[] 1. Title Page 2. Cover 3. Table of Contents தஞ்சைச் சிறுகதைகள் தஞ்சைச் சிறுகதைகள்   சோலை சுந்தர பெருமாள்     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/thanjai_sirukadhaigal மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/mahan_guru_nanak This Book was produced using LaTeX + Pandoc இந்த மின்னூலைப் பற்றி உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது1 இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம். மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )2 [3] (http://www.gnu.org/copyleft/fdl.html) இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: - Guruleninn - Balu1967 - Vasantha Lakshmi V - Fathima Shaila - J.shobia - Arularasan. G - Sridhar G - Jskcse4 - Balajijagadesh - Yaazheesan - Info-farmer - HoboJones - Be..anyone - Fleshgrinder - Patricknoddy-commonswiki - Mecredis - Rocket000 - Xato உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx. அணிந்துரை தமிழ்நாட்டின் இசை, நாட்டியம், சிற்பக்கலை, ஆன்மீகம் முதலிய பல துறை வளத்துக்கும், வளர்ச்சிக்கும் தஞ்சை அரும்பெரும் பங்காற்றியுள்ளது. இது வரலாறும் வாழ்க்கையும் காட்டும் உண்மை. இசை மூலம் பக்தி வளர்த்த அருட்ச்செல்வர்கள் துதித்துப் போற்றியப் பெரியகோயில்கள் பலவும் சிற்பக்கலையின் செல்வச் சிறப்புகளோடு தஞ்சை மண்ணில் அழகு செய்கின்றன. இசைக்கலை வளர்த்த மேதைகள் பலரும், நாட்டியக் கலைக்கு பெருமை சேர்த்து தங்களுக்குப் புகழ் தேடிக்கொண்ட நடனமணிகளும், அவர்களைப் பயிற்றுவித்த நாட்டிய ஆசிரியர்களும் பெரும்பாலும் தஞ்சையைச் சேர்ந்தவர்களே. அதேபோலத் தமிழ் இலக்கியத்துக்கு வளமும், வனப்பும், புதுமையும், பெருமையும் தேடித்தந்த பேனா மன்னர்கள் பலப்பலர் தஞ்சையைச் சேர்ந்தவர்களாவர். திரு. சோலை சுந்தரபெருமாள் எடுத்துக்காட்டியிருப்பது போல, தமிழின் முதலாவது நாவல் என்ற சிறப்பைப் பெற்றுள்ள ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ எழுதிய வேதநாயகம் பிள்ளையும், தமிழின் முதலாவது துப்பறியும் நாவல் எனும் பெருமைக்குரிய ‘தானவன்’ ஆசிரியர் நடேச சாஸ்திரியாரும், முதலாவது தேசீய சீர்திருத்த நாவல் என்று கருதப்பட வேண்டிய ‘முருகன் ஓர் உழவன்’ படைத்த கா.சீ. வேங்கடரமணியும் தஞ்சை மண்ணின் மைந்தர்களேயாவர். அதைப்போல சிறுகதைக்குக் கலைத் தன்மையும் இலக்கிய கனமும் சேர்த்த படைப்பாளிகள் மிகப்பலர் தஞ்சையின் புதல்வர்களே. தஞ்சையின் இன்றையப் புகழ்பெற்ற படைப்பாளர்களில் ஒருவரான சோலை சுந்தரபெருமாள் தஞ்சை மண்ணி இலக்கியச் செல்வர்கள்-முக்கியமாக சிறுகதை பிரம்மாக்கள் பற்றி பெருமை கொண்டு, அவர்களைப் பற்றிய தகுந்த அறிமுக உரையோடு அவர்களது விசேஷமான சிறுகதை ஒன்றையும் தொகுத்து வழங்க முற்பட்டது இயல்பாக அவருக்குள்ள மண்ணின் பற்றுதலையும் பெருமையையும் புலப்படுத்துகிறது. சோலை சுந்தரபெருமாள் மண்ணின் மனம் பரப்பும்-தஞ்சை மண்ணின் மக்களது வாழ்க்கை முறைகளையும், இயல்புகளையும், பேச்சுவழக்குகளையும், பழக்கங்கள் சடங்குகள் சம்பிரதாயங்கள் முதலியவற்றையும் பதிவு செய்யும் தன்மையில் அருமையான பல நாவல்களையும், குறுநாவல்களையும், சிறுகதைகளையும் படைத்துப் பெயர் பெற்றிருக்கிறார். அவர் தனது முன்னோடிகள் மற்றும் சமகாலத்தவர்களான தஞ்சை சிறுகதைப் படைப்பாளர்களது எழுத்துக்களைப் படித்து ரசித்ததோடு அமையாது, அவ்வெழுத்தாளர்கள் பற்றியும் அவர்களது சிறுகதைகள் குறித்தும் வாசகர்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்ற அவாவுடன் “தஞ்சை சிறுகதைகள்” எனும் இந்த அருமையானத் தொகுப்பைத் தயாரித்திருக்கிறார். இத்தகைய ஒரு தொகுப்பைத் தயாரிப்பது சிரமமானக் காரியமாகும். படைப்பாளர்கள் பற்றிய விவரங்கள் சேகரிப்பது கஷ்டமான செயல். அதைவிடச் சிரமமானது அவர்களது படைப்புக்களைத் தேடிக் கண்டுபிடிப்பது. இச்சிரமமான பணிகளில் சோலை சுந்தரபெருமாள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பொறுமையோடும், விடாமுயற்சியோடும் அரிதில் முயன்று தகவல்களையும் நல்ல கதைகளையும் தேடிச் சேகரம் செய்துள்ளார். இது பாராட்டுதலுக்குரிய ஒரு சாதனைதான். எழுத்தாளர்கள் பற்றி முக்கியமானவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களைத் தொகுத்துத் தருவதுடன் அவர் தனது எண்ணங்களையும் எழுதியிருக்கிறார். அவருடைய நேர்மையும் நியாயமுமானப் பார்வை அவ்வித அபிப்பிராயங்களில் வெளிப்பட்டிருப்பதைக் காணலாம். இத்தொகுப்பு தஞ்சையைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர்களின் படைப்புத் திறமையையும், அவர்களது படைப்புக்களின் தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது. அதே வேளையில், பொதுவானத் தமிழ் சிறுகதையின் வளத்தையும், வனப்பையும் பன்முகத் தன்மையும் ஓரளவுக்கு எடுத்துக்காட்டும் தொகுப்பாகவும் இருக்கிறது. இதை இலக்கிய ரசிகர்கள் வரவேற்பாளர்கள் என்று எண்ணுகிறேன். தமிழ் இலக்கியத்தின் வளத்துக்காக பலவகைகளிலும் பணிபுரிந்து வரும் இனிய நண்பர் சோலை சுந்தரபெருமாள் மேலும் முன்னேறிச் சிறப்புறுவதற்கு அவரது ஆர்வமும், ஆற்றலும், உழைப்பும் துணைபுரியட்டும். வாழ்த்துக்கள்… பதிப்புரை பொதுவாக தஞ்சைப் பகுதியில் இசை, நாட்டியக் கலைகளும், நெல்லைச் சீமையில் இலக்கியக்கலையும் தம் சிகரங்களைத் தொட்டிருக்கின்றன என்று சொல்வர். ஆனால் தஞ்சை சிறுகதைகளைத் தொகுத்துப் பார்க்கும்போது காவிரிக்கரையில் கதைகளுக்கும் பஞ்சமில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. இந்த நினைப்பை நிஜமாக்கியவர் சோலை சுந்தரபெருமாள். அவரது இந்த முதல் முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இது எனக்கும் நெல்லைக் கதைகளைத் தொகுக்க வேண்டும் என்ற ஆசையைத் தந்துள்ளது. எனக்கு மட்டுமென்ன எவருக்கும் தம் மண் சார்ந்தோர் கதைகளைத் தொகுக்கத் தான் தூண்டும். அவ்வகையில் சோலை சுந்தரபெருமாள் செய்த காரியம் பெரிய காரியம். இவரை முதலில் இவரது கதைகள் மூலமே அறிவேன். இன்றுவரை நேரிலும் பார்த்ததில்லை. இவர் திடீரென்று ஒருநாள் “இதுபோல் தஞ்சைப் பகுதி சிறுகதைகளைத் தொகுத்துக் கொண்டிருக்கிறேன். காவ்யா இதனை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன். உங்கள் பதில் என்ன?” என்று கடிதம் எழுதினார். நான் யோசிக்கவே இல்லை. உடனே சம்மதித்துவிட்டேன். இதுபோன்ற எண்ணம் ஏற்கனவே எனக்குள் தோன்றியதுண்டு. முயற்சியில் இறங்காமல் இருந்தேன். இதை ஒருவர் செய்து முடிக்கிறார் என்றதும் எனக்குள் பரவசம். இன்று நூலாக உங்கள் கைகளில்…. இம்முயற்சியில் பல விஷயங்கள் பராட்டுவதற்குரியவை. ஒன்று, இத்தனை எழுத்தாளர்களையும் இனம் கண்டுகொண்டது. இரண்டு, ஒவ்வொருத்தர் கதைகளிலும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தது. மூன்று, இதற்காக அவர்களை அணுகி அனுமதி பெற்றது. நான்கு, ஒவ்வொரு எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்திய விதம், ஐந்து, இவரது வெளியீட்டுக்கான விடாமுயற்சி. இத்தொகுப்பில் குறிப்பிடத்தக்க அம்சங்களுள் ஒன்று, பல தலைமுறை எழுத்தாளர்களையும் நேர்த்தியாக நிரல் படுத்தியதுதான். அதோடு பல குணம் சார்ந்த எழுத்தாளர்களை உள்ளடக்கியதும். எழுத்து வியாபாரிகளை கவனமாக விலக்கியிருக்கிறார். மெளனி, கலைஞர், தி.ஜா, க.நா.சு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம் . மொத்தத்தில் எல்லாவற்றிலும் காவிரியின் ஈரம், வண்டலின் வாசம். தஞ்சைக்கே உரிய கோவிலும், கோவில் சார்ந்த குளங்களும் எல்லாக்கதைகளிலும் பரவி பரிணமித்துள்ளன. காவிரி கர்நாடகத்தில் இருந்துதான் தஞ்சைக்குப் பாய்ந்து கொண்டிருக்கிறது. காவ்யாவோ தமிழகத்திலிருந்து கர்நாடகத்திற்குப் பாய்கிறது. காவிரிக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. காவ்யாவிற்கோ தடைகள் இல்லை. தமிழும், தமிழ் சார்ந்த வாழ்க்கையும்தான் இதன் இலட்சியம். இத்தொகுப்பிற்கு இசைவு தந்த எழுத்தாளர்களுக்கும், அணிந்துரை அளித்த திரு.வல்லிக்கண்ணன் அவர்களுக்கும், அச்சிட்டுதவிய ‘மா’ அச்சகத்தாருக்கும் காவ்யாவின் நன்றிகள். அன்புடன் காவ்யா சண்முகசுந்தரம். முன்னுரை சங்ககாலம் தொடங்கி இன்றைய நவீன இலக்கியக் காலநெடுகிலும் தமிழுக்கு அரும்பணியாற்றிய அற்புதமான கலை இலக்கியவாதிகளை ஈன்றுள்ளது ‘தஞ்சை வண்டல்மண்’ என்று சொன்னால் மிகையில்லை. இந்திய மொழிகளில் முதன் முதலாக எழுதப்பட்ட நாவல் வங்காளியில்தான். 1865 இல் பங்கிம்சந்திரர் எழுதிய ‘துர்கேச நந்தினி’ என்று சொல்லப்படுகிறது. அதன் பின்னர் 1879 இல் தமிழில் வெளிவந்தது மாயூரம் வேதநாயகம்பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம். இந்த நாவல்தான் முதன் முதலில் தமிழுக்குப் பெருமை தேடித்தந்தது. அன்று தொடங்கியது நவீன இலக்கியம் - நாவல். இதன் அடுத்தக் கட்டப் பரிணாம வளர்ச்சியில் முகிழ்த்தது சிறுகதை. தஞ்சையை வளப்படுத்திய காவிரி நதி அதன் நீள அகல ஆழத்தைப் போலவே அந்த மண்ணில் தோன்றிய நவீன இலக்கியவாதிகள் பல்வேறு கால கட்டத்தில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்திருக்கிறார்கள். அதை நாம் கவனமாக நினைவில் கொள்ளவேண்டும் என்பதைச் சொல்லுவதே எனது தலையாய நோக்கமானது. தமிழில் முதல் நாவல் என்று போற்றப்படும் ‘பிரதாபமுதலியார் சரித்திரம்’ முதலாக மாதவய்யாவின் ‘பத்மாவதி சரித்திரம்’ ஈறாக ஆறு நாவல்கள் வெளிவந்திருப்பது நன்கு தெரிந்தும், கும்பகோணம் இஞ்சிக்குடி நடேச சாஸ்திரியார் எழுதிய நாவலான ‘தீனதயாளு’ 1900 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்துள்ள முதல் நாவல் என்று அவராலேயே கூறப்படுகிறது. அவர் நிலைப்பாட்டை கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை தெரிகிறது. அதாவது அவரே மேலைநாட்டினர் எழுதிவந்த துப்பறியும் தொனியில் 1894 இல் ‘தானவன்’ என்ற நாவலை வெளியிட்டுள்ளார். இவர் வழியிலேயே வந்த மாயூரம் எஸ்.ஏ. ராமஸ்வாமி ஐயர் மர்மங்கள். மாறுவேடங்கள். எதிர்பாராத சந்திப்புகள் முதலிய அம்சங்களுடன் நடப்பியல் சூழ்நிலையோடு கிட்டத்தட்ட 12 நாவல்கள் எழுதியுள்ளார். இவற்றில் ‘நீலகண்டன்’ குறிப்பிடத்தக்கது. இதே நாவலில் தான் மாயூரம் கடைவீதி மற்றும் அதன் கற்றுப்புறங்களைச் சார்ந்த மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி எழுதிக்காட்டியுள்ளார். அதே காலத்தில் சமகால சமுதாயத்தின் ஊழல்களையே முக்கியக் கருப்பொருளாக வைத்து எழுதியவர்களில் முதன்மையானவர் நாகை கோபாலகிருஷ்ணன்பிள்ளை ஆவார். இவர் எழுதிய ‘தனபாலன்’ குறிப்பிடத்தக்க நாவலாகும். அப்போதே அந்த நாவலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அதனால் அதனை அடுத்து வெளிவந்த ‘அலைகடல் அரசி’ என்னும் நாவலில் தன் நோக்கத்தையும் சுட்டிக்காட்டி எழுதியுள்ளார். அந்தச் சூழலில் தமிழ் நாவல்களில் கொச்சை மொழியும் அனாவசியமாக சமஸ்கிருத சொற்களைத் தேவையற்ற இடங்களில் பயன்படுத்துவதும் முறையல்ல என்று குரல் கொடுத்த மறைமலையடிகள் ஓர் ஆங்கில நாவலைத் தழுவி ‘குமுதவல்லி’யைச் செந்தமிழ் நடையிலேயே எழுதியுள்ளார். இந்தத் தழுவல் நாவல், இலக்கியத்திற்குப் பெரியதாகப் பங்களிப்புச் செய்யவில்லை என்று கூறுபவர்கள் கூட அவரின் ’கோகிலாம்பாள் கடிதங்கள்’ நவீனத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளனர். இன்று பெரிய அளவில் பேசப்பட்டு வரும் தலித் பெண்ணிய இலக்கியக் கொள்கையில் அடங்கிவிடும் நாவலை 1936 லேயே தஞ்சை மாவட்டம் - மயிலாடுதுறை - மூவலூர் ராமாமிர்தம்மாள் ‘தாசிகளின் மோசவலை’ என்ற பெயரில் எழுதியுள்ளார். இந்த நாவல்தான் தமிழ் நவீன இலக்கியத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் தோன்றிய ஒரு பெண் எழுதிய முதல் பெண்ணிய தலித்திய நாவலாகக் கொள்ளலாம். இருபதாம் நூற்றாண்டின் இறுதி காலக்கட்டத்தில், தற்போது வாழ்நிலையில் தஞ்சை மக்களின் வாழ்க்கை முறைகளை நாவலில் பதிவு செய்து வருபவர்களின் குறிப்பிடத்தக்கவர்கள் - எம். வி. வெங்கட்ராம், இந்திரா பார்த்தசாரதி, ‘செம்மலர்’ கே. முத்தையா, சா. சந்தசாமி, தஞ்சை பிரகாஷ், சி.எம். முத்து, சோலை சுந்தரபெருமாள், பாவைசந்திரன் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.  1920 ஆம் ஆண்டு தொடங்கி ஆங்கில் நாவல்களைத் தழுவி எழுதிவந்த வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஒரு புதிய முயற்சிக்கு முன்னோடியாக இருந்திருக்கிறார். அவர் எழுதிய நாவல்கள் தழுவலாக இருந்தாலும், தமிழ்நாட்டு இடப்பெயர், மக்கள் பெயர்களை வைத்து, ‘தமிழில்’ சுய படைப்புகள் போல எழுதப்பட்டுள்ளன. இதனால் பரந்துபட்ட வாசக உலகத்தை அவரால் கைப்பற்ற முடிந்தது. நாற்பத்தேழு தடிமனான நூல்களை அவர் எழுதிக் குவித்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் ’கண்டமேனிக்குக் கதை எழுதும் எழுத்தாளர்களை உற்பத்தி செய்தது இந்த வடுவூரார் தான்” என்று க.நா.சு. குறிப்பிடுகிறார். இவரைப் பின்பற்றி எழுதிக்குவித்து இன்று ஒரு வாசக வட்டத்தைக் கைப்பற்றி வைத் திருப்பவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் - சாண்டில்யன், மணியன், பி.சி. கணேசன், பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர்…. உத்தமசோழன். தமிழ்மொழியில் நாவல் பிறந்தது, ஆங்கிலம் நாவல் தோன்றி நூற்றாண்டுகள் கழித்துதான், தமிழ்நாவல் தோன்றி 50 ஆண்டுகள் கழித்தே சிறுகதை ஒரு தனியான இலக்கிய வடிவம் என்ற உணர்வுடன் அங்கீகரிக்கப்பட்டது என்று சிட்டி சிவபாதசுந்தரம் கூறுவதை ஏற்றுக் கொள்ளலாம். வ.வே.சு ஐயரும், மாதவய்யாவும் மறைந்த பின்னர் மணிக்கொடி மூலம் பெயர் பெற்ற புதுமைப்பித்தன் முதலியோரைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இந்த இடைப்பட்டப் பத்தாண்டு காலத்தில் சிறுகதை பற்றி குறிப்பிடும் படியாக எதுவும் வெளியானதாகச் சொல்வதற்கில்லை என்று குறிப்பிடுபவர்களை ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. இது ஆராயப்பட வேண்டியக் கூற்று என்று ‘தமிழில் சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்’ கட்டுரையாளர்கள் கூறியிருப்பது நியாயமாகப்படுகிறது. காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த கா.சி. வேங்கடரமணி வேளாண்மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்களை பின்னணியாகக் கொண்ட ‘முருகன் ஓர் உழவன்’ என்ற நாவலை எழுதி வெளியிட்ட பின் அவர் செய்த சோதனை முயற்சியான சிறுகதை வடிவத்தையே நாம் தமிழில் சிறுகதை வடிவத் தொடக்க காலமாகக் கொள்ளலாம். அதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. “மாயூரம் புத்தமங்கலத்தில் பிறந்த ‘கல்கி’ரா. கிருஷ்ணமூர்த்தி, நவசக்தி, விமோசனம், ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகள் மூலம் சிறுகதை இயக்கத்திற்கு ஊக்கமளித்தார். அவரைத் தவிரவும் அந்தக் காலக்கட்டத்தைச் சார்ந்த இரு முக்கியமான எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் கவனிக்கவேண்டும். அதில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த நாரணதுரைக்கண்னன். அடுத்தவர் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை தி.ஜ. ரங்கநாதன்..” என்று குறிப்பிடும் ’சிறுகதைத் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரையாளர்களின் கூற்றை’ இங்கே கவனமாக நோக்கவேண்டும். இலக்கியத்திற்கு முன்னோடிகள் என்று குறிப்பிடப்படும் சிலரில் குறிப்பிடத்தக்கவர்கள் தஞ்சையில் முகிழ்த்த இலக்கியவாதிகளாகவே இருக்கிறார்கள். இந்த முன்னோடிகளின் வழித்தடத்தை ஒட்டி சிறுகதை வடிவத்திற்கு பலம் சேர்த்த, சேர்த்துக் கொண்டிருக்கும் படைப்பாளிகளின் பட்டாளமே ஒன்று உண்டு. இவர்களையெல்லாம் ஒன்று திரட்டி, அவர்களின் வாழ்க்கைக் குறிப்போடு அவர்கள் சிறுகதை இலக்கியத்திற்கு அளித்துள்ள பங்களிப்பைப் பதிவு செய்யும் போது அவர்களின் சிறுகதை ஒன்றையும் தொகுத்திருக்கிறேன். சிறுகதை, கதைவெளிப்பாட்டின் உள்வட்டத்திலும் அதன் புறநோக்கிலும் படைப்பு தொடர்பான நிகழ்வுகள், மைய இயக்கங்கள் யாருக்கேயேனும் அல்லது தனது குழுவினரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும், பணத்திற்ககாகவும், பகட்டிற்காககவும் ஆசைப்படாமல் கலைவெளிப்பாட்டை முதன்மைப்படுத்திய இலக்கியவாதிகளின் சிறுகதைகளை மட்டுமே தேர்வு செய்யவேண்டும் என்ற இலக்கில்… இவ்விலக்கின் எதிர்முகமாய் எழுதிக்குவித்தவர்கள் கூட அவர்களை அறியாமலேயே சிறந்தச் சிறுகதைகளைப் படைத்திருக்கக்கூடும். அத்தியூத்தாற்போல வெளிப்பட்டிருக்கும் அந்தச் சிறுகதைகளைக் காட்டிலும், தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் ஓரிரண்டு கலைவடிவம் குறைவுபட்டிருக்கும்போது அந்தக் கதைகளையும் சேர்த்திருக்கலாமே என்று சொன்ன என் இலக்கிய நண்பர்கள் கூற்றை விடுத்துவிட்டேன். தஞ்சையில் முகிழ்த்த இலக்கியவாதிகளின் பங்களிப்பைக் கண்டு என்னால் பிரமித்துப்போக முடியவில்லை. காலங்காலமாய் தஞ்சை தமிழகத்தின் நெற்களஞ்சியமாய் போற்றப்பட்டு வருகிறது. அதற்குக் காரணம் காவிரி நதியின் வளமூட்டத்தாலும், மருத நிலத்தாலும் மட்டுமே இந்தப் பெருமை கிட்டிவிட்டதாக நான் நம்பவில்லை. மருதநிலத்தையே தங்கள் ’வாழ்க்கை’யாகக் கொண்ட வேளாண் மக்கள், முதன்மையானவர்கள். அவர்களின் பண்பாட்டுக்கூறுகளை படைப்பிலக்கியம் உள்வாங்கிக் கொண்டு வெளிப்படுத்தவில்லை. அப்படியே செய்திருந்தாலும் சேற்றில் வாழும் மனிதர்கள் ஒரு ஓரமாகவே நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். நில உடைமையையே மட்டும் உரிமை கொண்ட மேட்டுக்குடி மக்களின் பண்பாட்டுத்தளங்கள் அவர்கள் பேசிய மொழியிலேயே பதிவாகி இருக்கின்றன. கிட்டத்தட்ட இதுதான் தமிழ் என்ற நிலைப்பாடும் நிறுவப்பட்டு வருகிறது. சமீப காலமாய்ப் பெரும்பான்மை வேளாண் மக்களின் வாழ்க்கைப் பண்பாட்டுக் கூறுகள் அவர்கள் பேச்சுமொழியிலேயே கலைவடிவம் பெற்றுவருகின்றன. அதுபோல அபூர்வமாய் வரும் வெளிப்பாடுகளைக் கண்டு மகிழாமல் இருக்க முடியவில்லை. ஒட்டுமொத்தமாய் சொல்லும்போது எனது இலக்கிலிருந்து இம்மிகூட பிசகாமல் படிப்பறிவின் துணைகொண்டு; எனது இலக்கியப் பிதாமகர்களான திருவாளர்கள் வல்லிக்கண்ணன், தி.க.சிவசங்கரன் ஆகியவர்களின் வழிகாட்டலோடும், என் இலக்கிய வாழ்விற்குத் திருப்புமுனையாக நின்ற பொன்னிலன், பாவைச் சந்திரன், திருப்பூர் கிருஷ்ணன் போன்றவர்களின் உற்சாகமூட்டலோடும் இத்தொகுப்பைச் செய்திருக்கிறேன். இதைத் தவிரவும் இருபத்தோராம் நூற்றாண்டில் அடிஎடுத்து வைத்துக் கொண்டிருக்கும் இளைய படைப்பாளிகளின் பட்டாளமே ஒன்று உண்டு. அந்த நம்பிக்கைக்குரியவர்களின் பங்களிப்பையும் கவனமாகப் பதிவு செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளேன். இத்தொகுப்புக்கு வேண்டிய செய்திகளையும், சிறுகதைத் தொகுப்புகளையும் தேடிச் செல்லும்போது எனக்கு ஆக்கபூர்வமான வழிக்காட்டியாக இருந்த நண்பர்களுக்கு என் நன்றியும் வணக்கமும்…. அன்புடன் (சோலைகந்தரபெருமாள்) 1. ↑ தஞ்சை என்று இங்கே குறிக்கப்பெறுவது 1950 வரை இருந்த தஞ்சை மாவட்டத்தைக் குறிக்கப்படுவதாகும். பின்னர் தஞ்சை மாவட்டத்தின் மேலப்பகுதியில் கொஞ்சம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இணைக்கப்பட்டுவிட்டது. மீதமிருந்த தஞ்சை மாவட்டம் தற்போது தஞ்சாவூர் மாவட்டமாகவும், திருவாரூர் மாவட்டமாகவும், நாகப்பட்டினம் மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.  வண்டலுக்கும் அதன் படைப்பாளிகளுக்கும்  கா. சி. வேங்கடமணி 1920 ஆம் ஆண்டுகளில் ஒரு பெயர் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. அந்தப் பெயர் கா.சி. வேங்கடரமணி. தஞ்சை மாவட்டம் பூம்புகாரில் பிறந்தவர். கிராமத் தொண்டும் உழவுத்தொழிலும் முக்கியமென்று வற்புறுத்த எழுதிய நாவல்கள் ‘முருகன் ஓர் உழவன்’ ‘தேசபக்தன் கந்தன்’. முதலில் இந்த நாவல்களை அவர் ஆங்கிலத்தில் தான் எழுதினார். ஆங்கிலத்தில் எழுதினாலும் நாவலில் வலம்வந்த மாந்தர்கள் தஞ்சையில் வாழ்ந்த விவசாயிகள். ‘முருகன் ஓர் உழவன்’ நாவலை கி. சாவித்திரிஅம்மாள் தமிழில் மொழிபெயர்த்தார். ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டு இருந்த கா.சி. வேங்கடரமணி தமிழிலும் எழுதத் தொடங்கினார். முதலில் சிறுகதை எழுதும் முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ‘தேசபக்தன் கந்தன்’ என்ற நாவலை அவரே தமிழிலும் எழுதினார். இவர் எழுதிய நாவல்களில் தேசியமும் தேசியஇயக்கமும் பின்னிப்பிணைந்து நின்றன. இவர் தான் முதல் முதலில் தேசிய இயக்க நாவல் எழுதியதாக க.நா. க. குறிப்பிடுகிறார். இந்திய இலக்கியத்தில் பிரதானமாகப் பேசப்பட்ட எழுத்தாளர்களான முல்க்ராஜ் ஆனந்த், ஆர்.கே. நாராயன் போன்றவர்கள் இவருக்குப் பின்னர் எழுதத் தொடங்கினவர்களே. ‘வ.வே.சு ஐயரும், மாதவய்யாவும் எழுதிய காலத்திலேயே ’தமிழ் உலகு’ என்ற பத் திரிகையில் நாவலாசிரியராகப் பாராட்டப்பெற்ற கா.சி. வேங்கடரமணி சிறுகதைகளையும் எழுதி புகழ்பெற்றதாக சிட்டி சிவபாதசுந்தரம் குறிப்பிடுகிறார்கள். இந்த கா.சி. வேங்கடரமணி சிறுகதையில் பெரியதாக ஒன்றும் சாதித்து விடவில்லை என்று சொல்லுபவர்கள் கூட இவர் எழுதிய முருகன், கந்தன் இரண்டு நாவல்களும் கலை, உருவப் பிரக்ஞையுடன் எழுதப்பட்டுள்ளன என்று ஒரு முகமாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். பட்டுவின் கல்யாணம் ஸி. சுப்பிரமணிய சாஸ்திரியார் சால்ட் இலாகாவில் 6-ஆவது கிரேட் ஸ்ப் இன்ஸ்பெக்டர். வறண்ட கடப்பை கர்நூல் ஜில்லாக்களின் மலேரியா ஜ்வரம் நிறைந்த மலைப் பிரதேசங்களில் ஈச்சந்தோப்பின் நடுவிலே ஐந்து வருஷ காலம் அரும்பாடு பட்டுவிட்டு, இப்பொழுதுதான் ஒரு சட்டக் கமிஷனர் துரையின் தயவினால் ஆரணி வட்டத்தைச் சேர்ந்த தங்கமான சாலவேடு ரேஞ்சுக்கு மாற்றலாகி வந்திருக்கிறார். சாலவேடு ரேஞ்சி, கலால் இலாகாவில் எவரும் விரும்பத்தக்க இனிய இடம். அந்த ரேஞ்சு ஸப் இன்ஸ்பெக்டரென்றால் ஒரு குட்டிக் குபேரனென்றே எவரும் சொல்வர். அங்கே அந்த இலாகா உத்தியோகஸ்தரின் மேல் வரும்படிக்கு அளவே இல்லை. அவரவர் கை நீளமும் துணிவுந்தான் அளவு. பனங்காடென்றால் அங்கேதான் பார்க்க வேண்டும். பல மைல் விஸ்தீரணத்துக்கு லட்சக்கணக்கான பனைமரங்கள் மேகக் கூட்டங்கள் போல வானத்தை மறைத்துக்கொண்டு வரிசை வரிசையாக விளங்கும். வறண்ட வடவார்க்காட்டு வனாந்தரத்துக்குப் பனையே செல்வப் புதல்வி. அங்கே அது சர்க்காருக்கு மரமொன்றுக்கு ரூபா 3 வீதம் கொடுக்கிறது. ஏழை ஸால்ட் ஸப் இன்ஸ்பெக்டருக்கும் அது மரமொன்றுக்கு ஓரணா வீதம் பிச்சை கொடுக்கிறது. ஆனால் அந்த ஒரனாவில் பல பேருக்குப் பங்கு உண்டு. கொப்பரைத் தேங்காய்க்குட் புகுந்த கட்டெறும்பு போலக் கள்ளுக்கடை முதலாளிகளை அரிக்கும் கலால் இலாகாச்சேவகர் நால்வர் அந்த ஓரணாவில் காற்பங்கு வீதத்திற்குப் பிறந்தவர். சிறந்த வைதிக பரம்பரையில் பிறந்த நம் சாஸ்திரியார், ‘உப்பு இலாகா’ என்று மறை பெயர் பூண்ட கள்ளிலாகாவுக்கு வந்து சேர்ந்ததே காலத்தின் கோலம் தான். அவர் பிரயத்தனம் அதிகமில்லை. அவருடைய வம்சத்தின் பெருமையைப் பார்க்கின் அவர் வேதாந்த சிரோமணியாக வேண்டியவர். ஆனால், சென்ற ஐம்பது வருஷ காலமாக ஆங்கில மதுவை அருந்தி அதில் ஈடுபடாத அந்தண ஈயே பெரும்பாலும் இல்லையல்லவா? இவரும் அந்த ஈக்களில் ஒருவர் தாமே? கலால் இலாகாவில் மேலதிகாரியின் உபத்திரவம் அதிகந்தான். ஆயினும் பனைமரங்களின் பரம காருண்யத்தால் கிடைக்கும் மேல் வரும்படியைக் கொண்டு சாஸ்திரியாரும் அவர் தர்ம பத்தினி சுந்திரியம்மாளும் இதுவரையில் சுகமாகவே காலங் கழித்து வந்தனர். இப்போது நல்ல இடத்திற்கு மாற்றப்பட்டிருந்த படியால் அவர்கள் பாடு கொண்டாட்டமாகவே இருந்தது. 2 “கையிலிருக்கும் சிறிய மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்கும் சாமர்த்தியம் ஒரு நாளும் உங்களுக்கு வரப் போவதில்லை. வேதாந்தம் பேசியென்ன? சுலோகங்களை அடுக்கடுக்காய்ச் சொல்லி என்ன? யாருக்குப் பிரயோசனம்? காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டாமா?” என்று சாஸ்திரியாரின் தர்மபத்தினி சுந்தரியம்மாள் கேட்டாள். “ஆமாம் சுந்தரி, வாஸ்தவந்தான். வாய்ப் பேச்சுக்கு என்ன ? காசா பணமா? வாய் கொண்ட மட்டும் பேசினால் போகிறது. செய்து பார்த்தாலல்லவோ தெரியும் கஷ்டம்? என் வேலையை ஒரு நாள் செய்து பாரேன்.” “என்ன, இந்த முத்திரை போடும் பெரிய வேலையையா? அல்லது கள்ளு காலன் கணக்கையா? அபார வேலை தான்!” என்று சுந்தரி ஒரு பாணம் போட்டாள். ‘ஏதடா இது, எக்கச்சக்கமாகச் சிக்கிக் கொண்டோமே’ என்றெண்ணிச் சாஸ்திரியார் சிரித்துக்கொண்டு நீலகண்ட தீவு தரவர்களுடைய நீதி சுலோகங்களுள் அச்சந்தர்ப்பத்திற்கேற்ற தொன்றைத் தம் இனிய குரலில் சொல்ல ஆரம்பித்தார். “ஏன், நல்ல சாரீரத்தோடு பாட்டுப் பாடிவிட்டால் உண்மையை மறைத்து விட முடியுமோ? ஐந்து வருஷ காலம் அந்தப் பாழாய்ப் போன கடப்பை ஜில்லாவில் போய் மடிவானேன்? கேட்ட சமயத்தில் ஏ.வி.யின் (அஸிஸ்டென்ட் கமிஷனர்) காம்ப் கிளார்க்குக்கு இரண்டு டின் நெய் அனுப்பியிருந்தால்?-நம் கையை விட்டா கொடுக்கப் போகிறோம்? கையைக் காட்டிவிட்டால் எந்தக் கிராமணியாவது கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போகிறான்.” “ஆமாம் சுந்தரி, ஆட்டுக்கறி, புலால் சமைக்க, சோமயாகம் செய்த கிருஷ்ண தீஷிதர் பிள்ளை சுப்பிரமணிய சாஸ்திரி நெய் சப்ளை செய்ய வேண்டியதுதான்; நியாயந்தான்!” ’பரிகாசம் பேசி என்ன லாபம்? காலத்துக்கு ஏற்றவாறு போக வேண்டியதன்றோ நம் கடமை? இல்லாவிட்டால் நமக்கு எப்பொழுதும் ஏக்கந்தான் கதி. கடப்பையில் இந்த ஐந்து வருவடிமாகப்பட்டது போதாதா? பட்டுவின் கல்யாணத்தை உத்தேசித்தாவது நீங்கள் மேல் அதிகாரிகளிடம் கொஞ்சம் நயந்து போக வேண்டாமா?” “கந்தரி, பட்டு கல்யாணத்துக்கு என்ன அவசரம்? எப்பொழுது பார்த்தாலும் அதே நினைவாயிருக்கிறாயே. இன்னும் அவளுக்கு மழலை கூட மாறவில்லை. அதற்கு உள்ளேயா கல்யாணம்? இன்னும் மூன்று வருஷம் போகலாம். பாழாய்ப் போன நம் தேசத்தில் தான் இந்த வீண் அவசரம். எவ்வளவோ அழகாக அமைதியாக நடக்க வேண்டிய காரியங்களை, புத்தியில்லாமல் நம்மவர்கள் பேய்க் கோலமாக்கி விடுகிறார்கள் நாமாவது-” “இதென்ன கூத்து இது? குலத்தைக் கெடுக்கும் வேதாந்தம்! உங்களுக்குக் கண் இல்லையா? குழந்தை வளர்ந்து தழைந்து நிற்கிறாளே! இந்த ஆனிக்குப் பன்னிரண்டாகிறதே. நாம் இந்தச் சாலவேடு காட்டில் இல்லாமல் வேறு எங்கேயாவதிருந்தால் இத்தனை நாள் ஊரெல்லாம் கூக்குரலிட்டிருக்குமே? போன வருஷம் நாம் கடப்பையில் இருக்கும் போதே பட்டுவைக் கன்னிகாதானம் செய்து கொடுத்திருக்க வேண்டியது. இனிமேல் கொஞ்சம் கூட ஒத்தி வைக்க முடியாது. குழந்தையின் வாழ்நாள் வீணாகிவிடும்; வீண் அபக்கியாதிக்கும் இடம்.” “நீ அவசரப்படுவதனால் தான் அப்படி வீணாய் விடுமோவென்று பயப்படுகிறேன், சுந்தரி” என்று சாஸ்திரியார் வறண்ட குரலில் கவலையுடன் விடை அளித்தார். குழந்தை பட்டுவின் விவாக விஷயத்தில் சாஸ்திரியாரின் விருப்பம் வேறாயிருந்தது. பட்டு சுயம்வரம் செய்துகொள்ள வேண்டுமென்பது அவர் கருத்து. ஆனால் அதை வெளிப்படையாய்ச் சுந்தரியிடம் சொல்லி வெல்ல முடியுமா? ஆகையால் உபாயமாய்ச் சுற்றிச் சுழற்றிப் பேசலானார். “ஆமாம், சுந்தரி. இந்த வருஷம் பண்ணியாக வேண்டுமென்றால் பணம் எங்கே இருக்கிறது? பணமுங் கிடையாது; லீவும் கிடையாது.” “பணம் ஏன் கிடைக்காது? ஊரில் உங்கள் அண்ணா அட்டகாசம் பண்ணிக் கொண்டு பத்து வருஷமாக உங்கள் பாகத்தையும் வாயில் போட்டு ஏப்பமிட்டுக் கொண்டு இருக்கிறாரே? ஊர் நிலத்தைப் பந்தகம் வைத்தோ, விற்றோ குழந்தை கல்யாணத்தை நன்றாய் நடத்துகிறது, பத்து வருஷமாக நமது பாகத்திலிருந்து நமக்கு ஒரு மூட்டை அரிசியுண்டா? பாத்திரந் தேய்க்க ஒரு குத்துப் புளியுண்டா? தர்ப்பணத்துக்கு ஒரு மூட்டை எள்ளுண்டா? அண்ணா பாடும் மன்னிபாடும் கொண்டாட்டம்.” “சரி, சரி. பெண் பிள்ளைகள் பேச்சுக்கு அளவுண்டோ? நமது பாகத்தை என்ன செய்வது? விற்க முடியுமா? சுட முடியுமா? அண்ணா கலைத்து விடுவாரே! ஊர் நாட்டாண்மை அவரல்லவோ? ஊரில் அவர் இட்டதுதானே சட்டம்?” “அது போகட்டும். இப்பொழுதுதானே பனைமரம் சாற்றுக் குத்தகைக் காலம்? 5000 மரம் முத்திரை போட்டால் ரூ. 1000 வருமென்றும், சாலவேடு ரேஞ்சு கிடைத்து மூன்று வருஷகாலம் அங்கே இருந்து விட்டால் குபேரனாய் விடலாமென்றும் வாயப்பந்தல் போட்டீர்களே. அப்படி சாலவேடு ரேஞ்சு கிடைத்தால் திருப்பதி வேங்கடாசலபதிக்குக் கூட அபிஷேகம் பண்ணி வைப்பதாக வேண்டிக் கொண்டீர்களே? எல்லாம் மறந்து போய் விட்டதோ?” “ஆமாம், பின்னால் வரப்போகும் மேல் வரும்படியை நம்பி யார் கடன் கொடுப்பார்கள்? விஷயம் புரியாமலே நீ சொன்னதையே சொல்லுகிறாயே, கந்தரி!” “இந்தக் கதையெல்லாம் எனக்குத் தெரியாது. எப்படியாவது பட்டுவின் கல்யாணம் இந்த ஆனிக்குள்ளேயே நடந்தாக வேண்டும். உங்கள் பகவத்கீதையையும் ராமாயண பாராயணத்தையும் மூன்று மாசத்துக்குக் கட்டி வைத்துவிட்டுச் சோம்பலையும் விட்டு நமது ஜில்லாப் பக்கம் போய் அலைந்து திரிந்து வரனைப் பாருங்கள். பனந்தோப்பைச் சுற்றுவதில் உள்ள பாதி ஜாக்கிரதையுடன் வரன் தேடி முயற்சியும் செய்தால் விவாகம் நிச்சயம் முடிந்துவிடும். பி.ஏ. படிக்கும் பையனாகப் பார்த்துக் கையில் ரூ. 1000 கொடுத்து மேலே பி.எல்., படிக்கவும் நாம் ஏற்றுக் கொண்டால் மாதமாதம் மணியார்டர் தடையின்றிப் பண்ணிவிடலாம்.” “ஆமாம் சுந்தரி, நீ போடும் ‘பிளான்’ நன்றாய்த்தான் இருக்கிறது. ஆனால் அதற்குக்கூடக் கையில் குறைந்தது ரூ.2000 வேண்டுமே? எங்கே போகிறது? பனைமரம் முத்திரை போடுவது அடுத்த மாதம் ஆரம்பித்தாலும் ஆடியில் தானே முடியும்? அப்பொழுது பணமும் சில்லறை சில்லறையாகத் தான் வரும். மொத்தமாக முன் பணம் கிடைக்காதே. அதற்குள் கல்யாணக் கோர்ட்டுச் சாத்தியாய் விடும். கள்ளுக் காலத்துக்கும் கல்யாண காலத்துக்கும் ஒத்துக் கொள்ளாது போல் இருக்கிறதே, என்ன செய்வது?” சுந்தரி சற்று யோசித்து, “அப்படியானால் நம்ப துரசுவைத் தஞ்சாவூர்ப் பக்கங்களில் ஜாதகம் வாங்கி அனுப்பும்படி ஏற்பாடு செய்யலாமே?” “நம்ம துரசு உன் தம்பி துரைசாமியா? அவன் எதற்கு லாயக்கு? அவனிடம் பணத்தைக் கொடுத்தால் காபிக் கிளப்பிலும், நாடகக் கொட்டகையிலும், தாசி வீட்டிலும் செலவழித்து விட்டுப் பொய்க் கணக்குச் சொல்லி, ஏதாவது புரட்டு ஜாதகத்தில் நாலு வாங்கி அனுப்பி விடுவான். போதும், ஆதியில் நாம் அவனோடு பட்டபாடு!” “நீங்கள் பேசுவது நன்றாயிருக்கிறதே. உங்கள் மனம் போல் விட்டால் என்னையுந்தான் வேண்டாமென்பீர்கள். தனியாய் இந்தக் குடிகார ஜவான்களோடு பனங்காட்டில் திரிந்து கொண்டிருந்தால் போதும் உங்களுக்கு! ஆனால் ஈசுவரன் பெண்ணையும், பிள்ளையையும் கண் முடித்தனமாய்க் கொடுத்திருக்கிறானே; அதற்கென்ன செய்கிறது? துரசு வேண்டாமென்றால் நானே புறப்படுகிறேன், ஜாதகம் வாங்க. நீங்கள் ஒழிந்தபோது வரலாம்.” “அதைப் பற்றி யோசிப்போம் கந்தரி. படபடத்தால் காரியம் ஆகுமா?” என்று சொல்லிவிட்டு, சாஸ்திரியார் மறுபடியும் ஏதோ ஒரு சுலோகத்தை மெதுவாய்ச் சொல்லலானார். இந்தச் சம்பாஷனை இடைகழித் திண்ணையில் நடந்து வந்தது. சுந்தரி சூடான காபியை ஆற்றுவது போல பாவணை பண்ணிக் கொண்டிருந்தவள் காபியிருந்த லோடாவைக் கொஞ்சங்கோபத்துடன் தன் கணவர் பக்கம் தள்ளினாள். பாவம்! லோடா சாய்ந்து காபியுங் கொட்டியது. லோடாவும் கொஞ்சம் உருண்டது. காபி, இடைகழித் திண்ணை யிலிருந்து குற்றால மலைச்சாரலிலின்று விழும் அருவி போலக் கீழே விழுந்தது. பட்டு, கையில் ஒரு புஸ்தகத்துடன் வாசிப்பது போலப் பாவனை பண்ணிக் கொண்டு முற்றத்தில் உட்கார்ந்து இவர்கள் சம்பாஷணையைக் கவனித்து வந்தாள். சாஸ்திரியார் சற்று நிமிர்ந்து முற்றத்தை நோக்கினார். பட்டுவின் உருவம் அவர் கண்ணிற்பட்டது. தம் சாயல் தப்பின்றி அமைந்து அழகுடன் விளங்கும் குழந்தை பட்டுவைப் பார்த்துப் பெருமூச்செறிந்து, எப்படியேனும் இவ்வருஷம் விவாகத்தை நடத்த வேண்டியதுதான் என்று தீர்மானித்துக் கொண்டார். 3 தங்கமான சாலவேடு ரேஞ்சில் பனைமரம் முத்திரை போடுங் காலத்தில் சாஸ்திரியாருக்கு வரும்படி சரியாய்க் கிடைக்கவில்லை. ஏனெனில், சாஸ்திரியார், பெண்ணின் விவாகத்துக்காக லீவில் போகப் போகிறாரென்று ஸால்ட் சேவகர்கள் எப்படியோ தெரிந்து கொண்டு கள்ளுக் கடைக்காரர்களுக்கு பகிரங்கப்படுத்திவிட்டார்கள். இது வெளிப்படவே மாமூலான பணங்கள் கிளம்பவில்லை. சாஸ்திரியார் எவ்வளவோ சிரமப்பட்டும் ரூ. 500 தான் சேர்ந்தது. அது ரயில் செலவுக்குக் கூடப் போதாதே என்றெண்ணி மறுபடியும் ஒரு நாள் சுந்தரியிடம் மெதுவாய்ச் சொல்லிப் பார்த்தார். ஒன்றும் பலிக்கவில்லை. பெண்ணைப் பெற்ற தாயின் கவலையைப் பனங்காட்டு நரி போலத் தினந்தோறும் பனந்தோப்புகளில் சஞ்சரிக்கும் சாஸ்திரியார் அறிவாரா? சுந்தரி, தன் ஆபரணங்களெல்லாவற்றையும் அடகு வைத்தேனும் எப்படியாவது எங்கேயாவது பணம் வாங்கிக் கட்டாயம் கல்யாணத்தை முடித்தே தீர வேண்டுமென்று சாதித்தாள். மனைவி இப்படித் தியாகம் செய்யத் தயாரா இருக்கும்போது எந்தக் கணவன்தான் கம்மா இருக்க முடியும்? ஆகையால் சாஸ்திரியார் துணிந்து ஒரு நாள் சாலவேட்டைவிட்டு, வரன் தேடும் பொருட்டுப் புறப்பட்டுவிட்டார். அதற்குக் கொஞ்ச நாள் முன்னே துரசுவும் தனக்கு அனுப்பியிருந்த ரூ. 50-க்காக 4 ஜாதகங்கள் வாங்கி அவருக்கு அனுப்பியிருந்தான். அந்த ஜாதகங்களையும் சாஸ்திரியார் ஜாக்கிரதையாகக் கையில் எடுத்துக்கொண்டார். சுந்தரியுடனும், பட்டுவுடனும் தம் சேர்ந்த ஊராகிய ஆலங்காட்டுக்கு ஒருநாள் காலையில் வந்து சேர்ந்தார். சுந்தரி இதற்கு முன் ஆலங்காட்டுக்கு வந்து வருஷம் பன்னிரண்டாகின்றன. அவள் மாமனார் காலஞ்சென்ற போது வந்து எட்டிப் பார்த்தவள். அவளுக்குத் தன் ஓரகத்தியின் நினைவே நினைவு. அவ்வோரகத்தியோ மலடி. அவளுக்குச் சுந்தரியின் பேரைக் கேட்டாலே போதும்; நெய்யைக் கண்ட நெருப்புப் போலத்தான். நேரே கண்டு விட்டாற் கேட்க வேண்டுமா? அத்தகையவளிடம், தன் பெண்ணின் கல்யாணத்தை உத்தேசித்து எப்படியேனும் பொறுத்துப் போவோமென்று எண்ணியே வந்தாள் சுந்தரி. நல்ல வரன் கிடைத்துக் கல்யாணமும் சரிவர நடந்தேற வேண்டுமேயென்ற திகிலுடன் தன் குலதெய்வத்தை வேண்டிக் கொண்டாள். 4 வைகாசி, ஆனி மாதங்கள் சாஸ்திரியாருக்கு மிகவும் கஷ்டம்; அலைச்சல். துரசுவும் அவரை ஊரூராய் அழைத்துப் போனான். சாஸ்திரியார் தமது ஜில்லாவைப் பார்த்தே வருஷம் பதினைந்தாகி விட்டன. நாட்டு வழக்கம் ஒன்றும் தெரியவில்லை. எங்கெங்கே பாட்டுக் கச்சேரி, சதிர்க் கச்சேரி, புதுத் தாசிகள் உண்டோ அங்கங்கே வரன் பார்ப்பதற்காகச் சாஸ்திரியாரை அழைத்துச் சென்றான் துரசு; அவரும் பாவம்! அவன் இழுத்த இழுப்பிற்கெல்லாம் ஆளாகி அவன் கூடவே சென்றார். கள்ளுக் காசெல்லாம் காபிக் கடைகளிலும், நாடக மேடைகளிலும் தொலைந்தது. ஒழிந்த வேலையில் ஜாதகங்களைப் பொறுக்கிச் சோதிடன் இடம் காட்டிப்பார்த்தார்கள். ஜாதகம் பொருந்துவது இல்லை. விஷயம் இவ்வாறாகக் குழந்தை பட்டுவுக்குப் புருஷனே பிறக்கவில்லையோவென்று கூடச் சாஸ்திரியாருக்குத் தோன்றியது. சாஸ்திரியார் கையிலிருந்த ரூபாய் 500-ல் பெரும்பாலும் செலவழிந்து விட்டது. திரும்பிச் சாலவேடு போகச் செலவுக்கு ரூபா 50-தான் பாக்கி. ஆனி மாதம் தேதி 22 ஆகிவிட்டது. வரன் ஒன்றும் நிச்சயமாகவில்லை. “வரன் தேட ஒரு வருஷ வரும்படியைச் செலவிட்டாலும் முடியாது போலிருக்கிறதே. என்னடா இது! விவாகமென்னும் இன்பமயமான உயர்ந்த சடங்கு, இவ்வளவு கஷ்டம் உடையதாய்க் கேவலமாகி விட்டதே. சர்க்கார் உத்தியோகஸ்தனின் பெண்ணுக்குக் கல்யாண மென்றால் சாத்தியமில்லாத விஷயம்போல் இருக்கிறது” என்று சாஸ்திரியார் கவலையில் ஆழ்ந்தார். 5 சாஸ்திரியார் துயரத்துடனும், கவலையுடனும் ஆனி 25 ஆலங்காட்டுக்குத் திரும்பி வந்தார். குழந்தை பட்டு, வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். தகப்பனாரைக் கவலையுடன் கடைக்கண்ணால் பார்த்தாள். அப்பார்வை அவர் இதயத்தில் காய்ச்சிய வேல்போல் பாய்ந்தது. சாஸ்திரியின் தமையனார் உள்ளிருந்து வெளியே வந்து தம்பியை வரவேற்று, அவர் கையில் நீண்ட உறையிட்ட ஒரு சர்க்கார்த் தபாலைக் கொடுத்து விட்டுக் கண்களைச் சிமிட்டிக் கொண்டு பேசலானார். “சுப்பு, என் மேல் கோபித்துக் கொள்ளாதே. நான் தயாராய் இருக்கிறேன். 5000 கீத்து, 100 சவுக்குக்கால் கொட்டகைப் பந்தலுக்குத் தயாராயிருக்கின்றன. மேளகாரன், சமையற்காரர்களுக்கு அச்சாரம் கொடுத்துவிட்டேன். பூதலூர்ப் பையன்தானே நிச்சயம் செய்திருக்கிறாய்? நல்ல இடம் தான். ஆனால் நம் அந்தஸ்துக்கு மிகவும் மேற்பட்டது. 31 முகூர்த்தந்தானே?” தமையனாருக்குத் தம்பியிடம் அபிமானம் அதிகம் ! தம்பியின் முகத்தைப் பார்த்தவுடனேயே சமாசாரம் தெரிந்து கொண்டுவிட்டார். சர்க்கார்க் கடிதத்தையும் இரகசியமாய்ப் பிரித்துப் பார்த்து விஷயந் தெரிந்து கொண்டிருந்தார். சர்க்கார்க் கடிதம் பின்வருமாறு: - ’சுப்பிரமணிய சாஸ்திரி, ஆறாவது கிரேட்டு சப் இன்ஸ்பெக்டர், சாலவேட்டிலிருந்து மூலக்காடு ரேஞ்சுக்கு மாற்றல், லீவு முடிந்ததும் அங்கே போய் வேலை ஒப்புக் கொள்க.”  கல்கி இன்றைய மயிலாடுதுறையிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புத்தமங்களத்தில் பிறந்த ரா. கிருஷ்ணமூர்த்தி எல்லோராலும் “கல்கி” என்று அன்போடு அழைக்கப்படுகிறவர். அவர் தமிழுக்கு செய்திருக்கும் பங்கு குறிப்பிடத்தக்கது. கல்கி ஒரு சிறந்த பத்திரிகையாசிரியர் என்று குறிப்பிட்ட க.நா.சு. “தமிழில் வாசிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்வதற்குப் பலர் உதவியிருக்கிறார்கள். அவர்களில் யாரும் கல்கி உதவிய அளவுக்கு உதவியதில்லை என்று சொல்லவேண்டும்” என்று கூறியுள்ளதை மேம்போக்காக விட்டு விடக்கூடாது. “1925-35 ஆண்டுகளின் இடைக்காலத்தில் எழுத்தாளர் கல்கி தோன்றி நவசக்தி, விமோசனம், ஆனந்தவிகடன் பத்திரிகைகள் மூலம் சிறுகதைக்கும் அதன் இயக்கத்திற்கும் ஊக்கமளித்ததைக் குறைத்து மதிப்பிட முடியாது. அவரின் சிறுகதைகளின் சிறப்பை அவற்றின் வடிவத்தில் காண முடியாது என்றாலும் சில கதைகளில் உத்தி குறிப்பிடத்தக்கதாக இருக்கும். ஆனால் இந்த உத்தி ஒரே மாதிரியாய் பல கதைகளில் தென்படும். ஒஹென்றியின் தாக்கம் அதிகம் காணப்படும். ஒரு நண்பன் அல்லது ரயில் பயணி, கதை சொல்லுவது போல் அமைப்பதிலும், வடிவம் உருவாவதற்கும் ஒருவாரு முயன்று இருக்கிறார் என்று சொல்லலாம். இலக்கிய வடிவ அடிப்படையில் அவருக்குச் சிறுகதை நன்றாக கைவந்தது என்று சொல்வதற்கில்லை. அவருக்கிருந்த இயல்பான நகைச்சுவை, உள்ளடக்கத்தின் முக்கியத்துவத்தைப் பாதித்து விடுகிறது”… என்று சிட்டி சிவபாதசுந்தரம் குறிப்பிடுகிறார்கள். ஒற்றை ரோஜா, காரிருளில் ஒரு மின்னல், அலையின் கண்ணீர், மாடத் தேவன்களை, மயில்விழி மான், வீணைபவானி, மயிலைக்காளை, ஸ்வப்பன் லோகம், ஜீவரசம், கணையாழியின் கனவு, தாரகையின் தந்திரம் போன்ற கதைகள் குறிப்பிடும் படியானவை. தமிழில் வரலாற்று நாவல் என்று எத்தனையோ பேர் எழுதிக் குவித்தாலும் இவர் எழுதிய சிவகாமியின் சபதமும், பொன்னியின் செல்வனுந்தான் தமிழில் தமிழரின் உள்முகத்தோடும், புறத்தன்மையோடும் வெளிவந்தவை என்று சொல்லலாம். கல்கி, நாவலில் செய்த சாதனையை சிறுகதையில் செய்துள்ளாரா? என்று யோசிக்கும் போது இல்லை என்ற விடைதான் கிடைக்கிறது.  ஜீவரசம் முன்னொரு காலத்தில் நான் பதினெட்டு வயதுள்ள இளைஞனாய் இருந்தேன். கலாசாலையில் எம்.ஏ., வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். போதாதற்கு பரீட்சை சமீபத்திருந்தது. நானே பரிட்சையில் முதல் தரமாக தேற வேண்டுமென்பதில் பெரியப் பிரமே கொண்டவன். இவ்வளவும் தவறான விஷயம் என்பது பிற்காலத்தில் தான் எனக்கு விளங்கிற்று. பரீட்சைக்கு முன்னால் மாணாக்கர்கள் அமைதியாக படிப்பதற்கென்று ஒரு வாரம் விடுமுறைவிட்டார்கள். நகரில் இருந்தால் இந்த ஒரு வாரமும் நிச்சயமாய் வீணாகி விடுமென்று நான் அனுபவத்தில் கண்டறிந்தவன். காப்பி ஹோட்டல்கள், சினிமாக்கள், நாடகங்கள், சிட்டுக்கச்சேரிகள் முதலியவை குறித்துப் பரீட்சை வினாக்கள் கேட்பதாயிருந்தால் நகரிலிருக்கலாம். அதனால் அந்தக் குருட்டுப் பரீட்சைகளோ டார்வினைப் பற்றியும், ஷேக்ஸ்பியரைப் பற்றியும் அல்லவா கேள்வி கேட்கிறார்கள்? ஆகவே என்ன செய்யலாமென்று யோசித்தேன். ஓர் அற்புதமான யோசனை தோன்றிற்று. நகரத்துக்கருகிலுள்ள ஏதேனுமொரு கிராமத்துக்குச் சென்று அந்த ஒரு வாரமும் அமைதியாகப் படித்துப் பரீட்சைப் பாடங்களைக் கரைத்துக் குடித்துவிட்டு வந்து விடுவதென்று தீர்மானித்தேன். அவ்வாறே ஒரு நாள் காலையில் ஸ்நானஞ் செய்து உடையணிந்து கைப்பெட்டி ஒன்றில் டார்வின், ஷேக்ஸ்பியர் முதலியவர்களையும், மாற்றி அணிவதற்குச் சில துணிகளையும் எடுத்து வைத்துக்கொண்டு கிளம்பினேன். ரயில்வே ஸ்டேஷன் சென்றதும் எந்த ஊருக்கு டிக்கெட் வாங்கலாமென்று பார்த்தேன். நகருக்கு ஐந்தாறு ஸ்டேஷனுக்கப்பால் தாமரைவேலி என்ற ஸ்டேஷன் இருந்தது. ஊரின் பெயர் அழகாய் இருந்தபடியால் அந்த ஸ்டேஷனுக்கே டிக்கெட் வாங்கிக் கொண்டு ரயில் ஏறினேன். ரயில் ஒடிய போது சிந்தனையும் வெகுதுரம் ஓடிற்று. தாமரைவேலி! ஆஹா! என்ன அழகான பெயர்! ஊரும் அத்தகைய அழகாகத்தான் இருக்கும். பக்கத்திலே சல சலவென்று ஜலம் ஓடிக்கொண்டிருக்கும் ஆறு, தாமரையும், அல்லியும் பூத்திருக்கும் பெரிய குளம், தென்னந்தோப்புகள், மாமரங்கள், வாழைத்தோட்டங்கள்; வீடுகள், இரண்டு சிறு கோவில்கள், ஆகா படிப்பதற்கு எவ்வளவு அமைதியான இடம்? சாப்பாட்டைப் பற்றிக் கவலையில்லை. ஹோட்டல் இராதென்பது உண்மையே. அதனால் என்ன மோசம்? ஒரு வீட்டிற்குள் தைரியமாக நுழைந்து சாப்பாடு போடும்பபடிக் கேட்கலாம். விஷயத்தைச் சொன்னால் சந்தோஷமாகப் போடுவார்கள். “லொடக்” என்று ஆடிக்கொண்டு ரயில் நின்றது. அவசர அவசரமாக வண்டியை விட்டுக் கீழே இறங்கினேன். என்ன ஏமாற்றம். எல்லாம் வெறும் ஆகாசக் கோட்டையாக முடிந்தது. ஆறு இருந்தது; தண்ணீர் இல்லை, குளம் இருந்தது. தாமரையும், அல்லியும் இல்லை. தென்னைமரம் இருந்தது. ஆனால் சமீபத்தில் இடி விழுந்திருக்க வேண்டும். எனவே மட்டையாவது தேங்காய் குலையாவது இல்லாமல் மொட்டையாய் நின்றது. மாமரம் பெயருக்கும் இல்லை. புளியமரம் ஏராளம். கோவில் ஒன்றிருந்தது. ஆனால் இடிந்து பாழாய் கிடந்தது. நந்தவனத்துக்குப் பதிலாக எங்கெங்கும் குப்பைமேடுகளாய் காணப்பட்டன. ஒரு கள்ளுக்கடை, ஒரு காப்பி ஹோட்டல், ஒரு போலீஸ் ஸ்டேஷன், ஒரு சுருட்டுக்கடை, ஒரு பள்ளிக்கூடம், பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயர் “அர்ரிதமெட்டிக்” என்று அழுத்தந்திருத்மாய் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆயினும் நான் தைரியத்தைக் கைவிடவில்லை. அடுத்த ரயில் வரும் வரையில் கிராம வாசம் செய்தே தீருவதென்று தீர்மானித்தேன். வேறு வழியும் இல்லை. என்னதான் இருந்தாலும் கிராமம். ஆகா! எவ்வளவு விஸ்தாரமான மைதானம்? என்ன அழகான அருகம்புல்? எவ்வளவு நேர்த்தியான மண் ? அப்புறம் இதோ, தெரியும் சப்பாத்திக் கள்ளி இவையெல்லாம் காணக்கிடைக்குமா? அவசரப்பட்டு கிராம வாழ்க்கை ‘வெறும் ஹம்பக்’ என்று தீர்மானித்தது பிசகுதான். எப்படியும் இந்தப் புல் நிறைந்த மைதானத்தில் சிறிது நேரம் உட்கார்ந்து அமைதியாகப் படிக்கலாம். ஆனால் அதற்கு முன்னால் கொஞ்சம் தாகத்துக்குச் சாப்பிட வேண்டும். தொண்டை வரளுகிறது. காப்பி கிளப்புக்கு ‘சை’ கிராமத்துக்கு வந்தும் காப்பி கிளப்பா? ஏதாவது ஒரு வீட்டுக்குள் நுழைந்து கெஞ்சம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு வரலாம். கிராமத்துக்குள் சென்றேன்; கொஞ்சம் ஒதுங்கி நின்ற ஒரு வீடு என்னைக் கவர்ந்திழுத்தது. அது சிறிது பாழடைந்த வீடு. “ஏழை வீட்டுக்குப் போனால்தான் நல்லது. தைரியமாகக் காலனா கொடுத்து மோர் கேட்கலாம்” என்று எண்ணியவாறு, வீட்டினருகில் சென்றேன். பெயர் “லலிதாவிலாசம்” கதவு தாளிட்டிருந்தது. வெளிச்சுவரில் ஏதேதோ எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தேன். இராஜப் பிரதிநிதி அர்வின் பிரபுவுக்கு ஒரு நோட்டீசு: இது கண்ட ஒரு வாரத்திற்குள் நீர் நமக்கு தரவேண்டிய இரண்டு லட்சம் ரூபாயையும் அனுப்பி வைக்க வேண்டியது. இல்லாவிடில் உம்மை வேலையிலிருந்து தள்ளிவிடும்படி சிபாரிசு செய்யப்படும்.” சென்னை ஹைகோர்ட்டு நீதிபதிகளையெல்லாம் இந்தியாவிலுள்ள பற்பல இடங்களுக்கு மாற்றியிருப்பதாக மற்றோர் உத்தரவு எழுதப்பட்டிருந்தது. இடையிடையே “ஜீவரசம், ஜீவரசம்” என்று பல இடங்களில் பொறிக்கப்பட்டிருந்தது. “சரி! நமது கிராம வாசம் வீண் போகவில்லை. இங்கே ஏதோ வினோதம் இருக்கிறது” என்று எண்ணிக் கொண்டேன். கதவைத் தட்டினேன். சிறிது நேரத்திற்கெல்லாம் கதவு திறக்கப்பட்டது. முதலில் ஒரு கரும்பூனை வெளியே வந்தது. அப்புறம் ஒரு முயல்குட்டி, அப்புறம் ஒரு நாய், பின்னர் ஒரு கிழவரின் முகம் மட்டும் தெரிந்தது. பிறகு கிழவரின் உருவம் முழுதும் வெளியே வந்தது. ஆகா! எத்தனைய கிழவர்? நீண்ட வெண்ணிறத் தாடி? முழங்கால் வரை வந்த வெண்மையான மேலங்கி, கண்ணில் மூக்குக் கண்ணாடி, நெற்றியில் குங்குமம்; ஆஜானுபாகுவானத் தோற்றம். யாரோ பிரும்மஜான சங்கத்தைச் சேர்ந்த மகானாயிருக்க வேண்டுமென்றும், இங்கேத் தனிமையாக வந்து தவம் செய்கிறார் என்றும் நான் எண்ணினேன். “என்னப்பா! எங்கே வந்தே? என்றார்.”தங்களுக்கு தொந்தரவு கொடுத்தற்காக மன்னிக்க வேண்டும். தாகமாய் இருக்கிறது. கொஞ்சம் மோர் கிடைக்குமா? என்று கேட்க வந்ததேன்” என்றேன். “மோர்-மோர் என்ன? மோரா? ஓகோ மோர் சர்ரி-சர்ரி உள்ளே வா” என்றார் கிழவர். எனக்குக் கொஞ்சம் சந்தேகம் தட்டிற்று. இருந்தாலும் உள்ளே சென்றேன். சுற்றும் முற்றும் பார்த்ததும் என் கலக்கம் அதிகரித்தது. காரணம் அவ்வளவு விசித்தரமாக சாமான்கள் அங்கே காணப்பட்டன. பழைய அலமாரி அதற்குள் கணக்கில்லாத கண்ணாடிப் புட்டிகள், ஒடிந்த மேஜை, அதன் மீது கண்ணாடிக்குழாய் முதலிய என்னென்னவோ கருவிகள், மூலைக்கு மூலை கிழிந்தப் பழையப் புத்தகங்கள், ஒரு ஜோடிப் பூனை, நாலு முயல், ஒரு நாய், எலி வலை முதலியன. கிழவர் ஒரு சட்டியிலிருந்து கொஞ்சம் மோர் ஊற்றிக் கொடுத்தார். அதை மறுப்பதற்கு எனக்கு தைரியமில்லை. வாங்கிக் குடித்தேன். சட்டென்று ஒரு யோசனை தோன்றிற்று. “தாங்கள் என்ன இரசாயன சாஸ்திரியோ?” என்று கேட்டேன். ரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டதாகவே எண்ணினேன். “என்ன? என்ன? ரசாயானாமா? இல்லை! ஹ!ஹ!ஹ! ர்ரசவாத சாஸ்திரி ர்ரசவாத சாஸ்திரி, ர்ரசவாதம் ர்ரசவாதம், ர்ரசவாதம்.” கிழவன் பைத்தியக்காரன் என்பது இப்போது நன்கு விளங்கிவிட்டது. திரும்பிப் போவதற்காக ஓர் அடி எடுத்து வைத்தேன். ஆனால் அதற்குள் கிழவன் என் கையைப் பிடித்துக் கொண்டான். ஏதோ பெரிய ரகசியம் சொல்வது போல் அவன் கூறியதாவது. “தெரியுமா? நான் ஜீவரசம் கண்டு பிடித்திருக்கிறேன்! ஒரு லட்சம் உயிர்களின் வடிகட்டி ஜீவசத்து! ஆமாம் ஒரு லட்சம் உயிர்கள்! ஓர் உயிருக்கு நூறு வருஷம், லட்சம் உயிருக்கு கோடி வருஷம் கோடி வருஷத்து ஆயுள் இதோ இந்தப் புட்டியில் அடங்கியிருக்கிறது!” இவ்வாறு சொல்லிக் கிழவன் மேஜையிலிருந்து ஒரு சிறு புட்டியை எடுத்துக் காட்டினார். இந்தப் பைத்தியக்காரனிடமிருந்து எப்படித் தப்பி வெளியே போகப் போகிறோம் என்று எனக்கு ஏக்கம் உண்டாகிவிட்டது. “நல்லது, ஐயா! ரயிலுக்குப் போகவேண்டும், மோர் கொடுத்தீர்களே, அதற்கேதாவது காசு…” என்று நான் தயங்கினேன். “நீ நல்லப் பையன். நான் சொல்கிறதைக் கேளு. ஒரு புட்டி வாங்கிக்கோ, ஜீவசரம் ஒரு லட்சம் உயிர்களின் வடிகட்டிய சத்து, கோடி வருஷ ஆயுசு” என்ற கிழவன் ஜீவரசத்தைப் பற்றி வர்ணித்தான். அங்கிருந்து தப்புவதற்கு இது தான் வழியென்று நினைத்தேன். “என்னவிலை?” என்று கேட்டேன். “விலை மூன்று ரூபாய். நீ நல்லப் பையன், உனக்கு மட்டும் இரண்டு ரூபாய்.” ஒரு குவளை மோருக்கு இரண்டு ரூபாய் நல்லப் பேரம். அல்லவா? ஆனால் எனக்கு அப்போதிருந்த மனக் குழப்பத்தில் கையில் இருந்த பத்து ரூபாயையும் கேட்டாலும் கொடுத்து வந்திருப்பேன். நான் வெளியே வந்து அந்த வீட்டின் கீழண்டைச் சுவரைப் பார்த்தபோது அதில் “பித்துக் கொள்ளிக் கிழவன்” என்று யாரோ குழந்தைகள் எழுதியிருப்பதைக் கண்டேன். என் நடையின் வேகம் நான் சொல்லாமலே அதிகமாயிற்று. நேரே ரயில்வே ஸ்டேஷனுக்குப் போனேன். இப்போதுதான் ஒரு வண்டி போயிற்றென்றும், அடுத்தவண்டி வர இன்னும் மூன்று மணி நேரம் ஆகுமென்றும் சொன்னார்கள். “அட தெய்வமே” என்று எண்ணியவனாய் ஸ்டேஷனில் இருந்த கடையில் வாழைப்பழம் வாங்கிக்கொண்டு சமீபத்தில் புல் முளைத்திருந்த ஒரு மைதானத்தில் போய் உட் கார்ந்தேன். வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது. ஏதோ வந்ததற்கு சிறிது நேரம் அமைதியாய்ப் படிப்போம் என்று எண்ணினேன். அதற்கு முன் மருந்துப்புட்டியை எடுத்து ஒருமுறை பார்த்தேன். பெருமூச்சுடன் அதைக் கீழே வைத்துவிட்டு டார்வின் புத்தகத்தைக் கையில் எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். ஜீவ வர்க்க பரிணாமத்தைப் பற்றியும் குரங்கிலிருந்து மனிதன் எப்படிப் பிறந்தான் என்பதைப் பற்றியும் வெகு ரசமாகச் சொல்லப்பட்டிருந்தது. அந்த ரசத்தில் சொக்கில் போன எனக்கு ஆனந்தமான நித்திரை வந்தது. “சை? தூங்கக்கூடாது!” என்று எண்ணி நான் கண்ணைக் கசக்கியபோது சமீபத்தில் காலடி சத்தம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தேன். எதிரில் யார் வந்ததென்று நினைக்கிறீர்கள்? புத்தகத்தில் யாரைப் பற்றி படித்துக் கொண்டிருந்தேனோ அந்த சாஷாத் ஆஞ்சனேயப் பெருமாள்தான். குரங்குடன் மனிதன் ஒருவனும் கூட வந்தான். அவன் கழுத்தில் ஒரு பழைய ஹார்மோனியப் பெட்டி தொங்கிக் கொண்டிருந்தது. குரங்கு, சட் டையும் குல்லாவும் அணிந்திருந்தது. “இந்தப் பிராணியிடமிருந்தா நாம் எல்லாரும் பிறந்தோம்? டார்வினும் ஒரு பெரிய பைத்தியக்காரன் போலிருக்கிறதே” என்று நான் எண்ணினேன். “குட்மார்னிங் சார்!” என்றான் குரங்காட்டி. அவனுடைய குரங்கு என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்ட தென்பதை அவன் எப்படியோ கவனித்திருக்க வேண்டும். “அனுமார்! ஐயாவுக்கு சலாம் போடு!” என்றான். அனுமார் சலாம் போட்டது. “ஐயாவுக்கு வாத்தியம் கேட்கப் பிரியமா? என்று கேட்டான் அந்த மனிதன். “இல்லை” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னேன். ஹார்மோனியம் என்றாலே எனக்குப் பிடிக்காது. அதிலும் நான் வசித்த ஹோட்டலுக்கு அடுத்த வீட்டிலிருந்த ஹார்மோனியம் என் படிப்பைக் கெடுப்பது போதாதென்று இங்கு அமைதியாகப் படிக்க வந்த இடத்திலுமா? “ஐயா, அனுமாருக்குக் காலனா கொடுப்பாரு. நான் வாத்தியம் வாசிப்பேன்” என்றான் மனிதன். “இரண்டும் இல்லை” என்றேன் நான். “அப்படியானால் ஐயா அரையனாக் கொடுப்பாரு. நான் வாத்தியம் வாசிக்காதிருப்பேன்!” என்றான் மனிதன். இப்போது அவன் குரங்கின் விலாவில் குத்தவே அது ஓடிவந்து தன் தலையில் இருந்த குல்லாவை எடுத்து நீட்டியது. மறுபடியும் தோல்விதான். சட்டைப் பையில் கை விட்டுக் காலனாக்களைத் தேடிக்கொண்டிருந்தேன். இதற்குள் குரங்கின் கவனம் பக்கத்திலிருந்த வாழைப்பழத்தின் மேல் போய்விட்டது. அப்பொழுது எனக்கு அருமையான ஒரு யோசனை தோன்றிற்று. கிழவனிடம் பெற்ற ஜீவரசத்தை இந்தக் குரங்குக்குக் கொடுத்து ஏன் பரிசோதிக்கக் கூடாது என்பதுதான் அந்த யோசனை. சட்டென்று ஒரு வாழைப்பழத்தை உரித்து, குரங்காட்டிப் பாராமல் புட்டியிலிருந்து அதில் கொஞ்சம் மருந்து ஊற்றி குரங்கனிடம் கொடுத்தேன். குல்லாவில் அரையனாவும் போட்டேன். அடுத்த கணத்தில் குரங்கு என் எஜமான் தோளுக்குப் போயிற்று; வாழைப்பழம் குரங்கின் வயிற்றுக்குப் போயிற்று; குரங்காட்டி என்னை வாழ்த்திக்கொண்டே போனான். “இவ்வளவுதானா? ஒன்றும் இல்லையா!’ என்று நினைத்துக் கொண்டு மீண்டும் படிக்கத் தொடங்கினேன். ஆனால் குரங்காட்டி கொஞ்ச தூரம் போய் நின்று குரங்கனிடம் ஏதோ வாதமிடுவதைக் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தேன். ஆகா? இதென்ன விந்தை? பழைய குரங்கு எங்கே? இந்த பெரிய குரங்கு எங்கிருந்து வந்தது? குரங்காட்டி எதோ தந்திரத்தினால் தான் இந்தப் புதிய குரங்கைக் கொண்டு வந்து விட்டானா? அப்படியிருக்க முடியாது. ஏனெனில் குரங்காட்டியிடம் என்னைப் போலவே அதிசயமடைந்தவனாய்க் காணப்பட்டான். அவன் குரங்கைக் கீழே இறக்கிவிட்டு அதைப் பார்த்து ஏதேதோ ஹிந்துஸ்தானி பாஷையில பேசினான். நன்றாகக் கண்ணை துடைத்துக் கொண்டு பார்த்தேன். முன்பு பார்த்த குரங்கைவிட இது மூன்று மடங்கு பெரியதாயிருந்தது. நிமிஷத்துக்கு நிமிஷம் அது வளர்ந்து வந்ததுடன் உருவமும் மாறி வந்தது. இப்போது குரங்காட்டியின் மார்பு அளவுக்கு அது உயர்ந்து விட்டது. அதன் முதுகு வளைவு மறைந்து போயிற்று. கால்கள் நிமிர்ந்து வந்தன. ஆனால் குல்லா பழைய குல்லாதான். சட்டையும் பழைய சட்டைதான். ஆனால் உடம்பு பருத்த போது சட்டை தாறுமாறாய்க் கிழிந்து விட்டது. எனவே பழைய குரங்குதான் இப்படி வளர்ந்து வருகிறதென்பதில் சந்தேகமில்லை. வாயைப் பிளந்த வண்ணம் இந்த அற்புதக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். குரங்க அல்லது மாஜி குரங்கு இன்னும் சில நிமிஷத்தில் தன் எஜமானின் தோளளவுக்கு வந்து, அவன் முகத்தை வினோதமாக உற்றுப் பார்க்கத் தொடங்கிய போது அதற்கு மேல் அந்த மனிதனால் தாங்க முடியாமல் போய்விட்டது. அவன் ஹார்மோனியப் பெட்டியைத் தொப்பென்று கீழேப்போட்டு விட்டு, “ஆண்டவனே! அல்லாவே” என்று கூச்சலிட்டுக் கொண்டு ஓட்டம் பிடித்தான். ரயில் வேலி, தண்டவாளம், அதனருகிலிருந்த வாய்க்கால் முதலியவற்றை அவன் சிறிதும் பொருட்படுத்தாமல் ஒரே தாண்டாக தாண்டி குதித்து ஓடினான். ஆனால் நானோ இந்த மகத்தான அற்புதக் காட்சியைப் பார்த்த வண்ணம் மந்திரத்தினால் கட்டுண்டவன் போல் உட்கார்ந்திருந்தேன். குரங்காட்டி ஓடிப்போனதும் ’மாஜி குரங்கு திரும்பி பார்த்தது. மெதுவாக என்னை நோக்கி வந்தது. இப்போது காட்டுமிராண்டி மனிதனைப் போல் காணப்பட்டது. இதற்குள்ளாக சட்டை சுக்கு சுக்காகக் கிழிந்து கீழே விழுந்து விட்டபடியால் தலையில் குல்லாவைத் தவிர வேறொன்றும் இல்லை. அந்த வினோதப் பிராணி என்னெதிரே வந்து உற்றுப் பார்த்தது. எப்படியேனும் அதை திருப்தி செய்யவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. பக்கத்தில் இருந்த வாழைப்பழத்தை சீப்புடன் எடுத்து அதனிடம் கொடுத்தேன். அந்தக் குரங்கு “அப் அப் அப்” என்றது. “அப்படியா! சந்தோஷம்!” என்றேன்நான். உள்ளுக்குள் எனக்கிருந்த திகிலைச் சொல்லி முடியாது. குரங்கு மனிதன் எனக்கெதிரில் புல்லில் உட்கார்ந்து கொண்டான். “கிக்-கிக்-கிக்” என்றான். “எக்-எக்-எக்” என்றான். பின்னர் என்னை நோக்கி எதோ கேட்பவன் போல் “வ்க்-வக்-வக்!” என்றான். என் மூளை இப்போது வேலை செய்ய ஆரம்பித்தது. இதென்ன விந்தை! இதென்ன அற்புதம்! எப்படி நிகழ்ந்திருக்கும்? கிழவனுடைய ஜீவரசம் செய்யும் வேலையா? ஜீவரசம் ஆயுளைத்தானே வளர்க்க முடியும். ஒரு லட்சம் உயிர்களின் வடிகட்டிய சத்து. ஒரு கோடி வருஷ ஆயுள், டார்வின் கொள்கை. பரிணாம வாதம் ஓஹோஹோ விளங்கிவிட்டது! கிழவன் பைத்தியக்காரனல்ல மகாசித்த புருஷன். வெறுமே உயிரைச் சாகாமல் வைத்திருக்கு ஜீவரசம் அன்று; உயிர் வளர்ச்சிக்கு தரும் ஜீவரசம். கால்மணி நேரத்தில் ஒருலட்சம் வருஷத்தின் வளர்ச்சி! ஆஹா! என்ன அற்புதம்! ஆனால் இந்த அற்புதத்தில் உண்மையைக் கண்டுபிடித்த மகிழ்ச்சியை நான் அதிக நேரம் அனுபவிப்பதிற்கில்லை. ஏனெனில் நிமிஷத்துக்கு நிமிஷம் நிலைமை மாறி மேலும் மேலும் பிரமிப்பு உண்டாக்கி வந்தது. இப்போது அந்தக் குரங்கு மனிதன் பேசுவதற்கு முயல்கிறாதென்பதை அறிந்து கொண்டேன். “இன் இன் இன்” என்று சொல்லிக் கொண்டே அவன் ஜீவரசம் இருந்த புட்டியைச் சுட்டிக் காட்டினான். பிறகு சிறிது சிரமப்பட்டு “இன் இன் இன்னும் கொஞ்சம்!” என்றான். ஆதிகாலத்தில் முதன் முதலில் தோன்றி மனிதசாதி தமிழ்மொழி தன் பேசிற்றென்று ஒரு தமிழ்ப் பிரமுகர் கூறுவது எனக்கு நினைவு வந்தது. அது உண்மையாகவே இருக்க வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் அது குறித்து அதிக நேரம் சிந்திப்பதற்கு தருணம் அதுவன்று. இன்னும் கொஞ்சம் ஜீவரசம் குடித்துவிட்டால் என்ன விளையுமோவென்ற பீதி எனக்கு உண்டாகி விட்டது. ஆகையால் புட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு எழுந்திருக்க முயன்றேன். ஆனால் முயற்சி பலிக்கவில்லை. வலிமை பொருந்திய ஒரு கை என்னைப் பிடித்து இறுத்திற்று. மற்றொரு கையால் அவன் புட்டியைப் பிடுங்கி அதிலிருந்த ஜீவரசம் முழுவதையும் குடித்துவிட்டான். பின்னர் அவர் என் கைப்பெட்டியைத் திறந்தான். அதிலிருந்த என்னுடைய மாற்று உடைகளை எடுத்து அணிந்து கொண்டு, மறுபடியும் கீழே உட்கார்ந்தான். என் மூளைத் திருவிழாக் காலங்களில் திருக்குளம் குழம்புவது போல் குழம்பிற்று. அது அடியோடு சிதறப் போகாமலிருக்கும் பொருட்டு நகரம், கலாசாலை, என்னுடைய ஆசிரியன்மார் முதலியவர்களைப் பற்றி எண்ணினேன். எனக்கு நேர்ந்திருக்கும் இந்த நிலையை என் விஞ்ஞான ஆரியரால் கூடச் சமாளிக்க முடியாது என்று கருதினேன். “ரொம்பநல்லது!” என்று அக்குரங்கு மனிதன் தூயத் தமிழில் பேசினான். பிறகு ஏதோ அபூர்வ ஐந்துவைப் பார்ப்பது போல் என்னைப் பார்த்துவிட்டு “நீ என்ன, பழைய கர்நாடகமாய் இருக்கிறாயே!” என்றான். ஒரு கூத்தாடிக் குரங்கு என்னைப் பார்த்து பழைய கர்நாடகம்” என்று சொல்லுமென்று கனவிலும் கருதியதில்லை. எனவே அக் கேள்வி என்னைத் தூக்கி வாரிப் போட்டது. அப்போது என் மடியிலிருந்து டார்வின் புத்தகம் கீழே விழுந்தது. “ஓஹோ மாண்டுபோன ஆங்கில மொழியா? என்றான் அம்மனிதன். நிமிஷத்துக்கு நிமிஷம் என் வியப்பு அதிகமானது போல் அவன் உருவமும் மாறி வந்தது. பழைய காட்டுமிராண்டி வடிவம் போய்விட்டது. அவன் தேகம் மெலிந்து மேன்மையாகியிருந்தது. மண்டை அசாத்தியமாகப் பெருத்துவிட்டது. கண்களும் அப்படியே வாய் மிகவும் சிறுத்திருந்தது. விரல்கள் மெலிந்து நீண்டிருந்தன. தலையில் இருந்த சிறுகுல்லா ஒன்றுதான் அவன் சற்று நேரத்திற்கு முன் குரங்காயிருந்தான் என்பதை எனக்கு நினைவூட்டிற்று. இந்த நினைவு வந்ததும் மறுபடியும் ஒரு நிமிஷம் சிந்தனை செய்தேன். வளர்ச்சி அதிவேகமாக நிகழ்ந்து வருகிறதென்று அறிந்தேன். குரங்கு காட்டுமனிதனாகி காட்டு மனிதன் இக்கால மனிதனாகி இக்கால மனிதன் வருங்கால மனிதன் ஆகிவிட்டான். இப்போது அவனைக் கண்டதும் என்னையறியாமலே பயபக்தி உண்டாயிற்று. “மன்னிக்க வேண்டும்” என்னும் சொற்கள் என் வாயினின்றும் தாமே வெளிவந்தன. எதற்காக மன்னிக்க வேண்டுமென்பது எனக்கே விளங்கவில்லை: வருங்கால மனிதன் கிழே விழுந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்துவிட்டுச் சொன்னான்; ஓ! டார்வின் இயந்திர யுகத்தைச் சேர்ந்தவன். நமது வளர்ச்சியை ஒருவாறு அப்போதே சொன்னான். ஆயினும் அக்காலத்து மக்கள் எல்லோரும் பொதுவாக மூடர்கள். எனவே ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டே செத்தார்கள்!” “உண்மை வாஸ்தவம்” என்றேன். இவ்வளவு மூளைக் குழப்பத்தினிடையே ஒரு சந்தோஷம் ஏற்பட்டது. வருங்கால மனிதர் தமிழ் மொழி பேசுவார்கள் என்பதில்தான் அந்த சந்தோஷம் ஏற்பட்டது. மீண்டும் சட்டென்று எனக்கு ஓர் அரிய யோசனை தோன்றிற்று. வருங்காலத்தைப் பற்றி இந்த வருங்கால மனிதன் கூறுவதையெல்லாம் எழுதி வைத்துக் கொண்டால் நல்லதல்லவா? அப்படி செய்து கெண்டால் கலாசாலை ஆசிரியர்களைக் கூட ஓட ஓட விரட்டலாம். உடனே நோட்டுப் புத்தகமும், பென்சிலும் சட்டைப் பையிலிருந்து எடுத்துக் கொண்டேன். “ஓகோ எழுதும் கலை. இது மறந்துபோய் இரண்டு லட்சம் ஆண்டு கழிந்து விட்டதல்லவா?” என்று கூறி வருங்கால மனிதன் வியப்புடன் நோக்கினான். பிறகு சட்டென்று ஓர் எண்ணம் உதயமானவனைப் போல் என்னை உற்றுப்பார்த்து, “நீ யார்? என்று கேட்டான். விஞ்ஞானப் புலவர்கள் ஒரு வண்டு அல்லது தேனீயை நோக்குவது போல் அவன் என்னை ஆராய்ச்சிக் கண்ணுடன் பார்க்கத் தொடங்கினான். உடனே எனக்கு அளவில்லாத பீதி உண்டாயிற்று, நல்ல வேளை! அவன் முன்போல் காட்டு மிராண்டி மனிதனாயில்லை. தப்பித்து ஓடிப் போகலாம்! . எழுந்து ஓடினேன். ஆனால் சில அடி தூரம் போவதற்குள் என் கால்கள் தாமாகவே நின்றன. விரும்பமில்லாமல் திரும்பிப் பார்த்தேன். வருங்கால மனிதன் இருந்த இடத்திலேயே இருந்தான். ஏதோ கண்ணுக்குப் புலனாகாத சக்தி என்னைப் பிடரி பிடித்துத் தளிக் கொண்டு போய் அவன் எதிரில் உட்கார வைத்து தேகபலத்தை அவன் இகழ்ந்து கூறியதன் கருத்து எனக்கு இப்போது நன்கு விளங்கியது. இதற்குள்ளாக அவன் மண்டையும் கண்களும் இன்னும் அதிகம் பெருத்திருந்தன. கண்களில் காந்த ஒளி வீசிற்று. இதன் பின்னர் அவன் வாய் திறந்து பேசவில்லை. ஆயினும் அவனுடைய கட்டளைகள் என் மூளையில் சற்று நன்றாகப் பதிந்தன. “உன் குல்லாவை எடுத்து என்னிடம் கொடு” என்று மானஸ்ரூபக் கட்டளை பிறந்தது. ‘முடியாது’ என்று நான் வாயால் சொன்னேன். ஆனால், கையினால் குல்லாவை எடுத்துக் கொடுத்தேன். மெளன மனிதன் அக்குல்லாவை மண்டபம் போலிருந்த தன் தலையின் உச்சியில் வைத்துக் கொண்டான். பின்னர் குரங்கு குல்லாவை என்னிடம் கொடுத்தான். “இதை உன் தலையில் வைத்துக்கொள்” என்ற இன்னொரு கட்டளை பிறந்தது. “மாட்டேன்” சொல்லிக்கெண்டே அதை வாங்கி என்னுடையத் தலையில் வைத்துக் கொண்டேன். “இடது கையில் குல்லாவைத் தூக்கி வலது கையினால் சலாம் போடு!” என்று அடுத்த உத்தரவு வந்தது. ஐயையோ! இதென்ன அநியாயம் ? மனிதர்கள் குரங்குகளையும், நாய்களையும் பழக்குவது போல் அல்லவா அவன் நம்மைப் பழக்குகிறான்? “முடியாது” என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னேன். ஆயினும் என் இடதுகை குல்லாவைத் தூக்கிற்று. வலது கை ஸ்லாம் போட்டது. “மீண்டும் சலாம் போடு!” எனக்கு கண்ணில் நீர் ததும்பிற்று. ஆயினும் ஸலாம் போட்டேன். “எழுந்து நின்று கூத்தாடு” அவமானம்! அவமானம்! ஆனாலும் எழுந்து நின்று கூத்தாடினேன். “போதும் உட்கார்” உட்கார்ந்தேன். அடுத்தார்போல் “செத்துப்போ” என்ற கட்டளை பிறக்கக்கூடாதா என்று நினைத்தேன். என்ன அதிசயம் அடுத்த கணத்தில் “செத்துப்போ” என்று பயங்கரமான கட்டளை வந்தது. “மாட்டேன்” என்று சொல்லிக்கொண்டே மல்லாந்து விழுந்தேன் வருங்கால மனிதனுடைய பயங்கரமான பெரிய மண்டை என் முகத்தினருகே வந்தது. அவனுடைய மெலிந்த நீண்ட விரல்கள் என் முகத்தைத் திண்டின. அளவில்லாத பீதி கொண்டவனாகக் கண்களை மூடிக் கொண்டேன். ஒரு பெரிய பிரயத்தனம் செய்து கண்களைத் திறந்தேன். என் மார்பின் மீது குரங்கு உட்கார்ந்து பல்லை இளித்துக் கொண்டிருந்தது. சுற்றும் முற்றும் பார்தேன். குரங்காட்டி ஹார்மோனியத்தைத் திறந்து ஸ்வரம் போட்டுக் கொண்டிருந்தான். எருமைக் கன்று சத்தமிடவது போல இருந்தது. பக்கத்தில் வாழைப்பங்கள் எல்லாம் உரிக்கப்பட்டு தோல்கள் கிடந்தன. கடவுளே! இவ்வளவும் கனவுதானா? சட்டென்று எழுந்து உட்கார்ந்தேன். என் மார்பிலிருந்து கீழே விழுந்த குரங்கு என்னை நோக்கி ’கிக் கிக் கிக்” என்றது. “ஐயா! அனுமாருக்கு காலனா கொடுப்பாரு நான் வாத்தியம் வாசிப்பேன்” என்றான் குரங்காட்டி. “இங்கு எத்தனை நேரமாய் நின்று கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டேன். “கால் நாழியாக நிற்கிறேன் சாமி! இன்று முழிச்ச முகமில்லை. பொழுது விடிந்து தம்பிடி கூடக் கிடைக்கவில்லை. அதோ அந்தப் பித்துக்குளி வீட்டில் ஒரு நாழி வீணாய் போய்ச்சு. நீங்களா பட்டப்பகலில் தூங்கிப் போயிட்டீங்க” என்றான். பித்துக்குளி என்றதும் நான் பக்கத்தில் திரும்பிப் பார்த்தேன். குரங்கு அப்போது தான் “ஜீவரசம்” இருந்த புட்டியைத் திறந்து கொண்டிருந்தது. “ஐயையோ” என்று ஒரு சத்தம் போட்டு அதைப் பிடுங்கி வீசியெறிந்தேன். கிராமவாசம் போதும் போதுமென்று ஆகி ஸ்டேஷனை நோக்கி வேகமாய் நடக்க ஆரம்பித்தேன். அப்போது குரங்கு என்னை உற்றுப்பார்த்து ‘வக் வக் வக்’ என்றது. “மாட்டேன்” என்று சொல்லிக்கொண்டே அதற்கு நான் ஸலாம் போட்டேன். வ.ரா ‘மணிக்கொடி’ காலத்துக்கு மூலபுருஷர் என்பதும், பார்தியைத் தமிழகத்துக்கு எடுத்துக்காட்டியவர் என்பதும் தெரியாதனவல்ல. படைப்புத் துறையில் புதுப்புது இலக்கிய உருவங்களைத் தாமே படைத்துக் காட்டிய கலைஞன் வ.ரா. ‘1889 இல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திங்களுரில் பிறந்தவரான வ. ராமசாமியிடம் எனக்கு ரொம்ப ஈடுபாடு உண்டு. அவர் எழுத்தில் பிரச்சார நோக்கம் அதிகமாக இருந்தாலும் ஒரு கவர்ச்சியும் இருந்ததை யாரும் தவிர்க்க முடியாததாக இருந்தது. மறுமலர்ச்சி இலக்கியத்திற்கு பாரதியார் எப்படி முன்னோடியோ அப்படியே வ.ராவும் ஒரு முன்னோடி என்று சொல்லவேண்டும்.’ என்று க.நா.க சொல்லுவது மிகையில்லை. அவரின் படைப்பின் பெருமையை எழுதிய தி.க.சி அவர்கள் “வ.ரா வின் வசன நடைக்காகவும், முற்போக்குக் கருத்துக்களுக்காகவும், அவரை நான் போற்றுகிறேன். அவர் எழுதும் வசனம் அற்புதமானது. அபூர்வமானது. விறுவிறுப்பும், வேகமும், தெளிவும், ஆழமும் கொண்டது. எதையும் சுற்றி வளைத்து எழுதத் தெரியாதவர். நேராகப் பளிச்சென்று தான் விஷயத்தைச் சொல்லுவார். சொற்கள் அவர் கையில் கூரிய அம்புகள், அரசியல், சமுதாயம், பொருளாதாரம், கலாச்சாரம் ஆகியவற்றின் மேன்மைக்காக அயராது தொண்டு செய்தவர் வ.ரா.” என்கிறார். - வ.ரா வின் சிறுகதைகளைப் பற்றி அவரிடமே நண்பர் அழகாகச் சொன்னாராம், இப்படி… “கதைகள் துவக்கத்தில் வெகு விரிவாக ஆரம்பமாகின்றன. முடியும் பொழுது சட்டென்று முடிந்து போகின்றனவே” “ஆம், உங்களுடைய அபிப்பிராயம் சரியானதே…” என்று கூறியதாக அவரது சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையிலேயே குறிப்பிட்டிருப்பது அவரது நேர்மையைச் சுட்டுகிறது. வண்ணார வீரம்மாள் சித்தூர் சமஸ்தானத்தில் புளியந்தோப்பு என்று ஒரு கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தில் புளிய மரங்கள் மிகவும் அதிகம். அதனாலேதான் ஊருக்கு புளியந்தோப்பு என்று பெயர் வந்தது. புளியந்தோப்பு, கிராமமானதால், வீடுகள் அதிகமில்லை. அந்தணர்களின் வீடுகள் சில. அவர்கள் தனித்தெருவில் வசித்து வந்தார்கள். வியாபாரிகள் சிலர். அவர்களுக்குப் பெருத்த வியாபாரம் கிடையாது. குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான உப்பு, மிளகாய் முதலியன அவர்கள் விற்று வந்தார்கள். அதிகமான ரூபாய் நாணயங்கள், அவர்களுக்குத் தினசரி வியாபாரத்தின் மூலமாய்க் கிட்டுவதில்லை. செப்புக் காசு வாணிபம் தான் அதிகம். பயிர்த் தொழிலில் ஈடுபட்டு குடியானவர்கள் வசித்தார்கள். இவர்களின் தொகைதான் பெரும்பான்மை. இந்தப் பண்டை காலத்து கிராமத்தில் ஒரு நாவிதன், ஒரு தச்சன், ஒரு கொல்லன், ஒரு வண்ணான், ஒரு ஜோசியன், ஒரு (தங்க) ஆசாரி - முதலியவர்கள் வாழ்ந்து வந்தார்கள். ஊரின் ஒரு கோடியில் உழைத்தும், வயிறாற உண்ண கூலி கிடைக்காத தீண்டாதார்கள் குடியிருந்து, எவ்வாறோ காலங்கழித்து வந்தார்கள். புளியந்தோப்பு விஸ்தாரமான கிராமம் இல்லை. ஊரில் குடியிருக்கும் மனிதர்களின் மொத்த எண்ணிக்கை ஐந்நூற்றுக்கு அதிகப்படாது. நஞ்சை, புஞ்சை வகையறா யாவும் இருநூறு ஏகரா நிலமிருக்கும். அதாவது புளியந்தோப்பு ஆள் ஒவ்வொருவருக்கும் அரை ஏகரா நிலம் கூட பங்கு வராது. ஆனால் பூமி இப்படிப் பங்கிடப்பட்டது என்று நினைக்க வேண்டாம். புளியந்தோப்பில், சொந்த பூமியுள்ள குடும்பங்கள் இருபது இருக்கலாம். பாக்கி சுமார் அறுபது குடும்பங்களுக்கு நிலம் இல்லை. குடியிருக்கும் வீடுகள் கூட அவர்களுக்குச் சொந்தமில்லை. பூமி சம்மந்தப்பட்ட வரையிலும், மேற் கூறியவாறு பங்கு ஏற்பட்டிருந்தாலும், பொதுவாக மனக்குறையும், பொறாமையுமில்லாமல், புளியந்தோப்பார் வாழ்ந்து வந்தனர். ஏனெனில் அவர்களுடைய வாழ்க்கைத் தேவைகள் அதிகம் இல்லை. கல்யாணம் முதலியன மிகச் செட்டாக நடைபெற்றன. விலைபெற்ற ஆடைகள் அவர்கள் அணிந்ததில்லை. தங்க நகைகள் சில வீடுகளில் மட்டுமிருந்தன. ஏழைக் குடியானவர்கள் வீட்டில் மண்பாத்திரங்கள் புழங்கி வந்தன. வெள்ளிக்காப்புகள் சில வீடுகளில் உண்டு. கள்ளுக்கடை அந்த ஊரில் இல்லை. இருக்கிறவர்கள் இல் லாதவர்களுக்கு கொடுத்து உதவி எப்படியோ பொதுவாழ்க்கையில் அதிகமாக மேடுபள்ளமில்லாமல் நடத்தி வந்தார்கள். இவ்வாறு வெளியுலகத்தை அதிகமாக ஏறிட்டுப் பார்க்காமல் வாழ்க்கை நடைபெற்று வந்த புளியந்தோப்பில், சோமதேவ சாஸ்திரிகள் என்று ஒருவர் இருந்தார். அவர் பரம்பரை வைதீகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். சோமதேவரின் பாட்டனார் காலத்தில் அவருக்கு மூன்று ஏகரா நிலம் அரசனால் சன்மானம் கொடுக்கப்பட்டது. மானியமாய் வந்த நிலத்தைக் கொண்டும் வித்வான் என்ற பெயரினாலும் அவர் திருப்திகரமாய் இல்லறம் நடத்தி வந்தார். அவருக்குப் பெரிய வீடு இல்லை. இல்லறம் இனிது நடத்திய சோமதேவரின் பாட்டனாருக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் ஒருவர் தான் சோமதேவரின் பிதா, சோமதேவரின் பிதாவுக்கு அவரது தகப்பனாரின் மூலமாய் மூன்று சாஸ்திரங்களில் தேர்ச்சி கிடைத்ததாயினும், பூமியில் பூர்வ சொத்தான மூன்று ஏகரா நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு (ஒரு ஏகரா) பாகமாய் கிடைத்தது. ஒரு ஏகரா நிலத்தையும், தனது மூன்று சாஸ்திரப் பயிற்சியையும் கொண்டு, அவர் இல்லறம் நடத்தத் துணிந்தார். குடியிருப்பு விட்டில், அவருக்கு மூன்றிலொரு பங்கு. சோமதேவ சாஸ்திரிகளும், மூன்று சகோதரிகளும் அவர்களது பிதாவுக்குப் பிறந்தனர். இவர்கள் குழந்தைகளாயிருக்கும் பொழுதே, புளியந்தோப்பின் பழைய நிலைமை மாறத் தலைப்பட்டது. தங்க நகைள் ஏற்பட்டுவிட்டன. ரூபாய்கள் தோன்றின. நோட்டுகளும் வந்து விட்டன. போதாக்குறைக்கு மதுபானக்கடையும் ஸ்தாபிக்கப் பெற்றது. சோமதேவ சாஸ்திரிகளுக்கு சமஸ்கிருதத்திலேதான் பயிற்சி. அவருடைய மூன்று சகோதரிகளும் தங்கள் புக்ககம் செல்லுமுன்னரே, தங்கள் பிறந்த வீட்டு பூமி ஒரு ஏகராவும் விலை போகும்படியாயிற்று காலம் மாறின விந்தை அது. நாகரிகம் தோன்றிய மயக்கால் நகைகளுக்கு ஆசை பெண்களின் உள்ளத்தில் உண்டாயிற்று. சீர் வரிசைகள் சரியாய்ச் செய்யாவிடின், பெண்களுக்குக் கல்யாணம் செய்ய முடியாதோவென்று பெற்றோர்கள் மனம் ஏங்கும் காலம் வந்துவிட்டது. சோமதேவ சாஸ்திரிகளின் வீட்டில் தரித்திரம் இவ்வளவு தாராளமாய் விளையாடி வந்தபோதிலும், அவருக்கும் பரம்பரை மாமூலையொட்டி கல்யாணம் நடைபெற்று விட்டது. “எனக்கு ஏற்பட்டது கலியாணம் இல்லை. எனக்குக் கட்டை கட்டி விட்டார்கள்” என்று அலுத்துக் கொண்டு சொல்லுவார் சோமதேவ சாஸ்திரிகள். கலியானமாயிற்று என்றால் குழந்தைகள் பிறந்தனவென்று சொல்லவும் வேண்டுமா? தரித்திரனுக்குச் சோற்றுக்குப் பஞ்சமே அன்றி, குஞ்சுகளுக்குப் பஞ்சமில்லை என்று கிராமத்தார் சொல்லிக் கொள்ளுவது உண்டு. அதுபோல சோமதேவ சாஸ்திரிகளுக்கு மூன்று ஆண் குழந்தைகள், நான்கு பெண் குழந்தைகள். குழந்தைகள் பிறக்கப் பிறக்க சாஸ்திரிகளின் வயிற்றில் இடி விழுந்தது போலாயிற்று. “மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்” என்று நொண்டித் தத்துவத்தைக் கொண்டித்தனமாய்ப் பேசிக் கொண்டிருந்தால், வாயில்லாக் குழந்தைகள் வளர வேண்டாமா? என்ன செய்வார் பாவம்? அவர் காலத்தில் சோமதேவ சாஸ்திரிகள் கற்ற வித்தைக்கும் அவர் தரித்திருந்த சாஸ்திரிகள் என்ற பட்டத்துக்கும் விலையுமில்லை, கெளரவமும் கிடையாது. அறிவு விற்பனைப் பொருளாய் வேண்டப்பட்டாலன்றி, அறிவாளி பிழைப்பது எங்ஙனம்? மேலும் சாஸ்திரிகள் படித்த படிப்பு பயன்படக்கூடாத காலம் வந்துவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிச்சயமாய் ஒரு புதுக் குழந்தையை வீட்டில் எதிர்பார்த்த சாஸ்திரிகள் வெளியே போய் சம்பாதிக்கும் இயல்பில்லாதவராகவும் ஆகிவிட்டார். எனவே சாஸ்திரப் பயிற்சியை மூட்டை கட்டி வைத்துவிட்டு, பக்கத்துக் கிராமங்களில் பிச்சை எடுக்கத் துணிந்து விட்டார். இவ்வாறு அவரது குடும்ப காலட்சேபம் நடைபெற்று வந்தது. தான் கெட்டது போல தனது குழந்தைகளும் கெடலாகாது என்று எண்ணி, சாஸ்திரிகள் தனது பிள்ளைகளை வடமொழிக் கல்வியில் பழக்கவில்லை. நாகரிக முறையில் நவீன அறிவும், ஆராய்ச்சியும் பெறுதற் பொருட்டு தனது பையன்களை ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பி வந்தார். அவ்வாறு ஆங்கிலம் கற்றவர்களில் ஒருவன் நாராயணன். இவன் சோமதேவ சாஸ்திரிகளின் நடுப்பிள்ளை. ஆங்கிலம் சிறிது கற்றுக்கொண்டான். அதிகமாகக் கற்றுக்கொள்ள அவனுடைய குடும்பத்தின் வறுமை இடங்கொடுக்கவில்லை. தான் பிழைப்புத் தேடினாலன்றி, தனது குடும்பம் அழிந்துபோகும் என்று அறிந்து கொண்ட நாராயணன் வேலைக்கு அலைந்தான். எந்த வேலைக்குத் தான் தகுதியுள்ளவன் என்று அவனுக்கே தெரியவில்லை. கூலிவேலை செய்வதற்கு உடம்பில் சக்தி போதாது. இவ்வாறு திகைத்துக் கொண்டிருக்கையில், காலவசத்தால் கமலாபுரம் என்ற ஊரில், பள்ளிக்கூட உபாத்தியாயர் வேலை அவனுக்குக் கிடைத்தது. கலாபுரத்துக்கும், புளியந்தோப்புக்கும் சுமார் நூறு மைல் இருக்கும். வண்டிப்பாதை சரியாக இருக்காது. கமலாபுரம் புளியந்தோப்பைக் காட்டிலும் பெரிய ஊர். அந்த ஊரில் சுமார் முன்னூறு வீடுகளுக்கு அதிகமிருக்கும். தங்கள் ஊர் வளர்கிற ஊர் என்று கமலாபுரத்தார் சொல்லிக் கொள்ளுவார்கள். “அஷ்டமத்திலே சனி உட்கார்ந்து அனர்த்தங்களுக்குள்ளாகித் தேய்ந்து போகிற ஊர் போகட்டும். நம்ம ஊருக்குக் குருவின் ஒன்பதாம் மடத்து வீட்சிண்யம் (பார்வை) பூராவாக இருக்கிறது. அது வளர்ந்து கொண்டே போகும். அதற்கு ஒரு நாளும் அழிவு கிடையாது” என்று கமலாபுரத்து குட்டைச்சுவடி ஜோசியர் சொல்லுவார். அவர் சொல்லுவதற்கு ஏற்றாற்போல, ஊரில் பள்ளிக்கூடம் ஏற்பட்டது. இந்தப் பள்ளிக்கூடத்துக்குத்தான் நாராயணன் உபாத்தியாயராக வந்திருக்கிறான். முன்னிருந்த “அம்மை மூஞ்சி” வாத்தி இறந்து போகவே, பள்ளிக்குப் பின்னர், “பவுண்டு” (பட்டிமேச்சல் மேயும் கால்நடைகளை அடைத்து அபராதம் வாங்கும் இடம்) வந்தது. அதற்குப் பின்னர் பஞ்சாயத்து ஏற்பட்டது. பிறகு சிறு கோயில் தோன்ற, அதற்குத் திருவிழாவும் அமைக்கப் பெற்றது. மேலும் கமலாபுரம் நீலா நதிக்கரையில் உள்ளதாகையால், அதன் வெள்ளம் கமலாபுரத்தை வளம்பெறச் செய்து வந்தது. பெற்றோர்களிடம் விடைபெற்றுக் கொண்டு நாராயணன் கமலாபுரத்துக்குக் கால்நடையிலே (நூறு மைலும்) வந்து சேர்ந்தான். வழியிலே எங்கே படுத்துறங்கினான், என்ன உண்டான் என்பது தெரியாது. கமலாபுரத்தில் அவனுக்கு வேலை கிடைத்தது. ஒரு கனவானுடைய சிபாரிசு கடிதத்தின் மூலமாக. அப்பொழுது நாராயணனுக்குப் பதினெட்டு வயது. “சொட்டவாளைக் குட்டி” மாதிரியிருப்பான். அவன் இடுப்பு குறுகி, மார்பு விரிந்திருக்கும். நல்ல அழகிய தோற்றமுள்ளவன். மாநிறத்தான். பதினெட்டு அடிக்கு மேல் பாய்ந்து தாண்டுவான். திவ்யமான தொண்டை, குழந்தைகளை அரவணைத்து அழைத்து வைத்து, தித்திக்கும்படி அவர்களுக்குச் சிறுகதைகள் சொல்லுவான். ஓட்டம் பிடித்தால் மூன்று மைல் வரையில் மூச்சுத் திணறாமல் ஓடுவான். புளியந்தோப்பில் ஆறாவது ஆழமான குளமாவது இல்லாமையால் அவனுக்கு நீந்தத் தெரியாது. அந்தக் குறையையும், கமலாபுரத்து நீலாநதியைக் கண்டபின்னர் தீர்த்துக் கொள்ளலாம் என்று சந்தோஷமடைந்தான். கால்நடையாக வழிப் பிரயாணம் செய்து களைத்துப் போன நிலைமையில், நாராயணன் பள்ளி நிர்வாகிப் பெரியார் முன்னிலையில் போய் நின்றான். “உட்காரு, அப்பா! யார் நீ” என்றார் பெரியார். “தங்கள் ஊர்ப் பள்ளிக்குத் தாங்கள் உபாத்தியாயராக நியமித்த நாராயணன்” என்றான். “வாத்தியாரே! வாரும் நல்ல வேளை! பழைய வாத்தியார் இறந்த ஒரு மாத காலமாக, இந்த ஊர்ப் பையன்கள் கழுதை மேய்க்கிறார்கள். நீர் வந்திருக்கும் லக்கினம் முகூர்த்தத்துக்கு எடுத்ததாகும். சுகஸ்ய சிக்கிரம் என்பது சுலோகம். ஆளைவிட்டுப் பள்ளிக்கூடத்தைக் காண்பிக்கச் சொல்லுகிறேன். அங்கே போயிரும். பையன்களை அழைத்து வருவார்கள். லக்கினம் தவறிப் போகாமல், பள்ளிக்கூடத்தை ஆரம்பித்து விடும்” என்றார். “சரி” என்றான் நாராயணன். ஆள் முன் செல்ல, நாராயணன் பின் நடந்தான். “கமலாபுரத்தில் எல்லோரும் இந்தப் பெரியவரைப் போலத்தான் இருப்பார்களோ? சாப்பிட்டாயா என்று மரியாதைக்குக்கூட அவர் கேட்க மறுத்துவிட்டாரே! வாத்தியார் வந்த சந்தோஷத்திலேயே, அவர் அதை மறந்து விட்டாரோ? என்னமோ, போகப் போகத் தெரிகிறது. பார்த்துக் கொள்வோம். வந்த முதல் நாளே வருந்துதல் கூடாது” என்று எண்ணிக் கொண்டே போனான் நாராயணன். “எந்த ஊர்” என்று வழியிலே ஒருவர் கேட்டார். “இந்த ஊருக்குப் புதிதாய் வந்திருக்கும் வாத்தியார் நான்” என்றான் நாராயணன். “சரிதான்” என்று அவர் போனார். நல்ல கமலாபுரம் என்று நினைத்தான் நாராயணன். “யார் ஐயா அங்கே போகிறது” என்று பின்னிருந்து ஒரு குரல் வந்தது. “அயலூர்” என்றான் நாராயணன். “இந்த ஊர் இல்லை என்று எனக்குத் தெரியும். அதை நீர் சொல்ல வேண்டுமா? காலமே கெட்டு வருகின்றது. உம்மை நான் கேள்வி கேட்டது பிசகு, நீர் யாராயிருந்தால் எனக்கென்ன” என்று சொல்லிக்கொண்டே அவர் போனார். “வாத்தியார் வேலை இந்த ஊரில் அழகாயிருக்கும் போலிருக்கிறதே” என்று எண்ணிக்கொண்டே போகையில், “களைப்பாய்ப் போகிறீர்களே? சாப்பிடவில்லை போலிருக்கிறது. இந்தாருங்கள்; இந்தப் பழங்களைச் சாப்பிடுங்கள்” என்று ஒரு சிறு பெண் சொன்னாள். வாய் பேசாமல், நாராயணன் அவைகளை வாங்கிக் கொண்டான். “நான் இந்த ஊர் பள்ளிக்கூடத்தின் புது வாத்தியார். அங்கே நீ வருவாயானால், உன் பழங்களுக்குக் காசு கொடுக்கிறேன்” என்றான் நாராயணன். “சும்மா போங்கள், சுவாமி” என்றாள் அந்தப் பெண். அக்கினி திராவகத்தைப் போல கொதிக்கும் மணல் பரந்த பாலைவனத்தில் நீர்ச்சுனையைப் பிரயாணி கண்டால், அவன் மனம் எவ்வாறு இருக்கும்? அதைப்போல நாராயணன் மனது துள்ளிக் குதித்தது. நாராயணன் (அவன் பள்ளி வாத்தியாராக நியமிக்கப்பட்ட சிறிது காலத்திற்கு முன்னரிலிருந்து தன்னை நாராயண சர்மா என்று அழைத்துக்கொண்டான்.) பள்ளியை அடைந்தான். வந்த ஆள் பள்ளியின் கதவைத் திறந்தான். பள்ளியாவதற்கு முன் அது குடியிருப்பு வீடாக இருந்தது. வீடு, திண்ணை எங்கே பார்த்தாலும் புழுதிமயமாக இருந்தது. “நான் போய் வருகிறேன்” என்றான் கூடவந்த ஆள். அவனும் போய்விட்டான். “இவ்வளவு புழுதியில் எப்படி பள்ளியைத் துவக்குகிறது” என்று எண்ணி, துடைப்பத்திற்காக, வீடு முழுவதும் தேடி அலைந்தான். உத்தரக் கட்டையில் ஒடிந்த விளக்குமாறு ஒன்றைக் கண்டான். அதைச் சீர்படுத்தி, பெருக்க ஆரம்பித்தான். இதற்குள் தத்தம் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு, தகப்பன்மார்கள் பலர் அங்கே வந்தார்கள். நிர்வாகிப் பெரியவரும் அங்கே வந்து சேர்ந்தார். “என்ன வாத்தியாரே! உமக்குச் சமயம், பொழுது தெரியவில்லையே! கூட்டுகிற வேலையை நாளைக் வைத்துக்கொள்ளக் கூடாதா? அதற்கு லக்கினம் தவறிப் போய்விடவில்லையே! குப்பை கிடந்தால் படிப்பு வராதா” என்று பெரியவர் பிரசங்கம் செய்தார். நாராயண சர்மா துடைப்பத்தைச் சிறிது தூரத்தில் கொண்டுபோய் வைத்துவிட்டு, கைக்கூட துடைத்துக் கொள்ளாமல் வந்து சேர்ந்தான். “என்ன அய்யா! கையிலே முழ நீளக் குப்பையை வைத்துக்கொண்டு, கையைச் சுத்தம் செய்து கொள்ளாமல் சொல்லிக் கொடுக்க வந்து விட்டீரே” என்றார் பெரியவர். கைகளைத் தனது உடையின் பின்புறத்தில் துடைத்துக் கொண்டான் நாராயண சர்மா. தரித்திரத்திற்கும் அடிமைத்தனத்துக்கும் எவ்வளவு நெருங்கிய சம்பந்தம் உண்டு என்று அவனுக்கு அப்பொழுது தெரிய வந்தது. குரங்காட்டி, குரங்கை “லங்காபட்டினம் தாண்டராயா” எனக்கேட்டு, அதைத் தாண்டச் செய்யும் வீதி வினோதம் அவனுக்கு ஞாபகம் வந்தது. லக்கினம் தவறிவிடாமல், அன்றைக்கு ஒருவாறு பாடம் முடிந்துவிட்டது. பெற்றோர்களும் பையன்களும் கலைந்து போனார்கள். “அவஸ்தப்படாதேயும், உமக்கு அரிசி அனுப்புகிறோம் இந்தப் பள்ளியின் அடுத்த பக்கத்தில் சமைத்துக் கொள்ள இடமிருக்கிறது” என்று சொல்லிவிட்டு நிர்வாகிப் பெரியார் அகன்றுவிட்டார். பள்ளிக்கூட வீட்டைச் சுற்றிப் பார்த்தான் நாராயணன். பக்கத்தில் ஒரு அறையிருந்தது. அதற்கும், வெளி வீதிக்கும் தனி வழியிருந்தது. அடுப்புக்கட்டிகள் இரண்டு இருந்தன. உடைந்ததும், உடையாததுமாக நாலைந்து மண்பாண்டங்கள் இருந்தன. பள்ளி ஊர்க்கோடியில் என்பதைச் சொல்ல மறந்துவிட்டேன். பள்ளிக்கூட கட்டிடத்துக்குப் பக்கத்தில் நடைபாதையின் ஒதுக்குப்புறத்தில் ஒரு கிணற்றைக் கண்டான். அந்தக் கிணறு ஊர் தண்ணிர்ப் பந்தலுக்காக ஏற்பட்டிருக்க வேண்டுமெனத் தெரிந்து கொண்டான். பள்ளிக்கும் நீலாநதிக்கும் இரண்டு பர்லாங்கு தூரம் இருக்கும். தண்ணீர் பந்தல் வாளியை எடுத்து, கிணற்றினின்றும் தண்ணீர் இறைத்து, தனது உடம்பைக் கழுவி சுத்தம் செய்து கொண்டான். பிறகு கையில் வைத்திருந்த பழங்களைத் தின்று ஏப்பமும் விட்டான். ஆனால் பள்ளியில் குவிந்து கிடந்த குப்பை மட்டும் அவன் கண்ணை உறுத்திற்று. தண்ணீர்ப்பந்தல் துடைப்பத்தைக் கடன் வாங்கிக்கொண்டு பள்ளியில் நுழைந்தான். இதற்குள் அரிசி, பருப்பு, கொஞ்சம் எண்ணெய், மிளகாய், சிறிது மோர், சிறிது நெய்-இத்தனையும் வந்து சேர்ந்தன. ஆனால் எதைக்கொண்டு அவைகளைச் சமைப்பது? விறகு இல்லை; பாத்திரங்கள் கிடையாது. கையால் தொட்டதும் பதார்த்தங்களைப் பக்குவமாய்ச் சமைத்து விடும் சக்தி நளனுக்கு இருந்ததைப்போல, நாராயணனுக்கு இல்லை. சாமான்கள் கொண்டு வந்தவர்கள் அவைகளைச் சாண் குப்பையிலே வைத்துவிட்டு, கூடையைப் பின்னால் அனுப்புங்கள் என்று உத்தரவிட்டுச் சென்றார்கள். பழம் சாப்பிடுவதற்கு முன், களைப்பையறியாத நாராயணனுக்குப் பசியால் இப்பொழுது காது அடைத்தது. தனது குடும்பத்தாரை நினைத்து, தனது தரித்திரத்தை நினைத்து, தனது தற்போதைய கமலாபுரத்து நிலைமையை நினைத்து, “கோ” வென்று அழுதான் நாராயண சர்மா. அப்பொழுது பிற்பகல் இருபது நாழிகையிருக்கும். கோடைகாலம் களைப்பும், கண்ணீரும் சேர்ந்தவுடன், அவனையறியாமல் அவன் குப்பையிலேயே படுத்துக்கொண்டு. தூங்கிவிட்டான். எவ்வளவு காலம் அவன் இப்படித் துங்கினான் என்பது அவனுக்குத் தெரியாது; கண்விழித்துப் பார்த்தான். பள்ளிக்கூடத்து வாயிற்படியண்டை சிறிய பெண் ஒருத்தி உட்கார்ந்திருந்ததைக் கண்டான். தனக்குப் பழம் கொடுத்த பெண் என அவனுக்குத் தெரிந்தது. “சுவாமி! நெடுநேரம் தூங்கிப் போனீர்களே! பொழுது போக இன்னும் இரண்டு நாழிகைதானே இருக்கிறது? நான் இங்கே வந்தேன். எல்லாம் திறந்திருந்தது. நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தீர்கள். கூடைச் சாமான்கள், பள்ளிக்கூடச் சாமான்களைப் பார்த்துக் கொண்டு இங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தேன். பொழுது போயிற்றே, எழுப்பலாமா என்று நினைத்தேன். அசதி என்று சும்மாயிருந்து விட்டேன். நீங்கள் ஆகாரத்திற்கு என்ன வழி செய்தீர்கள்” என்றாள் அந்தப் பெண். நாராயண சர்மாவுக்கு என்ன சொல்லுவது என்று ஒன்றுமே தெரியவில்லை. அந்தப் பெண்ணில் செயலைக் கண்டு, அவன் மனம் குழம்பிப் போனான். “எங்கள் வீட்டில் மோர் இருக்கிறது; கொண்டு வரட்டுமா” என்றாள். - “நீ யார்” என்றான். “என் பெயர் வீரம்மாள். நான் வண்ணார வீடு” என்றாள். “வீரம்மா! நீ சொன்னதற்கு ரொம்ப சந்தோஷம். ஆபத்துக்காலத்தில், அந்தணர்கள் வேறு ஜாதியாரிடமிருந்து உப்புப் போடாத மோர் மட்டும் வாங்கிக் கொள்ளலாம் என்றிருக்கிறது. நீ கொடுக்கும் எதையும் தட்ட எனக்கு இஷ்டமில்லை. ஆண்டவன் உன்னைக் காப்பாற்றவேண்டும்” என்றான் சர்மா. “சுவாமி! ஆண்டவனைக் கூப்பிடாதேயுங்கள். எங்கள் வீட்டில் நாங்கள் பத்துக் குழந்தைகள் பிறந்தோம். பாவி நான் ஒண்டிதான் பாக்கி. அந்த ஆண்டவனுக்கு எங்கள் குடும்பத்திலே இரக்கம் கிடையாது. ஊரைச் சுற்றி வரும் போதெல்லாம் அவனுக்குக் கண் இருக்கிறது. எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலே, அவன் கண் அடைத்துப் போகிறது. எங்கள் அம்மா, அப்பா அழுகிறது. ‘ஆண்டவனுக்குத் தெரிந்தால், அவன் கம்மாயிருப்பானா?’ நீங்கள் எங்கள் குடும்பத்தைப் பற்றி கவலைப்பட்டால், அது சாத்தியப்படாது. இப்பொழுது நீங்கள் ஆகாரத்திற்கு என்ன வழி செய்யப் போகிறீர்கள்” என்றாள் வீரம்மாள். “அதுதான் தெரியவில்லை. பாத்திரங்கள் இல்லை; விறகு இல்லை. வீடு புழுதிமயமாய் இருக்கிறது. கடைசியாக, எனக்குச் சமைக்கத் தெரியாது. ஆனால் பசியோ காதடைக்கிறது. எங்கள் ஊரிலிருந்து இங்கு வந்து சேர, நூறு மைல் நடந்து வந்து சேர்ந்தேன். வழியிலே சரியாக சாப்பாடு கிடையாது” என்றான். சொல்லச் சொல்ல, அவன் கண்களில் நீர் பெருகிற்று. “ஒன்று சொல்லுகிறேன். வருத்தப்படாமலிருந்தால் சொல்லுகிறேன். என்னிடம் நீங்கள் கோபங் கொள்ளலாகாது. எங்கள் வீட்டிலிருந்து விறகும் சிறு வெங்கலப்பானையும் கொண்டு வந்து, நான் சோறு சமைத்து விடுகிறேன். இன்றைக்கு மோரை ஊற்றிச் சாப்பிட்டு விடுங்கள். நாளைக்கு நன்றாக நீங்களே சமைத்துக் கொள்ளலாம்” என்றாள். “நீ சொன்னதில் எனக்கு வருத்தமில்லை, கோபமுமில்லை; ஆனால் சாத்தியப்படாத சங்கதி. நான் அந்தணன். உன்னைப் போல உத்தமப் பெண் சமைத்துச் சாப்பிடுவதை என் மனம் ஏற்றாலும், ஊரார் சம்மதிக்க மாட்டார்கள். அவர்கள் திட்டுவார்கள். என்னை ஊரைவிட்டுத் துரத்தி விடுவார்கள். வயிற்றுப் பிழைப்பு தேடிவந்த என் கதி என்னவாகும்? என்னை நம்பிக்கொண்டிருக்கிற என் குடும்பத்தின் கதி என்னவாகும்? நீ புத்திசாலி எனத் தோன்றுகிறது. நினைத்துப் பார்” என்றான் வாத்தி. “சுவாமி! சுவரை வைத்துத் தானே சித்திரம் எழுதவேண்டும்? நீங்கள் பட்டினி கிடந்து இறந்து போனால், உங்கள் கதி என்னவாகும்? உங்கள் குடும்பத்தின் கதி என்னவாகும்? நினைத்துப் பாருங்கள்” என்றாள் பெண். “நீ சொல்லுவது சரிதான். நான் ஒப்புக்கொள்ளுகிறேன். நீ சமைத்து நான் சாப்பிட்டேன் என்பதை என் தகப்பனார், தாயார் கேள்விப்பட்டால், அவர்கள் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு, பிராணனை விட்டு விடுவார்கள். என் தேகம் அவர்கள் எனக்குக் கொடுத்த தேகமாகும் ஒரு வழி சொல்லுகிறேன் கேள்; நீ சொன்னபடி கொண்டு வா. நீ இங்கேயே உட்கார்ந்து கொண்டு நீ எனக்குச் சமைக்கும் வித்தையைச் சொல்லிக் கொடு. நான் சமைக்கிறேன். அவ்வளவு தான். வைதீகத்தை, ஜாதியை முறிக்காமல், என்னால் செய்ய முடிந்தது” என்றான் நாராயண சர்மா. பேச்சை வளர்க்க மனமில்லாமல், வீரம்மாள் வீட்டிலிருந்து சாமான்களைக் கொண்டு வந்தாள். சமையல் அறையை ஒருவாறு சுத்தம் செய்து, அடுப்புமூட்டி உலையை வைத்தான் சர்மா. அடுப்பை எரியவிடுகிற ரகசியம் அவனுக்குத் தெரியவில்லை. அடுப்பு முழுவதும் ஒரே புகைமூட்டமாக இருந்தது. இதனிடையே, துடைப்பத்தைக் கையிலெடுத்து, ஒரு வினாடியில், பள்ளி முழுமையையும் வீரம்மாள் சுத்தமாகக் கூட்டி, குப்பையை வெளியே கொண்டுபோய் எரிந்துவிட்டாள். வீரம்மாள் என்ன சொல்லிக்கொடுத்தும், பதம் பார்த்து வடிக்கும் வழக்கம் தெரியாமல், சோற்றைக் களியாக்கிவிட்டான் சர்மா. அந்தக் களியிலே மேரை ஊற்றிச் சாப்பிட்டு, அன்றிரவைப் போக்கினான். பசியிலே அந்தக் களியும் அமுதமாய் இருந்தது என்று சொல்லவும் வேண்டுமா? ஏழைக்கு ஒரு நாள் ஒரு வருஷமாகக் கழியும். பொருள் உள்ளவனுக்கு வருஷம், நிமிஷத்தில் பறந்துபோகும். மறுநாள் காலையில் குயவனிடம் கடனாக, சமையலுக்கு வேண்டிய மண்பாத்திரங்களைச் சர்மா வாங்கிக்கொண்டான். வீரம்மாளின் உதவியால் குழம்பு வைத்தான். குழம்பிலே என்னன்ன சாமான்களோ போட்டுப் பார்த்தான். அதிலே ருசி மட்டும் இல்லை. பழகினால் எல்லாம் தானாக வந்துவிடும் என்று எண்ணிக் கொண்டான். தினந்தோறும் வீரம்மாள் பள்ளிக்கு வந்து, அதைக்கூட்டி மெழுகி சுத்தம் செய்வாள். கூலிவேலையன்றல்லவா? எனவே, அதைக் குறைகூற, யாரால் முடியும்? ஆனால் சமையல் பாண்டங்களைச் சுத்தம்செய்ய, சர்மா அவளுக்கு அனுமதி கொடுப்பதில்லை. ஏன் என்று அவள் கேட்டாள், ஜாதி என்று சொல்லி விழிப்பான். பள்ளிக்கூடத்தில் சுமார் இருபத்தைந்து பையன்களும், ஒரு சிறுபெண்ணும் படித்து வந்தார்கள். ஏன் ஒரு பெண் மட்டும் என்று கேட்கலாம். அந்த ஒரு பெண் வந்ததுகூட ரொம்ப நிர்ப்பந்தத்தினாலே, அந்தப் பெண்ணின் தகப்பனாருக்குத் தன் பெண் படிக்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாயிருந்ததால், அவர் மட்டும் தனது குழந்தையை அனுப்பி வைத்தார். ஊராருக்கு இது பிடிக்காத சங்கதியாகும்; என்றாலும் அவர்கள் பொறுத்துக் கொண்டார்கள். அந்தத் தனி மனிதனுடைய பிடிவாதத்தையும், பணத்தையும் கருதி. சர்மாவின் சம்பளம் என்ன? மாதம் ஐந்து ரூபாயும் அமாவாசை நாளன்றைக்கு பையனுக்குக் கால் மரைக்கால் வீதம் அரிசியும். ஊரார் எவரும் விரும்பாத் மரக்கட்டை, சர்மாவுக்கு, விறகாக அனுப்பப்பெறும். புதுப்பிள்ளை வந்து சேர்ந்தால் ஒரு தேங்காய், பாக்கு வெற்றிலை, ஒரு அனா குருபாத காணிக்கை நாராயண சர்மாவுக்கு வரும். இருபத்தைந்து குழந்தைகளும் ஒரே வகுப்பல்ல. அட்சராப்பியாசம் முதல் கூட்டிப் படிக்கத் தெரிந்த பையன்கள் வரையில் இருந்தார்கள். இவர்களைக் கட்டிமேய்க்கும் கஷ்டம் பள்ளி வாத்திமார்கள் அறிவார்களேயொழிய, பெற்றோர்களுக்கு ஒரு நாளும் தெரியப்போவதில்லை. வீட்டிலே குறும்பு செய்வதால், பள்ளிக்கூடத்துக்கு அனுப்பு என்று கம்பீரமாகத் தகப்பன் சொல்லிவிடுவான்; ஆனால் பள்ளி வாத்தியின் கஷ்டத்தை அவன் அறிவானா? “என் பையனுக்குச் சரியாய்ப் படிப்பு வரவில்லை. வாத்தியாரின் கவனிப்புப் போதாது” என்று குறைகூற மட்டும் அவனுக்குத் தெரியும். ஆனால், பச்சைக்குழந்தைகளைக் கண்ணாறக்கண்ட பிறகு, நாராயண சர்மா தனது கஷ்டமொன்றையும் நினைத்துக் கொண்டதேயில்லை. சமையல் நேரத்தைக் கூட மறந்துவிடுவான். குழந்தைகளைத் தெய்வங்களாக அவன் கொண்டாடினான். நாராயண சர்மாவின் அதிருஷ்டத்தால், அவன் கமலாபுரத்துக்கு வந்த இரண்டொரு தினங்களுக்குள் அமாவாசையும் வந்தது. அந்த மாதச் சாப்பாட்டு அரிசியும் கூட வந்து சேர்ந்தது. மாதம் முடிந்தபின், சம்பளமும் கைக்கு எட்டிற்று. ரொக்க ரூபாய் ஐந்து ரூபாயைக் கையில் பார்த்தவுடன், அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. ஐந்து மைல் தூரத்துக்கு அப்பாலுள்ள தபாலாபீசுக்கு ஓடி, நான்கு ரூபாயைத் தனது தகப்பனார் பெயருக்கு மணியார்டர் செய்தான். அன்று முழுவதும் அவன் அடைந்த களிப்பைச் சொல்ல முடியாது. ஆறு வடியக்கொல்லும், பஞ்சம் தெளியக்கொல்லும் என்று உலகத்தார் சொல்லுவார்கள். அதுபோல, சோமதேவ சாஸ்திரிகள் நாராயணன் அனுப்பிய பணத்தைக் கையிலெடுத்து கனம்பார்த்து களிப்படையுங் காலத்தில், இரண்டு தடவை சொடுக்கி இழுத்து இறந்துபோனார். நாராயண சர்மாவுக்குக் கடிதமூலமாக சேதிகிடைத்தது. விம்மி விம்மி அழுதான். வீரம்மாளிடம் சொன்னான். ஊராரின் உத்தரவைப் பெற்று, தனது தகப்பனாரின் உத்தரக்கிரியைகளின் பொருட்டு புளியந்தோப்புக்குச் சென்றான். ஏழைக் குடும்பத்தின் மூலபுருஷன் இறந்துபோனால், அந்த விபரீத நிகழ்ச்சியின் பலனை யாரால் எழுத்தில் எழுதமுடியும்? வாயால் சொல்ல முடியும்? சொல்லுவதென்ன? சோமதேவ சாஸ்திரிகளின் உத்தரக் கிரியைகள் நடைபெற்றன. குடும்பத்துக்கு ஐம்பது ரூபாய் கடன் ஏற்பட்டது. கடன் பொறுப்பை நாராயணன் ஏற்றுக்கொண்டு, கமலாபுரத்துக்குத் திரும்பி வ்ந்தான். வந்ததும் வீரம்மாள் அவனை விசாரித்தாள். “இரண்டு வித நஷ்டங்கள் எனக்கு உண்டாகி விட்டன. தகப்பனாரைச் சுகத்தில் வைத்துக் களிக்க வேண்டுமென எண்ணின எனக்கு அவர் இறந்தது ஒரு நஷ்டம். எனக்குச் சந்தோஷம் எது? அவருக்குப் பணிவிடை செய்து பாதுகாக்க அவர் இல்லையே! அவர் இறந்ததனால் எனக்குக் கடன் ஏற்பட்டது. மற்றொரு நஷ்டம்” என்றான். “கவலைப்பட்டுச் செய்வதென்ன? கடனைத் தீர்க்கிற வழியைப் பற்றியல்லவா இனிமேல் யோசிக்க வேண்டும்? கடனைத் தீர்த்து நல்ல பெயரோடு வெளியே வரவேண்டும்; அதுதான் கவலை” என்றாள் வீரம்மாள். “உன் யோசனையை மெச்சினேன்” என்றான் நாராயண சர்மா. அந்த மாதம் முதல் தன் தாய்க்கு மூன்று ரூபாயும் கடனுக்கு இரண்டு ரூபாயும் அனுப்பி வந்தான். அமாவாசை அரிசி அவன் சாப்பாட்டுக்குப் பாத காணிக்கை பணம் மணியார்டர் கூலிக்கு. இவ்வாறு இரண்டு ஆண்டுகள் கழிந்தன. ஆனால் கடன் தீர்ந்தபாடில்லை. இன்னும் இருபது ரூபாய்க்கு அதிகம், பாக்கி என்று கடன் கொடுத்தவன் சர்மாவுக்கு எழுதிவிட்டான். இப்பொழுது சர்மாவுக்கு வயது இருபது. வீரம்மாளுக்கு பதினான்கு. ஊரிலே சர்மாவுக்கு நல்ல மதிப்பு. பிள்ளைகளுக்கு அவனிடம் ரொம்பப் பிரியம். இந்தச் சமயத்தில் ஊரார் தபால் அதிகாரிகளுக்கு மனுச்செய்து கொண்டார்கள். கமலாபுரத்தில் ஒரு கிளை தபாலாபீஸ் ஸ்தாபிக்கப்படுதல் வேண்டும் என்பது மனுவின் கோரிக்கை. மனுவை விசாரிக்கத் தபால் இன்ஸ்பெக்டர் வந்தார். ஊரார் அவரை மரியாதை செய்து வரவேற்றார்கள். சர்மாவும் அங்கிருந்தான். தபாலாபீஸ் வைப்பது என முடிவு செய்யப்பட்டு, வேலைக்கு சர்மாவை நியமிப்பது உசிதம் என வேண்டிக் கொள்ளப்பட்டது. “அவன் யார், எங்கே அவன்” என்றார் இன்ஸ்பெக்டர். சர்மா அவர் முன்னிலையில் வந்து நின்றான். “நீ பிராமணனா? உன்னைப் பார்த்தால் பையன் போலிருக்கிறதே? தபாலாபீஸ் பணம் புழங்குகிற இடமாயிற்றே? கையரிக்கக் கூடாதே! பிராமணனா” என்றார் இனஸ்பெக்டர். “நல்ல பிள்ளை! வேண்டுமானால், அவருக்காக நான் ஜாமீன் நிற்கிறேன்” என்றார் பள்ளி நிர்வாகிப் பெரியார். விஷயம் முடிந்து, தபாலாபீஸ் உத்தியோக மூலமாய்க் கூடுதலாக, இன்னொரு ஐந்து ரூபாய் சர்மாவுக்கு கிடைத்தது. இரண்டையும் சேர்த்துப் பார்க்கும்படியாக, அவனுக்குக் காலமும் வேலையும் அமைந்தன. அன்றைய தபாலிலேயே தனது தாய்க்கு இந்த சந்தோஷச் செய்தியையும் எழுதி அனுப்பினான். அன்றைய தினம் வழக்கம் போல் வீரம்மாள் வந்தாள். “வீரம்மா! சங்கதி கேட்கவில்லையே! நம்ம ஊருக்குத் தபாலாபீஸ் வரப்போகிறது. நான் அதற்கு அதிகாரி. அதற்காக எனக்கு ஐந்து ரூபாய் சம்பளம். இரண்டு சம்பளமும் சேர்ந்து எனக்குப் பத்து ரூபாய் கிடைக்கும். இனிமேல் நான் பணக்காரனில்லையா” என்றான் சர்மா. “அப்பா! நல்ல வேளை! இனிமேல் உங்களுக்கு கடன் தொந்திரவு இருக்காது. ரொம்ப சந்தோஷம். சுவாமி!” என்றாள். “வீரம்மா! நீ புத்திசாலி. பார்த்தாயா, அந்தப் பாழான் கடனை மறந்து விட்டேனே! உண்மை; இனிமேல் கடன் இருக்காது. இனிமேல் உன் பாடங்களை நீயே படித்துக்கொள்ள வேண்டும். தபால் வேலையும் சேர்ந்தால் சமையல் செய்யக்கூட எனக்கு நேரமிராது. ஆகையால் உன் சந்தேகத்தை நீ கேட்டுக் கொள். நீ தனியாக எதையும் கற்றுக் கொள்ளக் கூடிய நிலமைக்கு வந்து விட்டாய்” என்றான் நாராயணன். அவள் ஒன்றும் சொல்லாமலிருந்தாள். “பேசாமலிருக்கிறாயே” என வினவினான். “ஒன்றுமில்லை; நான் சொல்வதைக்கேட்பதாயிருந்தால், சொல்லுகிறேன், வீணே வாயிழக்க இஷ்டமில்லை” என்றாள். “எனக்கு இது சந்தோஷ சமயம். நீ எதைக் கேட்டாலும் தருகிறேன்” என்றான். “உங்களுக்கு இனிமேல், அதிகமாக ஓய்வு நேர மிருக்காது. உங்கள் துணிகளைத் தோய்த்துக் கொண்டு வருகிறேன், புஸ்தகங்களையும் நானே படித்துக் கொள்கிறேன்.” “நான் அயர்ந்து போன சமயம் பார்த்து, என்னை வார்த்தைகளால் கட்டுப்படுத்திவிட்டாய். நான் சொல் தவற முடியாது. உன்னிஷ்டம் போல் செய்” என்றான் சர்மா. வீரம்மாள் மிகுதியும் சந்தோஷமடைந்தாள். மேலே கூறப்பட்டது நடந்து ஒரு வாரமிருக்கும், நாராயண சர்மா முகவாட்டத்துடனிருந்தான். அந்தச் சமயம் வீரம்மாள் வந்தாள். “சுவாமி! ஏதோ வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே! எனக்குச் சொல்லலாகாதா? தாயாருக்கு உடம்பு அசௌகரியமா? அல்லது கடனுக்காக அந்த ஆளிடமிருந்து கடிதம் வந்ததா” எனக்கேட்டாள். “உன்னிடத்தில் சொல்லக் கூடாதது என் ஆயுளில் ஒன்றுமே இருக்காது. உன்னைக் காட்டிலும் உலகத்தில் எனக்கு வேறு உதவி கிடையாது” என்று சொல்லும் பொழுதே, “சுவாமி! ஆண்பிள்ளைகள் ஒரு நாளும் மனங்கலங்கக் கூடாது. நீங்கள் கண் கலங்கினால், நாங்கள் போகிற வழி என்ன? எதற்கும் கவலைப்படலாகாது என்று என் தகப்பனார் அடிக்கடி எங்களுக்குச் சொல்லுவார். உங்களுக்கு இப்பொழுது என்ன வந்துவிட்டது. தபாலாபீஸில் ஏதேனும் திருட்டுப் போய் விட்டதா” என்று கேட்டாள். “ஒரு கடிதம் என் தாயாரிடமிருந்து வந்திருக்கிறது. அதைப் படித்தேன், வருத்தமுண்டாயிற்று. அதை நீ படித்துப் பார்” என்று கடிதத்தைக் கொடுத்தான். நீட்டின. கடிதத்தை வீரம்மாள் வாங்கிக் கொண்டு, கொஞ்சம் தடவி, ஆள! சரிப்படுத்திக் கொண்டு, பின்வருமாறு படித்தாள்: சிரஞ்சீவி நாராயணனுக்கு ஆசீர்வாதம். சகல மங்களங்களும் உண்டாவதாக! நீ எழுதிய கடிதத்தை உன் தங்கை ஞானாம்பாள் எனக்குப் படித்துக் காண்பித்தாள். ரொம்ப சந்தோஷமடைந்தேன். எல்லாம் கடவுளின் கிருபை. அவன் தான் நம்ம குடும்பத்தைக் காப்பாற்றவேண்டும். ஞானாம்பாளுக்கு இப்பொழுது பதினான்கு வயது (இந்த மாதத்தோடு) பூர்த்தியாகிற சங்கதி உனக்கு ஞாபகமிருக்கும். இன்னும் இரண்டு மாதங்களுக்குள் அவளுக்குள். கலியாணம் பண்ணியாக வேண்டும். இப்பொழுதே, ஊரார் கண்டதெல்லாம் பேசுகிறார்கள். வைதீகாள் விட்டுப் பெண்ணைப் பதினெட்டு வயதானாலும் கலியாணம் செய்து கொடுக்கலாம். அவர்களுக்கு சாஸ்திரமேது? அவர்களுக்கு அவர்கள் தான் சாஸ்திரம் என்று வம்பு பேசுகிறார்கள். உலை வாயை அடைத்துவிட முடியுமா? யோசித்துப் பார். உன் தமையனுக்குக் கலியாணமாகா விட்டாலும், உனக்கு இந்த வருஷம் எப்படியாவது தன் பெண்ணைக் கொடுத்துவிட வேண்டுமென்று உன் சின்ன மாமா கணபதி சாஸ்திரி ஒரு காலில் நிற்கிறான். நீயும் ஒண்டியாய் எத்தனை நாள் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியும்? இரண்டு கலியாணங்களும் இந்த வருஷம் கட்டாயம் நடந்தாக வேண்டும். இரண்டுக்குமாக, ஐந்நூறு ரூபாய் பிடிக்கும். உனக்குத் தெரிந்தவிடத்திலேயே, கமலாபுரத்தில் கடனுக்கு ஏற்பாடு செய்துவிட்டு, எனக்கு உடனே பதில் எழுது. கலியாண காரியங்கள் சீக்கிரம் ஆக வேண்டும். எல்லாவற்றிற்கும் உடனே பதில் எழுது. நாங்களெல்லோரும் இங்கே சௌக்கியமாய் இருக்கிறோம்.” வீரம்மாள் கடிதத்தைப் படித்து முடித்தாள். பேசாமலிருந்தாள். அவள் முகத்தில் ஏதோ வாட்டம் ஏற்பட்டாற்போல நாராயணனுக்குத் தோன்றிற்று. “என்ன. வீரம்மா பேசாமலிருக்கிறாயே” என்றான் நாராயணன். “அம்மா எழுதியிருக்கிறது சரிதானே! உங்கள் தங்கைக்குக் கல்யாணம் ஆக வேண்டும்! பிராமண வீட்டில் அதை அதிக காலம் நிறுத்தி வைக்க முடியாது. எங்கள் வீடா பிராமணர் வீடு? அம்மா சொல்லுகிறது போல, நீங்களும் எவ்வளவு காலம் ஒண்டியாயிருக்கிறது? நீங்கள் கடனைப் பற்றிக் கவலைப்படுகிறாப் போலிருக்கிறது. கடனைப் பற்றி நினைத்தால், கல்யாணம் போகிற வழி எந்த வழி?” என்று கேட்டாள் வீரம்மாள். ஆனால் அவளுக்கு வழக்கமாயுள்ள உற்சாகத்துடன் அவள் பேசவில்லையென்று அவளுடைய குரலினின்றும் தெரிந்ததாக நாராயணனுக்குத் தோன்றிற்று. “கடன் கவலை எனக்கு இப்பொழுது போய்விட்டது.. கடன் வாங்கிக் கடனைத் தீர்த்தவன், பின்னும் கடன் வாங்கப் பின்னடைய மாட்டான். எனக்கு இப்பொழுது வந்திருப்பது கல்யாணக் கவலை” என்றான். “உங்கள் தங்கைக்குக் கல்யாணம் செய்யாமல் சும்மாயிருக்க முடியுமா? நீங்களும் கலியாணம் செய்து கொள்ள வேண்டிய காலம் தான்” என்றாள் வீரம்மாள். “என் தங்கைக்குக், கல்யாணம் செய்துவிட வேண்டும். அதை நான் தடுத்துப் பேசவில்லை. எனக்கு எதற்குக் கல்-” என்று முடிப்பதற்குள் நிறுத்திக் கொண்டான். “ஏன் முடிக்கவில்லை? விழுங்கிவிட்டீர்களே” என்றாள் வீரம்மாள். “ஒன்றுமில்லை” என்றான் சர்மா. “எதையோ மறைக்கப் பார்க்கிறீர்கள்? என்னைத் தவிர உலகத்தில் உங்களுக்கு வேறு உதவி கிடையாது என்றீர்களே” என்று வீரம்மாள் கேட்டாள். “நான் சொல்லாததற்கு அதுதான் காரணம்” என்றான் நாராயண சர்மா. பிறகு பேச்சும் நின்றுவிட்டது. வீரம்மாளும் வீடு போய்ச் சேர்ந்தாள். அன்றிரவே சர்மாவுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. காலையில் வந்தாள் வீரம்மாள். சர்மா காய்ச்சலாகக் கிடப்பதைக் கண்டாள். “வீரம்மா! எனக்குக் காய்ச்சல், சுரம் எப்படியிருக்கிறது என்று உடம்பைத் தொட்டுப் பார்” என்றான். இதைக் கேட்டவுடன், வீரம்மாளின் உடம்பு தூக்கிப்போட்டது. ஒன்றும் பேசாமல், சர்மாவின் நெற்றியையும், மார்பையும் தொட்டுப் பார்த்தாள். காய்ச்சல் அதிகமில்லை என்றாள். “வாய் கசப்பாயிருக்கிறது” என்றான் சர்மா. வீரம்மாளுக்குப் புதியதொரு தைரியம் உண்டாயிற்று. “நிறையச் சர்க்கரை போட்டு, கஞ்சி வைக்கிறேன். குடியுங்கள், வாய்க் கசப்பு போய்விடும்” என்றாள். சிறிதுநேரம் பொறுத்து, “சரி” என்றான் சர்மா. சர்க்கரை உண்டா என்று கேட்டான். இல்லை எனவே, வீட்டுக்கு ஓடி, நொடிப்பொழுதில் சர்க்கரை கொணர்ந்து, கஞ்சி வைத்துக் கொடுத்தாள். குடித்தான் சர்மா. “மயக்கமாய் வருகிறது, தலையைப் பிடித்துக்கொள்” என்றான், தன் துடையில் அவன் தலையை வைத்து, அதை இரு கைகளாலும் அழுத்தி, ஆனால் வலிக்காமல் பிடித்துக் கொண்டாள் வீரம்மாள். “இதமாயிருக்கிறது” என்றான் சர்மா. “அப்படியே தூங்குங்கள்” என்றாள் வீரம்மாள். தூங்கிப் போனான். சிறிது நேரத்திற்குள்ளாகவே விழித்துக்கொண்டு, “உன்னைத் தொந்தரவு செய்வது பாவம்; தலையணையில் தலைவைத்துப் படுத்துக் கொள்ளுகிறேன்” எனக்கூறி, தலையை அவள் துடையினின்றும் எடுத்துவிட்டான். அன்று பள்ளிக்கூடம் கிடையாது. இரண்டு, மூன்று நாட்களுக்குள் அவன் காய்ச்சல் குணமாய்ப் போயிற்று. கமலாபுரம் பள்ளி, சர்க்கார் பள்ளியாக மாறி, ஒரு வருஷமாயிற்று. ஆனால் சம்பள உயர்வுமட்டும் சர்மாவுக்கு கிடையாது. திடீரென்று ஒருநாள் அவனுக்கு ஓர் உத்தரவு ஒருவர் மூலமாக வந்தது. உத்தரவு பின் வருமாறு: “கமலாபுரம் ஆரம்பப்பள்ளி உபாத்தியாயர் நாராயண சர்மாவுக்கு: நீர் இருபத்துநான்கு மணிநேரத்துக்குள் உம்முடைய வேலையை நமது ஆபீஸ் உத்தரவை உமக்குக் கொண்டு வந்து கொடுப்பவரிடம் ஒப்புவித்துவிட்டு, தேவூருக்குச் சென்று, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பதவியை ஏற்றுக்கொள்ளவும். ஒப்புக்கொண்ட தேதிமுதல், உமக்குப் பதினைந்து ரூபாய் சம்பளம் போடப்பட்டிருக்கிறது. உமக்கு இஷ்டமிருந்தால், அந்த ஊர்த் தபாலாபீஸ் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளலாம். அதற்குத் தனியாக ஊதியத்தைப்பற்றி அதன் மேலதிகாரிகளுக்கு எழுதிக் கொள்ளவும்…’ கல்வி இலாகா இன்ஸ்பெக்டர். உத்தரவு அவனுக்குக் கிடைத்த நேரம் மாலை. மறுநாள் அதிகாலையில் புறப்பட்டாலன்றி, தேவூருக்கு இரண்டு நாட்களுக்குள் போய்ச் சேர முடியாது. சுமார் அறுபது மைல் இருக்கும். வந்தவரிடம் சார்ஜ் ஒப்புவித்தான், ஊர்ப் பெரியவரிடம் சொல்லிக் கொண்டான், மறுநாள் காலையில் அருணோதயத்திற்கு முன், கமலாபுரத்தை விட்டு புறப்பட்டுப் போனான். வழக்கம்போல, வீரம்மாள் மறுநாள் காலையில் பள்ளிக்கு வந்தாள். வேற்று ஆள் இருப்பதைப் பார்த்தாள். “வாத்தியார் எங்கே?” என்று கேட்டாள். “நீ யார், வாத்தியார் எங்கே கேட்பதற்கு?” என்றான் அந்த ஆள். “அவரை எனக்குத் தெரியும்” என்றாள் வீரம்மாள். “அவரைப் போல என்னையும் தெரிந்து கொள். அவர் ஊரைவிட்டு ஒருவருக்கும் சொல்லிக் கொள்ளாமல் ஓட்டம் எடுத்துவிட்டார்” என்று துடுக்காகச் சொன்னான் புதிய வாத்தி. “நீங்கள் யார்?” என்று வீரம்மாள் வினவினாள். மங்கைப் பருவம் எய்திவரும் வீரம்மாளின் வயதுக் கிராமத்தை ஏற இறங்கப் பார்த்து, தொண்டையைக் கனைத்துக் கொண்டு, “அவர் இடத்துக்கு நான் வந்திருக்கிறேன். நீ எப்பொழுதும் போலவே வந்து கொண்டிருக்கலாம்” என்று வாய் அடங்காமல் உளறினான் அவன். “அவரும் வாத்தியார், நீயும் வாத்தியா? சீ! போ, மடையா” என்று சொல்லிவிட்டு விர்ரென்று வீரம்மாள் வீடு போய்ச் சேர்ந்தாள். அன்றைய தினமே, புதிய வாத்தி ஊர்வம்பைக் கிளப்பிவிட்டான். “கேட்டீர்களா செய்தியை! அந்த அயோக்கியன் நாராயண சர்மா, இந்த ஊர் வண்ணாரக் குடியை வைப்பாக வைத்துக் கொண்டிருந்திருக்கிறான். அவன் போய்விடவே, அவள் இன்றைய தினம் என்னிடம் வந்து என்னைப் பிடிக்கப் பார்த்தாள். சீ நாயே என்று அவளை அடித்துத் துரத்திவிட்டேன்” என்று அபாண்டமான பொய்யைப் புனைந்து திரித்து விட்டான், “வீரம்மாள் அப்படிப்பட்டவள் இல்லை” என்று ஊரார் சொன்னார்கள். சர்மாவுக்குப் பரிந்து சிலர் பேசினார்கள். “என்னய்யா முழுப்புரட்டு! அந்தப் பெண் இன்னும் ஆளாகவில்லையே” என்று யாரேனும் கேட்டால், “காமத்துக்குக் கண் கிடையாது” என்று உளறுவான். வம்பும் ஒருவாறு அடங்கிவிட்டது. இவ்வாறு ஆறு மாதம் கழிந்திருக்கும். வழக்கமாக வண்ணான் துறைக்குத் துணிகளை வெளுக்க எடுத்துச் செல்லுவாள் வீரம்மாள். அங்கே துணிகளைத் துவைக்கையில், தனது தகப்பனில்லாத காலத்தில், ஒவ்வோர் அடிக்கும், “வாத்தியாரே எங்கு போனீர்கள்? என்னை, மறந்து போனீர்களே” என்று சொல்லித் துவைப்பாள். நாளுக்கு நாள் மெலிந்து போனாள். ஒருவருக்கும் தெரியாமல், ஒருநாள் துறையில், நீரில் விழுந்து இறந்துபோனாள். வீரம்மாள் இறந்து சிறிது காலம் இருக்கும். தான் கமலாபுரத்தை விட்டுச்சென்ற ஒரு வருஷ காலமாக, நாராயண சர்மாவுக்கு, லீவு கிடைக்கவில்லை. எத்தனையோ தடவை மேலதிகாரிக்கு எழுதிப் பார்த்தான், பலிக்கவில்லை. “இந்தச் சமயத்தில் லீவு கொடுக்க முடியாது” என்று ஒவ்வொரு தடவையும் கடுமையாக அதிகாரியின் பதில் உத்தரவு அவனுக்குக் கிடைத்தது. ஏக்கமுற்றான். “வீரம்மாளிடம் சொல்லிக்கொண்டு வரமுடியவில்லையே” என்று பல தடவைகளில் வருத்தமுறுவான். கடைசியாக லிவு கிடைத்தது. கமலாபுரத்துக்கு ஒருநாள் மாலையில் வந்து சேர்ந்தான். வீரம்மாள் தண்ணீரில், விழுந்து இறந்ததைக் கேள்விப்பட்டான். மறுநாள் காலையில், வண்ணான் துறையில் நாராயண சர்மாவின் பிரேதம் கண்டெடுக்கப்பட்டது.  தி. ஜ. ரங்கநாதன் சிறுகதை இலக்கியத்திற்கு ஒரு புதுவேகத்தைத் தந்த ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களுக்கு, முன்னோடிகளில் குறிப்பிடத் தகுந்தவர் தி.ஜ. ரங்கநாதன். தஞ்சைமாவட்டம் மேலவழுத்தூர் - அய்யம்பேட்டையில் பிறந்த அவரை கம்பனுக்கு வேண்டப்பட்ட ஊரில் பிறந்தவர் என்று க.நா.சு வால் செல்லமாக தட்டிக் கொடுக்கப்பட்டவர். “அவன் காலத்துப் பள்ளிக் கூடத்தில் கம்பன் எத்தனாங்கிளாஸ் வரையில் படித்தானோ - எனக்குத் தெரியாது. நான் எலிமெண்டரி ஸ்கூலை தாண்டியதில்லை” என்று சொல்லுவாராம் தி.ஜ.ர. எழுத்தாளர் மத்தியில் நன்கு மதிக்கப் பெற்றிருந்த தி.ஜ. ரங்கநாதன் பல பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகவும், பிரதான ஆசிரியராகவும் இருந்து அனுபவம் பெற்றவர். ‘எந்த விஷயத்தையும், எளிய வசனத்தில் எழுதுவதில் வ.ராவின் வாரிசாகக் கருதப்படும், இவர் வடிவ உணர்வுடன் பல சிறுகதைகளை எழுதியிருக்கிறார். மனிதர்களை ஏமாற்றிப் பிழைக்கும் சிலரைப் பற்றி லேசான கிண்டலுடன், ஆனால் அழுத்தம் தொணிக்கும் சொற்களுடன் கதைகள் படைத்திருக்கிறார்’ என்று சிறுகதை விமர்சன இரட்டையர்களான சிட்டி-சிவபாதசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்கள். இவரின் முதல் சிறுகதை ‘சந்தனக்காவடி.’ விமர்சனங்களின் பாராட்டையும் நல்ல அபிப்பிராயத்தையும் பெற்ற சிறுகதை ‘நொண்டிக்கிளி’. சிறுகதைகளில் தடம்பதித்தவர். நாவல் எழுதும் முயற்சியில் இருந்தாரோ இல்லையோ… “நீங்கள் ஏன் நாவல் எழுத முயலக்கூடாது?” என்று கேட்பவர்களுக்கு அவர் அளித்த பதில் இது தான். “எழுத முயன்று பார்க்கவில்லை என்று நீங்கள் நினைப்பது சரியில்லை. பலதடவை முயன்று பார்த்திருக்கிறேன். முதல் அத்யாயத்துக்கு மேல் நகரமாட்டேன் என்கிறது. கதைக்காக உருவாக்கிக் கொண்ட மூன்று, நாலு பேர்களையும் மேலே என்ன செய்யச் சொல்வது என்று புரியவில்லை”..  பெட்டி வண்டி இதோ இந்தப் புளியமரத்தின் கீழே, ஆரங்கள் போன மூளிக் கால்கள், விரிந்து பிளந்த மூக்கணை, கிழிந்த கூண்டு இந்த லட்சணங்களோடு சீந்துவாரற்றுக் கிடக்கிறதே, இந்த வண்டிதான் என்ன என்ன சம்பவங்களையெல்லாம் ரெத்தினசாமிக்கு நினைவூட்டுகிறது! இந்தப் பெட்டி வண்டி-ஆம், இது பெட்டி வண்டி தான்; வில் வண்டி; ‘மைனர்’ வண்டி. ‘மைனர்’ என்றால், ‘வயசாகாத குட்டி’ என்று அர்த்தம் அல்ல. குஷியான பணக்கார வாலிபர்களை ‘மைனர்’ என்பார்கள் இல்லையா? அந்த மாதிரி மைனர்களுக்குரிய ஒரு வண்டியாகத் தான் இது உருவாயிற்று; விளங்கியது ஒரு காலத்தில். இதைப் பார்க்கும்போது, அவள், அந்தக் கோமளமான ரூபவதி-அந்த முகம், கண்ணழகு. அந்தக் கண்மணியிலிருந்து புறப்பட்ட ஒளி நினைவு வருகிறது. வெறும் நினைவா? வேதனை! வேதனை! ஓரே வேதனை! ஐயோ! ஏன் இந்த வண்டி இன்னமும் இங்கே கிடைக்கிறது? ஏன் அடியோடு அழியவில்லை? இதைச் செய்தவன் போய்விட்டான்; இதன் உரியவர் போய்விட்டார். அவள் போய்விட்டாள். பூமியில் படியும் களங்கமெல்லாம் மடிந்தோ, மட்கியோ, நீரில் கலந்தோ, காற்றில் பறந்தோ போய்விடுகிறது. அந்தக் களங்கத்திலே — ரத்தினசாமிக்கு நினைவு வரும் களங்கத்திலே- இந்த வண்டியும் அவனுந்தான் மிச்சம். களங்கமா? சீ! அப்படி ஒன்று உண்டா ? உண்டானால் அதற்கு நிலைப்பு உண்டா ? — ஒன்றுமே அறியாத குருட்டுத் தனத்தோடு தான் எல்லாரும் உலகத்துக்கு-பிரபஞ்சச் கழலுக்கு- வருகிறோம். எங்கிருந்துதான் வருகிறோமோ! வருகிறோம் என்றுதான் சொல்லமுடியுமா? — நீரிலே காற்றுப்புக உண்டாகும் நீர்க் குமிழியா மனிதப் பிறவி? ஒன்றுமே புரியவில்லை. புரிந்தவரோ, புரிந்ததுபோல பேசுபவரோ சொல்வதையும் நம்ப முடியவில்லை. பிரபஞ்சம் பொய்யா? மெய்யா? பொய்யிலே களங்கம் ஒட்டாது. பொய்யே களங்கந்தானே. அதிலே களங்கம் ஒட்டாது, இரண்டறக் கலந்துவிடும். உலகம் மெய்யா? மெய்க்குக் களங்கமே இல்லை. உலகம் பொய் அல்ல, மெய் அல்ல; இரண்டும் கலந்த ஒன்று. வெளிப்படத் தெரிவதெல்லாம் பொய்; உள்ளே மறைந்திருப்பதெல்லாம் மெய். ரத்தினசாமிக்கு இப்டியெல்லாம் என்ன என்னவோ வேதனையும் வேதாந்தமுமான சிந்தனைகள், மூளி வண்டியைக் கண்டதும் உண்டாயின. இதன் மேலே கவிந்திருக்கும் புளிய மரங்கூடச் சாக்குச் சாக்காய்ப் பழம் உதிர்ந்த காலம் போக, இப்போது நரைத்துத் திரைத்து விறகாகத் தயாராகி மொட்டையிட்டு நிற்கிறது. இதுதான் பிரபஞ்சு விந்தை-அற்புதம்! இந்தப் புளியமரத்திலிருந்து உதிரும் பழங்களைக் காலையிலே பலநாள் புன்னகை தவழும் முகத்தோடு அவள் வந்து பொறுக்கிக் கொண்டு போவதை. அவன் பார்த்திருக்கிறான். அவன் கூடச் சில சமயம் இப்படிப் பொறுக்குவதில் அவளுக்கு உதவியிருக்கிறான். அப்போதெல்லாம் பிந்திய சம்பவங்கள் நேரும் என்று அவனுக்குத் துளிக்கூடத் தெரியாது. ஒருவேளை அவளுக்குத் தெரிந்திருக்குமோ? பிந்திய சம்பவங்களுக்கு ஏதுவான எண்ணம், எதும் அவள் உள்ளத்திலே அப்போதே எழுந்திருக்குமோ? எப்படி? ஒரு நாளும் இல்லை; சாத்தியமே இல்லை. அது நிச்சயம். தோட்டத்தில் மேயும் பசுவைத் துள்ளித் தொடர்ந்து வரும் கன்றுக்குட்டிபோல, அவளுடைய சிறு மகள் சரசுவும் அவள் சேலை முன்றானையைப் பல்லில் வைத்துக் கடித்தபடி அவளோடு கூடவே வரும் காட்சியைத் தான் மறக்க முடியுமா? அந்தப் பெண் சரசு இப்போது எங்கே எப்படி வாழ்கிறாளோ? அது தெரியவில்லை. யாரைக் கேட்டாலும், புலனாகவில்லை. அக்கம்பக்கத்தில் அன்றைக்கு இருந்த எவரையுமே, இப்போது காணவில்லை. குமார் முப்பது வருஷத்துக்குப் பிறகு ஊருக்குத் திரும்பி வந்தால்……..? முன்னே பழகிய முகம் ஒன்றைக்கூடக் காண முடியாமல் போய்விட்டது? ஹும்! இதுதான் உலகம்! அழகான பொருள் அழியாதா, என்றுமே ஆனந்தம் தருவதால்? தெய்வப் பதுமைபோல் இருந்த அவள் ஏன் அழிந்தாள்?. சாலைக்கு அழகு தரும் ஒளி மரம் போன்ற இந்த வண்டி ஏன் இப்படிச் சிதைந்து கிடக்கிறது. பச்சைப்பசேல் என்று இலையும், பூவுங், காயுமாய் நின்ற இந்தப் புளியமரங்கூட இப்படிக் கொம்பொடிந்து தறிபட்டு வந்திருப்பதேன்? அழகு சாசுவதமா? பொய் ! பொய் ! பொய்! இந்தப் பெட்டி வண்டியைச் செய்த ஆசாரி சோம்பேறிச் சாந்தப்பன். இந்தப் புளியமரத்தடியிலே தான் இந்த வண்டி உருவாயிற்று. ஊரிலே தொழிலாளிகளின் அந்தக் காலத்து வழக்கம் இப்போதும் அப்படியேதான் இருக்கிறதோ, அல்லது மாறிவிட்டதோ? ரத்தினசாமிக்குத் தெரியாது. இன்றுதான் அவன் இங்கே வந்தான். எல்லாருக்கும் அந்நியனாக இருக்கிறான். முன்னே ஊர் முழுக்க எல்லாருக்கும் அவனைத் தெரியும். ஊருக்கே செல்லப்பிள்ளை என்றுகூட அவனைச் சொல்லலாம். அப்படித்தான் எல்லாரும் ’ரத்தினு’வைக் கொண்டாடினார்கள். கடைசியிலே, ’விழுந்த தேவதூனை’ப் போல அவன் ஊரைவிட்டு வெளியேறினான். எங்கேயாவது மூலை முடுக்கிலே அவனுக்குப் பழகிய பழைய முகங்கள் கிழடுதட்டிக் கிடக்குமோ என்னவோ! இனித்தான் தட்டுப்படவேண்டும். தச்சு, கொல்லு, பொன்வேலை இவையெல்லாம் செய்யும் ஆசாரிகளுக்கும் சரி, சலவை, ஷவரம் இவை செய்யும் தொழிலாளிகளுக்கும் சரி, சாதாரண வேலைகளுக்கு ஊரிலே யாரும் கூலி கொடுக்கும் வழக்கமில்லை. அறுவடைக் காலத்திலே அவர்கள் நிறைய நிறைய வர்த்தனை பெறுவார்கள். திருவிழாக்கள், ‘கலியாணம் கார்த்தி’, பண்டிகைகள் முதலிய விசேஷ நாட்களில் அவர்களுக்குப் பல வருமானங்கள் உண்டு. ஏர்க்காலுக்கு ஓட்டுப்போட வேண்டும், எரு வண்டிச் சக்கரத்துக்குப் பட்டம் மாட்ட வேண்டும் என்ற மாதிரி சகஜமான வேலைகளையெல்லாம் செய்வது ஆசாரிமார் கடமை. ஆனால், இதற்காக ‘ஒரு வண்டியே செய்’ என்றால் அதற்குக் கூலி கொடுத்தாக வேண்டும். வேலைப்பட்டறையிலும் சரிதான், அறுவடைக் களத்திலும் சரிதான், சாந்தப்பன் பெரிய சோம்பேறி. வேலைக்கு மழுப்புவான். வர்த்தனை கேட்கப் போகமாட்டான்; அவனுடைய மனைவி மக்கள் தான். ஏதோ யாசகம் கேட்பது போலக் கொஞ்சம் வர்த்தனையை வாங்கிவர வேண்டும். ஊர்ச் சமுதாய நிலத்தில் அவன் குடும்பத்துக்கும் சிறிது பங்கு உண்டு. அதன் ’வெள்ளாமை’யைக் கொண்டு தான் என்னவோ கொஞ்சம் கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தது அந்தக் குடும்பம். சாந்தப்பனுக்கும், குருமூர்த்திக்கும் ஒரு சமயம். ஒரு ‘சவால்’ வந்தது. ரகசியம் என்னவென்றால், சாந்தப்பனை வேலை செய்யும்படி தூண்டச் சவால் தான் சரியான யுக்தி என்பது குருமூர்த்திக்குத் தெரியும். ஊரிலே கௌரவமான ‘பெரிய’ மிராசுதார் குருமூர்த்தி. ‘பெரிய’ என்றால் பல வேலிக் குடித்தனக்காரர் அல்ல. கொங்கணச்சேரி கிராமத்தில் அவர்தான் பெரிய மிராசுதார். இரண்டரை வேலி நிலம் அவருக்கு உண்டு. ஒரு வேலி நிலத்துக்கு மேல் உடையவர் மற்ற யாருமே அங்கில்லை. எல்லாருக்குமே குருமூர்த்தியிடம் நல்ல மதிப்பும், மரியாதையும் உண்டு. அவர் பெரிய மிராசுதார். என்பதால் அல்ல; குணசீலர் என்பதால்தான். யாரையும் ஒரு வார்த்தை தவறாகப் பேசமாட்டார். தெய்வபக்தர் ஒருவிதத்தில் வேதாந்தி என்றே சொல்லவேண்டும். முறையாக அதிகமாய்ப் படித்தவர் இல்லை, சொல்லப்போனால், இரண்டாம் வகுப்புக்கு மேல் பள்ளியில் படிக்கவேயில்லை. ஆயினும், பல புஸ்தகங்களை அவருடைய அலமாரியிலே பார்க்கலாம். எல்லாம் பெரும்பாலும் ஸ்தோத்திரங்களும் வேதாந்தபரமான நூல்களுமாகவே இருக்கும். வெறும் வறளிக் கதையெல்லாம் அவருக்குப் பிடிக்காது. நுட்பமான கலைகளை அவர் பயின்றிருந்தால் நிச்சயம் அவருக்குப் புரிந்திருக்கும். ஆனால், அதெல்லாம் வியர்த்தம் என்பது அவருடைய எண்ணம். எனவே, அவை பற்றிய நூல்களையும் அவர் நாடவில்லை. சித்தர், தாயுமானவர், பட்டினத்தார் பாடல்கள், ஆஞ்சநேய பராக்கிரமம், விநாயகர் மான்மியம், திருவிளையாடல் புராணம், தனிப்பாடல் திரட்டு இந்த மாதிரி புஸ்தகங்கள் அவரிடம் ஏராளம். எல்லாவற்றிற்கும் மேலாகத் ’தஞ்சை பகவத்கீதை வசன’மே அவருக்கு மிகவும் பிடித்தமான புஸ்தகம். அதை அவர் திரும்பத் திரும்பப் படித்திருந்தார். ஆனால், அந்தப் புஸ்தகத்தைத்தான் யாரோ இரவல் வாங்கிக்கொண்டு போய்த் திருப்பிக் கொடுக்கவேயில்லை. அது போனது ஒரு துரதிருஷ்டம் என்றே அவர் கருதினார். கேட்டபோதெல்லாம் இல்லையென்னாது கால் அரை பணங்காசு சாந்தப்பனுக்குக் கொடுப்பவர் குருமூர்த்திதான். ஆனாலும் அவனை அவர் கேலி செய்து கொண்டே இருப்பார். அவர் வீட்டுக்குச் சித்திரக்கொடியும், சுவாமி உருவங்களும் அமைந்த அலங்கார நிலைப்படியைச் செய்தவன் சாந்தப்பன்தான். ஆனால், அவனும் அறியாமல் அந்த நிலைப்படிக்குக் கீழே குடும்பத்துக்குச் சிரேயஸைத் தருவதற்காக, சில நவரத்தினங்களை அவர் போட்டு வைத்தது ரத்தினசாமிக்குத் தெரியும். எந்தத் தொழிற்கலாசாலையிலும் சாந்தப்பன் பயிலவில்லை. அந்த நாளில் அந்த வழக்கம் ஏது? அவன் கண் கண்டதைக் கை செய்யும். அப்படிச் சொல்வது கூடச் சரி அல்ல; கண் கண்டதன் குறைகளையெல்லாம் நீக்கிக் கற்பனையோடு அற்புதமாய்ப் புதுமையைப் படைக்கும் திறன் வாய்ந்தது, அவன் கை. “சோம்பேறிச் சாந்தப்பனுக்கு என்ன தெரியும்? ஸ்லிப்பர் கட்டை செய்வான். வேலை செய்ய முடியாத கிளுவைக் கட்டையில் கூட அதைச் செய்துவிடுவான். கேட்டால், அது மிக லேசு; ‘கண்ணுக்குக் குளிர்ச்சி’ என்றெல்லாம் வர்ணிப்பான். ஆனால், ஒரு பெட்டி வண்டி செய்யத் தெரியுமா, பெட்டி வண்டி?” என்று ஒருநாள் சொன்னார் குருமூர்த்தி. அதையே சவாலாக மதித்து, வேலைக்கு ஆயத்தமாகி விட்டான் சாந்தப்பன். மரக்கட்டைகளையும், ஆணி, பிரம்பு, மெழுகு சிலை, ரெட்டு, வில், கண்ணாடி முதலிய சாமான்களையும் ஒன்றுக்குப் பின் ஒன்றாகக் குருமூர்த்தி வாங்கிப்போட்டார். உதவிக்கு ஆட்களையும் அமர்த்திக் கொடுத்தார். அவர்களுக்கெல்லாம் கூலி உண்டு. சாந்தப்பன் மாத்திரம் ஒரு கூலியும் பேசிக்கொள்ளவில்லை. குருமூர்த்தியிடம் சாந்தப்பன் கூலி வாங்கிக் கொள்வதா? அவர் அவனுடைய வள்ளல்; அவன் அவருடைய கலைஞன். ஆனால், அவர் கொடுக்கும் பணத்தையெல்லாம்விட, “பேஷ்! சாந்தப்பா!” என்று அவர் புகழ்ந்து இரண்டு வார்த்தை சொன்னால், அதுவே அவனுக்குப் பெரும் பரிசு. எந்தக் காலத்திலுமேதான் ’குருமூர்த்தியின் வீட்டில் சாந்தப்பனுக்குச் சர்வோபசாரமும் நடக்கும். வேலை செய்யும் காலத்தில் கேட்க வேண்டுமா? காபி, பலகாரம், சாப்பாடு எல்லாம் அவனுக்கு அங்கேதான். ஆனால், அவற்றை அவன் பூர்ணமாய் ரசித்து அனுபவிக்கவில்லை. பட்டினியோடு வேலை செய்வதில்தான், அவனுக்கு அதிக இஷ்டம். சுடச் சுடச் சரியான நேரத்தில் எதையும் அவன் உண்டதில்லை. எடுத்த வேலையை முடித்துவிட்டே எதுவானாலும் உண்பான். அதற்குள் எல்லாம் ஆறி அவலாய்ப் போய்விடும். பெட்டிவண்டி வெகு சீக்கிரத்திலே உருப்பெற்றது. நாலு மாதத்துக்கெல்லாம் அசலூரிலே ஒரு கல்யாணம். “அதற்கு என் வண்டியிலேதான் குருமூர்த்தி ஐயா போகவேண்டும்” என்று சொன்னான் சாந்தப்பன். அப்படியே தயாராகிவிட்டது பெட்டி வண்டி. கூண்டுகட்டி, ‘பெயிண்ட்’ எல்லாம் மூன்று கோட்டிங் கொடுத்தாயிற்று. கூண்டிலே பச்சை, சிவப்பு, மஞ்சள், நீலம், ஊதா முதலிய வர்ணக் கண்ணாடிகள் பதித்தாயிற்று. கூண்டுக்கு மேலே வர்ணங் கொண்டு அழகான சித்திரங்களைத் தன் கையாலேயே தீட்டினான் சாந்தப்பன். ஓவியத்தில் கூட வல்லவன் தான் அவன்! “பேஷ்! ஜோரான பெட்டி வண்டி! பலே வேலைக்காரன் சாந்தப்பன்!” என்றார் குருமூர்த்தி. சாந்தப்பன் மீசைக்காரன் அல்ல; ஆனால், மீசை இருக்க வேண்டிய இடத்தை அவன் தடவிக்கொண்டான். இப்படி இந்தப் பெட்டி வண்டி உருவான காலத்தில் சரசு சின்னக்குழந்தை அல்ல; அவளுக்குப் பிறகு எட்டுக் குழந்தைகள் பிறந்திருக்கவேண்டிய அளவு அவள் வளர்ந்துவிட்டாள். சரசுவின் வயசு பதினொன்று. அப்படியிருந்தும், அவளுக்குப் பின் அவள் அம்மாள் சிவகாமி கருத்தரிக்கவே இல்லை. ஒரு பிள்ளைக் குழந்தை பிறந்திருக்கலாகாதா? பாழுந்தெய்வம்; குருட்டுத் தெய்வம்! ஏன் அவளுக்கு இந்தக் குறையை வைத்தது? இதனால்தானே, இதனால் தானே… ஐயோ! நினைக்கவும் பதறுகிறதே! ரத்தினத்தின் அப்பாதான் அந்த ஊர்ப் பள்ளிக்கூடத்துக்கு வாத்தியாராக வந்திராமலே போயிருக்கப்படாதா? எத்தனையோ ஊரில் பள்ளிக்கூடம் இல்லை. இந்த ஊரில் அது இல்லையென்று யார் அழுதார்கள்? இங்கேயும் அது இல்லாது போயிருந்தால், எவ்வளவு மேலாக இருக்கும்! அப்பா வாத்தியார். அதனாலேயே ரத்தினசாமி இங்கே வந்து வாழ நேர்ந்தது; குருமூர்த்தியோடு சிநேகமாக நேர்ந்தது; அவருடைய தம்பிபோல உறவாட நேர்ந்தது. அவன் வேதாந்தி ஆனால் ரத்தினசாமியின் விதண்டாவாதங்களையெல்லாம் கேட்டு, அவனுக்குப் பதில் சொல்லுவதிலே அவருக்கு ஓர் ஆனந்தம். விளையாட்டிலேகூடக் குருமூர்த்தி ஒழுங்கு பிறழ மாட்டார்; ஆயினும் சீட்டாடும்போது ரத்தினம்’ செய்யும் தில்லுமுல்லுகளையெல்லாம் கண்டு அவர் மகிழ்வார். ‘ரத்தினம் புத்திசாலி; ஆனால் அதிலே தினையளவு கோணல் புத்தி கலந்திருக்கிறது’ என்பது அவர் கருத்து. எந்தவிதமான முரட்டுக் காரியத்துக்கும் ரத்தினத்தைத்தான் அவர் கூப்பிடுவார். அவர் என்ன? அவர் மனைவி சிவகாமியேதான் கூப்பிடுவாள். கிணற்றில் விழுந்த செம்பைக் கயிற்றின் துணைகூட இல்லாமல் இறங்கி எடுக்க வேண்டுமா? தென்ன மரமேறி நாலு இளநீர் பறித்துப்போட வேண்டுமா? எப்பேர்ப்பட்ட சண்டிக்காளை பூட்டிய வண்டியையும் சல்லியன் மாதிரி லாவகமாய்ச் சாரத்தியம் செய்ய வேண்டுமா? எதற்கும் ரத்தினசாமி தயார். ஆமாம்; அப்படி வண்டி ஓட்டியதால் தானே வந்தது வினை! வண்டி பூர்த்தியாகிவிட்டது. கல்யாணத்துக்குப் புறப்பட வேண்டிய நாளைக்கு முந்திய நாள் மாலை. சிவகாமி ஒரு குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு குடிநீர்க் கிணற்றுக்குப் புறப்பட்டாள். ஊர்ப் பொதுமக்களின் சௌகரியத்துக்காக, அதிலே இப்போது புதிதாகப் பம்புக்குழாய் போட்டிருந்தார்கள். ஆகவே, அவள் தாம்புக்கயிறு எடுத்துச் செல்லவில்லை. குடத்தை ஒரு கையால் அணைத்து, மறுகையால் அழகாகப் பிடித்துக்கொண்டு மெல்ல மெல்ல அவள் நடந்தாள். “ரத்தினு, பார்த்தாயா அண்ணியை? பாலகிருஷ்ணனை இடுப்பில் வைத்துயசோதை போவதை! பாவம் பிள்ளைக் குழந்தை இல்லை என்று பெருங்குறை இந்த யசோதைக்கு!” என்று கேலி செய்தார் குருமூர்த்தி. மனைவியை இப்படித் தமாஷ் செய்வதிலே அவருக்கு ஒரு குஷி. அவளுடைய ஏக்கத்தின் பரிமாணத்தை அவர் அறியவில்லை. உள்ளே கொந்தளித்துக் கொண்டிருக்கும் எரிமலையின் உஷ்ணத்தை, சாந்தமான சமவெளியில் இருப்பவன் எப்படி அறிவான்? “இனி உனக்குப் பிள்ளையே பிறக்காது” என்று ஒருநாள் கனவில் வந்து சிவபெருமான் அவருக்குச் சொல்லிவிட்டாராம். சிவகாமியிடம் தாம் இதைத் தெள்ளத் தெளியத் தெரிவித்து விட்டதாகச் சொல்லிச் சிரித்தார் குருமூர்த்தி. என்ன துர்ப்பாக்கியம்! நிராசை என்பது நீற்றுப்போன நெருப்பல்ல என்று அவர் அறியவில்லை. அது நீறு பூத்த நெருப்பு; காற்றடித்ததும் கிளர்ந்து கனன்று ஜவாலை ஆகிவிடுமே! ஆகிவிட்டதே! அந்தத் தீ இதோ இன்றுகூட எரிகிறதே! கல்யாணத்துக்குப் புறப்பட்டாயிற்று. தெருவிலே இருந்த இரண்டு, மூன்று குடும்பங்கள் வண்டிகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டன. எல்லாரும் ஒன்றுக்குள் ஒன்று; உறவினர்கள், ரத்தினம் சம்பந்தமில்லாதவன். ஆனால், அவன் தான் குருமூர்த்தியின் குடும்பத்துக்கு உற்ற துணைவனாகிவிட்டானே. குருமூர்த்தியின் ஆஸ்தானக் கலைஞன் சாந்தப்பன்; ஆஸ்தானப் புலவன் ரத்தினசாமி. இருவரும் கூடவே புறப்பட்டார்கள். ரத்தினத்தின் அப்பாவுக்கு அவன் ஒரு தறுதலை. “கட்டுக்கடங்காத பிள்ளையை வெட்டிப் போட்டால் என்ன?” என்று, அவன் இல்லாத சமயத்திலெல்லாம் அவர் திட்டிக் கொண்டிருப்பாரே ஒழிய, நேரிலே ஒன்றும் சொல்வதில்லை. எந்த விதமாகவும். அவனைக் கண்காணிப்பதில்லை. இப்போதுதான் அவன் உச்சிக் குடுமியாயிருக்கிறான். அப்போதெல்லாம் அவன் தலையிலே கட்டுக் குடுமி. பாதித் தலைக்கு மேலே அது பரவியிருக்கும். அதற்கு முன்னே சன்னமாகக் கன்றுக்குடுமி வைத்துக் கொண்டிருப்பான். அதைப் பார்த்து அவன் அப்பாவுக்கு எரிச்சல் எரிச்சலாய் வரும். ‘இந்தப் பயலின் கேராவும் கிருதாவும்’ என்று அவர் பெருமூச்செறிவார். ‘கன்றுக் குடுமிக்கும்’ ‘கோ-கிருதாவுக்கும்’ அவருக்கு வித்தியாசம் தெரியாது. சரியான வாலிபம். இருபத்தைந்து வயசு. ரத்தினம் டில்பஹார் தைலந்தான் பூசி வருவான். தலையிலே அடத்தியில்லாது மயிர் சொற்பமாக இருந்தாலும், முடிச்சுப் ‘புஸு புஸு’ என்று விலத்தியாய்ப் பெரிசாய் இருக்கும்படி தளுக்காக முடிந்து கொண்டையூசி செருகிக் கொள்ளுவான். சில சமயம் பெண்களைப்போல் செருகு கொண்டையும் போட்டுக்கொள்வான். கோதி வாரிவிட்ட மயிர் பறக்காது. ஆனாலும் அதைப் படிய வைக்கும் ‘கமான் வளைவுச் சீப்பு’ அவன் தலையிலே எப்போதும் அலங்காரப் பொருளாய் அமர்ந்திருக்கும். மஸ்லின் ஜிப்பா. வெண்பட்டு அங்கவஸ்திரம்.. இடுப்பிலே அழகாகக் கட்டமிட்ட வர்ணக் கைலி, நெற்றியிலே சன்னமாக வாசனைச் சாந்துப்பொட்டு, எப்போதும் வெற்றிலை மென்று சிவந்திருக்கும் அவன் உதடுகள், கதுப்பிலே புகையிலையைக் கிள்ளி அடக்கிக்கொண்டு தளைக் கயிற்றைக் கையிலே பிடித்தானானால், ஓடாத மாடெல்லாம் இறக்கை கட்டிய குதிரைகள் மாதிரி பறக்கும். அன்று இந்தப் பெட்டி வண்டியை அவன் தான் ஓட்டினான். அதுதானே பொல்லாத தீங்காய் முடிந்தது? குருமூர்த்தி இந்தப் பெட்டி வண்டியில் வெள்ளோட்டத்துக்கென்றே புதிதாக மிக அழகான ஒரு ஜோடி காளைகள் வாங்கினார். அவற்றுக்குக் கொப்பி, சதங்கை, மணிமாலை -முதலிய அணிகளெல்லாம் போட்டுவிட்டார். அந்த மாடுகளுக்கேற்ற சாரதி ரத்தினந்தான். என்னிடம் விதம் விதமாய்ப் பூணும் சாட்டைகளும் கட்டிய தார்க்குச்சிகள் உண்டு. மணிமுடிச்சுச் சாட்டை, சன்ன வார்ச் சாட்டை, பூக்குஞ்சலச் சாட்டை இப்படிப் பல உண்டு அவனிடம். சாட்டையோடு, கறுப்புக் குடை ஒன்றையும். வண்டியோட்டும் சாதனமாகச் சில சமயம் அவன் கையாளுவான். - குடைக்கு மிரளும் மாடுகள் விஷயத்தில் அவனுக்கும் வெகு உற்சாகம். சாட்டையடிக்கும், தார்க்குத்துக்கும் மசியாத மாட்டை, விறுக்கென்று குடையை விரித்து வெறித்தோடச் செய்யும்போது, ஏதோ ‘பாரசூட்டில்’ பறப்பதுபோல அவனுக்கு ஆனந்தம் ஏற்படும். இந்தப் புது மாடுகளுக்குப் பூச்சாட்டை போலவே குடையும் அவசியம் என்று அவன் எடுத்துவந்தான். “அடே , ரத்தினம், தார்க்குச்சியால் குத்தி ரத்தக்காயம் செய்துவிடாதே. ஹத்திலே ஓட்டு” என்று தொடக்கத்திலேயே எச்சரித்தார் குருமூர்த்தி. “அந்தக் கவலை உங்களுக்கு வேண்டியதே இல்லை” என்று உறுதி சொன்னான் ரத்தினம். தாரைச் சுர் என்று குத்தி எடுக்கக்கூடாது; மென்மையாகக் குத்தி ஒரு திருகு திருகி எடுத்தால் பொட்டு ரத்தம் வராது. தவறி வந்தால் சிறிது சாணத்தைத் தடவிவிட்டால் போயிற்று. இது தார்க்குச் சிக்களை பற்றி அவனுடைய சித்தாந்தம். ரத்தினம் வண்டியோட்டினான். அழகான பெட்டி வண்டி, அதில் அழகான பெண்களே உட்கார்ந்திருந்தார்கள். குருமூர்த்தி பின் வண்டி ஒன்றில் வந்தார். பெட்டி வண்டியில் முன் பாரம், பின் பாரங்களையெல்லாம் சரி செய்தபோது, சிவகாமி முன்பக்கத்தில் மூக்கணைக்கு அருகே உட்காரவேண்டி வந்தது. பெட்டி படுக்கை இவற்றோடு மற்றும் இரண்டு பெண்கள் அந்த வண்டியிலே இருந்தார்கள். சற்றுப் பருத்திருந்த ஒருத்தி, வண்டியின் நடு மத்தியிலே உட்கார்ந்திருந்தாள். அவள் சிவகாமியின் அத்தங்காள்; கொஞ்சம் வாயாடி; சம வயசுக்காரி. வண்டியில் இருந்த மூன்று பேருக்குள்ளும் அதிக அழகி சிவகாமிதான். முழுமதிபோல் சற்று வட்டமான முகம், செக்கச் செவேல் என்றிருக்கும் அவள் மேனி, கறுத்த கூந்தல் தானாகச் சுருண்டு சுருண்டு, ஓவியன் எழுதிய லலித ரேகைகள் அடர்ந்து அலை மோதுவது போல் வளைந்து சென்றது. அவளுக்கு ஒன்றும் அப்படி வயசாகி விடவில்லை. இருபத்தேழோ எட்டோதான் இருக்கும். கூந்தலை வாரி வகிடெடுத்துக் கால் வாங்கிப் பின்னித் தொங்கவிட்டு, பூச்செருகிக் கொண்டிருந்தாள். நெற்றியின் நடுவில் புருவங்களின் இடைக்குச் சற்று மேலே பச்சை குத்திய பொட்டு ஒன்று துவங்கியது. அந்தப் பொட்டை மறைக்காமல், அதை ஒட்டினாற்போல் அதற்குக் கீழே ரம்யமான செஞ்சாந்துப் பொட்டு இட்டிருந்தாள். ஜரிகைக் கரைச் சிவப்பு ரவிக்கை, கரும்பட்டுச் சேலை, அதிக நகைகள் இல்லை. கழுத்திலே இரண்டு வடச் சங்கிலி, கையிலே காப்பு, காதிலும், மூக்கிலும் மூளியில்லாமல் சாதாரண நகைகள். ‘ட்ரு! ட்ரு! ட்ரு! ஹை!’ என்று பூச்சாட்டையை ஓங்கி இடது மாட்டின் வாலை முடுக்கினான் ரத்தினம். கொஞ்சம் துடியான மாட்டைத்தானே பெரும்பாலும் இடத்தில் கட்டுவார்கள்? இது என்னவோ சற்று மந்தமாக இருந்ததுபோல் ஆரம்பத்தில் தோன்றியது. இடம் வலம் மாற்றிப் பார்க்கலாமா என்று எண்ணினான் ரத்தினம். இல்லை; கொஞ்ச தூரம் போனதும் சரியாகிவிட்டது. புது ஆளைக்கண்டு வெறிப்புத் தணியச் சிறிதுநேரம் ஆயிற்றுப் போலிருக்கிறது. வண்டிகள் ஓடின. பெட்டி வண்டி தான் எல்லாவற்றுக்கும் முன்னே சென்றது. மற்ற வண்டிகளுக்காகச் சிறிது சிறிது தளைக் கயிற்றை இழுத்துப் பிடித்து மெதுவாகவே ரத்தினம் அதை ஓட்டவேண்டியதாயிற்று. வண்டியோ வில்வண்டி; பாதையோ சற்று ஈரம் பாய்ந்தது. மாடுகளுக்குத்தான் கொஞ்சம் கஷ்டமாயிருந்திருக்கும். உள்ளே உட்கார்ந்து சவாரி செய்தவர்களுக்கு மிகவும் சொகுசாகவே இருந்தது. அந்தப் பெண்கள் உற்சாகமாகத் தொண தொண என்று பேசிக்கொண்டே இருந்தார்கள். ரத்தினத்தின் காதிலும் அது விழுந்தது. பருத்த அத்தங்காள், சிவகாமியை ஓயாமல் ஏதாவது கேலி செய்து கொண்டே வந்தாள். சிவகாமிக்கு ஒரே பெண் இல்லையா? இதனால் அவள் பெரிய ’சோடை’யாம். தனி மரம் தோப்பாகாதாம்; ஒரு குழந்தை பிள்ளைப்பேறு அல்லவாம். குறைந்தபட்சம் ஒரு பெண்ணும், ஓர் ஆணுமாக இரண்டு குழந்தைகளாவது ஒருத்தி பெற்றால்தான் பெண்மை பலித்ததற்குச் சான்றாகுமாம். அதுவும் எப்படி? “ரோஜா மாதிரி ஒரு பெண்; ரத்தினம் மாதிரி ஒரு பிள்ளை!” ரத்தினசாமி திடுக்கிட்டான்: அவள் வேண்டுமென்றே அவனை ஜாடையாகக் குறிப்பிட்டுத்தான் பேசினாளோ? என்ன! குறும்பு! இந்தச் சமயத்தில் சிவகாமியின் ஒரு புஜம் அவன் மீது தீண்டியது. தவறித் தன்னை அறியாமலே தான் தீண்டியிருக்க வேண்டும். அப்பாடா! அப்போது, அவள் மேனி எப்படி நடுங்கியது! தன் முதுகைத் தீண்டிய புஜத்தின் அதிர்ச்சியால் அதை அவன் அறிந்து கொள்ள முடிந்தது. பிறகு தீப்பட்ட கொடிபோலச் சட்டென்று அது விலகியது. ஆனால்…ஆனால்…அதுதான் ஆரம்பம். கொஞ்சநேரம் கழித்து அது மறுபடியும் மெல்ல மெல்ல நெருங்கி அவன் மீது பட்டது. விலகியது. இப்படிப் பலமுறை அவன் உணர்ச்சியிலே உள்ளத்திலே ஒரு லாகிரி-பித்தம் ஏறிவிட்டது. உலகத்திலே சரி-தவறு, நன்றி- துரோகம், நன்மை-தீமை என்றெல்லாம் பகுத்துச் சொல்லுகிறார்களே, அந்த விவேகத்தையெல்லாம் நியாயங்களையெல்லாம் கடந்த அதீத நிலையொன்றில் அவன் உள்ளம் சிறகு முளைத்த குருவிபோல் பறக்கத் தொடங்கியது. பிறகு, நடந்ததெல்லாம் என்னவோ கனவு மாதிரி இருக்கிறது. அப்புறம் ஐந்தாறு நாள்தான் அவன் பூலோகத்தில் ஜீவனோடு, உலவிய மனிதனாகவே இல்லையே; எங்கேயோ மேகத்தோடு மேகமாக மிதக்கும் ஆவிபோல் தான் அவனுக்கு உணர்ச்சி இருந்தது. அந்த நாட்களில் காதுந் தலையுமற்றுச் சின்னபின்னமா கனவை எப்படி ஒட்டவைத்து உருவாக்கிக் காணமுடியும்? கல்யாணம் முடிந்து எல்லாரும் திரும்பி ஊருக்கு வந்தாயிற்று. அப்போதுகூட, எவனோ குழந்தை காற்றில் பறக்கவிட்ட காகிதப் பட்டம்போல அவன் வீட்டுக்குச் சென்றான். ரத்தினசாமி எந்த நாளிலுமே வீட்டில் படுத்ததில்லை. குருமூர்த்தி வீட்டு ஒட்டுத் திண்ணையில்தான் படுப்பது வழக்கம். இது ஏழெட்டு வருஷமாகவே ஏற்பட்டுவிட்ட பழக்கம். அந்த வராந்தா ஒட்டுத் திண்ணையிலேயே சுருட்டி வைத்திருக்கும் அந்தப் படுக்கை, அதை யாரும் கலைக்கமாட்டார்கள், நகர்த்தமாட்டார்கள். மாலையில் அங்கே தள்ளாடித் தள்ளாடியபடி வந்தான் ரத்தினசாமி. அவன் தூரத்தில் வரும்போதே, பெரிய திண்ணையில் குருமூர்த்தி உட்கார்ந்திருப்பதை அவன் கண்டான். எப்போதும் அவனைக் கண்டதுமே புன்சிரிப்போடு வரவேற்கும் வழக்கமுள்ள அந்த முகத்திலே அன்று ஈயாடவில்லை, ரத்தினமே கிட்ட வரவர அவருடைய முகம் குரூரமாயிற்று. கடைசியிலே சரேல் என்று எழுந்து மகா ஆத்திரத்துடன் அந்த ஒட்டுத் திண்ணைப் படுக்கைமீது அவன் கண் பார்க்கப் பலமாக ஓர் உதைவிட்டார். அது இரண்டு, கஜதூரம் எழும்பி நடுரோட்டிலே போய் விழுந்தது. ரத்தினம் பிரமித்துப் போய், வாசல் பூவரச மரத்தடியிலே சப்த நாடியும் ஒடுங்கிக் குன்றியவனாய்ச் சிலைபோல் நின்றான். குரூமூர்த்தியும் சிறிது நேரம் எங்கேயோ வெட்டவெளியைப் பார்த்தவராய் நின்றார். பிறகு அந்த இடத்தை விட்டு அப்பால் போய்விட்டார். ரத்தினத்துக்குச் சிறிது சுயநினைவு வந்தது. “மனிதன் மிருகம்! மனிதன் மிருகம்! மனிதன் மிருகம்…!” என்று முணுமுணுத்துக் கொண்டே நடந்தான்; நடு வீதியில் அவந்தரையாய்க் கிடந்த படுக்கையைச் சுற்றிக் கையில் எடுத்துக்கொண்டான். மனிதனுக்கும் பசியும், தாகமும் இருக்கின்றன; இயற்கையின் தூண்டுதல்களுக்கு அவனுந்தான் ஆட்படுகிறான்; தீ, காற்று, நீராவி, மின்சாரம் இவையெல்லாம் விசை கொண்டு கண்மூடித் தொழிற்படுவது போல, உணர்ச்சி வேகத்திலே, உடம்பின் விறுவிறுப்பிலே, உள்ளத்தின் பரபரப்பிலே தன்னை அறியாமல் என்ன என்னவோ செய்து விடுகிறான்! நியாயம், தர்மம், சத்தியம், பாவம், புண்ணியம் எல்லாம் விவகாரப் பேச்சுக்கு, உள்ளம் பொங்கிவிடும்போது, இவையெல்லாம் அர்த்தமற்றுப் போகின்றன. உண்மை என்ன? கல்யாணச் சந்தடியிலே அது நடந்துவிட்டது. ரத்தினத்தின் ஆயுள் பரியந்தம் நிரந்தர வேதனையை நல்கிட்ட அதுதான். நாலு பேர் அங்கேயே கிசுகிசு என்று அதுபற்றிப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால், குருமூர்த்தியின் காதில் அதைப் போட யாரும் துணியவில்லை. ஆனால் ஊர் திரும்பி வந்ததுமே அவருக்கு எப்படியோ அது எட்டிவிட்டது. வளர்த்த கடா மார்பில் பாய்ந்தால், ஒரு மனிதனுக்கு எப்படித்தான் இருக்கும்! குருமூர்த்தி அந்த நிமிஷத்திலே என்ன வேண்டுமானாலும் செய்திருக்க முடியும். ஆனால், அவர் மானி; வேதாந்தி; சாந்தமூர்த்தி. சாந்தம் என்ற குன்றைக் குடைந்து வரும் ஆத்திரம் கங்கையின் வீழ்ச்சியாக இருக்குமா? அது அருவி நீர்போல் வலியற்றுப் போய்விட்டது. அன்று முதல் குருமூர்த்தி வேறு மனிதராகிவிட்டார். நஞ்சு தோய்ந்த பாம்புபோல் ரத்தினமும் அவர் கண்ணிலுமே படத் துணிவின்றி ஒளிந்து ஒளிந்து நடமாடினான். சிவகாமி அதற்குப் பிறகு வெகுகாலம் உயிரோடிருக்கவில்லை. அவளுடைய கடைசி நாட்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை, சில நடைமுறைகளாலும் அரையுங் குறையுமாய்க் கேள்விப்பட்ட சில தகவல்களாலும் ஊகித்து அவன் கற்பனை செய்ய முடிந்தது. அவளைக் குருமூர்த்தி ஒரு வார்த்தையும் கடிந்து சொல்லவில்லை. ஓடு, வெளியே என்று துரத்தவில்லை. தாமரையிலை நீர்போல், வீட்டிலே இருந்தும் இராதவராக ராஜரிஷிபோல், மனத்துறவு பூண்டு அவர் வாழத் தொடங்கினார். சிவகாமி? அவள் சாகு முன்பே, விஷயம் குருமூர்த்தியின் காதுகளை எட்டியவுடனேயே, உண்மையில் செத்துவிட்டாள்; நடமாடும் சவமானாள். அதோடு அன்று ஆரம்பித்த காய்ச்சல், படிப்படியாக உயிர் குடிக்கும் பெருநோயாக மாறி, சில மாத காலத்தில் அவள் ஆயுளைத் தீர்த்துவிட்டது. இதெல்லாம் ஒன்றும் விந்தை இல்லை. மயானத்திலே அவளுக்குக் கொள்ளி வைத்தபின் குருமூர்த்தி தம்மை மீறி வாய்விட்டுச் சொன்னாராமே சில வார்த்தைகள், அவை தான் ரத்தினத்தின் நெஞ்சை இன்னமும் வாள்போல் அறுக்கின்றன. “நீ இனிப் புனிதையாகிவிட்டாய். உன் மூடத்தனத்துக்குப் பிராயச்சித்தம் ஏற்பட்டுவிட்டது. போ, சுமங்கலியாய்ப் போய் வா; ஆனால், அவன்…. அவன்… அந்த அறியாத வாலிபன்!…” இதோடு அவர் நின்றுவிட்டாராம். என்ன சொல்ல எண்ணியிருப்பார்? என்னதான் எண்ணியிருப்பார்? இனி அதை அறியும் வகை ஏது? ஆறு மாதத்துக்கு முன் வரையில் முனிவரைப்போல் வாழ்ந்து வந்து அவருந்தான் போய்விட்டாராமே! இந்தப் பெட்டி வண்டி? இதை அந்தச் சாந்தப்பனைத் தவிர வேறு யாரும் தொடக்கூடாது என்று அவர் சொன்னாராம், அவனும் வெகுநாள் வரைக்கும் இதிலேயே எந்நேரமும் துக்கம் நிறைந்த முகத்தோடு வந்து படுத்திருந்து சில வருஷங்களுக்கு முன் உயிரை விட்டானாமே! என்ன விந்தை! அவள் மாண்ட பிறகு, யாரும் அறியாமல் ஊரை விட்டு ஓடிய ரத்தினம், எங்கெங்கோ திரிந்தான். எவ்வளவோ பொருள் சம்பாதித்தான். - உள்ளத்தின் சுமை மாத்திரம் சுமக்க முடியாப் பெரும் பாரமாக இருந்தது. பல பெண்கள் அவனை நாடி வந்தும், மணம்புரிய அவன் மனம் இசையவில்லை. கொங்கணச் சேரியை வந்து பார்க்க, எத்தனையோ தடவை என்னவோ ஓர் ஆசை வந்து உந்தியது. ஆனால் ஒரு பயமும் கூடவே வந்து அதை அத்தனை தடவையும் தடுத்தது. கடைசியாக இந்தத் தடவை வந்தேவிட்டான். வந்து இந்தக் காட்சியைக் காணவா? இதை அவன் கனவும் காணவில்லை. வாழ்க்கையிலே அவருடைய மன்னிப்பு ரத்தினத்துக்கு இல்லை. இனி என்ன பரிகாரம்? என்ன பிராயச்சித்தம்? செல்லரித்த அவன் மனத்துக்குக் கடைசி வரைக்கும் நிம்மதியே கிடையாது. அவனுடைய உள்ளத்திலே, ஒரு சங்கல்பம் எழுந்தது. குருமூர்த்தியின் வீடு இன்று யாருக்குச் சொந்தமானாலும் சரி, அவர்களுக்கு என்ன விலை கொடுத்து வேண்டுமானாலும் இந்த வீட்டை வாங்கப் போகிறான். வண்டியைத் தன் ஆயுள் வரைக்கும், குருமூர்த்தியைப் போலவே தானும் காப்பாற்றப் போகிறான். அப்புறம்? அப்புறம்? வீட்டுக் கூடத்திலே அவர்கள் இருவருடைய படங்களையும் வைத்து நித்தமும் மன்னிப்புக் கோரிப் பிரார்த்திக்கலாமா? ஐயோ! அப்போதாவது இரவிலே என்றாவது அயர்ந்த தூக்கம் வருமோ? இல்லை; வராது அவன் தான் மக்பெத்மாதிரி தூக்கத்தை என்றைக்கோ கொலை செய்து விட்டானே. அவனுக்கு இனி ஒரே தூக்கந்தான் உண்டு—கடைசிநாளில். ஆனால் கடுந்தவம் இன்றி இனி வாழ முடியாது. இன்றே அதை அவன் தொடங்கப் போகிறான். சிந்தனைப் புயலில் அலைக்கழிக்கப் பெற்ற ரத்தினம் ஏதோ கடின உழைப்புப் பிரிந்தவனைப்போல, உடல் சோர்ந்து அந்தப் பழைய ஓட்டுத் திண்ணையிலே போய்ப் பொத்தென்று உட்கார்ந்து, அதன் சார்மணையிலே தலையைச் சாய்த்தான். இனி என்றும் இங்கே தான் அவனுக்குப் படுக்கை. ஆனாலும், விரிப்பு மாத்திரம் ஒன்றும் கிடையாது; கண்டிப்பாய்க் கிடையாது. ந. பிச்சமூர்த்தி கும்பகோணத்தில் பிறந்த ந. பிச்சமூர்த்தி நீண்ட காலம் பிறந்த மண்ணில் இருந்து கொண்டே இலக்கிய தோழர்களுடன் சேர்ந்து சிறுகதை இலக்கியத்திற்கு புதுப்பொலிவை தந்தவர். அவர் எழுதிய கதைகளில் வடிவமும் உத்தியும் காலப்போக்குக்கு ஏற்றவாறு மாற்றமடைந்து அவரைச் சிறுகதை எழுத்தாளரின் முன்னணியில் வைத்துக் காண்பிக்கிறது. பல வகையான கருப்பொருள்களைக் கொண்ட அவரது கதைகளில் காணப்படும் ஓர் அடிப்படையான தத்துவநோக்கு அக்கதைகளுக்கு ஆழம் கொடுக்கிறது. அதனால் தான் க.நா.சு. “பிச்சைமூர்த்தியின் கதைகள் வேதாந்த தத்துவம் உடையது” என்று கூறி உள்ளார். “நடையிலும், உத்தியிலும் அவசியமற்ற போலிப் புதுமைகளின்றி எந்த விஷயத்தையும் அவர் பொலிவோடு சொல்லும் திறமை பெற்றிருந்தார். மனிதவாழ்வின் நியதியில் அசையாத நம்பிக்கை எப்போதும் கைகொடுக்கும் ஒரு நிதானப்போக்கு இரண்டும் சேர்ந்து பிச்சமூர்த்தியின் சில கதைகள் அமர இலக்கியங்களாகிவிட்டன” என்று சிட்டி-சிவபாதசுந்தரம் குறிப்பிடுகிறார்கள். “எனக்கு எப்போதும் உணர்ச்சிதான் முக்கியம். தர்க்க ரீதியான அறிவுக்கு இரண்டாவது இடந்தான் தருவேன். ஆகையால், எப்போதுமே ஒரு திட்டம் போட்டு, குறிப்பிட்ட கருத்தை வற்புறுத்துவதென்ற எண்ணத்துடன் ஒன்றுமே நான் எழுதியது இல்லை …” தனது கதைகள் எழுதப்படுதலை குறிப்பிட்டுள்ளார். இந்த பார்வையோடு பார்க்கும்போது பிச்சமூர்த்தியும் கு.ப.ராவும் இவ்வகையில் மனித மனத்தின் ஆழத்தை அளந்துப்பார்த்தவர்கள் என்று உணர முடிகிறது. கவிதை நடையால் நம்மைக் கட்டிப்போடும் பாங்கு இவரின் தனித்துவம். ‘சிறுகதை இலக்கணத்தைப் பயில இலக்கியமாக விளங்குவன பிச்சமூர்த்தியின் கதைகள்’ என்று சொன்னால் மிகை இல்லை. நேற்றுத் தபாலில் ஒரு பளுவான கவர் வந்து சேர்ந்தது. அவ்வளவு கனமான கவர் அதுவரையில் எனக்கு வந்ததில்லை. என்றாலும் அதை உடனே பிரித்துப் பார்க்க வேண்டும் என்ற அவசரம் உண்டாகவில்லை. எலி தப்பி ஓட முடியாதென்று நிச்சயமாகப் பூனைக்குத் தெரியும் பொழுது தானே பூனை வேட்டையின் முன் விளையாடிப் பார்க்கிறது! அதைப்போல உறையை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தேன். விலாசத்தை யார் எழுதி இருக்கலாம் என்று எண்ணி எண்ணிப் பார்த்தேன். ஒன்றும் விளங்கவில்லை. விளையாட்டு வினையாயிற்று. உறையைக் கிழித்தேன். மணி மணியான எழுத்தில் எனக்கென்று ஒரு கடிதம் எழுதியிருந்தது. அதுவும் முன் பின் அறியாதவருடைய கையெழுத்தாக இருந்தது. அதைத் தவிர, கச்சிதமாக மடித்துவைத்த சில தாள்கள் இருந்தன. கடிதத்தைப் படித்தேன்; வெகு ரசமாக இருந்தது. அதை முழுவதும் வெளியிடத் தேவை இல்லை. சில வரிகளையாவது வெளியிடத்தான் வேண்டும். “தன்னை அறியப் பல வழிகள் உண்டு. எழுத்தும் ஒரு வழி. இந்த உண்மையை நமது முன்னோர்கள் அதிகமாக வற்புறுத்தியதாகத் தெரியவில்லை. அவர்களுடைய கவனமெல்லாம் கர்மம், பக்தி, ஞானம் முதலிய மார்க்கங்களைப் பற்றியே சென்றது. மார்க்கத்தில் செய்கைக்குத்தானே முதன்மை. எழுத்தென்னும் வழியில் சொல்லே செய்கை. இந்த அடிப்படைகளுக்கு மாறாகச் சொல்லைக் கையாள்வது குற்றம்? அதனால்தான் பணத்திற்கோ வற்புறுத்தலுக்கோ தயாதாட்சிண்ணியத்திற்கோ எழுத்தை ஆளாக்கக்கூடாது. கொடாப்புப் போட்டுப் பழுக்கவைத்த பழத்தின் ருசி எப்படி இருக்கும்! எவ்வளவு சிக்கிரத்தில் பழம் கெட்டுவிடும்! தன்னை அறியவும், தன்மையை விளக்கவும் பிறந்தது எழுத்து. அவ்வெழுத்தில் தான் அழியாமை தங்கும்.” “எனவே எழுத்தை அகவாழ்வின் பாலம் எனலாம். மெய்யறிவின் ஏணி எனலாம். இந்தக் குணங்களுக்காகத் தான் எழுத்தின்மீது நமக்கு மோகம் உண்டாகிறது.” “சோம்பேறிகளுக்காகப் பைத்தியங்கள் கற்பனை செய்வதற்குப் பெயர் கலை என்று யாராவது நையாண்டி செய்தால் கூட நாம் வருந்தவேண்டியதில்லை. ஏனென்றால் பெருத்த பைத்தியக்காரத்தனத்தின் விளைவுதானே இந்தச் சோம்பேறி உலகம்!” “இத்துடன் ‘மாயமானை’ அனுப்பியிருக்கிறேன். உங்களைச் சுற்றிப் பல வேடர்கள் திரிகிறார்கள்-இலக்கிய வேடர்கள். வேடர்கள் என்ற சொல் வேடதாரிகள் என்ற பொருளுடன் தொனிக்காதென்பது எனக்குத் தெரியும். தொனித்தால் நல்லது! அவர்களில் யாருக்காவது ‘மாயமானை’ இலக்காக்கி விடுங்கள். அச்செய்கைக்கு நன்றி! இல்லாவிட்டாலும் நன்றி! ஒரு சோம்பேறியாவது இந்தப் பைத்தியத்தைப் படித்துத் தன் இயலை அறிந்து கொண்டிருப்பான் அல்லவா?” இவைகளைப் போன்ற பிற விசித்திரமான கருத்துக்கள் அடங்கிய அந்தக் கடிதத்தைப் படித்தேன்! இரண்டு, மூன்று முறை படித்தேன். யானைக்கு அங்குசம் போல் என் அறிவுக்குக் கடிதம் அமைந்தது. பின்னர் ‘மாயமானை’ எடுத்தேன். ஆனால் அதைப் பற்றி நான் சொல்வானேன் ? நீங்களே பார்த்துக்கொள்ளலாம்: மாயமான் பாழ்/வெறும்பாழ்/ இவ்வளவு பொட்டலாக என் மனம் இருந்ததே இல்லை. ஒன்றிலும் ஊக்கமில்லை; உணர்வில்லை. காலையில் எழுவதும், வெந்ததும் வேகாததுமாக எதையோ சாப்பிடுவதும், ஆபீசுக்கு ஓடுவதும், திரும்புவதும், தூங்குவதும் வாழ்வின் கொடுமையைப் பகல் தாங்குவது போதாதென்று கனவில் காண்பதும்-இதுவா வாழ்வு? இதற்கா பிறந்தோம்? வருஷம் முழுவதும் இதே கதையானால் மனத்தில் அமைதி நிலைக்குமா? தொழிலில் இன்பம் தெரியுமா? உயிரில் ஊக்கம் இருக்குமா? அந்த மாதிரியான சோர்வும், சலிப்பும் நிறைந்த நிலையில் இருந்தேன். இதற்கு மாற்று? இன்பத்தின் ஊற்றுக்கண் எனக்கு அகப்பட்டால் அல்லவா? அமைதியின் அடித்தளம் அண்டினால் அல்லவா? யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு எந்தவிதமான வேதனை உண்டானாலும் ஒரு தெய்வத்தைத்தான் சரணடைவது வழக்கம். அந்தத் தெய்வத்தைச் சரணடைந்தால் இந்தச் சலிப்பும், அயர்வும் மாறலாம் என நினைத்து ஒருவாரம் ரஜா எடுத்துக்கொண்டேன். செய்கிற தொழிலைச் செய்து கொண்டிருப்பது மட்டும் நமது அலுப்பிற்குக் காரணமாகாது. ஒரே இடத்தில் இருந்துகொண்டு போன தெரு வழியே போய்க்கொண்டு, பார்த்த முகங்களையே பார்த்துக்கொண்டு நாளைக் கடத்தவேண்டிய தலை விதி ஏற்பட்டிருப்பது மற்றொரு முக்கியக் காரணம். ஆகையால் சென்னைக்குக் கிளம்பினேன். நான் இருக்கும் ஊரைவிட்டு ரெயிலேறினால் செங்கற்பட்டில் இறங்கி ஏறாமல் சென்னைக்குச் செல்ல முடியாது. நான் ஜங்க்ஷனை அடைந்தபொழுது சென்னை செல்லும் ரெயில் வரவில்லை. விசாரித்ததில், வர மூன்று மணி தாமதமாகும் என்று தெரிந்தது. என்ன செய்வது? உத்தியோகம் பார்த்துப் பழக்கம் ஆகிவிட்டதால் கீழே உட்கார மனம் வரவில்லை. அங்கே கிடந்த ஒரு பெட்டியில் மேல் உட்கார்ந்தேன். என்னுடன் பொழுதும் உட்கார்ந்துவிட்டது. உட்கார்ந்தால்தான் என்ன ? சும்மா இருக்கக்கூடாதா? பெருமூச்சு விட்டுக்கொண்டே இருந்தது. காற்றுப்பட்டால் காற்றாடி சும்மா இருக்குமா? மனத்திலுள்ள காற்றாடியின் மீது பெருமூச்சுப் படப்பட அது சுழன்று கொண்டே இருந்தது. என்ன என்னவோ எண்ணங்கள் எழுந்தன. பகலுக்குப் பின் இரவும், விழிப்புக்குப் பின் தூக்கமும் வெறும் பெளதிக உலகத்து நிகழ்ச்சிகளா? அல்லது ஒவியனைப் போல் சித்திரம் ஒன்று எழுதி வேறொரு மறை பொருளைச் சுட்டிக்காட்டும் தந்திரமா? பகலென்னும் உருவெடுத்துக் காண இயற்கை முயல்கிறதா? தொழிலில் கிட்டாத அமைதி ரஜாவில் கிட்டிவிடுமா? கர்மத்தில் காணாத இன்பம் பக்தியில் காணுமா? ஸ்தல யாத்திரையின் மர்மம் இதுதானா? அயர்வும், சலிப்பும் சிருஷ்டி வேதனையா அல்லது சீரழிவின் தொடக்கமா?…. இந்த மாதிரியான பல எண்ணங்கள் எழுந்து கொண்டே இருந்தன. பக்தி, ஸ்தலயாத்திரை என்ற விஷயம் நினைவுக்கு வந்தவுடன் கவனம் பிளாட்பாரத்துக்குத் திரும்பிவிட்டது. அங்கே ஏராளமான யாத்திரிகர்கள். அவர்களுடைய மூட்டைகளையும், முடிச்சுகளையும் பார்த்தபொழுது எனக்கு ஒரு பைத்தியக்கார விருத்தி தோன்றிற்று. தங்களிடமுள்ள எல்லாவித அழுக்குகளையும் மூட்டை கட்டிக்கொண்டு, வெளுப்பதற்காக என்று புண்ணிய ஸ்தலங்களைத் தேடிச் செல்கிறார்களோ என்று நினைத்தேன். அவ்வளவு அழுக்கு! எண்ணெய்ப் பிசுக்கு ! நாற்றம்! யாத்திரிகர்களில் சில ஸ்திரீகள் ஒய்யாரமாகச் சுருட்டைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். இரண்டொருவர் பொட்டுக்கடலையும் பொரியுமாகக் கலந்து இடது கையால் வாயில் அறைந்து கொண்டிருந்தனர். இவர்கள் எல்லாருமே என்னைப்போலத்தான்! நான் ஒரு பித்தில் கிளம்பியிருக்கிறேன்; ஏறக்குறைய அதே மாதிரிப் பித்தில் தான் அவர்களும் கிளம்பியிருக்கிறார்கள். இந்தப் பித்தே தெரிந்தும் தெரியாமலும் ஒவ்வொரு மனிதனையும் பிடித்துக்கொண்டு வாழ்வைப் பாழாக்குகிறது. இந்தப் பித்தைத் தெளிய வைக்கும் மருந்தின் விஷயத்திலாவது தெளிவு இருக்கக்கூடாதா? இந்தக் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபொழுது எனக்குப் பின்புறத்தில் பேச்சுக்குரல் கேட்டது. ஆணும், பெண்ணும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் திரும்பிப் பார்க்கவில்லை. பேச்சைமட்டும் கவனித்தேன். ஜன விகிதத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தையும், இல்லாவிட்டால் ஏற்படக்கூடிய கஷ்டங்களையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சின் விஷயத்திற்கும் பேசிய குரல்களுக்கும் சற்றும் பொருத்தமில்லை. இந்த வியப்பில் திரும்பி ஜன்னல் வழியாகப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இரண்டாம் வகுப்புச் பிரயாணிகள்! கணவனும், மனைவியும் என்று மனம் பதிவு செய்துவிட்டது. குழந்தைகள் கிடையாதென்றும் மனம் பதிவு செய்து விட்டது. எந்த ஆதாரங்களைக் கொண்டு இந்த மாதிரி பதிவு செய்தாய்? என்று கேட்டால் மனம் நிச்சயமாக விழிக்கும். பதிவுதான் ஆகிவிட்டதே, கம்மா இருக்கலாகாதா? சத்திரத்தில் சோறில்லை என்றால் இலை பொத்தல் என்ற பழமொழியை நினைத்துக்கொண்டது. அந்தப் பழமொழியைப் போட்டு நாய் எலியைக் குதறுவதுபோல் குதறத் தொடங்கிவிட்டது. இந்த மாதிரியான பிளாட்பாரக் காட்சிகளை மனம் பதிவு செய்து கொண்டிருந்த போதிலும் சலிப்பு மட்டும் அடங்கவில்லை. பத்தடி தள்ளிப் பிளாட்பாரத்தில் ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக்கடை தென்பட்டது. என் கை தானாகச் சட்டைப் பைக்குள்… கனவைப்போல மற்றொரு யோசனை தோன்றிற்று. ’சலிப்பையும் அயர்வையும் போக்கப் பிரயாணத்தைத் தொடங்கினோம். பிரயாணமோ தடைப்பட்டு விட்டது. ஏதேனும் நல்ல புஸ்தகமாகக் கிடைத்தால் பொழுதையும் ஒட்டிவிடலாம் என்று நினைத்தேன். ஒரு ருஷியக் கதைப் புத்தகத்தை இரண்டு ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு அதே பெட்டிமேல் வந்து உட்கார்ந்தேன். மொத்தம் மூன்றே கதைகள்; 205 பக்கம். ’பாலைவனத்தில் பிரயாணம் செய்கிறவர்கள் தோல் பைகளில் தண்ணீரை எடுத்துச் செல்வார்களே; அந்த மாதிரி இந்த ஒரு புத்தகம் ரெயில் பிரயாணம் முடியுமட்டும் போதுமானது, என்று நினைத்துப் படிக்கத் தொடங்கினேன். சுமார் இரண்டு மணி நேரந்தான் கழிந்திருக்கும். புத்தகத்தின் கடைசி ஏடு வந்துவிட்டது. ரஸமான புத்தகம். புத்தகம் முடிந்ததும் கூட்டுக்குத் திரும்பும் குருவிபோல் பழைய சூனியம் வந்தடைந்தது. கண்ணை முடினேன். ஒரு சல்லடையும் அதன்மீது ஒரு புஸ்தகம் உருகி நீராகக் கொட்டுவது போன்ற சித்திரமும் தெரிந்தன. எதற்காகப் பணத்தை வீணாக்கிப் புத்தகம் வாங்கினாய்? சல்லடையில் ஐலம் நிற்குமா? என்ன இன்பம் மிஞ்சிற்று? என்று அந்தச் சித்திரம் குத்திக் காட்டுவதுபோல் இருந்தது. அப்பொழுது “யாரையா பெட்டிமேலே? அதென்ன நாற்காலியா?” என்று ஒரு குரல் அதட்டவே, திரும்பிப் பார்த்தேன். ரெயில்வேச் சிப்பந்தி! அதிகாரத்தின் முன் அகப்பேய்ச் சித்தர்கூட என்ன செய்யமுடியும்? அவன் அதட்டலைக் கேட்ட என் தத்துவ விசாரமெல்லாம் நண்டுபோல் வளைக்குள் பதுங்கிவிட்டது. அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். ஆனால் பொழுதும் அந்தச் சுமையும் என்னைவிட்டு நகரவில்லை. இப்படியே நரக வேதனையாக அரைமணி கழிந்தது. அதற்குப் பிறகு சொர்க்கவாசல் திறந்தது. ரெயில் ஆரவாரத்துடன் எதிரில் வந்து நின்றது. வெகு ஆறுதலடைந்து அதில் ஏறினேன். சென்னை சேரும் வரையில் அதிகச் சங்கடம் இல்லை. ஸ்டேஷனைவிட்டு என் நண்பன் வீட்டுக்குச் சென்றேன். ஆபீஸ் தவளை என்று நண்பன் என்னைப் பரிகாசம் செய்வதுண்டு. ஆகையால் என்னைப் பார்த்தவுடன் எதிர்பாராத மழையை வரவேற்பதுபோல், உத்ஸாகம் பொங்க “வா ரிசியசிருங்கா!” என்று வரவேற்றான். பிறகு சிறிதுநேரம் குடும்ப சுகங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். காலை உணவு ஆயிற்று. பொழுது அப்பொழுதும் சுமையாக உட்கார்ந்திருந்தது. ஆபீஸ் இல்லை. வேறு வேலையும் இல்லை. என்ன செய்வது? நண்பனை அழைத்துக்கொண்டு வெளியே புறப்பட்டேன். ஒரு திட்டமும் இல்லை, ஒரு குறிப்பும் இல்லை. சுற்றினோம், சுற்றினோம், அப்படிச் சுற்றினோம்! பகல் பன்னிரண்டு மணிக்குக் கூடக் கடற்கரையில் இருந்தோம். திரும்பி வரும்பொழுது அதுவரையில் சும்மா வந்த நண்பன் கால் கண்டைச்சதையைப் பிசைந்துகொண்டே கேட்டான்: “ஏழு மைலாவது கடந்திருப்போமே; எதற்காக?” “சும்மாத்தான்.” நண்பன் நல்ல மதியூகி. “சும்மாத்தான்பா? அதாவது வாழ்வில் பிடிப்பு விட்டுப்போய் அயர்வு தோன்றிவிட்டதென்று பொருள், மாயமான் சிக்கவில்லை என்ற வருத்தம். வண்டு, தேனைத் தேடுவதுபோல் பித்துப் பிடித்து அலைகிறாய். மோட்டார் வண்டியும், தார்போட்ட விதியும், சிமிட்டி மாடியும், வீடில்லா அநாதையும், டிராம் வண்டியும், ஒண்டுக் குடித்தனங்களும், ஆலைகளும், தரித்திரமும் நிறைந்த நகரம் புஷ்பமா என்ன உனக்குத் தேன் அளிப்பதற்கு? நீ டாக்டரைக் கலந்து ஆலோசிக்கவேண்டும்” என்றான். எனக்கு ஒரு குலுக்குக் குலுக்கிற்று; இந்த அயர்வென்னும் வியாதியைக் கண்டுபிடித்து விட்டானே என்று. பிறகு வீடுவந்து சேர்ந்தோம். சாப்பாடு முடிந்ததும் எனக்குத் தூக்கம் வந்துவிட்டது. தூங்காவிட்டால் மனத் திகிரியிலிருந்து என்ன என்ன விதக் கருத்துக்கள் உருவெடுத்திருக்குமோ? இரண்டரை மணிக்கு எழுந்தேன். அப்போதுகூடப் பொழுதென்னும் வெளவால் எனக்குள் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தது. “நல்ல சினிமாவாக ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டேன். ஒரு படத்தின் பெயரைச் சொல்லிவிட்டு, “முதல் ஆட்டத்துக்குப் போகலாம்” என்றான். “மூன்றுமணி ஆட்டம் இல்லையா?” “உண்டு; என்ன அவசரம், வெயில் வேளையில் ?” “சும்மாத்தான்.” அதற்கு மேல் நண்பன் தர்க்கம் செய்யவில்லை. ஆட்டத்துக்குக் கிளம்பினோம். ஆட்டம் அரை மணிக்குமேல் ரஸிக்கவில்லை. எழுந்து போய்விடலாமா என்று கூடத் தோன்றிற்று. ஆனால் டிக்கெட்டுக்குப் பணம் நான் கொடுக்கவில்லை என்ற நினைப்பு அதற்கு ஒரு தடை செய்தது. சும்மா உட்கார்ந்திருந்தேன். பெரிய மாம்பழத்தை அணில் கொறிப்பதுபோல் மனத்தைப் பொழுது கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று கொண்டிருந்தது. ஆட்டம் முடிந்து வீடு திரும்பினோம். இரவுச் சாப்பாட்டிற்குப் பிறகு தனியாகக் கடற்கரைக்குச் சென்றேன். நிலவின் ஒளியில், அலையின் ஏற்றத்தாழ்வில் ஒரு சுடர் தெரிந்தது. வீடு திரும்பி வந்து படுத்துக்கொண்டேன். படுத்ததும் சிந்தனை ஒடிற்று. “கஸ்தூரி மான் என்கிறார்களே, அது உண்மையா? கஸ்தூரி வாசனையைத் தேடிக் காடு முழுவதும் மான் அலைகிறது என்பதும் உண்மையா? அந்த மாய மானைப் போலத் தான் மனமா? தனக்குள் இருக்கும் நிலையான ஊற்றை அறியாது அதைத் தேடிப் பிரயாணத்தையும், ஸ்தல யாத்திரையையும், புஸ்தகப் படிப்பையும், சினிமா பார்ப்பதையும் மேற்கொள்வது சரியா?” இதே சந்தேகத்துடன் மறுநாள் காலையில் எழுந்தேன். ரஜாவை ரத்து செய்துவிட்டு ஊருக்குத் திரும்பவேண்டும் என்ற ஒரே எண்ணம் மேவி நின்றது. நண்பனிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினேன். ஊருக்கு வந்த மூன்றாம் நாள் நண்பனிடமிருந்து கடிதம் வந்தது. நான் புதுப் புஸ்தகம் ஒன்றை மறந்து வைத்துவிட்டுத் திரும்பியதாக எழுதியிருந்தான். புஸ்தகத்தை ஞாபகம் இல்லாமல்தான் வைத்துவிட்டுத் திரும்பியிருந்தான். ஆனால் இப்பொழுது அந்த மாதிரி தோன்றவில்லை. பிரயாணத்தில் இன்பம் தெரியவில்லை, சினிமாவில் தெரியவில்லை. புஸ்தகத்திலும் தெரியவில்லை; இவைகளால் என்ன பயன்? என்று எனக்குள் இருக்கும் எதுவோ ஒன்று கருதி அந்த அறிவின் அறிகுறியாகப் புஸ்தகத்தை வேண்டுமென்றே மறந்துவிட்டு வந்ததாகத் தோன்றிற்று. இந்தத் தெளிவான ஞானம் வந்ததும் நண்பனுக்குக் கடிதம் எழுதினேன். “மான் கஸ்தூரியைத் தேடி இனிமேல் அலையாது. இனிமேல் புஸ்தகம், சினிமா ஒன்றும் தேவையில்லை. டாக்டரும் தேவையில்லை. இந்த முடிவின் விளைவாகத்தான் புஸ்தகத்தை விட்டு வந்தேன். இனிமேல் செய்யும் தொழிலில் இன்பம் காணப்போகிறேன்.” என்று பதில் எழுதினேன். சரிதானே? இப்பொழுது மாயமானின் குளம்போசை நெஞ்சிலே கேட்கிறது. கு. ப. ராஜகோபாலன்   தமிழில் சிறுகதை இலக்கியம் பொற்காலம் காண முன்னுரை எழுதியவர்களில் குறிப்பிடத் தகுந்தவர். கும்பகோணத்தில் வாழ்ந்து கொண்டு அவர் செய்த பணியைச் சின்ன வட்டத்துள் நாம் அடைத்து விடமுடியாது. வசன கவிதை, விமரிசனம், நாவல்துறை இவற்றிலும் கணிசமான அளவு வெற்றி பெற்றவர். ஆனால் சிறுகதையில் அவர் ஸ்தானம் மிகவும் முக்கியமானது. புதுமைப்பித்தன், மெளனி என்பவர்களுடன் சேர்த்துச் சொல்லக்கூடியது. உண்மையில் கு.ப.ரா. வும் அவருடைய பக்கத்து வீட்டுக்காரரான பிச்சமூர்த்தியும் சிறுகதாசிரியர்களாகப் போற்றப்படுவதைக் கண்டு ‘அவர்களை விட என்னால் நல்ல சிறுகதைகள் எழுதமுடியும்’, என்று சொல்லித்தான் மெளனி எழுதவே தொடங்கினார் என்று சொல்லுவார்கள். வ.ரா. கா. சி. வேங்கட ரமணி போன்ற முதுபெரும் எழுத்தாளர்களுக்குச் சகாவாக இருந்தவர் கு.ப.ரா. அவர்களைப் போலவே இவரும் இலட்சியவாதி. பல எழுத்தாளர்களை உருவாக்குவதில் சிரத்தை காட்டியவர் என்று அறிமுகப்படுத்தும் க.நா.சு, கு.ப.ரா வின் சிறுகதைகளைப் பற்றி இப்படி கணிக்கிறார்; ‘புதுமைப்பித்தனைப் பார்க்கிலும் சிறுகதையில் உருவப் பரிசோதனை செய்திருக்கிறார். வெற்றியும் பெற்றுள்ளார்.’ “ஆண், பெண் உறவு என்னும் ஒருமுகப்பார்வை உள்ளதே தவிர பல்வகை காட்டும் பன்முக நோக்கில்லை” என்று குற்றம் சாட்டுபவர்களுக்கு கா. சிவதம்பி, “இலக்கியத்தில் உணர்ச்சி விவரிப்பே உயரியது. இதுவே மனித வாழ்வில் தலையாயது. அதுதான் மனிதனைச் சரியாக எடுத்துக்காட்டுவது என்ற கொள்கை கொண்டவர் கு.ப.ரா. இத்தகைய உணர்ச்சி நிலைகள் தோன்றுதற்குக் களமாய் அமைந்தவற்றுள்ள ஆண், பெண் உறவுக் களத்தினடியாகத் தோன்றுவதன் காரணமே இது…” என்கிறார். விடியுமா? ஒரு நல்ல சிறுகதை எப்படிச் சிறப்பாக அமையவேண்டும் எனப் படைப்பாளராலும், திறனாய்வாளராலும் எடுத்துக்காட்டப் பெறும் உயரிய கதை ‘விடியுமா?’ தந்தியைக் கண்டு எல்லோரும் இடிந்து உட்கார்ந்து போனோம். அதில் கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லைபோல் இருந்தது. “சிவராமையர் டேஞ்ஜரஸ்” என்ற இரண்டு வார்த்தைகளே இருந்தன. தந்தி சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருந்தது. என் தமக்கை இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சென்னையிலிருந்து வந்தாள். அப்பொழுது எங்கள் அத்திம்பேர் நன்றாகக் குணமடைந்துவிட்டார். ஷயத்தின் சின்னம் கொஞ்சங் கூட இல்லையென்று பிரபல வைத்தியர்கள் நிச்சயமாகச் சொல்லிவிட்டார்கள். ஓங்கித் தலையில் அடித்ததுபோலக் குஞ்சம்மாள் பிரமை தட்டிப்போய் உட்கார்ந்திருந்தாள். எங்கள் எல்லோருடைய மனத்திலும் ஒரு பெருத்த போர் நடந்து கொண்டிருந்தது. “இருக்காது!”, “ஏன் இருக்கக்கூடாது? இருக்கும்!” என்று இரண்டு விதமாக மனத்தில் எண்ணங்கள் உதித்துக் கொண்டிருந்தன. இருக்கும்! என்ற கட்சி மூலை முடுக்குகளிலெல்லாம் ஓடிப்பாய்ந்து தனக்குப் பலம் தேட ஆரம்பித்தது. தந்தியில் கண்டிருந்ததைத் திரும்பத் திரும்பப் படித்தோம். அதில் ஒன்றும் பிசகு இருக்கவே முடியாது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து தான் வந்திருந்தது; சந்தேகமில்லை. காலையில் அடித்திருக்கிறார்கள்; குஞ்சம்மாள் பேருக்குத்தான். தவறு எப்படியிருக்க முடியும்? ஆனால், இவ்வளவு சிக்கிரத்தில் என்ன நேர்ந்திருக்க முடியும்? மூன்று நாட்களுக்கு முன்புதானே கடிதம் வந்தது? ஏதாவது உடம்பு செளகரியமில்லாமல் இருந்தால் அதில் எழுதாமல் இருப்பாரோ? என் தமக்கையும், நானும் சாயந்திரம் ரயிலில் சென்னைக்குப் புறப்பட்டோம். அதுதான் அன்று கும்பகோணத்திலிருந்து சென்னைக்குப் போகும் முதல் வண்டி. புறப்படுவதற்குமுன் நல்ல வேளை பார்த்துப் பரஸ்தானம் இருந்தோம். சாஸ்திரிகள், “ஒண்ணும் இருக்காது. கிரகம் கொஞ்சம் பீடிக்கும்; அவ்வளவு தான்!” என்றார். அம்மா, தெய்வங்களுக்கெல்லாம், ஞாபகமாக ஒன்றைக்கூட விடாமல், பிரார்த்தனை செய்துகொண்டு மஞ்சள் துணியில் காணிக்கை முடிந்துவைத்தாள். குஞ்சம்மாளுக்கு மஞ்சள் கிழங்கு, குங்குமம், புஷ்பம், வெற்றிலைபாக்கு, சேமதண்டு எல்லாம் மறந்து போகாமல் மடி நிறையக் கட்டிக் கொடுத்தாள். பசியுடன் போகக்கூடாது என்று புறப்படும்பொழுது கட்டாயப்படுத்தி இருவரையும் சாப்பிடச் செய்தாள். குஞ்சம்மாள் இயந்திரம்போலச் சொன்னதையெல்லாம் செய்தாள்; “சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணு” என்றதும் போய் நமஸ்காரம் செய்தாள். அவள் கதிகலங்கிப் போயிருந்தாள் என்பது அவன் பேச்சற்றுப் போயிருந்ததிலிருந்தே நன்றாகத் தெரிந்தது. அவளுடைய கலகலப்பு முதல் தடவையாக அன்று எங்கோ அடங்கிவிட்டது. அம்மா வாசலில் போய்ச் சகுனம் பார்த்தாள். திவ்வியமான சகுனம்; காவேரியிலிருந்து அடுத்தவீட்டுச் சுந்தரி ஜலம் எடுத்துக்கொண்டு எதிரே வந்தாள். “ஒண்ணும். இருக்காது! நமக்கேன் அப்படியெல்லாம் வரது? நாம் ஒத்தருக்கு ஒண்ணும் கெடுதல் எண்ணல்லே” என்றெல்லாம் அம்மா அடிக்கடி தன்னையும், பிறரையும் சமாதானம் செய்து கொண்டிருந்தாள். ரயில் ஏறுகிறபொழுது மணி சுமார் எட்டு இருக்கும். இரவு பூராவும் போயாக வேண்டுமே என்று துடித்தோம். போய் இறங்குவதற்குமுன் செய்வதற்கு ஒன்றுமில்லை யென்றதால், கொஞ்சங் கொஞ்சமாகத் துடிப்பும் கலக்கமுங்கூட மட்டுப்பட்டன. இரண்டு ஜன்னல்களின் அருகில் நேர் எதிராக இரண்டு பெஞ்சுகளில் உட்கார்ந்தோம். “நீ புறப்படுகிறபோது ஒன்றுமே இல்லையே, அக்கா?” என்றேன், ஏதாவது பேச்சுக் கொடுக்க வேண்டுமென்று. “ஒண்ணும் இல்லையே! இருந்தால் புறப்பட்டு வருவேனா?” என்று அவள் ஏக்கம் நிறைந்த குரலில் பதில் சொன்னாள். “அதற்குள் திடீரென்று ஒன்றும் ஏற்படுவதற்குக் காரணமே இல்லையே!” எது எப்படியானாலும், மனத்தைச் சில மணி நேரமாவது ஏமாற்றித் தத்தளிப்பைக் கொஞ்சம் குறைத் துக் கொள்ளலாமென்று நினைத்ததுபோலப் பேச்சு வெளிவந்தது. “நான் இந்த நோன்பிற்காக இங்கே தாமதம் செய்யாமல் போயிருக்காமல் போனேன்!” ’ஒருவேளை, அக்கா, நோன்பிற்காக நீ இங்கே இருந்துவிட்டதுதான் அத்திம்பேருக்குக் கோபமோ? அவர் உடனே வரும்படியாக எழுதியிருந்தார். நாம் ஒரு வாரத்தில் வருவதாகப் பதில் எழுதினோம். அதற்காகத்தான் இப்படித் தந்தி அடித்துவிட்டாரோ?” “ஆஸ்பத்திரியிலேயிருந்து வந்திருக்கே?” “ஆஸ்பத்திரிப் பேரை வைத்து அத்திம்பேரே அடிக்கக்கூடாதா?” “அப்படி அடிக்க முடியுமோ?” குஞ்சம்மாள் குரலில் ஆவல் இருந்தது. “ஏன் முடியாது? தந்தியாபீஸில்.” “ஒருவேளை அப்படியிருக்குமோ?” என்று கேட்ட பொழு குஞ்சம்மாளின் முகம் கொஞ்சம் மலர்ந்துவிட்டது. “அப்படித்தான் இருக்கவேண்டும். இப்படித் திடீரென்று ஒன்றும் ஏற்படக் காரணமே இல்லை. முந்தாநாள் தானே கடிதாசு வந்தது!” “ஆமாம்! அதில் ஒடம்பைப் பத்தி ஒண்ணுமே இல்லையே?” - “தந்தி யடித்தால் நாம் உடனே புறப்பட்டு வருவோம் என்றுதான் அடித்திருக்கிறார். வீட்டிலிருந்து அடித்தால் கூட அவ்வளவு தாக்காது என்று ஆஸ்பத்திரிப் பேரை வைத்து அடித்திருக்கிறார்.” “அப்படி அடிக்க முடியுமாடா, அம்பி! அப்படியிருக்குமா?” என்று மறுபடியும் குஞ்சம்மாள் சந்தேகத்துடன் கேட்டாள். அவள் அப்படிக் கேட்டபொழுது, முடியாது என்று எனக்குத் தெரிந்திருந்தால்கூடச் சொல்ல மனம் வந்திருக்குமோ, என்னவோ? “நீ வேண்டுமானால் பாரேன்! எழும்பூர் ஸ்டேஷனில் வந்து இருக்கப் போகிறார்” என்றேன். மனத்தில், ஆழத்தில் பீதி அதுபாட்டிற்குப் புழுப்போலத் துளைத்துக்கொண்டே இருந்தது. மேலே மட்டும் சமாதானம். கொஞ்சநேரத்திற்கு ஒருதரம் அந்தத் திகில் மேல்மட்டத்திற்கு வந்து தலையெடுக்கும்; உடம்பு பதறும்; நெஞ்சு உலரும்; அடிவயிறு கலங்கும்; முகம் விகாரம் அடையும். மறுபடியும் மெதுவாகச் சமாதானத்தின் பலம் அதிகமாகும்; பயத்தைக் கீழே அமுக்கிவிடும். சுகமோ துக்கமோ, எந்த நிலைமையிலும் நீடிக்க முடியாது என்பதற்கு மனித சுபாவத்தில் இதுவும் ஓர் அத்தாட்சியோ? ரயில்வண்டி வெறிபிடித்ததுபோல் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தது; எங்கேயோ சென்னையில் விடியப்போகும் ஒரு காலையை நோக்கிக் கனவேகமாகப் போய்க் கொண்டிருந்ததுபோல் இருந்தது. துக்கத்தில் தலையெடுக்கும் தைரியம் போலத் தொலை இருளில் அந்த ஒளித்தொடர் விரைந்து சென்று கொண்டிருந்தது. சென்னை போய்ச் சேரும்பொழுது, எங்கள் கவலையும் அந்த இருளைப்போலப் பின்தங்கிவிடாதா? நிம்மதி, காலையைப்போல அங்கே எங்களை வந்தடையாதா? இருள், நிச்சயம் கூட வராது! சென்னையில் காலைதான்! இவ்வாறெல்லாம் பேதைமனம் தன்னைத் தேற்றிக்கொண்டே இருந்தது. குஞ்சம்மாள் மூட்டையிலிருந்து வெற்றிலை பாக்கை எடுத்து எனக்குக் கொடுத்துத் தானும் போட்டுக் கொண்டாள். எங்களவர்களுக்குள்ளேயே குஞ்சம்மாள் அதிக அழகு என்று பெயர். நல்ல சிவப்பு; ஒற்றை நாடித் தேகம்; அவளுக்குத் தெருவிலேயே ஒரு செல்வாக்கு உண்டு. அன்றென்னவோ, இன்னும் அதிகமாக அவள் ஒளிர்ந்து கொண்டிருந்தாள். அவள் முகத்தில் என்றுமே இல்லாத ஓர் ஏக்கம் அன்று முதல்முதலாகத் தென்பட்டதாலோ என்னவோ, அவன் அழகு மிளிர்ந்து தோன்றினாள். குஞ்சம்மாளுக்குப் புஷ்பம் என்றால் பிராணன். யார் கேலி செய்தாலும் அலட்சியம் செய்யமாட்டாள். தலையை மிஞ்சிப் பூ வைத்துக்கொள்ளுவாள்; ஆனால் அன்று அவள் தலையில் வைத்துக்கொண்டிருந்த பூவைப்போல, வேறு என்றும் எதுவும் சோபித்ததில்லை என்று என் கண்களுக்குப்பட்டது. வெற்றிலைக் காவி அவளுடைய உதடுகளில் அன்றுதான் அவ்வளவு சிவப்பாகப் பிடித்திருந்தது போலிருந்தது. சோர்வில்தான் செளந்தரியம் பரிமளிக்குமோ? அல்லது கடைசியாக, அணைவதற்கு முன்னால், விளக்கு…? இல்லை! இல்லை! குஞ்சம்மாள் அன்றென்னவோ அப்படியிருந்தாள். வெற்றிலையைப் பாதி மென்றுகொண்டே, “அம்பி, ஓங்க அத்திம்பேருக்கு வாக்கப்பட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்?” என்றாள் குஞ்சம்மாள். அவளுடைய கண்களில் ஜலம் மள மள வென்று பெருகிற்று. “என்னிக்கும் பிடிவாதம், என்னிக்கும் சண்டை; நான் அழாத நாள் உண்டா? என் வாழ்வே அழுகையாக…” என்று உணர்ச்சி வேகத்தில் ஆரம்பித்தாள் சட்டென்று நிறுத்திக்கொண்டாள். “எதிலாவது நான் சொன்ன பேச்சைக் கேட்டதுண்டா? எப்படியோ ஆயுசுடன் இருந்தாற் போதுமென்று தோன்றிவிட்டது போனதடவை உடம்புக்கு வந்தபோது…” இருவரும் வெகுநேரம் மெளனமாக இருந்தோம். ஆனால் மனசுமட்டும் மெளனமாக இருக்கவில்லை. நல்ல நிசிவேளை, வண்டியில் ஜனங்கள் உட்கார்ந்து கொண்டும், படுத்துக்கொண்டும் அநேக தினுசாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். வண்டி ஒரு சின்ன ஸ்டேஷனில் நின்றதும், சிலர் எழுந்து இறங்கிப் போவார்கள். மெளனமாகப் பிசாசுகள் போல, அப்பொழுதுதான் தூங்கி எழுந்த சிலர், “இதென்ன ஸ்டேஷன்?” என்று தலையை வெளியே நீட்டிக் கேட்பார்கள். போர்ட்டர் ஒருவன் ஏதாவது ஒரு ஸ்டேஷன் பெயரை அரைகுறையாகத் தூங்கி விழுந்துகொண்டே சொல்லுவான். மறுபடியும் வண்டி பூரான் மாதிரி ஓட ஆரம்பிக்கும். சுமார் ஒரு மணிக்கு வண்டி விழுப்புரம் ஸ்டேஷனுக்குள் ஆர்ப்பாட்டத்துடன் போய் நின்றது. அதுவரையில் வண்டியில் அமைதியும் நிசப்தமும் இருந்தன. அந்த ஸ்டேஷனில் கூட்டமும், கூக்குரலும் அதிகமாயின; அதுவரையில் காலியாகவே வந்த எங்கள் பலகைகளில் சாமான்கள் நிறைந்தன. நகரத்தார் இனத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருத்தி, பெண்குழந்தையும் பெட்டியுமாக என் தமக்கையின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். அவள் அணிந்திருந்த முதல்தரமான வைரங்களுடன் அவள்முகமும் ஜொலித்துக்கொண்டு இருந்தது. ஏதோ ஓர் உள்ளப் பூரிப்பில் அவள் தன்னையே மறந்து தன் குழந்தையுடன் கொஞ்சினாள். வண்டி புறப்பட்ட சற்று நேரத்திற்கெல்லாம், என் தமக்கையின் பக்கம் தன் புன்னகை பூத்த முகத்தைத் திருப்பி, “எங்கிட்டுப் போறிய அம்மா?” என்று கேட்டாள். என் தமக்கை சுருக்கமாக, “பட்டணம்” என்றாள். “நானும் அங்கேதாம்மா வாரேன்!” என்று ஆரம்பித்து, அந்தப் பெண் வரிசையாகக் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தாள். பிறகு தன் பக்கத்திலிருந்த ஓலைப் பெட்டியிலிருந்து கொஞ்சம் மல்லிகைப்பூ எடுத்துக் குஞ்சம்மாளுக்குக் கொடுத்தாள். என் தமக்கை மெய்சிலிர்த்துப் போனாள். வெகு ஆவலுடன் அந்தப் பூவை வாங்கி ஜாக்கிரதையாகத் தலையில் வைத்துக்கொண்டாள். அம்பாளே அந்த உருவத்தில் வந்து தனக்குப் பூவைக் கொடுத்து, “கவலைப்படாதே! உன் பூவிற்கு ஒருநாளும் குறைவில்லை!” என்று சொன்னது போல எண்ணினாள். அதுவரையில் அவளுக்கு ஒவ்வொரு வார்த்தை பதில் சொல்லிக்கொண்டு வந்தவள், உடனே இளகி அவளிடம் சங்கதி முழுதும் சொன்னாள். “மகாலட்சுமி போலே இருக்கீங்கம்மா! ஒங்களுக்கு ஒண்ணும் கொறவு வராது!” என்று அவள் சொன்னதைத் தெய்வ வாக்காக எடுத்துக்கொண்டுவிட்டாள் குஞ்சம்மாள். அந்த ஆறுதலில் கொஞ்சநேரம் அவளுடன் கவலை மறந்து பேசிக் கொண்டிருந்தாள். திடீரென்று ஞாபகம் வந்துவிட்டது. எதோ பெருத்த குற்றம் செய்தவன் போலத் திகிலடைந்தாள், ‘ஐயையோ! பைத்தியம்போல் இப்படிச் சிரிச்சுண்டு பேசிண்டிருக்கேனே!’ என்று எண்ணினவள் போல அவள் கலவரமடைந்தது நன்றாகத் தெரிந்தது. வண்டிபோன வேகத்தில் விர்ரென்று அடித்த காற்றிலும் அவளுடைய முகத்தில் வியர்வை தென்பட்டது. ஆனால் எவ்வளவு நேரந்தான். கவலைப்பட முடியும்? கவலையால் ஏற்பட்ட அசதியிலேயே எங்களை அறியாமல் கண்ணயர்ந்தோம். துக்கத்தில் நித்திரையும் நினைவு மறதியும் சேர்ந்துதான் வாழ்க்கைக்கு ஒரு போதையாகித் தாபத்தைத் தணிக்கின்றனவோ? வண்டி செங்கற்பட்டை நெருங்குகிற சமயம் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தோம். கிழக்கு வெளுத்துக் கொண்டிருந்தது. வண்டி ஏதோ ஒரு கிராமத்தைச் கடந்து போய்க் கொண்டிருந்த பொழுது கோழி கூவியது கூடக் காதில் வந்துபட்டது. ‘அப்பா! விடியுமா?’ என்கிற நினைப்பு ஒரு பக்கம். ‘ஐயோ! விடிகிறதே! இன்னிக்கி என்ன வச்சிருக்கோ !’ என்ற நினைப்பு மற்றொரு பக்கம். இரவின் இருட்டு அளித்திருந்த ஆறுதலைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தலைகாட்டிய வெளிச்சம் பறிக்க வருவது போல் இருந்தது. எங்கேயோ, கண்காணாத தூரத்தில் உருவடைந்த ஒரு காட்சியில் ஈடுபட்டவளாய் நிலைகுத்திய பார்வையுடன் குஞ்சம்மாள் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். “செங்கற்பட்டில் பல் தேய்த்துக் கொண்டு காபி சாப்பிடுவோமா?” என்று கேட்டான். “எல்லாம் பட்டணத்தில் தான்!” என்று சொல்லிவிட்டாள் குஞ்சம்மாள், பக்கத்தில் நகரத்தார் பெண் கவலையற்றுத் துாங்கிக்கொண்டிருந்தாள். “இதோ ஆயிற்று, அதோ ஆயிற்று” என்று சொல்வது போல வண்டி தாவிப் பறந்து கொண்டிருந்தது. ஆனால் எங்களுக்கென்னவோ பட்டணம் நெருங்க நெருங்க, வேண்டுமேன்றே வண்டி ஊர்வது போல இருந்தது. எழும்பூர் வந்தது கடைசியாக. ஸ்டேஷனில் யாரும் இல்லை; அதாவது எங்கள் அத்திம்பேர் இல்லை. எல்லோரும் இருந்தார்கள். ‘ஆனால் அவர் ஸ்டேஷனுக்கு எதற்காக வர வேண்டும்? அங்கே எதிர்பார்ப்பது சரியில்லைதான்’ என்று அப்பொழுது தோன்றிற்று. வீட்டுக்குப் போனோம், வீடு பூட்டியிருந்தது. உடம்பு சௌகரியமில்லைதான்! சந்தேகமில்லை, இப்பொழுது! ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் போனோம். அரைமணிநேரம் துடித்த பிறகு குமாஸ்தா வந்தார். “நீங்கள் கும்பகோணமா?” என்றார். “ஆமாம்” என்றேன். “நோயாளி- நேற்றிரவு- இறந்துபோய்விட்டார்’ என்று குமாஸ்தா சாவதானமாகச் சொன்னார், “இறந்து.? அதெப்படி? அதற்குள்ளா?” அப்பொழுதும் சந்தேகமும் அவநம்பிக்கையும் விடவில்லை . “சிவராமையர்?” “ஆமாம், ஸார்!” “ஒரு வேளை” “சற்று இருங்கள். பிரேதத்தைப் பெற்றுக்கொள்ளலாம்” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுக் குமாஸ்தா தம் ஜோலியைக் கவனிக்கப் போனார். கொஞ்சநேரம் கழித்துப் பிரேதத்தைப் பெற்றுக்கொண்டோம். அப்பொழுது, அதைப் பார்த்தவுடன், நிச்சயமாயிற்று!. ஒருவழியாக மனத்திலிருந்த பயம் தீர்ந்தது; திகில் தீர்ந்தது. பிறகு? விடிந்துவிட்டது! மௌனி புதுமைப்பித்தனால் ‘சிறுகதைத் திருமூலர்’ என்று போற்றப்பட்ட மெளனி, “எனது ஊர் செம்மங்குடி என நான் நினைக்கும் போது அதற்கான ஒரு முக்கிய நியாயத்தையும் சொல்ல வேண்டி வருகிறது. என் தந்தையும் அவரது மூதாதையரும் சமீபகாலம் வரை இந்த ஊரில் வீடு, சொத்து சுதந்தரத்துடன் வசித்து வந்திருக்கிறார்கள்…” என்று தான் பிறந்த ஊரைப்பற்றி செம்மங்குடி- ஊர் தேடல் என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியைத் தந்தது அந்தக் கட்டுரை. நான் பிறந்த காவனூருக்கும், செம்மங்கு டிக்கும் பத்து கிலோமீட்டர் தூரம் தான் இருக்கும். மொத்தத்தில் இருபத்திநான்கு சிறுகதைகளை மட்டும் எழுதி தமிழ் சிறுகதை இலக்கிய உலகில் ஒரு தனிபீடம் அமையப் பெற்றவர் மெளனி. ‘தமிழர்கள் பாக்கிய சாலிகள். ஆனால் தங்கள் பாக்கியத்தைத் தெரிந்து கொள்ளத்தான் அவர்களுக்குத் தன்மையோ அறிவோ போதுவதில்லை. ஆகவே 1935 இல் மெளனி எழுதிய சிறுகதைகள் 1959 இல் வெளிவருகின்றன….. மெளனியைப் பற்றித் தமிழ் வாசகர்களை இடித்துக் கூறுகிற காரியத்தைப் புதுமைப்பித்தன் தொடங்கினார். அதற்குப் பிறகு நான் சமயம் வாய்க்கும் போதெல்லாம் மெளனியின் பெயரைக் கூறி வந்திருக்கிறேன். இந்த மெளனியின் சிறுகதைகளில் ’அழியாச்சுடர்’ ‘பிரபஞ்சகானம்’ எனக்கு ரொம்ப பிடிக்கும். மீதிக்கதைகள் எல்லாமே சிறுகதைக்கே உரிய அமைதியுடன் பிரமாதமாக அமைந்திருக்கின்றன. ஒதுங்கி நின்று, உள்ளதெல்லாவற்றையும் ஒரு குறிப்பிட்ட கோணத்தில், நோக்கும் பூராவும், கடினமான விஷயத்தை ஏற்க மறுக்கிற மெலிந்த வார்த்தைகளில் சொல்லி விடுகின்ற காரியத்தை மெளனி சாதித்திருக்கிறார்..” இந்த அளவுக்கு இந்தச் சாதனையில் வெற்றி பெற்றவர்கள் என்று இன்றைய தமிழ்ச் சிறுகதையுலகில் வேறு யாரையும் சொல்லமுடியாது. அவரது நடையும் நோக்கும் பூரணமானவை. இந்த அம்சம் மிகச் சிறந்தது, தனிப்பட்டது என்று பிரித்தெடுக்க முடியாது. மொத்தத்தில் இதுதான் மெளனி என்று சொல்லலாம்…” என்று மெளனியின் சிறுகதை நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் கா.நா.சு. குடும்பத்தேர் பிற்பகல் மூன்று மணி சுமாருக்கு, ஒரு நாள், கிருஷ்ணய்யர் தன் வீட்டு ரேழி உள்ளே உட்கார்ந்துகொண்டு, நான்கைந்து தினம், எழுதப்படாது நின்றுபோன தினசரிக் கணக்கை எழுதிக் கொண்டிருந்தார். கிருஷ்ணய்யருக்கு ஐம்பத்திரண்டு அல்லது ஐம்பத்து மூன்று வயது இருக்கலாம். திடசாரி, அவர் அந்தஸ்தும் கெளரவமும் உடையவர். குடும்ப பரிபாலனம், வெளி விஷய வியாபகம் முதலிய எல்லா விஷயங்களிலும் அக்கிராமத்தாருக்கு, பின்பற்றக்கூடிய லட்சிய புருஷராகக் கருதப்பட்டவர். நாலைந்து தினம் அசெளக்கியமுற்றுக் கிடந்து, அவருடைய தாயார் இறந்து போய் ஒரு மாதம் ஆகிறது. கிழவிக்கு, அந்த எண்பது வருட உலக வாழ்க்கை, ஒரு மலர்ப்பாய்ப் படுக்கையாக இருக்கவில்லை. ஒரு தனவந்தக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டது, அவளை சிற் சில சங்கடங்களுக்கு ஆளாகாது மீட்டதெனினும், அற்ப ஆயுளில் போன அவள் குழந்தைகள், குடும்பம் நடுநடுவே சஞ்சலங்கள் முதலிய இன்னும் எத்தனையோ விதப் பொறுப்புகளின் தன்மையற்ற தொல்லைகளை அவள் அனுபவிக்காமல் இல்லை. அதில் சந்தோஷமே தவிர அவள் வருத்தம் கொள்ளவில்லை. விவேகமான இயற்கை அறிவு கொண்டு அவள் நடத்திய குடும்ப வாழ்க்கை, வீடு நிறைந்த ஒரு சுடரொளி போன்றது. செலவுகளை ஒவ்வொன்றாக ஞாபகப்படுத்தி எழுதலானார். ஆட்களுக்குக் கொடுத்தது. பறையன்கள் தண்ணிக்காக… தச்சன் கூலி… மூன்று நாள் முன்பு அமாவாசை தர்ப்பண தட்சினை. ஸ்வாமி புறப்பாட்டிற்கான ஊர் வீதாச்சாரம் எல்லாம் எழுதியாகிவிட்டது. அப்படியும் மூன்றே காலணாக் குறைந்தது. செலவு தெரியவில்லை. வழக்கமாக, எழுதிப் பழக்கப்பட்ட கை, ‘அம்மா பற்று… 0.3.3’ என்று எழுதிக் கணக்கைச் சரிக்கட்டிவிட்டது. அதைக் கிருஷ்ணய்யர் பார்த்தார். அதன் அர்த்தம் சிறிது சென்று திடீரென்று புலப்பட்டது போன்று அவர் கண்கள் நிரம்பின. இரு சொட்டுக் கண்ணீர் கணக்குப் புத்தகத்தின் மீது விழுந்தது. அறியாமல் விரலால் துடைத்த போது ‘அம்மா பற்று……0.3.3’ என்ற வரி நன்கு காயாததினால் மெழுகிக் கறைபட்டது. அது அவர் வழக்கம். சிறிது தொகை கணக்கிற்கு அகப்படாவிட்டால், தலையைச் சொறிந்தும்… பேனா மறுமுனையை மூக்கு நுனியில் அழுத்தியும்… என்ன ஞாபகப்படுத்தியும், செலவு தெரியாவிட்டால் ‘அம்மா பற்று’ என்று குறைந்த தொகையை எழுதி முடித்துவிடுவது அவர் வழக்கம். கதவை இழுத்துப் பூட்டிக்கொண்டு, இரண்டுதரம், நன்றாகப் பூட்டப்பட்டு இருக்கிறதா என்று கதவை தள்ளிப் பார்த்துவிட்டுக் கூடத்து ஊஞ்சலில் வந்து உட்காருவார். திருப்பத்தாழ்வாரச் சந்தனக் கல்லடியில், குருட்டு யோசனைகள் செய்துகொண்டு அவர் தாயார் படுத்திருப்பாள். மனைவி உள்ளிருந்து காப்பி கொணர்ந்து வைத்துவிட்டுப் போனவுடன், காப்பியை அருந்தி, வெற்றிலை போட்டுக்கொண்டே ‘அம்மா இன்னிக்கு உன் பற்று அணா’ என்று சொல்லுவார். உள்ளே இருந்து அவர் மனைவியின் சிரிப்புச் சப்தம் கேட்கும். அவர் தாயாருக்கோவெனின், சமீப சில வருஷமாக காது கொஞ்சம் மந்தமாகிவிட்டது. ஆனாலும் இவர் சொல்வது அவளுக்குக் கேட்கும். ‘ஆமாம் எனக்குத்தான் காக்கை புத்தி!’ வைத்தது மறந்து விடும் ! உனக்கு ? அவ்வப்போது செலவு குறித்துக்கொண்டால் தானே. நான் இருக்கேன் என் தலையை உருட்ட, என் தலையிலேபோட, அப்புறம் வயது ஆகியும் குடும்பப் பொறுப்பு… அவள் சொல்லி முடிப்பாள். கிருஷ்ணய்யருக்கு சாந்த சுபாவம் தான். இருந்தாலும் தன் தாயார் சொல்லும்போது சிற்சில சமயம் கடிந்து பேசிவிடுவார் ‘ஆமாம், பிரமாதம்! குடிமூழ்கிப் போய்விட்டது. அடித்துக் கொள்ளுகிறாயே’ என்பார். ‘எல்லாம் இருந்தாத்தாண்டா. எப்படியாவது போயேன்; என் காதிலே போட்டால் தானே நான் சொல்லும்படியாகிறது.’ என்று சொல்லும்போதே அவளுக்கு வருத்தத்தில் அழுகை வந்துவிடும். சிறிது சென்றபின் பழையபடி தாயாரும், பிள்ளையும் பேசிக் கொள்வதைப் பார்க்கும்போது - இவருடைய குதுகல குடும்பப் பேச்சுகள்! ஆம், அம்மா பற்று மூன்றே காலணாத்தான். எதிரிலே, மேஜையின் மீது நோட்டு விரிக்கப்பட்டு வெறிக்கப் பார்க்கிறது. அவர் கண்ணீர் நின்றுவிட்டாலும் மனது மட்டும் உள்ளே உருகிக் கொண்டிருந்தது. குடும்ப வீட்டின் தாய்ச் சுவர் இடிந்து கரைந்ததைக் கண்டார். அதற்குப் பிரதியாக, தன்னால் தாங்கி நிற்க முடியுமா என்ற எண்ணத்தில் தன் முழு பலவீனத்தையும் உணர்ந்தார். குடும்ப விவகாரங்களை, அடுத்த தலைமுறைக்கு விட்டு விட்டுத் தன் தாயார் வகித்த ஸ்தானத்தை ஏற்றுக்கொள்ளச் சமயம் இன்னும் வரவில்லையே என்பதை எண்ணினார். அவருடைய பெரிய பையன் படித்து விட்டு உத்தியோக வேட்டையில்தான் கண்ணும் கருத்துமாக இருக்கிறான். மற்றவர்கள் இன்னும் சிறுவர்கள் தான்.தன் மனைவியோ வெனில் ……சுத்த அசடுதானே! திடீரென்று எழுந்து உள்ளே காப்பி சாப்பிடச் சென்றார். வீடே வெறிச்சென்று தோன்றியது. மனைவி காப்பி வைத்துவிட்டுப் போனதும், ஏதோ சொப்பன உலகில் ஊமையாக நடப்பதுபோன்று தான் தோன்றியது. சந்தனக் கல்லடி காலியாக இருந்தது. காப்பி குடித்துவிட்டு வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தார். அவர் மனைவி, பாத்திரங்களை எடுத்துப்போக வந்தபோது எதிரே எங்கேயோ ஆகாயத்தைப் பார்ப்பது போல உட்காந்திருந்தார். சிம்னி இல்லாது தொங்கிக் கொண்டிருந்தது கூடத்தில் பவர்லைட்! ‘மூன்று நாளாச்சி, கிளாஸ் உடைந்து- சொன்னால் மறந்து விடுகிறீர்களே’ என்று பாத்திரங்களைக் கையில் எடுத்துக்கொண்டு அவர் மனைவி உள்ளே போக ஆயத்தப்பட்டவள், அவர் எதையோ உற்றுநோக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டுச் சொன்னாள். மூன்று நாளாய் அவள் சொல்லியதும் மறக்கும்படியாகத் தான் இருந்தது. கிருஷ்ணய்யருக்கு அவள் சொன்னது போலவே இல்லை. தன் தாயார் சொல்லியிருந்தால்…? தான் மறந்திருந்தால்-? அவர் மனது என்னவெல்லாமோ யோசித்தது நான்கு வருஷத்துக்கு முன் ஊரார் கூடிப் பெருமாள் கோவிலில் ஏகாதசி இரவு பஜனை செய்ய எண்ணினார்கள். அது விட்டு விட்டுத் தூங்கும் பக்தி சிரத்தையின் ஒருவிதத் திடீர் ஆரம்பம். இவர் லீட்டு பவர்லைட் இரவல் போயிற்று. அது அவர் தாயாருக்குத் தெரியாது. அன்று இரவு அவர் சாப்பிடும்போது தூணடியில் அவர் தாயார் உட்கார்ந்து பலகாரம் செய்துகொண்டு இருந்தாள். கிருஷ்ணய்யரின் மனத்துள்ளே, ஏதோ சொல்லவேண்டிய ஒரு விஷயம் வெளிச் செல்லாது அடக்கப்பட்டதினால் ஏற்பட்ட ஒரு வேகம். அவர் அறியாமல் சொன்னவர் போன்று ‘அம்மா கோவிலுக்கு பவர்லைட்’ என்று ஆரம்பித்தவர், சொல்லி முடிக்கவில்லை . அவர் தாயார் சொன்னாள், ‘எதையும் எரவல் கொடுத்துவிடு. ஏன் வாங்கணும்? தொலைக்கத்தானே…’ அப்போது அவருக்குச் சிறிது கோபம்தான். இருந்தாலும் அவள் சொன்னதில் என்ன பிசகு இருக்கிறது என்பதில் சந்தேகம். அவளிடம் ஏன் சொல்லவேண்டும்? சொன்னால் தானே, அவள் சொல்வதற்குக் காரணமாகிறது? அது ஒரு விநோத விஷயம்தான் — தாயாருக்கு தெரியப்படுத்துவது என்பது. எதில்தான் என்ன பிசகு. தன் தாயாருக்குத் தெரியாது, தெரியப்படுத்தாது இருந்தால்? ஆனால் அவ்வகையில் தான் குடும்பம் நடத்தினால் நாசகாலம் தான். அவருக்குத் தன் குடும்பத்தில் தன் தாயார் வகிக்கும் பொறுப்புத் தெரியும். அவள் சொல்வதில் என்ன பிசகு என்பதைத்தான் உணர்ந்தார். பேசாது இருந்துவிட்டார். மறுநாள் விளக்கு வந்தபோது கிளாஸ் உடைந்து இருந்தது. தம்பூராவை நிமிர்த்தி சுருதி கூட்டியபோது அது விளக்கைத் தட்டியதினால் சிம்னி விரிந்து விட்டது. அந்த விஷயமும் தன் தாயாருக்குச் சொன்னார். அவருடைய மனதை அறிந்தவள் போன்றே ஆறுதலாக, “போகிறது. அல்பவிஷயம் ஸ்வாமி காரியம். ஒன்று வாங்கி வந்துவிடு சாயங்காலம்” என்றாள். அந்தச் சிம்னி தான் இதுவரையிலும் இருந்து வந்தது. எதிரே அந்த சிம்னியில்லா விளக்கும் தன் தாயார் நினைவை ஊட்டிக் கொண்டிருந்ததை அவர் பார்த்தார். இரேழி உள் சாத்தாது வந்தது ஞாபகம் வந்தது. எழுந்து உள்ளே சென்று சிறிது உட்கார்ந்து இருந்தார். கணக்குப் புஸ்தகம் மூடி மேஜை அறையில் வைக்கப்பட்டது. நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார் கிருஷ்ணய்யர், மாட்டுக்காரப் பையன் மாடுகளை வீட்டு வாயில் வழியாக உள்ளே அடித்துவிட்டு ‘அம்மா மாட்டைக் கட்டுங்கோ’ என்று கூவிவிட்டுப் போய்விட்டான். மேல்காற்று வாயிலில் புழுதியைத் தூற்றிக் கொண்டிருந்தது. உள்ளே வைக்கப்பட்டிருந்த விரைக்கோட்டை அந்துகள் அவர் முகத்தில் மொய்த்தன. அவருக்கு அதுவும் தெரியவில்லை . ஜன்னல் கதவு காற்றில் தடாலென்று அடித்துக்கொண்டது. மேல்காற்று நாளில் தன் தாயார் சொல்வது ஞாபகம் வந்தது. “உடம்பு வலி எடுக்கும்; ரேழியிலேயே படுத்துக்கொள்,’ அவர் எங்கே படுத்துக்கொண்டாலும் அதைப்பற்றி அவளுக்குத் தெரியாது. அவள் சொல்லிதான் விடுவாள். இரவிலே அநேகமாக அவள் தூங்கமாட்டாள். காது மந்தம்; கிழவயது. தாழ்வாரத்துக் கீற்று இரட்டை விரி இரவில் காற்று அடித்துக் கொள்ளும் போது ‘யார்-யார்?’ என்று கேட்டுவிட்டுப் பின்னர் விஷயத்தை யூகித்துக் கொண்டு பேசாது உறங்கிவிடுவாள், மற்றும் நடு இரலில் கேட்காத சப்தங்கள் (?) அவள் நுண்ணுணர்விற்கு எப்படியோ எட்டி ‘யார்’ என்று கேட்டும் திருப்தி அடையாது, இருளின் பயத்தை, அவள் ஊன்றுகோல் உதவின டக்டக் சப்தத்தினால் விரட்டுவது போன்று எழுந்து நடந்து ஒவ்வொரு இடத்தையும் தடவித் தடவித் திருப்தியுற்று, திரும்பிப் படுத்துக் கொண்டுவிடுவாள். மார்கழி மாதக் குளிரானாலும் அவளை வருத்தாது. விடியற்காலையில் எழுந்து ஏதோ சுலோகத்தை முணு முணுத்துக் கொண்டு, கொல்லை மேட்டிலிருந்து வாயில் வரையிலும் சாணம் தெளித்து வீட்டையே புனிதமாக்குவது போன்று வேலை செய்வாள். கிருஷ்ணய்யருக்குத் தன் தாயாரை இழந்ததின் வருத்தம் தாங்கமுடியவில்லை. இழக்கப்பட்ட தாயார் தனக்குக் கவலைக்கு இடமின்றி குடும்பத்தை நடத்த எவ்வெவ்வகையில் உதவியாக இருந்தாள் என்பதை உணர்ந்தபோது, அவள் இடத்திற்கு யார் இப்போது இருக்கிறாள் என்பதை அவரால் கண்டுகொள்ள முடியவில்லை. அப்படி அவள் இல்லாது நடத்தும் வகையும் தோன்றவில்லை. தான் அந்த இடத்தைக் கொள்ள வேண்டின், தன் பொறுப்புகளைத் தன் கீழ்வாரிசுகள் கொள்ளவேண்டும். அதற்கோ ஒருவரும் இல்லை. இருந்தும் தன் தாயாரைப் போன்று தான் அவ்வளவு நன்றாகப் பாதுகாப்பளிக்க முடியுமா? இரவில், கூடத்துக் குத்துவிளக்கின் ஒளிபடராத பாதி இருளில் அவன் உட்கார்ந்து ஜபம் செய்து கொண்டிருப்பாள். உள்ளே குழந்தைகள் தாயாரிடம் விஷமம் செய்துகொண்டு அவளைக் காரியம் செய்யவிடாது உபத்திரவம் செய்யும் போது, குழந்தைகளைக் கூப்பிட்டு கதை சொல்வதும்…. அடிக்கடி குழந்தைகள் உடம்பு இளைத்துவிட்டது என்று நாட்டுப் பெண்ணைக் கோபித்துக் கொள்வதும், இவ்வகையில் தன்னால் கவனம் செலுத்தமுடியுமா என்பதை அவர் நினைக்கும்போது யோசிக்க, யோசிக்க, கிருஷ்ணய்யர் வீடே தன் தாயாரால் நிரப்பப்பட்டிருந்தது போன்ற தோற்றத்தைத் தான் உணர்ந்தார். அவள் இறந்ததை எண்ணும்போது தன் பலவீனத்தைக் கண்டார். வெளியில் தான் எவ்வளவு கெட்டிக்காரரெனத் தோன்றுவதற்கு ஒரு உரைகல் போலவிருந்த தாயார் போய்விட்டாள். எழுந்து கதவைப்பூட்டிக்கொண்டு கொல்லையில் வேலை செய்யும் தச்சனைப் பார்க்கப் போனார். கொட்டிலில் கட்டப்படாத மாடுகளில் ஒன்று கடந்த அரைமணி நேரமாக தவிட்டைத் தின்று கொண்டிருந்தது. ‘மாடு வந்திருக்கு கட்டு’ என்று முன்பு தன் தாயார் சொல்லுவதை ‘அனாவசியமாக ஏன் சொல்லுகிறாள் ? கட்டமாட்டார்களா’ என்று மிகுந்த அலட்சியமாக எண்ணியவர், கண்கூடாக அவள் வார்த்தைகளின் மதிப்பைப் பார்த்தார். கொல்லையில் சாவதானமாக வீட்டு வேலைக்காரன் வேட்டி துவைத்துக் கொண்டிருந்தான். உள்ளே அவர் மனைவி படுத்துக்கொண்டிருந்தாள். மாடுகளைக் கட்டிவிட்டு கொல்லையில் சென்றபோது, தச்சன் வேலை செய்யாது வெற்றிலை போட்டுக்கொண்டு சும்மா உட்கார்ந்து இருந்தான். அவனைக் கடிந்து, வாயிற்பக்கம் பார்த்துக்கொண்டே அங்கு உட்கார்ந்தார். கொல்லையில் வேலையை கவனிக்கும்போதும், வாயிற்பக்கத்தில் கவனிப்புக் கொள்ளவேண்டியிருக்கிறது. எவ்வளவு சமாதானத்தோடு முன்பு வீட்டை விட்டு வெளியே போகமுடியும் என்பதையும் வருகிறவர்கள் போகிறவர்களுக்கு எவ்வளவு சரியானபடி தன் தாயார் ஜவாப்பு சொல்லுவாள் என்பதையும் நினைத்துக் கொண்டார். ‘அந்தக் கர்நாடகம்’ என்று அவளை அடிக்கடி இவர் சொல்வது உண்டு. ஆனால் அப்படியல்ல. நாகரிகத்தையும், நாகரிகத்தில் ஜனங்கள் முன்னேற்றத்தையும் அவள் கண்டுகொள்ளாமல் இல்லை. கண்டுகொள்ள அவைகளைப் பயன்படுத்தும் வகையில்தான் வித்தியாசம். சூன்ய மூளையில், அழகற்று மிருகவேகத்தில் தாக்குவது போன்று நவநாகரிகம், அவளிடம் தன் சக்தியைக் காட்டமுடியாது. எத்தனையோ தலைமுறையாகப் பாடுபட்டுக் காப்பாற்றி வரப்பட்ட, மிருதுவாக உறைந்த குடும்ப லஷியங்கள் உருக்கொண்டவள் போன்றவள்தான் அவள். வெற்று வெளியிலும், தாழ்ந்த இடத்திலும் பாய்வது போலவன்றித் தணிவு பெற்ற, அழகுபட, அமைதியுடன்தான் நாகரிகம் அவளிடம் இசைவு கொள்ளும். திடீரென்று தோன்றும் பச்சை எண்ணங்களையும், பழக்கவழக்கங்களையும் பதனிடாமல் ஏற்று வழங்குவது முடியுமோ குடும்பங்களினால்? அவளைவிடப் புதுக்காலத்தின் முன்னேற்றத்தின் உயர் அம்சங்களை உணர்ந்தவர்கள் இல்லை. வெகு நாட்கள் முன்பே, வீட்டில் மணி அடிக்கும் கடியாரம், அவள் தூண்டுகோலின் பேரிலே வாங்கப்பட்டது. அதனால் அவளுக்குக் கொஞ்சமும் பிரயோஜனமில்லை. பகலில் முற்றத்தில் விழும் நிழல்தான் அவளுக்குக் கால அளவு. இரவிலோ வெனின், அவளுக்கு நஷத்திரம் பார்க்கத்தெரியும். அருணோதயத்திற்கு இன்னும் எவ்வளவு நாழிகை இருக்கிறது என்று அவளால் தெரிந்து கொள்ளமுடியும். வாங்கியபின், அநேகர் மணி பார்க்க வருவதுண்டு. அதில்தான் அவளுக்கு மிகுந்த திருப்தி. சிறுவயதில், குடும்பத்தின் கெளரவ எண்ணங்களை, குழந்தைகளுக்குச் சொல்லுவாள். அதனால்… குடும்பத்தில் பழைய நினைவுகள்… குத்துவிளக்கடியில் குழந்தைகளுக்குச் சொல்லும்போது… அறிவுக்கெட்டாது திகைப்பில் காலத்தில் மறைந்த பழைய பழைய கதைகள்… அவளுடைய மாமிப் பாட்டி அப்படி இருந்தது… பெரிய மாமனார் காசிக்கு ஓடிப்போனது… எவ்வளவு தூரம் தன் மதிப்பு, குடும்ப மதிப்பு, ஆரோக்கியமான போதனைகளை, குழந்தைகள் மனத்தில் பாலூட்டுவது போன்று, ஊட்டிவந்தாள்!… சாயங்காலம் ஆகிவிட்டது. கொல்லைக் கதவுகளை பூட்டிக்கொண்டு வாயிற்பக்கம் வந்தார். அப்போது அவருடைய தூர பந்து ஒருவர், அவர் தாயார் இறந்த துக்கம் விசாரிக்க வந்தார். அவரோடு பேசும்போதே கிருஷ்ணய்யருக்கு துக்கம் தொண்டையை அடைத்துவிட்டது. வந்தவருக்கு இது வியப்பாகத்தான் இருந்தது. ‘என்னடா கிருஷ்ணா! பச்சைக் குழந்தையைப்போல, அம்மாவை நினைத்துக்கொண்டு…! உன்னுடைய திடசித்தம் எல்லாம் எங்கே?’ என்றார் அவர். ஆனால் கிருஷ்ணய்யருக்கன்றோ, தன்னுடைய அவ்வளவு வெளியுலகப் பெருமைகளுக்கும் காரணம் மறைமுகமாக வீட்டினுள் இருந்தது, யார் என்று தெரியும். அவர் போனபின், என்ன நினைத்தென்ன என்று ஒரு பெருமூச்செறிந்தார் கிருஷ்ணய்யர். அவர் துக்கமெல்லாம், சிறு ஒரு குழந்தை போன்று, தன் தாயாரை இழத்தற்கன்று. மனது ஒரு நிதானமின்றி அலைமோதியது. அவருடைய குடும்பப் பொறுப்பைக் காப்பாற்றிப் பின்வருபவர்களிடம் ஒப்படைக்க, தன்னிடம் கொடுக்கப்பட்ட ஒரு உன்னத லஷ்யம். குடும்பம் என்பது சமூகத்தின் எவ்வளவு அடிப்படையான அஸ்திவாரம் என்பது அவருக்குத் தெரியும். எவ்வளவு நாகரிக முற்போக்கு எண்ணங்களிலும் கட்டுக்கடங்கி உணரமுடியாது எட்டிச் செல்வது போன்ற ‘குடும்பம் குடும்பவாழ்க்கை’ என்பது எவ்வளவு தூரம் தன் தாயாருடன் லயித்து இருந்தது என்பதை எண்ணித் துக்கமடைந்தார். உலகம் சீர்கெட்டுத் சிதைவுபடுவதின் காரணம் குடும்ப வாழ்க்கையில் சமாதானமற்று இருப்பது தான் என்பதை ஸ்பஷ்டமாக அறிந்தார். குடும்பத்தினர் ஒருவரிடமும், அதன் பொறுப்பு அடைபட்டுக் கிடக்கவில்லை. ஒருவர் ஏற்கும்படியான அவ்வளவு லேசானதல்ல. எல்லாரிடமும் அது இருப்பது முடியாது. அப்போது அது குடும்பப் பொறுப்பாகாது; சீர்கெட்ட தன் தலை ஆட்டம். பொறுப்பை வகிக்கும் அவர், பொறுப்பாளியின்றி, எல்லாம் தாயார் - தாயாரிடம் சொல்லி-சொல்லுக் கேட்டுத்தான்-அவர் குடும்பத் தலைவர்! ஒரு விசித்திர யந்திரம்தான் குடும்பம் என்பது!…… மாலை நேரம் சிறிது சிறிதாக இருட்டிவிட்டது. கிருஷ்ணய்யர் வாய்க்கால் சென்று சந்தி ஜபம் முடித்துக் கொண்டு விட்டிற்கு வந்தார். திண்ணைச் சாய்மனையில், எதிர்த் தூணில் காலை உதைத்துக்கொண்டு, சாய்ந்து படுத்திருந்தார். வாய் ஏதோ மந்திர ஜபம் செய்து கொண்டிருந்தாலும், மனது என்னவெல்லாமோ புரியாத வகையில் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. தலைக்கு மேலே மாடத்தில், ஒரு சிறு விளக்கு, லக்ஷ்மிகளை விசிப் பிரகாசித்தது. வெகு நேரம் அப்படியே சாய்ந்து கொண்டிருந்தார். உள்ளிருந்து வந்து தன் மனைவி விளக்கை எடுத்துச் சென்றதும் அவருக்குத் தெரியாது… அவர் கடைசிக் குழந்தை, ‘அப்பா நாழிகையாச்சு - சாப்பிடவா -’ என்று கூப்பிட்டதால் திடுக்கிட்டு எழுந்தார். வீதியில் சென்று அங்கிருந்தே பெருமாளைத் தெரிசித்துவிட்டு கதவைத் தாளிட்டு உள்ளே சென்றார். மனத்தில் ஒரு பெரிய பளுத்தொல்லை நீங்கினதான ஒரு உணர்ச்சி. பலங்கொண்டதான ஒரு எண்ணம். எதிர்கால வாழ்வு மிகவும் லேசாகத் தோன்றியது. ஒரு அளவற்ற ஆனந்தம். புரியாத வகையில் அவர் மனது ‘குடும்பம் ஒரு விசித்திர யந்திரம். பழுது பட்டுப்போன ஒரு பாகத்தினால் அது நிற்பதில்லை. அதற்குப் பிரதி மறு பாகம் தானாகவே உண்டாகிவிடும்…’ என்று என்னவெல்லாமோ எண்ணியது. மணிக்கொடி 1936 க. நா. சுப்ரமணியம் வலங்கைமானில் பிறந்த க.நா.சுப்ரமணியம் சுத்தமான தஞ்சாவூர்காரர். நவீன தமிழில் கலை கலைக்காகவே என்ற கோஷத்தை முன் வைத்தவர். நாவலாசிரியராகவும், சிறுகதையாசியராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், விமர்சகராகவும் பெயர் எடுத்தவர். பதினைந்து தமிழ் நாவல்கள் எழுதியவரின் சிறந்த படைப்பாக பேசப்படுவது ‘பொய்த்தேவு’ ‘அசுரகணம்’ இவ்விரண்டுமே. இவர் நாவல்கள் எல்லாமே சோதனைப் படைப்புகளே. மனித உணர்வுகளை மையமாகக் கொண்டனவே. மருட்சி தந்தாலும் மதித்துப் போற்றத்தக்கன. தெய்வ ஜனனம், ஆடரங்கு, கருகாதமொட்டு ஆகிய மூன்று சிறுகதைத் தொகுதிகளும் குறிப்பிடத்தக்கன. ஆங்கிலத்தின் மூலம் ஐரோப்பிய, அமெரிக்க இலக்கியங்களையும் படித்து அவற்றில் ஈடுபாடு கொண்ட க.நா.சு அன்றைய சூழ்நிலையில் தம்மைப் போன்றவர்கள் தமிழில் கதைகள், கட்டுரைகள் எழுதுவதைப் பார்த்துத் தாமும் எழுதலாமே என்று சிறுகதைகள் எழுதத்துணிந்ததாகச் சொல்லிக் கொள்கிறார். அவருடைய நண்பர் மெளனியைப் பின்பற்றி புதிய உத்திகளுடன் புதிய கதைப்பொருள்களையும் கையாளும் சோதனைகளையும் க.நா.சு செய்து பார்த்திருக்கிறார். ஆனால் இவரது முயற்சிகளில் மேனாட்டு இலக்கியச் சாயல் அப்பட்டமாகத் தலைதுாக்கி நின்றதால் தமிழ்ச் சிறுகதை வகையில் அவற்றைப் பொருத்திப் பார்க்கும்போது இவருக்கு முந்தியவர்களின் இலக்கியத் தரத்தை இவரிடம் காண முடியவில்லை…” என்று சிட்டி சிவபாதசுந்தரம் கூறுகிறார்கள். மணிக்கொடி காலத்து எழுத்தாளர்களில் பிறநாட்டு இலக்கியப் பாதிப்பில் தமிழ்நாவல், சிறுகதைத் துறைக்கு விமர்சனக் குரல் கொடுத்து அதை வளர்த்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இவ்வளவு இருந்தும், முற்போக்கு இலக்கியத்தை நேர்மையாக எதிர்கொள்ளாமல் ஓரவஞ்சனையாக எதிர்த்த கொள்கையே அவருக்கு மிகப்பெரிய பலகீனமாக அமைந்தது என்று துணிந்து சொல்லமுடியும். அவருக்கு இன்றைக்கும் சிஷ்யர்கள் இருக்கிறார்கள். அவர்களாவது யோசிக்க முன்வருவார்களா?  ஆடரங்கு கூட்டம் ஒன்றும் பிரமாதமாக இல்லை. ஏதோ பொறுக்கி எடுத்த சிலருக்கு, உபயோகப்படக் கூடியவர்களுக்கு, கலை உலகிலே முக்கியஸ்தர்களுக்கு மட்டுந்தான் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. பத்துப் பதினைந்து பெண்மணிகள், ஏழெட்டுக் குழந்தைகள், இருபது ஆண்கள்-இவ்வளவுதான். பெண்களில் சிலரையும், குழந்தைகளையும் தவிர மற்றவர்களெல்லாம் கலை உலகில் பெரிய ஸ்தானம் வகிப்பவர்கள்; அந்தச் சில பெண்களும் குழந்தைகளுங்கூடப் பெரியவர்களின் வீட்டுக் குழந்தைகளும், பெண்களுந்தான். லஷ்மி பாக்கியசாலி. அவளுடைய அரங்கேற்றம் நல்ல சுபசூசகங்களுடன் கலைத்தூண்’களின் நிழலில் நடக்க இருந்தது. லக்ஷ்மி உள்ளே வரும்போதே, “கீழே விரித்திருக்கும் விரிப்பு வழுக்காதே?” என்று சபையில் யாரோ கேட்டதும், “வழுக்காது; அநேகமாக வழுக்காது” என்று யாரோ சொன்னதும் அவள் காதில் விழுந்தன. குனிந்து பார்த்தாள். ரப்பரைப்போல ஏதோ ஒரு விரிப்பானது கீழே விரிக்கப்பட்டிருந்தது. அது அறை அகலம் முழுவதுங்கூட இல்லை. நடு அறையில் நாலடி அகலத்துக்குத்தான் இருந்தது. முழுவதும் அந்த விரிப்பிலேயே நாட்டியம் ஆடிவிட முடியாது. தரையிலும் கால் படத்தான் படும். விரிப்பு வழுக்காது போலத்தான் இருந்தது. ஆனால் காலைத் தரையிலிருந்து விரிப்புக்கு மாற்றும் போது அதிக ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும். தடுக்கிவிட்டால் ஆபத்து… ஆமாம், ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும்! அதென்ன, நாட்டிய மேடையா, எல்லாச் செளகரியங்களும் இருக்க? சாதாரண வீட்டில் ஒரு கூடம்; இந்தச் சந்தர்ப்பத்துக்கு நாட்டிய அரங்காக, லக்ஷ்மியின் அரங்கேற்றத்துக்காக மாறியிருந்தது; அவ்வளவுதானே! எவ்வளவு அசெளகரியமிருந்தாலும் கூட்டம் அதிகம் இல்லாதது பற்றி லக்ஷ்மிக்குப் பரம திருப்தி. என்ன இருந்தாலும் அவள் சிறுமிதானே? தைரியம் கொஞ்சம் இருந்தது; வாஸ்தவந்தான். இன்று இங்கே சபையில் கூடியிருந்தவர்கள் பெரியவர்கள் கலையைப் பற்றி முற்றும் அறிந்தவர்கள்; வயதானவர்கள்; தன் நாட்டியத்தில் எவ்வளவு குற்றம் குறையிருந்தாலும் சரியாகப் பயிற்சி பெறாதவள், சிறுமி என்பதற்காகத் தன்னை மன்னித்துவிடக் கூடியவர்கள் என்று எண்ணினாள் லக்ஷ்மி. அது அவளுக்குக் கொஞ்சம் ஆறுதல் அளித்தது. எதிரே சுவரில் பெரிய சரஸ்வதி படம் ஒன்று மாட்டியிருந்தது. அதை நோக்கிக் கையைக் கூப்பி வணங்கினாள் லக்ஷ்மி. அப்புறம் மெல்லெனச் சதங்கை ஒலிக்க, இரண்டடி முன்னால் எடுத்துவைத்துச் சபையை நோக்கித் தாழ்ந்து கைகூப்பி வணங்கினாள். அதே வினாடி மத்தளம் முழங்கிற்று. ‘வயலின்’ இசைத்தது. நட்டுவனாரும் கலந்து பாட ஆரம்பித்துவிட்டார். நாட்டியத்தை ஆரம்பிக்க, லஷ்மியின் கையும், காலும் துடித்தன. சுற்றுமுற்றும் பார்த்தாள். அவள் தாய்மட்டும் ஏன் முகத்தை அப்படிச் சிணுக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்? ‘எதையாவது மறந்துவிட்டேனோ?’ என்று எண்ணினாள் லஷ்மி. சதங்கை, கச்சை, டோலக்கு, பொட்டு, தலையணி எல்லாம் சரியாகத்தானே இருந்தன? இதென்ன இப்படி ஆரம்பிக்கும் போதே தடங்கலாகச் சகுனம்? அவள் தாய் ஏதோ சைகை காட்டினாள்… என்ன? என்ன அது? மறுபடியும் வணங்கச் சொன்னாள். யாரை? லக்ஷ்மி சபையைப் பார்த்தாள். ஓ! லக்ஷ்மி சதங்கை ஒலிக்க லாகவமாக நடந்து போய்ச் சபையில் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த மிஸ் ஊர்வசியை வணங்கினாள். என்ன பைத்தியக்காரத்தனம்! அவள் தாய் எவ்வளவோ தரம் சொல்லியிருந்தும் ஏன் இது இப்படிக் கடைசி விநாடியில் மறந்துவிட்டது! அசட்டுத்தனம்! அவள் தாய் படித்துப் படித்துச் சொன்னாளே! கடைசி நிமிஷத்தில்… நல்ல வேளை, கடைசி நிமிஷத்திலாவது ஞாபகம் வந்ததே! அந்தமட்டும் சரிதான். மிஸ் ஊர்வசி எவ்வளவு அபூர்வமான, வசீகரமான பாவத்துடன் அவளுடைய வணக்கத்தை ஏற்றுக்கொண்டாள்? அவளுடைய முகத்திலும், கையிலும் சட்டென்று ஒரு விநாடியில் தோன்றி மறைந்த அசைவுதான் எவ்வளவு அதிசயமானது! உண்மையிலேயே மிஸ் ஊர்வசியை நாட்டியக் கலையின் சிகரத்தை அடைந்தவள் என்று சொல்லுவதில் தவறில்லை என்பது அந்த ஓர் அசைவிலேயே லக்ஷ்மிக்குத் தெரிந்துவிட்டதுபோல் இருந்தது. இப்படி யோசித்துக்கொண்டே லக்ஷ்மி மெதுவாகத் தன்னுடைய ஆரம்ப ஸ்தானத்துக்கு நகர்ந்தாள். மிஸ் ஊர்வசியைப் போலத் தானும் ஆகிவிட வேண்டுமென்று அவள் உள்ளத்திலே தோன்றிற்று. இன்று ஆரம்பம், முன்னோக்கி நாட்டியமாடி நகர. இதோ நாட்டியம் ஆரம்பித்துவிட்டது. முதலில் மூன்று பாட்டுக்களுக்கு அபிநயம் பிடிப்பது ரொம்பக் கஷ்டமான காரியம். லக்ஷ்மியின் மனம் அபிநயத்தைத் தவிர வேறு எதிலும் ஓடவில்லை. வரிசைக் கிராமமாகப் பாட்டனார் சொல்லித் தந்திருந்தபடி, தாளம், பாவம் தவறி, விட்டுப் போகாமல் நாட்டியமாடினாள். நாலாவதாகப் பாடப்பட்டது ஓர் எளிய பதம். அது லக்ஷ்மிக்கு மிகவும் பழக்கமானது; நாட்டியமாட ஆரம்பித்த நாட்களிலிருந்து அவளுக்குப் பாடமானது. அதற்கு இசைந்து ஆடிக்கொண்டிருக்கும்போது லக்ஷ்மி மறுபடியும் நாட்டியக் கலையையும், மிஸ் ஊர்வசியையும், சபையையும் கவனிக்க ஆரம்பித்தாள். மிஸ் ஊர்வசி முகத்தில் சலனமே இல்லாமல் உட்கார்ந்திருந்தான். தன் நாட்டியம் அவளுக்குப் பிடித்திருந்ததா இல்லையா என்று அவள் முகத்திலிருந்து லக்ஷ்மியால் அனுமானிக்க முடியவில்லை. சிலசமயம் ஊர்வசியின் கண்கள் சபையில் அவள் அருகில் உட்கார்ந்திருந்த ஒருவருடைய கண்களை நாடித் தேடுவதை லக்ஷ்மி கவனித்தார். அந்த மனிதர் ஊர்வசியுடன் வந்தவர் என்று லக்ஷ்மிக்கு ஞாபகம் வந்தது. அவர் அபிப்பிராயத்தை அறிய விரும்பியவள் போல ஊர்வசி ஏன் அப்படி அடிக்கடி அவர் முகத்தை நோக்கினாள்? ஊர்வசியையும் விட அவர் நாட்டியக் கலையைப் பற்றி அதிகம் அறிந்தவராயிருப்பாரோ? அல்லது, ஒரு தீர்மானத்துக்கு வருமுன் அவர் அபிப்பிராயத்தையும் கலந்து அறிந்துகொள்வது நல்லது என்று ஊர்வசி எண்ணினாளோ? தன் நாட்டியம், தன் வயதுக்கு எவ்வளவுதான் உயர்ந்தானாலும், ஊர்வசிக்கு உயர்ந்ததாகப்படாது என்பது லக்ஷ்மிக்கும் தெரியாத விஷயமல்ல. ஏதோ குற்றங்குறைகள் அதிகம் இல்லை, முன்னேற இடமிருக்கிறது’ என்று ஊர்வசி சொல்லிவிட்டால் போதும் என்று எண்ணினாள் லசஷ்மி. அந்தப் பதம் முடிந்துவிட்டது. அடுத்த பதம் கொஞ்சம் கடினமானது. அது நடக்கும்போது லக்ஷ்மியால் வேற எதைப்பற்றியும் சிந்திக்க முடியாது. அப்படியும் அவள் வெகு சிரமப்பட்டு ஊர்வசியும், அவளுடன் வந்த நண்பரும் தன் நாட்டியத்தைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களுடைய முகபாவத்திலிருந்து அறிந்துகொள்ள முயன்றாள். சபையில் இரண்டொருவர் இடையிடையே “சபாஷ்!” என்றார்கள். ஆனால் அவர்களுடைய சபாஷால் மட்டும் லக்ஷ்மி திருப்தி அடைவதாக இல்லை. ஊர்வசியும், மற்றவரும்…? ஆனால், நிச்சலனமாயிருந்த அவர் முகத்தில் திடீரென்று ஒரு புன்னகை தோன்றிற்று. அந்தப் புன்னகையின் நிழல்போல ஊர்வசியின் முகத்திலும் லேசான ஒரு புன்னகை படர்ந்தது. அது கேலிப் புன்னகைதான்; சந்தேகமில்லை என்று லக்ஷ்மிக்குத் தோன்றிற்று. அவள் லயம் தவறிவிட்டது. அதைக் கவனித்த அவள் தாயும் பாட்டனும் விதவிதமான சைகைகள் காட்டினார்கள்; முகத்தை சிணுங்கிக் கொண்டார்கள். லக்ஷ்மி ஏதோ சமாளித்துக்கொண்டு ஊர்வசியையோ அவள் நண்பரையோ கவனிப்பதில்லை என்ற திடசங்கல்பத்துடன் நாட்டியமாடினாள். ஆனால் அவளையும் அறியாமலே அவள் கண்கள் அந்தப் பக்கந்தான் சென்றன. அவர்கள் இருவர் முகத்திலும் ஏளனப்புன்னகை இன்னமும் படர்ந்திருந்தது. அதற்கடுத்த நாட்டியம் துவக்கும்போது லக்ஷ்மியின் மனத்தில் ஒரு கசப்பு தோன்றிவிட்டது. பத்து வருஷங்கள் வெற்றியில்லாமல் பொதுஜனத்தின் கீழ்த்தரமான அபிருசிகளுடன் போர்தொடுத்து ‘ரிடையராகி’ விட்ட கலைஞன் மனத்தில் கூட அவ்வளவு கசப்பு ஒருங்கே திரண்டு காணப்படுமா என்பது சந்தேகந்தான். குழந்தைதான் எனினும், வயது அதிகம் ஆகாதவன்தான் எனினும், கலையிலே உள்ள ஒரு தேர்ச்சியினாலும், பழக்கத்தினாலும் அவள் உள்ளமும், உணர்ச்சிகளும் கனிந்து நிறைந்திருந்தன. அவள் வயதுச் சிறுமிகளுக்கும் சாதாரணமாக எட்டாத சிந்தனைகளும், ஆர்வங்களும், உணர்ச்சிகளும் அவளுக்கு எட்டின. அவள் ஊர்வசியையும் சபையில் மற்றவர்களையும் மறந்துவிட்டுப் பாட்டைத் தானும் சொல்லிக்கொண்டு, பாவத்தில் ஈடுபட்டு நாட்டியும் ஆட ஆரம்பித்தாள். தன் நாட்டியம் எப்படியிருக்கும் என்றோ, அதைப்பற்றி மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள் என்றோ, இந்த ஒரு பாட்டின் போது அவள் கவலைப்படவில்லை. அது முடிந்தவுடன் சபையில் ஒரே ஒரு குரல் மட்டும் வெகு உற்சாகத்துடன் ‘சபாஷ்’ என்றது. யார் அப்படிச் சொன்னவர் என்று லஷ்மி கண்ணைத் திறந்து பார்த்தாள்; இரண்டாவது வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபன். அவனுக்கு நாட்டியத்தைப் பற்றி ஏதாவது தெரியுமோ, தெரியாதோ, சிறுமிக்கு உற்சாக மூட்டவேண்டியது அவசியம் என்று தெரிந்திருந்தது. இதைப்பற்றி லக்ஷ்மி யோசித்து முடிக்குமுன் சபையில் சிலர் கை தட்டினார்கள். வேறு சிலர் லேசாகக் கையைத் தட்ட முயன்றார்கள். அதிகச் சப்தம் செய்யாமல், தன்னையும் அறியாமலே லக்ஷ்மியின் கண்கள் ஊர்வசியின் பக்கம் திரும்பின. அவள் முகத்தில் சிறிதும் சலனமில்லாமலே ஓர் உத்ஸாகமும் இல்லாமலே உட்கார்ந்திருந்தாள். அவள் நண்பரும் அப்படியே, மரக்கட்டை போல, அவள் நாட்டியத்தையும் அவள் உடலையும் அதற்கப்பாலும் ஊடுருவிப் பார்ப்பவர்போல உட்கார்ந்திருந்தார். அடுத்த நாட்டியம் ஆரம்பமாயிற்று. அதுவும் சற்றுக் கடினமானதுதான்; எனினும் லக்ஷ்மி தன் கவனம் முழுவதையும் நாட்டியத்திலே செலுத்தாமல் சபையிலும் செலுத்தி ஆடினாள். சபையில் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தது அவள் காதில் விழுந்தது. ‘பாவம்! சின்னப் பெண். ரொம்பக் கஷ்டப்படுத்தக்கூடாது“. அப்படிச் சொன்னவர் யார் என்று ஊர்வசி திரும்பிப் பார்த்ததை லக்ஷ்மி கவனித்தாள். முந்தி இருந்த கசப்பு மறுபடியும் அவள் மனத்தில் தோன்றிவிட்டது. ஊர்வசி என்ன அவ்வளவு பிரமாதமாகவா நாட்டியமாடினாள்? அதெல்லாம் ஒன்றுமில்லை. பெரிய இடம்; எது செய்தாலும் புகழுவதற்கென்றே ஒரு கோஷ்டி சதா உடன் இருக்கும் ’ஊர்வசியின் வெற்றியும் புகழும் கலையின் வெற்றியல்ல; அந்தஸ்தின் வெற்றி, அவ்வளவுதான்’ என்று பிறர் சொல்லக் கேட்டது லக்ஷ்மிக்கு ஞாபகம் வந்தது. அது உண்மையாகத்தான் இருக்கும் போல் இருக்கிறது என்று தோன்றியது. லக்ஷ்மிக்கு கலையில் படிப்படியாக அடி எடுத்துவைத்துச் சிரமப்பட்டு முன்னேறியிருந்தால் ல கூடி மியின் கஷ்டங்களைக் கண்டு அவளுக்கு அனுதாபம் பிறந்திராதா? முகத்தில் இப்படி எவ்வித அசைவும் இல்லாமே உட்கார்ந்திருக்க முடியுமா? ஆனால் தானும் நாட்டியத்தில் முழு மனத்தையும் செலுத்தாமல் ஊர்வசியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் நாட்டியம் சரியாக வருமா? அது தன்மேல் பிசகுதானே என்று எண்ணினாள் லக்ஷ்மி. ஏதோ சிந்தனையாக, அடி எடுத்துவைத்துப் பாவத்தை ஒட்டி வேகமாக நகரும்போது கால் விரிப்பில் தட்டிவிட்டது. தடுமாறிக் கீழே விழுந்துவிட்டாள். சபையில் ‘த்ஸொ த்ஸொ’ என்று அனுதாபக் குரல்கள் கேட்டன. ஓரிரண்டு குழந்தைகள் சிரித்தன. மற்றவர்கள் தன்னைத் தூக்கிவிட வருமுன், லக்ஷ்மி சமாளித்துக்கொண்டு தானே எழுந்துவிட்டாள். அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. உதட்டைப் பிதுக்கி அழுகை வராமல் அடக்கிக் கொள்ள வெகு சிரமப்பட்டாள். என்ன அவமானம் இது, அரங்கேற்றத்திலேயே ஆடையைச் சரிப்படுத்திக்கொள்ள அவள் ஆடரங்கிலிருந்து உள்ளே ஒரே எட்டில் தாவிப் போய்விட்டாள். அவள் காதில் ஏதோ முரசடிப்பதுபோல் இருந்தது; சபையில் பேசிக் கொள்ளப்பட்டது. ஒன்றும் அவள் காதில் விழவில்லை. அவள் கண்கள் தெளிவாக எதையும் காண வில்லை. அவள் இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது. அப்போது சபையில் ஒரு தாடி மீசையுள்ள பெரியவர், பெரிய சரிகை அங்கவஸ்திரத்துடன் எழுந்து நின்று பரதநாட்டியத்தைப் பற்றிப் பொதுவாகவும், அன்று ஆடிப் பெண்ணைப் பற்றியும், அவளைப் பயிற்றுவித்த நட்டுவனாரைப் பற்றியும் புகழ்ந்தும் சில வார்த்தைகள் பேசினார். இதில் பாதிக்கு மேல் லக்ஷ்மியின் காதில் விழவில்லை; காதில் விழுந்ததையும் அவள் சரியாக அர்த்தம் பண்ணிக் கொள்ளவில்லை. ஆடை அணிகளைத் திருத்திக்கொண்டு, மறுபடியும் அரங்குக்குள் பிரவேசிக்கத் தயாராக நின்றாள். அப்பொழுதும் அவள் கண்கள் ஊர்வசியையே நாடின. என்ன ஆச்சரியம்! பெரியவர் பேசிவிட்டு உட்கார்ந்ததும் ஊர்வசி எழுந்து நின்று, சாவதானமாக, லக்ஷ்மியின் நாட்டியத்தைப் பற்றிப் பேசினாள். நாலைந்து நிமிஷங்களே பேசினாள்; வழக்கமான, சம்பிரதாயமான, சில வார்த்தைகளே சொன்னாள். ஆனால் அந்த வார்த்தைகளில் தனிப்பட்ட ஓர் அர்த்தம் தொனித்தது. லக்ஷ்மியின் காதில் ஊர்வசி முதலில் எழுந்து எதுவும் பேசுவதாக இல்லை என்றும், ஆனால் சிறுமியாகிய அவள் கால் தடுக்கி விழுந்ததும் அனுதாபம் பிறந்து சிறுமியாதலால் உற்சாகமூட்ட இரண்டொரு வார்த்தைகள் சொல்லவேண்டும் என்று சொல்லுகிறாள் என்றும் லக்ஷ்மிக்குத் தோன்றிற்று. முதலில் ஊர்வசியிடம் அவளுக்குக் கோபம் வந்தது. ஆனால் ஊர்வசி சிறுமியை ஆசிர்வதித்துத் தன் பேச்சை முடித்தபோது அவள் மனத்தில் இருந்த கோபம் மறைந்துவிட்டது. ஊர்வசி உட்கார்ந்ததும் உள்ளம் நிறைந்த ஒரு கனிவுடன் அரங்குக்குள் பிரவேசித்து லக்ஷ்மி சபையையும், ஊர்வசியையும் மறுபடியும் ஒருதரம் வணங்கிவிட்டு ஆட ஆரம்பித்தாள். இந்தத் தடவை அவள் மனத்தில் கலையைத் தவிர வேறு எந்த ஞாபகமும் இல்லை. ஆர். வெங்கட்ராமன் திருத்துறைப்பூண்டியில் பிறந்த ஆர். வெங்கட்ராமன் விடுதலைப்போரில் பங்கு கொண்ட கலைஞன். 275 சிறுகதைகள் எழுதி தனக்கென்று ஒரு இடத்தை இலக்கியத்தில் பிடித்துக்கொண்டவர். இவர் கதைகள் நடப்பியல் நெறியோடு கிராமிய மனம் கமழும். பாத்திரர்கள் மனதில் நீங்காது நிற்பர். ஆழமான கருத்துக்களை அழுத்தமான வார்த்தைகளால் கலைமணம் கமழ வார்ப்பதில் வல்லவர். தஞ்சை மாவட்ட மண்ணும் மக்களுமே அவரின் கதைகளுக்கு அடித்தளம். பழக்கவழக்கங்கள் காட்சிகள் அனைத்தையுமே படம்பிடித்து விடுவார். முதன் முதல் தஞ்சை மாவட்ட கிராம வாழ்வியலை இந்த மண்ணின் மனம் கமழ எழுதியவர் எம். முத்து. ‘ஆர்.வியின் தாக்கம் தி. ஜானகிராமனிடம் அதிகம உண்டு’ என்று மது.ச. விமலானாந்தம் குறிப்பிடுகிறார். ‘அணையாவிளக்கு’ ‘திரைக்குப்பின்’ இந்த இரண்டு நாவல்களும் குறிப்பிடத்தக்கவை. நாவல்களில் இயல்பான உரையாடல்களையும் நெஞ்சம் நிறையும் கதையம்சத்தையும் காணலாம். புரட்சிகரமான கருத்துக்களையும், சிருங்கார ரசத்தையும் அளவோடு அமைத்து நாவல் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். அதில் கணிசமான வெற்றியும் கண்டவர். குழந்தைகளுக்கான கதைகளை எழுதி அதில் அரிய சாதனைகளைப் படைத்திருக்கும் ஆர்.வி, ஆசிரியர் பொறுப்பேற்று நடத்திய குழந்தைகள் பத்திரிகையான ‘கண்ணன்’ இதழ் வரலாற்றில் குறிப்பிடத்தக்கது.  தவிப்பு “லீவு கிடைத்ததும் வருகிறேன்.” கடிதத்தில் இந்த ஒரு வாக்கியந்தான் மீண்டும் மீண்டும் அவள் மனத்தில் சுழன்று கொண்டிருந்தது. ‘இவருக்கு லீவு எப்போது கிடைக்குமாம்? எப்போது வருவாராம்?’ என்ற பதிலும் கூடவே சுற்றி வந்தது. நட்ட நடு நிசியில் ருக்மிணி இவ்விதம் அரற்றிக் கொண்டே திரும்பித் திரும்பிப் படுத்துப் புரண்டாள். மெத்தை வெப்பமாய்த் தகித்தது. ‘குளிர்ந்த காற்றுக்கு யாரிடம் இப்படிக் கோபம்? துக்கமும் வந்து தொலைக்க மாட்டேன் என்கிறதே!’ என்று அவள் மனமும் புழுங்கியது. திறந்த வெளிப்பக்கம் இருந்த ஜன்னல், படிக்கட்டுப் பக்கம் இருந்த ஜன்னல் எல்லாம் நன்றாகத் திறந்துதான் கிடந்தன. ‘பின்னே என்ன கேடு?’ பக்கத்தில் ஒரு பர்லாங்கு தூரத்தில் “கூ” என்று கீச்சுக் குரலில் கூவியது ரயில். “அம்மாடி! பன்னிரண்டரை மணி வண்டியா? சீ, கடிதம் எழுதிப்போட்டுட்டார் வெக்கமிலாமே! வந்தால் இதிலே தானே வரணும்? வரப்படாதோ? வந்திருந்தால் எப்படி இருக்கும்! கருகருன்னு இரண்டு வரி எனக்கும் எழுதத் தெரியாதோ?” கீழே தெருவில் சலங்கை கட்டிய மாட்டு வண்டிகள் ஜல்ஜல்லென்று ஓடின. வண்டிக்கு யாராவது போகிறார்களோ அல்லது இறங்கித்தான் வருகிறார்களோ ருக்மிணிக்கு அந்தச் சலங்கைகளின் சத்தம் கட்டோடு பிடிக்கவில்லை. “காதில் வந்து கதறுவதைப் போல என்ன வண்டி வேண்டிக் கிடக்கிறது?” என்று கூறிக்கொண்டே அவள் ஜன்னலருகில் எழுந்து வந்து நின்றாள். தேய்ந்த நிலா மங்கிக் கொண்டிருந்தது. தெருவில் வண்டி வருகிறதா, போகிறதா என்று தெளிவாகத் தெரியவில்லை. அவளுக்கு அது எப்படிப் போனால் என்ன? “லீவு கிடைத்தப்புறந்தானே வரப்போறாராம், பெரிய இவர் மாதிரி!” என்று ஆத்திரத்துடன் முணுமுணுத்துக் கொண்டே திரும்பிவந்து தலையணையை மாற்றி வைத்துக் கொண்டாள். மெத்தையையும் கவிழ்த்துப் போட்டுக் கொண்டாள். குளிர்ச்சி வேண்டுமே ! ஜில்லென்று குளிர்ந்த தண்ணீர் சாப்பிட்டால் தேவலைபோல் இருந்தது. சாய்ந்து படுத்த பிறகுதான் இந்த நினைப்பு. எழுந்திருக்கச் சோம்பல். ‘என்னாலே எழுந்திருக்க முடியாது; அது கிடக்கட்டும்’ என்று நினைத்தாள். அப்படி நினைக்க நினைக்க நாக்கு உக்கிரமாய் வறட்ட ஆரம்பித்தது. “சே!” என்று கடைசியாக அலுத்துக்கொண்டே எழுந்தாள். விளக்கைப் போட்டாள். மேஜைமேல் கூஜாவில் தண்ணிர் கொண்டு வந்து வைத்துக் கொள்ளாவிட்டால் அவளுக்குத் தூக்கமே வராது. வழக்கப்படி அங்கேதான் அது இருந்தது. ‘ணங்’ என்று தம்ளரை எடுத்து, மடக்கு, மடக்கு என்று இரண்டு வாயாகத் தண்ணிரைக் குடித்துவிட்டுக் கட்டிலுக்கு அருகில் வந்து விட்டாள். கூஜாவை மூடவில்லை; விளக்கை அணைக்கவில்லை. “அட ராமா!” என்று சொல்லிக்கொண்டே திரும்பினாள். ‘ணங்’ அறைக்கு வெளியிலே திறந்த மாடியில் காற்றுக்காகப் படுத்திருந்த தங்கம்மாள் இந்தச் சத்தத்தைக் கேட்டு விழித்துக் கொண்டாள். “ருக்கு, தூங்கவில்லையா இன்னும் நீ? பாதி ராத்திரியிலே இப்படி ஏதுக்குத் தண்ணீரைக் கொட்டிக் கொட்டிக் குடிக்கிறே?” என்றாள் அங்கிருந்தபடியே. கொஞ்ச தூரத்தில் ருக்குவின் தம்பி ரங்கன் குறட்டைவிட்டுக் கொண்டிருந்தான்.ருக்கு பதிலே சொல்லவில்லை தங்கம்மாள் கவலையுடன் எழுந்து அறைக்குள் வந்தாள். “ருக்கு!” “ம்ம்..” “பன்னிரண்டரை ஆறது….. என்ன இன்னும்?” “தாகமாய் இருந்தது; தண்ணீர் குடிச்சேன்.” “தூக்கம் வரல்லியா? கீழே போகனுமா?” “ஒண்ணும் வேண்டாம்.” “பின்னே விளக்கை அணைச்சுட்டுப் படுத்துக்கப்படாதோ?” “எல்லாம் படுத்துக்கறேன். போ, நீ அனைச்சுட்டுப் போ. “தூங்கு, காலா காலத்துலே, உடம்பு என்னத்துக்காகும்? நன்றாய்ப் போர்த்திக்கோ.” “ஏன் அம்மா தொன தொணக்கிறே?” “ஊஹூம்; தூங்குங்கறேன்.” “சரிங்கறேன்; தூங்கப் பண்ணிட்டுத்தான் போகப்போறியா?” “வண்டி போயிடுத்தோ?” “எல்லாம் போயிடுத்து.” “எப்போ?” “சரியாய்ப் போச்சு; எல்லாம் இப்பதான்!” தங்கம்மாள் தன் படுக்கைக்குச் சென்றாள். தூங்குகிறவளைப் போல ருக்கு கண்களை மூடிக் கொண்டிருந்தாள். “ஜல்…..ஜல்……” ஒரு சபலம். “இதுதான் ஜனங்கள் இறங்கி வருகிற வண்டி. முதல்லே போகிற வண்டி போலிருக்கு. எழுந்திருப்போமா, வேண்டாமா?” “லீவு கிடைத்ததும் வருகிறேன்.” ‘லீவு கிடைக்காமலே இருக்கட்டும்; இவர் வராமலே இருக்கலாம். எப்பவுமே இப்படித்தானே? பெண்டாட்டி, பிள்ளை இருக்கிறவா லீவு கொடுக்காமலா இருப்பா? வேணும்னால் எல்லாம் வரலாம். இருக்கட்டுமே!’ ருக்குவுக்கு இப்போது தலையணை மீது ஆத்திரம் வந்தது. கால் மாட்டில் ஒன்றை எடுத்துத் தூக்கி எறிந்தாள். கடிகாரத்தில் மணி ‘டங்’ என்று ஒரு தடவை அடித்துவிட்டு நின்றது. “மணி ஒண்ணா, பன்னிரண்டரையா?” ஸ்டேஷனில் “கூ” என்று மறுபடியும் ரெயில் கூவியது. ஷட்டில், பார்ஸல் பாஸ்ட் பாஸஞ்சர். “லீவு கிடைத்ததும் வருகிறேன்.” ருக்கு ஒரு தடவை புரண்டு படுத்தாள். மூடின கண்கள் திறக்க முடியாமல் இருந்தன. ★ ருக்கு தூக்கத்தில் ஆழ்ந்து போனாள். ஆனால் தங்கம்மாள் தூங்கவே இல்லை. காரணம் இல்லாத விசாரம் அவள் மனசைக் கலக்கிக் கொண்டே இருந்தது. ‘மணி பன்னிரண்டரை; ருக்கு தூங்கவேயில்லை. அநேகமாய் வந்ததிலேயிருந்து தினமும் இப்படித்தான். ஏன்? வானத்திலே நட்சத்திரம் ஒன்று, ஒன்றும் தெரியாது என்பதைப் போல் மினுக்கியது. ’சனியன்; இலை அசங்கல்லியே இப்படியா புழுங்கும்?’ காற்று வராததற்குக் கவலைப்படுவதா? ருக்குவுக்காகக் கவலைப்படுவதா? திடீரென்று ரங்கனை வந்து அழைத்துப் போகும்படி வேணுவிடமிருந்து கடிதம் வந்தது. மறுநாளே ருக்குவை. - அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான் ரங்கள். தங்கம்மாளுக்கு மனசுக்குள் விசாரந்தான்… “வா அம்மா குழந்தை” என்றபடியே ருக்குவின் முகத்தை ஆராய்ந்து பார்த்தாள். முக காந்தி வாடவில்லை; பசுமை வெளுக்கவில்லை. ’போயும் நாளாச் சோல்லியோ? ஆசையாய் இருந்திருக்கும்; பார்க்கணும் போல; வந்திருக்காள்” என்று தன்னையே தேற்றிக் கொண்டாள். மூன்று பிள்ளைகளுக்கு நடுவில் ஒரு பெண். ருக்குவின் தந்தை அந்த ஆசையில் மேம்போக்காக இருந்துவிட்டார். “ஏன், அவன் வரவில்லையா?” என்று ஒரு வார்த்தை மரியாதைக்குக் கேட்பது போலக் கேட்டார். “லீவு கிடைக்கல்லே அப்பா” என்றாள் ருக்கு. அந்தக் குரலில் வேற்றுமை ஒன்றும் புலப்படவில்லை. சாதாரணமாய்த்தான் சொன்னாள். ஆனாலும் சிலுசிலு என்று சிறுகாற்று ஒன்று வீசி விட்டுப் போயிற்று. ஆனாலும்-? ஒரு சிறு சந்தேகம். “ஏண்டா ரங்கா , மாப்பிள்ளை எப்படிடா இருக்கார்? ஏதாவது-” என்று ரங்கனைத் தனியாக வந்து கேட்டாள். “மாப்பிள்ளைக்கு என்ன?” என்றான் ரங்கன், கொஞ்சம் இரைந்தே. மேலே ஓடவில்லை தங்கம்மாளுக்கு. ‘ஏதாவது இவர்களுக்குள் சண்டையா என்று கேட்கவேண்டும். இவனிடம் போய் எப்படிக் கேட்பது?’ “அதுக்கில்லையடா, ஏதாவது சொன்னாரான்னு…” “ஓஹோ….. எவ்வளவோ சொன்னார். ரேஷன் கஷ்டம், ஆபீஸ் வேலை, இண்டியன் யூனியன்…… “உன்னை வந்து கேட்கிறேனே, என்னைச் சொல்லு!” என்று திரும்ப வேண்டியதாயிற்று. ருக்கு தினமும் காபி சாப்பிட்டாள். பத்திரிகை ஒன்றை வைத்துக்கொண்டு அப்பாவுக்கு எதிர்த்தாற்போல உட்கார்ந்து ஏதோ சிறிது மல்லுக்கு நின்றாள். தலைவாரிப் பின்னிக் கொண்டாள். ஆர அமர, மொர மொரக்கக் குளித்தாள்; சாப்பிட்டாள். கலகலவென்று பேசினாள்; சிரித்தாள். குத்துவிளக்கைத் துலாம்பரமாகத் துடைத்து ஏற்றிக் கும்பிட்டாள்; பாடினாள். கும்மாளமாகத்தான் இருந்தாள். ஆனால்- வேணுவிடமிருந்து எப்போதாவது கடிதம் வரும். தங்கம்மாளுக்குப் பரபரப்பாய் இருக்கும். ருக்குவின் முகத்தில் மாறுதலே ஏற்படாது. “என்னடி?” “எல்லாம் சௌக்கியந்தான்.” “அதென்ன, அப்படி அசுவாரசியமாய்ச் சொல்றே?” ருக்குலின் தந்தை வரும்படி வருகிற வக்கீல். ஆனால் பெண்ணுக்குப் பீஸ் இல்லாமல் வக்காலத்து வாங்கிக் கொள்வார். “இதெல்லாம் உனக்கென்னடி? சுவாரசியத்தையும் அசுவாரசியத்தையும் ரொம்பக் கண்டவள் மாதிரி! விசேஷம் இருந்தால் சொல்லமாட்டாளா?” இந்த அடக்குமுறை தங்கம்மாளுக்குப் பழக்கம். அதற்கு அடி பணிந்துவிடுவதும் அவள் வழக்கம். “எப்படியானும் போங்கோ!” என்று கூறிவிட்டுப் போய் விடுவாள். பெண், பிறந்த வீட்டுக்கு வந்ததில் தங்கம்மாளை விடச் சந்தோஷப்பட்டவர் யாரும் இல்லை. ஆசையாக, அருமையாக வந்திருக்கும் பெண்ணுக்கு ஆசார உபசாரம் செய்தாள். ஒரு வேலை செய்ய விடுவதில்லை. ருக்கு வேடிக்கையும் விளையாட்டுமாய்ப் பேசும் போதெல்லாம், அப்படி ஓண்ணும் இதுக்கு அகமுடையானிடம் மனஸ்தாபப்பட்டுக் கொள்ளத் தெரியாது. வெறுமேதான் வீண் கவலை என்று மனசுக்குள் எண்ணமிடுவாள். அந்த எண்ணமே அவளுக்கு எவ்வளவோ ஆறுதலைக் கொடுக்கும். “உனக்கு டொமெட்டோ ரஸமே பிடிக்காதேடி?” என்பாள் பெண்ணைப் பார்த்து. “அதை ஏன் கேட்கிறே? அவருக்கு டொமெட்டோ ரஸம் இல்லாவிட்டால் சாப்பிட்ட மாதிரியே இருக்காது. இப்போ எனக்கும் அப்படித்தான் பழக்கமாயிடுத்து” என்பாள் ருக்கு. பேச்சு நெருங்கும். ஒருநாள் நெருங்கியே விட்டது. “அப்படிப்பட்டவனை விட்டுவிட்டுத் திடீர்னு வந்துட்டயே?” அசம்பாவிதமாக எப்படியோ கேட்டுவிட்டாள் தங்கம்மாள். “ஏன் வந்தே என்கிறாயா?” “ஊஹும். அவனையும் அழைச்சுண்டு ஒரு பத்து நாளைக்கு வந்து இருந்துட்டுப் போகப்படாதோ?” பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும். ருக்கு மௌனம் சாதித்துவிட்டாள். “அதுதான் லீவு கிடைக்கல்லேன்னியே” என்று தங்கம்மாளே ஒரு முடிவு கட்டினாள். எவ்வளவோ சந்தர்ப்பங்கள்; எத்தனையோ பேச்சுக்கள். தங்கம்மாள் மனக் கவலைக்குப் பரிகாரமாக ஒன்றுமே நேரவில்லை. எதிர்வீட்டுக் குழந்தைகளைத் தங்கம்மாள் அழைத்துக் கொண்டு வருவாள். “குழந்தையிலே இப்படித்தான் துருதுருன்னு இருந்தே நீ” என்பாள், ஒரு குழந்தையைக் குறிப்பிட்டு, அவள் எதற்கு இப்படிப் பேச ஆரம்பிக்கிறாள் என்பது தெரியும், ருக்குவுக்கு. பேசாமல் சிரித்துக் கொண்டே மாடிக்கு எழுந்து போய் விடுவாள். தனியாக இருக்கும்போது, இது என்ன அசட்டுக் கவலை என்று தங்கம்மாளுக்கே ஒவ்வொரு சமயம் தோன்றும். மூன்பெல்லாம் எவ்வளவு ஆனந்தமாய், பத்து வயசு இளமைத் தெம்புடன் இருப்பாளோ அந்த மாதிரி ஆகிவிடுவாள். ஆனால் ஏதாவது ஒன்று வந்து சேரும். கவலைப் பின்னல். மீண்டும் துவங்கிவிடும். ‘ஏதானும் இல்லாமல் இருக்காது. வந்து இவ்வளவு நாள் ஆகிறதே இல்லாவிட்டால் இவளும் இப்படி இருக்கமாட்டாள். அவனும் இப்படி இருக்கமாட்டான்’ என்று சங்கடம் உண்டாகும். அந்த ‘இப்படி’ என்றால் என்ன என்பது அவளுக்கே தெரியாது. ருக்குவின் தந்தையோ ஒரு கவலை இல்லாத ஆத்மா. இது அவளுக்கு மட்டும் உண்டான ஒரு தனிப்பிரச்சனை. இதில் எப்படியோ வேறு யாருக்கும் சம்பந்தமே இல்லாமல் போய்விட்டது. ‘டண், டண்’-மணி இரண்டு. தங்கம்மாள் கண் விழித்துப் பார்த்தாள். நிலா வெளிச்சம் அடியோடு மறைந்து இருள் சூழ்ந்திருந்தது. ‘ஙொய்’ , என்று எங்கேயோ கரிச்சான் ஒன்று கத்திக் கொண்டேயிருந்தது. தங்கம்மாள் கண்களை மூடிக்கொண்டாள். தூக்கம் எங்கே? குருட்டு யோசனைதான்; கவலைதான். விளையாட்டுப் போல ருக்கு வந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. ‘கைச் செலவுக்கு இருக்கட்டும்’ என்று ஒரு வரியுடன் ஐம்பது ரூபாய் மணியார்டர் ருக்குவின் பெயருக்கு வந்திருந்தது. “பணம் எதுக்கு? கேட்டிருந்தயா?” என்றாள் தங்கம்மாள். “அவர் குணமே இப்படித்தான்” என்றாள் ருக்கு. “வறதாக போறதாக ஒண்ணும் எழுதல்லியா?” ருக்கு விழித்துப் பார்த்தாள், சொந்த அம்மாவா இப்படிப் பேசுகிறாள் என்ற பாவணை. உடனே புறப்பட்டு வந்து சேர் என்று எழுதியிருந்தால் தங்கம்மாள் அவனை ஊருக்கு அனுப்பிவிடச் சம்மதிப்பாளா, என்ன? ஆனால், அன்பாக, ஆசையாக ஒரு வார்த்தை! அது எவ்வளவு விச்ராந்தியாக இருக்கும் மனசுக்கு! விட்டேற்றியாய் இப்படி யாராது பெண்டாட்டிக்கு எழுதுவதுண்டோ? போதும் போததற்கு அன்று சாயங்காலமே ஊரிலிருந்து கடைசி வீட்டு விசாலம் வந்திருந்தாள். அடுத்த தெருவில்தான் அவளும் கணவனுடன் இருந்து வருகிறாள். “ஏண்டி அம்மா, இவ அகத்துக்காரரைப் பார்த்தியோ?”. என்று தங்கம்மாளால் கேட்காமல் இருக்க முடியவில்லை. “பார்க்காமல் என்ன? அந்த வழியாகத்தானே நாங்க பீச்கக்குத் தினமும் போகணும்! இவர் கூடக் கேட்டார்; ’ஊருக்கு அனுப்பிச்சுட்டு நிம்மதியாய் இருக்கேன்’னு சொன்னாராம். என்ன நிம்மதி, சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட்டுண்டு?” என்றாள் விசாலம். தங்கம்மாளுக்கு அதற்கு மேல் எதுவும் கேட்கப் பிடிக்கவில்லை, கேட்கவேண்டும் என்று துடிப்புத்தான். ஆனால் ருக்குவிடம் பயந்து கொண்டு பேசாமல் இருந்துவிட்டாள். ருக்குவுக்குத் தெரியும். நிம்மதி எந்த விதத்தில் என்று. அவளோ அதைக் கேட்டுக் கொண்டு மௌனமாய், அமைதியாய், சிறிது அடக்கமாய்க் கூட உட்கார்ந்து கொண்டிருந்தாள், தங்கம்மாளுக்குப் பேச என்ன வாய் இருக்கிறது? நாள் ஓடுவதே தெரியாமல் ருக்கு வந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. தங்கம்மாளின் மன அவஸ்தை கட்டுக்கு அடங்காமல் போய்க் கொஞ்சம் பழகிக் கூடப் போய்விட்டது. அவள் தன் கணவரைப் பார்த்து, அந்தப் பெண்ணுக்கு நல்ல தூக்கமே இல்லை. நீங்களும் பேசாமல் இருக்கேளே?” என்றாள். வக்கீலுக்கு இதெல்லாம் அற்ப விவகாரங்கள். விசாரணை ஒத்திப்போடச் சமாதானம் சொல்வது அவருக்குத் தண்ணீர் பட்ட பாடு. “வந்து நாளாச்சோ இல்லையோ; சிறிசுகள் அப்படித்தான்.” “இப்பொன்னா நாளாச்சு; வந்ததிலேருந்து அப்படித்தான் இருக்கா” “வந்த புதிசு அப்போ. தனியாக வந்ததும் அப்படித்தான் இருக்கும்.” எல்லாம் தெரிஞ்சதுபோலத்தான்!’ என்று எண்ணிக்கொண்டே தங்கம்மாள் போய்விட்டாள். தன்னைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் தீவிரம் காட்டாமல் இருப்பது அவளுக்கு மிகுந்த கவலையாய் இருந்தது. திடீரென்று நாலைந்து நாள் முன்னதாக ருக்கு அவளிடம் வந்து, “அம்மா, அவர் வரப்போறார் போலிருக்கு” என்றாள். “யாரு, உன் அகமுடையானா?” “ஆமாம்.” “அழைச்சிண்டு போறதுக்கா?” “ஆமாம். திருப்திதானே ?” திருப்தி என்ற வார்த்தையை அழுத்தமாகக் கூறினாள். தங்கம்மாள் முகம் பேயறைந்தது போல ஆயிற்று. “என்னடியம்மா திருப்தி எனக்கு, உன்னை ஊருக்கு விரட்டறதிலே? நீ இங்கே இருக்கிறது எங்களுக்கெல்லாம் கொள்ளைத் திருப்திதான். ஆனால் பூவும் மணமுமா, புருஷனோடே இருக்காங்கிறதைக் கேட்டா அதைவிடத் திருப்தி இல்லையா?” என்றாள், மென்று விழுங்கிக் கொண்டே. ஆனால், அன்று காலையில் வேணுவிடமிருந்து கடிதம் வந்திருந்தது. “லீவு கிடைத்ததும் வருகிறேன்.” “இது என்ன, உன் அகமுடையானுக்கு, மொட்டைத்தாத்தாதன் குட்டையிலே விழுந்தான் என்கிறாப்போல அடியும் இல்லாமே முடிவும் இல்லாமே இரண்டு வரி! அழைச்சிண்டு வந்த ரங்கனுக்கு மட்டும் கொண்டுவிடத் தெரியாதா?” என்றாள். மீண்டும் அவளை அந்தக் கடிதம் பழைய கவலைக்குள் ஆழ்த்திவிட்டது. அறையினுள், ‘ணங்…’ என்று ஓசை கேட்டது. “ருக்கு!” “ம்”. “என்ன வேணும்!” “தாகமாய் இருந்தது.” ருக்மிணி வழக்கம் போலக் கலகலப்பாகத்தான் நடந்து கொண்டாள். அவள் மனத்தில் தங்கம்மாள் கூறிய வார்த்தைகள் உறுத்திக் கொண்டே இருந்தன. வேணுமீது தான் அவளுக்குக் கோபம் கோபமாய் வந்தது. பதிலே போடாமல் இருந்தாள். தினம் பத்தரை மணி ஆகும் போதெல்லாம் தபால்காரன் வரும் திசையை நோக்கி அவள் கண்கள் மட்டும் வட்டமிடத் தவறுவதேயில்லை. “தபால் இல்லையே? என்று ஏதோ வேண்டாத தோரணையில் கேட்பாள். “இல்லேம்மா” என்று ஏதோ ஆறுதலாகச் சொல்வது போன்ற பாவத்தில் தபால்காரன் பதிலளிப்பான். “அவர் ஏன் போடப் போகிறார்?” என்று அவள் தனக்குள் கூறிக் கொள்வாள். பத்து நாட்கள் சென்றன. திடீரென்று வேணுவிடமிருந்து கடிதம் வந்தது. “லீவு கிடைக்கவில்லை. உடனே ரங்கனை அழைத்துக் கொண்டு வந்து சேரவேண்டும்.” ருக்கு கடிதத்தை அசுவாரசியமாய் மடித்துப் போட்டாள். தங்கம்மாளுக்குத் திருப்தி பிறந்தது. “அவன்தான் வரச் சொல்லி எழுதியிருக்கான் போலிருக்கே. ஏன் வருத்தப்படறே?” என்று கேட்டாள். “ரங்கன் என்ன வச்ச ஆளா, அழைச்சிண்டு வறதுக்கும் கொண்டு போய் விடறதுக்கும்?” என்றாள் ருக்கு ஆத்திரத்துடன். பெண்ணின் இந்தக் கோபம் தங்கம்மாளுக்கும் அர்த்தமாகவே இல்லை. பல மாதங்களுக்குப் பிறகு தன் பெண் பிரியமாய் இரண்டு மாதம் தன்னிடம் வந்திருக்கிறாளே என்ற ஆசையே சப்பிட்டுவிட்டது தங்கம்மாளுக்கு. “பதில் போட வேண்டாமா?” “ஒண்ணும் வேண்டாம்.” மேலும் ஒரு வாரம் சென்றது. தந்தி வந்தது; “இரண்டு நாளில் எதிர்பார்க்கிறேன்.” தங்கம்மாளுக்குத்தான் தவிப்பாய் இருந்தது. கிணற்றில் கல் போட்டது போல இருந்தாள் ருக்கு. “தந்தி அடிச்சிருக்கானே” என்றாள் தங்கம்மாள். கிளம்பு என்று பெண்ணைப் பார்த்துத் தைரியமாய் அவளால். சொல்ல முடியவில்லை. எப்படிச் சொல்வது? “உடம்பு சரியாய் இல்லை. சரியாய் ஆனதும் உடனே வருகிறேன்.” என்று ருக்கு யாருக்கும் தெரியாமல் பதில் எழுதிப் போட்டாள். அப்பாவிடம், “இன்னும் பத்து நாள் போகட்டுமே, என்ன அவசரம்?” என்று வலியச் சென்று கூறினாள். “ஆமாம், ஆமாம்; போகட்டும்” என்றார் அவரும். “நல்ல அப்பா, நல்ல பொண்ணு! நெஞ்சழுத்தத்தில் ஒன்றுக்கொன்று சளையில்லை” என்று தோன்றிற்று தாய்க்கு, ஊருக்குப் போகவேண்டும் என்ற பிரஸ்தாபத்தையே காணவில்லை. “என்னமோ ஏதோ, பகவானே! என் மனசு குளிர எல்லாம் நடக்கணும். உன் உடல் குளிரப் பாலாபிஷேகம் பண்ணுகிறேன்” என்று அந்தர்யாமியைக் குறித்து வேண்டிக் கொண்டாள். ருக்கு மேலுக்குப் பிகுவாய் இருந்தாள். அவள் நடவடிக்கையில் ஒரு தளர்ச்சி இருந்தது. சிடு சிடு என்று விரைவில் சீற்றங்கொள்ள ஆரம்பித்தாள். தாயின் உபசாரமே அவளுக்குக் கசந்தது. வேண்டா வெறுப்பாக அவள் தாயிடம் தலை பின்னிக் கொள்ள உட்காருவாள். என்ன அம்மா தலையைப் போட்டு வெட்டறே?” என்று உடனே சிணுங்குவாள். காற்று அடிக்கவில்லை என்று கோபம் வந்தது. பேய்க் காற்றாக வீசினாலும் கோபம் வந்தது. தாகமாய் இருந்தால் கோபம். தூக்கம் வராவிட்டால் கோபம். சலங்கை ஒலியுடன் வண்டிகள் ஓடினால் சலிப்பு. வண்டிச் சப்தமே கேட்காவிட்டால் ஒரே ஏக்கம். “எதிர்பார்க்கிறாராம்; எதிர் பார்க்கட்டுமே!” பல தடவை இப்படித் தனக்குள் அவள் கூறிக் கொண்டாள். தானும் இரண்டே வரியில் பதில் எழுதிப் போட்டு விட்டதில் அவளுக்கு உள்ளுறத் திருப்தி. ஆனால் உடம்பு தனக்கு எப்போது சரியாகும்? அது எப்போது முதல் சரியாய் இல்லாமல் போக ஆரம்பித்தது? ‘வந்ததிலேயிருந்தா?’ நிலா அன்று பால்போலக் காய்ந்து கொண்டிருந்தது. வேண்டிய அளவு காற்றும் வீசிக் கொண்டிருந்தது. ஆனாலும் ருக்குவுக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. வந்ததிலேயிருந்து உடம்பு சரியாய் இல்லை என்று சொல்வது பிசகு; மனசு சரியாய் இல்லை என்பது தான் சரி என்று எண்ணமிட்டாள் அவள். வேணு மிகவும் அழுத்தக்காரன் என்பது பிரசித்தம். ஆனால் அவள் மட்டும்? தக்காளிப் பழ ரசம் பழக்கமானதைப் போலத்தான் அந்த அழுத்தம் அவனிடம் கற்றுப் பாடமானது தான்.ஏதோ வெளியில் சொல்லிக்கொள்ள முடியாத மனஸ்தாபம். “யார் வீம்புதான் செல்லுகிறது, பார்ப்போமே!’ என்று நிச்சயம் தான் தோற்றுவிட்டதாக ருக்கு உணர்ந்தாள். பெண்களாகப் பிறந்தாலே தோல்விதான். தொலைவிலே, தெருவிலே முனிசிபாலிடி ஆட்சியை எதிர்த்து ஒரு சொறிநாய் ஊளையிட்டது. அதைக்கேட்டு மற்றொன்று ‘வாள் வாள்’ என்று குலைத்தது. அரை மணி நேரமாய்ச் சத்தம். அடங்கவே இல்லை. ருக்கு நிலவையே கவனித்தபடி படுத்துக் கொண்டிருந்தாள். தூக்கம் வந்தால்தானே, இந்தச் சத்தத்தில் கலைந்து போவதற்கு? “ருக்கு!” என்று கூப்பிட்டுக் கொண்டே வந்தாள் தங்கம்மாள். “உம்” என்றாள் ருக்கு. “இந்தச் சத்தத்திலே முழிச்சுண்டயா?” “தூக்கமே வரல்லேம்மா; ஊருக்குப் போனாத்தான் இனிமே” என்றாள் ருக்கு வாயை விட்டு. தங்கம்மாள் மனசு கரைந்து ஓடிவிட்டது. “அசடே! நாளைக்கே போகலாம்; தூங்கு” என்றாள். ‘ஜல் ஜல்’ என்று தெருவில் வண்டிகளின் சப்தம். “பன்னிரண்டரை மணி வண்டி வந்து விட்டது போலிருக்கு. தாகமாய் இருந்தால் தண்ணீரைச் சாப்பிட்டு விட்டுத் தூங்கு” என்றாள் தங்கம்மாள். வழக்கம்போல ருக்கு தண்ணீர் எடுக்கும் பாவனையில் வண்டிகளைப் பார்க்க ஜன்னலருகில் வந்து நின்றாள். கீழே வாசற்படியைத் தாண்டாமல் ஒரு வண்டி வந்து நின்றது. “அம்மா, இங்கே வாயேன்! வாசல்லே வண்டி வந்து நிக்கறது. அவர்தான் போலிருக்கு. ஆமாம், அவர்தான்! போ ஜல்தியாய்!” என்று விரட்டினாள். தடதடவென்று விளக்குகளைப் போட்டாள். ‘லீவு கிடைத்து விட்டது போலிருக்கு’ என்று கண்ணாடியின் முன் வளைய வந்து நின்றாள். கூச்சமும் குறுகுறுப்பும் முந்த அவள் மாடிப்படியை விட்டுக் கதவு ஓரமாய் வந்து தயங்கி நின்றாள். தி. ஜானகிராமன் தஞ்சை மாவட்டம் தேவங்குடியில் பிறந்த தி. ஜானகிராமன் ஆங்கிலத்தில் பட்டப்படிப்பு, ஆசிரியப்பயிற்சி, வடமொழி அறிவு, சிறந்த இசைஞானம், இத்தனையும் பொருந்தியவர். தமிழ் எழுத்துலகில் நாவல், சிறுகதை இரண்டு துறையிலும் சாதனை படைத்திருக்கிறார். “கு.ப.ரா வின் அடிச்சுவட்டில் வந்த நான்கு பேரில் இவருடைய சிறுகதைப்பாணி மற்றவர்களை விட மிகவும் தெளிவாகக் காணப்படுகிறது. இவருடைய கதைகளில் பல, வடிவ முழுமை பெற்றிருக்கின்றன. வடிவத்தை மீறிய சில கதைகள் உள்ளடக்கத்தின் சிறப்பினாலும் கதை சொல்லும் நடையினாலும் வாசகர்களைக் கவருகின்றன. வாழ்வில் தம்மையறியாமல் அசட்டுத்தனம் செய்யும் மனிதர்களை அனுதாபத்தோடு பார்த்தும், அத்தகையவர்களைப் பயன்படுத்தும் சாமர்த்தியசாலிகளைப் பரிகாசம் செய்து குறைகளை எடுத்துக்காட்டியும் கதை மாந்தர்களைப் படைப்பதில் ஜானகிராமன் சிறந்த வெற்றி பெற்றிருக்கிறார். ஆண், பெண் உறவைப் பொறுத்தமட்டில் இவருடைய கதைகளில் கு.ப.ரா. வின் பாதிப்பு அதிகமாகக் காண முடிகிறது. இவருடைய கதைகளில் காணும் மற்றொரு சிறப்பு, பாத்திரங்களின் உரையாடலின் நடுவே புகுந்தும் சிறு மௌன இடைவெளிகளின் மூலம் வெறும் சொற்களால் முடியாத ஆழமான அனுபவத்தை வெளிப்படுத்துவதாகும். இவர் கதைகளில் நமக்குப் பழக்கமான பாத்திர அச்சுகள், மனித இயல்பை, நமக்குத் தெரிந்த முறையில் வெளியிடுவதைக் காணலாம்” என்று சிட்டி சிவபாதசுந்தரம் குறிப்பிடுகிறார்கள். “ஜானகிராமனை நாவலாசிரியராக - மதிப்பதைவிடச் சிறுகதை ஆசிரியராகக் கருதுவதுதான் விமரிசகனான எனக்கு சரியென்று தோன்றுகிறது…” என்று க.நா.சு அபிப்பிராயப்படுவது ஒருபக்கப் பார்வை என்று அவரின் ஒட்டுமொத்த படைப்புகளை படிக்கிறபோது தெரியவரும். கோபுரவிளக்கு திடீரென்று கண்ணைக் கட்டிவிட்டாற்போல் இருந்தது; அவ்வளவு இருட்டு, கிழக்குத் தெருவின் வெளிச்சத்தில் நடந்து வந்ததால் அந்த திடீர் இருட்டு குகை இருட்டாக காலைத் தட்டிற்று. சந்நிதித் தெரு முழுதும் நிலவொளி பரப்பும் கோவில் கோபுரத்தின் மெர்க்குரி விளக்கு அவிந்து கிடந்தது. நட்சத்திரங்களின் பின்னணியில் கோபுரம் கறுத்து உயர்ந்து நின்றது. கோயிலுக்குள் நீண்டு ஒளிரும் விளக்கு வரிசையில் லிங்கத்தைச் சுற்றிய ஒளிவட்டமும் காணவில்லை. கோவில் பூட்டித்தான் கிடக்கவேண்டும். ஏதாவது நாயை மிதித்துவிடப் போகிறோமே என்ற கவலையில் தட்டித் தடவி வீட்டு வாசலை அடைந்தேன். “பூஜை இல்லேன்னா கதவை அடைச்சுக்கட்டும். இந்த விளக்கைக் கூடவா அணைச்சுடணும்?” என்று எதிர் வீட்டு பந்தலிலிருந்து குரல் கேட்டது. “பஞ்சாயத்தும் கேட்பாரில்லாத நாட்டாமயாப் போயிடுத்து. இருக்கிறது ஒரு விளக்கு தெருவுக்கு, அதுவும் ப்யூசாயிடுத்து.. ஒரு வாரமாச்சு, நாதியைக் காணோம்”- என்று நாட்டு வைத்தியரின் குரல் கீழண்டை வீட்டு வாசலிலிருந்து புலம்பிற்று. “கோயிலில் விளக்கு எரிஞ்சுண்டிருக்கும். இந்த பஞ்சாயத்து. பல்பு எங்காத்துக்காரரும் கச்சேரிக்கு போறார்னு மினுங்கிண்டிருக்கும், மத்தியானத்திலே சந்திரன் இருக்கிற மாதிரி. இன்னிக்கு சூரியனே அவிஞ்சு போயிட்டான். மானேஜர் இதை அணைச்சிருக்க வாண்டாம். யாராவது வந்து சொல்லட்டும்னு இருக்கார் போலிருக்கு…” அந்த ‘யாராவது’க்கு அவரைத் தவிர யாராவது என்றுதான் அர்த்தம்! இந்த அற்ப விஷயத்திற்காக மானேஜரை போய்ப் பார்க்கும் கௌரவத்தை அவர் தலையில் போட்டுக் கொள்ளமாட்டார். நாட்டு வைத்தியர் அவரைவிட பெரிய மனிதர். நாட்டுவைத்தியம் அவருக்கு பொழுதுபோக்கு. ’நான் இருக்கிறேன், சுனச்சேபன். எனக்கு இதைவிட என்ன வேலை? பார்த்தால் போகிறது.’ இரண்டாம் கால பூஜை. மேளமும் சங்கும் தாரையுமாக அமர்க்களப்படுகிற அந்த வேளையில். இன்று இந்த நிசப்தம் நிலவுகிறது. யாருக்கு சீட்டு கிழிந்துவிட்டதோ? கதவைத் தட்டினேன். கௌரி வந்து திறந்தாள். “ஏன் கோவில் பூட்டிக் கிடக்கு?” “எல்லாம் விசேஷம்தான்” என்று கதவைத் தாழிட்டாள் அவள். “என்ன …?” “தெற்கு வீதியிலே யாரோ செத்துப் போயிட்டாளாம்.” “யாராம்?” “எல்லாம் உங்க கதாநாயகிதான்.” “என் கதாநாயகியா? அப்படி ஒருத்தரும் இருக்கக்கூடியதாக தெரியலியே!” “செத்துப்போன அப்புறம்தானே இந்த மாதிரி மனுஷா எல்லாம் உங்களுக்கு கதாநாயகி ஆகிற வழக்கமாகச்சேன்னு சொன்னேன்…” “எந்த மாதிரி மனுஷா?” “தருமு மாதிரி.” “தருமு யாரு?” “துர்க்கை அம்மன்கிட்ட வரம் கேட்பாள்னு சொன்னேளே, அந்த ஜில்தான்…” “ஆ…அவளா!” “என்ன மூச்சை போட்டுட்டேள்?” மூர்ச்சை போடக் கூடிய செய்திதான்… தர்மூவா செத்துப் பேய் விட்டாள்? முந்தாநாள் கூட கோவிலிலே பார்த்தேன். என்னைக் கண்டதும், நாணத்திலும் பயத்திலும் விறுவிறுவென்று நடையைக் கட்டிவிட்டாள்! இன்னும் கண் முன்னே இருக்கிறது. “முந்தாநாள் ராத்திரி கூட கோவிலிலே பார்த்தேனே!”. “பார்த்தா என்ன? நாலு மணிக்கு பார்த்தாவாளை நாலே கால் மணிக்கு பார்க்க முடியவில்லை; மாரடைச்சு பொத்துனு விழுந்து பிராணன் போய் விடுகிறது.” “என்ன உடம்பாம்?” “என்ன உடம்பு இருக்கும் இதுகளுக்கு? பாம்புக்காரனுக்கு பாம்புதான் எமன், புலியை வச்சு ஆட்றவனை புலி தான் விழுங்கும்.” நான் சமைந்து போய் உட்கார்ந்தேன். தருமுவின் மெல்லிய உருவம் நிழலாடிக் கொண்டிருந்தது. முந்தாநாள், இரண்டாங்கால பூஜை முடிந்ததும் கோவிலுக்குப் போயிருந்தபோது, அவள் நிகு நிகு என்று தீட்டித் தேய்த்த கத்தி மாதிரி நடந்து போய்க் கொண்டிருந்தாள். கோயிலில் ஒரு பிராணி இல்லை. நுழையும்போதே வெளிப் பிரகாரம் வெறிச்சென்று கிடந்தது. நந்திக்கருகில் அர்த்த ஜாமத்துக்காக காத்துக் கொண்டிருந்த இரண்டு ஆச்சிகள், தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். இரண்டு பேருக்கும் முண்டனம் செய்து முக்காடிட்ட சிரசுகள். பழுத்துப் போன வெள்ளைப் புடவை. நெற்றியில் விபூதி. பல்லும் பனங்காயுமாக மூஞ்சிகள். தோலில் சுருக்கம், பட்டினியும், பசியுமாக காயக் கிலேசம் செய்கிறார்களோ என்னமோ, இரண்டுபேரும்! இல்லாவிட்டால் ஐம்பது வயசுக்குள், இத்தனை அசதியும் சோர்வும் வருவானேன்? மனிதப் பிறவி எடுத்து சுகத்தில் எள்ளளவு கூட காணாத ஜன்மங்கள் இரண்டும், மங்கைப் பருவத்திற்கு முன்னாலேயே குறைபட்டு போனவர்களாம். பரஸ்பர அனுதாபத்தினால் ஒரு சிநேகம். இரண்டு பேரும் சேர்ந்து தான் வருவார்கள்; போவார்கள்- விருப்பு வெறுப்பு இல்லாத மரக்கட்டைகள்; உணர்ச்சி மாய்ந்துபோன மரப் பின் உருவாக, சாவை எதிர்நோக்கிக் கொண்டிருந்த கிழங்கள். அவர்களைக் கடந்து போனதும், தர்மு உள்ளே சிவ சன்னதியில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. “உன்னைவிட இந்த இரண்டும் எவ்வளவோ கொடுத்து வைத்தவை. முக்காடிட்டுக் கொள்கிற பாக்யமாவது இவர்களுக்கு இருக்கிறது. நீ வெறும் சுமங்கலிக்கட்டை” என்று தர்முவை நினைத்து என் நெஞ்சு குரல் கொடுத்தது. நான் உள்ளே போனதும் சட்டென்று திரும்பி என்னைப் பார்த்து விட்டாள் அவள். உடனே வேதனையையும், வெட்கத்தையும் ஒரு புன்சிரிப்பில் புதைத்துக் கொண்டு ’விர்’ரென்று அந்த இடத்தை விட்டுப் பறந்து விட்டாள். கட்டுக்கூந்தல் அவளுடைய பிடரியில் புரண்டு கொண்டிருந்தது. முன் தலை பக்கவாட்டில், ஒன்றோடும் சேராமல், பறங்கிக் கொடியின் பற்றுச் சுருளைப்போல இரண்டு சுருள்கள் அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஆடி அதிர்ந்து கொண்டே வந்தன. அவளை கறுப்பு என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் அட்டைக்கரி அல்ல. மெல்லிய உயரமான தேகம். கையில் நாலைந்து ஜோடி இருக்கும். மஞ்சளும் நீலமும் கலந்த ரப்பர் வளையல்கள். கழுத்தில் முலாம் தோய்ந்த சங்கிலி. அதுவும் முலாம் தேய்ந்து பல்லை இளித்தது. ஒரு பூப்போட்ட வாயில் புடவை. பளபளவென்று தங்க நிறத்தில் கைக்கு வழுவழுக்கும் செயற்கைபட்டு ரவிக்கை. நிகு நிகுவென்ற ஒரு புது மெருகு அந்த உடல் முழுதும் ஊடுருவி ஒளிர்ந்தது. என்னைக் கண்டுவிட்டு அவள் வெட்கி ஓடியதற்குக் காரணம், இது. இரண்டு மாதத்துக்கு முன் இரண்டாங்கால பூஜைக்குப் பிறகு கோவிலுக்குப் போன போது நடந்தது. பிரகாரத்தை வலம் வருவதற்காகச் சென்றேன். துர்க்கை அம்மனுக்கு முன்னால் நின்று இந்த தர்மு வேண்டிக் கொண்டிருந்தாள். அழும் குரலில். நான் வந்ததை கவனிக்காத அளவுக்கு அவ்வளவு சோகம் அவள் மனத்தையும் புலன்களையும் மறைத்திருக்கத்தான் வேண்டும். “ஈச்வரி! இரண்டு நாளாக வயிறு காயறது. இன்னிக்காவது கண்ணைத் திறந்து பார்க்கணும். தாராள மனசுள்ளவனா… ஒருத்தனைக் கொண்டு விட்டுத் தொலைச்சா என்னவாம்…?” கேட்டுக்கொண்டே போனேன். இரண்டு விநாடி கழித்து சட்டென்று என்னைப் பார்த்தவள், மருண்டு நின்றாள். என்ன செய்ய? வேண்டுமென்று ஒற்றுக் கேட்கவில்லையே! “ஈச்வரி, என் தங்கையை காப்பாற்றிப்டு, தாராள மனசுள்ளவனா ஒருத்தனை பார்த்து அவளுக்கு முடிச்சூடு, தாயே” என்று தயங்கித் தயங்கி வேண்டுகோள் முடிந்தது. உண்மையான முடிவாக இருந்தால் குரலில் இவ்வளவு அசடு தட்டுவானேன்? பயந்துகொண்டு அவசர அவசரமாக அவள் தான் ஓடுவானேன்? அவள் போனதும், துர்க்கை அம்மனைப் பார்த்துக் கொண்டே நின்றேன். கல்லில் வடிந்த அந்தப் புன்முறுவலுக்கு என்ன பொருள்? ‘மகிஷாசுரனை மர்த்தனம் - செய்கிற எனக்கு இந்த உத்தியோகம் கூடவா? இந்த பிரார்த்தனையைக் கொடுத்து விடலாமா…? கடைசியில் தங்கை கிங்களை என்று சொன்னது உன்னை ஏமாற்றத்தான், என்னை ஏமாற்ற இல்லை… ஆனால், நீ கூட ஏமாறவில்லை?’ என் உள்ளம் கிளர்ந்து புகைந்தது, கோபம் வந்தது. யார்மேல் என்றுதான் தெரிய வில்லை. கொஞ்சம் தொண்டையைக் கூட அடைத்தது. வெளியிலே இந்த வேண்டுகோளை நினைத்து யாரும் எதுவும் பதைபதைப்பதாக காணவில்லை. துர்க்கைக்கு முன் மினுங்கின விளக்கு சாந்தமர்க அசையாமல் மினுங்கிற்று. தட்சிணாமூர்த்தி மௌனமாக உட்கார்ந்திருந்தார்! கோயில் மானேஜர் நிமிராமல் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார். மானேஜர் தலைக்குமேல் தொங்கின கூண்டிற்குள்ளே கிளி கண்ணை மூடி தவத்தில் இருந்தது. வீட்டுக்கு வந்ததும், கௌரியிடம் சொன்னேன். “தெய்வம் நல்ல புத்தி கொடுக்கும், ஞானம் கொடுக்கும், விவேகம் கொடுக்கும். இப்ப இதுவும் கொடுக்கும்னு தெரியறது-” என்று என் படபடப்பைக் கிண்டல் செய்தாள் கௌரி. “ஏன், கொடுக்கப்படாதா?” “கொடுக்கனும்னுதான் சொல்றேன். எந்த காரியத்துக்கும் தெய்வபலம் வேணும். திருடனுக்குக் கூட ஒரு தெய்வம் உண்டு. அந்த மாதிரி, தேவடியாளுக்கு ஒரு தெய்வம் வேண்டாமா! நல்ல ஆளா கொண்டு வந்து விடுன்னா விடத்தானே வேணும் அது?” “அந்தப் பொண்ணு அழுதுண்டே வேண்டிண்டுது. கொஞ்சம் மனசுக்குள்ளேயே வேண்டிக்கப்படாதா? தன்னை அறியாமல் கஷ்டம் பொறுக்காமல் புலம்பியிருக்கு. என் காதிலே விழுந்து, உன் காதிலேயும் விழுந்து சிரிப்பா சிரிக்கணும்னு இருக்கு! வேறென்ன?” “நீங்க வர்றதை பார்த்துட்டுதான் அப்படிக் கொஞ்சம் உரக்க வேண்டிட்டாளோ என்னமோ? “அப்படி இருந்திருந்தா உன்னளவு சமாசாரம் எட்டி விடுமா என்ன?” “பேஷ் அவ்வளவு கெட்டிக்காரரா நீங்க? வாஸ்தவம் தான். உங்களுக்கு தாராள மனசுதான். கையிலேதான் காசு இருக்கிறதில்லை. அதனாலேதான் அனுதாபம் இங்கே வந்து அருள் பிரவாகமாக ஓடறது!” “போருமே! நீ பேசறது வேண்டியிருக்கலெ. இங்கிதம் தெரியாம என்ன பேச்சு இது?” “யார் அந்தப் பொண்ணு?” “யாரோ தெரியலெ. கறுப்பா உசரமா சுருட்டை மயிரா இருக்கு. முகம் கலையா இருக்கு… “கறுப்பா உசரமாவா?”ஆமாம்” “பல்லு கோணலா இருக்குமோ?” “அதென்னமோ பல்லை பார்க்கலை நான். “யாரு அது? வேடிக்கையா இருக்கே!” “வாசலோடு கூட அடிக்கடி போகும்.” மறுநாளைக்கு அந்தப் பெண் வாசலோடு போனாள். கூட அவள் தாய் போய்க் கொண்டிருந்தாள். அவசர அவசரமாக கௌரியைக் கூப்பிட்டேன். அவள் வருவதற்குள் ஜன்னல் கோணத்தை விட்டு அவர்கள் போய்விட்டார்கள். வாசலுக்கு ஓடிப்போய்ப் பார்க்கச் சொன்னேன். கௌரி ஒரு நிமிடம் கழித்து வந்தாள். “இதுவா? இது கிரிசை கெட்டதுன்னா!. இதுக்குத்தானா இத்தனை புலம்பினேள்?” “யாரது? உனக்குத் தெரியுமோ?” “தெரியறது என்ன? குளம், சந்தி, கடைத்தெரு, எங்கே பார்த்தாலும் நிக்றதே. காலமே கிடையாது. மத்தியானம் கிடையாது. ராத்திரி கிடையாது. எடுப்பட்ட குடும்பம்!” “அதுதான் தெரியறதே அவா யாருன்னு கேக்கறேன்.” “யாருன்னா? முருங்கைக்காயின்னா முருங்கைக்காய் தான். எந்த ஊரு.? எந்தக் கொல்லை- இதெல்லாமா கேக்கணும்?” “இது முருங்கைக்காயா? “முருங்கைக்காய் தான். வேணும்னா நீங்க போய் விசாரிச்சு தெரிஞ்சுக்குங்களேன். இந்த வம்பு தும்பெல்லாம் எழுதி உங்களுக்கு காசாப் பண்ணனும். அதுதான் சீனு மாமா இருக்காரே, அக்கப்போர் ஆபீசர். அவரைக் கேட்டாச் சொல்றார்.” நாலைந்து நாள் கழித்து சீனு ஐயரின் கடையில் உக்கார்ந்திருந்தபோது, தாயும் பெண்ணும் ஒருவர் பின் ஒருவராய்ப் போவதைக் காட்டிக் கேட்டேன்; “இது யார் சார்?” “தெற்கு வீதியிலே இருக்கா. ஒரு தினுசு!” “அப்படீன்னா ?” “நான் நேரே பார்க்லை சார். சொல்லிக்கிறா. “என்ன சொல்லிக்கிறா?” “ஒண்ணுன்னா பத்து சொல்லும் ஊரு. நானும் சரியா விசாரிக்காம சொல்லமாட்டேன்.” “நீங்க இன்னும் ஒண்ணுமே சொல்லலியே!” “என்னத்தைச் சொல்றதாம். எல்லாம் அதுதான். வேறே. என்ன?” “எது?” “மந்திரச் சாமா மந்திரச் சாமான்னு ஒருத்தன் இருந்தான். பஞ்சாங்கக்காரன். பொல்லாதவன். ஆனால், மகா உபகாரி. ரொம்ப நீக்குப் போக்குத் தெரிஞ்சவன். நன்னா பேசுவான். எட்டுக் கண்ணும் விட்டெறிஞ்சுது. மில்லுச் செட்டியாருக்கெல்லாம் அவன் சொன்னா வேதவாக்கு. அவன் பொண்ணுதான் இது. “அவன் பொண்டாட்டிதான் இந்த ‘விடோ’. அவன் ஜோசியம் சொன்னான்னா ரிஷிவாக்கு மாதிரிதான். இன்ன வருஷம், இன்னமாசம், இன்ன தேதி - இத்தனையாவது மணிக்கு இன்னது நடக்கும்னு பிரம்மதண்டத்தை தலையில வச்சாப்போலச் சொல்லுவான். அப்படியே ஒரு விநாடி பிசகாமல் நடக்கும். இந்தக் காவேரி மேற்கு முகமாப் போனாலும் போகும். அவன் சொல்றது பிசகாது. பாம்புகடி, தேள் கடிக்கு மந்திரிப்பான். ஆகாசத்துக்கும், பூமிக்கும் குதிச்சிண்டு வருவான். ‘தேள் கடிச்சுதா? என்னது? உன்னையா தேள் கடிச்சுது?’ என்பான் சாமா சிரிச்சுண்டே. ‘சரியாப் போயிடுத்தே. எங்கே கொட்டித்துன்னே தெரியலியேன்னு’ திரும்பிப் போயிடுவான் வந்தவன். சாமா பிசாசு கூட ஓட்டுவான். நடத்தைதான் கொஞ்சம் போராது. பூர்வீகமா ஒண்ணரை வேலி சர்வமானிய சொத்து இருந்தது. எல்லாத்தையும் தொலைச்சான். நாற்பது வயசுக்கப்புறம் திடீர்னு பாரிச வாயு வந்து ஒரு பக்கம் பூரா சுவாதீனமில்லாம போயிட்டுது. ஏழு வருஷம் படுத்த படுக்கையாகக் கிடந்தான். சாப்பாட்டுக்கு வழி இல்லே. பாங்கியிலே நானூறு, ஐநூறு போட்டிருந்தான். இதோ போறதே இந்த பொண்ணு கல்யாணத்துக்கு செலவழிஞ்சு போச்சு. என்ன செய்யறது? சாப்பிட்டாகணுமே! அவன் பொண்டாட்டி அவன் இருக்கிறபோதே இப்படி ஆரம்பிச்சுட்டா. இந்தப் பொண்ணோடு ஆம்படையானுக்கு கல்யாணமாகி நாலு மாசம் கழிச்சுத்தான் இதெல்லாம் தெரிஞ்சுது. அழைச்சு வச்சுண்டிருந்தான் மதுரையிலே. சமாசாரம் தெரிஞ்ச உடனே அடிச்சு விரட்டிப்புட்டான். தாயார் அப்படி இருந்தா பொண்ணு என்ன செய்யும்? அப்ப எல்லாம் இந்தப் பொண்ணு யோக்கியமாத்தான். இருந்தது. அது வாழாவெட்டியா வந்து சேர்ந்ததும் அம்மாக்காரி இப்படி பழக்கிப்பிட்டா. ஏழெட்டு குழந்தைகள்! வீட்டோட இந்த விடோவுக்கு ஒரு அம்மா கிழவி வேறெ. இருக்கா. என்ன செய்யறது? கிளப்பிலே இந்த ரெண்டும் அரைக்கிறது. என்னத்தை கிடைக்கப் போறது? ஒரு நாள் முழுக்க அரைச்சா எட்டணா கிடைக்கிறதே கஷ்டம். பத்துப் பேர் இருக்கிற குடும்பம். ஒரு ரூபாயிலே தினமும் ஒடுமோ? இப்படித்தான் பிழைக்கவேணும். என்னவோ யார் கண்டா? நேரிலே பார்த்ததில்லே. சொல்லக் கேள்வி. நானும் நிச்சயமா தெரியாட்டா சொல்லமாட்டேன் என்று மறுபடியும் அதே முத்தாய்ப்பு வைத்து முடித்தார் சீனு மாமா. “என்ன கஷ்டம்!” “கஷ்டம்தான். ஆனா நகையும் நட்டும் வீடும் நிலமும் வச்சுண்டு சிலபேர் ஊர் சிரிக்கறதுக்கு இதுவொண்ணும் கெட்டு போயிடலே, பெரியாத்து சமாசாரம், தெரியுமோ இல்லியோ?” என்று தமக்குப் பிடிக்காத யாரைப்பற்றியோ தொடங்கிவிட்டார் சீனு. “அப்படி எல்லாம் திமிர் பிடிச்சு போக்கிரித்தனம் பண்றா. அதுக்கு கேட்பாரில்லை. பணம் எல்லாத்துக்கும் பிராயச்சித்தம் பண்ணிப்பிடும். இந்த மாதிரி நாதன் இல்லாம, சோத்துக்கும் இல்லாம, எடுபட்டுடுத்தோ, அவ்வளவு தான். கட்டுப்பாடு காயிதா எல்லாம் அமர்க்களப்படறது. சாமா இருந்தபோது, ஜோஸ்யம் ஜோஸ்யம்னு- வாசல் திண்ணையிலே, திருச்சிராப்பள்ளி எங்கே, மதுரை எங்கே-கடலூர் எங்கேன்னு பெரிய பெரிய புள்ளிகள் எல்லாம் வந்து காத்துண்டிருக்கும். காரும் குதிரை வண்டியுமா வாசல்லே அதும்பாட்டுக்கு அவுத்துப்போட்டுக் கிடக்கும். வியாபாரிகள், மிராசுதாரர்கள்!-ஒண்ணும் அப்பைசப்பையா இராது. அவன் அப்படி இருந்ததுக்கு கடைசியிலே சொல்லிமாளாது அவ்வளவு. கஷ்டத்தையும் அனுபவிச்சுப்புட்டான். போராதுன்னு. இதுகள் வேறே இப்படி சிரிக்கிறதுகள். ஊரிலே ஒருத்தரும் போக்குவரத்து கிடையாது. அந்த வீடு மாத்திரம் இருக்கு. அதுவும் இடிஞ்சும் கிடிஞ்சும் யாரு தலைலே விழலாம்னு காத்திண்டிருக்கு. சாமா இருக்கிறபோது அக்கிரகாரத்திலே இருக்கிறவர்களுக்கு தோசைக்கு இட்லிக்கு அரைச்சுக் கொடுப்பா. ஒரு கல்யாணம் ஒரு விசேஷம்னா இட்லி வார்க்கிறது, அப்பளம் இட்டுக் கொடுக்கிறது இப்படி எதாவது காரியம் செஞ்சு கொடுப்பா. ஆனா ஒரு தினுகங்கிற சேதி தெரிஞ்சுதோ இல்லியோ? எல்லாம் நின்னு போச்சு. ஒரு வீட்டிலேயும் குத்துச் செங்கல் ஏற விடலே. கடைத்தெருவிலே ஹோட்டல்லெ வேலை செய்யறதுகள்…” எதிர்பார்க்கவில்லை. அவர் மனத்தையே கரைக்கிறதானால் உண்மைதான் கரைக்க முடியும். அவர் சொன்னது உண்மைதான். கெளரி சொன்னதும் உண்மைதான். எதிர்பாராத இடங்களிலெல்லாம் அந்த பெண்ணைப் பார்த்து மனம் துணுக்குற்றது. இரவு ஒன்பது மணிக்கு நடமாட்டம் இல்லாத தெருவில் போய்க்கொண்டிருப்பாள். போலீஸ் கான்ஸ்டபிளோடு ஸ்டேஷன் வாசலில் பேசிக் கொண்டிருப்பாள். வெற்றிலைக்காரனோடு ஹாஸ்யத்தில் ஈடுபட்டிருப்பாள். இரவில் தேர்முட்டியின் கருநிழலில் நின்று கொண்டிருப்பாள். வாடகை கார் ஷெட்டின் முன்னால் நின்று சிரித்து பேசிக் கொண்டிருப்பாள். கெளரியிடம் சொன்னேன். “கெளரவம் என்ன? மதிப்பு என்ன இதிலே? பொம்மனாட்டி ஜென்மம். எத்தனை நாளைக்குத் தேடிண்டு வருவா? முதல்லே அப்படித்தான் இருந்திருக்கும். இப்போ இவளே தேடிண்டு போற காலம் வந்துடுத்து. இல்லாட்டா இப்படி சந்தி சந்தியா நிப்பானேன்? இனிமேல் ஒரே வேகமாத்தான் போகும். வியாதி, ஆஸ்பத்திரி, பிச்சை, சத்திரத்து சாப்பாடு-எதைத் தடுக்க முடியும்? துர்க்கை அம்மன் கிட்டவே வந்து பிழைப்புக்கு மன்றாடற காலம் வந்துவிட்டது. “கேக்கறதுதான் கேட்டாளே பணம் வேணும்-கஷ்டம் விடியனும்னு அழப்படாதோ? நல்ல ஆளை பிடிச்சுத் தரணும்னு தானா கேக்கணும்.” “அவ வேலை செஞ்சு பிழைக்கிறவ. ஒரு வேலையும் செய்யாமல் திடீர்னு பணம் வந்து குதிக்கும்னு நம்பற இனம் இல்லே. ஏதாவது கொடுத்தாத்தான் இந்த உலகத்துக்கிட்ட இருந்து ஏதாவது கறந்து சாப்பாட்டுக்கு வழி பண்ணிக்க முடியும்னு நினைக்கிறவ. தெரிஞ்சுதா?” “என்ன தெரிஞ்சுதா? இது ஒரு வேலையா?” கெளரியின் சாமார்த்தியத்தைக் கண்டு எனக்கு வியப்பாக இருந்தது. வீட்டில் இருந்துகொண்டே அவள் எப்படி செய்திக்களஞ்சியமாக அபிப்பிராயக் களஞ்சியமாக விளங்குகிறாள்? “இனிமே ஒரே வேகமாகத்தான் போகும்…” ஆனால், இவ்வளவு வேகமாகப் போய் எல்லாம் அடங்கிவிடும் என்று நான் நினைக்கவில்லை. சாப்பிட்டானதும் கேட்டேன்; “என்ன உடம்பாம் அதுக்கு?” “அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறேள்! மூணு மாசம் குளிக்காம இருந்ததாம்…” பளிச்சென்று எனக்கு முந்தாநாள் இரவு அவளை கோவிலில் பார்த்தது நினைவிற்கு வந்தது. தோலிலும் உடலிலும் ஊடுருவி கண்ணைக் கவர்ந்த அந்த மெருகு நினைவுக்கு வந்தது. அக்கப்போர் சீனுவிடம் இவ்வளவு தயவை நான் அரைச் சாப்பாட்டுக்கு, பருவம் கடந்து ஆறு வருஷத்திற்கு அப்புறம் வரக்கூடிய மெருகல்ல அது. தாய்மையின் ஒளி; வயிற்றில் வளர்ந்த சிசுவின் ஒளி; செவ்வட்டையின் ஒளி மாதிரி அது என்னை இப்போது பதற அடித்தது. “அவ அம்மாக்காரி இருக்காளே - டாக்டர்கிட்டே போய் கேட்டாளாம். அம்பது ரூவா பணம் கேட்டானாம் அந்தத் தடியன். கடைசியிலே-வாசக்கதவு, கொல்லைக்கதவு எல்லாம் சாத்திபிட்டு-இவளே அந்தப் பொண்ணு வாயிலே-வைக்கல், துணி எல்லாத்தையும் வச்சு திணிச்சு வைத்தியம் பண்ணினாளாம். அப்படியே அலறவும் முடியாம, உசும்பவும் முடியாம எல்லாமே அடங்கிப் போச்சாம். அப்படீன்னு நம்ம பூக்காரி சொல்றா. ஆனா குருக்கள் பொண்டாட்டி சொன்னாளாம்; அந்த அம்மாக்காரி கண்ணாடியைப் பொடி பண்ணி தண்ணியிலெ கலந்து அந்த பெண்ணைக் குடிக்கச் சொன்னாளாம், அது குடிச்சுப்பிட்டு வயித்து வலியிலே-அய்யோன்னு ஊரே குலை நடுங்க கத்தி தீத்துப்பிடுத்தாம். அப்பறம் தான் துணியை வாயிலே வச்சு அடச்சு அழுகையை அடக்கினாளாம். அது உயிரையே அடக்கிப்பிடுத்து.” கேட்கும்போது வயிற்றைப் புரட்டிற்று எனக்கு. கெளரி குழந்தை மாதிரி விசித்து விசித்து அழ ஆரம்பித்து விட்டாள். என்னையும் அது தளரச் செய்துவிட்டது. “அந்தப் பொண்ணு ஊத்தின எண்ணெய்க்காவது மனம் இரங்கப்படாதா அந்த சாமி. இவ்வளவு பெரிய கோவிலை கட்டிண்டு உக்கார்ந்திருக்கே! துர்க்கைக்கு முன்னாடி நின்னுண்டு அழுதுன்னேளே, பொம்மனாட்டி கண்ணாலே ஜலம் விட்டா உருப்படுமா அந்தத் தெய்வம்? அவ யாராயிருந்தா என்ன? மனக உருகிக் கண்ணாலே ஜலம் விட்டுதே அது” என்று கெளரி குமையத் துவங்கி விட்டாள். கோவிலை ஒட்டினாற் போல இருந்தது மானேஜர் வீடு. சென்று கதவை தட்டினேன். “யாரு?” “நான் தான் சார்.” கதவைத் திறந்து கொண்டு வந்தார் அவர். வாசல் விளக்கு பளிச்சென்று எரிந்தது. “ஓ….சாரா, வாங்க, வாங்க, எங்கே இப்படி அபூர்வமா?” “கோவில்லே பூஜை இல்லைன்னு கேள்விப்பட்டேன்…” “ஆமா சார் ஒரு சாவு…. தெற்குத் தெருவுலே.” “அதுதான் கேள்விப்பட்டேன். அது விஷயமாத்தான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்.” “என்ன?” “கோபுரத்து விளக்கு இல்லாமல் தெருவே இருண்டு கிடக்கு. ஊரிலே திருட்டு பயமா இருக்கு. அதுதான்…” “ஒரு நாள் இப்படித்தான் இருக்கட்டுமேன்னு நினைக்சேன்.” இது என்ன அர்த்தமில்லாத பதில்! திகைப்பாக இருந்தது எனக்கு. பேசாமல் உட்கார்ந்திருந்தேன். ஒன்று, இரண்டு நிமிடங்களாயின. இருவரும் பேசவில்லை. “என்ன இப்படி பதில் சொன்னானேன்னு நினைக்கிறீங்களா? எனக்கு என்னமோ இந்த சாவுக்கு துக்கம் கொண்டாடனும் போல் இருக்கு. செத்துப்போனது யாருன்னு தெரியுமில்ல உங்களுக்கு?” “தெரியும். ரொம்பக் கண்ராவி.” “நீங்க கூட பார்த்திருப்பீங்களே. கோவிலுக்கு வருமே அந்தப் பொண்ணுதான். சிரிச்சிப் போன குடும்பம்தான்; ஒப்புத்துக்கிறேன். ஆனால், செத்துப் போனதுக்கு அப்புறம் தூக்கறதுக்கு ஒரு ஆள் கூட இல்லைன்னா இது என்ன மனுஷன் குடி இருக்கிற தெருவா? காக்கா கூட ஒரு காக்கா செத்துப்போச்சுன்னா கூட்டம் கூட்டமாக அலறி தீத்துப்பிடும்கள். மத்தியானம் மூணு மணிக்கு போன உசிரு. ஒரு பய எட்டிப் பாக்கலை, வீட்டிலேயே இருக்கிறது அத்தனையும் பொம்பளை. எல்லாம் சின்னஞ் சிறுசு. அப்படி என்ன இப்ப குடி மூழ்கிப் போச்சு? அவங்க கெட்டுப் போயிட்டாங்க. நாதன் இல்லாம கெட்டுப்போன குடும்பம். பசிக்கு பலியான குடும்பம். என்ன அக்கிரமம் சார்? இந்த மாதிரி மிருகங்களைப் பார்த்ததில்லைங்க நான். நானும் நாலு ஊரிலே இருந்திருக்கேன்-” மானேஜரின் உதடு துடித்தது. கரகரவென்று கண்ணில் நீர் பெருகிற்று. பேசமுடியாமல் நின்றார். சற்று கழித்து கண்ணைத் துடைத்துக்கொண்டு ஒரு பெருமூச்சில் துக்கத்தை இறக்கிக் கொண்டார். “இன்னிக்குக் கடவுள் வெளிச்சம் கேட்பானா? கேட்க மாட்டான். ஊருக்கு மட்டும் என்ன வெளிச்சம்? எத்தனை வெளிச்சம் போட்டால் என்ன, நம்ம இருட்டு கலையப் போறதில்லை. இப்படித்தான் தவிக்கட்டுமே, ஒரு நாளைக்கு…” ஆத்திரம் அவர் முகத்தில் ஜொலித்தது. “கோயிலுக்கு பூஜை செய்தாகணும். இன்னும் பொணத்தை தூக்கின பாடில்லை. யாரு தூக்குவாங்க? ஊரு கட்டுப்பாடாம்; ஊர் தலையிலே இடிவிழ!” நான் பேசமுடியாமல் உட்கார்ந்திருந்தேன். ஆத்திரம் தனிந்ததும் அவர் சொன்னார். “பத்து மணிவரையில் பார்க்கப் போறேன். அப்புறம் நாதியில்லேன்னா, நாயனக்காரர் ரெண்டு ஆளை கொண்டாறேன்னிருக்காரு. நாலு பேருமா தூக்கிக் கொண்டு போயிடலாம்னு இருக்கிறோம். வேறே என்ன செய்யறது? கோயிலைத் திறந்தாகணும்.” “நான் வாணா வரேன்?” “நீங்களா? என்னத்துக்காக? பேசாம நல்ல புள்ளையா இருங்க. இது ரொம்ப ஆபத்தான சமாச்சாரம். தனியாளோட போடற சண்டையில்லே…” “மோசமா போச்சு! பிழைக்க இடமா இல்லை வேறே?” என்று இழுத்தேன். எனக்கு பயமாகத்தான் இருந்தது. “இதபாருங்க, எனக்காகச் சொல்ல வேணாம். நான் ஒண்ணும் உங்களைப் பற்றி தப்பா நெனைச்சுக்க மாட்டேன். நிசம்மா தைரியம் இருந்துதுன்னா வாங்க இல்லே… எனக்காக…” “பரவாயில்லைங்க” “என்னமோ உங்க இஷ்டம், ஆனா தெருவுக்கு மட்டும் விளக்கு கிடையாது. நாளை ராத்திரி வரையிலும் நிச்சயமாகக் கிடைாது. அந்த துர்க்கை அம்மனுக்கும் அந்த பொண்ணுக்கும் அவ்வளவு ராசி. விளக்கு கிடையாது இப்பவே சொல்லிப்பிட்டேன்-” “சரி” விளக்கை அணைத்து வாசல் கதவைச் சாத்திக் கொள்ளச் சொல்லிவிட்டுச் துண்டைபோட்டுக் கொண்டு கிளம்பினார் அவர். இருட்டில் தட்டித் தட்டி கிழக்கு வீதி வெளிச்சத்திற்கு வந்தோம்.  ஆணை ஸு. குஞ்சிதபாதம் நன்னிலத்துக்கு அருகில் உள்ள தூத்துக்குடியில் 1914 ஆம் ஆண்டு பிறந்த ஆணை குஞ்சிதபாதம் பன்மொழி இலக்கியத்திலும் தேர்ச்சி உடையவர். அத்தி பூத்தாற்போல அபூர்வமாகச் சிறுகதை எழுதினாலும் தனக்கென்ற முகத்தோடு எழுதிய ஒப்பற்ற சிறுகதையாசிரியர். நல்ல பிசாசு என்ற ஒரு சிறுகதை தொகுப்பு மட்டுமே அச்சில் வந்திருப்பதாக அறியமுடிகிறது. நவீன தமிழ் இலக்கியத்தில் ஒரு நூறு சிறுகதை தொகுதி தேர்வு செய்தால் நிச்சயம் நல்ல பிசாசு விடுபடவே முடியாத தொகுப்பு என்று உறுதியாகச் செல்லலாம். தேவகியின் திருமணம் அபலைகள் அழகாலே அழிந்ததும், அரிகளை அம்பாலே அழித்ததும், அகதிகளை அருளாலே அளித்ததும், தக்கார்க்குத் தக்க கருவிகளையுடையாராய் விளங்கும் சக்ரவர்த்தித்திருமகன் கதாப்பிரவசனம் இன்றோடு முடிவு பெறும். நிகழ்த்தியவரோ பிரசித்தி பெற்ற உபந்தியாசகர் மதுராந்தகம் உபய வேதாந்த ஸ்ரீ சுந்தரவரதாச்சாரியார் சுவாமிகள், நிகழ்ந்த இடமோ தர்மரத்னகர ஸ்ரீ ரங்கபாஷ்யம் நாயுடு அவர்களுடைய திருமாளிகை. கேட்கவா வேண்டும்? ஒரு மாத காலமாகக் குதூகல விழாவாகவே இருந்தது. பௌராணிகர் மாதூர்யமும் காம்பீர்யமும் நிரம்பிய குரலில் பெரியவாச்சான் பிள்ளை என்ன, கோவிந்தராஜர் என்ன இப்பேர்க்கொத்த மகானுபாவர்களின் வியாக்யானங்களை அநுசரித்து வெகு நுட்பமான கருத்துக்களைப் பண்டிதர்களும் மெச்சும் வண்ணம் சொன்னார். ஆங்காங்குப் பொருத்தமான கட்டங்களில் மாமியார்-மருமகள் மனஸ்தாபம் பற்றியும், கொடுக்கல் வாங்கல், விஷயங்களில் கோர்ட்டு விஷயங்கள் பற்றியும் நகைச்சுவை ததும்புகின்ற உபகதைகள் பல சொல்லி ஜனரஞ்சகமாகவும் கதைப்போக்கைத் தெளிவு பண்ணினார். கம்பன் காவியத்தில் சடையப்ப வள்ளலுக்கு இடம் கொடுத்தது போல தர்மரத்னகர ரங்கபாஷ்யம் நாயுடுவையும் தம் வாக்கு சாதுரியத்தினால் வைக்கிற இடத்தில் வைத்துப் புகழ்ந்து விடவும் அவர் மறக்கவில்லை. செவிக்கினிய விருந்துக்குப் பிறகு நாவுக்கினிய பகவத் பிரசாதமும் தினம் தினம் கிடைத்துக் கொண்டிருந்தபோது கூட்டத்திற்குக் குறைவேது? இன்று பட்டாபிஷேக வைபவத்துடன் உபந்நியாசம் பூர்த்தியாகும் போது இந்தக் காலச் சம்பிரதாயத்தை ஓட்டி. பாகவதருக்குப் பொன்னாடை போர்த்துவதற்கு ஸ்ரீ நாயுடு ஏற்பாடு செய்திருந்தார். மந்திரி மகேச குமார சர்மா தலைமை வகிக்க இசைந்து வந்திருந்தார். நகரத்திலுள்ள பிரமுகர் அனைவரும் பிரசன்னமாகியிருந்தனர். ஜாஜ்வல்யமாக ஒளியலங்காரம் செய்திருந்த மேடையின் மேல் பாகவதர் துவாச நாமங்களும், அகலக்கரையுள்ள காஞ்சிபுரம் பத்தாறு முழ வேஷ்டிகளும், வழுக்கை யொதுக்கிப் பின் தள்ளிவிட்ட நரைத்த குடுமியும் சோபையளிக்க, முக மலர்ச்சியுடன் வீற்றிருந்தார். ஒரு பக்கத்தில் பெரிய அளவில் முரீராம பட்டாபிஷேகப் படம் மலர் மாலைகளால் ஜோடித்த கருங்காலி மர விமானத்தில் பொருத்தி வைக்கப் பெற்றிருந்தது. அதன் முன் ஆள் உயரமுள்ள இரண்டு வெள்ளிக் குத்து விளக்குகள் நாயுடுவின் செல்வ நிலையை நிதானமாக விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தன. மணி எட்டு அடித்ததும் மெல்லிய குரலில் பெளராணிகர் தியான லோகத்தைச் சொல்லிவிட்டுக் கணைத்துக்கொண்டார். ஒலிபெருக்கியும் ஹூங்காரம் செய்தது. கூட்டத்தின் ஆரவாரம் அடங்கியது. நிசப்தம் நிலவியது. ராவண வதம் ஆன அனந்தராம் கிரகணம் விட்டுப் பிரகாசியா நின்ற சந்திரனைப் போன்ற பிராட்டியாரின் வதனத்தைப் பக்தியோடு ஆஞ்சநேயர் தரிசிக்கிறார். சிதை சிறைப்பட்டிருந்த காலத்தில் தேவியாரைக் குரூரமாக ஹிம்சித்த அரக்கியரைப் பார்த்து அவர்களை ஹதம் செய்வதாகத் துடிக்கிறார். சிதை ஹனுமானைப் பார்த்து, “அப்பனே, தவறு இழைக்காதவரும் உலகில் உண்டோ? பணிப் பெண்களான இவர்கள், உத்தரவுக்குக் கீழ்ப் படிந்தன்றோ இங்ஙனம் நடந்திருக்கிறார்கள்? ஆகையால் இவர்களை ஹிம்சிப்பது தகாது” என்று திருவாய் மலர்ந்தருளியதும், ” தேவியின் கருணையுள்ளத்துக்கு இணை எது?” என்று வியப்படைகிறாராம் ஆஞ்சநேயர் பக்தர்கள் அமிருதமாக பாவிக்கும் தகஸ்சித்த அபராத்யதி (குற்றமிழைக்காதவன் எவனுமில்லை) என்ற பிராட்டியின் வார்த்தைகளுக்குப் பல்வேறு அர்த்தங்களை எடுத்துரைத்து, ‘எந்தப் பாவியும் பிராட்டியின் பொன்னடியை அடைந்து உய்வு பெறலாம்’ என்பதாகத்தானே தமக்கே உரிய பாணியில் பெளராணிகர் விளக்கம் கூறினார். சபையில் இருந்த ஒவ்வொரு ஜீவாத்மாவுக்கும் இந்தக் கூட்டத்திலே தத்தம் மனநிலையைப் பரிசீலனை செய்து கொள்ள அவகாசம் கொடுத்துவிட்டு, உத்தரீயத்தினால் எதிரில் மறைத்துக் கொண்டு. கொஞ்சம் பால் சாப்பிட்டார் பாகவதர். சிறிதுநேரம் மெளனமாகப் பாவ புண்ணியங்களுக்குக் கணக்குப் போட்டு, ஐந்தொகை எடுத்துக்கொண்டிருந்த ஜனக்கூட்டம் பாகவதர் சொன்ன ஓர் உபகதையினால் குபிரென்று மெய்மறந்து சிரித்தது. இந்தப் பிரகாரம் ஜனங்களின் சிந்தனையையும் உணர்ச்சியையும் பொம்மலாட்டத்தில் பாவைகளை சூத்திரக் கயிற்றால் ஆட்டி வைப்பதுபோலத் தமது அருமையான பேச்சுத் திறமையால் அழைத்துக்கொண்டே பட்டாபிஷேக அவசரத்தைக் கிட்டி நிறுத்தினார் பாகவதர். ஶ்ரீரங்கபாஷ்யம் நாயுடு அவர்கள் எழுந்து இவ்வளவு காலமாகத் தொடர்ந்து கதா காலட்சேபத்துக்கு வந்திருந்த மகா ஜனங்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, மகாஜனங்களின் சார்பாகப் பொன்னாடையைப் போர்த்திப் பாகவதருக்குச் சம்மானம் அளிக்கும்படி வினயமாகக் கேட்டுக்கொண்டார் மந்திரியை. மந்திரிகளிடையே அழகு மிக்கரான மகேச குமார சர்மா புன்னகையுடன் எழுந்து பாகவதரையும், நாயுடுவையும், சபையோரையும் முறையே கை கூப்பியபடி பார்த்து வணங்கினார். நாயுடு எடுத்துப் பிரித்துக் கொடுக்கப் பொன்னாடையை வாங்கி மகேச குமார சர்மா பாகவதருக்குப் போர்த்தினார். பெரியதொரு மலர் மாலையை அணிவித்தார். பளிச்சுப் பளிச்சென்று புகைப்படக் கருவிகள் மின்னல் வெளிச்சத்தை வர்ஷித்தன. பழங்களும், புஷ்பங்களும் நிரம்பிய பெரிய வெள்ளித் தாம்பாளத்துடன் ஆயிரம் வராகன் அடங்கிய பொற்கிழியைப் பாகவதருக்குச் சம்மானம் அளித்து மந்திரி பேசினார்; “தாய்மார்களே, ரசிகமணிகளே, இன்று இதில் பெரியவர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்வதை மகத்தான பாக்கியமாகக் கருதுகிறேன். பத்திரிகைகளும், மலிவு நாவல்களும், அதிகமாகிவிட்ட இக்காலத்தில் ராமாயணத்தைப் படிக்கிறவர்கள் குறைவு. பாகவதர் அவர்களைப் போன்ற மகான்கள் உபந்நியாசம் செய்வதனால்தான் ராமாயணம் மறைந்து போய்விடாமல் இருக்கிறது என்று நம்புகிறேன். ராமாயணத்தைக் கேட்கிறவர்களே அதிகம். படிக்கிறவர்கள் அதிகமில்லை. உங்களிலே, வீட்டுக்குப்போய் ராமாயணத்தை எடுத்துவைத்துக் கொண்டு படிக்கிறவர்களைக் கை துர்க்கச் சொன்னால் சிறுபான்மையாரே கைதூக்குவீர்கள் என்பது எனக்குத் தெரியும். இந்தக்காலத்து மனிதர்களுக்கு எதையும் சுவாரஸ்யமான முறையில் வழங்கவேண்டும். ருசியில்லாத விஷயங்களில் ஜனங்களுக்கு ஈடுபாடு கிடையாது. அதனால் பாகவதர் அவர்கள் ரசமான உபகதைகள்சொல்லி மக்களின் கவனத்தைக் கவர்ந்து இடையிடையே ஸத்விஷயங்களைப் போதனை செய்கிறார்கள். அழகான பெட்டிகளில் மிட்டாய்களை வியாபாரம் செய்கிறார்கள். மிட்டாய் தேவையிராவிட்டாலும், வர்ணப்படம் தீட்டிய பெட்டிகளுக்காக வாங்குகிறோம் அல்லவா? பெட்டியை வாங்கி அவைகளைக் காலி செய்வதற்காக மிட்டாயைச் சாப்பிடுகிறோம். (கரகோஷம்) அப்படிப்போல, பாகவதர் அவர்களுடைய உபகதைகளுக்காக வந்து ராமாயணம் கேட்கிறவர்கள் பலர் இருக்கிறார்கள். (சிரிப்பு) சிரிக்கிறதிலே பயனில்லை. வெறும் ராமாயணத்தைச் சொல்லுங்கள். எத்தனை பேர் வந்து கேட்பார்கள்? உபகதைகள் சொல்வதைப் பற்றியும் நான் தவறாகச் சொல்லவில்லை. அவைகளுள் எவ்வளவோ அடிப்படை உண்மைகள் பொதிந்திருக்கின்றன. தர்மரத்னாகர ஸ்ரீரங்கபாஷ்யம் நாயுடு அவர்கள் பல அரிய பெரிய தரும கைங்கரியங்கள் செய்திருக்கிறார்கள். தர்மரத்னாகரம் என்ற பட்டம் தக்க இடத்தைத் தான் நாடி அடைந்திருக்கிறது. பொது ஜனங்கள் சார்பாகப் பாகவதருக்குச் சம்மானம் செய்வதாக அவர்கள் வினயமாகச் சொல்லிக் கொண்டார்கள். ஆயிரம் வராகன்களை அவர்களே கொடுத்திருக்கிறார்கள். வெளியில் யாரிடமும் வசூல் செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். இப்படி நல்ல காரியங்களுக்குத் தம்முடைய தனத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிற ஸ்ரீ நாயுடுவுக்கு, ‘தர்மரத்னாகர’ என்ற பட்டத்தைச் சூட்டினவர்களும் நம் முடைய பாராட்டுக்குரியவர்கள்.” மந்திரி அமர்ந்ததும் ஸ்ரீ நாயுடுவின் நண்பர் என்ற முறையில் அழைப்பின் பேரில் வந்திருந்த திரு இளந்திங்கள் எழுந்து, “நான் இங்கு வந்து பேசுவதிலே உங்களுக்கு வியப்பே விளையும். இராமாயணத்துக்கும், எனக்கும் முரண்பாடு இருந்தாலும் ராமாயணம் ஒரு சிறந்த இலக்கியம் என்பதை நான் ஒப்புக்கொள்ளத் தயங்கவில்லை. உயர் திருவாளர் ஆச்சாரியார் அவர்கள் அற்புதமான பேச்சாளர். கடல் மடை திறந்ததன்ன, தங்கு தடையின்றிப் பொங்கிப் பெருகும் அவருடைய சொற்பொழிவு கேட்போரை மயங்க வைக்கிறது. வேறு எந்த நோக்குடன் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தபோதிலும் இலக்கிய வளர்ச்சிக்காக அள்ளி வழங்கியிருக்கும் திருவாளர் நாயுடுவின் ஈகைப் பண்பைப் பெரிதும் போற்றுகிறேன். தமிழ் மூதாட்டி சொன்னதுபோல் சித்திரம் எழுதுவது, மேடைமேலே பேசுவது எல்லாம் கைப்பழக்கம், நாப்பழக்கம். ஆனால் பிறவிக் குணந்தான் ஈகை. கை எதற்காக ஏற்பட்டிருக்கிறது என்றால் ஈவதற்கேதான்” என்று சொல்லும்போது ப்ஸ் ப்ஸ்ச என்று எங்கிருந்தோ வந்து காதில் விழுந்த அருவருப்புத் தொனியைக் கேட்டுவிட்டு, கெளரவமாக உட்கார்ந்துவிட்டார். அப்புறம் பல பிரமுகர்கள் ஒருவர் பின் ஒருவராக எழுந்து மேடைக்கு வந்து பேசினார்களோ, பேசினார்களோ அப்படி ஆசை தீர தர்மரத்னாகர ஸ்ரீ ரங்கபாஷ்யம் நாயுடுவுக்குப் புகழ்மாலைகளாகச் சூட்டிக்கொண்டே இருந்தார்கள். மந்திரி இடையிலே எழுந்து அவசர ஜோலி இருப்பதாகச் சொல்லிப் போய்விட்டார். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்ற மூன்றோடு நாலாவதாகப் புகழாசை என்பதைப் பெரியவர்கள் சேர்க்காமல் விட்டுவிட்டார்கள். காரணம் உண்டு. முதல் மூன்றும் ஓர் எல்லையிலே தெவிட்டிப் போகும். ஆனால் புகழாசையோ வளர்ந்து கொண்டே இருப்பது. முற்றும் துறந்த முனிவருக்கும் பிரமை ஊட்டக்கூடியதுதான் புகழாசை இன்றைப் பிரசங்கிகள் பலரும் நாயுடுவைப் புகழ்ந்தும் அவருக்குச் சலிப்பு ஏற்படவில்லை. உட்கார்ந்திருப்பதா எழுந்து போவதா என்று தீர்மானம் செய்து கொள்ள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த நீதிப்தி ஜனார்த்தனராவைப் பார்த்துக் பாகவதர், “அவ்விடத்திலிருந்தும் இரண்டு வார்த்தைகள் வரட்டுமே” என்றார். நீதிபதி ஜனார்த்தனராவ் எழுந்து கன்னட ஒசையுடன், பாகவதரு என்னையும் இரண்டு வார்த்தைகள் பிரஸ்தாபிக்க ஆக்ஞாபித்தாரு பரமசந்தோஷமாகுவது, பாகவதரு ரொம்ப ரொம்ப போதனை கொடுத்தாரு. அவருக்கே நம்ம வந்தன சொத்து, படிப்பு, கெளரவ எல்லாம் பூரணமான மனிஷ்யரு தர்மரத்னாகர ரங்கபாஷ்யநாயுடு அவரு. புருஷார்த்தம் எல்லாம் சித்தியாகி இருக்கிற அவருக்கே அரோக திடகாத்திரமுள்ள நீண்ட ஆயுளைக் கொடுக்கும்படி ஶ்ரீராமச்சந்திர மூர்த்தியைப் பிரார்த்திக்கிறேன்” என்று ரத் தினச் சுருக்கமாகப் பேசி உட்கார்ந்தார். குறுக்கு விசாரணை செய்வதில் வல்லவர் என்று பிரசித்தி பெற்ற வக்கீல் கனகலிங்கேசுவரய்யா எழுந்ததும் பாகவதர், “நீதிபதி தீர்ப்புக் கூறிய பிறகு வக்கீல்கள் பேசுவது வழக்கமில்லை” என்று சிரித்துக் கொண்டே சொன்னதும் சபையில் கொல்லென்று சிரிப்பொலி உண்டாயிற்று. கனகலிங்கேசுவரய்யாவும் சிரித்துக் கொண்டே அமர்ந்துவிட்டார். பட்டாபிஷேக வைபவம் மங்களமாக முடிந்து தின்பண்டங்களும், சந்தன தாம்பூலமும் வழங்கியதும் கூட்டம் கலைந்தது. 2 மறுநாள் காலை ஸ்ரீ ரங்கபாஷ்யம் நாயுடுவால் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியவில்லை. தலை பாரமாக இருந்தது. உளியை வைத்து நெற்றியில் அடிப்பது போலத் தலை வலித்துக் கொண்டிருந்தது. உடம்பெல்லாம் பூட்டுக்குப் பூட்டு ஸ்குரு திருப்பியைக் கொண்டு முடுக்குவது போல வேதனை ஏற்பட்டது. மெல்லத் தட்டுத் தடுமாறி எழுந்து டெலிபோன் அருகில் சென்று டாக்டரை வருமாறு அழைத்தார். எல்லாவிதமான சாதனங்களும் அமைந்திருந்த தம்முடைய விசாலமான அறையை ஒட்டியிருந்த ஸ்னான அறைக்குச் சென்று பல் விளக்கினார். அவரால் நிற்க முடியவில்லை. தள்ளாடிக் கொண்டே மறுபடியும் படுக்கைக்கு வந்து படுத்துக்கொண்டார். டாக்டர் வந்த பிறகு தான் ஸ்ரீ ரங்கபாஷ்யம் நாயுடுவுக்கு உடல்நிலை சரியில்லை என்பது வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரிய வந்தது. டாக்டர் பரிசோதனை செய்தபோது நாயுடுவுக்கு ஜூரம் இருப்பது தெரிந்தது. இருபுறத்து ஈரல்களிலும் கபம் கட்டியிருந்தது. “லேசான ஜூரம் தான்; நாளை சரியாகிவிடும்” என்று டாக்டர் சொல்லி நாயுடுவுக்கு இன்செக்ஷன் செய்தார். “நான் போய் ஒரு நர்சை அனுப்புகிறேன். மார்பின் மேல் ஆண்டிபிளாஜஸ்டைன் போடவேண்டும். சாயங்காலம் வருகிறேன்” என்று சொல்லி எழுந்திருந்தார். “அவசியமா என்ன?” என்று நாயுடு கேட்டார். “இல்லாவிட்டால் கபம் அதிகமாகும். அவசியம்தான்” என்றார் டாக்டர். “அது உங்களுக்கல்லவா தெரிந்த விஷயம்? உங்களிடம் ஒப்படைத்தாகிவிட்டது உடலை. என்ன செய்தாலும் ஒப்புக்கொண்டு தானே தீரவேண்டும்?” என்று நாயுடு சிரித்துக்கொண்டே கூறினார். டாக்டரும் கலகல என்று சிரித்துக்கொண்டு, “நான் வரட்டுமா?” என்று கைக் கெடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே வெளிக் கிளம்பினார். கட்டியிலின் ரப்பர் நுரை மெத்தையும் நாயுடுவுக்கு உறுத்தியது. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார். தர்மரத்னாகர ஶ்ரீ ரங்கபாஷ்யம் நாயுடு, “வாயில் வெள்ளிக்கரண்டியைக் கெளவிக் கொண்டு பிறக்கவில்லை.” கீழே இருந்து மேலே ஏறியவர். இருபத்துஏழு ரூபாய்ச் சம்பளத்தில் லைடன்ஹாம்ரோட்டில் ஒரு மரவாடியில் குமாஸ்தாவாக வாழ்க்கை தொடங்கிய அவர் சையது இப்ராஹிம் மரக்காயர் என்ற தம்முடைய கடை முதலாளியிடம் படித்துக் கொண்ட பாடத்தை இன்றளவும் மறக்கவில்லை. “பாஷ்யம் வியாபாரமும் ஒரு விதத்திலே நல்ல தேச சேவை தான். நல்ல சாமான்கள் எங்கு எங்குக் கிடைக்கும் என்று தேடிக்கொண்டு வந்து தேவைப்படுகிறவர்களுக்குக் குறைந்த விலைக்குக் கொடுப்பது உபகாரம் அல்லவா? ஒருவரை ஏமாற்ற வேண்டாம். போட்டியிட்டு மோசம் செய்யத் துணியவேண்டாம். ஜனங்களுக்கு நம்பிக்கை வேண்டும். அந்த ‘குட்வில்’ தான் நமக்கு எல்லாவற்றையும்விட சிறந்த மூலதனம்” என்று சையது இப்ராஹிம் மரக்காயர் சொன்ன வார்த்தைகள் பசுமரத்தாணி போலே நாயுடுவின் மனத்திலே பதிந்திருந்தன. இப்ராஹிமின் பிள்ளைகள் உதவாக்கரைகள். அவர் ஹஜ் யாத்திரை முடித்துவிட்டு வந்த பிறகு வியாபாரத்தில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொண்டார். கொள்முதல் செய்வது முதல் விற்பனை செய்வது வரை எல்லாப் பொறுப்புக்களையும் நாயுடுவிடமே ஒப்படைத்துவிட்டு, சர்வாந்தர்யாமியாய், சர்வசக்தியனாய் விளங்கும் கடவுளைத் தொழுது கொண்டே காலம் போக்கினார். நாயுடுவையும் ஒரு பங்காளியாகச் சேர்த்துக் கொண்டு இரண்டு வருஷங்களில் கடையையும் நாயுடுவிடம் பல தவணைகளில் விற்பனைப் பணம் கொடுக்கும்படி விற்றுவிட்டார். ஏகதேசம் நாயுடுவுக்குக் கடை சொந்தமான பிறகும் மரக்காயரை தினம் ஒரு தடவை பார்த்து அவர் அளவளாவிவிட்டு வந்தார். ஒருநாள் நாயுடு இப்ராஹிம் மரக்காயரின் பங்களாவுக்குப் போயிருந்தபோது அவர் சோபாவில் உட்கார்ந்து இஸ்லாமிய வேதப்புத்தகத்தின் வியாக்யானம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார். நாயுடுவைக் கண்டதும் மரக்காயர் எழுந்துவந்து அவர் கையைப் பிடித்துக் கொண்டு, “இங்கே வா, பாஷ்யம்- என் அருகில் உட்கார். நிறையச் சம்பாதித்துவிட்டேன். பிள்ளைகளுக்குச் சாமர்த்தியம் இருந்தால் சொத்தை வைத்துக் கொண்டிருக்கட்டும். உருப்படாதவர்களைப் பற்றிக் கவலைப்பட்டு என்ன பயன்? என் பிள்ளைகளைவிட உன்னிடம்தான் அப்பா எனக்குப் பிரியம். இனிமேல் எனக்கு ஒன்றும் நீ தரவேண்டியதில்லை. எப்போதும் கடவுளை நினை. ஆண்டவன் நல்ல லாபம் கொடுப்பான். உன் லாபத்தில் ஆறில் ஒரு பங்கு தர்மத்துக்காகக் கொடுத்துவிடு. நீ நல்ல பிள்ளை. இவ்வளவு உனக்குச் சொன்னால் போதும்” என்று நாத்தழுதழுக்க முதியவரான சையது இப்ராஹிம் மரக்காயர் சொன்னதும் நாயுடுவுக்கு நன்றியறிதலால் கண்களில் நீர் தளும்பியது. இந்தச் சம்பவத்தை இப்போது நினைக்கும்போதும் நாயுடுவுக்கு மயிர்கூச்சு ஏற்பட்டது. சையது இப்ராஹிம் காலமான பிறகு சிலகாலம் நாயுடு திக்கற்றவர் போல் இருந்தார். நாயுடுவுக்கு வாய்த்த மங்கைநல்லாளும் இல்லறத்தை நல்லறமாக நடத்த உறுதுணையாக இருந்தாள். மரக்காயருக்குக் கொடுத்த வாக்குப்படி நாயுடு தான தர்மங்கள் செய்து கொண்டிருந்தார். எந்த நல்ல காரியங்களுக்கு நிதி திரட்டினாலும் நாயுடுவின் பெயர் முதல் வரிசையில் இருக்கும். எந்த ஆஸ்பத்திரிக்குப் போனாலும் நாயுடுவின் பெயரில் வார்டு இருக்கும். கோயில்களில் தேசாந்திரிக் கட்டளைச் சீட்டுகள் அவர் பெயரால் வழங்கப்பட்டன. ஷேத்திரங்களில் சத்திரங்கள் கட்டினார். திவ்யப் பிரபந்தத்தை அச்சிட்டுப் பள்ளிக்கூடக் குழந்தைகளுக்கு இனாமாக வழங்கினார். வியாபாரம் நன்றாக வளர்ந்தோங்கியது. இரண்டு கிளைகள் ஏற்படுத்தினார். தொட்டதெல்லாம் பொன்னாயிற்று. தம்முடைய இரண்டு புதல்வர்களையும் வியாபாரத்திலேயே கலந்துகொள்ளச் செய்ய வேண்டுமென்பது அவருடைய விருப்பம். என்ன சொல்லியும் உத்தியோகத்திலேயே நாட்டமுடையவர்களாகப் பையன்கள் இருந்தார்கள். அவரவர் விருப்பம் என்று அதிகம் வற்புறுத்தாமல் விட்டுவிட்டார் நாயுடு. தம்முடைய மருமகனிடம் வியாபாரத்தை ஒப்படைத்துவிட்டு நாயுடு ஒய்வெடுத்துக் கொண்டார். ஐம்பது லட்சம் இருக்கும் என்று நாயுடுவின் சொத்துக்கு அவருடைய நண்பர்கள் சிலர் மதிப்புப் போட்டார்கள். 3 டாக்டர் வந்து போன பிறகு அரைமணி நேரம் கழித்து ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தாள் நாயுடு அவர்களின் மனைவி நாச்சியாரம்மாள். “ஜூரம் வந்துவிட்டதாமே! எனக்கு இப்போதுதான் தெரியும். இந்தப் பெண் நர்ஸாம். டாக்டர் அனுப்பியிருக்கிறார்” என்றாள் நாச்சியாரம்மாள். நாயுடுவின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள். “நல்ல காய்ச்சல். மருந்து கொடுத்தாரா டாக்டர்?” என்றாள். “என்னவோ இஞ்செக்ஷன் செய்தார். மார்பிலே பிளாஸ்திரி போட வேண்டுமென்றார்” என்று நாயுடு சொன்னார். “காப்பி, ஹார்லிக்ஸ், ஓவல் டின் ஏதாவது சாப்பிடுகிறீர்களா?” “ஒன்றும் இறங்காது போலிருக்கிறது. சாப்பிட்டால் வாந்தி எடுக்கும் என்று தோன்றுகிறது.” நாச்சியாரம்மாள், “ஏன் நின்று கொண்டிருக்கிறாய்? நீ செய்ய வேண்டியதைச் செய்யேன். ஏதாவது வேணுமா?” என்று நர்ஸைக் கேட்டாள். “இங்கே தான் ஹீட்டர், பம்பு, பாத்திரம் எல்லாம் இருக்றதனால் வேறு எதுவும் வேண்டாம்” என்று நர்ஸ் சொன்னாள்; சற்று நேரம் நின்றுவிட்டு நாச்சியாரம்மாள் போனாள். நர்ஸ் மருந்தைக் கொதிக்க வைத்துத் துணியில் தடவி நாயுடுவின் மார்பின் மேல் போட்டாள். “உடம்பு முழுவதும் வலிக்கிறதே. அதற்கு என்ன செய்யலாம்?” என்று அவளைக் கேட்டார் அவர். “இன்ப்ரா ரெட் வெளிச்சம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார் டாக்டர். காரிலே இருக்கிறது. கொண்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு அவள் வெளியே போனாள். ஓர் ஆள் ஒரு மின்சார விளக்கைக் கொண்டுவந்து உள்ளே வைத்தான்; நர்ஸ் அதன் ஒரு முனையைப் ’பிளக்’கில் செருகி நாயுடுவின் முன் வைத்தாள். “இதெல்லாம் வேண்டாம், அம்மா! சொன்ன கேசவலு, கைகால் எல்லாம் பிடித்துவிடு!” என்றார் நாயுடு. “ஆள் பிடிக்க வேண்டாம். இந்த வெளிச்சம் நல்லது, வலி குறைந்துவிட நல்ல சிகிச்சை” என்றாள் நர்ஸ். வேலைக்காரனைப் பார்த்து, “கொஞ்சம் காப்பி கொண்டா” என்று சொன்னாள். அவளுடைய குரல் இன்பம் அளித்தது. அவளுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டுமென்று நாயுடுவுக்குத் தோன்றியது. “உன் பேர் என்னம்மா?” என்று கேட்டார் அவர். “தேவகி” என்றாள். “நல்ல பெயராகத் தான் இருக்கிறது. உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதோ?” பதில் இல்லை. “நான் இப்படிக் கேட்டது தவறா?” “இல்லை, இல்லை. தவறு என்ன? இன்னும் எனக்கு ஆகவில்லை.” “ஏன் இன்னும் செய்துகொள்ளவில்லை? இந்தக் கேள்வியும் தப்பு இல்லையே?” “நீங்கள் பெரியவர். கேட்டால் என்ன தப்பு? போன வருஷம் என் தகப்பனார் செத்துப் போனார். வெகு காலமாய் உடம்பு சுகமில்லாமல் இருந்தார். சம்பாத்தியம் இல்லை. வீட்டின் பேரில் கடன் இருக்கிறது. தம்பி ஒரு பையன் படிக்கிறான். அம்மாவால் என்ன செய்யமுடியும்? தங்கை ஒரு பெண் இருக்கிறாள். நான்தான் இவர்களைக் கவனிக்க வேண்டும்.” நாயுடு தேவகியின் முகபாவத்தை ஆராய்பவர் போல் நோக்கினார். அவர் எதுவுமே புரிந்து கொள்ள முடியவில்லை. பெண்களை ஏறிட்டுப் பார்த்ததே இல்லை அவர். இதுவரையில் இவ்வளவு நெருங்கி அவருடன் எந்தப் பெண்ணும் உரையாடச் சந்தர்ப்பமே வாய்த்ததில்லை. அறுபது வயது தாண்டி நோய்வாய்ப்பட்ட தருணத்தில் ஒரு பெண்ணுடன் தனிமையில் பேசுகிறபோது சந்தோசம் அவருடைய மனத்தில் உண்டாயிற்று. ஆள் காப்பியைக் கொண்டு வந்தான். ஆற்றி டபராவிலிருந்து தம்ளரில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, தேவகி நாயுடுவிடம் கொடுத்துக் கொண்டிருந்தாள். நாயுடு அமுதமாக எண்ணிப் பருகினார். “நீ என்ன படித்திருக்கிறாய்?” “பள்ளிக்கூடத்தில் ஐந்தாவது பாரம் வரையில் படித்தேன். அதன் பிறகு ஒரு தமிழ்ப் பண்டிதரிடம் பாடம் கேட்டுத் தமிழ்ப் பிரவேசப் பரீஷை எழுதித் தேறினேன். தமிழ்ப் புலவர் பரீஷை எழுத வேண்டுமென்று எனக்கு ஆவல்தான். ஆனால் என்னவோ, ஆஸ்பத்திரியில் ஒருவருஷம் பயிற்சியடைந்து நர்ஸ் ஆனேன். இன்னும் தமிழ் படிக்கவேண்டும் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். அவகாசம் இல்லை.” “அப்படியா? படிக்கிறதென்றால் படியேன். நான் உனக்கு ஒத்தாசை பண்ணுகிறேன்.” “இப்படி யாரும் என்னை அன்புடன் விசாரித்ததில்லை. அபிமானத்துடன் உதவியதில்லை.” “என்னை உனக்கு முன்னால் தெரியுமா?” “பார்த்திருக்கிறேன். உங்களைத் தெரிந்து கொள்ளாதவர் சென்னப்பட்டினத்தில் யாரும் இருக்க முடியுமா?” நாயுடுவுக்கு நோயின் வேதனை இல்லை. இன்பக் கனவு காண்பது போல இருந்தார். தேவகியின் முகத்தைப் பார்த்தார். அவள் பிச்சோடாவைப் பிணைத்திருந்த வலை அவருடைய மனத்தையும் பிணைத்தது. ’வயசுக்கும் சமூகநிலைமைக்கும் சம்பந்தம் இல்லாதது காதல் என்று எங்கோ படித்திருந்தார். அதை எண்ணி இப்போது திடுக்கிட்டுப் போனார் நாயுடு, தம்மிடமே அச்சம் அடைந்தார் அவர். அசட்டுப் பிசட்டென்று எதையாவது பேசிவிடுவோமோ என்று மிரண்டார். கண்களை மூடிய வண்ணம் அசைவற்றுப் படுத்துக் கொண்டிருந்தார் அவர். “வலி இப்போது குறைந்திருக்குமே! இந்த விளக்கை அணைத்து விடட்டுமா?” என்று கேட்டாள் தேவகி. ‘உம்’ என்று முனகிக்கொண்டே நாயுடு கண்ணைத் திறந்தார். பரிசுத்தமான எழிலுடன் மிளிர்ந்த அந்தப் பூங்கொடியை இமைகள் மூடாமல் நோக்கினார். “ஏன் நிற்கிறாய் தேவகி? நாற்காலியில் உட்காரேன். முழங்கையில் வலி இருக்கிறது. அந்த பீரோவில் அமிர்தாஞ்சனம் இருக்கிறது அதை எடுத்துக்கொடு. தடவிக் கொண்டால் வலிக்கு நல்லது.” தேவகி எடுத்துக் கொஞ்சம் மெழுகை அவருடைய முழங்கையில் தடவினாள். “நான் தடவிக் கொள்கிறேன். இங்கே பாட்டிலைக் கொடு” என்று சொல்லிக்கொண்டே கை நீட்டினார் நாயுடு. “பரவாயில்லை. நானே போடுகிறேன்” என்று தேவகி சொல்லிக்கொண்டே இன்னும் கொஞ்சம் மெழுகை அவருடைய முழங்கையில் வைத்துத் தேய்த்தாள். நாயுடுவுக்கு இதமாக இருந்தது. “நீ திரும்பிப் போக நேரமாகவில்லையா?” என்று கேட்டார் அவர். அவள் அங்கேயே இருந்தால் தமக்குப் புத்தி கெட்டுப்போகும் என்று திகில் அடைந்தார். “சாயங்காலம் டாக்டர் வருகிற வரையில் என்னை இங்கே இருக்கச் சொன்னார். மத்தியானம் டெம்ப்ரேச்சர் பார்த்து போன் செய்யச் சொன்னார்.” நாயுடுவின் மனத்தில் உணர்ச்சிக்கும், சிந்தனைக்கும் பெரிய போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. ‘ஹே ராமச்சந்திரா! இது என்ன சோதனை? தவறு இழைத்துவிட்டுப் பச்சாத்தாபமடைந்த அகலிகைக்கும் நற்கதி அளித்த பதிதபாவன கருணாமூர்த் தியே! இப்பளவு காலம் புனிதமான வாழ்க்கையிலேயே கழித்த எனக்கு இப்போது தான் இந்த சித்தவிகாரம் உண்டாகிறது?’ என்று எண்ணித் துடித்துப் போனார். “என்னம்மா தேவகி. நீ தமிழ் படித்திருக்கிறாயே, இந்தப் பாட்டு யார் பாடினது, சொல்லு, ‘மோகத்தைக் கொன்றுவிடு, அல்லாலென்றன் மூச்சை நிறுத்திவிடு’ என்று தொடங்கும் பாட்டு.” “இதில் என்ன சந்தேகம் வந்தது? மகாகவி பாரதியார் பாடிய பாட்டு.” “அசடே, அசடே! வேதநாயகம் பிள்ளை பாட்டல்லவா இது?” “ஞாபகப் பிசகாகச் சொல்கிறீர்கள் பாரதியார் பாடினது.” நாயுடு கலகலவெனச் சிரித்துக்கொண்டே, “இல்லவே இல்லை, பாரதியார் இதைப் பாடியதில்லை. வேதநாயகம் பிள்ளை பாடியதாகக் கூறப்பட்டது. இதுகூடத் தெரியாமலா தமிழ் இலக்கியம் படிக்கிறேன் என்கிறாய்!” என்றார். “பாரதியார் பாடியது என்று நிச்சயமாகச் சொல்வேன்” என்று உறுதியாகச் சொன்னாள் தேவகி. “பந்தயம் ஆயிரம் ரூபாய். வேதநாயகம்பிள்ளை பாடியதுதான்.” “பந்தயம் போட நான் தயாராக இல்லை. என்னிடம் ஆயிரம் ரூபாய் இல்லை. சந்தேகமே இல்லாமல் பாரதிதான் பாடினார் என்று சொல்கிறேன்.” “அந்தக் கண்ணாடி பீரோவில் புத்தகங்கள் இருக்கின்றன. பாரதியார் கவிதைத் திரட்டை எடுத்துக் காண்பி. அதிலே இந்தப் பாட்டு இருந்தால் நான் உனக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன். இல்லாவிட்டால் நீ எனக்கு ஒன்றும் தரவேண்டாம்.” தேவகி புத்தகத்தை எடுத்துப் பிரித்து அதிலே அந்தப் பாடலைக் காண்பித்தாள். “நான் தோற்றுப் போனதாக ஒப்புக்கொள்கிறேன். உனக்கு நான் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிடுகிறேன்.” “ஆயிரம் ரூபாயா? எதற்காக? நான் அவ்வளவு ரூபாய் வாங்கிக் கொள்ளும்படி என்ன செய்துவிட்டேன்?” என்று வியப்புடன் கேட்டாள் தேவகி. “பந்தயத்தில் தோற்றுப்போனால் நிபந்தனைப்படி நான் கொடுத்துதானே ஆகவேண்டும்?” என்று சொல்லிக்கொண்டே தலையணையடியிலிருந்து சாவியை எடுத்து, தேவகியிடம் கொடுத்து, “அந்த இரும்புப் பெட்டியைத் திற, அதிலிருந்து ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொள்” என்றார். தேவகிக்கும் பயமாக இருந்தது. “வேண்டாம், வேண்டாம்; எனக்குப் பணம் வேண்டாம்” என்று சொன்னாள். நாயுடு சாவிக்கொத்தை மறுபடியும் தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு,“தேவகி, நீ எவ்வளவு கெட்டிக்காரியாக இருக்கிறாயோ அவ்வளவு அழகியாகவும் இருக்கிறாய்” என்றார் தேவகிக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவளுடைய கண்கள் மருட்சியடைந்தன. நாணத்தினால் முகம் சிவந்தது. தலைகுனிந்து குதிகாலை மையமாக வைத்துக் கால் கட்டைவிரல் பூமியில் வட்டம் போடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ’சொல்லக்கூடாததைச் சொல்லிவிட்டோமோ?” என்று தவித்தார் அவரும், தேவகி ஜன்னலோரம் போய்க் கீழே உட்கார்ந்துகொண்டு பாரதியார் கவிதைப் புத்தகத்தைப் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தாள். நாயுடுவின் மனத்தில் எண்ணங்கள் அலையலையாக மோதிக் கொண்டிருந்தன. மனிதனும் ஒரு மிருகம்தானா? சர்க்கஸில் பயத்தினால் கொடிய விலங்குகளும் கட்டுக்கு அடங்கியிருப்பது மாதிரியே மனிதனும் பயத்தினால் கட்டுப்பாட்டோடு இருக்கிறானா? தெய்வத்தினிடம் பயப்படுகிறான் மனிதன். தீய காரியங்களுக்குத் தண்டனை விதிகளும், அரசாங்கத்தினிடம் பயப்படுகிறான் மனிதன். இந்த மாதிரி பயங்கள் தோன்றாமலே இருந்தால் உலகம் வசிக்கத் தகுதியில்லாததாகவே ஆகியிருக்கும் அல்லவா? மனிதர்கள் தாமாக ஏற்படுத் திக்கொண்ட எல்லாக் கட்டுப்பாடுகளையும் நிலைகுலைக்கும் சண்டமாருதமாக அல்லவா இருக்கிறது இயற்கை வேகம்? தேவியைப் பார்தார் நாயுடு, ’சே! கள்ளம் கபடம் இல்லாத பெண்ணல்லவா இவள்? பரம சாத்வீகமாக, நிர்மலமாக, வர்ணசாலைக் கதவைத் திறந்துகொண்டு நிற்கும் சீதாபிராட்டியின் முன் நின்ற ராவணனுக்கு எப்படித்தான் காமவிகாரம் ஏற்பட்டிருக்க முடியும்? என்னைப் போல் அழகின் அழைப்பிற்கும், மனசாட்சியின் அங்குசத் தாக்குதலுக்கும் இடையே அவன் மனம் ஊசலாடிகிறதா? சந்திர, சூரியர்களின்றித் தனியே சந்திப்பொழுதை நள்ளிருள் கிட்டுவதைப் போல, பிராட்டியாரை ராவணன் கிட்டியதாகப் பாகவதர் சொன்ன உபமானம் தான் எவ்வளவு அழகு! என் மனத்தில் எவ்வளவு இருள் மண்டியிருக்கிறது! “தேவகி” “ஏன்?” அவரைப் பற்றி அவள் எதுவும் தவறாக நினைத்துக் கொண்டதாக அவள் குரல் தொனிக்கவில்லை. “போய்ச் சாப்பிட்டு வாயேன்.” “பசி இல்லை. காலை வருமுன் ஆகாரம் சாப்பிட்டு வந்தேன்.” “இல்லை அம்மா! அழைத்துப் போகச் சொல்லட்டுமா?” “அம்மாவே சாப்பிடக் கூப்பிடச் சொல்லுவார்கள்.” “மறந்து போய்விடப் போகிறார்கள்.” “அவர்கள் மறந்தாலும் நீங்கள் மறக்கமாட்டீர்களே!” நாயுடுவுக்குக் குழப்பம் அதிகமாக இருந்தது. என் மனநிலையை இவள் புரிந்துகொண்டு விட்டாளோ? புரிந்துகொண்டுதான் எனக்குத் திருப்தியாகவும் பேசுகிறாளோ? அப்படியானால் நான் இவளுக்குப் பணம் கொடுப்பதற்காகத்தான் கவிதைப் பந்தயம் போட்டேன் என்று இவள் தெரிந்த கொண்டிருப்பாளோ? என் தோல்வியால் நான் பணம் கொடுக்கும் முயற்சியில் வெற்றி பெறவில்லையே! என்று செக்குமாடுகள் போல அவர் யோசனைகள் எல்லாம் தேவகியையே சுழன்று சுழன்று வந்தன. “போம்மா! போ! சமையற்காரனைப் சாப்பாடு போடச் சொல்லு. எனக்கும் அவர்களுக்கும் ஒத்துவராது.” “நீங்கள் என்னிடம் பிரியமாக இருக்கிறீர்கள்.” பிரியம்! பெருமூச்சுவிட்டார் நாயுடு. இந்தப் பிரியம் அவர் வாழ்க்கையில் கணம் கனமாகத் திரட்டி உருவாக்கியிருக்கும் நொடியில் அழித்துவிடக் கூடிய கனலாக இருக்குமோ? ஜெகசிற்பியன் ‘ஜீவகீதம்’ ‘சொர்க்கத்தின் நிழல்’ போன்ற பிரபலமான நாவல்களின் சொந்தக்காரரான ஜெகசிற்பியன் பிறந்து வளர்ந்தது மயிலாடுதுறை. நாவலில் அவர் அளித்துள்ள பங்களிப்பைப் போல் சிறுகதையிலும் அவர் முத்திரை பதித்திருக்கிறார். ‘சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்’ எழுதியவர்கள் இவரை விடுவித்தது தமிழுக்கு உண்மையான வரலாற்றைத் தரவில்லை என்பது நிரூபணமாகிறது. சிறுபத்திரிக்கையில் அவர் அதிகம் எழுதவில்லை, வெகுஜனபத்திரிக்கையில் தான் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள சிறந்த சில கதைகளுள் ‘நரிக்குறத்தி’ குறிப்பிடத்தகுந்தது. இந்தக் கதை ஆனந்தவிகடன் நடத்திய வெள்ளிவிழாப் போட்டியில் (1957) பரிசு பெற்றது. ’ஊமைக்குயில், சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் தி.ஜ.ர. “ஜெகசிற்பியன் கதைகளில் உள்ளுறையும் ஜீவன் ஒன்று இருக்கிறது. அது நம் உள்ளத்தோடு உறவு கொண்டு விடுகிறது. அதை நாம் எடுத்துரைப்பது சாத்தியம் அல்லது. ஆயினும் பல அம்ச லட்சணங்கள் சேர்ந்த சமுதாய சோபை ஒன்று வெளிப்படப்புலப்படும். அதை நாம் காணமுடியும்…” என்று குறிப்பிட்டுள்ளார். ஜெகசிற்பியனின் படைப்பின் உள்விவகாரங்களை கண்டு கொண்டு தமிழன் பெருமைப்பட முடியாது. நரிக்குறத்தி தர்மமிகு தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னைப் பட்டணத்தில் நெடுஞ்சாலையொன்று ரயில் பாதையைக் குறுக்கே வெட்டிக்கொண்டு பாழ் இடமான ஒரு லெவல் கிராஸ். அந்த லெவல்கிராஸிங் கதவுகள் வழக்கம்போல் சாத்திக் கிடந்தன. அவை சாத்தப்பெற்ற இரண்டொரு நிமிஷங்களில் ஜனங்கள் வந்து குழுமினர். அப்புறம் வழக்கம்போல் கார், பஸ், லாரி, ரிக்ஷா, ஜட்கா, சைக்கிள் முதலான வாகனாதிகள் போக்குவரத்து விடுதிகளை அனுசரித்து, சாலையின் இடது பக்கங்களில் எதிர்ப்புதிரிட்டு ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நிற்கலாயின. சென்னை நகரமே ஸ்தம்பித்துப் போன மாதிரி ஒரு தோற்றம். சங்கீதக் கச்சேரிகளில் புடவை ரகங்களைப் பற்றியபேச்சும், மளிகைக் கடைகளில் ரூபாய்க்குப் பதினாறுபடி அரிசி விற்ற காலத்தைப் பற்றிய பேச்சும், எழுத்தாளர் மாநாடுகளில் தனித்தமிழ், கலப்படத்தமிழ் பற்றிய பேச்சும் வழக்கமாக அடிபடுவதைப்போல, அந்த ரயில்வே கிராஸிங் அருகில் குழுமி நின்ற ஜனங்களிடையே நகரசபை நிர்வாகத்தின் கையாலாகத் தன்மை, சர்க்காரின் பாராமுகம், ரயில்வே போர்டின் அசமந்தம், ஐந்தாண்டுத் திட்டங்களிலுள்ள குறைகள், தேர்தல் கால வாக்குறுதிகள், பற்றாக்குறை பட்ஜட் விவாதப் பிரசங்க நினைவுகள், தனி மனித உரிமைகள், அரசியல் கட்சிகளின் செயல்திறன், கொள்கைக் குழப்பம் முதலானவை பற்றிய வழக்கமான ‘பாஷன் பேச்சுக்கள்’ கிளம்பின. அவரவர்க்குரிய அவசரம், தேவை, காரியம் ஆகியவற்றைப் பொறுத்து, அந்தப் பேச்சுக்கள் ஆத்திரமாகவும், அலுப்பாகவும், சீறலாகவும், சலிப்பாகவும், கோபமாகவும், குத்தலாகவும், குறும்பாகவும் வெளிப்பட்டன. சிலர். வாய்விட்டுப் பேசாமலே முகத்தைச் களிப்பதும், கையைச் சொடுக்குவதும், காலைத் தேய்ப்பதும் பெருமூச்சு விடுவதுமாகத் தமது மன அவசங்களை வெளிக்காட்டினர். மற்றும் சிலர், தங்கள் பொறுமை பறிபோய்க் கொண்டிருப்பதைச் சைக்கிள் மணிகளாலும், ஹாரன்களாலும் தெரியப்படுத்தினர். வேறு சிலர், அந்தக் கிராஸிங் கதவருகில் அரக்கனின் கண்ணைப் போல் ஒளிவிட்டு எரிந்து கொண்டிருந்த சிவப்பு விளக்கை அமைதியாக ஏறிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தனர். இப்படியாகத்தானே அங்கு ஜனநாயக தத்துவத்தின் ஒரு வீரியப்பகுதிய பிண்டப்பிரமாணமாக உருவாகிக் கொண்டிருந்தது! ஆனால் அந்தச்சாலையின் இரு முனைகளிலும் குழுமி நின்ற நூற்றுக்கணக்கான ஜனங்களுடையவும் ஆத்திர அவசர கோபதாபக் குமுறல்களைக் கொஞ்சமும் சட்டை செய்யாதவனாய்- அத்தனை பேருடைய உரிமைகளையும் பறித்து, அவ்வளவு பேரையும் தடுத்து நிறுத்திப் போட்டுவிட்ட பெருமையில் திளைத்தவனாய்-லெவல் கிராஸிங்கின் உள்ளே, ரயில் பாதையோரம், கம்பீர நடைபோட்டுக் கொண்டிருந்தான் கேட் கீப்பர். ஆயிரக்கணக்கான கண்கள் அவனைக் கொத்திப் பிடுங்குவது போல் பார்த்துக் கொண்டிருப்பதைக்கூட லட்சியம் செய்யாமல், ருத்திரவெளியில் தன்னந்தனியே உலாவும் மந்திரவாதியைப் போல, பச்சைக் கொடிக் கருணையைக் கட்கத்தில் இடுக்கிக் கையைப் பின்னால் கோத்தவாறு உலாவிக் கொண்டிருந்தான். அவன் ஐந்து நிமிஷத்திற்கொருதரம் என்று அந்த லெவல் கிராஸிங் கதவுகளைச் சாத்தித் திறந்துவிடும் தொழிலை நாட்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் செய்துவரும் அவனுக்கு இது பழகிப்போன, புளித்துப்போன அனுபவம். எனவே, தன்னைச்சுற்றி ஒன்றுமே நடவாத மாதிரி உல்லாச நடைபயின்று கொண்டிருந்தான் அவன், பொறுமையிழந்த சில இளைஞர்கள் இரும்புக்கிராதியின் இடுக்குகளில் நுழைந்து ரயில் பாதையைக் கடக்க முயலும்போதெல்லாம், அவர்களை விரட்டியடித்து ஜபர்தஸ்து செய்வது அவனுக்கு ஒரு பொழுதுபோக்காயிருந்தது. அது ஆபீஸ் நேரம். கர்ப்பிணிக் கோலம் பூண்ட இரண்டு மின்சார ரயில் வண்டிகள் தெற்கிலிருந்தும், வடக்கிலிருந்தும் ஓடி மறைந்த பின்னும், சிவப்பு விளக்குகள் அணையவில்லை. கதவுகள் திறக்கப்படவில்லை. தேங்கிநின்ற ஜனப்பிளயத்தின் குமுறல் மிகுதியாயிற்று. “இது என்ன சார், நியாயம்? ரயில் வண்டியில் போகிறவர்களும், பாட்டைசாரிகளும் இந்த ஜனநாயக நாட்டில் சமஉரிமை பெற்றவர்கள்தாமே? அவர்களை மட்டும் முன்னால் போக அனுமதித்துவிட்டு, நம்மைமட்டும் மடக்கிப் போட்டு வைப்பதேன்? ஒரே காரியாலத்தில் வேலை செய்யும் இருவரில் ஒருவர், ரயில் டிக்கெட் வாங்கி முன்னதாகப் போகிறார்; பஸ் டிக்கெட் வாங்கிய மற்றவர், இதோ நின்று கிடக்கும் பஸ்ஸில் புழுவாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார். எந்த அளவுகோலைக்கொண்டு இவர்களுக்கு இந்த நியாயம் வழங்கப்பெறுகிறது?” என்று ஆவேசக் குரலில் கேட்டார் அங்கு நின்று நின்று கால் கடுத்துப்போன ஒரு வக்கில் குமாஸ்தா. “வாழ்க்கைப் போராட்டத்தில் பலமுள்ளவையெல்லாம் பலவீனமானவற்றை வென்று, பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னேறுவது இயற்கை!” என்று வறண்ட புன்னகையுடன் பதில் சொன்னார். கல்லூரிக்கு நேரமாகிவிட்டதே என்ற கவலையில் ஆழ்ந்து நின்ற ஓர் உயிரியல் பேராசிரியர். ’ஹூம்! எல்லாம் அவரவர் வந்த வழி!” என்று சலிப்புடன் முகத்தைக் களித்தார் ஒரு கோயில் அர்ச்சகர். “வழியாவது, விதியாவது! இங்கே தினந்தினம். அடிக்கொருதரம் ஆட்டுமந்தைக் கூட்டம் போல் நின்று அவதிப்படுகிற இந்த ஜனங்கள், அதோ இருக்கும் டிச்சிப் பள்ளத்தில், ஆளுக்கொரு பைசாவீதம் வீசியெறிந்தால் கூட, அந்தப் பணத்தைக் கொண்டு ஆறு மாசத்திற்கெல்லாம் ஒரு மேம்பாலத்தைக் கட்டி முடித்திருக்கலாமே!” என்று அலுத்துக் கொண்டான் பொருளாதாரப் பாடத்தில் ’கோட்’டடித்த ஒரு டியூடோரியல் கல்லூரி மாணவன். இப்படி எழுந்த இந்தக் காரமான பேச்சுக்களைக் காது கொடுத்துக் கேட்டுத் தம் கவலையை மறந்து நின்ற ஜனங்களின் கவனம், திடீரென்று வேறு திசையில் திரும்பியது. சோதனைகள் மிகும்போது, முகத்தின் அறிகுறிகள் கூடவே தோன்றும் என்று சொல்வதில்லையா? அவலச் சுவையான நாடகம் நடந்து கொண்டிருந்தாலும், இடையிடையே ஹாஸ்யச் சுவை வழங்க பபூன் தோன்றுவதில்லையா? அந்த மாதிரி, அங்கே குழுமி நின்ற ஜனங்களின் கோபதாபக் குமுறல்களைச் சாந்தப்படுத்துவதற்கென்றே கிளம்பி வந்தாற்போல் ஒரு வேடிக்கைச் சம்பவம் நிகழ்ந்தது. ஒவ்வொரு முறை அந்த லெவல் கிராஸிங் கதவுகள் சாத்தப்படும் போதெல்லாம். வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சி தான் அது. அங்குள்ள ஜனங்களில் பலர் அநேகமுறை பார்த்து ‘ரசித்த’ காட்சியும்கூட. அத்துடன், அந்த ஹாஸ்ய நிகழ்ச்சி, ஒரு நாடோடிப் பிறவியின் வயிற்றுப் போராட்டத்திற்காக நிகழப் பெறுவது என்பதும் அவர்கள் அறிந்த விஷயமே. ஆயினும் அதைத் திரும்பத் திரும்பக் காண்பதிலே அவர்களுக்கோர் அலாதி மகிழ்ச்சி. கால் கடுப்பைப் போக்கிக்கொள்ள அது கண் கண்ட லேகியம். எனவே, எல்லாருடைய கவனமும் ஒருசேரத் திரும்பியது. சடையும், செம்பட்டையுமாகக் கூடு பின்னிய காய்ந்த நிலை; சிறிய முகம்; இரும்பு வளையம் கோத்த செவிகள்; வெள்ளை, கறுப்பு, பச்சை, சிவப்பு முதலான வண்ண மணிகள் அணிந்த கழுத்து; சூணாம்வயிற்றுக்குக் கீழே மணி வடத்தாலான அரைஞாணில் இறுகித் தொங்கிய கோவணம்; கால்களில் இரும்புக்காப்பு: அழுக்குப் படையால் ‘அட்லாஸ்’ வரைந்து கிடந்த மானிற மேனி. இத்யாதி கோலத்திலிருந்த ஒரு பத்து வயது நரிக்குறவச்சிறுவன் அந்தச் சாலையின் பக்கவாட்டுச் சரிவிலிருந்து பாய்ந்தேறி ஓடி வந்தான். கொட்டி வைத்த இடத்திலிருந்து கொண்டு போக வருகிறவன் போல் வெகு அவசரமாக வந்த அவன், அந்தக் சாலையின் இடதுபுறம் நீண்ட வரிசைபோட்டு நின்றுகிடந்த கார்களை நோக்கி விரைந்தான். அவனுடைய இலக்கில் முதலாவதாகச் சிக்கியது ஒரு டாக்சி. அதன் கதவருகில் போய் நின்று காதில் ஒரு கையை வைத்துக் கொண்டு, மறுகையால் உப்பிச்கரந்த சூணாம் வயிற்றைத் தட்டித் தாளமிட்டவாறு பாட ஆரம்பித்தான். பாட்டா அது? பத்துப் பதினைந்து சினிமாப் படங்களில் வந்த இருபதுக்கும் மேற்பட்ட பாடல்களின் பல்லவி, அனு பல்லவி, சரணங்களைத் துண்டு துண்டாக நறுக்கியெடுத்து, ஒரு கூட்டுக் கலவையாகத் தொகுத்து நீட்டிய பாடல் அது! இரண்டு மூன்று வார்த்தைகளுக்கு ஓர் இராகமென மாறி மாறி, மடித்து இணைந்து முடிவற்ற விதமாக நீண்டு செல்லும் ஒரு விசித்திர ‘இராக மாலிகை’ அதில் வரும் வார்த்தைகள் அவனுக்கே உரிய ஓசை நயத்துடன் குறுகியும், விரிந்தும், சிதைந்தும், நலிந்தும் வெளியேறினாலும், அவ்வுருவழிந்த வார்த்தைகளை அவன் தான் எத்தளை லாவகமாக, சரளமாகப் பாடுகிறான்! அந்தக் கதம்ப இசைக் கோலத்தோடு அவனுடைய கால்களும் தாளகதியில் ஆடின. ஆனால், பாட்டின் தாளமும், வயிற்றின் மேல்தட்டும் கைத்தாளமும், தரையில் தடம்புரியும் காலின் தாளமும் ஏழாம் பொருத்தத்தில் இருந்தன! நரிக்குறவச் சிறுவன் உற்சாகமாகப் பாடிக்கொண்டே ஆடினான். அவனுடைய சினிமாக் கதம்ப இசையைக் கேட்டு அங்கு கால்கடுக்க நின்று ஜனங்களிடையே மகிழ்ச்சிக் கலகலப்பு ஏற்பட்டது. கதவு சாத்திக் கிடக்கும் கவலையை மறந்து, அந்த ’கலைநிகழ்ச்சி’யில் தம் கவனத்தைச் செலுத்தினர். பையனின் குரல் கம்மிக் கரகரத்தது. பயின்று வைத்திருந்த பாட்டின் அடிகள் தீர்ந்து போகவே, முடிவை முதலுடன் இணைத்துத் தொடர்ந்து பாடிக்கொண்டே இருந்தான். இடையிடையே. “ஐயா, சாமி! ஒரு பைசா போடு சாமி!” என்று டையலாக்கும் பேசிக்கொண்டான். சாத்திக்கிடக்கும் கதவு திறக்கப்பட்டுவிடுமோ என்ற பரபரப்பும், அது திறக்காமலிருக்க வேண்டுமென்ற ஆதங்கமும் சேர்ந்து அவனுடைய ஆட்டம்பாட்டத்தின் ‘ரிதமை’த் துரிதமாக்கின. அவன் கவனம் பாட்டிலோ, ஆட்டத்திலோ லயிக்கவில்லை, டாக்சியில் உட்கார்ந்திருப்பவரையும், அடுத்த காரிலிருப்பவர்களையும், அதற்கப்பாலுள்ள கார்களையுமே மாறி மாறி நோட்டமிட்டுக் கொண்டிருந்தது. அவனது பாட்டை ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கும் தரை மகாஜனங்களை அவன் சட்டை செய்யவே இல்லை. அவர்களெல்லாம் தர்மம் செய்வதற்கு லாயக்கற்றவர்கள் என்பது அவனுடைய தீர்மானமோ என்னவோ? ’டிக், டிக்’ என்று இயங்கிக் கொண்டிருந்த ‘மீட்டர்’ கருவியையும், லெவல் கிராஸிங்கின் சிவப்பு விளக்கையும் கவலையுடன் பார்த்தவாறு, டாக்சியில் அப்படியும் இப்படியுமாக நெளிந்தபடி அமர்ந்திருந்த பிரமுகர், சட்டென்று திரும்பி, “போடா! சீ, போ! இங்கே மனுஷன் அவஸ்தைப்படறது போறாதுன்னு, இவன் வேற வந்து உயிரை எடுக்கிறான்! இந்தச் சனியன் பிடிச்ச இடத்திலே இது ஒரு தொல்லையாப் போச்சு!” என்று சீறினார். பையன் இதை காதில் வாங்கிக் கொண்டானோ இல்லையோ, அடுத்து நின்ற காருக்குப் பாய்ந்து சென்றான். மீண்டும் அதே பாட்டு, அதே ஆட்டம்! அந்தக் காரில் இரண்டு ஆடவர்களும் ஒரு பெண்மணியும் அமர்ந்திருந்தனர். நரிக்குறவச் சிறுவனின் பாட்டைக் கேட்டு அவர்களுக்குச் சிரிப்பு வந்தது. ஆனால் காரில் அமர்ந்திருக்கும் தாங்கள் அந்தப் பாட்டை ரசிப்பது அகெளரவம் என்று எண்ணியோ என்னவோ, சிரிப்பை அடக்கிக் கொண்டு ஒருவரையொருவர் பார்த்துக் கண் சிமிட்டிக் கொண்டனர். பிறகு அம்மூவரில் ஒருவர் முகத்தில் அருவருப்புக் குறி தோன்ற இடது கையைத் துவள ஆட்டி, ஒண்ணுமில்லே, போடா!” என்று திருவாய் மலர்ந்தருளினார். தெற்கிலிருந்து ஒரு மின்சார ரயில்வண்டி ஒடி மறைந்தது. கதவு திறக்கப்படவில்லை. பையன் அடுத்த காருக்குத் தாவினான். அந்தப் பழைய மாடல் காரில் உட்கார்ந்திருந்த பழைய மாடல் மனிதரொருவர் பையனின் பாட்டையோ, லெவல் கிராஸிங் விளக்கையோ கவனியாமல், கையில் பிரித்து வைத்திருந்த தினப் பத்திரிக்கையில் ஆழ்ந்திருந்தார். நரிக்குறவச்சிறுவனின் அவியல் பாட்டுத் தொடர்ந்து கொண்டே இருந்தது. அமைதியாகத் தலை நிமிர்ந்து அவர், தமது பெரிய மணிப்பர்சை நிதானமாக திறந்து அதிலிருந்து சில்லறைகளைச் சீய்த்து, ஒர் ஐந்து பைசா நாணயத்தைப் பொறுக்கி எடுத்துக் காரின் ஜன்னல் வழியே தூக்கிப் போட்டார். விலை மதிப்பற்ற நேரத்தை வீணாக்காதவர் போலவும், சந்தர்ப்பக் கோளாறினால் அப்படி வீணாகும் நேரத்தில், இம்மாதிரி ஒரு தர்மம் செய்து அதைப் பயனுள்ளதாக்கிக் கொள்கிற வழக்கமுள்ளவர் போலவும் தோன்றியது அவருடைய இந்த செயல்! இரையைக் கண்டு பாயும் பருந்தைப் போல் பாய்ந்து குனிந்து பையன், அந்த ஐந்து பைசாவை ஆவலுடன் எடுத்தான். அது நல்ல நாணயம்தானா என்று அவனுக்குச் சந்தேகம். கல்லின் மேல் அதைத் தட்டிப் பார்த்துத் திருப்தியடைந்தவனாய் ஒரு துள்ளுத் துள்ளி நிமிர்ந்து அடுத்த காருக்கு விரைந்தான். இந்தச் சமயத்தில், சிவப்பு விளக்க அணைந்து, கிராஸிங் கதவுகள் திறக்கப்பட்டன. சாலையின் இரு முனைகளிலும் தேங்கி நின்ற ஜனப்பிரளயம் எதிரும் புதிருமாக அலைமோதிச் சாய்ந்து ஐக்கியமாகி நகர்ந்தது. ‘ஹே’ என்ற இரைச்சல்! சைக்கிள் மணியொலிகளும், கார் ஹாரன் சப்தங்களும் காதைப் பிய்த்தன. முன்னே பாயும் ஜனக் கடலை முந்திக்கொள்ள முடியாமல் கார்களும், பஸ்களும் திக்கித் திணறின. சில கார்கள் ‘ஸ்டார்ட்’ செய்த நிலையிலே உறுமலிட்டபடி நின்று கொண்டிருந்தன. நரிக்குறவச் சிறுவன் முற்றுகையிட்ட காரும் நகர வழியின்றி நின்றது. அது வேண்டுமென்ற பரபரப்புடன், பாட்டையும் ஆட்டத்தையும் துரிதகாலத்தில் ஆரம்பித்தான் பையன். புத்தம்புது மெருகுடன், அன்னப் படகுபோல் அழகாக விளங்கிய அந்த நீலநிறக் காரின் கண்ணாடி சன்னல்கள் அனைத்தும் பட்டுத்திரைகளால் மூடப்பெற்றிருந்ததால், உள்ளே உட்கார்ந்திருப்பவர்களைப் பார்க்க முடியவில்லை. ’டிப் டாப்’பாக டிரஸ் பண்ணிக்கொண்டு முன் சீட்டில் அமர்ந்திருந்த டிரைவர் மட்டுமே தெரிந்தான். பையனுக்கு அவசரம் தாங்கவில்லை. தன் முழுத் திறனையும் காட்டத் துவங்கினான் அவன். காரின் ஜன்னல் வழியே கை நீளுகிறதா என்றும் கவனித்துக் கொண்டான். கையும் நீளவில்லை; திரையும் விலகவில்லை. கார் மெல்ல நகர்ந்தது. பொறுமையிழந்த பையன் தன் பாட்டையும் ஆட்டத்தையும் நிறுத்திவிட்டு, ‘ஐயோவோசாமி! ஒரு பைசா போடு சாமி’ கேட்டுக்கொண்டே டிரைவர் இருக்கும் பக்கமாகக் குனிந்து காரின் உள்ளே எட்டிப் பார்த்தான். மறுகணம், அங்கு ஏதோ ஒரு பேரதிசயத்தைக் கண்டு திடுக்கிட்டவன் போல் பின்னால் சாய்ந்தான். அதெ சமயம், விருட்டென்று புறப்பட்டுவிட்டது கார். வியப்பும் திகைப்புமாகப் பிரமித்து நின்ற நரிக்குறவப்பையன், புஷ்பக விமானம் போல் மிதந்து விரையும் அந்த நீலநிறக் காரையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். காரின் உள்ளே ஒரு நரிக்குறவப் பெண்ணும், அவன் பக்கத்தில் ஓர் அழகிய நவநாகரீக வாலிபனும் அமர்ந்திருப்பது, பின்புறக் கண்ணாடி வட்டத்தின் வழியே மங்கலாகத் தெரிந்தது! ★★★ “ஏய்-ஹே திண்டிகோடா! அத்ரே, கார் பண்டிலே வண்டிகோடி போய்ரே, போய்ரே!” சாலையில் வலப்பக்கச் சரிவில் ஓடும் பெரிய சாக்கடை வாய்க்காலுக்கு அப்பால், ரயில்வேக்குச் சொந்தமான ஒரு துண்டு நிலத்தில் முளையடித்துப் போடப்பெற்றிருந்த சிறியதொரு கூடாரத்தில் எதிரில் குத்துகாலிட்டு அமர்ந்து, கிழிந்த அணில் வலையொன்றைச் செப்பனிட்டுக் கொண்டிருந்த ஒரு நரிக்குறவ வாலிபன் மெல்லத் தலைநிமிர்ந்து பார்த்தான். “ஏ, திண்டிகோடா! குத்ரே கார்பண்டிலே வண்டிகோடி போய்ரே!” என்று இரு கைகளையும் ஆட்டிக்காட்டி உரத்த குரலில் கூவிக்கொண்டே, தலை தெறிக்க ஓடிவந்தான் அந்தக் குறப்பையன். திண்டிகோடா என்று விளிக்கப்பட்ட வாலிபன், கையிலிருந்த வலையைப் போட்டுவிட்டு எழுந்து நின்று, தன் எதிரே ஓடிவரும் பையனை உற்றப் பார்த்தவாறு, “எக்க லபியோ மயிலங்கேளடா?” என்று வினவினான். இரைப்பு வாங்க ஓடிவந்த பையன், “தத்ரே, கார் பண்டிலே, வண்டிகோடி போய்ரே!” என்று கண்களை அகல விரித்து, வியப்பும் படபடப்புமான குரலில் கூவினான். ஒன்றும் புரியாமல் ஒரு கணம் திகைத்து நின்ற திண்டிகோடா, கோபமாக விழிகளை உருட்டிக் கரபுரா வார்த்தைகளில் ஏதோ அதட்டிக் கேட்டான். மணிலங்கோடா என்ற அந்தச் சிறுவன், மூச்சுத் திணறத் திணற பல்வேறு அபிநயங்களுடன் சரமாரியாகப் பொரிந்து தள்ளினான். அவனுடைய பேச்சில் ‘கார்பண்டி, வண்டிகோடி’ என்று சொற்களே மிகுதியாக அடிபட்டன. “ஹே, சங்கிலிகொட்டா!” என்று வானத்தை அண்ணாந்து பார்த்துக் கேவிக்கொண்டே தலையைத் தாங்கிப் பிடித்த வண்ணம் தரையில் அப்படியே உட்கார்ந்து விட்டான் திண்டிகோடா… கூடாரத்திற்குப் பின்னால், குப்பை கூளங்களைப் போட்டு எரிய விட்ட கல்லடுப்பிலே பானைச் சோறு பொங்கிக் கொண்டிருக்க, அதன் எதிரில் காலை நீட்டி உட்கார்ந்த நரிக்குறவ கிழவியொருத்தி, கம்பி இழையை நறுக்கிக் கருகமணிச் சரம் பின்னியவாறு இந்தப் பேச்சுக்களைக் காதில் வாங்கிக் கொண்டிருந்தாள். ஆனால் அவளுடைய கவனம் முழுவதும் அடுப்பில் பொங்கும் அவியல் சோற்றிலும், உருவாகிவரும் கருகமணிச் சரத்திலுமே லயித்திருந்தது. தலைமேல் கைவைத்து இடிந்துபோய் உட்கார்ந்திருந்த திண்டிகோடா சட்டென்று எழுந்து, “ஏ…அம்மாடியோவ்! இத்ரே லபோ!” என்று அந்தக் கிழவியைப் பார்த்துக் கத்தினான். கிழக்குறத்தி அவனைத் திரும்பிப் பார்த்தாள். பிறகு சாவதானமாக எழுந்து, பொங்கிக் கொதித்த அவியல் சோற்றை ஒரு துடுப்பால் கிளறிப் பதம் பார்த்துவிட்டுத் தனக்குள் ஏதோ முணுமுணுத்துக்கொண்டே வாலியக் குறவனை நோக்கி வந்தாள். கோபமும் குமுறலுமாக எதிர் சென்ற திண்டிகோடா அந்தக் கிழவியிடம் ஏதோ படபடவெனப் பேசினான். சற்று முன் பையன் வந்து சொன்ன விவரங்களை, அவனிடம் அவன் சொல்லியிருக்க வேண்டும். கிழவியின் முகம் சுண்டிச் சுருங்கியது. “தூ! தூ!” என்று காறித் துப்பினாள். திண்டிகோடா விறைப்பாக வேறு பக்கம் திரும்பி நின்று கொண்டிருந்தான். “ஏ, மயிலங்கோடா! இத்ரே லபோ!” என்று இரைந்து கூப்பிட்டாள் கிழவி. குப்பையைச் சீய்த்துக் கொண்டிருந்த ஒரு ஜோடி கவுதாரிகளைக் கூண்டில் அடைப்பதற்காக, அவற்றை விரட்டிக் கொண்டிருந்த பையன் ஓடிவந்தான். அவனிடம் கிழவி ஏதோ கேட்டாள். வாலிபக் குறவனிடம் சொன்ன வார்த்தைகளை அவளிடமும் ஒப்பித்தான் பையன். கிழக்குறத்தி மேலும் கிளறிக் கிளறிக் கேள்விகள் தொடுத்தாள். “செப்புத்ரே! செப்புத்ரே!” என்று அதட்டினாள் கிழவி. பையன் தலையைச் சொறிந்து கொண்டு முகத்தைச் சுளித்தான். லெவல் கிராஸிங் கதவுகள் சாத்தப்படுவதற்கு அறிகுறியாக மணிச் சத்தம் கேட்டது. பையன் தன்னிடமிருந்த ஐந்து பைசாவைக் கிழவியின் முகத்திற்கு நேரே சுண்டிப் பிடித்து அவளுக்கு ‘நங்கு’ காட்டிவிட்டு லெவல்கிராஸிங்கை நோக்கி ஓட்டம் பிடித்தான். “ஏ, -தண்டிகோடா ! இத்ரே லபோ!” என்று புன்முறுவலுடன் விழித்துக்கொண்டே, இடுப்பைப் பிடித்தவாறு வாலிபக்குறவனிடம் சென்றாள் கிழவி. அவன் அவளைத் திரும்பிப் பார்க்காமல் எங்கோ வெறித்து நோக்கிக் கொண்டிருந்தான். கிழவி அவன் முகத்தை அண்ணாந்து பார்த்தபடி இதமான குரலில் ஏதோ சொன்னாள். அவள் சொல்வதை மறுப்பவன் போல் வேகமாகத் தலையசைத்து கையை ஆட்டினான் திண்டிகோடா. கிழவி தான் சொன்னதையே திரும்பத் திரும்ப அழுத்திச் சொன்னாள். திண்டிகோடா அவளை முறைத்துப் பார்த்தான். பிறகு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன்போல் ஆவேசமாகப் பாய்ந்து சென்று கூடாரத்தைப் பிய்த்தெறிந்தான். அதனுள்ளிருந்த தட்டுமுட்டுச் சாமான்களைக் காலால் உதைத்துத் தள்ளினான். “ஏ, திண்டிகோடா! ஏ, திண்டிகோடா!” என்று அலறிக்கொண்டே ஓடிவந்து அவனைத் தடுக்க முயன்றாள் கிழவி. திண்டிகோடா அவளை நெட்டித் தள்ளிவிட்டு, வளைப்படல்களையும் தகரக் குவளைகளையும் மூலைக்கொன்றாய் வீசியெறிந்தான். பிறகு அடுப்பில் பொங்கிக் கொண்டிருந்த சோற்றுப் பானையைத் தூக்கி மடேரென்று தரையில் போட்டு உடைத்தான். அவியல் சோறு நாலா பக்கமும் சிதறித் தெறித்தது. இதைக் கண்ட கிழவிக்கு உயிரே போவது போலாகிவிட்டது. வாயிலும் வயிற்றிலுமாக ‘லபோ, திகோ’ என்று அடித்துக் கொண்டு ஓடி வந்தவள், வெறி பிடித்த மாதிரி அந்த வாலிபக் குறவனைப் பிய்த்துப் பிறாண்டினாள். திண்டிகோடாவின் கோபம் உச்சநிலையை அடைந்தது. அவன் அவளைக் கண்மூக்குத் தெரியாமல் அடித்து நொறுக்கினான். புழுதியில் விழுந்து புரண்ட கிழவி, நாய்க்குட்டிபோல் ஓலமிட்டுப் புலம்பினாள். மேலும், அவளை அடித்துப் புடைக்க, கீழே கிடந்த ஒரு கம்பை எடுத்துக்கொண்டு பாய்ந்தான் நரிக்குறவன். ★★★ “டேய். டேய்! இன்னாடா இங்கே கலாட்டா?” என்று கேட்டுக் கொண்டே, சாக்கடைப் பாலச் சுவரின் மேல் உட்கார்ந்திருந்த ஒருவன் இறங்கி ஓடிவந்தான். அவன் அங்கே நடைபாதையில் கடைவிரித்துப் பழ வியாபாரம் செய்பவன். திண்டிகோடா தன் கையிலிருந்த கம்பை வீசியெறிந்து விட்டுத் திரும்பினான். பழக்காரனைக் கண்டதும் அவனுடைய சீற்றம் சிறிதே தணிந்தது. வேட்டியை உள்வட்டமாக மடித்து இடுப்பின்மேல் விட்டுக்கொண்டு கால்களைப் பின்னி ஒருக்களித்துச் சாய்ந்து நின்றவாறு, பீடியைப் பற்றவைத்துப் பல்லிடுக்கில் கடித்துக் கொண்ட பழக்காரன், “இன்னாடா நடந்துச்சு? எதுக்கு அந்தக் கெய்வியைப் போட்டு இப்படிச் சாத்துரே?” என்று புன்முறுவலுடன் கேட்டான். “ஐயோ, சாமி! அந்த அக்குருமையா கேக்கிறே?” என்று இரு கையையும் நீட்டிச் சொல்லிக்கொண்டே வந்த திண்டிகோடா, பழக்காரனின் எதிரில் டப்யெனக் குந்தித் தலையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டான். அவனுடைய நிலையைக் கண்ட பழக்காரனுக்கு உண்மையிலேயே பரிதாபமாகிவிட்டது. திண்டிகோடாவைப் பற்றி அவனுக்கு ஓரளவு தெரியும். மத்தியான வேளைகளில் பழ வியாபாரம் மந்தப்படும்போது, அந்த நரிக்குறவனிடம் தமாஷாகப் பேசிக் கொண்டிருப்பதில் அவனுக்கோர் அலாதிப் பிரியம். அதனால் அவனை பற்றிய சில விவரங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தான். அந்த நரிக்குறக் குடும்பம், இந்த லெவல் கிராஸிங் அருகிலுள்ள மைதானத்தில் ‘டேரா’ போட்டுக்கொண்டு வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. அந்த இடத்தில் எப்போதும் ஏதாவதொரு குறக்கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். ஒரு கூட்டம் இடம் பெயர்ந்தால், மறுநாளே இன்னொரு கூட்டம் வந்து சேரும். காற்று மழைக்குத் தங்கிக் கொள்ள பக்கத்திலிருக்கும் ரயில்வே ஸ்டேஷன் வசதியாக இருப்பதால், அவர்கள் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தனர். சற்றுமுன் அடியும், உதையும் வாங்கிக்கொண்டு, அதோ பூனைக்குட்டி போல் முனகிக் கொண்டிருக்கும் அந்தக் கிழவிதான் திண்டிகோடாவின் தாயார்க்காரி. சிறுவன் மயிலங்கோடா அவனுடைய தம்பி, வண்டிகோடி என்பது அவன் மனைவியின் பெயர். அவளுக்குக் கல்யாணமாகி ஆறு மாசம் தான் ஆகிறது. திண்டிகோடா, திண்டிவனத்தில் பிறந்தவன்; மணிலங்கோடா, மயிலத்தில் பிறந்தவன்; வண்டிகோடி, விக்கிரவாண்டியில் பிறந்தவள்!… “இன்னாடா, கம்முனு இருக்கிறே? எங்கனாச்சும் ‘சல்பேட்டா’ போட்டுக்கினு வந்துட்டியா?” என்று குறும்பாகச் சிரித்துக் கேட்டான் பழக்காரன். “போ, சாமி! மன்சன் வவுறு பத்தி எரியறான்; நீ இன்னாடாக்கா, தமாஸ் பண்றே?” என்று பெருமிக் குமுறினான் திண்டிகோடா. “இன்னாடா விசயம்? சும்மா சொல்லுடா. என்கிட்டே?” “கஸ் மாலம்! கஸ்மாலம்!” என்று தலையடித்துக் கொண்ட நரிக்குறவன், சடாரென்று எழுந்து, “ஏ, சாமி! என் சமுசாரம் ஓடிப்பிட்டா சாமி, ஓடிப்பிட்டா” என்று புலம்பலுடன் கூவித் தலையைத் தாங்கிப் பிடித்த வண்ணம் குந்திக் கொண்டான். பழக்காரன் இதைக்கேட்டு உற்சாகமடைந்தவனாக பீடியை வேகமாக உறிஞ்சிப் புகையை ஊதிக் கலைத்துவிட்டு, “யாரு, உன் பொஞ்சாதி வண்டிகோடியா?” என்று ரொம்பவும் அக்கறையாகக் கேட்டான். திண்டிகோடா வெறுப்புடன் தலையசைத்தான். “அட, பாவமே! காலம்பறகூட அவ இங்கதானே இருந்தாள்? நான் கொத்தவால்சாவடிக்குப் போயி, சரக்குப் போட்டுக்கினு வந்தப்போ பார்த்தேனே?” “ஆமா, சாமி! அதுக்கப்புறம்தான் தெருமேலே கிளம்பிப் போனாள்.” “எதுக்கு?” “ஊசி, மணிவிக்க”. “அப்புறம்?” “பண்டிமேலே போயிட்டாளாம்?” “என்னது?” “கார்பண்டிமேலே போயிட்டா சாமி!” “ஓ!…ஊர்மேலே போயிட்டாளா?” என்று கெக்கலி கொட்டி நகைத்தான் பழக்காரன். திண்டிகோடாவின் கண்கள் சிவந்து பழுத்தன. எரித்து விடுவதுபோல் விழித்துப் பார்த்தான் அவன். “ஆமா, இது எப்படிடா உனக்குத் தெரிஞ்சது?” என்று வாழைப்பழத்தை உரிப்பது மாதிரி நைஸாக விசாரித்தான் பழக்காரன். “இப்பத்தான் சாமி, என் தம்பிப் பய வந்து சொன்னான்” “அவனுக்கு எப்படித் தெரிஞ்சுதாம்?” “ரயில் கேட்டண்டைப் பார்த்தானாம். பெரிய கார்பண்டியிலே குந்திக்கினு போனாளாம்.” “தனியா போனாளா? இல்லே. ஜோடி மேலே போனாளா? “பக்கத்திலே யாரோ ஒருத்தன் குந்திக்கினு இருந்தானாம் சாமி!” என்று தொண்டையடைக்க, பல்லைக் கரகரவெனக் கடித்துக்கொண்டு சொன்னான் திண்டிகோடா. “கொறப் பொண்ணு பலே கைகாரிதான்போல இருக்கு” என்று கடகடவெனச் சிரித்த பழக்காரன், பீடியைப் பாதியில் அனைத்து, செவியிடுக்கில் செருகிக்கொண்டு, ம்… அவள் மேலே மிஷ்டேக் இல்லே நைனா!” என்றான் அலட்சியமாக. மீண்டும் அவன் தொடர்ந்து, “ஆமா, அவள்தான் ஓடிப் போயிட்டா; அதுக்கு ஏன் உன்னோட ஆத்தாளைப் போட்டு அடிச்சே?” என்று வினவினான். “பின்னே என்ன சாமி? அந்தக் கய்லாத்து இப்படிப் பண்ணிப்பிட்டாளேன்னு இந்தக் கெய்விக்கிட்டே சொன்னா அதை நம்பமாட்டேங்குது. அவளை விசாரிச்சுக்கிட்டு அப்புறம் பேசிக்கலாம்னு சொல்லுது. அந்தக் கய்தே வரதுக்கு முன்னே, எங்கனாச்சும் புறப்பட்டுப் போயிடலாம்னு சொன்னா அதுக்கும் ஒப்புத்து வரமாட்டேங்குது. ஈசாம வருமா இல்லியா சாமி? அதுக்குத்தான் ரெண்டு வாங்கு வாங்கினேன்!” என்று பொங்கிக் குமுறினான். திண்டிகோடா. “அட, சர்த்தான் போடா! உலகம் போற போக்கிலே அவளும் போயிருக்கிறா. திரும்பி வரப்போ நெறையப் பணம் கொண்டாருவாடா. உன்பாடு லக்குதான்” என்று கூறி ஒரு கோணல் சிரிப்புச் சிரித்தான் பழக்காரன். இதைக்கேட்ட நரிக்குறவன் அடிபட்ட வேங்கைப்போல் துள்ளியெழுந்தான். அவன் முகம் பயங்கரமாகக் கறுத்துச் சிறுத்தது. “இன்னா சாமி சொன்னே? எங்க சனங்களைப் பத்தி உனக்கு ஒண்ணும் தெரியாது. நாங்கெல்லாம் சோத்திலே உப்புப் போட்டுத் துண்றவங்க. நேரம் தப்பி வந்தாலுமே பொண்ணுங்களை நாங்க சேத்துக்க மாட்டோம். இந்தக் கஸ் மாலத்தையா சேர்த்துக்குவோம்? எங்க சாதி சனமே அவ மூஞ்சியிலே இனி முய்க்கமாட்டோம் சாமி! தப்பித்தவறி அவளைமட்டும் நான் பார்த்துட்டா… கவ்தாரி கயித்தை முறிக்கிறாப்பலே முறிச்சுப் போட்டுட மாட்டேனோ!” என்று முரட்டுத்தனமாகக் கர்ஜித்தான். “இன்னா, பயக்கார! இங்கே கெராக்கி வந்து வந்து போவுது; நீ என்னமோ அந்தக் கொறவன்கிட்டே கோர்ட்டு கச்சேரி நடத்திகினு இருக்கிறியே!” என்று பூக்கடைக்காரியொருத்தி குரல் கொடுக்கவே, பழக்காரன் சட்டென்று திரும்பி, “சரிடா, அப்பறமா வந்து நாயம் சொல்றேன்; அந்தக் கெய்வியைப் போட்டு அடிக்காதே!” என்று சொல்லிக்கொண்டே தன் வியாபாரத்தைக் கவனிக்க விரைந்தான். திண்டிகோடா மெளனமாக உட்கார்ந்திருந்தான். ஆனால், அவனுடைய மனத்தின் வேக்காட்டை முகம் பிரதிபலித்துக் காட்டிக் கொண்டிருந்தது. சற்று நேரங்கழித்து எதையோ நினைத்துக் கொண்டவன் போல் தன் இடுப்பில் தொங்கிய ஒரு மடக்குக் கத்தியை எடுத்து நீக்கித் தனது இடது கை புஜத்தில், பின்னலிட்ட இரட்டைப் பாம்பு போன்ற சித்திரமாகக் குத்திக் கொண்டிருந்த பச்சைக் குறியைச் சதையோடு சீவியெறிந்தான். அது அவனுக்கும் வண்டிகோடிக்கும் கல்யாணம் நடந்தபோது குத்திய சடங்குப் பச்சை! அதைச் சீவியெறிந்த இடத்தில் இரத்தம் வழிந்தது. பொடிமண்ணை வாரி அந்தக் குருதிக்காயத்தில் அப்பிக்கொண்டு விருட்டென்று எழுந்து போய் , சிதறிக் கிடந்த சாமான்களையெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு பெரிய கோணிப்பையில் போட்டுக் கட்டுவதில் முனைந்தான். அவித்த மரவள்ளிக் கிழங்கைக் கடித்துத் தின்று. கொண்டே அங்கு ஓடி வந்தான் சிறுவன் மயிலங்கோடா. அவனிடம் திண்டிகோடா எதோ சொன்னான். பையன் அதைக் கேட்டு முரண்டு செய்வது போல் தலையசைத்தான். பாய்ந்து வந்த திண்டிகோடா அவன் கன்னத்தில் பளிரென ஓர் அறைவிட்டான். துடித்துப் பதறிய பையன் அழுதுகொண்டேபோய் கூடாரத் துணியைச் சுற்றிக் கட்டினான். அரைமணி நேரத்தில் ‘டேரா’ தூக்கியாகிவிட்டது. திண்டிகோடா ஒரு பையைத் தோளில் மாட்டிக்கொண்டு,! கட்கத்தில் வலைப்படலும், கையில் கவுதாரிக் கூண்டுமாகக் கிளம்பினான். பையனும், கிழவியும் மற்ற சாமான்களைத் தூக்கிக் கொண்டு, மெளனமாக அவனைப் பின் தொடர்ந்தனர். வியாபார மும்முரத்திலிருந்த பழக்காரன் அவர்களைக் கவனிக்கவில்லை. சற்றுதூரம் சென்ற திண்டிகோடா சட்டென்று நின்று வானத்தை அண்ணாந்து பார்த்து, “ஏ-ஹே, சங்கிலி கொட்டா” என்று உரக்கக் கூவிக்கொண்டே ஒருபிடி மண்ணை வாரிக் காற்றில் வீசிவிட்டுத் தள்ளாடித் தள்ளாடி மேலே நடக்கலானான். வழக்கம்போல் அந்த லெவல்கிராஸிங் கதவுகள் சாத்திக் கிடந்தன. சாலையில் இருமுனை திசைகளிலும் வழக்கம்போல ஜனத்திரள் தேங்கிக் கிடந்தது. வாகனாதிகளும் வரிசை கூட்டி நின்று கொண்டிருந்தன. வெறுப்பும் வேதனையுமாக முனு முணுத்தவாறு சிவப்பு விளக்கின் எதிரில் போய் நின்றான் திண்டிகோடா. அவன் பின்னால் பையனும், கிழவியும் வந்து நின்றனர். பையன் மயிலங்கோடா அங்கு நின்ற கார்களையெல்லாம் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். எதிரும்புதிருமாக இரண்டு ரயில்வண்டிகள் ஓடிமறைந்த பின், சாத்திக்கிடந்த கதவுகள் திறக்கப்பட்டன. ஜனங்கள் சாடி மோதிக்கொண்டு சாய்ந்து நகர்ந்தனர். கூட்டம் கலையும்வரை தயங்கி நின்ற திண்டிகோடா ஒரு பெருமூச்சு விட்டபடி சாலையில் இறங்கி நடந்தான். பின்னால் வந்த சிறுவன் மயிலங்கோடா திடீரென உரத்த குரலில், “ஏ, திண்டிகோடா! இத்ரே, கார்பண்டிலே, வண்டிகோடி போய்ரே, போய்ரே” என்று கூவிக்கொண்டே, எதிரே மெள்ள வந்து கொண்டிருந்த நீலநிறக் காரைச் சுட்டிக் காட்டினான. இதைக்கேட்டு அடங்காச் சினமுற்ற திண்டிகோடா, சடாரென்று குனிந்து, அந்தக் காரினுள் தன் அனல் பார்வையை வீசினான். மறுகணம், தேள் கொட்டியவன்போல் துடித்துப் பின்னால் சரிந்து, கண்களை நிமிண்டிக் கொண்டு பரபரப்புடன் விழித்து நோக்கினான். அங்கே, அந்தப் பெரிய காரினுள், ஓர் நரிக்குறத்தி ஒயிலாகச் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். ஆனால், அவள் உண்மையான நரிக்குறத்தி அல்ல; நரிக்குறத்திபோல் ‘மேக்-அப்’ செய்து கொண்டிருந்த ஒரு சினிமா நட்சத்திர நடிகை அவள்! மத்தியான ஷூட்டிங் முடிந்து, சிற்றுண்டிக்காகத் தன் வீட்டிற்குச் சென்றவள், இப்போது மீண்டும் படப்பிடிப்பிற்காக ஸ்டுடியோவுக்குப் போகிறாள் போலும்! “டோய்! நளினாதேவி போறாடா, நளினாதேவி!” என்ற குரல்கள் ஜனக் கும்பலிடையே இருந்து எழுந்தன. அடுத்த கணம் அந்த கார் குபீரெனக் கிளம்பி, சற்றைக்கெல்லாம் மறைந்தே போய்விட்டது. பிரமை பிடித்தவன்போல் விக்கித்து நின்றான் திண்டிகோடா. அதே சமயம், சாலையின் எதிர்த் திசையிலிருந்து, “ஏ.. பச்சைமணி, பாசிமணி, கருகமணி, ராஜாத்திமணி வாங்கலியோ ஆயே!” என்று ஓசையாகக் கூவிக்கொண்டே வெயிலில் வாடிச் சோர்ந்து வந்து கொண்டிருந்தாள் நரிக்குறத்தி வண்டிகோடி. சுப்ரமணியராஜூ தஞ்சைமாவட்டம் திருவையாறுக்கு பக்கம் உள்ள கிராமத்தில் பிறந்த சுப்ரமணியராஜூ, படித்து பட்டதாரிகளாய் புதிய வீச்சுடன் இலக்கிய பிரவேசம் ஆன இளைஞர்களில் குறிப்பிடத்தக்கவர். தனிமனிதனின் பிரச்சனைகளே சமுதாயத்தின் பிரச்சனையாகிறது. ஆகவே தனிமனிதனின் உணர்வுகளை அனுதாபத்துடன் பரிசீலிப்போம் என்ற நோக்கத்துடன் சிறுகதைகளைப் படைத்த இளைஞர்களில் இவரும் ஒருவர். படைப்பின் கதையம்சம் மிகக் குறைவாக இருப்பினும் புதிய தலைமுறைகளுக்கு அந்த நிலைகளுக்குப் பொருள்கான அவர்கள் மேற்கொள்ளும் ஆத்ம விசாரணையும் வெளிப்பட்டிருக்கிறது. ‘கசடதபற’ இதழில் சோதனை முயற்சிகளை மேற்கொண்டவருக்கு மாலன் தலைமையில் வெளிவந்த ‘வாசகன்’ இதழ் இவரை விரிவான இலக்கிய பார்வைக்கு இட்டுச் சென்றது. மிகச் சின்னவயசிலேயே சாலை விபத்தில் காலமாக இவர் நீண்டகாலம் வாழ வாய்ப்பிருப்பின் இலக்கியத்தில் சிலபல சிகரங்களை நிச்சயம் தொட்டிருக்க முடியும் என்பதை வெளிவந்திருக்கும் அவரது படைப்புகள் கட்டியம் சொல்லுகின்றன. ‘இன்று நிஜம்’ என்ற சிறுகதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. இந்த தொகுப்பு இலக்கியவாதிகளால் பெரிதும் பேசப்பட்டது. நவீன கவிதையில் அழுத்தமாக கால் ஊன்றியவர் என்று சொன்னால் மிகையில்லை.  இருட்டில் நின்ற… ரயில் நின்றுவிட்டது. வெளியே இருட்டு. ஒரு உவமை சொல்ல முடியாத அளவுக்கு நல்ல இருட்டு. சிலர் என்ன நடந்தது என்று பார்க்க ஜன்னல் வழியே வெளியே தலையை நீட்டினார்கள். இன்னும் சிலர் கதவுப் பக்கமாய் நடந்தார்கள். ஏதாவது விபத்து நடந்திருக்கும் என்று பேசிக் கொண்டார்கள். கணேசன் மெதுவாய் சோம்பல் முறித்துக்கொண்டே ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான். கீழே ஒரு பெண், மேல்பர்த்தில் படுத்திருந்த அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள். அவன் புகையை ஊதியபோது சற்று முகத்தைச் சுளித்தாள். அவன் அவளை அலட்சியப்படுத்திவிட்டுக் கூட்டத்தைப் பார்த்தான். கீழே இறங்கியவர்களைப் பார்த்து ரயிலில் இருந்தவர்கள் என்ன ஆயிற்று என்று ஜன்னல் வழியாய்க் கேட்டார்கள். பதில் வராது போகவே இவர்களும் இறங்கிப் போனார்கள். கணேசன் கீழே இறங்கி வந்தான். அந்தப் பெண் இன்னும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். நல்ல நாட்டுக் கட்டை என்று மனசுக்குள் அவளைப் படுக்க வைத்தான். ரயிலை விட்டுக் கீழே இறங்கியபோது வெளியின் இருட்டு அதிகமாய்த் தெரிந்தது. கீழே எல்லோரும் குறுக்கு நெடுக்குமாய்ப் போய்க் கொண்டிருந்தார்கள். அவன் சற்று நிதானமாய்ப் பார்த்தபோது ரயில் பாதையை ஒட்டி ஒரு பெரிய ஏரி இருந்ததைப் பார்த்தான். வலது பக்கத்தில் ஒரு பசுமையான வயலில் சலசலப்பை உணர முடிந்தது. எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இருட்டில் குரல்களின் வித்தியாசம் துல்லியமாய்க் கேட்டது. இன்னும் எவரும் உண்மையான காரணத்தைத் தெரிந்து கொள்ளவில்லை. காரணம் என்ன என்பதே அவர்களுக்கு அவசியமில்லாதது போல் தெரிந்தது. ஆனால் பேசிக் கொண்டிருக்க ஏதாவது ஒரு காரணம் போதும் என்பது போல் பேசினார்கள். கணேசனைக் கடந்து போன சிலர் அவனிடமும் விசாரித்தார்கள். அவன் தெரியாது என்று பதில் சொன்னவுடன் அதை எதிர்பார்த்ததே போல் மற்றவர்களிடம் கேட்கப் போனார்கள் சைன் கொஞ்சம் தள்ளியிருந்த வாராவதியின் மேல் போய் நின்று கொண்டு ஏரியைப் பார்த்தான். ஏரியின் கரைக்கு அப்பால் ஒரு உயரமான மேடையும் ஒரு பெரிய கிணறும் தெரிந்தது. பக்கத்தில் ஒரே ஒரு குடிசை மட்டும் தெரிந்தது. அங்கு ஒரு பம்ப்செட் இருக்கவேண்டும் என்று அவன் ஊகித்தான். இந்தத் தனியான இடத்தில் ஒரு சிறு குடிசையில் வசித்துக் கொண்டிருக்கும் அந்த யாரோ ஒரு உழவனை நினைத்துக் கொண்டான். எவ்வளவு சுகமான வாழ்க்கை! இவன் தெருவுக்கு இவனே ராஜா. இவன் ஊருக்கு இவன் மட்டுமே குடிமகன். யாரோடும் பேசாமல் இவன் மட்டும் தனியாகத் தன் வேலையைக் கவனித்துக் கொண்டிருப்பான். பிறரின் ரகசியங்களை அவலாக மெல்ல நினைக்கும் ருசி இவனுக்கு இருக்காது. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் காப்பியைக் குடித்துவிட்டு ’ஹிந்து’வைப் படித்து விட்டு பக்கத்து வீட்டுக்காரனோடு வம்பளக்கப் போகாதவனாய் அவன் இருப்பான். வேளா வேளைக்கு இருப்பதைத் தின்றுவிட்டு வயலில் உழப் போய்விடுவான். சொந்தக்காரன் எங்காவது பட்டணத்தில் ஒரு ரேஸ் கோர்ஸில் இவனது பகல்நேர உழைப்புகளையெல்லாம் குதிரை வாலில் விட்டுக் கொண்டிருப்பான். இந்த விவசாயிக்குக் கவலைகள் அவ்வளவாய் இருக்காது. ரேவதி, நளினி, விஸ்கி, பிராந்தி எதுவும் இருக்காது. சினிமாவோ கிடையாது. இவனின் ஒரே பொழுதுபோக்கு இவன் மனைவியாய்த்தான் இருக்கும். தன் உடலின் பசி உயரும் பகல் பொழுதில்கூட அவனால் அவன் மனைவியைக் குடிசைக்குள் கூப்பிட முடியும். அவளும் சிணுங்காமல் போவாள். நிம்மதியான வாழ்க்கை…ம்… கணேசன் திரும்பிப் பார்த்தான். அந்தப் பக்கமாய் வந்த கார்டு பலர் சூழ நடந்து கொண்டிருந்தார். ஒவ்வொருவரும் அவரைக் கேள்வி கேட்டுத் துன்புறுத்திக் கொண்டிருந்தார்கள். அவர் யாருக்கும் பதில் சொல்லாமல் அலட்சியமாய் நடந்து கொண்டிருந்தார். அவர்களும் விடாமல் அவரைத் துரத்தி ரயில் நின்று போன காரணத்தைக் கேட்டார்கள். கார்டு தன் கையில் பிடித்திருந்த விளக்கின் பச்சையை, சிவப்புக்கு மாற்றிவிட்டு, அவர்களைப் பேசாமல் இருக்கும்படி சைகை காட்டிவிட்டு மேலே நடந்தார். ரயிலின் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருந்த ஒரு கிழவர், ‘இப்படித்தான் போன வருஷம் நான் டில்லிக்கு போறச்சே…’ என்று கதை சொல்ல ஆரம்பித்தார். கணேசன் லயன் ஓரமாகக் கிடந்த கற்களில் ஒன்றைப் பொறுக்கி, ‘சீ, ஜனங்க ஏன் இப்படி அர்த்தமே இல்லாம அபத்தமா பேசிக்கிட்டிருக்காங்க’ என்று நினைத்தவாறே ஏரியில் ஒரு கல்லை எறிந்தான். ‘ப்ளக்’ என்று ஒரு ரசிக்கும் படியான ஓசை கேட்டது. தூரத்தில் பம்ப்செட்டின் மேலே இருந்த விளக்கின் ஒளி தண்ணீரில் சிதறுவதைப் பார்க்க முடிந்தது. அம்மா இருந்தா சொல்லுவா. தவளை இருக்கும். அடிக்காதடா! இப்ப அவ இல்லை. மறுபடியும் ஒரு கல்லை விட்டெறிந்தான். அவள் இருந்த வரைக்கும் கஷ்டப்பட்டாள். கஷ்டம் மட்டுமே பட்டாள். அவள் ரொம்பவும் எதிர்பார்த்த அண்ணன்கூட யாரையோ கல்யாணம் பண்ணிட்டு கல்கத்தா பக்கம் போய்விட்டான். அதன் பிறகு, ஊரில் இருந்த அம்மாவுக்கு அவன்தான் பணம் அனுப்பிக் கொண்டிருந்தான். அம்மாவுக்கு ஒரு ரேடியோ வாங்கணும்னு ரொம்ப நாளாய் ஆசை. கதா காலஷேபம் கேட்கணுமாம். அவனால் கடைசிவரை அதை வாங்கவே முடியவில்லை. கணேசன் பட்டணத்தில் தான் குடியிருந்த ராயர் வீட்டை நினைத்துக் கொண்டான். அந்த வீட்டின் முன் பக்க அறையில் பத்து ரூபாய் வாடகைக்குக் குடியிருந்தான். ராயருக்குப் பெண்கள் இல்லை. தான் படிக்கும் கதைகளில், முன்பக்க அறையைத் தன் போன்ற பையன்களுக்கு வாடகைக்கு விடும் ராயர்களுக்கு மட்டும் எப்படி அழகான பெண்கள் இருக்கிறார்கள் என்று அவன் சந்தேகப்பட்டிருக்கிறான். ராயர் ரொம்பவும் நல்லவர். அவர் மனைவி ஒரு பதினைந்து வருஷப் படுக்கை நோயாளி. மனைவிக்கு மருந்து வாங்குவதிலேயே வாழ்க்கையை அழித்துக் கொண்டவர். கணேசனும் இந்த மருந்துகள் வாங்கும் விஷயத்தில் அவருக்கு உதவியிருக்கிறான். ஆனால் எந்த மருந்தும் அவளைக் குணப்படுத்தவில்லை. ராயர் அவனை வேறு வேலை கிடைக்கும் வரை அங்கேயே இருக்கச் சொன்னார். ஆபீஸில் மேலே இருப்பவனை முறைத்துக் கொண்டதன் விளைவு… தன் சுயமரியாதையைக் காப்பாற்ற வேலையை ராஜினாமா செய்தான். (ம்…என்ன பெரிய சுயமரியாதை சாப்பாட்டுக்கு வழியில்லாம!) சாப்பாட்டைப் பற்றி அவர் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லியும் மறுத்துவிட்டான். தன் மேல் பிறர் அனுதாபப்படுவதை மிகவும் வெறுத்தான். (ஆமா, இதுக்கு மட்டும் கொறைச்சல் இல்லை) வேறு வேலை இங்கே இனிமேல் கிடைக்காது. ஆறு மாதம்வரை இருந்து ‘செட்டில்மென்ட்’ பணத்தை வைத்து ஓட்டியாயிற்று. எங்க போனாலும் Experience இருக்கா?ன்னு கேக்கறான். இருக்குன்னு சொன்னா அந்த வேலையை ஏன் விட்டேன்னு கேக்கறான். வேலை நிச்சயமாய்க் கிடைக்காது என்று தெரிந்தவுடன் முன்பு வேலை பார்த்துக் கொண்டிருந்த தன் ஒன்றுவிட்ட மாமாவின் ஊரில் இருக்கும் ’மில்’லுக்குப் போவதுதான் கடைசி வழி என்று தீர்மானித்துத் தன் மூன்று வருடப் பட்டண வாழ்க்கையை எக்மோர் ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் உதறிவிட்டு ரயில் ஏறினான். கூட்டம் என்ஜின் பக்கம் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு பெட்டியிலும் உட்கார்ந்திருந்தவர்கள் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார்கள். அந்தப் பெண்ணும் ஜன்னல் வழியே தனியாய் நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் கணேசனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். கணேசனுக்குத் திடீரென்று ராயர் வீட்டுக்கு நாலு வீடு தள்ளி இருந்த மாடி வீட்டு மைதிலியின் ஞாபகம் வந்தது. அவன் அவளை ரொம்பவும் விரும்பினான். இவள்தான் நம் மனைவி என்று தீர்மானமாய்க் காதலித்தான். ‘யாரோ அடிபட்டுக் கிடக்கான்’ ‘அவனைத் தேடவே இவ்வளவு நேரம் ஆயிடுச்சு’ ’செமுத்தியான அடி. உடம்பு பூரா அடி!… ஒரே ரத்தம்” மைதிலி மிக அழகாய்ச் சிரிப்பாள். அவள் சிரிப்பு ஒண்ணுதான் அவள் சொத்து. அந்தச் சிரிப்புக்காக அவன் பஸ் ஸ்டாண்டில் தினமும் காத்துக் கொண்டிருப்பான். கூட்டம் கொஞ்சம் பரபரப்பாய் பேச ஆரம்பித்தது. சிலர் என்ஜின் பக்கம் போய் அதைப் பார்த்துவிட்டு வர ஓடினார்கள். ‘உசிரு இருக்கா?’ ‘தெரியல. பக்கத்து ஜங்ஷன்ல இருக்கற ஆஸ்பத்திரிக்கு எடுத்துண்டு போவாங்கன்னு நெனக்கறேன்.’ இருட்டுல ஒரு எளவும் தெரியல. மைதிலி போல ஒரு பெண் இனி உலகத்தில் தனக்குக் கிடைக்கமாட்டாள் என்று அவன் நினைத்தான். மைதிலியோடு பேச அவன் பலமுறை முயன்று தோற்றுப் போனான். அது தன்னால் முடியாது என்றும் முடிவு செய்தான். ஆனால் அவளோ இவனை பார்த்ததும் ஒரு லேசான புன்னகையைக் காண்பித்துவிட்டு உடனே முகத்தைத் திருப்பிக் கொள்வாள். இது போதும் என்று அவன் நினைத்தான். ‘உசிரு இருக்காது. அந்தக் கார்டுகூட நாடி பாத்துட்டு ஒதட்டைப் பிதுக்கிட்டாரே.’ ‘அப்படியே இருந்தாலும் இவுக போறதுக்குள்ளே போயிடாதா?’ ‘எப்படி உளுந்தானாம்?’ ஆனால் அவள் தன்னைக் காதலிக்கிறாளா என்பதை மட்டும் அவனால் அறியவே முடியவில்லை. தன்னுடைய அந்தப் பேடித்தனத்தை எண்ணி அவன் குமுறினான். ஏன் அப்படி இருந்தோம்? ஏன்? என்று பலமுறை தன்னையே கேட்டுக் கொண்டான். பற்களைக் கடித்துக் கொண்டான். மறுபடியும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு மணியைப் பார்த்தான். 11.30. ‘அந்த ஆளு லயனை க்ராஸ் பண்ணறச்சே வண்டி வரதைப் பார்க்கல் போல. இங்க லயன் வேற வளஞ்சில்ல வருது!’ ‘டிரைவர்கூட கொஞ்சம் முன்னாலதான் பார்த்தாராம்.’ ‘பாவிப் பசங்க ஏன் இப்படி நம்ம உயிரை எடுக்கிறானுவளோ தெரியலை.’ கடைசியில் அவனால் அவளை அடைய முடியாமலேயே பேயிற்று. வேறு யாரோ ஒரு கணேசனுடன் அவளுக்குக் கல்யாணம் நடந்தது. அவன் ஒரு இன்ஜினியர் என்று கேள்விப்பட்டு அவன் மைதிலிக்காக வருத்தப்பட்டான். கல்யாணம் வெகு ஆடம்பரமாய் நடந்தது. இவன் ராயர் வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டுதான் அந்த மாப்பிள்ளை ஊர்வலத்தைப் பார்த்தான். கண்ணில் தளும்பி நின்ற நீரைக் கஷ்டப்பட்டுத் தேக்கிக் கொண்டான். அழக்கூடாது, அழக்கூடாது என்று தீர்மானமாய்ப் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றான். ‘பாடியை என்ன பண்ணுவாங்க?’ ‘போஸ்ட் மார்ட்டம் பண்ணிட்டுத்தான் குடுப்பாங்க, லயன்ல விழறதுக்கு முன்னாடியே அவன் செத்துப் போயிட்டானா இல்லையான்னு கண்டுபிடிப்பாங்க.’ ‘நாளை பேப்பர்ல இந்த நியூஸ் வருமா?’ ‘ம்…கண்டிப்பாய் வரும். கொட்டை எழுத்தில் நாலு காலத்துல போடுவான்.’ ‘பாவம். சாகறதுக்கு முன்னாலே என்ன நெனச்சுக்கிட்டானோ. இருவத்தஞ்சு வயசு ஆள் மாதிரிதான் தெரியுது. கல்யாணம் ஆயிடுச்சோ என்னமோ!’ இதற்குள் கார்டின் விஸில் சத்தம் கேட்டது. எல்லோரும் விழுந்தடித்துக்கொண்டு தங்கள் பெட்டிகளை நோக்கி ஓடினார்கள். என்ஜினின் ஹாரன் ஓசை ஒரு முறை நீளமாய் அலறியது. கதவு வழியில் அதிகக் கூட்டம் இருந்ததால் சிலர் ஜன்னல் வழியே தங்களைத் திணித்துக் கொண்டார்கள். ஒரு வழியாய் எல்லோரும் ஏறிய பின் ரயில் மெதுவாய் நகர்ந்தது. கணேசன் மட்டும் கீழேயே நின்று கொண்டிருந்தான். ரயில் வேகமாய் நகர ஆரம்பித்தபோது இன்னும் சிலர் கதவு வழியில் உள்ள கைப்பிடியில தொங்கிக் கொண்டிருந்தார்கள். ரயில் முழு வேகத்தில் அவனைக் கடந்து போயிற்று. அவன் கடைசிப் பெட்டியின் பின்னால் தெரியும் சிவப்பு விளக்கு மறையும்வரை பார்த்திருந்துவிட்டு இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான்.  கரிச்சான் குஞ்சு தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டம் சேதின்புரத்தில் பிறந்த நாராயணசாமி, தன் உயிர் நண்பர் கு.ப.ரா.வின் நினைவாக தன் பெயரை கரிச்சான் குஞ்சு என்று இட்டுக் கொண்டவர். (கு.ப.ரா கரிச்சான் என்ற பெயரில் சிறுகதை தவிரப் பிறவற்றை எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது) இவர் எழுதிய கதைகளில் மனித பலவீனங்களைப் பற்றிய எள்ளலும் போலித்தன்மைகளைச் சாடும் சினமும் வெளிப்பட்டதோடு, கலைஞானம் மிகுந்த மாந்தர்கள் தமது திறமையை முழுமையாகப் பிரதிபலிக்கும் போக்கும் தலைதுாக்கி நிற்கக் காணலாம். நீண்டகாலம் மன்னார்குடியில் ஆசிரியராக வாழ்ந்த கரிச்சான் குஞ்சு அசல் தஞ்சாவூர் பாரம்பரியத்தில் வளந்தவர். சமஸ்கிருதத்திலும், இசை முதலிய கலைகளிலும் ஈடுபாடு கொண்டவர். வடமொழியில் வேதம் வியாகரணம் படித்து தமிழிலும் சங்க இலக்கியங்களைக் கற்றார். கு.ப.ராவின் சீடர்களில் குறிப்பிடத்தக்கவர். சொற்சிக்களத்துடன் எழுதப்பட்டிருக்கும், ‘ரத்தசுவை’ சிறுகதை கரிச்சான் குஞ்சுவின் இலக்கிய உணர்வையும், சிறுகதைக் கொள்கையையும் விளக்குகிறது.  ரத்தசுவை ராமுவுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றார்கள் எல்லோரும். நானும் அவனை கவனித்தேன். அவன் சரியாயில்லை. நான் ஊருக்கு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. ராமுவை அழைத்துவரச் சொல்லிப் பலரை அனுப்பினேன். அவன் வரவில்லை. நான் போய்க்கூப்பிட்டேன். அவன் பேசவில்லை; ஆனால் என்னைப் பார்த்துச் சிரித்தான். ‘வீட்டுக்குப் போ வருகிறேன்’ என்று ஜாடை காண்பித்தான். உடனே திரும்பிக் குரங்கைப் பார்க்கப் போய்விட்டான். ராமு அந்தக் குரங்கினிடம் என்ன கண்டானோ, அதையே கவனித்துக் கொண்டும் அது போகுமிடங்களுக்கெல்லாம் தானும் போய்க் கொண்டும் இருந்தான். வீட்டுக்கு வந்தேன். என் வீட்டாரிடமும் ராமு வீட்டாரிடமும் விசாரித்தேன். அவனுடைய குடும்பம் நொடித்துவிட்டது. ஒரு கல்யாணத்துக்கு வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்காமலேயே பல வருவடங்கள் கழிந்துவிட்டன. கடன் கொடுத்திருந்த கோபாலய்யர் வியாஜ்யம் நடத்தி ராமுவின் சொத்து முழுவதையும் கட்டிக்கொண்டு விட்டார். வீடு உள்படப் போய்விட்டது. ஆறு மாதத்தில் வீட்டைக் காலி செய்து தரவேண்டும் என்று கோர்ட்டில் தீர்ப்பு ஆகியிருந்தது. அந்த கெடுவில் இன்னும் இரண்டே மாதங்கள் பாக்கி. மனுஷன் என்ன பண்ணுவான்? கலங்கிப் போய்விட்டான். பேச்சிலோ செய்கையிலோ வேறு ஒரு விபரீதமும் கிடையாதாம். பிரமை பிடித்ததுபோல் அந்தக் குரங்கைச் சுற்றிக்கொண்டு அலைகிறானாம் அதுவோ இவனைப் பாய்ந்து கடிக்க வருகிறதாம். குரங்கோ ஒற்றைக் குரங்கு. நானும் பார்த்தேன். அதன் பரிமாணம், நீளமும் சரி. பருமனும் சரி அசாதாரணமானதுதான். கொழுத்து விறாந்து கிடந்தது அது. ஊரில் அதன் ரகளை இல்லாத நாளே கிடையாதாம். எங்கு வேண்டுமானாலும் ஏறி இறங்கி எதையும் எடுத்துத் தின்று கொண்டு திமிர்பிடித்து அலைந்து கொண்ருக்கிறது அது. எல்லோரும் அதைக்கண்டு பயப்பட்டார்களே தவிர அது யாரைக் கண்டும் எதைக் கண்டும் பயப்படவில்லையாம். நாய்களையெல்லாம் அது பலபடித் துன்புறுத்திற்று. நாய்க்குட்டிகளைக் கொன்று போடுகிறதாம். ‘ஒற்றைக் குரங்கு ஊரை அழிக்கும்’ என்பது ஹனுமானைப் பற்றிய பழமொழியாம். அவர் லங்கையை அப்படி அழித்ததால்தான், நம்முடைய தெய்வமானார். ஆனால் இந்த குரங்கு எங்கள் ஊரில் இப்படி அட்டுழியம் செய்து வருகிறது. ஊரில் எல்லோரும் புராதனக் குடிகள். உலகத்தின் அணுவணுவிலும் தெய்வத்தைக் கண்டு போற்றும் புராதனக் கொள்கைகளை உடையவர்களின் வம்சபரம்பரை. ஆகவேதான் அந்தக் குரங்கைப் பிடிக்கவோ, அடிக்கவோ, அன்றிச் சுடவோ அவர்கள் அனுமதிப்பதே இல்லை. “நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டுமே ஒழிய ஆஞ்சநேய ஸ்வாமிக்கு அபசாரம் செய்யலாமோ” என்கிறார்கள். இப்படியெல்லாம் விவரங்கள் தெரிந்தன. ராமு கடன்பட்டுப் புண்பட்டதற்கும் இந்த வானர லீலைக்கும் என்ன சம்பந்தம்? இது யாரும் சொல்லவில்லை. எனக்கும் புரியவில்லை. “ராமு சில சமயமாவது நல்லபடி ஒழுங்காய்த் தொடர்ச்சியாய் பேசுகிறான் அல்லவா?” என்றேன். “அதெல்லாம் ஒன்றும் குறைவில்லை. குரங்கைக் கண்டுவிட்டால் இந்தப் பிரமை வந்து விடுகிறது. அதிசயம்தான் இது…” என்றனர். ‘பாவம். ராமு. அவனை எப்படியாவது என்னுடன் வடக்கே அழைத்துக்கொண்டு போய் ஒரு உத்தியோகம் தேடிக் கொடுத்துவிடவேண்டும். அப்புறம் இந்த ஊரையே மறந்துவிடட்டுமே அவன்’ என்று தீர்மானித்துக் கொண்டேன். நானே போய் ராமுவை அழைத்து வந்தேன். பார்வையில் பைத்தியத்தின் கோணல் இருக்கிறதா என்று ஆராய்ந்தேன். சற்றும் இல்லை. நடை, உடை, தோற்றம் எதிலும் கோளாறு இல்லை; ஆனால், அவன் மனதில் ஒரே விதமான போக்கு, ஒன்றை பற்றியே ஒரே எண்ணம் தொடர்ந்து இருப்பதுபோல் இருந்தது அவன் பாவனை. இதை யூகித்தேன். அதாவது அவன் மனம் அதிர்ச்சியில் அயர்ந்து குறிப்பிட்ட ஒரே துடிப்பை மட்டும் தொடர்ந்து துடித்துக் கொண்டிருக்கவேண்டும் என்ற தோன்றிற்று. அவன் போக்கிலேயே ஆரம்பித்தேன் பேச்சை; “ஏண்டா ராமு, இப்ப எப்படி இருக்கு குரங்கு? ஆமாம். பிராணி விஞ்ஞானத்தில் எப்போதிருந்து உனக்கு இவ்வளவு ஈடுபாடு?” “அந்த ஒரு விஞ்ஞானம் மட்டும் அல்ல; இன்னும் பல விஞ்ஞானங்களும் இதில் தெரிகின்றன…” “எதில்? ஊரில் தனியரசு செலுத்தும் இந்த ஒற்றைக் குரங்கினிடமா…?” “இந்தக் குரங்கு மட்டுமா? நம்மூரில் இதேமாதிரி தனியரசு செலுத்தி அட்டுழியம் செய்யும் பல பிராணிகள் இருக்கின்றன. நான் இந்தக் குரங்கைப் புரிந்து கொண்டு விட்டதால் எனக்கு இந் ஊர்ப் புண்யவான்களை விபூதி ருத்ராக்ஷப் பிராணிகள் எல்லோரையும் பற்றிப் புலப்பட்டு வருகிறது. நானா, இவனுகள் எல்லோரும் இப்டியே இருந்தால் இன்னும் இரண்டொரு தலைமுறையில் இந்த ஊரில் பாழ்மனைகள் பலவும், மூணோ நாலோ மாடிவிடும் தான் இருக்கும்..” “ராமு, அந்த கோபாலய்யர்…” “அவன்மேலே குற்றமில்லை. இருக்கிற சம்பிரதாயம், சட்டத்திட்டம்…” “கோபாலய்யர் உனக்கு ரொம்ப வேண்டியவர். நெருங்கிய உறவினர்கூட. இல்லையா?” “அதனால் தான் என்னை இப்படி உறிஞ்சிக் கொன்றார்.” “கடைசியில் அவருக்குக் கொடுக்க வேண்டிய கடன் போக என்ன மிச்சம் உனக்கு?” “பச்சை காய்ந்து வரட்சி குத்தும் இந்த மனமும், வாழ்ந்த ஊரில் ஓட எடுக்க ஆன இந்த தினதசையும் தான் மிச்சம்.” “வட்டியையாவது வருஷா வருஷம் கட்டியிருக்கலாம் நீ” “அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறாய்? முதலிலேயே ஒரு பகுதியை அடைத்திருப்பேனே? இவர்பண்ணின யுக்தியால்…” “என்ன யுக்தி…?” “வட்டி அதிகமாய் எழுதுவதற்கென்றே தன் தங்கையின் பெயரால் பந்தகம் எழுதினார். அவள் எங்கேயோ பம்பாயில் இருக்கிறாள் பெண்ணோடு, வரவு வைக்க வழியே இல்லை. பத்திரம் அவளிடம் இருக்கிறதென்று தள்ளிக் கொண்டே வந்துவிட்டார் அவர். நம்ம செய்திதான் தெரியுமே உனக்கு, மூணு முழமும் ஒரு சுற்று. முப்பது முழமும் ஒரு சுற்று.” “உண்மையில் பணம் யாருடையது?” “இவரதுதான்” “பின்னே ஏன்?” “அதுதான் அதிக வட்டிக்கும், ஆளை ஒழித்து அஸ்தியை அப்படியே கட்டிவைக்கவும் யுக்தி. இது இந்த ஊரான்களுடைய வெகு நாளைய சம்பிரதாயம்.” “சரிதான், பஞ்சாபிகள் எல்லாம் தவணைக்கடை…” “அதாவது நேரடியாகத் தெரியும். கத்தியைப் பார்த்துக் கொண்டே கழுத்தை நீட்டுகிறார்கள். இங்கே, அப்படியே வெளியிலே குளுமைப் பேச்சைப் பூசிப்பூசி உபசாரம் பண்ணியே பணத்தைக் கொடுத்துவிட்டு நோகாமல் கழுத்தை அறுத்து விடுவானுக. பின்னே ஏது இந்த சொத்தெல்லாம்? கலெக்டர், திவான் உத்தியோகம் பார்த்தானுகளா, இல்லே பெரிய வியாபாரம் பண்ணினானுகளா? தொன்றுதொட்டு இது தானே அவர்களுடைய குல தர்மம்.” “கோபாலய்யர் ஏதோ உத்தியோகம் பார்த்து ‘ரிடையர்’ ஆனவர்தானே?” “அது தான் சொல்லனும், வந்த புதிதில் அவர் வட்டி வாங்காமல் ஏழைகளுக்குக் கைம்மாறு கொடுத்துக் கொண்டிருந்தார். வரவர, இந்த ஊர் ராட்சஸனுகளைவிட ரொம்ப மேலே போய்விட்டார். என்னோடு சேர்த்து மொத்தம் ஐந்து குடும்பங்களை நிர்மூலமாக்கியிருக்கிறார் இதுவரை. இன்னும் அவரிடம் கடன்பட்டு வரவே வைக்காத இரண்டு ஜீவன்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன. சூழ்நிலையும் சுற்று வாடையும் அவரை…” “கோபாலய்யரா? அவர் ரொம்ப நல்லவர். ஆசார அனுஷ்டானம் தவறாதவர். நல்ல வம்சத்தில் பிறந்தவர்…” “வம்சமும் இனமும் என்னப்பா செய்யும்? நான் குரங்கோடு சுற்றுகிறேன். ஏன் தெரியுமா? எல்லோரும்.” “எல்லோரும் உன்னைப் பைத்தியம் என்று சொல்லத்தான்.” “அதை நான் லக்ஷ்யமே பண்ணவில்லை. இதை கேள், குரங்கு இனம் சாக பக்ஷி” “யார் இல்லையென்றது? ஈச்வர சிருட்டியே அப்படி,” “அதுதான் தப்பு; சிருட்டியில் குணம் கிடையாது. குரங்கும் மாம்ஸி பக்ஷி ஆய்விடும். சூழ்நிலை, திரும்பத் திரும்பச் செய்தல், வெறி இவை போன்ற காரணங்களால்…” “இது தான் நீ பைத்தியம் பட்டம் வாங்கிக்கொள்ள நடத்திய ஆராய்ச்சியோ?” “இது ஸத்யம் நாணா, ஊராரைக் கேள், சொல்லுவார்கள்…” “…இந்தக் குரங்கு எத்தனை நாய்க்குட்டிகளைத் தூக்கிச்சென்று கொன்றிருக்கிறது தெரியுமா? ஆரம்பத்திலே தாய் நாய்கள் குரைத்துத் துரத்தியதால் இதற்கு ஏற்பட்ட கோபவெறியில் குட்டிகளைத் தூக்கிச் சென்றது; கொன்றது; இவ்வளவுதான் ஊராருக்குத் தெரியும். எனக்கு அதுக்கு மேலே தெரியும். குட்டிகளின் கழுத்தை நெறித்துக் கிழித்துக் கையால் குதறி எறியும். கையெல்லாம் ரத்தமாய் விடும். துடைக்கத் தெரியாமல் நக்கும். ரத்தம்-நாக்கில் படும். தணிந்த வெறிக்கும் இந்தச் சுவைக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டு இது அடிக்கடி ஏற்படுவதால் நினைவில் அழுந்தும். பிறகு அதே செய்கைக்குத் தூண்டும். வெறி வந்தவுடன் நாக்குச் சுவையும் நினைவுக்கு வரும். வெறியும் தணியும். சுவையும் கிடைக்கும். இப்படியே வழக்கமாகி இன்று இந்தக் குரங்கு ரத்த வெறி மிகுந்து கிடக்கிறது. நேற்று ஒரு ஆட்டைக் கிழித்துக் காய்ப்படுத்திவிட்டது. கதையெல்லாம் எதற்கு? இன்று இந்தக் குரங்கு பரிபூர்ண ரத்தவெறி பிடித்து பக்கா மாம்ஸ் பக்‌ஷியாய் மாறிவிட்டிருக்கிறது. அந்தக் குரங்கை அப்படியே செய்ய அனுமதிப்பதைத் தான் தர்மமென்று கூறுகிறது. சமூகம். இதேதான் கோபாலய்யர் கதையும். ஆரம்பத்தில் வட்டி இல்லாமல் உபகார நோக்கத்தோடு, உதாரச் சிந்தையோடு ஏழைகளுக்குக் கடன் கொடுக்க ஆரம்பித்தவர், இப்போ குடும்பங் குடும்பமாய் அழித்துத் துடைத்துக் கொண்டு வருகிறார். அதையும் கடமையைப் போல் செய்கிறார். வழக்கமும் சட்டமும் அதை ஒப்புக்கொள்ளவும் செய்கின்றன. ஸ்வாமி தரிசனம் செய்வது அவ்வளவு அநுஷ்டானப் பொருத்தத்தோடுதான் இதைச் செய்கிறார். சமூகம் தான் நலமுற்று வரத் தானே செய்துகொண்ட கடன் கொடுக்கும் ஓர் உதவிமுறை இன்று இப்படிப் பரிணமித்திருக்கிறது. வளர்கிறது. ரத்தவெறி கொண்டு திரியும் குரங்கை ஒடுக்குவது ஆஞ்சனேய ஸ்வாமிக்கு அபசாரமென்று கருதப்படுகிறதே, அந்த மனோபாவத்திற்கும் சமூகப் போக்குக்கும் ஒரு தொடர்பை உணர்கிறேன். வெற்றி அந்தப் போக்கிற்குத்தானா என்று அறிவதில் ஆர்வத்தோடு இருக்கிறேன். நான் போகிறேன் நானா, குரங்கின் கதையில் இன்று விசேட கட்டம்.” “என்னடா ராமு, நான் வெகு தூரத்திலிருந்து வெகு நாள் கழித்து வந்திருக்கிறேன்.” “எனக்குத் தெரியவில்லையா, இருந்தாலும் உன்னைவிட எனக்கு நானா என் மனம் என் வசத்தில் இல்லை. அதோ ஒடுகிறது. காலையில் நம்முருக்கு ஒரு குரங்காட்டி வந்தான். அவனுடைய குரங்கை நம்மூர் தடிக்குரங்கு இழுத்துக் கொண்டு ஓடிவிட்டது. பாவம், அந்தப் பிச்சைக்காரனுடைய பிழைப்புக்கு ஆதாரமாயிருந்தது போய்விட்டது. ரொம்ப பாடுபட்டான். ஒன்றும் முடியவில்லை. மகா ஆத்திரம் அவனுக்கு. எப்படியாவது அதைப் பிடித்துவிட வேண்டும் அல்லது தடிக்குரங்கைக் கொன்றுவிட வேண்டும் என்று இருக்கிறான். போய் என்ன ஆகிறதென்று பார்க்க வேண்டும்…?” ராமு கிளம்பினான். இதற்குள் தெருவில் ஒரே சத்தம். பெரியவாள் எல்லோரும் இரைந்து கத்தினார்கள். “பிச்சைக்காரப் பயலைக் கட்டிப் பிடியுங்கடா, பந்தக்காலில் கட்டிப் போடுங்கள் படவாவை. குரங்கைப் பிடிக்கவாவது இவன்…” என்றார் ரொம்பப் பெரியவர் ஒருவர். ராமு வேகமாய்ப் போனான். நானும் பின்னே சென்றேன். பிச்சைக்காரன் கையிலிருந்த கயிற்றுச் சுருக்கில் தடிக்குரங்கு மாட்டிக்கொண்டு படாத பாடுபடுத்திற்று. பிச்சைக்காரனைப் பிராண்டிற்று கடித்தது. அவனும் அதை அடித்து இரத்தம் பீறிப் பிய்த்துவிட்டிருந்தான். இதற்குள் ஊர்ப் பெரியவாள் எல்லோரும் பல ஆட்களைக் கூட அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தார்கள். குரங்கை விடுதலை செய்யப் பிச்சைக்காரன் இசையவில்லை. அடிக்கக் கட்டளையிட்டார்கள் ஊரார்கள். அவன் அடிப்பட்டுக் கொண்டே கதறினான், சொன்னான்; “சாமி. அழகான பெண் குரங்குங்க என் குரங்கு, ரொம்ப சாதுங்க. என் குரங்கின் கழுத்தை நெறிச்சுப்போட்டு, இரத்தம் உறிஞ்சிடுச்சங்க இது! அந்த ஜாதியிலே வந்துட்ட ஏதோ பிசாசுங்க இது…” என்று சத்தியத்தைச் சொன்னான். சத்தியம் யாருக்கு வேண்டும் அதையும் இந்தப் பிச்சக்காரப் பயலா சொல்வது? “சீச்சீ நாயே, வாயை மூடு ஆஞ்சநேய ஸ்வாமிக்கு அபசாரம் பண்ணிவிட்டு பேசறையேடா…” என்றார் ஒருவர். “ஏண்டா நிற்கிறீர்கள்? அவனை உதையுங்களடா, கயிற்றை அறுத்துக் குரங்கை விடுவியுங்கள், உம்” என்று ஆட்களுக்கு உத்திரவு பிறந்தது. “சாமி சாமி, இந்தக் குரங்கு இருப்பது ஊருக்குக் கெடுதல்.” என்று பிச்சைக்காரன் முடிப்பதற்குள் அவனுக்கு அடி விழுந்தது. ராக்ஷஸக் குரங்கு யதேச்சையாய்த் தன்னரசு செலுத்த ஆரம்பித்தது. பழையபடியே ஐயமாரும் தன்னரசு செலுத்த ஆரம்பித்தார்கள். பிச்சைக்காரனுடைய பிழைப்புக்கு ஆதாரமாய் இருந்தது போய்விட்டதுடன் அவனும் ரத்தம் சிந்தினான் அடிபட்டு. எல்லாம் ஆஞ்சநேய ஸ்வாமிக்கு அபசாரம் செய்ததன் பலன். ஸ்வாமியும் தர்மமும்தான் எல்லாம். பல ராமுக்களுடைய சொத்துக்கள் போயின. இன்னும் பலர் ராமுகள் ஆக இருக்கிறார்கள். ஊரில் ஸ்னான, ஸந்தியா, ஜபதப ஹோமங்களுக்குக் குறைவே இல்லை. ஊரார்களோடு ஒப்பிட்டு ஒப்பிட்டுக் குரங்கைப் பார்த்துக்கொண்டு இருப்பதை ராமு நிறுத்தவில்லை. ஊரில் இருந்தவரைக்கும் நானும் ராமுவை அதிகம் விட்டுப் பிரியவில்லை. ராமுவுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றார்கள் எல்லோரும்…  எம். வி. வெங்கட்ராம் மணிக்கொடியில் கடைசிக் கொழுந்து என்று செல்லமாக அழைக்கப்படுபவர் எம்.வி. வெங்கட்ராம் கும்பகோணத்தில் பிறந்தவர். கு.ப.ரா. ந. பிச்சமூர்த்தி இவர்களின் ஊக்கத்தில் எழுதத் தொடங்கியவர். மணிக்கொடி அவருக்கு ஊக்கமளித்தது. இவர் எழுதிய கதைகளில் குறிப்பிடத்தக்கவை சிட்டுக்குருவி ‘தத்துப்பிள்ளை’ ‘சித்தக்கடல்’ பொதுவாய் இவர் கதைகளில் நுட்பமான உணர்வு நிலைகள் அதிகமாகக் காணப்படும். நாவல் இலக்கியத்திலும் குறிப்பிடத்தக்க பங்களித்துள்ளார். ‘வேள்வித்தீ’ என்ற நாவல் செளராஸ்டிர இனத்தின் சமுதாயச் சித்தரிப்பு, வாழ்வியல் வளர்ப்பு. மற்றொரு சிறப்பான நாவல் ‘நித்திய கன்னி’ மனதில் எழும் பழம் நினைவுகளும், அதனால் விளையும் சிக்கல்களும் நிறைந்த சித்தரிப்பே. சமீபமாய் பேசப்பட்ட நாவலான காதுகள் இந்திய அரசின் சாகித்திய அகாடமியின் விருதினைப் பெற்றது. முன் கூறப்பட்டுள்ள இரண்டு நாவல்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டது. கற்பனையின் கனவுக் கோட்டையே. வாழ்க்கைக்கும், படைப்புக்கும் தொடர்பே இல்லாத நாவல் என்று தான் சொல்லவேண்டும். “எம்.வி.வி அவர்களின் சிறுகதைகள் தனித்தன்மை வாய்ந்தவை. சுதந்திரமானவை. ‘ப்ரி பர்சனாலிட்டி’ உள்ளவை. மொத்தத்தில் தனித்துவம் வாய்ந்தவை. ஆனால் பல்வகையான பன்முக வார்ப்பு கொண்டவை.” - க.நா.சு  பூமத்திய ரேகை ஒரு சிலரே ஆயினும், அறிவாளிகளே நிறைந்த அந்தக் கூட்டத்தில் அவன் மிகவும் அழகாகத்தான் பேசிவிட்டான். கவிதா வேகத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு வந்த உவமைகள் சபையினரின் பிரமை பூண்ட கரகோஷத்துக்குக் காரணமாயின. அவைகளிலும் அவனுக்கே வியப்பு அளித்த உவமை ஒன்று. அதைப் பற்றி அவன் முன்னதாக நினைக்கவில்லை; மேலும் மேலும் விரியும் அவனுடைய பிரசங்கத்தில் அது தானாகவே முளைத்தது. அவன் பேசினான்; ’பூகோளம் படித்த நீங்கள் அறிவீர்கள். பூமத்திய ரேகையைப் பற்றி, பூமிக்கு இடையில் உள்ளதாகக் கூறப்படும் அந்த கோடு வெறுங் கற்பனை என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஆனால் விஷயம் அறியாத ஒருவன் அந்த ரேகை உண்மையாகவே உள்ளது என்று நம்பி அது காலப்போக்கில் விரிந்து கொண்டே போகும் என்று எண்ணினால்? அப்படியே விரித்து, பூகோளம் முழுவதையும் அந்தக் கோடு ஆக்கிரமித்துக் கொள்ளும் என்றும் அவன் கற்பனை செய்தால்…? இவ்வாறெல்லாம் எவனும் நினைக்கவும் மாட்டான், நம்பவும்மாட்டன். ஆனால் இன்றைய மனித ஜாதியின் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. மனிதனுள் பூமத்திய ரேகை “நான்” என்னும் உணர்ச்சி, பூகோள ஞானத்துக்கு அந்தக் கற்பனைக்கோடு எவ்வளவு அவசியமோ, மனித முன்னேற்றத்துக்கு அமைதியான வாழ்க்கைக்கு அந்த உணர்ச்சி அவ்வளவு அவசியந்தான். ஆனால் துர்ப்பாக்கியவசமாக மனிதன் இந்த ரேகைக்கு அளவுக்கு மீறி முக்கியத்துவம் கற்பித்துவிட்டான். “நான்” என்னும் அகங்காரம்தான் உயர்வு தரும் என்று நம்பி ஏமாறுகிறான். நம் சமுதாயத்தில் ஆத்மீக வீழ்ச்சிக்கு மூல காரணம் இதுதான்.” அத்துடன் அவனுடைய பிரசங்கம் முடிவுற்றது. நீண்ட கரகோஷம் செய்தார்கள். அவனுடைய சொற்பொழிவில் மயங்கிய சிலர் அவனை அணுகிப் பாராட்டினர். பிறகு அவன் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பினான். பூமாலையையும், செண்டையும் எடுத்து வரும் சுமைதாங்கிச் சிறுவன் ஒருவன் பின்னால் வந்தான். அவனுடைய கால்கள் பூமி மீது பாவவில்லை என்றே கூறவேண்டும். பேனா பிடித்தவனுக்கு வாய் ஊமை என்பதைப் பொய்ப்பித்துவிட்டோம். என்கிற மகிழ்ச்சி மிகவும் அழகான மொழியில் உயர்ந்த ஓர் உண்மையை வெகு லாகவமாக வெளியிட்டுவிட்டோம் என்கிற பெருமிதம் கூட. “பூ மத்திய ரேகை” என்று மனத்துக்குள் முணு முணுத்தான். “நான் என்னும் உணர்ச்சி” அது ஓரளவு தேவைதான். ஆனால் “நான்” தான் நித்யம் என்பது தான் சமுதாயத்துக்குச் சாபம். வீட்டு வாயிலில் கால்கள் நின்றபோதுதான் அவனுக்குத் தன் நினைவு வந்தது. தாழிடாமல் சாத்திருந்த கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான். வீட்டு முன் கூட்டில் வெளிச்சம் இல்லாததால் அவன் விளக்கைப் போட்டான். “ராஜம்” பதில் வரவில்லை. பிறகுதான் பூமத்திய ரேகையிலிருந்து அவன் வீட்டுக்கு வந்தான். பூமாலை கழுத்தில் விழுந்த விஷயம் ராஜத்துக்கு மகிழ்ச்சி அளிக்குமோ என்னும் எண்ணம் ஓர் அற்ப வினாடி அவனுள் எழுந்தது. அவன்தான் அப்படி நினைக்கும் வழக்கம் இல்லையே என்ற மறுநினைவு முதல் நினைவை விழுங்கியது. “ராஜம்!” என்று மீண்டும் அழைத்துக் கொண்டே இரண்டாவது கட்டுக்குச் சென்றான். அங்கு இருந்த இருட்டை விலக்கினான். ராஜம் அங்கே இருந்தாள்; கிடந்தாள்; ஆடை அலங்கோலமாய்த் தலையைக் கவிழ்த்துக் கொண்டு. “உடம்புக்கு என்ன ராஜம்?” என்று பதறி அங்கவஸ்திரத்தை அங்கேயே எறிந்துவிட்டு அவன் அருகில் வந்து உட்கார்ந்தான். என்னவோ?’ என்ற பயம் அவனுக்கு உண்டாகிவிட்டது. “ஒன்றுமில்லை” என்றாள். அவள். “ஸார்!” என்றது சிறுவனின் குரல். வெளியே சென்று மாலையை வாங்கிக் கொண்டு, கதவைத் தாழிட்டான். மாலை மேஜையின் மீது விழுந்தது. அதை ராஜத்திடம் காட்டி, அதனால் தனக்குண்டான பெருமையைக் கூறவேண்டும் என்ற அவன் நினைப்பு கரைந்துவிட்டது. மனைவியின் பக்கம் அவன் சென்றான். “ராஜம்! ஜூரம் கிரம்…” “ஒன்றும் இல்லை” என்ற பதில்தான். தலையை, உடம்பைத் தொட்டுப் பார்த்தான். சாதாரணமாகவே இருந்தது. கொஞ்சம் ஆறுதல் உண்டாயிற்று. “நான் சாப்பிட…” “நான் சமைக்கவில்லை” என்றாள். மிகவும் மெதுவாய்… “ஏன்?” “இல்லை” “முன்பே சொல்லியிருந்தால் அந்தப் பையனையாவது ஹோட்டலுக்கு அனுப்பி ஏதாவது வாங்கிக் கொண்டு வந்திருக்கலாமே?” அவள் பேசவில்லை. “சரி, நான் போய் இரண்டு பேருக்கும் ஏதாவது வாங்கி வருகிறேன்” என்று அவன் கிளம்பினான். ஹோட்டலுக்குப் போகும் போதும், திரும்பும்போதும் கூட அவனுக்கு அந்தக் கரகோஷம்தான் ஞாபகம். வீட்டைவிட அவனுக்குப் பூமத்தியரேகை இதமாக இருந்தது. அறிவாளிகள் அநாவசியமாய்க் கை தட்டுவார்களா? தங்களையும், நாகரிகத்தையும் மறந்து அவர்கள் செய்தால் அது அவனுக்கு விசேஷ கெளரவம் அல்லவா? ஆம்; ஆனால் அவனுக்குக் கிடைத்த இந்தப் பெருமையை, பெருமையின் மகிழ்ச்சியை அவளும் தன்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினான். ஆனால் என்றுமே அவள் அப்படி இருந்ததில்லையே. இன்று மாத்திரம் எதிர்பார்ப்பது தவறு என்ற நினைவு ஒரு பெருமூச்சை அவனிடமிருந்து பறித்தது. இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டதால், ஹோட்டலில் சாப்பாடு கிடைக்கவில்லை. மாலை டிபனில் மீந்திருந்ததைக் கட்டிக் கொண்டு அவன் வீட்டுக்குத் திரும்பினான். “ராஜம்! எழுந்திரு சாப்பிட்டுவிட்டுப் படுக்கலாம்.” “நீங்கள் சாப்பிடுங்கள்.” “சாப்பாடு கிடைக்கவில்லை; டியன்தான்.” என்று கூறிச் சாப்பிட்டு முடித்தான் விரைவாய். “நீயும் சாப்பிட்டால் தூங்கலாமே?” “நீங்கள் போய்த் தூங்குங்கள், கொஞ்சநேரம் ஆகட்டும், பார்க்கிறேன்.” இம்மாதிரிச் சந்தர்ப்பங்களில் அவளுடன் அதிகம் பேசக்கூடாது. முன்கட்டுக்குச் சென்று படுக்கையை விரித்து உடலைச் சாய்த்தான். மனம் நிலைகொள்ளவில்லை. பூமத்திய ரேகைக்குப் பாய்ந்தது; பின் தன் பெருமைக்கு நகர்ந்தது. அங்கிருந்து தன் குடும்ப வாழ்க்கையின் அசாந்தியில் அமுக்கியது. வழக்கமாய்ச் சொல்வதுண்டு. பெண் ஒரு புதிர் என்று. அதை அவன் ஏற்பதில்லை. ஆணும் ஒரு புதிர்தான் என்பதுஅஅவன் கருத்து. ஆனால் ராஜம் என்னவோ அவனுக்கு ஒரு புதிராகவே இருந்தாள். அவனை மணந்த நாள் முதல், அதாவது அவளுடைய திவ்யமான செளந்தரியம் அவன் வாழ்க்கையின் சுகதுக்கங்களைப் பங்கிட்டுக் கொள்ளும் என்பதாய் அக்னி சாட்சி சொன்ன நாள் முதல் இன்று வரையில் மூன்று வருஷங்கள். கழிந்துவிட்டன. அவனால் அவளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் கதையையும், கவிதையையும் எழுதுகிறான். நெஞ்சிலுள்ள நுணுக்கமான மர்மங்களையும் அலசுகிறான் எனப் பெரிய விமர்சகர்கள் கூடக் கூறுகின்றனர். ஆனால் அவளுடைய விசித்திரமான போக்கு அவனுக்கு அர்த்தம் ஆகவில்லை. அவளுடைய அழகு அவனுடைய கற்பனைக்கு உரம் அளித்தது; கவிதைக்குக் கண் வைத்தது; கதைகளுக்கு மெழுகு பூசியது. ஆனால் அவனுடைய நெஞ்சுக்கு வெறுமையைத் தான் அள்ளித் தந்தது. அவள் மனப்பூர்வமாய்த் தன் வாழ்க்கையில் கலந்துகொள்ளவில்லை என்றுதான் அவனுக்குப் பட்டது. மனப்பூர்வமாய்க் கலக்கிறாள் என்றால் அவனுக்கு ஏன் மன அமைதி கிடைக்கவில்லை? அழகு சிரித்தால் அமைதி கிடைக்கும்; அழகு அழுதால்? அழகின் மனக்குறை போதுமே வாழ்க்கையைப் பாழ்படுத்த. அவளுக்கு அப்படி என்னதான் மனக்குறை? விருந்தாளி போன்ற மனப்பான்மையுடன் அவனுடன் அவள் பழகுவானேன்? வாழ்க்கையைக் கூட்டு வியாபாரம் எனக் கற்பனை செய்தால் அதில் முதல் போட்ட முதலாளி யார், வேலை செய்யும் கூட்டாளி யார்? அவளை வேலைக் கூட்டாளியாய் அவன் கருதவே இல்லை. ஆயினும் நஷ்டத்தில் அல்ல, லாபத்தில்தான் அவளுக்குப் பங்குதர ஆசைப்பட்டான். அதையும் அல்லவா அவள் மறுக்கிறாள்? ஆணின் அழகுக் குறைவு, பெண்ணுக்குக் குறையாகப்படும் என்கிறார்கள்; ஆனால் அவன் அழகன், கம்பீர புருஷன் என்று பலவாய்கள் புகழ்ந்துள்ளன. அவன் குணனனும் அல்ல. அத்துடன் மிகவும் பொறுமைசாலி. தெரிந்தோ, தெரியாமலோ, அவள் செய்யும் தவறுகளையெல்லாம் அவனைப் போல் வேறு எந்தக் கன வனாலும் பொறுக்க முடியுமோ என்பது சந்தேகந்தான். அவன் அவளைச் சினந்ததே இல்லை. அன்பினால் அன்பைப் பெறலாம் என்றே நம்பினான். எதிர்பார்த்தான்; ஏமாற்றம் அடைந்தான். அவள் சிரிக்காதது மாத்திரம் இல்லை. முகம் கொடுத்து அவனுடன் சரியாகப் பேசாதது மாத்திரம் அல்ல. தன்னுடைய விருப்பு வெறுப்புக்களைத்தான் அவள் பூர்த்தி செய்ய முயன்று கொண்டாளே தவிர, அவனுடைய இச்சைகளைப் புறக்கணிப்பதில் மிகவும் தீவிரமாக இருந்தாள். சின்னஞ்சிறு காரியத்திலும் அப்படித்தான். குடும்ப வாழ்க்கைக்கு ருசி அளிக்கும் விஷயம், உணவு. அதுகூட அவன் நினைத்தால்தான் உண்டு. இல்லாவிட்டால் தடிப் பிரம்மச்சாரியைப் போல் ஹோட்டலில்தான் வயிற்றைக் கழுவவேண்டும். அவன் துடித்துக்கொண்டே படுக்கையிலிருந்து எழுந்தான். “அவள் குழந்தை. இன்னும் பொறுப்பு உணரவில்லை; அதனால்தான் இப்படி…” அவளுக்காக ஒரு சமாதானம் கூறிக்கொண்டு ஜன்னலுக்குப் பக்கத்தில் சென்று நின்று, வெளியே இரவைப் பார்த்தான். இரவு ஒய்யாரமாய் உறங்கியது. வானப் பொய்கையில் மிதக்கும் நிலவு ஒளிக் கொப்புளம் விட்டுக் கொண்டே நீந்தியது. ஆங்காங்கு நுரை முகில்கள். கண்ணுக்கு எட்டும் தூரம் வரையில், இந்த அழகான இரவில் கவலையோ, வேதனையோ இல்லை என்று கூற முடியுமா? ஆனால் இரவும் வானும் எல்லாவற்றையும் போர்த்துவிட்டன. ஆகையால் எங்கே பார்த்தாலும் அமைதி. ஒரே அமைதியாகத் தென்படுகிறது. அந்த அழகான அமைதியில் ஈடுபடுகிறவர்களின் மனத்துக்கும் அமைதி அளிக்கிறது. அமைதியாக அவன் நெடுநேரம் நின்றான்; இயற்கை அமைதியைத்தான் அளிக்கிறது. ஆனால் மனிதன் தன் மன விகாரங்களினாலும், உடலின் வசதிக் குறைவினாலும், செயற்கையினாலும் இயற்கையைக் குழப்பிச் சேறாக்கிவிடுகிறான். அமைதியாகச் சிந்தித்துக் கொண்டே மனைவியை நாடிச் சென்றான், மீண்டும். அங்கு விளக்கு முன்போலவே எரிந்துகொண்டிருந்தது. ராஜம் அங்கேயே பழைய இடத்திலேயே முடங்கிக் கிடந்தாள். தூக்கம் வந்திருக்கும் எனத் தோன்றியது. அவன் கொண்டு வந்த டிபனும் வைத்தது வைத்தபடியே இருந்தது. “ராஜம்!” அவனைத் தொட்டு எழுப்பினான். “சாப்பிடவில்லையா நீ?” “எனக்குப் பசி இல்லை.” “முதலிலேயே சொல்லி இருந்தால்…” “சொல்லவில்லை” “விளக்கை அணைத்துவிட்டாவது தூங்கக்கூடாதா?” “அணைக்கவில்லை.” பரீட்சையில் இந்தக் காலத்தின் கேட்கிறார்களே, துணுக்குக் கேள்வி துணுக்கு விடை என்று அது மாதிரி கேள்வியும் பதிலும், பரீட்சைக்காரனுக்குத் திருப்தி அளிக்கலாம், வாழ்க்கையில்? நிலை பிசகும் அமைதியுடன் சிறிது நேரம் பேசாது இருந்தாள். அவள் அவிழ்த்து வைத்திருந்த ஜரிகைப் புடவையின்மீது அப்போதுதான் அவன் கவனம் சென்றது. அவ்விருவருக்கும் மணம் ஆன காலத்தில் வாங்கியது அது. முழு ஐரிகைப் புடவை; கட்டிக் கொண்டால் தங்கத் தகடுபோல் ஜ்வலிக்கும். ஆனால் அதை உடுக்கிறவள் பழங் காலத்துத் திடப்பெண் ணாக இருக்கவேண்டும். எருமைபோல் கனப்பதோடு உடலையும் கீறிவிடும். அதை உடுக்கவேண்டாம் என்று பல முறைகள் கூறியிருக்கிறான். அவளால் அவ்வளவு பாரம் சுமக்க முடியாது. ஆனால் அதை உடுத்திக் கெளரவம் பெறுவதற்காக எங்கோ வெளியில் போயிருக்கிறாள். யாராவது சிநேகிதி வீட்டில் விசேஷமாக இருக்கலாம்; போன இடத்தில் அவளுடைய மனம் புண்படும்படி ஏதாவது நடந்திருக்கலாம். ஆகையால் சோர்ந்து படுத்துவிட்டால் போலும்! சோகத்திலும் சோபை அவனைக் கவர்த்தது. “ராஜம்! நான் வெளியில் போன சமயம் நீ வெளியே போனாயா?” “ஆமாம், ராதையின் குழந்தைக்கு நாமகரணம்!” “இந்தப் புடவையையா கட்டிக்கொண்டு போனாய்? ஜரிகை உடம்பெல்லாம் கீறி இருக்குமே?” “கிறினால் என்ன?” “கீறினால் என்னவா?…உம் அங்கே என்ன நடந்தது?” “நாமகரணம்” “அதைக் கேட்கவில்லை. நீ இப்படி முகம் சுண்டிப் படுத்திருக்கிறாயே, உன் மனசுக்கு வருத்தம் உண்டாகும்படி… “ஒன்றும் இல்லை.” “என்னிடம் சொல்லக்கூடாதா? “என்ன சொல்ல?” “இத்தனை நாட்கள் என்னுடன் பழகியும் நீ என்னைப் புரிந்து கொள்ளவில்லையா ராஜம்? என்னிடம் உன் குறையைச் சொல்லக்கூடாதா?” “எனக்குத் தூக்கம் வருகிறது.” “என்னை இன்னும் அன்னியன் என்றுதான் நினைக்கிறாயா ராஜம்”- அவன் பொறுமையுடன் மாத்திரம் பேசவில்லை. குழைந்து குழைந்து பேசினான், தோல்வியுற்றவன் போல். “நீங்கள் என்னதான் சொல்லவேண்டும் என்கிறீர்கள்?” எழுந்து உட்கார்ந்தாள். “நீ ஏன் ஒன்றும் சாப்பிடாமல் வருத்தமாகப் படுத்துவிட்டாய்?” “பசிக்கவில்லை என்றேனே!” “பொய். நீ என்னை ரொம்பவும் அவமானம் செய்கிறாய்.” “நான் பேசினாலும் அவமானம். பேசாவிட்டாலும் அவமானம் என்கிறீர்களே!” “பேசாதிருப்பதே அவமானம் ஆகாதா?” “எனக்குத் தெரியாது!” “அதைத்தான் கேட்கிறேன். நீ ஏன் என்னிடம் சரிவரப் பேசுவதில்லை? ஆயிரம் கற்பனைகளைக் கட்டிக்கொண்டு வீட்டுக்கு வருகிறேன். ஆனால் உன்னுடைய வாடிய முகம் எல்லாவற்றையும் கவிழ்த்து விடுகிறது. என்னால் பிறகு எழுத முடியவில்லை.” “நான் தடுக்கவில்லையே?” “அமைதி இழந்த குடும்ப வாழ்க்கை எழுதுவதற்கு முட்டுக்கட்டைதானே? திருப்தியும், சந்தோஷமும் நிறைந்த குடும்பந்தான் ராஜ்யம் நிலைக்க உதவும் என்று ஒரு பெரிய சரீர சாஸ்திரி கூறுகிறார்.” “எனக்குப் புரியவில்லை. நீங்கள் பேசுவதெல்லாம்.” “எத்தனை எத்தனையோ பேர் என்னை எத்தனையோ விதமாகப் புகழ்கிறார்கள். என்னைக் காண்பதையே பாக்கியம் என்று நினைக்கிறவர்களும் உண்டு. எனக்குக் கிடைக்கும் இந்தப் பெருமை உனக்கு இல்லையா?” “உம்” “பின் ஏன் என்னை அலட்சியம் செய்கிறாய்? நான் ஏழை என்கிற அற்பக் காரணத்துக்காகத்தானே? பனந்தான் சாகவதம் என்று நினைக்கிறாயோ?” “எதுதான் சாகவதம் இந்த உலகில்?” “ஜரிகைப் புடவையாலும், வைர நகையாலும் உண்மையான பெருமை அடைந்துவிட முடியாது.” “நான் ஜரிகைச் சேலை கட்டக்கூடாது. நகை அணியக் கூடாது என்கிறீர்கள். அதுதானே?” அவனுடைய பதில் வளர்ந்தது. “நான் அதைச் சொல்ல வரவில்லை. இருக்கிறோம், இறப்பதற்கு. அதற்குள் நம்மால் உலகத்துக்குச் செய்ய முடிந்ததைச் செய்துவிட வேண்டும் என்றுதான் என் எண்ணம். அதுவும், இது ஒரு யுக சந்திக் காலம், சந்தி என்றால் பொழுது விடிவதற்கு முன்னதா அல்லது அஸ்தமிப்பதற்கு முன்னதா என்றே புரியவில்லை. மேல்நாட்டு நாகரிகமும், கீழ்நாட்டு நாகரிகமும் மல்லுக்கு நிற்கின்றன. உடல்தான் எல்லாம் என்று உவமை வற்புறுத்துகிறது ஒன்று. ஆத்மா என்பது வெறும் பொய் என்கிறது அது. ஆத்மா தான் நித்தியம், அதுவேதான் எல்லாம் என்ற அழுத்தமாய்ச் சொல்கிறது மற்றொன்று. இரண்டு வகை தெரியாமல் மோதிக் கொள்கின்றன; ஒன்றுக்கொன்று முரணானவை என்று அவைநினைக்கின்றன. ஆனால், இரண்டையும் சமமாகவும், சமாதானமாகவும் இணைக்கலாம். அப்படி இணைப்பதில்தான் மனித ஜாதிக்குக் கதிமோச்சம் என்பதைத்தான் நான் உலகுக்கு என் எழுத்துக்கள் மூலம் காட்ட விரும்புகிறேன். உலகம் நான் எழுதுவதை ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் நான் உணர்வதை எழுத வேண்டியது என் கடமை.” இரவின் முன்பகுதியில், மேடையின் மீது நின்று பிரசங்கமாகப் பொழிந்தபோது இருந்த உக்கிரம் இப்போதும் அவனை ஆட்கொண்டுவிட்டது. அவள் தன்னைக் கவனிக்கிறாளா, புரிந்து கொள்கிறாளா என்பதைக் கவனிக்கக்கூட அவனுக்கு நேரம் இல்லை. “நான் எழுதுவதற்கு நீதான் ஊக்கமளிக்கவேண்டும்.” “உங்களை எழுத வேண்டாம் என்று நான் தடைசெய்யவில்லையே?” அவள் கொட்டாவியை விட்ட வண்ணம் கூறினாள். “ஆனால் என்னை உன் பக்கத்தில் கூட வரவிடாமல் துரத்துகிறாயே?” “எங்கே? எவ்வளவோ, நம்பிக்கையுடன் மன நிறைவுடன் உன் அருகில் வருகிறேன். நீதான் சந்தோஷம் இல்லாத வார்த்தையாலோ, மெளனத்தாலோ என்னைத் துரத்தியடிக்கிறாய்.” “நீங்கள் அப்படி நினைத்துக் கொண்டால் நான் என்ன செய்கிறது?” “சரி, போனது போகட்டும். இன்றையிலிருந்து நாம் புதிய வாழ்க்கையை ஆரம்பிப்போம். ராஜம்! அக்கினி சாட்சியாக நாம் செய்துகொண்ட பிரதிக்ஞையைத் தெய்வ சந்நிதானத்தில் புதுப்பித்துக் கொள்வோம்.” மகிழ்ச்சியுடன் அவளுடைய கரங்களைப் பற்றி அவன் தூக்கினான். ஆனால் அவள் அசையவில்லை. வெகு நேரம் கழித்து அவளுடைய வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவந்தன… “நாளைக்கு நான் ஊருக்குப் போகிறேன். கொஞ்ச நாட்கள் இருந்து வரவேண்டும்.” அவள் குழந்தைத்தன்மை உடையவள் என்றால் குழந்தை இப்படியா பேசும்? இருபது வயது பெண்கள் முழுப் பொறுப்பையும் ஏற்றும் குடும்பம் நடத்தவில்லையா? எவ்வளவோ தோழிகளுடன் பழகுகிறவள், இப்படிச் செய்தால், பேசினால்? சில நாட்களுக்கு முன்னால்தான் நண்பர்கள் சிலர் அவனைக் காண வந்தனர். அவர்களுக்குப் காப்பி கொடுக்க விரும்பி அவர்களிடமும் சொல்லிவிட்டு, அவளிடம் தயாரிக்கும்படி சொன்னான். கொஞ்சநேரம் நண்பர்களிடம் பேசிவிட்டு உள்ளே சென்றான். காப்பி தயாராக இருக்கும் என்று, ஆனால் அவள் இருந்த இடத்தைவிட்டு நகரவே இல்லை. “காப்பி போடவில்லையா?” என்று கேட்டான் திடுக்கிட்டு, நண்பர்களிடம் அவமரியாதை ஏற்படும் என்ற பயம். “இல்லை!” “சொன்னேனே!” “எனக்கு வேலை இருக்கிறது.” “இதைவிடவா?” அவள் மெளனம் சாதித்தாள். நேரம் ஆகிவிட்டது. அவளுடன் பேசிக் கொண்டிருந்தால் வந்தவர்களை இன்னும் காக்க வைக்க நேரிடும். ஆகையால் மேலும் பேசாமல் அவர்களிடம் சென்று, “பால் முறிந்துவிட்டது. இதோ நொடியில் கொண்டு வருகிறேன்” என்று கூறிவிட்டுக் கிளப்புக்குக் கிளம்பினான். இன்னொருமுறை, பித்தம் மிகுந்ததால், மார்பில் ஒரே வலி. இரவு முழுதும் துாக்கம் இல்லாமல் துடித்துக் கொண்டிருந்தான். முதலில் அவன் சொன்னதன் பேரில் எதோ பற்றுப் பேட்டவள் பிறகு அவனை ஏனென்று கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. இந்த மாதிரி எத்தனை எத்தனையோ சிறு விஷயங்கள் தாம். என்றாலும் சிறு விஷயங்களின் கோவைதானே வாழ்க்கை? சிறு விஷயங்களில்தானே மனமும் பிரதிபலிக்கிறது? ஜன்னலுக்கு அருகில் நின்று மறுபடியும் எட்டிப் பார்த்தான். மூலைக்கு மூலை நகைகளைச் சிதறிவிட்டு, கோபக்கிருகத்தில் புகுந்துகொண்டு, முகம் கவிழ்ந்து அழுகின்ற கைகேயியைப் போல, நட்சத்திரங்களுக்கிடையில் உள்ள நிலவு கார் முகில் ஒன்றின் மீது உறங்கியது. அங்கு நிற்க மாட்டாமல், படுக்கையின் மீது விழுந்தான். ஆனால் மனசு நிச்சயமாகப் படுக்க மறுத்தது. நாளுக்கு இரண்டு கணவர்கள் வீதம் விவாகமும், விவாகரத்தும் செய்து கொள்ளும் சினிமா நட்சத்திரங்களின் ஞாபகம் அவனுக்கு வந்தது. உயிரை மாய்த்தாலும் கணவன் கணவனே என்று உறுதி கொள்ளும் இந்தியப் பெண்ணையும் நினைத்தாள். இந்த இரண்டும் இல்லாது, இரண்டும் கெட்ட பெண்ணுடன் வாழ்க்கையும்… எறும்பு உயர்ச்சிகளின் துள்ளலைத் தாள முடியவில்லை அவனால், அப்போது தான் அவன் பொறுமையை இழந்தான். “என்னுடன் வாழ உனக்கு விருப்பம் இருக்கிறதா? இல்லையா?” என்றான் உள் புகுந்து. அவளுடைய மெளனம் அவனைக் குதறியது. பூமத்திய ரேகைக்குப் பக்கத்திலுள்ள சூரியனின் வெம்மை தன்னைச் சுட்டுக் கறுக்குவது போல் அவன் உணர்ந்தான். “உயிருடன் என்னைப் புதைக்கவா என்னை மணம் புரிந்தாய்?” அதற்கும் அவள் பேசவில்லை. புதையுண்டு போன தன் சவத்தின் துர்க்கந்தத்தைத் தானே சுவாசிப்பது போல் அவனுக்குத் தோன்றியது. மூச்சு தவிதவித்தது “நான் ஆணாய்ப் பிறந்ததே குற்றம்!” என்றான் ஆற்றமையுடன். “இல்லை. நான் பெண்ணாய்ப் பிறந்ததுதான் குற்றம்!”  கலைஞர் மு. கருணாநிதி தமிழ்ச்சூழலில் கலை இலக்கியத்திற்கு கணிசமான பங்களிப்பு செய்துள்ள கலைஞர் மு. கருணாநிதி திருக்குவளையில் பிறந்தவர். உத்தி, உள்ளடக்கம், நடை ஆகிய அம்சங்கள் முழுமையாக அமைந்த பல சிறுகதைகளைப் படைத்த மு. கருணாநிதி, மணிக்கொடிக்கு அடுத்த காலத்தில் இந்தத் துறையை வளர்க்க உதவிய ஆசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர். தேர்ந்த-நுட்பமான அவர் சார்ந்துள்ள அரசியல் கொள்கைகளை விமர்சிப்பதோடு விட்டுவிடாமல், சிலர் அவரின் ஒட்டுமொத்த இலக்கியச் சாதனைகளையும் கொச்சைப்படுத்துவது காழ்ப்புணர்வு என்று மட்டுப்படும். இன்னும் சொல்லப்போனால் அவரின் தலைமையை ஏற்றுக் கொண்டவர்கள் கூட அவரின் கலை வெளிப்பாட்டின் இலக்கை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. “திராவிட இயக்கக் கொள்கையிலும், தமிழ்ப்பற்றிலும் அண்ணாதுரையின் அடிச்சுவட்டில் நடக்கும் மு.க. எழுத்துலகில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார். நீண்ட நாவல்கள், நாடகங்கள் பல எழுதிய இவர் பல சிறுகதைகளையும் எழுதி அந்தத் துறைக்கு வளம் சேர்த்திருக்கிறார்…” என்று சிட்டி சிவபாதசுந்தரம் குறிப்பிடுகிறார்கள். “மு.க.வின் கதைகளில் பல சிறுகதை வடிவ அமைதி கொண்டுள்ளன என்பது தனிச்சிறப்பு. இவர் எழுதியுள்ள ‘குப்பைத்தொட்டி’ என்ற கதை மிகவும் வலிமையானது. யார் தமிழில் தடம்பதித்த சிறுகதைகள் என்ற ஒரு தொகுப்பு தொகுத்தாலும் இந்தச் சிறுகதை விடுபடவே முடியாது. இவரின் இலக்கிய பிரவேசக்காலத்திலேயே தரம் தாழ்ந்து போய் வந்த ‘திலோத்தமை’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்த தந்தையும், மகளும் சீரழிந்து போன கதையே ‘வாழமுடியாதவர்கள்.’ வாழ முடியாதவர்கள் ‘டாண் டாண்’ என்று மணிக்கூண்டு கெடிகாரம் பத்து ஒலிகளை முழங்கிற்று. நட்சத்திர டாக்கீசின் கதவுகள் திறக்கப்பட்டன. ‘திலோத்தமா’ படம் முடிந்து விடுதலை பெற்ற சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் வர்ணங்கள் திடீரெனச் சிரித்த பாதரச விளக்குகளால் சோபையிழந்தன. அந்தச் சோபையிலும் சொகுசு மின்னிடுவதாகத் தொடர்ந்து வந்த வாலிபப் பட்டாளம் ‘கம்பரசம்’ பாடிற்று. “பெண்களுக்குச் சுதந்திரம் அளிப்பதாயிருந்தால் முதலில் இந்த ஆண்களை எல்லாம் அரபிக்கடலில் தூக்கி எறியவேண்டும்” என்றால் ஒருத்தி, சிவப்புச் சேலைக்காரி. “உலகம் அழிந்துபோக உன்னை யோசனை கேட்டால் அப்போது சொல்லடி இந்த அபிப்பிராயத்தை” எனப் பதில் வீசினால் பச்சைச் சேலைக்காரி. “திலோத்தமா எப்படிடா?” என்றான் ஒரு இருபத்துநாலு வயது. “படத்தைக் கேட்கிறாயா?…அல்லது” என்று இழுத்தான் ஒரு மைனர். “படம் சுமார். டைரக்ஷன் பரவாயில்லை. கதைதான் பிடித்தமில்லை” என்ற விமர்சனத்தை ஒரு மேதை, பேச்சில் நுழைத்தார். “என்ன சார் உங்களுக்குக் கதை பிடிக்கவில்லை!” சினிமாப்பைத்தியம் ஒன்று இடையே குறுக்கிட்டது. “பிரம்மாவைப் போட்டு கலாட்டா செய்கிறான் சார்” ஒருவர் இப்படி அனுதாப்பட்டார். “புராணக் கதையை அப்படியே எடுத்திருக்கான்.” “பிரம்மா…மும்மூர்த்திகளில் ஒருவர். அவர் சிஷ்டித்தார். திலோத்தமையை! அவளையே அவன் காதலிப்பதென்றால்… தகப்பன் மகளை…சேச்சே.அபத்தம்!” “பொறுங்க, வாந்தியெடுத்துவிடாதீர்கள்” கிண்டல்காரன் பேச்சை முடித்தான். இவ்விதமாக திலோத்தமை பட விமர்சனங்களோடு அந்தக் கூட்டம் நகர்ந்தும் - சிதறியும் - வர வரக்குறைந்தும் - தேய்ந்தும் கொண்டிருந்தது. நடக்கும் பொன்வண்டுகள் பறக்கும் பட்டுப் பூச்சிகளாயின. காலேஜ் வேடர்களும் வேறு பக்கம் திரும்பினர். அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஓரமாக ஒதுங்கி சின்னச்சாமியும், காந்தாவும் வந்து கொண்டிருந்தார்கள். காந்தாவின் கண்கள் கலங்கரை விளக்கு போலச் சுற்றியபடியிருந்தன. “உ.