[] [cover image] ஜோசப் ஸ்டாலின் - வாழ்க்கை வரலாறு நன்மாறன் என் FreeTamilEbooks.com NonCommercial-ShareAlike 4.0 International ஜோசப் ஸ்டாலின் - வாழ்க்கை வரலாறு 1. ஜோசப் ஸ்டாலின் - வாழ்க்கை வரலாறு 2. ஜோசப் ஸ்டாலின் – 1 3. ஜோசப் ஸ்டாலின் – 2 4. ஜோசப் ஸ்டாலின் - 3 5. ஜோசப் ஸ்டாலின் – 4 6. ஜோசப் ஸ்டாலின் – 5 ஜோசப் ஸ்டாலின் - வாழ்க்கை வரலாறு ஜோசப் ஸ்டாலின் - வாழ்க்கை வரலாறு   நன்மாறன் என்   தமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   நன்றி - மார்க்சிஸ்ட் மாத இதழ் http://marxist.tncpim.org   உரிமை : NonCommercial-ShareAlike 4.0 International கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - கலீல் ஜாகீர் - jskcse4@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/JosephStalin} ஜோசப் ஸ்டாலின் – 1 “மீசையை முறுக்கு விழித்த விழியில்மேலே ஏற்று மேதினிக் கொளி செய்” என்றார் பாவேந்தர் பாரதி தாசன். இந்த வரிகளுக்கு ஏற்ப முக வடிவம் தேடினால் தோழர் ஸ்டாலின் அவர்களின் திரு உருவம் முன் நிற்கும். அப்பெருமகனார் குறித்து இக்கட்டுரை வெளிவருகிறது. ஐரோப்பாக் கண்டத்தில் கருங்கடல் உண்டு. காஸ்பியன் கடலும் உண்டு. இரண்டிற்கும் இடையில் உள்ள பகுதி தான் ‘காக்கேசியா’ என்பது இதன் தலைநகர் “டிப்ளிஸ்”, இதற்கு அருகில் உள்ள குக்கிராமம் தான் தோழர் ஸ்டாலின் அவர்களது முன்னோர் வசித்த கிராமம். தந்தை பெயர் விசரியோன். தாத்தா பெயர் ஐவன். தாத்தா பண்ணை அடிமை. தந்தை செருப்பு தைக்கும் தொழிலாளி. பண்ணை அடிமை என்றால் தற்போது புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். நில உடமையாளர்கள் தமது சொத்துக்களைக் கூறும்போது இவ்வளவு நிலம் உண்டு. இவ்வளவு மாடுகள் உண்டு, ஆடுகள் உண்டு என்பது போல் இவ்வளவு ஆட்கள் என்னிடம் அடிமைகளாக உள்ளனர் என்றும் கூறுவர். ஆடுகளையும் மாடுகளையும் விற்பது போல் அடிமைகளாக உள்ள மனிதர்களையும் விற்பதும் வாங்குவதும் உண்டு. இந்த நிலையில் படிப்படியான மாற்றம் வந்தது. இக்காலப் பகுதி நிலப்பிரபுத்துவ சமுதாயம் என்றும் அதில் நிலவிய பண்ணை அடிமைச் சமுதாயம் என்றும் அழைக்கப்பட்டது. ஐரோப்பாக் கண்டத்தில் புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் மூலதனம் சிலரிடம் குவியத் துவங்கியதும் முதலாளித்துவ வளர்ச்சிக்கு உதவியது. நிலப்பிரபுத்துவ அமைப்பிற்கும் பண்ணை அடிமை முறைக்கும் எதிரான குரலும் ஓங்கி ஒலித்தது. அடிமைகள் மத்தியிலும் தாங்களும் மனிதர்களே என்ற உணர்வும் வலுவடைந்தது. பண்ணை அடிமை முறை படிப்படியாகத் தகர்ந்தது. புதிய தொழிற்சாலைகள் தோன்றின. அவரவர் தமக்கு வாய்ப்புள்ள இடங்களை நோக்கிச் சென்றனர். அன்று இளைஞராக இருந்த ஸ்டாலினின் தந்தை தமக்குத் தெரிந்த செருப்புத் தைக்கும் தொழிலை மேற்கொள்ள தமது கிராமத்தை விட்டு காரி என்னும் ஊரை அடைந்தார். அவர்கள் பேசிய மொழி ஜார்ஜிய மொழி. இனம் ஜார்ஜிய இனம். காரி என்னும் ஜார்ஜியச் சொல்லுக்கு குன்று என்று பொருள். இப்பகுதியில் மக்களிடம் நேரடியாக செருப்புத் தைத்துப் பிழைத்து வந்த ஸ்டாலினின் தந்தை மிகவும் சிரமப்பட்டார். தொழில் சரியாக நடக்கவில்லை. மக்கள் தொழிற்சாலையில் தயாராகும் செருப்புக்களையே விரும்பினர். ஸ்டாலினின் தந்தையும் தாம் சுயமாகத் தைத்து விற்பதை விட ஏதேனும் ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலைக்குச் சேர முடிவு செய்தார். காக்கேசியாவின் தலைநகர் ஆக இருந்த “டிப்ளிஸ்” என்னும் நகரை அடைந்தார். அங்கு இருந்த தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். இதே போன்று தான் பலரும் மாறினர். தனி ஒரு நிலப்பிரபுவிடம் இதுகாறும் உணவுக்காக அடிமையாக இருந்த நிலைமை மாறியது. தற்போது பணம் படைத்த முதலாளிகளிடம் கூலி பெறும் அடிமைகளாக மாறினர். உணவுக்கான அடிமை; தான் விரும்பியபடி எங்கும் செல்ல முடியாது. ஆனால், கூலி பெறும் அடிமை தனது உழைப்பை விற்க எங்கும் செல்லலாம். முன்பு அவன் பெயர் அடிமை. தற்போது தொழிலாளி அடிமைத் தனம் நீடித்தது. உரிமையாளர்களின் அணுகுமுறையில் மட்டும் மாறுதல் இருந்தது. ஸ்டாலினின் தந்தை பிறரைப் போன்றே தானும் மாறினார். வேலைச்சுமை அதிகம். கூலிப் பணம் குறைவு. வாழ்க்கையை ஈடுசெய்ய முடியவில்லை. ஸ்டாலினின் தாய் குணவதி. பொறுமைசாலி அவர் பெயர் “எக்காட்டிரினா” குடும்பச் சுமையைத் தாங்க சலவைத் தொழிலை மேற்கொண்டார். அண்டை வீடுகளில் துணிகளை வாங்கி வெளுத்துத் தருவார். இதுபோக வீட்டு வேலைகளும் செய்வார். அதற்கான கூலியையும் பெற்றுக் கொள்வார். செருப்புத் தைக்கும் தொழிலாளி தந்தை. சலவை செய்வதும் வீட்டு வேலைகள் செய்வதுமான தாய் இவ்விருவருக்கும் நான்காவது மகனாகப் பிறந்தவர் தான் நமது தலைவர் உலகத் தொழிலாளி வர்க்கத்தின் போர்ப்படை நாயகர் தோழர் ஸ்டாலின். 1879 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 21 ஆம் நாள் தோழர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள். ஏற்கனவே, இவருக்கு முன்பு பிறந்த மூன்று குழந்தைகளும் இறந்துவிட்டன. இச்சோகத்தின் மத்தியில் பிறந்த மகனை நன்கு கவனித்தனர். “ஜோசப் விசரியானோவிச்” என்று பெயரிட்டனர். விசரியான் என்பது ஸ்டாலினின் தந்தை பெயர். விசரியான் மகன் ஜோசப் என்பது இதன் பொருள். ஸ்டாலினின் குழந்தைப் பருவம் மழலைத் தனத்துடன் கழிந்தது. அவர் பிறந்த பகுதி மலை சார்ந்த பகுதி. அதன் சிகரங்களில் இருந்து ஆறுகள் தோன்றிப் பாய்ந்து வந்தன. பனிக்கட்டி படர்ந்த ஆறுகளாக இருந்தன. மகாகவி பாரதி பாடினாரே ‘வெள்ளிப் பனி மலை’ என்று அப்படிப்பட்ட பனிமலைச் சிகரங்கள் அவரது பார்வையை விசாலம் ஆக்கின. கூர்மைப்படுத்தின. ஸ்டாலினை கவர்ந்த கதை குழந்தைக் கதைகளும் அவரது செவியில் விழுந்து இதயம் நுழைந்து பக்குவப்படுத்தின. ஸ்டாலின் வசித்த பகுதி ஜார்ஜியப் பகுதி. மொழி ஜார்ஜிய மொழி. ஆயினும் கிரேக்க மொழிக் கதைகள் அப்பகுதியில் உலவி வந்தன. அவற்றில் ஒன்று பிரமித்தீயூஸ் பற்றிய கதை. பிரமித் தீயூஸ் என்பவன் மாவீரன். மனிதர்களின் நன்மைக்காக தேவலோகம் சென்று தீயைக் கொண்டு வர முயன்றவன். இதனால் தேவர்களின் கடவுளால் தண்டிக்கப்பட்டான். தண்டனை கடுமையானது. ஆனால் பிரமித்தீயூஸ் இதனை மகிழ்ச்சியுடன் ஏற்கிறான். தான் துன்பமடைந்தாலும் மக்கள் இன்பமடைவதை எண்ணி மகிழ்கிறான். இந்தக் கதை ஸ்டாலினை மிகவும் ஈர்த்தது. பிரமித்தீயூஸ் போன்றே தானும் பிறர் நன்மைக்காக வாழ வேண்டும். எத்தகைய இன்னல் நேர்ந்தாலும் ஏற்க வேண்டும் என்று எண்ணம் கொண்டார். முதல் மாணவன் ‘காரி’ என்னும் அவ்வூரில் இருந்த பள்ளி கிறித்துவ மதப்புரோகிதப் பள்ளி. பள்ளியில் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் பலபேர் பயின்றனர். மாணவர்கள் தமக்குள் ஒவ்வொருவர் குடும்பம் பற்றியும் விசாரிப்பதும் கலந்து கொள்வதும் உண்டு. தோழர் ஸ்டாலின் குடும்பம் பற்றி அறிந்ததும் சற்று ஏற்றத் தாழ்வாகவே நடந்து கொண்டனர். ஆயினும் ஸ்டாலின் சோர்ந்துவிடவில்லை. கவனமாகப் பயின்றார். தரமான மாணாக்கனாகத் திகழ்ந்தார். விளையாட்டு வீரராக இருந்தார். சிறந்த குரல் வளத்துடன் நல்ல பாடகர் ஆகத் திகழ்ந்தார். இவையனைத்தும் அப்பள்ளியில் அவரை முன்னிறுத்தின. தந்தை மறைவு 1890 ஆம் ஆண்டு தந்தை மறைந்தார். அப்போது தோழர் ஸ்டாலின் வயது பத்து தான் ஆகியிருந்தது. குடும்ப வருவாய் குறைந்தது. தாயும் தந்தையும் சேர்ந்து பாடுபட்ட போதே கைக்கும் வாய்க்கும் போதாமல் தான் வாழ நேர்ந்தது. தற்போது அதிலும் குறைவு நேர்ந்த போது என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. படிப்பை தொடர்வதா? விடுவதா? என்பது முன்னின்றது. பத்து வயதுப் பாலகனுக்கு எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. தாய் ஊக்கப்படுத்தினார். படிப்பில் குறை வைக்காதே. முன்னிலும் கூடுதலாக நான் பாடுபடுகிறேன். தொடர்ந்து படி என்றார். ஸ்டாலினும் இன்னலை இதயத்தில் தாங்கிக் கல்வியில் கருத்தை ஊன்றி நன் மாணாக்கனாகப் பயிலத் துவங்கினார். கவலையும் இருந்தது. கல்வியும் தொடர்ந்தது. மூத்த மாணவர்கள் ஸ்டாலின் படித்த பள்ளியில் அறிவியலுக்கு விரோதமான மதக்கல்விக்கு முக்கியத்தும் அளிக்கப்பட்டது. அதுவே ஆதிக்கம் செலுத்தியது. உயிர்கள் தாமாகத் தோன்றியவை அல்ல. படைக்கப்பட்டவை என்று கற்பிக்கப்பட்டது. ‘டார்வின்’ என்னும் அறிஞர், உயிர்களின் தோற்றம் வளர்ச்சி பற்றிய பரிணமாக் கோட்பாட்டை வெளியிட்டிருந்தார். ஸ்டாலினை விட மூத்த மாணவர்கள் மத்தியில் இக்கருத்திற்கு வரவேற்பு இருந்தது. ஸ்டாலினுக்கும் இக்கருத்து உடன்பாடானதாக இருந்தது. இரகசியமாக இதனைப் படித்து சக மாணவர்களுக்கும் விளக்கி வந்தார். மார்க்சியக் கருத்துக்களும் பரவி வந்தன. ஸ்டாலின் மனத்திலும் அது வேரூன்றத் துவங்கியது. “ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி” என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளுக்கு ஏற்ப ஸ்டாலின் அவர்களது வளர்ச்சி இருந்தது. ஏட்டுப் படிப்போடு நாட்டு நடப்புகளின் மீதும் அக்கறை இருந்தது. அன்றைய ருஷ்யாவை ஆண்டு வந்த ஜார் மன்னன் ருஷ்ய மொழிக்கு மட்டுமே முன்னுரிமை அளித்தான். ருஷ்யாவுடன் இணைந்திருந்த மற்றைய மக்களின் மொழிகளைப் புறக்கணித்தான். ஸ்டாலின் வாழ்ந்த ஜார்ஜிய மக்களின் ஜார்ஜிய மொழி புறக்கணிக்கப்பட்டது. இதனை எதிர்த்த ஜார்ஜிய மாணவர்கள் மொழிப் போரில் ஈடுபட்டனர். ஸ்டாலின் மனதிலும் இது நியாயம் என்று தோன்றியது. ஜோசப் கோபா ஆகிறார் அக்காலத்தில் மக்களிடம் உலவி வந்த கதை மாந்தர்களில் ‘கோபா’ என்னும் பெயர் கொண்ட தலைவன் வீரம், விவேகம், துன்பங்களை தாங்கும் திறம், மக்கள் படும் துயரங்களைப் போக்க முயலும் குணம், அதனால் விளையும் துன்பங்களைத் தாங்கி வெற்றி கொள்ளும் உரம் ஆகியவற்றைக் கொண்டு படைக்கப்பட்டிருந்தார். தோல்வியறியா வீரனாகவும் சித்தரிக்கப்பட்டான். துவக்கத்தில் பிரமித்தீயுஸ் கதை பற்றிக் குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? தற்போது கோபா என்ற கதை மாந்தன் போல் தானும் விளங்க விரும்பினார். இனிமேல் என் பெயர் ‘கோபா’ என்றார். மற்ற மாணவர்களும் ஏற்றனர். ஆனால் பள்ளியில் பதிவேடுகளில் ஜோசப் என்ற பெயரே இருந்தது. கல்லூரியில் காரியில் இருந்த பள்ளியில் படிப்பு முடிந்தது. முதல் மாணவராகத் தேறினார். இதனால் ஊக்கத் தொகையும் கிடைத்தது. தாய் தமது மகன் கல்லூரியில் சேர்ந்து பயில விரும்பினார். அன்றைய காக்கேசியாவின் தலைநகராக இருந்த டிப்ளிஸ் என்னும் நகரில் தான் கல்லூரி இருந்தது. ஸ்டாலின் அங்கு சேர்ந்தார். ஆசிரியர் அனைவரும் பாதிரியார்கள். மத நூல்களே பாட நூல்கள். கணிதம் மற்றும் ரஷ்ய, கிரேக்க, லத்தீன் இலக்கிய வரலாறுகளும் கற்பிக்கப்பட்டன. இம்மையை மறந்து மறுமையைப் போதிப்பதே அடிப்படைப் பாடம். மத குருமார்களை உருவாக்குவதே கல்லூரியின் நோக்கம். இவ்வுலக மாந்தரின் துன்பங்கள் ஆண்டவனால் அளிக்கப்படுபவை. அதை சகிப்பது நம் கடமை. அதற்குத் தேவை பொறுமை. இப்பிறவியை இப்படியே கழித்து விட்டால் அடுத்த பிறவியில் இன்பம் இருக்கும். சொர்க்க லோகத்தில் இடம் கிடைக்கும். இந்த லோகத்தில் சோகம் இருக்கலாம். பரலோகத்தில் சுகம் கிடைக்கும் என்றனர். ஸ்டாலின் இதனை ஏற்கவில்லை. வேறு வழியின்றிப் படித்தார். சகித்தார். டிப்ஸிஸ் நகரைச் சுற்றிலும் இருந்த பாட்டூம், பார்க்கூ ஆகிய நகரங்களிலும் டிப்ளிஸ் நகரிலும் தொழிற்சாலைகள் இருந்தன. கொடும் சுரண்டல் இருந்தது. இதனை எதிர்த்து தொழிலாளர் போராட்டமும் நடந்து கொண்டு இருந்தது. அன்றைய ஜார் அரசு இதனை முறையாகத் தீர்ப்பதற்குப் பதிலாக கடுமையாக அடக்கியது. இச்செய்திகளை அறிந்த மாணவர்கள் தொழிலாளர்களை ஆதரித்தனர். ஆண்டவனின் பிரதிநிதி என்று வர்ணிக்கப்பட்ட ஜார் அரசின் அடக்குமுறையை எதிர்த்தனர். ஸ்டாலினை விட மூத்த மாணவர்கள் இதில் முன்னின்றனர். அவர்களில் ஒருவர் ‘லாடோ’ என்பவர். இம்மாணவரை ஸ்டாலின் மிகவும் மதித்தார். இவர் மூலம் தொழிலாளி வர்க்கத்தின் மீது பாசம் கொண்டார். தொழிலாளர் துயர்களைக்களையும் விமோசன சித்தாந்தமாகிய மார்க்சிய சித்தாந்தத்தைக் கற்றார். தோழர் லாடோவையும் சேர்த்து அன்றைய மாணவர்களில் எண்பத்து ஒரு மாணவர்களை கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியது. மாணவர்கள் மத்தியில் அச்சம் கலந்த அமைதி தோன்றியது. இது நீடிக்கவில்லை. தோழர் ஸ்டாலின் தொடர்ந்து மார்க்சீயக் கல்வியில் ஆர்வம் கொண்டார். மாமேதை மார்க்ஸ் எழுதிய “மூலதனம்” எனும் நூலை இரகசியமாகப் பெற்று கையினால் எழுதி சக மாணவர்களுக்குப் படிக்கச் கொடுத்தார். தானும் பயின்றார். “கற்க கசடற கற்பவை” என்னும் குறளுக்கேற்ப ஐயம் திரிபு அறப் பயின்றார். மார்க்ஸ் ஏங்கெல்ஸ் லெனின் ஆகிய ஆசான்களின் படைப்புகளைப் படித்து சக மாணவர்களுக்கும் கற்பித்தார். முற்போக்கு கலை இலக்கியங்களைக் கற்று கவிதை புனைந்தார். டிப்ளிஸ் நகர நாளேடுகள் அதனை வெளியிட்டன. பாடகர் குழு அமைத்தார். 