[] []                 ஜுபைதா அல்லது பழிக்குப் பழி       அல்ஹாஜ் பா. தாவூத்ஷா ஸாஹிப், B.A.         []   DarulIslamFamily Publications     ஜுபைதா அல்லது பழிக்குப் பழி ஆசிரியர்: அல்ஹாஜ் பா. தாவூத்ஷா B.A.    முதற் பதிப்பு: 1925 இரண்டாம் பதிப்பு: 2019 (Revised edition)   வெளியீடு: DarulIslamFamily Publications www.darulislamfamily.com    தொடர்புக்கு: admin@darulIslamfamily.com  darulislamfamily@gmail.com                            மின்னூலாக்கம் :    அ.ஷேக் அலாவுதீன்          தமிழ் இ சர்வீஸ், tamileservice17@gmail.com     வெளியீடு :    FreeTamilEbooks.com     உரிமை :    CC-BY-NC-ND              []   This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. தரவிறக்கவும், மற்றவரோடு பகிர்ந்துகொள்ளவும் அனுமதியுண்டு. பகிரப்படும்போது ஆசிரியர் பெயர், தொடுப்பு போன்றவற்றையும் கட்டாயம் வழங்க வேண்டும். மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்படவில்லை. வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை. இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர வேண்டும்.               பொருளடக்கம் ஆசிரியரைப் பற்றி 6  பதிப்புரை 8  ஜுபைதா அல்லது பழிக்குப் பழி 9  ஆசிரியரைப் பற்றி []   பா. தாவூத்ஷா (1885 - 1969) தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தாலுக்கா நாச்சியார்கோவிலைச் சேர்ந்தவர் பா.தா., என அழைக்கப்படும் பா. தாவூத்ஷா. பிறந்தது 1885ஆம் ஆண்டு. தமிழக முஸ்லிம்களிடம் கல்வியறிவு மிகவும் குறைந்திருந்த காலத்திலேயே B.A. பட்டம் படித்துத் தேறியவர் பா.தா. மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் முதலிடத்தில் தேறித் தங்கப் பதக்கம் பரிசு பெற்ற இவருக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் ஆற்றல் நிறைந்திருந்தது.   சப் மாஜிஸ்திரேட்டாக அரசுப் பணி புரிந்துகொண்டிருந்த பா.தா., கிலாபத் புரட்சியின் போது, 1921-இல்   தமது பதவியை ராஜினாமாச் செய்து விட்டு, மார்க்கச் சேவையே தமது வாழ்க்கை என நிர்ணயித்துக் கொண்டார். 1919-இல் துவங்கிய அவரது இஸ்லாமிய ஊழியம் தாருல் இஸ்லாம் எனும் மாத இதழாய்ப் பரிணpமித்தது. பின்னர் அது மாதமிருமுறை இதழாகி, வார இதழாகி, வாரமிருமுறை இதழாகி, நாளிதழாகி ஏறக்குறைய 40 வருடங்கள் இஸ்லாமிய இதழ்களுள் மிகச் சிறப்பான ஒன்றாக கொடிகட்டிப் பறந்தது.   குர்ஆனைத் தமிழ் மக்கள் தெள்ளு தமிழில் முறையாய்ப் பொருளுணர்ந்து கற்க வேண்டும் என்ற ஆர்வத்தால் தமிழிலேயே முதன் முறையாய் “குர்ஆன் மஜீத்” பொருளுரையும் விரிவுரையும் எழுத ஆரம்பித்தார். தூய தமிழில், நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வ வரலாற்றை நாயக மாண்மியம் என எழுதி வெளியிட்டார். முதல் நான்கு கலீபாக்களின் வரலாற்றை “குலபாஎ ராஷீதீன்” என நான்கு புத்தகத் தொகுப்பாய் எழுதி வெளியிட்டார். முதன் முதலாய் சஹீஹ் புகாரியிலிருந்து குறிப்பிட்ட ஹதீஸ்களை தமிழில் மொழிபெயர்த்து எழுதினார். இப்படியாக ஏறக்குறைய 100 புத்தகங்கள், பற்பல கட்டுரைகள் தமிழ் மொழியில் எழுதியுள்ளார். 1969ஆம் ஆண்டு, பிப்ரவரி 24ந் தேதி தமது 84ஆவது வயதில் சென்னையில் மரணமடைந்தார்.           பதிப்புரை அல்ஹாஜ் பா. தாவூத்ஷா ஸாஹிப் எழுதிய இந்த நெடுங்கதை 1925 ஆம் ஆண்டு அச்சாகியுள்ளது. ஜனாப் இ. அப்துர் ரஹ்மான் அவர்கள் சென்னை கார்டியன் பிரஸில் இதை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். இதன் அன்றைய விலை அணா 4.அதன் பிறகு இந்த நூல் மறுபிரசும் கண்டதா, வேறு ஏதேனும் இதழ்களில் மீள் பிரசுரம் ஆனதா எனத் தெரியவில்லை. இலங்கையைச் சேர்ந்த அண்ணன் ஜவாத் மரைக்கார் இந்த நூலின் PDF பிரதியை அனுப்பி வைத்திருந்தார்.அவருக்கு எனது அன்பும் நன்றியும் உரித்தாவன. அந்த பிரதி அப்படியே பகிரத்தக்கதே. எனினும், சமகால வாசகர்கள் வாசிப்பதற்கு ஏற்ப இந்த ஆக்கத்தை மீள் உருவாக்கி PDFவடிவாக்கியுள்ளேன். இதை அப்படியே நகலெடுத்து Print on Demand வகையில் அச்சிட்டு வினியோகம் செய்வது எளிது.  இந்நூலை தரவிறக்கவும், பகிரவும் முழு அனுமதியுண்டு. இலாப நோக்கமின்றி யார் வேண்டுமானாலும் அச்சிட்டு வெளியிடலாம். ஆனால் அனைத்திலும் ஆசிரியரின் பெயரும் darulIslamFamily.com வலைத்தள சுட்டியும் குறிப்பிடப்பட வேண்டும்.  இதே வகையில் பா. தாவூத்ஷா ஸாஹிப் அவர்களின் இதர நூல்களை வெளியிடும் திட்டம் உள்ளது. இன்ஷா அல்லாஹ். வாசகர்கள் இதிலுள்ள நிறை-குறைகளை கீழுள்ள மின்னஞ்சலில் பகிர்ந்துகொண்டால் இனிவரும் ஆக்கங்களில் அவற்றைக் கருத்தில் கொள்ள முடியும்.  எல்லாப் புகழும் பெருமையும் அல்லாஹ் ஒருவனுக்கே.   நூருத்தீன் nooruddinahamed@gmail.com  டிசம்பர் 25, 2019 +-----------------------------------------------------------------------+ | ஜுபைதா அல்லது பழிக்குப் பழி | +-----------------------------------------------------------------------+ ஷாபாஸ்கான் என்பவன் வட இந்தியாவிலுள்ள மிகப்பெரிய நிலச்சுவான்தார்களுள் ஒருவனாயிருந்தான், அவனுடைய சுவாதீனத்தில் ஒரு பெரிய ஜில்லாவின் முக்காற்பாகம் வரை இருந்து வந்தது. அவனுடைய நிலங்களை உழுது சாகுபடி செய்து அவனுக்கு அதிகமான வரிப்பணத்தைக் குவித்துக் கொடுக்கக்கூடியவராயிருந்த இரண்டேகால் இலக்ஷம் ஜனத்தொகைகளுக்கும் அவனே தலைவனாயிருந்து வந்தான், அக்குடிபடைகளின் தலைவிதியானது பெரும்பாலும் ஷாபாஸ்கானின் கையிலேயே இருந்து வந்ததென்று கூறலாம். அதிகமான ஐசுவரியமும் அளவு கடந்த அதிகாரமும் தன்னிடம் இருந்து வந்ததனாலும், நான் வேறு எவருக்கு ஜவாப் சொல்லப்போகிறேன்? என்னும் தைரியமிருந்ததனாலும் அவன் ஒருவருக்கும் அஞ்சாத ஒரு சுயேச்சையான எதேச்சாதிகாரத்தையுடைய இறுமாப்புக்கொண்டவனாய்விட்டான். அவனுடைய பால்யத்தில் அவன் அந்த எஸ்ட்டேட்டில் நடத்தப்பட்டு வந்த விதமே அவனை இன்னும் கொடுமையான இரக்கமற்றவனாகவும் கொடூரமிக்க கடினசித்தமுள்ளவனாகவும் செய்துவிட்டது. அவன் எப்பொழுதும் எதனிடத்தும் வெறுப்புமிக்கவனாகவே இருந்து வந்தான். ஏனெனின், அவனுடைய இளம்பிராயத்தில் ஒரு வருஷத்தில் விஜயம் செய்த காலரா நோயினால் தாக்கப்பட்டு அவனுடைய தகப்பனார் காலகதியடைந்து தேக வியோகமாய் விட்ட பின்னர் அவருடைய ஆஸ்திகளையெல்லாம் அபகரித்துக்கொண்டதோடு அண்ணன் மகனாகிய ஷாபாஸ்கான் என்னும் சிறுவனையும் கொலை செய்து விடப்பல முறையும் எத்தனித்து வந்த அப்படிப்பட்ட வியவஸ்தையில்லாத கொடுங்கோன் மனத்தையுடைய கொடூரச் சிறிய தந்தையின் கீழ் ஆருமற்ற அகதியாய் அதிபால்யத்திலேயே ஆகிவிட்டான். சிறிய தந்தை செய்து வந்த எல்லாவிதமான சூழ்ச்சிகளுக்கும் தந்திரங்களுக்கும் தெய்வசங்கல்பத்தினால் தப்பிக்கொண்டு வந்த ஷாபாஸ்கான் காளைப்பருவத்தை அடைந்தவுடன் தன்னுடைய பிதாவின் எஸ்ட்டேட்டை அந்தச் சிறிய தந்தையிடமிருந்து பிடுங்கிவிட வேண்டுமென்று தீர்மானம் செய்துகொண்டான். இதற்காகத் தன்னுடைய கௌமார அறிவினால் எத்தனிக்கக்கூடிய சூழ்ச்சிகளின் மீதே அவன் சார்ந்திருக்கநேர்ந்தது. தன்னைப்பழக்குவிப்பதற்கு வேறு விதமான துணையில்லாததனாலும், வியவஸ்தை கெட்ட கல் நெஞ்சனாகிய சிற்றப்பனுடன் போராடி மல்லுக்கு நிற்க வேண்டியிருந்ததனாலும் ஷாபாஸ்கானே வியவஸ்தை கெட்டவனாகவும் கல் நெஞ்சுள்ளவனாகவும் சிறுவயதிலேயே மாறிவிட்டான். பொய்க்குப்பொய்யும், கோளுக்குக்கோளும், குறும்புக்குக்குறும்பும், வம்புக்குவம்புமாய்ச்செய்து வந்ததனால் ஷாபாஸ்கான் இறுதியில் ஒரு ஜமீன்தாராக ஆய்விட்டான். அவனுடைய சிறியதந்தையோ நெடுங்காலம் அனுபவிக்கக்கூடிய தீவாந்தரசிக்ஷையை அடைந்துவிட்டான். இப்படிப்பட்ட வஞ்சனையும் சூதும் நிறைந்த போராட்டத்தில் வெற்றி பெற்று ஜயபேரிகையுடன் வெளிவந்ததனால் ஷாபாஸ்கானும் மோசத்திலும் பலாத்காரத்திலுமே நம்பிக்கைகொண்டவனாக ஆய்விட்டான். இவ்வாறே அந்த ஜமீன்தார் இருந்து வந்திருப்பானாயின் அவனுடைய சிற்றப்பனைக்காட்டினும் மகாகெட்டவனாக மாறியிருப்பான். ஆனால் அவனுடைய தீச்செயல்களை மிதப்படுத்துவதற்காகத் தேவலோகமாது போன்ற அப்ஸரஸ்திரீ ஒருத்தி அவனுக்கு மனைவியாக வாய்த்தாள். அம்மாது சிரோமணியை ஜமீன்தார் மிகவும் ஆழமாக நேசித்து அவள் பால் மேதை மரியாதையெல்லாம் காட்டத்தொடங்கினான். இப்புனிதவதியினால் ஜமீன்தாரின் நடவடிக்கைகளில் அதிகமான மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டதை அவனுடைய குடிபடைகளும் குடியானவர்களும் அதிசீக்கிரம் தெரிந்துகொண்டார்கள். ஆனால் அந்தோ! நெடுநாள் அவர்களுடைய சந்துஷ்டியானது நிலைத்திருப்பதற்கு அதிருஷ்டமில்லாமற் போய்விட்டது. விவாகமாகிப் பத்தாம் மாதத்திலேயே அந்தப் புண்ணிய சீலியாகிய மனைவியானவள் ஓர் இளங்குழந்தையை ஈன்று விட்டு ஆண்டவன் ஆணைப்படி அவ்வுலகுக்கு ஏகிவிட்டாள், மனைவி இறந்ததுக்கத்தின் மேலீட்டால் ஜமீன்தார் யாருடனும் பேசமனமில்லாமல் மௌன சாகரத்துள் மூழ்கிவிட்டான். நாளுக்குநாள் அவனுடைய விடியாமூஞ்சித்தனமானது அதிகமாக வளர்ந்தோங்கி வந்தது, ஆண்டவன் மீதிருந்த அணுத்துணை நம்பிக்கையும்போய், எஃகைக்காட்டினும் கடின சித்தமுள்ளவனாக மாறிவிட்டதனால் அவனைப்பார்த்தோர், “இவன் மனிதன்தானோ அல்லவோ!” என்று பரிதபிக்கும் படியாகக் கருங்கல்லைப்போல் சமைந்துவிட்டான். அதன் பின் எதிலும் சந்தோஷமில்லாமல் மந்த புத்தியுடையவனாய் இரக்கமென்பதற்கே நெஞ்சில் கிஞ்சித்தும் இடங்கொடாமல் தன்னுடைய சுயேச்சாதிகாரத்தை மிகக் கொடுமையுடன் தன் குடிகளின் மீது செலுத்தலானான். நெஞ்சில் கிஞ்சித்தும் ஈரமில்லாமலிருந்ததனால் அவனுடைய உலோபிச் செல்வமானது ஒன்றுக்கு மேல் ஒன்றாகக்கு விந்து வந்தது. ஜமீன்தாரின் துக்கத்துக்குக் காரண பூதமாயிருந்த அவனுடைய மனைவியின் மரணத்தின்போது அம்மாது சிரோமணியின் வயிற்றினின்றும் தோன்றியிருந்த