[] [] ஞாநி - தாயுமானவன்                                         மின் நூல் ஆசிரியர் : ஜோதிஜி திருப்பூர்                   E Mail - powerjothig@yahoo.com    மின்னூல் வெளியீடு     www.freetamilebooks.com        அட்டைப்படம்  (Design Making) திரு. கணேஷ் குமார். மயிலாடுதுறை.    உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0    எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.                          பொருளடக்கம் 1 ஞாநியும் நானும்……….. 7  2  நம்பி கை வை 9  3 அஞ்சலி - ஜெயமோகன் 20  4 ஞாநி இணையதளம் - ஜெயமோகன் 25  5  நேர்மை 29  6 ஞாநியென்னும் அக்கினிக்குஞ்சு - அ. ராமசாமி 32  7 ஞாநி என் அரசியல் எழுத்துக்களுக்கு க்கு ஆசான் - சி. சரவணகார்த்திகேயன் 45  8 அஞ்சலி - ஞாநி - ஜெயமோகன் 54  9 ஞாநி ஒரு கடிதம்- ஜெயமோகன் 60  10 மனிதன் பதில்கள் - ஆதி வள்ளியப்பன் 65  11 பத்திரிகை போராளியே சென்று வா! 67  12 வீட்டுக்கும் பொதுவெளிக்கும் இடைவெளியற்ற வாழ்க்கை! - ஷங்கர் ராமசுப்ரமணியன் 70  13 இலக்கிய உலகத்துடன் ஒரு பாலம்! - எஸ்.ராமகிருஷ்ணன் 73  14 நம்பிக்கையை விதைத்த நாடகக்காரன்! - எஸ்.ராமாநுஜம் 75  15 ஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி! - பாஸ்கர் சக்தி 78  16 நெட்டிசன் நோட்ஸ்: ஞாநி மறைவு - ‏ஓர் எழுதுகோலில் மை தீர்ந்தது 84  17 இந்த புத்தகக் கண்காட்சியில் உங்களைப் பார்க்க முடியவில்லையே ஞாநி! - வினையூக்கி செல்வா 92  18 நினைவில் வாழ்வீர்கள் ஞாநி! -கவின் மலர் 105  19 ஞாநி, சில நினைவுகள் - 1 - அதியமான் 112  20 ஞாநி, சில நினைவுகள் - 2 - அதியமான் 114  21 அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா? பாஸ்கர் ஆனந்த ராவ் 116  22 ஞாநி - பூவண்ணன் கணபதி 120  23 'வீழ்வேன் என்று நினைத்தாயோ' - கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு 123  24 நாம் யாருக்கு விசுவாசமாக இருக்கவேண்டும்? - எஸ் வி வேணுகோபாலன் 127  25 படத்திறப்பு விழா - மணா 132                                                                                            நன்றி  ஞாநியைப் பற்றி எழுதியவற்றை இந்த மின்னூலில் சேர்க்க அனுமதி தந்த பின்வரும் அனைவருக்கும் நன்றி!    ஜெயமோகன்  அ. ராமசாமி  சி. சரவணகார்த்திகேயன்    ஆதி வள்ளியப்பன்  ஷங்கர் ராமசுப்ரமணியன்  எஸ்.ராமகிருஷ்ணன்  எஸ்.ராமாநுஜம்  பாஸ்கர் சக்தி  வினையூக்கி செல்வா  கவின் மலர்  அதியமான்  பாஸ்கர் ஆனந்த ராவ்  பூவண்ணன் கணபதி  கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு  எஸ் வி வேணுகோபாலன்  மணா []   பிறப்பு வே. சங்கரன்  சனவரி 4, 1954 (அகவை 64)  செங்கல்பட்டு, தமிழ்நாடு  இறப்பு 15 சனவரி 2018 (அகவை 64)  இருப்பிடம் சென்னை  கல்வி பி.ஏ. பணி பத்திரிக்கையாளர்  பணியகம் இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, ஆனந்தவிகடன், முரசொலி  பெற்றோர் வேம்புசாமி, பங்காரு  வாழ்க்கைத் துணை பத்மா  பிள்ளைகள் மகன்: மனுஷ் நந்தன்  ஞாநியும் நானும்………..   நண்பர் அதியமான் மூலம் தான் எனக்கு எழுத்தாளர் ஞாநி நேரிடையாக அறிமுகமானர். அது வரைக்கும் அவரின் எழுத்துக்குத் தீவிர வாசகனாக மட்டுமே இருந்துள்ளேன். அதுவரையிலும் ஞாநி அவர்களுடன் தனிப்பட்ட முறையில் எந்த வகையிலும் அவருடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை. காரணம் பிரபல்யம் என்ற நிலையில் இருப்பவர்களின் பணிச்சூழல் என்பதை அறிந்தே காரணத்தால் பெரும்பாலும் நானே தேடிச் செல்வதில்லை. மின் அஞ்சல் வழியே உறுதிப்படுத்துதல் இல்லாதபட்சத்தில் மறந்து விடுவதுண்டு.   அதியமான், ஞாநி அவர்கள் திருப்பூர் புத்தகக் கண்காட்சிக்கு வருவதாக அழைத்துச் சொன்ன போது அவரை உபசரிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அலுவலக நெருக்கடியான சூழ்நிலையில் எங்களின் உரையாடல் மிகச் சுருக்கமாகவே இருந்தது.   சென்னை சென்று இருந்த போது ஞாநி அவர்களின் வீட்டுக்கு நண்பர் ராஜராஜனுடன் சென்றேன். ராஜராஜன் தான் பயந்து கொண்டே வந்தார். காரணம் பிரபல்யம் என்ற வட்டத்திற்குள் இருந்தவர்களை அவர் பார்த்த அனுபவங்கள் அந்த மாதிரி இருந்தது. ஆனால் நான் தயக்கமில்லாமல் ஞாநி அவர்களின் வீட்டில் அவருடன் உரையாடியது, பழகியது, அந்தப் பெரிய வீட்டில் அதிக நேரம் இருந்தது, கேணி நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இருந்து நானும் அதியமானும் கட்டிப் புரளாத குறையாக விவாதம் செய்தது என் என் சொந்த வீடு போல உரிமை எடுத்துக் கொண்டு இருந்ததைப் பார்த்த ராஜராஜனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரும் மெதுவாகக் கூட்டத்தில் ஐக்கியமானார்.   ஞாநி அவர்களின் இயல்பான பேச்சு பழக்க வழக்கத்தைப் பார்த்து ராஜராஜன் திரும்பி வரும் போது பல முறை ஆச்சரியமாகக் கேட்டார்.   "என்ன இந்த மனுஷன் இந்த அளவுக்கு அநிநியாத்திற்கு நல்லவராக இருக்கின்றாரே?" என்றார்.   அப்போது நான் அவரிடம் சொன்னது "எண்ணமும் சொல்லும் ஒரேமாதிரியாக இருப்பவர்களின் வாழ்க்கை எப்போதும் இப்படித்தான் எதார்த்தமாக இருக்கும்" என்றேன். தைரியமாகத் தயக்கமின்றி அழைக்கலாம். மின் அஞ்சல் அனுப்பினால் அன்றே பதில் வந்து விடும். ஆலோசனை என்பதை எப்போதும் அளவாகக் கொடுத்து நமக்கு எதார்த்தத்தைப் புரியவைப்பார். எழுத்துக்கள் மூலம் மட்டுமல்ல அவர் தனிப்பட்ட வாழ்க்கை கொள்கையிலும் இருந்து நான் நிறையக் கற்றுக் கொண்டிருக்கின்றேன்.   (டிசம்பர் 2012)                                                                                                             நம்பி கை வை []   என்னுடைய டாலர் நகரம் புத்தகத்தில் வரக்கூடிய ஒரு அத்தியாயத்தின் பெயர் நம்பி கை வை.   காரணம் திரு. ஞாநி அவர்களின் மேல் அந்த அளவுக்கு நான் நம்பிக்கை கொண்டவன். கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தான் மீண்டும் நான் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கியுள்ளேன். ஆனால் ஏதோவொரு சூழ்நிலையில் தற்காலச் சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகளை ஞாநி அவர்களின் ஓ... பக்கங்கள் தான் எனக்குப் பல புரிதல்களை உருவாக்கியது. மனதளவில் சோர்ந்து போய்க் கிடக்கும் தமிழ்நாட்டின் வாக்காளர்களுக்கு அருமருந்தாக உதவியது.   இவர் காட்டிய பாதையைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் அளவுக்கு இருந்தது.   இவர் மட்டுமல்ல ஞாநி அவர்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களுக்குச் சுட்டிக்காட்டிய 49 ஓ (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) பல கட்சிகளுக்கும் பல சமயங்களில் உதவியது. பல சமயங்களில் பீதியையும் தந்தது. இன்று வரையிலும் தந்து கொண்டிருக்கின்றது.   எழுத்துலகப் பயணத்தில் தொடக்கத்தில் இருக்கும் நான் வலைதளத்தில் இன்று அரசியல் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வளர்ந்தமைக்கு முக்கியக் காரணமே திரு. ஞாநி அவர்களின் ஓ பக்கங்கள் தந்த பாதிப்பு தான்.   ஞாநி என்றால் பலருக்கும் கசப்பு என்றே அர்த்தம் கொள்ளும் அளவிற்குத் தனது விமர்சனத்தால் இதயத் துடிப்பை எகிற வைப்பவர். இவர் தளத்தை மட்டும் சரியான முறையில் பராமரிக்க நபர்கள் அமைந்தார்கள் எனில் நிச்சயம் இன்னமும் பலருக்கும் பலன் உள்ளதாக இருக்கும். இவரது விமர்சனங்களைக் கண்டு அரசியல்வாதிகளை விடப் பத்திரிக்கைகள் தான் அதிக அளவு பயப்படுகின்றது.   ஆனால் தனது கொள்கையில் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல இவரது எழுத்துப் பயணம் பல பத்திரிக்கைகள் தாண்டி இன்று கலகியில் ஓ.... பக்கங்கள் வந்து கொண்டிருக்கின்றது.   வலையுலகில் நமது சமூகத்தில் நடக்கும் அன்றாடம் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை ஏதோவொரு வகையில் சுட்டிக்காட்டி விடும் வினவு தளம் போல எழுத்தாளர்களில் வெகுஜன பத்திரிகையுலகில் முக்கிய நிகழ்வுகளைத் தனது கட்டுரையின் மூலம் தனது எண்ணங்களை எடுத்து வைப்பதில் இவரே முதல் இடத்தில் இருக்கின்றார். படிப்பவருக்கு நேர்மறை எதிர்மறை எண்ணங்கள் என்று மனதிற்குள் எத்தனை தோன்றினாலும் இன்று வரையிலும் எழுத்தில் அறம் சார்ந்த கொள்கையைக் கடைப்பிடிப்பதில் முதல் இடத்தில் இருக்கின்றார்.   திரு. ஞாநி குறித்த பல விமர்சனங்களை வலையுலகில் நான் படித்து வந்த போதிலும் அதற்கெல்லாம் என்னுடைய ஒரே பதில் அவரை முழுமையாகப் புரிந்து கொண்டால் நிச்சயம் எழுதுபவர் எண்ணம் மாறக்கூடும்.   ஒரு வட்டத்திற்குள் சிக்காத மனிதர். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவரே அதிகாரப்பூர்வமான எதிர்க்கட்சியாக எழுத்தின் மூலம் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்.   ஏராளமான விமர்சனங்கள் எளிதாகக் கடந்து வந்தவர்.   முழுக்க முழுக்கத் தனது மனோபலத்தினால் மட்டுமே இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்.   சொல்லும் செயலும் வெவ்வேறாக வாழும் தற்போதைய சமூகத்தில் தன் மனதில் என்ன தோன்றுகின்றதோஅதையே தனது வாழ்வியல் கொள்கையாக வைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர். அது மற்றவர்களுக்குப் பாதிப்புத் தருகின்றது என்பதற்காகத் தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ளாதவர்.   நிச்சயம் ஆதரவு என்ற பெயரில் தனது சுயத்தைத் தொலைத்து இன்று வரையிலும் நிர்வாணமாக நிற்காதவர்.   திருப்பூரில் தமிழ் இணையத்தைப் பற்றி அறியாதவர்களுக்கும், எனது ஆயத்த ஆடை ஏற்றுமதி துறை சார்ந்த தொழில் துறை நண்பர்களுக்கு ஞாநியின் வருகை அதிக ஆச்சரியம் அளித்தது. எனது நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழைக் கொண்டு போய்க் கொடுத்த போது தொடக்கத்தில் கிண்டல் அடித்தார்கள். அவராவது உங்கள் விழாவிற்கு வருவதாவது என்றார்கள். விழா மேடையில் ஞாநியைக் கண்ட போது ஆச்சரியப்பட்டார்கள்.   தொழில் வாழ்க்கையில் சூறாவளி போலச் செயல்படும் அளவிற்கு இதிலும் உன் உழைப்பைக் காட்டிவிட்டாய் என்று இன்று வரைக்கும் ஆச்சரியத்துடன் பாராட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். . .   காரணம் என் தகுதி எனக்குத் தெரியும். அவர் நிச்சயம் என் எழுத்துக்காக வந்திருக்காவிட்டாலும் பையன் ஏங்கிப் போய்விடுவான். வளரவேண்டிய பையன் என்று மனதில் யோசித்து இருக்கக்கூடும்.   காரணம் எனக்குத் தெரிந்த தெரியாத துறை ஏதுவென்றாலும் துணிந்து இறங்கி அது குறித்து முடிந்தவரைக்கும் கற்றுக் கொள்ளும் பழக்கம் இன்று வரைக்கும் என்னிடம் உள்ளது.   சில கருத்துக்கள் நம்மை ஆறுதல்படுத்தும். பல சமயம் சிலரின் எழுத்துக்கள் நமக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுக்கும். இழந்து போன ஆற்றலை மேம்படுத்தும். அந்த வகையில் ஞாநி அவர்களின் எழுத்துப் பயணத்தில் நான் கற்றதும் பெற்றதும் அதிகம்.   இன்று இது போன்ற ஒரு விழாவை நண்பர்கள் ஒத்துழைப்புடன் நான் நடத்த முடியும் என்கிற வரையில் உயர்ந்துள்ளேன். வேண்டாத வேலை என்பதாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஒரு தனி மனித முயற்சி என்பதாகவும் இதைப் பார்க்கலாம்.   இந்த விழாவில் திரு. ஞாநி அவர்களைக் கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்ற எண்ணம் விழா திட்டமிடத் தொடங்கிய போதே எனக்குள் ஒரு விதமான வேகம் உள்ளுற உருவாகிக் கொண்டேயிருந்தது. அவருடன் உரிமையுடன் பழகும் வாய்ப்பு அமையப் பெற்ற காரணத்தால் அவரைச் சந்திக்கச் சென்னை சென்று அழைப்பு விடுத்து அணிந்துரை வேண்டுமென்று கேட்டேன்.   எழுத்தாளர்கள் பல சமயம் சிந்தனையாளர்களாக இருப்பதில்லை அல்லது இருக்க விரும்புவதில்லை.   தனது கடமை என்பதோடு அதைக் காசாக்கும் கலையில் கவனமாக இருப்பதால் படிப்பவனுக்கு எந்த நம்பகத்தன்மையும் தருவதில்லை.   காலப்போக்கில் அது போன்ற எழுத்துக்கள் வெறும் காகிதமாகத்தான் மாறிவிடுகின்றது. ஆனால் ஞாநி அவர்களின் ஒவ்வொரு கட்டுரையும் படிப்பவருக்கும் உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும் ஒரு திராவக எரிச்சலை உருவாக்கும்.   இயல்பான ஆரோக்கியத்தைப் பெற்ற மனத்திற்கு இது இயல்பானதாக இருக்கும். ஆமாம் உண்மைதானே சொல்லியிருக்கிறார் என்றும் சரியான எண்ணம் தானே? என்று ஏற்றுக் கொள்ள வைக்கும். ஆனால் மனம் முழுக்க வக்கிரத்தை சுமந்து கொண்டு வாழ்பவர்களுக்குக் கேலியும் கிண்டலும் அவர் குறித்த தனிப்பட்ட விசயங்களை ஆராய்ச்சி செய்து அழுகல் மணத்தைச் சுவைக்கத் தோன்றுவதாக இருக்கும்.   ஆனால் ஞாநி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை கூட நான் பார்த்த கேட்ட பழகிய வரைக்கும் திறந்த புத்தகம் போலத்தான் இருக்கின்றது. எவருக்கும் உரிமை உண்டு. அவர் நடத்தும் கேணி கூட்டத்தில் எவர் வேண்டுமானாலும் கலந்து கொள்ள முடியும். எது குறித்து வேண்டுமானாலும் நேருக்கு நேர் கேள்வி கேட்கலாம். வயது வித்தியாசமில்லாது அனைவரையும் அரவணைக்கும் பாங்கு இங்கே சிலருக்குத் தான் இருக்கிறது.   ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வட்டங்கள். அந்த வட்டத்திற்குள் சிலருக்கு மட்டுமே அனுமதி. வெளியே இருப்பவர்கள் உள்ளே வர முடியாது. உள்ளே இருப்பவர்கள் வெளியேறினால் மீண்டும் உள்ளே வரமுடியாது.   புகழ் மயக்கத்தில் தன்னைத் தன் ரூபத்தை இழந்து தனனுடைய போலியான அடையாளத்தைப் பதிய வைப்பதில் தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையில் பயணித்துக் கொண்டு இருக்கின்றார்கள். எழுத்துத் துறை மட்டுமல்ல. நீங்கள் காணும் எல்லாத்துறையிலும் இப்படித்தான் இருக்கின்றது.   ஆனால் ஞாநிக்கென்று எந்தப் பாதையும் இல்லை. எல்லாச் சாலையும் ரோம் நகரத்தை நோக்கி என்பது போலத் தனது சிந்தனைகள் அனைத்தும் சமூக மாறுதல் குறித்தே இருக்கின்றது என்பதைத்தான் தனது ஒவ்வொரு கட்டுரை வாயிலாகவும் வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றார்.   வளர்ந்த, பிரபல எழுத்தாளர்கள் கூட முகநூல், வலையுலகம் என்பதை எட்டிக்காய் போல எட்டி நின்று பார்த்துக் கொண்டிருப்பதைப் போல இல்லாது நவீன தொழில் நுட்பத்தையும் தனது இந்த வயதில் கூடத் தளராது பயன்படுத்திக் கொண்டு தன்னளவில் தோன்று சிந்தனைகளை நாள் தோறும் இங்கே விதைத்துக் கொண்டு இருக்கின்றார்.   இந்தியாவிற்குள் ஜனநாயகம் இருக்கின்றதோ இல்லையோ நிச்சயம் இவரிடம் உண்டு. இவர் முகநூலைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும்..   ஞாநி அவர்களிடம் டாலர் நகரம் புத்தகத்திற்கு அணிந்துரை வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்த கோப்பை அவருக்கு அனுப்பிக் கேட்ட போது நிச்சயம் தருகின்றேன் என்றார். ஆனால் அப்போது புத்தகமாக வர வாய்ப்பில்லாது போய்விட்டது. மூன்று மாதங்களுக்கு முன் புத்தகம் உறுதியாக வெளி வரப் போகின்றது என்று சொல்லி அவருக்கும் மீண்டும் கோப்பு வடிவில் அனுப்பி வைத்து விட்டு காகித வடிவில் அவர் வீட்டில் கொண்டு போய்க் கொடுத்து விட்டு வந்தேன்.   ஒருவரிடம் ஒரு வேலை கொடுத்து விட்டால், அல்லது அந்த வேலை முடியாத போது தொடர் நினைவூட்டல் மூலம் அந்தக் காரியம் முடியும் வரைக்கும் அவர்களைத் தொடர்ந்து கொண்டே இருப்பது என் வழக்கம். இது திருப்பூரில் உள்ள தொழில் வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட பழக்கம்.   ஒரு வேளைக் காரியம் செய்து முடிக்க வேண்டியவர்களின் சூழ்நிலை இடம் தராத போது நானே இந்த வேலையை எடுத்து முடித்து விடுவது என் வாடிக்கை. ஆனால் திரு. ஞாநி அவர்களிடம் நினைவூட்டலோ, தொடர் துரத்தல் எதுவும் இல்லாது வழக்கத்திற்கு மாறாக அவர் மேல் உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் அமைதி காத்தேன்.   சென்னை புத்தகக் கண்காட்சி, அவர் புத்தகங்களை அவரே அவரது சொந்த பதிப்பகத்தில் வெளியிடும் தன்மை, அது குறித்த தொடர் பணிகள், பத்திரிக்கைகளுக்கு அவர் எழுதிக் கொண்டிருக்கும் கட்டுரைகள், இதற்கு மேலாக அவர் ஆரோக்கியம் திருச்சியில் கலந்து கொள்ள வேண்டிய அவரின் தனிப்பட்ட பயணத்திட்டம் போன்ற அனைத்தையும் கவனத்தில் கொண்டதோடு கண்களில் ஒரு கனவை சுமந்து கொண்டு தான் நம்பிக்கையோடு இருந்தேன்.   மனதளவில் நம்பிக்கையைத் தளரவிடாத ஒரு வித எதிர்பார்ப்போடு காத்திருந்தேன்.   நான் கேட்ட அணிந்துரை வந்தபாடில்லை. லே அவுட் முடியும் அந்த இறுதிக் கட்டம் தீ போல நேரம் என்னைச்சுற்றிலும் பரவி உடம்பே தகித்துக் கொண்டிருந்தது.   எனக்குத் தெரிந்து விட்டது.   அப்போது தான் அவர் குறுஞ்செய்தி வந்தது. நிச்சயம் நான் விழாவில் கலந்து கொள்வேன் என்று சொல்லியிருந்தார்.   எனக்குப் புரிந்துவிட்டது.   அவர் ஏன் அணிந்துரை தரவில்லை என்பதை இந்தக் காணொளியில் நீங்க கேட்கும் போது புரிந்து கொள்வீர்கள்.   https://www.youtube.com/watch?v=vN9FoCFwmvY  நான் ஏற்கனவே எழுதிய ஈழம் சார்ந்த விவகாரங்களில், அதைப் போலத் திருப்பூர் தொழில் சார்ந்த விசயங்களில் எனக்கு நேரெதிர் கருத்து கொண்டவர். ஆனாலும் அவரவர் கருத்துக்களுக்குச் சுதந்திரம் அளிப்பவர். திருப்பூர் குறித்து ஞாநி அவர்களின் கருத்தை ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் சுற்றுச் சூழலை கெடுக்கும் முக்கிய நகரங்களில் முதன்மையான ஊர் திருப்பூர்.   அவர் எழுத்துலக அனுபவத்தை ஒப்பிடும் போது நான் எழுவதெல்லாம் அவருக்கு மிகச் சாதாரண அரிச்சுவடி சமாச்சாரம் தான். ஆனாலும் அவர் இந்த விழாவில் கலந்து கொண்டது தான் நான் அவர் மேல் வைத்திருந்த நம்பிக்கை என்பதற்கு உதாரணமாகும்..   ஆனால் என் தந்தை தாய் போல வாயார மனதார தன் மனதில் வைத்திருந்த என் எழுத்து குறித்து அப்பட்டமாகக் கூட்டத்தில் பேசி பெருமை சேர்த்த விதம் நான் இறக்கும் தருவாயில் கூட மறக்க இயலாது.   இந்த விழா நடக்கும் அந்த நேரம் வரைக்கும் சில காரணங்களால் அதிக மன உளைச்சலோடு இருந்தேன். காரணம் புகழ் என்ற போதை ஒருவரை எப்படி எல்லாம் செயல்பட வைக்கும் என்பதை உணர நடந்த பல சம்பவங்கள் எனக்குப் பல பாடங்களை உணர்த்திக் காட்டியது.   ஞாநி என் எழுத்தை பாராட்டிப் பேசிய போது எனக்கும் அந்தச் சமயத்தில் அப்படித்தான் தோன்றியது.   வேறு எவருக்கும் இது போன்ற வாய்ப்பு அமையுமா? என்று எனக்குத் தெரியவில்லை   திருப்பூரில் தாய்த்தமிழ் பள்ளியை நடத்திக் கொண்டு வரும் திரு. தங்கராசு அவர்கள் (அலைபேசி எண் 98 43 94 40 44 ) வீட்டில் விழா அழைப்பிதழைக் கொடுக்க நேரிடையாகச் சென்ற போது ஞாநி கலந்து கொள்கின்றரா? என்று சொல்லிவிட்டு, ஏற்கனவே ஒருவர் எழுதிய புத்தகத்தைப் படித்து விட்டு மேடையிலேயே வெளுத்து வாங்கியதைச் சொல்லி சிரித்தார்.   நிச்சயம் ஞாநி கலந்து கொண்டால்(?) உங்களின் உண்மையான தகுதி வெளியே தெரியும் என்றார்.   அவர் சொன்னபடிதான் கடைசியில் நடந்தது.   பிரபல்யங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு வீட்டில் வைத்து பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ள நான் ஒரு முக்கியப் பிரபல்யத்தை விழாவிற்கு அழைத்து வைத்து என் புத்தக வெளியீட்டு விழாவை நடத்தியுள்ளேன்.   என் அக்கா, மாமனார், மனைவி, சகலை, பள்ளிக்கூட நண்பர்கள், வந்திருந்த பார்வையாளர்கள் அத்தனை பேர்களும் திரு. ஞாநி அவர்களின் பேச்சை குறித்துத் தான் என்னிடம் சிலாகித்துப் பேசினார்கள். சிலர் முரண்டுபட்டு நின்றார்கள். நானும் ஞாநியைப் போலக் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிப்பவன் . மெட்ராஸ் பவன் சிவகுமார் திருப்பூரில் கலந்து கொண்ட விழாவில் தமிழ்மொழி பற்று குறித்து அவர் கொண்ட மாற்று சிந்தனைகளைத் தைரியமாகப் பேசு என்று தான் அவரை வழிமொழிந்தேன். அதே போல ஞாநி எனக்குக் குட்டு வைத்ததை ரசிக்கவே செய்தேன்.   குறிப்பாக என் மனைவிக்கு அவர் ஆதரவு தெரிவித்து என்னை ஞாநி ஓங்கி தலையில் குட்டாமல் குட்டு வைத்த விதத்தை மனைவியிடம் வந்து சொன்ன போது நீண்ட நாளைக்குப் பிறகு மனைவியார் முகத்தில் ஆயிரம் வால்ட் பிரகாசம்.   அவர் சொன்ன வாசகம்.   காலை நான்கு மணிக்கு எழுப்பி ஒரு சட்டி நிறைய இட்லி, சாம்பாரைக் கொடுத்து விட எப்படி மனம் வந்தது. ஏன் வெளியே சாப்பிட மாட்டோமா? என்றார். எனக்கு அவர் உடல் நலம் முக்கியம்.   அவருக்குப் பெண்களுக்குச் சுதந்திரம் முக்கியம். ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றைப் பெற முடியும் என்பது என் பாணி. ஆனால் நான் சொன்ன கருத்தை ஏற்காது விழா முடிந்தும் கூட என்னைத் துவைத்து எடுத்தார். மனைவியை ரொம்பப் பாடுபடுத்தாதே. மூன்று தேவியர்களும் வளர்ந்து உன்னை உண்டு இல்லை என்று படுத்த போகின்றார்கள் என்றார்.   