1894 ஆம் ஆண்டில் செப்டம்பர் முதல் தேதியில் இருந்து 1899 ஜூலை 29 முடிய இக்கல்லூரியில் தோழர் ஸ்டாலின் அவர்களின் கல்வியும் களமும் அமைந்திருந்தது. ஏற்கனவே இக்கல்லூரியில் இருந்து ஸ்டாலின் அவர்களின் முன்னோடி லாடோ அவர்களும் மற்றயை மாணவர்களும் நீக்கப்பட்டதைப் பார்த்தோம். அது நிகழ்ந்த காலம் 1894 ஆம் ஆண்டு அதோடு பிரச்சினை முடிந்ததாக நிர்வாகம் கருதியது. ஆனால் லாடோ அவர்களிடம் சிறிது காலம் பழகினாலும் அவரது வழிகாட்டலுடன் ஸ்டாலின் செயல்பட்டதும் தொடர்ந்து செயல்பட்டதும் நிர்வாகத்திற்குத் தெரிய வந்தது. 1899 ஜூலை 29ல் ஸ்டாலினை கல்லூரியை விட்டு நீக்கியது. அமைப்புகளில் கல்லூரியை விட்டு நீக்கப்படும் முன் கல்லூரிக்குள் மார்க்சீய வாசகர் வட்டம் அமைத்து தலைமையேற்றார். சக மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். 1896-97 ஆம் ஆண்டுகளில் இது நிகழ்ந்தது. 1898 ஆம் ஆண்டு ஓர் இரகசிய சோசலிச அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் பெயர் மேஸ்ஸேம்டேசி. தோழர் லெனின் அவர்களது கட்டுரைகளை விரும்பிப் படித்தார். அவரைச் சந்திக்க விரும்பினார். உழைக்கும் மக்களின் கூட்டங்களில் பங்கு கொண்டார். பிரசுரங்கள் எழுதினார். வேலைநிறுத்தங்களுக்கு அணி திரட்டினார். அதேசமயம் அவர்களுக்கு கற்றுக் கொடுத்ததுடன் தாமும் அவர்களிடம் கற்றுக் கொண்டார். அவர்களிடம் இருந்து ஞானஸ்தானம் பெற்றேன் என்றார். தொழிலாளர்களைத் தமது ஞான ஆசிரியர்களாக கருதினார். இக்காலம் முழுவதும் தோழர் ஸ்டாலின் கோபா என்றே அழைக்கப்பட்டார். வாசகர்கள் குழப்பம் அடைய வேண்டாம். ஸ்டாலின் என்கிறோம். ஜோசப் என்கிறோம். கோபா என்கிறோம். என்ன இது? என்று எண்ணத் தோன்றும். ஜோசப் என்பது பெற்றோர் இட்ட பெயர். மாணவப் பருவத்தில் அவர் விரும்பிய பெயர் ‘கோபா’ பிற்காலத்தில் அவருக்குப் பிறர் இட்ட பெயர் தான் ஸ்டாலின். இது குறித்துப் பின்னர் பார்க்கலாம். அதுவரை புரிதலுக்காக ஸ்டாலின் என்ற பெயரைப் பயன்படுத்திக் கொள்ளலாம். லெனின் மீது ஈர்ப்பு ஜார் அரசை வீழ்த்த வேண்டும். அது தனி மனிதனால் முடியாது. அமைப்பு வேண்டும். அவ்வமைப்பு புரட்சிகர மார்க்சீய சித்தாந்தத்தைப் புரிந்து உணர்ந்திருக்க வேண்டும். தொழிலாளி வர்க்கம்தான் முன்னணிப் படையாக இருக்க வேண்டும். இவ்வியக்கம் தனது படைவரிசையில் விவசாயி மக்களை இணைத்துச் செல்ல வேண்டும். இவற்றில் உள்ள ஆடவர் மட்டுமின்றி மகளிரும் திரட்டப்பட வேண்டும். ஜார் அரசாட்சியினால் ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் மாணவர், வாலிபர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரையும் திரட்டும் கட்சியை வர்க்க உணர்வு பெற்ற கட்சியாக வளர்க்க வேண்டும் என்று தோழர் லெனின் போராடி வந்தார். இக்கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்தது. தோழர் ஸ்டாலின் ஆதரவாளர் வரிசையில் முன்னின்றார். தோழர் ஸ்டாலின் அங்கம் பெற்றிருந்த அமைப்பில் பொருளாதார கோரிக்கைகளும் அதற்கான போராட்டங்களும் போதும் என்றனர். ஸ்டாலின் அவர்களிடம் இருந்து வேறுபட்டார். லெனின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். அவரது கருத்துக்களைப் பிரச்சாரம் செய்து வந்தார். வேலை வாழ்க்கை வாட்டியது. தான் கற்ற கல்வியைப் பயன்படுத்தி வேலை தேட விரும்பினார், மதகுருவாக விரும்பவில்லை. மாறாக உழைக்கும் மக்களின் தோழனாக அவர்களிடம் கற்றறிபவனாக கற்றுக் கொடுப்பவராக தலைமை பொறுப்பை ஏற்பவராக இருக்க விரும்பினார். அதே சமயம் உணவுத் தேவைக்காக வேலை தேட விரும்பினார். டிப்ளிஸின் நகர புவியியல் ஆய்வுக் கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். ஓய்வு நேரத்தை உழைக்கும் வர்க்கத்திற்கு பணியாற்றப் பயன்படுத்திக் கொண்டார். கட்சியில் 1900 ஆம் ஆண்டு தொழிலாளர் இயக்கங்கள் அலை அலையாய் எழுந்த காலமாக இருந்தது. “மே தினம்” சட்ட விரோதமாக கருதப்பட்டது. இதனை எதிர்த்து மேதினக் கொண்டாட்டத்திற்கு ஸ்டாலின் ஏற்பாடு செய்தார். டிப்ளிஸி நகருக்கு வெளியே மலைகளுக்குப் பின்னால் இது நிகழ்ந்தது. மொத்த ஊர்வலம் இல்லை. சிறு சிறு குழுக்களாக தொழிலாளர்கள் வந்தனர். கைகளில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் படங்கள் இருந்தன. சர்சதேச கீதம் இசைக்கப்பட்டது. ஸ்டாலின் உரையாற்றினார். ஐநூறு பேர் பங்கு கொண்டனர். இதற்கு முன் அப்பகுதியில் மேதினம் கொண்டாடப்பட்டதில்லை. அடுத்த ஆண்டு மேதினத்தை நாம் மலைக் குகைகளில் நடத்த வேண்டாம். மக்கள் மத்தியில் நடத்துவோம் என்று ஸ்டாலின் அறிவித்தார். அவர் அங்கம் வகித்த அமைப்பு இதை விரும்பவில்லை. அக்காலத்தில் தோன்றி வளர்ந்து கொண்டிருந்த சமூக ஜனநாயக அமைப்பில் அங்கத்தினர் ஆனார். அன்றைய கம்யூனிஸ்ட் கட்சி இப்பெயரில்தான் இயங்கி வந்தது. இதன் மத்தியக்குழுவில் இருந்து அமைப்புப் பணியிலும் பிரச்சாரப் பணியிலும் ஈடுபட்டார். இவ்வமைப்பின் டிப்ளிஸில் குழுவிற்கு ஸ்டாலின் தலைமை ஏற்றார். 1901 ஆம் ஆண்டு மேதினத் தயாரிப்புப் பணி மும்முரமடைந்தது. மார்ச் மாதம் இதைத் தடுக்க அரசு முயன்றது. தோழர் லெனின் அவர்களின் நெருங்கிய தோழர் கன்னோ தோவ்ஸ்கி உட்பட ஐம்பது தோழர்கள் கைது செய்யப்பட்டனர். தோழர் ஸ்டாலின் அறையிலும் சோதனை நடந்தது. இதை அறிந்த ஸ்டாலின் தலைமறைவு ஆகிவிட்டார். ஆனாலும் மேதினத் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டார். 1901 ஏப்ரல் 22 திங்கட்கிழமை அன்று டிப்ளிஸ் நகரின் மையப்பகுதியில் இரண்டாயிரம் தொழிலாளர்கள் திரண்டனர். இதனை அறிந்த லெனின் மகிழ்ந்தார். தனது இஸ்கரா இதழில் வாழ்த்தினார். தோழர் ஸ்டாலின் தான் தொடங்கி வைத்த தொழிலாளர் இயக்கத்தை வலுப்படுத்த போராட்டம் என்ற பெயரில் ஒரு செய்தி ஏடு துவங்கினார். தலையங்கம் எழுதினார். இவ்விதழ் அக்காலத்தில் தோழர் லெனின் அவர்களால் நடத்தப்பட்ட ‘இஸ்கரா’ இதழின் கருத்தோடு இணைத்திருந்தது. தோழர் லெனினை ஆசானாக தலைவராக மிக உயர்ந்த தலைவனாக ஸ்டாலின் மதித்தார். 1901 நவம்பர் 11 இல் டிப்ளிஸ் சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் மாநாட்டில் கமிட்டி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பாட்டூம் என்ற பகுதியில் கட்சியை உருவாக்க அவர் அங்கம் வகித்த டிப்ளிஸ் குழு அனுப்பியது. தொழிலாளர்களைத் திரட்டினார். இரகசியமாக அச்சடித்து துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார். 1902 பிப்ரவரி 27 அன்று ரோத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் வேலை நிறுத்தம் நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இராணுவ கவர்னர் அலுவலகம் நோக்கிச் சென்றனர். துப்பாக்கிச் சூடு நடந்தது. பதினைந்து பேர் பலி. 54 பேர் காயம். 500 பேர் கைது செய்யப்பட்டனர். தோழர் ஸ்டாலின் நடத்தி வந்த இரகசிய அச்சகம் காவலரால் தேடப்பட்டது. ஸ்டாலின் இடத்தை மாற்றினார். நகருக்கு வெளியே அல்யாஸ்கா என்ற கிராமத்தில் அதனை அமைத்தார். முஸ்லீம் மக்கள் அப்பகுதியில் அதிகம் வசித்தனர். இவரைப் பாதுகாக்க உதவினர். இயக்கங்களும் அடக்குமுறைகளும் மாறி மாறி தொடர்ந்தன. 1902 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் மாபெரும் பேரணியை நடத்தினர். தோழர் ஸ்டாலின் தலைமை ஏற்றார். இதற்குப் பெரிதும் காரணம் தோழர் ஸ்டாலின். அன்றைக்கு கோபா என்று அழைக்கப்பட்ட வரை காவல்துறை தேடி கண்டுபிடித்துவிட்டது. 1902 ஏப்ரல் 7 முதல் 1903 ஏப்ரல் 13 வரை பாட்டூம் நகர சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு கொடும் சிறையாகிய குடாய் என்னும் சிறைக்கு மாற்றப்பட்டார். 1903 ஆம் ஆண்டு மத்தியில் சமூக ஜனநாயக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. ஸ்டாலின் சிறையில் இருந்தார். ஆயினும் காக்கேசியப் பகுதியின் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1903 ஆம் ஆண்டு ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற இரண்டவது மாநாடுகளும், விவாதங்களும் வரப்பெற்றது. இம்மாநாடு பெல்ஜியம் நாட்டில் பிரஸ்ஸல்சிலும் பிரிட்டன் நாட்டின் லண்டனிலும் நடைபெற்றது. கட்சியின் அங்கத்தினர் சேர்ப்பு பற்றி விவாதம் இருந்தது. கட்சியின் கொள்கைகளை ஏற்று அதன்படி செயல்படுபவரைத்தான் உறுப்பினர் ஆக்க வேண்டும் என்று தோழர் லெனின் குறிப்பிட்டார். கருத்தை ஏற்றால் போதும் எவரையும் சேர்க்கலாம் என்று மற்றொரு பிரிவினர் கூறினர். போல்ஷ்விக் – மென்ஷ்விக் என்று இரு பிரிவாக மாறியது. லெனின் கருத்தை ஏற்றவர்கள் போல்ஷ்விக் எனப்பட்டனர். மறுபிரிவு சிறுபான்மையினர். இவர்கள் மென்ஷ்விக் என்று அழைக்கப்பட்டனர். சிறையில் இருந்த ஸ்டாலின் லெனின் கருத்தை ஏற்றார். இது குறித்து தோழர் லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்” என்ற நூலை மனதார வரவேற்றார். கடிதமும் எழுதினர். லெனின் அவர்களுக்கு இக்கடிதம் கிடைத்தது மகிழ்ச்சி கொண்டார். 1903 ஆம் ஆண்டு ஜூலை 9 அன்று ஜார் அரசு புதிய தண்டனையை விதித்தது. ஏற்கனவே சிறையில் உள்ள ஸ்டாலின் வெளியில் நடமாடக்கூடாது. நாடு கடத்த வேண்டும் என்றது. இத்தண்டனை மூன்று ஆண்டுகள் என்றது. சைபீரியப் பகுதியில் இர்குஸ்த் எனும் கிராமத்தில் அவரது தண்டனைக் காலம் கழிய வேண்டும் என்றனர். இக்காலத்தில் தோழர் லெனின் அவர்களிடம் இருந்து கடிதம் வந்தது. கட்சியின் அரசியல் பணி பற்றி அதில் இருந்தது. தோழர் ஸ்டாலின் அக மகிழ்ந்தார். பெறற்கரிய பேறுபோல் அக்கடிதத்தை பாவித்தார். 1904 ஜனவரி 5 அன்று காவலில் இருந்து தப்பித்தார். தோழர் லெனின் அவர்கள் எழுதிய என்ன செய்ய வேண்டும், “இரஷ்யாவில் முதலாளித்துவ வளர்ச்சி” ஆகிய நூல்களை ஆழ்ந்து கற்றார். பணிகளிலும் ஈடுபட்டார். கருத்துப் போர் தலைமறைவாக இருந்து கட்சிப் பணியாற்றினார். போல்ஷ்விக் என்ற பெரும்பான்மைக்கும் மென்ஷ்விக் என்ற சிறுபான்மைக்கும் இடையே இடைவிடாத கருத்துப் போர் நடந்து கொண்டே இருந்தது. ஸ்டாலின் அவர்களில் ஜார்ஜியப் பகுதியில் மென்ஷ்விக்குகளின் சக்திதான் ஓங்கி இருந்தது. இதனை மாற்றி அமைக்க ஸ்டாலின் பாடுபட்டார். லெனின் கருத்துக்களைத் தொய்வின்றி எடுத்துச் சென்றார். தொழிலாளர்களின் போராட்டம் என்ற பெயரில் வெளிவந்த இதழில் தேசிய இனப்பிரச்சினை குறித்து விரிவான கட்டுரை ஒன்றை எழுதினார். இந்தப் பிரச்சினை மீது அவரது நுண்மாண் நுழைபுலம் வெளிப்பட்டது. உலக கம்யூனிஸ்ட்டுகள் ஏற்கத்தக்கதாக அமைந்தது. “கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள்” என்ற தலைப்பில் பிரசுரம் எழுதி வெளியிட்டார். இது ஜார்ஜிய ரஷ்ய, ஆர்மேனிய மொழிகளில் வெளியிடப்பட்டது. மாமேதை லெனின் அவர்கள் எழுதிய ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற நூலின் கருத்தை ஆழ்ந்து பயின்று அதன் வெளிச்சத்தில் இதனை எழுதினார். உழைக்கும் வர்க்கத்திற்கு உயிரான சோசலிச உணர்வு அவசியம் என்பதை வலியுறுத்தினார். பாகூ பகுதியில் பிரம்மாண்டமான தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கு தலைமை ஏற்றார். முதலாவது புரட்சியின் போது 1904 ஆம் ஆண்டிற்குப் பின் ரஷ்யா, ஜப்பான் யுத்தம் துவங்கியது. நாடெங்கும் கொந்தளிப்புகள் ஏற்பட்டன. இதனை அணுகும் முறையில் தோழர் லெனின் எடுத்த நிலைபாட்டையே ஸ்டாலின் மேற்கொண்டார். 1905 ஆம் ஆண்டு ஜனவரி 9 அன்று அதிகாலையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஜார் மன்னரின் அரண்மனையை நோக்கி சென்றனர். கோபன் என்ற மதகுரு தலைமையில் இது நடந்தது. ஜார் மன்னர் படத்தோடுதான் சென்றனர். ஆயினும் தாக்கப்பட்டனர். இதனால் பயன் இருக்காது. ஆபத்து வரும் என்று போல்ஷ்விக்குகள் எச்சரித்தனர். மற்றவர்கள் கேட்கவில்லை. வேறு வழியின்றி போல்ஷ்விக்குகளும் பங்கு கொண்டனர். துப்பாக்கி சூட்டில் ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பல்லாயிரம் பேர் காயமடைந்தனர். செயின்ட் பீட்டர்ஸ் பர்க் வீதியில் இது நிகழ்ந்தது. “இரத்த ஞாயிறு” என்று இந்த நாளை பின்னாட்களில் நினைவு கூர்ந்தனர். இதைத் தொடர்ந்து ரஷ்யாவில் புரட்சிகர இயக்கங்கள் மும்முரம் அடைந்தன. 1905 ஜனவரி மாதம் ஒரு பிரசுரம் தோழர் ஸ்டாலினால் எழுதப்பட்டது. “காக்கசஸ் தொழிலாளர்களே பழிவாங்கும் தருணம் இது” என்பது அதன் தலைப்பு. தோழர் லெனின் அவர்களது வழிகாட்டுதலைப் பிசகின்றிப் பின்பற்றினார். அக்காலத்தில் கருப்பு நூற்றுவர்கள் என்ற பெயரில் ஒரு பிரிவினர் கூலிப்படையினராக செயல்பட்டு வந்தனர். இதனை முறியடிக்க உழைக்கும் மக்களுக்கு வழிகாட்டப்பட்டது. இக்காலம் முழுவதும் கோபா என்ற பெயரில் இரகசியமாகவே செயல்பட்டு வந்தார். ஆயுதம் தாங்கிப் போராடுவது என்று உழைக்கும் மக்களைப் பக்குவப்படுத்தினார். “குடிமக்கள்” என்ற தலைப்பில் பிரசுரம் வெளியிட்டார். 