ஜுபைதா என்னும் அழகிய சிறு குழந்தையின் சமீபத்திலிருக்கும் போது மட்டுந்தான் ஷாபாஸ்கானின் முகமானது சிறிது மலர்ந்திருக்கும், அப்பெண் குழந்தை ஒன்றினிடத்து மட்டுமல்லாமல் ஜமீன்தாருக்கு இவ்வுலகில் வேறெவ்வகைப்பொருள்களிடத்தும் பிரியமுண்டாவதில்லை, ஜுபைதாவின் தாயார் வாழ்ந்து வந்த ஒரு வருஷ காலத்திற்குள் தன்னுடைய கணவனை, எவ்வளவு நல்ல விதமாகப் பழக்கி வந்தாளோ அந்த விதமான நற்குணத்துடன் அந்தப் புத்திரியினிடத்தில் மட்டுமே அம்மனைவி எதிர்பார்த்திருந்ததன்படி முகமலர்ச்சியுடனும் அகமகிழ்ச்சியுடனும் ஷாபாஸ்கான் இருந்து வருவான். அவன் மறுபடியும் மணமுடித்துக் கொள்வதில்லையென்று தீர்மானித்துவிட்டான். குழந்தையின் நிமித்தமாகமட்டும் இவ்வாறு தனி வாழ்க்கை புரிய வேண்டுமென்று அவன் நினைத்தானில்லை, ஆனால் தன்னுடைய சொந்த நிமித்தமாகவே அவன் மறுமணம் புரிவதில்லையென்று வெறுத்து வந்தான். ஏனெனின், தன்னுடைய மனைவியின் திடுகூறான அகால மரணத்துக்குப்பின் இவ்வுலகில் விவாகம் புரிந்துகொள்வதனாலும் உயிர்வாழ்க்கை செய்வதனாலும் இனி என்ன சுகமிருக்கிறதென்று மனங்கசந்து நொந்து போனான். ஆனால் அவனுடைய எஸ்ட்டேட்டில் இளம் ஜுபைதாவுடன் கூடி விளையாடுவதற்கு ஒருவரும் துணையில்லாமற் போய் விட்டனர். எப்பொழுதும் கடுகடுத்த முகத்துடனும் கசந்துபோன மனத்துடனும் இருக்கக்கூடிய தந்தையின் பிரியத்தினால் மட்டும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துவரும் ஜுபைதாவுக்கு ஒன்றும் திருப்தியான சந்துஷ்டி உண்டாவதில்லை. இதனால் ஜமீன்தாரும் எவ்வாறு தன்னுடைய ஏகபுத்திரிக்கு மன உல்லாசத்தை ஊட்டுதல் முடியுமென்னும் ஆலோசனையுள் மூழ்கியிருந்தான். ஒரு நாள் மாலைப்பொழுதில் ஷாபாஸ்கான் குதிரை மீதேறிச் சவாரி செய்து கொண்டு போகும் போது அங்கோரிடத்தில் காபூலிகள் ஒரு கூட்டத்தினர் வந்து டேரா அடித்திருப்பதைக் கண்டான், இவர்கள் பலூக்கிஸ்தானத்துக்கும் பாரசீகத்துக்கும் இடையிலுள்ள எல்லைப் பிரதேசங்களிலிருந்து புறப்பட்டு வந்து இந்தியா முழுதும் சுற்றிக் கொண்டு திரிவார்கள். “பழையநாணயங்கள்” என்னும் பொய்ந் நாணயங்களையும் கத்தரிக்கோல்களையும் கத்திகளையும் சிற்சில சமயங்களில் நொண்டிக்குதிரைகளையும் கொண்டு வந்து விற்பார்கள். ஏமாந்த இடங்களில் ஜபர்ஜஸ்தாய்ச் சில்லறைத் திருட்டுக்களும் சிலவேளைகளில் செய்து வயிறு வளர்ப்பார்கள். இவர்களுக்குக் காவலாய் வரும் இந்தியச் செந்தலைப்புலிகளும் தூரத்தில் நின்று கொண்டு வேடிக்கைதான் பார்ப்பார்கள். அன்று மாலையில் அங்கே இறங்கியிருந்த காபூலிகளின் கார்வானில் சில நொண்டித் தட்டுவாணி மட்டக்குதிரைகளும், சில காட்டெருமைகளும், சில ஆடுகளும், பல நாய்களுமே காணப்பட்டன, சில ஆண்களும், சில பெண்களும், சிற்சில குழந்தை குட்டிகளும் அதில் சேர்ந்திருந்தார்கள். அதற்கு முன் இரவில் அவர்களெல்லோரும் ஷாபாஸ்கானின் ஜில்லாவுக்குள் வந்து அவனுடைய ஊருக்குச் சில மைல்கள் தூரத்திலுள்ள வேறொரு கிராமத்தில் தங்கியிருந்தார்கள். ஜமீன்தாரின் வாஸஸ்தானத்திலிருந்து அவர்கள் தங்கியிருந்த இடம் நெடுந்தூரத்திலில்லாததனால் ஷாபாஸ்கான் சவாரி செய்து கொண்டு போகும் போது அவர்களுடைய கூடாரத்தண்டை வந்துசேர்ந்தான், அங்கே அக்காபூலிகள் பகிரங்க ரஸ்தாவுக்கருகிலுள்ள காம்பு நிலத்தில் தங்கியிருந்தார்கள். அங்கிருந்த ஆண்களும் பெண்களும் வரப்போகும் இரவுக்கு வேண்டிய வசதிகளைத் தங்களுடைய மோட்டா டேராவின் கீழ் அமைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் அவர்களுடைய குழந்தைகளெல்லோரும் சிறிது தூரத்தில் நின்று விளையாடிக்கொண்டிருந்தார்கள். அக்கூட்டத்திலிருந்த ஒரு சிறு பெண் மகா ரூபவதியாயிருந்ததை ஷாபாஸ்கான் நோட்டமிட்டான். காபூலிகள் அணிந்துகொள்ளும் வழக்கம் போல் நீண்ட அங்கியையும் தரையினின்றும் உயர்ந்திருக்கும் பாவாடையையும் உடுத்திக்கொண்டும் ஒரு சாட்டில் கோத்த பற்பல விதமான நாணயங்களைக் கழுத்தில் அணிந்து கொண்டும் நின்றதனால் அப்பெண் குழந்தையின் சாமுத்திரிகா லக்ஷணமானது பரிபூர்ணமுள்ளதாய்க் காணப்பட்டது. மீனைப்பழித் தகண்ணும், மானைப் பழித்த பார்வையும் மகாவஜீகரத்துடன் தோன்றும் போது அப்பெண்ணின் புன்முறுவலினால் செவ்விய கொவ்வையுதடுகளுக்குள்ளிருந்த மணிமுத்துப்போன்ற வரிசையான பற்களும் பார்ப்போருக்கு அதிகப்பிரியத்தை வருவிக்கக்கூடியவையாயிருந்தன. ஷாபாஸ்கான் அப்பெண் குழந்தையின் அழகைக் கண்டவுடன் தன்னுடைய குதிரையின் கடிவாளத்தை இறுகப்பிடித்துக்கொண்டு அச்சிறுமியின் பூர்ணச்சந்திரன் போன்ற வதனத்தையே விடாமல் கூர்ந்து நோக்கினான். சில வினாடிகளுக்குள், எட்டு வயதையடைந்திருக்கும் தன்னுடைய இளங்குமாரியாகிய ஜுபைதாவின் வயதைப்போன்ற வயதையும் அவ்வழகைப்போன்ற அழகையும் இந்தக்காபூலிக்கன்னிகையிடம் கண்டு அந்த ஜமீன்தார் திடுக்கிட்டான், உடனே அப்பெண்ணைத்தன்னுடைய மாளிகைக்கு எவ்வாறேனும் கொண்டுபோய்ச் சேர்த்து விட வேண்டுமென்று தீர்மானித்தான். விளையாடுவதற்குத் தோழியில்லாமல் தனியே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த தன்னுடைய ஜுபைதாவுக்கு இச்சிறுமி ஒரு தகுந்த தோழியாயிருக்கக் கூடுமென்று கருதினான். ஆனால் அக்குழந்தைக்காக எவ்வளவு பெருந்தொகையான பணங்கொடுப்பதாயிருந்த போதிலும் அந்தக்காபூலிகள் தங்களுடைய குமாரியை விட்டுப் பிரியச்சம்மதிக்கமாட்டார்களென்றும் ஜமீன்தார் தனக்குள் எண்ணிக்கொண்டான்; ஆயினும் அச்சிறுமியை எப்படியாயினும் ஜுபைதாவுக்குத் துணையாகக்கொண்டு போய்ச் சேர்க்கத்தான் வேண்டுமென்னும் எண்ணமும் மற்றொரு பக்கம் தூண்டிக்கொண்டிருந்தது. கபடமும் சூழ்ச்சியும் கனமாகக் குடிகொண்டுள்ள அவனுடைய மூளையில் இதற்கொரு யுக்தியான வழி தோன்றாமற் போகவில்லை. உடனே திடீரென்று அச்சிறுமியைப் பறித்துத் தன்னுடைய குதிரை மீது இருத்தி அந்த அந்தி மாலைப்பொழுதுக்குள்ளேயே தன்னுடைய மாளிகைக்கு விரைவாகச் சென்று அங்கே அக்குழந்தையை மறைத்து வைத்து விடும்பக்ஷத்தில் அந்தக் காபூலிகளெல்லோரும் என் செய்யக்கூடுமென்று எண்ணினான், ஆனால் அவர்கள் தன்னுடைய மாளிகை இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அங்கே வந்து தங்களுடைய குழந்தையைத் தேடுவார்களாயின் அவர்களுக்கு வேண்டிய அதிகமான திரவியத்தைக் கொடுத்து விடுவதாகத் தீர்மானித்தான். அப்பெருந்தொகையான ஐசுவரியத்தை அவர்கள் பெற்றுக்கொண்ட போதிலும் மறுத்துவிட்ட போதிலும் அவர்களுடைய குழந்தையை மட்டும் எக்காரணத்தை முன்னிட்டும் ஒரு போதும் திருப்பிக்கொடுப்பதில்லையென்று தீர்மானித்துவிட்டான். அல்லது அவர்கள் தன்னுடைய மாளிகையைக் கண்டுபிடிக்காமற் போய்விடினும் தன்னுடைய எஸ்ட்டேட் ஏஜெண்ட்டுகள் மூலமாக அப்பெருந்தொகையான பணத்தை அனுப்பி, அவர்களிடத்திலிருந்த நொண்டிக்குதிரைகளையும் மெலிந்த எருமைகளையும் பொய்யான நாணயங்களையும் வாங்கிக்கொண்டேனும் அவர்களுக்கு ஒருவிதமான ஆத்மதிருப்தியைச் செய்து வைக்கலாமென்று எண்ணினான். அந்தக்கா பூலிகள் தங்களுடைய தட்டு வாணிக் குதிரைகளையும் தைரியமில்லா எருமைகளையும் பொய்யான நாணயங்களையும் புரட்டான. ஆபரணங்களையும் கொடுத்து இவ்வளவு பணம் பறித்துக் கொண்டோமே என்னும் மனச்சாந்தியுடன் காணாமற் போனகன்னிகையையும், அதிகமாகத் தேடாமல் அயலூருக்குப் போய்விடு வார்களென்று அந்த ஜமீன்தார் எண்ணினான்; அவர்கள் அவ்வாறு திருப்தியடைந்த போதிலும் அடையா மற்போயினும் ஷாபாஸ் கானின் மனம் மட்டும் இப்படிப் பட்ட சூழ்ச்சிகளாலெல்லாம் திருப்தியடைந்துவிடும் . அங்கே விளையாடிக் கொண்டிருந்த மற்றைச் சிறுவர் சிறுமிகளை விட்டு அந்தப் பெண்ணை மட்டும் பிரித்துக் கொண்டு போவதற்காகப் பிரயத்தனம் செய்த ஷாபாஸ்கானின் சமாதானமும் தர்க்கமும் இவ்வாறிருந்தன. உடனே அவன் அக்குழந்தையைப் பூமியினின்றும் பலாத்காரமாகத்தூக்கியெடுத்துத் தன்னுடைய குதிரையின் மீது தனக்கு முன்னே ஜேணத்தில் உட்கார வைத்துக் கொண்டு ஜுபைதாவிடம் கொண்டு போய்க் காட்டுவதற்காக ஷாபாஸ்கான் அதிவேகமாகத் தன்னுடைய குதிரையைத் தட்டிவிட்டான்.           இந்தக்கா பூலிப்பெண்ணைத் தன்னுடைய மாளிகைக்குக் கொண்டு வந்தவுடன் ஜமீன்தார் தனது முக்கியமான முதல் காரியக்காரனை அழைப்பித்து அவன் வசம் அச்சிறுமியை ஒப்புக்கொடுத்துத்தன் மாளிகையில் நில வறையின் ஒரு மூலையில் கொண்டு போய் ஒளித்து வைக்கும் படியாகக் கட்டளையிட்டான். இவ்வாறு பத்திரப்படுத்திவிட்டு, அதன் பின் காபூலிகளால் கிளப்பப்படும் கிளர்ச்சிகளெல்லாம் ஒருவாறு அமைதியடைந்த பின்னர் சில தினங்கள் கழித்து அச்சிறுமியை ஜுபைதாவிடம் காண்பிக்கலாமென்று எண்ணிக் கொண்டு மனத்திருப்தியுடன் படுக்கைக்குப் போய்விட்டான். அவன் கண்ணுறங்கியபின் சில நாழிகைகளுக்குள் மாளிகையின் மதிற்சுவருக்கு வெளிப்புறத்தில் அதிகமான ஆரவாரம் உண்டானதைக் கேட்டு ஷாபாஸ்கான் திடுக்கிட்டு விழித்தான். சமாசாரம் என்னவென்று கேட்ட போது ஒரு . காபூலிக் கூட்டம் வந்து பெருங்கூச்சலிட்டு வெளிவாயிற்கதவைத் தாக்குவதாக அருகிலிருந்தவர்கள் கூறினார்கள். தங்களிடமிருந்த ஏதோ ஓர் பெண்ணையாரோ ஒருவர் களவாடிக் கொண்டு போய் விட்டதாகவும், அதனால், அவர்கள் அக்குழந்தையைத் தேடிக் கொண்டு ஜமீன்தாரின் மாளிகைக்கு வந்திருப்பதாகவும் ஏதோ ஓர் பாஷையில் அரைகுறையாகப் பேசுகிறார்களென்று மாளிகையிலிருந்தோர் கூறினார்கள் . இதைக் கேட்டவுடன் மெய்யாகவே ஷாபாஸ்கானின் மெய்யானது சிறிது சிலிர்த்தது; அவர்கள் எவ்வாறு தன்னுடைய மாளிகையின் அடையாளத்தைக் கண்டுபிடித்து வந்து விட்டார்களென்று ஆச்சரியமடைந்தான்.   ஆயினும் அந்நேரத்தில் வந்து அட்டகாசம் செய்த அந்தக் காபூலிகளைத் தன்னுடைய காவற்காரர் களாகியபட்டான்களைக் கொண்டு தனது மாளிகையை விட்டு அதிக தூரம் விரட்டியடிக்கச் சொல்லாமல், அவர்களைச் சாந்தமாகச் சமாதானம் செய்தே ஏமாற்றி விடலா மென்று நினைத்தான் அந்த இறுமாப்புக் கொண்ட ஜமீன்தார்.   