[] [தண்டோரா கதைகள்] தண்டோரா கதைகள் விஜயலக்ஷ்மி சுஷில்குமார் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com உரிமை – கிரியேட்டிவ் காமன்சு. எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. This book was produced using PressBooks.com. உள்ளடக்கம் - தண்டோரா கதைகள் - விஜயலக்ஷ்மி சுஷில்குமார் - 1. கணக்கு - 2. இதா சுதந்திரம்? - 3. சொந்தமா? - 4. ஆண்மை - 5. இது எந்த ஊர்? - 6. என்னை மறந்ததேனோ? - 7. கண்டுகொண்டேன் (சுய)நலத்தை! - 8. காத்து வாங்கலையோ ...காத்து! - 9. காதல் வந்ததே... காதல் வந்ததே! - 10. சட்டம் என் கையில் - 11. சாகா வரம் பெற்ற பொதுஜனங்கள்!!!! - 12. சுடுகாட்டுக்குப் போறேன்... - 13. நல்லதோர் வீணை(கள்) - 14. நிஜம் நிழலான போது... - 15. பசியா ... பஞ்சமா... மூச்! இல்லவே இல்லை... - 16. பணம் காட்டும் நிறம் - 17. புதிய வார்ப்புகள் - 18. யார் மலடு? - 19. யார் காரணம்? - 20. விலைமாது - 21. விழிப்புணர்வு! - FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 தண்டோரா கதைகள்   [thandora-stories] ஆசிரியர் – விஜயலக்ஷ்மி சுஷில்குமார் வலைப்பூ: http://vijisushil.blogspot.ae/ vijayalakshmisushilkumar@gmail.com   நம்மைச்சுற்றி நடக்கும் சம்பவங்களின் வெளிப்பாடு – சமூகம், அரசியல், குடும்பம் என்று எல்லாம் வகையான கருவையும் கதைகளாக சொல்ல முயன்றதே இந்த தண்டோரா கதைகள்.   உரிமை – கிரியேட்டிவ் காமன்சு. எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.   மேலட்டை உருவாக்கம்: லெனின் குருசாமி மின்னஞ்சல்: guruleninn@gmail.com மின்னூலாக்கம் – த.சீனிவாசன் tshrinivasan@gmail.com 2 விஜயலக்ஷ்மி சுஷில்குமார் விஜயலக்ஷ்மி சுஷில்குமார் என்ற பெயரிலேயே சிறுகதைகளை எழுதுகிறேன். தமிழ்நாட்டில் பிறந்துவளர்ந்த நான் தற்பொழுது அமீரகத்தில் வசிக்கிறேன். சமூகவியல், மனோதத்துவம் மற்றும் வணிகவியல் தளங்களில் செயல்படுகிறேன். என்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்களின் தாக்கத்தை வெளிப்படுத்த தேர்ந்தெடுத்த ஊடகமே என்னை கதைசொல்லியாக்கியது. ஆசிரியர் – விஜயலக்ஷ்மி சுஷில்குமார் வலைப்பூ: http://vijisushil.blogspot.ae/ vijayalakshmisushilkumar@gmail.com [pressbooks.com] 1 கணக்கு “என்ன சுமா, என்ன நேத்திக்கி ஷாப்பிங் போன பில்ல கீழேயிருந்தும் மேலிருந்தும் கணக்கு பாக்கற? எப்படி கூட்டினாலும் ஒண்ணாத்தான் வரப்போகுது. அப்படி வச்சிட்டு வா காண்டீன் போயிட்டு வரலாம்” என்று சுமாவை அழைத்துச் சென்றாள் வர்ஷா. ‘300 ரூபா இடிக்குது’ என்ற சுமாவை பார்த்து “என்ன இன்னும் கணக்குல இருந்து வெளியவரலையா?’ என்றாள் வர்ஷா. “இல்லடி நேத்திக்கு தள்ளுபடில தானே வாங்கினோம், ஆனா மொத்தம் அமௌன்ட் ஜாஸ்தியா இருந்துது. இப்போதான் தெரிஞ்சிது ஒரு ட்ரெஸ் ரேட்டை குறைக்காம போட்டிருக்கான். இன்னிக்கி சாயங்காலம் போய் எக்ஸ்சேஞ்ச் பண்ணனும்.” என்றாள் சுமா. “ஏண்டி இப்படி கணக்கு பாக்கற” “ஆமா உன்ன மாதிரி செலவு பண்ண சொல்லறியா. அப்புறம் கேக்க மறந்துட்டேன், நீ நம்ப காஷியர் சந்திரன் சார் கல்யாணத்துக்கு என்ன டிரஸ் எடுத்த?’ என்று கேட்ட சுமாவை பார்த்து “அவர் கல்யாணத்துக்கு நான் எதுக்கு டிரஸ் எடுக்கணும். ஏற்கனவே வாங்கியிருக்கற புடவைய கட்டவே நேரமில்லை. ஆபீஸ்க்கு எப்பவும் சுடிதார், எப்பயோ வர விசேஷங்களுக்குதான் புடவை கட்டறதே. அதுனால இருக்கறதுல நல்லதா கட்டினா போச்சு. அதுவுமில்லாம யாரு நம்ப கட்டற புடவைய பாக்கபோறாங்க?” என்ற வர்ஷாவை ஒரு ஜந்துவைப்போல் பார்த்தாள். வர்ஷாவிற்கு தெரியும் எதையாவது சாக்கு வைத்து சுமா புடவைகள் மற்றும் அதற்கு தோதானதாக மற்ற அலங்கார பொருட்களை வாங்கிவிடுவாள். ஆனால் எல்லாவற்றிலும் கணக்கு பார்ப்பாள். சுமா வர்ஷாவை அழைத்துக்கொண்டு தன் வீட்டிற்கு சென்று முன்தினம் வாங்கிய புடவையுடன், பில்லையும் எடுத்துக்கொண்டு டீ.நகர் சென்றாள். பெயர்பெற்ற கடையினுள் சென்று முன்தினம் வாங்கிய புடவையை காண்பித்து அது தள்ளுபடி விலையில் இல்லாததை கூறி வாதிட்டு, எப்படியோ பணமாக தரமாட்டார்கள், அதனால் வேறு புடவையை எடுக்கலாம் என்று கூறியதால் வேறு நல்ல மனதுக்கு பிடித்த புடவையை தேடி கண்டுபிடித்து அதற்கு கூடுதலான 500 ரூபாயை தந்து கடையிலிருந்து வெற்றிகரமாக வெளியேறினாள். வர்ஷாவிற்கு கூடுதலாக செலவு செய்த சுமாவை என்ன சொல்வது என்று தெரியவில்லை. சந்தோஷமாக பேசிக்கொண்டே நடந்து வரும்போது கல் தடுக்கி சுமாவின் காலில் இருந்த செருப்பு அறுந்துவிட்டது. “ச்சே…போன மாசம்தான் வாங்கினது..அதுக்குள்ள இப்படியாயிடுச்சே..” என்று சுற்றும்முற்றும் பார்த்தாள். சிறிது தூரத்தில் நீல வண்ண இரும்பு பெட்டிபோல் ஒரு செருப்பு தைக்கும் கடை கண்ணில் பட்டது. அதை நோக்கி காலை இழுத்துக்கொண்டே நடந்தாள். ரோட்டரி சங்கம் தன் தானதர்மத்தை பறைசாற்றும் விதத்தில் “உடல் ஊனமுற்றோருக்கான” உதவியாக அமைத்து தந்ததை காணமுடிந்தது. அங்கு ஒரு மத்தியவயது பெண் உட்கார்ந்திருந்தாள். அவளருகில் ஒரு சிறுபெண் அடுத்த கடையில் இருந்தும், தெருவிளக்கிலிருந்தும் வரும் வெளிச்சத்தில் படித்துக்கொண்டிருந்தாள். செருப்பு தைக்கும் பெண்ணோ, எப்படியும் இன்னும் அரைமணிநேரம் கழித்து கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று சமைக்க வேண்டும். கடைக்கு விளக்கு கிடையாது, அதனால் இருட்டும்வரை இருந்துவிட்டு கடையை அடைக்க நினைத்தாள். கடைசி நேரம் வரை யாரவது வரமாட்டார்களா என்ற நப்பாசை! அப்பொழுது அவ்வழியே ஒரு வயதான பெண்மணி கையில் ஏதோவொரு மூட்டையை தூக்கியபடி நடக்க முடியாமல் நடந்து வந்துகொண்டிருந்தார். அடுத்து வரும்போது அந்த வயதானவர் பிஞ்சிபோன செருப்புடன் நடப்பது தெரிந்தது. “மல்லி, போய் அந்த கிழவிய இட்டா..” என்று தன் மகளை ஏவினாள். மகள் அந்த முதியவருடன் ஏதோ பேசி கடையை நோக்கி அழைத்துவருவது தெரிந்தது. “தா நா பிஞ்சிபோனதை தெச்சி தரேன்.” என்று கூறிய பெண்ணை கண்டு “இல்ல வேண்டாம்…என்று தயங்கியபடி கூறியவரை பார்த்தபோதே தெரிந்தது… பொருளாதாரத்தில் சமம் என்று. அங்கிருந்த ஆடிக்கொண்டிருந்த ஒற்றை ஸ்டூல்லில் அமருமாறு கூறி “நீ ஒன்னும் பைசா தர வேண்டாம்” என்று அந்த செருப்பை வாங்கி பார்த்தாள். அந்த செருப்பை எவ்விதத்திலும் தைக்கவே முடியாது, பலமுறை அறுவைசிகிச்சை நடந்ததன் அடையாளம் தெரிந்தது. உடனே கடையின் உட்புறம் இருந்த பையை எடுத்து தருமாறு தன் மகளிடம் கூறினாள். அப்பையில் பழைய செருப்புகள் ஜோடிஜோடியாக இருந்தது. பழையது என்றாலும்கூட அணிந்துக்கொண்டு நடக்க முடியும், நீண்டகாலம் உழைக்கும். அதில் இருந்து ஒரு ஜோடி செருப்பை எடுத்து “இந்தா இத போட்டு காட்டு” என்று கூறினாள். அம்முதியவர் அணிந்து காட்ட அது சரியாக இருந்தது “என்னாண்ட ரூபா இல்லை…வேண்டாம்” என்று மறுத்தவரிடம் “பரவாயில்லை போட்டுக்க.. சும்மா இருக்கறது தரேன்…என்னோட அம்மான்னா தரமாட்டேனா?’ என்று கேட்ட பெண் உண்மையாகவே தன் மகளைப்போல அம்முதியவரின் கண்ணீர் நிறைந்திருந்த கண்களுக்கு தோன்றியது. “நல்லா இருக்கணும்…இந்தா” என்று தன் மூட்டையில் இருந்த பொரிஉருண்டையை எடுத்து மல்லியிடம் தந்து விடைபெற்றார். இதுவரையில் நடந்தவற்றைப் பார்த்துக்கொண்டே இருந்தனர் சுமாவும் வர்ஷாவும். அதன்பின் சுமா “இந்தாமா, இத தெச்சிக்குடு.. எவ்வளவு ஆகும்” என்று கேட்ட சுமாவிடம் “அஞ்சி ரூபா தாங்க” என்ற பெண்ணை பார்த்து “என்னது இத்துனூண்டு தெக்கறதுக்கு இவ்வளவா? மூணு ரூபா தரேன்” என்ற சுமாவை ஓர் பார்வைப் பார்த்தாள். இப்பொழுது விற்கும் விலைவாசிக்கு தான் கேட்பதே மிகவும் குறைவு.. இந்த வருமானத்தில் தான் குடும்பம் போற்றவேண்டும். கணவன் என்ற தறுதலை ஏதாவது டாஸ்மாக் கடை வாசலில் மிதந்தபடி இருப்பான். என்ன செய்ய.. “சரி தாங்க” என்று செருப்பை சரிசெய்ய துவங்கினாள். சுமாவிற்கு தன் பேரத்தின் மீது பெருமை. வர்ஷவோ சுமாவை ஏதோவொரு அற்பப்புழுவை போல் பார்த்தாள். அவளின் பார்வை சுமாவை ஏதாவது செய்தா விடும்? சுமா வர்ஷாவை அழைத்துச்சென்றவுடன் அவள் தந்து சென்ற மூன்று ரூபாய் அப்பெண்ணை பார்த்து சிரித்தது. அவர்கள் அந்தப்பக்கம் போனவுடன் தன் மகளின் உதவியுடன் கடையை அடைத்து, அங்கிருந்த கைச்சக்கரவண்டியின் பின்னால் தன் மகளின் புத்தக மூட்டையை வைத்ததும், அந்த வண்டியின் பின்புறம் வரைந்திருந்த உதவிபுரிந்த தலைவரின் படம் மங்கி, உதிர்ந்துபோயிருந்தது மறைந்தது; மகளுடன் பேசிக்கொண்டே கையால் வண்டியை மிதித்துக்கொண்டு தங்கள் வீடு நோக்கி சென்றனர், நாளைய விடியலை எதிர்நோக்கி !!! 2 இதா சுதந்திரம்? “ஐயையோ… நேரம் ஆயிடுச்சே. இன்னிக்கும் இருக்கு அர்ச்சனை”, என்று வாய் முணுமுணுத்தாலும் அதற்கு மேல் என்ன சொல்ல முடியும்! எப்படியோ சிக்னல்ல பஸ்ஸ பாத்ததுனால ஓட்ட பந்தய வீராங்கனையைப்போல ஓடி வந்து பஸ் எடுக்கும் முன், முன்ஜென்ம பந்தத்தின் விட்டகுறை தொட்டகுறையாக படிகளில் தொத்திக்கொண்டு வந்து சேர்ந்தேன். ‘வா வா, ரொம்ப நேரமாச்சுன்னு பாத்துக்கிட்டு இருந்தோம்.’ என்று என் மாமியார் வரவேற்றார். ‘நாளைக்கு ஹெட்ஆபீஸ்ல இருந்து வராங்கன்னு எல்லா ரிப்போர்ட்டும் ரெடி பண்ணிட்டு வர லேட் ஆச்சு. நேத்திக்கே சொன்னேனே.” என்றபடி உள்ளே சென்றேன். ‘ஆமா, நீயும்தான் தினமும் ஒன்னு சொல்லற. அம்மா.. கிருஷ்ணா ராமான்னு போறகாலம் வந்தாச்சு. ஒண்ணுமே முடியலை’ என்றபடி நன்றாக கால்களை நீட்டி டிவியை காண அமர்ந்துவிட்டார். டைனிங் டேபிள் மேல் புத்தகத்தை வைத்துக்கொண்டு எழுதிக்கொண்டு இருந்த என் பெண்ணும் பிள்ளையும் என்னைப் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தனர், விட்ட இடத்திலிருந்து. “ஆமா, கிருஷ்ணா ராமான்னு கோவிலுக்கு போக முடியாது, வீட்டு பூஜையறையிலும் ஒக்கார முடியாது. அப்படி என்ன வேலை செஞ்சிட்டாங்க? காலைல 4.30 மணிக்கு எழுந்து காலைல டிபன், மத்தியானம் சாப்பாடு எல்லாம் அவங்க மெனு போட்டு தந்தத நான் சமைச்சு வச்சிட்டுப்போனா இவங்களுக்கு முடியல.’ என்று என் மனதில் கூறிக்கொண்டே காப்பிபோட்டு தந்துவிட்டு ‘அத்தே, ராத்திரிக்கு என்ன சமைக்கணும்’ என்று கேட்டேன். போன ஜென்மத்தில் ஹோட்டல்ல வேலை செய்தேனோ என்று தோன்றியது. பவ்யமாக அவர் கூறிய எல்லாவற்றையும் சமைத்துவிட்டு வரும்போது மாமியாரும் மாமனாரும் மும்முரமாக விட்டால் டிவியின் உள்ளேயே சென்றுவிடும் அளவிற்கு ஒன்றிப்போய் பார்த்துக்கொண்டு இருந்தனர். வந்ததில் இருந்து உட்கார நேரமில்லாமல் இப்பொழுது கிடைத்த நேரத்தில் பிள்ளைகளிடம் அமர்ந்தேன். அன்று நடந்த நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தனர். அதற்குள் அவர்கள் பார்த்துக்கொண்டு இருந்த சீரியல் முடியும் நேரம் கணவரின் தம்பியும் வந்துவிடவே எல்லோருக்கும் பரிமாறினேன். என்னுடைய அர்த்தநாரி வருவதற்கு எப்படியும் இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். அதற்குள்ளே மறுநாள் சமைக்க வேண்டிய பட்டியலைப் பெற்றுக்கொண்டு மற்ற வேலைகளை முடித்துவிட்டு நிமிரும் நேரம் அவரும் வந்தார். அன்றிரவு பிள்ளைகள் உறங்கியபின் ‘அம்மாவுக்கு முடியல ஒருவாட்டி பாத்துட்டு வரட்டுமா?’ ‘ம்..போய்ட்டுவா’ ‘அப்போ கொஞ்சம் பணம் வேணுமே..’ ‘என்கிட்டே எங்க இருக்கு. அம்மாவை கேட்டுக்கோ’ என்று கூறிவிட்டு அவர் சுவர்க்கத்தை அடைந்துவிட்டார். எப்படித்தான் இந்த மனுஷன் படுத்தவுடன் கண்ணு மூடி தூங்கிப் போறாரோ? ஒருவேளை இவரைப் பார்த்துதான் படுக்க வைத்தால் கண்ணை மூடும் பொம்மையை கண்டுபிடிச்சாங்களோ! ‘ம்.. அப்போ அப்போ கொண்டு கொட்ட இங்க பணம் எங்க இருக்கு? இந்த காலத்துல சம்பாதிக்கிற அகம்பாவம், நாம ஒன்னு சொல்லிட முடியுமோ.. அப்புறம் பெண் சுதந்திரத்தை பத்தி பேசுவாங்க.’ என்று அன்றைய பாடலை அவர் பாடவும், மாமனாரும், கணவரும் தப்பாமல் தாளம் போட்டனர். ‘இவ்வளவுக்குப் பின்னும் அம்மாவிற்கு தர பணமில்லை. திருமணமாகி வந்த முதல் மாதமே சம்பளத்தை மாமியாரின் கையில் தந்து என்னை அடமானம் வைத்துவிட்டேன். அடமானம் வைக்கப்பட்ட நான், பெண் சுதந்திரத்தின் எடுத்துக்காட்டாக, ‘ஐயையோ .. லேட் ஆச்சே. இன்னிக்கி ஹெட் ஆபீஸ்ல இருந்து வராங்களே.” என்று கிடைக்காத பணத்தை ஒரு நப்பாசையில் கேட்டு “இல்லை” என்ற பதிலின் உந்துதலில் வீராங்கனையாக ஓட்டம் பிடித்தேன், அடைமானத்தின் வட்டியை தீர்க்க, ஆபீஸுக்கு. 3 சொந்தமா? விஜயன் தன் வீட்டிற்கு அவசர அவசரமாக வந்து சேர்ந்தான். வீட்டில் யாருமில்லை. “விஜயன், உங்க மனைவிகூட என் பையனும் மனைவியும் போயிருக்காங்க. இப்போ கவலைப்பட ஒண்ணுமில்லை. நீங்க வரவரைக்கும் காத்துகிட்டு இருக்க முடியாதே, அதனாலதான் நான் அவங்கள அனுப்பிட்டு உங்களை என்கூடவே கூட்டிகிட்டு போகலாம்னு வெயிட் பண்ணறேன். உங்க செல்போன் என்ன ஆச்சு? ரிங் போய்கிட்டே இருந்தது.” என்று அடுத்த வீட்டு சங்கரன் கூறியபோதுதான் என் செல்போன் அலுவலகத்தில் விட்டுவிட்டு வந்தது ஞாபகம் வந்தது. நெஞ்சம் படப்படப்பாக அடித்துக்கொண்டது, அதுவரை எதுவும் உணராதது அப்போதுதான் நான் உணர்ந்தேன். அதுவரை பிடித்துக்கொண்டு இருந்த என் மூச்சு வெளிவருவதும், என் கால்கள் வலுவிழந்து துவளக்கண்டு அப்படியே வீட்டு வாசலில் உட்கார்ந்து விட்டேன். அதற்குள் அடுத்த வீட்டில் வசிப்பவர்கள் சிலர் என்னை சூழ்ந்துக்கொண்டு பேசுவது தெரிந்தது, ஆனால் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் என்று என் நினைவில் பதியவில்லை. மனம் என் மகளையே மானசீகமாக சுற்றிசுற்றி வந்தது. தவறு செய்துவிட்டோமோ என்று என் மனம் பதைத்தது. “கொஞ்சம் நகருங்க” என்று அவர்களை அப்புறப்படுத்திவிட்டு குடிக்க தண்ணீர் தந்து என்னை ஆசுவாசப்படுத்திய சங்கரன் உடனே தன் வண்டியில் ஏற்றி மருத்துவமனை நோக்கி செல்லவும் என் மனமோ பின்னோக்கி சென்றது. “அப்பா, ப்ளீஸ்… நானும் உங்ககூடவே வரேன். என்னையும் கூட்டிகிட்டு போங்க.” என்று கூறிய மகளை பார்த்து “ஸ்வேதா குட்டி நீ என்ன இன்னும் சின்ன பாப்பாவா? அடுத்த மாசம் டெர்ம் எக்ஸாம் வருதே, இப்போ ஸ்கூல் லீவ் போட்டுட்டு போனா சரியா வருமா? நானும் அம்மாவும் பாட்டிக்கு ஒடம்பு சரியில்லைன்னு தானே போறோம். நாங்க போயிட்டு என்னன்னு பாத்துட்டு சீக்கிரமே வந்துடுவோம். அப்படி யாராவது அங்க இருக்கணும்னு இருந்தா அம்மாவை விட்டுட்டு நான் வந்துடுவேன். எப்படியும் அடுத்த மாசம் வரும் லீவ்ல நாம்ப பாட்டிய பாக்க போகத்தானே போறோம். புரிஞ்சிக்கோடா, இப்போ பத்தாவது படிக்கற, இல்லைனாலும் உன்ன கூட்டிகிட்டு போவேன்” “அப்போ நான் என்கூட படிக்கற வித்யா வீட்டுல போய் தங்கறேன், அவங்க வீட்டுல ஒண்ணுமே சொல்லமாட்டாங்க.” என்று மறுபடியும் ஆரம்பித்தாள். அதுஎன்னவோ அவளுக்கு அவர்களைப் பார்த்தாலே ஆகாது, ஆனால் அவர்கள் ஆசையாகத்தான் இருப்பார்கள். ஏன் என்ற காரணம் தெளிவாக கூறாவிட்டாலும் அவளுக்கு பிடிக்கவில்லை என்று விடமுடியுமா? தூரத்து சொந்தமாக இருந்தாலும்கூட, நம் சொந்தம்ன்னு சொல்லிக்க அவங்கதான் பக்கத்துல இருக்காங்க. இவதான் அவங்க வீட்டுக்கு போகவே மாட்டா, அதுனாலதான் அவங்கள இங்க வந்து தங்க சொல்லறோம். இன்னும் சின்ன குழந்தையா நிலைமையை புரிஞ்சிக்காம இருக்காளே. ரொம்ப செல்லம் குடுத்துட்டோமோ? என்று தோன்றியதை மாற்றிவைத்து, “அது எப்படி மத்தவங்க வீட்டுல விடமுடியும், அதுவும் வயசு பொண்ண. சொன்னா புரிஞ்சிக்கணும் குட்டி. உனக்குதான் துணைக்கு நம்ப அத்தைப்பாட்டியும் தாத்தாவும் வந்துடற போறாங்க. தாத்தா வேலைக்கு போயிட்டு எப்படியும் இங்க வந்துடுவாரு, அப்பப்போ வந்து அவங்க பையனும் வந்துட்டு போவாங்க. பாரு அவங்க பையன கூட விட்டுட்டு உனக்காகவே இங்க வந்து தங்க போறாங்க. அப்புறம் என்னடா..” என்று சமாதானம் பலதும் கூறி அவளின் விருப்பத்தையும் மீறி விட்டுச்சென்றது தப்போ என்று இன்று தோன்றினாலும் என்ன பயன்? ஊருக்கு சென்று வந்ததில் இருந்தே அவளிடம் மாற்றம் இருந்ததோ? நாம்தான் கவனிக்காமல் விட்டுவிட்டோமோ? என்ற சிந்தனை தடைப்பட்டது, மருத்துவமனையில் வண்டி நின்றதால். உள்ளே ஓடிய என்னை ICU அறையின் வாசலில் அழுது சிவந்து இருந்த என் மனைவியின் முகமே வரவேற்றது. அவளுக்கு என்னைப் பார்த்ததும் வார்த்தையே வரவில்லை. அதே நேரம் அந்த அறையில் இருந்து வெளிப்பட்ட மருத்துவர் உள்ளே சென்று மகளை பார்க்கவிடாமல் “வாங்க முதல்ல உங்ககூட கொஞ்சம் பேசணும்” என்று அழைத்ததும் ஏதோவொரு மந்திரத்திற்கு கட்டுப்பட்டதுபோல் பின் சென்றோம். “இதுக்கு முன்னால உங்க பொண்ணு இப்படி ஏதாவது செஞ்சியிருக்காங்களா?” “இல்லை டாக்டர்” “வேற ஏதாவது அவங்ககிட்ட மாற்றம் தெரிஞ்சிதா? உங்களுக்கு தெரிஞ்சது எல்லாமே சொல்லுங்க, அவங்க ஸ்கூல்பத்தியும்” என்றார். நான் என் மனைவியை பார்த்தேன், அவளால் பேசமுடியாது என்று அறிந்தேன். எதில் இருந்து எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை, ஆனால் சொல்லாமல் இருக்க முடியாதே! “இப்போ கொஞ்சநாளா சரியா சாப்பிடவே மாட்டா, நல்லா படிக்கற பொண்ணுதான் ஆனா இப்போ அவ்வளவா படிக்கறதில்லை. அதுக்காக நாங்க அவளை ஒண்ணுமே சொல்லறதில்லை எப்படியும் அவளே தானா படிக்க ஆரம்பிச்சிட்டா போதும்னு விட்டுட்டோம். ஸ்கூல்ல போன வாரம் அவங்க டீச்சர் வர சொல்லி நான் போய் பார்த்தேன். இப்போ கொஞ்ச நாளா அவ பாடத்தை கவனிக்கறது இல்லைன்னும், அப்பபோ ஏதோ வேறலோகத்துல இருக்கறமாதிரி எங்கேயோ யோசனையாவே இருக்கா அப்படின்னும், அவ்வளவா யாருகூடயும் முன்னபோல கலகலப்பா இல்லை அப்படின்னு சொன்னாங்க. நாங்களும் அவளுக்கு என்ன பிரச்சினை அப்படின்னு கேட்டு பாத்துட்டோம்.” அதுவரைக்கும் சொல்லிக்கொண்டு வந்த என்னால் மேலே சொல்ல முடியவில்லை. நான் தயங்குவதை பார்த்து என் மனைவி ஆரம்பித்தாள், “அது வந்து டாக்டர்… அவளுக்கு அவளோட அத்தைப்பாட்டி வீட்டு ஆளுங்களை அவ்வளவா பிடிக்காது. எங்க மாமியாருக்கு உடம்பு சரியில்லை அப்படின்னு கொஞ்ச நாளைக்கு முன்னே நாங்க ரெண்டு பேரும் ஊருக்கு போகவேண்டியிருந்தது, அதுனால அத்தைப்பாட்டியும் தாத்தாவும் எங்க வீட்டுல வந்து தங்கினாங்க. அவங்க பையனும் வேலைக்கு போறதால அப்பப்போ வந்து பாத்துட்டு போனான். வந்த அன்னிக்கி எங்கள பாத்துட்டு ஒரே அழுகை, சரி பாக்காத இருந்ததால அப்படின்னு நினைச்சோம். ஆனாலும்கூட கொஞ்ச நாளாவே சரி சாப்பாடும் தூக்கமும் இல்லை. என்னமோங்க எப்படி சொல்லறதுன்னு தெரியல ஒரு மூட் அவுட்டாவே இருந்தா. என்ன கேட்டாலும் பதிலே வராது. எப்படியோ தோண்டித்துருவி கேட்டதுல அந்த தாத்தா சரியில்லை அப்படீன்னு சொல்லறா. அவங்க வயசுல பெரியவங்க, ரொம்ப தங்கமானவங்க, பொண்ணு சொல்லறமாதிரி இருக்காது, இத்தனைக்கும் வெளிப்படையாவே கேட்டுட்டேன் அவளை எங்கயாவது தொட்டுட்டாரா அப்படீன்னு, அதுக்கு இல்லை ஆனா அப்படின்னு ஒண்ணுமே சொல்லாம அழுகை. அவங்க எங்க சொந்தகாரங்க தான், ரொம்ப நல்ல குடும்பம், அவரும் ரொம்ப வயசானவர் இல்லை ஒரு 54 – 55 வயசுதான் இருக்கும். ஒரு பெரிய கம்பெனில நல்ல போஸ்ட்ல இருக்காரு. அவரு இதுவரைக்கும் ஒரு தப்பான பார்வையே பார்த்ததில்லை. அவரு பேரை எடுத்தாலே ஒன்னு அழுவா இல்லேன்னா கத்தறா. அடுத்த மாசம் எங்க மாமியாருக்கு ஆபரேஷன், அப்போ எக்ஸாம்கறதுனால அவங்ககிட்ட விட்டுட்டு போகலாம்ன்னு சொன்னதுல இருந்து ஒரே ரகளை. ஆனா இப்படி பண்ணுவான்னு நினைக்கல” என்று தன் மனதில் இருந்ததை சொன்னவுடன் ஏதோவொரு பாரம் இறங்கியதுபோல் இருந்தது. “உங்க பொண்ணுக்கு ட்ரீட்மென்ட் தரும்போது அவங்க மனசுல இருந்து வந்த புலம்பல்கள பாக்கும்போது அவங்க சொன்னது உண்மைதான் அப்படின்னு புரிஞ்சிக்க முடியுது. அது மட்டுமில்லாமல் அவங்க கொஞ்சம் முன்னையே மயக்கம் தெளிஞ்சிட்டாங்க; எங்க டீம்ல இருக்கற டாக்டர் பேச்சுக்குடுத்து பேச வெச்சதுல விஷயங்களை அவங்க சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. அதுனாலதான் நான் உங்களை இங்க கூப்பிட்டுகிட்டு வந்தேன். முதல்ல நீங்க ஒன்னு புரிஞ்சிக்கணும், வெறும தவறான இடத்துல தொட்டாதான் sexual abuse அப்படீன்னு நினைக்காதீங்க. தொடாமலேயே எதிர்ல பாக்கறமாதிரி ஒருத்தர் தன்னோட பிறப்புறுப்பை காட்டினாலோ, உணர்ச்சிகளை தூண்டிவிட போர்னோகிராபி (pornography materials) காண்பித்தாலோ, இல்லைனா வலுக்கட்டாயமாக யாரவது உடலுறவை வைத்துக்கொள்வதை பார்க்கவைத்தாலோ இல்லைனா சுய இன்பத்தை (masturbation) காணவைத்தலும் அல்லது வெறும் வாய் வார்த்தையால் சொல்வதும் அது பாலியல் அத்துமீறல்தான்.” அதைக் கேட்டு எங்களுக்கு ஒன்றுமே சொல்ல தோன்றவில்லை. மருத்துவரே தொடர்ந்தார் “இந்த நிலைமைல நீங்க அவங்க சொல்லறதை நம்பாததும், புரிஞ்சிகாததும் இங்க முக்கியமான மூல காரணம். இந்த நிலைல மீண்டும் அவங்ககிட்ட விட்டுட்டு போகபோறீங்க அப்படின்னா யோசிச்சி பாருங்க. இந்த விஷயத்தை யாருகிட்டையும் வெளிப்படுத்தாம மனசுலையே போட்டுபோட்டு அழுத்தியிருக்காங்க.” என்று எங்களைப் பார்த்தார். எங்களுக்கு புரிந்தது, ஆனால் வாய் பேச முடியவில்லை, மனம் சொன்ன விஷயத்தை ஜீரணிப்பேனா என்றது. அது எப்படி நல்ல குடும்பத்தில் பிறந்து நல்ல நிலையில் எல்லோருக்கும் நல்லவராக இருப்பவரால்…… இதைதான் தன் மகள் அவளுக்கு தெரிந்த விதத்தில் சொன்னதும், தாங்கள் புரிந்துக்கொள்ளாமல் இருந்ததும்…. என்ன ஒரு மடத்தனம். எங்களின் பாவனைகளை வைத்தே மருத்துவர் புரிந்துக்கொண்டார் “நல்ல குடும்பம் அல்லது பரம்பரை, சமூகத்தில் இருக்கும் நிலை இது எல்லாம் தனிமனித வக்கிரத்தை தடுக்காது. வக்கிரபுத்தி உள்ளவன் எங்கு வேண்டுமானாலும் எந்த நிலையிலும் யாராகவும் இருக்கக்கூடும். குழந்தைகள் ஆண் பெண் என்ற பேதமில்லாமல் இப்படி பாதிக்கப்படுகிறார்கள். அதுனால எப்படி நம் பிள்ளைகளுக்கு குட் டச், பாட் டச் (Good Touch / Bad touch) சொல்லித்தருகிறோமோ இவ்வாறும் சிலரை எதிர்க்கொள்ளும் நிலை வரலாம் அல்லது வராமலும் போகலாம் என்று எடுத்துக்கூறி அவர்கள் சொல்வதை முதலில் நம்ப வேண்டும்.” ஆமாம் அவள் கூறியபோது நாமே நம்பவில்லை… இதுபோல் எத்தனை குடும்பங்களில் நடக்கிறதோ? எங்களையே பார்த்துக்கொண்டிருந்த மருத்துவர் மேலும் தொடர்ந்தார், “எப்படியும் பிள்ளைகள் ஏதோவொரு விதத்தில் சொல்ல வருவார்கள், அதை புரிந்துகொள்ளவும், மாற்றத்தை அறிந்தாலும் இதுபோல் தன்னை அழித்துக்கொள்ளும் செயலை தடுக்கவும், அவர்களிடம் இருக்கும் கில்டி பீலிங் போக்கி மறுபடியும் நார்மல் வாழ்க்கை வாழ வைக்கலாம். அப்படி இல்லாம போனா உங்க பொண்ண மாதிரியோ இல்லைனா வேறுவிதமாவோ அவங்க வாழ்க்கை மாறிடும், ஏன்னா பாதிப்பு உடலுக்கும், மனசுக்கும் சேந்தது.” “அப்போ எங்க பொண்ணுக்கு…..” மேலே எப்படி கேட்பேன்? என்னவென்று கேட்பேன்? “இப்போ நீங்க கவலைப்பட தேவையில்லை. உங்க பொண்ணுக்கு தேவையான ட்ரீட்மென்ட், உடம்புக்கும் மனசுக்கும், தந்துட்டுதான் விடுவோம். இப்போவே எங்க டாக்டர் உங்க பொண்ணுகிட்ட பேசவேண்டிய விதத்துல பேசினதுல உங்க பொண்ணு யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க. எப்படியும் எதிர்காலத்தை பத்தி கவலையில்லை, இப்போதாவது சரியான ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சிட்டோமே. கொஞ்சம் நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க. அவங்களே உங்க பொண்ண பாக்க கூப்பிடுவாங்க” என்று எங்களை வழியனுப்பினார். குடும்ப பாரம்பரியம், சமூகத்தில் நல்ல நிலைமை என்ற வெறும் வறட்டு பெருமைகளுக்கு மதிப்பளித்து உண்மையான மனிதனையும் வக்கிரத்தையும் அடையாளம் காணமுடியாமல் கொடுத்த விலை மிகப்பெரியதே. எதையெதையோ அறிந்துக்கொள்ள முயலும் நாம் முக்கியமானதை அறிய தவறிவிடுகிறோமோ? 