1905 அக்டோபரில் இது வெளியானது. புரட்சி வேகம் அதிகரித்ததைக் கண்ட ஜார் அரசு அக்டோபர் 7 அன்று அறிக்கை வெளியிட்டது. நாடாளுமன்றத்தைக் கூட்டுவதாகக் கூறியது. இதனைப் புறக்கணிக்குமாறு தோழர் லெனின் தலைமையிலான கட்சி வேண்டுகோள் விட்டது. ஆயுதப் போரை தொடர்ந்து நடத்தக் கூறியது. தொழிலாளர் பிரதிநிதிகளைக் கொண்ட சோவியத்துக்கள், புரட்சிகர விவசாய குழுக்கள் ஆகியவற்றை அமைக்க கோரியது. 1905 டிசம்பரில் அனைத்து இரஷ்ய போல்ஷ்விக் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கு கொள்ள பின்லாந்து சென்றார். இங்கேதான் தோழர் லெனினை முதன் முறையாக நேரில் சந்தித்தார். இருவரும் அளவற்ற மகிழ்ச்சியடைந்தனர். மாநாட்டில் அரசியல் தீர்மான நகல் வரைவுக்குழுவில் லெனினுடன் இணைந்து பணியாற்றினார். கோபா ஸ்டாலின் ஆகிறார் மாநாடு முடிந்து திரும்பும் போது புதிய பெயருடன் ஸ்டாலின் திரும்ப வேண்டுமென்று தோழர்கள் விரும்பினர். லெனினும் அவ்வாறே கருதினார். ஸ்டாலின் என்று ஏன் இருக்க கூடாது என்று லெனினும் கருதினார். ஸ்டாலின் என்றால் “இரும்பு மனிதர்” என்று பொருள். “சிதையா உறுதி கொள்” என்ற கவிஞரின் வரிக்கேற்ப ஸ்டாலின் திகழ்ந்தார். இப்பெயர்ப் பொருத்தமுடன் அமைந்தது. புரட்சி அலை தணிகிறது கடுமையான அடக்குமுறை காரணமாக ரஷ்யாவில் முதல் புரட்சியின் வேகம் தணிந்தது. மென்ஷ்விக்குகள் போல்ஷ்விக்குகளைக் கடுமையாக சாடினர். ஆயுதம் தாங்கியது தவறு என்றனர். தோழர் லெனினைக் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஸ்டாலின் லெனின் கருத்தை ஏற்று விளக்கம் அளித்தார். 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் கட்சியின் மாநாடு ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது. தொழிலாளர் நிர்ப்பந்தம் காரணமாக மென்ஷ்விக்குகளும் இதில் கலந்து கொண்டனர். போல்ஷ்விக் மென்ஷ்விக் ஒற்றுமை வேண்டும் என்ற கருத்து தொழிலாளர்களின் கருத்தாக இருந்தது. தலைவர்கள் ஓரிடத்தில் கூடினர். உள்ளார்ந்த ஒற்றுமை ஏற்படவில்லை. மாநாட்டிற்குப் பின்பு தோழர் ஸ்டாலின் ஒரு பிரசுரம் எழுதினர். “இன்றைய சூழலும் நடைபெற்ற மாநாடும்” என்பது அதன் தலைப்பு தொழிலாளி வர்க்கம் கற்றுக் கொண்ட படிப்பினை. இதற்கு இருக்க வேண்டிய வர்க்க உணர்வு. புரட்சியில் அதன் தலைமைப் பணி ஆகியவற்றை வெளிப்படுத்தினர். ஜோசப் ஸ்டாலின் – 2 மண வாழ்வும் மகப்பேறும் தனது இருபத்து ஏழாம் வயதில் இல்லறம் என்னும் நல்லறத்தில் அடியெடுத்து வைத்தார். 1906 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் எக்காதெரினா ஸ்வானிட்சே என்னும் மங்கை நல்லாள் வாழ்க்கைத் துணைவியாக வாய்த்தார். இவரது தந்தையார் ஓர் இரயில்வேத் தொழிலாளி. சமூக ஜனநாயக இயக்கத்தில் ஈடுபாடு உடையவர். சகோதரர் தோழர் ஸ்டாலினுடன் இளம்குரு மடத்தில் பயின்றவர். 1908 ஆம் ஆண்டு ஆண்குழந்தை பிறந்தது. யாக்கோபு என்று பெயர் சூட்டினர். வாழ்க்கையில் வறுமைதான் நிலவியது. ஆயினும் இதயத்தில் அமைதியும் அன்பும் நிலவியது. ஆனாலும் கொடும் விஷக்காய்ச்சல் காரணமாக ஸ்டாலின் துணைவியார் மரணமுற்றார். 1906 இல் துவங்கிய மணவாழ்வு 1910 இல் முடிந்தது. அதே சமயம் அவரது பணிகளும் தொய்வின்றித் தொடர்ந்தது. இடையூறுகளுக்கு இடையிலும் 1905 ஆம் ஆண்டில் நடைபெற்ற புரட்சி வெற்றி பெறவில்லை எனப் பார்த்தோம் அல்லவா? அதையொட்டி ஜார் அரசின் அடக்குமுறை அதிகரித்தது. தொழிலாளி வர்க்க இயக்கத்திற்குள் பிரதானமான கருத்து வித்தியாசங்கள் எழுந்தன. போல்ஷ்விக் – மென்ஷ்விக் பிரிவுகள் முன்னை விடக் கூடுதல் ஆயின. போல்ஷ்விக் பிரிவின் சரியான நிலையையும் அதற்குத் தலைமை ஏற்ற தோழர் லெனின் அவர்கள் கருத்தையும் திறம்பட எடுத்துரைத்தார். வர்க்கப் போராட்டம் எனும் தலைப்பில் கட்டுரை எழுதினார்: விரக்தியாளர்கள் மத்தியில் அதிதீவிர அராஜகப் போக்குகள் எழுந்தன. இதனையும் ஸ்டாலின் வெறுத்தார். இப்போக்கு சோசலிசப் பாதைக்கு உதவாது என்றார். ஜார் அரசிடம் சரணாகதி அடைவதையம் எதிர்த்தார். அதே சமயம் இருக்கிற சக்தியை விரயமாக்கும் அராஜக வடிவத்தையும் கண்டனம் செய்தார். “அராஜகவாதமா சோசலிசமா” என்னும் புகழ் பெற்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை வெளியிட்டார். “இயக்கஇயல் பொருள்முதல்வாதம்“ “வரலாற்றியல் பொருள்முதல்வாதம்” குறித்த விளக்கங்களையும் வெளியிட்டார். 1906-1907 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் டிப்ளிஸ் நகரில் ஜார்ஜிய மொழி ஏடுகளில் இவை வெளியிடப்பட்டன. இன்றளவும் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தால் இவை போற்றப்படுகின்றன. டிராட்ஸ்கி என்ற முக்கிய தலைவர் செய்த சீர்குலைவு முயற்சிகளையும் கடுமையாக எதிர்த்தார். 1907 ஆம் ஆண்டு கட்சியின் ஐந்தாவது மாநாடு லண்டன் நகரில் நடைபெற்றது. இதில் தோழர் ஸ்டாலின் பங்கு கொண்டார். சரியான கருத்துக்கு உறுதியாக நின்றார். வெளியிலும் விளக்கினார். தோழர் லெனினது கருத்தை வலிமையுறச் செய்தார். 1907 ஜூன் மாதம் கட்சி இவரை பாகு நகர் செல்லக் கோரியது. இப்பகுதி தொழிலாளர் நிரம்பிய பகுதி. தொழிலாளர்களைத் தாக்கும் உடனடித் தாக்குதலை எதிர்த்து அவர்களைத் திரட்டினார். அதே சமயம் இந்நிலைமைக்குத் காரணமான முதலாளித்துவச் சுரண்டலையும் அதற்குத் துணைபுரியும் அரசின் கொள்கைகளையும் விளக்கினார். விளைவுகளை எதிர்த்தும் அதே சமயம் மூலகாரணத்தை எதிர்த்தும் உழைக்கும் மக்களை அணி திரட்டினார். மார்க்சிய – லெனினிய சித்தாந்தத்தைப் பற்றியும் விளக்கினார். தேர்தல் பிரச்சாரம் அக்காலத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாகு பகுதியில் சமூக ஜனநாயக இயக்க வேட்பாளர்கள் வெற்றிபெற பாடுபட்டார். சங்கப்பணி பாகு பகுதி எண்ணெய்த் தொழிலாளர் நிரம்பிய பகுதி. அத்தொழிலாளர்களை அமைப்பு ரீதியில் திரட்டினார். முதலாளிகளும் வேறு வழியின்றி பேசவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாயினர். பேச்சுவார்த்தையை மென்ஷ்விக் பிரிவினரும் வேறு சிலரும் எதிர்த்தனர். ஸ்டாலின் நீக்குப் போக்கான அணுகுமுறையைக் கையாளக் கோரினார். வேலைநிறுத்தமும் வேண்டும். பேசவும் வேண்டும் என்றார். இது பற்றி சங்கத்தின் ஏட்டில் ஒன்பது கட்டுரைகள் எழுதினார். அதே சமயம் தான் தொழிலாளர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாக கூறவில்லை. அவர்களிடம் கற்றுக் கொண்டேன் என்கிறார். 1907 முதல் 1909 முடிய மூன்று ஆண்டுக் காலம் தான் பணியாற்றியதில் கிடைத்த அனுபவத்தை தனது இரண்டாவது ஞானஸ்நானம் என்றார். கைது 1908 மார்ச் 25 அன்று கைது செய்யப்பட்டார். வைலோவ் என்னும் இடத்தில் சிறை வைக்கப்பட்டார். பொதுவாக சிறைச் சாலைகளில் விதவிதமான இன்னல்கள் இருக்கும் இந்தச் சிறை மிகவும் கொடூரமானது. ஸ்டாலின் முன்பாகவே தூக்குக் கைதிகளின் தண்டனை நிறைவேறும். அவர்களது மரண ஓலம் கடுமையாக கொடூரமானதாக இருக்கும். இச்சூழலில்தான் ஸ்டாலின் இருந்தார். நிறையப் படித்தார். எழுதினார் தளரா உறுதியுடன் செயல்பட்டார். தண்டனைக்காக காத்திருந்த காலம் முடிந்ததும் 1908 நவம்பர் 9 இல் தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை. நாடு கடத்தல். ஆனால் 1909 ஆம் ஆண்டு மத்தியில் தப்பித்தார். வேறு ஒரு பெயரில் பாஸ்போர்ட் பெற்றார். ஜக்கார் கிரிகோரியன் மெலிக் கியான்ஸ் என்ற பெயர் கொண்டு இதனைப் பெற்றார். தப்பித்து நேராக பாகு நகர் அடைந்தார். அமைப்பில் தளர்ச்சி இருந்தது. உற்சாகம் குன்றி இருந்தது. உறுப்பினர் எண்ணிக்கையும் குறைந்திருந்தது. கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியும் நமது பணிகளும் என்ற தலைப்பில் எழுதினார். கட்சி மக்களிடம் இருந்து தனிமைப்படக் கூடாது என்று எச்சரித்தார். உயர்வும், தாழ்வும் இதையொட்டித்தான் அமையும் என்றார். காக்கசசில் இருந்து கடிதங்கள் என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதி வந்தார். மீண்டும் கைது 1910 மார்ச் 23 அன்று மீண்டும் கைது செய்யப்பட்டார். கொடிய பைலோவ் சிறையில் அடைக்கப்பட்டார். ஆறுமாதம் அங்கே அடைக்கப்பட்ட பின் நாடு கடத்தப்பட்டார். காக்கசசுக்கும் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்குக்கும் வரக்கூடாது. மாஸ்கோவில் குடியிருக்கக் கூடாது. இத்தடை ஐந்து ஆண்டுகாலம் என்று விதிக்கப்பட்டது. ஆகவே குடியிருக்க வோலொக்டா என்ற இடத்தைக் தேர்ந்தெடுத்தார். அங்கிருந்து இரகசியமாக பீட்டர்ஸ் பர்க் நகரை அடைந்தார். இல்லற வாழ்வு தொடங்கிய காலமும் இன்னல்கள் அதிகரித்த காலமும் ஒன்றாகவே இருந்தது. “துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை” என்ற குறளுக்கேற்ப அவரது பணிகள் நீடித்தன. ஆழ்ந்த சோகத்தைத் தாங்கிக் கொண்டு அடைய வேண்டிய மக்கள் சுபிட்சத்திற்காக செயல்பாடுகளைத் தொடர்ந்தார். ஸ்டாலின் 1912 ஆம் ஆண்டு பிப்ரவரி மத்தியில் வோலொடக்டாவில் இருந்தபோது தோழர் ஸ்டாலின் அவர்களை ஒரு முக்கியமான தலைவர் சந்தித்தார். அவர் பெயர் ஆர்ஜோனிஜிட்சே. தோழர் லெனின் அவர்களது நெருங்கிய சகா. ஸ்டாலின் அவர்களது செயல்கள் பற்றியும் பண்புகள் பற்றியும் லெனின் உயர்வான அபிப்பிராயம் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். இரும்பு மனிதர் என்று கருதுவதாகக் குறிப்பிட்டார். இதன் வழியாகப் பிறந்த பெயர்தான் ஸ்டாலின் என்பது. லெனின் உட்பட மற்ற தோழர்களின் விருப்பப்படி அமைந்தது தான் ஸ்டாலின் எனும் பெயர். அதற்கு முந்திய பெயர்கள் மறைந்தன. ஸ்டாலின் என்னும் பெயரே நிலைத்தது. 1912 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் பிராக் நகரில் கட்சியின் ஆறாவது மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் தோழர் லெனின் அவர்களுடன் ஸ்டாலினும் இப்பெயரை அறிவித்த தோழர் ஆர்.ஜோனித்சேயும் மத்தியக்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தோழர் ஸ்டாலின் நாடு கடத்தப்பட்ட நிலையில் இது நிகழ்ந்தது. மாநாட்டு முடிவுகளை விளக்கி அறிக்கை தயாரித்தார். ஆறாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டன. 1912 பிப்ரவரி 29 அன்று தான் கட்டாயமாகத் தங்கி இருக்க நேர்ந்த வோலொக்டாவில் இருந்து தப்பித்தார். பீட்டர்ஸ் பர்க் பாகு ஆகிய நகர்களுக்கு சென்றார். மேதின ஆர்ப்பாட்டங்களுக்கான தயாரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மத்தியக்குழுவின் சார்பில் மேதினப் பிரகடனம் எழுதி வெளியிட்டார். புரட்சிகர இயக்கங்கள் 1912 ஏப்ரல், மே மாதங்களில் புரட்சிகர இயக்கங்கள் நாடெங்கும் வெடித்தன. லீனா என்னும் இடத்தின் தங்கச் சுரங்கத்தின் தொழிலாளர் போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடும் அதனால் 500 தொழிலாளர்கள் பலியானதும் நாடெங்கும் கோப அலைகளை உருவாக்கியது. வேலை நிறுத்தங்கள் வெடித்தன. ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்தன. ஸ்டாலின் இவற்றை வரவேற்று எழுதினார். பிராவ்தா கட்சியின் செய்தி ஏடாக பிராவ்தா என்ற பெயரில் ஏடு வெளிவந்தது. இதன் வெளியீட்டிற்கு தோழர் ஸ்டாலின் பெரும் பங்கு வகித்தார். முதல் இதழும் அவராலேயே தயாரிக்கப்பட்டது. தலையங்கமும் அவரே எழுதினார். ஒரு இதழ் பல அங்கங்களைக் கொண்டது. அதில் தலையாய அங்கம் தலையங்கம். இதனை எழுதும் வாய்ப்பு ஸ்டாலினுக்கு வாய்த்தது. வர்க்க எதிரிகள் மீது யுத்தம் தொடுப்போம். நமது அமைப்புக்குள் சமாதானத்தை நிலைநாட்டுவோம் என்றார். விற்பனை விறு விறுப்பாக உயர்ந்தது. எண்பது ஆயிரம் பிரதிகள் விற்றன. மக்கள் தொடர்புக்கு இவ்வேடு பணிபுரிந்தது. மீண்டும் கைது 1912 ஏப்ரல் 22 அன்று கைது செய்யப்பட்டார். மூன்று ஆண்டு காலத்திற்கு நாடு கடத்த உத்தரவு. இத்தண்டனையை அனுபவிக்க வேண்டிய இடம் சைபீரியாவின் நாரிம் மாகாண பகுதி. மூன்று ஆண்டுகள் தண்டனையை அரசு விதித்தது. மூன்றே மாதத்தில் இவர் தப்பித்துவிட்டார். ஏப்ரல் மாதம் கைது. ஜூலை மாதம் தண்டனை அறிவிப்பு. சைபீரியா நாரிம் மாகாணம் வந்ததும் செப்டம்பர் மாதம் தப்பினார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வந்தார். பிராவ்தாவின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். தொழிலாளர்கள் உரிய பாதுகாப்பை அளித்தனர். நான்காவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்றது. அதில் தொழிலாளர் பிரதிநிதிகள் வெற்றி பெற பாடுபட்டார். தொழிலாளர் பிரகடனம் என்ற பெயரில் பீட்டர்ஸ் பர்க் தொழிலாளர்களுக்கு அவர் விடுத்த வேண்டுகோள் தோழர் லெனின் அவர்களால் பாராட்டப்பட்டது. பிரச்சாரத்திற்கும் பெரிதும் பயன்பட்டது. தேர்தலில் போல்ஷ்விக் உறுப்பினர்கள் தொழிலாளர் பகுதியில் இருந்து கூடுதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாடாளுமன்றத்தில் ஆற்ற வேண்டிய பணிகளுக்கு தோழர் ஸ்டாலின் வழிகாட்டினார். மன்றத்திற்கு உள்ளேயும், வெளியிலும் ஆற்ற வேண்டிய பணிகளைத் தெளிவுபடுத்தினார். லெனின் சந்திப்பு இக்காலங்களில் தோழர் லெனின் அவர்களிடம் உள்ள உறவு மேலும் பலப்பட்டது. 