ம்…பாத்து நட!” சின்ன சாமி அதட்டினான். சின்னச்சாமி போலீஸ்காரன். வயது நாற்பது இருக்கும். வலுவேறிய உடம்பு வாட்டமற்ற நடை. திருண்டு உருண்ட தோள்கள், நிமிர்ந்த நெஞ்சு, கம்பிரமான தோற்றம் கண்களிலே எப்போதும் சிவப்புநிறம், கறுப்புக் குலையாத மீசைகள். காந்தா அவனுடைய வேகமான நடையோடு போட்டி போட முடியாமல் திணறித் திணறிப் பின்தொடர்ந்தாள். நீண்ட சாலையின் ஓரத்தில் நெடுக நிழல் தரும் மரங்கள் நின்றிருந்தன. அங்கே ஒரு பெரிய புளியமரம். மனித நடமாட்டத்தில் அதன் கிளைகளில் இருந்த பறவைகள் அடிக்கடி சிறகையடித்துக் கொண்டன. அந்த மரத்தின் பக்கமாகச் சின்னசாமி சாலையிலிருந்து இறங்கினான். சாலைக்குக் கீழ்ப்புறமாகச் சிறிது தூரம் சென்றால், போலீஸ் லைன். அங்கே 18-வது எண்ணுள்ள வீடுதான் சின்னசாமியுடையது. “காந்தா! கீழே பார்த்து வா. பூச்சி, பொட்டு இருக்கும்.” இதைச் சொல்லியபடி கொஞ்சம் மெதுவாக நடந்தான். பின்னால் திரும்பிப் பார்த்தபடி, வீட்டையடைந்ததும் சின்னச்சாமி பூட்டைத் திறந்துவிட்டு நெருப்புக் குச்சியைக் கொளுத்தினான். காந்தா விளக்கை ஏற்றிக்கொண்டு அடுக்களைப் பக்கம் சென்றாள். போலீஸ் லைன் வீடுதான் நமக்குத் தெரியுமே; குருவிக்கூடு! அடுக்களை படுக்கையறை எல்லாம் ஒன்றுதான். சின்னசாமி செருப்புகளைச் சுழற்றிவிட்டு, ஒரு பீடியைப் பற்ற வைத்தபடி வாயிலில் உட்கார்ந்தான். பீடியின் சுருள் புகையோடு அவன் சிந்தனையும் ஒரு சுற்றுச் சுற்றியது. அதற்குள்- “அப்பா சோறுபோட்டுட்டேன்” என்ற காந்தாவின் அழைப்பு கிடைத்தபடியால் பாதி பீடியை அனைத்துத் தீப்பெட்டியில் போட்டுக்கொண்டு உள்ளே சென்றான் சின்னச்சாமி. மார்கழி மாதக் குளிருக்கேற்ற நல்ல பழைய சோறு; விறுவிறுப்பாகச் சுண்டக்குழம்பு சாப்பாடு முடிந்தது. “நீ சாப்பிடம்மா” என்று சொல்லிவிட்டுச் சின்னச்சாமி மீதி பீடியை வாயில் வைத்தபடி வெளிப்பக்கம் வந்தான். வயிற்றின் ஜிலுஜிலுப்பை பீடிப்புகை சிறிது மாற்றிக் கொண்டிருந்தது. காந்தாவின் சாப்பாடு முடிந்ததும் பாத்திரங்களைக் கழுவி விட்டுப் படுக்கிற இடத்தைக் கூட்டினாள். இரண்டு கிழிந்த பாய்களை எடுத்து விரித்து, எண்ணெய் வாசனை வீசுவது மட்டுமின்றி, உறை தேவையில்லை என்கிற அளவுக்கு நிறத்தைக் கருப்பாக மாற்றிக்கொண்ட தலையணைகளை எடுத்துப் போட்டாள். “அப்பா நான் படுக்கட்டுமா?” “ஒரு டம்பளர் வெந்நீர் கொடு. இருக்கா?” “பச்சத் தண்ணிதான் இருக்கு. வெந்நீர் போட விறகு ஏது?” முணுமுணுத்தபடி ஒரு குவளைத் தண்ணீரைக் கொடுத்துவிட்டுப் படுக்கையில் படுத்தாள். தெருப்பக்கம் உட்கார்ந்திருந்த சின்னச்சாமியின் உதட்டில் இன்னொரு பீடி அமர்ந்து கொண்டது; பீடியைப் புகைத்தவாறு நிமிர்த்திய தலையைத் தாழ்த்தாமலே உட்கார்ந்திருந்த அவனிடம், வான வெளியில் மேகத்தைத் தொட்டுத் தொட்டு விளையாடிய சந்திரன் பேசுவது போலிருந்ததோ என்னவோ, அவன் வைத்த விழியை எடுக்காமல், அசைவற்றிருந்தான். சந்திரன்! சின்னச்சாமியின் மனைவியின் பெயர்கூடச் சந்திராதான். அவள் மண்ணோடு கலந்து பத்து வருடமாகிறது. சின்னச்சாமியின் முப்பதாவது வயதில் சந்திரா பத்து வயது நிரம்பப் பெறாத காந்தாவைத் தாயில்லாப் பிள்ளையாக்கி விட்டுப் போய்விட்டாள். தகப்பனார் உயிரோடிருந்த காலத்தில் சின்னச்சாமிக்குச் சந்திராவை எப்படியோ கல்யாணம் செய்து வைத்துப் பார்த்துக் கண்ணை மூடினார். இடையே சாவு தன் கொடிய கரங்களை நீட்டிச் சந்திராவின் கழுத்தை நெறித்தது மட்டுமின்றிக் காந்தாவைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பை அந்தப் பரிதாபத்துக்குரிய போலீஸ்காரருக்குக் கொடுத்துச் சொன்றது. மறு கல்யாணம் செய்து கொள்ள எத்தனையோ முறை முயன்று பார்த்தான். முன்னுாறு ரூபாய் கூட இல்லாமல் எப்படி கல்யாணம் பண்ணுவது! கஷ்டப்படும் போது- கண்ணீர் விடும்போது-கதியில்லயே எனக் கதறும் போது கைகொடுக்க வராத உறவினர்கள் கல்யாண மென்றால் நாக்கைத் தட்டிக்கொண்டு வருவார்கள். பத்திரிகை தராவிட்டால் பல்லைக் கடிப்பார்கள். இந்த நிலையில் ஏழைக்குக் கல்யாண எழவா?… அப்போதைய போலீஸ் சம்ளபத்தைத்தான் கேட்க வேண்டியதில்லை. அன்றாடம் சாப்பாட்டுக்கே கஷ்டம். இதில் நோய் நொடிகள் ஏற்பட்டால், டாக்டர் தர்மவானாக மாறவேண்டும். காலில் முள் குத்திவிட்டால், முறிந்துவிட்டால், வண்டிக்காரன் பயந்தவனாக இருக்க வேண்டும். என்னதான் மேல் வரும்படி வந்தாலும் காப்பி, தேத்தண்ணீருக்குத்தான் சரியாக இருக்கும். கல்யாணம் செய்துகொள்கிற அளவுக்குச் சாதாரண போலீஸ்காரருக்குக் ‘கிம்பள சான்ஸ்’ கிடைக்குமா? மனைவி இறந்துபோன துக்கம் மறைந்து, அடுத்த கல்யாணம் கிடையாதா என்ற கேள்வி ஏக்கமாக வளர்ந்து, சின்னச்சாமியின் இருதயத்தைத் துறட்டி போட்டு இழுக்க ஆரம்பித்தது. வைகாசி, ஆவணி, தை-இப்படி மாதக்கணக்குகள் புரண்டு இந்த வருடம் அடுத்த வருடம் என்று ஒத்திபோடப்பட்டு அவனுக்காகப் பார்த்த பெண்கள் எல்லாம் கல்யாணம் செய்துகொண்டு பிள்ளையும் பெற்றுவிட்டார்கள். அவன் கதிதான் இப்படி என்றால், பருவமடைந்து ஆறு வருடமாக வீட்டிலிருக்கும் காந்தாவுக்கும் கணவன் வரவில்லை. காந்தா விகாரமில்லை; சுமாரான அழகி, கறுப்புதான். கவின் பெறுமுகமும் எடுப்பான தோற்றமும் வாய்ந்த திராட்சைக் கொடி அவள். பெண் பிடிக்கவில்லை என்று யாரும் சொல்லவில்லை; “சீர்வரிசை என்ன செய்வார்கள்? கல்யாணச் செலவு பெண் வீட்டாருடையதுதானே?” இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமலேயே காந்தா அரும்புப் பருவம் அழியாமலிருந்தாள். சின்னசாமியின் இருதயம் நைந்துவிட்டது. சின்னசாமி வாழ முடியாதவன். காந்தா அவனால் வாழவைக்கப்பட முடியாதவள். மன அலைகளால் மயங்கிப் போயிருந்த அந்தத் துயர உருவம் திடீரென விரலில் சுட்ட பீடியின் நெருப்பால் உணர்ச்சி பெற்றுத் திடுக்கிட்டது. நிலாவும் மேகத்தில் மறைந்து கொள்ளவே சின்னசாமி ஒரு பெருமூச்சோடு எழுந்தான். கதவைத் தாழிட்டுவிட்டு, விளக்கைக் கொஞ்சமாய் அடக்கிவிட்டு, அந்தக் கிழிந்த பாயில் படுத்துக் கொண்டான். அவன் கண்களில் சோகம் படர்ந்திருந்தது. காந்தா உடம்பை நெளித்துக் கொண்டு சோம்பல் முறித்ததிலிருந்து அவளுடைய இருதயத்திலும் ஒரு பெரும் போராட்டம் நடந்திருக்கத்தான் வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. வாழ்நாளின் வனப்புமிக்க ஒரு பகுதி வீணே கழிவதென்றால்?… கொஞ்சு மொழியும், கோலாகலமும் அனுபவிக்க வேண்டிய பருவத்தில் ஊமையாக முடங்கிக் கிடப்பதென்றால்?… காதல் கீதத்திற்கேற்ற இன்பக் கேளிக்கையாட வேண்டிய இளமைநாட்கள், நொண்டியாகி விடுவதென்றால்?… எந்தப் பெண்ணால் தான் தாங்கிக் கொள்ள இயலும் அந்த வேதனையை! இந்த இருண்ட உலகில் ஒரு மனித ஐந்துவின் வீடு அங்கே இரண்டு கிழிந்த பாய்கள். பாயைவிட அதிகமாகக் கிழிந்து போன இரண்டு உள்ளங்கள்! தகப்பன்-மகள், தணலில் தவிக்கும் புழு! தாங்கொணா வேதனைப் புயலில் சிக்கிய தளிர்! காந்தாவின் நீண்ட பெருமூச்சும், அந்த மூச்சைத் தொடர்ந்து முனகிக் கொண்டே கிளம்பிய சின்னச்சாமியின் அசைவும்! அந்தோ… பரிதாபமான நிலைமை! “அட பாழாய்ப்போன கடவுளே! அவர்கள் என்ன பங்களாவா கேட்கிறார்கள்? பட்டு மெத்தையும், பவளக் கட்டிலும், பன்னீர் குளியலும், பாதாம்பரும்பும், பசும்பாலுமா அவர்கள் கேட்பது? பணக்காரனின் இருதயப் பசிக்கு எத்தனை இளம்பெண்கள் பலியிடப்படுகிறார்கள்! காசை வீசியெறிந்து நினைத்த இடத்தில் இந்திரனாக மாறும் மனித மகாவிஷ்ணுக்களையும்; வயிற்றையும், நெஞ்சையும் உடலுணர்ச்சிகளையும் உலரப்போட்டு வற்றலாக்கிக் கொண்ட வறுமை உருவங்களையும்”ஆண்டவன் படைப்பு” என்று சொல்ல மனித அறிவு அவ்வளவு மழுங்கியாவிட்டது” அந்தச் சிறிய வீடு இதைத்தான் உரத்த குரலில் அதட்டிப் பேசுவது போலிருந்தது. சின்னசாமியின் மனம் தொடர்ந்து பேசத் துவங்கிற்று:- ’பணமில்லையென்றால் அவனுக்கு வாழ்வு கிடையாதா? உணர்ச்சி கிடையாதா? கடவுளே! ஏழைகளுக்கு வயிற்றையும், நெஞ்சையும் ஏன் உண்டாக்கினாய்? உனக்குப் படைப்புத் தொழில் தேர்ச்சியிருந்தால் ஏழைகளை வெறும் நடமாடும் பொம்மைகளாக அல்லவா சிருஷ்டித்து முதலாளிகளுக்கு வேலை செய்யும் இயந்திரங்களாக ஆக்கியிருக்க வேண்டும்? காட்டில் திரியும் மிருகங்களுக்குக் கூடச் சந்தோஷமுண்டே ஜோடிப் புறாக்கள்-ஓடி விளையாடும் மான்கள்-பாடிப்பறக்கும் குயில்கள்-அவைகளை விடவா ஏழைகள் குறைந்து விட்டார்கள்! நான் என்ன பாவம் செய்தேன்? உன் பக்தியில் குறைச்சலா? உனக்குப் பயந்து நடக்கவில்லையா? ஏன் இந்தச் சோதனை?” அந்த மாஜி மனிதனின் அழுத்தமா கேள்விகளுக்குப் பதில்சொல்ல எந்த ஆண்டவனும் தயாராயில்லை. அவன் சோகக் குமுறலை காந்தாவின் உள்ளமும் ஒப்பாரியாக்கி விம்மிக் கொண்டிருந்தது. அவன் கண்களில் நீர் தேங்கி வழிந்து, கன்னத்தின் சூட்டில் காய்ந்துவிட்டது. சின்னச்சாமியின் தொண்டையில் ஒன்றுமே அடைக்கவில்லை; ஆனாலும் லேசாக கனைத்துக் கொண்டான். “எம்மாடி!” காந்தாவும் தூக்க அசதியில் அலுத்துக் கொண்டது போல இந்த வார்த்தையோடு உடம்பை வளைத்துப் புரண்டுபடுத்தாள். ஏதோ ஒரு பயங்கரமான முடிவால், அவன் முகத்தில் அசடு வழிவதை மங்கலான விளக்கின் வெளிச்சம் எடுத்துக்காட்டிற்று. சரியாகப் படுத்துக் கொண்டான். முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். கண்களைக் கொஞ்சமாக முடிக்கொண்டான். “சின்னச்சாமி சின்ன புத்திக்காரா!… என்ன காரியமடா… கசடனே!” என்று ஒரு பகங்கரமான குரல் அவன் நெஞ்சுக்குள்ளேயே கிளம்பியது. ஒரு நிமிடம் அமைதி. அய்யோ! அந்த ஒரு நிமிடத்தில் அவன் இரத்த ஓட்டத்தில் எவ்வளவு கொதிப்பு! நரம்புகள் எல்லாம் நடுங்கின. நாவில் நீரில்லை. உதடுகள் வறண்டு விட்டன. கையை மெதுவாக எடுத்தான். உள்ளங்கையில் வியர்வை கொட்டிற்று. வேட்டியில் துடைத்துக் கொண்டு, கையைக் காந்தாவின் மேல் மெதுவாகப் போட்டான். அவள் ஆயாச மூச்சோடு நகர்ந்து படுத்தாள். “ஏய் பாதகா! பரம சண்டாளா! மகளடா மகள்! நீ பெற்ற மகள்!,.. மகா பாதகத்தைச் செய்யாதேடா மடையா!… மண்டை வெறி பிடித்தவனே!” . அவன் தலையில் ஆயிரம் சம்மட்டி அடிகள். ஆங்காரமான குத்துக்கள். கொடூரமான அரிவாள் வெட்டுக்கள். சின்னச்சாமியின் மார்பு படபடவென்று அடித்துக் கொண்டது. ஈரமற்ற நாக்கால் உலர்ந்துபோன உதடுகளை ஒரு முறை நக்கிக்கொண்டு பேசாமல் படுத்திருந்தான். சற்று அமைதி. அந்த அமைதியும் மின்னலாய் மறைந்தது. விஷமேறி நடுங்கும் அவன் ஈர விரல்கள் மீண்டும் காந்தாவின் முகத்தில் விழுந்தது. நத்தைகள் ஊர்வது போல நகர்ந்துகொண்டிருந்தன. அந்த விரல்களைக் காந்தாவின் நடுங்கும் கரம், லேசாகப் பற்றியது… பற்றியது மட்டுமா? மெதுவாக அமுக்கியது. இடிகள் பல இடிப்பதுபோல மின்னல்களும் பல மின்னுவது போலத்… திடீரெனப் புயல் கிளம்பிப் பூகம்பம் ஏற்பட்டுக் கடல்கள் குமுறியெழுந்தது போலத் தடதடவென ஆட ஆரம்பித்தன. இரண்டு இரத்த பாசமுள்ள உடல்கள். கால் பக்கமிருந்த விளக்கைச் சின்னச்சாமி உதைத்தான். அது கீழே சாய்ந்து அணைந்து போய், எண்ணெய் தரையில் கொட்டியபடி உருண்டது. கடவுள் அந்தக் கற்பனைப் பெயரால் ஏற்பட்ட தலைவிதி-தலைவிதிக்காளான சமுதாயம்-அந்தச் சமுதாயத்திற்கேற்பட்ட சட்டம்-அந்தச் சட்டத்தை முறை தெரியாமல் உடைத்தெறிந்த இரு சண்டாளர்கள்-வாழ முடியாதவர்கள்! பொழுது சரியாக விடியவில்லை. மங்கலான வெளிச்சம் வீட்டுக்குள் நுழைந்தது. சின்னச்சாமி விழித்துக்கொண்டு காந்தாவின் முகத்தைப் பார்க்கத் திரும்பினான். அவன் கண்கள் அவனையறியாமல் மூடிக் கொண்டன. காந்தா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். வேகமாக எழுந்து வெளியே வந்த சின்னச்சாமி நிற்கவேயில்லை; பைத்தியக்காரனைப் போல நடந்து கொண்டேயிருந்தான். காலையில் ஒன்பது மணியிருக்கும்; காந்தா கன்னத்தில் கை வைத்துக்கொண்டு வாயிற்படியில் சாய்ந்திருந்தாள். ‘திலோத்தமா’ சினிமாப்பட விளம்பர வண்டி தெருவில் போய்க் கொண்டிருந்தது. எழில் முதல்வன் திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்தில் தகட்டூர் கிராமத்தில் பிறந்த மா. ராமலிங்கம் இன்று திறனாய்வாளராக தோற்றம் கண்டுள்ளார். ஆனால் அவர் இயல்பிலேயே ஒரு படைப்பாளி-சிறந்த சிறுகதையாசிரியர். பொய்யான இரவுகள், அதற்கு விலை இல்லை. நாளைக்கும் இதே கியூவில்… போன்ற தொகுப்புகள் மூலம் அவர் சிறந்த சிறுகதையாசிரியர் என்பது நிரூபணம் ஆகிறது. ‘இவருடைய கதைகளில் கற்பனையைவிட உண்மை வாழ்வே அதிகமாய் இடம் பெற்றுள்ளது. இவர் பார்த்தவற்றை உணர்ந்தவற்றை மன நெகிழ்ச்சியோடு கதைகளாக வெளிப்பட்டிருக்கின்றன.’ ‘நான் காணும் இன்றைய வாழ்கை, அவ்வப்போது எனக்குப் பல கதைகளைச் சொல்லியிருக்கிறது. அவற்றில் சிலவற்றை நான் உங்களுக்குத் திருப்பிச் சொல்லியிருக்கிறேன்…’ எழில்முதல்வனே தனது சிறுகதைகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் இப்படி. அகிலன் இவரைப்பற்றி, “இவர் ஒரு தேர்ந்த சிறுகதை ஆசிரியர். கிராம நகர்ப்புறத்து வாழ்க்கையில் இவர் கண்டு கேட்டு அனுபவித்த உண்மைகள், இவரிடம் அழகான சிறுகதைகளாக மலர்ந்துள்ளன. அற்புதமான சில பாத்திரப் படைப்புகளையும் கண்டு இன்புற முடிகிறது. ஆர்ப்பாட்டமோ, ஆரவாரமோ இல்லாமல் அமைதியாகக் கதைச் சொல்லும் திறன் இயல்பாக அமைந்திருக்கிறது. உண்மை வாழ்க்கையோடு ஒட்டிய எதார்த்த வாதக் கற்பனையே கதைகளாகப் படைத்துள்ளார். எளிய இனிய உயிரோட்டமுள்ள தமிழ் நடை, படைப்பவரை கவர்ந்திழுக்கும் சக்தியைக் கொண்டுள்ளது…” அவர் எழுதிய ‘அவள் நெஞ்சம்’ குறிப்பிடத்தக்க சிறுகதை… ’அன்றைக்கு இரவு முத்துத்தாண்டவனின் நாயனக்கச்சேரியும், திருவாரூர் அலங்காரத்தின் சதிர்க்கச்சேரியும் நடக்கவிருக்கிறது… திருவாரூருக்கே உரிய பெருமையையும், வளமையையும் எழுதியுள்ள படியால் நாமும் பெருமைபடலாம். அவள் நெஞ்சம் உறையிடப்பட்டு மூலையிலே சாத்தி வைக்கப்பட்டிருந்த நாதஸ்வரத்தை எடுத்து வைத்துக்கொண்டு கூடத் தில் உட்கார்ந்தான் முத்துத் தாண்டவன். பையை அவிழ்த்து, ‘ஆச்சா’ மரத்தால் ஆகிய அந்த நாதஸ்வரத்தை எடுத்து, கெண்டை வேறு ‘அணைசு’ வேறாகப் பிரித்துப் போட்டுத் துடைக்க ஆரம்பித்தான். பதமாக வேக வைக்கப்பட்ட இரண்டங்குல நீளக் கொறுக்குத் தட்டையைக் கிட்டிப் பலகையில் கொடுத்து நன்றாக இறுக்கி அதன் அடிப்பாகத்தை நூலால் அழுத்தச் சுற்றி, அவ்வாறு செய்து முடித்த ’சீவாளி’யை நாயனத்தின் வாயில் பொருத்தினான். சரிசெய்து முடித்த அந்தப் பாரி நாயனத்தைக் கையில் எடுத்துக் கேதார கெளளை ராகத்தை ஆலாபனம் செய்யத் தொடங்கினான். இரண்டு கட்டைச் சுருதியில் அவன் குரல் விட்டுவிட்டு இழைந்தது. பாடிக்கொண்டிருந்த அவன் சட்டென நிறுத்திவிட்டுத் தெருப்பக்கம் எட்டிப்பார்த்தான். வீதி நிறையத் திருவிழாக் கூட்டம் ‘திமுதிமு’ என்று சென்று கொண்டிருந்தது. எங்குப் பார்த்தாலும் கியாஸ் லைட் ஒளி கண்னைப் பறித்தது. சுற்றுப்பட்ட கிராமங்களிலிருந்து கையில் கட்டுச்சோறு மூட்டைகளோடு அன்றைய நிகழ்ச்சியாகிய புஷ்பப் பல்லக்கைக் காண மக்கள் வந்து திரண்டார்கள். அன்றைக்கு இரவு முத்துச் தாண்டவனின் நாயனக் கச்சேரியும், திருவாரூர் அலங்காரத்தின் சதிர்க்கச்சேரியும் நடக்கவிருக்கிறது என்றால் கூட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்? அலைமோதும் ஜனக்கூட்டத்தைப் பார்த்ததும், அந்த ஊரில் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் சற்குணநாத ஸ்வாமியின் மகிமைக்காக மட்டும் அல்லாமல் தன்னுடைய இசைவிருந்தைக் கேட்பதற்காகவுமே அத்தனை கூட்டம் வந்திருப்பதாக எண்ணி முத்துத்தாண்டவனின் மனம் விம்மியது. அதில் ஓரளவு உண்மையும் இல்லாமல் இல்லை. தான் வாசித்துக் கொண்டிருப்பது போலவும், எதிரே அலங்காரம் பதம் பெயர்த்து ஆடுவது போலவும் ஒரு மானசீகமான கற்பனை அவன் மனத்தில் படர்ந்தது. அந்த இனிய நினைவுகளால் ஒரு புதிய மலர்ச்சி அவன் முகத்தில் அவிழ்ந்தது. என்றோ ஒருநாள் அவளால் பாடப்பட்ட ‘பித்துப்பிடித்து’ ஏன் அலைகிறாய் பேதை நெஞ்சமே என்ற அந்த வரியை நினைக்கும் போதெல்லாம் அவன் அடிமனம் அந்தப் பாட்டைப் பாடியவளுக்காகப் பித்துப்பிடித்து அலைய ஆரம்பித்தது. நினைக்க நினைக்க இனிப்பூட்டும். அந்த நயம் பொருந்திய பாடலை நாதஸ்வரத்தில் பாட நினைத்து மீண்டும் அக்கருவியைக் கையில் எடுத்தான். உள்ளே இருந்து வெளிவந்த வடிவு-அவன் மனைவி-தன் கணவனை வேண்டா வெறுப்போடு ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் அடுக்களைக்குள் சென்றாள். எதற்காகவோ அவனைக் கடிந்து கொள்வதுபோல் அப்பார்வை இருந்தது. எத்தனையோ பேருடைய போற்றுதல்கட்கும், பாராட்டுதல்கட்கும் இலக்காக இருக்கும் அவனது கலையே அந்த நேரத்தில் அவளுக்கு அருவருப்பூட்டிற்று. தன் கணவனை நினைத்தபோது அலங்காரத்தையும் சேர்த்தே நினைத்தாள். உடன் நிகழ்ச்சியாக எழுந்த அந்த நினைவு அவள் உள்ளத்தில் கனிந்து கொண்டிருந்த தாபத்தை மேலும் அதிகமாக்கிற்று. ‘அலங்காரம் அலங்காரம்… அந்த ஆட்டக்காரியின் கூத்துக்கு இவர் வாசிக்கிறாராம். ஊரும் உலகமும் இவரைப் பத்தி பேசிக்கிறது இன்னமுமா இவர் காதிலே விழலே. அந்தக் கூத்தி இவருக்கு நல்லாத்தான் சொக்குப்பொடி போட்டிருக்கா… இதையெல்லாம் அனுபவிக்கணும்னா ஆண்டவன் என் தலையிலே எழுதி வச்சிருக்கான்.’ அடுப்பை முட்டி உலை ஏற்றிய வடிவாம்பாளின் உள்ளம் அந்த அடுப்பைப் போலவே புகைந்துகொண்டிருந்தது. தனி உடமையான தாம்பத்ய வாழ்க்கையை இன்னொரு பெண்ணுக்கும் பகிர்ந்து அளிக்க எந்தப் பெண்தான் ஒருப்படுவாள்! முத்துத் தாண்டவன் ஒத்திகையை முடித்துவிட்டு ‘வடிவு…வடிவு…” என்று அன்பாய் அழைத்தான். கணவனின் குரலைக்கேட்ட அவள் தன் ஆத்திரம் அனைத்தையும் உள்ளுர அடக்கிக்கொண்டு வெளியே வந்தாள். தெருப்பக்கத்தில் விளையாடிவிட்டுத் தன்னை நோக்கி ஓடிவந்த சிறுவன் செல்வத்தை வாரி அணைத்தவாறு கணவனைப் பார்த்தாள். ’ஏன் அழைத்தீர்களாம்?’ என்று வினவுவதுபோல் அவள் விழிகள் பிறழ்ந்தன. “சரியா பத்துமணிக்கு சாமி புறப்பாடு ஆயிடும். நாலு வீதியும் சுத்திவந்து வசந்தமண்டபம் போறதுக்கு மணி ரெண்டு ஆனாலும் ஆகும். நீ பத்து மணிக்கே வந்த அலங்காரத்தின் சதுரையும் பாத்திட்டு சாமி தரிசனம் பண்ணிட்டு வீட்டுக்குத் திரும்பிடு. ராத்திரியிலே ரொம்பநேரம் நிண்ணாப் பனி ஒத்துக்காது” என்றான் அவன். அவள் ஒன்றும் பேசவில்லை. ‘அலங்காரத்தின் ஆட்டத்தைப் பார்க்கிறது என் இஷ்டம். வந்து பாருண்ணு சொல்றதுக்கு நீங்க யாரு?’ என்று ஆத்திரம் தீர அவனிடத்தில் தன் உணர்வுகள் அத்தனையும் கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் அவளது பொறுமை தடுத்தது. நெஞ்சின் அடி ஆழத்திலிருந்து புறப்பட்டு உதட்டின் விளிம்புக்கு வந்த வார்த்தைகள் உள்ளேயே அடங்கின. அவள் மெல்லத் தலையசைத்தாள். பொங்கி வழியும் கசப்புணர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் நெளிவது போல் துடிக்கும் அவளது உதடுகளைப் பார்த்தான். அலங்காரத்தைப் பற்றி பேச்சை எடுக்கும் போதெல்லாம் அவள் முகம் இனம் தெரியாத பாதிப்புகளால் நிலைமாறிப் போவதை அவன் பன்முறை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறான். அப்பாவிப் பெண்ணான அலங்காரத்தின் மீது இவளுக்கு ஏன் இத்தனை குரோதம் என்றும் நினைத்துப் பார்த்தான். பல சமயங்களில், வடிவாம்பாளின் இந்தக் குறையே பெண்மையின் நிறைவாகத் தோன்றியது. வடிவாம்பாளின் மனத் தடுமாற்றத்தைச் ‘சக்களத்திப் போராட்டம்’ என்று கொச்சைப்படுத்தி நினைக்க முத்துத்தாண்டவனால் முடியவில்லை. கடந்த நான்கு வருடங்களாகத் தனக்கு மாலையிட்ட அன்று முதல் இன்றுவரைத் தன் மனம் கோணாமல் நடந்து வரும் புண்ணியவதியை நேற்று வந்த அலங்காரத்திற்காகப் புறக்கணித்துவிடுவதா? அல்லது தேடிப் போகாமல் தானே வந்து ஐக்கியமாகிவிட்ட அலங்காரத்தின் அன்பைத் தள்ளி விடுவதா?-உண்மையில் வடிவாம்பாளைவிட முத்துத்தாண்டவனே சிக்கலான மனப்போராட்டத்தில் இருந்தான். “வடிவு, நீ இன்றைக்கு ரொம்ப அழகாயிருக்கே! என்ன இருந்தாலும் இந்த முத்துத்தாண்டவனின் மனைவியில்லே…” என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் கூறிப் பேச்சை மாற்றி, அதன் மூலம் அவளது மனநிலையை மாற்றிய அவன், அவளிடத்தில் விடைபெற்றுக்கொண்டு கோயிலுக்குப் புறப்பட்டான். அலங்காரம் என்ற சொல்லே ஒரு நுட்பமான அழகைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது என்றால் அந்த அழகான சொல்லையே தன் பெயராக வைத்திருக்கும் அவள் எப்படி இருப்பாள் என்பதைச் சொல்ல வேண்டுமா? புனைந்து கொள்ளுதல் இல்லாமலேயே பொலிவு பெற்று விளங்கும் அவள் முகத்தைப் பார்ப்பவர்கள் இப்படியும் ஓர் அழகு உலகில் உண்டா? என்று வியந்து போவார்கள். சமுதாயத்திலே இருக்கிற பெரும்பான்மையோரின் செல்வம், சில சமயங்களில் ஓரிருவரிடத்திலேயே முடங்கிவிடுவது போல உலகத்தின் அழகெல்லாம் அவளிடத்திலேயே குவிந்துவிட்டன. இரண்டு ஆண்டுகட்கு முன் திருவாரூர் தியாகராசர் கோயில் தெப்ப உற்சவத்திற்குக் கச்சேரியின் பொருட்டு வாசிக்கச் சென்றிருந்த போது முத்துத்தாண்டவன் அலங்காரத்தை முதன் முதல் சந்தித்தான். ஆயிரங்கால் மண்டபத்தில்-ஆயிரம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுத் தேஜோமயமாய்த் திகழ்ந்த அரங்கத்தில்- கந்தர்வலோகத்து தெய்வப் பெண்போல அவள் சுழன்று சுழன்று ஆடிய காட்சி முத்துத்தாண்டவனின் மனத்தைக் கிறங்கச் செய்தது. “பித்துப்பிடித்து ஏன் அலைகிறாய் பேதை நெஞ்சமே.” அவளது அழகிய உதடுகளைப் பிளந்துகொண்டு ஒலி வடிவாக வெளிப்பட்ட அந்த நளினமான வார்த்தைகளும் அந்த வார்த்தைகளின் ஜீவனைப் பிடித்து இழுத்துவந்து இதுதான் என்று காட்டுவதுபோல் அவள் பிடித்த அபிநயங்களும் ஆடற்கலைக்கே அவளை ஆதர்சமாக எடுத்துக்காட்டிற்று. திருவாரூருக்குப் போய்விட்டுத் திரும்பிய முத்துத்தாண்டவன் புகழை மட்டும் அல்லாமல் அலங்காரத்தைப் பற்றிய நினைவுகளையும் சுமந்து கொண்டு வந்தான். எல்லாம் அதற்குப் பின் விளைந்த வினைதான். அலங்காரம் இப்பொழுது இவன் ஊருக்கே வந்துவிட்டாள். முத்துத்தாண்டவன் பக்கத்துத் தெருவில் ஒரு மனைக்கட்டை விலைக்கு வாங்கி, ஓர் அழகான வீட்டைக் கட்டி, அதில் அலங்காரத்தைக் குடியேற்றி வைத்தான். அவள் வந்து மூன்று மாதங்கட்குமேல் ஆகிறது. ஊரார் கட்டிவிட்ட கதைகள் முத்துத்தாண்டவனையோ அலங்காரத்தையோ பாதிக்கவில்லை. பாதிக்க முடியாத உயர்ந்த புகழ் உச்சிக்கு அவர்கள் ஏறிவிட்டார்கள். குத்தவேண்டும் என்று நினைத்து மாற்றான் மேல் வீசி எறியப்பட்ட வேல் அவனுக்கு ஊறு விளைவிக்காமல் முனை மழுங்கி விழும்போது, வேலை வீசியவன் சலிப்படைந்து விடுவதுபோல் ஊராரும் சோர்ந்துபோய்த் தங்கள் புனை சுருட்டுக் கதைகளை விட்டுவிட்டார்கள். ஆனால் இதையெல்லாம் மெளனமாகக் கண்டு வடிவு குமுறிக் கொண்டிருந்தாள். கோயிலுக்குப் போக மனமில்லாமல் திண்ணைக் குறட்டிலேயே முந்தானையை விரித்துப் போட்டு, பக்கத்தில் மகனைக் கிடத்திக்கொண்டு படுத்துவிட்டாள் வடிவு. விடிய விடிய அதிர்வேட்டுச் சத்தங்களும், சொற்களில் பிடிபடாத ஆரவாரமும் ஊரில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. எதிர்வீட்டுக் கிழவி தில்லைக்கண்ணு தூக்கம் பிடிக்காமல் கையில் வெற்றிலைப் பெட்டியை எடுத்துக்கொண்டு வடிவாம்பாளின் வீட்டுப் பக்கம் வந்தபோது வடிவுதிண்ணைக் குறட்டில் படுத்திருப்பதைப் பார்த்துவிட்டாள். “ஏண்டியம்மா, திருநாளும் அதுவுமா. ஊர் ‘ஜே’ ’ஜே’ண்ணு இருக்குது. நீ என்னண்ணா என்னத்தையோ பறிக்கொடுத்தவ மாதிரி அலங்கோலமா படுத்திருக்கே! உன் புருஷன் கச்சேரியைக் கேட்க ஊரே திரண்டு வாரப்ப நீ மட்டும் ஏன் இங்கேயே அடஞ்சி கிடக்குறே?…” என்று பரிவோடு கேட்டுவிட்டுப் பக்கத்தில் அமர்ந்தாள். தில்லைக்கண்ணுவின் கீச்சுக் குரலைக் கேட்டு குழந்தை செல்வம் தூக்கம் கலைந்து புரண்டு முனகினான். செல்வத்தைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே எழுந்து உட்கார்ந்த வடிவு நெற்றியில் படிந்த கூந்தலை ஒதுக்கிக்கொண்டு “வாங்க மாமி…” என்றாள். “ஒண்ணும் கவலைப்படாதேடி அம்மா!…ஆம்பளைங்க எப்டியும் இருப்பாங்க. நாம்தான் பொறுமையா இருந்து ’புருஷாளை வழிக்குக் கொண்டு வரணும்…” என்று அவளுக்கு ஆறுதல் கூறுவதாக நினைத்துக்கொண்டு கனிந்து கொண்டிருந்த துயரத் தீயை மேலும் ஊதிவிட்டாள் கிழவி. பின் அவளே சென்னாள்! “வடிவு, நாமும் சும்மா சொல்லப்படாது. அந்த அலங்காரத்தைப் பாத்தா நாம் எதுவும் தப்பாச் சொல்லத் தோணலே. முகத்திலே சின்னக் குழந்தை மாதிரி அப்படியே பால் வடியுது. அந்தப் பெண்ணோட அடக்கமும், சொகுசும் ஒரு மாதிரிதான். அதைக் கொறை சொல்ல முடியாது முத்துத் தாண்டவன் கெட்டலையுறதுக்கு அவ காரணம் இல்லே. எல்லாம் இவன்தான்.” கிழவி தன் கணவனைக் குறைத்துப் பேசுவது வடிவுக்குப் பிடிக்கவில்லை. என்றாலும் அவன் சொல்வதற்கு ஏதேனும் பதில் சொல்லவேண்டுமே என்பதற்காக “ஆமாம் மாமி! முந்தா நாளு நான் கோயிலுக்குப் போயிருந்தப்ப அவளைத் தூரத்திலே இருந்து பார்த்தேன். நம்ம தலைவிதிக்கு அவளை நொந்துக்கறது தப்புதான்” என்றாள். “அந்த அலங்காரம் ஆட்டக்காரியாக இருந்தாலும் நல்ல மனசு உள்ளவளா இருக்கிறதுனாலே அண்ணைக்கி உன் புள்ளே சிக்கா கிடக்கிறாண்ணு கேள்விப்பட்டதும் துடியாத் துடிச்சா! ஆள்மேலே ஆள்விட்டு விசாரிச்சா…” கிழவியின் பேச்சில் உண்மை இருப்பது வடிவுக்குத் தெரிந்தது. சிறுவன் செல்வம் கணையும், வெட்டும் வந்து படுக்கையில் கிடந்தபோது அலங்காரத்து வீட்டு வேலைக்காரன் அடிக்கொருதரம் வந்து பார்த்துச் சென்றது நினைவுக்கு வந்தது. அலங்காரமே வடிவாம்பாளின் வீட்டுக்கு வந்து பார்க்க நினைத்தாள் என்றும், ஒருவேளை வந்தால் ‘ஊர் என்ன சொல்லுமோ’ என்று அஞ்சி வராமல் இருந்துவிட்டாள் என்றும் வேலைக்காரன் வடிவாம்பாளிடம் சொல்லியிருந்தான்! என்ன இருந்தாலும் வடிவாம்பாளின் பெண்மனம் அலங்காரத்தை அங்கீகரித்துக் கொள்ள மறுத்தது. தில்லைக் கிழவி நீண்ட நேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தாள். கடைசியில் “நான் வரவேண்டியம்மா தூக்கம் ஆளை அசத்தியறது…” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டாள். வடிவாம்பாளும் எப்படியோ கண்ணயர்ந்தாள். பொழுது விடிந்தது. கோயிலிலிருந்து பண்டாரம் வந்தான். முத்துத்தாண்டவன் ஏதோ அவசர வேலையாக வெளியூர் போயிருப்பதாவும், வருவதற்கு இரண்டு நாள் ஆகுமென்றும் வடிவாம்பாளிடம் சொல்லிவிட்டுப் போனான். எங்கேயாவது கோயிலில் இருந்தோ அல்லது தனிப்பட்ட சபாக்களிலிருந்தோ கச்சேரிக்கு அழைப்பு வந்திருக்கும் என்று அனுமானித்துக் கொண்டாள் அவள். முத்துத்தாண்டவன் வெளியூருக்குச் சென்றிருக்கும் செய்தி அலங்காரத்திற்கும் தெரியாது. கோயில் பண்டாரம்தான் காலையில் அவளுக்கும் செய்தியைத் தெரிவித்துவிட்டுப் போனான். ‘திடீரென்று புறப்பட்டுப் போனதற்குக் காரணம் என்னவாக இருக்குமோ’ என்று கவலையுற்றாள் அலங்காரம். முதல் நாள் இரவு சதிர்க்கச்சேரி முடிந்தவுடன் அவள் நேரே வீட்டுக்கு வந்துவிட்டாள். முத்துத்தாண்டவனோடு தனித்துப் பேச சந்தர்ப்பம் இல்லை. இரண்டு நாட்கள் கழிந்தன. முத்துத்தாண்டவன் வரவில்லை. வீட்டுக்குத் திரும்பியிருந்தால் அவர் இங்கு வராமல் இருக்கமாட்டாரே. ஒரு வேளை வீட்டுக்குத் திரும்பி வந்து உடல்நலம் இல்லாமல் தங்கிவிட்டாரோ’ என்றெல்லாம் நினைத்து நினைத்து குழம்பினாள் அலங்காரம். தன் நினைவையும், நெஞ்சத்தையும் அவனுக்கே அர்ப்பணித்து விட்டு, அந்த அர்ப்பணத்தையே தன் வாழ்வின் வெற்றியாகக் கொண்டாடி வரும் அவளுக்கு எதிர்பாரா அந்தச் சிறு பிரிவு பெருவேதனை அளித்தது. மனத்தை மாற்றுவதற்காக வீணையை எடுத்துத் தனக்குப் பிடித்தமான ஒரு பாட்டைப் பாடத் துவங்கினாள். ‘பித்துப் பிடித்து ஏன் அலைகிறாய், பேதை நெஞ்சமே’ என்ற அந்த பாடல் வரி அவளது இதயத் துடிப்பின் எதிரொலி போலவே நளினமான ஒலித்தது. நேரே வடிவாம்பாளின் வீட்டிற்கே சென்று விசாரித்து வரவேண்டும் என்ற ஆவுல் தலை நீட்டிற்று. ‘ஊர் என்ன சொல்லுமோ’ என்ற அச்சம் இம்முறையும் எழுந்து கொழுந்துவிட்ட ஆவலை ஒடுக்கிற்று. கடைசியில், சிரமப்பட்டு அடக்கியும் அடங்காமல் மேலெழும்பும் அந்த ஆர்வத்தைத் தடுக்க இயலாதவளாக வீட்டை விட்டுக் கிளம்பினாள். தலையைக்கூட வாரிக்கொள்ளாமல், கட்டியிருந்த புடவையோடு, முந்தானையை இழுத்துப் போர்த்திக்கொண்டு வடிவாம்பாளின் வீட்டை நோக்கி நடந்தாள். ‘வடிவாம்பாளிடமிருந்து தனக்கு எத்தகைய வரவேற்புக் கிடைக்குமோ?’ என்று நினைத்தபோதெல்லாம் அவள் மனமும் நடையும் தளர்ந்து தொய்ந்தன. ஆவலும், தயக்கமும் முன்னும் பின்னுமாக மாறி மாறி இழுக்க அவள் நடந்து வந்தாள். சன்னதித் தெருவைத் தாண்டி தேர்முட்டியை அடைந்தாள். பின், திருக்குளத்துப் படித்துறையிலிருந்து நேர் கிழக்காகச் செல்லும் ராக்கப் பிள்ளைத்தெருவில் புகுந்தாள். தெற்கு வடக்காகச் செல்லும் அந்த நீண்ட தெருவின் தென் கோடியிலேயே முத்துத்தாண்டவனின் வீடு இருந்தது. வீடு நெருங்க அவள் துடிப்பும் அதிகமாகியது. வீட்டு வாசலுக்கு முன், தெரு மணலில் வேப்பமரத்து நிழலில் முத்துத்தாண்டவனின் குழந்தை நடைவண்டி உருட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது. குழந்தை செல்வனை அவன் இதுவரை பார்த்ததில்லை என்றாலும் ஒருவாறு ஊகித்துக் கொண்டாள். குழந்தை நடைவண்டியை உருட்டிவாறு தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் அலங்காரத்தைப் பார்த்து தன் பிஞ்சுக்கைகளை நீட்டி “அம்மா’”அம்மா” என்று அழைத்தது. அக்குழந்தையின் கண்ணும், மூக்கும், சாயலும் முத்துத்தாண்டவனையே உரித்து வைத்ததுபோல் இருந்தது. ஆறடி உயரம், பொன்னிறமான மேனியும், கருகருவென்று கழுத்து வரை வளர்ந்து கிடக்கும் சுருண்ட கிராப்புமாய் இன்றைக்குக் காட்சிதரும் முத்துத்தாண்டவன் சிறுபிள்ளையாக இருந்தபோது இப்படித்தான் இருந்திருப்பானோ என்று நினைக்கிற மாதிரி அக்குழந்தையின் சாயல் அவனைப் போவே இருந்தது. குழந்தை செல்வனின் குறுகுறுத்த விழிகளில் இலட்சியத்தைத் தேடி அலையும் முத்துத் தாண்டவனின் கம்பீரமான உருவமே அவளுக்குத் தெரிந்தது. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அக்குழந்தையைத் தூக்கிக் கொஞ்சவேண்டும் என்ற ஆர்வத்தோடு அலங்காரம் நெருங்கினாள். அப்பொழுதுதான் ஜன்னல் ஓரமாக நின்று தெருவைப் பார்த்துக் கொண்டிருந்த வடிவு எதிர்பாரத நிலையில் அலங்காரத்தைக் கண்டாள். வடிவு ஜன்னல் வழியாகத் தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்று அறியாத அலங்காரம் நடைவண்டி உருட்டும் சிறுவனை வாரி எடுத்து, உச்சி மோந்து முத்தம் கொடுத்தாள். அந்தக் காட்சியைக் கண்ட அந்தக் கணத்தில் வடிவின் மனம் நெகிழ்ந்தது. அலங்காரத்தின் தோள் மீது சாய்ந்த குழந்தை அவள் கழுத்தைக் கெட்டியாக இறுக்கிக்கொண்டு தன் மழலை மொழியில் “அம்மா” “அம்மா” என்று அழைத்தது. அதுவரை தன் உள்ளத்தில் குடிகொண்டிருந்த அழுக்காறு, வன்மம், தப்பபிப்பிராயம் எல்லாம் ஒரே நொடியில் கரைய வடிவு புதிய பிறவி பெற்றவள்போல் மனம் சிலிர்த்தாள். ஏதோ ஓர் உணர்வின் விழிப்பில் உந்தப்பட்டவள்போல் அவள் வாசலுக்கு விரைந்து வந்தாள். “அலங்காரம்!… வாம்மா வா… ஏன் தயங்கிறே…நீயும் இவனுக்கு ஒரு அம்மாதான்..” என்று கூறி அவளைத் தழுவிக் கொண்டு கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள். சலங்கை ஒலியோடு வாசலில் வில்வண்டி வந்து நின்றது. முத்துத்தாண்டவன் வண்டியைவிட்டு இறங்கினான். தன்னை வரவேற்க வடிவும், அலங்காரமும் சேர்ந்து நிற்பதைக கண்டான். அவன் மனம் தளிர்த்தது.  தி.ச. ராஜூ தஞ்சை மாவட்டம் தில்லை ஸ்தானத்தில் பிறந்த தி.சா.ராஜூ பட்டாளக்காரர், சிறந்த இலக்கியவாதி. அவரைப்பற்றி அவருக்குள்ளே தீவிர கொள்கையும், நம்பிக்கையும் கொண்டவர். அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான பட்டாளிக்காரன் என்ற சிறுகதை நூலுக்கு அவர் எழுதிய முன்னுரையான சொந்தக்கதையே அவரைப்பற்றி வாசக உலகம் புரிந்துகொள்ள போதுமானதாக அமையும் என்று அதையே இங்கே முன் வைக்கிறேன். ‘தீவிரமான நாட்டுப்பற்றும் இலக்கியப் புலமையும் உடைய பதிப்பாசிரியர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். சிறுகதை இலக்கியம் பற்றி அவருடன் உரையாடும்போது, “தமிழில் நல்ல சிறுகதைகள் வெளிவந்து கொண்டிருப்பது உண்மைதான். ஆனால் எந்த எழுத்தாளரும் ஒரு குறிப்பிட்ட துறையின் சிறப்பான முன்னேற்றம் காட்டக் காணோம். உதாரணமாக வேட்டைக்கதைகள் சிலவற்றைத் தொகுத்து வெளியிடலாம் என்று எண்ணினேன். வெளியிடுவதற்குத் தகுதியுள்ள பத்துச் சிறுகதைகள் கூட எனக்குக் கிடைக்கவில்லை.’ என்று அங்கலாய்த்தார். அவருடைய குறையீடு நியாயமானது என்று கூறத்தேவையில்லை. அறிஞர் வ.ரா. அவர்கள் கூறியது போல் ‘திரும்ப சகதி நிறைந்த சுவடு விழுந்த பாதையில் தான் நமது கற்பனை வண்டி சென்று கொண்டிருக்கிறது’ என்பது மறுக்க முடியாத உண்மை. “அந்த உரையாடல் என்னை இந்தத் துறையில் செயல்புரிய ஊக்கியது. சென்ற இருபது ஆண்டுகளுக்கு மேல் இராணுவத்தில் செம்மையுற பணிபுரிந்த செயல் கர்வம், படையினரின் சஞ்சிகையில் அவர்களுக்காகவே உரக்கச்சிந்திக்கும் வகையில் வரைந்த கடிதம் கட்டுரைகள், வெளியிட்ட ஓரிரு நூல்கள் ஆகியவை. தமிழில் படைத்துறையினரைப் பற்றியும் சில கதைகள் எழுதும் துணிவைத் தந்தன.”  பட்டாளக்காரன் நாற்புறமும் சிறிய கைப்பிடிச்சுவர். அதனுள் பத்து சிறிய வீடுகள். வீடுகளுக்குப் பின் பக்கத்தில் சிறிய தோட்டங்கள். முன்புறம் விசாலமான இடைவெளி, அதிலே அடர்த்தியான மரங்கள். மரநிழல் இல்லாத இடங்களில் தரையில் பசும்புல். வெயில் கள்ளென்று அடித்தபோதிலும் ஊடே குளிர்காற்று விசிற்று. முற்பகல் பதினொரு மணி இருக்கும். “மூங்…ஃபல்லிஈஈஈ…” ஒலி, மத்திய தைவதத்தில் தொடங்கி உச்ச நிஷாதத்தில் முடிவடைந்தது. அந்தத் தொனி சுவர்களில் மோதி நெடு நேரம் எதிரொலித்தது. எதிரொலி முடியும் முன்பு மறுபடியும் அந்த ஓசை புறப்பட்டது. “அம்மை… பட்டாளக்காரன் வன்னு!” “அது யாரடி பட்டாளக்காரன்?” “அதான் அம்மே கப்பலண்டி விக்கன்னனவன். அம்மே, எனிக்கிக் கப்பலண்டி வேடிச்சுத் தரணம்.” “தராம் மகளே தராம்; கரையண்டா, விளிக்கண்ணே ஆயாளை!” பேசியவர்கள் ராபர்ட் சூரியனின் மனைவியும் அவர்களுடைய நாலு வயது மகள் டெய்ஸியும். சூரியனுக்குச் சொந்தஊர் கொட்டாரக்காரை. அவருடைய மனைவி மரியாள் நெய்யாற்றங்கரையைச் சேர்ந்தவர். அவளுடைய தாய்மொழி தமிழே. ஆனாலும் பழக்கத்தின் காரணமாக வீட்டில் மலையாளத்திலேயே பேசினார்கள். சத்தத்தைக் கேட்டு நானும் வெளியே சென்றேன். கூடவே என் மகள் ரோஸியும் தம்பி ஜேம்ஸைக் கீழே விட்டுவிட்டு என்னுடன் வந்தாள். வந்தவன் வேர்க்கடலை விற்பவன். இராணுவத்தார்களின் பச்சைச் சட்டையும், காக்கிக் கால்சட்டையும் அணிந்திருந்தான். வயது முதிர்ந்தவனாகக் காணப்பட்டான். தலையில் ஒரு முடிகூட இல்லாமல் வழுக்கை இட்டிருந்தது. ஆனால் உடலில் ஒரு பளபளப்பு. விரிந்த பெரிய நெஞ்சு, நீண்ட கைகள், முழங்கால்களை நெருங்கின. தன் வயசுக் காலத்தில் அவன் நல்ல புயபலமுடையவனாக இருதிருக்க வேண்டும். குழந்தை ரோஸி என் முகத்தைப் பார்த்தாள். அவளுடைய குறிப்பறிந்து கடலைக்காரனை என் வீட்டிற்கும் அழைத்தேன். அண்மையில் வந்தபோது அவனுடைய முதுமை இன்னும் தெளிவாக விளங்கிற்று. அவனுடைய கண் இமை ரோமங்களும், புருவங்களும் கூட நரைத்திருந்தன. என்றாலும் நடையிலே நடுக்கமில்லை. கண் பார்வை தீர்க்கமாக இருந்தது. குழந்தைக்கு வேர்க்கடலை வாங்கிக் கொடுத்துவிட்டு உள்ளே வந்தேன். பிறகு தினமும் இதே வழக்கமாகப் போய்விட்டது. அவனுடைய இசை பொருந்திய ஒலியைக் கேட்காவிட்டால் என்னவோபோல் இருந்தது. அவனுடைய பெயர் அந்தோணி என்று தெரிந்துகொண்டேன். நான் தவறாமல் அவன் எங்கள் விடுதியில் நிலக்கடலையும், பட்டாணியும் விற்க வந்தான். தினமும் குழந்தைகள் அவனுக்குக் கப்பம் கட்டி வந்தன. அவனுடைய வரவை ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கின. அன்று அவன் ஏனோ வரவில்லை. குழந்தை ரோஸி வீட்டு வாசலில் நெடுநேரம் அவனுக்காகக் காத்திருந்தாள். பிறகு உள்ளே வந்து, “அம்மா, இன்று அந்தோணித் தாத்தாவைக் காணோம்!” என்றாள். அவளுடைய குரலில் ஆதூரம் தொணித்தது. இந்தச் சில நாட்களில் குழந்தை அவனுடன் நெருங்கிப் பழகிவிட்டாள். “உடம்பு சரியில்லையோ என்னவோ! இல்லாவிட்டால் வராமல் இருக்கமாட்டானே! நான் அசிரத்தையாகப் பதிலிறுத்தேன். அது அவளுக்குத் திருப்தி அளிக்கவில்லை. தம்பி ஜேம்ஸை மடியில் வைத்துக் கொண்டு வாசல் வராந்தாவிலேயே உட்கார்ந்திருந்தாள். பகலுணவிற்காக என் கணவர் வந்தபோதும் அவள் உள்ளே வரவில்லை. அவர் உணவருந்தித் திரும்பிய பிறகு சற்று அசதியுடன் கண்ணயர்ந்தேன். ஏதோ சத்தம் கேட்டது. எழுந்துபார்த்த போது குழந்தைகள் ஜேம்ஸ், ரோஸி இருவரையும் காணவில்லை. திடுக்கிட்டவாறு விடுதியின் முன்புறம், பின்புறம் எங்கும் தேடினேன். சுற்றுச்சுவர் அருகில் ஆலமரத்தடியில் ஏதோ பேச்சுக் குரல் கேட்டது. குழந்த ஜேம்ஸ் ஒரு மிட்டாயைச் சுவைத்துக் கொண்டிருந்தான். ரோஸி ஒரு பொம்மையை அணைத்தவாறு அந்தோணித் தாத்தாவின் மடியில் படுத்திருந்தாள். தாத்தா அவளுக்கு ஏதோ கதை சொன்னார். ரோஸி அதைக் கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் பரபரத்தவாறு எழுந்திருக்க முயன்றார் அந்தோணி. “இதெல்லாம் என்ன தாத்தா?”- சற்றுக் கோபத்துடனேயே வினவினேன் நான். “ஒண்ணுமில்லையம்மா. இன்னிக்கு முதல் தேதி. ‘பிஞ்சின்’ வாங்கினேன். குழந்தைகளுக்கு வேர்க்கடலைகூட நான் கொண்டுவரவில்லை. அந்தோணி எழுந்து நின்றான். அவன் இடுப்பில் ஓர் அரைக் கால்சட்டை, முழங்கால் வரை மேஜோடு; காலில் பழைய பூட்ஸுகள்; மேலே அரைப் பழசான இராணுவச் சட்டை, மார்பின் இடது பக்கத்தில் பல வண்ண விருதுகளும், பதக்கங்களும் தொங்கின. நிமிர்ந்து நின்றால் ஆறடிக்குக் குறையாத உயரம். அந்த இராணுவ உடையில் அந்தோணியின் தோற்றம் பொலிவுடன் விளங்கியது. என்னை அறியாமல் எனக்கு அந்தோணியிடம் மரியாதை தோன்றியது. என் கணவரும் படை வீரரே. ஒருவேளை தொழில் முறையினால் ஏற்பட்ட தோழமையோ? “வீட்டுக்கு வா தாத்தா” என்று அழைத்தேன். தாத்தாவும், குழந்தைகளும் வராந்தாவில் உட்கார்ந்தார்கள். “இதெல்லாம் என்ன தாத்தா?” ரோஸி அந்தோணியின் மார்பின் தொங்கிய பதக்கங்களைக் காட்டி வினவினாள். “இதுவா, இது ஆப்ரிகன் ஸ்டார் அடுத்தது மிடில் ஈஸ்ட், மூன்றாவது ஊண்ட் ட்ரைப்.” ரோஸிக்கு ஒன்றும் புரியவில்லை. “ஸ்டார் என்றால் என்ன?” “அதாவது அந்த ஊர்களிலெல்லாம் போய் நாங்கள் சண்டை போட்டிருக்கிறோம்னு அர்த்தம். அந்த நீலவர்ணக் கோடு கைக்குண்டினால் நான் விரல் இழந்ததற்கான வெகுமானம்.” “நீ பேசறது ஒண்ணுமே புரியலையே தாத்தா.” “ரொம்ப வருஷத்துக்கு முன்னாலே நான் பட்டாளத்திலே இருந்தேன். அப்போ எதிரிங்க எங்க மறை குழியிலே ஒரு கைக்குண்டை எறிஞ்சானுங்க. அது வெடிச்சிருந்தால் அங்கே இருந்த இருபது பேரும் செத்துப் போயிருப்போம். சட்டுனு அந்தக் குண்டைப் பொறுக்கி எதிரிங்க இருந்த பக்கமே எறிஞ்சேன். அதுக்குள்ளே குண்டு வெடிச்சிட்டுது. என்றாலும் நாங்கள் தப்பிவிட்டோம். ஆனால் என் இடது கையில் இரண்டு விரல்கள் போய்விட்டன.” தாத்தாவின் இடது கையைப் பார்த்தேன். கடைசி இரண்டு விரல்களின் இடம் மொண்ணையாக இருந்தது. அந்தோணிக்கு ஒரு கோப்பை தேனீர் தயாரித்துக் கொடுத்தேன். “உனக்குக் குழந்தை குட்டிகள் யாரும் இல்லையா?” “ஒரு மகன் இருந்தான். அவன் இரண்டாவது யுத்தத்திலே காலமாயிட்டான். அவன் குழந்தைகளும், மருமகளும் என்னோடு பஸ்தியிலே இருந்தார்கள். ஏதோ காரியமாய் நான் வெளியூர் போயிருந்தேன். அது ராஜாக்கர் கலவர சமயம். எங்க வீடுகளுக்கெல்லாம், நெருப்பு வெச்சிட்டாங்க. வீட்டில் வெள்ளிப் பணமாக இரண்டாயிரம் கல்தார் ரூபாய் வெச்சிருந்தேன். அவ்வளவும் மண்ணோடு போச்சு.” “கல்தார் பணம் என்றால் என்ன?” “அப்போதெல்லாம், அதாவது வெள்ளைக்காரன் நாளிலே இந்த ஊரில் ரெண்டு தினுசுக் காசு இருந்தது. நைஜாம் பணத்துக்கு ஹாலின்னு பேரு. வெள்ளைக்காரன் காசைக் கல்தார் இன்னு சொல்வோம். இப்போ நீங்க இருக்கிற வீடுகளிலெல்லாம் துரைமார்கள் இருந்தாங்க. அப்போதிலிருந்து நான் இங்கேதான் இருக்கேன். அவுங்க இந்த வேர்க்கடலையை மங்கி நட்ஸுன்னு சொல்லிப் பிரியமாய்த் தின்னுவாங்க.” “தாத்தா உனக்கு ரொம்ப வயசாயிருக்குமே?” “ஆமாம்மா, நீங்களே பாருங்களேன்.” அந்தோணி தன் சட்டைப் பையிலிருந்து இளஞ்சிவப்பு வர்ணப் பென்ஷன் கார்டை வெளியில் எடுத்துக் காட்டினான். அதில், ஜோஸப் அந்தோணி, முனையனூர், திருச்சி ஜில்லா, பிரிட்டிஷ், இந்தியா” என்று எழுதியிருந்தது. அந்தோணியின் பிறந்த தேதி ஆகஸ்ட் ஏழு, 1872. “உனக்கு என்ன பென்ஷன் கிடைக்கும்?” “மாசம் பதினஞ்சு ரூபாய்.” “அது எப்படி உனக்குப் போதும்?” “அதனால் தான் அம்மா, இப்படி வேர்க்கடலை வித்துப் பொழைக்கிறேன். கர்த்தர் படி அளக்கிறார். ஒரு கர்னல் துரை வீட்டு அவுட் ஹவுஸிலே படுக்கிறேன்.” அந்தோணி வானத்தை நோக்கிக் கையை உயர்த்திக் காட்டினான். “முஷீராபாதில் வயதானவர்களுக்கான விடுதி இருக்கிறதல்லவா, அங்கே போய்த் தங்கலாமே!” “கர்த்தர் உடலில் வலுவைக் கொடுத்திருக்கிறார். உடம்பிலே தெம்பு இருக்கும் வரையில் பிறர் ஆதரவில் இருக்கக்கூடாது; அது பிசகம்மா. இந்த ஊருக்கு நாற்பது வருஷத்துக்கு முந்தி வந்தேன். இங்கேயே தங்கிவிட்டேன்.” அந்தோணி பழைய நினைவுகளில் மூழ்கி உரை செய்தான். “அதோ, மெளலா அலிக்குப் பக்கத்திலே மெஸ் இருக்குதே, அங்கே சர்ச்சில் துரை கூடத் தங்கி இருந்தாராம்மா. நான் அவருக்கு ஆர்டர்லியாக இருந்திருக்கிறேன்.” “நிசமாகவா தாத்தா?” “உண்மை அம்மா. இப்போது கூட ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் அவரிடமிருந்து கார்டு வரும்.” ஆங்கிலேயர்களின் பெருந்தன்மையை எண்ணி வியந்தேன். அந்தோணி புறப்படத் தொடங்கியதும் ஓர் எட்டணா நாணயத்தை எடுத்து அவனிடம் கொடுக்க வந்தேன். “தேவையில்லை அம்மா. தற்போதைக்குக் கர்த்தர் தருகிறார். உங்கள் பிரியம் ஒன்றே போதும்.” தாத்தா சென்ற திசையை நோக்கியவாறு நெடுநேரம் நின்றேன். படையினர் உடுப்பணிந்திருந்த தாத்தாவின் நடையிலே கூட ஒரு கம்பீரம் இருந்தது. ★ மறுநாள் ரோஸியின் அப்பா ஒரு மரியாதை அணி வகுப்பில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. அவருடைய கால் பட்டிகளிலும், இடுப்புப் பட்டையிலும் பசுமண் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தேன். எவ்வளவு நிறையத் தடவினாலும் வெயிலில் உலர வைத்ததும் எல்லாம் உதிர்ந்துவிட்டது. கையில் சிறிய தூக்குக் கூடையுடன் அந்தோணி அங்கு வந்தார். நான் மேற்கண்ட வேலையைச் சரியாகச் செய்ய முடியாமல் திகைப்பது கண்டு அவர் எனக்குத் துணைபுரிய முன்வந்தார். “அம்மா, சோறு வடித்த கஞ்சி இருக்குதா? ஆறியதாயிருந்தால் நல்லது.” தாத்தாவிடம் கஞ்சியைக் கொண்டு வந்து தந்தேன். பச்சை மண்ணைத் தூளாக்கிக் கஞ்சியுடன் கலந்து பசையாக்கினார். தாத்தா, பட்டிகளையும், பட்டையையும் தண்ணிரில் ஊற வைத்துக் கழுவினார். அவை பாதி உலரும்போது அவற்றின் மேல் கஞ்சிப் பசையை ஒரே சீராகத் தடவினார். பசை உலர்ந்ததும் பட்டிகள் புதியவை போலப் பளபளத்தன. வேலை செய்யும் தாத்தாவின் கை லாகவத்தைக் கண்டு வியந்தேன். “தாத்தாவுக்கு எல்லா வேலையும் வரும் போலிருக்கிறது!” “பட்டாளக்காரனுக்குத் தெரியாத வேலையே இருக்கக்கூடாது. எந்த வேலையை எடுத்தாலும் அதைச் சுத்தமாய்ச் செய்யணும். மனசைச் செலுத்தணும்.” தாத்தாவின் கண்கள் பெருமித உணர்ச்சியில் பளபளத்தன. “தாத்தா, பிற்பகலில் உனக்கு வேலை ஏதும் இல்லையல்லவா? தினமும் வந்து எங்களுடைய பூட்ஸ், பட்டை ஆகியவற்றைச் சுத்தம் செய்து கொடேன். மாதம் ஏதாவது கொடுத்துவிடுகிறேன்.” எப்படியாவது அந்தோணிக்கு உதவி செய்யவேண்டும் என்று எண்ணினேன். “செய்கிறேன் அம்மா. எல்லா வேலையிலும் எனக்குப் பழக்கமுண்டு. மாண்ட்கோமரியின் உடைகளுக்கு இஸ்திரி போட்டிருக்கிறேன். வைஸ்ராய்வேலுக்குக்கூட நான் பாடமன்னாக இருந்ததுண்டு. அப்போது அவர் சாதாரண மேஜராக இருந்தார்….மூங்ஃபல்லிஈஈ…” தாத்தா வேர்க்கடலை விற்பனையைத் தொடங்கினார். மறுநாளிலிருந்து தாத்தா தினமும் பிற்பகலில் எங்கள் வீட்டிற்கு வந்து என் கணவரின் பொருள்களைச் சுத்தம் செய்து கொடுத்தார். நாளடைவில் அவருடைய சிபாரிசின் பேரில் அந்த விடுதியில் இருந்த அனைவர் வீடுகளிலிருந்தும் அந்தோணிக்கு வேலை கிடைத்தது. மாதம் பத்து ரூபாய் வருமானத்திற்குக் குறைவில்லே. ஆலமரத்தடியில் அந்தோணித் தாத்தா குழந்தைகளினிடையில் உட்கார்ந்திருக்கிறார். அவர்களுக்குத் தாத்தா ஒரு விளையாட்டுச் சாதனம். “தாத்தா இந்த வயதில் எப்படி இவ்வளவு பலசாலியாக இருக்கிறாய்?” ஆரோக்கியம் என்ற பெண் வினவினாள். அவள் திருமல் கிரி கான்வெண்ட் பள்ளி மாணவி. தாத்தா தனது சட்டையினுள்ளிருந்து முண்டாவை வெளிப்படுத்திக் காட்டினார். “பொய் சொல்லக்கூடாது, திருடக்கூடாது. வெயிலிலும் காற்றிலும் இந்த உடலை நன்றாக அலையவிடணும். குழந்தைகளிடம் அன்பாயிருக்கணும். கர்த்தரை விசுவாசிக்கணும். அதுதான் வழி” தாத்தா தெளிவுடன் கூறினார். தூரத்தில் நின்று இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் கண்கள் பனித்தன. தூய வாழ்வு முறையைப் பற்றிய பெருநூலொன்றைப் படித்த நிறைவு என் உள்ளத்தில் ஏற்பட்டது. சின்னக் குழந்தைகளுக்கு மிருகங்களைப் போல வாயினால் ஓசை செய்து வேடிக்கை காட்டினார் தாத்தா. பாடல்கள் பாடினார். அவர்களுக்கேற்ற சிறுகதைகள் சொன்னார். தான்சென்று வந்த பல்வேறு நாட்டுச் சிறுவர் சிறுமியர்களது நடைமுறைகள் குறித்து விவரங்கள் கூறினார். நாளடைவில் அந்தோணித் தாத்தா எங்கள் விடுதியின் இன்றியமையாத உறுப்பினர் ஆகிவிட்டார். ★ மழை ஓய்ந்து அடுத்த பருவம் நெருங்கிக் கொண்டிருந்தது. சரக்கொன்றை மரங்களில் இருந்த இரத்த வர்ண மலர்கள் எல்லாம் உதிர்ந்துவிட்டன. மரங்கள் இலைகள் இன்றி நின்றன. குளித்துவிட்டுச் சிரிந்து நிற்கும் சிறுவனைப் போல் தோற்றமளிக்கும் மெளலா அலிக்குன்றை வெண்திரை சூழ்ந்தது. காலையிலும், மாலையிலும் குளிர்காற்று வீசத் தொடங்கிற்று. கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதற்கான முன்னறிவிப்புக்கள் இவை! தெலுங்கானா பிரதேசத்தின் சிறப்பான இயல்பு. அங்கே உள்ள பல சமய, மொழி இனங்களின் அபூர்வமான கலவையாகும். வெளியிலிருந்து புதிதாகப் பார்ப்பவர்களுக்குத்தான் அது தெளிவாகப் புலப்படும். இந்திய நாட்டின் பொதுவான பண்பாடு இங்கே திகழ்ந்தது. பருவகால மாறுதல்கள் கூட, இங்கே ஆடம்பரம் இன்றி வரும், போகும்-இங்கு வாழ் மக்களின் இயல்புபோல. கிறிஸ்துமஸ் இந்த ஊரின் சிறப்பான பண்டிகை. இங்கே முன்பு நிறைய வெள்ளைக்காரர்கள் தங்கியிருந்தனர். அவர்களுடைய சமயப் பணியினால் சுற்றிலும் நிறைய மாதா கோயில்கள். பல எளிய மக்கள் கிறிஸ்துவ தர்மத்தைத் தழுவியவர்கள். பண்டிகையை முன்னிட்டு அடுத்த வீட்டு ராபர்ட் சூரியனின் தம்பி தம் துணைவி, குழந்தைகளுடன் வந்திருந்தார். டெல்லியில் உயர்ந்த பதவி வகித்து வந்த அவர் குழந்தைகளுக்கு நிறையப் பரிசுப் பொருள்கள் வாங்கி வந்திருந்தார். குழந்தை டெய்ஸி அன்று தன் சட்டையில் ஓர் அழகிய ஊசிப் பதக்கத்தை அணிந்திருந்தாள். அதைக் கையில் எடுத்துப் பார்த்தேன். பொன் விளிம்புடைய எனாமல் தகட்டில் இயேசுநாதரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. அதன் மேல் இருந்த குவி கண்ணாடியினால் உருவம் பன்மடங்காகித் தெரிந்தது. அழகான வேலைப்பாடுள்ள பொருள். அப்போது அந்தோணித் தாத்தா எங்கள் வீட்டில் பூட்ஸுகளைத் துடைத்துக் கொண்டிருந்தார். அவர் டெய்ஸியை நோக்கி, “இதைத் தாத்தாவுக்குத் தரலாமோ?” என்று வேடிக்கையாகக் கேட்டார். “ஊஹீம். கொச்சம்மைக்கித் தேஷ்யம் வரும்; அது என் கொச்சம்மை கிறிஸ்மஸ்ஸுக்குத் தன்னதாணு!” பதக்கத்தை வாங்கிக்கொண்டு ஓடிவிட்டாள் டெய்ஸி. நான்கு நாட்கள் சென்றன. அன்று தேதி டிசம்பர் இருபத்துநான்கு. மறுநாளைத் திருநாளுக்காகப் பனியாரங்கள் செய்வதில் ஈடுபட்டிருந்தேன். திராட்சை கேக், ஆரஞ்சு ரொட்டி, கோகோ சாக்லட் எல்லாம் செய்தேன். இவற்றில் கொஞ்சம் கொஞ்சம் காகிதத்தில், மடித்து வைத்தேன். ரோஸியை அழைத்துத் தாத்தாவைக் கூப்பிடும்படி கூறினேன். சூரியன் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த தாத்தா தம் கை வேலையை விட்டு எங்கள் வீட்டிற்கு வந்து நான் தந்த தின்பண்டங்களைப் பெற்றுக்கொண்டு திரும்பினார். மறுபடியும் வேலையில் ஆழ்ந்துவிட்டேன். ஒருமணி நேரம் சென்றிருக்கும். அடுத்த வீட்டில் யாரோ இரைந்து பேசுவது கேட்டது. என் கணவர் அங்கே சென்று திரும்பினார். “என்ன விசேஷம்?” என்று கேட்டேன். “ஏதோ தங்க புருச்சாம். அதை டெய்ஸியின் தங்கையுடைய சட்டையில் குத்தியிருக்கிறார்கள். அதைக் காணோம் என்று தேடுகிறார்கள்.” “அடாடா. அது மிக நன்றாக இருந்ததே!” என்று அங்கலாய்த்தவாறு நானும் அங்குச் சென்றேன். சூரியன் கடுங்கோபத்துடன் குதித்துக் கொண்டிருந்தார். திருநாளும் அதுவுமாக விலை உயர்ந்த பரிசுப்பொருள் காணாமற் போனது அவருக்கு வருத்தம் தந்தது. “டெய்ஸி எங்கே?” என்று அவள் தாயாரைக் கேட்டேன். “தன் கொச்சப்பனோடு அம்பலத்துப் போயி, இப்பளே போயி என்றாள் மரியாள். எனக்கு இப்போதெல்லாம் மலையாளம் புரிந்தது. சூரியனின் வீட்டு வாசலில் கூட்டம் கூடிவிட்டது. எல்லோரும் காணாமற்போன பொருளைத் தேடத் தொடங்கினோம். அந்தோணித் தாத்தா கடைசி வீட்டில் வேலை செய்து விட்டு வெளிவாசல் வழியாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். சூரியனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை;”ஏய், இவடே வா” என்று அந்தோணியை விளித்தார். “இந்தக் குழந்தைக்கு இட்டிருந்த பொன் புரூச்சைப் பார்தாயா?” “இல்லை சார் நாலு நாள் முன்னால் டெய்ஸி ஒரு பதக்கம் போட்டிருந்ததைப் பார்த்தேன். ரொம்ப அழகாக இருந்ததுங்களே அது.” “இந்தா, இந்தக் கதை எல்லாம் வேண்டாம்; உள்ளதைச் சொல்லு.” சூரியனின் முகபாவத்திலிருந்த குரூரத்தைக் கண்டு தாத்தா ஒரு கணம் திகைத்தார். “நான் எதையும் பார்க்கவில்லை ஸார்” -அமைதியாகப் பதிலளித்தார். “எங்கே, நின்னொட சஞ்சியை ஞான் காணட்டும்!” அந்தோணியின் உடல் குன்றியது. அது ஒரு சிறிய கித்தான் பை. சூரியன் அதனுள்ளிருந்து ஒவ்வொரு பொருளாக வெளியில் எடுத்தார். ஒரு கந்தைத் துணி, நான் கொடுத்த தின்பண்டங்கள், இரண்டு பாலிஸ்டப்பா, பித்தளைவிளக்கி டின், இரு பிரஷ்;. பிறகு…அது என்ன?…பளபளவென்று அதே தங்கப்பதக்கம், டெஸ்ஸியினுடையது. அந்தோணி அவமானத்தினால் செயலற்று நின்றார். “கள்ள நாயே!” சூரியன் அந்தப் பையை வீசி எறிந்தார். அந்தோணியை அடிக்கப் போனார். தாத்தா விலகிக் கொண்டார். - “சார் நிசம்மாச் சொல்லுறேன். இது என் பையில் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியாது; கர்த்தர் சாட்சியாகத் தெரியாது.” தாத்தா சிலுவைக் குறி செய்து கொண்டார். அவருடைய கண்களில் நீர் நிறைந்தது. சூரியனின் கோபம் கட்டுக்கடங்காமல் பொங்கிற்று. அவர் தாத்தாவின் தோள்களைப் பிடித்து உலுக்கினார். “சார், மிஸ்டர் சூரியன், தாத்தாவை விட்டு விடுங்கள். வயதான கிழவர்; உங்கள் பொருள்தான் கிடைத்துவிட்டதே!” என் கணவர் சூரியனைத் தடுத்து விலக்கினார். “எல்லாம் உங்களோட வார்த்தைகேட்டு வந்ததாணு. கண்டநாயெல்லாம் குவார்ட்டர்ஸில் வருன்னு. போனடா கள்ளா; இனி இந்தப் பக்கம் வாரம்பாடில்லா!” சூரியன் உறுமினார். தாத்தா என் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். திரும்பி நடந்தார். அவருடைய பையும் நான் கொடுத்த பனியாரங்களும் தரையில் கிடந்தன. நாங்கள் வீட்டிற்குள் சென்றோம். …அந்தோணி மெல்ல நடந்தார். அவமானத்தின் கமை அவரைத் தள்ளாடச் செய்தது. தொடர்ந்து நடக்க முடியாமல் தெருப்பாலத்து மதகின்மேல் உட்கார்ந்தார். இதுநாள் வரை அவர் கண்ட நல்வாழ்வின் அனுபவங்கள் யாவும் அவர் கண் முன்பு நின்றன. அவருடைய உள்ளத்து நரம்புகளில் எதோ ஒரு ஆட்டம் கொடுத்துவிட்டது. அமைதியுடன் மதகுச் சரிவில் சாய்ந்தார். வாய் கோணிக் கோணி இழுத்தது. ★ மாதா கோயிலிலிருந்து டெய்ஸி தனது சிற்றப்பாவுடன் திரும்பியதைப் பார்த்தேன். சற்ற நேரத்திற்கெல்லாம் சூரியன் வீட்டிலிருந்து உரத்த பேச்சுக்குரல் கேட்டது. நானும் என் கணவரும் அடுத்த வீட்டு வாசலில் போய் நின்றோம். டெய்ஸி பேசிக்கொண்டிருந்தாள். “தாத்தா கள்ளனல்ல, ஞானாணு ஆ. ப்ரூச்சை அவனடெ சஞ்சியில் இட்டு. தாத்தா இப்போள் எவடே போயி!” என்னுடைய நெஞ்சில் சில்லிப்புப் பாய்ந்தது அவமான உணர்ச்சி எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். பண்டிகைக்காக நாங்கள் தாத்தாவுக்கு வாங்கியிருந்த புதுத் துணிகள் அவருக்கு ஈமக் கோடி ஆயின. கல்லறைக்குச் சென்றுவிட்டு திரும்புகையில் எங்களுடைய தபால்பெட்டி நிறைந்து கிடப்பதைக் கண்டோம். அவற்றில் ஒன்று என் மேல்பார்வையிட்டு அந்தோணிக்கு வந்திருந்தது. அது ஒரு கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கடிதம். இங்கிலாந்து தேச முத்திரை பொறித்திருந்த அந்த உறையினுள் ஒரு வாழ்த்துச் செய்தி இருந்தது. அதன் முகப்பு வாசகம் என் உள்ளத்தை உருக்கியது. “யாருக்காக நீ முள் முடி தரித்து வசைகள் எய்தினாயோ…” அதை அனுப்பியவருடைய பெயரைக் கவனித்தேன். “வின்ஸ்டன் சர்ச்சில்” என்று கையொப்பமிடப்பட்டிருந்தது. பட்டாளக்காரன் பொய் சொல்லுவதில்லை! ந. முத்துசாமி 1936ஆம் ஆண்டு பிறந்த ந. முத்துசாமி தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள புஞ்சை என்றும் கிராமத்தைச் சேர்ந்தவர். எழுத்து பத்திரிகை மூலம் நவீன இலக்கியவாதியாக அறிமுகமானவர். ‘நாற்காலிக்காரர்’ ‘சுவரொட்டிகள்’ ஆகிய இவருடைய நாடகங்கள் நவீன நாடகத்துறையில் முன்னோடி முயற்சிகள். தெருக்கூத்து, தமிழர்களின் பண்டைய தியேட்டராக இருந்திருக்க முடியும் என்பது இவர் கருத்து. சென்னையில் ‘கூத்துப்பட்டறை’ என்ற அமைப்பில் மூலம் நவீன நாடகத்தை மேடையேற்ற முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு வரும் கலைஞன். புதியதலைமுறை எழுத்தாளர் பலர் கையில் மெளனியின் பாதிப்பு இருந்தது உண்மையாயினும், மெளனியையும் தாண்டிய Anti-short story எல்லையில் எழுத முற்பட்டவர்களில் ஒருவராக ந.முத்துசாமியைக் குறிப்பிடலாம். ‘சிறுகதை வடிவத்தை நன்றாய் அமைத்துவிடுவதில் முத்துசாமி ஓரளவு வெற்றியடைந்திருக்கிறார். மெளனியைவிட மிகவும் நுணுக்கமாகவே உளவியல் பகுப்பாய்வு விஷயங்களைக் கையாண்டிருப்பது கவனிக்கத்தக்கது. கதை சொல்லும் போது அதன் பின்னணியில் காணப்படும் விவரங்களை அடுக்கடுக்காக சில சமயங்களில் அதிகமாகவும், எடுத்துக் கூறுவது முத்துசாமி கதைகள் எல்லாவற்றிலும் காணப்படும் ஓர் அம்சம். அந்த அளவுக்கு மிஞ்சி விவரங்களை கதையில் நிரப்புவது வடிவத்தைப் பாதிக்கிறது…’ இப்படி சிட்டி-சிவபாதசுந்தரம் கூறுவது கவனத்துக்கு உரியது. ‘யார் துணை’ கதையில் … புஞ்சையிலேருந்து ஆக்கூருக்குப் போற பாதை, குறுக்கு வழி. நிலமெல்லாம் வெடிச்சிக் கிடக்கு. எலி பிடிக்க என்று வரப்பெல்லாம் வெட்டிக் கெடக்கு. புழுதி உழுத நிலம் கட்டியும் முட்டியுமாய் பரவிக் கிடக்கு… ‘தான் பிறந்த ஊரைப் பற்றி சொல்லும் போது நாமும் அந்த ஊரில் கால் பதிக்கிற சந்தோஷத்தில்…’ யார் துணை இது நேற்று நடந்தது. ஒரே இருட்டு கும்மிருட்டு. அழுகத் தேங்காய்க்குள்ளே நுழைஞ்சு பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி. பிரஸ்ஸிலே மிஸின்மேன் சிலிண்டர் இங்கைத் தொடச்சுப் போட்ட பேப்பர் மாதிரி கீற்றுகீற்றா வானத்தில் கொஞ்சம் வெளிச்சம். நான் தூங்கிக் கொண்டிருக்கேன். நல்ல தூக்கம். நல்ல தூக்கமா? என்றைக்கய்யா நல்ல தூக்கம் தூங்கினேன்! ஏதோ துங்குகிறேன். விழித்துக் கொண்டிருப்பதைப் போல ஒரு தூக்கம் நடுநிசி. “சார் தந்தி.” “கதவு ஓட்டை வழியா போட்டுட்டுப் போய்யா!” என்றோ என்றைக்கோ -யார் கண்டா? -சொன்னேன். “டேய், உங்க ஊர்லே ஒரு வேலை இருந்தா பாருடா. இங்க பசங்க ரொம்ப மோசம். நூத்தி ஐம்பது ரூபாய் தரேன்கிறான். நாலுநாள் லீவு போட்டா மூணு நாள் சம்பளத்தே புடிக்கிறான். என்னடான்னா இஷ்டமில்லேன்னா ஓடுங்கறான். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு முதலாளிங்கறான். பெட்டியிலே கருப்புப் பணம் கள்ளக்கணக்கு எழுத எனக்குக் கை வந்து போச்சு. “உடனே கிளம்பு. நாளை, மறுநாளைக்குள் எதிர்பார்க்கிறேன். அவசரம்.” இதுவா தந்தி. கிட்டா கல்கத்தாவிலே இருக்கான். டில்லியிலிருந்து தந்தி. பய என்னிக்கி அங்கே போனான். பக்கத்து வீட்டிலே எவனாவது என் பேருள்ளவன் இருக்கானா? இல்லே… நானேதான். ஓடினேன்… ஓடினேன். குதிகால் தரையில் வேரூன்றிப் போச்சு, ஆணிவேர் அறாமல் எப்படிச் செடியைப் புடுங்குவது −தண்ணி ஊத்தி புடுங்கினா? உளை விழுந்த நிலம் மாதிரி பொதபொதன்னு சேறு. உழப்போன மாடு உள்ளே புதையுது. கொம்பு தெரியுது. மூக்கணாங்கயிற்றைப் புடிச்சு மேலே தூக்கு. மெதுவாய் டெலிபோன் பூத்துக்கும் போய்விட்டேன். அழகான சின்ன அறை. உள்ளே இருந்து பேசினால் வெளியே தெரியாது. உள்ளே போனதும் கதவு சாத்திக் கொள்கிறது. வெளியே சிவப்பு எழுத்து எரியுது. ‘உள்ளே ஆள் இருக்கு’ இந்தியாவிலே விஞ்ஞானம் முன்னேறிப் போச்சு. ஒரு பட்டனை அழுத்தினா மணி அடிக்குது. ரீசிவரைக் காதில் வைத்துக்கொண்டு “ஹலோ, எய்ட், திரி, ஃபோர், டு, ஒன், ஸெவன்.” மீண்டும் மணி. “ஹலோ-ஏர்லைன்ஸா-டில்லிக்கு டிக்கட் இருக்கா? எத்தனை மணிக்கு-ஒன்று இருபதுக்கு கிளம்புதா? தேங்க்யூ.” பக்கத்தில் இருக்கும் உண்டியலில் பதினைந்து பைசாவைப் போட்டுவிட்டு வெளியில் வருகிறேன். கதவு சாத்திக் கொள்கிறது. பச்சை வெளிச்சம். ‘நீங்கள் உள்ளே வரலாம்’ என்று விளக்கு எரிகிறது. ஒரே வெயில். துருத்தி வைத்து தணலை மேலே ஊதுவதைப் போல வெயில் தகிக்கிறது. பெரியம்மை கொப்புளங்களைப் போல உடம்பெல்லாம் வியர்வை முத்துக்கள். சட்டை முதுகோடு ஒட்டிக்கொண்டுவிட்டது. ரத்த வியர்வை. நெற்றி வியர்வையை வழித்துவிட்டால் கீரைப் பாத்திக்கு நீர்பாய்ச்சிவிடலாம். தார் ரோட்டில் எங்கே கீரை விதைப்பது? புஞ்சையில் நான் சிறுவனாக இருந்தபோது விதைத்த கீரை இப்பொழுது முப்பது வருஷங்களுக்குப் பிறகு பசுமையாய் முளைத்திருக்கிறது. அதைப் பறித்து நாளை மசித்துவிடலாம். மவுண்ட்ரோட்டில் ஒரு குடிசை மிக அழகாக புத்துலக உத்திகளை எல்லாம் பயன்படுத்தி அமெரிக்கா, ரஷ்யா எல்லாம் சென்று திரும்பின. கட்டிடக்கலை நிபுணர்கள் கூட்டு முயற்சியிலே உருவாக்கி இருக்கிறார்கள். வாசலில் “இண்டியன் ஏர்லைன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற போர்டு குழந்தை எழுதும் எழுத்து வடிவத்தில் எழுதித் தொங்குகிறது. படியில் அடியெடுத்து வைக்கிறேன். உள்ளே போகலாமா என்ற தயக்கம். “கெட்இன்…கெட்இன்.” “டில்லிக்கு என்ன டிக்கெட்?” “நூத்திப் பத்தொன்பது ரூபா எட்டு பைசா.” “எட்டு பைசா என்னய்யா எட்டு பைசா? கொசுறா?” “சரி ரவுண்டாக் கொடுங்க.” “ரவுண்டுன்னா 119 ரூபா 5 பைசாவா?” “உங்க இஷ்டம்.” “நூத்திப் பத்தொன்பது ரூபாய் தான் தருவேன். கொடுப்பியா?” “சரி கொடுங்க… எட்டு பைசாவை ரைட்டாஃப் செஞ்சுடறேன்.” பையிலே கையைவிட்டேன். பாம்புப்புற்றுக்குள்ளே கையை விட்டால் ரெம்ப சுகமாக இருக்கும். ஜிலுஜிலு என்று பேரானந்தம் உடம்பில் ஏறும். நித்திரை சுகதுக்கமற்ற நித்திரை. மூட்டை பூச்சிக் கடியில்லை. என்ன தொல்லையிது. தோள்பட்டை வரையில் கை உள்ளே போகிறது. மேலே போக கை நீளமில்லை. அட ஆண்டவனே? என்னமோ கையில் தட்டுப்படுகிறது. ஏதோ கடித்ததுபோல் இருந்தது. வெடுக்கென்று வெளியில் இழுக்கிறேன். பெண்டாட்டி கழுத்துச் சங்கிலி. “இது ரெண்டு பவுனய்யா?” “பணமா கொடுங்க சார்.” “இது பணமில்லையாங்காணும்? பவுனய்யா பவுன். ரெண்டு பவுன். இருபத்திரெண்டு காரட், மாமியார் வூட்டுலே செஞ்சு போட்டது.” “…” “என்னய்யா ஊமை மாதிரி உட்கார்ந்து இருக்கிறிர்? எங்க அம்மா செய்தது இல்லைங்காணும். மாமியார் வூட்டுலே செஞ்சது. பதினாலு காரட் இல்லே, ஸ்மக்ளிங் கோல்ட், திருட்டுத்தனமாக ஆசாரியை அடுப்பங்கரையிலே கொண்டு வந்து செய்யச் சொன்னது. “…” “கொஞ்சம் இமைச்சுப் பாருங்க. பயமா இருக்குது. பொணமும் தெய்வமும்தான் கண்ணை இமைக்காது. நீங்க பொணமா இல்லை தெய்வமா சொல்லுங்க? எனக்குப் பயமா இருக்குது. ஓகோ. பதினாலு காரட்டுன்னு சந்தேகமா? அதான் மாமியார் செஞ்சதுங்கிறனே. பதினாலு காரட்டுன்னு அவ எனக்குப் பெண்டாட்டி இல்லேங்காணும், அவ அம்மாவுக்கு மக!” நகையை வாங்கிப் பையிலே போட்டுக்கிட்டான். ரெண்டு தாளை எடுத்தான். அதை வெட்டி இதிலே ஒட்டி. இதை வெட்டி அதிலே ஒட்டுனான். “என்னாய்யா இது?” “டிக்கட்.” “இதுதான் டிக்கட்டா?” “ஆமாம்.” “ஆட்டைத் தூக்கி மாட்டுலே போடு. மாட்டைத் தூக்கி ஆட்டிலே போடுங்கறததான் டிக்கட்டா?” “ஆமாம்.” “இதை நான்தான் செய்யனுமா?” “ஆமாம்.” “நீ செஞ்சு குடுத்தா என்ன?” “நீ தானே ப்ளேனுக்குப் போகணும்?” “ஆமாம்.” “அப்போ ஒட்டு.” அடதெய்வமே! அதில் பாதியை வெட்டி இதிலே ஒட்டுகிறேன். இதில் பாதியை வெட்டி அதிலே ஒட்டுகிறேன். “சரியாப்போச்சா?” “சரிதான்.” “இப்பவே வயசு முப்பது அய்யா… இன்னும் எத்தனை வருஷம் காத்துக்கிட்டு இருக்கணும். ப்ளேனுக்க நேரம் ஆச்சா” “இன்னும் நாப்பது நிமிஷத்திலே ப்ளேன்.” “முப்பது வருஷமா காத்துக்கிட்டு இருந்தேனே இன்னும் நாப்பது நிமிஷந்தானா?” “ஓடு ஓடு நேரமாச்சு. ஓடு” “இங்கேருந்து ஏரோட்ரோம் வரைக்குமா?” “இல்லே…வழியிலே டாக்சியெ புடிச்சுக்க” ஓடுகிறேன். வேட்டி அவிழ்ந்து போச்சு… ஒரு முனையை கையிலே புடிச்சுக்கிட்டு ஓடுகிறேன். “டாக்கி… டாக்சி!” நிறுத்தாமே போறானே! இன்னும் ஓடுவோம். வழி குறுகுமே. “டாக்சி…டாக்சி!” - பய நிறுத்தமாட்டானா? வேட்டி அவுந்து தரையிலே புரளுது. “டாக்சி, டாக்சி” கண்ணெல்லாம் ரோட்டு மேலேயா? அட போகட்டும். காதெங்கே போச்சு… அடைச்சுப் போச்சா… மனிதாபிமானமே மரத்துப் போச்சா… இங்கே ஒருத்தன் காட்டுக் கத்தலா கத்தறது காதிலே கேக்கலையா? “டாக்சி.டாக்சி” ‘பசங்க நிறுத்த மாட்டானுங்க… அவன் அவன் பாடு அவனவனுக்கு. நிறுத்த மாட்டானுங்க. வேட்டி அவுந்து ரோட்டிலே போச்சு… அட போகட்டுமே… போனா போகட்டுமே… ப்ளேனே போகப் போகுதாம். வேட்டி போனாக்க என்னவாம்’ ‘டாக்சி… டாச்சி’ எனக்குப் பின்னே வந்து எத்தனை பய முன்னே ஓடிப்பூட்டான். என்னை ஏத்திக்கிட்டுப் போனா என்ன? குடியா முழுகிப்பூடும்? சும்மாத்தான போறான். அவன்கிட்டே கார் இருக்குங்கற துணிச்சல்லே போறானா? “டாக்சி… டாக்சி” அவனுங்க எங்க நிறுத்தப் போறானுங்க… முப்பது வருஷம் -இருபது நிமிஷம் ஆச்சு. நேரம் குறுகிப் போச்சு. நேரம் குறுகினா வழியும் குறுகணும் இல்லே. ஆனா வழி குறுகல்லியே. நீண்டுக்கிட்டில்லே போகுது. குறுக்கு வழியாப் போனால் என்ன? புஞ்சையிலேருந்து ஆக்கூருக்குப் போற பாதை குறுக்கு வழி. நிலமெல்லாம் வெடிச்சுக் கிடக்கு. எலி புடிக்க வரப்பெல்லாம் வெட்டிக் கிடக்கு. புழுதி உழுத நிலம் கட்டியும் முட்டியுமாய் பரவிக் கிடக்கு. வரப்பிலே துவரை வெட்டிய அடிக்கட்டை ஈட்டி ஈட்டியா நீட்டிக் கொண்டு நிக்குது. செருப்பு கிழிந்து போச்சு. ரத்தமும் சதையுமா வழியுது. பக்கத்திலே பெரிய திடல், ஸ்பெயின் தேசத்துக் காளை விளையாட்டு நடக்குது அங்கே. காளையை ஈட்டியாலே மேலெல்லாம் குத்தி இருக்கான்கள். ஈட்டி குத்திக்கொண்டு மேலே தொங்குது. எதிரிலே நின்னுக்கிட்டு கலர் துணிய காண்பிச்சு மிரட்டறான். இதுவா மீனம்பாக்கத்துக்குப் போற பாதை? இது ஆக்கூர் பஸ் ஸ்டாண்டுக்குப் போகிற பாதையில்லையா? இதிலே போனா பொறையார் பஸ்ஸைத்தானே புடிக்கலாம். இல்லே- இல்லே. இது குறுக்குப்பாதை. மீனம்பாக்கம் இன்னும் தொலைவில் இல்லே. தெரியாத பாதையிலே போறதை விட தெரிஞ்ச பாதையிலே போறது நல்லது இல்லையா? போற இடத்துக்கு சிக்கிரம் போகலாம். மீனம்பாக்கம் ரொம்பத் தொலைவில் இல்லே. முப்பது வருஷம் முப்பத்தொன்பது நிமிஷம் ஆச்சு. “டாக்சி…டாக்சி” எங்கே போறானுங்க இப்படி? “யோவ் நான் ப்ளேனுக்குப் போகணும் ஏத்திக்கிட்டுப் போங்கய்யா!” “போய்யா.போய்யா கிண்டிலே ரேசய்யா!” “இந்த அர்த்த ராத்திரியிலேயா?” “ஆமாய்யா ரேசு… நேரமாச்சு போறேன்.” “நிறுத்துங்கய்யா நானும் வரேன். மீனம்பாக்கத்திலே கொண்டு விட்டுடுங்க.” “போய்யா போய்யா… கிண்டிலே ரேசய்யா” “ரேசுன்னா என்னய்யா… இப்பிடி குடல் தெரிக்க ஓடுறே. குதிரையா ஓடுது.. இல்லே நீயே ஓடுறெயா?” “பணம் கொட்டிக் கிடக்குது அள்ளிக்கிட்டு வரப்போறேன்.” “பணமா?” “என்னய்யா வாயைப் பொளக்கிறே. நீயும் ஓடி வா. அள்ளிக்கிட்டு வரலாம்.” “எப்பிடியய்யா பணம் கொட்டிக்கிடக்கும். குதிரை கொள்ளைத் தின்னுட்டுப் பணம் பணமா லத்தி போட்டுக்கிட்டே ஓடுமா?” “ஆமான்னு வைச்சுக்க… பணம் கொட்டிக்கிடக்குது. கறுப்புக் குதிரையில்லே ஓடுது அங்கே.” - “டாக்சி டாக்சி. காரைப் புடிச்சுக்கிட்டே நானும் வரேன்யா.” “டாக்கி டாக்சி.” முப்பது வருவடிம் முப்பத் தொன்பது நிமிஷமாச்சு. இன்னும் ஒரே நிமிஷம். ஒரே ஒரு நிமிஷந்தான். மீனம்பாக்கம் தொலைவில் இல்லே. ப்ளேனைப் புடிச்சிடலாம். ‘டாக்சி டாக்சி.’ நாயைப் போல இறைக்குது. கண்ணை இருட்டுது. அதோ… அதோ… ஒரே உந்தல். ஒரே ஓட்டம். கொய்ங்குன்னு சப்தம் காதைத் தொளைக்குது. அடக் கடவுளே! ப்ளேன் கிளம்பிப் போச்சா. எத்தனை வருஷமா ஓடுறேன். முப்பது வருவடிம் நாற்பது நிமிஷம் அதுக்குள்ளே ஆச்சா. தலைக்கு நேரே… மேலே… மேலே கொய்ங்கின்னு பறக்குதே. கண்ணுக்குத் தெரியுதே. ஏணி வெச்சாலும் இனிமே எட்ட முடியாதே. அடக்கடவுளே! மேகத்துக்குள்ளே பூந்து மறைஞ்சு போச்சே. கண்ணை இருட்டுது. காதை அடைக்குது. நாக்கு வரண்டு போச்சு. இமையைப் பாரமாய் அழுத்துவது வாழ்வு. இமைக்கதவை நீக்கி வெளியிலே பார்க்கிறேன். இருட்டு… ஒரே இருட்டு. ப்ளேனோட சத்தம் அடிவானத்தில் போய் அழுந்திப் போச்சு. அடக்கடவுளே! இதற்குக் கூடவா நான் கொடுத்து வைக்கவில்லை. நான் அன்றாடம் காய்ச்சி அவனெல்லாம் குதிரிலே மொத்தமாய்க் காய்ச்சிக் கொட்டிக்கொண்டு வைக்கோல் கருணையைப் பிடுங்கிவிட்டு வாய்வைத்துக் குடிக்கிற பயல்களா? அவன் கடைவாயில் ஒழுகுகிறதை நீ நக்கிக் குடிக்க அனுமதி கொடுத்தானா? நீ அவன்களுக்கே துணை போகிறாயே! எனக்கு யார் துணை?  சா.கந்தசாமி இன்றைய மயிலாடுதுறை மண்பெருமை கொள்வது போல ‘சாயாவனம்’ என்ற நாவல் மூலம் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென்று ஒரு இடத்தை கைப்பற்றிக் கொண்டவர், சா. கந்தசாமி. இலக்கிய சங்கம் தோற்றுவித்த இளைஞர்களில் சிலர்தான் திட்டமிட்டு மெளனியின் உத்தியைப் பின்பற்ற முனைந்தார்கள். அன்றுவரை சிறுகதை எழுத்தாளர்களிடையே அதிகம் பாதிப்பு ஏற்படுத்தாத மெளனி இவர்களுக்கு வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது ஒரு முக்கிய அம்சமாகும். சா. கந்தசாமி, ந. முத்துசாமி ஆகியோர் இந்த வழியில் வந்தவர்கள். முக்கியமாக சா. கந்தசாமி எழுதிய ‘சாயாவனம் என்ற நாவல் இலக்கிய ரசிகர்களின் கவனத்தைப் பெற்றபின் இவருடைய சிறுகதைகளும் விமர்சகர்களின் கவனத்தைப் பெற்றன. சிலவற்றில் வடிவ உணர்வு ஓரளவு தெளிவாகத் தெரிந்தாலும் வித்தியாசமான கருப்பொருள்களை, பாலுணர்வு, மனோவிகாரம் போன்ற அம்சங்களைச் சற்று வெளிப்படையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சோதனை முயற்சி அதிகமாகப் புலப்படுகிறது…’ என்று சிட்டி-சிவபாதசுந்தரம் குறிப்பிடுகிறார்கள். ‘சா. கந்தசாமியின் கதைகளும், நாவல்களும் அற்புதமாக அமைந்துவிட்டன என்று காணும்போது தமிழர்கள் எத்தனைதான் குப்பைப் பத்திரிக்கைகளுக்கு அடிமைப்பட்டிருந்தாலும் இலக்கிய ரீதியாக அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்லவேண்டி இருக்கிறது’ என்றார், க.நா.ச. ‘ஆறுமுகசாமியின் ஆடுகள்’ என்ற கதை இப்படித் தொடங்குகிறது. “ஆறுமுகசாமி புங்கமரத்துக் கிளையைத் தாவி பிடித்து வளைத்து ஒரு சின்ன கிளையை முறித்தான்…” அவர் அனுபவம் தெறிக்கிற கதைகள் அமைவதை அவரே, “பூம்புகார் என் தாயார் வீடு. அந்தக் காலங்களில் சீர்காழி பூம்புகார் போன்ற இடங்களைச் சுற்றியிருக்கிறேன். எங்கம்மா கூட பூம்புகாருக்கு காவேரிக்கரையோரமா நடந்தே போகிற பழக்கம் உண்டு. அங்கு கண்ட இளமைக்கால நினைவுகள். தான் என் கதைகளில் வருகிறது.” இப்படியாப்பட்ட சா. கந்தசாமி இன்று அம்மண்ணில் நிலவும் சமூகத்தை பிரதிபலிக்க முடியாது போனது… இவருக்கும் இலக்கியத்திற்கும் இழப்பே… ஆறுமுகசாமியின் ஆடுகள் ஆறுமுகசாமி புங்கமரத்துக் கிளையைத் தாவிப் பிடித்து வளைத்து ஒரு சின்ன கிளையை முறித்தான். ஆனால் கிளை முறியவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு கிளையை திருகி முறுக்கினான். முறுக்க முறுக்க கிளை மெதுவாக முறிந்து கையோடு வந்தது இடது கையால் தழைகளை உருவி போட்டுக்கொண்டு அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். ஆடுகள் வாய்க்கால் மேட்டிலிருந்து இறங்கி சின்னபண்ணையை நோக்கிச் சென்றன. “தோ…தோ…” ஆறுமுகசாமி ஆடுகளைப் பார்த்துக் கத்தினான். அவன் குரல் சின்னபண்ணை தோட்டத்தை நோக்கிச்சென்ற ஆடுகளுக்குக் கேட்டதுபோலும். இரண்டு பெரிய ஆடுகள் தலையைத் திருப்பிப் பார்த்தன. அவன் மறுபடியும், “தோ…தோ…” என்று கத்தினான். ஆனால் தலையைத் தூக்கிப் பார்த்த இரண்டு ஆடுகளும் மற்ற ஆடுகளோடு சேர்ந்து கொண்டு சின்ன பண்ணை தோட்டத்தையொட்டி சென்றன. அவன் கால்சட்டையை மேலே தூக்கிவிட்டுக் கொண்டு முன்னே ஓடினான். நேற்று கருப்பு ஆடு தன் இரண்டு வெள்ளைக்குட்டிகளோடு சின்னபண்ணை கத்தரி தோட்டத்திற்குள் புகுந்துவிட்டது. சின்னபண்ணை காவல் முனியாண்டித்தேவர் ஒரு வெள்ளை குட்டியைப் பிடித்துக் கட்டிவிட்டார். கருப்பு ஆடு கத்திக் கொண்டு மிரண்டு ஓடிவந்தது. அதன் பின்னால் ஒரு வெள்ளைக்குட்டி நொண்டிக் கொண்டு வந்தது. புளியமரத்தடியில் கால்களை நீட்டி உட்கார்ந்து சரித்திரம் படித்துக் கொண்டிருந்த அவன் திரும்பிப் பார்த்தான். கருப்பாடு சின்னபண்ணைத் தோட்டத்தைப் பார்த்துப் பார்த்துக் கத்தியது. அவன் எழுந்து தலையில் கட்டியிருந்த சிவப்புத் துண்டை அவிழ்த்துத் தோளில் போட்டுக்கொண்டு வாய்க்கால் ஓரமாக நடந்தான். காலில் ஒரு நெருஞ்சிமுள் குத்தியது. குனிந்து காலை மேலே தூக்கிப் பிடுங்கிப் போட்டுவிட்டு நொண்டிக்கொண்டு சின்னபண்ணைத் தோட்டத்துப் பக்கம் சென்றான். சின்னபண்ணைத் தோட்டத்துக் காவல் முனியாண்டித்தேவர் பம்பு சுவர் மீது சாய்ந்து உட்கார்ந்து தண்ணிருக்குள் காலைவிட்டு ஆட்டிக் கொண்டிருந்தார். பம்பில் இருந்து பாய்ந்த தண்ணீர் அவர் காலை அலம்பிக் கொண்டு சென்றது. அவர் குனிந்து பச்சை பெல்டில் இருந்து சுருட்டை எடுத்து வாயில் வைத்து பற்றவைத்துக் கொண்டார். ஆறுமுகசாமி வாய்க்கால் கரையேறி மூங்கில் படலைத் திறந்துகொண்டு கத்தரித் தோட்டத்து வரப்பு மேலேயே ஓடிவந்தான். சுருட்டை கையில எடுத்துக்கொண்டு முனியாண்டித்தேவர் திரும்பிப் பார்த்தார். அவன் தயங்கி நின்றான். ஒதிய மரத்தடியில் கட்டியிருந்த வெள்ளை ஆடடுக்குட்டி கத்தியது. அவன் சலசலத்தோடும் தண்ணீரில் இடது காலை வைத்து துவரைச் செடியை விலக்கிக்கொண்டு ஓடி முனியாண்டித்தேவர் முன்னேபோய் நின்றான். அவர் இவனை கவனிக்காதது மாதிரி லேசாகக் கண்களை மூடி சுருட்டை வாயில் வைத்து இழுத்துக் கொண்டிருந்தார். அவர் முன்னே ஓரடியெடுத்து வைத்தான். முனியாண்டித்தேவர் திரும்பி உட்கார்ந்து கொண்டார். “மாமா” என்றான் ஆறுமுகசாமி. அவர் வாயில் இருந்த சுருட்டை கையில் எடுத்துக் கொண்டு புகையை வேகமாக ஊதினார். தலை மட்டும் என்னவென்று கேட்பது மாதிரி அசைந்தது. “மாமா… அது வந்துங்க மாமா” “அது என்னடா வந்து போயி… என்னென்னு சொல்லு-” அவன் லேசாக ஒரு சிரிப்புச் சிரித்தான். முனியாண்டித்தேவர் சுருட்டை வாயில் வைத்து ஒரு இழுப்பு இழுத்தார். இரண்டு கன்னமும் ஒட்டிக்கொள்ள காற்றெல்லாம் வாய்க்குள் புகுந்தது. அவன் மெதுவாக ஒரடிமுன்னே எடுத்து வைத்தான். “உம்” “மாமா” “என்னடா” “ஆட்டுக்குட்டி மாமா” ஒதியமரத்தில் கட்டிப் போட்டிருந்த ஆட்டுக்குட்டியை சுட்டிக்காட்டினான். “நாலஞ்சு ஆடும், ஐஞ்சாறு குட்டியுமா தோட்டத்துல புகுந்து ஒரே அதம். புடிச்சிக்கட்டி பட்டியில் கொண்டுபோய் தள்ளலாமென்னா போரை துள்ளிப் பாய்ஞ்சி போயிடுச்சி. கடைசியில இந்தக் குட்டிதான் மாட்டுச்சி… எங்கே போயிட போவுது…” “நம்ம ஆடுங்க மாமா” “அடிசக்க. நம்ப, தோட்டமென்னுதான் கத்தரிச் செடியா பார்த்துக் கொண்டாந்து விடுறீயா?” “இல்ல மாமா… அதெல்லாம் இல்லிங்க மாமா” “ஆட்டயெல்லாம் விட்டுட்டு எங்க போற” “அடுத்தவாரம் பரிட்சைங்க மாமா. செத்த படுச்சிக்கிட்டு இருந்தேன்…” “இந்த ஆட்டுக்குட்டி புடிச்சிக் கட்ட என்ன பாடுபட்டேன் தெரியுமா?” அவர் பச்சை பெல்ட்டை மேலே ஏற்றிவிட்டுக் கொண்டார். அவன் பதிலொன்றும் சொல்லாம் ஆட்டுக்குட்டியையே பார்த்தபடி இருந்தான். ஆட்டுக்குட்டி கயிற்றை இழுத்துக்கொண்டு ஒருமுறை கத்தியது. முனியாண்டித்தேவர் சுருட்டை அணைத்துக் கீழே போட்டுவிட்டு, “இந்த ஒருவாட்டிதான்… இன்னம இஞ்ச வராம பாத்துக்க… இன்னம இஞ்ச வந்துச்சி நேரா பட்டிக்குத்தான்…” என்றார். - அவன் தலையசைத்து தண்ணீர் ஓடும் வாய்க்காலைத் தாண்டி ஒதியமரத்துப் பக்கம் ஒடினான். ஆட்டுக்குட்டி இவனைப் பார்த்ததும் கொடியை இழுத்துக்கொண்டு இரண்டுமுறை கத்தியது. அவன் ஆட்டுக்குட்டியைக் கட்டி இருந்த ஓணான் கொடியை அறுத்துவிட்டான். ஆட்டுக்குட்டி துள்ளிப் பாய்ந்து கத்தரித்தோடிடத்திற்குள் ஓடியது. “பாத்துப்பாத்து… கத்தரியெல்லாம் கடிக்காம புடிச்சிக்கிட்டு போ” என்றார் முனியாண்டித்தேவர். அவன் அவசர அவசரமாகக் கத்திரி செடிகளுக்குள் புகுந்து ஆட்டுக்குட்டியை ஓட்டிக்கொண்டு வெளியில் வந்தான். “அம்மாவை நான் கேட்டென்னு சொல்லு” “சரிங்க மாமா அவன் ஆட்டுக்குட்டியை ஓட்டிக்கொண்டு சின்ன்பண்ணை கத்திரி தோட்டத்தை விட்டு வெளியில் வந்தான். ஆறுமுகசாமி ஏழாவது படிக்கும்போது அவன் அப்பா செத்துப் போய்விட்டார். செத்துப் போனார் என்றால் திடீரென்றுதான் நடந்தது. சென்னைக்கு அறிவாலயம் திறப்புக்குச் சென்ற காத்தமுத்து குழுவுக்கு வேன் ஓட்டிக்கொண்டு சென்றார். திறப்புவிழா முடிந்ததும் சாலைமறிப்புப் போராட்டம் இருக்கிறது என்ற படியால் அவசர அவசரமாகத் திரும்பினார்கள். ஆனால் செங்கல்பட்டுப் பக்கத்தில் ஒரு டயர் பஞ்சாராகிவிட்டது. பஞ்சர் போட்டு டயர் மாற்றிக்கொண்டு திண்டிவனம் வரும்போது பொழுது புல புல வென்று புலர்ந்து கொண்டிருந்தது. சாலையில் நூறு நூற்றியம்பதுக்கு மேலாக ஆட்கள் கையில் அரிவாள், தடிகளை வைத்துக்கொண்டு போக்குவரத்தை மறித்துக் கொண்டிருந்தார்கள். அவன் அப்பா கலியபெருமாள் வேனை மெதுவாக ஒட்டிக்கொண்டு வந்தார். ஒரு பையன் பதினாறு பதினேழு வயதிருக்கும். சாலையின் நடுவில் நின்று வேனை மறித்தான். வேன் நின்றது. ஐந்நூறு ஆட்கள் ஓடிவந்து வேனைச் சூழ்ந்து கொண்டார்கள். வேன் பின்னால் தடியாலும் கல்லாலும் அடிப்பது மாதிரி சப்தம் கேட்டது. கலியபெருமாள் வேனில் இருந்து இறங்கி பின்னால் சென்றார். சாலையோரத்து தூங்கு மூஞ்சிமரம் சட சடவென்று சாய்ந்தது. அவர் கிளைகளுக்கு இடையில் சிக்கிச் செத்துப்போனார். செத்து இரண்டு நாட்கள் கழித்துதான் பள்ளிக்கூடத்தில் இருக்கும்போது ஆட்கள் வந்து சொன்னார்கள். அவனும், அத்தானும் திண்டிவனத்திற்கு வந்து அப்பா உடலை அடிபட்டு நொறுங்கிப்போன வேனில் வைத்து வீட்டிற்குக் கொண்டு வந்தார்கள். உடல் வந்த சற்று நேரத்திற்கெல்லாம் வீட்டின் முன்னே பெரிய கூட்டம் கூடிவிட்டது. வட்டச் செயலாளர் மதிவாணன் பெரிய கொடியை அப்பா மீது கோத்தினார். பொருளாளர் சண்முகசுந்தரம் அத்தானிடம் ஒரு கவர் கொடுத்தார். அத்தான் இவன் பையில் திணித்தார். இரண்டு நாட்கள் கழித்து கவரைத் திறந்தபோது ஐயாயிரம் ரூபாய் இருந்தது. அத்தான் எண்ணிப்பார்த்துவிட்டு, “அம்மா கிட்டக்கொடு” என்று இவனிடம் கொடுத்தார். அப்பா காரியமெல்லாம் முடிந்த பத்து நாட்கள் கழித்து அத்தான் ஒருநாள் வீட்டிற்கு வந்தார். அம்மா கதவுக்குப் பின்னால் மறைந்து கொண்டாள். அத்தான் இவனைப் பிடித்து இழுத்துப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு, ’என்ன இப்பப் பண்ணலாம் சொல்லு சாந்தி” என்றார். சாந்தி என்பது இவன் அக்கா. “நீங்கதானே சொல்லணும்” அத்தான் இப்படியும், அப்படியும் ஒரு பார்வை பார்த்தார். மடியில் கிடந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார். ஆறுமுகசாமி கொஞ்சம் பின்னால் நகர்ந்தான். “உம். என்ன பண்ணலாம். நீ சொல்லு” அத்தான் அவள் கையைப் பிடித்து இழுத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டார். அவன் நிமிர்ந்து அம்மாவைப் பார்த்தான் பாதிமுகம் தான் கதவு மறைப்பில் தெரிந்தது. “ஒரு கறவமாடு வாங்கலாம்” என்றாள் சாந்தி. “மாடா” “பின்ன… நீங்கதான் சொல்லுங்க” “ஆடு வாங்கலாம் சாந்தி. அரசாங்கத்துல மானியம் தர்றாங்க… பேங்கில லோன் வேற கிடைக்கும். “ஆடா” “தென்னந்தோப்பு பசுபதி படையாச்சி ஆடு வாங்கி வளர்த்து பெரிய ஆளா ஆகிட்டான். ஆடுன்னா கறி ஐம்பது ரூபாக்குப் போகுது. இதெல்லாம் பாக்கறப்ப ஆடு வளர்க்கறது தான் சரின்னு படுது” “அப்ப ஆடே வளர்க்கலாங்க” “பள்ளிக்கூடம் போயிட்டு வந்து தம்பிகூட பாத்துக் கொள்ளுவான்.” ’இல்ல… இல்ல…அவன் படிக்கட்டும்… நான் பாத்துக்கறேன்” என்றாள் அம்மா கதவு மறைப்பில் இருந்து கொஞ்சம் வெளியில் வந்தபடி. “அத்த சொல்லுறதுதான் சரி” “என்னா?” “தம்பி படிக்கட்டும்” “ஆடு மேய்க்கறது கட்டுறது எல்லாம் கஷ்டம் இல்லையா?” என்றாள் சாந்தி. - “கஷ்டமென்று பாத்தா சாப்பிட முடியுமா?” என்றாள் அம்மா. “சாந்தி, நீ கொஞ்சம் வாய மூடிக்கிட்டு சும்மா இரு.” “இப்ப நான் என்ன சொல்லிட்டேன்.” “நீ ஒண்ணும் சொல்லுல. சும்மா இரு” “எதுக்கு உங்களுக்கு இப்ப கோபம் வருது” “எனக்கென்னா கோபம்.” “சாந்தி. நீ இங்கவா” அம்மா உள்ளே இருந்து வெளியில் வந்தாள். அத்தான் திரும்பி சாந்தியை ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்து வாசல் பக்கம் வந்தார். அவர் கூடவே இவனும் எழுந்து வந்தான். வாசல் பூவரசு மரத்தில் இருந்து ஒரு காக்கைக் கத்திக்கொண்டே இருந்தது. இவன் குனிந்து ஒரு கல்லை எடுத்து காக்கையை நோக்கி வீசினான். அது பறந்துபோய் கல்யாண முருங்கை மரத்தில் உட்கார்ந்தது. “நீ இங்க வா” என்று அத்தான் அவனை அழைத்துக் கொண்டு பேங்கிற்குள் சென்றார். பேங்கில் மானேஜர் இல்லை. வெளியில் போயிருப்பதாகச் சொன்னார்கள். “நாளைக்கு உனக்குப் பள்ளிக்கூடமா” “ஆமாங்க அத்தான்.” “நீ பள்ளிக்கூடம் போ.” இரண்டு மாதங்கள் கழித்து பேங்கில் அம்மாவுக்கு லோன் சாங்ஷன் ஆனது. அதற்கு கஷ்டப்பட வேண்டியதிருந்தது என்று அக்கா சொன்னாள். ஆனால் அத்தான் ஒன்றும் சொல்லவில்லை. அவன் அம்மாவை அழைத்துக் கொண்டு பேங்கிற்குச் சென்றான். பேங்கு வாசலில் ஒரு பெரிய கூட்டம். தெரிந்த முகம், தெரியாத முகம் எல்லாம் கூடியிருந்தது. வண்டிக்காரத்தெரு அன்னம்மா அம்மா பக்கமாக வந்து, “நல்லா இருக்கிறியா அண்ணி என்றாள். அம்மா தலையசைத்தாள். கண்களில் கண்ணீர் திரண்டு வருவது மாதிரி இருந்தது. அம்மா திரும்பி இவன் கையைப் பிடித்துக் கொண்டாள். அத்தான் அவன் பக்கமாக வந்து ஜாடை காட்டினார். அவன் அம்மாவை அழைத்துக்கொண்டு பேங்கு உள்ளே சென்றான். மானேஜர் உட்காரச் சொன்னார். அம்மா தயங்கி நின்றாள். “உட்காருங்க அம்மா.” அம்மா உட்கார்ந்தாள். “கையெழுத்து போடுவிங்க இல்ல” அம்மா தலையசைத்தாள். லேசான பச்சைக் காகிதத்தில் ஐந்தாறு இடத்தில் கையெழுத்துப் போடச் சொன்னார். அம்மா கோணல் மாணலாக பெரியநாயகி என்று கையெழுத்துப் போட்டாள். அப்பறம் அத்தான் கையெழுத்து. பேங்கு மானேஜர் செக்கைக் கொடுத்தார். அம்மா வாங்கிக் கொண்டு கையெடுத்துக் கும்பிட்டாள். “இந்தக் கடன கட்டிக்கிட்டே வந்தா அப்பறம்கூட கடன் கொடுப்பாங்க அம்மா.” “அதெல்லாம் கட்டிடுவோம் சார்” என்றார் அத்தான். பேங்கு மானேஜர் பார்வை இவன் மேல் விழுந்தது. “தம்பி என்ன பண்ணுறான்.” “படிச்சிக்கிட்டு இருக்கிறான் சார்” “நல்லா படிக்க வையுங்க…நாளைக்கு பேங்குக்குயெல்லாம் வேலைக்கு வர்லாம்.” “பள்ளிக்கூடத்திலேயே இவன்தான் சார் பஸ்ட்… நெறையா பரிசு எல்லாம் வாங்கி இருக்கான் சார்.” கூட்டமாக ஐந்தாறு ஆட்கள் உள்ளே வந்தார்கள். “அப்ப நாங்க வர்றோம் சார்” “வாங்க” அம்மா எழுந்து அவன் பின்னாலேயே வந்தாள். வெளியில் வந்ததும் அத்தான் அம்மா பக்கம் திரும்பி “நம்ப தியாகராஜ வாண்டையார் பையன். அது வந்ததுல இருந்துதான் கடன் எல்லாம்; ஒழுங்கா கொடுத்துக்கிட்டு வருது” என்றார். அம்மா பதிலொன்றும் சொல்லாமல் வெளியில் கடன் வாங்குவதற்கு நிற்கும் கூட்டத்தையே பார்த்தபடி இருந்தாள். ஆறுமுகசாமி பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வந்தபோது பூவரசு மரத்தைச் சுற்றிலும் ஆடுகள். கருப்பு, பழுப்பு, வெள்ளையும் கருப்புமாக— என்று பல்வேறு நிறத்தில். அப்புறம் பெரிய ஆடு… குட்டிகள். அவன் எண்ணிப் பார்த்தான். இருபத்தோரு ஆடுகள். கையைச் சுழற்றியபடி உள்ளே ஓடினான். அரிசி புடைத்துக் கொண்டிருந்த அம்மா திரும்பிப் பார்த்தாள். “அம்மா.ஆடு அம்மா” “நம்ப ஆடுதான். இருபத்தோரு ஆடு. அத்தான் மத்தியானமா பசுபதி படையாச்சிக்கிட்ட இருந்து வாங்கிக்கிட்டு வந்தாங்க.” “பெரிசு பெரிசா இருக்கு அம்மா.” “தழையெல்லாம் ஒடிச்சாந்து போட்டு பத்தரமா பாத்துக்கணும்.” “சரி அம்மா.” “கல்லுக்கார மாமா வீட்டுல அலக்குக் கேட்டிருக்கேன். அதெ வாங்கிக்கிட்டு வா… அப்படியே இஞ்சித் தோப்புல கொஞ்சம் பூவரசு இல ஒடிச்சிக்கிட்டு வா.” - அவன் குதித்து வெளியில் ஓடிவந்தான். பூவரசு மரத்தடியில் கட்டப்பட்டிருந்த ஆடுகளில் சில கத்தின. அவன் தரையில் இருந்து மேலே எம்பி கைக்கு எட்டிய பூவரசு கிளையைப் பிடித்து ஒடித்து ஆடுகளுக்கு மத்தியில் போட்டுவிட்டு கல்லுக்கார மாமா வீட்டை நோக்கி நடந்தான். மூன்றாவது மாதம் கொம்பாடு இரண்டு குட்டிப் போட்டது. அவன் ஈச்ச மட்டையெல்லாம் வெட்டி வந்து போட்டான். ஒரு குட்டியைத் தூக்கினான். கொம்பாடு தலையைச் சாய்த்துக் கொண்டு முட்ட வந்தது. அவன் கொஞ்சம் போல பின்னுக்கு நகர்ந்து கொண்டான். “ஆட்டுக்கிட்ட என்ன விளையாட்டு” என்றாள் அம்மா. “அது முட்ட வருது அம்மா.” “குட்டிபோட்ட ஆடு. அதெ விட்டுட்டு மத்த ஆட்டயெல்லாம் மேய்ச்சலுக்கு ஓட்டிக்கிட்டு போ.” ஆறுமுகசாமி கொல்லைப்பக்கம் போய் சின்ன அலக்கைத் தூக்கிக் கொண்டு வந்தான். அம்மா கட்டியிருந்த ஆட்டையெல்லாம் அவிழ்த்துவிட்டான். பின்னால் சென்ற ஆட்டை முன்னே துரத்திவிட்டான். ’பராக்குப் பார்த்துக்கிட்டு அங்க இங்க நிக்காம பத்தரமா ஆட்டையெல்லாம் மேய்ச்சிக்கிட்டு வா” அவன் தலையசைத்தான். “என்ன பண்ணைத் தோட்டத்துப் பக்கம் ஆட்ட விட்டுடாதே முனியாண்டி அண்ணன் ரொம்ப கோவிச்சிக்குது.” “இல்லம்மா” அலக்கை இடது தோளில் சாய்த்துக் கொண்டு, பையை வலது கையில் எடுத்துக்கொண்டு நடந்தான். “அத என்ன பை” “புஸ்தகம் அம்மா, படிக்க” அம்மா அவனை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தான். “அடுத்த வாரம் பரிட்சை அம்மா” “படிக்கறேன்னு ஆட்ட விட்டுடாதே. அப்ப அப்ப ஆட்டையும் பாத்துக்க” “சரி அம்மா” பின்னால் நின்ற ஆட்டை எல்லாம் முன்னே ஓட்டிக் கொண்டு சென்றான். ஆற்றில் தண்ணீர் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. தண்ணீரைக் கண்டதும் ஆடுகள் பயந்தது மாதிரி நின்றுவிட்டன. அவன் ச்சூ என்று கத்தி, அலக்கை முன்னே சுழற்றி ஆடுகளை விரட்டினான். ஆடுகள் அடிக்குப் பயந்து தண்ணீரில் இறங்கி அக்கரைக்கு சென்றன. அவன் எல்லா ஆட்டையும் ஒன்று சேர்த்து பாப்பான் சாவடி பக்கம் ஓட்டிச் சென்றான். அதுதான் பெரிய மேய்ச்சல் புறம்போக்கு. அதற்கு அப்பால் சுடுகாடு. சுடுகாட்டை ஒட்டி பெரிய பெரிய பூவரசு மரங்கள். பூவரசு மரத்தில் ஏறி நான்கைந்து கிளைகளை வெட்டி கீழே போட்டான். முன்னே சென்ற ஆடுகள் கத்தியபடி ஓடிவந்தன. அவன் அலக்கை பூவரசு மரத்தில் சாத்திவிட்டு இலுப்பை மரத்தடியில் உட்கார்ந்து இங்கிலீஷ் புத்தகத்தை எடுத்தான், அரை பரிட்சையில் அதில்தான் மார்க்குக் குறைவு. “கொஞ்சம் கஷ்டப்பட்டு படி. நல்ல மார்க்கு வாங்கலாம்” என்று பேப்பர் கொடுக்கும்போது கனகசபை சார் சொன்னார். இரண்டு பாடங்களைத் தள்ளினான், செய்யுள் படிக்கலாம் போல இருந்தது. முதல் செய்யுளை எடுத்து வைத்துக்கொண்டு படித்தான். வெய்யில் மூஞ்சியில் அடித்தது. புத்தகப் பையைத் தூக்கிக்கொண்டு முந்திரி மரத்தின் கீழே உட்கார்ந்து கொண்டான். அப்பறம் நோட்டை எடுத்து வைத்துக்கொண்டு எழுத ஆரம்பித்தான். படிப்பதை விட எழுதுவது சுலபம் மாதிரி இருந்தது. கொஞ்சம் பின்னால் சாய்ந்து முந்திரி மரத்துக்கிளையில் நன்றாகச் சாய்ந்துகொண்டு எழுத ஆரம்பித்தான். அவன் பால்பாயிண்ட் பேனாவால் அழுத்தி அழுத்தி எழுதிக் கொண்டிருந்தான். பெரியஆடு சின்ன கிளையை இழுத்துக்கொண்டு கூந்தல் பனை மரத்துப் பக்கம் சென்றது. அதைத் தொடர்ந்து இரண்டு மூன்று ஆடுகள் சென்றன. அப்டியே ஆடுகள் கூந்தல் பனையைத் தாண்டி ஐயனார் கோவில் பக்கம் சென்றன. மோட்டார் சைக்கிளில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் இப்படியும், அப்படியும் பார்த்தபடியே வந்தார். மோட்டார் சைக்கிள் சப்தத்தைக் கேட்டதும் ஆடுகள் மிரண்டு தலையைத் தூக்கிப் பார்த்தன. ஆட்டைத் தாண்டிப்போன சப்-இனஸ்பெக்டர் சரக்கென்று மரத்தடியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். கீழே இறங்கி எச்சிலைத் துப்பிவிட்டு ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்துக்கொண்டார். ஐந்தாறு ஆடுகள் குறுக்காகச் சாலையைத் தாண்டச் சென்றன. சப்-இன்ஸ்பெக்டர் வாயில் இருந்து சிகரெட்டை கையில் எடுத்துக்கொண்டு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார். எதிர்ப்பக்கத்தில் இருந்து ஒரு லாரி வேகமாக வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் டிரைவர் வேகத்தைக் குறைத்தான். கிளினர் அவசர அவசரமாகக் கிழே குதித்து முன்னே ஓடிவந்து, “வெறும் வண்டி சார். ஒண்ணும் இல்ல சார்-” என்றான். “எங்க போவுது” “மொகதீன் பாய் மெட்ராஸூக்கு ஆடு புடிச்சித் தர்றேன்னார் சார். அதுக்குத்தான் போகுது சார்” “பணம் எல்லாம் கொடுத்தாச்சா” “இல்ல சார்…இன்னமதான் சார்” “ஒத்த பனமரத்துக்கிட்டே மேயுது பாரு… அதுல பத்து ஆட்டைப் புடிச்சிகிட்டு ஐயாயிரம் கொடு” “நம்ப ஆடா சார்” “அடி செருப்பால்” ராஜேந்திரன் அவசரஅவசரமாக மோட்டார் கைக்கிளில் இருந்து கீழே இறங்கினான். “ஏண்டா… ஊரான் வீட்டு ஆட எல்லாம் புடிச்சி விக்கற பொறுக்கின்னு என்ன நெனைச்சிக்கிட்டீயா? டிரைவர் சக்ரபாணி லாரியில் இருந்து இறங்கி வந்தான். “பாரு… இவன் நம்பள நக்கல் பண்ணுறான்” “புது பையன் சார். உங்கள பத்தி தெரியாது சார். என்னா சார். நீங்க சொல்லுங்க சார்” “கூந்தல் பனை கிட்ட மேயறது எல்லாம் நம்ம ஆடு… உத்தியோகத்துல இருக்கறதால நம்ப பேர்ல வேணாமென்னு மச்சினன் பேர்ல வாங்கிவிட்டு இருக்கேன். அதுல ஒரு பத்து ஆட்ட புடிச்சிக்கிட்டு பணம் கொடுடான்னா உங்க ஆடான்னு கேட்கறான். இவன செருப்பாலே அடிச்சி பல்ல உடைக்க வேணாம்” “மொகைதீன் பாய் கிட்ட பேசி இருக்கு சார்” “என்னய்யா மொகைதீன்… பெரிய… இது… அவன் கிட்டதான் ஆடு வாங்குவீங்களா சரி. போங்க… நீங்க போங்க…” “அது இல்ல சார். அப்டியெல்லாம் ஒண்னும் இல்ல சார்” “வேணாம். வேணாம். நீ போய் மொகைதீன் பாய்கிட்டேயே வாங்கிக்கிட்டுப் போ—” “கோவிச்சிக் கொள்ளாதீங்க சார். இப்ப ஒரு பத்து ஆடு தான் சார் வேணும். டேய்… சுப்பு. நீ போய் ஆட்ட இப்படி ஓட்டிக்கிட்டுவா… நான் லாரிய முன்னால எடுத்துக்கிட்டு வர்றேன்.” “இல்ல… இல்ல… நீங்க போய் மொகைதீன்பாய் கிட்டயே புடிச்சிக்கிட்டுப் போங்க” என்று ராஜேந்திரன் மோட்டார் சைக்கிள் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டான். “அவன் சின்ன பய சார். அத விடுங்க சார்-” என்று பின்னால் போய் ஆடுகளை முன்னால் விரட்டிக் கொண்டு வந்தான். ஆடுகள் லாரி பக்கம் வந்ததும் கிளினர் சுப்பு பெரிதாக இருந்த ஓர் ஆட்டை எட்டிப்பிடித்தான் டிரைவர் அதைத் தூக்கி லாரி உள்ளே போட்டான். இன்னொரு ஆட்டைப் பிடிக்கும்போது, ‘அண்ணே நிஜமாவே ஆடுயெல்லாம் இன்ஸ்பெக்டர் ஆடா இருக்குமா அண்ணே’ என்று கேட்டான். “இருக்குண்டா, இப்பதான் இன்ஸ்பெக்டர் போலீஸ்காரன் எல்லாம் கண்டதையும் வாங்கிப் போட்டு காக பண்ணுறாங்களே” “எனக்கு என்னமோ பயமா இருக்கு அண்ணே” “ஊரான் வீட்டு ஆட எவண்டா புடிச்சி விற்பான்” சப்-இன்ஸ்பெக்டர் லாரியை நோக்கி வந்தான். “அண்ணே ஆளு” டிரைவர் சக்கரபாணி லுங்கியை மேலே தூக்கி கால்சட்டை பையில் கைவிட்டு பணத்தை எடுத்து எண்ணி ராஜேந்திரன் பக்கம் நீட்டினான். “எவ்வளவு இருக்கு?” “எண்ணி பாருங்க சார்” “சொல்லுப்பா” “இல்ல… இல்ல நீ சொல்லு” “ரெண்டாயிரத்து ஐநூறு சார்” “பத்து ஆட்டுக்கா. திருட்டு ஆடுகூட கிடைக்காது. நேத்தி இப்ராகிம் ராவுத்தர் நாலாயிரத்து ஐநூறுக்குக் கேட்டான். நான்தான் தர்லே” “இல்ல சார் சின்ன குட்டிங்க சார். அதுவேற மெட்ராஸ் வரைக்கும் போகுனும் சார். லாரி கூலியெல்லாம் வேற இருக்கு.” “இல்ல… இல்ல… இன்னும் ஐநூறு எடு-” சப்-இன்ஸ்பெக்டர் பணத்தை பையில் திணித்துக்கொண்டு டிரைவர் முன்னே கையை நீட்டினான். “இருநூறுதான் சார். இருக்கு. டீசல் வேற போடணும்” “நூறு எடு” டிரைவர் ஒரு பழைய நூறுருபாய் நோட்டை எடுத்து சப்-இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தான். அதை வாங்கி மேல்பையில் வைத்துக் கொண்டு “நம்ப ஆளா இருக்கே. எங்க போயிடபோற” என்றான். “எப்பவும் உங்க ஆளுதான் சார்” “சார் வழியில ஒன்னும் பிரச்சினை வராதே” என்றான் கிளீனர் சுப்பு ‘அடி செருப்பால’ என்று காலைத் தூக்கிக் கொண்டு அவனை உதைக்கப் போனான். கிளினர் லாரிக்கு முன்னே ஓடி மறைந்து கொண்டான். “அவன விடுங்க சார். எதிலையும் சந்தேகம் பிடிச்ச பய சார்” “அவன ஒரு நாளைக்கு நல்லா கொடுக்கப்போறேன். நீ பார்த்துக்கிட்டே இரு” “நான் சார்-” “நீ கிளம்பு” “சரி சார்” “வழியில் ஏதாவது பிராபளமென்னா என் பெயர சொல்லு” “அது போதும் சார் வண்டி நேரா மெட்ராஸ்தான் சார்” என்று சக்ரபாணி லாரியில் போய் உட்கார்ந்தான். லாரி கிளம்பி மெதுவாக உருண்டது. நாவல் மரத்துக்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டிருந்த கிளீனர் சுப்பு ஓடி வந்து லாரியில் ஏறிக் கொண்டான். லாரி புழுதியைக் கிளப்பிக்கொண்டு பனைமரங்கள் நிறைந்த சாலையில் ஓட ஆரம்பித்தது. சப்-இன்ஸ்பெக்டர் லாரியையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். லாரி பார்வையில் இருந்து மறைந்ததும், மோட்டார் சைக்கிளில் ஏறி எதிர்ப் பக்கமாகச் சென்றான். ஆறுமுகசாமிக்குத் தாகம் எடுப்பது மாதிரி இருந்தது. படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி பையில் வைத்துக்கொண்டு முந்திரி மரத்தடியில் இருந்து வெளியில் வந்தான். சூரியன் கீழே இறங்க எங்கும் நிழல் பரவி இருந்தது. ஆற்றுப்பக்கம் ஓடி இரண்டு கையாலும் தண்ணீரை அள்ளி குடித்துவிட்டு கையைத் துடைத்தபடி ஐயனார் கோயில் பக்கம் சென்றான். வெள்ளாடும் ஐந்தாறு குட்டிகளும் மேய்ந்துகொண்டு இருந்தன. ஐயனார் கோயில் குதிரைகள் பக்கம் ஓடினான். கருப்பு ஆட்டையும் அதனோடு இருக்கும் ஏழெட்டு ஆடுகளையும் காணோம். அவன் அவசர அவசரமாகக் கோயில் பின்னால் ஓடி மேட்டில் ஏறி நின்று, “ம்மா என்று கத்தினான். அவன் கத்தினால் முதலில் கருப்பு ஆடுதான் பதில் கொடுக்கும். ஆனால் பதில் இல்லை. ஈச்சமரங்கள் பக்கமாக ஓடிப் பார்த்தான். கருப்பு ஆட்டைக் காணோம். அவன் மேட்டில் இருந்து கீழே இறங்கி சின்னப் பண்ணை கத்தரித் தோட்டத்தை நோக்கி ஓடினான். கத்தரி செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிவிட்டு, சுருட்டை இழுத்துக்கொண்டு முனியாண்டி தேவர் வெளியில் வந்தார். அவரைப் பார்த்ததும் கொஞ்சம் ஒதுங்கி நின்றான். எங்க ஓடுற” “கருப்பாட்டக் காணோம் மாமா” “தோட்டத்துப் பக்கம் ஆட்ட எல்லாம் விரட்டி விட்டுட்டு ஆட்டமா போட்டுக்கிட்டு இருக்க… இரு… இரு… இன்னிக்கு எல்லாத்தையும் பட்டியில் கொண்டு போய்த் தள்ளிடுறேன்” என்று திரும்பினார். அவன் அவரைத்தாண்டி மூங்கில் படலைத் திறந்து கொண்டு கத்தரித் தோட்டத்திற்குள் வேகமாக ஓடினான். பாலகுமாரன் ‘கசடதபற’ இதழில் முதல் சிறுகதை ஆசிரியராக அறிமுகமான பாலகுமாரன் தஞ்சை மாவட்டம் பழமாநேரியில் பிறந்தவர். தஞ்சையில் இலக்கிய தடம்பதித்த கு.