4 ஆண்மை “அம்மா அந்த ஆளுகூட வாழவே முடியாது. என்னோட சம்பளம் மட்டும் போதாதுன்னு இருக்கற எல்லா லோன்னும் எடுத்தாச்சு. இப்போ தான் ஒரு லோன் முடிஞ்சது, திரும்ப எடுக்கணும்னு ஒரே ரகளை. நீங்க எனக்கு போட்ட நகையும் வேணும்னா எப்படி மா?” “அப்படி சொல்லாத விமலா. குடும்பம்ன்னா முன்ன பின்ன இருக்கும். எல்லாத்தையும் அனுசரிச்சு போகணும், அதுதான் பொண்ணுக்கு அழகு.” “அப்படி ஒன்னும் நான் அழகா தெரியவேண்டாம்” என்று முணுமுணுத்த பெண்ணை பார்த்து என்ன சொல்லி இவளுக்கு புரிய வைப்பது என்று குழம்பினாள், விமலாவின் தாய். அன்று சாயந்திரம் மகளுக்கு வேண்டிய பொடிவகைகள், இனிப்பு காரம் என்று ஒரு மூட்டையை தயார் செய்து அவளின் வீட்டிற்கே அனுப்பி வைத்தார்கள் அவளின் பெற்றோர்கள். “என்ன போன வேகத்தில இன்னிக்கே வந்துட்ட? எல்லாம் கட்டி குடுத்து விட்டாங்களா?” என்று இளக்காரமாக கேட்ட மாமியாரையும் “இப்படிதான் வரும் என்று எனக்கு தெரியும்” என்ற எண்ணத்தைப் பிரதிபலிக்கும் முகமுமாய் இருந்த கணவனை பார்த்து மனம் கனத்தது. “என்ன கேட்டுட்டான் என் பையன், அவனோட தங்கைக்கு கல்யாணம் செய்ய வேண்டிய கடமை உங்களுக்கு தானே. ஒரு இருவது பவுன் நகைய நாத்தனாருக்கு போட்டா என்ன வந்தது?” என்று புலம்பிக்கொண்டே இருந்த மாமியாருக்கு “பாத்து தொண்டை தண்ணி வத்திபோச்சு, இந்த காப்பிய சூடா குடிச்சிட்டு தொடருங்க” அப்படின்னு மனதில் சொல்லியபடியே காப்பி கோப்பையை நீட்டினாள். எல்லா வேலையையும் தன் கைகள் செய்தாலும் மனம் எதிலும் லயிக்காமல் தன் வாழ்க்கையை அசை போட்டது. “ச்சே சரியான மாட்டின் ஜென்மம், வாயை திறக்காம எல்லாத்தையும் மனசுல போட்டு அறைச்சிக்கிட்டே இருக்கும் ஜென்மம்” என்று தன் தோழி தன்னை திட்டுவது அசரீரியாக ஒலித்தது. நல்ல கணவனாக இருந்தால் எதுவும் சிரமமாகவே தெரியாது…ஆனால் வாய்த்தது!!! ஏதாவது நல்ல விஷயம் உண்டோ? தான் ஆண் என்ற கர்வம். பெண் என்பவள் அவன் வேண்டும்போது அனுபவிக்கும் சதை பிண்டம். கண்டிப்பாக என் மகளுக்கு இதுபோன்ற வரனை நான் பார்க்கமாட்டேன். என்று மனம் மௌனமாகவே தன் வாழ்வின் சங்கீதத்திற்கு ஏற்றாற்போல் பிடில் வாசித்துக்கொண்டிருந்தது. பெண் பார்க்க வந்த சம்பவம் மனதில் ஓடியது…”மாப்பிள்ளை பெரிய கம்பெனியில் நல்ல உத்தியோகம். கை நிறைய சம்பளம். கம்பெனியே வீடும், காரும் கொடுத்து இருக்கு. ஒரே தங்கை, இப்போ ஸ்கூல்ல படிச்சிகிட்டு இருக்கா. அவங்க அப்பா ரெண்டு வருஷம் முன்னதான் இறந்துவிட்டார்” என்ற நீளமான பட்டியலும், வந்தவர்கள் நடந்துக்கொண்ட விதமும், மாப்பிளையின் அழகும் திருமணத்திற்கு சரி சொல்ல வைத்தது. மாப்பிள்ளையுடன் தனித்து பேசும் சந்தர்பத்திலும் “என்ன விமலா என்னை கண்டிப்பா பிடிச்சி இருக்கும்ன்னு நினைக்கறேன். எங்க அம்மா அப்பா எங்களை கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. கடைசி வரைக்கும் நம்பதான் அம்மாவை பாத்துக்கணும். என்னோட தங்கைக்கு நல்ல எடத்துல கல்யாணம் முடிக்கணும். அதுக்கப்புறம் நீதான் சொல்லணும். உன்னோட வேலை எப்படி போகுது? சீக்கிரமே ப்ரோமோஷன் இருக்கும் அப்படின்னு சொன்னாங்க. அதுவும்கூட நல்லதுதான். நீயும் வேலைக்கு போனா நல்லபடியா லைப்ல செட்டில் ஆகலாம்.” என்று அவனின் விருப்பத்தை சொல்லும்போது பேக்கு மாதிரி மண்டைய ஆட்டினது தப்போ என்று இப்போது தோன்றியது. “என்னோட பெற்றோர்களும்தான் என்னை வளர்க்க கஷ்டப்பட்டு இருப்பார்கள். என்னுடைய தம்பி தங்கைக்கு திருமணம் செய்வது அவர்களின் கடமையாகவே நினைக்கிறார்கள். வீட்டு வேலை செய்யவும், அவனுடன் அவனுக்கு தேவைபடும்போது படுக்கவும், என்னுடைய சம்பளமுமே இவர்களுக்கு தேவை, நான் தேவையில்லை. படிப்பிற்கும் ஒரு மனிதனின் விசாலமான சிந்தனைக்கும் சம்பந்தம் உண்டோ? ” என்ற மௌன பாஷையில் மனம் பேசிக்கொண்டிருக்கும்போது விமலாவின் பத்து வயது மகள் டியூஷன் முடிந்து வந்தாள். அன்று மகள் மாமியாருடன் உறங்க போனபின் எல்லா வேலையும் முடித்துவிட்டு தங்கள் அறைக்கு வந்த போது கணவன் விட்டத்தை நோக்கி யோசித்துக்கொண்டிருந்தான். “நாளைக்கு லோன் அப்ளை பண்ணிடு. எனக்கு ரெண்டு நாள் வெளியூர் போகணும் காலைல பெட்டில எல்லாம் எடுத்து வைத்துவிடு.” என்று பதிலை எதிர் பார்க்காமல் திரும்பி படுத்துவிட்டான். காலையில் அவசரத்தில் பெட்டியை தயார் செய்வதைவிட இப்போதே செய்யலாம் என்று எப்போதும் கொண்டுபோகும் பெட்டியை தயார் செய்ய ஈடுபட்டாள். காலியான பெட்டியில் ஏதோவொரு பொருள் சைடு ஜிப்பில் இருப்பதுபோல் தோன்றியதால் அது என்னவென்று கையை விட்டு எடுத்தபோது, இதயமே ஒருகணம் நின்றுவிட்டு இயங்கியது. “என்ன இது?” அதை கண்டு ஒரு கணமே முகம் மாறியது, சுதாரித்துக்கொண்டு “இதுகூட தெரியாதா?” என்று கேட்டவனை என்னவென்று சொல்ல?” “இது எதுக்கு உங்க பெட்டியில வந்தது? இது உங்க ஆபீஸ் வேலைக்கு தேவையில்லாததாச்சே” என்று கேள்விகள் சரமாரியாக வெளிவந்தது. “இதெல்லாம் உனக்கு தேவையில்லாதது. ஒரு மனைவியா கணவன் சொல்லறத கேட்டு நடந்துக்கோ அதுதான் உனக்கு நல்லது.” இப்படியே அந்த பெட்டியில் கண்டெடுத்த ஆணுறையால் வாக்குவாதம் கைகலப்பாய் முடிந்தது. கணவன் எப்போதுமே கை நீட்டுபவன்தான் ஆனால் இம்முறை அதை எப்போதும்போல் எடுத்துக்கொள்ள முடியவில்லை. செய்வதெல்லாம் செய்துவிட்டு அது அவனின் பிறப்புரிமை போல் நடந்துக்கொள்வதை பார்த்தால் பற்றியெரிந்தது. “கை நீட்டுற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம்” என்ற மனைவியை பார்த்து ஆத்திரம் மூண்டது. ஏற்கனவே நகைக்காகவும், பணத்திற்காகவும் மனைவி தன் எதிர்ப்பை வெளிப்படுத்துவதும், இப்போது இதுவும் சேர்ந்து அவனை, ஏற்கனவே மனிதனாக இல்லாதவனை மேலும் மோசமாக நடந்துக்கொள்ள தூண்டியது. “நான் ஆம்பிள்ளை என்னையே நீ கேள்வி கேக்கறையா?” என்று அருகில் இருந்த பொருளால் ஓங்கி அடித்தான். அலறல் சத்தத்தை கேட்டு மாமியார் ஓடி வந்தார். அங்கு ரத்தம் சொட்ட இருந்த மருமகளை பார்த்து பதறாமல் “என்னடா ஆச்சு?” என்று மகனிடம் ஓடினார், அவரை பொறுத்தவரையில் இந்த அடிதடி நகை மற்றும் பணத்திற்காகவே. “வெளிய தெரிஞ்சா என்ன நினைப்பாங்க. போய் மருந்து கொண்டுவந்து போடு. கடவுளே பாவம் என் பையன் யாருக்கும் கெடுதல் செய்ய மாட்டான். ஏதோவொரு பேயோ பிசாசோதான் என் பையன இப்படி செய்ய வெச்சிருக்கும். பாரு விமலா இத பெருசு பண்ணாத. நம்ப குடும்ப கெளரவம் என்ன ஆகறது. இது மாப்பிள்ளை வீட்டுக்கு தெரிஞ்சா அவங்க நம்பள பத்தி என்ன நினைப்பாங்க” என்று வேதனையில் துவண்டுக்கொண்டிருக்கும் மருமகளுக்கு குடும்ப கெளரவம் பற்றி உபதேசம் செய்து கொண்டிருந்தார். மாமியார் சென்றவுடன் அவளின் கணவனிடம் அவனின் நடத்தைக்கு விளக்கம் கேட்ட பொழுது அவனும் தற்போது இதிலிருந்து தப்பிக்க “எனக்கே தெரியல விமலா. ஏதோ பேயோ பிசாசோதான் என்னை இப்படி ஆட்டிப்படைகுது” என்று உளறினான். “அப்போ சரி, நானே பேய ஓட்டறேன்!” என்று விளக்கமாற்றால் விளாசித்தள்ளினாள். மறுநாள் தன் மகனின் மேல் இருந்த காயத்தை பார்த்து, “நீ எல்லாம் பொண்ணா? இப்படி புருஷன போட்டு அடிச்சி இருக்க?” என்ற மாமியாரிடம் “நீங்களே சொல்லுங்க இவர் பண்ண காரியம் சரிதானா? ஆபீஸ் விஷயமா வெளியூர் போறேன்னு சொல்லிட்டு வேற பொம்பள கூட இருந்துட்டு வராரே” “ஆம்பிள்ளைங்க அப்படி இப்படிதான் இருப்பாங்க. இதையெல்லாம் பெருசு பண்ணாத. என் மகன் உனக்கு என்ன குறை வெச்சான்” என்று கேவலமாக நடந்துக்கொள்ளும் மகனுக்கு வக்காலத்து வாங்கும் மாமியாரை பார்த்தால் அருவருப்பாக இருந்தது. “உங்க மகளுக்கு வர மாப்பிள்ளையும் இப்படி நடந்துகிட்டா எனக்கு சொல்லறதையே உங்க மகளுக்கும் சொல்லுவீங்களா?” “அடியே, என்னோட பொண்ணு நல்லபடியா வாழணும்னு நினைக்காம இப்படி சொல்லறே, நீ எல்லாம் குடும்ப பெண்ணா? இப்படிப்பட்ட குடும்பத்துல போய் தெரியாத்தனமா பொண்ண எடுத்துட்டோமே” என்று ஒப்பாரி வைத்து பாடுவதை மௌனமாக கேட்டுக்கொண்டு இருந்த கணவனையும் நாத்தனாரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கு பயந்துபோய் போய் பார்த்துக்கொண்டிருந்த மகளை பள்ளிக்கு தயார் செய்து அனுப்பினாள். “ராதா வீட்டுல நடந்த எதைப்பற்றியும் யோசிச்சி வருத்தப்படாத. உன்னோட மனசு மொத்தமும் படிப்புலையும், உன்னோட நல்ல எதிர்க்காலத்தை அமைச்சிக்கறதுலையும் தான் இருக்கணும். உனக்கு பக்கபலமா அம்மா இருப்பேன்” என்று மகளை தெளிவு படுத்தி அனுப்பிவைத்தாள். அந்த சம்பவத்திற்குப்பிறகு வீட்டில் ஒருவித அமைதி நிலைத்திருந்தது. ஒருநாள் வேலை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வரும்போது பீச்சில் யாரோ ஒரு பெண்ணை கட்டிப்பிடித்துக்கொண்டு சென்ற கணவனை பார்த்ததும் மனம் அடித்துக்கொண்டது. “ச்சே இவனெல்லாம் திருந்த மாட்டான்” என்று மனம் அறிவுறுத்தியது. மனமோ பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தது, “இவனை இப்படியே விட்டா சரியாகுமா? நான் என்ன செய்தாலும் சமுதாயத்தின் கண்ணில் என்னைத்தான் குற்றவாளியாக நிறுத்துவார்கள். ஆண், ஆம்பிள்ளை என்ற எண்ணம் எந்த தவறையும் செய்யலாம் என்ற அங்கீகாரம் இச்சமுதாயம், ஆணாதிக்க சமுதாயம் கொடுத்திருக்கிறது. இதை எல்லாம் மீறி நான் என்ன செய்யமுடியும்? என்ற விவாதங்களின் முடிவில் ஒரு எண்ணம், ஒரு தண்டனை மனதில் தோன்றியது. அதை செயல் படுத்த ஒருவித தயக்கம் இருந்தது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண் ஜென்மம் உள்ளுக்குள் கதறியது.” எப்படியோ தைரியமாக முடிவெடுத்ததை செயல்படுத்த தயாரானாள். எத்தனை பெண்கள் பாதிக்கபடுகிறார்கள், ஒருவனாவது தண்டிக்கப் படவேண்டாமோ? இவர்களுக்கு நீதிமன்றம் தண்டனையைத் தருமா?! இவர்கள் நீதிமன்ற தண்டனையில் இருந்து தப்பித்துவிடலாம். ஆனால் இப்பொழுது செயல் படுத்தபோகும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது, வெளியே சொல்லவும் முடியாது. திருடனுக்கு தேள்கொட்டிய கதையே! அன்று மாலை மெரீனாவில் நீண்டநாட்களுக்கு பிறகு பழைய கிராக்கியோடு, அவனுடைய பாஷையில், தன் கணவன் அந்த பெண்ணின் தோளில் கையைப்போட்டுக்கொண்டு செல்வதை பார்த்து ஆனந்தப்பட்டது, விமலாவின் மனம். “ஏய், வா அந்த லாட்ஜூக்கே போகலாம் அன்னிக்கி மாதிரி” என்று அழைத்தவனை. “இப்போவே வேண்டாம். கொஞ்சநேரம் இந்த பீச்ல காத்து வாங்கிட்டு அப்புறம் போகலாம்., இப்போ வாங்க அந்த பக்கமா போகலாம்.” என்று மறைவான இடத்திற்கு அழைத்துச்சென்றாள். கொஞ்சம் இருட்டிய பின், ஆள் அரவம் குறைந்தது. இவர்களை போல் இருந்த இரண்டு ஜோடிகள் எதையும் உணரும் நிலையில் இல்லாமல் தங்கள் காம களியாட்டத்தில் மூழ்கியிருந்தனர். அதை காணும்போது அவனுக்கும் அவன் சொல்லும் ஆண்மை, விழித்தெழுந்து. “ம்ம்.. சீக்கிரம் வா போகலாம்” என்று அழைத்தவனை மேலும் பேசவிடாமல் ஆக்கிய அப்பெண் அவன் உணரும்முன்பே அங்கிருந்த நறநற என்று இருந்த மண்ணுடன், உடைந்த கிழிஞ்சல் துண்டுகளையும் பேசிக்கொண்டிருந்த போதே சேர்த்து இருந்ததை அவனின் ஆணுறுப்பில் நன்கு தேய்த்துவிட்டுவிட்டு ஓடிவிட்டாள். அப்பெண்ணின் செயல் அவனின் ஆணுறுப்பை நன்கு பதம் பார்த்துவிட்டது, அங்கு செல்லும் ரத்தநாளங்கள் எல்லாம் அறுப்பட்டு, வேதனையை தாங்கமுடியாமல் அவன் மயங்கிவிட்டான். வெகுநேரம் கழித்து யாரோ அவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவனின் வீட்டிற்கு அழைத்து கூறினார். அவனின் ஆண்மை என்பது இப்போது இல்லையே. இதுவா ஆண்மை? கண்டிப்பாக ஆண்மை என்பது இது இல்லை, இதை எவ்வளவு பேர் ஒத்துக்கொள்ளுவார்கள்? ஆண்மை என்பது செயலில், நல்ல சிந்தனையில். சுய சிந்தனையில், தன்னை நம்பி வந்த பெண்ணை வாழவைப்பதில், காப்பதில், அவர்களை மதிப்பதில், அவர்களின் முன்னேற்றத்தை தன் முன்னேற்றமாக கருதுவதில். சரிதானே? 5 இது எந்த ஊர்? நவம்பர் 5, திங்கள் , மாலை 6 மணி : ‘ஐய், அம்மா நானும் வரேன்.’ என்ற மகளிடம் ‘போ…போய் கை கால் அலம்பிட்டு வா. எத்தன தடவை சொல்லறது விளையாடிட்டு வந்தா நேரா போய் கை கால் கழுவ சொல்லி. ‘கொஞ்சம் இரு ம்மா. நானும் வந்துடறேன்.’ என்று ஓடிய மகளை பார்த்து தானாகவே புன்னகை பூத்தது. ‘அம்மா வந்துட்டேன்’ என்று கூறிக்கொண்டே மகள் வந்தவுடன் வேக வேகமாக வேலை நடந்தது. ‘அம்மா இது எந்த ஊர்?’ ‘இது…நியூ கினியா (New guinea)’ என்றேன். ‘அம்மா இது எந்த ஊர்?’ எனக்கு உடனே பதில் சொல்ல முடியவில்லை, ரொம்பவே யோசிக்க வேண்டியதாயிற்று ‘ஹான்… கண்டுபிடிச்சிட்டேன்…ஜாவா’ ‘அம்மா இது எந்த ஊர்?’ ‘அட இது கிரீன்லாந்து’ என்று தயங்காமல் கூற முடிந்தது. இப்படியே ஆடுத்த அரைமணிநேரத்தில் பல ஊர்களும், அதன் தலை நகரங்களும் கண்டுபிடித்து மகளுக்கு கூறினேன். ‘சரி சரி..சீக்கிரம் போய் ஒருதடவை இன்னிக்கி கிளாஸ்ல சொல்லித்தந்ததை மறுபடியும் படிச்சிப் பாரு. அப்பா கொஞ்சநேரத்துல வந்துடுவாரு.’ என்று என் மகளை விரட்டிவிட்டு மற்றக்காரியங்களை முடித்தேன். நவம்பர் 5, திங்கள் , மாலை 7.30 மணி : காலிங்பெல் சத்தத்திலேயே வந்தது என் கணவர் என்று தெரிந்தது. ‘வாங்க. என்ன ரொம்ப சோர்வா இருக்கீங்க? ரெடியாகி வாங்க நிமிஷத்துல காபி கொண்டுவரேன்’ என்று கூறி தலைமறைவானேன் அடுக்களையில். மகள் படித்து முடித்து வரும் வரையில் ஹாலில் அன்றைய நிகழ்வுகளை பேசிக்கொண்டு இருந்தோம். நவம்பர் 5, திங்கள் , மாலை 8.30 மணி : ‘அப்பா இனிக்கி நாங்க எந்த ஊர் எல்லாம் சுத்திப்பார்க்க போனோம்னு சொல்லுங்க’ என்று மகள் கேட்ட கேள்வியில் என் கணவருக்கு சிரிப்பு வந்தது. ‘உங்க அம்மாக்கே எந்த ஊருக்கு போவோம்னு நீங்க போறவரைக்கும் தெரியாது. என்னை கேட்டா நான் என்ன சொல்லுவேன். அதுவும் உங்க அம்மா புவியியல் (Geography) படிச்சியிருக்காங்கன்னே எனக்கு கல்யாணத்துக்கு அப்புறம்தான் தெரியும்’ என்று என்னை பார்த்துக்கொண்டே மகளுக்கு பதிலளித்த சாமர்த்தியத்தை என்ன சொல்வேன்!!! ‘அப்ப சரி நானே இனிக்கும் சொல்லறேன்’ என்ற மகள் அன்று கற்றுக்கொண்ட ஊர்களின் வடிவத்தில் வந்த சப்பாத்திகளை எங்கள் தட்டில் வைத்தாள். என்ன செய்ய எனக்கு சப்பாத்தி வட்டமாக வராதே! ஆனால், அதையும் இப்படி நல்ல கோணத்தில் பார்க்கலாம்!! 6 என்னை மறந்ததேனோ? “பையன் பொறந்திருக்கான், பாக்க செக்கச்செவேலுன்னு ராஜா மாதிரி. இனி உனக்கென்னடா கவலை. இதை கொண்டாடனும்.” என்று கூறிய சுதாகரைப் பார்த்து சுந்தர் பூரித்துப்போனார். இங்கு ஆரம்பித்த மகவைப் பற்றிய சுந்தரின் பெருமிதம் மகனின் வளர்ச்சியோடும் சேர்ந்து வளர்ந்தது. “கண்ணா, ஜப்பான் தேசியக்கொடி எது? இந்தியா, அமெரிக்கா?” என்று நீண்ட பட்டியல்களை அடையாளம் காட்டும் அக்குழந்தை, லோகேஷ். “என்னங்க, இன்னிக்கி நீங்க வரும்போது அந்த ‘ஈஸி இங்கிலீஷ்’ சீடி வாங்கிகிட்டு வாங்க. அது இந்த சின்ன வயசுலையே கேக்க கேக்க குழந்தை ஸ்கூல் போகும்போத அவனுக்கு எல்லாமே சீக்கிரம் புரியும், நல்லாவும் இங்கிலீஷ் பேசுவான்.” என்ற மனைவியிடம் “கண்டிப்பா வாங்கிடறேன், அனு.” என்றான் சுந்தர். ஆறு வயது மகனுக்கு சுற்றிபோட்டு விட்டு “பாத்தீங்களா திருஷ்டிய. இந்த சின்ன வயசுலையே எவ்வளவு ஸ்மார்ட்டா இருக்கான் அப்படின்னு பாக்கறவங்க எல்லோரும் சொல்லிட்டாங்க. இதுல இவன் ஜூனியர் டான்சர் ப்ரோக்ராம்ல வர ஆரம்பிச்சிட்டா …ஹப்பா என்ன சொல்ல?” என்று தன் மனைவி கூறிக்கொண்டே சென்றதை ஆமோதித்து “ஆம், நம்ப வீட்டுலேயே இவ்வளவு சின்ன வயசுல இப்படி யாருமே இருந்ததில்லை. நாம்ப இதுக்காக எவ்வளவு மெனக்கெடறோம்.” ‘ஒவ்வொன்றையும் கற்றுத்தரும் போதும் என்னையும் மறக்காமல் அறிமுகம் செய்யுங்க. உங்களைப் பார்த்து தான் அவன் படிப்பான். மற்றதெற்கெல்லாம் செலவு செய்யற மாதிரி இதுக்கு செலவு செய்யவேண்டாம். அவனோட வாழ்க்கைக்கு இது ரொம்ப முக்கியம்.’ என்று நான் கூறுவது ஊமையின் வார்த்தையானது. ‘இவ்வளவும் கற்றுத்தரும் நீங்கள் எப்படி என்னை மறக்கலாம்?’ என்ற என் ஆதங்கம் அவர்கள் கவனத்தில் பதியவில்லை. ‘என்னை இதுவரை அறிமுகப்படுத்தவில்லை, இனியும் வருவேனா’ என்ற சந்தேகத்தில் கேட்டதும் அவர்களின் காதில் விழாமல் காற்றோடு கரைந்தது. மகன் இந்த பத்து வயதில் பல போட்டிகளிலும் வெற்றிப்பெற்று பெயரோடும் புகழோடும் இருப்பது பெற்றவர்களுக்கும் உற்றவர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியும், வாழ்க்கையில் சாதித்த உணர்வும் தந்தது. “கண்ணா, போன வாரம் நீ தொகுத்து வழங்கற நிகழ்ச்சியை பாத்துட்டு வேற டிவியில் இருந்தும் ஒரு ப்ரோக்ராம் பண்ண கேட்டாங்க. இப்போதைக்கு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் தான் ப்ரீ டைம் இருக்கு. அதுனால அந்த ப்ரோக்ராம் அந்த நேரத்துல பதிவு பண்ணறதா இருந்தா நாம்ப ஒத்துக்கறோம் அப்படின்னு சொல்லிட்டேன். நீ என்ன சொல்லற? படிப்புக்கு எந்தவிதமான தடங்கலும் வந்துட கூடாது.” “சரி பா, நீங்க ஒத்துக்கோங்க, அந்த டைம் சரின்னு சொன்னா. அப்புறம் நான் அன்னிக்கே சொன்னேனேப்பா ஸ்கூல்ல நேச்சர் கேம்ப் போறாங்க. நானும் போகட்டுமா?” “எதுக்கு கண்ணா. அங்க என்ன இருக்கு வெறும் மரம் செடி கொடின்னு. இப்போ இருக்கற ப்ரோக்ராம்க்கும் கிளாஸ்களுக்கும் போறதுக்கே நேரம் இல்லை. இதுல ரெண்டு நாள் கேம்ப் போனா சரியா வராது.” என்று தடுத்த பெற்றோரை ஆமோதித்தான். ‘இப்போ சுற்றுசூழலுக்கும் தூரம் ஆக்கிட்டீங்களே. எப்போதான் புரியும் நான் சொல்லறது. நானும் பாத்துக்கிட்டே இருக்கேன் நீங்க உங்க புள்ளைய வளர்க்கும் அழகை. ஆண்டவா. இவங்களை காப்பாத்து.’ என்ற என் வேண்டுதல் அந்த ஆண்டவனுக்கே கேட்டதோ? இல்லையோ? வருடங்கள் உருண்டோடின, நானும் அக்குடும்பத்தில் அங்கத்தினராக இருந்தும் வெளிப்படையாக சேர்த்தியில்லை. மகனின் வளர்ச்சியில் பெருமிதமும் கர்வமும் கொண்டு தங்கள் வாழ்வை வாழ்ந்த தம்பதி, இன்று மகன் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைந்ததைக் கண்டும் அடுத்திருந்து முன்புபோல் சந்தோஷிக்க முடியவில்லை. “என்னம்மா இன்னிக்கும் உங்க மகன் வரலையா?” “இல்லை சத்யா. லோகேஷுக்கு ஞாபகம் இருக்கானே தெரியல. ஐயாவ ஆஸ்பத்திரியில் சேர்க்கணும், ம்ம்ம். அவருக்கு முடியாம இருக்கும்போதாவது வருவான் அப்படின்னு நினைச்சேன்.” என்று தழுதழுத்த முதியவரை பார்த்து “அட..என்னம்மா இதுக்கு போய் கலங்கிகிட்டு. நான் தோட்டத்துக்கு தண்ணி ஊத்திட்டு வரேன். நீங்க ஐயாவ தயாராக்குங்க.” என்று சென்ற தோட்டக்காரனைப் பார்த்தபோது வயதில் முதிர்ந்த அனுவிற்கு புரிந்தது, நான், மனிதம் இருக்கிறேன் என்று. ஆம் “இவர்களுக்கு மனிதம் என்ற நான் இருப்பதை உணர இவ்வளவு காலம் ஆனது. இப்போதேனும் உணர்ந்தார்களே; ஆனால் இவர்கள் வளர்த்த மகவுக்கு புரிய எவ்வளவு காலமோ??????’ ‘பேசவும், கணக்கும், பெயரும் புகழும் சம்பாதிக்க உதவும் கலைகளை கற்றுக்கொடுத்து வழிக்காட்டியவர்கள் தங்கள் மகனுக்கு மனிதனாக இருக்க வழிக்காட்ட வில்லை.’ என்ற என் ஆதங்கம் திரும்பவும் நான் மற்ற வீடுகளில் இவர்கள் வீட்டில் பட்ட ஆதங்கத்தை படாமல் இருக்கவேண்டும் என்பதே என் வேண்டுதல். “அன்று மரமும் செடியும் கொடியும் எதற்கு என்று தோன்றியது, ஆனால் இன்று மரம் செடி கொடிகளுடன் கூடிய இந்த வீடு, பல ஆண்டுகளுக்கு முன்னர் நல்லவிலை பின்னாளில் கிடக்கும் என்ற ஒரே காரணத்தினால் தாங்கள் அன்று வாங்கி போட்டதே தங்களின் இப்போதைய நிழலாகவும் துணையாகவும் மாறியது விந்தையே.இதன் உண்மை விலையும் இந்த முதுமையில் புரிந்தது! இப்போது மிகவும் நன்றாக புரிந்தது எதற்கு பெருமிதம் கொள்ளவேண்டும் வேண்டும் என்று; அப்போது பெருமிதமாக இருந்தது இப்போது இல்லை!” என்று பெருமூச்சுடன் எண்ணிய அனு வெளியே சொல்ல முடியாமல் ஊமையானாள், அன்று அவர்கள் வீட்டில் மனிதம் இருந்ததுபோல். ‘நான் விதையாக இருப்பேன், உயிர்ப்புடன்! ஈரப்பதம் உள்ள நிலத்தில் முளைப்பதுபோல் மனதில் ஈரம் உள்ள மனிதனிடம் மனிதமாக இருப்பேன். பலகாலம் வறண்ட நிலமாக இருந்தாலும்கூட, மழைப்பொழிவு அந்த வறண்ட நிலத்திலும் புதைந்திருக்கும் விதையை முளைப்பிக்கும். மழைப்பொழிவுபோல் பெற்றோர்கள் இருந்தால் தங்கள் பிள்ளைகளின் உள்ளிருக்கும் மனிதம் என்ற விதை முளைக்கும்.’ 7 கண்டுகொண்டேன் (சுய)நலத்தை! “அப்பா நீங்களே இப்படி இருந்தா எப்படி? முதல்ல வாங்க, நீங்க தைரியமா இருந்தாதானே மத்ததெல்லாம் நல்லபடியா நடக்கும். வாங்கப்பா, வந்து சாப்பிடுங்க. ரெண்டுநாளா நீங்க பட்டினி கிடந்ததால எல்லாம் சரியா போச்சா? வாங்க .. ம்ம்ம்..” என்று இழுத்துச்சென்ற மகனோடு செல்லும்போது ஒருமுறை திரும்பி மனைவியை பார்த்தேன், மனைவியின் நிலைகுத்திய பார்வை ஊசியாய் குத்தியது என்னை. வார்த்தைகளை விட மிகவும் தாக்கிய பார்வை. இரண்டு நாட்களாக ஒவ்வொரு நிமிடமும் எனக்கு வலியை வெவ்வேறு வகைகளில் உணர்த்திய நிமிடங்கள். கை தன்னிச்சையாக வாயிற்கு எடுத்துச்சென்ற உணவு ருசிக்கவில்லை. மீண்டும்மீண்டும் நிலைக்குத்திய பார்வையே என் மனக்கண்ணில் வந்து என்னை குற்றவாளியாக்கி கேள்விகள் கேட்டது. மௌனத்திற்கு வார்த்தைகளைவிட அர்த்தமும் வலிமையையும் உண்டு என்று இன்று புரிந்தது. “என்னப்பா தட்டு காலியானது கூட தெரியாம கையை வாயிக்கு கொண்டுபோறீங்க. ம்ச்..இப்படி இருந்தா எப்படி? நீங்களும் படுத்துட்டா ….” என்று எழுப்பிய மகனுக்கு தெரியுமா என் மனவோட்டம்? மீண்டும் மனைவியின் அடுத்து இருந்த இருக்கையில் இருந்தேன். மனமோ பல நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்விற்கு தாவியது. “என்ன சங்கர், அந்த A1 கேர் ஹாஸ்பிடல் பத்தின ரிப்போர்ட் தயாரிக்க வேண்டாம்ன்னு சொல்லியும் தயாரிச்சி என்கிட்டேயே கொண்டுவந்து தந்திருக்கீங்க?” மருத்துவமனை செயல்பாடுகள் கண்காணிப்பு மற்றும் அனுமதி தரும் அரசு அதிகாரி என்ற முறையில் வந்த அறிக்கையை பார்த்து கேள்விகேட்டேன். “சார், அங்க பல பன்னாட்டு, உள்நாட்டு மருத்துகளையும் மனுஷங்களுக்கு கொடுத்து டெஸ்ட் பண்ணறாங்க. சிலபேருக்கு சொல்லிட்டு அவங்க சம்மதத்தோடு மருந்தை போட்டாலும் முழுசா அதோட பக்கவிளைவுகளை சொல்லறதில்லை. அப்படியே அந்த மருந்தால் பாதிப்பு வந்தா மேற்கொண்டு அவங்களுக்கு சிகிச்சை அளிக்கறது இல்லை.” “உனக்கு என்ன மேன் வந்தது. அவங்கதான் பணம் தராங்களே, அதுக்கு ஆசைப்பட்டு தானே சம்மதிச்சு வராங்க.” “இல்லை சார். சிலருக்கு பணம் தரேன்னு சொல்லி ஆசை காட்டி கொண்டுவந்து டெஸ்ட் பண்ணறாங்க. அவங்ககிட்ட பணம் வாங்கற ஆளுங்க எல்லாமே ஏதோவொரு விதத்துல பணத்தட்டுப்பாடுல இருக்கறவங்க. அவர்களுடைய தேவையையும், அறியாமையையும் சாதகமா ஆக்கிகிட்டு இப்படி பண்ணறது என்ன நியாயம்? ஒரு பத்து பேருக்கு பணம் தந்தா யாருக்கும் தெரியாம ஒரு 15 – 20 பேருக்கு அவங்களுக்கு தெரியாமையே அந்த மருந்தை போடறாங்க. நம் மக்களும் டாக்டர தெய்வமாய் பாக்கறாங்க. அந்த நம்பிக்கையை இப்படி துர்உபயோகப்படுத்தி உயிரோட விளையாடலாமா? மிருகங்களுக்கு இப்படி தந்தாலே அதற்கென்று கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் இருக்கு. அதை அவர்களின் நாட்டில் கடைப்பிடிக்கறவங்க இங்க இப்படி மனிதர்களிடம் நடக்கலாமா?” “கூல் டவுன்… என்ன நீங்க இதுக்கு போய் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு பேசறீங்க? நீங்க என்னதான் ரிப்போர்ட் பண்ணாலும் அவங்களோட பணபலம், ஆள்பலம் இதையெல்லாம் ஒண்ணுமில்லாம ஆக்கிடும். பணம், பொருள் இப்படி எது வேணும்னாலும் கேளுங்க கிடைக்கும்.” “எப்படி சார், நீங்களே இப்படி பேசறீங்க? மக்களுக்கு நல்லது பண்ணறோம் அப்படின்னு சொல்லிக்கிட்டு நாம் தான் திட்டங்களை போட்டு செயல் படுத்தறோம். ஆனா நாம என்ன பண்ணறோம்…பணத்திற்கு வணங்கி தப்பான காரியங்களுக்கு துணைபோவது சரியா? …ச்சே…. மண்ணை அழிச்சோம் பசுமை புரட்சிங்கற பேருல நம்மோட தானியங்களையும் இயற்கை விவசாயத்தையும் பின்னுக்கு தள்ளிட்டோம். அதோட நிக்காம நீர் நிலைகளை அழிச்சோம், மலைகளை அழிச்சோம், மனிதர்களையும் அழிக்கறோம்..இப்போ. இப்படியே போனா எல்லாமே அழிஞ்சுபோய் கடைசியில் நாமே அழிவோம்.” என்ற சங்கர் என் கண்களுக்கு பைத்தியகாரனாக தெரிந்தான். “எப்படியும் நீங்களோ நானோ அந்த ஹாஸ்பிடலுக்கு போகபோறதில்லை. யாரு எப்படி போனா உங்களுக்கு என்ன? நீங்க இப்படி உணர்ச்சி வசப்பட்டு பேசறதுனாலதான் உங்களுக்கு அடிக்கடி வேற வேற எடத்துக்கு ட்ரான்ஸ்பர் ஆகுது. நான் நீங்க இப்போ பேசினத பெருசா எடுக்கல. எப்படியும் என்னோட கையெழுத்து இல்லாம அந்த ரிப்போர்ட்டுக்கு மதிப்பில்லை. சோ நீங்க போகலாம்” சங்கரின் கண்முன்னேயே அந்த ரிப்போர்ட்டை கிழித்து குப்பையில் சேர்த்தேன். “ஹலோ, டாக்டர் .. எஸ் எஸ் நான் தான். நீங்க அந்த சங்கர ட்ரான்ஸ்பர் பண்ணற காரியத்தை சீக்கிரம் பண்ணுங்க. இன்னிக்கி என்கிட்டேயே உங்க ஹாஸ்பிடல் பத்தி ரிப்போர்ட் தரான். சொல்லவேண்டியது சொல்லிட்டேன்.” நான் சொன்னதற்கான பிரதிபலன் கிடைத்தது. அதன் விலை புரிந்தது. இரண்டு நாட்களுக்கு முன் “என்னங்க நான் இன்னிக்கி நம்ப சுசீலாவோட அவ நாத்தனார் வீட்டுக்கு போயிட்டு வரேன்.” “சரி மனோ, போயிட்டு வா. எப்படியும் நானும் இன்னிக்கி வீட்டுக்கு வர லேட் ஆகும். போகும்போது நம்ப கௌரவத்துக்கு குறையில்லாம என்ன பண்ணணுமோ பண்ணிடு” என்று கூறிவிட்டு வாயிலை கடக்கும்போது “என்னங்க…” “என்ன?” “ஒன்னுமில்லைங்க … என்னவோ இன்னிக்கு காலயில இருந்து ஒரு மாதிரியாவே இருக்கு போகவே தோணல.” “இப்படி சொன்னா எப்படி. இது ரொம்ப நாளாவே சொல்லிக்கிட்டு இருந்தது தானே. போயிட்டு வா” என்று கையை அழுத்தி விடைபெறும் போதும் அவளின் பார்வை தெளிவில்லாமல் இருந்தது. அன்று மதியமே “ஆமாம், ஓ நோ. இப்போவே நான் வரேன். வேண்டாம் வேண்டாம் … நான் வரும்முன்னயே நம்ப எப்பவும் போகற ஹாஸ்பிடல்க்கு கொண்டு போக ஏற்பாடு பண்ணு.” “…………..” “ஷிட்” கைபேசியை வைத்துவிட்டு மனம் நிலைக்கொள்ளாமல் வந்த போது எல்லாமே நிகழ்ந்து விட்டது. உடலில் எவ்வித உணர்வும் அசைவும் இல்லை; நினைவும் இல்லை. மூச்சு மட்டும் “நான் உயிருடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துக்கொண்டு இருந்தது. மனைவியின் நிலையை பார்த்து பித்து பிடித்தது போல் நேராக மேலிடத்திற்கு சென்றேன் “டாக்டர், நீங்க எப்படி என்னோட மனைவிக்கு பரிசோதித்துக்கொண்டு இருக்கும் அந்த மருந்தை கொடுக்கலாம்? அந்த மருந்து இதுவரையில் அங்கீகரிக்கப்படவில்லை.” “வாங்க மிஸ்டர், வாங்க. எங்களுக்கு எப்படி அது உங்க மனைவின்னு தெரியும்? எங்களை பொறுத்தவரையில் ஒரு ஸ்பெசிமென் மாதிரி. அதுக்கு பரிகாரமா தான் பணம் குடுக்கறோமே!” “பணத்துடன் ஒரு உயிரை எப்படி சமன் ஆக்கலாம்?” என்றேன் “ஏன் மிஸ்டர், உங்க மனைவிக்குன்னா உயிர், மத்தவங்களுக்குன்னா மயிரா?” என்று இளக்காரமாக அவர் கேட்டப்போது எனக்கு சுட்டது. “ஸ்டாப் இட். என்ன பேசறீங்க. நான் இதை சும்மா விடப்போறதில்லை” “ஹா ஹா ஹா . கம் ஆன். குட் ஜோக். நீங்களே எங்க ஹாஸ்பிடல் பத்தி நல்ல ரிப்போர்ட் குடுத்து இருக்கீங்க. சட்டப்படி எங்க போனாலும் நாங்க தான் ஜெயிப்போம். உங்கள மாதிரி சுயநலமானவங்க இருக்கற வரை நாங்க எங்கேயும் எப்போதும் ஜெயிப்போம். இப்பவும் நீங்க எங்களுக்கு வேண்டிய ஆளா இருக்கறதாலதான் உங்க மனைவிய வேற எடத்துக்கு கொண்டுபோக சம்மதிக்கறோம்.” எப்படியோ அங்கிருந்து என் மனைவியை வேறொரு நல்ல மருத்துவமனைக்கு கொண்டு போனாலே போதும் என்ற நிலையில் வெளியேறினோம். “உங்க மனைவியோட ரிப்போர்ட் கிளியரா இல்லை. மொதல்ல என்ன காரணம்ன்னு தெரிஞ்சாதானே சரி பண்ண முடியும். இப்போ ஒரே ஆறுதல் உயிரோட இருக்காங்க. அப்சர்வேஷன்ல இருக்கட்டும். ஆண்டவன் துணையிருப்பார், அவரை நம்புங்க.” என்று கூறி சென்ற மருத்துவரை பார்த்தேன். காரணம் அறிந்தும் சொல்ல முடியாத நிலை. அன்று சங்கர் கூறிய ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தமும், ஆதங்கமும், வலியும் இன்று புரிந்தது. ஜீவச்சவமாக இருக்கும் மனைவி எனக்கு போதிமரம் ஆனாள். மனைவியின் இந்த முகமே எனக்கு தண்டனை ஆனது. நான் செய்த காரியம் என் மக்களுக்கும் மனைவிக்கும் தெரிந்திருந்தால்….மனம் வலித்தது. நானே என்னைப்பார்த்து அருவருப்பானேன். என் மனம் உள்ளிருந்து பல கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தது “இப்போதாவது ஏதாவது செய்ய வேண்டும். இதுவரை இதுபோல் எவ்வளவு குடும்பம் பாதிக்கப்பட்டிருக்கும்? மருத்துவம் பார்க்க முடியாமல் எவ்வளவு பேர் அவதிப்பட்டிருப்பர்? எத்தனையோ குடும்பங்களின் ஆணிவேராக இருந்த மக்கள் அழிந்திருக்கும் வாய்ப்பு அதிகம்.” என் மனம் கேட்ட கேள்விகள் ஒன்றுக்கும் என்னிடம் பதிலில்லை. பல நேரம் யோசித்து முடிவு செய்தேன். சுயநலம் என்னை பார்த்து சிரித்தது கூறியது, “அன்னிக்கி நான் வளர்வதற்காக இயற்கையையும், மற்ற மனிதர்களையும் அழித்தாய்….இன்று எனக்கு அழிக்க நீயே கிடைத்தாய். நான் புல்லோ பூண்டோ அல்ல, விருக்ஷம்.” “சங்கர், கொஞ்சம் வரமுடியுமா?” “எனக்கு இப்போதான் புரியுது உங்க வார்த்தைகளுக்கான அர்த்தம். என்னையே என்னால மன்னிக்க முடியல, செய்த காரியம் அப்படி. நானும் உங்க கூட இருக்கேன். எங்கெங்கே ஓட்டைகள் இருக்குன்னு எனக்கு அத்துபடி. இனி உங்கள மாதிரி குரல் கொடுக்கும் மனிதர்களுக்கு நான் தப்பிக்கும் ஓட்டைகளை காட்டறேன். நீங்க அதை அடைச்சா கண்டிப்பா இதுபோல் சம்பவங்கள் குறைந்து பின்பு இல்லாமலே போய்விடும்.” என்று கூறியவாறு என் மனைவியை பார்த்தேன், அந்த வெறித்த பார்வையின் குத்தல் சற்று குறைந்ததுபோல் இருந்தது. என் எண்ணமும் செயலும் என் வாழ்வை வழிநடத்தும் என்பது நன்கு புரிந்தது. கண்டிப்பாக இப்புதிய சிந்தனை என் மனைவியை மீட்டு தரும் என்ற நம்பிக்கையில் நான் சுயநலமில்லா நல்ல மனிதர்களுடன் இணைந்தேன். 8 காத்து வாங்கலையோ ...காத்து! “ஐயா வாங்க, அம்மா வாங்க. அடுத்த வாரத்துல இருந்து சுவாசிக்க சுத்தமான காத்து விற்பனையில். ஒரு வாட்டி வாங்கி பாருங்க. காத்து வாங்கி அனுபவிச்சா உங்களுக்கே வித்தியாசம் தெரியும், சுவாச கோளாறு இருக்காது. இன்னும் சில வருஷத்துல அரசாங்கம் கண்டிப்பா நீங்க காசு போட்டு வாங்கின காத்துலதான் சுவாசிக்கணும்ன்னு சொல்லி காத்துக்கும் வரிபோடும். அப்போ புதுசா வாங்குறதை விட இப்போவே என்கிட்டே வாங்க ஆரம்பிச்சா குடும்பத்துக்கு சில பல சலுகைகள் கிடக்கும், எதிர்காலத்தில் உங்கள் வருமானத்தில் மிச்சமும் பிடிக்கலாம்..” என்று விளம்பரப்படுத்திக்கொண்டு இருக்கும் மணியை பலர் ஏதோ மனநலம் பாதிக்கப்பட்ட மனிதனைப்போல பார்த்து சென்றனர். “என்ன மணி, நீ என்ன லூசா?” என்று கேட்டுகொண்டே சென்றேன் அவனை நோக்கி. “அடடே வாடா சுகுமார். இப்போ உனக்கு என்னை பாத்தா அப்படித்தான் தெரியும். ஆனா இன்னும் சில வருஷத்துல நான் சரியான நேரத்துல சரியான தொழில் ஆரம்பிச்சது புரியும்.” என்றான். “ம்கும். சொல்லுவ சொல்லுவ. சொன்னாலும் ஒத்துக்கற மாதிரி ஏதாச்சும் சொல்லு.” என்றேன். “அப்போ நான் சொல்லற எல்லாம் கேட்டுட்டு நான் கேக்கற கேள்விக்கு மட்டும் நீ சரியா பதில் சொல்லு, நான் பேசறது லூசுத்தனமா இருக்குனு ஒத்துக்கறேன். அரசாங்கம் இனிமே ஒவ்வொருத்தரும் பயன்படுத்தும் தண்ணிக்கு வரி செலுத்தனும்ன்னு சொல்லறாங்களே, அதுக்கு ஒத்துக்கற ஜனங்க நாளைக்கு கண்டிப்பா வாங்கற காத்துலதான் மூச்சு விடணும்னு சொன்னாலும் கேக்கவேண்டி வருமே, அப்போ என்ன சொல்லுவ?” என்றான். “அட என்னடா இப்படி வரி போட்டா நம்பள மாதிரி ஜனங்க என்ன பண்ணும்? எதுக்கு இப்போ இப்படி ஒரு முடிவு?” “அதை ஏன் கேக்கற எல்லாத்தையும் எப்படியாவது தனியாருக்கு தரவேண்டி தலைகீழ நிக்கறாங்க. வேற என்னத்தை சொல்ல? இதுவரைக்கும் தனியாருக்கு தந்தது எந்த லக்ஷணத்துல இருக்குன்னு யோசிச்சாங்களா? அரசாங்கம் சொல்லறது எல்லாம் கண்ணமூடிக்கிட்டு தலையாட்ட முடியுமா? நம்பளும் யோசிக்கவேண்டாமா?” என்றான். “சரி சரி. என்னோட காரியத்தை விடு. நீ இங்க என்ன விளம்பரப்படுத்திகிட்டு இருந்த?” என்று பேச்சை மாற்றினேன். “ஓ.. அதுவா. சொல்லறேன் சொல்லறேன். நீ இப்போ குடிக்கற தண்ணிக்கி என்ன பண்ணற?” என்று கேட்டவனை புரியாமல் பார்த்தேன். “என்னடா முழிக்கற. துட்டுக்குத்தானே வாங்கற?” என்று கேட்டான். “ஆமா. என்ன பண்ணறது. காசு குடுத்து வாங்கி குடிக்கற நிலைமை. இதுவரைக்கும் ஏதோ மத்த தேவைக்கு வீட்டுல இருக்கற கெணத்து தண்ணிய வெச்சி ஓட்டறோம். அதுவும் வத்திச்சுன்னா என்ன பண்ணறது.” என்றேன். “ம்ம் இதுக்கே இப்படி சொல்லறயே. இனிமே உன் சொந்த நிலத்துல இருக்கற தண்ணிக்கே உபயோகத்துக்கு தகுந்த மாதிரி அரசாங்கத்துக்கு வரி கட்டனும். அப்போ என்ன பண்ணுவ.” என்றவுடன் நான் புரியாமல் பார்த்தேன். “என்ன பாக்கற. இப்போ மத்திய அரசாங்கம் கொண்டுவந்த புதிய ‘தேசிய நீர்கொள்கை, 2012’ பத்தி தெரியுமா. அதுதான் சொல்லுது. வேணும்னா அதை பத்தி படிச்சு பாரு, அப்போ புரியும் அதோட விளைவுகள். அதுவும் தனியார்துறை காசு பாக்கற மாதிரி வழி பண்ணியிருக்காங்க.” என்றான். இவன் இப்படி சொன்னா ஏதாவது வில்லங்கம் இருக்குமோ? இவன அப்படியே ஒதுக்கிட முடியாது; பாம்பா பழுதான்னு தெரியாது நம்ப அரசாங்கம் மாதிரி. “ஏன்டா.. ஒன்னோட கடைசி தங்கச்சிக்கு நல்ல காலேஜுல எடம் கிடைச்சும் இன்னும் சேக்கலையா? என்னோட தங்கச்சி பொலம்பிக்கிட்டு இருக்கா.” “அட போடா. என்னத்தை சொல்ல? இப்போ வர வருமானத்துல குடும்பத்தை காப்பாத்தவே முடியாம முழி பிதுங்குது. உன்ன மாதிரி நாங்க என்ன பணமாவோ பொருளாவோ சேர்த்தா வைச்சிருக்கோம் ?..