1912 நவம்பர் – டிசம்பர் மாதங்களில் சந்தித்தார். ஆஸ்திரியாவில் கிராகோவ் நகரில் இது நிகழ்ந்தது. ஏற்கனவே ஸ்டாலினின் எழுத்து, பேச்சு ஆகியவைகளுக்கு லெனினது ஆதரவு இருந்தது. இருவரும் இணைந்து பேசினர். உறவு மேலும் பலப்பட்டது. நவில் தொறும் நூல் நயம் போலும் பயில் தொறும் பண்புடையாளர் தொடர்பு என்ற முறையில் இது அமைந்திருந்தது. தேசிய இனப் பிரச்சினைகள் தேசிய இனப்பிரச்சினைகளில் கம்யூனிஸ்ட் அணுகுமுறை குறித்த வழிகாட்டலை தோழர் லெனின் அவர்களது ஆலோசனையுடன் வகுத்தளித்தார். இதற்காக ஆஸ்திரிய நாட்டின் வியன்னாவில் 1913 ஜனவரியில் ஒரு மாத காலம் தங்கி இருந்தார். மார்க்சியமும் தேசிய இனப்பிரச்சினைகளும் என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதினார். உலகக் கம்யூனிஸ்ட்களின் வழிகாட்டியாக இக்கட்டுரைள் திகழ்கின்றன. தேசிய இனங்களின் உணர்வையும், உரிமையையும் ஏற்பது. அதே சமயம் வர்க்க உணர்வை வலுப்படுத்தி சோசலிச உணர்வை உறுதிப்படுத்துவது ஆகியவை அதில் வலியுறுத்தப்பட்டன. தோழர் லெனின் இதனை மணதார வரவேற்று எழுதினார். தொடர் கைது ஜார் அரசு மீண்டும் ஸ்டாலினை கைது செய்தது. நான்கு ஆண்டு நாடு கடத்தல் தண்டனை விதித்தது. சைபீரியாவின் கொடிய பகுதிக்கு அனுப்பப்பட்டார். 1900-க்குப் பின்பு 1913-க்குள் அவர் கைது செய்யப்பட்டது ஏழுமுறை. நாடு கடத்தப்பட்டது ஆறு முறை. இவற்றில் இருந்து தப்பித்தது ஐந்து முறை. அவரது சரீரத்தை சிறையிட முடிந்தது. ஆனால் சிந்தனையைச் சிறையிட முடியவில்லை. ருஷ்ய மண்ணை விட்டு அவரது உடலைக் கடத்த முடிந்தது. உள்ளத்தைக் கடத்த முடியவில்லை. உடலை வருத்த முடிந்தது. உள்ளம் உறுதிப்படுவதை தடுக்க முடியவில்லை. தொலை தூர சைபீரியாவில் உள்ளத்தைச் சோர்வுறச் செய்யும் சூழலில் அவர் இருந்தார். ஆயினும் இயற்கைக் காட்சிகளை வெளிப்படுத்தும் படங்களை கேட்டுக் கடிதம் எழுதினார். நிறையப் படித்தார்; கற்றார்; கற்றபடி நின்றார். யுத்தம் 1914 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் யுத்தப் போக்குகள் தோன்றின. தோன்றின என்பதை விட தோற்றுவிக்கப்பட்டன. முதலாளித்துவ சக்திகளுக்கு இந்த யுத்தம் தேவைப்பட்டது. ரஷ்யாவிலும் இதன் தாக்கம் இருந்தது. ரஷ்ய ஜார் அரசும் யுத்தத்தில் ஈடுபட்டது. இதனை தோழர் லெனின் வெறுத்தார் ஏகாதிபத்திய யுத்தம் இதனை உள்நாட்டு யுத்தமாக மாற்றுங்கள். உழைக்கும் மக்கள் ஒருவரை ஒருவர் அழிக்க வேண்டாம் என்றார். யுத்தக் கோட்பாடுகள் என்ற தலைப்பில் வேண்டுகோள் விடுத்தார்.தோழர் ஸ்டாலினுக்கும் இது கிடைத்தது. இதனை மனதார ஏற்றார். நாடு கடத்தப்பட்டு இருந்த புரட்சியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். அணி திரட்டினார். லெனின் அவர்களது கருத்து உழைக்கும் மக்களால் ஏற்கப்பட்டது. போர் வீரர்கள் மத்தியிலும் இதற்கு வரவேற்பு இருந்தது. நாடு கடத்தப்பட்டவர் இடையே அணிதிரட்ட தோழர் ஸ்டாலின் நீண்ட பயணம் செய்தார். அனுபவங்களை தோழர் லெனினுக்கு கடிதம் மூலம் தெரிவித்தார். ஜார் அரசை எதிர்த்து இந்த இயக்கத்திற்கு மக்கள் ஆதரவு பலமாக இருந்தது. உழைக்கும் பெண்கள், இராணுவ வீரர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மத்தியில் பெரும் எழுச்சிகள் இருந்தன. போல்ஷ்விக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தோழர் லெனினது கருத்துக்களையே வெளிப்படுத்தினர். இவைகளையெல்லாம் அச்சமயம் வெளிநாட்டில் இருந்த தோழர் லெனினுக்கு கடிதம் மூலம் தெரிவித்தார். மக்கள் இயக்கங்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக நாளுக்கு நாள் வலுப்பெற்றதும், ஜார் அரசு தனது பலத்தை இழப்பதும் ஒருசேர நிகழ்ந்தது. புதிய அரசு அமைக்கப்படும் சூழல் உருவானது. தோழர் லெனினது கருத்துக்கு எதிரான மென்ஷ்விக் பிரிவினரும் வேறு சில பிரிவினரும் ஆதரித்த முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சக்திகளின் அரசு அமைந்தது. இந்த அரசு தற்காலிக அரசாகவும் இடைக்கால அரசு என்றும் அழைக்கப்பட்டது. அதே சமயம் மக்கள் மத்தியில் சோவியத் என்னும் பெயரில் புரட்சிகர அமைப்புகள் செயல்பட்டன. இதில் தொழிலாளர்கள், விவசாயிகள், இராணுவ வீரர்கள் பிரதிநிதியாக இருந்தனர். பெட்ரோ கிராட் நகரில் லெனினது கருத்துக்கு ஆதரவான போல்ஷ்விக் பிரிவினர் தலைமையில் சோவியத் இருந்தது. பெட்ரோ கிராட் நகரமும் புரட்சிகர குணமும் சோசலிச பற்றுறுதி மிக்க தொழிலாளர்கள் நிரம்பியதாக இருந்தது. ஒரு புறம் முதலாளித்துவ குணம் கொண்ட தற்காலிக அரசு இருந்தபோதே தொழிலாளர் மத்தியில் செல்வாக்குப் பெற்ற சோவியத் அமைப்பும் செயல்பட்டதால், இரட்டை ஆட்சி என்று அழைக்கப்பட்டது. 1917 ஆம் ஆண்டின் பிப்ரவரி புரட்சி என்று இது அழைக்கப்படுகிறது. நாடு கடத்தப்பட்டிருந்த தோழர் ஸ்டாலின் 1917 மார்ச் 12 அன்று பெட்ரோகிராட் நகரை அடைந்தார். ஸ்விட்சர்லாந்தில் தலைமறைவாக இருந்த தோழர் லெனினுடன் இடைவிடாது தொடர்பு கொண்டு வழிகாட்டுதலைப் பெற்றுக் கொண்டார். கட்சியின் மத்தியக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க கட்சியின் தலைமைப் பொறுப்பையும் பிராவ்தா இதழின் பொறுப்பையும் ஏற்றார். கட்சியை பலப்படுத்துவது சோவியத் அமைப்புக்களை நாடெங்கும் உருவாக்குவது போன்ற கருத்துக்களை எழுதினார். அடுத்து நடைபெற வேண்டிய புரட்சி பற்றி தோழர் லெனினது கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றார். இடைக்கால அரசுக்கு நடுக்கம் ஏற்பட்டது. தோழர் லெனின் ரஷ்யாவிற்கு திரும்ப வேண்டும் என்ற உணர்வு மக்கள் மத்தியில் இருந்தது. லெனினும் விரும்பினார். ஆனால் அரசு விரும்பவில்லை. ஏராளமான தடைகளை ஏற்படுத்தியது. லெனின் நாடு திரும்பும் போது பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று ஸ்டாலின் விரும்பினார். அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். 1914-ல் துவங்கிய உலக யுத்தத்தை முதலாளித்துவ சக்திகள் இடைவிடாது நடத்தின. ஜார் அரசு வீழ்ந்த பின் அமைந்த தற்காலிக அரசும் இதனை தொடர்ந்து நடத்தியது. மக்கள் இதனை விரும்பவில்லை. யுத்தம் என்ற பெயரில் ஸ்டாலின் எழுதினார். முதலாளித்துவத்தின் தீய நோக்கங்களை அம்பலப்படுத்தினார். லெனின் வருகிறார் 1917 ஏப்ரல் 3 அன்று தோழர் லெனின் தமது நீண்ட தலைமறைவு வாழ்க்கையை முடித்துக் கொண்டு பெட்ரோ கிராட் திரும்பினார். இரயில் நிலையத்தில் மக்கள் வெள்ளம் சூழ்ந்து வரவேற்றது. அதில் அவர் ஆற்றிய உரை ஏப்ரல் ஆய்வுரை என்று அழைக்கப்படுகிறது. தோழர் ஸ்டாலின் பிராவ்தா இதழில் இதனையொட்டி தமது கருத்துக்களை எழுதினார். தோழர் லெனினை வரவேற்று அவருடன் நெருக்கமாக இருந்து பணியாற்றினார். 1917 ஏப்ரல் 24 முதல் 29 முடிய போல்ஷ்விக் கட்சியின் அனைத்து இரஷ்ய மாநாடு பெட்ரோ கிராடில் நடைபெற்றது. ரஷ்ய வரலாற்றில் இதுதான் வெளிப்படையாக நடந்த மாநாடு. தேசிய இனப் பிரச்சினை குறித்து இம்மாநாட்டில் ஸ்டாலின் தமது கருத்துக்களை முன் வைத்தார். மாநாடு இதனை ஏற்றது. 1917 இல் நடைபெற்ற ரஷ்யப் புரட்சியில் அனைத்து தேசிய இனங்களும் தமது ஆதரவை நல்க இது பயன்பட்டது. மே மாதம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உருவாக்கப்பட்டது. தோழர் ஸ்டாலின் அதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களைத் திரட்ட, அவர்களுக்குப் போர்ப் பயிற்சி அளிக்க, இராணுவத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த, கட்சி அளித்த பணிகளை திறம்பட நிறைவேற்றினார். இக்காலத்தில் தோழர் லெனினுடன் நெருங்கிப் பழகியது, வர்க்க இயக்கங்களில் பங்கேற்றது. அதில் கிடைத்த அனுபவம் ஆகியவற்றை தமக்குக் கிடைத்த ஞானஸ்நானம் என்றார். 1917 ஜூன் 3 அன்று இரஷ்யா முழுவதும் இருந்த சோவியத்துக்களின் முதலாவது காங்கிரஸ் நடைபெற்றது. ஸ்டாலின் இதில் பங்கு கொண்டு ஜூன் 18 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடுத்தார். ஜூன் 18 அன்று ஐந்து லட்சம் தொழிலாளர்கள் திரண்டனர். யுத்த எதிர்ப்பும் இடைக்கால அரசை எதிர்த்தும் முழக்கங்கள் இருந்தன. அனைத்து அதிகாரமும் சோவியத்துக்களுக்கே என்ற முழக்கம் அதிர்ந்தது. புரட்சி வீரர்களின் போர்ப் பிரகடன அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டார். அரசு கடும் அடக்குமுறையை ஏவியது. ஸ்டாலின் ஆசிரியராக இருந்த பிராவ்தா அலுவலகத்தை அடித்து நொறுக்கியது. லெனின் தலைமறைவு ஜூலை முதல் வாரம் தோழர் லெனினைக் கைது செய்ய ஆணை பிறந்தது. லெனினை மறைத்து வைக்க ஸ்டாலின் ஆவன செய்தார். தனக்கு நெருக்கமான அலிலுயேவ் குடும்பத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் லெனினைத் தங்க வைத்தர். அவரது தாடியையும், மீசையையும் தானே வழித்து மாற்றினார். வேறு ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தார். அவர் இருந்தால் என்னென்ன பணிகளை எந்தெந்த விதத்தில் ஆற்றுவாரோ அவைகளை அவர் நேரடியாக பணியாற்ற முடியாத சூழலில் தான் முன்னின்று நிறைவேற்றினார். தொண்டர்களை அணுகுவீர் என்ற தலைப்பில் அறிக்கை விடுத்தார். புரட்சிக்கு எதிரான சக்திகள் புரட்சிகர சக்திகள் மீது கடும் தாக்குதல் தொடுத்தன. இதனை முறியடிக்க இந்த அறைகூவல் பயன்பட்டது. மாநாடு 1917 ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 3 வரை கட்சியின் 6-வது மாநாடு இரகசியமாக நடைபெற்றது. லெனின் இல்லாத நிலையில் ஸ்டாலின் தான் மத்தியக்குழுவின் வேலை அறிக்கை மற்றும் அரசியல் நிலை பற்றிய அறிக்கையை முன்வைத்தார். சோசலிசப் புரட்சி சாத்தியமா? ரஷ்யாவில் அது வெற்றி பெறுமா? என்றெல்லாம் டிராட்ஸ்கி போன்ற தலைவர்கள் முன்வைத்த தவறான கருத்துக்ளை லெனின் வழியில் நின்று முறியடித்தார். மத்தியக்குழுவிற்கு நடைபெற்ற தேர்தலில் லெனினுக்கு அடுத்தபடியாக கூடுதல் வாக்குகளைப் பெற்றார். புரட்சிகரமான போருக்கு மக்களை அழைத்து அறிக்கை வெளியிட்டார். நாடு முழுவதும் அமைதியற்ற காலம் துவங்கியது. இராணுவ ஆட்சிக்கான முயற்சி நடைபெற்றது. புரட்சியாளர்கள் மீது கடும் தாக்குதலை அரசு கட்டவிழ்த்து விட்டது. புரட்சி வெற்றி தோழர் ஸ்டாலின் இதனை எதிர்கொள்ள தோழர் லெனின் அவர்களது ஆலோசனையைப் பெற்று வழிகாட்டி வந்தார். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவிற்கு உழைக்கும் மக்களின் போராட்டம் வலுப்பெற்றது. இராணுவத்தின் தரைப்படை, கப்பற்படை வீரர்களும் உழைப்பாளிகளுக்கு ஆதரவாக திரும்பினர். புரட்சிக்கான சூழல் கனிந்து விட்டதாக லெனின் கருதினார். இதற்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட மத்தியக்குழுவை கேட்டுக் கொண்டார். லெனினுக்கும் மத்தியக்குழுவிற்கும் இணைப்புப் பாலமாக ஸ்டாலின் விளங்கினார். 1913 அக்டோபர் 7 அன்று லெனின் தான் தலைமறைவு வாழ்க்கை நடத்திய பின்லாந்திலிருந்து பெட்ரோ கிராடுக்கு இரகசியமாக வந்து சேர்ந்தார். அக்டோபர் 10 அன்று மத்தியக்குழு கூடியது. புரட்சியைத் தொடங்க வேண்டும் என்ற லெனினது கருத்தைச் சிலர் எதிர்த்தனர். ஸ்டாலின் உறுதியாக லெனின் பக்கம் நின்றார். ஆதரித்து வாக்களித்தார். லெனின் மீண்டும் தலைமறைவு ஆனார். ஸ்டாலின் இப்பணிகளை நிறைவேற்றினார். அக்டோபர் 16 அன்று கட்சியின் விரிவடைந்த மத்தியக்குழு கூடியது. ஸ்டாலின் தலைமையில் மையம் தேர்ந்தெடுக்கப்பட்டது. புரட்சிகரப் பணிகள் மார்க்சிய லெனினிய வெளிச்சத்தில் சுறுசுறுப்புடன் நடைபெற்றன. அக்டோபர் 24 அன்று லெனின் மீண்டும் திரும்பினார். அதுகாறும் ஸ்டாலினும் மற்ற தோழர்களும் ஆற்றி இருந்த பணிகளை மேலும் ஒருமுகப்படுத்தி ஆட்சியாளர்களுக்கு எதிராக நேர்த்தியுடன் திருப்பினார். மக்கள் எழுச்சிக்குப் பயந்த ஆட்சியாளர்கள் குளிர்கால அரண்மனை என்று அழைக்கப்பட்ட அரண்மனைக்குள் புகுந்தனர். அவர்களது ஆணைகள் நிறைவேறவில்லை. மக்கள் எழுச்சிக்கு முன் மண்டியிட நேர்ந்தது. 