ஒரே ஒரு டாலர் நகரம் புத்தகத்தை அவருக்குக் கொடுத்ததைத் தவிர வேறு எதையும் அவருக்கு நான் பெரிதாகச் செய்துவிடவில்லை.   எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் வாழப் பழகிய அவர் வாழ்க்கையில் எந்தப் பெரிதான விருதுகளும் இன்று வரையிலும் அவரைத் தேடி வரவில்லை.   இவரும் தேடிச் செல்லும் நபரும் இல்லை.   விருதுகள் பலவும் இன்று எருதுகள் சுமக்கும் நிலையில் இருப்பதால் சலனமற்ற நதி போல அவர் பயணம் எந்த எதிர்பார்ப்பின்றிப் போய்க் கொண்டே இருக்கின்றார். .   நன்றி திரு. ஞாநி அவர்களே.   (ஜனவரி 2013)  ஞாநி நினைவேந்தல் கூட்டம் | பகுதி - 6  https://www.youtube.com/watch?v=HTxk4CQTBg0  https://www.youtube.com/watch?v=iESvyx128VY                       அஞ்சலி - ஜெயமோகன்   ஞாநியைப்பற்றி  நான் முதலில் அறிந்தது எழுபதுகளின் இறுதியில். தமிழ்நாடகம் என்னநிலையில் இருக்கிறது என்று குமுதம் நாளிதழ் எழுபதுகளில் பலரிடம் பேட்டி எடுத்துப்போட்டிருந்தது. அதில் ஞாநி ‘ருத்ராட்சப்பூனைகளே’ என ஆக்ரோஷமாக பேட்டிகொடுத்திருந்தார். அந்த தோரணையும், சொல்லாட்சியும், கூடவே வெளியான ஹிப்பி ஸ்டைல் புகைப்படமும் என்னைக் கவர்ந்தது. எனக்கு அப்போது பதினைந்து வயது என நினைக்கிறேன்.  நெடுநாட்களுக்குப்பின் ஞாநியைச் சந்தித்தபோது குமுதத்தின் அந்தப்பக்கம் நினைவில் இருக்கிறது என்றேன். அவர் அந்தப்பேட்டிதான் அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனை என்று சொன்னார். அவர் பாதல்சர்க்காரின் பாதிப்பால் சுதந்திர நாடகங்கள் போட ஆரம்பித்திருந்த காலம். பரீக்‌ஷா அமைப்பு பயில்வோர்க் குழுவாக உருவாகி நாடகங்களைப் போட்டுக்கொண்டிருந்தது. அவர் அன்றைய நாடக நட்சத்திரங்களை எதிர்த்துக் கொடுத்த பேட்டியை அவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திற்கு முறையீடாகக் கொண்டுசென்றனர். அனுமதியின்றி இன்னொரு ஊடகத்திற்கு பேட்டியளித்த குற்றத்திற்காக ஞாநி வேலைநீக்கம் செய்யப்பட்டார். அதற்கு எதிராகச் சட்டப்போராட்டம் நடத்தி பல ஆண்டுகளுக்குப்பின் வென்று இழப்பீடுபெற்றார் என்று சொன்னார்.  அதன்பின் பல இதழ்களில் அவர் இதழாளராகப் பணியாற்றியிருக்கிறார்.தீம்தரிகிட என்னும் சிற்றிதழை பல இடைவெளிகளுடன் தொடர்ந்து நடத்தியிருக்கிறார்.  பரீக்ஷா நாடகக்குழுவை தொடர்ந்து கடைசிவரை நடத்தினார்.   என் நண்பர்கள் பலர் அவ்வியக்கத்திலிருந்து வந்தவர். அவர்களுக்கு ஞாநி ஓர் ஆசிரியர், தலைவர், கூடவே தடைகளே இல்லாத நண்பர்.  ஞாநி காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியை எடுத்த பேட்டி துளக்கில் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டபோது அவருக்கு நான் ஒரு வாசகர் கடிதம் அனுப்பியிருந்தேன், அப்பேட்டியைப் பாராட்டி. அவரை முதலில் சந்தித்தபோது அதைப்பற்றி அவரிடம் சொன்னேன். முதல்சந்திப்பு இப்போது மூடப்பட்டுவிட்ட உட்லண்ட்ஸ் டிரைவ் இன்னில் நிகழ்ந்தது.   என் கைகளைப்பற்றிக் கொண்டு ஆவேசமாக நிறையப் பேசிக்கொண்டிருந்தார். பேசும்போது நம்மை தொட்டுக்கொண்டே இருப்பதும், நட்பார்ந்த சிரிப்புடன் முகத்தை நம் முகம் அருகே கொண்டுவந்து அடித்தொண்டையில் உரக்கப்பேசுவதும் அவருடைய பாணி. பேச்சில் அடிக்கடி ‘என்ன? என்ன?’ என்பார், அன்று அவரைச் சந்தித்தபோது அப்பேச்சு முறை எனக்கு விந்தையாக இருந்தது. மறுநாள் அவர் டிரைவ் இன் வர நானும் அவரும் அசோகமித்திரனைச் சந்திக்கச் சென்றோம்.  1992- ல் அவரும் நானும் சாகித்ய அக்காதமி கருத்தரங்கு ஒன்றுக்குச் சேர்ந்து சென்றோம். அதற்குமுன் அவருடைய இல்லத்தில் ஒருநாள் தங்கியிருந்தேன். அப்போது அரசுத் தொலைக்காட்சியில் தொடர்கள் தயாரிப்பதில் பெரும் ஈடுபாட்டுடன் இருந்தார். திரைத்துறையில் நுழைந்து இயக்குநர் ஆகவேண்டும் என்ற திட்டமிருந்தது. சில திரைக்கதைகளைப்பற்றி பேசினார். பிறிதொருமுறை அவருடைய ஒரு நாடகவிழாவின்போது அவருடன் தங்கியிருந்தேன். கடைசியாக அவர் தன் இல்லத்தில் நடத்தும் கேணி இலக்கியச் சந்திப்புக்குச் சென்றபோது அவருடன் ஒருநாள் தங்கியிருந்தேன். மறுநாள் அசோகமித்திரனைச் சந்திக்கச் சென்றோம்.    தொடர்ந்து அவருடன் எனக்கு தொடர்பிருந்தது. அவருடன் பலமுறை நீண்ட உரையாடல்களில் ஈடுபட்டிருக்கிறேன். அவருடைய கருத்துக்கள் எளிமையான இடதுசாரி- திராவிட இயக்க அரசியல்நிலைபாடுகள் சார்ந்தவை. அந்த அரசியல்நிலைபாடுகளுடன் சமகால அரசியல்செய்திகளை விமர்சனம் செய்வதுதான் அவருடைய அறிவியக்கச் செயல்பாடு. ஆகவே அவர் முதன்மையாக ஓர் அரசியல்விமர்சகர் மட்டுமே. அவருடைய நாடகங்களும் மேடையில் நிகழும் அரசியல் விமர்சனங்கள்தான்.  பொதுவாக அவருடைய கலை, இலக்கிய ஆர்வங்கள் எளிய நிலையிலானவை. அரசியல்விமர்சகர் என்றாலும் அரசியலுக்குப்பின்புலமாக அமையும் வரலாறு, தத்துவம் ஆகியவற்றில் பெரிய ஆர்வமோ பயிற்சியோ அற்றவர். இதழாளராகவே தன்னை வரையறை செய்துகொண்டவர்.  நாவலும் நாடகங்களும் எழுதியிருக்கிறார். அவையும் சமகால அரசியல் உள்ளடக்கம் கொண்டவை மட்டுமே.  எனக்கு ஞாநியின் அரசியல்நிலைபாடுகள் பலசமயம் ஒத்துப்போவதில்லை, அவருடைய பொதுவான அறநிலைபாடுகளில் உடன்பாடுகள் உண்டு. ஆனால் அவர் தன் அரசியல்நிலைபாடுகளில் நேர்மையான ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதும், அவருடைய அரசியல் முழுக்கமுழுக்க அவருடைய கொள்கைகள் சார்ந்ததே என்பதிலும் முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தேன். சுயநல அரசியல், நம் அன்றாடக் கயமைகள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவர் அவர். பழைய கம்யூனிஸ்டுத் தோழர்களின் அதே தீவிரமனநிலையும்,அர்ப்பணிப்புள்ள வாழ்க்கையும் கொண்டவர். அவர்களைப்போலவே அரசியல்எதிரி என உருவகித்துக்கொண்டவர்கள் மேல் தீவிரமான வெறுப்பும் அவரிடம் எழுவதுண்டு. அதில் அதிக தர்க்கநியாயம் பார்க்க மாட்டார், எல்லாக்கோணங்களிலும் தாக்குவார்.  அதேசமயம் ஞாநியின் இயல்புகளில் முதன்மையானது அவருடைய திறந்தமனம். எனக்கும் அவருக்கும் கருத்துமோதல்கள் உருவானாலும் நான் அவர் மேல் எனக்குள்ள மதிப்பை எப்போதும் பதிவுசெய்து வந்திருக்கிறேன். அவருக்கு என் நூல் ஒன்றை சமர்ப்பணம் செய்திருக்கிறேன், அவரை பெரும்பாலும் மறுக்கும் அரசியல்கருத்துக்கள் கொண்ட நூல் அது. அரிதாகவே அவரிடம் மனக்கசப்பு கொள்ளுமளவுக்குப் பூசல்கள் நிகழ்ந்துள்ளன. சிலநாட்களிலேயே தொலைபேசியில் அழைத்து சமாதானம் செய்துகொள்வேன். “நீ கூப்பிடுவேன்னு தெரியும்” என்று சிரிப்பார். அவரைப் பொறுத்தவரை தனிமனிதர்கள் எவர் மேலும் நீடித்த பகைமை கொள்பவர் அல்ல. சந்தித்ததுமே அனைத்தையும் மறந்து தழுவிக்கொள்ளக்கூடியவர்.  இறுதிநாட்களில் உடல்நிலை சரியில்லாமலிருந்தபோது நலம் விசாரிப்பதற்காகச் சென்றிருந்தேன். நான் நோய் விசாரிக்கச் சென்றால் அதைப்பற்றிப் பேசவேண்டாம் என நினைப்பவன். அவரிடம் நானும் நண்பர்களும் முற்றிலும் வேடிக்கையாகவே பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவரை தொலைக்காட்சியில் இருந்து ஏதோ கருத்து கேட்க அழைத்தார்கள். அவர் அதன்பொருட்டு பேரார்வத்துடன் நாற்காலியில் அமர்ந்து பேசுவதைக் கண்டேன். தொலைக்காட்சி விவாதங்களில் மிகுந்த நம்பிக்கையுடன் அவர் கலந்துகொண்டார் என்றும் அவருக்கு வாழ்க்கை குறித்த நம்பிக்கையையும் பிடிமானத்தையும் அவை அளித்தன என்றும் தோன்றியது.  அன்று மருத்துவக் காப்பீடு செய்வதைப்பற்றி என்னிடமும் என்னுடன் வந்த என் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தார் ஞாநி. என்னிடமும் நண்பர்களிடம் அதை திரும்பத்திரும்ப வலியுறுத்தினார். நான் திரும்பவந்தபின் சில மாதங்கள் கழித்து தொலைபேசியில் அழைத்து “செய்துவிட்டீர்களா?” என விசாரித்தார்.   உண்மையில் நான் அதன்பின்னரே தனிப்பட்டமுறையில் மருத்துவக்காப்பீடு செய்துகொண்டேன்  அனைத்துவகையிலும் நம் காலகட்டத்தின் அரிதான ஆளுமைகளில் ஒருவர் ஞாநி. ’கருத்தியல்வாழ்க்கை’ என ஒன்று உண்டு. தனிப்பட்ட மகிழ்ச்சிகள், இலக்குகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தான் நம்பும் கருத்தியல் ஒன்றுக்காக வாழ்தல், அதில் நிறைவடைதல்.   ஆனால் அது வெறுப்பில் எழும் எதிர்நிலைபாடு அல்ல, நேர்நிலையான நம்பிக்கையிலிருந்து எழுவது. அதேபோல அது வெறும் வாய்வெளிப்பாடு அல்ல, சலிக்காத செயல்பாடு வழியாக நீள்வது .இன்று முகநூலில் மட்டுமே கருத்தியல்சார்பாளர் என முகம் காட்டும் உலகியல்வாதிகளே மிகுதி. சென்ற யுகத்தில் அப்படி கருத்தியல்வாழ்க்கை வாழ்ந்தவர்கள் பலர் நம்மிடையே இருந்தனர்.   காந்தியர்கள், இடதுசாரிகள். ஞாநி அவர்களில் ஒருவர். அவரை அதன்பொருட்டு நாம் நீண்டகாலம் நினைவில்கொண்டிருப்போம் என நினைக்கிறேன்.  (எழுத்தாளர் ஜெயமோகன்).  ஞாநி இணையதளம் - ஜெயமோகன்   தமிழில் நான் எப்போதுமே கவனித்து வாசிக்கும் இதழாளர்களில் ஒருவர் ஞாநி. நான் சின்னப்பையனாக இருந்த காலத்தில் நாடகங்கள் அழிகிறதா என்ற ஒரு விவாதம் குமுதத்தில் வந்தது. அதில் ‘ருத்ராட்சப்பூனைகளே !’என்று சீறி ஞாநி எழுதிய குறிப்பு வெளியாகியிருந்தது. அதுதான் நான் அவரைப்பற்றி படித்த முதல் தகவல். அதன் பின் இந்த முப்பது வருடத்தில் அவரை நுட்பமாகக் கூர்ந்து கவனிப்பவனாகவே இருந்திருக்கிறேன். அதன் பின் அவர் சங்கராச்சாரியாரை பேட்டிகண்டு எடுத்து வெளியிட்டது எனக்கு மிகவும் பிடித்த கட்டுரையாக இருந்திருக்கிறது.  ஞானியின் அரசியல் சமூகவியல் கருத்துக்களில் எனக்கு எப்போதுமே முரண்பாடுதான். அவர் தவறாகச் சொல்கிறார் என்று தோன்றுவதில்லை.  மாறா¡க எளிமைப்படுத்திவிடுகிறார் என்று தோன்றும். சமூக இயக்கம் என்பது எப்போதுமே முழுக்கப் புரிந்துகொள்ள முடியாத முரணியக்கத்தின் விளைவு.   வன்முறை இல்லாமல் அம்முரணியக்கம் நிகழ்மென்றால் அது வளர்ச்சிப்போக்காகவே இருக்கும் என்பது நான் கொண்டுள்ள இலட்சியவாத நம்பிக்கை. ஞாநி அந்த முரணியக்கத்தை காண்பதில்லை. கறுப்பு வெள்ளைகளில் நிற்கும் தீவிர நோக்கு அவருடையது. அந்த எளிமைநோக்குதான் அவரை ஈவேராவை நோக்கி இழுத்திருக்கிறது.    ஆனால் தன்னளவில்  நேர்மை கொண்ட இதழாளர் என நான் அவரை நினைக்கிறேன். தன் கருத்துக்களுக்காக போராடக்கூடியவர். அதன் பொருட்டு எதையும் இழக்க தயாராக இருப்பவர். சலியாத சமூகக் கோபம் கொண்டவர். தமிழில் இன்றைய தலைமுறையில் அப்படி சிலரை மட்டுமே நம்மால் சுட்டிக் காட்ட முடிகிறது. ஞாநி நான் சொல்லும் பெரும்பாலான கருத்துக்களை எதிர்ப்பார். ஆனால் அவர் தமிழில் ஒரு தார்மீக சக்தி என்றே நான் எப்போதும் எண்ணி ,சொல்லி வருகிறேன்.  தமிழில் அவ்வாறு சமூகக் கோபம் கொண்டவர்களாக காட்டிக் கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் வெறும் தனிநபர்க் காழ்ப்பும் உள்ளடங்கிய சாதிக்காழ்ப்பும் மட்டுமே கொண்டவர்கள் என்பதை நான் பொதுத்தளத்தில் செயல்பட ஆரம்பித்த இந்த முப்பது ஆண்டுகளில் கண்டு சலிபப்டைந்திருக்கிறேன். ஞானி தனிப்பட்ட காழ்ப்புகள் அற்றவர். தனிப்பட்ட கோபங்களுக்கு தாவிச்சென்றாலும் உடனே குளிர்ந்துவிடுபவர்  எனக்கும் ஞாநிக்கும் சில பொது அம்சங்கள் கூட இருக்கின்றன. அவரைப்போலவே நானும் அசோகமித்திரனின் எழுத்துக்களின் தீவிர வாசகன். அவரை போலவே எனக்கும் பழைய போஸ்ட் கார்டு போல உடம்பெல்லாம் முத்திரைகள். ஞாநியை பார்ப்பனர் என்றும் [ இந்துத்துவர் என்றும் கூட !] பிற்போக்குவாதி என்றும் முத்திரை குத்தும் எழுத்துக்களை நான் சென்ற எத்தனையோ வருடங்களாக கண்டுவருகிறேன்.  அதை முன்வைப்பவர்கள் எவருமே எளிய அடிப்படை நேர்மை கூட இல்லாத அரசியல் ஆத்மாக்கள்  பெரும்பாலான சமயங்களில் ஞாநி முத்திரைகளுக்கு எதிராக அதீதமாக உணர்ச்சிவசப்படுவார். நேரடியாக அவர் எகிறுவதைக்கூட கண்டிருக்கிறேன். என்ன செய்வது, தமிழில் எழுதினால் இது நிகழாமலிருக்காது. நான் சிரிக்கக் கற்றுக் கொண்டுவிட்டேன். அவர் இன்னும் கொஞ்சம் புன்னகையாவது செய்யலாம்.  ஞானி ஒர் இணையதளத்தை ஆரம்பித்திருக்கிறார். வாசகர்களுக்கு ஆர்வமூட்டும் அரசியல் சமூகவியல்  விவாதங்களுக்காக அதை சிபாரிசு செய்கிறேன்.  www.gnani.net  (எழுத்தாளர் ஜெயமோகன்)            []   ‘நாம் விரும்பும் விஷயங்கள் எல்லாம் நம் வாழ்க்கையில் கிடைக்காமல் போகலாமே தவிர, நேர்மையினால் நாம் வாழ்வில் சிதைகிறோம் என்ற உணர்ச்சி எனக்கு எப்போதும் இல்லை.’ – ஞாநி                        நேர்மை   Gnani Sankaran:  மன அழுத்தத்தைத் தருவது நேர்மையல்ல. நேர்மையின்மைதான். இன்னொருவரின் நேர்மையின்மை நமக்கு மன அழுத்தத்தைத் தரும். நம்முடைய நேர்மைதான் நம் மனதை அதன் அழுத்தத்தை லேசாக்கும்.  Taj Deen:  அன்பிற்குறிய ஞாநிக்கு…நேர்மையா இருந்து அந்த நோயின் கொடுமையை அனுபவிக்கிறதால்தான் சொல்றேன்… ‘நேர்மை மிகக் கொடிய நோயேதான். எந்த மன அழுத்தம் வந்து, எந்த அரசியல்வாதி/பணவாதி/ கோணல் கருத்துவாதி/ அபத்த பத்திரிகை முதலாளிவாதி/ மதவாதி/ ஆன்மீகவாதி/ சாமியார்வாதி/ பெண்களை சிதைக்கும்வாதி..என்று இப்படி நாம் காணும் சமூகத்தில் எவனாவது செத்தான் என்று செய்தியுண்டா? என் ஞாநிதான் விளக்கணும்.  Gnani Sankaran:  தாஜ்.. திரும்பவும் சொல்றேன், குழப்பிக்கறீங்க. உங்களோட நேர்மையால உங்களுக்கு மன அழுத்தம் வராது. இன்னொருத்தருடைய நேர்மையின்மைதான் உங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துது. இன்னொருத்தருடைய நேர்மை எங்கயாவது உங்களுக்கு மன அழுத்தம் தருமா? தராது. மகிழ்ச்சியைத்தான் தரும்.   நீங்க சொல்ற பட்டியல்ல இருக்கற நேர்மையற்றவர்களுக்கு ஏன் நேர்மையானவங்களால மன அழுத்தம் வரப்போகுது ? அவங்களாலதான் நமக்கு மன அழுத்தம் வரும்.   இன்னி வரைக்கும் நான் நேர்மையா இருக்கறதப்பத்தி எனக்கு எந்த ஸ்டெரெஸ்ஸும் இல்லை.   இன்னொருத்தர் நேர்மையில்லாம இருக்கரதப்பத்தின கோபம்தான் என் பி.பிக்குக் காரணம்..  Taj Deen:  அன்பிற்குறிய ஞாநிக்கு… நான் என் சின்ன வயசு தொட்டு பலரிடம் பல நல்லவைகளை, உயர்ந்தவைகளை கற்றவன். அந்த வகையில் உங்களிடமும் எழுத்தில் நேர்மையை இன்னும் சிலவும் கற்றிருக்கிறேன். அதுபோகட்டும். //உங்களோட நேர்மையால உங்களுக்கு மன அழுத்தம் வராது// இதைப் பற்றி பேசுவோம். வருதே. இப்படியே நேர்மை நேர்மைன்னு அழிந்து கொண்டிருக்கிறோம்… உருப்படாமல் போகிறோம்… அடுத்தவர்கள் நம் பார்வையை திரும்பிக் கூட பார்க்க மாட்டேன் என்கிறார்களே… போன்ற இத்தியாதிகளால் மன அழுத்தம் வரத்தானே செய்கிறது. ‘ரிஃபேஸ்-50’ தினம் ஒண்ணு தின்கிற நிலையில்தான் இன்றைக்கு நான் இருக்கிறேன். அதிகத்திற்கு ஞாநி மன்னிக்கணும்.    Gnani Sankaran:  தாஜ்..நாஎனக்கு தினசரி காலையில் ஐந்து மாத்திரைகள், இரவிலும் ஐந்து, தவிர மூன்று வேளை இன்சுலின் ஊசி. என் நோய்களுக்கு என் நேர்மை நிச்சயம் காரணமே இல்லை. என் நேர்மையைப் பற்றி எனக்கு துளியும் வருத்தமோ சுயபரிதாபமோ கிடையாது. அது தேவையுமில்லை.   சூழலில் இருக்கும் தவறுகள், அவை குறித்து நம்முடைய இயலாமை முதலான மன உளைச்சல்கள்தான் நம்மை பாதிக்கின்றன. ஆனால் நாம் நம் மனசாட்சிப்படி சரியாக இருக்கிறோம் என்பது பற்றிய மகிழ்ச்சியே இதற்கு மருந்து.                        ஞாநியென்னும் அக்கினிக்குஞ்சு  - அ. ராமசாமி   புதியதொரு இடத்தில் – நெருக்கடியான இடத்தில் படுத்திருப்பதுபோலக் கனவு. திரும்பிப்படுக்கும்போது, இடது கைபட்டு ஜன்னலில் இருந்த சின்னஞ்சிறு  முகம் பார்க்கும் கண்ணாடி கீழே விழுந்து கலீரென்று உடைகிற சத்தம். தட்டியெழுப்பியபோல விழிப்பு. கழிப்பறைக்குப் போய்வந்து படுத்தால் தூக்கம் வரவில்லை. அரைமணி நேரமாகியும் கண்சொருகவில்லை. கணினியின் திரையைத் திறந்து முகநூலுக்குள் நுழைந்தபோது கல்கி ஆசிரியர் வெங்கடேஷ் ஞாநியின் மரணச்செய்தியை அறிவுப்புச் செய்திருந்தார். சரியாக 38 நிமிடங்கள் ஆகியிருந்தன. இவ்வளவு துல்லியமாகச் சொல்லக்காரணம் உள்ளுணர்வின் முன்னறிவிப்புதான்.  உள்ளுணர்வு பற்றி இப்போது கேட்டாலும் தர்க்க அறிவு  நம்பிக்கை இல்லை என்றுதான் சொல்கிறது.   ஆனால் அந்த உள்ளுணர்வு தனது முன்னறிவிப்பைச் செய்துகொண்டேதான் இருக்கிறது. வழக்கமாக 5 மணிநேர இடைவெளியில்தான் விழிப்பு வரும். இரவு 11 மணிக்குப் படுத்தால் காலையில் 4 மணி. 12 என்றால் காலை 5. எப்போது படுத்தாலும் ஐந்தரை மணிக்கு எழுந்து விடவேண்டுமென பழக்கமாக்கப்பட்ட உடல்.   அன்று தடம்புரண்டு மூன்றரை மணிநேரத்தில் விழித்துக்கொண்டது. படுத்திருந்த அறை புதிய இடம்தான். ஆனால் குறுகலான அறையல்ல.   குற்றாலமலையின் உள்புறமெல்லாம் சுற்றிவிட்டுத் தென்காசியில் வசதியான அறையில் தான் தங்கியிருந்தேன். 10 மணிக்குப் படுத்து மூன்றரை மணிநேரத்தில் விழிப்பு வந்த காரணம் ஞாநியின் மரணம் நிகழ்ந்தபோதே அறியவேண்டும் என்பதாகத் தான் நினைத்துக் கொண்டேன்.     ஞாநியை நேர்ச்சந்திப்பாக அறிந்தபோது எனக்கு வயது 22. கணையாழி அறிமுகமான பட்டப்படிப்புக் காலத்திலேயே ஞாநியின் பெயர் நன்கு அறிமுகம். கணையாழியின் வாசகனாக இருந்த அதே நேரத்தில் தீபம், தாமரை போன்ற இதழ்களின் வாசகனாகவும் இருந்தேன். மாதந்தவறாமல் வரும் இம்மூன்றையும் வாங்குவதற்காக மதுரை செண்ட்ரல் பஸ் ஸ்டாண்டுக்குப் பேருந்தில் போய்விட்டு மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போகும்பாதையில் பரப்பிக்கிடக்கும் பழைய புத்தகங்களை மேய்ந்துவிட்டு அமெரிக்கன் கல்லூரி விடுதிக்குத் திரும்பிய காலமது.  அசோகமித்திரனின் ஆசிரியப்பொறுப்பில் பெல்ஸ் சாலையிலிருந்து வந்துகொண்டிருந்த கணையாழியில் சுஜாதாவின் கடைசி பக்கங்களை வாசிப்பதுபோலவே ஞாநியின் குறிப்புகள், கட்டுரைகள் எல்லாம் வாசித்தபின்பே அதில் வரும் கவிதைகள், கதைகள் பக்கம் போவேன். ஞாநியின் தடித்த ‘கண்ணாடிப்ரேம்’ போலவே அவரது கையெழுத்து தடியாக அச்சிடப்பெற்ற கணையாழியின் தலைப்புகளை ரசித்துப் பார்ப்பேன்.   தீர்க்கவாசகன் என்ற பெயரில்  இரண்டு மூன்று கவிதைகள் கணையாழியில் அச்சிடப்பெற்றதால், என்னைக் கணையாழியின் வாசகனாகக் கருதாமல் அதன் எழுத்தாளனாகவே கருதிக்கொண்டிருந்தேன்.  கருணாநிதி எதிர்ப்பு என்பதை வெளித்தெரியாமலும், இந்திரா காந்தி எதிர்ப்பு என்பதை வெளிப்படையாகவும் எழுதும் கணையாழியின் அரசியல் எழுத்துகள் அந்த நேரத்தில் உவப்பானவையாக இருந்தது. அத்தகைய கட்டுரைகள் சிலவற்றை ஞாநி கணையாழியில் எழுதினார். அதே நிலைபாட்டோடு கிண்டலும் அங்கதமும்கொண்ட சோவின் துக்ளக்கும்  எனது வாசிப்புக்குள் இருந்த காலம். இந்த நிலைப்பாட்டுக்குரியவர்களாக எங்களையெல்லாம் மாற்றியதின் பின்னணியின் இந்திராவின் அவசர நிலைக்காலம் இருந்தது.   மனித உரிமைப் போராளிகளாக அறியப்பெற்ற அருண்சோரி, ஜார்ஜ் பெர்ணாண்டஸ்,. தார்குண்டே, குல்தீப் நய்யார் போன்றவர்களையெல்லாம் தேடிப் படித்துக் கொண்டிருந்த நேரம்.  நவீன ஓவியர்களின் ஓவியங்களை அட்டைப் படங்களாகத் தாங்கிவந்த கணையாழியின் வழியாகவே எனக்கு நவீனத்தமிழ் நாடகம் அறிமுகமானது.  பாதல் சர்க்காரின் தமிழக வருகை, ந.முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி ஆகியோரின் நாடகங்கள், அவை நிகழ்த்தப்பட்ட விதங்கள், பங்கெடுத்தவர்கள் பற்றியெல்லாம் ஞாநியின் குறிப்புகளில் இடம்பெற்றிருந்தன. பரிக்‌ஷா, கூத்துப்பட்டறை, வீதிநாடக இயக்கம் போன்றனவற்றைப் பற்றிய குறிப்புகளைத் தந்தது போலவே மதுரையில் இயங்கிய மு.ராம்சாமியின் நிஜநாடக இயக்கம் பற்றிய அறிமுகத்தையும் தந்தது கணையாழியே. அமெரிக்கன் கல்லூரியிலிருந்து மதுரைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றபோது நிஜநாடக இயக்கத்தோடு இணைந்து செயல்பட்டேன். அப்போது ஞானி என்னும் நாடக ஆளுமை எனக்குள் நுழைந்துகொண்டார்.  முதுகலைப்படிப்பில் இதழியல் ஒரு விருப்பப்பாடம். எனது வகுப்பளிப்புக்காக எழுதிய கட்டுரையை மு.ராம்சாமியிடம் காட்ட, அதன் முக்கியத்துவம் – அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.கருணாநிதியின் திருச்செந்தூர்  நோக்கிய நடைப்பயணத் தொடக்கம் -  கருதித் தான் தொடங்கிய தீம்தரிகிட இதழின் முதல் அட்டைப்படக்கட்டுரையாக வெளியிட்டார். முதல் இதழில் தான் எழுதிய கட்டுரையை முதன்மையாக கருதி அச்சிட நினைக்காமல் அறிமுகமே இல்லாத ஒருவரின் எழுத்தை வெளியிட்ட அவரின் இதழியல் நோக்கம் இப்போதும் ஆச்சரியம் அளிப்பது.  ஞாநியை அதுவரை நேரில் சந்தித்ததேயில்லை.  தான் வேலைபார்த்த  இண்டியன் எக்ஸ்பிரஸின் முதலாளியுடன் வழக்காடி வெற்றிபெற்றுக் கிடைத்த பணத்தில் தான் தீம்தரிகிட இதழைத் தொடங்கியிருக்கிறார் ஞாநி என்னும் இளைஞன் என்ற தகவல் எனக்கு உற்சாகமூட்டின. தீம்தரிகிட இதழின் விளம்பரச் சுவரொட்டியை ஒட்டுவதற்காகச் சில இரவுகள் மதுரைத் தெருக்களில் நள்ளிரவு தாண்டி பசைவாளியோடு திரிந்தோம்.   