[] தண்ணீர் விட்டா வளர்த்தோம்? தஞ்சை வெ. கோபாலன் http://FreeTamilEbooks.com சென்னை [Creative Commons License] This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License. This book was produced using PressBooks.com. Contents - மின்னூல் ஆக்கம் - 1. பூ.கக்கன் - 2. கடலூர் அஞ்சலை அம்மாள் - 3. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை - 4. திருப்பூர் குமரன் எனும் குமாரசாமி - 5. சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார் - 6. கோவை சுப்ரமணியம் என்கிற "சுப்ரி" - 7. சுப்பிரமணிய சிவா - 8. வ.உ.சிதம்பரம் பிள்ளை - 9. ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் - 10. தமிழ்த் தென்றல் திரு வி. க - 11. பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் - 12. தியாகசீலர் கோவை என்.ஜி.ராமசாமி - 13. கோவை சி.பி.சுப்பையா - 14. கு. காமராஜ் - 15. எம்.பக்தவத்சலம். - 16. பி. ராமமூர்த்தி - 17. பாஷ்யம் என்கிற ஆர்யா - 18. "கல்கி" ரா.கிருஷ்ணமூர்த்தி - 19. கானக்குயில் கே.பி.சுந்தராம்பாள் - 20. சர்தார் வேதரத்தினம் பிள்ளை - 21. ஸ்ரீமதி செளந்தரம் இராமச்சந்திரன் - 22. பழனி P.S.K.லட்சுமிபதிராஜு - 23. திருச்சி டி.எஸ்.அருணாசலம் - 24. திருச்சி P.R.ரத்தினவேல் தேவர் - 25. திருச்சி டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி - 26. வேதாரண்யம் தியாகி வைரப்பன் - 27. கோவை தியாகி கே.வி.இராமசாமி - 28. தொழிலாளர் தலைவர் செங்காளியப்பன் - 29. கு. ராஜவேலு - 30. சீர்காழி சுப்பராயன் - 31. திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம் - 32. திண்டுக்கல் மணிபாரதி - 33. பழனி கே.ஆர்.செல்லம் - 34. தியாகி பி.எஸ். சின்னதுரை - 35. மதுரை ஸ்ரீநிவாஸவரத ஐயங்கார் - 36. மதுரை ஜார்ஜ் ஜோசப் - 37. தேனி என்.ஆர். தியாகராஜன் - 38. முனகல பட்டாபிராமய்யா (சோழவந்தான்) - 39. பெரியகுளம் இராம சதாசிவம் - 40. திருப்பூர் தியாகி பி.எஸ்.சுந்தரம் - 41. திருக்கருகாவூர் பந்துலு ஐயர் - 42. ஜி. சுப்பிரமணிய ஐயர் - 43. ராஜாஜி - 44. திரு வ.வெ.சு. ஐயர் - 45. குமராண்டிபாளையம் நாச்சியப்பன் - 46. மதுரை A.வைத்தியநாத ஐயர் - 47. மதுரை என்.எம்.ஆர். சுப்பராமன் - 48. சேலம் A.சுப்பிரமணியம் - 49. ஐ. மாயாண்டி பாரதி - 50. ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் - 51. தியாகசீலர் ந.சோமையாஜுலு - 52. வீர வாஞ்சி - 53. டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி - 54. ப. ஜீவானந்தம் - ஆசிரியர் பற்றி - Free Tamil Ebooks - எங்களைப் பற்றி - வேண்டுகோள்! 1 மின்னூல் ஆக்கம் மின்னூல் ஆக்கம் : கிஷோர் ukisho@gmail.com மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com வெளியீட்டாளர்: த. ஸ்ரீநிவாசன், தரை தளம் 4, சுபிக்ஷா அடுக்ககம், 42, வியாசர் தெரு, கிழக்கு தாம்பரம் சென்னை – 600 059 தொ. பே: +91 98417 95468 – tshrinivasan@gmail.com நன்றி : http://pressbooks.com [pressbooks.com] 1 பூ.கக்கன் எளிமை என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருபவர் பூ.கக்கன். அடக்கத்தின் மறு பெயர் பூ.கக்கன். தமிழ்நாட்டு அமைச்சரவையில் ஒன்பது ஆண்டுகள் அமைச்சராக இருந்தவர். சொந்தமாக ஒரு கார்கூட இல்லாதவர். வெளி இடங்களுக்குப் போக பேருந்துப் பயணத்தையே நம்பியிருந்தவர், இப்படியெல்லாம் இவரைப்பற்றி மக்கள் சொல்லியும் எழுதியும் வந்ததை நாம் அறிவோம். அந்த எளிய மனிதரை இந்த மாதக் கட்டுரையில் பார்ப்போம். மதுரை மாவட்டம் மேலூர் அருகில் தும்பைப்பட்டி எனும் ஊரில் பூசாரி கக்கன், பெரும்பி அம்மாள் ஆகியோரின் மகனாக 1909ஆம் வருஷம் ஜூன் 18இல் பிறந்தவர் கக்கன். இந்த பூசாரி கக்கன் நகர சுத்தித் தொழிலாளியாக சொற்ப சம்பளத்தில் வாழ்ந்தவர். இளமைக் கல்வி மேலூரிலும், பின்னர் வறுமை காரணமாக திருமங்கலத்தையடுத்த காகாதிராய நாடார் உயர் நிலைப் பள்ளியில், விடுதியில் தங்கி படித்தார். பின்னர் பசுமலையில் இருந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும் படித்து முடித்தார். ஆசிரியர் பயிற்சி முடித்ததும் ஹரிஜனங்கள் வாழும் சேரிகளுக்குச் சென்று அங்குள்ள பிள்ளைகளுக்கு இலவசமாகக் கல்வி கற்பித்தார். இவரது ஹரிஜன சேவையைக் கேள்விப்பட்டு, மதுரையில் ஹரிஜன சேவையில் முன்னிலையில் இருந்த மதுரை ஏ.வைத்தியநாத அய்யர் இவரை அழைத்துப் பாராட்டித் தம்முடன் சேர்த்துக் கொண்டார். மதுரை ஏ.வி.அவர்கள் கக்கனை மகாத்மா காந்திக்கு அறிமுகம் செய்வித்தார். அவரது ஹரிஜன சேவையை மகாத்மாவும் பாராட்டி வாழ்த்தினார். மதுரை ஏ.வி.ஐயர் வீட்டில் எடுபிடி வேலை முதல், சமையலறை வரை எல்லா நிர்வாகமும் கக்கன் செய்து வந்தார். ஏ.வி.ஐயரின் மனைவு அகிலாண்டத்தம்மாளும் தேச சேவையில் ஈடுபட்டு சிறை சென்றதால் கக்கன் நிர்வாகத்தைக் கவனித்தார். நாட்டு சேவையில் மட்டுமே இவருக்கு நாட்டம் இருந்த காரணத்தால் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். எனினும் பெரியோர்கள் நிர்ப்பந்தப்படுத்தி 1938 செப்டம்பர் 6இல் எளிய திருமணம் செய்து கொண்டார். மனைவி சிவகங்கையைச் சேர்ந்த சொர்ணபார்வதி. 1937இல் நடந்த சென்னை மாகாண சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராஜாஜி பிரதமர் (முதல்வர்) ஆனார். இந்த அரசு 15-7-1937 முதல் 29-10-1939 வரை இருந்தது. இந்த குறுகிய காலகட்டத்தைல் தமிழ்நாட்டில் ஏற்பட்ட சீர்திருத்தங்கள் ஏராளம் ஏராளம். அவ்வளவுக்கும் ராஜாஜியே காரணம் என்பதை உலகம் அறியும். அதில் முதல்படி, ஹரிஜனங்கள் ஆலயப் பிரவேசம். இதனை மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் தலைமை ஏற்று நடத்தியவர் மதுரை ஏ.வைத்தியநாத ஐயர். அவருக்கு வலதுகரமாக இருந்து செயல்பட்டவர் கக்கன். இந்த ஆலயப் பிரவேசத்தில் கக்கனோடு பங்குகொண்ட மற்ற ஹரிஜன காங்கிரஸ் தலைவர்கள் சாமி.முருகானந்தம், முத்து, வி.எஸ்.சின்னையா, வி.ஆர்.பூவலிங்கம் ஆகியோராவர். இவர்களோடு ஆலயப்பிரவேசம் செய்தவர் எஸ்.எஸ்.சண்முக நாடார் என்பவர். இந்த இரத்தக் களறி இல்லாத போரை நடத்த கக்கனும் உதவியாக இருந்தார். 1942ஆம் ஆண்டில் நடந்த பம்பாய் காங்கிரசை அடுத்து, ‘வெள்ளையனே வெளியேறு’ எனும் ஆகஸ்ட் புரட்சியின்போது கக்கன் கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் சிறையில் ஒன்றரையாண்டு காலம் வைக்கப்பட்டார். அந்த காலகட்டத்தில் தேசபக்தர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பது மட்டுமல்லாமல், சிறைக்குள்ளே கடுமையாக அடித்தும் நொறுக்கினர். இந்தத் தாக்குதலுக்கு மிகப் பெரிய தலைவர்கள்கூட தப்பவில்லை. ராஜாஜியைக்கூட அப்போதைய ஆங்கில ஜெயிலர் அவமதித்த செய்திகள் உண்டு. கக்கனை கம்பத்தில் கட்டிவைத்து கசையடி கொடுத்தனர். தன் உடலில் விழுந்த ஒவ்வொரு அடிக்கும் கக்கன் “மகாத்மா காந்திக்கு ஜே” “காமராஜுக்கு ஜே” “ராஜாஜிக்கு ஜே” என்றுதான் கோஷமிட்டாரே தவிர அடிக்கு பணிந்து போகவில்லை. இவரது இந்த வீரச் செயல் காமராஜரையும் கவர்ந்து விட்டதால் காங்கிரசில் கக்கனுக்கு உரிய மரியாதையும் இடமும் கொடுத்தார். 1955இல் ஆவடி காங்கிரஸ் நடந்தபோது தமிழ்நாடு காங்கிரசுக்கு கக்கன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1957 வரை அந்தப் பதவியில் இருந்தார். இவர் 1952 தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்வானார். அடுத்து 1957இல் சென்னை சட்டசபைக்கு மேலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது காமராஜ் தலைமையில் உருவான அமைச்சரவையில் கக்கன் அமைச்சராகி, ஹரிஜனநலம், வேளாண்மை, பொதுப்பணி, உணவு ஆகிய துறைகளுக்குப் பொறுப்பேற்றார். முழுமையாக ஐந்தாண்டுகள் திறம்பட நிர்வகித்தார். 1962இல் மீண்டும் வெற்றி பெற்று அமைச்சர் ஆகி, காமராஜ் முதலமைச்சர் பதவியைத் துறந்து கட்சிப்பணிக்குச் சென்றபோது, எம்.பக்தவத்ஸலம் முதல்வரான போதும், இவர் அமைச்சர் ஆனார். இம்முறையும் பல துறைகளிலும் இவரது திறமையும் நேர்மையும், எளிமையும் வெளிப்பட்டது. மக்கள் நலன் ஒன்றுதான் இவரது நோக்கமாக இருந்தது. சுயநலம் என்பது ஒரு ஊசிமுனை அளவுகூட இவரிடம் இருந்தது இல்லை. ஐந்தாண்டு நாடாளுமன்ற பதவி, ஒன்பது ஆண்டுகள் அமைச்சர் பதவி இவ்வளவும் வகித்தும் கரை படியாத கரமுடையார் என்று மக்களால் போற்றப்பட்டார். காங்கிரஸ், காந்தியடிகள், காமராஜ் ஆகிய மூன்று “கா” மட்டுமே இவர் எண்ணத்தில் கடவுளாக இருந்தன. இம்மூன்றும்தான் ஹரிஜனங்களை முன்னேற்றியது என்பது இவரது அசைக்கமுடியாத கருத்து. 1975இல் காமராஜ் மறைவுக்குப் பிறகு இவர் அரசியலில் இருந்து விலகிவிட்டார். தன் தனி வாழ்வுக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட இவர் விரும்பவில்லை. 1967இல் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பிறகு 1970 வரை இவர் சென்னை ராயப்பேட்டையில் கிருஷ்ணாபுரம் எனுமிடத்தில் மாதம் ரூ.110 வாடகையில் குடியிருந்தார். 1971இல் தி.நகர், சி.ஐ.டி. நகர் அரசு குடியிருப்புக்கு மாறினார். அந்த காலகட்டத்தில் இவரது பயணம் அனைத்தும் நகரப் பேருந்துகளில்தான். நாலு முழ கதர் வேட்டி, எளிய கதர் சட்டை, ஒரு கதர் துண்டு இவைதான் இவரது உடை. 26-1-1979 குடியரசு தினத்தை யொட்டி இவருக்கு இலவச வீடு, பேருந்துப் பயணத்துக்கு இலவச பாஸ், இலவச மருத்துவச் சலுகை தவிர மாதம் ஐநூறு ரூபாய் ஓய்வூதியம் ஆகியவை அப்போதைய அரசால் வழங்கப்பட்டது. 28-12-1981ஆம் ஆண்டு இந்தத் தியாகச் சுடர் அணைந்தது. வாழ்க கக்கன் புகழ்! 2 கடலூர் அஞ்சலை அம்மாள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு தியாகங்கள் பல புரிந்த வீரர்கள் பற்றிய எல்லா விவரங்களும் கிடைப்பது என்பது அரிதுதான். எத்தனையோ தியாகிகளின் வரலாறு கால ஓட்டத்தில் காற்றோடு காற்றாகக் கலந்து வெளியில் தெரியாமலே பொய்விட்டது. வேறு சிலரது வரலாறோ பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படாத காரணத்தாலேயே மறக்கப்பட்டும் விட்டது. ஒரு நாட்டின் தியாக வரலாறு முறைப்படி அரசாங்கத்தின் முத்திரையோடு பதிவு செய்யப்பட வேண்டும். அப்படி பதிவு செய்யப்பட்ட தியாகிகளை மக்கள் ஆண்டுதோறும் நினைவுகூர வேண்டும். குறைந்த பட்சம் சுதந்திர நாள், குடியரசு நாள் போன்ற தேசிய நாட்களிலாவது அவர்களது நினைவுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த வேண்டும். அப்படி வரலாற்றின் ஏடுகளில் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும், பெருமளவு மக்கள் மத்தியில் பிரபலமாகாத சில பெயர்களில் கடலூர் அஞ்சலை அம்மாளும் ஒருவர். இவரது கணவரும் ஒரு தியாகி. இவரது மகளும், மருமகனும்கூட தியாகிகள். இப்படி குடும்பமே தியாகிகள் குடும்பமாக இருக்கும் ஒருசிலரில் அஞ்சலை அம்மாள் குடும்பமும் ஒன்று. இந்திய சுதந்திரப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் நம் நாட்டுப் பெண்கள் இப்போது போல சுதந்திரம் பெற்று ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாக வாழவில்லை. அந்நிய ஆட்சி நமக்களித்த தீயவற்றில், பெண்ணடிமைத்தனம், பெண்களுக்குக் கல்வி அறிவு பெற வாய்ப்பு இல்லாமை போன்றவற்றால் பொதுவாக பெண்கள் பொதுக் காரியங்களில் அதிகம் தலையிடுவதில்லை. இருந்தாலும் பரம்பரை பரம்பரையாக நமது பாரத பண்பாட்டிலும், நமது மக்களின் ரத்த ஓட்டத்திலும் கலந்துவிட்ட பெண்ணுரிமை காரணமாக, பெண்கள் அறிவிலே சிறந்தும், நிர்வாகத் திறன், அநீதிகளைக் கொண்டு பொங்கும் பாங்கு இவையெல்லாம் எல்லா காலங்களிலும் சாம்பல் மூடிய அக்கினியாகவே இருந்து வந்திருக்கிறது. அப்படி சில பெண்கள் ஆண்களுக்கு நிகராகச் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றும், தியாகங்கள் பல புரிந்துமிருக்கிறார்கள். அதற்கு அந்தக் குடும்பத்தின் ஆண்மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் இருக்குமானால் இவர்களது பங்கு சிறப்பாக அமையும். அப்படி குடும்பச் சூழ்நிலையும், சுதந்திர தாகமும் கொண்டு போராட்டங்களில் ஈடுபட்டு சிறைசென்ற கடலூர் அஞ்சலை அம்மாள் பற்றி இங்கு பார்க்கலாம். அஞ்சலை அம்மாள் பிறந்தது 1890ஆம் ஆண்டு. 1921ஆம் ஆண்டில் தனது முப்பத்தியோராவது வயதில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு, தமிழகத்தின் முதல் பெண் சுதந்திரப் போராளி எனும் பெருமையைப் பெற்றார். இவரும் இவரது கணவரும் நம் நாட்டில் நடந்த அத்தனை போராட்டங்களிலும் கலந்து கொண்டார்கள். சென்னையில் கர்னல் நீல் என்பவனின் சிலையொன்று இருந்தது. இந்த நீல் முதல் சுதந்திரப் போரின் போது இந்திய மக்களுக்கும், சிப்பாய்களுக்கும் இழைத்த கொடுமைகளைக் கருத்தில் கொண்டு, இந்தக் கொடுங்கோலனின் சிலை சென்னை நகரத்தில் இருப்பது அவமானம் என்று கருதி இந்தச் சிலையை நீக்க ஒரு போராட்டம் நடந்தது. ந.சோமையாஜுலு போன்ற பெரும் தலைவர்கள் இதில் கலந்து கொண்டார்கள். 1927இல் முதன் முதலாக அஞ்சலை அம்மாள் இந்த நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்திலும், 1933இல் சட்டமறுப்பு மறியலிலும், 1940இல் தனிநபர் சத்தியாக்கிரக போராட்டத்திலும் இவர் கலந்து கொண்டார். 1941லும், 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் கலந்து கொண்டு சிறை சென்றார். இவர் வாழ்க்கை பெரும்பாலும் சிறைவாசத்திலேயே கழிந்தது எனலாம். ஊர் சுற்றி பார்க்க இவர் அலைந்திருக்கிறாறோ இல்லையோ, பல ஊர்களில் இவர் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். அப்படிப்பட்ட ஊர்களில் கடலூர், திருச்சி, வேலூர், பெல்லாரி ஆகியவை அடங்கும். இவர் கர்ப்பவதியாக இருந்த காலத்தில் சிறை சென்று, பேறு காலம் வந்தபோது சில நாட்கள் வெளியே விடப்பட்டு, பிரசவம் ஆனதும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 1929ஆம் ஆண்டு நடந்த சென்னை சட்டசபைத் தேர்தலில் இவர் கடலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது கணவர் முருகப்பா, இவரும் பலமுறை சிறை சென்ற தியாகி. கணவன் மனைவி இருவருமே சிறையில் இருந்தபோது, இவர்களது மகள் லீலாவதி என்ன பாடு பட்டிருப்பார். 1952ஆம் ஆண்டு நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலிலும் இவர் கடலூரிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது மகள் லீலாவதி ஒன்பது வயதாக இருக்கும்போதே நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த வயதிலேயே நான்காண்டுகள் சிறைதண்டனை பெற்றார். இவரது தேசப்பணியைக் கண்டு மகிழ்ந்த மகாத்மா காந்தி இவரைத் தன்னுடன் அழைத்துச் சென்று வார்தா ஆசிரமத்தில் சேர்த்துக் கொண்டார். அஞ்சலை அம்மாளும் அவர் கணவர் முருகப்பாவும் கடலூர் சிறையில் இருந்த காலத்தில் வேலூரைச் சேர்ந்த ஜமதக்கினி என்பவரும் கடலூர் சிறையில் இருந்தார். இவர் சிறையில் காரல் மார்க்சின் ‘தாஸ் காபிடல்’ எனும் நூலை மூலதனம் என்று மொழியாக்கம் செய்தவர். இவர் பிரபல மார்க்சீய சிந்தனையாளராக மலர்ந்தார். சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றவர். இவர் கடலூர் சிறையில் இருக்கும் காலத்தில் அஞ்சலை அம்மாளையும், முருகப்பாவையும் சந்திக்க சிறைக்கு வரும் மகள் லீலாவதியைச் சந்திக்க நேர்ந்தது. மகள் லீலாவதிக்கும், சிறையில் இருந்த தியாகி ஜமதக்கினிக்கும் காதல் மலர, இவ்விருவருக்கும் திருமணம் முடிக்க பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால் ஜமதக்கினி அவர்களோ, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுதான் திருமணம் என்று உறுதியாக இருந்தார். அதன்படியே 1947இல் இந்திய சுதந்திரத்துக்குப் பின் இவர்கள் திருமணம் நடைபெற்றது. இந்த ஜமதக்கினி (நாயக்கர்) 1952 முதல் சுதந்திர இந்தியத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோற்றார். அங்கு வெற்றி பெற்றவர் B.பக்தவத்ஸலு நாயுடு என்ற சுயேச்சை. இரண்டாவதாக வந்த காங்கிரஸ் வேட்பாளர் வேதாசல முதலியார். இந்த பக்தவத்ஸலு நாயுடு, பின்னர் ராஜாஜி மந்திரி சபை அமைந்தபோது, காங்கிரசுக்கு ஆதரவளித்து, எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு நாயக்கர் இவர்கள் அமைச்சர்களாக ஆனபோது, இவர் துணை சபாநாயகர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. கடலூர் அஞ்சலை அம்மாள் குடும்பத்தில், தம்பதிகளைத் தவிர, மகள் மருமகன் ஆகியோரும் சிறை சென்ற தியாகிகளாக இருந்தனர் என்பதும், பெண்ணினத்துக்கே பெருமை சேர்த்தவர் இந்த அஞ்சலை அம்மாள் என்பதும் பெருமைப் படத்தக்க விஷயம். வாழ்க அஞ்சலை அம்மாள் புகழ்! 3 நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர். தேசியப் போராட்டங்களில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். மகாகவி பாரதியால் பாராட்டப் பெற்றவர். ராஜாஜியின் மனதுக்குகந்த தோழர். உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தின் வழிநடைப் பாடலாக ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ எனும் பாடலை எழுதிப் புகழ் பெற்றவர், இந்தப் பெருமைகளுக்கெல்லாம் உரியவர் நாமக்கல் கவிஞர் எனப்படும் ராமலிங்கம் பிள்ளை அவர்கள். இவர் 1888ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி கரூருக்கும் ஈரோட்டுக்கும் இடையே அமைந்துள்ள மோகனூர் எனும் ஊரில் அவ்வூர் ஹெட் கான்ஸ்டபிளாக இருந்த வெங்கட்டராம பிள்ளை அம்மணி அம்மாள் தம்பதியினருக்கு ஏழு பெண் குழந்தைகளுக்குப் பிறகு வாராது வந்த மாமணி போல் வந்து பிறந்த எட்டாவது ஆண் குழந்தை ராமலிங்கம். ராமேஸ்வரம் சென்று ஆண் குழந்தை வேண்டிப் பிறந்ததால் ராமலிங்கம் என்று பெயர் வைக்கப்பட்டது. கவிஞரின் தாயார் அம்மணி அம்மாள் இதிகாச புராணங்களை யெல்லாம் சொல்லி தன் மகனை வளர்த்தார். பொய் பேசுவதும், பொல்லாதவன் என்று பெயரெடுப்பதும் கூடாது என்று திரும்பத் திரும்பச் சொல்லி மகனைச் சான்றோனாக வளர்த்தார். இவர் நாமக்கல்லில் இருந்த நம்மாழ்வார் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின்னர் தந்தை கோவைக்கு மாற்றலாகிச் சென்றபோது கோயம்புத்தூரில் உயர்நிலைக் கல்வி பயின்றார். திருச்சியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்த இவருக்குத் தனது அத்தை மகளை 1909இல் திருமணம் செய்து கொண்டார். இவர் ஆசிரியர் தொழில் உட்பட பல தொழில்களைல் சேர்ந்தாலும் ஒன்றிலும் நிலைக்கவில்லை. இவருக்கு இயற்கையிலேயே ஓவியம் வரையும் ஆற்றல் இருந்தது. இவரது ஆசிரியராக இருந்த ஒரு ஆங்கிலேயர், எல்லியட் என்று பெயர், அவர் இவரது ஆற்றலை வளர்க்க உதவினார். இவர் ஓவியங்கள் நல்ல விலை போயின. அப்படி இவர் வரைந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஓவியமொன்றை டெல்லியில் நடந்த அவரது முடிசூட்டு விழாவில் பரிசளிப்பதற்காக 1912இல் டெல்லிக்குப் பயணமானார். ஓவியத்தைப் பார்த்து மன்னர் குடும்பம் இவருக்கு ஒரு தங்கப் பதக்கத்தை அளித்தது. ஓவியம் தவிர இவருக்கு கவிதை புனையும் ஆற்றலும் இருந்தது. 1924ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் எஸ்.சீனிவாச ஐயங்கார் அறிவித்த ஒரு போட்டியில் தேசபக்திப் பாடல்களை எழுதித் தங்கப் பதக்கம் பரிசு பெற்றார். அதுமுதல் இவர் பல கவிதைகளைப் புனைந்து தள்ளினார். குடத்திற்குள் இட்ட விளக்காக விளங்கிய இவரது கவிதைத்திறன் 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்துக்காக எழுதிய “கத்தியின்றி” பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். இவரது பாடல்களை சங்கு கணேசன் தனது “சுதந்திரச் சங்கு” பத்திரிகையில் வெளியிட்டு வந்தார். இவரது அத்தை மகள் முத்தம்மாளை மணந்து கொண்டாரல்லவா, அவர் 1924இல் காலமானார். அதைத் தொடர்ந்து அவரது இளைய சகோதரியை இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. இவருக்கு 1906ஆம் ஆண்டு முதலே நாட்டுச் சுதந்திரத்தைல் வேட்கை பிறந்தது. இவர் கரூரில் தனது சகோதரி வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1914இல் திருச்சி மாவட்ட காங்கிரசின் செயலாளராக இருந்தார். கரூர் வட்டக் காங்கிரஸ் தலைவராகவும் பணிபுரிந்தார். 1921 முதல் 1930 வரை நாமக்கல் காங்கிரசின் தலைவராக இருந்தார். கரூர் அமராவதி நதிக்கரையில் இவர் அடிக்கடி கூட்டங்கள் நடத்தினார். தேவகோட்டை சின்ன அண்ணாமலை தமிழ்ப்பண்ணை எனும் புத்தக வெளியீட்டு நிறுவனத்தை நடத்தினார். அதன் மூலம் நாமக்கல்லாரின் நூல்கள் பிரசுரம் செய்யப்பட்டன. சின்ன அண்ணாமலை சிறந்த பேச்சாளர். அவரது நகைச்சுவை மிகவும் பிரபலம். சங்கப்பலகை எனும் ஒரு பத்திரிகையையும் அவர் நடத்தினார். ம.பொ.சி. தலைவராக இருந்த தமிழரசுக் கழகத்தின் தூண்களில் அவரும் ஒருவர். இவர் மகாகவி பாரதியாரைச் சந்தித்திருக்கிறார். அவரால் பாராட்டப் பெற்றிருக்கிறார். சுதந்திரப் போராட்டத்தில் முதன் முதலாக 1932இல் இவருக்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தது. சுதந்திரம் நெருங்கி வந்த சமயத்தில் இவரது கவிதைகள் பெரும் புகழ்பெற்று தமிழ் மாநிலமெங்கும் இவருக்குப் பாராட்டும் புகழும் ஈட்டித் தந்தன. 1945இல் இவரைப் பாராட்டி சென்னையில் நடந்த விழாவில் காமராஜ், திரு.வி.க., பி.ராமமூர்த்தி, கல்கி போன்றவர்கள் கலந்து கொண்டு இவரைப் பாராட்டினார்கள். இவர் எழுதிய “மலைக்கள்ளன்” எனும் நெடுங்கதை கோவை பக்ஷிராஜா ஸ்டுடியோவினரால் திரைப்படமாக்கப் பட்டது. எம்.ஜி.ரமச்சந்திரன் பானுமதி நடித்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு 1949இல் ஆகஸ்ட் 15 சுதந்திரத் திருநாளில் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் பவநகர் மகாராஜா தலைமையில் இவருக்கு ‘அரசவைக் கவிஞர்’ எனும் பதவி வழங்கப்பட்டது. 1956 ஆண்டிலும் பின்னர் 1962ஆம் ஆண்டிலும் தமிழக சட்ட மேலவை உறுப்பினராக இவர் செயல்பட்டார். 1971இல் இவருக்கு டெல்லியில் ‘பத்மபூஷன்’ விருது வழங்கப்பட்டது. இவர் எழுதிய “காந்தி அஞ்சலி” எனும் கவிதைத் தொகுதி நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் 1972ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி இரவு 2 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். பாரதிக்குப் பிறகு தோன்றிய ஒரு தேசியக் கவிஞரின் ஆயுள் முடிந்து விட்டது. வாழ்க நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை புகழ் .[] நினைத்த மாத்திரத்தில் சுதந்திரம் பெறலாம் சொல்கிறார் தேசியக் கவி நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை இச்சை கொண்ட நிமிஷமே நிச்சயம் சுதந்திரம்; பிச்சை கேட்க வேண்டுமோ, பிறர் கொடுக்க வல்லதோ? ‘வேண்டும்’ என்ற உறுதியே விடுதலைக்கு வழிவிடும் யாண்டிருந்து வருவது? யார் கொடுத்துப் பெறுவது? ‘அடிமையல்ல நான்’ எனும் ஆண்மையே சுதந்திரம்; தடியெடுக்க வேண்டுமோ? சண்டையிட்டு வருவதோ? ஆசைவிட்ட பொழுதிலே அடிமை வாழ்வும் விட்டிடும்; மீசை துள்ளி வாயினால் மிரட்டினால் கிடைப்பதோ? அஞ்சுகின்ற தற்றபோது அடிமையற்றுப் போகுமே நஞ்சுகொண்டு யாரையும் நலிவு செய்து தீருமோ? நத்திவாழ்வ தில்லையென்ற நாளிலே சுதந்திரம் கத்தி கொண்டு யாரையும் குத்தினாற் கிடைக்குமோ? கள்ளமற்ற நேரமே காணலாம் சுதந்திரம்; உள்ளிருக்கும் ஒன்றை வேறு ஊரிலார் கொடுப்பவர்? தீமையோடு உறவுவிட்ட திண்மையே சுதந்திரம் வாய்மையோடு உறவறாத வன்மையே சுதந்திரம். ஒப்பற்ற காந்தியால் உலகம் வாழும் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை கவிபாடிப் பெருமை செய்யக் கம்பனில்லை கற்பனைக்கிங் கில்லையந்தக் காளிதாசன் செவிநாடும் கீர்த்தனைக்கு தியாகராஜரில்லை தேசிய பாரதியின் திறமும் இல்லை புவிசூடும் அறிவினுக்கோர் புதுமை தந்து புண்ணியமும் கண்ணியமும் புகழும் சேர்ந்த உவமானம் வேறெவரும் உரைக்க வொண்ணா உத்தமராம் காந்திதனை உவந்து பேச. சொல்லுவது எல்லார்க்கும் சுலபமாகும் சொன்னபடி நடப்பவர்கள் மிகவும் சொற்பம் எல்லையின்றி நீதிகளை எழுதுவார்கள் எழுதியது பிறருக்கே தமக்கென் றெண்ணார் தொல்லுலகில் நாமறிந்த தலைவர் தம்முள் சொன்னதுபோல் செயல் முயன்றார் இவரைப் போல இல்லையெனும் மோகனதாஸ் கரம்சந்த் காந்தி இந்தியத்தாய் உலகினுக்கே ஈந்த செல்வம். கொலைகளவு பொய்சூது வஞ்சமாதி கொடுமைகளே வித்தைகளாய் வளர்த்துக் கொண்டு தலைசிறந்த பிறவியெனும் மனித வர்க்கம் சண்டையிட்டு மடிவதனைத் தடுக்க வேண்டி உலகிலுள்ள மனிதரெல்லாம் கலந்து வாழ ஒருவராய்த் தவம்புரிய உவந்த காந்தி விலைமதிக்க முடியாத செல்வமன்றோ வேறென்ன நாட்டிற்குப் பெருமை வேண்டும்? புத்தர்பிரான் பெருந்துறவைப் படிக்கும் போதும் போதிமர நிழல்ஞானம் நினைக்கும் போதும் கர்த்தர்பிரான் ஏசுமுன்னாள் சிலுவைதன்னில் களிப்போடு உயிர்கொடுத்த கதையைக் கேட்டும் சத்துருவாய்க் கொல்லவந்தோர் தமையுங் காத்த தயைமிகுந்த நபிகளின்பேர் சாற்றும் போதும் உத்தமரைக் ‘கண்டோமா’ என்னும் ஏக்கம் ஒவ்வொரு நாள் நமக்கெல்லாம் உதிப்பதுண்டே! குத்தீட்டி ஒருபுறத்தில் குத்த வேண்டும் கோடரி ஒரு புறத்தைப் பிளக்க வேண்டும் ரத்தம் வரத் தடியடியால் ரணமுண்டாக்கி நாற்புறமும் பலர் உதைத்து நலியத்திட்ட அத்தனையும் நான்பொறுத்து அகிம்சை காத்து அனைவரையும் அதைப்போல நடக்கச் சொல்லி ஒத்துமுகம் மலர்ந்துடட்டில் சிரிப்பினோடும் உயிர்துறந்தால் அதுவே என் உயர்ந்த ஆசை. என்றுரைக்கும் காந்தியை நாம் எண்ணிப் பார்த்தால் எலும்பெல்லாம் நெக்குநெக்காய் இளகுமன்றோ? நின்றுரைக்கும் சரித்திரங்கள் கதைகள் தம்மில் நினைப்பதற்கும் இச்சொல்லை நிகர்வ துண்டோ? கன்றினுக்குத் தாய்போல உயிர்கட்காகக் கரைந்துருகும் காந்தியை நாம் நேரில் கண்டோம் இன்றுலகின் துயர்நீங்கச் சிறந்த மார்க்கம் எடுத்துரைக்கக் கொடுத்து வைத்தோம் இருந்து கேட்க. கவிராஜர் கற்பனைக்கும் எட்டாத் தீரம் கடலென்றாற் குறைவாகும் கருணை வெள்ளம் புவிராஜர் தலைவணங்கும் புனித வாழ்க்கை பொறுமையெனும் பெருமைக்குப் போற்றும் தெய்வம் தவராஜ யோகியர்கள் தேடும் சாந்தி தளர்வாகும் எழுபத்து ஒன்பதாண்டில் யுவராஜ வாலிபர்க்கும் இல்லா ஊக்கம் ஒப்பரிய காந்தியரால் உலகம் வாழ்க. தீண்டாமைப் பேயை நாட்டைவிட்டு ஓட்டுவோம் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை தொத்து நோய்கள் மெத்தவும் தொடர்ந்து விட்ட பேரையும் தொட்டு கிடிச் சொஸ்தமாக்கல் தர்ம மென்று சொல்லுவார் சுத்தமெனும் ஜாதியால் தொடப்படாது என்றிடில் தொத்து நோயைக் காட்டிலும் கொடிய ரென்று சொல்வதோ? நாய் குரங்கு பூனையை நத்தி முத்த மிடுகிறோம் நரகல் உண்ணும் பன்றியும் நம்மைத் தீண்ட ஒப்புவோம் ஆயும் ஆறு அறிவுடை ஆன்ம ஞான மனிதனை அருகிலே வரப் பொறாமை அறிவிலே பொருந்துமோ? செடிமரங்கள் கொடிகளும் ஜீவரென்ற உண்மையை ஜெகமறிந்து கொள்ள முன்பு செய்த திந்த நாடடா! முடிவறிந்த உண்மை ஞானம் முற்றி நின்ற நாட்டிலே மூடரும் சிரிக்கு மிந்த முறையிலா வழக்கமேன்? உயிரிருக்கும் புழுவையும் ஈசனுக்கு உறையுளாய் உணருகின்ற உண்மை ஞானம் உலகினுக் குரைத்த நாம் உயருகின்ற ஜீவருக்குள் நம்மோடொத்த மனிதனை ஒத்திப் போகச் சொல்லுகின்ற தொத்துக் கொள்ள லாகுமோ? அமலனாகி அங்குமிங்கும் எங்குமான கடவுளை ஆலயத்துள் தெய்வமென்று அங்கிருந்து எண்ணுவோம் விமலனான கடவுள் சக்தி மனிதன் கிட்டி விலகினால் வேறு ஜீவர் யாவும் அந்த விமலனென்ப தெப்படி? ஞாயமல்ல ஞாயமல்ல ஞாயமல்ல கொஞ்சமும் நாடுகின்ற பேர்களை நாமிடைத் தடுப்பது பாயுமந்த ஆற்றிலே பருகிவெப்பம் ஆறிடும் பறவையோடு மிருகமிந்தப் பாரிலார் தடுக்கிறார்? 4 திருப்பூர் குமரன் எனும் குமாரசாமி கொடிகாத்த குமரன் வரலாற்றுச் சுருக்கத்தைப் படிக்குமுன்:- திருப்பூரில் போலீசாரின் தாக்குதலில் மரண அடி வாங்கி உயிருக்குப் போராடியபோதும், கையில் பிடித்திருந்த கொடியைக் கீழே விழாமல், ‘பாரதமாதாகி ஜே’, ‘மகாத்மா காந்திக்கு ஜே’ என்று முழங்கி உயிர்விட்ட அந்தத் தியாகியைப் போல எத்தனையோ வீரர்களின் ரத்தம், சதை, எலும்பு இவற்றை விலையாகக் கொடுத்துப் பெற்றதுதான் இந்தியத் திருநாட்டின் சுதந்திரம் என்பதை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டுகிறேன். திருப்பூர் குமரன் பற்றி நாமக்கல்லார் பாடியது: (தமிழன் இதயம்) மனமுவந்து உயிர் கொடுத்த மானமுள்ள வீரர்கள் மட்டிலாத துன்பமுற்று நட்டுவைத்த கொடியிது தனமிழந்து கனமிழந்து தாழ்ந்து போக நேரினும் தாயின் மானம் ஆன இந்த கொடியை என்றும் தாங்குவோம். “கொடிகாத்த குமரன்” என்று பள்ளிக்கூட பாடங்களில் எல்லாம் எழுதப்பெறும் திருப்பூர் குமரனின் இயற்பெயர் குமாரசாமி. இவரது சொந்த ஊர் ஈரோட்டை அடுத்த சென்னிமலை. தறி நெய்யும் நெசவாளி குடும்பம் குமாரசாமியினுடையது. சென்னிமலை கைத்தறித் துணி உற்பத்திக்குப் பெயர் பெற்றது. இங்கு நாச்சிமுத்து முதலியார் கருப்பாயி அம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர் குமாரசாமி. இவர் பிறந்தது 1904 அக்டோபர் மாதம். தறியில் துணி நெய்துப் பிழைக்கும் மிகவும் ஏழ்மையான குடும்பம் குமாரசாமியினுடையது. சென்னிமலையில் தனது ஆரம்பகால கல்வியை ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். மேலே படிக்க வசதி இன்மையால் பள்ளிப்பாளையத்தில் இருந்த தாய்மாமன் வீட்டுக்குச் சென்றார். அங்கும் இவரது குலத் தொழிலான கைத்தறி நெசவுத் தொழிலை மேற்கொண்டார். ஈரோடு சென்று அங்கு நூல் வாங்கிக் கொண்டு வந்து துணி நெய்து மீண்டும் ஈரோடு சென்று விற்று பிழைப்பு நடத்தினார். அப்போதெல்லாம் போக்கு வரத்துக்கு போதிய வசதிகளோ அல்லது பேருந்து வசதிகளோ இல்லாத நிலையில் இவர் மாட்டு வண்டிகளிலோ அல்லது சுமையைத் தலையில் சுமந்து கால் நடையாகவோ சென்று வந்தார். இப்படி ஓர் ஐந்து ஆண்டுகள் இவர் ஓட்டினார். இந்தத் தொழிலில் போதிய வருமானம் இல்லாமையாலும், அலைச்சல் ஒத்துக் கொள்ளாததாலும், இவர்கள் குடும்பம் திருப்பூருக்குக் குடி பெயர்ந்தது. அங்கு இவர் தனக்குப் பழக்கமான தறியடிக்கும் தொழிலைச் செய்யாமல், சென்னியப்ப முதலியார் மற்றும் ஈங்கூர் ரங்கசாமிக் கவுண்டர் ஆகியோர் நடத்திய தரகு மண்டியில் கணக்கு எழுதும் வேலையில் சேர்ந்தார். பஞ்சு எடைபோட்டு வாங்குவது கொடுப்பது என்பதில் மிகவும் நேர்மையாக நடந்து கொள்பவர்களைத்தான் முதலாளிகள் நியமிப்பார்கள், அப்படிப்பட்ட நேர்மையாளராக இருந்த குமாரசாமிக்கு அந்த வேலையை அவர்கள் அளித்திருந்தார்கள். பஞ்சு மண்டி வேலை முடிந்ததும், பொது வேலைகளிலும் ஈடுபட்டு நாட்டுச் சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் குமாரசாமி. அப்போது திருப்பூரில் இயங்கி வந்த தேசபந்து வாலிபர் சங்கத்தில் இவர் உறுப்பினரானார். இவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர், எனவே பஜனைப் பாடல்கள், நாடகம் போடுதல், கூட்டம் போட்டுப் பேசுதல் என்று நடவடிக்கைகளில் ஈடுபடலானார். இவரது பத்தொன்பதாவது வயதில் இவருக்குத் திருமணம் நடந்தது. அப்போது பதினான்கே வயதான ராமாயி இவரது மனைவியானாள். ஆறாண்டு காலம் இவரது திருமண வாழ்வு இனிதே நடந்தும் மகப்பேறு இல்லை. மகாத்மா காந்தி ஐந்து முறை திருப்பூருக்கு வந்திருக்கிறார். கதர் இயக்கம் இங்குதான் சிறப்பாக நடந்து வந்தது. குமாரசாமியும் கதர் இயக்கத்தில் கலந்து தலையில் கதர்க் குல்லாய், கதர் உடை என்று அந்த நாள் காங்கிர தொண்டர்களின் உண்மைத் தோற்றத்தில் விளங்கினார். 1932இல் காங்கிரஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது. காந்தியடிகள் கைது செய்யப்பட்டிருந்தார். பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டிருந்தன. சட்ட மறுப்பு இயக்கம் அதனைச் சார்ந்த மறியல் போன்றவைகள் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகின. பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் அடக்குமுறை தலை விரித்தாடியது. ஆங்கிலேய அரசு அடக்குமுறையை ஏவிவிடவும், அதனை எதிர்த்து மக்களின் போராட்டமும் மேலும் மேலும் வலுவடைந்தது. எல்லா இடங்களைப் போலவே திருப்பூரிலும் காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்பட்டது, காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் பூட்டி சீலிடப்பட்டது. இந்த தடைகளையெல்லாம் மீறி திருப்பூரில் 10-1-1932இல் ஓர் ஊர்வலம் நடத்த முடிவாகியது. தேசபந்து வாலிபர் சங்கத்தினர் முன்னிலையில் இருந்து ஏற்பாடுகளைச் செய்தனர். அந்த ஊர்வலத்துக்கு அவ்வூர் செல்வந்தரும் மிகப் பிரபலமாயிருந்தவருமான ஈஸ்வர கவுண்டர் தலைமை ஏற்பது என முடிவாகியது. ஊர்வலத்துக்கு முதல் நாள் மக்களிடம் செல்வாக்குள்ள பி.டி.ஆஷர், அவர் மனைவி பத்மாவதி ஆஷர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமை வகிப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்த ஈஸ்வர கவுண்டர் வரவில்லை. எனவே புகழ்பெற்ற தியாகி பி.எஸ்.சுந்தரம் என்பார் அவரைத் தேடி அவர் வீடு சென்றார், பின்னர் அவரது பஞ்சாலைக்குச் சென்றார். அங்கு கவுண்டர் இருப்பதைப் பார்த்தார். ஊர்வலத்துக்கு வர அவர் மறுத்து விட்டார். இந்தச் சூழ்நிலையில் தியாகி பி.எஸ்.சுந்தரம் அவர்களே ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினார். அவரது தலைமையில் குமாரசாமி, இராமன் நாயர், விசுவநாத ஐயர், நாச்சிமுத்து கவுண்டர், சுப்பராயன், நாச்சிமுத்து செட்டியார், பொங்காளி முதலியார், அப்புக்குட்டி எனும் மாணவன், நாராயணன் ஆகியோர் ஊர்வலத்தில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஊர்வலம் திருப்பூர் வீதிகளில் தேசபக்த முழக்கங்களோடு சென்று கொண்டிருந்தது. வீரர்கள் இரண்டு இரண்டு பேராக அணிவகுத்துச் சென்றனர். சாலையில் கூடியிருந்த மக்கள் என்ன நடக்குமோ இந்த வீரர்களை போலீஸ் அரக்கர்கள் எப்படியெல்லாம் தாக்குவார்களோ என்று அஞ்சியபடி பார்த்துக் கொண்டிருந்தனர். ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து போலீஸ் நிலையத்தை நெருங்கியது. அப்போது போலீஸ் நிலையத்திலிருந்து இரு உயர் அதிகாரிகள் உட்பட சுமார் முப்பது நாற்பது போலீஸ்காரர்கள் கைகளில் தடியுடன் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது பாய்ந்தனர். ஊர்வலத்தில் வந்த தொண்டர்களைப் போல பல மடங்கு அதிகமான போலீசார் அந்த சிறு ஊர்வலத்தில் வந்தவர்களைக் கண் மண் தெரியாமல் அடித்துப் புடைத்தனர். அவர்கள் கைகள் சோர்ந்து ஓயும் வரை அடித்தனர். மண்டைகள் உடைந்தன. கை கால்கள் முறிந்தன. தொண்டர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்து உயிர் பிரியும் நிலையிலும், மகாத்மா காந்திக்கு ஜே, பாரத மாதாக்கு ஜே என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். குமாரசாமியின் தலையில் விழுந்த அடியால் மண்டை பிளந்தது. ரத்தம் பீரிட்டு எழுந்து கொட்டியது. அவன் கையில் பிடித்திருந்த கொடிக்கம்பு மட்டும் பிடித்த பிடி தளரவேயில்லை. வாய் ஜே கோஷம் போட்டபடி இருந்தது. குமாரசாமி எனும் அந்த வீரத்தியாகி உடல் சரிந்து தரையில் விழுந்தபோதும் அவன் கையில் பிடித்திருந்த கொடிக்கம்பும் கொடியும் மட்டும் கீழே விழவேயில்லை. நினைவு இழந்து தரையில் வீழ்ந்து கிடந்த குமாரசாமியைத் தன் பூட்ஸ் கால்களால் போலீசார் உதைத்தனர். சிலர் அவன் உடல் மீது ஏறி மிதித்தனர். அவன் கை கெட்டியாகப் பிடித்திருந்த கொடிக் கம்பை ஒரு போலீஸ்காரர் சிரமத்துடன் பிடித்து இழுத்து வீசி தரையில் எறிந்தார். குமாரசாமியும், ராமன் நாயரும் ரத்தமும் நிணமுமாக தரையோடு தரையாக வீழ்ந்து கிடந்தனர். மண்டையில் அடிபட்ட பி.எஸ்.சுந்தரத்துக்கு காட்சிகள் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தனவே தவிர காதில் எந்த ஒலியும் கேட்கவில்லை. போலீசார் அடித்த அடியில் அவரது கேட்கும் சக்தி முழுமையாகப் போய்விட்டது தெரிந்தது. அவரது உடலில் கை, கால்கள், இடுப்பு, விலா ஆகியவிடங்களில் மொத்தம் பதினான்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. இந்த நிகழ்ச்சியின் விளைவாக தியாகி பி.எஸ்.சுந்தரம் தன் வாழ்நாள் முழுவதும் உடல் ஊனமுற்றவராக, செவிடராக இருக்க நேர்ந்த கொடுமையும் நடந்தது. அடிபட்டு வீழ்ந்த சிலரை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர். மற்றவர்களை அவர்களது உற்றார் உறவினர் எடுத்துச் சென்று விட்டனர். இவ்வளவு அடிபட்ட காந்தியத் தொண்டர்கள் போலீஸ் மீது கல் எறிந்து தாக்கியதாகவும், குழப்பம் விளைவித்ததாகவும், அதனால் போலீஸ் தடியடி நடத்தியதாகவும் வழக்கு பதிவாகியது. சுந்தரம், குமாரசாமி, ராமன் நாயர் ஆகியோர் உடல்களைத் தூக்கி சாமான்களை வீசுவது போல ஒரு வண்டியில் வீசினார்கள். மரண அடிபட்ட குமாரசாமிக்கு மண்டை உடைந்து ஏதோவொன்று மூளைக்குள் சென்று விட்டது. நினைவு இல்லை. ரத்தம் நிற்கும் வழியாக இல்லை. சிறிது நேரம் துடித்துக் கொண்டிருந்த குமாரசாமியின் உயிர் 11-1-1932 அன்று இரவு தன் மூச்சை நிறுத்திவிட்டுப் பிரிந்து சென்றது. அந்த வீரத் திருமகனின் உடல் ஒரு துணியால் கட்டப்பட்டு மூங்கிலால் தூக்கப்பட்ட ஒரு தூணியில் கிடத்தப்பட்டு தூக்கிச் சென்று அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடம் எது? போலீசார் செய்த ரகசிய சவ அடக்கத்தினால், அது எந்த இடம் என்று தெரிந்து கொள்ள முடியாமல் போனது. ஒரு வீர தேசபக்த இளைஞனின் உடல், அவன் பிறந்த நாட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அடக்கம் செய்யப்பட்டதே தவிர, அவன் விளைத்த வீரப் போரின் விவரத்தை யாராலும் மறைக்க முடியாது. முடியவும் இல்லை. வாழ்க திருப்பூர் குமரனின் புகழ்! 5 சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார் [] ம.பொ.சி. இந்த மூன்றெழுத்துக்கு அபூர்வமான காந்த சக்தி உண்டு. சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு அரசியலிலும் சரி, இலக்கிய உலகிலும் சரி இந்த மூன்றெழுத்து மனிதர் செய்த சாதனைகள் அபாரமானவை. இவரிடம் என்ன காந்த சக்தியா இருந்தது? அன்றைய தமிழ் உணர்வுள்ள இளைஞர்களை இவர் அப்படி கவர்ந்திழுத்து வைத்துக் கொண்டார். அவர் மேடைப் பேச்சை, அப்படியே பதிவு செய்து அச்சிட்டால், ஒரு சிறிதுகூட இலக்கணப் பிழையின்றி, சொற்றொடர் அழகாக அமைந்து, வாய்விட்டுப் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்திருக்கும். தோற்றத்தில் மட்டுமென்ன? அந்த ஆழ்ந்து ஊடுறுவும் கரிய கண்கள். அபூர்வமான மீசை. படியவாரப்பட்ட தலை, வெள்ளை வெளேரென்ற தூய கதராடை, முழுக்கைச்சட்டை, தோளில் மடித்துப் போடப்பட்ட கதர் துண்டு. மேடையில் அவர் நிற்கும் தோரணையே ஒரு மாவீரனின் தோற்றம் போலத்தான் இருக்கும். ஆனால் … அந்த மனிதர் சிறைவாசம் கொடுத்த கொடிய வயிற்றுப்புண்ணால் அவதிப்பட்டவர். சூடான அல்லது காரமான எதையும் சாப்பிட முடியாதவர். தயிர் மட்டும் விரும்பிச் சாப்பிடும் அப்பட்டமான தேசிய வாதி. ஆம்! அந்த தமிழினத் தலைவன்தான் ம.பொ.சி. [] இது என்ன? யாருக்கும் இல்லாத தனி நபர் வர்ணனை என்று நினைக்கலாம். இவர் வேறு யாரைப் போலவும் இல்லாமல் பல கோணங்களிலும் புதுமை படைத்தவர். இவர் செல்வந்தரல்ல! மிக மிக ஏழை. வடதமிழ் நாட்டில் கள்ளிறக்கும் தொழில் புரியும் கிராமணி குலத்தில் பிறந்தவர். அடிப்படைப் பள்ளிக் கல்வி என்றால் இவர் படித்தது மூன்றாம் வகுப்பு மட்டுமே. ஆனால், இன்றைய நிலையில் பல முனைவர் பட்டங்களைப் பெறக்கூடிய தகுதி பெற்ற கல்வியாளர். தமிழ் இவரது மூச்சு. தமிழ்நாடு இவரது உயிர் உறையும் புனிதமான இடம். முதன்முதலில் “உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு” என்றும், “மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்றும், “தலைகொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்றும் குரல் கொடுத்து சென்னையை தமிழ்நாட்டுக்குத் தக்கவைத்துக் கொள்ளவும் பாடுபட்டவர். வடவேங்கடமும் தென்குமரியும் இடையிட்ட தமிழகத்தைப் பிரித்துக் கொடுக்க மாட்டோம் என்று, மாநிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டபோது வடவேங்கடத்தை மீட்போம் என்று போரிட்ட வீரத் தளபதி. திருப்பதி மட்டுமல்ல, திருத்தணியும் ஆந்திரத்துக்குப் போய்விட்டது. உடனே வட எல்லைப் போராட்டம் தொடங்கியதன் பலன் இன்று திருத்தணியாவது நமக்கு மிச்சமானது. தென் குமரி திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்டதாக இருந்தது. தெற்கெல்லை மீட்க நேசமணி போன்றோர்களுடன் இணைந்து போராடினார், இன்று குமரி தமிழ்நாட்டின் தெற்கெல்லையாக இருக்கிறது. தேவிகுளம் பீர்மேடு தமிழகத்துக்குச் சொந்தம் என்று போராடினார், “குளமாவது மேடாவது” என்று உடன்பிறந்தோரே கேலி செய்ததன் பலன் இவரது போராட்டம் தோல்வி கண்டது. தமிழிலக்கியத்தில் சிலப்பதிகாரம் எனும் காப்பியத்தைப் பட்டி தொட்டிகளில் எல்லாம் பிரச்சாரம் செய்த பலன் இன்று அந்த காப்பியம் தமிழர் நாவிலெல்லாம் மணம் வீசுகிறது. கம்பனைச் சிலர் சிறுமைப் படுத்தியும், கம்பராமாயணத்தை எரித்தும் வந்த நேரத்தில், இவர் கம்பனின் பெருமையை உலகறியச் செய்து, தனது ‘தமிழரசுக்கழக’ மாநில மாநாட்டின் போதெல்லாம் முதல் நாள் மாநாடு இலக்கிய மாநாடு என்று பெயரிட்டு, இலக்கியங்களை பரவச் செய்த பெருமை இவருக்கு உண்டு. இப்படிப் பல பெருமைகள், பல முதன்மையான செயல்பாடுகள் சொல்லிக்கொண்டே போகலாம். கட்டுரை நீண்டுவிடும். அந்தப் பெருமகனார் தமிழக வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடித்த புடம் போட்டெடுத்த தியாக புருஷன். அவர் வரலாற்றைச் சிறிது பார்ப்போமா? [] வளமையான குடும்பத்தில் பிறந்து, வாய்ப்பும் வசதியும் நிரம்பப்பெற்றதன் பயனாகப் பல பெருந்தலைகளோடு பழக்கம் வைத்துத் தலைவனானவர்கள் பலர். கல்வியில் சிறந்து பட்டம் பெற்று, புகழ் பரவிநின்றதன் பயனாகப் பொது வாழ்க்கையிலும் தலையிட்டு முன்னேறியவர்கள் பலர். பெருந்தலைகளின் உதவியால் கைதூக்கி விடப்பட்டு பிரபலமானவர் சிலர். இப்படி எதுவும் இல்லாமல், மிகமிக ஏழைக் குடும்பத்தில் பிறந்து, வறுமை ஒன்றையே சொத்தாகக் கொண்ட ஒருவர், ஆரம்பக் கல்வியைக்கூட முடிக்கமுடியாத சூழலில், தான் பிறந்த குடியினரின் குலத்தொழிலான கள்ளிறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் எதிர்ப்பைத் தனது கள் எதிர்ப்பினால் ஏற்படுத்திக் கொண்டு திண்டாடிய ஒரு தொழிலாளியின் வரலாறு இது. இவர் செய்த தொழில்கள் பல. அதிலெல்லாம் இவர் முத்திரை பதித்தார். பின் எப்படிப் படித்தார். இவர் ஏற்றுக்கொண்ட அச்சுக்கோர்க்கும் தொழிலில்தான் அவருக்கு இந்த பலன் கிட்டியது. இப்போது போல அல்லாமல் அன்றைய தினம் அச்சடிப்பதற்கு விஷயத்தை ஒவ்வொரு எழுத்தாக அச்சு கோர்த்துத்தான் செய்து வந்தார்கள். அந்த பணி இவருக்கு. அங்கு விஷயம் அச்சில் ஏற ஏற இவர் மனத்தில் தமிழ் படிப்படியாக அரங்கேறத் தொடங்கியது. முதலில் இவரை ‘கிராமணி’ என்றும் ‘கிராமணியார்” என்றும்தான் அழைத்தனர். அவ்வளவு ஏன்? ராஜாஜி கடைசி வரை இவரை ‘கிராமணி’ என்றுதான் அழைத்து வந்தார். இவர் அவரை ராமராகவும், தன்னை அனுமனாகவும் வர்ணித்து எழுதியும் பேசியும் வந்த உண்மையான ராஜாஜி தொண்டன் இவர். இவரது பணி சிறக்கச் சிறக்க சிலப்பதிகாரத்தை இவர் பிரபலமாக்க “சிலம்புச் செல்வர்” என்ற அடைமொழி இவர் பெயருக்கு முன் சேர்ந்து கொண்டது. வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு மிக உயர்ந்த இடத்தைப் பிடித்தவர் சிலம்புச்செல்வர். [] V.O.Chidambaram Pillai சென்னையில் தேனாம்பேட்டைப் பகுதியில் வாழ்ந்த பொன்னுச்சாமி கிராமணியார்தான் இவரது தந்தை. தாயார் சிவகாமி அம்மையார். இவர்தான் ம.பொ.சியை உருவாக்கியவர். இவர் சொன்ன புராணக் கதைகள், நீதிக் கதைகள், பாடல்கள் இவைதான் இவரை ஓர் சத்திய புருஷராக உருவாகக் காரணமாக இருந்தன. இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ஞானப்பிரகாசம். பிந்நாளில் ஞானப்பிரகாசமாக விளங்குவார் என்று எப்படித்தான் அவர்களுக்குத் தெரிந்ததோ? பெற்றோரிடம் இவருக்கு அதீதமான பக்தி, அதிலும் தாயார் என்றால் அவருக்குக் கடவுளாகவே நினைப்பு. இவரும் படிக்கத்தான் பள்ளிக்குச் சென்றார். ஆனால் உடன் பிறந்த வறுமை, இவரால் புத்தகம் வாங்கக்கூட முடியாமல் மூன்றாம் வகுப்பிலிருந்து துரத்தப்பட்டார். ஆனாலும் அன்னை கொடுத்த கல்வி, அவரது ஆயுளுக்கும் பயன்பட்டது. முன்னமேயே சொன்னபடி இவர் பல தொழில்களை வயிற்றுப் பிழைப்புக்காகச் செய்தார். நெசவுத்தொழில் செய்தார். அச்சுக்கோக்கும் பணியினைச் செய்தார். இவர் காந்திஜி, ராஜாஜி இவர்களைப் பின்பற்றி மதுவிலக்குக் கொள்கையில் மிக திடமாக இருந்த காரணத்தால் இவரது உறவினர், ஜாதியினர் கூட இவரை வெறுத்து ஒதுக்கும் அளவுக்குப் போய்விட்டார்கள். இவரை ஜாதிப்பிரஷ்டம்கூட செய்து விட்டனர். இவ்வளவு கஷ்ட தசையிலும் இவர் நாட்டை நினைத்தார், குடிப்பழக்கத்தினால் அழிந்து போய்க்கொண்டிருக்கும் ஏழை எளியவர்களை நினைத்தார், நம்மை அடக்கி ஆண்டுகொண்டிருக்கும் வெள்ளை பரங்கியர்களை எப்படி விரட்டுவது என்று எண்ணமிட்டார். பதினைந்து ஆண்டுகள் வசித்துவந்த இவர்களது ஓலைக்குடிசை ஒருநாள் தீப்பற்றிக்கொண்டது. இவரது ஆழ்ந்த இறை நம்பிக்கை இவரைக் காப்பாற்றியது. 1928இல் இவருக்குத் திருமணம் ஆயிற்று. மிகக் குறைந்த நாட்களிலேயே அந்த இளம் மனைவி கூற்றுக்கு இரையாகி விட்டார். இனி தேச சேவைதான் நமக்கு என்று மறுபடி திருமணம் செய்து கொள்ளாமலேயே நாட்டுப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். என்றாலும் பெற்றோரும் சுற்றத்தாரும் விடுவார்களா? 1937இல் தனது 31ஆம் வயதில் தனது மாமன் மகளான 17 வயது ராஜேஸ்வரியைத் திருமணம் செய்து கொண்டார். [] Rajaji அன்றைய பிரபலமான தேசபக்தரும், தமிழ்நாட்டுப் பெருந்தலைவர்களில் ஒருவரும், “தமிழ்நாடு” எனும் தினப்பத்திரிகையை நடத்தி வந்தவருமான டாக்டர் வரதராஜுலு நாயுடுவிடம் இவர் அச்சுக்கோக்கும் பணியில் சேர்ந்தார். அங்கு ஒரு தொழிலாளர் பிரச்சினை. அது முடிந்ததும் தொழிலாளர்கள் அனைவரும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். போராடிய ம.பொ.சி. மட்டும் வெளியேற்றப்பட்டார். விதி விளையாடியது. மறுபடியும் வேலை தேடி அலையும் நிலைமை. அப்போது அவரது உறவினர் இவரைத் தன் கள்ளுக்கடையில் கணக்கு எழுத அதிக சம்பளம் ரூ.45 கொடுத்துக் கூப்பிட்டார். இவருக்கு கள்ளுக்கடைக்குப் போக இஷ்டமில்லை. மறுபடி அச்சுக்கோக்கும் பணியில் ரூ.18 சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இவருக்கு சொத்து பத்து எதுவும் கிடையாது. மனைவியின் வழியில் வந்த ஒரு வீட்டில் இவர் வாழ்ந்தார். இவரது பொது வாழ்க்கை விடுதலைப் போரில் செலவழிந்தது. இருபதாண்டு காங்கிரஸ் உறவில் இவர் ஆறுமுறை சிறை சென்றார். முதல் வகுப்பு கைதியாக அல்ல. மூன்றாம் தர கிரிமினல்களுடன் வாழும் ‘சி’ வகுப்பு கைதியாக. கடைசி காலத்தில் இவரது புகழ், அந்தஸ்து இவை உயர்ந்த காலத்தில்தான் இவருக்கு ‘ஏ’ வகுப்பு கிட்டியது. [] இவர் கைதாகி அமராவதி சிறையில் இருந்த காலத்தில் உடல் நலம் குன்றி, உயிருக்குப் போராடும் நிலைமைக்கு வந்து விட்டார். சிறையில் இவருடன் இருந்த பல தலைவர்களும் இவருக்கு வைத்தியம் செய்ய ஏற்பாடுகளைச் செய்தனர். வி.வி.கிரி அவர்கள் இவருடன் சிறையில் இருந்தார். அவர்தான் இவரை அவ்வூர் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க உதவினார். சிறையில் இவர் நடைப்பிணமாகத்தான் இருந்தார். மகாகவி பாரதியைப் போல இவரும் தனது முப்பத்தியொன்பதாம் வயதில் கிட்டத்தட்ட உயிரை விட்டுவிடும் நிலைமைக்கு வந்து விட்டார். இவரை மேலும் அங்கே வைத்திருந்தால் இறந்து போனாலும் போய்விடுவார் என்று இவரை வேலூர் சிறைக்கு மாற்றினர். இவர் பரோலில் வீடு சென்றபோது இவரை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை. அந்த அளவுக்கு இவர் உடல் மெலிந்து, முகத்தில் மீசை மட்டும்தான் இருந்தது. 1942 ஆகஸ்ட் 13ம் தேதி இவர் சிறை செல்லும்போது இவரது எடை 119 பவுண்டு. வேலூர் சிறையில் 1944 ஜனவரியில் இவரது எடை 88 பவுண்டு. அங்கிருந்து இவர் மீண்டும் தஞ்சை சிறப்பு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இங்கு இவர் கிட்டத்தட்ட இறக்கும் தருவாய்க்கு வந்து விட்டார். அதனால் இவரை உடனடியாக விடுதலை செய்து சென்னைக்கு ரயில் ஏற்றிவிட்டனர். தஞ்சை சிறையிலிருந்து குறுக்கு வழியாக தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு இரவு 10-30க்குக் கிளம்பும் ராமேஸ்வரம் போட்மெயிலில் ஏற்றிவிட இருவர் இவரை ஒரு ஸ்ட்ரெச்சரில் போட்டுத் தூக்கிக்கொண்டு போகும் போது அரை நினைவிலிருந்த இவருக்கு யாரோ சாலையில் போனவர் சொன்னது காதில் விழுந்ததாம். “ஐயோ பாவம்! ஏதோ ஒரு அனாதை பிணம் போலிருக்கிறது” என்று. என்ன கொடுமை? மறுநாள் சென்னை எழும்பூரில் இவரை அழைத்துச் சென்றனர். இவரது சிறை வாழ்க்கை, பட்ட துன்பங்கள், இவரது உடல் நிலை இவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் முடிவே இருக்காது. அடுத்ததைப் பார்ப்போம். இவர் வடசென்னை மதுவிலக்குப் பிரச்சாரக் குழு, ஹரிஜன சேவை, கதர் விற்பனை இப்படியெல்லாம் பணி செய்திருக்கிறார். வடசென்னை காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருந்திருக்கிறார். பல ஆண்டுகள் சிறை வாசம், பலமுறை சிறைப் பிரவேசம், உடல்நிலைக் கோளாறு, இப்படி மாறிமாறி துன்பம் துன்பம் என்று அனுபவித்த ம.பொசிக்கு சுதந்திரம் கிடைத்த பிறகாவது நல்ல காலம் பிறந்ததா என்றால், அதுவும் இல்லை. அதுவரை அவருக்கு அதாவது சுதந்திரம் வரை ஆங்கிலேய ஏகாதிபத்தியம்தான் எதிரி. சுதந்திரத்துக்குப் பிறகு ஏராளமான எதிரிகள், உள் கட்சியிலும், எதிர் கட்சியிலும். எல்லாம் அவர் பிறந்த நேரம். [] சுதந்திரத்துக்குப் பிறகு சென்னை மாகாணத்தைப் பிரித்து விஷால் ஆந்திரா வேண்டுமென்று உண்ணாவிரதமிருந்து உயிரைவிட்டார் பொட்டி ஸ்ரீராமுலு என்பவர். உடனே கலவரம். நேரு மாநிலங்களைப் பிரிக்க ஒரு குழு அமைத்தார். அதன் சிபாரிசுப்படி தமிழ்நாடு தனியாகவும், ஆந்திரம் தனியாகவும் பிரிக்கப்பட்டது. அப்போதைய சித்தூர் மாவட்டம் முழுவதும் ஆந்திரத்துக்குப் போயிற்று. அந்த மாவட்டத்தில்தான் புகழ்மிக்க க்ஷேத்திரங்களான திருப்பதி, திருத்தணி முதலியன இருந்தன. Kavi Ka.Mu.Sheriff இவர் திருப்பதியை மீட்க போராட்டம் தொடங்கினார். காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு இதுபோன்ற கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பது தமிழ்நாடு காங்கிரசின் கொள்கை. என்ன செய்வது. காங்கிரசை விட்டு வெளியேறினார். அவர் அதற்கு முன்பே கலாச்சார கழகமாக ஆரம்பித்திருந்த “தமிழரசுக் கழகத்தை” எல்லைப் போராட்டதில் ஈடுபடுத்தித்தானும் போரில் ஈடுபட்டார். எந்த காங்கிரசுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் தியாகம் செய்தாரோ அந்தக் கட்சி இவரை தூக்கி வெளியில் எறிந்து விட்டது. போர் குணம் இவருக்கு உடன் பிறந்ததாயிற்றே. விடுவாரா. இவரும் முழு மூச்சுடன் போராட்டத்தில் இறங்கினார். திருப்பதி கிடைக்காவிட்டாலும் திருத்தணி தமிழ்நாட்டுக்குக் கிடைத்தது. அதில் இவருக்கு கே.விநாயகம் எனும் ஒரு தளபதியும் கிடைத்தார். இவர் திருத்தணியில் வழக்கறிஞராக இருந்தவர். பின்னாளில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிங்கம் போல நின்று வாதிட்டவர். ம.பொ.சிக்குத் துணையாக அன்று காங்கிரசிலிருந்து சின்ன அண்ணாமலை, ஜி.உமாபதி, கவி கா.மு.ஷெரீப், கு.மா.பாலசுப்பிரமணியம், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, வேலூர் கோடையிடி குப்புசாமி போன்றவர்கள் தமிழரசுக் கழகத்துக்கு வந்தனர். முன்பே கூறியபடி தெற்கெல்லை போராட்டத்திலும் ஈடுபட்டார். தேவிகுளம் பீர்மேடு பகுதிகளைத் தமிழகத்தில் சேர்க்க வேண்டுமென்று போராடினார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேரள முதலமைச்சர், கேரள காங்கிரஸ் இவற்றோடு பேசிய பின், குளமாவது, மேடாவது என்று பேச, அந்தப் போராட்டம் தோல்வியில் முடிந்தது. இவர் எந்த இயக்கத்துக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடினாரோ, அங்கு இவருக்கு எந்த பெருமையும் கிடைக்கவில்லை. ஆனால் இவர் ‘திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு” என்று அடிக்கடி நடத்தினார். அந்த திராவிட இயக்கத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். காலத்தில் இவருக்கு மேலவைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. இவரை அப்போது எல்லோரும் கேலி செய்தனர். எதிரியின் காலடியில் விழுந்து விட்டார் ஆதாயம் தேடி என்று. போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் இறைவனுக்கே என்று இவர் ஒரு கர்ம வீரராக வாழ்ந்தார். []Kamaraj சுதந்திரதின பொன்விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் சுதந்திரப் போடில் சிறப்பிடம் வகித்த சில இடங்களிலிருந்தெல்லாம் புனித மண் எடுத்து அதையெல்லாம் டில்லியில் காந்திசமாதி ராஜ்காட்டுக்குக் கொண்டு செல்ல ஏற்பாடாகியது. அந்த இயக்கத்தில் 1930இல் ராஜாஜி உப்பெடுத்து சத்தியாக்கிரகம் செய்த வேதாரண்யத்தில் புனித மண் எடுக்கும் பொறுப்பினை எம்.ஜி.ஆர். ம.பொ.சிக்குக் கொடுத்தார். தள்ளாத வயதிலும் அவர் அங்கு சென்று புனித மண் எடுத்து வந்து டில்லியில் சேர்த்தார். அதைப்பற்றி அவர் எழுதிய நூலில் அந்த பயணம் முழுவதிலும் காங்கிரஸ்காரர்கள் யாரும் வந்து கலந்து கொள்ளவோ, சந்திக்கவோ இல்லை என்று எழுதியிருந்தார். ஒரு கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் உடனிருந்தாராம். தஞ்சை ரயில் நிலையத்தில் அன்றைய நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் சிங்காரவடிவேல் அவர்கள் டில்லி செல்வதற்காக நின்றிருந்த போது ம.பொ.சியைச் சந்தித்துப் பேசினாராம். தன் வாழ்நாள் எல்லாம் ராஜாஜியின் அந்தரங்க தொண்டராக இருந்தவர் இவர். எந்த பதவியையும் கேட்டுப் பெறாதவர் இவர். ராஜாஜி சுதந்திரா கட்சி தொடங்கிய போது எவ்வளவோ கூப்பிட்டும் ம.பொ.சி. அந்தக் கட்சிக்குப் போகவில்லை. ராஜாஜி 1952இல் மந்திரிசபை அமைத்தபோது தஞ்சை நிலசீர்திருத்த சட்டம் 60:40 அவசரச்சட்டம் அமலாகியது. அந்த அவசரச் சட்டம் அமலாகிய தினம் ராஜாஜி தஞ்சை ராமநாதன் செட்டியார் ஹாலில், தஞ்சை நிலப்பிரபுக்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசுவதாக ஏற்பாடு. அதுவரை இப்படியொரு சட்டம் வருகிறது என்பது யாருக்கும் தெரியாது. காலையில் ராஜாஜி வந்து விட்டார். அன்றைய “தி ஹிந்து” பத்திரிகையில் அவசரச்சட்டம் பற்றிய செய்தி வருகிறது. கூட்டம் ஏற்பாடு செய்தவர்கள் மத்தியில் என்ன செய்வது கூட்டத்தை ரத்து செய்வதா என்ற நிலை. ராஜாஜி கூட்டத்தில் எதிர்ப்புக்கிடையே பேசினார். அந்தக் கூட்டத்தில் சி.சுப்பிரமணியமும், ம.பொ.சியும்தான் அவசரச் சட்டத்தை விளக்கிப் பேசினர். ஒருவழியாக நிலப்பிரப்புக்கள் சமாதானமாகி கூட்டம் முடிந்தது. ஆனால் தஞ்சை மாவட்டம் முழுவதும் எதிர்ப்பு அதிகமானதால், ராஜாஜி ம.பொ.சியிடம் நீங்கள் தஞ்சை மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எல்லா இடங்களிலும் சட்டத்தை விளக்கிப் பேசி அனைவரும் ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டுமென்று பணித்தார். அவரும் அதுபோலவே ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்தார். மாயவரத்தில் பேசும்போது இவர் கற்களால் தாக்கப்பட்டு காயமடைந்தார். பொதுத் தொண்டில் சுதந்திர இந்தியாவிலும் அடிபட்ட தேசபக்தர் ம.பொ.சி.மட்டும்தான். [] இந்த மாமனிதன் நெடுநாள் வாழ்ந்தார். மூன்றாம் வகுப்புப் படித்திருந்தாலும் டாக்டர் பட்டம் இவரைத் தேடி வந்தது. இவர்1995ஆம் வருடம் அக்டோபர் 3ம் தேதி தனது 89ஆம் வயதில் காந்தி பிறந்த நாளுக்கு அடுத்த நாள் உயிர் நீத்தார். வாழ்க ம.பொ.சி. புகழ்! வாழ்க தமிழ்! 6 கோவை சுப்ரமணியம் என்கிற "சுப்ரி" கொங்கு நாடு தந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் வரிசையில் கோவை சுப்ரமணியம் என்கிற “சுப்ரி” அவர்களுக்கு ஓர் முக்கிய இடம் உண்டு. நம் சுதந்திரப் போரில் பங்கு கொண்ட சர்வபரித்தியாகம் செய்தவர்களில் பலருடையெ பெயர் இன்று எவருக்கும் தெரியாமல் போனது நமது பாரத தேவியின் துரதிருஷ்டமே. தமிழ்நாட்டில் எதிர்மறை நாயகர்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் கதாநாயகர்களுக்குத் தரப்படுவதில்லை. ஒரு கோயில் பட்டாச்சாரியார் கோயில் கருவறையில் படுகொலைச் செய்யப்படுகிறார். கொலைகாரர்கள் பெருமாளின் நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்று விடுகின்றனர். படுகொலை செய்யப்பட்ட அந்த பட்டாச்சாரியாரின் குடும்பம் எப்படியெல்லாம் வருந்துகிறது என்பது நமது ஊடகங்களின் கண்களுக்குத் தென்படவில்லை. ஆனால், அந்த கொலைகாரன் சிறையில் எப்படி வருந்துகிறான் என்று எழுதியது தமிழ்நாட்டின் மிகப்பெரிய வாரமிருமுறை தமிழ்ப் பத்திரிகை. நமது பத்திரிகை தர்மத்தை நினைத்து வருத்தப்படுவதா, நமக்காக உயிர்த்தியாகம் செய்த நாட்டு விடுதலைப் போராட்டத் தியாகிகளை அறவே மறந்துபோன தமிழ்ச் சமுதாயத்தை நினைத்து வருத்தப்படுவதா? வேண்டாம் இந்தக் கவலையைத் தூர எறிந்துவிட்டு “சுப்ரி” அவர்களின் வரலாற்றைப் பார்ப்போம். கோயம்புத்தூரில் அந்த காலத்தில் சலிவன் தெரு என்று ஒரு தெரு உண்டு. கோவை வேணுகோபால சுவாமி தெப்பக்குள வீதிதான் அது. அதற்கு “சுப்ரி” தெரு என்றொரு பெயர் உண்டு. கோவை மாவட்டத்தில் காங்கிரஸ் இயக்கம் தோன்றி வளர காரணமாக இருந்தவர்களுள் சுப்ரி அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. தோற்றத்தில் மிகவும் மெலிந்தவர், மன உறுதியில் எஃகினைக் காட்டிலும் உறுதி படைத்தவர். இவர் அப்போதைய கோவை, ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் அடங்கிய காங்கிரஸ் குழுவுக்குச் செயலாளராக இருந்து ஏறக்குறைய எல்லா அனைத்திந்திய காங்கிரஸ் மாநாடு களுக்கெல்லாம் சென்று வந்தவர். கோவை மாவட்டத்தில் கட்சிக்கு கிராமம் தோறும் கிளைகளைத் தோற்றுவித்தவர். 