ஒன்னும் சேர்த்து வைக்கல. ஆனாலும் நல்லா படிக்கற புள்ளையாச்சே எப்படியாவது படிக்க வைக்கணும். சொந்த கால்ல நிக்க வைக்கணும்னு ஆசைப் பட்டா மட்டும் போதுமா?” என்றேன். இப்போதும் படிப்பிற்கு லோன் கிடைக்குமா என்று அலைந்துவிட்டு நொந்துவிட்டேன். “லோன்க்கு கேட்டிருந்தியே என்ன சொன்னாங்க?” “ம்ம்ம்ம். என்ன சொல்லுவாங்க. கொஞ்சம் பேருக்கு மட்டும் தந்துட்டு இந்த வாட்டி எங்களுக்கு குடுக்க வேண்டிய அளவுக்கு நாங்க குடுத்துட்டோம். அதுனால இன்னும் கொஞ்சப்பேருக்கு தர மேல இருந்து எங்களுக்கு அப்ரூவல் வரணும்னு சொல்லறாங்க. என்னைய மாதிரி இன்னும் பல பேரு நடையா நடக்கறோம். ஒவ்வொரு வாட்டியும் ஒவ்வொன்னு சொல்லி அனுப்பறாங்க. கிடைக்கும்கிற நம்பிக்கையே இல்ல.” என்றேன். “அதுசரி நீ இப்போ சொன்னமாதிரி அந்த புதுசா போட்ட தேசிய நீர்கொள்கைல என்ன போட்டிருக்காங்க?” என்று கேட்ட என்னை அன்றிரவு அவன் வீட்டிற்கு அழைத்தான். “அப்போ சரி ராத்திரி வரேன்” என்று விடைபெற்றேன். நான் விடை பெறவும் அவன் “ஐயா வாங்க, அம்மா வாங்க.” என்று தொடங்கினான். “அட நீ வந்துட்டியே. வரமாட்டியோன்னு நினைச்சேன். இரு இப்போ வரேன்” என்று என்னை இருக்கையில் இருக்கவைத்துவிட்டு உள்ளே சென்றான். “அண்ணே. எப்படி இருக்கீங்க?” என்று கேட்டபடியே குடிக்க காப்பி கொண்டுவந்து தந்தாள் என் கடைசி தங்கை மல்லியின் தோழி மாலா. “நல்லா இருக்கேன் ம்மா. எப்படி பொழுது போகுது? அடுத்த மாசத்துல இருந்து காலேஜுக்கு போகணும்ல” என்றேன். “அண்ணே..அது வந்து.. அது முடியுமான்னு தெரியல. மல்லி சேரலைன்னா என்னை அனுப்புவாங்களான்னு தெரியல. அவளும் என்கூட இருப்பான்னு தெரிஞ்சதாலதான் வேற ஊருல ஹாஸ்டலில் தங்கி படிக்க ஒத்துக்கிட்டாங்க. இன்னிக்கி அண்ணன் கிட்ட மதியம் பேசினத சொன்னாங்க. அண்ணே எப்படியாச்சும் சேத்துடுங்க அண்ணே. நம்ப ஜனத்துல பொம்பளை புள்ளைங்க படிச்சது கம்மி, நாங்களாச்சும் நல்லா படிக்கணும்னு சின்ன வயசுல இருந்து கஷ்ட்டப்பட்டு படிச்சோம்.” என்று கலங்கிய மாலாவின் வேதனை எனக்கு புரிந்தது. “என்னம்மா பண்ணறது. கையில காசு இருந்தா பிரச்சினை இல்லையே. சரி அரசாங்கம்தான் லோன் தராங்களே எப்படியாவது படிக்க வைச்சிடலாம்ன்னு நினைச்சேன். இதுவரைக்கும் சாதகமா ஒரு பதிலும் வரல.. ம்ம்ம். என்ன செய்ய? பாப்போம். தொழிலும் முன்ன போல இல்லை, வெளிய அதிக வட்டிக்கும் வாங்க முடியாது. அடுத்த வாரம் வரைக்கும் அவகாசம் இருக்கே, அதுக்குள்ள ஏதாவது சரியாகாதா அப்படின்னு பாக்கறேன்.” என்று கூறினேன். “இப்போ பாரு அரசாங்கம் தனியாருக்கு கல்விய தாரவாத்து தந்தாச்சு; அதோட விளைவா நீயும் உன்னை மாதிரி ஆளுங்களும் இப்போ லோனுக்கு லோலோன்னு அலையவேண்டிய நிலைமைக்கு தள்ளிட்டாங்க. அதுமட்டுமில்லாம, படிக்கற புள்ளைகளும் படிக்க முடியாம அல்லோலப்படுது. கல்வி மட்டுமில்லை மருத்துவமும் தனியாருக்கு தள்ளிட்டாங்க. நம்பள மாதிரி சாமான்ய ஜனங்க நோய்வாய்ப்பட்டா எங்க போக? என்று கேட்டான். “எங்க போக, அரசாங்கம் கட்டிபோட்ட ஆஸ்பத்திரிக்கு தான். ஆனா என்ன செய்ய அங்கயும் ஊழல். வைத்தியம் பாக்க திண்டாடனும்.” என்றேன். “அதைத் தான் நானும் சொல்லறேன். இப்போ கொண்டுவந்து இருக்கற மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு பதிலா, அரசே அரசாங்க மருத்துவமனைய நல்ல விதமா கொண்டுவந்தா தனியார தேடிப் போற ஜனங்க குறைந்துடும். ஆனா நம்ப அரசியல்வாதிகள் விட மாட்டானுங்க. எவ்வளவு அரசியல்வாதிகள் காலேஜும், ஆஸ்பத்திரியும் வெச்சிக்கிட்டு கல்லா கட்டறாங்க.” “ஆமாம், நானும் இதை யோசிக்கலயே” என்றேன். “தனியாருக்கு தாரவாத்து தந்துட்டு அப்புறம் திரும்பிக்கூட பாக்க மாட்டாங்க, அவங்க வீட்டு பொறுப்ப யாருக்காச்சும் தருவாங்களா? நாட்டை ஆளவேண்டியது அவங்க பொறுப்பு, அப்படி இருக்கும்போது அதை ஏலம் போடறது சரியா? அப்படி பொறுப்பு எடுக்க முடியலைனா எதுக்கு தலைமை ஏத்துக்கிட்டு மத்தவங்களுக்கு, அதுவும் நம்பி உக்கார வெச்ச நாட்டுமக்களுக்கு கெடுதலும் வேண்டிய தனியார் கம்பெனிகளுக்கும், சொந்தமான கம்பெனிகளுக்கும் லாபமும் வரமாதிரி செய்யணும். தாரைவார்த்து குடுத்தா கஷ்டப்பட போறது மக்கள்தானே நமக்கு என்ன அப்படிங்கற எண்ணம் இருக்குது. இப்போ குடிக்கற தண்ணிக்கு காசுபோட்டு வாங்கறோம், அதுவும் மனுஷன் குடிக்க அருகதை இல்லாத தண்ணிக்கு. இந்தத் தண்ணிய குடிச்சிட்டு ஒடம்புக்கு சுகமில்லாம போய் ஆஸ்பத்திரிக்கு மொய் அழறோம். தனியார் விக்கற தண்ணியாவது தரமானதா இருக்கா? அதுவும் இல்லை. அப்போ அரசு என்ன செஞ்சி இருக்கணும்? அவங்களுக்கு தனியார் மயமாக தண்ணீர் சுத்திகரித்து விக்க தந்த தொழில் உரிமையை ரத்துசெய்திருந்தா அது நியாயம். சரிதானே?” என்று என்னை கேட்டான் “ஆமா. நீ சொல்லறதும் சரிதான் ” “நிர்வாகம்ங்கற பெயருல மக்களுக்கு நல்லது செய்யறாங்களான்னு தெரியல. ஒரு நாட்டுல மக்கள் நல்லா வாழ, சுயசார்பா இருந்தாலே போதும். ஆனா இப்போ நாம மத்தவங்களை சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தை மக்களுக்கு ஏற்படுத்துது அரசாங்கம். ஜெயமோகன் எழுதின ‘உயிர்வேலி’ பத்தி படிச்சிப்பாத்தா தெரியும்.. இப்போ இவங்க எடுக்கற முடிவுகள் பின்னாளில் எப்படி நம்மை வாட்டபோகுதுன்னு.” என்றான் எனக்கு பல விஷயங்கள் புரிந்தும் புரியாமலும் கேட்டுக்கொண்டு இருந்தேன். “எத்தனை தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் தரமானதா இருக்கு? அறிவை வளர்க்காம இருந்தா தானே இவனுங்க ராஜ்யம் நடக்கும். மக்களை டாஸ்மாக் தயவால குடிகாரனாவும் இலவசத்தால சோம்பேறியாவும் திரியட்டும் அப்படின்னு நினைக்குறாங்க…. இவனுங்களுக்கு என்ன வந்தது? அப்படியே ஒழைச்சி வாழற மக்களும் நிம்மதியா வாழத்தான் முடியுதா? தொட்டதுக்கு எல்லாத்துக்கும் காசு. படிக்க வெக்க முடியாது. அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் தன்னோட கட்டுப்பாட்டுல வெச்சிக்கிட்டு மத்ததை தனியாருக்கு தரட்டுமே. யாரு வேணாம்னு சொன்னாங்க? ஆனா அப்படி செஞ்சா எப்படி கல்லா கட்ட முடியும்?” என்று மணி சொல்வதில் உண்மை இல்லை என்று சொல்ல முடியுமா? “அதுதான் இன்னிக்கி தண்ணிய சொந்தம் கொண்டாட முடியாம செய்யறவனுங்க நாளைக்கு அதையே காத்துக்கும் செய்ய மாட்டாங்கன்னு என்ன நிச்சயம். அதுக்கு தான் நான், நாளைக்கு காத்தை விக்க இப்போவே தயாராகுறேன்” என்றான். “நிஜமாத்தான் சொல்லறயா தண்ணிய சொந்தம் கொண்டாட முடியாதுன்னு.” என்று கேட்ட என்னை பார்த்து “ஆமா. பல ஆண்டுகளுக்கு முன்ன இருந்த ஆறுகள் பலதும் இப்போ இல்லை. இருக்கறதுல தூர் வாரற அழகு தான் நமக்கு தெரியுமே. இருக்கற நீராதாரத்தை காப்பாத்தி மேம்படுத்த யோசிக்காம பங்கீட்டுக்கு போய்ட்டாங்க. ஆனாலும் மாநிலங்களுக்கு நடுவுல எப்படி நதிநீர் பிரச்சினை தீர்க்கறது என்பது பத்தி தெளிவா ஒண்ணுமே சொல்லல. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.” என்றான். “ஓஹோ.” இதை பற்றி எவ்வளவு மக்களுக்கு தெரியும் என்று நினைத்தேன். “அதுக்குன்னு நீ இப்போ சொல்லிக்கிட்டு திரியுற காத்து வாங்கலையோ ..காத்து எப்படி சரிவரும்? இது மக்களை ஏமாத்தறது மாதிரி தானே” என்றேன். “இயற்கையா கிடைக்கற தண்ணிக்கு, அதுவும் சொந்த நிலத்துல கிடைக்கற தண்ணிக்கே வரிபோட தீர்மானிக்கறவங்க நாளைக்கு காத்துக்கும் வரிபோடமாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? இப்போ நான் இப்படி சொல்லிக்கிட்டு திரியறத பாத்துட்டு யோசிக்கறவன் முழிச்சுக்குவான். யோசிக்காம போனா விரிக்கற வலையில..அதுதான் வியாபாரம்கற வலையில சிக்கிக்குவான். சில்லற வணிகத்தை தாரவாத்து தர சொன்னாங்களே அவன் வந்தா வேலை வாய்ப்பு அதிகரிக்கும்ன்னு, இவங்க அறுவது வருஷத்துல புடுங்காததையா அவன் நிமிஷத்துல புடுங்க போறான். இதெல்லாம் மக்களை உயிரோட பொதைக்கறதுக்கு சமம். மேலே இருக்கறதை எல்லாம் கூறு போட்டு வித்தாச்சு, அதுதான் நிலத்தடியில் இருக்கற சுரங்கத்தையும் சுரண்டிட்டான், தண்ணிய மட்டும் விட்டுவைப்பானா?” என்று அவன் கூறும்போது அவனின் சொல்லிலும் செயலிலும் ஆதங்கம் இருப்பதை உணர்ந்தேன். அவன் காற்றை விற்பனை பொருளாக்கியது கேலி அல்ல..அவனின் ஆதங்கம். “அப்போ தண்ணிக்கு இப்போ இருக்கறதைவிட கூடுதலா தவிக்கவேண்டி வருமே. அதுக்கு என்ன பண்ணுவாங்களாம்” என்றேன். “ரெண்டு கக்கூஸ சரியாக்க 35 லக்ஷம் செலவு பண்ணுறவங்க, கொடௌன்ல வீணா போற தானியங்களை பசி பட்டினியால வாடுற மக்களுக்கு கொடுக்காதிருக்க சால்ஜாப்பு சொன்னவங்க, தாகத்துல தவிக்கிற நிலைமையில மக்கள் இருந்தா குடிக்க தண்ணியா தரபோவுது? சும்மா மூடிகிட்டு போவியா.” என்ற மணியின் கேள்விக்கு பதில் யாரிடம்? ஆம், யோசிக்கவேண்டியிருக்கிறது. யோசித்துக்கொண்டே நடந்தேன் நான். 9 காதல் வந்ததே... காதல் வந்ததே! வருடம் 2015 “ச்சே … இத்தனை நடந்தும் சகிச்சுக்கிட்டு போகணும்ன்னு இருக்கறது என்னோட தலையெழுத்தா?” அன்னிக்கி எடுத்த முட்டாள் தனமான முடிவு கண்ணுக்கு தெரியாத தாம்புக்கயிறால் தூணோடு கட்டிவிட்டு நகக்கண்ணில் சிறிது கீறிவிட்டதுபோல் ஒன்றும் செய்யமுடியாமல் … உதிரம் சிந்த சிந்த சிறிது சிறிதாக மரணிக்கும் என்நிலை யாருக்கும் வரக்கூடாது..” என்று என் மனம் அனிச்சையாக ஓலமிட்டது. அந்த ஓலத்தை கலைப்பதுபோல் “என்ன செத்தவன நினைச்சிகிட்டு இருக்கியா? இரு உனக்கு இருக்கு கச்சேரி! உன் நினைப்பே அவனுக்கு இருக்கக்கூடாதுன்னு தானே அவன போட்டு தள்ளினது.” என்று கூறிக்கொண்டு உள்ளே சென்றவன்.. ஊருக்கு உத்தமன்! எனக்கு வாழ்வு பிச்சை போட்ட புண்ணியவான்!! என் கணவன்!!! என் மரத்து போன மனமும் உடம்பும் இன்றும் வாழ்ந்துக்கொண்டிருப்பது விந்தையே! “என்ன தேவி உன் வீட்டுக்காரன் ஊருல இருந்து வந்துட்டான் போல” என்று கேட்டபடி என் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றிருந்த என் மூத்தாரின் மனைவியான அக்கா வந்து என் அருகில் உட்கார்ந்துகொண்டு என்னோடு சேர்ந்து கீரையை ஆயத்தொடங்கினார். “ஆமாம் க்கா” என்ற என் குரலே என்நிலையை காட்டிக்கொடுத்தது. “ம்ம்ம் என்ன சொன்னாலும் இந்த வீட்டு ஆம்பிளைங்களுக்கு புத்தியில்லை…மனசும் இல்லை.” என்று கூறியதை கேட்டபோது எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை. “நீயும் நிமிந்து நிக்கணும்” என்று எனக்கு கூறியதை கேட்டபோது “படிக்க வேண்டிய வயசுல படிப்ப முடிக்காம வீட்டை விட்டு வெளியேறியது முதல் தப்பு!” என்று ஈட்டியால் குத்தியது என் மனசாட்சி. “எப்படி அக்கா? என்னோட நிலைல இருந்து பாருங்க.” என்று கூறும்போதே என் கண்கள் அருவியாகவும் மூக்கும் தொண்டையும் ஞங்ன என்று பாடத்தொடங்கியது. அதற்குள் “என்ன அங்க மாநாடு போடறீங்களா. சீக்கிரம் வந்து சாப்பாட போடுங்க” என்று தன் அண்ணனை அழைக்க சென்ற என் கணவனின் குரலே என்னை அச்சுறுத்தியது. இன்னும் சில மணிநேரமே எனக்கு இருக்கிறது…கச்சேரி ஆரம்பிக்க! மேலே இருந்த எங்கள் பகுதிக்கு வரும்பொழுதே கால்கள் பின்னத்தொடங்கியது. “ஆண்டவா… போன ஜென்மத்துல நான் என்ன பாவம் செஞ்சேன்? ச்சேச்சே…தப்பு தப்பு! இந்த ஜென்மத்துல செஞ்ச பாவத்துக்கு தண்டனையா தான் இந்த ஆளோட என் வாழ்க்கைய முடிச்சி போட்டுட்டன்னு தெரியாம உன்ன வேற கேள்வி கேட்டுகிட்டு இருக்கேன். ம்ம்ம்.. என்ன செய்ய? நான் வேறு யாருகிட்ட போய் என்னன்னு கேக்கமுடியும்?” என்ற என் மனக்குமுறல்களையெல்லாம் நிறுத்த முடியாமல் எங்கள் அறைக்குள் செல்லும் முன் என் பிள்ளைகளின் படுக்கும் அறைக்குள் சென்றேன். அங்கு மூத்த மகளை கட்டிக்கொண்டு என் மூன்றாவது மகன் உறங்குவதும், இரண்டாவது மகன் தனிக்கட்டிலில் உறங்குவதும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. “இவர்கள் இரவு விழிக்காமல் இருக்க வேண்டுமே” என்ற என் வேண்டுதல் பலிக்குமா?” “அப்போவே மேல வந்தவ உள்ள வர வெத்தில பாக்கு வைச்சி கூப்பிடனுமா?” என்ற என் கணவனின் குரலே என்னை நிகழ்வுலகுக்கு மீட்டி குலைநடுங்க வைத்தது. “நேத்திக்கி நான் இல்லாதப்ப யாரு வந்தா?” என்று கேட்டுக்கொண்டே என் கையை பிடித்து இழுத்து தன் மார்பில் சார்த்திகொண்ட கணவனைப் பார்க்க அருவருத்தது. “என்ன அப்படி பார்த்தா.. நான் விட்டுடுவேனா? சொல்லு?” என்று என் பதிலுக்கு காத்திருப்பவனிடம் என்ன சொன்னாலும் குதர்க்கமாகவே தோன்றும். “யாரும் வரல.” என்றேன் “அது எப்படி? முன்ன ஓடி போனையே அப்போ கூட இருந்தவன் கூட்டி குடுத்த ஆளுக யாரும் இல்லையா?” “ச்சே.. என்னை ஏன் சித்திரவதை செய்யறீங்க? எல்லாம் தெரிஞ்சி தானே என்னை கல்யாணம் பண்ணிகிட்டீங்க?” என்று கேட்டேன். “பளார்..!” என்ற அடியில் கட்டிலில் இருந்து உருண்டு கீழே விழுந்தேன். “பிச்சிபுடுவேன் பிச்சி. தத்..தேவடியா. உடம்பு நமச்சல் எடுத்துக்கிட்டு ஒருத்தனை இழுத்துக்கிட்டு ஓடினவ தானே…நீ. உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னோட பொண்டாட்டின்னும் ரெண்டு குழந்தைக்கு தாயாவும் கௌரவமான வாழ்வை உனக்கு தந்த என்னை பார்த்து கேள்வியா கேப்ப? நான் உன்ன சித்திரவதையா பண்ணேன்?” என்று கேட்டுக்கொண்டே காலால் என்னை மேலும் மேலும் எட்டி உதைத்ததில் படக்கூடாத இடத்தில் பட்டு என் உடம்பில் ஒட்டிக்கொண்டு இருந்த சிறிது உயிரும் பிரிந்தது போல் பொறிகலங்கியது. அந்த நேரத்திலும் இவனுக்கு பிறந்த மகளையே தனக்கு பிறந்ததில்லை என்று கூறியது மேலும் என்னை தளர்த்தியது. “ஆண்டவா … என் மகளை காப்பாத்துப்பா… அவளுக்கு ஒரு வழிபிறக்கிற வரைக்கும் என் உசிரு இருக்கணுமே!” என்ற என் வேண்டுதலுடன் மயங்கினேன். மறுநாள் மருத்துவமனையில் கண் விழித்த போது, என் அசைவை உணர்ந்து பதைபதைப்புடன் என் அருகில் வந்த அக்காவின் முகத்தை பார்க்க முடியவில்லை. “ராட்சசன்.. இப்படியா பண்ணுவான். நீ கண்ணு முழிக்கற வரைக்கும் என் உசிரு என்கிட்ட இல்லை.” என்று தழுதழுத்தவரின் பாசம் என் கண்களை குளமாக்கியது. உடன்பிறப்பு இல்லையெனினும் உறவு முறை தந்த சகோதரி! “ப..பச…ங்க…” அதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை. “அவங்களுக்கு ஒன்னும் தெரியாது. என் பிள்ளைக கூட பள்ளிக்கூடம் போக ஏற்பாடு செஞ்சிட்டேன். ஆனா உன் மக மட்டும் என்ன ஆச்சு அப்படின்னு நச்சிகிட்டே இருந்தது. ஏதோ சொல்லி சமாளிச்சிட்டேன். குடிக்க ஏதாவது தரட்டா?” என்று என் தலையை ஆறுதலாக கோதியபடி கேட்டவரை பார்த்து கை எடுத்து கும்பிட தோன்றியது. நான் மறுத்தும் என்னை உண்ணவும் குடிக்கவும் செய்து மருந்தின் பிடியில் நான் ஆழும்வரை ஆறுதலாக இருந்தார். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது.. “உங்க அம்மா வீட்டுக்கு சொல்லி அனுப்பவா?” என்ற அக்காவை பார்த்தேன். “என்ன அப்படி பாக்கற? என்ன இருந்தாலும் உங்க வீட்டு மனுசங்கள பாத்தா தெம்பு வருமேன்னு கேட்டேன்.” “ம்ச்…அது மனுஷங்களை பார்த்தா தெம்பு வரும். ஆனா…. என்னால இதுக்கு மேல தாங்க தெம்பு இல்லைக்கா…” என்று கூறிவாறு கண் மூடி படுத்தேன்… மேற்கொண்டு பேச்சு போகும் திசையை நிறுத்த. ஆனால் என் நினைவலைகள் இரண்டு வருடங்கள் பின்னோக்கி சென்றது. அன்றும் இன்றுபோல் உடலாலும் உள்ளத்தாலும் சித்திரவதை அனுபவித்து இதைவிட ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அம்முறை, மூன்று நாட்களுக்கு பின்னர் கண் விழித்து பார்த்த போது என் பெற்றோரும் உடன் இருந்தனர். என் கணவரின் வீட்டு மனிதர்கள் இல்லாத நேரம் என் அம்மாவிடம் “அம்மா.. நான் நம்ப வீட்டுக்கே வந்துடறேன். என்னால இங்க இருக்க முடியல..நீங்க கூட்டிக்கிட்டுப் போயிடுங்களேன்” என்றேன். “சீ.. வாய மூடு. நீ பண்ணின காரியத்துக்கு சொந்தகாரங்களே உனக்கு வாழ்வு தராதப்ப, நம்ப ஜாதி சனத்துல சேர்ந்த பெரியவங்க பெரிய மனசு பண்ணி உனக்காக முன்ன நின்னு கடவுள் மாதிரி கொண்டுவந்தாங்க உன் புருஷன …உனக்கு பெருந்தன்மையா வாழ்க்கை கொடுத்தா … வாழ துப்பில்லை.” என்றது என் அம்மாவா என்ற அதிர்ச்சியில் வார்த்தைகள் வெளிவராது மலங்க விழிக்க மட்டுமே முடிந்தது. அம்மாவே பரவாயில்லை என்றது போல் “சோரம்போய் வந்தவள கட்டிகிட்டதுக்கு மாப்பிள்ளைக்கு நீ கோவில் கட்டி கையெடுத்து கும்பிடனும்….ஆனா…அந்த மனுஷன அல்லாடவிடற மாதிரி நடந்துக்கற ..ஆஸ்பத்திரிகாரங்க மாப்பிள்ளைதான் ஏதோ உன்ன கொடுமை பண்ணியிருப்பாரோன்னு சந்தேகப்பட்டு அவர் மேல போலிஸ்ல கம்ப்ளெயின்ட் கொடுத்துட்டாங்க. ஏதோ நாங்க அது இதுன்னு சொல்லி சமாளிச்சி அவர் மேலையும் அவர் வீட்டுல இருக்கறவங்க மேலையும் பழி வராத மாதிரி செஞ்சிட்டோம். நீயும் அவர் உன்ன அடிச்சதா சொல்லாத… நாங்க சொன்னமாதிரியே நீயே விழுந்து வெச்ச அப்படின்னு சொல்லு. நீ இனியும் இப்படிதான் இருப்பேன்னு இருந்தா மாப்பிள்ளை உன்னை சுருக்கு கயிறு கட்டி கொன்னு போட்டாலும் மாப்பிள்ளை மேல தப்பேயில்லை, என் மவதான் தூக்கு போட்டு நட்டுகிட்டு இருப்பான்னு நானே சாட்சி சொல்லுவேன். இனிமே மருவாதையா அவங்க சொல்லறபடி வாழு. அத விட்டுட்டு திரும்ப எங்க வீட்டுக்கு வரலாம் அப்படிங்கற எண்ணத்தை வளத்துக்காத.” என்ற என் தந்தையின் வார்த்தை என் உடம்பை திராவகத்தில் முக்கியதுபோல் இருந்தது. இவர்கள் உயிர் மாய்த்துக்கொள்ளகூடாது, இச்சமூகத்தில் இவர்கள் தலைநிமிர்ந்து இருக்க வேண்டும், அதோடு இவர்களிடம் இருந்து மணந்தவனின் உயிரை காக்கவேண்டும் என்று தானே அன்று தன் மனசாட்சிக்கு எதிராக; தான் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி மணம்முடித்தவனை சிறிது காலத்தில் அவனை விட்டுபிரிந்து பெரியவர்கள் மற்றும் சட்டத்தின் முன் நின்று காதலித்து மணந்தவனுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று கூறியது…இதற்கெல்லாம் அர்த்தமில்லாமல் போய்விட்டதே! “அம்மா… நீயாவது சொல்லும்மா அப்பா கிட்ட..என்னால இங்க கொடுமைய தாங்க முடியாது… எல்லாம் தெரிஞ்சி நீங்க எல்லாம் சேர்ந்துதானேம்மா எனக்கு கல்யாணம் செய்து வைச்சது….” “பாரு இழந்த கௌரவத்தை உன்னோட இப்பத கல்யாணம் தான் மீட்டு தந்தது. இனியும் முட்டாள்தனமா இருக்காம மாப்பிள்ளை சொல்லறதை கேட்டு நடந்துக்க. நீ முன்ன மாதிரி திரியணும்னு நினைச்சா கௌரவமானவங்க வீட்டுல ஒத்துக்குவாங்களா? நீ ஒழுங்கா நடந்துகிட்டா அவங்களும் ஒழுங்கா நடத்துவாங்க. நீதான் புத்திய மேய விடாம நல்லபடியா நடந்துக்கணும்…” என்ற அவர் கூறிக்கொண்டே சென்றது என்னை பூமியோடு புதைத்தது. அதன் பின் பிறந்த வீடு என்ற ஒன்று இல்லை, என்னை பொறுத்தவரை! ஊருக்கு வேண்டி சீர் செனத்தி வந்து போகும். இரத்த சொந்தமில்லை எனினும் ஒரே ஜாதி என்ற காரணம் மாமாவுக்கும் மாப்பிள்ளைக்கும் இடையே நல்ல உறவை வளர்த்தது. மருத்துவமனையில் இருந்து வந்ததும் பழையபடி வாழ்க்கை சக்கரம் சுற்றியது. “என்ன ஆஸ்பத்திரியில சொகுசா இருந்துட்டு வந்திருக்க… சுகவாசியா இருந்ததுக்கு இப்போ என்னை சுகப்படுத்து…” என்று என்னை அன்று இரவு நெருங்கிய கணவனிடம் என் உடல் சோர்வால் “என்னால முடியலைங்க…” என்று நான் கூறுவதையே பொருட்படுத்தாமல் “அப்போ அவனா இருந்தா குஜாலாக கூப்பிடும் முன்னாடியே படுத்திருப்பயில்ல… போடற சோத்துக்கும் குடும்ப பொண்ணுங்கற கௌரவத்துக்கும் உனக்கு என் கூட படுக்கக் கூட முடியாதா?” என்று மூர்க்கத்தனமாக நடந்ததை கற்பழிப்பு என்று சொல்லலாமோ???? இப்படியே வருடங்கள் உருண்டன … என்னை வேசி என்று கூறிக்கொண்டே கற்பழிக்கும் இழிநிலை மட்டும் மாறவில்லை. என் மக்களுக்கும் என் கடத்த காலமும் நிகழ காலமும் தெரியும்… இந்த அவல நிலையை என்ன சொல்ல? ஏதோ மகளும் இளைய மகனும் ஆறுதலாக நடப்பதே உருண்டோடிய வருடங்களில் என்னை பிடித்து நிறுத்தியது! மூத்த மகள் வேலைக்கு செல்லத் தொடங்கியது கொஞ்சம் ஆறுதல். அவளின் அறிவும், படிப்பில் மட்டுமல்லாமல் மற்ற விஷயங்களில் இருந்த சூட்டிகையான திறனும் அவள் படிக்க ஸ்காலர்ஷிப் பெற்றுத்தந்தது. அவள் படிப்பிற்கு வந்த இடையூறுகளையும் தாண்டி வந்தது மன நிறைவை தந்தது. ஏனோ என் கணவனுக்கு அவளை கண்டால் ஆகாது. என் கணவனுக்கு பிறந்த குழந்தை என்றாலும்கூட அவனுக்கு பிறந்ததா என்று அவனின் சொல்லம்புகள் பாய்ந்து குதறியது… “என்னடி பொட்ட புள்ள உன்ன மாதிரி எப்போ எவன்கூட ஓடப்போறா…மினுக்கி குலுக்கிகிட்டு இருக்கா… இல்ல நீயே கூட்டி குடுக்க போறியா?” என்பது போன்ற கேள்விகளால் இன்னும் குதறிக்கொண்டு இருக்கிறது. நேரிடையாகவே சிலப்போ மகளிடமே “என்ன நீயும் உடம்பு அரிப்பு எடுத்துகிட்டு யாருகூடயாவது படுக்க போறியா? அப்படி அரிப்பு வந்தா என் கிட்ட சொல்லு நானே கௌரவமா கல்யாணம்கற கருமாதிய பண்ணிவெக்கறேன்” என்பதை கேட்கும்போது நான் கூசி கூனிக்குறுகி போவேன். ஆனால் என் மகள் அசட்டையாக விட்டு சென்றாலும்கூட தனிமையில் வருந்துவது எனக்கு தெரியும்… என் செயல் என் மக்களையும் பாதிக்கும் என்று அப்போது எண்ணும் பக்குவம் எனக்கில்லாமல் போனதை நினைத்து இப்போது நான் என்ன செய்ய? நான் என்ன வேலை செய்து கொண்டு இருந்தாலும் என் மனம் பின்னணி இசைபோல் “ஆண்டவா.. ஒரு நல்லவன் கைல என் மக வாழ்க்கை போய் சேரணும். என்னை மாதிரி சீரழிந்து போகக்கூடாது. அன்னிக்கி எடுத்த தப்பான முடிவு, என்னை நானே நரகத்துல தள்ளிகிட்ட கொடுமைய என்ன சொல்ல? முதல் தப்பு.. படிக்க வேண்டிய வயசுல படிப்ப முடிக்காம வீட்டை விட்டு வெளியேறியது! அதைவிட பெரிய தப்பு வீட்டைவிட்டு வெளியேறும்போது இல்லாத பாசம் அம்மா, அப்பா, குடும்ப கெளரவம் இப்படி கண்ணுக்கு தெரியாத கயிற கட்டிக்கிட்டு சுய புத்தி இல்லாம என் பெற்றோருடன் செல்ல தீர்மானித்து எல்லோரும் நிறைஞ்ச சபைல, சட்டத்துக்கு முன்ன சொன்னது!! நான் இப்படி சொல்லுவேன்னு தெரியாம என்மேல நம்பிக்கை வைச்ச நான் காதலிச்சி மணந்தவன்…நான் சொன்னதை கேட்டு என்னை பார்த்த பார்வை இந்த ஜென்மத்தில் மறக்காது!!! அதுமட்டுமா… என்னை காதலிச்சி கை பிடிச்ச பாவத்துக்காக அவனோட வாழ்க்கைய முடிச்ச வெறிபிடிச்சவங்க கூட்டதை சேர்ந்தவனை திரும்பவும் கல்யாணம் என்ற பெயரில் சுருக்கு கயிறாகக் கட்டிகிட்டது பெரிய தப்பு!!!! எல்லாத்தையும் விட இத்தனையும் சகிச்சுக்கிட்டு முதுகெலும்பு இல்லாம ஜீவ சவமா நடமாடிக்கிட்டு இருக்கறது என்னோட மக்களுக்காகதான்.” என்று மனசு இசைத்துக்கொண்டே இருக்கும். வருடம் 2035 மகள் வேலைக்கு செல்லத்தொடங்கியதும் தான் நான் சுதந்திரமாக மகளுடனோ இல்லை அக்காவுடனோ அடுத்திருந்த கோவிலுக்கு வரமுடிகிறது. இன்று மகளுடன் கோவிலில் அமர்ந்த போது… “அம்மா…. நாளைக்கு என்னை பொண்ணு கேட்டு செல்வம் வீட்டுல இருந்து வருவாங்க. செல்வமும் நானும் விரும்பறோம். நான் முன்னமே சொல்லல அப்படின்னு நினைக்காதீங்க.” என்ற என் மகள் சாதனாவை பார்க்க ஒரு பயப்பந்து வந்து என் தொண்டையை அடைத்தது. “… எல்லாம் தெரிஞ்சும் எப்படி..டி இவ்வளவு தைரியம் வந்தது? உங்க அப்பாருக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்…. ஏன்டி … திரும்பவும் ஆரம்பத்துல இருந்து ஆட்டத்தை ஆரம்பிக்கற….” என்று நான் கலங்கிய போது… “அம்மா… நான் தெளிவா இருக்கேன். மன்னிச்சிடுங்க இப்படி சொல்லறதுக்கு…நான் உங்கள மாதிரி முட்டாள் தனமா முடிவு எடுக்க மாட்டேன். என்னோட காலேஜ் சீனியர்தான் இந்த செல்வம். காலேஜ்ல படிக்கும்போதே ஈர்ப்பு இருந்தது. ஆனா முதல்ல சுயமா என் காலுல நான் நிக்கணும் அப்புறம்தான் வாழ்க்கைய பத்தி தீர்மானிக்கணும் அப்படின்னு இருந்தேன், அவரும் அதுக்கு துணையா இருந்தார்.” என்ற என் மகளின் முகத்தில் கண்ட தைரியமும் காதல் தந்த மென்மையும் என்னை ஒன்றும் கூறவிடாமல் தடுத்து! “கேக்கறேன்னு தப்பா நினைக்காதீங்க….நீங்களே உங்க மனச தொட்டு சொல்லுங்க ம்மா …நீங்க முன்னாடி காதலிச்சி சேர்ந்து வாழ்ந்த மகிழ்ச்சியான நினைவு உங்க மனசுல இருக்கா? அதைவிட அப்போ தப்பான முடிவு எடுத்துட்டோமே அப்படின்னு தானே நீ எப்பவும் நினைச்சிகிட்டு இருக்க?…” என்று கேட்ட என் மகளின் கேள்விக்கு “………..” மௌனமே என் பதிலாக இருந்தது. “நீ கவலையே படாத..ம்மா. என்னோட வாழ்க்கைய நான் பாத்துக்கறேன். சொல்லறேன்னு தப்பா நினைக்காதீங்க..எனக்கு அப்பா மேல நம்பிக்கையே இல்லை… அவர் மாதிரி ஆளைதான் எனக்கு மாப்பிள்ளையா கொண்டு வருவார்…மனுஷன கொண்டு வர மாட்டார். அப்பா என்னைப் பத்தி வெச்சி இருக்கற நினைப்பும் கேக்கற கேள்வியும் நம்பள சுத்தியிருக்கும் எல்லோருக்கும் தெரியும். இதை நம்பிகிட்டு பின்னாடி பேசறவங்களும் இருக்காங்க… அப்படி இருக்கும்போது …. நீ அனுபவிக்கற மாதிரி நானும் கொடுமைய அனுபவிக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்?” “………..” என் பதிலானது! மறுநாள் விடிந்து… “என் மகளின் வாழ்வு விடியுமா? அஸ்தமிக்குமா? என்ற கேள்விகள் ஒருபுறமும்”..” ஆண்டவா நான் அனுபவிக்காத சுகத்தை என் மகள் அனுபவிக்கனும்..நீதான் துனையிருக்கணும்” என்ற பிரார்த்தனை மறுபுறமும் சுற்றி சுழன்றது. என் மகள் அவள் அறையை விட்டு வெளியே வரவே இல்லை…. செல்வம் வீட்டில் இருந்து வரும்வரை. சரியாக அவர்கள் வரும்போது மகளும் பளிச்சென்று உடையணிந்து கீழே வந்தாள். “வாங்க…வாங்க. உக்காருங்க .. அப்பா மேல இருக்கார் இப்போ வந்துடுவார்.” என்று அவர்களை இருத்தினாள். இவர்கள் வந்ததை அறிந்து கீழே வந்த என் கணவரின் முகம் பார்க்க தெம்பிலாமல் நான் சமையலறையில் புகுந்தேன். அவர்கள் உள்ளே வரும்போதே பார்த்துவிட்டு என்னால் என் தலையை மட்டுமே வருமாறு அசைக்க முடிந்தது. என் மனதில் “மாப்பிள்ளை நல்லா இருக்கார். கூட வந்தவங்க இவர் பண்ணபோற கூத்தை பார்த்து அவங்கள அவமானப்படுத்திட்டார் அப்படின்னு என் பொண்ண வேண்டாம்ன்னு சொல்லிட்டு போகக்கூடாது ஆண்டவா…” என்ற என் எண்ண வலையை அறுத்தெறிந்து, வேறிட்டு நின்றிருந்த என்னையும் முன்னறையில் இருந்து வந்த சத்தம் அங்கு இழுத்துச்சென்றது. “அடியே ..