அவர்களுடன் வம்பு செய்யாமல் மிக நல்ல மாதிரியாகவே அவர்களை அதிலகுவில் திருப்தியுடன் திரும்பிச் செல்லும் படி செய்து விடலாமென்றும் தீர்மானித்துக் கொண்டான். உடனே அந்தக் காபூலிகளையெல்லாம் உள்ளே வரவழைத்துத் தனக்கொன்றும் அப்பெண்ணின் விஷயம் தெரியாதென்று கூறி, “எனக்கு உங்களுடைய காபூலிப் பெண்ணால் என்ன பிரயோஜனம் உண்டாகப் போகிறது?” என்று மிக நிதானத்துடனும் அமைதியுடனும் அவர்களுடன் வாதாடினான். எனினும் அந்தக் காபூலிகள் தங்களுடைய குழந்தையை அந்த ஜமீன்தாரே தூக்கிக் கொண்டு வந்துவிட்டானென்று அதிக பலமாகச் சந்தேகித்திருந்த படியால் அம்மாளிகையின் அறைக் கதவுகளையெல்லாம் திறந்து ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தாங்கள் சுயமே தேடிப் பார்த்தாலல்லாமல் தங்களுக்கொன்றும் திருப்தியுண்டாகாதென்று கூச்சலிட்டார்கள். அவர்களுடைய சந்தேகத்தைக் கண்டு ஜமீன்தாருக்கு ஆத்திரம் உண்டான போதினும் அவர்களுடைய பூசலின் முன் அவனால் ஒன்றும் செய்யக்கூடவில்லை. தன்னுடைய மாளிகைக்கப்பால் அவர்களையெல்லாம் பிடரியைப் பிடித்துத்தள்ளிவிடலாமென்றும் ஒரு சமயம் தீர்மானஞ்செய்தான். இதற்கெல்லாம் அந்தக்காபூலிகள் பயந்து விடவில்லை, உடனே அவனை நெட்டித்தள்ளிவிட்டு அக்காபூலிகள் அனைவரும் அம்மாளிகையின் உட்புறமெல்லாம் தேனீக்களைப்போல் நிரம்பி மொய்க்க ஆரம்பித்துவிட்டனர், மாளிகையைச் சுற்றிச் சுற்றிப்பார்த்தனர், உட்புறமெல்லாம் நுழைந்து நுழைந்து பார்த்தனர், மூலைமுடுக்கெல்லாம் தடவித்தடவிப் பார்த்தனர். அவர்களுடைய மனத்துணிவையும் வீராவேசத்தையும் கண்டு ஷாபாஸ்கானின் மனமானது அதிகம் குழம்பிவிட்டது. ஆயினும் அவர்களுடைய பெண்ணை மட்டும் திருப்பிக் கொடுக்க ஜமீன்தார் கொஞ்சமும் இசையவில்லை. அவனுடைய திவான்கானா, கச்சேரி, மேல்மாடி, கீழ்மாடி முதலிய இடங்களையும், அவனுடைய வேலைக்காரர்கள் வசிக்கும் ஒவ்வோர் இடத்தையும், இன்னும் அவனது மகதைசுவரியமான பெருமையைக் காண்பிப்பதற்குரிய அரைடஜன் யானைகள் கட்டப்பட்டிருந்த யானைக்கொட்டடியையும் தேடிவிட்டு அந்தக்காபூலிகள் திரும்பிவரும் போது ஷாபாஸ்கான் அவர்களைக் கூப்பிட்டுத் தன்னுடைய ஜனானாவின் கதவுகளையும் திறந்துவிடுவதாயும், அவர்களுடைய பெண்களையே தன்னுடைய அந்தப்புரத்துக்கு அழைத்துக்கொண்டு போவதாயும், அங்கேயும் அம்மாதர்கள் அக்குழந்தையிருக்கிறதோவென்று நன்றாகத் தேடிப்பார்த்துக்கொள்ளும் பொருட்டு அனுமதி கொடுப்பதாயும் கூறினான். இவ்வாறெல்லாம் எங்கெங்கும் தேடியும் அங்கிருந்தெல்லாம் அக்குழந்தை அகப்படவில்லை. சாதாரணமான இடங்களில் மட்டும் அவர்கள் தேடினார்களேயல்லாமல் அந்தமாளிகைக்குள் பூமியின் கீழ்ச்சுரங்கமாகச் செய்யப்பட்டிருக்கும் நிலவறையொன்று இருப்பதை ஒரு சிறிதும் அவர்கள் அறியமாட்டார்கள். மாளிகை முழுதும் தேடிப்பார்த்தும் மகளைக் காணாததால் அந்தக்காபூலிகள் இன்னும் கடுமையாக ஜமீன்தாரைத் தொந்தரை செய்ய ஆரம்பித்தனர். நயமாகக் கேட்டதற்கெல்லாம் ஷாபாஸ்கான் இணங்கிவராததனால் பிறகு பயமுறுத்தாட்டவும் தொடங்கினர்; அவர்களுடைய தீரமான தொனிக்குத் தகுந்தாற்போல் அன்னாரின் செக்கச் சிவந்த கண்களினின்றும் கோபக்குறியின் அனற்பொரியானது சிதறிச்சிந்த ஆரம்பித்தது; அதனாலும் ஒன்றும் பயன் விளையாததால் அந்தக்காபூலிகள் தங்களுடைய சிறுமிக்காகப்பணம் வேண்டுமாயினும் எவ்வளவேனும் அந்த ஜமீன்தாருக்குக் கொடுப்பதாகவும் வாக்குறுதி கூறினார்கள், தாங்கள் பணங்கொடுப்பதாகவும் குதிரைகளைக் கொடுப்பதாகவும் எருமைகளைக் கொடுப்பதாகவும் இன்னும் தங்கள் பாலுள்ள எதை வேண்டுமாயினும் அதை எல்லாம் கொடுப்பதாகவும் வாக்குறுதி கூறித்தங்களுடைய ஷீரீனை மட்டும் திருப்பிக் கொடுத்து விடும்படி கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் ஷாபாஸ்கானோ சற்றும் மனமிரங்காமல் ஒரே பிடிவாதமுள்ளவனாய் இருந்தான். காபூலிகள் ஏழைகளாயிருந்த போதிலும் அதிகமான மமதை நிறைந்தவர்கள், ஆயினும் அவ்வேளையில் தங்களுடைய ஷீரீன் மீதிருந்த வாஞ்சையினால் அவ்வளவு தூரம் ஷபாஸ்கானிடம் மன்றாடிக் கெஞ்சிக்கேட்டார்கள். என்ன சொல்லியும் ஜமீன்தாரின் மனம் இளகவில்லை; அவன் தனக்கொன்றும் தெரியாதென்றே சொல்லிவந்தான். மாலையில் விளையாடிக்கொண்டிருந்த மகளை உயிருடன் பறிக்கக்கொடுத்த ஷீரீனின் தாயார் தரையில் விழுந்து புரண்டு அலறிக்கொண்டிருந்த பரிதாபகரமானதன்மையும், கல் நெஞ்சனாகிய ஷாபாஸ்கானைத் தவிர்த்து மற்றெல்லோருடைய மனங்களையும் கலங்கச்செய்து அன்னாரின் கண்களினின்றும் சோகபாஷ்பத்தைத் தாரைதாரையாகச் சொரித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதற்குமாறாக அந்தத்தாயின் கூக்குரலால் ஜமீன்தாரின் ஆத்திரமானது அதிகப்பட்டு வந்தது, உடனே அந்தக்காபூலிகளெல்லோரையும் காம்ப்பவுண்டுக்கு வெளியே தள்ளிக் கதவையடைக்கும்படி உத்தரவிட்டான். தன்னுடைய எஸ்ட்டேட் மானேஜரைப்பார்த்து அருணோதயத்துக்கு முன் ஒரு காபூலியும் தன்னுடைய ஜில்லாவுக்குள் இல்லாமல் வெளியே போய்விடும்படி செய்யவேண்டுமென்று மிகக்கடுமையாகக் கட்டளையிட்டான். ஜமீன்தாரின் காவற்காரர்களாகிய பட்டான்கள் தங்களுடைய எஜமானின் உத்தரவை நிறைவேற்றும் பொருட்டு அந்தக்காபூலிகளுக்கருகில் சென்றபோது அவர்களுள் தலைவனாயிருந்த ஷீரீனின் தந்தையான காபூலியானவன் திரும்பி நின்று அந்தப்பட்டான்களின் முன், “நீங்களெல்லோரும் அங்கேயே நில்லுங்கள்! யாரேனுமொருவன் ஓரடி வைத்து முன்வந்தால் அவனுடைய உயிர் அங்கேயே எமலோகம் சேரும். இப்படிப்பட்ட கொடுங்கோன் மனிதனான அயோக்கியனின் கீழ் அடிமைகளாயிருக்கின்ற நாய்களைப் போன்ற உங்களை நாங்கள் அனாவசியமாகக் கொன்று எங்களுடையகையில் இரத்தக்கறையை உண்டு பண்ணிக்கொள்ளமாட்டோம், ஆனாலும் அதற்கோர் எல்லையுண்டு, அதைமீறி எவனேனும் வருவானாயின் அவனுடைய கழுத்தை இந்தக்கத்திக்கு இரையாக்குவேன் !”என்று தன் கண்களில் அனற்பொரி பறக்க மகா ஆத்திரத்துடன் பேசினான். இவ்வாறு ஏசியதுடன் உயிர்க்கிறுதி வருமென்று பயமுறுத்தாட்டியதனால் ஒன்றும் பிரயோஜனம் உண்டாகாமற்போகவில்லை, ஒவ்வொரு பட்டானும் தான்தான் இருந்தவிடத்திலேயே நின்றுவிட்டான். ஷாபாஸ்கானும் பிரமையினால் திகிலடைந்து அதற்குமேல் ஒன்றும் சொல்ல நாவெழாமல் மௌனமாயிருந்துவிட்டான். அவனைப்பார்த்து அந்தக்காபூலித்தலைவன் பின்வருமாறு கூறினான், “ஷாபாஸ்கான்! நீயொரு பெரிய ஜில்லாவின் ஜமீன்தாராயிருந்த போதிலும் நீயேதான் எங்களுடைய குழந்தையைக் கொள்ளைகொண்டு வந்துவிட்டாயென்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம். இங்கே எங்களுடைய சிறுமியைக் கண்டுபிடிக்கக்கூடவில்லையென்பது வாஸ்தவமே, ஆயினும் உன்னுடைய வாஸஸ்தலத்தின் வாயில் வரையில் நாங்கள் தேடிக்கண்டுபிடித்துக் கொண்டு வந்துவிட்டோம், நாங்கள் தேடுவது ஒருபோதும் வீணாகாது. நீதான் எங்களை விட்டுப் பிரித்து எங்கள் குழந்தையைக் கொண்டு வந்திருக்கிறாய். இன்னும் உனக்கு அவகாசம் கொடுக்கிறேன், ஆனால் இப்பொழுதேனும் நீ இணங்கி வராவிடின் பின்னர் அதிகமான துயரத்துக்கு ஆளாகும்படி நேரிடும். அதிஜாக்ரதை! அப்பொழுது நீ அதிகம் வருந்துவாய், இன்னும் ஒரு வார்த்தை மட்டும் கூறிவிட்டு நாங்கள் போய் வருகிறோம், காபூலியொருவன் தன்னுடைய குழந்தைகளிடம் அளவு கடந்த பக்ஷம் பாராட்டுவது உண்மையே, ஆனால் அவன் பழிக்குப்பழி வாங்குவதில் இன்னும் அதிகமான பிரியங்காட்டுகிறானென்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்!” இவ்வாறு உக்கிரத்துடன் சொல்லிக்கொண்டு அந்தக்காபூலியானவன் அந்த ஜமீன்தாரை விட்டுத்திரும்பி மகாபிடிவாதமான எண்ணங்கொண்டவனேபோல் ஆத்திரத்துடன் அழுத்தமாகவும் கம்பீரமாகவும் நடந்துசென்றான். மறுநாள் விடியுமுன் அங்கே டேரா அடித்திருந்த காபூலிகளெல்லோரும் தங்களுடைய குடிசைகளைக் கிளப்பிக் கொண்டு போய்விட்டார்கள். ஷாபாஸ்கான் அன்று காலையில் ஆகாரம் செய்ய உட்காரும்போது அவனுடைய எஸ்ட்டேட் மானேஜரும் வந்து தங்களுடைய ஜமீன் ஜில்லாவுக்குள் ஒருவரேனும் காபூலியில்லையென்று கூறிவிட்டான். இவ்வாறு ஒருவாரம் சென்றது. அதிலகுவில் அந்தக்காபூலிகளை ஏமாற்றிவிட்டதனால் ஷாபாஸ்கானுக்குண்டான மனத்திருப்திக்கொன்றும் அந்தவாரத்தில் கிலேசம் உண்டாகவில்லை. தன்னுடைய சமயலறைக்கு வெளிப்புறத்தில் யாரோ ஓர் காபூலிப்பெண் பிள்ளையானவள் வட்டமிட்டுக்கொண்டிருந்தாள் என்பதையும் கேள்வியுற்று, அவள் ஏதேனும் பிச்சைச்சோற்றுக்காக வழிபார்த்திருத்தல் கூடுமென்று ஜமீன்தார் தன்னுடைய மனத்துக்குள் சமாதானம் செய்துகொண்டான். ஆனால் சில நாட்கள் கழிந்த பின் ஜமீன்தாரின் குமாரியாகிய ஜுபைதாவுக்கு ஒரு விதமான வியாதியுண்டாயிற்று. ஒருநாள் மாலைப்பொழுதில் தன்னுடைய தலை கிறுகிறுக்கிறதென்று கூறிக்கொண்டு முன்னேரத்திலேயே இராப்போஜனம் செய்துகொண்டு ஜுபைதா தன்னுடைய படுக்கைக்குப் போய்விட்டாள், மறுநாள் விடிந்து எட்டு மணியடித்தும் அப்பெண் எழுந்திருக்கவில்லை. யார்யார் எழுப்பியும் குழந்தை எழுந்திருக்காததனால், அதன் பிறவித்தின முதல் எட்டு வருஷங்கள் மட்டும் அக்குழந்தையைச் சீராட்டிப் பாராட்டிப் பாதுகாத்து வளர்த்து வந்த செவிலித்தாயாகிய அன்னாவும் கடைசியில் சென்று தன்னாலான மட்டும் எழுப்பிப்பார்த்தாள். ஆனால் ஜுபைதா எழுந்திருக்கவுமில்லை, பதில்பேசவுமில்லை. இதைக்கேட்டு மாளிகையிலுள்ள அனைவரும் திகில் கொண்டார்கள். உடனே சமாசாரம் ஷாபாஸ்கானுக்கு அறிவிக்கப்பட்டது; ஜமீன்தார் அப்பொழுதே தன்னுடைய குடும்ப ஹக்கீமுக்கு ஆளனுப்பினான். அந்த வயோதிகரான ஹக்கீம் சாஹிப் இரண்டு தலைமுறையாக அந்த ஜமீன்தார் குடும்பத்துக்கு வைத்தியம் பார்த்துவருகிறார். இதைக்கேட்டவுடன் அந்தப்பெரியவர் அவசரமாக ஓடி வந்து தமக்குத் தெரிந்த ஹிக்மத்தையெல்லாம் செய்து பார்த்தார்; ஜுபைதாவுக்கோ பிரக்ஞை வரவில்லை. மாளிகையிலுள்ள வயது சென்றமாதர்களோ இது ஹக்கீமினால் தெளியக்கூடிய