1921இல் நாக்பூரில் நடந்த கொடிப் போராட்டத்துக்கு இவர் சுமார் 12 தொண்டர்களோடு சென்று கலந்து கொண்டு ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். இவருடைய தந்தையார் பெயர் கிருஷ்ண ஐயர். 1924ஆம் ஆண்டில் கோவை மாவட்டத்தில் பயங்கர வரட்சி ஏற்பட்டது. மக்கள் பட்டினியால் மடிந்தனர். அரசாங்கம் இதை அதிகம் பொருட்படுத்தாமல் அலட்சியம் காட்டியது. ஆனால் சுப்ரி அவர்கள் அவிநாசிலிங்கம் செட்டியார், சி.பி.சுப்பையா ஆகியோருடன் சேர்ந்து பல நிவாரண உதவிகளைச் செய்து மக்கள் மாண்டுபோகாமல் காத்தனர். 1925இல் அகில இந்திய நூற்போர் சங்கம் திருப்பூரில் தொடங்கப்பட்டது. இதனைத் தொடங்க கதர் இயக்கத்தின் நாயகரான கோவை அய்யாமுத்து அவர்களோடு சேர்ந்து சுப்ரியின் பங்களிப்பு முக்கியமானது. இந்த சங்கம் திருப்பூரில் தொடங்கப்பட்ட காலத்துக்குப்பின் கதர் உற்பத்தில் பல கிராமங்களிலும் அதிகரித்தது. 1929இல் லாகூரில் கூடிய காங்கிரஸ் மகாநாட்டில் பூரண சுதந்திரப் பிரகடனம் வெளியிடப்பட்டது. ஜனவரி 26ஆம் தேதியை நாட்டின் விடுதலை நாளாகக் கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவினை கோவை மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சுப்ரி அவர்களும் மற்ற தேசபக்தர்களும் மக்களுக்குத் தெரிவித்தனர். 1930இல் மகாத்மா காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்ட போது அந்த போராட்டம் நடைபெற்ற அனைத்து நாட்களும் சுப்ரி கோவையில் ஊர்வலங்களை நடத்தினார். இந்தப் போராட்டத்தில் சுப்ரி ஒரு வருஷம் கடுங்காவல் தண்டனை பெற்றார். அவிநாசிலிங்கம் செட்டியார், பாலாஜி போன்றவர்களும் தண்டிக்கப்பட்டனர். 1932இல் அந்நிய ஆங்கில அரசு இந்திய காங்கிரஸ் இயக்கத்தை சட்ட விரோதமானது என்று தடை செய்தபோது தலைவர்கள் அடக்குமுறைக்கு ஆளாகினர். அப்போது அந்த அடக்குமுறைச் சட்டத்தை எதிர்த்து போராடியதற்காக சுப்ரி, அவரது இளம் மனைவி கமலம், தாயார் பாகீரதி அம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மூவருக்கும் ஆறுமாத கடுங்காவல் தண்டனை கிடைத்தது. இந்த காலகட்டத்தில்தான் திருப்பூரில் போலீசாரின் தடியடியில் குமாரசாமி எனும் தொண்டர் (திருப்பூர் குமரன்) காலமானார். 1933இல் மறுபடியும் அந்நிய துணிக்கடை மறியலில் ஈடுபட்டு இவரது மனைவி கமலம், மற்ற தொண்டர்களான அம்புஜம் ராகவாச்சாரி, முத்துலட்சுமி, நாராயண சாஸ்திரி ஆகியோர் நான்கு மாத சிறை தண்டனை பெற்றனர். அதே ஆண்டில் ராஜாஜி தலைமையில் திருச்செங்கோட்டில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்து கொண்டமைக்காக சுப்ரி, திருமதி சுப்ரி, கோவிந்தம்மாள், அய்யாமுத்து, உடுமலை சாவித்திரி அம்மாள், பி.எஸ்.சுந்தரம், அவரது மனைவி, தாயார் ஆகியோர் கைதாகி ஆறுமாத தண்டனை பெற்றனர். சுப்ரி அகில இந்திய தலைவர்கள் பலரை அழைத்து வந்து கோவை, நீலகிரி மாவட்டங்களில் கூட்டங்களை நடத்தினார். ராஜாஜியுடன் இவர் வேலூர், கடலூர் சிறைகளில் இருந்திருக்கிறார். சுப்ரி அவர்களுக்கு ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் உண்டு. காந்தியடிகளின் சொற்பொழிவுகளை தமிழில் மொழிபெயர்க்கும் வேலையை இவர் செய்து வந்ததனால், இவரை “மை லெளட் ஸ்பீக்கர்” என்றே காந்தி அன்போடு அழைத்தார். 1934இல் நடந்த தேர்தலில் அவிநாசிலிங்கம் செட்டியாரின் வெற்றிக்காக இவர் மிகவும் பாடுபட்டார். 1937இல் நடந்த சட்ட சபை தேர்தலிலும் கோவை நீலகிரி மாவட்டங்களில் காங்கிரசின் வெற்றிக்கு உழைத்தார். 1941இல் ஜாலியன்வாலாபாக் தினமாக அனுசரித்து கூட்டம் நடத்திய காரணத்துக்காக சிறை தண்டனை பெற்று பொள்ளாச்சி கொண்டு செல்லப்பட்டார். 1942இல் “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தில் இவர் பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு வேலூர், தஞ்சாவூர் சிறைகளில் தண்டனை அனுபவித்தார். பிறகு இரண்டு ஆண்டுகள் சிறையில் கழித்தபின் பொது விடுதலையின்போது விடுதலையாகி வெளியே வந்தார். இவர் கோவை மாவட்ட காங்கிரஸ் செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸின் செயற்குழு உறுப்பினர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், கோவை நகர சபை தலைவர்; 1947-52 காலகட்டத்தில் சென்னை சட்டசபை உறுப்பினர் இப்படி பல நிலைகளில் பணியாற்றியிருக்கிறார். இவர் முருகப் பெருமானைக் குறித்து ஏராளமான பாடல்களையும் எழுதியிருக்கிறார். அதற்கு “முருக கானம்” என்று பெயரிட்டார். 90 வயதையும் தாண்டி இளமையோடு வாழ்ந்த மறக்கமுடியாத விடுதலை வீரர் “சுப்ரி”. வாழ்க அவரது புகழ்! 7 சுப்பிரமணிய சிவா [] இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்திய சுதந்திர வரலாற்றில், பால கங்காதர திலகர் காலத்தில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த மூவர் மறக்கமுடியாத தியாகசீலர்களாவர். இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் சுதந்திர தாகம் ஏற்பட காரணமாயிருந்த அம்மூவரில் ஒருவர் தான் சுப்பிரமணிய சிவா. மற்ற இருவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை, எட்டயபுரம் தந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோராவர். மற்ற இருவரைப் பற்றி இந்த வலைத்தளத்தில் வேறோர் இடத்தில் வரலாற்றைக் கொடுத்திருக்கிறோம். இப்போது ‘வீரமுரசு’ எனப் புகழப்படும் சுப்பிரமணிய சிவா பற்றி பார்ப்போம். வீரத்துறவி என்று தலைப்பில் கொடுத்துவிட்டு, இவர் ஓர் சுதந்திரப்போராட்ட வீரர் என்கிறீர்களே என ஐயப்பாடு எழலாம். ஆம்! இவர் அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்தே சுதந்திரத்துக்காகப் போராடினார், ஆகையால் இந்தத் தலைப்பு அவருக்கு மிகவும் பொருந்தும். இவர் பிறந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு. இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள். இவருக்கு இரு சகோதரிகள் அவர்கள் ஞானாம்பாள், தைலாம்பாள். ஒரு சகோதரரி வைத்தியநாதன் என்று பெயர். இவர் கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் படித்தார். மெட்ரிகுலேஷன் தேர்வில் தோற்றார். தூத்துக்குடியில் போலீஸ் ஆபீசில் அட்டெண்டராக வேலை பார்த்தார். வாழ்க்கையில் விரக்தியுற்று துறவியானார்.அவர் நினைவாக அவ்வூரின் பேருந்து நிலையம் இவர் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த தியாகிக்குச் செலுத்தும் அஞ்சலி அது. சிறு வயதில் வறுமைக்கு ஆட்பட்டு திருவனந்தபுரம் சென்று அங்கு இலவசமாக உணவு படைக்கும் ஊட்டுப்புறையில் உண்டு வசித்தார். அங்கிருக்கும் நாளில் இவருக்கு தேசபக்தி இயல்பாக உண்டாகியது. தன் உள்ளத்தில் ஏற்பட்ட தேசபக்தியை இவர் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். 1906இல் கர்சான் வங்கத்தை மதரீதியில் இரண்டாகப் பிளந்தான். நாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் ‘வந்தேமாதரம்’ எனும் சுதந்திர கோஷம் எழுந்தது. அப்போது தூத்துக்குடியில் வக்கீல் ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனி தொடங்கினார். சிதம்பரம் எனும் காந்தம் சிவா எனும் இரும்பைத் தன்வசம் இழுத்துக் கொண்டது. இவர்களின் சுதேச உணர்வைத் தன் ‘சுதேச கீதங்களால்’ பாரதியார் தூண்டிவிட்டார். சிதம்பரம் பிள்ளை பேசும் கூட்டங்களில் எல்லாம் இவரும் வீரவுரையாற்றினார். அவர் பேச்சில் அனல் வீசியது. அந்த சமயம் சென்னை கடற்கரையில் தேசபக்தர் விபின் சந்திர பால் வந்து தொடர்ந்து சொற்பொழிவாற்றினார். தெற்கில் இம்மூவரின் மேடைப்பேச்சு, சென்னையில் பாலரின் சொற்பொழிவு இவை சேர்ந்து சுதந்திர நாதம் எங்கும் எதிரொலிக்கத் தொடங்கியது. 1907இல் சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு காங்கிரசில் திலகரின் கை ஓங்கியது. அப்போது தூத்துக்குடியில் சிவா தொடர்ந்து மேடைகளில் சுதந்திரம் கேட்டு முழங்கினார். அதோடு தூத்துக்குடி கோரல் மில் வேலை நிறுத்தம் வெற்றி பெறவும் பாடுபட்டார். தொழிலாளர் பிரச்சினையிலும் இவர் கவனம் சென்றது. அந்தக் காலத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தித் தலைவர்கள் பேசிவந்தார்கள். சிவாவும் தன் பேச்சு துவங்கு முன்பாக ‘வந்தேமாதரம்’, ‘அல்லஹுஅக்பர்’, என்று முழக்கமிடுவாராம். தெற்கே சுதந்திரக் கனல் பரவி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள், வ.உ.சி. சிவா உட்பட பலர் மீது வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் வ.உ.சி. தீவாந்தர தண்டனை பெற்றதும், அப்பீலில் அது குறைக்கப்பட்டதும் நமக்குத் தெரியும். சிவா சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் முதலில் ஆறாண்டு காலம் சிறை தண்டனை பெற்று ஜுலை 1908 முதல் நவம்பர் 1912 வரை சிறையிலிருந்தார். இவருடைய சிறை வாழ்க்கையில் இவர் அனுபவித்தத் துன்பம் சொல்லத் தரமன்று. சிறை இவருக்கு அளித்த சீதனம் பார்த்தவர் அஞ்சும் தொழுநோய். இதனை அவர் “கொடியதோர் வியாதி கொல்லுது என்னை” என்று ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். 1912இல் இவர் சென்னை மயிலாப்பூரில் குடியேறினார். சென்னையில் இவர் இருந்த நாட்களில் இவர் தன்னுடன் ஒரு தொண்டரை அழைத்துக் கொண்டு ஒரு மேஜை, நாற்காலி இவற்றையும் அத்தோடு ஒரு பெட் ரோமாக்ஸ் விளக்கையும் எடுத்துக் கொண்டு கடற்கரைக்குச் செல்வார். அங்கு மக்கள் கூடும் ஒரு நல்ல இடத்தில் மேஜையைப் போட்டு அதன் மீது ஏறி நின்று உரத்த குரலில் மகாகவி பாரதியின் பாடல்களைப் பாடுவாராம். அப்போது அங்கு கூடும் கூட்டத்தில் இவர் சுதந்திரப் பிரச்சார்ம் செய்வாராம். இப்படித் தன்னலம் கருதாத தேசபக்தனாக இவர் கடமையே கருத்தாக இருந்தார். இரண்டாம் முறையாக இவர் இரண்டரை வருடங்கள் நவம்பர் 1921 முதல் சிறையில் இருந்தார். இவர் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, நல்ல எழுத்தாளர், நல்ல பத்திரிகை ஆசிரியர். “ஞானபானு” எனும் பெயரில் இவர் ஓர் பத்திரிகை நடத்தினார். மகாகவி பாரதியும், வ.வெ.சு.ஐயரும் இந்த பத்திரிகையில் எழுதி வந்தார்கள். அதன் பின்னர் ‘பிரபஞ்சமித்திரன்’ எனும் பெயரிலும் இவர் ஒரு பத்திரிகை நடத்தினார். இரண்டாம் முறை இரண்டரை ஆண்டுகள் சிறை சென்று விடுதலையானபின் தொழுநோயின் கடுமை அதிகமாக இருந்ததாலும் இவர் மிகவும் வருந்தினார். சேலம் மாவட்டத்தில் அப்போது இருந்த பாப்பாரப்பட்டி எனும் கிராமத்தில் பாரதமாதாவுக்கு ஒரு ஆலயம் எழுப்ப இவர் பெரிதும் முயன்றார். அதற்காக சித்தரஞ்சன் தாசை கல்கத்தாவிலிருந்து அழைத்து வந்து 1923இல் அடிக்கல்லும் நாட்டினார். மறுபடியும் சிவா மூன்றாம் முறை சிறை செல்ல நேர்ந்தது. இது ஒரு ஆண்டு சிறைவாசம். அதுகுறித்து இவர் ஒரு வழக்கு தொடர்ந்து அதிலிருந்து விடுதலையானார். இவர் மகாத்மா காந்தியின் அகிம்சை வழிப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. தீவிர வாதமே இவரது எண்ணம். இவர் தொழுநோயினால் பாதிக்கப்பட்டதனால் இவரை அன்றைய பிரிட்டிஷ் அரசு ரயிலில் பயணம் செய்வதை தடை செய்திருந்தது. எனவே இவர் மதுரையிலிருந்து தன் உடல் உபாதையையும் பொருட்படுத்தாமல் பாப்பாரப்பட்டிக்கு வந்துவிட வேண்டுமென்று கால்நடையாகவே பயணம் செய்து வந்து சேர்ந்தார். இவருக்கு வயது அதிகம் ஆகவில்லையாயினும், தொல்லை தரும் கொடிய வியாதி, ஆங்கில அரசின் கெடுபிடியினால் கால்நடைப் பயணம் இவற்றல் ஓய்ந்து போனார். இவர் யாருக்காகப் போராடினாரோ அந்த மக்களும் சரி, சுதந்திரத்துக்காக முன்நின்று போராடிய காங்கிரசும் சரி, இவர் காந்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் இவர் ஒதுக்கப்பட்டார். மனம் உடைந்த சிவா 23-7-1925இல் இவ்வுலக வாழ்க்கையை நீத்து அமரரானார். வாழ்க தீரர் சுப்பிரமணிய சிவாவின் புகழ்! 8 வ.உ.சிதம்பரம் பிள்ளை [] [] வ.உ.சிதம்பரம் பிள்ளை பற்றி நாமக்கல்லார்: சிதம்பரம் பிள்ளையென்று பெயரைச் சொன்னால் – அங்கே சுதந்திர தீரம் நிற்கும் கண்முன்னால் விதம்பல கோடி துன்பம் அடைந்திடினும் – நாட்டின் விடுதலைக்கே உழைக்கத் திடம் தருமே! திலக மகரிஷியின் கதைபாடும் – போது சிதம்பரம் பிள்ளை பெயர் வந்து சுதிபோடும் வலது புயமெனவே அவர்க்குதவி – மிக்க வாழ்த்துக் குரிமை பெற்றான் பெரும் பதவி. சுதேசிக் கப்பல் விட்ட துணிகரத்தான் – அதில் துன்பம் பல சகித்த அணிமனத்தான் விதேச மோகமெல்லாம் விட்டவனாம் – இங்கே வீர சுதந்திரத்தை நட்டவனாம். தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரரும், தமிழறிஞருமான சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்களால் கப்பலோட்டிய தமிழன் என்று தமிழுலகத்துக்கு அறிமுகமான வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் சுதந்திரப் போராட்ட ஜோதியை தென்னிந்தியாவில் ஏற்றி வைத்து, அதன் பயனாய் கடுமையான தண்டனைகளை அடைந்தவர். காங்கிரஸ் வரலாற்றில் மிதவாத அரசியல் வாதிகளின் காங்கிரஸ், பால கங்காதர திலகர், லாலா லஜபதி ராய், விபின் சந்திர பால் ஆகியோருடைய தீவிரவாத காங்கிரஸ், மகாத்மா காந்தியடிகளின் தலைமையில் உதயமான அஹிம்சை வழிப் போராட்ட காங்கிரஸ் என மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம். இதில் இரண்டாம் பகுதி காங்கிரசில் பால கங்காதர திலகரைத் தலைவராக ஏற்றுக்கொண்டு வ.உ.சி. அவர்கள் போராடினார். தென்னாட்டில் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பி அவர்களோடு போரிட்டு தூக்கிலடப்பட்டு மாண்டுபோன பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த மண்ணுக்கு அருகிலுள்ள ஒட்டப்பிடாரம்தான் இவர் பிறந்த ஊர். இவர் பிறந்தது 1872 செப்டம்பர் 5ஆம் நாள். கட்டபொம்மனின் அமைச்சராக இருந்த தானாபதி பிள்ளை அவர்களின் உறவினராக வந்தவர்தான் வ.உ.சி. இவரது தந்தை உலகநாதப் பிள்ளை, தாயார் பரமாயி அம்மை. இவருக்கு நான்கு சகோதரர்கள், இரு சகோதரிகள் இருந்தனர். தூத்துக்குடியில் பள்ளிக் கல்வியும் வக்கீல் தொழிலுக்கான பிளீடர் கல்வியை திருச்சியிலும் பயின்று வக்கீலானார். ஒட்டப்பிடாரத்தில் இவர் வக்கீல் வேலை பார்க்கத் தொடங்கினார். 1895இல் தமது 23ஆம் வயதில் திருச்செந்தூர் சுப்பிரமணிய பிள்ளையின் மகள் வள்ளியம்மையைத் திருமணம் செய்துகொண்டார். அவர் ஆறு ஆண்டு காலத்தில் இறந்து போகவே மீனாட்சி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். வ.உ.சிக்கு இளமை முதலே தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் கொண்டிருந்தார். 1906இல் இவர் மகாகவி பாரதியாரை சென்னை ‘இந்தியா’ அலுவலகத்தில் சந்தித்து உரையாடினார். இவரும் ஓர் சிறந்த பேச்சாளர். 1905இல் வங்காளத்தை மத அடிப்படையில் இரண்டாகப் பிரித்தனர் பிரிட்டிஷ்காரர்கள். நாடெங்கிலும் எதிர்ப்பலை எழுந்தது. விபின் சந்திர பால் சென்னை வந்து கடற்கரையில் ஓர் சொற்பொழிவாற்றினார். 1908இல் சென்னை ஜனசங்கம் எனும் அமைப்பு ஒன்று தோன்றியது. இதில் வ.உ.சி. நிர்வாகக் குழுவின் இருந்தார். வ.உ.சி. தூத்துக்குடியில் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி எனும் பெயரில் ஒரு கப்பல் கம்பெனி ஆரம்பித்தார். இதற்கு முதலீடு செய்வதற்குப் பலரையும் சென்று பங்குகள் சேர்த்து ஒரு கப்பலையும் வாங்கி பிரிட்டிஷ் கப்பல் கம்பெனிக்கு எதிராக சரக்கு ஏற்றுமதி இறக்குமதியைச் செய்தார். இதற்கு ஆங்கிலேயர்களின் பலத்த எதிர்ப்பு இருந்தது. போட்டி காரணமாக பிரிட்டிஷ் கம்பல் கம்பெனி பயணிகளை இலவசமாக ஏற்றிச் செல்வதாகக்கூட அறிவித்தது. 1907இல் சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் மகாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது. அங்குதான் திலகர் தலைமையிலான தீவிரவாதக் கோஷ்டிக்கும், மிதவாதத் தலைவர்களுக்குமிடையே பூசல் எழுந்து மாநாடு நின்று போயிற்று. இதற்கு வ.உ.சி. மகாகவி பாரதி ஆகியோர் தலைமையில் நூறுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் சென்னையிலிருந்து ரயிலில் சென்றனர். அங்கிருந்து திருநெல்வேலி திரும்பிய வ.உ.சி. தேசாபிமானச் சங்கம் என்றதொரு அமைப்பைத் தோற்றுவித்தார். சுதந்திர இயக்கத்தில் தீவிரப் பங்கு கொண்டார். தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுத்தினார். ஆங்கில நிர்வாகம் இவர் மீது ஆத்திரம் கொண்டது. தனது வீரமான மேடைப் பேச்சினால் மக்களை மிகவும் கவர்ந்து வந்த வீரத்துறவி சுப்பிரமணிய சிவா இவரது ஆதரவில் இவரோடு தங்கியிருந்து பொதுக்கூட்டங்களில் பேசிவந்தார். எங்கும் சுதந்திர வேகத்தையும் ‘வந்தேமாதர’ கோஷத்தையும் இவர்கள் இருவரும் பரப்பி வந்தனர். அப்போது தூத்துக்குடியில் துணை மாஜிஸ்டிரேட்டாக இருந்த ஆஷ் எனும் ஆங்கிலேயன் வ.உ.சி மீது வன்மம் பாராட்டி இவருக்கு இடையூறு செய்து வந்தான். அதற்கு திருநெல்வேலி கலெக்டராக இருந்த விஞ்ச் துரையும் ஆதரவாக இருந்தான். 1918இல் ஏப்ரல் 13. பஞ்சாபில் ஜாலியன்வாலாபாக்கில் பயங்கரமாக பொதுமக்களை ஆயிரக்கணக்கில் சுட்டுத் தள்ளினான் ஜெனரல் டயர் என்பவன். திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பெரிய கூட்டம் நடைபெற்றது. வ.உ.சியும் சிவாவும் பேசினர். விபின் சந்திர பால் அவர்களின் விடுதலை நாள் விழாவாக அது நடைபெற்றது. போலீஸ் அடக்குமுறையாலும், ஆஷ், கலெக்டர் ஆகியோரின் வெறித்தனத்தாலும் அன்று திருநெல்வேலியில் பயங்கர கலவரம் நடைபெற்றது. இதனை நெல்லைச் சதி வழக்கு என்ற பெயரில் விசாரித்தார்கள் இந்த வழக்கின் முடிவில் வ.உ.சிக்கு நாற்பது ஆண்டுகள் தீவாந்தர தண்டனையும், சுப்பிரமணிய சிவாவுக்கு சிறை தண்டனையையும் கொடுத்தார்கள். இதில் சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்பதற்காகவும் வ.உ.சிக்கு இருபது ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது. அப்போது வ.உ.சிக்கு வயது முப்பத்தைந்துதான். இதனையடுத்து வ.உ.சி. மேல்முறையீடு செய்து அதில் அவரது தண்டனை குறைக்கப்பட்டு ராஜ நிந்தனைக்காக ஆறு ஆண்டுகள் தீவாந்தர தண்டனையும், சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக நான்காண்டு தீவாந்தரமும் கொடுத்து இவற்றை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டனர். இதன் பின்னரும் இங்கிலாந்தில் இருந்த பிரீவி கவுன்சிலுக்கு அப்பீல் செய்ததில் தீவாந்தர தண்டனைக்குப் பதிலாக கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. இவர் கோயம்புத்தூர் சிறையில் இரண்டரை ஆண்டுகளும் கள்ளிக்கோட்டை சிறையில் இரண்டு ஆண்டுகளும் இருந்த போது மிகவும் கேவலமாக நடத்தப்பட்டார். சிறையில் இவரை கல் உடைக்கவும், செக்கிழுக்கவும் வைத்து வேடிக்கை பார்த்தது ஆங்கில ஆளும் வர்க்கம். இவரது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பிணித்து செக்கிழுக்க வைத்தனர். இந்த செக்கு இரண்டு கருங்கற்களால் ஆனது. இந்த செக்கு பின்னர் 1972இல் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு அவை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதற்கிடையே ஆஷ் தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி கலெக்டராக ஆனான். அவன் தன் மனைவியுடன் கொடைக்கானலில் படிக்கும் தன் மக்களைப் பார்ப்பதற்காக மணியாச்சி ரயில் நிலையத்தில் மாற்று ரயிலுக்காகத் தன் ரயில் பெட்டியில் காத்திருக்கும்போது, வாஞ்சிநாதன் எனும் செங்கோட்டை வாலிபன் உள்ளே நுழைந்து ஆஷைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, வெளியே வந்து தானும் சுட்டுக்கொண்டு இறந்து போனான். ஆளுவோரின் சந்தேகம் வ.உ.சி., பாரதி. வ.வெ.சு. ஐயர் ஆகியோர் மீதும் விழுந்தது. சிறையிலிருந்த வ.உ.சிக்கு இதனால் மேலும் சில கஷ்டங்கள் நேர்ந்தன. பாரதியை பிரிட்டிஷ் வேவுகாரர்கள் வேவு பார்த்துத் தொல்லை கொடுத்தனர். 130 பவுண்டு எடையோடு சிறை சென்ற இவர் வெளிவரும்போது 110 பவுண்டு இருந்தார். இவர் சிறையில் இருந்த காலத்தில் இவரது சுதேசி கப்பல் கம்பெனி ஆங்கிலேயருக்கே விற்கப்பட்டு விட்டது. இவர் 24-12-1912இல் விடுதலை செய்யப்பட்டார். சுப்பிரமணிய சிவா 2-11-1912இல் சேலம் சிறையிலிருந்து விடுதலையானார். ஆனால் இவர் சிறையில் இருந்த போது தொழுநோய் இவரைப் பற்றிக்கொண்டது. வியாதியஸ்தராகத்தான் இவர் வெளியே வந்தார். இது சிறை தந்த சீதனம் என்று மனம் நொந்து கூறினார் சிவா. ஆயிரக்கணக்கான மக்கள் வழியனுப்ப சிறை சென்ற வ.உ.சி. விடுதலையாகி வெளியே வரும்போது எவரும் இல்லை. தொழுநோய் பிடித்த சுப்பிரமணிய சிவா மட்டும் காத்திருந்தார். இதனை பி.ஆர்.பந்துலு எனும் சினிமா தயாரிப்பாளர் தான் தயாரித்த “கப்பலோட்டிய தமிழன்” எனும் படத்தில் காட்டியிருந்தார். பார்த்தோர் அனைவரும் கண்ணீர் சிந்தினர். சிறைவாசம் முடிந்து வ.உ.சி. தூத்துக்குடிக்கோ அல்லது திருநெல்வேலிக்கோ செல்லவில்லை. மாறாக சென்னை சென்றார். இவர் சிறைப்பட்டதால் இவரது வக்கீல் சன்னது பறிக்கப்பட்டது. சென்னையில் என்ன தொழில் செய்வது? மண்ணெண்ணை விற்றார். சரிப்பட்டு வரவில்லை. மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியார் எனும் தேசபக்தர் இவருக்கு உதவினார். சென்னையில் சில பிரபல தலைவர்களுடன் சேர்ந்து தொழிற்சங்க இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். திரு வி.க., சிங்காரவேலர், சக்கரைச் செட்டியார், வரதராஜுலு நாயுடு ஆகியோர் அவர்கள். சென்னை பின்னி மில், சென்னை டிராம்வே தொழிலாளர்கள், நாகப்பட்டினம் ரயில்வே தொழிலாளர்கள் ஆகியவற்றில் தீவிர பங்கெடுத்துக் கொண்டார். இந்திய தொழிலாளர் இயக்கத்தில் அன்னிய நாட்டில் பிறந்த அன்னிபெசண்ட் ஈடுபடுவதை இவர் எதிர்த்து குரல் கொடுத்தார். சிலகாலம் இவர் கோயம்புத்தூரிலும் சென்று தொழிற்சங்க பணியாற்றினார். எனினும் முன்பு போல காங்கிரஸ் இயக்கத்தில் அவர் அதிக ஈடுபாடு காட்டவில்லை. திலகர் காலமாகிவிட்ட பிறகு மகாத்மா காந்தி 1919இல் இந்திய சுதந்திரப் போரை முன்னின்று நடத்தத் தொடங்கினாரல்லவா? அப்போது அவர் ஒரு சில நேரங்களில் தனது கருத்துக்களை வெளியிட்டு மகாத்மாவின் சாத்வீக இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். பிறகு அவரது நம்பிக்கை தளர்ந்தது போலும். 1920 ஆகஸ்ட்டுக்குப் பிறகு இவர் “திலகர் ஒத்துழையாமை மூலம் சுயாட்சி பெற விரும்பவில்லை யென்றும், சட்டப்படியான ஆயுதத்தைப் பயன்படுத்தியே சுதந்திரம் பெறவேண்டும்” என்றும் பேசியிருப்பதிலிருந்து இவருக்குச் சிறுகச் சிறுக மகாத்மாவின் சாத்வீக இயக்கத்தில் நம்பிக்கி இழப்பு நேர்ந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டுக்குச் சென்று வந்த பிறகு காங்கிரசிலிருந்து இவர் விலகினார். கொள்கை காரணமாக காங்கிரசிலிருந்து விலகிய வ.உ.சி. பிறகு 1827இல் சேலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநில மகாநாட்டில் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார். அந்த மகாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். எனினும் பிறகு இவர் காங்கிரசில் தொடர்ந்து செயல்படமுடியவில்லை. 1916இல் சென்னை ராஜதானியில் டாக்டர் நாயர் தலைமையில் தோன்றி வளர்ந்து வந்த பிராமணர் அல்லாதார் இயக்கத்தின்பால் இவருக்கு ஈடுபாடு வந்தது. 1927இல் இவர் கோயம்புத்தூரில் நடந்த மாநாட்டில் தலைமை ஏற்றார். எனினும் இந்த இயக்கம் ஜஸ்டிஸ் கட்சியாக மாறியபோதும் காங்கிரஸ் எதிர்ப்பு இயக்கமாக வளர்ந்த போதும் வ.உ.சி. அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. பல துறைகளிலும் பிராமணரல்லாதார் பிந்தங்கி இருப்பதற்காக அவர் வருந்தினார், அவர்கள் முன்னேற பாடுபடவும் விரும்பினார் என்றாலும் அதற்காக பிராமணர் – பிராமணரல்லாதார் எனும் சாதி வேற்றுமைகளின் அடிப்படையில் ஓர் அரசியல் இயக்கம் தோன்றுவதையோ, வளர்வதையோ அவர் விரும்பவில்லை. பெறுதர்கரிய ஓர் சிறந்த தேசபக்தரான வ.உ.சிதம்பரம் பிள்ளை1936 நவம்பர் 18ஆம் தேதி இரவு 11-30 மணியளவில் தனது இல்லத்தில் காலமானார். அவர் இறக்கும் தருவாயில் மகாகவியின் “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்” எனும் பாடலைப் பாடச்சொல்லிக் கேட்டுக் கொண்டே உயிர் பிரிந்தது. வாழ்க கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் புகழ்! கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. பற்றி நாமக்கல்லார் பாடிய பாடல். சிதம்பரம் பிள்ளை என்று பெயர் சொன்னால் – அங்கே சுதந்திர தீரம் நிற்கும் கண் முன்னால் விதம்பல கோடி துன்பம் அடைந்திடினும் – நாட்டின் விடுதலைக்கே உழைக்கத் திடம் தருமே! திலக மகரிஷியின் கதை பாடும் – போது சிதம்பரம் பிள்ளை வந்து சுதி போடும் வலது புயமெனவே அவர்க்குதவி – மிக்க வாழ்த்துக்கு உரிமை பெற்றான் பெரும் பதவி. சுதேசிக் கப்பல் விட்ட துணிகரத்தான் – அதில் துன்பம் பல சகித்த அணி மனத்தான் விதேச மோகமெல்லாம் விட்டவனாம் – இங்கே வீர சுதந்திரத்தை நட்டவனாம். நன்றி: “தமிழன் இதயம்” நாமக்கல்லார். 9 ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் [] சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள். ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார். தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன். பாரதி போற்றி! போற்றி போற்றி ஓராயிரம் போற்றி – நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றி காண் சேற்றிலே புதிதாக முளைத்ததோர் செய் தாமரைத் தேமலர் போலொளி தோற்றி நின்றனை பாரதத் திருநாட்டிலே! துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை சாற்றி வந்தனை பாரதீ! எங்கள் தமிழ்ச் சாதிசெய்த தவப்பயன் வாழி நீ! பாரதி பற்றி கவிமணி (மணிமண்டபம் திறக்கப்பட்ட போது பாடியது) தேவருமே இங்குவந்து செந்தமிழைக் கற்றினிய பாவலராய் வாழமனம் பற்றுவரே – பூவுலகில் வானுயரும் பாரதியார் மண்டபத்தை எட்டப்பன் மாநகரில் கண்டு மகிழ்ந்து. இறைவனிடம் முறையீடு பண்டம் மலிய வேண்டும் – எங்கும் பயிர் செழிக்க வேண்டும் சண்டைகள் ஓய வேண்டும் – எவரும் சகோதரர் ஆகவேண்டும். இந்த வரங்களெல்லாம் – ஈசா இரங்கி அளித்திடுவாய்! சந்ததம் உன்பதமே – போற்றித் தலை வணங்குகின்றேன். – கவிமணி பாரதி பற்றி ஒரு கிராமத்து இளைஞன் (கவிமணி பாடல்) பாட்டுக் கொருபுலவன் பாரதி அடா! – அவன் பாட்டைப் பண்ணோடொருவன் பாடினான், அடா! கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனே, அடா! – அந்தக் கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய், அடா! சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமே, அடா! – கவி துள்ளும் மறியைப் போலே, துள்ளுமே அடா! கல்லும் கனிந்துகனி யாகுமே அடா! – பசுங் கன்றும் பால் உண்டிடாது கேட்குமே, அடா! குயிலும் கிளியும் பாட்டில் கூவுமே, அடா! – மயில் குதித்துக் குதித்து நடம் ஆடுமே, அடா! வெயிலும் மழையும் அதில் தோன்றுமே, அடா! – மலர் விரிந்து விரிந்து மணம் வீசுமே, அடா! அலைமேலே அலைவந்து மோதுமே, அடா! – அலை அழகான முத்தை அள்ளிக் கொட்டுமே, அடா! மலைமேலே மலை வளர்ந்து ஓங்குமே, அடா! – அதை வனங்கள் அடர்ந்து அடர்ந்து சூழுமே, அடா! விண்ணில் ஒளிரும் மீன்கள் மின்னுமே, அடா! – விண்ணில் விளங்கும் மதி நிலவு வீசுமே, அடா! கண்ணுக்கு இனிய சோலை காணுமே, அடா! – அதில் களித்து இளமான்கள் விளையாடுமே, அடா! தேனும் தினையும் பாலில் உண்ணலாம், அடா! – மிகத் தித்திக்கும் முக்கனியும் உண்ணலாம், அடா! கானக் குழலிசையும் கேட்கலாம், அடா! – ஊடே களிவண்டு பாடுவதும் கேட்கலாம், அடா! நாட்டு மொழியும் அவன் பாட்டினிசையில் – மிக்க நல்ல கற்கண்டின் இனிமை சொட்டுமே, அடா! ஏட்டில் இம்மந்திரந்தான் கண்டவர் உண்டோ? – ஈதவ் ஈசன் திருவருள் என்றெண்ணுவாய், அடா! உள்ளம் தெளியுமொரு பாட்டிலே, அடா! – மிக்க ஊக்கம் பிறக்கும் ஒரு பாட்டிலே, அடா! கள்ளின் வெறி கொள்ளுமோர் பாட்டிலே, அடா! – ஊற்றாய்க் கண்ணீர் சொரிந்திடும் ஓர் பாட்டிலே, அடா! “பாரத பூமி பழம் பெரும் பூமி, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்!” என்று அடிமைப்பட்டுக் கிடந்த பாரத வாசிகளுக்கு உரைக்கும்படி எடுத்துரைத்த மாபெரும் தமிழ்க்கவிஞன் மகாகவி பாரதி. நாமெல்லோரும் ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டவர்கள், இந்த நாடு ஆளுகின்ற அந்த வெள்ளைக்காரர்களுக்கே சொந்தம், அவர்கள் கருணா கடாட்சத்தில்தான் நாமெல்லாம் இங்கு வாழ்கிறோம் என்ற மூடக் கொள்கையில் ஆமைபோல் அடங்கிக் கிடந்த இந்தியர்களிடம் “நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்” என்பதைச் சொல்லி உணர்த்துகிறான் அந்த மாக்கவி. இப்படித் தன் கவிதைகளாலும், கட்டுரைகளாலும், பத்திரிகைகள் வாயிலாக தமிழ் மக்கள் உள்ளங்களிலெல்லாம் குடியேறியவன் மகாகவி பாரதி. இந்தப் புரட்சிக் கவி யின் வாழ்க்கை வரலாற்றை இங்கு சிறிது பார்க்கலாம். 1882ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 11ஆம் தேதி, அதாவது தமிழ் சித்திரபானு வருஷம் கார்த்திகை மாதம் 27ஆம் தேதி அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டயபுரம் எனும் சிற்றூரில் சின்னசாமி ஐயர், லக்ஷ்மி அம்மாள் ஆகியோரின் தவப்புதல்வனாக சுப்பிரமணியன் எனும் சுப்பையா வந்து அவதரித்தார். சின்னசாமி ஐயர் நல்ல அறிவாளி, பொறியியல் துறையில் ஆர்வமுள்ளவர், எட்டயபுரத்தில் ஓர் ஜின்னிங் தொழிற்சாலை வைத்திருந்தார். உண்மையாகவும் ஊக்கத்துடனும் உழைத்த இவர் ஏமாற்றப்பட்டார், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு நொடித்துப் போனார், பின்னர் அதே கவலையில் இறந்தும் போனார். சுப்பையாவின் இளம் வயதிலேயே அன்னையை இழந்தார். தந்தை மறுமணம் செய்து கொண்டார், அந்தச் சிற்றன்னை சுப்பையாவை அன்போடு வளர்த்தார். தாய் இல்லாத குறையை சிற்றன்னை போக்கிவிட்டார். அவர் வளர்ந்த இடம் சின்னஞ்சிறு கிராமமாதலின் இவர் சிறு வயதில் தன் வயதொத்த பிள்ளைகளோடு விளையாடும் நாட்டமின்றி, பெரியோர்களிடம் சாஸ்திரப் பயிற்சியும், பெரியவர்களைப் போன்று ஆழ்ந்து சிந்திப்பதிலும் நாட்டம் கொண்டார். இயற்கையிலேயே எந்தவொரு சொல்லைப் பிறர் சொல்லக் கேட்டாலும், அதற்கு இணையான ஓசைகொண்ட பல சொற்களை மனதில் சொல்லிப் பார்த்துக் கொள்வார். இதுவே பிற்காலத்தில் இவர் கவிதைகளுக்கு எதுகை மோனைகள் தாமாகவே வந்து சேர்ந்து கொண்டனவே தவிர இவர் தேடிப்போய் சொற்களைத் தேடியதில்லை. பள்ளிப்படிப்பில் அதிகம் நாட்டமில்லாமலே இவர் வளர்ந்தாலும், பொது அறிவிலும், இயற்கைக் காட்சிகளிலும் மனதைச் செலுத்தினார். எட்டயபுரம் ஜமீன் அரண்மனையில் இவர் பல புலவர்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கு இவர் இயற்கையாகக் கவி இயற்றி அனைவர் மனங்களையும் கொள்ளை கொண்டார். காந்திமதிநாதன் என்றொரு மாணவர், சுப்பையாவுக்கும் மூத்தவர், இவர் கவிபாடும் ஆற்றலைச் சோதிக்க வேண்டி “பாரதி சின்னப்பயல்” எனும் ஈற்றடி கொடுத்து ஒரு வெண்பா பாடச் சொன்னார். இவரும் “காந்திமதி நாதனைப் பார், அதி சின்னப்பயல்” எனும் பொருள்படும்படி வெண்பா பாடி அவரைத் தலை குனியச் செய்தார். எட்டயபுரத்தில் பெரியோர்கள் தமிழறிஞர்கள் சபையில் இவருக்கு “பாரதி” எனும் பட்டம் சூட்டப்பட்டது. திருநெல்வேலி இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார் சுப்பையா. அந்தக் கால வழக்கப்படி பாரதிக்கு இளம்வயதில் திருமணம் நடைபெற்றது. செல்லம்மாள் எனும் பெண் இவருக்கு வாழ்க்கைப் பட்டாள். துள்ளித் திரியும் பருவத்தில் இந்தக் குழந்தைகளுக்குத் திருமணம் நடந்தது. மறு ஆண்டில் சின்னச்சாமி ஐயர் சிவகதி அடைந்தார். தனித்து விடப்பட்ட பாரதி என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தத் தருணத்தில், காசியில் வாழ்ந்த அத்தை குப்பம்மாளும், அவர் கணவர் கிருஷ்ண சிவனும் சுப்பையாவை காசிக்கு அழைத்துச் சென்றனர். காசியில் மெட்றிக் தேர்வில் வென்று, ஜெயநாராயணா கல்லூரியில் சேர நுழைவுத் தேர்விலும் வெற்றி பெற்றார். காசி வாழ்க்கையில் பாரதி வாழ்க்கையைப் பற்றியும், இந்த நாடு இருக்கும் நிலையைப் பற்றியும், சமூகத்தில் நிலவி வந்த மூடப் பழக்க வழக்கங்களையும், அவற்றால் ஏற்படும் துன்பங்களையும் புரிந்து கொண்டார். அப்போது டில்லி வந்திருந்த எட்டயபுரம் ராஜா, இவரைத் தன்னுடன் வரும்படி அழைக்கவே சுப்பையா எட்டயபுரம் திரும்பி, மன்னரிடம் வேலையில் சேர்ந்தார். மன்னரிடம் வேலை எதுவுமின்றி ஊதியம் பெறுவது பாரதிக்கு வேதனை தந்தது. வேலையை உதறித் தள்ளினார். பிறகு மதுரையில் இருந்த சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஓர் தற்காலிக தமிழ்ப் பண்டிதர் வேலை இருப்பதாக அறிந்து அங்கு வேலைக்குச் சேர்ந்தார். அங்கு நான்கு மாதங்களே வேலை செய்த நிலையில், ‘தி ஹிந்து’ பத்திரிகையின் அதிபர் ஜி.சுப்பிரமணிய ஐயர் இவரது திறமையை அறிந்து, இவரைத் தன்னுடன் கூட்டிச் சென்று தான் நடத்தி வந்த ‘சுதேசமித்திரனி’ல் வேலைக்கமர்த்தினார். அங்கு இவர் உதவி ஆசிரியர். உலக நடப்புகளையும், நம் நாட்டின் சீர்கேட்டினையும் நன்கு அறிந்திருந்த பாரதிக்கு இங்கு கவிதைகள் எழுதும் வாய்ப்பு நிறைய கிடைத்தது. ஆயினும் பத்திரிகையில் அரசியல் கட்டுரைகள் தலையங்கம் எழுத வாய்ப்பிருக்கவில்லை. எனவே மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியார் தொடங்கிய ‘இந்தியா’ பத்திரிகைக்கு மாறினார். அங்கு இவரது எழுத்தார்வத்துக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. இந்த காலகட்டத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் இவர் தீவிரமாக ஈடுபட்டு திலகரின் தலைமை ஏற்று சூரத் காங்கிரஸ் போன்றவற்றுக்குச் சென்று வந்தார். சென்னையிலும் கடற்கரைக் கூட்டங்களில் பாடல்களைப் பாடியும், பேசியும் வந்தார். இவரது எழுத்துக்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகத் தீக்கங்குகளைப் பொழிந்தன. பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தின் பார்வை ‘இந்தியா’ பத்திரிகை மீது விழுந்தது. ஆனால் அதிகாரபூர்வமாக என்.சீனிவாசன் என்பவர்தான் அதன் ஆசிரியராகப் பதிவு செய்யப்பட்டிருந்தார், ஆயினும் எழுதியது முழுவதும் பாரதிதான். அந்த சீனிவாசன் கைது செய்யப்பட்டார். பாரதியும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், அவரது நண்பர்கள் வக்கீல் துரைசாமி ஐயர் போன்றவர்கள், இவரை எப்படியாவது கைதிலிருந்து காப்பாற்றிவிட நினைத்தார்கள். காரணம் இவரது உடல்நிலை சிறைவாழ்க்கைக்கு ஒத்து வராது, மேலும் நாட்டு விடுதலைக்கு இவரது எழுத்துக்கள்தான் மக்கள் உணர்ச்சிகளைத் தூண்டிவிட முடியும், ஆகவே இவர் வெளியில் இருக்க வேண்டுமென்பது தான். ஆகவே நண்பர்கள் இவரை சைதாப்பேட்டை ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்று புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தனர். புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்ததால் பிரிட்டிஷ் போலீஸ் அங்கு இவரை ஒன்றும் செய்ய முடியாது என்று கருதினர். புதுச்சேரியில் பாரதி மிகவும் சிரமத்துக்குள்ளானார். இவர் புரட்சிக்காரர் என்று முதலில் இவருக்கு உதவ பயந்தனர். பின்னர் இவருக்கு நல்ல நண்பர்கள் அமைந்தனர். புதுச்சேரியில் ‘இந்தியா’ பத்திரிகையும் வெளியிடப்பட்டது. தொடர்ந்து இவரது கவிதை, எழுத்துப் பணிகள் தொடர்ந்தன. வழக்கம்போல ‘இந்தியா’ பத்திரிகையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான கட்டுரைகள் வெளியாகின. தொடர்ந்து ‘விஜயா’ எனும் தினசரி மற்றும் பல பத்திரிகைகளை பாரதி இங்கிருந்து வெளியிட்டார். பொறுமை இழந்த பிரிட்டிஷ் போலீஸ் இவருக்கு எல்லா வகையிலும் துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. இவரை எப்படியாவது கைது செய்து பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் கொண்டு வர முயன்றது. நல்ல காலமாக பாரதிக்குத் துணையாக வ.வே.சு. ஐயரும், அரவிந்த கோஷ் ஆகியோரும் புதுச்சேரி வந்து தங்கினர். இங்குதான் பாரதியின் முப்பெரும் காப்பியங்களான, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு ஆகியவை தோன்றின. பத்தாண்டுகள் புதுவை வாழ்க்கைக்குப் பிறகு, பாரதி இந்திய எல்லைக்குள் நுழைந்தார். அங்கு இவர் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் 21 நாட்கள் வைக்கப்பட்டார். இவரை ஜாமீனில் கொண்டு வர நண்பர் துரைசாமி ஐயர், சர் சி.பி.ராமசாமி ஐயர், அன்னிபெசண்ட் போன்றவர்கள் முயன்று இவரை நிபந்தனை ஜாமீனில் வெளிக் கொணர்ந்தனர். பின்னர் இவர் மீது வழக்கு ஒன்றும் இல்லை என்று விடுதலையானார். சிறிது நாள் தன் மனைவியின் ஊரான கடையத்தில் வாழ்ந்தார். இந்த காலகட்டத்தில் பொட்டல்புதூர் எனும் ஊரில் இஸ்லாமியர்களின் வேண்டுகோளுக்கிணங்க ‘அல்லா அல்லா அல்லா’ எனும் பாடலை இயற்றிப் பாடிவிட்டு, ரம்ஜான் தினத்தில் இஸ்லாம் பற்றியதொரு அருமையான சொற்பொழிவையும் நிகழ்த்தினார். பின்னர் கடையத்திலிருந்து புறப்பட்டுச் சென்னை வந்து மீண்டும் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக சேர்ந்தார். மகாகவி பாரதியார் தன்னுடைய “இந்தியா” பத்திரிகையைப் பற்றி குறிப்பிடும் செய்தி என்ன தெரியுமா? புதிய கட்சியின் (திலகர் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு இந்தப் பெயர்) ஒரே தமிழ்ப் பத்திரிகை – “இந்தியா” என்பது. இந்தப் பத்திரிகைக்குத் துணை புரிவதற்கு “பாலபாரதா” எனும் ஆங்கில இதழும், ‘சுதேசமித்திரன்’, ‘சூர்யோதயம்’, “விஜயா” நாளிதழ் இவைகளும் இவர் ஆசிரியராக இருந்த நடத்தியப் பத்திரிகைகள். 1905இல் கயாவில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டில் இவர் பத்திரிகை நிருபராகக் கலந்து கொண்டார். அவருடைய தேசிய உணர்வுகளின் வெளிப்பாடுதான் இவர் 1906 முதல் 1908 வரையில் எழுதி வெளியிட்ட தேசிய கீதங்கள். அவைகளுக்கு இவர் இட்ட பெயர் “தேசோபநிஷத்” என்பது. இவர் சென்னை வந்து சுதேசமித்திரனில் பணியாற்றத் தொடங்குமுன்னதாகவே மதுரையில் இருந்தபோது “விவேகபானு” எனும் பத்திரிகையில் “தனிமையிரக்கம்” எனும் பாடலை எழுதினார். இவரது மற்ற பாடால்களில் உள்ள எளிமையான சொற்கள் போலவல்லாமல் இதில் கடுமையான பண்டிதத் தமிழ் இருப்பதைக் காணலாம். “வங்கமே வாழிய” எனும் பாடல்தான் இவரது முதல் அரசியல் கவிதை. இது 1905இல் செப்டம்பர் 15 “சுதேசமித்திரனில்” வெளியாகியது. லார்டு கர்சான் வங்கத்தைப் பிரித்த போது நாட்டில் எழுந்த மிகப்பெரிய கிளர்ச்சியை ஆதரித்து எழுதியது இந்தக் கவிதை. பாரதியார் புனா சென்று தனது ஆதர்ச குருவாகிய பால கங்காதர திலகரை 1905ல் சந்திக்கிறார். அது பற்றி அவர் கூறும் செய்தி:- “யான் 1905 வருடம் புனா தேசம் போயிருக்கையில் அவருடைய நண்பரொருவர் திலகரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அச்சமயம் அவருடன் பேசினதில் யான் அறிந்ததென்னவெனில் அவருடைய பக்தியும், மருவில்லாத அவருடைய சாந்த குணமுமன்றி வேறில்லை.” 1906இல் இவர் விபின் சந்திர பாலருடைய அழைப்பின் பேரில் நான்கு பிரதிநிதிகளில் ஒருவராகக் கல்கத்தா காங்கிரசுக்குச் சென்றார். இந்த கல்கத்தா விஜயத்தின் போதுதான் 1906 டிசம்பரில் பாரதி கல்கத்தா அருகிலுள்ள டம்டம் எனுமிடத்தில் தங்கியிருந்த சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையும், பாரதியார் தன்னுடைய ஆன்மிக குருவாக ஏற்றுக் கொண்ட சகோதரி நிவேதிதாவைச் சந்திக்கிறார். பாரதி திலகர் மீது வைத்திருந்த பக்திக்கு ஓர் சான்று, “உண்மையான தேசாபிமானத்தில் ஸ்ரீ திலகருக்கு மேலான இந்தியன் இவ் இந்தியாவிலும் இல்லை, இவ்வுலகத்திலும் இல்லை என்பது என் அபிப்பிராயம்” என்று சொல்வதிலிருந்து புரிகிறது. 1908இல் சென்னை திருவல்லிக்கேணி கங்கைகொண்டான் மண்டபத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் “சென்னை ஜனசங்கம்” எனும் அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் வ.உ.சி., சக்கரைச் செட்டியார், சுரேந்திரநாத் ஆர்யா, கே.வெங்கட்டரமணராவ், எஸ்.ஸ்ரீநிவாசாச்சாரி, வரதராஜ சர்மா ஆகியோருடன் சுப்பிரமனிய பாரதியாரும் நிர்வாகக் குழுவில் அங்கம் வகித்தனர். இந்த ஜனசங்கம் தான் சென்னையில் ‘இந்தி’ மொழி கற்றுக் கொடுக்கும் வகுப்புக்களைத் தொடங்கியது. இந்த ஆண்டு (1908) சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் மகாநாடுதான் வரலாற்றுப் புகழ் பெற்ற மகாநாடாக அமைந்து மிதவாதிகளுக்கும், திலகர் தலைமையிலான காங்கிரசாருக்கும் தகறாறு உண்டாகி பாதியில் நின்ற மகாநாடு. இதில் பாரதியார் கலந்து கொண்ட வரலாற்றை அவர் ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறார். பாரதியார் இந்திய அரசியலை மட்டும் கவனித்து எழுதியவரில்லை. உலக அரசியல் அரங்கில் நடைபெறும் அனைத்தையும் கவனித்து எழுதியவர். தான் சாகும் தருணத்தில் கூட செப்டம்பர் 11 அன்று அரை மயக்க நிலையில் அவர் சுதேசமித்திரனில் ஆப்கானிஸ்தான் மன்னரைப் பற்றிய கட்டுரை ஒன்று எழுத வேண்டுமென்று புலம்பியிருக்கிறார். பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யாவில் லெனின் தலைமையில் நடைபெற்ற புரட்சி, ஐரிஷ் விடுதலை இயக்கம், அமெரிக்க விடுதலைப் போர் போன்ற அயல்நாட்டுப் புரட்சிகளைப் பற்றியும் எழுதியிருக்கிறார். குறிப்பாக 1917இல் ரஷ்யாவில் கொடுங்கோலன் ட்ஸார் மன்னனுடைய வீழ்ச்சி பற்றியும் புரட்சியாளர் லெனினின் எழுச்சி பற்றியும் அவர் எழுதிய பாடல்தான் பிற்காலத்தில் ரஷ்யா முழுவதிலும் பாரதியின் புகழ் பரவக் காரணமாக அமைந்தது. 1857இல் வடநாட்டில் நடந்த “சிப்பாய் கலகம்” என்று பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர்களால் எழுதப்பட்ட நிகழ்ச்சியை பாரதி “இந்துஸ்தான சுதந்திர யுத்தம்” என்றே குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்லாமல் இந்தப் புரட்சியை அடுத்து பிரிட்டிஷ் அரசியார் வெளியிட்ட மகாசாசனத்தை அனைவரும் ஆகா, ஓகோ என்று வானளாவப் புகழ்ந்து தள்ளியபோது, பாரதி மட்டும் “அதன் ஒரு வார்த்தையாவது உண்மையைப் பிரதிபலிக்கவில்லை. அந்த சாசனம் நாக்கு முதல் நாபி வரையில் இரண்டு தீவட்டிகள் ஏற்றிப் பார்த்தாலும் எள் அளவுகூட உண்மை கிடையாது” என்கிறார். இருபதாம் நூற்றாண்டு தொடக்க காலத்தில் திலகரின் காங்கிரசின் பிரசாரகராக பாரதி விளங்கியிருப்பதை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. அது எவ்வளவு ஆபத்தானது, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு அவர் ஆளாக வேண்டிய சூழ்நிலைகளை ஏற்படுத்தியது என்பதையும் எண்ணிப்பார்த்தால்தான் பாரதியின் தீவிரமான தேசபக்தி நமக்கு விளங்கும். இங்கு 1921ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணி கோயில் யானை இவரை தூக்கித் தள்ளிவிட்டது. அதன் காரணமாக இவர் சில காலம் படுத்திருந்தார். பின்னர் உடல்நலம் தேறி வேலைக்குச் சென்றார். அப்போது ஈரோட்டையடுத்த கருங்கல்பாளையம் எனும் ஊரிலிருந்த காங்கிரஸ் வக்கீல் ஒருவர் அழைப்பின் பேரில் அங்கு சென்று ‘சாகாதிருப்பது எப்படி’ எனும் தலைப்பில் உரையாற்றித் திரும்பினார். சென்னை திரும்பிய அவருக்கு வயிற்றுக் கடுப்பு நோய் உண்டாகி அவதிப்பட்டார். வியாதியின் உக்கிரம் தாங்காமால் மருந்துண்ண மறுத்தார். செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி இரவு, 12ஆம் தேதி விடியற்காலை 2 மணி சுமாருக்கு இவர் உயிர் பிரிந்தது. இவரது இறுதி யாத்திரையில் சுமார் 12 பேர் மட்டுமே கலந்து கொண்டனராம். இப்படி யொரு மகாகவியின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. வாழ்க மகாகவி பாரதியாரின் புகழ் 10 தமிழ்த் தென்றல் திரு வி. க இந்திய சுதந்திரப் போர் பல அரிய தலைவர்களைக் கண்டிருக்கிறது. அரசியல் மட்டும் சார்ந்தவர்கள்தான் இவர்களில் பெரும்பாலோர். அரசியல் வாதியாகவும், மொழிப்புலமையும் பெற்ற பலரும் சுதந்திரப் போர் வீரர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இவர் அரசியல், மொழிப்புலமை, சைவம், தொழிற்சங்கப் பணி, சமூக சீர்திருத்தங்கள் என்று பல துறைகளிலும் பாடுபட்டவர் இவர் போல வேறு யாரும் உண்டா என்பது தெரியவில்லை. தலைவர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் தமிழ்த்தென்றல் என்று போற்றப்படும் திரு வி.க. ஆவார். இவரது தனித்தமிழ் எழுத்தும் பேச்சும் இவருக்குத் தனி முத்திரைப் பதித்தது. திருவாரூர் விருத்தாசல கலியாணசுந்தர முதலியார் என்பதன் சுருக்கமே திரு. வி.க. என்பது. இவர் 1883இல் பிறந்தார். இவரது பாட்டனார் காலத்திலேயே இவர்கள் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்து விட்டது. இவரது தந்தையார் விருத்தாசல முதலியார். இவருக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவி இறந்த பின், சின்னம்மாள் என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு நான்கு பெண்கள், நான்கு ஆண்கள் பிறந்தனர். இவர்களில் ஆறாவது குழந்தைதான் திரு.வி.க. இவரது தந்தையாருக்கு சென்னை ராயப்பேட்டையில் வியாபரம் தொழில். இவர் சென்னை செம்பரம்பாக்கம் ஏரியை மராமத்து செய்யும் பணியை ஏற்றுக்கொண்டு துள்ளம் எனும் கிராமத்தில் குடியேறினார். அங்கு இருக்கும்போதுதான் 26-8-1883இல் திரு.வி.க. பிறந்தார். இவருக்கு ஆரம்பகால கல்வியை அவ்வூரில் பள்ளிக்கூடம் இல்லாததால் இவரது தந்தையே புகட்டி வந்தார். பின்னர் சென்னையில் வந்து பள்ளியில் சேர்ந்தார். இவரது குடும்ப சூழல் காரணமாகவும், இவரது சொந்த காரணங்களாலும் பத்தாவதோடு இவரது பள்ளிக்கல்வி முடிவடைந்தது. ஆனால் இவரது புறக்கல்வி தேவாரம், திருவாசகம் என்று தொடர்ந்தது. இவரது மரியாதைக்கு உரியவரான கதிரைவேற் பிள்ளை என்பவரிடம் இவர் தமிழ் பயின்றார். அவர் காலமான பின் மயிலை வித்வான் தணிகாசல முதலியார் என்பவரிடம் தமிழ் பயின்றார். தமிழோடு இவர் சமஸ்கிருதமும் நன்கு பயின்றார். இவரது சொந்த முயற்சியால் ஆங்கிலம், வேதாந்தம், பிரம்மஞானதத்துவம் போன்ற பல துறைகளில் இவர் முயன்று கற்றுத் தேர்ந்தார். கல்வி ஒருபுறமிருந்தாலும் வாழ்வதற்கு ஒரு தொழில் வேண்டுமே. அதனால் சில காலம் ஸ்பென்சர் நிறுவனத்தில் பணியாற்றினார். இவரது தேசிய உணர்வு அந்த கம்பெனியின் வெள்ளை முதலாளிகளுக்குப் பிடிக்காமல் வேலை போயிற்று. அப்போது சென்னை வந்து சொற்பொழிவு ஆற்றிய வங்கதேசபக்தர் விபின் சந்திர பாலின் பேச்சைக் கேட்க நேர்ந்தது. அரவிந்தரின் பத்திரிகையும் இவரை ஒரு தேசபக்தனாக உருவாக்கின. வேலை போன பிறகு தனது தமையனார் நடத்திய அச்சகம் வாயிலாக பெரிய புராணக் குறிப்புரை எழுதி வெளியிட்டார். திருமந்திரத்துக்கும் விளக்கம் எழுதி வெளியிட்டார். பிறகு சிலகாலம் வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். காங்கிரஸ் இயக்கத்தில் இவர் தம்மை இணைத்துகொண்டு பணியாற்றத் தொடங்கினார். ‘தேசபக்தன்’ எனும் பத்திரிகையில் ஆசிரியப் பொறுப்பை ஏற்று நடத்தினார். பிறகு அதிலிருந்தும் வெளியேறி “நவசக்தி” பத்திரிகையின் ஆசிரியரானார். 1941இல் இந்த பத்திரிகையும் நின்று போயிற்று. 1917இல் காங்கிரசில் தீவிரமாக ஈடுபட்ட திரு வி.க. 1934 வரை அதில் முழுமையாக பங்கேற்றார். இவர் காலத்தில் காங்கிரசில் முன்னணி வகித்தவர்கள் டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு, ஈ.வே.ராமசாமி நாயக்கர், திரு வி.க. ஆகியோராவர். எனினும் கால ஓட்டத்தில் இந்தக் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக ஒவ்வொருவரும் தனித்தனி வழியே பயணிக்க வேண்டியதாகி விட்டது. இதில் முதல் இருவரும் காங்கிரசை விட்டுப் போய்விட்டாலும் திரு வி.க மட்டும் கட்சியை விட்டு விலகாமல் சற்று ஒதுங்கியே இருந்தார். 1918இல் வாடியா என்பவராம் தொடங்கப்பட்ட சென்னை தொழிற்சங்கத்தில் இவர் ஈடுபாடு காட்டினார். இந்த சென்னை தொழிலாளர் சங்கம்தான் இந்தியாவிலேயே தொழிலாளர்களுக்கென உண்டான சங்கங்களில் முதல் சங்கமாகும். இவரது காங்கிரஸ் அரசியல் பணியில் இவர் சிறை சென்றதில்லை. ஆனால் 1947இல் நடந்த பக்கிங்காம் கர்நாடிக் மில் தொழிலாளர் போராட்டத்தில் அப்போதிருந்த காங்கிரஸ் அரசால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இவர் 1919இல் மகாத்மா காந்தியடிகளை முதன்முதலாகச் சந்தித்தார். லோகமான்ய பாலகங்காதர திலகரை வ.உ.சிதம்பரனாருடன் சென்று கண்டு உரையாடினார். அப்போது சென்னை கவர்னராக இருந்த லார்டு வெல்லிங்டன் என்பவர் இவரை அழைத்துக் கடுமையாக எச்சரித்தார். நாடுகடத்த வேண்டியிருக்கும் என்றும் இவர் தெரிவித்திருக்கிறார். அப்படியொரு எண்ணம் கவர்னருக்கு இருப்பது அறிந்து அப்போதிருந்த ஜஸ்டிஸ் கட்சியின் தலைவராக இருந்த சர் பிட்டி தியாகராசர் கவர்னரிடம் அப்படிச் செய்தால் விபரீதமான விளைவுகள் ஏற்படும் என்று கூறி நாடுகடத்தலைத் தடுத்து நிறுதினாராம். 1925இல் காஞ்சிபுரம் நகரில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் மகாநாட்டில் பெரியார் ஈ.வே.ரா. வகுப்பு வாரி பிரதிநிதித்துவத் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அந்த மாநாட்டுக்கு தலைமை வகித்தவர் திரு வி.க. இந்த தீர்மானத்தை தலைவர் ஏற்க மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த பெரியார் மாநாட்டை விட்டு வெளியேறினார். காங்கிரசுக்கும் தலை முழுகிவிட்டு தனி இயக்கம் கண்டது நாடறிந்த வரலாறாகிவிட்டது. பன்முகத் திறமை கொண்டவராக திரு வி.க. விளங்கினார். அரசியலில், தொழிற்சங்க இயக்கத்தில், தமிழிலக்கியத்தில், சைவ சமயத்தில் இப்படி இவரது பணி பல துறைகளிலும் சிறப்புற்று விளங்கியது. மிக எளிமையானவராக இவர் திகழ்ந்தார். 1943இல் இவருக்கு மணிவிழா எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் எல்லாம் இந்த நிகழ்ச்சிக்காக சிறப்பு மலர்கள் வெளியிட்டன. மணிவிழாவுக்குப் பிறகு இவர் மேலும் பத்தாண்டுகள் பயனுள்ள பணிகளைச் செய்துகொண்டு வாழ்ந்தார். ஏராளமான நூல்களை எழுதினார். தொழிலாளர் இயக்கங்களிலெல்லாம் பங்கு கொண்டார். இவரது தொழிற்சங்க பணிகளில் வ.உ.சி.யும் பங்கெடுத்துக் கொண்டு, சென்னை துறைமுகத் தொழிலாளர் இயக்கத்தில் தீவிரமாக இருந்தார். இவ்வளவு பெயருக்கும் புகழுக்கும் உரியவரான திரு வி.க. சொந்த வீடு இன்றி, வங்கிக் கணக்கு இன்றி, காலில் காலணி இன்றி, எளிய கதராடையில் நான்கு முழ வேட்டி, சட்டை, அல்லது சில சமயங்களில் மேல் துண்டு மட்டும் என்று இப்படி மிக எளியவராகவே இருந்தார். இறுதி நாட்களில் சர்க்கரை வியாதியால் கண்பார்வை இழந்து முதுமை வாட்ட தனது எழுபதாவது வயதில் ஒரு வாடகை வீட்டில் 1953 செப்டம்பர் 17ல் உயிர் நீத்தார். இவரைப் பற்றி நூல் எழுதியுள்ள பேராசிரியர் மா.ரா.போ. குருசாமி இவரைப் பற்றி கூறியுள்ள கருத்து “படிப்பால் இமயம், பண்பால் குளிர் தென்றல், பணியால் திருநாவுக்கரசர், சுருங்கச் சொன்னால் தமிழகம் கண்ணாரக் கண்ட ஒரு காந்தி. பல சாரார்க்குப் படிப்பினை நிறைந்த வாழ்க்கை, இன்று அவரது நூல்களில் ஒளிமயமாய் வாழ்கிறது”. வாழ்க திரு வி.க. வின் புகழ்! 11 பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் [] பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற பெயர் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளிலுள்ள ஊர்களில் கூட பிரபலமான பெயர். தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாகப் பாவித்த மகான். மதுரைப் பகுதியில் சுதந்திரப் போரை முன்னின்று நடத்திய தீரர்களில் முதன்மையானவர் பசும்பொன் தேவர் அவர்கள். ராஜாஜி அவர்கள் தேவர் மீது அன்பும் பற்றும் கொண்டவர். நான் அர்ஜுனன் என்றால் தேவர்தான் சாரதி என்றார் அவர். மதுரையில் ஏ.வைத்தியநாத ஐயர் தலைமையில் ஆலயப் பிரவேசம் மேற்கொண்ட போது பலத்த எதிர்ப்பு இருந்தது. அப்போது ராஜாஜி தேவர் அவர்களைத்தான் சத்தியாக்கிரகிகளுக்குத் துணையாக இருக்கப் பணித்தார். கதிரவனைக் கண்ட பனி போல எதிர்ப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. ஆலயப் பிரவேசம் மிக விமரிசையாக நடந்தது. தேசியமும் தெய்வீகமும் தேவர் கடைப்பிடித்த இரு கொள்கைப் பிடிப்புகள். அந்த நாளில் இராமநாதபுரம் மாவட்டத்துக்குட்பட்ட சில பகுதிகளில் ஜஸ்டிஸ் கட்சியினரின் அத்துமீறல்களைத் எதிர்த்து அங்கெல்லாம் தேசிய முழக்கங்களை எதிரொலிக்கச் செய்து “காங்கிரசைக் காத்தவர்” எனும் பாராட்டை தீரர் சத்தியமூர்த்தியிடம் பெற்றவர் தேவர். முத்துராமலிங்கத் தேவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் 1908ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் நாள் பிறந்தார். தந்தை உக்கிரபாண்டித் தேவர், தாயார் இந்திராணி அம்மையார். இளம் வயதில் இவர் தாயை இழந்தார். தாயை இழந்த இந்தத் தனயனுக்கு ஒரு இஸ்லாமியப் பெண் தாய்ப்பால் ஊட்டி வளர்த்தார். 1927ஆம் ஆண்டு தனது 19ஆவது வயதில் சென்னை சென்று வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான எஸ்.சீனிவாச ஐயங்காரைச் சந்தித்த பின் காங்கிரசில் சேர்ந்தார். அப்போது சென்னையில் டாக்டர் அன்சாரியின் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. அதன் பிறகு ஊர் திரும்பிய தேவர் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு சுதந்திரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். விவசாயக் குடும்பத்தில் பிறந்த தேவர் புகழ்பெற்ற தலைவர்கள் பலரை அழைத்து ராஜபாளையத்தில் விவசாயிகள் மாநாட்டினை நடத்தினார். ராஜாஜி 1937இல் சென்னை மாகாண முதல்வராகப் பொறுப்பு ஏற்றபின் ஆலயப் பிரவேசச் சட்டத்தைக் கொண்டு வந்தார். தாழ்த்தப்பட்டவர்களை ஆலயத்துள் அழைத்துச் செல்லும் பொறுப்பை மதுரையில் ஏ.வைத்தியநாத ஐயர் மேற்கொண்டார். அவருக்கு அங்கு பயங்கர எதிர்ப்பு ஏற்பட்டது. அந்த எதிர்ப்பை முறியடித்து அந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார் தேவர். ராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தலில் இவர் முதுகுளத்தூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஜில்லா போர்டு தலைவராக வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் கட்சி பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் பெயரை சிபாரிசு செய்ததும், அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்து பாடுபட்டார் தேவர். 1937இல் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது பலம்பொருந்திய கட்சியாக விளங்கிய ஜஸ்டிஸ் கட்சிக்கும் காங்கிரசுக்கும் பலத்த போட்டி. ராமநாதபுரம் தொகுதியில் ராமநாதபுரம் ராஜா ஜஸ்டிஸ் கட்சி சார்பில் நின்றார். அவர் சமஸ்தானத்தில் மன்னருக்கு எதிராக யார் காங்கிரசில் போட்டியிட முடியும். அப்படி போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியுமா? அந்த நிலையில் தேவரை காங்கிரஸ் கட்சி அங்கு நிறுத்துகிறது. தேவரே வெற்றி பெற்றார். அப்போது சாத்தூர் தொகுதியில் காமராஜ் நின்றார். அந்தத் தேர்தலில் கடும் எதிர்ப்பு அமளிக்கு இடையே காமராஜை வெற்றி பெற வைத்தவர் தேவர் அவர்கள்தான். காங்கிரசில் அப்போது மகாத்மா காந்தியின் தலைமைக்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கும் போட்டி நிலவியது. திரிபுரா காங்கிரசில் மகாத்மா காந்தி பட்டாபி சீத்தாராமையாவை தலைமைப் பதவிக்கு நிறுத்துகிறார். நேதாஜியை தீவிர தேசபக்தர்கள் ஆதரித்தனர். இந்தப் போட்டியில் தேவர் நேதாஜியை ஆதரிக்கிறார். நேதாஜி வெற்றி பெற்றதும் காந்திஜி பட்டாபியின் தோல்வி என் தோல்வி என்று அறிவித்தார். காங்கிரசில் அப்போது இரு கோஷ்டிகளுக்கிடையே ஒற்றுமையில்லாமல் பிறகு நேதாஜி ராஜிநாமா செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது. காங்கிரசிலிருந்து வெளியேறிய நேதாஜி பார்வர்டு பிளாக் எனும் கட்சியைத் தோற்றுவிக்கிறார். அதில் தேவர் அங்கம் வகித்தார். இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தேவர் தீவிரவாத கோஷ்டியைச் சேர்ந்தவர் என்று சொல்லி அவரை மதுரையை விட்டு வெளியே போகக்கூடாது என்று தடை விதித்தனர். இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு அடிபணியக்கூடியவரா தேவர். தடையை மீறி சொந்த கிராமமான பசும்பொன்னுக்குச் செல்கிறார். வழியில் திருப்புவனத்தில் கைது செய்யப்பட்டு 18 மாத சிறை தண்டனை பெறுகிறார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் 1939 செப்டம்பர் மாதத்தில் 18 மாத சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த தேவரை, சிறைச்சாலை வாயிலில் மறுபடியும் கைது செய்கிறார்கள். பாதுகாப்புச் சட்டத்தின் படி மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சி, வேலூர், அலிப்புரம், ராஜமுந்திரி, அம்ரோட்டி ஆகிய சிறைகளில் இவர் அடைக்கப்பட்டிருந்தார். போரில் ஜப்பான் சரணடைந்த பிறகு தேவர் ஆறாண்டு சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்தார். சுதந்திரம் பெறும் காலம் நெருங்கிவிட்டதற்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கின. 1946இல் சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். டி.