நீயும் அந்த தே…முண்ட …சிறுக்கிக்கு பொறந்தவ அப்படின்னு நிரூபிச்சிட்ட. உன்ன என்ன பண்ணறேன் பாரு” என்று அடிக்க ஓங்கிய தந்தை என்ற என் கணவனின் கையை பற்றி நிறுத்திய மகளின் உக்கிர முகமே என்னை வரவேற்றது! “என்ன பண்ணிடுவீங்க? உங்களோட ஆட்டம் எல்லாம் நட்டெலும்பு இல்லாத உங்க ஊமை பொண்டாட்டி கிட்ட மட்டும்தான் செல்லுபடியாகும்…. ஒருவேள எனக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சா அந்த நிம்மதி அவங்கள நிமிந்து நிக்கவைக்கலாம்!” என்ற என் மகளை சட்டை செய்யாமல் “அவ்வளவு திமிரா? உன்ன வெளிய விட்டா தானே… போட்டு தள்ள ஒரு நிமிஷம் ஆகாது…” வந்தவர்களை பார்த்து “இந்த சிறுக்கி சொன்னான்னு கல்யாணம், குடும்பம்கற பேருல பொண்ண கூட்டி குடுக்கும் தொழிலுக்கு ஆளு சேர்க்க வந்திருக்கீங்களா? உங்கள…. ” என்று ஆவேசம் கொண்டவரை ஏளனமாக பார்த்து “பாருங்க உங்கள நேரில் பார்த்து பொண்ணு கேக்க மட்டும் தான் அவங்க வந்திருக்காங்க.. மீறி அவங்கள ஏதாவது பேசினீங்க அவ்வளவு தான்..உங்க மரியாதை போய்டும். நானும் உங்க பொண்ணு தான்..உங்களோட குணம் நல்லாவே தெரியும். அவங்களும் எல்லாம் தெரிஞ்சிதான் வந்திருக்காங்க.” என்று பேசிக்கொண்டு இருந்த மகளை நோக்கி “பொட்டச்சிக்கு இவ்வளவு திமிரா… அப்பாவ பாத்து எதுத்தா பேசற?… அப்பா இவள விடுங்க நான் பாத்துக்கறேன்” என்ற என் இரண்டாவது வாரிசான மகன் மணி அப்பனுக்கு தப்பாதவனாக வந்தான் “என்னடா … நீ மட்டும் என்ன ..யாரு வந்தாலும் என்னை ஒன்னும் பண்ண முடியாது. பாருங்க சட்டபடி யாரும் திருமண விஷயத்துல தலையிட முடியாது. நீங்களா சம்மதிச்சி கல்யாணம் செய்து வைச்சா உங்களுக்கு மரியாதை. இல்லையா எனக்கு கவலை இல்லை நான் அவரை இங்க இருந்து போய் கல்யாணம் செஞ்சிக்குவேன்” “அப்படி மட்டும் அவன திருட்டு தாலி கட்டிகிட்ட உன் ஆத்தாவ கட்டிகிட்டவன தட்டின மாதிரி இவனையும் போட்டு தள்ளிடுவேன்… ஜாக்கிரதை… யோவ், உனக்கும் சேர்த்துதான் சொல்லறேன்..புரிஞ்சிதா” என் கணவனை எதிர்த்து ஏதோ சொல்ல வந்த மாப்பிள்ளையை கையமர்த்திய என் மகளே “உங்க புத்தி எப்படி போகும்… அப்படி ஏதாவது தகிடுதத்தம் செய்யலாம் அப்படின்னு நினைக்காதீங்க. இன்னும் நான் யாருன்னு உங்களுக்கு தெரியல.. நானே என் புருஷன் மண்டைய ஒடச்சிட்டு உங்க மேல கம்ப்ளெயின்ட் பண்ணிடுவேன். அதுக்கு ஆதாரமா நீங்க முன்ன செஞ்ச எல்லா அடாவடித்தனங்களை புட்டு புட்டு வெச்சிடுவேன். முன்ன நீங்க மாட்டாத சட்ட பொந்தை எல்லாம் நான் அடைச்சிடுவேன்… பின்ன நான் புகழ்பெற்ற லாயரோட ஜூனியர்… உங்கள மாதிரி ஜென்மங்களுக்கு புத்தி சொல்லவும்..இதோ இங்க மௌனமா உள்ளயே உருகி செத்துகிட்டு இருக்கற என்னோட அம்மா மாதிரியான ஜீவன்களுக்கு விடிவு தரணும்ன்னே இந்த படிப்பு படிச்சது.” என்ற என் மகளின் வார்த்தைகள் எனக்கு தெம்பு தந்தது. என் கணவர் மகளின் பேச்சில் தன் பேச்சுத்திறனை இழந்து நின்றது எனக்கு நிறைவைத் தந்தது. அப்போது உள்ளே நுழைந்த என் கடைசி மகன் அங்கு செல்வம் குடும்பத்தை பார்த்து “வாங்க மாமா. எப்போ வந்தீங்க? நீங்க வரப்போறது எனக்கு தெரியாம போச்சு. இல்லைன்னா இங்க இருந்திருப்பேன்” என்று சகஜமான மாப்பிள்ளையோடு பேசியது என் வயிற்றில் பால் வார்த்தது. ஆண்டவா ஒரு மகனையாவது நல்ல ஆண் மகனாக படைத்தாயே. “அவங்க அப்போவே வந்துட்டாங்க சுரேன். செல்வம், அத்தை.. மாமா நீங்க இந்த வாரமே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடுங்க. கல்யாணம் முடியற வரைக்கும் நான் என்னோட வீட்டுலேயே இருக்கேன். அதுதான் நம்ப எல்லோருக்கும் நல்லது. யாரும் உங்கள ஒன்னும் பண்ண முடியாது. எதுக்கும் முன்னாடியே எழுதி வெச்ச கம்ப்ளெயின்ட் ரெஜிஸ்டர் பண்ண சொல்லிடறேன். உங்களுக்கு மரியாதை இல்லாத வீட்டுல நீங்க பச்சை தண்ணிகூட குடிக்க வேண்டாம் அப்படின்னுதான் நான் ஒண்ணுமே தரல. மன்னிச்சிடுங்க” என்று தன் தந்தையையும் மூத்த தம்பியையும் ஒரு ஏளனப்பார்வை பார்த்துக்கொண்டே பேசியதும், என் முகத்தை பார்த்து புன்முறுவலுடன் “அம்மா இந்த சமுதாயத்தைப் பொறுத்தவரை கல்யாணம் ஆகி போகும் வீடு புடுந்த வீடுன்னாலும் அதுவும் உன்னோட வீடுதான். நீ எப்போ வேணும்னாலும் அங்க உன் வீட்டுக்கு வரலாம். அங்க இருக்கறவங்க எல்லோருமே மனுஷங்கதான். எங்க கூடவே கடைசிவரை சேர்ந்து இருக்கலாம்.” என்ற என் மகளை தொடர்ந்த செல்வமும் “அத்தை,… சாதனா இப்போ சொன்னததான் நானும் சொல்லறேன். அதோட.. நீங்க உங்க பொண்ண பத்தி கவலை படவேண்டாம். அவ என்னோட மனைவின்னு ஆயிட்டா நான் உரிமையா அவளோட நியாயமான எல்லா செயலுக்கும் உறுதுணையா நின்னு அவளோட எண்ணப்படி நல்ல நிலைக்கு கொண்டுவருவேன். அதே நேரம் எங்க குடும்ப வாழ்க்கை சீரும் சிறப்புமா இருக்கும் அப்படின்னு உறுதி தரேன்.” என்று சொன்னது எனக்கு சொர்க்க வாசல் கண்டதுபோல் சந்தோஷத்தை தந்தது. “மாமா, நீங்களும் புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கறேன்” என்று செல்வம் சொல்லும்போது முகத்தை திருப்பிக்கொண்ட என் கணவன் தான் ஒரே நாளில் திருந்தும் ஜென்மம் இல்லை என்று நிரூபித்தார்! “என்ன அக்கா, மாமா…. அப்படி சொல்லிட்டீங்க. என்கிட்டயும் கொஞ்சம் மனுஷ தன்மை இருக்கு. நான் அம்மாவ பாத்துக்குவேன். ஆனா அவங்க நினைச்சப்போ உங்க கூட வந்து தங்குவாங்க. நான் எல்லாத்தையும் மௌனமா பாத்துகிட்டு..மனசுலையே அக்காவ மாதிரி புழுங்கிகிட்டு இருந்ததுக்கு முடிவா இன்னும் ரெண்டு மாசத்துல ட்ரைனிங் முடிஞ்சதும் பெங்களூரில போட்டுடுவாங்க. அவங்கள நான் எங்க போனாலும் கூடவே கூட்டிக்கிட்டு போய்டுவேன். “அக்கா, மாமா..அத்தை…” என்று கூறிக்கொண்டே என்னை பார்த்தபோதே நான் வரவில்லை என்று கண்களால் சொன்னதை புரிந்துக்கொண்டு. “வாங்க … நம்ப வெளிய போய் கல்யாணம் முடிவு பண்ணதுக்கு சாப்பிடலாம். நான் தான் ட்ரீட் தருவேன்” என்று அவர்களை அழைத்துக்கொண்டு சுரேன் சென்றதையும், செல்வத்துடன் கைகோர்த்து சென்ற மகளையும் நிறைவுடன் பார்த்தேன். இப்போது புரிந்தது காதல் வந்ததே ….என் மகளின் வாழ்வில் காதல் வந்ததே…காதல் விடியலையும் கொண்டு வந்தே…காதல்! 10 சட்டம் என் கையில் “ம்ம்.. இன்னியோட எல்லாமே முடிஞ்சுது. இத்தனை காலம்…, எத்தனையோ வேதனையை அனுபவிச்சாச்சு. ஊர் முன்ன குத்தவாளியா நின்னது மட்டுமில்லாம நல்ல வேலையும், சொத்தும் இழந்துட்டோம் இந்த சூறாவளியால். இப்போ இந்த முப்பத்தி எட்டு வயசுலேயே வாழ்க்கை சூனியமா மாறிடிச்சு… அவன் இப்படி மோட்டுவளைய பாத்துகிட்டு பித்து பிடிச்ச மாதிரி இருக்கறத பாக்க முடியாம தான் நான் இங்க வந்துட்டேன். அவனை நான் இப்போ என்ன சொல்லி ஆசுவாசப்படுத்த….” மாமி தன் அம்மாவிடம் பேசுவதை எல்லாம் நான் வீட்டினுள்ளே நுழைந்ததில் இருந்து கேட்டவாறு உடை மாற்றி வந்து எல்லோருக்கும் கொடுக்கும் வரை தொடர்ந்தது, “இந்தாங்க காப்பி குடிங்க.” என்ற கூறி குடுத்துவிட்டு அருகில் அமர்ந்தேன். பெருமூச்சுடன் குடித்த காப்பியுடன் தன் சங்கடங்களையும் விழுங்கிய மாமியை பார்க்க தன் பெற்றோர்களும் இவ்வாறு ஒரு காலத்தில் இருந்தது ஞாபகம் வந்தது. கண்டிப்பாக காலம் வெந்த இந்த மனங்களுக்கு மருந்திடும், அதுவே இயற்கையின் நியதி. “சரி நான் போறேன், அவர் வர நேரம்.” என்று எழுந்து சென்ற மாமியையே பார்த்துக்கொண்டு இருந்த அம்மாவின் மனம் இப்போது இங்கில்லை என்று நன்கு புரிந்தது. “..ம்ம்ம்.. நல்ல மனுஷங்களுக்கு தான் கடவுள் கஷ்டத்தை குடுக்கறார். நம்ப கவிதாவ வாரி குடுத்துட்டோம், ஆனா அதோட ஒரு சுவடும் இல்லாம அவளோட பணத்துல சந்தோஷமா திரியறான் அவளோட புருஷன். இப்போ வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கற ஏற்பாடு நடக்குது. எந்த மகராசி வந்து கஷ்டப்பட போகுதோ? வரவளாவது அவங்கள நல்லபடியா சமாளிச்சி வெக்க வேண்டிய இடத்துல வெக்கணும்.” என்று கூறிக்கொண்டிருந்த அம்மாவின் கையை ஆதரவாக பற்ற… “நம்ப வீட்டு கதை இப்படினா இந்த மாமியோடது வேற தினுசு….சரி நான் கோவிலுக்கு போயிட்டு வரேன்.” என்ற அம்மாவிடம் “நானும் கீழே போயிட்டு வரேன்” என்றவாறே மாமியின் வீட்டிற்கு சென்றேன். “வாம்மா வா. நானே அடை போட்டுட்டு கூப்பிடலாம்ன்னு இருந்தேன். நீயே வந்துட்டே.” என்று வரவேற்றார். “மாமா வந்தாச்சா?” “அவர் வந்துட்டார். இந்த வாரம் வத்சலா வரா. இப்போதான் கூப்பிட்டா. திங்கள்கிழமை இங்க இருந்தே வேலைக்கு போய்ட்டு போவா. அதுனால ஞாயித்துக்கிழமை அம்மாவும் நீயும் இங்கே சாப்பிட வந்துடுங்க.” “நீங்க கூப்பிட்டாலும் இல்லைனாலும் நான் வந்துடுவேனே… அவர் இன்னும் மோட்டுவளையைப் பாத்துக்கிட்டுதான் இருக்காரா?” “இல்லை. அவன எழுப்பி காப்பி குடுத்தேன். ம்ம்ம் …. அப்படியே உக்காந்தா எல்லாம் சரியாயிடுமா? எல்லாமே சூறாவளியில அடிச்சிகிட்டு போனாலும் இனி அது இந்த பக்கம் வராதுன்னு இருக்கறதே ரொம்ப நல்ல விஷயம். இப்போ புஸ்தகத்தை வெச்சிகிட்டு உக்காந்திருக்கான்.” “அப்போ சரி நான் அவர பாத்துட்டு வரேன்” என்று அங்கிருந்து அகன்றேன். “அதுக்குள்ள நான் அடை வேலைய பாக்கறேன்.” மூடியிருந்த கதவை தட்டி வாசன் அழைத்ததும் நான் சென்றபொது அங்கு கையில் புத்தகத்துடன் இருந்த ஸ்ரீநிவாசனை பார்த்தபோது மனதில் ஒரு வித உணர்வு தோன்றியது, தான் அவனை அரவணைத்து ஆறுதல் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. “என்ன அங்கேயே நின்னுட்ட. வா. நீ கேட்ட புஸ்தகம் இன்னிக்கி லைப்ரரியிலிருந்து கொண்டுவந்திருக்கேன்.” என்று கூறியவனை பார்த்து “ம்ம் போகும்போது கொண்டுபோறேன். அப்புறம்….” இன்றைய நிகழ்வை என் வாயால் கேட்க ஏனோ தயக்கமாக இருந்தது. “அப்புறம் என்ன… அம்மாதான் சொல்லியிருப்பாளே. அதுக்குதானே மேலே வந்த.” “அம்மாவோட பேசிகிட்டு இருந்தாங்க. நான் கொஞ்சம் முன்னாடிதான் வந்தேன்…” “ஓஹோ…” ஒருவித அமைதி நிலவியது… ஆனால் இருவரின் மனமோ அமைதியாக இல்லை. “எல்லாமே போயிடுத்து…வெறும் சொத்து இருந்து என்ன செய்ய? எப்படியோ அந்த சொத்து எடுத்துகிட்டு சந்தோஷமா இருந்தா சரிதான். இனிமே தர ஒண்ணுமில்லை. எல்லாம் முடிஞ்சா போதும்…. இவ்வளவு நாள் இழுத்த இழுப்புக்கு போயாச்சு.” என்று பெருமூச்சுடன் நிறுத்தியதை பார்க்க சகிக்கவில்லை. என் மனம் கரித்துகொட்டியது, இந்த நிலைக்கு இந்த குடும்பத்தை ஆளாக்கியவர்கள் மீது. “இனிமே எல்லாம் நல்லதே நடக்கும்” “எப்போதிருந்து குறிசொல்லும் வேலையில் சேர்ந்த? எனக்கு சொல்லவே இல்லை!” “ம்ம்ம் இப்போதிருந்து தான். அதான் சொல்லிட்டேனே..முதல் குறி உங்களுக்குதான் தட்சிண தாங்க” என்று கையை நீட்டினேன். “ம்ம்ம் என்னடான்னு நினைச்சேன். தந்துட்டா போச்சு..” என்று எழுந்து சென்று சட்டை பாக்கெட்டிலிருந்து கையில் வந்த பணத்தை தந்தவனை பார்த்து “யாருக்கு வேணும் உங்க பணம்…” “நீ தானே தட்சணை கேட்ட?” ஒருகணம் யோசித்தேன், இப்போதே சொல்லவா? வேண்டாம். இன்னும் சரியான நேரம் வரவில்லை. “எனக்கு இது வேண்டாம்.” “அப்போ என்ன வேணும்?” “ம்ம்ம்.. ஒருநாள் சொல்லறேன். அப்போ கண்டிப்பா நான் கேட்டதை தரணும்.” “என்னால முடிஞ்சதை கேளு… வேற ஏதாவது உள்குத்து இருக்கா?” “நானா…உள்குத்தா? அப்படினா?” “அடடா… நீ பண்ணறது நேக்கு தெரியாதுன்னு நினைச்சியா? அதுதான் எங்கம்மா இருக்காளே எல்லாத்தையும் சொல்லுவா.” “என்ன மாமி எல்லாமே சொல்லிட்டாங்களா? எல்லாமேவா…..” என்று இழுத்த என்னைப் பார்த்து மெலிதாக புன்னகைத்து “ஆமாம் எல்லாமேதான். அந்த கோடியாத்துல இருந்தவங்களுக்கு பதில் சொன்னது, கோவில்ல நடந்தது… இன்னும் சொல்லணுமா?” இதை கேட்டதும் இத்தனையும் தெரிந்தவன் ஒன்றும் அறியாததுபோல் இருந்தது என்னை இக்கட்டில் தள்ளியது. இவன் தான் சண்டைக்காரி என்று நினைத்தானோ? எப்படி கேட்பது… என் தயக்கத்தை பார்த்து “நீ நடந்துகிட்டது எங்க அம்மாவை தற்காத்தது. அவங்களும் அவங்க கூட்டை விட்டு கொஞ்சம் கொஞ்சமா வெளியவர சகாயமாச்சு. அவங்க உங்ககூட போகும்போது ஒரு பாதுகாப்பா உணர்ந்ததால் தான் நீங்க எங்க கூப்பிட்டாலும் நாங்க போயிட்டு வர அனுப்பறதே. அவங்களுக்கும் ஒரு மாறுதல் வேணுமோனோ? உங்களுக்கு இதுக்கெல்லாம் என்ன கைமாத்தா தரபோறேன்?” “அப்போ அந்த தக்ஷணையோட இதையும் சேத்துக்கோங்க… நான் வசூல்பண்ண வரும்போது கண்டிப்பா தந்துடுங்க.” “ரெண்டுபேரும் சாப்பிட வாங்கோ.” என்று மாமி அழைத்ததும் நான் சென்று எல்லாம் சாப்பாட்டு மேஜையில் எடுத்து வைக்க உதவினேன். அன்று இரவு நான் வாசன் கொண்டுவந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தது தெரியும் ஆனால், படித்துக்கொண்டிருந்த என் மனம் எப்போ வாசனை பற்றி நினைக்க சென்றதோ தெரியவில்லை. தன் அக்காவின் மரணம் கூடவே தன் தந்தையையும் கொண்டுபோக, எதில் இருந்தோ தப்பிப்பதுபோல் பழைய வீட்டில் இருந்து இந்த வீட்டிற்கு குடிவந்தது. தான் வேலைக்கு போனால் அம்மா தனியாக இல்லாமல் ஆத்திர அவசரத்திற்கு கீழேயே வீட்டின் உரிமையாளர் இருக்கும் நிம்மதியில் தான் இந்த வீட்டிற்கே வந்தது. ஆனால், இந்த வீட்டின் நபர்களைப் பற்றி தாறுமாறாக காதில் விழுந்தது. ஏதோ தன் அக்காவின் புகுந்த வீட்டினர் செய்த கொடுமைகள் நினைவிற்கு வந்து, தாங்கள் வந்த இடமும் அவ்வாறே என்று நினைத்து அவ்வளவாக அவர்களுடன் பேசாமல் தங்கள் கூட்டினுள் இருந்தனர். படிப்படியாக அவர்களைப்பற்றி தெரிந்ததும் தாங்களே அவர்களுக்கு துணையாக இருப்பது விந்தையாக இருந்தது. படிப்படியாக வாசனிடம் என் மனம் சாயத்தொடங்கியது… அப்போது சாதகமாக இல்லாமல் இருந்த சூழ்நிலையிலும். இந்த முப்பத்தெட்டு வயதில் தனிமரமாய் நிற்கும் நிலை, எப்படியோ ஒன்பதாண்டுகள் தாக்கிய தாக்குதல் இப்போது நின்றுவிட்டது. இந்த ஆறுமாதங்களில் பெரிதாக ஒரு மாறுதலும் இல்லாமல் அவரவர் வேலைக்கு செல்வதும் வீடு திரும்புவதுமாக இருந்தது. அம்மாதான் மீண்டும் பல்லவியை பாட தொடங்கினாள், சுருதி பேதமில்லாமல் துணையாக மாமியும் ஒத்து. “இந்த புரட்டாசி வந்தா முப்பது ஆரம்பிக்கும். இன்னும் நீ எவ்வளவுகாலம் என்னோடேயே இருக்கபோற? நானே உன்னோட கல்யாணத்துக்கு தடையா இருப்பேன் அப்படின்னு நினைக்கல. இப்போ எல்லாத்தையும் தாங்கற சக்தி வந்துடுச்சு! இருக்கறத வெச்சி நான் என்னோட காலத்தை தள்ளிடுவேன். அப்பா மாதிரி நீ மாலையும் கழுத்துமா இருக்கறத பாக்காம நான் உன்ன தனிமரமா விட்டுட்டு போய்டுவேனோ அப்படின்னு பயமா இருக்கு.” என்று புலம்பல் பல்லவியை ஆரம்பித்த அம்மா மூச்சு வாங்க நிறுத்திய அவகாசத்தில் மாமி தொடர்ந்தார் “அம்மா சொல்லறத கேளு சந்தியா. நாங்கலாம் இருக்கோம், பாத்துக்க மாட்டோமா? உன்னோட எதிர்ப்பார்ப்புப்படி நீ புக்காத்துல இருந்து அப்பப்போ வந்துட்டு போகலாம், உன்னோட சம்பளத்தில் அம்மாவை பாத்துக்கலாம். இப்போ வத்சலா கொண்டுவந்த இடம் நம்ப நிலைமைய தெரிஞ்சீண்டு அவாளுக்கு சம்மதம்ன்னும், நீங்களும் ஒத்துண்டா வந்து பொண்ணு பாக்க இந்த ஞாயித்துக்கிழமை வரோம்ன்னும் சொல்லியிருக்கா. ரொம்ப காலம் கழிச்சி நல்லது நடக்க போறதுன்னு உங்கம்மா நிம்மதியா இருக்கா. நீதான் அந்த நிம்மதிய நிரந்தரமா நிலைச்சி இருக்கற மாதிரி செய்யனும்.” இனியும் தான் நினைப்பதை தள்ளி போட முடியாது. எப்படியாவது கொஞ்சம் அவகாசம் கேட்டு தான் பேசவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உணர்ந்து, “எனக்கு கொஞ்சம் யோசிக்க அவகாசம் வேணும். அதுனால இந்த வாரம் அவங்கள வரச்சொல்ல வேண்டாம்” “என்னடி இப்போ இத ஒரு சாக்கா சொல்லறியா?” என்று நின்ற பல்லவியை தொடர நினைத்த அம்மாவை மேலே தொடராமல் நிறுத்தி “இது சாக்கு இல்லை. ப்ளீஸ் கொஞ்சம் அவகாசம் தாங்க. நான் திருமணமே வேண்டாம்ன்னு சொல்லலை.” என்று மேலே அவர்கள் தொடங்கும் முன் அவ்விடம் விட்டு என் அறைக்குள் முடங்கினேன். அந்த வெள்ளிக்கிழமை கீழ் வீட்டு மாமி மாமாவுடன் அம்மாவும் கோவிலில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிக்கு போய்விட்டு தங்களின் மனபாரத்தை இறைவனிடம் சேர்த்துவிட்டு தம் மக்களுக்கு நல்லது நடக்கவேண்டி பிரார்த்தனைகள் செய்துவிட்டு இரவு நேரம் கழித்தே வருவர் என்று தெரியும். இதுதான் நல்ல சமயம் என்று உணர்ந்து வாசனின் வரவிற்கு காத்திருந்தேன். “வாங்க காப்பி குடிச்சிட்டு போங்க. எல்லோரும் கோவிலுக்கு போயிருக்காங்க” “ஓஹோ.. மறந்துட்டேன். சரி இப்போ வரேன்” என்று வாசன் போனபின், அவன் வருமுன் காப்பி தயாரித்து எடுத்துக்கொண்டு வரவும், அவன் வரவும் சரியாக இருந்தது. பொதுவாக பேசியவாறே காப்பி குடிக்கும்போது திடீரென்று “ஏன் வத்சலா சொன்ன வரனை இப்போ வரவேண்டாம் அப்படின்னு சொல்லிட்டே. உங்கம்மாவுக்கும் எங்கம்மாவுக்கும் ரொம்ப வருத்தம், வர நல்ல எடத்தை ஏன் தட்டி கழிக்கற? பெரியவா இதுவரைக்கும் வருத்தப்பட்டது போதும். உனக்கு இன்னும் என்ன வேணும்?” என்று என் முகத்தை பார்ப்பவனைப் பார்த்து “எனக்கு உன்னை பிடித்திருக்கிறது, நீ என்ன சொல்கிறாய்?” என்று உடனே கேட்க முடியுமா? “என்னோட கதைய இப்போ விடுங்க. நீங்க ஏன் உங்க வாழ்க்கையை பத்தி இன்னும் யோசிக்கலை?” இக்கேள்வி நினைத்தது போலவே மௌனத்தை உடனடியாக குடி கொள்ள செய்தது. ஒரு பெருமூச்சுடன் “ம்ம்ம்… என்னோடது எல்லாமே முடிஞ்சது. நீ அப்படி இல்லை. அதுதான் நீ எதிர்பாக்கற மாதிரி நல்லவங்களாவும், உன்னோட அம்மாக்கு நீ செய்ய நினைக்கிறதை ஏத்துக்கறவாளாவும் இருக்கா. இந்த சென்னைலையே வீடு. நினைச்சபோ வந்து பாத்துட்டு போகலாம். நாங்க இருக்கோம், பாத்துக்க மாட்டோமா. எப்படி எனக்கு என்னோட அம்மா அப்பாவோ அதே மாதிரி உங்க அம்மாவும், நான் இருக்கேன். நீயாவது நல்லா இருக்கணும்.” என்று கூறியவனை பார்த்து என் மனம் நெகிழ்ந்து. “யாரோ வேண்டாம்டா நீதான் வேண்டும்” என்று கூற வாய்வரை வந்தது. அவன் தன் பதிலுக்கு காத்திருப்பது தெரிந்தது. “நீங்க ஏன் உங்க வாழ்க்கையே முடிஞ்ச மாதிரி நினைக்கறீங்க? சுனாமி வந்தாலும் சூறாவளி வந்தாலும் இழந்ததை புனரமைக்கறதில்லையா? இது வாழ்க்கையாச்சே! இருக்கற ஒரு வாழ்க்கையை நாம்பதானே நல்லா அமைச்சிக்கணும். நடுவுல ஏதோ எதிர்பாராம ஆயிடுச்சுன்னு முற்றுப்புள்ளி வெக்காம, அதை கமாவா போட்டு தொடர வேண்டாமா? நீங்க எத்தனை காலம் சேந்து வாழ்ந்தீங்க? மிஞ்சிபோனா ரெண்டு வருஷம் இருக்குமா? அப்புறம் இந்த ஒன்பது வருஷமா அங்கயும் இங்கயும் அல்லாடி இருக்கறதையும் இழந்துட்டு இருக்கீங்க. தெளிவில்லாத ஆள் வாழ்கை துணையானால் இப்படிதான் ஆகும்ன்னு உங்க வாழ்க்கையே உதாரணம். அதுனால நீங்களும் யோசியுங்க.” “நான் கேட்டதுக்கு இது பதிலாகாது. நீ உன்னோட வாழ்கையை அமைச்சி உங்க குடும்பத்தோட சந்ததிய கொண்டுபோனா தானே உங்க அப்பா, அக்காவுக்கும் சாந்தியாகும்?” அக்காவின் வாழ்க்கையில் நடக்காத சம்பவம், தன் வாழ்க்கையிலாவது குழந்தை குட்டியோட வாழணும்னு என்று தன் தந்தை தாயிடம் மரிக்கும் தருவாயிலும் வருந்தியது நினைவில் வந்தது. “நம்ப பொண்ண நல்ல இடம்ன்னு கட்டி குடுத்தா, அவங்க அவளோட வருமானத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டு, வீட்டு வேலைக்காரியாவும் நடத்தினது மட்டுமில்லாம புருஷன்கூட வாழாம அடுப்படியில படுக்க வெச்சது மட்டுமா? சோறும் போடாமலே கொன்னுட்டாங்க பாவிங்க. பாவி மக சொன்னா நம்ப வருந்துவோம்ன்னு சொல்லாமலே இருந்து இல்லாமையே போய்ட்டா. சின்னவளாவது நல்ல எடத்துல வாக்கப்பட்டு குழந்தை குட்டின்னு சந்தோஷமா வாழறதை பாக்காமயே போய்டுவேனோன்னு இருக்கு” என்று மரணப்படுக்கையில் கிடந்த தந்தை தாயிடம் கூறியதை கேட்ட மனம் வெதும்பியது. என்னை அறியாமலேயே என் கண்களில் இருந்து வந்த கண்ணீர் வழிந்தது. “சாரி சந்தியா. நான் உன்ன வருத்தப்பட வைக்க நினைக்கலை. நீ நல்லா வாழணும்னு அக்கறைல சொல்லறேன். நீ எல்லாத்தையும் தெளிவா யோசிச்சி என்ன வேணும் வேண்டாம் அப்படின்னு வெளிப்படையா நடந்துக்கறது எனக்கு ரொம்ப பிடிக்கும். வேலையையும் குடும்பத்தையும் மதிச்சி ரெண்டையும் சரிவர கொண்டுபோறது என்னை உன்ன மதிப்பா பாக்க வெச்சுது. நீ சொன்ன மாதிரி தெளிவில்லாத துணையால என்னோடது மட்டுமில்ல எங்க குடும்பமே வாழ்க்கையை இழந்துடுச்சு. ஒருசில நண்பர்களை தவிர உறவுக்காராவும் நண்பர்களும் எங்களை ஒதுக்கிட்டாங்க.” மேற்கொண்டு பேச ஆயத்தமான அவனே பேசட்டும் என்று நான் காத்திருந்தேன். “எனக்கே தெரியாம என்னோட குழந்தையையும் அழிச்சிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரியும், தன்னோட வேலைதான் முக்கியம் அப்படின்னு நினைச்ச என்னோட மாஜி பொண்டாட்டியும், அவளோட எல்லா செயலுக்கும் கண்மூடித்தனமாக ஆதரிச்ச அவளோட பெத்தவங்களையும் என்னாலதான் என்ன செய்ய முடிஞ்சது?” ஒரு டம்ளரில் தண்ணீர் தந்தேன் ஆசுவாசப்படுத்த… குடித்தவன் தொடர்ந்தான். “பெண்களுக்கு சாதகமா இருக்கற சட்டத்தால நாங்க அவளை வரதட்சணைகேட்டு கொடுமை படுத்தினதாவும், எங்க அம்மா அப்பா நான், ஏன் என்னோட அக்கா எல்லோரையும் கூண்டுல ஏத்திட்டாங்க. ஊரே எங்களை கேவலமா பேசியும் நடத்தியும் … ஹப்பப்பா… போதும் பட்டது. இந்த வீடு நான் ஊர்ல இருந்து இங்க மாத்தி வந்தப்ப அவளோட அம்மா அப்பாவும் எங்களோடையே இருக்க ஏத்தாமாதிரி மேலயும் கீழையும் இருக்கறமாதிரி வாங்கினேன்.” “ஆனா என்ன ஆச்சு அவ என்கூடவே வரல. தனக்கு வேலையை விட்டுட்டு வரமுடியாதுன்னு சொன்னா. அது கவர்மெண்ட் வேலைகூட இல்லை. இங்க வந்து வேலை தேடிக்கலாம், அதுவும் அவ படிச்ச படிப்புக்கு இங்க நல்ல வேலை கிடைக்கும்ங்கற நிலைமை. மொதல்ல நீங்க போங்க அப்புறம் வரேன்னு சொன்னா. நாங்க இங்க வரும்போது அவளோட அம்மா வீட்டுலதான் இருந்தா. அந்த சமயத்துலதான் அவ தாயாக போற விஷயமே அவளுக்கு தெரிஞ்சிதுன்னு அப்புறம் சொன்னா. ஆனா முன்னையே தெரிஞ்சிருக்கும்ன்னு இப்போ தோணுது. குடும்பத்தையும் வேலையையும் சரிவர பாலன்ஸ் பண்ண தெரிஞ்சிருக்கணும். அப்படி வேலைதான் முக்கியம்ன்னா எதுக்கு என்னை கல்யாணம் செஞ்சியிருக்கணும்?” “நீங்க நாக்கு புடிங்கிக்கற மாதிரி கேக்கலையா” என்று எல்லாம் அவன் வாயாலேயே அறிந்துக்கொள்ளும் ஆவலில் கேட்டேன். “அவளை மட்டும் எப்படி குத்தம் சொல்லமுடியும்? அவளை அப்படி வளர்த்து எல்லாத்துக்கும் துணையா இருந்த அவள பெத்தவங்களைதான் சொல்லணும். சாமர்த்தியமான வக்கீலும், சாட்சியங்கள் அழிக்கவும், உண்டாக்கவும் தெரிஞ்சவங்களுக்கு எதுவுமே ஏறாது. தெரிஞ்ச டாக்டர் கிட்டபோய் கருவை கலைச்சதால அவங்களால அதை மறைக்க முடிஞ்சிது. நிஜம் தெரிஞ்சும் எங்களால அங்க மெளனமாகதான் இருக்க முடிஞ்சிது. அவங்க ஊர்ல கேஸ் ஃபைல் பண்ணதால ஒவ்வொரு வாட்டியும் கோர்ட்டில் கூப்பிடும்போதெல்லாம் நான் போகவேண்டி வந்ததால முதல்ல இருந்த நல்ல வேலையும் போயிடுத்து. இப்போ இந்த சாதாரணமான கிடைச்ச வேலைல இருக்கறதாயிடுச்சு. எங்க வீட்டுல எல்லோருக்குமே உன்ன பிடிக்கும், உன்னோட குறும்பும், அதேசமயம் பொறுப்பும்தான் எல்லாரையும் கொஞ்ச கொஞ்சமா சகஜநிலைக்கு கொண்டுவந்தது. என்னோட வாழ்க்கை மாதிரி ஆகாம நீ நல்லபடி வாழனும்னு நல்லா விசாரிச்சு கொண்டுவந்த வரன் இது.” தன் வாழ்வுபோல் ஆகாமல் அவள் நல்லபடி வாழவேண்டும், எப்படியாவது அவளை இப்போது வந்துள்ள வரனை ஏற்க சம்மதிக்க வைக்கவேண்டும் என்று நினைத்தான். “நீங்க எல்லோரும் சொல்லறது எனக்கு புரியுது… ஆனாலும்….” எப்படியோ தயக்கத்தை உடைத்து “எனக்கு ஒருத்தர பிடிச்சிருக்கு…” என்று நிறுத்தினேன். ஆச்சர்யமாக பார்த்த வாசன் “அட இப்படி ஒன்னு இருக்கும்னே யாருமே நினைக்கல. முன்னாடியே சொல்லறதுக்கு என்ன? நாங்களே நல்லா நடத்தி வெச்சிருக்க மாட்டோமா?” என்று கேள்விகளை அடுக்கத் தொடங்கியவனை நிறுத்தி “அப்படியெல்லாம் இல்லை. அவருக்கு எதுவுமே தெரியாது, எனக்குதான் தோணிச்சு…” “யாருன்னு சொல்லு நாங்க போய் பேசறோம்” பட்டென்று “நீங்கதான்” என்ற பதிலில் தீயை மிதித்தது போல் பின்வாங்கினான். “லூசா நீ, என்னைபோய்…. உன்னோட வயசு என்ன? நான் ஏற்கனவே திருமணமானவன்” என்று அடுக்கிக்கொண்டே சென்றவனையும், அவன் சொல்வதை கேட்டுக்கொண்டு இருந்தவளையும் திடீர் என்று வந்த சந்தியாவின் அம்மாவின் குரல் “நீங்க ரெண்டுபேரும் பேசிட்டு இருங்க. நான் கடையிலேயே ஒரு பையை விட்டுட்டு வந்துட்டேன். போய் எடுத்துக்கிட்டு வரேன்” என்று பதிலை எதிர் பாராமல் சென்ற அம்மாவையே பார்க்கவைத்தது. “அம்மா தாங்கள் பேசியதை கேட்டிருப்பாங்களோ? அப்படின்னா எதில் இருந்து?” என்று யோசிக்க வைத்தது. இதுபோல் இனி சந்தர்ப்பம் அமையாது என்று நானே தொடங்கினேன். “என்ன வயசு… எட்டு ஒம்பது வயசுதானே? எனக்கு அது பெருசா தெரியலை. நீங்க திருமணமாகி அதால பட்டதெல்லாம் எனக்கு தெரியும். அதோட பாதிப்பு எப்படி இருக்கும்ன்னு எனக்கு புரியும். கஷ்டப்படற பொண்ணுங்க வெளியே சொல்ல மாட்டாங்க, எங்க அக்கா மாதிரி. அப்படியே சொன்னாலும் எல்லோரையும் சட்டம் பாதுகாக்கறது இல்லை. ரொம்ப சிலரையே இந்த சட்டம் காக்குது. சிலர் என்னடானா ஆதாயமா இருக்கற சட்டத்தை “சட்டம் என் கையில்” அப்படின்னு அதை ஆயுதமா ஆக்கி அப்பாவிகளை அழிக்கறாங்க. உங்களோட வாழ்க்கையில நீங்க மட்டுமே இழக்கல, உங்க கதைல ரெண்டுபேருக்குமே நஷ்டக்கணக்கு தான். அவங்களுக்கும் இப்போ முப்பத்தியாறு வயசாயிடுச்சு. இளமை காலம் முடிஞ்சாச்சு. உங்க சொத்தும் அவங்கள எத்தனை நாள் சந்தோஷமா வெச்சியிருக்கும்? அவங்களுக்கு ஏத்தாமாதிரி அடுத்த வாழ்க்கை துணை கிடைக்குமா? இல்லை வேலை வேலை அப்படின்னு இப்போ இருந்துட்டு பின்னாடி வருந்தறமாதிரி ஆகாதுன்னு என்ன நிச்சயம்? யோசிச்சி சொல்லுங்க. என்னோட வாழ்க்கை உங்களோட இணைஞ்சா நல்லா இருக்கும்ன்னு நம்பிக்கை இருக்கு. நம்ப ரெண்டுபேருமே ஒருத்தர் ஒருத்தருக்கு துணையா ஆதரவா இருந்து நம்பள சுத்தி இருக்கற நம்ப உறவுகள் இதுவரை பட்ட வேதனைகளை போக்க அருமருந்தாக இருக்க ஆசைப்படறேன். நான் சொல்லறது எதுவுமே நியாயமா இல்லைனா சொல்லுங்க…” “என்கிட்ட என்ன இருக்கு? ஒண்ணுமேயில்லை. ஆனாலும்கூட.. என்று தயங்கியவனை பார்த்து “என்ன நான் உங்க ஜாதி இல்லைன்னு யோசிக்கறீங்களா? முதல் திருமணம் ஒரே ஜாதியா பாத்துதானே செஞ்சது? நம்ப ரெண்டு குடும்பமும் எதிர்க்கொண்ட அடியில மேல் பூச்சா இருக்கற ஜாதி உதிர்ந்திருக்கும். இப்போ அதுக்குள்ள இருக்கற மனிதன், மனிதம் தான் தெரியும். அதுதான் வேண்டும். நாம்ப பேசிப்பாப்போம். புரிஞ்சிப்பாங்க. என்ன சொல்லறீங்க?” அவன் பதில் சொல்லும் முன் மாமி மாமா மற்றும் அம்மாவின் குரல்கள் ஒருசேர “எங்களுக்கு சம்மதம்.” என்று சந்தோஷத்தில் ஆனந்தமாக திருப்தியுடன் கூவின. “ரெண்டு பேருமே பேசி ஒரு முடிவுக்கு வாங்க” என்று கையில் இரண்டு கேசரி கிண்ணங்களை திணித்துவிட்டு சென்றனர். “என்ன இன்னும் யோசனை? இப்போ தட்சிண தாங்க, அன்னிக்கே தரவேண்டியது” என்று கூறிய என்னைப் பார்த்து மெல்லிய புன்னகையுடன், இவ்வளவு நாள் அழுத்திய துக்கம் விலகும் என்ற நிலையில் அவனே அறியாமல் “தட்சிணயா என்ன தரட்டும்?” என்று கண்ணடித்தவனைப் பார்த்து “உங்களையே” என்று கூறி உனக்கு நான் சளைத்தவளில்லை என்று புரியவைத்தேன். ஒருமணிநேரம் கழித்து நாங்கள் இருவரும் எங்கள் கைகளை கோர்த்துக்கொண்டு சந்தோஷமாகவும், நம்பிக்கையுடனும் எதிர்காலம் எங்களுக்காக வைத்திருக்கும் சுகதுக்கங்களை சேர்ந்து அனுபவிக்க தயாராக கீழே சென்றோம். எங்களை பார்த்து ஆனந்த கண்ணீர் வழிய, மனநிம்மதியுடன் வாய்வார்த்தையின்றி எங்கள் தலையில் கைவைத்தும், கட்டிப்பிடித்தும் ஆசீர்வாதத்தையும் சந்தோஷத்தையும் பகிர்ந்தது ஒன்றிணைந்த எங்கள் குடும்பம். 