வியாதியல்லவென்றும் காபூலிகளின் மாந்திரீ கசக்தியால் விளைந்திருக்கக்கூடிய சங்காதோஷமென்றும் மூடத்தனமாகக்கூறி மந்திரம் ஓதி மாங்காய் விழவைப்பதற்காக மௌல்விமார்களை அழைத்து வரும்படி வேண்டிக்கொண்டார்கள். அங்கிருந்த பெண்களுக்குண்டான மூட பக்தியே போல் ஷாபாஸ்கானின் குற்றமுள்ள நெஞ்சிலும் ஒரு விதமான மூட நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது, உடனே ஜமீன்தார் தனக்குண்டான ஆத்திரத்தையடக்கிக் கொண்டு வயது சென்ற ஹக்கீம் சாஹிபை அவசரமாக அனுப்பிவிட்டுச் சுற்றுப்பக்கங்களிலுள்ள எல்லா மஸ்ஜித்களிலுமிருந்து அங்கங்கேயுள்ள மௌல்விகளையெல்லாம் மந்திரம் படிப்பதற்கு அதிக ஆவலுடன் அழைப்பித்தான். அவர்கள் அனைவரும் ஷாபாஸ்கானின் உத்தரவைக் கேட்டவுடன் அதிக அவசரமாக ஓடிவந்தார்கள், சிலர் தங்களுடைய வைதிகப்பற்றினால் துரிதமாக நடந்துவந்தார்கள், மற்றும் பலர் ஜமீன்தாரிடமிருந்து அதிக தாராளமான நன்கொடை கிடைக்குமென்னும் ஆர்வத்தினால் ஆவலுடன் பறந்து வந்தார்கள். மௌல்விகளெல்லோரும் மாளிகைக்குள் வந்து பிரக்ஞையற்றுக் கிடக்கும் ஜுபைதாவின் படுக்கையைச் சுற்றி நின்று கொண்டு தங்களுக்குத் தெரிந்த வஜீபாக்களையும் மாந்திரீகங்களையும் நெடுநேரம் வரையில் முணுமுணுத்து ஓதியோதி ஊதினார்கள். ஒரு மணிநேரம் இவ்வாறெல்லாம் ஓதிப்பார்த்தும் அந்தப்பெண் உசும்பவேயில்லை, உடனே அதற்கு முன் ஹக்கீம் சாஹிபை வெறுப்புடன் அனுப்பிவிட்டதேபோல் ஷாபாஸ்கான் அந்த மௌல்விகளையும் கடுகடுத்த மூஞ்சியுடன் வேகமாக விரட்டி விட்டான். மீண்டும் ஹக்கீம் சாஹிபை வரவழைத்தான். அவர் மறுபடியும் வருவதற்கு மனமில்லாதிருந்தும் ஜமீன்தாரின் கட்டளையை மறுக்க முடியாமல் மீண்டும் ஒரு முறை ஓடிவந்தார். ஜுபைதாவுக்கு ஸ்மரணையை உண்டு பண்ண வேண்டுமென்னும் நல்லெண்ணமானது அந்த ஹக்கீம் சாஹிபின் மனத்தின்கண் ஆழமாகக் குடிகொண்டிருந்தபோதிலும் ஜமீன்தார் தம்மிடம் நடந்துகொண்ட மரியாதைக்குறைவு மட்டும் அவருடைய உள்ளத்தை விட்டொழிந்த பாடில்லை. ஆயினும் அங்கு வந்தவுடன் ஜுபைதாவின் நாடியைத் தொட்டுப்பார்த்தார்,தாம் நாடியபடியே மௌல்விகளின் ஜபதபங்களினால் ஒன்றும் “ஜபம்” சாயவில்லையென்று தமக்கு உள்ளுக்குள் உண்டான மனக்கிளர்ச்சியை அடக்கிக்கொண்டு, நீம்ஹக்கீமுக்கு (அரைவைத்தியனுக்கு) நெடுங்காலமாக உபயோகிக்கப்பட்டு வந்த பழமொழியானது நீம்முல்லாவுக்கு (அரைஆலிமுக்கு) உபயோகிக்கப்படும்படியான வேளை வந்து விட்டதனால் கத்ரெஈமானுக்கு (மதநம்பிக்கையில்ஏற்படும்ஆபத்துக்கு) பதிலாய்க்கத் ரெஜானே (உயிருக்கேஏற்படும்ஆபத்து) வந்து விட்ட தென்று சுருக்கமாகக் கூறிமுடித்தார். ¹   ஜுபைதாவின் கைகால் முதலிய அவயவங்களெல்லாம் “ஜில்லிட்டுப்” போய்விட்டன, தாதுவோ அடியோடு நின்றுவிட்டது. இனிமேல் ஒன்றும் பரிகாரத்துக்கு இடமில்லை! அதுவரையில் உள்ளுக்குள் அடங்கிக்கிடந்த ஷாபாஸ்கானின் ஆத்திரமானது இப்பொழுது அடியோடு பலங்குன்றி உடைந்துவிட்டது.காபூலிகளின் மந்திரசக்தியினால் தன்னுடைய குமாரி இறந்திருக்கக்கூடுமென்று அவனுடைய பகுத்தறிவானது அவனுக்கு அறிவுறுத்தவில்லை. ஆனால் அந்தக்காபூலிகளின் கைவசமிருந்து அவர்களுடைய அருமைக்குழந்தையைக் கொள்ளை கொண்டு வந்துவிட்டதனால் மரணத்தின் மலக்கேதன் மீது பழிக்குப்பழி வாங்கியிருப்பதாக அவனுடைய குற்றமுள்ள நெஞ்சானது குறுகுறுக்கத் தொடங்கிற்று, ஜமீன்தாரின் மனவருத்தமானது ஆரம்பத்தில் அதிகமாயிருந்தபோதிலும் பிறகு சிறிது நேரத்திற்கெல்லாம் அந்தத்துக்கமுழுதும் அவனது கொடியசிந்தனைக்குள்புக்கு மறைந்தது. அதன்பின் உரிய காலத்தில் வீட்டின் தலைமைக்கார திகாரிக்குப் பிரேதச்சடங்குகளுக்கு வேண்டிய காரியங்களைத் தயாரிக்கும்படியான அனுமதி அளிக்கப்பட்டது. அப்பால் யாதொருவிதமான ஆடம்பரமுமில்லாமல் ஜுபைதாவின் பிரேதமானது அதற்கென்று ஏற்படுத்தப்பட்டிருந்த ஒரு கல்லறைக்குள் வைத்துப் பத்திரமாக அடக்கம் செய்யப்பட்டது. கருங்கல் செங்கற்களைக் கொண்டும் சுன்னத்தைக் கொண்டும் அந்தச்சமாதியை நன்றாகக் கட்டிவைக்கும்படி ஷாபாஸ்கான் அனுமதி கொடுத்துவிட்டான். பிறகு அந்த ஜமீன்தார் தன்னுடைய மாளிகையின் திவான்கானாவிலிருந்த ஒரு சிறு அறைக்குள் புகுந்து கொண்டு எக்காரணத்தை முன்னிட்டும் எவரும் வந்து தனக்குத் தொந்தரை கொடுக்கக் கூடாதென்று தங்களுடைய ஏவலாளருக்குக் கடுமையான உத்தரவு கொடுத்துவிட்டான். அங்கே ஷாபாஸ்கான் வெறுங்கட்டிலின் மீது படுத்துக்கொண்டு ஆகாயத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டேயிருப்பான். ஏதோ தன்னுடைய வீட்டின் முகட்டில் தன் செல்வக்குமாரியின் தோற்றமானது காணப்படுவதே போல் அண்ணாந்தபடியே ஆகாயத்தை வெறிக்கப் பார்த்துக் கொண்டேயிருப்பான். நாட்களோ பல கழிந்தன. ஆனால் ஷாபாஸ்கானின் துக்கமோ சிறிதும் தணியவில்லை. அன்று ஜுபைதாவை அடக்கஞ்செய்தபோது அந்தப் பிரேதத்தைப் பார்த்துக் கொண்டிருந்த காலையில் அவனுக்குண்டாயிருந்த அதேவிதமான மௌனம் நிறைந்த துக்கசாகரமே பிறகு எப்பொழுதும் நிரம்பத் ததும்பிக்கொண்டிருந்தது. துயாத்தினால் மேலே என் செய்வதென்பது புலப்படவில்லை, ஆனால் அவன் ஒரு போதும் கண்ணீர் விட்டழுவதில்லை. ஒரு முறையேனும் விம்மியழுததில்லை; ஒரு முறையேனும் ஒரு பெருமூச்சும் விட்டதில்லை. அந்தக்காபூலிகளின் அருமைக்குழந்தையைத் திருடிக்கொண்டு வந்துவிட்டதற்காகத் தனக்குக் கிடைத்தது சரியான தண்டனையென்றே சமாதானம் செய்துகொண்டிருந்தான். இதனால் ஆண்டவனுடைய பெருமையை ஜமீன்தார் ஒருவாறு அறிந்துகொண்ட போதிலும் இவ்வளவு ஜல்தியில் தன்மீது இப்படிப்பட்ட தண்டனையை இறக்கியது மட்டும் மகா அநீதியென்றே கூறிக்கொண்டிருந்தான். ஏழைகளின் குழந்தையைத் திருடியதற்காகச் செல்வவந்தனாகிய தன்னுடைய ஏகபுத்திரியை ஆண்டவன் மரிக்கச்செய்வது அநியாயமல்லவோ வென்று தனக்குள் வாதித்துவந்தான், எப்படி இருந்த போதிலும் ஊரூராய் அலைந்துதிரியும் காபூலிகளின் பெண்ணுக்கீடாக மிக்க செல்வாக்கும் அதிக தனசகாயமும் பெற்றிருந்த ஒரு ஜமீன்தாரின் ஏகபுத்திரியாகிய ஜுபைதாவைக் கொண்டுபோவது எந்தத் தெய்வத்துக்குத்தான் அடுக்குமென்று ஆத்திரப்பட்டான், இக்காரியங்களிலெல்லாம் தெய்வ நீதியென்பதே கிடையாதென்று மனக்கொதிப்படைந்தான். ஆயினும் என் செய்வது? தனக்குள்ளேயே வெம்பினான், வெதும்பினான். யாரிடத்தில் போய் இனி முறையிட்டுக்கொள்வதென்னும், ஒன்றும் செய்யமுடியாத உக்கிரமான கோபமே அவனுடைய உள்ளத்தை உருக்கிக்கொண்டு வந்தது. தெய்வநீதியில் நம்பிக்கையில்லாமற் போனதனால் வேதத்தில் சொல்லியிருப்பதே போல் தொழுகையைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும் ஆறுதல் அடைவதற்கும் ஒன்றும் வழியில்லாமற் போய்விட்டது. ஜமீன்தார் அதற்கு முன் நெடுநாட்களாகவே தன்னுடைய மார்க்கத்துக்குரிய தொழுகை, நோன்பு, தானதர்மம் முதலிய தெய்விகக்கடமைகளையெல்லாம் அடியோடு விட்டு விட்டுப் பெயருக்கு மட்டும் ஷாபாஸ்கான் என்னும் முஸ்லிம் பெயரை வைத்துக்கொண்டு திரிந்தான். ஆதலின் மரணத்துக்குப்பின் தனக்கு வரவேண்டியிருந்த நரகவேதனையை நம்முடைய ஜமீன்தார் இவ்வுலகத்திலேயே தானாகவே சுயமே சிருஷ்டித்துக் கொண்டு அனலிற்பட்டபு ழுப்போல் அதில் வீழ்ந்து அல்லும் பகலும் அனவரதமும் அவஸ்தைப்பட்டுக் கொண்டு கிடந்தான். இவ்வாறு பல வருஷங்கள் கழிந்தன. ஜுபைதா இறந்து பத்து வருஷமாகியும் ஷாபாஸ்கானின் மனமும் தேகமும் இன்னமும் செயலற்று ஒடுங்கிக்கிடந்தன. பார்ப்போர் பித்தனென்று எண்ணும்படியான விதத்தில் நம் ஜமீன்தார் காலங்கழித்து வந்தான்; அவனுக்கு உலக விஷயத்தில் ஒன்றும் உற்சாகமேயில்லை. இப்படியாகக் காலங்கழிந்து வரும்போது ஒருநாள் அவன் தன்னுடைய பைத்தியத்தினின்றும் தெளிந்து வெளிக்கிளம்பும் படியான பிரம்யம் ஒன்றுநேரிட்டது: காபூலிகளின் கார்வான் ஒன்று ஜமீன்தாரின் சொந்தக்கிராமத்தினின்றும் சில மைல் தூரத்திலிருந்த மற்றொரு குக்கிராமத்தில் வந்து குடிசை இறக்கியிருந்தார்கள். இவ்வாறு அவர்கள் இறங்கியதில் அசாதாரணமான விஷயம் ஒன்றுமில்லை, ஏனெனின் அப்பகுதிகளில் இப்படிப்பட்ட காபூலிக்கூட்டங்கள் வந்து இறங்காத வருஷம் ஒன்றுமிராது. ஷாபாஸ்கான் வசித்து வந்த அனார்க்கலியென்னும் ஊரானது ஒரு நகரமாயில்லாமலும் அதிகக் குக்கிராமமாய் இல்லாமலும் அமைந்திருந்த ஒரு நடுத்தரமான பெரிய ஊராயிருந்தது. அவ்வூரிலிருந்து அந்தக்காபூலிகள் இறங்கியிருந்த கிராமத்திற்குச் செல்லக்கூடிய ஒரு நாட்டுப்புற ரஸ்தாவானது நல்ல விதமாகப் போடப்பட்டிருந்தது. மேலும் ஜமீன்தாருடைய ஊரிலிருந்து அந்த ரஸ்தாவின் வழியே மற்றும் பல நகரங்களுக்கும் செல்லலாம், இதனால் அந்தப் பகிரங்க ரஸ்தாவின் வழியே அனேக விதமான ஜனங்கள் அன்றாடம் போய்க்கொண்டும் வந்து கொண்டுமிருப்பார்கள். இக்காரணத்தினால் அந்தக்காபூலிகள் இறங்கியிருந்த கிராமத்தில் சாலையோரமாக ஒரு பெரிய கிணற்றையும் வெட்டி வழிப்போக்கர்கள் தங்குவதற்கென்று பல விதமான மா, பலா, அசோக மரங்களையும் அங்கே உற்பத்தி செய்து வைத்திருந்தான். கால்நடைப்பிரயாணிகளும் கட்டை வண்டிப்பிரயாணிகளும் இராக்காலத்தில் வந்து அந்தத்தோப்பில் அதிகமாக இறங்குவதுண்டு, பகற்காலத்திலும் பிரயாணிகள் அந்தத் தோப்பின் நிழலில் இளைப்பாறும் பொருட்டுப் பல நாழிகை நேரம் தங்கிச்செல்வதுண்டு. ஜமீன்தாரைப் பேட்டி காணவரும் குடியானவர்களும் முதல் நாளிரவில் அந்தத் தோப்பில் தங்கியிருந்து விட்டு மறுநாட்காலையில் ஷாபாஸ்கானை வந்து கண்டுகொள்வார்கள். ஜுபைதாவின் தாயார் இறந்து போன பின் அக்குழந்தையின் செவிலித்தாயாகிய ஜய்த்தூன்பீபி ஜுபைதாவையும் இன்னும் இரண்டு மூன்று வேலைக்காரிகளையும் அழைத்துக்கொண்டு ஜுபைதாவின் தாயாரைப் பெற்ற மாதாபிதாக்கள் வசிக்கும் ஊருக்குச் சென்று அவர்களுடைய குமாரியின் ஞாபகார்த்தமாக அவள்வயிற்றில் பிறந்த ஜுபைதாவைக் காண்பித்து வருவது வழக்கம். ஜுபைதா உயிரோடிருந்த மட்டும் ஜுபைதாவும் ஜய்த்தூன்பீபியும் சில