1917 அக்டோபர் 25 அன்று (நவம்பர் 7) பெட்ரோ கிராட் நகர் புரட்சியாளர் வசம் ஆயிற்று. மாபெரும்சோசலிசப் புரட்சி வெற்றி பெற்றது. கட்சி இதழில் தோழர் ஸ்டாலின் இடைக்கால அரசைத் தூக்கி எறிக என்று அறைகூவல் விடுத்தார். இந்த அறைகூவல் சிறப்புற நிறைவேறியது. புரட்சியின் உன்னத நோக்கத்தை நிறைவேற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டார் ஸ்டாலின். ஜோசப் ஸ்டாலின் - 3 புதிய அரசு மூன்று அரசு ஆணைகளை உடனடியாக பிறப்பித்தது. 1. சமாதனம் தேவை – நாங்கள் தயார் 2. பேச்சுவார்த்தை நடத்து என்று உலகப் போரில் ஈடுபட்டிருந்த அனைத்து நாடுகளுக்கும் வேண்டுகோள். நிலம் முழுவதும் அரசின் உடமை நேரடியாகப் பாடுபடுவோர் அதன் உரிமையாளர்கள். 3. அரசின் அதிகாரம் வட்டார அளவில் செயல்படும். தொழிலாளி – விவசாயி – இராணுவ வீரர்கள் கொண்ட சோவியத்துகளுக்கு என்பது உடனடியாக அறிவிக்கப்பட்டது. தோழர் லெனின் தலைமையில் அமைச்சரவை ஒன்று உருவாக்கப்பட்டது. தோழர் ஸ்டாலின் அமைச்சர்களில் ஒருவராக இருந்தார். தேசிய இனங்களுக்கான அமைச்சராக செயல்பட்டார். மொத்தம் டிராட்ஸ்கி உட்பட 15 பேர் அமைச்சர்களாக இருந்தனர். 101 உறுப்பினர்கள் கொண்ட மத்திய நிர்வாகக் குழு கட்சியில் தேர்வு செய்யப்பட்டது. மென்ஷ்விக்குகள் என்று ஒரு பிரிவினரை பற்றி பார்த்தோம் அல்லவா. அவர்கள் சிறுபான்மையினர்தான். ஆயினும் தோழர் லெனினுக்கு தொடர்ந்து விரோதமாக இருந்தனர். அவரை அரசில் சேர்க்கக் கூடாது என்றனர். சுருக்கமாகக் கூறினால் தலையற்ற உடலைக் கோரினர். டாலின் அவர்களைச் சீறினார். லெனின் பக்கம் உறுதியாக இருந்தார். புரட்சி முடிந்து 7 நாளில் நாட்டு மக்களுக்கு ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. தோழர் லெனினும், ஸ்டாலினும் இதைத் தயாரித்தனர். இவ்வறிக்கை கீழ்க்கண்ட கருத்துக்களைப் பிரகனடம் செய்தது. 1. ரஷ்ய மக்கள் அனைவரும் சமமானவர்கள். 2. தேசிய இனங்கள் சுதந்திரமானவை. தேவை ஏற்பட்டால் பிரிந்து சென்றும் அரசு அமைக்கலாம். 3. அனைத்து சிறுபான்மையினரும் சுதந்திரமான வளர்ச்சி பெற வேண்டும். 4. எந்த மதத்திற்கும் சிறப்பு சலுகை இல்லை – தடைகளும் இல்லை. 5. இந்தக் கருத்துக்களுக்கு எதிராக கட்சிக்குள் சிலர் குழப்பம் செய்து கொண்டு இருந்தனர். இவர்களைக் கண்டித்து லெனினுடன் சேர்ந்து ஸ்டாலினும் கையொப்பமிட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. பின்லாந்தில்: 1917 நவம்பர் 14 அன்று பின்லாந்து சென்றார். கட்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அவர்களை வாழ்த்தினார். பின்லாந்து விடுதலை பெற்று தன்னாட்சி அமைக்க அறிவிப்பு செய்தார். அதே ஆண்டு டிசம்பர் 18 அன்று தோழர் லெனின் – ஸ்டாலின் கையெழுத்துடன் இந்த ஆணையை வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு சிலரிடம் இருந்தது. தோழர் லெனின் துணையுடன் ஸ்டாலின் இதை சமாளித்தார். தொடர் முயற்சி அரசிற்கும் மதத்திற்கும் உள்ள உறவு பிரிக்கப்பட்டது. தேவாலயங்கள் வேறு – அரசு வேறு என்று வெவ்வேறு ஆக்கப்பட்டது. அதே சமயம் ஒவ்வொரு குடிமகனுக்கும் மதச்சுதந்திரமும் வழிபாட்டு சுதந்திரமும் உறுதி செய்யப்பட்டது. உலக யுத்தம் துவங்கி நடைபெறும் காலமாக இது இருந்தது. ஏற்கனவே இருந்த அரசு தன்னை யுத்தத்தில் ஈடுபடுத்தியிருந்தது. இதிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள தோழர் லெனின் தலைமையிலான அரசு விரும்பியது. அனைத்து நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்தது. 1918 – ஜனவரியில் ஐரோப்பாக் கண்டம் முழுவதிலும் மற்றும் அமெரிக்காவிலும் இருந்த புரட்சிகர, குணம் கொண்ட சோசலிச சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட கட்சிகளின் மாநாடு கூட்டப்பட்டது. இதில் ஸ்டாலின் முக்கியப் பங்கு வகித்தார். இது மூன்றாவது அகிலம் உருவாக உதவியது. உலக யுத்தம் உலக முதலாளித்துவ சக்திகளால் நடத்தப்படுகிறது. இதனைத் தொழிலாளி வர்க்கம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று கருத்து தோழர் லெனினால் முன்வைக்கப்பட்டது. ரஷ்யாவில் யுத்தமற்ற சூழல் இருந்தால்தான் முன்னேற்றப் பணிகளை நிறைவேற்ற முடியும் என்பதையும் வற்புறுத்தினார். டிராட்ஸ்கி போன்ற சிலர் இதை ஏற்கவில்லை. தோழர் ஸ்டாலின் லெனின் பக்கம் நின்றார். டிராட்ஸ்கியின் துரோகச் செயலைக் கடுமையாகக் சாடினார். ஜெர்மனி ரஷ்யாவைத் தாக்கியது. போரைத் தொடர்ந்தது. ரஷ்யாவின் பழைய இராணுவம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தோழர். லெனின் மக்களை வேண்டினார். புதிய இராணுவம் செம்படை என்ற பெயரில் அமைந்தது. இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஜெர்மனியின் முயற்சி முறியடிக்கப்பட்டது. முறுக்கிக் கொண்டு வந்த ஜெர்மனி முறியடிக்கப்பட்டதும் பணிந்தது. சமாதான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. இக்காலத்தில் பாதுகாப்புக் கருதி ரஷ்யாவின் தலைநகர் பெட்ரோகிராடில் இருந்து மாஸ்கோவுக்கு மாற்றப்பட்டது. ஜெர்மனியர் தாக்குதல் பெட்ரோகிராடுக்கு அருகாமையில் வந்ததால் இம்முடிவு எடுக்கப்பட்டது. கட்சியின் பெயரும் ரஷ்யக் கம்யூனிட் கட்சி (போல்ஷ்விக்) என்று மாற்றப்பட்டது. கிராமப்புறங்களில் இருந்த ஏழை விவசாயிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. இவர்களை ஒடுக்கி வந்த குலாக்குகள் என்னும் பிரிவினர் ஒடுக்கப்பட்டனர். இரண்டு எதிர்ப்புகள்: புரட்சிகர அரசு உழைப்பாளி மக்களின் அரசாக உறுதிப்பட்டுவிட்டால் நமது நாடுகளிலும் இதே நிலைமை ஏற்பட்டு விடும். இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற முனைப்புடன் உலக ஏகாதிபத்திய சக்திகள் செயல்பட்டன. அதே சமயத்தில் உள்நாட்டில் தங்கள் சுரண்டல் கொள்கை நின்றுவிடுமே என்ற அச்சத்துடன் முதலாளிகளும், தங்கள் நிலங்களை இழந்த உடமையாளர்களும் அரசை எதிர்த்தனர். இவர்களுக்கு ஆதரவாக உள்நாட்டில் இருந்த சுரண்டும் வர்க்க ஆதரவு கட்சிகளும் செயல்பட்டன. முறைப்படி போர் அறிவிப்பு செய்து போர் தொடுப்பது தான் முறை. ஆனால் அதனைக் கைவிட்டு திடீர் என்று பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் ரஷ்யாவைத் தாக்கின. உலகின் மிகப் பெரிய நாடுகள் புதிய அரசைத் தாக்கின. வெண்படை என்ற பெயரில் மிகவும் மோசமான புண்படை ஒன்று ரஷ்யாவில் இருந்தது. அதனை ஆதரித்து ஏற்கனவே மக்கள் அமைத்திருந்த சோவியத்துக்களைக் கலைத்தனர். வெண்படை அரசை அமைத்து முதலாளித்துவ நிர்வாகத்தை ஏற்படுத்தினர். எதிர் புரட்சி சக்திகள் ஊக்குவிக்கப்பட்டன. தோழர். ஸ்டாலின் பணிகள் கூடுதல் ஆயின. அவரது தலைமையில் புரட்சிகர இராணுவ கவுன்சில் அமைக்கப்பட்டது. செம்படை பலப்படுத்தப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தினர்களும், அவர்கள் தலைமையில் இருந்த தொழிலாளி வர்க்கமும் இப்பணிக்கு உறுதுணையாக இருந்தனர். உணவுத் தட்டுப்பாடு கடுமையாக இருந்தது. உற்பத்தி நடைபெற முடியவில்லை. இந்தச் சூழலிலும் தளரா உறுதியுடன் போரிட்டு முறியடித்தனர். அகில ரஷ்ய மத்திய நிர்வாகக்குழுவிற்கும், தலைமைக்குழுவிற்கும் ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். தோழர். லெனின் அவர்களின் உதவியாளராகவும் செயல்பட்டார். போர் முனையில் தோல்வி ஏற்படும் இடங்களுக்கு நேரில் அனுப்பப்பட்டு பலவீனத்தைப் போக்கி வெற்றி கொள்ளச் செய்தார். 1919 மார்ச் 18 முதல் 23 வரை மாகோவில் கட்சியின் 8-வது மாநாடு நடைபெற்றது. போர்த்துறையின் அமைச்சராக இருந்த டிராட்ஸ்கியின் செயல்கள் கடும் விமர்சனத்திற்கு ஆளாயின. தொழிலாளர், விவசாயிகள் கொண்ட இராணுவம் அமைக்கப்படுவதன் அவசியத்தை ஸ்டாலின் முன்வைத்தார். இம்மாநாட்டில் கட்சியின் உயர்மட்டக்குழுக்களுக்கு தேர்வு செய்யப்பட்டார். உள்துறை அமைச்சராகவும் ஆனார். இவரது தலைமையில் இயங்கியவர்கள் பாராட்டை எதிர்பாராமல் கடுமையாக உழைத்தனர். மணவாழ்க்கை 1919 மார்ச் 24 அன்று நாடியா அலுவாலியா என்னும் நங்கையை மணமுடித்தார். இக்குடும்பம் ஸ்டாலினுடன் மிகவும் நெருக்கமாக இருந்த குடும்பம். ஜார் ஆட்சிக் காலத்தில் பணியாளர் குடியிருப்பாக இருந்த பகுதியில் ஒரு சிறிய வீட்டில் அவரது இல்லறம் நடந்தது. இதே காலத்தில் வெண்படையின் கொட்டத்தை அடக்க செஞ்சேனைக்குத் தலைமை தாங்க கட்சியால் அனுப்பப்பட்டார். அப்பணியையும் திறம்பட நிறைவேற்றினார். போர்க் கலையில் வல்லவராகத் திகழ்ந்தார். 1917 நவம்பர் திங்கள் புரட்சிகர அரசு அமைந்தது என்று பார்த்தோம் அல்லவா, அதற்கு முன்பு நடந்த சேதத்தை விட பின்பு நடைபெற்ற தேசம் கொடியதாக இருந்தது. அந்நிய நாடுகளின் தாக்குதல், உள்நாட்டு எதிர்புரட்சி சக்திகளின் தாக்குதல் இவற்றினாலும், பஞ்சம் பட்டினியாலும் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 லட்சம், பொருட் சேதம் 6000 கோடி டாலர். 1918 ஆம் ஆண்டு பேனி காப்ளான் என்னும் கொடியவளால் தோழர் லெனின் சுடப்பட்டார். குருவி தலைமையில் பனங்காய் என்பது போன்ற சூழல் புதிய அரசிற்கு ஏற்பட்டது. இதற்காக ஏகாதிபத்திய நாடுகள் செலவிட்டது பல்லாயிரம் கோடிகள். இச்சூழலில் தோழர். லெனின் தலைமையில் உறுதியாக நின்று ஸ்டாலின் செயல்பட்டார். கட்சி பலம்: கட்சியின் தரத்தையும், உறுப்பினர் எண்ணிக்கையையும் உயர்த்த அயராது உழைத்தார். 1917 ஆம் ஆண்டு புரட்சி நடந்த காலத்தில் இரண்டரை லட்சமாக இருந்த உறுப்பினர் எண்ணிக்கை 7 லட்சமாக 1920 நவம்பர் மாதம் இருந்தது. தோழர். லெனின் வழிகாட்டலின் பேரில் சக தோழர்களுடன் இணைந்து இப்பணி நிறைவேற உதவினார். கருத்து வேறுபாடுகள்: தொழில் வளர்ச்சி, வேளாண்மை வளர்ச்சி ஆகியவற்றில் கருத்து வேறுபாடுகள் வந்தன. போர்க்காலத்தில் இருந்த அணுகுமுறையை மாற்றி புதிய பொருளாதார அணுகுமுறை வேண்டும் என்று லெனின் வலியுறுத்தினார். முதலாளித்துவத்தின் சில அம்சங்களை நாம் அனுமதிக்கலாம். அதே சமயம் கட்டுப்பாட்டு அதிகாரம் நம்மிடம் இருக்க வேண்டும். அடிப்படையான தொழில்கள் நம்மிடம் இருக்க வேண்டுமென்றார். இது புதிய பொருளாதாரக் கொள்கை என்று அறிவிக்கப்பட்டது. 1921 மார்ச் 8 அன்று நடைபெற்ற கட்சியின் பத்தாவது காங்கிர இதனை நிறைவேற்றியது. கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கங்கள் ஜனநாயகப் பூர்வமாக நடத்தப்படக் கூடாது என்று டிராட்ஸ்கி போன்றோர் கருதினர். லெனின் மறுத்தார். தொழிற்சங்கங்கள், நிர்வாகப் பயிற்சி, மேலாண்மைப் பயிற்சி மற்றும் கம்யூனிசப் பயிற்சிக்கான பள்ளிகள் என்று கூறினார். “நமது கருத்து வேறுபாடுகள்” என்ற தலைப்பில் ஸ்டாலின் “பிராவ்தாவில்” எழுதிய கட்டுரையும் இதை வழிமொழிந்து இருந்தது. கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப் போக்குகளையும் கண்டித்தனர். உடல்நலம் குன்றல்: 1920-21ல் ஸ்டாலின் இருமுறை உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டார். குடல் சுழற்சி நோய் தாக்கியது. அறுசை சிகிச்சை செய்ப்பட்டது. புதிய பொறுப்புகள்: இதற்கு மத்தியில் பொறுப்புகளும் அதிகரித்தன. தேசிய இன அமைச்சராக ஸ்டாலின் இருந்தார் என்று பார்த்தோம் அல்லவா? அன்றைய ருஷ்யாவின் மக்கள் தொகை 14 கோடி. இதில் ருஷ்யர் அல்லாதவர் 6.50 கோடி. இவர்களது நலனைப் பாதுகாக்கும் பொறுப்பை ஸ்டாலின் நிறைவேற்றினார். ஜார் ஆட்சிக் காலத்தில் இருந்த ஊழியர்கள் மக்களை நேசிக்காதவர்களாக இருந்தனர். தேவையற்ற தாமதம் செய்தனர். ஊழலில் திளைத்தனர். இதனை கண்காணித்து ஒழுங்கமைக்க தொழிலாளர் – விவசாயிகள் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது. இது ராப்க்ரின் என அழைக்கப்பட்டது. இந்தக் கண்காணிப்புத் துறை அமைச்சராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். 1922 ஏப்ரல் 3 அன்று விரிவடைந்த மத்தியக்குழுக் கூட்டம் நடைபெற்றது. தோழர் ஸ்டாலின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜோசப் ஸ்டாலின் – 4 லெனின் நலக்குறைவு: 1918 இல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடும் உள்ளேயே தங்கிவிட்ட குண்டினை அகற்ற 1922 இல் ஏப்ரலில் நடைபெற்ற அறுவை சிகிச்சையும் தோழர் லெனினை வலுக்குறையச் செய்தது. 