ரயில் சந்திப்பில் படுத்து உறங்கியதெல்லாம் உண்டு. அவரைப் போன்றதொரு பத்திரிகையாளனாக வரவேண்டுமென்ற விருப்பம் இருந்தது.   அவரைச் சந்திக்கவேண்டும் என்ற ஆசையெல்லாம் இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்றியது அவரது பலூன் நாடகம் தான். அந்த நாடகம் அவரது பத்திரிகை அடையாளத்தைத் தகர்த்து நாடக ஆளுமையாக மாற்றிக்காட்டியது.  மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் ஹென்றி தீபாங்கே அப்போது தார்குண்டே மீது நடத்திய போலீஸ் தாக்குதல் வழக்கை எதிர்கொள்ள நிதி திரட்டிக்கொண்டிருந்தார். பாளை சண்முகம் வழக்குரைஞராக இருந்தார். அந்த வழக்கிற்கான நிதி திரட்டலுக்காக ஒரு நாடகமொன்றைத் தயாரித்து மேடையேற்றி நிதியைத் தருவது என்ற முடிவில் தயாரிக்கப்பட்ட நாடகமே ஞாநியின் பலூன். நீதிமன்றங்களை அம்பலப்படுத்தும் பலூன் நாடகத்தில் சத்யன் என்னும் கவிஞன் பாத்திரத்தை ஏற்று நடிப்பதற்காக மனப்பாடம் செய்த ஞாநியின் வரிகள் அந்த நேரத்தில் இலக்கியத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த இருத்தலியல்வாதத் தொனிகொண்ட வரிகள். அமெரிக்க அரசிடம் மனித உரிமையைக் கோரிப்பெறும் விதமாக நடத்தப்பெற்ற போராட்ட முறையை உள்வாங்கி எழுதிய ஞாநி, பலூன்விடும் போராட்டத்தை நடத்திக் கைதான இளைஞர்களின் கனவுலகத்தை முன்வைத்திருந்தார்.  வெற்று அரட்டை அரங்கத் தொகுப்பான சபா நாடகங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த  சென்னையின் நடுத்தரவர்க்கத்தினரை – குறிப்பாகப் பிராமண நடுத்தர வர்க்கப் பார்வையாளர்களைத் தன்வசப்படுத்தும் நோக்கம் கொண்ட நாடகங்களை ஞானி, தனது பரிக்‌ஷா நாடகக்குழு மூலம் மேடையேற்றினர்.   அதில் அவருக்கு ஆதர்சமாக இருந்தவர்கள் நேரடியாக அரசியல் கருத்துநிலையை வெளிப்படுத்திய நாடகாசிரியர்கள். பெர்ட்டோல்ட் ப்ரெக்ட், விஜய் டெண்டுல்கர் போன்றவர்களோடு பாதல் சர்க்காரையும் அவர் அதிகம் மேடையேற்றினார்.    இந்திய அளவில் மூன்றாம் அரங்கம் என்பதைக் கருத்தியல் மற்றும் வடிவவியல் ரீதியாக விளக்கம் தந்ததோடு பயிற்சிப்பட்டறைகளையும் நடத்திய பாதல் சர்க்காரைத் தமிழ்நாட்டுக்குப் பரவலாக அறிமுகப்படுத்தியதில் ஞாநிக்கும் அவரது பரிக்‌ஷா நாடகக் குழுவிற்கும் முக்கியப்பங்குண்டு. வீதிநாடக்குழு பொறுப்பேற்று நடத்திய 10 நாள் நாடகப்பயிற்சி முகாமில் ஞாநியின் பங்கு பலவிதமானது என வாசித்திருக்கிறேன்.  சர்க்காரின் புகழ்பெற்ற நாடகங்களான ஊர்வலம், பிறகொரு இந்திரஜித், போன்றவற்றைச் சிறப்பாகப் பலதடவை மேடையேற்றியிருக்கிறார்.  இடைவெளிகள் இருந்தபோதிலும் பரிக்‌ஷா தனது நாடகப்பயணத்தைப் பலவிதமாகத் தொடர்ந்தது. ஆகச் சிறந்த மேடையேற்றம் என்பதைவிட நாடகத்தின் கருத்தைச் சொல்லிவிட்டால் போதும் என்பதில் திருப்தி அடையும் எண்ணம் ஞாநிக்கு உண்டு. அதனால் அவரது மேடையேற்றங்களில் தேர்ந்த நடிப்பையோ, தொழில் நுட்ப வெளிப்பாடுகளையோ, பின்னரங்கச் செயல்பாடுகளையோ எதிர்பார்க்க முடியாது.    அன்றாட வாழ்க்கையில் பலவிதமான  தடைகளுடன் நாடக ஈடுபாட்டைக்காட்டும் இளைஞர்களோடு நாடகச்செயல்பாட்டை முன்னெடுத்த ஞாநி, குறைவான செலவில் கருத்துகளைச் சொல்லும் எளிய அரங்கின் ஆதரவாளராகத் தன்னைக் கடைசி வரைக்கும் காட்டிக்கொண்டார். அதன் காரணமாகவே தமிழ் நவீன நாடகக்குழுக்களில் அதிகமான நாடகாசிரியர்களையும் நாடகங்களையும் மேடையேற்றிய நாடகக்குழுவாகவும் பரிக்‌ஷாவை வளர்த்தெடுத்தார். அவரே எழுதிய நாடகங்களைத் தாண்டி ஜெயந்தன், இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி,சி.என். அண்ணாதுரை, அறந்தை நாராயணன் ஆகியோரது நாடகங்களை இயக்கியவர் அவர்.  நாடகத்தயாரிப்பில் அவருக்கொரு கொள்கை இருந்தது. எந்தவொரு கலையும் அதன் நுகர்வோரின் ஆதரவில் நிற்கவேண்டுமேயொழியப் புரவலர்களால் பாதுகாக்கப் படுவதாக இருக்கக்கூடாது என்ற கருத்தியலில் அவருக்குப் பிடிமானம் உண்டு. தனது நாடகங்களைத் தயாரிக்கப் புரவலர்களின் – நிதிநல்கைக் குழுக்களின் பண உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பதில்லை என்பதிலும் உறுதியாக இருந்தார். புரவலர்களால் பேணப்படும் கலை நிலப்பிரபுத்துவக் கலையாக இருக்கமுடியுமேயொழிய மறுமலர்ச்சிக்காலக் கலையாக இருக்க முடியாது என்று விளக்கம் கொடுத்துள்ளார்.   1980 களின் மத்தியில் தொடங்கி பத்தாண்டுகாலம் மைய அரசின் சங்கீத் நாடக அகாடெமியின் இளம் இயக்குநர்கள் திட்டத்தில் நிதிபெற்று நாடகம் தயாரிக்கும் வாய்ப்பைக் கோரி ஒருதடவைகூட அவர் விண்ணப்பிக்கவில்லை என்பது அவரது நிலைபாட்டின் வெளிப்பாடு.  மேடை நாடகங்களுக்குப் புரவலரை நாடவில்லை என்பது உண்மையென்றாலும் உள்நாட்டு, வெளிநாட்டு நிதியுதவியோடு செயல்பட்ட தன்னார்வக்குழுக்களின் தேவைக்காகவும் அரசு நிறுவனங்களின் வேண்டுகோள்களை ஏற்றும் நாடகப்பயிற்சிப்பட்டறைகள் நடத்துதல்,  பிரச்சார நாடகங்கள், ஆவணப்படங்கள் தயாரித்தல் போன்றவற்றை அவர் நிராகரித்ததில்லை. அத்தகைய செயல்பாடுகள் எப்போதும் அவரது துணைவியார் பத்மாவதியினை மையமிட்டு நடந்தது. பெரும் செலவு செய்து ஓரிரண்டு மேடையேற்றத்தோடு நின்றுபோகும் வாய்ப்புக்கொண்ட நாடகங்களைத் தவிர்க்கும் மனநிலையும் இதன் பின்னணியில் இருந்தது என்பது எனது கணிப்பு.                                                                                                          முழுநேர ஒத்திகை, பின்னரங்க முக்கியத்துவம் கொண்ட நாடகத் தயாரிப்பு போன்றவற்றை அவர் தவிர்த்தார் என்பதற்கு அவரது பலவித ஈடுபாடுகள் ஒரு காரணமாக இருந்தன. நாடகக்காரர் என்ற அடையாளத்துடன் அவர் சினிமா முயற்சிகளும் தொலைக்காட்சித் தயாரிப்புகளிலும் அவ்வப்போது ஈடுபட்டார். பெரியாரைப் பற்றிய ஆவணப்படம், விண்ணிலிருந்து மண்ணுக்கு (அறந்தை நாராயணனின் நாவலை அடிப்படையாகக்கொண்து) போன்றன குறிப்பிடத்தக்க முயற்சிகள். அண்மைய ஆண்டுகளில் திருச்சி எஸ்.ஆர்.வி. பள்ளிக்குழுமங்களின் கலை இலக்கியச் செயல்பாடுகளின் ஆலோசகர்களில் ஒருவராக- வளவராக இருந்தார் .  நாடகக்காரர் என்ற அடையாளத்தை விடவும் பத்திரிகையாளர் என்ற அடையாளமே அவருக்கு முழுமையானது. தனது வாழ்க்கைத் தேவைக்கான வருமானத்தை இதழியலாளன் என்பதின் வழியாகவே பெற்றார். தினமணி குழுமம், முரசொலி குழுமம்,  விகடன் குழுமம். கடைசியாகத் தினமலர் குழுமம் வரை ஒப்பந்த நிலையில் விருப்பநிலை இதழியலாளராக எழுதிக்கொண்டே இருந்தார். அவரது எழுத்து எல்லா நேரமும் உரையாடல் தன்மை கொண்டதாகவே இருந்தது. கேள்விகளுக்குப் பதில் சொல்வதில் ஆர்வம் அவருக்கு உண்டு. மனிதன் பதில்கள், ஓ பக்கங்கள் போன்றன அவரது பத்திரிகை எழுத்தின் அடையாளங்கள். தனது தீம்தரிகிட இதழை அவ்வப்போது அவர் தொடங்கியபோதெல்லாம் என்னை எழுதும்படி கேட்டுக்கொள்வார்.   பலவிதமான கட்டுரைகளை அதில் எழுதியிருக்கிறேன். திசைகளின் வாசல் என்றொரு பத்தி எழுதும்படி கேட்டுக்கொண்டார். தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தேன்.   மேடைப் பேச்சில் விருப்பங்கொண்ட ஞாநியைப் பல தடவை நான் பணியாற்றிய கல்வி நிறுவனங்களுக்கு அழைத்திருக்கிறேன். பேசியபின் மாணாக்கர்களோடு உரையாட வேண்டுமெனச் சொல்லிக் கேட்டு உரையாடுவார். தன்னை அழைத்தவர்களுக்குச் சிக்கல் வரும் என்ற போதிலும் தனது கருத்தைச் சொல்லிவிட்டுப் போய்விடுவார். அவர் பேசிவிட்டுப் போனபின்பு அதன் பின் விளைவுகள் சிலவற்றை எதிர்கொள்ள முடியாமல் தவித்த அனுபவமும் எனக்கு உண்டு.    பெரியாரின் எழுத்துகள், வாழ்க்கை முறை, பெண்ணியக் கருத்துகளில் அவருக்கு ஈடுபாடும் பிடிமானமும் உண்டு.அதன் காரணமாகத் தன்னைச் சாதியற்றவராக நினைத்துக் கொண்டார். குறிப்பாகத் தன்னைப் பிறப்பு அடிப்படையில் பிராமணர் என்று சுட்டிக்காட்டுவதை ஏற்றுக் கொள்வதில்லை. சிலநேரங்களில் எனது எழுத்துகளில்கூட அப்படியான சாயல் வந்தபோது நட்போடு சுட்டிக்காட்டி மறுத்துள்ளார். அதற்காக நட்பை முறித்துக்கொண்டவரில்லை.  இந்தியக்  கம்யூனிஸ்டுகளோடு (மார்க்சிஸ்ட்) நெருக்கமான உறவுகொண்டவராகத் தன்னை நினைத்துக்கொண்டதும் வெளிப்பட்டதுமுண்டு. இவ்விரு அரசியல் நிலைபாட்டின் வழியாகவே தலித் அரசியல் எழுச்சியாகத் திரண்ட 1990 -களில் அதன் ஆதரவுக் கருத்தியலாளராகத் தன்னை முன்னிறுத்தினார்.  அச்செழுத்துகளின் தீவிரத்தாக்கம் குறைந்து 24 மணிநேரச் செய்தி அலைவரிசைகளின் விவாதங்கள் முதன்மையான கருத்தியல் உருவாக்கமாக மாறிய கடந்த ஆறேழு ஆண்டுகளில் ஞாநியின் கருத்துகள் படிக்காதவர்களிடமும் சென்று சேர்ந்தன. தனது நிலைபாட்டிலிருந்து பெரிதும் மாறுபடாத விவாதம் அவருடையது.   தேசிய இனங்களின் தன்னுரிமையை மதிக்கும் மைய அரசைத் தீவிரமாக ஆதரிக்கும் நிலைபாட்டோடு, மாநிலமொழிகள் வழியாகக்கல்வி, மதவேறுபாடு,  சாதிவேறுபாடுகளைக் களைந்த சமூக வாழ்வு என்பது அவரது அடிப்படையான அணுகுமுறை.   பெண்களுக்கான சமத்துவத்தைப் பேசியதோடு நடைமுறையில் பின்பற்றிய வாழ்க்கைக்குரியவர். தமிழ் நாட்டு அரசியலில் மலிந்து கிடக்கும் ஊழலை மையப்படுத்தி  தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரண்டையும் ஒரே இடத்தில் நிறுத்தி விமரிசனம் செய்த ஞாநியின் நிலைபாடுகள், அதன் மேல் அவர் ஊடகங்களில் வைத்த விவாதங்கள்,   அவர் எழுதிய எழுத்துகள் அண்மைக்காலத்தில் கடும் விமரிசனத்தைச் சந்தித்தன.  திருவான்மியூர் பத்திரிகையாளர் குடியிருப்பில் அவர் இருந்த காலம் தொட்டு அவரது வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். பெரும்பாலும் பூட்டப்படாத கதவுகள் கொண்டவை அவரது இல்லங்கள். ஞாநியின் நண்பர்களாகவும், அவரது நண்பர்களின் நண்பர்களாகவும் இருக்கும்  இளைஞர்களும் யுவதிகளும் இருப்பார்கள்;   அவர்களே சமைப்பார்கள்; சாப்பிடுவார்கள்.. சிலர் வேலை தேடுவதற்காகத் தங்கி இருப்பார்கள்.   சிலர் வீடோ, அறையோ தேடிக்கொள்ளும்வரை அங்கே தங்கியிருப்பார்கள். பறவைகள் வந்துபோகும் சரணாலயம் போல, மனிதர்கள் வந்துபோகும் இல்லம் அது.  எனது மகளுக்கும் மகனுக்கும் திருமணம் ஆகிச் சென்னைக்கு வந்தபிறகு  ஒருமுறை நண்பர் ஞாநி  சொன்னார். “ராமசாமி! பிள்ளைங்கெல்லாம் செட்டிலாயாச்சு..அரசாங்க வேலை பார்த்தது போதுமே. சென்னைக்கு வந்துடுங்க. சுதந்திரமா.. விருப்பம்போல மக்களுக்காக ஏதாவது வேலை செஞ்சுக்கிட்டு இருக்கலாம்; அரசாங்க ஊழியர் என்ற பயமில்லாமெ எழுதலாம்” என்றார். மாதச் சம்பளத்தை விட்டுவிடத் தயாரில்லாத மனசு,  “நடுத்தரவர்க்க மனசு- அதற்குத் தயாராகவில்லை ஞாநி” என்று சொல்லியிருந்தேன்.  வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின் ஞாநியோடு சேர்ந்து வேலைசெய்யும் வாய்ப்பு இருக்கிறது என்று நம்பியிருந்தேன். அவரது அரசியல் பற்றிய நிலைபாட்டில் முக்கால்வாசி எனக்கு உடன்பாடு. நாடகம், சினிமா பற்றிய கருத்துகளும்கூட ஏற்புடையனதான்.  அதனால் ஒருவருடம் கழித்து அவரோடு சேர்ந்து வேலைசெய்யும் நாட்களுக்காக ஆவலுடன் இருந்தேன். ஆனால் அவர் எனது நம்பிக்கையைப் பொய்யாக்கிவிட்டுப் போய்விட்டார். அவரது மரணத்தை அறிவிக்க வந்த கண்ணாடி- கனவில் உடைந்த கண்ணாடியில் என்னைப் பார்த்துக்கொண்டேன். அவரது இடத்தை நிரப்ப இன்னொருவர் வரவாய்ப்பில்லை.    அ. ராமசாமி  பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்  இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்                                                                                ஞாநி என் அரசியல் எழுத்துக்களுக்கு க்கு ஆசான் -              சி. சரவணகார்த்திகேயன் எழுத்தாளர், பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர் ஞாநி இன்று அதிகாலை மரணமுற்றார். மதிப்பிற்குரியோருக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்த முடியாத தொலைவில் தான் லௌகீக வாழ்வ‌ழுத்தங்கள் என்னை வைத்திருக்கின்றன.  சரியாய் மூன்றாண்டுகள் முன் இதே நாளில் தான் - அது ஒரு தைப் பொங்கல் தினம் - பத்திரிக்கையாளர் ஞாநி முதல் இதழை வெளியிட்டு 'தமிழ்' மின்னிதழைத் துவக்கி வைத்தார். அப்போது அது குறித்து "என் மகனை விட ஒரு மாதம் மட்டுமே மூத்தவரான சரவணகார்த்திகேயன் தமிழ் எழுத்துலகில் துடிப்போடும் செறிவாகவும் இயங்கிவருவது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. அவரை ஆசிரியராகக் கொண்டிருக்கும் தமிழ் இதழ், மாற்பட்ட கருத்துக்களை ஆழமாகவும் நாகரிகமாகவும் விவாதிக்கும் களமாகவும், வெவ்வேறு ரசனைகளை மதிக்கும் படைப்புக்களுக்கான இடமாகவும் அதே சமயம் தன் வாசகர் யார் என்ற‌ புரிதலோடு அவர்களை நோக்கி இயங்குவதாகவும் செயல்பட்டு வெற்றி காண வாழ்த்துகிறேன்." என்று சொல்லி இருந்தார். பேரன்புடன் எழுதப்பட்ட வரிகளாக அவை என்னை நெகிழ்த்தின.  ஞாநி என் அரசியல் எழுத்துக்களுக்கு ஆசான். லட்சக்கணக்கானோருக்குப் போல் ஆனந்த விகடன் மற்றும் குமுதத்தில் வெளியான‌ 'ஓ பக்கங்கள்' தொடரில் தான் அவர் எனக்கு அறிமுகம். குறைந்தது பதினைந்து வருடங்களாக அவரது வாசகன் நான். சமநிலை குலையாத, அதே சமயம் கறாரான அரசியல் விமர்சனங்கள் எழுதுவது தமிழ்ச் சூழலில் அரிது.   ஞாநி சமரசங்கள் ஏதுமின்றி அதைத் தொடர்ச்சியாய்ச் செய்த சாதனைக்காரர். நான் எழுத வந்த ஆரம்ப ஆண்டுகளில் பல அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளில் என் நிலைப்பாடுகளை உருவாக்கிக் கொள்ள அவர் எழுத்துக்கள் உதவிகரமாய் இருந்தன. உதாரணமாய் இன்று நோட்டா எனப் பரவலாய் அறியப்பட்ட விஷயத்தை இரு தசாப்தம் முன்பே 49-ஓ என்ற பெயரில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் அவரே.   2009 பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் போது அது குறித்து நான் ஓர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பதிவு எழுத அவரே தூண்டுதல். 'ஓ பக்கங்கள்' தொகுதிகளை தமிழின் சிறந்த நூறு புத்தகங்களுள் ஒன்றாகப் பத்தாண்டுகள் முன் குறிப்பிட்டிருந்தேன். தவிப்பு முதலான அவரது புனைவுகளை வாசித்ததில்லை. அய்யா முதலான அவர் அரங்கேற்றிய‌ மேடை நாடகங்களையும் கண்டதில்லை. அறிந்தும் அறியாமலும் போன்ற பிற முயற்சிகளையும் படித்ததில்லை. அதனால் கலாப்பூர்வமாய் என்னால் அவரை மதிப்பிட முடியாது. ஆனால் சில தடுமாற்றங்கள் தாண்டியும் ஓர் அரசியல் விமர்சகராய் அவரது இடம் தமிழகத்தில் அசைக்க முடியாதது.  அவருடைய கருத்துக்களின் வீச்சு விஸ்தாரமானது. பல ஆண்டுகளாக குறிப்பிடத்தகுந்த எல்லா அரசியல் நிகழ்வுகளிலும் தன் நிலைப்பாட்டை வலிமையாகப் பதிவு செய்து வருகிறார். அது ஒரு முக்கியமான சமூகப் பங்களிப்பு. சமகாலத்து அரசியல் விமர்சகர்களில் அவரளவுக்கு வெகுஜனத்தைச் சென்றடைந்த வேறு ஒருவர் இல்லை என்பேன்.   ஐம்பதுகளில் பிறந்த பிராமணர் என்ற போதிலும் எந்தச் செயலிலும் பார்ப்பனியத்தை வெளிப்படுத்தியவரோ இந்துத்துவத்தை ஆதரித்தவரோ இல்லை. ஆரம்ப காலம் முதல் பிஜேபி உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளை விமர்சித்து வருகிறார் என்ற அடிப்படையில் ஓர் ஒரிஜினல் செக்யூலர் ஆசாமியாக அவர் மீது பெருத்த மரியாதை உண்டு. அவரது நிலைப்பாடுகளில் பிசகுகள் இருக்கலாம். ஆனால் ஒருபோதும் அவர் தன் நேர்மையைக் கைவிட்டதில்லை. ஆன்மசுத்தியுடன் தான் நம்பும் சித்தாந்தங்களின் அடிப்படையில் எந்த விஷயத்திலும் தர்க்கரீதியாக சமரசமின்றி தன் கருத்தைப் பதிவு செய்தவர்.  அவருடைய 'ஏன் நான் கலைஞர் கருணாநிதியை எதிர்க்கிறேன்?' என்ற கட்டுரை எனக்குப் பிடித்தமான ஒன்று. 'தீம்தரிகிட' வழியாக அவர் வெளியிட்ட பாரதியின் 'அன்பென்று கொட்டு முரசே!' என்ற கோட்டோவிய சுவரொட்டி நெடுநாட்கள் என் அறையை அலங்கரித்திருந்தது. சென்னை புத்தகக் காட்சிகளில் பலமுறை அவரை நேரில் பார்த்தும் என் தயக்க சுபாவத்தினால் அவருடன் பேசாமல் விலகி நடந்திருக்கிறேன். அவரது ரசனை சார் நிலைப்பாடுகளிலிருந்து orthogonal-ஆக விலகி இருந்தாலும் என் முதல் கவிதைத் தொகுதியான 'பரத்தை கூற்று' வெளியான போது அவருக்கு அனுப்பி இருந்தேன்.  அரசியலிலுமே கூட‌ நான் அவரோடு முரண்படும் புள்ளிகள் உண்டு தான். ஆனாலும் அவற்றில் ஏன் அவர் எதிர்நிலைப்பாடு எடுத்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்வது முக்கியமானதாய் இருந்தது.   அவ்வகையில் ஒரு கட்டத்தில் அவரை ஓர் இணைப் பயணியாகவே பார்க்க முடிந்தது. "என் பார்வைகளை உங்கள் முன் வைப்பது என் உரிமை. அவற்றை நீங்கள் ஏற்பதும் நிராகரிப்பதும் உங்கள் உரிமை. ஏற்பு குறித்த மகிழ்ச்சி, நிராகரிப்பு பற்றிய வருத்தம் ஆகிய மன நிலைகளை இப்போது நான் கடந்து விட்டேன். பகிர்தல் மட்டுமே என் இன்றைய மனநிலை." என்று பத்தாண்டுகள் முன் தன் இணையதளத்தைத் துவங்கிய போது சொல்லி இருந்தார். இப்போதும் அத்தகைய மனநிலையை அடைவதே என் இலக்காக இருக்கிறது. அப்படியான ஒரு பத்திரிக்கையாளர் கையால் தான் என் மின்னிதழ் துவக்கப்பட வேண்டும் என்பதால் தான் அவரை முதல் இதழை அவரை வெளியிடக் கேட்டுக் கொண்டேன். என் மகனுக்கு ஞானி எனப் பெயர் சூட்ட அவர் மீதான மதிப்பும் முக்கியக் காரணம். ஒரு கட்டத்தில் என் மனதுக்கு அத்தனை நெருக்கமானவராக அவர் ஆகி விட்டிருந்தார்.   கோலம் திரைப்பட இயக்கத்தை அவர் துவக்கிய போது பணம் செலுத்தி இணைந்தேன். அது குறித்த சில கேள்விகளை எழுப்பினேன். அவர் அதற்கு பதிலளிக்கவில்லை. எஸ்ராவின் புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினியின் படம் அவரை விடப் பெரிதாகப் போட்டது,   ஷ்ருதி ஹாசன் தோழிகளுடன் மதுவருந்திக் கொண்டிருக்கும் படம் பற்றியது என அவரோடு நிறையச் சந்தர்ப்பங்களில் நீண்ட விவாதங்கள் நிகழ்த்தி இருக்கிறேன். விவாதங்களின் போது சம்மந்தமற்று திசை திருப்புவதோ, தனி மனிதத் தாக்குதல்களில் ஈடுபடுவதோ அவரிடம் காணவே முடியாது. அது மிக முக்கியமான பாடம்.  சிறுநீரகம் பழுதடைந்து டயலாலிசிஸ் செய்து உயிர் வாழத் துவங்கியதிலிருந்து அவர் தன் ஆயுள் பற்றித் தொடர்ந்து கவலைப்பட்டுக் கொண்டே இருந்தார் என்பதை அவரது எழுத்துக்களிலிருந்து உணர்ந்திருந்தேன். சுற்றி நிகழும் அவர் பழகிய, அவர் வயதொத்தவர்களின் மரணத்திற்கு அவர் எதிர்வினையாற்றிய போதெல்லாம் இது குறித்த‌ பதற்றம் அதிகரித்ததாய்ப் பட்டது. அதைத் தன் அதீதத் தன்னம்பிக்கை மூலம் எதிர்கொண்டிருந்தார். எவரது பிறந்த நாள் என்றாலும் "மேலும் வளம், மேலும் மகிழ்ச்சி , மேலும் அமைதி, மேலும் படைப்பாற்றல் பெருகிட வாழ்த்துகள்" என்று தான் வாழ்த்துவார் என்பதை யோசிக்கும் போது அவரது அந்த‌ மனநிலை எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது.  2014ல் ஆலந்தூர் சட்டமன்றத் தேர்தலில் அவர் நின்றது கூட அதன் பக்கவிளைவாகவே பார்க்கிறேன். அவருக்குத் தான் ஏற்படுத்திய சமூக மாற்றங்கள் குறித்து திருப்தியின்மை இருந்ததாகப்படுகிறது. நேரடியாக, அதிகாரம் கொண்ட‌ மக்கள் பணியில் ஈடுபட்டாலாவது ஏதாவது செய்ய முடியுமா என இறங்கிப் பார்த்தார் என்றே புரிந்து கொள்கிறேன். தினமலர் பட்டம் இதழில் பங்கேற்கத் துவங்கியதும் அதையொட்டியே எனக் கருதுகிறேன்.   அதாவது அரசியல் தெளிவற்ற இந்தத் தலைமுறை போய்த் தொலையட்டும், அடுத்த தலைமுறையையேனும் அது விளையும் போதே வலுவான குடிமக்களாக ஆக்க முடியுமா என விழைந்தார். தன் பணிகளின் வெற்றி குறித்த ஆதங்கம் தொடர்ந்து அவருக்கு இருந்தது.  தேர்தல் நிதியளித்தது போக‌ ஆலந்தூரில் அவரை ஆதரித்து விரிவாய் ஒரு கட்டுரை எழுதினேன். 'என் சாதிக்காரருக்கு ஓட்டு போடுங்கள்!' என்பது அதன் தலைப்பு! ஜெயித்தால் ஞாநியால் தொகுதிக்கான நலப்பணிகளைத் திறம்பட முன்னெடுக்க முடியும் என நினைத்தேன். சட்டமன்றத்தில் அவரது குரல் தனிப்பட்டு ஒலிக்கும், சமூக வலைதளங்களில் முடங்கி விட்ட கலகக் குரல்கள் அரசாங்கத்திடம் கம்பீரமாய் ஒலிக்க இது ஒரு வாய்ப்பு என்பதாக என் எதிர்பார்ப்பு இருந்தது. அக்கட்டுரையை இப்படி முடித்திருந்தேன்: "அவர் தன் உடல் நலத்தில் மிகுந்த அக்கறையோடு இருக்க வேண்டும். தன்னைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அதிலும் சமரசம் கூடாது. அரசியலில் ஜெயிப்பது தோற்பது தாண்டி நெடிய ஆயுளோடு பல்லாண்டுகள் அவர் ஓர் எழுத்தாளராக, சமூக அரசியல் விமர்சகராக உற்சாகமாகப் பங்காற்ற வேண்டும்."  எந்தக் கட்சியோடும் அமைப்போடும் என்னை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடாது என்ற என் சுயக்கட்டுப்பாடு தாண்டி ஆலந்தூர் தொகுதி பூத்தில் ஞாநியின் போலிங் ஏஜெண்டாக பணி செய்ய விரும்பி அவரைக் கேட்டேன். பூத் ஏஜண்ட்டாக அந்தந்த பூத்தில் வாக்காளர்களாக இருப்போர் மட்டுமே பணி புரியலாம் என்பது தேர்தல் விதி என்று பதிலளித்தார்.   நான் பூத் ஏஜெண்ட்களுக்கான தேர்தல் ஆணையத்தின் கையேட்டிலிருந்து மேற்கோள் காட்டி அப்படி அவசியமில்லை என்பதைச் சுட்டினேன். ஏனோ அவருக்கு அதைச் செய்ய‌ தயக்கங்கள் இருந்தன.   