ப.ரா., தி. ஜானகிராமன் வழியில் எழுதத் தொடங்கியவர். ஜானகிராமனின் தாக்கத்தை பெரும்பான்மையான படைப்புகளில் கண்டுகொள்ளலாம். இவருடைய எழுத்துக்கள் பெரும்பாலும் பெண்களைப் பற்றியும், ஆண் பெண் வக்கிரங்களைப் பற்றியுமே பேசுகின்றன. பெண்களை அதிலும் அவர்கள் வக்கிர மனசையே பேசுவதால் இவரை ‘நவீன அருணகிரிநாதர்’ என்று சாடுவார் செ.யோகநாதன். இவரைப் பற்றி பலர் இப்படி அபிப்பிராயம் சொல்லுவதால், “இன்றைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஆதாரமாக இருப்பது ஆண், பெண் உறவு. இப்படி மிக மோசமான நிலையில் இருக்கும் இதனைச் சரிசெய்யாமல் சமன்படுத்தாமல் வேறு எந்தச் பிரச்சனையையும் தீர்வு செய்ய முடியாது. நான் பசிக்கு தீனி போடுபவன். ருசிக்கு அலையாதீர்கள்..” என்று சமாதானம் சொன்னாலும் பின்னாளில் காசுக்காக மட்டுமே எழுதி குப்பை கொட்டிக்கொண்டு இருக்கும் கும்பலில் இவரும் கரைந்துப் போனதால், அவர் செய்துள்ள ஆரம்பகால இலக்கிய முயற்சிகளும் கரைந்துபோய் கொண்டுதான் இருக்கின்றன. 1978 ஆம் ஆண்டு இலக்கிய சிந்தனையில் பரிசுபெற்ற ‘நெருடலை மீறி நின்று…’ கதைக்கு தி. ஜானகிராமன் இப்படி ஒரு குறிப்பு எழுதியுள்ளார். “செக்ஸ்-ஆண் பெண் கடல் ஒரு புனிதமான அத்யாவசியம் என்று சொல்ல பகவான் ரஜினீஸ் தேவை இல்லை. அதை உணர்த்த ஆதி மனிதர்கள் தட்டித் தடவி ஒரு மாதிரியாக கலியாணம் என்ற ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்… மிகவும் நுட்ப உணர்வோடு அமைந்த படைப்பு” என்று கூறுகிறார். நெருடலை மீறி நின்று சந்தோஷமாயிருக்கிறது. ரொம்ப சந்தோஷமாயிருக்கிறது. இருபத்துநாலு வயசில் இன்றுதான் ரொம்ப ரொம்ப சந்தோஷமாயிருக்கிறது. இன்னும் அந்த மோட்டார் பைக் சத்தம், தூக்கித் தூக்கிப் போடுகிற அனுபவம், அறுபது மைல் வேகத்தில் புடவைத் தலைப்பை அடக்க முடியாமல் தலைமுடியைக் கோத முடியாமல் காலை மாற்றிக்கொள்ள முடியாமல், பிடித்த பிடியை விடமுடியாமல், நெஞ்சு முழுக்க பயத்தோடும், ஆனந்தத்தோடும் சவாரி செய்தது இன்னும் உடம்பு முழுக்கப் பரவிக் கொண்டிருக்கிறது. லேசான பெட்ரோல் வாசனையும், சூடான எஞ்சின் நெடியும், ஷேவிங் க்ரீம் மாதிரி ஏதோ ஒரு சுகந்தமும் இன்னும் மூக்கருகே வட்டமிடுகின்றன. இது மொத்தமும் கலந்து ஒரு ஆண் வாசனையாய் மனசுக்குப்படுகிறது. இத்தனை நெருக்கமாய் இதுநாள் வரை நான் யாரோடும் உட்கார்ந்ததில்லை. என் நினைவுக்குத் தெரிந்து அருகே நின்றதுகூட இல்லை. பேசினது இல்லை. பழகினது இல்லை. முகத்தை உன்னிப்பாய்க் கவனித்தது இல்லை. யாராவது என்னைப் பார்க்கிறார்கள் என்றால் சட்டென்று கண்களைத் தாழ்த்திக்கொள்கிற பழக்கம் எனக்குப் பதினாலு வருஷப் பழக்கம். பத்து வயசில் கன்னத்துப் பக்கம் ஒரு அரும்பு மாதிரி, சிரித்த வெள்ளைத் தேமல் விரிந்து கொடியாகிக் கிளைத்து உடம்பு முழுக்க, முகம் முழுக்க, இலை இலையாய், வெள்ளைப் பூவாய்ச் சிரிக்க ஆரம்பித்து என்னைச் சிரிக்க முடியாதபடி செய்துவிட்டது. யார் பார்வைக்கும் படாமல் ஒதுங்கிப் போக வைத்தது. எத்தனையோ இரவுகள் என்னைத் தேம்பித் தேம்பி அழ வைத்தது. அழுதது நான் மட்டுமில்லை. கூடச் சேர்ந்து கண்கலங்க, விரக்தியாய் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த எனக்கு அம்மாவும் அப்பாவும். எனக்கு இப்படி நேர்ந்ததுக்குப் பிறகு அம்மா பவுடர் பூசிக் கொள்வதை நிறுத்திவிட்டாள். பூ வைத்துக்கொள்வதைக் குறைத்துவிட்டாள். புதுசை சலவைக்குப் போட்டுப் பழசாக்கிக் கட்டிக்கொள்வாள். ஊரிலுள்ள அத்தனை கோவிலுக்கும் விளக்குப் போடுவாள். அப்பா லூக்கோடர்மாவைப் பற்றி உலகத்திலுள்ள அத்தனை புத்தகங்களையும் வாங்கிப் படித்தார். எத்தனைபிரிவு வைத்தியம் உண்டோ, அத்தனை வைத்தியத்துக்கும் காசை இறைத்தார். இன்னொரு குழந்தை இப்போது வேண்டாம் என்று இருந்தவர், இப்படி ஒரு குழந்தைக்குப் பிறகு வேண்டவே வேண்டாம் என்று அடங்கினார். என்னுடைய ஒரே பொழுதுபோக்கு, புத்தகங்கள். மனசுக்குப் பிடித்த ஒரே விஷயம், உத்தியோகம். ஆரம்பகாலத்தில் அடைந்து கிடந்ததும், அழுது தவித்ததும் மெல்ல மெல்லக் குறைந்து போயின. இந்த நோய் தீர்க்க முடியாதது என்று தெரிந்ததும் மனசின் வேதனைகள் மறைந்துபோயின. வேதனை இருந்த நெஞ்சில் வெறுமே ஒரு பள்ளம் இருந்தது. எங்கள் மூன்று பேருக்கும் இடையே எதுவும் பேசமுடியாமல் போயிற்று. இப்போ இந்த இரண்டு நாளாய் நான் சந்தோஷமாய் இருக்கிறேன். ரொம்ப சந்தோஷமாயிருக்கிறேன். இருபத்து நாலு வயகப்பெண் எதற்குச் சந்தோஷப்படுவாள்? தன்னை மறந்து நெஞ்சில் கை கோத்து எதற்குக் குதூகலப்படுவாள்? இயல்பாய் சுலபமாய் எதற்குப் பாட்டுப்பாடுவாள், சிரிப்பாள், கனவு காணுவாள்? யாரும் சட்டென்று ஊகித்துவிட முடியும். “எஸ். ஐ லவ் ஹிம். ஐ லவ் ஹிம். பத்ரிநாதன்.” நேற்று பஸ் ஸ்டாண்ட் வரை அவர் மோட்டார் பைக்கில் சவாரி. இன்று தெரு முனை வரை மோட்டார் பைக் சவாரி வீட்டிற்குக் கூப்பிட்டேன். நாளைக்கு வருகிறாராம். “எத்தனை மணிக்கு வருவீங்க பத்ரி?” “எப்ப வேணா…” தாங்க்யூ சொல்லக்கூடத் தோன்றவில்லை எனக்கு. வீட்டில் அவர் வரப்போவதைச் சொன்னேன். அப்பாவுக்கு ஆச்சரியம். உடனே ஓட்டடை அடிக்க ஆரம்பித்தார். நான் வீட்டிற்கு யாரையும் அழைத்ததில்லை. பள்ளிக்கூடத்தில், காலேஜில் நான் இப்போது வேலை செய்கிற ஆபீஸில் யாரும் என் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டதில்லை. “மேடம், உங்க முகத்தில் வெள்ளை வெள்ளையாய் இருக்கே இது என்ன- இப்படித்தான் ஆரம்பிப்பார்கள். அது என்ன என்று தெரிந்து பிறகுகூடக் கேள்வி கேட்பார்கள். இதற்கு என்ன வைத்தியம் என்று அலசுவார்கள். ஒட்டிக்குமோ, ஆபீஸ் பேப்பரைப் பயத்துடன் வாங்குவார்கள். உடம்பில் வேறு எங்கேயாவது வெள்ளை தென்படுகிறதா என்று நான் அறியாதபடி பார்வையால் தேடுவார்கள். வலக் கன்னத்திலும், இடக் கன்னத்திலும் சொல்லிவைத்த அளவாய் வட்டமாய் இரண்டு வெள்ளைத் திட்டுக்கள் மின்னுவதால் எனக்கு சங்கு சக்கரம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ‘எஸ் எஸ்’ என்று சங்கேத பாஷையில குறிப்பிடுவார்கள். அவர்கள் மீது எனக்குக் கோபமில்லை. அவர்கள் நடத்தையில் வருத்தமேயில்லை. அவைகள் பள்ளிக்கூட நாட்களிலிருந்து எனக்குப் பழகிப்போன சமாசாரம்.”எனக்குத் தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான். அவனுக்கும் இதே கம்ப்ளெய்ன்ட் தான். ஆனா நல்ல உத்தியோகம். கை நிறையச் சம்பளம், உசந்த குடும்பம். உனக்கு வேணா பார்க்கட்டுமா?” ஆபீஸில் வயதான ஒருத்தர் என்னைக் கேட்டபோது தான், துக்கம் பீரிட்டு அடித்தது. அவர் காதுக்கு மட்டும் கேட்கும்படியாய், “வேணும்னா உங்க பொண்ணுக்கு அந்தப் பையனைப் பாருங்க சார்,” என்று சொல்ல வைத்தது. என் பதிலில் அடிபட்டு நசுங்கினார். அந்த மனிதரை நினைத்து ராத்திரி முழுக்க வேதனைப்பட்டேன். தலையணை நனைய அழுதேன். எதற்காக அழுதேன் என்று கேள்வி கேட்காமல் தலையைக் கோதியபடி விசும்புகிற அம்மாவையும் கால்மாட்டில் உட்கார்ந்து விசிறின அப்பாவையும் பார்த்து மனசைத் திடப்படுத்திக் கொண்டேன். பேசினால் இவர்களோடுதான் பேசுவது. இந்த இருவரோடு தான் பழகுவது என்று சங்கல்பம் செய்துகொண்டபோது ஒரு மூன்றாவது ஆள் வருகை எனக்கு நேருமென்று நினைக்கவேயில்லை. “ஹலோ, எம் பேர் பத்ரிநாதன். இந்தக் கம்பெனியில ஸேல்ஸ் எஞ்சினியர். அடிக்கடி டூர் போய்ட்டு வர வேலை. இந்தத் தடவை கொஞ்சம் லாங் டூர். நீங்கதானே புது டெஸ்பாட்ச் கிளார்க்? எனக்கு ஏதாவது லெட்டர் உண்டா? பர்ஸனல் தபால் எனக்குக் கொஞ்சம் இங்கே வரும். இருந்தா தயவுசெய்து கொடுக்கணும். பனாரஸ் அல்வா சாப்பிட்டிருக்கிறீர்களா? பூசணிக்காயில் ஊசி குத்தி சக்கரை இறக்கியிருக்கும். வாயில் போட்டால் தித்திப்பா கரையும்.”இந்த மாதிரி டூர் போனா இப்படி ஏதாவது வாங்கிட்டு வருவேன். லைக் டு டேக் சம்?” என் நினைவு தெரிந்து இதுதான் முதன் முதலாய் இனிப்பில் ஆரம்பித்த சிநேகிதம். என் முகத்தின் கோரம் பற்றிக் கொஞ்சம்கூட சலனப்படாத பாவம். அவர் பெயருக்கு நான்கு கனமான கவர்கள் ஒரு வாரப்பத்திரிகையிலிருந்து வந்திருந்தன. அவற்றை மெல்லிய நூலில் கட்டி ஒரு பெரிய கவரில் போட்டு பசை ஒட்டி வெளியே பெயரெழுதி, கவர் மீது தபால் வந்த தேதிகளை, நேரத்தைக் குறித்து வைத்திருந்தேன். ஆச்சரியத்துடன் கவரை வாங்கிக்கொண்டார். “ஸோ நீட் ஸோ ப்யூட்டிஃபுல்!” கவரைப் பெற்றுக்கொண்டதற்கு கையெழுத்துப் போடும் படிக் கேட்டபோது, “பர்ஸனல் தபாலுக்குக்கூட ரிஜிஸ்டரா?” என்றார். “உங்க கையெழுத்து எவ்வளவோ அழகா இருக்கு; கையெழுத்துக்கும், ஒருத்தர் மனசுக்கும் சம்பந்தம் உண்டாம். உங்களுக்கு மிருதுவான மனசு. ஆம் ஐ ரைட்?” என்றேன். “யூ நோ. இதெல்லாம் திரும்பி வந்த கதைகள். நான் எழுதினது. வழக்கமா இதுகள் திரும்பி வந்தா ரொம்பக் கஷ்டமா இருக்கும். சோர்வா படும். இப்ப என்னவோ கையில் கர்வமா தூக்கிட்டுப் போலாம்போல இருக்கு. ப்ளிஸ், அடுத்த தடவையும் திரும்பின கதையை யார் கண்ணுக்கும் படாம இதேமாதிரி கொடுத்துடுங்க. தாங்க்யூ வெரிமச்.” பதில் ஏதும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தேன். திடீரென்று மேலே வீசப்பட்ட புகழ்ச்சியையும் கலகலப்பையும் தாங்கமுடியாமல் கஷ்டப்பட்டேன். பிற்பகல் இடைவெளி வழக்கம்போல் போரடித்தது. “நான் அந்தக் கதைகளைப் படிச்சுட்டுக் கொடுக்கட்டுமா?’ என்றேன். பளிரென்று ஒரு வெள்ளைச் சிரிப்பு. “யூ மீன் இட்? ஓ.கே. படிச்ச பிறகு வெளிப்படையா அபிப்பிராயம் சொல்வதானால் தருகிறேன்.” நான் தலையசைத்தேன். கவரை எடுத்து வந்து கதைகளைப் பிரித்துப் படித்தேன். கிறுக்கல் கையெழுத்து எந்தப் பத்திரிக்கைக்காரன் இதைப் படிப்பான்? முதல் இரண்டு கதைகளையும் வீட்டிற்கு எடுத்துப்போய் சுத்தமாய் எழுதி வேறொரு பத்திரிக்கைக்குப் போஸ்ட் பண்ணினேன். பதினைந்து நாட்கள் கழித்து கதை பிரசுரமானதை நான் விரித்து நீட்டினபோது நம்ப முடியாமல் தவித்தது சிரிப்பாய் இருந்தது. இடைவேளையில் கேரியரைத் தூக்கிக் கொண்டு என் டேபிளுக்கு வந்து, வறுவலை துவையலை பொரிச்ச கூட்டை இலக்கியத்தை பரிமாறிக் கொள்வது சுவையாய் இருந்தது. மறந்துபோய்க் கூட முகத்துத் தேமலைக் கேட்கவில்லை. எனக்கே ஒரு சந்தேகம். தேமலே எனக்கு இல்லையோ என்று ஒரு க்ஷண சந்தேகம். இல்லாம எங்கு போகும்? ஒவ்வொரு நாள் காலையும் குளித்துத் தலை முடிந்து கொள்கிறபோது கண்ணாடியைப் பார்த்துச் சிரிக்கிற வெள்ளைத்தேமல். எனக்கே இதைத் தொட்டுப் பார்க்கப் பயமாய் இருக்கிறதே. உள் மனசில் என் கண்ணில் கொஞ்சம்கூட அருவருப்புக் காட்டாமல் எப்படி இருக்க முடிகிறது. பத்ரி? ஒரு வேளை, ஊர் முழுக்க சுற்றி விதவிதமான அழகை ரசித்து முதிர்ந்து போனாயோ? அழகில்லாத பெண்ணோடு பழகுவதை டெஸ்ட் ட்யூப் சோதனையாய்க் கொண்டிருக்கிறாயோ? இது ஒரு அனுபவம் என்பாயோ. என்னைப் பற்றி ஒரு கதை எழுதிவிட்டு அதற்குக் காசு வாங்கி மறந்து போவாயோ. நான் உனக்கு டெஸ்ட்ட்யூபா? அமிலக் கரைசலா? ஆராய்ச்சிப் பொருளா? இல்லை. நிஜமாகவே உனக்கு என்னைப் பிடித்திருக்கிறதா? என் பேச்சு உனக்கு ரசிக்கிறதா?- இந்த லூக்கோடர்மா உனக்கு ஒரு விஷயமே இல்லையா? எங்க அம்மாவுக்கும் லூக்கோடர்மா இருந்தது. உன்னைப் பார்க்கிற போதெல்லாம் என் அம்மா ஞாபகம் வருகிறது. இப்படி ஏதாவது கயிறு திரித்துச் சாட்டையாக்கிக் கடைசியாய் விளாசப் போகிறாயா? ச்சீ— எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு அவலம் வாய்க்கவேண்டும். வெந்தும், வேகாததுமாய் ஒரு முகம் கிடைக்க வேண்டும். நான் கரிக்கட்டையாய் கிருஷ்ண நிறமாய் இருந்திருக்கக் கூடாதா. புருவத்துக்குத் தீட்டின மையை எடுத்துக் கன்னத்து வெள்ளையில் தீட்டினேன். கொஞ்சம் வழித்து இடக் கன்னத்தில் தேய்த்தேன். இன்னும் இரண்டு விரல் எடுத்து முகவாயில் நெற்றி மேட்டில் கழுத்து வளைவில் முகம் முழுக்க கறுப்பாய் கரிக்கட்டையாய் கிருஷ்ண நிறமாய் அப்பா இந்தக் கறுப்பு எத்தனை அழகு! லூக்கோடர்மா இல்லாத என் முகம் எத்தனை எடுப்பு! வாசல் பக்கம் நிழலாடிற்று. காலை ஏழு மணிக்கு யார் வரப் போகிறார்கள்? “மே ஐ கம் இன்-?” பத்ரி. பளிரென்று ஒரு பயமும், சந்தோஷமும் வயிற்றில் வெடிக்க “யெஸ் கம் இன்.” ஐயோ மூஞ்சியெல்லாம் மை! பொத்திக்கொண்டு அறைக்கு ஓடுகையில் எதிரே நின்றுவிடுகிறார். “ஏய் என்ன இது கரி வேஷம்?” . நிமிர்ந்து அவர் கண்களைச் சந்திக்கையில் வெட்கமும் அவமானமும், விசும்பலுமாய் அவசரமாய் அழிக்க முற்படுகையில், நித்யா, உனக்கென்ன பைத்தியமா!” என்கிறார். “உன்னைக் கெட்டிக்காரின்னு நெனைச்சேன். அசடே கண்களை மூடிக்கொண்டால் இருட்டாகிவிடுமா? கறுப்பைத் தீத்திக் கொண்டால் எல்லாம் போய்விடுமா? கண்ணாடி சொல்கிற அழகா முக்கியம்? வெறும் நிலைக் கண்ணாடிப் பொண்ணா நீ? நிஜத்தை மறுக்காதே நித்யா பாவம், கோழைத்தனம். அழகு என்பது உருவமா? வெளித் தோலா? இல்லை நித்யா. அது மனசு கேட்காமல் உதவி பண்ணுகிற உன் மனசு, பதில் நன்றிக்குக் கட்டிக் காத்துக் கொண்டிராமல் நகர்ந்து போகின்ற உன் குணம். சின்ன வேலையைக்கூட மாக்கோலம் போடுகிற அழகாய்ச் செய்து முடிக்கிற பழக்கம். அழுவதை நிறுத்து நித்யா, இது வேணும் அது வேண்டாம்னு பிரித்துப் பிரித்து அடம் பிடிக்கிற மனகதான் அழும். உன்னைப்புரிந்து கொள்.” தலையை வருடி முதுகைத் தட்டி கட்டிலில் அமர்ந்து கைக்குட்டையால் முகத்தின் கறுப்பைத் துடைத்து கண்ணீரை ஒற்றி. “உன் முகத்தை மறக்கக் கற்றுக் கொள்ளணும். இது சுலபம். உன்னால் இது முடியும்.” இரண்டு நிமிஷம் என் கைகளை அழுத்தப் பிடித்துக் கொண்டிருந்துவிட்டு விடை பெற்றுப் போனார். ஊருக்குப் போகிறாராம். இன்னொரு டூராம். நான் சோப்பும் டவலும் எடுத்துக்கொண்டு சொச்சத்தை அழிக்கக் குளியலறைக்குள் நுழைந்தேன். ஈரம் சிதற மீண்டும் ஹாலுக்கு வருகையில் அம்மாவின் குரல் கேட்டது. அம்மா பாத்திருப்பாளா? “பையனைப் பார்த்தா நல்லவனா தெரியறான். ஆனா கலயாணம் ஆயிடுத்தாமே!” அப்பாவும் பார்த்திருக்கிறார். “ஒரு குழந்தைகூட இருக்குன்னு என்கிட்ட சொல்லியிருக்கா நித்யா.” இது அம்மாவின் பதில். “விறுவிறுண்னு போய் குழந்தைக்குப் பக்கத்தில் உட்கார்ந்துடறான்” “உம்.” “இத்தனை இதம்மா நம்ம பெண் கிட்ட நாம கூடப் பேசினதில்லை. நீங்க தொண்டையைக் கனைச்சுண்டு உள்ளே போவேளோன்னு நினைச்சேன்.” “நான் எதுக்குப் போகனும்? அவள் சந்தோஷமாக இருந்தா சரி.” “இவனோட பழகறதுக்கப்புறம் சந்தோஷமாதான் இருக்கா. வாய் ஓயாம ஆபீஸ் பத்திப் பேசறா. யார் சொன்ன ஜோக்கையோ இங்க சொல்லிச் சிரிக்கிறா” “ஆனா அந்தப் பையனுக்கு கல்யாணமாயிடுத்து.” “ஒரு குழந்தை வேற இருக்கு. எதுக்கும்மா இதெல்லாம்னு நெஞ்சு வரைக்கும் கேள்வி வருது. கேட்டுடலாமான்னு படறது.” “நீ ஒண்ணும் கேட்க வேண்டாம். பேசாம விடு” “விடச் சொல்றேளா?” “வேறென்ன பண்றது? எத்தனை நாள் சந்தோஷமா இருக்காளோ, அத்தனை நான் சந்தோஷமான இருக்கட்டும்.” “வைப்பாட்டியாவா?” அம்மா முழங்காலில் கரும்பு உடைக்கிற வேகத்தோடு கேட்கிறாள். சிலீரென்ற ஒரு பொட்டு சோப்பு நீர் உதட்டில் இறங்க அனிச்சையாய் நாக்கு நுனியில் நெருடுகிறேன். கொஞ்சம் இனிப்பாய் காரமாய் கசப்பாய் என்னனென்னவோவாய் ஒரு சுவை பரவுகிறது.  இந்திரா பார்த்தசாரதி தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் பிறந்த ஆர். பார்த்தசாரதி எழுத்துக்காக ‘இந்திரா’ வை இணைத்துக்கொண்டவர். மாறிவரும் சமுதாய அமைப்பில் பழைய மரபின் பிரதிநிதிகள் வீழ்ந்துபடுவதும், குடும்ப உறவின் வலிய பந்தங்கள் விலகி விடுவதுமான உறவுமுறைச் சிக்கல்கள் - சிதைவுகள், தனக்குத்தானேயும், தனக்கும் சமூகத்திற்கும் முரண்பட்டு அந்நியப்பட்டுப் போகின்ற தனிமனிதர்களின் பிரச்சனைகள், பாலியல் விவகாரங்கள் முன்னிருந்த கட்டுதிட்டுக்களிலிருந்து சுதந்திரமாகிய நிலைமைகள்… வாழவேண்டி இருப்பதால் மனிதன் போடவேண்டியதைப் போட்டுக் காட்டுகிற போலி வேஷங்கள் எத்தனையோ? புதிய மாறுதல்களுக்கு இடங்கொடுத்த பழம்மரபின் கட்டுக்களை உடைத்தெறிககின்ற கிளர்ச்சித் தன்மைகள், அரசியல் பொய், பித்தலாட்டங்களுக்கு உரிய இடமா மாறிவிட்ட வருந்தத்தக்க தன்மை நகர நாகரிகத்தின் மதிப்புக்கள் நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களின் நடைமுறை வாழ்க்கையிலும் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் போன்ற நகர்ப்புறச் சமுதாய மாற்றங்கள் அடிப்படையாகக் கொண்டுள்ள சில பிரச்சனைகளை இந்திரா பார்த்தசாரதி கையாண்டுள்ள முறைமையைப் பற்றி மிகத்தெளிவான ஒரு ஆய்வு நூல் வெளிவந்துள்ளது. இதுபோன்ற ஆய்வு நூல்கள் எல்லா எழுத்தாளர்களுக்கும் வரவேண்டும் என்ற ஆசை இந்த தமிழ்ச் சூழலில் நிறைவேறுமா என்பது கேள்விக்குறியே… சாகித்திய அகாதமி விருது பெற்ற ‘குருதிப்புனல்’ கீழத்தஞ்சை மாவட்டத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விவசாயிகளின் பிரச்சனைகளையும் சமூகச் சூழலையும் மையம் கொண்டு எழுதப்பட்டு இருப்பதாகக் காட்டியிருப்பது போலியானது முழுமையானது அல்ல. அவர் வெளிப்படுத்தியிருக்கும் களமும் சரி மக்களும் சரி அவர் தூரத்தில் நின்று பார்த்த சாயல்கள் மட்டுமே நிழலாக…  நாசகாரக் கும்பல் அம்பி, வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். எதிரே சேறும் சகதியுமாயிருந்த வராகக் குளத்தை தூர்த்துக் கொண்டிருந்தார்கள். எதற்காகத் தூர்க்கவேண்டும், சேறும் சகதியுந்தானே வராகருக்கு ஏற்றதொரு இடம் என்று நினைத்தான் அம்பி. ஆனால் பாசி படர்ந்த அவ்விடத்திலிருந்து புறப்பட்டு ஊரில் வியாதியைப் பரப்பும் கொசுவுக்கு வராகர் ஒரு வழி செய்வாரானால், அவர் உவக்கும் இடத்தை அப்படியே விட்டு வைத்திருக்கலாம்… “கொசு ஓர் அரக்கன்; அவனை அழிக்க ஒரு புது அவதாரம் தேவை…’ அம்பியின் கற்பனை அவனுக்கே சிரிப்பைத் தந்தது. “என்னடா, காலங்காத்தாலே திண்ணையிலே உட்கர்ந்திண்டு காலை ஆட்டிண்டிருக்கே?” கிட்டு, கையில் பட்டமும் நூற்கண்டுமாக நின்று கொண்டிருந்தான். அவனுக்கு அம்பியைக் கண்டால் கொஞ்சம் பொறாமை… வாத்தியார் மகனாக இருந்தாலும், படிப்பில் அம்பியை மிஞ்ச முடியவில்லை. இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சையில் அம்பி ராஜ்யத்திலேயே முதலாவதாக வருவான் என்று அவன் அப்பாவே சொல்லிக் கொண்டிருந்தது. கிட்டுவுக்கு எரிச்சலைத் தந்தது. “பட்டம் விடப் போறயா, நானும் வரட்டுமா?” “உனக்கு என்ன பட்டம் விடத் தெரியும்?… நாலு பாடத்தைப் பொட்டை நெட்டுரு போட்டு மார்க் வாங்கத் தெரியும்… அவ்வளவுதானே?” “அம்பிக்கு அவமானமாக இருந்தது. அவனை யாருமே விளையாடச் சேர்த்துக் கொள்வதில்லை. விளையாட வேண்டுமென்ற ஆர்வமிருந்தாலும், விளையாட்டில் அவனுக்குத் திறமை போதாது. படிப்பில் கெட்டிக்காரனாக இருந்து என்ன பயன்? இந்த வயதில், விளையாட்டில் சூரனாக இருந்தால்தான் எல்லாரும் மதிக்கிறார்கள். பள்ளிக்கூட விளையாட்டுப் போட்டி ‘சாம்பியன்’ கதிர்வேலுவைத்தான் எல்லாருக்கும் தெரியும். அம்பியை யாருக்குத் தெரியும்? வயசான வாத்தியார்கள் வேண்டுமென்றால், அவனைத் தட்டிக் கொடுக்கலாம்… ஆனால்?. கதிர்வேலுக்கு. அந்த வெறுந்தடியனுக்கு, ராதா காதல் கடிதம் எழுதினாளே, தன்னை ஒரு தடவையாவது பார்த்துப் புன்னகை செய்திருப்பாளா? ’அம்பி கெட்டிக்காரப் பையன், நல்ல மாதிரி சே… இந்தப் பட்டங்களைச் சுமந்து கொண்டிருப்பதினால் அவனுக்கு என்ன பிரயோஜனம்? கிட்டு போய்விட்டான்… அம்பிக்கு அழுகை வரும் போலிருந்தது… அப்பொழுது ஒரு பஸ் வரும் சப்தம் கேட்டது. அம்பி உட்கார்ந்தபடியே தலையை நீட்டித் தெருக்கோடியை நோக்கினான். கருணுடூரிஸ்ட் பஸ். ஏன் இந்தப் பக்கம் வருகிறது? அவனுக்கு ஞாபகம் வந்தது. வழக்கமான பாதையில் குழி தோண்டி வைத்திருக்கிறார்கள். டூரிஸ்ட் பஸ்… பேர்தான் டூரிஸ்ட் பஸ்… அது டூரிஸ்ட் பஸ்ஸே இல்லை. தினசரி இரவு வெளியூர்களுக்கும், வெளியூர்களிலிருந்தும் பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு போய் வருகிறது. நடத்துகிறவர், ஆளுங்கட்சிப் பிரமுகர். அரசாங்கம் காந்திஜிக்குப் பிடித்த குரங்கு; தீமையைப் பார்க்காது. கண்ணை மூடிக் கொள்ளும். -ஒருவேளை இரவு வேளைகளில் அரசாங்கம் தூங்கி விடுகிறதோ என்னவோ? அம்பிக்குத் தான் கெட்டிக்காரன் என்று பட்டது. தன்னை ஒத்த மற்றவர்களுக்கு இந்த வயதில் இந்த மாதிரியெல்லாம் தோன்றுமோ? கெட்டிக்காரனாக இருப்பதோடு மட்டுமல்லாமல், விளையாட்டிலும் புலியாக இருந்தால்?… ஒரு ராதா என்ன, ஒன்பது ராதாக்கள் கடிதம் எழுதலாம். பஸ் அருகில் வந்துவிட்டது. சிகப்பு நிற பஸ். அம்பியின் வீட்டருகே வந்ததும் பஸ் சற்று யோசிப்பது போல், தயங்கி நின்றது. அவன் வீட்டெதிரே, குளத்துக்கும், கோயிலுக்குமிடையே இடைவெளியில் போகிறானோ?… தான் நினைத்தது சரிதான்… “ரிவர்ஸ் செய்யத்தான் பஸ்ஸை இங்கு கொண்டு வந்திருக்கிறான். பூதாகாரமான பஸ். இந்தச் சிறிய இடைவெளி போதுமோ? கண்டெக்டர் பஸ்ஸை விட்டுக் கீழே இறங்கவில்லை. பின்புறத்துக் கண்ணாடி வழியாகப் பார்த்துக்கொண்டே ‘எஸ்…எஸ்…எஸ்’ என்று சொல்லிக் கொண்டிருந்தான். பஸ் பின்பக்கம் நகர்ந்தவாறு திண்ணையருகே வந்தது. அம்பி காலைத் தூக்க வேண்டுமா என்று ஒரு கணம் நினைத்தான்… அப்படிப் பார்க்காமலேயா இருந்துவிடப் போகிறான், கண்டக்டர்? அம்பியின் அலறல் தெரு முழுவதும் கேட்டது. கண்டக்டரின் ஹோல்ட் ஆன் என்ற கத்தலும், அம்பியின் அலறலும் ஒரே சமயத்தில் ஒலித்தன. பஸ் நின்றது… வண்டியிலிருந்து பிரயாணிகள் அவசர அவசரமாகக் கீழே இறங்கினார்கள். “ஐயோ பாவம், கால் சட்னியாயிடுத்தேய்யா?” “முதல்லே ரத்தத்தை நிறுத்துய்யா… ஃபஸ்ட் எய்ட் பாக்ஸைக் கொண்டா சீக்கிரம்.” “நோ… நோ… ஆஸ்பத்திரிக்கு எடுத்துண்டுதான் போகணும்… சின்னப்பையன்… என்னய்யா அநியாயம்…!” கண்டக்டர் அம்பியின் கால்களை மெதுவாக விடுவித்தான். அம்பி அழவில்லை. அவனுக்கு நினைவு தப்பிவிட்டது. அப்பொழுது திடீரென்று எல்லாருடைய நெஞ்சையும் பிழிந்தெடுக்கும்படியாக ஓர் ஓலம் கேட்டது. கண்டக்டர் பையனைத் தூக்கிப் பஸ்ஸில் வைத்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகலாமா என்று யோசித்தவன், திடுக்கிட்டு நின்றான். “அம்பி… அம்பி… நான் என்னடா செய்வேன்… உன்னைத்தானேடா நான் நம்பிண்டிருந்தேன்…” “யாரு இவங்க?… பையனோட அம்மாவா?” “ஆமாம்…” “பெரியம்மா, கொஞ்சம் நகருங்க. ரத்தம் போய்கிட்டே இருக்கு… பஸ்ஸிலே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கிட்டுப் போறோம். மத்ததெல்லாம் அப்புறம் பேசிப்போம்…” “எங்கேய்யா அவசர அவசரமா ஓடறே? பையன் பேரிலே பஸ்ஸை ஏத்திட்டுத் தப்பிச்சுக்கலாம்னு பாக்கறயா? தோப்பணில்லாத பிள்ளை, ஒரு ஏழைக் குடும்பத்தோட வயத்தலே அடிச்சிட்டியே, உருப்படுவியா?…” “ஐயரே, நீங்க என்னய்யா வேணும் இந்தப் பையனுக்கு? சொல்லறத்தை கேளுங்க… உங்களுக்குப் பையன்தானே முக்கியம்?… சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கிட்டுப் போவோம்; அப்பறம் சத்தியமா சொல்றேன், நீங்க என்ன சொல்றீங்களோ அதைச் செய்யறேன்… நானும் பிள்ளை குட்டிக்காரன்… வேணும்னு இந்தப் பச்சைப் புள்ளை மேலே பஸ்ஸை ஏத்தலே…” “பையன் திண்ணையிலே உட்கார்ந்திண்டிருந்ததை நீ பாக்கலே? கண் அவிஞ்சா போச்சு? காலைச் சட்னியாக்கிட்டியே… இந்த அம்மாவுக்கு ஒரு வழி சொல்லிவிட்டுப் போ…” - டிரைவருக்குக் கோபத்தினால் முகஞ் சிவந்தது. நன்றாக அடிபட்டுக் கிடக்கும் பையனை வைத்துக் கொண்டு வியாபாரம் பேசுகிறாரே, இவர் யாராக இருக்கும்? “இந்தப் பையனுக்கு நீங்க என்ன வேணும்?” “நான் பக்கத்து வீட்டிலே குடியிருக்கேன்… நான் யாராயிருந்தா உனக்கென்ன?” டிரைவர் கண்டக்டரிடம் சொன்னான், “ராஜா, பையனைத் தூக்கி வண்டியிலே எடுத்துட்டுப் போவோம் வா… டைம் வேஸ்ட் ஆகிகிட்டிருக்கு…” அம்பியின் அம்மா அவன் உடம்பைக் கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தாள். “பெரியம்மா… சொல்றத்தைக் கேளுங்க. நானும் பிள்ளை குட்டிக்காரன்… தெரியாத்தனமா வண்டியை ஏத்திட்டேன்… முதல்லே குழந்தையை ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப்போவோம். தயவு செய்து பையனை விடுங்க… நீங்களும் கூட வாங்க…” “ஏதாவது பொய் ஸ்டேட்மெண்ட் கொடுத்து கையெழுத்து வாங்கிக்கலாம்னு பாக்கறயா? கனகாமாமி, போகாதீங்க…” புதுக்குரல் கேட்டதும் டிரைவர் திரும்பினான். நெற்றியில் திருநீறு சந்தனப்பொட்டு, நாற்பது வயதிருக்கும் அவருக்கு. குழந்தை துடித்துக் கொண்டிருக்கிறான். சட்டம் பேசுகிறார்களே படுபாவிகள்! டிரைவர் சிறினான். “ராஜா, பையனைத் தூக்கு… ஹீம் சீக்கிரம்.” “அட நீங்கதானா சட்டம் பேசறது…? இவர் யாரு தெரியுமில்லே அண்ணே, வக்கீல் குமாஸ்தா பாலு அய்யர்” என்றான் ராஜூ. “அவர் யாரா வேனுமானாலும் இருக்கட்டும், குழந்தையக் கொஞ்சம் பிடி…” “போலீஸ் வந்தப்புறம் போகலாம்…” என்றார் பாலு அய்யர். “பையன் செத்துப் போயிடுவான்யா, ஈவு இரக்கமற்ற படுபாவியா இருக்கியே!” “வண்டியை ஏத்தரச்சே, இந்த ஈவு இரக்கமெல்லாம் எங்கே போச்சு…? நியாயம் பேசறான், நியாயம்… நான் சட்டம் தெரிஞ்சவன், என்னை ஏமாத்த முடியாது…” “பெரியம்மா… பையன் உங்க பையன்… என்னை நம்புங்க… நான் திரும்பி வரேன்… எவ்வளவு ஸ்டேட்மெண்ட்லே வேனுமானாலும் கையெழுத்துப் போடறேன்… பையனுக்கு ரத்தம் போய்கிட்டே இருக்கு. ஆஸ்பத்திரிக் கேஸ். போலீஸ் எப்பொ வர்றாங்களோ, காத்துக்கிட்டிருக்க முடியுமா? சீக்கிரம் சொல்லுங்க…” அழுது கொண்டிருந்தவள் அவனை ஏறிட்டு நோக்கினாள். “சரி, எடுத்துண்டு போ… நானும் வரேன்..” டிரைவர் பையனைத் தூக்கி ராஜூவின் உதவியைக் கூட எதிர்பார்க்காமல், வண்டிக்குள் கொண்டுபோய் சீட்டில் கிடத்தினான். அம்பியின் அம்மாவும் வண்டிக்குள் ஏறினாள். “ராஜூ! வாப்பா சிக்கிரம்…” என்றான் டிரைவர். பாலு அய்யரும் ராஜூவும் தனியாகப் போய் ஏதோ இரகஸ்யமாகப் பேசுவது போல், கீழ்க் குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். டிரைவரின் குரல் கேட்டதும், ராஜூ அவசர அவசரமாக வந்து வண்டியில் ஏறினான். “என்னப்பா எங்களையெல்லாம் ’அம்போ’ன்னு விட்டுட்டே…” என்றார் பஸ்ஸில் வந்த பிரயாணிகளில் ஒருவர். “அதுதான் கும்பகோணம் வந்தாச்சேய்யா… டவுன் பஸ்லே போங்க… ஒரு உசிரு மன்றாடிகிட்டிருக்கு… வீட்டிலே ஏன் கொண்டு விடல்லேன்னு கேக்கறாரு, இவரு…” “இதுக்கு நாங்கதானா பொணை ? நீ செஞ்ச தப்புக்கு யார் மேலே கோவிச்சிக்கறே?” “சரிதான், வண்டியை விட்டு இறங்குங்க. ஸ்டார்ட் பண்ணனும்…” “நான் உங்க முதலாளி கிட்டே கம்ப்ளெயின்ட் பண்ணிக்கிறேன்… திமிராவா பேசறே?” டிரைவர் ஆசனத்தை விட்டு எழுந்து அந்தப் பிரயாணியிடம் வந்தான். ’நீ மனுஷன்தானே, இல்லாட்டி மிருகமா? அதோ அந்தப் பச்சைப்புள்ளை கிடக்கிறது உன் கண்ணுக்குத் தெரியலே… கோபத்திலே நான் என்ன செய்வேன்னு தெரியாது.” அவர் முணுமுணுத்துக் கொண்டே கீழே இறங்கிவிட்டார். பஸ் புறப்பட்டது. ராஜூ சொன்னான். “வேலு அண்ணே, நான் செய்யறது தப்புத்தான்… திண்ணையிலே இடிச்சதினாலே ‘டெயில்லைட்’ நொறுங்கிப் போயிடிச்சி. இதைத் தவிர இன்னும் ‘பாடி’க்கு வேற ’டாமேஜ்’… முதலாளிக்குப் பதில் சொல்லியாகணும்… போலீஸ் வர்றதுக்குள்ளே நாம் புறப்பட்டு வந்தது அவ்வளவு சரியில்லே.” “நீ வாயை மூடிக்கிட்டு இரு… எல்லாப் பொறுப்பையும் நான் ஏத்துக்கறேன்…” “குழந்தை பொழைப்பானா டிரைவர்?” “நிச்சயமா. பொழைப்பான், கவலைப்படாதீங்க… என்னோட போறாத காலம்…” டிரைவரின் குரல் கம்மியது. “சன்னரத் தாழ்வான் கோயிலை ஒரு கத்து சுத்திட்டு வருவோம்னுதான் போனேன்… அதுக்குப் பலன் இப்படியா இருக்கணும்?” அம்பியின் அம்மா சிறிது நேரம் மெளனமாக இருந்தவள், மறுபடியும் புலம்பத் தொடங்கிவிட்டாள். “பெரியம்மா, அழுவாதிங்க… எல்லாம் நல்லபடியா சரியாயிடும்.” இதை வேலு சொன்னானே தவிர, அவன் சொன்னதில் அவனுக்கே நம்பிக்கையில்லை… எப்படிச் சரியாயிடும்? இரண்டு பாதங்களும் நசுங்கிவிட்டன. விரல்கள் இல்லை. பையன் எப்படி நடக்கப் போகிறான்? தகப்பன் இல்லாத பிள்ளை, இவனைத்தான் நம்பிக் கொண்டு இருப்பதாகத் தாய் புலம்புகிறாள்! “பெரியம்மா, உங்களுக்கு வேறு குழந்தைங்க இல்லையா?” என்று கேட்டான் வேலு. அம்பியின் அம்மா பதில் கூறவில்லை. கண்களை மூடிக்கொண்டு ஜபித்துக் கொண்டிருந்தாள். பதில் வராததைக் கண்டு வேலு திரும்பிப் பார்த்தான். அவள் என்ன செய்கின்றாள் என்றறிந்ததும் தன் கேள்வியை மீண்டும் வற்புறுத்தவில்லை. ராஜூ சொன்னான். “பையனை ஆஸ்பத்திரியிலே சேத்தப்புறம் முதலாளிக்கு அங்கேயிருந்து ஃபோன் பண்ணி விஷயத்தைச் சொல்லிடுவோம். போலீஸை அவர் பாத்துப்பாரு… என்னன்னே?” வேலு பேசாமலிருந்தான். இந்த அம்மாவுக்கு வேறு குழந்தைகள் இல்லையோ? அப்படி இல்லையென்றால், இதைக் காட்டிலும் துயரம் இந்த அம்மாவுக்கு வேற என்ன வேண்டும்? முதலாளியிடம் சொல்லி நஷ்ட ஈடு வாங்கித் தரமுடியுமா? “ஒண்னாம் நம்பர் கஞ்சன், குடிக்கும் கூத்திக்கும் செலவழிப்பான், நஷ்டஈடா தரப்போகிறான்? தானும் ‘பிள்ளை குட்டிக்காரன்’ என்று வேலு சொன்னது வாஸ்தவந்தான்… ஒன்பது குழந்தைகள்… பெரியவளுக்குப் பதினெட்டு வயது. கல்யாணம் செய்தாக வேண்டும். ஆறு பெண்கள், மூன்று பிள்ளைகள். கடைசிக் குழந்தை பெண்; இரண்டு வயதாகிறது… ராஜூவையே தன்னுடைய மூத்த பெண்ணுக்கு வளைத்துப் போடலாமென்பது வேலுவின் திட்டம். பிச்சுப் பிடுங்கலில்லை. ஒரே பிள்ளை… அம்மா கிடையாது, அப்பாதான். அவரும் வைப்பாட்டியோடு தஞ்சாவூரில் இருந்து வருகிறார். ஆனால் இந்தக் காலத்து வாலிபர்களைப் போல், ராஜூவுக்கும் நெஞ்சில் ஈரம் இல்லையே என்ற சந்தேகம் வேலுவுக்கு உண்டு. இன்று உறுதியாகிவிட்டது. முதலாளி, போலீஸ், முதலாளி, போலீஸ்! என்று அரற்றிக் கொண்டிருக்கிறானே தவிர, ஒரு சின்னப் பையனுக்கு அடிபட்டுவிட்டதே என்ற வருத்தம் அவனுக்குக் கொஞ்சம் கூட இல்லை… ஆஸ்பத்திரி வந்துவிட்டது… ராஜூ இறங்கி உள்ளே போய் ஸ்டெரச்சருடன், இன்னொரு ஆளையும் கூட்டிக்கொண்டு வந்தான், அம்பியின் அம்மா வீறிட்டு அழுதாள். . வேலு அவளருகில் போய் நின்றான். “பெரியம்மா, உங்களுக்குத் தைரியம் இல்லேன்னா, வண்டியிலேயே இருங்க… நான் உள்ளே போய் டாக்டரைப் பாத்துட்டு வந்து சொல்றேன்…” அவள் அவன் சொன்னதைக் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. கீழே இறங்கி ஸ்டெரச்சரைத் தொடர்ந்து மிக வேகமாக ஆஸ்பத்திரிக்குள் சென்றாள். உள்ளே நர்ஸ் ராஜூவிடம் கூறிக் கொண்டிருந்தாள்; “இது போலீஸ் விவகாரம். நாங்க எப்படி ‘அட்மிட்’ பண்ணறது?” ராஜூ வேலுவைத் திரும்பிப் பார்த்தான். “நான் தான் அப்பவே சொன்னேண்ணே, போலீஸ் வரக் கொள்ள நாம் வந்திருக்கக்கூடாது…” வேலு நர்ஸிடம் மிக நிதானமாகத் தான் பேசினான். “முதலில் பையனை ஆபரேஷன் தியேட்டருக்கு எடுத்துட்டு போங்கம்மா, அதான் முக்கியம்… நான் போலீசுக்கு இதோ ஃபோன் பண்றேன்.” நர்ஸ் புன்னகை செய்தாள். “நோ…ரூல்படிப் பார்த்தா…” அவள் சொல்லிக் கொண்டிருந்ததை முழுவதும் வேலு கேட்கவில்லை. டாக்டர் அறையை நோக்கி மிக வேகமாகச் சென்றான். நர்ஸ் கூப்பிட்டாள். “டிரைவர்.டிரைவர்.” அந்த டாக்டர் இளைஞன். பெயர் ரவி. முப்பது வயதுக்குள் தானிருக்கும். குறுந்தாடி வைத்திருந்தான். வேலு சொன்னதை அவன் அமைதியாகக் கேட்டான். சொல்லப் போனால், கேட்பது போலிருந்தான். அவன் கை வேறொரு நோயாளிக்கு மருந்து எழுதிக் கொண்டிருந்தது. “நர்ஸைக் கூப்பிடுங்க…” என்றான் ரவி. அதற்குள் அவளே வந்துவிட்டாள். “பையனை ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டு போங்க.” “டாக்டர். இது போலீஸ் கேஸ்…” “ஐ நோ… டிரைவர், நீங்க போய் போலீசுக்குப் ஃபோன் பண்ணுங்க…” “போலீஸ் பையனோட கண்டிஷனைப் பார்த்தப்புறம் ஆபரேஷன் பண்ணறது நல்லது டாக்டர்.” “மிஸ் தாமஸ், கைன்ட்லி டு வாட் ஐ ஸே…” டாக்டர் எழுந்தான்… ஆபரேஷன் தியேட்டருக்குள் அம்பி இருந்தபோது, போலீஸ் வந்தது. ராஜூ ஃபோன் செய்து, முதலாளியையும் வரவழைத்துவிட்டான். இன்ஸ்பெக்டர் முதலாளி வந்ததும் கேட்டார்; “நம்ம வண்டிதானுங்களா?” “ஆமாம். என்ன வேலு இப்படிச் செய்திட்டே?” வேலு பதில் சொல்லவில்லை. அவனுக்கு முதலாளியைக் கண்டால் பிடிக்காது. முப்பத்தைந்து வயதுக்குள், கட்சி செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு, திருட்டுத்தனமாக ஏழெட்டு டூரிஸ்ட் பஸ் விடுகிறான்… கேள்வி முறையில்லை… தன் தலையெழுத்து, வேறு வேலை கிடைக்கவில்லை. இந்தத் திருட்டுக்குத் தானும் உடந்தை… சைக்கிளுக்குக் காற்று அடித்துக் கொண்டிருந்த பயல், இவனுக்கு வந்த அதிர்ஷ்டம் இன்று தன்னைக் கேள்வி கேட்கும் நிலைக்கு வந்துவிட்டான்!. இன்ஸ்பெக்டரும், முதலாளியும் ஆஸ்பத்திரியின் பின்பக்கம் சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். ராஜூ வேலுவிடம் கிசுகிசுத்தான்; “முதலாளி சமாளிச்சிடுவாரு, பயப்படாதீங்க…” “சமாளிக்கிறதுக்கு என்ன இருக்குது?” “யார் யாருக்கு எங்கெங்கே கை ஊறுதுண்ணு முதலாளிக்குத் தெரியும்…” இதைச் சொல்லிவிட்டு ராஜூ புன்னகை செய்தான். இந்தப் பயலுக்கா தன் பெண்னைக் கொடுக்க வேண்டுமென்று ஒரு கணம் யோசித்தான் வேலு. தம்பியின் அம்மா ஓரமாக ஒரு பெஞ்சியில் உட்கார்ந்து கொண்டு கண்கள் மூடிய நிலையில் இருந்தாள். வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. இன்ஸ்பெக்டர் வேலுவிடம் சொன்னார். “என்ன நடந்ததுன்னு முதலாளி எழுதித் தருவாரு… கையெழுத்துப் போட்டு என்கிட்ட கொடு.” “சம்பவம் நடந்த இடத்திலே முதலாளி இல்லே… நான்தான் இருந்தேன்… ஆக்ஸிடென்டுக்கும் நான்தான் காரணம்.” முதலாளி வேலுவை முறைத்துப் பார்த்தான்… அவனுடைய கோபம் முகத்தில் தெரிந்தது. “வேலு. இப்படி வா என்னோட…” இருவரும் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தார்கள். வைச்சான்னா, நீ ஜெயிலுக்குப் போகும்படியா ஆயிடும்… புரிஞ்சுதா… நான் சொல்றபடி கேளு…” “அதைப்பத்தி நான் கவலைப்படலிங்க… நான் செஞ்ச தப்புக்கு…” முதலாளி சீறினான். “மூளை இருக்குதா, இல்லியா உனக்கு? ஒம்பது குழந்தைகளை வைச்சிகிட்டு அரிச்சந்திரனா இருக்க முடியுமா உன்னாலே? சொல்வதைக் கேளு. நான் இப்படி எழுதித்தரேன், கையெழுத்துப் போடு…” “என்ன எழுதித் தருவீங்க?” “கால உசர வைச்சிக்கிட்டிருந்த பையன் திடீர்னு தொங்கப் போட்டுட்டான்… மற்றபடி கோர்ட்லே கேஸ் வந்திருச்சின்னா, வக்கீல் பார்த்துப்பாரு. பையனுக்கும், அம்மாவுக்கும் சண்டை, அது இதுன்னு… எத்தனையோ வழி இருக்குது… வக்கீலுக்கு சொல்லியா கொடுக்கணும்? கோர்ட் கேஸ் ஆகாமப் பார்த்துக்கறேன். பையனோட அம்மாவுக்குக் கையிலே கொஞ்சம் வைச்சு அழுத்தினா சரிம்பாங்கன்னுதான் நினைக்கிறேன்… ஏழைக் குடும்பந்தான் போலிருக்குது…” “நான் பொய் சொல்லமாட்டேன்.” “அட சீ, சொல்றத்தைக் கேப்பியா? உன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கிறத்திலே என்ன லாபம்? இன்னொண்ணு நினைவு வச்சுக்க, போலீஸ் நான் சொல்லறதைத் தான் கேக்கும்…” “உங்களுக்கு இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி கொடுத்துடப் போறாங்க… நான் தான் ஜெயிலுக்குப் போகப்போறேன். என்னைக் காப்பாத்தணும்னு உங்களுக்கு என்ன இவ்வளவு தீவிரம்?” “கோர்ட் கேஸ் ஆகக் கூடாதுண்ணுதான் பாக்கறேன். உன்னைப் பத்தி எனக்குக் கவலையில்லே…” “ஓ! கோர்ட்லே ஆயிரத்தெட்டுக் கேள்வி கேட்பாங்க… டூரிஸ்ட் விவகாரம் எல்லாம் அடிபடும்… அதுக்காகச் சொல்றீங்களா?” - “ஏன் நடுரோட்லே நின்னுகிட்டு கத்தறே? மெதுவாய் பேசேன். எனக்கென்ன காது செவிடா?” “அந்தப் பையன் செத்துப் போயிட்டா என்ன செய்வீங்க?” “அதைப்பத்தி நீ கவலைப்படாதே… நான் சொல்றபடி கையெழுத்துப் போட்டுத் தா… சீக்கிரம், ஹீம்… அந்த அம்மா கிட்டே பக்குவமாப் பேசி இன்ஸ்பெக்டர் ஒரு”ஸ்டேட்மெண்ட் வாங்கிப்பாரு.” - “என் மனசக்குச் சரியா படலே, நீங்க செய்யறது.” “இது என்னடா கஷ்ட காலம்? அரிச்சந்திரனையெல்லாம் டிரைவரா வெச்சுக்கிட்டு, ரோதனையா போச்சு… நீ, நான் சொல்றபடி செய்யப் போறயா இல்லையா? உன் குடும்பத்தைத் தூக்கிக் கிணத்திலே போடணும்னா, உன் விருப்பப்படி செய்… என்னதான் ஆனாலும், கடைசியிலே நான்தான் ஜெயிக்கப் போறேன், அதை நினைவு வெச்சுக்க…” வேலுவுக்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை. முதலாளி மந்திரிகளுக்கு நெருங்கியவன் என்பது அவனுக்குத் தெரியும். அவன் சொல்லுவதுபோல் நிச்சயமாக அவன் ஜெயிக்கத்தான் போகிறான். உண்மைக்காகப் போராடி ஒருவன் ஜெயிலுக்குப் போவதினால், யாருக்கு என்ன பிரயோஜனம்? அவன் குடும்பம் அவனை காந்தி என்றோ, ஏசு என்றோ ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. வாழ்நாள் முழுவதும் தூற்றிக் கொண்டு இருக்கப் போகிறார்கள். அந்த அம்மாவுக்குத்தான் என்ன பயன்? அந்தப் பையனோட கால் திரும்பியா வரப்போகிறது. அந்த அம்மாவுக்கு எவ்வளவு தரப் போகிறான். இந்தப் படுபாவி? தனக்கும் ஏதாவது கொடுத்தானானால், அதையும் சேர்த்து அந்த அம்மாவிடம் கொடுக்கலாம். இந்த அளவுக்குத் திருப்திப்பட்டுக் கொள்ளுவதைத் தவிர அவனால் வேறு என்ன செய்யமுடியும்? “அவங்களுக்கு எவ்வளவு தரப் போறீங்க?’ என்று கேட்டான் வேலு. “எவங்களுக்கு?” “அந்த அம்மாவுக்கு…” “அதைப்பத்தி உனக்கென்ன கவலை?” “நானும் பிள்ளைகுட்டிக்காரன்…” “வாய்யா வா… பெரிய நியாயம், அநியாயமில்ல பார்த்துக்கிட்டிருந்தீங்க இத்தனை நேரம்? இதுக்குத்தானா? சரி ஏதானும் தரேன், வாங்கிக்க…” “ஏதானும்னா எவ்வளவு?” “குழந்தை மேலே வண்டியை ஏத்திட்டு பேரம் வேற பேசறியா? ஒரு பச்சை நோட்டுத் தரேன், ஒளிஞ்சி போ…” “பத்தாது.” “அடச் சீ!… உன் விருப்பப்படி என்ன ’ஸ்டேட்மெண்ட்” வேணுமானாலும் கொடுத்துக்க… இதுக்கு மேலே ஒரு பைசா கிடையாது.” வேலு பதில் கூறாமல் திரும்பினான். “அவ்வளவு திமிரா உனக்கு?… உனக்கு அழுவறது தெரிஞ்சா, ராஜூ சும்மா விடுவானா? அவனுக்கு வேற அழுதாவணும். சரி, இரண்டு வாங்கிக்க… போ… அதுக்கு மேலே பிச்சுப் பிடுங்காதே…” வேலு யோசித்தான். இதற்குமேல் இவன் தரமாட்டான். தான் வாங்கிக் கொள்வது தப்புதான்… என்ன செய்ய? அரிச்சந்திரனுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும், தான் கடைசி மட்டும் உறுதியாக நின்றால், கத்தி மாலையாக விழுமென்று, ஆனால் இந்தக் காலத்தில் கத்தி கத்தியாகத்தானிருக்கும்; மாலை போட்டுக் கொள்கிறவர்கள் நட்சத்திரேயர்கள். “என்ன, சரியா? சிக்கிரம் சொல்லு.” என்றான் முதலாளி. “சரிங்க.” இருவரும் உள்ளே சென்றபோது, இன்ஸ்பெக்டர் யாரோ இருவரிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்தப் பையனுக்கு உறவுக்காரர்களாக இருக்க வேண்டுமென்று நினைத்தான் வேலு. இன்ஸ்பெக்டர், “இவங்க அந்தப் பையனோட அக்காவாம், ஸ்கூல் டீச்சரா இருக்காங்களாம், இவரு அவங்க ஹஸ்பெண்ட், தாலுக்கா ஆபீஸ்ல இருக்காரு.” அவர்கள் கூட ராஜூ குறிப்பிட்ட, வக்கீல் குமாஸ்தா பாலு அய்யரும் வந்திருந்தார். அவர் ஓர் ஓரமாக நின்று கொண்டிருந்தார். “ஏதோ தவறு நடந்துட்டுதுங்க… பையன் திடீர்னு காலைத் தொங்கப் போடுவான்னு டிரைவர் எதிர்பார்க்கலே…” ஓரமாக நின்று கொண்டிருந்த பாலு அய்யர் அப்பொழுது அங்கு வந்தார். முதலாளி சொன்னது அவர் காதில் விழுந்திருக்க வேண்டும். “பையன் திடீர் என்று காலைத் தொங்கப் போடலை, தொங்கப் போட்டிருந்த கால் மேல்தான் பஸ் மோதிட்டு… அவ்வளவு தூரம் ரிவர்ஸ் செய்ய வேண்டிய அவசியமே இல்லை” என்றார் அவர். “நீங்க யாரு?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர். “வக்கீல் குமாஸ்தா.” இன்ஸ்பெக்டர் முதலாளியைப் பார்த்து புன்னகை செய்தார். அந்தப் பெண்ணின் கணவன் பேச ஆரம்பித்தான். “இதோ பாருங்க… என்னோட மாமியாருக்கு இந்தப் பையன் ஒரே பிள்ளை. ஒரு பொண்ணு, ஒரே பிள்ளை அவ்வளவுதான்… அவளை நம்பித்தான் அவ இருக்கா, படிப்பிலே மகா கெட்டிக்காரன், பள்ளிக்கூடத்திலே விஜாரிச்சுப் பாருங்க…” “இன்னி சாயங்காலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வாங்களேன்… எல்லாம் பேசிக்கலாம்…” என்றார் இன்ஸ்பெக்டர். ரவி அப்பொழுது ஆபரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்தான். “எப்படி இருக்கு டாக்டர்?” என்று கேட்டான். ரவி, பையனோட அம்மா யாரு?” என்று வினவியவாறு சுற்றுமுற்றும் பார்த்தான். அம்பியின் அம்மா எழுந்து வந்தாள். “நன்னாத்தான் அடிபட்டிருக்கு… நான் என்னாலே முடிஞ்சதைச் செய்யறேன்… இரண்டு காலும் ரொம்ப மோசமாத்தான் இருக்கு…” என்றான் ரவி. “உயிருக்கு ஆபத்தில்லையே?” என்று கேட்டான் முதலாளி. “அதில்லே… பட்… போத் லெக்ஸ் மே கோ அவுட் ஆஃப் ஆக்ஷன். திஸ் ஈஸ் டு பாட்! ஆல்ரைட் இன்ஸ்பெக்டர், நான் என் ரிபோர்ட்டைத் தரட்டுமா?” இன்ஸ்பெக்டர் முதலாளியைப் பார்த்தார். முதலாளி டாக்டரிடம் சொன்னான்; “நான்தான் வண்டியோட ப்ரொப்ரைட்டர்… வந்து…வந்து…கொஞ்சம் தனியா பேசலாமா உங்களோட?” “என்ன பேசணும்?.ஐ ஹாவ் நதிங் டு டு வித் யு. “சரி, உங்க ரிபோர்ட்டைக் கொடுங்க… உள்ளே போகலாமா?” என்றார் இன்ஸ்பெக்டர். அவர்கள் இருவரும் உள்ளே சென்ற பிறகு, முதலாளி ராஜூவைத் தனியாக அழைத்துக் கொண்டு போய்க் கூறினார். “பாலு அய்யர்கிட்டே பேசிப் பாரு…” “பேச வேண்டாம்… ஒத்துக்கிற ஆள்தான்.” என்று முணுமுணுத்தான் ராஜூ” “எவ்வளவு?” “பெரிய ஒண்ணுக்குக் குறைஞ்சு வாங்கமாட்டார்னு தோணுது… பேசிப் பார்ப்போம்.” “உனக்குண்டா இதிலே கமிஷன்” “என்னங்க முதலாளி இப்படிப் பேகறீங்க? பாலு அய்யர் அங்கே இல்லேன்னு பொய்ச் சொல்லச் சொல்றீங்களா? அது நியாயமில்லே…” “வேலுவுக்கு ரெண்டு, உனக்கு ரெண்டு, பாலு அய்யருக்கு அஞ்சு… வக்கீல் குமாஸ்தா பார்ப்பான், இதுக்குக் குறைஞ்சு வாங்கமாட்டான், சீக்கிரம் கேட்டுச் சொல்லு.” “எட்டு மட்டும் போலாங்களா? அவரையே கொண்டு அந்தப் பையனோட அக்காவையும் அவங்க புருஷனையும் சமாளிக்கச் சொல்றேன்…” “சரி. எதை வேணுமானாலும் பண்ணு. போய்த் தொலை!” முதலாளிக்கு எரிச்சல் அதிகமாகிக் கொண்டு வருகிறது என்பதை உணர்ந்த ராஜூ, அந்த இடத்தை விட்டு அகன்றான். அம்பியின் அம்மா திடீரென்று சிரிக்க ஆரம்பித்தாள். எல்லோரும் திடுக்கிட்டு அவள் பக்கம் திரும்பினர். “அம்பி… என்னடா விளையாட்டு இது… அம்பி…அம்பி…” என்று பலமாக, சப்தம் போட்டுக்கொண்டே குறுக்கும், நெடுக்குமாக ஓடத் தொடங்கிவிட்டாள். நாலைந்து பேராக அவளைக் கட்டிப் பிடித்து உட்கார வைத்தனர். அம்பியின் அக்கா அவளருகே சென்ற, “அம்மா, அம்மா, என்னம்மா இது” என்று அழாக் குறையாகக் கேட்டாள். வேலு, அவள் கைகளை இறுக்கப் பற்றிக் கெண்டே சொன்னான். “பெரியம்மா! என்னை நம்புங்க, உங்க பையன் பொழைச்சிடுவான்.” “ஆமாம் பொழைச்சிடுவான், நிச்சயமா பொழைச்சிடுவான்” வறுை தலையை ஆட்டிக் கொண்டே அவள் சொல்லிவிட்டு, உரக்கச் சிரிக்கத் தொடங்கினாள். ரவி வெளியே வந்தான். ’வாட் ஈஸ் திஸ்?…” நர்ஸ் அவரிடம் விரைவாக வந்து சொன்னாள்: ’ஷி ஹாஸ் பிகம் இன்ஸேன்.” ரவி கேட்டான்: “இவங்களுக்க வேண்டியவங்க யாரானும் இருக்காங்களா?…ஓ ! நீங்கதானா? கைண்ட்லி டேக் ஹர் ஹோம்… மிஸ் தாமஸ். கிவ் ஹர் ஸம் ஸேடேட்டிவ் இன்ஜெக்ஷன். நாங்க இதுக்கு ட்ரீட் பண்ண முடியாது. நோஃபெஸிலிட்டீஸ்…” இன்ஸ்பெக்டர் முதலாளியிடம் சொன்னார்: “டாக்டர் ரிப்போர்ட்டைக் கொடுத்திட்டாரு… உங்க டிரைவர், கண்டெக்டர் ரெண்டு பேரோட ஸ்டேட்மெண்ட் வேணும்… சம்பவத்தைப் பார்த்தவரு அந்த அய்யரு… அவரோட ஸ்டேட்மெண்ட்டும் வேணும். எல்லோரும் ஸ்டேஷனுக்குப் போவோம் வாங்க…” அம்பியின் அத்திம்பேரோடு பேசிக் கொண்டிருந்த பாலு அய்யர் சிரித்துக் கொண்டே சொன்னார்: “சரி நானும் வரேன். இவரையும் வேணும்னா கூட்டிண்டு வரேன்.” வேலு அவரை உற்று நோக்கினான். பாலு அய்யர் அவரையும் சரிக்கட்டி விட்டாரென்று அவனுக்குப் புரிந்தது. அவர் முதலாளியருகே வந்து நின்றார். “அந்த அம்மாவை யார் கூட்டிக்கிட்டுப் போவாங்க?” என்று கேட்டான் முதலாளி. நர்ஸ் கொடுத்த இன்ஜக்ஷனின் காரணமாக அம்பியின் அம்மா மயக்கமுற்றிருந்தாள். “ஜானகி, நீ அம்மாவை.” என்று ஆரம்பித்த அம்பியின் அத்திம்பேர் முதலாளியைக் கேட்டார்: “அவ எப்படி அழைச்சிண்டு போக முடியும்? கார் இருக்குதா உங்ககிட்டே?” இன்ஸ்பெக்டர் சொன்னார்: “நாம் போலீஸ் ஜீப்லே போவோம். இவரோட கார்லே உங்க வொய்ஃபும், அவங்க அம்மாவும் போகட்டும், டிரைவர் அவங்களைக் கொண்டு போய்விட்டுட்டு, ஸ்டேஷனுக்கு வரட்டும்…” “வேலு, ஐயா சொல்றபடியே செய்” என்றான் முதலாளி. எல்லாரும் வெளியே வந்தார்கள். இன்ஸ்பெக்டர் முதலாளியிடம் சொன்னார்: “டாக்டர் ரிப்போர்ட் தான் சாதகமா இல்லே.” “நான் யாரு, என்ன செய்ய முடியும்னு சொன்னீர்களா அந்த மடையன்கிட்டே?” “சொன்னேன், அவன் கேக்க மாட்டேங்கிறான். கத்துக் குட்டி ராஸ்கல்…” ரவி அப்பொழுது வெளியே வந்தான். “எல்லோரும் இப்படிப் போயிட்டிங்கன்னா யாரு இங்கே இருப்பாங்க, பையனைப் பாத்துக்க!” “கொஞ்ச நேரம் கழிச்சு என் வொய்ஃப் இங்கே வருவா.” என்றார் அம்பியின் அத்திம்பேர். “என்னய்யா டாக்டரே! ரிபோர்ட் இப்படிக் கொடுத்திருக்கீங்க?” என்று கேட்டான் முதலாளி. “உங்க இஷ்டப்படி ரிபோர்ட் கொடுக்கணும்னா நான் எதுக்காக டாக்டராக இருக்கணும்?” “நான் டி.எம்.ஓ.வைப் பார்த்துப் பேசிக்கிறேன். உங்க அதிஷ்டம், தண்ணி இல்லாத காட்டுக்குப் போகணும்னா போங்க…” “நீங்க யாருன்னு நினைச்சிண்டிருக்கீங்க, இப்படி பேச?” என்று சீறினான் ரவி. . “நான் நினைச்சிக்கிட்டிருக்கேன், சுரக்காய்க்கு உப்பு இல்லேன்னு. போய்யா தெரியும்… நானும் யாருன்னு உனக்குத் தெரியாமலேயா இருக்கப் போவுது…?” “கேவலம். இந்த வேலைக்காக, நீ விட்டெறியப் போற காசுக்கு இந்தக் கும்பல் மாதிரி, காக்கா கணக்கா காத்திண்டிருக்கப் போறேன்னு நீ நினைச்சியா…? யு கான் ஜாலி வெல் கோ டு தி சீஃப்மினிஸ்டர் ஃபார் ஆர் ஐ கோ… நான் என் ரிப்போர்ட்டை மாத்தப் போறதில்லை… எவ்வளவு தைரியம் இருந்தா ஆஸ்பத்திரி வாசல்லியே நீ இப்படிப் பேசுவே, உனக்காக இந்த இன்ஸ்பெக்டர் பேரம் பேச வரான்… கோர்ட்லே கேஸ் வந்து ஜெயிச்சா, பத்தாயிரக் கணக்கிலே அழனுமேன்னு, சாமார்த்தியமா சமாளிக்கப் பாக்கறிங்களா?” இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டார்: “டாக்டர்… கொஞ்சம் மரியாதையா பேகங்க…” “என்னடா மரியாதை வேண்டிக் கிடக்குது உங்களுக்கு? ஒரு உசிரு உள்ளே மன்றாடிக்கிட்டு இருக்குது… எப்பொடாப்பா பஸ்ஸை ஏத்தப் போறேன்னு காத்துக் கிட்டிருந்தாப்பலே, எல்லாரும் பொணத்தைக் கொத்தித் தின்ன வந்துட்டீங்களே, படுபாவிகாளா? இதோ பாருய்யா முதலாளி… உன் பிச்சைக் காசு எனக்கு வேண்டாம். நான் உண்மையைச் சொல்றேன்… பஸ்ஸை ஏத்தினது நான்தான்… கோர்ட்லே கேஸ் வரட்டும்… நாட்டை நாற அடிச்சிட்டு இருக்கிற கும்பல் யார் யாருன்னு எல்லாருக்கும் தெரிய வேணாம்? டாக்டரய்யா, வாங்க, பையனைக் கவனிச்சுக்க நான் இருக்கேன்…” என்று கூறிக்கொண்டே உள்ளே சென்றான் வேலு. கனிவண்ணன் நன்னிலம் - மருங்கூரை தாய் மண்ணாகக் கொண்ட கனிவண்ணன் பிறந்த மண்ணில் தன்னோடு வாழ்ந்த வாழ்ந்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையையும், மண்ணையுமே முக்கிய களமாக வைத்து நேர்த்திமிகு கலைப்படைப்பை வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர். ‘…பெரும்பாலும் நேசத்திற்குரிய கிராம மனிதர்களைச் சுற்றி எதார்த்த பாணியில் எளிய நடையில் எந்தச் சிக்கலுமில்லாத கதைப்போக்கில் தன் முத்திரையைப் பதித்துக் கொண்டிருப்பவர் கனிவண்ணன். கிராமம் என்றால் நேசத்திற்குரிய மனிதர்களின் அவலம் மட்டும் தானா? இல்லை. இந்த அவலத்திற்குக் காரணமானவர்களாகிய அரசியல்வாதிகளும், நிலப்பிரபுக்களும் கூட அடையாளம் காட்டப்படுகின்றனர். ஆர்ப்பாட்டம் அதிகமில்லாமல் ஒடுக்கப்பட்ட மனிதர்களுக்குச் சார்பாக நின்று எதிர்காலம் குறித்த நம்பிக்கைத் தொனியோடு கதைகள் நடத்திச் செல்லப்படுகின்றன. பரிச்சயமான மனிதர்கள் பரிச்சயமான சம்பவங்கள், மனிதர்களையும், சம்பவங்களையும் அறிமுகப்படுத்தும் போதே அடுத்த நிகழ்ச்சி நமக்குத் தெரிந்துவிடுகிறது. எல்லாம் வெளிப்படையாக இருப்பது போன்ற தோற்றம். எதிலும் சிக்கலில்லை. மர்மமில்லை, அப்படியே மர்மமிருந்தாலும் படைப்பாளியின் தத்துவநோக்கு அவற்றைத் தோலுரித்துக் காட்டும் என்பதுதான் எதார்த்த பாணி இலக்கியத்தின் சாதனையாகச் சொல்லப்படுகிறது. இத்தகைய எதார்த்த பாணியிலிருந்து எள்ளளவும் வழுவாமல் கதைகளை நடத்திச் சென்றிருக்கிறார் கனிவண்ணன்…’ ஒரு கிராம சபையில்…’ சிறுகதைத் தொகுதிக்கு அ.மார்க்ஸ் மதிப்பீடு செய்யும் போது கனிவண்ணனைப் பற்றி இப்படிச் சொல்லியிருக்கிறார். மிகச் குறைவாக எழுதினாலும் அவர் படைப்புகள் அடர்த்தியானவை, ஆழமானவை.  பேயாண்டித்தேவரும் ஒரு கோப்பைத் தேநீரும் ’காலம்பற கரெக்டா ஆறு மணிக்கு வந்துடறேன்னு போனவன் இன்னும் காணல. சட்டுனு வந்துடு, வெயிலுக்கு முன்னாடி போயிட்டு வந்துருவோம். கிட்டனுகலா இருக்குன்னு சொன்னதுக்கு அப்படி சொல்லிப்புட்டு போனான் ஆளக் காணுமே.” இளவெயில் முதுகுக்கு இதமாக இருந்தது. முகத்தில் பட்டால் மயக்கம் வரும். வயதானதினால் தெம்பு வடிந்து அடித்துப்போட்டது போல உடம்பு இருந்தது. குளிரில் ஈரக்குலை நடுங்கியது. தொண்டையில் வலி பின்னி மூச்சுவிட சிரமமாக இருந்தது. காறித் துப்பிக் கொண்டிருந்ததில் உள்நாக்கு வலித்தது. மூக்கு வழியாக மூச்சுவிட முடியவில்லை. வாயை அகலத் திறந்து கப்கப்பென்று காற்றை உறிஞ்சி விடும்போது மார்புக் கூட்டுக்குள் ஒரு இரைப்பு எலி உட்கார்ந்திருந்தது. சூடாக ஒரு டீ குடித்தால் தேவலாம் போலிருந்தது. ‘அந்தப் பய மவன் வந்தா, எப்படியும் ஒரு டீ வாங்கித் தருவான். எப்ப வருவான்னு தெரியல’ -மனதுக்குள் புலம்பிக் கொண்டே பேயாண்டித் தேவர் கண்களை இறுக மூடிக்கொண்டார். நெற்றிப் பொட்டு விண் விண் என்று தெறித்தது. “என்னா தாத்தா உக்காந்துட்டே” குரல் கேட்டு மெதுவாக கண்களைத் திறந்தார். எதிரே மேலத்தெரு முத்தையனின் எட்டு வயது மகள். “எங்க போயிட்டு வர்ற” “டீ வாங்கிட்டு வாறேன்” கையிலிருந்த சிறு எவர்சில்வர் தூக்கைக் காண்பித்தாள். பாத்திரத்தில் தேநீர் வழிந்து கோடுகள் இருந்தன. “டீய தாத்தாவுக்குத் தாயேன்” “கொடுத்துட்டு, பைப்புத் தண்ணிய புடிச்சிக்கிட்டு போவவா” “வூட்டுக்குக் கொண்டு போறதுக்குள் ஆறிப் போயிடுமே” “சட்டியில ஊத்தி அடுப்புல வச்சு ஒலயப் பத்த வச்சா ஒரு நிமிஷத்துல சுட்டுடும்” “பொக நாத்தம்ல அடிக்கும்” “எந்த நாத்தமா இருந்தா என்ன. சூடா சக்கரத் தண்ணி தொண்டையில போவுலனா அப்பாவும், அம்மாவும் எழுந்திரிக்க மாட்டாங்க” “பழகிட்டா அப்படித்தான். நீ குடிக்கிறது உண்டா” “வே…” முகம் கழித்துக் கொண்டாள். “சரி. ஒப்பன் கிட்ட சொல்லு வயசுக்கு வந்ததும் தேவர் தாத்தாவைத் தான் கட்டிக்குவேன்னு, என்ன”. “கெளவனையா” பழிப்புக் காட்டுவிட்டு அவள் நடந்தாள். போலிருந்தது. தேநீர் குடித்து சரியாக பத்து நாட்களாயின. தினமும் அதிகாலையில் குளிரைப் பொருட்படுத்தாமல் நல்லதம்பி தேநீர் கடையில் போய் நிற்பார். அவன் அடுப்பைப் பற்ற வைத்து, பால் சட்டியைத் தூக்கி வைத்து, பாய்லரில், தண்ணீர் கொதிக்கும் வரை அமைதியாக நின்று கொண்டிருப்பார். நல்லதம்பி போடும் முதல் தேநீர் அவருக்குத்தான். முதல் போனியே கடன்தானா என்று சகுனம் பார்க்காமல் “தாத்தா இந்தா” என்று டீ கிளாசை நீட்டுவான்… கை பொறுக்காத சூட்டிலும் இரு கைகளாலும் கிளாசைப் பிடித்துக் கெர்ண்டு ஒரு ஓரமாகச் சென்று உட்காருவார். கிளாசை முகத்துக்கருகே கொண்டு போய் ஆவியை வாயில் இழுத்து நெஞ்சுக் கூட்டுக்குள் அடைத்து பின் மெதுவாக வெளியேற்றுவார். இவ்வாறு நான்கைந்து தரம் செய்தபின் நெஞ்சு பாரம் இறங்கியது போல உணர்வார். பின் மெதுவாக உதட்டருகே கிளாசைக் கொண்டு போய், டீ ஒருவாய், ஆவி ஒருவாய் என்று சூடு ஆறுமுன் உள்வாங்கிக் கொள்வார். பின் எழுந்து தலை முதல் முழங்கால் வரை வேட்டியால் போர்த்திக் கொண்டு, மாரியம்மன் கோவில் காட்டுக் கருவை தோப்புக்குள் போய்விட்டு நேராக பெரியகுளம் நோக்கி நடப்பார். கருவைக் குச்சியை ஒடித்து, விழாமல் இருக்கும் எட்டுப் பற்களையும் தேய்த்து சுத்தம் செய்து முகம் கழுவி நெஞ்சுச் சளியை காறி, கனைத்து, இறுமி வெளியேற்றி புத்துணர்வுடன் மீண்டும் நல்லதம்பி டீக்கடைக்கு வருவார். சூடாக இன்னொரு டீ குடித்து விட்டு வீட்டிற்குப் போவார். இப்படி தினமும் பழகிய உடம்பு. மாச முதல் வாரத்தில், ஒரு நாள், போஸ்ட் மேன் நயினார் தேவரைத் தேடி நல்லதம்பி தேநீர்க் கடைக்கு வருவார். அந்த நேரத்தில் தன்னை எதிர்பார்த்து அவர் அங்கே குந்தியிருப்பார் என்று நயினாருக்குத் தெரியும். தேவரிடம் கைநாட்டும், நல்லதம்பியிடம் கையெழுத்தும் வாங்கிக்கொண்டு, பேரன் அனுப்பிய பணத்தை நயினார் தருவார். எண்ணிப் பார்க்காமல் பணத்தை மடியில் கட்டிக்கொண்டு, தனக்கும் நயினாருக்கும் ஸ்பெஷல் டீ போடும்படி தேவர் கூறுவார். டீயைக் குடித்துவிட்டு, தேவரிடம் ‘கிப்ட் பணம்’ எதுவும் வாங்காமல் தபால் கட்டுகளை எடுத்துக்கொண்டு நயினார் புறப்பட்டு செல்வார். கடைசியில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, மடியை அவிழ்த்து நூறு ரூபாய் நோட்டு அல்லது இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகளாய் எடுத்து நல்லதம்பியிடம் தேவர் நீட்டுவார். மனக்கணக்காகப் போட்டு உத்தேசமாக இத்தனை தேநீர் என்று கூட்டி, பணத்தை எடுத்துக் கொண்டு மீதத்தை நல்லதம்பி தருவான். அதை வாங்கி மடியில் இருக்கும் பணத்தோடு சேர்த்துக் கொண்டு நேராக வீட்டிற்குச் சென்று பேரனின் மனைவியிடம் ஒப்படைப்பார். மகராசி அதை வாங்கி வைத்துக் கொள்வாளே தவிர எவ்வளவு பணம் வந்தது எவ்வளவு அதில் இருக்கிறது என்று ஒரு வார்த்தை இதுவரை கேட்டதில்லை. பேயாண்டித் தேவருக்கு வேறு செலவுகள் என்றும் இல்லை. பீடி, சுருட்டுகளில் பழக்கம் இல்லை. வாலிய பிராயத்தில் கள் குடித்ததுண்டு. மருங்கூர் ஐயரிடம் பண்ணை ஆளாக இருந்தபோது மாதம் இரண்டு கலம் நெல்; மூன்று ரூபாய் கூலி. வேலை இல்லாத நாட்களில் கையில் நாலனா எடுத்துக்கொண்டு மானாம்பேட்டைக்குப் போவார். ஒரு படி கள் ஓரணா. அதிகமாகப் போனால், அதுவும் கள் புளிப்பு இல்லாமலிருந்தால், இரண்டு படி கள் குடிப்பார். ஓரணாவிற்கு வறுத்த கருவாடு. அதோடு சரி. வீடு திரும்பிவிடுவார். நாடு சுதந்திரம் அடைந்த நேரம். சாராயக்கடைகளை எடுத்துவிட்டு ஊருக்கு ஊர் தேநீர் கடைகளைத் திறந்தார்கள். கள் பழக்கத்திலிருந்து தேநீருக்குத் தாவினார் தேவர். நாளாக நாளாக, தேநீர் இல்லாமல் பொழுது விடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. வீட்டிற்குப் போய் ஒரு வாய் நீராகாரம் குடிக்கலாம் என்று எண்ணினார். இந்தக் குளிரில், நெஞ்சில் சளி பின்னிக் கொண்டிருக்கும் போது நீராகாரம் உள்ளே போனால் காய்ச்சல் வந்து படுத்துக்கொள்ள வேண்டி வரும் என்ற நினைப்பு வந்தது. அந்தப் பய வர்ற வரைக்கும் இங்கேயே குந்தியிருப்போம் என்று முடிவு செய்தார். பூவரசு மரத்திலிருந்து பனித்துளி மழை போல் கொட்டிக் கொண்டிருந்தது. பனியின் அடர்த்தி இன்னும் குறையவில்லை. தேவருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. பயல் இன்னும் வரவில்லை. அவனுக்கு வேறு ஏதும் அவசர ஜோலியா வர்றேன்னு சொல்லிப்புட்டு வராம இருக்க மாட்டான் பாப்போம்.’ அவன் வந்தாலும் நல்லதம்பி கடையில் போய் தேநீர் குடிக்கக்கூடாது என்று முடிவு செய்தார். தாத்தா மனோபலம் இல்லாத ஆள். ஒரு பத்துநாள் கூட தாக்குப் பிடிக்க முடியாம வந்திட்டாரு என்று நெனைப்பான். “பேசாம துறையூருக்கு போற வழியில வேற கடையில ஒன்னுக்கு ரெண்டு டீயா குடிக்கனும் என்று எண்ணினார். இன்னொரு பக்கம், மனசு ஏன்தான் இந்த அல்லாட்டம் போடுது. எவ்வளவு வைராக்கியம் காத்த மனசு என்ற நினைப்பும் வந்தது. ‘முடியாத காலத்துல உசிர வச்சிக்கிட்டிருக்கிறதே பெரிய கொடும. நாலு காசு சம்பாதிக்க முடியாம போனாப் பொறவு எதுக்காவ உயிர் வாழனும். பெத்த புள்ளைங்களே பாரமா நெனப்பாங்க. பேரப் புள்ள நெனக்கிறதுக்குப் கேக்கணுமா. அயோக்கியப் பய’ மூக்கை உறிஞ்சி சிந்தினார். வேட்டி முனையில துடைத்துக் கொண்டார். தலை கனம் அழுத்தியது. ‘பய மவன எப்படி வளத்தேன். அப்பனும், ஆத்தாவும் காலராவுல போன பின்னாடி, நெஞ்சிலும் தோள்லயும் போட்டு, குருவிய வளக்கிற மாதிரி ஆளாக்குனேன். உத்தூர் வாத்தியார் கால்ல விழுந்து கையில விழுந்து பள்ளிக்கொடத்துல சேத்து, என் வாயக்கட்டி வயத்தக்கட்டி படிக்க வச்சேன். என் கோவத்தத் தவிர எல்லாத்தையும் வித்து, குருக்கத்திக்கு அனுப்பி, வாத்தியாராக்கினேன். இன்னிக்கு இவன் வாங்குற சம்பளம் ரெண்டாயிரம் இருக்கும்னு எல்லாரும் சொல்றாங்க. ஒரு நாள் இவ்வளவு சம்பளம் வாங்குறேன்னு இந்தப் பய சொன்னதுண்டா.’ ’என்னா கெலவாடி உக்காந்திடிச்சு சாலையில் போய்க் கொண்டிருந்த குறக் கோவாலு பொஞ்சாதி கேட்டாள். சீவி முடித்து, ஒருருபாய் அகலத்திற்குக் குங்குமப் பொட்டு வைத்து, நெற்றியில் வழிந்த எண்ணை பளபளக்க அவள் நடந்த நடை. ‘எங்கடி போயிட்டு வார’ ‘சிம்பு தீந்து போச்சு. மூங்கி மரம் வாங்கணும். நரிமணம் போனேன், நாயிடு இல்ல, திரும்பி வாறேன்.’ ஆளப்பாத்தா மூங்கி மரம் வாங்கப்போன மாதிரியா இருக்கு… இம். தேவர் இழுத்தார். தொடர்ந்து பேச முடியாமல் சளி அடைத்தது. ஆனாலும் அவள் வேறு மாதிரி புரிந்து கொண்டாள். ‘போயா. வயசானாலும் புத்தி மட்டும் மாறல’ கோணல் சிரிப்புடன் நகர்ந்தாள். தேவருக்கு மீண்டும் பேரன் மீது இருந்த ஆத்திர உணர்வுகள் கொப்புளித்தன. “ஊர் ஜனங்களுக்கு என்னப் பத்தி இருக்குற அக்கற இவனுக்கு இல்லியே. எவ்வளவு பாடுபட்டு வளத்தேன். என்னா கேள்வி கேட்டுட்டான், நெஞ்சில் கொள்ளிய சொருவுன மாதிரி. எம்மவன் மட்டும் உசுரோட இருந்திருந்தா இந்தப் பய இப்புடிப் பேசியிருப்பானா. எம் புள்ளைங்க வளந்துட்டானுங்க. செலவு அதிகமாவுது. நீ, ஒம்பாட்டுக்கு அம்பது, அறுவதுன்னு செலவு செய்யறத உட்டுப்புடு, இல்லாட்டி இனிம பணத்த அவ பேருக்கே எம்.ஓ. பண்ணிடுவேன். அந்தக் குட்டியும் புருஷன் பேச்சுக் கேட்டுக்கிட்டிருந்தாளே ஒழிய, ஒரு வார்த்த, வயசான காலத்துல வேற என்னா செலவு செய்யுது, தாத்தா. பீடி உண்டா, வெத்தல பொகையில உண்டா, டீ தானே. குடிச்சிட்டுப் போறார்னு சொல்லியிருக்க வேணாம்.’ நேரம் போனதே தெரியவில்லை. சூரியன் தலைக்கு மேல் வந்துவிட்டது. ஆனாலும் உறைக்கவில்லை. பள்ளிக்கூடம் விட்டுக் குழந்தைகள் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். காலையிலிருந்து வெறும் வயிற்றுடன் இருந்தபோதும் தேவருக்குப் பசியில்லை. போகிறவர்களையும், வருகிறவர்களையும் கூப்பிட்டு இரண்டு வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தால் பொழுது போனதும் தெரியவில்லை. வாய் மட்டும் இல்லாமலிருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தார். மற்ற உயிரினத்திலிருந்து மனிதனைப் பிரிப்பதே வாய் வார்த்தை மட்டும்தான் என்பது தேவரின் கருத்து. வயதானக் காலத்தில் வாய் வார்த்தை ஒன்றுதான் நல்ல பொழுதுபோக்கு அம்சமாக இருக்கிறது. வாயை மூடிக்கொண்டு வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தால் பைத்தியம் பிடித்துவிடும் என்பது அவரது அபிப்பிராயம். “தாத்தாவ்” தொள தொளப்பான அரைக் கால் சட்டையும், திட்டுத்திட்டாக அழுக்குப் படிந்த மேல்சட்டையும் அணிந்த பேரனின் மகன் ஓடி வந்தான். “தாத்தாவ். அம்மா ஒன்னக் கூட்டியாரச் சொல்லுச்சு” மேல்மூச்சு, கீழ் மூச்சு வாங்க, படபடப்புடன் கத்தினான். “யேய் நீயாவே ஸ்கூல்ல இருந்து வந்துட்டியா” “ஒன்னப் பாத்து நின்னுக்கிட்டிருந்தேன். காணும். நானா தம்பிய அழச்சிக்கிட்டு வந்துட்டேன்” “அட பயலே” அலுப்பு முறித்துக் கொண்டு தேவர் எழுந்தார். பின் பக்கமாக முதுகை வளைத்து நிமிர்ந்தார். எண்பது வயதுக்கு மேலாகியும் கூனல் விழாத முதுகு. மெலிந்த உடல். கூரிய பார்வை. எள் விழுந்தாலும் காது கேட்கும். சளி தொந்தரவைத் தவிர மற்றபடி பூரண ஆரோக்கியம். “டே பாடம் ஒழுங்கா படிச்சியா” “ஓ” “தம்பிப் பய அழுதானா?” “இல்ல” “வெளயாட்டு கிளயாட்டுனு மரம் மட்டையில ஏறாதே, என்ன. இங்கிலிசு நல்லா படிக்கிறியா?” “ரொம்ப நல்லா புரியுது தாத்தா. நானும் அப்பா மாதிரி வாத்தியாரா ஆவப் போறேன்.” “சரி சரி ஆவு. ஆனா கடைசி காலத்துல ஒப்பன கவனிக்காம அம்போன்னு வுட்டுடாதே, என்ன” “போ, தாத்தா. சம்பளம் வாங்குனா அப்பன் கிட்ட தரமாட்டேன். அப்பாவ எனக்குப் புடிக்கல. ஒனக்கு நெறைய டீ வாங்கித் தருவேன்.” “அடே கண்ணா. நீ தாண்டா என் மொவன்.” குனிந்து கொள்ளுப்பேரன் முகத்தில் முத்தமிட்டார். வீட்டு வாசலில் பேரனின் மனைவி உட்கார்ந்திருந்தாள். முகத்தில் வாட்டம். “தாத்தா, எங்க போனிங்க காலயில இருந்து உங்களக் கானோம் உண்மையான அக்கறையுடன் கேட்டாள். “சும்மா பொழுது போகணும்ல. ரோட்டடியில போயிருந்தேன்.” “பத்து நாளா ஆளே சரியில்ல. ஒம் பேரன் வந்துட்டுப் போனதுல இருந்து முகம் வாடிக்கிடக்கு”. “அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா.” “டீ செலவு செஞ்சதுக்காவ திட்டினார்னு தானே வருத்தம். சொல்லணும்னு நான் ஒன்னும் சொல்லல. வரவு செலவு எழுதி வச்சிருந்த நோட்ட அவரு படிச்சிட்டாரு” “அதனால பரவாயில்லமா’ தேவர் குரல் நடுங்கியது. “இன்னில இருந்து நாமே டீ போட்டுத் தருவம்னு அரமாணி பால் வாங்கி வச்சேன். உங்களக் காணோம். காச்சி வச்சிருக்கேன். டீ போட்டுத் தரவா அவள் குரல் தழுதழுத்தது. அவளுக்குப் பின்புறம் நின்றிருந்த கொள்ளுப் பேரன் வேண்டாம் என்பது போல சைகை செய்தான். நான் சம்பாரிச்சு ஒனக்கு நெறைய வாங்கித் தருவேன்’ என்று அவன் விழிகள் கூறின. தேவரின் மனசுக்குள் ஆயிரம் மத்தாப்புக்கள். “வேண்டாம்மா. பால ஒம் புள்ளைங்களுக்குக் கொடு.” உயிர் இருக்கும் வரை இனி தேநீர் குடிப்பதில்லை என்ற வைராக்கியத்துடன் தேவர் கூறினார். கொள்ளுப் பேரன் முகத்தில் ஆனந்தக்களிப்பு; அவர் நெஞ்சுக்குள்ளும். ம. ராஜேந்திரன் தஞ்சை - எடஅண்ணவாசலைப் பிறந்த மண்ணாகக் கொண்டவரான ம.ரா. வின் சிறுகதை வெளிப்பாட்டின் சிறப்பம்சம் சொல் சிக்கனம். செற்களை இவர் விரயம் செய்வதேயில்லை. தான் பார்த்த - தெரிந்துக் கொண்டுள்ள - அனுபவித்த வாழ்க்கையை ஒரு வட்டத்திற்குள் கொண்டு வருவதில்லை. கதைக்கருவிற்கு ஏற்ப பன்முகப்பட்டு வெளிவரும். பலகுரல் தன்மை ஒரு படைப்பில் இருந்தால் தான் அது இலக்கியமாகும் என்ற நிலைபாட்டைக் கொண்டவர். “இவரது கதைகள் கிராமப்புறங்களில் சுரண்டலுக்கு உள்ளாகும் மக்கள் பக்கம் நிற்கின்றன. நகர்ப்புற உதிரித் தொழிலாளர்களின் வாழ்க்கையை அனுதாபத்தோடு சித்திரிக்கின்றன. அதிகாரத்துவப் போக்கை அம்பலப்படுத்துகின்றன. இத்தகைய கதைகள் இன்றைய காலக்கட்டத்துக்குத் தேவையானவை” என்று முனைவர் கோ. கேசவன் மதிப்பீடு செய்துள்ளார். “…பாத்திரங்களின் வாழ்க்கைச் சூழலையொட்டியதாகவே நடை உள்ளது. பெரும்பாலும் சின்னச்சின்ன சொற்கள் கவிதை மாதிரி சுண்டக் காய்ச்சிய உரைநடை. கதை நிகழ்வுக்கு அடர்த்தியைக் கூட்ட மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ள இயற்கை வருணனைகள். இப்படி எழுத்துக்களில் எங்கேயும் துருத்திக் கொள்ளாது தன்னைக் கரைத்துக் கொள்கிற படைப்பாளி படைப்பு முழுக்க நிறைந்திருப்பான். இந்தச் சூட்சுமம் தெரிந்திருப்பது தான் இவரது வெற்றி” என்று வளர்ப்பு தொகுதிக்கு மதிப்பீடு செய்திருக்கும் கே.எம். வேணுகோபால் சொல்லிருப்பதை ம.ரா. வின் படைப்புகளைப் படிக்கும் போது நாமும் உணரலாம். நிஜங்கள் “சார்…சார் வடுவூர் ஒண்ணு!” விடிந்தால் தீபாவளி, பஸ் எல்லாம் ஒரே கூட்டம். பட்டாசும் புதுத்துணியும் வாங்க தஞ்சாவூர் டவுன் முழுவதும் கூட்டம் கூட்டமாய் மக்கள் திரிந்தனர். வாங்கியவர்கள் ஊருக்குப் போகிற அவசரத்தில் பஸ் ஸ்டாண்டில் மொய்த்தனர். கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் கண்டக்டர்கள் திண்டாடினர். “டிக்கெட் வாங்காம யாரும் பஸ்ல ஏறாதீங்க கீழே நின்ற காக்கிச் சட்டைக்காரர் எச்சரித்தார். சாதாரண நாட்களில் வடுவூர், மன்னார்குடி என்று போகிற வழிகளில் உள்ள ஊர்களை எல்லாம் ஏலம்கூவி பஸ்ஸுக்கு கூட்டம் சேர்க்கத் துடிக்கிறவர், இன்றைக்கு மிதப்பில் எச்சரித்துக் கொண்டிருந்தார். “சார்…சார்…வடுவூர் ஒண்ணு” கண்டக்டர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. பத்து வயசு முருகேசனுக்கு அதற்கு மேல் முண்டியடித்து டிக்கட் வாங்க முடியவில்லை. கூட்டம் நெருங்கியது. “எல்லாம் துரு டிக்கெட் தான்” கண்டக்டர் இடைவழியில் உள்ள ஊர்களுக்கு டிக்கெட் போட மறுத்தார். இந்த பஸ் வடுவூர் வழியா மன்னார்குடி போனாலும் வடுவூருக்கு டிக்கெட் கிடையாது. முருகேசன் யோசித்தான். “அப்படின்னா மன்னார்குடிக்கு டிக்கெட் ஒண்ணு குடுங்க!” அவன் முடிவெடுத்து ‘துரு’ டிக்கெட் கேட்கும் போது கண்டக்டர் டிக்கெட்டை முடித்து விசில் கொடுத்தார். இனி அடுத்த பஸ் தான். எஞ்சி நின்ற கூட்டம் ஆசுவாசமடைந்தது. ‘அடுத்த பஸ்ஸுக்கு எடுத்த, ஒடனேயே ’துரு’ டிக்கெட்ட கேட்ற வேண்டியதுதான்’ அவன் யோசனையில் பையைத் துழாவினான். மன்னார்குடி வரை டிக்கெட்டுக்குக் காசு இருந்தது. மன்னார்குடிக்கு டிக்கெட் எடுத்து இடையில் வடுவூரில் இறங்கி மூணு மைல் நடந்து ஊர் போகவேண்டும். இப்போதே இருட்டி விட்டது. தீபாவளி பட்டாசு வெளிச்சம் துணிச்சலைத் தந்தது. டவுனுக்குச் சிக்கிரமாகவே தீபாவளியும் வந்துவிட்டது. வானத்தில் ராக்கெட் பூக்கள் சிதறின. சிறிது நேரம் முருகேசன் வேடிக்கைப் பார்த்தான். அத்தான் கொடுத்த பணத்தில் அவன் வாங்கிய பட்டாசுகளைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். ’வீட்டுக்குப் போவதற்குள் தங்கச்சி தூங்கிடக் கூடாது.தூங்கினாலும் எழுப்பி வெடிக்கனும் மனசுக்குள் யோசனையில் நின்றான். “சார். சார். மன்னார்குடி ஒண்ணு” பஸ் வந்து நிற்பதற்குள் கண்டக்டரை நோக்கிப் போட்ட கூப்பாடுகளில் முருகேசனும் கலந்தான். “வேதாரண்யம் இருக்கா?” “நாலு குடுங்க” பனத்தை வாங்கிக் கொண்டு டிக்கெட்டை நீட்டினார் கண்டக்டர். வெகு சிரமத்தோடு டிக்கெட் வாங்கியவர் வெளியேறினார். இது வேதாரண்யம் பஸ். வேராரண்யம், திருத்துறைப்பூண்டி முடிந்து தான் மன்னார்குடி மன்னார்குடி போகிறவர்களும் வேதாரண்யத்திற்கு டிக்கெட் கேட்பார்கள். முருகேசனுக்கு வியர்த்தது. கையால் முகத்தைத் துடைத்துக் கொண்டான். ‘பட்டாக வாங்கலேன்னா வேதாரண்யத்துக்கே டிக்கெட் கேக்கலாம். கையில் அவ்வளவு காசு இல்லை. இப்பே என்ன பண்றது?’ முருகேசன் தனக்குத்தானே பேசிக் கொண்டான். “அடுத்த பஸ் எப்பங்க?” “டிக்கெட் வாங்காதவங்க பஸ்ல ஏறாதீங்க” எச்சரித்துக் கொண்டிருந்த காக்கிச் சட்டையைக் கேட்டான். “இதுதான் கடைசி பஸ்” சொல்லிக் கொண்டே காதில் இருந்த பீடியை கையில் எடுத்துக் கொண்டு பற்ற வைக்க நெருப்பு தேடிப் போனார். பஸ்ஸும் போனது. சிறுவர்களுடன் பெரியவர்களும் பஸ் ஸ்டாண்டில் அல்லாடினர். அடம் பிடித்துப் பட்டாசு வாங்க வந்த சிறுவர்கள் ஊருக்குப் போக முடியாத கவலையில் மெளனத்தில் அலைந்தார்கள். பட்டாசு வெடிக்க ஊதுவத்தி, பலூன், பொம்மை, கிலுகிலுப்பை கூவிக் கொண்டு கூட்டத்தில் சிலர் புகுந்துவிற்றனர். இந்த நெருக்கடியில் அதிஷ்டத்தைச் சுமந்த சிறுவர்கள் லாட்டரி சீட்டை வாங்கச் சொல்லி, கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். முருகேசன் வருத்தமாய் இருந்தான். “தீபாவளிக்கென்று ஸ்பெஷல் பஸ் விடுவாங்க” கூட்டத்தில் யாரோ நம்பிக்கையை விதைத்தார்கள். கூட்டம் நின்றது. வெடிசத்தம் அதிகரித்துக் கொண்டிருந்தது. நேரமும் கடந்து கொண்டிருந்தது. இனிமேல் பஸ் இல்லை என்றதும் வசதியுள்ளவர்கள் கூட்டணியாய் டாச்சி ஸ்டாண்டுக்குப் போனார்கள். சிலர் லாரியை மறிக்கலாம் என்று சாலையில் இறங்கினர். “தீபாவளியும் அதுவுமா லாரி எங்க வரப் போவுது” அவநம்பிக்கையில் சிலர் தயங்கினர். பஸ் ஸ்டாண்டு மக்களால் நிரம்பிக் கிடந்தது. தஞ்சாவூர்க் கதம்பமும், மல்லிகையும் முகம் வாடிச் சுருண்டு கிடந்தன. கடைக்காரர்கள் அதில் தண்ணீர் தெளித்தனர். எடை பார்க்கும் எந்திரத்தின் ‘பளிச் பளிச்’ என்ற விளக்கொளி கண்ணைக் கூசியது. ஊனமுற்ற பிச்சைக்காரர்கள் அந்த நேரத்திலும் காசுக்காக நின்று நின்று நகர்ந்தனர். வெளியூரிலிருந்து வரும் பஸ் எல்லாம் ஷெட்டுக்கு விரைந்தன. இளைஞர்கள் தியேட்டர் பக்கம் நடை கட்டினார்கள். பஸ் ஸ்டாண்டு கடைகளும் மூடப்பட்டன. கூட்டம் கொஞ்சம் கொஞ்சமா அசமடங்கியது. மூடிய கடைகளின் முன் படுக்க பலர் இடம் பிடித்தனர். மற்றவர்கள் நடைபாதையிலேயே கால் நீட்டினர். முருகேசன் பட்டாசுப் பையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஓரமாகப் படுத்தான். பஸ் ஸ்டாண்டு வெளிச்சமும், வெடிச்சத்தமும் அவனைத் தூங்க விடவில்லை. நினைவும், கனவுமாக அவன் புரண்டு கொண்டிருந்தான். அவன் அக்கா வீட்டிலேயே தங்கிவிட்டதாக ஊரில் அப்பாவும், அம்மாவும் நினைப்பார்கள். அதுவும் ஒரு வகையில் நல்லது தான். இல்லையென்றால் அப்பாவை விட அம்மா ரொம்பவும் கவலைப்படும். கிராமத்தில் பொழுது பட்டும் அவன் வல்லேனா, வீட்டில் இருந்தே அம்மா கூப்பாடு போடும். குளத்தங்கரையில இருந்தாலும் அவன் ஓடி வருவான். இதுவரைக்கும் தீபாவளிக்கு அவன் வீட்டில் இல்லாமல் போனதில்லை. அப்பா எங்காவது கடன் வாங்கிக்கிட்டு வந்து வாடா பட்டாசு வாங்கப் போவோம்னு டவுனுக்குக் கூட்டிக்கிட்டுப் போவாரு. தீபாவளி டவுனே பார்க்க வேடிக்கையா இருக்கும். பட்டாக கடையில கூட்டம் தாங்கமுடியாது. கூட்டத்திலேருந்து நூறு இருநூறு ரூபாய்கெல்லாம் வெடி வாங்கிகிட்டு இருப்பாங்க. கூட்டம் குறைஞ்சு இவன் கிட்டே போவும் போது அவன் வாங்க நினைச்சதெல்லாம் தீர்ந்து போயிருக்கும். கடைகடையா ஏறி இறங்கி அடுத்த தீபாவளிக்குப் பாத்துக்கலாம்னு அப்பா ஆறுதல் சொல்ல அவனும் திரும்பி நடப்பான். சரின்னு திரும்பி துணி எடுக்கப் போனா, நடைபாதை பூரா ரெடிமேடு துணிக்கடை. அங்கேயும் கூட்டம்தான். அப்பா கையிலுள்ள பணத்திற்கே துணி தேடுவார். எப்பவும் அவனுக்குத்தான் முதலிடம். அவன் தான் பள்ளிக்கூடம் போகிறவன். தீபாவளி முடிந்து எல்லோரும் புதுச்சட்டையில் பள்ளிக்கு வருவார்கள். அவனுக்காக சட்டை தேடும்போது அதனுடைய நிறமோ தரமோ எல்லாம் அவன் பார்க்கமாட்டான். சட்டையில ‘சீல்’ இல்லாமல்தான் தேடுவான். இப்படி துணி எடுக்கிற ஒவ்வொரு தடவையும் எல்லோருக்கும் பளிச்னு தெரியும்படி வெள்ளை நிறத்தில் பெரிய பெரிய எழுத்துக்களாய் ‘சீல்’… இருக்கும். அதுவே போதும் இந்தச் சட்டையின் பிளாட்பாரப் பூர்வீகத்தைச் சொல்ல. இந்த முறையாவது சீல் இல்லாத சட்டையாய் எடுக்கணும் என்று அவன் முடிவெடுப்பான். ஆனால் அப்படி ஒரு சட்டையே அங்கே கிடைக்காது. அளவும் அப்படித் தான். உத்தேசமா இருக்கும். அவன் அரணாக்கயிறு போட்டிருப்பது இதற்குத்தான். கால்சட்டைப் பொத்தானை அவன் போட்டுக் கொண்டதாய் நினைவில்லை. வயிறும் ஒரே நிலையில் இருக்காது. சாப்பிட்டதும் சரியாக இருக்கிற கால் சட்டை குளத்துப் பக்கம் போய் வந்தால் இடுப்புக்குக் கிழே சரியும். அரணாக்கயிற்றைக் கால்சட்டைக்கு மேல் அடிக்கடி போட்டுக் கொள்வான். அதனால் அதுவும் அறுந்துவிடும். அப்போதெல்லாம் வயிற்றை எக்கி இரண்டு கைகளாலும் கால் சட்டையின் இரண்டு பக்கத்தையும் பிடித்துக்கொண்டு இடுப்பில் இறுக்கி சொறுகி விட்டுக் கொள்வான். முருகேசன் இடுப்பைத் தடவிப் பார்த்தான். இப்போதும் அரணாக் கயிறு இல்லை. ‘அம்மாவிடம் சொல்லனும்’ முணகிக் கொண்டே புரண்டு படுத்தான். ’இந்தத் தீபாவளிக்கு அப்பா டவுனுக்குப் போயிருப்பாரா? நான் இல்லாதது அப்பாவுக்கு கஷ்டமா இருந்திருக்கும் தங்கச்சிக்குப் பாவாடை வாங்கியிருப்பாரு. பட்டாசு கொளுத்தத் தங்கச்சி என்னைத் தேடும். பக்கத்து வீட்டு கோபால் இன்னேரம் வெடிச்சிக்கிட்டிருப்பான். அவனுக்குப் போட்டியா வெடிக்க முடியாமப் போச்சே, இந்த வருஷம் தான் ஆசைப்பட்ட மாதிரி பட்டாசு வாங்க முடிஞ்சுது. ஆனா அதுவும் இப்ப வெடிக்க முடியாம பஸ் ஸ்டாண்டுலே படுத்துக் கெடக்க வேண்டியிருக்கே… பேசாம அக்கா வீட்டுக்கே போயிடலாமா… வேண்டாம். அப்பா சொல்ல சங்கடப்பட்டு தான என்னை அனுப்புனாரு. அங்க அத்தானோட மொதத்தாரத்துப் புள்ளைகளும், அக்காவோட மாமியாரும் என்ன நெனைப்பாங்க. …அக்கா எதுக்கு அழுதுச்சுன்னும் தெரியல. அம்மாகிட்ட சொல்லனும்… தலைத் தீபாவளிக்கு பொண்ணு மாப்பிள்ளையை அழைத்துச் சீர் செய்ய அவன் அப்பா கடன் கேட்காத ஆள் இல்லை. சில நாள் அவனையும் கூடவே அழைத்துக் கொண்டு போயிருக்கார். கடன் கிடைத்தால் உடனே போய் துணி எடுத்துக் கொள்ளலாம் என்ற ஆசையில் அவனும் அப்பாவுடன் நடந்திருக்கான். ஆனால் கடைசி நாள் வரைக்கும் அலைய வைத்துக் கழுத்தறுத்துவிட்டனர். முருகேசன் வெடிச்சத்தத்தில் விழித்தபோது தான் அவன் தூங்கிப் போனதே தெரிந்தது. பட்டாசுப் பையைப் பார்த்தான். பத்திரமாக இருந்தது. எழுந்து நடந்தான். “வடுவூர்… மன்னார்குடி… வடுவூர்.. மன்னார்குடி” காக்கிச் சட்டைக்காரர் கூப்பாடு போட்டார். முருகேசன் ஓடி வந்து ஏறிக் கொண்டான். பஸ்ஸில் கூட்டம் இல்லை. டிரைவரும் கண்டக்டரும் நெற்றியில் திருநீறும் தீபாவளி மகிழ்ச்சியுமாய் இருந்தனர். டிரைவருக்கு மேலே இருந்த சாமிப்படம் ஊதுவத்திப் புகையில் மறைந்தது. பஸ் வேகமாகச் சென்றது. ஐப்பசி குளிர் ஊசியாய் குத்தியது. பஸ் ஸ்டாண்டு தரையில் படுத்துக் கிடந்ததும் பஸ் வேகமும் அவனுக்கு உடம்பெல்லாம் நடுங்கின. கையையும், காலையும் கட்டுப்படுத்திக் கொண்டாலும், ஈரக்குலையே உள்ளுக்குள் நடுங்கியது. பல்லைக் கடித்துக் கொண்டான், முடியவில்லை. வெளியே தீபாவளி வானத்தில் வெளிச்சப்பூக்கள் சிதறின. வடுவூர் வந்தது. இறங்கினான். இப்போது இன்னும் நடுங்கியது. டீ கடையைத் தேடினான். டீ கடைகள் தனியாக இல்லை. இரவில் அவையும் வீடுகளாகவே இருந்தன. அங்கேயும் கொண்டாட்டம் தான். நடந்தால் நடுக்கம் சரியாகிவிடும் என்ற நம்பிகையில் ஊரை நோக்கி நடந்தான். ‘மூணு மைல் நடக்கணும்’ மனசுக்குச் சொல்லிக் கொண்டான். பட்டாசுப் பையைக் கைமாற்றிக் கொண்டு நடையில் வேகம் கூட்டினான். வழியெங்கும் வீட்டு வாசல்களில் மத்தாப்பு வெளிச்சங்கள். புதுத்துணியில் குழந்தைகளும், பெரியவர்களும் சிரித்து நின்றனர். . அவன் அப்பா இந்த வருசம் யாருக்கும் துணி எடுத்திருக்க முடியாது. அதனால் தீபாவளி முடிந்த மறுநாள் அவன் பள்ளிக்கூடம் செல்ல வேண்டியிருக்காது. எல்லாரும் புதுச்சட்டையில் பள்ளிக்கூடம் வரும்போது அவன் மட்டும் பழைய சட்டையில் போவது கஷ்டம். அவன் அப்பாவே அவனைப் போக வேண்டாம் என்பார். அதில் அவனுக்கு மகிழ்ச்சி இருந்தது. காலையிலேயே தூண்டிலை எடுத்துக்கொண்டு புறமடுவுக்கோ, உப்புக் குளத்துக்கோ, ஒட்டக்குளத்துக்கோ போய்விடலாம். முழங்கால் தண்ணீரில் நாள் முழுக்க நின்று தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் சுகத்தை நினைத்துக் கொண்டே நடந்தான். “டேய்… டேய்… வராத நில்லு” இவன் வயதுப் பையன்கள் சாலையை மறித்து நின்றார்கள். முருகேசன் நின்று பார்த்தான். அணுகுண்டு வெடிக்கவில்லை. ஒதுங்கி நடந்தான். ரொம்ப தூரம் வந்த பிறகும் அவன் திரும்பிப் பார்த்தான். அது வெடிக்கவில்லை. அவர்கள் நெருங்கவுமில்லை. வெடி வெடிக்க வேறு இடம் மாறிச் சென்று கொண்டிருந்தனர். நிலம் வெளுத்தது. புஸ் வாணம் கொளுத்தியதாய் கீழ்வானத்தில் பிரகாசம் வந்தது. அவன் ஊரும் வந்தது. அவனுடைய கூட்டாளிகள் எல்லாம் சாலையில் வெடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கண்களுக்குப் படாமல் சுற்றி வயல்காட்டு வழியாக அவன் வீட்டின் கொல்லைப்புறம் வந்தான். அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் தங்கச்சிக்கு அம்மா குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். வேலிப்படலைத் திறந்து கொண்டு இவன் நுழைய சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தது அம்மா தான். “முருகேசு… இந்த நேரத்துல… ஏதுடா பஸ்…” அம்மா ஓடிவந்து அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கவலையுடன் கேட்டாள். அப்பாவும் சத்தம் கேட்டு வந்தார். “அக்கா நல்லா இருக்கா…? அத்தான் கோவிச்சுக்கலியே. நீ என்ன சொன்ன?” அடுக்கடுக்காய் வந்த கேள்விகளில் அப்பாவின் மன உளைச்சல் தெரிந்தது. அவருக்குத் தன் மீதே வெறுப்பு. தலைத் தீபாவளிக்கே இப்படி நேர்ந்துவிட்டதில் சங்கடம். “அம்மா…அம்மா…” கண்ணில் விழுந்த சியக்காய்துள்ளைக் கசக்கிக் கொண்டே எரிச்சலில் தங்கச்சி அழுதது. அம்மா தலை துவட்டிவிட்டதும் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு ஈரத்தோடு ஓடி வந்து அவனிடமிருந்த பட்டாசுப் பையைப் பிடுங்கிக் கொண்டது. “நான் அப்பா சொன்னதைத் தான் சொன்னேன்” “என்ன சொன்னேன்னு விவரமா சொல்லுடா” சீக்கிரம் வெடி வெடிக்கப் போக நினைத்த முருகேசனை அப்பா விடவில்லை. அவன் ஏதாவது மாற்றாகச் சொல்லி இருப்பானோ! புள்ளையை விட்டே சொல்ல வேண்டியதாச்சே, அப்பா கவலைப்பட்டார். அம்மா அவன் தலையைக் கோதினாள். வெடிச்சத்தத்தில் மிரண்ட பறவைகள், திடீரென்று மக்களுக்கு ஏதோ பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைத்து ஊரை விட்டு கத்திக் கொண்டே வெளியேறின. முருகேசனுக்கு அப்பாவைப் பார்க்கப் பாவமாக இருந்தது. “தலைத் தீபாவளிக்கு வேட்டி, புடவை எல்லாம் வாங்கியாச்சு. அக்காவுக்கு அரக்கு நெறத்துல புடவை எடுத்திருக்கு. திடீர்னு அப்பாவுக்கு ரெண்டு நாளா காய்ச்சல். அப்புறமா அம்மாவுக்கு அம்மாவாத்துப் போச்சு. அதான் அப்பா வர முடியலை. என்னை சீர்மட்டும் குடுத்துட்டு வரச் சொன்னாங்க. தலைக்குத் தண்ணி ஊத்துனதுக்கப்பறம் அழைக்க வர்றோம்னு சொல்லச் சொன்னாங்கன்னேன்!” அம்மா ‘ஊம்’ கொட்டி கேட்டது. “அவுங்க என்ன சொன்னாங்க?” அப்பா மீண்டும் கேட்டார். “ஒண்ணும் சொல்லலை. அக்கா தான் என்னைத் தனியா கூட்டிப் போயி ’அப்பாவுக்கு இப்போ எப்படி இருக்குன்னுச்சு? நான் அதுகிட்டே அப்பாவுக்கு ஒண்ணுமில்லே. கேட்ட எடத்திலேருந்து அப்பாவுக்குப் பணம் கெடைக்கலை. அதனால வேட்டி, புடவையெல்லாம் வாங்க முடியலை. அப்பாதான் இப்படி சொல்லச் சொன்னுச்சுன்னேன்!” “அக்கா மாமியா என்ன சொன்னுச்சு?” அம்மாவின் பங்குக்கு ஒரு கேள்வி வந்தது. “நான் போனப்பு அவுங்க இல்லை. மொதத்தாரத்து புள்ளைகளுக்கு வளையல் வாங்கப் போயிருந்தாங்க” “அப்புறம்…” “அப்புறம் அத்தானுக்கும் நெலமை தெரிஞ்சிபோச்சு, அக்கா சொல்லிச்சு” மெளனம் கனத்தது. முருகேசன் கலைந்தான். “ஆனா… அத்தான் வந்து, நீ இதெல்லாம் சொல்லாதே, எங்கம்மா வந்ததும் தலைத் தீபாவளிக்கு அழைச்சிக்கிட்டுப் போவ நீ வந்திருக்கிறதா சொல்லுன்னாரு அழைச்சிக்கிட்டுப் போனா அப்பா என்னைத் திட்டும்னு சொன்னேன். நீ சும்மா கூப்புடு, நாங்க யாரும் வரமாட்டோம்னு சொன்னாரு. அவுங்க அம்மாவுக்கு மட்டும் தெரிய வேணாம்னாரு. சரின்னு நானும் அழைச்சேன்? “அக்கா மாமியா என்ன சொன்னாங்க?” “விடிஞ்சா தீபாவளி இப்ப வந்து கூப்புட்டா எப்படின்னாங்க? ஒடனே அத்தான் தான் மாமாவுக்கு எதோ ஒடம்பு சரியில்லையாம். அதனால தான் முருகேசனை அனுப்பியிருக்காங்கன்னு சொன்னாரு. ஒடனே அவுங்க சரி அப்படின்னா நீ ஒம் பொண்டாட்டியக் கூட்டிக்கிட்டுப் போயிட்டு வான்னாங்க. எனக்கு தின்னுக்கு ஆயிடுச்சி. “அதெல்லாம் நான் புள்ளைங்களையும், ஒன்னையும் விட்டுட்டுப் போவ முடியாது. வேணும்னா அவன் அக்காவை அழைச்சிக்கிட்டுப் போவட்டும்னு அத்தான் சொல்ல, நீங்க வல்லன்னா நானும் போகமாட்டேன்னு அக்கா சொல்லுச்சு. தலை தீபாவளிக்குப் பொண்ணை மட்டும் அனுப்பப்படாதுடான்னு அவுங்க அம்மா சொல்ல, அப்படின்னா லட்சுமியும் இருக்கட்டும். அப்புறம் போய்க்கலாம்னு அத்தான் சொல்ல, சரின்னு நானும் கோவிச்சுகிறது மாதிரி புறப்பட்டு வந்துட்டேன்” “ராத்திரியேவா பொறப்புட்டே” அம்மா ஆதங்கப்பட்டாள். “ஆமாம்மா.. பஸ் கெடைக்கல. பஸ் ஸ்டாண்டுலேயே. படுத்துக்கெடந்துட்டு மொத பஸ் ஏறி வந்தேன்.” “பஸ் இல்லேன்னா அக்கா வீட்டுக்குப் போயிருக்குறது தானேப்பா… இப்படி அனாதை மாதிரி பஸ் ஸ்டாண்டுல படுத்திருந்து வந்திருக்கியே…ங்ங “இல்லம்மா… தலைத் தீபாவளிக்கே அழைக்க துப்பில்ல. புள்ளையை வேற இங்க அனுப்பிட்டாங்கன்னு அக்கா மாமியார் சொல்லுமோன்னுதான் போவலம்மா.” அம்மாவுக்குத் தொண்டை அடைத்தது. குரல் தழுதழுத்தது. முருகேசனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு செறுமினாள். அவனுக்கு அக்கா தஞ்சாவூரில் அழுதது நினைவுக்கு வந்தது. ஆனாலும் அம்மாவிடம் சொல்லவில்லை. தஞ்சைப்ரகாஷ் தஞ்சை மானம்புச்சாவடிக்காரர். மண்ணில் தழைத்தோங்கிய பொய்க்கால்குதிரை, பொம்மலாட்டம் சரபோஜி ராஜாவின் அருங்கலைப் பொக்கிஷம் மற்றும் கவிதைப் பொழுதுகள், இலக்கிய சூழலால் அழகுப்படுத்திக் கொண்டவர். தி. ஜானகிராமன் , எம்.வி. வெங்கட்ராம், சுவாமிநாதஆத்ரேயன், கா.நா.க கரிச்சான்குஞ்சு போன்றோரிடையே நெருங்கி பழகி வளர்ந்த இவரது ஆரவாரம் அற்ற இலக்கிய சந்திப்புகள் பலப்பல. க.நா. சு. வின் ‘ஞானரகத்தில்’ வந்த இவரது கவிதைகளில்- வழி காட்டும் யவன இலக்கியம் போன்ற கட்டுரைகளில் - கள்ளம், கரமுண்டார்வூடு ஆகிய நாவல்களில் எல்லாம் மின்னலின் துடிப்பாய்ப் பளிச்சிடும் வலுவான எழுத்து ஆளுமையை அறியலாம். மனிதனின் வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் சமூகம் எத்தகையப் பொறுப்பு வைக்கிறது என்ற அடிப்படையில் படைப்பிலக்கியத்தை அணுக வேண்டும் என்ற போக்குக்கு எதிர் குரல் கொடுப்பவர் வெங்கட்சாமிநாதன் - இருவரும் தஞ்சை மாவட்டத்துக்காரர் தான் - க.நா.சு போன்றவர்களின் வழித்தோன்றலான பிரகாஷின் ஒட்டுமொத்த படைப்பின் ஆளுமையை உற்று நோக்கும் போது கலை, கலைக்காகவே என்ற சித்தாந்த வெளிப்பாடுகளோடு பாலியல்தூக்கலாய் நிற்பதை உணரமுடிகிறது.  பற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் இரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால் அடித்துச் சொல்ல முடியும். கடந்த பத்து நாளாக இந்த மூன்று மணி அவளை துரத்திக் கொண்டேயிருக்கிறது. இரவு வெகுநேரமாகியும் அந்தத் தீவில் அவன் வராத கஷ்டம் கூட அவளுக்குப் பெரியதாக தோன்றவில்லை. இந்த மூன்று மணி விழிப்பு தினமும் நேருகிறதே அதுதான் தாங்க முடியவில்லை. இந்த கிராமத்தில் அவளைக் கொண்டு வந்து விட்டு விட்டு அவன் போனது கூட ஏதோ கனவில் நேர்ந்தது போல் இருக்கிறதே தவிர நடந்ததாக தோன்றவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மூங்கில் குத்துகள், புளிய மரங்கள், இருபுறமும் வழிந்தோடும் காவிரி. இந்தக் கிராமத்தை அவன் ஏன் தேர்ந்தெடுத்தான்? இந்த மூன்று மணிக்கு விழித்துக் கொண்டு எப்பொழுது விடியும் என்று கொட்டக் கொட்ட விழித்திருக்கத்தானா? தினமும் அவன் வருவான் என்று எதிர்பார்ப்பதில் நாள் முழுவதும் கழிந்து விடுகிறது. இரவு ஒரு மணி வரை வழி மேல் விழிவைப்பது அடர்ந்த தூக்கத்திற்கு காரணமாகிவிடுகிறது. ஆனாலும் கத்தியால் குத்தி எழுப்பியது போல விடியற்காலை மூன்று மணி அளவில் அவன் விசாரங்களுக்காகவே திறந்து கொள்கிறது. ஆற்றை பார்த்துக் கொண்டேயிருப்பதில் சலிக்கிறதேயில்லை. அவன் வருவானா? என்று எதிர்பார்ப்பதைத் தவிர வேறு வேலை எதுவும் இல்லை. இந்த ஆற்றுக்கும், இந்த நீருக்கும் வேறு வேலையே இல்லை என்பது போல. லோச்சனாவுக்கு அவனை எட்டு வயதிலிருந்தே பழக்கம். எட்டு வயதிலேயே தெரியும். இவனைத்தான் கட்டிக் கொள்ளப் போகிறோம், கலியாணம் தள்ளிக் கொண்டே போனது. யாரும் கவலைப்படவில்லை. கவலைப்பட என்ன இருக்கிறது. அவன் அவளை விரும்பி தேடித் தேடி அவளைச் சுற்றி வந்தபோது யாராவது தடுத்தார்களா? அப்பா, அம்மா, மாமா, மாமி யாராவது தப்பு என்று சொன்னார்களா? பள்ளிக்கூடத்தில் படிக்கிற காலத்திலேயே அவன் கன்னத்தைப் பிடித்து நிமிண்டுவான். வாத்தியார்கள் கூட தடுத்ததில்லை. தெருவுக்கேத் தெரியும் இது ரெண்டும் தான் “இது” ஆகப் போகிறது என்று ஊருக்குத் தெரியும் லோச்சனா யார் என்று உலகத்துக்கே தெரியும் அவன் எப்படி என்று. எல்லாமே மங்களகரமாய் எப்போதும் போலத்தான் நடந்தது. கல்லூரியில் படிக்கும்போது கூட தஞ்சாவூருக்கு ரெட்டை மாட்டு வண்டியில் மோளை மாடுகள் குதிரைகளாய் பாய அவள் கல்லூரிக் கேட்டைத் தாண்டும் போது ராகவன் என்று மாணவர்கள் அவளுக்காகவே போடுகிற கூச்சல் வண்டிக்குள் அலையடிக்கும். பித்தளை கொப்பிகள் மினுங்க ரதம் போல் அவள் வண்டி, வரும்போது காலேஜூ ஒரமாக கார்பார்க்கிங் செட்டில் நிற்கும். ராகவனின் நீல நிற அம்பாஸிடர் அவளைப் பார்த்து விழிக்கும். அவளுக்கு எத்தனை சுகமான நாட்கள் அது. எதையும் அவள் விரும்பியதேயில்லை. காரணம் அவளுக்கு எதுவும் வேண்டாம். அதனாலேயே அவள் எதையும் யாரிடமும் கேட்டதேயில்லை. ராணிக்கு யார் எதை தர முடியும்? அவள் எதை விரும்ப வேண்டும்? லோச்சனாவுக்கு என்ன இல்லை? அவளைப் பார்த்துப் பெருமூச்சு விடத்தான் சுற்றிலும் பெண்கள் அடேயப்பா ! என்று கண்களை அகல விரித்து வாய்மூடி கொள்வதைத்தான் அவள் பார்த்திருக்கிறாள். லோச்சனாவுக்கு ஆரம்பத்தில் இது புரியாது. ஏன் இப்படி எல்லாரும் தன்னைக் கண்டு ஆச்சரியப்பட்டு காலில் விழுந்தும் விழாத குறையாக வணங்கி புரண்டு விழுகிறார்கள் என்பதும் லோச்சனாவுக்குப் புரிவதேயில்லை. வெள்ளைத்தோலும், சிவப்பு சர்மமும் மஞ்சுள் கூடிக் கிடந்த பால் போன்ற நிறமும், உடலின் மேடு பள்ளங்கள் துல்லியமாய் தெரியும் பட்டுப்புடவையின் சலசலப்பும், மெல்லிய மிருதுவான மணம் வீசும் பூக்களும், மிதமான சுடர் வீசும் வைர நகைகளும், கடல் போன்ற அவளது விழிகளும் யாரையும் அயர வைப்பது அவளுக்குப் பழக்கமாகி செறித்துப் போன விஷயம். காவிரியாற்றில் கொள்ளிடத்திற்கு மேற்கே வெகு தூரத்தில் ஒரு கண் திறந்ததுபோல ஒரு பசுமையான தீவுக் கிராமம்தான் இப்போது அவளுக்கு உறவு. அந்த கிராமம் அஞ்சினி. கிராமத்திலிருந்து பார்த்தால் இருபுறமும் கடல் போல் வழிவது புரியுது. அந்தக் காவிரி அவளைப் பார்த்து ஆசைப்படாது, கல்யாணம் செய்து கொள்ளாது. காலில் புரண்டு நக்காது, நகைப் பூட்டிக் கேட்காது. அலனைப் போல விட்டுவிட்டுப் போய் விடாது. போனாலும் வராது. வந்தாலும் போனது போல் இருக்காது. அவளும் இவற்றை எல்லாம் ஒத்துக் கொண்டுதானே இங்கு வந்தாள். இருபுறமும் மணல் மேடுகள், மணல் மேடுகளில் அவனை நோக்கியே பார்த்துக் கொண்டிருக்கும் பெரிய பெரிய புளியமரங்கள். திரும்பிப் பார்த்தால் தூரத்தில் புள்ளியாகத் தெரியும் அஞ்சினி கிராமம். புள்ளிப் புள்ளியாகத் தெரியும் நெட்லிங்க மரங்கள். இரவில் கோடிக்கணக்கில் கோடி கோடியாய் ஒளி கொட்டும் மின்மினிப் பூச்சிகள். அவளைத் தவிர அந்தக் காவிரித் தீவில் வேறு யாருமே இல்லையோ என்று எண்ண வைக்கும். அவள் காலையிலிருந்து என்னதான் செய்கிறாள்? என்னதான் செய்ய வேண்டும்? அந்த சின்னஞ்சிறு வீடு சுற்றிலும் பசுமையாக கிளுவை வேலி, வேலியில் படர்ந்து கிடக்கும் தூதுவளைக் கொடிகள். அவைகளைப் பின்னிக் கொண்டு கோவைக் கொடிகள், ஒரு பசுமையான சுவரையே உருவாக்கியிருந்த கொடி ரோஜா என்று அவளது உழைப்பை வாங்கிக் கொண்டு சுற்றிலும் தோட்டம் மண்டிக் கிடந்தது. கொடிகள் காய்களை தொங்கவிட்டிருந்தன. மாமரங்களில் மாங்கனிகள் மரத்திலேயே பழுத்து கனத்தன. வேர்ப் பலா சட்டி சட்டியாய் மலைமலையாய் காய்த்துக் கிடந்தன. அந்த வீட்டிற்கு அவளே வெள்ளையடித்தாள். திருவையாற்றுச் சந்தையில் வாங்கி வந்த இதமான டிஸ்ட்ம்பர் கலர்களில் அவளே அந்த வீட்டுச் சுவர்களுக்கு வண்ணம் தீட்டினாள். ஆற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஜன்னல்களுக்கெல்லாம் அவளே வர்ணங்கள் பூசினாள். துணைக்கு கூட அவள் யாரையும் கூப்பிட்டுக் கொள்ளவில்லை… ஒருமுறை அவன் வந்தான். “இன்னும் எவ்வளவு நாள் தான் இஞ்சயே இருக்கணும்” என்று கேட்டாள் லோச்சனா. அவன் ஒன்றுமே சொல்லாமல் சிரித்தான். பிறகு “உன்னப் பாத்தா எல்லாருக்கும் பயமாருக்கு! எல்லாரும் வாண்டாம் வாண்டாங்கிறாங்க! இப்படியே மூன்று வருஷம் ஆகிப்போச்சு. எனக்கு தெரியாது லோச்சனா? நீ வேற பெரிய ஆர்ட்டிஸ்ட் அப்படீன்னு சொல்லிகிட்டு உடம்பெல்லாம் வர்ணத்தெ மாறி மாறிப் பூசிக்கிறெ! உங்கம்மாவே சொல்றா ‘அவளுக்கு குணமாயிட்டதா? இல்லையா?ன்னு எப்படிடா தெரியும்? ஒடம்பு, கை, காலு, மொகம் எல்லாம் தாமரைப் பூவாவும், எலையாவும், காயாவும் இப்படி வரைஞ்சு வச்சுக்குமா ஒரு பொண்ணு!??’ அப்படிங்கிறா. நீ என்னடிான்னா அவா சொல்ற மாதிரி இருக்கவும் மாட்டேங்கிறே? ஒனக்குப் பிடிச்சிருந்தது போயிடுத்துன்னு எல்லாரும் நம்பினோம். அதுக்கு நாஞ் சொல்றபடியாவுது நீ கேட்கணும். இந்தப் படம் வரையிற சனியனை விட்டொழின்னு ஆயிரம் தடவை சொல்லியாச்சு. அஞ்சினியில குடியானத் தெருவிலருந்து அக்ரஹாரம் வரைக்கும் எல்லாரும் ஒனக்குப் பைத்தியம்ங்கிறா. ’யாராவது இப்டி ஊருக்கு வெளியே மூங்கித் தோப்புக்குள்ள சுடுகாட்டுக்குப் பக்கத்துல தனியாப் போய் ஒரு பொண்ணு தானே வீடு கட்டிண்டு இருப்பாளோ?! அப்படீன்னு பேசாதவளேயில்ல. எல்லாரும் என்னதான் பேசறா? நீயா தான் லெப்ரசி ஆஸ்பத்திரிலருந்து வந்து அஞ்சு வருஷமா இதே மாதிரிதான் இருக்கெ. உனக்கு எல்லாரு மாதிரியும் இருக்கணும்னு ஆசையே கிடையாதுன்னு நல்லாவே தெரியும். ஏதோ பெரிய தியாகின்னு ஒனக்கு நெனப்பு! என்னையானும் நினைச்சுப் பாக்கிறியா? நீ ஒங் குழந்தையை என்னிக்காணும் பார்க்கணும்னு எங்கிட்ட கேட்டுருக்கியா? நானா அழைச்சுண்டு வந்தாக் கூட யாரோ அன்னியப் பெண்ணப் பார்க்கிற மாதிரி பாக்குற…” என்றெல்லாம் ராகவன் தொடர்ந்து பேசிக்கொண்டே போனான். அவன் பேச்சுகூட அவளுக்கு கசந்தது. அவன் முகத்தைப் பார்த்துக் காறித் துப்பினால் என்ன, என்று கூடத் தோன்றியது. எட்டு வருடங்களுக்கு முன்னால் இருந்ததைப் போலத்தான் இப்பமும் ராஜா மாதிரி இருக்கிறான் ராகவன். கை நிறைய சம்பாதிக்கிறான். ஜாக்கிரதையாய் சேமிக்கிறான். ஊர் மெச்ச, உலகம் மெச்ச குழந்தை வளர்க்கிறான். குழந்தை! அவள் பெற்றெடுத்தக் குழந்தையா அது!? பிறந்ததுமே அவளுக்குத் தோலெல்லாம் ஒரு நமைச்சலை உருவாக்கியது அந்தக் குழந்தைதான். அந்த அரிப்பு அவளைத் தொட்ட போதே அவளுக்கு இருந்ததுதான். குழந்தை காய்ச்சல் அனல் பறந்த போது டாக்டர்கள் குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டாமென்று சொன்னார்கள். முதல் நாளிலேயே அவளுக்கும், அவள் குழந்தைக்கும் அரிப்பும், நமைச்சலும் உடம்பெல்லாம் பூரித்து விட்டது. சிவப்பு சிவப்பாய் தடிப்புகள் உடலெங்கும் பூரி இருந்தது. கோடு கோடாக வெட்டு விழுந்தது போல் தடிப்புகள், சினைப்புகள், தஞ்சை, மதராஸ், டெல்லி எல்லா டாக்டர்களும் “மதர் அலர்ஜி” என்றார்கள். அது தாய்க்கும், குழந்தைக்கும் இடையே முதல் திரையாக விழுந்தது. அவளுக்கு ‘மதர் அலர்ஜி’ என்று கேள்விப்பட்டபோது எல்லோரும் வியப்பால் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்! குழந்தைக்கு பேரு என்ன வைக்கிறதுன்னு கேட்டப்போ அவ சொன்னா “மைத்ரேயி”. ஆனால் பேரு யாருக்கும் புடிக்கல. அவா எல்லாரும் சுசீலான்னு கூப்பிட்டா. ராகவன் மகாலட்சுமின்னு கூப்பிட்டான். ஸ்கூல்ல அவளுக்குப் பேரு அஞ்சனா. எப்பவும் அம்மாகிட்ட வரமாட்டா. வரக்கூடாது. அம்மாவுக்கு உடம்பெல்லாம் தடிச்சு தடிச்சு போய்டும். புள்ளிப் புள்ளியா சினைப்பு தட்டிடும். ஆனாலும் ‘குழந்தை அம்மான்னு கத்தின்டே ஓடி வந்து கட்டிக்காதோ? மைத்ரேயின்னு வாய் நிறைய கூப்பிடணும்’ன்னு லோச்சனாவுக்கு முன்னல்லாம் தவிக்கும். தப்பித் தவறி மேல பட்டுட்டா ’என்னத் தொடாடீ’ மா எனக்கு “மதர் அலர்ஜி” அப்புறம் செறுமி செறுமிண்டு மூச்சு வாங்கும் அப்படின்னு சொல்லும் குழந்தை! ராகவன் என்ன ப்ராடெக்ட்னு லோச்சனாவுக்கு எப்பவும் தெரிந்ததேயில்லை. எப்பப் பார்த்தாலும் கட்டில்ல போட்டு படுக்க வச்சு வியாதி, வியாதின்னு மூலையில உக்காத்தி வச்சப்போதான் ராணிக்கு தான் ராணி இல்லைன்னு புரிஞ்சுது. பால் முத்து மாரெல்லாம் கனத்து பாலையெல்லாம் கொல்லைப்புறத்து மாட்டுக் கொட்டகையில் இடிந்த சுவர் செங்கலில் பிழிந்துவிடும் போதெல்லாம் நெஞ்சுக்குள்ளிருந்து பயம் வெளியே போய்க் கொண்டிருந்தது. மல்லிகைப் பூவை வாங்கி வைத்துக்கட்டி பாலை முறித்த போது அவளுக்கு உயிரே போனது போல் ஆயிற்று. கொல்லைப்புறத்து இடிந்த சுவர் செங்கல்லைப் பார்க்கும் போதெல்லாம் அது கதறுவது கேட்டது. லோச்சனாவுக்கு மிச்சமிருந்தது வெட்கம் ஒன்றுதான். ராகவன் ஒரு நாள் கேட்டான், “உனக்கு எதுக்கடி கொழந்தை?” பேச முடியவில்லை அவளால். எப்போதும் சுவற்றோரமாகத் திரும்பிப் படுத்துக்கிடப்பாள். எவ்வளவு நேரம் தூங்க முடியும்! யாரும் அவளை வேலை செய்ய விடுவதில்லை. சுவற்றை நகத்தால் கீறி சுவற்றுக் காரையை உதிர்த்துக் கொண்டிருந்தாள் லோச்சனா. காரை உதிர்ந்த இடம் ராகவனைப் பயமுறுத்தியது. “என்னடீது? செவுத்துல ரெண்டு கண்ணு வரைஞ்சு வச்சுருக்கிறே? எப்படி முழிக்குதுன்னு பாரேன்!” என்றான். அப்போது தான் லோச்சனம் தான் பண்ணிக் கொண்டிருந்த வேலை என்னவென்று பார்த்தாள். உண்மைதான்! சுவற்றிலிருந்து இரண்டு காளியின் கண்கள் அவளையே நோக்கி இமைச்சுடர் இரத்தம் சிந்த மூடி மூடி விழித்தன. அவளா இதை சுவற்றில் கீறினாள்!! ஆச்சரியம்! வர்ணங்கள் யார் பூசியது! அந்த இரண்டு விழிகளும் கண்ணீரில் நனைந்திருந்தன. இப்போது அந்த விழிகள் அவளையேப் பார்த்து மூடி மூடி, விழித்தன. அந்தக் கண்களுக்குள் அந்த உயிர் லோச்சனத்துக்கு வியப்பாய் இருந்தது. அன்றைக்குத் தான் லோச்சனத்துக்கு உயிர் வந்தது. படுக்கையை விட்டு எழுந்து கொண்டாள். உடலெங்கும் தடிப்பு தடிப்பாய் வரும் அலர்ஜி. வெள்ளையாய் திட்டுத் திட்டாய் ரோஸ் நிறத்தில் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் தீவு தீவாக, படலம் படலமாக, கைகளிலும், கால்களிலும் தொழுநோய் அவளை சீராட்டத் தொடங்கியது. திருவையாற்றுக்குப் போய் குப்பி குப்பியாக கலர்கள் வாங்கி வந்தாள். உடல் முழுதும் ஃபிரஷை வர்ணத்தில் தோய்த்து கைகளிலும், கால்களிலும் இலைகளும், கனிகளுமாய் வரைந்து தள்ளினாள். நகங்களின் விளிம்புகளிலெல்லாம் பொன் வர்ணங்கள் தீட்டி மறைத்தாள். விரல்கள் நகங்களோடு சுருங்கத் தொடங்கின. அக்ரஹாரத்திலும், வெளியிலும் பரவத் தொடங்கியது. கையிலும், கால்களிலும் மட்டுமில்லாமல் நெற்றியிலும், தலைமுடிக்குள்ளும் வெள்ளையாக சிவந்த நிறத்தில் குஷ்டம் பரவியபோது, எல்லோரும் அருவருப்பில் முகம் சுளித்தார்கள். ஊரும், உலகமும் அவளைத் தள்ளி வைக்கத் தொடங்கியது. மாமியாரும், மருமக்களும், நாத்தனாரும் மதனிகளும் வேறு வேறு வீடுகளைத் தேடி ஒதுங்கி ஓடிப்போனார்கள். அப்பாவும், அம்மாவும் அருவருத்து எட்டி நின்றார்கள். ராகவன் கிட்டே வராதது மட்டுமல்ல எட்டிக்கூட நிற்க மறுத்தான். சாப்பாட்டுக்கு அலுமினிய தட்டாயிற்று. குடிக்க இரும்புக் குவளை வந்தது. படுக்க பிரப்பம்பாயுமாயிற்று. கொல்லைக்கு வெளியே குடிசையுமாயிற்று. இதெல்லாம் கூட ராணி ஏற்பாடு தான். யாரும் அவளைத் தூர போகச் சொல்லவில்லை. அவர்கள் தான் தூரப் போனார்கள். ராணி அவர்களை விரட்டிக்கொண்டுதான் இருந்தாள். மைத்ரேயி மட்டும் “எப்போம்மா ஒனக்கு சரியாவும்” என்று எப்போதாவது கேட்கும். அவளுக்கு இருந்தது கித்தான் துணி மட்டும் தான் மீதமாக கொல்லைப்புறம் கிடந்த சாக்குகள் கித்தான்களா மாறின. கித்தான்களில் வெள்ளை, கருப்பு, நீல வர்ணங்களில் விபரீதமான காளியின் உருவங்களை லோச்சனத்திற்கு யாரும் வரையச்சொல்லித் தரவில்லை. டாக்டர்கள் ‘குஷ்டரோகம்’ தொற்று நோய் அல்ல என்றார்கள். கர்ம வியாதி இல்லை என்றார்கள். ஊசிகள் போட்டார்கள். தொடர்ந்து ராஜ வைத்தியம் ஆனாலும் லோச்சனம் தன் கை, கால்களில் வரைந்து கொண்டு, இலைகளும், பூக்களும், கனிகளுமாய் திரிவதை நிறுத்தவே இல்லை. அவள் கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் ஆஸ்பத்திரிக்குள் போய் வந்து கொண்டிருந்தாள். தொடர்ந்து ராகவனோ, வேறு யாருமோ, துணையில்லாமல் அவள் மட்டும் தனியே போய் வர ஆரம்பித்தாள். இனம் காண முடியாத சுமையைத் தாங்கி அவள் கித்தான்களில் அவன் கற்பனைகளின் கசங்கலையும் ஒன்றாக இறக்கி வைத்தாள். உடலின் வண்ணங்கள், மினுமினுப்புகள், வீக்கங்கள், யாவும் படிப்படியாய் வடியத் தொடங்கின. அந்த ஆஸ்பத்திரியின் ‘மதர்ஸ் சுப்பீரியர்’ கேட்டார் “இன்னும் ஏம்மா ஒடம்பெல்லாம் வர்ணத்தைப் பூசிக்கிறெ? Don’t hide yourself behind the colours its only an illusion ஒனக்கு நீ செய்றது புரியல்லியா?” “புரியலம்மா…” என்றாள் லோச்சனா. அவளது ஓவியங்கள் இரண்டை பார்த்த அந்த அம்மாள் அசந்து போனார்கள். “oh! Now l understand you Don’t hide yourself, Don’t hide yourself, behind yourself, come out and enjoy உனக்கு நேர்ந்திருக்கிறது அநீதி இல்லையம்மா, உன்னுடைய Society தான் உன்னை ஒதுக்கி இருக்கு. நீ தான் அதை ஒதுக்கிட்டியே?” என்றார்கள். அன்றிலிருந்து அவள் கித்தான்கள் அவளோடு பேசத் தொடங்கின. லோச்சனாவின் காளிகள் கலகலவென்று சிரித்து அவளுடன் கைகோர்ந்து விளையாடிக் களித்தன. அவளது பிறக்காத குழந்தைகள் அவள் கர்ப்பப்பையை அறுத்துக் கொண்டு, அவளை ஓடி வந்து தழுவிக் கொண்டு, அவள் மார்புகளில் ரத்தத்தைப் பாய்ச்சின. நரம்புகளில் உயிரைப் பெய்தன. லோச்சனா தன்னந்தனியே புறப்பட்டாள் ராகவன் அம்மா, மாமியார், அப்பா, மன்னி, குழந்தை, மச்சினர்கள் எல்லாம் தடுத்துக்கூட புறப்பட்டுவிட்டாள். வானம், கனவு போல் சிரித்த கர்ஜித்த ஒரு மாலை வேளையில் அஞ்சினி என்னும் பூர்வீக அக்ரஹாரத்துக்கு காவிரியாற்றுக்கப்பாலிருந்த அந்தத் தீவுப் பிரதேசத்துக்குப் புறப்பட்டுவிட்டாள். ராகவன் அவளைத் தடுக்க முயன்ற போதும் சிரித்தாள் ராணி! தவளைகள் சப்தம் அலை அலையாய் கிளம்பிய அஞ்சினியின் காவிரியை அந்த ராத்திரி வேளையில், பரிசலில் தாண்டிப் போக, மூட்டையோடு அவள் இறங்கிய போது “அய்யிரு ஆட்டுப் பொண்ணு இப்படி தனியா வந்திருக்குப் பாருங்கடா”ன்னு குசுகுசுத்துவிட்டு நின்னானுவ பரிசல்காரப் பயலுவோ! “அஞ்சினிக்குப் போவணும்பா.” “ஆத்துல இழுப்பு சாஸ்த்தியா இருக்குங்க! தண்ணி வேற ஏறுது” “அக்கரைக்கி அக்ரஹாரத்துக்குப் போவணும்! எத்தனையானாலும் தாரேன்!” “காசுக்கென்னம்மா?! வெள்ளைய்யர் ஆட்டுப் பொண்ணு தானம்மா நீங்க!? தண்ணி சாஸ்த்தியா போய்கிட்டு இருக்கு! கொறையட்டும்! ராத்திரியெல்லாம் கோரையாத்து பரிசத் தொறையிலியே கொட்டு கொட்டுன்னு முழிச்சிட்டு ஒக்காந்திருந்ததுல நேரம் போனது தெரியவேல்லியா? கெழக்க செவப்பா பூதம் ஏந்திரிச்சிது! வெள்ளையா, ஆறு, கடல், மலையா உருண்டு உருண்டு வருது. அஞ்சினி புளியமரமெல்லாம் தண்ணீல நிக்கிதுவ. பரிசக்காரனுவ பரிசலை களத்தி போட்டு மேட்டுல உக்காந்திருக்கானுவோ? காலை வெய்யில்ல ஆத்து வெள்ளத்துலெ எங்கிருந்த குடிசை கூரையெல்லாம் பிச்சிகிட்டு மிதந்துகிட்டு வருது. சாமான்களையெல்லாம் தலையில தூக்கிகிட்டு எதையும் லட்சியம் பண்ணாமே அஞ்சினியை நோக்கி எறங்கப்போன அவளை பரிசக்காரனுவோ கூப்பாடு போட்டு தடுத்தானுவோ! ’வெள்ளான அய்யரு ஆட்டுப் பொண்ணு எங்கேடான்னு நாளைக்கு அய்யர் கேட்டா நாங்க என்னா பதிலு சொல்றது?”ன்னு கத்திக்கிட்டே அவ கூடவே வந்து குதிச்சானுவ. ராணிக்கிட்டப் பேச முடியுமா? லோச்சனா நெனைச்சா நெனைச்சதுதான்! ராகவன் சொன்னான். “உன்னப் பாத்து எல்லாரும் பயப்படுறா”ன்னு - பொறப்புட்டுட்டாள் லோச்சனா, அம்மா, அப்பா எல்லாம் போகாதடி போகாதடி ன்னு பின்னாலேயே ஓடி வந்தார்கள். “மெட்ராசுக்குப் போய் Specialist கிட்ட போயி ஒசத்தி வைத்தியம் பாத்துக்கலாம். அஞ்சினிக்கல்லாம் போகவேண்டாம். என்ன இருக்குன்னு அங்கேப்போறே? யார் இருக்கா ஒன்னெ அங்கப் பாத்துக்க? தன்னந்தனியா பேய் மாதிரி அஞ்ச புளியமரத்துல ஏற வேண்டியதுதான். சொல்றத கேளு”ன்னு அப்பாக்கூட சொன்னார். ராணிக்கு சொல்லச் சொல்ல மூர்க்கம் தான் ஏறித்து. அவளுக்கு மனசிலே தான் வியாதி. சொல்லப்போனால் எந்த வியாதியும் மனசுலதான் தொடங்குது. உடம்புல தான் முடியிறது. உடம்பு லோச்சனாகிட்ட பேசும்போது அவளால் என்ன பண்ணமுடியும்? அவள் நெஞ்செல்லாம் நோயாக நிரம்பியிருந்தவள் அவள் மகள் மைத்ரேயி உள்ளுக்குள் மட்டுமில்லாமல் அவள் உடம்பெல்லாம் சிவப்பும், வெள்ளையுமாய் பரவியிருந்தன. அது நோய் இல்லையென்று யாருக்குப் புரியப்போவுது. தன்னந்தனியோ லோச்சனா மைத்ரேயிவுடன்தான் போராடிக் கொண்டிருக்கிறாள். இரண்டு கரிய பரிசல்காரர்களிடையே தலையில், தோள்களில் மூட்டைகளுடன் நீந்துவது ஒரு சிரமமாகத் தான் இருந்தது. சென்னையிலோ, டெல்லியிலோ ஏதோ ஒரு சானிடோரியத்திலோ லெப்ரசிகேர்ஹோமிலோ தனிப்பட்ட டாக்டர்களிடமோ வசதியாக சிகிச்சை பெற முடியும். “மைத்ரேயி?” மனதெல்லாம் ஒரு ஆங்காரம். மூளையிலெல்லாம். ஏதோ ஒரு கனல், உடலெல்லாம். ஏதோ ஒரு தேவை. இதை மருந்து கொடுத்தோ, சிகிச்சை செய்தோ ஒடுக்க முடியாது. தன்னந்தனியே அவன் தன்னுடனேயே போராடினாள். ராகவன் அவளைப் புறக்கணிக்கவில்லை. அவளை விட்டு ஓடித்தான் போனான். அதனால் தான் ராணி எல்லோரையும் புறக்கணித்துவிட்டு அஞ்சினிக்குப் புறப்பட்டுவிட்டாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெள்ளம்தான் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. “ஏம்மோவ்? சுழி வருது கழி! ஜாக்ரதை அடிச்சு நின்னுங்க! காலை ஒதஞ்சு நின்னுங்க. அய்யிருவூட்டு ஆயி?!! இழுப்பு சொயட்டும்! அடிச்சு நின்னுங்க்?”ன்னு கத்தினான் சாம்பனும், கலியனும், சலப்சலப்பென்று இரண்டு ஆளை வாய்ச்சுழிகள் பேய் வேகத்துடன் லோச்சனாவின் குறுக்கில் கடந்தபோது அவன் தலைக்கு மேல் இருந்த மூட்டைகள் பற்சக்கரத்தில் சிக்கியது போல் சுழண்டு சிதறின. “அய்யோ!” என்று அலறல் சாம்பனிடம் இருந்து கிளம்பியது. கலியனைக் காணோம். நீர் யானை ஒன்று நீருக்குள்ளிருந்து வாய் பிளந்தது போல் ஆற்று வெள்ளம் சுழித்து திரண்டது. வெள்ளம் மூடிய போது லோச்சனாவையும் காணோம். எங்கப் பாத்தாலும் வெள்ளக்காடு. மாலை வரை அஞ்சினிக் கரையோரம் எல்லாம் ஜனங்கள் நின்று வெள்ளத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆத்தில் கோபுரம் கோபுரமாக நுரைகள் மிதந்தன. வீடுகளின் தகரக் கூரைகள் சப்பு சருவுகள் மனித சடலங்கள், செத்த நாய்கள், குப்பைக் கூளங்கள், வேறுடன் மரங்கள் எல்லாம் மிதந்தன. ஆ! எல்லாம் மிதந்தே ஒழிந்தன! அஞ்சினி கிராமத்து ஜனங்கள் லோச்சனாவை நெருங்கவே பயப்பட்டார்கள். தொழுநோயின் வர்ணம் தெரியாமல் உடம்பெல்லாம் வர்ணம் பூசிக் கொண்டு நிற்கும் அவளை யாரும் தங்களுடன் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டார்கள். அவர்களுக்கெல்லாம் ரொம்ப பழக்கமான வெள்ளானை அய்யர் ஆட்டுப் பொண்ணாச்சே அவள்?! அதற்காகவே அவர்கள் அவள் செய்த எதையும் தடுக்கவில்லை. ’தன்னந்தனியாக மூங்கித் தோப்புக்குள்ள ஒரு பொண்ணு இருக்கவாவுது? ஏழு வாளுமுணி இருக்கு!! அடிச்சுடாது?!” என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். ஊர்ப் பெண்கள், “இதென்ன எளவு?! - ஒடம்பெல்லாம் பச்சையும், செவப்புமாக படமெல்லாம் வரைஞ்சுக்குது” அவர்களுக்கெல்லாம் தெரியாது. ராகவன் தான் இதுக்கு “மருந்து” என்று, ஒரு நாளாய், ரெண்டு நாளாய் இருந்தால் பரவாயில்லை. வருஷங்கள் கழிய ஆரம்பித்ததும் ஜனங்களுக்கு லோச்சனா புரிந்து போனாள். ஆளண்டாத முங்கித் தோப்புக்குள் லோச்சனாவுக்காக பால்காரியும், தயிர்காரியும் போனார்கள். கீரைகள் புடுங்கிக் கொண்டுப் போகிற சாலியத் தெரு பெண்கள் அவளுக்கும் நாலு கீரைக்கட்டு கொண்டு போய் கொடுத்தார்கள். ஏகாலிகள் குடி பொண்ணுங்களும், குரும்பனும் வேலி அடைக்கிற முதலாளிகளும் அவளுக்காகவே போய் பேசிவிட்டுப் போனார்கள். அவளே மண்ணைக் குழைத்து சுவர் வைத்தபோது ஆசாரிகளும், கொல்லத்துக்காரர்களும் “அய்யருவூட்டுப் பொண்ணுக்கு வந்த கெதியப் பாத்திங்களா? எல்லா எளவையும் இழுத்துப் போட்டுகிட்டு, இப்டி அல்லாடுது. இதுக்கென்ன விதி வந்துடுச்சு? இந்த மாதிரி ஆள் அண்டாத எடத்துலெ வந்து உக்காந்துகிறதுக்கு?!” - என்றார்கள். ராகவன் மிகவும் நல்லவன். எட்டு வருடங்களாக அவளை அண்டுவதே இல்லை! வியாதியாம்! அவளது அடங்காதளத்தைப் பொறுத்துக் கொள்கிறானாம். ஜனங்களும், அவன் தியாகம் செய்கிறானென்று டாக்டர்களை அழைத்துக் கொண்டு, கார்களில் வந்து இறங்கி, அந்த மூங்கில் தோப்புக்குள் வந்து அவளை சிகிச்சைக்கு அழைக்கும் போதெல்லாம் அவள் கணவனுக்கு அடங்கிய அமெரிக்கையானப் பெண்ணாக இருக்கும்போது, யாருக்கும் ஆச்சரியமாய் இருக்கும். இவளையா, பைத்தியம், தொழுநோயாளி என்றெல்லாம் சொல்கிறார்களே?! என்று விபரீதமாய் இருக்கும். மெல்லிய கலர்களில் அவள் உடுத்தும் புடவைகள் ராகவனுக்குப் பிடிக்காது. அவளது ஓவியங்கள் அவனுக்குப் பயமுறுத்தல்களாக இருக்கும். இரண்டு பேரும் தனியாக இருந்தால் பேசுவதேயில்லை. ராகவனை ராணி ஏறெடுத்துப் பார்ப்பதுடன் சரி. ஒவ்வொன்றாய் ஐந்து வருடங்கள் கழிந்த போது ராகவனின் தியாகம் அவளுக்கு புரியிற மாதிரிதான் இருந்தது. இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கிற தியாகம் அந்த கிராமத்துக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது போல அவளுக்கு பயமாக இருந்தது. ராணி பயப்படுவாளது பயம் இப்படித்தான் ஆரம்பித்தது. பயத்தைப் போக்கிக் கொள்ளத்தான் கும்பகோணத்துக்குப் போனாள். முத்துப்பிள்ளை மண்டபம் ஆஸ்பத்திரிக்கு அவள் சிகிச்சைக்காக போவதாக அம்மா, அப்பா, மன்னிகள் எல்லோரும் பேசிக் கொண்டார்கள். ராகவனைப் பார்த்து எல்லோரும் பரிதாபப்பட்டார்கள். அவன் வயதில் அவன் செல்வத்துக்கு, அவன் அழகுக்கு அவன் உத்யோகத்திற்கு அவன் செல்வாக்குக்கு அவன் இப்படியெல்லாம் ஏகாங்கியாய் இருக்க வேண்டியதில்லை. ஆனால் அவனது ரகசியம் முழுவதும் லோச்சனா மட்டுமே அறிவாள். ஆனால் லோச்சனா சொல்லமாட்டாள். கை நீட்டி வாங்கமாட்டாள். கெஞ்சி நிற்கமாட்டாள். தன்னந்தனியே வினோதமான உருவத்துடன் அந்தக் கிராமத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் சுற்றிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு யாரும் வேண்டாம். அவள் ஒரு தாய் இல்லை. யாருக்கும் அவள் உறவில்லை. யாருக்கும் அவள் தமக்கையில்லை, தங்கையில்லை, மனைவி இல்லை. அவள் வெறும் மனுஷி!? ஐந்தாறு வருடங்களாக அந்த மண்ணில் உழலும், சாதாரணமான மனிதர்களோடும், மனுஷிகளோடும் அவளும் ஒருத்தி. அவளே கல் அறுத்து பெரிய பெரிய செங்கற்கல்லாய்ச் சுட்டு அவளே வினோதமாய்கட்டிய அந்த வினோதமான வீடும் லோச்சனாவைப் போலவே, முரட்டுத்தனமாய் கவலையற்று இயற்கையின் சீற்றங்களை எதிர்த்து நின்றது? வீட்டைச் சுற்றிலும் திருகு கள்ளிச் செடிகளை வைத்து வளர்த்திருந்தாள் லோச்சனம். மணல் மேடுகளில் உருண்டைக் கள்ளி பயிரினங்களை வளர்த்திருந்தாள். வினோதமான கேக்டஸ் இனங்கள் சிவப்பு, நீலம், பூக்கள் முள்ளுக்குள்ளிருந்து புஷ்பங்களை புதுப்பித்து வளர்த்திருந்தன. வீடுகளின் வாசல்கள் எட்டு புறமும் திறந்து கிடந்தன. வாசல்களுக்கு கதவுகள் இல்லை. கவர்களில்லை!! ஆலய வாசல்கள் போல் சிற்பச் சாதுரியாய் அவள் கையாலயே கட்டிய வாசல்களாய் இருந்தன. வாசலுக்கு நேர் எதிரே அவளும் அந்தப் பக்கத்து பறையர்களும், பள்ளர்களும் சேர்ந்து வெட்டிய குளம் ஒன்று நீல நிற தடாகமாய் காட்சி அளித்தது. இதெல்லாம் யாருக்குப் பிடிக்கும்? யாருக்குப் பிடிக்க வேண்டும்?!! ஆனால், அந்தப் பக்கத்து மீன் பிடிக்கும் வலையர்களுக்கும், ஆடு வளர்க்கும் தோரிகளுக்கும் லோச்சனாவை ரொம்பப் பிடித்தது. அவள் தரும் காரமான டீயும், உப்புச்சுவை மிகுந்த எலும்பிச்சபழ சாறும் பல காய்கறிகள், கீரைகள் மிதக்கும் சாம்பாரும், சோறும் அவர்கள் எங்கும் ருசித்ததேயில்லை. அந்தத் தொழு நோயாளிப் பெண்ணின், நோய் அவர்களுக்குத் “தெரியவேயில்லை”. ஏகாலிப் பெண்கள் கொண்டு வந்து கொடுக்கும் ஒவ்வொரு வெள்ளைத் துணியிலும் அவள் மெழுகால் வரைந்து கொடுத்த, Batic (பேத்திக்) டிசைன்கள் அபாரமாய் இருந்தன. அந்த வீட்டுச் சுவர்கள் எங்கும் அவள் வரைந்த காளியின் உருவங்கள். சாந்தமாகிச் சிரித்தன. ஒரு தடவை அப்பா வந்தார். “என்னடீது பெண்ணே?!! இந்த நல்ல எடத்தெக் குட்டிச்சுவர் ஆக்கி வச்சிருக்கே? சப்பாத்திக்கள்ளி குண்டு கள்ளி, திருகுகள்ளி, குச்சிக்கள்ளின்னு ஊருல இருக்குற எல்லா முள்ளுச் செடியும் கொண்டு வந்து நட்டு வச்சு, என்ன எழவு இதெல்லாம்?. ராகவன் ஒன்றுமே சொல்றது இல்லையா? ஒன் இஷ்டத்துக்கு விட்றான் பார்! He is Great அவனை மாதிரி ஒரு புருஷன் கிடைச்சதுக்கு நீ புண்ணியம் செஞ்சிருக்கணும். ஒனக்கு ஒண்னும் மனக்குறையில்லாம வச்சிருக்கானே? இத்தனை வியாதியிலும்..” என்றார்! “யாருக்குப்பா வியாதி? ராணி தலை நிமிர்ந்து சீறினாள். “ஒனக்குத்தான் - வேற யாருக்கு?” “எனக்கு வியாதியில்ல, உங்களுக்கும், உங்க மருமகனுக்கும் தான் வியாதி, எனக்கு இரண்டு வருடத்திற்கு முந்தியே சொஸ்த்தமாயிடுத்து.” “இந்தா ரோஸ் பேட்ச் (patch) செல்லாம். அப்படியே தானே இருக்கு, குணமாயிடுத்துங்கிறயே?” “நான் சொல்லலைப்பா? டாக்டர்ஸ் சொல்றா! எனக்கெல்லாம் சரியாப் போயிடுத்தாம். இனிமே நான் எல்லாரு மாதிரிதான் அப்படிங்கிறா” “இதையேதான் எல்லாருஞ் சொல்றா! ஆனா யாரு நம்பறா!?” “ராகவன் கூடச் சொல்றானே? ஆனா ஓம் மூஞ்சிலே இன்னும் நீ எலை, பூ, கொடியெல்லாம் வரைஞ்சுகிறியே? அதெல்லாம் எதுக்காம்? மறைக்கிறதுக்கா?! மூடுறதுக்கா?” “நான் எதையும் மூடலைப்பா, நீங்களும் ஒங்க மருமகனும் தான் மறைக்கிறேள். பொதுவா உலகமே பூராவும் மறைச்சுக்கிறது மூடிக்கிறது, அப்படிங்கிறதுதான் உண்மை யாருக்கு. எல்லாப் பொண்ணும், எல்லா மாடும், எல்லா மிருகங்களும், ஒங்களுக்கு ஒண்ணாயிருக்கணும், ஒழுங்கா தீனி தின்னனும், குட்டி போடணும், வேற மாதிரி இருக்கக்கூடாது, இல்லையா? எனக்கு நோய்குணமாயிட்டாக்கூட நீங்க ஒத்துக்கமாட்டேள். எட்டு வருசமா வேற ஒருத்தியா இருந்தா - இவ இருந்த எடத்துல - இப்போ புல்லு, மொளச்சிருக்கும். ஒங்களுக்கெல்லாம் ஒரு குடும்பம், வீடு, வாசல், உறவு எல்லாம் நீங்க விரும்புற மாதிரி இருக்கு. ஆனா எட்டு வருசமா நான் தனியா இல்ல. எனக்குன்னு ஒரு முழு உலகத்தையே உருவாக்கிகிட்டதால நான் இடிஞ்சு போயிடல. என்னுடைய வேலையெல்லாம் இன்னும் ஓர் முழு ஆயிசுக்குப் பாக்கியிருக்கு. நான் குமஞ்சு போய் மூலையில உட்கார்ந்திருந்தா என்னா ஆகியிருந்திருக்கும்.” “என்னமோ நீதான் சொல்றே? மனுஷா இல்லாம யாரையும் தண்டாம இப்படி ஒரு வாழ்க்கையா? இதைவிட டாக்டர்கிட்ட நர்ஸிங்ஹோம்லேயே நீ இருக்கலாம்…” “ஆமாமா மூலையில போட்டு மூடி வைக்கிறதுக்கு நல்ல இடம் அதுதான்.” “ஆமா!? லோச்சனம் நீ ஏண்டி இப்படி இருக்கே? எல்லாரு மாதிரியும் இருக்கப்படாதோ?…” “இருக்கக்கூடாதுன்னு தானேப்பா இஞ்சப் போட்டு வச்சருக்கேள்!” வானம் இருண்டு வந்தது. மலை மலையாக மேகங்கள் அடர்ந்து வந்தன. அவள் ராகவனிடம் போவது அவளுக்கு மறந்து வந்தது. அவன் வரும்போதெல்லாம் தொடமாட்டானா? என்று மனம் தவிக்கும். ராணியா வாய்தெறந்து தொடு என்று கேட்பாள்? அவனால் முடியாது. எப்போதாவது அவன் கைகளைப் பிடித்து வைத்துலோச்சனத்தின் சின்ன, ஆனால் தடித்த உதடுகளை கவ்வ மாட்டானா? என்றிருக்கும். ஆனால் ராகவன் நிச்சலனமாய், கருணை வடிவாய் அவளைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பான். லோச்சனத்தைப் பார்க்க வரும் அம்மா பொருமிப் பொருமி அழுவா. தங்கைகள் தூரத்திலிருந்து பரிதாபப் பார்வைப் பார்ப்பார்கள். மச்சினர்கள், மரியாதையோடு பழங்களைக் கொண்டு வந்து தருவார்கள். ஆஹா! உலகம்தான் எத்தனை ஒழுக்கமாகவும், ஞாயமாகவும் நடந்து கொள்கிறது. அடடா! எங்குப் பார்த்தாலும் கருணை வடிவங்கள் எட்டு வருடத்து தனிமையையும், அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் அமுதத்திலிருந்த விஷத்தை சாப்பிட்டது போல் லோச்சனம் சாப்பிட்டிருந்தாள். ’லோச்சனா? இந்தா ஒரு ரோஜாப் பூ! கண்ணு? இந்தா ஒனக்கொரு ஜிலேபி! மகளே இந்தா ஒனக்கொரு வர்ணப்பெட்டி! டியர் மயர்! இதோ உனக்கொரு “கிஸ்” லோச்சனா ஒனக்கு குணமாயிடுத்தாடா, அவள் கால்களில் சொட்டும் இருதுளி கண்ணீர் இந்தப் பரிசுகளை யாராவது அவளுக்கு கொடுத்ததுண்டா? இது பரிசுகள் என்று அவர்களுக்காவுது, யாருக்காவுது தெரியுமா? அவர்களெல்லாம் தியாகிகள், ஞாயவான்கள் இந் உலகத்தைக் காப்பாற்ற வந்தவர்கள். மழைப் பெய்யத் தொடங்கியது. மழையில் நனைந்து கொண்டே கள்ளியும், முள்ளும் படர்ந்து கிடந்த அந்த தோட்டத்தில் மண்வெட்டியுடன் சேற்றில் நின்று ஒவ்வொரு செடியாக சுற்றிலும் மண் அணைத்துக் கொண்டிருந்தாள். மழையில் கள்ளிச் செடிகள் அசையாது நின்றன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ராகவனைக் காணவில்லை. அது என்னவோ. ராணியானாலும் ராஜாவைத் தான் மனது தேடுகிறது. ராகவன் இல்லாவிட்டால் என்ன? இந்த எட்டு வருடங்களும் நோயில் படுத்து, போராடி அலையுண்ட காலமெல்லாம் எல்லாரும் தூரத்திலிருந்தே கருணையை பொழிந்தார்கள். பெற்றத் தாயிலிருந்து ஜாக்ரதையாக விலகிக் கொண்ட அசிங்கம். அவர்களுக்குப் புரியுமா? தினமும் அவளுடன் கஞ்சி குடிக்கும் கீதாரிகள் மறுபடி வரமாட்டார்கள். ஆற்றோரமாக வலயன் பிடிக்கப் போகும் குறவர்கள். வலை வீசி விறால் பிடிக்கும் வலையர்கள் யாரும் அவளைக் கண்டு விலகியதும் இல்லை. நெருங்கியதும் இல்லை!! தொழுநோயை வர்ணங்களால் பூசி மறைத்த போதும் அவர்கள் அவளுடன் அட்டகாசமாக பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். அவள் ஊற்றும் கஞ்சியில் அவர்கள் யாரும் தொழுநோயின் அருவருப்பைக் காட்டவில்லை. எப்போதும் திறந்து கிடந்த அவளது வீட்டில் அவர்கள் எந்த நேரத்திலும் அவர்கள் இஷ்டம் போல் பிரவேசித்து, எந்த நேரத்திலும், ஏதாவது தின்னக் கேட்டார்கள் அவள் குடிக்கக் கொடுத்தாள். ஒரு நாள் ஒரு கிதாரி கேட்டான். “ஒன் ஒடம்பெல்லாம் இருக்கே? இது குஷ்ட்டம் தானே?” அவள் சொன்னாள் “ஆமா!” - அவன் முகம் வேறுபடவில்லை! “ஆமா… ரொம்ப வலிக்குமோ?…” “ஏன் கேக்குறே?” “இல்ல என்னோட பொண்டாட்டிக்கு கூட கை விரலெல்லாம் தேஞ்சு சுண்டிப் போச்சு. ஒனக்கும் அப்படி ஆயிடுமா?” “இப்போ ஓம் பொண்சாதி எங்கேயிருக்கா?!” “எனக்குத் தெரியாது” “பொஞ்சாதின்னு சொல்றே எங்கேன்னு தெரியாதா?” “நாங்க கிதாரிங்க, ஆடுங்கதான் எங்களுக்கு எல்லாம்.” “ஏங் கெடையெ ஒட்டிக்கிட்டு நான் இங்க வந்திருக்கேன். அவ கெடையெ ஓட்டிக்கிட்டு அவ எங்கயோ தெக்க திரிஞ்சுக்கிட்டிருக்கா வருஷத்துல ஒம்பது மாசம் இப்படி பச்சையெ தேடிக்கிட்டு ஆடுங்களுக்காக ஊர் ஊரா திரிஞ்சுகிட்டே இருக்க வேண்டியதுததான்” அவள் அசந்து போனாள். லோச்சனத்துக்கு சுதந்திர காற்றின் வேகம் மூச்சை முட்டியது. பலிஷ்ட்டமான அந்த கீதாரி ஆண் மகனைப் பார்த்தாள். கரு கருவென்று கருங்காலியில் செய்த சிலை போல இருந்தான். “அவளுக்கு வியாதிங்கிறியே…? அத குணமாக்கலாம் தெரியுமா? ஆஸ்பத்திரிக்கு அவளெக் கூட்டிகிட்டுப் போ ஒம் பொண்சாதி தானே?!” “இப்போ அவளெ வேறொரு தோரி வெச்சுக்கிட்டான்” என்றான். அவள் தந்த காரமான டீயை உறிஞ்சியபடியே “டீ நல்லாருக்கு…” என்றான். “அவளுக்குக் குஷ்டம்ன்னு அவளுக்கேத் தெரியாதா? அவன் அவள பிரியமா வச்சுக்குவானா?…” என்றாள் லோச்சனம். “பிரியமான்னா. என்னங்க? புடிச்சு தானே வச்சுக்கிட்டான்” இடி இடித்தது. மழைக்குள்ளிலிருந்து மின்னல்கள் வெட்டி வாங்கின. . ஜே… வென்ற மழையில் எதிரே தெரிந்த காவிரி ஆறு. பின்னால் தெரிந்த கோரை ஆறு. யாவும் மழை திரையில் மூடுண்டன. இருட்டிக் கொண்டு வந்த ஓலத்தில் இடிகள் குலுங்கின. பெருமழையின் காற்றில் அங்கு வளர்ந்துகிடந்த குத்துக்கள்ளிகள் அசைவுற்றன. சுற்றிலும் தெப்பமாய் நெனைந்து போன லோச்சனா வாசலை நோக்கி, ராகவனை எதிர்பார்த்தாள். இன்னும் பைத்தியமாய் இனியும் முட்டாளாய் நின்று கொண்டிருந்தாள். அவளுக்கே அவளது உடலின் கேவலம் மனதின் அசிங்கம் தெரியத்தான் செய்தது. அவளது வாழ்வில் இனிச் செய்ய வேண்டியது என்ன என்று சொல்லக்கூட அவளுக்குத் தேவைப்பட்ட பலவீனம் ஆச்சரியமாய் இருந்தது! மழையில் அவள் மேனியில் வரைந்திருந்த ஓவியங்கள் யாவும் சுத்தமாய் கலைந்து ஓடியிருந்தன. சுத்தமாக அவள் விரல்கள் முகம் யாவும் குளிரிந்து மலர்ந்திருந்தன. அவளது உடல் முழுவதும் ஆரோக்கியத்தின் தாதுக்கள் முண்டி எழுந்து கொண்டிருந்தன. அவள் இனி தொழு நோயாளி இல்லை! மனதிற்குள் இருந்து அவள் சுதந்திர காற்றை மீண்டும் சுவாசித்தாள்? இனி அவளால் அஞ்சினியில் இருக்க முடியாது. மனதிலே ஒரு பேரொளி எழுப்பி வானத்தை ரெண்டாக கிழித்தது. ஒரு இடி மின்னல். ஆற்றின் எதிர்கரையில் நின்ற ஒரு தென்னை மரத்தின் மீது அந்த இடி இறங்கியிருக்க வேண்டும். அந்தக் கொட்டும் மழையிலும் அந்த தென்னை மரம் இடி இறங்கியதால் தீப்பற்றி சடசடவென்று கொழுந்துவிட்டு எரிந்தது. பிசாசு போல் சடை விரித்து, நெருப்புக் கங்குகள் சிதறி தென்னை மரத்தின் இளநீர் காய்கள் நாலுயுறமும் வேட்டுகள் போட்டுச் சிதறின. “டம்! டம்! டம்! டம்!” இனி லோச்சனம் தனி மனுஷி இல்லை. அவள் மனதிலிருந்து அந்த தென்னைமரம் திகுதிகுவென பற்றி எரிந்து அடங்கியது. இனி அங்கு புயலோ, மழையோ, சூறாவளியோ எதுவுமில்லை. காற்று அடங்கிவிட்டது. வழி திறந்துவிட்டது. கட்டிய ஈரச் சேலையுடன் கையில் எதையும் எடுக்காமல் தான் கட்டிய அந்த வீட்டின் வாசலில் இருந்து இறங்கினாள் லோச்சனம். ஆற்றங்கரையை நோக்கி திடமாய் முடிவுக்கு வந்தவளாய் வேகமாய் நடந்தாள் ஆற்றுத் துறையில் பரிசல்காரர்களைக் காணோம். ஆற்றில் வேகமாய்ப் பாய்ந்து கொண்டிருந்த பெரு வெள்ளத்தில் சற்றும் அஞ்சாமல் ‘தொபீர்’ என்று குதித்து எதிர்கரையை நோக்கி நீந்தலானாள். சுழல்நீர் யானைகள் வாய் பிளந்து அவள் இருபுறமும் சுழன்றன. சுழல்களை கால்களால் உதைத்து இரு கைகளையும் வீசி நீந்தினாள் லோச்சனா! ஆற்றின் மேற்பரப்பு மழை முத்துக்களை வாரி இறைத்தன. சற்றும் குறையாத மழையில் ஏறத்தாழ முக்கால் மணி நேரத்துக்கு பின்னர் வெகுதூரம் எதிர்கரையில் அஞ்சினிக்கு மேற்கே கரையேறினாள் லோச்சனா. இனி அவள் தன்னந்தனியவள் அல்ல. இந்த உலகில் வாழப் போராடிக் கொண்டிருக்கும் கோடிக் கணக்கான பிந்துக்களில் அவளும் ஒருத்தி, அண்டம் குலுங்கினாலும், அவள் குலுங்காமல் தொடர்ந்து சுதந்திரக் காற்றை சுவாசித்தபடி, அவள் தன்னந்தனியளாய் இந்த உலகமாகிவிடுவாள். மழை தன் வலிமையெல்லாம் சேர்த்து அவளை அடித்து துரத்தியது. அவள் - லோச்சனா எல்லாவற்றையும் விட்டு விட்டு எல்லாமாகிப் போனாள். சோலை சுந்தரபெருமாள் “கு.ப.ரா. பிச்சமூர்த்தி, எம். வி.வெங்கட்ராம், தி.ஜானகிராமன், மெளனி, க.நா.சு ஆகியோரைப் போல இவரும் தஞ்சை மாவட்டத்துக்காரர்தாம். (திருவாரூர், அம்மையப்பன், காவனூர்க்காரர்) எனினும் மேற்கண்ட ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களிலிருந்து இவர் மாறுபடுகிறார். கதைக்கருவைத் தேர்ந்தெடுப்பதிலும், தமிழ்நடையிலும் இவர் வித்தியாசப்படுகிறார். முக்கியமானது இவரது தமிழ்நடை. பாத்திரங்களின் உரையாடலில் மட்டுமின்றி படைப்பாளியின் நடையிலும் பேச்சுத்தமிழ்! இத்தகைய போக்கை ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களிடம் காண முடியவில்லை…” ‘ஓராண்காணி சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் தி.க.சி.’ 1953 இல் பிறந்து சோலை சுந்தரபெருமாள் இன்றுவரை பிறந்த கிராமத்திலேயே வாழ்க்கை… ’தரமான சிறுகதை வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். கிராமத்து விவசாயிகளைப் போலவே ரொம்பவும் எளிமையானவர். தனக்கென்று தனியான இலக்கியக் கொள்கை நிலை உடையவர், உறுதியானவர், நல்ல இலக்கியவாதி… மொழி, சோலை சுந்தரபெருமாளுக்கு ஒரு பெருஞ்செல்வம். கீழத்தஞ்சை வட்டார வழக்கு மொழி, கதைக்கு ஆழத்தையும், அகலத்தையும் தருகின்றன. (மாலைக்கதிர் - சிறுகதை விமர்சனத்தில் எழுத்தாளர் பொன்னீலன்) “வாழ்வின் உயரங்களை எட்ட வேறு வழி இல்லாது உழைப்பை மட்டுமே நம்பி உயிர் வாழும் எளிய மக்களின் கதை இது. இயல்புணர்ச்சியும் மிகையற்ற எளிய நடையுமே இவரின் பலம்… என உறங்க மறந்த கும்பகர்ணன் நாவலை கவிஞர் பாலா இப்படி மதிப்பிடுவதை ஏற்றுக்கொள்ளலாம்…” எண்பதுகளில் சிறந்த தமிழ் நாவல்கள் தி.க.சி. (சுபமங்களா) “சோலை சுந்தரபெருமாளின் படைப்புகளில் யாருடைய பாதிப்பும் இல்லை. இவர் எதையும் படித்துவிட்டு அதைப் போல எழுத முயலவில்லை. எல்லாமே அவரது அனுபவ எல்லைக்குட்பட்ட ஆழ்ந்த உணர்வின் சுய வெளிப்பாடுகள். இத் ‘தனித்தன்மையே’ இவரது எழுத்துக்குப் பெருமை தரப் போதுமானது. (‘மண் உருவங்கள்’ சிறுகதைத் தொகுதி மதிப்பீட்டில் எழில் முதல்வன்) வைக்கப்போரும் கடாவடிக்கு வாக்கப்பட்டவளும்… பாக்கியத்துக்கு முழிப்பு வந்து ரொம்ப நேரமாயிட்டு. புரண்டு புரண்டு படுத்தாள். குளிரும் ஜாஸ்தி. எரவாணம் வழியாய் ’சல் சல்’ன்னு பனி வாடை வீட்டுக்குள் எம்பி குதித்தது. வெளியே பட்டப் பகல் போல நிலா. நாளான்னிக்கு மாசி மகம். அதுக்கான வீரியம் இல்லாம்யா போவுதுன்னு நினைத்துக் கொண்டாள். தலைக்கு மேல் கூரையிலிருக்கும் ஓட்டைகளின் வழியாக நுழைந்த நிலாச் சக்கரங்கள் மெல்ல இறங்கி அவள் மேலும், அவளை ஒட்டிப்படுத்துத் தூங்கும் மவள் மீதும் புள்ளி புள்ளியாய்… கால்மாட்டில் பஞ்சாரத்தில் கவித்திருந்த கன்னிச் சேவல் மூக்கை தரையில் தீட்டி றெக்கையைப் படபடத்துக் கொண்டு கூவி ஓய்ந்தது. அவளால் எழுந்திருக்க முடியவில்லை. உடம்பு ரணமாய் வலித்தது. நேத்தைக்கு விடி கருக்கலில் எழுந்துருச்சிப் போனவள். பொழுதுக்கும் அடிச்ச வெயில் அவள் தலையில். அப்பாடின்னு ஒரு நாழி உக்காரத்தான் நேரமேது? வைக்கல்ல நின்னு வேலப் பாக்கிறதுன்னா சும்மா லேசுபட்ட வேலையா? கை, கால்ல, வைக்கல்ல இருக்கும் ‘சொணை’ ஏறி சுருக் சுருக் என்ற குத்தலோடு அரிப்பு வேறு. எது செஞ்சா என்ன? வெள்ளாமக்கார வங்க விட்டுத் தள்ளிடவா முடியும்? அதிலேயே கெடந்துவெந்து தான் தணியனும். ’சோந்து போயிட்டியா பாக்கியம்? இன்னும் கொஞ்சம் வைக்கத்தான் மீதம் கெடக்கு. ஒரே தறியா தெரச்சிப் போட்டுட்டு போயிடுவோம். முத்தண்ணன், பாக்கியத்திடம் நைசா பேசிக்கொண்டே வேலை வாங்கினான். இன்னிக்கு நேத்தா இப்புடி? என்னிக்கு அவள் புருஷன், டீ கடைக்காரர் வூட்டுப் பொண்ண இழுத்துக்கிட்டு ஓடிப் போனானோ அன்னியிலிருந்து தாம் பெத்தப் பொண்ணுக்கிட்ட எப்புடி அன்னியோன்னியமா இருந்து பாதுகாப்பா இருப்பானோ அப்புடித்தானே. ஒருத்தரப் போல வேலத் தலைப்புக்குப் போய் நெழுப்பிக்கிட்டு நிக்கிறவளா பாக்கியம்? முத்தண்ணன் வரைக்கும், அவள் சோம்பிக்கிட்டு நின்னு ஒரு நாளும் பாத்ததே இல்லையே. ஒழைச்சு சம்பாத்தியம் பண்ணுறதே போதும் எத்தி வாங்கிட்டுப் போற காசா ஒட்டப் போவுது? எப்பயும் படு சுறுசுறுப்பா நின்னு கை வேலயப் பாத்து முடிச்சுட்டு மறு வேலப் பாத்து தான் பழக்கப்பட்டவள். அவளுக்கு ஈடா நின்னு வேலை செய்ய ஆம்பளையே தடுமாறிப் போயிடுவானுங்க. ஆஞ்சி, ஓஞ்சி வந்து எப்பப் படுத்தாலும் தூக்கம் எங்க எங்கன்னு தான் நிக்கும். அப்புடி அடிச்சுப் போட்டது போல தூங்கும் அவள் ரெண்டு நாளா ராத்திரியில தூக்கம் வராம பொரண்டுப் படுக்க வேண்டிருக்கு. மனசு என்னமோ எதை எதையோ நெனச்சு அல்லாடிக்கிட்டு இருக்கு. என்னா இது? இத்தினி வருசம் கழிச்சு? தாம் அன்னியப்பட்டு போயிட்டமோங்கிறதுபோல ஒரு நெனப்பு மனசப் போட்டு அரிச்சுக்கிட்டு இருக்கு. பத்துநாளா இந்தப்பாடு தான். செட்டியார் பண்ணையில வைக்கப்போர் அடிச்சாவது, ஒரே களத்தில நின்னு வேலப் பாக்கிறாப்பல தோதா வாச்சுருக்கு. ஆளுகளயும் நெறயா வச்சுக்கிட்டு செய்யுற வேலயாயும் இல்ல. அவருகிட்ட இருக்கிற நாலு ஜோடி மாடுகளை வச்சுக்கிட்டுத்தான் கடாவடி கட்டணும். கூலிக்கு மாடு அமத்திக்கிட்டு போர் அடிக்கிறதா இருந்தா ஜோடிக்கு எட்டு மரக்கா நெல் வள்ளிசா போவும். அடுத்து அடுத்து இப்ப என்னதான் வேல இருக்கு? உளுந்து பயிறு தானே. மெல்ல நகர்த்துட்டும். நாம கிட்டக்க நின்னு வேலப் பாத்தா கைக்கு ஒண்னும் வந்து சேராது. குத்தவைக்கே கொடுத்துட்டா வந்த வரைக்கும் ஆதாயமா இருக்கும்ங்கிற நெனப்பு தான் செட்டியாருக்கு. ’முத்தா! நருக்கா நாலு ஆளு வச்சுக்கிட்டு நருவுசா வேலயப் பாரு. மொத்தத்துக்கும் நாலு மூட்ட நெல்லு அளந்துடு. அன்னைய அன்னைய வைக்கல தெரச்சு வண்டி ஏத்தி விட்டடுனும். போனவருஷம் போலவே வைக்கப்போர தண்ணி எறங்கிடாம பக்குவமா போட்டு தலைகூட்டிப்புடுனும். உனக்கு ஒண்ணும் கொறஞ்சிப் போயிடாதுன்னு சொன்னதும் ஒப்புக் கொண்டான். பத்து வருஷமா இப்படித்தான் செய்யிறது. அதில் அவனுக்கு கூலிக்கு மேலத் தேறிப் போயிடும். கம்முன்னு ஒப்புக் கொண்டான். அடவா நின்னு வேலப் பாக்கவும் செளரியமா இருக்கும். அடுத்த எடத்துக்குப் போயி நிக்கவேணாம். இப்புடி, பல யோசனையோடத்தான் தன்னோட மவன், மருமவளோட பாக்கியத்தையும் சேத்துக்கிட்டு, வேத்தாளு சேக்காம வேலய ஆரம்பிச்சு வச்சு இன்னிக்கு மூணாம் நாளு. பெரும்பகுதியா வயல் களம் பொழங்கினவங்கல்லாம் அடங்கியாச்சு. எக்கண்டத்திலயும் ஒரு காக்கா குருவிகூட இல்ல. அந்தியில வைக்கத் தெரச்சு வண்டியில ஏத்தியுட்டு களம் பொழங்கி கூலியப் பங்குப் போட்டுக்கிட்டு பொறப்படும்போது, ‘ஆளுக்கு ரெண்டு கையா வைக்கல் இழுத்துப் போட்டு அடக்கிப்போட்டுப் போன விடியக் கருக்கல்ல வந்ததும் கடாவடிய கட்ட வாகா இருக்கும். புடிங்க…’ வீட்டுக்குப் போவ இருக்கும்போது முத்தண்ணன் சொன்னதும் அவன் மவனும், மருமவளும் அலுத்துக் கொண்டார்கள். பாக்கியம் முகம் சுழிக்காமல் ஒரு கடாவடி வைக்கலை இழுத்துப் போட்டு அடக்கினதும் வேர்த்து விறு விறுத்தது. சல்ல யாய் அரிப்பு வேற. ஓடிப்போய் தாமரைக்குளத்தில் விழுந்து அப்புடியே உடம்ப நீவிவிட்டு மிதந்து, பொழுதுக்கும் சாந்து போயி இருக்கும் சூட்ட தணிக்க வைக்கணும் கிற அவசரம். சொணை கரைஞ்சிப் போற வரைக்கும் அப்புடியே வெது வெதுப்பான தண்ணில கெடந்து எழுந்திருச்சுப் போவனுங்கிறது போல ஒரு உணர்வு புரடியைப் புடித்துத் தள்ளியது. ’தங்கச்சி! விடிய கருக்கல்ல வந்துடு இப்ப அடக்கிப் போட்டத புடுச்சுட்டு, உருமத்துக்குள்ள ரெண்டு கடாவடி அடக்கனும். அஞ்சுமா வைக்க அடம்பா வேற இருக்கு. உச்சி சாஞ்சதும், பீராஞ்சிப் போட்டுட்டு பிரியவுட்டா வெயில் சாஞ்சதும் தெரச்சுப் போட்டு வண்டி யேத்திவுட்டுட்டு வெரசா வூட்டுக்குப் போவலாம். இல்லாட்டா இன்னிக்கும் அகாலமா ஆயிடும். வண்டிக்காரனுங்க கால்ல வெண்ணிர ஊத்திக்கிட்டு வந்து நிப்பானுங்க களம் பொழங்கிவிட்டு வரும்போது முத்தண்ணன் சொன்னது அவள் மனதில்… இன்னும் செத்த நாழிக்கெல்லாம் ’பாம் பாம்’ன்னு அடிச்சிக்கிட்டு பால்காரர் வந்து நின்னுடுவார். அதுக்குள்ள எழுந்திருச்சி கொட்டுலைச் சுத்தம் பண்ணி கறவப் பசுக்கு தண்ணித் தவிடு வைச்சு பாலக் கறந்து கொடுக்கனுமேங்கிற அவசரத்தில் எழுந்து உக்காந்தாள். மனசு பரபரப்பாய் இருக்கும் அளவுக்கு ஒடம்பு அவளுக்கு ஈடு கொடுக்கவில்லை. இந்த வீட்டுல அடியெடுத்து வச்ச நாள்லருந்து ஒரு நாளாச்சும் அப்பாடின்னு படுத்திருப்பாளா? சதாகாலமும் சுறுசுறுன்னு… கை புள்ளக் காரியா இருக்கிறப்ப, புருஷன், அம்போன்னு வுட்டுப்புட்டு போயிட்டானேன்னு சுருண்டுக்கிட்டா படுத்தாள்? ஊரு உலகம் மூக்கு மேல கை வச்சிக்கிட்டு பாக்கிறது. போல தான் பெத்தப் பொண்ண முன்னுக்கு கொண்டாந்து வாழ வச்சிக் காட்டனுங்கிற வைராக்கியத்தில தானே இன்னிக்கு வரைக்கும் இந்தப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறாள். இப்ப வந்து மனசும் ஓடம்பும் ஒட்டாம அலைக்கழிச்சா அவள் தான் என்ன செய்ய முடியும்? ‘…பட்ட இம்சை எல்லாம் எட்டாச்சு. இன்னும் ஏன் கெடந்து லோலுபடனும்?’ மவளை எழுப்பி வேலையப் பாக்கச் சொல்லலாங்கிற எண்ணத்தோட, “தங்கம்! தங்கம்!”ன்னு குரல் கொடுத்தவள் சட்டுன்னு நிறுத்திக் கொண்டாள் பாக்கியம். இந்தப் பொண்ண வாழ வைக்கத்தானே பத்து வருஷமா இந்தப் பாடுபட்டுக்கிட்டு இருக்கிறோம். எல்லாம் கஷ்டமும் நம்மத் தலையோடயே போவட்டும். ஊரைப் போல பொண்ணப் பெத்தவன் கிட்டக்க இருந்தா நல்லது. கெட்டது செய்யப் போறான்? வயித்தக்கட்டி வாயக்கட்டி வாங்கி வைச்சிருந்த நன்னி புண்ணியயும் சுருக்கு பையில வைச்சிருந்த பணத்தையும் ராத்திரியோட ராத்திரியா தூக்கிட்டு ஓடிப்போன, மனுசனா திரும்ப வந்து நல்லது கெட்டது செய்யப் போறான்? பாழும் கெணத்தில் தள்ளி விட்டுட்ட பெத்த ஆயாவும், அப்பனும் போய் சேந்தாச்சி. இப்ப என்னா நடக்குதுன்னா கண்ண முழுச்சி முழுச்சிப் பாக்கிறாங்க? ஆயி, அப்பன் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது பாக்கியத்துக்கு. ஆயி, அப்பன் இல்ல. மாமன் வீட்டுல வளர்ந்த புள்ள. சம்பாதிச்சதெல்லாம் கண்டபடி செலவு பண்ணிப்புட்டு இப்ப வெறும் ஆளா நிக்குது. இருந்தாலும், நாம் அந்தத் தம்பிக்கே பாக்கியத்த கட்டிவச்சா அவ அங்க போயி எட்டு சித்திரம் பண்ணிப்புடுவா. ஏங்கதாங்கலுக்கு நாமும் கையில கெடைக்கிறத செஞ்சா பெரிசா வாழ்ந்துடுங்க. பாக்கியத்தோட ஆயா, அப்பன்காரன் கிட்ட சொல்லி தான், வேலுசாமிக்கு பாக்கியத்த கட்டிவச்சதுங்க. அப்பயெல்லாம் வேலுசாமியும், பாக்யம் கிழிச்சக் கோட்டத் தாண்டாமத்தான் இருந்தான். தான் குடும்பம் உண்டுண்ணும் தான் வேல உண்டுண்ணும், சம்பாத்தியத்தில்’ ஏதோ டீக்கும், பீடிக்கும் எடுத்துக்கிட்டு மீதியெல்லாத்தியும் கொண்டாந்து பொண்டாட்டிக் கையிலக் கொடுத்திட்டு ஒரு வம்பு தும்புக்கு போவாம இருந்தவன் தான். ஈட்டுக்கும், பாட்டுக்கும் போக மீதப்பட்டத் சிறுவ சிறுவ சேத்து வச்சு வீடாக்கி, ஆடு மாடாக்கி, நன்னி. புன்னியாக்கி…. சந்தோஷமாத்தான், ஏப்பர் பொண்டாட்டிய உட்டு ஒரு நாழி பிரிஞ்சி இருக்கமாட்டான். அந்த மகசூல்ல நெல்ல வித்து பணத்தக் கொண்டாந்து கொடுத்தவன், “இந்தா பாரு! வர்ற போகத்துக்கு ரெண்டு ‘மா’ குறு நெலத்த வாரத்துக்குப் புடுச்சுப் புடுவோம்.” புருஷன் சொன்னப்ப அப்புடியே நெகிழ்ந்துதான் கிடந்தாள் பாக்கியம். இதுபோல ஒரு புருஷன் கிடைப்பானாங்கிற சந்தோசத்தில அவனைப் பிரிஞ்சி ஒரு ராத்திரிக்கூட… அவன் மட்டும் என்னவாம்? வௌக்கு வச்சுட்டா போதும் சதா காலமும் அவ முந்தாணையப் புடுச்சுக்கிட்டு, அவன் பிடிக்குள் அவள் அன்னியோன்னியப் பட்டுதான் கிடந்தாள். தங்கம் பொறந்து கொஞ்ச நாள்ளேயே புருசனுக்கும் டீக்கடைக்கார வீட்டுப் பொண்ணுக்கும் தொடர்பு ஆயிட்டுன்னு அரச புரசலா பாக்கியத்துக் காதில் விழுந்தது. ஒரேயடியா அழுது ரெண்டு நாள் பட்டினி கிடந்த அவளை அவள் புருஷன் கண்டுகொள்ளவே செய்யாமல் ஒண்ணுமே நடக்காதது போலவே அலட்டிக்காம அலட்சியப் படுத்திவிட்டு இருந்தான். “நீ பச்சபுள்ளக்காரி. இப்புடி கொலப் பட்டினியா கெடந்தா புள்ளைக்குத்தான் என்னா ஆவும்? ருசி கண்ட ஆம்பளங்க அப்புடி இப்புடின்னுதான் நிக்குங்க. பொம்பளங்க உட்டுதான் புடிக்கனும். புள்ளப் பெத்த ஓடம்பு, வீணா போட்டு அலட்டிக்காத.” பாக்கியத்தைப் பெத்தவள் கேள்விப்பட்டு ஓடியாந்து மவள் பக்கத்திலேயே இருந்து ஆறுதல் சொல்லிக்கொண்டு தான் இருந்தாள். தாயா, புள்ளையா இருந்தாலும் வாயிம், வயிறும் வேறத்தானே? எத்தன நாளு பொண்ணு வூட்டுல வந்து உக்காந்துக்க முடியும்? வேற யாரு எவரு இருக்கான்னு இருந்தாலும், சோறு கெடச்ச எடம் சொர்க்கம்ன்னு உக்காந்துட்டா பாருன்னு தானே ஊரு உலகம் சொல்லும்ன்னு நெனச்சா? “தங்கச்சி! உன்னோட தலையில அப்புடி எழுதிருந்திருக்கு…. கைய ஊணி கரணம் போட்டு பொண்ண ஆளாக்கிப்புடு. என் கையில கெடக்கிறத உனக்கு செய்யாம நாங்க யாருக்கு செய்யப் போறோம்?” சொல்லிப்புட்டுப் போன மறு வருஷமே மவனைப் பத்தியக் கவலையில் இருந்தே தெக்கப் போயி சேந்தாச்சு. இந்த ஊருலேயே இருந்த பொண்ணப் படிக்க வச்சி பெரிய வாழ்க்கையா அமைச்சுக் கொடுக்கணும்ங்கிற, வைராக்கியத்திலேயே மனச் ஈடுபடுத்திக் கொண்டிருந்தாள். அவளுக்கு நல்ல பக்கத் துணையா முத்தண்ணன். இத்தனை வருஷமா எந்த நெனப்பும் இல்லாமல் தான் இருந்தாள். தனக்கும் ஒரு புருஷன் இருந்தான், அவனோட மூணு வருஷம் வாழ்ந்து முந்தானை விரிச்சிருக்கோம்ங்கிற உணர்வே இல்லாமத்தான்… சதா காலமும் மவளே மனசில இருக்கிறப்ப மவ தங்கம் ஆளாயி நின்னுட்டா. பூந்த, எடத்தில தான் ஒண்ணுமில்லாம போயிட்டு. ’பொறந்த எடத்திலாவது ஒரு மனுஷன் இருக்கிறானா? என்ற கவலை பாக்கியத்தைக் கொத்தி திங்காம் இல்லை. ‘தங்கச்சி! உன்கூடப் பொறந்தப் பொறப்பா என்னை நெனைச்சுக்க. என்னோட பொண்ணு புள்ளைங்க உன்னை வேத்துக் கலப்பாவா நெனக்குது? சடங்க வையி சபையில் நான் பொண்ணுக்கு மாமனா உக்கார்றேன்’ னு சொன்னதோட உட்டுப்புடாமத்தான் சீர் செனத்தி அத்தனையும் செஞ்சிக் காட்டுனான் முத்தண்ணன். பாக்கியம் மவளை எழுப்பினதும், புரண்டு படுத்து உடம்பை நெளித்துக் கொண்ட தங்கம், “என்னம்மா” என்று கேட்டுக் கொண்டே கண்ணை கசக்கியபடி எழுந்து உக்காந்தாள். “ஒண்ணுமில்லம்மா, நீ படுத்துக்க. இன்னும் செத்த நாழி தூங்கி எழுந்திரி. அப்பதான் கலகலப்பா இருக்கும். ராத்திரி கூட ரொம்ப நேரம் படிச்சிட்டுத் தானே படுத்தே. என்னமோ மனசுல நெனச்சுட்டு எழுப்பிட்டேன். நான் விடிய கருக்கல்ல போயி வேலயப் பாத்தாதான். வெயில்ல நிக்காம ஓதுங்கிக்கலாம். சிவராத்திரியே இன்னும் வர்ல. அதுக்குள்ள வெயில் தலையப் பொளக்குது” என்று மழுப்பியது போலச் சொன்னாலும் நாக்கைப் பிடுங்கிக் கொண்டுதான் எழுந்தாள் பாக்கியம். உடம்பு எடம் கொடுக்க மாட்டேன் என்றது. அதுக்காவ எழுந்திரிக்காம் இருக்க முடியுதா? நிலா மேக்கால சாஞ்சியிருந்தது. பனியும் ரொம்ப தான், இப்பயெல்லாம் தங்கம் அம்மாவுக்கு அதிகம் தொந்தரவு தராமல் தானே வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். அதனால் பாக்கியம் சுத்துப்பட்ட வேலைகளை மட்டும் பாத்து மாட்டைக் கறந்து பால்காரருக்குக் கொடுத்துவிட்டு தூக்கு வாளியில் பழைய சோத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டாள். அவள் மவள் தங்கம், பள்ளிக்கூடம் போய் வந்த நேரம் போவ ஆக்கவும், இறக்கவும் வந்தபின் அவளுக்கு வேலை கொறவுதான். இல்லாட்டா, எல்லா வேலையும் பாக்கியமே இழுத்துப் போட்டுக் கொண்டு சிரமப்பட வேண்டி வரும். பாக்கியம், அம்பட்டன் முக்கால் களத்துக்குப் போம் போது நிலா மறைஞ்சி, மானம் வெளுக்க ஆரம்பிச்சிருந்தது. பனிச்சாரல் இன்னும் குறைந்தபாடில்லை. கடாவடியில் வாங்கி விட்டிருந்த வக்க பரவலாய் நனைஞ்சிருந்திச்சி. முத்தண்ணனும் அவன் மவனும் ஒரு நாழிக்கு முன்னமேயே போய் இருக்க வேண்டும். முத்தண்ணன், கடாவடியில் மாடுகளை நிப்பாட்டி புணைதலில் ஈடுபட்டிருந்தான். அவன் மவன், சுள்ளாப்பாய் இருந்த ஒரு இளங்காளை வயலில் இறங்கி ஓடியதை மறித்துக் கொண்டார ரொம்ப பாடுபட வேண்டியிருந்தது. காளை மீது இருந்த கோபத்தைப் போக்கிக் கொள்ளுவது போல் கையிலிருந்து புளியான் விளாரால் நாலு சொடுக்கு சொடுக்கினான். அந்தக் காளையை கடாவடியில நிப்பாட்டி, “அப்பா! இது உள்ளான்ல வைச்சுப் பொணையல் போடுங்க. அப்ப தான் அது திமிரு அடங்கும்.” சொல்லியபடி தலைக் கயித்தை அவிழ்த்துப் பிடித்துக் கொண்டான். தூக்கு வாளியை பங்கீடாய் ஒரு இடத்தில் வைத்து பக்குவப்படுத்திவிட்டு, கோக்காலியை எடுத்துக் கொண்டு வைக்கல் மேம்புடியாய் புரட்ட ஆரம்பித்தாள் பாக்கியம். “பாக்யம்! நீ கடாவடிய ஓட்டு, வைக்க மசிய அவன் எடுத்துப் போடட்டும். நான் நல்லா அலக்கிப் போடுறேன். நேத்து ரொம்ப நெல்லு வீணா வயல்ல போயி சேந்துட்டு. செட்டியாருக்கும் போவாம நாமலும் திங்காம விரையமா போவாமப் பாத்து அள்ளிப் போடுறேன். அங்கயே பிரியப்போட்டு தெரச்சி வண்டியில ஏத்தி விட்டுடலாம்.” சொல்லிக்கொண்டே கடாவடி பொணையலை இழுத்துப் பிடித்து உள்ளான் மாட்டை கடாவடிக்கு மையமா ஓட்டிவிட்டு தலை கயித்தை அவளிடம் கொடுத்து, “கொடியான அதட்டி ஓட்டு” என்று சொல்லிப்புட்டு வைக்கப்போர் ஓரமாய் வெத்தலைப் பாக்கு பொட்டலத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு உக்காந்தான். முத்தண்ணன் வெத்தலைப் பாக்கோடு புகையிலையும் போட்டு வாயில் அடக்கிக் கொண்டால் போதும், ரெண்டு கடாவடி முடியிர வரைக்கும். சளைக்காமல் நிப்பான். இன்னிக்குப் பாக்கியத்தை கடாவடியை ஓட்டச் சொன்னதுக்குக் கூட காரணம். இருந்தது. கொஞ்சம் அவளுக்கும் வேலை லெங்கிசாய் இருக்கட்டுமேன்னுதான். நேத்திக்கு அவனே கடாவடியை ஓட்டினான். பாக்கியம் நேத்தைக்கு பொழுதுக்கும் கோக்காலியைப் பிடித்து வைக்கலை அலக்கிப்போட ரொம்ப தான் சிரமப்பட வேண்டியிருந்தது. கடாவடி ஓட்டுரது அப்புடி ஒன்னும் லெங்குக இல்ல தான் பொணையல்ல. உள்ள எட்டு காளை மாடும் எப்ப சாணிப் போடுதுன்னு பாத்துக்கிட்டு இருந்து சாணி வைக்கல்ல விழுந்திடாம வைக்கல்ல புடிச்சு வாங்கிப் போடணும். உள்ளான் காளைக்கு கால்ல வைக்க சுத்தி கீழ விழுந்திடாம பாத்து கால்ல சிக்குர வைக்கல பிரிச்சுப் போட்டு கொடியான அதட்டி ஓட்டணும். அப்பதான் கடாவடி சீரா போவும். இடுப்பு முட்டும் உள்ள வைக்கல்ல ஓச்ச ஒழிவு இல்லாம சுத்தி வர்ரதுக்குள்ள தாவு தீந்து தான் போயிடும். மூணாவது கடாவடியை எறக்கிவிடும்போது சூரியன் உச்சிக்கு வந்துட்டு. பொட்டத் தெடல் அனலாய் தகித்தது. ‘ஆவட்ட சோவட்ட’ விட்டுப் போய் தான் ஆலமரத்துக் களத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே. உடையார் பண்ணை களம் பொழங்கியது. கிட்டத்தட்ட அது அவர்களுக்கு சொந்தம் போலத்தான். அவர்கள் களம் வச்சிட்டா வேத்தாளுங்க களம் பொழங்க முடியாது. அந்தக் களத்துக்காரவங்களுக்கு சங்கடமில்லாம வேணும்ன்னா ஓரமா ஒதுங்கிக்கலாம். முத்தண்ணன் மவன், கடாவடியில் இருந்து அவுத்துவிட்ட காளைகளை ஓட்டிப் போய் களத்தில் இறக்கி தண்ணிக் காட்டி நீச்சலடிக்கக் கொண்டு போக விரட்டிக் கொண்டு போனான். கொஞ்சம் பனிப் பதத்தோட பிரிவுடன்னு தெரச்சிப் போட்ட வைக்கல தூக்கிக்கிட்டுப் போயி ஆலமரத்துக் களத்தில் ஒரு ஓரமாய் போட்டு பிரி திரிக்க பூப் போல உதறி விட்டான் முத்தண்ணன். பாக்கியம், நெல்லைப் பட்டறைப் போட்டு அது மேல சாணிப் பால் ‘குறி’ போட கரைச்சு வைச்சுருக்கும் குடத்தை எடுத்துக் கொண்டு போனாள். திருவாசல் குளத்தில் தண்ணி கொண்டு வந்து முத்தண்ணன் பிரிதிரிக்க உதறி விட்டு இருக்கும் வைக்க மீது தெளித்துவிட்டாள். அந்த வைக்கல நல்லா பிசரிவிட்ட முத்தண்ணன் கொஞ்சம் ‘தாள்’ வைக்கலை எடுத்துத் தன் பக்கத்தில் வைத்துக் கொண்டான். புடி அளவுக்கு வைக்கலை எடுத்து இடுக்கிக்கொண்டு, குச்சியை அதில் வைத்து பாக்கியத்திடம் கொடுத்தான். ’பிரி’விடுவதில் அவள் புருஷன் வேலுசாமி கெட்டிக்காரன் அவன் நினைவு வந்து அவளைப் பாடாய் படுத்தியதால் பிரியை முறுக்குவதில் கவனம் இல்லாமல் இருந்தாள். “தங்கச்சி! பிரிய இழுத்து முறுக்கு, தொய்வா உடாத” அவளை உஷார் படுத்தினான். பனங்கரையில் உள்ள பனை மரத்தில் மாட்டிருக்கும் பானையில் உள்ள கள்ளைக் குடிக்க காக்கைகள் அலைமோதுவதைப் பாத்துக் கொண்டிருந்தபோது அவனோட பேரன் ஓடி வருவதைப் பார்த்தான் முத்தண்ணன். “எலே! ஏலே… மொல்ல வாடா. என்னடா இப்புடி தலை தெறிக்க ஓடியார?” “தாத்தா ஓவ்…. தங்கம் அக்காவோட அப்பா வந்துருக்காங்க. அம்மாதான் சொன்னுச்சு. அவங்க வூட்டுத் திண்ணையில உக்காந்திருக்காங்க. அவங்கதான் அத்தைய கூப்பிட்டுக்கிட்டு வரச் சொன்னாங்க.” களத்து மேட்டுக்கு வராமல் வரப்பு தலைமாட்டிலேயே நின்னபடியே கத்திக் கொண்டு ஓடி வந்தான். ஆலமரத்துக் களத்தில் களம் பொழங்கியவர்கள் எல்லார் கவனத்திலும் அவன் சொன்னது நின்றது. “என்னாடா சொல்ற?” “ஆமாம் தாத்தா… வெள்ள வேட்டி, சட்டைப் போட்டுக்கிட்டு வந்து உக்காந்துருக்கிறத நானும் பாத்தேன். என்னக் கூப்பிட்டு,”ஒப்பன் பேரு என்ன? டான்னு கேட்டாங்க தாத்தா …” பாக்கியத்துக்கு மின்சாரம் தாக்கியது போல இருந்தது. ‘பாவி மனுசா பொண்டாட்டி பொண்ணு நெனப்பு இருந்தா ஒருத்திய இழுத்துக்கிட்டுப் போயிருப்பியா? பாவி மவனே. ஒனக்கு என்ன கூப்பிட ஏதுடா உருமை?’ அவள் வாய் திறக்கவில்லை. கை பாட்டுக்கு பிரிக் குச்சியை முறுக்கிக் கொண்டிருந்தது. கேடும் பொளவையும் கேட்காம வந்து போனப் பயலுக்கு இப்ப பொண்டாட்டி நெனப்பு வந்திருக்கு. அப்பன் பேரு தெரியாம நின்னப் பயலுக்கு இந்தப் பொண்ணக் கட்டி வைக்க தானும் தொணை போயிட்டோமேங்கிற நெனப்பு முத்தண்ணனை ஊசி குத்தலாய் குத்தியது. “ஏப்பா! வேலுசாமி வந்துருக்கானாம்டா. இப்ப தான் பொண்டாட்டி நெனப்பு வந்துருக்கு. டீக்கடைக் காரவூட்டுக் குட்டியத் தள்ளிக்கிட்டுப் போனான்ல்ல! அந்தச் சேப்பு தோலுக்காரி இப்ப அவனுக்கா வடிச்சுக் கொட்டுறா? ம்… அவ அவன அம்போன்னு விட்டுப்புட்டு ஒரு பாத்திரக்காரனத் தள்ளிக்கிட்டுப் போயிட்டாளாம். அய்யா அதான் பொண்டாட்டிய தேடிகிட்டு வந்திருக்கான். ஒரு நாழி பொடவத் துணியப் பாக்காம இருப்பானா?…” உடையார் களத்தில் வேலை செய்யும் ஆட்கள் சததம் போட்டே நையாண்டியாய் பேசிக் கொண்டது எல்லார் காதிலும் நல்லாவே விழுந்தது. முத்தண்ணன் கொஞ்ச நாழி யோசனையில் இருந்துவிட்டு, ‘எலே! நீ போய் வந்திருக்கிற அந்த ஆளுகிட்ட சொல்லிப்புட்டேன்னு சொல்லிப்புட்டுப் போடா.’ “என்னா தாத்தா? என்னா தாத்தா… அத்தைய வரச் சொல்லு தாத்தா…” நிமுண்டிக்கிட்டே நின்ற பேரனை அதட்டி அனுப்பி வைத்தான் முத்தண்ணன். பாக்கியம் வாய் திறந்து பேசவில்லை. ரொம்பவும் ஜாக்கியாத்தான். இருந்தது. முத்தண்ணன் கைகட்டைவிரல் பாட்டுக்கு வைக்கோலை அளவாய் பிரித்துவிட உள்ளங்கை மேட்டால் பிரியைத் தள்ளி அழுத்தமாகத் திரித்துவிட அவள் ஏற்றிவிடும் முறுக்கால் பிரி கதண்டு போல் நீண்டு கொண்டிருந்தது. “அந்தி…. சந்தின்னு பாக்காமா கூட எப்பயும் ஓடம்பு ஒடம்புன்னு தெனவு எடுத்து நின்னு தீத்துக்க பாடா படுத்திய மனுசன் இப்ப மட்டும் எதுக்கு வந்து கூப்பிட்டு அனுப்புவான்?” பிறத்தியார். அவளோடு அவன். அன்னியோன்யமாக இருந்த நேரத்தை சுட்டிக் காட்டுவது போல் பேசிய சொல் அவன் மனசில் வேதனையைக் கிளம்பிவிட்டிருந்தாலும், அது உம்மதானே என்பது போல அவன் முகம் இறுகிக் கிடந்தது. அவள் மனசுக்குள் எவ்வளவோ “எவ்வளவோ”… நெருப்பும், தண்ணியும் இல்லாமல் வெந்து கொண்டிருந்தன. ’சதக்’ன்னு அவள் கையில் குருவியின் எச்சம் விழுந்தது. முகத்தை சுழித்துக் கொண்டாள். வைக்கலை எடுத்து அதை வழித்து எறிந்தாள். “பிரி கூட போதும். குருவி எச்சம் வுட்ட எடத்த தண்ணிவுட்டு கழுவிபுடு இல்ல, அந்த எடம் பருவம் கட்டி வெந்து போயிடும்.” முத்தண்ணன் எச்சரித்ததும் மண் தோண்டியில் இருந்த தண்ணிய எடுத்துக் கழுவி கொண்டாள். ‘அது புருஷன் டீக் கடைக்காரக் குட்டியோட ஓடிப்போன அன்னிக்கு இந்த ஊரு வாயில பூந்து பொறப்பட்டு பேச வச்சுட்டுப் போனான். இத்தினி வருஷம் லோலுப்பட்டு சிரிப்பா சிரிச்சு இப்பதான் நிம்மதியா இரண்டு பருக்க திங்குது. இப்ப திரும்பவும் வந்து தொசம் கட்டி அடிக்கிறானே. பாவம் அதுதான் என்னாப் பண்ணும்?’ பாக்கியம் பட்ட இம்சையும் அல்லாட்டமும் முத்தண்ணனுக்கு மட்டும் தானே தெரியும். ஆடி வந்தா பிரிஞ்சி போயி ஆடு அடிச்சா கூடிக்கிற சனங்களுக்கு அடுத்தவங்க மனசு எப்படித் தெரியப் போவுது முத்தண்ணன் நெஞ்சுக்குள் வேதனை. கடாவடி மாடுகளை பண்ணைக்குக் கொண்டு போய் மறித்துவிட்டு வந்த மவனை, முத்தண்ணன் கூப்பிட்டு, “இந்தப் பிரிகளைக் கட்டிக்க. நாம ரெண்டு பேரும் போய் வைக்கத் தெரப்போம். தங்கச்சி நீ போய் களத்தக் கூட்டி பெருக்கி சுத்தம் பண்ணு”. வைக்கப் பிரிகளை கட்டிக் கொண்டு புறப்படும் போது, வெயிலின் வெக்கை தணிந்து போயிருந்தது. காத்தும் சிலுசிலுன்னு ஓடியது. நேத்துக்கு வைக்கல தெரக்கிறதுக்குள்ள வந்த வண்டிக்காரங்க இன்னிக்கு தெரச்சு போட்டும் வரவில்லை. களத்தில் கணிசமான அளவுக்கு நெல் கிடந்தது. ஒழைச்சப் பாட்டுக்கு வீண் போயிடாம கூலி கெடைச்சிடுங்கிற தெம்பு. சந்தோஷமாய் நெல்லை அளந்து கொண்டிருந்தான். ஏதோ அரிசி கருக்கா கெடைக்காதாங்கிற நெனப்புல கருக்கா மூட்டையை அள்ளிப் போட்டு தூத்திக் கொண்டிருந்தாள் பாக்கியம். “அம்மா… அம்மா! அப்பா வந்திருக்கு வந்து பாரேன்…” மூச்சு இறைக்க ஓடிவந்த தங்கத்தின் மொகத்தில் எவ்வளவு சந்தோஷம்-? அவன் அப்பா மூஞ்சை மனசில் வரிச்சுக்கறதுக்குள்ள ஓடிப்போனவனை அம்மாவோடு சேத்து எடுத்திருந்த போட்டாவைத் தானே அப்பா என்று பார்த்தவளுக்கு இவ்வளவு சந்தோஷமா… “ஏய்! ராதிகா… தங்கத்தோட அப்பா ஒருத்தி இழுத்துக்கிட்டுப் போயிட்டாராம்டீ. பாவம்டீ அவ, அவ அம்மா தான் அவளுக்கு எல்லாம் செய்யனுமாம்” சிநேகிதிகள் சொல்லும் போது- ‘இந்தப் பொண்ணு பாவம். அப்பன் மூஞ்சக் கூட சரியா பாக்குல. கிளி போல இருக்கிற பொண்டாட்டியயும், பொண்ணையும் உட்டுப்புட்டா ஒரு மனுசன் ஓடுவான். அப்புடி என்னாத்த அவகிட்டக் கண்டான்…’ அக்கம் பக்கத்தில் உள்ளவங்க அவள் மீது பரிதாபப்படும் போது- ’உன்னோட அப்பா என்ன வேலப் பாக்கிறார்?’ன்னு வாத்தியார்மார்கள் கேட்கும் போது- பாக்கியத்து மவ தங்கம் எப்படியெல்லாம் தடுமாறிப் போய் அழுதிருக்கிறாள். இனிமே யாரு கேக்க முடியும்? கேட்டா என் அப்பா இந்தா இருக்காங்கன்னு ரெத்தம் தெறிக்கிறது போல சொல்லலாம்ங்கிற பூரிப்பு, சந்தோஷம் குதூகலிப்பாய் தங்கத்தின் முகத்தில். மவளைப் பார்த்த க்ஷணத்திலேயே உணர்ந்து கொள்ளத் தெரியாதவளா பாக்கியம்? ஒவ்வொரு தடவையும் மவ வந்து ‘அம்மா இப்படி கேட்கிறாங்கம்மா’ன்னு சொல்லும் போது, ’ஏம்மா அப்பா இப்புடி செஞ்சிட்டுப் போனாரு?’ எத்தனை தடவை அம்மாவைக் கேட்டு அழுதிருப்பாள்? மவளை எப்புடி சமாளிக்கப் போறோமோ என்கிற கவலையை நெஞ்சுக்குள்ளேயே போட்டு அடக்கிக் கொண்டு, “ஏண்டி இப்புடி ஓடியாரே?” என்று கேட்ட அம்மாவின் பேச்சைக் காதில் போட்டுக் கொள்ளாமல், “அம்மா…அம்மா…அப்பா வந்திருக்கு, போட்டாவ்ல எப்புடி இருக்கு? இப்ப ரொம்ப எழைச்சுப் போயிருக்கும்மா… நீ எனக்கு வச்சிட்டு வந்த பாலைக் காய்ச்சிக் கொடுத்திட்டு வந்திருக்கேம்மா… ஒண்ணக் கூப்புடத்தான் ஓடியாரேன்.” பாக்கியம் மவ மனசில் தேக்கி வைச்சிருக்கும் ஆசையை எப்புடி அணைபோடப் போறோம்ங்கிற யோசனையில்… ’ஓப்பன நீ இப்ப தானே பாத்திருக்க? நான் மூணு வருஷம் முந்தாணை விருச்சி வாழ்ந்தவடி’ன்னு சொல்ல நினைத்தாள். “தங்கச்சி! நீ கூலியத் தூக்கிக்கிட்டுப் போ. நானும் தம்பியும் கிட்டக்கயிருந்து தெரய வண்டியில ஏத்திவுட்டுட்டு வர்றோம்.” பாக்கியம் புருஷனைப் பத்தி ஏதாச்சும் கேட்டுப்புடுவாளோங்கிற நெனப்புலதான் தந்திரமாய் அவளை அனுப்பிவிட அப்புடிச் சொல்லி அனுப்பினான் முத்தண்ணன். இந்த நிலையில் பாக்கியத்தால் எதிர்த்துப் பேச வழி வகையில்லை. பொழுது நல்லாவே எறங்கிக் கொண்டிருந்தது. பொழுதுக்கும் வேர்த்த வேர்வையில் சுருக் சுருக்குன்னு குத்திக் கொண்டிருந்த ‘சொணை’ அப்போது தான் அடங்கியிருந்தது. குளுகுளுப்பான காத்து வேற… இந்த சுகத்தை அவளால் அனுபவிக்க முடியவில்லை. கூலி நெல்லு மூட்டையைத் தூக்கிக் கொண்டாள். இத்தனைய நாளை விட இன்னிக்கு கூலியும் மூணு மரக்கா அதிகம். ஒரே கனம். சாம்பான் குறிச்சு வயலில் குறுக்கே இறங்கி நடக்கும் வரை’ “ஏம்மா! ஒண்ணும் பேச மாட்டேங்கிற? பேசும்மா பேசு” என்ற நச்சரிப்பாய் தங்கம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சே பசேலேன்னு பாசிப் பயிறும், உளுந்தும் தழைத்துக் கிடந்தன. தை மொதல்ல வெதச்சதுக்கு தோதா மாசி மொதல்ல கணுக்கா மழை. அதில பயிறு மதமதன்னு வளர்ந்து அடம்பா சங்கு வச்சு நின்றது. முந்தா நாளிலிருந்து தென்னக் காத்து வீச ஆரம்பிச்சதும் பூக்க ஆரம்பித்த பூக்கள் இளம் மஞ்சள் நிறமாய், கண்ணுக்கு குளிர்ச்சியாய் தெரிந்தன. தலைக்கு மேலே ஜிவ் ஜிவ் என்று பறக்கும் மடையான்கள் எழுப்பும் ஒலி சன்னமாய் அவள் காதில் விழுந்தது எதுவும் அவளுக்கு சுகப்பட வில்லை. சாம்பான் குறிச்சு வயலை ரெண்டாய் வகிந்து போட்டது போல கிடக்கும் ஒற்றையடிப் பாதை தலைப்பில் பாக்கியத்தோட புருஷன் வேலுசாமி…. “அம்மா! அதா பாரு. அப்பாவே எதிரக்க வருது பாரும்மா” - தங்கம் பயிர்ச்செடிகளை மிதித்துக் கொண்டு தன் அம்மாவைத் தாண்டி அப்பாவை எதிர்நோக்கி ஓட முயன்றாள். அவனும் கிட்டக்கவே, பத்து தப்படியில்… “இப்பதான் ஒப்பன கண்டிருக்கியாடி. சரிதான் போடி…” பரபரவென்று மவள் தங்கத்தின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு போனாள். பாக்கியத்தின் மனகக்கு ஒரேயடியாய் தகித்தது. அவனை அறியாமலேயே ஒத்தையடிப் பாதையிலிருந்து விலகி பாக்கியத்திற்கு வழி விடுவது போல ஒதுங்கி நின்று கொண்டவன், அவள் போகும் திக்கையே… மதாலித்து நிற்கும் பயிர்கள் தென்னலுக்கு வணங்கிக் கொடுத்து அலை அலையாய்… சி.எம். முத்து தஞ்சை - இடையிருப்பு கிராமத்தைத் தாய் மண்ணாய்க் கொண்ட முத்து, தான் உண்மையான கலைஞன் என்பதை ‘நெஞ்சின் நடுவே’, ‘கறிச்சோறு’ ஆகிய நாவல்கள் மூலம் நிரூபித்துக் கொண்டார். மேலத்தஞ்சை வாழ்மக்களின் - குறிப்பாக கள்ளர் மரபினரின் வாழ்க்கையோடு அந்த மண்ணின் மணத்தையும் பொய்மை கலவாது முத்து வெளிப்படுத்திய கலைவடிவம் படிப்பவரைத் தன் வயப்படுத்திக் கொள்ளும் என்று சொன்னால் மிகையில்லை. எழுபதுகளில் எழுத ஆரம்பித்தவர். நாட்டுப்புறப் பாடல்களில் ஈடுபாடு கொண்டு நாட்டுப்புறக்கலையை மேடையேற்றினாலும் சிறுகதை வடிவத்தில் குறிப்பிடத்தக்க சாதனையைச் செய்திருக்கிறார். இந்தியா டுடே முதலாம் இலக்கிய ஆண்டு மலரில் திரு. வெங்கட்சாமிநாதன் இப்படிக் கூறுகிறார். “அறுபது ஆண்டு கால இலக்கிய வரலாற்றில் திராவிட பாரம்பரியத்தில் எழுத வந்த அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி உட்படவும் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் உட்படவும் கலையைப் பிரச்சாரப்படுத்தி விட்டனர். அதனால் தான் உலகத் தரத்தை எட்டமுடியாமல் போய்விட்டது. இது தமிழ்மொழிக்கு நேர்ந்த ஆபத்து. தமிழ்நாட்டு சி.எம். முத்துவால் மட்டுமே அந்த வெற்றிப் பாதையை அடைய முடிந்தது. சாதி பற்றிய விஷயங்களை கலாப்பூர்வமாக சொல்லமுடியும் என்று சாதித்துக்காட்டிய அவரை தமிழகம் கவனிக்காதது அவருக்கு நேர்ந்த துரதிஷ்டமல்ல. தமிழின் துரதிஷ்டம் என்றால் மிகையில்லை …” என்று அவர் சொன்னது சி.எம். முத்துவைப் பொறுத்தவரை மிகையில்லை தான். ஆனால் வெங்கட் சாமிநாதன் திராவிட இயக்க எழுத்தாளர்களின் படைப்புகளின் மீது சந்தேகப்படுவதும் கொச்சைப்படுத்துவதும், ஓரவஞ்சனையே. நாடக வாத்தியார் தங்கசாமி நாடக வாத்தியார் தங்கசாமி இந்த பொளப்புக்கு வந்து வள்ளுசா நுப்பது வருசம் ஓடியே போச்சி. அவருக்கு இப்பக்கி வயசு தோராயமா அறுவத்தஞ்ச தாண்டி வச்சிகிட்டாலும் அவுரு நாடாவம் பளக்க வந்ததெல்லாம் அவுரோட பதினஞ்சாவது வயசுல தான். அந்த பதினஞ்சாவது வயசுலயே அவுருக்கு நாடாவ ஞானமெல்லாம் அத்துப் படியாயி போயிருச்சி. அரிச்சந்திராவிலேருந்து ஆரம்பிச்சா ராம நாடாவம்; பவளக்கொடி; வள்ளித் திருமணம்; சத்தியவான் சாவித்திரி; நல்லதங்காள்; நந்தன் சரித்திரம் அப்படின்னு பல நாடாவத்துல கரைகண்டு போயிருந்தாலும், அவுரு தனக்குன்னு மெயினா வச்சிகிட்டதெல்லாம் அரிச்சந்திராவ மட்டும் தான். அந்த நாடாவம்ன்னா அவுருக்கு ரொம்ப இஷ்டம். அவுருக்கு மட்டும்தானா? நாடாவத்துல வேசம் கட்டிகிட்டு நடிக்க வந்த பலபேருக்கு அதுதான் இஷ்டம். அவுரோட பதுநாலாவது வயசுலேருந்து நுப்பத்தஞ்சாவது வயசு வரைக்கும் தமிழ்நாட்டுல சும்மா ஐநூறு நாடாவ மேடையாவது ஏறியிருப்பாருன்னு தான் தோராயமா சொல்லணும். கணக்கெல்லாம் வச்சிகிட்டா அதத்தாண்டிதான்னு வச்சுக்கங்க. அவுரோட பதினாலாவது வயசுல மொத மொதலா உள்ளூரு நாடாவத்துல லோகிதாசனா வேசம் கட்டி ஜனங்களோட பரிதாபத்தையும், பாராட்டையும் வெகுசா பெத்துக் கிட்டதுல ‘இன்னாம நாடாவம்தான் நம்ப பொளப்புன்னு’ அன்னிக்கி நெஞ்சுல உறுதி எடுத்துக்கிட்டவருதான் இந்த தங்கசாமி. தங்கசாமிக்கு நாடாவம் பழக்கிக் குடுத்தது ஆருங்குறீங்க…? தஞ்சாவூர் ஜில்லா ஊத்துக்காடு மொட்ட வாத்தியாருதான். அந்த மொட்ட வாத்திக்கு பேரெல்லாம் கூட உண்டு. தங்கவேலுன்னு அழகான பேரு. அவுரு வயச ஒத்த மனுசங்க தங்கசாமியோட குருநாதரை தங்கவேலுன்னு கூப்பிட்டு பார்த்ததே இல்ல. ‘மொட்ட வாத்தியாரு, மொட்ட வாத்தியாரு’ன்னு தான் கூப்பிட்டு பாத்துருக்காரு இவுரு. தங்கசாமி கூட ஆர்கிட்டயாவது இவுருப் பத்தி பேசிக்கிட்டிருக்கப்ப ’மொட்ட வாத்தியாரு’ அப்படின்னுதான் குறிப்பிட்டு சொல்லுவாரு. ரொம்ப நாளு வரைக்கும் அவுருபேரு ‘மொட்டதானான்னு’ ஒரு சந்தேகம் தங்கசாமிக்கு நெஞ்சில் இருந்திச்சி. கேட்டுதான் பாத்துருவேமேன்னு மொட்ட வாத்தியாருகிட்டயே போயி கேட்டாரு. துணிஞ்சி கேட்டுப்புட்டாரே ஒளிய உள்ளுக்குள்ள நடுக்கம்தான். அவருக்கு வாத்தியாரு தப்பா எடுத்துக்கு வாரோன்னு தான். கூனிக் குறுவிப்போயி நின்னுக்கிட்டிருந்தாரு. நடுக்கமா போயிருச்சி. ‘என்னா துணிச்சலா கேட்டுப்புட்டம்’ அப்படிங்குற கவலதான். மொட்ட, வாத்தியாரு கேட்டதுக்கு பதிலு சொல்லாட்டி கூட பரவால்ல தான். அதத் தெரிஞ்சிகிட்டுதான் என்னாப் பண்ணப் போறாம்னு அப்றமா தான புத்தில படுது. மொட்ட வாத்தியாரு இதுக்காவ ஒண்ணும் கோச்சுக்கலை. ஆனா பேசாம குந்திருக்காரே… டக்குன்னு செவ்வுல நாலு குடுத்து நாலு வார்த்தை பேசிபுட்டா கூட தேவலாம் தான். அவுரு மௌனம்தான இவுர சில்லு சில்லா நொறுக்கிட்டிருக்கு. மொட்ட வாத்தியாரு மேல தங்கசாமிக்கு ரொம்ப இஷ்டம். நிமுசம் வுடாம அவுரு ’ஆ….ஆ…’ன்னு மூச்சுவுடாம இளுத்து பாடுறதும், வெட்டிப் பாடுறதும், சுளுச்சி பாடுறதும், ஜாலக்கு பண்றதும் காதுக்குள்ள தேவாமிர்தமா கேட்டுகிட்டேருக்கே. எம்புட்டு மரியாதை வச்சிருக்காரு தங்கசாமி அவரு மேல. நிமுச நிமுசமா மொட்ட வாத்தியாரப் பத்தியேதான் நெனச்சிகிட்டிருப்பாரு இவுரு. குரு பக்தில அப்டி ஒரு பக்தி. அவுரு சொல்லிகுடுக்குற பாட்டும், வசனமும், நடிப்பும் நெஞ்சுல டேப்பா பதிஞ்சி போயிருச்சி.. தங்கசாமி தா வூட்டுக்குள்ள மாட்டி வச்சிருக்குற அநேக சாமி படத்தோட மொட்ட வாத்தியாரு படத்தத்தான் முக்கியப்படுத்தி மாட்டி வச்சிருக்காரு. நெத்தில் சந்தன பொட்டு வச்சி பூ போட்டு லைட்டு குடுத்து கூட வச்சிருக்காருன்னா பாத்துக்கங்களேன். அவுரு குருபத்திய மதிச்சதால தான இன்னியவரைக்கும் நாடாவத்திலே கெடந்து. ஒலண்டு இந்தால ஓஞ்சிப் போயி குந்தப்போறதும்… தங்கசாமி மட்டும் பாட்டுல கெட்டிக்காரரு இல்லியா என்னா? ரேடியோ பெட்டி, மைக்கு கிய்க்கு இல்லாம ஒரு பர்லாங் தூரத்துக்கு கேக்கும்படியா பாடுவார் ஆசாமி… ஆ…ஆ…ஆன்னு இளுத்து ஆ…ன்னு வெட்டிப் பாடயில பெட்டிக்காரனுக்கும், சட்டிக்காரனுக்கும் டவுசரு கிளிஞ்சிப் போயிராது… என்னா கொரலுடா. சாமி அது தவுள டகடகடகடகன்னு உருட்ற மாறில்லா ராகத்தை எளச்சிப்புடுவாரு எளச்சி… தவள கக்கரக்கா கக்கரக் காக்குற மாறில்லா கொரலு உருண்டு உருண்டு வரும். பாட்ட எம்புட்டுக்கு ருசி படுத்த முடியுமோ அப்புட்டுக்குல்ல ருசிபடுத்திபுடுவாரு. இவுரு எளச்சிப் பாடுற ராகத்தக் கேட்டு எம்புட்டு எடத்துல எம்புட்டு பொம்பளைங்க மயங்கி கீள வுளுந்துருக்காங்க. ஐயோ ஐயோ அதெல்லாம் தனிக்கதைடா சாமி. இவுரோட குருநாதரு மொட்ட வாத்தியாரு ரெண்டு பொண்டாட்டிக்காரரு. அஞ்சு புள்ளங்க வேற. மொட்ட வாத்தியாரு மட்டும் உசுரோட நல்லபடியா இருக்குற காலத்துலே நெனச்சிருந்தாருன்னா எவனோ ஒரு ராஜன் தொன்னுத்தாறு பொண்டாட்டி கட்டிக்கிட்டிருந்தாராமே. அதுமாறி கட்டிருந்துருக்கலாம்தான். அவுருதான் மனஞ்சளிச்சிப் போயி வேண்டாம்னு வுட்டுட்டாரு. பொண்டாட்டிய கட்டிகிட்டு வந்தது சேத்துக்கிட்டு வந்து கட்டிக்கிட்டதுதான்? அவுரோட வேஷம் கட்டிக்கிட்டு சந்திரமதியா ஆக்கிட்டு பண்ணிகிட்ட பொம்பள…ச்சீ… பொண்ணு அவுர வுடுவனா தொடுவனான்னு இருந்து இம்சை பண்ணில்ல கட்டிகிட்டா மனுசி. ஆங்…எங்கியோ ஆரம்பிச்சி எங்கியோல்ல போவுது கதை… தங்கசாமி மொட்ட வாத்தியாரப் பாத்து ’எப்டி மொட்டைன்னு ஓங்களுக்கு பேரு வந்துச் சி’ன்னு கேட்டாருல்ல. அதுக்கொண்ணும் மொட்ட வாத்தியாரு கோச்சுக்கலை. அதுல கோச்சுக்குறதுக்குதான் என்னாருக்கு? அவுரு செத்த நேரம் மௌனமா குந்திருந்துட்டு சொன்னாரு. “அந்தக் கதைய ஏங்கேக்குற தங்கசாமி… எங்க அம்மா அப்பா வெகுநாளா கல்யாணம் ஆயி பத்துவருஷ காலமா கொளந்த இல்லாம தவிச்சி தவமா தவமிருந்து என்னப் பெத்தாங்களாம். எங்களோட கொல தெய்வம் கொரடாச்சேரிக்கும் பக்கத்துல கீரந்தங்குடி மகமாய்ய வேண்டிகிட்டு அங்கப்பெரட்டம் பெரண்டு பாடகாவடி தூக்கி பால் காவடி எடுத்து… ஓடம்பெல்லாம் ரணமாவுறாப்பல அலகு காவடி எடுத்து என்னான்ன சிகிச்சை ஆக்கிணை பண்ணி அப்றமா நா பொறந்தேனாம். ஆம்பளப்புள்ளையா பொறந்ததுல எங்க அம்மாவுக்கும், அப்பாவுக்கும் பரமசந்தோசம். அதுல தான் கொளந்தை இல்லாமலிருந்த பத்து வருச காலத்தப் போல பத்து வருச காலத்துக்கு ஏம்புள்ளக்கி ஓஞ்சன்னதிக்கு வந்து மொட்டப் போட்டு முடியிறக்கி காணிக்க வச்சிபுட்டு போறன்னு வேண்டிகிட்டாங்களாம் பெத்தவங்க. முடி மொளக்கிறதும், மொட்டையடிக்கிறதும்ன்னு ஆயிப் போனதுல நா பத்து வருச காலமாக மொட்டைத் தலையாவே வெளையாண்டுகிட்டு கெடந்தனா? அதுல எங்க அம்மா அப்பா வச்ச தங்கவேலுங்குற பேரு வுட்டுப்போயி ஜனம் அம்புட்டும் மொட்டன்னு வச்சப் பேருதான் நெலச்சிப் போச்சி. ஊருக்குள்ள ஆருக்கும் தங்கவேலுன்னா சுளுவா தெரியாது. மொட்டன்னா டகாருன்னு புரியும். நா நாடாவத்த வாத்தியாரு வச்சி பழக்கிட்டு நானே வாத்தியாரா வந்ததும் மொட்ட வாத்தியாருன்னு கூப்ட ஆரம்பிச்சிட்டாங்க.” அப்படின்னு கதைபோல சொல்லி முடிச்சாரு. ’கூத்துடா சாமி’ன்னு நெனச்சிக்கிட்டாரு தங்கசாமி. தங்கசாமிக்கி கூட மொட்ட வாத்தியாரு ரெண்டாவது பொண்டாட்டி கட்டிக்கிட்ட சமாச்சாரமெல்லாம் கூடத் தெரியும். அதப்பத்திக் கூட லேசா நெனச்சிப் பாத்துக்கிட்டாரு. மொட்ட வாத்தியாரு மேடையில் ஏறி நடிக்கிற காலத்துல சக்கரவேசமோ, நக்குற வேசமோ போட்டுக்க மாட்டாரு… செத்த நாளி வந்துட்டுப் போற சைடு ஆக்கிட்டும் பண்ணமாட்டாரு. வேசம் கட்டிக்கிட்டா ராஜபார்ட் மட்டும் தான். அவுரு மெயினாக்கிட்டு பண்ணிகிட்டு நடிக்கிறப்பல்லாம் எம்புட்டோ பேர்போன பொம்பளைங்களோடல்லாம் ஆக்கிட்டு பண்ணிருக்காரு. அப்புடி நடிச்சி வர்ற காலத்துல திருவாளூருலேருந்து ஒருத்தி சந்திரா சந்திரான்னு அவுருகூட மெயினாக்கிட்டா நடிச்சிக்கிட்டிருந்தா. அந்தக் குட்டி மொட்டவாத்தியாரு ராகத்துக்கோ நடிப்புக்கோ ஈடுவல்லைன்னாலும், கிட்டத்தட்ட அவுரோட ஒத்துப்போற அளவுக்கு நடிக்கவும் பாடவும் செய்வா. மொட்ட வாத்தியாரு தா நடிக்கிற மேடையிலெல்லாம் அவளதான் ஜோடியா போட்டுக்குவாரு. அப்புடி ரெண்டு பேரும் ஜோடி ஜோடியா நடிச்சிவர்ற காலத்துல ஜனங்க எல்லோரும் அவரையும், அவளையும் சம்பந்தப்படுத்திப் பேசிப்பாங்களாம். இந்த விசியபசியம் மொட்ட வாத்தியாரு காதுக்கும் சந்திரமதி சந்திராவோட காதுக்கும் எட்டிப் போனதுல மொட்ட வாத்தியாரு. கவலைப்பட்டாலும் சந்திரா கவலைப்படலியாம். அவளுக்கு என்னடான்னாக்கா அப்டி கேக்குற சங்கதிபங்கதியெல்லாம் ருசிபசியாயிருந்துச்சாம். பஞ்சுல தீக்குச்சி கொளுத்திவச்சா என்னாவும் கதை…? அப்டிதான் ஆச்சி சமாச்சாரம். சந்திரா மொட்டவாத்தியாரு மேல பிரியப்படுற ரகசியத்த நேரடியாவே சொல்லிப்புட்டாளாம். மொட்டவாத்தியாரு லேசுல சம்மதப்படாமருந்தவரு அவ தன் உசுரை மாச்சிக்கிறதுக்காவ மருந்து மாயத்தக் குடிச்சி காப்பாத்திவுட்டு, கதை முத்திப் போச்சி, இன்னிம தாக்குப் புடிக்க முடியாதுன்னு ஒத்துக்கிட்டு கொஞ்ச நாளக்கி அவள வப்பாட்டி மாறி சேத்து கிட்டு வச்சிருந்து அப்றமாதான் ரெண்டாந்தாரம் கட்டிக்கிட்டாரு. நாடாவ கலைஞர்களோட வாழ்க்கையில இதெல்லாம் சகஜமானதுதான் அப்டின்னு தங்கசாமிக்கும் தெரியும். தங்கசாமி மட்டும் இப்புடிபட்ட புடியில்லாம் இன்னிவரைக்கும் சிக்கிக்கிட்டதுல்ல. வந்தவளை வாடின்னு கூப்ட்டு கீப்ட்டு நாச்சியமா பேசி கீசி என்னமோ அப்டி இப்டி பண்ணிக்கிண்ணி வச்சாலும் வச்சிருப்பாரேத் தவுர, கல்யாண அளவுக்கு சங்கதி முத்திப் போயிர வுட்றலை. கட்ன பொண்டாட்டிகிட்ட கொஞ்சம் பயந்த மனுசனாச்சே என்னா பண்றது? தங்சாமி தனது நுப்பத்தஞ்சாவது வயசு வரைக்கும் உள்ளூரு ஆளுங்களோட நாடாவத்துல நடிக்கிறதுக்கு ஆரம்பிச்சிதுலேருந்து பேர் பெத்த எம்புட்டோ பேர்களோட நடிச்சி பாத்துப்புட்டாரு. எம்புட்டோ பாத்திரங்கள்ளயும் ஆக்கிட்டு பண்ணிப்புட்டாரு. ஒன்னுலயும் சோட போனதுல்ல மனுசன். அவுருகிட்ட இருந்த தெறமைகளை மொட்ட வாத்தியாரு மட்டும் கண்டுபுடிக்காட்டி வய வாய்க்கான்னு விவசாயத்துலதான் ஈடுபட்டுப் போயிருப்பாரு. நாடாவம் நடிக்க ஆரம்பிச்சி அவுருக்கு பேர் கெடச்ச பொறவு அவுருக்கு விவசாயம் பண்றதுலல்லாம் நாட்டமே வந்ததுல்ல. கோடை எப்ப பொறக்கும் கொட்டாவ எங்க போடுவான் அப்டின்னுதான் எதுபாத்துக்கிட்டு கெடப்பாரு. வருசத்துல ஆறுமாசம் கையையும், காலையும் கட்டிப் போட்டாப்புலதான் இருக்கும். திண்ணையில குந்தி ஆசதீர பாடிகிட்டிருப்பாரு. உணர்ச்சிவசப்பட்டு வசனம் கூட பேசிப்பாக்குறதும் உண்டுதான். அவுரு பாட்டையும், வசனத்தையும் கேட்டு ஊரு ஜனங்க வேல வெட்டிகளை வுட்டுபுட்டு செத்தநேரம் கேட்டு பாராட்டிப்புட்டு போய்ச் சேருவாங்க. பொண்டாட்டிக்காரி பெருசா கத்தி நாறடிப்பா. ‘கஞ்சிக்கி கதியத்த நாயிக்கி பாட்டும் கூத்தும்தான் மிச்சம்’ன்னு அத்தோடயா வுடுவா…? ’கூலிக்காரனுக்கு வாக்கப்பட்டு, போயிருந்த கா வவுத்து கஞ்சிநாச்சும் தட்டுப்படாம கெடைக்கும். இந்த மனுசனக் கட்டிக்கிட்டு அதுக்கும் வக்கத்துப் போச்சி’ம்பா, பொண்டாட்டி வசது செத்தநேரத்துக்கு குறுகுறுன்னுருக்கும். அவ சொல்றதுல நாயமுல்லாமலாயான்னு தன்னையேக் கூட நொந்துக்குவாரு. அவிரு வயித்துப் பாட்டப் பத்தியெல்லாம் ஒருநாளும் கவலப்பட்டுகிட்டதே இல்ல. பாட்டும் கூத்தும் தான் அவுருக்கு சோறு தண்ணி எல்லாமும். கத்தி சிரிக்கடிக்கிற பொட்டாட்டிகிட்ட ’கவலைப்படாம கெட்டி குச்சிவூட்ட இடிச்சி மச்சிவூடா கட்டத்தான் போறன். சீக்கிரத்துல நீயும் நானும் சேந்தர்னயா கார்ல போற டயத்தப் பாரு’ அப்படின்னு ஆள அசமடக்கிப்புடுவாரு. வூட்டுக்குள்ள அடுப்பு எரியறதும், எரியாததும் பொண்டாட்டி சாமார்த்தியதுலதான்… அவ மட்டும் வேலவெட்டிக்கி போவாட்டி நடக்குமா பொலப்பு? தங்கசாமியோட பொண்டாட்டி இப்டி கன்னாப்பின்னான்னு கத்துனாலும் கொண்டாலும், அடி மனசுக்குள்ளார கொஞ்சம் எரக்க சுபாவம் உள்ளவதான். கூத்தாடுற மனுசனக் கட்டிக்கிட்டு நாளும் அவதிப்படுறது ஒரு பக்கத்துல இருந்தாலும், இப்டி நாலு ஜனம் பெருமைபடுத்துறாப்பலயும், மரியாதை மனுசன் தனக்கு கெடச்சாரே அப்டின்னு சமயங்கள்ல சந்தோசப்பட்டுக்றதும் உண்டுதான். அவுரு சொன்ன மாறி காரூல ஏறி போறதுக்கு கனவு காணலன்னாலும், கட்ட வண்டில போறதுக்காவதும் டயம் வராமலயா போயிரும் அப்படின்னுதான் நெனச்சிக்குவா. ஆம்பளப் புள்ளைங்களா ரெண்டு பெத்து அதுங்களுக்கு வேற வயசாயிட்டு வருது. பயலுங்க ஆளாயி மனுசனாயிப் போயித்தா தின்ன வச்சி காப்பாத்தமயா போயிருவானுங் கங்குற நம்பிக்கையில் தான் காலத்த கெடத்திக்கிட்டு கெடக்கா. தங்கசாமிக்கி மட்டும் குடும்பம் ஒசறனுமே அப்டிங்குற கவலையெல்லாம் இல்லாமயா? இருக்குது…? மனசு எம்புட்டுதான் கூத்துலயும், பாட்டுலயும், குடும்பம் ஒசறனுமே அப்டிங்குறதுலயும் கவல உண்டுதான். எம்புட்டுதான் நாடாவத்துல நடிச்சோ பழக்கிக் குடுத்தோ வருமானம் வந்தாலும், வர்ற காசம்புட்டும் ஏனோ நின்னு தொலைக்கமாட்டேங்குது. வாமடை ஒன்னுருந்தா வடிமடை ஒன்னுருக்குமில்ல. கன்னா புன்னாவா போயிருது. தொயிலுக்கு வந்ததுலேருந்து இன்னிவரைக்கும் முளுசா ஒரு ஆயிரம் ரெண்டாயிரம்னு கண்ணாலப் பாத்ததுல்லயே என்னாப் பண்றது? ராசா வேசம் கட்டிகிட்டா ராசாவாருந்ததுர முடியுமா? ‘அரிச்சந்திரன்’ வேசம் கட்டி ‘அரிச்சந்திரன்’னே பேரு பெத்துக்கிட்ட ’முட்டம் பெரியசாமி’ சொத்து சொவம் சேத்துகிட்டதுல கூட கில்லாடிதான். அவுரு சாவுறப்ப சாவுறதண்டிக்கி முன்னாலேயே பொறந்த ஊர்ல தன் சமாதிய தானே கட்டி முடிச்சிவச்சிபுட்டுதான் செத்தாரு. அவுரு மாறி தானும் வந்துரணும்னுதான் நெனச்சாரு தங்கசாமி. நெனப்பு நடக்குதா? முட்டம் பெரியசாமிக்கு இவரு மட்டும் சோடையா என்னா? அவுரு மாறி கொரல ஒசத்திப் பாடுறதுலயும், வெட்டி நடக்குறதுலயும், ஜாலக்கு பண்றதுலயும் பலே கில்லாடிதான் மனுசன். அரிச்சந்திரா மயான காண்டத்துல, ‘ஆரடி கள்ளி’ன்னு பாடி முடிக்கிறப்ப அண்டம் குலுங்கும். அம்புட்டு பேர் கண்ணுலயும் நீர் வடியும். எம்புட்டுருந்து என்னா பெரோசனம். முட்டம் பெரியசாமிக்கு ஒரு ரேட்டு தங்கசாமிக்கு ஒரு ரேட்டுன்னுல்ல ஆயிப்போச்சி கதி. அட ரேட்டு பேசி அளச்சிக்கிட்டு போற மக்கமனுச பேசுன ரேட்ட ஒழுங்கா குடுத்து கணக்கு தீர்த்ததுண்டா? ஐநூறு பேசி அளச்சிக்கிட்டு போனா முந்நூறு குடுகறதே பெரிய காரியம்தான். வாக்குல ஒன்னு செய்கையில் ஒன்னு. ’கலைக்கு என்னடா காசு மசுரு’ அப்டின்னு தங்கசாமிதான் தன்னை சமாதானப்படுத்திக்குவாரு. முட்டம் பெரியசாமின்னா அப்டிவுட்றுவாரா மனுசன்? அவுருக்கு பேசுன ரேட்ட ஒழுங்கா குடுக்காட்டி மறு வருசத்துக்கு நடக்கிறதுக்கு ஒத்துக்க மாட்டாரு. எப்பவும் அவரப் பொறுத்தவரைக்கும் நாக்கு சுத்தமாருக்கணும். நடிப்பும் சுத்தமாருக்கணும். பாடுற பாட்டும் சுத்தமாருக்கணும். ஜனங்க ரசனைக்கு தவுந்தாப்புல ஒருநாளக்கிம் பாட்டுல சினிமா மெட்ட கலக்கவே மாட்டாரு. கலப்புல்லாத பாட்டத்தான் பாடுவாரு. கேக்குறதுக்கு ஒருத்தன் இருந்தாகூடப் போறும்னு வீம்பா நெனச்சிக்குவாரு. கொடல்லேருந்து தான் பாட்டு வரும். வெங்கலம் மாறி கணீருங்கும். ஒரு பிசிறு பிசகு வருமா? ’சும்மாவா சொன்னான் கொடப்புடுங்கி நாடாவும்’ன்னு தங்கசாமியும் அப்டிதான் கொடல்லேருந்து பாட்டெடுத்து பாட்டெடுத்து வத்துன வவுரும் ஒடம்புமா போயித்தாரு. முட்டம் பெரியசாமியோட தங்கசாமி நடிக்கிறப்பல்லாம் நக்குற வேசமானாலும் பரவால்லன்னுதான் ஆக்கிட்டு பண்ணுவாரு. ராஜபார்ட்டுதான் கெடைக்காதே… குத்தப்போறது கலிக்கி, கமுகக்கட்டி மயிரு தெரியுதுன்னு கவலப்பட முடியுமா? நாய் வேசம் போட்டா கொலச்சிதானே ஆவணும்? நச்சத்திரனா விசுவாமுத்திரனா எந்த வேசமானாலும் கட்டிக்குவாரு. அந்த வேசத்தக் கட்டிக்கிட்டா எம்பியல்லோ குதிச்சாவணும். அதுக்குத்தான் தனி பிராக்கிட்டெல்லாம் பண்ணி குடுத்துருக்காரே. மொட்டவாத்தியாரு. உத்தரத்துக்கு தாவுவாரு. பூமிய கொடையலாம்னா கொடஞ்சிகிட்டு கீழக்கூட போயிருவாரு. எல்லாம் மொட்டவாத்தியாரு தயாருதான். ந்தால நாலடி ஓசறம் முளுசாருப்பாராள்னுதான் சொல்லணும். கன்னங்கரேல்னு காரித்துப்புனா காக் காசுக்கு பொறமாட்டாரு. அந்த மனுசன் எம்புட்டு வித்தையெல்லாம் கத்து வச்சிருந்துருக்காரு. பாவம் பத்து பதுனஞ்சி வருசத்துக்கு முந்தியே செத்துப் போயித்தாரு.. செத்த எடம் புல்லு மொளச்சி பூச்சி மரமாவும் போயித்தாரு. மரத்துலதான் மொட்ட வாத்தியாரு குந்திருக்காருன்னு நெனச்சிகிட்டு தங்கசாமி, வருசத்துக்கு கொருக்கா மால கூட கட்டிப்போட்டுட்டு வருவாரு. தங்கசாமி ஒரு தபா ஸ்திரீ பார்ட்டா ஆக்கிட்டு பண்ணனும்னு ஆசப்பட்டு காக்காமுளி கோயிந்தசாமி பிள்ளையோடயே சுத்தி திரிஞ்சாரு. அந்த காக்கமுளி கோயிந்தசாமி எப்டிபட்டவருன்னா சந்திரமதியா வேசம் கட்டிக்கன்னு பொறந்த மனுசன் அவுரு ஒருத்தருதான்னு சொல்லணும். பொம்பள மாறியே கீச்சுக்கொரல்லதான் பாடுவாரு. சாரீரம் சுத்தமாவும், கேக்குறதுக்கு ஏஞ்சிப்பாவும் இருக்கும். அநேவமா முட்டம் பெரியசாமி; கஞ்சனூரு முத்துக்குமர பத்தரு; பிளேட்டு கதிரேசம் பிள்ளை; பசுபதிகோயிலு கதிரேசன் காடவராய்ரு இவுங்களுக்கு ஜோடியா ஸ்திரீ பார்ட்டுல நடிப்பாரு. சந்திரமதிய தவுர வேற பாத்திரங்கள்ல நடிக்கமாட்டாரு. மயான காண்டத்துல லோகிதாசன பறிகுடுத்துபுட்டு கதர்ற கட்டத்துல பின்னிபுடுவாரு பின்னி ஆசாமி. அவுரு ஸ்திரீ பார்ட்டா வேசம் கட்டிக்கிட்டு மேடையில் வந்து நின்னா ஆம்பளையெல்லாம் ஆ…ன்னு வாயப் பொளந்துகிட்டு பாத்துகிட்டிருப்பானுவ. அசல் பொம்பளை தோத்துப் போயிருவா. அடா அடா என்னா நடை என்னா ஒயிலு- குலுக்கறதும், மினுக்குறதும் காக்கா முளி கோயிந்தசாமியால மட்டும் தான் முடியும். என்னா மூக்கு அது… கத்தி மாறி அம்புட்டு கூர்மையா… அவுரு தாம்பேர மட்டும் ‘காக்கா முளி கோயிந்தசாமி’ன்னு மட்டும் வச்சுக்காமருந்துருந்தாருன்னா தமிழ்நாட்டுல அநேவம் பேரு பொண்ணு, கேட்டு போயிருப்பாங்கன்னா பாத்துக்கங்களன், என்னா கூந்தல்… என்னா பொடவக்கட்டு… அம்புட்டுலயுமுல்ல கில்லாடி. நம்ப தங்கசாமிக்கு அதப் பாத்துதான ஸ்திரீபார்ட்டா ஆக்கிட்டு பண்னும்னு ஆச வந்துச்சி. மொட்டவாத்தியாரு. கிட்ட தன் ஆசய சொன்னப்ப அவரும் ’குஷி’பட்டுப் போயி, ’ஒனக்கு இதெல்லாம் தூசுடா தங்கசாமி’ அப்டினுல்ல சூர் ஏத்திவுட்டு நடிக்க வச்சாரு. ரொம்ப காலத்துக்கு முந்தி நாடவத்துல பொம்பள வேசம் கட்டிக்கிறதுக்கு எந்த பொம்பள முன்னாடி வந்து நின்னா? அது என்னமோ தமிழ்நாட்டுல அத்திப்பூத்தாப்லதான் இருந்துச்சி. பொம்பள வேசத்த ஆம்பளதான் நடிச்சாவணும். அப்டி ஆளாளுக்கு நடிச்சிதான் தீத்தாங்க. ஸ்திரீபார்ட்டுன்னு மட்டுமுல்ல, டப்பாங் குத்தாருந்தாலும் சரி, டான்சாருந்தாலும் சரி எல்லாத்தையும் ஆம்பளதான் ஆக்கிட்டு பண்ணுனான். அதுக்கப்பறமாதான் நாகரீகமும், சினிமாவும் வந்த காலத்துல பொம்பளைங்களும் நடிக்க வந்தாங்க. ஒருத்திய பாத்து ஒருத்தியா வந்து ஈசப்பூத்தாப்புல பொம்பளையோளே அரிதாரம் பூசிக்க முன்னாடி வந்துட்டாங்க. அந்த காக்கா முளி கோயிந்தசாமி புள்ளயும் தான் செத்துப் போயிட்டாரே மனுசன்… காக்காமுளி செத்தப்பவும், முட்டம் பெரியசாமி செத்தப்பவும் நம்ப தங்கசாமி அன்னந்தண்ணி இல்லாம ஒருவாரம் வரைக்கும் பட்னியா கெடந்தாரு. அம்புட்டு துக்கம் அவுரு நெஞ்சுல. நாடாவத்துல நடிக்கிறதுக்கு அப்டிபட்ட மனுசங்களெல்லாம் இன்னம வருவாங்களா அப்டின்னுதான் நெனச்சுக்குவாரு தங்கசாமி. எம்புட்டுதான் மனுச உசுர குடுத்து நடிச்சாலும் கொண்டாலும், பாட்டுதான் பாடினாலும் ரசிக்கிற மனுசனுங்களுமல்லவா கூடருந்து ரசிக்கணும். அதுதான் ஒழுங்கா நடந்துருக்கா நாட்டுல? ராசா வேசம் கட்டிக்கிட்டு நடிப்பாளி மேடையில் வந்து நின்னாக்கா பாக்குற ஜனத்துல பாதிபேரு வெளியே கௌம்பிக்கிட்டல்லவா அங்குட்டும், இங்குட்டுமா போயிருது. ஏதோ அப்பல்லாம் அந்த ராகத்தையும் நடிப்பை அனுபவிக்கிறதுக்கு வயசான கௌங்கட்டைங்கதான இருந்து தொலச்சாங்க. எளவட்டமான பசங்களோ பசங்கிகளோ நய்யாண்டி கூத்த ரசிக்கிறதுக்குத்தான நாடாவத்துக்கு வர்றதெல்லாம் நாடாவ கொட்டவையில் சீன்படுதா கட்டி லைட்டெல்லாம் போட்டுக்கிட்டு நடிக்கிற ஆளுவளும் பின்பாட்டுக்காரனும் பெட்டிக்காரனும் சுக்லாம்பர்தனம் பாடி, ’கிர்ரத்தா கிர்ர்ரத்தா’ன்னு கொட்டுக்காரனெல்லாம் தட்டி முடிச்சப்புறம் சீன தொறந்துவுட்டா பவுனாக்கிட்டு எப்பவரும், டான்சுக்காரி எப்ப வருவா அப்டின்னுதாள் பாத்துகிட்டு குந்திகிட்டிருக்கும் சனம் அம்புட்டும். பவுனாக்கிட்டும் டான்சுக்காரியும் மேடையில வந்து குதிக்க ஆரம்பிச்சா சனங்களுக்கு சிரிச்சிசிரிச்சி வயுரெல்லாம் புண்ணாயிப்போயிரும். அவுங்க கும்மாளம் போடுறதும், சீட்டி அடிக்கிறதும் அதுவே ஒரு நாடாவம்தான். நாடாவம் நடத்துரதுக்கு முன்னாடி பொம்பளை குட்டிங்க அரிதாரம் பூசி ஓடை மாத்திக்கிட்டிருக்கப்ப உள்ளூரு பசங்களும், வெளியூசு பசங்களும் மறப்புல வச்சிருக்க கீத்த நீக்கி நீக்கிகிட்டு வேடிக்க பாக்க கௌம் பிருவானுவ. என்னமோ அங்கயே அவ அவுத்துப் போட்டுப்புட்டு ஆடுற மாதிரி, நடிக்க வந்தவன் அவனுவள வெரட்டி வெரட்டி அப்பயே தொண்ட பாதிப் புண்ணாப் போயிரும். அப்புடி என்னா ருசியத்தான் பொம்ளகிட்ட கண்டானுவளோ? ராஜபார்ட்டு வந்து. மேடையில் நடிக்கிறப்ப நாடாவம் பாக்க வந்தவனுவல்ல பாதி பயலுவ போயிருவான், நடிக்கிறத பாக்க வந்தவனுளா அவனுவ… நய்யாண்டிய ரசிக்க வந்தவனுவளாச்சே…. அங்கன புதுசா மொளச்சக் கடையில டீ குடிக்க போயிருவானுவ. பொட்ணம் திங்கப் போயிருவானுவ. புரோட்டா சாப்டப் போயிருவானுவ. காவாசிப்பேரு சூதாட்டம் ஆட கௌம்பிப் போயிருவான். வய வாய்க்காலுல கண்டு ரசிச்சு பேசிப்பழகுன குட்டிங்க ஆராச்சும் நாடாவம் பாக்க வந்துருந்தாளுவன்னா அவள மை போட்டு இழுத்துக்கிட்டு போயிருவானுவு… எங்கங்குறீங்க…. கணக்கு பண்ணத்தான். இதெல்லாம் முடியாதப் பயலுவ கொறட்டையடிச்சிக்கிட்டு தூக்கம் போட்டுகிட்டு கெடப்பான். வேட்டி அவுந்தது தெரியாமக் கூட பல்லு வுளுத்தவனும் பாக்கியடிக்கிற பயலுவளும் தான் ஆன்னு பொளந்த வாயி பொளந்தபடி ராஜாவ ரசிச்சிக்கிட்டிருப்பான். இப்புடி வந்த சனம் அம்புட்டும் மெயின் நடிப்ப பாக்காம போயிருதேன்னு கவலப்பட்டுதான் நாடாவக்காரன் தந்தரம் பண்ணுனான். மெயினாக்கிட்டு ஆக்கிட்டு பண்ணிகிட்டிரக்கப்பயே சைடையும் வுட்றுவான். சில்ற ஆக்கிட்டு வந்து தையா தக்கான்னு குதிச்சி ரெட்ட அர்த்தத்துல வசனம் பேசுனாதான் நம்ம ஆளுவ குந்தி நாடாவம் பாக்குறான்… அரிச்சந்திர நாடாவம் அரிச்சந்திரா நய்யாண்டி நாடாவமா ஆயிப்போயிரும். தங்கசாமி ராஜபார்ட் கட்டிகிட்டு முக்கி முக்கி மூணு மூணரை கட்டைக்கு எவ்வுறப்ப மூக்குல, சளியே வந்துரும். அனாயசமா நாலு கட்டக்கி கூட பாடுனவருதான். ரொம்ப காலத்துக்கு முந்தியே அது முடியாமப் போச்சி. அந்தக் காலத்துல வடக்குத்தி ஆளுவ தமிழ உச்சரிக்கத் தெரியாத காலத்துல நாடாவ மேடையில ஏறி ராசாவேசம் கட்டிக்கிட்டு இப்புடித்தான் சொல்ல வுட்டுபுட்டு பாடுவானுவளாம்… சும்மானாச்சுக்கும் ஒன்னே ஒன்னு பாருங்க… ராசாதி ராசா வந்துச்சே - அதுவுங்கூட சந்த்ரமதி பொண்ணு வந்துச்சே - அதுவுங்கூட லோகிதாசன் குஞ்சி வந்துச்சே கார்ல கறுக்கன் மார்ல பறக்கம் அப்டின்னு தமிழ கொல பண்ணி பாடுவானுங்களாம். கால கறுக்கன்னா என்னா மார்ல பறக்கம்னா என்னா தெரியுமா? காதுல கடுக்கன். மார்புல பதக்கம். புரிஞ்சிச்சா சங்கதி! எடுத்துப் பாடுற பின்பாட்டுக்காரனுங்கூட அதையேத்தான் திருப்பி திருப்பி பாடுவானுவளாம். கேக்குறவனுக்கு மதி எங்க போச்சி. என்னமோ வாக்கியத்தக் கண்டான் வர்ணத்தக் கண்டான் கேக்க ரஞ்சிப்பா இருந்தா சரிதான்னு பாட்ட கேப்பானுவளாம். இந்தக் கூத்தையெல்லாம் கண்டு மனம் நொந்துபோயிதானோ என்னமோ தமிழ் நாட்டுல அநேகம் பேர நாடாவம் நடிக்க வந்தாங்களாம். அப்புடி வந்தவங்கள்ல இன்னும் தங்கசாமி நெனப்புல இருக்குற பேரு அநேகம் உண்டு. ராஜபார்ட்டுன்னு வச்சிகிட்டா ‘கஞ்சனூரு முத்துக்குமர பத்தர்’, ‘பிளேட்டு கதிரேசம் பிள்ளை’, இவுரு எப்புடின்னாக்கா, அரிச்சந்திரா நாடாவத்த ஆகமப்படி ஏளு நாளக்கி நடத்துவாராம். நாடாவப் பாட்டை எசத்தட்டுல கொண்டாந்தவரும் அவுருதானாம். அதனாலத்தான் அவருக்கு ’பிளேட்டு கதிரேசம்பிள்ளை’ன்னு ஆச்சாம். முட்டம் பெரியசாமி, மதுர உடையப்ப தேவரு, பசுபதி கோயிலு கதிரேசன் காடவராயரு, புதுக்கோட்ட முத்துமணி பாகவதரு, திருப்பாமாபுரம் முருகைய்யன், திருவிழி மழலை எம்மெம் மாரியப்பா நந்தன் சரித்திரத்துல பலே கெட்டிக்காரராம். நவாப் ராஜமாணிக்கம், டி.கே.எஸ்.சகோதரர்கள் இப்புடின்னு அநேகம் பேரு ராஜபார்ட்டுல கெட்டிக்கார ஆசாமிகளாம். இதுல மொட்ட வாத்தியாரையும் அவசியமா சேத்துக்கணும். ஸ்திரீபார்ட்டுக்கு பேர் போனவங்க காக்காமுளி கோயிந்தசாமி பிள்ளை; சன்னாவூரு செல்லம். வடுவூர் கண்ணம்மா, மாயவரம் இந்திரா இவுங்கள்லாம் ஸ்திரீபார்ட்டுல எக்ஸ்பர்ட்டாம். பின்னையும் சில்ற ஆக்கிட்டுகளுக்கு காரமேட்டு கண்ணு, வெண்ணூர் சாமிதொரை, டான்சு மற்றும் காமிக்கிக்கு ஆடல் அழகி அபிநயசுந்தரி, திருவாளூரு மோகனா, மதுர மல்லிகா, புதுக்கோட்ட பத்துமா இப்புடின்னு வந்தாங்களாம். தஞ்சாவூரு வடக்கிவாச நாடிமுத்துராவ் வகையறா கூட டான்சு கீன்சுன்னு அமுக்களப்படுத்துவாங்களாம். ஆர்மோனியம் புண்ணிய நல்லூர் சித்திரவேலு, தங்கசாமிக்கு ஸ்திரீபார்ட்டா கூட ஆக்கிட்டு பண்ணிருக்காராம் இந்த சித்திரவேலு தபேலா - டோலக்கு - கோடையிடி மாரிமுத்து. ரெண்டு கண்ணும் தெரியாத மனுசன்தான்னாலும் தபேலாவும், டோலக்கும் இவுருகிட்ட சங்கதி பேசுமாம். ஐயம்பேட்டை கிருஷ்ணமூர்த்தியும், தபேலா டோலக்குல கெட்டிக்காரராம். வுட்டுப் போச்சுல்ல ஆர்மோனியம் பொட்டில தஞ்சாவூரு ஜெகன்னாதனும் பலே கில்லாடியாம். கைப்பொட்டி கால் கொட்டி ரெண்டுலயும் படுசூரத்தனம் பண்ணுவாராம். பொட்டி போட்டுக்கிட்டே பாடுறதுலயும் அநேக கெட்டிக்காரரு. ராகம் புரிஞ்சி பாடுவாராம். மெல்லிய சாரீரம் தான்னாலும் மூணு சுதிக்கு பாடுவாராம். அப்றம் சிஞ்சக்கு மணப்படுவை நடேசன். சிஞ்சக்கு சிஞ்சக்குன்னு அடிச்சாருன்னா செவுளெல்லாம் பிஞ்சிப் போயிருமாம். பின்பாட்டுல பலே ஆசாமி ஆரங்குறீங்க? குருங்களூரு முருகைய்யன். சீன் படுதா டிரஸ் சமிக்ஞைகள்ல தஞ்சாவூரு சிங்காரம்பிள்ளை தட்டிக்க ஆருருக்கா? இவுரு செத்துப்போனதுக்கப்புறம் இப்பக்கி திருக்களாவூரு பூண்டி மூக்கையன் மேக்கப்புல கெட்டிக்காரராம். தங்கசாமி இவுங்களப்பத்தியெல்லாம் இப்ப ஓஞ்சிப்போன காலத்துல குந்தி நெனையா நெனச்சிக்கிறாரு. தங்கசாமி தன்னோட நுப்பத்தஞ்சாவது வயசுலயே நடிக்கிறத்த கொறச்சிகிட்டு ஊரு ஊரா போயி நாடாவம் பழக்கிக் குடுக்க ஆரம்பிச்சிட்டாரு. அவுரு நடிக்க வந்த பதுனஞ்சி இருவது வருச காலத்துல எத்தனை மேடை ஏறியிருந்தாலும் முட்டம் பெரியசாமி மாறியோ பிளேட்டு கதிரேசம்பிள்ள மாறியோ, காக்க முளி கோயிந்தசாமி மாறியோ பேரெடுக்க முடியலியேன்னு கவலப்பட்டு கெடக்காரு. காசுபணம் சேத்துக்கலையே அப்டிங்குற கவலையும் உண்டுதான். ஊரு ஊரா நாடாவம் பழக்கி குடுக்குற காலத்துல வந்த சம்பாத்தியத்த கெட்டிப் பத்தரம் கெவுளிப் பத்தரம்னு வச்சுக்காம போனது எம்புட்டு குத்தமா போச்சி… சதா நேரமும் பொண்டாட்டிகாரிகிட்ட வாங்கிக்கட்டிக்க வேண்டியதில்லையேன்னு நொந்து போறாரு. ஆகாத மனுச தைப்பட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம்னு பொண்டாட்டிக்காரிக்கு எம்புட்டுதான் சொத்து பத்து சேத்து குடுத்துருந்தாலும் பேசுற கழுதை பேசித்தான் ஆவா. ஒரு காலத்துல ஊருக்கு ஊரா நாடாவம் பழக்கி தங்கள் ஊருல தாங்களே மேடை ஏறி நடிக்கணும்னு ஆசப்பட்டவங்க தங்கசாமி மாறி ஆளுங்களப்பாத்து நாடாவம் பழக்கி குடுக்குறதுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டாங்க. இதுல நாடாவ வாத்தியார்களுக்கும் கொஞ்சம் வரும்புடி சாஸ்திதான். ஒரு ஊருக்குள்ள குந்தி நாடாவம் பழக்கி குடுக்க ஆரம்பிச்சிட்டா மூணு வேள அந்த ஊருக்குள்ளயே நாளக்கி ஒருத்தரு வூடுன்னு கணக்கு பண்ணி சாப்ட்டுக்கலாம். நாடாவம் பளவுறவனுக்கு இம்புட்டுன்னு நெல்லு வசூலும் பண்ணிக்கலாம். ஆளுவால பாட்டுக்கும் கூத்துக்குமா வசப்படுத் துறகுள்ள தங்கசாமிக்கு தாவு தீந்து பேயிரும். வல்லினம்; மெல்லினம்; இடையினம் அப்படின்னெல்லாம் ஒரு எனமும் வராது பளகுறவனுவளுக்கு. ஆ…ஆ….ஆன்னு கத்துவானுவளே தவுர எளப்புள்ளி போர்ரதெல்லாமோ பம்மாத்தோ ஒன்னும் வரவே வராது. குட்டு குட்டா பாடி தீத்துப்புடுவானுவ. அவனுவளுக்கு நாடாவத்துல நடிச்சி பெரியாளா ஆவணும்னு ஒண்ணும் ரோசனையெல்லாம் இல்ல. மாமங்காரன், மச்சாங்காரன் செய்வினையா எதுருபார்த்துதான் இந்தக் காரியமெல்லாம் பண்றது. ஒரோருந்தனும் அழுவுற சீன்ல சிரிப்பானுவ. சிரிக்கிற சீனுல அழுவானுவ. தங்கசாமி வாத்தியாரு எம்புட்டுதான் தலையில அடிச்சிகிட்டு திருத்துனாலும் கொண்டாலும் வேதாளம் முருங்க மரத்துல ஏறிக்கும். என்னமோ பாட்டுப் பாடுறதுல சூரன் மாறி நெனச்சிக்கிட்டு பனங்கள்ளையோ, சாராயத்தையோ ஊத்திக்குவானுவ. அப்பதான் பாட்டு நல்லா எடுப்பா வருமாம். ஊத்திக்கிட்டுதான் பாடுறானுவளே பாட்டுதான் நல்லா வருமா? என்னமோ தேஞ்சுபோன எசத்தட்டு மாறி கொரல் கீச்சு மூச்சுங்கும்.. கேக்றவன்ல்லாம் காரித் துப்பாத கொறையாயிருக்கும். கஷ்ட காலமேன்னு வுட்றுவாரு தங்கசாமி. நாடாவம் நல்ல கட்டத்துல நடந்துகிட்டிருக்கும். ராஜா வந்து மந்திரியப்பாத்து, “மந்தீர்… நமது ராஜாங்கத்தில் மாதம் மும்மாரி பொழிகிறதா?” என்று கேட்கவும், கூட்டத்தில் ஒரு கில்லாடிப் பயல், “இதப்போயி மந்திரிகிட்ட கேட்டுதான் தெரிஞ்சுக்கணுமா ராஜா… நீங்க ஊர்தேசத்துல இருக்குறதில்லையா?”ன்னு பெலக்கமா சத்தங்குடுப்பான். “சும்மா நிறுத்துடா கம்னாட்டி, ஒன்னக் கேக்கலை”ன்னு ராஜா பாய்வாரு. அவனும் பாய்வான். கூட்டத்துல சலசலப்பு. எல்லோரும் எந்திரிச்சி சமாதானம் பண்ணி கூட்டம் அசமடங்கும். ராஜா நடிக்கிறதுக்கு தயங்குவாரு. தங்கசாமி சமாதானப்படுத்தி கூட்டமெல்லாம் குந்தி நாடாவம் தொடரும். மறுவவும் ராஜா மந்திரிகிட்ட கேப்பாரு. “மந்த்ரீ… நமது ராஜாங்கத்துல மாதம் மும்மாரி பொழிகிறதா?” மந்த்ரீ சொல்லுவாரு, “அதுக்கெல்லாம் கொறச்சலில்லை மகாராஜா. மாசம் மும்மாரி பொழிந்து ஜனங்களெல்லாம் சகலவிதமான சௌக்யபௌக்யங்களோடு இருக்கிறார்கள்” அப்படின்னு சொல்லிக்கிட்டிருக்கப்பதான் ராஜா வேசம் கட்டிக்கிட்டவனோட மாமனோ, மச்சானோ வேகவேகமா ஓடியாருவான் மேடக்கி. கையில வச்சிருக்க மாலையை ராஜா கழுத்தில் போட்டுப்புட்டு சட்டப்பையிலயோ மடியிலயோ வச்சிருக்குற தங்கமோதிரத்தை கைவெரல்ல மாட்டிபுட்டு அவசர அவசரமா தங்கசாமி வாத்தியாரக் கூப்டுவான். அவுரு வர்றாரா… வந்தொடனே சொல்லுவான். “வாத்தியாரய்யா! ஒத்தப்பன மாரியப்பன் மாமன் மொறைன்னு செஞ்சது மாலை ஒன்னு அரப்பவுனு மோதிரம்னு ரேடியாவுல சொல்லிப்புடுவாங்க”ன்னு சொல்லிப்புட்டு அவுரு மைக்குல பேசி சொல்றதட்டும் நின்னு கேட்டுபுட்டு போவான். வாத்தியாரு கோவப்பட்டுக்காம இதெல்லாத்தையும் மெனக்கெட்டுதான் சொல்ல ஆரம்பிப்பாரு. இல்லாட்டி சோத்துப் பையில கிளிஞ்சி போயிரும். “ராஜபார்ட்டா வேசம் கட்டிக்கிட்ட கரம்பத்தூரு கலியனுக்கு ஒத்தபன மாரியப்பன் மாமன் மொறைன்னு செஞ்சது மாலையும், அரப்பவுனு மோதரமும்”. இந்தக் கூத்து முடிஞ்சப்புறம் பின்னயும் நாடாவம் தொடரும். எப்புடிக்கின்னா, மறுவடியும் ஆரம்பிச்ச எடத்துலருந்தே ராஜா கேப்பாரு. “மந்திரி… நமது நாடு நகரத்தில் மாசம் மும்மாரி பொழியுதா?” இப்ப மந்திரி பேசமாட்டாரு. ராஜாவுக்கு புரியுமா மந்திரி படு எரிச்சல்ல இருக்காருன்னு. அவுருக்கு என்னடா ராஜா சொன்ன வசனத்தையே திருப்பி திருப்பி பேசிகிட்டிருக்காரேன்னு கோவம்ன்னா நெனச்சீங்க. அதுதான் இல்லன்னன். பின்ன கோவத்துக்கு…? ராஜாவுக்கு செய்வினையை மொறையுள்ளவன் நாலு பேருத்துக்கு முன்னாடி வச்சி செஞ்சிபுட்டு போயித்தான் தனக்கு செய்ய வேண்டிய மொறக்காரன் வந்து செய்யலியே அப்டிங்குற கோவந்தான். முன்னாடியே உள்ளுக்குள்ள ஏத்தி வச்சிருக்குற சாராயம் வேற ஊச்சத்துல நிக்கிறதா உப்புன்னு சொல்றதா, புளின்னு சொல்றதான்னு பல்லக் கடிச்சிக்கிட்டு நிப்பாரு மந்திரி. ’வசனத்த மறந்துப்புட்டாரா மந்த்ரி?’ன்னு தங்கசாமி எரிச்சலாயிருக்கறப்பத்தான ராஜா சமயோசிதமா வசனத்த மாத்தி, “மந்திரி ஏமேல கோவமா… கேட்டதுக்கு ரொம்ப நாளியா வதுலு வரலியே என்னா காரணம் சொல்ல முடியுமா?”ன்னு கேக்க, மந்திரி வெகு கடுப்பாயி, “ஓங்க மேல என்னா ராசா எனக்கு கோவம்… ஓங்க மாமன் அக்கறையா. வந்து செய்வினையை செஞ்சிபுட்டு போயித்தாரு. ஏ மாமன் வரலியே அப்டிங்குறதுலதான் கோவம். செய்வினையை வாங்கிக்காம மட்டும் வசனத்தப் பேசுறாப்ல இல்ல. இப்டி தான் ஏ மாமன அவுமானப்படுத்தணும்” அப்படின்னு எரிச்சலா சொல்லிக்கிட்டிருக்கப்பதான் அவுரு மாமன் புத்தில் ஓரச்சிப்போயி வேட்டி அவில அவில மேடைக்கி ஓடியாருவாரு. வாழ எலையில சுத்திவச்சிருக்குற மாலைய அவுக்குறப்ப அவசரத்துல பாதிப்பூவு கொட்டிப் போயி நாராருக்கும். அத கழுத்துல போட்டுட்டு சட்டப்பையில ஒம்போது பேப்பரு சுத்தி பதுவுசா மடிச்சி வச்சிருந்த ஒரு பவுனு சங்கிலிய எடுத்து மந்திரி கழுத்துல மாட்டிப்புட்டு தங்கசாமிய பாப்பாரு. தங்கசாமி புரிஞ்சிகிட்டு மைக்குக்கு முன்னாடி ஓடியாந்து “கொத்தங்குடி சின்ராசு கரம்பத் தூரு கருப்பையாவுக்கு செஞ்சது ரோசாப்பூ மாலை ஒன்னு. ஒரு பவுனு சங்கிலி” அப்டின்னு சொல்லி நிறுத்தி புட்டு கூட்டத்தப் பாத்து சொல்லுவாரு, “கூட்டத்துல செய்வன செய்யிறவுங்க இருந்தா வந்து செஞ்சிபுட்டு போயிருங்க… நாடாவத்த சட்டுபுட்டுன்னு முடிச்சாவணும். சூரியன் வந்து எழுப்பறவரைக்குமா நாடாவத்த நடத்திகிட்டிருக்க முடியும்? இப்பத்தானா ராசா நாடு நவரங்கள எளக்கணும். பொண்டாட்டிய வெல கூறணும். நச்சத்தரய்யர் வாங்கணும். சந்திரமதி அல்லல்படனும்… இன்னும் எம்புட்டே கத இருக்குல்ல. நாளக்கி தான் மயான காண்டம்…“ன்னு சொல்லி முடிச்சதும் பின்னயும் நாடாவம் தொடரும். “மந்திரி… மாசம் மும்மாரி பொழியுதா…?”