11 சாகா வரம் பெற்ற பொதுஜனங்கள்!!!! “நீ எதுக்கு கவலைப்படுற? நம்ப எல்லாம் சாகா வரம் வாங்கிட்டு வந்தவங்க” என்ற அசரீரியாக ஒலித்த குரலில் நான் திடுக்கிட்டு எழுந்தேன். “ம்கும்…உனக்கு என்னப்பா இப்புடி குந்திக்கினு அருள்வாக்கு சொல்லிக்கின்னு இருப்ப…அத்த கேக்குற கேன பையன்னு என்னைய நினைச்சிக்கினியா?” என்ற மற்றொரு குரல் அது அசரீரி அல்ல என்று உணர்த்தியது. நான் தங்கியிருந்த ஒத்தை அறையின் மான்ஷனின் வராண்டாவில் நடக்கும் பேச்சுவார்த்தை என்று புரிந்தது. “என்னோட வாக்கு சித்தன் வாக்குத்தான், அதுபுரிய உனக்கு கொஞ்சம் மேல் மாடியில சமாச்சாரம் வேணும்.” என்றார் மற்றவர். “இன்னா மாரி இப்படி சொல்லுற, நான் என் கஷ்டத்தை சொன்னா நீ இப்படி சும்மாங்காட்டியும் கவலை படாதன்னுற… விக்கறவெலைவாசில ஊட்டுல இருக்கிறதுங்க மூணு வேள துண்ண சோறு போடுறதா, இல்ல இஸ்துக்கினு கிடைக்குற அம்மாவ பாப்பேனா?” என்று மாரியிடம் கேள்விகள் அடுக்கப்பட்டது. இதே சிந்தனை தான் படித்துவிட்டு வேலை தேடி அலையும் என் மனதிலும், ஆதலால் எனக்கும் மாரியின் பதிலில் விடை கிடைக்குமோ என்ற நப்பாசையில் வெளியில் வந்து நின்றேன். “பொங்கி தின்ன இலவசமா அரிசி கிடைக்குது, தர்மாஸ்பத்திரி இருக்கு. இதுக்கு மேல என்ன வேணும்” என்றார் மாரி. “வெறும் அரிசிய பொங்கி துண்ணா ஆச்சா? மளிகை ஜாமான் வாங்கவும், மத்த குடும்ப செலவுக்கும் ராக்கெட் விடுற கணக்கா துட்டு வேண்டியிருக்கே? அதுக்கு எங்க போக. நீ சொல்லுற தர்மாஸ்பத்திரில இட்டுகின்னு போய் அம்மாவ காட்டினா ஏதோ மருந்து மாத்திரை தந்தாங்க, வேற ஏதோ ஆப்பரேசன் பண்ணனும், அதுக்கு இங்க வசதி இல்லன்னு கொண்டு போக சொல்லிட்டாங்க. கொசுறா சத்தான ஆகாரமா துண்ண தரணும்ன்னு சொல்லிட்டாங்க. அம்மாம் துட்ட எங்க போய் கொள்ளை அடிக்க?” “ஹஹஹா பய புள்ளைக்கு இன்னும் ஒண்ணுமே புரியல. நான் சொன்னா கோவம் மட்டும் பொத்துகிட்டு வருது.” சிரியோ சிரி என்று சிரித்தார் மாரி. “ஐய. உனக்கு என் கஷ்டம் பாத்தா காமடியா இருக்கா” என்று நொந்தவரைப்பார்த்து “இன்னும் புரியாத கூமுட்டயா இருக்கியே. இப்போ பாரு டாஸ்மாக்ல தண்ணிய போட்டு தள்ளாடிக்கிட்டு இருக்கிற இஸ்கூல்ல படிக்கற புள்ளைங்க முதல் பெருசுங்க வரை சீக்கிரமே பரலோகம் போய்டும். பொட்டப்புள்ளய எடுத்துக்கிட்டா கருவுல பாதிய கொன்னா மீதிய அப்புறம் கெடுக்கறது முதல் ஆசிட் வீசுறது வரை செஞ்சி கொன்னுப்புடுவோம். இல்லேனா தற்கொலை கொலை இப்படி எல்லாம் பண்ணி ஜனங்கள கொன்னுப்புடுவோம்.” என்று கூறியபடி பீடியை பிடிக்க நிறுத்திய மாரியை வினோதமாகப் பார்த்தார் மற்றவர். ஒரு முறை பீடியை இழுத்துவிட்டு, “இப்படி எல்லாம் பாதி பேரு செத்தா மீதிய பசி, பட்டினி, குழந்தைங்க முதல் பெரியவங்க வர வியாதி என்னனு தெரியாம பாதியும், தெரிஞ்சப்புறம் உங்க ஆத்தா மாதிரி வைத்தியம் பாக்க முடியாம மீதியும் போச்சுனா மிச்சம் என்ன தேறும்?” என்று கேள்வி கேட்டார். அதற்கு என்ன பதில் சொல்ல என்று யோசித்த மற்றவரை போல் என்னாலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை…வெறும் ஆதங்க பெருமூச்சே வெளியேறியது. “அதுமட்டுமில்ல…தெக்கு பக்கம் கூடங்குளம்,கிழக்கு பக்கம் மீதேன், மேற்குல இப்போ சொல்லிக்கிட்டு இருக்கற …ம்ம்.. அது என்னப்பா ஒரு மிட்டாய் பேரு மாதிரி வருமே..நியூட்ரின்..ஆங்.. நியூட்ரினோவோ என்ன எழவோ, அப்புறம் கெயில் குழா புதைக்கறது, கவுத்தி வேடியப்பன் மலைல என்னமோ வெட்டி எடுக்கறது இப்படி எல்லா பக்கமும் எதிர்க்காலத்துக்கு தேவை, அது இதுன்னு சொல்லி நிகழ்காலத்துலையே நம்ப ஜனங்க இருக்க முடியாத படிக்கு நடவடிக்கை நடக்குது.” ம்ம்ம் என்று பீடியை ஒரு இழுப்பு இழுத்துவிட்டு ‘நம்மூர் பய புள்ளைங்க, நீங்க மட்டும் தான் கேப்மாரித்தனம் பண்ணுவீங்களா, அப்போ நாங்களும் மொள்ளமாரித்தனம் பண்ணுவோமில்லன்னு நிரூபிக்கறகணக்கா மீதி எடத்துல கிரானைட், தாது, ஆத்து மண்ணுன்னு ஒண்ணுத்தையும் விட்டு வெக்காம அள்ளுறானுங்க, அதோட விளைவ பத்தி எந்த பன்னாட யோசிக்குது? நுனிமரத்துல ஒக்காந்துகிட்டு அடி மரத்த வெட்டுற அறிவாளி புள்ளங்க நெறஞ்ச ஊரு நம்மூரு. தேவையில்லாததுக்கு எல்லாம் நியாயம் கேட்டு போராட்டம் நடத்துறவங்க நம்ப நாடே சாக கெடக்குது அதுக்கு நியாயம் கேக்காத வீரனுங்க.” என்று மற்றவரின் பதிலை எதிர்ப்பார்க்காமல் மீதி இருந்த பீடியை அனுபவித்து குடிக்கத் தொடங்கினார். “ஆமாம், இவர் சொல்லுறதுலயும் உண்மை இருக்கே” என்று என்னையும் மீறி என் மனம் அவருக்கு தன் வோட்டை போட்டது. “இது எல்லாம் பத்தாதுன்னு ஒபாமா மாதிரி மைனர் மாப்பிள்ளை கூடவும், மான்சாண்டோ, அணுஉலை அமைக்கறவன், ஆயுதங்கள விக்குறவன் மாதிரியான பங்காளிங்க நல்லா இருக்கணும்னு காவடி எடுக்கற பக்தர்கள் ஏராளம். கட்சி பேதம் இல்லாம புரோக்கர் வேலை பாக்குறவன் தான் அதிகாரத்துல இருந்துகின்னு திட்டம் திட்டமா போட்டு நம்பள இப்படி இருக்க வழி இல்லாம பண்ணிட்டானுங்க. இந்த நிலை மட்டும் இல்ல இன்னும் ஆட்டம் இருக்குன்னு சொல்லுறாங்க.” என்ற மாரியை ஆதரித்து “ஆமா, நீ சொல்லுறதும் சரிதான்.” என்று மற்றவர் ஆமோதித்தார். “இதுமட்டும் போதாதுன்னு வெளிநாட்டுக்காரன் இங்க வந்து லாபம் பாக்க கூவி கூவி அழைக்கறாங்க. உள்ளூரு பெரிய வியாபாரிங்க எதிர்ப்பை சமாளிக்க எல்லா விதமான சலுகையும் தந்துட்டாங்க. இதுக்கு பழகிபோட்டாங்க அந்த உலகப் பணக்காரனுங்க. இன்னும் அவங்க உலகப் பணக்காரனா முன்னணில இருக்க போட்டா போட்டி போட்டுக்கிட்டு லாபம் பாக்க ஆட்குறைப்புல இறங்கிட்டாங்க. 25,௦௦௦ – 3௦,௦௦௦ ஆளுங்கள வீட்டுக்கு அனுப்பிடறாங்க, அந்த வருமானம் நிரந்தரம்ன்னு கனா கண்டுட்டு அதை நம்பி கடன வாங்கி எத்தன பேரு கட்ட முடியாம நட்டுக்க போறாங்களோ தெரியல. இதை ஏன்னு கேக்க அதிகாரத்துல இருக்கறவனும் சரி, எதிர்கட்சின்னு சொல்லிக்கற ஆளுங்களும் சரி கேக்க துணிச்சல் இல்ல… இது எல்லாம் எதனால? எல்லா வக்கத்த பய புள்ளயும் இவனுங்ககிட்ட நிதி வசூல் பண்ணவங்க, ‘மாப்பு நீ யாருக்கு ஆப்பு வெச்சாலும் கேக்க மாட்டோம், எனக்கு மாத்திரம் ஆப்பு வெக்காதன்னு’ கை கழுவிட்டானுங்க.” இதை கேட்டு என் மனமும் அவருக்கு வோட்டு போட்டது. அவர் சொல்வது போல் சொந்த நாட்டுக்காரனயே கேக்க நாதி இல்லாத ஆளுங்க வெளிநாட்டுக் காரனை மட்டும் கேட்டுடுவாங்களோ? “ஆக மொத்தம் இப்படி எல்லா ஜனங்களும் இத்தனையையும் மீறி பொழச்சு எழுந்தா அவன் சாகாத வரம் வாங்கினவன் தானே!” என்று சொல்லி புன்னகைத்தார். அந்த புன்னகை “சித்தன் வாக்கு சிவன் வாக்கு” என்பது இதுதான் என்று எனக்கு தோன்றியது. 12 சுடுகாட்டுக்குப் போறேன்... ‘எலே அந்தப் பக்கமா எங்க போறே?” என்று கேட்ட கந்தனைப் பார்த்து, “வீட்டு சாமான் விக்கற கடை போடப் போறேன்” என்றேன் “கேணப்பய… சுடுகாட்டுலப் போய் கடையத் தொறக்கற மூஞ்சியப் பாரு. மறைகிறைக் கழண்டுச்சாலே?” “ம்க்கும்.. சொன்னாலும் புரிஞ்சிக்கிட்டு மேற்கொண்டு ஆற காரியத்தைப் பாக்கறமாதிரி ….” “புரியறமாதிரி சொல்லுவே” என்று என்னை அவனருகில் இருத்திக்கொண்டான்; அந்த ஆலமர நிழலில் எங்கள் விவாதம் தொடர்ந்தது. “இன்னும் கொஞ்ச நாள், இல்லைனா வருஷத்துல, நம்ப நாட்டுப் பொருட்களை போய் மக்கள் எங்க வாங்குவாங்க? அதுதாம்ப்பா.. இப்போவே சுடுகாட்டுல ஒரு கடையப் போட்டுடலாம் அப்படின்னு..” என்று இழுத்த என்னைப் பார்த்து “என்ன ஒரு மார்க்கமாவே பேசுற..சுடுகாட்டுல கடை…மக்கள் சாமான் வாங்கரதப் பத்திக் கவலை புரியலியேப்பா” என்றக் கந்தனை மேலும் குழப்பாமல், “அது ஒண்ணுமில்லை! வெளிநாட்டுக் காரனுக்குச் சில்லறை வியாபாரத்தை அனுமதிக்கும் போது கவர்மென்ட் என்ன சொன்னாங்க? ஞாபகம் இருக்கா?” என்றேன். “என்ன இப்படி கேட்டுப்புட்ட? அவங்க வாறதாலதான் இங்க அம்புட்டு பேருக்கும் வேலை கிடைக்கும், ஏற்கனவே இங்க நம்பள மாதிரி வியாபாரம், விவசாயம் பண்ணறவங்களுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. வெளிநாட்டுக்காரன் கடை எல்லாம் பட்டணத்துலதான்… அதுவும் பத்து லட்சம் பேருக்கு மேல வசிக்கும் இடத்துல தான் கடைய போட முடியும் அப்படின்னு தானேப்பா சொன்னாங்க.” “ஆமாம்..சொன்னாங்கதான்..” “அதுக்கு இப்போ என்ன வந்தது?” என்றான் கந்தன் “நீ சொன்னதுக்கு எல்லாமே ஆப்பு வந்தது…அதுமட்டுமில்லப்பா.. இன்னும்கூட இருக்கு” “என்னது இன்னும் இருக்கா?” “ஆமாம்ப்பா அனுமதி வாங்கற வரைக்கும் நல்ல பாம்பா தலையத் தலைய ஆட்டிப்புட்டு இப்போ நேரம்பாத்து சீறுற மாதிரி ஆகிடிச்சு.” “நீ என்ன சொல்லற? அதுதான் நம்ப அப்பச்சி மத்தியில குந்திக்கினு இருக்காரே, அவரும் நமக்கு விடுதலை வாங்கித் தந்தக் கதரும் சீறுற பாம்ப, அடக்கிட மாட்டாங்களா?” என்ற கந்தனை என்ன சொல்ல! அவனை மேலும் கீழும் பார்த்த நான் “நீ ஏன் இன்னும் கோமணத்தோடத் திரியுற அப்படின்னு இப்போ தானே புரியுது.” “இதப்பாரு..என்னைச் சொல்லு கேட்டுக்கறேன், ஆனா என்னோட கோவணத்தை ஒன்னும் சொல்லாத. ஆமாம் சொல்லிப்புட்டேன்” “நான் கோவணத்தைச் சொன்னதுக்கே இம்புட்டுக் கோவம் வருதே. உன்னோட கோவணத்தையே உருவிக்கிட்டா என்ன செய்யுவே?” என்றேன் ஆதங்கத்தில். “இப்படிச் சொன்னா எப்படி. புரியற மாதிரி சொல்லு” அப்போது “இங்க என்ன ரெண்டு பேரும் கதை பேசிக்கிட்டு இருக்கீங்க?” என்று வந்தான் மாரி. “ம்ம்.. அறிவு கண்ணத் தொறந்து கோவணக்கதையைப் பத்திதான் பேசிக்கிட்டு இருக்கோம்” என்றான் கந்தன். “என்னலே.. இந்தக் குசும்புதானே வேணாங்கறது. நீ சொல்லுப்பா” என்றான் என்னைப் பார்த்து.. “கந்தன் அண்ணே சொல்லறது சரிதான்.. இப்பத்தி நாட்டு நிலவரத்தப் பத்தி, அவங்க ஊரையே சுருட்ட எடுக்கற முயற்சிப் பத்தி..கோவணத்தக்கூட விடமாட்டாங்கன்னுப் பேசிக்கிட்டு இருக்கோம்.” “அப்போச் சொல்லு… எந்த விஷயத்தப் பத்தி” என்றான் மாரி. “வெளிநாட்டுக்காரன் இங்க வந்து வியாபாரம் செய்யப்போறதை பத்தி” என்று எடுத்துத் தந்தான் கந்தன். “ம்ம்ம் வெளிநாட்டுக்காரனுக்குத் தாரை வாக்கும்போது, நம்ப விளைவிக்கறதும், உற்பத்தி செய்யுற பொருள்களை முப்பது சதமாவது அவனுங்க வாங்கி வித்துக்குறதுனும், சொந்த கட்டிடம், குடவுனுகள் போல் இருக்கும் அசையா சொத்தா அவனுங்க பாதிப் பணத்தை போடவும் ஒத்துகிட்டாங்க.” “அதுதான் தெரியுமே. இப்போ என்ன புதுசா?” “சொன்னதை எல்லாம் மாத்த ஏற்பாடு நடக்குது. முன்னாடி சொன்ன நம்ப ஊரு உற்பத்தியில் விளையுற பொருட்களை, வாங்கிவிக்க ஒத்துக்கிட்ட அளவை விட இன்னும் கொறச்சிட்டு (20 சதவீதமாவும்), 10 லட்சம் பேருக்கு கம்மியா இருக்கற எடத்துலக் கடையத் திறக்கச் சம்மதிக்கணும்னு மாத்தறாங்களாம்” “அடப் பாவிங்களா?” “அதுவும் இல்லாம.. பாதிப் பணத்தை அசையாச் சொத்துலப் போட நான் என்ன கேணையா? அப்படின்னு அவன் கேக்க..அவனோட மனசுக் குளிர நம்ப மனசு வெந்தாலும் பரவாயில்லை அப்படினுட்டு, சலுகைன்னு சொல்லிட்டு இம்புட்டுக் காரியத்தையும் வெளிநாட்டுக்காரனுக்குச் சாதகமா மாத்த, மத்தியில இருக்கற அரசாங்கம் முனைப்புக் காட்டுது” என்றேன். “இம்புட்டு நடக்குதா?” “ஆமாம். அனுமதித் தந்தக் கொஞ்ச நாளுலியே நம்ப சொந்தமா விளைவிச்சி உண்டாக்குற பொருள்கள வாங்க ஜகா வாங்குறவன், நாளைக்கு நூறு சதம் அவன் இஷ்டப்படி வெளிநாட்டு உற்பத்திப் பொருளை விக்க மாட்டான் அப்படின்னு என்ன நிச்சயம்? அப்போ அவங்க எல்லா எடத்துலயும் கடைய தொறந்து கல்லா கட்டினா என்னைய மாதிரி ஆளுங்க சுடுகாட்டுக்குதான் போய்த்தானே கடைய விரிக்கணும்..அப்பத்தானே நம்ம ஆளுங்களும் பொழைக்கலாம் ” என்றேன் “அண்ணே… அவனுங்க வந்தா விலை கம்மியாவும் தரமான சாமான்கள் கிடைக்கும்ன்னும் சொல்லுதாங்களே.” என்றான் மாரி. “சோமாறி பயலுக சொல்லறதை நம்பாத. இப்போவே அவங்க ஆட்டத்துக்கு நம்ப ஆடணும்ன்னு சொல்லுறவன் நாளைக்கு என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க. இப்போ சல்லிசா வித்துப்போட்டு, ஜனங்க அவன் பின்னாடி போனதும் அவன் வெச்சதுதான் விலை அப்படின்னு சொல்லுவான்.” என்றேன். இதுவரை நடப்பதைக் கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் இருந்த காய்கறிகளைக் கூறுகட்டி விற்கும் பொன்னம்மா, தன் வாயைத் திறந்தாள்! “இப்போ சொன்னியே, அது என்னமோ உண்மை. நான் இங்கக் கூறு கட்டி விக்கற காயைப் பேரம் பேசிகிட்டு வாங்காம போறவங்க, அந்தக் கோடில இருக்கற நம்ப நாட்டுக்காரன் கடை… பேரு என்ன …அதுதாம்ப்பா செல்போன கூறு கட்டி விக்கறமாதிரி வித்தானே..அவன்தான்” “ஓ .. ரிலையன்ஸா” என்று எடுத்துத் தந்தான் மாரி “ஆமாம்… அவனேதான்..அங்கப் போய் போட்ட விலைக்கு வாங்கிக்கிட்டுப் போறாங்க. என்னமோப்பா கூறுகட்டி விக்கற எங்க பொருள் என்னமோ கேவலமானது மாதிரியும் … வத்தலும் சொத்தலும் பாக்கெட்டுல அடைச்சித் தந்தா தரமானது அப்படிங்கற நினைப்பு நம்ப ஜனங்களுக்கு வந்திடுச்சு! நாம அன்னன்னிக்கு விளையற காய குடுத்தாலும், ப்ரெஸ்ஸா இருக்குன்னு ரெண்டு நாளு குளுருல இருக்குற காயத்தானே எல்லாரும் வாங்கறாங்க ம்ஹ்ம்” என்று தன் ஆதங்கத்தைப் பகிர்ந்தாள் “நம்ப நாட்டுக்காரனே கையில் காசும், ஆள் பலமும் இருக்கற தகிரியத்துல சூப்பர் மார்க்கெட், அப்புறம் வேறேதோ பேரு… என்ன எழவோ ஒரே எடத்துல எல்லா பொருளும் கிடைக்கும் அப்படின்னு கூப்பாடுப் போட்டு திறந்துடறான். நம்ப ஜனங்களும் அங்கன போய் விட்டில் பூச்சி மாதிரி விழுவாங்க. இவனுங்களாலேயே சின்னச் சின்னக் கடைங்க வியாபாரம் படுத்துடுச்சு.” என்று மேலும் தன் பட்டறிவைப் பகிர்ந்தாள். “இப்போப் படுத்த சின்ன வியாபாரிகள ஒரேடியாக் குழியிலப் படுக்க வைக்கத்தான் வெளிநாட்டுக்காரன இஸ்த்து விட்டிருக்காங்க” என்றேன். “அடப் பாவி மக்கா. இவனுங்க என்னைய மாதிரி விவசாயிகளுக்கு நல்லது பண்ணறோம் அப்படின்னு சொல்லிக்கிட்டு திரியுறத நம்பி, இருக்கற கஷ்டத்திலயும் உற்பத்தி செஞ்சு புழைக்கற எங்களோட ஒட்டுக் கோவணத்தையும் உருவர நாதாரிப்பயகள என்ன செய்ய?” “விவசாயிங்க மட்டுமில்லை, எங்களை மாதிரி வியாபாரிங்க, பொது ஜனங்க எல்லாரோட தலையையும் மொட்டைப் போட்டுச் சந்தனம் பூசி, காதுல பூ சுத்தி முச்சந்தியில குந்தவெச்சி அழகு பாக்க நாம விட்டுட்டோம். இனியும் சுதாரிச்சுக்கிட்டு முழிக்காட்டி, அரசியல்வாந்தி..தப்புத் தப்பு …அரசியல்வாதிகள் தயாரிக்கற முள் கிரீடத்தையும் நம்பத் தலையில அலங்கரிச்சுடுவாங்க.” என்றேன் “அந்த முள் கிரீடத்தை நம்ப தலைல அலங்கரிக்க சம்மதிச்சி தலைய காட்ட நாம் என்ன கேணப்பயகளா? சுடுகாட்டுல போட்டாலும் எங்க போட்டாலும் நம்ப சனங்க உற்பத்தி பொருள வாங்குவோம்ன்னு நாம் தீர்மானிச்சு நம்ப கோவணத்தை நாமே காப்பாத்திக்க வேண்டியதுதான்.” என்றான் மாரி. “அப்படி போடு அருவாள” என்ற கந்தன் மற்றும் மாரியின் வார்த்தைகள் நம் எதிர்காலத்தின் மேல் நம்பிக்கை விதை விதைத்தது! 13 நல்லதோர் வீணை(கள்) அன்றும் அப்படித்தான், நாளிதழ் மற்றும் தொலைக்காட்சியில் கண்ட செய்தியில் மனம் அதிர்ந்து சொல்ல முடியா துயரத்தில் மனது அழுத்தியது, “படுபாவிங்க நாசமா போக..பச்ச மண்ண கூட விட்டு வெக்காத காவாலி பயலுக பாடையில போக…” என்ற ஒப்பாரி குரல்கள் வெவ்வேறு மக்களிடம் இருந்து வெவ்வேறு விதமாக வெளிப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு தாயாக என் மனம் பரிதவித்தது. அதுவும் பெண் பிள்ளை தாய் தந்தையுடன் இருந்தாலும், இல்லை விடுதியில் இருந்தாலும் பாதுகாப்பு சிறிதும் இல்லாத நிலையில் என்ன செய்ய? எங்க தப்பு நடந்துதுன்னு யோசிச்சா நீ, நான், நாம், நம் குடும்பம், நம் சமூகம், நம் கல்வி… இப்படி நீளமான சங்கிலித்தொடர் கண்ணிகள் போய்க்கொண்டேயிருக்கிறது. இன்று எங்கோ, யாருக்கோ நடந்தது நாளை நம் பிள்ளைக்கு நடக்காதுன்னு என்ன நிச்சயம்? “யம்மா. யம்மா” என்று என் வீட்டில் வேலை செய்யும் அன்பரசியின் குரல் என் சிந்தனையை வலையை அறுத்தது. “என்ன அன்பு. உன் பொண்ணு இன்னிக்கி ஸ்கூல் போகலையா?” என்று கேட்டேன். ஒரு நாள் கூட பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் செல்லும் பெண். நன்றாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் பெண், அதற்கு உறுதுணையாக அன்பும் அவள் கணவனும். அப்பெண் கவலையாக “இல்ல..அம்மா இனி போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க.” என்று தன் தாயை பார்த்தாள். “என்ன அன்பு… என்ன திடீர்ன்னு இப்படி? அதுவும் நல்லா படிக்கற பொண்ணு..” என்று நான் கேட்கும்போது அப்பெண் நான் அவள் தாயுடன் பேசி எப்படியாவது அவளை மறுபடியும் பள்ளிக்கு அனுப்பி விடவேண்டும் என்ற ஏக்கத்தை கண்களின் தேக்கி பார்த்துக்கொண்டு இருந்தாள். “பின்ன என்னாம்மா… உங்க வீட்டுல எத்தினி வருசமா ஜோலி செய்யறேன். என்கிட்ட இருக்குறது என்னோட கை சுத்தம், நாயம், பொய் சொல்ல மாட்டேன், செய்யற வேலைய சுத்தமா மனசார நல்லா பண்ணனும்ன்னு செய்யுறேன்… சரி தானே?” என்றாள் அன்பு. “அட, அதுதான் தெரியுமே, அதுனால தான இத்தன காலம் உன்ன வீட்டுல ஒருத்தியா நடத்தறோம்? இப்போ எதுக்கு இது. பேச்ச மாத்தாத. ..” என்று கேட்டேன். “நீயே நாயம் சொல்லு… எதுக்கு புள்ளைகள படிக்க அனுப்பறோம்? மனுசனா இருக்கற புள்ளைங்க இஸ்கோலுக்கு போனா அதுங்கள நல்ல வழி எடுத்து சொல்லி பக்குவமா அது அதுங்க எதுல நல்லா வளருமோ அத்த கண்டு பிடிச்சி நல்ல நிலைக்கு இட்டுகினு போகதானே?” என்று கேள்வி கேட்டாள். “ஆமாம்.” என்றேன் “அதுங்க எங்கள மாதிரி அன்னாடங்காச்சியா இல்லாம நல்ல நெலமை வரணும்னு நெனக்கறது சரிதானே?” என்ற அன்பின் கேள்விக்கு என் வாய தானாகவே “ஆமாம்” என்றது. “ஆனா, இப்போ என்னா நடக்குது? இஸ்கோலுக்கு போற பொண்ண நாசம் பண்ண படிப்பு சொல்லி தர வேண்டிய வாத்தியும், அங்க வேலை பண்ணுற ஆம்பிள்ளைகளும், பெரிய கிளாஸ்ல படிக்கற ஆம்பிள்ள பசங்களும் போட்டி போடற மாதிரி தானே இருக்கு?” என்று அன்பு கூறியதை என்னால் ஆட்சேபிக்க முடியாத நிலையில் தள்ளிய இன்றைய நிலையை எண்ணி வாய்கட்டி நிற்கும் நிலையில் இருந்தேன். “அது மட்டுமா… இது எல்லாம் பத்தாதுன்னு பொம்பள புள்ளய கெடுக்கலாம் தப்பில்ல; இல்ல ஒரு பொண்ணுக்கு இஷ்டம் இல்லாம கழுத்துல மஞ்ச கயித்த கட்டி இஸ்துகின்னு போனா அவ தான் பொண்டாட்டி, அவகூட படுக்கலாம் தப்பே இல்லன்னு கண்ட கஸ்மால கதைங்க புஸ்தகமாவும், டிவி சினிமாலயும் திரும்ப திரும்ப சொல்லி தருதுங்க. இதை எல்லாம் படிச்சும் பாத்தும் இத்த தானே தெரிஞ்சோ தெரியாமலோ கத்துகிதுங்க…” “இந்த கேடுகெட்ட கதைங்கள நிசம்ன்னு நம்பி ஆம்பள பசங்களும் பொம்பள புள்ளங்களும் கெடுத்துகிட்டும், கெட்டுபோய்கிட்டும் இருக்குதுங்க.” என்று அன்பு அவள் அறிந்த வகையில் சுட்டிக்காட்டிய உண்மையை என்னால் மறுக்க முடியவில்லை. “அதான், பேசாம என் பொண்ணு பத்திரமாவும் நல்ல மனுசியாவும் இருக்க உங்கள மாதிரி நம்பிக்கையான வீட்டுல வேலை செஞ்சி புழச்சிக்கட்டும்ன்னு இட்டாந்துட்டேன்.” என்ற அன்பிறகு நான் என்ன பதில் சொல்லுவேன். ஒரு தாயாக என் மனதில் இருப்பதை அவள் தைரியமாக வெளியே கொட்டிவிட்டாள். “என் பையன் முருகனைக் கூட நம்ப ராசு தம்பி மெக்கானிக் கடைல விட்டுட்டேன். இப்போ ஒழுங்கா இருக்கறவனும், அவன் இஸ்கோல் போற வழில இருக்கற டாஸ்மாக்ல பெரிய பசங்க வாங்கிட்டு போய் குடிக்குறத பாக்குறவன், நாளைக்கு அந்த தறுதலைங்களோட கூட்டு சேந்து டாஸ்மாக்கோ, இல்ல போத பக்கமோ, அதுவும் இல்லாங்காட்டி மத்த பொண்ணுங்கள கெடுக்கவோ, ஜாதி சண்டைக்கு போகவோ மாட்டான்னு சொல்ல முடியுமா. அதுக்கு பேசாம இப்போவே தொழில் கத்துகிட்டா அவன் பொழப்ப அவன் பாத்துப்பான். டர் டர்ன்னு இப்போ ஓடுற வண்டிங்க எப்படியும் இனி வரும் காலத்துல கூடத்தான் செய்யும், என்னா நான் சொல்லுறது சரியா?” என்ற போது இந்நிலை தொடர்ந்தால், எதிர் கால தீர்க்கதரிசி போல் சொல்லும் அன்பின் வார்த்தையை என்னால் மறுக்கவோ, இல்லை எல்லாம் நல்லபடியாக மாறிவிடும் என்ற நம்பிக்கையோடோ எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருந்தேன்…ஏனெனில், மாற்றம் வரவேண்டிய சங்கிலித்தொடரில் நான் ஒரு கண்ணியே! என் மனம் இந்நிகழ்வுக்கு காரணமாகிய தனி மனிதன், குடும்பம், சமூகம், சமூக அமைப்புகள் ஆகிய கல்வித்துறை, நீதித்துறை, ஆரோக்கியம் – மன மற்றும் உடல்நலம் போன்றவற்றில் கட்டாயம் மாற்றம் தேவை என்று உணர்த்தியது. இதுபோன்ற சம்பவங்கள் நாட்டில் தினந்தோறும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது…. ஆனால், சில சம்பவங்கள் மட்டுமே ஊடகங்களின் வெளிச்சத்தை பெறுகிறதே..இது ஏன்?” என்று சிந்தித்துக் கொண்டிருக்கையில் “பாரு..நீயே நான் சொல்லுற பாயின்ட் கரீட்டா இருக்குதுன்னு ஒத்துகின்னு இருக்க.” என்ற அன்பை பார்த்து “இதுக்கு எல்லாம் எது காரணம்ன்னு யோசிச்சிட்டு இருந்தேன்” என்றேன். “ம்கும்…நல்லா யோசிச்ச போ. யாரு பண்ணாங்கன்னு ஆதாரத்தோட நிரூபிச்சாலே தண்டனை கிடைக்குறது இல்ல. இந்த அழகுல யோசிச்சி யோசிச்சி நின்னுக்கிட்டு இருந்ததால தான் இம்புட்டு தூரம் நாரி போய் கடக்குது. முதல இந்த மாதிரி நாதிரி பயலுகளுக்கு கீழ வேலைக்கு ஆகாத மாதிரி பண்ணி விட்டுடனும். ஆனா, எவன் இதை பண்ணுவான், அதிகாரம் இருக்குற ஆளு வீட்டுல இந்த மாதிரி ஒன்னும் நடக்காது, அதுனால அவனுங்களுக்கு நம்ப படுற கஷ்டம் எங்க புரியுது.” என்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள தண்ணீரை குடித்துவிட்டு மேலும் தொடர்ந்தாள் “தாலிக்கு தங்கம் குடுத்துட்டு அதை அறுக்க டாஸ்மாக் வெச்ச கதைய எவன் மாத்துவான்? அவனவன் கோடி கோடியா சம்பாதிக்க, இருக்கற ஜனங்க எக்கேடு கெட்டா என்னான்னு இருக்கானுங்க…இவனுங்க எல்லாம் பாடைல போக. கொஞ்சம் கொஞ்சமா குடிச்சிட்டு சாவறதுக்கு பேசாம ஒரேடியா எதையாவது கலக்கி குடிக்க குடுத்துடலாம். அப்போ ஒரேடியா காலி!” என்ற அன்பின் வார்த்தை என்றேனும் நடக்கலாம், இந்நிலை தொடர்ந்தால்! 14 நிஜம் நிழலான போது... நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொண்டு, உடம்பில் ஒருவித நடுக்கம் வந்து, என்னால் வார்த்தைகளை வெளியிடமுடியாது தொண்டைக்குழியை அழுத்தியது. மனமோ நேர்மாறாக “என்ன? ஏன்? எதற்கு? எப்படி? எப்போ? நிஜம்மாவா?” இப்படி எல்லாவிதமான கேள்விகளும்; அகராதியில் உள்ள அத்தனை கேள்விகளும் ஒன்றையொன்று பற்றிப் பிணைந்து, என்னைச் சூழ்ந்தது, ஆனால் விடைதான்… கிடைக்கவில்லை. இன்று, இப்போது கோமதி இவ்வுலகில் இல்லை என்று கேட்டதில் இருந்து என் நிலையைச் சொல்லமுடியவில்லை.. இந்த மூன்று மாதமாக வேலை காரணமாக வெளியூருக்குச் சென்ற போது என்ன நடந்தது? அதற்கு முன்பு வரையில் ஏதும் வித்தியாசம் தோன்றியதில்லை. எழுந்து ஜன்னலிடம் நின்றேன், இங்கு இங்கிருந்து தானே…என் கோமதி..என் மனம் இன்னும்கூட அவள் இல்லாததை ஏற்றுக்கொள்ளவில்லை. என் கைகள், அந்தக் கம்பியில்லா ஜன்னலை நடுங்கும் விரல்களால் வருடியது. அன்றொரு நாள் கோமதி என்னிடம் கூறியது படமாக மனக்கண்ணில் விரிந்தது, “பாத்தியா சௌம்யா என் பொண்ணு கொடுத்தது” என்று கையில் ஒரு கீசெயின் மற்றும் ஒரு வாழ்த்து அட்டையைக் காண்பித்தாள். “அட கீசெயின் அழகா இருக்கே. ஒரு குழந்தை அம்மாவக் கட்டிப்பிடிச்சு முத்தம் தராமாதிரி. எவ்வளவு தத்ரூபமா இருக்கு.” என்று கூறிக்கொண்டே அன்னையர் தின வாழ்த்திற்கு கோமதியின் மகள் தன் கையால் உருவாக்கிய வாழ்த்து அட்டையைப் பார்த்துப் பிரமித்தேன். படமும் வரிகளும் மனதைத் தொட்டது. “ரொம்ப நல்லா இருக்கு” என்று உணர்ந்து சொன்னேன். “ஆமாம். அவ சொல்லறா ‘எப்படி அம்மா நான் கேக்கும் முன்னையே எனக்கு வேண்டியதை நீங்க பண்ணிடறீங்க? உங்கள மாதிரி யாருக்குக் கிடைப்பாங்க பெஸ்ட் அம்மா? என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் பொறாமையாப் பாப்பாங்க தெரியுமா? அப்படின்னு” என்ற கோமதியின் குரலில் பெருமிதமும் நெகிழ்வும் நிறைந்து வழிந்தது. “ஆமாம் உன் மக சொல்லறதும் சரிதான். அது எப்படித்தான் நீ லேட்டஸ்ட் பேஷன் ஆகட்டும், சமையல் ஆகட்டும் எல்லாமே ஜோரா செஞ்சி அசத்தற. இப்படி ஒண்ணொண்ணா பாத்துப் பாத்து செய்யற.. ஆனா என்னால எல்லாம் முடியாதுப்பா. வேலை முடிஞ்சி வீட்டுக்குப் போனா போதும்ன்னு தோணும். போனதும் ஏதோ அரக்கப்பரக்க செஞ்சிச் சாப்பிட்டுப் படுத்தாப் போதும்ன்னு தோணும். லீவ் நாளுல தான் பசங்களுக்குப் பிடிச்சதைச் செய்யமுடியுது.” என்றேன். “இல்ல சௌமி, என் பொண்ணு எப்பவும் ஏங்கிப் போய்டக்கூடாது. அவ யாருகிட்டயும் எதுக்கும் போய் நிக்கக்கூடாது. அவ எதிர்ப்பாக்காம இருக்கும்போது, அவ ஆசையை நிறைவேத்தினா, அவ முகத்துல தெரியும் சந்தோஷம், பிரமிப்பு இப்படி கலந்த உணர்வை பாக்கும்போதே என் மனசு நெறஞ்சிடும்.” என்று மெய்மறந்து சொன்னது அசரீரியாக இப்பொழுதும் என் காதில்…. அன்று முதல் அந்த சாவிக்கொத்து கோமதியிடம் எப்போதும் இருக்கும். “ஏன் கோமதி, ஒரு வாட்டியாவது நீ உன் முடிவை செயல்படுத்தும் முன் அந்த சாவிக்கொத்தை பார்த்திருக்கலாமே? அவ்வளவு உன் பொண்ணுக்காக பார்த்துப் பார்த்து செய்வியே! அவளுக்கு எதிர்பாராத ஆச்சர்யங்களைத் தந்தவ, இப்போ இதையும் அவ எதிர்ப்பார்க்காம செய்துட்டியா? அவ உணர்வுகள் இப்போ உனக்கு தெரியுதா? புரியுதா?” என்று என் வாய் முணுமுணுத்தது. என்னிடம் கேள்விகள் மட்டுமே…என் கேள்விகளுக்குப் பதிலில்லை. “வாங்க மேடம், அன்னிக்கி போகமுடியாதவங்க எல்லோரும் இப்போ அவங்க வீட்டுக்குப் போறாங்க.” என்று அழைத்த ஊழியருடன் நானும் சென்றேன். எல்லாம் முடிந்து ஒரு வாரம் ஆகப்போகிறது. என்னால் உள்ளே செல்ல முடியவில்லை. “இங்க இங்கதான் ஒக்காந்துகிட்டு கதை கதையாப் பேசுவோம்.” அங்கு சென்று நான் அந்த நாற்காலிக்கு வலிக்குமோ என்று மெல்ல அதில் அமர்ந்தேன். “அடுத்த வாரம் எங்க வீட்டுல, ஊருக்குப் போயிட்டு வந்த கதையை பேச வரேன்னு சொன்னியே…வருவியா? உனக்கு பிடிச்சப் பொருள் ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன்… இப்போ அதை வாங்கிக்கத் திரும்ப வருவியா?” புலம்பித்தவித்த என் மனம் என் கட்டுப்பாட்டில் இல்லை. என் உடன் வந்தவர் அழைத்ததும் உள்ளே சென்றேன். எனக்கே இப்படி இருக்கே அங்கே கோமதியின் கணவர் மற்றும் பெண்ணைப் பற்றி என்ன சொல்ல? உணர்வுகள் இல்லா ஜடமாய்; ஜீவன் உண்டோ? ஒடுங்கி வெறித்த பார்வையில் என்ன தென்படுகிறது? அவளுடைய கணவர் ஏதோ பத்துப் பதினைந்து வயது மூப்புபோல் தோற்றத்துடன்! “என்னடி உங்க வீட்டுக்காரர் ரொம்ப ரிசெர்வ்டா? நான் வந்தாலே ஏதோப் புலியப் பாத்தாமாதிரி வாங்கன்னு சொல்லிட்டு ஆளே காணாமப் போய்டறார்?” என்றபோது, “ச்சே ச்சே, நீ மட்டுமில்லை சொந்தக்காரங்க வந்தாலும் அப்படிதான். ஆனா அவரு அடிக்கற லூட்டி இருக்கே..ஹப்பா. எங்க கிட்டதான். எங்க மாமியார்கூட, அட இவனுக்குச் சிரிச்சிப் பேசக் கூடத் தெரியுமா? அப்படின்னு சொல்லி அவரை வாருவாங்க. கேட்டா… எங்க கிட்ட ப்ரீயா இருக்கற மாதிரி மத்தவங்க கிட்ட இருக்கமுடியல அப்படின்னு சொல்லுவார்.ஆனா யாராவது வீட்டுக்கு வரப்போறாங்க அப்படின்னா தேவையானது எல்லாம் வாங்கிக்கிட்டு வந்துடுவாங்க. இது பண்ணு அது பண்ணுன்னு ஒரு வழிபண்ணிட்டு விருந்தாளி வந்தவுடன் அவங்க உள்ளே போயிடுவாங்க.” என்பாள் “இனி உன் வீட்டுக்காரர் யாருக்கிட்ட மனசுவிட்டு பேசுவார்? அவர ஊமையாக்கிவிட்டுப் போக எப்படி மனசு வந்தது?” என் மனமோ இப்படி கேள்விக்கணைகளைத் தொடுத்தது. எதற்கேனும் பதில் சொல்ல வரமாட்டாளா? அப்போது உள்ளே அவளின் தாயார் ஒரு மூலையில் சுருண்டிருப்பதைப் பார்த்து அவரிடம் சென்றேன். பெற்றப் பெண்ணைப் பறிகொடுத்தத் தாயை எப்படி சமாதானம் செய்ய முடியும். என் கை அவரை ஆறுதலாக வருடியது… அவர் என்னைக் கண் திறந்துப் பார்த்தார். அந்தப் பார்வையில் எத்தனை உணர்ச்சிப்போராட்டம்… புரிந்தது வார்த்தைகளுக்குத் துக்கத்தை வெளிப்படுத்தும் சத்தியில்லை. ஆம். “எப்படித்தான் மனசு வந்ததோ. ஒரு ராத்திரி கூட எங்க வீட்டுல தங்கமாட்டா. போம்மா நினைச்சப்போ வந்துட்டுப் போறேனே இன்னும் என்ன வேணும் உங்களுக்கு. இங்க தங்கினா சரியா வராது அவருக்கு; அவர விட்டுட்டு என்னால இங்க இருக்க முடியாது. அப்படின்னு சொல்லிட்டு ஓடி ஓடி இங்க வந்துடுவா. இப்போ எப்படி? அவளால அவ புருஷனையும் பொண்ணையும் தனியாத் தவிக்கவிட்டுப் போகமுடிஞ்சது?” என்று என்னைக் கேட்டபோது மனம் கனத்தது. விடை தெரியா பல கேள்விகளுடன் இதுவும் இணைந்தது. “அதிசயமா ஒரு பத்துநாளுக்கு முன்ன பொண்ணோட வந்து ஒரு நாள் தங்கினா. பிடிச்சதைச் சமைக்கச் சொல்லிக் கேட்டுக் கேட்டுச் சாப்பிட்டா. இனிக் கேட்டுச் சாப்பிட இருக்க மாட்டேன் அப்படின்னு சொல்லாம சொன்னது புரியாம போச்சே.. புரிஞ்சிருந்தா, அவளப் பிடிச்சி வெச்சிருக்க மாட்டேனா?” என்று அரற்றிய தாயைக் கண்கொண்டு காண முடியவில்லை. “அவ போனதுக்கு காரணம் குடும்பப் பிரச்சினைதான்; இல்லை ஆபீஸ் பிரச்சனை தான் அப்படின்னு ஆளாளுக்குப் பட்டிமன்றம் நடத்தறாங்க. எங்களுக்கே தெரியாத புரியாத காரணங்கள் எப்படி மத்தவாளுக்கு புரியும்? தெரியும்?” என்ற தாயாரின் ஆதங்கத்தைப் புரிந்துக்கொள்ள முடிந்தது. கோமதிக்கு இந்த எண்ணம் எப்போதிருந்து இருந்தது, அதை வெளிப்படுத்தும் விதமாக தாயாருடன் தங்கியது எனில் ஏன் வேறு வழியில் அவள் முடிவெடுக்க முயலவில்லை? ஒருவேளை முயன்றாளோ? என்ற என் எண்ண வலைகள் பின்னத்தொடங்கியது. அதைக் கலைக்கும் விதமாக மீண்டும் அப்பெரியவர் சொன்னது என் கவனத்தை ஈர்த்தது, “ம்ம்ம்..