பூத்துக்கு வெளியே 200 மீட்டர் தொலைவில் வேட்பாளர்கள் அமைக்கும் உதவி பூத்களில் யாரும் பணியாற்றலாம் என்று சொல்லி அதைச் சிபாரிசு செய்தார். பிறகு ஏதும் சரிவராததால் நான் போகவில்லை. 2016 தேர்தலில் அவர் மக்கள் நலக்கூட்டணியை ஆதரித்தது தான் அவரது இயல்பான நிலைப்பாடு. ஆனால் அதன் பின்னிருந்த வைகோவின் சதியை அவரும் கூட உணராதது தான் வருத்தம்.  சமீப ஆண்டுகளில் என் மீது அவருக்கு அதிருப்தி இருந்தது. குறிப்பாய்ப் பெண்கள் பற்றிய என் சில நிலைத்தகவல்களைக் கண்டித்திருந்தார். அதன் உச்சமாய் "பட்டாசு என்பது காசைக் கரியாக்குவதெனில் உணவு என்பது பணத்தைப் பீயாக்குவது தானே!" என்ற என் நிலைத் தகவலுக்கு "உணவு பணத்தைப் பீயாக்குவது என்று சிந்திக்க ஒரு பீ மனம்வேண்டும். உணவு தான் உயிர்வாழச் செய்கிறது என்ற அடிப்படை அறிவியல் உண்மையை புரிந்துகொள்ளாத மனங்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியில் பட்டினியில் சாகட்டும்." எனக் கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தார்.   உண்ட உணவு மறுதினம் மலமாய்ப் போவதால் போட்ட காசு வீண் என்று நினைப்பதில் அர்த்தமில்லை.   இடையில் உடல் அதிலிருந்து சக்தியை உறிஞ்சிக் கொள்கிறது, சுவையை அனுபவிக்கிறது. அது மாதிரி தான் பட்டாசுகள் காசைக் கரியாக்கும் விஷயமும். கரியாகும் முன் பட்டாசு புலன்களை - கண், காது, மனம் - மகிழ்விக்கிறது என்பது தான் நான் உத்தேசித்த பொருள். "பட்டத்திற்கு நன்றி. ஆனால் நான் சொல்வது வேறு.   சொல்பவன் மீது அடிப்படையாய் ஒரு நம்பிக்கை இருந்தால் விளக்கமின்றி அவற்றை நீங்களே புரிந்து கொள்ள முடியும்.   அப்படி இல்லாதவர்களுக்காய் இரு பொழிப்புரைகள் எழுதி உள்ளேன். அப்புறம் புரிதல் அவரவர் விருப்பம் தான்." என்று சொல்லி இருந்தேன். அவரது எதிர்வினை கசப்பூட்டியது என்பது உண்மை தான்.   இரு மாதங்கள் முன் கிண்டிலில் வெளியான 'கமல் ஹாசனின் அரசியல்' என்ற அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு நூலை அவருக்கே சமர்ப்பித்திருந்தேன். அது குறித்து அவருக்கும் தெரியப்படுத்தினேன். அப்போது அவர் உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வந்தார். அவர் அதற்குப் பதிலளிக்கவில்லை. அது என் மீதான கோபமா அல்லது நிஜமாகவே கவனிக்கவில்லையா என்றறியேன். இனி ஒருபோதும் அறிந்து கொள்ள முடியாது என்பது தான் சோகம்.  சிஎஸ்கே என்ற எழுத்தாளனை, கருத்தாளனை திட்டவும், நிராகரிக்கவும் வெறுக்கவும் ஞாநி அவர்களால் முடியலாம். ஆனால் சி.சரவணகார்த்திகேயன் என்ற‌ அவரது வாசகனை சீடனை அவரால் மறுதலிக்க முடியாது என நம்புகிறேன்.    எல்லாவற்றுக்கும் நன்றி, அய்யா! உங்கள் பணியைத் தொடர உங்கள் மாணாக்கர்கள் முயல்வோம். சென்று வாருங்கள்.  சி. சரவணகார்த்திகேயன்                 அஞ்சலி - ஞாநி - ஜெயமோகன்   ஞாநியைப்பற்றி  நான் முதலில் அறிந்தது எழுபதுகளின் இறுதியில். தமிழ்நாடகம் என்னநிலையில் இருக்கிறது என்று குமுதம் நாளிதழ் எழுபதுகளில் பலரிடம் பேட்டி எடுத்துப்போட்டிருந்தது.   அதில் ஞாநி ‘ருத்ராட்சப்பூனைகளே’ என ஆக்ரோஷமாக பேட்டிகொடுத்திருந்தார்.   அந்த தோரணையும், சொல்லாட்சியும், கூடவே வெளியான ஹிப்பி ஸ்டைல் புகைப்படமும் என்னைக் கவர்ந்தது. எனக்கு அப்போது பதினைந்து வயது என நினைக்கிறேன்.  நெடுநாட்களுக்குப்பின் ஞாநியைச் சந்தித்தபோது குமுதத்தின் அந்தப்பக்கம் நினைவில் இருக்கிறது என்றேன். அவர் அந்தப்பேட்டிதான் அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனை என்று சொன்னார். அவர் பாதல்சர்க்காரின் பாதிப்பால் சுதந்திர நாடகங்கள் போட ஆரம்பித்திருந்த காலம். பரீக்‌ஷா அமைப்பு பயில்வோர்க் குழுவாக உருவாகி நாடகங்களைப் போட்டுக்கொண்டிருந்தது. அவர் அன்றைய நாடக நட்சத்திரங்களை எதிர்த்துக் கொடுத்த பேட்டியை அவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திற்கு முறையீடாகக் கொண்டுசென்றனர். அனுமதியின்றி இன்னொரு ஊடகத்திற்கு பேட்டியளித்த குற்றத்திற்காக ஞாநி வேலைநீக்கம் செய்யப்பட்டார். அதற்கு எதிராகச் சட்டப்போராட்டம் நடத்தி பல ஆண்டுகளுக்குப்பின் வென்று இழப்பீடுபெற்றார் என்று சொன்னார்.    அதன்பின் பல இதழ்களில் அவர் இதழாளராகப் பணியாற்றியிருக்கிறார்.தீம்தரிகிட என்னும் சிற்றிதழை பல இடைவெளிகளுடன் தொடர்ந்து நடத்தியிருக்கிறார்.  பரீக்ஷா நாடகக்குழுவை தொடர்ந்து கடைசிவரை நடத்தினார். என் நண்பர்கள் பலர் அவ்வியக்கத்திலிருந்து வந்தவர். அவர்களுக்கு ஞாநி ஓர் ஆசிரியர், தலைவர், கூடவே தடைகளே இல்லாத நண்பர்.  ஞாநி காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியை எடுத்த பேட்டி துளக்கில் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டபோது அவருக்கு நான் ஒரு வாசகர் கடிதம் அனுப்பியிருந்தேன், அப்பேட்டியைப் பாராட்டி. அவரை முதலில் சந்தித்தபோது அதைப்பற்றி அவரிடம் சொன்னேன். முதல்சந்திப்பு இப்போது மூடப்பட்டுவிட்ட உட்லண்ட்ஸ் டிரைவ் இன்னில் நிகழ்ந்தது.   என் கைகளைப்பற்றிக்கொண்டு ஆவேசமாக நிறையப் பேசிக்கொண்டிருந்தார். பேசும்போது நம்மை தொட்டுக்கொண்டே இருப்பதும், நட்பார்ந்த சிரிப்புடன் முகத்தை நம் முகம் அருகே கொண்டுவந்து அடித்தொண்டையில் உரக்கப்பேசுவதும் அவருடைய பாணி. பேச்சில் அடிக்கடி ‘என்ன? என்ன?’ என்பார், அன்று அவரைச் சந்தித்தபோது அப்பேச்சு முறை எனக்கு விந்தையாக இருந்தது. மறுநாள் அவர் டிரைவ் இன் வர நானும் அவரும் அசோகமித்திரனைச் சந்திக்கச் சென்றோம்.    1992- ல் அவரும் நானும் சாகித்ய அக்காதமி கருத்தரங்கு ஒன்றுக்குச் சேர்ந்து சென்றோம்.   அதற்குமுன் அவருடைய இல்லத்தில் ஒருநாள் தங்கியிருந்தேன். அப்போது அரசுத் தொலைக்காட்சியில் தொடர்கள் தயாரிப்பதில் பெரும் ஈடுபாட்டுடன் இருந்தார். திரைத்துறையில் நுழைந்து இயக்குநர் ஆகவேண்டும் என்ற திட்டமிருந்தது. சில திரைக்கதைகளைப்பற்றி பேசினார். பிறிதொருமுறை அவருடைய ஒரு நாடகவிழாவின்போது அவருடன் தங்கியிருந்தேன். கடைசியாக அவர் தன் இல்லத்தில் நடத்தும் கேணி இலக்கியச் சந்திப்புக்குச் சென்றபோது அவருடன் ஒருநாள் தங்கியிருந்தேன். மறுநாள் அசோகமித்திரனைச் சந்திக்கச் சென்றோம்.  தொடர்ந்து அவருடன் எனக்கு தொடர்பிருந்தது. அவருடன் பலமுறை நீண்ட உரையாடல்களில் ஈடுபட்டிருக்கிறேன். அவருடைய கருத்துக்கள் எளிமையான இடதுசாரி- திராவிட இயக்க அரசியல்நிலைபாடுகள் சார்ந்தவை.   அந்த அரசியல் நிலைபாடுகளுடன் சமகால அரசியல்செய்திகளை விமர்சனம் செய்வதுதான் அவருடைய அறிவியக்கச் செயல்பாடு. ஆகவே அவர் முதன்மையாக ஓர் அரசியல்விமர்சகர் மட்டுமே. அவருடைய நாடகங்களும் மேடையில் நிகழும் அரசியல் விமர்சனங்கள்தான்.    பொதுவாக அவருடைய கலை, இலக்கிய ஆர்வங்கள் எளிய நிலையிலானவை. அரசியல்விமர்சகர் என்றாலும் அரசியலுக்குப்பின்புலமாக அமையும் வரலாறு, தத்துவம் ஆகியவற்றில் பெரிய ஆர்வமோ பயிற்சியோ அற்றவர். இதழாளராகவே தன்னை வரையறை செய்துகொண்டவர்.  நாவலும் நாடகங்களும் எழுதியிருக்கிறார். அவையும் சமகால அரசியல் உள்ளடக்கம் கொண்டவை மட்டுமே.  எனக்கு ஞாநியின் அரசியல்நிலைபாடுகள் பலசமயம் ஒத்துப்போவதில்லை, அவருடைய பொதுவான அறநிலைபாடுகளில் உடன்பாடுகள் உண்டு. ஆனால் அவர் தன் அரசியல்நிலைபாடுகளில் நேர்மையான ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதும், அவருடைய அரசியல் முழுக்கமுழுக்க அவருடைய கொள்கைகள் சார்ந்ததே என்பதிலும் முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தேன். சுயநல அரசியல், நம் அன்றாடக் கயமைகள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவர் அவர். பழைய கம்யூனிஸ்டுத் தோழர்களின் அதே தீவிரமனநிலையும்,அர்ப்பணிப்புள்ள வாழ்க்கையும் கொண்டவர். அவர்களைப்போலவே அரசியல்எதிரி என உருவகித்துக்கொண்டவர்கள் மேல் தீவிரமான வெறுப்பும் அவரிடம் எழுவதுண்டு. அதில் அதிக தர்க்கநியாயம் பார்க்க மாட்டார், எல்லாக்கோணங்களிலும் தாக்குவார்.    அதேசமயம் ஞாநியின் இயல்புகளில் முதன்மையானது அவருடைய திறந்தமனம். எனக்கும் அவருக்கும் கருத்துமோதல்கள் உருவானாலும் நான் அவர் மேல் எனக்குள்ள மதிப்பை எப்போதும் பதிவு செய்து வந்திருக்கிறேன். அவருக்கு என் நூல் ஒன்றை சமர்ப்பணம் செய்திருக்கிறேன், அவரை பெரும்பாலும் மறுக்கும் அரசியல்கருத்துக்கள் கொண்ட நூல் அது. அரிதாகவே அவரிடம் மனக்கசப்பு கொள்ளுமளவுக்குப் பூசல்கள் நிகழ்ந்துள்ளன.   சிலநாட்களிலேயே தொலைபேசியில் அழைத்து சமாதானம் செய்துகொள்வேன்.   “நீ கூப்பிடுவேன்னு தெரியும்” என்று சிரிப்பார். அவரைப்பொறுத்தவரை தனிமனிதர்கள் எவர் மேலும் நீடித்த பகைமை கொள்பவர் அல்ல. சந்தித்ததுமே அனைத்தையும் மறந்து தழுவிக்கொள்ளக்கூடியவர்.  இறுதிநாட்களில் உடல்நிலை சரியில்லாமலிருந்தபோது நலம் விசாரிப்பதற்காகச் சென்றிருந்தேன். நான் நோய் விசாரிக்கச் சென்றால் அதைப்பற்றிப் பேசவேண்டாம் என நினைப்பவன். அவரிடம் நானும் நண்பர்களும் முற்றிலும் வேடிக்கையாகவே பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவரை தொலைக்காட்சியில் இருந்து ஏதோ கருத்து கேட்க அழைத்தார்கள். அவர் அதன்பொருட்டு பேரார்வத்துடன் நாற்காலியில் அமர்ந்து பேசுவதைக் கண்டேன். தொலைக்காட்சி விவாதங்களில் மிகுந்த நம்பிக்கையுடன் அவர் கலந்துகொண்டார் என்றும் அவருக்கு வாழ்க்கை குறித்த நம்பிக்கையையும் பிடிமானத்தையும் அவை அளித்தன என்றும் தோன்றியது.  அன்று மருத்துவக் காப்பீடு செய்வதைப்பற்றி என்னிடமும் என்னுடன் வந்த என் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தார் ஞாநி. என்னிடமும் நண்பர்களிடம் அதை திரும்பத்திரும்ப வலியுறுத்தினார். நான் திரும்பவந்தபின் சில மாதங்கள் கழித்து தொலைபேசியில் அழைத்து “செய்துவிட்டீர்களா?” என விசாரித்தார். உண்மையில் நான் அதன்பின்னரே தனிப்பட்டமுறையில் மருத்துவக்காப்பீடு செய்து கொண்டேன்  அனைத்துவகையிலும் நம் காலகட்டத்தின் அரிதான ஆளுமைகளில் ஒருவர் ஞாநி. ’கருத்தியல்வாழ்க்கை’ என ஒன்று உண்டு. தனிப்பட்ட மகிழ்ச்சிகள், இலக்குகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தான் நம்பும் கருத்தியல் ஒன்றுக்காக வாழ்தல், அதில் நிறைவடைதல். ஆனால் அது வெறுப்பில் எழும் எதிர்நிலைபாடு அல்ல, நேர்நிலையான நம்பிக்கையிலிருந்து எழுவது. அதேபோல அது வெறும் வாய்வெளிப்பாடு அல்ல, சலிக்காத செயல்பாடு வழியாக நீள்வது .இன்று முகநூலில் மட்டுமே கருத்தியல்சார்பாளர் என முகம் காட்டும் உலகியல்வாதிகளே மிகுதி. சென்ற யுகத்தில் அப்படி கருத்தியல்வாழ்க்கை வாழ்ந்தவர்கள் பலர் நம்மிடையே இருந்தனர். காந்தியர்கள், இடதுசாரிகள். ஞாநி அவர்களில் ஒருவர். அவரை அதன்பொருட்டு நாம் நீண்டகாலம் நினைவில்கொண்டிருப்போம் என நினைக்கிறேன்  எழுத்தாளர் ஜெயமோகன்  ஞாநி ஒரு கடிதம்- ஜெயமோகன்   அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,  ஞாநியும் ஆம் ஆத்மியும் என்ற கட்டுரை படித்தேன். உங்களது எல்லா ஞாநி பற்றிய குறிப்புகளிலும் “ஞாநி ஒரு நேர்மையாளர்” என்ற பதத்தை தவறாமல் குறிப்பிடுகிறீர்கள், எல்லா கட்டுரைகளிலும் இது தவறாமல் வருகிறது. ஆனால் எனக்கு இது பற்றி ஒரு கேள்வி உண்டு, நேர்மையாளர் என்றால் என்ன? “லஞ்சம்” வாங்காமல் இருத்தலா? உழைப்பின்றி பலன் அடையாமல் இருத்தலா? அது மட்டும்தான் நேர்மைக்கு அடையாளமா?  இதன் அடிப்படையில் ஞாநி நேர்மையாளர்தான், ஆனால் தனது கருத்திற்கு நேர்மையாக இருத்தலும், கொள்கை என ஒன்றை கொண்டால் அதில் வலுவிலக்காமல் இருத்தலும் நேர்மைதானே? முன்பு மனுஷ்யபுத்திரனுக்கும் ஞானிக்கும் ஏற்பட்ட கருத்து மாறுபாட்டு “சண்டையையே” எடுத்துகொள்கிறேன், எல்லாவற்றையும் விமர்சிக்கும் மனுஷ்யபுத்திரன் சுஜாதா தொடர்பான எதையும் விமர்சிக்காமல் கள்ள மவுனம் சாதிக்கிறார் அல்லது பட்டும்படாமல், யாருக்கும் நோகாமல் விமர்சிக்கிறார் அதற்க்கு காரணம் சுஜாதாவின் ராயல்டியால் அவர் பெரும் பயன்தான், அது மிகவும் நேர்மையற்ற செயல்” என்பதுதான் ஞாநியின் குற்றசாட்டாக இருந்தது. “ஒரு எழுத்தாளன் எல்லா விஷயங்களையும் விமர்சித்தே ஆகவேண்டும் என்று யாரும் வற்புறுத்த முடியாது, அதேபோல் உங்களுக்கு தவறு என்று தோன்றுவது எனக்கு தவறு என்று தோன்றாமல் இருக்கலாம் என்று ஒரு சப்பைகட்டு கட்டினார் (அனைத்தும் நினைவில் இருந்து எழுதுகின்றேன், வார்த்தைகள் மாறி இருக்கலாம், ஆனால் சொன்னது இதுதான்).  ஆனால் ஞாநி ஒரு அரசியல் விமர்சகராக முன்தைய ஆட்சியை விமர்சித்த அளவு இந்த ஆட்சியை விமர்சிப்பதில்லை என்ற ஒரு குற்றசாட்டு ஞாநி மேல் அப்படியே உள்ளது. அதை பொய் பிரச்சாரம் என்று சொல்லி சென்று விடுகிறார். ஆனால் அவரது “ஒ பக்கங்கள்” முந்தைய ஆட்சியின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் விமர்சித்து களைகட்டி கொண்டிருந்தது. அதனாலேயே அது அனைவருக்கும் தெரிந்த ஒரு தொடர் கட்டுரையாக இருந்தது.அதனாலேயே குமுதம், விகடன் என்று தொடர்ந்து துரத்தப்பட்டு கல்கியை சரணடைந்தது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஆட்சி மாறியவுடன் அந்த தொடர் நீர்த்துபோய் பொதுவான உலக பிரச்சனைகளை பற்றியே பேசியது, ஒ பக்கங்களுக்காக புத்தகம் வாங்கியது போக இப்போது கொடுக்கும் கட்டுரைகளையே அவர்கள் பிரசுரிக்க ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள். இப்போது வருகிறதா இல்லையா என்பதே தெரியவில்லை, அவரது வலைத்தளத்திலும் அப்படியே உள்ளது. இல்லை, இந்த ஆட்சி ஒரு போற்றத்தக்க ஆட்சி என்றால் ஒரு அரசியல் விமர்சகராக அதுவும் சொல்லப்படவேண்டும் இல்லையா? ஏனெனில் “குட்டுவது” மட்டும் ஞானி தன்மையல்ல, “பூங்கொத்து” கொடுப்பதும்தானே?  மனுஷ்யபுத்திரனை “கள்ள மவுனம் சாதிப்பதாக” சொன்ன ஞாநியின் இந்த செயல்பாடும் நேர்மையின் கீழ்தான் வருமா?   அரசாங்க அலுவலகத்தில் சில முக்கிய பதவிகளில் இருப்பவர்கள், நேர்மையானவர்கள் பிரச்சனையான சமயங்களில் “லீவில்” போய்விடுவார்கள். பிரச்சனை எல்லாம் முடிந்தவுடன் பின் ரிஜாய்ன் பண்ணிகொள்வார்கள். அது ஒரு சுமூகமான ஏற்பாடு. ஆனால் அப்போதும் அவர்களை நாம் நேர்மையானவர்கள் என்றுதான் வகைபடுத்த வேண்டுமா?  ஞானி இந்த தேர்தலில் தோற்றது மிகவும் கவலைக்குரிய விஷயம், ஒரு மாற்று சிந்தனை அரசியல் ஆதரிக்கபடவேண்டும் என்ற விருப்பம் நிராசையாக்கப்பட்டது. நீங்கள் கூறியது போல் ஏமாற்றத்திர்க்குரியது, ஆனால் அதற்கும் அவர்தானே காரணம். அவரது தோல்வி ஒரு அரசியல் விமர்சகராக அவரது அறுவடை என்றுதான் சொல்லுவேன். அரசியல் விமர்சகனின் நிரந்தர பதவி எதிர்கட்சி மட்டுமே, எந்த ஆட்சி வந்தாலும். ஒரு அரசை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தாமல், ஒரு அரசியல் விமர்சகராக விமர்சனம் பண்ணாமல், எந்த விமர்சனங்களும் அற்று, தேர்தலில் மட்டும் “அந்த கட்சிக்கு ஒட்டு போடாதீர்கள், எனக்கு போடுங்கள்” என்று சொல்வது எப்படி நியாயம். அரசியல்வாதிகள், தேர்தலுக்கும் மட்டும் தொகுதிபக்கம் தலைகாட்டுவது போல், தேர்தல் பிரச்சாரத்தில் மட்டுமா ஒரு அரசியல் விமர்சகன் அரசை விமர்சனம் பண்ணுவது? நான் இப்படிதான் எடுத்து கொள்கிறேன்,என் பார்வை சரியா அல்லது தவறா என்று தெரியாது.    இதை ஏன் உங்களுக்கு எழுதுகின்றேன் என்றால், எல்லோரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்களே, சமூக வெளியில் செயல்படும் அனைவரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொள்வதும், சந்தேகங்களை எழுப்பி நிவர்த்தி செய்து கொள்வதும் இன்றியமையாதது. ஞாநியை பற்றிய உங்களது பல கட்டுரைகள் சமநிலையானது, அவர் மேலான உங்களது விமர்சனங்களை / ஆதரவுகளை நீங்கள் தொடர்ந்து வெளிபடுத்திகொண்டே வந்திருக்கிறீர்கள். அதை அவர் மேலான உங்களது நம்பிக்கை என்றே உணர்கிறேன், விமர்சனம் என்பதே ஒருவர் மீதான பெருமதிப்பு என்றே எடுத்து கொள்கிறேன். ஆனால் நான் அறிந்தவரை, ஞாநி மேல் வேறு யாரும் விமர்சனங்களை வைப்பதில்லை, (அவர் மதிப்பறியா பேஸ் புக் விமர்சனங்களை நான் எடுத்து கொள்வதில்லை) ஒருவேளை உங்கள் விமர்சனங்களை அவர் தவறாகவும் எடுத்து கொள்ளலாம், எனக்கு தெரியவில்லை.  இங்கு நான் ஞாநி பற்றி சொன்ன எவையும் மாங்கா புளித்ததோ வாய்புளித்ததோ என்று சொல்லவில்லை, ஒரு நம்பிக்கைக்குரிய, இருக்கும் வெகு சில அரசியல் விமர்சகர்களில் ஞாநியும் ஒருவர் அவர் கள்ள மவுனம் சாதிப்பது அவரது நேர்மையை சந்தேகிக்க வைக்கிறது அல்லது “நேர்மை” என்பதற்கான விளக்கம் என்ன என்று குழப்புகிறது.  முருகதாஸ்      அன்புள்ள முருகதாஸ்,  ஞாநி நேர்மையானவர் என்று நான் சொல்வது ஒரே அர்த்ததில்தான் தன் கருத்துக்களைக்கொண்டு பொருளியல் சார்ந்த சுயலாபம் அடைய அவர் முயல்வதில்லை- நான் அறிந்தவரை. ஆகவே அக்கருத்துக்களை நாம் நம்பலாம்.  அத்தகைய நம்பிக்கையை நாம் அளிக்கக்கூடிய கருத்துக்கள் இன்று மிகமிக அபூர்வம்  ஜெ                  மனிதன் பதில்கள் - ஆதி வள்ளியப்பன்   தொன்னூறுகளின் பிற்பாதியில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். அதற்கு முன்பிருந்தே எங்கள் வீட்டின் தினசரி காலை விருந்தாளியாக ‘தினமணி’ வந்து சேரும். ‘தினமணி’ ஆசிரியராக இராம.திரு. சம்பந்தம் பொறுப்பேற்றவுடன் அந்த செய்தித்தாள் வாசகர்களுடன் இன்னும் நெருக்கமடைந்தது. அதற்கு முக்கியக் காரணங்களில் ஒருவராக இருந்தவர் ஞாநி.  ‘தினமணி’ இணைப்பிதழ்களுக்குப் பொறுப்பாக தன் நண்பர் ஞாநியை சம்பந்தம் அழைத்துவந்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெகுஜன இதழ் பணிக்கு ஞாநி திரும்பியிருந்தார். தான் பொறுப்பு வகித்த தினமணி கதிரில் பல்வேறு மாற்றங்களை ஞாநி மேற்கொண்டார். அரசியல், சமூகப் பிரச்சினைகள் பற்றிய மாற்றுப் பார்வை – மாற்றுச் சிந்தனை, நாடறிந்த சிந்தனையாளர்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தியது அதில் முக்கியமானது.  அத்துடன் ‘மனிதன் பதில்கள்‘ பகுதியில் பல முக்கியமான விஷயங்களை மிகச் சுருக்கமாக கவனப்படுத்திக்கொண்டிருந்தார். அதுவரை மற்ற இதழ்களில் வெளியான ‘கேள்வி-பதில்’ பகுதிகள் பொழுதுபோக்கு, அறிவியல் போன்ற அம்சங்களை மட்டுமே நோக்கமாகக்கொண்டிருந்தன.  பிரபல நிறுவனங்கள் தீபாவளி மலர் கொண்டுவரும் சம்பிரதாயம் தமிழ் இதழியலில் நீண்டகாலமாக இருந்துவருகிறது. இந்தப் பின்னணியில் ஞாநி ஆசிரியர் பொறுப்பில் ‘தினமணி’ முதல் முறையாக ‘பொங்கல் மலரை’ வெளியிட்டது.   20 ஆண்டுகளுக்கு முன் வெளியான அந்த மலரில் பேசப்பட்டிருந்த கலை, இலக்கிய, சமூகம் சார்ந்த பல்வேறு கட்டுரைகள் தமிழ் இதழியல் தரத்தை பல மடங்கு உயர்த்தின. விளம்பர வருவாய்க்கான மலர்களுக்கு பதிலாக ‘மகளிர் மலர்’, ‘மருத்துவ மலர்’ என மக்கள் பயன்பாட்டுக்கான, சிந்தனைப் போக்கை மாற்றுவதற்கான களமாக சிறப்பு மலர்களையும் இணைப்பிதழ்களையும் ஞாநி மாற்றினார்.                                                                                           இன்றைக்கு கவனம் பெற்றுள்ள மாற்றுச் சிந்தனை சார்ந்த பார்வை, சமூக அக்கறை சார்ந்த இதழியல், சிறப்பு மலர்கள் போன்றவை வெகுஜன இதழியலில் பரவலானதற்கு அவர் ஓட்டிய முன்னத்தி ஏரும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது. நாம் முக்கியமாகக் கருதும் விஷயங்கள், பார்வையை வெகுஜன ஊடகத்தில் முன்வைக்கவும் எழுதவும் முடியும் என்பதற்கு அவர் எடுத்துக்காட்டாக இருந்தார். என்னைப் போன்று சிலருக்கு அச்சு ஊடகத் துறையில் ஈடுபட வேண்டும் என்கிற ஆர்வம் தீவிரமடைவதற்கு ஞாநி முக்கியக் காரணங்களில் ஒருவராகத் திகழ்ந்திருக்கிறார்.  ஆதி வள்ளியப்பன்    பத்திரிகை போராளியே சென்று வா!   தமிழ் அறிவுலகின் முக்கியமான குரல்களில் ஒன்றாக ஒலித்துவந்த ஞாநி (64) மறைந்துவிட்டார். தமிழ் வெகுஜனக் கலாச்சாரத்தில் ஒரு காலகட்டத்தின் உயரிய பிரதிநிதி அவர். தமிழில் பொது அறிவுஜீவிக்கான (public intellectual) இடத்தை விஸ்தரித்தவர். பொதுப்புத்திக்கு எதிராகத் தொடர்ந்து இயங்கியவர். உண்மை என்று தான் நம்பியது எதுவோ அதை யார்க்கும், எதற்கும் அஞ்சாமல் உரக்கச் சொன்னவர். பத்திரிகைப் பணியைத் தொழிலாக அல்லாமல், ஒரு போராட்டக் களமாகவே வரித்துக்கொண்ட போராளி ஞாநி. பத்திரிகை எழுத்தோடு மட்டும் அல்லாமல் புனைவு, ஓவியம், நாடகம், பதிப்பு, அரசியல் என்று வெவ்வேறு தளங்களில் தன்னுடைய பணியை விரித்துக்கொண்ட பன்முக ஆளுமை அவர்!  1954-ல் செங்கல்பட்டில் பிறந்த ஞாநியின் இயற்பெயர் சங்கரன். ஆங்கில நாளிதழ் ஒன்றில் பத்திரிகையாளராக இருந்த தனது தந்தை வேம்புசாமியின் வழியில் பத்திரிகை உலகில் நுழைந்தவர். ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் பணியாற்றத் தொடங்கிய அவர், ‘தினமணி’, ‘விகடன்’ என்று முன்னணிப் பத்திரிகைகள் பலவற்றிலும் பணியாற்றியவர். பணியாற்றிய பத்திரிகைகளில் எல்லாம் இதழியலின் எல்லைகளை விஸ்தரித்தவர். நாளிதழ்கள் சிறப்பு மலர்களை வெளிக்கொணரும் கலாச்சாரம் இங்கே உருவானதில் ஞாநிக்கு முக்கியமான பங்கு உண்டு. அரசியல் கட்டுரைகளுக்கு என்று தனி வாசகர் கூட்டத்தையும் பத்தி எழுத்துக்கு என்று ஒரு முக்கியத்துவத்தையும் உண்டாக்கியதில் அவருக்குச் சிறப்பான ஓரிடம் உண்டு. அமைப்போடு இயங்காத பத்திரிகையாளர்களுக்கு இங்கு இடமே இல்லை எனும் சூழலைக் களையவும் பத்திரிகையாளர்களுக்கான சுதந்திர வெளியை விஸ்தரிக்கவும் கடைசி வரை அவர் போராடினார். அவர் நடத்திய ‘தீம்தரிகிட’ பத்திரிகை, ‘ஞானபாநு’ பதிப்பகம் ஆகியவையெல்லாம் இவற்றின் வெளிப்பாடுகளே!  அவர் பங்களித்த துறைகளில் ஊடகத்துக்கு இணையாக அவர் போற்றி வளர்த்த இன்னொரு துறை நாடகம். ‘பரீக்ஷா’ நாடகக் குழுவை உருவாக்கிய அவர், ‘போர்வை போத்திய உடல்கள்’, ‘நாற்காலிக்காரர்’, ‘பலூன்’ உட்பட 30-க்கும் மேற்பட்ட மேடை, வீதி நாடகங்களை இயக்கியிருக்கிறார். பெரியாரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘அய்யா’ உட்பட குறிப்பிடத்தக்க தொலைக்காட்சித் தொடர்களையும், தொலைக்காட்சிப் படங்களையும் இயக்கியிருக்கிறார்.   தனது இறுதிநாட்களில் ‘ஓ பக்கங்கள்’ எனும் பெயரில் யூடியூப் சேனலைத் தொடங்கியிருந்தார். இப்படி அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட வடிவங்கள் வெவ்வேறு என்றாலும், அடிப்படையில் அவர் உரையாடல்காரராக இருந்தார். தனக்கு உவப்பான கருத்துகளை மட்டும் அல்லாமல், நேரெதிர் கருத்துகளைக் கொண்டிருந்த வர்களோடும் இடையறாது உரையாடிக்கொண்டிருந்தார். ஜனநாயகத்தில் அவர் கொண்டிருந்த நம்பிக்கையும் அதற்கான அவருடைய பங்களிப்பும் மகத்தானவையாக இருந்தன.    சாதி, மத அடையாளங்களைக் கடந்து வாழ ஆசைப்பட்ட ஞாநி, எழுத்துக்கும் வாழ்க்கைக்குமான இடைவெளியை ஆனமட்டும் குறைத்து வாழ்ந்த அரிய ஆளுமைகளில் ஒருவர். விழுமியங்களை அந்நியமாகப் பார்க்கும் ஒரு காலகட்டத்தின் நடுவே நின்றுகொண்டு, திரும்பத் திரும்ப அறத்தையும் மதிப்பீடுகளையும் பேசிக்கொண்டிருந்தார். தமிழ் மீது மிகுந்த காதல் கொண்டிருந்த அவர், தமிழ் மக்களின் உரிமைக் குரலாகவும் பன்மைத்துவத்தின் காவலர்களில் ஒருவராகவும் ஒலித்தார். ஞாநியின் மறைவால் தமிழ்ச் சமூகம் தன்னுடைய மேன்மையான ஜனநாயகக் குரல்களில் ஒன்றை இழந்துவிட்டது என்றாலும், அவருடைய பணி அவரைத் தொடர்வோருக்கு என்றென்றும் உந்துசக்தியாக இருக்கும்!    http://tamil.thehindu.com/opinion/editorial/article22447046.ece         வீட்டுக்கும் பொதுவெளிக்கும் இடைவெளியற்ற வாழ்க்கை!  - ஷங்கர் ராமசுப்ரமணியன்   தாம் கொண்ட கருத்தியலையும் தமது தனி வாழ்க்கையையும் வேறுவேறாகப் பார்க்கவியலாத இலட்சியவாதத் தலைமுறை ஒன்றின் பிரதிநிதி ஞாநி. சினிமா, அரசியல், எழுத்து அனைத்துமே கேளிக்கையை மையமாகக் கொண்டு வெகுஜனக் கலாச்சாரத்தைத் தீர்மானித்த 1970, 80-களில் இலக்கியம், கலை, அரசியல், சிந்தனைத் துறைகளில் எந்த உடனடிப் பயனையும் கருதாது சொந்த நஷ்டங்களைப் பொருட்படுத்தாது ஈடுபட்டவர்களில் ஒருவர். பெண்ணியம், பெரியாரியம், சுற்றுச்சூழல், தலித்தியம், மாற்றுக் கல்வி, மாற்று மருத்துவம், விளிம்பு நிலை அரசியல், தீவிர இலக்கியம் போன்றவை மீது இன்று அரசுக்கும் வெகுஜன ஊடகங்களுக்கும் வெகுமக்களுக்கும் ஏற்பட்டிருக்கும் அக்கறைக்கு இவர்கள்தாம் காரணம்.  மென்மை, மிதம், தீவிரம் என அடையாளப்படுத்த முடியுமே தவிர, இந்த ஆங்க்ரி யங்மேன்கள் எல்லாரையும் மார்க்சியம் பாதித்திருந்தது. இவர்கள் அனைவரும் உயர், மத்தியதர வர்க்க, முன்னேறிய சமூகங்களிலிருந்து வந்த இளைஞர்களாகவே பெரும்பாலும் இருந்துள்ளனர். ஞாநியைப் பொறுத்தவரை எந்தத் தீவிரமான விஷயமும் வெகுமக்களைச் சேரும் விதமாக இருக்க வேண்டும் என்பதே அவரது பிரதான வேலைத் திட்டமும் நோக்கமுமாக இருந்தது.                                                                                   ‘தினமணி’ முதல் ‘பாடம்’ வரை கனத்த, காத்திரமான விஷயங்களை வெகுஜனப் பரப்புக்குக் கொண்டு சேர்த்திருக்கிறார். குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்களுக்காக வெவ்வேறு காலகட்டங்களில் அவர் ஆசிரியராகவும் ஆலோசகராகவும் பணியாற்றிய பத்திரிகைகளுக்கும் வாசகர்களுக்கும் அவரது வேலைத்திட்டம் பயன் அளித்துள்ளது.   ஒருகட்டத்தில் அலுப்பையும் வரையறைகளையும் உணரும்போது ‘தீம்தரிகிட’ போன்ற சிறு பத்திரிகைகளையும் நடத்தியிருந்திருக்கிறார். வீடியோ ஜர்னல், தூர்தர்ஷன், கதைத் தொடர் தொடங்கி சமீபத்திய வடிவமான யூட்யூப் சேனல் வரை அவர் பல்வேறு ஊடகங்களில் பயணித்தபடி இருந்திருக்கிறார்.  ஒரு மத்தியதர வர்க்க நோக்குள்ள நேர்மையான அறிவிஜீவியாகத் தன்னை வரையறுத்துக்கொண்ட அவரது வேலைத்திட்டமே அவரது எல்லைகளை வரையறை செய்துவிட்டது என்று கூறலாம். அது நம்முடைய சூழலில் அபூர்வமான நிகழ்வுமல்ல. அவரது வாசிப்பு, சமூக நோக்கு, அரசியல் பார்வை, ரசனைகளில் வளர்ச்சிப் போக்கையும் மாறுதலையும் அவர் அடையவில்லை. தன் எல்லைகளையும் தன் வரையறைகளையும் கொண்டே அவர் மற்ற ஆளுமைகளையும் மற்ற இயக்கங்களையும் பார்த்தார்.   ஒருவகையில் ஒரு காலகட்டத்தோடு தன்னை உறையவைத்துக் கொண்ட பொது அறிவுஜீவி அவர்.1960-ளில் மாணவர் இயக்கங்களிடமும் இரண்டாம் அலை பெண்ணியவாதிகளிடமும் புகழ்பெற்ற ‘தி பெர்சனல் இஸ் பொலிடிகல்’ (அந்தரங்கம் அரசியல்தான்) என்ற முழக்கம் 1970, 1980-களில் உருவான தமிழக அறிவுஜீவிகளிடமும் புகழ்பெற்றது.   முதலில் இந்த முழகத்தை நான் ஞாநி, பத்மா இணையர் வீட்டில்தான் கேட்டேன். தனி வாழ்க்கை, பொது வாழ்க்கை என்ற பேதங்கள் இல்லாமல் தாங்கள் நம்பும் கருத்தியலையே வாழ்வாக அவர்கள் தேர்ந்தெடுத்திருந்தனர்.   குடும்பம், குழந்தைகள் என எல்லோரையும் தங்கள் நம்பிக்கைகளுக்குப் பாத்தியப்பட்டவர்களாக ஆக்கி சொந்த இழப்புகளையும் அடைந்தவர்கள் இவர்கள். சென்னையின் மூன்று தலைமுறை அறிவுஜீவிகளுக்கும் வாசகர்களுக்கும் இடமளித்து மேம்படுத்திப் பராமரித்த வீடு அவருடையது. இளைப்பாறியவர்களின் நினைவுகளில் ஞாநிக்கும் அவர் ஏற்படுத்திய சூழலுக்கும் என்றும் இடமிருக்கும்!    - ஷங்கர் ராமசுப்ரமணியன்      இலக்கிய உலகத்துடன் ஒரு பாலம்! - எஸ்.ராமகிருஷ்ணன்   பத்திரிகையாளர், எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், ஆவணப்பட இயக்குநர், பத்திரிகை ஆசிரியர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர் ஞாநி. மாணவப் பத்திரிகையாளராக விகடனில் தேர்வுசெய்யப்பட்ட நாட்களில் முதல் முறையாக ஞாநியைச் சந்தித்தேன்.   அன்றிலிருந்து நட்பு நீண்டு தொடர்ந்தது. இலக்கியத்தையும் இலக்கியவாதிகளையும் நேசித்தவர் ஞாநி. தன்னுடைய நேசத்தை இதழியலுக்கும் கடத்தியவர்.  தமிழில் வெகுஜனப் பத்திரிகை உலகத்துக்கும் இலக்கிய உலகத்துக்கும் இணக்கம் இல்லாத காலகட்டம் ஒன்றும் இருந்தது. சொல்லப்போனால், தமிழ் வெகுஜன இதழியலின் சிக்குப்பிடித்த சில மதிப்பீடுகளை உடைப்பதில் நவீன இலக்கியம் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. விளைவாக, இருதரப்புகளுக்கு இடையிலும் ஒரு பனிப் போர் நிலவிய காலமும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் இலக்கியவாதிகளின் தரப்பு நியாயத்தையும் அவர்கள் முன்வைத்த விமர்சனங்களையும் வெகுஜன இதழியலில் ஆக்கபூர்வமாக அணுகியவர்களில் முக்கியமானவர் ஞாநி.      இலக்கிய உலகோடு அவருக்கிருந்த உறவின் குறியீடாக அசோகமித்திரனுடனான அவருடைய உறவைக் குறிப்பிடலாம். அசோகமித்திரன் மீது ஞாநிக்குத் தனிப் பிரியம் உண்டு. இருவர் இடையே ஆழமான நட்பு உண்டு. ஞாநியின் நாடகக் குழுவில் அசோகமித்திரன் இணைந்து நடித்திருக்கிறார். அசோகமித்திரனின் மறைவுக்குப் பின் அவர் பெயரில் சிறுகதைப் போட்டி நடத்தி விருதுகள் வழங்கினார்.  தமிழ் இலக்கியத்தின் முக்கியமான படைப்பாளிகள் பலருடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார் ஞாநி. தன்னுடைய வீட்டில் ‘கேணி’ என்ற இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியைத் தொடங்கியவர், அதன் முதல் நிகழ்வில் உரையாற்ற என்னை அழைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தினார். எப்போதும் தன்னைச் சுற்றிலும் இளைஞர்களைக் கொண்டிருக்கும் ஞாநி, அவர்களிடத்தில் சமூகப் பிரச்சினைகள், அரசியலைக் கடத்துவதில் கொண்டிருந்த அக்கறையை இலக்கியத்தைக் கடத்துவதிலும் கொண்டிருந்தார். ஒருவிதத்தில் தமிழ் இலக்கியத்துக்கும் இதழியலுக்கும் இடையில் ஒரு பாலமாகச் செயல்பட்டார்!  எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,        நம்பிக்கையை விதைத்த நாடகக்காரன்! - எஸ்.ராமாநுஜம்   தமிழ் நவீன நாடகப் போக்கு இரண்டு புள்ளிகளிலிருந்து தொடங்குவதாக முன்வைக்க முடியும். ஒன்று, காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் பன்ஸி கெளல் நடத்திய நாடகப் பட்டறை. மற்றொன்று, சென்னையில் பாதல் சர்க்கார் நடத்திய நாடகப் பட்டறை. ஞாநி இரண்டாவது போக்கைத் தொடங்கியவர்.  பாதல் சர்க்காரின் நாடகப் பாணி, இங்கு தமிழில் ஒருவித வீதி நாடகமாக உருக்கொண்டது. ஞாநி தொடங்கிய ‘பரீக்ஷா’ அவ்வப்போதைய அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகள் குறித்து ஒரு மாற்றுப் பார்வையை அல்லது விமர்சனத்தை முன்வைக்கும் ஒரு வடிவமாக அதனை முன்வைத்தது. எனக்கு ஞாநியோடு தொடர்பு ஏற்பட்டபோது ‘பரீக்ஷா’வின் முதல் கட்டம் முடிவுற்றிருந்தது என்று சொல்லலாம். அவருடன் பங்காற்றிய அனுபவத்திலிருந்து சொல்வதென்றால், ஒரு பத்திரிகையாளராக அவர், அதன் நீட்சியாகவே நாடகத்தைப் பார்த்தார் என்றே நான் புரிந்துகொள்கிறேன். இந்தப் பார்வை எனக்கு ஏற்புடையது அல்ல என்றாலும், அவருடன் இணைந்து பணியாற்றுவதில் எத்தகைய சிக்கல்களும் தோன்றியதில்லை.  ஞாநி எழுதிய ‘பலூன்’ நாடகம் மற்றும் பாதல் சர்க்காரின் நாடகத்தைத் தழுவிய ‘பாலு ஏன் தற்கொலை செய்துகொண்டான்?’ நாடகத்திலும் நடித்த அனுபவம் எனக்கு உண்டு.     சில ஆண்டுகளுக்கு முன் நான்கு நாடகக் குழுக்களை இணைத்து ‘கோலம்’ அமைப்பைத் தொடங்கினார். ஒவ்வொரு வாரமும் வியாழனன்று ஒரு வருடத்துக்கு நாடகம் நடத்துவது என்று திட்டத்தை முன்வைத்தார். ‘பரீக்ஷா’, ‘ஆடுகளம்’, ‘ஐக்யா’, ‘யவனிகா’ ஆகியவை நான்கு நாடகக் குழுக்கள். சுழற்சியில் நான்கு வாரங்களுக்கு ஒரு புது நாடகத்தை நிகழ்த்த வேண்டும். ஆனால், முதல் சுற்றுக்குப் பின் ‘பரீக்ஷா’வைத் தவிர பிற மூன்று நாடகக் குழுக்களால் அதில் தொடர்ந்து பங்காற்ற முடியவில்லை. ஆனாலும், ஞாநி திட்டமிட்டதுபோல் ஒரு வருடம் நடத்திக் காட்டினார்.  நாடகம் நடத்துவதில் அவருக்கு இருந்த அக்கறையை, ஆர்வத்தை நாம் ஒதுக்கித் தள்ளவே முடியாது. என்னையும் என்னுடைய ‘ஆடுகளம்’ நாடகக் குழு நண்பர்களையும் அவர் அடையாளம் கண்டு ஊக்குவித்தது அவரது அடிப்படையான பலம். அவரைச் சுற்றியிருந்த இளைஞர்களுக்கு எப்போதும் பெருத்த நம்பிக்கையைக் கொடுத்துக்கொண்டே இருந்தார். அந்த நம்பிக்கையை நாங்களும் பெற்றோம்.  ஒவ்வொரு நிகழ்விலும் ‘நாங்கள் வெல்லுவோம்’ பாடலை ஞாநி பாடுவார். நான் அதைப் பல முறை ரொமான்டிக் சிந்தனை என்று நினைத்தது உண்டு. ஆனால், இந்த நம்பிக்கைதான் ஞாநி. இதைத்தான் அவர் மறைந்த அன்று அவரைச் சூழ்ந்து நின்றிருந்த இளைஞர்கள் கூட்டம் எனக்குச் சொன்ன செய்தியாக இருந்தது.  - எஸ்.ராமாநுஜம்,  ஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி!   - பாஸ்கர் சக்தி                                                                                                                                                                                                                       ஒவ்வொரு மரணமும் சிலரை உடைக்கிறது. சிலரை அநாதை ஆக்குகிறது. சிலரை வெறுமைக்குள் தள்ளுகிறது. ஆனால் ஞாநியின் மரணம், அவரது உறவுகள், நட்பு வட்டம் மட்டுமல்லாது நமது சமூக கலாச்சார ஊடக வெளியிலும் ஒரு பெரும் சூனியத்தை உருவாக்கிவிட்டுப் போய்விட்டதாக உணர்கிறேன்.  எழுபதுகளில் இளைஞனாக பத்திரிகை உலகில் நுழைந்த ஞாநி பத்திரிகையாளராக, நாடகக் கலைஞராக, ஆவணப்பட இயக்குநராக, சமூக விமர்சகராகப் பல்வேறு துறைகளில் தன் பாதிப்பைச் செலுத்தியிருக்கிறார். அவர் இயங்கிய அனைத்துத் தளங்களிலும் தன் கூர்மையான அவதானிப்பாலும் நேர்மையான விமர்சனங்களாலும் தனித்து நின்றவர் ஞாநி. சமூகத்தில் நிகழும் எந்த ஒரு விஷயத்திலும் சமூகத்தில் இயல்பாக எழும் பொதுக் கருத்துக்கு அப்பாற்பட்டு, அந்த விஷயத் தின் நுட்பமான அடுக்குகளைக் கவனித்து, எளிய மொழியில் கச்சிதமாக வெளிப்படுத்தியது ஞாநியின் பேனா. ‘தினமணி’, ‘ஜூனியர் விகடன்’, ‘ஜூனியர் போஸ்ட்’, ‘அலைகள்’, ‘தீம்தரிகிட’, ‘டி.வி. உலகம்’, ‘சுட்டி விகடன்’, ‘விண் நாயகன்’ என்று எத்தனை இதழ்கள்! எத்தனை கட்டுரைகள்! எத்தனை விவாதங்கள்! கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக ஞாநியின் மனமெங்கும் தமிழகத்தின் நிகழ்வுகள் சுற்றிச் சுழன்றுகொண்டிருக்க... அவர் ஓயாது எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தார்.    ஞாநி தனியாக இருக்கும் நேரம் மிகவும் குறைவு. எப்போதும் நாலு பேர் அல்லது அதற்கும் மேற்பட்டோருடன் உரையாடிக்கொண்டே இருந்த மனிதர். “என்னால அரட்டை அடிக்காம இருக்க முடியாது பாஸ்” என்பார். அரட்டை என்றால் வெற்று அரட்டை அல்ல. சமூக விஷயங்களே அதில் பிரதானமாக இருக்கும். சமூகம் குறித்தும் அதன் பிரச்சினைகள் குறித்தும் பெரும் கவலை அவருக்கு இருந்தது. அவ்விதத்தில் தன்னை சமூகத்துக்கு முழுமையாக ஒப்புக்கொடுத்த ஒரு மனிதராக ஞாநி இருந்தார்.  நான் பழகத் துவங்கிய காலம் தொட்டு அவருக்கு உடல் உபாதைகள் இருந்துகொண்டே இருந்தன. ஆனால், தன் காலத்துடன் இந்த உலகுடனும் சமூகத்துடனுமான உறவு முடிந்துவிடும் என்று அவர் எண்ணியதே இல்லை. இந்தச் சமூகம் எனக்குப் பிறகும் அல்லது எனக்குப் பிறகாவது நன்றாக இருக்க வேண்டும். அதற்கு என்னாலான வேலையை நான் செய்தே ஆக வேண்டும் என்று எப்போதும் நினைத்துக்கொண்டிருந்தார்.  ஞாநியைக் கருத்துரீதியாக விமர்சிப்பவர்களும், எதிர் நிலையில் இருப்பவர்களும்கூட ஞாநியின் நேர்மையையும் அவரது சமரசமற்ற போக்கையும் வியப்பார்கள். இந்த சமரசமற்ற போக்கு உங்களுக்கு எப்படி வந்தது என்று கேட்டபோது, அவர் மூன்று பேரைக் குறிப்பிட்டார். ஒருவர் அவரது தந்தை, இரண்டாமவர் பாரதியார், மூன்றாமவர் பெரியார்.     அடிப்படை நேர்மையைத் தன் தந்தையிடமும், வாழ்வின் பல கேள்விகளுக்கான விடையை பாரதியிடமும், பொது வாழ்வில் ஒருவர் எப்படி அர்ப்பணிப்புடன் இயங்க வேண்டும் என்பதை பெரியாரிடமும் எடுத்துக் கொண்டதாகச் சொன்னார்.  அபூர்வமாக அவரிடம் தென்படும் மன நெகிழ்ச்சியுடன் அவர் சொன்னது இது, “தொண்ணூறு வயசைக் கடந்த பிறகும் மூத்திரச் சட்டியைத் தூக்கிட்டு மேடையில பேசினாரே பெரியார்! அவரோட ஒப்பிடும்போது நாம செய்யற வேலையெல்லாம் ஒண்ணுமேயில்லை பாஸ்” என்பார்.  தனது சமரசமற்ற போக்கினால் ஞாநி நிறைய இழந்திருக்கிறார். தமிழுக்கு இணையாக ஆங்கிலத்தில் எழுதவும், உரையாடவும் புலமை பெற்றவர் ஞாநி. ஆங்கிலப் பத்திரிகைகளில் பெரும் பொறுப்பும், பணமும் ஈட்டியிருக்க முடியும் என்றாலும், வாழ்வில் தான் ஏற்றுக்கொண்ட விழுமியங்களைச் சமரசம் செய்வதை ஒருபோதும் தன் மனம் ஏற்காதென்றும் சொல்லி அதன்படி வாழ்ந்து முடித்துவிட்டார். ஒருபோதும் அவர் பணத்தைப் பெரிதாக எண்ணியதில்லை.  அப்போது ‘தினமணி’யில் மனிதன் பதில்கள் எழுதிக்கொண்டிருந்தார் ஞாநி. சில காரணங்களால் அது நின்றுபோனது. எழுதியே ஆக வேண்டும்; ஆனால் அவர் எழுதுபவை அப்படியே வெளிவர எந்தப் பத்திரிகையிலும் இடமில்லை என்ற சூழலில், ஏற்கெனவே நடத்தி நின்றுபோயிருந்த ‘தீம்தரிகிட’ இதழை மறுபடி கொண்டுவருவதென்று முடிவெடுத்தார். ‘இதழின் பொறுப்பாசிரியராக நீங்கள் இருங்கள்’ என்று சொன்னார். ‘தீம்தரிகிட’ இதழை நேரடியாக சந்தா வசூலித்து, அந்தப் பணத்தில் பத்திரிகையை நடத்தினோம். கைக் காசு செலவு ஆனதே தவிர, லாபமில்லை; நட்டம்தான். ஆனால் ஞாநி வெகு மகிழ்ச்சியுடன் பார்த்துப் பார்த்து ஒவ்வொரு இதழையும் கொண்டுவந்தார்.  ஞாநியுடன் இதழ் தயாரிப்பில் ஈடுபட்ட அந்த நாட்களில்தான் ஞாநியின் பன்முகத் திறமையை உடனிருந்து பார்க்க வாய்த்தது. விஷயங்களைத் தேர்ந்தெடுப்பது. அதனை விவாதித்து இறுதிசெய்வது, லே அவுட் செய்வது எல்லாம் அவரே செய்வார். ஞாநியின் எழுத்துரு தனித்துவமானது. ‘பரீக்ஷா’ நாடகங்களுக்கு போஸ்டர் டிஸைன் செய்த காலங்களில் அந்த எழுத்துருவை உருவாக்கியதாகச் சொன்னார். அந்த எழுத்துருக்கள் போன்றதே ஞாநி வரைந்த பாரதியின் உருவமும். கறுப்பு வெள்ளையில் புருவம், கண்கள் மீசை இவற்றை வைத்தே பாரதியை நம் கண் முன்னே நிறுத்தும் அந்த பாரதி ஓவியம், ஞாநியின் முக்கியமான பங்களிப்பு. அது இப்போது பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.  சில ஆண்டுகள் வெளிவந்த ‘தீம்தரிகிட’ இதழை மீண்டும் நிறுத்தும் சூழல் உருவானது. அதன் பின் அவருடைய ‘ஓ பக்கங்கள்’ பத்தி ‘இந்தியா டுடே’, பின் ‘ஆனந்த விகடன்’, ‘குமுதம்’, ‘கல்கி’ என்று மாறிமாறி தொடர்ந்தது.  எப்போதும் கடுமையாக உழைத்தார். அவர் வேகத்துக்கு அவரது உடலால் ஈடுகொடுக்க முடியவில்லை.   என்னிடம் ஒருமுறை அவர் சொன்னார். “பைபிள்ல ஒரு ஸேயிங்க் இருக்கு பாஸ், ‘தி ஸ்பிரிட் இஸ் வில்லிங்; பட் தி ஃப்ளெஷ் இஸ் வீக்’ (the spirit is willing but the flesh is weak). சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்த ஞாநி, சமீப காலமாக எழுதுவதற்குச் சிரமப்பட்டார். ஆனாலும், குரல்கொடுக்க வேண்டிய விஷயங்களுக்குக் கட்டாயம் கொடுத்தாக வேண்டும் என்று நினைத்தார். விளைவாக, ‘ஓ பக்கங்கள்’ யூடியூப் சேனலைக் கடந்த வாரம் தொடங்கியவர் ரஜினியின் அரசியல், போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம் என்று நடப்பு விஷயங்கள் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர ஆரம்பித்தார்.  பொங்கல் தினம். அன்றும் தனது உடல் நலத்தைப் பொருட்படுத்தாமல் சென்னை வந்த மேதா பட்கரை ஒரு பேட்டி எடுத்தார். அன்றைய இரவு தன் யூட்யூப் சேனலுக்காக வைரமுத்து ஆண்டாள் சர்ச்சை குறித்த தன் கருத்தை ஒளிப்பதிவுசெய்தார்.                                                                                                                                           அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவரது உடல் தனது ஓயாத இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. தன் மனதுக்குச் சரி என்று பட்டதை எவர் வரினும் நில்லேன்.. அஞ்சேன் என்று ஓங்கி ஒலித்த ஒரு தலைமுறை மனசாட்சியின் குரல் காற்றில் கலந்துவிட்டது!  - பாஸ்கர் சக்தி,         நெட்டிசன் நோட்ஸ்: ஞாநி மறைவு - ‏ஓர் எழுதுகோலில் மை தீர்ந்தது   பத்திரிகையாளரும், எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான ஞாநி சங்கரன் இன்று (ஜனவரி 15) அதிகாலை காலமானார். ஞானியின் மறைவையடுத்து சமூக வலைதளங்களில் அவரை பற்றி நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றன அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸ்ஸில்....  Gopal Narayanan  சென்று வாருங்கள் #ஞாநி! ஆற்றிய சேவை அளப்பெரிது!  Adhi.suresh  ‏தோழர் #ஞாநி யின் மறைவால் "பொங்கல்" விழா எடுக்க மனம் இல்லை..  குட்டி பையன் :)  ‏ஒரு சிலர் இறந்ததுக்கு அப்புறமாத்தான் அவர்களைப்பத்தி நிறைய பேசுறாங்க. இத்தனை நாளா டிஎல்ல இவரைப்பத்தி படிக்கக் காணாதது வேதனையே!  #GnaniSankaran #ஞானி #RIPGnani                                                                                                                                  Nellaiseemai  ‏#ஞாநி இளைஞர்களுக்கு அறிவுரை.  திறமையை வளர்த்துக்கொள்வதை விட நல்லவனாக இருப்பதே முக்கியம்.  நல்லவன் திறமைகளை எப்போது வேண்டுமானாலும் வளர்த்துக்கொள்ளலாம்.  திறமையான கெட்டவன் நல்லவனாக மாறவே முடியாது என்பதை அரசியலில் பார்த்து வருகிறோம்.  Asha Srinivasan  ‏அத்தனை வாரப் பத்திரிகைகளும் முதலில் வாவா என அழைத்து அவர் துணிந்து அரசியல்வாதிகளைச் சாடியதும் விரட்டிவிட்டு _அநேகமாக சிலரைத்தவிர எல்லா பத்திரிகைகளுமே இதை செய்தது.  ‏Gnanakuthu  சினிமா செய்திகள்,சுஜாதா,ஹாய் மதனுக்குக்கா விகடன் வாசித்துக்கொண்டிருந்த காலமது.. ஒ பக்கங்களில் முதல் பகுதி வந்தது மனித மலங்களை மனிதனே அள்ளும் முறையை சாடி எழுதியிருத்தார் பின் ஒ பக்கங்களுக்குக்கா விகடன் படிக்க நேர்ந்தது அன்று முதல் #ஞாநி பால் ஈர்ப்பு கொண்டவன் நான்.  ஒருமுறை கூட பத்திரிகையாளர் சந்திப்பு செய்யாத பிரதமரை பத்திரிகையின் பவள விழாவுக்கு அழைப்பது இன்றைய மீடியா உலகத்தின் அறம் எப்படிப்பட்டது என்பதையே காட்டுகிறது - #ஞாநி  MD SHA  ‏2014 NDTV விவாதத்தில் பங்கேற்பாளர் ஒருவர் ஆங்கிலம் தெரிந்திருந்தும் ஹிந்தியில் பேசிக் கொண்டிருக்க உடனே ஞாநி தமிழில் பேசி பதிலடி கொடுப்பார். இது எனக்கு மிகவும் பிடித்த விவாதம்.  அம்புலி  ஓர் எழுதுகோலில் மை தீர்ந்தது #ஞாநி  Jenish  ‏40+ ஆண்டுகள் பணி.எழுத்துலகின் பேரிழப்பு.திரு.#ஞாநி அவர்களது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்  தமிழன்டா  எழுத்தாளர் சகோதரர் ஞானி அவர்கள் காலமானது ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்  படத்தில் அவரது கடைசி முகநூல் பதிவு, யாரை அம்பலப்படுத்த வேண்டும் என அவர் எண்ணினாரோ அது நடந்தேரட்டும்  சிந்தனைவாதி  சிந்தனையாளர்கள் ஜாதியில் தனக்கென்று தனியொருவராக வாழ்ந்த மாபெரும் சிந்தனைவாதி  #ஞாநி இன்று மறைந்தார்  என்றும் அவரது சிந்தனைகளில் வாழ்வாங்கு வாழ்வார்  சரவணன்  #RIPGnani நி-க்கும், னி-க்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் அஞ்சலியே செய்ய வேண்டாம். #ஞாநி  Rathinavel Rajan S  ‏ஞானத்தோடும்  நிதர்சனத்தோடும்  படைத்தவன் நீ!!  Ashokkumar‏  மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர் #ஞாநி அவர்கள் காலமானார் #ஞாநி அவர்களின் விருப்பத்தின்படி அவரது உடல் மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட உள்ளது #RIPGnaniSir  Naren  ‏அறிந்தும் அறியாமலும், ஓ போடு மூலம் எங்கள் வெகுஜனத் தலைமுறையை பெரிதும் பாதித்தவர்.  ‘நோட்டா’, ‘குட் டச்’ சொற்களை புழக்கத்தில் விட்டவர். கோவை சந்திப்பில் அவரின் அடித்தொண்டை பேச்சிற்கு முன் வரிசையில் இளைஞனொருவன் தொடை தட்டி பொங்கிக் கொண்டிருந்ததை என்றும் மறவேன் #ஞாநி  / யதார்த்தவாதி //  ‏குதூகலக் கொண்டாட்டங்களின் நடுவே...  ஒரு இலக்கியச் சூரியனின் அஸ்தமனத்தை அறியத் தவறிவிட்டோம்  உண்மையில் தவறவிட்டோம் - நெஞ்சுயர்ந்த இலக்கியத்தை!  RJ Rofina Subash  ‏வாழ்க்கையில் எல்லாமே பழக்கத்தில் வருவதுதான்.  #ஞாநி  இம்ரான்  ‏முற்போக்கு சிந்தனையாளர்,  மது மற்றும் மதவெறியர்களின் எதிர்ப்பாளர்,  தோழர் #ஞாநி அவர்களின் இழப்பு,  பாசிச எதிர்ப்புப் போராளிகளுக்கு பேரிழப்பு.  Perur Hariharan  ‏#ஞாநி என்னும் #எழுதுகோல் இனி எழுதாது....  ஞாநி என்னும் #ஆணித்தரமான_குரல் ஒலிக்காது...  ‏ராஜ்மோகன்..!  ‏நேர்மையான போலீஸ்காரனுக்கு எப்படி அடிக்கடி இடமாறுதால் கிடைக்குமோ  அப்படியே ஞாநிக்கும் நடக்கும்  எந்த பத்திரிகைகளிலும் நிரந்தரமாக எழுதியில்லை  #ஞாநி  KOLAPPA THANDESH  ‏அந்த காலத்தில் #ஞாநி யின் அந்த மொழிபெயர்ப்பு அத்தனை அட்சர சுத்தமாக இருந்தது.அனைவரின் பாராட்டையும் பெற்றது.  #ஞாநிக்கு_அஞ்சலி  இட ஒதுக்கீடு பற்றிய என் தவறான பார்வையை ஒரே கட்டுரையால் மாற்றியவர். பிறப்பால் பார்ப்பனர்; ஆனால் வாழ்வால் தமிழர்! எழுத்தால் மட்டுமின்றி சமூக மாற்றத்துக்காகக் களப் பணியும் ஆற்றிய செயல்பாட்டாளர்! என் மானசீக ஆசான்களில் ஒருவரான #ஞாநி அவர்களுக்குக் கண்ணீர் வழியும் தமிழ் வணக்கம்!  கொள்ளிடத்தான்  ‏கொண்ட கொள்கையில் நேர்மையானவர் ஒரு புள்ளயில் #மரு_அன்புமணியின் நிர்வாக திறமையை பாராட்டி தமிழகத்தை ஆளும் தகுதிபடைத்தவர் என்று பாராட்டிய பத்திரிக்கையாளர் #ஞாநி காலமானார்..  புன்னகை மன்னன்  ‏இலக்கியப்புள்ளிகளில்  ஒரு புள்ளி தன்னை விலக்கிக்கொண்டது  உயர்குல பிறப்பிலும்  நடுநிலைப்புள்ளி வீழ்ந்தது  இலக்குகள் மாறினாலும்  உனது இலக்கியம் நிற்கும்  மறைவின் பிரிவோ  மனதுக்கு சொல்லொன்னா வருத்தம்.... #ஞாநி  ravithambi ponnan  ‏இருப்பிடமற்று அலைந்து திரிந்தவனுக்கு 17/2 பீட்டர்ஸ் காலனியில் இருக்க இடம் கொடுத்து சோறூட்டி என் இளம் பருவ சிந்தனை போக்கை சீராக்கி வளர்த்தெடுத்ததில் #ஞாநி நட்புமானார் என்பதை விட ஞானத் தந்தை யுமானார்.சமரசமற்று வாழ்ந்து சமரசமற்று மறைந்த #ஞாநி மறக்க முடியா #மாமனிதர் என் வாழ்வில்.  Nirmal Selvaraj  அசாத்திய குணநலன் மற்றும் கூர்மயான பார்வை கொண்ட ஒரு சிறந்த மனிதர் நெருங்கி பழக வில்லை புத்தக கண்காட்சி காலத்தில் பேசியது உண்டு அவரின் படைப்பு களை தாண்டி ஏதும் இல்லை...... இலைபருங்கள் ஐயா... #ஞாநி .....  Ram Moorthi  உங்களில் எத்தனை பேர் டிவி பார்ப்பீர்கள்?  அனைவரும் கைகளை உயர்த்தினோம்  உங்களில் எத்தனை பேர் நாளிதழ் படிப்பீர்கள்?  அரங்கமே அமைதியாய் இருந்தது..  கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் பொழுது தேசிய மாணவர் இயக்கத்தின் பயிற்சி வகுப்பு நடைபெற்றபோது  பத்திரிக்கையாளர் ஞாநி அவர் கேட்ட முதல் இரண்டு கேள்விகள் இது..  #இதயஅஞ்சலி #ஞாநி  Raj Sekar  சமரசம் செய்து கொள்ளாத மனிதர்  #ஓ........#ஞாநி........  Navratnam Paraneetharan  விவாதமேடைகளில் அடிக்கடி காணலாம், ஓ பக்கங்களில் தன்னை வெளிக்காட்டியவர், கடந்த வாரம்கூட வைரமுத்துவின் ஆண்டாள் விவகார விவாதமேடையில் தன் முகம் காட்டியவர்.  ஆழ்ந்த அனுதாபங்கள்.    இந்த புத்தகக் கண்காட்சியில் உங்களைப் பார்க்க முடியவில்லையே ஞாநி! - வினையூக்கி செல்வா   ஒவ்வொரு ஆண்டு புத்தகக் காட்சியின்போதும் அவரது அலாதியான புன்சிரிப்பும் கைகுலுக்கல்களும் நிச்சயம் பலருக்கும் பரிச்சயமான ஒன்று.  சென்னையில் ஞாநியில்லாத புத்தகக் காட்சிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதில் முக்கியமானது அவரது மகன் திரைப்படக் கல்விக்காக இரண்டு ஆண்டுகள் மும்பையில் குடியேறியது.  இந்தப் புத்தகக் காட்சிக்குக் கூட அவர் வந்திருக்கிறார். ஆனால் நான் சென்ற நேரங்களில் அவர் காணக்கிடைக்கவில்லை.  சென்ற இரண்டு ஆண்டுகளில் சற்றே தளர்ச்சியுற்ற நிலையில்கூட (ஆம்ஆத்மி சார்பாக அவர் எதிர்கொண்ட ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதி தந்த தேர்தல் தோல்வியின் தளர்ச்சியல்ல) புத்தகக் கண்காட்சிக்கு வந்து எல்லோரிடமும் அளவலாவியது நினைவின் சாளரங்களில் மெல்லிய காற்றாக வீசிக்கொண்டிருக்கிறது.  உண்மையில் இந்தப் புத்தகக் காட்சியை எதிர்கொள்ளும் எனது எதிர்பார்ப்பில் அவரது புன்னகையும் இடம்பெற்றிருந்தது. ஆனால் அது இந்த முறை மிஸ்ஸிங்!    முதல்முதலில் காயிதே மில்லத் புத்தகக் காட்சியில் அவரைப் பார்த்தது நினைவுக்கு வருகிறது. கல்லூரியில் பிரமாண்டமான வளாகத்தில் புத்தகக் காட்சிக்கு வெளியே பரந்துவிரிந்த புல்வெளியில் அமர்ந்திருந்தார். அதற்குமுன் என்னை அவருக்குத் தெரியாது. நானாக சென்று அறிமுகம் செய்துகொண்டேன்.  என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவர் எதிரே அமர்ந்து அவரது பல்வேறு பங்களிப்புகள் குறித்து பேசத் தொடங்கினேன். அச்சமயம் அவர் பிரபல வாரஇதழ் குடும்பத்திலிருந்து வெளிவரத் தொடங்கிய சிறுவர் இதழ் ஒன்றுக்கு ஆசிரியர் பொறுப்பை ஏற்றிருந்தார்.  ''தாங்கள் பொறுப்பேற்றிருக்கும் சிறுவர் இதழ் நன்றாக உள்ளது. அதே சமயம் அதன் தலையங்கத்தில் காஷ்மீர் பிரச்சனையை எழுதிஉள்ளீர்களே... குழந்தைகள் உலகத்தோடு அதை சம்பந்தப்படுத்துவது சரிதானா?'' என்று கேட்டேன்.  ''இன்றுள்ள குழந்தைகளை என்ன நினைத்துவிட்டீர்கள்? அவர்களுக்குத் தெரிந்த உலகங்கள்கூட உங்களுக்குத் தெரியாது என்பது உங்களுக்குத் தெரியுமா?'' என்று திருப்பிக் கேட்டார். ஒருகணம் செய்வதறியாது விழித்தேன். அவர் கூறியதுதான் எவ்வளவுபெரிய உண்மை. குழந்தைகள் சார்ந்த புரிதலின் வேறு பக்கங்களும் கிளைவிடத் தொடங்கியது அந்தநிமிடத்திலிருந்துதான்.  எல்லா பத்திரிகையாளர்களும் இப்படியெல்லாம் யாரிடம் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் பகிர்ந்துகொள்ள ஞாநி அளவுக்கு இடம்தருவார்களா என்பது கேள்விக்குறிதான்.  ஒரு திறந்த புத்தகமாக அவர் இருந்தார். சென்னைத் தொலைக்காட்சியில் ஞாநி நிறைய தரமான தொடர்களைத் தயாரித்தார். அதில் குறிப்பிடத்தகுந்தது நான்கைந்து வாரங்களே வந்த அவரே இயக்கி நடித்த பெரியார் குறித்த தொடர். பின்னர் அது பிலிம்சேம்பரிலும் திரையிடப்பட்டு சமூக ஆர்வலர்கள் சிந்தனையாளர்கள் பலரது பாராட்டையும் பெற்றது.  நீங்கள் சிறுகதைகள்தானே எழுதறீங்க... நான் தொடர்கதை எழுத ஆரம்பிச்சிட்டேன் பாத்தீங்களா என்று விளையாட்டாக அந்தநேரத்தின் தருணத்தின் மகிழ்ச்சியைக்கூட்ட அவர் ஒருமுறை கேட்டார். அவர் எழுதிய தவிப்பு தொடர்கதை குறித்து எனக்கு பெரிய அபிப்பிராயங்கள் இல்லை என்று சட்டென்று கூறிவிட்டேன். ஹாஹாஹா.... என்று விழுந்துவிழுந்து சிரித்தார். அது உங்களுடைய அபிப்பிராயம் என்றார்.  அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது... விமர்சனத்தையும் பாராட்டையும் சமபுள்ளியில் அணுகும் பெருந்தன்மை.  இது எப்படி எனக்குத் தெரிந்தது என்றால் அடுத்த மாதமே அவர் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்திவந்த ‘தீம்தரிகிட’ இதழில் நான் எழுதிய எனது முக்கியமான கதைகளில் ஒன்றான 'இன்னுமொரு கணக்கு' எனும் சிறுதை வெளிவந்திருந்தது.  மேற்கத்திய படைப்பாளிகளின் நாடகங்களை இன்று கல்லூரி வளாகமாகத் திகழும் சத்யா ஸ்டூடியோ தளங்களில் அரங்கேற்றினார். ஒவ்வொரு நாடகத்திற்கும் பார்வையாளனாக சென்று நாடக முடிவின்போது அவரை சந்தித்து அவரது நடிப்பு, இயக்கம் குறித்து பாராட்டிப் பேசினேன்.  அவர் வரைந்த இலகுவான ஓவியங்களும் எளிதான சொற்களும் நேரடியான சொல்முறைகளும் அவரது பத்திரிகை பயணத்தின் பாதையை சாதனையாக மாற்றித்தந்தன.  ஒரு நல்ல நேர்மையான பத்திரிகையாளருக்கு இருக்க வேண்டிய குணநலன்கள் அனைத்தும் ஞாநியிடம் இடம்பெற்றிருந்ததுதான் அவரது பத்திரிகைப் பயண வெற்றியின் அடிநாதம் என்று சொல்லத் தோன்றுகிறது.  ஒருமுறை கடற்கரையிலிருந்து கண்ணகி சிலையை ஜெயலலிதா அரசு அகற்றியது குறித்து ஞாநி அதை அகற்றியது தவறில்லை என்று பத்திரிகையில் எழுதியிருந்தார்.  தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் அவரிடம் அதுகுறித்து நான் எழுப்பிய கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் பெரிய விவாதமாக மாறிய தருணங்களும் என்றென்றும் மறக்கமுடியாது. ஆனால் அதை அவர் மனதில் வைத்துக்கொண்டதாகவே தெரியவில்லை.  அடுத்த புத்தகக் கண்காட்சியிலேயே சற்று பார்க்காமல் நகர்ந்து போன என்னை பெயர்சொல்லி அழைத்தார். ஏனெனில் எப்போது சந்தித்தாலும் நான் அவரிடம் அரசியல் நிகழ்வுகளையும் திறந்த பார்வையோடு அலசும் அவரது நட்பைக் கோருபவன். அப்படியிருக்க நான் நகர்ந்துபோனது அவருக்கு குழப்பதை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.                                                                                                                                                                                    அவரிடம் சென்ற நான் முதல்வேலையாக மன்னிப்புக் கோரினேன். ''போனவாரம் உங்ககிட்ட நிறைய முரண்பாடா பேசிட்டேன் சாரி சார்'' என்றேன்...  ''நீங்க வேற அதுஎன்ன நம்ம ரெண்டுபேருக்குள்ள வாய்க்கா வரப்பு தகராறா என்ன? ரெண்டு பேருமே ஒரு பொதுவிஷயத்தைத்தான் பேசினோம். இதுல வருத்தப்படறதுக்கு என்ன இருக்கு?'' என்றார். அதுதான் ஞாநி!  யார் எதிரே வந்தாலும் என்னை கையைப்பிடித்து வைத்துக்கொண்டு அவர்களிடம் பேசினார். அன்று மீண்டும் எங்கள் காரசாரமான அரசியல் சூடுபிடிக்கும் நேரம் தொடங்கும் அறிகுறிகள் தென்பட்டன.,..  ஞாநி சார்!... இந்த புத்தகக் கண்காட்சியில் உங்களைப் பார்க்கமுடியவில்லையே! நீங்கள் வந்திருக்கக்கூடும். ஆனால் என் கண்ணில் தென்படவில்லை.  புத்தகக் காட்சியில் உங்களைக் காணாததும் முரண்பாடுகள் நிறைந்த உலகிலிருந்து தாங்கள் இன்று காலை விடைபெற்றுக்கொண்ட செய்தியும் அறிந்தபோது, வாழ்வின் ஏதோ ஒரு வாசல் அறைந்து மூடப்பட்டது போன்ற வலியைத் தருகிறது ஐ யெம் வெரி ஸாரி... சார்....  ஹிந்துத்வா சிந்தனையாளர் மதிப்பிற்குரிய ஐயா திரு.எஸ்.குருமூர்த்தி, (வைதீக மனுஸ்ம்ருதி) ஹிந்து மதத்தை காலங்காலமாய் எதிர்ப்பது திராவிட மரபணுவில் ஊறியிருக்கிறது என்று அண்மையில் “நம்மில் எத்னி பேருக்கு தெரியும்” வகை கருத்தொன்றை தெரிவித்திருந்தார். திராவிட டி.என்.ஏவிற்கும் வைதீக வர்ணாசிரம ஹிந்து மதத்தை தீவிரமாக பின்பற்றுபவர்களின் டின்.ஏ.விற்கும் அப்படி என்ன வேறுபாடு இருக்க முடியும் என்பது மனதை கடந்த ஓரிரு தினங்களாக அரித்துக்கொண்டே இருந்தது.  எழுத்தாளரும், மானுடவியல், முற்போக்கு சிந்தனையாளரும் எனது நண்பருமான திரு.ஞாநி சங்கரன் மறைவில் அதற்கான பதில் கிடைத்தது. ஒருவரின் மறைவை கொண்டாடுவது வைதீக டிஎன்ஏ. தீபாவளி கொண்டாடுபவர்களுக்கும், சூரபத்மன் கொல்லப்படுவதை திருவிழா ஆக்கியவர்களுக்கும் இது தெரியும். மரணித்தவர்களை குலதெய்வங்களாக கும்பிடுவது திராவிட மரபணு. தனது நிலைப்பாட்டில் பெரும்பாலான புள்ளிகளில் விலகினாலும் குறைந்தபட்ச பொதுநன்மை சேரும் புள்ளிகளில் ஒன்றாய் கைக்கோர்த்த ஆளுமைகளின் மரணத்தின் பொழுது அவர்களின் நற்செயல்களை, நற்பண்புகளை, சமுதாயக்கொடைகளை உளம் மகிழ்ந்து நினைவு கூர்வதில் திராவிட மரபணுவின் கூறுகள் வெளிப்படும்.  கடந்த ஓரிரு தசாப்தங்களாக திராவிட இயக்கங்களையும் குறிப்பாக தமிழகத்திற்கு வளர்ச்சித்திட்டங்கள் கொடுத்த திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் அதன் தலைவர் திரு.கருணாநிதிக்கும் எதிரான நிலைப்பாட்டை திரு.ஞாநி எடுத்திருந்தாலும் அவரின் மரணத்தை பெரும் வருத்தமாக, துக்கமாக, இழப்பாக அனுஷ்டிப்பவர்கள் யாரென்று பார்த்த்தால், அவரின் கருத்துகளுக்குக்காக அவருடன் மல்லுக்கட்டிய-கடும் எதிர்ப்பை பதிவு செய்த திமுகவினரும் திராவிட இயக்க அனுதாபிகளுமே! சாமானிய திராவிட அனுதாபிகள் நினைத்திருந்தால், அறிஞர் அண்ணா மரண அஞ்சலி கூட்டத்தில் அண்ணாவை அவமானப்படுத்தி ஜெயகாந்தன் பேசியதைப்போல சமூக ஊடகங்களில் எழுதியிருக்கலாம். திராவிட அனுதாபிகள் அப்படி செய்யாததே திருவள்ளுவரும், பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் ஊட்டிய திராவிடர்களின் அரசியல் டி.என்.ஏ!!!  தனது அசமஞ்ச எழுத்து மற்றும் அச்சுபிச்சு சேட்டை வழியாக திராவிட சமூகநீதி எதிர்ப்பைக் காட்டி பிரபலம் அடைந்த நகைச்சுவை நடிகரும், தீவிர வலதுசாரி பத்திகையாளரான திரு.சோ. ராமசாமியின் மரணம் தராத தாக்கத்தை ஞாநியின் மரணம் அவரின் எதிர்க்கருத்தாளர்களுக்கு கொடுத்திருக்கிறதென்றால் ஞாநி என்ற ஆளுமையின் மகத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.  2013-ஆம் ஆண்டு, ஞாநி ஐரோப்பிய பயணம் மேற்கொள்ளப்போவதாக அவரின் சமூக ஊடக பதிவுகளின் வழியாக அறிந்தேன். அச்சமயத்தில் நான் இத்தாலி ரோம் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சி படிப்பில் இருந்தேன்.  எனக்கு கலைஞர் கருணாநிதியைப் பிடிக்கும். கருணாநிதியை விட அவரின் சமூகநீதி செயற்பாடுகளும் தமிழும் அதிகமாக பிடிக்கும். கலைஞர் ரசிகன் ஒருவன், கலைஞரை கடுமையாக எதிர்க்கும் ஒருவரை தனது இல்லத்திற்கு விருந்தினராக அழைக்கலாமா என்ற கேள்வி இருந்தது.   கலைஞரின் சமூகநீதியின் உடலும் உயிருமான திரு.வி.பி.சிங்கின் உரைகளை தமிழில் மொழிப்பெயர்த்தவர் திரு.ஞாநி!  சமூகநீதியும், தமிழும்! - இவை இரண்டு போதாதா?!. கலைஞர் ரோமில் இருந்திருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார். ஞாநியை ரோம் நகரில் என்னுடன் தங்க அழைத்தேன் ! "சக எழுத்தாளரை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி வினையூக்கி” என பதிலளித்து என் அடையாளத்திற்கும், என் எழுத்திற்கும் அங்கீகாரம் கொடுத்தார் மனங்களை வென்ற மானுடம் போற்றும் திரு.ஞாநி.  தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் மேற்குநாடுகளுக்கு பயணப்படும்பொழுது எல்லா செலவையும் அழைப்பாளர்களின் மேல் கட்டிவிடுவார்கள் என்ற பொதுவான குற்றச்சாட்டு உண்டு. நான் செய்த செலவுகளுக்கு மறுத்தாலும், தான் முந்தி பணம் கொடுத்துவிடுவார். எழுத்திலும் செயற்பாட்டிலும் சமரசம் செய்து கொள்ளாததால் பொருளாதார ரீதியாக தான் செல்வந்தன் இல்லை என்றாலும், தனது ஐரோப்பிய பயணத்திற்கான தனது சேமிப்பை செலவு செய்தால்தான் அந்த பயணத்தின் நோக்கம் முழுமையடையும் என்பது அவரின் பதிலாக இருந்தது.  உற்சாகம் ஒரு தொற்று!. உற்சாகத்தின் வடிவமான ஞாநியுடன் ரோம் நகரத் தெருக்களில் சுற்றினேன். அவசியமான கேள்விகள் பல. ஆர்வக்கோளாறு கேள்விகள் சில… எல்லாவற்றிற்கும் பதில் கொடுத்தார் ஞாநி.  அவர் எனக்கு அறிவுறுத்திய பல விசயங்களில், பயத்தாலோ சுயநலத்திற்காகவோ அற்ப சந்தோசங்களுக்காகவோ என்றுமே சமரசம் செய்து கொள்ளக்கூடாது என்பது முக்கியமானது.  காஞ்சி சங்கரமடத்து வைதீகத் துறவி ஜெயேந்திரர் ஒரு பேட்டியின் பொழுது, திராவிடத்தலைவர்களை அவதூறாக பேசிவிட்டு பின்பு அப்படி சொல்லவே இல்லை என்று மறுத்தார். ஞாநி துணிச்சலாக, ஜெயேந்திரர் அப்படித்தான் பேசினார், ஜெயேந்திரர் பேட்டி கொடுத்தபொழுது நான் அங்கே இருந்தேன் என்று உண்மையை உரக்கக் கூறினார். நான் அறியாத இவ்விசயத்தை வெனீஸ் நகரத்தில் இரவு உணவு உண்ணும்பொழுது பகிர்ந்து கொண்டார். எழுத்தில் பெரும்பாலும் தெனாலியாக இருக்கும் எனக்கு அந்தத் துணிச்சல் புத்துணர்ச்சியைக் கொடுத்தது. நான் பெற்ற துணிச்சல், பின்பு கிளிமூக்கு அரக்கர்களின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ஆனபொழுது பெருமளவு உதவியது.                                                                                            ஹிந்திமொழி திணிப்பு ஆங்கில விவாதமொன்றில், ஹிந்தியில் பேசிய வடநாட்டார் ஒருவருக்கு தமிழில் அதிரடியாக பதில் அளித்து இந்திய இறையாண்மையில் தேசிய இனங்களின் மொழிகளுக்கான முக்கியத்துவத்தை உணர்த்தியவர்.  சித்பவன் பிராமணர்களுக்கு மறுவாழ்வு அளித்த காகபட்டர் தொடங்கி, சமகால விவேகானந்தர் பவுண்டேசன் வரை வலதுசாரி பிராமணியம் எப்படி மக்களை வசியப்படுத்துகிறது என்பதன் சூட்சுமங்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார். கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு அருகில் வானுயர திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டதை சிலாகித்ததுடன் மட்டுமல்லாமல் சூட்சுமங்களை எதிர்கொள்வது இப்படியான செயல்களாக இருக்கவேண்டும் என்று கருத்தூட்டினார்.  திராவிட முன்னேற்ற கழக அனுதாபிகள் பலருக்கு, கலைஞரைப் பற்றி ஞாநி எழுதிய ஒரு சில விசயங்களுக்காக அவரின் மேல் வருத்தமிருக்கலாம், ஆனால் ஞாநி வாழ்வின்மேல் காட்டிய ஈடுபாட்டிற்கும், வாழ்க்கையை முழுமையாக வாழவேண்டும் என விரும்பியதற்கும் கலைஞர் ஒரு இன்ஸ்பிரேஷன் என்பது பலருக்கு தெரியாது.  கலைஞரிடம் பிடித்தது என்ன என்று கேட்டதற்கு ஞாநியின் பதில் மேலே சொன்னதுதான். பலநாடுகளில் பயங்கரவாத இயக்கம் என தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஞாநி எப்பொழுதோ சொன்ன ஒன்றிற்காக, ‘லெட்டர் பேடு’ ஈழ இயக்கம் ஒன்றின் தலைவர், ஞாநி போன்றவர்கள் உயிரோடு இருப்பதைக் காட்டிலும் செத்து தொலையலாம் என்று எழுதி இருந்தார். ஞாநி என்னிடம் காட்டி “நான் ஏன் வினையூக்கி சாகனும், நான் வாழ்வேன், உலகத்தின் பாதியையாவது சுற்றிவிட்டுத்தான் இவ்வுலகத்தை விட்டு போவேன்” என்றார்.  “சார், இவங்க கலைஞர் பிறந்த நாளன்னிக்கும் இப்படித்தான் வருஷா வருஷம் எழுதுறாங்க, சாபம் கொடுக்கப்பட்டவர்கள் வாழ்வார்கள் சார்” என்றேன்.    விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக விடுதலைப்புலிகளின் “சாத்தானின் படைகள்” நூல் தொகுப்பு பற்றிய ஒரு கட்டுரை “உயிர்மை” இலக்கிய-பண்பாட்டு-சமூகநீதி பத்திரிக்கையில் எழுதப்பட்டபொழுது, அந்த நூல் தொகுக்கப்பட்ட விதம், பதிப்பகம், பதிப்பாளர் பின்புலம் மற்றும் துணிச்சல் பற்றி பகிர்ந்து கொண்டது அக்கட்டுரைக்கு மேலும் சிறப்பு சேர்த்தது. ஞாநி நினைத்திருந்தால், அத்தகவலை சொல்லாமலே இருந்திருக்கலாம், ஆனால் பகிர்ந்து கொண்டது பஞ்சபாண்டவர்களின் சிறந்த ஞானியான சகாதேவன், எதிரிகள் கௌரவர்களுக்கும் நல்லநேரம் பார்த்துக் கொடுத்ததை போல இருந்தது.  என்னுடைய ஆர்வக்கோளாறு கேள்விகளில் இரண்டு... கலைஞருக்கு பின்னர் திராவிட முன்னேற்ற கழகம் என்ன ஆகும்? ஜெயலலிதாவிற்கு பின்னர் அதிமுக என்ன ஆகும்?  2013ம் ஆண்டில் தீர்க்கதரிசியாக ஞாநி சொன்ன பதில்கள்:  1. கலைஞருக்குப் பின்னர் ஸ்டாலின் திமுகவை கட்டுக்கோப்பாக நடத்துவார்.  