வேலைக்காரிகளுடன் பாட்டியாரகத்துக்குப் போய் வருவார்கள். ஜுபைதா இறந்த பின்னும் ஜய்த்தூன்பீபி அந்தப்பாட்டியாரகத்துக்குப் போய் வருவதை நிறுத்தவில்லை, மகா கரும சிரத்தையுடன் ஒவ்வொரு வருஷத்திலும் ஜய்த்தூன்பீபி அவ்வூருக்கு யாத்திரை போய் வருவதை மறப்பதில்லை. இவ்வாறு ஒருமுறை சென்று வரும்போது மேற்கூறிய மாந்தோப்பில் ஜய்த்தூன்பீபி இளைப்பாறும் பொருட்டு வந்து தங்கினாள், வயது சென்ற இம்மாது அங்கே தங்கியிருக்கும் போது உடன் வந்த வேலைக்காரிகள் அருகிலிருந்த கிராமத்துக்குள் சென்று ஏதேனும் சிற்றுண்டி வாங்கி வரலாமென்று போய்விட்டார்கள். ஜய்த்தூன்பீபி ஓர் அசோகமர நிழலில் அயர்ந்திருக்கும்போது ஒரு காபூலிப்பெண் பிள்ளையானவள் தங்களுடைய குடிசையிலிருந்து புறப்பட்டு ஜலம் திரட்டும் பொருட்டு அத்தோப்பிலிருந்த கிணற்றருகில் வந்தாள். அந்தக்காபூலிகளின் டேராவைக்கண்டவுடன் ஜய்த்தூன்பீபியின் மனத்தில் ஜுபைதாவின் தோற்றம் சட்டென ஓடி வந்தது, உடனே அக்கிழவியின் கண்களினின்றும் இரண்டு சொட்டு ஜலம் கீழே விழுந்தது. பிறகு இன்னும் சில காபூலிப்பெண்கள் அக்கிணற்றண்டை வந்தார்கள். அவர்களெல்லோரும் வாலிபப்பருவமுள்ள இளங்குமரிகளாகக் காணப்பட்டனர்; அவர்களுள் சுமார் பதினெட்டு வயதுடைய மகா ரூப லாவண்யமுள்ள சௌந்தர்ய வதனி ஒருத்தி காணப்பட்டாள். மற்றைப் பெண்களிடத்தில் காணப்படாத மடம், நாணம், அச்சம், பயிர்ப்புக்குரிய முகக்குறியானது அப்பெண்ணின் பால் காணப்பட்டது. அவளுடைய இப்படிப்பட்ட தன்மையையும் கம்பீரமான தோற்றத்தையும் ஜய்த்தூன்பீபி கண்ட போது அவள் காபூலிப் பெண்ணாயிருப்பது ஒரு போதும் முடியாதென்று சந்தேகித்தாள். இன்னும் உற்று நோக்கும் போது அவளுடைய அங்க அமைப்பெல்லாம் அவளொரு காபூலிப் பெண்ணல்லவென்பதையே வெளிக்காட்டிக் கொண்டிருந்தன. எல்லாக் காபூலிப் பெண்களையும் போல் இவளும் அவர்களுக்குரிய உயரமான பாவாடையையும் தலை முக்காட்டையும் உடற்சட்டையையும் அவர்களே போன்ற ஆபரணங்களையும் அணிந்து கொண்டு அவர்கள் பேசும் பாஷையாகிய பட்டாயிஸ் பாஷையையே பேசி வந்த போதிலும் இவள் பிறவியால் மட்டும் காபூலிப் பெண்போல் காணப்படவில்லை. நாணத்துடன் கூடிய இந்தப் பெண்ணின் சௌந்தர்யத்தையே ஜய்த்தூன்பீபி நெடுநேரம் வரையில் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தாள். உடனே சட்டென்று தான் தரையில் விரித்து உட்கார்ந்திருந்த ஷத்ரஞ்ஜியிலிருந்து எழுந்து அப்பெண்ணருகிற் சென்று அவளுடைய முகத்தை உற்று நோக்கினாள். தன்னையாரோ ஓர் அயல் மனுஷி வெறிக்கப் பார்க்கிறாளென்பதைக் கண்டு அப்பாலிகை கிணற்றின் மற்றொரு புறத்துக்குப் போய்விட்டாள். ஆயினும் அந்தச் செவிலித்தாய் அப்பெண்ணின் முகத்தினின்றும் தன்னுடைய கண்களை அப்புறப்படுத்தவில்லை. அப்பெண் எங்கெங்கெல்லாம் மருவியபோதிலும் ஜய்த்தூனின் பார்வையும் அங்கங்கெல்லாம் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. சிறிது நேரங்கழித்து ஜய்த்தூன்பீபியும் தன்னுடைய ஷத்ரஞ்ஜியில் போய் உட்கார்ந்து சாய்ந்து கொண்டாள். அங்கிருந்தபடியே பல முறை பெருமூச்சுவிட்டுத் தனக்குள்ளே இவ்வாறு சொல்லிக் கொண்டாள். “இல்லை!               அப்படியிருப்பது முடியாது! ஆண்டவன் தான் அக்குழந்தையை நம்மிடத்திலிருந்து பிடுங்கிக் கொண்டானே! அது ஒருகாலும் முடிந்திராது. புதைகுழியை விட்டு மற்றொரு முறையும் நான் என் ஜுபைதா வைப்பார்க்கப் போகிறேனா? என்னுடைய ஜுபைதா இப்பொழுதிருந்தால் இவ்வளவு பருமனையடைந்திருப்பாள். இந்தக் காபூலிப் பெண்ணைப் பார்த்தால் என் ஜுபைதாவை வைத்து உரித்தாற்போலவே இருக்கிறாள். ஆ! என்னகாலம்! நானும் இன்றே இறந்து போனால் அந்த ஆன்ம உலகிற் சென்று என்னுடைய ஜுபைதாவைக் கண்ணாரக்காண மாட்டேனோ!” இவ்வாறு கூறும் போதே அவளுடைய நயனங்களினின்றும் நீர்த்தாசையானது ஆறாய்ப் பெருகிற்று. கிணற்றங்கரைக்கு வந்திருந்த காபூலிப் பெண்களெல்லோரும் தண்ணீரைமொண்டு கொண்டுத்து தம்முடைய டேராவிற்குத் திரும்பிச் சென்று விட்டார்கள். ஆனால் ஜய்த்தூன்பீபியின் மனத்தில் ஜுபைதாவின் ஞாபகத்தை மூட்டி விட்ட அந்தப்பெண்மட்டும் தனித்து நின்றாள். வாலிபப்பருவமுள்ள ஒரு பெண் எவ்வளவு சுறுசுறுப்புடன் தண்ணீர் இறைக்கக்கூடுமோ அவ்வளவு சுறுசுறுப்புடன் அந்தப்பெண் இறைக்காமல் சற்று மந்தமாகவே தண்ணீரை இழுத்துக் கொண்டிருந்தாள். இவள் தன்னுடைய குடத்தை நிரப்பு முன் மற்றைப்பெண்களெல்லாம் மாந்தோப்பைக் கடந்து மறைந்து விட்டார்கள். இவளும் தண்ணீர்க் குடத்தையெடுத்துக் கொண்டு மற்றவர்கள் சென்ற வழியே செல்லாமல் ஜுபைதாவின் ஞாபகத்தினால் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்த அந்த வயோதிகமாதிடம் வந்து, “அம்மா! உனக்கு உடம்புக்கென்ன? ஒரு நிமிஷத்துக்கு முன் ஏன் என்னுடைய முகத்தையே உற்று நோக்கினாய்?” என்று வினவினாள். ஜய்த்தூன்பீபி மறுபடியும் பெருமூச்சு விட்டுக் கொண்டு, “அருமைக் குழந்தாய்! உன்னைப் பார்த்தவுடன் என்னுடைய ஜுபைதாவின் ஞாபகம் வந்து விட்டது. ஆஹா! நீ எங்கள் ஜுபைதாவைப் போலவே இருக்கிறாயே. ஜுபைதா இன்றைக்கிருந்தால் உன்னைப் போலவேயிருக்கும். ஜுபைதாவின் கொவ்வைச் செவ்வாயின் உதடுகளே உன்னுடைய உதடுகள். அவளுடைய அழகிய கண்களே உன்னுடைய கண்கள். ஜுபைதாவுக்குத் தமக்கையொருத்தி இருந்திருப்பாளாயின் அவளென்றே உன்னை நான் சத்தியமிட்டுச் சொல்வேன். ஆனால் ஜுபைதாவோ எங்கள் எஜமானுக்கு ஏகபுத்திரியாயிருந்தாள். அவள் உயிரோடு இருந்திருந்தால் நீ அவளுடைய பிரதிபிம்பமென்றே கூறுவேன்,” என்று சொல்லித் தேம்பினாள். உடனே எழுந்து நிமிர்ந்து விம்மி விம்மியழுதபடியே அந்தக் காபூலிப் பெண்ணைக் கட்டியணைத்து முத்தங்கொடுத்தாள். இதனால் அந்தக் காபூலிப் பெண்ணின் மனமும் இளகிவிட்டது. “அம்மா! நானும் காபூலி வயிற்றில் பிறந்த பெண்ணென்று என்னை நினைக்கவில்லை. ஏனெனின், நெடு நாட்களுக்கு முன் ஒரு பெரிய மாளிகையில் வசித்து வந்ததாகக் கனாக்கண்டாற் போல் எனக்கு ஞாபகமிருக்கிறது. இப்பொழுது நான் அலைந்து திரிவதே போல் அந்நாட்களில் என்னை ஒருவரும் எதேச்சையாக வெளியே விட்டிருக்கவில்லையென்று நினைக்கிறேன். ஆதியில் எங்கே நான் இருந்தேனென்பதும், எப்பொழுது நான் வெளிப்பட்டேனென்பதும், எப்படி நான் இந்தக் காபூலிகளிடம் வந்து விட்டேனென்பதும் எனக்கொன்றும் விளங்கவில்லை. எல்லாம் பழய கால மறதியாயிருக்கிறது, எனக்குக் கருத்துத் தெரியுமுன் அப்படியெல்லாம் நடந்திருக்கலாம். ஈதெல்லாம் என்னுடைய கனவோ நனவோ ஒன்றும் புரியவில்லை. ஆ! எவ்வாறாயினும் நான் ஒரு ஸ்திரமான குடும்பத்தில் தங்கியிருந்து வாசஞ் செய்ய விரும்புகிறேன். இவர்களுடன் அடிக்கடி இடம் விட்டு இடம் பெயர்ந்து செல்வதில் எனக்குப் பிரியமில்லை,” என்று ஜய்த்தூனின் காதில் இரகசியமாகச் சொன்னாள். அந்தக் காபூலிப் பெண் இவ்வாறே பேசி விட்டே நெடுந்தூரம் போயிருப்பாள். அதற்குள் “ஷீரீன்! ஷீரீன்!! நீ எங்கேயிருக்கிறாய்? அங்கே நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? அங்கே யாருடனே வார்த்தையாடிக் கொண்டிருக்கிறாய்?” என்று கர்ண கடூரமான அதிகாரத்தொனியொன்று மாந்தோப்பிற்குப் பின்னேயிருந்து கேட்டது. உடனே அப்பெண் எழுந்து அந்தக் கடுங்குரல் வந்த திசையை நோக்கி அதிக துரிதமாகச் சென்றாள். அதற்குள் ஷீரீனைக் கூப்பிட்ட கிழவியும் அதிவேகமாக நொண்டி நொண்டிக் கொண்டு எதிர் கொண்டு ஓடிவந்தாள். “அம்மா! இங்கே ஓர் கிழவிபடுத்துக் கிடக்கிறாள். அவள் மிகக் கடுமையான வியாதியினால் கஷ்டப்படுவதனால் அவளுக்கு நான் ஏதேனும் உதவி செய்யட்டுமோவென்று கேட்டேன்,” என்று அப்பெண் சமாதானம் கூறினாள். ஆனால் அந்த நொண்டியின் மண்டைக்கூட்டில் காணப்பட்ட துளையூசிகளைப் போன்ற இரண்டு சிறிய நெருப்புக் கண்களின்றும் வெளியான அனற்பொரியே அவளுடைய சமாதானத்தை அழுத்திவிட்டது. “சாலையோரத்தில் கிடக்கும் கிழவி சீக்காயிருந்தால் உனக்கென்ன? சுகமாயிருந்தால் உனக்கென்ன? சீக்கிரம் நடந்து வா. உன் தந்தையார் உன்னைக் கூப்பிடுகிறார்,” என்று இடியிடித் தாற்போல் அந்த நொண்டித் தாய் சிம்மநாதத்துடன் கர்ஜித்தாள். அதனுடன் அவ்விருவரும் சென்று விட்டார்கள். ஜய்த்தூன்பீபி மட்டும் தனியே அழுது கொண்டிருந்தாள். சிறிது நேரத்திற்குப் பின் கிராமத்திற்குச் சிற்றுண்டி வாங்கப் போயிருந்த வேலைக்காரர்கள் வந்தவுடன் பசியையாற்றிக் கொண்டு சாவகாசமாகத் தங்களூரை நோக்கி எல்லோரும் புறப்பட்டார்கள். வழி முழுதும் ஜுபைதாவின் செவிலித் தாயாகிய ஜய்த்தூன்பீபி தன்னுடைய ஜுபைதாவையும் இந்தக் காபூலிப் பெண்ணையும் மாற்றி மாற்றி நினைத்துக் கொண்டே போனாள். அவள் எவ்வளவு பிரயத் தனத்துடன் இந்த எண்ணத்தைத் தன்னுடைய மனத்தை விட்டு விரட்டிய போதிலும் அந்தக் காபூலிப் பெண்ணான வள்தான் காபூலியின் வயிற்றில் பிறக்கவில்லையென்றதும், நெடுநாளைக்கு முன் தானொரு பெரிய மாளிகையில் வசித்து வந்ததாகக் கூறியதும் ஜய்த்தூன்பீபியின் எண்ணத்தை விட்டு ஒரு சிறிதும் ஒழியவேயில்லை. ஒரு கால் தங்களுடைய மாளிகையிலிருந்த ஜுபைதா தான் அவளோவென்னும் சந்தேகமானது அவளுடைய உள்ளத்தின் கண் உட்கார்ந்து விட்டது. இறந்து கல்லறைக்குள் பத்திரமாக அடக்கம் செய்யப்பட்டவள் எவ்வகை அத்புதத்தினால் உயிர் பெற்று வெளியில் வந்திருத்தல் கூடும்! ஆனால் அல்லாஹ்வுக்கு எல்லா வஸ்துக்களின் மீதும் அதிகாரமில்லையா? அவன் உயிரோடிருப்பவரை மரிக்கச் செய்பவனென்றும் மரித்தோரை உயிர்ப்பிக்கச் செய்பவனென்றும் ’குர் ஆன் வேதமானது கூறவில்லையா? செத்தோரை ஆண்டவன் பிழைப்பிப்பதில் என்ன ஆச்சரியமிருக்கிறது?’ என்றெல்லாம் பலவாறாகச் சிந்தித்துக் கொண்டு ஷாபாஸ்கானின் மாளிகைக்குப் போய்ச் சேர்ந்தாள். உடனே தன்னுடைய எஜமானிடம் கிணற்றங்கரையில் தான் கேட்டதையும் கண்டதையும் மனப்பாடமாக ஒப்பித்து விட்டாள். “என்னுடைய குழந்தையைக் கல்லறைக்குள் கபனிட்டு வைத்ததை என்னுடைய இந்த இருகண்களினாலும் கண்டிராதபக்ஷத்தில் அவளே என்னுடைய சொந்த ஜுபைதா வென்று கூறுவதற்குச் சற்றும் தயங்கியிருக்க மாட்டேன். ஆயினும் ஜுபைதாவுக்காக அதிகம் அழுது அனவரத மும்கண்ணீர் வடித்ததனால் என்னுடைய பார்வையானது மழுங்கிப் போயிருக்கிறது. கான்சாஹிப்! என்னைப் போன்ற ஓர் ஏழைக் கிழவி பார்த்ததைக் காட்டினும் தாங்களே நேரில் சென்று அவ்வுண்மையைக் கண்டு கொள்ளலாம், ”என்று ஜய்த்தூன்பீபி ஷாபாஸ்கானிடம் வேண்டிக் கொண்டாள். ஜய்த்தூன்பீபி ஷாபாஸ்கானிடம் பேசும் பொழுது தயங்கித் தயங்கிப் பேசினாள். ஏனெனின், அவனுடைய குமாரி இறந்தது முதல் அவன்மனம் இன்னபாடுபட்டு வந்திருக்கிறதென்பது அந்தச் செவிலித் தாய்க்கே தெரியும். ஏதேனுமோர் நல்ல சமாசாரமிருந்தால் அதனால் தன்னுடைய எஜமான் பழய தைரியத்தில் பாதியையேனும் அடைதல் கூடுமோவென்று ஆவலுடன் எதிர் பார்த்திருந்தாள். ஆனால் ஜய்த்தூன்பீபியின் சமாசாரத்தைக் கேட்டவுடன் ஷாபாஸ்கான் பிரேதக் குழியிலிருந்து எழுந்ததே போல் திடுக்கிட்டெழுந்தான். ஒரு வினாடிக்குள் அவனுடைய அங்க முழுதும் மின்சாரசக்தியால் நிரம்பியதே போல் ஆய்விட்டது. உடனே ஜய்த்தூன்பீபியின் கையை ஜமீன்தார் இறுகப் பற்றிக் கொண்டான். மெய் விதிர்த்து நா குளறி, “ஜய்த்துன்! இப்பொழுதே புறப்படு அந்தப் பிசாசுகள் இறங்கியிருக்கும் இடத்துக்கு என்னை அழைத்துக் கொண்டு போ. அவ்விடம் எங்கேயிருக்கிறது? நீ கண்டபெண் எங்கிருக்கிறாள்? என்னுடைய ஜுபைதா எங்கே?” என்று ஆத்திரத்துடன் அவசரப்பட்டான். தன் கையைப் பிடித்த வலிமையைக் கண்டும், அவன் பிரலாபித்த வசனங்களைக் கொண்டும் ஜமீன்தாருக்குப் புத்தி தடுமாறிவிட்டதென்று அந்தச் செவிலித் தாய் எண்ணினாள். ஆயினும் அவனுடைய அதிகாரத்துக்கு இரண்டு செய்யக் கூடாதென்று அன்றிரவே அழைத்துக் கொண்டு போய் அந்தக் காபூலிகளிருக்குமிடத்தைக் காண்பிப்பதாக வாக்குக்கொடுத்தாள். ஆயினும் அதற்கு முன் அரைப்பித்தால் மனமுடைந்து கிடந்த ஷாபாஸ்கான் இதைக் கேட்டது முதல் “எப்பொழுது புறப்படுவோம்! எப்பொழுது புறப்படுவோம்!!” என்னும் ஏக்கத்தினால் தூக்கம் பிடியாமல் தன் படுக்கையின் மீது புரண்டு புரண்டு கொண்டு கிடந்தான். பொழுது புலருமுன் ஷாபாஸ்கானும் ஜய்த்தூன்பீபியும் அவர்களுடன் வந்த சில ஏவலாளரும் அந்தக் காபூலிகள் இறங்கியிருந்தமாந் தோப்புக்கு வந்து சேர்ந்தார்கள். அவ்வதிகாலை வேளையில் காபூலிப் பெண்டுகள் எழுந்து நடமாடிக்கொண்டிருந்தார்கள். சிலர் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு போனார்கள். வேறு சிலர் தங்கள் புருஷர்களுடைய ஹூக்காவுக்கு நெருப்பெடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்; மற்றுஞ் சிலர் தங்கள் குழந்தைகளின் காலை ஆகாரத்துக்காக அடுப்பை மூட்டிக் கொண்டிருந்தார்கள். கிணற்றருகில் வந்திருந்தவர்களுள் இன்னாள் தான் அந்தப் பெண்ணென்று ஜய்த்தூன்பீபி காட்டு முன் ஷாபாஸ்கான் அப்பெண்ணைக் குறியாகப் பார்த்துக் கொண்டான். அந்தப் பெண்ணின் முகம் வெயிலிலடிபட்டிருந்ததனால் சிறிது தேஜஸ்மாறியிருந்தது. மேலும் அவளுடைய வயதானது பதினெட்டுப் பிராயமாய்க் காணப்பட்டது. இவ்விரு வேறுபாடுகளையல்லாமல் வேறொரு வித்தியாசத்தையும் ஷாபாஸ்கான் காணவில்லை. தன்னுடைய குமாரியே காபூலி உடையில் தனக் கெதிரில் வந்து நிற்பது போல் கண்டான். அவள் உண்மையான பெண் தானோ அல்லது தன்னுடைய மகளின் பிரதிபிம் பத்தோற்றமோ என்று சந்தேகித்தான். அப்பெண் நின்று கொண்டிருந்த இடத்திற்குச் சமீபத்தில் ஷாபாஸ்கான் சென்று அவளுடைய முகத்தை ஏறிட்டுக் கூர்ந்து நோக்கினான். அவனுக்கு அப்பொழுது புத்தியானது தடுமாறுகிறாற் போல் காணப்பட்டது. அவள் ஜுபைதாவோ அல்லவோவென்று தீர்மானிப்பது தான் அவனுக்கொரு பெருங்காரியமாய் அப்பொழுது காணப்பட்டது. அதிகாலையில் வெளிச்சமோ மங்கலாயிருக்கிறது; மூளையோ தடுமாறுகிறது. என் செய்வான் பாபம்! ஷாபாஸ்கான் இன்னும் சமீபத்தில் ஓடிச் சென்று அப்பெண்ணின் முகத்துக்கருகில் தன்னுடைய முகத்தை வைத்துக் கூர்ந்து நோக்கி, “அதோதழும்பு! அதோதழும்பு! ஆமாம்; அதோதழும்பிருக்கிறது!” என்று கூக்குரலிட்டான். ஜுபைதா சிறு குழந்தையாயிருக்கும் போது ஒருமுறை ஜனானாவின் படிக்கட்டில் விழுந்து விட்டது. அங்கே நீட்டிக் கொண்டிருந்த கல்லொன்று குத்தியதனால் ஜுபைதாவின் இடப்பக்கத்து நெறியில் ஒரு சிறுதழும்பு உண்டாய் விட்டது. இதைத்தான் ஷாபாஸ்கான் அவ்வேளையில் அடையாளங் கண்டுபிடித்தான். உடனே கான்சாஹிப் அப்பெண்ணை இறுகத்தழுவிக் கொண்டுகோவென்று கதற ஆரம்பித்தான். அவன் அழுத பரிதாபகர நிலைமையானது காண்போர் உள்ளத்தையெல்லாம் கலங்கச் செய்யும் படியாயிருந்தது. “ஆ என் ஜுபைதா! ஆ என் ஜுபைதா!” என்று வாய் விட்டலறினான். அதுவரையில் திக்பிரமை கொண்டதே போல் அந்தக் காபூலிப் பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் அசையவுமில்லை, ஒரு வார்த்தையேனும் பேசவுமில்லை. ஸ்வாஸம் விடும் பொருட்டு அவள் மூச்சுவாங்கிக் கொண்டிருந்த போது அவளுடைய நெஞ்சானது மேல் எழுந்தெழுந்து அழுந்தியிராத பக்ஷத்தில் எல்லோரும் அவளையொரு சலவைக்கல் சிலையென்றே மதித்திருப்பார்கள். இரண்டொரு நிமிஷங்களுக்குள் அவளுடைய கண் முன்னே தொங்கிக் கொண்டிருந்த திரையானது கிழிக்கப்பட்டது. அவனுடைய மாளிகையில் தான் நெடுநாளைக்கு முன் ஜீவித்து வந்த விஷயம் அவளுடைய ஞாபகத்தில் நன்றாக விளங்கிற்று, அதிலொன்றும் சந்தேகமில்லை. தான் தான் அவனுடைய மாளிகையிலிருந்த ஜுபைதா வென்னும் நினைவும் ஓடி வந்தது. உடனே “ஆமாம் பிதா! நான் தான் தங்களுடைய ஜுபைதா; ஏன் என்னைத் தாங்கள் விட்டு விட்டீர்கள்? இதுவரையில் எங்கே சென்றிருந்தீர்கள்?” என்று தான் சொன்னாள். உடனே மயக்கங் கொண்டு ஷாபாஸ்கானின் பாதத்தடியில் வீழ்ந்துவிட்டாள். இந்தச் சம்பவமானது அந்தக் காபூலிகளைக் கிளப்பிவிட்டது. அடுப்பெரித்துக் கொண்டிருந்தவர்களும் மாந்தோப்புக்கப்பால் மாடு ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்களும் எல்லோரும் சேர்ந்து ஒருமிக்க ஓடிவந்தார்கள். அப்பொழுது தான் ஷாபாஸ்கான் ஜய்த்தூன்பீபியை விட்டுத் தன் குமாரியைத் தூக்கி நிறுத்தும் படி செய்தான். அவ்வேளையில் அரைடஜன் காபூலிகள் அந்த ஜமீன்தாரின் மார்பின் மீதுகை கொடுத்துப் பலமாகத் தள்ளினார்கள். அவர்களுள் ஒருவன் தன்னிடம் சுமார் பத்து வருஷங்களுக்கு முன் தன்னுடைய ஷீரீனைத் திருப்பிக் கொடுக்கும் படி வேண்டிக் கொண்டவனாய் இருந்தானென்பதைக் கண்டவுடன் ஷாபாஸ்கானின் மெய்விதிர்ப்புக் கொண்டது. ஒரு நிமிஷம் வரை ஷாபாஸ்கான் ஆச்சரியத்தினால் அடங்கிப் பின்னோக்கி இரண்டோர் அடியை எடுத்து வைத்தான். ஆனால் அதே நிமிஷத்தில் ஜமீன் தாராயிருந்த அந்த அதிகாரியின் ஆங்காரமுள்ள தொனியானது காபூலிகளின் இரைச்சலுக்கு மேல் ஓங்கிக் கிளம்பிற்று. “அயோக்கியர்காள்! அகன்று செல்லுங்கள்! என்னுடைய குமாரியின் மீது விரல் வைக்காதீர்கள்! நீங்கள் என்ன விதமான அயோக்கிய முள்ள மாந்திரீக சக்தியால் என்னுடைய குழந்தையைக் கவர்ந்து கொண்டு போய் விட்டீர்களென்பதை நான் அறியேன். ஆனால் இப்பொழுதோ நான் உங்களுடைய மந்திரசக்தியை எதிர்க்கும் ஆற்றல் பெற்றவனாயிருக்கிறேன்,” என்று அதிகாரத் தொனியுடன் அட்டகாசஞ்செய்தான். இவ்வாறு சொல்லிக் கொண்டு ஷாபாஸ்கான் அப்பெண்ணின் பக்கம் திரும்பி அவளுடைய கழுத்தின் மீது தன்னுடைய கரங்களைப் போட்டு அத்தியந்த விசுவாசத்துடன் உச்சிமோந்து உள்ளங்குளிர முத்தமிட்டு, “ஓ என்னருமைக் குழந்தாய்! ஓ என் அதிருஷ்டஹீனமான புத்திரீ! இனியொன்றும் என்னை விட்டு உன்னைப் பிரிக்கமாட்டாது. இல்லை! இல்லை!! கல்லறையும் இனி உன்னைப்பிரிக்க மாட்டாது!”என்று கூறினான். ஆனால் அப்பொழுதே திடீரென்று அவனுக்கும் அப்பெண்ணுக்குமிடையில் ஒரு காபூலியின் கையானது விழுந்தது; அந்தக் காபூலியானவன் ஷாபாஸ்கானை ஒரு புறம் தள்ளிவிட்டு அவன் பக்கம் முதுகைக் காட்டி அப்பெண்ணின் பக்கம் திரும்பி நின்று அவளை அன்புடன் ஆலிங்கனம் செய்து பின்வருமாறு கூறினான்: “ஆ என் அருமை ஷீரீன்! உனக்கும் எனக்கும் நடுவே ஒருவரும் வரக்கூடாது. இவன் உன்னை இன்று தன் மகளென்று கூறிக்கொள்வதால் என்ன பிரயோஜனம்? நான் உன்னை நேசிப்பதே போல் நாற்பதினாயிரம் தந்தைமார் நேசிக்கமாட்டார். இன்னும் நானூறாயிரம் தந்தைமார் என்னைவிட்டு உன்னைப் பறித்துக் கொள்வது முடியாது. நான் உன்னைப்  பிரேதக்குழியிலிருந்து பிழைப்பு மூட்டிக் கொண்டு வரவில்லையா?” ஷாபாஸ்கான் அன்றிரவு எழுந்து வரும் போது அதிகமான ஆட்களைத் துணைக்குக் கொண்டு வரவில்லை. தன்னுடைய மகள் போலிருந்த ஒரு பெண்ணைப் பார்க்கப் போக வேண்டுமென்னும் ஆவேசம் மலிந்த அவசரத்தினால் எல்லா அங்கக் காவலரும் தயாராகு முன் மூன்று நான்கு மனிதர்களுடனேயே புறப்பட்டுவந்துவிட்டான். ஆயினும் அந்தக் காபூலியின் பயமுறுத்தாட்டலுக்கு ஷாபாஸ்கான் சிறிதும் மனங்கலங்கவில்லை. மற்றும் பல காபூலிகள் கத்தியையும் கட்டாரியையும் உருவிக்கொண்டு சூழ்ந்து நின்றதைப் பார்த்தும் ஜமீன்தாரின் உள்ளம் துணுக்குறவில்லை. ஆனால் அந்த வாலிபனுடைய வாயினின்றும் வெளிப்பட்ட காதற்கனிவே ஷாபாஸ்கானின் உள்ளத்தை உருக்கிவிட்டது. “கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள், என்ன பயனுமில” என்பதே போல் அவனும் அவளும் ஒருவரோடொருவர் காதற்சாகர மௌனத்தில் மூழ்கியிருந்ததைக் கண்ட ஜமீன்தாரின் உள்ளம் பதைபதைத்தது. தன்னுடைய குமாரியின்  பார்வையிலிருந்தே அவன் மீது அவளுக்கிருந்த ஆர்வத்தின் ஆழம் விளங்கிற்று. மீண்டும் ஷாபாஸ்கானின் வலிமை குன்றிற்று. ஜய்த்தூன்பீபியும் மற்றையோரும் ஆச்சரியப்படும் படியான விதத்தில் ஆண்மையையடைந்திருந்த ஷாபாஸ்கானின் தைரியமானது ஒரு சிறிதுமில்லாமல் ஒடுங்கிற்று. சென்ற பத்து வருஷங்களுக்கிடையில் உடைந்து போயிருந்ததைக் காட்டினும் அதிகமான அயர்ச்சியும் மெலிவும் இப்பொழுது