மாடா உழைக்கணும்ன்னு தலையெழுத்தா? வீட்டுக்காரர்கூட போகட்டும் விடுன்னு சொல்லறார்…ஆனா விடமுடியலையேன்னு சொன்னா. ஏண்டிம்மா.. உங்க ஆபீஸ்ல என்ன தான் நடந்தது? நல்ல நாள்லயே மாப்பிள்ளை நாம்ப நூறு வார்த்தைப் பேசினா, எண்ணி நாலு வார்த்தைப் பேசுவார். இப்போ அந்த நாலு வார்த்தையும் இல்லாம ஆக்கிட்டாளே.” என்று என் முகத்தைப் பதிலுக்காகப் பார்த்தார். எனக்கே ஒன்றும் தெரியாத போது நான் என்ன சொல்ல? “எனக்கு தெரிஞ்சி ஒன்னும் இல்லை. இப்போதான் ஊருலே இருந்து வந்தேன். இனிதான் பாக்கணும். தெரிஞ்சா கண்டிப்பா சொல்லுறேன்.” என்று அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் “மாடாய் உழைக்கணும்” என்ற சொல் மனதில் நெருஞ்சிமுள்ளாய் இடறியது. நான் அலுவல் காரணமாக வெளியூர் சென்ற ரிப்போர்ட்டை மேலதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் கோமதியின் வீட்டில் இருந்து நேரே அலுவலகம் சென்றேன். ரிப்போர்ட் தயாரிக்கும்போது என் கண்ணில் பட்ட அலுவல் கடிதம் என்னை உலுக்கியது. “கோமதிக்கு வரவேண்டிய பதவி உயர்வு கோமதிக்கு அடுத்த நிலையில் இருக்கும் சேகருக்கு எப்படி வழங்கலாம்? கோமதியின் அயராத உழைப்பு ஏன் அங்கீகரிக்கப்படவில்லை?” என் மனம் ஆறவில்லை. பதவி உயர்வுப் பற்றியப் பேச்சு அலுவலகத்தில் தொடங்கியதில் இருந்து கோமதி பதவி உயர்வு கிடைக்கும் என்று எத்தனை எதிர்ப்பார்ப்புடன் இருந்தாள். கோமதியும் “இந்த வேலை முடிக்கற வரைக்கும் குடும்பத்துக்குக் கூட நேரம் செலவு செய்ய முடியல. ஏதோ புரிஞ்சிக்கற வீட்டுகாரர் கிடைச்சது நான் செஞ்ச புண்ணியம். இந்த சேகருக்கு ரொம்ப கொழுப்பு ஜாஸ்தி ஆகிடுச்சு. இன்னிக்கி ஃபைல் எடுக்க வந்தவன், நான் என்னதான் மாடுமாதிரி உழைச்சாலும் ப்ரொமோஷன் எனக்குக் கிடைக்காதாம். அவனுக்குத் தான் கிடைக்கும்ன்னு நக்கல் பண்ணிட்டுப் போறான்.” என்றது நினைவிற்கு வந்தது. அவள் மட்டுமல்ல, பெரும்பாலான ஊழியர்களுக்கும் கோமதிதான் ஆரம்பம்முதலே அயராது உழைத்த அந்த ப்ராஜெக்ட் மூலம் எத்தனை அதிக லாபம் கம்பெனிக்கு கிடைத்தது என்றும், ஆதலால் அவ்வருட செயல் திறனை மட்டுமல்லாது, இங்கு வேலைக்கு சேர்ந்தது முதல் அவளின் உழைப்பிற்கு தகுந்த பிரதியுபகாரமாக பதவிஉயர்வு வரும் என்று மகிழ்ந்தனர். என் ரிப்போர்ட் உடன் மேலதிகாரியைக் காணச்சென்ற நான் என் விஷயங்களை பற்றிப் பேசி முடித்து விட்டு, “என்ன சார், கோமதிக்கு வரவேண்டிய பதவி உயர்வை சேகருக்குத் தந்துட்டீங்க?” சில நிமிடங்கள் மௌனமாக இருந்துவிட்டு, “உங்களுக்கே தெரியும் அந்த பொறுப்பு எவ்வளவு கடினம் அப்படின்னு?” “ஏன் சார், கோமதிக்கிட்ட அதற்குத் தேவையான எல்லா தகுதியும் இருக்குன்னு உங்களுக்கே தெரியும். இப்போ நீங்க சொல்லறது சரியான காரணம் இல்லை. நீங்க உண்மையான காரணத்தைச் சொல்லுங்க.” என்றேன் என்னை கட்டுப்படுத்திக்கொண்டு. “வெல்… ஒரு பெண்ணா அந்தப் பொறுப்பு சரிவராது. …” என்று ஏதேதோ சொல்லிக்கொண்டே சென்றது என் காதில் விழவில்லை. “ம்ம்ம் ஒன்னு மட்டும் இப்போ தெளிவாப் புரிஞ்சிடுச்சு. என்ன தான் தொழில் அனுபவம், படிப்பு, அந்தஸ்து, கெளரவம் இப்படி எல்லாம் இருந்தாலும்கூட பெண்ணை இரண்டாம்தர பிரஜையாக பார்க்கும் மனோபாவம் மட்டும் உங்கள மாதிரி ஆண்களுக்கு மாறவே இல்லை; மாறவும் மாறாது. இந்த லக்ஷணத்துல ரோட்டரி சங்கம் அங்க இங்கன்னு போய் இளைய தலைமுறைக்கு வழிக்காட்டியா போறீங்க! ஆணும் பெண்ணும் சமம்!! பெண்ணடிமைய ஒழிப்போம் அப்படின்னு உலக பெண்கள் தினம் (மார்ச் 8) அன்னிக்கி போய் பேசறீங்க. ச்சே..கேவலம். இதுக்கு வெளிப்படையா பெண்கள் ரெண்டாம் பிரஜைதான்னு சொல்லறவங்களே பரவாயில்லை, அவங்க மாற வாய்ப்பிருக்கு. ஆனா நீங்க…?” என்று மனக்குமுறலை வெளியிட்டேன். “இப்போ நான் உங்ககிட்ட பேசினதுக்கு நீங்க என்னை வேலைய விட்டுத் தூக்கினாலும் பரவாயில்லை. நான் கவலைப் படமாட்டேன். ஆனா ஒண்ணு.. ஒரு உயிர் போக உங்க முடிவும் முக்கியமான காரணம்ன்னு தெரிஞ்சிக்கோங்க” என்று சூறாவளியாக வெளியேறினேன். அங்கிருந்து நேரே வீட்டுக்கு வந்ததும் அதுவரை அடக்கிவைத்திருந்த அழுத்தம் அழுகையாக வெடித்தும், அழுத்தமும் ஆதங்கமும் கூடியதேத் தவிர குறையவில்லை. வீட்டிற்கு வந்தும் மனம் சமாதானம் ஆகவில்லை. ச்சே … அன்று அலுவலகத்தில் நடந்ததை என் கணவரிடம் பகிர்ந்தேன்…”ஒருவேளை என்னோட வேலை கூடப் போனாலும் போகும்.” என்றேன். “போனாப் போகட்டும் விடு. இது இல்லைனா வேற. எதுவா இருந்தாலும் நான் உன்கூட இருக்கேன். எல்லாமே சமாளிப்போம்.” என்ற பதில் ஆறுதலாக இருந்தது. அப்போதுதான் நினைவு வந்தவராக, “நீ ஊருல இல்லாதப்போ உனக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு, இரு..கொண்டு வரேன்” என்று கூறிச்சென்றார். அக்கடிதம் கோமதியிடம் இருந்து என்று அறிந்ததும் கை பரபரப்புடன் செயல்பட்டது. அக்கடிதத்தில் சேகருக்கு பதவி உயர்வு தந்ததைப் பற்றி குறிப்பிட்டு வருந்தி எழுதியிருந்தாள். அப்படியென்றால், இதுதான் அவளது மன அழுத்தத்திற்கான காரணம்…ஐயோ.. இது நடந்த போது நானும் ஊரில் இல்லாதது துரதிஷ்டவசமாகிப்போனதே..நான் மட்டும் இருந்திருந்தால் என் கோமதி.. சற்றே மட்டுப்பட்ட என் அழுகை மீண்டும் மடை திறந்தது. கடலளவு ஆசைகளும்; விண்ணளவு கனவுகளும் ஏன் சிதறி சின்னாபின்னமானது? ஆசைகள் அலையலையாய் எழுந்தாலும் ஆழ்கடலில் இருக்கும் பொக்கிஷங்கள் போல ஆழ்மனதில் பார்க்கத் தவறியதேனோ? மெய்படும் மெய்படாக் கனவுகளை பிரித்தறிய முடியாது போனதோ? “எண்ணம் செயலாக்கத் தோன்றிய அந்த ஓரிரு நிமிடங்கள் அதை தள்ளிப்போட்டிருந்தால் மீண்டும் அதைச் செயலாக்க நினைத்திருக்க முடியாதே. ஏன் கோமதி உடனே செயலாக்க நினைச்ச? என்னதான் பிரச்சனை இருந்தாலும் இப்படியா செய்யணும்?” என்ற என் ஆதங்கத்தை என் கணவருடன் பகிர்ந்தேன். “யாருக்குத்தான் பிரச்சனையில்லை? பிரச்சனைங்கற கடல்ல மூழ்காம அதை சமாளிச்சி வெளிய வரத்தானே நமக்கு அறிவுங்கற கப்பல கடவுள் தந்திருக்கார்.” என் மனதில் இருப்பதை வாய்வார்த்தையில் என் கணவரிடம் நான் வெளியிட்டபோது அவரிடமும் பதிலில்லை. “ஏங்க.. எல்லோரும் சினிமா தியேட்டர், ஹோட்டல், பேங்க், போல பலதோட டெலிபோன் நம்பரும் வெச்சிருக்காங்க, அப்படியே இல்லைனாலும் இன்டர்நெட்டில் தேடி எடுக்கறாங்க. ஆனா சிநேகா (Sneha: Helpline – 91 – 44 – 24640050; Email: help@snehaindia.org இதுபோல் பல மையங்கள் உள்ளன. ரகசியம் காக்கப்படும்) போன்ற எண்களைத் தெரிஞ்சிக்கறதில்லை?” என்ற என் இந்த ஒரு கேள்விக்கு பதிலாக என் கணவர், “ஆமாம், காலம் மாறும்போது நாமும் சிலதுல மாறணும். சினிமா, அரசியல் இப்படிப் பலது பத்தியும் மாஞ்சி மாஞ்சி தெரிஞ்சிக்கும் நாம்ப, இதுபோன்ற மிக மிக அத்தியாவசியமான எண்கள், மையங்கள் பத்தியும் கட்டாயம் தெரிஞ்சிக்கணும். கவுன்சிலிங் போறதுக்கோ, மனநல மருத்துவரப் போய்ப் பாத்தாப் பைத்தியம்ன்னு முத்திரைக் குத்திடுவாங்கனோ பயப்பட அவசியமில்லை. நமக்கு தெரியாதப்போ, நம்மை வழிநடத்தத் தெரிஞ்சவங்க கிட்ட வழி கேக்கறது தப்பேயில்லை அப்படின்னு புரிஞ்சிக்கணும்.” “ஆமாம், ஒரு உயிர் இயற்கையா பிரியும்போதே அக்குடும்பம் நிலையில்லாது தத்தளிக்கும்போது, தானே மாய்ச்சுக்கிட்டா அவங்களச் சார்ந்தவங்க கழுத்துல கல்லைக் கட்டி கடல்ல தள்ளின மாதிரி.” என்ற என் கூற்றை ஆமோதித்தார் என் கணவர். என் மனம் “எதைக் கண்டும் கலங்காது, எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டிய அவசியத்தை என்னைச் சுற்றி உள்ள மனிதர்களிடம் விதைக்க வேண்டும்” என்று தீவிரமானது! அதையே ஜெபிக்கத் தொடங்கியது. 15 பசியா ... பஞ்சமா... மூச்! இல்லவே இல்லை... (மீத்தேன் வாயு – நிலக்கரி போன்றது மீத்தேன் வாயு தேவையா அல்லது உணவு தேவையா? என்று யோசிக்கவேண்டிய கட்டாயம்தான் இக்கதை) வருடம் 2020: “ஐயா எப்படியாவது எனக்குக் கொஞ்சம் விலை கம்மியா தாங்கய்யா..வீட்டுல புள்ள குட்டிங்க படுற பாட்டை கண்ணால பாக்க முடியலை.” இப்போது அதிகம் விற்கப்படும் மாத்திரைக்குத் தான் இந்தக் கெஞ்சும் நிலை! “அட போய்யா, உன் கூட ஒரே ரோதனையா போச்சு.. நாலு நாளா இங்கே சுத்திக்கிட்டு இருக்கறதுக்குப் பதிலா வேற ஏதாச்சும் பண்ணமுடியுமான்னு பாருப்பா.” “புண்ணியமாப் போகுமுங்க. பாருங்கையா இந்தப் புள்ளைய” என்று வெறும் எலும்பிற்குப் போர்த்தியத் தோலோடு நிற்கும் இளைய மகனை முன்னிறுத்தியபோது, “என் அப்பன் வீட்டுதா.. நான் விலையக் கம்மியாக் குடுக்க.. என்னத்தைச் சொன்னாலும், காட்டினாலும் நான் ஒன்னும் பண்ணமுடியாது. நான் உனக்காக பாவமும் புண்ணியமும் பாத்தா என்னைய வீட்டுக்கு அனுப்பிட்டு, காத்துகிட்டு இருக்கற கூட்டத்துல இருந்து ஒருத்தனை வெச்சிடுவாங்க. நான் வேணா ஒண்ணு பண்ண முடியும்.. ஒரு அட்டைய வேணா மாத்தி வெக்கறேன். நாளைக்குள்ள பணம் கொண்டுவந்தா உங்களுக்குத் தரேன். ஸ்டாக் தீரபோவுது. போங்க.. போங்க.. பணம் கொண்டு வாங்க” என்று அந்த மனிதனை விரட்டினாலும் மனதின் மூலையில் வேதனை கனத்தது, பசியும் பட்டினியும் எவ்வளவு கொடுமையானது. “சார் @#$% மாத்திரை 20 பாக்கெட் தாங்க.” என்று கேட்ட அடுத்த நபரின் குரல் என் வேதனையை தற்காலிகமாக மறைத்தது. “மன்னிக்கனும்.. 6 பாக்கெட்டுக்கு மேல குடுக்க முடியாதுங்க. எங்களுக்கு வாய்மொழியா ஆர்டர் போட்டிருக்காங்க. அப்புறம் ஆதார் அட்டை தாங்க.. அப்போதான் தர முடியும்.” என்றேன். “என்னப்பா அதுதான் கேக்கற விலைய கொடுத்து வாங்கறோமே, இப்போ இப்படி சொன்னா எப்படி.? சரி சரி 6 பாக்கெட்டு தாங்க. திரும்பவும் நான் எப்போ மறுபடியும் வாங்க முடியும்? இதுக்குக்கூட ஆதார் வேணுமா?” “ஒரு 20 நாளைக்கு அப்புறம்தான் நீங்க அடுத்தது வாங்க முடியும். நாங்க என்னங்க செய்யறது, எங்களுக்கும் நசையான வேலைதான்.. இப்படி ஒவ்வொரு வாட்டியும் ஆதார் அட்டை பாத்து என்ட்ரி போட்டுக் குடுக்கறதுக்கு.” இத்தனைக்கும் காரணமானது மக்களை பார்த்து ஏளனமாக சிரிப்பது போல் வீற்றிருந்தது சிறிது கர்வத்துடன்.. கலிகாலத்தில் பசியை உணராமல் வைக்கும் மாத்திரைக்குத் தான் இப்போது ஏக மவுசு! “ஒரு மாத்திரை எடுத்துக்கொண்டால் மூன்று நாட்களுக்குப் பசி தெரியாதுங்க.” என்று கூறியவாறு பணம் வாங்கிக்கொண்டு, கேட்டவருக்கு மருந்தைத் தந்துவிட்டு என் பசியை அடக்க மதிய உணவு டப்பாவை எடுத்துக்கொண்டு பின் அறைக்கு சென்றேன். மதிய உணவைக் கண்முன்னே கண்டும் மனம் அங்கில்லாமல் எங்கெங்கோ பறந்து பறந்து கேள்விக்கணைகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வழி தேடிக்கொண்டிருந்தது. “என்ன நீ.. கையில சாப்பாட வெச்சிக்கிட்டு சாப்பிடாம யோசிச்சிக்கிட்டு இருக்க?” என்று மதிய சாப்பாட்டு நேரத்திற்காக கடையின் கதவை அடைத்துவிட்டு வந்தான் ராஜன். “ம்ம்ம் என்ன பண்ணறது? இன்னும் எத்தனை நாள் இந்த சாப்பாடு கிடைக்கும்ன்னு தெரியல?” என்றேன். “நீ ஏன் இப்போவே அதைப்பத்தியெல்லாம் யோசிக்கற? முதல்ல இருக்கறதை சாப்பிடுவியா…அத விட்டுட்டு.. நமக்கு இதுவாச்சும் இருக்கேன்னு சந்தோஷப்படு.” “நீ சொல்லறதும் சரிதான். ஒரு பக்கம் இது என்ன வேலை? இந்த வேலையும் வேண்டாம்.. ஒரு மண்ணும் வேண்டாம்ன்னு தோணும். அதுவும் இப்போ ஏகப்பட்ட தேவையா இருக்கற புது மாத்திரைக்கு.. இன்னிக்கி வந்த மாதிரி ஆளுங்க கூடிக்கிட்டே போகறதை பாக்கும்போதே வயிறு கலக்குது.” என்றேன். “ஆமாம்ப்பா.. நீ சொல்லறதும் சரிதான். அந்த மாத்திரையைப் போடும்போது பசி உணர்வை அறியாமல் செய்வதும், அதை உட்கொள்ளாமல் இருக்கும்போது கூடுதல் பசி உணர்வைத் தூண்டி, தொடர்ந்து உணவை நாடவும்; உணவு போதுமானதாக இல்லாத பக்ஷத்தில், மாத்திரையை எடுத்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்துக்கு மக்களை தள்ளுவது ரொம்ப கொடுமை. அதோட பக்க விளைவைப் பத்தி யாரு யோசிக்கறாங்க?” என்ற ராஜன் கூறிய உண்மை என் மனதோடு உடலையும் அமிலமாக பொசுக்கியது. “எந்த ஒரு செயலோட விளைவுகளைப் பத்தியும் யோசிக்காதது தான் நாம்ப இப்படி அவதிப்படும் நிலைக்கு கொண்டுவந்திருக்கு.” என்று கூறும்போது சில வருடங்களுக்கு முன் நடந்த நாட்டுநடப்புக்களை ஒதுக்க முடியவில்லை. வருடம் 2013: பத்திரிகையில் வந்த கட்டுரை மூலம் அறிந்த “காவிரி படுகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம்” டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தைப் பாதித்தது. 2010(ம் ஆண்டு) அனுமதித்த திட்டத்தைப் பற்றி மூன்று ஆண்டுகள் கழித்தே, அப்பகுதி மக்கள் அறியும் நிலை! இத்திட்டம் மூலம், கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் பகுதியில் தொடங்கி அரியலூர் மாவட்டத்தில் ஜெயம்கொண்டம், தஞ்சாவூரில் திருவிடைமருதூர், கும்பகோணம், திருவாரூரில் வலங்கைமான், குடவாசல், நீடாமங்கலம் வரையில் உள்ள வளமான பகுதிகளில் நிலத்தடியில் இருக்கும் மீத்தேன் வாயுவை எடுக்க, மத்திய அரசு…மக்களின் கருத்தையும் கேட்காமல், தகவலும் தெரிவிக்காமல் “கிரேட் ஈஸ்டன் எனெர்ஜி கார்ப்பரேஷன்” என்ற நிறுவனத்திற்கு உரிமையைத் தந்தது. அதுவும் இங்கிருந்து மீத்தேன் வாயுவை குழாய் மூலம் கொண்டுசெல்ல அனுமதித்ததால், ஆழ்குழாய் கிணறுகள் இட்ட விவசாய நிலங்கள் மட்டுமல்லாமல் மற்ற விவசாய நிலங்களும் பாதிப்படையும். இந்த அவலம் இத்துடன் முடியாது.. நிலத்தடி நீரும் பாதிப்படையும் என்பதால் விவசாயிகள் மட்டுமல்லாது அத்துறையில் சிறந்து விளங்கிய வல்லுனர்களும் ஒன்று கூடி விவசாயத்தைக் காக்க முயன்றனர். வருடம் 2020: நினைவுகளில் மூழ்கி இருந்த என்னை, ராஜனின் குரல் மீட்டது அவன் பேசியது என் காதுகளில் விழவில்லை. “என்ன சொன்ன?” என்று திருப்பிக் கேட்டேன். “இப்போ இருக்கற அவல நிலைக்கு என்ன காரணம்?” என்று கேட்டான். “ஒன்றா ரெண்டா? அடுக்கிக்கிட்டே போகலாம். ‘காவிரிப் படுகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம்’ வரும்முன்பே விவசாயத்தைப் பாதிக்கக்கூடிய பல முக்கிய, வீரியமான, காரணிகளாக “காவிரி நீர் போதிய அளவு கிடைக்காததும், மாநிலத்தில் நீர் நிலைகளை பாதுகாக்காததும், பசுமைப் புரட்சி என்ற பெயரில் இயற்கை விவசாயத்தையும், நம் பாரம்பரிய விதைகளை அழித்து மட்டுமின்றி பூச்சிக்கொல்லி போன்ற வீரியமிக்க மருந்துகளின் உற்பத்தியாளர்களுடன் வல்லுனர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கூட்டு முயற்சியில் நிலத்தடி நீரையும் மாசுபடுத்தி இழந்தோம்.” “அப்போ 1960-களில் இருந்தே சொந்த மக்களுக்கு சூனியம் வெக்க தொடங்கிட்டாங்களா?” என்ற ராஜனின் கூற்றை மறுக்க முடியுமா? “அதுவும் உலகமயமாக்கல்.. அது இதுன்னு பேசத் தொடங்கினதுக்கு அப்புறம், சொல்லவே வேண்டாம். விவசாயத்தைப் பின்னுக்குத் தள்ளிட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி – அப்படின்னா தொழில் வளர்ச்சிதான் அப்படிங்கற நிலைக்கு சிந்தனையில் ரொம்பவே தாழ்ந்துட்டாங்க. சில சமயம் சிந்திக்கறாங்களா அப்படின்னே சந்தேகம்தான்.” “அவங்க சொல்லறது சரிதானே” என்று கண் அடித்த ராஜனை நான் புரிந்துகொண்டேன். “ஆமா ஆமாம். நீ சொல்லறதும் சரிதான். இப்போ இந்த மாத்திரைய தயாரிச்சி விக்கறவங்க யாருன்னு யோசிச்சாலே போதுமே. அந்த கம்பெனியில் யாரு யாருக்கு எல்லாம் பங்கு அப்படின்னு யோசிக்கற நிலைமையிலா மக்கள் இருக்காங்க. அவங்க ஒரு வேள சோத்துக்கு என்ன பண்ண? அப்படின்னு முழி பிதுங்கி இருக்காங்க.” என்றேன். “உணவுப் பாதுகாப்பு பத்தி யோசிக்க வேண்டிய நேரத்துல மீத்தேன் பத்தி யோசிச்ச அறிவு ஜீவிகள் யாரு? அந்த அறிவு ஜீவிகளை என்னன்னுதான் சொல்ல?” என்ற ராஜனின் கேள்வியில் நியாயம் இருந்தது. “எந்த அறிவு ஜீவின்னு உனக்கு சந்தேகம் வேறயா? வீணாப் போற தானியங்களை பசி பட்டினியில் வாடும் மக்களுக்குத் தர மாட்டோம், எலிகள் கொழுக்கட்டும் அப்படின்னு சொன்ன ஆளுங்க தானே அவங்க..என்ன ராஜன்..இன்னும் புரியலையா? அதுதாம்ப்பா…. 2 கக்கூஸ் சரியாக்க 35 லக்ஷம் செலவு செஞ்ச நாலும் தெரிஞ்சவங்க, வல்லவங்க!” என்றேன். “இப்போவாச்சும் நம்ப விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணராட்டி எதிர்காலத்தில் அரிசிய, பருப்ப கண்ணுல பாக்கவே முடியாது. இப்போவே இதை எல்லாம் சாப்பிட வழியில்லாம மாத்திரைய முழுங்க வேண்டிய நிலைமை. விளைநிலமெல்லாம் விஞ்ஞானமா போச்சுனா நம்ம எதிர்கால சந்ததியினருக்கு இதெல்லாம் தான் முந்தி சாப்பிட்டோம்னு சொல்ற நிலை வந்தாலும் வரும்..ஏற்கனவே மழை, இயற்கை அப்படின்னு ஷோ தான் காமிக்கற நிலை வந்தாச்சு..இப்போ இதுவும் சேந்திடும்..அப்புறம் எல்லாருமே மெய்ஞானிகளா பசியைத் துறந்து வாழவேண்டியதுதான்..இல்லன்னா நட்டுக்கிட்டு சாக வேண்டியதுதான்.” 16 பணம் காட்டும் நிறம் “உங்களுக்கு என்னங்க? ராணி மாதிரி உங்கள பாத்துக்கும் புருஷன்! ஏழு தலைமுறைக்கும் இருக்கற சொத்து..ம்ம்ம்..இதுக்கு மேல என்னங்க வேணும்?” என்று பெருமூச்சு விடும் சொந்தத்துக்கு தெரியுமா சுமித்திரையின் வேதனை? “இங்க இவ்வளவு சொத்து இருந்து என்ன பிரயோஜனம்? திருமணமாகி பதின்நான்கு வருடங்கள் உருண்டோடியும் ஒரு குழந்தை அம்மா என்று அழைக்கும் பாக்கியம் இல்லாது போனது எந்த ஜென்மத்து பாவம்? அதுவும் மருத்துவ ரீதியாக தன்னால் குழந்தையை பெற முடியாது என்று மருத்துவர் கூறிய அன்று; அந்த நிமிடம் நான் உணர்ந்ததை எவ்வாறு சொல்வேன்! சொன்னால் தான் புரியுமா?” என்ற எண்ணத்தில் சுமித்ரா மனதிற்குள் குமைந்தாள். சமீபகாலமாக தோன்றும் ஒரு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் எண்ணம் வலுப்பெற்றது. அதை செயலாக்கும் விதமாக கணவருடன் ஆலோசித்து உடனடியாக ஒரு வாடகைத் தாயை மருத்துவர் மூலம் ஏற்பாடு செய்ய கூறிய பின்னரே மனம் கொஞ்சம் ஆசுவாசமானது. நான், கமலா. நான் தவமாய் தவமிருந்து முதல் பெண்ணிற்கு பிறகு பெற்றெடுத்த ஆண் வாரிசு, செல்வம். இவன் ஜனனமே என் புகுந்த வீட்டில் எனக்கு கிட்டும் ஏச்சுக்கள் குறைய காரணம். அதுவரை ஏதோ பெண் பிள்ளையை பெற்றதை குறையாக கூறும் வீட்டோடு இருக்கும் மாமியாரின் புலம்பல் நின்றது. “எப்படியாவது என் புள்ளைய காப்பாத்துங்க.” என்ற என் கதறலை கண்டுக்கொள்ளாமல் “அதுதான் சொல்லியாச்சே. நீங்க தேவையான பணம் தயார் பண்ணுங்க” என்று நர்ஸ் கூறி சென்றது என்னை எவ்விதத்திலும் சமாதானப்படுத்தவில்லை. “அவ்வளவு பணம் இல்லைங்க. ஏற்கனவே ஊர சுத்தி கடன் வாங்கியாச்சு. வேற எந்த விதத்துலயும் பணம் புரட்ட முடியலங்க. இனி ஆண்டவனா ஒரு வழி காண்பிச்சாதான் உண்டு. புள்ள உசுர காப்பாத்தி தந்தாங்கன்னா கோடி புண்ணியமா போகும்.” என்று பக்கத்தில் இருந்தவரிடம் தான் என்னால் புலம்பமுடிந்தது இதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த வேறொரு நர்ஸ் “ஒரு வழி இருக்கு..ஆனா எல்லாம் சரியா வந்து நீயும் ஒத்துகிட்டா பணம் கிடைக்க வாய்ப்பு இருக்கு.” என்றார். நர்ஸ் சொன்னதைக்கேட்டதும் “கண்டிப்பாங்க இந்த உசுரையே தரேன். எனக்கு என் பையன் பொழைச்சா போதும்.” என்று கையெடுத்து கும்பிட்டேன். நாங்கள் கணவனும் மனைவியுமாக கூலி வேலை செய்தும் எப்போதும் வீட்டில் பற்றாக்குறைதான்! வீட்டில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை மற்றும் கையில் சம்பளமாக கிடைக்கும் 300 ரூபாய் பணம் இரண்டிற்கும் மிகப்பெரிய இடைவெளி!; அதுவும் வேலை இருக்கும் தினம் மட்டும் கிடைக்கும்; எப்பாடு பட்டாலும் ஏணிவைத்தாலும் எட்டமுடியாத நிலை. கையில் இருந்த கையிருப்பு குறைந்தது, கடன் சுமையும் ஏற்றிவிட்டது. இதுஒருபுறமிருக்க குழந்தை படும் நரக அவஸ்தையை காணமுடியவில்லை. மறுநாள் அந்த நர்ஸ்ஸின் வரவிற்காக நானும் என் கணவரும் காத்திருந்தோம். தூரத்தில் அவர் வருவதை கண்டதும் மனம் படபடவென்று அடித்துக்கொண்டது. “வாம்மா அந்த பக்கம் போய் பேசலாம். இப்போவே சொல்லிட்டேன் முடியுமா, முடியாதா அப்படின்னு நீதான் முடிவு செய்யணும். என்னை குத்தம் சொல்ல கூடாது.” என்று பீடிகையோடுத் தொடங்கினார் நர்ஸ். “என் உசிரையே தர தயாரா இருக்கேன். எனக்கு என் மகன் பொழைக்கணும்.” என்றேன். “ம்ம்ம். நீ உன் உசிர ஒன்னும் தரவேண்டாம். ஒரு உசிரு உருவாக உன் கர்பப்பையை தந்தா போதும். அதுவும் வாடகையாதான்! உனக்கு ரெண்டு லக்ஷம் பணம் கைல தருவாங்க. அப்புறம் நீ கர்ப்பமா இருக்கும் காலம் மொத்தம் உன்னோட எல்லா செலவும் வாடகைக்கு எடுக்கறவங்க ஏத்துப்பாங்க.” என்னால் யோசிக்க முடியவில்லை, புரியவும் இல்லை “என் மகனை காக்க பணம் வேண்டும், அது கிடைக்கும் …. ஆனாலும்…நான் கர்ப்பம்..” “கர்ப்பம் …என் பொண்டாட்டி எப்படி வேறொருத்தர் குழந்தைய….” என்ற என் கணவரின் தடுமாற்றத்தை கண்டு “அட. எந்தக் காலத்துல இருக்கீங்க..தப்பா எதுவும் இல்லை…மருத்துவ முறைல ஏற்கனவே உருவாகிய கருவை உங்க மனைவியின் கர்ப்பப்பையில் வைப்பாங்க. அதுவும் அவங்க ஆரோக்கியமா இருக்க அவங்களே சாப்பாடு, மருந்து இப்படி எல்லாத்தையும் பாத்துப்பாங்க. இப்போ ஒருத்தருக்கு தேவை இருக்கு. எனக்கு உங்க ஞாபகம்தான் வந்துச்சு, நீங்க இல்லைன்னா அவங்க வேற ஆளை பாத்துப்பாங்க.” என்றார் நர்ஸ். எங்கள் முகத்தில் தயக்கமும், ஆர்வமும், கவலையும் இப்படி பல வித உணர்ச்சிகளை பார்த்தார் போலும்! “நீங்க ரெண்டுபேரும் யோசிச்சிட்டு உங்க முடிவை நாளைக்கு வந்து சொல்லுங்க. இப்போ டியூட்டி டாக்டர் வர நேரமாச்சு. நான் போறேன்.” என்று நர்ஸ் சென்ற பின்னரும் நாங்கள் வேரிட்ட மரம்போல் நின்றிருந்தோம். அன்று வீட்டிலும் இதே பேச்சாக இருந்தது. பணம்! பணம்!! பணம்!!! கண்டிப்பாக இதுபோல் பணத்தை வாழ்நாளில் பார்க்கவே முடியாது. அப்பணம் இருந்தால் இந்நிலையில் மகனுக்கு நல்ல சிகிச்சையும் பிள்ளைகளின் எதிர்காலமும் நன்கு அமையும். இது வறுமை மற்றும் ஏழ்மையில் இருந்து விடுதலையைப் பெற்றுத்தரும். “இன்னும் என்ன யோசனை? அதுதான் ஏற்கனவே உருவான கருவைதானே வெக்க போறாங்க. இப்போ இருக்கற நிலையில ஏதோ தெய்வமா பாத்து தந்த வழி” என்று என் மாமியாரும் அவரின் சம்மதத்தை தெரிவித்தார். “நம்பளா வெளிய சொன்னாதானே இந்த விஷயம் மத்தவங்களுக்கு தெரியபோவுது. இல்லைன்னா இப்போ மூணாவது தடவையா நீ மாசமா இருக்கறமாதிரி தானே நம்ம சுத்தி இருக்கறவங்க நினைச்சிப்பாங்க.” என்று என் மாமியார் கூறவும் என் மனதிற்குள் ஒரு நிம்மதி, இச்சமூகம் என் கற்பு மற்றும் கர்ப்பத்தை சந்தேகக்கண் கொண்டு பார்க்காது. “ஆனாலும்கூட குழந்தை பிறந்ததும் அந்த குழந்தை எங்கே என்று கேக்கற நம்ப சொந்த பந்தங்களுக்கு என்ன சொல்ல?” என்று என் அடுத்த சந்தேகத்தை கேட்டேன். “க்கும்.. குழைந்த பொறக்கும் போதே பிரச்சன, அது ஆஸ்பத்திரில இருக்கு அப்படி இப்பிடின்னு சொல்லி சமாளிக்க நாங்க இருக்கோம். இப்போவே அதை பத்தி எதுக்கு நினைக்கற?” என்று என் மாமியார் என் வாயை அடைத்துவிட்டார். எனக்கு தெரியும் அவர் வாய்ஜாலத்தில் எதிராளியை சமாளித்துவிடுவார். என் வீட்டினரின் துணையுடன், எதிர்காலம் சிறப்பாக இருக்க நான் செய்யப்போகும் காரியம் தவறே இல்லை என்ற எண்ணத்துடன் மறுநாள் விடிய காத்திருந்தேன்! எங்கள் வறுமையும் ஏழ்மையும் விடியும், இவ்விடியலுடன் என்ற நம்பிக்கையோடு!! “வாங்க, டாக்டர் கிட்ட நீங்களே பேசிக்கோங்க.” என்று நர்ஸ் அழைத்துச்சென்றார். டாக்டர் பரிசோதித்து எல்லாம் விளக்கிய பின்னர், தம்பதிகளுடன் நேரடியாக பேசி எல்லாம் முடிவாகிவிட்டது. “இந்த பிரசவம் முடியும் வரை நான் அவங்க கட்டுப்பாட்டுல அவங்க வீட்டோட இருக்கணுமே. இது சரிவருமா? நம்ப பசங்க …” என்ற என் தயக்கத்தை பார்த்து “அட இது ஒரு விஷயமா? என்ன நம்ப வீட்டுல இருக்கறதுக்கு பதிலா நீ அங்க போய் இருக்கணும். இதுவும் நல்லதுதான். நீ கர்ப்பம் ஆனதே இங்க யாருக்கும் தெரியாது. அப்படி கேட்டாலும் ஒரு வருஷம் வெளிநாட்டுல வேலை அப்படின்னு சொல்லி சமாளிச்சிடலாம்.” என்று என் மாமியார் கூறியது “சரிதான்” என்று என்னைச் சம்மதிக்க வைத்தது. இதற்கிடையில் முன் பணமாக கிடைத்த பணத்தில் என் மகன் வைத்தியம் முடிந்து நல்லபடியாக கிடைத்து வீட்டிற்கு திரும்பினான். “செல்வம், அம்மா ஊருக்குப்போய்ட்டு வரவரைக்கும் நீ சமத்தா இருக்கணும். அக்கா கூட சண்ட போடாம ஸ்கூலுக்கு போய்ட்டு வரணும்.” இன்னும் சொல்லிக்கொண்டே சென்ற என்னை நிறுத்தி உடனே கிளம்ப வைத்தனர் என் வீட்டினர். மனம் கனமாக இருந்தது. “இதெல்லாம் நம்ப பசங்க நல்லா இருக்கனும்ன்னு தானே. நீ கவல படாம போயிட்டு வா. அதுதான் நான் அப்பப்போ டாக்டர பாத்து நீ எப்படி இருக்கன்னு கேட்டுக்கலாம்ன்னு சொல்லியிருக்காங்களே.” என்று என்னை தேற்றி மருத்துவமனைக்கு என் கணவர் அழைத்து வந்தார். அப்படியிப்படி மருத்துவ முறையில் வெற்றிகரமாக நான் கர்ப்பத்தை சுமந்தவுடன் அவர்களின் வீட்டிற்கே அழைத்துச் செல்லப்பட்டேன். கையில் ஜூஸுடன் வந்த பணியாளை பார்த்ததும் தெரிந்தது, இப்பொழுது நேரம் காலை 11 மணி. “வேற ஏதாவது வேணுமாம்மா” “இப்போ இது போதும். வேற எதுவும் வேண்டாம்.” என்றேன். இங்கு வந்ததில் இருந்து ராஜ உபச்சாரம். நேரத்திற்கு சாப்பாடும் மற்ற விஷயங்களும். என்னதான் எல்லாம் நல்லபடியா நடந்தாலும்கூட மருத்துவ மனையில், “அட நீங்களும் என்னைப்போல தானா. நல்லா விசாரிச்சுட்டு தானே ஒத்துகிட்டீங்க. புரோக்கர் மூலமா? இல்லை வேற யாராவதா?” என்று கேட்டாள் வேறொரு வாடகைத்தாய்! “தெரிஞ்ச நர்ஸம்மா சொல்லி வந்தேன். நல்லவங்களாத்தான் இருக்காங்க, முன் பணம் கூட குடுத்தாங்க. ஆமா புரோக்கரா? இதுக்கு கூடவா?” என்று மலைத்தேன். “அட இது தெரியாதா. அத்த ஏன் கேக்கற? எனக்கு தெரிஞ்சி ஒரு புரோக்கர் மூலமா வந்த பொண்ணு சொன்னது; அவளுக்கு கடைசில சொன்ன பணம் முழுசும் தராம அந்த புரோக்கர் பாதிக்கு அமுக்கிட்டான்.” என்றதும் எனக்கு பகீர் என்றது. “அட கடவுளே, இப்படியும் பண்ணுவாங்களா? அந்த பொண்ணு அந்த ஆள சும்மாவா விட்டுடுச்சு?” “இதை எங்க போய் சொல்ல? சொன்னபடி பேசின பார்ட்டி ப்ரோகர்கிட்ட பணத்தை குடுத்துட்டாங்க. அதுக்கப்புறம் அவங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு ஒதுங்கிட்டாங்க.” “கமலா, அடுத்தது நீங்க வாங்க” என்று நர்ஸ் அழைத்ததும் நான் அவருடன் சென்றாலும் மனதில் கடைசியில் பணம் முழுவதும் கிடைக்குமா என்றே என் எண்ணம் சுற்றிக்கொண்டு இருந்தது. அன்று முதல் இந்த எண்ணத்தை என்னால் தடுக்க முடியவில்லை. “கடவுளே. பேசின படி மீதி பணம் கைக்கு வரணுமே. வந்தா உன் சந்நிதிக்கு நடந்தே வந்து நேத்திகடன் செலுத்தறேன்.” என்ற வேண்டுதல் ஒரு பலம் தந்தது. இந்த மாலைக்காற்று மனதிற்கு இதமாக இருந்தது. அப்பொழுது அருகில் வந்தமர்ந்த சுமித்ரா, இதுவரை இவரை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை. முதலாளியா? இல்லை .. அம்மா என்றா..