1922 மே மாதம் பக்கவாதம் தாக்கியது. பேச்சுத் திறனையும் இழந்தார். ஆயினும் தொடர்ந்து சிகிச்சை பெற்றுத் தேறினார். இக்காலத்தில் லெனினின் குறிப்பறிந்து, கருத்தறிந்து ஸ்டாலின் செயல்பட்டார். அவ்வபோது நடைபெறும் நிகழ்ச்சிகளை லெனின் கவனத்திற்கு கொண்டு சென்று வழிகாட்டுத்தலைப் பெற்றார். அரசியல் அமைப்பு: 1922 ஆகட் 10 அன்று அரசியல் அமைப்பு ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக ஸ்டாலின் செயல்பட கட்சி முடிவு செய்தது. சோவியத் சோசலிசக் குடியரசுக் கூட்டமைப்பிற்கான புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்படுவது, இதன் நோக்கமாக இருந்தது. அனைத்து தேசிய இனங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதும் அதன் மூலம் சோவியன் யூனியனை பலப்படுத்து வதும் இதன் நோக்கம். இப்பணியைச் சிறப்புற ஸ்டாலின் நிறைவேற்றினார். இத்துடன் உடல்நலம் குன்றி இருந்த லெனினின் அறுவைச் சிகிச்சையிலும் உரிய கவனம் செலுத்தினார். லெனினது கடிதங்கள்: இக்காலத்தில் லெனின் தனது உடல்நலம் குன்றி இருந்த காலத்தில் சில கடிதங்களை சொல்லி எழுத வைத்தார். 1922 டிசம்பர் 23, டிசம்பர் 24, 1923 ஜனவரி 4 ஆகிய தேதிகளில் மூன்று கடிதங்கள் அவரால் சொல்லப்பட்டு எழுதப்பட்டன. அடுத்து வரும் கட்சிக் காங்கிரசில் முன்வைப்பதற்காக இதனைத் தயாரித்தார். இதில் பல அம்சங்கள் இருந்தன. ஸ்டாலின் பற்றியும் இருந்தது. ஸ்டாலினிடம் எல்லையற்ற அதிகாரங்கள் குவிந்திருக்கின்றன. போதிய அளவு எச்சரிக்கையுடன் இதைப் பயன்படுத்துவாரா? என்பதை என்னால் உறுதி கூற முடியவில்லை என்று ஒரு கடிதத்திலும், மற்றொன்றில், ஸ்டாலின் மிகவும் சிடுசிடுப்பு உடையவர், நம்மிடையே குறைபாடு சகித்துக் கொள்ளப்படலாம். ஆனால் பொதுச் செயலாளர் என்ற முறையில் இதைச் சகிக்க முடியாது. ஆகவே ஸ்டாலினை அப்பதவியில் இருந்து நீக்கி விட்டு வேறு ஒருவரை அந்த இடத்தில் நியமிக்க தோழர்கள் சிந்திக்க வேண்டும் என்று இருந்தது. இதை ரகசியமாக வைத்திருக்க லெனின் கோரி இருந்தார். இக்கடிதங்கள் அவரது மனைவி குரூப்கயாவிடம் இருந்தன. காங்கிரசில் இக்கருத்தை முன்வைக்க அவர் எண்ணி இருந்தார். அமைப்பு குறித்தும், அரசு குறித்தும் பல கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இவையனைத்தும் அடுத்து நடைபெற்ற மாநாடுகளில் நிறைவேற்றப்பட்டன. டிராட்ஸ்கி இதனை எதிர்த்து செய்த முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன. மாநாடு: 1923 ஏப்ரல் 17-25 ஆகிய தேதிகளில் கட்சியின் 12 ஆவது மாநாடு நடைபெற்றது. தோழர் லெனின் கடுமையான உடல்நல பாதிப்பு காரணமாக இதில் கலந்து கொள்ளவில்லை. லெனின் இல்லாத காலத்தில் ஸ்டாலின் பொறுப்புடன் தனது கடமைகளை நிறைவேற்றினார். தேசிய இனவெறிப் போக்கு எவ்விடத்தில் தலைதூக்கினாலும் எவ்வளவு தீங்கானது என்பதை விளக்கினார். நாட்டின் ஒற்றுமை, கட்சிக்குள் ஒற்றுமை ஆகியவை இம்மாநாட்டின் உட்கருவாக இருந்தது. 1924, ஜனவரி 16,17,18 தேதிகளில் நடந்த கட்சியின் 13 ஆவது மாநாட்டிலும் இக்கருத்து பலப்படுத்தப்பட்டது. டிராட்ஸ்கி செய்த தவறுகளையும் லெனினிசத்தில் இருந்து விலகிப் போவதையும் இம்மாநாடு கண்டித்தது. லெனின் மறைவு: மார்க்சையும், ஏங்கெல்சையும் மனமார விரும்பியவர் அறிவுப்பூர்வமாகப் புரிந்தவர், புரிந்து கொண்டதை உழைக்கும் மக்களுக்கு விளக்கியவர். “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்ற குறளுக்கேற்ப மார்க்சியத்தை கசடின்றிக் கற்று அதன்படி வாழ்வையும் நெறிப்படுத்திக் கொண்ட தலைவர் தோழர் லெனின் அவர்கள் 1924 ஜனவரி 21 அன்று மாலை மாஸ்கோ அருகில் உள்ள கோர்க்கி என்ற கிராமத்தில் காலமானார். அவரது உடல் மாஸ்கோ கொண்டு வரப்பட்டது. லெனினுக்கு மரியாதை: நாடு முழுவதும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது. லெனினை வணங்க மக்கள் சாரைசாரையாக அணி வகுத்தனர். அவரது உடலைப் புதைக்க வேண்டாம், எரிக்க வேண்டாம் பாதுகாப்போம் என்ற முடிவு கட்சியில் எடுக்கப்பட்டது. லெனினது துணைவியார் குரூப்கயா கூட இதனை விரும்பவில்லை. சோவியத் யூனியனில் இருந்த மக்களின் அன்றைய நிலை, உணர்வு இவற்றைக் கணக்கிலெடுத்து தோழர் ஸ்டாலினின் வற்புறுத்தல் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டது. ஏழு லட்சத்திற்கும் அதிகமான மக்கள், பாதுகாப்புடன் கண்ணாடிப் பேழையில் பாதுகாக்கப்பட்டிருந்த லெனினை வணங்கினர். இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்களும் தொலை தூரத்தில் இருந்து வந்து லெனினை வணங்கினர். அப்போது பிறக்காதவர்களும் பல ஆண்டுகள் கழித்து அவரைக் கண்டனர். மரியாதை செலுத்தினர் (இந்தக் கட்டுரையாளர் உட்பட) 1924 ஜனவரி 21 அன்று சோவியத்துக்களின் மாநாடு நடைபெற்றது. தோழர் ஸ்டாலின் ஆற்றிய உரை மகத்தானது. தோழர்களே! கம்யூனிஸ்ட்களாகிய நாம் தனிச் சிறப்பு மிக்க வார்ப்புகள். தோழர் லெனின் அவர்களது இராணுவத்தைச் சேர்ந்தவர்கள். தோழர் லெனின் அவர்களால் உருவாக்கப்பட்ட கட்சியின் அங்கத்தினர்கள். இதை விட உயர்ந்தது எதுவும் இல்லை. இத்தகைய கட்சியின் உறுப்பினராக இருந்து நெருக்கடிகள், தாக்குதல்கள் ஆகியவற்றைத் தாங்கிக் கொள்வது எல்லோராலும் முடியாது. உழைக்கும் வர்க்கத்தின் புதல்வர்களாலும், ஏழ்மை அதிலும் போராட்ட உணர்வு கொண்டவர்களால் தான் முடியும். இதனால் தான் லெனினிய வாதிகளாக உள்ள நம் கட்சி கம்யூனிஸ்ட்களின் கட்சி, உழைக்கும் வர்க்கத்தின் கட்சி என அழைக்கப்படுகிறது. நம்மிடமிருந்து நம்மை விட்டுப் பிரிந்து சென்றுள்ள தோழர் லெனின் கட்சியின் உறுப்பினர் என்ற பெரும் பொறுப்பை தூய்மையுடன் பாதுகாக்க நமக்கு கட்டளையிட்டிருக்கிறார். இம்மாநாட்டின் மூலம் அவருக்கு நாம் கூறுகிறோம். தோழர் லெனின்! உங்களது கட்டளையை நிறைவேற்றுவோம். நேர்மையுடன் நிறைவேற்றுவோம் என்று உறுதி கூறுகிறோம். கண்ணின் மணிபோல் கட்சி ஒற்றுமையைக் காக்கக் கோரி இருக்கிறார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைப் பாதுகாக்க வலுப்படுத்தக் கோரி இருக்கிறார். தொழிலாளர், விவசாயிகள் அணிவகுப்பை முழு ஆற்றலுடன் வலுப்படுத்தக் கோரி உள்ளார். சோவியத் ஒன்றியங்களின் குடியரசுகளை வலிமைப்படுத்தக் கோரி உள்ளார். கம்யூனிஸ்ட் அகிலத்தின் கோட்பாடுகளுக்கு உண்மையுடன் நடந்து கொள்ளக் கோரியுள்ளார். தோழர். லெனின் அவர்களே! இக்கடமைகளை நிறைவேற்றுவோம் என்று உறுதி கூறுகிறோம். மேற்கண்ட நோக்கங்களை வலிமைப்படுத்த விரிவாக்கம் செய்திட எம் உறிரைத் துச்சமெனக் கருதிடுவோம்! என்று சூளுரை செய்தார். சோகம் கப்பிய சூழலில் இது வேகம் ஊட்டுவதாக இருந்தது. இன்றளவும் உலக கம்யூனிஸ்ட்களால் ஏற்கப்பட்டு மதிக்கப்பட்டு வருகிறது. லெனினது சடலம் தாங்கிய பெட்டியைத் தூக்கிச் செல்வதிலும் ஸ்டாலின் இருந்தார். கட்சிக்கு முன் லெனினது கடிதம்: லெனின் சொல்லச் சொல்ல எழுதப்பட்ட கடிதங்கள், கட்டுரைகள் பல உண்டு. அதே சமயம் ஸ்டாலின் பற்றிய தம் கடிதத்தைத் தமது மறைவிற்குப் பிறகு தான் வெளியிட வேண்டும் என்று தமது மனைவி குரூப்கயாவிடம் கொடுத்து இருந்தார். அதன்படியே கடிதம் அன்றைய தலைவர் காமனேவிடம் குரூப்கயாவால் ஒப்படைக்கப்பட்டது. காமனேவ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தோழர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தார். ஸ்டாலின் இக்கடிதத்தை வரும் காலத்தில் நடைபெற்று இருந்த 13 ஆவது காங்கிரசை வழிநடத்த இருந்த வழிநடத்தும் குழுவிடம் ஒப்படைத்தார். அக்குழு கடிதத்தை மாநாட்டின் பிரதிநிதிகளுக்கு வழங்குவது என்று முடிவு செய்தது, அவ்வாறே வழங்கியது. மாநாட்டிலும் படிக்கப்பட்டது. மத்தியக்குழுவில் தோழர் ஸ்டாலின் தன்னை மாற்றக் கோரினார். குழு மறுத்து விட்டது. டிராட்ஸ்கி, காமனேவ், ஜினோவியேவ் உட்பட பல தலைவர்கள் ஸ்டாலினே நீடிக்க வேண்டுமென்றனர். மாநாட்டுப் பிரதிநிதிகளும் இதன் மீது மாற்றுக் கருத்து கூறவில்லை. மாநாடு 1924 மே 23 துவங்கி 31 வரை நடந்தது. தொடர்ந்து ஸ்டாலின் தமது பணிகளை மேற்கொண்டார். “பெட்ரோ கிராட்” நகர் “லெனின் கிராட்” என பெயர் மாற்றப்பட்டது. லெனினது படைப்புகளைத் தொகுத்து உலகின் அனைத்து மொழிகளிலும் வெளியிட லெனின் இன்ஸ்டியூட் அமைக்கப்பட்டது. மாகோவிலும் மற்ற நகரங்களிலும் லெனின் நினைவிடங்கள் அமைக்கப்பட்டன. தோழர் ஸ்டாலின் தன்னை லெனினது மாணவர் என அழைத்துக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொண்டார். லெனின் எழுதியிருந்த விமர்சனங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு செயல்பாடுகளை அமைத்துக் கொண்டார். ஜோசப் ஸ்டாலின் – 5 பெட்ரோ கிராட் லெனின் கிராட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. லெனினது படைப்புக்களைத் தொகுத்து உலகின் அனைத்து மொழிகளிலும் வெளியிட லெனின் இன்ஸ்டிடியூட் அமைக்கப்பட்டது. மாஸ்கோவிலும் மற்ற நகரங்களிலும் லெனின் நினைவிடங்கள் அமைக்கப்பட்டது. தோழர் ஸ்டாலின் தன்னை லெனினது மாணவன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொண்டார். அவர் எழுதியிருந்த விமர்சனங்களைக் கணக்கில் கொண்டு செயல்பாடுகளை அமைத்துக் கொண்டார். லெனினிசம் இக்காலத்தில் லெனினிசத்தின் அடிப்படைகள் என்ற நூலை ஸ்டாலின் எழுதினார். நாம் வாழும் காலத்தின் மார்க்சியமே லெனினியம் என்று நிறுவினார். ஒரு நாட்டில் மட்டுமே சோசலிசம் வெற்றி பெற முடியாது என்று ட்ராட்ஸ்கி குறிப்பிட்டதை மறுத்தார். சோவியத் யூனியன் தனது சொந்த உழைப்பின் மூலம் சோசலிசத்தைத் தம் நாட்டில் நிறைவேற்ற முடியும் என்று குறிப்பிட்டார். 1925 ஏப்ரல் 27, 28, 29 தேதிகளில் நடைபெற்ற கட்சியின் 12 ஆவது மாநாட்டிலும் இதனை முன்வைத்து கட்சியை இதன் கீழ் அணி திரளச் செய்தார். சோவியத் புரட்சிக்குப்பின் அதனை வீழ்த்த அணி திரண்ட முதலாளித்துவ சக்திகள் தவிர்க்க முடியாமல் சோவியத் யூனியனுடன் உறவு கொள்ள முயன்றன. பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளுடன் தூதரக உறவுகள் ஏற்பட்டன. கட்சிக்குள் கருத்துப் போர் தோழர் லெனின் புதிய பொருளாதார கொள்கையை உருவாக்கினார் அல்லவா? அதனை ஏற்றுச் செயல்பட்டு வந்த காலத்தில் புதிய கடுமையான இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. இது முதலாளித்துவ வளர்ச்சிக்குத்தான் இட்டுச் செல்லும். சோசலிச உற்பத்தி முறைக்கு உதவாது என்றனர். 1925 டிசம்பர் 18 அன்று 14 ஆவது கட்சிக் காங்கிரஸ் துவங்கியது. கட்சிக்குள் பதற்றமும் இனக்கமற்ற போக்கும் இருந்தது. ஸ்டாலின் அறிக்கை சமர்ப்பித்தார். லெனினது வழிகாட்டுதல் எவ்வளவு பொருத்தமானது என்பதையும் அதனை எதிர்ப்பது பொருத்தமற்றது என்பதையும் வெளிப்படுத்தினார். இயந்திரங்களையும் பிறவற்றையும் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். நாம் நமது சொந்தக்காலில் இருந்து முன்னேறி ஏற்றுமதி செய்யும் நாடாக மாற உறுதி பூணுவோம் என்றார். கட்சியின் பெயர் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்) என்று மாற்ற காட்சியின் 15 ஆவது காங்கிரஸ் 1926 அக்டோபர் 26 முதல் நவம்பர் 3 முடிய நடைபெற்றது. கட்சியில் ஒற்றுமை வேண்டும் லெனினியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்தைக் கட்சி அங்கத்தினர்களில் பெரும்பான்மையினர் ஏற்றனர். சைபீரியப் பயணம் விவசாய உற்பத்தி பற்றியும் பேசப்பட்டது. உற்பத்தியின் உபரியில் அரசுக்குத் தராமல் பதுக்குவோர் பற்றிய விவாதத்தில் கடும் நடவடிக்கை வேண்டும் என்று ஒரு கருத்து இருந்தது. சட்ட நடவடிக்கை மட்டும் உதவாது. கருத்துப் பிரச்சாரமும் தேவை என்று ஸ்டாலினும் பிறரும் கூறினர். மாற்றாரும் ஏற்றனர். இதன்படி தோழர் ஸ்டாலின் சைபீரியப் பகுதிகுச் சென்றார். விவசாயத்தில் கூட்டுப் பண்ணையின் அவசியத்தை விளக்கினார். இக்காலத்தில் கட்சித் தலைவர்கள் பற்றியும் உறுப்பினர்கள் பற்றியும் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறை குறித்தும் ஏராளமாக எழுதினார். உலகக் கம்யூனிட்டுகளுக்கு இன்றளவும் வழிகாட்டுவதாக இது அமைந்துள்ளது. தோழர் லெனின் மறைவிற்குப் பின் அவரது கருத்துக்களை எதிர்த்தோரை அரசியல் சித்தாந்த ரீதியில் எதிர்ப்பதில் முன் நின்றார். தனி ஒரு நாட்டில் சோசலிசம் சாத்தியமே என்பதை கட்சிக்குள்ளும் வெளியிலும் பேசி எழுதி அணி திரட்டினார். லெனினிசத்தின் அடிப்படைகள் என்னும் நூலை எழுதினார். இது உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு இன்றளவும் உதவுகிறது. லெனினிசத்திற்கு மாற்றாக ட்ராட்ஸ்கியிசம் முன் வைக்கப்பட்டதை இந்நூலில் முறியடித்தது. வாழ்க்கை முறை கடசியிலும் ஆட்சியிலும் உயர் பொறுப்பில் இருந்த தலைவன் எத்தகைய இன்ப வாழ்வையும் அமைத்துக் கொள்ள முடியும். ஆனால், அவர் ஒரு எளிய பணியாளர் குடியிருப்பில் தான் வசித்தார். அவரது மனைவி நாடியா, மூத்த மனைவிக்கு பிறந்த மூத்த மகன் யாக் கோபு, நாடியாவுக்குப் பிறந்த மகள் வாசிலி அடுத்துப் பிறந்த ஸ்வாட்லானா ஆகியோர் இதில் தான் இருந்தனர். ஏராளமான செயலாளர்களை வைத்துக் கொள்ளவில்லை. அன்றைய எழுத்தாளர்கள் பலரும் இது குறித்து வியந்து எழுதினர். ஊருக்குத்தான் உபதேசம் உனக்கும் எனக்கும் இல்லை என்று நம் ஊரில் ஒரு வழக்கு மொழி இருப்பதை அறிவோம். ஆனால் ஸ்டாலின் உதட்டுக்கும் உள்ளத்திற்கும் உறவு கொண்டவராகவே திகழ்ந்தார். நான் லெனினின் மாணவன் அவரது தகுதி படைத்த மாணவனாக வாழவே விரும்புகிறேன் என்றார். 