ஏற்பட்டுவிட்டன. ஒன்றும் ஆற்றமாட்டாதவனே போல் காணப்பட்டான். அப்பொழுது உதயகிரியினின்றும் வெளிக்கிளம்பி வந்த சூரியகாந்தியானது அக்கட்டழகுள்ள காளைப் பருவத்தினர் இருவரின் முகாரவிந்தத்திலும் காதலுக்கு மேற்பட்ட காந்தியின் தேஜஸைப் பிரதி பிம்பித்துக்காட்டிற்று. அதைக்கண்டு ஷாபாஸ்கான் ஒன்றும் செய்யமாட்டாதவனே போல் வாயைப்பிளந்து கொண்டு வேடிக்கை பார்த்து நின்றான். ஜமீன்தாரின் ‘ஆட்ட பாட்டமெல்லாம் ஒடுங்கி விட்டதைக்கண்டு மற்றைக்காபூலிகளெல்லாம் அவனை நோக்கிப் பரிகாசமாக ஏசினார்கள். அவமானத்தினாலும் ஆற்ற மாட்டாத்தன்மையினாலும் அவனுடைய கண்களினின்றும் ஆரம்பித்து வடிந்த கண்ணீரானது கன்னத்தையும் தாடியையும் நனைத்துவிட்டது. அப்பொழுது அந்த வயது சென்ற காபூலியானவன் அதிகமாக இடித்திடித்துக்காட்டி, தானொரு ஏழைக்காபூலியாய் இருந்த போதிலும் தன்னுடைய மகளை அவன் கொள்ளைகொண்ட போது தனக்கும் அப்படித்தான் புத்திரிசோகத்தால் துக்கமுண்டாயிற்றென்று பரிகாசம் செய்தான். புத்திரசோகமென்பது ஏழை, பணக்காரர் எல்லோருக்கும் ஒரேவிதந்தான், தனவந்தன் வீட்டுத் துக்ககாரியம் ஒன்றும் பெரிதாயிராது. இதையெல்லாம் கேட்டு ஷாபாஸ்கான் மௌனமாயிருந்த போதிலும் அவனுடைய முகத்திலும் அவயவத்திலும் மற்றுமுள்ள சரீரத்திலும் அவனுக்கிருந்த படபடப்பையும் துடிதுடிப்பையும் கண்டு, “நான் உனக்கு முன்னமே எச்சரிக்கை செய்திருந்த காபூலியின் பழிக்குப்பழி என்பது இதுதான்,” என்று கிழவன் சொல்லி முடித்தான். அந்தக் கிழக்காபூலி சொன்ன வார்த்தையைக் கேட்டு ஷாபாஸ்கானின் உள்ளமானது உருகி ஒடுங்கிற்று. என் செய்வான் பாபம்! அவனுக்குத் தன்னுடைய காணாமற் போன குழந்தை புதிதாக அகப்பட்ட தனாலுண்டான பேரானந்தத்தினால் அந்தக் கிழவன் ஏசிக்காட்டிய பரிகாசத்தையும் ஒரு பொருளாய் எண்ணவில்லை. மேலும் தன்னுடைய அகங்காரமமகாரங்களையெல்லாம் ஒருபக்கம் ஒதுக்கிவைத்துவிட்டே பின்வருமாறு அக்கிழவனுடன் பேசக் தொடங்கினான், “இப்படியெல்லாம் நடக்க வேண்டிய விதிவசம் ஒன்றிருந்தது. பெரியோரே! நான் உமக்குத் தவறிழைத்தேன் என்பதை ஒத்துக்கொள்ளுகிறேன். ஆயினும் என்னுடைய குழந்தையைப் போலவே உன்னுடைய குழந்தையையும் நான் வளர்த்து வந்திருக்கிறேன். முதன் முதலில் உன்னுடைய மகள் காட்டிலுள்ள பூனையைப்போல் அவளுக்கு ஆறுதல் தேறுதல் சொல்லக்கூடியவரையெல்லாம் கடித்துக்கொண்டும் கிள்ளிக்கொண்டும் இருந்தாள். அனேகசமயங்களில் என்னுடைய வீட்டைவிட்டு ஓடிப்போகவும் பார்த்தாள். ஆனால் நான் சொல்வதில் உனக்கு நம்பிக்கையில்லாவிடின் நீயே வந்து அவளைப்பார், அல்லது இந்தக் கிழச் செவிலித்தாயைக் கேட்டுப்பார். இந்த ஜய்த்தூனையே உன்மகள் இப்பொழுதும் தன் தாயைப்போல் நேசித்து வருகிறாள். அவளை நீ எடுத்துக்கொள், ஏனெனின் ஷீரீன் உன்னுடைய மகள். பிறகு என்னுடைய மகள் ஜுபைதாவை என்னிடம் விட்டுவிடு.” அதைக்கேட்டு அந்தக்கிழவன் பின்வருமாறு பிரசங்க மாரி பொழிந்தான், “பரிவர்த்தனை என்பது ஒருபோதும் முடியாது. உன்னுடைய மாளிகையின் மதிற்சுவர்களுக்குள் சிறைக்கூடம் போல் அடைத்துவைத்து அங்கிருக்கும் அடிமைத்தனமுள்ள அசுசிகரமான கெட்ட காற்றை நீண்ட பத்துவருஷ காலம்வரையில் சுவாசிக்கும்படி செய்த அந்தப் பெண்ணைப் பெற்றுக்கொள்வதால் எனக்கென்ன பிரயோஜனம் உண்டாகப்போகிறது? எதேச்சையாக ஆகாயவெளியில் உலாவித்திரியும் காபூலிகளாகிய நாங்கள் ஒரு வீட்டை வீடுதானென்று மதிப்பதில்லை. ஆனால் அதை அடிமை வாழ்க்கைக்குரிய சவக்குழியென்றே மதிக்கிறோம். ஆகாயவெளியில் காணப்படும் எதேச்சையான நீலவிதானமாகிய மண்டபத்தைவிட்டு உன்னுடைய கூரைக்குள் நுழைந்தவுடன் என்னுடைய ஷீரீன் புதைகுழியில் புதைக்கப்பட்டு விட்டாளென்றே கருதுகிறேன். எங்களுக்கு ஒரு வீடும் வீடல்ல, ஒரு நாடும் நாடல்ல. திறந்த வெளியெல்லாம் எங்களுடைய நாடே. எங்களுடைய கரடுமுரடான மோட்டாக்குடிசையே எங்களுக்கு வீடு. எங்களைக் ‘காட்டுமிராண்டி’களென்று நகரவாசிகள் கருதுகிறார்கள், எங்களுடைய சாமர்த்தியத்தை அவர்கள் அறிவதில்லை. எங்களுடைய கட்டாரியினால் எப்படிப்பட்ட பலசாலியையும் வீழ்த்தி எமலோகம் அனுப்பிவிடுவோம். இஃதேபோல் எமலோகம் சென்றவரையும் நாங்கள் பிழைப்பு மூட்டி இழுத்துக் கொண்டு வந்துவிடுவோம். இதையெல்லாம் அறியாமல் நீங்கள் மகா பலசாலிகளேபோல் பேசுகிறீர்கள். நீ மடத்தனமாக உன்னுடைய குமாரியைக் கல்லறைக்குள் வைத்துப் புதைத்துவிட்டாய். நானோ அவளை அங்கிருந்து மீட்பித்தேன். அன்று முதல் அவள் உனக்குச் சொந்தமில்லை. நானே அவளைப் பெற்று வளர்ப்பதாக எண்ணிக்கொண்டு இன்றளவும் போற்றிவருகின்றேன். நான்தான் அவளைப் பெற்றுவளர்த்ததாக எனக்குத் தோன்றுகிறதல்லாமல் நீ அவளுடைய பிதாவென்பதை நான் சற்றும் நிதானிக்கவில்லை. “அதிக தூரம் நடந்து செல்வதற்கு அவளுக்கு நான் சிரமம் கொடுப்பதில்லை; எங்களுடைய கார்வான் மிருகங்களின் மீது அவளை ஏற்றிக்கொண்டு போவது வழக்கம். முதன்முதலில் எங்களுடைய கூடாரங்களில் வசிக்க இஷ்டப்படாமலிருந்தவளை நாங்கள் நன்றாகப்ப ழக்கியிருக்கிறோம். நான் உன்னுடைய மகளைத் திருத்துவதற்கு எவ்வளவோ பாடுபட்டு வந்திருக்கும்போது என்னுடைய மகளை நீ காட்டிலிருக்கும் பூனையென்று சொல்லத்துணிகிறாயோ? நீ என்னுடைய மகளைப் பழக்கியதைக்காட்டினும் நானே உன்னுடைய அடிமைமகளை அதிக சிரமத்துடன் யதேச்சாஸ்திரீயாகப் பழக்கி வந்திருக்கிறேன். இதற்கெல்லாம் காரண பூதம் நான்தானென்று பெருமை பாராட்டிக்கொள்ளமாட்டேன். என்னுடைய குமாரனே அவளைத் தன்னுடைய பலத்தினாலும் தைரியத்தினாலும் பழக்கிக்கொண்டு வந்திருக்கிறான். மேலும் அவன் தன்னுடைய காதலின் காரணத்தினாலும் அவளைத் தனக்கு வணங்கும்படியாகவும் செய்திருக்கிறானென்று சங்கோசமில்லாமல் சொல்லத்துணிவேன். அடுப்பங்கரையில் அடைபட்டுக்கிடந்த உன்னுடைய மகளுக்கு என்னுடைய மகனைப்போன்ற ஒரு எதேச்சாதிகாரமுள்ள கணவன் கிடைப்பதென்றால் அஃதொரு சாமான்யமான காரியமென்றா நினைக்கிறாய்?” மீண்டும் அங்கே நாணிக்கொண்டு நின்ற ஜுபைதாவைச் சுட்டிக்காட்டி, “இவள்தான் இப்பொழுது என்னுடைய ஷீரீன், உன் வீட்டிலிருக்கும் அந்தப் பெண்ணே உன் ஜுபைதா. அவளை நீ ஜுபைதா என்றேனும் வேறு பெயரிட்டேனும் அழைத்துக்கொள். இனியொரு முறை நாம் நம்முடைய குமாரிகளைப் பரிவர்த்தனை செய்து கொள்வது முடியாது, அஃது அறவே முடியாது!” என்று மிக்க அழுத்தமாகப் பேசினான். உடனே “முடியாது! ஒருபோதும் முடியாது!” என்று மற்றைக்காபூலிகளும் கூச்சல் போட்டார்கள். அப்பொழுது “அறவேமுடியாது,” என்று ஷாபாஸ்கானை அப்புறம் தள்ளிய அந்தப்பலாட்டியனான வாலிபன் சொல்லிப்பிறகு“ இவள் உன்னுடைய மகளாயிருக்கட்டும்; ஆனால் என்னுடைய மனைவியாயிருக்கிறாள். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே; ஆண்டவன் நாடுவானாயின் அதிசீக்கிரம் இவள் என்னுடைய குழந்தைக்குத் தாயாய்விடுவாள்,” என்று கூறி முடித்தான். அவ்வாலிபன் இவ்வாறு கூறுவதற்கு முன்னரே ஜுபைதாவின் கண்களினின்றும் வெளியான காதல் தோற்றத்தைக் கொண்டும், முகத்தில் தோன்றிய மடம், நாணத்தைக் கொண்டும் ஷாபாஸ்கான் தன்னுடைய குமாரியின் மனப்பாங்கு இன்னதென்பதை ஒருவாறு யூகித்துக்கொண்டான். “ஏதிலார்போலப்பொதுநோக்குநோக்குதல், காதலார்கண்ணேயுள”என்னும்நீதியின்படியும், “யானோக்கின்நிலநோக்கும்நோக்காக்கால், தானோக்கிமெல்லநகும்” என்னும் நீதியின் படியும் அக்குமரனும் தன்குமாரியும் நடந்து கொண்ட விதத்திலிருந்து ஜமீன்தார் ஜுபைதாவின் உள்ளக்கருத்தை உய்த்துணர்ந்து கொண்டான். ஆயினும் அந்தக்காபூலி வாலிபன் தன்னுடைய உள்ளெண்ணத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்திவிட்டதனால் இடியோசை கேட்ட சர்ப்பமே போல் ஷாபாஸ்கான் திக்பிரமை கொண்டு மயங்கிவிட்டான். உடனே தன்னுடைய கிறுகிறுக்கின்ற மண்டையைக் கைகளினால் பிடித்துக்கொண்டு, “ஏஆண்டவனே! ஜமீன்தார் ஷாபாஸ்கானின் மகள் ஒரு கஞ்ஜாரின் மனைவியாகவும் ஆகநேரிட்டதே!” என்று முணுமுணுத்தான். ‘கஞ்ஜார்’ என்னும் சொல்லைக் கேட்டவுடன் எல்லாக்காபூலிகளின் கண்களும் அனல்போல் பழுக்கச்சிவந்தன. மீண்டுமொருமுறை அவர்கள் தங்களுடைய கத்திகளையும் கட்டாரிகளையும் அவ்வவற்றின் உறைகளினின்றும் கழற்றினார்கள். ஆனால் அதைக்கண்டு ஷாபாஸ்கான் திகில் கொள்ளவுமில்லை; அல்லது சண்டை செய்வதற்கு இணங்கவுமில்லை. தன்னுடைய மனவருத்தத்தினால் ஏதோ சொல்லத்தகாததைச் சொல்லிவிட்டதனால் தான் வருந்துவதாகவும் கூறினான். ஷீரீனின் தந்தையாகிய அந்தக்காபூலித்தலைவனிடம், “சோதர! ஆண்டவனுடைய நாட்டம்போல் நிறைவேறிவிட்டது. இனியேனும் நாம் நட்புடன் இருந்து வருவோம். நமக்குள் சம்பந்தம் ஏற்பட்டு விட்டது. உன்னுடைய மகன் என்னுடைய மருகனாகவும், என்னுடைய ஆஸ்திக்கு வாரிஸாகவுமிருக்கட்டும், நீயும், உன்னுடைய நண்பர்களும், கூட்டத்தார்களும் என்னுடைய உறவினராயிருங்கள், என்னுடைய ஆஸ்தி முழுதும் இனிமேல் உங்களுடையதே,” என்று சமாதானங் கூறினான். அதைக்கேட்டவுடன் அந்தக்காபூலிக் கிழவன், “இனிமேல் எனக்குச் சொந்தமாயில்லாத என்னுடைய குமாரியைத் திருடினவனாயிருக்கும் உன் மீது நாங்கள் இரக்கங்கொண்டு இப்பொழுது நம்பிக்கை வைத்தபோதிலும் ஆகாயவெளியில் எதேச்சையாய்த் திரியும் என்னுடைய குமாரனின் சுயேச்சையை அதிகாரமென்றும் ஐசுவரியமென்றும் நீ நினைத்துக் கொண்டிருக்கின்ற உன்னுடைய அடிமைத்தனத்தினிடத்திலா விற்றுவிடப் போகிறோமென்று நினைக்கிறாய்? உன்னுடைய ஜில்லாவில் உனக்குச் சொந்தமான அனேகம் ஏக்கர் நிலமிருந்த போதிலும் நாங்கள் அவற்றிற்கு அடிமையாக மாட்டோம். ஆண்டவனருளால் அவனுடைய உலகமானது உன்னுடைய பெரிய எஸ்ட்டேட்டைக் காட்டினும் அதிக விசாலமுள்ளதாயிருக்கிறது. எங்களுடைய பாரசீகப் பழமொழி கூறுவதேபோல் என்னுடைய காலானது நொண்டியாயில்லை,”என்று ஒரே முடிபாகக் கூறிவிட்டான். என்ன சொல்லியும் அந்தக்காபூலிகள் கேளாததனால் ஷாபாஸ்கான் முரட்டுப் பிடிவாதங்கொண்டு தன்னுடைய குதிரையின் ஜேணத்தில் ஒளித்து