பிரகாசம் முதல்வராகப் பதவியேற்றார். தேவரை தன்னுடைய அமைச்சரவியில் சேரும்படி பிரகாசம் அழைத்ததை தேவர் ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரசின் ஒரு பிரிவாக செயல்பட்டு வந்த நேதாஜியின் பார்வர்டு பிளாக் கட்சி 1948ல் தனிக் கட்சியாக வெளியே வந்தது. அப்போதிலிருந்து தேவர் காங்கிரசில் இல்லை, பார்வர்டு பிளாக்கின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். இந்த நிலையில் இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்து குடியரசாக 26-1-1950இல் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தியக் குடியரசின் முதல் பொதுத் தேர்தல் 1952இல் நடைபெற்றது. தேவர் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும், அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியிலும் ஒரே நேரத்தில் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்றுப் பின் சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்கிறார். மதுரையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையின் போது அதில் பங்குகொண்ட ஒருவர் கொலையுண்ட வழக்கில் தேவர் கைதுசெய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் இருந்தார். அங்கு இவரது உடல்நலம் கெட்டது. அப்போது தென் மாவட்டங்களில் இருவேறு பிரிவினர்களுக்கிடையே கலவரம் மூண்டது. அப்போது காமராஜ் முதலமைச்சராக இருந்தார். மதுரையில் இவர் கைது செய்யப்பட்ட நிகழ்ச்சியே ஒரு நாடக பாணியில் அமைந்தது. விடியற்காலை எழுந்து மதுரையிலிருந்து புறப்பட்டு முதுகுளத்தூர் புறப்பட்டு வைகை நதிப் பாலத்தில் அவரது கார் வரும்போது பாலத்தின் நடுவில் போலீஸார் இவரைத் தடுத்து நிறுத்தி கைது செய்கிறார்கள். காரிலிருந்து கீழே இறங்கிய தேவர் முழங்காலுக்கும் கீழ் வரை தொங்கும் தனது பழுப்பு நிற கதர் ஜிப்பாவில் கைவிட்டதுதான் தாமதம் போலீஸ் அதிகாரிகள் அவர் கைகளைப் பிடித்துக் கொள்கிறார்கள். இவர் ஏதோ ஆயுதத்தை எடுக்கிறார் என்று. இவர் அவர்களை ஒதுக்கிவிட்டுத் தன் பையிலிருந்து பட்டினால் ஆன திருநீற்றுப் பையை எடுத்து அதிலிருந்து கைநிறைய திருநீற்றை எடுத்துத் தன் நெற்றியில் பூசிக்கொண்டு, ஊம் இப்போது போகலாம் என்றார். இவர் இப்போதைய மியன்மார் எனும் பர்மாவுக்குச் சென்று அங்கு வாழும் தமிழ் மக்களையெல்லாம் சந்தித்திருக்கிறார். அவர்கள் இவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தனர். அங்கு சென்ற பல இந்தியத் தலைவர்களில் இவருக்கு அளித்தது போன்ற வரவேற்பு வேறு யாருக்கும் அளிக்கப்பட்டதில்லையாம். எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, உலகின் அத்தனை பகுதிகளிலும் தேவரின் புகழ் பரவிக் கிடந்தது. 1957இல் நடந்த பொதுத் தேர்தலிலும் இவர் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி, ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தொகுதி இரண்டிலும் போட்டியிடுகிறார். இரண்டிலும் மறுபடி வெற்றி. இந்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து விடுகிறார். உடல்நலம் கெட்டுவிட்ட நிலையில் 1962ல் நாடாளுமன்றத்துக்கு மட்டும் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். ஆனாலும் இவர் டெல்லி சென்று பதவி ஏற்றுக் கொள்ளமுடியாதபடி உடல்நிலை கெட்டு விடுகிறது. தன்னுடைய நண்பர் திருச்சி டாக்டர் காளமேகம் அவர்களிடம் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டு வைத்தியம் செய்தும் முடியாமல் மதுரை சென்று விடுகிறார். அங்கு அவர் 30-10-1963இல் தனது 55ஆம் வயதில் இவ்வுலக வாழ்க்கையை நீத்து உயிர் துறந்தார். வாழ்க தீரர் முத்துராமலிங்கத் தேவரின் புகழ்! 12 தியாகசீலர் கோவை என்.ஜி.ராமசாமி [] சுவாமி விவேகானந்தர் அறிவுரையென்னும் நூலில் வரும் ஒரு பகுதி: “மரணம் வரும் வரையிலும் வேலை செய். நான் உன்னுடன் இருக்கிறேன். நான் இறந்த பிறகும் என் ஆவி உன்னுடன் இருந்து வேலை செய்யும். இந்த வாழ்க்கை வருவதும் போவதுமாக இருக்கிறது. செல்வம், புகழ், இன்பங்கள் எல்லாமே ஏதோ ஒரு சில நாட்கள்தான் நிலைத்திருக்கும். உலகப்பற்று நிறைந்த ஒரு புழுவைப்போல வாழ்ந்து இறப்பதைவிட, உண்மையை போதித்துக் கொண்டே, கடமையைச் செய்யும்போது உயிர் விடுவது மிக மிக மேலானது. முன்னேறிச் செல்! உனக்கு அனைத்து நலன்களும் அருள இறைவனைப் பிரார்த்திக்கிறேன்”. இந்த அருள் வாக்குக்கேற்ப வையத்தில் ஏழை எளிய உழைப்பாளர்களுக்காக வாழ்வாங்கு வாழ்ந்து, நாட்டிற்கு உழைத்து, நீங்கா புகழும் பெருமையும் பெற்று தனது 31ஆம் வயதிலேயே மரணத்தைத் தழுவிவிட்ட ஒரு தியாக புருஷனின் வாழ்க்கைச் சரிதத்தைச் சுருக்கமாக இப்போது பார்ப்போம். ஒரு தொழிலாளர் தலைவரை, தேசத்தின் விடுதலைக்காகப் பாடுபட்ட ஒரு இளைஞரை, பல்வேறு சந்தர்ப்பங்களில் கொலை வெறியோடு தாக்கி அவரை சின்னாபின்னப்படுத்தியும், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்ட கோவை என்.ஜி.ராமசாமிதான் சுவாமி விவேகானந்தரின் வாக்குக்கேற்ப வாழ்ந்து மாண்டு போனவர். 1912ஆம் வருஷம் மார்ச் 11ஆம் நாள் இவர் பிறந்தார். தந்தை கோவிந்தசாமி நாயுடு, தாயார் சித்தம்மாள். பெற்றோர்கள் இவரது சிறு வயதிலேயே காலமாகிவிட்டனர். இவரது அண்ணன் ராஜு என்பவரின் அரவணைப்பில் வளர்ந்தார். 1930இல் மகாத்மா காந்தி உப்பு சத்தியாக்கிரகத்தில் கைதானபோது, இவர் தனது மாணவத்தோழர்களை ஒன்று திரட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இவர் இளம் மனம் புரட்சியை நாடினாலும், மகாத்மாவின் அஹிம்சை, சத்தியம் ஆகிய கோட்பாடுகள் இவரைக் கவர்ந்தன. இவர் நண்பர்கள் ஒன்றுசேர்ந்து “உண்மை உள்ள கழகம்” என்ற பெயரில் ஒரு சங்கம் நிருவி வாரம் ஒருமுறை ஒளிவு மறைவின்றி தத்தமது கருத்துக்களை வெளியிடும் வழக்கத்தைக் கையாண்டனர். இவர்கள் ஒரு அச்சகத்தையும் நிருவினர். இவர் ஜீவனத்திற்காக சரோஜா மில்லில் வேலைக்குச் சேர்ந்தார். அவர் அங்குள்ள இயந்திரங்களில் பழுது நீக்குவதில் தலைசிறந்த நிபுணர் என்று பெயர் பெற்று, அந்த ஆலையில் ‘மாஸ்டர்’ எனும் தகுதி பெற்றார். மக்களை ஒன்று திரட்டுவதிலும், திறமையாக வழிநடத்திச் செல்வதிலும், தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டவர் என்ற முறையிலும் காங்கிரஸ் கட்சி இவர் மீது கண் வைத்து, இவரை தேர்தலில் போட்டியிட வைத்தது. இவருக்கு எதிராக பலமான போட்டி இருந்தும், மிகப் பெரிய காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவில் இவரே வெற்றி பெற்று தனது 25ஆம் வயதில் சட்டசபை உறுப்பினர் ஆனார். 1937இல் ராஜாஜி தலைமையில் அமைந்த சென்னை சட்டசபையில் இவரே வயதில் இளையவர். இவரது தொழிலாளர் சார்பு நடவடிக்கைகள், கோவை மில் அதிபர்களுக்கு வருத்தத்தை அளித்தபோதும், இவர் தொழிலாளர் நலனையே முக்கியமாக நினைத்தார். ஆனால் இவரது நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த முதலாளிகள் சிலர் இவரை ஒழித்துக் கட்ட முனைந்தனர். அந்த முயற்சியில் தொழிலாளர்களையே பயன்படுத்துவது என்றும் முடிவு செய்தனர். புலியகுளம் எனும் இடத்தில் ஓர் கூட்டத்தில் பேசிவிட்டுத் திரும்புகையில் சிலர் இவரைத் தாக்கி விட்டு, இறந்துவிட்டார் என்று ஓடிவிட்டனர். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்ந்தது. ஆத்திரமடைந்த தொழிலாளர்களை என்.ஜி.ராமசாமி அழைத்து “அமைதியாக இருங்கள். ஆத்திரப்படாதீர்கள். கொதிப்பும் ஆத்திரமும் காந்திய கொள்கைகளுக்கு முரணானவை” என்று எடுத்துரைத்தார். தொழிலாளர் தலைவர் வி.வி.கிரி அவர்கள் தலையிட்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். 1937இல் கோவை ஜில்லா சோஷலிச பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் நிருவப்பட்டது. அதற்கு என்.ஜி.ராமசாமி துணைத் தலைவராக இருந்தார். சோஷலிசம் என்ற பெயரை அரசாங்கம் ஏற்காததால் அந்த சொல்லை நீக்கியே சங்கம் பதிவு செய்யப்பட்டது. பின்னர் என்.ஜி.ராமசாமி இந்த சங்கத்தின் தலைவராக ஆனார். 1938இல் பீளைமேட்டில் ஒரு கூட்டம். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோபால ரெட்டி பேசினார். இந்தக் கூட்டத்தில் என்.ஜி.ஆரை. தீர்த்துக் கட்ட ஒரு கூட்டம் காத்திருந்தது. அதுபோலவே கூட்டம் முடிந்து அனைவரும் திரும்பும் வேளையில் என்.ஜி.ஆரை இரும்புத் தடிகள் கொண்டு தாக்கி வீழ்த்தினார்கள். தொழிலாளர்களின் முடிசூடா மன்னனாக இவர் விளங்கியது இவரது உயிருக்கே ஆபத்தாக வந்து சேர்ந்தது. இவர் மருத்துவ மனையில் இரண்டு மாத காலம் சிகிச்சை பெற்றுத் தேறினார். பிறகு 1940இல் உடுமலைபேட்டையில் நடந்த கூட்டத்திலும் இவர் தாக்கப்பட்டார். இதில் இவரது தொடை எலும்பு முறிந்தது. முதுகிலும், தலையிலும் நல்ல அடி. நீண்ட நாள் சிகிச்சைக்குப் பின் இவர் தேறினாலும் தனது 28ஆம் வயதிலேயே கைத்தடி கொண்டு நடக்கும் நிலைக்கு ஆளானார். இரண்டாம் உலகப் போர காலத்தில், பிரிட்டிஷ் போர் முயற்சிகளுக்கு உதவக்கூடாது என்று சத்தியாக்கிரகம் நடந்தபோது, கோவை பகுதியில் இவர் 1940 ஆகஸ்ட் 22ஆம் தேதி சிங்காநல்லூரில் சத்தியாக்கிரகம் செய்து சிறைப்பட்டு, வேலூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் நோய் வாய்ப்பட்டார். 1941 நவம்பர் 6இல் தண்டனை முடிந்து விடுதலையானார். இவர் கோவையில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் மறுபடியும் எதிரிகள் இவரைக் கத்தியால் குத்தி கொல்ல முயன்றனர். தெய்வாதீனமாக உயிர் தப்பினார். பிறகு இவரது தலைமையில் இருந்த தொழிற் சங்கம் பல காங்கிரஸ் தலைவர்களை அழைத்துக் கூட்டங்களை நடத்தி சுதந்திரப் போராட்ட வேகத்தை அதிகப்படுத்தினார். இந்தச் சூழ்நிலையில் கோவை முருகன் மில்லில் ஒரு ஷிஃப்ட் தொழிலாளர்கள் அனைவரையும் நிர்வாகம் வேலை நீக்கம் செய்தனர். நியாயம் கேட்கச் சென்றபோது என்.ஜி.ஆரும், கே.பி.திருவேங்கடம் எனும் தலைவரும் தாக்கப்பட்டனர். இதன் பயனாகப் பெரும் கலவரம் மூண்டது. ஒரு தொழிலாளி இறந்தார். இதற்கிடையே 1942 ஆகஸ்ட் 8ஆம் தேதி பம்பாயில் கூடிய காங்கிரசில் மகாத்மா “வெள்ளையனே வெளியேறு” எனும் கோஷத்தைக் கொடுத்தார். எல்லா காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். கோவையில் 1942 ஆகஸ்ட் 13ஆம் தேதி என்.ஜி.ஆர் அவர்கள் கைதானார். வேலூர் சிறையில் இருந்த இவரது உடல்நிலை மிகவும் மோசமாகவே, யாராவது கோவையிலிருந்து வந்து அவரை அழைத்துப் போகுமாறு சிறை நிர்வாகம் கேட்டுக் கொண்டது. அப்படி யாரும் போய் அழைத்து வருவதற்கு முன்பே இவரை ரயிலில் ஏற்றித் தனியாக அனுப்பிவிட்டது. கோவையில் மயக்க நிலையில் வந்திறங்கிய இவரை டாக்டர் சிவானந்தம் என்பவர் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். அதன் பிறகு மூன்று மாதங்களே உயிரோடு இருந்த என்.ஜி.ராமசாமி தனது 31ஆம் வயதில், 1943 பிப்ரவரி 12ஆம் நாள் கோவையில் காலமானார். அன்று கோவை நகரமே அழுதது. மில் தொழிலாளர்கள் அத்தனை பேரும் தம் குடும்பத்தலைவர் இறந்ததைப் போல தவித்தனர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் அழுதனர். நாட்டிற்குழைத்த ஒரு தியாகச் சுடர் மறைந்தது, அதுவும் மிக இளம் வயதில், கொடுமதியாளர்களின் தாக்குதலுக்கு ஆளாகி! நாட்டு விடுதலையைக் காணாமலே அந்த இளம் சிங்கம் மறைந்தது. வாழ்க தியாகசீலர் என்.ஜி.ராமசாமி புகழ்!. 13 கோவை சி.பி.சுப்பையா தமிழ்நாடு காங்கிரஸ் கோஷ்டிப் பூசலுக்கு பெயர் பெற்றது. அந்தக் காலத்திலேயே ராஜாஜி கோஷ்டி என்றும் சத்தியமூர்த்தி கோஷ்டி என்றும் பிரிந்திருந்தது. இந்த பிரிவு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தல் 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்கு முன்னதாக நடைபெற்ற போது ராஜாஜி கோவை சி.பி.சுப்பையாவை நிறுத்த சத்தியமூர்த்தி காமராஜை நிறுத்தினார். இறுதியில் காமராஜ் ஒரு வாக்கு வித்தியாசத்தில் சுப்பையாவைத் தோற்கடித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆனார். அது முதல் தமிழ்நாட்டில் காமராஜ் சகாப்தம் தொடங்கியது. அந்த தேர்தலில் காமராஜிடம் தோற்றவர்தான் நாம் இப்போது பார்க்கப்போகும் கோவை சி.பி.சுப்பையா. சி.பி.எஸ். என்று காங்கிரஸ் தொண்டர்களால் அழைக்கப்பட்ட சுப்பையா, 1901ஆம் ஆண்டு கோவை நகரில் பெரியண்ண முதலியார் மீனாட்சி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இளம் வயதில் அதாவது 1920 முதல் நடைபெற்ற அத்தனை போராட்டங்களிலும் கலந்து கொண்டவர் சுப்பையா. மகாத்மா காந்தியடிகளிடம் அளவற்ற பக்தியும், தேசப்பற்றும் மிகுதியாக உடையவர். இவர் அந்தக் காலத்தில் காங்கிரஸ் பிரச்சாரம் செய்த முறையே வித்தியாசமானது. ஒரு சிறுவன் கையில் ஒரு தகர டப்பாவைக் கொடுத்து அதை ஒரு குச்சியால் தட்டிக் கொண்டே சென்று ஆங்காங்கே மக்கள் கூடும் இடங்களில் நின்று இவர் பிரச்சாரம் செய்வார். பொதுக்கூட்ட விளம்பரங்களும் இதே முறையில்தான் இவர் செய்து வந்தார். இவரது இந்த செய்கையால், இவரது எதிரிகள் இவருக்குக் கொடுத்த பட்டம் “தகர டப்பா” என்பதாகும். இவருக்கு நல்ல பேச்சு வன்மை இருந்தது. கூட்டங்களில் மணிக்கணக்காக பேசுவார். இவரது பேச்சு தேசபக்தியைத் தூண்டுவதாக இருக்கும். மகாகவி பாரதி உட்பட பல தேசிய கவிஞர்களின் கருத்துக்களை உரத்த குரலில் இவர் பாடி உரையாற்றும்போது மக்கள் மெய்மறந்து கேட்பர். தேசபக்த விதை மக்கள் மனதில் பதியும் வண்ணம் இவரது உணர்ச்சிகரமான பேச்சு அமைந்திருக்கும். 1920 தொடங்கி 1942 வரையில் இவர் பங்கேற்காத காங்கிரஸ் போராட்ட களமே கோவை பகுதியில் கிடையாது எனும்படி எங்கும் எதிலும் முன்னணியில் இருந்தார். 1930ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கத்தில் கலந்து கொண்டார். பின்னர் ராஜாஜி நடத்திய வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில் கோவையிலிருந்து இவரும், இவரோடு தொழிலதிபர் ஜி.கே.சுந்தரம் ஆகியோர் பங்கு கொண்டு சிறை சென்றனர். கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு, கள் குடியால் ஏழை எளியவர்கள் படும் துயரங்களை எடுத்துக்கூறி ‘மது அருந்த வேண்டாம்’ என்று இவர் கேட்டுக் கொண்டதற்காக இவர் பட்ட அடிகளும், அவமானங்களும் எண்ணில் அடங்கா. கள்ளுக்கடை மறியல் நடந்தபோது, கள்ளுக்கடை அதிபர்கள் அடியாட்களை வைத்து இவரை நையப் புடைத்தனர். ஒரு இடத்தில் செருப்பால் அடித்து அவமானம் செய்தனர். இவ்வளவும் இந்த நாட்டுக்காக, இந்த ஏழை உழைக்கும் மக்களுக்காக என்ற உணர்வோடு அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டார். அப்படி இவர் அடிபடும்போது கூட இவர் கேட்டுக் கொண்டது என்ன தெரியுமா, என்னை அடியுங்கள், கொல்லுங்கள், ஆனால் கள் குடிப்பதை மட்டும் நிறுத்தி விடுங்கள். உங்கள் பெண்டு பிள்ளைகளை வாழ விடுங்கள் என்று கெஞ்சினார். பல இடங்களில் கள்ளுக்கடை அதிபர்கள் இதுபோன்ற காட்டுமிராண்டித் தனமான அவமானங்களைத் தொண்டர்களுக்கு இழைத்திருக்கின்றனர். சிலர் தலையில் கள்ளை ஊற்றி அபிஷேகம் கூட செய்திருக்கின்றனர். இவர் அப்பட்டமான தேசிய வாதி. அப்போது சென்னை மாகாணத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த ஜஸ்டிஸ் கட்சியினரை இவர் தனது சொற்பொழிவுகளில் கேலியும் நையாண்டியும் செய்வார். மக்கள் ரசிப்பார்கள். அவர்களுக்கு மகாராஜாக்களும், ஜமீந்தார்களும் பக்கபலமாக இருக்க எங்களுக்கு இரட்டை ஆடை பக்கிரியான காந்தி இருக்கிறார். கோடானுகோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பார். கோவையில் ஆர்.எஸ்.புரம் என்ற பகுதியின் முழுப் பெயர் தெரியுமா? அது ரத்தின சபாபதி முதலியார் புரம் என்பதாகும். இந்த சி.எஸ்.ரத்தினசபாபதி முதலியார் என்பவர் கோவை நகரசபை தலைவராகவும், அந்த நகரத்தில் ஒரு கெளரவமான தலைவராகவும் இருந்தவர். இவரைப்பற்றி கோவை அய்யாமுத்து “எனது நினைவுகள்” எனும் நூலில் மிக விரிவாக எழுதியிருக்கிறார். இவர் காங்கிரஸ்காரர் இல்லையென்றாலும், காங்கிரஸ் தொண்டர்களிடம் அனுதாபம் கொண்டே இருந்திருக்கிறார். இவர் 1936ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து சாதாரண தொண்டரான சி.பி.சுப்பையா காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மகாத்மா காந்தி அறிவித்த 1942 ‘க்விட் இந்தியா’ போராட்டத்தில் ராஜாஜி காங்கிரசிலிருந்து விலகி யிருந்தமையால் கலந்து கொள்ள வில்லையாயினும், இவர் கலந்து கொண்டு சிறை சென்றார். இவர் மகாத்மா காந்தியை ஒரு தலைவராக பார்த்ததை விட அவரை கடவுளாக மதித்து அவரிடம் பக்தி கொண்டிருந்தார். 1948இல் மகாத்மா கொலையுண்ட பின் இவர் மனம் தளர்ந்து போனார். அந்த துயரம் அவரை பெரிதும் தாக்கிவிட்டது. சுதந்திர இந்தியாவில் நாட்டு விடுதலைக்குப் பாடுபட்டவர்களுக்கு இலவச நிலம் கொடுக்கப்பட்ட போதும், தியாகிகள் ஓய்வூதியம் தரப்பட்ட போதும் அவற்றை வாங்க மறுத்துவிட்டார். தான் வாங்காவிட்டால் போகட்டும் தன் சகோதரர் ஒருவரையும் இவர் வாங்கக்கூடாது என்று தடுத்து விட்டார். இப்படி சுயநலம் என்பதே என்னவென்றறியாத தியாகக்கூட்டம் இங்கு தடியடிபட்டு, சிறை தண்டனை பெற்று, காலமெல்லாம் தன் இளமையையும், முதுமையையும் நாடு நாடு என்று பாடுபட்டவர்களுக்கு, நாம் செய்யும் கைமாறு, குறைந்த பட்சம் இந்தத் தியாகிகள் பெயரையாவது ஒரு முறை சொல்லி நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்வதுதான். அதையாவது நல்ல மனதோடு செய்வோமே. வாழ்க தியாகி சி.பி.சுப்பையா புகழ்! 14 கு. காமராஜ் [] தமிழக முதலமைச்சர், மதிய உணவு அறிமுகம் செய்து பல்லாயிரக்கணக்கான ஏழை குழந்தைகளைப் பள்ளிக்கு வரவழைத்து கல்வி அறிவு புகட்டியவர், காலா காந்தி என்று புகழப்பட்ட ஏழைப் பங்காளன், மக்கள் நலனே தன் நலன் என்று சுயநலம் இல்லாமல் வாழ்ந்த தியாக புருஷன், இவர்தான் காமராஜ். இன்றும்கூட அவர் பெயரால் ‘காமராஜ்’ ஆட்சி அமைப்போம் என்று சொல்லுகிறார்கள் என்றால், அவரது ஆட்சி பொற்காலமாக இருந்தது என்பதை அறியலாம். 1903ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி விருதுப்பட்டி எனும் விருதுநகரில் மிகமிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தார். காமாட்சி என்று பெயர் சூட்டப்பட்ட இவரை எல்லோரும் ‘ராஜா’ என்று அன்போடு அழைத்ததால் இவர் காமராஜா என்றே வழங்கப்பட்டார். இவர் ஆரம்பக் கல்வி பயின்று வந்த போதே இவரது பாட்டனாரும், தந்தையார் குமாரசாமியும் மறைந்தனர். இவரது கல்வியும் ஆறாம் வகுப்போடு நின்று போனது, மகாகவி பாரதியைப் போலவே, எதிர்காலத்துக்குப் பிறரை அண்டி வாழும் நிலை ஏற்பட்டது. தாய்மாமன் கருப்பையா நாடாரின் ஜவுளிக்கடையில் வேலை செய்தார். அப்போது நாட்டில் சுதந்திர வாஞ்சை மூட்டப்பட்டு எங்கும் சுதந்திரம் என்ற பேச்சாயிருந்தது. சுதந்திர ஜுரம் இவரையும் பிடித்தது. 1919 வரலாற்றில் ஓர் முக்கியமான ஆண்டு. ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தது அந்த ஆண்டுதான். ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த ரெளலட் சட்ட எதிர்ப்புப் போர் நடந்தது. காமராஜ் அவர்களின் சுதந்திர வேட்கையைப் புரிந்து கொண்டு, இவரை திருவனந்தபுரம் அனுப்பி திசை திருப்ப முயன்றனர். காமராஜ் அங்கு வெகு காலம் இருக்கவில்லை. விருதுநகர் திரும்பினார். அந்த நாட்களில் விருதுப்பட்டி ஜஸ்டிஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. காமராஜரின் முயற்சியால் அந்த கோட்டை தகர்ந்து போகத் தொடங்கியது. கிராமப் பகுதிகளுக்கெல்லாம் சென்று காமராஜ் சுதந்திரத் தீயை மூட்டினார். பெரும் தலைவர்களை அழைத்து கூட்டங்கள் நடத்தினார். 1920இல் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். வீட்டில் திருமண பேச்சு எழுந்தது. காமராஜ் நாட்டைத் தான் விரும்பினாரே தவிர வீட்டையும் திருமணத்தையும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இவரது சீரிய பணிகளின் விளைவாக இவர் மாகாண காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆனார். தீரர் சத்தியமூர்த்தியை இவர் தனது குருநாதராகக் கருதி வந்தார். இந்தியர்கள் யாரும் கையில் வாள் ஏந்தக்கூடாது என்று தடை இருந்தது. அதனை மீறி இவர் வாள் ஏந்தி ஊர்வலம் வந்தார். சென்னை மாகாண அரசு இந்தத் தடையை மலபார் நீங்கலாக மற்ற பகுதிகளில் விலக்கிக் கொண்டது. 1927இல் சென்னையில் நிறுவப்பட்டிருந்த கர்னல் நீல் என்பவனின் சிலையை, அவன் சிப்பாய்கள் போராட்டத்தில் இந்தியர்களுக்குச் செய்த கொடுமையை எண்ணி, அவன் சிலையை நீக்க வேண்டுமென காமராஜ் எண்ணினார். காந்தியடிகளும் அதற்கு ஒப்புக் கொண்டார். 1930இல் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். 1928இல் சைமன் கமிஷன் மதுரை வந்தபோது கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்து எதிர்ப்பை காமராஜ் தலைமையில் தெரிவித்தனர். தொடர்ந்து இவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் ஆனார். காமராஜ் மீண்டும் ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். காமராஜ் மற்றும் அவர் நண்பர் முத்துச்சாமி ஆகியோர் மீது கலவரம் செய்ததாக வழக்கு நடந்தது. இதில் காமராஜ் நிரபராதி என்று விடுதலையானார். இவர் பல சமூகப் பணிகளை மேற்கொண்டார். பீஹார் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாபு ராஜேந்திர பிரசாத் மூலம் உதவிகளைச் செய்தார். நேரு தமிழகம் விஜயம் செய்த போதெல்லாம் காமராஜ் அவர் உடனிருந்தார். 1937இல் நடந்த தேர்தலில் விருதுநகரில் ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து இவர் வெற்றி பெற்று சரித்திரம் படைத்தார். 1940இல் தீரர் சத்தியமூர்த்தி காமராஜை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெற வைத்தார். தலைவர் தேர்தலில் கடுமையான போட்டியும், எதிர் தரப்பில் பலம் பொருந்திய தலைவர்கள் இருந்தும் காமராஜ் வெற்றி பெற்றது சாதாரண தொண்டனுக்குக் கிடைத்த வெற்றியாக கொண்டாடப்பட்டது. 1940இல் மீண்டும் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். விருதுநகர் நகர் மன்றத் தேர்தலில் இவர் வெற்றி பெற்று தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இவர் ஒரு நாள் மட்டும் அந்தப் பதவியில் இருந்து விட்டு விலகிக் கொண்டார். 1942இல் நடந்த பம்பாய் காங்கிரஸ் தீர்மானத்தின்படி ‘வெள்ளையனே வெளியேறு’ என்று ஆகஸ்ட் புரட்சி எழுந்தது. பம்பாயிலிருந்து சாமர்த்தியமாக தப்பி வந்து தலைமறைவாக சில ஏற்பாடுகளைச் செய்தபின் தானே முன்வந்து கைதானார். மகாத்மா காந்தி ஒருமுறை தமிழக காங்கிரசில் இருந்த கோஷ்டிப் பூசலை ‘க்ளிக்’ என்று வர்ணித்தார். இதனை காமராஜ் கடுமையாக கண்டித்து காந்தியடிகளிடம் போராடினார். 1952 தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் பெரும்பான்மை பெறவில்லை. நேருவின் சம்மதத்தோடு ராஜாஜியை முதலமைச்சராகும்படி காமராஜ் கேட்டுக் கொண்டார். பின்னர் அவர் ராஜிநாமா செய்தபின் 1954இல் காமராஜ் தமிழகத்தின் முதல்வர் ஆனார். இவர் ஆலோசனைப்படி அகில இந்திய காங்கிரசில் “காமராஜ் திட்டம்” நேருஜியால் கொண்டு வரப்பட்டு, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அரசாங்க பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு, கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும் என்று முடிவாகியது. காமராஜ் தனது முதல்வர் பதவியைத் துறந்து முன்னுதாரணமாய்த் திகழ்ந்தார். 1956இல் ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டை மிக விமரிசையாக நடத்திக் காட்டினார். இங்குதான் “சோஷலிச மாதிரியான சமுதாயம்” அமைத்திட தீர்மானம் நிறைவேறியது. 1963இல் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு புவனேஷ்வர் காங்கிரசுக்குத் தலைமை ஏற்றார். 1964இல் நேருஜி காலமானதும் லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக வருவதற்கும், அவர் தாஷ்கண்டில் இறந்தபின் இந்திரா காந்தி பிரதமராக வருவதற்கும் காமராஜ் காரணமாக இருந்தார். இதனால் மொரார்ஜி தேசாய்க்கு வருத்தம் இருந்தது. 1969இல் காங்கிரஸ் பிளவுபட்டது. நிஜலிங்கப்பா, எஸ்.கே.பாட்டில், அதுல்யா கோஷ், காமராஜ் ஆகியோர் இந்திரா காந்திக்கு எதிராக ஆயினர். பின்னர் 1974இல் இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்தபோது காமராஜ் வருந்தினார். மற்ற தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட போதும் இந்திரா காந்தி, காமராஜ் பக்கம் வரவில்லை. 1967 தேர்தலில் அவரும் தோற்று, தமிழகத்தில் காங்கிரசும் பதவி இழந்த பிறகு மன வருத்தத்தில்தான் காமராஜ் இருந்தார். மீண்டும் காங்கிரசுக்குப் புத்துயிரூட்ட முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் விதி 1975ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி, காந்தி பிறந்த நாளில் இவரது ஆவியைக் கொண்டு சென்றது. காமராஜ் அமரரானார். வாழ்க காமராஜ் புகழ்! 15 எம்.பக்தவத்சலம். [] தமிழ்நாட்டில் கடைசி காங்கிரஸ் அரசாங்கத்தின் முதலமைச்சராக இருந்தவர்தான் எம்.பக்தவத்சலம். 1967 தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது மட்டுமல்லாமல் பல பெரும் தலைவர்களும் தேர்தலில் தோற்றுப் போனார்கள். காங்கிரஸ் கட்சியின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த காமராஜ் அவர்கள்கூட விருதுநகர் தொகுதியில் ப.சீனிவாசன் என்னும் மாணவர் தலைவரிடம் தோற்றுப் போனார். இதெல்லாம் கடந்தகால வரலாறு. மூழ்கிப்போன காங்கிரஸ் ஆட்சியின் கப்பல் கேப்டனாக இருந்த எம்.பக்தவத்சலம் காலத்தில் உணவுத் தட்டுப்பாடு வந்தது. பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி உணவு விடுதிகளில் இரவு உணவு பரிமாறுவதை நிறுத்தி வைத்தது; தேர்தலுக்குச் சில ஆண்டுகள் முன்புதான் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வன்முறை இயக்கமாக நடந்து முடிந்தது; அதன் பயனாக தி.மு.க. பலம் பொருந்திய கட்சியாக உருவெடுத்தது; இவை எல்லாம் சேர்ந்து 1967 தேர்தல் தோல்வியில் முடிந்தது. தோல்விக்கு பக்தவத்சலத்தைக் குறை கூறியவர்களும் உண்டு. இவர் ஓர் நல்ல நிர்வாகி. காந்திய சிந்தனைகளில் தெளிந்த நல்ல அறிவாளி. நேர்மையானவர், காமராஜ் தனது ‘காமராஜ் திட்டத்தின்’ மூலம் பதவி விலகியபோது இவரைத்தான் தனக்கு அடுத்தபடி தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக சிபாரிசு செய்தார். இவ்வளவு இருந்தும், இவரால் வெகுஜன உணர்வை எதிர்த்து தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போயிற்று. ஸ்ரீபெரும்புதூரை அடுத்த நசரத்பேட்டை எனும் ஊரில் நல்ல செல்வந்தர் குடும்பத்தில் வந்த அவரது தாய்மாமன்களான சி.என்.முத்துரங்க முதலியார், இ.என்.எவளப்ப முதலியார் ஆகியோரிடம் வளர்ந்தார். இவரது தந்தையார் இளம் வயதில் காலமாகி விட்டதால் மாமன்கள் பார்வையில் வளர்ந்தார். ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள பெருநிலக்கிழார் குடும்பத்தின் வாரிசு இவர். எனினும் இவரது பதவிக் காலத்தில் இவரை ‘பத்து லட்சம் பக்தவத்சலம்’ என்றும், ‘அரிசி கடத்தினார்’ என்றும் கொச்சையாக அரசியல் பேசி சிலர் இழிவு படுத்தினர். எனினும் 1967 தேர்தல் முடிவு தெரிந்ததும் இவரிடம் பத்திரிகையாளர்கள் கருத்து கேட்டபோது இவர் சொன்ன பதில், “தமிழ்நாட்டில் விஷக் கிருமிகள் பரவிவிட்டது” என்பதுதான். பக்தவத்சலத்தின் மனைவி ஞானசுந்தரத்தம்மாள். மகள் பிரபல சமூக சேவகி சரோஜினி வரதப்பன். மகாத்மா காந்தியடிகளின்பால் இவருக்கிருந்த ஈடுபாடு, அன்னிபெசண்டின் அரசியல், திலகரின் போர் முழக்கம், விபின் சந்திர பாலின் சென்னை கடற்கரைப் பேச்சு இவற்றால் கவரப்பட்டு அரசியலில் குதித்தார். வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் தொழிலை உதறிவிட்டு அரசியலில் முழுக் கவனம் செலுத்தினார். திரு வி.க. வின் தேசபக்தன் இதழ்களில் இவர் நிறைய எழுதினார். 1919இல் ரெளலட் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். 1921இல் காந்திஜி சென்னை வந்தபோது சட்டக்கல்லூரி மாணவராக இருந்த பக்தவத்சலம் இவரைச் சந்தித்தார். காங்கிரஸ் கட்சிக்கு முன்னோடியாக இருந்த சென்னை மகாஜன சபாவின் காரியதரிசியாக இவர் 4 ஆண்டுகள் இருந்தார். மது ஓழிப்பு இயக்கத்தில் ஈடுபட்டார். 1927இல் நடைபெற்ற சென்னை காங்கிரசுக்கு இவர் செயலாளராக இருந்து பணிபுரிந்தார். அதே ஆண்டில் சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். 1929இல் நடந்த ஊர்வலத்தில் இவர் மீது போலீஸ் தடியடி நடத்தியது. ஒத்துழையாமை இயக்கம், தனிநபர் சத்தியாக்கிரகம், 1942 ஆகஸ்ட் புரட்சி அனைத்திலும் இவர் தீவிரமாகப் பங்கு கொண்டார். 1933-34இல் துவக்கப்பட்ட தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தின் துணைத் தலைவராக இருந்தார். 1932இல் போலீஸ் தடியடிக்கு ஆளாகி சிறை சென்றார். 1940இல் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் மீண்டும் கைதாகி சிறை சென்றார். சிறையில் கைதிகளுக்கு ராஜாஜி நடத்திய கம்பராமாயணம், பகவத் கீதை உரைகளைக் கேட்டு பயன் பெற்றார். 1942 பம்பாய் காங்கிரசில் கலந்து கொண்டு கைதானார். அமராவதி சிறையில் பல காலம் வாடினார். இப்பொழுதெல்லாம் அரசியல் கட்சிகள் அமைச்சர்களுக்கு எதிராக போராட்டமோ, கருப்புக்கொடி ஆர்ப்பாட்டமோ நடத்துவதற்கு போலீஸ் அனுமதி அளிப்பதில்லை. அப்படி அளித்தாலும் தலைவர் அல்லது அமைச்சர் கண்களில் படாதபடி ஏதாவதொரு மூலையில் இடம் ஒதுக்கித் தருவார்கள். 1952 தேர்தலுக்குப் பின் ராஜாஜி தலைமையில் சென்னையில் அமைச்சரவை அமைந்தது. அதில் எதிர் கட்சியைச் சார்ந்த எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு நாயக்கர், பி.பக்தவத்சலு நாயுடு ஆகியோரை ஆளும் கட்சி சார்பாக ராஜாஜி அழைத்து அரவணைத்துக் கொண்டார். ராஜாஜி மந்திரி சபையில் எம்.பக்தவத்ஸலமும் ஒரு அமைச்சராக இருந்தார். இவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரக்கோணம் நகருக்கு விஜயம் செய்து அங்குள்ள டவுன் ஹாலில் ஒரு கூட்டத்தில் பேச இருந்தார். இவர் வந்து மேடையில் அமர்ந்ததும், கூட்டத்திலிருந்து தி.க.வைச் சேர்ந்த எல்.சஞ்சீவி என்பவரும் அவரது தம்பிகள் ஏ.எல்.சி.கிருஷ்ணசாமி, எல்.பலராமன் ஆகியோரும் மற்றும் சிலரும் கருப்புத் துணியைக் கையில் வைத்துக் கொண்டு வீசினார்கள். பக்தவத்ஸலம் அது என்ன என்று விசாரித்தார். உங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர்கள் கருப்புத் துணியைக் காட்டுகிறார்கள் என்றார்கள். உடனே பக்தவத்ஸலம் போலீசிடம் அவர்களை உள்ளே வரச் சொல்லுங்கள் என்றார். அவர்களும் வரிசையில் வந்து பக்தவத்சலத்திடம் தங்கல் கருப்புத் துணிகளைக் கொடுக்க அவர் அவற்றை வாங்கி மேஜை மேல் வைத்துக்கொண்டு, உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டேன். முதலமைச்சரிடமும் கூறுகிறேன் என்று சொன்னார்; அவர்களும் அமைதியாகக் கலைந்து சென்றார்கள். இதுபோல இன்று யாராவது நடந்து கொள்வார்களா, நடக்கத்தான் முடியுமா என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தான் ஒரு அமைச்சர் அல்லது முதலமைச்சர் என்ற பந்தா சிறிதுகூட இவரிடம் காணமுடிவதில்லை. இவர் முதலமைச்சராக இருந்த போது இவர் எந்த ஊருக்குச் சுற்றுப்பயணம் சென்றாலும், இவருக்கு முன்பாக ஒரு போலீஸ் பைலட் காரும் அதனைத் தொடர்ந்து ஒரு அம்பாசிடர் காரின் முன் சீட்டில் அமர்ந்துகொண்டு பக்தவத்சலமும் செல்வார்கள். இவ்வளவு எளிமையை யாரிடமாவது பார்க்க முடியுமா. அன்றைய தினம் இருந்த அமைச்சர்கள் எல்லோருமே அப்படித்தான் எளிமையை மேற்கொண்டிருந்தனர். பக்தவத்சலத்துடைய துரதிஷ்டம் அவர் முதலமைச்சர் பதவி வகித்த காலத்தில் உணவு தானியங்களுக்குத் தட்டுப்பாடு வந்தது. மத்திய அரசிலிருந்த ஒரு அமைச்சர் வேறு தாறுமாறான உபதேசங்களை வழங்கி காங்கிரஸ் அமைச்சரவைக்கு சிக்கலை உண்டாக்கினார். மத்திய அரசு ஹோட்டல்களை இரவு நேரத்தில் மூடும்படி அறிவுரை வழங்கியதன் காரணமாக மக்கள் தொல்லைகளுக்கு உள்ளாகினர். போதாத குறைக்கு அப்போது நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் வன்முறைப் போராட்டமாக வெடித்தது. போலீஸ் தடியடி, துப்பாக்கிச் சூடு, பொதுமக்கள் பலி, போலீஸ் அதிகாரிகள் பலி, பல அரசாங்க அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், அஞ்சல் அலுவலகங்கள் இவையெல்லாம் தீக்கிரை என்று பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதை கையாண்ட விதம் சரியில்லை என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டதின் விளைவு பக்தவத்சலமும், காங்கிரசும் 1967 தேர்தலில் படுதோல்வி அடைந்தது இன்று வரை நிமிரவேயில்லை. இவர் அமைச்சராக, முதலமைச்சராக பல்வேறு பதவிகளையும் வகித்துத் தன் நிர்வாகத் திறமையால் பெருமையோடு திகழ்ந்தவர். பதவி இழந்த பிறகும் பலகாலம் உயிரோடு இருந்து காலமானார். இவரது சிறப்பான நிர்வாகத் திறன், காங்கிரசில் இவருடைய அனுபவம், கல்வி அறிவு, நீண்டகால அரசியல் பயிற்சி, காமராஜ், ராஜாஜி ஆகியோரின் வழிகாட்டுதல்கள், முத்துரங்க முதலியாரின் நெருக்கம் ஆகியவை இருந்தும், இவருக்கு எதிராக நடைபெற்ற மோசமான தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் இவர் தோற்றார். எனினும் அவருடைய மேதைத்தன்மையையும், அறிவுக்கூர்மையையும் எவராலும் குறைகூற முடியாமல் இருந்தது. இவர் அடைந்த தோல்வி அவருக்கல்ல, அவர் சார்ந்த காங்கிரசுக்கு அல்ல, அன்றைக்கு மாறிவந்த அரசியல் நாகரிகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமையே காரணம். இவருடைய வீழ்ச்சி பலருடைய மனத்திலும் அனுதாபத்தைத்தான் ஏற்படுத்தியதே தவிர மகிழ்ச்சியை அல்ல. போர்க்களத்தில் அபிமன்யுவை வீழ்த்தியதைப் போல இவரை வீழ்த்திவிட்டாலும் இவர் புகழ் வானோங்கிதான் நின்றிருந்தது. இவர் ஆட்சி காலத்தில் இவர் காட்டி வந்த உறுதி, சட்டவழியிலான ஆட்சியின் மீது வைத்திருந்த நம்பிக்கை அதன்பிறகு காணமுடியாமலே போய்விட்டது. இவரை மிகவும் மோசமாகத் தாக்கியவர்கள்கூட பின்னர் இவரை ‘பெரியவர்’ பக்தவத்சலம் என்று அழைத்தும், இவர் மறைந்த போது அனுதாபம் தெரிவித்து, இவருக்குப் புகழாரம் சூட்டியதையும் நாடறியும். தோன்றின் புகழொடு தோன்றுக, அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று எனும் வாக்கிற்கிணங்க புகழோடு வாழ்ந்து, புகழோடு மறைந்தவர் பெரியவர் பக்தவத்சலம். வாழ்க அவரது புகழ்! 16 பி. ராமமூர்த்தி 1940ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி சென்னை மாகாணத்தில் வெளிவந்த அத்தனை நாளிதழ்களிலும் சென்னை அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரம் இதோ: ” 100 ரூபாய் இனாம்!! இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்படி தேடப்பட்டுவரும் கீழ்கண்ட நபர்களைப் பற்றிய நம்பகரமான தகவல்களைத் தரும் எவருக்கும் ரயில்வே துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலும் மற்றும் சென்னை சி.ஐ.டி. இலாகாவும் 100 ரூபாய் அன்பளிப்பு தரும். (1) பி.ராமமூர்த்தி, வேப்பத்தூரைச் சேர்ந்த வி.பஞ்சாபகேச சாஸ்திரிகளின் மகன், வயது 36/40, உயரம் 5அடி 4 அங்குலம். பிரவுன் நிறம். மெல்லிய உடல். கிராப்புத் தலை, வலதுகால் ஊனம்”. இவர் தவிர அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தவர்கள் எம்.ஆர்.வெங்கட்ராமன், மோகன் குமாரமங்கலம், சி.எஸ்.சுப்பிரமணியம் ஆகியோர். இவர்களுக்கு உதவி செய்பவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியது அந்த விளம்பர வாசகம். இதிலிருந்தே இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டவர்கள் பிரிட்டிஷ் அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்கள் என்று தெரிகிறதல்லவா? இரண்டாம் உலகப் போர் தொடங்கிய காலத்தில் கம்யூனிஸ்டுகள் யுத்த எதிர்ப்பில் தீவிரமாக இருந்தார்கள். பின்னர் ஹிட்லர் ரஷ்யாவின் மீது படையெடுத்தபின், இது மக்கள் யுத்தம் என்று பெயரிட்டு, ஆங்கில அரசின் யுத்த முஸ்தீபுகளுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அப்படி முதலில் யுத்த எதிர்ப்பில் பி.ஆர். எனப்படும் ராமமூர்த்தி தீவிரமாக இருந்ததால், இவரை தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூருக்கு அருகில் உள்ள வேப்பத்தூர் எனும் கிராமத்தில் வீட்டுக் காவலில் வைத்தார்கள். ஆனால் இவர் போலீசார் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தலைமறைவாகி விட்டார். இவரது அரசியல் வாழ்க்கை பெரும்பாலும், கடைசிகாலம் தவிர போராட்டக் களமாகவே இருந்தது எனலாம். இவர் 1908 செப்டம்பர் 20ஆம் தேதி வேப்பத்தூரில் பஞ்சாபகேச சாஸ்திரிகள், லக்ஷ்மி அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். படிப்பில் படுசுட்டியான ராமமூர்த்தியை விடுதலை வேட்கைப் பற்றிக் கொண்டது. 1919இல் ரெளலட் சட்டத்தை எதிர்த்து நாட்டில் அனைவரும் வீட்டிலேயே உண்ணா நோன்பு இருக்க மகாத்மா பணித்தபோது பி.ஆரும். வீட்டில் உண்ணாவிரதம் இருந்தார். காந்திஜியின் அழைப்பை ஏற்று இவர் கதர் மட்டுமே உடுத்தினார். 1920ஆம் ஆண்டில் ஒரு கிரிக்கெட் போட்டியைப் பார்க்க மரத்தின் மேல் ஏறியபோது கீழே விழுந்து கால் ஊனம் ஆனது. அது கடைசிவரை இருந்தது. இவர் வீட்டில் சொல்லாமல் திருட்டு ரயில் ஏறி அலஹாபாத் சென்றார். வழியில் பல இடங்களில் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டார். சபர்மதி ஆசிரமம் சென்று சேர விரும்பினார். அப்போது காந்திஜி சிறையில் இருந்தார். ராஜாஜி “யங் இந்தியா” பத்திரிகை நடத்திக் கொண்டு அங்கு இருந்தார். அவர் ராமமூர்த்தியிடம் நீ இப்போது இங்கு செய்யக்கூடியது எதுவுமில்லை. ஊருக்குச் சென்று மீண்டும் படிப்பைத் தொடங்கு என்றார். வேறு வழியின்றி சென்னை திரும்பி இந்து உயர் நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். 1926இல் பள்ளி இறுதி தேறினார். பிரசிடென்சி கல்லூரி எனும் மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். அரசியலுக்காக கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டு வெளியேற்றப்பட்டார். காசிக்குச் சென்று அங்கு நான்காண்டு காலம் படித்தார். 1930இல் பி.எஸ்.சி. முடித்ததும் அரசியல் போராட்டத்தில் சிறைப்பட்டார். சென்னை திரும்பி ரயில்வே பணியில் சேர்ந்தார். எனினும் சமூகப் பணிகளும், அரசியல் பணிகளும் அவரை இழுத்துக் கொண்டன. 1932இல் திருவல்லிக்கேணியில் சத்தியாக்கிரகம் செய்து ஆறுமாத சிறை தண்டனை பெற்றார். இவரது சமூகத் தொண்டின் ஒரு பகுதியாக இவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் நிர்வாகக் குழுவில் தாழ்த்தப்பட்டவர்களை உறுப்பினராக ஆக்க எடுத்துக் கொண்ட முயற்சி, வழக்கு விசித்திரமானது. தாழ்த்தப்பட்ட மக்கள் பலரை ஒன்றுதிரட்டி அவர்களுக்குப் பிரபந்தங்கள் சொல்லிக் கொடுத்து கோயிலை வலம் வரச் செய்தார். அவர்களுக்கு கோயில் உள்ளே செல்ல அனுமதி இல்லை. அப்போது கோயில் தர்மகர்த்தா தேர்தல் வந்தது. இவர் 200 செறுப்பு தைக்கும் தொழிலாளிகளை ஒன்று திரட்டி அவர்களுக்கு வைணவ முறைப்படி தோளில் சங்கு சக்கரம் பொறிக்கச் செய்து கோயில் உறுப்பினராக ஆக்க முயன்றார். வைணவர்கள் மறுத்துவிட்டனர். இவர் சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ராமப்பா எனும் நீதிபதி விசாரித்தார். இவர்களுக்கு டி.ஆர்.வெங்கடராம சாஸ்திரி ஆஜரானார். வைணவர்களுக்கு வரதாச்சாரியார் என்பவர் ஆஜரானார். நீதிபதி இவர்களைப் பார்த்துக் கேட்டார் உங்கள் குரு யார் என்று. அதற்கு அவர்கள் சாத்தாணி ஐயங்கார் என்றார்கள். இவ்வழக்கில் பி.ஆர். எடுத்துக் கொடுத்த ஒரு பாயிண்ட் ‘பாஞ்சராத்ரம்’ எனும் ஆகமப் பிரிவின் கீழ் எந்த ஒரு வைஷ்ணவனும் மற்றொரு வைஷ்ணவனைப் பார்த்து நீ என்ன சாதி என்று கேட்கக்கூடாது. அப்படிக் கேட்பது தன் தாய்;உடன் உடலுறவு வைத்துக் கொள்வதற்குச் சமம் என்பதை வக்கீல் வாதத்திற்கு எடுத்துக் கொண்டார். வழக்கில் வெற்றி. செறுப்பு தைக்கும் தொழிலாளிகள் வெற்றி பெற்றாலும், இவர்களுக்கு சொத்து இல்லை என்பதால் யாரும் தர்மகர்த்தா ஆக முடியவில்லை. அப்போது சென்னை சதி வழக்கு என்ற பெயரில் ஒரு வழக்கு நடந்தது. இதனைக் காண நீதிமன்றம் சென்று வந்த ராமமூர்த்திக்கு பல கம்யூனிஸ நூல்கள் படிக்கக் கிடைத்தன. 1934இல் ப.ஜீவானந்தம் ஆகியோருடன் சேர்ந்து காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்தார். தொழிற்சங்கங்கள் உருவாகின. கொடுங்கையூரில் நடந்த ஊர்வலம் காரணமாக இவர்மீது வழக்கு, ஒரு மாதம் சிறைவாசம். 1936இல் உருவான கம்யூனிஸ்ட் கட்சியில் உருப்பினர் ஆனார். பல தொழிலாளர் போராட்டங்களை நடத்தினார். இவரோடு தோளோடு தோள் நின்று போராடிய மற்ற கம்யூனிஸ்ட்டுகள் கே.ரமணி, அனந்தன் நம்பியார், வி.பி.சித்தன், கே.பி.ஜானகி அம்மாள், எம்.ஆர்.வெங்கடராமன், என்.சங்கரையா, ஏ.நல்லசிவன் ஆகியோராவர். இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியது. கம்யூனிஸ்ட்டுகள் தலைமறைவாயினர். எனினும் யாரோ ஒரு கருங்காலி காட்டிக் கொடுக்க அனைவரும் கைதாகிவிட்டனர். 1940-41இல் இவர்கள் மீது அரசாங்கத்தைக் கவிழ்க்க சதிசெய்ததாக வழக்கு தொடர்ந்தது. இவர்களுக்காக பிரபலமான இந்திய வழக்கறிஞர்கள் வாதாடினர். இதில் பி.ஆர். நாண்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். மோகன் குமாரமங்கலம் மூன்று ஆண்டுகள் இப்படிப் பலரும் பல தண்டனைகள் பெற்றனர். 1943இல் பம்பாயில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் மாநாட்டிற்குச் சென்றார். தன் வாழ்நாள் முழுவதும் பற்பல வழக்குகளைச் சந்தித்து, பிரபல கம்யூனிஸ்டாக இருந்து, பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நெருக்கடி நிலையின் போதும் தலைமறைவாக இருந்து பல சாகசங்களைப் புரிந்து, இறுதியில் தனது 79ஆம் வயதில் 1987 டிசம்பர் 15ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார். வாழ்க பி.ஆர்.புகழ்! 17 பாஷ்யம் என்கிற ஆர்யா தற்காலம் புழக்கத்தில் இருக்கும் மகாகவி பாரதியாரின் படம் அனைவருக்கும் தெரியும். அதனை வரைந்தவர் இந்த பாஷ்யம் எனும் ஆர்யா. சென்னை தலைமைச் செயலகம் இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடிக்கடி தொலைக்காட்சியில் பார்க்கிறொமல்லவா, அங்கு வானுயர எழும்பியிருக்கும் கொடிமரத்தையும் பார்த்திருக்கலாம். இந்த கம்பத்தின் உச்சியில் ஒருவரும் அறியாமல் ஏறி, பிரிட்டிஷ் கொடியான யூனியன் ஜாக்கை இறக்கிவிட்டு, இந்திய தேசியக் கொடியை ஏற்றிய மாவீரர் பாஷ்யம் எனும் ஆர்யா. இன்று யார் யாரெல்லாமோ ‘மாவீரன்’ என்ற பட்டப் பெயரைத் தாங்கிக்கொண்டிருந்தாலும், நிஜமான, மாவீரச் செயலைப் புரிந்த இந்த மாவீரன் நம்முடன், நம் காலத்தில் வாழ்ந்து மறைந்தார் என்பது நமக்குப் பெருமை. அதிலும் அவர் நம் மாவட்டத்தில், மன்னார்குடிக்கு அருகிலுள்ள சேரங்குளம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது நமக்கு மேலும் பெருமை சேர்க்ககூடியது. அல்லவா? சேரங்குளத்தில் 1907ஆம் ஆண்டு பிறந்தார் பாஷ்யம். ‘சுதேசமித்திரன்’ ஆசிரியராக இருந்த ஏ.ரங்கசாமி ஐயங்கார் இவரது உறவினர். மன்னார்குடியில் கல்வி பயின்றார். தன் 11ஆம் வயதில் பஞ்சாபில் ஜாலியன்வாலாபாக்கில் நடந்த படுகொைலையினால் ஆவேசம் கொண்டார். நீடாமங்கலம் சென்று அங்கு நடந்த காந்திஜியின் சொற்பொழிவைக் கேட்டார். தேச சேவைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள உறுதி பூண்டார். உயர்நிலைப் பள்ளிப் படிப்பை மன்னார்குடியில் முடித்தபின் திருச்சி சென்று தேசியக் கல்லூரியில் பயின்றார். அங்கு படித்த காலத்தில் இவர் படித்த நூல்கள் பாடப்புத்தகங்களைக் காட்டிலும் தேசபக்தி நூல்களே அதிகம். இங்கிலாந்திலிருந்து ‘சைமன்’ என்பவர் தலைமையில் ஒரு கமிஷன் இந்தியா வந்தது. காங்கிரசார் அதனை கருப்புக்கொடி காட்டி திரும்பிப்போ என்று போராடினர். சைமன் கமிஷன் திருச்சி வந்தது. அங்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம். முன் வரிசையில் தேசியக் கல்லூரி மாணவர்கள், அவர்களுக்குத் தலைமை பாஷ்யம். முதல்வர் சாரநாதன் காட்டிய கருணையால் அவர் படிப்பு இடையூறு இன்றி தொடர்ந்தது. எனினும் தேசவிடுதலை இவரை அழைத்துக் கொண்டது. பயங்கரவாத அமைப்புகள் இவரை கைநீட்டி வரவேற்றன. புதுச்சேரி சென்றார். அங்கு துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றார். பாரதமாதா சங்கம் போன்ற சங்கத்தில் உறுப்பினராகி, காளி படத்தின் முன் ரத்தக் கையெழுத்திட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டார். சேரங்குளத்துக்குத் திரும்பிய பாஷ்யம் ஏதாவது செய்யத் துடித்தார். அப்போது கவர்னர் மார்ஷ் பாங்சின் என்பவர் சிதம்பரத்துக்கு வருவதாக செய்தி கிடைத்தது. பாஷ்யம் சிதம்பரம் சென்றார். கவர்னர் கலந்து கொண்ட கூட்டத்திற்குச் சென்று அவரைச் சுட முயன்று, முடியாமல் போய்விட்டது. தஞ்சை திரும்பி தனது நண்பர் டாக்டர் கோபாலகிருஷ்ணனிடம் சொல்லி வருத்தப்பட்டார். டாக்டர் அவர் செயலை ஏற்றுக் கொள்ளவில்லை. இனி இதுபோன்ற செயல்களை விடுத்து மகாத்மாவைப் பின்பற்றும்படி அறிவுரை கூறினார். மதுரையில் ஒரு வங்கியைக் கொள்ளை அடிக்கத் திட்டம் தீட்டி சில நண்பர்களுடன் முயன்றார். அதில் தோல்வியடைந்து போலீசில் சிக்கி சித்திரவதைக்கு உள்ளானார். இவரது நண்பருக்கு ஏழாண்டு சிறை, இவர் மீது எந்த ஆதாரமும் இல்லையென விடுதலையானார். 1931இல் சென்னை சென்று தமையனார் வீட்டில் தங்கினார். போலீஸ் கண்காணிப்பு இருந்தும், இவர் கதர் அணிந்து கதர் துணி விற்பனை செய்தார். அந்நிய துணிகளை வாங்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். அதன் பயனாய் துணிக்கடைக்காரர்கள் இவர் மீது எச்சிலை உமிழ்ந்தார்கள், சிகரெட்டால் சுட்டார்கள், தலையில் கள்ளுப்பானையைப் போட்டு உடைத்தார்கள். ஜவஹர்லால் நேரு ஜனவரி 26ஆம் தேதியை நாட்டு மக்கள் சுதந்திர தினமாக அனுசரிக்க வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்று பாஷ்யம் ஒரு சாகசத்துக்கு தயாரானார். 1932 ஜனவரி மாதம் 26ஆம் தேதி நெருங்கிக் கொண்டிருந்தது. பெரிய தேசிய மூவண்ணக் கொடியன்றை இவரே தைத்துக் கொண்டார். நடுவில் மையினால் ராட்டை வரைந்து கொண்டார். அதன் கீழ் “இன்று முதல் இந்தியா சுதந்திரம் அடைகிறது” என்று எழுதினார். ஜனவரி 25, மாலை 7 மணிக்கு கொடியைத் தன் உடைக்குள் மறைத்துக் கொண்டு, தன்னுடன் தியாகி சுப்பிரமணிய சிவாவின் மருமகன் வேணுகோபாலனைத் தன்னைப் பின் தொடரும்படி சொல்லிவிட்டுச் சென்றார். ஒரு திரைப்படக் கொட்டகை சென்று சினிமா பார்த்துவிட்டு நள்ளிரவு 12 மணிக்கு ரகசியமாக கோட்டைக்குள் நுழைந்தார். அங்கு 140 அடி உயரம் குறுக்களவு 3 அடி உள்ள கம்பத்தில் ஏறினார். அப்போது சுழலும் விளக்கின் வெளிச்சம் படும்போதெல்லாம், கம்பத்தின் மறுபுறம் ஒளிந்து ஏறி யூனியன் ஜாக்கை இறக்கிவிட்டு அதில் தேசியக் கொடியை ஏற்றிவிட்டு இறங்கி சாமர்த்தியமாக ஓடி தப்பிவிட்டார். காலையில் ஒரே பரபரப்பு. கோட்டையில் ராணுவ வீரர்கள் பதட்டமடைந்தனர். கவர்னருக்குச் செய்தி போயிற்று. இதனைச் செய்தவரைக் கண்டுபிடிக்க போலீஸ் தலைகீழாக நின்றும் பயனில்லை. இன்று வரை அந்த செயலைச் செய்தவர் கண்டுபிடிக்கப்படவில்லை என்றுதான் அரசாங்க ஆவணங்கள் கூறுகின்றன. அதுமட்டுமல்ல சென்னை ஜார்ஜ் டவுன் பகுதிகளில் அந்நிய துணிகளை விற்கும் பிரம்மாண்டமான கடைகளில் துணிகள் அடிக்கடி தீப்பற்றி எரிவதாக புகார்கள் வந்தன. அவைகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படி தீ விபத்து நடந்த கடைகளுக்கு பாஷ்யமும் அவரது நண்பர்களும் போய்வந்ததும் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பாஷ்யம் அப்போது கம்யூனிஸ்டுகளாக இருந்த அமீர்ஹைதர் கான், சி.எஸ்.சுப்பிரமணியம், புதுச்சேரி சுப்பையா ஆகியோரோடு தொடர்பு வைத்திருந்தார். இந்த நிலையில் 1942இல் ஆகஸ்ட் புரட்சி தொடங்கியது. பாஷ்யம் எனும் மீன்குட்டிக்கு நீந்துவதற்குச் சொல்லியா கொடுக்க வேண்டும். புகுந்து விளையாடினார். இவர் ஓர் ஓவியர். நிறைய படங்களை வரைந்து வைத்திருந்தார். அப்படித்தான் மகாகவி பாரதி படத்தையும் வரைந்தார், அது பின்நாளில் சென்னை அரசாங்கத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1945இல் முழு நேர ஓவியரானார், “ஆர்யா” எனும் புனைபெயரைத் தாங்கிக் கொண்டார். மகாத்மா, நேதாஜி ஆகியோருடைய படங்களையும் இவர் வரைந்திருக்கிறார். இவர் நீண்ட நாட்கள் வாழ்ந்து சில ஆண்டுகளுக்கு முன்புதான் காலமானார். வாழ்க வீரர் பாஷ்யம் எனும் ஆர்யாவின் புகழ்! 18 "கல்கி" ரா.கிருஷ்ணமூர்த்தி பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சரித்திரப் பாடங்களைப் படிக்க அலுத்துக் கொள்ளும் மாணவர்கள்கூட மிகவும் ஆர்வத்தோடும், கவனத்தோடும் படித்து கடைச்சோழர்களான விஜயாலயனுடைய வம்சத்தைப் பற்றியும், காஞ்சி மாநகரைக் கட்டியாண்ட மகேந்திர பல்லவன், நரசிம்ம பல்லவன், வாதாபியை ஆண்ட புலிகேசி ஆகியோரைப் பற்றியும், உறையூரையாண்ட சோழர்கள் பற்றியும் விரும்பிப் படிக்க வைத்த வரலாற்றுக் கதையாசிரியர் “கல்கி” ரா.கிருஷ்ணமூர்த்தியாவார். அதுமட்டுமா? இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது நடைபெற்ற மதக் கலவரங்களின் தீவிரத்தை நாம் பிறர் சொல்லக் கேட்டிருக்கலாமே தவிர பார்த்ததில்லை அல்லவா? “அலை ஓசை” எனும் நாவலைப் படித்தால் நாம் அதை அப்படியே உணரலாம். அமரர் கல்கியின் “பொன்னியின் செல்வன்”, “சிவகாமியின் சபதம்”, “பார்த்திபன் கனவு”, “அலை ஓசை”, இன்ன பிற நூல்கள் ஒவ்வொருவரும் படித்துப் பயன் பெற வேண்டிய சாகா வரம் பெற்ற அமர காவியங்களாகும். இவற்றையெல்லாம் படைத்த இந்த எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், ஒரு விடுதலைப் போராட்ட வீரரும்கூட. இவரது அந்த முகத்தைச் சற்று இங்கே பார்க்கலாம். தஞ்சாவூர் மாவட்டம் மாயவரத்தை அடுத்த புத்தமங்கலம் எனும் கிராமத்தில் 1899இல் பிறந்தார் கிருஷ்ணமூர்த்தி. மாயூரம் முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பிறகு திருச்சி தேசியக் கல்லூரியில் படிக்கச் சென்றார். 1920இல் நடந்த நாகபுரி காங்கிரஸ் தீர்மானத்தின்படி ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியது. மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியேற வேண்டும், கிருஷ்ணமூர்த்தியும் கல்லூரியை விட்டு வெளியேறினார். இவருக்கு மகாத்மா காந்தி, ராஜாஜி, டாக்டர் ராஜன் ஆகியோர் ஆதர்ச தலைவர்களாக விளங்கினர். 1922இல் முதன்முதல் ராஜத்துவேஷப் பேச்சுக்காக கைது செய்யப்பட்டார். வயதில் குறைந்தவர் என்பதற்காக இவரை எச்சரித்து விட்டுவிட நினைத்த நீதிபதியிடமே, இவர் தான் தெரிந்தே ராஜ துவேஷப் பேச்சு பேசுவதாக இவர் தெரிவித்ததும், ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். திருச்சியில் அப்போது தமிழ்நாடு காங்கிரசின் தலைமையகம் இருந்தது, விடுதலையானதும் கிருஷ்ணமூர்த்தி அங்கு வேலையில் சேர்ந்தார். 1921இல் மகாத்மா காந்தி தமிழகம் வந்தபோது இவர் டாக்டர் ராஜனுடன் சேர்ந்து வரவேற்பு, கூட்டம் ஆகிய ஏற்பாடுகளில் ஈடுபட்டு, மகாத்மாவால் ‘அச்சா தேஷ் சேவக்” என்று பாராட்டப் பெற்றார். கரூரில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை அவர்கள் தலைமையில் கூட்டத்தில் பேசிய பேச்சிற்காக கைது செய்யப்பட்டார். திருச்சி சிறையில் இருந்தபோது மதுரையைச் சேர்ந்த இளைஞர் சதாசிவம் என்பவரின் நட்பு கிடைத்தது. இந்த நட்பு வாழ்நாளெல்லாம் தொடர்ந்தது. “கல்கி” பத்திரிகை தோன்றவும் காரணமாக இருந்தது. இவரது முதல் நாவல் வ.ரா. ஆசிரியராக இருந்த நடத்திய “சுதந்திரன்” எனும் பத்திரிகையில் வெளிவந்தது. பள்ளிக்கூடத்தில் படித்த நாட்களிலேயே ராஜாஜியைப் பற்றி தெரிந்து கொண்டு அவரிடம் பக்தி கொண்டார். திருச்சி காங்கிரஸ் அலுவலக வேலையைத் தொடர்ந்து, இவர் சிலகாலம் ஈரோடு கதர் அலுவலகத்தில் வேலை செய்தார். டாக்டர் ராஜனின் வேண்டுகோளின்படி இவர் திரு வி.க.வைச் சந்தித்தார். அவர் நடத்தி வந்த “நவசக்தி” இதழில் வேலை செய்தார். மகாத்மா காந்தி “யங் இந்தியா”வில் எழுதி வந்த சுயசரிதையை இவர் மொழிபெயர்த்து “நவசக்தி”யில் வெளியிட்டார். இவர் ராஜாஜியின் திருச்செங்கோடு ஆசிரமத்தில் இருந்து அங்கிருந்து வெளியான “விமோசனம்” எனும் மதுவிலக்குப் பிரச்சார இதழிலும் எழுதி வந்தார். 1930இல் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் இவரது ஆரோக்கியம் கருதியும், ஏற்கனவே ஓராண்டு சிறையில் தவமிருந்ததாலும் ராஜாஜி இவரைத் தன் படையில் சேர்ந்துக் கொள்ளவில்லை. உப்பு சத்தியாக்கிரகத்தில் இவர் கலந்து கொண்டு சிறை செல்லவில்லையாயினும், இவரது எழுத்துக்கள் ஆயிரமாயிரம் தொண்டர்களை உசுப்பி இந்தப் போரில் கலந்து கொள்ளத் தூண்டுதலாயிருந்தது என்பது உண்மை. இவர் எழுதி வெளியிட்ட துண்டு பிரசுரங்களுக்காக இவருக்கு மறுபடியும் ஒரு ஆறுமாத சிறை தண்டனை கிடைத்தது. விடுதலையான பிறகு “ஆனந்த விகடனில்” தொடர்ந்து எழுதிவரலானார். அதில் இவர் எழுதிய “தியாக பூமி” நாவல் தமிழ்நாட்டை மட்டுமல்ல, தமிழர்கள் வாழும் எல்லா இடங்களிலும் ஓர் புதிய எழுச்சியையும், தேச பக்தியையும் தூண்டியது. அந்த காலகட்டத்தில் அந்த நாவலில் வந்த ‘சரோஜா’ எனும் குழந்தையின் பெயரைப் பலர் தங்கள் குழந்தைகளுக்கும் வைத்தனர் என்பது ஒரு சுவையான செய்தி. “ஆனந்த விகடனில்” ஒன்பது ஆண்டுகள் வேலை பார்த்த பின் “கல்கி” எனும் பெயரில், இவரும் சதாசிவமும் இணைந்து ஒரு புதிய பத்திரிகையை வெளியிட்டனர். அதில் வெளியான இவரது வரலாற்றுப் புதினங்கள், கட்டுரைகள், இசை விமரிசனங்கள், தலையங்கங்கள் ஆகியவை வரலாற்றுப் புகழ் மிக்கன. அவையெல்லாம் மீண்டும் நூல் வடிவம் பெற்று இப்போது விற்பனையாகின்றன. இப்போதும்கூட அவை படிப்பதர்கு சுவையும், சூடும் நிறைந்திருப்பதைக் காண முடியும். மகாகவி பாரதியாரின் பால் மிகவும் ஈடுபாடு கொண்டு, அவர் நினைவாக எட்டயபுரத்தில் ஓர் மணிமண்டபம் கட்டுவதர்கு முன்முயற்சி எடுத்து, கட்டி முடித்து அதனை கவர்னர் ஜெனரல் ராஜாஜியினால் திறந்து வைத்த சேவையைத் தமிழகம் என்றென்றும் நினைவில் வைத்துப் போற்றும். இவருக்கு நாட்டு நன்மை என்பதுதான் தாரக மந்திரம் இதை அவர் பாணியில் கூறுவதென்றால், அவருக்கு இருந்த மூன்று நோக்கங்கள் முதலாவது தேச நன்மை, இரண்டாவது தேச நன்மை, மூன்றாவது தேச நன்மை. இந்த வரலாற்று ஆசிரியர், சுவாரசியமான எழுத்தாளர், இசை ரசிகர், பாரதி அன்பர், தேச பக்தர், தமிழ் நாவல்களைப் படிக்கத் தூண்டிய அபூர்வமான கதாசிரியர் 1954ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 5ஆம் நாள் தனது 55ஆம் வயதில் காலமானார். தமிழ் நாட்டில் ஓர் சகாப்தம் நிறைவடைந்தது. வாழ்க கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி புகழ்! 19 கானக்குயில் கே.பி.சுந்தராம்பாள் அந்தக்கால நாடகமேடை சக்கரவர்த்தி எஸ்.ஜி.கிட்டப்பாவை மணந்த கானக்குயில், அவர் மறைவுக்குப் பிறகு பாடுவதையும், நடிப்பதையும் நிறுத்தியிருந்து ஜெமினி ஒளவையார் படத்தின் மூலம் வெளிவந்த இந்த இசையரசி, ஒரு சுதந்திரப் போராட்ட வீராங்கனை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த விடுதலைப் போராட்ட வீராங்கனையைப் பற்றி இந்தக் கட்டுரையில் சிறிது பார்ப்போம். காவிரி வளம் விரிக்கும் கொடுமுடி எனும் சிற்றூரில் பிறந்தவர் கே.பி.எஸ். மிகவும் ஏழ்மையான குடும்பம். இவரது தாய்மாமனான மலைக்கொழுந்து என்பவரின் ஆதரவில் வளர்ந்தார். சின்னஞ்சிறு சிறுமியாக இருந்தபோதே தன் வயதொத்த சிறுவர் சிறுமியரோடு விளையாடப் போகுங்கால் இவர் பாடும் பாட்டுக்களைக் அனைவரும் விரும்பிக் கேட்டு பாராட்டுவராம். இவர் கொடுமுடியிலிருந்து கரூருக்கு ரயிலில் பயணம் செய்தபோது பாடிய பாடலொன்று, அதே ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த வேலு நாயர் எனும் நாடகக் கம்பெனி முதலாளியின் மனதைத் தொட்டது. உடனே மலைக்கொழுந்துவிடம் பேசி கே.பி.எஸ். ஐ கும்பகோணத்தில் அப்போது நடந்து கொண்டிருந்த வேலு நாயரின் நாடகக் குழுவில் குழந்தை நட்சத்திரமாகச் சேர்த்துக் கொண்டார். அங்கு நாடகங்களில் நடித்தும் பாடியும் வந்த இவருடைய புகழ் நாலா திசைகளிலும் பரவியது. இவரது ஏழ்மை நிழல் விலகி வளமையின் ஒளி இவர் மீது படிந்தது. ஊருக்கு வெளியே ஏழ்மைக் குடிலில் வாழ்ந்த இவர், கொடுமுடியின் நடுநாயகமாக ஒரு வீட்டை வாங்கி குடியேறினார். இவரது பாட்டுக்களும், குரல் வளமும், மைக் வசதி இல்லாத அந்தக் காலத்தில் கூட்டத்தினர் அனைவரும் கேட்கும் வண்ணம் இவர் பாடும் திறமையும் தமிழ்நாடெங்கும் பரவியது. ஆங்காங்கே இவரது நாடகங்களைப் பார்க்கவும், இவரது பாடல்களைக் கேட்கவும் மக்களிடையே ஆர்வம் ஏற்பட்டது. சினிமாவின் தாக்கம் ஏற்படாத அந்தக் காலத்தில் தென் மாவட்டங்களிலும், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களிலும் இவரது நாடகங்களுக்கு அதிக வரவேற்பும் பாராட்டுக்களும் கிடைத்தன. இவர் நடித்துப் பாடிய ஸ்ரீ வள்ளி, நந்தனார் போன்ற நாடகங்கள் பல நாட்கள் ஒவ்வொரு ஊரிலும் நடைபெற்றன. அதே காலகட்டத்தில் நாடகங்களில் உச்ச ஸ்தாயியில் பாடி மக்களைக் கவர்ந்த எஸ்.ஜி.கிட்டப்பா, தன்னைப் போலவே பாடி நாடக உலகின் முடிசூடா அரசியாக விளங்கிவந்த கே.பி.எஸ்.ஐப் பற்றிக் கேள்விப்பட்டார். இவர் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவர். அன்றைய நாடக உலகின் சக்கரவர்த்தி இவர்தான். கிட்டப்பா, செல்லப்பா போன்றவர்கள் அன்றைய நாடக உலகில் பெயர் பெற்று விளங்கினார்கள். இந்த இரு நாடக உலகின் சிகரங்கள் 1924இல் திருமண உறவின் மூலம் ஒன்று கலந்தன. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்த பிறந்து அது இறந்து போயிற்று. திருமணமாகி எட்டு ஆண்டுகளில் எஸ்.ஜி.கிட்டப்பா இறந்து போனார். கானக்குயில் தனது 24ஆம் வயதில் விதவையானார். எனினும் அன்று தொடங்கி அவர் காலமான 72ஆம் வயது வரை சுமார் ஐம்பது ஆண்டுகள் தேசியத்தையும், தெய்வீகத்தையும் தன்னிரு கண்களாகக் கொண்டு நாட்டுக்கு உழைத்து வந்தார். இவர்களுடைய நாடகங்கள் வெரும் புராணக் கதைகளாக இருந்தபோதும், அதன் ஊடே வரும் தேசியக் கருத்துக்கள் பார்ப்போர் மனதில் விடுதலை உணர்ச்சியைத் தட்டி எழுப்புவதாக இருந்தது. அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் தீரர் சத்தியமூர்த்தி, பெருந்தலைவர் காமராசர் ஆகியோர் கொடுமுடி சென்று கே.பி.எஸ்.ஐ சந்தித்து கூட்டங்களுக்கு அழைத்திருக்கிறார்கள். 