யோசனையில் இருந்த என்னை அவரின் கேள்வி மீட்டது. ”என்ன கமலா, எப்படி இருக்க? எல்லாம் சௌகரியமா இருக்கா?” “எல்லாம் நல்லா இருக்கும்மா.” என்று கூறிக்கொண்டே எழுந்த என்னை “ஒக்காரு, ஒக்காரு! இப்படி சட்டு சட்டுன்னு எழுந்துக்காத. குழந்தைக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா. டாக்டர் கிட்ட நாளைக்கு போகணுமே, ஸ்கேன் பண்ணும்போது இந்த வாட்டி நானும் வரேன். உள்ள குழந்தை எப்படி இருக்குன்னு பாக்கவாவது செய்யறேன்.” என்று குழந்தையை நினைத்து சொன்னபோது மனதிற்கு சங்கடமாக இருந்தது. அப்படியே சிறிதுநேரம் பேசி சென்றபின்னரும் அன்று முழுவதும் மனம் ஒரு நிலையில் இல்லை. என் பிள்ளைகளின் கர்ப்பகாலத்தில் குழந்தை மட்டுமல்லாது என் மேலும் கூடுதல் அக்கறை செலுத்த என் சொந்தபந்தங்கள் இருந்தது வேறு நினைவிற்கு வந்து மனதை வருத்தியது. சுமித்திரையின் மனதை புரிந்துக்கொள்ள முடிந்தாலும்கூட என் மனம் சங்கடமானது. “இதுவும் என் குழந்தைதானே, நான் ஜாக்கிரதையாக இருக்க மாட்டேனா? ஓ, அப்படியில்லை. நான் இக்குழந்தைக்கு தாயில்லை, அப்பொழுது இக்குழந்தைக்கு நான் யார்?” கேள்வி எழுவதைத் தடுக்க முடியவில்லை மறுநாள் ஸ்கேனில் இரட்டை குழந்தைகள், அதுவும் நல்ல வளர்ச்சியாக இருக்கிறது என்று அறிந்ததில் இருந்து சுமித்திரையின் குடும்பம் மகிழ்ச்சிக்கடலில் தத்தளித்தனர். “அட நல்லா சத்தா சாப்பிட வேண்டாமா? அப்போதானே ரெண்டு குழந்தைக்கும் போய் சேரும்.” என்று எனக்கு முன்னை காட்டிலும் கூடுதல் கவனம் கிடைத்தது. கண்முன் இருக்கும் சுவையான, விதவிதமான பதார்த்தங்களை பார்க்கும்போது, “செல்வத்துக்கு இது பிடிக்கும். பிரியாக்கு இது பிடிக்கும்… பாவம் அவங்க அங்க என்ன சாப்பிடறாங்களோ? முன்பணம் தீர்ந்து போய் இருக்கும். பாவம், அவருக்கு மட்டும் கிடைக்கற கூலி எப்படி எல்லாத்துக்கும் பத்தும். ம்ம்ம்..” என்று பெருமூச்சு எழுந்தது. “கமலா, எப்படி இருக்க? நல்லா ஆளே மாறிட்ட! நல்லா கவனிக்கறாங்கன்னு தெரியுது. அவங்க ரொம்ப நல்லவங்க. தான்.. போன வாரம் உன் வீட்டுக்காரர் வந்துட்டு போனார். நீ நல்லா இருக்கன்னு சொல்லி அனுப்பினேன். நீ வந்தா பேச சொல்லறேன்னு சொன்னேன். இரு” என்று கூறியபடி என் கணவருடன் பேச இணைப்பை கொடுத்தார் மருத்துவர். “புள்ள, எப்படி இருக்க?” என்ற கணவரின் குரலில் இருந்த பிரிவின் தவிப்பும், என் நலனில் அக்கறையும் எல்லாமாக சேர்த்த உணர்வின் நிலை என்னையும் தாக்கியதில் என்னால் பேசவேண்டும் என்று நினைத்த எல்லாவற்றையும் பேசமுடியாமல் தடுத்தது. “ம்ம் நல்லா இருக்கேன். நல்லா பாத்துக்கறாங்க. நம்ப புள்ளைங்க எப்படி இருக்கு? அவங்கதான் கண்ணுலயே இருக்காங்க. எப்போ உங்கள எல்லாம் பாப்பேன்னு இருக்கு.” என்று நெகிழ்ந்து சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே “சரி சரி. அப்புறம் பேசலாம். உங்ககூட வந்தவங்க காத்துகிட்டு இருக்காங்க.” என்று மருத்துவர் என்னை அனுப்பி வைத்தார். என் மனம் கணவரின் குரலை கேட்டதில் இருந்து சந்தோஷமாக இருந்தது, அதே நேரம், வீட்டின் நிலையை அறிந்தது முதல் எப்பொழுது அவர்களை பார்ப்போம் என்று இருந்தது. என்ன தான் இங்கு எல்லா வசதிகளும் இருந்தாலும் என் மனுசங்க அப்படின்னு ஒருத்தர் கூட இல்லையே? பாவம் புள்ளைங்க ஏங்கி போயிருக்குமே? நான் அதுங்கள விட்டுட்டு இப்படி இருக்கறது சரிதானா? புள்ளைங்கள தவிக்க விட்டுட்டு நான் இங்க நல்லா இருக்கறது நியாயமா? இவ்வளவு கஷ்டமும் புள்ளைகளை நல்லா வளர்க்க தானே! ஆனா, கடைசில பேசின படி பணம் கிடைக்காம போச்சுன்னா…” என்ற எண்ணங்களால் மனதிற்கு உறுத்தலாகவே இருந்தது. “அட கடவுளே, என்ன ஆச்சு? யாரு அங்க சீக்கிரம் டாக்டர கூப்பிடுங்க” என்று உத்தரவிட்ட சுமித்ரா மயங்கிய என்னை தாங்கிக்கொண்டு அருகில் இருந்த நாற்காலியில் இருத்தினார். “நேத்திக்கு கூட எல்லாம் நல்லா தானே இருந்தது. இப்போ பிபி கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு. இப்போ பயப்பட ஒண்ணுமில்லை. ஆனா ஜாக்கிரதையா இருக்கணும்.” என்று ஆசுவாசப்படுத்திய மருத்துவர் “கமலா, மனச சந்தோஷமா வெச்சிக்கணும். வேண்டாதத நினைக்காத. சரியா?” என்று என்னை பார்த்த பார்வையில் என்ன இருந்தது என்று எனக்கு புரியவில்லை. ஆனால் மருத்துவர் முன்தினம் நான் என் குடும்பத்தினருடன் பேசியது தான் இக்குழப்பதிற்கு காரணம் என்று கூற நினைத்தது பின்னர் புரிந்தது, ஏனெனில் அதற்கு பிறகு வீட்டினருடன் பேச சரியாக சந்தர்ப்பம் அமையவில்லை, அமைந்தாலும் தனிமையில் பேச முடியவில்லை. “நான் என் குடும்பத்தை பற்றி நினைப்பது வேண்டாத செயலா? ஒருவேளை நான் எடுத்த முடிவு தவறோ? இப்படி இருக்கும்ன்னு தெரியாம போச்சே” என்று என் மனம் சஞ்சலமானது. இன்னும் சில வாரங்களே பிரசவிக்க இருந்த நிலையில் என்ன வென்று சொல்ல முடியாத நிலை. “வாடகைத்தாயாக இருந்தாலும் நானும் தாய் தானே! அதுவும் இரட்டைக் குழந்தைகள், அவை எப்படி இருக்கும்?” என்று ஒரு ஆவல்! “கரு எப்படி உருவானால் என்ன? என் உயிரைக்கொடுத்து தானே வளர்த்தது, இதற்கு முன் எத்தனை பிரசவித்திருந்தால் என்ன? ஒவ்வொரு பிரசவமும் ஜனனம் தானே, எனக்கும் மறுபிறவிதானே.” என்ற என் வாதத்தை ஆதரிப்போர் எத்தனை பேர்? அதுவும் எட்டாம் மாதம் முதல் என் கூடவே ஒரு நர்சை நியமித்து விட்டனர். ஆதலால் எப்போதும் கண்காணிப்பு இருந்தது. “ஆ… அம்மா!” என்ற என் அலறல் வலியின் வெளிப்பாடு மட்டுமல்ல, என் சொந்தங்கள் என்னுடன் இல்லையே என்பதையும் சேர்த்தே வெளிப்படுத்துகிறேன் என்று யாருக்கும் புரியாது போனது வேதனையை கூட்டியது. அதுவும் “ஒருவேளை நான் இப்பிரசவத்தில் பிழைக்காட்டி…என் புள்ளைங்க, என் கணவர்..யாரையும் ஒருவாட்டிகூட பாக்க முடியலையே” என்று தவிதவிக்கும் என்னை ஏன் யாருக்கும் புரியல? அவங்களாவது ஒரு வாட்டி என்னைப்பத்தி நினைச்சி பாத்து இருந்தா புரிஞ்சி இருக்குமோ? இதை சொல்ல வந்த என்னை உள்ளிருந்த குழந்தையும் சொல்லவிடாமல் வெளிவர முயன்றதில் “அம்மா…” என்றே சொல்லமுடிந்தது. குழந்தை பிறந்ததும் ஒருமுறைகூட எனக்கு காட்டவும் இல்லை, எந்த குழந்தை என்று சொல்லவும் இல்லை. “கடவுளே..முன்னமே அவங்க இதை சொன்னப்போ பெருசா தெரியல..ஆனா, இப்போ அந்த குழந்தைங்கள என் உசுரா தானே காத்தேன். ஒரு வாட்டியாவது காண்பிச்சிட்டு போய் இருக்கலாம், என்ன புள்ளங்கன்னு கூட தெரியாம போவதானா நான் இத்தன மாசமும் பொத்தி பொத்தி வளர்த்தேன்?” என்று வெளியில் சொல்லாமுடியாமல் மனதிற்குள்ளேயே குமைய மட்டுமே முடிந்தது. அவர்கள் சொன்னபடி மீதி பணத்தையும் கொடுத்துவிட்டார்கள் என்ற அறிந்ததும், கொஞ்சம் நிம்மதியானது. ஆனாலும்கூட ஏதோ சொல்ல முடியாத துக்கம்! உடலாலும் மனதாலும் வேதனையே மிஞ்சியது! வீட்டிற்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. மீண்டும் என் குடும்பத்துடன் இணைந்தது சந்தோஷம் என்றாலும்கூட, கண்ணுக்கு தெரியாமல் ஏதோ இடறியது. “என்னங்க, நீங்களே சொல்லுங்க இது சரியான்னு? நானே நம்ப புள்ளைக நல்லா இருக்கணும்ன்னு தானே இவ்வளவும் செஞ்சது. நீங்க பரங்கி பத்தைய கீறி குடுத்த மாதிரி எழுபத்தையாயிரம் அப்படியே உங்க அக்காக்கு குடுத்துட்டீங்க.” என்று நான் என் கணவரிடம் கேட்டால் பதிலோ மாமியாரிடம் இருந்து வந்தது “ம்கும்…குடுத்தா என்ன தப்பு? அவன் செய்யாம யாரு அவன் அக்காவுக்கு செய்வாங்க? ஏதோ நீ கஷ்டப்பட்டு சம்பாதிச்ச மாதிரியில்ல பேசுற? சும்மா வயித்த சாச்சிகிட்டு வக்கணையா தின்னுக்கிட்டு இருந்துட்டுத்தானே வந்த. சும்மா கேக்க வந்துட்டா…டேய்.. போடா. போய் உன் வேலைய பாரு. இதுக்கெல்லாம் தலைய சொரிஞ்சிட்டு நின்னுகிட்டு.” என்று அனுப்பிவிட்டார். “நான் அனுபவித்ததை சொன்னா இவங்களுக்கு புரியுமா?” என நான் நினைத்ததை என்னால் வெளியே சொல்லமுடியவில்லை. நான் இப்பணத்தை பற்றி கேட்டதுமுதல் வீட்டில் இதை வைத்தே ஏதோவொரு ஏச்சும் பேச்சும் தொடர்வது தொடர்கதையானது. “அம்மா, அம்மா, நீ என்ன வேலை செய்யற?” என்று செல்வம் கேட்டது எனக்கு அதிசயமாக இருந்தது, இதுவரை இல்லாமல் இப்போது… “உனக்கு தெரியாதா? கிடைக்கற கூலி வேலை செய்யறேன்.” “அப்போ இவ்வளவு நாளும் எங்க கூட இல்லாம எங்க போன?” “வெளியூர்ல வேலை கிடைச்சி போனேன்.” “ஓ. அம்மா, நான் எப்படி பொறந்தேன்?” “அம்மா வயித்துல இருந்து” “அப்போ ஏன் என்னை உங்க கூடவே இங்க வெச்சி வளர்க்கறீங்க?” “பின்ன என்னோட புள்ள என் கூட இல்லாம, வேற எங்க போவும்?” என்று பதில் கூறினாலும் மனம் எதுவோ செய்தது. “அப்போ இப்ப பொறந்த பாப்பாங்க எங்கம்மா?” என்று கேட்டதில் சுரீர் என்றது “யாரு சொன்னாங்க?” “பாட்டி தான் அந்த வீட்டு ஆயாகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாங்க” என்ற என் மகனிடம் நான் என்ன பதில் சொல்வேன்? ஆவலாக என் பதிலுக்காக காத்திருக்கும் மகனை அவன் நண்பர்கள் வந்து அழைத்தது கடவுளாக என்னை பதில் சொல்வதில் இருந்து காப்பாற்றியது போல் இருந்தது. இதுபோல் கடவுளால் எத்தனை முறை என்னைக் காப்பாற்றமுடியும்? “கடவுளே…புள்ளைகளுக்கு வேண்டியது செய்ய தானே நான் இந்த முடிவெடுத்தேன். ஆனால் கிடைத்தது என்ன? கிடைத்த பணத்துல வாங்கிய கடனை அடைச்சி, மீதியை அப்படியே நாத்தனாருக்கு கொடுத்தாச்சு. இப்போ மறுபடியும் கிடைக்கும் கூலிக்கு மாரடிக்கணும். மீண்டும் புதிதாக கடன் வாங்கும் நிலை.” “இப்போ அக்கம்பக்கத்தில் நடந்த விஷயம் பரவ தொடங்கிடுச்சு. ஆளுங்க பாக்கற பார்வையும் மாறிடுச்சே. அப்போ பணம் கிடைக்கும்ன்னு தெரியும்போது உறுத்தாம இருந்த உறவுகளுக்கு, இப்போ நான் செஞ்ச காரியம் உறுத்தலா போச்சு.” “இப்போத்த என் நிலைமை தெளிஞ்ச குளத்துல கல்ல எறிஞ்ச மாதிரி ஆகிடுச்சு. நான் ஆறுதலுக்காக தலைசாய்க்க ஒரு தோள் இல்லாம போய்டுச்சு.” “இத்தனையும் யாருக்காக, எதுக்காக செஞ்சேன்? அதோட பலன் என்ன?” என்ற கேள்விகளுக்கு பதிலை தேடி அலையும் நான் என்னுள்ளே ஒடுங்கிபோகத் தொடங்கினேன். மீண்டும் குடும்பத்தில் வேறொரு இக்கட்டான நிலை! இதை சமாளிக்க மீண்டும் சுலபமான வழியாக “வாடகைத்தாய்” என்ற எண்ணம் என் கணவன் உட்பட குடும்பத்தினரிடம் வேரிட்ட மரமாக நின்றிருப்பதை உணர்ந்து கொதித்து போனேன். “அட..இப்போ நாங்க என்ன சொல்லிட்டோம்? அதுதான் போன வாட்டி போன மாதிரி போனா என்ன ஆகிடும்? இப்போ இருக்கற பிரச்சனைய தீத்துடலாம். எப்படியும் உன்னோட செலவ அவங்க பாத்துடுவாங்க. அதுனால இப்போ இருக்கற நிலைமைல உன்னோட செலவும் இல்லைன்னு ஆகிட்டா நல்லது தானே.” என்ற என் மாமியாரின் வாதம் என்னை வதைத்தது. “நீங்க என்ன என்னைய புள்ளைகள பெக்கற மெசின் மாதிரி பாக்குறீங்க? மொத தடவையே தெரியாத்தனமா ஒத்துகிட்டேன். அப்புறம் நான் அனுபவிச்ச கஷ்டம் உங்களுக்கு தெரியுமா? இல்ல சொன்னாதான் புரியுமா? அப்பா சாமி… ஒவ்வொரு நாளும் மனசு என்னமா அடிச்சிக்கும் தெரியுமா? கடைசில எங்க உங்க முகம் எல்லாம் பாக்காம செத்துடுவேனோ அப்படின்னு நான் தவிச்ச தவிப்பு யாருக்குமே தெரியலையே! குழந்தைய பெத்து தரப் போற எடத்துல சாப்பிட, மருந்து இப்படி எல்லா விஷயமும் பாத்து பாத்து பண்ணாலும் எல்லாம் அவங்க குழந்த நல்ல இருக்கணும்ன்னு தான்! அவங்கள சுத்தி அவங்க ஆளுங்க இருக்கும்போது நான் தனியா என்னோட மனுசன்னு யாரும் இல்லாம இருந்தேன் தெரியுமா? என்னைய பாத்துகிட்ட வேலைக்காரங்க நாளைக்கு அவங்க புள்ளங்க வளர்ந்து பெருசாகும்போது எவளோ பெத்தது தானேன்னு சொல்ல மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? வேலைக்காரர்கள விடுங்க..என்னை மாதிரி இல்லாம வாடகைத்தாயோட கருவையே வெச்சி உண்டாகிய குழந்தைய அவங்களுக்கு பிடிக்காத விஷயம் ஏதாவது செஞ்சா மத்தவளோட புத்திய காட்டின மாதிரி அந்த குழந்தைய பேச மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? மனுஷன் மனசு எப்போ எப்படி மாறும்னு யாருக்கு தெரியும்? இப்போ உங்களுக்கே நான் பணம் காய்க்கற மரம் தானே? ஒரு நாளுல எத்தன வீட்டுல வேணும்னாலும் காலைல இருந்து ராத்திரி வரை வீட்டுவேலைய பாத்து சம்பாதிச்சி போடறேன்..ஆனா இன்னொரு வாட்டி வாடகைத்தாயா மட்டும் போகவே முடியாது.” “என்ன நீ..சும்மா இப்படி பிலிம் காட்டிகிட்டு இருக்க? நீ என்னதான் மாங்கு மாங்குன்னு வேலை செஞ்சாலும் ஒரு வருஷத்துல இம்புட்டு பணம் பாக்க முடியுமா?” என்று கேட்கும் மாமியாரை தட்டிக்கேட்காமல் தனக்கும் அவ்வெண்ணம் இருப்பதை சொல்லாமல் சொல்லும் கணவனைப் பாத்து “நாதாரிப்பயலே கட்டின பொண்டாட்டிய பாத்துக்க முடியல… அதுவும் ஒரே வாட்டி உழைச்சாலும் பாக்க முடியாத பணம் பாத்ததும் நீயும் மாறிடுவன்னு நான் நினைக்கலய்யா…அப்போ இந்த பணத்துக்காக நான் அனுபவிச்ச கஷ்டத்தைச் சொல்லியும் கேக்காம இன்னிக்கி என்னை திரும்பவும் வாடகைத்தாயா போக சொல்லற நீங்க நாளைக்கு வயசுக்கு வந்த பெத்த பொண்ணையும் வாடகைத்தாயா அனுப்ப மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?” என்ற என் ஆதங்கத்தையும் ஆற்றாமையையும் புரிந்துக்கொள்ளாமல் இருக்கும் அவர்களின் முகபாவம் என்னை எதற்கும் தயாராக இருக்க உறுதியாக்கியது “நான் நீங்க சொன்னதுக்கு எல்லாம் ஒத்துக்க முடியாது.” என்று எதற்கும் துணிந்து நின்றேன், நான் அனுபவித்த அனுபவம் அப்படி! “அப்போ நீ உங்க வீட்டுக்கே மூட்டைய கட்டு. அப்போதான் புத்தி வரும்” என்று என் மாமியாரும் வாய் விட “நான் என் முடிவுல மாற மாட்டேன். அப்படி நீங்க சொன்ன படிதான் நான் நடக்கணும்ன்னு சொன்னா நீங்க என்ன என்னைய மூட்ட கட்டறது. நானே உங்களை உதறிட்டு போறேன். போகும்போது என் பசங்களையும் கூட்டிக்கிட்டுப் போய்டுவேன். என் புள்ளைகளை நான் கூலி வேலை செஞ்சி எப்படியாச்சும் படிக்க வெச்சி நல்லா வளர்க்க முடியும்ன்னு தைரியமும் தெம்பும் இருக்கு. என் முடிவை நான் சொல்லிட்டேன்..உங்க முடிவ நீங்க சொல்லுங்க” என்றுவிட்டு அவர்களின் பேயறந்த முகத்தைப்பார்த்து அங்கிருந்து நகர்ந்தேன். **************************************************************************** கமலா போல் தைரியமாக முடிவெடுப்பவர்கள் வெகு சிலரே! மேலும் இச்சூழலில் சிக்கி மூழ்குபவர்கள் ஏராளம். காரணம் : குழந்தைக்காக ஏங்கும் தம்பதிக்கு குழந்தை செல்வமும், அதேநேரம் கஷ்டப்படும் குடும்பத்திற்கு பணத்தேவை இருப்பதும் இவ்விருவரையும் ஒரு ஒப்பந்தத்துடன் வெற்றிகரமாக இணைத்து, அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் தொழில்; அண்மைக்காலமாக நல்ல முன்னேற்றம் காணும் தொழிலாகவும்; இந்தியாவில் ஒரு வருடத்திற்கு பல கோடி ருபாய் புழங்கும் தொழிலாகவும் இருப்பது எது தெரியுமா? ..வாடகைத்தாய் தொழிலே! இந்திய மருத்துவம் இதை அனுமதித்தாலும் அதற்கான சட்டம் என்பது இன்னும் உருவாகவில்லை. அம்மா என்று அழைக்கும் தொப்புள்கொடி பந்தத்தை பணம் கொடுத்து வாங்கிவிடும் நிலை! கசப்பான உண்மையே! இந்தியாவில் வாடகைத்தாய் தொழிலின் மையமாக குஜராத்தில் “ஆனந்த்” (சிறு நகரம்) திகழ்கிறது. “அகாங்ஷா” என்பது முதல் வாடகைத்தாய்க்கான மருத்துவமனையும் குஜராத்தில் தொடங்கப்பட்டது. இவையெல்லாம் இத்தொழில் சிறந்து விளங்க துணைபுரிகின்றன. பல ஏழைத் தாய்மார்கள் இதை வறுமையைப் போக்க வந்த சிறந்த வாய்ப்பு என்று கருதி கருவை சுமக்கின்றனர். இத்தொழில் என்றும் வளர்ச்சி நோக்கியே போய்க்கொண்டு இருக்க வாய்ப்பிருக்கிறது, ஏனெனில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற ஆகும் செலவில் மூன்றில் ஒரே ஒரு பங்கு இந்தியாவில் செலவு செய்தால் போதும். இதன் காரணமாக பல வெளிநாட்டு தம்பதிகள் நம் இந்தியாவை நோக்கி படையெடுக்கும் நிலை! (நன்றி: விகடன்) 17 புதிய வார்ப்புகள் “ஐயோ..அம்மா” என்ற சுபாஷ் மாஸ்டரின் அலறலைக் கேட்டு நான் பக்கத்து வகுப்பறைக்கு ஓடினேன். அங்கு நான் கண்டக் காட்சி என்னைக் குலைநடுங்கச் செய்தது. காது கிழிந்து, வாய்ப் பிளந்து எக்குத்தப்பாக மேஜை நாற்காலிக்கு இடையில் சிக்கியிருக்கும் சுபாஷ் மாஸ்டரைச் சில மாணவர்களும் ராஜன் மாஸ்டரும் தூக்க முயன்றனர். இரண்டு நாட்களுக்குப் பின் ஆசிரியர்கள் அறையில், “என்ன ரேகா டீச்சர் இன்னிக்கி காலைல நீங்க ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தீங்களே சார் எப்படிஇருக்காரு? ஏதாவது முன்னேற்றம் இருக்கா?” என்று கேட்டுக்கொண்டே வந்தார் சாரா மிஸ். “உயிருக்கு ஆபத்து இல்லை, ஆனா முதுகுத்தண்டுல அடி பட்டதால இன்னும் ஒரு சில மாசமாவது சிகிச்சை எடுக்கணும், எப்படியோ மீண்டும் பழையபடி வாழமுடியும்ன்னு இன்னிக்கி காலைல டாக்டர் சொன்னதும் தான் மாஸ்டரும் அவர் பொண்டாட்டியும் கொஞ்சம் தெளிஞ்சி இருக்காங்க. பாவம் சுபாஷ் வீட்டுல இருக்கறவங்க. அவங்கப் பொண்டாட்டி நாலு வயசுப் பொண்ணயும் பாத்துக்கணும். இப்போ அவங்க இரண்டாவதா கர்ப்பமாவும் இருக்காங்க. நாளைக்குத் தான் ஊருல இருந்து அவங்க அம்மா அப்பா வரப்போறாங்க. அதுவரைக்கும் ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைச்சல். இதுவே முதுகுத்தண்டில் பட்ட அடியால் இனி கிடந்த கிடப்பு என்று ஆகியிருந்தால் என்னவாகியிருக்கும். யோசிக்கவே முடியவில்லை! நாளைக்கு இந்நிலை நமக்கும் வராமல் இருக்கும் என்று என்ன நிச்சயம்?” என்ற என் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. ஆனால் இக்கேள்வி எல்லோரிடத்திலும் உண்டு. நேரம் தவறி வந்த மாணவர்களைக் கேள்வி கேட்டதால் சுபாஷ் மாஸ்டருக்கு வந்த நிலை! “நாங்க குடுக்கற காசுல சம்பளத்தை வாங்கிகிட்டு எங்களையே கேள்வி கேப்பியா..மவனே” என்று கூறிக்கொண்டே அவரைத் தும்சம் செய்துவிட்டனர் இரண்டு மாணவர்கள். இவ்விஷயம் பத்திரிகையில் வந்ததும் எல்லோருக்கும் பதில் சொல்லவேண்டிய நிலை. எப்படியோ எல்லாவற்றையும் சமாளித்துவிட்டது பள்ளி நிர்வாகம். “டிங் டிங் டிங்” என்று மணி அடித்ததும் பள்ளிக்கூடம் விட்டுவிட்டது என்ற நிம்மதியில் “அப்பா ஆண்டவா, இன்னிக்கி ஒரு பிரச்னையும் இல்லாம நல்லபடியாப் போச்சே. இது மாதிரி எப்பவும் நீதான்ப்பா என்னைக் காப்பாத்தணும்” என்ற வேண்டுதலுடன் பஸ் பிடிக்க வந்தேன். இந்தச் சம்பவத்திற்குப் பின் இது விஷயமாக ஆசிரியர் பெற்றோர் சங்கம் கூடியது. அக்கூட்டம் காரசாரமான விவாதித்தது, ஒவ்வொருவரும் மற்றவரைக் குறைகூறிக்கொண்டே இருந்தனரே தவிர பிரச்சனைக்கு மூலகாரணம் என்ன? அதற்குத் தீர்வு என்ன? என்று சிந்திக்கத் தவறிவிட்டு மீண்டும் அடுத்த வாரத்தில் இதைபற்றிய விவாதம் தொடரும் என்று கூறி பிரிந்தனர். “அம்மா இன்னிக்கி ஸ்கூல்ல அடுத்த வாரம் நடக்கற பெயிண்ட்டிங் காம்பெடிஷனுக்குப் பேரு தரலாம்ன்னு சொன்னங்க. அதுக்கு நான் போய்த்தரும் போது இந்த வருஷம் பப்ளிக் எக்ஸாம் வெச்சிக்கிட்டு இதெல்லாம் எதுக்கு? போய் படிக்கற வேலைய பாரு. அப்படின்னு எங்க டீச்சர் சொன்னாங்கம்மா.” என்று வருந்தினாள் பன்னிரண்டாவது படிக்கும் என் மகள் லலிதா. “சரி சரி. நான் உன்னோட பேரையும் சேர்க்க சொல்லி உன் டைரில எழுதி தரேன். அப்புறம் ராம் எங்க? அவன காணோம்?” என்று என் இளைய மகனைபற்றிக் கேட்டேன். “அவன் வந்ததும் சீக்கிரமா ஹோம்வொர்க் முடிச்சிட்டு பசங்க கூட விளையாட போய்ட்டான். ஆறு மணிக்கு வந்துடறேன்னு சொல்ல சொன்னான்.” என்று பதில் அளித்துவிட்டு படிக்க இருக்கும் மகளைப் பார்த்தேன். இந்த வயதில் விளையாட்டுக்கும் மற்றப் படைப்பாற்றலுக்கும் முக்கியத்துவம் தராமல் எப்படி நல்ல மக்களை உருவாக முடியும்? “எப்பவும் படிபடின்னு சொன்னா பசங்க எப்போ பசங்களா இருப்பாங்க?” மனிதனின் உள்ளிருந்து பீறிட்டுக்கொண்டு வரும் சக்தியை விளையாட்டோ அல்லது ஆக்கபூர்வமாக வெளிப்படுத்த தவறும் போதுதான் தகாத பழக்கவழக்கங்களில் செல்கின்றனர் என்பதைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் புரிந்துக்கொள்ளாமல் இருப்பதால் தான் சுபாஷ் மாஸ்டருக்கு நேர்ந்த நிலைமை இப்பொழுது அதிகரிக்கக் காரணம் என்ற என் வாதத்தை என் சக ஆசிரியர்களே ஒதுக்கியது வருத்தமாக இருந்தது. போன வாரத்தில் இதைப் பற்றிக் கூறும்போது, “ரேகா டீச்சர் நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க? இந்த ஸ்கூல்ல பசங்கள சேர்க்கறதே 100% ரிசல்ட் தருவதாலதான். இருக்கற பாடத்தை முடிக்கவே நேரம் இல்லை. இதுல நீங்க சொன்னாப்பல பாட்டு, விளையாட்டு அப்படின்னு சொன்னா மானேஜ்மெண்ட் மட்டுமில்லை பேரண்ட்ஸ் கூட இதுக்கா நாங்க பசங்கள அனுப்பறோம் அப்படின்னு கேள்வி கேக்கறாங்க.” “ம்ம்.. நீங்க சொல்லறது எனக்கும் புரியுது. ஆனா பசங்கள எதுக்குப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பறாங்கன்னு புரிஞ்சிக்காம இருக்கறது வேதனையா இருக்கு. பல விஷயங்களை கத்துக்கொடுக்கறது மட்டுமில்லாம அவங்களோட தனித்திறமைகளைக் கண்டுபிடிச்சி மெருகேத்தினாதான் குழந்தைகள் நல்லபடியா வளர்ந்து இந்தச் சமுதாயமும் நல்லா இருக்கும். எதிர்காலத்துல பல துறையிலும் சிறந்து விளங்க நம்ப சந்ததியினருக்கு நாம் தானே வழிகாட்டனும்.” என்ற என் கருத்தை ஆமோதிக்க ஒரு சிலரே இருந்தனர். “அட போங்க டீச்சர். வாங்கற சம்பளத்துக்கு இதுவே அதிகம். ஏதோ வந்தோமா சொல்லிகொடுத்தோமா அப்படின்னு போய்கிட்டே இருக்கணும். அதவிட்டுட்டு…” என்ற ஆசிரியரை என்ன சொல்ல? அதுவும் இந்தத் தனியார் பள்ளியில் தரும் குறைவான சம்பளத்துக்குக் கூடுதல் வேலை! “நம்ப நல்லபடியா இருந்தா தானே பசங்களும் நல்லபடியா வளருவாங்க. அதுவும் இப்போ பசங்களுக்குப் பாடம் நடத்த போனா பசங்க பாடத்தைக்கவனிக்காம கண்டதையும் பாத்துக் கமென்ட் பண்ணறாங்க அப்படின்னு சாரா மிஸ் சொல்லி வருத்தப்பட்டாங்க. நம்பளும் அவங்க அம்மா அப்பா போல அப்படின்னு ஒரு எண்ணம் இல்லை..ஹ்ம்ம் நமக்கும் நம்பகிட்ட படிக்கும் பசங்க மட்டுமில்லை எல்லாப் பசங்களும் நம்ப சொந்த குழந்தைகள் அப்படின்னு எண்ணம் இருக்கணும்.” என்று சொன்னேன். “ஆமா ரேகா டீச்சர். அன்னிக்கி நான் போர்டுல கணக்கு போட்டுக்கிட்டு இருந்தா கணக்கை கவனிக்காம நம்ப என்ன போட்டு இருக்கோம், அதுவும் உள்ள என்ன போட்டு இருக்கோம் அப்படின்னு பேசிகிட்டு இருக்கற பசங்கள என்ன செய்ய?” என்ற சுதா டீச்சரின் ஆதங்கத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவரே தொடர்ந்து “ரேகா டீச்சர் பசங்க உங்க கிட்ட மட்டும் எப்படிப் பெட்டி பாம்பா அடங்கி இருந்து நீங்க சொல்லறதை எல்லாம் சரியா பண்ணிக்கிட்டுவராங்க. அப்பப்போ உங்கள சுத்தி பசங்க கூட்டம் வேற..” என்று என் முகத்தைப் பார்த்துகொண்டிருந்தார், என் பதிலுக்காக. “அது ஒன்னும் கம்ப சூத்திரம் இல்லை! பசங்கள பசங்களா நடத்தனும். பாடம் நடத்தும்போது அவங்க கவனம் கலையற மாதிரி இருந்தா வேற ஏதாவது விஷயம் பத்தி பேசி, அவங்க கவனம் திரும்பவும் நம்ப கிட்ட இருக்கும்போது பாடத்தை நடத்துவேன். அவங்களும் பசங்க தானே, ரோபோவா? எப்பவும் ஒரே மாதிரி இருக்கணும்ன்னு நினைக்காம, அப்பப்போ தட்டிக்குடுத்து மேல கொண்டு வரணும்.” “முன்ன மாதிரி மனுஷங்களுக்குத் தேவையான நல்லொழுக்கத்தைப் பத்தி போதிக்கும் வகுப்புகள் தேவை” என்றேன். “நீங்க வேற விளையாட்டு, பாட்டு, கைவேலை இப்படிப்பட்ட வகுப்பையே வேண்டாம் டைம் வேஸ்ட் அப்படின்னு நினைக்கும் மக்களுக்கு நடுவுல இருந்துகிட்டு இப்படி நீதி போதனை அப்படி இப்படின்னு சொன்னா நம்பளதான் முட்டாள் மாதிரி பாப்பாங்க.” என்று பதில் சொன்ன சுதா டீச்சரைப் புரிந்து கொள்ள முடிந்தது. அதற்குள் வகுப்புகள் தொடங்க மணி அடித்ததும் வகுப்பை நோக்கி சென்றோம். “ஏங்க, நானும் சுதா டீச்சரும் நாளைக்குச் சுபாஷ் மாஸ்டர பாக்க போய்ட்டு வரோம்” என்று கணவரிடம் கூறினேன். அடிக்கடி சென்று பார்த்துவிட்டுவருவது ஒரு வாடிக்கையாகிவிட்டது. அப்படிப் போகும்போது ஏதேனும் கொண்டு செல்வது வழக்கம். “போயிட்டு வாங்க. கிட்டத்தட்ட ரெண்டு மாசம் ஆகபோகுது. அந்தக் காலத்துல டீச்சர்ன்னா மரியாதையா பாப்பாங்க. ஆனா இப்போ … இதுவும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வேலையா போச்சு.” என்று என் கணவர் சொன்னதை ஆமோதிக்கும் நிலையில் இருந்தேன். “வாங்க வாங்க.” என்று அழைத்துச்சென்ற சுபாஷின் மனைவியின் பின்னே சென்றோம். “சார் இப்போ எப்படி இருக்காரு?” என்று கேட்டுகொண்டே உள்ளே சென்றோம். தன் மாமியாரை பார்த்துவிட்டு ..”இப்போ கொஞ்சம் பரவாயில்லை. மெல்லமா பிடிச்சி சாய்வா ஒக்கார வெச்சா கொஞ்ச நேரம் இருக்க முடியுது.” என்று அவர் இருந்த அறைக்கு அழைத்துச்சென்றார். முகத்தில் சில தழும்புகளுடன் இருந்த சுபாஷ் மாஸ்டரை கைத்தாங்கலாகச் சாய்ந்து இருக்க உதவியவர் “நீங்க பேசிகிட்டு இருங்க. நான் இப்போ வரேன்”என்று சென்றார் அவர் மனைவி. “சார். எப்படி இருக்கீங்க? வலி எல்லாம் எப்படி இருக்கு?” என்று கேட்டதற்கு “இப்போ கொஞ்சம் பரவாயில்லை. இதையெல்லாம் கூடத் தாங்கிடுவேன். ஆனா என்னோட பொண்டாட்டி மாசமா இருக்கா. அவளை நான் தாங்கனும்ன்னு நினைச்சதுக்கு மாறா இப்போ அவதான் எனக்குப் பாத்து பாத்து செய்யறா.” என்று வேதனையை வெளிபடுத்திய சுபாஷின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ள முடிந்தது. “என்னோட அம்மாவும் வயசானவங்க. அவங்களுக்கு இந்த ஊரும் புதுசு. அதுனால இவதான் எல்லா வெளிவேலைக்கும் போகணும்.” என்று பேசிய சுபாஷுடன் வேறுபல விஷயங்களும் பேசிவிட்டு வெளியே வந்த எங்கள் பின்னேயே வந்த அவர் மனைவி, ”அவர் எழுந்து நடந்தாலும் முன்ன மாதிரி அவருக்கு நடக்க முடியாது அப்படின்னு டாக்டர் சொன்னார். இது எங்க மாமியாருக்கு தெரியாதுங்க.” என்றதை கேட்டதும் மனம் பதைபதைத்தது. “நீங்க எதுக்கும் அவரோட டாக்டர் ரிப்போர்ட்டை குடுங்க. நாங்களும் ஏதாவது பண்ண முடியுமான்னு பாக்கறோம்.” என்று ரிப்போர்ட்டின் ஒரு காப்பியை வாங்கி வந்தோம். “சாரு எப்படி இருக்கார்?” என்று கேட்ட கணவர் மற்றும் பிள்ளைகளிடம் “இப்போ பரவாயில்லை. ஆனா இன்னும் கொஞ்ச மாசமாவது ரெஸ்ட் எடுக்கணும்.” என்று கூறிவிட்டு வீட்டுவேலைகளைப் பார்க்கச் சென்றேன். அப்படி இப்படி என்று சில மாதங்கள் கழித்துச் சுபாஷ் மாஸ்டர் வேலைக்கு வந்தார், ஊன்றுகோலின் துணையுடன். அவரை இந்நிலைக்கு ஆளாக்கிய இரண்டு மாணவர்களும் பலவித பலம்பொருந்திய சக்திகளின் துணையுடன் சட்டத்தின் பிடியில் இருந்து விடுபட்டு மீண்டும் பள்ளிக்கு வந்தனர். “என்ன டீச்சர், மறுபடியும் அந்த ரெண்டு தறுதலைகள் நம்ப ஸ்கூலுக்கே வந்திருக்குங்க,,” என்று சாரா மிஸ் கூறும்போது தான் எனக்கும் தெரிய வந்தது. ஆசிரியர்களின் எதிர்ப்பையும் மீறி பள்ளிக்குத் தேவையான பணம் “பள்ளியின் விரிவாக்கத்திற்கு” என்று சில லக்ஷங்களை விட்டெறிந்த அந்த மாணவர்களின் பெற்றோர்களையும், அதைப் பெருந்தன்மையாகப் பொறுக்கிக்கொண்டு மீண்டும் பள்ளியில் அனுமதித்த நிர்வாகத்தையும் எங்களால் என்ன செய்ய முடிந்தது? அன்று நிர்வாகி பேசியது இன்னும் மனதை விட்டு அகலவில்லை. “பாருங்க உங்களுக்கு இங்க வேலை செய்யப் பிடிக்கலைன்னா தாராளமா வேலையவிட்டு போங்க. நீங்க போனா அடுத்த நிமிஷம் வேற ஆளு ரெடியா இருக்காங்க. உங்களுக்குச் சம்பளம், இங்கயும் அங்கயும் அப்ரூவல் வாங்க தண்டம் அழறதுக்குப் பணம், 100% ரிசல்ட் காமிக்கவும் தேவையான எல்லா வசதியும் செய்யப் பணம் வேணும். நான் ஒன்னும் ஏதோ தருமத்துக்கு இந்த ஸ்கூல நடத்தல. பணம் பாக்கணும்ன்னு தான் இதுல எறங்கியிருக்கேன். அதுனால நீங்கதான் யோசிச்சி இங்க இருக்கனுமா இல்லை வெளிய போகணுமான்னு முடிவு பண்ணனும்” என்று கூறிவிட்டு எங்களை ஒரு பொருட்டாகவே கருதாமல் அருகில் இருந்த தொலைபேசியில் யாரையோ அழைத்துப் பேசத்தொடங்கினார். “வேலைய விட்டு வெளிய வர ஒரு நிமிஷம் ஆகாது! இதுல பலரும் குடும்பத்தை நடத்த சம்பாதிக்க வேண்டிய நிலைல இருக்காங்க. அப்படியே இங்கவிட்டுட்டு வேற ஒரு பிரைவேட் ஸ்கூல்லுக்குப் போனா அங்கயும் இந்த நிலை வராதுன்னு உத்தரவாதம் இருக்கா?” மனம் “ச்சே” என்று ஆனது. பணம்! பணம்!! பணம்!!! இதுமட்டுமே முக்கியம் என்று ஆனதின் விளைவுகள் …ஜீரணிக்கவே முடியாத வகையில் இருக்கிறது. அடுத்தக் கல்வியாண்டு தொடங்கியது. மகள் நல்ல மதிப்பெண் பெற்று அவளுக்கு விருப்பமான வேதியல் படிக்கச் சேர்ந்துவிட்டாள். “ஏன் டீச்சர் உங்க பொண்ணு நல்ல மார்க் எடுத்தும் எதுக்குக் கெமிஸ்ட்ரி படிக்க வெக்கறீங்க. அவளுக்கு மெடிக்கல் தான் கிடைச்சிருக்குமே.” என்றார் ராஜன் மாஸ்டர் “அவளுக்கு எதுல விருப்பம் இருக்கோ அதுல தானே சேர்க்க முடியும். அப்போதானே அவ சந்தோஷமா படிச்சி பெரிய அளவுல சாதிக்க முடியும்?”