2. ஜெயலலிதாவிற்கு பின்னர் ஔரங்கசீப்பிற்கு பின்னாலான மொகலாய பேரரசை போல அடிதடியில் ஆரம்பித்து காணாமல் போகும்.  ஞாநிக்கு தி.மு.க செயல் தலைவர் திரு.ஸ்டாலின் மேல் ஒரு தனித்தப் பிரியம் உண்டு. ஒருமுறை ஸ்டாலின் அவர்களை ஞாநி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த பொழுது, என்னிடம் தொடர்பு கொண்டு ஸ்டாலினிடம் ஏதேனும் சொல்ல வேண்டுமா எனக்கேட்டார். “நானே ஸ்டாலினை சந்திக்கும் பொழுது சொல்லிக்கொள்கிறேன்” என்று எடக்காக பதில் சொன்னாலும் அதையும் ரசித்தவர் ஞாநி. இலைமறை காய்மறையாக ஞாநியின் கருத்துகளை எனது சமூக ஊடகப்பக்கங்களிலும் நான் மண்டப எழுத்தாளராக செயற்படும் ‘கிளிமூக்கு அரக்கன்’ போன்ற பக்கங்களில் விமர்சித்தாலும், தகவல் பிழை இருந்தால் ஒழிய தனி உரையாடலில் தொடர்பு கொள்ள மாட்டார் கருத்து சுதந்திரத்தை மதித்த ஞாநி.  சமீபத்தில் அவரிடம் உரையாடிய பொழுது, அவரின் தீர்க்க தரிசனத்தை நினைவூட்டி, மற்றுமொரு ஆர்வக்கோளாறு கேள்வியை முன்வைத்தேன். “ஸ்டாலினுக்குப் பின்னர் திராவிட முன்னேற்ற கழகம் என்னவாகும்?”  "உங்களைப்போன்ற திராவிட அரக்கர்கள் முன்னெடுத்து சொல்வார்கள்” என்றார்.  சமரசமற்றப்போக்கு, துணிச்சல், உற்சாகம், வாழ்வது - வாழ்க்கையை முழுமையாக வாழ்வது , தகவல் சுரங்கமாக விளங்கியது, நெருங்கக் கூடிய மனிதராக இருந்தது என ஏதாவது ஒருவகையில் நமக்கு நெருக்கமானவராக இருந்ததால்தான் ஞாநியின் கருத்துகளுடன் மாறுபட்டாலும் நூற்றுக்கணக்கான திராவிட இயக்க அனுதாபிகள் அவரின் இழப்பை தனது சோகமாக பார்க்கின்றனர்.  உடல் தானம் செய்து இவ்வுலகத்தில் நீங்காமல் வாழப்போகும் ஞாநியின் நினைவுகளும் கருத்துகளும் நம்மிடம் என்றும் இருக்கும். திராவிட சிந்தனையாளர்களும், ஞாநியும் ஒன்றுபடும் புள்ளியான ஹிந்துத்துவ எதிர்ப்பே அவரின் கடைசி எழுத்தாக அமைந்தது அவர் வாழ்ந்த சமரசமற்ற வாழ்க்கையின் மகுடம்.  முனைவர்.வினையூக்கி செல்வா                நினைவில் வாழ்வீர்கள் ஞாநி! -கவின் மலர்   நான் பள்ளிக்கூட மாணவியாய் இருந்தபோது வந்த ஒரு தேர்தல். அது குறித்து ஞாநி இதழொன்றில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கட்சியின் வாய்ப்புகள் குறித்தும் அலசல் கட்டுரை எழுதிவந்தார். அதுதான் ஞாநி எனும் பெயரை நான் முதன்முதலில் கவனித்தது. அப்பாவும் நானும் அக்கட்டுரைகள் குறித்து சிலாகித்து உரையாடியதெல்லாம் நினைவில் இருக்கிறது.  சென்னை வந்ததும், அவரை பல இடங்களில் கூட்டங்களில் கண்டாலும் நெருங்கியதில்லை. தொலைவில் நின்றுகொள்வேன். ‘தீம்தரிகிட’ இதழை தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன்.   என் வலைத்தளத்தில் 'பத்திரிகையாளராய் ஆவதற்கு முன்னும் பின்னும்' என்கிற தலைப்பில் ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதில் அவருடைய பின்னூட்டம் மகிழ்ச்சியளித்தது.  "நம் மனமும் அறிவும் ஒருங்கே விரும்பும் துறையில் பணியாற்றும் சுதந்திரம்தான் வாழ்க்கையில் முதன்மையான சுதந்திரம்.அதை 35 வருடங்களாக அனுபவித்து வருகிறேன். இன்னொரு தலைமுறையிலும் ஒருவர் அதே உணர்வுகளை வெளிப்படுத்துவது பெரும் மகிழ்ச்சி தருகிறது. வாழ்த்துகள்.   ஞாநி”  இதுதான் அவர் எழுதியது. அத்தனை மகிழ்ச்சியாய் உணர்ந்தேன். சிறு பெண்ணான நான் எழுதுவதைக் கூட ஞாநி வாசிக்கிறார் என்கிற உணர்வே எனக்கு அதிக உற்சாகமூட்டியது. அது 2011. நான் ஊடகத்தில் நுழைந்து இரண்டு ஆண்டுகள் கூட ஆகவில்லை. மூத்த பத்திரிகையாளரான அவருடைய வார்த்தைகள் எனக்கு உத்வேகமூட்டின.  அதன்பின், நிறைய முறை சந்தித்துவிட்டேன். திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியில் நான் உரையாற்றச் சென்றிருந்தேன். ஞாநியின் பரீக்ஷா குழுவினர் ‘வட்டம்’ நாடகம் நிகழ்த்த வந்திருந்தனர் . அன்று நடிக்கவேண்டிய பெண் ஏதோ காரணங்களால் வர இயலவில்லை. அப்போது ‘வந்த இடத்தில் கேட்கக்கூடாதுதான். ஆனாலும் வேறு வழியில்லை. அந்த கேரக்டரில் நீங்கள் நடிக்க முடியுமா ?’ என்று கேட்டார். உற்சாகமாகிவிட்டது எனக்கு. காலையில் ஒத்திகை பார்த்து மாலையில் நாடகம் நடந்தேறியது.  அதன்பின் சென்னையில் ’அலையன்ஸிலும்’ புரிசை நாடகவிழாவில் ‘வட்டம்’ நாடகத்தில் நடித்தேன். ஞாநி சில ஆண்டுகளுக்கு முன் எழுதி இயக்கிய ‘சண்டைக்காரிகள்’ நாடகத்தை மீண்டும் நடத்தவேண்டுமென ஆசைப்பட்டார். அந்த நாடகத்திற்கான வேலைகள் தொடங்கும்போது அழைக்கிறேன் என்று சொன்னார். அதுபோலவே அழைப்பும் வந்தது. சில நாட்கள் நாடக வாசிப்பு நடந்தது. ஒரு மார்ச் 8 அன்று அரங்கேற்றுவது என முடிவானது. ஆனால் ஏனோ அது தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. ’சண்டைக்காரிகள்’ நாடகத்தை மீண்டும் மேடையேற்றாமலேயே ஞாநி சென்றுவிட்டார்.  சிறியவர்கள்தானே என்று புதியவர்களை அவர் என்றும் புறக்கணித்ததில்லை. அவர்கள் எவ்வளவு சிறுபிள்ளைத்தனமான கேள்வி கேட்டாலும் பொறுமையாக அடிப்படையிலிருந்து விளக்குவார். எப்போதும் இளைஞர்களோடு தொடர்பில் இருந்தார். மாற்றுக்கருத்துள்ளவர்களோடு தொடர்ந்து விவாதித்தவர். அவர் சொல்லும் அனைத்தையும் நாம் ஒப்புக்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்க மாட்டார். அவரவருக்கு இருக்கும் கருத்து சுதந்திரத்தை எப்போதும் மதித்தவர். அவருடைய நாடகப் பிரதிகளிலும் சரி, எழுத்துகளிலும் சரி அவருடன் முரண்படுவதை அவரிடமே விவாதிக்க முடியும் என்பது ஞாநியின் தனிச்சிறப்பு.  அவருடைய வீடு என்றும் திறந்திருக்கும் கதவுகள் கொண்டது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம் என்கிற உரிமையுடன் கூடியது அவரது இல்லம். சிறு குழந்தை கூட ‘ஞாநி’ என அவரை பெயர் சொல்லி அழைக்கலாம். அவர் வயது நபர்களில் நான் பெயர் சொல்லி அழைப்பது ஞாநி ஒருவரைத்தான் என நினைக்கிறேன். பரிக்‌ஷாவிலும் எல்லோரும் அவரை ‘ஞாநி’ என்று பெயர் சொல்லி அழைப்பதுதான் வழக்கம்.                                                                                                                                                               தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு பிரச்சனை வந்தபோது ஒரு மூன்றாம் நபராக அவர் அதில் தலையிடும்படி ஆனது. ஆனால் அவர் அப்பிரச்சனையை மிக நாகரிமாகக் கையாண்டார். என் தரப்பு நியாயங்களைப் புரிந்துகொண்டு பேசினார். அந்த நம்பிக்கையில் ஒரு கட்டத்தில் பிரச்சனையின் உச்சத்தில் அவரைப் பார்க்கச் சென்றபோது எல்லோருக்காகவும் திறந்திருந்த அவருடைய வீட்டின் கதவுகள் அன்று எனக்காகத் திறக்கவில்லை. அது இன்றளவும் என்னை உறுத்தும் நெருடும் ஒரு தருணம். அன்று அவர் வீட்டு வாசலில் இருளில் நின்றிருந்த கணம் என்னை இப்போதும் வாட்டி வதைக்கிறது.  அது குறித்து அவரிடம் கேட்டுவிடவேண்டும் என்றேனும் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். ஏன் அப்படிச் செய்தீர்கள் என்று கேட்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருந்தேன். அதன்பின் பல முறை அவரை ஆங்காங்கே சந்தித்தாலும் அது குறித்து அவரும் பேசவில்லை. நானும் கேட்கவில்லை. ஆனால் அதற்கான சுவடுகளின்றி அவர் என்னுடன் உரையாடினார். என்றாவது அவரிடம் எனக்கு நெருடல் உண்டாக்கிய இந்த விஷயத்தைக் கேட்டுவிடவேண்டும் என்று எண்ணி இருந்தேன்.  அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் சார்பில் மாட்டுக்கறி திருவிழா நடத்த முடிவானபோது அவர் அது inclusive ஆக இருக்கவேண்டும். மாட்டுக்கறி உண்ணாதவர்களுக்கான உணவும் அங்கு இருக்கவேண்டும் என்று வாதாடினார். ”மாட்டுக்கறி வைத்திருந்ததற்காக ஒருவரை கொன்றிருக்கிறார்கள். அதற்கான எதிர்வினையாக செய்யப்படும் ஒரு விஷயத்தில் எல்லோருக்குமான உணவு வைக்கமுடியாது. மாட்டுக்கறி உண்ணாதவர்கள் விழாவுக்கு வரலாம். உண்ணத் தேவையில்லை. பிற கலை நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளலாம்” என்று நாங்கள் சிலர் வாதாடினோம். ஒரு கட்டத்தில் நான் ‘நாங்கள் மாட்டுக்கறித் திருவிழாதான் நடத்துகிறோம். ரெஸ்டாரண்ட் அல்ல எல்லாவற்றையும் தருவதற்கு’ என்று சற்று காட்டமாகவே பதில் கூறினேன்.   ஆனால் அதன்பின்னரும் அவர் என்னோடு சுமுகமாகவே உரையாடினார். அதுதான் ஞாநி! என்றாலும் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்பதில் எனக்கு வருத்தமுண்டு. இப்படியான முரண்பாடுகள் அவரோடு அடிக்கடி உண்டுதான் என்றாலும் உரையாடலை அவர் கைவிட்டதில்லை.  சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு தேர்தல் நடத்தாமல் இருப்பது குறித்து கடுமையாக வாதங்களை முன்வைத்துப் போராடியவர். ஒரு முறை கூடங்குளம் தொடர்பாக ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அதில் சில பேர் அவரிடம் கேள்வி கேட்கிறேன் பேர்வழி என்று வந்து அவரிடம் தகராறு செய்தனர். ”முதலில் தேர்தலை நடத்துங்கள். அதுவரை இந்த பத்திரிகையாளர் மன்றத்திற்குள் நுழையமாட்டேன்” என்று சவால்விட்டுவிட்டு வெளியேறிச் சென்றார். அதன்பின் நானறிந்து அவர் அங்கு செல்லவில்லை என்றே நினைக்கிறேன்.  எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் ஒரு கருத்தரங்கத்தில் அவர் தலைமையில் நான் உரையாற்றினேன். அப்போது என்னை அவர் அறிமுகப்படுத்திய விதத்தை என்னால் மறக்க முடியாது. ”இவர் பெண்ணியம் பேசுபவர் என்று சொல்ல முடியாது. அப்படியாக தன் வாழ்க்கையையே அமைத்துக்கொண்டவர். வெகு சிலரே பேசுவதும் செயல்பாடும் ஒன்றென வாழ்வோர். அப்படி ஒருவர் கவின் மலர்’ என்று மாணவர்களிடம் அறிமுகப்படுத்தினார். தன் சொந்த வாழ்க்கையை பரிசோதனைக் களமாக மாற்றிய ஞாநியின் வாயால் இவ்வார்த்தைகளைக் கேட்டது உண்மையில் மகிழ்ச்சியாகவே இருந்தது.   இந்த வார்த்தைகள் எனக்குப் போதுமானது; என்னை நெருடிய அந்த விஷயத்தை கேட்கவேண்டாம் என முடிவெடுத்தேன். இறுதிவரை கேட்கவில்லை. இனி கேட்கவும் முடியாதபடி ஞாநி தன் மூச்சை நிறுத்திக்கொண்டார்.  நேற்று அவர் உடல் கிடத்தப்பட்டிருந்த அந்த ஹாலில்தான் பரீக்‌ஷாவின் ஒத்திகைகள் நடந்திருக்கின்றன. அதே ஹாலில் உயிரற்ற அவர் உடலைக் காண இயலாது உள்ளே ஓர் அறைக்குள் நின்றிருந்தேன். அந்த அறையில்தான் ஒருமுறை ‘என் வானிலே ஒரே வெண்ணிலா’ பாடலை தோழர்கள் சிலர் பாடச் சொல்ல நான் பாடத் தொடங்கினேன். திடீரென தாளச் சத்தம் கேட்டது. ஞாநி அப்பாடலுக்கு அட்டகாசமாகத் தாளமிட்டார். நான் பிரமிப்போடு பாடிக்கொண்டிருந்தேன். பாடி முடித்தபோது சொன்னார். ‘பேங்கோஸ் வாசிக்கத் தெரியும். கச்சேரிகளில் வாசித்திருக்கிறேன்’ என்றார். இது நானறியாத அவருடைய இன்னொரு முகம். வியப்பாக இருந்தது. அந்த அறையில்தான் நேற்று நின்றுகொண்டிருந்தேன். திடீரென அங்கிருந்த அத்தனை பேரும் என் கண்ணிலிருந்து மறைந்து அனைத்து சத்தங்களும் மறந்து, ஞாநி ’என் வானிலே’ பாடலுக்கு இசைத்த தாளம் மட்டுமே ஒலித்தது. இனியும் அவர் குறித்த இப்படியான நினைவுகள் மட்டுமே மனதில் நிற்கும்.  நினைவில் வாழ்வீர்கள் ஞாநி!  கவின் மலர் Kavin Malar        ஞாநி, சில நினைவுகள் - 1  -  அதியமான்                                                                               2008 டிசம்பரில், ஞாநியை அவர் அன்று வசித்த திருவல்லிக்கேணி இல்லத்திற்கு சென்று சந்தித்தேன். பிறகு நல்ல நண்பர்கள் ஆனோம். என் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தையும் திருப்புமுனையையும் ஏற்ப்படுத்தியவர். பல கருத்து முரண்பாடுகள், மோதல்கள் இருந்தாலும் நட்பையும் அன்பையும் அது பாதித்ததே இல்லை.   ஒரு முறை சொன்னார் : 'அதியமான், நீங்க முதலாளித்துவம் பேசினாலும், அடிப்படையில் இடதுசாரிதான். மனிதாபிமானம் அதிகம் உள்ள நீங்க இடதுசாரி தான்' ; இது போன்ற நெகிழ்ச்சியான பல தருணங்கள்.  எனது பைக்கில் அவரை பல இடங்களுக்கு அழைத்து சென்றிருக்கிறேன். இந்துஸ்தானி இசை பிரியர். எனக்கு இந்துஸ்தானி இசையை அறிமுகம் செய்து வைத்தார். ஒரு முறை பெசன்ட் நகர் பீச்சில் பண்டிட் ஜஸ்ராஜின் அற்புதமான கச்சேரிக்கு அழைத்து சென்றார். மெட்ராஸ் யூத் கொயரின் கவரவ அங்கத்தினர். Madras String Quartet திரு.நரசிம்மநின் நண்பர். அற்புதமான பல இசை நிகழ்ச்சிகளுக்கு அழைத்து சென்றிருக்கிறார். Anil Srinivasஇன் பியானோ இசையை அறிமுகப்படுத்தினார்.  அவரின் பரிக்‌ஷா குழு என்னும் குடும்பத்தில் நானும் ஒரு செயல்படாத உறுப்பினர் போல் ஆனேன். புதிய பல நண்பர்கள் அமைந்தனர். பல எழுத்தாளர்கள், தலைவர்களை அவர் இல்லத்தில், கேணி கூட்டத்தில் சந்தித்து அறிமுகம் செய்யது கொள்ள வாய்ப்பு கிடைத்தது.  2014 வரை பல்வேறு துறைகளில் இருந்த நான், ஊடாக துறைக்கு மாற வழி வகை செய்த ஆசான் அவர். He arranged for my interview for my present job in 2014.  கண்ணீருடன் எனது அஞ்சலிகள்...  KR Athiyaman  ஞாநி, சில நினைவுகள் - 2  -  அதியமான்                                                                                               அபாரமான நகைச்சுவை உணர்வு கொண்டவர் ஞாநி. மிக கஸ்டமான காலங்களில், கடும் உடல் வேதனை உருவான காலங்களிலும் நகைசுவை உணர்வை கைவிடாமல், கிண்டல் செய்வார். என்னை, இதர நண்பர்களுடன் சேர்ந்து கிண்டல் செய்து ஓட்டுவார். கேணி கூட்டம் முடிந்த பின் அவரது அறையில் கூடும் ஜமாவில் இப்படி அடிக்கடி நடக்கும். கேணியில் பேசிய பல பேச்சாளர்களுக்கு நான் இவ்வாறு தான் அறிமுகமானேன் !  தீவிர பெரியாரிஸ்டான அவருக்கு ஜோதிட நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் நான் அவருக்கு அவ்வப்போது 'ஜோதிடம்' சொல்வேன் ! 2011 ஜனவரியில் அவருக்கு heart attack வந்து, மலர் ஹாஸ்பிடலில் angioplasty செய்யப்பட்டது. ICUவில் இருந்த அவரை காண சென்ற போது, நான் எதுவும் பேசுவதற்கு முன்பு, அவர் சொன்ன முதல் வாக்கியம் : 'எனக்கு இப்படி ஆகும் என்று உங்க ஜோசியத்தில் ஏன் முன்னரே சொல்லவில்லை ?' ; இப்படி சாவகசமாக கேட்டார்.    2008இல் திருவல்லிக்கேணியில் அவர் குடியிருந்த போது, மாடியில் வீட்டு உரிமையாளரான ஒரு 80 வயது பாட்டி தனியாக குடியிருந்தார். பாட்டியம்மா மிகவும் ஆசாரமான, பக்தி, பழமைவாதம் மிகுந்த விதவை. பசங்க எல்லோரும் வெளிநாட்டில்.  ஞாநி தனியாக தான் கீழ் போர்சனில். நல்ல மனிதர், எழுத்தாளர் என்று சொன்னார்களே என்று பாட்டியம்மா முதலில் வீடு கொடுத்தார். ஞாநி 21ஆம் நூற்றாண்டு பின் நவீனத்துவ, முற்போக்காளர். ஆனால் பாட்டியம்மா 19ஆம் நூற்றாண்டு பழமைவாதி. ஞாநியின் வீடு ஒரு open house. ஆண், பெண் நண்பர்கள், தோழர்கள், பரிக்‌ஷா நாடக குழுவினர் பலரும் அவ்வப்போது வந்து போவார்கள். சிலர் தங்குவார்கள். ஞாநியின் வளர்ப்பு பெண் சில காலம் அங்கு தங்கி படித்தார். வீட்டுக்கார பாட்டியம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரே குழப்பம். இவர் 'நல்லவரா, கெட்டவரா' என்று பெரும் குழப்பம். 19ஆம் நூற்றாண்டு, 21ஆம் நூற்றாண்டை சந்திக்க நேர்ந்ததால் ஏற்பட்ட 'குழப்பம்'. ஞாநியும் நானும் இதை அவ்வப்போது பேசி சிரித்துக்கொள்வோம்...  KR Athiyaman                அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா? பாஸ்கர் ஆனந்த ராவ்   நாங்கள் வெல்லுவோம்..  நாங்கள் வெல்லுவோம்...  நாங்கள் வெல்லுவோம் - ஓர் நாள்    ஓஹோ, மனதில் நம்பிக்கை - பூரண நம்பிக்கை  எனவே நிச்சயம் வெல்லுவோம் - ஓர் நாள்  (நாங்கள் வெல்லுவோம்)    நமக்கு வேண்டாம் வேஷங்கள்  இனிமேல் தேவை நேசங்கள்  நிச்சயம் வெல்லுவோம் - ஓர் நாள்  (நாங்கள் வெல்லுவோம்)    நம்மில் பேதம் இல்லையே  நெஞ்சில் அயர்வும் இல்லையே  நிச்சயம் வெல்லுவோம் - ஓர் நாள்  (நாங்கள் வெல்லுவோம்)    ஒன்றாய் போகலாம்  இனி ஒன்றாய் போகலாம்  நிச்சயம் வெல்லுவோம் - ஓர் நாள்  (நாங்கள் வெல்லுவோம்)    இது 'மனமே ஹே பிஸ்வாஸ்' என்னும் வங்காள பாடலின் தமிழாக்கம். புகழ் பெற்ற வங்க நாடக ஆசிரியர் பாதல் சர்க்கார் அவர்களின் பிரபல நாடகத்தின் தமிழ் வடிவமான (ஞாநியின்) 'தேடுங்கள்' நாடகத்தின் இறுதியில் இந்தப் பாடலை நாடகத்தில் பங்கேற்பாளர்கள் அனைவரும் பாடிக் கொண்டே பார்வையாளர்களினுடே வரும் போது பார்வையாளர்களும் பாடிக்கொண்டே அரங்குக்கு வெளியே வருவர். அங்கு அனைவரும் சேர்ந்து பாடி ரசிகர்களுக்கு விடை அளிப்போம்.  இதை இந்த நாடகத்தில் எப்போதும் கிழவன் வேடத்தில் நடிக்கும் ஞாநி தான் முன்னெடுப்பார்.மேலும், இது ஞாநிக்கு மிகவும் பிடித்த பாடல் ஆதலால்,  இன்று ஞாநியையும் இதே பாடலைப் பாடி குழுவினர் விடை கொடுத்தோம்.  காலையிலேயே கண் தானம் முடிந்தது.  இறுதி சடங்குகள் எதுவும் இன்றி, சென்னை மருத்துவக் கல்லூரிக்கு ஞாநியை அவர் குடும்பத்தினர் அர்ப்பணித்தனர். 1988 ஆம் ஆண்டில் அவர் பெரியம்மா இறந்த போது, ரிக் க்ஷாவில் அவர் உடலை தம் மடியில் கிடத்தி இடுகாட்டிற்கு எடுத்துப் போய் எளிமையாக அடக்கம் செய்தது நினைவுக்கு வந்தது. (இன்று என் குடும்பத்தினரிடமும் நான் இறந்தால், கண் தானம் முடித்து, என்னையும் இப்படியே அரசு மருத்துவ மனைக்கு கொடுத்து விடும்படி கூறி விட்டேன்)  அவருக்கு இறுதி மரியாதை செலுத்த காலையிலேயே வந்துவிட்ட ரஜினி முதல் பலரும் அவரால் கடுமையாக விமர்சிக்கப் பட்டவர்கள். ஞானியின் விமர்சனம் 100% நேர்மையானது. எனவேதான் அவருக்கு அனைவரும் வித்தியாசம் பார்க்காமல், இறுதி மரியாதை செலுத்த வந்தனர்.  ஒரு முறை அவர் முதல் அமைச்சரை கடுமையாக விமர்சித்த போது, ஆளும் கட்சியினர் தமிழகம் முழுவதும் இவருக்கு எதிராக கண்டனக் கூட்டங்கள் நடத்தினர். அப்போது ஒரு முன்னாள் ஆளுநர்(இவரும் ஞாநியால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது) தொலைபேசியில் ஞாநியை தொடர்பு கொண்டு, (you are the only journalist I have seen with spine in tamilnadu) தான் பார்த்தத்திலேயே ஞாநி முதுகெலும்புள்ள பத்திரிக்கையாளர் என்று குறிப்பிட்டார். (நான் அப்போது அவர் அருகில் இருந்தேன்).  ஞாநியின் சிந்தனை, சொல், செயல் மூன்றிலும் எப்போதும் ஒத்திசைவு இருக்கும். நான் என் வாழ்க்கையில் பங்கேற்ற பல இயக்கங்களுள் பரீக் ஷாவில், கோஷ்டிகளோ, அல்லது 'politics' எனப்படும் சூழ்ச்சிகளோ ஒரு போதும் இருந்ததில்லை என்பது எப்போதும் மன நிறைவு தரும் விஷயம். அனைத்து முடிவுகளும் கலந்தாலோசிக்கப்பட்டு ஏகமனதாக(unanimous) இருக்கும். எனவேதான் அவருடைய கலைப் பயணத்தில் சக பயணியாக இருந்தது ஒரு பாக்கியமாக கருதுகிறேன்.  அவர் கையெழுத்தே ஓவியம் போல இருக்கும். அவரின் மிகப் பிரபலமான உயர்த்திய புருவம், முறுக்கிய மீசை கொண்ட நாட்டுடமையாக்கப்பட்ட பாரதியின் ஓவியத்தின் கீழ் பாரதியின் வாசகமான 'அன்பென்று கொட்டு முரசே' என்று எழுதியிருப்பார். தம் அன்பால் நண்பர்களை வசியப்படுத்தி, மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டார்.  முப்பது வருட நட்பு; பந்தம். துக்கம் நெஞ்சை அடைக்கிறது. என் வாழ்க்கையிலேயே என் தொழிற்சங்க ஆசான் தோழர். ஜெகன் அவர்கள் மறைவிற்குப் பிறகு நிலை குலைந்தது இன்றுதான்.  அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா?        ஞாநி  - பூவண்ணன் கணபதி                                                        ஞாநி வீட்டிற்கு முன்பு ,அவர் உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்படுவதை பார்த்து கொண்டிருந்தேன்.எந்த வித சடங்குகளும் இல்லை. தோழர்களின் வீர வணக்கம் குரல்கள் தான் தேம்பல்களை மீறி ஒலித்து கொண்டிருந்தன.உடல் வண்டியில் ஏற்றப்பட்ட பின்பு யாராவது நாலு பேர் வாருங்கள்,freezer box எடுத்து சென்று வண்டியில் ஏற்ற வேண்டும் என்று குரல் கேட்டது. உடனே பலர் சென்ற போது ,போதும் தூக்கி விட்டார்கள் என்றும் குரல் கேட்டது.  அவர் வீட்டில் இருந்து வண்டியை ஆன் செய்தால் நாலு பேருக்கு நன்றி எனும் டி எம் எஸ் பாடல் ஒலிக்க துவங்கியது. வண்டியை ஓட்டாமல் அப்படியே அமர்ந்திருந்தேன். நல்ல சாவு தான்.புத்தக கண்காட்சியில் அவர் சுடாலில் வழக்கம் போல வோட்டு பெட்டி,புத்தக விற்பனை ,வாசகர்களுடன் சந்திப்பு ,இந்துத்வத்தை எதிர்த்து நேற்றிரவு நெத்தியடியாக ஒரு பதிவு என்று கடைசி வரை விருப்பப்பட்டபடியே வாழ்ந்து விட்டு வேகமாக சென்று விட்டார்.  அவருக்கு பிடித்தமான ஒரு காரியத்தை செய்யும் போது துணை இருந்தவன் என்பதால் அவருக்கு எவ்வளவு கோவம் வர கூடியபடி நடந்து கொண்டாலும் என் மீது கோவித்து கொண்டதில்லை.அவர் தேர்தலில் நின்ற போது நானும்,என்னை விட என் வாகனமும் அவருக்காக துணையாக நின்றோம்.  இடை தேர்தல் என்றாலும் அவருக்கு இருந்த நம்பிக்கையும்,உடல்நிலையை மீறிய அவர் உழைப்பும் மிகவும் ஆச்சரியப்படுத்தியது.