1937இல் நடந்த தேர்தலில் இங்கு பலம் பொருந்தியிருந்த ஜஸ்டிஸ் கட்சியை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிட்டது. அப்போது கொடுமுடியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் தீரர் சத்தியமூர்த்தி பேசுவதற்கு முன், கே.பி.எஸ். தன் வெண்கலக் குரலில் “ஓட்டுடையார் எல்லாம் கேட்டிடுங்கள்” என்று பாடத் தொடங்கியதுதான் தாமதம், கூட்டம் தாங்கமுடியாத அளவுக்குச் சேர்ந்து விட்டது. “சிறைச்சாலை என்ன செய்யும்?” எனும் இவரது பாடலும், “காந்தியோ பரம ஏழை சந்நியாசி” எனும் பாடலும் மிகப் பிரசித்தம். தீரர் சத்தியமூர்த்தி சென்னையில் தேர்தலில் நின்று வெற்றிபெற கே.பி.எஸ்.சின் பாடல்கள்தான் துணை நின்றன. கணவர் இறந்த பிறகு பாடுவதை நிறுத்தியிருந்த கே.பி.எஸ். மகாத்மா காந்தி அவருடைய வீடு தேடிச் சென்று கேட்டுக் கொண்ட பிறகு, மீண்டும் பாடி தேச சேவையில் ஈடுபட்டார். இவரை “கொடுமுடி கோகிலம்” என்று வர்ணித்து தனது திராவிட நாடு பத்திரிகையில் புகழ்ந்து எழுதினார் அறிஞர் அண்ணா. பெருந்தலைவர் காமராஜ் காலத்தில் கே.பி.எஸ். சென்னை சட்ட மேல் சபை உறுப்பினராக ஆறு ஆண்டு காலம் இருந்தார். இந்த “இசைப் பேரரசி” மறைந்து போனாலும், இவர் விட்டுச் சென்ற இவரது பாடல்களும், இவர் ஊட்டி வளர்த்த தேசிய உணர்வுகளும் என்றென்றும் நிலைத்திருக்கும். வாழ்க கே.பி.எஸ்.புகழ்! 20 சர்தார் வேதரத்தினம் பிள்ளை [] ராஜாஜியோடு வேதரத்தினம் பிள்ளையும் தொண்டர்களும் வேதரத்தினம் என்ற பெயரைக் கேட்டமாத்திரத்தில், வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம் நினைவுக்கு வரும். ராஜாஜி நினைவுக்கு வருவார். கடுமையான தியாகமும், முரட்டு கதர் உடையும் நம் நினைவுக்கு வரும். அது மட்டுமா? வேதாரண்யத்தில் சிறப்பாக நடைபெற்று வரும் ‘கஸ்தூரிபா காந்தி கன்னியா குருகுலம்’ நம் நினைவுக்கு வரும். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கி அவர் காலமான அறுபதுகள் வரை, வேதரத்தினம் பிள்ளையின் பெயர் சொல்லாமல் எந்த காங்கிரஸ் இயக்கமும் தமிழ்நாட்டில் இல்லை எனலாம். அந்த அளவுக்கு அவர் தன்னை காங்கிரஸ் இயக்கத்தோடு இணைத்துக் கொண்டவர், பொதுநலத்துக்காக சொத்து, சுகம் அனைத்தையும் இழந்து தியாகசீலராக விளங்கியவர். அவரது வரலாற்றை இப்போது சுருக்கமாகப் பார்ப்போம். தஞ்சாவூர் மாவட்டத்தில் கடற்கரை கிராமமான வேதாரண்யம் இவரது ஊர். இவரது தந்தையார் அப்பாகுட்டி பிள்ளை என்பவர். உப்பு சத்தியாக்கிரகம் உச்ச கட்டத்தில் நடந்து கொண்டிருந்த போது, இவரது உடமைகளுக்கும் ஆபத்து வந்து, இவர் கைது செய்யப்படப்போகிறார் என்ற நிலையில் அவ்வூர் மாஜிஸ்டிரேட் ஒருவர் 90 வயதைக் கடந்த முதியவர் அப்பாக்குட்டி பிள்ளையிடம் வந்து, “ஐயா! நீங்களோ பெரிய குடும்பத்தில் வந்தவர். கெளரவமான குடும்பம். உங்கள் மகன் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டால், அவர் மீது எந்த வழக்கும் வராமல் நான் பார்த்துக் கொள்ளுகிறேன்” என்றார். அதற்கு அந்த முதிய தேசபக்தர் என்ன சொன்னார் தெரியுமா? எப்படியாவது தனது மகன் ஜெயிலுக்குப் போகாமல் தப்பி, சொத்துக்களும் பறிமுதல் ஆகாமல் போனால் சரி, கேவலம் ஒரு மன்னிப்புக் கடிதம் தானே, கொடுத்துவிடலாம் என்றா எண்ணினார். இல்லை. இல்லவே இல்லை. அவர் சொன்னார், “என் மகன் வேதரத்தினம் உங்களிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்பதிலும், அவன் சிறைக்குச் செல்வதையே நான் விரும்புவேன்” என்றார். அந்த முதியவரின் தேசப்பற்றுக்கு எதனை உவமை கூற முடியும்? அப்படிப்பட்ட தியாக பரம்பரையில் பல தலைமுறைகளுக்கு முந்தி உதித்தவர் தாயுமானவ சுவாமிகள். இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? தாயுமானவர் கோயில் கொண்டுள்ள திருச்சியில் உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கியது. தாயுமானவரின் குலவாரிசுகள் வாழும் வேதாரண்யத்தில் முடிவடைந்தது. இதனை முன்னின்று நடத்தியவரும் தாயுமானவ சுவாமிகளின் வாரிசுதான். என்ன ஒற்றுமை. இவரைப் பற்றிய ஒரு வியப்பான செய்தி. இவர் வாரத்தில் ஒரு நாள் உண்ணாவிரதத்தைக் கடைப்பிடித்து தன் ஆன்ம பலத்தைப் பெருக்கிக் கொண்டார். அதுபோலவே பேசா நோன்பிருந்து தன் உள்ளத்து ஒளியைப் பெருக்கிக் கொண்டார். வேதாரண்யம் எனும் அவ்வூரின் பெயருக்கேற்ப வேத நெறிகள் ஆசாரங்கள் இவைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்து வந்த குடும்பம். இவர் மற்றவர்களுக்காக சுதேசி வேஷம் போட்டவரல்ல. ஆத்மார்த்தமாக தன் சொந்த வாழ்வில் இவர் சுதேசியத்தைக் கடைப்பித்த வரலாற்றை தமிழாறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் பிள்ளை கூறுகிறார். “இவர் வீட்டிலும் சரி, ஊரிலும் சரி, எங்கும் கைக்குத்தல் அரிசி, எங்கும் கதர் ஆடை, எங்கெங்கு நோக்கினும் கைத்தொழில் வளர்ச்சி, ஆரவாரமில்லாத, அழகிய, இனிய, எளிமையில் ஒரு வீறாப்பு இவரிடம். காந்தியடிகளிடம் மாறாத பக்தி”. இப்படி வேதாரண்ய அனுபவத்தை அந்தத் தமிழறிஞர் வர்ணிக்கிறார். இவர் ஸ்தாபித்த கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம் சென்று பாருங்கள். இன்றும் அவர் கூறிய வார்த்தைகளின் பொருள் புரியும். அங்கு தினந்தோறும் ஆயிரமாயிரம் பெண்கள், சிறுமிகள் முதல் பெரியவர் வரை படிப்பதும், தொழில் பயில்வதும், வேலை செய்வதும், ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உணவு அருந்துவதும், அடடா! என்ன காட்சி. இவ்வளவு குழந்தைகளையும் ஒரு தந்தையாய் இருந்து பாதுகாத்து வாழ்வுக்குப் பயன்படும் தொழில் பயிற்சி கொடுத்து வாழ்வளித்து வந்தவர் சர்தார் வேதரத்தினம். அவரது அடியொற்றி வழிநடந்து அமரரானவர் அவர் மகன் அப்பாக்குட்டிப் பிள்ளை. இப்போது அந்த சீரிய பணியினைச் சிறப்பாக நடத்தி வருபவர் அவரது பேரன் ஜுனியர் அ.வேதரத்தினம். என்ன குடும்பம். உலகமே பார்த்து வியக்கும் கைங்கரியம். சுதந்திரத்துக்கு முன்பெல்லாம் தனியொருவரை விளித்து எழுதும்போது “மகாராஜராஜ ஸ்ரீ” என்று எழுதுவது வழக்கமாயிருந்தது. இது எதற்கு இவ்வளவு பெரிய அடைமொழி என்று சிந்தித்து வேதரத்தினம் பிள்ளை “ஸ்ரீ” என்று போட்டால் போதாதா என்று ‘தினமணி’யில் ஒரு கடிதம் எழுதினார். அதைப் படித்துப் பார்த்த ராஜாஜி அவர்கள் அவ்வாறு “ஸ்ரீ” என்றே அழைத்தால் போதும் என்று உத்தரவிட்டார். பின்னர் தி.மு.க.ஆட்சியின் போது இந்த ‘ஸ்ரீ’ வடமொழி என்பதால் அதற்கு பதில் “திரு” என்று போடச் செய்தனர். பழைய அடிமை நாட்களின் ஒரு மரியாதை முத்திரை மறைந்து, மக்கள் அனைவரும் சமமான உணர்வினைப் பெற முடிந்ததற்கு சர்தார் வேதரத்தினம் பிள்ளை காரணமாக இருந்திருக்கிறார். [] இவர் வாழ்க்கையில் இன்னொரு வேடிக்கையும், வேதனையும் நிறைந்த ஒரு நிகழ்ச்சி. வேதாரண்யத்தில் இவர் குடும்பத்துக்கு மிகவும் வேண்டிய நாவிதர் ஒருவர், வைரப்பன் என்பது அவர் பெயர். காந்தி மகாத்மாவிடமும், காங்கிரஸ் இயக்கத்திடமும், வேதரத்தினம் பிள்ளையிடமும் அபார பக்தியுடையவர். போலீஸ்காரர்கள் முதலாளி வேதரத்தினத்தை விலங்கிட்டுத் தெருவோடு இழுத்துச் சென்ற காட்சியைக் கண்டு இவர் பதறி ஆத்திரம் கொண்டு, இனி எந்த போலீஸ்காரருக்கும் சவரம் செய்வதில்லை என்று சபதம் எடுத்துக் கொண்டார். உப்பு போராட்டத்திற்காக வெளியூர் போலீஸ் பலர் அங்கு வந்திருந்ததால் யார் என்று தெரியாமல் சாதாரண உடையில் வந்திருந்த ஒரு போலீஸ்காரருக்கு இவர் முகச் சவரம் செய்யத் தொடங்கி முகத்தில் சோப்பு போட்டு பாதி சவரம் முடித்துவிட்ட நிலையில், அவர் போலீஸ் என்பது தெரியவந்ததும், வேலையை அப்படியே போட்டுவிட்டு இனி நம்மால் செய்ய முடியாது என்று எழுந்துவிட்டார். போலீஸ்காரர் விடவில்லை. இவரை இழுத்துக் கொண்டு போய் மாஜிஸ்டிரேட்டிடம் நிறுத்தி நியாயம் கேட்டார். மாஜிஸ்டிரேட் வைரப்பனை, போய் இவருக்கு மீதி சவரத்தையும் செய்து முடித்துவிட்டுப் போ என்றார். வைரப்பன் தன் சவரப் பெட்டியை கையில் எடுத்துக் கொண்டு, அவர் மேஜை முன்பு சென்று, “ஐயா! அது நம்மால முடியாதுங்க. ஐயா வேணும்னா செஞ்சு விட்டுடுங்க” என்று சொல்லிக் கொண்டே பெட்டியை அவர் மேஜை மீது வைத்து விட்டார். கேட்க வேண்டுமா அவருக்கு வந்த கோபத்துக்கு. ஆறு மாத கடுங்காவல் தண்டனை விதித்தார். அதோடு போயிற்றா இது? இல்லை. இந்த நிகழ்ச்சி பற்றி சாத்தான்குளம் என்ற ஊரில் நடந்த பொதுக்கூட்டத்தில் சர்தார் வேதரத்தினம் சொல்லிய போது, கூட்டத்தில் ஒரே சிரிப்பு கும்மாளம் எகத்தாளம், கைதட்டி ஆரவாரம் செய்தனர். அப்போது தன் காரில் அந்தப் பக்கம் வந்த அவ்வூர் மாஜிஸ்டிரேட்டுக்கு வந்ததே கோபம். மறுநாள் பிள்ளைக்கு இந்தப் பேச்சுக்காக ஆறு மாத சிறை தண்டனை கொடுத்தார். ஒரு நிகழ்ச்சிக்கு இரண்டு இடத்தில் தண்டனை. என்ன கோமாளித்தனம். பெரும் செல்வந்தரான வேதரத்தினம் சிறையில் அடைக்கப்பட்டார். சொத்துக்கள் பறிமுதலாயின. அவர் குடும்பம் சோற்றுக்கும் சிரமப்பட வேண்டிய நிலை. தங்கக் கிண்ணத்தில் பால் சோறு சாப்பிட்ட குழந்தை பழம் சோற்றுக்கு அழுதது கண்டு அக்கம்பக்கத்தார் கண்ணீர் சிந்தினர். அவர் மனைவி பதினைந்து மைலில் இருந்த அவரது ஊருக்குச் செல்ல பஸ்சுக்குக் காசில்லாமல் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடந்து சென்ற கொடுமையும் நடந்தது. விடுதலைக்காக இந்த நாட்டில் சாதாரண குடும்பப் பெண்கள் கூட பட்ட துயர் அம்மம்மா! எண்ணிப் பார்க்க மனம் பதறுகிறது. உப்பு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட சென்னை டாக்டர் ருக்மணி லட்சுமிபதி என்ற அம்மையாரை புளியம் விளாரால் அடித்து, கால்களைப் பிடித்து இழுத்துச் சென்று புதரில் விட்டெறிந்த கொடுமையும் இதே வேதாரண்யத்தில்தான் நடந்தது. இவரைப் பற்றிய கட்டுரையை இந்தத் தொடரில் விரைவில் காணலாம். [] சர்தார் வேதரத்தினம் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவராக பல ஆண்டுகள் இருந்திருக்கிறார். 1929இல் வேதாரண்யத்தில் தமிழ் மாகாண காங்கிரஸ் மகாநாட்டை சர்தார் வல்லபாய் படேலை அழைத்து வந்து ராஜாஜி முன்னிலையில் வெற்றிகரமாக நடத்தினார். இவர் விரல் அசைந்தால் தஞ்சாவூர் மாவட்டம் அசையும் நிலை அன்று இருந்தது. இவ்வளவுக்கும் இம்மாவட்ட நிலப்பிரபுக்கள் அனைவரும் ஆங்கிலேயர்களின் ஆதரவாளர்களாகவும், நிலமற்ற ஏழை விவசாயக் கூலிகள் கம்யூனிஸ்ட் ஆதிக்கத்தின் கீழ் ஓர் வர்க்கப் புரட்சியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், நடுத்தர மக்கள் மட்டுமே தஞ்சை மாவட்ட சுந்ததிரப் போரில் பங்கு கொண்டார்கள். அவர்களுக்குத் தலைமை வகித்தவர் சர்தார் வேதரத்தினம் பிள்ளை. இவர் சென்னை சட்டசபைக்கு 1952இல் மன்னார்குடி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957இல் திருத்துறைப்பூண்டி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டார். 1961இல் சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருந்த போது இவர் பேசிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு வந்து, உடல் நலம் கெட்டு இறந்து போனார். இவர் உடல் வேதாரண்யம் கொண்டு வரப்பட்டு கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தில் இறுதி அஞ்சலி செய்யப்பட்டது. இவரது சமாதியை இன்றும் அங்கு பல்லாயிரக்கணக்கானோர் சென்று பார்த்து வழிபட்டு மரியாதை செய்கின்றனர். வாழ்க சர்தார் வேதரத்தினம் பிள்ளை புகழ்! [] சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் பெயர் சொல்லும் வேதாரண்யம் கஸ்தூர்பாய் கன்யா குருகுலம். கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தின் நிறுவனர் சர்தார் வேதரத்தினத்தின் நூற்றாண்டு விழாவும் சுதந்திர தின பொன்விழாவும் ஒரே ஆண்டில் 1997இல் நடந்தது. 1897ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி வேதாரண்யத்தில் பிறந்த சர்தார் வேதரத்தினம் தனது 19ம் வயது முதல் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டார். 1924ம் ஆண்டு பெல்காமில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டில் கலந்து கொண்டு காந்தியின் தலைமை உரையைக் கேட்ட வேதரத்தினம் முழுவீச்சில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1930ம் வருஷம் ராஜாஜி தலைமையில் திருச்சியில் இருந்து வேதாரண்யம் வரை நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகப் பேரணி மற்றும் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னின்று நடத்திய வேதரத்தினம் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது சொத்து பறிமுதல் செய்யப்பட்டது. 1931ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் அவருக்குச் சர்தார் பட்டம் வழங்கப்பட்டது. 1929 முதல் 1939 வரை தஞ்சை மாவட்டக் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவராக விளங்கிய பல்வேறு போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தினார். 1929ம் ஆண்டு வேதாரண்யத்தில் நடைபெற்ற காங்கிரசின் மாநில மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவராகப் பணியாற்றியதுடன், சர்தார் வல்லபாய் படேலை மாநாட்டில் கலந்து கொள்ளச் செய்வதில் முக்கிய பங்காற்றினார். 1935ம் ஆண்டு வேலூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநில மாநாட்டைத் தலைமை தாங்கி நடத்தினார். மாநில காங்கிரசின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்துக்குப் பிறகு காந்தியின் நிர்மாணத் திட்டங்களில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்தார். 1944ம் ஆண்டு கஸ்தூர்பா காந்தி இறந்த பின் கஸ்தூர்பா தேசிய நினைவு நிதி திரட்டுவதில் பங்கு கொண்ட வேதரத்தினம் பிள்ளை, இந்த நிதியின் தஞ்சாவூர் திருச்சி மாவட்டப் பிரதிநிதியாகச் செயல்பட்டு இம் மாவட்டங்களில் பல பெண்கள் குழந்தைகள் நல மையங்களையும், மகப்பேறு மருத்துவமனைகளையும் நிறுவினார். இதன் தொடர்ச்சியாக கஸ்தூர்பா கன்யா குருகுலத்தை 1946ம் ஆண்டு நிறுவினார். தமிழ்நாடு ஆதாரக் கல்விக் கமிட்டியில் மாநிலத் துணைத் தலைவராகவும் விளங்கினார். சர்தார் வேதரத்தினத்தின் மறைவுக்குப் பிறகு (1961) அவரது புதல்வர் அப்பாக்குட்டி கன்யா குருகுலம் மற்றும் தாயுமானவர் வித்யாலங்களைக் கவனித்து வந்தார். இந்நிறுவனங்களில் பயிலும் மாணவ மாணவிகள் தாம் கற்ற கல்வியால், தாமே சம்பாதிக்க முடியும் என்று திறமையோடு என்று வெளியேறுகிறார்களோ அன்றுதான் எனக்கு நிம்மதி ஏற்படும் அதுவரை அதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டே இருப்பேன் என்ற உறுதியுடன் செயல்பட்டார் அப்பாகுட்டி. இந்திய அரசு 1989ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கிக் கெளரவித்தது. பெண்களுக்குக் கல்வி அளித்து அவர்களைத் தன்னம்பிக்கை உள்ளவர்களாக்குவதற்குத் தொடர்ந்து பாடுபட்டு வருவதற்காக கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்துக்கு 1996ம் ஆண்டுக்கான இந்திய சுழற்சங்க விருது வழங்கப்பட்டது. பாராட்டுப் பத்திரத்துடன் ரூ. 1 லட்சமும் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்துக்கு வழங்கப்பட்டது. சர்வதேச சுழற்சங்கத்தின் தலைவர் இவ்விருதை சென்னையில் 1996ம் ஆண்டு குருகுலத்தின் அறங்காவலரும் சர்தாரின் பேரனுமான ஜூனியர் அ.வேதரத்தினத்திடம் வழங்கினார். [] குருகுலத்துக்கு வருகை தந்த தலைவர்கள்: சர்வோதயத் தலைவர் வினோபாஜி. மக்களவையின் முதல் சபாநாயகர் ஜி.வி.மாவ்லங்கர் கர்ம வீரர், பெருந்தலைவர் காமராஜ் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி எளிமையின் இருப்பிடமான கக்கன் போன்ற பலர். குருகுலத்தில் படிக்கும் ஆதரவற்ற நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ள விரும்புகிறவர்களுக்குப் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இத் திட்டத்தில் செலுத்தப்படும் நிதி நிரந்தர வைப்பு நிதியாக வங்கிகளில் செலுத்தப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகை மூலம் பெண் குழந்தைகளின் கல்விச் செலவு ஈடு கட்டப்படுகிறது. ஒரு பெண் கல்வி முடித்து வேலைக்குப் போனபின் அந்த வட்டி வேறொரு பெண்ணுக்கு வழங்கப்படும். ஜப்பானில் உள்ள நிப்பான் வேதாந்த சபையின் மூலம் பல நன்கொடையாளர்கள் தலா ஆயிரம் டாலர்கள் அனுப்பி நமது பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவி வருகிறார்கள். ஆதரவற்ற பெண்களுக்கு நிழல் தருகிறது வேதாரண்யம் கஸ்தூர்பா கன்யா குருகுலம். பெண் கல்விக்கு எதிர்ப்பு நிலவிய காலத்தில் நிறுவப் பட்ட இந்த பள்ளி பல நூறு பெண்களின் வாழ்க்கைக்குப் பாதை அமைத்துக் கொடுத்துள்ளது. பெண்களை வெளியில் அனுப்பாமல் வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்த காலத்தில் கிராமம் கிராமமாகச் சென்று சர்தார் பெண் குழந்தைகளை அழைத்து வந்து கல்விக் கண் திறக்க உதவினார். அவர்களுக்கு உணவு, உடைகள், புத்தகங்கள், தங்கும் வசதி ஆகியவற்றை இலவசமாக வழங்கினார். தொடக்கப் பள்ளியாகத் தொடங்கிய பள்ளி இப்போது மேல் நிலைப் பள்ளியாகத் திகழ்கிறது. முதலில் மிகக் குறைந்த அளவு எண்ணிக்கையோடு துவங்கிய பள்ளி இப்போது ஆயிரக்கணக்கில் கல்வி பயிலும் நிலையமாக உருவாகியிருக்கிறது. பள்ளியின் விடுதியில் வசிக்கும் மாணவியர் அனைவரும் ஒரே குலம், இங்கு எந்த பிரிவோ, வித்தியாசமோ கிடையாது. மகாத்மா காந்தியின் சமரச கோட்பாடு கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இடம் இது. தாழ்த்தப்பட்டவர்கள் என்போர், குறிப்பாக கீழத் தஞ்சை மாவட்டத்தில் இருப்போர் பின் தங்கிய நிலையில் இருந்த நிலையை மாற்றி இன்று அவர்களுக்குக் கல்வி அறிவு புகட்டி, தன்னம்பிக்கையை அளித்து, சமூகத்தில் பெரும் அந்தஸ்த்து உள்ளவர்களாக மாற்றியதில் இந்த குருகுலத்துக்குப் பெரும் பங்கு உண்டு. இங்கு புத்தகப் படிப்பு மட்டுமல்லாமல், தொழிற் கல்வி, ஊதுபத்தி தயாரிப்பு, அச்சுக் கோர்த்தல், அச்சு அடித்தல், மின்னணுசாதனங்கள், வானொலி தொலைக்காட்சி பெட்டிகள் தயாரித்தல், தையற்கலைப் பயிற்சி, சித்த மருத்துவக் கூடம் ஆகிய பல துறைகளில் இங்கு பயிற்சி பெரும் பெண்கள் சமூகத்தில் யாருக்கும் சளைத்தவர் அல்ல என்பதை இன்று பறை சாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பாரதி கண்ட புதுமைப் பெண்களை உருவாக்கி இன்று பாரதி விரும்பிய பெண் விடுதலையை செயலில் காண்பிக்கும் இடம் இந்த குருகுலம். இங்கு ஆடை வடிவமைப்பு, டி.வி. மெக்கானிசம், கட்டடவியல் வரைபடங்கள் வரைதல், செவிலியர் பயிற்சி என பல வகுப்புகளும் இங்கு உண்டு. சுதந்திரப் போராட்டத்தில் செய்த தியாகத்துக்காக அரசாங்கம் கொடுத்த 10 ஏக்கர் நிலத்தைத் தன் சொந்தத்துக்கு எடுத்துக் கொள்ளாமல் மகாராஜபுரம் எனும் இடத்தில் 15 ஏக்கர் சேர்த்து இந்த குருகுலம் விரிவடைந்து காணப்படுகிறது. இங்கு நுழைந்தவுடன் காண்கின்ற காட்சி, அமைதி, எளிமை, அடக்கம், மரியாதை, பண்பாடு இவைகளைத்தான் காணமுடியும். உடல் நலம் குறைந்தால் தங்குவதற்கு ‘ஆரோக்கிய சாலை’. மருத்துவ உதவிகள் உடனுக்குடன் கிடைக்கின்ற வசதி இங்கு உண்டு. விளையாட்டுக்களுக்கும், உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் உண்டு. அதிகாலையில் எழுந்ததும் உடற்பயிற்சி, பிரார்த்தனை என்று ஒரே சீரான நடவடிக்கைகள் இங்கு. இங்குள்ள நவீன சமையற் கூடத்தைப் பார்த்து வியந்து போவார்கள். சுகாதார முறையோடு ஆயிரக்கணக்கானோருக்கு ஒரே நேரத்தில் வரிசையில் உணவு பரிமாறப்படும் அழகை உலகத்தார் பார்த்து வியந்து போகிறார்கள். ஒரு போட்டி, கூச்சல், சந்தடி எதுவுமின்றி அமைதியான சூழலில் ஆயிரக்கணக்கில் மாணவிகள் உணவு உண்ணும் காட்சி வியந்து போற்றுதற்குரியது. இங்கு பணம் செலுத்தி தங்குவோருக்கும், விடுதியின் செலவில் இலவசமாக உணவு உண்போருக்குமிடையே உணவில் வித்தியாசம் இல்லை. இந்த சாதனைகள் எனும் ஆல விருட்சத்திற்கு ஒரு சிறிய விதை சர்தார் வேதரத்தினம் எனும் காந்தியவாதி. அதை தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுத்தி வந்தவர் அப்பாகுட்டி. இன்று அவருடைய புதல்வர்கள் மிகச் சிறப்பாக இதனை நடத்தி வருகிறார்கள். வாழ்க இவர்களது சாதனை. வளர்க இந்த சமுதாயப் பணி. உலகில் பெண்ணினம் இருக்கு மட்டும் இந்த குருகுலத்தின் பங்களிப்பு வரலாற்றில் நினைவில் கொள்ளப்படும். சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் பெயர் சொல்லும் வேதாரண்யம் கஸ்தூரிபாய் கன்யா குருகுலம். கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தின் நிறுவனர் சர்தார் வேதரத்தினத்தின் நூற்றாண்டு விழாவும் சுதந்திர தின பொன்விழாவும் ஒரே ஆண்டில் 1997இல் நடந்தது. 1897ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி வேதாரண்யத்தில் பிறந்த சர்தார் வேதரத்தினம் தனது 19ம் வயது முதல் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டார். 1924ம் ஆண்டு பெல்காமில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டில் கலந்து கொண்டு காந்தியின் தலைமை உரையைக் கேட்ட வேதரத்தினம் முழுவீச்சில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1930ம் வருஷம் ராஜாஜி தலைமையில் திருச்சியில் இருந்து வேதாரண்யம் வரை நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகப் பேரணி மற்றும் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னின்று நடத்திய வேதரத்தினம் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது சொத்து பறிமுதல் செய்யப்பட்டது. 1931ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் அவருக்குச் சர்தார் பட்டம் வழங்கப்பட்டது. 1929 முதல் 1939 வரை தஞ்சை மாவட்டக் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவராக விளங்கிய பல்வேறு போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தினார். 1929ம் ஆண்டு வேதாரண்யத்தில் நடைபெற்ற காங்கிரசின் மாநில மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவராகப் பணியாற்றியதுடன், சர்தார் வல்லபாய் படேலை மாநாட்டில் கலந்து கொள்ளச் செய்வதில் முக்கிய பங்காற்றினார். 1935ம் ஆண்டு வேலூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநில மாநாட்டைத் தலைமை தாங்கி நடத்தினார். மாநில காங்கிரசின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்துக்குப் பிறகு காந்தியின் நிர்மாணத் திட்டங்களில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்தார். 1944ம் ஆண்டு கஸ்தூர்பா காந்தி இறந்த பின் கஸ்தூர்பா தேசிய நினைவு நிதி திரட்டுவதில் பங்கு கொண்ட வேதரத்தினம் பிள்ளை, இந்த நிதியின் தஞ்சாவூர் திருச்சி மாவட்டப் பிரதிநிதியாகச் செயல்பட்டு இம் மாவட்டங்களில் பல பெண்கள் குழந்தைகள் நல மையங்களையும், மகப்பேறு மருத்துவமனைகளையும் நிறுவினார். இதன் தொடர்ச்சியாக கஸ்தூர்பா கன்யா குருகுலத்தை 1946ம் ஆண்டு நிறுவினார். தமிழ்நாடு ஆதாரக் கல்விக் கமிட்டியில் மாநிலத் துணைத் தலைவராகவும் விளங்கினார். சர்தார் வேதரத்தினத்தின் மறைவுக்குப் பிறகு (1961) அவரது புதல்வர் அப்பாக்குட்டி கன்யா குருகுலம் மற்றும் தாயுமானவர் வித்யாலங்களைக் கவனித்து வந்தார். இந்நிறுவனங்களில் பயிலும் மாணவ மாணவிகள் தாம் கற்ற கல்வியால், தாமே சம்பாதிக்க முடியும் என்று திறமையோடு என்று வெளியேறுகிறார்களோ அன்றுதான் எனக்கு நிம்மதி ஏற்படும் அதுவரை அதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டே இருப்பேன் என்ற உறுதியுடன் செயல்பட்டார் அப்பாகுட்டி. இந்திய அரசு 1989ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கிக் கெளரவித்தது. பெண்களுக்குக் கல்வி அளித்து அவர்களைத் தன்னம்பிக்கை உள்ளவர்களாக்குவதற்குத் தொடர்ந்து பாடுபட்டு வருவதற்காக கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்துக்கு 1996ம் ஆண்டுக்கான இந்திய சுழற்சங்க விருது வழங்கப்பட்டது. பாராட்டுப் பத்திரத்துடன் ரூ. 1 லட்சமும் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்துக்கு வழங்கப்பட்டது. சர்வதேச சுழற்சங்கத்தின் தலைவர் இவ்விருதை சென்னையில் 1996ம் ஆண்டு குருகுலத்தின் அறங்காவலரும் சர்தாரின் பேரனுமான ஜூனியர் அ.வேதரத்தினத்திடம் வழங்கினார். குருகுலத்துக்கு வருகை தந்த தலைவர்கள்: சர்வோதயத் தலைவர் வினோபாஜி. மக்களவையின் முதல் சபாநாயகர் ஜி.வி.மாவ்லங்கர் கர்ம வீரர், பெருந்தலைவர் காமராஜ் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி எளிமையின் இருப்பிடமான கக்கன் போன்ற பலர். குருகுலத்தில் படிக்கும் ஆதரவற்ற நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ள விரும்புகிறவர்களுக்குப் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இத் திட்டத்தில் செலுத்தப்படும் நிதி நிரந்தர வைப்பு நிதியாக வங்கிகளில் செலுத்தப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகை மூலம் பெண் குழந்தைகளின் கல்விச் செலவு ஈடு கட்டப்படுகிறது. ஒரு பெண் கல்வி முடித்து வேலைக்குப் போனபின் அந்த வட்டி வேறொரு பெண்ணுக்கு வழங்கப்படும். ஜப்பானில் உள்ள நிப்பான் வேதாந்த சபையின் மூலம் பல நன்கொடையாளர்கள் தலா ஆயிரம் டாலர்கள் அனுப்பி நமது பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவி வருகிறார்கள். ஆதரவற்ற பெண்களுக்கு நிழல் தருகிறது வேதாரண்யம் கஸ்தூர்பா கன்யா குருகுலம். பெண் கல்விக்கு எதிர்ப்பு நிலவிய காலத்தில் நிறுவப் பட்ட இந்த பள்ளி பல நூறு பெண்களின் வாழ்க்கைக்குப் பாதை அமைத்துக் கொடுத்துள்ளது. பெண்களை வெளியில் அனுப்பாமல் வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்த காலத்தில் கிராமம் கிராமமாகச் சென்று சர்தார் பெண் குழந்தைகளை அழைத்து வந்து கல்விக் கண் திறக்க உதவினார். அவர்களுக்கு உணவு, உடைகள், புத்தகங்கள், தங்கும் வசதி ஆகியவற்றை இலவசமாக வழங்கினார். தொடக்கப் பள்ளியாகத் தொடங்கிய பள்ளி இப்போது மேல் நிலைப் பள்ளியாகத் திகழ்கிறது. முதலில் மிகக் குறைந்த அளவு எண்ணிக்கையோடு துவங்கிய பள்ளி இப்போது ஆயிரக்கணக்கில் கல்வி பயிலும் நிலையமாக உருவாகியிருக்கிறது. பள்ளியின் விடுதியில் வசிக்கும் மாணவியர் அனைவரும் ஒரே குலம், இங்கு எந்த பிரிவோ, வித்தியாசமோ கிடையாது. மகாத்மா காந்தியின் சமரச கோட்பாடு கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இடம் இது. தாழ்த்தப்பட்டவர்கள் என்போர், குறிப்பாக கீழத் தஞ்சை மாவட்டத்தில் இருப்போர் பின் தங்கிய நிலையில் இருந்த நிலையை மாற்றி இன்று அவர்களுக்குக் கல்வி அறிவு புகட்டி, தன்னம்பிக்கையை அளித்து, சமூகத்தில் பெரும் அந்தஸ்த்து உள்ளவர்களாக மாற்றியதில் இந்த குருகுலத்துக்குப் பெரும் பங்கு உண்டு. இங்கு புத்தகப் படிப்பு மட்டுமல்லாமல், தொழிற் கல்வி, ஊதுபத்தி தயாரிப்பு, அச்சுக் கோர்த்தல், அச்சு அடித்தல், மின்னணுசாதனங்கள், வானொலி தொலைக்காட்சி பெட்டிகள் தயாரித்தல், தையற்கலைப் பயிற்சி, சித்த மருத்துவக் கூடம் ஆகிய பல துறைகளில் இங்கு பயிற்சி பெரும் பெண்கள் சமூகத்தில் யாருக்கும் சளைத்தவர் அல்ல என்பதை இன்று பறை சாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பாரதி கண்ட புதுமைப் பெண்களை உருவாக்கி இன்று பாரதி விரும்பிய பெண் விடுதலையை செயலில் காண்பிக்கும் இடம் இந்த குருகுலம். இங்கு ஆடை வடிவமைப்பு, டி.வி. மெக்கானிசம், கட்டடவியல் வரைபடங்கள் வரைதல், செவிலியர் பயிற்சி என பல வகுப்புகளும் இங்கு உண்டு. சுதந்திரப் போராட்டத்தில் செய்த தியாகத்துக்காக அரசாங்கம் கொடுத்த 10 ஏக்கர் நிலத்தைத் தன் சொந்தத்துக்கு எடுத்துக் கொள்ளாமல் மகாராஜபுரம் எனும் இடத்தில் 15 ஏக்கர் சேர்த்து இந்த குருகுலம் விரிவடைந்து காணப்படுகிறது. இங்கு நுழைந்தவுடன் காண்கின்ற காட்சி, அமைதி, எளிமை, அடக்கம், மரியாதை, பண்பாடு இவைகளைத்தான் காணமுடியும். உடல் நலம் குறைந்தால் தங்குவதற்கு ‘ஆரோக்கிய சாலை’. மருத்துவ உதவிகள் உடனுக்குடன் கிடைக்கின்ற வசதி இங்கு உண்டு. விளையாட்டுக்களுக்கும், உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் உண்டு. அதிகாலையில் எழுந்ததும் உடற்பயிற்சி, பிரார்த்தனை என்று ஒரே சீரான நடவடிக்கைகள் இங்கு. இங்குள்ள நவீன சமையற் கூடத்தைப் பார்த்து வியந்து போவார்கள். சுகாதார முறையோடு ஆயிரக்கணக்கானோருக்கு ஒரே நேரத்தில் வரிசையில் உணவு பரிமாறப்படும் அழகை உலகத்தார் பார்த்து வியந்து போகிறார்கள். ஒரு போட்டி, கூச்சல், சந்தடி எதுவுமின்றி அமைதியான சூழலில் ஆயிரக்கணக்கில் மாணவிகள் உணவு உண்ணும் காட்சி வியந்து போற்றுதற்குரியது. இங்கு பணம் செலுத்தி தங்குவோருக்கும், விடுதியின் செலவில் இலவசமாக உணவு உண்போருக்குமிடையே உணவில் வித்தியாசம் இல்லை. இந்த சாதனைகள் எனும் ஆல விருட்சத்திற்கு ஒரு சிறிய விதை சர்தார் வேதரத்தினம் எனும் காந்தியவாதி. அதை தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுத்தி வந்தவர் அப்பாகுட்டி. இன்று அவருடைய புதல்வர்கள் மிகச் சிறப்பாக இதனை நடத்தி வருகிறார்கள். வாழ்க இவர்களது சாதனை. வளர்க இந்த சமுதாயப் பணி. உலகில் பெண்ணினம் இருக்கு மட்டும் இந்த குருகுலத்தின் பங்களிப்பு வரலாற்றில் நினைவில் கொள்ளப்படும். 21 ஸ்ரீமதி செளந்தரம் இராமச்சந்திரன் மதுரையில் டி.வி.சுந்தரம் ஐயங்கார் மிகப் பெரிய மோட்டார் தொழிலதிபர். சுய முயற்சியினாலும், கடின உழைப்பாலும் உயர்ந்து, சிறந்த மனிதராக விளங்கியவர் திரு சுந்தரம் ஐயங்கார். நேரம் தவறாமை இந்த நிறுவன ஊழியர்களின் அடையாளம்; பண்பும், பணிவும் அந்த கம்பெனி ஊழியர்களின் அடையாள முத்திரை. மதுரை நகரப் பேருந்து சேவையை முழுமையாக ஏற்று நடத்திக் கொண்டிருந்த இந்த கம்பெனி பேருந்து இயக்கம் பற்றி கூறும்போது மதுரை வாசிகள் போற்றி புகழும் செய்தி, இவர்களது நேரம் தவறாமை. குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் வரவேண்டுமென்றால், அந்த பேருந்து சரியாக அந்த நேரத்தில் வந்து சேரும். நம் கடிகாரத்தை அதைப் பார்த்து சரி செய்து கொள்ளலாம் என்று மதுரை வாசிகள் சொல்லுவதுண்டு. அப்படிப்பட்ட புகழ்மிக்க தொழிலதிபரின் மகளாகப் பிறந்தவர்தான் செளந்தரம். டி.வி.சுந்தரம் ஐயங்கார், மற்ற பல தொழிலதிபர்களைப் போல ஆங்கில ஆதிக்கத்துக்கு துணை போனவர் அல்ல. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு தரப்பினருக்கும் பல உதவிகளைச் செய்து வந்தார். இவரது மனைவி திருமதி லக்ஷ்மி அம்மாள் தான் கதர் துணியை மட்டுமே அணிவதோடு, வீடு வீடாகச் சென்று அனைவரும் கதர் துணியை அணியவேண்டுமென்று கேட்டுக் கொண்டு கதர் துணிகளையும் விற்றார். தேச நிர்மாணப் பணிகளில் மகாத்மா காந்தியடிகளின் வழியைப் பின்பற்றி பல சேவைகளை இவர் புரிந்து வந்தார். குழந்தைகள், பெண்கள் நலனில் அக்கறை கொண்டு இவர் ஆற்றிய பணிகள் ஏராளம். 1935ஆம் ஆண்டு செளந்தரம் டெல்லியிலுள்ள லேடி ஹார்டிஞ்சு மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். பிறவியிலேயே அறிவுச் சுடராக பிரகாசித்த இவரது திறமை நாட்பட நாட்பட மேலும் மேலும் பிரகாசிக்கத் தொடங்கியது. பல்கலைக் கழகத்தில் முதல் மாணவராக இவர் தேர்ந்தார். எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற பிறகு மகளிர் மருத்துவம் (Gynaecology) தாய் சேய் நலம் (Obsterics), ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றார். சென்னையில் சுமார் இரண்டு ஆண்டுகள் மருத்துவராகப் பணியாற்றினார். இவர் டெல்லியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே சேவா கிராமம் சென்று மகாத்மாவைச் சந்தித்திருக்கிறார். அங்கு பல சேவைகளில் பங்கு கொண்டிருக்கிறார். அதுதவிர சென்னை, மதுரை ஆகிய நகரங்களிலும் பல்வேறு காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து சுதந்திரப் போரில் தனது பங்கினை அளித்து வந்திருக்கிறார். 1937 முதல் மூன்றாண்டுகள் மதுரையில் கெளரவ மருத்துவராகப் பணியாற்றினார். 1938இல் இவர் பெண்களுக்கு கண்காணிப்பு இல்லம் (Vigilance Home) நிறுவினார். 1940இல் கேரளாவைச் சேர்ந்த சுதந்திரப் போரில் ஈடுபட்டிருந்த ராமச்சந்திரன் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். 1942 தொடங்கி இவர் நேரடியாக சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொள்ளத் தொடங்கினார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது இவர் கேரளப் பகுதியெங்கும் சுற்றுப் பயணம் செய்து நாட்டு விடுதலைக்குப் போராடினார். தேச விடுதலைக்காக சிறை சென்ற தியாகிகளின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளைச் செய்தார். இவரது நடவடிக்கையைக் காரணம் காட்டி திருவாங்கூர் சமஸ்தானம் இவரை சமஸ்தானத்தை விட்டு வெளியேற்றியது. 1943இல் டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டியுடன் தொடர்பு ஏற்பட்டது. அவரோடு சேர்ந்து பல சமூகப் பணிகளை மேற்கொண்டார். அன்னை கிராமிய மருத்துவப் பணி என்ற பெயரில் இவர் பல கிளைகளை அமைத்து மக்களுக்கு மருத்துவ உதவியை மேற்கொண்டார். 1945இல் இவர் கஸ்தூர்பா காந்தி நினைவு அறக்கட்டளைக்குத் தமிழ்நாட்டு பிரதிநிதியாக மகாத்மாவால் நியமிக்கப்பட்டார். 1947இல் இப்போது உள்ள காந்திகிராமம் துவக்கப் பட்டது. இரண்டு ஏக்கர் நிலத்துடன் அன்று ஆரம்பிக்கப்பட்ட காந்தி கிராமம் என்று 350 ஏக்கர் நிலப் பரப்பில் செயல்பட்டு வருகிறது. இதில் 4000க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து பயன் பெறுகிறார்கள். மதுரை சிதம்பர பாரதி, வீர சவார்க்கர் எழுதிய ‘எரிமலை’ எனும் ஆங்கில நூலைக் கொண்டு வந்து கொடுத்தார். அது அரசாங்கம் தடை செய்திருந்தது. அந்த நூலை சுமார் 250 பக்கங்களில் தமிழில் மொழி பெயர்த்து டாக்டர் செளந்தரம் கொடுத்தார். இந்த நூல் காரைக்காலில் அச்சிடப்பட்டு ரகசியமாக நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டது. சுதந்திர தாகம் மக்களியையே பரவ இந்த நூலும் பயன்பட்டது. 1857 சிப்பாய் கலகம் என்ற பெயரில் ஆங்கில ஆசிரியர்கள் கூறும் நிகழ்ச்சி முதல் விடுதலைப் போர் என்று வீர சாவர்க்கர் விளக்கிய எழுதிய நூல் இது. இந்த ‘எரிமலை’ நூலை பலர் மொழி பெயர்த்திருக்கின்றனர். எனினும் ஆங்கில அடக்குமுறைக்கு இடையே துணிவோடு மொழிபெயர்த்த டாக்டர் செளந்தரத்தின் பணி சிறப்பானது. 1952இல் சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பொதுத் தேர்தலில் இவர் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது சட்டசபைக்குள் நுழைந்த முதல் பெண்மணி என புகழ் பெற்றார். வினோபா பாவே தமிழகம் விஜயம் செய்தபோது டாக்டர் செளந்தரம் அவர்களுடன் பயணம் செய்து அவரது பூதான இயக்கத்தில் பங்கு கொண்டார். 1956இல் பிரதமர் ஜவஹர்லால் மற்றும் திருமதி இந்திரா காந்தியுடன் இவர் சீனாவிற்கு விஜயம் செய்தார். கிராமப் பொருளாதாரம், கிராம சுகாதாரம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டு பணியாற்றினார். 1957ஆம் ஆண்டு தேர்தலில் மிகவும் பிந்தங்கிய வேடசந்தூர் தொகுதியில் நின்று சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தத் தொகுதிக்கு கல்வி, சுகாதாரம், சாலை வசதிகள், மின்சாரம் இவற்றைக் கொண்டு வந்து பெருமை சேர்த்தார். இந்தியாவிலுள்ள நான்கு காந்தி மியூசியங்களில் மதுரை மியூசியத்தை டாக்டர் பி.என்.ராமசுப்பிரமணியத்துடன் சேர்ந்து உருவாக்கினார். 1960இல் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் துணைத் தலைவர் ஆனார். 1962ஆம் ஆண்டு தேர்தலில் திண்டுக்கல் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்தாண்டுகள் கல்வி மற்றும் சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். குழந்தைகள் கல்வி, சமூக நலம் ஆகியவற்றில் இவர் அதிக கவனம் செலுத்தினார். 1974 இல் காந்தி கிராமத்தின் இயக்குனராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிழக்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது இவர் கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடையே ஒற்றுமையும் அமைதியும் ஏற்பட பாடுபட்டார். தான் ஒரு செல்வந்தர் வீட்டுப் பெண் என்ற நினைப்பே இல்லாமல், எப்போதும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை, சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி இவற்றுக்காகவே இறுதி வரை பாடுபட்டார். வாழ்க செளந்தரம் ராமச்சந்திரன் புகழ்! 22 பழனி P.S.K.லட்சுமிபதிராஜு சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் வெற்றிபெற்று தமிழ்நாடு சட்டசபையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் பெயர்களில் பி.எஸ்.கே.லட்சுமிபதிராஜு பெயரும் ஒன்று. இவர் மதுரை மாவட்டம் பழனி நகரத்தில் கிருஷ்ணசாமிராஜு அவர்களின் மகனாகப் பிறந்தார். இவரது இளம் வயதில் பள்ளிக்கூட நாட்களிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டு பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். இவர் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக நகர கமிட்டி, தாலுகா கமிட்டி, மதுரை மாவட்ட கமிட்டி, தமிழ்நாடு காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் என்று படிப்படியாக எல்லா நிலைகளிலும் பணியாற்றியிருக்கிறார். 1930ஆம் ஆண்டிலேயே இவர் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறுமாத சிறை தண்டனை பெற்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வது என்று பிடிவாதமாக இருந்து நாடு சுதந்திரம் பெற்ற பிறகே திருமணம் புரிந்து கொண்டவர். 1942இல் இவர் பாதுகாப்புக் கைதியாக சுமார் 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரது சிறைவாசம் அலிப்புரம், பெல்லாரி, சென்னை, தஞ்சாவூர், திருச்சி, பாளையங்கோட்டை, மதுரை முதலிய இடங்களில் கழித்தார். இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு பழனி நகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில், 24 வார்டுகளுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து நிறுத்தினார். இவர்கள் அனைவருமே மகோன்னத வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் லட்சுமிபதிராஜு நகரசபை சேர்மனாக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நாளில் ஒரு நகரசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அனைத்து வார்டுகளிலும் நின்றவர்கள் வெற்றிபெற்ற வரலாறு தமிழ்நாடு முழுவதும் பேசப்பட்டது. இந்த வெற்றியின் காரணமாக லட்சுமிபதிராஜுவின் பெருமை வெளி உலகுக்குத் தெரியலாயிற்று. அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான பெருந்தலைவர் காமராஜ், புதுக்கோட்டை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இளையராஜா விஜயரகுநாத தொண்டைமான் அவர்கள தலைமையில் லட்சுமிபதிராஜுவுக்கு ஒரு வெள்ளிவாள் பரிசளித்தார். இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் விவசாயத்துக்காக குரல் கொடுத்து பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். பழனி தாலுகாவில் விவசாயிகளின் கோரிக்கைகளின்படி, கொடைக்கானல், பழனி ரோடு, விருப்பாச்சி, பரப்பலாறு அணை, பழனி பாலாறு, பொருந்தலாறு அணை, ஆய்க்குடி, வரதமாநதி அணை ஆகிய திட்டங்களுக்காக போராடி தமிழ்நாடு அரசு மேற்படி திட்டங்களை நிறைவேற்ற காரணமாக இருந்தார். தமிழகத்தில் மிகப்பெரும் கோயிலாகவும், வருமானம் அதிகமுள்ள கோயிலாகவும் இருந்த பழனி தண்டாயுதபாணி கோயிலின் டிரஸ்டிகளின் தலைவராக இருந்திருக்கிறார். இவர் தலைமை பொறுப்பேற்றிருந்த காலத்தில் பழனி தண்டபாணி ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் செய்வித்து பெருமை பெற்றார். இவர் டிரஸ்ட்டின் தலைவராக இருந்த போது 30 லட்சமாக இருந்த கோயில் வருமானம் ஒரு கோடியைத் தாண்டியது. கோயில் தேவஸ்தானத்தின் சார்பில் ஒரு கலைக்கல்லூரி, பண்பாட்டு கல்லூரி, பெண்கள் கல்லூரி, நாதஸ்வரத்துக்கென்று ஒரு கல்லூரி, முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம், புதிய சத்திர தங்கும் விடுதி ஆகியவற்றை நிறுவினார். அன்றைய குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சர் சி.பி.ராமசாமி ஐயர், மைசூர் மகாராஜா சாமராஜ உடையார், பவநகர் மகாராஜ், கவர்னர் ஸ்ரீ பிரகாசா, பிஷ்ணுராம் மேதி ஆகியோரிடம் பாராட்டுப் பெற்றவர் நமது லட்சுமிபதிராஜு. இந்தியாவில் தோன்றிய முதல் தொழிற்சங்கம் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ். இதிலிருந்து பிரிந்து இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தமிழ்நாட்டுக் கிளை துவக்கப்பட்ட போது அந்த மாநாட்டின் வரவேற்பு கமிட்டி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் லட்சுமிபதிராஜு. மலைத்தோட்ட விவசாயிகளுக்காக பல போராட்டங்களை நடத்தினார். குறிப்பாக நெய்க்காரபட்டி எஸ்டேட்டில் நடந்த போராட்டத்தின் போது நடத்தப்பட்ட அடக்குமுறைகளை எதிர்த்து வெற்றி கண்டவர் இவர். இவரது அமைதிப் பணிகளை மகாத்மா காந்தி பெரிதும் பாராட்டியிருக்கிறார். இவர் ஒரு விளையாட்டு வீரரும்கூட. சைக்கிள் ஓட்டும் போட்டியில் தங்க கைக்கடிகாரம் பரிசு பெற்றவர். மத ஒற்றுமைக்காக மிகவும் பாடுபட்டவர். பழனி ஃபைன் ஆர்ட்ஸ் சபாவினால் “தியாகச் செம்மல்” எனும் பட்டமளித்து கெளரவிக்கப்பட்டவர். மகாத்மா காந்தியடிகளின் அழைப்பை ஏற்று ‘ஹரிஜன சேவா சங்கம்’ தொடங்கி நகர துப்புறவுத் தொழிலாளிகள் தையல் தொழிலாளர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்கள், ஹோட்டல் தொழிலாளர், டாக்சி ஓட்டுனர்கள் ஆகியோருக்காக சங்கங்கள் அமைத்து அவைகளின் தலைவராக இருந்து பாடுபட்டவர். அகில இந்திய ஏலக்காய் வாரியத்தின் உறுப்பினராக இருந்து வந்திருக்கிறார். தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்து பாடுபட்டவர். வாழ்க பழனி லட்சுமிபதிராஜு அவர்களின் புகழ்! 23 திருச்சி டி.எஸ்.அருணாசலம் அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை திருச்சி மாவட்டத்தில் காங்கிரஸ் என்றால் தியாகி டி.எஸ்.அருணாசலம் அவர்கள்தான் நம் நினைவுக்கு வருவார். இவரது பெயரால் மெயின் கார்டு கேட் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகக் கட்டடம் “அருணாசலம் மன்றம்” என்ற பெயரால் விளங்கி வருவதை அறியலாம். மெலிந்த உடல், வலிமை பொருந்திய உள்ளம், எந்த எதிர்ப்பையும் சமாளிக்கக்கூடிய மன உறுதி, மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர் தனது தளராத உழைப்பாலும், தேசபக்தியாலும், தியாக உள்ளத்தாலும் முன்னுக்கு வந்தவர். திருச்சி மாவட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்திச் சென்ற ஒரு சிலரில் இவர் முதன்மையானவர் என்றால் மிகையன்று. கர்ம வீரர் காமராஜ் இவரது தியாகத்தையும், தீரத்தையும் போற்றி இவர் மீது அசைக்கமுடியாத அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்தார். திருச்சி மாவட்டத்துக்காரர் என்றபோதிலும் இவரது பணியைத் தமிழ் மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி வந்தது. மிக மிக சாமானிய குடும்பத்தில் வந்தவர், மிக மிக உயர்ந்த நிலையில் இருந்த பல தலைவர்களும் இவரைத் தமக்குச் சமமாக நடத்தினர். இவர் காலத்தில் செல்வத்திலும், கல்வியிலும் உயர்ந்திருந்த தியாக சீலர்கள் திருச்சி மாவட்டத்தில் இருந்தார்கள். அவர்களில் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், ஹிந்தி பிரச்சார சபா பாலகிருஷ்ண சாஸ்திரி, ரத்தினவேலு தேவர், டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி, என்.ஹாலாஸ்யம், கதர் சங்கிலியா பிள்ளை, கரூர் நன்னா சாஹிப் ஆகியோர் நினைவுகூரத் தக்கவர்கள். இவர்களெல்லாம் இருந்த திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவி மிக எளியவரான டி.எஸ்.அருணாச்சலத்தைத் தேடி வந்தது என்றால் அது இவரது பெருமைக்கு ஓர் எடுத்துக்காட்டு எனலாம். மகாத்மா காந்தி இட்ட கட்டளைகளையெல்லாம் தலைமேற்கொண்டு தளராத உழைப்பாலும், இடைவிடாத முயற்சியினாலும், மாவட்டம் முழுவதும் பயணம் செய்து தொண்டர்களைச் சந்தித்து போராட்ட ஏற்பாடுகளைச் செய்வதிலும், தொண்டர்கள் கைதானால் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் செய்ய வேண்டிய கடமைகளைக் கண்ணும் கருத்துமாகச் செய்து வந்தார் அருணாச்சலம். காங்கிரஸ் தொண்டர்களும், அனுதாபிகளும், தேசபக்தர்களும் இவரைத் தங்கள் சொந்த சகோதரரைப் போலவே பாவித்தார்கள். 1930ல் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரக போராட்டத்திற்குப் பிறகு தமிழ் மாநிலத்தில் நடந்த அத்தனை போராட்டங்களும் பெரும்பாலும், திருச்சி மாவட்டத்தில் கிராமப் புறங்களில் மிகச் சாதாரண தொண்டர்களால் நடத்தப்பட்டவை. இதற்கு அருணாசலமே காரணம். சாமானியர்களின் தலைவர் என்று இவர் போற்றப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலும் பெரிய தலைவர்களை தொண்டர்களும் சாமானியர்களும் கிட்டே நெருங்கவோ, சகஜமாகப் பேசவோ முடியாத நிலையை மாற்றி இவர் தொண்டர்களுள் ஒருவராகவே இருந்தார். இதன் காரணமாக கிராமப் புறங்களில் காங்கிரஸ் இயக்கம் வேரூன்றி வளர்ந்தது. இளைஞர்கள் பெருமளவில் இவருடன் வந்து சேர்ந்து கொண்டனர். இப்படித் தொண்டர்கள் தமக்குள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் செயல்பட காரணமாக இருந்த டி.எஸ்.அருணாசலத்துக்கு பலர் உதவியாக இருந்தனர். அவர்கள் அறிவானந்தசாமி, வாங்கல் மருதமுத்து பிள்ளை, அரியலூர் எல்.சபாபதி, திருச்சி டி.எம்.மாசி கோனார், லாடபுரம் எம்.குருசாமி நாயுடு, செட்டிக்குளம் வி.எஸ்.பி.ராமசாமி ரெட்டியார், பாதர்பேட்டை வி.ஏ.முத்தையா, காட்டுப்புத்தூர் கே.ஏ.தர்மலிங்கம், குளித்தலை கே.செல்லப்பன், வெள்ளனூர் ஏ.ரெங்கசாமி உடையார், புதூர் உத்தமனூர் கோ.கிருஷ்ணசாமி உடையார், வேங்கூர் எஸ்.சாம்பசிவம், ஸ்ரீரங்கம் சேதுராமன் முதலானோர் ஆவர். திருச்சி மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் என்ற வகையில் பிரிந்து ஒருவருக்கொருவர் நட்புரிமையுடன் ஒன்றுபட்டு போராடுவதற்கு பதில் பிரிந்து நின்றார்கள். இதற்கு தமிழ்நாடு காங்கிரசில் ராஜாஜி கோஷ்டி, காமராஜ் கோஷ்டி என்ற பெயரால் அதிகாரபூர்வமற்ற செயல்பாடும் ஓர் காரணமாக இருந்தது. என்றாலும் கூட டி.எஸ்.அருணாச்சலம் கர்ம வீரர் காமராஜ் அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான மக்கள் பிரதிநிதியாக காங்கிரஸ் தலைவராக திருச்சி மாவட்டத்தில் கொடி கட்டி பறந்த வரலாறு நாடு அறியும். வாழ்க தியாக டி.எஸ்.அருணாச்சலம் புகழ்! 24 திருச்சி P.R.ரத்தினவேல் தேவர் [] நேருவுடன் பி.ஆர்.தேவர் இடது கோடியில் திருச்சி நகருக்கு அடையாளச் சின்னங்களாக விளங்கும் மலைக்கோட்டை, தெப்பக்குளம் போன்ற பல இடங்களில் ‘தேவர் ஹாலும்’ ஒன்று. பழைமை வாய்ந்த அந்த அரங்கம் இப்போது புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது. முன்பு அதில் நடைபெறாத நாடகங்களோ, பொதுக்கூட்டங்களோ இல்லையெனலாம். நவாப் ராஜமாணிக்கம் இங்கு முகாமிட்டிருந்த காலத்தில் இங்குதான் அவரது நாடகங்கள் நடைபெற்றன. பிரச்சினைக்குரிய எம்.ஆர்.ராதாவின் நாடகங்களும் இங்குதான் நடைபெற்றன. இது ஒரு சரித்திர முக்கியம் வாய்ந்த இடமாக இருந்தது. அது சரி! இந்த ‘தேவர் ஹால்’ என்பது எவர் பெயரால் அப்படி அழைக்கப்படுகிறது. அவர்தான் திருச்சியில் நகர்மன்றத் தலைவராகவும், ஜில்லா போர்டு தலைவராகவும், புகழ்மிக்க காங்கிரஸ் தலைவராகவும் விளங்கிய பி.ஆர்.ரத்தினவேல் தேவர் பெயரால் அழைக்கப்படும் இடம் இது. ‘தேவர்’ என்ற இவரது பெயரையும், இவருக்கு அன்று திருச்சியில் இருந்த செல்வாக்கையும், மக்கள் ஆதரவையும் பார்க்கும்போது ஒரு ஆஜானுபாகுவான முரட்டு தலைவரை கற்பனை செய்து கொள்ளத் தோன்றுகிறதல்லவா? அதுதான் இல்லை. இவர் மெலிந்த உடலும், வைர நெஞ்சமும், மனதில் இரும்பின் உறுதியும் ஆண்மையும் நிறைந்த ஒரு கதாநாயகன் இவர். இப்போது திருச்சியில் இவருக்கு நிறுவப்பட்டுள்ள சிலையைப் பார்க்கும்போதுதான் நம் கற்பனை சிதறிப் போகிறது. இவ்வளவு சிறிய ஆகிருதியை வைத்துக் கொண்டா அவர் அன்று திருச்சியை மட்டுமல்ல, தமிழக அரசியலையே ஒரு கலக்கு கலக்கினார் என்ற எண்ணம் தோன்றுகிறது. பி.ஆர். தேவர் என்று அழைக்கப்படும் அந்த ரத்தினவேல் தேவர் திருச்சியின் ஒரு பகுதியான உறையூரில் வசித்து வந்தார். இவரது அரசியல் பிரவேசத்துக்குப் பின் அதிகம் வெளியில் தெரியாவிட்டாலும், உள்ளூர் அளவில் திருச்சி முனிசிபாலிடியில் அதன் தலைவராகவும் ஆகியிருந்தார். 1933இல் மகாத்மா காந்தியடிகள் திருச்சிக்கு விஜயம் செய்தார். அப்போது அவருக்கு திருச்சி நகர் மன்றத்தின் சார்பாக ஒரு வரவேற்புக்கு தேவர் ஏற்பாடு செய்தார். பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட நகர்மன்றம் மகாத்மாவுக்கு வரவேற்பளிப்பதை ஆளும் வர்க்கமும் அதன் ஜால்ராக்களான ஜஸ்டிஸ் கட்சியும் கடுமையாக எதிர்த்தன. அந்த எதிர்ப்பையெல்லாம் முறியடித்து தேவர் அளித்த வரவேற்பு அவரது துணிச்சலை வெளிக்காட்டியது. அந்தக் காலத்தில் திருச்சி நகரம் குடி தண்ணீர் வசதியின்றி மிகவும் சிரமப்பட்ட காலம். தேவர் மிகத் திறமையோடு திருச்சியின் குடிநீர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கண்டதோடு மக்களின் பேராதரவையும் பெற்றார். இவரது இந்த செயல்பாட்டை அப்போதிருந்த மாநில நீதிக்கட்சி அரசாங்கம் எதிர்த்தது. மக்களின் துணையோடு அவர் அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி செயல்பட்டு புகழ் பெற்றார். அநீதிக்குத் தலைவணங்குவது என்பது தேவரின் அகராதியிலேயே கிடையாது. இதன் காரணமாக இவர் பல நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்தது. மகாத்மா காந்தி துவக்கிய தனி நபர் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதற்காக இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்படியொரு முறை இவர் தஞ்சாவூர் சிறையில் இருந்த போது நடந்த ஒரு நிகழ்ச்சியை அப்போது சிறை அதிகாரியாக இருந்த கோபாலகிருஷ்ண நாயுடு என்பவர் ஒரு கட்டுரையில் விவரித்திருக்கிறார். தேவர் தஞ்சாவூர் சிறையில் இருந்த காலத்தில் அங்கு ராஜாஜி போன்ற பல பெரிய தலைவர்களும் இருந்திருக்கிறார்கள். ஒவ்வொருநாளும் சிறை அதிகாரி பேரேடு நடத்தும்போது கைதிகள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருக்குமானால் தங்கள் கையை முன்புறம் நீட்டவேண்டும். உடனே அதிகாரி அவரிடம் விசாரிப்பார். அதுபோல ஒருமுறை ராஜாஜி அவர்கள் தன் கையை நீட்டவும், ஜெயிலராக இருந்த ஒரு வெள்ளைக்கார அதிகாரி அவர் கையைத் தன் கைத்தடியால் தட்டிவிட்டு அவரை கேவலமாகவும் பேசிவிட்டான். அப்போது அவரோடு உடன் இருந்த தேவருக்கு தாங்க முடியாத ஆத்திரம் வந்து விட்டது. அந்த அதிகாரி மீது பாய்ந்து தாக்க முயன்றபோது ராஜாஜியும் மற்றவர்களும் தடுத்து விட்டனர். பிறகு சில ஆண்டுகள் கழிந்தபின் ராஜாஜி சென்னை மாகாண பிரதான அமைச்சராக பதவி ஏற்றார். அப்போது அவர் திருச்சிக்கு விஜயம் செய்து பி.ஆர்.தேவர் அவர்கள் இல்லத்தில் தங்கி இருந்தார். பல அரசாங்க அதிகாரிகளும் முதலமைச்சரை அங்கு வந்து சந்தித்தனர். அப்போது திருச்சி சிறையின் உயர் அதிகாரியாக இருந்தவர் முன்பு தஞ்சாவூரில் ராஜாஜியை அவமரியாதை செய்த வெள்ளைக்கார அதிகாரி. அவரும் ராஜாஜி கூப்பிட்டு அனுப்பியிருந்ததால் பார்க்க வந்திருந்தார். அவர் மனதில் ராஜாஜி பழைய நிகழ்ச்சியை மனதில் வைத்துக் கொண்டு தன்னை பழிவாங்கி விடுவாரோ என்ற பயத்தில் இருந்தார். இறுதியாக அந்த வெள்ளை அதிகாரி அழைக்கப்பட்டார். அவர் ராஜாஜியின் முன்பு வந்தபோது ராஜாஜி எதுவுமே நடைபெறாதது போல, சிறையில் செய்ய வேண்டிய சில சீர்திருத்தங்களைச் சொல்லி அவற்றையெல்லாம் செய்து வசதி செய்து கொடுக்கும்படி சொல்லிவிட்டு, நீங்கள் போகலாம் என்றார். அதிகாரிக்கு ஏமாற்றம். முன்பு நடந்த நிகழ்ச்சி பற்றி நினைவில் இருப்பது போல கூட காட்டிக் கொள்ளவில்லையே என்று வெளியே வந்து ராஜாஜியின் பெருந்தன்மையை புகழ்ந்து தள்ளினாராம். அன்று அவரை அடிக்கப் பாய்ந்த பி.ஆர்.தேவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் ராஜாஜி, அந்த அதிகாரிக்கு தான் அடித்திருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய வலியைக் காட்டிலும் அதிகமாகவே கொடுத்ததாக நினைத்து மகிழ்ந்தாராம். இப்படியொரு செய்தி அவரைப் பற்றி. இவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நெருங்கிய நண்பராகவும் விளங்கினார். வாழ்க பி.ஆர்.தேவரின் புகழ்! 25 திருச்சி டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி ஒரு காலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் அலுவலகம் திருச்சியில்தான் இருந்தது என்பது பலருக்கு இன்று தெரிந்திருக்க நியாயமில்லை. கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி கூட முதன் முதலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆபீசில் திருச்சியில்தான் பணிசெய்து கொண்டிருந்தார் என்பதும் புதிய செய்தியாக பலருக்கு இருக்கும். தமிழ்நாடு காங்கிரசின் தலைமை அகமாகத் திகழ்ந்த திருச்சி மாநகரில் அப்போது காங்கிரஸ் கட்சியைக் கட்டிக் காத்து வளர்த்த தியாகச் செம்மல்கள் பலரில் குறிப்பிடத்தக்கவர் டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி ஆவார். இவர் தொழில் முறையில் மருத்துவராக இருந்து திருச்சி நகர மக்களின் பேரன்புக்கு பாத்திரமானவர். இவரது தந்தையார் வாசுதேவ சாஸ்திரியார். இவர் 1887ஆம் ஆண்டு பிறந்தார். திருச்சி சிங்காரத் தோப்பில் “சத்தியாக்கிரக விலாஸ்” எனப் பெயரிடப்பட்ட வீட்டில் இவரது வாசம். பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்திலேயே நாடு சுதந்திரம் பெற வேண்டும் எனும் பேரவா இவருக்கு உண்டு. மருத்துவப் பட்டப்படிப்பு படித்து புகழ்மிக்க மருத்துவராக இவர் பிராக்டீஸ் செய்து வந்த போதும் தேச சேவையையே பெரிதும் விரும்பி செய்யத் தொடங்கினார். 1912இல் இவர் சுதேச இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1921இல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு IPC செக்ஷன் 123யின் கீழ் தண்டிக்கப்பட்டு ஒரு வருஷம் சிறைவாசம் இருந்தார். 1930இல் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் இவர் மட்டுமல்ல இவரது குடும்பம் முழுவதுமே ஈடுபட்டு அடிபட்டு சிறை புகுந்து சகல கஷ்டங்களையும் பட நேர்ந்தது. இந்த தியாக வரலாற்றில் இடம் பிடித்துவிட்ட இவர் குடும்பத்தின் மற்றவர்கள், இவரது மனைவி கல்யாணி, சாஸ்திரியாரின் சகோதரன் மகன் கணபதி சாஸ்திரி, மகள் சுப்பலக்ஷ்மி, சுப்பலக்ஷ்மியின் கணவர் ராமரத்தினம், இவரது சகோதரரும் பிரபல வக்கீலுமான டி.வி.