1924 டிசம்பர் 21 அன்று அவரது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. எனது வாழ்நாள் முழுவதும் உழைக்கும் மக்கள் நலனுக்காகப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்காகப் உலகக் கம்யூனிசத்துக்காக என்னை அர்ப்பணிப்பேன். உடலில் ஒரு துளி இரத்தம் உள்ள வரையிலும் பாடுபடுவேன் என்று இச்சமயம் செய்தி விடுத்தார். தன்னை வாழ்த்தியவர்களுக்கு அளித்த பதிலாக இதனையே தெரிவித்தார். ஆட்சியிலும் கட்சியிலும் தன்னலமற்றவராக, தன்னிகரற்றவராகத் திகழ்ந்தார். ஐந்தாண்டுத் திட்டம் தொழில் துறையிலும், விவசாயத் துறையிலும் பின்தங்கியிருந்த நாட்டை முன்னேற்ற ஐந்தாண்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தோழர் லெனின் அவர்களின் புதிய பொருளாதாரக் கொள்கையை அடியொற்றி இத்திட்டம் உருவாக்கப்பட்டது. கட்சிக் காங்கிரஸ் ஏற்றது. கட்சி உணர்வாகவும், மக்கள் உணர்வாகவும் மாறியது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளுக்கும் சோவியத் யூனியனுக்கும் உள்ள மாபெரும் இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது. மக்களுக்கு கல்வி புகட்டப்பட்டது. தொழிலாளர்களுக்குத் தொழில் நுட்பம் பயிற்றுவிக்கப்பட்டது. உலகம் முழுவதும் இதனைக் கூர்ந்து நோக்கியது. முதலாளித்துவ அறிஞர்கள் இதனைக் கேலி பேசினர். இது இன்பக் கனவாக இருக்குமேயன்றி நனவாக முடியாது என்றனர். விவசாயத்தில் பழைய ஏர்களுக்குப் பதில் டிராக்டர்கள் வந்தன. கூட்டுப் பண்ணைகள் உருவாயின. கூட்டு உழைப்பு, கூட்டு சிந்தனை என்பது ஏற்பட்டது. குலாக்குகள் தொல்லை தந்தனர். அது விவசாய மக்களால் முறியடிக்கப்பட்டது. கிராமப்புற வேலையின்மை ஒழிக்கப்பட்டது. விளைச்சல் பெருகியது. பசியும், பஞ்சமும் நீங்கியது. பற்றாக்குறை மாறியது. உபரியாக விளைச்சல் ஏற்பட்டது. தொழில்துறையில் வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டது. கனரகத் தொழில்கள் ஏற்படுத்தப்பட்டன. 1930 ஜனவரிக்கும் 1933 அக்டோபருக்கும் இடைப்பட்ட காலத்தில் 6,60,000 தொழிலாளர் கம்யூனிஸ்ட்டுகள் புதிய தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெற்றனர். அறிவு ஜீவிகள் என்பர் தொழிலாளி வர்க்கத்திலேயே தோன்றினர். தோற்றுவிக்கப்பட்டனர். விவசாய நாடாக இருந்தது தொழில் வள நாடாக மாற்றப்பட்டது. 1928 இல் தொடங்கிய திட்டம் 1933 ஆம் ஆண்டு முடியும் முன்பே நிறைவேறியது. உலகம் வியந்தது. தோழர் ஸ்டாலின் 1933 ஜனவரியில் நடந்த மத்தியக்குழுவின் கூட்டத்தில் திட்டம் பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் அறிக்கை வைத்தார். இதனை சோவியத் யூனியனின் இரண்டாம் புரட்சி என்றும் மக்கள் மத்தியில் ஸ்டாலின் புரட்சி என்றும் அறிவியல், பொருளியல் வல்லுநர்களாலும் மக்களாலும் அழைக்கப்பட்டது. இவ்வெற்றி கண்டு தொழிலாளி வர்க்கம் ஆனந்தக் கூத்தாடியது. முதலாளித்தவ சக்திகள் இதனை நீடிக்காமல் தடுக்க தொடர்ந்து முயற்சி செய்தனர். கட்சிக்குள் தொல்லை ட்ராட்ஸ்கி, ஜினோவியேவ் போன்றோர் இவ்வெற்றிக்குப் பின்பும் தங்களைத் திருத்திக் கொள்ளவில்லை. தொடர்ந்து சீர்குலைவு வேலைகளில் ஈடுபட்டனர். இது சுரண்டும் வர்க்கத்திற்கு ஆதரவாக மாறியது. அவர்கள் இவர்களைப் பெரிய தியாகிகள் ஆகவும் ஸ்டாலின் பெரும் சர்வாதிகாரி என்றும் செய்திகளைப் பரப்பினர். இன்றளவும் அதனை வெளியிடுகின்றனர். கொலை லெனின் கிராட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஆகவும் சோவியத்தின் தலைவர் ஆகவும் இருந்த தோழர் கெர்கிரோவ் படுகொலை செய்யப்பட்டார். இவர் போல்ஷ்விக் தியரியில் உறுதியாக இருந்து ட்டிராட்ஸ்கியத்தை எதிர்த்துப் போராடிய தலைவர். ஸ்டாலின் அவ்வியக்கத்திற்கு நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தினார். இது ஸ்டாலினுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக கருதப்பட்டது. இந்தக் கொலை 1934 ஜனவரி முதல் நாள் நடைபெற்றது. கட்சிக்குள் விழிப்புணர்வு தேவை என்றும் எதிரிகளைக் குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார். புதிய அரசியல் சாசனம் 1935 பிப்ரவரி 6 ஆம் நாள் சோவியத் யூனியன் ஏழாவது காங்கிரஸ் கூடியது. 1917 புரட்சி முடிந்தது. 1924 முதலாவது அரசியல் அமைப்பு சாசனம் ஏற்கப்பட்டது. தற்போதைய புதிய சூழலில் புதிய அரசியல் அமைப்புச்சட்டம் தேவை என்ற முடிவு செய்யப்பட்டது. அரசியல் சாசன நகல் தயாரிக்கும் குழுவிற்கு ஸ்டாலின் தலைமையேற்றார். அரசியல், அறிவியல், வரலாறு, பொருளியல் ஆகியவற்றில் வல்லுநர்கள் இக்குழுவில் இருந்தனர். இக்குழு ஓராண்டு காலம் ஆய்வு செய்து நகல் தயாரிக்கப்பட்டது. மக்களிடையே கருத்து கேட்கப்பட்டது. ஆறு மாத காலம் விவாதம் நடந்தது. 6 கோடி பிரதிகள் அனுப்பப்பட்டன. 1,54,000 திருத்தங்கள் முன்மொழியப் பட்டன. பல கருத்துக்கள் ஒரே மாதிரி இருந்தன. இறுதியில் 43 திருத்தங்கள் செய்யப்பட்டன. 1936 டிசம்பர் அன்று இக்கூட்டம் சோவியத் காங்கிரசால் ஏற்கப்பட்டது. அரசையும் அதன் அதிகாரத்தையும் வலுப்படுத்த மக்களின் வாழ்வை மேம்படுத்த இச்சட்டம் உதவியது. மக்கள் மத்தியில் இது ஸ்டாலின் கட்டம் என்று அழைக்கப்பட்டது. எதிரிகளின் ஆத்திரம் எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியர் திண்ணியராகப் பெரின் என்ற குறளுக்கேற்ப தெளிவான சித்தாந்தப் பின்புலமும் தின்மையான நுண்ணிய அறிவும் கொண்ட கட்சி உறுப்பினர்களும் தலைவர்களும் தோழர் ஸ்டாலின் தலைமையில் ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெறுவதை எதிரிகள் பொறுத்துக் கொள்ள முடியாமல் துடித்தனர். லெனின் கிராட் செயலாளர் படுகொலையில் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சியான விபரங்கள் வெளிவந்தன. கட்சிக்குள் பதவி ஆசை கொண்டோரின் மலிவான வர்க்க விரோதப் போக்குகள் கண்டறியப்பட்டன. ஏராளமான தனி நபர் படுகொலைகளுக்கு ஏராளமான தனிநபர்களுக்கு கொலைகளுக்கு அந்நிய உளவாளிகளுடன் திட்டமிடப்பட்டிருந்தது தெரிய வந்தது. தோழர் ஸ்டாலின் கட்சி அங்கத்தினர்களை உஷார்படுத்தினார். கட்சிக் கல்வியை மேலும் மேலும் ஊக்கப்படுத்தினார். எதிரி வர்க்கக் கருத்துக்களால் கவரப்பட்டு கட்சிக்குள் இருப்பவர்களைக் களையடுக்கும் முடிவு கட்சியில் கொடுக்கப்பட்டது. இதில் கவனமாகவும் நிதானமாகவும் ஈடுபட முடியு செய்யப்பட்டது. தோழர் ஸ்டாலின் விரிவாக எழுதினார். 1930-38 ஆம் ஆண்டுகளில் இவ்வியக்கம் நடத்தப்பட்டது. இந்தக் கடுமையான இயக்கத்தில் பல இடங்களில் விவாதங்களும் நடந்தன. இதனை ஸ்டாலின் தலையிட்டு சரிபடுத்தினார். இவ்வியக்கம் சோசலிசத் தாய் நாட்டைக் காப்போம் என்கிற முறையில் தேச பக்த உணர்வுடன் நடத்தப்பட்டது. இரண்டாம் உலக மகாயுத்த காலத்தில் ஹிட்லரது நாஜிப் படையினருக்கு சோவியத் நாட்டில் உளவாளிகளின் கிடைக்கவில்லை. பல்வேறு நாடுகளில் அவர்களுக்கு காட்டிக் கொடுப்போர் இருந்தனர். சோவியத்தில் ஒருவர் கூட கிடைக்கவில்லை. கட்சிக்குள்ளும் வெளியிலும் நடத்தப்பட்ட களையெடுப்பு அல்லது நெறிப்படுத்தும் இயக்கம் இதற்கு மிகவும் பயன்பட்டது. கல்வி இக்காலத்தில் தோழர் ஸ்டாலின் தமது உரைகளில் எழுத்துக்களில் மார்க்சிய-லெனினியம் பற்றி ஏராளமாக குறிப்பிட்டார். இதில் பெற வேண்டிய ஞானம் சோசலிச கட்டுமானத்தில் இதனைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் பற்றியும் குறிப்பிட்டார். சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்) வரலாறு என்ற நூலை எழுதினார். இதிலேயே இயக்கவியல் வரலாற்றியல் பொருள் முதல்வாதம் பற்றியும் எழுதியிருந்தார். 1938 இல் இந்நூல் கட்சியின் மத்தியக்குழுவால் ஏற்றக்கப்பட்டு வெளிவந்தது. உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு இந்நூல் இன்றளவும் துணை புரிகிறது. போர்முகம் 1914 இல் துவங்கி 1918 வரை முதலாம் உலகப் போர் நடந்ததும் அதன் மத்தியில் 1917 நவம்பரில் சோவியத் யூனியன் தனது புரட்சியை முடித்து புரட்சிகர அரசை அமைத்ததும் நாம் அறிந்ததே! இந்த அரசு நீடிப்பதையும், நிலைபெறுவதையும் விரும்பாத முதலாளித்துவ சக்திகள் இதற்கு எதிரான கருத்துக்களை விதைத்துக் கொண்டே இருந்தன. அதே சமயம் உலக நாடுகளைக் கொள்ளையடிக்க தங்களுக்குள் மோதிக் கொண்டும் இருந்தன. கம்யூனிச அபாயத்தில் இருந்து உலகைக் காக்கப் போகிறோம் என்று கூறிக் கொண்டன. ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் இதில் முன்னின்றன. 1935 இல் ஹிட்லர் ஜெர்மனியை இராணுவமயமாக்கினார். கம்யூனிஸ்ட் எதிர்ப்பு ஒப்பந்தம் என்ற பெயரில் ஜெர்மனியும், ஜப்பானும் கையொப்பமிட்டன. ஜெர்மனும், இத்தாலியும் இதனைச் சொல்லிக் கொண்டே ஸ்பெயின் நாட்டை ஆக்கிரமிப்பு செய்தன. 1937 இல் இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி ஆகியவை இணைந்து கூட்டணியை அமைத்தன. ரோம், டோக்கியோ, பெர்லின் கூட்டணி என்று இது அழைக்கப்பட்டது. 1939 மார்ச் 10 அன்று கம்யூனிஸ்ட் கட்சியின் பதினெட்டாவது மாநாட்டில் தோழர் ஸ்டாலின் அறிக்கை சமர்ப்பித்தார். போர் மேகங்கள் சூழ்ந்திருப்பதையும், முதலாளித்துவ சூழ்ச்சிகளையும், பாசிச சக்திகளின் அபாயத்தையும் அவர் குறிப்பிட்டார். இதனை வெற்றி கொள்ள கட்சி ஊழியர்களைப் பயிற்றுவிக்க வேண்டுமென்றார். 1939 மார்ச்சில், பாசிச எதிர்ப்புக் கூட்டணி அமைக்க பிரிட்டனும், பிரான்சுடனும் பேசினார். இரு நாடுகளும் இழுத்தடித்தன. காலதாமதம் செய்தன இது ஹிட்லருக்கு சாதகமானது. நாம் சோவியத் யூனியனைத் தாக்கினால் இவர்கள் மௌனமாக இருப்பார்கள் எனக் கருதினான். 1939 மார்ச் 15 அன்று செக்கோஸ்லோவேகியாவைத் தாக்கிக் கைப்பற்றினான். முதல் உலக மகாயுத்தம் முடிந்த காலத்தில் 1919 ஆம் ஆண்டு போர்தடுப்பு முயற்சிக்காக சர்வதேச சங்கம் அமைக்கப்பட்டிருந்தது. இது ஆங்கிலத்தில் League of Naboro என்று அழைக்கப்பட்டது. இதன் ஆதரவோடு மகா கூட்டணி அமைக்கலாம் என ஸ்டாலின் யோசனை தெரிவித்தார். இதனைப் பிற முதலாளித்துவ நாடுகள் ஏற்கவில்லை. 1939 ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் பிரிட்டனும், ஜெர்மனியும் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டன. பிரிட்டனும் ஹிட்லரும் மோதக் கூடாது. வேறு எங்கும் தாக்கலாம் என்பது இதன் உள்ளடக்கம். சோவியத் எதிர்ப்பு முன்னணி உருவாவதை ஸ்டாலின் அதிர்ந்தார். பாசிச எதிர்ப்பு முன்னணி உருவாக நாம் முயன்றால் நிலைமை தலைகீழ் ஆகிறதே என்று கவலை கொண்டார். சோவியத்தை காக்க வேண்டுமென்று கவலை கொண்டார். ஹிட்லர் சோவியத் யூனியனுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள தூது அனுப்பினார். முதலில் ஸ்டாலின் தயங்கினார். பிரிட்டனும், பிரான்சும் அவனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதால் தன் நாட்டை தற்காக்க வேறு வழியின்றி ஸ்டாலின் இசைவு தெரிவித்தார். 1939 ஆகஸ்ட் 24 அன்று சோவியத் – ஜெர்மன் ஒப்பந்தம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் ஆக்கிரமிக்கக் கூடாது என்பது இதன் சாரம். இது அனாக்கிரமிப்பு ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது. பத்தாண்டு காலம் இவ்வொப்பந்தம் நீடிக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டது. ஹிட்லரின் வாக்குறுதிகள் நீர் மேல் எழுத்து போன்றவை தான் என்பது ஸ்டாலினுக்குத் தெரியும். ஸ்டாலின் தமது கொள்கையின் பரமவைரி என்பது ஹிட்லருக்கும் தெரியும். ஆயினும் இவ்வொப்பந்தத்தில் இருவரும் கையொப்பமிட்டனர். சோவியத் யூனியன் இக்காலத்தைப் பயன்படுத்தி ஸ்டாலின் தற்காப்புப் பணிகளை முடுக்கிவிட்டார். கட்சி அணிகளை எச்சரிக்கை செய்தார். பாசிச வெறியனாலும் ஆபத்து உண்டு. ஏகாதிபத்திய நாடுகளாலும் ஆபத்து உண்டு. அனைவரையும் ஒரு சேர உடனடியாக எதிர்க்க வழியில்லை. ஆகவே இந்த ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன என்றார். கட்சி அணிகள் இதன் உணர்வைப் புரிந்து கொண்டு மக்களை அணி திரட்டினர். இரண்டாம் உலகப் போர் 1939 செப்டம்பர் 1 அன்று போலாந்து நாட்டை ஹிட்லரின் ஜெர்மனி தாக்கியது. அடுத்த தாக்குதல் நமக்கு வரும் என்று பிரிட்டனும் பிரான்சும் கருதின. ஜெர்மனி மீது போர் தொடுத்தன. வரலாற்றில் இடம் பெற்ற இரண்டாம் உலகப் போர் துவங்கியது. பின்லாந்து சோவியத் யூனியனில் உள்ள லெனின் கிராட் பின்லாந்துக்கு மிக அருகாமையில் இருந்தது. இதனைக் காக்க வேண்டுமென்றால் பின்லாந்தின் சில பகுதிகள் சோவியத் வசம் தேவை. பின்லாந்திடம் ஸ்டாலின் சில பகுதிகளை குத்தகைக்கு கேட்டார். இதற்காக பல ஆயிரம் சதுரமைல் பரப்பளவை சோவியத் தரும் என்றார். பின்லாந்து முதலாளித்துவ நாடுகளின் பேச்சைக் கேட்டு மறுத்தது. வேறு வழியின்றி சோவியத் யூனியன் பின்லாந்தில் நுழைந்தது. உடனே பின்லாந்துக்கும் உதவி என்ற பெயரில் பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் போரில் இறங்கின. சர்வதேச சங்கம் என்று பார்த்தோம் அல்லவா? அதில் இருந்து சோவியத் யூனியன் விலக்கப்பட்டது. பின்லாந்துடனான போர் 1940 மார்ச் 13 அன்று முடிவடைந்தது. மார்ச் 14 அன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்லாந்தை முழுவதுமாக விழுங்கும் எண்ணம் இல்லையென்பதும், சோவியத்தையும் பின்லாந்தையும் ஹிட்லரிடம் இருந்து காப்பது தான் நோக்கம் என்பதும் நிறுவப்பட்டது. தயார்நிலை 1939க்கும் 41க்கும் இடையே 2900 தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன. ஏற்கனவே 9000 பெருந் தொழிற்சாலைகள் 1928க்குப் பின் உருவாக்கப்பட்டிருந்தன. அத்துடன் இவையும் சேர்ந்தன. மின்உற்பத்தி நிலையங்கள், சுரங்கங்கள் ஆகியவையும் அமைக்கப்பட்டு மாபெரும் தொழில்வள நாடாக சோவியத் யூனியன் மாற்றப்பட்டது. ஏராளமான ஆயுதங்களும் தயாரிக்கப்பட்டன. 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் இராணுவ சேவை புரிய வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டது. சிறப்பான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இராணுவ அதிகாரிகள் கூட்டங்களில் ஸ்டாலின் கலந்து கொண்டார். கட்சியையும் தயார்படுத்தினார். போரில் வெற்றி பெற நவீன இராணுவம் தேவை தான். ஆயுதங்கள் தேவை தான். அதைப் பிரயோகம் செய்யும் நுண்ணறிவும் தேவை தான். அதே சமயம் இவை மட்டும் போதாது. அனைவரையும் அரசியல் ரீதியாகத் தயார் செய்வதும் அவசியம் என்றார். பாசிஸ்டுகள் முதலாளித்துவ நாடுகளைத் தாக்குவார்கள். அவர்களும் திருப்பித் தாக்குவார்கள். ஆனால் பாசிஸ்ட்டுகள் கம்யூனிஸ்ட்டுகளைத் தான் முக்கிய எதிரிகளாகத் கருதுவார்கள். ஈவு இரக்கம் இன்றி நம்மை அளிக்க நினைப்பார்கள் என்று எச்சரிக்கை செய்தார். பாசிசத்தில் கோரத் தாக்குதல் 1941 ஜூன் 23 அன்று காலை 3 மணிக்கு ஹிட்லரின் ஜெர்மன் படைகள் சோவியத் யூனியனில் அத்து மீறி நுழைந்தன. போர் அறிவிப்பு செய்யாது போர் துவங்கிவிட்டது. சோவியத்துக்குள் ஹிட்லருக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் ஹிட்லாரால் மீறப்பட்டது. உள்ளத்துக்கும் உதட்டுக்கும் சம்பந்தம் இல்லாதவனுடன் தான் நாம் பேசுகிறோம். ஒப்பந்தம் போடுகிறோம் என்பது ஸ்டாலினுக்குத் தெரியும். ஆனாலும் இவ்வளவு விரைவில் ஒப்பந்தம் மீறல் வரும் என்பது அவர் எதிர்பாராதது. மலையே புரண்டாலும் நிலை குலையாத மாமனிதன் தனது வாழ்நாளில் நிலைகுலைந்த தருணம் என்று இச்செய்தியைக் கேள்விப்பட்ட தருணம் என்று வரலாற்றாசிரியர்க்ள் குறிப்பிடுகின்றனர். வந்து விட்டது சந்திப்போம் என்ற உணர்வை விரைந்து பெற்றார். கட்சி அணிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். போரின் ஆரம்ப நிலையில் சோவியத் யூனியன் பல இழப்புகளுக்கு ஆளாகியது. ஜெர்மனி ஆதாயம் அடைந்தது. ஜெர்மன் இராணுவத்தில் இருந்த வீரர்களில் ஆகப் பெரும் பகுதியினர் சோவியன் யூனியனில் இறக்கிவிடப்பட்டனர். ஆயுதங்களும் அப்படியே. இத்துடன் ருமேனியா, பின்லாந்து, இத்தாலி, ஹல்கேரி, ஸ்பெயின், ஸ்லாவோகியா நாட்டுப் படைகளும் ஹிட்லருக்கு ஆதரவாக இறங்கின. இராணுவத்தில் அணிதிரளுங்கள் என்று கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இளம் கம்யூனிஸ்ட்டுகள் என்ற பெயரில் இயங்கி வந்த தோழர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். அதன்படியே சேர்ந்தனர். இவர்கள் ஆயுத வீரர்களாக மட்டும் இன்றி அரசியல் வீரர்கள் ஆகவும் இருந்தனர். தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன என்று பார்த்தோம் அல்லவா? அவைகள் எல்லாம் இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டது. 1923 தொழிற்சாலைகள் இடம் மாற்றப்பட்டன. இது மனித சக்தியை மீறிய அமானுஷ்ய சக்தி ஆகும். இதனால் உற்பத்தி பாதித்தது. நிலைமையை மக்களுக்குப் புரிய வைத்து சமாளிக்கப்பட்டது. வானொலி உரை 1941 ஜூலை 3 அன்று ஸ்டாலின் வானொலி மூலம் உரையாற்றினார். போரின் நோக்கத்தை விளக்கினார். லெனினது மேற்கோள்களை எடுத்துரைத்தார். பாசிசத்தை எதிர்க்கும் மக்கள் உலகம் முழுவதும் உள்ளனர். அவர்கள் நமக்கு ஆதரவாக உள்ளனர் என்றார் இவ்வுரை மக்களை அவருடன் இணைத்தது. தளபதி போர் தொடர்ந்து உச்சிகரமாக நடைபெற்றுக் கொண்டே இருந்தது. சோவியத் தலைமைக்குழு ஜோசப் ஸ்டாலின் பாதுகாப்பு அமைச்சகர் ஆகவும் தளபதி ஆகவும் தேர்வு செய்தது. முதலாளித்துவ நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டார். பாசிச எதிர்ப்புக்காக அணி திரள வேண்டுகோள் விடுத்தார். 1941 ஜூலை 12 அன்று ஜெர்மனுக்கு எதிராக சோவியத் யூனியனுடன் பிரிட்டன் ஒப்பந்தம் செய்தது. படிப்படியாக சோவியத் வீரர்கள் பலம் பெற்றனர். ஜெர்மன் படைகளுக்கு ஈடுகொடுத்தனர். ஜெர்மனியை பின்வாங்கச் செய்தனர். 1941 நவம்பர் 6 அன்று உரையாற்றுகிறார். இவ்வுரை ஒலிபரப்பப்பட்டது. போரில் அப்போதைய நிலவரம் விளக்கப்பட்டது. பாசிச வெறியர்களின் குணம் பற்றியும் முதலாளித்துவ நாடுகள் கடைப்பிடிக்ககும் போக்கு பற்றியும் விளக்கப்பட்டது. லெனின் உடல் அருகே 1941 நவம்பர் 7 அன்று செஞ்சேனை அணி வகுப்பு நடந்தது. 1917 ஆம் ஆண்டில் நடைபெற்ற புரட்சியின் 24 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியாக இது அமைந்திருந்தது. போரில் செம்படை அடையும் வெற்றியின் உலக முக்கியத்துவத்தை விளக்கினார். தோழர் லெனின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து உரை நிகழ்த்தினார். 6 ஆம் நாளும் 7 ஆம் நாளும் அவர் ஆற்றிய உரை இலட்சக்கணக்கில் பிரதி எடுக்கப்பட்டது. நாடெங்கும் விநியோகிகப்பட்டது. போராடும் மக்களுக்கு உத்வேகம் ஊட்டக் கூடியதாக அமைந்திருந்தது. வெறிநாய் போல மாஸ்கோ அருகில் ஜெர்மன் படைகள் சூழ்ந்திருந்தன. பீரங்கிச் சத்தமும் கேட்டுக் கொண்டுதான் இருந்தது. இதன் மத்தியில் தான் செஞ்சேனை அணி வகுப்பும் தோழர் ஸ்டாலின் உரையும் திகழ்ந்தது. ஜெர்மன் படைகள் விரட்டப்பட்டன. ஆனாலும் அவர்கள் விடவில்லை. அடிபடும் வெறிநாய் மீண்டும் மீண்டும் கடிக்க வருவது போல் வந்து கொண்டே இருந்தனர். தொடர் முயற்சி ஐரோப்பிய அரசுகளின் ஆதரவைக் கோரி லண்டன் வாஷிங்டன் ஆகிய நகர்களுக்கு மாலடேங் என்ற தோழரை அனுப்பி வைத்தார். இப்பயணம் பயன்பட்டது. ஐரோப்பாவில் இருந்து வேறொரு பகுதியில் ஹிட்லர் படைகளைத் தாக்குவது என்ற முடிவு நிறைவேறவில்லை. இது ஹிட்லருக்குத் தெம்பு ஊட்டியது. அதே சமயம் பிரிட்டன் அமெரிக்க போன்ற நாடுகளில் இருந்த சோவியத் எதிர்ப்பு உணர்ச்சி குறைந்தது. 1942 ஆகஸ்ட் 12 அன்று பிரிட்டன் தலைவர் சர்ச்சில் மாஸ்கோ வந்தார். தோழர் ஸ்டாலினைச் சந்தித்தார். ஸ்டாலின் கிராட் போர்: 1942 நவம்பர் 19 முதல் 1943 பிப்ரவரி 2 வரை ஸ்டாலின் கிராட் பகுதியில் போர் நடந்தது. ஜெர்மன் முயற்சி முறியடிக்கப்பட்டது. ஆனாலும் ஸ்டாலின் செஞ்சேனையையும் மக்களையும் எச்சரித்தார். எதிரி தோல்வியால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் முற்றாக அழிந்துவிடவில்லை என்றார். இக்காலத்தில் ஜெர்மனியர்களைப் பற்றி இருந்த சோவியத் பகுதிகள் பெருமளவு விடுவிக்கப்பட்டன. 1941 ஜூன் 1944 மே ஆகிய காலத்திற்கு இடையில் சோவியத் யூனியனில் இருந்து ஜெர்மனியாளர்களால் கைது செய்யப்பட்டோர் பசிக் கொடுமையாலும் சித்திரவதைகளாலும் கொல்லப்பட்டனர். ஸ்டாலினது முதல் மனைவிக்குப் பிறந்த மகன் இராணுவத்தில் இருந்தார். போரின் போது ஜெர்மனியர்களால் கைது செய்யப்பட்டார். ஸ்டாலின் பேரம் பேசுவார் என்று ஜெர்மன் எதிர்ப்பார்த்தது. ஸ்டாலின் அவ்வாறு பேசவில்லை. ஜெர்மனிப் படையில் கைது செய்யப்பட்ட முக்கிய அதிகாரியை ஸ்டாலின் விடுவித்தால் அவர் மகனைவிடலாம் என்று எதிர்பார்த்தனர். அது நடக்கவில்லை. முக்கிய சந்திப்பு 1943 நவம்பர் 29 அன்று பிரிட்டன் தலைவர் சர்ச்சில் அமெரிக்க தலைவர் ரூல்வெல்ட் சோவியத் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் டெஹ்ரான் நகரில் சந்தித்தனர். இது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. காலனியாதிக்கம் பற்றியும் பேசினர். காலனியாதிக்க கொள்கையை கைவிட ஸ்டாலின் வற்புறுத்தினார். இந்திய சுதந்திரம் பற்றியும் குறிப்பிட்டார். சர்ச்சில் பிடிவாதத்துடன் முரண்டு செய்தார். வீரவாள் அதே சமயம் ஸ்டாலின் கிராட் போரில் பாசிசப் படைகளைத் தோற்கடிப்பபதில் அவர்களுக்கு கடும் சேதாரம் ஏற்படுத்தியதில் மாபெரும் இழப்புகளைத் தாங்கி வெற்றி பெற்ற மக்களுக்கு இப்பரிசை பிரட்டன் நாட்டின் மாட்சிமை பொருந்திய மன்னின் சார்பில் இப்பரிசை வழங்குகிறோம் என்று சர்ச்சில் ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார். ஸ்டாலின் உணர்ச்சி பொங்கிட வாளை முத்தமிட்டார். இரண்டாவது போர் முனை 1944 ஜூன் மாதம் ஹிட்லரது ஜெர்மன் படையைத் தாக்குதவற்குத் திட்டமிட்டு களத்தில் இறங்கின. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டதை இப்போது தான் நிறைவேற்ற முனைந்தனர். ஒரு புறம் சோவியத் தாக்குதால் மறுபுறம் அமெரிக்க பிரிட்டன் தாக்குதல் என்று இருமுனைத் தாக்குதலால் ஜெர்மன் திணறியது. சோவியத் செஞ்சேனைப் படிப்படியாக முன்னேறியது. ஜெர்மன் படைகள் பின்வாங்கின. அவர்கள் பிடியிலிருந்த பகுதிகள் விடுவிக்கப்பட்டன. 1945 ஏப்ரல் மாதம் சோவியத் படைகள் ஜெர்மனியில் நுழைந்தன. சிங்கத்தை அதன் குகையிலேயே அதைச் சந்திக்கத் துவங்கினர். ஜெர்மனியின் தலைநகர் பெர்லினை நெருங்கி விட்டனர். பெர்லின் வீழ்ந்தது. அங்கிருந்த நாடாளுமன்ற கட்டிடம் கைப்பற்றப்பட்டது. அதன் பெயர் ரீச்ஸ்டாக் என்பது அதன் மீது மே முதல் தேதி சோவியத் யூனியனில் செங்கொடி ஏற்றப்பட்டது. “Fall of ——“ என்று ஒரு திரைப்படம், “பெர்லின் வீழ்ச்சி” என்று அதன் பெயர். உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களில் ஒன்றாக இன்றும் போற்றப்படுகிறது. ஏப்ரல் 30 மே தினத்தில் ஹிட்லர் பயந்து தற்கொலை செய்து கொண்டான். மே 24 அன்று செஞ்சேனையின் படைத் தலைவர் உரையாற்றினார். போர்க்காலத்தில் 200க்கும் அதிகமான கூட்டங்கள் நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. தோழர் ஸ்டாலின் அனைத்திலும் பங்கு கொண்டார். இக்காலத்தில் ஜப்பான் நாட்டில் ஹிரோசிமா நாகசாகி ஆகிய நகர்களில் அமெரிக்கா தனது அணுகுண்டை வீசியது. இதுபற்றி ஸ்டாலினுக்குத் தெரிவிக்கப்படவில்லை. இரண்டரை லட்சம் அப்பாவி மக்கள் பலியானர். போர் முடிவு 1945 செப்டம்பர் 2 அன்று ஜப்பானும் சரணாகதி அடைந்தது. ஜெர்மன் ஜப்பானிய கொடுங்கோல் அரசுகளிடம் இருந்து மக்கள் விடுபட்டனர். உலகப் போர் முடிந்து அமைதி திரும்பியது. சோவியத் 1945 இல் போர் முடிந்தது. ஸ்டாலின் மகன் ஸ்வெட்லான தனது தந்தையைக் சந்திக்க வந்தார். அது சமயம் பெல்ஜிய நாட்டு அதிகாரி ஒருவர் அனுப்பிய செய்தியைத் தெரிவித்தார். அவரது மூத்த மனைவியின் மகனை ஸ்வெட்லானாவின் அண்ணனை ஹிட்லரின் பாசிசப் படைகள் கொலை செய்து விட்டனர் என்பதை துயரம் தோய்ந்த குரலில் கூறினார். 1952 அக்டோபர் 5 அன்று சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 19 ஆவது மாநாடு நடத்தப்பட்டது. ஸ்டாலின் கலந்து கொண்டார். ஆனால் அறிக்கை சமர்ப்பிக்க முடியவில்லை. மாலங்கோங் சமர்பித்தார். இவ்வறிக்கை தயாரிப்பில் ஸ்டாலின் இருந்தார். இது உலகப் பெருமை வாய்ந்த அறிக்கை. மறைவு: 1953 மார்ச் 5 அன்று இரவு 9.50 க்கு ஸ்டாலின் மரணமடைந்தார். உலகம் கலங்கியது. கண்ணிர் வடித்தது. சோவியத் வானொலி பின்வருமாறு ஒலிபரப்பியது. தோழர் லெனினுடன் தோளோடு தோல் நின்ற தோழரும் அவரது பணிகளை ஊக்கத்துடன் தொடர்ந்து வரும் ஞானமிக்க தலைவரும் சோவியத் மக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆசானும் ஆகிய ஜோசப் விகாரியோனிவிச் ஸ்டாலினின் இதயம் சுவாசிப்பதை நிறுத்தி விட்டது. வாழ்க ஜோசப் ஸ்டாலின் திருநாமம் முற்றும்