ன்னு ராஜா மந்திரியைப் பாத்து கேட்டுகிட்டுருக்கபத்தான கூட்டத்துல ஒருத்தன் கடுப்பாயி போயி கத்துவான், “மாசம் மும்மாறி என்ன நாமாறி போயிது அடுத்த வசனத்த சட்டுபுட்டுனு பேசிபுட்டு உள்ளாரப் போயித்தொலைய்யா. ஆட்டக்காரியும் காமிக்கும் வரட்டும்… யோவ் வாத்தியார தொம்பன் தொம்பச்சி உண்டாய்யா… வரச்சொல்லு. டப்பாங்குத்து போடட்டும்.” தங்கசாமிக்கு இப்பத்தான தர்மசங்கடமா போயிரும். ராசா வந்ததுலேருந்தே தொல்லமயமாயிருக்கே… ஆட்டக்காரி வுட்டு தையா தக்கான்னு ரெண்டு குதியாலம் போடச் சொன்னா தான் கூட்டத்த அசமடாக்கலாம்னு நெனச்சிக்கிட்டே “சட்னா வசனத்தை பேசிபுட்டு சீன் முடிங்கைய்யா… தொம்பன் தொம்பச்ச வுட்டாத்தான் சனம் குந்திப்பாக்கும். வந்த சனத்துல முக்காவசி சனம் எந்திரிச்சி போயித்து”ன்னு சொல்லிபுட்டு உள்ள போவாரு. வாத்தியாரு சடாருன்னு இப்புடி சொல்லிபுட்டாரேன்னு ராஜாவும், மந்திரியும் சொச்ச வசனத்த பேசாமக்கூட சீன முடிச்சிபுட்டு உள்ளாரப் போயிருவாங்க. “எப்படா ராஜபார்ட் உள்ளாரப் போவும்னு காத்துக்கிட்டிருந்த பொட்டிக்காரனும், தாளக்காரனும் அப்பத்தான நிம்மதியா மூச்சுவுடுவான்”. ராசாவும், மந்திரியும் சேந்துகிட்டு வாசிக்கிறதுக்கு டயம் குடுக்கலியே அப்டிங்குற கோவந்தான். அவுங்க போன செத்த நாளிக்கெல்லாம் பெட்டிக்காரரு பாட ஆரம்பிச்சிருவாரு. ’டிய்ய டிய்யோ டிய்ய டிய்யோ டிய்யமாமா டிய்யாலோ… அத்திரி பச்சா ஆளுபச்சா உய்யாலோ… தலாங்கு தரிகிட தலாங்கு தரிகிடதா… ஏ த்தா…த்தா…த்தா… டிய்ய டிய்யோ டிய்ய டிய்யோ டிய்ய மாமா டிய்யாலோ… இப்பத்தான சனங்க மூஞ்சில அநேக சந்தோசம் தூங்கிகிட்டிருந்தவன் எந்திரிச்சி குந்துவான். மூத்தரம் பேயப் போனவன் பேஞ்சது பாதி போயாதது பாதியா ஓடியாந்துருவான். டீ குடிச்சிகிட்டிருந்தவன் கிளாசை தூக்கி வுட்டேஞ்சிட்டு காசக் குடுக்காமக் கூட ஓடியாந்து முன்னாடி எடம் புடிச்சி… குந்திக்குவான். ரோட்டுப்பக்கம் போனவன் வாய்க்காபக்கம் போனவன் நாடாவம் நல்லால்லன்னு சொல்லிகிட்டு வூட்டப்பக்கம் பாய சுருட்டிக்கிட்டு கெளம்பிப் போனவன் நாடாவம் எல்லாருமா சொராத்து கிளம்பிப் போயி ’தொம்பன் தெரம்பச்சி வந்துட்டுடோய்’ன்னு சொல்லிகிட்டு இடிச்சி புடிச்சிகிட்டு ஓடியாந்து குந்தராத்தப்பாத்தா தொம்பனையும், தொம்பச்சியையுமே கடைசி பரியந்தொட்டும் நடத்திகிட்டிருக்கலாமான்னு தான் தங்கசாமி நெனச்சிக்குவாரு. தங்கசாமி ஓஞ்சிப்போயி வூட்ல குந்திட்டப்புறம் இதெல்லாத்தையும் வரிசை வரிசையா நெனச்சிக்கிறாரு… அம்பது வருசம் எப்புடி ஓடிப்போச்சி பொழுது…’ லோகிதாசனா நேத்தக்கி வசனம் கட்னாப்புல இருக்கேன்னு…’ அருவியா கண்ணீரு கொட்டுது… அம்பது வருசமா ஒளச்சிபுட்டு கட்ன துணிக்கி மாத்துதுணிக் கூட கட்ட கதியில்லாமப் போச்ச அப்புடிங்குற கவல நெஞ்சுல வண்டி வண்டியா தேங்கிக் கெடக்க இப்ப நெனச்சி முடியுமா இன்னமத்தான் சம்பாரிக்க முடியுமா? இப்பல்லாம் முந்திக்கி மாறி அவுரால கொரலை ஒசத்தி பாடமுடியல; எம்புட்டுக்கு தான் எவ்வுனாலும் தொண்டைக்குள்ளார ஏதோ கெடந்து அடச்சிக்குது. இவுரு கொரலு ஒடுங்கிப் போயி குந்திட்டாருன்னு முந்திக்கி மாறி எந்த ஊர்தேசத்துலருந்தும் வந்து இரவு நாடாவம் பழக்கிகுடுக்க கூப்டுறதில்லை. இவுரு ஒசரத்துக்கு வளந்து நிக்கிற ரெண்டு மவனை அண்டித்தான் சொச்சக்காலம் ஓடப் போவுதோன்னு நென்க்கிறப்ப கவல பத்திக்கும். மவங்காரனுங்க சோறு போட்டாலும் மருமவளுவ வுடுவாளுவளா அப்டிங்குற கவலதான். ஒரு ஆபிசு உத்தியம்தான் பாத்தமா கடைசியா கெடைக்கிற பிஞ்சினு பணத்தவச்சி காலத்த ஓட்டலாம். ஒரு ஏக்கரு நஞ்சையோ, புஞ்சையோ வாங்கிப் போட்ருந்தாகூட உளுது சாப்ட்டுக்கலாம்… ஒன்னுமுல்லாத அப்ராணியா போயித்தமே… ஒரு டீ தண்ணி குடிக்கனுமுன்னாலும் புளிக்கிற வாயிக்கி வெத்தலப் போட்டுக்கலா முன்னாலும் மவனுவகிட்ட கையேந்து நிக்கிற காலம் வந்து போச்சே… பொண்டாட்டிக்காரி துப்புறான்னா ஏந்துப்பமாட்டா? இன்னிக்கு அப்படிதான் பொண்டாட்டிக்காரி தட்டுல சோத்தப் போட்டு நாய்க்கி வச்ச மாறி வச்சிபுட்டு சாப்டுன்னா… அவ சோத்த வச்சிப்புட்டு போன ரோக்கிதியப் பாத்தா சாப்ட மனங்கொள்ளல. பட்டினியா கெடந்து செத்துப் போயிரணும்னு கூட நெனச்சிக்கிட்டாரு. அப்பத்தான் பாருங் ‘கொளா’ சட்ட போட்ட ரெண்டு பேரு வந்து ‘நாடாவ வாத்தியார் தங்கசாமி’ ஆருங்கன்னு இவுருகிட்டயே வந்து விசாரிக்கவும் இவுரு என்னமோ ஏதோன்னு பதறிப்போயி; ‘நாந்தான் நீங்க ஆரங்கய்யான்னு’ பதுவுசா கேட்டாரு. “நாங்க கலைட்டரு ஆபீஸிலேருந்து வர்றம். கெவுருமுண்டு. நீங்க நாடாவத்துக்காவ ரொம்பகாலமா ஒளச்சிருக்கீங்க அப்டிங்கறதுக்காவ மாசாமாசம் ஒங்க காலம் பரியந்தொட்டும் நானூறு ரூவா குடுக்கச் சொல்லி உத்தரவு போட்டுருக்குது. அதான் நீங்க ஆரு எவுருன்னு சொல்லி விசாரிக்க வந்தம் அப்டின்னு சொல்லவும் இவுரு வந்தவுங்களை திண்ணையில குந்தச் சொன்னாரு. ரொம்ப தூரத்துலருந்து வந்தவுங்களுக்கு ஒரு காப்பித்தண்ணி கீப்பித்தண்ணிகூட வாங்கிக்குடுக்கக் கூட கெதியில்லாமருக்கனேன்னு நொந்துக்கறாரு. பொண்டாட்டிக்காரி என்னடா பணங்காசுன்னு பேச்சு அடிபடுதே அப்படின்னு வூட்டுக்குள்ளேருந்து வெளியில வந்தவ வந்தவுங்களுகிட்ட விசியத்தக் கேட்டு சந்தோசப்பட்டு போயித்தா. புரஷங்காரரு இம்புட்டுக் காலமா ஒளச்சதுக்கு இப்பத்தான் பலன் கெடச்சிருக்கோன்னு மனசுக்குள்ள நிம்மதி, இன்னம மவனுவள நம்பி காலம் ஓடாதுல்ல அப்டின்னு நெனச்சிக்கிறா. தங்கசாமி இப்பத்தான பொண்டாட்டிக்காரிய பெருமையாவும் அதே சமயத்துல வீம்பாவும் பாக்குறாரு. எவனோ ஒரு படிச்ச மனுசன் போன வருசத்துல சலுகைக்காவ வேண்டி கலைட்டரு ஆபீசுக்கும் மொதலமைச்சருக்கும் மனு எழுதிக்குடுத்து போடச் சொன்னாரு. அவுரு கைப்பட எழுதிபோட்டதுல வந்த பலனோ இதுன்னு தங்கசாமி புரிஞ்சிக்கிறாரு. ‘அடுத்த மாசத்துலேருந்து ஓங்களுக்கு மாசாமாசம் பணம் வரும்னு’ சொல்லிபுட்டு ஏதேதோ பேப்பருல தங்கசாமிகிட்ட கைநாட்டு வாங்கிகிட்டு போயிடுறாங்க. பொண்டாட்டிக்காரி தங்கசாமியப் பாத்து ‘ஏங்க சோத்த திங்கலியா ஈமொச்சிகிட்டுகெடக்கே… கொளம்பு ஊத்தட்டா ஊருகா வய்க்கட்டுமா’ அப்புடின்னு பாசமா கேக்குற மாறி கேக்குறா. எல்லாம் தங்கசாமிக்கு புரியிது. பணத்ததான இவ மதிக்கிறா… புருஷங்கிட்ட இருந்த தெறமையை அறியலியே அப்டின்னு மனசு நொந்துக்குறாரு. இப்பவும் கூட - இவுரு பணத்த பெருசா நெனைச்சுக்கலை. தான் செத்தப் பொறவு முட்டம் பெரியசாமி மாறியோ, டேப்பு கதிரேசம்புள்ள மாறியோ காக்காமுளி கோயிந்தசாமிபுள்ள மாறியோ தன்னயும் ஊருசனம் பெருமையா எடுத்துகிட்டு பேசிகிட்டிருக்குமா அப்டின்னுதான் கவலப்பட்டுக்குறாரு.. அப்புடி பெருமையா பேசிகிட்டாங்கன்னா அது. மட்டும் தான் இம்புட்டு காலமா நாடாவத்துல ஒளச்சதுக்கான பலன் அப்டின்னு நெனச்சிக்கிறாரு. பொண்டாட்டியப் பாத்து”எனக்கு பசிக்கலடி சோத்த எடுத்துட்டுப் போயிரு” அப்டின்னு சொல்லிகிட்டே நாடாவப்பாட்டை தனக்கு பிரியமான பாட்டை ராகம் போட்டு பாடுறாரு…. இஷ்டமேனிக்கு பாடுறாரு… கொரல் ஓடையாம பாட்டு வருது. பாட்டக்கேட்டு சனம் கூடுது… தனக்கு இப்பயும் ஓச்சல்ல ஒளிச்சல்ல தொண்டயும் கொரலும் உள்ளவரைக்கும் சாவுற தொட்டும் பாட முடியும்னு தெம்பா நெனச்சிகிட்டவரு… இப்பெல்லாம் ஊருதேசத்துல நாடாவம் போடுறது வுட்டு புட்டு டீவி பெட்டி வக்கிறானுவளாமே… சினிமா காட்டுறானுவளாமே… அதெல்லாம் எதுக்கு… ஒரு நாடாவத்துக்கு ஈடாவுமா அம்புட்டும்னு நெனச்சிகிட்டு பாடிகிட்டே கெடக்காரு. சனந்தான் பாட்டக்கேக்க வந்துருச்சுல்ல பாடாம என்னா பண்ணுவாரு மனுசன். பொண்டாட்டிக்காரி பணங்கெடச்ச சந்தோஷத்துல பாடுறாரே அப்டின்னு நெனச்சிக்கிட்டே சோத்த எடுத்துகிட்டு உள்ளாரப் போறா… அறியாதவ அதத்தான் நெனப்பா? சாருநிவேதிதா ‘எக்ஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்’ என்ற நாவல் மூலம் இலக்கியத்தில் கலகக்குரல் எழுப்பிய சாருநிவேதிதா கீழ்த்தஞ்சைக்காரர். ‘எண்பதுகளின் பிற்பகுதியில் சாருநிவேதிதா, சில்வியா போன்றோர் அறிமுகப்பட்டு, விமர்சகர்களின் புறக்கணிப்புக்கும் இளைய தலைமுறையினரின் வரவேற்புக்கும் ஆளாயினர்’… புதிய இலக்கியப் போக்கு பற்றிக் குறிப்பிடுகிறார். (தளம் 1990 ஆகஸ்ட்) அ.மார்க்ஸ். ‘…மனிதர்களின் செக்ஸ் வக்கரங்களையும், ஓடுகாலித்தனத்தையும் சித்தரிப்பது தான் தத்துவங்களுக்கும், அறவியலுக்கும் எதிரான கலகம் என்று சாருநிவேதிதா கருதுகிறார் போலும். இது மிக ஆபத்தானது. நவநவீனக் கோட்பாட்டை இலக்கிய நாசகாரப் போக்கு, இலக்கிய வெறுமைப் போக்கு என்று கூறலாம்’… என்று மார்க்ஸிய விமர்சகர், தி.க.சி. குறிப்பிடுகிறார். ’சாரு நிவேதிதா தன் கதைக்களங்களை மிகவும் நேர்த்தியாகப் பயன்படுத்தும் ஆற்றல் படைத்தவர். சொல்ல வேண்டியதை முழுமையாகவும், சிக்கனமாகவும் கூறவல்லவர். அவருடைய உரையாடல் பதிவு சிறப்பாகவே இருக்கும். (நேநோ சிறுகதைத் தொகுதியில் அசோகமித்திரன்) இவருடைய நோக்கில் நானும் உடன்படுகிறேன். ஆனால் அதே சமயத்தில்…. அடுப்பெரிக்க முடியாத பெரியக்கட்டையை உடைத்து அடுப்பெரிக்க பயன்படுத்தினால் சரி. அதை அப்படியே சிதைத்து மண்ணோடு மண்ணாக்கிவிட்டால்…. வாழ்க்கையைக் கட்டு உடைத்து எளிய மனிதனுக்காக குரல் கொடுக்கும்போது இலக்கை ஏற்றுக் கொள்ள முடிகிறது. மனிதநேயத்தை சிதைப்பு செய்யும்போது அந்த இசம் நாசகாரப் போக்குக்கு உட்படுத்திக் கொள்கிறது. இந்த நவநவீனத்துவமே பெண்ணியத்தின் தலித்தியத்தின் உச்சக்குரல் என்ற கோஷத்தை வைத்துவிட்டு இந்த இசம் வார்த்த ‘ஸிரோடிகிரி; நாவலையும், நேநோ’ சிறுகதைத் தொகுதியும் முன் வைத்து பார்த்தால்… தலித்தியத்திற்கும் பெண்ணியத்திற்கும் எதிராகவே உள்ளதை மறுப்பதற்கு இடமில்லை. சைக்கிள் வீட்டுக்கு எதிரே தெரிந்த கூட்டத்தை பார்த்ததும் ‘பகீர்’ என்றது. கிட்டத்தில் போனதும் தான் எதிர் வீட்டில் கூடியிருந்த கூட்டம் என்று தெரிந்தது. ரூபவதியின் கணவர் கத்திக் கொண்டிருந்தார். ‘அடிப்பேன், வெட்டுவேன், குத்துவேன், கூறு கூறாகக் கிழித்துப் போடுவேன்’ என்றும் இன்னும் பிரசுரிக்க முடியாத வகையிலும் வசைகள் சரமாரியாக வந்து விழுந்து கொண்டிருந்தன. பக்கத்துத்தெரு சண்முகத்தின் மனைவிதான், ரூபவதியின் கணவனோடு மல்லுக்கு நின்று கொண்டிருந்தாள். இரண்டு பேரையும் ஒரு பத்து பதினைந்து பேர் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார்கள். விட்டால் இரண்டு பேரும்தெருவில் கிடந்து புரளுவார்கள் போல் தெரிந்தது அல்லது சண்டை போடும் ஆர்வம் அணைந்து ஒன்றும் பேசாமல் அவரவர் ஜோலியைப் பார்த்துக்கொண்டு போனாலும் போய் விடலாம் சொல்வதற்கில்லை. கத்திக் கத்தி, இரண்டு பேருக்குமே தொண்டை கட்டிவிட்டது போலும் ரூபவதியின் கணவனுக்கு பெண் குரலும், சண்முகத்தின் மனைவிக்கு ஆண் குரலும் வந்து விட்டிருந்தது. சண்டையை விலக்கி விட்டுக் கொண்டிருந்தவர்கள் சோர்வடைந்து விட்டதனாலோ அல்லது சுவாரசியம் குறைந்து விட்டதனாலோ ஒவ்வொருவராக சண்டைக் களத்திலிருந்து விலகிக் கொண்டிருந்தார்கள். ரூபவதி தன் பெயருக்கேற்ற அழகு பொருந்தியவள் என்று சொன்னால். கதைக்காக பொய் சொல்வதாகிவிடும். ஆனால், அதே, சமயத்தில் அவலட்சணமும் அல்ல என்றுதான் சொல்லவேண்டும். பெண்களின் சராசரி உயரத்தைவிட சற்று அதிகப்படியான உயரம். ஊடுருவிப் பார்க்கும் பார்வை வசீகரிக்கும் சிரிப்பு. இதில் சண்முகம் எதைக் கண்டு மோகம் கொண்டானோ தெரியவில்லை. ரூபவதியே கதியாகக் கிடந்தான் தன் கடையையும் மறந்து. ரூபவதிக்கு இரண்டு பையன்கள். முதல் பையன் எட்டாம் வகுப்பு. இரண்டாவது பையன் ஐந்தாம் வகுப்பு. ரூபவதியின் கணவர் ஒரு அரசாங்க அலுவலகத்தில் டிரைவர். அதிகாரிகளோடு இன்ஸ்பெக்க்ஷன் என்று சொல்லி அடிக்கடி வெளியூர் போய்விடுவார். ஊரில் இருந்தாலும் ‘சைடு’ பிசினசாக வீட்டு மனை வாங்க, விற்க உதவும் தரகு வேலையும் பார்க்கிற காரணத்தால் வீட்டுக்கு வர இரவு பத்து மணிக்கு மேல ஆகிவிடும். இதற்கெல்லாம் வசதியாக ஒரு பைக்கும் வைத்திருக்கிறார். ஆனால், அவர் மனைவி ரூபவதிக்கோ சைக்கிள் மீது தான் மோகம் சைக்கிள், சண்முகத்தின் சைக்கிளாக இருந்தால் இன்னும் அதிக மோகம் வரும். காலையில் ரூபவதியின் கணவர் வெளியே போகும் பைக் சத்தம் கேட்டதும், ஒருசில நிமிடங்களிலியே சண்முகத்தின் சைக்கிள் மணிச்சத்தம் ரூபவதியின் வீட்டு வாசலில் கேட்கும். சைக்கிளை விட்டு, இறங்காமலேயே ஒரு காலை தரையில் ஊன்றிக் கொண்டு பெல்லை அழுத்துவான். சத்தம் கேட்டதும், சிரித்துக் கொண்டே வெளியே ஓடி வருவாள் ரூபவதி. (நிஜமாகவே ஓடித்தான் வருவாள். அப்போது அவளைப் பார்த்தால் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு பையனின் அம்மா என்றே நம்ப முடியாது. ப்ளஸ் டூ மாணவி ஒருத்தியின் துள்ளலுடன் ஓடி வருவாள்) சில வேளைகளில் ஓரிரு நிமிடங்கள் சைக்கிளை விட்டு இறங்காமலேயே பேசிக் கொண்டிருந்து விட்டு போய் விடுவான். சண்முகம். சில வேளைகளில் சைக்கிளை ஓரமாக நிறுத்தி விட்டு உள்ளே போவான். நான் ஜன்னலுக்கு பக்கத்தில் நின்று முகச் சவரம் பண்ணிக் கொண்டிருக்கும் போது தெரியும் காட்சி அது. ஆர்வ மிகுதியால், சற்று எட்டிப் பார்த்தால் ‘அப்படி என்ன அடுத்தவங்க விஷயத்தில் அக்கறை?’ என்று கேட்டு ஜன்னலை சாத்துவாள் என் மனைவி. ஜன்னல் சாத்தப்பட்ட தினங்களில் லைட்டைப் போட்டுக் கொண்டுதான் சவரம் செய்ய வேண்டியிருக்கும். ‘காதல் ஜோடி இருவரும் ஏன் தத்தம் கணவனையும், மனைவியையும் ’டிவோர்ஸ்’ செய்துவிட்டு புதிதாகக் கல்யாணம் பண்ணிக் கொள்ளக்கூடாது?’ என்று ஒருநாள் என் மனைவியிடம் கேட்டேன். ‘இது என்ன அமெரிக்கான்னு நினைச்சீங்களா? வாயை மூடுங்க. யாராவது கேட்டால் என்ன நினைப்பாங்க?’ என்றாள் அவள். அவள் சொல்வதும் சரிதான். ஏதோ ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையில் படித்தது ஞாபகம் வந்தது. வழக்கம்போல் நீதிமன்றத்துக்கு வந்த நீதிபதி, நீதிமன்றத்தில் அன்றையதினம் ஜோடிகள் கூட்டம் எக்கசக்கமாக நின்று கொண்டிருக்கவே விஷயம் புரியாமல் முழித்திருக்கிறார். பிறகு ஒருவாறு, தெளிந்து அவர்களிடம் ‘லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன் நீங்கள் தவறான இடத்துக்கு வந்திருக்கிறீர்கள். இது திருமணம் பதிவாளர் அலுவலகம் அல்ல. இது நீதிமன்றம்!’ என்று சொல்லியிருக்கிறார். உடனே அந்த ஜோடிகள் கோரசாக, ‘சாரி மிலாட்! இது நீதிமன்றம் என்று தெரிந்துதான் வந்திருக்கிறோம். நாங்களெல்லாம் ’டிவோர்ஸ் வாங்க வந்திருக்கும் ஜோடிகள்’ என்று சொல்ல அதிர்ந்து போனாராம் நீதிபதி. சண்டை எல்லாம் முடிந்து தெரு அமைதியான பிறகு, என் மனைவி நல்ல மூடில் இருக்கிறாளா என்பதையும் சோதித்து அறிந்த பிறகு சண்டையைப் பற்றி தெரிந்துக் கொள்ள அவ்வளவாக ஆர்வமில்லாதவன் போல் ஏதோ எதேச்சையாகக் கேட்பவனின் ‘தொனியை’ சிரமப்பட்டு வரவழைத்துக் கொண்டு விசாரித்தேன். “கேக்கலேன்னா உங்களுக்கு மண்டை வெடிச்சிடும்னு எனக்குத் தெரியும்… விஷயம் ரூபவதியின் புருஷனுக்குத் தெரிந்து விட்டது. அதுதான் ரகளை” என்றாள். இதுமாதிரி விஷயத்தில் மட்டும் கணவனுக்குத்தான் கடைசியில் தெரிகிறது என்று நினைத்துக் கொண்டேன். பிறகு சண்டை தினமும் தொடர்ந்து ‘உன் மனைவியைக் கண்டித்து வை’ என்று சண்முகத்தின் மனைவியும், ‘உன் புருஷன் இங்கே இனிமேல் வந்தால் அவன் குடலை உருவி விடுவேன்’ என்று ரூபவதியில் கணவனும் பரஸ்பரம் மிரட்டிக் கொண்டார்கள். இப்போதெல்லாம் தெருவாசிகள் யாரும் சண்டையை விலக்கி விடப் போவதில்லை. சண்டை முடிந்து கடைசியில் சண்முகத்தின் மனைவி தெரு மண்ணை வாரி வாரி இறைத்துவிட்டுப் போவாள். இவ்வளவுக்கும் அவளுடைய ஒரு வயதுக் குழந்தை அவள் இடுப்பிலேயே தொற்றிக் கொண்டு கிடக்கும். இவ்வளவு சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தபோதும், சண்முகத்தின் சைக்கிளை எதிர்வீட்டில் நான் பார்க்கத் தவறியதில்லை. “இப்போது எல்லாம் பகல் பூராவும் சைக்கிள் எதிர் வீட்டிலேயே தான் கிடக்கிறது” என்று நான் கேட்காமலேயே சொன்னாள் என் மனைவி. இப்படி இருந்து கொண்டிருக்கும் போதுதான், ஒரு நாள் சண்முகத்தை போலீசார் வந்து அழைத்துக்கொண்டு போனார்கள். ரூபவதிதான் தன்னை தினமும் வீட்டுக்கு அழைக்கிறாள் என்றும், அவள் தனக்கு எழுதிய கடிதங்களே கத்தை கத்தையாக இருக்கிறது என்றும் சொல்லி, வீட்டுக்கு வந்து அந்தக் கடிதங்களை எல்லாம் அள்ளிக்கொண்டு போய் போலீஸ் ஸ்டேஷனில் காட்டினானாம் சண்முகம். இது எல்லாவற்றையும் அவன் மனைவி தெருவில் நின்று கொண்டு அடிக்கடி ரூபவதி வீட்டுப் பக்கம் மண்ணை வாரித் தூற்றிக் கொண்டே சொல்லி அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். போலீசார் ரூபவதியையும் வந்து அழைத்துக்கொண்டு போனார்கள். அவளுடன் அவள் கணவரும் போனார். ஸ்டேஷனிலிருந்து ரூபவதி தம்பதியர் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது எதேச்சையாக நான் வாசலில் நின்று கொண்டிருந்தேன். (எதேச்சையாக என்பதை என் மனைவி ஆட்சேபிப்பாள். அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எனக்கு அவசர ஜோலி எதுவும் இல்லை என்று சொன்னாலும் கூட அவளிடம் எடுபடாது.) ரூபவதியின் கணவர் என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்தார். ஒரு வெற்றிப் புன்னகை மாதிரி இருந்தது. என்னுடன் ஏதோ பேச விரும்புகிறார் போலவும் தோன்றியது. பதிலுக்கு நானும் பூத்து வைத்தேன். உடனே ‘சிக்னல்’ கிடைத்துவிட்டது போல், “அந்தத் தறுதலைப் பயலை எனக்கு யாரென்றே தெரியாது. அடிக்கடி எங்கள் வீட்டுப் பக்கமாக வந்து என்னைத் தொந்தரவு செய்து கொண்டிருக்கிறான் என்று ஸ்டேஷனில் சொல்லி விட்டார். சார் இவள்” என்று பெருமிதத்துடன் தன் மனைவியைச் சுட்டிக்காட்டி என்னிடம் சொன்னார். நான் பதிலுக்கு, ‘அப்படி என்றால் உங்கள் மனைவி அவனுக்கு எழுதின கடிதங்கள்?’ என்று கேட்க வாயெடுத்து, ஆனால், அது அவ்வளவு நாசுக்கான தல்ல என்பதை உடனே உணர்ந்தவனாய், “அப்படீங்களா? அப்படீன்னா சரி” என்று சொல்லி தலையை பலமாக ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு உள்ளே போனேன். இனிமேல், ரூபவதியின் வீட்டுப் பக்கம் போனால் தோலை உரித்து விடுவோம் என்று மிரட்டி போலீசார் சண்முகத்தை வீட்டுக்கு அனுப்பினார்கள் என்ற செய்தி காதில் விழுந்தது. ஆனால், அதற்குப் பிறகும்கூட சண்முகத்தின் சைக்கிளை எதிர் வீட்டில் பார்த்த போது தான் விஷயம் சீரியசாகிவிட்டது புரிந்தது. என்னதான் எனக்கு சம்பந்தம் இல்லாத பிரச்சனையாக இருந்தாலும், சண்முகத்தின் மனைவியின் இடுப்பிலேயே எப்போதும் தொற்றிக் கொண்டிருந்த அந்தக் குழந்தையின் ஞாபகம் வந்து என் வயிற்றைக் கலக்கியது. பிறகு, போலீசார் மறுபடியும் வந்து சண்முகத்தை அழைத்துப் போனார்கள். போலீசாரை ரூபவதியின் கணவர் நன்றாக கவனித்து விட்டார் என்று தெருவில் பேசிக் கொண்டிருந்தார்கள். அன்றைய தினம் மாலையே தெருவில் திடீரென்று ‘புசு புசு’ வென்று ஒரு வதந்தி பரவியது. சண்முகத்தை போலீஸ் ஸ்டேஷனில் ஆடைகளை எல்லாம் கழற்றிவிட்டு, நிர்வாணமாக்கி, அடியோ தண்டதென்று அடிக்கிறார்கள் என்ற வதந்தியே அது. வதந்தி உண்மையா என்ற சர்ச்சை கிளம்பியது. யார் யாரோ பார்த்தேன் என்றார்கள். ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள சில தைரியசாலிகள் ஸ்டேஷனை நோக்கி நடந்தார்கள். நானும் ஓரளவு தைரியம் பெற்றவனாய் கிளம்பினேன். வதந்தி உண்மைதான் உடம்பு பூராவும், ரத்தக் காயங்களுடன், தோல் கிழிந்து சதை தெரிய உடம்பில் வஸ்திரம் எதுவுமின்றி குப்பையாய்க் கிடந்தான் சண்முகம். போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே தரையில் கிடந்த அவனை சில பேர் தூக்கி இடுப்பில் துண்டைக்கட்டி ரிக்ஷாவில் போட்டு வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள். மறுநாள் நான் ஆபீசுக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பிய போது சண்முகத்தின் வீட்டு வாசலில் கூட்டம். வேகத்துடன் போய் எட்டிப் பார்த்தேன். உத்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தான் சண்முகம். இரண்டு மூன்று பேர் ஆஜானுபாகுவான அவனை உத்தரத்திலிருந்து இறக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். வீட்டுக்கு வெளியே கேட்பாரற்று விழுந்து கிடந்தது சைக்கிள். உத்தம சோழன் திருத்துறைப்பூண்டிக்கு அருகே உள்ள தீவாம்பாள்புரத்தை பிறந்த மண்ணாகக் கொண்டவர் செல்வராஜ். உத்தமசோழன் என்ற புனைப்பெயரை சூடிக்கொண்டு பிரபலமான வணிக இதழ்களில் சிறுகதையாசிரியராக கால் பதித்தவர். அதுபோன்ற இதழ்களில் அறிவிக்கப்படும் சிறுகதைப் போட்டிகளில் பரிசை இலக்காகக் கொண்டு எழுதி பல பரிசுகளை குவித்துக் கொண்டவர். கீழத்தஞ்சை மக்களோடு மக்களாய் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர். ஓர் அரசு அதிகாரியும் கூட. அவரின் அனுபவ எல்லை விரிவானது. ஏழை எளிய மக்கள் எவ்வாறெல்லாம் வஞ்சிக்கப்படுகின்றனர் என்பதை அதிகார மட்டத்தில் இருப்பவருக்கு சொல்லியோ கேட்டோ அறித்து கொள்ளவேண்டிய அவசியமற்றவர். வேளாண் மக்களின் வாழ்க்கையை உள்ளும் புறமுமாய் கலை நயம் படுத்த வேண்டியவர். அவரது சிறுகதைகளில் எல்லாமே மேலோட்டமாய் நின்றே பேசுகின்றன. நூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதிக்குவித்தவர். சிறுகதையின் கலைவடிவம் உள்ளடக்கம் இவற்றை முன் நிறுத்தி எழுத மூன்வருவாரானால் கலைநுட்பமான சிறுகதைகளை அவரால் தரமுடியும். அதற்கு சாட்சியாக அவரது சிறுகதைத் தொகுப்புகளில் உள்ள சில சிறுகதைகள் நிற்கின்றன. முதல்கல் ஐப்பசி மாத அந்திப் பொழுது, வண்ண ஜாலங்கள் காட்ட வேண்டிய அந்திச் சூரியன் மழைமேகங்களின் சிறையில். அதனால் நிழல் வெளிச்சம் மட்டுமே மிச்சம், பூமிக்கு. வளவனாற்றின் வடகரையில் நின்று வடக்கே பார்த்த மருதனுக்கு திக்கென்றது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் என்று விரிந்து கிடந்த வயல் வெளிகள். அடர்பச்சையில் தீவுபோல ஊர்க்குடியிருப்பு… மரங்களுக்கிடையில், வயல் வெளியெங்கும் நடவு முடிந்து ஒரு வாரம் பத்து நாளான ‘பச்சை’ பிடிக்கத் தொடங்கியிருந்த இளம்பயிர், வெளிர்பச்சையில் இப்பொழுதோ சற்றுப் பொறுத்தோ நீருக்குள் மூழ்கிவிடும் ஆபத்தில், நான்கு நாள் அடைமழையில் எல்லா வாய்க்கால்களும் பொங்க வழிந்து வரப்பு எது, வயல் எது என்று அடையாளம் தெரியாமல் ‘கெத்… கெத்’ என்று அலையடித்துக் கொண்டிருந்து, ஓட வழி தெரியாமல். போதும் பத்தாதற்கு வானொலி வேறு அதிகாலையிலேயே அபாய அறிவிப்பு ஒன்றை வழங்கிவிட்டது. வங்கக்கடலில் உருவான தாழ்வழுத்த காற்றுமண்டலம் ஒன்று நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே ஐநூறு கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்காக நகரக் கூடும். இதன் விளைவாக அடுத்த நாற்பத்தியெட்டு மணி நேரத்திற்கும் நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பலத்த அல்லது மிகப் பலத்த மழை பெய்யக்கூடும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில், கீழத்தஞ்சை மாவட்டக்காரர்களுக்கு இது வாடிக்கையான செய்திதான். ஆனால்… கர்நாடகத்தின் ஒற்றுமையான பிடிவாதத்தால், காவிரியின் கடைமடைக்காரர்கள். ‘குருவை’யை மறந்து விட்டு, ’சம்பா’விற்காவது தண்ணீர் வராமலா போய்விடும் என்று நாற்றை விட்டு, அது முற்றுகின்ற வரை ’மேட்டூர்’ நிலவரத்தை அன்றாடம் பார்த்து பார்த்து பெருமூச்சு விட்டபோது, மனம் பொறுக்காத மேகங்கள் ஈட்டிய கருணைப் பொழிவினால், முற்றிய நாற்றைப் பிடுங்கி, அதன் பருவம் தப்பியதற்கு தாங்கும் வகையில் அதிக உரம் போட்டு நட்டு ஒருவாரமே ஆன ‘குழந்தைப் பயிர்கள் தான்’ இப்போது வயல் முழுவதும். எந்த மழையின் உதவியில் நட்டார்களோ அதே மழையின் ‘அபரிமித’ அன்பினால் இப்போது பயிர் தெப்பலாடுகிறது. ஒருநாள் மூழ்கினால் போதும். முழுவதும் அழுகிவிடும். மறுபடி புதிதாக நாற்றுவிட்டு… புதிய சாகுபடி தான். அதற்கு யாரால் முடியும்…? இதற்கே அங்கே வாங்கி, இங்கே பிடுங்கி என்று ஏகப்பட்ட அல்லாடல்கள். மறுபடியும் என்றால்… தரிசுதான். சோற்றுக்கு லாட்டரிதான். வேறு என்ன செய்ய. என்ன செய்யலாம் என்று மருதனுக்குள் ஆயிரம் யோசனைகள். கரைவழியே நடந்தான். உபரித் தண்ணீர் வடிய வேண்டிய வடிகால் மதகை எட்டிப் பார்த்தான். மதகின் ‘கீழ்க்குமிழி’ மட்டுமல்ல ஊரைச்சுற்றி வளைந்து ஓடிவரும் மூன்றுமைல் நீள வடிவாய்க்கால் முழுவதுமே சுவர் வைத்து தடுத்ததைப் போல் காடாய் மண்டிக் கிடந்த நெய்வேலி காட்டா மணக்குச் செடிகளின் அசுரத்தனமான ஆக்கிரமிப்பு. பயிர்கள் மூழ்காமல் மொத்தக் கிராமமும் தப்பித்துக் கொள்ள வழி கண்டுபிடித்துவிட்ட சந்தோஷம் மருதனுக்கு. ‘இந்தப் பேய்ச் செடிகளை பிடுங்கி எறிந்தால் போதும். ஒரே நாளில் உபரி நீர் முழுதும் வடிந்துவிடும்.’ ‘சரி இவ்வளவு நீளம் மண்டிக்கிடக்கும் செடிகளை அரித்து எறிவது லேசான காரியமா என்ன…!’ இந்த மலைப்பிற்கும் ஒரு சில நிமிட யோசனைக்குப் பிறகு வழி தெரிந்தது. உற்சாகமாக நடக்கத் தொடங்கினான். நடந்தவனின் பார்வை; வடிவாய்க்கால் வளைவில் வலை போட்டபடி நின்று கொண்டிருந்த மாரிமுத்துவின் மீது பதிந்தது. நின்றான். “இந்தச் சனியன் பிடிச்ச காட்டாமணக்குச் செடியால தாண்டா தண்ணி வடியமாட்டேங்குது…” மாரி இவனைத் திரும்பிப் பார்த்தான். “யாரு இல்லேன்னா …” “அதிலும் நம்மூரு வடிமதகு இருக்கே… அது வெள்ளைக்காரன் காலத்துலே நம்மூருக்குன்னே ரொம்ப டெக்னிக்கா கட்டுனது. கடலே திரண்டு வந்து உள்ளே நுழைஞ்சாலும் அப்படியே முழுங்கிட்டு ’கம்’முன்னு இருக்கும், தெரியுமில்ல ….!” “யாரு இல்லேன்னா …” “ஊர்க்காரங்க எல்லோரும் ஒண்ணு சேந்தோம்னு வச்சுக்க. ஆளுக்கொரு செடின்னாகூட ஒரே நாள்லே வாய்க்காலும் சுத்தமாயிடும். தண்ணியும் கடகடன்னு வடிஞ்சிடும்.” இப்படிச் சொன்ன மருதனை ஏற இறங்கப் பார்த்தான். பார்த்ததோடு சரி. பிறகு வலையை வாய்க்காலுக்குள் இறக்குவதும் தடம்பார்த்து மேலே தூக்கி, துள்ளும் கெண்டை மீன்களை அள்ளி பக்கத்திலிருந்து மீன் கூடைக்குள் போடுவதுமாக காரியத்திலிலேயே கண்ணாயிருந்தான் மாரி. பொறுமையிழந்து போனான் மருதன். “ஏண்டா மாரி, நான் சொன்னது உங்கிட்டதான். நீ சாஞ்சுகிட்டிருந்த பனைமரத்துக்கிட்டேயில்லை.” “தெரியுது… ஏதாவது நடக்கிற காரியமா இருந்தா பதில் சொல்லலாம். நீயோ போகாத ஊருக்கு வழி கேக்கிற, … நானென்ன சொல்ல முடியும்…” “எதுடா நடக்காத காரியம்.” “சரிசரி. எதுக்கு இப்படி கோபப்படறே. முதல்லே ஊரை ஒண்ணு கூட்டி காரியத்தை ஆரம்பி. மத்ததை நீயே தெரிஞ்சிக்குவே…” “ச்சே… நீயெல்லாம் ஒரு மனுஷன்… முதமுத உங்கிட்ட வந்து கேட்டேன் பாரு… என்னைச் சொல்லணும்…” கோபம் மாறாமல் கீழே இறங்கினான் மருதன். கணுக்கால் அளவு தண்ணீர் நிற்கும் நடைபாதை வரப்பு, இருபுறமும் முழ்க இருக்கும் பயிர்கள். ஒரு வார மழையால் பருவப் பெண்ணைப் போல் இடையிடையே பசுமை பூரித்துப் போய் நிற்கும் கருவை மரங்கள். மடித்துக் கட்டியிருந்த பழைய கைலி, பனியன் மீதெல்லாம் சேறடிக்க, ‘சௗக்புளக்’ கென்று நடந்து கொண்டிருந்தான். வழியில் வீரன்கோவில் குளம். கரை நெடுக தண்ணீர்க் குளியலில் மினுக்கியபடி நிற்கும் தென்னைகள். இரவு வந்துவிட்டதாய் நினைத்து அவசரமாய் பூத்துச் சிரித்தபடி குளம், முழுக்க பூத்திருக்கும் செவ்வல்லிகள்… இவை எதுவும் மருதனின் மனதைத் தொடவில்லை. குளக்கரை மேட்டில் புல்லறுத்துக் கொண்டிருந்த முல்லையம்மாக் கிழவி தான் கண்ணில்பட்டாள். “ஏ. .. ஆத்தா. .. இந்த அடிச்சு ஊத்துற மழையிலேகூட புல்லறுக்க வந்துட்டியாக்கும். நீ ஆடு, மாடு வளத்தாதான் உன் வயத்துக்கு, சோறு கிடைக்குமாக்கும்…” கிழவி மருதனை பார்த்து நொடித்தாள். “போடா…போக்கத்தவனே…! சோத்துக்கு வக்கில்லாம இல்லேடா…. கையை காலை மடக்கிட்டு வீட்லே முடங்கிக்கிடந்தா சோறு எப்படிடா வயத்துக்குள்ளே இறங்கும்…?” “அடேங்கப்பா… கோபத்தைப் பாரேன். .. சரி. சரி. உங்க வீட்டுக்காரரு எங்கேயாம்…?” “எதுக்கு… அதோ அந்த பூவரச மரத்தை அண்ணாந்து பாரு… ஆட்டுக்கு தழை ஒடைச்சுக்கிட்டிருக்காரு…” கிழவிக்கே எழுபது வயதிருக்கும். அதைவிட ஐந்து வயதாவது கூடுதலாக இருக்கும் கிழவனுக்கு. அவரோ நடுக்கும் சாரலில் பூவரச மரத்தின் உச்சாணிக் கொம்பில். மருதனின் மனத்திற்குள் ஆச்சரியம் பூத்தது. கிழவன் காளியப்பன்தான் ஊரிலேயே பெரிய மிராசு. ஏராள நிலம் நீச்சு. வீடு வாசல் ஆள்மாகானம் என்ற அமோக வாழ்க்கை. இதுவே இன்னொருவனாயிருந்தால் இந்நேரம் ஈசிச் சேரில் சாய்ந்தபடி வெற்றிலை குதப்பிக்கொண்டு ஊர் அக்கப்போர் பேசிக் கொண்டிருப்பான். கிழவனால் அப்படி முடியாது. “பெரியப்பா …!” குரல் சேட்டு, கோவணக்கட்டும், தலையில் முண்டாசுமாய் இருந்த கிழவர் முகத்தை மறைத்த பூவரசக் கிளைகளை ஒதுக்கிக் குனிந்து பார்த்தார். “யாரது….” “நான்தான்… மருதன்” “என்னடா …” “வடக்கேயிருக்கும் எட்டூரு தண்ணியும் நம்மூரு வழியாத் தானே வடிஞ்சாகணும். மேற்கொண்டு மழை பேயணும்கூட அவசியமில்லே… ராத்திரிக்குள்ளெ எல்லாத் தண்ணியும் இங்கே வந்திறங்கிடுச்சின்னா, அவ்வளவுதான் இப்பவே எல்லாப்பயிரும் தோகையாடுது. எல்லாமே அப்புறம் தண்ணிக்குள்ளதான்.” “வாஸ்தவம்தான்… அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்றே. என்ன பாவம் செஞ்சோமோ இந்த ஊர்ல வந்து பொறந்து தொலைச்சிட்டோம். அனுபவிக்க வேண்டியதுதான்…” “பாவ புண்ணியமெல்லாம் அப்புறமா பேசிக்கலாம் பெரியப்பா. முதல் காரியமா இன்னைக்கு ராத்திரி நம்ம ஊர்க்காரர்களை ஒண்ணுகூட்டி ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா போதும்.” கிழவரின் புருவம் ஏறி இறங்கியது. “என்னன்னு …?” “விடிஞ்சதும் வீட்டுக்கொரு ஆள் அரிவாள் மம்பட்டியோட வடிவாய்க்காக்கரைக்கு வந்துடணும். ஒரு செடி பூண்டு இல்லாம அரிச்சு எறிஞ்சுட்டா பொட்டுத் தண்ணியில்லாம வடிஞ்சிடும்’னு சொல்லணும்…” கிழவர் மெதுவாய் மரத்திலிருந்து கீழே இறங்கினார். “ஏண்டா மருதா… உனக்கு விவரம் தெரிஞ்சு நம்ப ஊரு பயலுவ எந்த நல்ல காரியத்துக்காகவாவது ஒண்ணுகூடியிருக்கானுவளா… மூளைக்கு ஒருத்தனா முறுக்கிக்கிட்டுல்லே போவானுங்க…” “சொல்றவிதத்திலே சொன்னா எல்லாருமே கேப்பாங்க… அதிலும் உங்க சொல்லுக்கு மதிப்பு ஜாஸ்தி. யோசிக்காதீங்க பெரியப்பா… ஒரு நாள், தாமதிச்சாலும் ஊரே பாழாப் போயிடும்…” மருதனின் கவலையும், பதைப்பும் கிழவரை என்னவோ செய்தது, இருந்தாலும், கண்மூடி யோசித்தார். ’இவன் சொல்றபடி ஊரானை கூப்பிட்டு சொன்னாக் கேப்பானுங்க தான். ஆனா நாம முன்னுக்கு நின்னு செய்றப்ப அது இதுன்னு ஆயிரம் ரெண்டாயிரம்னு செலவு வைப்பானுங்க… அப்படி செய்யணும்னு என்ன முடை நமக்கு. எல்லோருக்கும் ஆவறது நமக்கும் ஆயிட்டு போவட்டுமே. இவன் வெறும்பயல். .. எது வேணாணும் சொல்வான். .. நாம ஏமாந்துவிடக்கூடாது…; மனதின் எண்ண ஓட்டத்தை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் தழைந்த குரலில் நெற்றியைத் தேய்த்தபடியே சொன்னார். “ஏண்டா மருதா… ஊர்லே எத்தனா பயலுவ இருக்கானுவ… ஆனா உனக்கு வந்த அக்கறை எவனுக்காவது வந்துச்சா… நீ சொல்றபடி செஞ்சாதான் பயிர் பொழைக்கும். சந்தேகமேயில்லை. ஆனா எனக்கொரு சங்கடம். நளைக்காலையிலே ‘பலபல’ன்னு விடியறப்ப வானமா தேவியிலே கட்டிக் கொடுத்திருக்கிற எம்மக. வீட்லே இருந்தாகணும். குடும்பத்தோட வில்வண்டியிலே போறோம். அங்கே பேத்திக்கு ’தலை சுத்துறாங்க’ திரும்பி வர மூணு நாளாகும். அதாம் பாக்குறேன்….” கிழவரின் சாதுரியம் மருதனுக்கு புரிந்துவிட்டது. மனது கசந்து வந்தது. “பரவாயில்லே பெரியப்பா… நீங்க போயிட்டுவாங்க.” திரும்பிப் பார்க்காமல் நடக்கத் தொடங்கினான். ஊர் எல்லையை மிதித்த போது எதிரில் வந்து கொண்டிருந்த பிரேம்குமாரைப் பார்த்ததும் சரேலென்று உற்சாகம் கொப்பளித்தது மருதனுக்கு. பிரேம்குமார் கிராமத்தின் முதல் பட்டதாரி. ‘நாகூர்பிச்சை’ என்று அப்பா, அம்மா வைத்த பெயரை ‘பிரேம்குமார்’ என்று மாற்றிவைத்துக் கொண்டு ‘மன்றம்’ அது இது வென்று என்னவென்னவோ சதா சர்வகாலமும், செய்து கொண்டிருப்பவன். 19 “நாம நினைக்கிற காரியத்துக்கு இவன் தான் பொருத்தமானவன்.” முகம் மலர பிரேம்குமாரை வழி மறைத்தான். “என்னண்ணே …” சிரித்தபடி பிரேம்குமார். கடகடவென்று எல்லாவற்றையும் சொல்லிமுடித்தான் மருதன். ஆனால் அவன் எதிர்பார்த்தபடி பிரேமிடமிருந்து சட்டென்று எந்த பதிலும் வரவில்லை. சிறிது நேர யோசிப்புக்குப் பிறகு மருதனை ஏறிட்டான். “மருதண்ணே … நீங்க சொல்ற வேலையை செய்றதுக்குன்னே ‘பி டபிள்யூ, டின்னு’ கவர்மெண்ட்லே ஒரு டிபார்ட்மெண்ட் இருக்கு. நாளைக் காலையிலே அவங்களைப் பார்த்து ஒரு ‘பெட்டிஷன்’ கொடுத்தீங்கன்னா செஞ்சுட்டுப் போறாங்க.” மருதனின் முகம் சிறுத்துப் போய் விட்டது. “நானே கூட நாளைக்கு என்ஜினியரைப் பாக்கலாம். ஆனா எனக்கு ஒரு ரெண்டு மூணு நாளைக்கு மூச்சு விட முடியாத வேலை. எங்க ‘தலைவருக்கு’ பிறந்தநாளு. அதுக்கு அன்னதானம்… ரத்ததானம்னு நிறைய வேலை. உங்களுக்கே தெரியும் ‘அவரோட’ ரசிகர் மன்றத்துக்கு நான் தான் தலைவருன்னு. பிறந்தநாள் விழா முடிஞ்சதும் நீங்க சொல்ற மாதிரி ஏதாவது செய்வோம். வரட்டுமாண்ணே. எனக்காக எல்லாரும் காத்துக்கிட்டிருப்பாங்க.” மருதனின் பதிலை எதிர்பார்க்காமல் அவன் போய்க் கொண்டேயிருந்தான். இதற்குப் பிறகும் மருதனால் கம்மாயிருக்க முடியவில்லை. ஒருத்தர் பாக்கியில்லாமல் ஊர்க்காரர்களிடம் சொல்லிச் சொல்லி புலம்பினான். அத்தனை பேரும் அவன் சொன்னதை ஒப்புக் கொண்டார்கள். ஆனால் அதென்ன அதிசயமோ தெரியவில்லை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை இருந்தது. அதுவும் தள்ளிப்போட முடியாத அவசர வேலை. மனமும் உடம்பும் சோர்ந்து போய் வீடு திரும்பிய மருதனை அல்லி பதட்டமாய் எதிர் கொண்டாள். “என்னது. ஏன் என்னமோ மாதிரி இருக்கே மாமா. உடம்பு கிடம்பு சரியில்லையா…” அவனது கழுத்து, முகமெல்லாம் தொட்டுப்பார்த்தாள். “ம்ஹீம்… உடம்புக்கு ஒன்றுமில்லே… மனசிலேதான் ஏதோ …” நொடிப் பொழுதில் புரிந்து கொண்ட அல்லி உள்ளே ஓடினாள். அப்போதுதான் வடித்த சுடுகஞ்சியில் இரண்டுகல் உப்பைப் போட்டுக் கலக்கி எடுத்து வந்தாள். “இதைக்குடி. .. சூடா இருக்கு.” குடித்தான். இதமாக இருந்தது. பிறகு அவள் கேட்காமலேயே எல்லாவற்றையும் சொல்லிவிட்டு கன்னத்தில் கைவைத்தபடி உட்கார்ந்துவிட்டான். அவனைப் பார்த்து அவளுக்கு சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை. “ஏன் மாமா. .. தெரியாமத்தான் கேக்குறேன். .. நீ நட்டுப் போட்டுருக்கிற எந்த நிலம் பாழப் போயிடப் போவுதுன்னு இப்படிக் கன்னத்திலே கை வச்சுக்கிட்டு உக்காந்துகிட்டே… இந்த ஊர்லே இருக்கிற மொத்தம் அறுபது வேலி நிலத்திலே நமக்குன்னு ஒரு ’சக்கரைக்குழி நிலம் கூட இல்லே. எந்த நிலம் எப்படிப் போனா நமக்கென்ன… நமக்குன்னு சொந்தம் கொண்டாட நம்ம கையும் காலும் தான். இந்த ஊரு இல்லேன்னா. ..இன்னொரு ஊரு.. வேலையைப் பாப்பியா…” ஆவேசமாய்க் கொட்டி முழக்கி விட்டு உள்ளே போனாள். விக்கித்துப்போய் உட்கார்ந்திருந்த மருதனின் முன்னே சோற்றுத்தட்டையும், தண்ணீரையும் வைத்தாள். தட்டிலிருந்து கிளம்பி சுடுசோற்றின் வாசம், காரமான மொச்சைக் கொட்டை குழம்பின் நெடி, அவித்த முட்டையின் மணம் எதுவும் அவன் உணரவில்லை. யந்திரமாய்ச் சாப்பிட்டான். ஊமையாய்ப் படுத்துவிட்டான். இரவு முழுக்க அவனால் தூங்க முடியவில்லை. நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த நெல் பயிர் அத்தனையும் ‘என்னைக் காப்பத்து’… என்னைக் காப்பத்து’ என்று அவனைப் பார்த்துக் கெஞ்சிக் கொண்டிருந்தன. பொழுது புலரும் தருணம். புருஷனைத் தொட கை நீட்டியவள் அவன் இல்லாமல் திடுக்கிட்டு எழுந்தாள். “எங்கே போனாரு…?” யோசித்தவளுக்கு, ‘ஒரு வேளை அங்கே போயிருப்பாரோ.’ என்று பொறிதட்டியது. முடியை அள்ளிச் சொறுகிக் கொண்டு வடிவாய்க்காலை நோக்கி வேகுவேகென்று நடக்கத் தொடங்கினாள். அல்லியின் கணக்குத் தப்பவில்லை. தளும்புகின்ற வடிவாய்க்காலில் ஜில்லென்ற இடுப்பளவு தண்ணீரில் தன்னந்தனியே நின்றபடி மண்டிக் கிடந்த காட்டாமணக்குச் செடிகளை ‘சரக் சரக்’ கென்று அறுத்து மேலே எறிந்து கொண்டிருந்தான் மருதன். அப்படியே திகைத்துப்போய் நின்றுவிட்டாள் அல்லி. அவளையறியாமலேயே புடவையை வரிந்து கட்டிக் கொண்டு வாய்க்காலுக்குள் இறங்கிவிட்டாள். “நீ சொல்றது நிஜம்தான் மாமா. ஊரு நல்லா இருந்தாத்தான் நாமலும் நல்லாயிருக்கலாம். அதுக்காக இவ்ளோ நீளமான வாய்க்காலை நீயும், நானும் மட்டுமே சுத்தம் பண்ணிட முடியுமா…” ஆற்றாமையுடன் கேட்டவளை திரும்பிப் பார்க்காமலே பதில் தந்தான். “முதல்லே நம்மாலே முடிஞ்சதை நாம செய்வோம்….” அதற்குமேல் என்ன சொல்வது என்று தெரியாமல் அவன் அறுத்துப்போட்ட செடிகளை அள்ளி கரையில் கொண்டுபோய் போடத் தொடங்கினாள். அவர்களைப் பார்த்தபடியே சற்றுத்தள்ளி எப்போதும் போல் வலை போட்டுக் கொண்டிருந்த மாரிமுத்துவுக்கு என்ன தோன்றியதோ என்னவே, .. வலையை மடக்கி கரையில போட்டான். “நாசமாப் போற செடிங்க, தரையிலேயும் மண்டுது, தண்ணியிலேயும் மண்டுது. .. எங்கிருந்து வந்துச்சோ எங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்க. ..” என்று முணுமுணுத்தபடி வேட்டியை அவிழ்த்து முண்டாக கட்டியபடி வாய்க்காலுக்குள் இறங்கிவிட்டான், மருதனுக்கு ஜோடியாக. நேற்று மருதனிடம் சொல்லிவிட்டதாலோ என்னவோ வடிவாய்க்கால் ரோட்டில் வில் வண்டியின் புறம் உட்கார்ந்தபடி மகள் வீட்டிற்கு போய்க்கொண்டிருந்த கிழவர் காளியப்பனின் பார்வை யதேச்சையாக வாய்க்காலுக்குள் சென்றபோது திடுக்கிட்டுப் போனார். மருதன்… அல்லி.., மாரி… மூவரும் மும்முரமாய் செடிகளை அறுத்தபடியிருந்தனர். அனிச்சையாய் வண்டியிலிருந்து குதித்து விட்டார் பெரியவர். நொடி நேர யோசனைக்குப் பிறகு “வண்டியை வீட்டுக்கு திருப்பிப் போடா… எனக்கு இங்கே கொஞ்சம் வேலையிருக்கு…”என்றபடி, வேட்டி சட்டையை கரையில் அவிழ்த்து போட்டுவிட்டு துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு அவரும் வாய்க்காலுக்குள் இறங்கிவிட்டார். இந்தச் செய்தி வண்டிக்காரன் மூலம் ஊருக்குள் பரவியது. டீக்கடை, மாரியம்மன் கோவிலடி என்று வெட்டிக்கதை பேசுபவர்கள் காதில் விழுந்தன. உறுத்தல் தாங்காமல் ஊர்க்காரர்கள் ஒவ்வொருத்தராய்த் தயங்கித் தயங்கி முன்னும், பின்னுமாய் வடிவாய்க்கால் நோக்கி நடக்கத் தொடங்கினர். நா. விச்வநாதன் தஞ்சை மாவட்டம் காவிரிக்கரை ஓரத்தில் உள்ள அரசூரில் 1948 இல் பிறந்த விஸ்வநாதன் தொடக்கக் காலத்தில் நவீன கவிதை மூலம் பரவலாய் அறியப்பட்டவர். அண்மைக்காலத்தில் சிறுகதைத்துறையிலும் தன் முத்திரையை பதித்துக் கொண்டிருப்பவர். தனது படைப்பு எந்த இதழிலும் வரலாம். தன் குறிப்புமொழியில் தன் முகத்தோடு மட்டுமே தன் படைப்புகள் வடிவம் கொள்ளும் என்பதை நிலைநாட்டிக் கொண்டிருப்பவர். வாழ்வின் மென்மையான உணர்வுகளை படைப்பாக்குவதில் தேர்ச்சிப் பெற்றவர். இரண்டு கவிதைத் தொகுதி நூல் வடிவம் கொண்டுள்ளன. அவரது சிறுகதைகளைப் படிக்கும் போது அவர் எதிர்காலத்தில் சாதிப்பார் என்பதை உணரமுடிகிறது.  குளம் ஊருக்குள் நுழைந்தபோது அவனுக்குத் தென்பட்ட முதல் மாறுதல் அந்தக் குளத்தில்தான். கௌதமன் குளம் என்று அதற்குப் பெயர் அகலிகையைக் கல்லாகுமாறு சபித்துவிட்டு அந்த சாபத்தினால் ஏற்பட்ட பாவத்தைப் போக்கிக்கொள்ள இப்படியொரு குளத்தை உண்டாக்கிய முனிவன் இதில் மூழ்கிக் கரையேறியதாகக் கதை கூடச் சொல்வார்கள். தண்ணீரே இருக்காது. மழைகாலத்தில் கூட சேறும், சகதியுமாய் சுற்றிலும் கோரைப்புற்கள் மண்டிக்கிடக்க அசிங்கமாய்க் காட்சியளிக்கும் தூரத்தில் வரும்போதே காற்று வாக்கில் அங்கிருந்த ஒருவித துர்க்கந்தம் வீசும். இப்போது அந்தக் குளம் வெகு சுத்தமாக இருந்தது. தண்ணீர்ப் பளிங்காய்த் ததும்பி வழிந்தது. நான்கு பக்கமும் படித்துறை வேறு குளத்தைச் சுற்றிலும் கம்பி வேலி போடப்பட்டு வெகு நேர்த்தியாய் பராமரிக்கப்பட்டிருந்தது. ‘குடிதண்ணீர் குளம் அசுத்தம் செய்யாதீர்’ என்ற மிரட்டலான அறிவிப்புப் பலகை வேறு. இவனுக்குச் சந்தோஷமாக இருந்தது. இந்தப் பதினைந்து வருஷத்தில் ஊர் வெகுவாக மாறிப்போய் இருக்கும் என்பதற்கு முதல் குறியாக இதைக் கொண்டான். இத்தனை காலமாய் மனம் முழுவதும் நசநசத்துக் கொண்டிருந்த கசப்பிற்காக சற்று நாணம் கூட ஏற்பட்டது. பிறந்த மண்ணை தான் வெறுக்க முடியுமோ? வெறுப்பதற்கு எத்தனை சாக்குகளைக் கற்பித்துக் கொண்டாலும் அதெல்லாமும் நிஜமாக இருக்கமுடியுமோ? கையைக் குத்தியதற்காக இதழ்களைப் பிய்த்துப்போடும் ஆவேசம் - ஆவேசமென்ன மூர்க்கம் - மூர்க்கமென்ன அநாகரிகம். அந்த அக்ரகாரத்திலேயே அவன் தான் அழகாக இருப்பான். அழகென்றால் கண், மூக்கு, காது முகமென்று - அளவாக - இருக்கவேண்டிய அளவிற்குச் சற்றும் கூடாமலும், குறையாமலும் - சுருள் சுருளான முடியும் பரந்த மார்பும் என்றெல்லாம் இருக்கும் அழகல்ல. அது ஒரு மாதிரி. பார்த்தவர்கள் மறுபடியும் மறுபடியும் பார்க்கத் தூண்டுகிற வருணிப்புகளுக்குள் அடைக்க முடியாத ஒருவகையானது. அவன் முதல் முதல் அங்கு கிராப் வைத்துக் கொண்டான். மீசை வைத்துக் கொண்டான், ரயில்வே ஸ்டேஷன் சாயபு ஓட்டலில் கோழிப் பிரியாணி சாப்பிட்டான். எப்படியாவது கெட்டுத் தொலையட்டும் என்று மற்றவர்களால் வெறுமே இவனை ஒதுக்கிவிட முடியவில்லை. இவனை ஒதுக்க ஓதுக்க அவர்களே பாதிக்கப்பட்டார்கள். அவன் தனியனானான். எல்லோரும் நன்றாய் பெரிய வியூகம் வகுத்துக்கொண்டு இவன்மேல் படையெடுத்தார்கள். இதோ தெரியும் இந்த ஆலமரத்தடியில்தான் சாமாவையர் அவனைக் கட்டி வைத்து அடித்தது. பாவம் சாமாவையரை குற்றம் சொல்லமுடியாது. எத்தனை வருஷங்களாக அந்த நெருப்பு உள்ளுக்குள்ளேயே கணன்று கொண்டிருந்திருக்கும். இயலாமை-பெண்டாட்டியைக் கண்டிக்கத் தக்க ஆரோக்கியமான துணிவை அவருக்குத் தரவில்லை. ஏதோ ஒரு பொழுதில் ஏதோ ஒரு சாக்கில், ஒருநாள் இவனை வளைத்துவிட்டார். பிள்ளையார் கோவில் மேடையில் ஊர் நியாயஸ்தர்கள் முன்னிலையில் மொத்து மொத்து என்று மொத்தினார். “திருட்டு படவா… எங்காத்துப் பிள்ளையாட்டமா வந்து போயிண்டிருந்தியேடா. மேஜையிலே வச்சிருந்த வைரமோதிரத்தை நீதானேடா எடுத்தே. நீதானேடா எடுத்தே… மூவாயிரம் ரூவாடா… உழைச்சு சம்பாரிச்ச சொத்துடா பாவி” என்று ஆக்ரோஷமாகக் கத்தினார். ஆவேசம் வந்தவர்போல் இவனை கிழித்துப் போட்டார். இவனுக்கும் தெரியும், ஊருக்கும் தெரியும், சாமாவையருக்கும் தெரியும். ரொம்ப சாமர்த்தியமாக அந்த விஷயத்தைக் கையாண்டார்கள். ஒரு கலாச்சார மரபை மீறியவனுக்கு தண்டனை ஏற்றி வீழ்த்தி விடத் துடித்து வைரமோதிரம் வைரமோதிரம் என்று ஊரே முனுமுனுத்தது. செடிமறைவிலும், சாக்கடை ஓரத்திலும், இருண்ட கோயில் பிரகாரத்திலும் ஏகாந்தமான தோப்புகளிலும் ஏன் அன்று நாறிக்கொண்டிருந்த கௌதமன் குளத்து மேட்டிலும் கூட ஒவ்வொரு தடவையும் வியர்வையைத் துடைத்துவிட்டுக் கொண்டும் இவனுடைய , தலைமயிரைப் பிய்த்து விடுபவளைப் போல அளைந்துகொண்டும் துடிப்போடு சொல்லுவாள் கல்யாணி. செற்களல்ல அவை. அவளுக்கும், அவனுக்கும் கூட அந்த கணத்தில் அவைதாம் சாத்தியங்கள். “ரங்கு இந்த சாமாவையரை இரண்டாந்தாரமா கட்டிண்டு பதினைந்து வருஷமாச்சுடா. இப்படியொரு சுகத்தை, இப்படியொரு திருப்தியை, இப்படியொரு அற்புதத்தை இப்ப தாண்டா அனுபவிக்கிறேன்.” பஞ்சுமாதிரி அந்த உடம்பை இப்படியும், அப்படியுமாய் சூறைக் காற்றாய்ப் புரட்டி புரட்டி முகம் கைகள், கால்கள் என்ற பேதாபேதங்களின்றி…. பேதங்களை மறந்த இவனின் புயல் தனம் அவளுக்கு வேண்டியிருந்தது. எழுதத் தெரியாத சின்னக்குழந்தையாய்ப் பாவித்துக் கொண்டு ஸ்லேட்டில் மனம் போன போக்கில் குறுக்கும் நெடுக்கிலுமான கோடுகள் தரும் சுகம் அவளுக்கு வேண்டியிருந்தது. இதழ்களைப் பிச்சுப் பிச்சுப் போட்டு முகரும் மூர்க்கம் மட்டுமல்ல… சில வேளைகளில் ‘கல்யாணி அவசரமா வெளியூர் போறேன்’ என்றவாறே கன்னத்தை லேசாய் நிமிண்டி விட்டுப் போகும் அந்த மென்மை - அந்த லயம் கூட அவனுக்குப் பிடித்திருந்தது. கல்யாணி மட்டுமல்ல, ஜெயா, சரோஜா, கோமளவல்லி உள்ளூர் எலிமெண்ட்ரி ஸ்கூல் வாத்திச்சி ராஜம்மா வயலட் என்று ஒரு நீளமான பட்டியலே - இவனைத் தன்னுள். - தங்கள் கனவிலாவது. பிரவேசிக்க வைத்து விட வேண்டுமென்று காத்திருந்தனர். அதனால்தான் ஆண்கள் பயந்தார்கள். சீட்டு தம் வீட்டிலும் விழுந்துவிடுமோ என்ற பரபரப்பில் அவனை அவசர அவசரமாக, பிள்ளையார் கோயில் மேடைக்குத் தள்ளிக்கொண்டு வந்து நியாயம் பேசி… இந்தக் கைதானே, இந்தக் காலதானே; இந்தக் கண் தானே, இந்த உடம்புதானே… என்று அடியடியென்று அடித்துப் பிய்த்துப்போட்டார்கள். அன்றைக்கு மறுநாள் இவன் கல்யாணியோடு ஓடிப்போனான். உலகம் தன் வீட்டு கொல்லைப்புறமளவிற்கும் சின்னதாகத் தோன்றியது. கொஞ்ச நாட்கள் தாம், சாமாவையரைப் போல இவனையும் உணர்ந்தவளே போல இன்னொரு ரங்குவைச் சினேகித்துக் கொண்டு ஒரு ராத்திரி வேளையில ஓடிப்போனாள் அவள். ’யாரு… ரங்கஸ்வாமியாடா. அது, ’இப்பத்தான் வரியா? என்று வில் வண்டியிலிருந்து ஒரு குடுமித் தலை எட்டிப் பார்த்தது. “எலே என்னடாலே இப்படியாயிட்டே, இளைச்சுப்போய்.. கறுத்து…தலையெல்லாம் வெளுத்துப்போய் என்ன டா … கண்முழி இருக்கற எடத் தெரியலே. உனக்கு சேதி தெரியுமோ… சாமாவையன் செத்துப் போயிட்டான். தலைத்திவசம் கூட ஆயிட்டுது. “யாரது? வெறும் வார்த்தைகளை விடுத்து நெஞ்சில் ஆயிரம் அர்த்தங்களாய் விகசித்துப் பரவும் அம்புகளாய் மாற்றும் இந்தத் தஞ்சாவூர்த்தனம். ஓ…ஜோஸ்யர் மாமா.” “எங்கேடா இருக்கே. என்ன பண்ணிட்டிருக்கே, இப்போ ஊருக்கு நான்தான் பஞ்சாயத்து போர்டு பிரசிடென்ட். நான் வந்துதான் ஊரையே தலைகீழா மாத்தினேன். மழை பேஞ்சா இந்தப் பாதையிலே நடக்கமுடியுமா முந்தி. இப்ப பாரு தாரு போட்டாச்சு. சிவன் கோயில் பாழடைஞ்சு கிடைந்ததே இப்ப பாரேன் எப்படியிருக்குன்னு. போனவருஷம்தான் கும்பாயிஷேகம் ஆச்சு. முந்தியெல்லாம் செம்பு ஜெலத்துக்காக யப்பாடி யம்மாடின்னு மூணு மைலும், நாலு மைலும் வேர்க்க விருவிருக்க நடப்போமே. இப்போ பாத்தியா கௌதமன் கொளத்தை… ஏகமாக செலவு பண்ணி தூர் எடுத்து பளிங்கு மாதிர ஜலம்… குடிக்க மட்டும் தான்னு ஊர்லே ஸ்ட்ராங்கா சட்டம் போட்டு காவலும் போட்டு… எலே… நாம் பாட்டுக்கு பேசிண்டே இருக்கேன். நீ மரமாட்டமா நிக்கறே… ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கே. நம்ம மனுஷனாச்சேங்கர விஸ்வாசத்திலே உன்னை நிறுத்திப் பேசறேன் பாரு என்னை ஜோட்டாலே அடிக்கனும்… எலே ஓட்றா வண்டியை. மகாராஜா பிரவேசம் பண்ணியிருக்கார். ஊருக்கு இனிமே பிரளயமோ, பூகம்பமோ” அடிமனதில் கசப்பு தட்டுவதை உணர்ந்தான். சந்திக்கும், எதிர்படும் எட்டிப்போகும் கேள்விப்படும் ஒவ்வொரு மனுஷனும் கிழக்கட்டைகளும் கூட பதினைந்து வருஷத்திய நினைவை மாறாமல் வைத்திருந்து துவேஷத்தை வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தார்போல்- யாரு ரங்கஸ்வாமியா? யாரு ரங்கஸ்வாமியா வந்திருக்கான்? சரிதான் ரங்கஸ்வாமி வந்துட்டானோன்னோ?” “ரங்கு நாள் முழுக்க இப்படியே இருந்துடுவோம்டா… எந்திருக்காதேடா… எந்திருக்காதேடா… மாமாகூட ஆத்திலே இல்லேடா.” உறைபனியின் தன்மையும், ஜன்னல் வழியாகப் பிரவேசிக்கும் காலை வீச்சுக்களின் இதமான சூடும் உடம்புகளில் சங்கமிக்கும் போது எத்தனை சுகம்? இந்த சுகத்திற்காகத் தொலைத்த விஷயங்களைக் கணக்குப் பார்க்கும் நேரமா இப்போ …. ‘அப்படியே போங்கடி. உள்ளே…. வாசல்லே என்ன அவுத்துப் போட்டுண்ணா ஆடறா. வாசல்லே வாசல்லே வந்து நின்னுண்டு… காலை முறிச்சுப் போட்டா சரியாப் போயிடும்’ என்று மனைவி, மகள்களை, தங்கைகளை, அக்காக்களை உள்ளே அவசர அவசரமாக விரட்டிவிட்டு நடுவாசலுக்கு வந்து கரிசனமாய் விசாரிக்கும் இவனுடைய காயத்தை மேலும் மேலும் கிளறியது. “ரங்கஸ்வாமியா…கல்யாணி கூட உன்னை வுட்டுட்டு ஓடிப்போயிட்டாளாமேடா… கேள்விப்பட்டேன் நெஜந்தானா- சந்தோஷப்படும் முறை இப்போது அவளுடையது. இவனது காயத்தை கிளறிவிட்டு குஷிப்பட அவர்களிடம் கைவசம் அம்புகள் நிறைய இருந்தன. நா வறண்டது. வயிற்றில் லேசாக நெருப்பு புகைந்தது. விடுவிடுவென்று நடந்தான்: வேதபாடசாலை வெராண்டாவில் ஏழெட்டு இளம் பையன்கள், சின்னக் குடுமியும் அழுக்கு வேஷ்டியுமாக உட்கார்ந்து தொண்டை கிழிய கத்திக் கொண்டிருந்தார்கள். பூதம் ஜதிஷ்யே புவனம் வதிஷ்யே தேஜோ வதிஷ்யே தபோ வதிஷ்யே பிரம்ம வதிஷ்யே… ஓம் சாந்தி சாந்தி சாந்தி- உச்சந்தலை வழுக்கையைத் தடவிக்கொண்டே எந்திரமாய்ச் சொல்லிக் கொண்டிருந்த ராமச்சந்திரசர்மா தெருவோடு போகும் இவனைப் பார்த்துவிட்டு அவசர அவசரமாக எழுந்து வந்தார். “ஏண்டாப்பா… நீ வந்திருக்கேன்னு கேள்விப்பட்டேன். ஏன் இப்படி…கறுத்து இளைச்சு மார்க்கூடெல்லாம் பின்னிப் போய் என்னமோ வியாதிஸ்தன் மாதிரி… போயிட்டே. அந்தக் கல்யாணி முண்டை கூட இன்னொருத்தனோட ஓடிப்போயிட்டாளாமே நிரந்தரமான சந்தோஷம்னு ஒண்ணு இருக்காடா இந்த பூமியிலே. அதைப் புரிந்துக்காமா தாம் தூம்னு குதிச்சா இப்படித்தான்…” அவரை உற்றுப் பார்த்தான்.. அதே பழைய ராமச்சந்திரசர்மா தான். பழுப்புக் காவி வேஷ்டியும் அசட்டுச் சிரிப்பும், வெற்றிலைக் காவியேறின பற்களும், திறந்து மூடும் போது எச்சில் நூல்கள் இரண்டு உதடுகளையும் இணைத்து வேடிக்கை காட்டும் அசிங்கமும் - இந்தப் பிரதேசத்தில் வழியாகத்தான் வேதங்கள் வெளியே வருகின்றன என்ற விஷயமே. இவனுக்குச் சங்கடத்தை தந்தது. யாரோ ஒரு கருணையுள்ள மொட்டைப் பாப்பாத்தி எழுதிவைத்த சொத்தில் இன்னும் நடந்து கொண்டிருந்த வேதபாடசாலை அது. சோற்றுக்கு அல்லாடும் ஏழை பிராமணக் குடும்பத்துப் பையன்கள். அங்கே எல்லாரும் புனித பழைய சோற்றைத் தின்றுவிட்டு சூனா வயிறு தட்டிப்போய் குழிவிழுந்த கண்களும், முன் துருத்திய நெஞ்சுமாய் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். பள்ளிக்கூடம் போகும் இதர பையன்களின் கிராப் தலைகளை ஏக்கத்தோடு பார்ப்பார்கள். அந்தக் கண்களில் சினிமாக் கனவுகள் மண்டிக்கிடக்கும். இவன் கூட இரண்டு வருஷங்கள் அங்கே வேதம் படித்தான். அப்போதும் இதே ராமச்சந்திர சர்மாதான் வாத்தியார். படு கண்டிப்பு. பையன்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து மடிவேஷ்டி கட்டிக்கொண்டு விபூதியை அப்பிக்கொண்டு உள்ளே வரும்போதே பின்புறம் கைவைத்து கௌபீன முடிச்சைத் தொட்டுப் பார்ப்பார். கௌபீனம் கட்டிக் கொண்டிராத பையன்களுக்கு அன்று சரியான உதை. சோறு போடமாட்டார். இந்தப் பழக்கமே பின்னால் பையன்களை மிரள வைத்திருக்கிறது. சில பையன்கள் பாதியில் இதன் காரணமாகவே ஓடிப்போகிறதும் உண்டு. பெண்டாட்டி இல்லாத அந்த மனுஷனின் வக்கிரம் இப்போது கூட இந்த வயசிலும்கூட அவர் கண்களில் குறுகுறுப்பது நன்றாகத் தெரிந்தது. பையன்கள் இவனை ஆச்சரியத்தோடு பார்க்க ஆரம்பித்தார்கள். இவனுக்கு வருத்தமாக இருந்தது. இங்கு வருவதை விட்டுவிட்டு வேறெங்காவது நாலு தமிழ் நாலு இங்கிலீஷ் எழுத்துக்களைப் படித்துவிட்டு எங்காவது குமாஸ்தாவாகவோ, ப்யூனாகவோ போய் அடிபட்டு அல்லாடிக் கொண்டிருக்கக் கூடாதா என்று நினைத்தான். சோற்றுக்காக எட்டு வருஷம் வேதம் படித்துவிட்டு பிரகஸ்பதியாக வந்து உலகத்து அழுக்கையெல்லாம் எரிக்கவா போகிறான்கள். அமாவாசை தர்ப்பணத்துக்காக ஓடி ஓடி நாலனாவுக்கும், எட்டணாவுக்குமாய்ச் சந்தி சிரித்து பரங்கித் துண்டமும் நாலு வாழைக்காய் கால்படி அரிசி என்று ஆயிரம் இளிவரல்களை சந்தித்து மூட்டைகட்டி கல்யாணத்திற்கு நிற்கும் நான்கு பெண்களைப் பார்த்து பெருமூச்செறிந்து எதற்காகவோ காரணமின்றியோ மனைவியை சபித்து கூனிக்குறுகி ஆஸ்த்மாவின் சுருண்டு போகும் வாழ்க்கை உங்களுக்காகக் காத்திருக்கிறதடா பசங்களா என்று சத்தம் போட வேண்டும் போலிருந்தது. இவன் நடந்தான். சிவன் கோயில் வழியாகத் தாண்டி தெற்குப்புறம் வந்தபோது- அதற்குள் எத்தனை பேரைச் சந்தித்து விட்டான். இதெல்லாம் பழிவாங்கவா? கோயில் குருக்கள் வழிமறித்தார். “ரங்கஸ்வாமி சார்…” என்று நக்கல் தொனிக்கக் கூப்பிட்டார். “ஏன் சார்… கல்யாணி இப்ப உன்னோட இல்லையாமே அதான் இப்படி தேஞ்சு போயிட்டேள்- எப்டி . இருப்பேள் ராஜாவாட்டமா? சாகும்போது சாமாவையர் சபிச்சுண்டேதான் செத்தான். பிராம்மணன் சாபம் சும்மா விடுமான்னா?” வைத்தினாதக் குருக்கள் உருவத்தில் பிரம்மாண்டமானவர். மற்ற குருக்கள் மாதிரி நைவேத்யச் சோற்றை மட்டும் நம்பி இருப்பவரில்லை. கொஞ்சம் நிலபுலங்கள் மாடுகன்று என்று ஏகமாக வைத்துக் கொண்டிருந்தார். ஊரில் எதற்கெடுத்தாலும் முன்னால் வந்து தாம் தூம் என்று குதிப்பார். கல்யாணிகூடச் சொல்லுவாள். “இது பொல்லாத கிழம் ரங்கு. சன்னதியிலே விபூதி கொடுக்கிற சாக்கிலே ரகசியமாக் கையைக் கிள்ளும். மாமி ஊருக்குப் போயிருக்கா. ஆத்துப்பக்கம் வந்துட்டுப் போயேண்டி…” என்பாராம். காலம் மனுஷ உருவங்களில் செய்த மாற்றத்தைத் தவிர, வேறில்லை இங்கே. தெஞ்சின் காயம் அகலமானதுதான் மிச்சம். இனிமேலும் இங்கே அன்னியமாய் நின்று கொண்டிருப்பது அர்த்தமாற்றதாகப்பட்டது. விடுவிடுவென்று நடந்தான். ராகவன் பிள்ளை டீக்கடை தென்பட்டது. டீக்கடைக்காரன் இவனை அடையாளம் கண்டுகொண்டு சிரித்தான். “என்ன ஐயரே, எப்ப வந்தே. தளதளனு இருப்பியே… ஆளே உருமாறிப் போயிட்டே…” “ம்…” என்று தலையை ஆட்டினான். “அந்த பாப்பாத்தி ஒன்ன வுட்டுட்டு ஓடிடுச்சாமே… கவலைய விடு சாமி. வளியா வந்த கழுதைங்களே தாண்டிப் போவுது. இந்த ரகம் எத்தனை நாளைக்குத் தாக்குப் பிடிக்கும். என்னைப் பாரேன். இந்த அம்மினிக் கழுதை எனக்கு அஞ்சாவதோ ஆறாவதோ…” “ராகவன் பிள்ளை! குளிச்சா தேவலாம் போலிருக்கு.”கௌதமன் கொளத்திலே இப்பல்லாம் கால்வைக்க முடியாது தெரியுமா?, சாமி. குடிதண்ணிக்காவ மட்டும்தான். அம்மினி, ஐயருக்கு ஒரு பக்கெட் தண்ணி கொண்டா.” குளித்த பிறகும் உடம்பு எரிச்சல் அடங்கவில்லை. டீக்கடையைவிட்டு ரயிலடிப் பக்கமாக நடக்க ஆரம்பித்தான். இன்னும் யாராவது விசாரித்துவிடப் போகிறார்களோ என்று பயந்தான். வயிற்றை லேசாக புரட்ட ஆரம்பித்தது? இன்னும் இரண்டொருவர் இவனை உற்றுப் பார்த்துவிட்டு கேள்விக்குறிகளோடு தாண்டிப் போனார்கள். வேகவேகமாக நடக்க ஆரம்பித்தான். திடீரென்று வயிற்றின் சங்கடம் அதிகமானது. பலவிதமான ஓசைகள் வயிற்றுக்குள்ளிருந்து கிளம்பின. சற்று நேரத்திற்கு முன் குடித்த டீயின் வேலையோ இது. மனதின் சங்கடமும், வயிற்றின் சங்கடமும் ஒரே சேர வதைக்க இவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கிடுகிடுவென்று வரப்போரமாகப் போய் வேஷ்டியை வழித்துக் கொண்டு உட்கார்ந்தான். வயிற்றின் சங்கடம். இறங்கியபிறகு எழுந்து சற்றுமுற்றும் பார்த்தான். யாரும் தென்படவில்லை. வேஷ்டியை ஒதுக்கிக் கொண்டு குளத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். உஞ்சைராசன் மதுக்கூர் மண்ணில் பிறப்பெடுத்தவர். தமிழில் ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் வளர்ச்சி திசை நோக்கி சென்று கொண்டிருக்கிற இப்போதைய நிலையில், உஞ்சைராசன் பங்களிப்பை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் உண்டு. இவரது சிறுகதைகள் அவர் பிறந்த மண்ணையும், மக்களையும் களமாகக்கொண்டு எழுதப்பட்டிருக்கும் யதார்த்தப் படைப்புகள்-ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சனையை முன் நிறுத்தி போராட வேண்டியதை முன்மொழிகின்றன. ’… போராடும் ஒரு சமுதாயத்தில் அவனுடைய மொழிதான் சிறப்பான அடையாளத்தைக் காட்டும். இவரது கதைமொழி தலித்தினுடைய சிறுகதைத் தொகுதியில் கட்டியம் கூறும் இன்குலாப்பின் சொல்லாடல் மிகையானதே உஞ்சைராசனின் கதையை வாசப்பில். மரபுவழிப்பட்ட மொழியைத்தான் புணைந்துள்ளார் என்பதை நன்கு உணரமுடிகிறது. இத்தொகுப்பில் உள்ள கதைகளில் தலித்துக்களின் அடிமனதைத் தொட்டு காட்டும் - மொழியில் வீச்சம் இல்லாவிட்டாலும் படைப்பாளி அந்தத் திசையை நோக்கிய எடுத்து வைத்துள்ள அடியை மறுக்க இயலாது. ‘இந்தியா டுடே’ நூல் விமர்சபகுதியில் ராஜ்கௌதமன், ஆசிரியரின் இயக்கப் பணியின் அனுபவத்தால் இக்கதைகள் வரையறுக்கப்பட்ட ஒற்றைப் பரிமாணம் பெற்றுள்ளது… கட்சி இயக்கம் என்ற தளத்தில் கதைகளை வரிசைப்படுத்துகிறபோது பிறப்பு முதற்கொண்டே தீண்டாமையால் தண்டிக்கப்படும் தலித்துக்களில் மனோநிலையில் உருவாகின்ற பகடித்தனமான எதிர்ப்புக் குணமும் நடவடிக்கைகளும் கவனிக்கப்படாமல் போகின்றன. தலித்துக்களைவிட தலித்துக்களைப் பற்றி எழுதுகிற இயக்கவாதிகள் மிகவும் ஒழுக்கவியலாளராக ஆகிவிடுவது ஆபத்தான போக்காகும்’ என்று எகிறு தொகுதிக்கு எழுதியிருக்கும் குறிப்பு கவனத்துக்குள்ளாகிறது. ஆத்திரம் மேற்கு வானில் செம்மஞ்சள் பரவிக் கிடந்தது. கதிர் அடக்கிய சூரியனைக் காணவில்லை. வடக்கு நோக்கி காக்கைகளும், மைனாக்களும் கத்திக் கொண்டு பறந்தன. குளத்துக் கரையில் வழக்கமாய் மேயும் ஆடு, மாடுகள் ஆத்து வாய்க்கால் வழியே சென்று விட்டிருந்தன. மயான அமைதியைக் கலைத்தபடி ஆரவாரமாய் மீசைக்காரர் கள்ளரின் பிண ஊர்வலம் நெருங்கியது. செவந்தானும் பொன்னுச்சாமியும் பூவரசங்கட்டைகளை பக்குவமாக அடுக்கி, தலைப்பக்கமும் கால் பக்கமும் கட்டைகள் சரிந்து விடாமல் பக்கத்துக்கு இரண்டு அச்சுகளை அடித்து வைத்தனர். கை எட்டும் அளவில் விராட்டிகளை கொட்டி வைத்தனர். ‘கண்ணு’ புடிச்ச வைக்கோல் அருகில் கிடந்தது. பிணத்தை மூடி மண் வைத்துப் பூச மோட்டார் கிணத்தில் தண்ணீர் எடுத்து வந்து மண்ணைக் குழைத்து வைத்திருந்தனர். அரிவாள், கோடரி, மண்வெட்டி இவற்றுடன் பட்டைப் பூண் போட்ட வைரம் பாய்ந்த மூங்கில் தடியும் கிடந்தது. மூங்கில் தடி இல்லாமல் செவந்தான் எங்கும் : கிளம்புவதில்லை. வயதான காலத்தில் கைத்தடி வேண்டும் என்றாலும்… செவந்தான். தடியூன்றி நடப்பதில்லை . எந்நேரமும் கம்கட்டில் வைத்திருப்பார். படுக்கிற நேரத்தில் தடியை எங்கும் சாத்தி வைக்காமல் தன் படுக்கையிலேயே போட்டுப் படுப்பார். செவத்தான்… உள் வல்சலான ஆள். நாலு முழ வேட்டியை முழங்காலுக்குக் கீழே இறங்கி விட்டுக் கட்டியிருப்பார். மடியில் நாலைந்து அறைகளைக் கொண்ட மடிச்சிலப் பையை நீண்ட கயிற்றைப் போட்டுச் சுழற்றிக் கட்டி வைத்திருப்பார். பையில் ஏதும் இருக்கிறதோ இல்லையோ மடி மட்டும் எப்போதும் கனமாகவே இருக்கும். ஏலத்தில் எடுத்த பச்சைத் துப்பட்டியை தலையில் முண்டாக கட்டியிருப்பார். எத்போதாவது தான் முண்டாசை அவிழ்ப்பார். அவிழ்த்தார் என்றால் தோளில் போட மாட்டார். ஊர்லெ பெரிய மனிதர்களைப் பார்த்து விட்டால் முண்டாசுப் துப்பட்டியை கம்கட்டில் வைத்துக் கொள்வார். ஊரில் யாரு செத்தாலுஞ் சரி பிணத்தை செவந்தான் தான் சுடவேண்டும். சுடுகாட்டில் செவந்தானின் செல்வாக்கே தனி. கிட்டதட்ட எண்பது வயதாகிறது செவந்தானுக்கு. இன்னமும் தடியூன்றாமல் நடக்கிறாரென்றால் அந்த காலத்தில் குடிச்ச கேப்பக் கூழும், உப்புக் கண்டம் போட்ட மாட்டுக் கறியுந்தான் என்று பெருமையாகச் சொல்வார். சுடு கூழுக்கும் மாட்டுக் கறி குழம்புக்கும் அப்படி இருக்கும். அப்பவெல்லாம் அரைக்கருவாய்க்கு பொடைக்கஞ்சட்டி நெறைய கிடைக்கும். இப்பதான் எல்லாருஞ் சாப்புடப் போய் நமக்கு கெடைக்காமப் போச்சு…” என்று சலித்துக் கொள்வார். அதே மாதிரி நண்டு, நத்தை எல்லாம் நொறுங்கச் சாப்பிட்டவர். உலுவை மீன் இவருக்கு ரொம்பப் பிரியம். அப்படியெல்லாம் சாப்பிட்டதாலெ தான் இளந்தாரிகளுடன் நின்று வேலை செய்கிறார். அதுமாதிரி பொட்டிக் கணக்கிலே கள்ளும் குடிப்பார். இப்பல்லாம் எரிசாராயந்தான். “நெய்வேலிக்காரன்ங்க முன்னே மாதிரி இல்ல நெறைபுடிச்சி அடிக்கிறான்ங்கய்யா…” என்று பெருமைப்படும் அளவுக்கு தப்பு அடித்தனர். இளைஞர்கள் அடிக்குத் தகுந்தபடி ஆடினர். ஆடியவர்கள் அத்தனை பேரும் நல்ல தண்ணியில் இருந்தனர். சின்னப் பசங்களெல்லாம் பாடையில் கிடந்த மாலைகளை அறுத்து பந்துகளாகச் சுருட்டி பாடைக்கு மேலே வீசி மகிழ்ந்தனர். சின்னான் மகன் ரெங்கசாமி வானவெடியை சர்வசாதாரணமாக கொளுத்தி வீசிக் கொண்டு வந்தான். பிணப்பாடை நெருங்க நெருங்க செவந்தான் பரபரத்தார் மரம், விராட்டி, உடைந்த ஓடு, சீனி, குங்கிலியம், சீயக்காய்த்தூள் இவைகளை ஒரு முறை சரிபார்த்துக் கொண்டார். பொன்னுசாமியிடம் அரிவாளை எடுத்துத் தயாராக வைத்துக் கொள்ளச் சொன்னார், பாடையை கீழே வைத்து பிணத்தை வெளியில் எடுத்தவுடன் பாடையை மூன்று கொத்து கொத்தி தூக்கிப் போட்டு விடு என்று அறிவுறுத்தினார். ரெங்கசாமி வேகமாக முன்னே ஓடி வந்து ஒரே ஒரு வானத்தை மட்டும் தயாரா வைத்திருந்தான். சுடுகாட்டுக்குள் பாடை வந்துவிட்டது. ரெங்கசாமி ஒற்றை வெடியை கொளுத்தி வீசுவதற்கும் பாடையை கீழே வைப்பதற்கும் சரியாக இருந்தது. “சாமியலே… இத்தோட ஒங்க வேலை முடிஞ்சிருச்சி. இனிமே பொணம் எங்களுது. சொந்த பந்தமெல்லாம் முடிஞ்சு போச்சு. வெலவுங்க…. இருட்டறதுக்கு மின்னாடி… எங்க வேலையப் பாக்கணும்…” செவந்தானின் குரல் உயர்ந்தது. பொன்னுசாமி, ரெங்கசாமி இவர்களெல்லாம் செவந்தான் சொன்னபடி கேட்டனர். செவந்தான் பிணம் கூட முன்னாயத்த வேலையைச் செய்தார். தயாராயிருந்த விறகு அடுக்கில் பிணத்தைத் தூக்கி வைத்தார்கள். விராட்டியை வைத்து அடுக்கி மார்புப் பகுதியில் விராட்டியுடன் உடைந்த ஓடுகளையும் வைத்து அடுக்கினார். பின்னிக் கிடந்த வைக்கோலை விராட்டி மேல் பரப்பி குழைத்த மண்ணை வைத்துப் பூசினார். நீளவாக்கில் விரலால் நான்கைந்து துளைகளைப் போட்டு அவற்றில் சீனி, குங்கிலியம், சீயக்காய்… என உள்ளே கொட்டினார். கொள்ளி வைக்கத் தயார் செய்துவிட்டு, ம். அடுத்த காரியத்தைப் பாருங்க… என்றார். உறவு முறைக்காரர்கள் வாய்க்கரிசி போட்டு முடித்தனர். மூட்டி வைத்திருந்த நெருப்புச் சட்டியிலிருந்து சிறு சந்தனக் குச்சியை எடுத்து கொள்ளிக்காரர் கொள்ளி வைத்த கையோடு எல்லோரும் கலைந்து சென்றனர். உடனே, சுற்றி வைத்திருந்த வைக்கோல் பிரியை பற்ற வைத்து சுற்றிலும் நெருப்பு வைத்தார் செவந்தான் எரிய ஆரம்பித்தது. சுடுகாட்டிலிருந்த மேட்டில் எல்லோரும் கூடினர். வண்ணார் விரித்த மாத்தில் முக்கியமான ஒரு சிலர் உட்கார்ந்தனர். கருமாதி வைக்க தேதி குறித்த பின்னர் காலையிலிருந்து வேலை செய்த ஆட்களுக்கு கூலி கொடுத்தனர். தப்புக்காரர்கள், வண்ணார், பாடை கட்டியவர்கள், கேதம் சொல்லிப் போனவர்கள், மரம் வெட்டியவர்கள், விராட்டி வாங்கப் போனவர்கள் வெடிவிட்டவர் என்று எல்லோரையும் அழைத்த ஆளுக்கு கொஞ்சம் காசு கொடுத்தனர். அதைப்போலவே “பொணஞ் சுடுறது யார்டா”, என்ற அழைப்புக்கு. தலையில் கட்டியிருந்த முண்டாசை அவிழ்த்து கம்கட்டில் வைத்தபடி… “சாமி… நான்தாங்க… கூட பொன்னுச்சாமியையும், ரெங்கசாமியும் நிக்கிறான்ங்க. பாத்துக் குடுங்க சாமியோவ்” என்று கும்பிட்டபடி சொன்னார் செவந்தான். “என்னத்தெடா பாத்துக் குடுக்கிறது. சின்னக் கள்ளுச்சியெ எரிச்சியலெ அரை கொறையா.. அப்படியில்லாமெ இருக்கணும் இம்புட்டு வேணுங்க சாமின்னு கேளுடா. செவந்தான் மிச்சம் புடிக்கவா கேக்கிறே எல்லாம் தண்ணிக்கித் தானெடா”. மரத்தில் உட்கார்ந்திருந்த ஒருவர் சொன்னர். “என்ன சாமி. ஓங்களுக்கு தெரியாதா, தண்ணிய கிளாசி - அஞ்சி ரூவா விக்கிதுங்க. அதுவும் மொட்டப் பச்சத் தண்ணி நாங்க மூணுபேரு…… வழக்கமா குடுக்கறதெ விட கூட. பாத்துக்குடுங்க மீசைக்காரக் கள்ளனுக்கு காசே வாங்காம எரிக்கணும்… நாங்க அப்பிடிக் கூட்டாளிக…” செவந்தான் பணிவாகக் கேட்டார். “சரி, இந்தா ஓம் பொல்லாப்பு வேண்டாம். பத்து ரூவா கூடவே வச்சுக்க. நல்லா எரிச்சுப் புடனும். அவரு மருமகன் பொல்லாத ஆளுடா. அப்புறம் அடிச்சிப்புட்டாரு வைச்சிப்புட்டாருன்னு சொல்லிக்கிட்டு வரப்புடாது ஆமா.” பணங்கொடுத்த வடக்கு வீட்டுக்காரர் எச்சரித்தார். நிலா உயர்ந்து விட்டது. மாரியண்ணே வீட்டு பொட்டை நாய் ஊளையிட்டது. கரும்புக் கொல்லையில் கிடக்கும் காட்டுப் போக்கான் கத்தும் சத்தம் கேட்டது. வள்ளி மக அறை வீட்டுக்குள்ளே அழுவுறது அக்கம் பக்கத்தாரின் தூக்கத்தைக் கெடுத்தது. மினுக்கட்டான் பூச்சியாட்டம் தெருவிளக்கு கீழே நாலைந்து பையன்கள் படக்கதை பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர். கருவாட்டுக் கொழம்பு. முழிச்சிருந்து பேத்தி சோறு போட்டாள். காலையில் செட்டியார் கடையில் நாலைந்து இட்லியெப் புட்டுப் போட்டது. பகல் முழுக்க வெறும் வயித்திலேயே தண்ணியெக் குடிச்சது சரியாகவே இல்லை. இப்ப வேறு குடித்திருந்தார். எனினும் ஒரு குண்டாச் சோறு உள்ளே போனதும் போதை ஏறி இறங்கியது. மடிச்சிலைப் பையை அவிழ்த்து வெத்திலை போட்டுக் கொண்டார். தடியை எடுத்துக்கொண்டு பொன்னுச்சாமி. வீட்டுக்குப் போனார் செவந்தான். “பொன்னுசாமி… ஏ… பொன்னுசாமி… அடஙொங்காள ஒலியாண்டா… கள்ளென்ங்க காலையிலே கட்டி வச்சி அடிக்க வாடா… காசெ வாங்கி தண்ணியெக் குடிச்சுப்புட்டு தூங்குறெ… ஏலெய்… எந்திரிடா- ஏய் வனிதா-அடியேய்-வனிதா-” செவந்தான் சத்தமிட்டார். “என்னப்புச்சி- இப்பத்தானே படுத்தாக தண்ணியெ வாங்கி குடுத்திட்டியா” வெளியில் வந்த வனிதா சொன்னாள். “ஆமா… ஓம் புருஷனுக்கு வாங்கிக் குடுத்தாக… இதையுங் கண்டமான்னு குடிக்கிறாண்டி… சரி சரி - கெளப்பிவிடு சுடுகாட்டுக்குப் போகணும். “சுடுகாட்டுக்கா… என்னப்புச்சி நீ. வெல்லனா வேலைக்கிப் போவணும் அப்புச்சி.” “போகலாமுடி… யாத்தா இன்னேரம் எரிஞ்சிரிக்கும் ஒப்புக்குப் போய் பாத்தெட்டு வர்றதுக்தானே… இந்தா… கரிச்சாங் கத்தறத்துக்குள்ளே வந்திடுவோம்…. எழுப்பு விடுத்தா… இனி ரெங்கசாமியெ வேறெ கௌப்பனும்” வனிதா - உள்ளே சென்று எழுப்பினாள். தென்னங்காற்ற நன்கு வீசியது. தலைப்பக்கம் நெருப்பு பிடிக்கவேயில்லை. சுற்றிவர விராட்டி எரிந்து. கட்டையில் லேசாகப் பற்றி இருந்தது. நெருப்புச் சத்தம் மட்டுமே அங்கு நிலவியது. தூரத்தில் இருக்கும் ஆலமரத்தில் ஓர் ஆந்தை கத்தும் சத்தம் கேட்டது. செவந்தான் மேலே போத்திக் கிடந்த துப்பட்டியை எடுத்து தலையில் உருமா கட்டினார். நான்கு முழு வேட்டியை கோமணமாக்கிக் கட்டிக் கொண்டார். ரெங்கசாமி வைத்திருந்த சாராயப் பாட்டிலை வாங்கிக் கொஞ்சம் அன்னாத்தி கொண்டார். பொன்னு.சாமியிடம் ஒரு வாட்டி வெத்திலை எடுக்கச் சொல்லிவிட்டு - நீண்ட குச்சியை எடுத்து நீளவாக்கில் நாலு இடத்தில் துளையிட்டார். பொட்டலத்திலிருந்த சீனியை அள்ளிக் கொட்டினார். தலைமாட்டுப் பக்கம் காற்று அணைவுக்காக பாடையை இழுத்து வைத்தார். சுற்றிலும் கலகல வென எரிய ஆரம்பித்தது. பாம்பு தவளையைப் பிடித்திருக்க வேண்டும். தவளை கத்தி அடங்கியது. பதினொன்னரை மணி கார் போகும் சத்தம் கேட்டது. “இன்னும் கொஞ்ச நேரத்திலே தலைப்பக்கம் பத்திக்கிட்டுரும். அப்புறம் போனமுன்னா வெள்ளி முளைச்சி வரலாம்”. என்றார் செவந்தன். “ஓனக்கு வேலை இல்லேய்யா. வேலை மயிரத்துப் போய் மருவுடியும் வர்றியோ வந்தது வந்தாச்சி… இன்னங்கொஞ்சம் சீனி இருந்தாப் போடு- டையரு கியரு கிடந்தா எடுத்துப் போட்டு எரிச்சுப்புட்டு ஒரேயடியாய் போறதுக்கு. காலையிலே ஒருக்கா வர்றியோ.” ரெங்கசாமி சொன்னான். “அப்பன்னா … ஓண்ணுசெய்… இருக்கிற தண்ணிய இவென்ங்கிட்டே குடுத்துட்டு நீ ஓடிப்போய் இன்னரெண்டு கிளாசு வாங்கியா… தண்ணி குடிச்சாத்தான் கிட்டே நின்னு வேலை செய்ய முடியும்…” செவந்தான் மடிப்பையிலிருந்து பத்து ரூபாயெக் குடுத்து ஓடச் சொன்னார். “வாட்டசாட்டமா உருவம்டா. சதை புடிப்பு இருக்கு. சட்டுனு எரிஞ்சிடும்.. இப்ப சாக வேண்டிய ஆளில்லைடா இவரு. வந்த மருமக படுத்துன பாடு. மனமொடைஞ்சு இப்புடிப் போயிட்டாரு. ஆனாக்காக் காசு எலக்க மாட்டாருடா.. அம்புட்டுச் சொத்தும் மாட்டுத்தரகு, ஆட்டுத்தரகு பாத்து சம்பாதிச்சது தானே.. இவுரு பையன் அப்படி கெட்டி இல்லேப்பா தண்ணி கடுமையாப் போடுறாராம்.” செவந்தாள். வைக்கோல்’ பரப்பில் சாய்ந்தபடி கூறினார். “ஒரு நா… நானும் நம்ம மூக்கன் இல்லே அவெனும்…. சினிமாவுக்குப் போயிட்டு வந்தோம்.. ரெண்டாவது ஆட்டமுல்ல பாத்திட்டு வர்றோம். ஒட்டு வீட்டுக்கார வீட்டு பாலத்துக்கிட்டே வரயிலே யார்ராதுன்னு அதட்டுனாரு யார்டா இந்த நேரத்திலேன்னு- நின்னோம். தண்ணி போட்டிருந்திருப்பாரு போலிருக்கு. கிட்டே வந்து என்னடா இன்னேரத்திலே யார்டா நீள்னாரு. நான் முத்தன் மகன் பொன்னுச்சாமின்னேன். அவென் யார்டான்னாரு ஒத்தவீட்டு மூக்கன். நொண்டிக்கிழவன் மகன் கள்ளவீட்டு அய்யா ன்னு சொன்னேன். எங்கெடா போயிட்டு வாறியன்னாரு. சினிமாவுக்குன்னு சொன்னேன். சரி என்னோட கொஞ்சம் வாங்கடா. கொளத்து வய வரைக்கும் போயிட்டு வருவோம்ன்னாரு… எனக்கு என்னடா நல்லா மாட்டிக்கிட்டமே… இபோகாட்டி மனசிலே வச்சிக்கிட்டு அடிப்பாரேன்னு மொட்டையா- எதுக்கு வயலுக்கு மம்பட்டி எடுத்துக்கிட்டு வாங்கன்னு சொன்னேன். நின்னுங்கடா. வர்றேன்னு போனாரு. போயி கொஞ்ச நேரத்திலே- பொரப் போட்டாரு ச்செய்- இது வம்புலெ வந்து முடியப் போவுதுன்னு ஒரே தட்டு, ஓடி வந்திட்டோம் அன்னக்கி மைக்கா நாளுதாய்யா. இவருக்கும் மொத்திக் கள்ளன் மகனுக்கும் சண்டெவக்காலொக்க வயதான ஆளா இருந்தாலும் இவரெ ஒன்னும் பண்ண முடியலைய்யா…” பொன்னுச்சாமி சொன்னான். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு… ஊறி வந்த வெத்திலை எச்சியை காரித் துப்பினார் செவந்தான். கால்மாட்டில் எரிந்து கொண்டிருந்த விறகு ஒன்று சரிந்து விழுந்தது. சுற்றிலும் திபுதிபுவென எரிய ஆரம்பித்தது. காற்று கொஞ்சம் தணிந்து விசியது. சாராயம் வாங்கப் போனவனின் பாட்டுக் குரல் தூரத்தில் கேட்டது. செவந்தானுக்கு பொன்னுச்சாமி கூறியவுடன் பழைய நினைவு வந்தது. புகையிலையை உள்ளங்கையில் வைத்து கசக்கி கடைவாயில் அடக்கிக் கொண்டார். கணன்று வந்த காரை எச்சியை துப்பிவிட்டு கணைத்துக் கொண்டார். போதை தணிந்திருந்தது. மீண்டும் கணைத்துக் கொண்டு- “நீ…இதெச் சொல்றே- நான் ஒரு தரம் இவருகிட்டே மாட்டிக்கிட்டேன்டா… மாட்டிக்கிட்டேன்னா… ஒன்னுமில்லே… அப்ப கள்ளுக்கடை இருந்த நேரம்… நானும்… எம் மச்சான்… அதான் எஞ்சம்மந்தியும் கள்ளுக் குடிக்கப் போனோம். எனக்கும் எம் மச்சானுக்கும் சின்ன தவசல். சரியாப் பேசிக்கிறதில்லே. ஒரு நாப் பொங்கலுக்கு வருசெ கொண்டுக்கிட்டு வந்திட்டாரு. எம்மருமவ அஞ்சி ரூவாக் காசெக் குடுத்து போயித்து வாங்கன்னுச்சி. சரின்னு அந்தாளெ அழைச்சிக்கிட்டு போனேன். அங்கே ஒரே கூட்டம் பொங்கச் சமயமா- கூட்டம். ஒரு மங்கு வாங்கி ஆளுக்கு பாதி குடிச்சோம். அப்பதான் இவரு வந்தாரு. மொதல்லேயே குடிச்சிருந்திருக்காரு.”டேய் செவந்தான் எனகொரு. கொவளை வாங்கியாடான்னாரு.” ’நமக்கென்ன சொன்னதெக் கேப்போம்’ன்னு வாங்கிக் கொடுத்தேன். குடிச்சிட்டு பேசிக்கிட்டு இருந்தாரு. அப்பறம் எங்கிட்டே இருந்த காசெ எடுத்து இன்னுங்… கொஞ்சம் வாங்கி, நாங் குடிக்கலெ… எம்மச்சானுக்கே குடுத்து குடிக்கச் சொன்னேன். கள்ளுக்கடைக்காரரு…” செவந்தான் மீசைக்கார்ருக்கிட்டேயிருக்கிற கொவளையெ எடுறான்னாரு. நான் போயி எடுத்தேன். ஒடனே இவரு “செவந்தான் ஒஞ் சம்மந்தி பசையான ஆளாமுல்லடா, எனக்கு கள்ளு வாங்கித் தரச் சொல்லுன்னாரு…” நாஞ் சொன்னேன், அந்தாளுக்கு இது பழக்கமில்லே கள்ளவீடு. மல்லுக்கட்டி அழைச்சாந்தேன்னேன். “சரிடா… வாங்கச் சொல்லுடா”ன்னாரு… நல்லா மாட்டிக்கிட்டோம். எப்படியும் கலட்டிக்கிட்டு போயிடனுமுன்னு நெனச்சிக்கிட்டு….”எம் மச்சானெ நீ மொல்லப் போயென்னு சொன்னேன். அவரு ஒரு பத்தடி நடந்திருப்பாரு இவரு என்ன பண்ணுனாரு. உக்காந்து இருந்தவரு எந்திருச்சி டேய் இந்த ஊரான் அடேய் செவந்தான் சம்மந்தி- என்னடா… ஒரு கள்ளன் கேக்கிறேன் மரியாதெ இல்லாமப் போறேன்னுட்டு வேகமாய் போனாரு. போன வாக்கிலே இடுப்புலே ஒரு ஒதை விட்டாருய்யா. எனக்கு குடிச்ச கள்ளெல்லாம் எங்கே போச்சினே தெரியலே… ஒப்புரானே… சம்மந்தியெ ஓதைச்சிப்புட்டாரேன்னு- என்ன கள்ளவீடு நீங்க குடிக்காத கள்ளா. இதுக்குப் போயி - விருந்தாடி வந்த மனுசனெ ஒதைக்கிறியன்னு கேட்டேம்பாரு அட தாயலி இந்த மீசைக்காரன்கிட்டேயே எதுத்துப் பேசிறியாடான்னு இழுத்து அறைஞ்சார்டா. காது கூவுது… நல்லதுக்கு காலமில்லேன்னு. நெனச்சிக்கிட்டு… சரி…வா… மச்சான் தப்பா நெனக்காதேன்னு சொல்லி கூப்புட்டேன். அங்கென ஆளுக நெறையா நிக்கி- அடுத்த ஊருக்காரனுக்கு கொடுக்கிற மரியாதையா இது. எங்க ஊரா இருக்கணும்ன்னு சொல்லிவிட்டு திரும்புனாரு. எஞ்சம்மந்தி என்னடா, டெ. மனனேன்னு மறுபடியும் எட்டி ஒதைச்சிப்புட்டாருய்யா எம் மச்சான் எதுக்க ஆரம்பிக்க ஒடனேல்லா எல்லாரும் வந்து என்னெக்கிட்டே ஒம் மச்சானெக் கூட்டிகிட்டுப் போடான்னு சொல்றாக, அன்னையிலிருந்து இந்தாளு மேலே கொஞ்சங்கூட எனக்கு- சொல்லி முடிப்பதற்குள் ரெங்கசாமி சாராயத்தைக் கொண்டு வந்து விட்டான். பழைய கசப்பான அவமானகரமான நினைவுகளை அசைபோட்ட செவந்தான். வாங்கி வந்த அவ்வளவு சாராயத்தையும் எடுத்து. ஒரே மூச்சாகக் குடித்தார்.. விருட்டென. போதை ஏறியது. சுற்றிலும் நன்கு பற்றி எரிந்த விறகு கட்டைகள் பொதபொதவெனச் சரிந்தன. கட்டைகளுடன் சேர்ந்து பாதி வெந்த நிலையிலிருந்த மீசைக்காரரும் சரிந்து விழுந்தார். பழைய நினைவுகளில் சுழன்று போதையேறிய செவந்தானுக்கு இப்படி பிணம் சரிந்து விழுவதும் தூக்கி வைத்து எரிப்பதும் புதிதல்ல இருக்கிறதெக் கொண்டு எரிக்கணும். சட்டுனு சொல்லு நாறுது என்று கேட்டான். போதை ஏற ஏற- கள்ளுக்கடையும் தன் சம்மந்தி அடிவாங்கி அவமானப்பட்டது… ஏன்ய்யா … இப்புடி மானங்கெட்டு பொளைக்கிறியன்னு மச்சான் திட்டியதுமே நினைவை அரித்தது. மரத்தைக் குடுத்து தூக்கி வைச்சி எரிச்சுப்புடுவோம்ன்னு ரெங்கசாமி கேட்டான். செவத்தான் எழுந்தார். தலையில் உருமாலை சுற்றினார். “தூக்கி வச்சியா எரிக்கணும். எங்கடா கோடாலின்னு போய் கோடலியை எடுத்தார். சரிந்து கிடந்தார் மீசைக்காரர். ஓங்கி காலை வெட்டினார். இந்தக் காலுதானே எம்மச்சானெ ஒதைச்சது… ஓங்கி கையை வெட்டினார் இந்தக் கைதானே என் கன்னத்திலே அறைஞ்சது. பழைய நினைவும் இப்போது குடித்த சாராயமும் செவந்தானுக்குள் அடங்கிக் கிடந்த மூர்க்கத்தனத்தை உசுப்பி விட்டன. வெட்டி வெட்டி எடுத்து நெருப்பின் மேல் போட்டார். எரிந்தும் எரியாமலும் கிடந்த முண்டத்தை தாறுமாறாகக் கொத்த அள்ளி நெருப்பில் போட்டார். பாடைக் கம்புகளையும் பிய்த்து எடுத்து நெருப்பிலேற்றி மீந்து கிடந்த சீனியையும், சீயக்காயையும் அள்ளிக் கொட்டினார். மீசைக்காரர் எரிந்த விறகுகளுடன் கருகிக் கொண்டிருந்தார். தணல் உயர்ந்து படபடத்து எரிந்தது. செவந்தானுக்கு ஆத்திரம் தணிந்தது. இந்த ஆத்திரமும், கோவமும் எப்படி வந்ததென்றே தெரியவில்லையே என்று தன்னையே வியந்து நின்றார் செவந்தான். யூமா வாஸுகி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மண்ணுக்குச் சொந்தக்காரர் ஓவியர் மாரிமுத்து. மாரிமுத்து என்ற பெயரில் ஓவியங்கள் வரைந்து வந்த ஒருவரே யூமாவாஸுகி என்ற பெயரில் கவிதைகளும், கதைகளும் எழுதுகிறார். இவரது கவிதைகள், ஓவியங்கள், சிறுகதைகள் எல்லாமே சோகத்தை அடிநாத இழையாகவும் அதை வெளிப்படுத்தும் மொழியாக அறுவெறுப்பு மிக்க கோரப்படம் பிடித்தலையும் கொண்டிருக்கின்றன. …நல்ல கோடுகளை உருவாக்க வல்ல ஒரு ஓவியன் சோகத்தையே தனது மொழியாகக் கொண்டிருக்கிறான். சொற்படிமங்களை வெளிப்படுத்தும் தன்மையுடைய இவர் படிமங்கள் அறுவெறுப்புரும் கோரங்களாக வெளிப்படுகின்றன. இவற்றை இவர் நியாயப்படுத்தவும் செய்கிறார். இதன் மூலம் எவ்வித இலக்கும் அற்ற லும்பன் பண்பாட்டு தன்மையுடையவராக இருக்கிறார். நமது சூழலின் பண்பாட்டு தன்மையுடையவராக இருக்கிறார். நமது சூழலின் சோகம். இங்குள்ள பண்பாட்டு நிகழ்வுகள் குறித்த அக்கறையோடு தேடும் சொரணையற்று வெறும் அற்ப நிகழ்வுகளில் தன்னை இனம் காணும் இவரின் லும்பன் வாழ்வை விமரிசனம் செய்யும் அதே வேளையில் இந்த லும்பன்களிடம் உள்ள திறமைகள் குறித்தும் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை . இப்படிப்பட்டவர்களின் ‘நான்’ களின் பிரக்ஞை பூர்வமாக உருக் கொள்வதில் சமூகத்தின் பங்கு பற்றி நாம் தீர விசாரித்துக் கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறோம்… இந்த மாரிமுத்துவைப் பற்றி கவிதாசரணில் வீ. அரசு குறிப்பிட்டுள்ளார். “…யூமாவாஸுகியின் சொல்லோவியங்கள் வெறியும், அமைதியும் கொண்டவை. குரூரம் அன்பும் பாராட்டுபவை. பல சமயங்களில் அவர் அறிமுகப்படுத்திக்காட்டும் அவர் வாழ்க்கைக்குத் தொடர்பில்லாத வகையில் நியாயத்தையும், நேர்மையையும் வலியுறுத்துபவை. ஒரு வேளை மீட்சிக்கான வேட்கைகளாக இருக்குமோ? இருந்தால் நல்லது. இந்த வேட்கை இன்னும் தேவையானது…” இலக்கு இதழில் தன் அபிப்பிராயத்தை வைக்கிறார், இன்குலாப். இவர் அதிகமாக எழுதாவிட்டாலும் சிறுகதை: - வெளிப்பாட்டின் கூர்மையும், தெளிவும் பொதிந்திருப்பது அவரது படைப்புகளின் தனிச்சிறப்பு. விபத்து மறுபடியும் அதைப் போல் ஒன்று நடந்திருக்க வேண்டும். இத்தனை ஜனம் ஒரே இடத்தில் திரண்டிருப்பதற்கு வேறு காரணமெதுவும் தோன்றவில்லை. சாலையோரத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு சற்றுநேரம் கும்பலையே பார்த்துக் கொண்டிருந்தான். வெகுவான எண்ணச் சிடுக்குகளிலிருந்து ஓய்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தது மனது. அந்த திருப்தியானது சகஜபாவனையில் உறங்கும் மூர்க்க உணர்வுகளுக்கிடையில் எந்த நிமிடத்திலும் நிகழ இருக்கும் நுட்பத் தாக்குதல்களுக்கும் - அவற்றில் முதிர்வில் அவனிடம் ஏற்படுத்தப் போகும் புறக் கொந்தளிப்புகளுக்கும் ஆயத்தம் பூண்டிருந்தது. முன்னம் வாய்ந்த அனுபவம் வேறுவிதம். அது லாரியேறிய பெண். சதை மசிந்து வெளெரென்று துருத்திய நெஞ்செலும்புகள். ரத்தத்தில் ஊறிக் கொண்டிருந்த இளமையின் கோரக்கலவை. ரத்தம் புறக்கணித்துத் தெளிவாயிருந்த ஒரு பக்க முகத்தில் நவீன மோஸ்தர் காதுத் தொங்கள் கன்னத்தில் ஸ்னேகமாய் பதிந்து வெயிலுக்கு ஒளிர்ந்தது. இறந்த பின்னும் விட்டுவிடாத பையிலிருந்து விலகிக் கிடந்த வண்ணக்குடையின் கைப்பிடி மண்ணில் ஓடிந்திருந்தது. ஒரு போலீஸ்காரன் சாவதானமாக மூக்கைச் சிந்தியபடி “நகரு நகரு…எஸ்.ஐ. வரப்போறாரு” என்று லட்டியைத் தரையில் தட்டி மிடுக்குக் காட்டும் வரையில் வண்டலாய்த் தேங்கி நின்று யதார்த்தத்தின் உஷ்ணத்தால் ஆவியாகிப் போய் இப்போது இனம் புரியாத மணத்தை மட்டுமே தக்க வைத்துக் கொண்டிருக்கிற கடந்த காலத்தில் ஒரு விசாலமான பகுதியில்; அல்லது ஏதாவது ஒரு பருவத்தின் சொற்ப தினங்களில்… அல்லது உயர்வான அர்த்தத்துடன் எதிர்வந்து மோதி ஸ்தம்பிக்க வைத்து திரும்பிப் பார்ப்பதற்குள். தன் எல்லா அடையாளங்களையும் சுருட்டிக் கொண்டு மறைந்து விடுகிற அனேக உன்னத நிமிடங்களொன்றில் - அவனது வார்த்தைகளோ, உடலோ, மௌனமான செயல் துணுக்கோ, அவளோடு தொடர்பு கொண்டிருந்திருக்குமென கருதினான். குறைந்தபட்சம் ரயில் நிலையப் பாலத்தின் உயரமான படிக்கட்டுகளில் அவன் புகைத்தபடி நிதானமாக நடக்கும்போது பின்னிருந்து அவனை உந்தித் தள்ளி நாகரீக வார்த்தையில் எரிச்சலைத் துப்பி விட்டு முன்னேறும் மனிதர்களில் அவளும் ஒருத்தியாயிருந்திருக்கலாம். பிற்பாடு அவள் புதைக்கப்பட்ட மயானமறிந்து அவளுக்குப் பிரியமான எதையாவது சமர்ப்பித்துவர விருப்பமெழுந்தது. படம் வரையும்போது வெகுநாட்களாக தூரிகையைத் துடைப்பதற்காக உபயோகப்படுத்திய துண்டில் அற்புதமான நிறச்சேர்க்கையில் ஒரு ஓவியம் சம்பவித்து அவனது கவனத்திற்காகக் காத்திருந்ததை சில தினங்கள் முன்புதான் கண்டுபிடித்திருந்தான். அதைப் போர்த்துவதும்கூட சிறந்ததாக அமையும். ஒரு கனவை அவிழ்த்துப் பரத்தியது அந்த இரவு. கண்ணுக்கெட்டியவரை மரங்களேயில்லாத வெளியில் ஏக்கப்பிரவாகமான அழுகுரல் மிதக்கிறது. பாதங்களில் கீழே கரிய நிலத்தில் வெடிப்புகளில் நாறும் நிணம். வெயிலைத் தடவியுணர்ந்து ஊடுருவ முடிந்தது. ஒரு கைக் குழந்தையைத் தோளில் தாங்கி அவன் நடந்து கொண்டிருக்கிறான். குழந்தையில் தலை வழவழப்பாய் ரோஜா நிறத்தில் மின்னுகிறது. சற்றும் எதிர்பாராமல் நில வெடிப்புகள் அதிகரிக்கத் தொடங்கி பெரும் பள்ளங்களாகின்றன. பள்ளத் திரவத்திலிருந்து தோன்றி மேல் வந்து அலைகின்ற குழிழ்கள் ஒவ்வொன்றாய் வெடிக்கும் போது ஜனிக்கும் அழுகுரல். பேராசையான அவலக்குரல்களின் தாபம் எங்கும் நிறைகிறது. பிரிந்து கொண்டிருக்கும் நிலத்தட்டுக்களின் மீது தாவிச் செல்கையில் அதிர்வு தாங்க மாட்டாத குழந்தையிடமிருந்து மெல்லக் கசிகிறது. அழுகை. வெளி நிசப்தமானது. ஒரே குரல். அது குழந்தையிடமிருந்து வந்தது. குழந்தையின் கண்ணீர்ச் சொட்டு திட உருவில் தரை தொட்டவுடன் எழுந்த புகை தூண் போலாகி - குழந்தையின் தலையும் நிலவெடிப்புகளைப் போல விரிசல் காட்டுகிறது. குழந்தையின் அழுகுரல் ஓலமாய் வலுப்பதற்கேற்ப தலைவெடிப்புகள் ரத்த விளிம்புகளுடன் - அதிகரிக்கின்றன. மிரளும் அவனின் கலவரமான தேற்றுதல் வார்த்தைகளுக்குக் கட்டுப்படாமல் கதறுகிறது குழந்தை .. அவனில் மரண பயம் கவிந்தது. அவனுக்கே விளங்காத பிதற்றலாய் குழந்தையிடம் மன்றாடி முடியாமல், நிர்தாட்சண்யக் கண்களுடன் இமைக்காமல் வெறித்தழும். குழந்தையின் தலையில் முழுச் சக்தியுடன் குட்டுகிறான். குட்டு விழுந்த இடம் சில்லுபோல் நொறுங்கி ஓட்டை விழுவும்அந்த ஒழுங்கற்ற .சதுரத்திற்குள் வெண்குழைவு அடர்ந்து கொதிக்கிறது. அது மேலேறி.. வழியும்போது புலரும் ஒரு குருவியின் அலகு. தன் சிறகு வீச்சில் சப்தத்தில் மீது அமைதியைச் சரித்து மூடி குருவி பறக்கத் தொடங்கியது இப்போது குழந்தையில்லை. அழுகுரல் இல்லை. நிலமும், வெயிலும் அவனுமில்லை. தூரத்தில் புள்ளியாகி மறைந்து கொண்டிருந்தது குருவி. இரண்டு தினங்கள் வேறெதையும் நினைக்க விடாமல் பதிந்து விடாமல் வலுவான நகக்குறியாய்ப் பதிந்து ஹிம்ஸித்தது கனவு. அறைத் தனிமை அவனை நெருங்கவிடாமல் துரத்த ஊர் வெளிப்புறங்களில் சுற்றிக் கொண்டிருந்தான். கனவின் வர்ணனையும் அதன் கீழே சில விளக்கச் சித்திரங்களும் குறிப்புத் புத்தகத்தின் சில பக்கங்களை நிரப்பின. கூட்டத்தில் கலந்து குனிந்து பார்த்தான். ஒருக்களித்த விகாரச் சயனமாயிருந்தது. வலதுகை தலைக்குமேல் உயர்ந்து அசாதாரண வளைவுடன் புழுதியில் பதிந்திருந்தது. வாயிலிருந்து தரையை இணைத்த ஒழுக்கு நின்று போய் வாய் கோடியிலும், கன்னத்திலும் உறைந்திருந்தது ரத்தம். இனங்காணும் வாய்ப்புகளைத் துறந்து சக்கரவேகத்தில் பிசையப்பட்டிருந்தது. முகம். தலையென்று அவதானிக்கக் கூடிய பாகத்தின் ரோமப்பிளவின் கீழிருந்து நாவின் நுனி போல மூளை எட்டிப் பார்த்திருந்தது. ஒரு கால் மடிந்தும், இன்னொன்று திக்குகள் காட்டும் விரைத்த விரல்களுடனும் நீண்டிருந்தது. ஆழச் சிராய்ப்பில் தசையுரிந்து முழங்கை எலும் வெளித் தெரிந்தது. தார்ச்சாலையில் - விளிம்புகளில் ஈக்களுடன், ஒரு அபகரித்தலின் தீவிரத்தை விளக்க முற்படும் - ரத்தப்பெருக்கில் ஊறிக்கிடந்தது பிணம். மேலும் நிற்க முடியாமல் கூட்டத்திலிருந்து விலகி நடந்தான். சைக்கிளை அந்த இடத்திலேயே விட்டு வந்ததை இப்போதுதான் அறைச் சூழல் உணர்த்துகிறது. மறுபடியும் அவ்வளவு தூரம் சென்று சைக்கிளைத் தேடுவதற்கு இசைவற்றிருந்தது உடற்களைப்பு. அகாலத்திலும் விட்டு வந்த இடத்திலேயே சைக்கிள் நின்று கொண்டிருப்பதால் யோசிப்பதற்கு ஒரு முகாந்திரமுமில்லை. அது பூட்டப்படாதிருந்தது. தீய்ந்த முனைகளுடனான சிகரெட் துண்டுகளும், கிழிபட்ட காகிதத் துணுக்குகளும், வண்ணங்கள் காய்ந்த தூரிகைகளும் விரவி அறையை வயப்படுத்தியிருந்தன… புழுதியின் மீதும் பழைய காலண்டர் தாளின் மீதும் படுக்கை விரித்திருந்தான்: படுக்கையெனில் அழுக்குப் பிடித்த போர்வையொன்று தரையில் சுருண்டு கிடப்பது. உத்தரக்கட்டைகளின் ஏதோ ஒரு இடுக்கில் எலி செத்துக் கிடக்கும். துர்நாற்றம் அழுத்தமாக பரவியிருந்தது. சிகரெட் -துர்நாற்றம் அழுத்தமாகப் பரவியிருந்தது. சிகரெட்-கொசுவர்த்திச் சுருள் புகை மூட்டத்தினூடேயும் அவனைத் தீண்டிவிடும் வல்லமையாயிருந்தது. நாற்றம். இருந்தது எல்லாமும் அரைகுறையாக வாசிக்கப்பட்ட இரவல் புத்தகங்கள், நல்ல புத்தகத்தை உடமைக்காரனிடத்தில் திரும்ப ஒப்படைக்கையில் அத்தியந்தமாய் உடலோடு ஒட்டியிருந்த தனி வஸ்துவொன்றை பிய்த்துக் கொடுப்பதான சோகம் நெருடும். புத்தக அடுக்கின் இடையிலிருந்து குறிப்புத் தாள்களையெடுத்து புரட்டத் தொடங்கினான். வெறிபிடித்த கொசுக்கள் அவனைச் சுற்றிவந்து அவ்வப்போது சருமத்திற்குள்ளாக மூக்கைச் செலுத்தியமர்ந்து சில நொடிகள் தியானித்தன. கடந்த வாரம் செல்வரெங்கனோடு நடந்த உரையாடலை எழுதியிருந்ததில், அவனுடைய விஷயமாக இன்னும் கொஞ்சம் சேர்க்க வேண்டியிருந்தது. எழுத முற்படும்போது தற்போதைய உபயோகத்திற்கு சிகரெட் இல்லாதது ஆயாசமேற்படுத்தியது. நசுங்கி சிதறிக் கிடந்தவற்றில் பெரிதாகச் தேர்ந்த ஒரு சிகரெட் துண்டைப் பற்ற வைத்து பேனாவின் முனையால் புள்ளி வைத்தபடியிருந்தான். வராண்டாவில் உதிர்ந்து கிடந்த இலைச்சருகுகளுக்கு அறையைச் சுட்டியது காற்று. யாரோ தடதடத்து ஓடுவது போல அஸ்பெஸ்டாஸ் கூரை மீது மரக்கிளைகள் உராய்கின்ற சப்தம். எழுந்து கதவைச் சாத்திவிட்டு வந்து உட்கார்ந்தான். அடித்தல், திருத்தலாய் தாளில் குழறிக்கிறுக்கியது பேனா, எங்கோ ஒளிபுகாத வானத்தில் பாறையில் உடலைக் கிடத்தியிருக்கும் மலைப்பாம்பின் வயிற்றுக்கோடுகள் துண்டு துண்டாய் தன் மார்பின் ரோமங்களுக்கிடையில் பதியும் பிரமையிடல் கிலி தட்டியது.. நிமிர்த்த மற்ற அச்சத்தில் எழுத முடியாமல் விளக்கை அணைத்து சில்லிட்ட தரையில் படுத்துக் கொண்டான். உற்சாகத்திற்கல்ல இருட்டு. திடீரென்று பக்கத்தில் துழாவி காகிதமும், பேனாவுமெடுத்து மறைப்பு நீங்கித் தொட்டு விட்ட ஒரு வாசகத்தை தோராயமாகக் கணித்து எழுத்துக்களில் நிறுத்தினான். ஏகப் பராக்கிரமமாய் வீசிய காற்றுக்குப் பிறகு ஆர்ப்பாட்ட இரைச்சலுடன் வந்தாடியது மழை. கூரையில் நீர்ச்சரங்களாக மோதி அவனைத் திடுக்கிட வைத்து எங்கும் தன் கர்வத் திரை விரித்தது. அவன் உடைகளைக் களைந்து வராண்டாவிற்கு வந்த போது, வெளியேறும் மார்க்கமின்றி அவனுள்ளே பரிதவித்துக் கொண்டிருந்த முறையீடுகளும் இன்னபிறவும் வாசகங்களாக விடுபட்டன. நீரடித்த கண்களின் உறுத்தலை விருப்பத்துடன் சகித்து வளர்கின்ற வாக்கியங்களுடன் படுத்துக் கிடந்தான். அவற்றையெல்லாம் இடிமூழ்கி அங்கீகரித்தது வானம். கவிழ்ந்து படுத்து தரையைத் தழுவி ஓடுகின்ற நீர்மேல் முத்தம் வைத்தான் உதடுகள் இயல்பாயில்லை. கரிப்புச் சுவையொத்த எதுவோ ஒட்டிக் கொண்டிருந்தது. முகத்தை கையால் வழித்து விடுகையில் விரல்களுக்கிடையில் குமட்டும் மணத்துடன் பிசுபிசுத்தது இளஞ்சூடான புதிய ரத்தம். திகைப்பில் சிறைப்பட்ட நாவு அவனின் வீறிடலை. ஒரு முனகல் விளிப்பாகவே பிரசவித்தது. பதைத்து எழுந்தான். அடிவைக்கும் இடமெல்லாம் பாய்ந்து கொழகொழப்பாய் வழுக்கியது. சிரிப்பில் விரியும் கொடூர உதடுகளுக்கிடையில், தோன்றி மறையும் பல் வரிசையாய் ஒளியெறிந்த மின்னலில் வெளியெங்கும் கருஞ்சிவப்புப் படலம் கண்டு குலைபதறி அறைக்குள் விழுந்தான். திறந்த கதவுகள் வழியே இலைச் சருகுகளையும், போர்வையையும் நனைத்து உள்ளேயும் ரத்தம் நுழைந்திருந்தது. பாதி மயக்க நிலையில் அவனுக்குள்ளேயே ஒண்டிக்கொண்டு அறை மூலையில் புகைப்படமாய்ச் சமைந்தான். வெகுநேரம் அமர்ந்து வியர்த்து அந்த நிலையிலேயே உறங்கிப் போனான். உறக்கத்திற்கு முன்பாக வினாடியிலும் வெளியே சந்நதங் கொண்டல்றும் ரத்தப்பொழிவை கிரகிக்க முடிந்தது. தன் மீது கொஞ்சம். உற்சாகத்தைப் பிழிந்து கொள்ள மேற்கொண்ட செயல்களில் தோற்று, வாடிய மனதின் மேய்ப்புத் தரையாக எதையாவது பற்றிவிட்டு இலக்கற்று அலைந்து கொண்டிருந்தான்.. வெயிலேறிய பொழுதில் அவனுக்குப் பக்கமாக வந்து நின்று மனிதர்களைக் கழித்த பஸ்ஸில் ஆலோசனையுடன் ஏறி நின்று பார்த்தான். உட்கார்வதற்கு இடமெதுவும் காலியாயில்லை. அவனது இருக்கையைக் கைப்பற்றி விரோதி யாராக இருக்குமென்று முகங்களை கூர்ந்து கவனிக்கையில் பஸ் கிளம்பியது. பஸ் புறப்பட்ட பிறகும் எங்கு செல்வதென்ற தீர்மானம் சிந்திக்காமலிருந்தது. நகரத்திற்கும் அப்பால் எந்த கிராமத்திலாவது இறங்கிக் கொள்வதென்று உத்தேசமாய்க் குறித்து வைத்தான். ஜனநெரிசல் மிகுந்த அவன் கொஞ்சம் கால் மாற்றி வைக்கவும் இடமில்லாமலிருந்தது. மனிதர்கள் எந்த சங்கோஜமுமில்லாமல் சாய்ந்தும் தள்ளிக் கொண்டும் மேல்கம்பியைப் பிடித்த கரத்தின் முட்டியால் அவன் தலையில் இடிக்கவும் செய்தனர்: அவனும் கம்பியைப் பிடித்துக் கொண்டிராவிடில் தடுமாறி, பக்கத்து இருக்கைப் பெண்ணின் மடியிலிருந்த குழந்தை மீது விழுந்திருப்பான். அந்தக் குழந்தை உறங்குவதும் கண்களைத் திறந்து பார்ப்பதுமாயிருந்தது. அவனைச் சொடுக்கி வீழ்த்தியது அதன் குறுநகை வாத்ஸல்யம் மிகுந்த இணக்கமான. பாவத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தாடையில் விழித்திருந்த எச்சிலில் லேசாக விஷச்செம்மையேறிக் கொண்டிருப்பதாய் ஊகித்ததும் பட்டென்று முகத்தைத் திருப்பின் கொண்டான். ஒரு ஐந்து தன் முரட்டுச் செதில்களைக் கொண்டு மண்டைக்குள்ளாக கீறி வரைவதிலேற்பட்ட வலியை எதிர்கொள்ள இயலாமல் அடிக்கொருதரம் அவன் தலை குலுங்கியது. தலையைத் தடவி விட்டுக் கொண்டே சகபயணிகளை வேடிக்கை பார்த்தவாறிருந்தான். கண்டக்டர் நெரிசலில் புகுந்து பிரயத்தனப்பட்டு வெளிவருகையில் விபத்தில் இறந்தவனின் ஒரு அம்சம் அவர்மீது சுவாசமிடுவதை எச்சரிக்கையாக கவனித்தான். இந்த பஸ் எதுவரையில் செல்லுமென்று விசாரித்து கடைசி நிறுத்தத்திற்கு டிக்கெட் வாங்கினான். கம்பியைப் பிடித்திருந்த கையில் இறகு வருடுவது போலிருந்த கிளர்ச்சியனுபவத்திற்கு கூசியது உடல். அந்த சுகம் அறுந்துவிடாத ஜக்கிரதையோடு தலையுயர்த்திப் பார்த்தான். உள்ளங்கையிலிருந்து ஒழுகி முழங்கை வரையிலான நெளிக்கோடுகளின் முடிவில் சொட்டுகளாய் ரத்தம் துளிர்த்திருந்தது. நெஞ்சையடைத்து திணறியது சுவாசம். கையை உதறி அழுத்தமாய் சட்டையில் துடைத்துக் கொண்டான். பிசுபிசுப்பு அகன்றபாடில்லை. மீண்டும் மீண்டும் பரபரப்பாய் கையைத் தேய்த்து அதை முற்றுமாய்க் களைத்துவிட முனைந்தான். அவன் கையில் டிக்கெட்டைத் திணித்துவிட்டு விநோதமாய் உற்றுப்பார்த்த கண்டக்டர், அப்பால் நகர்ந்தபோது-அவர், நசித்துப் போன மனித மூளையின் ஒரு துண்டை உதிரக்கறைகளுடன் தன்கையில் திணித்ததை நம்பத் திராணியற்று அங்குமிங்குமாய் நடுக்கத்துடன் தேடினான். அந்தப் பஸ்லிருந்து உடனடியாக தப்பிச் செல்வதாயிருந்தது அவனது முயற்சி பெருத்த அசைவுடன் பஸ் நின்றது. துணை நூல்கள் - தமிழ்ச் சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும் - ⁠ ⁠பெ.கோ. சுந்தரராஜன்(சிட்டி), கோ. சிவபாதசுந்தரம் - தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் - ” - இலக்கிய சிந்தனையாளர்கள் - க.நா. சுப்ரமணியம் - தமிழ் எழுத்தாளர் யார்? எவர்? - தமிழ் எழுத்தாளர்சங்கம் - தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் - மது ச. விமலானந்தம் - அமுதக் கதம்பம் சிறுகதைத் தொகுப்பு - வெளியிட்டாளர், தொகுப்பாளர் பெயர்கிடைக்கவில்லை. - கதைகோவை- அல்லயன்ஸ் வெளியீடு - சுபமங்களா, புதியபார்வை விமர்சனங்கள்-குறிப்புகள் - கவிதாசரண், இந்தியா டுடே. ⁠   இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதை சொல்லிகளின் அனைத்து தொகுப்புகளும். ஆய்வுக்காக அனைத்து படைப்பாளிகளின் நூல்களை நான் தேடிச் செல்லும் போதெல்லாம் ஆக்கப்பூர்வமாக உதவிபுரிந்தவர்கள் என் அன்புக்கு உரியவர்கள் – திருவாளர்கள் - எம்.வி. வெங்கட்ராம் - சௌ. இராதாகிருஷ்ணன் - இரா. காமராசு - அ.ப. பாலையன் - தஞ்சை ப்ரகாஷ் - தேணுகா - பொதியவெற்பன் - மதுக்கூர் ராமலிங்கம் - ந. சுந்தரபுத்தன் - நாகை மாலி - சௌ. ராமலிங்கம் - அரசியன்பன் - மானா பாஸ்கரன் - தெ. வெற்றிச்செல்வன் - சத்தியசந்தன் FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.