பாலகிருஷ்ண சாஸ்திரி ஆகியோரும் சிறைசென்ற தியாக சீலர்கள். குடும்பமே நாட்டுக்காக சிறைசென்ற வரலாறு வேறு எங்கேயாவது, எவராலாவது நடத்தப்பட்டதா என்பது நமக்குத் தெரியவில்லை, நேரு குடும்பத்தைத் தவிர. இவர்கள் அனைவரும் கைதாகி கண்ணனூர் சிறையில் ஆறு மாத காலம் வைக்கப்பட்டிருந்தனர். சுவாமிநாத சாஸ்திரியார் அழகான தோற்றமுடையவர். நடுவகிடு எடுத்து வாரப்பட்ட கிராப்புத் தலை. சிவந்த மேனி, எப்போதும் சிரித்த முகம், கலகலப்பான பேச்சு இவை சாஸ்திரியாரின் முத்திரைகள். ரத்தினவேல் தேவருக்கு இவர் மிகவும் நெருங்கிய நண்பர். கதர் பட்டு சட்டை அணிந்து, அங்கவஸ்திரம் தரித்து பார்ப்பதற்கு எப்போதும் கண்ணியமான தோற்றத்தோடு விளங்குவார். கையில் ஒரு ஓலைப்பெட்டி. அதில் நூல் நூற்பதற்கான பஞ்சு பட்டைகள், கையில் ஒரு தக்ளி இவை சகிதமாகத்தான் அவர் எப்போதும் இருப்பார். ஏழை மக்களுக்கு அவர் அந்தக் காலத்திலேயே இலவசமாக சிகிச்சை அளித்து வந்தார். திருச்சி ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இவர் இருந்தார். அதுமட்டுமல்ல திருச்சி ஜில்லா ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவர் பதவியும் இவரிடம்தான் இருந்தது. இவை இரண்டிலும் இவர் ஆற்றிய பணிகள் இன்றும்கூட நினைவு கூரத் தக்கவையாகும். அவருக்குச் சொந்தமான பிரம்மாண்டமான “சத்தியாக்கிரக விலாஸ்” எனும் மாளிகையைவிட்டு நீங்கி தென்னூரில் தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் சேரிப்பகுதியில் ஒரு குடிசையை அமைத்துக் கொண்டு அந்த ஏழை ஜனங்களுக்கு மருத்துவ உதவியையும் செய்து கொண்டு, தேசப்பணியாற்றினார். சிறையில் சுவாமிநாத சாஸ்திரியாரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதுமுதல் அவர் உடல் நலம் கெட்ட நிலையில்தான் பொதுத் தொண்டிலும் கவனம் செய்து வந்தார். இந்த காரணத்தினால் 1942 ஆகஸ்ட்டில் நாடு முழுவதும் எழுச்சியுற்ற “ஆகஸ்ட் புரட்சியில்” இவரால் ஈடுபடமுடியவில்லை. டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது எழுத்துக்கள் படித்தவர்கள் மத்தியில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தியது. இவர் சில சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். அந்தக் கதைகளின் மையக் கரு ஒத்துழையாமை இயக்கம்தான். இலக்கியத்திலும் அவரது நாட்டுப் பற்று, சமுதாயப் பற்று வெளிப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. இவர் ஒரு பத்திரிகை ஆசிரியரும்கூட. இவர் நடத்திய பத்திரிகையின் பெயர் “களி ராட்டை” என்பதாகும். இந்த பத்திரிகையின் மூலம் மகாத்மா காந்தியடிகளின் தேச நிர்மாணப் பணிகளைப் பரப்பி வந்தார். தீரர் சத்தியமூர்த்தி இவரது நெருங்கிய நண்பர். சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட இந்த பெருமகன் சுதந்திரம் பெறுவதற்கு ஓராண்டுக்கு முன்பாக 13-7-1946இல் காலமானார். இவர் காலமானபோது மகாத்மா காந்தி தன் கைப்பட இரங்கல் கடிதமொன்றை இவர் மனைவி கல்யாணி அம்மாளுக்கு எழுதியிருந்தார். தனது தூய வாழ்க்கையாலும், உயர்ந்த தியாகத்தாலும், தேசபக்தி ஒன்றையே செல்வமாகத் தனது குடும்ப வாரிசுகளுக்கு விட்டுச் சென்ற இந்த தியாக சீலரின் புகழ் வாழ்க! 26 வேதாரண்யம் தியாகி வைரப்பன் 1930 ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி தமிழ் வருஷப் பிறப்பு நாளன்று திருச்சியில் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் இல்லத்திலிருந்து ராஜாஜி தலைமையில் சுமார் நூறு தொண்டர்கள் கிளம்பி பதினைந்து நாட்கள் நடைப் பயணம் செய்து வேதாரண்யம் சென்றடைந்து அங்கே அகஸ்தியம்பள்ளி எனும் இடத்தில் உப்பு எடுத்து, மகாத்மா காந்தியடிகள் தண்டியில் செய்த உப்பு சத்தியாக்கிரகத்தை இங்கே தமிழ்நாட்டில் அரங்கேற்றிய நிகழ்ச்சி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதில் ராஜாஜி, சந்தானம், சர்தார் வேதரத்தினம் உள்ளிட்ட ஏராளமான தலைவர்களும் தொண்டர்களும் போலீஸ் அடக்குமுறைக்கு ஆளாகி புளியம் மிளாறினால் அடிபட்டு, உதைபட்டு சிறை சென்று செய்த தியாகம் வரலாற்றின் ஏடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்படி இவர்கள் ஒருபக்கம் உப்பு சத்தியாக்கிரகப் போர் நடத்தினார்கள் என்றால், சாதாரண பொதுமக்கள் நேரடியாக இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லையாயினும், தங்கள் சக்திக்கு உட்பட்டு ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அவர்களது அடக்குமுறைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே சில அரிய காரியங்களையும் செய்திருக்கிறார்கள். அப்படிப் பட்ட நிகழ்ச்சிகளில் வேதாரண்யத்தில் நாவிதராக இருந்த ஓர் இளைஞர் செய்த அரிய காரியமும், அதன் விளைவாக அவர் சிறை சென்று தியாகியான விதமும் சற்று வித்தியாசமானது, ஏன்? வேடிக்கையானதும் கூட. அந்த நிகழ்ச்சியை இப்போது பார்ப்போம். வேதாரண்யம் புகழ்மிக்க புண்ணிய ஸ்தலம். இங்குள்ள ஆலயத்தில் அடைபட்டுக் கிடந்த கதவை பார்வதி தேவியாரின் தாய்ப்பால் அருந்திய திருஞானசம்பந்த சுவாமிகள் திருப்பதிகம் பாடி திறந்த வரலாறு அனைவருக்கும் தெரியும். திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் ஒருசேர இத்தலத்துக்கு விஜயம் செய்து பாடியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல தாயுமானவ சுவாமிகளின் எட்டாவது வாரிசாக வந்த சர்தார் வேதரத்தினம் பிள்ளை ஏற்பாடு செய்து அவ்வூரில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்றது. வேதரத்தினம் பிள்ளையின் குடும்பத்தாருக்கும், ஊரில் பலருக்கும் முடிவெட்டும் நாவிதராக வைரப்பன் என்றொரு இளைஞர் இருந்தார். இவருக்கு பிள்ளை அவர்களின் மீது மரியாதை, அன்பு, ஏன் பக்தி என்றுகூட சொல்லலாம். அப்படிப்பட்ட மரியாதைக்குரிய பிள்ளை அவர்களை போலீசார் கைவிலங்கு கால் விலங்கிட்டு வீதி வழியே இழுத்துச் சென்ற காட்சியைக் கண்டு ஊரே அழுதது. பிள்ளை அவர்களின் மனைவியும், அவரது ஒரே மகனான அப்பாக்குட்டி குழந்தையாக இருந்து இந்த காட்சியைக் கண்டு வருந்தியிருக்கிறார்கள். போலீசார் விலங்கிட்டு வேதரத்தினம் பிள்ளையைத் தெருவோடு அழைத்துச் செல்வதைப் பார்த்து அக்கம்பக்கத்துப் பெண்கள், பிள்ளையவர்களின் மனைவியிடம் ஓடிச்சென்று, ஐயோ, ஐயாவை இப்படி அடித்து இழுத்துச் செல்கிறார்களே அண்ணி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே என்று அலறி அழுதனர். கையில் மகன் அப்பாக்குட்டியை வைத்துக் கொண்டு இந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த பெருமைக்குரிய தாய், ஐயா என்ன குற்றம் செய்தார்? திருடினாரா, பொய் சொன்னாரா? இல்லையே. இந்த நாட்டு ஜனங்கள் எல்லோரும் சுதந்திரம் பெற வேண்டுமென்றுதானே போராடினார். இதோ இழுத்துச் செல்கிறார்களே இந்த போலீஸ்காரர்களுக்கு உட்பட. பிறகு நான் ஏன் வருத்தப்பட வேண்டும் என்று ‘வந்தேமாதரம்’ என்று முழங்க, இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டிருந்த குழந்தையும் எல்லாம் தெரிந்தது போல கையைத் தூக்க, அத்தனைப் பெண்களும் ஒருமுகமாக வந்தேமாதரம் என்று முழங்கினர். பிள்ளை அவர்களிடம் பக்தி விஸ்வாசம் கொண்ட நாவிதர் வைரப்பன் இந்தக் காட்சியைக் கண்டு உள்ளம் கொதித்து, ஆத்திரமடைந்து, இந்த வெள்ளை அரசாங்கத்துக்கும், அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் போலீசாருக்கும் ஏதாவதொரு வகையில் பாடம் கற்பிக்க வேண்டுமென்று மனதில் உறுதி பூண்டார். அதை உடனே செயல் படுத்தவும் துணிந்தார். போராடவும், கோஷம் போட்டு போலீசாரின் தடியடிக்கு ஆளாகி சிறைக்குச் செல்லும் நூற்றுக் கணக்கான தொண்டர்களின் தியாகம் இவரையும் போராடத் தூண்டியது. இவர் ஓர் சபதம் மேற்கொண்டார். தனது தொழிலை போலீசாருக்கோ, அடக்குமுறைக்கு துணை போகும் அரசாங்க அதிகாரிகளுக்கோ செய்வதில்லை, அதாவது அவர்களுக்கு சவரம் செய்வதில்லை என்று உறுதி பூண்டார். அதை மிகக் கட்டுப்பாட்டோடு கடைபிடிக்கவும் செய்தார். அது போராட்ட காலமல்லவா? வெளியூரிலிருந்து பல போலீஸ்காரர்கள் பணியின் நிமித்தம் அவ்வூருக்கு வந்திருந்தனர். அப்படி முகம் தெரியாத ஒரு புதிய போலீஸ்காரர் சாதாரண உடையில் வந்து வைரப்பனிடம் முகச் சவரம் செய்து கொள்ள விரும்பினார். வைரப்பனும் அவரைப் பலகையில் உட்கார வைத்து முகத்தில் நீர் தடவி, சோப்பின் நுரை போட்டு கத்தியைத் தீட்டி பாதி சவரம் செய்து கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து வைரப்பனுக்குத் தெரிந்த ஒரு நபர் அங்கு வந்தார். அவர் சும்மாயிராமல், “என்ன வைரப்பா! போலீஸ்காரங்களுக்கு சவரம் செய்ய மாட்டேன்னு சத்தியம் பண்ணியிருந்தியே! இப்போ என்ன ஆச்சு? போலீஸ்காரர் ஒருவருக்கு சவரம் செய்து கொண்டிருக்கியே!” என்று கேட்டு விட்டார். வைரப்பனுக்கு அதிர்ச்சி. உடனே எழுந்து கொண்டார். “ஐயா! நான் உங்களுக்கு முகச் சவரம் செய்ய முடியாது. நீங்கள் வேறு இடம் பாருங்கள்” என்று சொல்லிவிட்டார். பாதி முகச் சவரம் செய்துகொண்ட நிலையில் முகத்தில் சோப் நுரையுடன் நிற்கும் அந்த போலீஸ்காரர் கெஞ்சிப் பார்த்தார். வைரப்பன் அசைந்து கொடுக்கவில்லை. தன் போலீஸ் தோரணையில் மிரட்டிப் பார்த்தார். அதற்கும் வைரப்பன் அஞ்சவில்லை. “என்னால் செய்ய முடியாது, நீங்கள் என்ன வேணுமானாலும் செய்து கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டார். ஆத்திரமடைந்த போலீஸ்காரர் வைரப்பனை கைப்பிடியாக அழைத்துக் கொண்டு போய் அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி “தம்பி! ஒழுங்காக அந்த போலீஸ்காரருக்கு மீதி சவரத்தையும் செய்துவிடு! இல்லாவிட்டால் தண்டிக்கப் படுவாய்” என்றார். வைரப்பனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. தான் மேற்கொண்ட விரதம் சந்திக்கு வந்து விட்டது. இது எல்லோருக்கும் தெரிந்து விட்டது என்பது ஒரு புறம். மற்றொரு புறம் தனது எஜமான் வேதரத்தினம் பிள்ளையவர்கள் “வைரப்பா! நீயெல்லாம் போராட்டத்தில் கலந்து கொண்டால், உன்னைப் பிடித்து ஜெயிலில் போட்டு விடுவார்கள். அப்புறம் உன்னை நம்பியிருப்பவர்கள் திண்டாடுவார்கள், நீ வெளியே இருந்து கொண்டு உன்னால் முடிந்த ஆதரவைக் கொடுத்துக் கொண்டிரு” என்று சொல்லியிருந்தாரே, இப்போது தானும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு நீதிபதியின் முன்பு நிற்கிறோமே என்று மகிழ்ச்சி. நீதிபதியைப் பார்த்து வைரப்பன் சொன்னார், “ஐயா! எஜமானே! போலீஸ்காரருக்கு மிச்சம் சவரத்தை நம்மாலே செய்ய முடியாதுங்க! அப்படி செய்துதான் ஆகணும்னா, ஐயாவே செய்து விட்டுடுங்க!” என்று சொல்லிக் கொண்டே தனது சவரச் சாதனங்கள் கொண்ட தகரப் பெட்டியை நீதிபதியின் மேஜை மீது வைத்து விட்டார். கோர்ட்டே கொல்லென்று சிரித்தது. நீதிபதிக்கு வந்ததே கோபம். வைரப்பனுக்கு ஆறுமாத சிறை தண்டனை விதித்து தீர்ப்புக் கூறிவிட்டார். வைரப்பனுக்கு ஏக மகிழ்ச்சி. தானும் போராடி ஜெயிலுக்குப் போகப் போகிறோம். நம் தலைவர் பிள்ளை அவர்களை அவமானப் படுத்திய இந்த போலீஸ்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நல்லதொரு பாடம் புகட்டி விட்டோம் என்ற மகிழ்ச்சி. அவர் அப்போது இளைஞர்தான், பிறகு சிறை வாசம் முடித்து வெளியே வந்து தியாகி வைரப்பன் என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டு நீண்ட காலம் உயிரோடு இருந்தார். அவர் வாழ்நாள் முழுவதும் அவரிடம் இந்த நிகழ்ச்சி பற்றி கேட்டு விட்டால் போதும். அவர் உற்சாகம் கரைபுரண்டு ஓட அதை வர்ணிப்பார். தானும் தன் தலைவரைப் போல ஜெயிலுக்குப் போய் தியாகியாகி விட்டதைச் சொல்லிச் சொல்லி மகிழ்ச்சியடைந்தார். ஸ்ரீ இராமபிரானுடைய அணை கட்டும் பணியில் உதவியதாகச் சொல்லப்படும் அணில் போல தானும் இந்த நாட்டு விடுதலைப் போரில் தன் பங்கைச் செலுத்திவிட்ட மகிழ்ச்சி அவருக்கு. அவருடைய நூற்றாண்டு விழா சமீபத்தில் வேதாரண்யத்தில் நடைபெற்றது. அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையில் வேதாரண்யத்தில் அவருக்கு ஓர் நினைவுத் தூண் நிறுவப்பட்டிருக்கிறது. வாழ்க தியாகி வைரப்பன் புகழ்! 27 கோவை தியாகி கே.வி.இராமசாமி இந்திய சுதந்திரப் போரில், சுதேசி இயக்கத்தைத் தொடங்கி வைத்து அன்னிய துணிகளை பகிஷ்கரிக்கவும், தூய கதராடைகளையே அணிய வேண்டுமென்று மகாத்மா காந்தியடிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று தானும் தன் குடும்பத்தார் அனைவரும் கதராடை அணியவும், காந்திய பொருளாதாரத்தின் ஆணிவேராகத் திகழ்ந்த மதுவிலக்கு, கதராடை அணிதல் போன்றவற்றில் உறுதியாக இருந்தவருமான தியாகி கே.வி.இராமசாமி அவர்களைப் பற்றி இந்த மாதம் பார்ப்போம். கோவை மாவட்டத்தில் கோவைக்குக் கிழக்கே விவசாயத்தையே பெரிதும் நம்பியிருக்கும் கண்ணம்பாளையம் இவரது ஊர். இவரது தகப்பனார் வெங்கடராய கவுண்டர். இவர் மகாத்மாவின் வழிகளைப் பின்பற்றி நடந்து தனது மகனும் மற்றவர்களும் காந்திய நெறியில் நடக்கக் காரணமாக இருந்தவர். இவர் ஒரு விவசாயி. உணவு தானியங்களை உற்பத்தி செய்வதோடு தனது கடமை தீர்ந்ததாக இவர் நினைக்கவில்லை. மக்களின் வயிற்றுப் பசியைத் தீர்க்கும் அரிய தர்ம காரியங்களையும் மேற்கொண்டிருந்தார். வெங்கடராய கவுண்டரின் மூத்தமகன் கே.வி.இராமசாமி. இவர் வெள்ளை கதராடை, தலையில் காந்தி குல்லாய் இவற்றோடு கிராமங்கள் தோறும் தனது சைக்கிளில் சென்று காந்திஜியின் போதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறியும், குடியின் கேடுகளை விளக்கிப் பேசியும், நாடு விடுதலையடைய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துவதோடு, ஒரு பள்ளிக்கூடத்தையும் தொடங்கி அதன் மூலம் சுதந்திர தாகத்தை வளர்த்தார். இவருக்கு உறுதுணையாக இவரது தம்பி கே.வி.தாண்டவசாமி கவுண்டரும் ஒத்துழைத்து வந்தார். 1930ஆம் வருஷத்தில் இவரது குடும்பம் முழுவதுமே மகாத்மா காந்தியடிகளின் போராட்ட திட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டு, மிருகத்தனமாகத் தாக்கப்பட்டனர். இதில் தந்தை வெங்கடராய கவுண்டர், மகன் கே.வி.ராமசாமி, தாண்டவசாமி, ஆகியோரோடு விசுவாமித்திரன், செல்லப்ப கவுண்டர், படைக்கலம் வீடு சுப்பண்ண கவுண்டர், தொட்டிக்கட்டு வீடு கந்தப்ப கவுண்டர் ஆகியோரும் பங்கேற்றனர். 1937இல் சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்தல் வந்தது. காங்கிரஸ் கட்சிக்கு மஞ்சள் நிறப் பெட்டிதான் அடையாளம். இப்போது போல அப்போது சின்னங்கள் வழங்கப்படவில்லை. அந்தத் தேர்தலில் இவரது குடும்பம் முழுவதும் கிராமம் கிராமமாக நடையாய் நடந்து, மூவண்ணக் கொடியேந்தி காங்கிரஸ் பிரசாரம் செய்தனர். இவர்கள் உழைப்பு வீண்போகவில்லை. காங்கிரசின் மஞ்சள் பெட்டி வெற்றி வாகை சூடியது. 1938இல் திரிபுராவில் நடந்த காங்கிரசுக்கு இவர் தன் நண்பர் இம்மானுவேலுடன் சைக்கிளிலேயே புறப்பட்டார். அந்த காங்கிரசின் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். 1939இல் இரண்டாம் உலகப் போர் மூண்டது. போருக்கு எதிராக காங்கிரசார் பிரச்சாரம் செய்தனர். மாகாணங்களில் இருந்த காங்கிரஸ் மந்திரி சபைகள் ராஜிநாமா செய்தன. சென்னை மாகாண ராஜாஜி தலைமையிலான அரசும் ராஜிநாமா செய்தது. அரசை எதிர்த்து நடந்த தனிநபர் சத்தியாக்கிரகத்துக்கு கே.வி.ராமசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். சூலூரில் நடந்த மறியலில் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1942இல் பம்பாய் காங்கிரசில் “வெள்ளையனே வெளியேறு” எனும் தீர்மானம் நிறைவேறியது. உடனே தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நாடு முழுவதும் புரட்சி வெடித்தது. கோவையில் தேசபக்தர்கள் ஒன்றுகூடி திட்டம் வகுத்தனர். கோவை பீளமேடு ராதாகிருஷ்ணா மில்லைத் தகர்த்து மத்திய சிறையில் இருந்த தொழிலாளர் தலைவர் என்.ஜி.ராமசாமியையும் மற்றவர்களையும் விடுதலை செய்வது என்று தீர்மானித்தனர். பைக்காரா மின் நிலையத்தை அழிப்பது என்றும் தீர்மானித்தனர். சூலூர் விமான நிலையம் தாக்கி தீவைக்கப்பட்டது. சிலர் பிடிபட்டனர். கே.வி.ராமசாமியின் தகப்பனார் வெங்கட்டராய கவுண்டர் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். 1942 ஆகஸ்ட் 26ஆம் தேதி தலைமறைவான கே.வி.ராமசாமி நான்கு ஆண்டு காலம் தன் தலை மறைவு வாழ்க்கையில் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டார். இவரைப் பிடித்துக் கொடுப்பவருக்கு ரூ.500 பரிசு தருவதாக அரசாங்கம் அறிவிப்பு செய்திருந்தது. என்ன ஆச்சரியம்! இந்தப் பணியில் ஈடுபட எவரும் முன்வரவில்லை. துரோகிகளாக மாற எவரும் தயாராக இல்லை. 1946இல் இடைக்கால அரசு அமைந்த பிறகு இவர்கள் மீதிருந்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. கே.வி.ராமசாமியும் சுதந்திரமாக வெளியே வந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுதான் தான் திருமணம் செய்து கொள்வது என்று விரதம் இருந்த கே.வி.ஆர். அங்ஙனமே சுதந்திர இந்தியாவில் திருமணம் செய்து கொண்டார். இந்த வீரத் திலகம், தியாகி கே.வி.ராமசாமி 1965ஆம் ஆண்டில் இறைவனடி சேர்ந்தார். வாழ்க தியாகி கே.வி.ராமசாமி புகழ்! 28 தொழிலாளர் தலைவர் செங்காளியப்பன் தொழிலாளர் பற்றி கவிமணி உழுது பயிர் செய்வோன் – வயிற்றுக்கு உணவு பற்றாமல், அழுதழுது நிதம் – நிற்பதறியீரோ! ஐயா! கோடி கோடியாக – நீங்கள் குவித்திடும் லாபம் வாடும் எம்மக்கள் – உண்ணா வயிற்றுச் சோறலவோ? மனம் திரியாமல் – காலை மாலை எப்பொழுதும் குனிந்து வேலை செய்வோர் – கும்பி கொதிக்கலாமோ? ஐயா! வாழ வேண்டுமெனில் – தொழில்கள் வளர வேண்டுமையா! ஏழை என்றொருவன் – உலகில் இருக்க லாகாதையா! பல்லடம் அருகே மல்லகவுண்டன்பாளையம் எனும் சிற்றூரில் ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் ராம கவுண்டர் பழனியம்மாள் தம்பதியருக்கு 1926ஆம் ஆண்டில் பிறந்தவர் செங்காளியப்பன். கோவையில் ஒரு பஞ்சாலையில் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவக்கினார். காலப் போக்கில் மகாத்மா காந்தியடிகளின் வழிகளைப் பின்பற்றி தேச சுதந்திரப் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1942 ஆகஸ்ட்டில் இந்தியா முழுவதும் பற்றி எரிந்த “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் இவர் பங்கெடுத்துக் கொண்ட போது இவருக்கு வயது 16. சூலூர் விமான தளம் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு 1943 மே மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு, இவர் ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார். அலிப்பூர் சிறையில் அடைபட்டிருந்த காலத்தில் இவருக்கு வயிற்றுக் கடுப்பு நோய் ஏற்பட்டு உயிருக்குப் போராடினார். கிட்டத்தட்ட உயிர் பிரிந்து விட்டது என்று சொல்லும் அளவில் இவர் எலும்பும் தோலுமாக அலிப்பூர் சிறையில் வயிற்றுக் கடுப்பு நோய் பிரிவில் துணியால் மூடப்பட்டு கிடத்தப்பட்டிருந்தார். அந்தச் சிறையில் அடைபட்டிருந்த எல்லா கைதிகளும், தங்கள் உணவை மறந்து, இந்த ஒரு உயிருக்காகப் பிரார்த்தனை செய்துகொண்டதின் விளைவு அன்றிரவு வேகு நேரத்துக்குப் பின் அவர் அபாய கட்டத்தைத் தாண்டினார். சிறையிலிருந்து வெளியே வந்த செங்காளியப்பன் தொடர்ந்து தேச விடுதலைக்காகப் பாடுபடத் தொடங்கினார். தொழிலாளர் நலனுக்காக அவர்கள் உரிமைக்காக, வாழ்வாதாரத்துக்காக போராடும் பணியோடு, நாட்டின் விடுதலையையும் அவர் மற்றொரு கண்ணாக எண்ணி பாடுபட்டார். வெள்ளை வெளேர் என்ற கதராடை, அரைக்கை சட்டை, நெற்றியில் வெள்ளை திருநீறு, சிரித்த முகம், அமைதியான பண்பு இவற்றோடு இவர் வலம் வந்து தொழிலாளர்களின் நெஞ்சங்களில் குடிபுகுந்தார். இவரை அனைவருமே “தொழிலாளர் தோழர்” என்றே அழைத்தனர். தியாகசீலர்களின் உழைப்பாலும், அவர்களது வியர்வையாலும், தியாகத்தாலும், ரத்தத்தாலும் 1947 ஆகஸ்ட் 15இல் நாடு சுதந்திரம் பெற்றது. என்றாலும் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர இவரது பணி தொடர்ந்து நடந்தது. 1962இல் நடந்த பொதுத் தேர்தலில் இவர் பல்லடம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். கோவை பகுதி தொழிலாளர்களின் கண்கண்ட தெய்வமாகத் திகழ்ந்த என்.ஜி.ராமசாமி அவர்களின் ஆன்மா இவரை ஆசி வழங்கி வாழ்த்தியிருக்கும். இவருடைய பெரு முயற்சியால் தியாகி என்.ஜி.ராமசாமிக்கு சிங்காநல்லூரில் ஒரு சிலை நிறுவப்பட்டது. இவரது சட்டசபைப் பணிகளின்போது தொழிலாளர்கள் நலத்துக்காக இவர் பங்கேற்ற விவாதங்களும், இவரது முயற்சியால் கொண்டுவரப்பட்ட தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களும் ஏராளம். வாழ்க தொழிலாளர் தோழர் செங்காளியப்பன் புகழ்! 29 கு. ராஜவேலு இந்திய சுதந்திரப் போரில் பங்கேற்ற தமிழ் அறிஞர் மற்றும் எழுத்தாளர்களுள் கு.ராஜவேலு ஒருவர். இவர் தனது சிறைவாசத்தை புதிய நூல்கள் இலக்கியங்களைப் படைக்கப் பயன்படுத்திக் கொண்டவர். 1942இல் மகாத்மா காந்தி அறைகூவல் விடுத்த “வெள்ளையனே வெளியேறு!” எனும் Quit India இயக்கத்தில் தனது மாணவப் பருவத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். இந்த வரலாற்றை இவர் தனது “ஆகஸ்ட் 1942″ எனும் புதினத்தில் விரிவாக எழுதியிருக்கிறார். பதினொன்று ஆண்டுகால முழுநேர அரசியல் வாழ்க்கையில் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் பங்குபெற்று சிறைபுகுந்த மாணவப் பருவ போராட்டத்தைச் சிறிது பார்ப்போம். ஈரோடு நகரத்தைச் சேர்ந்த இந்த தேசபக்த இளைஞர் 1942இல் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு நகரத்தில் இருந்த அரசர் கல்லூரியில் தமிழ் படித்து வந்தார். அப்போதுதான் ஆகஸ்ட் 7, 8 தேதிகளில் பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மகாத்மா காந்தி “வெள்ளையனே வெளியேறு” எனும் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அன்றே மகாத்மாவும் மற்ற காங்கிரஸ் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர், காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்டது. வெளியில் பெயர் சொல்லக் கூடிய அளவில் எந்த தலைவரையும் ஆன்கில ஆட்சியாளர்கள் விட்டு வைக்கவில்லை. இந்த நிலையில் திருவையாறு அரசர் கல்லூரி மாணவர்கள் கூடி தலைவர்கள் கைதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தனர். அவர்கள் போராட்டம் நடத்திய பந்தல் தீக்கு இறையாகியது. ஆகஸ்ட் 13ஆம் தேதி திருவையாற்றில் கடையடைப்புப் போராட்டம் நடந்தது. அரசர் கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு கடைத் தெருவில் கூடினர். ஆந்திராவைச் சேர்ந்த சமஸ்கிருதம் படிக்கும் மாணவர் எஸ்.ஆர்.சோமசேகர சர்மா, பிற்காலத்தில் கவிஞர் எஸ்.டி.சுந்தரம் என அழைக்கப்பட்டவரும் நமது கு.ராஜவேலு உள்ளிட்ட தீவிரமான தேசபக்தர்கள் இந்தக் கூட்டத்தில் இருந்தனர். அன்றைய மாணவர்கள் குறிப்பாக திருவையாறு கல்லூரியில் இருந்த மாணவர்கள் அனைவருமே தேசிய சிந்தனை உடையவர்களாக இருந்ததோடு, அவர்களை சோமசேகர சர்மா எனும் தீவிரமான தேசபக்தரும், கு.ராஜவேலும் வழிநடத்தி வந்தனர். இவர்கள் கடைகளை அடைக்கும்படி கேட்டுக் கொண்டனர். அப்போது ஆட்கொண்டார் சந்நிதி எனப்படும் கடைத்தெரு பகுதியில் போலீஸ் இவர்களைக் கலைந்து போகும்படி கூறியது. அதற்குள் மாணவர்களோடு பொதுமக்களும் நூற்றுக் கணக்கில் கூடி விட்டனர். கடைத்தெருவின் கீழ்புறத்திலிருந்து மாணவர்களும், மேல்புறத்திலிருந்து பெரும் கூட்டமாக பொதுமக்களும் வந்து சேர்ந்ததனால் கடைத்தெரு கொள்ளாமல் மக்கள் கூட்டம். ஆத்திரம் கொண்ட போலீஸ் தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியது. உடனே கூட்டத்திலிருந்து கலைந்து சென்றவர்கள் ஒருபுறம் தபால் அலுவலகத்தைத் தீயிட்டுக் கொளுத்தி, பொருட்களை நொறுக்கிவிட்டனர். மறுபுறம் மற்றொரு கூட்டம் காவிரி ஆற்றைக் கடந்து தஞ்சாவூர் சாலையில் இருந்த முன்சீப் கோர்ட் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்தைச் சூறையாடியது. தஞ்சாவூரிலிருந்து மலபார் போலீசார் கலவரத்தை அடக்க வந்து சேர்ந்தனர். அப்போது முன்சீப் கோர்ட் உள்ளே இருந்த கு.ராஜவேலு காவிரியின் வெள்ளத்தில் குதித்து நீரோட்டத்தோடு நீந்திச் சென்று திருப்பழனம் எனும் ஊரில் கறை ஏறி, பிறகு அவருடன் படித்துக் கொண்டிருந்த அவ்வூர் மாணவனின் உதவியுடன் திருவையாறு வந்தார். அன்று மாலையே இவரும் மற்றும் 42 பேரும் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் கோர்ட்டில் நடந்த வழக்கில் இவரும் மற்ற 42 பேரும் 1943இல் தண்டிக்கப்பட்டனர். கு.ராஜவேலு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார். இவருடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த கவிஞர் எஸ்.டி.சுந்தரம் (அவரும் அப்போது அந்தக் கல்லூரி மாணவர்) பதினெட்டு வயது ஆகாதவர் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்து இவர் விடுதலையான நேரத்தில் தொடுவானில் சுதந்திர வெளிச்சம் தோன்றலானதை யொட்டி, இவர் சென்னை சென்று தனது படிப்பைத் தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் எம்.ஏ. பட்டம் பெற்றார். தேசிய உணர்வும், தியாக பின்னணியும் கொண்ட இவரை அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜ் அடையாளம் கண்டு, இந்த இளைஞரின் வாழ்வு முன்னேறவேண்டும் என்று விரும்பினார். இவர் கல்வி இலாகாவில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு இவர் கல்வி இலாகாவில் சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைக்குச் சேர்ந்து, ராஜதானி கல்லூரி முதலான இடங்களில் பணியாற்றி, பற்பல நூல்களையில் எழுதினார். ஓய்வுக்குப் பிறகும் தனது எழுத்துப் பணியில் ஈடுபட்டு வயது தொண்ணூறை எட்டும் இவர் இப்போது சென்னையில் அஷோக்நகரில் வாழ்ந்து வருகிறார். இவரது திருவையாற்று அனுபவத்தைக் கேட்டால் இவர் இப்போதும் மனம் உருகிப் பேசுகிறார். இவரோடு சிறைசென்ற பல தியாகிகள் இன்னமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் தஞ்சை ஸ்ரீநிவாசபுரத்தில் தியாகி கோவிந்தராஜு, திருவிடைமருதூரில் சண்முகம், மதுரையில் இராம சதாசிவம் போன்றோர் பழைய நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தில்லைஸ்தானத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மாணிக்கம் பிள்ளை சில மாதங்களுக்கு முன்புதான் அமரர் ஆனார். இவர்களுக்கு உடற்பயிற்சியும் கஸரத் போன்றவற்றைக் கற்பிக்க ஓர் உடற்பயிற்சி மையத்தை குஞ்சுப் பிள்ளை என்பவர் நடத்தி வந்தார். இவர்தான் திருவையாற்று தேசபக்தர்களுக்கெல்லாம் வழிகாட்டி, குரு எல்லாம். இவர்தான் 13-8-1942இல் நடந்த புரட்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர். இவர் அமரராகிவிட்டார். இப்படிப்பட்ட தியாகிகளையெல்லாம் உருவாக்கிய திருவையாற்று மண்ணை வணங்குவோம். வாழ்க கு.ராஜவேலு! அவர் இன்னும் பல ஆண்டுகள் பயனுள்ள வாழ்க்கை வாழ இறைவனை வேண்டுவோம். 30 சீர்காழி சுப்பராயன் 1942இல் நடைபெற்ற “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த ஒருசில நிகழ்ச்சிகளில் சீர்காழி உப்பனாற்று பாலத்துக்கு வெடி வைத்த சதி வழக்கு முக்கியமானது. இந்தப் போராட்டம் முழுவதும் வெற்றி பெறவில்லையாயினும், இதில் ஈடுபட்ட சுதந்திரப் போர் வீரர்களை பிரிட்டிஷ் அரசு மிகக் கடுமையாக தண்டித்தது. இதில் குற்றவாளிகளாக அப்போது பிரபலமாக இருந்த பலர் சேர்க்கப்பட்டார்கள். அவர்களில் முதன்மையானவர் சீர்காழி ரகுபதி ஐயரின் குமாரர் சுப்பராயன் என்பவராவார். மற்ற பிரபலங்கள் குறிப்பாக தினமணி நாளிதழில் பணியாற்றி வந்த ஏ.என்.சிவராமன், ராமரத்தினம், டி.வி.கணேசன், கும்பகோணம் நகர காங்கிரஸ் தலைவர் பந்துலு ஐயரின் குமாரர் சேஷு ஐயர் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தனர். சுப்பராயனின் தந்தையார் குன்னம் ரகுபதி ஐயர் நூற்றுக்கணக்கான வேலி நிலத்துக்குச் சொந்தக்காரர். ஐந்தாறு கிராமங்கள் இவர் குடும்பத்துக்குச் சொந்தமாக இருந்தது. இவர் தயாள குணமும், தன்னை அண்டியவர்களை அரவணைத்து ஆதரிக்கும் பண்பு பெற்றவர். தான் பெரிய நிலப்பிரபு என்பதற்காக மற்றவர்களை எளிதாக எண்ணக்கூடியவர் அல்ல. இவர் வீட்டுக் கதவு விருந்தாளிகளுக்கு உணவு படைக்க எப்போதும் திறந்தே வைக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட குடும்பத்தில் தோன்றிய சுப்பராயன் தங்கத் தட்டில் வெள்ளி ஸ்பூன் கொண்டு சாப்பிடும் வசதி படைத்தவர். இவர் குடும்பத்தோடு சம்பந்தம் செய்து கொண்டவர்கள் மிகப் பெரிய தொழிலதிபர்கள், தலை சிறந்த உத்தியோகஸ்தர்கள். அப்படிப்பட்ட தயாள குணமும், இரக்க குணமும் கொண்ட ரகுபதி ஐயரின் குமாரன் சுப்பராயன் தேசபக்தி காரணமாக ஐந்து ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று, வெளியே வர வாய்ப்பிருந்தும், பிடிவாதமாக சிறைவாசத்தை முடித்தே வெளிவருவேன் என்று நாட்டுக்காகத் தன்னை வருத்திக் கொண்ட மாபெரும் தியாகி. இன்று மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டாவது வெளியே வரத்துடிக்கும் அரசியல் வாதிகளோடு இத்தகைய தியாக உள்ளம் கொண்டு சுப்பராயனை என்னவென்று சொல்லுவது? 1942இல் பம்பாய் காங்கிரஸ் மாநாடு முடிந்த அன்றே மகாத்மா காந்தி அடிகள் முதலான அனைத்துக் காங்கிரஸ் தலைவர்களும் சிறை பிடிக்கப்பட்டு பாதுகாப்புக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர். நாடு முழுவதும் புரட்சித் தீ பற்றிக் கொண்டது. காங்கிரஸ் கட்சி தடைசெய்யப்பட்டது. நாட்டின் பலபாகங்களிலும் வன்முறையும், தீ வைத்தல், தந்தி கம்பி அறுத்தல் போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றில் கலவரமும், தீ வைப்பும் நடந்தது. அதனைத் தொடர்ந்து இந்த மாவட்ட தேசபக்தர்கள் சிலர் ஒன்றுகூடி, பிரிட்டிஷ் அரசாங்கம் போராட்டத்தின் கடுமையை உணரும் வண்ணம் சென்னை மாயவரம் இடையே ரயில் தண்டவாளத்தைப் பெயர்த்து அல்லது வெடி வைத்துத் தகர்க்க முடிவு செய்தனர். அதை செயல்படுத்துவதற்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் ராம்நாத் கோயங்கா ஒரிசா ஆந்திரா எல்லையிலுள்ள சுரங்கத்திலிருந்து வெடிமருந்து குச்சிகளை வாங்கி வந்தார். பல மாவட்டங்களுக்கும் இந்த வெடிப் பொருட்கள் ராமரத்தினம் மூலம் அனுப்பப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்துக்கான வெடிகள் கும்பகோணம் பந்துலு ஐயரின் புதல்வரும், தினமணி உதவி ஆசிரியருமான டி.வி.கணேசன், அவரது சகோதரர் சேஷு ஐயர் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு சொந்த ஊர் பாபநாசம் அருகிலுள்ள திருக்கருகாவூர். இந்தப் பகுதியில் எங்கு வன்முறை நடந்தாலும் அது டி.வி.கணேசன் மீதுதான் விழும் என்பதால் இவர்கள் மாயவரம் அருகே ரயில் பாதையில் வெடி வைத்துத் தகர்க்க சீர்காழி உப்பனாறு பாலம்தான் சரியான இடம் என்று முடிவு செய்து, அந்தப் பகுதியில் இளமையும், ஆர்வமும், தேசபக்தியும் உள்ள சீர்காழியைச் சேர்ந்த சுப்பராயனைப் பார்த்துப் பேசினர். அவரும் தன் நண்பர்களுடன் இந்தக் காரியத்தை முடிப்பதாகச் சொல்லி வெடிகளை வாங்கிக் கொண்டார். சுப்பராயனும் அவரது நண்பர்களும் சீர்காழி ரயில் நிலையம் அருகேயுள்ள உப்பனாறு பாலத்தில் வெடி வைக்க எல்லா வேலைகளையும் செய்யலாயினர். பாலத்துக்கு அடியில் துளை போட்டு, வெடிகளை அதில் பொருத்தி, திரி தண்ணீரில் படாமல் கம்பி வைத்துக் கட்டி, தீ வைத்துவிட்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்து மறைந்து கொண்டனர். அப்போது அந்த வழியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் பார்ட்டியின் கண்களில் எரியும் திரி பட்டுவிட்டது. உடனே அவர்கள் அதை தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டு மேலதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து விட்டனர். போலீஸ் விசாரணையில் இந்தக் காரியத்தைச் செய்யக்கூடியவர் சுப்பராயனாகத்தான் இருக்க முடியும் என்று அவரைப் பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர் நண்பர்களும் கைதாயினர். பிறகு தினமணி சிவராமன், ராமரத்தினம், சேஷு ஐயர், டி.வி.கணேசன் ஆகியோர் கைதாகினர். வழக்கு நடந்தது. இந்திய பாதுகாப்புச் சட்டப்படி இவர்கள் அனைவரும் விசேஷ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர். முதலில் சேஷு ஐயர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். முடிவில் கிருஷ்ணமூர்த்தி என்பவரும் டி.வி.கணேசனும் விடுவிக்கப்பட்டனர். தினமணி ராமரத்தினத்துக்கு ஏழு ஆண்டுகளும், சீர்காழி சுப்பராயனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், மற்றும் பலருக்கு வெவ்வேறு தண்டனைகளுக் அளிக்கப்பட்டது. சுப்பராயன் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். சுப்பராயன் செல்வந்தர் வீட்டுப் பிள்ளையாதலால், இவரது தந்தை மகனை எப்படியாவது வெளியில் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் சுப்பராயன் அப்படிப்பட்ட எந்த முயற்சிக்கும் இடமளிக்கவில்லை. சிறை தண்டனையை அனுபவிப்பேன் என்று உறுதியோடு இருந்தார். பின்னர் ஆந்திர கேசரி டி.பிரகாசம் சென்னை மாகாண பிரதமராக பதவி ஏற்று பொது விடுதலை செய்தபோது பல ஆண்டுகள் சிறை வாசத்துக்குப் பிறகு சுப்பராயன் விடுதலையானார். விடுதலையான பிறகு திருச்சிக்குச் சென்று அங்கு சிம்கோ மீட்டர்ஸ் எனும் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி, பெரும் தொழிலதிபரானார். தானொரு நிலப்பிரபு என்பதோ அல்லது பெரும் தொழிலதிபர் என்பதோ இவரது நடத்தையில் தெரிந்து கொள்ள முடியாது. மிகச் சாதாரண முரட்டுக் கதர் கட்டும் இவர், எவ்வளவு எளியவரானாலும், பழைய நண்பர்களை, உறவினர்களை, தியாகிகளை நேரில் கண்டுவிட்டால் அவர்களோடு பேசி, சாப்பிட ஏதாவது வாங்கிக் கொடுத்து, தான் ஒரு பெரிய மனிதர்தான் என்பதை எப்போதும் நிரூபித்து வந்திருக்கிறார். எந்த வசதியும் இல்லாதவர்கள்கூட பதவிக்கு ஆலாய் பறப்பதும், பதவி கிடைத்ததும் பழைய நிலைமையை மறப்பதும், தலை கனம் கொண்டு அலைவதும் சகஜமாக உள்ள இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு தியாகியா? ஆம். சீர்காழி சுப்பராயனைப் பாருங்கள். அவர்தான் ஓர் உதாரண புருஷர். வாழ்க தியாகி சுப்பராயன் புகழ்! 31 திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம் 1919இல் பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஜாலியன்வாலாபாக் எனும் இடத்தில் ஜெனரல் டயர் என்பவன் இரக்கமில்லாமல், ஆண், பெண் குழந்தைகள் ஆயிரக்கணக்கானோரை பீரங்கி வைத்துச் சுட்டுக் கொன்றது இந்திய சுதந்திர வரலாற்றில் ஆங்கிலேயரின் கறை படிந்த வரலாற்று நிகழ்ச்சி. உலகம் முழுவதும் இந்த அரக்கத்தனமான செயல் கண்டனத்துக்கு உள்ளானது. மனித இனமே வருந்தி தலைகுனிந்த போது ஜெனரல் டயர் மட்டும் பெருமிதத்தோடு சொன்னான், குண்டுகள் தீர்ந்துவிட்டன, இல்லாவிட்டால் இன்னமும் பல உயிர்களைப் பறித்திருப்பேன் என்று. என்ன ஆணவம்? என்ன திமிர்? இந்தச் செயலை இந்திய தேசபக்தர்கள் நாடெங்கணும் கூட்டங்கள் கூட்டி மக்களிடம் சொல்லி, ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக மக்கள் உணர்வுகளைத் திரும்பச் செய்து கொண்டிருந்தனர். அப்படிப்பட்டதொரு கூட்டம் 1920இல் திருமங்கலத்தில் நடந்தது. கூட்டத்தில் பேசியவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவரும், சென்னை சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக இருந்தவருமான கிருஷ்ணசாமி சர்மா என்பவராவர். இவர் இதற்கு முன்பும் வ.உ.சி. கைதானதை எதிர்த்து கரூரில் பேசிய பேச்சு தேசவிரோதம் என்று சிறையில் அடைக்கப்பட்டவர். மாபெரும் தியாகி. தமிழக மக்களால் மறக்கப்படக்கூடாதவர் ஆனால் மறக்கப்பட்டவர். இப்படிப்பட்ட தேசபக்தரின் வீராவேசப் பேச்சைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு தனக்கு வயது 16தான் என்பதைக்கூட மறந்து காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து தேசசேவையில் ஈடுபட்டவர் திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம். இவரது தந்தையார் பெயர் சுப்பிரமணிய ஐயர். காங்கிரசில் சேர்ந்ததோடு தனது பணி முடிந்துவிட்டதாக இவர் கருதவில்லை. ஊர் ஊராகச் சுற்றத் தொடங்கினார். மக்களிடம் ஆவேசமாகப் பேசி அவர்கள் உள்ளங் களிலெல்லாம் தேசபக்தி விதையைத் தூவினார். மதுரை மாவட்டத்தில் குறிப்பாக திருமங்கலம் தாலுகாவில் இவரால் தயார் செய்யப்பட்ட வீர இளைஞர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இவர் தேச சேவையில் ஈடுபட்ட நாள் முதலாக இந்தப் பகுதியில் எங்கு பார்த்தாலும் பொதுக்கூட்டங்கள், மகாநாடுகள், போராட்ட பிரச்சாரம் என்று இவர் ஈடுபடாத நிகழ்ச்சிகளே இல்லையெனலாம். இவர் வேறு எவரையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கமாட்டார். தானே முன்னிருந்து அனைத்து வேலைகளையும் செய்து முன்னணியில் இருப்பார். ஒரு காரியத்தைத் தொடங்கிவிட்டால் போதும், அது முடியும் வரை கண் துஞ்சார், பசி அறியார், கருமமே கண்ணாயிருப்பார். தலைவர் தீரர் சத்தியமூர்த்திக்கு இவரிடம் அன்பு அதிகம். இந்த இளம் வயதில் இப்படியொரு தேசாவேசமா? இவருக்குத் தகுந்த ஆதரவு கொடுத்தால், இவர் பல அரிய காரியங்களைச் செய்து முடிக்கும் ஆற்றல் மிக்கவர் என்பதனை தலைவர் உணர்ந்தார். தீரர் சத்தியமூர்த்தி இவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் மாநிலக் குழு உறுப்பினராக சேர்த்தார். தொடர்ந்து காங்கிரசுக்குத் தலைமை வகித்த எஸ்.சீனிவாச ஐயங்கார், முத்துரங்க முதலியார், எம்.பக்தவத்ஸலம், காமராஜ் ஆகியோரிடம் இவருக்கு நல்ல தொடர்பும் செல்வாக்கும் இருந்து வந்தது. 1930 இந்திய சுதந்திரப் போரில் ஓர் முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில்தான் மகாத்மா உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கினார். தமிழகத்தில் திருச்சி யிலிருந்து வேதாரண்யம் வரை தலைவர் ராஜாஜி உப்பு சத்தியாக்கிரக தொண்டர் படையை அணிவகுத்து அழைத்துச் சென்றார். அதே சமயம், மாகாணத்தின் தலைநகரத்தில் ஸ்ரீமதி துர்க்காபாய் தலைமையிலும், டி.பிரகாசம் தலைமையிலும் உப்பு சத்தியாக்கிரகம் நடந்தது. அதில் ஆதிகேசவலு நாயக்கர், ம.பொ.சிவஞானம் போன்றோர் கலந்து கொண்டனர். அந்த சென்னை போராட்டத்துக்குப் பல தொண்டர்களைத் தயார் செய்து அனுப்பி வைத்தார் மீனாட்சிசுந்தரம். இந்தத் தொண்டர் படைக்கு இவரே தலைவராக இருந்து வழிகாட்டலானார். இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு ஆறு மாத சிறை தண்டனை பெற்றார். 1931இல் நாடக நடிகராக இருந்து சுதந்திரத்துக்காகப் போராடிக் கொண்டிருந்த தியாகி விஸ்வநாத தாஸ் திருநெல்வேலியில் நடைபெற்ற நாடகத்தில் மக்களை விடுதலைக்குத் தூண்டும் விதமாக தேசபக்திப் பாடலை பாடினார் என்று வழக்குத் தொடர்ந்தார்கள். விஸ்வநாத தாஸ் கைது செய்யப்பட்டார். இவருக்காக வழக்காடும்படி கோயில்பட்டி சென்று வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை மீனாட்சிசுந்தரம் கேட்டுக் கொண்டார். வ.உ.சி.யும் சம்மதித்து வழக்கை எடுத்துக் கொண்டார். 1932இல் சட்ட மறுப்புப் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் தீவிரம் காட்டியதற்காக மீனாட்சிசுந்தரம் கைது செய்யப்பட்டு இரண்டரையாண்டுகள் தண்டனை பெற்றார். இந்த தண்டனையை இவர் திருச்சிச் சிறையில் கழித்தார். 1941ஆம் வருஷத்தில் தனிநபர் சத்தியாக்கிரகம் அறிவிக்கப்பட்டது. அப்போது மூண்டிருந்த இரண்டாம் உலகப் போரில் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் யுத்த எதிர்ப்புப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. அதில் மீனாட்சிசுந்தரம் வேகம் காட்டினார். இதற்காக இவர் கைது செய்யப்பட்டு 4 மாத சிறைதண்டனை பெற்று மதுரை சிறையில் கழித்தார். இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு மத்திய அரசு இவருக்குத் தாமிரப்பட்டயம் கொடுத்து கெளரவித்தது. இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது என்பதற்காக இவர் ஓய்ந்து உட்கார்ந்து விடவில்லை. மாறாக தேச நிர்மாணப் பணிகளில் அதே ஆர்வத்தையும் சுறுசுறுப்பையும் காட்டி உழைத்தார். திருமங்கலத்தில் அமைந்துள்ள மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்துக்கு புனருத்தாரணம் செய்வித்துக் கும்பாபிஷேகமும் செய்து வைத்தார். தேசபக்தி எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு தெய்வ பக்தியும் உடையவர். தன்னை நாட்டுக்காக அர்ப்பணித்துக் கொண்டு விட்ட காரணத்தால் இவர் திருமணம் செய்துகொள்ளாமலே நாட்டுக்காக உழைக்க உறுதிபூண்டுவிட்டார். வாழ்க தியாகி புலி மீனாட்சிசுந்தரம் புகழ்! 32 திண்டுக்கல் மணிபாரதி திண்டுக்கல் நகரம் வரலாற்றுப் புகழ் பெற்றது. தொழில்துறையில் நல்ல வளர்ச்சியடைந்து மதுரைக்கு அடுத்ததாகக் கருதப்படும் பெரிய நகரம். பூட்டு உற்பத்திக்குப் பெயர்பெற்ற ஊர். திண்டுக்கல் பூட்டுதான் உலகப் பிரசித்தமானது. இந்தப் பகுதியில் தலையணை போன்ற தோற்றத்தில் அமைந்த ஓர் குன்றிற்கு தலையணைப் பாறை என்று பெயர். இது நாளடைவில் மருவி ‘திண்டுக்கல்’ என வழங்கப்படுகிறது. இந்தப் பாறை 400 அடி அகலம் 280 அடி உயரமும் கொண்டது. உறுதியான இந்தப் பாறையைப் போலவே இங்கு உறுதியான மனம் படைத்த தேசபக்தர்கள் பலர் தோன்றினார்கள். திண்டுக்கல்லில் அமைந்துள்ள கோட்டை 17ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. 1736இல் ஆற்காடு நவாப் சந்தா சாகேப் திண்டுக்கல்லைக் கைப்பற்றினார். பின்னர் ஆறு ஆண்டுகள் கழித்து மைசூர் படை இந்த ஊரைக் கைப்பற்றியது. 1755இல் ஹைதர் அலி இந்த நகரத்தை ஒரு ராணுவ முகாமாக மாற்றியமைத்தார். அதுமுதல் இந்த ஊர் வரலாற்றில் பல போர்களுக்குக் காரணமாகவும் அமைந்தது. மேலும் திண்டுக்கல்லையடுத்த மலைப் பிரதேசத்தில் விளைந்த சிறுமலைப் பழம் எனும் ஒரு அரிய வகை வாழைப்பழம் மிகவும் பிரசித்தமாக இருந்தது. பழனி ஆலயத்திற்கு பஞ்சாமிர்தம் செய்ய இது பயன்பட்டது. அது தற்போது அரிதாகிவிட்டது. இத்தனை அரிய வரலாற்றுப் பின்னணியுள்ள திண்டுக்கல்லில் தோன்றிய பல தேசபக்தர்களில் மணிபாரதியும் ஒருவர். இவ்வூரிலிருந்து மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்த மணிபாரதி இளவயதிலேயே, பள்ளிப்பருவத்திலேயே தேச விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டு, மகாத்மா காந்தி வகுத்துக் கொடுத்தப் போராட்டப் பாதையில் பயணிக்கத் தொடங்கி விட்டார். வயது ஏற ஏற இவரது போராட்டக் களம் விரிவடைந்து கொண்டே சென்றது. மாணவர் இயக்கத்திலிருந்து இவர் நகர காங்கிரஸ் கமிட்டியில் அங்கம் வகிக்கத் தொடங்கினார். சுற்று வட்டார கிராமங்களுக் கெல்லாம் சென்று அங்கு மக்களுக்கு சுதந்திர தாகத்தை ஊட்டினார். அதற்கேற்ப நல்ல பேச்சுத் திறன் இவருக்கு அமைந்திருந்தது நல்லதாகப் போயிற்று. மக்கள் இவர் பேச்சை ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கினார். வெகுகாலம் “திண்டுக்கல் மணிபாரதி” என்ற பெயர் மேடைப் பேச்ச்சில் திறமையானவர் என்று மக்களுக்குத் தெரிந்திருந்தது. திண்டுக்கல்லை மையமாக வைத்துச் சுற்றுப்புற கிராமங்களில் சுதந்திரப் பிரச்சாரம் செய்து வந்த இவர், நாளடைவில் அப்போதைய தேசிய வாதிகளாகவும், பின்னர் பொதுவுடமை கட்சியினராகவும் இருந்த ப.ஜீவானந்தம், பி.இராமமூர்த்தி, ஏ.கே.கோபாலன் இவர்களோடும், ஆன்மீகமும் தேசியமும் இரு கண்களாக மதித்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர்களுடன் இணைந்து சென்னை மாகாணம் முழுவதும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 1930ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஓர் முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில்தான் மகாத்மா காந்தி நடத்திய தண்டி உப்பு சத்தியாக்கிரகம், தமிழகத்தில் ராஜாஜி நடத்திய வேதாரண்ய உப்பு சத்தியாக்கிரக யாத்திரை, ஒத்துழையாமை இயக்கம் போன்ற பல போராட்டங்கள் நடந்த காலம். இந்த காலகட்டத்தில் திண்டுக்கல் மணிபாரதி சிறைப்பட்டு ஒரு வருடம் கைதியாக இருந்தார். இந்த தண்டனைக் காலம் முடிந்து வெளிவந்த இவர் மீண்டும் 1932இல் ஒத்துழையாமை இயக்கத்தில் கைதாகி சிறை சென்றார். 2 தொழிலாளர்களுக்காகப் போராடத் தொடங்கிய இவர் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசில் இணைந்து பாடுபட்டார். INTUC எனப்படும் தேசிய தொழிலாளர் இயக்கத்தில் அப்போது முனைப்புடன் ஈடுபட்டிருந்த ஜி.ராமானுஜம், ரங்கசாமி, எம்.எஸ்.ராமச்சந்திரன், வேலு போன்றவர்களோடு சேர்ந்துகொண்டு தொழிலாளர்கள் நலனுக்காகப் போராடலானார். 1936இல் சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக முழுமையாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு, ஊர் ஊராக சென்று மேடைகளில் காங்கிரசுக்கு வாக்களிக்க வெண்டினார். இவருடன் தீரர் சத்தியமூர்த்தி, கானக்குயில் கே.பி.சுந்தராம்பாள் ஆகியோரும் மேடைகளில் முழங்கி வந்தனர். இந்தத் தேர்தலில்தான் அப்போது ஆட்சி புரிந்த ஜஸ்டிஸ் கட்சியைத் தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சியமைத்தது, ராஜாஜி ‘பிரதமர்’ (முதல்வர்) ஆனார். 1940இல் பஞ்சாலைத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். செளந்திரா மில் தொழிலாளர் சங்கத்துக்குத் தலைவராக இருந்த மணிபாரதி கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். இவர் விடுதலை யடைந்த நேரம், மகாத்மா காந்தி அறிவித்த “வெள்ளையனே வெளியேறு” எனும் போராட்டம் நாடெங்கும் வெடித்துக் கிளம்பியது. தேசத் தலைவர்கள் அனைவரும் சிறைப்பட்டிருந்த அந்த நேரத்தில், போராட்டத்தைத் தலைமையேற்று நடத்த ஆளில்லாமல், பொதுமக்களும் காங்கிரஸ் தொண்டர்களுமே அவரவருக்குத் தோன்றிய விதத்தில் போராட்டம், அதிலும் வன்முறைப் போராட்டம் நடத்தது தொடங்கியிருந்த நேரம். மணிபாரதி மட்டும் விட்டுவைக்கப்படுவாரா? இவரும் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு கைதியாக சிறை வைக்கப்பட்டார். இவர் வேலூர், கண்ணனூர் ஆகிய இடங்களில் தண்டனை அனுபவித்துவிட்டு வெளிவந்தார். இவருடன் சிறையில் எம்.எஸ்.முனுசாமி, ஏ.ராங்கசாமி ஆகிய தேசபக்தர்களும் இருந்தனர். இவர் தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் சங்கத்தில் நெடுநாட்கள் உறுப்பினராக இருந்து பணியாற்றினார். சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பீரங்கிகளில் ஒருவராக தமிழ்நாட்டின் மேடைகள் தோறும் முழங்கி வந்தார். காமராஜர் முதலான தமிழகத் தலைவர்கள் இவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள். வாழ்க திண்டுக்கல் மணிபாரதி புகழ். 33 பழனி கே.ஆர்.செல்லம் தமிழகத்தில் மிக அதிக வருமானம் தரும் ஆலயம் பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம். இன்று நேற்றல்ல காலங்காலமாய் பழனி மிகப் பிரசித்தி பெற்ற ஊர். பழனி பஞ்சாமிர்தமும், சித்தநாதன் விபூதியும் உபயோகிக்காதவர்கள் அரிது. அப்படிப்பட்ட புண்ணியத் தலத்தில் தோன்றிய ஓர் அரிய தியாகிதான் கே.ஆர்.செல்லம் ஐயர். பழனிக்கு அருகில் கலையம்புதூர் என்றொரு கிராமம். அங்கு கே.எஸ்.இராமநாத ஐயர் தம்பதியருக்கு 1908இல் மகனாகப் பிறந்தவர் கே.ஆர்.செல்லம். இந்த ஆண்டு அவரது நூற்றாண்டு. விழா கொண்டாடுகிறார்களா காங்கிரஸ்காரர்கள்? நமக்குத் தெரியவில்லை. ஆனால் இப்படிப்பட்ட தொண்டர்களை நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்; இல்லையேல் இப்படிப்பட்ட தியாகபுருஷர்கள் இந்த நாட்டில் தோன்ற மாட்டார்கள். இவர் மாணவப் பருவத்திலேயே நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டார். பள்ளிப் படிப்பை முடித்தவுடனேயே இவர் பழனி நகரத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடலானார். அப்போது காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர் மணி செட்டியார் என்பவர். அவரது தலைமையின் கீழ் செல்லம் செயலாளராக இருந்து பணியாற்றினார். இளமைத் துடிப்பும், தேசாவேசமும் இவரை பம்பரமாகச் சுழன்று செயல்பட வைத்தன. ஊர் ஊராக, கிராமம் கிராமமாக இவர் சுற்றி வந்து காங்கிரஸ் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறிவந்தார். காந்திய சிந்தனைகளை மக்கள் மனங்களில் ஊட்டி வந்தார். நூல் நூற்றல், கதர் அணிதல், வெளிநாட்டுத் துணிகளை பகிஷ்கரித்தல் போன்றவற்றில் மக்களின் ஆர்வத்தைத் தூண்டிவிட்டார். தேசபக்தி காரணமாக தேசசேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும், வயிற்றுப் பாட்டுக்காக ஒரு சொந்தத் தொழில் வேண்டாமா? பழனியிலேயே ஒரு உணவகத்தை உருவாக்கினார். இவரது உணவகம் தேசபக்தர்கள் கூடும் படைவீடாக மாறியது. இங்கு வரும் தேசபக்தர்களுக்கு உணவளித்து உபசரித்தார். இவர் ஹோட்டலில் வருவோர் மத்தியில் அந்தக் காலத்திலேயே ஜாதி பாகுபாடோ, வித்தியாசமோ எதுவும் இல்லாத சமத்துவ விடுதியாகத்தான் அது விளங்கியது. இவரைச் சுற்றி எப்போதும் காங்கிரஸ் தொண்டர்கள் சூழ்ந்துகொண்டிருப்பர். எந்தப் போராட்டமானாலும் இவர் வழிகாட்டுதலுக்காக இளம் தொண்டர்கள் காத்திருப்பார்கள். அப்படி இவரது வழிகாட்டலில் பற்பல தொண்டர்கள் போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றார்கள். 1930இல் தொடங்கிய இவரது இந்தப் பணி தொடர்ந்து கொண்டிருந்தது. பழனி நகரத்து மக்கள் இவரது சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடந்துகொண்டார்கள். இவர் சொன்ன வழியில் போராட்டங்கள் நடைபெற்றன. இவரது எளிமை, இனிய பேச்சு, பணிவு இவை காரணமாக மக்கள் இவரை மிகவும் விரும்பிப் பின்பற்றலாயினர். 1932இல் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்திற்கு இவர் தொண்டர்களை தயார் செய்து அனுப்பி வந்தார். அந்நியத் துணி பகிஷ்காரம் மிகவும் தீவிரமாக நடைபெற்றது. அதில் இவரது பங்கு மகத்தானது. 1934ஆம் ஆண்டு மகாத்மா காந்தி பழனிக்கு விஜயம் செய்தார். அந்த சமயத்தில்தான் ஹரிஜனங்கள் பழனி ஆலயத்தில் நுழையத் தடை இருப்பதறிந்து இவரும் கோயிலுக்குச் செல்லவில்லை. பின்னர் 1937இல் ராஜாஜி தலைமையில் மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயம், பழனி தண்டபாணி ஆலயம் ஆகியவற்றில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைந்தபின்னர்தான் காந்தி இவ்விரு கோயில்களுக்கும் வருகை புரிந்திருக்கிறார். மகாத்மா பழனி வந்தபோது ஹரிஜன நிதிக்காக இவர் பணம் திரட்டி காந்தியடிகளிடம் கொடுத்தார். காந்திஜியோடு நெருங்கி பழகி அவருக்கு 2 உபசாரங்கள் செய்து தங்க வைத்தார். ஊரில் நடைபெறும் கூட்டங்கலில் எல்லாம் பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து தாங்கள் அணிந்திருந்த தங்க நகைகளை ஹரிஜன நிதிக்குக் கொடுக்க வைத்தார். 1935, 36 ஆகிய ஆண்டுகளில் ஜவஹர்லால் நேரு, ராஜாஜி, பாபு ராஜேந்திரபிரசாத், தீரர் சத்தியமூர்த்தி, வி.வி.கிரி ஆகியோர் பழனிக்கு விஜயம் செய்த போது அவர்களையெல்லாம் தனது விருந்தினராக ஏற்றுத் தங்க வைத்து உபசரித்து அனுப்பிவைத்தவர் செல்லம் ஐயர். 1937இல் நடைபெற்ற சென்னை சட்டசபைத் தேர்தலில் மட்டப்பாரை வெங்கட்டராமையர் நின்றார். இவருக்கு ஆதரவாக செல்லம் ஐயர் ஊர் ஊராகச் சென்று வாக்குகள் சேர்த்தார். காங்கிரசின் மஞ்சள் பெட்டி வெற்றிக்காக இவர் தீரர் சத்தியமூர்த்தியுடன் சுற்றுப்பயணம் செய்து பாடுபட்டார். ராஜாஜியின் ஆணைப்படி மதுரையில் ஏ.வைத்தியநாத ஐயர் மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்தது போல் இவர் பழனி தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் ஆலயப் பிரவேசம் செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இவர் இப்படிச் செய்ததால் இவருக்கு பல தொல்லைகள் ஏற்பட்ட போதிலும், அவைகளை இவர் தீரத்துடன் எதிர்கொண்டார். 1942இல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின் போது இவரும், பி.ராமச்சந்திரன், பி.எஸ்.கே.லக்ஷ்மிபதிராஜு ஆகியோரும் கோஷமிட்டுக்கொண்டு ஊர்வலம் சென்றபோது ரிமாண்டில் 15 நாட்கள் இருந்தார். தேச சேவைக்காகச் சிறை செல்லும் தொண்டர்களுக்கு வேண்டிய உதவிகளை இவர் செய்து வந்தார். ராஜாஜி யாரையும் அவ்வளவு எளிதில் பாராட்டிவிட மாட்டார். அப்பேற்பட்ட ராஜாஜியாலேயே பெரிதும் பாராட்டப்பட்டவர் பழனி செல்லம் ஐயர் அவர்கள். இவரது பணி சுதந்திரம் பெற்றபின்பும் தொடர்ந்து நடந்து வந்தது. வாழ்க பழனி கே.ஆர். செல்லம் ஐயரின் புகழ்! 34 தியாகி பி.எஸ். சின்னதுரை சுதந்திர இந்தியாவில் தமிழ்நாடு சட்டசபையில் பிரஜா சோஷலிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக சட்டசபை உறுப்பினராக இருந்து விவாதங்களில் சிறப்பாகக் கலந்துகொண்டு பணியாற்றியவர் பி.எஸ்.சின்னதுரை. பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற காலத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபடும் வயது இல்லாத நிலையில் பெரிய தலைவர்களுக்கிடையே செய்திகளை ரகசியமாகப் பரிமாரிக்கொள்ள ஒவர் தூதனாகப் பயன்பட்டு வந்தார். விளம்பரத் தட்டிகளை எழுதி ஊரில் பல பகுதிகளிலும் கொண்டுபோய் வைப்பார். சுவர்களில் கூட்ட விளம்பரங்களை எழுதுவதோடு, அறிவிப்பு செய்து மக்களுக்குத் தெரிவிக்கும் பணிகளையும் செய்து வந்தார். அப்படி இவர் பணியாற்றும் காலங்களில் பலமுறை போலீசாரிடம் மாட்டிக்கொண்டு புளியம் மிளாரினால் அடிவாங்கி கால் வீங்கிக் கிடந்த நாட்களும் அதிகம். இவர் பல்லடத்தில் மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை சுப்பராய செட்டியார். இவர் படிக்கும் காலத்தில் இவருக்கு அமைந்த ஆசிரியர்களில் பலர் தேசபக்தர்கள். அவர்கள் ஊட்டிய தேசபக்தி இவர் ரத்தத்தில் கலந்துவிட்டது. இவர் தன் வயதுக்கும் மீறிய பணிகளில், தேச சேவையில் ஈடுபட்டு பல துன்பங்களுக்கு ஆளாகியிருக்கிறார். ஒரு ஆலையில் தொழிலாளியாக சேர்ந்து வேலை செய்துகொண்டிருந்த போதே தேச சேவையை இவர் உயிர் நாடியாகக் கருதி வந்தார். மால நேரங்களில் எங்கெங்கு பொதுக்கூட்டங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் சென்று பெஞ்சுகளைத் தூக்கிப் போடுவது முதல் மேடையை தயார் செய்வது வரை பல வேலைகளைத் தானே முன்வந்து செய்வார். நாளடைவில் பெரிய தலைவர்களின் பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டு இவரும் மேடைப் பேச்சாளர் ஆனார். பலரிடமிருந்து தெரிந்துகொண்ட செய்திகள் இவரது பேச்சில் வெளிவர அவை மக்கள் மனதில் போய் தைக்கத் தொடங்கியது. இவர் பேச்சில் வீரம் வெளிப்படும், செய்திகளில் உணர்ச்சி விளையாடும், கோழைகளையும் நிமிர்ந்து நிற்கச் செய்யும் அதிரடிப் பேச்சாக இவரது பேச்சுக்கள் அமையும். இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியதும், இவர் தீவிரமாக யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கினார். ஊர் ஊராகச் சென்று மக்களிடம் இந்தப் போர் நம்மை கலந்தாலோசிக்காமல் வெள்ளைக்காரர்கள் அவர்களுக்காக ஈடுபடும் போர். இதில் நம் மக்களும், செல்வமும் வீணடிக்கப்படுவது நியாயமில்லை. நாம் எந்த விதத்திலும் இந்தப் போரில் அவர்களுக்கு உதவக்கூடாது. இது ஏகாதிபத்திய போர். நம்மை அடக்கி ஆள்வோரின் போர், எனவே இது நமக்கு எந்த வகையிலும் தொடர்புடையதில்லை என்று பேசினார். இத்தகைய பேச்சு இவரை சிறைச்சாலையில் கொண்டு போய் சேர்த்தது. தொழிலாளர் சின்னதுரை, சிறைக்கைதியானார். 1942இல் ஆகஸ்ட் புரட்சி தொடங்கியது. வெள்ளையனே வெளியேறு போராட்டம் தலைவர்கள் இல்லாமலேயே பொதுமக்களாலும், தொண்டர்களாலும் நடத்தப்பட்டது. அதில் சின்னதுரை ஈடுபட்டார். அப்போதைய கோவை மாவட்ட தொழிலாளர் தலைவர் என்.ஜி.ராமசாமி அவர்கள் தலைமையில் போராட்டம் வலுத்தது. சூலூர் விமான தளம் தகர்க்கப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. ரயில்கள் கவிழ்க்கப்பட்டன. பல இரகசிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு நாடு முழுவதும் வன்முறை விளையாடியது. பி.எஸ்.சின்னதுரை கைது செய்யப்பட்டு இந்திய பாதுகாப்புச் சட்டத்தின்படி சிறையில் அடைக்கப்பட்டு பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார். சித்திரவதைக்கு ஆளானார். எதற்கும் மனம் கலங்காமல் நாட்டு விடுதலை ஒன்றையே சதாகாலம் எண்ணிக் கொண்டிருந்தார் அவர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தொழிலாளர்களின் தலைவர் ஆனார். பல தொழிற்சங்கங்களுக்கு இவர் தலைவராக இருந்து அவர்கள் நலன் கருதி அரிய தொண்டாற்றினார். சென்னை சட்டசபையில் உறுப்பினராக இருந்து பல சேவைகளை ஆற்றியிருக்கிறார். இவரது எளிமை, அடக்கம், தெளிந்த சிந்தனை, கனிவான பேச்சு இவைகள் இவரது எதிரிகளாலும் போற்றி பாராட்டப்பட்டன. வாழ்க தியாகி பி.எஸ்.சின்னதுரை புகழ்! 35 மதுரை ஸ்ரீநிவாஸவரத ஐயங்கார் மதுரை நகரமும், அதனைச் சுற்றியுள்ள பல ஊர்களும் நாடு போற்றும் நல்ல பல தியாகிகளைக் கொடுத்திருக்கிறது. தென் மாவட்டங் களில்தான் எத்தனை எத்தனை சுதந்திரப் போர் நிகழ்ச்சிகள்? பெயர் தெரிந்த, பெயர் தெரியாத நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான சுதந்திரப் போர் வீரர்கள், அவர்கள் அத்தனை பேரையும் நினைவுகூர முடியாவிட்டாலும், ஒரு சிலரைப் பற்றிய விவரங்களையாவது நாம் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம் அல்லவா? அந்த வகையில் மதுரை ஸ்ரீநிவாஸ ஐயங்கார் பற்றி இந்த மாதம் பார்ப்போம். 1919ஆம் ஆண்டு தொடங்கி ஒரு சில ஆண்டுகள் மதுரை வீதிகளில் ஓர் புதுமை தொடங்கி நடந்து வரலாயிற்று. விடியற்காலை நேரம். கிழக்கே வெள்ளி எழும் பொழுது; அப்போது மகாகவி பாரதியாரின் “பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்” எனும் பூபாள ராகப் பாடல் இனிமையாகப் பாடப்பெறும் ஒலி கேட்கும். இந்தப் பாடல் ஒலி கேட்ட மாத்திரத்தில் ஆங்காங்கே பல வீடுகளிலிருந்து சிறுவர்கள் எழுந்து வந்து அவசர அவசரமாக, அந்த பாரத மாதா திருப்பள்ளி எழுச்சிப் பாடலைப் பாடிக்கொண்டு, கையில் ஒரு மூவண்ணக் கொடியை ஏந்திக்கொண்டு, வெள்ளை அங்கியும், காவி தலைப்பாகையுமாக வந்துகொண்டிருக்கும் அந்த மனிதரோடு சேர்ந்து கொள்வார்கள். நேரமாக ஆக அந்த பாரத மாதா பஜனை கோஷ்டி பெரிதாக ஆகிவிடும். இந்த பஜனை பல தெருக்களைச் சுற்றிவிட்டு இறுதியில் அந்த மனிதரின் வீட்டுக்குப் போய்ச்சேரும். அங்கு அந்த சிறுவர்களை உட்கார வைத்து நாட்டு நடப்பையும், ஆங்கிலேயர்களை நம் நாட்டை விட்டுத் துரத்த வேண்டியதின் அவசியம் குறித்தும் பேசுவார். அந்த பேச்சு அந்த இளம் சிறார்களின் அடிமனதில் போய் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியது. இதனைக் கண்டவர்கள் பலர் இவர் ஒரு ‘சுயராஜ்யப் பைத்தியம்’, இவர் சுயராஜ்யம் வாங்கப் போகிறாராம். அதற்கு இந்த குழந்தைகளின் பட்டாளத்தைத் தயார் செய்கிறார் என்று கேலி பேசுவார்கள். மகாகவி பாரதியார் பாடல்கள் அனைத்தையும் இவர் மதுரை தெருக்களில் பாடிப் பிரபலப் படுத்தினார். இவற்றில் பல பாடல்கள் வெளியிடப்பட்டிருக்காது; இருந்த போதிலும் அவை ஸ்ரீநிவாஸவரதன் பாடிப் பாடி பிரபலப் படுத்தி விடுவார். இவரைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் உடனடியாக பாரதியாரும் அவரது பாடல்களும்தான் நினைவுக்கு வரும், அந்த அளவுக்கு இவர் ‘பாரதி பக்தன்’; ஏன்? இவரை பாரதிப் பித்தன் என்றே சொல்லலாம். 1917ஆம் வருஷம், இவர் அன்னிபெசண்ட் நடத்திய ஹோம்ரூல் இயக்கத்தில் பங்கு கொண்டார். சுதந்திரப் போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டு இவர் பலமுறை சிறை சென்றார். எந்த எதிர்பார்ப்பும் இன்றி இவர் பாட்டுக்குத் தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். இவரை எல்லோரும் ‘நிஷ்காம்யகர்மன்’ என்றும் ‘கர்மயோகி’ என்றும் அழைக்கலாயினர். இவர் மிகமிக 2 எளிமையானர். இவர் பிறந்தது 1896ஆம் வருஷம் ஏப்ரல் 17ஆம் தேதியன்று. வாழ்க்கையில் எவரிடமும் வேற்றுமை பாராட்டாதவர். அனைவரும் இவருக்குச் சமமே! தேசியம்தான் இவருக்கு மதம். தேசியம்தான் வாழ்க்கை. பிறருக்கு உதவுவதென்பது இவரது இரத்தத்தில் ஊறிய பண்பு. தலைசிறந்த தேசியவாதிகளாகத் திகழ்ந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவம், வ.வே.சு.ஐயர், மகாகவி பாரதி ஆகியோரிடம் நட்பு கொண்டு பழகியவர். 