ஒவ்வொரு பகுதியின் குறைகளை கூர்ந்து சேகரித்து அதனை சரி செய்ய என்ன செய்வேன் என்பதனை தெளிவாக ஆலந்தூர் இடை தேர்தலில் பேசி பிரச்சாரம் செய்தார்.  நாடகம்,எழுத்து,குறும்படம்,பத்திரிக்கை,எழுத்து பணி, என வாழ்நாள் முழுதும் அவரின் உழைப்பு மிகவும் பிரமிக்கத்தக்க ஒன்று.  நல்ல அரசியல்வாதியாக,எம் பி யாக ,எம் எல் ஏ வாக ,அமைச்சராக வந்திருக்க வேண்டியவர் அவர்.அதற்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் அளவுக்கு அளவுக்கு மீறி இருந்தன.ஆனால் சாரு சொன்னது போல அவர் ஒரு cultural தாலிபான்.எதை குடிக்க வேண்டும்,எதை குடிக்க கூடாது ,எதை பாடலாக எழுத வேண்டும்.எதை எழுத கூடாது எதை படமாக எடுக்க வேண்டும்,எதை எடுக்க கூடாது,எப்படி எடுக்க கூடாது என்று உறுதியான நம்பிக்கைகள்,விதிகளை கொண்டிருந்தார்.  இந்த முரணை என்னால் இன்று வரை விளங்கி கொள்ளவே முடியவில்லை.மது விலக்கு எனும் மாயமான் மீது அவருக்கு இருந்த நம்பிக்கை மிகுந்த வருத்தத்தையும் ஆச்சரியத்தையும் தந்தது என்றால் மிகை அல்ல .திமுக மற்றும் கலைஞர் மீது அவருக்கிருந்த புரிந்து கொள்ள முடியாத கோவத்துக்கும்,வெறுப்புக்கும் இதுவே முக்கிய காரணம்.  என்ன என்ன என்று மணிக்கணக்கில் தன தரப்பு வாதத்தை வலுவாக எடுத்து வைக்கும் அவர் மதுவிலக்கு என்று வரும் போது வாதிக்கவே தயாராக இல்லை.  அவருக்கு மதுவிலக்கு இந்த முறை கண்டிப்பாக அமுலாகி விடும் என்ற நம்பிக்கை இருந்தது.அனைத்து கட்சிகளும் அதனை ஒரு மாதிரியாக முன் வைத்ததை பெரும் வெற்றியாக பார்த்தார்.அது சாத்தியமே கிடையாது என்று தர்க்கபூர்வமாக வாதிடும் போது அவருக்கு வரும் கோவம் அளவிட முடியாது.  மதுவிலக்கு எப்படிப்பட்ட போலீஸ் ஸ்டேட் ,அத்துமீறல்,அராஜகத்தை உருவாக்கி இருக்கும் என்ற வாதத்தின் நியாயம் அவருக்கு புரிந்திருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.ஆனாலும் அதனையும் மீறி முற்போக்காளராக இருந்தும் அதனை முன் வைத்தார்.அவருக்கு மது மீது இருந்த வெறுப்பே அவரின் சில அதீத கோவம் கொண்ட எழுத்துக்களுக்கு காரணம்.சிலரை ,சில தலைவர்களை அவர் மிக அதிகமாக வெறுக்கவும் காரணம்.  well lived ,well played ,well fought ,well lead ஞானி.சொர்க்கத்துக்கு தான் செல்வீர்கள்.அங்கு இந்துத்வர்கள்,மத வெறியர்கள் ,சாதிவெறியர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.சமத்துவம் இருக்கும் ஆனால் ஒன்று தான் உங்களுக்கு ஆகாது. எல்லாவிதமான மதுவும் அங்கு கட்டாயம்.மதுவிலக்கு தவறு என்று கடவுளாவது உங்களை மாற்றினால் மகிழ்ச்சி  Poovannan Ganapathy  'வீழ்வேன் என்று நினைத்தாயோ' - கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு   பத்திரிகையாளர், எழுத்தாளர், நாடக படைப்பாளர், குறும்பட இயக்குனர், கல்வியாளர், அரசியல் ஆய்வாளர், அரசியல்வாதி என, பல தோற்றங்களில் வாழ்க்கை எனும் அனுபவத்தை சிறப்பித்துக் கொண்டு இருந்தவரும், 'தினமலர்' நாளிதழில், என் சக ஊழியருமான, திரு.ஞாநி சங்கரன் நேற்று முன்தினம் நள்ளிரவில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, நேற்று அதிகாலை இயற்கை எய்தினார்.    வீழ்வேன் என்று நினைத்தாயோ,  கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு,துணை ஆசிரியர்,தினமலர்  திங்கள் தோறும், பள்ளி மாணவர்களுக்காக, 'தினமலர்' வெளியிடும், 'பட்டம்' இணைப்பு மற்றும் வாரம் ஐந்து நாட்கள் வெளியாகும், 'தினமலர்' மாணவர் பதிப்பை உருவாக்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன், நாங்கள் திட்டமிட்டுக் கொண்டு இருந்த நேரத்தில், ஞாநியின் அறிமுகம் கிடைத்தது. அதுவரை அவருடைய எழுத்து மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாக மட்டுமே அவர் எனக்கு பரிச்சயம்.  பள்ளி மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட அவர், எங்கள் முயற்சியில் ஆர்வத்துடன் இணைந்து, வழிகாட்டியாக பொறுப்பேற்றார். மாணவர் இதழுக்கு, 'பட்டம்' என, பெயர் சூட்டியது, பல அடிப்படை கொள்கைகளை வகுத்துத் தந்தது, பல திறமையான நபர்களை அதில் எழுத வைத்தது என, அந்த பணியில் அவருடைய பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது. அதே கால கட்டத்தில், தனது பிற தோற்றங்களையும் உயிரோட்டத்துடன் வைத்துக்கொண்டு இருந்தார்.  இவ்வளவும், கடும் சிறுநீரக கோளாறோடு! அசாத்தியமான உழைப்பாளி!  சில ஆண்டுகளாக உப்பில்லாத சாப்பாடு, அளவான குடிநீர், தொடர்ச்சியான, 'டயாலிசிஸ்'  சிகிச்சை என, அவதிப்பட்டுக்கொண்டு இருந்தும், அதை பொருட்படுத்தாமல் எப்போதும் கலகலவென இருப்பார். அனைத்தையும் நையாண்டி செய்வார்.   வயது 64 ஆகியும், புதிய விஷயங்களை சிறுவன் போல உள்வாங்கிக்கொள்வார். மூன்று நாட்களுக்கு முன், இளைஞர்களுக்கு பிடித்த பாணியில் நாவல்களை எப்படி உருவாக்க வேண்டும் என, பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது, புதிதாக வந்துள்ள, 'பொன்னியின் செல்வன்' படக்கதை பற்றி பேசத் தொடங்கி, 'நீங்க எனக்கு ஒரு சில, யங் அடல்ட்ஸ் கதைகள், காமிக்ஸ் எல்லாம் படிக்கத் தரவேண்டி இருக்கு. தரேன்னு சொன்னீங்க...' என, நினைவூட்டினார்.    உடனே, அவருடைய மொபைல் போனில் ஜப்பான் காமிக்ஸ் படிப்பதற்கான செயலியை பதிவிறக்கம் செய்து கொடுத்து, 'காமிக்ஸ் பட்டியலை, இ - மெயில்ல அனுப்பறேன்' என்றேன். இன்னும் அனுப்பினபாடு இல்லை. அவருடைய வயதினர் எத்தனை பேர் புதிய காமிக்ஸுக்கு அறிமுகமாக தயாராக இருப்பார்கள்!  இப்படி வாழ்க்கை தரும் அனைத்து அனுபவங்களையும் அரவணைக்கும் போக்கு தான், பல துன்பங்கள் / ஏமாற்றங்களுக்கு இடையிலும், அவரை கசப்பான மனிதராக மாற விடாமல், உற்சாகமான மன நிலையில் வைத்திருந்திருக்க வேண்டும். இதுவே, அவரை பார்த்து நான் படித்த பாடம். அவரிடம் பிரகாசித்த இன்னொரு குணாதிசயம், தர்க்கம். கருத்து பன்மையை எதிர்பார்த்தே தர்க்கம் செய்வார். அதனால், அவருடனான தர்க்கங்கள் ஜாலியாக இருக்கும். எதைச் சொன்னாலும் ஒரு முரண்பாடான கருத்தைச் சொல்வார். அவர் நம் கருத்தை ஒப்புக்கொண்டாலும் கூட!  'ஆஹா... இதைப்பற்றி இப்படியும் யோசிக்கலாமா...' என, என்னை மறுபரிசீலனை செய்ய வைப்பார். இறுதியில், அவருடைய கருத்து ஏற்புடையதாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், அந்த தர்க்கம் மூலம் என் சிந்தனை பலப்பட்டு இருக்கும். அந்த பலம் இப்போது விலகிவிட்டதே என, வருந்துகிறேன்.  இந்த தர்க்க குணம், அவருடைய அறிவு / கருத்து சார்ந்த வாழ்க்கை அணுகுமுறையில் இருந்து உருவாகி இருக்க வேண்டும். கருத்துகள், புதிய சிந்தனைகள், புதிய ஆக்கங்களை பற்றியே அவருடைய பேச்சு இருக்கும்.  பிற மனிதர்களை குறை சொல்வது, அவர்களின் சிறு சிறு பிழைகளை உதப்புவது என்பன எல்லாம் அவரிடம் அறவே கிடையாது. அதே போன்றது தான் அவருடைய எழுத்தும்; அழகியலை விட கருத்துக்கும், கதைக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்.   எளிதாக புரியும் படி எழுதுவார். பாரதியாரை போல!  பாரதியை நேசித்தவர், பாரதியை குறிக்கும் முத்திரையாக பிரபலமாக இருக்கும், 'கண்கள்+மீசை' வரைபடத்தை உருவாக்கியவர், பாரதியின்;  தேடிச்சோறு நிதந் தின்று - பலசின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்வாடித் துன்பமிக வுழன்று - பிறர்வாடப் பல செயல்கள் செய்து - நரைகூடி கிழப்பருவமெய்தி - கொடும்கூற்றுக் கிரையென பின்மாயும் - பலவேடிக்கை மனிதரை போலே - நான்வீழ்வே னென்று நினைத் தாயோ?  என்ற கேள்விக்கு பதில் அளிப்பது போல், தன் வாழ்க்கையை வாழ்ந்து சென்றவர் ஞாநி.  அவருடைய கண்கள் தானம் கொடுக்கப்பட்டன;  உடல் மருத்துவக் கல்லுாரிக்கு தானம் கொடுக்கப்பட்டது.  -கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு-துணை ஆசிரியர், 'தினமலர்'    நாம் யாருக்கு விசுவாசமாக இருக்கவேண்டும்? - எஸ் வி வேணுகோபாலன்   தமுஎகச கே கே நகர் கிளையில் நிகழ்ந்த ஒரு கூட்டத்திற்குப் பிறகு அருகேயே டிஸ்கவரி புத்தக நிலைய அரங்கில் நடந்து கொண்டிருந்த நூல் வெளியீட்டுக்குச் சற்று தாமதமாகப் போய்ச் சேர்ந்துவிட முடிந்தது.  யாருடைய எலிகள் நாம் என்கிற தலைப்பில் 384 பக்கங்கள், துளி வெளியீடு என்ற முறையில் அவரது வாழ்க்கை இணை ரேகா அவர்கள் முயற்சியில் வெளிவந்திருக்கும் நூலின்  ரூ 300/-  நான் உள்ளே நுழைகையில், தி இந்து தமிழ் சிறப்புப் பகுதிகளின் பொறுப்பாசிரியர் அரவிந்தன் பேசி நிறைவு செய்திருந்தார். ஞாநி அவர்களது பேச்சை முழுமையாகக் கேட்டேன்.  ஞாநி பேசியவற்றிலிருந்து:    என் வயது 61. எனக்கும் சமஸ் அவர்களுக்கும் வயது வித்தியாசம் 26. நான் இதழியலுக்கு வந்த ஆண்டு 1974. எனக்கு அப்போதைய வயது 20. இந்த விஷயங்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்களுக்கு அப்போது இத்தகைய ஸ்பேஸ் கிடையாது. இப்போது சூழல் உதவுவதில்எழுத ஆட்கள் கிடையாது. அதில் வாராது போல வந்த மாமணி என்பதால்,  சமஸ் பங்களிப்பு போற்றவேண்டியது.  அது இன்னும் தழைக்கவேண்டும்.  படைப்பாளி வேறு, செய்தியாளன் வேறு என்கிற சாதியம் இதழியல் உலகில் நிலவுகிறது.   படைப்பாளி களுக்குள்ளேயே கூட சிறுகதை, கவிதை, நாவல் என்கிற வகைக்கேற்ப சாதிப் பிரிவினைகள். ஆனால், புனைவு படைப்பாளியைப் போலவே செய்திக்கட்டுரை அளிப்பவரும் மதிக்கத் தக்கவர்.   ஆனால் நடைமுறையில் அது நிகழ்வதில்லை. நானே தொலைகாட்சி விவாதங்களுக்குப் போகையில் ஒரு சிறுகதையாளரும் கூட இடம்பெற்றால் அவருக்கு எழுத்தாளர் என்றும், எனக்கு பத்திரிகையாளர் என்றும்தான் பெயரோடு இணைத்துப் போடப்படுகிறது. எழுத்தாளன் என்று செய்திக் கட்டுரையாளரை ஏற்பதில் உடன்பாடு இல்லாத நிலைமை.   இரண்டு நிலையிலும் இயங்கிய உலகப் படைப்பாளி என்று சொல்வதானால், கேப்ரியேல் மார்க்வெஸ் அவர்களைத் தான் சொல்லவேண்டும். ஒருமுறை அவர் சொன்ன பதில் அருமையானது. அவர் சொன்னார், புனைவுகளில் எங்காவது ஓரிடத்தில் வாழ்வியல் உண்மை இருந்துவிடுமானால் அது அதற்குரிய கனத்தோடு மக்களைப் போய்ச்சேரும். அதே நேரம் செய்திக்கட்டுரைகளில் ஒரே ஓர் இடத்தில் தகவல் பொய்யாகப் போய்விடுமானால் அந்தப் படைப்பு அழிந்தே போகும்.     அப்படியான பணிகளில் நெறி பிறழாது, நேர்மை தவறாது இயங்கவேண்டும். இந்த அம்சம் மிகவும் முக்கியமானது.   விகடன் எஸ் எஸ் பாலன் அவர்களுக்கு இந்த நேரத்தில்  அஞ்சலி தெரிவிக்க வேண்டியது அவசியம். அவரது குழுமத்தில் பணியாற்றியது முக்கியமான அனுபவம்.   அவரோடு பணியாற்றுவதில் இருந்த  நல்ல அம்சம் என்னவெனில், அவரோடு கருத்து மாறுபாடு கொள்ளலாம். வாதிடவும் செயலாம். உங்கள் கருத்து தவறு என்று அவரிடம் சொல்ல முடியும். உங்கள் கருத்து முட்டாள்தனமானது என்று கூட சொல்லலாம். அவர் அதையெல்லாம் பொருட்படுத்தியதில்லை. ஆனால் அவர் சொல்வார், என்னை 'கன்வின்ஸ்' பண்ணு! அதற்கு நேரம் அவகாசம் அவரே கொடுப்பார். நாளைக்கு நாலு மணிக்கு நாம உட்கார்ந்து பேசுவோம் என்பார். மறுநாள் அவர் தனது கருத்துக்கு ஏற்ற ஆதாரங்களோடு வந்து விடுவார். நீங்கள் உங்கள் தரப்புக்கு நியாயங்கள் என்ன உண்டோ அவற்றோடு போய் உட்கார்ந்து வாதிட வேண்டும்.   பல பிரச்சனைகளில் நான் அவரோடு இப்படி தர்க்கம் செய்திருக்கிறேன். அணு ஆற்றல் பிரச்சனையில் நான் அவரோடு மாறுபட்டேன். அவர் அது அவசியம் என்றார். அணு குண்டு மற்றுமல்ல அணு ஆற்றல் கூட ஆபத்தானதுதான் என்று நான் அவரோடு முரண்பட்டேன். அவர் ஒதுக்கிய நேரத்தில் பேச்சு இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் என்று தொடர்ந்தது. அவர் பொறுமையோடு பேசிக் கொண்டிருந்தார். கேட்டுக் கொண்டிருந்தார். பின்னர், சரி, ஜூவியில் முப்பது  வாரத் தொடர் ஒன்றை நீ எழுது என்றார். அதில் உன் வாதங்களை அடுக்கு என்றும் இடம் ஒதுக்கத் தயாரானார். அவரிடம் என்ன நிபந்தனை என்றால், முப்பது வாரம் என்ன எழுதப் போகிறோம் என்பதற்கான synopsis நீங்கள் முதலிலேயே எழுதிக் கொடுத்துவிட வேண்டும்.     நான் 32 வாரத்துக்கு எழுதிக் கொடுத்தேன். ஆனால் எனக்கு இதழ் பொறுப்பு என்பதால் வேறு வேறு கமிட்மெண்ட்ஸ் இருப்பதால் எழுத இயலாது என்றும் அவரிடம் தெரிவித்தேன். ஆர்கியு பண்ணிட்டு எழுதல என்றால் என்ன அர்த்தம் என்றார். பிறகு ஏ எஸ் பன்னீர்செல்வம் அவர்களை கேட்டுக் கொண்டேன். அவர் எழுத அந்தத் தொடர் ஜூவியில் வெளியானது.   வாசன் காலத்தில் தொடங்கிய ஜெமினி ஸ்டூடியோ, திரைப்பட உலகம் இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், பாலன் அவர்கள் இதயம் பத்திரிகை உலகத்தில் இருந்தது.   நான் பல நிறுவனங்களில் பணியாற்றியவன். இந்தியன் எக்ஸ்பிரசில் இருந்தேன். பின்னர் விகடன் நிறுவனத்தில் ஜூவி பொறுப்பில், ஜூனியர் போஸ்ட் பொறுப்பில், சுட்டி விகடன் பொறுப்பில் என பணியாற்றியவன். எங்கும் பணியில் இல்லாதும் பழகி இருக்கிறேன்.   அதனால்தான் அரவிந்தன், சமஸ் போன்றவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, நாம் யாருக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்பதில் தெளிவு இருக்கவேண்டும்.   வாசகருக்குச் சொல்லவேண்டிய உண்மைகளைச் சொல்பவனாக அவர்களுக்கே நமது விசுவாசம் - நிறுவனத்திற்கு அல்ல. அதற்காக, நிறுவனத்தை betray செய்யவேண்டும் என்றல்ல. நமது எழுத்தின் நேர்மை நம்மைக்  கறாராக வழிநடத்தும்.                                                                                                                      படத்திறப்பு விழா  - மணா   ‘’ என்னோட ஓட்டு உங்களுக்கு இல்லை’’  – நேரடியாக ஸ்டாலினிடம் சொன்ன ஞாநி!  ‘சமீபத்தில் மறைந்த பத்திரிகையாளர் ஞாநிக்கான படத்திறப்பு விழா சென்னை நிருபர்கள் சங்கத்தில் இன்று ( 24.1.18) மாலை நடந்தது .  நிறையப் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஞாநியின் உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர்.  1955 ல் ஞாநி சங்கரனின் தந்தை வேம்புசாமியால் துவக்கப்பட்ட இந்தச் சங்கத்தில் ஒரு சமயத்தில் ஞாநியும் செயலாளராக இயங்கியிருக்கிற தகவலைச் சொன்னார் சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவரான ரங்கராஜ்.  பல கட்சித்தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசப்பட்டவற்றிலிருந்து சில பகுதிகள் :  காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவரான கோபண்ணா பேசும் போது ‘’ ஞாநி எழுதிய ‘’ ஓ பக்கங்கள்’’ பத்தியில் அவர் அரசியல் கட்சிகளை விமர்சித்தார். சமூக அவலத்தை விமர்சித்தார். அவருடைய பத்தி வார இதழ்களில் வரும்போது நாங்கள் ஆவலுடன் வாசிப்போம்.  அவருடன் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். சில கருத்துக்களில் என்னுடன் உடன்படுவார். பல கருத்துகளில் முரண்படுவார். அவருக்கான பார்வையை அவர் இறுதி வரை மாற்றிக் கொள்ளவே இல்லை’’ என்றார்.  பா.ம.க சட்டப்பிரிவுத் தலைவரான பாலு ‘’ ஞாநி எந்தக் கட்சியையும் விமர்சிக்கத் தவறவில்லை. பா.ம.க வையும் அவர் விமர்சித்திருக்கிறார். அவருடைய விமர்சனத்தில் இருந்தது சமூகத்துக்கான பார்வை. யாருக்கும் அஞ்சாத துணிச்சலான பார்வை.  அவருடைய ‘’ ஓ.. பக்கங்களில்’’ இருந்த நேர்மைக்கும், துணிவுக்கும் வாரிசாக இங்குள்ள பத்திரிகையாளர்கள் யார் வாரிசாக வரப் போகிறீர்கள்?’’ – என்று முன்னிருந்த பத்திரிகையாளர்களைச் சுட்டிக்காட்டிக் கேட்டார் பாலு.  ‘’ ஞாநியுடன் உடன்பட்டாலும், முரண்பட்டாலும் அவருடைய எழுத்து விளிம்புநிலை மக்களுக்கானதாகத் தானிருந்தது. ஒடுக்குமுறைக்கும், அதிகாரச் செருக்கிற்கும் எதிரானதாகத் தானிருந்தது. இறுதிவரை அவருடைய தனித்த குரல் எந்தச் சார்புகளற்று ஒலித்துக் கொண்டிருந்தது. அந்தத் தோழருக்கு செவ்வணக்கத்தை விடுதலைச் சிறுத்தைகள் செலுத்துகிறது’’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் பேசினார்.  ( 2014 ல் ஞாநிக்கு விடுதலைச் சிறுத்தைகள் – அயோத்தி தாசர் விருது கொடுத்தபோது கூட மிகுந்த தயக்கத்துக்குப் பிறகே வாங்கிக் கொள்ளச் சம்மதித்தார் என்றார் விடுலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான வன்னியரசு நேர்ப்பேச்சில்!)  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரான ஆர்.நல்லகண்ணு  ’’ .ஞாநியின் எழுத்துகளில் சமரசம் செய்து கொண்டவர் அல்ல. அவருடைய பார்வையை அச்சமில்லாமல் பொதுவெளியில் முன் வைத்திருக்கிறார். அவர் மறைவதற்கு முன்னால் கூட வைரமுத்து- ஆண்டாள் பிரச்சினை தொடர்பாகத் தன்னுடைய கருத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இன்று வரை அது தொடர்பான கருத்துக்கள் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  விமர்சனத்திற்கு ஆளான கட்டுரையில் சொல்லப்பட்ட ‘’ தேவதாசி’’ என்கிற சொல்லை வைத்துக் கொண்டு சிலர் தூண்டிவிடுகிறார்கள். சவால் விடுகிறார்கள். தேவதாசி முறையைக் கோவிலை ஒட்டி வளர்த்துக் காப்பாற்றியது யார்? எந்த சமூகம் வளர்த்தது?  தமிழகச் சட்டமன்றத்திலேயே சத்தியமூர்த்தி தேவதாசி முறைக்கு ஆதரவாகப் பேசியதை மறந்துவிட முடியுமா? இதையெல்லாம் தான் ஞாநி வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்’’ என்றார்.  நீதியரசரான சந்துரு ஞாநியுடன் இணைந்து மண்டல் கமிஷன் தொடர்பான சிறு வெளியீட்டை 25 ஆயிரம் பிரதிகள் வரை அச்சடித்துக் கல்லூரி, பள்ளி வாசல்களில் சென்று விநியோகித்த அனுபவங்களைச் சுருக்கமாகப் பகிர்ந்து கொண்டார்.  நிறைவாக ஞாநியின் படத்தைத் திறந்து வைத்துப் பேசிய தி.மு.க செயல் தலைவரான மு.க.ஸ்டாலின்  ‘’ ஞாநி அரசியல் என்று வரும்போது பல கட்சிகளை விமர்சித்திருக்கிறார். குறிப்பாக தி.மு.க.வை அதிகமாகவே விமர்சித்திருக்கிறார். அதெல்லாம் பண்பட்ட, நாகரீகமான, எங்களை மறுபரிசீலனை செய்யத் தூண்டுகிற விமர்சனங்களாகத் தானிருந்தன.  எதையும் வெளிபடையாகச் சொல்ல ஞாநி தயங்கியதே இல்லை.  1984 ஆம் ஆண்டு. தேர்தல் சமயம். நான் ஆயிரம் விளக்குத் தொகுதியின் தி.மு.க வேட்பாளர்.  ஞாநி அதே தொகுதியின் வாக்காளர்.  வாக்குக் கேட்டுப் போகிறபோது ஞாநி குடியிருந்த பீட்டர்ஸ் காலனிக்குப் போனேன். பல பத்திரிகையாளர்களைச் சந்தித்தேன். வாக்குக் கேட்டேன். ஞாநியையும் சந்தித்தேன். பேசிக் கொண்டிருந்தோம். காபியும் அளித்தார். இறுதியில் என்னிடம் சொன்னார்.  ‘’ என்னுடைய ஓட்டு உங்களுக்கு இல்லை’’  அடுத்து 1989 ஆம் ஆண்டு தேர்தல் சமயம். அவருடைய வீட்டுக்குப் போனேன். பேசினோம்.  அப்போது அரசியல் சூழ்நிலை மாறியிருந்தது.  அன்று ஞாநி சொன்னார்.  ‘’ உங்களுக்குத் தான் ஓட்டுப் போடுவேன்’’  84 ல் தோல்வியடைந்த நான் 89 ஆம் ஆண்டில் வெற்றிபெற்றேன்.  மண்டல் கமிஷன் அறிக்கை வெளிவந்த சமயம். வி.பி. சிங் தமிழகத்திற்கு அடிக்கடி வந்தார். அப்போது சிங்குடன் சென்று அவருடைய கூட்டங்களில் பேச்சை மொழிபெயர்த்தவர் ஞாநி தான்.  2014 ஆம் ஆண்டு. ஞாநியிடம் பேச வேண்டும் என்று தோன்றியது.  என்னுடைய வீட்டிற்கு வந்திருந்தார்.  இரண்டு மணி நேரம் வரை பேசிக் கொண்டிருந்தோம். என்னுடைய வளர்ச்சிக்கான பல விஷயங்களைப் பற்றி விரிவாகப் பேசிக் கொண்டிருந்தார் ஞாநி.  அவருடைய மறைவு பெரிய இழப்பு’’ என்றார் ஸ்டாலின்.  விழா துவங்கியதும் - ஞாநியின் மகன் மனுஷ் நந்தனைப் பேச அழைத்தார்கள்.  முன்னணி ஒளிப்பதிவாளராக இருக்கும் மனுஷ்  பேசியது ஐந்து நிமிடங்கள் தானிருக்கும்.  அப்படியே ஞாநியின் குரலைக் கொஞ்சம் சுருதி குறைத்துக் கேட்பதைப் போலவே இருந்தது. காலம் சிலருடைய குரலை எப்படியெல்லாம் புதுப்பித்துத் தருகிறது!    கடந்த 25 வருடங்களில் தமிழகத்தில் உள்ள முக்கியப் பிரபல்யங்கள் பலரையும் நேரிடையாகச் சந்தித்துள்ளேன். நெருக்கமாகப் பழகும் வாய்ப்பும் அமைந்து இருந்தது. இன்று வரையிலும் பலருடனும் அந்தத் தொடர்பு இருந்து வருகின்றது. ஆனால் என் வாழ்க்கையில் ஞாநி என்பவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர் போலவே என்னுடன் இருந்தார். இவருடன் பழகிய அத்தனை பேர்களும் இதனைத் தவறாமல் குறிப்பிடுகின்றார். புத்தகங்கள் அதிகம் வாசிக்காத என் சகோதரிகள், உறவினர்கள் என அத்தனை பேர்களும் ஞாநி இறந்த தினம் அன்று என்னிடம் தொடர்ச்சியாக விசாரித்துத் தங்கள் வருத்தங்களைத் தெரிவித்தனர். அந்த அளவுக்குத் தன் தனிப்பட்ட குணநலனால் எங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கவர்ந்தவர். நிச்சயம் இவர் நினைவுகள் எதிர்காலத்தில் பலரின் பார்வைக்குப் பட வேண்டும் என்பதற்காக இந்த மின் நூலை தயாரித்தேன். என் ஆழ்ந்த அஞ்சலிகள்.   உங்கள் கருத்துக்களை அவசியம் இந்த மின் அஞ்சல் முகவரி வாயிலாகத் தெரிவித்தால் மகிழ்ச்சியடைவேன்.   நன்றி.   ஜோதிஜி திருப்பூர்   01.03.2018   powerjothig@yahoo.com