வைத்திருந்த பிஸ்ட்டோலை எடுத்து அக்கிழவனை நோக்கிச் சுட எத்தனித்தான். உடனே ஜமீன்தாரின் செய்கையைக் கூர்மையாக நோக்கிக் கொண்டிருந்த ஜுபைதாவின் காதலன், “ஏகையாலாற்ற மாட்டாத மடயா! உன்னுடைய முட்டாள்தனத்தை நிறுத்து!” என்று சொல்லி ஷாபாஸ்கானின் பிஸ்ட்டோலையும் கையையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டான். பலாட்டியனான அந்த வாலிபனின் பிடியினின்றும் திமிறிக்கொண்டு ஷாபாஸ்கானால் ஒன்றும் செய்யக்கூடவில்லை. ஆனால் கான்சாஹிபின் கையிலிருந்த ரிவால்வரைப் பிடுங்கிக்கொண்டு அந்தக் கட்டழகுள்ள காளைப் பருவத்தான் கூறத் தொடங்கினான்: “நீ இவ்வாறு துஷ்டத்தனத்தில் இறங்கியதனால் உன்னுடைய உயிரானது இப்பொழுது எங்களுடைய கையிலிருக்கிறது. ஆனால் ஷீரீன் என்னும் என்னுடைய காதலியாகிய உன்னுடைய ஜுபைதாவின் நிமித்தம் இன்று உனக்கு உயிர்ப்பிச்சையளிக்கிறேன். அடே முட்டாள்! உன்னுடைய குமாரியை அவளுடைய விருப்பத்துக்கு மாற்றமாக நாங்கள் பலாத்காரமாக இறுத்திக் கொண்டிருக்கிறோமென்று நீ மூடத்தனமாய் எண்ணுகிறாற் போல் இருக்கிறது. நீ என்னுடைய தங்கையை அவளுடைய விருப்பத்துக்கு மாற்றமாக உன்னுடைய மாளிகையென்னும் சிறைக்கூடத்தில் மடக்கி வைத்திருப்பதே போல் நாங்கள் உன்னுடைய குழந்தையைப் பலவந்தமாகப் பிடித்துவைத்தில்லை. இப்பொழுதே உன்னுடன் போக அவளுக்கு விடைகொடுக்கிறேன், உன்மீது அவளுக்குப் பிரியமிருந்தால் உன்னுடன் வருவாள், ஆனால் என்மீது அவளுக்குக் காதலிருந்தால் என்னை விட்டு நகரமாட்டாள். என்பால் அவளுக்கிருந்து வரும் காதற்பெருக்கில் எனக்கொன்றும் சந்தேகமில்லை.உன்னுடைய மனத்துயரத்தைப் பின்னும் அதிகப்படுத்தும் பொருட்டு அவள் தன்னுடைய காதலனும் நாயனுமாகிய என் பின்னே வரப்போகிறாள் பார்!” இவ்வாறு சொல்லிவிட்டு அவ்வாலிபன் ஆண்பறவையானது தன்னுடைய பெண்பறவையைக் கூவியழைக்கும் சமிக்ஞை போன்ற ஒரு காபூலிக் காதற்கண்ணியை மிருதுவான தொனியில் பாடிக்கொண்டு மெல்ல மெல்ல நடந்து சென்றான். முதன்முதலில் ஜுபைதாவின் நிலைமையானது ஒருவிதமான தீர்மானத்திற்கும் வராமல் தயங்கிக் கொண்டிருந்தாற்போல் காணப்பட்டது. அவள் என்ன செய்யப்போகிறாளென்று எல்லோரும் அக்கன்னிகையின் மீதே கண்ணோட்டமிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அவளுடைய காதலன் இருபத தூரம் செல்லுமுன் ஜுபைதா அவனைப்பின் தொடர்ந்து அடியெடுத்து வைத்தாள். முதலில் மெல்லமெல்லச் செல்லத் தொடங்கினாள். மாந்தோப்பின் எல்லையைக்கடக்கு முன் தன்னுடைய முகத்தைத் திருப்பி ஷாபாஸ்கானையும் ஜய்த்தூன்பீபியையும் பரிந்து நோக்கினாள்; தந்தையென்னும் பாசத்தையும் விட்டுக்காதலனுடன் கலந்து பின்பற்றிச் சென்றனளேயென்னும் அடங்காக் கோபத்தினால் அந்த ஜமீன்தார் ஆத்திரங்கொண்ட போதிலும், மாந்தோப்பின் கோடியில் நின்றுமிக்க இரக்கத்துடன் திரும்பிப்பார்த்த மகளின் தோற்றத்தைக் கண்டு கான்சாஹிபின் கோபாக்கினி முழுதும் குன்றிப் போய் விட்டது. தன்னுடைய கஷ்ட காலத்தின் கொடுமையேயல்லாது கன்னிகை ஜுபைதாவின் மீது கடுகத்தனையும் குற்றமில்லையெனக் கண்டு கொண்டான். ஆயினும் அவளுடைய பரிந்து நோக்குந் தன்மையைக் கண்ட போது, ஒரு பக்கத்தில் தந்தையின் பாசத்தாலும் மற்றொரு பக்கத்தில் காபூலியின் காதலாலும் ஈர்க்கப்பட்டு, “பொன் போலும் கள்ளிப் பொரிபறக்கும் கானலிலே என்பேதை செல்லற்கியைந்தனளே” என்னுமா போல் காதலின் பிணைப்பால் கட்டுண்டிழுக்கப்பட்டுத் தன்னையறியாமலே தள்ளிக் கொண்டு போகப்படுவதைக் கண்டான். மரணத்தின் அருவருப்பான துயரச் செய்தியை மறைக்கும் பொருட்டுத் தன்னுடைய குமாரியின் பிரேதத்தின் குழியின் மீது பதிற்றாண்டுகளுக்கு முன் வெண்சலவைக் கற்களை நிறுத்தி அழகிய ஞாபகச் சின்னத்தைக் கட்டிய காலத்தில் மரணமென்பது பணக்காரர் ஏழை, சிறியோர் பெரியோர் என்னும் வேற்றுமையில்லாமல் எல்லோரையும் சமன் செய்யக் கூடிய நிரவற் கருவியென்று ஒரு போதும் ஷாபாஸ்கான் நினைத்தனனில்லை. “தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர் ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் முதியோ ரென்னான் இளையோ ரென்னான் கொடுந் தொழிலாளன் கொன்றனன் குவிப்பவிவ் அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும் கழிபெருஞ் செல்வக் கள்ளாட்டயர்ந்து மிக்க நல்லறம் விரும்பாது வாழும் மக்களிற் சிறந்த மடவோ ருண்டோ?” (மணிமேகலை) இப்பொழுது ஒரு பெரிய அதிகாரியாயிருந்த ஜமீன்தாரின் குமாரியொருத்தி தன்னுடைய மனப்பூர்வமான சுய இச்சையாகவே ஒரு ‘கஞ்ஜாரின்’ மீது வைத்த காதலினால் தந்தையையும் தாயான செவிலியையும் விட்டு ஏகிவிட்டாள்! மாந்தோப்பைக் கடந்தவுடன் ஜுபைதாவின் தோற்றமும் மறைந்து விட்டது. ஷாபாஸ்கானும் தன்னுடைய குதிரை மீதேறி இறங்கியமுகத்துடன் வந்த வழியே திரும்பிச்சென்றான். ஷாபாஸ்கான் தன்னுடைய மாளிகைக்குத் திரும்பி வந்து ஒரு மணி நேரத்துக்குள் அவ்வூர் முழுதும் அச்செய்தி பரவிற்று. உடனே அவனுடைய குடிபடைகளும் ஏவற்காரர்களும் கூட்டங் கூட்டமாக வந்து குழுமினார்கள். ஜமீன்தாரின் மீது தாம் கொண்ட அனுதாபத்தினால் வந்து சேர்ந்தவர் பலர், ஆனால் அந்த ஆச்சரியமான அற்புதச் செய்தியைக் கேட்டு அங்கு வந்து கூடியவர் மிகப்பலர். ஆயினும் ஷாபாஸ்கான் ஒருவரையும் பார்க்க மனமில்லாமல் துக்கமேலீட்டால் ஓர் அறைக்குள் புகுந்து கதவைத் தாழக்கோலிட்டுக் கொண்டான்; அன்று முழுதும் அவ்வறைக்குள்ளேயே இருந்தான். ஆனால் அவன் துக்கமேலீட்டால் தற்கொலை புரிந்து கொள்ளக்கூடுமென்றஞ்சி அங்கிருந்தோர் அஸ்தமித்தவுடன் அவ்வறையின் கதவை உடைத்துப் பிளக்க எத்தனித்தனர்; உடனே ஷாபாஸ்கான் தாழ்ப்பாளைத் திறந்து கொண்டு வெளியில் வந்தான். அனுதாபங் கொண்டவர்களெல்லோரும் அதிக ஆச்சரியங்கொண்டு அவனையே தன்னுடைய கதையைப் பற்றிச் சொல்லும்படி வேண்டிக் கொண்டார்கள். ஆனால் இறுதியில் பலர் இக்கதையை நம்பமுடியாதென்று வாதிக்கத் தொடங்கினார்கள். அங்கு வந்து சேர்ந்திருந்த வயோதிகரான ஹக்கீம் சாஹிபும் ஜுபைதா இறந்து விட்டது வாஸ்தவந்தானென்று கூறினார். “சொகராத், பலாத்தூன், அரிஸ்தொதீல், ஹிபாகிராத்தீஸ், ஜய்லான் முதலிய எல்லாயூனானி முறைகளைக் கொண்டும், அவையெல்லாவற்றைக் காட்டினும் என்னுடைய ஷெய்கின் இரகசியமான உபதேச முறைகளைக் கொண்டும் ஜுபைதாவை அன்று பத்து வருஷங்களுக்கு முன் நான் நன்றாகச் சோதித்தேன். அடக்கஞ் செய்வதற்கு முன் பல மணி நேரங்களுக்கு முன்னரே அப்பெண்ணின் அங்க முழுதும் உயிரற்ற சலவைக்கல்லே போல் ஜில்லிட்டு நீர்த்துப் போயிருந்தது. நான் சொல்வது பொய்யாயின் என்னுடைய ஹக்கீம் தனத்தையே விட்டு விடுகிறேன்,” என்று அந்த ஹக்கீம் சாஹிப், ஷாபாஸ்கானின் குமாரியைப் பிழைக்கச் செய்ய முடியாமற் போய் விட்ட பின்னர் அந்த ஜமீன்தாரின் மனத்தில் இந்தஹக்கீமைப் பற்றி ஏதோ நல்லெண்ணம் இன்னும் எஞ்சியிருப்பதே போல், அதிக வீரப்பிரதாபத்துடன் சபதங் கூறினார். இதைக் கேட்டவுடன் அங்கே கூடியிருந்த எல்லோரும் இறந்து போன ஜுபைதா பின்னே பிழைத் திருப்பது முடியாதென்று ஒரே பிடிவாதமாகப் பேசத் தொடங்கினர். ஷாபாஸ்கானுடன் மாந்தோப்புக்குச் சென்று அங்கே நடந்தவற்றை நேரில் கண்டு வந்த ஒரு சிலரைத் தவிர்த்து மற்றையோரெல்லாம் அவ்வற்புதத்தை மறுத்து வந்தனர். இவ்வாறு ஒருவரோடொருவர் வாதாடிக் கொண்டிருந்ததனால் அவ்வூர் முழுதும் பெருங்கூச்சல் பரவி விட்டது. ஊர் வாயை மூட உலை மூடி இல்லையென்பதே போல் சுற்றுப் பக்கங்களிலிருந்த ஆயிரக்கணக்கான ஜனங்கள் திரள்திரளாக அங்கே வந்து கூடினர். எல்லோரும் சேர்ந்து ஏகமாக வாதித்ததனால் இறுதியில் ஜுபைதாவின் சவக்குழியைத் தோண்டிப் பார்ப்பதே சரியென்று தீர்மானித்தார்கள். இதற்கு ஷாபாஸ்கானும் அரைமனத்துடன் அனுமதி கொடுத்தான். உடனே எல்லோரும் அந்தச் சவக்குழியின் சலவைக்கல் சின்னத்தருகிற் சென்று பத்துப் பன்னிரண்டு பலாட்டியமுள்ள வேலைக்காரர்களை ஏவினார்கள். அன்றிரவு நடுச்சாம முதல் நாலு மணி நேரம் வரையில் அத்தொழிலாளிகள் பன்னிருவரும் அதிகசிரமத்துடன் வேலை பார்த்து வந்தார்கள். பாட்டுக்கும் பொழுதுக்கும் சரியாயிருந்தது. அவர்களும் அப்பிரேதக் குழியைத் திறந்து வைத்தார்கள். அப்பொழுது தான் கிழக்கு வெளுத்து உடுக்குலங்களும் ஒவ்வொன்றாய் மறைந்து வந்தன. உதயகிரியின் அப்புறத்தில் ஆழத்திலிருந்த அருணோதயத்தின் முதல் ஒளியானது சிறிது சிறிதாக வீசிக் கொண்டிருந்தது. வெளிச்சமோ மங்கலாயிருந்தது. புதைகுழியோ வாய் திறந்து காட்டிற்று. அதற்குள் என்ன காணப்பட்டது? சவக்குழியின் உட்புறமெல்லாம் வழுவழுப்பாயும் மிகப் பளபளப்பாயும் புதியதோர் கல்லறையே போல் காணப்பட்டது. ஷாபாஸ்கான் எட்டிப் பார்த்தான். உள்ளே ஒன்றுமில்லை! உடனே பிரமித்தான். பெருமூச்செறிந்தான். நின்றான். நிலைகுலைந்தான். வெறிகொண்டான். வீழ்ந்திறந்தான். மறுநாட் காலையில் ஷாபாஸ்கானை அச்சவக்குழியினுள்ளேயே வைத்து எல்லோரும் சேர்ந்து நல்லடக்கம் செய்து விட்டனர்.     அறுசீர்விருத்தம் வடிக்கும் புனித மமைந்துவழு வழுப்பாய்ப் புதிதாய் வெறுமையெனும் படிக்குத் திறந்த சவக்குழியைப் பகரு மிரண்டோர் வினாடிவரை துடிக்கு மனத்தான் ஷாபாஸ்கான் சுருக்கென் றெட்டிப் பார்த்துடன்வீழ்ந் தொடுக்க முற்றான் பின்பதன்கண் உடலம் புதைக்கப் பட்டானே.   Notes [←1 ]  “நீம்முல்லாகத்ரெ ஈமான்; நீம் ஹக்கீம் கத்ரெஜான்” என்பதோர் உருதுப்பழமொழி. அரை ஆலிமால் ஈமானுக்கு மோசம் வந்துவிடுமென்றும், ஆனால் அரை வைத்தியனால் உயிருக்கே மோசம் வந்து விடுமென்றும் இதற்குத் தாத்பரியங் கொள்வர். ஈமான் போய்விட்டாலும் அதைப் புதுப்பித்துக் கொள்ளலாம். உயிர் போய் விடுமாயின் ஒன்றும் செய்வது முடியாது. வழக்கம்போல்அரை வைத்தியனால் உயிர் போக வேண்டியிருக்க, ஈமானை மட்டும் போக்கடிக்கக்கூடிய சாமர்த்தியமுள்ள அரைஆலிமால் இப்பொழுது உயிருக்கே அபாயம் வந்துவிட்டதென்று ஹக்கீம் சாஹிப் கூறினார்.