1919இல் இவர் பொதுச்சேவையில் ஈடுபட்ட நாள்முதல் காங்கிரஸ் இயக்கத்தின் கட்டளைகள் அனைத்திலும் பங்கேற்றவர். தன் கொள்கைகளைச் சிறிதுகூட விட்டுக்கொடுக்காதவர். எதிர் கட்சிக்காரர்களானாலும், அவர்களுக்கு உரிய மரியாதைக் கொடுத்து வந்தவர். இவர் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்துத் தேறியவர். நல்ல எழுத்தாளர்; சொற்பொழிவாளர். நல்ல குரல் வளம் இருந்ததனால் நன்கு பாடக்கூடியவர். பாரதியார் பாடல்களை இனிய குரலில் பாடி பிரபலப்படுத்தியவர். இவருக்கு எந்த வேலையைக் கொடுத்தாலும் அதனை பொறுப்போடும், திறமையோடும் செய்யும் ஆற்றல் படைத்தவர். கலைத் துறையிலும் இவர் தன் திறமையைக் காட்டத் தவறவில்லை. நாடகங்களில் நடித்தார்; திரைப்படங்களும் இவரை ஏற்றுக் கொண்டன. ஆங்காங்கே இவர் பல வாசகசாலைகளையும், சங்கங்களையும் அமைத்தார். இவருக்குத்தான் மகாகவி பாரதி கடையத்தில் இருந்தபோது தன் நூல்களை பிரசுரம் செய்வது பற்றி மிக விரிவாக கடிதம் எழுதினார். தீப்பெட்டிகளைப் போல் தன் நூல்கள் அனைவர் கைகளிலும் அரையணா, காலணா விலைக்குப் போய்ச்சேர வேண்டுமென்று பாரதி விரும்பி எழுதியது இவருக்குத்தான். 1936இல் தனது நாற்பதாவது வயதில் தன் மூத்த தாரத்தை இழந்தார். 1943இல் தன் ஒரே மகனையும் இழந்தார். இவரது முதல் மனைவி ஒரு தேசபக்தை. பத்மாஸினி அம்மையார் என்று பெயர். அவரைப் பற்றி நாம் முன்பே ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறோம். மறுபடியும் அதே பத்மாஸினி எனும் பெயரில் 1946இல் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு இரண்டு பெண்களும், ஒரு மகனும் பிறந்தனர். இந்த பத்மாஸினியும் இவருக்கு ஏற்றபடி தேசபக்தராயும், நல்ல இசை ஞானம் உள்ளவராகவும் இருந்தார். இவர் தனது 67ஆம் வயதில் நோய்வாய்ப்பட்டு 1962 பிப்ரவரி 4ஆம் தேதி சோழவந்தானில் இறைவனடி சேர்ந்தார். வாழ்க தேசபக்தர் ஸ்ரீநிவாஸ ஐயங்கார் புகழ்! 36 மதுரை ஜார்ஜ் ஜோசப் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மதுரையின் பங்கு மகத்தானது. தமிழகத்தின் கலாச்சார தலைநகரமாக விளங்கும் இந்த மதுரை இன்றும்கூட புதிதாக தோன்றுகின்ற அரசியல் இயக்கங்களாகட்டும், ஏற்கனவே செயல்படுகின்ற இயக்கங்களின் மாநாடுகளாகட்டும் இந்த மதுரை நகரத்தில் நடந்தால் மிகவும் பிரகாசமான எதிர்காலம் அமைந்துவிடும் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. அப்படிப்பட்ட மதுரை மண்ணில்தான் எத்தனையெத்தனை அரசியல் இயக்கங்கள்; எத்தனையெத்தனை அரசியல் நிகழ்ச்சிகள். வெகுகாலம் நமது ஆலயங்களின் கதவுகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அடைக்கப்பட்டிருந்ததே, அப்போது அதை அனைவருக்கும் திறந்து விட்ட பெருமை மதுரையைத்தான் சேரும். ராஜாஜியின் விருப்பப்படி மதுரை தியாகி ஏ.வைத்தியநாத அய்யர் தலைமையில் ஏராளமான தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலயப் பிரவேசம் செய்தது இந்த மதுரையில்தான். அந்த ஆலயப் பிரவேசத்தை எப்படியும் தடுத்துவிடுவது என்று ஒரு சாரார் தலைகீழாக நின்று முயன்றதும் இந்த மதுரையில்தான். ஆலயப் பிரவேசம் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் நடைபெற தன் முழு பலத்தையும் பசும்பொன் தேவர் அவர்கள் செலுத்தியதும் இந்த மதுரையில்தான். அதே பசும்பொன் தேவர் ஓர் வழக்கில் கைது செய்யப்பட்டதும் இந்த மதுரையில்தான். அடே அப்பா! இந்த மதுரை மண் எத்தனை வரலாற்றுச் செய்திகளைத் தன் மடியில் வைத்துத் தாங்கிக் கொண்டிருக்கிறது. அத்தகைய புனிதமான நகரத்தில் காங்கிரஸ் இயக்கம் எத்தனையோ தலைவர்களையும் தொண்டர்களையும் உருவாக்கியிருக்கிறது. மதுரை காந்தி என்ற பெயர் என்.எம்.ஆர்.சுப்பராமனுக்கு. அவர் காலத்திலேயே காந்திய கொள்கையால் கவரப்பட்டு சுதந்திரப் போராட்டத்திலும், காங்கிரஸ் தொண்டர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளுக்காக ஆஜராகித் தன் வாதத்திறமையால் பலரது விடுதலைக்குக் காரணமாக இருந்தவர் ஜார்ஜ் ஜோசப் ஆவார். ஜார்ஜ் ஜோசப் மக்களால் அதிகம் மதிக்கப்பட்டவர். மக்கள் இவருக்கு ஒரு செல்லப் பெயர் வைத்திருந்தனர். அந்த பெயர் “ரோஜாப்பூ துரை” என்பதாகும். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே மகாத்மா இந்திய சுதந்திரப் போரை தலைமை ஏற்று நடத்துமுன்பாகவே ஜார்ஜ் ஜோசப் 1917இல் போராட்டத்தில் ஈடுபட்டவர். அந்தக் காலத்தில் அரசியல் போராட்டங்கள் வலிமையடையாமலும், தீவிரமான அரசியல் இயக்கங்கள் நேரடியாக சுதந்திரம் பெற போதுமான அளவில் நடவடிக்கைகள் எடுக்காத காலகட்டத்தில் இந்தியர்களின் பிரச்சினைகளை இங்கிலாந்திலுள்ள பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக இந்திய தலைவர்களைக் கொண்ட குழுவொன்று இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டது. அந்த குழுவில் மூன்று பேர் உறுப்பினர்கள். அவர்களில் ஒருவர்தான் மதுரை ஜார்ஜ் ஜோசப். மற்ற உறுப்பினர் சேலம் பி.வி.நரசிம்மையர். இவரைப் பற்றி மகாகவி பாரதியார்கூட தனது கட்டுரைகளில் எழுதியிருக்கிறார். அன்றைய சென்னை சட்டசபையில் இவர் பல பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்திருக்கிறார். மூன்றாவது உறுப்பினர் மாஞ்சேரி ராமையா என்பவராவார். இவர்கள் இங்கிலாந்துக்குப் பயணம் புறப்பட்டு கப்பலில் சென்றனர். ஆனால் இங்கிலாந்து அரசாங்கம் இவர்களது வரவை விரும்பவில்லையாதலால் தடைசெய்தது. ஜிப்ரால்டர் வரை இவர்கள் போன கப்பல் போய்ச்சேர்ந்தபோதும், இங்கிலாந்துக்குச் செல்ல முடியாமல் இவர்கள் இந்தியா திரும்ப நேர்ந்தது. தொழிலாளர்களின் பிரச்சினைகளில் இவர் மிகவும் அக்கறை காட்டினார். சிதறிக்கிடந்த தொழிலார்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்காக தொழிற்சங்கம் ஏற்படுத்தினார். இது 1918ஆம் ஆண்டில் நடந்தது. 1919ஆம் வருஷத்தில் இராமநாதபுரத்தில் நடந்த மாநாடுக்கு வரவேற்புக் கமிட்டித் தலைவராக இருந்து ஜார்ஜ் ஜோசப் செயல்பட்டார். இவரது மனைவியும் இவரது நடவடிக்கைகள் அனைத்திலும் ஒத்துழைப்புக் கொடுத்ததோடு தாமும் பல போராட்டங்கலிலும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு கணவருக்கு வலது கரமாகச் செயல்பட்டார். இவர் பெரும் பொருள் ஈட்டிக் கொண்டிருந்த பிரபலமான வழக்கறிஞர். பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். இவர் மட்டும் தன் தொழிலில் கவனம் செலுத்தி சம்பாதிப்பது என்று இருந்திருபாரானால் பெரிய கோடீஸ்வரராக ஆகியிருக்கமுடியும். என்றாலும்கூட நாட்டுப் பற்று, ஏழை எளியவர்களின்பால் உள்ள அன்பு, தொழிலாளர் பிரச்சினைகளில் இவருக்கிருந்த ஈடுபாடு இவற்றின் காரணமாக இவர் தன் தொழிலைக் காட்டிலும், நாட்டுச் சேவையையே பெரிதும் மதித்துப் போற்றினார். இந்த காலகட்டத்தில்தான் மகாத்மா காந்தியடிகள் இந்திய சுதந்திரப் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவர் அறிவித்த ஒத்துழையாமை இயக்கம் மதுரை ஜார்ஜ் ஜோசப்பை பெரிதும் கவர்ந்தது. அதில் முழுவதுமாக ஈடுபடலானார். ஒத்துழையாமை இயகத்தில் ஈடுபடுவதற்காக, பெரும் வருவாய் ஈட்டித்தந்துகொண்டிருந்த தனது வக்கீல் தொழிலை உதறித் தள்ளினார். ஆங்கில பாணியிலான தனது உடை பழக்கத்தை மாற்றிக்கொண்டு தூய முரட்டுக் கதராடை அணையலானார். மகாத்மா அறிவித்த எல்லா போராட்டங்களிலும் ஜார்ஜ் ஜோசப்தான் முன்னணியில் இருந்தார். ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு அலகாபாத் நகரத்திலிருந்து “இண்டீபெண்டெண்ட்” எனும் பெயரில் ஒரு பத்திரிகை நடத்தினார். அந்தப் பத்திரிகைக்கு ஜார்ஜ் ஜோசப்தான் அதிபர். அந்த பத்திரிகையில் வெளியான கட்டுரைகளுக்காக இவர் அலகாபாத்தில் கைதுசெய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றார். இவரது சிறை தண்டனை நைனிடால் எனும் இடத்தில் கழிந்தது. சிறையில் இவருடன் இருந்த முக்கியமான தலைவர்கலில் ஜவஹர்லால் நேருவும் ஒருவர். சிறையிலிருந்து விடுதலையான பின்பு, அப்போது மகாத்மா காந்தி நடத்தி வந்த “யங் இந்தியா” எனும் பத்திரிகைக்கு இவர் ஆசிரியரானார். அந்தப் பத்திரிகை வாயிலாக இவர் எழுதிய கட்டுரைகளின் மூலம் இவர் பல தேசபக்தர்களை உருவாக்கினார். சுதந்திரக் கிளர்ச்சி படித்த மக்கள் உள்ளங்களில் எழ இவரது எழுத்துக்கள் காரணமாயிருந்தன. உலகத் தலைவர்கள் பலருடன் இவர் கடிதத் தொடர்பு வைத்திருந்தார். அவர்களில் ராம்சே மக்டனால்டு, அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் ஆகியோரும் அடங்குவர். 1937ஆம் வருடம் காங்கிரஸ் கட்சி சட்டசபைக்கு போட்டியிட்டு பெரும்பாலான இடங்களை வென்று ஆட்சி அமைத்தது நமக்கெல்லாம் தெரியும். அந்த சட்டசபையில் ஜார்ஜ் ஜோசப் அங்கம் வகித்தார். ஓராண்டு காலம் அவர் சட்டசபை உறுப்பினராக இருந்த சமயம் 1938இல் இவர் இம்மண்ணுலக வாழ்வை நீத்து அமரர் ஆனார். வாழ்க ஜார்ஜ் ஜோசப் அவர்க ளின் புகழ்! 37 தேனி என்.ஆர். தியாகராஜன் கர்ம வீரர் காமராஜ் அவர்கள் தமிழக அரசியலில் கோலோச்சிய காலத்தில் தென் தமிழ்நாட்டிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமை மிக்க உறுப்பினர்களில் தேனி என்.ஆர். தியாகராஜனும் ஒருவர். திராவிட இயக்கத்தினர் தேனி, கம்பம் பக்கம் கூட்டங்கள் போடுவதற்குக்கூட அச்சப்படக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தவர் தேனி என்.ஆர்.தியாகராஜன். நெஞ்சுத் துணிவும், தேசப் பற்றும், தூய கதராடையும், அச்சமற்ற பேச்சும் இவரது அடையாளங்களாகத் திகழ்ந்தன. இவர் தேனிக்கு அருகிலுள்ள இலட்சுமிபுரம் எனும் கிராமத்தில் பிறந்தார். கிராம காங்கிரஸ் கமிட்டியிலிருந்து தனது அரசியல் வாழ்வைத் தொடங்கிய திரு தியாகராஜன், படிப்படியாக வளரத் தொடங்கினார். 1939இல் சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் 1931 முதல் 1942 ஆகஸ்ட் புரட்சிவரையிலான எல்லா போராட்டங்களிலும் இவரது பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. இவர் இல்லாத சிறைச்சாலைகளே இல்லை எனலாம். அலிப்புரம், வேலூர், பாளையங்கோட்டை, திருச்சி என இவர் இருந்த சிறைகளின் எண்ணிக்கை அதிகம். தேனி நகரத்தில் ஊர்ச்சந்தைக் கூடும் இடத்துக்கு அநியாய கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து தியாகராஜன் போராடினார். அதில் இவர் கைது செய்யப்பட்டு வழக்கில் ஒன்பது மாதம் சிறை தண்டனை பெற்றார். 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது இவர் தலைமறைவாக இருந்து கொண்டு தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டார். இவரது திறமையும், ஆற்றலும் இவரது பெருமையை நாடறியும்படி செய்தது. தொடக்கம் முதலே இவர் மாநில காங்கிரஸ் கமிட்டியில் ஓர் முக்கிய இடம் பெற்றிருந்தார். அதுமட்டுமல்ல காமராஜ் அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் இருந்தார். 1949ஆம் ஆண்டு இவர் மதுரை ஜில்லா போர்டு தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதுவரை பிரிட்டிஷ் அரசுக்கு ஜால்ராக்களாக இருந்து கொண்டு பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு வரவேற்பும், விருந்தும் அளித்து வந்த ஜில்லா போர்டு இவர் காலத்தில் மக்கள் பணி செய்யத் தொடங்கியது. பல நல்ல திட்டங்களை இவர் கொண்டு வந்து நிறைவேற்றினார். 1957இல் நடைபெற்ற சென்னை சட்டசபைத் தேரதலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1964இல் இவர் சென்னை சட்டசபை மேல்சபை உறுப்பினரானார். 1968இல் மேல்சபை எதிர்கட்சித் தலைவராக இருந்து சிறப்பாக பணி புரிந்தார். இவர் மிகவும் சுமுகமாக அனைவரிடமும் பழகக் கூடியவர். நல்ல பண்பாளர். அதிகம் நண்பர்களைப் பெற்றவர். நாட்டுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தியாகி. இவர் 1969 ஏப்ரல் மாதம் உடல்நலமில்லாமல் இருந்து இவ்வுலக வாழ்வை நீத்தார். வாழ்க தியாகி என்.ஆர். தியாகராஜன் புகழ்! 38 முனகல பட்டாபிராமய்யா (சோழவந்தான்) முனகல பட்டாபிராமய்யா என்ற பெயரைப் பார்த்தவுடன் இவர் ஏதோ ஒரு ஆந்திரத்து தேசபக்தர் போல இருக்கிறதே என்ற எண்ணம் ஏற்படுகிறதல்லவா? ஆம்! இவரது பூர்வீகம் ஆந்திராவிலுள்ள முனகல எனும் ஊர்தான். இவர் பிழைப்புக்காக தமிழகம் வந்து மதுரை அருகிலுள்ள சோழவந்தானில் குடியேறியவர். இவரது முன்னோர் சோழவந்தான் பிரளயநாத சுவாமி கோவிலுக்குப் பின்புறம் வைகையாற்றில் பொதுமக்கள் நீராடுவதற்காக ஒரு படித்துறையை அமைத்தார்கள். ‘முனகல’ எனும் சொல்லுக்கு முனையுள்ள கல் என்று பொருள். இப்படியொரு படித்துறையை பாறாங்கல் கொண்டு கட்டுவார்கள் என்பதாலேயே முனகல என அழைக்கப்பட்டார்கள் போலும். முனகல பட்டாபிராமையா ஒரு பன்மொழி வித்தகர். இவருக்கு தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஹிந்தி, உர்து, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நல்ல பயிற்சி பெற்றதோடு, வேத சாஸ்திரங்களிலும் நல்ல பாண்டித்தியம் பெற்றவர். துப்பாக்கி சுடும் பயிற்சியும் பெற்றவர். இந்தியா முழுவதும் சுற்றி வந்து மக்களை நன்கு அறிந்து கொண்ட பட்டறிவும் பெற்றவர். 1919இல் நடைபெற்ற ஹோம்ரூல் இயக்கம் இவரை முதன்முதல் நாட்டுப் பணியில் இழுத்து வந்தது. பால கங்காதர திலகர் மதுரை விஜயம் செய்த போது அவருக்கு வரவேற்பு அளிப்பதில் முன் நின்றவர். 1921 – 22 காலகட்டத்தில் நடந்த நாகபுரி கொடிப்போராட்டத்தில் கலந்துகொள்ள மதுரை பகுதியிலிருந்து ஏராளமான தொண்டர்களை அனுப்பி வைத்ததோடு தானும் சென்று கலந்துகொண்டு ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். மகாத்மா காந்தியின் மதுரை விஜயத்தின் போது அவர் ஜார்ஜ் ஜோசப் பங்களாவில் தங்கியிருந்தார். அப்போது ஹரிஜன நிதிக்காக அலைந்து திரிந்து மக்களைத் தூண்டி ஏராளமான பொருளும், நகைகளும் நிதிக்கு அளிக்கத் தூண்டினார். இவரது இந்தப் பணிக்காக மகாத்மா இவரைப் பெரிதும் பாராட்டிப் போற்றினார். 1926இல் இவர் சோழவந்தானில் ஒரு தொண்டர் படையை நிறுவி அவர்களுக்குப் பயிற்சி அளித்தார். இந்தப் படையை கிராமம் கிராமமாக அனுப்பி அங்கெல்லாம் மக்களுக்கு நாட்டு நடப்படி எடுத்துச் சொல்லி தேசபக்திக் கனலை மூட்டினார். இவர் மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் ஆகியவற்றின் செயல் உறுப்பினராகவும் இருந்து பணியாற்றினார். இவரது AICC பதவியின் காரணமாக இவருக்கு வட இந்தியத் தலைவர்களின் நட்பும் கிடைத்தது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் மகாநாடுகளுக்கு இவர் தலைமை ஏற்று நடத்திக் கொடுத்திருக்கிறார். மகாத்மா காந்தியடிகளின் தலைமையில் நடைபெற்ற எல்லா போராட்டங் களுக்கும் தொண்டர்களைத் தயார்செய்து அனுப்பும் பணியையும் திறமையாக செய்து வந்தார். அப்படிப்பட்ட அமைப்புகள் பல இடங்களிலும் இருந்தன. காமய கவுண்டன்பட்டியில் இவரது தொண்டர்படை பயிற்சி மையம் இருந்தது. 1930இல் போராட்டங்கள் உச்ச கட்டம் அடைந்த காலத்தில் இவர் கள்ளுக்கடை மறியல் செய்து சிறைபட்டார். இவர் திருச்சி, அலிப்புரம், பெல்லாரி ஆகிய சிறைகளில் அடைபட்டுக் கிடந்தார். 1932இல் காந்தி – இர்வின் ஒப்பந்தம் தோல்வியை அடுத்து ஏற்பட்ட போராட்ட களத்தில் இவர் சர்வாதிகாரி எனும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சிறைப்பட்டார். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்ட Sedition குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் கைதுசெய்யப்பட்டு இரண்டரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் திருச்சி சிறையில் இருந்த போது நடந்த ஒரு நிகழ்ச்சி இவரது அஞ்சா நெஞ்சத்தை பறைசாற்றுவதாக அமைந்தது. திருச்சி சிறையில் ஒரு அரசியல் கைதியை வார்டன் நையப் புடைத்துவிட்டார். இதனைக் கண்டித்து கொதித்து எழுந்தார் பட்டாபிராமையா. சிறை தலைமை அதிகாரியிடம் இவர் வார்டனுக்கு எதிராக முறையிட்டார். அவர் அந்தப் புகாரைக் காதில் போட்டுக்கொள்ளவேயில்லை. இதனைக் கண்டித்து சிறையிலிருந்த அரசியல் கைதிகள் அனைவரும் உண்ணாநோன்பு இருக்க இவர் தூண்டினார். சிறையில் கலவரம் மூளும் நிலை ஏற்பட, போலீஸ் துப்பாக்கிச் சூட்டிற்குத் தயாராகியது. போலீஸ் துப்பாக்கிக்குத் தனது மார்பைத் திறந்து காட்டி, ஊம்! சுடு என்று இவர் முழக்கமிட்டதைக் கண்டு அனைவரும் திகைத்தனர். அப்போது அங்கிருந்த வடநாட்டு அரசியல் கைதிகள் கங்குலி, சாட்டர்ஜி, கோஷ்குப்தா போன்றவர்கல் தலையிட்டு சமாதானம் செய்து, நிலைமை மோசமடையாமல் காத்தனர். 1941இல் இவர் மதுரை ஜில்லா போர்டு தலைவராக ஆனார். இவரது காலத்தில் மதுரை மாவட்டம் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி முன்னேறியது. இவர் ஜில்லா போர்டு தலைமைப் பதவி வகித்த காலத்தில்தான் 1942இல் காந்திஜி வெள்ளையனே வெளியேறு போராட்ட தீர்மானம் நிறைவேற்றியமைக்காக கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து நாடு முழுவதும் கொதித்து எழுந்தபோது, இவர் மதுரையில் ஹர்த்தால் அனுசரிக்க வேண்டுகோள் விடுத்ததோடு, ஜில்லா போர்டு அலுவலகத்தையும் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு போய்விட்டார். ஜில்லா போர்டு பள்ளிக்கூடங்களில் பணியாற்றிய ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரையும் ஹர்த்தாலில் பங்குகொள்ளச் செய்தார். மாவட்ட கலெக்டர் தலையிட்டு ஜில்லா போர்டு அலுவலக சாவியை வாங்கி கதவைத் திறக்கும்படியாயிற்று. இவர் சாவியைக் கொடுக்க மறுத்ததால் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வரலாறெல்லாம் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியுமா? அல்லது தெரியும்படி எடுத்துச் சொல்லியிருக்கிறார்களா? சொல்ல வேண்டாமா? சும்மா வந்ததா சுதந்திரம்? ‘தீண்டாமை’ எனும் கொடுமைக்கு சாஸ்திரங்களில் சான்றுகள் இல்லை என்று இவர் தீவிரமாக வாதிட்டார். இதனைத் தகுந்த ஆதாரங்களுடன் மகாத்மாவிடம் இவர் வாதிட்டார். இவரது அழுத்தமான சாஸ்திர ஞானத்தையும், வாதிடும் திறமையையும், கொண்ட கொள்கையில் இவருக்கு இருந்த பிடிப்பையும் கண்டு மகாத்மா காந்தி வியந்து பாராட்டினார். 1942இல் கைது செய்யப்பட்டு சிறை வாசம் முடிந்து வெளியில் வந்ததும், இவர் தேசியப் பள்ளிக்கூடம், பாரதி வாசகசாலை, கைக்குத்தல் அரிசி சாப்பிடுவோர் சங்கம் போன்றவற்றை நிறுவினார். ஈ.வே.ரா. அவர்கள் தனது பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரையை எதிர்த்து அதே பத்திரிகைக்கு இவர் ஒரு கட்டுரையை அனுப்பி வெளியிடச் செய்தார். உத்தமபாளையத்திலிருந்து நாராயணசாமி செட்டியார் வெளியிட்டு வந்த “பாரதி” எனும் பத்திரிகையில் இவர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். 1946இல் இவர் திண்டுக்கல் தொகுதியிலிருந்து சட்டசபைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆச்சார்ய வினோபா பாவேயின் பூதான இயக்கத்தில் தீவிர பங்கு கொண்டார். தீண்டாமை ஒழிப்பில் முனைப்பு காட்டி உழைத்தமைக்காக இவருக்கு அரசாங்கம் விருது அளித்து கெளரவித்தது. அதற்காக இவருக்கு அளிக்கப்பட்ட தங்கப் பதக்கத்தை, இந்திய பாகிஸ்தான் யுத்தத்தின் போது யுத்த நிதிக்காகக் கொடுத்து விட்டார். சுதந்திர இந்தியாவில் தியாகிகளுக்கு நிலம் கொடுக்கப்பட்டபோது அதனை இவர் வாங்க மறுத்து விட்டார். மத்திய அரசாங்கத்தின் தாமரப் பட்டயம் பெற்ற இவர் 1977இல் காலமானார். வாழ்க முனகல பட்டாபிராமையா புகழ்! 39 பெரியகுளம் இராம சதாசிவம் இராம சதாசிவம் என்ற இந்த தியாகி மதுரை மாவட்டம் பெரியகுளத்தையடுத்த சவளப்பட்டி எனும் குக்கிராமத்தில் மிகமிக எளிய குடும்பத்தில் பிறந்தவரென்றாலும், இவரது தியாக வரலாறு தஞ்சை மாவட்டம் திருவையாற்றிலுள்ள அரசர் கல்லூரி மாணவராக இருந்த காலத்தில் 1942 ஆகஸ்ட்டில் நடந்த “திருவையாறு கலவரம்” எனும் போராட்டத்தின் மூலமாகத்தான் தொடங்கியது. சவளப்பட்டியில் வாழ்ந்த ராமகிருஷ்ண கவுடர், கிருஷ்ணம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் சதாசிவம். இவர் தனது ஆரம்ப காலக் கல்வியை வெங்கடாசலபுரம் எனும் கிராமத்தில் தொடங்கினார். அதன்பின் பல ஆண்டுகள் விவசாயத்தில் ஈடுபட்டு தனது சொந்த நிலபுலன்களை பராமரித்து வந்தார். அப்போது இளைஞர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக விளங்கிய ரா.நாராயணசாமி செட்டியார் என்பவரின் தூண்டுதலின் பேரில் இவர் உசிலம்பட்டியில் அப்போது இருந்த விவசாயப் பள்ளியில் 1936 தொடங்கி 1938 வரை விவசாயக் கல்வியைப் படித்து முதன்மை மாணவராகத் தேர்ந்தார். அதனைத் தொடர்ந்து காட்டுநாயக்கன்பட்டி எனும் ஊரில் ஒரு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றினார். ரா.நாராயணசாமி செட்டியார் இவரது ஆற்றலை இப்படி ஆரம்பப் பள்ளியில் வீணடிக்க விரும்பாமல் இவரை மேற்கொண்டு படிக்கத் தூண்டினார். 1940இல் அவருடைய சிபாரிசோடு தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் அரசர் கல்லூரியில் தமிழ் வித்வான் படிப்பு படிக்க சேர்ந்தார். மதுரை மாவட்டத்திலிருந்து இவரது முகாம் திருவையாற்றுக்கு மாறியது. இங்குதான் இவருக்கு சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெறும் வாய்ப்பு அமைந்தது. 1942இல் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் வித்வான் படிப்பும், சமஸ்கிருத பட்டப் படிப்பும் படிப்பதற்காக வெளியூர்களிலிருந்தெல்லாம் மாணவர்கள் வந்து சேர்வார்கள். அப்படி வரும் மாணவர்கள் பெரும்பாலும் அங்கிருந்த கல்லூரி விடுதியில்தான் தங்கி படிப்பார்கள். அப்படி அங்கு தங்கியிருந்த மாணவர்களில் பெரும்பாலும், அன்றைய சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வமும், அனுதாபமும், தீவிர பற்றும் உள்ளவர்களாக விளங்கினார்கள். அப்படிப்பட்டவர்களில் ஈரோடு நகரத்திலிருந்து வந்து தமிழ் படித்துக் கொண்டிருந்த கு.ராஜவேலு, சேலம் ஆத்தூரிலிருந்து வந்திருந்த எஸ்.டி.சுந்தரம், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவரும் சமஸ்கிருதக் கல்லூரி மாணவருமான சோமசேகர சர்மா ஆகியோர் முக்கியமானவர்கள். 1942 ஆகஸ்ட் 7,8 ஆகிய தேதிகளில் பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டில் மகாத்மா காந்தி தலைமையில் “வெள்ளையனே வெளியேறு” எனும் தீர்மானம் நிறைவேறியது. அந்தத் தீர்மானம் நிறைவேறிய அன்றிரவே மகாத்மா உட்பட எல்லா காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். காந்திஜி எங்கு கொண்டு செல்லப்பட்டார் என்பதைக்கூட அரசாங்கம் தெரிவிக்கவில்லை. பெயர் சொல்லக்கூடிய அளவில் இருந்த உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் உட்பட அனைவரும் சிறைபிடிக்கப்பட்டு பாதுகாப்பு கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர். பம்பாய் காங்கிரசுக்கு உடல்நிலை காரணமாக வராமல் பாட்னாவில் ஓய்விலிருந்த பாபு ராஜேந்திர பிரசாத், கஸ்தூரிபாய் காந்தி, மகாதேவ தேசாய் உட்பட அனைவரும் சிறையில். நாடு முழுவதும் கொந்தளிப்பு. மக்கள் என்ன செய்வது என்பது தெரியாமல் அவரவர்க்கு தோன்றிய முறைகளில் எல்லாம் எதிர்ப்பைக் காட்டினர். திருவையாறு அரசர் கல்லூரி மாணவர்களும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஒரு உண்ணாவிரத போராட்டத்தைக் கல்லூரி வளாகத்திற்குள் நடத்தினர். அதனை சோமசேகர சர்மா தலைமை வகித்து நடத்தினார். அன்று இரவு உண்ணாவிரதப் பந்தல் எரிந்து சாம்பலாயிற்று. போலீஸ் விசாரணை நடந்தது. 12ஆம் தேதி திருவையாறு புஷ்ய மண்டபத் துறையில் ஒரு மாபெரும் கூட்டம் நடைபெற்றது. மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் சிதம்பரம் பிள்ளை என்பவரும், அப்போதைய செண்ட்ரல் ஸ்கூல் (தற்போது ஸ்ரீநிவாசராவ் மேல்நிலைப் பள்ளி) ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரும் பேசினர். 13ஆம் தேதி திருவையாற்றில் கடையடைப்பு நடந்தது. காலை எட்டு மணிக்கே அரசர் கல்லூரி மாணவர்கள் தெருவுக்கு வந்து கோயிலின் தெற்கு வாயிலில் ஆட்கொண்டார் சந்நிதி அருகில் கூடினர். கடைகளை மூடும்படி கேட்டுக்கொண்டனர். அப்போது போலீஸ் தலையிட்டு மாணவர்களை தடிகொண்டு தாக்கினர். கூட்டம் சிதறி ஓட இதில் பொதுமக்களும் சேர்ந்து கொண்டனர். போலீஸ் மீது கல் வீசப்பட்டது. தபால் அலுவலக பெயர்ப்பலகை உடைக்கப்பட்டது, தபால் பெட்டி தகர்க்கப்பட்டது, தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டன. சிதறி ஓடிய கூட்டம் முன்சீப் கோர்ட், பதிவு அலுவலகம் ஆகியவற்றை சூறையாடி தீயிட்டுக் கொளுத்தியது. இந்தக் கலவரம் பிற்பகல் வரை தொடர்ந்தது. மாலை தஞ்சாவூரிலிருந்து மலபார் ரிசர்வ் படை வந்தது. நூற்றுக்கணக்கானோர் கைதாகினர். மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். ராம சதாசிவம் உட்பட எஸ்.டி.சுந்தரம், கு.ராஜவேலு ஆகியோரும் கைதாகினர். இறுதியில் 44 பேர் மீது பல்வேறு கிரிமினல் குற்றங்கள் சாட்டப்பட்டு தஞ்சை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அதில் ராம சதாசிவம் ஒரு வருடம் சிறை தண்டனை பெற்றார். இவருடன் எஸ்.டி.சுந்தரம், கு.ராஜவேலு போன்ற மாணவர்கள் தவிர, திருவையாற்றைச் சேர்ந்த பலரும், குறிப்பாக தற்பொழுது தஞ்சாவூர் ஸ்ரீநிவாசபுரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் தியாகி கோவிந்தராஜு, குஞ்சுப் பிள்ளை, சுப்பிரமணியன் செட்டியார், சண்முகம், தில்லைஸ்தானம் மாணிக்கம் பிள்ளை போன்ற பலர் தண்டனை பெற்றனர். சிறையிலிருந்து வெளிவந்த ராம சதாசிவம் 1944இல் பெரியகுளம் நந்தனார் மாணவர் இல்லத்தில் பணியில் சேர்ந்தார். 1946இல் இவருக்குத் திருமணம் நடந்தது. சிவகாமி எனும் பெண்ணை மணந்தார். 1947இல் இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு இவர் வினோபாஜி அவர்களுடைய சீடனாகி, தனது தம்பியை அவருடைய ஆசிரமத்தில் சேர்த்தார். இந்த உயர்ந்த தியாகி இன்னமும் மதுரையில் பழைய நினைவுகளில் ஆழ்ந்திருக்கிறார். வாழ்க இவரது புகழ். 40 திருப்பூர் தியாகி பி.எஸ்.சுந்தரம் அந்தக் காலத்தில் இந்தியாவிலிருந்து பிழைப்புக்காக பர்மா சென்று குடியேறியவர்களில் லட்சுமி அம்மாளும் ஒருவர். மகாத்மா காந்தியடிகளின் மீது அபரிமிதமான மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். காந்தியப் பொருளாதாரம், காந்தியடிகளின் கதர் கொள்கை இவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். பர்மாவில் இவர் வாழ்ந்த பகுதியில் வாழ்ந்த இந்தியர்களை ஒன்றுதிரட்டி ‘கதர் சேவா சங்கம்’ என்ற அமைப்பை நிறுவி, அவர்களைக் கைராட்டை மூலம் நூல் நூற்கச் செய்து அவற்றைத் துணியாக்கி அணிந்து வரத்தொடங்கினார். இந்தியாவிலிருந்தும் கதர் துணிகளை வரவழைத்து லாபம் இல்லாமல் கொள்முதல் விலைக்கே இந்தியர்களுக்கு விற்று கதர் அணியத் தூண்டினார். பர்மாவில் இவரது மதிப்பும் மரியாதையும் அதிகரித்து வந்தது. அந்த லட்சுமி அம்மாளுக்கு மூன்று ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் இருந்தனர். இவர் ஒருமுறை இந்தியா வந்தபோது அப்போது மைசூரில் தங்கியிருந்த மகாத்மா காந்தியடிகளைச் சந்தித்தார். அவரிடம் தன்னுடைய கதர் பணி பற்றி சொல்லி, கதர் நிதிக்காக காந்தியடிகளிடம் 15 ரூபாயை நன்கொடையாகக் கொடுத்தார். லட்சுமி அம்மையாரின் கதர் பணி பற்றியும் தேசபக்தி பற்றியும் கேட்டறிந்த காந்தியடிகள் பெருமகிழ்ச்சியுற்று பேசியதோடு, கதர் இயக்கத்தில் இவ்வளவு ஆர்வம் கொண்ட நீங்கள் நன்கொடை கொடுப்பதில் மட்டும் ஏன் கஞ்சத்தனம் செய்தீர்கள் என்றார். அதற்கு அம்மையார் தன்னிடம் அவ்வளவுதான் பணம் இருக்கிறது என்று சொல்லி சமாளித்தார். இந்த சம்பாஷணையின் போது ராஜாஜியும் அங்கு உடனிருந்தார். காந்தியடிகள் சொன்னார், “நான் விரும்பும் நன்கொடை வேறு. நீங்கள் பணத்தைப் பற்றி சொன்னதாக நினைக்கிறீர்கள். இல்லை. உங்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்களல்லவா, அவர்களில் ஒருவரை தேசப் பணிக்காக நீங்கள் ஏன் அர்ப்பணிக்கக்கூடாது” என்று புன்னகைத்தார். அடிகளின் கேள்வியின் பொருள் அப்போதுதான் லட்சுமி அம்மாளுக்குப் புரிந்தது. காந்தியடிகள் இப்படிக் கேட்டதும் லட்சுமி அம்மாள் மகிழ்ச்சியடைந்தார். தேச சேவைக்கு வீட்டிற்கு ஒரு பிள்ளை என்பது போல அண்ணல் காந்தியடிகள் தன்னிடம் கேட்டது தன் ஜென்மம் சாபல்யமடைந்தது போல நினைத்தார். “பாபுஜி தங்கள் விருப்பப்படியே என்னுடைய மூன்று குமாரர்களில் ஒருவனைத் தேச சேவைக்காகத் தங்களிடம் ஒப்படைக்கிறேன்” என்றார். உடனே ரங்கூனில் இருந்த தன் மூத்த மகனுக்கு கடிதம் மூலம் நடந்த விவரங்களை எழுதினார். ஒரு கம்பெனியில் நல்ல வேலையில் இருந்த அந்த மகனும் தாய் சொல்லைத் தட்டாமல் தன் வேலையை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியா வந்தார். அகில இந்திய சர்க்கா சங்கத்தை அடைந்து விவரங்களைக் கூறினர். திருப்பூர் சென்று அங்கு கதர் பணியினை மேற்கொள்ளுமாறு இவர் அனுப்பி வைக்கப்பட்டார். கதர் பணியோடு நாட்டுச் சுதந்திரப் போரிலும் தீவிரமாக பங்கு கொண்டார் அந்த இளைஞர் அவர்தான் பி.எஸ்.சுந்தரம் என்பவர். தியாகி கொடிகாத்த குமரன் அணிவகுத்துச் சென்று போலீசார் தடியடியில் உயிர் இழந்தாரல்லவா அந்த குழுவுக்குத் தலைமை ஏற்று நடத்திச் சென்றவர் இந்த சுந்தரம் தான். அன்று, திருப்பூர் குமரன் அடிபட்டு இரத்த வெள்ளத்தில் வீதியில் விழுந்து கிடந்த அன்று; 10-1-1932 அன்று, குமரனை அடித்து வீழ்த்திவிட்டார்களே, என்னை விட்டு வைத்திருக்கிறார்களே ஏன்? என்று அவர் சிந்தித்துக் கொண்டிருந்த அந்த விநாடி, போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் முகமது என்பவர் திடீரென இவர் மீது பாய்ந்து கண்மூடித்தனமாகத் தாக்கினார். பாவம் அந்த இன்ஸ்பெக்டர் அவர் மட்டும் அடிக்கிறாரே, அவரது கரங்கள் வலிக்குமே என்று கூட இருந்த கான்ஸ்டபிள்களும் தங்கள் பங்குக்குத் தாக்கினர். அவர்கள் அடித்த அடியில் சுந்தரத்தின் இரண்டு கால்களிலும் எலும்புகள் முறிந்தன. கீழே விழுந்து கிடந்த அவரை கான்ஸ்டபிள்கள் தூக்கிப் பிடித்து நிறுத்திக்கொள்ள மீண்டும் கைகள் நோகும் வரை அடித்தான் அந்த அரக்கன் முகமது. மயங்கி கீழே விழுந்தார் சுந்தரம். அத்தனை பேரிலும் அதிகமாக அடிவாங்கியவர் இவர்தான். உடலில் மொத்தம் பத்தொன்பது இடங்களில் எலும்புகள் முறிந்தன என்பது பின்னர் தெரிந்தது. அன்றைய போரில் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட மூவரில் இராமன் என்பவருக்கு இதயத்துக்கு அருகில் மார்பு எலும்பு முறிந்திருந்தது. சுந்தரம் பல எலும்பு முறிவோடு கிடந்தார். தலையில் அடிபட்ட குமரன் மட்டும்தான் நினைவினை இழந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். நினைவு திரும்பிய சுந்தரம் குமரன் நிலைபற்றியே திரும்பத் திரும்ப விசாரித்துக் கொண்டிருந்தார். குமரன் இறந்த செய்தி கேட்டு தன் உடல் வேதனைகளைக்கூட மறந்து அழுதார். பின்னர் நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். போலீஸ் அடித்த அடியில் சுந்தரம் தன் காதுகள் கேட்கும் சக்தியை இழந்து விட்டதை உணர்ந்தார். எலும்பு முறிவுகளால் உடல் நலம் கெட்ட போதும், காதுகள் இரண்டும் முழுவதுமாக செயல் இழந்துவிட்ட போதும் தொடர்ந்து தேச சேவையில் ஈடுபட்டு உழைத்தார் சுந்தரம். 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் இவரை இப்படி செயலிழக்கச் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது பதவி உயர்வு பெற்று, பெருமையோடு பணி ஓய்வும் பெற்று சுகமாக வாழ்ந்தார். பாரதி பாடியது நினைவுக்கு வருகிறது: “மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும், நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ? எண்ணற்ற நல்லோரிதயம் புழுங்கியிரு கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ? தர்மமே வெல்லுமெனுஞ் சான்றோர் சொல் பொய்யாமோ? கர்ம விளைவுகள் யாம் கண்டதெல்லாம் போதாதோ?”. சுதந்திர இந்தியாவைப் பார்க்காமலே திருப்பூர் குமரன் இளம் வயதில் தடியடியில் உயிரிழந்தான். அதே வேள்வியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட சுந்தரமும் இராமனும் நடைப்பிணங்களாக வாழ்ந்து சுதந்திர இந்தியாவைப் பார்த்த பின் உயிரிழந்தனர். இவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் எந்த குறையுமின்றி நலமாக வாழ்ந்தனரே. இறைவா! இதுதான் உந்தன் நீதியா என்று நமக்குக் கதறத் தோன்றுகிறது. இவர்களையெல்லாம் இன்று நாம் போற்றிப் புகழ் பாடலாம். சிலைகள் வைத்து மாலைகள் போடலாம். வாழ்க வாழ்க என்று வாய் நிறைய கோஷம் போடலாம். அவர்களது படங்களை சுவற்றில் மாட்டி பூக்களையிட்டு வணங்கி மகிழலாம். ஆனால் அவர்கள் இழந்தவற்றை, உடல் நலத்தை இந்த சுதந்திர நாடு அவர்களுக்குத் திருப்பித் தரமுடியுமா. முடியாவிட்டாலும் பரவாயில்லை அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களுக்காவது தண்டனை கொடுக்க முடிந்ததா? அதுகூட வேண்டாம் அவர்களைப் போற்றி பதவி உயர்வு கொடுக்காமலாவது இருந்திருக்கலாம் அல்லவா. இதெல்லாம் நமது மனக்குமுறல்தான் என்றாலும் ஆண்டவர் காதுகளில் அவை விழவில்லையே! அதுதான் குறை. வாழ்க மாவீரன் சுந்தரம் புகழ்! 41 திருக்கருகாவூர் பந்துலு ஐயர் தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் திருக்கருகாவூர் எனும் பிரசித்தி பெற்ற தலமொன்றில் பிறந்தவர் வெங்கட்டராமையர் எனும் பந்துலு ஐயர். இவர் தேசபக்தியின் காரணமாக இவர் காலத்தில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டார். அதற்கு வசதியாக இவர் கும்பகோணம் நகரத்துக்குக் குடி பெயர்ந்தார். 1930ஆம் ஆண்டில் வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக நிகழ்ச்சி நந்து கொண்டிருந்தபோது, தொண்டர்கள் ராஜாஜி தலைமையில் கால்நடையாக திருச்சியிலிருந்து கும்பகோணம் வந்தபோது, நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் அப்போது அதன் தலைவராக இருந்த பந்துலு ஐயர் அவர்களை வரவேற்றார். டவுன் ஹை ஸ்கூலுக்கு எதிரில் இப்போதுள்ள காந்தி பார்க் இருக்கும் இடத்தில் தொண்டர்களுக்கு ஒரு வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் தலையெடுத்து வளர்ந்து கொண்டிருந்த ‘சுயமரியாதை’ இயக்கத்தினர் இந்தத் தொண்டர்கள் இவர்களுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும், அதில் பல கேள்விகளை எழுப்பியும், கூட்டத்தில் கலவரம் செய்ய முயன்றனர். கூட்டத்துக்கு பந்துலு ஐயர்தான் தலைமை வகித்திருந்தார். நிலைமையை கட்டுப்படுத்தியபின் கூட்டத்தைச் சிறப்பாக நடத்தி முடித்தார். ராஜாஜி முதலிய தலைவர்கள் காமாட்சி ஜோசியர் தெருவில் இருந்த பந்துலு ஐயரின் வீட்டில்தான் தங்கினர். பின்னர் உப்புச் சத்தியாக்கிரகப் படை மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யம் சென்றடைந்த போது, இவர் ஒவ்வொரு ஊரிலும் நடைபெற்ற கூட்டங்களில் எல்லாம் உரையாற்றினார். கடைசியில் வேதாரண்யத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் இவர் பங்கேற்று, க.சந்தானம் உள்ளிட்டோரோடு கைதாகி சிறை தண்டனை பெற்று திருச்சி சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இவர் மட்டுமல்ல, இவரது குடும்பவே சுதந்திர வீரர்களைக் கொண்ட குடும்பம். இவரது மகன்கள் சேஷு ஐயர், டி.வி.கணேசன் ஆகியோரும் விடுதலைப் போராட்ட வீரர்கள், தியாகிகள். தஞ்சை மாவட்டம் சீர்காழியை அடுத்த உப்பனாற்று பாலத்துக்கு வெடி வத்துத் தகர்க்க முயன்ற குற்றத்துக்காக சீர்காழி ரகுபதி ஐயரின் புத்திரன் சுப்பராயனோடு, சேஷு ஐயரும், டி.வி.கணேசனும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கணேசன் ‘தினமணி’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தவர். இந்தப் பத்திரிகை அதிபர் இராம்நாத் கோயங்கா, தினமணி ஏ.என்.சிவராமன், ராமரத்தினம் ஆகியோரும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள். எனினும் சேஷு ஐயர் வழக்கிலிருந்து விடுதலையானார். ஆனால் கணேசன் விடுதலை ஆன கையோடு, பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மிகத் தீவிரமான அடக்குமுறையை 1930இல் கையாண்ட தஞ்சை கலெக்டர் தார்ன் துரைக்குச் சவாலாக விளங்கிய பந்துலு ஐயர் ஏராளமான தொல்லைகளுக்கு ஆளானார். மாறி வந்த அரசியல் சூழ்நிலையில் பந்துலு ஐயரின் குடும்பம், அவர்களின் வாரிசுகள் இவர்கள் இருந்த இடம் தெரியாமல் மறைக்கப்பட்டு விட்டனர். இந்த தியாகசீலர் பற்றிய மேலும் விவரங்கள் வைத்திருப்போர் தயைகூர்ந்து அவற்றை எமக்கு அனுப்பி வைத்தால் பந்துலு ஐயர் பற்றிய வரலாற்றைத் தொகுத்து வெளியிட முயற்சி செய்யலாம். 42 ஜி. சுப்பிரமணிய ஐயர் நாட்டின் சுதந்திரத்திற்குப் பாடுபட்டதிலும், சமூக சீர்திருத்தங்களிலும், பத்திரிகை துறையில் நுழைந்து பெரிய அளவில் செய்தித் தாள்களை அறிமுகம் செய்ததிலும் ஆகிய மூன்று வெவ்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கியவர் ஜி.சுப்பிரமணிய ஐயர். “தி இந்து” “சுதேசமித்திரன்” ஆகிய பத்திரிகைகளைத் தொடங்கி, நாட்டு சுதந்திரப் போரில் விடுதலை வேட்கையையும், வீரத்தையும் மக்கள் உள்ளங்களில் விதைத்த பெருமை இவருக்கு மட்டுமே உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக மகாகவி பாரதியாரை உலகுக்குக் காட்டியவர் இவரே. இவர் தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் 1855ஆம் ஆண்டு கணபதி ஐயர், தர்மாம்பாள் தம்பதியருக்கு மகவாகப் பிறந்தார். கணபதி ஐயர் அவ்வூர் முன்சீப் கோர்ட்டில் வழக்கறிஞராக இருந்தவர். சுப்பிரமணிய ஐயருக்கு உடன் பிறந்தவர்கள் சகோதரர்கள் ஆறு பேர், சகோதரி ஒருவர். ஆரம்பக் கல்வி திருவையாற்றிலும், உயர் கல்வியைத் தஞ்சாவூரிலும் படித்து 1869ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷன் தேறினார். 1871இல் எஃப்.ஏ (இடைநிலை) தேர்வில் தேறினார். அதே ஆண்டு திருமணமும் நடந்தது. பிறகு சைதாப்பேட்டையில் ஆசிரியர் பயிற்சி முடித்தார். அதனைத் தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரி உட்பட சில இடங்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பத்து ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பின் தி ஆரியன் ஸ்கூல் எனும் பள்ளியை நிறுவி நடத்தினார். சென்னை திருவல்லிக்கேணியில் அப்போது செயல்பட்டுக் கொண்டிருந்த இலக்கியக் கழகத்தில் சேர்ந்து, அங்கிருந்த சில அறிஞர்களின் தொடர்பை பெற்றார். அப்போது முதன் முறையாக சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதியாக ஒரு இந்தியரை சர் டி.முத்துசாமி ஐயரை நியமித்தனர். இந்த நியமனம் குறித்து அப்போதைய ஆங்கிலோ இந்தியப் பத்திரிகைகள் குறைகூறியும் சாதி பேதங்கள் குறித்தும் எழுதின. இதனைக் கண்டித்து எழுதத் தங்களுக்கென்று ஒரு பத்திரிகை தேவை என்பதை ஜி.சுப்ரமணிய ஐயரும் அவரது நண்பர்களும் உனர்ந்தனர். உடனே ஒவ்வொருவரும் கொடுத்த நன்கொடை ஒண்ணே முக்கால் ரூபாயில் 80 பிரதிகள் அச்சிட்டு ஒரு பத்திரிகை வெளியிட்டனர். 1878 செப்டம்பர் 20ஆம் தேதி “இந்து” பத்திரிகை வெளியானது. பொது மக்களின் குரலை ஓங்கி ஒலிக்கும் பத்திரிகையாக அப்போதிருந்து ‘இந்து’ இருந்துவந்தது. ஜி.சுப்பிரமணிய ஐயரோடு சேர்ந்து ‘இந்து’ பத்திரிகையைத் தொடங்கிய அந்த அறுவர் செங்கல்பட்டைச் சேர்ந்த எம்.வீரராகவாச்சாரியார், டி.டி.ரங்காச்சாரியார், பி.வி.ரங்காச்சாரியார், டி. கேசவ ராவ் பந்த் மற்றும் என். சுப்பாராவ் பந்துலு ஆகியோராவர். இவர்களில் ஜி.சுப்பிரமணிய ஐயரும் வீரராகவாச்சாரியாரும் பச்சையப்பன் கல்லூரியில் ட்யூட்டராக பணியாற்றியவர்கள். மற்ற நால்வரும் சட்டக்கல்லூரி மாணவர்கள். அப்போது ‘இந்து’ பத்திரிகை ஜார்ஜ் டவுனில் மிண்ட் தெருவில் ஸ்ரீநிதி அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு ஒவ்வொரு புதன்கிழமையும் மாலையில் இப்போதைய இந்து பத்திரிகையின் அளவில் கால் பகுதியாக எட்டு பக்கங்கள் நாலணா விலையில் அதாவது இப்போதைய இருபத்தைந்து காசுகளுக்கு வெளியிடப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த தேசபக்த இளைஞர்கள் அறுவரும் வெளிக்கொண்டு வந்த ‘இந்து’ பத்திரிகை மக்களின் அபிப்பிராயங்களைப் பிரதிபலிப்பதாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் பத்திரிகையின் கருத்துக்கள் பொதுமக்கள் மத்தியில் எல்லா பிரச்சினைகளிலும் மக்கள் சரியான கோணத்தில் அணுக உதவி செய்தது. இந்தப் பத்திரிகை தொடங்கியதின் நோக்கத்தைப் பற்றி இவர்கள் எழுதிய அந்த ஆங்கிலப் பகுதி இதோ: “……The principles that we propose to be guided by are simply those of fairness and justice. It will always be our aim to promote harmony and union among our fellow countrymen and to interpret correctly the feelings of the natives and to create mutual confidence between the governed and the governors”. ‘இந்து’ பத்திரிகை தொடங்கப்பட்டதே ஆங்கிலேயர்களின் ஆதரவு பத்திரிகைகள் குறிப்பாக “தி மெட்றாஸ் மெயில்” இந்தியர்களை ஏளனமாக எழுதியதை எதிர்த்துத்தான். ஆகவே நீதிபதி முத்துசாமி ஐயர் நியமனத்தை எதிர்த்து அந்த ஆங்கில பத்திரிகை எழுதியபோது ‘இந்து’ நியமனத்தை ஆதரித்ததோடு, ஆங்கில ஏட்டின் கருத்தைத் தூள்தூளாக்கியது. அதன் பிறகு இந்து பத்திரிகையின் தாக்கம் மக்களுக்கு ஏற்பட்டது செங்கல்பட்டு கலவர வழக்கு 1881இல் தான். இந்த வழக்கு சம்பந்தமாக சென்னை கவர்னருக்கு எதிராக கடுமையான வாதங்களை முன்வைத்தது இந்து பத்திரிகை. அதற்குப் பின் மூன்று ஆண்டுகள் கழித்து 1884இல் சேலம் கலவர வழக்கின் போதும் இந்து பத்திரிகை ஆங்கில அரசுக்கு எதிராக போர்முழக்கம் செய்தது. சேலம் மூத்த காங்கிரஸ் தலைவராக இருந்த சி.விஜயராகவாச்சாரியார் சம்பந்தப்பட்ட வழக்கு அது. அதுபற்றி ‘இந்து’வின் வாதம் இதோ:- “ the prosecution of the socalled Salem Rioters and their convictions were the result of a premeditated design, hastily formed and executed in a vindictive spirit, not very honourable and utterly unworthy of a civilized Government”. 1880இல் இந்து பத்திரிகை மைலாப்பூருக்குக் கொண்டு செல்லப்பட்டது. ‘தி இந்து அச்சகம்’ ரகூநாத ராவ் (Ragoonada Row) என்பவரால் தொடங்கப்பட்டது. 1883 முதல் இது வாரம் மும்முறையாக வெளிவந்தது. 1897இல் திலகரின் கைதை எதிர்த்து இந்து முழக்கமிட்டது. பிறகு 1883 டிசம்பர் 3ஆம் தேதி முதல் இந்து பத்திரிகை மவுண்ட் சாலைக்குத் தனது சொந்த அச்சகமான ‘தி நேஷணல் பிரஸ்’க்கு மாறியது. சென்னையில் பிரபல கிரிமினல் வக்கீலாக இருந்த நார்ட்டன் என்பார் சென்னை சட்டமன்ற மேலவைக்குப் போட்டியிட்டார்; அவரை இந்து ஜி.சுப்பிரமணிய ஐயர் அவரை தீவிரமாக ஆதரித்தார். ஆங்கில ஏகாதிபத்தியத்தைக் கடுமையாக எதிர்த்த ஜி.எஸ். நார்ட்டன் துரையுடன் எப்படி இவ்வளவு நெருக்கம் கொண்டார் என்பது தெரியவில்லை. இந்த ‘திருவல்லிக்கேணி அறுவர்’ பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சட்டம் படித்த மாணவர்கள் வக்கீல் தொழில் செய்யச் சென்று விட்டனர். ஜி.சுப்பிரமணிய ஐயரும் வீரராகவாச்சாரியாரும் மட்டும் பத்திரிகையை நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டது. 1898இல் அதாவது இந்து பத்திரிகை வெளிவரத்தொடங்கி இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஜி.சுப்ரமணிய ஐயர் இந்த பத்திரிகையை தனது நண்பர் ஒருவருக்கு விற்றுவிட்டார். அதுமுதல் அது கஸ்தூரி ஐயங்கார் குடும்பத்துக்குச் சொந்தமானது. இந்து பத்திரிகை காங்கிரஸ் கட்சி தொடங்குவதற்கு முன் ஏழு ஆண்டுகள் மூத்தது. இவர் சென்னை மகாஜன சபையில் உறுப்பினர் ஆனார். 1885இல் பம்பாயில் காங்கிரஸ் கட்சி உருவானபோது ஜி.எஸ். அவர்கள் அதன் ஆரம்ப கால உறுப்பினர் ஆனார். 1906இல் கர்சான் பிரபு வங்கத்தை பிரித்தபோது அதனை எதிர்த்துக் கடுமையாக எழுதினார். 1907இல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் இவர் மிதவாத தலைவரைத் தலைமைப் பதவிக்கு முன்மொழிந்தாரே தவிர, பிறகு பால கங்காதர திலகரையே பின்பற்றலானார். 1882ஆம் வருஷம் “சுதேசமித்திரன்” பத்திரிகையை வார இதழாகத் தொடங்கினார். 1889 முதல் இது நாள் இதழாக மலர்ந்தது. மதுரையில் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த பாரதியாரைச் சென்னைக்குக் கொண்டு வந்து ஒரு பத்திரிகையாளராகவும், அதன் மூலம் ஒரு தீவிரமான அரசியல்வாதியாகவும் ஆவதற்கு மூலகாரணமாக இருந்தவர் ஜி.எஸ். மகாகவியை உலகத்துக்கு அறிமுகம் செய்தவர் இவரே. இவர் சமூக சீர்திருத்தங்களில் அதி தீவிர கவனம் செலுத்தினார். பால்ய விவாகம், விதவைத் திருமணம், தேவதாசி முறை ஒழிப்பு, சாதி ஒற்றுமை இவைகளில் அவர் ஆர்வம் காட்டினார். திருமண வயதை அதிகரிக்கவும், விதவைத் திருமணங்களுக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சமுதாயத்தைல் சரிசமமான அந்தஸ்த்தைப் பெற்றுத் தருவதற்கும், குழந்தை திருமணங்களைத் தடை செய்யவும் இவர் அயராது பாடுபட்டார். இவர் ஊருக்கு உபதேசம் செய்வதோடு நிற்கவில்லை, தனது விதவை மக ளான 13 வயதில் விதவையாகிவிட்ட சிவப்பிரியாம்பாளுக்கு பம்பாயில் 1889ஆம் வருஷ காங்கிரஸ் மகாநாடு நடந்த போது அந்தக் காலத்திலேயே அதாவது நூறு ஆண்டுகளுக்கு முன்பே விதவா மறுவிவாகம் செய்து வைத்தவர். பிற்காலத்தில் இவருக்கு உடல் உபாதை ஏற்பட்டு உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு அது உடைந்து புண்ணாகி, உடல் முழுவதும் மோசமாக ஆகியது. இது அவரது பொதுத் தொண்டினை மிகவும் பாதித்தது, மனம் வருந்தினார். மகாத்மா காந்தி இவர் இருக்குமிடம் வந்து இவரைக் கண்டு ஆறுதல் கூறிச் சென்றார். “சுதேசமித்திரன்” பத்திரிகையை இவர் வாரம் மும்முறையாகக் கொண்டு வந்தார். 1889 முதல் அது தினசரியாக வெளியாகியது. இந்த காலகட்டத்தில் ‘சுதேசமித்திரன்’ எழுத்துக்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மிக கடுமையான விமரிசனங்களைத் தாங்கி வந்தது அதன் காரணமாக அரசாங்கத்தின் கெடுபிடிகளும் அதிகமாயின. இவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைவாசம் இவரது உடல்நிலையை அதிகம் பாதித்தது. எனினும் இவர் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு அதாவது 1915இல் சுதேசமித்திரனை கஸ்தூரிரங்க ஐயங்காரின் மருமான் ஏ.ரங்கசாமி ஐயங்காரிடம் ஒப்படைத்தார். தியாகச் செம்மல், பத்திரிகைத் துறையின் முன்னோடி, மகாகவி பாரதியை உலகுக்கு அறிமுகம் செய்துவைத்த உத்தமர், சமூக சீர்திருத்தங்களுக்காகப் பாடுபட்டவர் ஜி.சுப்பிரமணிய ஐயர் தனது 61ஆம் வயதில் 1916இல் காலமானார். வாழ்க ஜி.சுப்பிரமணிய ஐயர் புகழ்! 43 ராஜாஜி [] [] [] [] [] சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் பதவி வகித்த தமிழர்; வங்காளத்தில் நடந்த மதக் கலவரத்துக்குப் பின் மேற்கு வங்க மாநில கவர்னர் பதவி வகிக்க பலரும் தயங்கிய நேரத்தில் துணிந்து அங்கே கவர்னராகப் போன தீரர்; வடக்கே மகாத்மா காந்தி தண்டி யாத்திரை சென்றதை அடுத்து தென்னகத்தில் வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தை வெற்றிகரமாக நடத்திய சுதந்திரப் போராட்ட வீரர்; தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் ஆலயங்களில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், ஆலயக் கதவுகளை அவர்களுக்குத் திறந்துவிட்ட சீர்திருத்தச் செம்மல்; தன் வாதத் திறமையாலும் நிர்வாகத் திறமையாலும் ஆளும் கட்சியைக் காட்டிலும் எதிர்கட்சியினர் எண்ணிக்கையில் அதிகம் இருந்தபோதும் சிறப்பாக அரசை வழிநடத்திச் சென்ற ராஜ தந்திரி; இசையிலும், இலக்கியங்களிலும் ஆர்வமும் புலமையும் பெற்று, குறையொன்று மில்லை என்று இன்று திரும்பிய பக்கமெல்லாம் ஒலிக்கும் பாடலை எழுதி திருமதி எம்.எஸ்.அவர்களை பாட வைத்தவர்; இராமாயண மகாபாரத இதிகாசங்களைச் சாதாரண மக்களும் படித்துப் பயன்பெறும் வண்ணம் “சக்கரவர்த்தித் திருமகன்” என்று ராமாயணத்தையும் “வியாசர் விருந்து” என்ற பெயரில் மகாபாரதத்தையும் அழியாத இலக்கியச் செல்வமாகப் படைத்தவருமான சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் எனும் ராஜாஜி பற்றி இந்த மாதம் பார்ப்போம். தற்போதய தருமபுரி மாவட்டம் ஓசூர் அருகிலுள்ள தொரப்பள்ளி எனும் சின்னஞ்சிறு கிராமம். தென் பண்ணை ஆற்றின் கரையில் அமைந்த சிற்றூர். அவ்வூரில் கிராம முன்சீப்பாக இருந்தவர் சக்கரவர்த்தி ஐயங்கார் என்பவர். சமஸ்கிருதத்தில் பெரும் புலமை வாய்ந்தவர். அவருடைய மனைவி பெயர் சிங்காரம் அம்மாள். நற்குணங்களும், சிறந்த பண்புகளும் நிரம்பப் பெற்றவர். இவர்களுக்கு மூன்று மக்கள். முதலாமவர் நரசிம்மன், இரண்டாமவர் சீனிவாசன், மூன்றாவது பிள்ளைதான் உலகைத் தன் அறிவினால் ஆண்ட ராஜகோபாலன். ஆம்! நம் ராஜாஜிதான். பள்ளிப்படிப்பைத் தொடங்கி தனது பன்னிரெண்டாம் வயதில் மெட்ரிகுலேஷன் தேறினார். பிறகு பெங்களூர் இந்து கல்லூரியில் படித்து பி.ஏ. தேறினார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தார். அந்த காலகட்டத்தில்தான் சுவாமி விவேகானந்தர் சென்னை வந்தார். அவரை தரிசிக்கவும், அவர் இருந்த ரதத்தை இழுத்துச் செல்லவும், அவரிடம் கண்ணன் நிறம் ஏன் நீல நிறம் என்பது பற்றி பதில் சொல்லவும் வாய்ப்புப் பெற்றார். மகாத்மா காந்தி படித்தவர்களை சுதந்திரப் போரில் ஈடுபட அழைப்பு விடுத்தபோது அதனை ஏற்று முழுநேர அரசியல் வாதியாக ராஜாஜி மாறினார். சேலம் நகர சபைத் தலைவர் பதவியில் இருந்து பல நல்ல பணிகளைச் செய்தார். 1921ல் காந்திஜி அறிவித்த சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வேலூர் சிறையில் அடைபட்டார். இவருக்குத் தண்டனை அளித்த வெள்ளைக்கார மாஜிஸ்டிரேட் இவருக்குத் தண்டனை கொடுத்த மறுகணம், “உங்களைப் போன்ற உத்தமரைத் தண்டிப்பது எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. ஆயினும் கீதை சொன்ன நெறிப்படி என் கடமையை நான் செய்ய வேண்டியிருக்கிறது” என்று நெஞ்சுருகக் கூறினார். பிறகு ராஜாஜி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இங்கிலாந்து அரசாங்கம் இந்தியாவில் விடுதலைப் போராட்டம் உச்ச கட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது, காங்கிரசுடன் சமாதானம் பேச சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் என்பவரை தூது அனுப்பியது. அந்த கிரிப்ஸ் கொண்டு வந்த திட்டத்தில் முதல் அம்சம் உலக யுத்தம் முடிந்த கையோடு இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிப்பது; இரண்டாவது இந்திய முஸ்லீம்கள் தங்களுக்குத் தனி நாடு கோரி பிரிந்து போக விரும்பினால் நாட்டைப் பிரிப்பது. இதை காந்தி ஏற்கவில்லை. ஆனால் ராஜாஜி நாட்டின் அமைதி கருதியும் மக்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வதைத் தவிர்க்கவும் வேண்டுமானால் முஸ்லிம்களுக்குத் தனிநாடு பிரித்துக் கொடுப்பதுதான் சரி என்று கருதினார். ஒன்றுபட்டிருந்த காந்தி–ராஜாஜி உறவில் விரிசல் விழுந்தது. ராஜாஜி தனது கருத்தைப் பிரச்சாரம் செய்ய நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்தார். ஆனால் அவர் சென்ற இடங்களில் எல்லாம் காங்கிரசார் கலாட்டா செய்தனர். எதிர்த்தனர். எனினும் ராஜாஜி தன் கொள்கையினின்றும் சிறிதும் இறங்கி வரவில்லை. தன்னந்தனியாக காங்கிரசை விட்டு வெளியேறி போராடி வந்தார். ஆகாகான் மாளிகையில் சிறையிலிருந்த மகாத்மா காந்தி 1942ல் உண்ணாவிரதம் தொடங்கினார். அவர் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் ராஜாஜி அவரைச் சென்று பார்த்தார். பிரிந்த இருவரும் பாசத்தால் இணைந்தனர். காந்தி கேட்டார், உங்கள் நிலைதான் என்ன என்று. ராஜாஜி உடனே தனது திட்டத்தை ஓர் காகிதத்தில் எழுதிக் காட்டினார். இதனைக் கண்ட காந்தி, இவ்வளவுதானா, இது எனக்குப் புரிந்திருந்தால் முன்பே ஒப்புக்கொண்டிருப்பேனே என்றார். இப்படி மகாத்மாவே ராஜாஜியின் கருத்தை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. 1944ல் எல்லா காங்கிரஸ்காரர்களும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அப்போதைய காங்கிரஸ் தலைவர் அபுல் கலாம் ஆசாத் ராஜாஜியை மீண்டும் காங்கிரசில் இணையும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி அவர் திருச்செங்கோடு தாலுகா காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகச் சேர்ந்தார். திருச்செங்கோட்டில் ராஜாஜி காந்தி ஆசிரமம் ஒன்று ஏற்படுத்தி பல தொண்டர்களை ஒருங்கிணைத்து நன்கு செயல்பட்டு வந்தார். பேராசிரியர் கல்கி அவர்களும் திருச்செங்கோடு ஆசிரமத்தில் இருந்து, மதுவிலக்குக்காக நடத்தப்பட்ட “விமோசனம்” எனும் பத்திரிகையில் ஆசிரியராக இருந்தார். ராஜாஜி திருச்செங்கோடு தாலுகா காங்கிரசில் உறுப்பினராகச் சேர்ந்தும், மாகாண காங்கிரஸ் கமிட்டி மதுரையில் கூடி அவரை காங்கிரசில் அனுமதிக்க மாட்டோம் என்று தீர்மானம் போட்டனர். இந்த முடிவுக்கு காமராஜ் அவர்களின் பங்களிப்பு இருந்தது. என்றாலும் கூட மத்திய காங்கிரஸ் கமிட்டி ராஜாஜியின் பணியை முழுமையாகப் பயன்படுத்தி வந்தது. தமிழ்நாட்டின் நஷ்டம் அகில இந்தியாவுக்கும் அதிர்ஷ்டமாக அமைந்தது. அப்போது ஜவஹர்லால் நேரு தலைமையில் மத்தியில் இடைக்கால அரசு ஒன்று உருவாகியது. அதில் ராஜாஜி தொழில் துறை அமைச்சராகச் சேர்ந்தார். இந்த காலகட்டத்தில் இந்தியப் பிரிவினையின் விளைவாக மேற்கு வங்கத்தில் மதக்கலவரம் பரவியபோது அங்கு கவர்னராகச் செல்ல ஒருவரும் முன்வராதபோது நேரு அவர்கள் ராஜாஜியை அங்கே கவர்னராக நியமிக்க ஏற்பாடு செய்தார். இவர் அங்கே சென்று கல்கத்தாவில் காலடி எடுத்து வைத்தபோது இவருக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. இவர் காங்கிரசில் சுபாஷ்சந்திர போசுக்கு எதிராக நிலைப்பாடு கொண்டிருந்ததனால், அவரது சகோதரர் சரத் சந்திர போஸ் தலைமையில் பெரும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. இத்தனை விரோதமான சூழ்நிலையில் அந்த மாநிலத் தலைநகர் கல்கத்தாவில் காலடி வைத்த ராஜாஜி நாளடைவில் அம்மாநில மக்களின் அன்புக்குப் பாத்திரமானார். இந்திய சுதந்திரம் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் கிடைத்த பிறகு சிலகாலம் லார்டு மவுண்ட் பேட்டன் கவர்னர் ஜெனரலாக இருந்தார். பிறகு இந்தியர் ஒருவர் அந்த பதவிக்கு வரவேண்டும் என்ற நிலையில் அனைவரும் யோசித்து அந்த பதவிக்கு ராஜாஜியே தகுதியானவர் என்று முடிவு செய்தனர். அதன்படியே ராஜாஜி இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்றார். 1952ல் பொதுத் தேர்தல் நடந்து நாட்டுக்கு ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் வரை ராஜாஜி பதவியில் இருந்தார். பின் ஓய்வு பெற்று சென்னைக்குத் திரும்பினார். அப்போது நடந்து முடிந்திருந்த சென்னை மாகாண சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்திருந்தது. எதிர்கட்சி வரிசையில் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும் தலைகள் அனைவரும் இருந்தனர். காங்கிரசால் மந்திரி சபை அமைக்க முடியவில்லை. மேலிட உத்தரவின் பேரில் தமிழக காங்கிரசார் ராஜாஜி அவர்களை அணுகி அவரைப் பதவி ஏற்றுக் கொள்ள வேண்டினர். ராஜாஜியும் பெரும்பதவிகளில் இருந்தபின் மாநில முதலமைச்சர் பதவியா என்று தயங்காமல் சில நிபந்தனைகளுடன் சம்மதித்தார். அப்படிப்பட்ட ஒரு நிபந்தனை கட்சிக்காரர்கள் தலைமைச் செயலகத்தின் செயல்பாட்டில் தலையிடக் கூடாது என்பதுதான். ஊழலை அண்ட விடாமல் இருக்க அந்த மேதை எடுத்த நடவடிக்கை பின்னர் காற்றில் விடப்பட்டதனால் ஏற்பட்ட பல விபரீதங்களை, அதன் பிறகு நாம் பார்த்தோமே! அமைச்சரவை அமைக்க காங்கிரசுக்கு போதிய உறுப்பினர்கள் இல்லை. என்ன செய்வது? சில எதிர்கட்சி உறுப்பினர்களைக் காங்கிரசில் சேர்த்துக் கொண்டார். காமன்வீல் கட்சியிலிருந்து மாணிக்கவேலு நாயக்கர், ராமசாமி படையாச்சியார், சுயேச்சை பி.பக்தவத்சலு நாயுடு போன்றவர்கள் ராஜாஜிக்கு ஆதரவு கொடுத்தனர். 1952ல் சென்னை மாகாணத்தில் அமைந்த ஆட்சியில் ராஜாஜி பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தார். உணவுப் பொருட்களுக்கு இருந்த ரேஷனை நீக்கினார். மதுவிலக்கு தீவிரமாக அமல் செய்யப்பட்டது. விற்பனை வரி மூலம் வருவாய் இழப்பை ஈடுகட்டினார். தஞ்சையில் நிலவிய நிலவுடைமையாளர் விவசாயிகளுக்கிடைய பகை முற்றி போராட்டம் நடந்த நிலையில் “பண்ணையாள் சட்டம்” கொண்டு வந்து உழைக்கும் விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்தார். பழைய ஆங்கில முறை கல்வியில் மாற்றம் கொண்டுவரவும், ஏராளமானவர் பள்ளிகளில் சேர்ந்து படிக்கவும் ஓர் புதிய திட்டத்தைக் கொணர்ந்தார். அதனை ‘குலக்கல்வித் திட்டம்’ என்று சொல்லி திராவிட இயக்கங்களும், அவர்களோடு சேர்ந்து கொண்டு காங்கிரசில் காமராஜ் உட்பட அனைவரும் எதிர்த்து போராட்டம் நடத்தவே, ராஜாஜி தன் பதவியை ராஜிநாமா செய்தார். மத்தியில் நடந்த ஆட்சி லைசன்ஸ் அண்டு பர்மிட் ராஜ் என்று சொல்லி நேருவின் சோசலிசத்தை எதிர்க்கும் வகையில், இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் கட்சி போன்ற அமைப்பில் “சுதந்திராக் கட்சி”யைத் தொடங்கினார். ‘சுயராஜ்யா’ எனும் பத்திரிகை மூலம் தன் கருத்தை வலியுறுத்தினார். காசா சுப்பா ராவ் சுயராஜ்யாவின் ஆசிரியர். பெரும் முதலாளிகளும், ஆலைச் சொந்தக்காரர்களும் மட்டுமல்லாமல், சாதாரண மக்களும் சுதந்திராக் கட்சியில் சேர்ந்தனர். கட்சி நன்கு வளர்ந்தாலும் பின்னர் அது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. அணுகுண்டு உலகை பேரழிவில் கொண்டு சேர்க்கும் என்று கருதி அதனை ஒழிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடியிடம் தூது போனார். திராவிடக் கட்சிகள் மதுவிலக்கை நீக்கிக் கள்ளுக் கடைகளை மறுபடியும் திறந்த போது அன்றைய முதல்வர் வீடு தேடிச் சென்று ‘வேண்டாம் கள்ளுக் கடை” என்று வேண்டுகோள் விடுத்தார். அது செவிடன் காதில் ஊதிய சங்கு போலாயிற்று. இன்று மக்களில் பெரும்பலோர் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி வீணாகின்றனர். தன் கடைசி நாட்களை பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம் போன்ற இலக்கியங்களைத் தமிழில் படைக்கத் தன் நேரத்தைச் செலவிட்டபின் 1972ல் டிசம்பர் 25ம் தேதி இம்மண்ணுலகை நீத்து ஆச்சார்யன் திருவடிகளை அடந்தார். வாழ்க ராஜாஜியின் புகழ். 44 திரு வ.வெ.சு. ஐயர் [] வ.வெ.சு.ஐயரின் வரலாற்றைச் சிறிது பார்ப்போம். திருச்சி நகரத்தில் ஒரு பகுதி வரகநேரி. இங்கு கல்வி இலாகாவில் பணிபுரிந்து கொண்டிருந்த வெங்கடேச அய்யர் என்பவருக்கும் காமாட்சி அம்மாளுக்கும் 1881இல் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி பிறந்தவர் வ.வெ.சுப்பிரமணியம் என்கிற வ.வெ.சு.ஐயர். திருச்சியில் இவரது ஆரம்பக் கல்வி. தனது 12ஆவது வயதில் மெட்ரிகுலேஷன் தேர்வில் மாநிலத்தில் ஐந்தாவதாகத் தேறினார். பிறகு திருச்சி தூய வளனார் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ.பட்டம் பெற்றார். அப்போது வழக்கறிஞராகப் பணியாற்ற பிளீடர் என்ற ஒரு தேர்வு இருந்தது. அதைப் படித்து வக்கீலாக இவர் பணியாற்றத் தொடங்கினார். கல்லூரியில் படிக்கும்போதே திருமணம் நடந்தது, மனைவியின் பெயர் பாக்கியலட்சுமி. இவருடைய உறவினர் ஒருவர் பர்மாவில் ரங்கூனில் இருந்தார்; பெயர் பசுபதி ஐயர். அவரிடம் சென்று ரங்கூனில் வக்கீலாகப் பணியாற்றினார் வ.வெ.சு.ஐயர். அங்கு இவருக்கு தான் லண்டன் சென்று பாரிஸ்டராக வேண்டுமென்கிற ஆசை வந்தது. லண்டன் புறப்பட்டுச் சென்றார். ரங்கூனில் இருக்கும்போது திருச்சியைச் சேர்ந்தவரும் மருத்துவத் தொழில் புரிந்து வந்தவருமான தி.சே.செளந்தரராஜன் என்பவரின் நட்பு கிடைத்தது. இவர்தான் புகழ்மிக்க டி.எஸ்.எஸ்.ராஜன் ஆவார். இங்கிலாந்துக்குச் சென்ற ஐயர் அங்கிருந்த இந்தியா ஹவுஸ் எனுமிடத்தில் தங்கினார். ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா என்பவருக்குச் சொந்தமானது இந்த இந்தியா ஹவுஸ். அவர் ஒரு சிறந்த தேசபக்தர். அங்கு இவருக்கு வீரர் சாவர்க்காருடைய நட்பு கிடைத்தது. அங்கிருந்த தேசபக்தர்கள் ஒன்றுகூடி இந்தியா சுதந்திரம் பெற வேண்டியதன் அவசியத்தை பிரிட்டிஷ் மக்களுக்கு விளக்கிச் சொல்லும் பணியை மேற்கொண்டனர். இவர்களுடைய நடவடிக்கைகளைக் கவனித்து வந்த பிரிட்டிஷ் அரசு இவர்களுக்குப் பல விதங்களிலும் தொல்லைகள் கொடுத்தது. அதைத் தவிர்க்க இவர்கள் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் குடிபுகுந்தனர். அப்போது ஷியம்ஜி கிருஷ்ண வர்மா இறந்து போனார். லண்டனில் பாரிஸ்டர் தேர்வு எழுதி வெற்றி பெற்றும் இவர் அந்தப் பட்டத்தை நிராகரித்துவிட்டார். தேசபக்திதான் அதற்குக் காரணம். அப்போது 1910இல் லண்டனில் கர்ஸான் வில்லி எனும் ஆங்கிலேய அதிகாரி மதன்லால் திங்க்ரா எனும் ஓர் தேசபக்த இளைஞனால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதன் காரணமாக இந்தியா ஹவுசில் குடியிருந்த அனைத்து இந்தியர்களுக்கும் பிடித்தது சனியன். போலீஸ் தொல்லை அதிகரித்தது. விடுதி சோதனைக்குள்ளாகியது. திங்க்ராவுக்குத் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பாரிசிலிருந்து லண்டன் வந்த சவார்க்கரை ஆங்கில அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. வ.வெ.சு.ஐயர் இவரைச் சிறையில் சென்று சந்தித்தார். அதனால் ஐயர் மீது சந்தேகப்பட்ட ஆங்கில அரசு இவரையும் கைது செய்ய திட்டமிட்டது. இந்த செய்தியை எப்படியோ ஐயர் தெரிந்து கொண்டார். சவார்க்கரும் ஐயரை எப்படியாவது சிறைப்படாமல் தப்பி இந்தியா போய்விடுமாறு கேட்டுக் கொண்டார். ஐயர் ஏற்கனவே தாடி மீசை, தலைமுடி இவற்றை வளர்த்துக் கொண்டிருந்தார். அதோடு ஒரு சீக்கியர் போல உடை அணிந்துகொண்டு தனது கைப்பெட்டியுடன் கிளம்பி கப்பல் ஏறச் சென்றார். இவர் பெட்டியில் இவரது பெயரின் முன் எழுத்துக்களான ‘வி.வி.எஸ்’ பொறிக்கப்பட்டிருந்தது. இவரைப் பல இடங்களிலும் தேடிய போலீஸ், இந்தியா செல்லவிருந்த கப்பலில் ஏறியிருந்த இந்தியர்களை சோதனையிட்டது. அதில் ஒரு சர்தார் இருந்ததைப் பார்த்தார். இவர்களுக்கு வ.வெ.சு.ஐயர் பற்றிய அடையாளங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த சர்தார் நிச்சயமாக ஐயராக இருக்கமுடியாது என்று நினைத்தனர். எனினும் ஒரு சந்தேகம். அவரைச் சோதித்துப் பார்த்து விடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்போது ஐயர் பெயருக்கு வந்ததாகப் பொய்யான ஒரு தந்தி கவரை, அதன் மீது வி.வி.எஸ்.ஐயர் என்று எழுதப்பட்டிருந்ததை அவரிடம் கொடுத்தனர். அந்த உறையை வாங்கிப் பார்த்த ஐயர், “ஓ! இது எனக்கு வந்த தந்தி அல்லவே. வி.வி.எஸ். ஐயர் என்பவருக்கல்லாவா வந்திருக்கிறது” என்றார். போலீசார் விடவில்லை. “மன்னிக்க வேண்டும். இதோ உங்கள் பெட்டியில் வி.வி.எஸ்.ஐயர் என்று எழுதப்பட்டிருக்கிறதே” என்றனர். உடனே சமயோசிதமாக ஐயர், “அதுவா, என் பெயர் வி.விக்ரம் சிங், அதன் சுருக்கம்தான் இந்த வி.வி.எஸ்.” என்றார் நிதானமாக. எவ்வித ஆபத்தான சூழ்நிலையிலும் நிதானம் தவறாதவர் ஐயர் என்பது இந்நிகழ்ச்சியின் மூலம் தெரிகிறது. ஓராண்டு காலம் பாரிசில் தங்கிய ஐயர் பிறகு ரோம் நகருக்குப் போனார். அங்கிருந்த பல மாறுவேஷங்களில் பல ஊர்களுக்கும் சென்றுவிட்டு கப்பலில் இந்தியா நோக்கிப் பயணமானார். இவர் கடலூரில் இறங்கி அங்கிருந்த நடந்தே புதுச்சேரி போய்ச்சேர்ந்தார். ஐயர் புதுச்சேரி வந்த செய்தி போலீசாருக்கு நெடுநாள் கழித்தே தெரிந்தது. இங்கும் போலீஸ் தொல்லை இவரைத் தொடர்ந்தது. இந்த சூழ்நிலையில் திருநெல்வேலியிலிருந்து சிலர் வந்து புதுச்சேரியில் ஐயரைச் சந்தித்தனர். அவர்களுக்கு ஐயர் துப்பாக்கிச் சுடக் கற்றுக் கொடுத்தார். அதில் வாஞ்சிநாதன், நீலகண்ட பிரம்மச்சாரி, மாடசாமி ஆகியோரும் அடங்குவர். 1911ஆம் வருஷம் அப்போது திருநெல்வேலி ஜில்லா கலெக்டராக இருந்த ஆஷ் என்பார் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்ட வாஞ்சிநாதன் எனும் இளைஞரும் தன்னையே சுட்டுக்கொண்டு இறந்து போனார். இவர் ஏற்கனவே புதுச்சேரி சென்று அங்கிருந்த சுதேசித் தலைவர்களைச் சந்தித்தனால், புதுச்சேரி சுதேசிகள் ஐயர் உட்பட அனைவரும் சந்தேக வலையில் சிக்கிக்கொண்டார்கள். புதுச்சேரியில் ஐயருக்கு எத்தனை தொல்லைகள் தரவேண்டுமோ அத்தனையையும் போலீசார் தந்தனர். இவ்வளவு தொல்லைகளுக்கி இடையிலும் இவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். முதல் உலக யுத்தம் 1918இல் முடிந்தது. இந்திய தேசபக்தர்களுக்கு மாற்றம் நேரிடும் என்ற உணர்வு வந்தது. அதனால் 1918இல் பாரதியார் இந்திய எல்லைக்குள் நுழைய கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1920இல் ஐயர் இந்திய எல்லைக்குள் வந்தார். வந்த பின் இந்தியா முழுவதும் சில மாதங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஹரித்துவார், கவி ரவீந்திரரின் சாந்திநிகேதன், மகாத்மா காந்தியின் சபர்மதி ஆகிய ஆசிரமங்களுக்கும் சென்று வந்தார். இது போன்ற குருகுலம் ஒன்றை தமிழகத்தில் தொடங்க ஆர்வம் கொண்டார். ஊர் திரும்பிய பின் “தேசபக்தன்” என்ற பத்திரிகையின் ஆசிரியராக அமர்ந்தார். அதில் வெளியான கட்டுரை ஒன்று தேச விரோதமானது என்று சொல்லி இவருக்கு ஒன்பது மாத சிறை தண்டனை கிடைத்தது. அப்போது பெல்லாரி சிறையில் இருந்த போதுதான் கம்ப ராமாயண ஆங்கில கட்டுரையை எழுதி முடித்தார். 1922இல் சிறையிலிருந்து விடுதலையான ஐயர் திருநெல்வேலி ஜில்லாவில் சேரன்மாதேவி எனுமிடத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஓர் ஆசிரமம் நிறுவினார். அதற்கு ‘பாரத்துவாஜ ஆசிரமம்’ என்று பெயர். மிக நன்றாக நடந்து வந்த இந்த ஆசிரமத்துக்கு வழக்கமான தமிழ்நாட்டு அரசியல் விளையாட்டால் ஒரு கெட்ட பெயர் வந்தது. ஆசிரமத்தில் அனைத்து ஜாதி குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான உணவும் சமபந்தி போஜனமும்தான் கொடுக்கப்பட்டது. ஆனால் புதிதாகச் சேர்ந்த சில பிராமண குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குத் தனியாக உணவு பரிமாற வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களுக்குத் தனியாக உணவளிக்க ஐயர் ஏற்பாடு செய்தார். ஆனால் ஐயர் மற்ற எல்லா குழந்தைகளோடும்தான் உணவு அருந்தினார். அவர் மட்டுமல்ல, அவர் பெண் மற்றும் மற்ற பிராமண குழந்தைகளும் அப்படியே. ஆனால் அவரைப் பிடித்த துரதிர்ஷ்டம், இப்படி சில பிராமண பிள்ளைகளின் பெற்றொர்கள் ஒரு நிபந்தனையாகக் கேட்டுக் கொண்டதற்கிணங்க தனி உணவு அளித்தது ஜாதிப் பிரச்சனையாக உருவெடுத்தது. அது பிரம்மாண்டமாக வளர்ந்தது. தமிழ்நாட்டு வழக்கப்படி, இங்கு ஜாதியை வைத்துத்தான் அரசியல், ஆகையால் ஐயர் மீது ஜாதி வெறியன் என்ற முலாம் பூசப்பட்டது. பூசிய தலைவர்கள் ஈ.வே.ராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராஜுலு நாயுடு போன்றோர். மகாத்மா காந்தி வரையில் இந்த பிரச்சனை எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் ஐயர் மிகவும் மனம் வருந்தி நொந்து போனார். இந்த நிலையில் 1925இல் ஜுன் மாதம் குருகுல குழந்தைகளோடு பாபநாசம் அருவிக்கு சுற்றுலா சென்ற போது, அவரது மகள் சுபத்ரா அருவியைக் கடக்க தாண்டியபோது அவளது தாவணி நீரில் பட்டு அவளை அருவிக்குள் இழுத்துக் கொண்டது. அவளைக் காப்பதற்காக அவளைத் தொடர்ந்து தண்ணீரில் பாய்ந்த ஐயரும் அருவிக்குள் போய்விட்டார். இருவரின் உடலும் கிடைக்கவில்லை. ஒரு மகத்தான வீரபுருஷனின் இறுதிக் காலம் அவலச்சுவையோடு முடிந்து போய்விட்டது. வ.வெ.சு.ஐயரின் வரலாற்றைச் சிறிது பார்ப்போம். திருச்சி நகரத்தில் ஒரு பகுதி வரகநேரி. இங்கு கல்வி இலாகாவில் பணிபுரிந்து கொண்டிருந்த வெங்கடேச அய்யர் என்பவருக்கும் காமாட்சி அம்மாளுக்கும் 1881இல் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி பிறந்தவர் வ.வெ.சுப்பிரமணியம் என்கிற வ.வெ.சு.ஐயர். திருச்சியில் இவரது ஆரம்பக் கல்வி. தனது 12ஆவது வயதில் மெட்ரிகுலேஷன் தேர்வில் மாநிலத்தில் ஐந்தாவதாகத் தேறினார். பிறகு திருச்சி தூய வளனார் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ.பட்டம் பெற்றார். அப்போது வழக்கறிஞராகப் பணியாற்ற பிளீடர் என்ற ஒரு தேர்வு இருந்தது. அதைப் படித்து வக்கீலாக இவர் பணியாற்றத் தொடங்கினார். கல்லூரியில் படிக்கும்போதே திருமணம் நடந்தது, மனைவியின் பெயர் பாக்கியலட்சுமி. இவருடைய உறவினர் ஒருவர் பர்மாவில் ரங்கூனில் இருந்தார்; பெயர் பசுபதி ஐயர். அவரிடம் சென்று ரங்கூனில் வக்கீலாகப் பணியாற்றினார் வ.வெ.சு.ஐயர். அங்கு இவருக்கு தான் லண்டன் சென்று பாரிஸ்டராக வேண்டுமென்கிற ஆசை வந்தது. லண்டன் புறப்பட்டுச் சென்றார். ரங்கூனில் இருக்கும்போது திருச்சியைச் சேர்ந்தவரும் மருத்துவத் தொழில் புரிந்து வந்தவருமான தி.சே.செளந்தரராஜன் என்பவரின் நட்பு கிடைத்தது. இவர்தான் புகழ்மிக்க டி.எஸ்.எஸ்.ராஜன் ஆவார். இங்கிலாந்துக்குச் சென்ற ஐயர் அங்கிருந்த இந்தியா ஹவுஸ் எனுமிடத்தில் தங்கினார். ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா என்பவருக்குச் சொந்தமானது இந்த இந்தியா ஹவுஸ். அவர் ஒரு சிறந்த தேசபக்தர். அங்கு இவருக்கு வீரர் சாவர்க்காருடைய நட்பு கிடைத்தது. அங்கிருந்த தேசபக்தர்கள் ஒன்றுகூடி இந்தியா சுதந்திரம் பெற வேண்டியதன் அவசியத்தை பிரிட்டிஷ் மக்களுக்கு விளக்கிச் சொல்லும் பணியை மேற்கொண்டனர். இவர்களுடைய நடவடிக்கைகளைக் கவனித்து வந்த பிரிட்டிஷ் அரசு இவர்களுக்குப் பல விதங்களிலும் தொல்லைகள் கொடுத்தது. அதைத் தவிர்க்க இவர்கள் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் குடிபுகுந்தனர். அப்போது ஷியம்ஜி கிருஷ்ண வர்மா இறந்து போனார். லண்டனில் பாரிஸ்டர் தேர்வு எழுதி வெற்றி பெற்றும் இவர் அந்தப் பட்டத்தை நிராகரித்துவிட்டார். தேசபக்திதான் அதற்குக் காரணம். அப்போது 1910இல் லண்டனில் கர்ஸான் வில்லி எனும் ஆங்கிலேய அதிகாரி மதன்லால் திங்க்ரா எனும் ஓர் தேசபக்த இளைஞனால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதன் காரணமாக இந்தியா ஹவுசில் குடியிருந்த அனைத்து இந்தியர்களுக்கும் பிடித்தது சனியன். போலீஸ் தொல்லை அதிகரித்தது. விடுதி சோதனைக்குள்ளாகியது. திங்க்ராவுக்குத் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பாரிசிலிருந்து லண்டன் வந்த சவார்க்கரை ஆங்கில அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. வ.வெ.சு.ஐயர் இவரைச் சிறையில் சென்று சந்தித்தார். அதனால் ஐயர் மீது சந்தேகப்பட்ட ஆங்கில அரசு இவரையும் கைது செய்ய திட்டமிட்டது. இந்த செய்தியை எப்படியோ ஐயர் தெரிந்து கொண்டார். சவார்க்கரும் ஐயரை எப்படியாவது சிறைப்படாமல் தப்பி இந்தியா போய்விடுமாறு கேட்டுக் கொண்டார். ஐயர் ஏற்கனவே தாடி மீசை, தலைமுடி இவற்றை வளர்த்துக் கொண்டிருந்தார். அதோடு ஒரு சீக்கியர் போல உடை அணிந்துகொண்டு தனது கைப்பெட்டியுடன் கிளம்பி கப்பல் ஏறச் சென்றார். இவர் பெட்டியில் இவரது பெயரின் முன் எழுத்துக்களான ‘வி.வி.எஸ்’ பொறிக்கப்பட்டிருந்தது. இவரைப் பல இடங்களிலும் தேடிய போலீஸ், இந்தியா செல்லவிருந்த கப்பலில் ஏறியிருந்த இந்தியர்களை சோதனையிட்டது. அதில் ஒரு சர்தார் இருந்ததைப் பார்த்தார். இவர்களுக்கு வ.வெ.சு.ஐயர் பற்றிய அடையாளங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த சர்தார் நிச்சயமாக ஐயராக இருக்கமுடியாது என்று நினைத்தனர். எனினும் ஒரு சந்தேகம். அவரைச் சோதித்துப் பார்த்து விடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்போது ஐயர் பெயருக்கு வந்ததாகப் பொய்யான ஒரு தந்தி கவரை, அதன் மீது வி.வி.எஸ்.ஐயர் என்று எழுதப்பட்டிருந்ததை அவரிடம் கொடுத்தனர். அந்த உறையை வாங்கிப் பார்த்த ஐயர், “ஓ! இது எனக்கு வந்த தந்தி அல்லவே. வி.வி.எஸ். ஐயர் என்பவருக்கல்லாவா வந்திருக்கிறது” என்றார். போலீசார் விடவில்லை. “மன்னிக்க வேண்டும். இதோ உங்கள் பெட்டியில் வி.வி.எஸ்.ஐயர் என்று எழுதப்பட்டிருக்கிறதே” என்றனர். உடனே சமயோசிதமாக ஐயர், “அதுவா, என் பெயர் வி.விக்ரம் சிங், அதன் சுருக்கம்தான் இந்த வி.வி.எஸ்.” என்றார் நிதானமாக. எவ்வித ஆபத்தான சூழ்நிலையிலும் நிதானம் தவறாதவர் ஐயர் என்பது இந்நிகழ்ச்சியின் மூலம் தெரிகிறது. ஓராண்டு காலம் பாரிசில் தங்கிய ஐயர் பிறகு ரோம் நகருக்குப் போனார். அங்கிருந்த பல மாறுவேஷங்களில் பல ஊர்களுக்கும் சென்றுவிட்டு கப்பலில் இந்தியா நோக்கிப் பயணமானார். இவர் கடலூரில் இறங்கி அங்கிருந்த நடந்தே புதுச்சேரி போய்ச்சேர்ந்தார். ஐயர் புதுச்சேரி வந்த செய்தி போலீசாருக்கு நெடுநாள் கழித்தே தெரிந்தது. இங்கும் போலீஸ் தொல்லை இவரைத் தொடர்ந்தது. இந்த சூழ்நிலையில் திருநெல்வேலியிலிருந்து சிலர் வந்து புதுச்சேரியில் ஐயரைச் சந்தித்தனர். அவர்களுக்கு ஐயர் துப்பாக்கிச் சுடக் கற்றுக் கொடுத்தார். அதில் வாஞ்சிநாதன், நீலகண்ட பிரம்மச்சாரி, மாடசாமி ஆகியோரும் அடங்குவர். 1911ஆம் வருஷம் அப்போது திருநெல்வேலி ஜில்லா கலெக்டராக இருந்த ஆஷ் என்பார் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்ட வாஞ்சிநாதன் எனும் இளைஞரும் தன்னையே சுட்டுக்கொண்டு இறந்து போனார். இவர் ஏற்கனவே புதுச்சேரி சென்று அங்கிருந்த சுதேசித் தலைவர்களைச் சந்தித்தனால், புதுச்சேரி சுதேசிகள் ஐயர் உட்பட அனைவரும் சந்தேக வலையில் சிக்கிக்கொண்டார்கள். புதுச்சேரியில் ஐயருக்கு எத்தனை தொல்லைகள் தரவேண்டுமோ அத்தனையையும் போலீசார் தந்தனர். இவ்வளவு தொல்லைகளுக்கி இடையிலும் இவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். முதல் உலக யுத்தம் 1918இல் முடிந்தது. இந்திய தேசபக்தர்களுக்கு மாற்றம் நேரிடும் என்ற உணர்வு வந்தது. அதனால் 1918இல் பாரதியார் இந்திய எல்லைக்குள் நுழைய கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1920இல் ஐயர் இந்திய எல்லைக்குள் வந்தார். வந்த பின் இந்தியா முழுவதும் சில மாதங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஹரித்துவார், கவி ரவீந்திரரின் சாந்திநிகேதன், மகாத்மா காந்தியின் சபர்மதி ஆகிய ஆசிரமங்களுக்கும் சென்று வந்தார். இது போன்ற குருகுலம் ஒன்றை தமிழகத்தில் தொடங்க ஆர்வம் கொண்டார். ஊர் திரும்பிய பின் “தேசபக்தன்” என்ற பத்திரிகையின் ஆசிரியராக அமர்ந்தார். அதில் வெளியான கட்டுரை ஒன்று தேச விரோதமானது என்று சொல்லி இவருக்கு ஒன்பது மாத சிறை தண்டனை கிடைத்தது. அப்போது பெல்லாரி சிறையில் இருந்த போதுதான் கம்ப ராமாயண ஆங்கில கட்டுரையை எழுதி முடித்தார். 1922இல் சிறையிலிருந்து விடுதலையான ஐயர் திருநெல்வேலி ஜில்லாவில் சேரன்மாதேவி எனுமிடத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஓர் ஆசிரமம் நிறுவினார். அதற்கு ‘பாரத்துவாஜ ஆசிரமம்’ என்று பெயர். மிக நன்றாக நடந்து வந்த இந்த ஆசிரமத்துக்கு வழக்கமான தமிழ்நாட்டு அரசியல் விளையாட்டால் ஒரு கெட்ட பெயர் வந்தது. ஆசிரமத்தில் அனைத்து ஜாதி குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான உணவும் சமபந்தி போஜனமும்தான் கொடுக்கப்பட்டது. ஆனால் புதிதாகச் சேர்ந்த சில பிராமண குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குத் தனியாக உணவு பரிமாற வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களுக்குத் தனியாக உணவளிக்க ஐயர் ஏற்பாடு செய்தார். ஆனால் ஐயர் மற்ற எல்லா குழந்தைகளோடும்தான் உணவு அருந்தினார். அவர் மட்டுமல்ல, அவர் பெண் மற்றும் மற்ற பிராமண குழந்தைகளும் அப்படியே. ஆனால் அவரைப் பிடித்த துரதிர்ஷ்டம், இப்படி சில பிராமண பிள்ளைகளின் பெற்றொர்கள் ஒரு நிபந்தனையாகக் கேட்டுக் கொண்டதற்கிணங்க தனி உணவு அளித்தது ஜாதிப் பிரச்சனையாக உருவெடுத்தது. அது பிரம்மாண்டமாக வளர்ந்தது. தமிழ்நாட்டு வழக்கப்படி, இங்கு ஜாதியை வைத்துத்தான் அரசியல், ஆகையால் ஐயர் மீது ஜாதி வெறியன் என்ற முலாம் பூசப்பட்டது. பூசிய தலைவர்கள் ஈ.வே.ராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராஜுலு நாயுடு போன்றோர். மகாத்மா காந்தி வரையில் இந்த பிரச்சனை எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் ஐயர் மிகவும் மனம் வருந்தி நொந்து போனார். இந்த நிலையில் 1925இல் ஜுன் மாதம் குருகுல குழந்தைகளோடு பாபநாசம் அருவிக்கு சுற்றுலா சென்ற போது, அவரது மகள் சுபத்ரா அருவியைக் கடக்க தாண்டியபோது அவளது தாவணி நீரில் பட்டு அவளை அருவிக்குள் இழுத்துக் கொண்டது. அவளைக் காப்பதற்காக அவளைத் தொடர்ந்து தண்ணீரில் பாய்ந்த ஐயரும் அருவிக்குள் போய்விட்டார். இருவரின் உடலும் கிடைக்கவில்லை. ஒரு மகத்தான வீரபுருஷனின் இறுதிக் காலம் அவலச்சுவையோடு முடிந்து போய்விட்டது. 45 குமராண்டிபாளையம் நாச்சியப்பன் மகாத்மா காந்தியடிகள் 1930க்குப் பிறகுதான் மதுவிலக்குக் கொள்கையை முன்வைத்து அகிம்சை வழியில் மறியல் முதலான போராட்டங்களை நடத்தினார். அதற்கு முந்தைய காலகட்டத்திலும் அன்றைய காங்கிரசார் மதுவிலக்கை ஓர் முக்கியமான கொள்கையாகக் கொண்டிருந்தனர். ஏழை எளிய உழைப்பாளர்கள் தங்கள் உழைப்பினால் கிடைத்த பணத்தையும், அதையும் மீறி, தங்கள் வீட்டுப் பெண்டு பிள்ளைகளின் நகைகளையும், ஏன்? தாலியையும் கூட விற்றுக் குடித்து அழிந்து போனதைத் தடுத்து நிறுத்த எண்ணம் கொண்டனர் தியாக பாரம்பரியத்தில் வந்த அன்றைய காங்கிரசார். இந்த காலகட்டத்திற்கு முன்னதாகவே தமிழகத்தில் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் ராஜாஜி ஆரம்பித்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் தங்கிக் கொண்டு ராஜாஜி மதுவிலக்குப் பிரச்சாரம் செய்து வந்தார். அதற்காகவே “விமோசனம்” எனும் ஒரு பத்திரிகையும் நடத்தப்பட்டது. அதன் ஆசிரியராக இருந்து பத்திரிகை துறைக்கு வந்தவர்தான் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி. அன்று ஆசிரம தொண்டர்கள் பலர் மாட்டு வண்டிகளில் மதுவினால் விளையும் கேட்டினை விளக்கும் விளம்பரத் தட்டிகளை வைத்துக் கொண்டு கிராமம் கிராமமாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர். திருச்செங்கோடு காந்தி ஆசிரிம தொண்டர்களின் பிரச்சாரத்தின் பயனாக பொதுவாக மக்கள் மதுவின் கேட்டினைப் புரிந்துகொண்டு சிறிது சிறிதாக அதனை விலக்கத் தொடங்கினர். திருச்செங்கோடு, ராசிபுரம், நாமக்கல் ஆகிய மூன்று தாலுக்காக்களிலும் மதுவிலக்குப் பிரச்சாரத்துக்குப் பரிபூரண வெற்றிகிடைத்தது. இந்த செய்தியைக் கேள்விப்பட்ட அன்றைய கலால் இலாகா இயக்குனராக இருந்த ஆங்கிலேயர் ஈ.பி.கார்ட்டர் என்பவர் நேரில் வந்து ஆய்வு செய்து இங்கெல்லாம் மதுவிலக்கு வெற்றிகரமாக நடைபெறுவதைக் கண்டு வியந்து திருச்செங்கோடு ஆசிரமத்தின் பார்வையாளர் புத்தகத்தில் பாராட்டி எழுதினார். பூரண மதுவிலக்கு ஏற்படுமானால், அடிமட்ட மக்களின் வாழ்க்கை மேம்படுவதோடு, அமைதியும், ஒழுக்கமும் மக்கள் மத்தில் நிலவும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். மகாத்மா காந்தியடிகள் இந்த மூன்று தாலுக்காக்களிலும் மதுவிலக்கு சட்டத்தினால் கொண்டுவரப்படாமல், தொண்டர்களின் சாத்வீக தொண்டினால் வெற்றி பெற்றுள்ளது என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அந்தப் பகுதிகளில் எங்காவது கள்ளுக்கடை திறந்திருப்பது தெரிந்தால் அவ்வூர் மக்களே சென்று அதனை மூடவைத்தனர். கள் இறக்கப்படாமலும் பார்த்துக் கொண்டனர். இதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிக ஆர்வம் காட்டினர். இந்த சூழ்நிலையில், எங்கும் எப்போதும் பலர் நேர்வழியில் சென்றால் யாராவது ஒருவர் குறுக்கு வழி தேடுவதை நாம் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட ஒருவன் கள்ளத் தனமாக சாராயம் காய்ச்சத் தொடங்கினான். இது 1930க்கு முந்தைய நிலை. இன்றைய நிலையை எண்ணிப் பார்க்காதீர்கள். ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு கள்ளச் சாராயமும், அரசாங்க சாராயமும் ஆறாக ஓடுவதை நாம் காணலாம். இந்தத் திருட்டுத் தனத்தை நாச்சியப்பன் எனும் ஒரு தேசபக்தன், காந்திய தொண்டன் போலீசுக்குத் தகவல் கொடுத்தான். குற்றவாளி கைதுசெய்யப்பட்டுத் தண்டிக்கப் பட்டான். அது அன்றைய நிலை. அவன் சிறைவாசம் முடிந்து ஊர் திரும்பியதும் முதல் வேலையாகத் தன்னைப் பற்றி போலீசுக்குத் தகவல் கொடுத்த குமராண்டிபாளையம் நாச்சியப்பனைத் தேடிப் பிடித்து அவனை அடித்துத் துன்புறுத்தி, அவன் இரண்டு கண்களிலும் பார்வை இழக்கச் செய்தபின் ஊரைவிட்டு ஓடிவிட்டான். பாவம் நாச்சியப்பன், கண்கள் குருடானான். நல்ல காரியம் செய்த பாவத்துக்காக! இந்தச் செய்தி திருச்செங்கோடு ஆசிரமத்தில் இருந்த ராஜாஜியை எட்டியது. அவர் உடனே நாச்சியனை ஆசிரமத்துக்கு அழைத்து வந்து அவனுக்கு சிகிச்சை அளிக்க உதவினார். அவன் கண்களின் புண்கள் குணமடைந்த பின் அவனுக்கு ராட்டையில் நூல் நூற்கக் கற்றுத் தந்தார். அவன் நூற்கும் நூலுக்கு மட்டும் மற்றவர் நூற்கும் நூலுக்குக் கொடுக்கும் தொகையைவிட இரட்டிப்பாக வழங்கி வந்தார். அப்போதெல்லாம் காங்கிரஸ் பொருட்காட்சி நடத்துவது வழக்கம். அங்கெல்லாம் இரு கண்கள் இல்லாத நாச்சியப்பன் நூல் நூற்பதை மக்களுக்குக் காட்டி, அவனது மேன்மையை விளக்கி வந்தார். அந்த நாச்சியப்பனுக்கு ஆசிரமம் ஓய்வு ஊதியம் வழங்கி எந்தக் குறையுமின்றி காப்பாற்றி வந்தது. திருச்செங்கோடு காந்தி ஆசிரமும் ராஜாஜியும் கண்களை இழந்த நாச்சியப்பனுக்கு ஆதரவாக இருந்து வந்தது போல, மேலும் பல தியாகிகளுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது. வாழ்க மதுவிலக்குக் கொள்கைக்காக தன்னிரு கண்களையிழந்த தியாகி நாச்சியப்பன் புகழ் வாழ்க! 46 மதுரை A.வைத்தியநாத ஐயர் மதுரை அளித்த தேசபக்தர்களில் ஏ.வைத்தியநாத ஐயர் குறிப்பிடத்தக்கவர். மகாத்மா காந்தி தமிழ்நாட்டு விஜயமொன்றின்போது குற்றால அருவிக்குச் சென்றுவிட்டு அங்கிருந்த குற்றாலநாத ஸ்வாமி ஆலயத்திற்குச் சென்றார். அங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை என்றறிந்து கோயிலுக்குச் சென்று வழிபடாமல் திரும்பிவிட்டார். பின்னர் மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயத்திலும் அதே போல நடந்தது. தமிழ்நாட்டில் என்று அனைவரும் சமமாகக் கோயிலில் அனுமதிக்கப்படுகிறார்களோ அதன்பிறகுதான் நான் கோயிலுக்குள் நுழைவேன் என்று சபதமேற்கொண்டார். 1936ல் தேர்தலில் வென்று ராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதமராக (அன்று முதல்வர் பதவிக்கு அப்படித்தான் பெயர்) பதவியேற்றுக் கொண்டபின் ஆலயப் பிரவேசச் சட்டம் கொண்டு வந்தார். எல்லா ஆலயங்களிலும் தாழ்த்தப்பட்டவர்களும் அனுமதிக்க போராட வேண்டியிருந்தது. மதுரையில் ஏ.வைத்தியநாத ஐயரிடம் மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயத்தில் ஆலயப்பிரவேசம் நடத்தும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அவரும் பல தொண்டர்களுடன், பின்னாளில் அமைச்சராக இருந்த மேலூர் திரு கக்கன் உட்பட பலர் தயாராக குளித்து, திருநீறணிந்த கோலத்தில் ஆலயத்திற்குள் நுழைய முற்பட்டபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்த சிலர் திட்டமிட்டிருந்தனர். இந்த செய்தி ராஜாஜிக்குத் தெரிந்து அவர் முதுகுளத்தூர் திரு முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் பார்த்துக் கொள்வார், நீங்கள் திட்டமிட்டபடி ஆலயப்பிரவேசம் செய்யுங்கள் என்று மதுரை வைத்தியநாத ஐயருக்கும் தெரிவித்து விட்டார். தொண்டர்கள் ஆலயத்துக்குள் நுழைய தயாரான சமயம், எதிர் தரப்பில் தடி, கம்பு, வேல், அரிவாள் முதலிய ஆயுதங்களுடன் மற்றோரு கூட்டம் இவர்களைத் தடுக்க தயாராக இருந்தது. அந்த நேரம் பார்த்து முதுகுளத்தூர் தேவரின் ஆட்கள் அங்கு வந்து இறங்குவதைப் பார்த்ததுதான் தாமதம், அதுவரை வரிந்துகட்டிக்கொண்டு தொடை தட்டியவர்கள் காணாமல் போய்விட்டனர். ஆலயப் பிரவேசம் வைத்தியநாத ஐயர் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதன் பின் மதுரை வந்த காந்தியடிகள் கோயிலுக்குச் சென்று வழிபட்டார் என்பதெல்லாம் வரலாற்றுச் செய்திகள். அந்த புகழ்வாய்ந்த ஆலயப்பிரவேச நிகழ்ச்சியின் நாயகன் இந்த ஏ.வைத்தியநாத ஐயர் அவர்கள். மதுரை ஏ.வைத்தியநாத ஐயர் மதுரையில் ஓர் புகழ் பெற்ற வழக்கறிஞர். காங்கிரஸ் இயக்கத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்தவர். இவருக்கு அந்நாளில் மதுரையில் ஏராளமான சீடர்கள், பலதரப்பட்டவர்கள். ராஜாஜியின் அத்தியந்த தோழர் இல்லையில்லை பக்தர். அந்நாளில் அப்பகுதி முழுவதிலும் ஹரிஜனங்கள் அனைவரும் இவரைத் தங்கள் தந்தைபோல எண்ணிப் போற்றி வந்தனர். இவரது குடும்பத்தில் ஒருவராகவும், தொண்டராகவும் இருந்தவர்களில் முதன்மையானவர் முன்னாள் தமிழ்நாடு அமைச்சர் திரு பி.கக்கன் அவர்கள். தோற்றத்தில் இவர் மிக ஆசாரசீலராக இருப்பார். பஞ்சகச்ச வேஷ்டி, கதர் ஜிப்பா, மடித்துத் தோள்மீது போட்ட கதர் துண்டு, நெற்றி நிறைய விபூதி, தலையில் உச்சிக்குடுமி, மெலிந்த உடல் இதுதான் அவரது தோற்றம். அனைவருக்கும் புரியும்படியான எளிய பேச்சு வழக்கில் இவர் பேச்சு அமைந்திருக்கும். இவர் வீடு தேசபக்தர்களுக்கு ஒரு சத்திரம். எப்போதும் இவர் வீட்டில் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். சிறைசென்றுவிட்ட காங்கிரஸ் தொண்டர்களின் குடும்பத்தினர் வந்தால் அவர்களுக்கு பண உதவி உடனே செய்வார். ராஜாஜி மதுரை வந்தால் இவர் வீட்டில்தான் தங்குவார். இவர்தான் இப்படியென்றால் இவரது மனைவி அகிலாண்டத்தம்மாள் அதற்கும் மேல். இவர் பிறந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த விஷ்ணம்பேட்டை. கொள்ளிடக்கரை ஊர். தந்தயார் அருணாசலம் அய்யர், தாயார் லட்சுமி அம்மாள். வைத்தியநாதய்யர் இவர்களது இரண்டாவது மகன். அருணாசலம் ஐயர் புதுக்கோட்டை மகாராஜா பள்ளியில் கணக்கு ஆசிரியராக இருந்தார். அங்கிருந்து அனைவரும் மதுரையில் குடியேறினர். இவர் மதுரையில் பாரதியார் ஆசிரியராக சிறிது காலம் இருந்த சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பள்ளி இறுதி வகுப்பில் தங்கப்பதக்கம் வென்றார். அரசாங்க உதவித்தொகை கிடைத்தது, அதில் மேற்கல்வி பயின்றார். மதுரையிலும், பின்னர் மாநிலக் கல்லூரியிலும் படித்துத் தேறினார். அப்போது சென்னையில் விபின் சந்திர பால் வந்து கடற்கரையில் பொதுக்கூட்டத்தில் பேசினார். அதில் மனம் ஈடுபட்டு இவர் தேசபக்தர் ஆனார். இவருக்கு சுந்தரராஜன், சங்கரன், சதாசிவம் என்ற மூன்று குமாரர்கள். சுலோசனா, சாவித்திரி எனும் இரண்டு புதல்விகள். மதுரைக்கு வந்த பெருந்தலைவர் சி.ஆர்.தாஸ் அவர்களை வைத்தியநாதய்யர் சந்தித்தார். அவர் அறிவுரைப்படி வக்கீல் தொழிலை விடாமல், அதன் மூலம் பலருக்கு உதவி செய்து கொண்டும், நாட்டுப்பணியாற்றிக்கொண்டும் இருந்தார். பல தேசிய தலைவர்கள் சிறையிலிருந்து வெளிவரும்போது அவர்களை எதிர்கொண்டு வரவேற்கும் நல்ல பணியைச் செய்து வந்தார். ஜார்ஜ் ஜோசப், துர்க்காபாய் போன்றவர்களை இவர்தான் வரவேற்றுத் தன் இல்லம் அழைத்து வந்தார். மதுரையில் ஏற்படும் வெள்ளம், தீ விபத்து காலங்களில் இவர் ஓடிச்சென்று உதவி ஏற்பாடுகளைச் செய்து வந்தார். கருப்பையா பாரதி எனும் தொண்டர் கொலை செய்யப்பட்ட போது அவரது குடும்பத்துக்கு நிதி வசூல் செய்து உதவி செய்தார். 1946இல் வைகை நதியின் வடகரையில் திராவிடக் கழக மகாநாடு நடைபெற்றது. சில தி.க.தொண்டர்கள் மீனாக்ஷி அம்மன் கோயிலுக்குச் சென்று அங்கு கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அங்கிருந்த பக்தர்கள் அவர்களைத் துரத்திக் கொண்டு போய் மகாநாட்டு பந்தல் வரை விட்டனர். மகாநாட்டு பந்தலும் தீயில் எரிந்தது. அப்போது ஷெனாய் நகரில் ஈ.வே.ரா தங்கியிருந்த வீட்டைச் சுற்றியும் கூட்டம் கூடியது. போலீசும் தடுமாறியது. தகவல் அறிந்த அய்யர் அங்கு விரைந்து சென்று நடுவில் நின்று பொதுமக்களைத் தடுத்து நிறுத்தி அமைதிப்படுத்தினார். பெரியாரையும் அவரது தொண்டர்களையும் பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். (தகவல்: திரு ஐ.மாயாண்டி பாரதி – நூல்: “விடுதலை வேள்வியில் தமிழகம்”) இவர் 1947-52 இல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1947இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. அப்போது ஒரு ரயில்வே ஸ்ட்ரைக் நடந்தது. தலைமறைவாக இருந்த பி.ராமமூர்த்தி மதுரையிலிருந்து சென்னைக்கு ஒரு முக்கிய வேலையாகச் செல்ல வேண்டி இருந்தது. பி.ஆர். வைத்தியநாத அய்யரை அணுகினார். சென்னைக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டார். எதிர் கட்சியைச் சேர்ந்தவர், ஒரு கம்யூனிஸ்ட் இருந்தாலும் சரியென்று இவரைத் தன் காரில் ஏற்றிக்கொண்டு சென்றார். வழியில் போலீஸ் வண்டியை நிறுத்தியபோது, பி.ஆர்.அடியில் படுத்துக் கொண்டார், ஐயர், “நான் எம்.எல்.ஏ. அவசரமாக செல்கிறேன்” என்று சொல்லவும் வழிவிட்டனர். பி.ராமமூர்த்தியும் தலை தப்பினார். இவர் 1946இல் மதுரையில் மூளவிருந்த மதக் கலவரத்தையும் லாவகமாக தடுத்து நிறுத்தினார். 1930இல் ராஜாஜி தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் பல தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரையிலிருந்து ஐயர் தலைமையில் ஒரு படை வேதாரண்யம் சென்று உப்பு எடுத்தது. அங்கு புளிய மிளாறினால் அடி வாங்கி சிறையிலும் அடைக்கப்பட்டார். 1932இல் சட்ட மறுப்பு இயக்கத்துக்காக சட்டத்தை மீறி பேசிய குற்றத்துக்காக ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது இவர் பாதுகாப்புக் கைதியாக சிறை பிடிக்கப்பட்டு கொண்டுபோகப்பட்டார். தீண்டாமை ஒழிப்புக்காக இவர் நடத்திய ஆலயப் பிரவேசம் குறித்து இக்கட்டுரையின் முதலில் கூறியபடி, இவர் என்.எம்.ஆர்.சுப்பராமன், டாக்டர் ஜி.ராமச்சந்திரன், நாவலர் சோமசுந்தர பாரதி, முனகலா பட்டாபிராமையா, சிவராமகிருஷ்ணய்யர், சோழவந்தான் சின்னச்சாமி பிள்ளை, மட்டப்பாறை வெங்கட்டராமையர் ஆகியோருடன் ஐ.மாயாண்டி பாரதி போன்ற மாணவர்களோடும் சேர்ந்து ஆலயப் பிரவேசப் பிரச்சாரம் மேற்கொண்டார். இவரது அரிஜன சேவையும், தீண்டாமை ஒழிப்பும் அவரது இறுதிக் காலம் தொடர்ந்தது. 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்தில் சிறைப்பட்டபோது இவர் அபராதம் செலுத்த மறுத்ததால் இவரது கார் ஏலம் விடப்பட்டது. ஆனால் மதுரையில் இவரது காரை ஏலத்தில் எடுக்க எவருமே முன்வரவில்லை. இவரது குடும்பமே நாட்டுக்காகச் சிறை சென்ற குடும்பம். மகன் வை.சங்கரன் ஆறு மாதம் அலிப்பூர் சிறையில் இருந்தார். அய்யரின் தம்பியும் சிறை சென்றார். மனைவி அகிலாண்டத்தம்மாள், கக்கன் அவர்கள் தன் தாயாகக் கருதிய இவரும் சிறை சென்றார். தியாகசீலர் மதுரை ஏ.வைத்தியநாதையர் பற்றி பார்த்தோம். இவர் மட்டுமல்ல, இவரது மனைவி திருமதி அகிலாண்டத்தம்மாள், மகன் ஏ.வி.சங்கரன் ஆகியோரும் நாட்டுக்காகச் சிறை சென்ற தியாகிகளாவர். குடும்பத்தார் மட்டுமா? இல்லை, குடும்பத்தில் ஒருவராக இருந்து மதுரை ஏ.வி.ஐயரின் குடும்பப் பொறுப்புக்களையெல்லாம் கவனித்து வந்த வளர்ப்பு மகன் தியாகசீலர் பூ.கக்கன் அவர்களும் ஒரு சிறைசென்ற தியாகி. இப்படி இவரும் இவரோடு சேர்ந்தவர்களும் நாட்டுக்காக உழைத்தவர்கள்.இவர் 1955ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி மதுரையில் காலமானார். மதுரை ஏ.வைத்தியநாத ஐயரின் மனைவி திருமதி அகிலாண்டத்தம்மாள் 1899இல் பிறந்தவர். மதுரைக்கு இவர் வீட்டுக்கு வரும் தொண்டர்களுக்கெல்லாம் அலுப்பு சலிப்பு இல்லாமல் மலர்ந்து இன்முகத்தோடு உபசரித்து உணவு வழங்கியவர் இவர். இவரை ‘அன்னபூரணி’ என்றே தொண்டர்கள் எல்லாம் புகழ்ந்து பேசுவார்கள். அன்றைய தொண்டர்கள் மதுரைக்கு வந்த எவரும் இவர் கையால் உணவருந்தாமல் போனதில்லை. இவர் 1932 மற்றும் 1933ஆம் ஆண்டுகளில் மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று மறியல் போராட்டங்களில் கலந்து கொண்டு 2 மாத சிறை தண்டனையும், 1941இல் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் 3 மாத சிறைதண்டனையும் விதிக்கப்பட்டார். இவர் மதுரை, வேலூர் ஆகிய சிறைகளில் இருந்திருக்கிறார். ஐயருக்குச் சிறந்த மனைவியாகவும், காங்கிரஸ் இயக்கத்துக்கு ஒரு ஊக்கமுள்ள தொண்டராகவும், காங்கிரஸ் தொண்டர்களுக்கெல்லாம் உணவு அளித்து அன்னபூரணியாகவும் திகழ்ந்தார். இவர்களது குமாரர்தான் பிரபல வழக்கறிஞர் ஏ.வி.சங்கரன், எம்.ஏ.,பி.எல். இவர் 1942இல் சென்னை சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது மகாத்மா காந்தி ஆகாகான் அரண்மனையில் உண்ணாவிரதம் இருக்கிறார் என்ற செய்தி கேட்டுத் தானும் உண்ணாவிரதம் இருந்து, மறியலிலும் ஈடுபட்டார். இவர் மறியல் செய்தமைக்காக அன்றைய இந்திய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் 6 மாத காலம் தண்டனை விதிக்கப்பட்டார். இவர் ஒருமுறை திருச்சி தேவர் அரங்கத்தில் நடந்த எம்.ஆர்.ராதாவின் கீமாயணம் நாடகம் பார்க்கப் போயிருந்தார். அந்த நாடகத்தில் எம்.ஆர்.ராதா ராமனை இழிவு படுத்தியும், சீதையைப் பற்றிக் கொச்சையாகப் பேசியும் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது எழுந்து சங்கரன், நீங்கள் சொல்லும் இந்த ‘கீமாயண’க் கதைக்கான விஷயங்கள் எந்த நூலில் இருக்கிறது. இவற்றுக்கு ஏதேனும் ஆதாரங்கள் உண்டா என்று கேள்வி எழுப்பினார். திராவிட இயக்க நிகழ்ச்சிகளில் இதுபோன்ற நியாயமான கேள்விகளை யாராவது கேட்டால் என்ன ஆகுமோ அது அன்று சங்கரனுக்கு ஆயிற்று. இது நமது சுதந்திர இந்தியாவில் எல்லா உரிமைகளும் பெற்றிருந்த நேரத்தில், அரசாங்கத்தால் அல்ல குடிமக்களில் ஒரு பகுதியினரால் வழங்கப்பட்ட தீர்ப்பு. எனினும் மதுரை ஏ.வி.ஐயர் குடும்பம் ஒரு தியாகக் குடும்பம். வாழ்க அவர்களது புகழ்! வாழ்க தியாக வைத்தியநாத அய்யரின் புகழ்! 47 மதுரை என்.எம்.ஆர். சுப்பராமன் மதுரை மாநகர் அளித்த தேசபக்தர்களில் என்.எம்.ஆர்.சுப்பராமன் முக்கியமானவர். மதுரை மக்கள்தொகையில் அன்று நாலில் ஒரு பங்கு இருந்த செளராஷ்டிர சமூகத்தில் 1905 ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியில் இவர் பிறந்தார். இவரது தந்தை நாட்டாண்மை ராயலு ஐயர், தாய் காவேரி அம்மாள். இவருடைய குடும்பம் நல்ல செல்வ செழிப்புள்ள குடும்பம். இவரது இளம் வயதில் விளையாட்டுக்களில் குறிப்பாக கால்பந்தாட்டம், நீச்சல், மலையேற்றம் போன்றவற்றில் ஆர்வமுள்ளவர். படிப்பில் கேட்கவே வேண்டாம். நல்ல திறமைசாலி. இளம் வயதிலேயே முத்துராமையர் என்பவருடைய பெண்ணான பர்வதவர்த்தினியோடு இவருக்குத் திருமணம் ஆயிற்று. படிக்கும் பருவத்திலேயே காந்தியடிகளுடைய பத்திரிகைகளைப் படித்து இவர் தேசபக்தி கொண்டார். காந்திஜியின் போராட்டங்கள் இவரைக் கவர்ந்தன. ரெளலட் சட்ட எதிர்ப்பு, ஜாலியன்வாலாபாக் படுகொலை இவைகள் இவரது மனதை மிகவும் பாதித்தன. இதனால் 1923இல் இவர் ராமேஸ்வரம் சென்று ராமநாதஸ்வாமி தரிசனம் செய்தபின் தூய கதராடை அணிந்து வந்தார். அதுமுதல் கடைசி வரை கதராடை அணிவதே அவர் வழக்கம். காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டார். இவர் இயக்கத்தில் சேர்ந்த பின் முதன்முதலாக சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இவர் பங்குகொண்ட முதல் போராட்டம். இதில் ஜார்ஜ் ஜோசப், பசும்பொன் தேவர், காமராஜ் ஆகியோருடன் சேர்ந்து போராட வாய்ப்புக் கிடைத்தது. 1930இல் இவர் மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். அதே ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழ்நாடு காங்கிரசின் மகாநாடு மதுரையில் நடந்தது. இம்மாநாட்டுக்கு என்.எம்.ஆர்.தான் தலைமை வகித்தார். மதுரை கோரிப்பாளையத்தில் இன்று இராஜாஜி அரசு மருத்துவமனை இருக்கும் இடம் அன்று அடர்ந்த காடாக இருந்தது.வைகை ஆற்றின் கரைவரை ஒரே காடுதான். அந்தப் பகுதிகளில் ஓலைக் குடிசைகளில் பல கள்ளுக்கடைகள் இருந்தன. 1930 ஜூலை 30 அன்று அங்கு கள்ளுக்கடை மறியல் நடந்தது. மறியல் அகிம்சை வழியில் நடந்தது. அந்தக் குடிசைகளுக்குக் கள் குடிக்க வருபவர்களை கையெடுத்துக் கும்பிட்டு தொண்டர்கள் “வேண்டாம் ஐயா! கள் குடிக்காதீர்கள்” என்று கேட்டுக் கொண்டார்கள். அங்கு வந்த குடிகாரர்களில் சிலர் பதில் சொல்லாமல் சென்றனர், சிலர் இவர்களைப் பிடித்துத் தள்ளிவிட்டுச் சென்றனர், சிலர் இவர்கள் மீது எச்சிலை உமிழ்ந்தனர். அப்படியும் மிகப் பொறுமையோடு சத்தியாக்கிரகிகள் வேண்டுகோள் விடுத்த வண்ணம் நின்றனர். அந்த நிலையில் திடீரென்று போலீஸார் வேனில் வந்து இறங்கி இவர்களைத் தடிகொண்டு தாக்கத் தொடங்கினர். சுற்றிலும் கூட்டம் கூடிநின்றது. அவர்களில் சிலர் போலீசார் மீது கற்களை வீசினர். கள்ளுக்கடைகளுக்கு தீவைக்கவும் செய்தனர். போலீஸ் கண்மண் தெரியாமல் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ஏழு பேர் இறந்தனர், கூட்டத்திலிருந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர். மறுநால் போலீசாரின் அத்துமீறிய நடவடிக்கைகளைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஒரு பெரிய கண்டன ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து கள்ளுக்கடை மறியல் தன் தலைமையில் நடைபெறும் என்று என்.எம்.ஆர். அறிவித்தார். காங்கிரஸ் தொண்டர் இப்ராஹிம் என்பவர் தமுக்கு அடித்து ஊருக்கு இந்த செய்தியைத் தெரிவித்தார். மறுநாளும் வந்தது. கள்ளுக்கடை மறியல் தொடங்கியது. மக்கட்கூட்டம் பெருக்கெடுத்து வந்தது. மாசிவீதி வழியாக ஊர்வலம் புறப்பட்டது. இது நடைபெறாமல் தடுக்க, போலீசார் என்.எம்.ஆர். உட்பட பல தொண்டர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டது. இவர் மீது தீ வைத்தல், கொள்ளை அடித்தல் போன்ற பல கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்கில் இவருக்கு ஓராண்டு சிறையும் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த சிறையில் ஏற்கனவே அவினாசிலிங்கம் செட்டியாரும் இருந்தார். அங்கு இவர்கள் இருவரும் சிறைக்கைதிகளுக்கு திருக்குறள், பகவான் இராமகிருஷ்ணர் வரலாறு போன்றவற்றை போதிக்கலாயினர். கணவர் சிறை சென்ற பிறகு என்.எம்.ஆரின் மனைவி சும்மாயிருப்பாரா? அவரும் மகளிர் அணியைச் சேர்த்துக் கொண்டு அன்னியத் துணிக்கடைகளை மறியல் செய்து சிறைப்பட்டு ஆறு மாத கால தண்டனை பெற்றார். 1934இல் மதுரை வந்த காந்தியடிகள் என்.எம்.ஆர் வீட்டில் தங்கினார். அவருக்கு என்.எம்.ஆர். ஒரு திருக்குறள் நூலைப் பரிசாக அளித்தார். காந்திஜி இவரை வாழ்த்தினார். அதுவரை பிரம்மச்சரிய விரதம் இருந்த என்.எம்.ஆரின் மனதை மாற்றி குடும்ப வாழ்க்கைக்கு ஊக்குவித்தார். காந்திஜி மட்டுமல்ல 1935இல் பாபு ராஜேந்திர பிரசாத், 1936இல் ஜவஹர்லால் நேரு இவர்களும் தங்கள் தமிழக விஜயத்தின் போது மதுரையில் என்.எம்.ஆர். இல்லத்தில்தான் தங்கினார்கள். இந்த காலகட்டத்தில் தென்னக கோயில்களில் ஹரிஜனங்கள் ஆலயங்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற செய்தி கேட்டு காந்திஜி மிகவும் வருந்தினார். அவர்களுக்குத் திறக்காக கோயில்களுக்க்த் தானும் போவதில்லை என்ற விரதம் மேற்கொண்டார். பல கோயில்கள் அனைவருக்கும் கோயில் கதவுகளைத் திறந்து விட்டன. 1938ஆம் ஆண்டி ஜூன் மாதம் மதுரை காங்கிரஸ், ஹரிஜன் ஆலயப் பிரவெச்ச மாநாடு நடத்தியது. தொடர்ந்து மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயத்தில் ஹரிஜன ஆலயப் பிரவேசம் நடந்தேறியது, பலத்த எதிர்ப்புக்கிடையில். எனினும் ராஜாஜியின் ராஜதந்திரமும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வீரமும் ஆலயப் பிரவேசம் நன்கு நடக்க துறைபுரிந்தது. 1942இல் மதுரையில் “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தில் தடைமீறி ஊர்வலம் நடந்தது. மதுரை ஏ.வைத்தியநாத ஐயர் தலைமை வகித்தார். ஏ.வி. உட்பட பல தொண்டர்கள் பாதுகாப்புக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். மூன்று நாட்கள் கழித்து என்.எம்.ஆர். கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து மதுரையில் கடையடைப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. மீண்டும் போலீஸ் தடியடி, கலகம். 1942 புரட்சியில் என்.எம்.ஆர். திருச்சி, வேலூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் சிறை வைக்கப்பட்டார். இவர் மதுரை நகராட்சித் தலைவராகவும், சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும், டில்லி பாராளுமன்ற உறுப்பினராகவும் பணிபுரிந்திருக்கிறார். இரண்டாம் உலகப் போருக்கு மதுரையில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதை இவர் கடுமையாக எதிர்த்தார். மதுரை நகருக்குட்பட்ட பகுதிகளுக்கு மக்களுக்க நல்ல பல வசதிகளைச் செய்து கொடுத்தார். இவர் தன் வாழ்நாளில் செய்த பல தொண்டுகளைப் பட்டியலிட்டால், அது மிகப் பெரிய நூலாக இருக்கும். இவர் வாழ்வின் கடைசி வரை காந்தியடிகளின் தொண்டராகவே வாழ்ந்தார். இறுதி நாட்களில் நாடு செல்லும் அவலம் குறித்தும், தனது தியாகங்கள் அவமதிக்கப்பட்ட அவமதிப்பு உணர்வாலும் துவண்டு போய், 1983 ஜனவரி 25 அன்று அமரர் ஆனார். வாழ்க தமிழ்நாட்டு காந்தி என்.எம்.ஆர்.சுப்பராமன் புகழ்! 48 சேலம் A.சுப்பிரமணியம் இந்திய சுதந்திரப் போராட்டம் பல்வேறு கட்டங்களாகப் பிரிந்து நடந்தன. 1885 முதல் 1906 வரையிலான காங்கிரஸ் வரலாறு பிரிட்டிஷ் அரசுக்கு மனுச்செய்து, வேண்டுகோள் விடுத்து, காங்கிரஸ் மாநாடுகளுக்கு பிரிட்டிஷ் வைஸ்ராய், கவர்னர்கள் ஆகியோரை அழைத்து கெளரவித்து நடத்தப்பட்டன. 1906க்குப் பிறகு பால கங்காதர திலகரின் காலம்தான் முதன் முதலாக பரிபூர்ண சுதந்திர பிரகடனம் வெளியிடப்பட்ட காலம். ‘சுதந்திரம் என் பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்’ என்பது திலகரின் குறிக்கோள். அவரது சீடர்களாக தமிழகத்தில் பலர் இருந்தனர். கப்பலோட்டிய தமிழன் என்று போற்றப்பட்ட வ.உ.சிதம்பரம் பிள்ளை, மகாகவி பாரதி, சுப்பிரமணிய சிவா ஆகியோர் திலகரின் தொண்டர்கள். அவரது மறைவுக்குப் பின் காந்தி சகாப்தம் தொடங்கியது. அவரது காலத்தில் 1919இல் பிரிட்டிஷ் அரசாங்கம் ‘ரெளலட் சட்டம்’ எனும் ஓர் அடக்குமுறைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தியாவில் சுதந்திரம் என்று வாயைத் திறப்போர்க்கு கடுமையான தண்டனைகளைப் பெற்றுத் தர கொண்டுவரப்பட்ட சட்டம் இந்த ரெளலட் சட்டம். இந்த அராஜக சட்டத்தை எதிர்த்து காந்திஜி குரல் கொடுத்தார். நாடு முழுவதும் எதிர்ப்பு ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் என்று எங்கும் அமளி ஏற்பட்டது. பிரிட்டிஷ் அரசின் அராஜகத்தை எதிர்த்து அங்கெல்லாம் குரல் எழுப்பப்பட்டது. நாடு முழுவதும் நடந்த ரெளலட் சட்ட எதிர்ப்பு சேலம் நகரிலும் நடந்தது. அதற்காக சேலத்தில் நடந்த ஒரு ஊர்வலத்துக்கு பூபதி என்பவர் தலைமை தாங்கி நடத்திச் சென்றார். அப்போது சேலத்தில் பள்ளிக்கூடமொன்றில் படித்து வந்த ஏ.சுப்பிரமணியம் எனும் சிறுவன் இந்த ஊர்வலம் குறித்து வீதி வீதியாகச்சென்று மக்களுக்கு அறிவித்து ஊர்வலம் வெற்றி பெற உழைத்தான். மாணவப் பருவத்தில் தொடங்கிய சுப்பிரமணியனின் தேசபக்தி நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. சேலத்துக்கு வந்து பேசும் பெரும் தலைவர்கள் கூட்டத்துக்கெல்லாம் சென்று அவர்கள் சொற்பொழிவைக் கேட்டு தேசாவேசம் கொள்ளலானான். ஒவ்வொரு கூட்டத்திலும் முன்னால் நின்று “வந்தேமாதரம்” “பாரதமாதாகி ஜே” என்று கோஷமிடுவார். இப்படி தேச சேவையில் ஈடுபட்டிருந்தாலும் காந்திஜியின் கொள்கைகளைக் காட்டிலும் வன்முறை வழியே இவருக்குச் சரி என்று தோன்றியது. மயிலே மயிலே இறகு போடு என்றால் போடுமா? அடி மேல் அடி அடித்தால் அம்மியும் அசையும் என்பது இவரது கருத்து. 1922ஆம் ஆண்டு. இங்கிலாந்தின் இளவரசர் இந்தியாவுக்கு விஜயம் செய்தார். சென்னைக்கும் அவரது பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரது வருகையை எதிர்த்து காங்கிரஸின் பெரும் தலைவராக இருந்த ஆந்திர கேசரி டி.பிரகாசம் தலைமையில் ஓர் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதில் ஏ.சுப்பிரமணியமும் கலந்து கொண்டார். அப்போது போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான தடியடியில் இவருக்கு அடிபட்டு தலை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது. காயம் ஆற பலநாள் ஆனபோதும், இவரது வஞ்சம் நாளுக்கு நாள் வளர்ந்தது. மகாத்மா காந்தி 1927இல் தமிழகத்துக்கு விஜயம் செய்தார். அவரது விஜயத்தின் போது இளைஞர்கள், மாணவர்கள் அவரைச் சந்தித்து உரையாடினர். அப்போது இவர் காந்திஜியிடம் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார். காந்திஜியின் வழிமுறைகள் இவருக்குச் சரியாகப் படவில்லை. இப்படியெல்லாம் போராடினாலா வெள்ளையன் இந்த நாட்டைவிட்டுப் போவான். ஆனால் இந்த வீரமிக்க இளைஞர்களின் கோபத்தீயைத் தன் அறிவார்ந்த உரைகளால் காந்திஜி சமப்படுத்தி, அவர்களையும் காந்திஜியின் அகிம்சை வழிக்குக் கொண்டு வந்தார். ஏ.சுப்பிரமணியமும் காந்தியத்தில் நம்பிக்கைக் கொண்டவராக மாறினார். 1930 மார்ச்சில் மகாத்மா காந்தி சபர்மதியிலிருந்து தண்டி வரை உப்பு சத்தியாக்கிரக யாத்திரை தொடங்கினார். தெற்கே அவரது மனச்சாட்சியாக விளங்கிய ராஜாஜி இங்குமொன்று உப்பு சத்தியாக்கிரக யாத்திரையை திருச்சியிலிருந்து தொடங்கி வேதாரண்யத்தில் முடித்தார். இந்த சென்னை ராஜதானியின் தலைநகரில் நடக்காமல் எங்கோ தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த இந்தப் போர் போலவே, சென்னையின் முக்கியப் பகுதியிலும் ஓர் உப்பு சத்தியாக்கிரகத்தை துர்க்காபாய் தேஷ்முக் தலைமையில் தொடங்கப்பட்டது. காங்கிரஸ் தொண்டர்கள் சென்னை கோட்டையின் முன் உப்பு காய்ச்சுவதற்காக அணிவகுத்துச் செல்லலாயினர். அதில் ஏ.சுப்பிரமணியமும் தொண்டர்களில் வழிநடத்திச் செல்லும் தலைவராகச் சென்றார். இந்த ஊர்வலம் போலீசாரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டது. அடித்து, உதைத்து, கண்மண் தெரியாமல் துகைத்து, இவர்களை நாயை இழுத்துச் செல்வது போல இழுத்துச் சென்ற கொடுமை நடந்தது. 40க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பலத்த காயமடைந்தனர். தியாகி ஜமதக்கினி நாயக்கர், திருவேங்கட நாயக்கர், திருவாங்கூர் தம்பி, சேலம் ஏ.சுப்பிரமணியம் ஆகியவர்கல் சுயநினைவு இழந்து கிடந்தனர். அடிபட்ட தியாகிகளை துர்க்காபாய் தேஷ்முக் தனது வேனில் ஏற்றிக்கொண்டு சென்று டாக்டர் ராமாராவ் மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். உடல் நலம் தேறியதும் சேலம் சென்று, மீண்டும் சென்னை வந்து சூளையில் நடந்த மறியலில் கலந்து கொண்டு ஒரு வருடம் சிறைவாசம் அனுபவித்தார். மதுவிலக்குப் பிரச்சாரம் செய்து வந்த இவர் மீது கள்ளுக்கடை முதலாளிகளுக்குக் காண்டு. இவரை எப்படியும் ஒழித்துவிட வேண்டுமென்று சமயம் பார்த்திருந்தனர். ஒரு நாள் இவர் ஏமாந்த சமயம் இவரை அடியாட்கள் கண்மண் தெரியாமல் அடித்துக் கொண்டு போய் ஒரு சோளக்காட்டில் போட்டுவிட்டுப் போய்விட்டனர். இவரது சேவை தேவை என்றோ என்னவோ, பாரதமாதா இவரைக் காப்பாற்றி உயிர் பிழைக்கச் செய்து விட்டாள். இது போதாதென்று இவர் மீது பொய்வழக்கு ஒன்று போட்டு இவரை மீண்டும் ஓராண்டு சிறைக்கு அனுப்பினர் ஆட்சியாளர்கள். 1940இல் காந்திஜி தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டம் அறிவித்தார். இவர் சேலத்தை விட்டு தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோயிலூருக்குச் சென்று அங்கு சத்தியாக்கிரகம் செய்து சிறைப்பட்டார். இப்போது அவருக்குக் கிடைத்த தண்டனை 16 மாத கடுங்காவல் சிறை. இவர் பலமுறை சிறை சென்று நாட்டுக்காக உழைத்து, சர்வோதயத் திட்டத்தால் கவரப்பட்டு, ஏழை எளியவர்களுக்காகப் பாடுபட்டுத் தன் வாழ்நாளை அமைத்துக் கொண்டார். சுதந்திரத்தின் பலனையோ, பதவி, பகட்டு, பவிஷுகளையோ பெறாத இவர், எந்த எதிர்பார்ப்புமின்றி சாதாரண காந்தியத் தொண்டனாகவே வாழ்ந்து வந்தார். வாழ்க ஏ.சுப்பிரமணியம் புகழ்! 49 ஐ. மாயாண்டி பாரதி மதுரை நாட்டுக்களித்த தியாகசீலர்கள் அனேகரில் ஐ.மாயாண்டி பாரதி முக்கியமானவர். சுதந்திரப் போரில் மதுரையின் பங்களிப்பு மிகச் சிறப்பானது என்பதை என்றும் மறக்க முடியாது. அது போலவே சுதந்திரப் பொன்விழா ஆண்டில் மதுரை தியாகிகள் மலரை தியாகி ந.சோமையாஜுலு அவர்கள் மிகச் சிறப்பாக வெளிக் கொண்டுவந்திருக்கிறார். இதில் மிக நுணுக்கமாக அனைத்து தாலுகாக்களிலும் இருந்த தியாகிகள் பலரது வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறார். அவர்களில் ஐ.மாயாண்டி பாரதியின் வரலாறும் ஒன்று. இவர் 1917ஆம் ஆண்டில் பிறந்தார். தந்தையார் கு.இருளப்ப ஆசாரி. பின்னாளில் கம்யூனிச இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டைவர் பல்வேறு போராட்டங்களிலும் கலந்து கொண்டார். முதன் முதலாக 1931இல் கள்ளுக்கடை மறியலில் இவர் தனது போராட்டக் களத்தை அமைத்துக் கொண்டார். அதற்கு அடுத்த ஆண்டில் 1932இல் சட்டமறுப்பு இயக்கத்தின் போது, போராட்டத்தைப் பற்றி விளக்கும் துண்டுப் பிரசுரங்களை இவர் விநியோகித்தார்; சுவர்களில் சுவரொட்டிகளை ஒட்டி விளம்பரப் படுத்தினார். அது தவிர சுதந்திரப் போராட்டத்தை ஆதரிக்கும் சுதந்திரச் சங்கு போன்ற பத்திரிகைகளை கூவிக் கூவி விற்றார். ராஜாஜி கொண்டு வந்த ஆலயப் பிரவேசச் சட்டத்தையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் மதுரை ஏ.வைத்தியநாத ஐயர் தலைமையில் நடந்த ஆலயப் பிரவேசத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தார். 1935இல் ஜவஹர் வாலிபர் சங்கம் எனும் ஓர் இயக்கத்தைத் தொடங்கி இளைஞர்களை ஒன்று திரட்டி தேச சேவையில் ஈடுபடுத்தினார். வாசக சாலைகளை உருவாக்கி அங்கெல்லாம் மக்கள் சுதந்திரப் போர் செய்திகளைப் படிக்கும்படி வகை செய்தார். இவர் ஒரு எழுத்தாளர்; இலக்கியவாதி. திரு வி.கலியாணசுந்தரனார் நடத்திய “நவசக்தி” பத்திரிகையிலும், மகாகவி பாரதியாரின் சீடர் பரலி சு.நெல்லையப்பப் பிள்ளையின் “லோகோபகாரி”யிலும் இவர் துணை ஆசிரியராக இருந்து பணியாற்றினார். மேலும் பல சிறு பத்திரிகைகளிலும் எழுதி சுதந்திரத் தீயை எங்கும் பரப்பினார். இவரது எழுத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போர்க்குரல் உரக்க எழும். ஆட்சியாளர்களுக்கு இவரது எழுத்து சிம்ம சொப்பனமாக விளங்கியது. இந்திய கம்யூனிச இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் எம்.என்.ராயை மதுரைக்கு வரவழைத்து மாநாடு நடத்தி அதில் பெரிய தலைவர்களைப் பேச வைத்தார். 1940இல் இரண்டாம் உலக யுத்தம் உச்ச கட்டத்தில் இருந்தபோது யுத்த எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பிக் கைதானார். இதில் இவருக்குக் கிடைத்தது 7 மாத கடுங்காவல் தண்டனை. இந்திய பாதுகாப்புச் சட்டப்படி இவர் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைந்து கிடந்தார். வேலூர், தஞ்சாவூர், பாளையங்கோட்டை ஆகிய சிறைகளில் இவரது சிறை வாழ்க்கைக் கழிந்தது. அடிப்படையில் பொதுவுடமை கருத்துக்களில் மனம் ஈடுபட்ட இவர் முழுநேர கம்யூனிஸ்டாக மாறினார். சிறையிலிருந்து விடுதலையான பிறகு வெளியே வந்து அப்போது கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வந்த ஜீவாவை ஆசிரியராகக் கொண்ட “ஜனசக்தியில்” வேலைக்கு அமர்ந்தார். அதில் இவர் சுமார் 20 ஆண்டுகள் உதவி ஆசிரியராக இருந்து அனல் கக்கும் கம்யூனிச பிரச்சாரத்தை மேற்கொண்டார். 1950இல் இவர் ஒரு சதிவழக்கொன்றில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்றார். சுதந்திர இந்தியாவிலும் சிறைவாசம் அனுபவித்த ஒருசில தேசபக்தர்களில் ஐ.மாயாண்டி பாரதியும் ஒருவர். 1952இல் ராஜாஜி தலைமையில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் அமைச்சரவை அமைந்தது. அப்போது 1953இல் மாயாண்டி பாரதி விடுதலை செய்யப்பட்டார். 1962இல் சீன ஆக்கிரமிப்புக்குப் பிறகு இந்தியாவில் கம்யூனிச இயக்கம் இரண்டாகப் பிளவு பட்டது. சீன ஆதரவு நிலை எடுத்த இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியில் (மார்க்சிஸ்ட் கட்சி) இவர் அங்கம் வகித்தார். அந்த கட்சி நடத்திய “தீக்கதிர்” எனும் பத்திரிகையில் உதவி ஆசிரியராக அமர்ந்தார். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்து கொண்டே இவர், அனைத்துக் கட்சி சுதந்திரப் போராட்ட வீரர்கள் சங்கத்தின் மாவட்டக் குழுவின் பொதுச்செயலாளராக இருந்தார். சமூக சிந்தனை, இலக்கியச் சிந்தனை, எழுத்தாற்றல் மிக்க சுதந்திரப் போர் வீரர் மாயாண்டி பாரதி. வாழ்க இவரது புகழ்! 50 ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் [] ஓமந்தூர், திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் திண்டிவனத்திலிருந்து நான்கு கி.மீ. தூரத்திலுள்ள சின்னஞ்சிறு கிராமம். இந்த கிராமத்தில் 1895ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி முத்துராம ரெட்டி ரங்கநாயகி தம்பதியருக்கு ஓர் தவப்புதல்வன் பிறந்தான். அந்தக் குழந்தைதான் பின்னாளில் சென்னை மாகாண அரசியலில் பெருமைக்குரியவராக விளங்கிய ஓ.பி.ராமசாமி ரெட்டியார் ஆவார். அரசியலில் நாணயம், ஒழுக்கம், எளிமை, பொறுப்புணர்ச்சி, கடமை தவறாமை இப்படிப்பட்ட தவக்குணங்கள் பெற்று விளங்கியவர்கள் மிகச் சிலரே. அவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவராகவும், பின்னாளில் காமராஜ் அவ்வளவு குணங்களையும் தன்னகத்தே எற்றுக் கொண்டவராக விளங்க அவருக்கு வழிகாட்டியாக விளங்கியவரும் இந்த ஓ.பி.ராமசாமி ரெட்டியார் தான். இளம் வயதில் தந்தையை இழந்த ஓ.பி.ஆர் தன் கல்வியை மட்டும் விடாமல் தொடர்ந்தார். கற்பதில் ஆர்வமும், கற்றதை நடத்தையில் காட்ட ஊக்கமும் உடையவராக விளங்கினார் இவர். இலக்கணம் கற்றார், சமய, ஆன்மிக, நீதி நூல்களைக் கற்றார், இந்தி, தெலுங்கு போன்ற பிற மொழிகளையும் கசடறக் கற்றார். அவரது அறிவும் ஞானமும் விசாலமடைய அடைய அவர் சிந்தனையும் பரந்து விரிந்ததாக, ‘சர்வோ ஜனஹ ஸுகினோ பவந்து’ இவ்வுலக மாந்தரெல்லாம் நலமோங்கி வாழ்க எனும் மந்திரத்தைத் தனது வாழ்க்கையை வழிகாட்டும் தாரக மந்திரமாகக் கொண்டு விளங்கினார். ஊருக்குள் இவருக்கு நல்ல பெயர், போதாதற்கு இவர்தான் அவ்வூரின் மணியகாரர். மக்கள் இவருக்கு அளிக்கும் மரியாதைக்குக் கேட்க வேண்டுமா? உயர்ந்த பதவியில் அமர்ந்திருப்போர் நேர்மை, இரக்கம், தூய்மை இவற்றின் இருப்பிடமாக இருந்தால் கேட்க வேண்டுமா? இவரிடம் மக்கள் அன்பு மட்டுமல்ல, பக்தியே செலுத்தி வந்தார்கள். இவர் அடிப்படையில் ஒரு விவசாயி. தானே களத்தில் இறங்கி விவசாயம் பார்த்து, அதில் தேவையான முன்னேற்றங்களைச் செய்து அனுபவ விவசாயியாகவும், மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்கினார். திருவண்ணாமலையில் வாழ்ந்த ரமண மகரிஷியிடம் இவருக்கு ஈடுபாடு, பக்தி. தியாகி வெங்கம்பூர் சாஸ்த்திரி என்றொருவர். அவர்தான் ரெட்டியார் மனதில் தேசிய விதையை ஊன்றி, அதை நன்கு வளர்த்து விட்ட அரசியல் குரு. இவரது அயராத காங்கிரஸ் பணி, தன்னலமற்ற தொண்டு இவரை 1930ஆம் ஆண்டில் தென் ஆற்காடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஆக்கியது. இவர் தென் ஆற்காடு மாவட்டம் முழுவதும் ஊர் ஊராகச் சுற்றுப் பயணம் செய்து நாட்டின் அரசியல் நிலமையை மக்களுக்கு விளக்கி, கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார். காந்தி ஆசிரமம் ஒன்றை சிறுவந்தாடு எனும் கிராமத்தில் தொடங்கி நடத்தினார். தென் ஆற்காடு மாவட்டத்தில் 1927 தொடங்கி 1934 வரையிலான காலகட்டத்தில் பல காங்கிரஸ் மகாநாடுகளைக் கூட்டி மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். ஒரு காலத்தில் தென் ஆற்காடு மாவட்டம் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியாரின் தலமை அகமாகத் திகழ்ந்தது. புகழ்பெற்ற ராபர்ட் கிளைவ் கிழக்கிந்திய கம்பெனி கவர்னராக இருந்த இடம் கடலூர்தான். இங்குள்ள ஒரு மைதானத்தில் எந்தவொரு நிகழ்ச்சியையும் பொதுமக்கள் நடத்தத் தடை இருந்தது. அந்தத் தடையை எதிர்த்து ஓமந்தூரார் அங்கு ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். அதிகார வர்க்கம் செய்வதறியாது விழித்தது. ஓமந்தூரரின் புகழ் பெருகியது. கடலூரைத் தலைமையிடமாகக் கொண்டு அம்மாவட்டத்தின் காங்கிரஸ் இயக்கம் வேகமாக வளரத் தொடங்கியது. 1920இல் நாகபுரியில் சேலம் விஜயராகவாச்சாரியார் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடந்தது. அதற்குச் சென்று வந்த ஓ.பி.ஆர். தென் ஆற்காடு மாவட்ட அரசியல் மாநாட்டைக் கூட்டினார். இதில் பண்டித அசலாம்பிகை அம்மையார், ‘தி ஹிந்து’ ரங்கசாமி ஐயங்கார், காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கிருஷ்ணசாமி சர்மா வ.உ.சி. தண்டிக்கப்பட்டபோது கரூரில் அந்த தண்டனை தீர்ப்பை எதிர்த்து பேசிய பேச்சுக்காக சிறை தண்டனை பெற்றவர். 1933இல் பாபு ராஜேந்திர பிரசாத் அவர்களை அழைத்து மாவட்ட மாநாட்டை நடத்தினார். 1930இல் ராஜாஜி தலைமையில் நடைபெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்திற்குத் தொண்டர்களை அனுப்பிய குற்றத்துக்காக இவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஆறு மாத சிறை தண்டனை கிடைத்தது. அதுதான் அவரது முதல் சிறை வாசம். அதற்கு அடுத்த ஆண்டே, மகாத்மா காந்தியடிகள் அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டு இரண்டாம் முறையாக ஆறு மாத சிறை தண்டனை பெற்றார். சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு இவர் ஊரின் ஓரத்தில் ஒரு ஓலைக் குடிசை அமைத்து அதில் வசிக்கலானார். அரசியலும் ஆன்மீகமும் அவருக்கு உறுதுணையாக இருந்ததால் பலரும் இவரைத் தேடி அங்கு வரலாயினர். அந்தக் காலத்தில் தென் ஆற்காடும், செங்கல்பட்டும் இணைந்தது ஒரு பாராளுமன்றத் தொகுதி. இங்கு எம். பக்தவத்சலத்தின் மாமனாரும் பிரபல காங்கிரஸ் தலைவருமான முத்துரங்க முதலியார் காங்கிரஸ் சார்பிலும், கேசவன் எனும் ஜஸ்டிஸ் கட்சிக்காரரும் இங்கு போட்டியிட்டனர். இதில் முத்துரங்க முதலியார் வென்றார். 1936 தேர்தலில் இம்மாவட்டத்தில் பல இடங்களிலும் கடுமையான போட்டி காங்கிரசுக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும். இதில் ஓ.பி.ஆர். முனைந்து ஈடுபட்டு காங்கிரஸ் சார்பில் ந.சோமையாஜுலு, பசும்பொன் தேவர், ப.ஜீவானந்தம், பி.இராமமூர்த்தி ஆகியோரை அழைத்து கூட்டங்கள் நடத்தி காங்கிரசை வெற்றி பெறச் செய்தார். இந்த வெற்றியின் பயனாக அகில இந்தியாவும் ஓ.பி.ஆரை. கவனிக்கத் தொடங்கியது. யார் இந்த சாதனையாளர் என்று. ஓ.பி.ஆரின் பெயர் தமிழகமெங்கும் பரவியது. 1938இல் இவர் தமிழ்நாடு காங்கிரசின் தலைவரானார். இவரது புரட்சிகரமான போக்கும், முற்போக்குச் சிந்தனைகளும் இவருக்கு கட்சியிலும் சரி, உறவிலும் சரி எதிர்ப்புகள் அதிகம் ஏற்பட்டன. எந்த கெட்ட பழக்கத்துக்கும் ஆளாகாத, ஊழலற்ற, நேர்மையான இவரைப் போன்ற அரசியல் வாதிகளுக்கு எதிர்ப்புகள் ஏற்படுவது சகஜம்தான். என்ன செய்வது? புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டுமென்பதற்காகவும் இவர் பாடுபடலானார். இவரை ஆதரித்துப் பல தலைவர்கள் அன்று அந்த போராட்டத்தைத் தொடங்கி நடத்தி வந்தனர். 1942 ஆகஸ்ட் 8, பம்பாயில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் “வெள்ளையனே வெளியேறு” எனும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்தப் போரில் ஒன்று செய், அல்லது செத்து மடி எனும் வேத வாக்கியத்தை மகாத்மா தொண்டர்களுக்கு வழங்கினார். அன்று இரவே அங்கு வந்திருந்த அத்தனை தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஓமந்தூராரும் இந்திய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு 18 மாதகாலம் சிறையில் அடைக்கப்பட்டார். இது இவரது நான்காவது சிறை வாசம். இந்திய சுதந்திர தினமான 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதன்முதலாக சென்னை மாகாண பிரதமர் என்ற முறையில் கொடியேற்றும் உரிமை ஓமந்தூராருக்குக் கிடைத்தது. சென்னை கவர்னராக இருந்த சர் ஆர்ச்பால்டு நை முதலானோர் இந்த வைபவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தென் ஆற்காடு மாவட்ட கிராமவாசி ஒருவர் தன் தியாகத்தாலும், உழைப்பாலும் சென்னை மாகாண முதல்வராக பதவி ஏற்றது அனைத்து மக்களாலும் பாராட்டப்பட்டது. இவருக்குப் பிறகு குமாரசாமி ராஜாவும், அதன் பின்னால் இந்திய குடியரசு ஆனபிற்பாடு 1952இல் ராஜாஜியும் 1954இல் காமராஜ் அவர்களும் அவர்களைத் தொடர்ந்து பலரும் இந்தப் பதவியில் அமர்ந்தாலும், ஓமந்தூராரின் நினைவு நேர்மை, சத்தியம், ஒழுக்கம் இவற்றோடு இணைந்தே மனதில் நிற்கிறது. வாழ்க ஓமந்தூரார் புகழ்! 51 தியாகசீலர் ந.சோமையாஜுலு தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் தான் முதன்முதலாக ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போர்முழக்கத்தை எழுப்பியது. இங்கு ஏராளமான தேசத் தொண்டர்கள் உருவாகியிருக்கிறார்கள். முதன்முதலாக ஆங்கிலப் படைகளைப் போர்க்களத்தில் சந்தித்து மரண தண்டனைக்கு உள்ளான கட்டபொம்மு நாயக்கர், சுதேசிக் கப்பல் ஓட்டிய வ.உ.சிதம்பரம் பிள்ளை, இந்தியரைப் புல்லிலும் கேவலமாகக் கருதிய கலெக்டர் ஆஷ் என்பவனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வீரவாஞ்சி, இவர்கள் வாழ்ந்த பூமி இது. இங்குதான் தியாகசீலர் ந.சோமையாஜுலு பிறந்தார். திருச்செந்தூர் அருகிலுள்ள ஆத்தூர் எனுமிடத்தில் 1902 டிசம்பர் 28ஆம் தேதி சோமசுந்தர ஐயர் சீதையம்மாள் தம்பதியருக்குப் பிறந்த குழந்தைதான் நரசிம்ம சோமையாஜுலு. இவரது இளமைக்காலக் கல்வி தூத்துக்குடியில்தான் நடந்தது. இளம் வயதில் விளையாட்டுகளிலும், உடற்பயிற்சியிலும் ஆர்வம் நிறைந்தவராக இருந்தார். அவர் மாணவராக இருந்த காலத்தில் வ.உ.சியின் தேசிய இயக்கப் போராட்டங்கள் இவர் மனதில் கிளர்ச்சியையும், உறுதியையும் ஏற்படுத்தின. அந்தக் காலத்தில் காவல்துறையினர் செய்த அத்து மீறல்கள், அக்கிரமங்கள் இவர் மனதில் புயலை எழுப்பின. ஓரளவு விவரம் புரிந்த வயதில் இவர் வ.உ.சியையும், சாது கணபதி என்ற வழக்கறிஞரையும் சந்தித்திருக்கிறார். இவரது கல்லூரி பருவத்தில் இவரது தேசியப் போராட்டத்தின் தாக்கம் அதிகமாகியது. வ.உ.சி.யே இவரது ஆதர்ச தலைவராக விளங்கினார். அவரது துணிச்சலும், நேர்மையும், கொண்ட காரியத்தில் விடாமுயற்சியும் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட பாடம். மகாகவியின் இறப்புக்கு முன்பு சோமையாஜுலு அவரைப் பலமுறை சந்தித்திருக்கிறார். அவர் பாடல்களைப் பாடும் போது கேட்டிருக்கிறார். இவையனைத்தும் திருநெல்வேலிக்கு பாரதி வந்த போது நடந்தது. இவர் முதன்முதலாக கலந்து கொண்ட தேசியப் போராட்டம் 1920இல் நடத்திய ஒத்துழையாமை இயக்கம். அது முதல் இவர் பல காங்கிரஸ் மாநாடுகளுக்குச் சென்று வரலானார். பல பெரிய தலைவர்களின் உரைகளைக் கேட்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது. அதோடு இவர் ஆசிரியர் பணியிலும் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். 1924இல் திருவண்ணாமலையில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடந்தது. அதற்குப் பல தொண்டர்களைத் திரட்டி அனைவரும் மதுரையிலிருந்து நடந்தே திருவண்ணாமலை சென்றடைந்தனர். வழிநடையின் போது அவர்களுக்குச் சிரமம் தெரியாமல் இருப்பதற்கு பாரதியின் பாடல்கள் பயன்பட்டன. இப்போது கேரளத்தில் இருக்கும் வைக்கம் நகரில் நிலவிய தீண்டாமையை எதிர்த்து மதுரக் ஜார்ஜ் ஜோசப் தலைமையில் பலரும் சென்று கலந்து கொண்டனர். அப்போது சங்கரன்கோயிலில் இருந்த சோமையாஜுலுவும் தொண்டர்கள் புடைசூழ வைக்கம் செல்லப் புறப்பட்டபோது, போராட்டம் முடிவடைந்துவிட்டது என்று செய்தி வரவே பயணத்தை நிறுத்திக் கொண்டார். வ.உ.சியின் வலது கரம் போல செயல்பட்ட சுப்பிரமணிய சிவா, வ.உ.சியுடன் சிறை சென்றவர். பாப்பாரப்பட்டியில் பாரதமாதா ஆலயம் அமைக்கப் பாடுபட்டவர். அவரோடு சோமையாஜுலுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. சிவாவைத் தனது குருவாக பாவித்தார் சோமையாஜுலு. அப்போது நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் வ.வெ.சு.ஐயர் ஒரு ஆசிரமம் நிறுவினார். அதுமுதல் சோமையாஜுலுவுக்கு வ.வெ.சு.ஐயரின் நட்பும் கிடைத்தது. 1924இல் பம்பாய் மாகாணம் பெல்காம் நகரில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டிற்காக மதுரையிலிருந்து பெல்காம் வரையிலான 1100 கி.மீ தூரத்தை பல தொண்டர்களைக் கூட்டிக் கொண்டு சோமையாஜுலு கால்நடையாகவே புறப்பட்டுப் பாதயாத்திரை சென்றார். மாநாடு முடிந்து திரும்பும் போதும் நடந்தேதான் திரும்பி வந்தனர். 1927இல் நாகபுரி வேளேந்தும் போராட்டத்தையொட்டி மதுரையில் சோமையாஜுலு பல காங்கிரஸ் தொண்டர்களுடன் வாள் ஏந்தி ஊர்வலம் சென்றனர். அடுத்து கர்னல் நீலன் சிலை அகற்றும் போராட்டத்திலும் இவர் தீவிரமாகப் பங்கு கொண்டார். 1857இல் நடந்த முதல் சுதந்திரப் போரின்போது இந்தியச் சிப்பாய்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் புரட்சி செய்து பல மாதங்கள் வடமாநிலங்களைத் தங்கள் வசம் வைத்துக் கொண்டிருந்தனர். அவர்களை அடக்கும் விதமாக கர்னல் நீல் சென்னையிலிருந்து அனுப்பப்பட்டான். அவன் கல்கத்தா சென்று ஆங்கிலப் படையுடன் சென்று வழிநெடுக அப்பாவி மக்களைப் பெண்கள், குழந்தைகள் உடபட பலரைக் கொன்று இந்தியச் சிப்பாய்களை அடக்கிக் கொடுமை புரிந்தவன். அவனுக்குச் சென்னையில் சிலை வைத்திருந்தார்கள். அந்தச் சிலையை அகற்ற ஓர் போராட்டம் நடந்தது. எனினும் 1937இல் ராஜாஜி அமைச்சரவை அமைந்ததும் முதல் வேலையாக அந்த நீலன் சிலை அகற்றப்பட்டு அருங்காட்சியகத்தில் கொண்டு போய் வைக்கப்பட்டது. எதிர்த்த ஆங்கில ஆதரவாளர்களுக்கு ராஜாஜி சொன்ன பதில், அதி எங்கள் சிலை, அதனை எங்கு வேண்டுமானாலும் வைப்போம் என்பதுதான். 1930இல் மகாத்மா காந்தி நடத்திய தண்டி உப்பு சத்தியாக்கிரக யாத்திரையை அடுத்து சென்னை மாகாணத்தில் ராஜாஜி தலைமையில் திருச்சி முதல் வேதாரண்யம் முதல் 15 நாட்கள் யாத்திரை செய்து உப்பு அள்ளிய நிகழ்ச்சி நடந்தது. இந்தப் போராட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் தொண்டர்களைச் சேர்க்கும் பணியும் மதுரையில் நடந்தது. அதில் ந.சோமையாஜுலுவின் முயற்சியால் முப்பதுக்கும் மேற்பட்ட தொண்டர்களை மதுரை அனுப்பியது. இந்தப் போராட்டத்தின் பொதுஜன தொடர்பு வேலையை சோமையாஜுலு ஏற்றுக் கொண்டார். இவர் கோவில்பட்டியில் பேசிய ஒரு பொதுக்கூட்டச் சொற்பொழிவிற்காக ராஜதுவேஷக் குற்றம் சாட்டப்பட்டு ஆறுமாத கடுங்காவல் தண்டனை பெற்றார். இந்த வழக்கு நடந்த காலத்திலேயே இவர் மீது மேலும் பல வழக்குகள் போடப்பட்டன. ஆறுமாத தண்டனை முடிந்து வெளியே வரும்போது மறுபடி கைதுசெய்யப்பட்டு மறுபடி மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுக்கப்பட்டது இவருக்கு. மதுரையில் சட்டமறுப்பு இயக்கத்தில் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்தபோது போலீசின் கடுமையான தடியடிக்கு ஆளானார் இவர். இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் இவருக்கு. கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு இவர் மீண்டும் தடியடிக்கு ஆளானார். 1932இல் இவருக்கு பத்து மாதம் சிறை தண்டனை கிடைத்தது. காங்கிரஸ் கட்சிக்குள் இடதுசாரி எண்ணங்கொண்ட தலைவர்கள் கூடி 1937இல் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி எனும் அமைப்பை ஏற்படுத்தினர். அதில் இவர் இணைந்தார். 1939இல் இரண்டாம் உலகப் போர் தொடங்கிய போது இவர் யுத்த எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியதால் கைது செய்யப்பட்டார். 1940இல் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1942இல் காங்கிரஸ் நடத்திய உச்ச கட்டப் போராட்டம். வெள்ளையனே வெளியேறு போராட்டம். இதிலும் இவர் கைது செய்யப்பட்டார், ஆனால் இவரது உடல்நிலை காரணமாக இடையில் விடுதலையானார். கல்கி அவர்கள் எட்டயபுரத்தில் பாரதிக்கு மணிமண்டபம் கட்டத் தொடங்கியபோது அந்தக் குழுவில் செயலாளராக இருந்து உழைத்தவர் சோமையாஜுலு. இந்திய சுதந்திரத்துக்குப் பின் 1952இல் நடைபெற்ற முதல் சட்டசபை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியிலிருந்து பெரும் வெற்றி பெற்றார். இவரைப் பற்றி மிக உயர்வாக எழுதியுள்ள பெரியோர்கள் இவரைச் “சொற்சோர்விலாத சோமையாஜுலு” என்றே குறிப்பிடுகின்றனர். இந்திய சுதந்திரப் பொன்விழா ஆண்டில் தியாகிகள் வரலாற்றைத் தொகுக்க குழுக்கள் அமைக்கப்பட்டன. அப்படி திருநெல்வேலி, மதுரை ஆகிய பகுதி தியாகிகள் வரலாற்றினைத் தொகுத்து வெளியிட்டார் நா.சோமையாஜுலு அவர்கள். 1972இல் சுதந்திரப் போராட்ட வீரர்கள் சங்கத்தினைத் தொடங்கினார். தன் வாழ்நாள் முழுவதையும் இந்த நாட்டுக்காகச் செலவிட்ட தியாகி நா.சோமையாஜுலு அவர்கள் 1990ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீங்கி அமரரானார். வாழ்க நா.சோமையாஜுலு புகழ்! 52 வீர வாஞ்சி [] உலக நாடுகளில் பல வன்முறைப் புரட்சிகளின் மூலம்தான் விடுதலையடைந்திருக்கின்றன. பிரெஞ்சு புரட்சியில் மாண்ட உயிர்கள் எத்தனை? ரஷ்யப் புரட்சியில் மாண்டவர்கள் எத்தனை பேர்? அமெரிக்க உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்? இப்படி உலகம் முழுவதும் போர் மூலமாகத்தான் சுதந்திரம் பெற்றிருக்கின்றனர். இந்தியாவில் மட்டும்தான் மகாத்மா காந்தியடிகளின் அகிம்சைப் போராட்டம், சத்தியாக்கிரகம் மூலம் நெடுநாள் போராட்டத்துக்குப் பிறகு சுதந்திரத்தைக் காணமுடிந்தது. காந்தியடிகளின் இந்தப் போரை “கத்தியின்றி, ரத்தமின்றி” நடந்த போராக எடுத்துக் கொள்ளலாம். அதாவது ஆங்கிலேயர்களின் ரத்தத்தை சிந்த வைக்காமல், அடிபட்டு, உதைபட்டு, துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டு நம் இந்திய ரத்தத்தைச் சிந்தி இந்த சுதந்திரத்தைப் பெற்றோம் என்பதை மறுக்கமுடியாது. அதுதான் அகிம்சை வழி. மகாத்மா காந்தியடிகள் இந்திய அரசியலில் ஆழங்கால் படுவதற்கு முன்பு பால கங்காதர திலகர் காலத்தில் இந்த அகிம்சை வழியெல்லாம் நடைமுறையில் இல்லை. அதுமட்டுமல்லாமல் எந்த வழியிலாவது ஆங்கில ஏகாதிபத்தியத்தை இந்தியாவிலிருந்து விரட்டிவிட வேண்டுமென்கிற துடிப்புதான் நம் மக்கள் உள்ளங்களில் இருந்த கருத்து. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வாஞ்சிநாதன் எனும் தேசபக்த இளைஞன், கொடுமைக்காரனும், இந்தியர்களை புழுவிலும் கேவலமாகக் கருதக்கூடியவனும், தேசபக்த சிங்கம் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்குக் கிடைத்த கொடிய தண்டனைக்குக் காரணமாக இருந்தவனுமான ஆஷ் என்பவனை சுட்டுக் கொன்றான் என்பது எந்த வகையில் நாம் எடுத்துக் கொள்வது. இது தேசபக்தியின் வெளிப்பாடா இல்லையா, இது தவறு என்று சொல்வதற்கு, இதற்கு மாற்று வழி ஏதேனும் அந்த காலகட்டத்தில் இருந்ததா? இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் கண்ட பிறகுதான் இந்த வீர இளைஞனின் தியாகத்தை மதிப்பிட வேண்டும். சரித்திர காலத்தில் ஒரு நாட்டுப் படையும், எதிரி நாட்டுப் படையும் நேருக்கு நேர் போரிட்டுக் கொண்டார்கள். அதில் இரு தரப்பிலும் வீரர்கள் உயிரிழக்க நேரிடுகிறது. இதையெல்லாம் கொலையாகக் கருதுவதில்லை. அதுமட்டுமல்லாமல் கொடியவர்களும், சர்வாதிகாரிகளும் கொலை செய்யப்பட்ட வரலாறு நமக்கு நிறையவே கிடைக்கின்றன. இத்தாலியில் ஃபாசிஸ்ட் தலைவன் முசோலினியும் அவனோடு பல ஃபாசிஸ்ட்டுகளும் மிலான் நகரில் கொல்லப்பட்டு ஒரு பெட்ரோல் நிலையத்தில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டிருந்தனர். அப்படிச் செய்தவர்கள் இத்தாலி தேசபக்தர்களாகக் கருதப்பட்டார்களேயன்றி கொலைகாரர்களாக அல்ல. அவர்களுக்கு முன்பாக அதே இத்தாலியில் மாஜினியும் வன்முறை அரசியல் நடத்தியவர்தான். கொடுங்கோன்மை கட்டுக்கடங்காமல் போகிறபோது ‘வன்முறை’யும் ஒரு ஆயுதமாகப் பயன்பட்டிருக்கிறது என்ற கோணத்தில் இந்த வீர வாஞ்சியின் வரலாற்றைச் சற்றுப் புரட்டிப் பார்க்கலாம். தாங்கமுடியாத தருணத்தில் வன்முறையில் ஈடுபடும் தேசபக்தர்கள் எத்தகைய தியாகங்களைப் புரிகிறார்கள். அவையெல்லாம் அவர்களது சொந்த நலனுக்காகவா, நாட்டின் நலன் கருதியா? தன்னை அழித்துக் கொண்டு இந்த நாடு நல்ல நிலை அடையவேண்டுமென்று அவர்கள் செய்த தியாகங்களுக்கு அளவுகோல் உண்டா? சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஒரு வெள்ளைக்கார சார்ஜெண்ட் சாண்டர்ஸ் என்பான் அடித்த அடியின் காரணமாகப் பாஞ்சால சிங்கம் லாலா லஜபதி ராய் இறந்து போனார். அன்று லாகூர் பல்கலைக் கழக மாணவர்களாக இருந்த ஷாகீத் பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோர் அந்த வெறிபிடித்த வெள்ளையனைச் சுட்டுக் கொன்றனர். அது கொலையா? தேசபக்தனின் பழிவாங்கும் செயலா? 24 வயதில் அந்த இளைஞர்கள் நாட்டுக்காகத் தமது இன்னுயிரை நீத்த செயலை என்னவென்று சொல்லலாம்? குதிராம் போஸ், மதன்லால் திங்க்ரா போன்ற மாவீரர்கள் உயிர்த்தியாகம் செய்தது யார் பொருட்டு? இதையெல்லாம் நம் மனதில் கொண்ட பிறகே வீரன் வாஞ்சிநாதனின் செயலை எடைபோட வேண்டும். வியாபாரம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனியார், பொருட்களை விற்கவும் வாங்கவும் என்று வந்த வேலையை விட்டு இங்கு நாடுபிடிக்கும் வேலையில் இறங்கினர். அவர்களது சூழ்ச்சிக்கு இரையான ராஜ்யங்கள் எத்தனை எத்தனை? வாரிசு இல்லாமல் ஒரு அரசன் இறந்தால் அந்த ராஜ்ஜியத்தைத் தங்களதாக எடுத்துக் கொண்டது பிரிட்டிஷ் சூழ்ச்சி. ராஜ்யத்தை நல்லபடி நடத்துவதாகவும், தகுந்த பாதுகாப்புக் கொடுப்பதாகவும் உத்தரவாதமளித்துப் பிடுங்கிக் கொண்ட ராஜ்யங்கள் எத்தனை? இந்தியர்கள் ஏமாளிகள் இவர்கள் தொடைகளில் திரித்த வரையில் லாபம் என்று கருதியது வியாபாரம் செய்யவந்த கிழக்கிந்திய கம்பெனி. அதில் ஆளவந்தவர்கள் ராபர்ட் கிளைவ் போன்றவர்கள் ஈவு இரக்கமற்ற முரடர்கள். இந்தியர்களை மனிதர்களாகவே நினைக்கத் தெரியாதவர்கள். இந்தப் பின்னணியில் வாஞ்சியின் வரலாற்றைப் பார்ப்போம். அமைதியாகவும், வெள்ளையனின் அடக்குமுறைக்குக் கட்டுப்பட்டும் தென்னகம் முழுவதும் வாய்பேசாத மெளனிகளாக இருந்த சமயம் உரக்கக் குரல் கொடுத்த தேசிய வாதிகள் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா மற்றும் அவர்களோடு தோளோடு தோள் நின்ற மாடசாமி போன்ற வீரர் பெருமக்கள். இவர்களைக் கைது செய்து பொய்யான வழக்கில் சிக்க வைத்து இந்த வீரப்பெருமக்களைச் சிறைச்சாலைக்குள் கொண்டு வந்து அடைத்த பின் பிரச்சினை ஒன்றும் இருக்காது என்று இருமாந்திருந்த வெள்ளை ஆதிக்கமும், அதன் பிரதிநிதியாகத் திருநெல்வேலி ஆக்டிங் கலெக்டராக இருந்த ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் என்பானும் எதிர்பாராத அதிர்ச்சிக்கு உள்ளான சம்பவம் ஒன்று மணியாச்சி ரயில் சந்திப்பில் நடந்தது. ஆம்! 1911ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதி காலை 10-40 மணிக்கு மணியாச்சி சந்திப்பில் அந்த சம்பவம் நடந்தது. 17-6-1911 கலெக்டர் ஆஷ் அவனது மனைவி ஆகியோர் கொடைக்கானலில் படிக்கும் தங்களது பிள்ளைகளைப் பார்ப்பதற்காக நெல்லை பாலம் ரயில் நிலையத்தில் காலை 9-30 மணிக்குக் கிளம்பினார்கள். அவர்கள் பயணம் செய்த ரயில் மனியாச்சியில் நின்றது. அங்கு தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயிலுக்காக இருவரும் முதல் வகுப்புப் பெட்டியில் காத்திருந்தார்கள். அந்த நேரத்தில் அந்த ரயிலில் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்து கொண்டு வந்த வண்டியை விட்டு இறங்கி ஆஷ் இருந்த முதல் வகுப்புப் பெட்டிக்குள் ஏறினார். வாஞ்சியைப் பார்த்த ஆஷ் பதறினான், யார் நீ என்று கத்தினான். உடனே தன் கைத்துப்பாக்கியால் ஆஷை நோக்கிச் சுட்டார். குண்டு அவன் மார்பில் பாய்ந்தது. அந்த நிலையிலும் ஆஷ் தன்னைச் சுட்டவனைப் பிடிக்க முயன்றான். அவன் மனைவி அதைத் தடுத்து விட்டாள். ஆஷைச் சுட்டுவிட்டு பெட்டியை விட்டுக் கீழே இறங்கிய வாஞ்சிநாதனைப் பிடிக்க சிலர் முயன்றனர். அவர்களை உதறித் தள்ளிவிட்டு அருகிலிருந்த கழிப்பறைக்குள் சென்றுவிட்டார் வாஞ்சி. உள்ளே நுழைய பயந்துகொண்டு ஒரு மணி நேரம் நின்றவர்கள் கழிப்பறையிலிருந்து குண்டு வெடித்த சப்தம் கேட்டு உள்ளே போய் பார்த்தார்கள். அங்கே வாஞ்சி தனது கைத் துப்பாக்கியைத் தன் வாயினுள் சுட்டுக்கொண்டு இறந்து வீழ்ந்து கிடந்தார். குண்டடிபட்டுக் காயமடைந்த ஆஷ் திருநெல்வேலிக்குக் கொண்டு செல்லும் வழியில் கங்கைகொண்டான் எனுமிடத்தில் இறந்து போனார். கழிப்பறையில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்து கிடந்த வாஞ்சிநாதன் உடலைப் போலீசார் சோதனையிட்டனர். அவர் காட்டிலாகாவில் வேலை பார்த்தவராதலால் உறுதியான துணியால் தைக்கப்பட்ட சட்டை அணிந்திருந்தார். ஒரு பையில் தமிழில் எழுதப்பட்டு, தமிழிலும் ஆங்கிலத்திலும் கையெழுத்திடப்பட்ட தேதியில்லாத ஒரு கடிதம் இருந்தது. அவர் அணிந்திருந்த கோட்டில் ஒரு மணிபர்சும், ராணி விக்டோரியாவின் படமும், இரண்டாம் வகுப்பு ரயில்வே டிக்கட் ஒன்று, ஐந்து அணா நாணயங்கள் இவை இருந்தன. யார் இந்த வாஞ்சி? அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்ட செங்கோட்டையில் கோயில் மணியமாக இருந்த ரகுபதி ஐயர் என்பவரின் மகன். இவருக்கு நான்கு சகோதரிகள், இரண்டு ஆண் பிள்ளைகளில் இவர் இளையவர். இவர் செங்கோட்டையில் ஆரம்பக் கல்வி பயின்றார். திருவனந்தபுரம் மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.படித்தார். தனது 23ஆம் வயதில் முன்னீர்ப்பள்ளம் சீதாராமையரின் மகள் பொன்னம்மாளைத் திருமணம் செய்து கொண்டார். அங்கிருந்து பரோடா சமஸ்தானத்துக்குச் சென்று மரவேலை செய்யும் தொழில்துறைப் படிப்பைப் படித்துத் தேறினார். பிறகு புனலூரில் காட்டிலாகாவில் பாரஸ்ட் கார்டாக வேலைக்குச் சேர்ந்தார். அந்த காலகட்டத்தில் தென் தமிழ்நாட்டில் பாரதமாதா சங்கம் என்றொரு இயக்கம் வேகமாக வளர்ந்து வந்தது. இதனை நிறுவியவர் எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி என்பார். இவர் சீர்காழியை அடுத்த எருக்கூர் கிராமத்தில் பிறந்தவர். தேசபக்தியின் காரணமாக வெள்ளை அரசுக்கும், வெள்ளைக்காரர்களுக்கும் எதிராக ஒரு மாபெரும் புரட்சி செய்ய எண்ணி வங்கத்திலிருந்து வந்திருந்த சில புரட்சிக்காரர்களின் தீர்மானப்படி பாரதமாதா சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. நீலகண்டனுக்கு ஏற்கனவே புதுச்சேரியில் வந்து தங்கியிருந்த வ.வெ.சு.ஐயரின் தொடர்பு இருந்தது. இந்த பாரதமாதா சங்கம் என்பது ஒரு ரகசிய இயக்கம். இதில் உறுப்பினர்களாக இருப்போர் ரகசியமாக ஒன்று கூடி, காளியின் படத்திற்கு முன்னால் குங்குமம் கலந்த தண்ணீரை வெள்ளையரின் குருதி என்று எண்ணிக் குடிப்பர். கத்தியால் தங்கல் கை விரல்களில் கீறிக்கொண்டு அந்த ரத்தத்தால் ஒரு வெள்ளைக் காகிதத்தில் கையெழுத்திட்டு உறுதிமொழி எடுத்துக் கொள்வர். என்ன ஆபத்து நேர்ந்தாலும், சங்கத்தைப் பற்றிய ரகசியங்களை வெளியாருக்குச் சொல்வதில்லை, எதிர்பாராத ஆபத்து எதுவும் ஏற்பட்டால் தன்னைத்தானே மாய்த்துக் கொள்ள வேண்டும். எப்படியும் ரகசியம் வெளிவரக்கூடாது என்றெல்லாம் இந்தச் சங்கத்தின் நிபந்தனைகள் ஆகும். வாஞ்சிநாதன் நீலகண்ட பிரம்மச்சாரியோடு நேர்ந்த ஏதோ மனவருத்தத்தால் அவரை ஒதுக்கிவிட்டு புதுச்சேரியிலிருந்த வ.வெ.சு.ஐயரைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டார். செங்கோட்டையிலிருந்து புதுச்சேரி சென்று அங்கு ஐயரைச் சந்தித்தார். அப்போது ஐயர் சிலருக்குத் துப்பாக்கிச் சுடும் பயிற்சியை அளித்து வந்தார். அதில் வாஞ்சிநாதனும் சேர்ந்து கொண்டு துப்பாக்கிச் சுடும் பயிற்சியைப் பெற்றார். வாஞ்சிநாதன் ஆஷ் என்பானைக் கொல்ல ஏன் முடிவெடுத்தார்? தூத்துக்குடியில் 1906இல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தொடங்கிய சுதேசிக் கப்பல் கம்பெனியை அழித்து ஒழிப்பதற்கு இடைவிடாமல் பாடுபட்டவன் அப்போது தூத்துக்குடியில் சப் கலெக்டராக இருந்த இந்த ஆஷ் என்பான். அங்கு இவன் இருந்த காலத்தில் இவன் செய்த அக்கிரமங்களுக்கு அளவே இல்லை. நாடு போற்றும் சிதம்பரம் பிள்ளையை அவமதித்தான். அவர் மீது பொய் வழக்குகளைப் போட்டான். இவரை ஒழிப்பதுதான் தனது வாழ்க்கை லட்சியம் என்பது போல நடந்து கொண்டான். குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளைக்காரர்கள் குள்ளிப்பதற்காக அங்கு இந்தியர்கள் யாரும் நீராடக்கூடாது என்று உத்தரவு போட்டான் ஆஷ். வ.உ.சிதம்பரம் பிள்ளை இரண்டு தீவாந்தர தண்டனை பெறக் காரணமாக இருந்தவனும், உத்தமத் தலைவராக இருந்த சுப்பிரமனிய சிவாவை அவரது தகுதியறியாமல் அவமானப் படுத்திய இந்த அன்னியனை இனியும் உலாவ விடக்கூடாது என்று முடிவெடுத்தார் வாஞ்சி. ரகசியக் கூட்டத்தில் சீட்டுக் குலுக்கிப் போட்டு பாரதமாதா சங்கத்தினர் வாஞ்சியின் பெயர் வரவே இந்தப் பணியை முடிக்க வாஞ்சியை ரத்தத்தால் வீரத் திலகமிட்டு வழியனுப்பி வைத்தனர். வாஞ்சியும் திட்டமிட்டபடி ஆஷையும் கொன்று தன்னையும் மாய்த்துக் கொண்டார். வாஞ்சியின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட ஆங்கிலக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்த வாசகம் என்ன? “ஆங்கிலச் சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு அழியாத சனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசத்தின் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தித் தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குருவோவிந்தன், அர்ஜுனன் ஆகியோர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில் எருது மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சயனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் கால் வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை.” இந்தக் கொலை நாடு முழுவதும் பரபரப்பை ஊட்டியது. எங்கு பார்த்தாலும் போலீசின் அத்து மீறல், கெடுபிடி. புனலூரில் ஒரு வக்கீல் தான் பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார். செங்கோட்டையில் வாஞ்சிநாதனுக்கு நெருங்கியவர்கள் வீடுகள் போலீசாரால் சூறையாடப்பட்டன. கைதுக்குத் தப்பி தலைமறைவானார் மாடசாமி என்பார். தர்மராஜ ஐயர் வீடு சூறையாடப்பட்டவுடன் சித்திரவதைக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டார். 23 வயதே ஆன வாஞ்சிநாதனின் இளம் மனைவி பொன்னம்மாள், பருவமடைந்த நாள் முதலே விதவையானாள். தேசபக்தனை மணந்து கொண்டால் என்ன கிடைக்கும் என்பதை அவள் உலகுக்கு அறிவிப்பது போல எல்லாம் நடந்தன. இந்த வழக்கில் மாடசாமி தப்பிப் போய்விட்டாலும், அழகப்ப பிள்ளை, தென்காசி மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சாவடி அருணாசலம் பிள்ளை எனும் மாணவர் கல்லூரி விடுதியிலேயே கைது செய்யப்பட்டார். இவர்கள் தவிர இந்த வழக்குக்காக தூத்துக்குடி ஆறுமுகம் பிள்ளை, வக்கீல் குமாஸ்தா சோமசுந்தரம் பிள்ளை, சுந்தரபாண்டியபுரம் சோமசுந்தரம் ஐயர் ஆகியோரும் கைதானார்கள். இவர்களில் சிலர் அப்ரூவர்களாக ஆனார்கள். புதுச்சேரியில் இருந்த போது மாடசாமி மூலம் வாஞ்சிநாதன் ஆஷ் துரையைக் கொல்லப் போகிறான் என்ற செய்தி கேட்டதும், இதுபோன்ற தனிப்பட்ட கொலைகளில் நம்பிக்கை இல்லாத, ஒரே நேரத்தில் நாடு முழுவதும் ஒரு புரட்சி செய்ய ஒரு இயக்கத்தை நடத்தி வந்த நீலகண்ட பிரம்மச்சாரி, பழி தன் மீது விழுந்துவிடும் என்பதால் தப்பிக் காசி நகருக்குச் சென்று விட்டார். ஆனால் விதி அவரை அங்கு சென்னை மாகாண ரகசியப் போலீசார் உருவில் துரத்திக் கொண்டு சென்றது. அவர் அங்கிருந்து கல்கத்தா சென்று விட்டார். ஆனால் காசியில் இவருக்கு அடைக்கலம் கொடுத்த செட்டியாரை போலீஸ் துன்புறுத்தியது. தன்னைக் கைது செய்ய போலீசார் அலைகிறார்கள் என்ற செய்தி அறிந்ததும் நீலகண்ட பிரம்மச்சாரி கல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் சரணடைந்தார். அங்கிருந்து அவர் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டார். இவரை நீதிபதியின் முன்பு கொண்டு வந்து நிறுத்தியபோது விலங்கிடப்பட்டுக் கொண்டு வரப்பட்டார். இவரது தேஜசைப் பார்த்த நீதிபதி, இவரது விலங்குகளை நீக்கச் சொல்லி உத்தரவிட்டார். பின்னாளில் ஓம்கார் சுவாமிகளாக நீலகண்ட பிரம்மச்சாரி கர்நாடக மாநிலம் நந்தி மலையடிவாரத்தில் வசித்த காலம் வரை அந்த நீதிபதி இவருடைய சீடனாக விளங்கி வந்தார். ஆஷ் கொலை வழக்கு நீண்ட நாட்கள் நடைபெற்றது. இறுதியில் எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், கிருஷ்ணாபுரம் சங்கரகிருஷ்ணன் 4 ஆண்டுகள், ஆலப்புழை ஹரிஹர ஐயர் 3 ஆண்டுகள், தூத்துக்குடி முத்துக்குமாரசாமி பிள்ளை, சுப்பையா பிள்ளை, செங்கோட்டை ஜெகநாத ஐயங்கார், புனலூர் பாபு பிள்ளை, செங்கோட்டை பிச்சுமணி ஆகியோருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. மேலும் சிலர், சாவடி அருணாசலம் பிள்ளை, கஸ்பா அழகப்ப பிள்ளை, எட்டயபுரம் சுப்பிரமணிய ஐயர் ஆகியோர் விடுதலையானார்கள். ஒருக்கால் வாஞ்சி உயிரை விடாமல் இருந்திருந்தால் அவருக்கு பிரிட்டிஷ் அரசு தூக்குத் தண்டனை விதித்திருக்கும். இவர்கள் கையால் மாண்டு போவதைவிட தன்னைத் தானே மாய்த்துக் கொள்வதையே அந்த மாவீரன் விரும்பி ஏற்றுக் கொண்டான். இத்தோடு இந்த வழக்கின் போக்கு நின்று போய்விடவில்லை. இந்த தண்டனையெல்லாம் கொடுத்து முடித்த பிறகும், வீர சாவர்க்கருக்கு இதில் பங்கு உண்டா என்று போலீசுக்கு மூக்கில் வியர்த்தது. அவரையும் விசாரணை செய்தனர். இன்றும் கூட ஆஷ் கொலை எங்கு எவரால் திட்டமிடப்பட்டது என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை. வாஞ்சி புதுச்சேரி சென்று வ.வெ.சு.ஐயரைச் சந்தித்தது அறிந்து போலீஸ் ஐயரை மாட்டிவைக்க தன்னால் ஆனமட்டும் முயன்று பார்த்தது. அதற்குச் சாதகமாக எந்த சாட்சியும் கிடைக்கவில்லை, ஐயரின் மீது வழக்குப் போட முடியவில்லை. தேசபக்த சிங்கங்கள் இதற்கு முன்பு பல தடவை முயன்றனர், சில வெற்றி பெற்றன, சில தோல்வியில் முடிந்தன. குதிராம் போஸ் முயன்றதில் இரு பெண்கள்தான் மாண்டனர். மதன்லால் திங்க்ரா யாரைக் கொல்ல திட்டமிட்டாரோ, அவர் தப்பிவிட, மற்றொரு குற்றவாளியான கர்சானைத் தாக்கியது. ஆனால் மணியாச்சியில் வாஞ்சிநாதன் வைத்த குறி தப்பவில்லை. இதனை வெறும் கொலையாகப் பார்ப்பதை விட ஒரு தேசபக்தன் நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமையாகக் கொள்வதுதான் சரியாக இருக்கும். காரணம், அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கிந்திய கம்பெனியின் பானர்மன் எனும் ஆங்கில தளபதி வீரபாண்டிய கட்டபொம்மனைக் கயத்தாற்றில் தூக்கிலிட்டான். நூறு ஆண்டுகள் கழித்து அதே நெல்லை மண்ணில் வீரவாஞ்சி அதற்குப் பழிவாங்கிவிட்டான் என்றுதான் கொள்ள வேண்டும். வாஞ்சிநாதன் இந்தச் செயலைச் செய்த மணியாச்சி ரயில் நிலையத்துக்கு அவன் பெயரை வைக்க வேண்டுமென்று நாடாளுமன்றத்திலும், வெளியிலும் காங்கிரஸ் உறுப்பினர் குமரி அனந்தன் அவர்கள் பாடுபட்டு, இறுதியில் மணியாச்சி என்ற பெயரோடு வாஞ்சியின் பெயரையும் சேர்த்திடச் செய்தமைக்கு அவருக்கு தேசபக்தர்கள் நன்றிக்கடன் பட்டவர்களாகிறார்கள். வாழ்க வீர வாஞ்சியின் புகழ்! 53 டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி அந்தக் காலத்தில் தமிழகத்தில் பெண்கள் அதிகமாக ஆண்களைப் போல அரசியலிலும், பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. அப்படியே கலந்து கொண்டாலும் முன்னணியில் நின்று போராட்டங்களை வழிநடத்துவதில்லை. இதற்கெல்லாம் காரணம் நமது கலாச்சாரம், பண்பாடு இவற்றில் மக்கள் வைத்திருந்த அதீதமான நம்பிக்கை. அதுபோலவே பெண்களை உயர்கல்வி கற்க அனுமதிப்பதும் இல்லை. அப்படி உயர்கல்வி கற்று மேம்பட்ட திறமையுடன் வெளிவந்தவர்களில் அனேகம் பேர் மேற்சொன்ன வேலிகளை உடைத்தெறிந்து விட்டு முன்னணியில் விளங்கியிருக்கின்றனர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, அம்புஜம்மாள், லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி, மதுரை அகிலாண்டத்தம்மாள் (மதுரை வைத்தியநாத அய்யரின் மனைவி), மஞ்சுபாஷ்ணி அம்மையார், கடலூர் அஞ்சலை அம்மாள் போன்றவர்களைக் குறிப்பிடலாம். அந்த வரிசையில் டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி அவர்களையும் சொல்லமுடியும். மகாகவி பாரதியார் ‘சந்திரிகையின் கதை’ என்றொரு கதை எழுதியிருக்கிறார். அதில் நிஜமாகவே வாழ்ந்த பல உயர்ந்த மனிதர்களைக் கதாபாத்திரமாகப் படைத்திருக்கிறார். அதில் வீரேசலிங்கம் பந்துலு வருவார். தி ஹிந்து ஜி.சுப்பிரமணிய ஐயர் வருவார். இப்படிப்பட்ட உயர்ந்த தலைவர்கள் பெண்களின் உயர்வுக்காக உண்மையிலேயே பாடுபட்டவர்கள், தாங்களே தடைகளை மீறி செய்தும் காட்டியிருக்கிறார்கள். இங்கு நாம் பார்க்கப் போகிற விடுதலைப் போராட்ட வீராங்கனை ருக்மணியை அப்படி உருவாக்கியவர் வீரேசலிங்கம் பந்துலு என்று கூறலாம். சுதந்திரப் போராட்ட காலத்தில் பல தலைவர்கள் போலீசாரின் தடியடிக்கு ஆளாகி குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த வரலாற்றை நாம் நிறைய படித்திருக்கிறோம். ஆனால் அப்படி அடிவாங்கிய பெண்பிள்ளைகளைப் பற்றி அதிகமாகச் செய்திகள் இல்லை. அந்தக் குறையை போக்கும் வகையில் 1930இல் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தின் போது, தொண்டர்கள் சேர்ந்து குவித்து வைத்திருந்த உப்பை அள்ளிச் செல்ல போலீஸ் முயன்றபோது, அந்த உப்புக் குவியலைச் சுற்றித் தொண்டர்கள் கைகோர்த்து தடுத்தனர். அப்படித் தடுத்த பலரும் போலீசாரின் புளியம் மிளாரினால் அடிக்கப்பட்டனர். தொண்டர்களில் ஒருவராக இந்தப் போரில் ஈடுபட்ட டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதியை பெண் என்றும் பாராமல், போலீஸ் புளியம் மிளாரினால் அடித்துத் துவைத்ததோடு, அவரது இரண்டு கால்களையும் பிடித்துத் தரையில் தரதரவென்று இழுத்து வந்து தூக்கி கூடாரத்தை விட்டு வெளியே எறிந்த கொடுமையும் நடந்தது. இந்தக் கொடுமை நிகழ்வைச் சற்று கண்மூடி கற்பனை செய்து பாருங்கள். அடடா! என்ன கொடுமை இது என்று அலறத் தோன்றும். அந்தக் கொடுமைக்கு ஆளானவர் நாம் இப்போது பார்க்கப் போகும் தேசத் தொண்டர், சமூகத் தொண்டர், தியாகி டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி அவர்கள். மற்றுமொரு செய்தியையும் இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை யொட்டி மதக்கலவரம் வடநாட்டில் கொடுமையாக நிகழ்ந்தேறியபோது, நேரு சிறையில் இருந்த நேரத்தில், அவரது மகள் இந்திரா பிரியதர்ஷினியை மகாத்மா காந்தியடிகளிடம் அனுப்பித் தனக்கு தேச சேவையில் ஈடுபடுத்த வேண்டிக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். இந்திராவும் காந்தியடிகளிடம் சென்று கேட்டார். அவர் சொன்னார். நீயோ சின்னப் பெண். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். நீ மதக்கலவரம் நிலவும் டெல்லிக்குச் சென்று என்ன சேவையைச் செய்ய முடியும். நீயே போய் நிலைமையைப் பார்த்து என்ன செய்யலாம் என்று சொல்லு என்றார். இந்திரா டெல்லி வந்தார். தன்னையொத்த இளைஞர்களை ஒன்று சேர்த்தார். “ஹனுமான் சேனா’ எனும் அமைப்பை ஏற்படுத்தி வன்முறைகளைத் தடுக்கவும், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவும் இந்த சேனையின் மூலம் பாடுபட்டார். அது அங்குமட்டும்தான் நடக்குமா என்ன? ஜவஹர்லால் கேட்டுக் கொண்டபடி இந்திரா செய்ததைப் போல, தென்னகத்தில் டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி அவர்கள் “வானரசேனை” எனும் சிறுவர்களுக்கான ஒரு அமைப்பை ஏற்படுத்தி, சமூக சேவையில் ஈடுபட்டார். சீனிவாச ராவ, சூடாமணி அம்மையார் தம்பதியருக்கு 1892ஆம் வருஷம் டிசம்பர் 6ஆம் தேதி ருக்மணி பிறந்தார். இவருடைய தந்தை இவருடைய இளம் வயதிலேயே திருமணம் செய்துவிட முயன்றபோது வீரேசலிங்கம் பந்துலு தலையிட்டு பால்ய விவாகத்தைத் தடுத்தார். மகளை நன்றாகக் கல்வி கற்கச் செய்ய வேண்டினார். அதன்படி பள்ளி சென்று படிக்கத் தொடங்கினார் ருக்மணி. இந்த துணிச்சலை ஊரார் தாங்கிக் கொள்வார்களா. இவர்களுக்குத் தொல்லை கொடுத்தனர். டாக்டர் லக்ஷ்மிபதி என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். திருமதி ருக்மணி லக்ஷ்மிபதிக்குப் பிறந்த குழந்தைகளுள் இறந்தது போக மிச்சம் இரண்டு பெண்கள் ஒரு மகன். இவர்களுள் ஒரு பெண் பிரபல நரம்பியல் மருத்துவரான டாக்டர் ராமமூர்த்தியின் மனைவி இந்திரா ராமமூர்த்தி. ஜாதி சமய வேற்றுமைகளைக் கடந்து இவர் அனைவரிடமும் அன்போடு பழகியதோடு, அதனைச் செயலிலும் காட்டி வந்தார். பெண்களின் முன்னேற்றத்திலும் இவர் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். முன்பே சொன்னபடி வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில் தன் குடும்பத்தை விட்டு போராடி சிறை தண்டனை பெற்றவர் இவர். மகாத்மா காந்தி சென்னை வந்தபோது அவரை வரவேற்று நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தவர்களில் ருக்மணியும் ஒருவர். 1934இல் இவர் சென்னை மகாஜன சபைக்குத் துணைத் தலவரானார். 1936இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவரானார். 1937இல் சென்னை மாநகராட்சி மன்றத்தில் உறுப்பினரானார். அதே ஆண்டில் சென்னை சட்டசபையின் மேலவைக்குத் தேர்வாகி துணைச் சபாநாயகராக ஆனார். 1938இல் இவர் ஜப்பான் சென்றார். 1940இல் தனி நபர் சத்தியாக்கிரகத்தில் பங்கு கொண்டு கைதானார்.1946இல் சுதந்திரத்துக்கு முன்பு ஆந்திர கேசரி டி.பிரகாசம் தலைமையில் பதவி ஏற்ற காங்கிரஸ் அமைச்சரவையில் இவர் சுகாதார அமைச்சரானார். தமிழ்நாட்டுப் பெண்களுக்குப் பெருமை சேர்த்த இந்த வீரப் பெண்மணி, சமூக சேவகி, சிறந்த நிர்வாகி, 1951ஆம் ஆண்டி ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று காலமானார். இன்று பெண்விடுதலை பற்றிப் பலரும் பேசுகிறார்கள். முக்கால் நூற்றாண்டுக்கு முன்பு அதனைச் செயலில் செய்து காட்டிய வீரப் பெண்மணி டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதியின் பெருமைக்கு நாம் அஞ்சலி செய்வோம். வாழ்க டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி புகழ்! 54 ப. ஜீவானந்தம் [] “ஜீவா” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட ப. ஜீவானந்தம் கம்யூனிச இயக்கத்தில் மிகவும் பிரபலமானவராகவும் அக்கட்சியின் அதிகார பூர்வ ஏடான “ஜனசக்தி” இதழ் ஆசிரியராகவும் இருந்தவர். இவர் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக இறங்கி பாடுபட்டதும், மகாத்மா காந்தியால் பாராட்டப்பட்டதும் அனைவரும் அறிந்த செய்தி. கன்யாகுமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் 21-8-1907இல் பட்டன் பிள்ளை உமையம்மை தம்பதியரின் மகனாகப் பிறந்தார் ஜீவா. இந்தச் சிறுவனுக்கு சொரிமுத்து என்றும் மூக்காண்டி என்றும் பெயர் . இவரே தனது பெயரை ஜீவானந்தம் என்று மாற்றி வைத்துக் கொண்டார். இளம் வயதில் மகாத்மா காந்தியின்பால் ஈர்க்கப்பட்டு காந்திய வழியில் அரசியல் சமூகப் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இராமநாதபுரம் மாவட்டம் சிராவயம் எனும் கிராமத்தில் 1927இல் “காந்தி ஆசிரமம்” ஒன்றை இவர் நிறுவினார். 1927இல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாடுதான் ஜீவா கலந்து கொண்ட காங்கிரஸ் மாநாடு. அரசியலில் காந்திஜியையும் சமூகப் பிரச்சினைகளில் பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்களையும் பின்பற்றத் தொடங்கினார். அரசியல், சமூக மாற்றம் இவற்றோடு இலக்கியத் தாக்கமும் அவரிடம் இயற்கையாக வந்து சேர்ந்து கொண்டது. மகாகவி பாரதியின் பால் மிக்க ஈடுபாடு கொண்டு அவர் எழுதியுள்ள நூல்களும், கட்டுரைகளும் ஏராளம். கவி ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளில் மனம் ஈடுபட்டு அவற்றை அழகிய தமிழில் இவர் மொழிபெயர்த்துப் பாடுவதை நாள் முழுவதும் கூட கேட்டுக் கொண்டிருக்கலாம். குறிப்பாக தாகூரின் “கீதாஞ்சலி”யை இவர் தமிழாக்கம் செய்திருப்பதைப் போல வேறு யாரும் செய்திருப்பதாகத் தெரியவில்லை. சிராவயலில் தான் நடத்தி வந்த ஆசிரமத்துக்கு காந்திஜி வரவேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க காந்திஜி வருகை புரிந்தார். அங்கு வந்து ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்த காந்திஜி ஜீவாவிடம், உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று கேட்டாராம். அதற்கு ஜீவா இந்த தேசம்தான் எனது சொத்து என்று பதில் கூறினாராம். இந்தப் பதிலைக் கேட்டு வியந்துபோன காந்திஜி இல்லையில்லை நீங்கள்தான் இந்த நாட்டின் சொத்து என்றாராம். இந்தச் செய்தி பலராலும் பிரபலமாகப் பேசப்பட்டு வந்த செய்தி. மகாத்மா காந்தி விதவைகளின் மறுமணம் பற்றிக் கொண்டிருந்த கருத்தை மகாகவி பாரதியும் கண்டித்திருக்கிறார். காந்திஜி இன்னமும் இந்த விஷயத்தில் பிற்போக்கானவர் என்பது அவர் கருத்து. அதுபோலவே ஜீவாவும் சமூக சீர்திருத்தங்களில் காந்திஜி சற்று பிற்போக்கானவர், ஆனால் தேச சுதந்திரம், கதர்த் தொழில் ஆகியவை அவர் கொண்ட உயரிய சேவைகல் என்று கருதினார். 1928இல் சைமன் கமிஷன் எதிர்ப்பு இயக்கத்திலும் அதனையொட்டி அந்தப் போரில் போலீசார் தாக்குதலில் உயிரிழந்த பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராயின் மறைவினால் மனம் பாதிக்கப்ப்ட்ட நிலையில் ஜீவா பல ஊர்களுக்கும் சென்று பொதுமக்களிடம் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் அக்கிரமங்களை விளக்கிப் பொதுக் கூட்டங்களில் பேசினார். 1928இல் பெரியகுளத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சிறிது நேரம் பேசினார். இந்த காலகட்டத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையோடும் ஜீவாவுக்குப் பழக்கம் ஏற்பட்டது. சரி! காங்கிரஸில் இருந்து கொண்டு காந்திஜி, பெரியார் ஆகியோருடைய கொள்கைகளைப் பின்பற்றி வந்த ஜீவா பின் எப்போது கம்யூனிஸ்ட்டாக மாறினார்? இந்த கேள்வி எழுகிறது அல்லவா? ஆம். அதற்கொரு சரியான காரணம் இருக்கிறது. இந்திய சுதந்திரப் போர் ஒரு பக்கம் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டிருந்தது. மகாத்மா காந்தி போலவே நாட்டிலுள்ள அனைவரும் அமைதி, அகிம்சை, சத்தியாக்கிரகம் என்று இருப்பார்கள் என்று எண்ணியதோ என்னவோ பிரிட்டிஷ் அரசு. ஆனால் அவர்களது எண்ணங்களுக்கு மாறாக பல மாகாணங்களில் தொழிலாளர் இயக்கங்கள் உருவாகி, வளர்ந்து, பலம்பெறத் தொடங்கியது. தொழிலாளர் நலன் மட்டுமல்ல, நாட்டு நலனும் முக்கியம் என்று இவர்களது செயல்பாடு இருந்தது கண்டு வெள்ளையர் ஆட்சிக்குக் கிலி பிடித்தது. என்ன செய்வது? இந்த தொழிலாளர் தலைவர்களையெல்லாம் பிடித்துச் சிறையில் தள்ளி இவர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு எதிராகச் சதி செய்தார்கள் என்று குற்றம் சாட்டிச் சிறையில் தள்ளிவிட எண்ணியது. அதற்காக வட மாநிலங்கள் மேற்கு வங்கம், பம்பாய், பஞ்சாப், ஐக்கியமாகாணம் போன்ற பகுதிகளில் இருந்த விவசாய, தொழிலாளர் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களைப் பிடித்து அவர்கள் மீது சதிவழக்கொன்றை ஜோடித்து விசாரணை என்ற பெயரில் ஒரு நாடகம் நடத்தினர். இதற்கு “மீரத் சதிவழக்கு” என்று பெயர். கம்யூனிச இயக்கத்தின் மூத்த பிதாமகர் எஸ்.ஏ.டாங்கே போன்ற முன்னணித் தலைவர்கள் குற்றவாளிகளாக நீதிமன்றத்தில் நின்றார்கள். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு 1933இல் வெளிவந்தது. குற்றவாளிகள் என கூண்டில் நிறுத்தப்பட்டவர்கள் அனைவரும் மிக விளக்கமாக அறிக்கைகளை வெளியிட்டார்கள். இதையெல்லாம் படித்த ஜீவாவுக்கு வர்க்க உணர்வு ஏற்பட்டுத் தனது எதிர்கால அரசியலை நிச்சயம் செய்து கொண்டார். ஜீவாவின் அனல் கக்கும் பேச்சைக் கண்டு பிரிட்டிஷ் அரசு, இவர் இனி எந்தக் கூட்டத்திலும் பேசக்கூடாது என்று தடை விதித்தனர். ஆனால் அந்தத் தடையை மீறி ஜீவா கோட்டையூரில் பேசினார். இது பெரிய குற்றம் அல்லவா, பிரிட்டிஷார் பார்வையில். இவர் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து பிறகு திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார். அவரது சிறைவாசமும், சிறையில் பகத் சிங்கின் கூட்டாளிகளோடு ஏற்பட்ட பரிச்சயமும், மார்க்சீய நூல்களைப் படித்ததன் பலனும் சேர்ந்து இவரை ஒரு முழு கம்யூனிஸ்ட்டாக மாற்றியது. கம்யூனிசம் ஒரு புறம், சமூக சீர்திருத்தம் மறுபுறம் என்று இவர் இருமுனை வாளாகச் செயல்பட்டார். பகத் சிங்கின் நூலொன்றை இவர் தமிழில் மொழிபெயர்த்தமைக்காகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார் ஜீவா. அப்படிக் கைது செய்யப்பட்ட இவரை மிகவும் கொடிய பயங்கரவாதியாகச் சித்தரித்து கைவிலங்கிட்டு ஊர் ஊராக அழைத்துச் சென்று சிறையிலடைத்தனர். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் இவரது செயல்பாடு இன்னும் வேகமாக வளரத் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியில் இருந்த இடதுசாரி கொள்கையுடையவர்கள் அனைவரும் காங்கிரஸ் சோஷலிஸ்ட் என்று அழைக்கப்பட்டனர். இவர்களது முதல் மகாநாடு சேலத்தில் நடந்தது. இதில் ஜீவா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு தொழிற்சங்க காங்கிரசின் தலைவராகவும் தேர்வானார் ஜீவா. 1938இல் வத்தலகுண்டில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் மாநாட்டிலிருந்து அகில இந்திய காங்கிரசுக்குப் பிரதிநிதிகள் தேர்வாயினர். அவர்களில் ராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராஜ் ஆகியோரோடு இவர்களைக் காட்டிலும் அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றார் ஜீவா. அப்போதுதான் ராஜாஜிக்கு யார் இந்த ஜீவா என்ற கேள்வி பிறந்தது. இவர் பல தொழிற்சங்கங்களுக்குத் தலைமை ஏற்றுப் பல போராட்டங்களை நடத்தினார். இவரது வளர்ச்சியைக் கண்டோ, அல்லது இவருக்குத் தொழிலாளர் மத்தியில் இருந்த செல்வாக்கு காரணமாகவோ, அல்லது இவரது போக்கு காங்கிரசுக்கு பாதகமாக இருக்குமென்றோ தெரியவில்லை காங்கிரஸ் கட்சி இவரை 1939 ஆகஸ்ட்டில் கட்சியை விட்டு நீக்கியது. உடனே ஜீவா தனது அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் பதவியையும் தூக்கி எறிந்தார். அதன் பிறகு காங்கிரசிலோ, அல்லது காங்கிரஸ் சோஷலிஸ்ட் குழுவிலோ அங்கம் வகிக்காமல் ஜீவா முழுநேர கம்யூனிஸ்ட்டாகவே இருந்தார். 1940இல் இவரை சென்னை நகரை விட்டு வெளியேறும்படி வெள்ளையர் அரசாங்கம் உத்தரவிட்டது. அதனால் இவர் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த காரைக்கால் பகுதிக்குச் சென்றார். அந்த அரசும் இவரை அங்கு தங்க சம்மதிக்கவில்லை. அங்கிருந்து பம்பாய் சென்ற ஜீவாவை அந்த மாகாண அரசு பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்து சிறையில் அடைத்து, பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றியது. 1942இல் விடுதலையான ஜீவா திருவாங்கூருக்கு அனுப்பப்பட்டார். அந்த சமஸ்தான அரசு இவரை சொந்த ஊரான பூதப்பாண்டியை விட்டு வெளியேறக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. இவரால் சும்மாயிருக்க முடியுமா? தடையை மீறினார், கைது செய்யப்பட்டு சிறைவாசமும் ரூ.500 அபராதமும் கிடைத்தது. அதிலிருந்து தொடர்ந்து ஜீவா தொழிலாளர் போராட்டங்களிலும், அரசியல் போராட்டங்களிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந்திய சுதந்திரத்துக்கு முன்பாக 1946இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அதனால் அது முதல் இந்திய சுதந்திரம் வரை தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டார். 1952 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அப்போது சென்னை மாகாணத்தில் அமைந்த அரசுக்கு ராஜாஜி முதலமைச்சர் ஆனார். அப்போது ஆளும்கட்சி வரிசையில் ராஜாஜியும், எதிர் வரிசையில் பெரும் கம்யூனிஸ்ட் தலைவர்களும் இருந்து வாதிட்டதைப் பார்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அப்போது ராஜாஜி சொன்னார் கம்யூனிஸ்ட்டுகள்தான் எனது முதல் எதிரி என்று. ஜீவாவின் அரசியல், சமூக சீர்திருத்தக் கொள்கை, தொழிற்சங்க பணிகள் இவற்றோடு இலக்கியத் துறையிலும் இவர் சிறந்து விளங்கினார். இவரது கணீரென்ற குரலில் இவர் தாகூரின் ‘கீதாஞ்சலி’யை மொழிபெயர்த்த தமிழ்க் கவிதையை உரக்கப் பாடியதை நேரில் கேட்டு அனுபவித்த பேறு இந்தக் கட்டுரையை எழுதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. தனது அந்திம காலத்தில் சென்னை தாம்பரத்தில் ஒரு குடிசையில் அவரும் அவரது மனைவியும் வாழ்ந்த காலத்தில், காமராஜ் முதலமைச்சராக ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற தாம்பரம் வந்தார். இங்குதான் ஜீவா இருக்கிறாராமே அவர் வீட்டுக்கு விடு என்று காரோட்டியைக் கேட்டுக் கொண்டார் காமராஜ். கார் ஒரு குடிசை வாயிலில் நின்றது. இறங்கி உள்ளே போனார் காமராஜ். அங்கு ஒரு கிழிந்த பாயில் படுத்திருந்தார் நாடறிந்த தலைவர் ஜீவா. காமராஜ் மனம் கலங்கியது. சரி நான் போகும் நிகழ்ச்சிக்கு நீங்களும் வாருங்கள் போகலாம் என்றார். சிறிது நேரம் ஆகுமே பரவாயில்லையா என்றார் ஜீவா. காமராஜ் காத்திருந்தார். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. ஜீவா வரக்கணோம். என்னவென்று பார்த்தால் அவருக்கென்று இருந்த ஒரே வேட்டியை துவைத்து காயவைத்துக் கொண்டிருந்தார். பின்னர் அந்த நிகழ்ச்சிக்கு இருவரும் சென்றார்கள். ஜீவா வசிக்க ஒரு அரசாங்க வீட்டை ஒதுக்க காமராஜ் ஜீவாவிடம் அனுமதி கேட்டார். அதை மறுத்துவிட்ட ஜீவா சொன்னார், இந்த நாட்டில் வீடு இல்லாத ஏழைகளுக்கு என்று இருக்க வீடு கிடைக்கிறதோ அன்று எனக்குக் கொடுத்தால் போதுமென்றார். அதன் பிறகு அவர் அதிக நாள் உயிரோடு இல்லை. இறக்கும் தருவாயில் ஜீவா சொன்ன செய்தி, காமராஜுக்குத் தகவல் சொல்லிவிடு என்பதுதான். இந்த நூற்றாண்டின் ஒரு அதிசய மனிதர், கொள்கைப் பிடிப்புள்ள மக்கள் தலைவன், சிறந்த இலக்கியவாதி மறைந்து போனார். ஆனாலும் அவர் நினைவுகளைத் தாங்கிக் கொண்டு ஆயிரமாயிரம் தொண்டர்கள் இன்றும் ஜீவாவின் பெயரை நினைவில் வைத்துக் கொண்டு மரியாதை செய்து வருகிறார்கள். வாழ்க ஜீவாவின் புகழ்! “ஜீவா ஏறினா ரயிலு, இறங்கினா ஜெயிலு” (இந்தக் கட்டுரை “தினமணி” சுதந்திரப் பொன்விழா மலரில் பி.எம்.சோமசுந்தரம் எழுதி வெளியானது) சுதந்திரப் பொன் விழாவை நாம் உற்சாகமாகக் கொண்டாடும் நேரத்தில் நமக்கு இந்த வாய்ப்பைப் பெற்றுத் தருவதற்கு நம் முன்னோர்கள் பட்ட பாட்டையும் அவர்கள் செய்த தியாகத்தையும் எழுதிட எந்த அகராதியிலும் வார்த்தைகள் இல்லை என்பதே உண்மை. குடும்பத்தைத் துறந்து வெஞ்சிறையில் அடைபட்டு செங்குருதி சிந்தி தம் இனிய உயிரத் தந்து, நமக்கு வாங்கித் தந்த சுதந்திரம் இது. இந்த வேள்வியில் ஆஹூதியானோர் பல்லாயிரக் கணக்கில். அவர்களில் இந்தத் தலைமுறையினர் மறக்க முடியாதவர் மறக்கக்கூடாதவர் ஜீவா என தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட அமரர் ப.ஜீவானந்தம். 1927ஆம் ஆண்டு சிராவயல் கிராமத்தில் ஜீவா ஆரம்பித்த ஆசிரமத்திற்கு விஜயம் செய்தார் காந்தியடிகள். ஜீவாவைப் பார்த்து உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று அவர் கேட்டார். ‘இந்திய மக்கள்தான் என் சொத்து’ என்று ஜீவா பதிலளித்தார். இந்த பதிலால் நெகிழ்ந்த காந்தியடிகள் ‘இல்லை, நீங்கள்தான் இந்தியாவின் சொத்து’ என ஜீவாவைப் பாராட்டினார். பதவிக்காகவும் சொந்தச் சூழ்நிலை காரணமாகவும் தங்களது கொள்கைகளையே தியாகம் செய்யும் தலைவர்களை இன்று பார்க்கிறோம். கொண்ட கொள்கையில் எந்தச் சூழ்நிலையிலும் லட்சியங்களைக் கைவிடாத கொள்கைக் கோமானகவே கடைசி வரை வாழ்ந்தவர் ஜீவா. சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டிருந்தபோது தந்தை பெரியாரின் இணையிலாத் தொண்டனாகவும் வலது கரமாகவும் இருந்தவர். குறைந்தது பத்தாண்டுகளுக்கு ஒரு முறை பெரியாரிடம் கருத்து மாறுபட்டு பலர் பிரிந்து செல்வது வழக்கம். பிரிந்து செல்பவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுவார்கள். ஒரு சமயத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் திசை மாறுவதைக் கண்டார் ஜீவா. 1935இல் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற மகாநாட்டில் பெரியாரின் முன்னிலையிலேயே அவரது கருத்தை போக்கை விமர்சனம் செய்து (தலைவரைத் தொண்டர்கள் விமர்சனம் செய்ய முடிந்த காலம் அது) விட்டு வெளியேறினார். ஆத்திகராக பொது வாழ்வை ஆரம்பித்தவர் ஜீவா. காங்கிரஸ் தொண்டராக சோஷலிஸ்டாக சுயமரியாதை வீரராக பொதுவுடமைக் கட்சியின் தொண்டர் தோழர் தலைவர் என்று பல நிலைகளில் பணியாற்றியவர். காந்திஜி, பெரியார், ராஜாஜி, முத்துராமலிங்கத் தேவர், ராய. சொ., கோவை அய்யாமுத்து போன்ற முன்னணித் தலைவர்களுடன் இணைந்து பாரதத்தின் சுதந்திரத்திற்குப் பாடுபட்டவர். இன மத பேதமின்றி பல்வேறு கட்சிகளும் போராடிப் பெற்ற இந்தச் சுதந்திரத்தைக் காங்கிரஸ்காரர்கள் தங்கள் பிதுரார்ஜித சொத்தாக அனுபவிக்க நினைத்த போது அதைத் தன் கடைசி மூச்சு உள்ளவரை எதிர்த்தவர் ஜீவா. பல தலைவர்களையும், கலைஞர்களையும் இந்த நாட்டுக்குத் தந்த நாஞ்சில் நாட்டில் பூதப்பாண்டி எனும் சிற்றூரில் ஏழ்மையான குடும்பத்தில் 21-8-1907ஆம் ஆண்டு பிறந்தவர் ஜீவானந்தம். பின்னாளில் இவர் ஜீவா எனப் பெயர் பெற்றாலும் இவரது பெற்றோர் பட்டம் பிள்ளை உமையாம்பாள் தம்பதியினர் இவருக்கு வைத்த பெயர் சொரிமுத்து. சட்ட மறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டு காரைக்குடியை அடுத்த கோட்டையூரில் பேசும்போது கைது செய்யப்பட்டார். சிறையில் ஆறு மாதம் அடைக்கப்பட்டார். இது அவருக்கு முதல் சிறை அனுபவம். அன்று தொடங்கி 1942இல் தடுப்புக் காவல் சட்டப்படி மீண்டும் சிறை. நாடு கடத்தல் என்று அவர் அனுபவித்த இன்னல்கள் ஏராளம். ஜீவாவை அவரது தொண்டர்கள் “ஜீவா ஏறினா ரயிலு, இறங்கினா ஜெயிலு” என்று சொல்லும் அளவுக்குத் தன் வாழ்க்கையின் பெரும் பகுதியைப் போராட்டத்திலும் சிறையிலும் கழித்தார். பொதுவுடமைக் கட்சியின் தலைவராக இருந்த சமயம் மதுரையில் மாநாடு ஒன்றை மிகச் சிறப்பான முறையில் நடத்தினார். ஜீவா மாநாடு முடிந்த மறுநாள் சக தோழர்களுடன் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்தார். பக்கத்தில் இருந்தவர்கள் ‘மயக்கம்’ தெளிவித்து எழுப்பினர். மயக்கம் ஏன் வந்தது என்று கேட்டனர். கையில் காசில்லாததால் ஜீவா இரண்டு நாள் பட்டினி என்பது அப்போது அவர்களுக்குத் தெரிந்தது. (பாருங்கள்! இவர் ஒரு அகில இந்திய கட்சியின் மாநிலத் தலைவர்) உடனே அவருக்கு உணவு கொடுத்தனர். அப்போது மாநாட்டுக்குப் பந்தல் போட்டவர் வந்து நின்றார். ஜீவா, தன் அரைக்கால் சட்டையிலிருந்து பணக்கத்தை ஒன்றை எடுத்து அவரிடம் தந்தார். இவ்வளவு பணம் இருக்கும்போது ஏன் பட்டினியாக இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் கேட்டபோது வந்த பதில் “இது கட்சியின் பணம். நான் சாப்பிட அல்ல”. இதுதான் மாசிலா மாணிக்கம் ஜீவா. பாரத மக்களின் மனதில் சோஷலிசக் கருத்துக்களை ஊன்றியவர் நேரு என்றால், தமிழக மக்களின் மனதில் அதை ஆழ ஊன்றியவர் ஜீவா. குடிசை வீட்டில் வாழ்ந்த ஜீவாவுக்கு அரசு சார்பில் வீடு கொடுக்க அப்போதைய முதலமைச்சர் காமராஜ் விரும்பினார். அவர் ஜீவாவிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்த போது, “எல்லோருக்கும் வீடு கொடிங்கள். அப்போது எனக்கும் ஒன்று கொடுங்கள், அதுதான் உண்மையான சோஷலிசம்” என்று அரசு வீட்டை மறுத்தவர் ஜீவா. எந்த விஷயத்திலும் ஒரு உண்மையான அக்கறையுடனும், தீவிரமான பற்றுதலுடனும் ஈடுபடும் இயல்பு கொண்டவர் ஜீவா. தலைவராக இருந்த போதும் தன்னை ஒரு தொண்டனாக தோழனாக நினைப்பதில் பெருமை கொண்டவர். நன்றி: “தினமணி” சுதந்திரப் பொன்விழா மலர் 1 ஆசிரியர் பற்றி [Kambaramayanam] தஞ்சை வெ.கோபாலன் privarsh@gmail.com வலைத்தளம் : http://tamilnaduthyagigal.blogspot.in/ 38 ஆண்டுகளாய் பொதுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகாகவி பாரதி பற்றி பயிலரங்குகள் நடத்தி வருகிறார். பாரதி பயிலகம், இலக்கிய பயிலகம் நடத்துகிறார். தமிழ் நாடு சுதந்திரப் போர் தியாகிகள் பற்றி எழுதுகிறார். —- 2 Free Tamil Ebooks - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும் எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948 நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org - Arun arun@fsftn.org - இரவி Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/ 3 வேண்டுகோள்! என் அன்பிற்கினிய நண்பர்களே, பாரதி பயிலகம், இலக்கிய பயிலகம், தமிழ் நாடு சுதந்திரப் போர் தியாகிகள் தவிர கம்பராமாயணம் உரை நடை ஆகியவற்றை எனது வலைப்பூக்களில் படித்துவரும் அன்பர்களே! உங்களுக்கு மீண்டும் நினைவு படுத்துகிறேன். என்னுடைய கீழ்கண்ட வலைப்பூக்களுக்கு விஜயம் செய்யுங்கள். படித்தபின் தங்கள் ஆலோசனைகளை வழங்குங்கள். அவை எனக்கு மேலும் ஊக்கத்தையும், ஆர்வத்தையும் அதிகரிக்கும் என்பதால் தங்களது கருத்துக்களை தயவு செய்து பதிவு செய்யுங்கள். எனது வலைப்பூக்கள் விவரம் இதோ:– 1.http//www.bharathipayilagam.blogspot.com 2.http//www.ilakkiyapayilagam.blogspot.com 3.http//www.tamilnadythyagigal.blogspot.com 4.http//www.kambaramayanam-thanjavooraan.blogspot.com நன்றி நண்பர்களே! மீண்டும் சந்திப்போம்! தஞ்சை வெ.கோபாலன்