என்றேன். சுபாஷ் மாஸ்டர் இப்போது ஊன்றுகோல் இல்லாமல் வந்தாலும், தாங்கி தாங்கியே நடக்க வேண்டிய நிலை. இரண்டாவதும் ஒரு மகள். புதிதாகச் சேர்ந்த ராஜேஷ் ஆசிரியரின் பார்வை சரியில்லை என்று தோன்றும். அதை உறுதிப்படுத்துவது போல் ஒரு மாணவி நான் தனியாக இருக்கும்போது “டீச்சர்..” என்று கூறி மேற்கொண்டு பேசாமல் தயங்கினாள். “சொல்லும்மா… என்ன ஆச்சு? நீ சொன்னாதானே எனக்குத் தெரியும்.” என்று பலவாறு பேசி அவளைப் பேச வைத்தேன். அதைக் கேட்டு அதிர்ந்தேன். “டீச்சர்..வந்து..வந்து ..அந்த ராஜேஷ் மாஸ்டர் நேத்திக்கி லேப்ல ரெகார்ட் எல்லாம் வெக்க சொன்னார். நான் கொண்டு போனப்போ அங்க யாருமே இல்லை… அப்போ அப்போ…” மேற்கொண்டு ஒன்னும் சொல்ல முடியாமல் அழுதவளை எப்படியோ மீண்டும் பேச ஊக்கினேன். “அவர் சாதாரணமாவே எங்களை எல்லாம் தடவி தடவிதான் பேசுவார். ஆனாலும் நாங்க எப்படியாவது அவர் கிட்ட மாட்டாம பாத்துக்குவோம். ஆனா நேத்திக்கி… லேப்ல வெச்சி அசிங்கமா பேசி நடக்கப் பாத்தாரு. எப்படியோ தப்பிச்சி வந்துட்டேன். வீட்டுல சொல்ல பயமா இருக்கு மிஸ்.” என்று அழுதவளை ஆசுவாசப்படுத்தி. “நீ கவலைப்படாம போ. இனி ஜாக்கிரதையாவே இரு. உனக்குத் தெரிஞ்சி உன்னோட பிரெண்ட்ஸ் கிட்ட கேட்டு அவர் இப்படி இன்னும் யாரு கிட்ட என்ன பண்ணியிருக்கார்ன்னு தெரிஞ்சிகிட்டு என் கிட்ட சொல்லு. இல்லை அந்தப் பசங்களை நான் தனியா இருக்கும்போது என்னை வந்து பாக்க சொல்லு.”என்று அனுப்பி வைத்தேன். வீட்டிற்குச் சென்றும் மனம் கனமாக இருந்தது..”அச்சிறு பெண் வந்து அழுதது மனதில் ஓடிகொண்டே இருந்தது. அவள் தைரியமாக வந்தாள். வெளியேவந்து கூறாது எத்தனை பேர் மனதிற்குள்ளேயே குமைந்துகொண்டிருக்கிறார்களோ?” அன்றிரவு கணவருடன் தனிமையில் இருக்கும்போது அன்று நடந்ததைப் பகிர்ந்தேன். “ஒரு ஆசிரியர் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது கூட அறியாத, இப்படிப் பட்ட ஆட்களின் வழி காட்டுதல் எப்படி இருக்கும்? ஆசிரியர் என்பதைத் தொழிலாகப் பார்க்காமல் அடுத்த சந்ததியினருக்கு வழிக்காட்டும் சேவை மனப்பான்மையுடன், நம் மக்கள் என்ற எண்ணம் வேண்டும். அப்படி இல்லாமல் இதுபோன்ற மனிதர்கள் கல்வி என்ற அமைப்பில் நுழைந்தது தான் பல பிரச்சனைக்கும் மூலகாரணம். அதுவும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நடத்தும் பலரும் இதைப் பணம் கொழிக்கும் மரமாகப் பார்ப்பதால் வந்த வினை!” என்றார் என் கணவர். “ஆமாங்க. என்னிக்கி பணம் மட்டுமே பிரதானம்; மத்தபடி தரம் மற்றும் திறன் எல்லாம் பின்னுக்குப் போச்சோ அன்னிக்கி பிடிச்சது இச்சமுதாயத்திற்குச் சனி. சனிகூட நல்லது பண்ணும். ஆனா இவங்கள மாதிரி ஆளுங்க நண்டு மாதிரி…வெளிய தெரியாம உள்ள இருந்தே அரிச்சிடுவாங்க.” என்றேன். “சரி நீ இப்போ இதுக்கு என்ன பண்ண போறே?” என்று கேட்டார் கணவர். “யோசிச்சி பார்த்தேன். இந்த வேலை போனா கூடப் பரவாயில்லை அப்படின்னு தோணுது.” என்று அவரின் முகத்தைப் பார்த்தேன். அவரும் என் தலையைத் தடவி ஆமோதிப்பாய் தலையசைத்தார். “நம்ப பசங்களுக்கு இப்படி ஒரு நிலை வந்தா என்ன பண்ணுவியோ அதைப் பண்ணு. என்ன வந்தாலும் நான் உனக்குத் துணையிருப்பேன்” என்றார். எனக்கு யானை பலம் வந்தது! யாருக்கும் தெரியாமல் இது விஷயமாக நானும் எனக்கு நம்பிக்கையான சுதா டீச்சரும் இதில் இறங்கினோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருடன் பேசினோம். “ஐயோ..இந்த பொண்ணு எங்க கிட்ட ஒண்ணுமே சொல்லல.. இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா என் மக வாழ்க்கை சீரழியும்” என்று கூறியவர்களுக்குப் பேசி புரிய வைத்தோம் “பாருங்க உங்க பொண்ணு உங்க கிட்ட வந்து பகிர முடியாம இருக்க நீங்க தான் காரணம். எதுவா இருந்தாலும் நம்ப அம்மா அப்பா இருக்காங்க, அவங்கதுணை இருப்பாங்க அப்படிங்கற எண்ணம் அவங்களுக்கு இருந்தா கண்டிப்பா அவ முதல்ல உங்க கிட்ட தான் வந்து சொல்லியிருப்பா.” என்றேன் “இப்பவும் நீங்க உங்க பொண்ண திட்டாம அடுத்து என்ன செய்யலாம் அப்படின்னு யோசிச்சா நல்லது. நாங்க இந்த மாதிரி இன்னும் எத்தன பசங்கபாதிச்சிருக்காங்க அப்படின்னு பாக்கறோம். எல்லோரும் சேர்ந்து எழுத்து பூர்வமா எழுதி அவங்களுக்கு எதிரா கம்ப்ளெயின்ட் குடுத்தா சரியா இருக்கும்.”என்ற சுதா டீச்சரை பார்த்து “ஐயோ..கம்ப்ளெயின்ட் குடுத்தா எப்படி..வேற ஏதாவது செய்யலாம்” என்று படபடத்தனர். “இங்க பாருங்க இதுல பயப்பட ஒண்ணுமேயில்லை. நல்ல காவல்துறை அதிகாரிகளும் இருக்காங்க. சமூக நல அமைப்புகளும் இருக்கு. இவங்க எல்லோரோடதுணையையும் நம்ப எடுத்துக்கலாம். பாதிக்கப் பட்ட எல்லோரும் ஒத்துமையா நின்னா எதையும் எதிர்கொள்ளலாம்.” என்று பலவாறு எடுத்துகூறி சரிக்கட்டினோம். இவர்களின் வீட்டிலேயே பாதிக்கப் பட்ட சில குழந்தைகளின் பெற்றோர்களைச் சந்தித்து நடவடிக்கைகளை மேற்கொண்டோம். ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டவர்கள் இவ்விஷயத்தைக் கவனத்திற்குக் கொண்டு சென்றது மட்டுமல்லாமல், வெளியுலகுக்குத் தெரியாமல் காவல்துறை மற்றும் மற்ற சமூக அமைப்பின் உதவியுடன் அந்த ராஜேஷ் மாஸ்டரை வேலையில் இருந்து நீக்கினர். நிர்வாகத்தினரிடமும் “எங்களுக்குப் பசங்க படிக்கணும். அது எவ்வளவு முக்கியமோ அதே அளவு பசங்களோட பாதுகாப்பும் அவங்க முன்னேற்றமும் முக்கியம். ஏற்கனவே இங்க சுபாஷ் மாஸ்டருக்கு நடந்ததை நாங்க மறக்கல. இப்போ இந்த ராஜேஷ் மாஸ்டர் இப்படிப் பண்ணி இருக்கார். அடுத்தது இப்படிஏதாவது நடந்ததுன்னு தெரிஞ்சா நாங்க எல்லோரும் உங்களுக்கு எதிரா நடவடிக்கை எடுக்கச் சொல்ல வேண்டிவரும். அப்படியே இந்த ஸ்கூல இழுத்துபூட்ட வெச்சிட்டுதான் மறுவேலை பாப்போம்.” என்று ஆவேசமாக சொன்னதைக் கேட்டதும் “பாருங்க…ப்ளீஸ், இனி இதுபோல ஒன்னும் நடக்காது, நாங்க தேவையான நடவடிக்கை எடுக்கறோம்.” என்று அவர்களுக்கு நம்பிக்கையளித்தது நிர்வாகம். “பின்னே முதலுக்கே மோசம் வந்தால்!” பெற்றோர் ஆசிரியர் சங்கம் இப்பொழுது கொஞ்சம் ஆக்கபூர்வமான முடிவுகளை எடுக்கவும் செயல் படுத்தவும் முனைந்தனர். “பாருங்க நம்ப எல்லோரும் பெற்றோர், ஆசிரியர் என்ற வேறுபாடு இல்லாம, நம்பப் பசங்களுக்கு எது நல்லது, எது தேவை அப்படின்னு மட்டும் யோசிச்சி எந்த முடிவும் எடுக்கணும்.” என்று நான் என் கருத்தை சொல்லும் போது பலரும் ஆமோதித்தனர். முன்பு போல் அல்லாமல், மாறி மாறி குற்றம்சொல்லாமல் ஒத்துழைப்புக் குடுத்தனர். “பாருங்க… படிப்பு தேவை தான். ஆனா அதுகூடவே அவங்கள மன அழுத்தத்திற்கு ஆளாக்காம, அவங்க இந்த வயசுக்குரிய மகிழ்ச்சியையும் அனுபவிக்கனும். அதுக்கு என்ன பண்ணலாம் அப்படின்னு நான் ஒரு லிஸ்ட் போட்டு இருக்கேன். நான் சொல்லறதை முழுசும் கேட்டுட்டு உங்க கருத்தை சொல்லுங்க. எதுவா இருந்தாலும் பேசி முடிவு பண்ணலாம்” என்று நான் கூறத் தொடங்கினேன். “1. பசங்களின் திறமையைக் கண்டறிஞ்சி ஊக்கப்படுத்தனும். 2. விளையாட்டு மற்றும் கைவேலை போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை விடாம வாரத்துல சில பாட வேளைகளை இதுக்கு ஒதுக்கி பயன்படுத்தனும். இது நம் பிள்ளைகள் தீய பழக்கவழக்கங்கள் பக்கம் போகாம பார்த்துக்கும். நீதிபோதனையும் தேவை, இது பிள்ளைகளுக்கு எது சரி தப்பு அப்படின்னு யோசிச்சி முடிவெடுக்கவும், நல்ல பண்புகலோடு வளரவும் உதவும். 3. ஸ்கூலுக்குத் தனியா ஒரு கவுன்சிலர் வைக்கணும். இது பசங்களுக்குச் சரியான வழிகாட்டியாகவும் தேவையான நேரத்துல சீர்திருத்தவும் உதவும். 4. பெற்றோரும் ஆசிரியரும் எந்த விஷயத்தையும் ஈகோ பார்க்காம பகிர்ந்துக்கணும். நம்ப பசங்க எதிர்காலம் தான் முக்கியம், மற்றது எல்லாம் அப்புறம் என்ற எண்ணம் வேண்டும். 5. வீட்டிலும் குடும்பத்தினர் கூடி நேரத்தைச் செலவு செய்யவேண்டும். அது ஆரோக்கியமான உறவை வளர்க்கும்.” என்று கூறி நிறுத்தினேன். எல்லோரும் கையைத் தட்டி ஆதரவைத் தெரிவித்தனர். 18 யார் மலடு? காலிங்பெல் சத்தம் கேட்டு கைவேலை செய்துக்கொண்டு இருந்த நான் அப்படியே வைத்துவிட்டு ‘யாரு? இதோ வரேன்’ என்று கூறியபடியே வாயிலை நோக்கி ஓடினேன். ‘ஓ, கற்பகமா. ஒரு நாலு முழம் தா. மல்லி ரெண்டும், கதம்பம் ரெண்டும். அப்புறம் கொஞ்சம் உதிரியும் போடு. குடிக்க தண்ணீர் கொண்டுவறேன்’ என்று கூறிவிட்டு சென்றேன். ‘இந்தா மா.’ என்று என்னிடம் பூவை தந்துவிட்டு தண்ணீர் குடித்தாள். ‘அம்மா, என் பொண்ணு வளைகாப்புக்கு நீங்க கட்டாயம் வரணும். இந்த வெள்ளிக்கிழமை வெச்சிருக்கேன்.’ என்று வெற்றிலையும் சிறிது பூவுமாக வைத்து என்னை கூப்பிட்டாள். ‘இல்ல கற்பகம் நான் வரல, வந்தா நல்லா இருக்காது. நல்ல சேதி சொல்லியிருக்க இரு வரேன்’ என்று கூறி உள்ளே செல்ல இருந்த என்னை தடுத்து ‘நீங்க கண்டிப்பா வரணும். நீங்க வரலைன்னு சொன்னா எப்படி?’ என்று அவளுக்கு கோபம் வந்தது. ‘புரிஞ்சிக்கோ கற்பகம். உனக்குதான் தெரியுமே இந்த மாதிரி விசேஷங்களுக்கு நான் வரமாட்டேன்’ என்று கூறும்பொழுதே என் மனதில் புதைக்கப்பட்ட, பல்வேறு சம்பவங்களில் உண்டான ரணங்கள் ஆறாது மீண்டும்மீண்டும் இந்த நிமிடம் அனுபவிப்பதுபோல் என்னை வேதனையும், வலியும் உணரச்செய்தது. ‘ம்கும்..யாரு வீட்டு விசேஷத்துக்கு வரீங்க, எங்க வீட்டுக்கு. யாரும் உங்கள ஒன்னும் சொல்லமாட்டாங்க. நீங்க எங்களுக்கு எவ்வளவோ செஞ்சியிருக்கீங்க. என் பொண்ணு இன்னிக்கி இந்த நல்ல நிலைமையில இருக்கறதுக்கு நீங்களும் ஐயாவும் தான் காரணம்.’ நான் பதில் சொல்லாமல் இருந்தேன், என்ன பதில் சொல்லுவேன்? எப்படி சொல்லுவேன்? முடியவில்லையே? நானா வேண்டும் என்று இந்த வரம் வாங்கிக்கொண்டு வந்தேன்? எருதின் புண் காக்கைக்கு விருந்து. என் ரணம் யாருக்கு…. ‘அம்மா, ரொம்பவும் யோசிக்காத. எதையும் எதிர் பாக்காம மனசால எல்லாரும் நல்ல இருக்கணும்னு நினைக்கற பாரு, நீதான் வாழ்த்தனும், நீ தெய்வம் மாதிரி. மனசுலதான் தாயன்பு இருக்கணும். பெத்துட்டா மட்டும் போச்சா? பெத்துட்டும் மனசுல அன்பு இல்லேன்னா அவங்கதான் மலடு’ ‘நான் கண்டிப்பா வரேன்’ என்றேன் எனக்கு தெளிவாயிற்று யார் மலடு என்று. 19 யார் காரணம்? “என்ன தம்பிகளா, ரெண்டு நாளா பாக்கறேன், இங்கயே சுத்திக்கிட்டும் தூங்கிகிட்டும் இருக்கீங்க?” என்று ஒரு பத்து பதினோரு வயது இருக்கும் சிறுவர்களைப் பார்த்துக் கேட்டான் செல்வா. இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி சென்னைக்கு வந்து சேர்ந்த மூன்று நாளும் அந்த ரயிலடியையே சுற்றி சுற்றி வந்தார்கள். கையில் இருந்த சில்லறை பணமும் ஒரு நாள் உணவிற்கே சரியாகிவிட்டது. அச்சிறுவர்கள் பதில் சொல்லாமல் மௌனமாய் இருந்ததை கண்ட செல்வம் “என்னப்பா யாரும் உங்ககூட வரலையா? சாப்பிட்டிங்களா?” என்று செல்வம் அக்கறையுடன் கேட்டதும் அவர்களுக்கு தங்கள் அம்மாவின் ஞாபகம் வந்தது. “இல்லைண்ணா, வந்து..” என்று தயங்கிய சிறுவனை மேற்கொண்டு எதுவும் கேட்காமல் “வா, ஆமாம் உங்க பேர் என்ன?” என்று அழைத்துச் சென்று அருகில் இருந்த கையேந்தி பவனில் உணவு வாங்கித்தந்தான். “சுரேஷ், செந்தில் உங்களுக்கு வேறேதாவது வேணும்னாலும் வாங்கிக்கோங்க. நீங்க சாப்பிட்டுகிட்டே இருங்க இப்போ வரேன்” என்று கூறிவிட்டு அருகில் இருந்த தொலைபேசி பெட்டியை நோக்கி சென்றான். சென்னைக்கு வந்த ஒரு மாதத்தில் சுரேஷிற்கும், செந்திலுக்கும் செல்வம் தெய்வமாகி போனான். தினமும் இருவருக்கும் பிடித்த உணவுவகைகளையும், நல்ல உடைகளையும் விளையாட்டு பொருட்களையும் கொண்டு நிறைத்து வீட்டை விட்டு வெளியேறிய துக்கமேயில்லாமல் பார்த்துக்கொண்டான், செல்வம். சுரேஷிற்கும், செந்திலுக்கும் படிப்பு சுமை இல்லாமல் விளையாடியபடி பொழுதைக்கழிப்பதில் மகிழ்ச்சி. ஆறுமாதங்கள் கடந்திருந்தது. சுரேஷ், செந்தில் நான் சொன்னேன்ல நம்ப ஐயாவ போய் பாத்துட்டு வரலாம். நான் ஊருக்கு போயிட்டு வர வரைக்கும் நம்ப பெரிய ஐயாவும், சின்ன ஐயாவும் உங்களை பத்திரமா பாத்துப்பாங்க. அவங்க சொன்னபடியே நீங்க நடந்துக்கணும். அப்போதான் நீங்க நல்ல நிலைமைக்கு வந்து உங்க ஊருக்குப்போய் நின்னா உங்களோட அருமையும், பெருமையும் எல்லோருக்கும் தெரியும். அப்புறம் …” என்று சிறிது காலமாக செய்யும் மூளைச்சலவையை செவ்வனே செய்து சுரேஷை ஒரு பெரிய வீட்டிற்கு அழைத்துச்சென்றான். அவர்கள் உள்ளே சென்ற நேரம் செந்தில் கேட்டின் வெளியே நின்றுக்கொண்டிருந்தான். “வா வா செல்வம். இதுதான் நீ சொன்ன பையனா? வாப்பா உன் பேரு என்ன, சுரேஷா? எப்பவும் செல்வத்துக்கு உன் நினைப்புத்தான்.” வேலைக்காரனை அழைத்து சுரேஷை அவன் தங்கும் இடத்தை காண்பிக்க சொன்னார் அப்பெரியவர். சுரேஷும் செல்வத்திற்கு பிரியாவிடை கொடுத்துச் சென்றான். “செல்வம், இந்தா.” என்று மூன்று பணக்கட்டை தந்தார். “சொன்னபடியே வந்துட்டியே, அதுனாலதான் செல்வத்துக்கு கிராக்கியிருக்கு. எப்பவும் புதுசு வந்தா முதல்ல என்கிட்ட சொல்லு. சரியா?” என்ற பெரியவருக்கு வயது ஐம்பதுகளில் இருக்கும். “சரிங்கையா, ஏதோ உங்க தயவுலதான் எங்க பொழப்பு நடக்குது.” என்று மரியாதையுடன் அப்பணத்தை பெற்றுக்கொண்டு சென்றான். அங்கிருந்து செந்திலை வேறொரு இடத்திற்கு அழைத்துச்சென்றான், வெளியே இருந்து காணும்போது சிறிய வீடு போல் இருந்தது, ஆனால் உள்ளே சென்றபோது விஸ்தாரமாகவும் எல்லா வசதிகளுடனும் சற்று வித்தியாசமாகவும் இருந்தது. அங்கும் செந்திலுக்கு தெரியாமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு செல்வம் தன் புரோக்கர் தொழிலுக்கு மரியாதை செலுத்தினான். முதல் ஒரு வாரம் ஒரு மாற்றமும் இல்லாமல் அப்பெரியவர் சொன்ன வேலைகளை எல்லாம் செய்தான் சிறுவன் சுரேஷ். அவரும் பெரிய வேலைகள் எதுவும் தராமல், ஆனால் தன் சுற்றுவட்டத்தில் இருக்குமாறு பார்த்துக்கொண்டார். சில சமயம் அவரின் தனி அறையில் இருக்கும் போது அவனைத் தடவியபடி அன்பொழுகப் பேசுவார். சுரேஷிற்கு தன் தாத்தாவின் ஞாபகம் வந்தது. அதனால், மேலும் அப்பெரியவரின்பால் ஒரு பிணைப்பு ஏற்பட்டது. அவனால் அந்த வீட்டை விட்டு வெளியேற முடியாதபடி சுரேஷிற்கு அறியாமலேயே கண்காணிப்பு இருந்தது. இரண்டாவது வாரம் அப்பெரியவர் கூடுதல் நேரம் தன் தனியறையில் செலவிட தொடங்கினார். அவரின் தடவலில் உணர்ச்சி வெளிப்பாடு மாறுப்பட்டது. “என்ன சுரேஷ், இதெல்லாம் தப்பேயில்லை. இங்க வா. இங்க தொட்டு பார்….” என்று அப்பெரியவர் அவனை வழிநடத்தினார். முதலில் ஒருவித அச்சமும், தயக்கமும், அருவருப்பும் உணர்ந்த சுரேஷ் இந்த குறுகிய காலத்தில் அப்பெரியவரின் இச்சையை தீர்க்கும் அருமருந்தானான். அவனின் வாழ்க்கையே மாறிவிட்டது, ஆம் இன்று அவனும் ஒரு ஹோமோசெக்ஸாக மாறிவிட்டான். அவன் அவ்வீட்டை விட்டு வெளியேறி தனியாக வந்துவிட்டான். அவனைப்போன்ற நண்பர்கள் கூட்டம் அவனை தத்தெடுத்துக் கொண்டது. அவனுக்கு வீட்டைவிட்டு வந்த இந்த ஏழு வருடங்களில் வீட்டினரைக் காணும் ஆசையும் ஏக்கமும் இருந்தாலும்கூட பொருளாதாரத்தில் கொஞ்சம் முன்னேறிய பிறகே செல்லவேண்டும் என்று வைராக்கியம் காத்தான். கடைசியில் இன்று பிறந்து வளர்ந்த வீட்டிற்கு செல்லும் உணர்ச்சிக்கலவையில் இருந்தான். “சுரேஷ்… “ பேச்சே வராமல் தன் தாய் நிற்பதைக் கண்டு மனம் கசிந்து கனத்தது. “எப்படிப்பா இருக்க? இத்தனை காலம் உன்னை தேடாத இடம் இல்ல. எங்க இருந்த?…” என்று அடுக்காக வந்த கேள்விகளுக்கு பதிலளித்தவாறே கை கொள்ளாமல் வாங்கி வந்த பொருட்களை கடை பரப்பினான். “எங்க வேலை செய்யற?” என்ற கேள்விக்கு மட்டும் பதில்சொல்ல முடியவில்லை. மனம் வலித்தது. “ஒரு பெரியவர் வீட்டுல, சொல்லற வேலை எல்லாம் செய்வேன். அவங்களும் நல்ல சம்பளம் தராங்க.” என்று பதிலளித்து பெருமூச்சுடன் வேறு விஷயங்களுக்கு பேச்சை திசை மாற்றினான். இரண்டு நாள் சந்தோஷமாக பொழுதைக் கழித்துவிட்டு மீண்டும் தன் உலகிற்கு வந்தான். “சுரேஷ், நீ ஊருக்கு போனப்ப வசந்த் வந்து அடுத்தவாரம் உன்ன ரெண்டு நாளைக்கு வேண்டியத எடுத்துகிட்டு எப்பவும் பாக்கற எடத்துக்கு வர சொன்னார்.” என்றான் அலெக்ஸ். வசந்த் ஒரு செல்வாக்கான அரசியல்வாதியின் மகன். சல்லாப பேர்விழி, அவனின் விருப்பத்திற்கு ஈடுகொடுத்து திருப்திப்படுத்தினால் போதும் கூடுதல் பணமும் மற்ற விஷயங்களும் கிடக்கும், அவன் மூலமே மேலும் பல நிலையான வாடிக்கையாளர்கள் கிடைத்துவிட்டார்கள். ஒருமுறை கடற்கரையில் தன் நண்பர்களுடன் செல்லும்போது யாரோ தன் பெயரை கூறி அழைப்பதைக் கேட்டு திரும்பினான். ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். எங்கேயோ பார்த்த முகம் போல் தோன்றினாலும் அடையாளம் தெரியவில்லை. “என்ன சுரேஷ் அடையாளம் தெரியலையா? நான்தான் செல்வி, அதுதான் செந்தில். நீ எப்படி இருக்க? நீயாவது நல்லா இருக்கியே அதுபோதும்” என்று கூறியதைக் கேட்டு திடுக்கிட்டான். “நீ ..எப்படி ..இப்படி” என்று தடுமாறி கேட்டான் சுரேஷ். “அதையேன் கேக்கற, அந்த கஸ்மாலம் செல்வம் என்னைக் கொண்டுபோய் விட்டது ஒருமாதிரி எடம். அப்பா மாதிரி இருந்த ஒரு ஆளுக்கு எப்பெப்போ தோணுதோ என்னை பொம்பள மாதிரி உடுக்க சொல்லி என்னென்னவோ பண்ணுவான். ..ம்ம்… அதுவே பழகி பழகி ஒருகட்டத்தில என்னால ஆம்பள கணக்கா இருக்கமுடியல. அதுதான் எனக்கு தெரிஞ்சி என்னை மாதிரி இருக்கறவங்க கூட வந்துட்டேன். இப்போ ஆணுமில்லாம பெண்ணுமில்லாம அல்லாடறேன். சரி சரி ..நான் போறேன் என்னை இட்டுப்போக ஆளு வந்திருக்கு. எப்பனாச்சும் பாக்கணும்னா நான் இந்த பக்கம்தான் சுத்திக்கிட்டு இருப்பேன். இப்போ வரேன்.” என்று ஓடிச்சென்றான் செந்தில்..இல்லையில்லை ஓடிச்சென்றாள் செல்வி. அன்று எப்பொழுதும் செல்லும் பெட்டிக்கடைக்கு சென்றபோது முதலாளியான பெரியவர், “ஏன் தம்பி, இதையெல்லாம் விட்டுட்டு வேற வேலை தேடிகிட்டு போகலாமே. எதுக்கு கெட்டு சீரழியனும்?” என்று எப்பவும் சொல்லற மாதிரி சொன்னார். “ஆமாம் நான் ஒருத்தன் விட்டுட்டு போய்ட்டா எல்லாம் சரியாயிடுமா? அரசியல்வாதி, போலிஸ்காரன், பெரிய மனுஷனுங்க எல்லாம் என்னை மாதிரி பலரை வளர்த்துவிட்டு சுகம் காணும்வரைக்கும் இது மாறவே மாறாது. எனக்கும் இதுல கிடைக்கற பணம் வேற எதுலையும் கிடைக்காது, அப்புறம் நான் என்ன செய்ய? நானும் செக்குமாடு மாதிரி இதுக்குனே வளர்க்கப்பட்டவன். எல்லாருக்கும் இது எங்க எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியும், தனக்கு என்ன வந்ததுன்னு கண்டும் காணாம போறாங்க.. அவனுங்களுக்கு என்ன வந்தது, இப்போ என்னையும் சேர்த்து எல்லோருமே சுயநலபிண்டங்கள்.” என்று கூறிச்சென்றான் சுரேஷ். அங்கு எழும்பூர் ரயில் நிலையம், கொஞ்சம் வயது கூடியிருந்தாலும் கம்பீரமாக இருந்தான் செல்வம் , “என்ன தம்பி, ரெண்டு நாளா பாக்கறேன், இங்கயே சுத்திக்கிட்டு தூங்கிகிட்டு இருக்க?” …………. மறுபடியும் சுரேஷோ செல்வியோ உருவாக்கப்படுகிறார்கள். 20 விலைமாது ‘சரோஜா, இத கட்டிவுடு’ என்று மேனகா தன ஜாக்கெட்டின் பின்புறம் இருக்கும் நாடாவை கட்டுமாறு அழைத்தாள். ஜாக்கெட்டின் நாடவை அழகாக கட்டியதும் கண்ணாடியில் பார்த்தபோது மார்பகங்கள் ஜாக்கெட்டினை மீறி வெளிப்பட்டு மறைத்தும் மறையாமல் இருந்தது. அதன்மேல் புடவையின் தலைப்பை போட்டும் வெளிர் நிற புடவையின் உள் அடர்நிற ஜாக்கெட் செவ்வனே அவளின் எதிர்ப்பார்ப்பினை பொய்ப்பிக்காமல் பளபளத்த மாநிற ஸர்மத்தை நன்கு வெளிப்படுத்தியது. ‘என்ன இன்னிக்கு அலங்காரம் ஜோரா இருக்கு? எப்படியும் இன்னிக்கு நல்ல கிராக்கி கிடைச்சிரும். அது எப்படித்தான் நீ இன்னும்கூட அழகா இருக்கியோ, … உன்ன பாத்தா 15 வயசுல பொண்ணு இருக்குனுதான் ஒத்துக்குவாங்களா?’ என்ற சரோஜாவை பார்த்து மேனகாவிற்கு புன்னகைக்க மட்டுமே முடிந்தது. மேனகாவிற்கு இப்பொழுது 35 – 36 வயதே இருக்கும். அவளின் மகள் இந்த காலனியில் தான் பிறந்தாள். குழந்தைக்கு விவரம் தெரியும் முன்பே ஒரு நல்ல உள்ளம் படைத்த மனிதரின் உதவியுடன் ஆசிரமத்தில் சேர்த்துவிட்டு பின்னர் அவ்வப்போது சென்று பார்த்து வருவாள். இப்பொழுது மகளுக்கும் தெரியும், தன் தாய் செய்யும் தொழில் பற்றி. அவளாகவா விரும்பி வந்தாள் இத்தொழிலுக்கு? இப்பொழுது நினைத்தால் உடனே விட்டுவிட்டு சென்றுவிடத்தான் முடியுமா? 5 மணியடித்ததும் கிளம்பினாள். மாலை கடற்கரை காற்று சில்லென்று உடலைத் தழுவிச்சென்றது. சொன்ன நேரத்திற்கு சரியாக அந்த வெள்ளி நிற கார் வந்து அவள் முன் நின்றது. அங்கு பேருந்திற்காக காத்திருந்த சில கண்கள் அதுவரை கண்டுகளித்த வனப்பு செல்வதை ஏக்கத்துடன் கண்டு பெருமூச்சு விட்டது. அவள் சென்ற இடம் ஸ்வர்கபூமியாக இருந்தது. இங்கு பலமுறை வந்திருக்கிறாள். கொஞ்சம் முரட்டுத்தனமாகவும், கூடுதல் வெறித்தனமாகவும் நடந்துக்கொண்டாலும் செல்லும்போது கிடைக்கும் சன்மானத்தில் தன் மகளின் எதிர்காலம் இருப்பதை எண்ணி தாங்கிக்கொள்வாள். ‘என்ன மேனகா வந்துட்டியா? என்ன சொல்லு புதுசு புதுசா அனுபவிச்சாலும் நீ தர சுகமே தனிதான். இந்த பத்துவருஷத்துல உன்கிட்ட மாற்றமேயில்லை.’ என்று கூறிகொண்டே தன்மேல் படரவிட்டுக்கொண்ட அந்த பெரிய மனிதன், பரோபகாரி, வள்ளல் என்று வெளியுலகுக்கு காணப்படும் மனிதமிருகம் தன் அடையாளங்களை விட்டுச்சென்று தன் இச்சையை தீர்த்துக்கொண்டது. அன்று தன் இருப்பிடத்தை அடைந்ததும் சிறிது நேரத்தில் மற்றொரு கிராக்கி வந்தது. ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது. சிறிதுநேரத்தில் பொலிஸ் ரெய்ட் வந்தது. ‘வா வா வந்து ஏறு. எத்தன வாட்டி வந்தாலும் திருந்தாதுங்க. கான்ஸ்டபிள் எல்லாரையும் போட்டு கொண்டுவா. நான் முன்னாடி போறேன்’ என்று கூறி சென்ற போலிஸ்காரனின் பார்வை அங்கிருந்த பெண்களை கண்ணாலேயே பிரித்து மேய்ந்தது. அவளையும் அவளைப்போல் இருக்கும் மற்ற இரு பெண்களையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர். இதைப்போல் பலமுறை வந்த அனுபவத்தால் பெரிய பாதிப்பு அவளிடம் இல்லை. கூட வந்த பெண், சார் சார்…நான் அப்படிபட்ட பொண்ணு இல்லை. என்னை விட்டுடுங்க.’ என்று அழுதவளை யாருமே சட்டைசெய்யவில்லை. ‘சார்.. மேடம்…கூட இருந்தது என் கணவர் தான். இன்னிக்கி காலையில தான் கோவில்ல தாலி கட்டினார்.’ ‘அப்படியா? அப்போ உனக்கு இன்னிக்கு சாந்திமுகூர்த்தமா? ஆனா கூட இருந்த ஆளு உன்ன மனைவின்னு சொல்லவேயில்லை’ என்ற தலைமை போலிஸ்காரர் அவளை இளக்காரமாகப் பார்த்து சிரித்தான். ‘இல்லை சார், அவர் தான் இந்த தாலிய கட்டினது’ என்று காண்பித்த பெண்ணை பார்த்து ‘இந்த மாதிரி எத்தன பேர பாத்திருக்கோம். உடம்பு நமைச்சல் எடுத்தா இப்படி கிளம்பி வந்துடுவீங்களே’ என்று கூறிய போலீஸ்காரனின் வார்த்தையில் என்ன ஹாஸ்யம் கண்டார்களோ? ஸ்டேஷனில் இருந்த எல்லா காக்கிச்சட்டையும் விகாரமாக சிரித்தது. மேனகாவிற்கு அப்பெண்ணை பார்க்கும்பொழுது 16 வருடங்கள் முன் தான் கதறியது நினைவு வந்தது. இன்று அப்பெண் கதி அதோகதிதான். அந்த தலைமை காக்கிச்சட்டை அங்கிருந்த மற்ற போலீஸ்காரர்களிடம் கண்ணாலேயே பேசிவிட்டு உள்ளேயிருக்கும் அறைக்குள் சென்றார். சிறிது நேரத்தில் அப்பெண்ணை அழைக்க வேறு காக்கிச்சட்டை வந்து ‘ஏய்.. வா, ஐயா கூப்பிடறார். போ.. போய் சொன்னபடி நடந்துக்கோ. அப்போதான் சீக்கிரம் வெளிய வர மாதிரி கேஸ் போடுவாரு. சொன்னபடி நடக்கலேன்னா நீ வெளியவே வரமுடியாது’ என்றதைக் கேட்டு அப்பெண் பயத்துடன் கோழிக்குஞ்சாய் சுவரோரம் சுருண்டாள். ‘ஏட்டு பாவம் சின்ன பொண்ணு. எதுக்கு அது வாழ்கைய நாசமாக்கிட்டு. நா வேண்ணா அந்த ஆளுக்கு வரேன்’ என்று தன்னால் முடிந்தவரை அப்பெண்ணை இப்புதைகுழியில் விழாமல் காக்க முற்ப்பட்டாள். ‘நீ சும்மா இரு. உன்னோட பொண்ணு பத்தி அந்த ஆளுக்கு தெரியும். ஏதோ விட்டுவெச்சியிருக்கான். தேவையில்லாம எதுலையும் தலையிடாதே. எப்படியும் இந்த பொண்ண கண்ணு வெச்சிட்டாங்க. இன்னிக்கி இல்லைனாலும் என்னிக்காவது முடிச்சிடுவாங்க.’ என்று அப்பெண்ணை அழைத்துக்கொண்டு செல்வதிலேயே குறியாக இருந்தார். அவள் நகராமல் இருக்கவும் உள்ளிருந்த தலைமை காக்கிச்சட்டை அவர்கள் இருந்த இடத்திற்கே வந்து ‘என்னடி ..என்ன நடிப்பு ..பதிவிரதையா? சும்மா என்கிட்டே வெச்சிக்கிட்டே ..உன்ன தே…..லிஸ்ட்ல் சேத்துடுவேன்.’ என்று இழுத்துச்சென்றது அந்த தலைமை காக்கிச்சட்டை. சிறிதுநேரத்தில் பயங்கர அலறல் நின்று முனகல்களாக கேட்டது. வெளிவந்த தலைமை காக்கிச்சட்டை ‘ஏகாம்பரம்…என்ன சொல்லு புதுசு புதுசுதான். ம்…ம் … போ உனக்கும் விருந்துதான். இதைப்போல புதுசு வரும்போது கண்டிப்பா சொல்லு’ என்றது தலைமை காக்கி. ‘சரிங்கய்யா. ஐயா…’ என்று தலையை சொறிந்துகொண்டு நின்றது ஏகாம்பரம். ‘எல்லாம் ஞாபகம் இருக்கு. ப்பைல் மூவ் பண்ணிட்டேன். சீக்கிரமே அப்ரூவல் ஆயிடும். சரி நான் கிளம்பறேன். நீ போய் விருந்து சாப்பிடு’ என்று ஏகம்பரத்தை தட்டிக்கொடுத்து சென்றார் அந்த தலைமை. மறுபடியும் அலறல் கேட்கத் தொடங்கியது. மேனகாவின் மனதில் எழுந்த ‘யாருக்கு உடம்பு நமைச்சல்’ என்ற கேள்வி ஊமையின் வார்த்தையாய் மனதில் வடித்த இரத்தத்துடன் ஒழுகிச் சென்றது. 21 விழிப்புணர்வு! டிசம்பர் 1, பெரிய தலைகள் எல்லாம் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சி. டிசம்பர் 1 “டேய், சீக்கிரம் வாடா. ப்ரோக்ராம் ஆரம்பிச்சிட்டாங்க”. என்று சில மாணவர்கள் அந்த அரங்கை நோக்கி ஓடினர். “மச்சி அங்க நல்ல ஆங்கிள்ல்ல சீட்டுப் பிடிச்சி இருக்காங்க. வாங்கடா” “ஹப்பா, நீங்களாம் எப்ப வந்தீங்க? எங்களுக்குத் தெரியும் நீங்க சீக்கிரமே வந்து நல்ல இடமா பாத்து வெச்சியிருப்பீங்கன்னு.” என்று பேசிக்கொண்டே இருந்தனர். “மலரு வரலையா அக்கா?” என்று கேட்டாள் கவிதா. “இல்ல அவளுக்கு ஆள் வந்திருக்கு. அதுதான் அவள விட்டுட்டு நாங்க வந்தோம்.” என்றாள் ரமா. “ஹும், வந்திருந்தா பாத்திருப்பேன். பாத்து ரொம்ப நாள் ஆச்சு. இந்த மாதிரி அப்பப்போ பாத்துக்கறதுதானே.” இதெல்லாம் நடக்கும் பொழுது மேடையில் “மனிதனை அழிக்கும் நோய் எய்ட்ஸ். @#%^&*(“ என்று பேசிகொண்டிருந்தார்கள், பேச்சு முடிந்தவுடன் கலை நிகழ்ச்சிகளும் இருக்கும். அந்த அரங்கத்தின் இருக்கைகளை நிரப்பவும், தப்பித்தவறி பேசும் கருத்துக்கள் சென்றடையவும் பள்ளி, கல்லூரி மாணவர்களும், பாலியல்தொழிலாளர்களும் சில தொண்டுநிறுவனங்களால் அழைத்துவரப்பட்டுத் தலை எண்ணிக்கை காண்பிக்க உதவியது. “எலே, என்ன தூங்கற, முழிச்சிக்கோ” என்று இரவு பாலியல் தொழிலாளியாகப் பணிசெய்துவிட்டு வந்து இருக்கையிலேயே உறங்கும் கவிதாவை எழுப்பினாள் ரமா. “ஆமாம் போ” என்ற கவிதா தொடர்ந்து “என்ன சொல்லிட போறாங்க, எய்ட்ஸ் வராம இருக்கணும்னா காண்டம் போட்டுக்கோன்னு சொல்ல போறாங்க. மத்தவங்களோட படுக்காதே அப்படின்னு சொல்லற மாதிரி சொல்லிட்டு இப்படிச் சொன்னா எவன் திருந்துவான். காண்டம் கம்பெனிகாரனுக்கு லாபம். உனக்கும் எனக்கும் என்ன லாபம், நம்ப தலையெழுத்து மாறப்போறதில்லை. மேடைல இளிச்சிக்கிட்டு இருக்கே அந்தச் சோளக் கொல்லை பொம்மை – அந்த தொண்டுநிறுவன தலைவன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நம்பள தொட்டுதொட்டுப் பேசாமயிருக்கப் போறானா, இல்லை நம்ப கூட எவனும் படுக்காம இருக்கப்போறானா? காண்டம் போட்டுக்கிட்டு படுப்பான். அவ்வளவுதானே!” என்றாள். 1 FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/ Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/   2 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !