[] [javvarisi_low]   ஜவ்வரிசி வடாம், உள் பனியன் மற்றும் ஒரு ரேடியோ விளம்பரம் தேர்ந்தெடுக்கப்பட்ட வலைப்பதிவுகள் சித்ரன் ரகுநாத் ஜவ்வரிசி வடாம், உள் பனியன் மற்றும் ஒரு ரேடியோ விளம்பரம் தேர்ந்தெடுக்கப்பட்ட வலைப்பதிவுகள் உரிமம்: சித்ரன் ரகுநாத் Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0     சர்வதேச உரிமத்தின் கீழ் பகிரப்படுகிறது. [88x31] முதல் மின்பதிப்பு: ஆகஸ்டு 2015 மின்னூலாக்கம் - அட்டை வடிவமைப்பு: சித்ரன் ரகுநாத் மின்னூல் வெளியீடு  - FreeTamilEbooks.com Javvarisi vadaam, uL baniyan matrum oru radio vilambaram Collection of selective blog posts This work is licensed under a    Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0    International License. First electronic edition:  August 2015   Cover design:  Chithran Raghunath முன்னுரை எனது வலைப்பதிவுத் தளத்திலிருந்து எடுத்துக் கோர்க்கப்பட்ட பதிவுகள் இவை. 2004 ஏப்ரல் ஐந்தாம் தேதியை சுபதினமாக பாவித்து வலைப்பதிவு எழுத ஆரம்பித்தேன். ‘புள்ளி’ என்று நாமகரணமிட்டு பொட்டு பூவெல்லாம் வைத்து அமர்க்களமாகத்தான் துவங்கினேன். அப்போதிருந்த சக வலைப்பதிவர்களுடன் போட்டிபோட்டு (அப்போது சுமார் 50 பேர் தேறுவார்கள் என்று நினைக்கிறேன். குறுகிய காலத்திற்குள்ளேயே மளமளவென்று நான்கு ஐந்து பதிவுகள் எழுதிக் குவித்தேன்!) இதோ இத்தோடு பதினொரு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பல்லாயிரக்கணக்கான பதிவுகள் எழுதப்பட்டுவிட்டன. (அட எல்லோருடையதையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்). அதில் என்னுடையது எவ்வளவு என்று பார்த்தால் சற்றேறக்குறைய ஆயிரத்திலிருந்து தொள்ளாயிரத்தைம்பதை கழித்தால் எவ்வளவு வருமோ அவ்வளவு. எண்ணிக்கையா முக்கியம்? என்ன எழுதினோம் என்பதுதானே முக்கியம் என்று எனக்கு நானே சமாதானம் செய்துகொள்கிறேன். முத்தோ குப்பையோ அவ்வப்போது எதையாவது கிறுக்கிக்கொண்டு, இன்னும் இழுத்து சாத்தப்படாத ப்ளாக்கர் மற்றும் வேர்டுப்ரஸ் கடைகள் உபயத்தில் என் வலைப்பதிவுகள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. ஒரு நாளைக்கு தோராயமாக என்னையும் சேர்த்து பதினேழரைப் பேர் பார்க்கிறார்கள். 'புள்ளி' என்ற என்னுடைய வலைத்தளம் தவிர சித்ரன் டாட் காம் மற்றும் “இன்று” தளங்களிலும் அவ்வவ்போது எழுதிக்கொண்டிருந்தேன். ‘இன்று’ என்பது ஒரு கூட்டு வலைப்பதிவு என்பதால் இதைவிட அங்கே வாசகர்கள் ஜாஸ்தி. ஏன் அதிகம் எழுதுவதில்லை என்று நண்பர்கள் என்னிடம் கேட்கும்போது அதை ஒரு எதிரொலி போல உடனே என்னிடமே கேட்டுவிடுவேன். அப்போது வந்து குதிக்கும் பாருங்கள் சால்ஜாப்புகள்!! அப்பப்பா! எல்லோரும் பொதுவாகச் சொல்கிற காரணமான “எங்க சார்? எதுக்குமே டைமே கிடைக்கறதில்ல” என்ற ஒரு அருமையான சாக்கு இருக்கிறதே! சில சமயம் “ரைட்டர்ஸ் ப்ளாக்” (Writer's block) என்கிற மிகப்பெரிய சவுகரிய வட்டத்துக்குள் உட்கார்ந்துகொண்டு பெரும்பாலும் வாழ்வாதாரத்திற்கான வேலைகளை மட்டும் சிரமேற்கொண்டிருந்தேன். இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்கிற சப்பைக்கட்டு அது என்று எனக்கே தெரியும்தான். ரொம்ப யோசித்துப் பார்த்தால் ஏதோ ஒரு சின்ன ஆயாசம். வாழ்க்கையில் எதையோ தேடி ஓடுகிற அவசரத்தில் “எழுத்துதானே? கிடக்கட்டும் கழுதை!” என்கிற அலட்சியம். இன்னும் பல காரணங்களைச் சொல்லலாம். எதுவும் எழுதாமலே “எழுத்தாளர்” என்கிற பட்டத்தைச் சுமப்பது தர்மசங்கடத்திற்குரியது. ஒரு நாளைக்கு ஐந்து KB கூட எழுதாதவன் எப்படி எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ள முடியும்? “சிறுகதை எழுதுதல்” என்கிற விஷயத்தில்தான் என் எழுத்துலகப் பிரவேசம் நிகழ்ந்தது. முன்னணிப் பத்திரிக்கைகளில் நிறைய சிறுகதைகள் வெளியானதும், கிழக்கு பதிப்பகம் வெளியாடாக ஒரு சிறுகதைத் தொகுப்பு பதிப்பிக்கப்பட்டதும், மின்னூலாக இன்னொரு சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டதையும் தவிர சொல்லிக்கொள்கிற மாதிரி வேறு கின்னஸ் சாதனைகள் இல்லை.  ஆயிரத்தெட்டு வேலைகளுக்கு நடுவில் ஆயிரெத்தெட்டு வலைப்பதிவுகளும், தொடர்களும், கதைகளும், புத்தகங்களும் எழுதிக் குவிப்பவர்கள் எப்போதுமே எனது மதிப்பிற்கும் பொறாமைக்கும் உரியவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் எப்படி ஒரு நாளைக்கு இருபத்தைந்து மணி நேரம் வாய்க்கிறது? ஆனாலும் இந்த எழுத்துக் கழுதை கூடவே வருகிற பிராணியாக இருக்கிறது. அதற்கு ஆகாரம், குடியிருக்கக் கொட்டாரம் என்றெல்லாம் கொடுத்து ரொம்பவும் சிஷ்ருஷை செய்ய முடியாவிட்டாலும் ஒரு ஓரமாய் படுத்துக்கிடக்கட்டுமே என்று தோன்றுகிறது. எதையாவது எழுதித் தொலையேண்டா என்று அரற்றுகிற மனக் குரல் இதனால் கொஞ்சம் சமாதானமடையலாம். அப்படியாக சின்னச் சின்னதாக சுவாரஸ்யமாக எதையாவது எழுத வேண்டும் என்கிற எண்ணத்தில் உருவானவைதான் இந்தப் பதிவுகள்.  பல வருடங்களுக்கு முன் மைக்ரோ ப்ளாகிங் ட்ரெண்டெல்லாம் வருவதற்கு முன்னால் எழுதப்பட்டவை என்பதால் இந்தப் பதிவுகள் எல்லாம் கொஞ்சம் நீளமாகவே இருக்கும். மேலும் இதில் நிறைய விஷயங்கள் அந்தந்த கால கட்டத்தைச் சார்ந்தவையாக இருக்கும் என்பது முன்கூட்டிய டிஸ்க்ளைமர். கணினி என்பது அலைபேசியாகவும், டேப்லட் ஆகவும் சுருங்கிவிட்ட இந்தக் காலத்தில் இனிமேல் தேவைப்பட்டாலொழிய நீளமான வலைப்பதிவுகள் எழுதுவதில்லை என்பது தீர்மானம். இந்த துரித உணவு உலகில் இரண்டு பேராக்களுக்குமேல் ஒரு வாசகரை உட்கார வைப்பது பாவச் செயல். அப்படிச் செய்தால் அடுத்த ஜென்மத்தில் கிண்டி உயிரியல் பூங்காவில் ஆமையாகப் பிறந்து ஊர்ந்து ஊர்ந்தே நூற்றைம்பது வருடங்கள் வாழவேண்டியிருக்கும். சித்ரன் ரகுநாத் மின்னஞ்சல்: chithranji@gmail.com இணையத்தில்: http://www.chithran.com http://www.chithran.blogspot.com http://www.facebook.com/chithranraghu http://www.twitter.com/raghuji ஆரோக்கியமான உரையாடல் ஆட்டு தாடி வைத்திருந்த ஒரு நண்பரிடம் 'அப்படியே உங்க தாடி கார்ல் மார்க்ஸ் மாதிரியே இருக்கு' என்று சொல்லப்போக துவங்கியது ஒரு உரையாடல். ”கார்ல் மார்க்ஸ்க்கு தாடி இப்படி இருக்காது” என்றார். “அப்படியா.. இருங்க.. நெட்ல பாத்துரலாம்.” நான் கூகுளில் கார்ல் மார்க்ஸ் என்று தேட புசுபுசுவென வெண்தாடியுடன் அவர் வேறு மாதிரி இருந்தார். நான் சமாளித்து “அப்ப லெனின்னு நினைக்கிறேன்.” நல்ல வேளையாக நண்பரின் தாடி லெனினோடு கச்சிதமாகப் பொருந்தியது. “ஆங்.. மார்க்ஸூன்னு வாய் தவறி தப்பா சொல்லிட்டேன்..” “கம்யூனிஸம் படிப்பீங்களோ..?” “நோ.. கத்தி படத்துல இட்லி சமாச்சாரம் அளவுக்குத்தான் தெரியும்.. ” ”புக்ஸ் நிறைய படிப்பீங்களா?” “நிறைய படிச்சிட்டிருந்தேன்.. இப்ப ரொம்ப கம்மியாயிருச்சு.. ரெண்டு வருஷத்துக்கு முன்னால புக் ஃபேர்ல வாங்கினதெல்லாம் படிக்காம அப்படியே கிடக்குது..” “எந்த மாதிரி புக்ஸ்?” “நிறைய தமிழ் நாவல்ஸ்..  சிறுகதைகள்... சுஜாதால ஆரம்பிச்சு, ஆதவன், வண்ணதாசன், அ.முத்துலிங்கம்..” நான் முடிப்பதற்குள் நண்பர் குறுக்கிட்டு “எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோஹன்..” என்று தொடர்ந்தார். “ஆமா.. ஆமா..” நான் தொடந்து “சதத் ஹஸன் மாண்ட்டோ..” என்று பீலா விட ஆரம்பிப்பதற்குள்.. ”நான்கூட படிப்பேன்” “எந்த மாதிரி?” “ஓஷோ, சாருலதா.. இந்த மாதிரி” “சாருலதாவா அது யாரு.. பெங்காலி ரைட்டரா?” “தமிழ்தாங்க... சாரு... சாரு” “நிவேதிதாவா..” முகத்தில் இருபது வாட்ஸ் சி.எல்.எஃப் பல்ப் எரிந்து “ஆங்.. அவர்தான்..” “ஓஷோன்னவுடனே ஞாபகம் வருது.. அவரோட ’கிருஷ்ணா எனும் மனிதனும் அவன் தத்துவங்களும்’ படிச்சிருக்கீங்களா?” “இல்லையே.. நல்லாருக்குமா?” “தெரியலை.. நானும் படிச்சதில்லை.. கேள்விப்பட்டிருக்கேன்.” “அவரை மாதிரியே இன்னொருத்தர் இருப்பாரே.. ஜகதீஸ் வாசுதேவன்னு. விகடன்ல எழுதுவார்..” “ஓஹோ..” “இந்த மூச்சுக்காத்தை இழுத்து விட்டு.. அதுக்கு என்ன பேரு? அதெல்லாம் சொல்லித்தருவாங்க அவர் சென்டரிலே.. பிரயாணம்-ங்கற மாதிரி வரும்” “பிராணயாமம்..” “அதேதான்.. நான் ஒரு வாரமா பண்ண ஆரம்பிச்சிருக்கேன்... எங்கப்பா வளச்சு வளச்சு பண்ணுவார் யோகாசனமெல்லாம்... என்னையும் பண்ணச்சொல்வார்.. ” “ரொம்ப நல்லது.. என்ஜினீயரா இருந்த என் நண்பர்கூட வேலையை ரிசைன் பண்ணி பல வித யோக நிலைகளைக் கடந்து...” “யோகியாயிட்டாரா..” “இல்ல மறுபடி என்ஜினீயரே ஆயிட்டார்..” நண்பர் பதினெட்டு மூலிகைகள் அடங்கிய மெடிமிக்ஸ் சோப்பால் குளித்தமாதிரி உணர்ந்து ”சரி.. வேலையைப் பாப்போம்..மார்க்ஸ்-ல ஆரம்பிச்சு.. எங்கெங்கேயோ போய் முடிஞ்சிருச்சு பேச்சு.. நல்ல ஹெல்த்தியான கான்வெர்ஷேசன். மேலும் நிறைய பேசுவோம்..” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஒப்பணக்கார வீதியிலிருந்து ஒரு வாசகர் கடிதம் 95-ல் என் முதல் கதை கல்கி இதழில் வெளியானபோது எனக்கு ஏற்பட்டது புல்லரிப்பு என்றால், அதற்கு வந்த வாசகர் கடிதத்தை என் முகவரிக்கு ஒரு உறையில் போட்டு கல்கி அலுவலகம் அனுப்பிவைத்தது புளகாங்கிதம் என்று சொல்லலாம். கோவை ஒப்பணக்கார வீதியிலிலிருந்து சந்திரன் என்பவர் கதையை வெகுவாகப் பாராட்டி எழுதியிருந்தார். நானும் அப்போது கோவையில்தான் இருந்தேன். முதல் வாசகர் கடிதம் என்பதால் பத்திரமாக ரொம்ப நாள் அது என் பையிலேயே இருந்தது. இந்தக் கடிதம் வந்த ஒரு மாதத்திற்குப் பிறகு நானும் என் நண்பன் சரவணனும் ஒரு சாயங்கால வேளையில் ஒப்பணக்கார வீதிப் பக்கம் ஒரு வேலையாகப் போனோம். வேலை முடிந்து ஒரு பேக்கரியில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று சந்திரன் என்கிற அந்த வாசகரின் நினைப்பு வந்தது. பையிலிருந்து அவரின் அந்தக் கடிதத்தை எடுத்து முகவரியைப் பார்த்தால் பக்கத்தில்தான் எங்கேயோ இருக்கிறார் என்று தெரிந்தது. அலுவலக முகவரி போலும். தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தார். சட்டென்று ஒரு யோசனை வந்தது. சரவணனிடம் அதைச் சொன்னபோது முதலில் தயங்கிப் பின்னர் சரி என்றான். ஒரு சின்ன விளையாட்டு! சரவணன் ஒரு பப்ளிக் டெலிஃபோன் பூத்திலிருந்து சந்திரனைக் கூப்பிட்டு, தன்னை சித்ரன் என்று அறிமுகம் செய்துகொண்டு அவரிடமிருந்து கடிதம் வந்ததைச் சொன்னான். ”உங்க ஏரியாலதான் இருக்கோம். இப்போ வந்தா உங்களப் பாக்க முடியுமா?” என்று கேட்டான். மறுமுனையில் சந்திரன் ”செம சர்ப்ரைஸ்ங்க.. வாங்க வாங்க..” என்று சத்தமாய் சொன்னது எனக்கே கேட்டது. நாங்கள் போனபோது சந்திரன் அவர் அலுவலகத்தில் எங்களுக்காக ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார். முன்பே பேசி வைத்துக்கொண்டபடி சரவணன் தன்னை ’சித்ரன்’ என்றும் என்னை ’சரவணன்’ என்றும் அறிமுகப்படுத்தினான். ”நீங்க என்னைப் பாக்க வந்தது ரொம்ப சந்தோஷம்..” என்று சரவணனின் கையைப் பிடித்து இறுக்கமாய்க் குலுக்கினார். என் கையை லேசாக. பின்னர் அலுவலகத்துக்குள்ளேயே அவர் தங்கியிருந்த ஒரு அறைக்கு எங்களைக் கூட்டிச் சென்றார். நான் ஒரு ஓரமாய் உட்கார்ந்து அங்கே கிடந்த பாக்யா வார இதழைப் புரட்ட ஆரம்பிக்க, அவர்களிருவருக்குமிடையே குதூகலமாக உரையாடல் தொடர்ந்தது. நான் சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். சந்திரன்: “எப்படி உங்களுக்கு இந்த மாதிரி கதைக்கரு எல்லாம் தோணுது?” சரவணன் (என்னை ஓரக்கண்ணால் பார்த்தபடியே): ”எல்லாம் அப்பப்ப அப்படி அப்படியே தோணும்! எழுதிருவேன்..” சந்திரன்: ”நிறைய எழுதியிருப்பீங்க போல.. உங்க எழுத்துல ரொம்ப முதிர்ச்சி தெரியுது.” சரவணன்: “இல்ல இது என் முதல் கதைதான். போனாப் போகுதுன்னு ஏதோ போட்டிருக்காங்க போல கல்கியில..” சந்திரன்: சேச்சே.. அது அருமையான கதைங்க. திரும்பத் திரும்பப் படிச்சேன்.. என்ன இருந்தாலும் உங்களுக்குத் தன்னடக்கம் ஜாஸ்தி..” இப்படியே மேலும் ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு சந்திரன் வீசிய கலை இலக்கிய பந்துகளை சரவணன் சரமாரியாக சமாளித்துக் கொண்டிருந்தான். சந்திரன் சட்டென்று “தி.ஜா படிச்சிருக்கீங்களா? நாஞ்சில் நாடன்? நம்மூருதாங்க அவரு” என்பது போன்ற டஃப்ஃபான கேள்விகளின்போது திருதிருவென்று முழித்து பிறகு ஒருவாறு சமாளித்து “பின்னே படிக்காம? என்னமா எழுதுவாங்க!” என்றான். சந்திரன்: “நாவல், தொடர்கதை எல்லாம் எழுதற ஐடியா இருக்கா? இல்லை சிறுகதைகள் மட்டும்தானா?” “எழுதிட்டாப் போச்சு? என்னடா எளுத்தாளர் சித்ரன்.. என்ன சொல்ற!..” என்றான் என்னைப் பார்த்து. ”இந்தா.. இடத்தை மாத்திக்கலாம்.. இதுக்கு மேல முடியல..” என்று எழுந்தான். நான் பாக்யாவிலிருந்து நிமிர்ந்து சந்திரனைப் பார்க்க, அவர் புரியாமல் எங்களிருவரையும் மாறி மாறிப் பார்த்தார். நான் சிரித்தபடி “ஒரு சுவாரஸ்யத்துக்கு ஒரு சின்ன விளையாட்டு விளையாடலாம்னு நினைச்சோம்.. நாந்தான் சித்ரன். அவன் சரவணன். ஸாரி..” என்றேன். புரியாமையிலிருந்து குழப்பத்துக்குள் விழுந்து, சந்தேகத்துக்கு மாறி, ஏமாற்றத்தைத் தொட்டு பின் சட்டென்று விடுபட்ட சந்திரன் முகம் போன போக்கை விவரிக்கவே முடியாது. ”இவந்தான் இந்த ஐடியாவைச் சொன்னான். என்னைத் திட்டாதீங்க..” என்று சரவணன் என்னைக் கை காட்ட.. சந்திரன் உடனே சமாளித்துச் சிரித்து “அதான பாத்தேன்..  ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஏதோ சரியில்லைன்னு பட்டுச்சு..” என்றார். வட போச்சே - 1 எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் இந்த ஸ்டேட்டஸைப் படித்ததும் முன்னொருநாள் நடந்த சம்பவம் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. https://www.facebook.com/appadurai.muttulingam/posts/563785150363657:0 நானும் எனது நண்பர் ஒருவரும் ஒரு க்ளையண்டைப் பார்க்கச் சென்றிருந்தோம். க்ளையண்ட் ஆகப்பட்டவர் வீட்டிலேயே ஒரு பெட்ரூமை அலுவலகமாக மாற்றியிருந்தார். அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது சமையலறையிருந்து வடை சுடுகிற வாசம் வந்தது. சிறிது நேரம் கழித்து அவரது மனைவியார் ஒரு தட்டில் ஒரு பத்துப் பதினைந்து சூடான மசால் வடைகளைக் கொண்டுவந்து நாங்கள் சாப்பிடுவதற்காக வைத்தார். கூடவே தேநீரும். க்ளையண்ட் ரொம்ப நேரமாக நிறுத்தாமல் பேசிக்கொண்டேயிருந்ததால் இடையில் குறுக்கிடவேண்டாம் என்று நாகரிகம் கருதி நானும் நண்பரும் தட்டில் கைவைக்கவில்லை. மசால்வடை என்பது எனக்கு மிகவும் பிடித்த ஐட்டம் என்பதால் ஒரு குறுகுறுப்பு இருந்துகொண்டே இருந்தது. இப்படியே பல நிமிடங்கள் கழிந்தன. வடைகளிலிருந்து வெளியேறும் ஆவி நின்றுபோனதை வைத்து சூடு ஆறிவிட்டதென்பதை உணர்ந்தோம். திடீரென அவர் தேநீர் ஆறுகிறது குடியுங்கள் என்று சொல்லிவிட்டு வடைகள் இருந்த தட்டை மேஜைக்கு அந்தப்பக்கம் எங்கள் கைகளுக்கு எட்டாத இடத்திற்கு நகர்த்தி வைத்துவிட்டு லாப்டாப்பில் மும்முரமாக எதையோ காண்பிக்க ஆரம்பித்தார். இப்படியாக இருபது நிமிடங்கள். தேநீர் முடிந்தது. மீட்டிங்கும் முடிந்தது. சரி மீண்டும் சந்திப்போம் என்று க்ளையண்ட் எழுந்து நின்றுவிட்டதால் இப்படியும் உலகத்தில் அநியாயங்கள் நடக்குமா என்று நினைத்தபடி அப்படியே வடைத்தட்டை கடைசியாக ஒருமுறை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு வெளியேறினோம். கைக்கும் எட்டவில்லை. வாய்க்கும் எட்டவில்லை. வட போச்சே - 2 அந்தப் பிரபல எழுத்தாளர் பொள்ளாச்சியில் ஒரு லாட்ஜில் பிற திரைப்படக் கலைஞர்களுடன் தங்கியிருந்தார். அப்போது உலக நாயகன் நடித்துக்கொண்டிருந்த ஒரு திரைப்படத்தில் அவர் பணியாற்றுவதற்காக வந்திருந்தார். முன்பே கடிதத் தொடர்புகள் மூலம் நண்பர் சரசுராம் அவருக்குப் பழக்கமாயிருந்தார். நாங்கள் எழுத்தாளரின் செல்வாக்கில் படக்குழுவினருடனேயே மூன்று நாட்கள் சிங்காநல்லூர், சூலக்கல் போன்ற இடங்களில் சுற்றிக்கொண்டிருந்தோம். சரசுராம், மீன்ஸ், நான் - மூவரும் அவரை சந்திப்பதற்காகச் சென்றிருந்தோம். சுமாரான அந்த லாட்ஜில் எழுத்தாளருக்கு ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அபாரமான எழுத்தாளராகிய அவர் எங்களுடன் அவரது கதை / திரைப்பட / அனுவங்களைப் பற்றி உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். வந்து நின்ற லாட்ஜ் பையனிடம் வடையும், டீயும் ஆர்டர் செய்தார். ஒரு பத்து நிமிடம் கழித்து ஆர்டர் செய்த உளுந்து வடையையும், அதனுடன் தேங்காய்ச் சட்டினியையும் டேபிளில் பரப்பிவிட்டுப் போனான் லாட்ஜ் பையன். இலக்கியம், சிறுகதைகள், சினிமா என்று கலந்து கட்டி சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருந்தது எங்கள் பேச்சு. அப்போது மிக ஒல்லியாக ஒருவர் உள்ளே வந்தார். எழுத்தாளரைப் பார்த்துச் சிரித்தார். இருவரும் என்னவோ பேசிக்கொண்டார்கள். அப்போது எழுத்தாளர் எங்களிடம் இவர் யார் என்று தெரிகிறதா என்று கேட்டார். எனக்கு சுத்தமாகத் தெரியவில்லை. ஆனால் சரசுராமும், மீன்ஸூம் லேசாக அவரை அடையாளம் கண்டுகொண்டு, ஒரு படத்தின் பெயரைச் சொல்லி அதில் நடித்தவர்தானே என்று கேட்டார்கள். அவரும் தான் இவ்வளவு சீக்கிரம் அடையாளம் காணப்பட்டது குறித்து மகிழ்ந்து ‘ஆமாம்’ என்றார். பிறகு நண்பர்களிருவரும் வளரும் நடிகரான அவர் நடிப்பு பற்றி பாராட்டி வாழ்த்துகள் சொன்னார்கள். எளிமையான அந்த நடிகர் சுற்றுமுற்றும் பார்த்தார். பிறகு இயல்பாக டேபிளிலிருந்த வடையொன்றை படக்கென்று எடுத்து அதை சட்னியில் முக்கிவிட்டு டபக்கென்று வாய்க்குள் தள்ளினார். இந்த எதிர்பாராத செய்கையின் மூலம் வடைகளின் எண்ணிக்கையில் ஒன்று திடீரென குறைந்தது ஒரு திடுக்கிடல் சம்பவமாக இருந்தது. வடை சாப்பிட்டவுடன் நடிகர் ’வரட்டா’ என்று கிளம்பிப் போய்விட்டார். பிறகு மறுபடியும் வடையை ஆர்டர் பண்ணினோமா, இல்லை இருந்த வடைகளையே ஆளுக்குக் கொஞ்சம் பிய்த்துத் தின்றோமா என்றெல்லாம் இப்போது நினைவில்லை. ஆனால் தமிழ்கூறும் நல்லுலகிற்கு இப்படியொரு டைட்டில் கிடைத்ததே அந்த நடிகரால்தான். அந்த எழுத்தாளர்: ம.வே.சிவகுமார். ஜவ்வரிசி வடாம், உள் பனியன் மற்றும் ஒரு ரேடியோ விளம்பரம் நான் அட்வர்டைசிங் துறைக்குள் நுழையலாம் என முடிவெடுத்த காலம். உடம்பும் மூளையும் பரபரவென்று ஆகிவிட்டது. என்னவொரு திடமான முடிவு. இதுதான் நீ வேலை செய்ய லாயக்கான துறை என்று மனசுக்குள் ஓரமாய் உறுதியாக ஒரு மணி அடித்து பல்பு தோரணமெல்லாம் எரிய ஆரம்பித்திருந்தது. உடனே நான் ஹாலோ ப்ளாக் கற்கள் அடுக்கிவைத்து மனக் கோட்டை கட்ட ஆரம்பித்துவிட்டதுடன் ஒரு புதிய அனுபவத்திற்கு வாழ்க்கையை தயார் பண்ணவும் துவங்கியிருந்தேன். அதற்கு முன் அட்வர்டைசிங் கம்பெனிகள் எப்படியிருக்கும் என்று நேரில் பார்த்ததில்லை. ஆனால் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். முற்றிலும் கிரியேட்டிவ்வான விஷூவலைசர் ஆர்ட் டைரக்டர்கள் எல்லாம் உலவுகிற இடம். குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறைகளுக்குள் க்ரியேட்டிவ் ஸ்டுடியோ. கிராஃபிக் டிசைன் மென்பொருள்கள் நிரம்பி வழிகிற கம்ப்யூட்டர்கள். ஷெல்ஃப்களில் வழியும் விளம்பர டிசைன் பத்திரிக்கைகள், புத்தகங்கள். ஸ்டைலாக நுனி நாக்கு ஆங்கிலம் பேசுகிற யுவதிகள். மீடியாவுடன் நெருங்கின சம்பந்தம் உள்ள வேலை. எட்செட்ரா. நண்பர் ஒருவர் ஏதோ ஒரு கம்பெனியில் க்ராஃபிக் டிசைனர் வேலை காலியாயிருக்கிறதென்று கேள்விப்பட்டதாய் சொன்னார். உடனே நான் ஆர்வமாய் அட்ரஸ் ஃபோன் நம்பர் போன்ற தகவல் சேகரித்துக் கொண்டு அதை முயற்சித்துப் பார்த்துவிடவேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டேன். விசாரிக்க ஃபோன் செய்தபோது குயில் போன்ற இனிமையான குரலில் ஒரு இளம்பெண் எடுத்துப் பேசுவதற்குப் பதில் ஒரு வயசான கட்டைக்குரல் “சொல்லுங்க.. ஆமாங்க.. ஒரு ஆள் வேணும். காலைல பத்து மணிக்கு வந்து மேடம்-ஐ பாருங்க” என்று தமிழில் பேசியது ஏமாற்றத்தைத் தந்தாலும்.. மேடம் என்பது மேனேஜரா, எம்.டி யா என்று யோசித்துக்கொண்டே அடுத்தநாள் காலை சரியாக 9.45-க்கு அந்த அட்வர்டைஸிங் கம்பெனியிருக்கிற தெருவுக்குள் நுழைந்தேன். அது இரண்டாவது ஏமாற்றம். நான் ஏதோவொரு சின்னக் கண்ணாடிக் கட்டிடம் ஒரு அகலமான மெயின்ரோட்டில் இருக்கும் என்று கணக்குப் போட்டு வைத்திருந்தேன். இது என்னவென்றால் ஒரு சின்ன சந்துமாதிரி எதிரில் எருமை மாடு வந்தால் அதற்கு வழிவிட திரும்பி தெரு முனைவரை போய் அப்புறம் அது போன பிறகு மறுபடி சந்துக்குள் வருகிற அளவு மிகக் குறுகலாக இருந்தது. அந்த அட்ரஸை ஒரு வழியாகக் கண்டுபிடித்து அதன் முன் போய் நின்றபோது மலைத்துப் போனேன். கசகசவென்று வீடுகளும் கடைகளுமாய் இருந்த அந்தச் சந்தில் நெரிசலில் சிக்கியதுபோல ஒரு மாடிவீடு விழி பிதுங்கி நின்று என்னை வரவேற்றது. வாசலில் கொடியில் உள்பாவாடை, வேட்டி எல்லாம் காய்ந்துகொண்டிருக்க ஓரமாய் ஜவ்வரிசி வடாம் காயப்போட்டிருந்தது. பக்கத்து மண்டியிலிருந்து மளிகைப்பொருட்களால் ஆன கதம்ப வாசனை. வீட்டின் முன்னால் அங்கே ஒரு கம்பெனி இருப்பதற்கான அடையாளமோ போர்டோ எதுவும் இல்லை. விசாரித்தபோது வீட்டை ஒட்டியிருந்த இருட்டுச் சந்துக்குள் போய் மரப்படிக்கட்டு வழியாக மேலே போகச் சொன்னார்கள். போனேன். படி முடிகிற இடத்தில் மேலே ஓட்டுக் கூரையுடன் கூடிய ஒரு தளத்தில் ஒரு பெரியவர் நெற்றியில் பட்டை போட்டுக் கொண்டு ஒரு மர டேபிளின் முன் ஒரே ஒரு ஃபைலை வைத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார். இண்டர்வ்யூக்கு வந்திருப்பதாய் அவரிடம் தகவல் தெரிவித்தவுடன் ஒரு கால் லேசாய் ஆடுகிற ஸ்டூலை நகர்த்திப் போட்டு காத்திருக்கச் சொல்லிவிட்டு அந்த ஒரே ஒரு ஃபைலை மறுபடி பார்க்க ஆரம்பித்தார். இன்னொரு இருட்டறையிலிருந்து பாதமிரண்டில் பொன்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட என்று பாட்டு வந்தது. நான் உட்கார்ந்திருந்த அறையை மலங்க மலங்கப் பார்த்தேன். அந்த அறையின் குறுக்கே ஒரு கயிறு கட்டப் பட்டிருக்க அதில் சின்ன சைசில் சில உள் பனியன்களைப் பார்த்து புருவம் உயர்ந்தது. நான் பெரியவரைப் பார்க்க அவர் கருமமே கண்ணாக ஃபைலில் நெருக்கி நெருக்கி என்னவோ எழுதிக் கொண்டிருந்தார். அவர் நிச்சயமாக ஒரு ஆர்ட் டைரக்டராக இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. அட்ரஸ் மாறி வந்துவிட்டேனோ என்று சந்தேகமும் வந்தது. போய்விடலாமா என்று யோசிப்பதற்குள் திடீரென்று உள்ளறையிலிருந்து ஒரு நாற்பத்தி ஐந்து வயது அம்மாள் காட்டன் புடவையில் தோன்றினார். ’வாங்க தம்பி’ என்றார். நான் ஸ்டூலிலிருந்து எழுந்து நிற்க.. ”உங்க சாம்பிள் ஒர்க் எல்லாம் கொண்டுவந்தீங்களா” என்றார். நான் கையோடு கொண்டு போயிருந்த ஒரு சின்ன ஃபோல்டரை நீட்டினேன். நின்றபடியே ஒவ்வொரு பக்கமாகப் பார்க்க ஆரம்பித்தார்.  “எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா?” “அவ்வளவா இல்ல” “நல்லா வரையறீங்க” ”தேங்க்ஸ் மேடம்” சட்டென்று உடம்பில் ஒரு டவுசர் தவிர வேறு எதுவும் அணியாத ஒரு பையன் ஓடிவந்து கொடியிலிருந்த உள்பனியனை உருவி அதை தலைவழியே இறக்கி அணிந்தான். அந்த அம்மாள் அவனிடம் புளகாங்கிதமாய்த் திரும்பி “அங்கிள் ட்ராயிங் எல்லாம் சூப்பரா இருக்கு பாரு.. நீ அங்கிள் கிட்ட கத்துக்கோ.. சரியா” என்றார். நான் கலவரமடைந்து.. “ஆஃபிஸ் எங்க இருக்கு?” என்றேன். “இதான் ஆஃபிஸ்.. அவரு அக்கவுண்டண்ட்.. ரேடியோக்கு ஜிங்கிள்ஸ் நிறைய பண்ணிருக்கோம். நிறைய துணிக்கடை எங்க கிளையண்டு. ரேடியோல திருமணப் பண்டிகை மங்கலப் பட்டு-ன்னு ஒரு விளம்பரப் பாட்டு கேட்டிருப்பீங்களே. அது நானே ட்யூன் போட்டுப் பாடினது என்றுவிட்டு தொண்டையை செறுமி அதை பாடிக்காட்ட ஆரம்பித்தார். “மேடம்.. கம்ப்யூட்டர்...?” ”கம்ப்யூட்டர் எதும் இல்லை. வேணும்னா வாங்கிடலாம். என்ன விலை வரும்?” திடீரென்று வீட்டுக்குள் சாம்பார் கொதிக்கிற வாசம் பலமாய் வந்தது. என்னை சந்தேகமாய்ப் பார்த்துக்கொண்டே ஒரு சாம்பல் நிறப் பூனை மியாவ் என்று கடந்தது. அந்த அம்மாள் ஃபோல்டரை திருப்பிக் கொடுத்தார். அக்கவுண்டண்டட் ஃபைலில் முற்றிலுமாய் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தார். ரொம்ப நம்பிக்கையுடன் ”நீங்க மண்டேவே ஜாயின் பண்ணிக்கலாம். மண்டே வரும்போது அவர்ட்ட அப்பாயிண்ட் லெட்டர் தரச்சொல்றேன்” என்றார் மர டேபிள் மனிதரைக் காட்டி. அந்த அம்மணியிடம் வெகு அவசரமாய் விடைபெற்றுக் கொண்டு மரப்படி இருட்டில் தடுமாறாமல் கவனமாய் இறங்கி வெளியே வந்து எருமைச் சாணியை மிதிக்காமல் வீட்டுக்குத் திரும்பும் வழியில் திருமணப் பண்டிகை மங்கலப் பட்டு என்று வாய் தன்னிச்சையாகப் பாடிக்கொண்டிருந்ததை உணர்ந்தேன்.  சுஜாதா... சுஜாதா பல வருடங்களுக்கு முன்னால் எனக்கு அவசரமாய் ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் எடுக்க வேண்டியிருந்தது. மதியம் ஒரு மணி வெயிலில் கோவை டவுன்ஹால் அருகில் ஒரு ஸ்டுடியோவுக்கு விரைந்தேன். என் அவசரத்தைத் தெரிவித்துவிட்டு, மேக்அப் அறைக் கண்ணாடியில் முக லட்சணங்களை சரிபார்த்துவிட்டு காமிரா முன் உட்கார, பளிச் என ஒரு மின்னலை என் மேல் சொடுக்கிவிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வாங்க என்றார் ஸ்டுடியோக்காரர். வரவரவென்று அடிக்கும் இந்த மத்தியான வெயிலில் ஒரு மணி நேரத்தை எங்கே தொலைப்பது என்று வெளியில் வந்தவனுக்கு பக்கத்தில் புத்தகச்சுமைதாங்கி நிற்கும் நூலகக்கட்டிடம் தென்பட்டது. ஆஹா! இதைவிட வேறென்ன வேண்டும்? உடனே உள்நுழைந்தேன். மெல்ல முதல் மாடிக்கு படிகளில் ஏற கிரவுண்ட் ஃப்ளோரில் மாடிப்படிக்கு இந்தப்பக்கம் கும்பலாய் சில பேர். உற்றுப் பார்த்தால் நடுநாயகமாய் S டைப் சேரில் எழுத்தாளர் சுஜாதா உட்கார்ந்துகொண்டிருக்கிறார். என்னவோ உரையாடல் போய்க்கொண்டிருக்கிறது. நான் ஆர்வமாய் உடனே கீழே இறங்கி வந்து கும்பலில் தலை நுழைத்து எட்டிப் பார்த்தேன். எல்லோரும் ஆளாளுக்கு கேள்விகளை அவர்மீது வீசிக்கொண்டிருக்க பதிலுக்கு பதில்களை லாவகமாய்த் திருப்பி வீசிக்கொண்டிருந்தார். எனக்குப் மிகப்பிடித்த எழுத்தாளரை மிகப் பக்கத்தில் பார்த்த வியப்பிலிருந்து மீள முடியாமல் நின்றிருந்தேன். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வாழ்க. சுற்றி நிற்பவர்களில் ஒருவன் கேட்கிறான். "சார் குவாண்டம் தியரியை கொஞ்சம் விளக்க முடியுமா?". நான் அவனைப் பார்க்கிறேன். எல்லாரும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள் போல. சுஜாதா விளக்க ஆரம்பித்தார். அடுத்த ஆள் தேச ஒற்றுமை குறித்து கேட்க அதற்கும் பதில். (தேச ஒற்றுமை இருக்கிற இடங்கள் என்று சலூன் மற்றும் விபசார விடுதிகள் என்று குறிப்பிட்டது ஞாபகம் வருகிறது). ஒரு ஜீனியஸிடமிருந்து பதில்கள் கிடைத்த சந்தோஷத்தில் அவர்கள் தலைகள் ஆடுகின்றன. நான் சுஜாதாவை படிக்க ஆரம்பித்தது ஆறாம் வகுப்பு படிக்கும்போது என்று தெள்ளத் தெளிவாக ஞாபகம் இருக்கிறது. அறிமுகப்படுத்தியது அவருடைய "மறுபடியும் கணேஷ்" நாவல். மாலைமதியோ ராணிமுத்தோ நினைவில்லை. அப்போது தமிழ் அதிகம் பரிச்சியமில்லாத என் வீட்டுக்குள் அது எப்படி நுழைந்திருந்தது என்று தெரியவில்லை. கட்டிலுக்கு அடியில், அலமாரியில், அடுக்களையில் விறகு கொட்டப்பட்ட இடத்தில் என்று பூனையோல் எங்கேயாவது கிடக்கும் அதை மறுபடி மறுபடி தேடியெடுத்து கிட்டத்தட்ட 100 தடவைகளாவது படித்திருப்பேன். இன்றைய தேதிக்கு ஒப்பிடுகையில் அது ஒன்றும் சுஜாதாவின் முக்கிய படைப்பு அல்ல என்றாலும் என் அன்றைய வயசுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை அள்ளிக்கொணர்ந்தது அது. அதை ஏன் பேப்பர்காரனுக்கு போடாமல் அல்லது அடுப்பு மூட்ட உபயோகிக்காமல் வீட்டில் விட்டு வைத்தார்கள் என்பது மிக ஆச்சர்யம். இத்தனைக்கும் சுஜாதாவை வீட்டில் யாருக்கும் தெரியாது. புதுசாய் வாழ்க்கையில் எதையோ பார்த்துவிட்டமாதிரி ஏறக்குறைய பக்கங்கள் மஞ்சளாகியிருந்த அதை நேரம் கிடைத்தபோதெல்லாம் எடுத்துப் படித்தேன். அப்புறம் உடுமலை நூலகத்தில் கதைக் களஞ்சியமோ, சிறுவர் கதைப் பூங்காவோ தேடிக்கொண்டிருந்தபோது சுஜாதாவின் "மேற்கே ஒரு குற்றம்" கண்ணில் படுகிறது. ஒரு இன்ப அதிர்ச்சியுடன் அதைக் கவர்ந்துகொண்டு ஒரே பாய்ச்சலில் வீட்டுக்குவந்து அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் அதை படித்துமுடித்துவிட்டது ஞாபகத்துக்கு வருகிறது. அப்புறம் நான் தேடாமலே சுஜாதா புத்தகங்களாய் கிடைக்க ஆரம்பித்தது லைப்ரரியில். சுஜாதாவின் வசீகரமான எழுத்து நடையும், கதைக்களங்களும், கதை மாந்தர்களும், சயின்ஸ் கலந்த புதிய கொலை உத்திகளும், கணேஷூம், வசந்தும், ராஜேந்திரனும், வித்தியாசமான தலைப்புகளும் பெரிதும் கவர சுஜாதாவின் கதைப்புத்தகங்கள் தேடி வெறிகொண்டு அலைய ஆரம்பித்தேன். பத்தாம் வகுப்பு தேறுவதற்குள் சுஜாதா வி்ஷயத்தில் நன்கு தேறியிருந்தேன். வளர்ந்தபிறகு நண்பர்களுக்கு நான் சுவாரஸ்யமாய் கடிதங்கள் எழுத முனைந்ததிலும், பின்னர் பிற்காலத்தில் சில சிறுகதைகள் எழுதினதிலும் சுஜாதாவின் பாதிப்பு இருந்ததாகக் கொள்ளலாம். அவரின் பதினாலு நாட்கள், ஜே.கே. சொர்க்கத்தீவு, வானமென்னும் வீதியிலே, பிரிவோம் சந்திப்போம், கொலையுதிர்காலம், வைரம், காகிதச்சங்கிலிகள் போன்ற மறக்க இயலாத நாவல்களில் மிரண்டதும், மேலும் கணையாழியின் கடைசிப்பக்கங்களில் ஆழ்ந்ததும் நினைவுக்கு வருகின்றன. பிறகு ஒருநாள் சென்னையில் தசரா கணையாழியைத் தத்தெடுத்துக்கொண்ட விழாவில் அவர் பேசினதைக் கேட்கிறபோது சுஜாதா தாண்டி என் வாசிப்பு ரசனைகள் தி.ஜா, அசோகமித்ரன், ஆதவன், வண்ணதாசன் என்று மாறிப்போயிருந்தது. அதேபோல் புக்பாயிண்ட் அரங்கில் ஒரு சி.டி வெளியீட்டு விழாவில் இருமல்களோடு சேர்த்து இருபத்தி ஐந்து நிமிடம் அவர் பேசினதை கேட்டபோதும். இப்படியாக பல வருடங்கள் தாண்டி இப்போது சுஜாதா வீட்டுக்குப் பத்து வீடுகள் தள்ளி என் ஆபிஸ். ஒரு நாளைக்கு நான்கு தடவை சுஜாதாவின் வீட்டைத் தாண்டித்தான் போக வேண்டியிருக்கிறது. எப்போதாவது எதேச்சையாய் லஸ் சிக்னலில் நான் நிற்கும்போது பக்கத்தில் காருக்குள் அவர் உட்கார்ந்துகொண்டிருப்பார். எல்லா நிகழ்வுகளும் ஏதோ ஒரு காரியத்தின் பொருட்டே நிகழ்கின்றன என்று தோன்றுகிறது. சுஜாதாவுடனான அம்பலம் ஆன்லைன் அரட்டையில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது யாரோ ஒருவர் அணுசக்தி, எனர்ஜி என்று ஏதேதோ சுஜாதாவிடம் சந்தேகம் கேட்டுக்கொண்டிருந்தார். லைப்ரரியில் கேள்விகேட்ட அதே ஆள்தானோ என்று சந்தேகம் வந்தது. சுஜாதாவும் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். நானும் ஆசைக்கு ஓரிரு கேள்விகள் கேட்டுவிட்டு வந்துவிட்டேன். என்னைப் போல ஒரு குறு எழுத்தாளன் எங்கிருந்து வருகிறான் என்று தெரியப்படுத்துவதற்கு மேற்கண்ட நினைவுகூறல்கள் தேவைப்படுகிறது. நிறைய எழுத்தாளர்களைப் போலவே சுஜாதாவின் எழுத்தைக் கூர்ந்து கவனித்து ஏதோ கற்றுக்கொண்டதில் நானும் ஒருவன் என்று சொல்லலாம். "மறுபடியும் கணேஷ்" என்ற அந்தப் பழைய புத்தகம் கடைசியில் எங்கே போனது என்று இப்போது யோசித்துக்கொண்டிருக்கிறேன். பிஸ்லெரி கருணைகள் சின்ன வயதில் எனக்கு செடி வளர்ப்பது ரொம்பப் பிடிக்கும். நாங்கள் முன்பிருந்த ஊரில் குடியிருந்த வீட்டில் அடுக்களைக்குப் பின்பக்கமாய் நல்ல செம்மண் புஷ்டியுடன் ஒரு தோட்டம் இருந்தது. சிறிது காலம் வேலையில்லாமல் வெட்டியாய் வீட்டில் இருந்தபோது அப்பாவின் பார்வையைத் தவிர்ப்பதற்காய் அம்மாவுக்கு தோட்டத்தில் உதவுவது மாதிரி பாவ்லா பண்ணிக்கொண்டிருந்ததுதான் தாவரம் வளர்ப்பது குறித்தான எனது முதல் ஆவலைத் தூண்டியது எனலாம். அம்மா வெண்டைக்காய், கத்தரிக்காய், பச்சை மிளகாய் போன்ற தினசரி சமையல் வஸ்துக்களை எப்படி வீட்டுத் தோட்டத்திலேயே தயாரித்துக்கொள்வதென்கிற கலையை கற்று வைத்திருந்தாள். ஒரு தடவை தோட்டத்தில் காய்த்த அந்த முதல் பூசணிக்காயை சமைக்காமல் வைத்து வைத்துப் புளகாங்கிதமாய் பார்த்துக்கொண்டிருந்தாள். அம்மா காய்கறிகளை மட்டுமே பயிரிடுவது எனக்கு அத்தனை சுவாரஸ்யமில்லாமலிருந்தது. கொஞ்சம் பூச்செடிகள் வேண்டாமா? என் விருப்பத்தை அம்மாவுடன் சொன்னபோது தன் ஒரு சில காய்கறி அறுவடைகளை முடித்துக்கொண்டு எனக்கான இடம் ஒதுக்கினாள். ஒரு நண்பன் வீட்டில் பார்த்த அந்த மஞ்சள் பூச்செடியின் விதைகளை கொண்டுவந்தேன். மண்தோண்டி விதை விதைத்து, சிறிது தண்ணீரும் ஊற்றிவிட்டு பிறகு தினம் அது முளைக்கிறதா என்று வந்து வந்து பார்க்கிற சுகம் அலாதியாயிருந்தது. ஒரு துளிர் முளைத்ததைப் பார்த்துவிட்டபோது மனம் சந்தோஷத்தில் துள்ளியது. ஒரு சில தினங்கள் கழித்து மஞ்சள் நிறத்தில் கொத்துக்கொத்தாய் பூத்த அதற்கு சைனா ரோஸ் என்று பெயர் சொன்னார்கள். திடீரென்று தோட்டத்துக்கு உயிர் வந்துவிட்டது. அதற்கப்புறம் ரோஜா, பட்டன் ரோஸ், குரோட்டன்ஸ்கள், நித்ய கல்யாணி, சூரியகாந்தி, செம்பருத்தி என்று என்னென்னவோ தோட்டத்தில் முளைத்துவிட்டதைப் பார்த்து அம்மா வியந்து நின்றாள். அப்பாவின் பார்வை இன்னும் கடுமையாய் மாறியது. பிறகு திடீரென்று எனக்கு வேலை கிடைத்துவிட்டதும், வீடு மாறினதும், மாறின வீட்டில் செடிவைக்க அதிகமாய் இடமில்லாமல் போனதும் ஆக தாவரத்திட்டங்கள் பின்னாளில் கொஞ்சம் கொஞ்சமாய் கைவிடப்பட்டன. அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைக்குத் தாவினதற்கப்புறம் குழிதோண்டி விதைபோட்டு செடி வளர்ப்பது கற்பனையில் மட்டுமே முடிந்தது. வேண்டுமானால் தொட்டிச்செடிகளாய் சிலது வைத்து அழகுபார்த்துக்கொள்ளலாம். அவற்றிற்கு விதைகளும், கொம்புகளும், செடிகளும் கிடைத்தாலும், சுற்றிலும் சுவர்கள் மறைத்து காற்றுக்கே அனுமதி மறுக்கப்பட்டுவிட்ட அபார்ட்மெண்ட் வராண்டாவில் வெயில் எங்கேயிருந்து வரும்? பச்சையம் தயாரித்தல் எப்படி நிகழும்? இவையெதும் தேவையற்ற ஜீவனற்ற பிளாஸ்டிக் செடிகள் மேலோ அத்தனை விருப்பமில்லை. இருந்தாலும்... விட்டுவிடமுடியுமா? அலுவலக பால்கனி மணிப்ளாண்ட் செடியிலிருந்து கொஞ்சம் களவாடிவந்து ஹார்லிக்ஸ் பாட்டிலில் பிஸ்லெரி வாட்டர் (!) நிரப்பி செடியைப்போட்டு என் மூன்றாவது மாடி பால்கனி க்ரில்லில் அதை அபத்திரமாய் தொங்க விட்டேன். ஜென்மம் சாபல்யமடைந்ததுபோல் ஒரு உணர்வு. தினம் அதன் வளர்ச்சியை உற்றுக் கவனிக்க ஆரம்பித்தேன். ஒரு இலை, இரு இலை, என்று வெயில்தேடி மணிப்ளாண்டின் கைகள் பால்கனி க்ரில்லைத்தாண்டி விரிய ஆரம்பித்தது. ஆஹா! இந்த அபார்ட்மெண்டின் வரட்டு வாழ்க்கைக்கு அர்த்தம் வந்து விட்டது. ஆனால் இப்படியும் ஒரு செடி இருக்குமா? முளைத்து மூன்று இலை விடுவதற்குள், குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் மூச்சுத்திணறுகிற நகரத்தில் நான் என்னை பாரிவள்ளல் மாதிரி நினைத்துக்கொண்டு பாட்டிலில் ஊற்றுகிற பிஸ்லெரி வாட்டரை அந்தச் செடி அசுரவேகத்தில் குடித்துக் காலிபண்ணிக்கொண்டிருந்தது. பாட்டிலில் நிரப்பிவைக்கிற தண்ணீர் இரண்டு நாள் கழித்துப்பார்த்தால் பாதிக்கு வந்துவிடுகிறது. சரியான ராட்சஸ செடிபோல என்று நினைத்துக்கொண்டேன். ஒரு நாள் காலை அதன் தற்போதைய வளர்ச்சிநிலையை மேற்பார்வையிட பால்கனி கதவைத் திறந்தபோது எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாட்டில் அப்படியே இருக்கிறது. மணிப்ளாண்டைக் காணவில்லை. எங்கே போயிற்று? உடனே தாமதியாமல் பால்கனி கிரில் வழியே எட்டிப்பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கீழே எங்கேயும் அதன் பச்சை தட்டுப்படவில்லை. இத்தனை உயரம் ஏறிவந்து இதை யாரேனும் திருடிக்கொண்டு போகவேண்டியதன் அவசியத்துக்கு வாய்ப்பிருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தேன். மின்கம்பிமேல் உட்கார்ந்திருந்த காக்கைமேல் எனக்கு சந்தேகம் வந்தது. பயங்கர சோகமாகிவிட்டது. கீழே போய்த் தேடிப்பார்த்தேன். எங்கேயும் காணோம். சரி எனக்குக் கொடுப்பினை அவ்வளவுதான்போல என்று மனம் சமாதானத்திற்கு வந்தது. மறுபடி இன்னொரு செடியை கொண்டுவருவதுபற்றிய யோசனையைக் கைவிட்டேன். இதெல்லாம் சரிவராது போல. தண்ணீர் பாதி தீர்ந்துபோன பாட்டிலை மட்டும் அப்புறப் படுத்தாமல் அப்படியே விட்டுவைத்திருந்தேன். அது அங்கேயே இருக்கட்டும். மணிப்ளாண்ட் சில நாள் என்வீட்டில் வாழ்ந்ததை நினைவுபடுத்திக்கொண்டு. மறுநாள் எதற்கோ மறுபடியும் பால்கனி கதவைத் திறந்தபோது அதைப் பார்த்தேன். மணிப்ளாண்ட்டை அல்ல. ஒரு அணில். கிரில் கம்பியில் ஒரு சர்க்கஸ் லாவகத்துடன் தலைகீழாக தவழ்ந்துவந்து பாட்டிலுக்குள் தலை நுழைத்து தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது. ஓஹோ! இப்போது எல்லா மர்மங்களும் பளிச் என்று விளங்கிவிட்டன. மணிப்ப்ளாண்ட்டாவது இவ்வளவு வேகமாய் தண்ணீரை உறிஞ்சுவதாவது. லேசாய் சிரிப்பு வந்தது. எல்லாம் இதன் வேலை! இந்த அணிலைக் கோபித்துக்கொள்ளமுடியுமா? தண்ணீர் குடித்துவிட்டு டுபுக் டுபுக் என்று உற்சாகமாய் வாலாட்டியபடி அணில் இடத்தைக் காலிபண்ணியது. நான் யோசிக்கவேயில்லை. உடனே சமையலறைக்கு ஓடிப்போய் கேனிலிருந்து பிஸ்லெரி வாட்டர் எடுத்துவந்து பாட்டிலில் நிறைத்தேன். அணிலோ செடியோ.. ஏதாவது ஒன்று. வாழ்க்கை நிறைவாயிருக்கிறது. ஒரு கடிதம் நான் என் முதல் கடிதத்தை எப்போது யாருக்கு எழுதினேன் என்பது நினைவில்லை. பத்தாம் வகுப்பு பரீட்சை முடிந்ததும் "தாஜ் தியேட்டரில் சினிமாவுக்குப் போகலாமா?" என்று நாலுவீடு தள்ளி இருக்கிற கணேஷூக்கு என் தம்பியிடம் கொடுத்தனுப்பிய துண்டுச் சீட்டுகூட என் முதல் கடிதமாக இருந்திருக்கலாம். எங்கேயோ எப்படியோ தொடங்கிவிட்டது அது. அடிக்கடி படிப்பு வேலையென எல்லோரும் இடம் மாற நேர்ந்த சூழ்நிலைதான் யாருக்காவது கடிதமெழுதுவதன் அவசியத்தைத் ஏற்படுத்தியது என்றாலும்.. சில முக்கியமான தகவல்களைத் தெரிவிப்பதற்கென என்று இல்லாமல்.. அது பின்னாளில் ஒரு சுவாரஸ்யமான விஷயமாகிவிட்டது. அப்போது கடிதமெழுதுவதென்பது ஒரு போதை மாதிரி. அந்த அனுவங்களையெல்லாம் சொல்ல இங்கே இடம் போதாது. கடிதமெழுதுவதில் என்னென்ன புதுமைகள் செய்ய முடியுமோ அத்தனையும் பண்ணி தபால்காரரிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட சம்பவங்களும் உண்டு. உதாரணத்துக்கு போஸ்ட் கார்டில் படம் ஒட்டி லே-அவுட் செய்து அனுப்புவதும், அட்ரஸை தலைகீழாய் பின்கோடிலிருந்து ஆரம்பித்து எழுதுவது.. இன்னபிற! இன்றைய தேதிக்கு நான் எழுத்துலகுக்கு நல்லமுறையில் அறிமுகமாயிருப்பதற்கு கடிதப் பயிற்சி முதல் மூலகாரணம். நானும் இலக்கியம் சார்ந்த என் நண்பர்களும் எழுத்துநடையைப் பக்குவப்படுத்திக்கொண்டதற்கு கடிதம் எழுதுவதை ஒரு கருவியாய் உபயோகித்துக்கொண்டோம் என்று நிச்சயம் சொல்லலாம். போஸ்ட் கார்டு, இன்லேண்ட் லெட்டர், என்வலப் என்று மாய்ந்து மாய்ந்து என் நண்பர்கள் எழுதிய கடிதங்களைக் கிழிக்க மனமில்லாமல் எடுத்துவைத்ததில் ஒரு சூட்கேஸ் நிறைய குவிந்து கிடக்கிறது. அதில் நிறைய கடிதங்கள் இப்போது நிறம் மங்கி பழுப்பேறத்துவங்கிவிட்டது, கொஞ்சமல்ல - ரொம்பவே வருத்தமாயிருக்கிறது. சந்தோஷப்பட வைத்தது, வேதனைகளைக் கொண்டுவந்தது.. தளர்ந்தபோது உத்வேகமும், உற்சாகமும் அளித்தது, எரிச்சலடைய வைத்தது, நெகிழ்வாய் கண்கலங்க வைத்தது.. துள்ளிக் குதிக்க வைத்தது... வாய்விட்டுச் சிரிக்க வைத்தது, தர்மசங்கடத்தில் நெளிய வைத்தது.. யாருக்கும் சொல்லாதே என்று ரகசியங்களைத் தாங்கி வந்தது.... இப்படி எண்ணற்ற கடிதங்கள். என்றோ, யாரோ எழுதிய கடிதத்தை இப்போது எடுத்துப்படித்துப் பார்ப்பது சுகமான விஷயம். ஆனால் ஒரு சில சமயம் என்றோ நடந்த ஒரு நிகழ்வுக்கு இன்று படிக்கும்போது மனசை கனக்கச் செய்யும்விதமான கடிதங்களும் அதில் உண்டு. நேற்று அதுமாதிரி பழையவைகளை லேசாய் கிளறியபோது கண்ணில்பட்டது ஒரு கடிதம். 75 பைசா இன்லண்ட் லெட்டர். பதினைந்து வருடம் முன்னால் என் நண்பர் சரசுராம் எனக்கெழுதியது. படிக்கும்போது அந்தக் கடிதத்தில் புதைந்திருந்த, அது எழுதப்பட்ட காலத்தின் வேதனையை இப்போதுகூட உணரமுடிந்தது. அந்தக் கடிதம் அத்தனை பர்சனலாக இல்லாமல் பொதுவாய் ஒரு சிறுகதைத்தனத்துடன் இருந்ததால், இங்கே அதை பகிர்ந்துகொள்கிற விருப்பத்தை எனக்குக் கொடுத்தது. ஆக, சரசுராமின் அனுமதியுடன் அதை இதோ இங்கே... ----------------------------------------------------------------------------------------------------- பொள்ளாச்சி 4-4-91 "வாழ்க்கை என்பது துவந்த யுத்தமா? விரிந்த கனவா? ஆச்சரிய நிமிடங்கள் அடங்கிய கதையா? தீக்குள் விரலை வைத்துத் தீண்டும் இன்பத்தைக் காணும் தவமா? எனக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை." - மாலன். ***** ப்ரிய ரகுவிற்கு....ராம் இந்தக் கடிதம் முழுவதும் பாட்டியைப் பற்றியே எழுதும் எண்ணம் நான் முன்பே யோசித்ததல்ல. ஆனால் அது தவிர, தற்போதைய என் நினைப்பில் அல்லது ஏதோவொரு நியாயத்தில் இடமில்லை. போன வாரத்தின் ஒரு தினத்தில், புழு மாதிரி சுருண்டு கிடந்த பாட்டியை பார்த்துவிட்டு மாமா அழுதாரே பார்க்கணும். எல்லோரும் நிறுத்தச்சொல்ல.. முடியவே முடியாமல் அழுதார். எனக்கு சமாதானப்படுத்த விருப்பமேயில்லை. அழட்டும்! நிறைய அழட்டும் என்றுதான் இருந்தது. ஒரு துக்க நேரத்தில் சமாதானம் சொல்வதைவிட வேறென்ன அசிங்கம் இருந்துவிடமுடியும்? அழுகை நிஜமாய் மனதின் கவிதை. அது தரும் ஒத்தடம் வார்த்தைகளில் இல்லை. நம்மால் பிரியப்பட்டவர்களின் உயிர் நாட்கள் எண்ணப்படுவது எவ்வளவு கொடுமை? ஏழு வருட தண்டனைக்குப்பின், சாவின்போதுகூட ஒரு சின்ன சுகத்துடன் போக முடியாத அவர்களின் நிலைமை எதிரிக்குக்கூட ஏற்படக்கூடாது. ஒரு மனித உயிர் இவ்வளவு தூரம் சித்திரவதைக்கப்படுவதைக் நான் பார்ப்பது இதுவே முதன் முறை. கடவுள் மீதான எண்ணத்தில் மேலும் விரிசல் விழுந்துகொண்டிருப்பதெல்லாம் இத்தகைய நிகழ்ச்சியின்போதுதான். பாட்டி கும்பிடாத சாமியா? அவர்கள் செய்யாத பூஜையா? அவர்களிடம் இல்லாத சுத்தமா? செய்யாத நல்லவைகளா? பிறகும் இவர்களுக்கு இப்படியொரு நிலைமை என்றால்...? தீர்க்கமுடியாத பிரச்சனைக்கு விதி என்று பெயரிட்டு... - எல்லாம் விதியெனில் கடவுள் எதற்கு? தினம் தினம் எல்லோரும் சுற்றிலும் நின்று பாட்டியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பாட்டிக்கு வந்தவர்களில் எத்தனைபேரை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது என்பது தெரியாது. ஆனால் வந்தவர்களைப் பார்க்கும் அந்த ஸ்நேகமான பார்வை கொஞ்சமும் இன்னும் குறையவேயில்லை. வந்தவர்கள் நீ பிழைக்கவே மாட்டாய் என்கிற மாதிரிதான் ஆறுதல் சொல்கிறார்கள். தலையசைத்தால்... தண்ணி வேணுமா? என்கிறார்கள். கண் உருண்டால் காபியா வேணும்? என்கிறார்கள். பாட்டி எல்லோருக்கும் ஒரு குழந்தை. அவரின் ஒவ்வொரு அசைவுக்கும் காரணங்கள் திணிக்கப்படுகிறது. பாட்டி உயிருள்ள ஒரு ஜடம். பாட்டியை எண்ணுகிறபோதெல்லாம், அவர்கள் பற்றி நினைவுகள் தோன்றாமல் இருப்பதில்லை. ஒவ்வொருவரைப்பற்றியும் நினைக்க ஏதாவதொரு நினைவு நிச்சயம் இருக்கும். அது பெரியவர்களானாலும்.. ஒருவயது குழந்தையானாலும் கூட! உள்ளே நுழைந்ததும் தனக்கு தெரிந்த முறையில் வரவேற்கும் பாங்கும், சாப்பிடச்சொல்லி, டீ குடிக்கச் சொல்லி.. திக்கிக் திக்கித் துண்டு துண்டாய் வந்து விழும் வார்த்தைகளும், அதை மறுக்கிறபோது.. அந்த முகச்சுருக்கம் மீறி தெரிகிற அசைவுகளும், (நான் கோபமென நினைத்துக்கொள்வதுண்டு!). இதற்கிடையில், சில சந்தோஷ நிமிடங்களில், அந்தக் கோணிப்போன வாயிலிருந்து வரும், இன்னும் மறந்துபோகாத சில பாடல்களும்... இன்னமும் சின்னச் சின்னதாய் என்னென்னவோ... மறக்க நாளாகும். எப்படி அழகு ததும்பின உருவம் அது! இப்போது முழுவதும் உருகிப்போய்.. வெறும் எலும்புக்கூடும், அதற்குப் பாதுகாப்பென மிக லேசாய் தொங்கும் தோலும்.. ச்சே.. வாழ்க்கை வெறுப்பாகிப் போகிறது. திங்கட்கிழமை, நானும் மாமாவும், கோயிலுக்குப் போய் குங்குமத்துடன் வீடு திரும்ப, வீட்டில் கூட்டம். பாட்டி மூச்சுத்திணறிக் கொண்டிருந்தார்கள். வாயில் ஒரு வித சப்தம். கையிலிருந்த குங்குமம் வைக்கச்சொன்னார்கள். வைத்து ஐந்து நிமிடத்தில் உயிர் பிரிந்தது. அந்த உயிர் பிரிந்த நிகழ்வு, எல்லோருக்கும் அழுகையை வெளிப்படுத்த, எனக்கு மட்டும் சந்தோஷமாயிருந்தது. அன்புடன் -ராம். ரோம் - பயணக் கட்டுரை 'இத்தாலியிலுள்ள ரோம் ஒரு அழகிய நகரம். அனைவரும் வாழ்க்கையில் ஒருமுறையேனும் நிச்சயம் பார்க்கவேண்டிய இடம்' என்று ட்விட்டரில் எழுதிவிட்டுப் போய்விடலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். அப்படியே எழுதிப் போட்டாலும் ட்விட்டரில் இன்னும் 39 எழுத்துக்கள் மிச்சமிருக்கும் என்பதாலும், மிகத் தொன்மையான நகரமான ரோமின் உலகளாவிய பேரழகை இப்படி ஓரிரு வரிகளில் சொல்லிவிட்டுப் போனால் 16-ஆம் நூற்றாண்டு ரோமாபுரி பேரரசர்களின் ஆவிகள் என்னை மன்னிக்காது என்பதாலும் ஒரு சிறிய பதிவாகப் போட்டுவிடுகிறேன். நான் முதலில் சென்று இறங்கிய இடம் லியனார்டோ டாவின்ஸி ஃபியுமிசீனோ விமானநிலையம் என்றெல்லாம் எழுதி உங்களுக்கு ஆயாசத்தை உண்டு பண்ணப் போவதில்லை. இறங்கின இடமும் திரும்பிய இடமுமா முக்கியம்? எப்போதும் மெயின் பிக்சர்தானே நமக்கு முக்கியம். ஆகவே நேராக தெருவில் இறங்குகிறேன். ஒரு நகரம் என்பது தெருக்களின் தொகுப்புதானே? இத்தாலிய மொழியில் ரோமா என்றும் செம்மொழியாம் தமிழ் மொழியில் உரோமை நகரம் என்றழைக்கப்படும் இந்நகரமானது கி.மு.753-ல் அமைக்கப்பட்டு அப்போதிருந்தே மக்கள் வசிக்க ஆரம்பித்த வரலாற்று விவரங்கள் எல்லாம் நேரமும் வாய்ப்பும் இருந்தால் இன்னொரு பதிவில் விவரமாய் எழுதி விடுகிறேன். ஏனென்றால் இது ஒரு மிகச் சிறிய பயணக்கட்டுரை மட்டுமே.  "All roads lead to Rome" என்று எதற்காகச் சொன்னார்கள் என்பது இப்போது தெள்ளத் தெளிவாகப் புரிந்துவிட்டது. உலகம் முழுவதுமுள்ள, பயணங்களை விரும்புகிற மக்கள் அனைவருக்குமான வாழ்நாள் டூரிஸ்ட் டெஸ்டினேஷன் இது. பின்னே உலகின் மொத்த அழகும் இங்கேயே கொட்டிக்கிடந்தால் மக்கள் வேறு என்னதான் செய்வார்கள்? ரோமுக்குள் நுழைந்தவுடனேயே வாட்டிகன் மியூசியம், போர்கீஷ் காலரி மற்றும் ம்யூசி கேப்பிடோலினி, கலோசியம் ஆகிய நான்கையும் முதலில் பார்த்துவிடவேண்டுமென்று ஒரே துடிப்பாய் துடித்தது மனது. (இந்த மாதிரி இடங்களின், தெருக்களின் பெயர்களை நான் சரியாக உச்சரிக்கவில்லை எனில் இத்தாலிய மக்கள் கோபித்துக் கொள்வார்களோ என்ற பயமும் இருந்தது). ரோம் பற்றியெரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக்கொண்டிருந்த இடம் எங்கேயிருக்கிறதென்று யாரிடமாவது கேட்டால் அடிக்க வருவார்களோ என்ற யோசனையுடன் ஊர் சுற்றக் கிளம்பினேன். ரோமர்கள் அவர்களது ஆட்சிக்காலத்தில் ரொம்ப போரடித்தால் உயர உயரமாய் தூண்கள் வைத்து வானளாவிய கட்டிடங்களை எழுப்புவார்கள் என்று கருதத்தக்க வகையில் பிரம்மாண்டங்கள், சிதிலங்கள், வரலாற்று மிச்சங்கள், புராதனம், வெள்ளையும் கருப்புமாய் மிகப் பெரிய சிலைகள். நம்மூரின் கட்டிடங்களுக்கும் ரோமாபுரியின் கட்டிடங்களுக்கும்தான் எத்தனை வித்தியாசங்கள்!! ரோமர்களின் ஆர்க்கிடெக்ச்சர் நுட்பங்கள் அப்படி வியப்பளிப்பதாக இருக்கிறது. அதுவும் கட்டிடங்களில் இந்தத் தூண்கள் இருக்கிறதே! அப்படி ஒரு ஆகிருதி. ஒவ்வொரு தூணும் பத்து பேர் சேர்ந்து கட்டிப்பிடிக்கவேண்டும் என்பது போல் இருக்கின்றன. ஆனால் எட்டிப் பிடிக்க வேண்டும் என்றால் அது நடக்காது. அவ்வளவு உயரம். ஆக ரோம்-ஐ தூண்களின் நகரம் என்று சொன்னால் அது மிகையாகாது. ரோமன் ஹாலிடேஸ் என்னும் கருப்பு வெள்ளைத் திரைப்படத்தில் நான் கண்ணுற்ற ரோம் இப்படி வண்ணமயமாய் காணக் கிடைக்குமென்று கனவிலும் நினைக்கவில்லை. இதை நினைக்கும் இதே நேரம் அந்தப் படத்தில் நடித்த அந்நாள் அழகுப் பதுமை ஆட்ரே ஹெப்பர்ன் (Audrey Hepburn) பற்றியும் ஒரிரு விநாடிகள் மறைந்த எழுத்தாளர் ஆதவன் உபயத்தால் நினைவு கூர முடிந்தது.  Piazza Venezia (நகரத்தின் இதயம் என்று பொருள்படும்) என்கிற இடத்தில் Altare Della Patria என்ற புராதன வரலாற்று கட்டிடம்... ச்சே!! அதை கட்டிடம் என்று சொல்லுவது ரோமாபுரிவாழ் மக்களைக் கேவலப்படுத்துவது போலாகும் - ஆகவே அரண்மனை? சரி.. ஏதோ ஒன்று. இங்கும் மறுபடி பிரம்மாண்ட தூண்கள். இதற்குமுன் இருக்கும் ஒரு மிகப் பெரிய சிலையருகே என்னைப் போலவே உலகமெங்குமிருந்தும் வருகை புரிந்திருக்கும் சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் காணமுடிந்தது. இதுபோல எண்ணற்ற கட்டமைப்புகள். எண்ணற்ற பழங்காலச் சின்னங்கள். எண்ணற்ற.. எண்ணற்ற.. ம்ம்.. சரி விடுங்கள்.  ரோமிலுள்ள ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் கட்டிடத்துக்குள்ளும் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு வரவேண்டும் (விடுவார்களா தெரியவில்லை) என்கிற அளவுக்கு எல்லாமே அழகழகாய் இருக்கின்றன. நம்புங்கள்!! ரோம்-ல் உள்ள எல்லா இடங்களையும் ரசித்து அனுபவித்துப் பார்க்க வேண்டுமென்றால் நம் ஆயுள் போதாது என்று தோன்றிவிட்டது. ஏனென்றால் அவைகளையெல்லாம் கட்டி முடிப்பதற்கே அவர்கள் ஆயுள் போதவில்லை பாருங்கள். எனக்குக் கூட எதை சொல்வது எதை விடுவது என்று தெரியாமல் தடுமாறுகிறது. அத்தனை அத்தனை.. அதே மாதிரி சர்ச்சுகளை எடுத்துக்கொண்டால் ஒரு பெரிய லிஸ்ட்டே போடுமளவுக்கு இருக்கிறது என்றார்கள். யாராவது ஏற்கனவே அந்த லிஸ்ட்டைப் போட்டிருப்பார்கள் என்பதால் நான் அதை செய்யவேண்டாமென்று தீர்மானித்தேன். ஆனால் நான் பார்த்தவரையில் எனக்கு எந்தச் சர்ச்சும் கண்ணில் படவில்லை. அல்லது பார்த்தது எல்லாமே சர்ச்தானா? சிங்கப்பூர் மாதிரியே சாலைகள் படு சுத்தம். எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது வானத்திலிருந்து யாரோ கூட்டமாய் இறங்கிவந்து இரவோடு இரவாக குப்பைகளை அள்ளித் துடைத்துவிட்டுப் போய்விடுவார்கள் என்று நினைக்கும்படிக்கு அபார சுத்தம். ஆனால் பார்த்த சில இடங்களில் உறுத்தின ஒரே விஷயம் கார்களும் ஸ்கூட்டர்களும் (டூ வீலரில் அதிகம் ஸ்கூட்டர்கள் போன்ற வாகனங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள்) பல இடங்களில் ஒழுங்கு இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதுதான். நேனோ மாதிரி குறுங்கார்கள் நிறைய கண்ணில் பட்டன. சர்வசாதாரணமாக ஏழு எட்டு சாலைகள் ஒருங்கே சந்திக்கும் வீதி முக்குகள் இருக்கின்றன. இந்த மாதிரி முக்குகள் நம்மூரில் இருந்து வீதி முனையில் ட்ராஃபிக் போலீசை நிற்கவைத்தால் முழி பிதுங்கிவிடுவார் என்று நினைக்கும் போது பாவமாக இருந்தது. ரோமில் மக்கள் தொகை குறைவு என்பதால் ’பாரத் பந்த்’ தினம் மாதிரி நிறைய சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. எங்கேயும் போக்குவரத்து நெரிசலே இல்லை. Iron Man, Saw IV போன்ற ஆங்கிலப் படங்கள் ஓடிக்கொண்டிருந்த தியேட்டர் வாசலில் நான்கே நான்கு இருசக்கர வாகனங்கள் மட்டுமே இருக்க மொத்தமாய் காற்று வாங்கிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது. நம்மூர் தாழ்தள சொகுசுப் பேருந்தின் பத்தாவது வெர்ஷன் மாதிரியான பஸ்கள் நல்ல சிவப்பு நிறங்களில் சாலையெங்கும் ஓடுகின்றன. மக்கள் நவீனமாக வண்ணமயமாக உடையணிகிறார்கள். பெரிய கொட்டை எழுத்துக்களில் பார்கள் நம்மை இழுத்து வரவேற்கின்றன. ரோமில் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள் யாவை என்று குத்துமதிப்பாக ஆராய்ந்ததில் கீழ்கண்ட லிஸ்ட் கிடைத்தது. மேற்சொன்ன வாட்டிகன் ம்யூசியம் இன்னபிற இடங்கள் தவிர Colosseum, Trevi Fountain, Spanish Steps, Villa Borghese, Galleria Doria Pamphilj, Castel Sant'Angelo, Via Condotti, Piazza del Popolo, Imperial Forum, St. Peter's Basilica, Piazza Navona என்று பட்டியல் நீண்டுகொண்டே போனது. வாயிலும் பிறகு ஞாபகத்திலும் நுழையாத பெயர்கள் என்றாலும் எல்லாவற்றையும் எப்போது பார்த்து முடிப்பது என்று மலைப்பாக இருந்தது. ஷாப்பிங் போகவேண்டும் என்றால் Piazza Spagna என்ற இடத்திற்கருகிலுள்ள (ஸ்பானிஷ் ஸ்டெப்ஸ்-க்கும் கூட இது பக்கந்தான்) ஷாப்பிங் ஏரியா மிகப் பிரபலமாம். சிங்கப்பூர் முஸ்தபா சென்டர் மாதிரி ஏதேனும் சல்லிசாகக் கிடைக்குமா என்று விசாரிக்கவேண்டும். Piazza Spagna என்றதும் பீட்சா ஞாபகம் வந்து திடீரென பசிக்கிற மாதிரி இருந்தது. எங்கேயாவது நல்ல பீட்சா கார்னர் தென்படுகிறதா என்று Via Cola di Rienzo பக்கத்தில் தேடிக் கொண்டிருந்தபோது தோளில் ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தால் என் மனைவி. கண்கள் விரிய ஆச்சரியப்பட்டு “ஏய்.. நீ எப்படி இங்க.. ரோமாபுரி-ல?” என்று கேட்பதற்குள் மனைவி முறைத்தபடி.. “ஒக்காந்த எடத்துலயே ஒலகம் சுத்தினது போதும்.. தோசை ஆறுது. வந்து சாப்டுங்க”.  எனக்கும் கூட கூகுள் மேப்ஸ் Street View-இல் உரோமிய வீதிகளைச் சுற்றிச் சுற்றி வலது கை ஆள்காட்டி விரல் ரொம்ப வலியெடுக்க ஆரம்பிக்க (மவுசை கிளிக்கி கிளிக்கி) கம்ப்யூட்டரை ஆஃப் செய்துவிட்டு தோசை சாப்பிடக் கிளம்பினேன். நாளைக்கும் இதே மாதிரி ஒரு நடை ஸ்விட்சர்லாந்து போய்வரவேண்டும். முதல் காதல். முதல் முத்தம். முதல் சமையல். இந்த மு.கா, மு.மு இரண்டும் 'ப்யூர்லி பர்சனல்' ஆக இருப்பதால் அதை இங்கே தணிக்கை செய்து விட்டு தலைப்பின் மூன்றாவது விஷயத்துக்கு நேரடியாக வருகிறேன். நான் முதன் முதலில் சமையல் செய்த அனுபவம் கொஞ்சம் விட்டிருந்தால் நாளிதழில் எட்டுப்பக்க செய்தியாக மாறுகிற அபாயம் வரை போனதை யாராவது சொன்னார்களா? தங்கமணி ஊருக்குப் போவதற்கு (சுமார் ஒரு மாதம் வெக்கேஷனாம்) ஒரு வாரம் முன்னரே கொஞ்சம் கிலியால் லேசாய் வயிறு புரள ஆரம்பித்துவிட்டது. சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போகிறேன்? மூன்று வேளை ஹோட்டலில் சாப்பிடுவதென்பது ஒத்துவராத ஒரு காரியம். ஆக வேறு வழியில்லாமல் நானே சமைத்து நானே சாப்பிட வேண்டிய நிர்பந்தத்திற்கு காலம் என்னைத் தள்ளிவிடப்போகிறதா? "முதல்ல குக்கரை எடுத்து.." என்ற தங்கமணியை கையமர்த்தித் தடுத்தேன். "எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் அம்மணி. இதெல்லாம் ஒரு பெரிய விஷயமேயில்லை! நீ எதுவும் சொல்ல வேண்டாம். நான் சமையல் கற்றுக்கொள்வதற்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. நானாக கற்றுக்கொண்டு சமையலில் ஒரு கலக்கு கலக்குகிறேன் பார்!. நீ கவலைப்படாமல் ஊருக்குக் கிளம்பு". தங்கமணி அப்போது பார்த்த பார்வையின் அர்த்தம் அடுத்த நாள் விடியலில் தெரிந்துவிட்டது. முதன் முதலாக வெறிச்சோடிக்கிடந்த சமையலறைக்குள் லேசான ஜேம்ஸ்பாண்ட்தனத்துடன் எட்டிப் பார்த்தேன். ஓ! இதுதான் நான் இனிமேல் இயங்க வேண்டிய களம். இந்தக் குக்கர் எங்கேயிருக்கிறது?. அதோ!. ம்! தங்கமணி சொன்னது என்ன? "முதல்ல குக்கரை எடுத்து... எடுத்து??? 'எங்கே நீ சொல்லவிட்டாய் மானிடா...!! எக்கேடோ கெட்டுப்போ! நீயாச்சு! உன் சமையலாச்சு!' என்று விட்டத்தில் அசரீரி கேட்டது. என்றோ ஒரு நாள் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு முயற்சியாய் சேர்ந்து சமைத்த அனுபவங்களை ஞாபக அடுக்கில் விரட்டி விரட்டி தேடி மனதில் ஒரு சில குறிப்புகள் தயார் செய்துகொண்டேன். இதோ ஆரம்பித்தாயிற்று. ஒரு வழியாய் ஆயத்தங்கள் முடிந்து குக்கர் நீலமாய் எரிகிற அடுப்பின்மேல் உட்கார்ந்திருக்கிறது. இன்னொரு பத்து நிமிடத்தில் சாப்பாடு ரெடி. அதற்குள் ரசம் வைத்து முடித்துவிடலாம். குழம்பு வைப்பதெல்லாம் ஒரு வேலையா என்ன? எல்லாமே தாளித்துத் தாளித்து கொட்டுவதுதானே?. சரி! ரசம். அதற்குத் தேவையான பொருட்கள், உபகரணங்கள் என்னென்ன? முதலில் புளியை ஊறவைத்து பிறகு தக்காளிக் கரைசலில்... என்று கரெக்டாக ஆரம்பித்துவிட்டேன் பாருங்கள். நான் தடுத்ததையும் மீறி தங்கமணி "குக்கர் நாலு விசில் அடிச்சா அடுப்பை ஆஃப் பண்ணிருங்க" என்று கோவை எக்ஸ்பிரஸ் கிளம்பும் போது ஜன்னல் வழியே சொன்னது நினைவுக்கு வருகிறது. நான் விசிலுக்காகக் காத்திருந்தேன். இன்னும் வரவில்லை. மாறாக என்ன இது லேசாய் ரப்பர் கருகுகிற வாசம்?. நான் மெதுவாய் குக்கரை அணுகினேன். என்னவோ தப்பு. அதன் மூடி மற்றும் இன்னபிற விஷயங்களைச் சோதித்தேன். நேரமாக ஆக குக்கரின் மகா மெளனம் என்னை சோதிக்க ஆரம்பித்தது. கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்துக்கும் மேலாகிவிட்டது. எங்கே விசில்? விசிலடிப்பதெல்லாம் அதற்குப் பிடிக்காதோ என்னவோ..!! திறந்து பார்த்துவிடலாமா என்று யோசிக்கும்போது.. குக்கரிலிருந்து வரக்கூடாத இடத்திலிருந்தெல்லாம் நீராவி கசிய ஆரம்பித்ததை பார்த்தேன். ஏய்!! என்னிடம் மட்டும் இது என்ன விளையாட்டு? ரப்பர் வாசம் வீடெங்கும் பரவ ஆரம்பித்தது. எனக்கு உடனே தீபாவளியன்று வெடிக்கும் பச்சை நிற அணுகுண்டும், எரிமலை வெடிப்பதற்குமுன் லேசாய் புகைவதும் நினைவுக்குவர... சட்டென்று தீர்மானித்து குக்கர் மூடியை சடால் என்று திறந்தேன். அத்தனை நேரம் அடக்கி வைத்த மகாகோபம் புஸ் என்று நீராவியாய் சீறி முகத்தில் அடிக்க நான் பத்தடி எகிறி நின்றேன். இன்னும் ஒரு ஐந்து நிமிடம் பொறுத்திருந்தால் அது நிச்சயம் வெடித்துச் சிதறியிருக்கக்கூடிய அபாயம் ரொம்ப லேட்டாய் உறைத்தது. இப்போது இன்னும் அதிகமாய் ரப்பர் வாசம். சுதாரித்து மெதுவாய் குக்கர் மூடியை ஆராய்ந்தேன். வெப்பம் தாங்காமல் வால்வ் ஓட்டையாகியிருக்கிறது. இத்தனை நேரமாகியும் சாப்பாடு வெந்திருக்கவில்லை. நான் யோசனையாய் நின்றேன். ப்ரெஷர் குக்கர் வேலை செய்யும் முறைபற்றி தீவிரமாய் யோசிக்க ஆரம்பித்தேன். இன்றைக்கு ஹவ் ஸ்டஃப் ஒர்க்ஸ் டாட் காமில் தேட வேண்டும். எங்கேயோ லாஜிக் இடிக்கிறது. பாஃர்முலா வேலை செய்யவில்லை. வால்வின் ஈயம் உருகி சாப்பாட்டோடு கலந்திருக்கும் என்பதால் இனி அதை வைத்துக்கொண்டு மேற்கொண்டு எதையும் யோசிப்பது உசிதமல்ல என்று பட்டது. இதோ ரசம் கூட இப்போது கொதிநிலைக்கு வந்துவிட்டது. ரசப்பொடியை ஸ்பூனில் எடுக்கும்போதுதான் இந்தக் குக்கரின் அபாய நிலை உணர்ந்து அருகில் போய்ப்பார்த்தது. பொடியை போட்டேனா இல்லையா? திடீர் சந்தேகம்! அப்புறம் ரசத்தை கொஞ்சமாய் கரண்டியில் எடுத்து ருசி பார்க்க.. உவ்வே! எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு வசந்தபவனுக்குப்போய் ரெண்டு இட்டிலி, ஒரு கல்தோசையை உள்ளே தள்ளி பசியாற்றிக்கொண்டேன். நலமாய் ஊர் போய் சேர்ந்துவிட்டதாக தங்கமணியிடமிருந்து இரவு போன் வந்தது. பிரயாண செளகரியங்கள் பற்றியெல்லாம் பொதுவாய் கேட்டறிந்துவிட்டு அப்புறம் குரலைத் தணித்துக்கொண்டு மெதுவாய் கேட்டேன். "முதல்ல குக்கரை எடுத்து...சொல்லு.! அப்பறம் என்ன பண்ணனும்?" ஹேப்பி பர்த்டே!! அப்பா எங்கள் பிறந்த தினங்களில் பெயரிட்ட பெரிய வட்டக் கேக்குகளை எச்சில் காற்றால் கேண்டில் அணைத்து வெட்டச் சொல்லி பாட்டுப்பாடினார்... * அங்கேயிருக்க நேரும் பத்துப்பேரிலும் அப்பாவால் மட்டும்தான் வெட்கத்தைவிட்டுப் பாடமுடியும், இது உனக்கொரு சந்தோஷமான பிறந்த தினம்... இது உனக்கொரு சந்தோஷமான பிறந்த தினம்... * அப்பாவின் பிறந்த நாட்களில் பாட ஆளிருக்காது. நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் பரஸ்பர நம்பிக்கையற்றுப் பார்த்துக்கொண்டபின் ஹாப்பி - என்று துவங்கிய நானும் என் ஒற்றைக் குரலின் பைசாசத்திற்கு பயந்து பாட்டை நிறுத்திப் பேந்தப்பேந்த விழித்துக்கொண்டிருப்பேன். * அப்புறம் காலப்போக்கில் எங்களுக்குத் தைரியம் வந்தது. ஆனால் அப்போது அப்பா எங்கள் பிறந்த தினங்களை மறந்துவிட்டிருந்தார் நாங்கள் அவர் பிறந்த தினங்களை மறந்து போயிருந்தோம். "அப்பாவின் பிறந்த தினங்கள்" - கவிதை. - சுதேசமித்திரனின் 'அப்பா' கவிதைத் தொகுப்பிலிருந்து. * பாலக்காடு. ஒரு குக்கிராமம். ஏராளமான மரங்களும், கோழிகள் அடைகிற கூண்டும், சில மாடுகள் அடங்கிய தொழுவத்தையும் உள்ளடக்கிய தோட்டத்தின் நடுவே ஒரு மச்சுவீடு. அங்கே முப்பத்தி மூன்று வருடங்களுக்குமுன் ஒரு புதன்கிழமை காலையில் ஒரு குழந்தை பிறந்தபோது (நான்தான்) "என்ட கொச்சு மோனே" என்று ஈன்றபொழுதில் பெரிதுவர்த்தவர்கள், இவன் பிற்காலத்தில் தமிழில் சிறுகதையெல்லாம் எழுதி, அப்புறம் தமிழ் வலைப்பதிவு எல்லாம் ஆரம்பிப்பான் என்று யோசித்திருக்கக்கூட மாட்டார்கள். வருடங்களின் சுழற்சியில் சிந்தனைகளும், சிந்திக்கிற மொழியும் மாறிவிட்டன. எந்த மொழியில் வளர்ந்தாயோ அது தாய் மொழி. எந்த இடம் உனக்கு சோறு போட்டதோ அது சொந்த பூமி என்றாகிவிட்டது. சரி அதை விடுங்கள். இதை இப்போது நினைவுகூர்வதற்குக் காரணம் இந்த வருடமும் என் பிறந்தநாள் வந்துவிட்டதுதான். அப்போதெல்லாம் ஒவ்வொரு வருடமும் பிறந்தநாள் வரும்போது நிறைய எதிர்பார்ப்புகளை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு காத்திருப்பேன். நிறைய பேர் வாழ்த்துக்கள் சொல்வார்கள். நிறைய பரிசுப்பொருள்கள் வரும். புதுசாய் உடை அணிந்து கொள்ளலாம். முக்கியமாய் ஸ்பெஷலான ஆட்கள் தரும் ஸ்பெஷலான பரிசுகளுக்காய் மனசு தவம் கிடக்கும். ஸ்பெஷல் என்றால் அப்படி ஒரு ஸ்பெஷல். நிறைய பிறந்தநாட்களில் சந்தோஷத்தில் மனசும் விழிகளும் கலங்கியிருக்கின்றன. பிறகு நண்பர்களுடன் பர்த்டே ட்ரீட்டுக்குப் போகிற இடங்களும், கழிகிற பொழுதுகளும் அடுத்த பிறந்தநாள்வரை ஞாபகம் இருக்கும். அதே போலத்தான் நான் விரும்பி அடுத்தவர் பிறந்தநாளைக் கொண்டாடுவதும். ஒவ்வொரு வருடமும் என் பிறந்த தேதி நெருங்க நெருங்க எனக்குப் பிடித்த, என்னைப் பிடித்த நண்பர்கள் உறவினர்கள் முதுகுப்புறம் எதையோ மறைத்துக்கொண்டு (பரிசுப்பொருட்கள்தான் வேறென்ன?) வட்டமாய் என்னை நெருங்குகிற மாதிரி கற்பனை வரும். இனிமை கலந்த நெர்வஸ் ஒன்று முதுகுத் தண்டில் ஓடும். என் பிறந்த நாளை மறந்துவிட்ட ஒரு நண்பனை ஏன்டா ஒரு விஷ்கூட பண்ணல என்று கன்னா பின்னாவென்று திட்டியிருக்கிறேன். சிலோன் ரேடியோவில் "பிறந்த நாள்.... இன்று பிற....ந்...த நாள்!" என்று பாட்டு போட்டு யாருக்காவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்வதைக் கேட்கும்போது ஆஹா! என்றிருக்கும். தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, அம்மும்மா, அக்கக்கா என்று வாழ்த்தியவர்கள் லிஸ்ட்டை நீளமாய்ப் படிப்பதைக் கேட்கும்போது ஒருத்தன் பிறந்ததற்கு இத்தனை பேர் சந்தோஷப்படுகிறார்களே என்று வியப்பாக இருக்கும். வாழ்வின் நிறைய வருடங்கள் அதற்குள்ளாகக் கடந்துவிட்டன என்று ஏதோ ஒரு நாள் திடீரென்று ஏனோ உணர்ந்துவிட்டேன் போலும். பிறகு பி.நாள் கொண்டாடுவதன் சுவாரஸ்யம் லேசாய் குறைந்துபோய்விட்டது. நான் இன்னும் என்னைச் சின்னப்பையனாதான் ஃபீல் பண்றேன் என்று சொல்கிற பொய், கண்ணாடியைப் பார்க்கும்போது உடைந்து சிதறிவிடுகிறது. (இதைப்படிக்கிற அன்பர்கள் உடனே என்னை ஒரு குடுகுடு கிழவனாக கற்பனை செய்து ஏமாந்து போகாதீர்கள் என்று எச்சரிக்கிறேன்). எனக்கொரு மகன் பிறந்தபிறகு சென்டர் ஆஃப் அட்ராக்ஷன் மாறியதில் என் பிறந்தநாளின் முக்கியத்துவம் பங்கு மார்க்கெட் மாதிரி சரிந்தது. நல்லது! அதையேதான் நானும் எதிர்பார்த்தேன். பெரிய வட்ட கேக். நடுவே நம்பர் கேண்டில் வைத்து குவிந்த வாயால் குழந்தை சுடரை ஊதிக் கைதட்டுகிற குதூகல தருணங்களில் முடிவு செய்துகொண்டேன். இனி நான் என் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை. இனியென்ன? இதோ இப்போது வரப்போகிற பி.நாள் தானாகக் கடந்துபோகட்டும். அப்படியும் நினைவு வைத்துக்கொண்டு வாழ்த்துபவர்களுக்கு சின்னதாய் ஒரு தேங்க்யூ சொல்லி முடித்துவிடவேண்டும். ட்ரீட் என்று நிர்பந்தித்தால் நான் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை என்று அறிவத்துவிட்டு ஒரு காஃபி பைட்டோ, காஃபியோ வாங்கிக்கொடுத்துவிட்டு நைஸாய் கழன்று கொள்ள வேண்டும். எல்லா நாளையும்போல இது இன்னொருநாள் அவ்வளவே! இதோ என் இருப்பை ஞாபகப்படுத்தும் இந்த வருடத்திற்கான பிறந்ததினம் வந்துவிட்டது. வயது ஏற ஏற டென்ஷனும், டெக்னாலஜியும் அதிகமாகிவிட்டது பாருங்கள். காலை 5.30க்கு 'மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தி டே!' என்று SMS வருகிறது. தொடர்ந்து பல இப்படியே. பிறகு தட்டப்பட்ட கதவைத்திறந்தால் நண்பர்கள். கையில் கிஃப்ட் பேக். மலங்க முழித்துநின்ற என்னைப்பார்த்து "வாழ்த்துக்கள்! என்றார்கள். 'இந்த சிகப்பு டி-சர்ட் உனக்கு எடுப்பாக இருக்குமென்று வாங்கினேன்.' நண்பன் சொல்கிறான். பிரித்த கிஃப்ட் கவர்களிலிருந்து புத்தகங்களை உருவி எடுக்கிறேன். "ப்ஷீர் வரலாறு". அப்புறம் "முகவீதி" - ராஜசுந்தரராஜன் கவிதைகள். நான் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த புத்தகங்கள். நன்றி. நன்றி. நன்றி! டெலிபோன் அடிக்கிறது. எடுத்தால் மறுமுனையில் கோயமுத்தூரிலிருந்து ராகம் போட்டு பையனின் பாட்டு.. "ஹாப்பி பர்த்டே டூ யூ". லேசாய் நெகிழ்கிறது. "கே.பி.என் பார்சல் சர்வீஸ்ல உனக்கு ஒரு பார்சல் கிப்ஃட் அனுப்பியிருக்கேன்.. மறக்காமப் போய் வாங்கிக்கோ" என்கிறாள் மனைவி. பிறகு ஆஃபீஸ் கிளம்புகிற வரை நிறைய போன்கள். நிறைய வாழ்த்துக்கள். கடவுளே! என்னை மீறி இவையெல்லாம் நிகழ்ந்துவிட்டது. சரி! அலுவலகத்திலாவது யாருக்கும் இதைப் பற்றி நான் ப்ரஸ்தாபிக்காமல் இருத்தல் நலம். அங்கே யாருக்கும் இது தெரியாது. அலுவலகத்திற்கு நண்பன் கொடுத்த டி-சர்ட்டைப் போட்டுக்கொண்டு நல்ல பிள்ளையாய் போய் தேமே என்று வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டேன். அலுவலக முகவரிக்கு குரியரில் வந்த க்ரீட்டிங் கார்டுகளை மற்றவர்கள் பார்க்காமல் பிரித்துப் பார்த்து பின் ஒளித்தும் வைத்துவிட்டேன். மின் அஞ்சலில் வந்த ஒரு சில வாழ்த்துக்களை ப்ரவுசர் மினிமைஸ் பண்ணிவைத்துப் படித்தேன். பிறகு அலுவலக போனிலும் செல் போனிலும் வந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். எல்லாவற்றிற்கும் மற்றவர்கள் கேட்காமல் குரலைத் தணித்துப் பேசிச் சமாளித்தேன். போதாக்குறைக்கு "Airtel wishes a very happy birthday" என்று செல்போன் ப்ரொவைடரின் ஆட்டோமேட்டட் வாய்ஸ் வேறு. அப்படியும் ஒருத்தன் ஆஃபிஸில் கேட்டுவிட்டான். "இன்னைக்கு என்ன ரொம்ப உற்சாகமா இருக்கீங்க?". நான் சிரித்து மழுப்பினேன். ஹா! எப்படியோ நாலு மணி வரையிலும் இப்படியே ஓட்டியாயிற்று! பிறகு 123greetings.com-ல் இருந்து ஒரு வாழ்த்து வந்தது பாருங்கள்! யாருக்கும் தெரியாமல் லேசாய் அதைத் திறந்தபோது.. அடப்பாவி அதில்.. மிடி ஃபைலாக அதில் ம்யூசிக் வேறு இணைத்து அனுப்பியிருக்கிறான். டி...டி... டீ....டி. டீ... டீ! என்று ஹேப்பி பர்த்டே ட்யூன். என் ஸ்பீக்கர் வால்யூமை நான் ஏன் இத்தனை வைத்துத் தொலைத்தேன்? அருகில் இருந்தவன் சடாரென்று திரும்பினான். என்னது? என்றான். நான் வால்யூமை சடாலென்று குறைப்பதற்குள் புரிந்து கொண்டுவிட்டான். "ஷிட்.. மறந்தே போயிட்டேன்.." என்று அவன் அருகில் வந்து கைகுலுக்க... நிமிடத்தில் என்னைச்சுற்றிக் கூட்டம். 'ஆனாலும் நீ இத்தனை கமுக்கமாய் இருக்கக்கூடாது' என்றார்கள். ட்ரீட்க்கு எங்கே போகலாம் என்று பேரம் நடந்தது. முடிவாய் திருமயிலை அடையாறு ஆனந்த பவனில் என் பிறந்த நாள் ட்ரீட் இனிதே முடிந்தது. ஆக இந்த வருடம் இந்த நாள் அபாரமாய்க் கழிந்துவிட்டது. இந்த நாளின் மகிழ்ச்சி வயதொன்று ஏறிவிட்ட சோகத்தை தற்காலிகமாய் மழுங்கடித்துவிட்டதுதான் 'அதெல்லாம் சரிதான். இந்த தினத்தை நிறைவானதாக ஆக்கும் பொருட்டு அடுத்தவேளை சோற்றுக்கு வழியில்லாத, உன்னிலும் மிக ஏழ்மையான யாருக்கேனும்.. பத்து ரூபாய்க்கோ, ஒரு பிடி அரிசிக்கோ ஏதாவது வழிவகை செய்து உதவினாயா? அப்படியொன்றை நினைத்தாவது பார்த்தாயா?' எதிர்பாராத (பார்த்த?) வகையில் இத்தனை சிறப்பாய் கழிந்த நாளின் இறுதியில் எழுந்த இந்தக் கேள்வி சுருக்கென்று ஆழமாய்த் தைக்கிறது மனதை. ஹேப்பி பர்த்டே டு மி! விஜிகள் மீச்சாதான் அந்தப் பெண்ணை எனக்கு முதன் முதலில் காட்டினான். நான் ஸ்தம்பித்து நின்றுவிட்டேன். நான் வாழ்க்கையில் முதன் முதலாகப் பார்க்கிற அழகான பெண். அப்போது எனக்கு வயது சுமார் 20 இருக்கலாம். நான் முதன் முதலில் அவளைப் பார்க்கும்போது எப்படியிருந்தாள் என்று கொஞ்சமாய் வர்ணித்துவிடுகிறேன். மஞ்சள் புடவை. கையில் வெயிலுக்குப் பூப்போட்ட குடை. இன்னொரு கையில் சுருட்டப்பட்ட வெள்ளைத் தாள். அவள் நல்ல நிறம். மையிட்ட அழகான கண்கள். எடுப்பாய் திருத்தப்பட்ட புருவங்கள். ரோஸ் நிறத்தில் உதடுகள். ரூஜ் உபயத்தில் சிவந்த கன்னக் கதுப்பு. நடையில் இயற்கையாய் நளினம். நீள ஜடை. எங்கள் காலனியிலிருந்து டைப் ரைட்டிங் பழக டெய்லி பதினொரு மணிக்குப் இப்படிப் போவாள் என்றான் மீச்சு. அழகு என்றால் அப்படியொரு அழகு. அவள் கடந்தவுடன் ரோட்டில் அவள் நடந்த புழுதியைத் மீச்சா தொட்டுக் கும்பிட்டுக் கொண்டான். என்னா பிகருடா என்று அங்கலாய்த்தான். தினம் பதினோரு மணிக்கு இந்த இடத்தில் ஆஜராகிவிடுவானாம். நான் மஞ்சள் புடவை கண்ணிலிருந்து மறைகிற வரை பார்த்துக்கொண்டிருந்தேன். மீச்சா தவிர அந்தக் காலனியின் இன்னபிற இளைஞர்களும் அந்தப் பெண்ணிற்கு பெரிய அளவில் ரசிகர் மன்றங்கள் வைத்திருந்தார்கள் என்று மெல்ல மீச்சா மூலம் தெரிய வந்தது. அவள் டைப் ரைட்டிங் போகும்போது, திரும்பி வரும்போது என தினம் இரண்டு தடவை அவன் ஜென்மம் சாபல்யமடைந்துவிடுவதாகச் சொன்னான் அவன். எனக்கே அந்தக் கணம் அப்படித்தான் இருந்தது. சினிமா டைரக்டர் யாராவது பார்த்தால் கேள்வி கேட்காமல் கொத்திக் கொண்டு போய்விடுவார்கள். அவ்வளவு செளந்தர்யமாக இருந்தாள். கண்ணில் அறைகிற அழகு என்று சொல்லலாம். மேலும் ஓரிரு தடவைகள் மீச்சாவுடன் நின்றிருக்கும்பேது அவள் போவதைப் பார்க்க நேரிட்டபோது அவள் அழகு பற்றி ஓரிரு வார்த்தைகளில் நானும்கூட சிலாகித்ததுண்டு. ஈதிப்படி இருக்க நாங்கள் வீடு மாற்றத் தீர்மானித்தோம். அப்பா நிறைய இடம் தேடி கடைசியில் ஒரு வீட்டை முடிவு பண்ணினார். ஒரு சுபயோக சுபதினத்தில் பால் காய்ச்சி புது வீட்டுக்குக் குடிபோனாம். மாடியில் ஒன்றும் கீழே இரண்டுமாக தனி காம்பவுண்டுக்குள் போர்ஷன்கள் இருந்தன. குடிபோனதற்கு அடுத்தநாள் காலை திண்ணையில் நின்று சுற்றுப் புறத்தை பார்வையால் அளவெடுத்துக் கொண்டிருந்தேன். மாடியிலிருந்து அந்தப் பெண் நைட்டியில் இறங்கிவந்தாள். பார்த்ததும் எனக்குள் மத்தாப்பு நட்சத்திரங்கள். "நிங்ஙளானோ இவிடெ வந்நிரிக்குந்நது?" என்றாள் புன்னகைத்தபடி. நான் என்னைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். அடுத்த நொடி தகவல் பரவிவிட்டது. என்னைக் குசலம் விசாரிக்க நண்பர்களெல்லாம் அடிக்கடி வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள். உனக்கு எங்கயோ மச்சம்டா என்றான் மீச்சா. ரமேஷ், குண்ஸ் எல்லாம் என் மூலம் அந்தப் பெண் பற்றி இன்னபிற தகவல்களைப் பெற்று அறிவு அபிவிருத்தி அடைந்தார்கள். அவள் பெயர் விஜி என்று தெரிந்தது. அவளுக்கு கல்யாணமாகி புருஷனோடு தனியே மாடியில் வசிக்கிறாள். தினம் ஹீரோ ஹோண்டாவில் வேலைக்குப் போகிற அவள் புருஷன் அவளைவிட கொஞ்சம் சுமாராகத்தான் இருந்தான். ரெண்டு பேருக்கும் ஊர் கேரளாவாம். ரெண்டுபேரும் வீட்டு சம்மதத்துடன் லவ் மேரேஜ் பண்ணிக்கொண்டவர்களாம். விஜி என் அம்மாவை "சேச்சி" என்றழைத்து என் வீட்டுக்குள்ளேயே அடிக்கடி வளையவர ஆரம்பித்தாள். எங்கள் குடும்பத்துடன் நன்றாக ஒட்டிக்கொண்டும் விட்டாள். அவள் குடும்ப ஆல்பம் எல்லாம் எடுத்துவந்து காட்டினாள். சுபாவத்திலேயும், பழகுவதிலும் ரொம்ப நல்ல பெண். என்னிடம் சகஜமாய் பேச ஆரம்பித்தாள். நண்பர்கள் காதில் புகைவிட்டார்கள். "நிங்ஙளுடெ ப்ரெண்ட் எந்தினா என்னெ வெறுதெ மொறச்சு நோக்குந்நது?" என்றாள் குண்சைக் காட்டி. அவன் நார்மலான பார்வையே அப்படித்தான் என்றேன். அப்புறம் பிரசவத்துக்காக ஒரு ஆறுமாசம் பிறந்தவீடு போய்விட்டாள். புருஷனும் ஹீரோ ஹோண்டாவும் மட்டும் இங்கேயே இருந்தார்கள். விஜி திரும்பி வரும்போது அவளை மாதிரியே அழகான குழந்தையுடன் வந்தாள். நல்ல கொழுக் மொழுக்கென்று இருந்தது. அப்புறம் அவர்கள் குடும்பத்தில் கூடுதல் சந்தோஷம் கலகலக்க ஆரம்பித்தது. அப்பாவுக்கு மறுபடி மாற்றலாகி நாங்கள் கோவைக்கு போகவேண்டியதாயிற்று. கிளம்புகிற நேரம் விஜி, கணவன் மற்றும் குழந்தையுடன் ஊருக்குப் போயிருந்தாள். ஆகவே அவர்களிடம் சொல்லிக்கொண்டு போகமுடியவில்லை. கோவை வந்து ஒரு மாதிரி செட்டில் ஆகி பழைய ஞாபகத்தில் ஒருநாள் பழைய வீட்டுக்குப் போனபோது மீச்சா தகவல் சொன்னான். விஜி அவளது ஊரில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டாளாம். என்ன நடந்ததென்று தெரியவில்லையென்றான் சோகமாய். நான் அதிர்ந்தேன். அந்தச் செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. ஏன் இப்படியொரு திடீர் முடிவு? அதுவும் அத்தனை பிஞ்சுக் கைக்குழந்தையை தனியாய் தவிக்கவிட்டு...என்ன காரணம் என்று மனதைக் குடைந்த கேள்விகளுக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை. இதற்குமுன் நாங்கள் குடியிருந்த ஊரிலும் எதிர் வீட்டில் இதே மாதிரி ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு மாமியார் கொடுமை, புருஷன்காரனிடம் அடி என்று தினசரி பிரச்சனைகள் இருந்தன. அப்போது நான் இன்னும் ரொம்பச் சின்னப் பையன். என்றாலும் எல்லாக் காட்சிகளும் இன்னும் எனக்கு தெள்ளத் தெளிவாய் நினைவிலிருக்கின்றன. ’என்னக்கா பண்ணிட்டு இருக்கீங்க’ என்று வாசற்படியில் நிற்கிற அம்மாவிடமும் பாட்டியிடமும் கேஷூவலாக கேட்டபடி வீட்டுக்குள் வருவாள். உள்ளே வந்த மறுநிமிடம் கதவுக்குப் பின் சாய்ந்துகொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதபடி தன் துக்கத்தையெல்லாம் அம்மாவிடம் கொட்டுவாள். அம்மாவும் பாட்டியும் அவளுக்கு ஆறுதல் சொல்வார்கள். அந்த ஊரிலிருந்தும் அப்பாவுக்கு மாற்றல் ஆகி வேறு ஊர் போனோம். ஆறு மாசம் கழித்து யாரோ சொன்னார்கள். அந்தப் பெண் அவள் வீட்டுக்குள்ளேயே அதிகாலை நாலுமணிக்கு தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டாள் என்று. எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. அவள் பெயரும்கூட விஜிதான். நடுநிசிப் பேய்கள் எங்கள் பாட்டி கதை சொல்லி வளர்ந்தவரா இல்லை கதை சொல்லி வளர்க்கப்பட்டவரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் பாட்டி ஒரு நல்ல கதை சொல்லி. என் கதைவிடும் திறன்கூட பாட்டி தன் டி.என்.ஏ குணாம்சங்களை எனக்குத் தாரை வார்த்துக்கொடுத்ததுதானோ என்றொரு சந்தேகமுண்டு. பாட்டி சொல்கிற கதைகளில் தொண்ணூற்றைந்து சதவீதம் அட்வென்சர், திரில்லர், ஹார்ரர் ரகமாகத்தான் இருக்கும். கேட்கிறவர்கள் அதிகபட்சம் சின்னப் பையன், பொண்ணுங்களாக இருந்ததால் நெஞ்சுறைந்து கேட்டுக் கிடப்பார்கள். பி.டி. சாமி ரேஞ்ஜில் அமானுஷ்யமான கதைகள் நிறைய சொல்வார். ஊரில் நடந்தது. அக்கம்பக்கத்தில் நடந்தது என்று விழிகள் விரிய கதைசொல்லி பயமுறுத்துவார். கேட்டால் இரண்டு நாட்களுக்குத் தூக்கம் வராமல் புரள வேண்டியிருக்கும். மோயாறு மின்சார வாரிய க்வார்டஸில் இருந்தபோது நிகழ்ந்தவை என்று சிலது சொல்வார். அப்போது நான் ஒரு வயசுக் குழந்தையாம். மோயாறு - மலைமேல் அமைந்திருக்கிற ஒரு அடர் காடு. வனத்துறை மற்றும் மின்சார வாரிய ஆட்கள் மட்டுமே புழங்குகிற இடம். EB க்வார்டஸில் சொற்பமாய் வீடுகள். எல்லோரும் சாயங்காலம் ஏழு மணிக்கெல்லாம் கதவைச் சாத்தி விடுவார்கள் என்று பாட்டி சொல்வார். காரணம் காட்டு யானைகள். கூட்டமாய் வீட்டு வாசலுக்கு வந்து முன்புற தோட்டத்தில் இருக்கிற வாழை மரங்களை தினசரி துவம்சம் செய்துவிட்டுப் போய்விடுமாம். ஜன்னல் கதவை நூல் இடைவெளியில் திறந்து வைத்து இருட்டுக்குள் யானைகளைப் பார்த்துக்கொண்டிருப்பார்களாம். அவைகள் கண்ணில் பட்டால் வாழை மரங்களுக்கு ஏற்படுகிற கதிதான் நமக்கும் என்றார் பாட்டி. ஒரு முறை அப்பா நண்பர்கள் சிலருடன் எங்கேயோ போய்விட்டு வருவதற்கு லேட்டாக, திரும்பி வரும்போது இருளில் சடசடவென சப்தம் கேட்டதாம். ரொம்ப அருகில் ஒரு பெரிய காட்டு யானை மூத்திரம் பேய்ந்து கொண்டிருக்கிற சப்தம்தானாம் அது. அங்கிருந்து பிடித்த ஓட்டம் வீட்டுக்கு வந்துதான் நின்றார்களாம். ஒரு வைல்ட் லைஃப் எக்ஸ்பெர்ட் மாதிரி மேலும் சில கதிகலக்குகிற விஷயங்கள் சொல்வார். யானை தவிர இருட்டினதும் திருப்பதி லட்டு சைஸுக்கு இருக்கும் வண்டுகள் டொக் டொக் என்று ராப்பூராவும் கதவில் மோதிக்கொண்டே இருந்தது, ஒரு சிறுத்தை தன் இரு குட்டிகளுடன் வீட்டுக் கூரையில் உட்கார்ந்து கொண்டு கர் கர் என்று விடிகாலையில் கத்திக்கொண்டிருந்தது என்று நிறைய சொல்வார். நான் இதையெல்லாம் பின்னாளில் கதைகளாய்க் கேட்கும்போது ஆறாங்கிளாஸோ என்னமோ படித்துக்கொண்டிருந்தேன். மலையிலிருந்து இறங்கி டவுனுக்கு வந்த பிறகு பாட்டியின் கதைகளில் மாறுதல் வந்துவிட்டன. திடீரென்று ஒரு நாள் காலையில் எழுந்ததும், இரவு ஏதோ ஒரு அமுக்கான் தன் கழுத்தைப் பிடித்து மூச்சுத் திணறும்வரை வெகு நேரம் அமுக்கிக்கொண்டிருந்துவிட்டு பின் போய்விட்டதாக சொன்னார். இன்னொரு நாள் எதற்கோ வீட்டுக்குள்ளிருந்து வெளியில் வந்தபோது வானத்தில் ஒரு தேர் வந்து நின்றதாகவும், அதிலிருந்து தேவர்கள் மாதிரி இருவர் பாட்டியை தம்முடன் வருமாறு அழைத்ததாகவும், பிறகு என்ன தோன்றியதோ சட்டென்று தேரைத் திருப்பிக்கொண்டு சர்ரென்று போய்விட்டதாகவும் சொன்னார். அவர்கள் போனபிறகு வானத்தில் கழுத்தில் மட்டும் வெள்ளை நிறமிருக்கும் பருந்து வட்டமடித்துப் போனதாகவும் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார். அன்றைக்குக் காலை நாலு வீடு தள்ளி ஒரு பாட்டி பரலோக பதவியடைந்துவிட்டதை தன் கதையின் ஒரு அத்தியாயமாய் சேர்ந்துகொண்டு அதற்கு தெளிவுரையும் அளித்தார். தன்னைக் கூப்பிட வந்த தேர் அந்தப் பாட்டியை அழைத்துக்கொண்டு போய்விட்டதாம். எதைச் சொன்னாலும் அப்படியே நம்புகிற வயதல்லவா? கேட்டதும் எங்களுக்கு அடிவயிற்றுத் திகில் அதிகமாகிவிட்டது. பக்கத்துவீட்டில் லலிதா என்று ஒரு பெண் இருந்ததாகவும் அது ஒருநாள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதன் ஆவி அந்த வீட்டுக்குள்ளேயே அலைவதாகவும் சொல்லி ஒருநாள் பயமுறுத்திவிட்டார். நான் இரவில் எழுந்து பாத்ரூம் போவதைக்கூட நிறுத்திவிட்டேன். அவள் தினமும் நடுநிசியில் பின்புற சந்தில் இருக்கிற கதவைத் தட்டுவதாகவும், யாரும் திறக்காவிட்டால் லேசாய் தேம்பி அழுகிற சப்தமும் கேட்கும் என்றார். மல்லிகைப் பூ வாசம் வரும். ஜல் ஜல் என்று கொலுசொலி எல்லாம் கேட்கும் என்பார். பாட்டி இதையெல்லாம் சும்மா மேம்போக்காய் சொல்லிவிட்டுப் போக மாட்டார். ஒரு சினிமாத் தயாரிப்பாளரிடம் ஒரு புது இயக்குநர் எப்படி கதை சொல்வாரோ அப்படி சொல்வார். கைகாலெல்லாம் ஆட்டி, விழிகள் விரித்து முக பாவங்களோடு. கேட்கிற பொடிசுகளுக்கு குலை நடுங்கிவிடும். எனக்கு ஒருநாள் நடுநிசியில் விழிப்பு வந்தது. மணி பன்னிரண்டரை இருக்கும். பாட்டி சொன்னது சட்டென்று ஞாபகம் வந்தது. உற்றுக் கேட்டபோது பக்கத்துவீட்டில் கதவைத் தட்டுகிற சப்தம் கேட்டது. எனக்கு உடலெங்கும் ஒரு முறை சிலிர்த்து அடங்கிவிட்டது. போர்வையை சர்ரென்று இழுத்து தலையோடு முக்காடிட்டுக் கொண்டேன். கொலுசு சப்தத்தைக் காதுகள் தேடின. மல்லிகைப் பூ வாசம் வருகிறதாவென பார்த்தேன். கொஞ்ச நேரத்தில் கதவு தட்டல் சப்தம் பலமாகிவிட்டது. பிறகு சட்டென்று நின்றுவிட்டது. பேய் போய்விட்டது போலும். நான் பிறகு இரவு முழுவதும் தூங்காமல் நடுங்கிக் கிடந்தேன். அதன்பிறகும் ஒரு சில நாட்களில் அந்தச் சப்தத்தை மறுபடி மறுபடி கேட்டிருக்கிறேன். பாட்டி இதுமாதிரி அதற்கப்புறம் சொன்ன நிறைய கதைகள் ராஜேஷ்குமாரின் "உலராத ரத்தம்" சுஜாதாவின் "கொலையுதிர் காலம்". இந்துமதியின் "ஒரு நிமிடம் தா ஒரு கொலை செய்கிறேன்" ஆகியவைகளை மிஞ்சுகிற திகில் கதைகளாக இருந்தன. பிறகு ஒருநாள் தெரிந்துவிட்டது. டெக்ஸ்டைல் மில்கள் நிறைந்த ஊர் அது. பகல் மூன்று மணிக்கு மில்லுக்குப் போய்விட்டு நடுநிசி பன்னிரண்டு மணிக்குத் வீட்டுக்குத் திரும்பும் பணியாளர்களின் நடுநிசிக் கதவு தட்டல்தான் நான் தினசரி கேட்டுக்கொண்டிருந்தது. நான் வளர்ந்தபிறகு என் வீடு இருக்கிற காலனிக்குப் போகிற குறுக்கு வழியான இருளடைந்த சோளக்காட்டுக்குள் பென் டார்ச் துணையுடன் தனியாக நடக்கும்போது பாட்டி சொன்ன பேய்க்கதைகள் ஞாபகத்துக்கு வரும். சிரித்துக்கொண்டே நடப்பேன். ஆனால் அந்த ஒற்றை மரத்தைத் தாண்டி நடக்கும்போது மட்டும் கொஞ்சம் அமானுஷ்யமாக இருக்கும். என் நண்பன் சதீஷ் எப்போது வீட்டுக்கு வந்தாலும் பேய்க்கத சொல்லுங்க பாட்டி என்று விரும்பிக் கேட்டு உட்கார்ந்துவிடுவான். ஜாலியாய் சிரித்துக்கேட்டு பாட்டியை கொஞ்சம் கிண்டல் பண்ணி விளையாடிவிட்டுப் போய்விடுவான். பாட்டி இப்போது இல்லை. பாட்டி சொன்ன கதைகள் அப்படியே நெஞ்சுக்குள் பத்திரமாய் அதே திகில் வாசனைகளோடு இருக்கின்றன. இப்போதுகூட எங்கள் அபார்ட்மெண்டில் நடுநிசியில் ஏதோ ஒரு வீட்டில் அடிக்கடி கதவு பலமாய் தட்டப்படும் சப்தம் கேட்டது. ஜல் ஜல் என்று கொலுசு சப்தம்கூட கேட்கிறது. பாட்டியை நினைத்துக்கொண்டு காலையில் மெதுவாய் விசாரித்தபோது "கால் சென்டர்ல வேலைங்க. நைட்டு வேன்ல கொணாந்து ட்ராப் பண்ணிருவாங்க" என தகவல் கிடைத்தது. சுட்டது யார்? மேட்டுப் பாளையம் மெயின் ரோட்டிலிருந்து ராமசாமிக் கவுண்டர் தோட்டம் வழியாக நாங்கள் முன்பு குடியிருந்த திருமுருகன் நகருக்குக் குறுக்கு வழி இருந்தது. பொது வழி அல்ல என்று போர்டு போட்டிருந்தாலும் நடக்கிறவர்கள் நடந்துகொண்டுதான் இருந்தார்கள். முதலில் பரந்து விரிந்த ஒரு ரோஜாத் தோட்டம் இருக்கும். கோவை பூமார்க்கெட்டுக்கு அங்கிருந்து நிறைய சப்ளை உண்டு. அதைத் தாண்டி நடந்தால் அப்புறம் கவுண்டர் வீடும் அதையொட்டின வாழைத் தோட்டமும் இருக்கும், அங்கிருந்து ஒரு தென்னந்தோப்பின் நிழல் சூழ்ந்த மண்பாதை ஆரம்பமாகும். அதெல்லாம் நான் நிறைய ரசித்து ரசித்து நடந்த வழிகள். அதிகம் ஆட்கள் நடமாட்டமற்ற தனிமையில் இத்தனை தூரம் கடந்து வந்தால் பிறகு அந்தப்பக்கம் இருக்கிற காலனியை தன் அடர்த்தியால் மறைக்கிற ஆளுயர சோளக்காடு. அதற்குள் புகுந்து நடக்க வேண்டும். சோளம் நன்றாய் வளர்ந்திருந்தால் ஒரு ஆள் நடக்கிற வழி மட்டுமே இருக்கும். இரவானால் அந்த வழியே நடப்பதானால் கொஞ்சம் ரிஸ்க்தான். துளி வெளிச்சம்கூட இல்லாத இருளடடைந்த அந்தச் சோளக்காட்டின் நடுவேயான ஒற்றையடிப்பாதையில், காலடியில் ஊரும் பாம்புகளை பயத்துடன் தவிர்த்து நடக்கையில் எதற்காக அப்பா இப்படியொரு காலனியில் வீடு பார்த்தார் என்று கோபமாய் வரும். வழியில் நடுவில் ஒரு பெரிய ஒற்றை வேப்பமரமும், அதனடியில் ஒரு பாம்புப் புற்றும் உண்டு. இப்படி ஒரு பெரிய நகரத்துக்கு நடுவில் இந்த கிராமிய சூழ்நிலை தாண்டி திடீரென்று ஒரு காலனி விரிவது கொஞ்சம் வியப்பாய்தான் இருக்கும். தள்ளித் தள்ளி தனித்தனி வீடுகள் கொண்ட காலனி. அது ஒரு நல்ல வீடு. அப்பாவின் ட்ரான்ஸ்ஃபர் பந்தாடல்களுக்கு நடுவில் நாங்கள் இருக்க நேரிட்ட இன்னொரு ஜாகை. எனக்கு மிகவும் பிடித்த வீடு அது. முன்னால் வட்டவடிவில் ஒரு சிட் அவுட், சின்ன தோட்டத்துடன் கொஞ்சம் அழகாகத்தான் இருக்கும். வீட்டின் பின்புறமும் உபரி ரம்மியமாய் கொஞ்சம் தென்னந்தோப்புகள், அதன் பின் புலத்தில் நீல நிறத்தில் ஒரு குட்டி மலைத்தொடர். அன்றைக்கு எதற்கோ வேலைக்கு லீவு போட்டு வீட்டில் இருந்தேன். ஒரு நல்ல வெயிலடிக்கிற பகல் பொழுது அது. எதேச்சையாக வீட்டு ஜன்னலின் வழியே பார்வை ஓட்டியபோது அவர்களைக் பார்த்தேன். இரண்டு பேர் என் வீட்டுக்கு எதிரில் நின்றிருந்தார்கள். அவர்கள் என் வீட்டைச் சுட்டிக்காட்டி என்னவோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் வெகுநேரம் அவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தேன். யார் அவர்கள்? என்ன பேசுகிறார்கள்? என்று புதிராய் இருந்தது. அதில் ஒரு ஆள் லேசாய் வீட்டருகில் வந்து சுற்றுமுற்றும் பார்வையால் அளந்துவிட்டு பின் மறுபடி இன்னொரு ஆளிடம் போய் என்னவோ சொல்வதைப் பார்த்தேன். எனக்கு லேசாய் சந்தேகமாய் இருந்தது. பின்னர் இருவருமாக மேலும் நெருங்கி மறுபடி வீட்டை நோட்டம் பார்க்க ஆரம்பித்தார்கள். நான் இருக்கக் கொள்ளாமல் டக்கென்று கதவு திறந்து வெளியே வந்தேன். என்னைப் பார்த்ததும் அவர்கள் மையமாய் சிரித்தார்கள். நான் சிரிக்காமல், ’யார் நீங்க? என்ன வேணும்?’ என்றேன். "விஜய் டி.விக்காக ஒரு சீரியல் ஷூட்டிங் பக்கத்துல நடந்துட்டிருக்கு தம்பி. நாங்கதான் அதுக்கு ப்ரொடியூசர்ஸ். உங்க வீடு அமைப்பு நல்லா இருக்கு. இங்க ரெண்டு மூணு ஷாட்ஸ் எடுக்கலாமான்னு டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம்." என்றார் ஒருவர். ’ஓஹோ’ என்றேன் நான். அவர்கள் வீட்டுக்கு எதிரில் நின்று உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது சந்தேகம் வரவழைத்ததைச் சொன்னேன். சிரித்தார்கள். "சொல்லுங்க தம்பி ரெண்டு மூணு சீன் இங்க எடுத்துக்கலாமா?" என்றார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியாவிட்டாலும் கொஞ்சம் ஆர்வமாய்த்தான் இருந்தது. 'தேவர் மகன்' ஷூட்டிங் யூனிட்டுடன் பொள்ளாச்சி சூலக்கல், ஊத்துக்குளி வட்டார படப்பிடிப்பிலெல்லாம் மூன்று நாட்கள் அலைந்தது ஞாபகம் வந்தது. ஆஹா இப்போது என் வீடே படப்பிடிப்புத்தளமாகிவிட்ட பாக்கியம் கிடைத்துவிட்டது. இதோ நான் அனுமதித்தால் விஜய் டி.வி.யில் என் வீடு தெரியும். எனக்கு பயங்கர திரில்லாகிவிட்டது. அப்பா ஆபிஸ் போயிருக்கிறார். அம்மாவிடம் ஓடி விஷயத்தைச் சொன்னேன். அம்மாவுக்கு அது பற்றியெல்லாம் தெளிவான ஞானம் இருக்கவில்லை. என்னமோ நம்மளை தொந்தரவு பண்ணாம நடத்தினாங்கன்னா சரி என்றாள். நான் வெளியில் வந்து "ஷாட்ஸ் எடுத்துக்கோங்க ஆனா வீட்டுக்குள்ள எல்லாம் வேண்டாம்" என்றேன் அவர்களிடம். ஒத்துக்கொண்டார்கள். தோ வந்துர்றோம் என்று மறைந்தார்கள். திரும்பி வரும்போது கேமரா, ரிஃப்ளக்டர், லைட்டுகள் சகிதம் ஒரு படையே வந்தது. நடுவில் நடுநாயகமாய் ஆறேழு வீடுகள் தள்ளி குடியிருக்கிற பாலன் குட்டி பளபளவென்று நடந்து வருகிறார். அவர் முகத்தில் ரோஸ் பவுடர், உதட்டில் லேசாய் லிப்ஸ்டிக். ஜெல் போட்டு தலையை படிய வாரி, கோட்டெல்லாம் போட்டிருந்தார். என்னைப் பார்த்து மந்தாரமாய் மேக்கப் கலையாமல் சிரித்தார். விஜய் டி.வி. சீரியலில் அவர்தான் ஹீரோ என்றார். எனக்கு பகீரென்றது. அவருக்கு ஒரு ஐம்பது வயதிருக்கும். அவர் தமிழ் பேசினால் கேரளா பார்டரில் இருக்கிறமாதிரி ஃபீலிங் வந்துவிடும். ஆங்காங்கே மலையாள சமாஜ் ப்ரோக்ராம்களில் நன்றாய் கதகளி எல்லாம் ஆடுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சரிதான். அவர் கலை ஆர்வம் டி.வி. வரை வந்துவிட்டதுபோலிருக்கிறது என்று நினைத்தேன். நான் ஆவல் மேலிட என்ன கதைங்க? என்றேன். துப்பறியும் கதை தம்பி. கொஞ்சம் காமெடியா பண்றோம். சுட்டது யார்னு டைட்டில் என்றார் தயாரிப்பாளர். பின்னர் பரபரவென்று சுற்றுமுற்றும் ஆராய்ந்துவிட்டு. "தம்பி உங்க டேப்ரிக்கார்டரோட ஸ்பீக்கர் கொஞ்சம் கழட்டித் தாங்க வீட்டு வாசல்ல மாட்டணும். கதைப் பிரகாரம் இதுதான் துப்பறியும் நிபுணர் வீடு" என்றார். நான் என்னடா ப்ரொடியூஸர்தான் டைரக்ஷணும் பண்ணுகிறாரா என்று வியந்து கொண்டே கழற்றிக் கொடுத்தேன். அதை வீட்டு வாசலில் தொங்க விட்டார்கள். அதற்கு மேல் ஒரு புலியின் படத்தை ஒட்டினார்கள். பாலன் குட்டி தயாரானார். லைட்ஸ்! கேமரா! ஆக்ஷன். கேமரா ஓட ஆரம்பித்தது. என் வீட்டு ப்ளக் பாயிண்டில் ஒயர்கள் சொருகப்பட்டு பளிச்சென்று 2KVA விளக்கு எரிந்தது. இன்னொரு நடிகர் ஒருவர் எங்கிருந்தோ என் வீட்டு வாசலுக்கு வந்து நின்றார். மிஸ்டர் துளசிங்கம் என்று கூப்பிட்டார். உடனே ஸ்பீக்கரிலிருந்து குரல் வருவது மாதிரி யூனிட்டின் மினி டேப்பிலிருந்து ஒரு புலியின் உறுமல் கேட்டுவிட்டு 'எஸ்.. ஐ ஏம் கமிங்' என்று குரல் கேட்டது. பாலன் குட்டி என் வீட்டுக்குள்ளிருந்து வெளிப்பட்டார். அப்புறம் வந்த ஆளை நோக்கி ஒரு டயலாக் சொல்லவேண்டும்.. "நான்தான் உலகப் புகழ்பெற்ற துப்பறியும் டைகர் துளசிங்கம். நீங்க யாரு?" என்பதுதான் அந்த டயலாக். நான் டைகருக்கும் சிங்கத்துக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது பாலன் குட்டி டையை சரிபண்ணிக்கொண்டு சொன்னார். "நாந்தான் உழகப் புஹழ்பெற்ற துப்பறியும் டைகர் துழசிம்ஹம். நிங்ஙள் யாரு?" எனக்கு குபீர் என்று சிரிப்பு வந்தது. நல்ல காமெடி சீரியல்தான் போலும். இதே டயலாக்கை திரும்பத்திரும்ப சொல்லி பத்து பன்னிரெண்டு தடவை டேக் எடுத்தார்கள். அவர் வாயில் கடிபட்டு சிங்கமும் புலியும் செத்தே போயிற்று. அப்புறம் எல்லாவற்றையும் கழற்றிவிட்டு, தென்னந்தோப்பில் வில்லனை துளசிங்கம் ஸ்கூட்டரில் துரத்துகிற சீன் எடுக்கப் போய்விட்டார்கள். சுற்றிலும் ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க கூடியிருந்த கும்பல் என் வீட்டை ஆச்சரியமாய் பார்ப்பதை கவனித்தேன். மானசீகமாய் நான் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டேன். ஷூட்டிங்கெல்லாம் நடந்த வீடு என்றால் சும்மாவா? நான் ஸ்பீக்கரை தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் போனேன். அப்பா வந்தார். விஷயம் கேள்விப்பட்டு என்னை முறைத்தார். பணம் ஏதாவது கொடுத்தார்களா என்றார். நான் இல்லை என்றேன். உடனே போய் E.B மீட்டரைப் பார்த்தார். 2000 வாட்ஸ் பல்புகள் அரை நாள் எரிந்ததில் மீட்டர் ரீடிங் எகிறியிருந்தது. அய்யய்யோ இதை நான் யோசிக்கவேயில்லை. அப்பா டென்ஷனாய் திரும்பி என்னைத் திட்டுவதற்கு தேடும்போது நான் கவுண்டர் தோட்டமெல்லாம் தாண்டி மெயின் ரோட்டுக்குப் பறந்து வந்திருந்தேன். சுட்டது யார் என்ற அந்த காமெடி சீரியலை எப்போதாவது யாராவது விஜய் டி.வியில் பார்த்தீர்களா? எங்கள் வீடு தெரிந்ததா? சொல்லுங்க. பாம்பாட்டம் பாம்புகளைப் பற்றி இப்போது எழுதுவதன் அவசியம் சுமார் ஒண்ணரை மாதத்துக்கு முன் நிகழ்ந்தது. ஆரண்யம் இதழில் முன்பு சாரு நிவேதிதா எழுதிய "பாம்புக் கதைகளு'-க்கும்" இதற்கும் சம்பந்தமில்லையென்று முன்பே தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நாள் பட்டப்பகல் 1.00 மணிக்கு என் அம்மாவை பாம்பு கடித்துவிட்டதாக பதற்றமாய் கோவையிலிருந்து டெலிபோன் கால் வந்தது. கடித்தது (கொத்தியது?) நல்ல பாம்பு என்றும் அம்மா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், சினிமா டயலாக் மாதிரி 'எதையுமே 48 மணி நேரம் கழித்துத்தான் சொல்ல முடியும்' என்று டாக்டர் சொன்னதாகவும் தகவல்கள் கிடைத்தன. செல்போன் கண்டுபிடித்தவன் இருக்கிற திசைக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு கொட்டுவாயில் ரயிலேறி கோவை விரைந்தேன். வழியெல்லாம் காதிலிருந்து செல்போனை எடுக்காமல் நிலைமையை விசாரித்துக்கொண்டே சென்றேன். அன்றைக்கு நான் அடைந்த பதற்றமும் வேதனையும் இதற்குமுன் பட்டதில்லை. ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் போய்ப் பார்த்தபோது அம்மாவுக்கு ஆக்ஸிஜன் மாஸ்க், ECG மற்றும் இன்னபிற ஒயர்கள் இணைக்கப்பட்டு பார்க்கவே ரொம்ப பயமாய் இருந்தது. அது நல்லபாம்பில்லை. கெட்ட பாம்பு என்று நினைத்துக்கொண்டேன். பிறகு தெரிந்தது, அது கொஞ்சூண்டு நல்ல பாம்புதான் என்று. ஏனெனில் 4 நாட்கள் அவசர சிகிச்சைப் பிரிவின் கவனிப்பில் அம்மா நலம் என்று அறிக்கைகள் வந்தன. பாம்பு கடித்த (வலது கை நடுவிரல்) இடத்துக்கு மேலே மணிக்கட்டில் உடனடியாக அப்பா இறுக்கமாக கட்டுப் போட்டுவிட்டதும், கடித்த பாம்பை உடனே கொன்று கையோடு டாக்டரிடம் கொண்டுவந்து காட்டியதும், ரூபாய் 3500 மதிப்புள்ள Anti-Venom என்கிற 10 ml ஊசி உடனடியாக போடப்பட்டதும் + மற்ற சிகிச்சைகளும் அம்மாவை காப்பாற்றின. பிறகு தனி ரூமில் அனுமதிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்கள் வந்து பார்க்க அனுமதிக்கப்பட்டதும் நிறைய பாம்புக் கதைகளைக் கேள்விப்பட நேர்ந்தது. பக்கத்து ரூமில் சிறுநீரகக் கோளாறுக்கான ஆபரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவரின் அம்மாவை 30 வருடங்களுக்குமுன் பைரானி என்கிற பாம்பு கடித்து தீவிர சிகிச்சைக்குப்பின் தப்பிப் பிழைத்தாராம். அந்தப் பாம்பு அவரது காலைக் கடித்தவாக்கிலேயே ஒரு புரண்டு புரண்டு பின் கடித்த இடத்தில் தன் வாலால் நச் நச் என்று நான்கு அடி அடித்ததாகச் சொன்னார். இதே மாதிரி என் நண்பனொருவன் தனது ஏழாவது வயதில் தன் இடுப்புயரமுள்ள ராஜ நாகம் காலில் ஒரு போடு போட்டதில் ரொம்ப அபாய நிலைக்குப் போய் ஏழு நாட்கள் கோமாவில் இருந்துவிட்டு டாக்டர்கள் முயற்சியில் இரண்டாம் ஜென்மம் எடுத்ததாகவும் தெரிவித்தான். இன்னும் அவனது வலது காலில் கொதித்த எண்ணையைக் கொட்டியது போன்ற தழும்பு விகாரமாய் உள்ளது. பாம்பு சீற்றமாய்க் கொத்தின கொத்தில் பாதம் அப்படியே ஒரு பந்துமாதிரி சுருண்டுபோய் விட்டதாகவும், பிறகு தொடையிலிருந்து சதையை எடுத்து பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணியிருப்பதாகவும் சொன்னான். கேட்கவே பயங்கரமாக இருந்தது. அம்மாவுக்கான சிகிச்சையின்போது சில விஷயங்கள் தெரிந்துகொண்டேன். இரண்டு மணிக்கொருதரம் ப்ளீடிங் டைம், க்ளாட்டிங் டைம் என்று கடிபட்டவரின் ரத்தம் எடுத்துப் பரிசோதிக்கிறார்கள். ரத்தத்தின் உறைநிலையில் ஏதாவது மாற்றம் நேரிடின் கொஞ்சம் பிரச்சனைதான். இந்தமாதிரி கடிவாங்குபவர்களுக்கு இரண்டு விதமான விளைவுகள் ஏற்படுமாம். ஒன்று உடனடி விளைவு. இன்னொன்று பின் விளைவு. உடனடி விளைவானது விஷத்தால் நரம்பு மண்டலம், நுரையீரல்கள் போன்றவை பாதிக்கப்பட்டு மரணம் சம்பவித்தல். பின் விளைவு சில நாட்களுக்குப் பிறகு இதயம், சிறுநீரகம் போன்றவை பாதிப்புக்குள்ளாதல். எல்லாவற்றையும் நன்கு பரிசோதனை செய்த பிறகே வீட்டுக்கு அனுப்புகிறார்கள். பாம்புக்கடிக்கான சிகிச்சை அரசு மருத்துவமனைகளில்தான் சரியாக அளிக்கப்படுகிறது என்று ஒரு தரப்பு விவரம் சொல்லி பயமுறுத்தியது. சரியான விஷமுறிவு மருந்துகளை அவர்கள்தான் வைத்திருப்பார்களாம். தனியார் மருத்துவமனைகளில் சில சமயம் அவைகள் கிடைக்காது என்றும் சொன்னார்கள். அம்மா அனுமதிக்கப்பட்டிருந்து ஒரு தனியார் மருத்துவமனை என்பதால் லேசாய் கவலையாயிருந்தது. ஆனால் எதுவும் பிரச்சினைகளின்றி குறிப்பிட்ட மருந்துகள் சரியான சமயத்துக்கு கிடைத்தன என்றுதான் சொல்ல வேண்டும். சிறுவயதில் அம்மா வாழ்ந்து வளர்ந்த வீடு பாம்புகள் அதிகம் நடமாடும் ஒரு பெரிய தோட்டத்துக்கு நடுவேதான் இருந்தது. பள்ளி விடுமுறையின் போது அங்கே போகும்போது பெரிய முற்றத்தில் போட்டிருக்கிற மலர்க் கோலத்தைக் கலைத்தபடி சாரைப் பாம்புகள் ஊர்ந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். மேலும் வீட்டின் உள்ளே மரப்படிகள் கொண்டு போய்ச் சேர்க்கும் மச்சின் மேல் ஏறி எட்டிப் பார்த்தால் இஸ்.. இஸ்.. என்று பாம்புகள் சீறுகிற சப்தம் கேட்கும். சாரைப் பாம்பில் ஆரம்பித்து கட்டுவிரியன், நாகப் பாம்பு, கூழைப்பாம்பு என்று அத்தனை வெரைட்டிகளும் மனிதர்களோடு சேர்ந்து புழங்குகிற இடம் அது. அங்கேயெல்லாம் தப்பித்து செடிகளும், மரங்களும் அருகிப்போன நகரத்தில் ஒரு கான்கிரீட் காலனியில் வந்து கடிவாங்க நேரிட்டதை என்ன சொல்ல? கோவையில் ஒரு பெரிய மருத்துவமனை மருந்தகத்தில் பணிபுரியும் என் உறவினர் 'இதெல்லாம் சின்ன கேஸுங்க. உங்களுக்கு முப்பதாயிரம் ரூபாய் செலவுல ட்ரீட்மெண்ட் முடிஞ்சிருச்சு. எங்க ஆஸ்பத்திரில Anti-Venom எல்லாம் பெட்டி பெட்டியா வாங்கிட்டுப் போவாங்க" என்று அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். விஸிட்டராக வந்த இன்னொருவர் தந்த தகவல்: ஒரு 35 வயது இளைஞன் உடலில் எத்தனை புரோட்டின் இருக்குமோ அத்தனை புரோட்டினை பாம்பு கொத்தும்போது மனித உடலினுள் செலுத்துகிறது. இம்மாதிரி செலுத்தப்படும் கூடுதல் புரோட்டின்தான் அதன் பல்லில் இருக்கும் விஷமாக மனிதர்களை கொல்கிறது என்றார். உண்மையா தெரியவில்லை. அதே மாதிரி ஆளைக் கடித்த பாம்பு மயக்கமடைந்து கடித்த இடத்திலேயே கிடக்குமாம். ஏனென்றால் நமது ரத்தம் அதற்கு விஷமாம். இதையும் யாராவது தெளிவுபடுத்தவேண்டும். இதற்குமுன் நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு குறுக்கு வழியாக இருளடைந்த ஒரு சோளக்காடு, தென்னந்தோப்பைத் தாண்டிச் செல்லவேண்டும். ராத்திரி பதினொரு மணிக்கு பயமின்றி கையில் வைத்திருக்கிற ஒரு பென் டார்ச்சுடன் கீழே குனிந்தபடி ஒற்றையடிப் பாதையில் பளபளப்பாக நகரும் பாம்புகளைத் தவிர்த்து நடந்த அனுபவங்களை இப்போது அசைபோட்டால் உடல் குலுங்குகிறது. கையில் கடிபட்ட இடத்தில் காயம் இன்னும் ஆறாத நிலையில் சிறிது ஓய்வெடுத்துக்கொள்ளலாம் என்று சென்னை வந்த அம்மாவை கிண்டி பாம்புப் பண்ணைக்கு அழைத்துச் சென்றேன். பாம்புகளைப் பற்றி நேஷனல் ஜியாகரஃபி, அனிமல் ப்ளானட், டிஸ்கவரி சேனல்கள் கற்றுக் கொடுத்ததுபோக மீதி விஷயங்களை அங்கே போனபோது தெரிந்துகொள்ள முடிந்தது. பாம்புகள் பற்றி நம்பப்படும் மூட நம்பிக்கைகளுக்கெல்லாம் விளக்கம் அளித்து போர்டு வைத்திருந்தார்கள். சில உதாரணங்கள்: ● ஒரு பாம்பை அடித்தால் இன்னொரு பாம்பு பழிவாங்கும் - நிச்சயமாக இல்லை. ● கொம்பேறி மூர்க்கன் ஆளைக் கடித்தபிறகு மரத்தின் மேலேறி பிணம் எரிகிறவரை பார்க்கும். - தவறு. கொ.மூர்க்கனுக்கு விஷம் கிடையாது. ● பாம்பு விஷத்தை மந்திரம் ஜெபித்து இறக்கிவிடலாம். - நிச்சயமாய் முடியாது. ● பறக்கும் பாம்பென்று ஒரு வெரைட்டி கிடையவே கிடையாது. பாம்பு கடித்ததினால் ஏற்படும் மரணங்களில் 75 சதவீதம் அதிர்ச்சியால் ஏற்படுவதாம். தகுந்த முதலுதவி, பாதிக்கப்பட்டவர் நம்பிக்கையிழக்காமல் பார்த்துக்கொள்ளுதல், பதற்றமடையாமல் இருத்தல் போன்றவற்றின் மூலம் அதிகபட்சம் காப்பாற்றிவிடமுடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சில இடங்களில் கடிபட்டவரைப் படுக்க வைத்து மந்திரம் ஜெபிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என் நண்பரின் அண்ணனுடைய நண்பனின் அக்காவுக்கு வயலில் பாம்பு கடித்து ஒரு முழு இரவும் படுக்கவைத்து மந்திரம் சொல்லிக்கொண்டிருந்ததில் காலையில் அவர் இறந்துபோனது நினைவுக்கு வந்தது. அதுதவிர கோவை மாவட்டம் சோமனூர் அருகே இருக்கும் வாழைத்தோட்ட ஐயன் கோவிலுக்குப் போய் வருவதன் மூலம் பாம்பு தோஷங்களிலிருந்து விடுபட முடியும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது. அம்மாவை பாம்பு கடிப்பதற்கு ஒரு வாரம் முன்பு நானும் என் நான்கு வயது வாண்டும் இரவு பத்தரைக்கு பரமபதம் விளையாண்டு கொண்டிருந்ததுகூட காரணமாயிருக்கலாம் என்று என் மனைவிக்கு லேசான சந்தேகம்கூட இருக்கிறது. அம்மா வந்திருந்தபோது போரடிக்கிறது என்று காலையில் டி.வி போட்டபோது முதலில் திரையில் தெரிந்தது சூர்யா டி.வியில் பாம்புகள் பற்றிய ஒரு நிகழ்ச்சி. 'நம்மள் தம்மில்' என்று ஸ்ரீகண்டன் நாயர் என்பவர் நடத்துவது. அதில் 25 தடவைகள் அரணை (பாப்பராணி) கடித்த பெண்மணி, 32 தடவை பாம்புக்கடி வாங்கிய ஒரு நடுத்தர வயது பெண்மணி, ஒரு பாம்பு சாஸ்திர நிபுணர், பாம்புக்கடி மருத்துவ நிபுணர், 100க்கும் மேற்பட்ட விஷப் பாம்புகளைப் பிடித்து வளர்த்துகிற ஒரு வீரப்பன் மீசைக்காரர். கொஞ்சம் ஆடியன்ஸ் இவர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி. அந்தப் பெண்மணி சென்ற இடமெல்லாம் பாம்புகள் தேடிவந்து கடித்துவிட்டுப் போகிறதாம். அதற்கு விளக்கம் கேட்டதற்கு மருத்துவர் அந்தப் பெண்மணியின் உடலிலிருந்து வருகிற மணம் இப்படி பாம்புகளை ஈர்த்து அழைக்கிற தன்மையைப் பெற்றிருக்கலாம் என்று சந்தேகமாய் பதில் சொன்னார். தவிர கேள்வி கேட்டுவிட்டு யாராவது பதில் சொல்வதற்குள் அவர்களை ஓவர்லேப் அல்லது ஓவர்டேக் பண்ணி பேச ஆரம்பிக்கிற ஸ்ரீகண்டன் நாயரின் குணத்தால் - பாம்புக்கு காது கிடையாது, மகுடி இசை அதற்கு கேட்காது. மகுடியின் அசைவுக்கு ஏற்ப தலையசைப்பது அது இசைக்கு ஆடுவதுபோல் தோன்றுகிறது; நில அதிர்வுகளை வைத்தே ஆள் நெருங்குவதைக் தெரிந்துகொள்கிறது - என்கிற அடிப்படை விஷயங்களைத் தவிர எக்ஸ்பர்டுகள் தெரிவிக்க நினைத்த பாம்பு விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. பாம்புகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவதற்கு இணையம் சிறந்த இடமென்று தெரியும். இன்னும் உள்ளே போகவில்லை. என் பயோ டேட்டாவில் 'ஹாபி' என்பதற்கு நேராக பாம்பு ஆராய்ச்சி என்று போடாலாமா என்றும் யோசனை. மேற்படி நான் கேள்விப்பட நேர்ந்த விஷயங்களில் ஏதேனும் தவறிருப்பினும் கூடுதல் விவரம் தெரிந்து வைத்திருப்பவர்கள் சுட்டிக் காட்டவும். எப்படியோ நான் இப்போதெல்லாம் தரையில் ஒரு மண்புழு ஊர்ந்தால்கூட சந்தேகமாய்ப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். பின்னே இருக்காதா? மாயாஜாலம் எங்களுக்கு வில்சன் என்றொரு நண்பர் இருந்தார். கவனிக்கவும். 'எங்களுக்கு' என்று குறிப்பிட்டிருக்கிறேன். காரணம் எனக்கு மட்டுமே அவர் நண்பரல்ல என்பதுதான். எங்கள் செட்டான ஒரு ஐந்தாறு பேருக்கும் பொதுவான நண்பர் அவர். சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் நாங்கள் வசித்துக் கொண்டிருந்த காலனிக்கு சற்றுத் தள்ளி நெடுஞ்சாலையில் அவர் வீடிருந்தது. வில்சன் எங்களையெல்லாம் விட பல வயது மூத்தவர் என்பதால் நாங்கள் எல்லோரும் அவரை அண்ணா என்றுதான் அழைப்போம். அவரும் ஒரு அளவிடற்கரிய ஸ்நேகத்துடன் 'தம்பிகளா..' என்று எங்களை அழைப்பது நன்றாய் இருக்கும். அடர்த்தியாய் தாடிவிட்டுக்கொண்டு, சற்றே உயரமாய் கொஞ்சம் மீடியம் உடம்புடன் இருப்பார். சற்றே பிசிறடித்த ஆனால் கம்பீரமான குரல் அவருடையது. வில்சன் ஒரு மேஜிக் நிபுணர். கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட சுற்றுவட்டாரத்தில் அப்போதே 250-க்கும் மேற்பட்ட மேடைகளில் அவர் மேஜிக் நிகழ்ச்சி பண்ணியிருந்தார். நீங்கள் வழக்கமாய் மேஜிக் ஷோ-க்களில் கண்டு ரசித்திருக்கும் தொப்பிக்குள்ளிருந்து புறா எடுப்பது. சீட்டுக் கட்டுகளைக் கொண்டு வித்தை காண்பிப்பது, வாய்க்குள்ளிருந்து கோழி முட்டைகளை எடுத்துக்கொண்டேயிருப்பது, நியூஸ்பேப்பரை விரித்துக் காண்பித்துப் பின் அதை மடக்கி அதனுள்ளிருந்து தண்ணீர் கொட்டவைப்பது போன்ற வழக்கமான ஐட்டங்களோடு பெட்டிக்குள் ஆளை நிற்கவைத்து ரம்பம் வைத்து அறுத்து நாலைந்து துண்டாக்கிவிட்டுப் பின் ஆளை மறுபடி உயிரோடு(!) கொண்டு வருதல் போன்ற மெகா மாயாஜாலங்களையும் மேடைகளில் செய்வார். நிகழ்ச்சிகளின்போது கோட்டு சூட்டெல்லாம் போட்டு தலையில் நீளத் தொப்பி, கையில் மந்திரக்கோல் என்று ஃப்ரொப்ஷனலாகத்தான் தோன்றுவார். என்னதான் எங்கள் நண்பர் என்றாலும் எவ்வளவோ மன்றாடியும் அவர் பண்ணுகிற மேஜிக் ரகசியங்களைப் பற்றி மூச்சுவிட மாட்டார். போனால் போகிறதென்று ஒரு நாலணா காசை முழங்கையில் தேய்த்துத் தேய்த்து எப்படி மறைய வைப்பது என்கிற ட்ரிக்கை மட்டும் சொல்லிக் கொடுத்தார். வெகு சுலபமாக நான் கற்றுக் கொண்ட அந்த வித்தை குழந்தைகளிடம்தான் செல்லுபடியாகும். பெரியவர்கள் புத்திசாலிகளாக இருந்தால் கண்டுபிடித்துவிடுவார்கள். காலனி முக்கில் நாங்கள் கூடிப் பேசிக்கொண்டிருக்கிற இடத்துக்கு அவர் வந்து நின்றால் சடக்கென்று ஏதாவது எளிய வித்தை செய்து காட்டி அசத்துவார். உதாரணம் : என் சட்டைப் பாக்கெட்டில் கைவிட்டு பத்து ரூபாய்த்தாள் எடுத்து அதை நான்காக மடித்து வலது கை ஆள் காட்டி விரலுக்கும், நடு விரலுக்கும் இடையே வைத்து விஸ்ஸ்க் என்று இடதுகை உள்ளங்கையில் தட்டினார். மறுநொடி ரூபாய் நோட்டு அவரது இரண்டு கைகளிலும் இருக்காது. பத்து ரூபாயைத் திருப்பித் தரவேண்டுமானால் என் அப்பாவிடம் சொல்லி அவரிடம் டி.வி கேபிள் கனெக்ஷன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். ஆம். அவர் அந்த ஏரியாவுக்கு கேபிள் கனெக்ஷன் கொடுக்கிற வேலையையும் பார்த்து வந்தார். கேபிள் கனெக்ஷன் என்றால் அப்போதெல்லாம் தூர்தர்ஷன் தவிர எதுவும் கிடையாது. ஆனால் அதில் வெள்ளிக் கிழமை எட்டு மணிக்குப் போடுகிற ஒலியும் ஒளியும் பார்ப்பதற்கே எல்லார் வீட்டிலும் அப்படியொரு முன்னேற்பாடு நடக்கும். வில்சன் ஒவ்வொரு மதியமும் சினிமா வீடியோ கேசட்டுகளை வைத்து அவர் வீட்டிலிருந்தே ஒளிபரப்ப அது காலனி முழுக்க எல்லோருடைய டி.வியிலும் தெரிகிற டெக்னலாஜியை வியந்துகொண்டிருந்தோம். ஒரு தடவை கார்த்திக் படமான இரட்டைக் குழல் துப்பாக்கி என்கிற படத்தை கேபிளில் ஒளிபரப்பி காலனி தாய்மார்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட சம்பவமும் உண்டு. அப்போது சன் டிவியெல்லாம் கிடையாது. ஆனால் வில்சன் சன் டி.வி-யின் (ராஜ்?) முதல் முயற்சியான 'பூமாலை' என்கிற கேசட்டை போட்டு அவ்வப்போது ஒளிபரப்புவார். நாட்டு நடப்புகள், இசை நிகழ்ச்சிகள், காமெடி ஷோ, சினிமா பாட்டு என்று கலவையாய் மாதமொருமுறை தொகுத்து கேசட் வடிவில் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்ததுதான் பூமாலை என்று பெயரிடப்பட்ட அந்த கேசட். அதுதவிர வில்சன் புண்ணியத்தில் தூர்தர்ஷனில் ஞாயிறு மதியம் 1.00 மணிக்கு NFDC படங்களான எல்லா ஆர்ட் ஃபிலிம்களையும் உட்கார்ந்து பார்ப்போம். ஒன்றும் புரியாவிட்டாலும். வில்சன் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் விழா மேடைகளில் தோன்றி மைக் பிடித்து கம்பீரமாய்ப் பேசுவார். பேசுகிற விஷயங்களில் நிச்சயம் சமூக அக்கறை தொனிக்கும். அவர் பொள்ளாச்சியில் 'மனிதம் சேவை மையம்' என்கிற சமுக அமைப்புக்குத் தலைவராக இருந்தார். அவ்வப்போது நகரில் ரத்ததான முகாம், இலவச கண் பரிசோதனை முகாம் நடத்துவது, ஆதிவாசிகள் மற்றும் மலைவாழ் மக்களுக்கு உடைகள் சேகரித்துக் கொடுப்பது போன்ற காரியங்களில் தீவிரமாய் ஈடுபட்டிருந்தார். நாங்களெல்லோரும்கூட மனிதத்தில் உறுப்பினராகி அவருடன் சேர்ந்து சுற்றி சமுக சேவை செய்துகொண்டிருந்தோம். அவ்வப்போது ஆட்டோவில் மைக் வைத்து அறிவித்துக்கொண்டு சுற்றியிருக்கிற காலனிகளில் வீடுவீடாகப் போய் உடைகள் சேகரித்து ஆதிவாசிகளுக்கு கொண்டுபோய் வழங்குவோம். தவிர மனிதம் வெளியிட்டுக்கொண்டிருந்த "மனிதம் செய்திகள்" என்கிற சிற்றிதழில்(?) சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சமுக ஆக்கப்பணிகள் பற்றிய விவரங்கள் போக மீதி இருந்த இடத்தில் நாங்கள் கதை, கட்டுரை, கவிதைகள், படித்ததில் பிடித்தது, ஜோக்ஸ் என்று எதையாவது எழுதுவோம். சரசுராம் இதற்கு ஆசிரியராய் இருந்தார். ராஜீவ் காந்தி இறந்த சமயத்தில் அவர் எழுதின உருக்கமான கட்டுரையை முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் D.R. கார்த்திகேயன்கூட படித்துப் பாராட்டினார். ஒரு தடவை சாயங்காலம் ஐந்து மணிக்கு வில்சன் வேகமாய் வந்து நெகமம் அருகில் சேரிபாளையம் என்கிற ஊரில் நடக்கிற நவராத்திரி கலை விழாவில் அன்றைக்கு அவரின் மேஜிக் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதன்கூடவே நீங்களெல்லாம் சேர்ந்து சைடில் கலை நிகழ்ச்சி செய்கிறீர்களா என்று கேட்டார். ஏழு மணிக்கு ப்ரோக்ராம் என்றார். இரண்டு மணி நேரத்திக்குள் என்னத்தைத் தயார் பண்ணுவதென்று எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் அரை மனதாய் சரி என்று தலையாட்டிவிட்டு பரபரவென்று இரண்டு மணி நேரத்துக்குள் டாக்டர் கடீஸ்குமார் என்கிற காமெடி நாடகத்தை நான் மற்றும் நண்பர்களான ராம் (சரசுராம்), மீனாட்சி சுந்தரம் உட்கார்ந்து எழுதி முடித்துவிட்டோம். ஒரு சில நண்பர்களை வைத்து கடகடவென்று ஏழு மணிக்குள் ரிகர்சலும் பார்த்து வில்சனுடன் வேனில் கிளம்பிவிட்டோம். நான் அதில் ஒரு நோயாளி கேரக்டர். கூடவே நரம் தினசரி கேட்கிற ரேடியோ செய்திகளை நகைச்சுவையாய்த் திரித்து நான் அதை வாசிப்பது என்றும் முடிவு செய்து, வண்டி சேரிபாளையம் போய் சேர்வதற்குள் ராம் ஒரு முழு வெள்ளைத்தாளில் அதை இரண்டு பக்கத்துக்கு எழுதியும் கொடுத்துவிட்டார். அதோடு 'டிஸ்கோ டான்ஸ் ஆடிக் கலக்குகிறேன்' என்று தானாக முன்வந்த மஞ்சு என்ற பொடியனும் வேனில் ஜிகினா உடை சகிதம் தொற்றிக் கொண்டான். மின்நகர் கீதம் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் இன்னும் சில நொடிகளில் ஆரம்பம் என்று மைக்கில் அமர்க்களமாய் அறிவித்துவிட்டு ஆரம்பித்தோம். அன்றைக்கு சேரி பாளையத்தை ஒரு வழி பண்ணிவிட்டோம் என்றுதான் சொல்லவேண்டும். மஞ்சு என்கிற அந்தப் பையன் அப்போது சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்த ஹாசன் ஜகாங்கீரின் "ஹவா ஹவா" பாட்டுக்கு அட்டகாசமாய் டான்ஸ் ஆடி பின்னி எடுத்துவிட்டான். அவசரகதியில் பண்ணின இந்த ஏற்பாடுக்கு அத்தனை வரவேற்பா என்று சத்தியமாய் நம்பமுடியவில்லை எங்களால். கொஞ்சம் கற்றுக்குட்டித்தனமாகவே இருந்தாலும் எங்கள் நாடகத்தையும், நியூஸையும் ரசித்துப் பார்த்த / கேட்ட சேரிபாளையப் பொதுமக்கள் சிரித்த சிரிப்பு இன்னும் மனதுக்குள் பத்திரமாய் இருக்கிறது. வில்சனுக்கோ ரொம்ப சந்தோஷம். இதற்கு நடுவே இப்போது நினைத்தாலும் நாங்கள் விழுந்து விழுந்து சிரிக்க நேரிட்ட சில வெளியே சொல்ல முடியாத சம்பவங்களும் நடந்தன. அதற்கப்புறம் வில்சன் மேஜிக் ஷோ போகிற இடத்துக்கெல்லாம் எங்களைக் கூப்பிட ஆரம்பித்தார். நாங்கள் பிறகு நான்கைந்து மேடைகளில் வில்சன் தயவால் இன்னும் சில அயிட்டங்கள் சேர்த்து எங்கள் கலைத்திறமையைக் காட்டினோம். பிறகு பொள்ளாச்சி காந்தி மண்டபத்தில் நடைபெற்ற புத்தாண்டுக் கலைநிகழ்ச்சியில் நண்பனொருவன் டயலாக்கை முழுங்கிவிட்டு பேந்தப் பேந்த முழிக்க, ஆடியன்ஸிடமிருந்து விசிலும் கூக்குரலும் வர அத்தோடு எங்கள் கலைப் பயணம் முடிவுற்றது. இந்தக் கூத்துக்கெல்லாம் இப்போது இணையத்தில் எழுதும் எழுத்தாளர் ஒருவரும் சாட்சியாக இருந்தார். சுகமான நினைவுகளை ஞாபகப்படுத்தும் பழைய உருப்படிகளை எப்போதும் பத்திரப்படுத்தி வைக்க நினைக்கும் என்னிடம் 'மனிதம் செய்திகளின்' ஒரு சில பிரதிகளும், ஏழெட்டு மேடைகளில் நான் வாசித்த நகைச்சுவை செய்திகளின் பிரதியும் இருக்கின்றன.  நண்பர்கள் வேலை நிமித்தம் ஆளுக்கொரு திசைக்குப் பிரிந்தபிறகு வில்சனைப் சந்திக்கமுடியவில்லை. விசாரித்தபோது அவர் சொல்லாமல் கொள்ளாமல் வேறு ஏதோ ஊருக்கு குடும்பத்துடன் காலிபண்ணிவிட்டுப் போய்விட்டதாகப் பின் தகவல் கிடைத்தது. அவரிருக்கிற இடம் யாருக்கும் தெரியவில்லை. மனிதம் சேவை மையம் இப்போது இல்லை. வில்சனிடமிருந்து கற்றுக்கொண்ட ஒரே ஒரு நாலணா மேஜிக்கை இப்போது வாய்க்கும்போது குழந்தைகளுக்குச்  செய்து காண்பித்துக் கொண்டிருக்கிறேன். இந்த மாதிரி நட்புகள் என்னிடமிருந்து காணாமல் போகிறதா அல்லது நான்தான் அவர்களிடமிருந்து காணாமல் போய்விடுகிறேனா என்று எப்போதுமே எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. ஏதாவது மேஜிக் பண்ணி அவர்களை என் முன்னால் வரவழைத்துவிட முடியாதென்பது தெரியும். தேடினால் நிச்சயம் கிடைப்பார்கள். ஜீவித்திருப்பவர்கள் சென்னையில் வசிப்பவர்களுக்கு, அதுவும் கடலிலிருந்து ஒரு பத்து கிலோமீட்டர்களுக்குள் வசிப்பவர்களுக்கு ஒரு செளகரியம் உண்டு. நினைத்தவுடனே அவரவர் செளகரியத்திற்கேற்ப ஏதாவதொரு வாகனத்தில் பயணித்து சடுதியில் கடற்கரையை அடைந்து கால் நனைத்துவிடலாம். கடற்கரை ஒரு அழகான பொழுது போக்கிடம். பெரியவர்கள் விரும்பினால் தங்கள் குழந்தைகள் சார்பாக ஒரு பட்டம் வாங்கிக்கொண்டு மணலில் ஒரு ஓரமாய் உட்கார்ந்து மீண்டும் குழந்தையாகி மகிழலாம். நானும் சில சமயம் அப்படியே. சென்னைக்கு வந்த இந்த நாலு வருஷத்தில் எத்தனை முறை கடற்கரைக்குச் சென்றேன் என்று கணக்கில்லை. கடற்கரைக்கு இன்னும் கொஞ்சம் பக்கமாய் வீடு மாறியபின் அநேக ஞாயிற்றுக் கிழமைகள் வண்டியை எடுத்துக்கொண்டு மெரீனாவுக்குப் போய்விடுவது வழக்கம். வார நாட்களில் கூட ஒரு சில நண்பர்களைச் சந்திக்கும் பொருட்டு இரவு எட்டு மணிக்குமேல்கூட அடிக்கடி அங்கே போவதுண்டு. கடற்கரைக்குப் போகிற சமயங்களில் இருட்டுவதற்கு முன் சமுத்திரத்தை ஒரு முறை தரிசனம் பண்ணிவிடுகிற ஆசை எப்போதும் மேலோங்கியிருக்கும். அப்படி வாய்ப்பு அமைந்தால் என் நாலு வயசு வாண்டை மகிழ்விக்கிற சாக்கில் நானும் கொஞ்சம் அலைகளில் விளையாடுவதுண்டு. பேண்ட்டை மேலே சுருட்டிவிட்டுக் கொண்டு இறங்கி அவன் விரல்களை இறுகப் பிடித்துக் கொண்டு, முழங்காலளவு வந்து திரும்புகிற அலையில் காலடியில் மணல் சரசரவென்று நழுவ, பாதங்கள் புதைகிற அபத்திர உணர்வில் இருவரின் கைப்பிடியும் இறுகும். சில நேரம் எதிர்பாராமல் மிகப் பெரிய அலை வந்து அவனை முழுதாகவும் என்னை முகம் வரையிலும் நனைக்கிற போது உற்சாகத்தில் "க்ரீச்" என்று அருகாமை ஜனங்கள் நடுங்கிப் போகுமளவு கத்துவான். கடற்கரைக்கு போகும்போதே இருட்டியிருந்தால் இந்த விளையாட்டு ஆசையையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, வந்து திரும்பும் அலையின் மிஞ்சிய நுரையில் லேசாய் செருப்பை நனைப்பதோடு சரி. ஞாயிற்றுக் கிழமைகளில் அலைகடலென(!) திரண்டிருக்கிற கூட்டத்திற்கு கடலும் அலைகளும் ஒரு வேடிக்கைப் பொருளாக, ஒரு எக்ஸிபிஷன் தன்மையுடன் இருப்பதாக நான் எப்போதும் நினைத்துக்கொள்வேன். கடல் எல்லோருக்கும் பிடிக்கிறது. கடல் நீரில் கால் நனைப்பது, கடற்கரையில் கடலை சாப்பிடுவது, கடலின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டு காதல் பண்ணுவது, கடல் மணலில் கால் புதைய பேசிக்கொண்டே நடப்பது அல்லது வெறுமனே வேடிக்கை மட்டும் பார்ப்பது என எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் அல்லது எல்லா விதத்திலுமே கடலின் அருகாமை மிகப் பிடித்தமானதாக இருக்கிறது. எனக்கு கடலின் தூரத்து நேர்கோட்டு விளிம்பில் பார்வையை செலுத்தி எதையாவது யோசித்துக்கொண்டிருப்பது பிடிக்கும். கற்பனைக்கெட்டாத அதன் தூரம், ஆழம், அது மறைத்து வைத்திருக்கிற உயிரின ரகசியங்கள் எல்லாம் யோசிப்பின் தீவிரத்தில் ஆச்சரியங்களாய் விரியும். மனிதனின் பிரபஞ்ச எல்லையைப் பற்றிய வியப்பின் ஒரு மினியேச்சர் மாதிரிதான் இது. ஞாயிற்றுக்கிழமை அல்லாத மற்ற வார நாட்களில் மெரீனாவில் கடலுக்கு இன்னொரு முகம் இருப்பதுபோல் தோன்றும். அதிகம் கூட்டமில்லாமல், தன் பாட்டுக்கு ஏதோ யோசனையோடு அமைதியாய் வந்து போகிற அலைகள். அந்த எக்ஸிபிஷன் தன்மை இல்லாதிருப்பதுபோல் அல்லது கொஞ்சம் குறைந்திருப்பது போல் தோன்றும். அதுவும் இருட்டில் தூரத்துக் கப்பல் விளக்குகளோடு சேர்ந்து பார்க்கும் போது கருமை படர்ந்த கடலின் அமைதி மனதை என்னவோ செய்யும். அலைகளின் லேசான இரைச்சல் ஒரு தாலாட்டு மாதிரி இருக்கும். வாழ்க்கைக்கும் தினசரி பரபரப்புக்கும் இடையை இருக்கிற பிணைப்பு தற்காலிகமாய் அறுந்த மாதிரி கொஞ்சம் ஆசுவாசமாகத் தோன்றும். திரும்பி மெயின் ரோட்டுக்கு வரும்வரைதான் அந்த ஆசுவாசம் எல்லாம். டிசம்பர் 26க்கு ஒரு வாரத்துக்கு முன் மனைவி மகனுடன் ஒரு இருட்டின மாலையில் அலைகளுக்கு நெருக்கமாய் தூர வானத்தில் எரிநட்சத்திரம் விழுவதைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தபோதுகூட இதே ஆசுவாசம் மனதில் நிறைந்திருந்தது. அதற்கப்புறம் ரொம்ப நாளைக்கு கடற்கரைப்பக்கம் போக முடியாமல் போய்விட்டது. போய்ப் பார்க்கவேண்டும் என்று நினைத்து ஏனோ தள்ளிப் போய்க்கொண்டேயிருந்தது. மெரீனாவை நினைக்கும்போது தினத்தந்தியின் டபுள் ஸ்ப்ரெட் ஏரியல் புகைப்படம் நினைவில் நிழலாடி மனதை பிசைகிறது. கடலையும் கடல் சார்ந்த இடங்களையும் மனதில் காட்சிப்படுத்திப் பார்க்கும்போது அந்தக் காட்சிக்குக் கீழே துக்கத்தில் தோய்த்தெடுத்த ஒரு ஸ்க்ரால் நியூஸ் ஓடுவது மாதிரி ஒரு பிரமை. ரொம்ப நாள் கழித்து இந்த ஞாயிற்றுக்கிழமை மறுபடியும் நண்பர்களுடன் போனேன். பெசன்ட் நகர் கடற்கரை. போகும்போதே நன்றாய் இருட்டியிருந்தது. அன்றைய தினத்திற்கு கூட்டம் ரொம்பக் குறைச்சல் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் நிறைய பேர் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கவில்லையெனத் தெரிகிறது. கடற்கரை தன் முகத்தை மாற்றிக்கொண்டதுபோல் ஒரு உணர்வு. மணலில் கடலை நோக்கி நடக்கும்போது எல்லோருக்கும் கால்களில் தயக்கம் பின்னுக்கிழுக்கிறது. செருப்பைக் கழற்றிவிட்டு நடந்தால் அரைக் கிலோமீட்டருக்கு மணல்வெளியில் இன்னும் ஈரப்பதம். எப்போதும் நம்மை அற்பமாய் உணரச்செய்யும் கடல் இன்று அதன் கூடவே எல்லோர் மனதிலும் லேசான பய உணர்ச்சியையும் சேர்த்துவிட்டது. அன்று யாரும் அலையருகில் உட்கார்ந்து நான் பார்க்கவில்லை. அதுமாதிரியே கால் நனைத்து விளையாடுபவர்களும். அலைகள் தன் வழக்கமான எல்லைக் கோட்டை மாற்றி வரைந்திருந்ததாகப் பட்டது. யானொன்றுமறியேன் பராபரமே என்பதுபோல் தேமே என்றிருக்கும் கடற்பரப்பின் அகண்ட வெளியில் எல்லோர் பார்வையும் ஒரு சந்தேகத்துடன் குத்திட்டு நிற்கிறது. நாங்கள் போன அன்று பெளர்ணமிக்கு இரண்டு நாள் முந்தியாதலால் 98 சதவிகித நிலா வானத்தில் இருந்தது. பளிச்சிடும் வெண்மையான நிலவொளியில் அலுமினிய ஃபாயில்களை சுருட்டுவது போன்ற தோற்றத்துடன் இருளில் பளபளப்புடன் புரண்டு வந்த அலைகளில் கால் நனைத்தபோது உயிரின் நரம்பு லேசாக நடுங்கிச் சிலிர்த்தது. இந்தப் பிஞ்சு வயசிலேயே தொலைகாட்சிச் சேனல்களிலின் 'லைவ்' காட்சிகள் மற்றும் செய்திகள் மூலம் ஏதோ புரிந்து வைத்திருந்த என் பையன் ஒரு உறைந்த பார்வையுடன் கடலை கொஞ்சம் வெறித்துவிட்டு என் கைகளை இறுக்க்க்க்க்க்கிகொண்டு என்னை அண்ணாந்து பார்த்தவாறு மெதுவே அலை நுரைகளைக் கால் விரல்களால் தீண்டிப் பார்த்தான். அன்று அலையருகில் உட்காரவும் இல்லை. அதிக நேரம் நிற்கவுமில்லை. கொஞ்சம் பாதுகாப்பான தூரம் என்று பட்ட இடத்தில் மணல்வெளியில் உட்கார்ந்துகொண்டோம். பாதுகாப்பான இடம் என்பதும் பாதுகாப்பாய் இருக்கிறோம் என்கிற இந்த நினைப்பும் எத்தனை அபத்தம்!!  கனத்த மனத்துடன் கடற்கரையிலிருந்து திரும்பி வரும்போதும் ஒரே சிந்தனை. இவ்வுலகின் இத்தனை கோடி ஜனங்களும் ஏதோ ஒன்றிலிருந்து தப்பிப் பிழைத்து இந்தக் கணம் ஜீவித்திருப்பவர்கள்தான் என்று திரும்பத் திரும்பத் தோன்றுகிறது. ஐநூறு ரூபாயில் ஒரு அனுபவம் [cell] மேற்கண்ட படத்தில் நீங்கள் பார்ப்பது ஒரு பேட்டரி. பட்டன் செல் என்றும்கூட இதற்கு புனைபெயர் இருக்கிறது. குவார்ட்ஸ் கைக்கடிகாரம், சிறிய பென் டார்ச், PDA, Organiser போன்ற சாதனங்கள், குழந்தைகளின் சில விளையாட்டுப் பொருட்கள் போன்ற எத்தனையோ சாதனங்களில் உபயோகம் இது ஒரு சட்டைப் பொத்தானைவிட பெரிய அல்லது சிறிய அளவுகளில் கிடைக்கக்கூடியது. இந்த பேட்டரியின் மேற்புறம் நிக்கல் காட்மியம் எனும் உலோகத்தினாலானது. இதன் பாஸிட்டிவ் நெகட்டிவ்வுக்கு மத்தியில் மெஷின் பாக்கிங்கில் அடைபட்டிருக்கிற பொருள் ஸில்வர் ஆக்சைடு அல்லது மெர்க்குரிக் ஆக்ஸைடு அல்லது லித்தியம் இவைகளில் ஏதாவது ஒன்று. கைக்கடிகாரத்தில் போட்டால் ஒரு வருடமும், கணினிக்குள் போட்டால் ஒரு இரண்டு வருடமும் அதன் தரத்திற்கேற்ப உழைக்கிறது. ஒரு நல்ல பகல் பொழுதில் மதிய உணவுக்கு முன்னர் தன் பொம்மைக் காமராவை சுக்கு நூறாக உடைத்து அதிலிருந்த இந்த பேட்டரியை வாயில் போட்டுக் கொண்டான் என் பையன். அவனுக்கு அது "ஜெம்ஸ்" மிட்டாய் மாதிரி சுவைத்ததா எனத் தெரியவில்லை. அப்படியே முழுங்கிவிட்டு பொறுப்பான மகனாய் அம்மாவிடம் தகவலறிவித்துவிட்டான். அதற்கப்புறம்தான் கூத்து. உடனே வீட்டிலிருந்து டெலிபோன். ஆபிஸில் "சொல்யூஷன் ஆர்க்கிடெக்ச்சர்" வரைந்து கொண்டிந்தவன் அப்படியே அம்போவென்று விட்டுவிட்டு புரவியேறி கடுகி விரைந்தேன் வீட்டுக்கு. (உடனே புருவம் உயர்த்தாதீர்கள்). நான் திட்டுவேன் என்று பயந்து போய் நின்றிருந்தவனிடம் அவன் முழுங்கிய பொருள் மேற்படி பேட்டரிதானா என்று ஒரு புலன் விசாரணை செய்து உறுதிப்படுத்திவிட்டு அருகாமையிலுள்ள பெரிய தனியார் மருத்துவமனைக்கு மறுபடி கடுகி விரைந்தோம். அவன் பேட்டரியை விழுங்கின கையோடு இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்து சமையலுக்கு வைத்திருந்த பச்சை பீன்ஸ் விதைகளை வேறு ஒரு கைப்பிடி தின்றிருந்தான். அவன் என்னவோ ரொம்ப உற்சாகமாய்த்தான் இருந்தான் என்றாலும் அம்மா சொன்ன 'டாக்டரங்கிள் உன் வயித்த கீச் கீச்னு அறுத்து பேட்டரிய எடுக்கப்போறாங்க பாரு' -என்பதில் அவன் கொஞ்சம் பயந்திருந்தான். கேசுவாலிட்டி பிரிவில் நோயாளிகள் அதிரும் வண்ணம் "டேய் மச்சி.. நீ மெட்ராஸிலேயா இருக்க. எப்படா வந்த?" என்று கத்திக் கத்தி செல்போனில் பேசிக்கொண்டிருந்தவர்தான் டாக்டர் என்று சத்தியமாய் நம்ப முடியவில்லை. ஒரு சின்ன வயசுப் பையன். வயது 25 இருக்கலாம். தயக்கத்துடன் பேட்டரி வி்ஷயத்தைச் சொன்னவுடன் எழுந்து நின்று யோசனையாய் மோவாக்கட்டையை சொறிந்து போஸ் கொடுத்தார். நான் நம்பிக்கையில்லாமல் மனைவியையும் பையனையும் பார்த்தேன். மறுநிமிடம் நான் நினைத்த மாதிரியே "எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துவிடலாம்" என்றார் முகத்தில் பல்ப் எரிய. பதினைந்து நிமிடத்தில் எக்ஸ்ரே தயாரானது. அதை வெளிச்சத்தில் உயரத் தூக்கிப் பார்த்தபோது பேட்டரியானது பையன் வயிற்றுப் பகுதியில் எலும்புகள் அரணாய் சூழ்ந்திருக்க, பாதுகாப்பாய் சாய்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. சின்ன டாக்டரின் பக்கத்தில் நின்றிருந்த நர்ஸ் "எண்டோஸ்கோபி பண்ணி எடுத்துறலாம்" என்று குத்து மதிப்பாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டது. "மோஸ்ட்லி மோஷன்ல வந்துரும். 'எதுக்கும்' பெரிய டாக்டரை கன்ஸல்ட் பண்ணிக்கோங்க." என்று தன் முடிவைத் தெரிவித்தார் சின்னப் பையன் டாக்டர். நிறைய காத்திருந்து பெரிய டாக்டரைப் பார்த்தோம். அவரும் எக்ஸ்ரேவை ஒரே ஒரு செகண்ட் பார்த்துவிட்டு "முழுங்கின அஞ்சு ரூபா காயினே கக்கா போனா வந்துருது. இது நிச்சயம் வந்துரும். கவலப்படாதீங்க. இங்க குழந்தைகளுக்கான எண்டோஸ்கோபி இன்ட்ஸ்ருமெண்ட்ஸ் எல்லாம் இல்ல. நீங்க 'எதுக்கும்' அடையாறில இந்த டாக்டரை கன்ஸல்ட் பண்ணுங்க" என்று அட்ரஸ் தந்தார். இந்த 'எதுக்கும்' என்கிற வார்த்தை படுத்துகிற பாடு இருக்கிறதே!!! அங்கிருந்து வெளியே வரும்போது ரூ. 252 செலவாகியிருந்தது. அடையாரில் அந்த லேடி டாக்டரைத் தேடிப் போனபோதும் நிறைய நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. காத்திருந்த நேரத்தில் 'எதுக்குடா பேட்டரிய முழுங்கின?' என்று கோபமாய் விசாரித்தபோது "பவர் வர்ரதுக்குதான்' என்றான் மகன் அமைதியாய். வருகிற நோயாளிகளையும், க்ளீனிக் நடவடிக்கைகளையும் பார்த்துக் கொள்கிற மூன்று பெண்களில் ஒன்று வாயை மூடாமல் 'லொக் லொக்' என்று நோயாளி மாதிரி இருமிக் கொண்டிருந்தது. இன்னொன்று "என்னடி இந்த மாத்திரை நல்லாவேயில்ல. கரையவே மாட்டேங்குது" என்று வாயைத் திறந்து இன்னொருத்திக்குக் காட்டியதிலிருந்து அதுக்கும் என்னவோ பிரச்சனையென்று புரிந்தது. டாக்டர் வந்துவிட்ட பிறகும்கூட கவலையே படாமல் அவர்கள் பாட்டுக்கு டேபிளில் ஒய்யாரமாய் குங்குமம் இதழை பிரித்து வைத்துக்கொண்டு "ஏய் பாத்தியாடி.. நம்மாளு 'ஜெயம்' ரவிக்கு மேஷ ராசின்னு போட்ருக்கான்." என்று கெக்கே பிக்கேயென்று சிரித்துவைத்து "நம்ம டாக்டர் ராசியும் அதானே.." என்றது. டாக்டர் எந்த ராசியானாலும் பிரச்சனையில்லை. கைராசியாய் இருந்தால் சரி என்று நினைத்துக் கொண்டேன். எங்கள் முறை வந்தது. லேடி டாக்டரும் அதே மாதிரி எக்ஸ்ரேவை ஒரு செகண்ட் தூக்கிப் பார்த்துவிட்டு, "இது குழந்தை கக்கா போகும்போது வந்துரும். வாளப்பளம் வாங்கிக் குடுங்க. அப்படி வரலைன்னா அடுத்தது என்ன செய்யலாம்னு பார்ப்போம். இப்ப அநாவசியமா கைவெச்சா நாலாயிர்ரூவா ஆகும்" என்றார். வெளியே வந்தபோது கன்ஸல்டேஷன் 250 ரூபாய் என்றாள் 'ஜெயம்' ரவி ரசிகை. ஆக இதுவரை மொத்தமாய் ஐநூறை முழுங்கிவிட்டது இந்த விஷயம். 'வாளப்பளம்' வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தோம். அக்கம் பக்கத்தாரின் விசாரிப்புக்கெல்லாம் ஒரே கதையை திரும்பத் திரும்ப சொல்லிவிட்டு (பேட்டரி என்று சொன்னவுடன் பெரிய டார்ச்சுக்குப் போடுகிற பெரிய எவரெடி பேட்டரி என்று நினைத்துக்கொள்கிறார்கள் பாவம்!) கவலையுடன் தூங்கப் போய்விட்டோம். எல்லாருடனும் பேசியதில் இந்த ழுழுங்குகிற கலாச்சாரம் குழந்தைகளுக்கு புதிதல்ல என்றும் எல்லாக் குழந்தைகளுமே அவரவர் விருப்பத்திற்கேற்ப புளியங்கொட்டை, தேங்காய் மூடி (சிரட்டைத் துண்டு), ஸேஃப்டி பின், போல்ட் அல்லது நட், நாணயங்கள், க்ரையான் துண்டு என்று இப்படி எதையாவது முழுங்கித் தொலைத்த வீர வரலாறுகளையும் அறிந்துகொள்ள முடிந்தது. பிறகென்ன? மறுநாள் பையன் கக்கா வருவதற்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கத் தொடங்கினோம். அது வருவதற்கான எந்த அறிகுறியும் பையன் முகத்திலிருந்து அறிந்து கொள்ள முடியாத அவஸ்தையுடன் பொழுது ஓடியது. அவன் எந்தக் கவலையும் இல்லாமல் ஜாலியாய் விளையாண்டு கொண்டிருந்தான். எனக்கோ பேட்டரிக்கு உள்ளேயிருக்கிற ரசாயனப் பொருட்கள் குறித்த கவலை. ஏதாவது லீக் ஆகி எதையாவது பாதிக்குமா என்று. இதே நினைப்புடன் ஆபிஸூக்கு லேட்டாக போய் சொல்யூ்ஷன் ஆர்க்கிடெக்ச்சரை மறுபடி பிராண்ட ஆரம்பித்தபோது செல்பேசியில் வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. காதில் வைத்ததும் பையன் குரல் கேட்டது. "வந்திரிச்சு! பேட்டரி வந்திரிச்சு!" உங்களுக்கு முந்தா நேத்து பக்கத்தில் ஏதோ சுழல்காற்று அடித்த மாதிரி சப்தம் கேட்டதா? அது ஒன்றுமில்லை. நான் விட்ட நிம்மதிப் பெருமூச்சுதான். உலகத் தொலைகாட்சி நான் முதன் முதலில் டி.வி பார்த்தது என் ஒன்பதாம் வகுப்புத் தோழன் நாகராஜ் வீட்டில்தான். என் வீடிருந்த தெருவுக்கு அடுத்த சந்தில், படுத்திருக்கும் ஒரு சில நாய்களைக் கடிவாங்காமல் தாண்டிப் போனால் அவன் வீடு வரும். தரையில் தாருக்குப் பதில் சிமெண்ட் ஸ்லாப்களாகப் பதித்திருக்கும் சந்திலிருந்து செங்குத்தாக ஐந்து படிகள் ஏறினால் அவன் வீட்டின் முன்னறை. அதற்கு நேராய்த் தெரியும் அதற்கு அடுத்த அறையில் அதை வைத்திருந்தார்கள். நீலச்சாம்பல் கலரில், வீட்டுக் கூரையின் ஆண்டென்னா உபயத்தில் அப்போதெல்லாம் தூர்தர்ஷன் மட்டுமே. நிகழ்ச்சிகளைவிட "தடங்கலுக்கு வருந்துகிறோம்"-ஐ அதிகம் ஒலிபரப்பின தொலைக்காட்சி. ஒரு நிகழ்ச்சி முடிந்ததும் கிடைக்கிற இடைவெளியில் ஒரு ரோஜாப்பூ ஸ்லைடு போட்டு லொட் லொட் என்று பட்டறையில் தட்டுகிற சப்தம் மாதிரி ஒரு ம்யூசிக் போடுவார்கள். நான் புதன் கிழமையானால் எட்டுமணிக்குத் தவறாமல் போய் அவன் வீட்டு முன்னறைப்படியில் உட்கார்ந்துவிடுவேன். (உள்ளே போகமுடியாதபடிக்கு எக்கச்சக்கமான கூட்டம் இருக்கும்) அங்கிருந்து பார்த்தாலே ஓரளவுக்கு ரிஷிகபூர், ஹேமமாலினி எல்லாம் தெளிவாகத் தெரிவார்கள். சித்ரஹாரைத்தான் சொல்கிறேன். சாட்டிலைட்டிலிருந்து புரியாத ஹிந்திப் பாடல் காட்சிகளை டெக்னாலஜித் தூண்டில் போட்டு இழுத்து திரையில் காண்பிக்கும் அந்தப் பெட்டியை எல்லோரும் வியந்து வியந்து பார்த்துக்கொண்டிருந்த காலம் அது. அதிலும் நீலம் என்று ஒரு நடிகை அடிக்கடி ஏதாவதொரு பாட்டில் வருவது பிடித்துப் போய் வாராவாரம் தவறாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். சித்ரஹார் போட்டாலே நாகராஜ் வீடு நிரம்பிவிடும். அவன் வீட்டை விட்டால் வேறு டி.வி அந்தத் தெருவில் எங்கும் இல்லாதிருந்தது. டி.வி ஓடும்போது தவறாமல் விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிடுவார்கள். இருட்டுக்குள் நீலத்திரை மட்டும் ஒளிரும். சித்ரஹாரைத்தவிர அடுத்ததாய் அதிக மவுசு உள்ள நிகழ்ச்சியாய் கிரிக்கெட் மேட்ச்தான் இருந்தது. கிரிக்கெட் என்றால் ஒரு கஜம் என்ன விலையாகிறதென்று கேட்பவனாகிய நான், ஹிர்வானி என்ற பட்டையாய் கண்ணாடி போட்ட ப்ளேயர் ஓடி ஓடி வந்து பவுலிங் போடுவதை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். நடுநடுவில் வருகிற "வா்ஷிங் பெளடர் நிர்மா" அப்புறம் கபில்தேவ் வருகிற "பூஸ்ட் - ஸீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி" எல்லாம் எத்தனை தடவை போட்டாலும் பார்ப்பேன். அப்புறம் கணேஷ் வீட்டில் அதைவிட பெரிய டி.வி வாங்கினதும் பெரிய செளகரியமாய் போய்விட்டது. 1. அவன் வீடு நாகராஜ் வீட்டைவிட இன்னும் கிட்டத்தில் இருந்தது. 2. தாண்டவேண்டிய கடிநாய்களின் எண்ணிக்கை குறைவு 3. கணேஷ் வீட்டு உள்ளறையிலேயே சேர் போட்டு உட்கார்ந்து பார்க்கலாம். 4. டி.வி நிகழ்ச்சிகளின் நடுவே அவன் அம்மாவின் அன்பான டீ கிடைக்கும். ஆனால், அதுவும் கருப்பு வெள்ளைதான். தவறாமல் அதற்கும் முகத்தில் ஒரு நீலக் கண்ணாடி அணிவித்திருந்தார்கள். அந்த கணேஷாகப்பட்டவன் பல சமயம் டி.வியை ட்யூன் பண்ணுகிறேன் பேர்வழி என்று புஸ் என்று சப்தத்துடன் எப்போதும் புள்ளி புள்ளியாய் ஓடவிடுவான். அது ஓரளவு அட்ஜஸ்ட் ஆகி திரையில் காட்சி தெரிவதற்கு ஒரு அரைமணி ஆகிவிடும். அவன் வீட்டு டிவியில் புள்ளிகளைத்தவிர என்னெல்லாம் பார்த்தேன் என்று தெள்ளத் தெளிவாக ஞாபகமில்லை. அசுவாரஸ்யமாகப் பாரத்த ஓரிரு கிரிக்கெட் மேட்ச்கள் மட்டும் ஞாபக நிழலில் துண்டு போட்டு உட்கார்ந்திருக்கின்றன. கொஞ்சநாள் கழித்து ஜாகை மாறி வேறு ஊருக்குப் போனபோது டி.வி என்கிற வஸ்துவின் உள்ளடக்கம் பொருளடக்கம் எல்லாம் மாறியிருந்தது. தூர்தர்ஷனில் ஒளியும் ஒலியும் என்று ஸ்லைடுபோட்டு வெள்ளிக்கிழமை அமர்களப்பட ஆரம்பித்தது. பெண்கள் அன்றைக்கு எட்டு மணிக்குள் அவசரமாய் கோவிலுக்குப் போய்விட்டு பறந்தோடி வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள். டி.வி வைத்திருந்த பக்கத்துவீட்டுப் புண்ணியவான்கள் தயவில் கமலும் ரஜினியும் வீட்டுக்கு வந்துவிட்டுப்போனார்கள். நிகழ்ச்சிக்கு இடையிடையே ஸ்டேஷனில் ஒளி, ஒலி இரண்டும் கட்டாகும். முன்பு சொன்னதுபோல், தடங்கலுக்கு வருந்துவதாக தகரத்தட்டல் பிண்ணனி இசையோடு ஸ்லைடு போட்டுவிட்டு விட்ட இடத்திலிருந்து தொடர்வார்கள். டி.வியில் ஒலியும் ஒளியும் மட்டுமல்லாது ஞாயிறு மதியம் 1 மணிக்கு NFDC படங்கள் ஒலிபரப்பாகின்றன என்று தெரிந்தபிறகு எங்கள் ரசனை நரம்புகள் உசுப்பப்பட்டு அதையெல்லாம் நண்பர்கள் குழாமுடன் விழுந்து விழுந்து பார்க்க ஆரம்பித்தோம். இதில் பெரும்பாலும் மலையாள நடிகர் கோபி நடித்த கலைப்படங்கள். வாழ்க்கையில் நிறைய பொறுமையை கற்றுக்கொண்டது இந்த காலகட்டத்தில்தான் என்று சொல்லலாம். (ஒரு படத்தில் கோபி ஒரு பூங்காவின் இந்த கேட்டிலிருந்து அந்த கேட் வரை பதினைந்து நிமிடம் நடந்து கடந்ததை உதாரணத்துக்குச் சொல்லலாம்.) கலைப்படங்கள் பார்ப்பதற்கான வயது அது அல்ல என்பதனால் அவைகளை ரசிக்க முடியாமல் மனதில் ஒட்டாமல் போய்விட்டன. எல்லோர் வீட்டிலும் டி.வி வந்துவிட்டதே என்று குமார் எலெக்ட்ரானிக்ஸ்க்கு போய் ஃபிலிப்ஸ் போர்ட்டபிள் கருப்பு வெள்ளை ஒன்றை பூஸ்டருடன் சேர்ந்து என் அப்பாவும் வாங்கிவந்துவிட்டார். அன்றைக்கு மொட்டை மாடியில் ஒரு மிக நீளமான இரும்பு பைப்பின் உச்சியில் ஆன்டென்னாவை மாட்டுவதற்குப் பட்ட பாடு நன்றாய் ஞாபகமிருக்கிறது. பைப்பின் தலையில் ஆன்டென்னாவை மாட்டிவிட்டு அப்படியே புவியீர்ப்பு விசைக்கு எதிராய் அதை தூக்க வேண்டும். ஒரு கழைக்கூத்தாடியின் லாவகத்துடன் பாலன்ஸ் செய்து அது சரிந்து மண்டையில் விழுவதற்கு முன்பாக மொட்டைமாடிக் கைப்பிடிச்சுவரில் அடிக்கப்பட்டிருக்கும் க்ளாம்ப்-ல் சட்டென்று மாட்டிவிட வேண்டும். இப்படியாக எங்கள் வீட்டிலும் டி.வி. அதற்கப்புறம் உலகம் படுவேகமாக சுருங்க ஆரம்பித்தது. ஆன்டென்னாவை கேரளத்தின் திசை நோக்கித் திருப்பினால் ஒளியும் ஒலியும் மற்றும் சித்ரஹாருக்கு கொஞ்சமும் குறைவில்லாத "சித்ர கீதம்" தெரிகிறது என்பதை என் அப்பா R&D பண்ணிக் கண்டுபிடித்தார். திருவனந்தபுரம் சேனல். வியாழக்கிழமை எட்டு மணிக்கு! ஆக கொஞ்சம் கொஞ்சமாய் எல்லோருடைய நேரத்தையும் சாப்பிட ஆரம்பித்தது டி.வி. நடுநடுவே Turning Point, The world this week போன்ற உருப்படியான நிகழ்ச்சிகள். ரேணுகா சஹானே மற்றும்... ம்ம்.. இன்னொருவர் பெயர் மறந்துவிட்டது... அவர்களிருவரும் சேர்ந்து நடத்திய "சுரபி" நான் வெகுவாக விரும்பிப் பார்த்த ஒன்று. அப்புறம் ்ஷாருக் கான் நடித்த ஃபாஜி மற்றும் சர்க்கஸ் என்ற ஸீரியல்கள். பங்கஜ் கபூர் நடித்த ஒரு சோக ஸீரியல். R.K. நாராயணின் மால்குடி டேஸ். மோகன் கோகலே நடித்த "மிஸ்டர் யோகி", திலிப்குமார் என்கிற ஒரிஜினல் பெயரில் ஏ. ஆர். ரஹ்மான் டைட்டில் மியூசிக் போட்ட உகாதி புரஸ்கார், அடிக்கடி ஒலிபரப்பின பூபேந்தர் சிங், மிடாலி கச்சேரி (பின்னாளில் இளையராஜா இந்த மிடாலியை "தளபதி" படத்தில் பாடவைத்ததற்கு நான் உளமாற பூரிப்படைந்தேன்), இடையிடையே ரெமோ ஃபெர்னாண்டஸ் பாப், ஜாவத் ஜாஃப்ரி நடனம் என்று கலவையாய் ஒரு மாதிரி பார்த்த வரைக்கும் நிறைவாகவே இருந்தது. டி.வியை மிக விரும்பிய காலகட்டம் அது. அருகில் போனால் அந்தக்கால ப்ளாக் அண்ட் ஒயிட் டி.விக்கு ஒரு வாசனைகூட இருந்ததாக ஒரு உணர்வு. பிரமையா என்று தெரியவில்லை. அதன் சேனல் செலக்டரை கடக் கடக் என்று திருப்பிப் பார்ப்பதில்கூட ஒரு சுகம் இருந்தது. ராமாயணம், மகாபாரதம் என்று மெகா சீரியல்கள் ஆரம்பித்தபிறகுதான் டி.வி தன் உண்மையான சொரூபத்தைக் காட்ட ஆரம்பித்தது. அப்புறம் சந்திரகாந்தா வந்தவுடன் வில்லனின் யக்க்கூ யக்க்கூ என்ற கூவல் கேட்டது. ஜூனூன் வந்து ரசிகப் பெருமக்களைப் புரட்டிப்போட்டதில். தமிழகத்திற்கு புதிய தமிழ் கிடைத்தது. அப்புறம் சேனல்கள் ஒன்றாகி இரண்டாகி பல்கிப் பெருகத் தொடங்கின. அபாயமான உடைகளில் M டிவியில் 11 மணிக்குமேல் மாவு அரைக்க ஆரம்பித்தார்கள். ஆங்கில எழுத்துக்களின் அத்தனை எழுத்துகளிலும், அத்தனை கோள்களின் பெயரிலும் சேனல்கள் வர ஆரம்பித்தன. டெலிபோனில் கால்போட்டு பிடித்தபாட்டு கேட்க ஆரம்பித்தார்கள் மக்கள். கால்மேல் கால்போட்டு திரைப்பட விமர்சனம். நன்கு சூடான தோசைக்கல்லில் ஒரு டம்ளர் தண்ணீரை விசிறி அடிக்கும்போது எழும் சப்தம் மாதிரி துவக்க ம்யூசிக் போட்டு பயமுறுத்துகிற குரலில் தலைப்புச் செய்தி சொன்னார்கள். விளம்பர இடைவேளைகள் அதிகமாயின. டி.வியை தூரத்திலிருந்தே இயக்கிக்கொள்கிற வசதி வந்ததற்கப்புறம் மனிதன் இன்னும் அலைபாய ஆரம்பித்தான். 100 சேனல்கள் அவனுக்குப் போதவில்லை. இப்போது திரும்பின பக்கமெல்லாம் ஒளியும், ஒலியும்தான். தோசைமாவு, முறுக்குக் கம்பி, பேரீட்சம்பழத் தயாரிப்பாளர்கள் நிகழ்ச்சிகளுக்கு உபயதாரர்களாக ஆனார்கள். இடுப்பு வெட்டுகிற குத்துப்பாட்டுகளும், உதட்டு முத்தமும், நீர்வீழ்ச்சியில் உடல்கள் நனைந்த டூயட்டும், மேலாடை துறந்த ஃபேஷன் சேனல்களும் நம் அருமைக் குழந்தைகளுக்கு காணக்கிடைத்தன. வீடுதோறும் சீரியல்களின் ஒப்பாரி. காமெடி ஷோக்களில் நாம் சிரிப்பதற்கு வேலை வைக்காமல் அவர்களே ரெகார்டட் சிரிப்பலையை கூடவே ஒலிபரப்பிவிடுகிறார்கள். உலகத்தொலைகாட்சிகளில் முதன்முறையாக திரைக்கு வந்து சில தினங்களே ஆன படத்தை போட்டு ஐந்தே மணிநேரத்தில் முடித்துவிடுகிறார்கள். பெண்களை கும்பலாய் ஆடவிட்டு ஜவுளிக் கடல் விளம்பரங்கள் எடுக்கிற யுக்தி நமக்கு பழகிவிட்டது. நவரத்தினக்கல், வாஸ்து, எண்கணிதம் என்று திரையின் ஒவ்வொரு சதுர செ.மீ பரப்பையும் வாடகைக்கு விட்டுவிட்டார்கள். சினிமாவை, சினிமா உலகத்தைப் பொடிபண்ணி திரைக்கு வெளியே தூவுகிறது சேனல்கள். ரசிகப்பெருமக்கள் விழுந்துகிடக்கிறார்கள். நான் விளம்பரத் துறையில் இருந்தபோது அங்கு "Black Box" என்று வீடியோ கேஸட்டுகள் இருக்கும். இந்திய, அகில உலக நாடுகளில் எடுக்கப்பட்ட அருமையான விளம்பரப்படங்கள் அடங்கின கேஸட் அது. அது ஓட ஆரம்பிக்குமுன் டைட்டிலில் "Advertisements without the interruption of stupid programs" என்று போடுவார்கள். நான் அந்த ஹாஸ்யத்தை ரசித்திருக்கிறேன். இப்போது என்னிடம் ஒரு நல்ல கலர் டி.வி இருக்கிறது. ரங்கநாதன் தெரு முக்கில் வாங்கின ப்ளாஸ்டிக் கவர் அணிவித்த ரிமோட் இருக்கிறது. எப்போதாவது நேரம் கிடைத்தால் நல்லதும் கெட்டதுமாய் வண்டி வண்டியாய் கொட்டிக்கிடக்கிற அத்தனை சேனல்களினிடையே சிலவற்றைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கிறேன். அதில் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. எது எப்படியிருந்தாலும் நான் முதன்முதலில் தரிசித்த மற்றும் ஸ்பரிசித்த அந்த முதல் டி.வியின் வாசனையை இப்போது உணரமுடியவில்லை. ஒங்களுக்கு நெறைய பணம் சம்பாதிக்க ஆசையா? திடீரென எனக்கு ஒரு ஃபோன் வருகிறது. மறுமுனையில் ரொம்ப நாளாக என்னுடன் தொடர்பில்லாமலிருந்த நண்பர். எனக்கோ ஒரே ஆச்சரியம். வெளியே மேகமூட்டமாயிருக்கிறதாவென்று பார்த்தேன். இன்று மழை வந்தாலும் வரும். குரலில் உற்சாகம் மிதக்க குடும்ப செளக்கியம், வேலை, பையன் ஸ்கூல் எல்லாவற்றைப்பற்றியும் விசாரிக்கிறார். எனக்கு மிக மகிழ்ச்சியாயிருக்கிறது. பரவாயில்லை. நண்பர்களாகப்பட்டவர்கள் என்னை ஞாபகம் வைத்திருப்பது எத்தனை கொடுப்பினை!?. அவரைப் பற்றி, அவர் குடும்ப குசலங்களையெல்லாம் நானும் விசாரித்து வைக்கிறேன். வீட்டுக்கு வாங்களேன் ஒருநாள் என்கிறேன். மறுமுனையில் அவர் முகத்தில் பல்ப் ஒளிர்ந்ததை போன் வழியாகவே உணர முடிகிறது. என் முகத்திலும் பல்ப். "அடடா... புதன்கிழமை நானே ஒங்களை வந்து பாக்கறதுதான் ப்ளானே.." என்கிறார். தொடர்ந்து "ஒரு சின்ன விஷயம் இருக்கு." விஷயத்தை அறிந்து கொள்கிற ஆவல் என் குரலில் விரிகிறது. சொல்லுங்க என்கிறேன். அவர் ஆரம்பிக்கிறார். "ஒண்ணுமில்ல... ஒரு சின்ன பிஸினஸ். அத நான் உங்கள நேர்ல பாத்து சொன்னாதான் செளரியமாருக்கும். ஒரு சின்ன டெமோ காட்டணும். புதன் கெழம வர்றேன்." சட்டென்று எனக்கு புரிந்துவிட்டது. உடனே என்னுடைய பல்ப் ஆஃப் ஆகிவிட்டது. இன்றைக்கு மழை வந்தாலும் நான் சந்தோஷப்படமாட்டேன். "மல்டிலெவல் மார்க்கெட்டிங்கா?" "நான் நேர்ல சொல்றனே.." என்னிடமிருந்து ஒரு பலத்த பெருமூச்சு! வாழ்க்கையில் பதினெட்டாவது தடவையாக மாட்டிக்கொண்டேன். எனக்கு இந்த மாதிரி பிஸினஸ்களில் துளியும் ஆர்வமில்லையென்றும், நான் ஏற்கெனவே இதையெல்லாம் (வேறு சில நண்பர்களின் வற்புறுத்தலின் பொருட்டு) முயற்சித்துப் பார்த்தாயிற்று என்றும் சொல்லி எப்போதும்போல் நான் நழுவப்பார்க்கிறேன். அத்தனை லேசில் விடுபவர்களா மல்டிலெவல் மார்க்கெட்டிங்தாரர்கள்? நான் நினைத்துக்கொண்டிருக்கிற மாதிரி மிக மோசமான பிஸினஸ் அதுவல்லவென்றும், இதனால் ஏகப்பட்ட பேர் குறுகிய காலத்தில் பணக்காரர்களாயிருக்கிறார்களென்றும், தனக்குக்கூட மாசா மாசம் அறுபதாயிரம் இதன் மூலம் வந்துகொண்டிருக்கிறதென்றும், நான் தலையை மட்டும் அசைத்தால் போதும் மற்றதையெல்லாம் தான் பார்த்துக்கொள்வதாகவும், தனலட்சுமியானவள் இப்போது என் வீட்டுக் காலிங்பெல்லில் கை வைத்திருப்பதாகவும் மூச்சுவிடாமல் பேசினார். ஜஸ்ட் நீங்க ஒரு ஹாஃபனவர் ஸ்பென் பண்ணுங்க போதும் என்றார். ஒரு பதினைந்து நிமிடத்திற்கு அவர் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். எல்லாம் கேட்டுவிட்டு 'நன்றி, எனக்கு இதில் ஆர்வமில்லை' என்று மறுபடி சொன்னேன். இப்போது அவர் முகத்தில் பல்ப் ஃப்யூஸ் போயிருக்கவேண்டும். சடுதியில் பணம் சம்பாதிக்கக்கூடிய ஒரு அரிய பெரிய வாய்ப்பை நீங்கள் இழக்கிறீர்கள் என்று கூறி போனை வைத்தார். இது போல் பல. முதலில் கொஞ்சம் பட்டுப் பின் தெரிந்துகொண்ட அனுபவங்களிலிருந்து The art of saying No வை கொஞ்சம் கொஞ்சமாக பயின்றதிலும் இப்போது இம்மாதிரி நண்பர்களுக்கு சிரித்து மழுப்பி எனக்கு ஆர்வமில்லை என்று எப்படியாவது சொல்லித் தப்பித்துக்கொள்கிறேன். அவர்கள் சொல்கிற மாதிரி 'எதுவுமே செய்யாமல்' காசானது கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுமா என்றெல்லாம் நான் ஆராயவும் இல்லை. ஆனால் இந்த மாதிரி மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் உழல்பவர்கள் அதிகபட்சம் மற்றவர்களை வற்புறுத்தி இதில் இணைக்கிறார்கள் என்கிற விஷயம் எனக்கு உடன்பாடாக இல்லை. பின்னே மார்க்கெட்டிங் என்றாலே அதுதானே? ஆரிஃப்ளேம் வகை பிஸினஸ்காரர்கள் "யூஸ் பண்ணிப் பாத்தீங்கன்னா அப்புறம் நீங்களும் இந்த லைனுக்கு வந்துருவீங்க" என்று சில விலை அதிகமுள்ள நமக்கு வேண்டாத பொருட்களை தலையில் கட்டிவிட்டுப் போய்விடுகிறார்கள். சில சமயம் டெமோ என்கிற பெயரில் நமது நேரம் நமது அனுமதியில்லாமல் சாப்பிடப்படுகிறது. ரொம்ப காலத்துக்கு முன் என் நண்பர்களிருவர் இது மாதிரி எதையோ ஆரம்பித்து ஒரே மாதத்தில் ஆளுக்கொரு யமஹா வாங்கி ஆக்ஸிலேட்டரை முறுக்கித் திரிந்ததைப் பார்த்து என் புருவங்கள் உயர்ந்ததை நினைவுகூர்கிறேன். இன்னொரு நண்பன் இரண்டு வருடம் இதில் உழன்றுவிட்டு கடைசியில் இரண்டேகால் லட்சம் கடனாளியாக நின்றது ஏன் என்றும் புரியவில்லை. இதன் சூட்சுமம் என்னவென்று கண்டுபிடிப்பதற்கு நான் முயற்சிக்கவில்லை. எது எப்படியோ இருக்கட்டும்! இந்த ஆம்வேவோ இல்லை ஆரிஃப்ளேமோ நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, இல்லை தெரிந்த நபர்களுக்கு மத்தியில் வரும்போது ஒரு ஆரோக்கியமாக இருக்கும் நட்புக்கு கொஞ்சம் காய்ச்சலோ இருமலோ வரத்தான் செய்கிறது. மனத்தில் கொஞ்சம் டென்ஷன் உருவாகிறது. என் நண்பன் ஒருவன் இந்த விஷயத்தைச் சமாளிப்பதில் பரவாயில்லை. கீழ்கண்ட உரையாடல் அவனுக்கும் மல்டிலெவல் மார்க்கெட்டிங்தாரருக்கும் இடையே நடந்தது. - ஒங்களுக்கு நிறைய பணம் சம்பாதிக்க ஆசையா? - இல்லையே... - என்ன இப்படி சொல்றீங்க. பணம் லைஃப்ல ரொம்ப அவசியமில்லையா? - தேவைதான். - ஸோ யு நீட் மணி. - நோ! - இப்பதானே சொன்னீங்க பணம் முக்கியம்னு! - முக்கியம். ஆனா எனக்கு வேணும்னு சொல்லலையே! - அப்ப நீங்க பணம் சம்பாதிக்க வேண்டாமா? - எதுக்கு சம்பாதிக்கணும்? - பணம் இல்லாம எப்படி சார் வாழ முடியும்? - தோ.. நான் வாழ்ந்துட்டுதானே இருக்கேன்? - நிறைய பணமிருந்தா உங்களுக்கு எவரிடே ப்ராப்ளம்ஸ் எல்லாம் ஈஸியா சால்வ் பண்ணலாம் இல்லையா??? - எனக்குதான் எந்த ப்ராப்ளமும் இல்லையே சார். - உங்க ஃப்யூச்சருக்கு? - ஹாஹா. Great Joke. அவன் மசியமாட்டான் என்று தெரிந்து லேசாய் என்பக்கம் திரும்பினார். "நீங்க சொல்லுங்க... உங்களுக்கு வாழ்க்கைல பணம் வேணுமா வேண்டாமா?" சும்மா பேசிக்கொண்டிருப்பானேன். நான் திருவிளையாடல் சிவபெருமான் மாதிரி "டங்" என்று நின்ற போஸில் மண்டபத்திலிருந்து மறைந்துவிட்டேன். சண்டை முன்னொரு காலத்தில் சினிமாக்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி என்றழைக்கப்படும் நடிகர்கள் வாழ்ந்து வந்தார்கள். சினிமாவில் எங்கெல்லாம் எப்பொழுதெல்லாம் அக்கிரமக்கார்கள் அப்பாவிகளுக்கு வஞ்சனையால் அநீதியிழைக்கிறார்களோ, அங்கெல்லாம் குதிரை, ரிக்ஷா போன்ற கிடைக்கிற வாகனங்களில் கடுகி விரைந்து வந்து வானத்தில் எம்பிக் குதித்து அக்கிரமக்காரர்களை உதைத்து பூமியில் உருட்டிவிட்டார்கள். சாட்டை, பட்டாக்கத்தி, வாள், வேல் முதலான சாமானியர்கள் கையாள்வதற்கியலாத ஆயுதங்களை அநாயசமாக கையாண்டு சளைக்காமல் சண்டையிட்டார்கள். அடிபட்டு விழுந்தாலும் வில்லனை நோக்கி ஒரு அலட்சியப் பார்வையை வீசிவிட்டு இதழ்கடையோரம் அரும்பிய உதிரத்தை வலது கை கட்டை விரலால் ஸ்டைலாக துடைத்துவிட்டு முழு வீச்சோடு பாய்ந்தார்கள். இறுதியில் தன் சக்தியையெல்லாம் இழந்து கீழே குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கும் பகைவனின் நெஞ்சில் காலும், அவன் கழுத்தில் கத்தியும் பதித்து ஓரிரு டயலாக் உதிர்த்து அவனை மன்னித்து விடுதலை செய்தார்கள். அல்லது உத்தரத்தை நோக்கிச் சுட்டுக்கொண்டே கடைசி காட்சியில் உள்ளே நுழைந்த இன்ஸ்பெக்டரிடம் அவனை ஒப்படைத்துவிட்டு சட்டத்துக்கு காவலர்களானார்கள். இந்த மாதிரி காட்சிகளில் கத்திச் சண்டையாயிருந்தால் டிணிங் டிணிங் என்ற சப்தமும், வெறும் கை என்றால் டிஸ்யூம் டிஸ்யூம் என்ற சப்தமும் ஒரு இருபது நிமிடங்களுக்கு இடைவிடாது கேட்டுக்கொண்டிருக்கும். பிண்ணனியில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும்பொருட்டு பாம் பாம் பாம், தடுபுடுதடுபுடுதடுபுடுதடுபுடு என்று இசையமைப்பாளர் ட்ரம்ஸையும் ட்ரம்பட்டையும் உருட்டியவாறிருந்தார். இடையிடையே கதாநாயகர்களின் அருமை வளர்ப்பான குதிரை, அல்லது கறுப்பு நாய் முதலானவை, வில்லனால் கட்டிப்போடப்பட்டிருக்கும் குடும்ப உறுப்பினர்களின் கட்டை அவிழ்த்தோ அல்லது வெடிக்கவிருக்கும் குண்டின் திரியில் சிறுநீர் கழித்தோ தம்மாலான வகையில் நீதிக்குத் துணைபுரிந்தன. இந்தமாதிரி சண்டைக்காட்சிகளில் திரையரங்கில் கரகோஷங்களும், விசில்களுமாக அதிர்ந்து தூள் பறந்தன. சினிமா அதன் அழகிய பொய்களை, செல்லுலாய்ட் கதாநாயகர்களின் வீரத்தோடு கலந்து உறுத்தாமல் ரசிகர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தது. அவர்களின் மனம் திரையரங்கைவிட்டு வெளியில் வரும்போது மிக உற்சாகமாயிருந்தது. கமலஹாசன், ரஜனிகாந்த் போன்றோர் வந்தபிறகு வில்லன்கள் சற்று ஆடித்தான் போனார்கள். பின்னே இவர்களுக்கு கராத்தேவும், குங்ஃபூவும் வேறு தெரிந்திருக்கிறதே. செகண்டுக்கு முப்பத்தியிரண்டு குண்டுகள் வீதம் பொழியும் இருபத்துக்கும் மேற்பட்ட இயந்திரத் துப்பாக்கிகளாலும் இவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. சாக்கில் கட்டி கடலில் வீசினாலும் மிதந்து எழுந்து வந்தார்கள். நிஜமான பராக்கிரமசாலிகள்தான். ஆகவே இதுபோன்ற சாகாவரம்பெற்ற கதாநாயகர்களை அடியோடு ஒழித்துக்கட்ட ராக்கெட் லாஞ்ச்சர்களும், க்ரானைடு குண்டுகளும் வில்லன்களுக்கு நிறைய தேவைப்பட்டன. கமலஹாசனுக்கே இப்படியென்றால் மாருதி காரையெல்லாம் ஒற்றைவிரலால் தூக்குகிற சரத்குமார்களை வெறுங்கையால் சண்டையிட்டுக்கொல்வதென்ன சாதாரண விஷயமா என்ன? தயாரிப்பாளர்களுக்கு செலவு இழுக்கத் தொடங்கியது. சினிமாவில் கொள்ளைக்கூட்டத் தலைவர்கள் மறைந்து, தங்கத்தைக் கடத்துபவர்களின் ட்ராஃபிக் அதிகமாகத் தொடங்கியது. அப்புறம் தங்கம் தீர்ந்துபோய் அதிகம் சிரமமில்லாமல் ப்ரெளன் சுகர். இடைஞ்சலாய் இருக்கிற கதாநாயகர்களை துவம்சம் செய்யப் போன அடியாட்கள் கைகாலில் கட்டுடன் திரும்பி வந்தார்கள். ஆட்கள் போதவில்லை. ஆயுதங்களும். எத்தனை நாள்தான் கஞ்சாவையே கடத்துவதென்று அலுத்து சாராயம் காய்ச்சிப் பார்த்தார்கள். அங்கேயும் விஜயகாந்த் எழுந்தருளி மேற்படி சட்டவிரோதக்காரர்களை பக்கத்து மரத்தில் கால் வைத்து எகிறி அடித்தமையால் பேசாமல் அரசியல்வாதியாவதைத் தவிர வில்லன்களுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. அரசியலென்றால் எப்படியும் அடியாட்கள் எனப்படுபவர்களையும் கழுத்தில் ஒரு கிலோ சங்கலியணிந்த தாதா என்றழைக்கப்படுகிற அதிபயங்கர வில்லன்களையும் ஏவி கதாநாயகர்களின் வீரத்துக்கு சவால்விட ஆரம்பிக்கலாமே. இதன் மூலம் அணுகுண்டை நெஞ்சில் தடுத்து மாண்புமிகு வில்லர்களின்பால் திருப்பியனுப்பும் கதாநாயகனுக்கு அரிவாள் என்கிற ஒரு பயங்கர ஆயுதத்தை அறிமுகம் செய்ததன்மூலம் தமிழ்த்திரை சண்டைக்காட்சி ரசிகர்களை கொஞ்சமாய் நகர்த்தி சீட் நுனியில் உட்கார வைத்தார்கள். இப்போது ரசிகன் உற்றுப் பார்க்க... ஸாரி... கேட்க ஆரம்பித்தான். அடடே... அந்த டிஸ்யூம் டிஸ்யூம் சப்தத்தையே காணோமே. அதற்குப் பதில் என்ன இது இடி இடிக்கிற மாதிரி.. ஓ... DTS... இல்லை.. டால்பியா? வருடங்கள் எத்தனை உருண்டிருந்தாலும், எத்தனைதான் நையப் புடைத்து அனுப்பியிருந்தாலும் மறுபடி மறுபடி எதிரே தோன்றுகிற இந்த தாதாக்களை ஒழிக்க நம்மருமை கதாநாயகனுக்கு ஒரேயொரு வழிதான் இருந்தது. அது தப்பித்து ஓடுகிற மாதிரி ஓடி துரத்துகிற அடியாட்களை ஒரு சந்து முனையில் கார்னர் செய்து திரும்பி நின்று எரிமலையை கண்களில் தேக்கி வைத்து முறைப்பது. இந்த இடத்தில் ரீ ரெகார்டிங் அனைத்தையும் நிறுத்திவிட்டு நம் கதாநாயகனின் வலது அல்லது இடது கை விரல்கள் மடங்குவதை ஒரு மாதிரி நெறிபடுகிற சப்தத்துடன் மிக மிக டைட் குளோசப்பில் காட்டவேண்டும். அரை நூற்றாண்டு காலமாக சண்டைக் காட்சிகளில் ஊறித் திளைத்திருந்த ரசிகப் பெருமகனானவன் அடுத்து என்ன நடக்கிறதென்பதை மிக சுளுவாக ஊகித்துக்கொண்டான். கதாநாயகனிடம் முதல் அடி வாங்குகிற அடியாளைப் பார்த்தீர்களா? அந்த முதல் அடி என்பது மிக முக்கியம். அது நாயகன் எப்படிப் பட்டிவன் என்பதற்கான முன்னுரை. திடீரென DTS சர்ரெளண்ட் சவுண்டு ஸ்பீக்கர் தன் அதிக பட்ச இடியை ரசிகனின் காது ஜவ்வுகள் அதிரப் பாய்ச்ச இதோ அடியாள் அந்தரத்தில் 13 கரணம் போட்டு (இது கொஞ்சம் ஸ்லோ மோஷனில் காட்டிவிட்டு) தூரத்தில் ஊருக்கு ஒளி வழங்கும் ட்ரான்ஸ்ஃபார்மர் ஒன்றின்மேல் பொறி தெறிக்க (இது கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஃபாஸ்ட் மேட்ரிக்ஸ் எஃபெக்டில்) வெடித்து விழுந்தான் பாருங்கள். மற்ற அடியாட்கள் தொண்டையில் எச்சில் விழுங்கினார்கள். பின்னே கதாநாயகனும் முன்பு தாதாவாக இருந்ததும் அவனுக்கு இன்னொரு பெயர் இருந்ததும் பின்னர் தெரிய வந்தது. அதற்கப்புறம் விழுந்த ஒவ்வொரு அடியிலும் தியேட்டரில் ரசிகனின் தாடை கிழிந்து தொங்கியது. அவன் ரத்தம் சூடாகி நரம்புகள் ஜிலீர் ஜீலீர் என்று அதிர்ந்தன. அடியா இது. இடி. போததற்கு ஒரு பாட்டி வேறு வந்து கதாநாயகனை உற்சாகப் படுத்தும் வகையில் பாட நிஜமாகவே அவன் ஒரு சூறாவளிக் காற்றென சுழன்று எழுந்தான். க.நா அடியாட்களின் கைகளைத் திருகி வீசுகிற போது எக்ஸ்ரேயில் எலும்புகள் ஒடிவது தெரிந்தன. இந்த கிராஃபிக்ஸ் என்று ஒன்று வந்து சேர்ந்துவிட்டதாமே நடுவில். நல்லதாகப் போயிற்று. இனி தாதாக்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் சிம்ம சொப்பனம்தான். வில்லனைப் பந்தாட விஜய் நடந்துவரும்போது அவர் ஷுவில் பட்டாசு எதுவும் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை. அப்புறம் எப்படி சாணை பிடிப்பது மாதிரி தீப்பொறி பறக்கிறது? ஓ! கிராஃபிக்ஸ். இனி காலைச்சுழற்றி தரையில் புயல்காற்றை உருவாக்கி வில்லன்களை கதிகலங்கச் செய்வது சுலபம். இப்படி எத்தனையோ! கதாநாயகன் DTS, க்ராஃபிக்ஸ், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் எடிட்டிங் துணைகொண்டு முஷ்டி மடக்கி விசிறின ஒவ்வொரு அடியிலும், மண்டை பிளந்து, கைகால் முறிந்து, தாடைச் சதைகள் பிய்ந்துபோய், கழுத்தெலும்பு மளுக்கென்று முறிக்கப்பட்டு, சுவரோடு அடித்துத் துவைக்கப்பட்டு, கண்கள் பிதுங்கி, நரம்புகள் தளர்ந்து உயிர்நாடி ஊசலாடி ஓய்ந்து இருக்கைகளில் கிடக்கிறான், தொன்று தொட்டு குடும்பத்தோடு திரைப்படம் காணவந்து கொண்டிருக்கும் ரசிகன். இதற்கு முன் பார்த்த திரைப்படத்தில் ஒரு சண்டைக்காட்சியினைக் கண்ணுற்று இதயம் நடுங்கி அதிர்ந்து மிகவும் பயந்துபோய் இரவெல்லாம் உளறின தன் குழந்தைக்கு காதில் வைப்பதற்கு பஞ்சோடு இன்றைக்கு "அந்நியன்" என்ற இந்தப் படத்தைக் காண வந்தவனும் கொஞ்சம் நடுங்கித்தான் போய்விட்டான் இந்தத் தடவை. வெளியே வந்தபோது விண் விண் என்று தலை வலித்தது. வந்த கையோடு இந்த வலைப்பதிவையும் எழுதி வைத்தான். எம்.ஜியாரும் சிவாஜியும் வந்து இந்த DTS என்கிற வில்லனை எப்படியாவது ஒழித்துக்கட்டினால் இனி குழந்தைகளையும் தைரியமாய் சண்டைப்படத்துக்கு கூட்டிக்கொண்டு போகலாமென்று அவனுக்குத் தோன்றுகிறது. பதினோராயிரத்தில் ஒருவன் கிரிக்கெட் என்கிற வார்த்தை முதல் முதலில் என் காதில் விழுந்தபோது எனக்கு எட்டோ ஒன்பதோ வயதிருக்கும் என்று நினைக்கிறேன். Made in Japan என்று எழுதியிருந்த அப்பாவின் சிவப்புக் கலர் Sanyo - ரேடியோவிலிருந்து ஒலிபரப்பான கமெண்ட்ரியிலிருந்துதான் அந்த வார்த்தையை முதலில் கேட்க நேரிட்டது. எங்கேயோ விளையாட்டு மைதானத்தின் விண்ணைப் பிளக்கிற கரகோஷத்துக்கு நடுவே நடக்கிற விளையாட்டை ஒருத்தர் மூச்சு விடாமல் வர்ணிக்கிறார்.  "...வருகிறார், வீசுகிறார், அருமையான பந்து. அந்தப் பந்தானது சுழன்று இறங்கி... இதோ கவாஸ்கர் மட்டையை வீசுகிறார். சரியான வீச்சு. பந்து பார்வையாளர் திசை நோக்கி பறக்கிறது. இதோ ஸிக்ஸர். இன்னும் அதிக டெசிபலில் கரகோஷம். 6 ரன்கள். இப்போது ஸ்கோர்: 152-2. கரகோஷமோ, வர்ணனையாளரின் உச்சஸ்தாயி குரலோ, ஸ்கோரோ எதுவும் பாதிக்காமல் அப்பா சலனமற்று கேட்டுக் கொண்டிருந்தார். எதுவும் புரியாமல் நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன். இது என்ன விளையாட்டு என்று கேட்டபோது Eleven fools are playing. Eleven thousand fools are watching என்றார். அன்றைய வயதுக்கு அது என்னமோ மண்டைக்குள் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது.  அதனால் கிரிக்கெட் என்கிற அந்த வார்த்தையானது, என் வயதையொத்த சக நண்பர்களுக்கு ஏற்படுத்தின பரவசத்தை எனக்குள் ஏனோ ஏற்படுத்தவில்லை. ஆனால் பரமபதத்திலிருந்து பம்பரம்வரை வகை தொகை பாராமல் விளையாடிக் கொண்டிருந்த என் நண்பர்கள் சட்டென்று மட்டையும் கையுமாய் அலைய ஆரம்பித்தது மட்டும் எனக்கு ஏனோ ஏமாற்றமாயிருந்தது. இது இப்படி இருக்கிறதென்றால் பக்கத்து வீட்டில் சுப்ரமணியபுரம் சசிகுமார் மாதிரியாகத் தோற்றமளிக்கிற ஒரு அண்ணன் ஒரு சின்ன ட்ரான்ஸிஸ்டரை காதோடு அணைத்து புஸ் என்ற சப்தத்துடன் வாசலில் அமர்ந்து கிரிக்கெட் காமெண்ட்ரி கேட்டுக் கொண்டிருப்பார். அவரிடத்தில் கிரிக்கெட் பற்றிய குறைந்த பட்ச விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று போனேன். வெங்சர்க்கார் எனப்படுகிற கிரிக்கெட் வீரர் அவர் காதுக்குள் பந்து வீசி முடித்தவுடன் ரேடியோவை அகற்றி என்ன என்றார். சொன்னேன். அவர் நான் சொன்னதை சட்டை செய்யாமல் "அது இருக்கட்டும், உன் பேரை இனிமே யார் கேட்டாலும் ரகுநாத வர்ம சேதுபதி கணேஷ சுந்தர பாண்டிய குலோத்துங்க வீர வெங்கடேஷ்வர யோகி ஜகந்நாத சூர்ய காந்திப் ப்ரகாஷ ராவ்-ன்னு சொல்லணும். எங்கே சொல்லு பாக்கலாம். சொல்லேன்னா டைகரை அவுத்து விடுவேன்" என்றார் சம்பந்தமில்லாமல். தன் பெயர் உச்சரிக்கப்பட்ட மாத்திரத்தில் டைகர் என்றழைக்கப்படுகிற அல்சேஷன் நாய் கழுத்துச் சங்கிலியை இழுத்து "வ்வ்வவ்" என்று குறைத்துப் பரபரத்தது. ஒருவேளை வீரமாய் நகராமல் நான் அங்கேயே நின்றிருந்தால் என் மனத் துணிவை பாராட்டி குறைந்த பட்சம் "ஃபோர்" என்பதும் "பவுண்டரி" என்பதும் ஒன்றுதான் என்பதையாவது அவர் எனக்குச் சொல்லிகொடுத்திருக்கக் கூடும். அதன் பிறகு கிரிக்கெட்டின் மேல் எனக்கு எந்த ஒரு சுவாரஸ்யமும் ஏற்படாமல் அது எனக்கு ஒரு அந்நிய விளையாட்டாக மாறிப் போனது. பதினொரு முட்டாள்கள் விளையாடுகிறார்கள். பதினோராயிரம் முட்டாள்கள் பார்க்கிறார்கள். இந்தச் சொற்றொடரின் கவர்ச்சி பிடித்துப் போக, எனக்கு இந்த விளையாட்டு பிடிக்காமல் போனதற்கான சாக்காக இதை எல்லோரிடமும் சொல்ல ஆரம்பித்தேன். அது என்ன ஒரு பந்தை சுழற்றிச் சுழற்றி வீசுவதும் அதை ஒருவன் அடிப்பதும் ஒருவன் பிடிப்பதும். இதெல்லாம் ஒரு விளையாட்டா? சுத்த போர். ஆனால் இதனை மனதுக்குள் வர விடாமல் எத்தனை வேலி போட்டுத் தடுத்தாலும் டி.வி திரையில் கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் மட்டையுடன் தோன்றி பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி என்றார். கபில்தேவின் தட்டையான மட்டையைவிட கட்டையான மீசை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. நான் பெரிதானால் இப்படித்தான் மீசை வைத்திருக்கவேண்டும் என்பதற்கு என் ரோல் மாடல்கள் லிஸ்டில் 1) வாழ்வே மாயம் கமல் 2) கபில்தேவ் 3) சிசர்ஸ் விளம்பரத்தில் வருகிற ஒருவர். மீசை என்பதெல்லாம் நாய்க்குட்டி மாதிரி நம் இஷ்டத்துக்கு தேர்ந்தெடுத்து வளர்க்கிற ஒன்றல்ல என்று புரிகிற பருவம் வந்தபோது ரேடியோவுக்கு மவுசு குறைந்து டி.வி வந்திருந்தது. அப்போதுதான் ரேடியோவில் மட்டையும் பந்தும் வீசின நிபுணர்களை யார் யார் என்று அடையாளம் தெரிந்தது. அம்பயர் என்று ஒரு கேரக்டர் நடுவில் நின்று கொண்டிருப்பார் என்பதும். அப்புறம் என் நண்பர்கள் குழாம் கிரிக்கெட் மேட்ச் பார்க்கிறோம் என்று என்னை தனிமைப் படுத்தி வெறுப்பேற்ற ஆரம்பித்தார்கள். காலனிக்கு வெளியே காலி மனைகளில் மூன்று குச்சிகள் நட்ட வைத்து டீம் பிரித்து விளையாட ஆரம்பித்தார்கள். எனக்கு இது எதுவும் பிடிக்காவிட்டாலும், டி.வி- மேட்சில் விளையாடுபவர்களைப் போலவே பந்தை தொடையில் தேய்த்து தேய்த்து பசங்கள் பவுலிங் போடுவதை அசுவாரஸ்யமாய் மரத்தடி நிழலில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் பக்கத்தில் இருக்கிற தண்ணீரற்ற பொட்டல் கிணற்றில் அடிக்கடி விழுந்து விடுகிற பந்தை எப்படி எடுப்பது என்று தெரியாமல் நண்பர்கள் முழித்துக் கொண்டிருக்கும்போது நான் கயிறு கட்டி இறங்கி அட்வென்ஞ்சர் எல்லாம் செய்து எடுத்துக் கொடுப்பேன். அனில் கும்ளே, வினோத் காம்ப்ளி, ஸ்ரீகாந்த், கிரண்மோர், ரன் ரேட், ஓ.டி.ஐ, உலகக் கோப்பை, எல்.பி.டபிள்யூ, வைடு, நோ பால் என்று என்னென்னவோ பெயர்களும் வார்த்தைகளும் என் அனுமதியில்லாமலே அவ்வப்போது என் காதில் விழுந்து கொண்டிருந்தது. கல்கியில் வெளியான என் முதல் கதைக்கு "25 வயது சித்ரனின் முதன் இன்னிங்ஸ் இச்சிறுகதை" என்று அறிமுகம் கொடுத்து போட்டபோதுகூட கிரிக்கெட்டில் இன்னிங்ஸ் என்றால் என்ன என்று தெரியாமல்தான் இருந்தது. ஒரு ஓவருக்கு 6 பந்துகள் என்கிறதே எனக்கு ரொம்ப நாள் கழித்துதான் அறிவூட்டப்பட்டது. அப்படியாக கிரிக்கெட்டை என் வாழ்க்கையின் கூண்டுக்குள் வர விடாமல் நான் பட்ட எத்தனங்கள் எல்லாவற்றையும் திடீரென இப்போது ஒதுக்கி வைக்க வேண்டியதாய் போயிற்று. காரணம் என் பையன். அவன் ஒண்ணரை வயதாய் இருக்கும்போது சும்மா ஒரு ப்ளாஸ்டிக் கிரிக்கெட் பேட் ஒன்றை ஃபோட்டோ எடுப்பதற்காக கையில் கொடுத்தது தப்பாகப் போய்விட்டது. இன்று வரை அவனிடமிருந்து அதைப் பிடுங்க முடியவில்லை. ஐ மீன் ப்ளாஸ்டிக்கிலிருந்து இங்க்லீஸ் வில்லோவோ என்னவோ மெட்டிரீயல் என்று உருமாறிவிட்டது. டொக் டொக் என்று சதா வீட்டுக்குள் பேட்டின், பந்தின் சப்தம் கேட்க ஆரம்பித்தது. அவனது கிரிக்கெட் ஆர்வம் நாளடைவில் அதிகமாகி தீவிரமாகியது. ஒரு தடவை அவன் பொடியனாய் இருக்கும்போது மொட்டை மாடியில் அவன் சகாப் பொடியன்களுடன் ஆடிய வேர்ல்டு கப் மேட்சில் சிக்ஸருக்குப் போன ஒரு பந்தைப் பிடிக்கப் போய் இடது கையில் Green Stick Fracture உடன் அழுதுகொண்டே திரும்பி வந்தான். மூன்று மாதம் மாவுக்கட்டு. அப்படியும் அடங்காமல் மாவுக் கட்டுத் தொட்டிலுடனேயே இல்லாத பேட்டால் இல்லாத பந்தை பவுண்டரிக்கோ, அரங்கத்துக்கு வெளியேயோ இடைவிடாமல் அனுப்பிக் கொண்டிருந்தான். வீட்டுக்கு வருகிற விருந்தினர்களிடமும் பந்தைக் கொடுத்து அவனுக்கு பவுலிங் போடச் சொல்லி ஆட்டத்துக்கு இழுத்துவிடுவான். என் அலுவலக நண்பர்கள் ஒரு தடவை அடையாறு காந்தி நகர் மைதானத்துக்கு கிரிக்கெட் விளையாடக் கூப்பிட்டபோது என் மகனுக்காக ஞாயிற்றுக் கிழமை தூக்கத்தைக் தியாகம் செய்து அதிகாலை ஐந்தரை மணிக்குப் போனோம். நான் முதன் முதலாக பேட்டிங் செய்த நிகழ்வு அங்கே அரங்கேறியது. எனக்கு விளையாடத் தெரியாது என்று சொல்லியும் எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் பவுலிங் போட்டு முதல் பந்திலேயே அவுட் ஆக்கிவிட்டதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. நீ சுத்த வேஸ்ட்டு என்கிற மாதிரி பார்த்த மகனின் பார்வையைத் தவிர்த்து அந்தப் பக்கம் பார்த்தேன். அவன் இது நாள்வரை என்னை இன்னொரு சச்சின் என்றே நினைத்துக் கொண்டிருந்தான். பையனின் உயரத்துக்கும் உருவத்துக்கும் வயது வந்தவர்களின் மட்டையும் அதன் எடையும் ஒத்து வரவில்லையென்றாலும் சளைக்காமல் அதையும் முயற்சித்துப் பார்த்தான். இது தவிர பொடியன் இப்போது டி.வியில் பழைய மேட்செல்லாம் பார்க்க ஆரம்பித்துவிட்டான். எல்லா நாட்டினுடைய எல்லா அணி மெம்பர்களையும் உருப்போட்டு வைத்திருக்கிறான். எந்த மேட்சில் யார் எத்தனை ரன் எடுத்தார்கள், எப்படி அவுட் ஆனார்கள் என்று அவன் ரேன்ஞ்சுக்கு ஒரு மினி கிரிக்கெட் என்சைக்ளோப்பீடியாவாக உலா வந்து கொண்டிருக்கிறான். Puma Ballistic என்று எழுதியிருக்கிற மட்டைதான் வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று வாங்கிக் கொண்டான். இதுவரை 128 பந்துகளைத் மொட்டை மாடியில் ஸிக்ஸர் அடித்துத் தொலைத்திருக்கிறான். ஒருமுறை அவன் இன்னும் சின்னக் குழந்தைதானே என்று என் மனைவி அவனுக்கு சோறு ஊட்டும்போது 'கிரீஸ்'-க்கு வெளில நின்னு ஊட்டினா எனக்கு எப்படி எட்டும். இன்னும் பக்கத்துல வா! என்றான். முழங்காலில் கட்டுகிற பட்டை, கையுறை, ஸ்டம்ப்ஸ் எல்லாம் வைத்திருக்கிறான். அஜந்தா மெந்திஸ்-ன் ஸ்பின் இப்படித்தான் இருக்கும் என்று சுழற்றி வீசி என் நெற்றியைப் பதம் பார்க்கிறான். கம்ப்யூட்டரில் ஆன்லைன் கிரிக்கெட் கேம் விளையாடுகிறான். இவையெல்லாற்றையும் மையப்படுத்தி, "அவனுக்கு கிரிக்கெட்-ல பயங்கர இண்டரெஸ்ட் இருக்கு, கோச்சிங் போட்டிருங்க." என்று ஒருத்தர் தவறாமல் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். வரவேற்பறையில் அவன் கிரிக்கெட் விளையாடி இரண்டு ட்யூப் லைட், ஒரு சுவர் கடிகாரம், இரண்டு மூன்று ஃபோட்டோ ஃப்ரேம் அப்புறம் பக்கத்து வீட்டு அகல் விளக்கு, காலிங் பெல் ஸ்விட்ச் என்று ஏகத்துக்கு உடைத்திருந்தாலும், கோச்சிங் பற்றி யோசித்துக் கொண்டுதானிருக்கிறேன். கிரிக்கெட் பேட்டை எப்படி கையில் சரியாகப் பிடித்து நிற்பது என்பதை முதன் முதலாக மகனிடமிருந்து சென்ற வாரம் கற்றுக் கொண்டேன். *** பின் குறிப்பு: இது எழுதியது 2008-ல். இப்போது பையன் வளர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் அண்டர் 14-ல் தேர்வாகி மாவட்ட அளவில் டோர்னமெண்டுகள் விளையாடி, ரவுண்ட் ராபின், கம்பைண்டு டிஸ்ட்ரிக்ட், ஸ்டேட் ப்ராபபிள்ஸ் என்று தேர்வாகி வந்ததில் நான் சென்னையில் ஒரு கிரிக்கெட் க்ரவுண்ட் விடாமல் தேவுடு போக வேண்டியிருந்தது. இப்போது அதே காஞ்சிபுரம் மாவட்ட அண்டர் 16 ப்ளேயரான அவன் ஏதோ ஒரு தமிழ்நாட்டு கிரிக்கெட் அஸோஸியேஷன் நாலாவது டிவிஷன் லீக் டீமிலும் இருக்கிறான். எப்போவாவது ’ஏண்டா போன மேட்சில் ஒழுங்கா விளையாடல’  என்றால், லெக் பை, ஆஃப் ஸைடு என்று ஏலியன் மொழியில் எதையாவது விளக்க முற்படுவான். நான் வாயை மூடிக்கொள்வேன். ஆனாலும் என்னுடைய அந்த 11-11 அபிப்ராயம் லேசாய் மாறிவிட்டது. வர்ணமயமான வாழ்க்கை என் எழுத்தாள நண்பர்கள் எழுதின புத்தகங்களை சும்மா எடுத்துப் புரட்டிக்கொண்டிருந்தபோது அதில் ஐந்தாறு புத்தகங்களின் அட்டையை நான் வடிவமைத்திருந்ததைப் பார்த்தேன். ரொம்ப மோசம் என்று சொல்லமுடியாமல் சுமார் ரகத்தில் இருந்தன அவை. கோவை ஞானியின் ’தமிழன் - வாழ்வும் வரலாறும்’ என்கிற சின்ன புத்தகத்திற்கான அட்டைப்படம்தான் முதல் முயற்சி. அதில் நான் வரைந்து கொடுத்த ஒரு ஓவியம் அட்டையாய் வந்தது. ஃபோட்டோஷாப் என்கிற வஸ்து என் வாழ்வில் வந்ததற்கப்புறம் கிரியேட்டிவிட்டியை கையாள்கிற விஷயம் சுலபமாய்ப் போய்விட்டது. அதை நான் முதன் முதலில் உபயோகித்து உருவாக்கினது பாலைநிலவனின் “கடல்முகம்” கவிதைத் தொகுப்பின் முகப்பு. அதற்கப்புறம் சில பல அட்டைகள். ஒரு நல்ல கிராஃபிக் டிசைனராக நண்பர்கள் வட்டாரத்தில் அறியப்பட்டிருந்தேன் என்பது இந்த மாதிரி வடிவமைப்பு வாய்ப்புகளுக்கு ஆதாரமாய் இருந்தது. சின்ன வயதில் கையில் கிடைத்த பேப்பரிலெல்லாம் எதையாவது கிறுக்கிக் கொண்டிருப்பேன். அப்பாவிடம் லோடு லோடாக திட்டுவாங்க அதுவே போதுமானதாக இருந்தது. ஒரு பதினைந்து வயதிற்கப்புறம் திடீரென பெண்களின் முகங்களை வரைவதின்பால் ஒரு நாட்டம் ஏற்பட்டது. பென்சில், கரி, பேனா, சாக்பீஸ் என்று எது கிடைத்தாலும் குறைந்தபட்சம் ஒரு பெண்ணின் கண்களையாவது வரைந்துவிடுவது என்பது ஒரு பழக்கமாகவே ஆகியிருந்தது. பொம்பளைப் படம் வரைவதைத் தவிர வேறு எதுவும் இவனுக்கு உருப்படியாகத் தெரியாது என்பது அப்பாவும் தன் தினசரி கண்டனக் கடமையை தவறாமல் செய்து கொண்டிருந்தார். நாங்கள் குடிபோகிற வீடுகளிலெல்லாம் சமையலறை சுவற்றில் ஒரு பெண்ணின் முகத்தை பென்சிலால் தீட்டி வைத்திருப்பேன். (அப்பா அதிகம் நுழையாத இடம் அது ஒன்றுதான் என்பதால்). இப்போதுகூட என் வீட்டு வரவேற்பறை ஹால் சுவற்றில் அதுபோல ஒன்றை நீங்கள் பார்க்கலாம். இப்போது பையன் “என்னை wall-ல scribble பண்ணக்கூடாதுன்னு சொல்லிட்டு நீ மட்டும் ஏன் பண்றே?” என்று திட்டுகிறான். ஆக இரண்டு தலைமுறைகளாக எதிர்ப்பு தொடர்கிறது. நண்பர்கள் நடத்தின கீதம் என்கிற கையெழுத்துப் பிரதிகள் என் கிராஃபிக் டிசைன் திறமையை பட்டை தீட்டிய முதல் கல். வெள்ளைத்தாள்களில் கதைகளுக்கும் கவிதைகளுக்கும் ஓவியம் வரைந்து பள பளா பத்திரிக்கைகளிலிருந்து படங்கள் கத்தரித்து ஒட்டி, பார்டர் போட்டு லே-அவுட் எல்லாம் செய்து வெளியிட்ட காலத்திலிருந்து இந்த டிசைனிங் ஆர்வம் படிப்படியாக வளர்ந்து ஒரு நாள் இன்ஜினியரிங் துறையிலிருந்து என்னைக் கழற்றி விளம்பரக் கம்பெனியின் வாசலில் வீசிவிட்டது. விளம்பரக் கம்பெனிகளுக்கு வருவதற்கு முன்னால், ஒரு எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியில் மெக்கானிக்கல் இன்ஜினியராக (!) முதன் முதலாக கணினியில் நான் கற்றுக்கொண்டது ஆட்டோ கேட் (AutoCad) என்கிற மென்பொருள். அதில் பிள்ளையார் சுழிக்குப் பதில் முதன் முதலில் ஒரு பெண்ணின் முகத்தை வரைந்து முதலாளியிலிருந்து ஆஃபீஸ் பையன் வரை பாராட்டு வாங்கி காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டேன். ஆனால் அதையே செய்து கொண்டிருந்தால் சம்பளம் கிடைக்காதென்பது புரிந்து வேறு வழியில்லாமல் இன்ஜினியரிங் ட்ராயிங்கும் போட்டுத் தொலைக்க வேண்டியிருந்தது. இந்த கிராஃபிக் டிசைன் மற்றும் மல்டிமீடியா என்கிற இந்த கிரியேட்டிவ் துறைக்குள் நான் எப்படி அடியெடுத்து வைத்தேன் என்று ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் ஓட்டிப் பார்த்தேன். நிறைய விஷயங்கள் அலையடித்தன. கோயமுத்தூரில் True illusions Graphics & Animations Private Limited என்ற பெரிய பெயர் கொண்ட ஒரு விளம்பர நிறுவனம்தான் முதன் முதலில் என்னை சுவீகரித்து இந்தத் திசையில் என் பயணத்திற்கு உதவியது எனலாம். “உங்களுக்கு கோரல்ட்ரா (CorelDraw) தெரியுமா?” என்று இன்டர்வ்யூவில் என்னைப் பார்த்து கேட்ட அந்த நிறுவன நிர்வாக மேலாளரிடம் “ஓ! நன்றாய்த் தெரியும்” என்று நான் அப்பட்டமாய் சொன்ன பொய்யினால்தான் இந்த திருப்பம் நிகழ்ந்தது. (இந்த ரகசியத்தை அப்புறம் அவரிடம் சொல்லிவிட்டேன்). கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்களாக இந்தக் குதிரை ஓடிக்கொண்டிருக்கிறது. அல்லது ஓட்டிக்கொண்டிருக்கிறேன். WANTED என்று 5 செ.மீ x 2 காலத்திற்கு கட்டம் கட்டின தினத்தந்தி விளம்பரங்களிலிருந்து ஆரம்பித்து பின்னர் Brand Identity, Print Design, மல்டிமீடியா, இணையதள வடிவமைப்பு (web designing), eLearning, Deskop GUI என இந்த ஏரியாவின் அநேக இடங்களிலும் கால் பதித்தாயிற்று. அடுத்த கட்டத்துக்கான நகர்தலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நேற்று http://www.thefwa.com என்ற வலைத்தளத்தை மறுபடி மேய்ந்துகொண்டிருந்தபோது எல்லாவற்றையும் ஆரம்பத்திலிருந்து ஒழுங்காய் கற்றுக்கொண்டு வரவேண்டும் என்று தோன்றியது. வாயும் பாயும் அது அடிக்கடி கேட்கிற குரல்தான். பாய் விற்பனைக்காரனுடைது. பாய்....பாயேய்ய்ய்ய்ய்ய்.... என்று குறிப்பிட்ட இடைவெளிகளில் தெருவிலிருந்து உச்சஸ்தாயியில் கிளம்பி என் அபார்ட்மெண்ட் ஜன்னலை அடைகிற அந்தக் குரலுக்குச் சொந்தக்காரனை நான் ரொம்ப நாள் பார்த்திருக்கவில்லை. உயிரைக் கொடுத்து கத்தியபடி இப்படி தெருவில் பொருள் விற்கிறவனிடம் இந்த ரெஸிடென்ஷியல் ஏரியாவில் யாராவது வாங்குகிறார்களா என்பதைப் பற்றியும் அடிக்கடி யோசித்திருக்கிறேன். இன்று அலுவலகம் கிளம்பும்போது அவனைப் பார்த்தேன். ஒரு சைக்கிளும் அதன் கேரியரில் சில பாய்களும் அவனிடம் இருந்தன. கருத்து மெலிந்த தேகத்துடன் காணப்பட்டான். அவன் என்னைப் பார்த்ததும் "பாய்.... பாயேய்ய்ய்ய்ய்ய்...." என்றான். நான் உடனே திடுக்கிட்டுப் பார்த்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. 1. இவ்வளவு சின்ன உருவத்திலிருந்து இத்தனை பெரிய குரலா?. 2. கத்தும்போது அவன் வாய் அசையவேயில்லை. கூர்ந்து கவனித்த போது அவன் ஹாண்டில் பாரில் அடிக்கடி ஒரு ஸ்விட்சை அழுத்துவதையும், அதன் விளைவாக அடுக்கப்பட்டிருந்த பாய்களுக்கு அடியில் மறைவாய் ஒரு ஸ்பீக்கர் (அவன் குரலிலேயே) பாய் விற்பதையும் பார்த்தேன். Innovative Business Thinking பார்த்து புல்லரித்துவிட்டது. குழலினிது ஆடியோ ஸிஸ்டத்தில் கொஞ்சம் புல்லாங்குழலிசையை வழியவிட்ட பிறகே இந்தப் பதிவை எழுதுகிற மூடு வந்தது. அதுவும் புல்லாங்குழலிசை பற்றிய அல்லது அதற்கும் எனக்கும் உள்ள சொற்பமான தொடர்பு பற்றிய விஷயம் என்பதால் அது தேவைப்படுகிறது. எங்கேயோ காட்டில் விளைகிற மூங்கில் துண்டொன்றில் ஏழோ எட்டோ துளை போட்டு அதற்குள் கொஞ்சம் மூச்சுக் காற்றை அனுப்பி விரல்களால் வருடினால் மனதையும் உயிரையும் சுருட்டிப் போட்டுவிடுகிற மாயத்தை அது நிகழ்த்தி விடுகிறதெப்படி என்பது எனக்கு இன்னும் யோசித்துத் தீராத ஆச்சரியமாயிருக்கிறது. சின்ன வயசிலிருந்தே இந்தக் காற்றுக்கருவி மீது அமோக மோகம். ஆல் இண்டியா ரேடியோவில் பாடல்கள் கேட்டு வளர்ந்த பருவத்திலிருந்தே பாடல்களை விட “கேப் ம்யூஸிக்” (Gap Music) என்று நானாகவே பெயர் வைத்துக் கொண்ட சரணங்களுக்கு நடுவே வருகிற இசையை உற்றுக் கேட்பது பழக்கம். அதிலும் முக்கியமாய் ஏதாவது குழலிசைத் துண்டு வந்தால் இன்னும் உன்னிப்பாக. எம்.எஸ். விஸ்வநாதனின் பாடல்களிலிருந்து இந்தத் தேடல் தொடர்ந்து வந்தது. இதன் விளைவாக என்றாவது ஒருநாள் நானும் என் விருப்ப இசைக்கருவியான புல்லாங்குழலை கற்றுக் கொண்டே தீருவேன் என்றொரு ஆசையோ வைராக்கியமோ ஏதோ ஒன்று மனதில் கூடு கட்டியிருந்தது. எம்.எஸ்.வி-யிலிருந்து இளையராஜாவுக்குத் தாவி அப்புறம் திரைப்படப் பாடல்களும் வாழ்க்கையும் பிரிக்க இயலாத ஜோடிகளான பிறகு பு.குழலின்மேல் அதை இசைப்பவர்களின் மேல் தனி மரியாதை தொடர்ந்தது. இளையராஜா புல்லாங்குழலை பாடல்களில் பொருத்தமான இடங்களில் மிக்ஸ் பண்ணுவதில் கைதேர்ந்தவர் என்பதற்குச் சாட்சியாக பல பாடல்களைச் சொல்லலாம். இவருடைய ஃப்ளுட்டிஸ்ட் அருண்மொழி என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதிகாலை நிலவே, நானென்பது நீயல்லவோ, ஆதாமும் ஏவாளும் போன்ற பாடல்களை இளையராஜாவின் இசையில் பாடியவர். இவர் புல்லாங்குழல் விளையாடின திரைப்படப் பாடல்கள் ஏராளம். அதென்னமோ இளையராஜாவின் புல்லாங்குழல் கேட்கிறபோது எங்கேயோ ஒரு கிராமத்தின் தென்னந்தோப்புக்குள் ஸ்லோமோஷனில் ஓடிக்கொண்டிருப்பது மாதிரி ஒரு எஃபெக்ட்தான் எப்போதும் கிடைக்கிறது. அவர் ’போவோமா ஊர்கோலம், இந்தமான் எந்தன் சொந்தமான் ’ மாதிரியான கிராமப் பின்னணியில் அமைந்த படங்களுக்கே இந்தக் கருவியை பிற்காலத்தில் நிறைய உபயோகப்படுத்தினார் என்பதனாலோ என்னவோ. ஹரிப்பிரசாத் செளராஸியாவின் குழலிசையை இளையராஜா “Nothing but wind" மூலம் நம் காதுகளில் ஒலிக்கவிட்ட போது சோறு தண்ணியில்லாமல் திரும்பத் திரும்ப அதையே கேட்டுக் கொண்டு கிடந்தேன். அவர் புல்லாங்குழலை இன்னும் எந்தெந்தப் பாடல்களில் எப்படியெல்லாம் உபயோகப்படுத்தினார் என்றெல்லாம் இந்த ஒரே ஒரு பாராவுக்குள் சொல்லமுடிகிற காரியமில்லை என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். ரஹ்மான் வந்த பிறகு இந்த புல்லாங்குழலிசையில் ஏதோ ஒரு மாற்றம் வந்து சேர்ந்துவிட்ட மாதிரி தெரிந்தது. அது இளையராஜாவினுடைது போலல்லாமல் வேறுமாதிரி இன்னும் கொஞ்சம் ஆழமாக, இன்னும் கொஞ்சம் உருக்கமாய் உயிரை நிரடியது. என்னவளே, மார்கழிப் பூவே, அஞ்சலி அஞ்சலி, பம்பாய் தீம் ம்யூசிக், வெள்ளி நிலவே, என் மேல் விழுந்த மழைத்துளியே, ஜாக்கி ஷ்ராஃப் ஊர்மிளாவைத் துரத்தும் ஹேராமா ஏ க்யாகுவா எல்லாவற்றிலும் ஏதோ கொஞ்சம் புதுசாய் இதுவரை கேட்காத ஒரு தவிப்பு, துடிப்பு, அழுத்தம் எல்லாம் சேர்ந்த கலவையாய் இருந்தது. எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை. அப்புறம் யாரோ சொன்னார்கள் நவீன் என்று ஒருத்தர்தான் ரஹ்மானின் புல்லாங்குழலார் என்று. மனதை லயிக்க வைக்கிற விதமாய் இப்படி அனுபவித்து வாசிக்கற ஆளைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம் என்று தேடியபோது விவரங்கள் சிக்கின. ஆசாமி கோலிவுட்டில் அநேகம் இசையமைப்பாளர்களால் தேடப் படுகிற படு பிஸியான ஃப்ளூட்டிஸ்டாம். ரஹ்மானுக்கு பாம்பே ட்ரீம்ஸ் வரை வாசித்திருக்கிறார். "Fluid" என்று ஒரு ஆல்பம் வெளியிட்டிருக்கிறார். இவர் சமீபத்தில் ஆனந்தத் தாண்டவம் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருக்காக வாசித்த தீம் ம்யூசிக் கிறங்கடிக்கிறது. (காற்றலை சுழற்சியிலே என்ற பாடலின் இசை வடிவம்). நவீன் வாசித்ததனால் என்றில்லாமல் புல்லாங்குழலைப் பொறுத்தவரையில் ராஜாவைவிட ரஹ்மான்தான் என்னை அதிகம் உருக்கினதும் உலுக்கினதும். (ஆனால் நான் ஒரு தீவிர ராஜா ரசிகனும்கூட என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.) எம்.எஸ்.வி, ராஜா, ரஹ்மான் பாடல்களில் புல்லாங்குழலின் பயன்பாடு பற்றி யாரவது எழுதினாலோ சொன்னாலோ (அல்லது வாசித்துக் காட்டினாலோ நான் கேட்கத் தயாராக இருக்கிறேன்.) நான் வேலை செய்த ஒரு கம்பெனியின் மானேஜிங் டைரக்டர் கோவை பி.எஸ்.ஜி காலேஜின் இசைக்குழுவுக்குத் தலைமை வகித்தார் என்கிற வகையில் புல்லாங்குழல் நன்றாக வாசிப்பார். அவர் மேசையில் 3, 4 1/2 என்றெல்லாம் நம்பர் போட்டு நிறைய புல்லாங்குழல் வைத்திருப்பார். அலுவலகத்தில் என்றாவது ஒருநாள் திடீரென்று மின்சாரம் நின்று விட்டால் அப்புறம் கச்சேரிதான். அதாவது நான் அவரை வாசிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருப்பேன். ”அஞ்சலி அஞ்சலி” அவருடைய ஃபேவரிட். அப்புறம் அவரது இசை நண்பர் பாலு ஒருநாள் அங்கே வர திடீரென ஆர்வம் வந்து அவரிடம் புல்லாங்குழல் கற்றுக்கொள்ளச் சேர்ந்துவிட்டேன். சேர்வதற்குமுன் என்னிடம் குழலைக் கொடுத்து ஊதச் சொல்லி சப்தம் வருகிறதா என்று பரிசோதித்தார். பிரமாதமாக வந்தது. வெஸ்டெர்ன் கற்றுக் கொள்ளத்தான் நான் சேர்ந்தது என்றாலும் ஒரிஜினல் கர்நாடக புல்லாங்குழலை (இதில் எட்டு துளை இருக்கும். வெஸ்டெர்னில் ஏழுதானாம்.) எனக்குக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். எட்டாவது துளைக்கு என் சுண்டுவிரல் எட்டாமல் போனதாலோ, காலை ஆறரைக்கு தி.நகரிலிருந்து கோடம்பாக்கம் வரை போக சோம்பேறித்தனப் பட்டதாலோ இரண்டே மாதங்களோடு என் இசைப் பயணத்தை முடித்துக் கொண்டேன். அப்புறம்தான் தெரிந்தது எனக்கு இருந்தது கற்றுக் கொள்கிற ஆசை மட்டுமே தவிர வைராக்கியம் அல்ல என்று. ஆக உலக இசை ரசிகர்கள் ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பித்துக் கொண்டார்கள். அப்போது வீட்டுக்கு வருகிற விருந்தாளிகள் பார்வையில் படுகிறமாதிரி அந்த கர்நாடக புல்லாங்குழலை வரவேற்பறையில் தொங்கவிட்டிருப்பேன். அப்புறம் அதைப் பார்க்கிறவர்கள் என்னை ஒரு பெரிய சங்கீத சிரோன்மணி என்கிற தோரணையில் பார்க்கத் தொடங்கியபோது எடுத்து உள்ளே வைத்துக் கொண்டேன். பின் எவ்வளவு நாள்தான் எனக்குத் தெரிந்த ஒரே ட்யூன் ஆன “mary had a little lamb" -ஐ மட்டுமே அவர்கள் கேட்கிறபோது வாசித்துக் காட்டிக்கொண்டிருக்க முடியும்?. அவரிடம் கற்றுக் கொண்ட வெஸ்டெர்ன் நோட்ஸ் அறிவை வைத்துக் கொண்டு பின்னாளில் கீபோர்டில் ”மலரே மலரே உல்லாசம்” (பல்லவியை மட்டும்) வாசிக்க முடிந்தபோது யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் என்னை நானே வியந்து பாராட்டிக்கொண்டேன். மாலி, சஷாங், சவுராஸியா போன்ற அருமையான புல்லாங்குழல் கலைஞர்கள் பற்றி இங்கே பேசவேண்டுமானால் அவர்களைப் பற்றியும், அவர்களது இசையைப் பற்றியும் நான் நிறைய தெரிந்து வைத்திருக்க வேண்டியிருக்கிறதென்று தோன்றுவதால் விட்டுவிடுகிறேன். ராகம் தாளம் என்று இசையை பகுத்துணர்ந்து கேட்கத் தெரியாது. சாஸ்திரிய சங்கீதத்தின் அடிப்படைகள் புரியாது. ஸ்ருதி லயம், ஆரோகணம் அவரோகணம், அபஸ்வரம் இன்னபிற சங்கீத சங்கதிகள் பற்றிய ஞானமில்லை. ஆனால் இசை என்பது அநேக சமயங்களில் காதுகளுக்குள் இறங்கி வட்ட வட்டமாய் அலைகள் பரவுகிற ஒரு குளத்தின் மேற்பரப்பு மாதிரி மனசுக்குள் அலையெழுப்பும்போது உணர்ந்து ரசிக்கத் தெரிந்தால் போதாதா? கேட்கத் தெரியும். ரசிக்கத் தெரியும். சொல்லப்போனால் பீச்சில், ரயிலில் புல்லாங்குழல் விற்பவர்கள் அத்தனை பேரும் சொல்லிவைத்த மாதிரி வாசிக்கிற “பர்தேஸி பர்தேஸி ஜானா நஹி” என்கிற ஒரே ட்யூனைக்கூட இன்னும் ஆச்சரியமாய் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த வகையில் இந்த அளவிலான இசை ரசனையே எனக்குப் மிகப் பெரும் வாழ்வியல் திருப்தியைத் தருகின்றது. குழலைப் பொறுத்தவரையிலும் கூட அதுவேதான். உதாரணத்திற்கு கலோனியல் கசின் ஆல்பத்தின் கிருஷ்ணா நீ பேகனே -வின் நடுவில் வருமே ஒரு flute interlude!! அதை பன்னிரண்டு வருடமாய் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். அதேபோல் ரன் படத்தின் பனிக்காற்றே தீம், போறாளே பொன்னுத்தாயி ஓபனிங்.. வேண்டாம்! பெரிய லிஸ்ட் அது! கதை படிக்கிற குரல் ஒரு லோக்கல் வாராந்தர நியூஸ் பேப்பரில் இந்த சின்ன வரி விளம்பரத்தைக் கண்டேன். "Wanted a lady to read novels in Tamil to an elderly gentleman. Clarity and good voice essential. Hours required 10 am to 11.30 or 3.30 to 5.00, 6 times a week. Kindly ring ......" லேசான ஆச்சரியமும் நிறைய கேள்விகளும் எழுந்தன. இதை ஒரு ஓய்வு பெற்ற கனவானின் பொழுது போக்கு அம்சமாய் மட்டுமே எடுத்துக் கொள்ளமுடியுமா என்று தெரியவில்லை. தமிழில் கதை, நாவல் படிக்க விரும்புகிறார். அதுவும் வாரத்துக்கு 6 நாட்கள், குறைந்த பட்சம் ஒன்றரை மணி நேரம். ஓய்வு நாட்களில் தன்னை எந்த வகையிலாவது பிஸியாக வைத்துக் கொள்ள அந்த முதியவரே செய்து கொள்கிற ஏற்பாடா? இல்லை மகன், மகள், மனைவி என்று வேறு யாராவது அவருக்காக எடுத்துக் கொண்ட முயற்சியா? அவருக்குத் தமிழ் தெரியாதா? அல்லது தெரிந்தும் படிக்க சோம்பேறித்தனமா? அல்லது வேறு காரணங்களா? ஏன் அவருக்கு ஆண் குரல் வேண்டாம்? எந்த மாதிரி தமிழ் நாவல்கள்? ராஜேஷ்குமாரா, பட்டுக்கோட்டை பிரபாகரா, சுஜாதாவா? அல்லது ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போல இலக்கிய நாவல்களா? சாண்டில்யன்? கல்கி? சாரு நிவேதிதா உண்டா?எதுவானாலும் படிப்பதோ படிக்கச்சொல்லிக் கேட்பதோ நல்ல விஷயம்தான். ஈஸிச் சேரில் கண்ணை மூடிச் சாய்ந்து கொண்டு ஒரு பெண்மணி பக்கத்தில் உட்கார்ந்து கணீர் என்ற குரலில் கதை படிக்க, அந்த கதா பாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு அவர் ஒரு புது உலகிற்கு சஞ்சரிக்கிற காட்சி ஓடுகிறது. “அந்த பாராவை மறுபடி படி(ங்க)” “சுத்த இழுவையா இருக்கே. இந்த நாவல் போதும். அடுத்ததைப் படிக்கலாம்”. “மணி பதினொன்னரை ஆயிருச்சா? சரி ’தொடரும்’ போட்ரலாம். நாளைக்கு வாங்க.” “என்ன இன்னிக்கு குரல் கரகரங்குது? த்ரோட் இன்ஃபெக்‌ஷனா?” என்னுடைய ரிடையர்மென்ட் காலத்தை எப்படி பிஸியாக வைத்துக் கொள்ளப் போகிறேன் என்கிற யோசிப்பை கிளறிவிட்டது இது. பையனும் டார்வினும் பின்னே ஞானும் சென்ற வெள்ளி - சனியில் பன்றிக் காய்ச்சல் எச்சரிக்கைகளையும் மீறி என் பையன் படிக்கும் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அவன் படிக்கிற ’நாலாப்பு’ சார்பாக கையில் ஒரு ரிமோட் கண்ட்ரோல் எஸ்கவேட்டர் கொடுத்து ஒரு அறையில் நிற்க வைத்துவிட்டார்கள். கண்காட்சிக்கு வருகை புரிபவர்கள் அவனிருக்கிற குறிப்பிட்ட பகுதிக்கு வந்ததும் "This is called excavator. This is used for digging the trenches, holes... " என்று டீச்சர் சொல்லிக்கொடுத்த ப்ளா ப்ளா-க்களை மள மளவென ஒப்பிக்க வேண்டும். (நானே நான்கு தடவை அவனருகில் போய் நின்று “can you please explain this?" என்று கேட்க சின்ன தயக்கச் சிரிப்புடன் சளைக்காமல் விளக்கினான்) சரி ஸயின்ஸ் எக்ஸ்போவில் அப்படி என்னதான் இருக்கிறதென்று பார்க்கலாமே என்று போனவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. சும்மா சொல்லக் கூடாது. டீச்சர்களும், மாணவ மாணவிகளும், பள்ளி நிர்வாகமும் ஒன்று சேர்ந்து அற்புதமாகக் கலக்கிவிட்டார்கள். க்ரவுண்ட் ஃப்ளோரில் சிவப்புக் கம்பளம் விரித்து எல்.சி.டி. டிவியில் நிகழ்ச்சிகளின் வீடியோ விரிய, ஸ்பீக்கரில் இசை முழுங்குகிறது. இதை வந்து பாருங்கள் அதை வந்து பாருங்கள் என்று மாடிப் படிகள் முழுக்க மாணவர்கள் தயாரித்து ஒட்டிய விளம்பர நோட்டீஸ்கள். அலங்கார வளைவுகள். கலை நயம். ஜிகினா. மெட்ரோ ரயில் சிஸ்டம், ஹைட்ரோ பவர் சிஸ்டம், டெலி கம்யூனிகேஷன் நெட்வொர்க், ரோபோட்டிக்ஸ், ஓரிகமி, டேன்கிராம்ஸ், குளோபல் வார்மிங் என்று ஒரு சப்ஜெக்டையும் விட்டு வைக்காமல் பள்ளிக் கட்டிடத்தின் மூன்று தளங்களிலும் கலக்கலான செட்டப்புகள். முக்கால்வாசி சாதனங்களை தெர்மோகோல், ஃபெவிகால், வாட்டர்கலர் கொண்டே தயாரித்து விட்டார்கள். சின்னச் சின்ன பொடிசுகள் லேப்டாப், ப்ரொஜக்டர்கள் எல்லாம் வைத்துக் கொண்டு விண்டோஸ் மூவி மேக்கரில் தயாரித்த வீடியோ படங்களை இயக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது ’ஆச்சரியத்தால் கண்கள் விரிந்தன’ என்று அடிக்கடி இந்த எழுத்தாளர்கள் எல்லாம் எழுதுகிறார்களே அது என்ன என்று புரிந்தது. ஒவ்வொரு பிரிவிலும் நிற்க வைக்கப்பட்டிருந்த குழந்தைகள் நாம் உள்ளே நுழைந்ததும் போட்டி போட்டுக் கொண்டு “அங்கிள்! (அல்லது ஆண்ட்டி) can I explain this?" என்று கேட்டுவிட்டு ஜெட் வேகத்தில் ஆங்கிலத்தில் குறைந்தது ஐம்பது விநாடிகள் பட்டையைக் கிளப்பிவிட்டு கடைசியில் “தேங்ங்ங்ங்க்க்க்க்க்யூ” என்று ராகம் பாடி முடித்தன. மனப்பாடம் செய்து கொண்டு ஒப்பிக்கிறதுகள் என்றாலும் ஒவ்வொரு டேபிளிலும் பொறுமையாய் அந்த மழலைக் குரல்களை ஓரிரு நிமிடங்கள் கேட்டுக் கொண்டிருப்பது மிகப் பெரிய சுகம். அநியாயத்துக்கு இத்தனை பேர் ’படிப்ஸ்’ஆக இருக்கிறார்களே என்று ஆச்சரியமாக இருந்தது. அதுவும் க்ளோபல் வார்மிங் பற்றி விளக்கின பையனிடம் நான் ஏதோ சந்தேகம் கேட்க. “இட் இஸ் தேர் இன் த இண்டெர்நெட் அங்கிள். யு கேன் டவுன்லோட் இட் ஃப்ரம் தேர்.” என்று முத்தாய்ப்பு வைத்தான். சொல்லி முடித்தபிறகு அவர்கள் நீட்டுகிற Feedback நோட்டுப் புத்தகத்தில் உங்கள் பெயரெழுதி உங்கள் கருத்தை அல்லது பாராட்டை எழுதிக் கொடுத்தீர்களானால் குழந்தைகள் முகத்தில் பொங்குகிற சந்தோஷம் இருக்கிறதே. அப்பப்பா! (சொக்கன் கவனிக்க). நான் நீட்டப்பட்ட நோட்டுகளில் எல்லாம் “excellent presentation" என்று தாராளமாக எழுதிக் கொடுத்தேன். (ஆனால் பாராட்டி கை கொடுத்தால் மட்டும் பன்றிக் காய்ச்சல் பயத்துடன் கையை பின்னுக்கு இழுத்துக் கொள்கிறார்கள். அப்புறம் என்னை நானே திட்டிக்கொண்டு அதை தவிர்க்க ஆரம்பித்தேன்.) ஆறாங்கிளாஸ் படிக்கிற மூன்று சிறுமிகள் அவர்களின் கிளாஸ்மேட்டுகளான சில வாண்டுப் பையன்களைக் காட்டி “அங்கிள்! கன் வி எக்ஸ்ப்ளெய்ன் அபெளட் தெம்” என்று குசும்புச் சிரிப்புடன் கேட்க, நானும் என்னவென்று புரியாமல் தலையாட்ட, “தெ ஆர் ஆல் மங்கீஸ். தெ ஹவ் எஸ்கேப்ப்டு ஃப்ரம் வண்டலூர் ஜூ. தெ நார்மலி ஈட் பனானாஸ்” என்று கலாய்த்து வெடிச்சிரிப்பு சிரித்தார்கள். இதைக் கேட்டதும் ஒரு தடவை என் பையனுக்கும் எனக்கும் இரவு தூக்கம் வருவதற்கு முந்தைய பொழுதில் நடந்த சம்பாஷணை ஞாபகத்திற்கு வந்தது. நான்: குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்னு யார் கண்டுபுடிச்சா தெரியுமா? பையன்: ஆங்... தெரியும். லெஸன்ல இருக்கு. அது வந்து... நான்: சார்லஸ் டார்வின் பையன்: ஆ! ஆமா.. டார்வின் தியரி.. நான்: கரெக்ட்டு.. மில்லியன் மில்லியன் வருஷத்துக்கு முன்னால குரங்கா இருந்து அதிலேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா மனுஷன் வந்தான். அப்போ அவனுக்கு உடம்பு பூரா நிறைய முடி இருந்துச்சு. வால் இருந்துச்சு. கை காலெல்லாம் பெருசு பெருசா இருக்கும். மரத்துக்கு மரம் தாவிகிட்டு இருந்தான். அப்றம் அதெல்லாம் போய் இப்போ பாத்தியா இப்ப என்னை மாதிரி ஆயிட்டான். பையன்: (மெளனமாய் சில விநாடிகள் யோசித்துவிட்டு) “அப்ப இதுக்கு முன்னாடி நீ கொரங்கா இருந்தியா?”. அடுத்த ஜெனரேஷன் பசங்களிடம் கொஞ்சம் அல்ல நிறையவே ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. கிழித்த கதை ஷெல்ஃப்பில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது ஒரு பழைய கிழிந்த லெதர் பை ஒன்றில் ஒரு கத்தையாக கொஞ்சம் சிறுகதைகள் கிடைத்தன. பதினைந்து வருடங்களுக்கு முன் குமுதம், விகடன், சாவி இதழ்களிலிருந்து கிழித்துத் சேர்த்துவைத்த சிறுகதைகள். கொத்துக் கொத்தாக ஸ்டேப்ளர் செய்யப்பட்டு ‘பைண்ட் செய்து வைக்கவேண்டும்’ என்கிற எண்ணம் வருடக்கணக்கில் புறக்கணிக்கப்பட்டு, தாள்கள் பழுப்பேறிச் சிதைந்து, திறந்ததும் குப்பென்று மூச்சுத் திணறவைக்கும் நெடியுடன் கிடந்தன. [old_stories] குமுதத்திலும், விகடனிலும் சிறுகதைகள் அதிக அளவில் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்த பொற்காலம் அது. சுஜாதா, பாலகுமாரன், சுபா முதற்கொண்டு பிரபல எழுத்தாளர்கள் அனைவரும் மானாவாரியாக எழுதிக்கொண்டிருந்த நேரம். பொதுவாகவே சிறுகதைகள், தொடர்கதைகள் படிக்கிற ஆர்வத்துடன் ஒரு கூட்டமாக நாங்கள் (நான், சரசுராம், மீனாட்சி சுந்தரம், ஷாராஜ், கனகராஜன்) அலைந்துகொண்டிருந்தோம். கதைகளைப் படிப்பதும், படித்தபிறகு அவைகளைப் பற்றியும், கதாசிரியர்களைப் பற்றியும் பெருமளவில் விவாதித்துத் திரிந்த நாட்கள் ரம்மியமானவை. சுமார் அறுபது கதைகள். சிறந்த சிறுகதைகள் என்று கிழித்து வைத்துக் கொண்டதா என்று கேட்டால் தெளிவாக நினைவில்லை. நல்லதாய் ஒரு சிறுகதையை எப்படி எழுதுவது என்கிற தேடலில் இந்த மாதிரி நிறைய கிழித்து வைக்கிற பழக்கம் எங்கள் எல்லோருக்கும் இருந்தது. இதில் சிறுகதை, குறுந்தொடர், நாவல் எல்லாம் அடங்கும். அரஸ்-ஸின் அட்டகாச ஓவியங்களுக்காகவே சுஜாதாவின் என் இனிய இயந்திராவையும், மீண்டும் ஜீனோவையும், அப்புறம் கோவி மணிசேகரன் நாவல் ஒன்றையும் கிழித்துச் சேர்த்திருந்தேன். கமலஹாசன் ஸ்டில்லுகளுக்காக விக்ரம் தொடர். இது மாதிரி நிறைய. என்னிடமிருக்கிற இந்த கதைக் கொத்தை கிழித்துத் தொகுத்தவர் சரசுராம். எப்படியோ கைமாறி என்னிடத்தில் வந்து கிடக்கிறது. இந்த சேகர சாகரத்தில் என்னதான் இருக்கிறதென்று மூச்சை இறுக்குகிற நெடியை பொறுத்துக் கொண்டு திறந்து பார்த்தேன். பெரும்பாலும் சிறுகதைகள்தான் இருந்தன. “என் பெயர் அருண்குமார்” என்ற சாருப்ப்ரபா சுந்தரின் (நான் விரும்பிப் படித்த எழுத்தாளர் இவர்) தொடர்கதை. பாலகுமாரன், மாலனின் ஒரு சில கதைகள். அப்புறம் ராஜேஷ்குமார், சுபா, சுப்ரபாரதிமணியன், தனுஷ்கோடி ராமசாமி, சு. சமுத்திரம், பிரதிபா ராஜகோபாலன், அனுராதா ரமணன், பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகிய எல்லோரும் அடக்கம். நாகா என்றொரு எழுத்தாளரின் சில கதைகள். கே.சித்ராபொன்னி என்பவரின் கதைகள் நிறைய இருந்தன. (இப்போது எழுதுகிறாரா?) பா.ராகவனின் கதை ஒன்று. அதுதவிர பெரும்பாலான கதைகள் அதிகம் பிரபலமாகாத, பெயர் கேள்விப்படாத எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருந்தது. தமிழிணி, இள.அழகிரி, ஜெரா, தார்க்‌ஷியா இப்படியாக. பவதாரிணி என்பவர் எழுதிய ரூ.5000 பரிசு பெற்ற கதை ஒன்றும் இருந்தது. வித்யா சுப்ரமணியம், எஸ்.பி. ஹோசிமின், சங்கர்பாபு, திருவாரூர் பாபு போன்ற அடிக்கடி கண்ணில் படுகிற எழுத்தாளர்களும் இந்தக் கலெக்‌ஷனில் ஒளிந்திருந்தார்கள். இதில் பரசுராம் பிஸ்வாஸ் என்றொரு எழுத்தாளரும் இருக்கிறார். இவர் குமுதத்தில் விகடனில் ‘புதிய ஆத்திச்சூடி கதைகள்’ என்று ஒரு தொடர் எழுதிக்கொண்டிருந்தார். குமுதத்தில் விகடனில் பணிபுரிகிற யாரோ ஒருவர்தான் (அல்லது பலர்) இந்த புனைபெயரில் எழுதிக்கொண்டிருந்தார்(கள்) என்றொரு அரசல் புரசல் இருந்தது. யாராக இருந்தாலும் அற்புதமாய் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர் இவர். ஜெ, அரஸ், ம.செ, மாருதி, ராமு, கரோ போன்ற ஓவியர்கள் இந்தக் கதைகளுக்கு படம் வரைந்திருந்தார்கள். மருது, ஜி.கே.மூர்த்தி, ஸ்யாம் கூட இருந்தார்கள். அட்டகாசமாக வரைந்துகொண்டிருந்த அரஸ்-ஸூக்கு ஒரு கட்டத்தில் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. திடீரென்று கானா மூனாவென்று வரைந்து தள்ள ஆரம்பித்தார். இந்த இடைவெளியில் கச்சிதமாக உள்ளே நுழைந்தவரான கரோவும் (கிட்டத்தட்ட அரஸ் சாயலிலேயே) சளைக்காமல் எண்ணற்ற கதைகளுக்கு அருமையாய் படம் வரைந்து தள்ளிக் கொண்டிருந்தார். இன்னும் சில வருடங்கள் வைத்திருந்தால் உடைந்து உதிர்ந்துவிடும் என்பதுபோல் வெடவெடவென்றிருக்கிற இந்த சாணிப் பேப்பர்களில் இந்த ஓவியர்களின் பழைய ஓவியங்களை மறுபடி பார்க்கக் கிடைப்பது அழகான விஷயம். ஆதவனின் ’புறாக்கள் பறந்து கொண்டிருக்கும்’ என்கிற கதை இரண்டு பாகங்களாய் இந்தத் தொகுப்பில் இருக்கிறது. ஆதவனின் சிறுகதைகள் அனைத்தையும் திரட்டி “ஆதவன் சிறுகதைகள்’ என்கிற புத்தகமாக கிழக்கு பதிப்பகம் வெளியிட்டபோது இந்தக் கதையும் இருக்கிறதா என்று பா.ராகவனிடம் ஒருமுறை கேட்டது நினைவுக்கு வந்தது. அதிகபட்சமாக எல்லாக் கதைகளையும் முடிந்தவரை திரட்டிப் போட்டுவிட்டதாக அவர் சொன்னார். அந்த தொகுப்பிலிருக்கும் “புறா” என்கிற கதைதான் இது என்று ரொம்ப நாளாய் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது எடுத்துப்பார்த்தபோது அதுவும் இதுவும் வேறு என்பது தெரிந்தது. வியாபார மயமாகிப் போன பிரபல பத்திரிக்கைகளில் சிறுகதைகள் வெளியிடுவது அரிதாகிப் போன இந்தக் காலத்தில், நைந்து போன இந்தப் பேப்பர் கற்றையை எடுத்துப் பார்க்கும்போது தும்மல் கலந்த பெருமூச்சொன்று வருகிறது. முகத்தில் கர்ச்சீப் கட்டிக்கொண்டாவது இதில் உள்ள கதைகளை மறுபடி பொறுமையாய் உட்கார்ந்து முழுதாய் படித்துப் பார்க்கவேண்டும். கீட்ஸ் படிச்சிருக்கியா? கதைகளோ, நாவல்களோ படிப்பது என்பது சும்மா பொழுதுபோக்கிற்காகவா? அல்லது குறிப்பிட்ட எழுத்தாளர்களின் எழுத்து நடைக்கான ஆராதனை அல்லது ஆர்வமா? இலக்கிய (அல்லது கமர்ஷியல்) தாகமா? கதையில் வரும் சம்பவங்களோடு தன் வாழ்வில் எதையாவது பொருத்திப் பார்த்து மகிழ்ச்சி அல்லது துக்கப்படுவதற்கா? அல்லது தன் வாழ்வுக்கெட்டாத, கற்பனை செய்து பார்க்க இயலாத நிகழ்வுகளை கதைகளில் படித்துக் களிக்கிற திருப்தியா? பொது அறிவு வளர்ப்பதற்கா? இது எல்லாமும் ஆக இருக்கலாம் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்று. ஆனால் கடைசியில் சொல்கிற பாயிண்டை கவனியுங்கள். பொது அறிவு வளர்ப்பது. கதைகள், நாவல்கள் படிப்பதால் நம் பொது அறிவு வளருமா என்றால் நிச்சயம் ஓரளவுக்கு வளரும் என்பதற்கான பதிவு இது. எனக்கு கொஞ்சமாய் வளர்ந்திருக்கிறது. குறிப்பாக சின்ன வயசிலிருந்து படித்த வணிக எழுத்தாளர்களின் கதைகள், நாவல்கள் மூலம். பல்வேறு விஷயங்கள் பற்றிய ஞானத்தைப் பெற அவைகள் வெகுவாக துணை புரிந்திருக்கின்றன. அப்போது பெருமளவில் வந்துகொண்டிருந்த பாக்கெட், மாத நாவல்களை எடுத்துக்கொள்ளுங்கள். (உடனே எடுக்கப் போய்விடாதீர்கள்). ராஜேஷ்குமாரிலிருந்து ஆரம்பித்தால் சுஜாதாவரை ஒரு பெரிய ரவுண்டு வரலாம். இந்த மாதிரி எழுத்தாளர்கள் தாராளமான ஆங்கிலக் கலப்போடு எழுதினார்கள் என்பது வாசகர்களின் வொக்காபுலரி அல்லது ஒக்கபிலேரியை முன்னேற்றப் பயன்பட்டன. நான் சொல்வது அதிகமாய் விஷய ஞானமற்ற வயதில் இவைகளைப் படிப்பவர்களுக்கு (அல்லது படித்தவர்களுக்கு). நான் ஆறாங்கிளாஸ் படிக்கும்போதே அம்புலிமாமா ரத்னபாலாவிலிருந்து ப்ரொமோஷன் ஆகி மாத நாவல்களுக்கு வந்துவிட்டேனாக்கும். அப்போது ராஜேஷ்குமார் “அவன் காரிடாரில் நடந்து வெளியே வந்தான்” என்று எழுதினால் எனக்கு காரிடார் என்ற புதிய வார்த்தை கிடைக்கிறது. அப்போது இவையெல்லாம் நான் கேள்விப்படாத வார்த்தைகளாகியிருந்தது. இப்போதுகூட எங்கேயாவது நீண்ட காரிடாரில் நடக்கும்போது ராஜேஷ்குமார் சிலசமயம் சட்டென்று நினைவுக்கு வருவதுண்டு. இதே போல் சில உதாரணங்களைச் சொல்லவேண்டுமென்றால். (சும்மா படித்த ஞாபகத்திலிருந்து உதாரணத்துக்கு மட்டுமே. சரியான வரிகள் அல்ல) அவன் போர்டிகோவில் காரை செருகி நிறுத்தினான். அவள் லவுஞ்சில் காத்திருந்த மாதவனை நோக்கிக் கையசைத்தாள். அந்த விமானம் ஒரு அலுமினியப் பறவை போல மிதந்துவந்தது. ஸ்க்வாட்ரன் லீடர் குமார் கீழே விழுந்தபோது ஒரு பந்துபோல தன்னைச் சுருட்டிக்கொண்டான். அவன் அவளை நரிமன் பாயிண்டிற்கு வரச் சொல்லியிருந்தான். வஸந்த் ஒருவித ரிஃப்ளெக்‌ஷ் இயக்கத்தில் செயல்பட்டு உடனே குனிந்துகொண்டான். அவன் யமஹாவை உதைத்துக் கிளப்பிச் சீறினான். சோடியம் வேப்பர் விளக்கு வெளிச்சத்தில் அவள் முகம் இன்னும் அழகாக இருந்தது. மேலுள்ளவற்றில் காணப்படும் வரிகளில் போர்டிகோ, லவுஞ்ச், அலுமினியத்தால் செய்யப்படும் விமானம், ராணுவத்தில் இருக்கிற ஸ்க்வாட்ரன் லீடர் என்ற பதவி, மும்பையின் நரிமன் பாயிண்ட், ரிப்ளெக்ஸ், இந்த மாதிரி புதிய வார்த்தைகள் எல்லாம் ஆறாங்கிளாஸ் தமிழ் மீடியம் படிக்கிற பையனுக்கு எதேஷ்டமான பொது அறிவா இல்லையா? நிச்சயம் நான் யமஹாவையோ, சோடியம் வேப்பர் விளக்கையோ அப்போது பார்த்ததில்லை. அப்புறம்.. மார்ச்சுவரி, போஸ்ட்மார்ட்டம், ஃபாரன்ஸிக், அப்ஜெக்‌ஷன் யுவர் ஆனர், வென்ட்டிலேட்டர், பாயிண்ட் 33 பிஸ்டல், ஸிர்ரஸ் மேகத்தீற்றல்கள், ஜானவாசக் கார், காக்டெயில், ப்ரீஃப்கேஸ், ஃபேக்ஸ், ரிகர்மாட்டிஸ், ரிஸீவர், மவுத் பீஸ், ஹேபியஸ் கார்பஸ், காஸனோவா, சாண்ட்லியர் விளக்குகள், வாய்ஸ் ரெகக்னிஷன், பீத்தோவனின் ஸிம்பனி, ஹாலோகிராம், அப்பெர்ச்சர், வியூஃபைண்டர், ஸாட்டின் பாவாடை இன்னபிற. இது மட்டுமல்லாமல் மனிதர்களைப் பற்றி, சில பிரபலங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதும். சுஜாதா ஒரு கதையில் ‘அவன் ஒரு நவீன மெஸ்ஸையா போல தோற்றமளித்தான்’ என்று எழுதியிருப்பார். யாருடா இது மெஸ்ஸையா (messiah) என்று ரொம்ப நாள் மண்டைக் குடைச்சலாக இருந்தது. கணேஷ் வஸந்திடம் “கீட்ஸ் படிச்சிருக்கியா” என்று கேட்கும்போது ஒரு பிரபல உலகக் கவிஞரைத் தெரிந்துகொள்ள முடிந்தது. (ஆனால் படித்ததில்லை). இந்த வரிசையில் ஷெல்லி, பைரன் எல்லோரும் அடிக்கடி வருவார்கள். நான் சென்னைக்கு வரும் முன்பே இந்த நகரம் எனக்குப் பரிச்சயமான இடமாகத் தோற்றமளித்ததற்குக்கூட மேற்கூறிய எழுத்தாளர்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. பொதுவாக அநேக கதைகள், மாத நாவல்கள் சென்னையைக் களமாக வைத்து எழுதப்பட்டன என்கிற வகையில் மிகக் கொஞ்சமாக அதன் பேட்டைகளைப்பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது. ‘அவன் தேனாம்பேட்டை சிக்னலைக் கடந்து...’ அல்லது ‘மெரீனாவில் கண்ணகி சிலையருகே காத்திருந்தான்’ ‘மவுண்ட் ரோட்டில் ஜெமினி மேம்பாலத்துக்கு அருகே அவன் அலுவலகம் இருந்தது’ அல்லது ‘எலியட்ஸ் பீச்சின் மணலில் இருவரும் நடந்தார்கள்’ அல்லது ‘தம்புச் செட்டி தெருவில் உள்ள அவன் அலுவலகத்துக்குப் போனபோது...’ அல்லது ‘ஹிக்கின் பாதம்ஸின் அருகே காரை நிறுத்தினான்’ ‘கொத்தவால் சாவடிக்கு இடது பக்கமாக பைக்கை வளைத்துத் திருப்பினான்’ - இவை போதாதா சென்னையைப் பற்றி சும்மா போகிற போக்கில் தெரிந்து கொள்வதற்கு? (சென்னை கொத்தவால் சாவடி மார்க்கெட்டை கோயம்பேட்டுக்கு மாற்றின விஷயத்தை மக்களுக்கு அறிவிக்கும் விதமாக “கொத்தால் சாவடி லேடி நீ கோயம்பேடு வாடீ..” என்ற பொது அறிவுப்பாடலை கேட்டிருக்கிறீர்களா?). மேலும் ராஜேந்திரகுமார், புஷ்பா தங்கதுரை, சாண்டில்யன் கதைகளின் மூலம் கொஞ்சமாய் ‘அந்த’ அறிவு வளர்ந்ததையும், பட்டுக்கோட்டை பிரபாகரின் ஹீரோயின் சுசீலாவின் பனியன் வாசகங்கள் (I like Tennis, because they play with two balls) மூலம் டென்னிஸ்-ஸில் இரண்டு பந்துகளை வைத்து விளையாடுவார்கள் என்கிற மகா அறிவு கிடைத்ததையும் சொல்லியாக வேண்டும். வணிக எழுத்துக்களில் மட்டும்தான் என்றில்லை. இன்றைக்கும் ஆதவன் எழுத்துக்களைப் படித்தால் ஒரு அலுவலகத்தின் இயக்கம், அன்றைய ஹாலிவுட் ஹீரோக்கள், ஹீரோயினிகள் (ஆட்ரே ஹெப்பர்ன், காஸநோவா), டெல்லியின் இடங்கள் என்று எத்தனையோ விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது. எவ்வகை எழுத்தாளராக இருந்தாலும் அவர்கள் கதையினூடாக லேசாகத் தெளித்துவிடும் விவரங்கள் இது மாதிரி நிறைய இருக்கும்தான். இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நான் என்ன சொல்ல வந்தேன் என்று புரிவதற்கு இத்தனை போதும் என்று நினைக்கிறேன். படிப்பது என்பது நிச்சயம் அறிவை வளர்க்க உதவும் செயல். நிறைய ஆங்கில புத்தகங்களாகப் படித்துத் தள்ளியிருந்தால் இதைவிட மேம்பட்ட விஷயங்கள், விவரங்கள் எத்தனையோ கிடைத்திருக்கலாம்தான். நான் அதிகம் படித்தது தமிழ் புத்தகங்கள்தான். எனக்கு இப்போதிருக்கிற அறிவின் ஒரு பகுதி நிச்சயம் சின்ன வயசில் படித்த தமிழ் கதைகள், நாவல்களால் வந்ததுதான் என்று நிச்சயம் சொல்லமுடியும். நீங்களும் கூட இதை உணர்ந்திருப்பீர்கள். இல்லையா? நெருப்பில்லாமல் புகைகிறது மதிய உணவு இடைவேளையில் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது சின்ன வயதில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொன்னார். நண்பர் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர். அவரது நண்பரொருவர் “இதை பாக்கெட்டில் வைத்திரு. அப்புறம் வாங்கிக் கொள்கிறேன்” என்று கொடுத்து வைத்திருந்த ஒற்றை சிகரெட்டை பாக்கெட்டில் போட்டு அப்புறம் மறந்துபோய் வீட்டுக்கு எடுத்துப் போய்விட்டாராம். சிகரெட் பிடிப்பதோடு அப்பாவின் சட்டையையும் அவ்வப்போது எடுத்துப் போட்டுக்கொண்டு போகும் பழக்கமுடையவர் இவர். வீட்டுக்கு வந்து ஹாங்கரில் மாட்டின சட்டையை அப்பா துவைக்கப் போடுவதற்காக எடுத்தபோது சொன்னாராம். “எலே.. சட்டப்பாக்கெட்ல ஒரு சிகரெட் இருக்குலே”. கட்டிலில் ஒய்யாரமாய் படுத்து அரைத்தூக்கத்தில் இருந்த நண்பர். “அத வெளிய தூக்கிப் போடுங்கப்பா!” அப்பாவும் வேறு கேள்விகள் ஏதும் கேட்காமல் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டாராம். இந்தச் சம்பவத்தை விவரித்த நண்பர் சொன்னது “அப்பா என்னை எதுவுமே கேக்கல. அது தவிர நான் சிகரெட் பிடிப்பனா இல்லையான்னு என்பது இன்னிக்கு வரைக்கும் அப்பாவுக்கு தெரியாது. தெரிஞ்சிருந்தாலும் இதுவரைக்கும் என்கிட்ட அதப் பத்திக் கேட்டதில்ல.” இந்த மாதிரி தன் கட்டுப்பாடுகளிலிருந்து மகன்களுக்கு முழு சுதந்திரம் வழங்கியிருக்கிற அல்லது அவ்வப்போது கண்டுகொள்ளாத அப்பாக்கள் ஓரிரு பேரை நான் கண்டிருக்கிறேன். இத்தனைக்கும் அந்த அப்பாக்கள் சிகரெட் பழக்கம் இல்லாதவர்கள். சிகரெட் பிடித்தல் உடல்நலத்திற்குத் தீங்கானது என்கிற அரசாங்க வாசகத்தை அவர்கள் தெளிவாக அறிந்து வைத்திருப்பவர்கள். ஒரு முறை என்னுடைய (இன்னொரு) நண்பனின் வீட்டுக்குப் போனபோது வாசலில் ஈஸி சேரில் அவன் அப்பா சாய்ந்து படுத்திருந்தார். அவன் இல்லையா என்று அவரிடம் விசாரித்தபோது ஆள்காட்டி விரலால் உத்தரத்தை நோக்கிக் காட்டிவிட்டு, பிறகு இரண்டு விரல்களை “v" மாதிரி உதட்டில் வைத்து ஊதிக் காட்டினார். நான் ஒரு நிமிடம் தேமே என்று விழித்துவிட்டுப் பின்னர் அதன் பொருள் புரிந்து சைடு படிக்கட்டு வழியாக மொட்டை மாடிக்குச் சென்றேன். அங்கே சுற்றுச் சுவரில் உட்கார்ந்து வானத்தைப் பார்த்துக் கொண்டு புகைவிட்டுக் கொண்டிருந்தான் நண்பன். “என்னடா வீட்லயே தம்மா? அப்பா இருக்காரே!” என்றதற்கு மூக்கு வழியாக புகையை வெளியே விட்டுவிட்டு “கண்டுக்க மாட்டார்” என்றான். மீண்டும் ஒரு இழுப்பு இழுத்துவிட்டு.. “அம்மாவும்தான்” என்றான். இந்த இடத்தில் நீங்கள் எல்லாரும் “ரோஜா” படத்தில் அரவிந்தசாமி அம்மா முன்னிலையிலேயே சிகரெட் பற்ற வைத்துப் புகைப்பதை தவறாமல் நினைவுகூறுவீர்கள் என்று தெரியும். (நினைவு கூறாதவர்கள் இந்த வரியைப் படித்துவிட்டு ஒருமுறை நினைவு கூறுங்கள்.) இதைப்பார்த்து சிலபேர் அதிர்ச்சியும் சில பேர் ஆச்சரியமும், சில பேர் இரண்டையும் ஒருங்கே அடைந்தார்கள். என் அப்பா சிகரெட்டெல்லாம் பிடிக்கற பழக்கம் வெச்சுக்காதே என்று என்றைக்காவது எனக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறாரா என்று யோசித்துப் பார்த்தால் அப்படி எதுவும் நினைவில் புகையாடவில்லை. பையன் தம் எல்லாம் அடிக்கிறானா என்று யாரிடமாவது விசாரித்திருப்பாரா என்பது கூட நிச்சயமாகத் தெரியவில்லை. எனக்கு சிகரெட் பிடிக்கிற நண்பர்கள் நிறைய பேர் உண்டு. என்னிடமே ரெண்டே முக்கால் ரூபாய் வாங்கி ‘கிங்ஸ்’ வாங்கியவர்கள் இருக்கிறார்கள். (இப்போ எவ்ளோ?) அவர்கள் சில நேரம் அளவுக்கு அதிகமாக புகைப்பதுபோல தோன்றும் சமயங்களில் “ஏம்ப்பா இந்தக் கருமத்த விட்டுற வேண்டியதுதான?” என்று கேட்டிருக்கிறேன். அதற்கு விதவிதமான பதில்கள் வந்திருக்கின்றன. பதில் 1: பதினெட்டு வயசில காலேஜ்ல ஆரம்பிச்சதுடா.. உடம்புல ஊறிப்போச்சு. விடறது கஷ்டம். பதில் 2: எந்த ******க்கு விடணும்னு சொல்லு. பதில் 3: புகை உடலுக்குப் பகைங்கறதுனாலதான் உள்ள வச்சுக்காம வெளிய விட்டுர்றேன். ஹிஹி! பதில் 4: வுட்டுட்டா உளுந்துரும்ஜி! பதில் 5: எனக்கு ஆக்ஸிஜனே இதுதான். எப்டி வுடறது? இன்னபிற. சிகரெட் பிடிக்கிற அப்பாக்கள் சிலபேரைப் பார்த்திருக்கிறேன். தன்னிடமிருந்து மகனோ மகளோ சிகரெட் பிடிப்பதைக் கற்றுக் கொண்டுவிடக்கூடாதென்கிற முன்னெச்சரிக்கையுடன் வீட்டுக்கு வெளியே சற்றுத் தள்ளி தெருமுனையில் அல்லது டீக்கடையில் என்று கமுக்கமாக முடித்துவிட்டு வந்துவிடுவார்கள். வாசம் தெரியாமலிருக்க ஹால்ஸ் அல்லது நிஜாம் பாக்கு. பதில் 1-ஐ சொன்ன நண்பரிடம் முன்னெல்லாம் ஏதாவது ஒரு இடத்தைக் குறிப்பிட்டு அது எங்கேயிருக்கிறதென்று கேட்டால், இந்த பஸ்ஸில் ஏறி, அந்த ஸ்டாப்பிங்கில் இறங்கி அப்றம் ஒரு சிகரெட் பத்த வெச்சு நடக்க ஆரம்பிச்சீன்னா அது தீர்றதுக்குள்ள போயிரலாம் என்பான். இது எனக்கு ஒரு விதத்தில் இன்ஸ்பையர் ஆகி 96-ல் கல்கியில் வெளிவந்த ஒரு சிறுகதையில் இதை ஒரு வரியாக வைத்தேன். கதை நாயகி காயத்ரியின் கணவன் ராம்குமார் என்பவன் தினம் காலை ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டு மனைவியை நடக்கிற தூரத்தில் இருக்கிற ஆபிஸ் வரை விட்டுவிட்டுத் திரும்புவான். ‘ஒரு சிகரெட் தூரம்’ என்று கூட தலைப்பு வைத்து பிறகு ‘நடக்கிற தூரம்’ என்று மாறிவிட்டது. கோவையில் ஒரு அட்வர்டைஸிங் கம்பெனியில் பணிபுரிந்தபோது அங்கே வேலை செய்த ஒரு பத்துப் பன்னிரண்டு பேரில் பெண்கள் தவிர முக்கால்வாசிப் பேர் புகை மன்னர்களாக இருந்தார்கள். கம்பெனியின் வைஸ் பிரஸிடெண்ட் உட்பட. கிரியேட்டிவ் ஏரியாவில் ஆர்ட் டைரக்டர், உதவி ஆர்டிஸ்ட், க்ளையண்ட் சர்வீஸ் எக்ஸிக்யூட்டிவ், அக்கவுண்ட் ஹெட் என்று எல்லாருமே ஒரே அறையில் உட்கார்ந்து கொண்டு மாற்றி மாற்றி பற்றவைத்துக் கொண்டிருப்பார்கள். வத்திப் பெட்டி இருக்கா என்று என்னிடம் வேண்டுமென்றே கேட்பார்கள். புகைபிடித்தல் என்பது கிரியேட்டிவ்-ஆன ஆசாமிகளின் தலையாய லைஃப் ஸ்டைல் என்பதை ஸ்தாபிக்க முனைபவர்கள் அவர்கள். நான் பக்திப் படத்தில் கைலாயக் காட்சி மாதிரி புகை மண்டலத்துக்கு நடுவே மூச்சுத் திணறி உட்கார்ந்து கொண்டிருப்பேன். இதற்கல்லவா அறிஞர்கள் பாஸ்ஸிவ் ஸ்மோக்கிங் (Passive Smoking) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்!! இதில் என்ன வேடிக்கை என்றால் மாத ஆரம்பத்தில் டப்பா டப்பாவாக கைமாறுகிற சிகரெட், மாத இறுதியில் பட்ஜெட் காரணமாக மல்லிசேரி பீடியாகத் தேய்ந்து ஆளாளுக்குக் காட்டமாய் உதட்டில் வைத்து இழுத்துக் கொண்டிருப்பார்கள். வைஸ் பிரஸிடெண்ட் வந்து “யோவ், பீடி குடுய்யா” என்று ஆர்ட் டைரக்டரிடம் வந்து வாங்கிப் போவார். நான் எழுந்து வெளியே வந்துவிடுவேன். (அந்த சமயங்களில் அவர்களின் கிரியேட்டிவிட்டி இன்னும் அதிகமானதா என்பதை நான் கவனித்திருக்கவில்லை) பொள்ளாச்சியில் தேவர் மகன் படப்பிடிப்புக்கு வந்திருந்த ஒரு பிரபல எழுத்தாளரை அவர் தங்கியிருந்த லாட்ஜ் அறையில் சந்திந்தபோது கையில் புகைகிற சிகரெட்டுடன் வரவேற்றார். ஒரு நான்கைந்து மணி நேரமிருக்கும். ஒரு சிகரெட் தீர்ந்து போகும் போது அதிலேயே இன்னொன்றை பற்றவைத்துக் கொண்டு இடைவெளி விடாமல் தொடர்ந்து அவர் புகைத்ததைப் பார்த்து அரண்டும் மிரண்டும் போயிருந்தேன். எனக்குத் தெரிந்து குறைந்தது 25 சிகரெட்டுகளாவது தீர்ந்திருக்கும். செயின் ஸ்மோக்கிங் என்றால் என்ன என்று டெமோ-வுடன் தெரிந்து கொண்டது அன்றுதான். என் வீட்டுக்குப் பக்கத்தில் கூட ஒருவர் காலர் தூக்கிவிடப்பட்ட டி-சர்ட் மற்றும் வேட்டியுடன் எப்போதும் சதா விரலிடுக்கில் புகைகிற சிகரெட்டுடன் காம்பவுண்டுக்கு வெளியே நின்றிருப்பார். எங்கேயாவது போகும்போதும் வரும்போதும் எந்நேரமும் அவரை அந்த இடத்தில் அந்த நிலையிலேயே பார்த்துக்கொண்டிருக்கிறேன். தம் அடிப்பதை ஒரு வேலையாகவே செய்ய முடியுமா என்று ஆச்சரியமாகவும் இருக்கிறது. சிகரெட் பிடிக்கிற ஆண்கள் பெட்டிக்கடையில் “பிரதர்.. நெருப்பு குடுங்க” என்று பக்கத்தில் நிற்கிறவரிடம் இயல்பாகக் கேட்கும் கேள்வியில் முன்பின் பழக்கம் இல்லாதவர்கூட மனமுவந்து தன் கொள்ளியைத் தந்து உதவி பின் தோழமையுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கூட பார்த்திருக்கிறேன். நட்பு வளர்க்க உதவும் நெருப்பு. வாழ்க்கையில் அவ்வப்போது தொட்டுக்கொள்ள சிகரெட், பான் பராக், சுவிங்கம் என்று ஏதாவது ஒரு ஐட்டம் ஏன் எப்போதும் சிலருக்குத் தேவைப்படுகிறதென்று சில நேரம் யோசித்துப் பார்த்திருக்கிறேன். இது ஒரு உளவியல் சம்பந்தப்பட்ட விஷயம் என்றுதான் தோன்றுகிறது. ஸீரியசாய் எப்போதும் யோசிப்பவர்கள் கையில் சிகரெட் புகைகிறது. அது அவர்கள் சிந்தனையைத் தூண்டுகிறதா என்று உலகமெங்கும் யாராவது கருத்துக் கணிப்பு நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். தொழிலாளிகள் தன் உழைப்பை, வியர்வையை, அலுப்பை மறக்க ஓரமாய் உட்கார்ந்து ஒரு பீடியை ஒரு இழுப்பு. சிலருக்கு பெண்களிடம் தான் ஒரு ஹீரோவாக நிரூபணம் செய்வதற்கு. சிலருக்கு தான் ஒரு வில்லன் என்று மற்றவர்களுக்குத் பிரகடனப்படுத்துவதற்கு. சிலருக்கு தான் ஒரு ஆண் என்று நிரூபணம் செய்வதற்கு. இந்த லிஸ்டை இன்னும் விரிக்கலாம். பிறரிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதற்கு. தன்னுடைய தாழ்வு மனப்பான்மையை மறைப்பதற்கு. அப்பாவை எதிர்ப்பதற்கு. தன்னிடமிருக்கிற இண்டெலெக்சுவல்தனத்தை வெளிப்படுத்துவதற்கு. கை நடுக்கத்தை மறைப்பதற்கு. மதுவருந்தும்போது சும்மா ஒரு உப கிக் ஏற்படுத்துவதற்கு. சிலருக்கு சும்மா ஸ்டைலுக்கு. சிகரெட் என்றால் என்ன என்று ஒரு முறை தெரிந்துகொள்வதற்கு. தன் படைப்பாற்றலை அதிகரித்துக் கொள்வதற்கு. சிலருக்கு சாப்பாட்டுக்கு பதிலாக. சிலர் தன் நண்பர்களுடன் சும்மா கம்பெனிக்கு. தன் கணவனையோ, காதலனையோவிட தானும் குறைந்து போய்விடவில்லை என்று தெரிவிப்பதற்கு. சிலருக்கு துக்கத்தைக் கரைக்க. சிலருக்கு தூக்கத்தை அழைக்க. சிலருக்கு குளிரைத் தடுக்க. சிலருக்கு மழையை ரசிக்க. இப்படியாக ஒவ்வொருவருக்கும் புகைபிடிப்பதற்கான தனிப்பட்ட காரணங்கள் நீண்டுகொண்டே போகும். உதடு வழி நுழைகிற புகை நெஞ்சாங்கூட்டில் இறங்கிப் பரவி மனதிலும் உடம்பிலும் என்னெல்லாம் மாயம் செய்கிறது என்பதை சிகரெட்டை நுனி முதல் அடிவரை அனுபவித்துப் பிறகு ஃபில்டரைக் கடாசுபவர்களுக்குத்தான் வெளிச்சம். சிலர் தொட நினைக்கிறார்கள். சிலர் விட நினைக்கிறார்கள். சிகரெட் பிடிப்பது என்பது தனிப்பட்ட நபரின் விருப்பமும், சுதந்திரமும், உரிமையும், கொள்கையும் ஆகவும் இருக்கிறது. சிலருக்கு அதுவே ஒரு மோனத்தவமும், தியானமும், வாழ்வியல் வழியும் ஆக பரிமாணம் கொண்டிருக்கிறது. டாக்டர் எக்ஸ்ரேவை சுட்டிக் காட்டி “உங்க நுரையீரல்ல... என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்கும்வரை. வீட்டுக்காரர் பார்த்தால் என்ன நினைப்பார்? சென்னையில் ஒரு வீட்டை நீங்கள் குடியிருக்க வாடகைக்குப் பிடிக்கிறீர்கள். அதுவும் நகரத்தின் இதயத்துக்கு நடுவே அல்லது அருகாமையில். உங்களுக்கு வாடகைக்கு விடுவதற்கென்று தன் வீட்டின் சுவர்களுக்கு பளபளவென டிஸ்டெம்பரோ பெயிண்ட்டோ அடித்து ஒரு புதிய வீட்டின் தோற்றத்தை அதற்கு கொடுத்து வைத்திருக்கிறார் வீட்டு உரிமையாளர். ஒரு நல்ல நாள் பார்த்து பால் காய்ச்சி பிறகு உங்கள் வாழ்நாள் உடைமைகளை அல்லது இப்பூவுலகில் வாழத் தேவையானதாகக் கருதும் குறைந்த பட்ச அத்தியாவசியச் சாமான்களை புதிய வீட்டிற்கு மாற்றிவிடுகிறீர்கள். எல்லாவற்றையும் அந்தந்த இடத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு, காலண்டர் மாட்டி, பால்கனியில் துணியுலர்த்த கொடிகட்டிவிட்டு, மின் அட்டையை சரிபார்த்து ரீடிங்கைக் குறித்து வைத்துவிட்டு, பாலுக்கும் பேப்பருக்கும் ஏற்பாடு பண்ணிவிட்டு, பக்கத்து வீட்டுக்காருக்கு எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு ஹலோவும் சொல்லி வைத்தாயிற்று. ஒரு பெரிய ராக்கெட் ப்ராஜக்டை முடித்த அலுப்புடன் உங்கள் வரவேற்பறை சோபாவில் சாய்கிறீர்கள். எதிரில் சுவரில் புதிதாக வண்ணமடிக்கப்பட்ட சுவரில் ஒரு பெரிய கருப்புக் கீறல். என்ன அது என்று பதறி பக்கத்தில் போய்ப் பார்த்தால் அது ஒரு பென்சில் கிறுக்கல். மிகவும் கண்டிக்கத்தக்க இந்த அசட்டு வேலையைச் செய்தது உங்கள் குழந்தையாகத்தான் இருக்கும் என்று சந்தேகப்பட்டு அதைத் தேடினால் அது கையில் க்ரையான்களுடன் பெட்ரூம் சுவரில் தனது அடுத்த கட்ட வேலையை ஆரம்பித்திருக்கிறது. உங்கள் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும்? சென்னை நகரில் நம்மை நம்பி வீடு தரும்போதே ஆயிரத்து நூற்றி இருபத்து நாலு நிபந்தனைகளும் கூடவே ஒரு பதினோரு மாத அக்ரிமெண்டும் போட்டிருக்கும் வீட்டுக்காரருக்கு அவரது வீட்டை சேதாரமில்லாமல் திருப்பிக் கொடுக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறபடியால் நிச்சயம் இப்போது உங்கள் ரத்த அழுத்தம் ஏறியிருக்க வாய்ப்புண்டு. “கண்ணா இதுமாதிரியெல்லாம் சுவத்தில கிறுக்கக்கூடாது சரியா. ஹவுஸ் ஓனர் அப்பாவ திட்டுவாரு” என்று நயமாய்ச் சொல்லி பென்சில், பேனா க்ரையான்களை உடனடியாக குழந்தைக்கு எட்டாத உயரத்தில் வைத்துவிடவும் செய்வீர்கள். இப்படிச் செய்யவில்லையென்றால் வீட்டுக்காரரின் கடும் எரிச்சலுக்கு ஆளாவதுடன், வீட்டைக் காலி செய்யும்போது உங்கள் அட்வான்ஸ் தொகையிலிருந்து ஒரு பெரும் பங்கை வீட்டுச் சுவர்களை நாசப்படுத்தியதற்காக அவர் கழித்துக் கொள்ளக்கூடும். ஆனால் இவ்வாறான கவலைகள் எதுவுமற்று செந்தில் என்று ஒரு நண்பர் இருந்தார். அபிராமபுரத்திலிருக்கும் அவர் வீட்டுக்கு ஒரு முறை போனேன். வாசலைத்தாண்டி உள்ளே நுழைந்ததும் ஹாலின் மொத்த சுவரையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு சுவர் கிறுக்கல்கள். அவரது ப்ரீ கேஜி குழந்தை ஹரிணியின் கைவண்ணம். பென்சில், க்ரையான், இன்சுலேஸன் டேப், போஸ்டர் கலர் என்று என்ன கையில் என்ன கிடைக்கிறதோ அவைகளைக்கொண்டு தனக்கு எந்த உயரம் வரை எட்டுகிறதோ அது வரை விதவிதமான கிறுக்கல்கள். எட்டவில்லையென்றால் சோபாவின் மீது ஏறி நின்று. ஹாலில் மட்டும் அல்ல படுக்கையறைகளில், சமையலறை சுவர்களில் என எங்கும் கிறுக்கல் மயம். ஆக அவரது வீடு ஒரு சிறிய ஆர்ட் கேலரி மாதிரி தோற்றமளித்தது. நீங்கள் குழந்தையைக் கண்டிப்பதில்லையா என்று கேட்டதற்கு நண்பர் மெதுவாய்ச் சிரித்தார். அதோட கிரியேட்டிவிட்டியையும் சுதந்திரத்தையும் ஏன் கெடுக்கவேண்டும் என்றார். மீறிப் போனால் வீட்டுச் சொந்தக்காரர் வெள்ளையடிக்க ஒரு இருபதாயிரம் ரூபாய் கேட்பார். கொடுத்தால் போயிற்று என்றார். நான் ஆச்சரியமாகிப்போனேன். [harinie-2][harinie-3] [harinie-4][harinie-5] [harinie-6][harinie-1] ஹரினியின் சுவரோவியங்கள் நான் குடியிருக்கிற வீட்டில் என் பையன் இப்படிக் கிறுக்கத் தலைப்பட்டபோது அவனை தடுத்தாட்கொண்டது ஞாபகம் வந்தது.  நான் முடிந்த அளவு வீட்டுக்காரர் குறை சொல்லாமல் நடந்துகொள்ளவேண்டும் என்று நினைக்கிற ஆசாமி. அதற்காக செய்கிற தியாகங்களில் அதுவும் ஒன்று. குழந்தைகளுக்கு சுவரில் கிறுக்குதல் சந்தோஷம். ஆனால் ஒரு சில நிர்பந்தங்களின் பொருட்டு அவ்வாறு செய்யவிடாமல் அடக்கி ஆள்கிறோம். அதை என் நண்பர் செய்ய முயற்சிக்கவில்லை என்பது நல்ல பாராட்டத்தக்க விஷயமாகப்பட்டது. அவரது குழந்தை தனக்கு மனதில் தோன்றுவதை எல்லாம் எங்கே வேண்டுமானாலும் சுதந்திரமாகக் கிறுக்கிக் கொள்ள அனுமதியளித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக சுவர் முழுவதும் குறுக்கும் நெடுக்கும் பலவிதமான கோடுகளால் ஹரிணிக்கு தன் உலகத்தை விரியச் செய்ய முடிகிறது. அவைகளை சாதாரணக் கண்களோடு பார்த்தால் வெறும் கிறுக்கல்களாக மட்டுமே தெரியும். ஹரிணியின் மாய உலகத்தில் அவள் கற்பனைகளில் மிதக்கும் உருவங்கள் கோடுகளாக வெளிப்பட்டிருக்கிறதென்று ஏன் சொல்லமுடியாது?. அந்த உலகத்திற்கு நீங்கள் பயணிக்க வேண்டுமென்றால் அந்தக் கிறுக்கல்களை புரிந்து கொள்ளவேண்டுமென்றால் உங்கள் வயதை மூன்றாக மாற்றினால் மட்டுமே முடியும். குழந்தைகள் பிற்காலத்தில் என்னவாக ஆவார்கள் என்று யாராலும் சரியாகக் கணிக்க முடியாது. பெரும்பாலானவர்களின் வாழ்க்கையிலும் அதுவே நிகழ்ந்திருக்கிறது. நான் என்னவாக ஆவேன் என்று எப்படி என் அப்பாவுக்குத் தெரியாமல் போனதோ அதே மாதிரி என் மகன் பிற்காலத்தில் எதுவாக மாறுவான் என்று என்னாலும் சொல்ல முடியாது. வேண்டுமென்றால் அவன் எதுவாக ஆகவேண்டுமென்று நினைக்கிறானோ அதற்கான அடித்தளத்தையும், உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கலாம்.  நியூயார்க்கில் குழந்தை மேதாவியான மார்லா ஆம்ஸ்டெட் (Marla Olmstead) என்கிற ஒரு சின்னக் குழந்தை உலகின் முன்னணி ஓவியர்கள் மூக்கில் விரலை வைக்குமளவுக்கு மாடர்ன் ஆர்ட் ஓவியங்களை வரைந்து பல லட்சம் டாலர்களுக்கு அவைகளை விற்றுக்கொண்டிருப்பதையும் டாக்குமெண்டரியாக டிவியில் ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். அது சின்ன வயதிலிருந்தே இப்படி சுவரில் கிறுக்கிய குழந்தையாகக்கூட இருக்கலாம். இன்றைய சும்மா சுவர்க் கிறுக்கல்கள் நாளைய கலைப்படைப்புகளாக மாற நிறையவே வாய்ப்பிருக்கிறது. குழந்தைகள் செய்வதையும் சொல்வதையும் முற்றும் சரியல்ல என்று புறந்தள்ளுவதும் நல்லதல்ல என்று தோன்றுகிறது. வளரும் வயதில் லேசான கண்டிப்புடன் கொஞ்சம் சுதந்தரத்தையும் வழங்கும் பட்சத்தில் குழந்தைகள் தங்களின் படைப்புத்திறனை நல்ல முறையில் கூராக்கிக் கொள்ள இயலும். நண்பர் அதை செவ்வனே செய்கிறார். நண்பர் வீட்டுக்குப் போன நேரம் கையில் டிஜிட்டல் கேமரா இருந்ததால் குழந்தை ஹரிணியின் சுவரோவியங்களைப் படமாக்கி பிறகு கம்ப்யூட்டரில் அவைகளுக்குப் ஃப்ரேம் எல்லாம் போட்டு மின்னஞ்சலில் அவருக்கு அனுப்பி வைத்தபோது நெகிழ்ந்து சந்தோஷப்பட்டார். ஹரிணியின் அந்த சுவரோவியங்களை இந்தப் பதிவில் கொடுத்திருக்கிறேன். எப்படியிருக்கிறதென்று சொல்லுங்களேன்! அவர் எதிர் ஃப்ளாட் பெரியவர் இறந்துவிட்டார். மற்ற ஃப்ளாட்வாசிகள் அறியாதவண்ணம் இன்று பல்ஸ் குறைந்து கடைசி கணத்தை மவுனமாகவோ சிரமமாகவோ வாழ்ந்து முடித்துச் சென்றுவிட்டார். நான் இதுவரை அவரைப் பார்த்ததில்லை. எதிர்க்கதவாக இருப்பதனால், சென்று துக்கம் விசாரித்து வருதல் நாகரிகம் என்பதால் சென்றேன். பெரியவர் 10 சதவிகிதம் கண்கள் திறந்த நிலையில் அமைதியாய் கண்ணாடிப் பெட்டிக்குள் படுத்திருந்தார். நல்ல உயரம். நார்மலான உடம்பு. ரொம்ப நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கஷ்டப்பட்டுவந்தது போன்ற தோற்றம் எதுவும் இல்லாமல் முகத்தில் மிஞ்சியிருந்த சிறு தேஜஸ். அவரது மகனிடம் ‘ஐயம் சாரி.. எத்தனை மணிக்கு இறந்தார்?” என்றேன். சம்பிரதாயமான கேள்வி. ‘டூ. தர்ட்டிக்கு! ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போனோம். ஐ டவுட்.. வீட்லயே மூச்சு நின்னிருக்கும்னு..” சம்பிரதாயமான பதில். ”என்ன வயசு அவருக்கு?” ”எய்ட்டி ஒன்!” மேலும் ஓரிரு சம்பிரதாயமான கேள்விகளைக் கேட்டுவிட்டு ”ஏதாவது உதவி தேவைன்னா தயங்காம சொல்லுங்க சார்..” என்று சொல்லிவிட்டு, கண்ணாடிப் பெட்டியருகே நின்று மனசுக்குள் மரியாதை செலுத்திவிட்டு வந்துவிட்டேன். மொத்தமாய் ஐந்து நிமிடங்களுக்குள் எனது கடமை முடிந்துவிட்டது. ஒருவர் காலமாகிவிட்டார் என்கிற ஆர்ப்பாட்டங்கள் ஏதுமில்லாமல் அமைதி காத்து நிற்கிறது அப்பார்ட்மெண்ட். ஷாமியானா இல்லை. சங்கு இல்லை. தென்னை ஓலைகள் கிடையாது. மடக்கு நாற்காலிகள் இல்லை. ஒப்பாரி அழுகை இல்லை. அதிகமாய் யாருக்கும் அவர் இருந்ததும் தெரியாது. இறந்ததும் தெரியாது. உறவினர்களின் வருகையைத் தெரிவிக்கும் ஏழெட்டு ஜோடி செருப்புகள் மட்டும் கதவின் முன்னால். ’சாப்பிடாம இருக்காதீங்கோ. ரெண்டு இட்லியாவது சாப்பிடுங்கோ. பையன்ட்ட வாங்கிட்டு வரச் சொல்றேன்’ என்று யாரோ யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். இந்த மரணத்தினால் இம்மி அளவு கூட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் மற்ற ஃப்ளாட்டுகளில் டி.வி. சீரியல் சப்தங்கள், தாளிக்கும் வாசனை, சின்னப்பையன்கள் விளையாடும் உற்சாகக் குரல்கள், லிஃப்ட்டின் கிராதி கேட்டை அறைந்து மூடும் சப்தம். எஃப். எம் ரேடியோ. நாளைக் காலை ஃப்யூனரல் சர்விஸ் மாருதி ஆம்னி வந்து அமைதியாய் எடுத்துப் போய் எலெக்ட்ரிக் க்ரிமடோரியத்தில் இறுதி அஞ்சலி முடிந்துவிடும். அபார்ட்மெண்ட் சுவர்களுக்குள் அடைபட்ட நகரமயமாக்கப்பட்ட வாழ்வு உறுத்தல்களற்றுத் தொடரும். குரங்கு பெடல் என்றால் என்ன? ஒரு வழியாக மகனுக்கு பாலன்ஸ் கிடைத்துவிட்டது. இது இரண்டாவது பாலன்ஸ். முதல் பாலன்ஸ் தவழ்கிற குழந்தை என்கிற நிலைப்பாட்டிலிருந்து ‘நடக்கிற குழந்தை’ என்கிற நிலையை அடைந்தது. அப்போது எல்லாக் குழந்தைகள் போலவும் ‘பொதக் பொதக்’ என்று நிறைய தடவை விழ வேண்டி வந்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் எப்படியோ நடக்கவும் பிறகும் ஓடவும் பழகிக் கொண்டான். ஓடப் பழகின பிறகு ஓட்டப் பழகவேண்டாமா? முதலில் வாங்கின மூன்று சக்கர சைக்கிள் மோகம் முடிந்து (நான் கூட அவ்வப்போது ஓட்டுவதுண்டு) ஹாண்டில் பாரில் அவனது முழங்கால் இடிக்க ஆரம்பித்தவுடன் மாநாடு கூட்டி அவனுக்கு பெரிய சைக்கிள் வாங்கலாம் என முடிவானது. பி.எஸ்.ஏ ராக்கெட் என்று போட்ட ஒரு சின்ன இரண்டு சக்கர சைக்கிள் (சைடு வீலையும் சேர்த்தால் நான்கு) வாங்கிவந்தோம். பேர்தான் ராக்கெட் என்று போட்டிருந்தார்களே தவிர தரையில் தான் ஓடியது. ஆனால் அந்த சைக்கிளில் ஒரு பிரச்சனை. அது மகனைவிடப் பெரியதாக இருந்தது. அதாவது அவன் இன்னும் நான்கைந்து வருடங்கள் கழித்து ஓட்டவேண்டியதை அப்பொழுதே வாங்கிவிட்டேன். இருந்தாலும் சீட்டையும், ஹாண்டில் பாரையும் கொஞ்சம் தணித்து இறக்கித் தந்ததில் அதில் எப்படியோ ஏறப் பழகி மூன்றாவது மாடி வராந்தாவிலும், மொட்டை மாடியிலுமாக ஓட்ட முயற்சித்துக் கொண்டிருந்தான். கீழே விழாமலிருக்க சைடு வீல்கள் துணை புரிந்தாலும் அபார்ட்மெண்ட் வாசிகளுக்கு ஓட்டும்போது டர்ர்ர்ர் என்ற அதன் நாராசமான சத்தம் அத்தனை ரசிக்கவில்லை. அதற்காக அவனை ரோட்டில் போய் ஓட்ட வைக்கிற மயிர்க்கூச்செரியும் அட்வென்ஞ்சரை நான் எடுக்கத் தயாரில்லை. சில நாட்கள் வேறு வழியில்லாமல் ஹாலுக்கும் பெட்ரூமுக்கும் கிடைத்த இடைவெளிகளில் கூட ஓட்டுவான். சில நாட்கள் இரவு உணவு முடித்துவிட்டு நடு ஜாமத்தில் ட்ராஃபிக் அடங்கின எங்கள் தெருவில் அவன் பின்னாலேயே ஓடி ஓடி உண்ட உணவு செரித்துக்கொண்டிருந்தது. அதிலும் முக்கியம் அங்கேயிருக்கிற மற்ற அபார்ட்மெண்டுகளில் பார்க்கிங் இல்லாமல் ரோட்டிலேயே நிறுத்திவைத்திருக்கும் கார்களின் மேல் அவன் சைக்கிள் மோதி கீறல் போடாமல் இருக்கவேண்டுமே என்கிற கவலை மூச்சிரைப்போடு சேர்ந்து பொங்கிவரும். “ப்ராண்ட் நியூ கார் ஸார் இது.. டெலிவரி எடுத்து ஒரு வாரம்கூட ஆகலை. பாருங்க எவ்ளோ பெரிய கீறல். உங்க மகனுக்கு சமூகப் பொறுப்புன்னா என்னன்னு நீங்க கத்துக் குடுத்திருக்க வேணாமா? திஸ் இஸ் ரிடிகுலஸ். எனக்கு மிகப் பெரிய மன உளைச்சலாயிருச்சு. கீறலுக்கான நஷ்ட ஈடா  பதினைந்தாயிரத்தை...” என்று யாராவது கனவான் கேட்டில் நின்றுகொண்டு கத்துவதை கற்பனை செய்துகொண்டு அந்த பயத்துடனேயே மகனுக்கும் கார்களுக்குமிடையே இடைவெளி ஏற்படுத்துகிற முனைப்பிலேயே ஓட்டம் கழியும். சைக்கிள் அவன் உயரத்திற்குப் பொருந்தாமல் உயரமாக இருந்ததாலும், அவ்வப்போது சீறி வருகிற ஆட்டோ, பைக்வாலாக்களுக்கு பயந்து தடுமாறியதாலும் மற்றும் சென்னை சாலைகளின் பிரத்யேக அடையாளமான குழிகளினாலும் அவ்வப்போது தடுமாறி விழவும் செய்தான். பாலன்ஸூம் கிடைக்காமல் சாய்ந்த நிலையிலேயே ஓட்டி ஓட்டி பக்கவாட்டுச் சக்கரங்களும் தேயத் தொடங்கியிருந்தது. நொடிகளும், நிமிடங்களும், நாட்களும், வருடங்களுமாக உருண்டோடியது. இந்த பெரு நகரத்துக்குள் வாழ்வின் அத்தியாவசிய தேவையான சைக்கிள் ஓட்டுதலைக் கற்றுக் கொடுப்பதற்குள் வுதா (இது ஒரு கெட்டவார்த்தை என யாரோ சொன்னதால் தலைகீழாக எழுதியிருக்கிறேன்) தீர்ந்து போய்விடும் என்று தான் தோன்றியது. ஆனால் இந்தக் கோடை விடுமுறையின் போது ஊருக்குப் போய் அங்கே மரங்கள் சூழ்ந்த, சுத்தமாய் போக்குவரத்து இல்லாத, அகலமான ரோடுகள் கொண்ட மின்சார வாரிய குவார்டர்ஸூக்குள் அக்கா பசங்களின் (சைடு சக்கரங்கள் இல்லாத) சைக்கிள்களை ஓட்டி ஒரே நாளில் அட்சர சுத்தமாக நன்றாய் சைக்கிள் பழகிவிட்டான். ஆக வாழ்க்கைக்குத் தேவையான இரண்டாவது பாலன்ஸூம் ஒரு வழியாய்க் கிடைத்துவிட்டதில் அக மகிழ்வு ஏற்பட்டுவிட்டது. இன்றைக்கு அவன் சைக்கிளை விட கொஞ்சம் உயரமாய் வளர்ந்துவிட்டான்.  சைடு வீல்களையும் நீக்கியாயிற்று. சீறுகிற ஆட்டோக்களை லாவகமாய்த் தவிர்க்கவும் பழகிவிட்டான். ரொம்ப குள்ளமாய் இருக்கிறதென்று ஸீட்டை கொஞ்சம் இன்னும் ஏற்றித்தரமுடியுமா என்று கேட்கிறான். இல்லையென்றால் கியர் எல்லாம் வைத்து மவுண்டன் பைக் டைப்பில் வேறு பெரிய சைக்கிள் வேண்டுமாம். நான் எண்பதுகளின் ப்ளாஷ்பேக் காட்சியொன்றை நினைவுகூர்ந்து அவனிடம் சொன்னேன். “நாங்கெல்லாம் எங்களை விட பெரிய சைக்கிள்ள குரங்கு பெடல் போட்டு ஓட்டிப் பழகினோம். இனி அந்த அனுபவமெல்லாம் உங்கள மாதிரி சிட்டிப் பசங்களுக்குக் கிடைக்காதுடா..” “குரங்குப் பெடல்னா என்ன?” என்றான். இந்த பதிவை போஸ்ட் பண்ணி முடித்தபிறகு விளக்குகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். படித்ததும் பிடித்ததும் எப்பவோ ஒரு காலத்தில் நமக்குப் பிடித்தது இப்போது பிடிக்காமல் போவதும், அப்போது பிடிக்காமல் இருந்தது இப்போது பிடித்துவிடுவதும் நிகழத்தான் செய்கிறது. இதைத்தான் வேறு விதமாக “இப்பப் பாத்த புதுசு பாக்கப் பாக்கப் பழசாகி எப்பவுமே பாக்காத பழசு பாத்தவுடனே புதுசாத் தெரியும்” என்று மீனாட்சி சுந்தரனார் கூற முயற்சித்தார். ஆனால் இது முதல் வரிக்கு சம்பந்தமில்லாமல் இருப்பதால் அதிகம் யோசிக்காமல் அடுத்த பாராவுக்குப் போய்விடலாம். பொள்ளாச்சி சேரன் போக்குவரத்துக் கழகத்திலிருந்து யாரோ கொடுத்த 1988- ஆம் ஆண்டு டயரி, எதையோ தேடும்போது கண்ணில் பட்டது. புரட்டிப் பார்த்தபோது அதில் மணி மணியான கையெழுத்தில் அப்போது படித்தவைகளிலிருந்து பிடித்த பேராக்கள் அல்லது வரிகளை ’படித்ததில் பிடித்தது’ என்று போட்டு எழுதி வைத்திருந்தேன். என் அப்போதைய வாசிப்பானுபவ ரசனை ரொம்ப தத்துப் பித்தென்றெல்லாம் இல்லாமல் கொஞ்சம் பரவாயில்லையாக இருந்ததாக நிழலடிக்கிறது. இப்போது அவைகளைத் திரும்பப் படித்துப் பார்க்கும்போது எனக்குப் பிடித்ததை எழுதியவர்களின் பெயர்கள் எல்லாம் ஒரு கலவையாக அவியல் போல இருக்கிறது. கார்த்திகா ராஜ்குமார், காண்டேகர், பாப்ரியா, அனுராதா ரமணன், இந்திரன், காப்ரியேல் ஒகாரா, சுந்தர ராமசாமி, லே ஹண்ட், மு.மேத்தா, மாலன், கார்ல் மார்க்ஸ், வண்ண நிலவன், சி.சு. செல்லப்பா, க.நா.சு, அப்புறம் ஜப்பானிய பழமொழிகள், பெயரில்லாத தத்துவங்கள் ஒன்றிரண்டு. யாரோ என்று போட்டு சில. இந்த யாரோ என்பது யாராக இருக்கும் என்று ரொம்ப நாட்களாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். இதில் லே ஹண்ட், ஒகாரா, மார்க்ஸ், காண்டேகர் போன்றவர்களின் பெயர்களைப் பார்த்து யாரும் பயப்படவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அது சும்மாவாச்சும் அவர்களுடைய ஏதாவது ஒரு பேரா எங்கேயாவது தட்டுப்பட்டதை டயரியில் எழுதி வைத்திருப்பேன். மற்றபடி ரொம்ப தடிமனான புத்தகங்கள் படிக்கிற கெட்ட பழக்கம் எதுவும் அப்போது எனக்கு இருந்ததில்லை. பொன்னியின் செல்வன் கூட ரிடையர்மெண்டுக்கு அப்புறம் படிக்கலாம் என்று எடுத்துவைத்திருக்கிறேன். ஆனால் கிடைத்ததையெல்லாம் வாசிக்கிற வெறி ஒரு மானாவாரித்தனத்தைக் (பார்த்தீர்களா! தமிழில் புதிய சொல்லாடல்) கொடுத்திருந்தது. பாலகுமாரனை விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்த அதே நேரம் சைடுவாக்கில் க.நா.சு வருகிறார். கி.ராஜநாராயணன், தி.ஜா என்று வாசிப்பு அனுபவத்தை அடுத்த தளத்திற்குக் கொண்டு போகவேண்டுமென்று பிரயத்தனம் மேற்கொண்ட காலகட்டம் அது. பிடித்த எழுத்தாளர்கள் என்று ஒரு இறுதிப் பட்டியல் உருவாகுவதற்கு முன் வரை எல்லோருமே இதுபோல சகட்டுமேனிக்குப படித்து வைத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருப்பார்கள். பொள்ளாச்சி லைப்ரரியில் மேற்படி இலக்கிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் இருக்கும். ஆனால் எல்லா புத்தகங்களிலும் வாசகர்கள் தனக்குப் பிடித்த வரிகளை பென்சிலாலோ பேனாவாலோ அடிக்கோடிட்டு அடிக்கோடிட்டு புத்தகம் முழுவதும் கோடு கோடாக இருக்கும். போதாதற்கு கடைசி பக்கத்தில் ‘அருமையான புத்தகம்” என்றோ, “மரணக் கடி. படிக்காதே” (இதை முதல் பக்கத்திலல்லவா எழுதியிருக்கவேண்டும்) என்றோ தங்களது உண்மையான விமர்சனத்தை பதிந்தும் வைத்திருப்பார்கள். ஆக அடிக்கோடு போடுகிற வேலையை நான் செய்யவேண்டாம் என்று படித்ததில் பிடித்ததை தனியாக சேரன் போக்குவரத்துக் கழக டயரிக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன். இந்த மாதிரி படித்ததில் பிடித்ததை தொகுத்து பொள்ளாச்சியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘மனிதம் செய்திகள்’ என்கிற சிற்றிதழில்(!) போட்டுக் கொண்டிருந்தோம். கோபால் பில்டிங் பக்கத்தில் கடை வைத்திருந்தவர்கள் எல்லாருக்கும் ஒரு காப்பி போகும். ப.பி-இல் ஒரு சில இப்போது படித்தாலும் பிடிக்கத்தான் செய்கிறது. அவைகளில் சில தத்துவார்த்தமாக இருப்பதே காரணம் என நினைக்கிறேன். ஒரு சிலது மரண மொக்கை. படித்ததில் பிடித்ததில் சில இங்கே.. **** குழந்தைகள் உலக சத்தியங்கள். கையுயர்த்தித் தந்ததெல்லாம் கடைசிவரை காப்பாற்றுவேன் என்னும் நியாயப் பிரமாணங்கள். வாழ்க்கையையே விளையாட்டாய் கழித்ததுபோல் குதிபோடும் பையன் நாட்கள். இலக்குகள் பதுங்கியிருக்க அவற்றைக் கண் கட்டித் தேடக் கிளம்பும் வாழ்க்கை. ஜரூராய் இருந்து இடமாறிப் பிழைக்கும் கிளித்தட்டு. ஏமாந்தவனை எழுப்பிவிட்டுத் தான் உட்கார்ந்து கொள்ளும் கொக்கோ. மூச்சுப் பிடித்து மூலைவரை சென்று எதிரியை கால் தாக்கி எற்றித் திரும்பும் சடுகுடு. வளைத்து வளைத்து இரண்டு சக்கரத்தையும் பாலன்ஸ் செய்து ஓட்டிச் செல்லும் வாடகை சைக்கிள். வாழ்க்கை விளையாட்டாய்த்தான் ஆரம்பிக்கிறது. - மாலன், நந்தலாலா நாவலில் ***** எனது பூப்பு நாளில் நான் கட்டிய பச்சைப் பட்டு இன்னனும் நெஞ்சுக்குள் பசுமையாய் நினைவிருக்க.. காலையில் சாப்பிட்டது நினைவில்லை. மறதி.. பனித்துளி போல மறதி. காலம் கரையுது. காலம் கரையுது. காதுக்குள் பேரொலி. என்னுள் என்னை நான் இழந்திருக்கையிலே.. உலகம் என்னை இழந்து கொண்டிருக்கிறது. - அனுராதா ரமணன் *** கொஞ்சமாக தெரிந்து வைத்துக் கொண்டிருக்கும்போது தெரிந்து கொண்டுவிட்டோம் என்றும், அதிகமாகத் தெரிந்துகொண்டிருக்கும்போது தெரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணமும் ஏற்படுகிறது. ஒரு கதவு திறக்கும்போது திறக்காத பல கதவுகள் தெரியும் விசித்திரக் கோட்டை இது. அவற்றையும் திறக்கும்போது, மேலும் பல கதவுகள் மூடிக்கிடப்பதைப் பார்க்கிறோம். அப்படியானால் இதற்கு முடிவு என்ன? திறப்பதே திறக்காத கதவுகளைப் பார்க்கத்தானா? பெரிய சவால்தான் இது. - சுந்தர ராமசாமி, ‘ஜே.ஜே சில குறிப்புகள்’ நாவலில். *** கடைசிக் கதவும் திறக்கப் போகிறது. நான் ஒரு சுதந்திர மனிதன் ஆகிவிடுவேன். அந்தக் கதவு நிலையிலிருந்து ஒரு எட்டு வெளியே எட்டிப் போட்டதும் என் இருதயம் நிரம்பி இருந்தது. நிம்மதியா அல்லது கனமா? இரண்டும் அல்ல. அது ஓர் அபிமான இருதயத்தின் அடியிலிருந்து எழும் அனுதாபக் குரலின் தொனி போல எனக்குப் பட்டது. அந்தத் தொனியோடு கடைசிக் கதவும் திறந்து கொண்டது. எதையும் நான் சொல்லிவிடக்கூடும். அந்த க்ஷணத்து உணர்ச்சியை மட்டும் சொல்ல முடியாது. அது இருதயத்தின் தனிச் சொத்து. அதற்கு பாஷையே இல்லை. -சி.சு. செல்லப்பா *** மூன்றாம் முறை முகத்தில் அறைந்தால் புத்தருக்கும் கோபம் வரும். -யாரோ தப்பு இன்று வாகன காப்பீட்டுப் பிரீமியம் செலுத்துவதற்காகப் போனபோது அந்த அலுவலகத்தில் ஒரு மானேஜர் உட்பட 4 பெண் ஊழியர்கள். நிசப்தம் பூசிய குளிர்சாதன அறை. ஆளுக்கொரு கம்ப்யூட்டர். இன்னும் காலாவதியாகாத டாட் மேட்ரிக்ஸ் பிரிண்டர்கள். மூலையில் தேமே என்று ஒரு ஆண் ஊழியர். குப்பைத்தொட்டி. அதில் நிரம்பி வழிந்த காகிதக் குப்பைகள். இந்தக் கம்ப்யூட்டர் காலத்திலும் இத்தனை காகிதங்கள் உபயோகப்பட்டு விரயமாகின்றதே என்ற ஆச்சரியத்துடன் ஒரு மேசையை அணுகினேன். விவரங்கள் கேட்டுவிட்டு என்னை உட்காரச் சொல்லிவிட்டு மேற்படி கம்ப்யூட்டரில் என் காப்பீட்டுக் கணக்கு வழக்கை மேய ஆரம்பித்தார் ஒரு அம்மணி. அந்த அறைக்குள் ஒரு வாடிக்கையாளார் எதிரில் அமர்ந்திருக்கிறாரே என்கிற பாவனை எதுவுமற்று பிறகு சத்தமாய் உரையாடத் தொடங்கினார்கள். எல்லாமே ஆங்கிலத்தில்தான். நடுவாந்திர மேசையில் கண்ணாடியணிந்த நடுத்தர வயது குண்டு பெண்மணி, தான் நேற்று “balanced diet" ப்ரோக்ராம் ஒன்றில் பங்கு கொண்டதை சத்தமாக அறிவித்தார். “பட்.. யு நோ.. அயம் அல்ரெடி ஃபால்லோயிங் தட் யா” என்றார். “உண்மையாகவா? இன்னும் மார்னிங் ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு ஓட்ஸ்தான் எடுத்துக் கொள்கிறாயா?” கம்யூட்டரில் என் விவரங்களைத் தட்டியபடி இந்தப் பெண்மணி. “பின்னே? என்னைப் பற்றி என்னவென்று நினைத்தாய்?” என்று கண்ணாடிக்குள்ளிருந்து விழி உருட்டிப் பார்த்தார் கு.பெண்மணி. கம்ப்யூட்டர் பெண்மணி திரையிலிருந்து பார்வையை விலக்கி மூன்று பேரைத்தாண்டி “ஸார்.. தி த்ரீ மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப் படித்திருக்கிறீர்களா?” என்றார் மூலையைப் பார்த்து. “சேத்தன் பகத்-தானே. படித்திருக்கிறேன்” என்று குரல் வந்தது. “ஓ நீங்கள் அப்டுடேட் ஸார்”. இன்னும் சில பல அரட்டைகள். டாட் மேட்ரிக்ஸ் பிரிண்டரில், சர் சர் என்று காப்பீட்டுக் காகிதங்களை அச்சிட்டுக் கிழித்து, ரெவன்யூ ஸ்டாம்ப் ஒட்டி, ”Balanced diet" பெண்மணியிடம் கையெழுத்து வாங்கி, சீல் வைத்து என்னிடம் பணம் பெற்று ரசீது கொடுத்து... எல்லாம் ஒழுங்காகத்தான் நடந்தது. காகிதங்களை வாங்கி சரி பார்த்துவிட்டு சொன்னேன். “மேடம்... பேப்பர்ஸ்-ல வண்டி நம்பர் தப்பா என்ட்ரி பண்ணிருக்கீங்க..” கம்ப்யூட்டர் பெண்மணி லேசாய் அசடு வழிந்தது. விரயம்: மூன்று காகிதங்கள் + கார்பன் + டாட் மேட்ரிக்ஸ் ரிப்பன் + என்னுடைய மற்றும் அவரின் மேலும் பத்து நிமிடங்கள்.  தப்பான காகிதங்களை டர்ரென்று கிழித்து அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் போட்டார். இந்தக் கம்ப்யூட்டர் காலத்திலும் எப்படி இத்தனை காகிதங்கள் உபயோகப்பட்டு விரயமாகின்றது என்கிற என் ஆச்சரியத்துக்கு பதில் கிடைத்துவிட்டது. கம்யூட்டரைக் கண்டு பிடித்தது மிகப் பெரிய தப்பு என்று நினைக்கிறேன். பின்னே ஞானும் 'வாஸந்தியும் லக்ஷ்மியும் பின்னே ஞானும்' என்றொரு மலையாளப்படம் கொஞ்ச வருடத்துக்கு முன் வந்தது. ரொம்ப அருமையான தலைப்பு என்றெல்லாம் சொல்லமுடியாது. படம் வெற்றியடைந்து பிரபலமானதோ இல்லையோ இந்தத் தலைப்பு மெகா ஹிட் ஆகிவிட்டது. அதற்குப் பின் எழுத்தாளர்களுக்கு தன் படைப்புகளுக்குத் தலைப்பு வைப்பதில் உள்ள நீண்டகால சிக்கல் எளிதில் நீங்கிவிட்டது போலும். எப்படி? ரொம்ப சுலபம். படைப்போ உடைப்போ எழுதி முடித்தவுடன் அதற்கு ஒரு தலைப்பும் கிடைக்கவில்லையெனில் உடனே எழுதியவற்றில் உள்ள ஏதாவது இரண்டு விஷயங்கள் அல்லது வார்த்தை களை தேர்ந்தெடுத்து அத்தோடு 'பின்னே ஞானும்' என்று சேர்த்துக்கொண்டால் தீர்ந்தது பிரச்சனை. இன்ஸ்டண்ட் தலைப்பு. பொருத்தமாகவும் இருக்கும். இவ்வாறாக நான் ஒப்பேற்றிய ஒரு பதிவின் தலைப்பு 'பையனும் டார்வினும் பின்னே ஞானும்.' அதற்கப்புறம் இதே மாதிரியான நிறைய தலைப்புகள் அவ்வப்போது கண்ணில் பட்டுக்கொண்டிருந்தன. இன்றைக்கு நண்பர் ரவி ஆதித்யாவின் வலைப்பதிவை எதேச்சையாய் மேய்ந்துகொண்டிருந்தபோது இதே பாணியில் 'ஹரியுடன் நானும் பின்னே டிவி சமையலும்' என்று தலைப்பு வைத்திருந்ததைப் பார்த்தேன். திடீரென்று இப்போது உற்றுக் கவனித்ததில் அநேகம் பேர் இந்த 'பின்னே ஞானும்' டைட்டில் வைப்பதை தொடர்ந்து வழக்கத்தில் வைத்திருப்பதாகப்பட்டது. இப்போதைக்கு இது ஒரு ட்ரெண்ட்-ஆகவே மாறிவிட்டும் இருக்கிறது என்று நினைக்கிறேன். உலகின் மிக ஜாலியான தலைப்பு என்கிற அந்தஸ்தை இது பெற்றுவிட்டது போலும். தன் தலைப்பு இப்படி பிரபலமாகிவிட்டது ஒரிஜினல் 'பின்னே ஞானும்' இயக்குநருக்கே தெரியுமா என்று தெரியவில்லை. சற்று சுவாரஸ்யம் கொண்டு கூகிளில் கொஞ்சம் ஆராய்ந்ததில் மேலும் சுவாரஸ்யமான டைட்டில்கள் பல கிடைத்தன. கொஞ்சம் பெரிய லிஸ்ட் என்றாலும் சும்மா படித்து வையுங்களேன். டெல்லி கணேஷும் பின்னே ஞானும் தோப்பும் புங்கை மரமும் பின்னே ஞானும். சுஜாதாவும் ஜெயமோகனும் பின்னே ஞானும். Torrent-உம் Badminton உம் பின்னே ஞானும். நேசமித்ரனும் நண்பர்களும் பின்னே ஞானும். ஞானும் சயன்ஸூம் பின்னே கொறச்சு காமெடியும் . அண்ணாகண்ணனும் மீராஜாஸ்மினும் பின்னே ஞானும். பரிசலும் கோவியும் பின்னே ஞானும். போப்பும் ஷோவும் முனியும் பின்னே ஞானும். நானும் ஜாக்கி சேகரும் பின்னே அனானியின் வாந்தியும். வால்பையனும் வாசிப்பும் பின்னே ஞானும். ஞானும் பின்னே ஞானும் நடுவே ஞானமும். ஒரு செல்போனும் கிப்ட் கவரும் பின்னே ஞானும். Black Label ம் noodles ம் பின்னே ஞானும். ராஜாவும் சாருவும் பின்னே ஞானும். மஹாராஷ்டிராவும் பொங்கலும் பின்னே ஞானும். ஆனந்த விகடனும் அட்டைப்பட அழகியும் பின்னே ஞானும். ஈரோடும் லேடீஸ் ஹாஸ்டலும் பின்னே ஞானும். ஃப்ராய்டும் ஃபிரான்சிஸ் சேவியரும் பின்னே ஞானும்.  அத்னான் சாமியும் ஆசாத் அண்ணனும் அய்யனாரும் பின்னே ஞானும். பார்வதி ஓமனக்குட்டனும் பின்னே ஞானும். டேனியும் ஞானும் பின்னே என்டெ ஹஸ்பென்டும். பாட்டும் கதக்கும் குச்சுப்புடியும் பின்னே ஞானும்.  ஜகன் மோகினியும் அதிஷாவும் பின்னே ஞானும். சுந்தராம்பாளும் கருணாநிதியும் கமல்ஹாசனும் பின்னே ஞானும். சுனாமியும் பல்வலியும் பின்னே ஞானும்.  மலையாளபூமியில் நிங்களும் கள்ளும் பின்னே ஞானும். ஞானும் தற்கொலையும் பின்னே கொலையும். வண்டிக்காரத் தெரு மாரியம்மனும் ஆயில்யனும் பின்னே ஞானும். இந்தியா இவ்வளவுதானா? India என்று கூகிளில் தேடினால் என்னெல்லாம் வருகிறது என்று ஒரு பொழுதுபோகாத பொம்மு மாதிரி ஒரு சின்ன ஆராய்ச்சியில் இறங்கியபோது சில விஷயங்கள் புலப்பட்டன. கூகுள் தேடுதல் முடிவுகளின் முதல் பக்கத்தில் வந்தது என்னவென்றால் கொஞ்சம் இந்திய வரைபடங்கள். சில தாஜ்மஹால் படங்கள். வெவ்வேறு நிறங்களில் இந்திய தேசியக் கொடி. அப்புறம் இந்தியா கேட் அல்லது கேட்வே ஆஃப் இந்தியா. தொடர்ந்து அடுத்தடுத்த பக்கங்களில் மேற்சொன்னவற்றின் கலவையாக திரும்பத் திரும்ப அதேதான். சரி ஃப்ளிக்கரில் என்ன காட்டுகிறது என்று தேடிப்பார்த்தபோது, அது தேடிக்கொடுக்கும் ‘4,278,685 results’ களில் அதிகபட்சம் கண்ணில் படுவது யாதெனில்.. தலைப்பாகை அணிந்த ஆண்கள் மற்றும் காதில் மூக்கில் கழுத்தில் விதவிதமாக நகைகளும் தலையில் முக்காடும் அணிந்த பெண்கள். பிச்சைக்கார அல்லது ஏழ்மை நிலையிலுள்ள சிறுமிகள்-சிறுவர்கள். வெண்தாடி சாமியர்கள்-சாதுக்கள். இளைத்துக் கருத்த முதியவர்களின் சுருக்கம் விழுந்த க்ளோஷப் முகங்கள். மறுபடி தாஜ்மஹால். படகுகள். கலர்ப்பொடி. இந்தியா என்றால் இவை மட்டும் தானா என்று யோசனை வந்தது. வியக்கவைக்கிற அளவுக்கு வேறு பரிமாணங்கள் இந்தியாவுக்கு எத்தனையோ இருக்கிறதே!! ஏன் அவைகள் இந்தப் புகைப்படங்களில் சிக்கவில்லை என்கிற ஆச்சரியம் முளைத்தது. வேறு பரிமாணம் என்று நான் சொல்வது இந்தியாவின் நாகரீக வளர்ச்சி, நகரங்கள், நவீன தெருக்கள் மற்றும் கட்டிடங்கள், தொழிற்துறை முன்னேற்றங்கள், அழகு ததும்பும் இடங்கள், நவீன இந்தியாவின் மக்கள் இப்படியாக சில விஷயங்கள். கொஞ்சம் மெனக்கெட்டுத் தேடினால் இவ்வாறாக சில புகைப்படங்கள் கிடைக்கின்றனதான். நான் ஒரு வெளிநாட்டில் பிறந்து வளர்ந்து கூகிளிலோ ப்ளிக்கரிலோ காட்டும் புகைப்படங்களை பார்த்திருந்தால் இந்தியா ஒரு ஏழை நாடு. அதன் அனைவரும் ஒருவித புராதனமான உடை அணிபவர்கள். பிச்சைக்காரர்களும், போதை புகைக்கிற சாதுக்களும் நிறைந்து காணப்படுவர். எங்கு பார்த்தாலும் வறண்ட நிலங்கள், குப்பை மிகுந்த நகரங்கள். கல்வியறிவு இல்லாத மக்கள். பாம்பாட்டிகள். யானைகள். எப்போதோ மன்னர்கள் கட்டிய ஒரு சில மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், கோயில்கள், மண் ரோடுகள் எட்செட்ரா என்றெல்லாம்தான் இந்தியாவைப் பற்றி ஒரு பிம்பம் கொள்வேன். அதாவது நான் சொல்வது அவ்வாறான புகைப்படங்களைப் பார்க்கும்போது தோன்றும் ஒரு பொதுவான, மேலோட்டமான, உடனடிப் பார்வை. ஏற்கெனவே ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் முடிந்த அளவு கச்சடா நாடாகக் காட்டி ஆஸ்காரும் வாங்கி இந்தியா பற்றிய ஒரு மோசமான ஆவணமாகப் பதிந்தும் போய்விட்டிருக்கிற நிலையில் இப்படியாக ஏற்படுகிற பிம்பம் சரியானதல்ல. பரத் பாலா தயாரித்த ஏ.ஆர். ரஹ்மானின் வந்தே மாதரம் வீடியோவைப் பார்த்தபோது கூட மேற்கண்ட உணர்வுதான் தோன்றியது. பாலைவனம், இறுக்கமான முகங்களோடு ராஜஸ்தானிகள் என்று ஒரு வறண்ட நிலையை, ஏழ்மையைப் பறை சாற்றுவது போன்ற உணர்வை அந்த வீடியோ வெளிப்படுத்தியதாக ஒரு எண்ணம் தோன்றியது. இந்தியாவைப் பற்றி எதுவும் தெரியாத யாராவது இந்த வீடியோவைப் பார்த்தால் இவ்வளவுதானா இந்தியா என்கிற மாதிரியான பிம்பம்தான் தோன்றும். அது தவிர இந்தியா என்றாலே வட இந்தியா மட்டும்தான் என்கிற தோற்றத்தையே இதிலிருந்து இணையத்தில் புழங்குகிற புகைப்படங்கள் தருகின்றன. தென்னிந்தியப் புகைப்படங்கள் அதிகம் கண்ணில் தென்படுவது இல்லை. இந்தியாவிலிருக்கிற அமெச்சூர் மற்றும் தொழில்முறைப் புகைப்படக்காரர்கள், பத்திரிக்கைகளில் பணிபுரியும் புகைப்படக்காரர்கள் ஆகியோர்களின் கேமராக்கள் தென்னிந்தியாவின் பக்கமும் கொஞ்சம் ஃபோகஸ் செய்தால் நலம் பயக்கும். அல்லது வலையேற்றப் பட்ட புகைப்படங்களில் முக்கால்வாசி வெளிநாட்டவரால் கிளிக்கப்பட்டதாகக் கூட இருக்கலாம். அவர்கள் எப்போதும் போல இந்தியாவின் எழிலை விட்டுவிட்டு ஏழ்மையை வெளிச்சமிட்டுக் காட்டுவதில் ஆர்வம் காட்டுபவர்களாக இருந்திருக்கக்கூடும். உண்மையான நவீன இந்தியாவின் அழகை எடுத்துக்காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாய் இல்லையோ என்றுதான் தோன்றுகிறது. அப்படியே இருந்தாலும் கூட அவைகள் சரியான வகையில் இந்தியா பற்றிய இணைய பக்கங்களில் உபயோகப்படுத்தப்படவில்லை. அல்லது நல்ல புகைப்படங்களை இணைய பக்கங்களில் இணைக்கும்போது அவைகளின் குறிச்சொற்கள் மற்றும் கோப்புகளின் பெயர்கள் ஏனோதானோ என்று இருப்பதால் தேடியந்திரங்கள் சரியாகக் காட்டுவதில்லை என்று கூடச் சொல்லலாம். தேடியந்திரங்களில் குறிப்பிட்ட குறிச்சொற்கள் உபயோகித்துத் தேடும்போது மட்டுமே ஒரு சிலது கிடைக்கின்றன. அப்படியே கிடைத்தாலும் இந்தியாவின் பொதுவான லைஃப் ஸ்டைலை அவைகள் காட்டவில்லை என்பதுதான் குறை. கூகுளில் நம் பெயர் உள்ளிட்டுத் தேடும்போது எப்படி நம் சம்பந்தப்பட்ட வலைப்பக்கங்களை அழகாய்க் கச்சிதமாய் கொண்டுவந்து கொடுக்கிறதோ அது போலவே இந்தியா பற்றிய தலைசிறந்த புகைப்படங்களை இணையத் தேடலின் போது முன்னிறுத்த டெக்னாலஜியை உபயோகித்தால் இப்புகைப்படங்கள் சரியான முறையில் பார்வையாளர்களைச் நிச்சயம் சென்றடையும் என்பது நிச்சயம். அதிகபட்சம் கிராமங்களால் நிறைந்திருக்கும் இந்தியாவில் புகைப்படங்களில் வேறு எதைத்தான் காட்டமுடியும் என்று கேள்வி எழலாம். எத்தனையோ இருக்கிறது. இந்தியா வண்ணமயமானது. இது ஒரு அற்புதமான பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் உள்ளடக்கியது. இந்தியா ஒரு வளரும் வல்லரசு நாடு. இந்தியாவில் வெளிநாடுகளைச் சார்ந்த சுற்றுலாவாசிகளைக் கவர என்னென்னவோ இருக்கின்றன. மலைவாசத்தலங்கள், இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள். பிரம்மாண்டமான கோவில்கள், புராதனச் சின்னங்கள், பாரம்பரியம், நடனங்கள், நீர் நிலைகள், யோகா, தியானம், இயற்கை வைத்திய முறைகள், பசுமை, மக்கள், கல்வி, கலாச்சாரம், உணவு வகைகள் என இந்தியாவின் எத்தனையோ முகங்கள் புகைப்படக்காரர்களுக்கு வரப்பிரசாதமாய் அதிரும் வண்ணங்களில் அம்சமாய்க் காட்சிப்படுத்தக் கிடைக்கின்றன. ஆனால், புகைப்படக்கலைக்குத் தீனி போடும் மிகத் தொன்மையான இந்திய தேசப் பாரம்பரியச் சின்னங்களை அரசு சிறந்த முறையில் பராமரிப்பதில்லை என்பது வருத்தத்திற்குரியது. ஒரு சில உதாரணங்களாக மஹாபலிபுரத்தில் பல்லவர்களின் ஒரு சிற்ப மண்டபம் அற்ப சங்க்யைக்கு ஒதுங்குவதற்காகப் பயன்படுவதும், சென்னை அருங்காட்சியகத்தில் சோழற்கால கல்வெட்டுக்களின் மேலேயே காதலர்கள் இதயம் வரைந்து அம்பு விட்டு siva loves priya போன்ற காவியங்களை மானாவாரியாகப் பொறித்து வைத்திருந்ததையும் சொல்லலாம். இந்த இடத்தில் சதா நாற்காலிக்குப் போட்டியிடும் அரசாங்கத்தைச் சாடுவதா அல்லது அலட்சியப் போக்குள்ள மக்களை குறை சொல்வதா என்றே தெரியவில்லை. ஆனால் இரண்டுமே ஒன்றுக்கொன்று சம்பந்தமுள்ளதுதான் என்பதை மறுக்க முடியாது. இணையம் என்பது பரந்துவிரிந்து ஒரு மிக முக்கியமான ஊடகமாக வளர்ந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில் இந்தியாவை அதன் நவீன விஷயங்களை ஒரு உன்னத அழகியலோடு புகைப்படங்களில் காண ஆசையாயிருக்கிறது. அதை நிறைவேற்றும் பொறுப்பை சுற்றுலாத்துறையும் காமிராக்காரர்களும் கையில் எடுத்துக்கொள்ளவேண்டும். அதற்கு கிழவர்களின் முகச்சுருக்கங்கள், தலைப்பாகை, மூக்கொழுகும் சிறுவர்கள் தாண்டி யோசிக்கவேண்டும் என்று தோன்றுகிறது. திருட்டு மாங்காய்த் தோப்பு நான் வசிக்கிற அபார்ட்மெண்ட்டை ஒட்டி சின்னதாய் ஒரு தோப்பு உள்ளது. ரியல் எஸ்டேட்காரர்களின் கண்களில் இன்னும் தென்படாத அல்லது தென்பட்ட பின்னரும் விற்பனை மறுக்கப்பட்டு நகரமயமாக்கலின் கரங்களில் தப்பிப் பிழைத்திருக்கும் தோப்பு. தென்னை, மா, வேம்பு, வில்வம் என பலவகையான மரங்கள் நிரம்பியது. தண்ணென்று நிழல். குளுகுளு காற்றில் சரசரவென தென்னை ஓலைகள் உரசும் ஒலி. பெயர் தெரியாத பறவைகள் கீச்சிக்கொண்டிருக்கும். நகர வாகன இரைச்சல்களிலிருந்து ஒதுங்கி, ஒரு சொல்லவொண்ணாத அமைதியுடன் இருக்கும். சில நேரங்களில் மரங்களுக்கு நடுவே தோப்புச் சொந்தக்காரர்களின் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அல்லது மரங்களினிடையே கட்டிய கயிற்றில் யாராவது துணி உலர்த்திக்கொண்டிருப்பார்கள். அல்லது ஆயுள் முடிந்து வீழ்ந்துகிடக்கும் ஒரு தென்னை மரத்தின் மேல் உட்கார்ந்து ஒரு பாட்டி வேலை எதுவுமின்றி சாவகாசமாகக் காற்று வாங்கிக்கொண்டிருக்கும். மாமரங்களில் நிறைய (திருட்டு) மாங்காய்கள் தொங்கும். மிகப்பெரிய விவசாய விளைநிலங்களாக இருந்த இடங்கள் ஆக்கிரமிக்கப் பட்டு வீட்டுமனைகளாக மாறிய இடம் இது. சுற்றிலும் உள்ள ஏரிகள் கரை சுருங்கி சுருங்கி சின்ன தண்ணீர் தேக்கங்களாய் மாறிக்கொண்டிருக்கின்றன.  அவற்றிலும் கழிவுநீர் கலக்க ஆரம்பித்துவிட்டதால் ஏரிகளில் உலாவரும் வெண் நாரைகளும் பெலிக்கான்களும் வேறு இடம் தேடிப் பறக்க ஆரம்பித்துவிட்டன. இன்னும் கொஞ்சநாட்களில் கூகிள் மேப்பில் இந்த ஏரிகளும் மறைந்து ஏரியல் வ்யூ-வில் கட்டிடங்கள் மட்டுமே தெரியும். பக்கத்து மினி தோப்புக்கு நிறைய பறவைகள் வருகின்றன. கிளிகள், மைனாக்கள், புறாக்கள். தோப்பில் நிரந்தர குடியிரிமை பெற்ற பறவைகள் காலை ஐந்து மணியளவில் மெதுவாய் தங்களது கதா காலட்சேபத்தைத் துவங்கிவிடுகின்றன. மனதைவருடும் இசைக் கச்சேரி அது. மொபைலில் அலாரம் வைக்கத் தேவையேயில்லாமல் ஜன்னலில் வந்தமர்ந்து தினமும் சப்தமாய் கீச்சிடுகிறது ஏதோ ஒரு பறவை. கொஞ்சம் குண்டாக ப்ரவுன் கலந்த கருப்பில் கண்களைச் சுற்றிலும் சின்ன மஞ்சள் வட்டத்துடன் அழகாய் இருக்கிறது. ஜன்னலோரம் பதுங்கி நின்று பார்த்தாலும் ஒரு சின்ன உள்ளுணர்வில் வேகமாய் இடம்பெயர்ந்து விடுகின்றது. சாயங்காலங்களில் பால்கனியிலிருந்து பார்த்தால் ஒரு புறாக்கூட்டம் வீட்டைச் சுற்றிச் சுற்றிப் பறந்து வரும். அவைகளின் சுற்றுப்பாதையில் ஒரு பெரிய செல்ஃபோன் டவர் உள்ளது. அதை லாவகமாக ஒரு U-turn அடித்துவிட்டு மீண்டும் எங்கள் அபார்ட்மெண்டுக்கு மேல் பறக்கும். சொல்லிவைத்தாற்போல் எல்லாப் புறாவும் படபடவென இறக்கைகளை அடித்து வேகமாய்ப் பறப்பதும் பிறகு எல்லாமே ஒரே நேரத்தில் சிறகடிப்பை நிறுத்திவிட்டு ஜிவ்வெனப் மிதந்து பறப்பதுமாக ஒரு அரைமணிநேரம் உற்சாக விளையாட்டு. அவைகளுக்குள்ளாக ஏதோ ஒரு பாஷையில் இந்த டேக் ஆஃப், லாண்டிங், ஃப்ளைட் ரூட் தகவல்களை பரிமாறியபடி பறக்கின்றன. அசாத்தியமான புரிந்துணர்வு. தினசரி அதே சுற்றுப் பாதை. அதே நேரம். அதேபோல் விளையாட்டு. ஆச்சரியம்!! ’புறாக்கள் பறந்துகொண்டிருக்கும்” என்ற ஆதவனின் சற்றே பெரிய சிறுகதையொன்றின் தலைப்பு ஞாபகம் வருகிறது. நகரத்தின் மத்தியில் பரபரப்புக்கு மத்தியில் அதிக காற்றும் வெளிச்சமும் இல்லாத ஒரு இடத்தில் ஏழெட்டு வருடங்கள் வசித்துவிட்டு வந்தவனுக்கு சென்னைப் புறநகர்ப் பகுதியில் இந்த சூழ்நிலை மிகப் பெரிய ஆசுவாசத்தைத் தந்திருக்கிறது. பசுமை என்பதை ப்ளாஸ்டிக் செடிகளில் மட்டுமே காணக் கிடைக்கிற நகரவாழ்க்கையில் இது ஒரு தற்காலிக அதிர்ஷ்டம். பக்கத்துத் தோப்பின் மாமரங்களுக்கு அடியில் கயிற்றுக் கட்டில் போட்டு கொஞ்சநேரம் உலகம் மறந்து உறங்கவேண்டுமென்று தோன்றுகிறது. சுற்றிலும் காம்பவுண்டும் அத்துமீறி நுழைபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்கிற எழுதப்படாத மானசீக அறிவிப்புப்பலகையும் தடுக்கின்றன. விஸ்கி என் நண்பர் ஒருவர் அடையாறில் ஒரு வீட்டுக்கு புதிதாய்க் குடி போயிருந்தார். இன்று அவர் அழைப்பின் பேரில் அவர் வீட்டைத் தேடிப் போனேன். அவர் சொன்ன வழியும் அடையாளங்களும் மண்டைக்குள் இருந்தது. மெயின் ரோட்டிலிருந்து சட்டென்று பார்த்தால் தெரியாத கிளை மெயின் ரோட்டில் உள்ளே வரவேண்டும். ரோடு முக்கில் ஒரு காலணியகம் இருக்கும். அதை ஒட்டின ரோடு. அதற்குள் நேராக உள்ளே வந்தால் இரண்டாவது லெஃப்ட். அங்கேயிருக்கிற ஒரு ஸ்கூலுக்கு எதிர் வீடு. ரொம்ப சுலபமாய் கண்டுபிடித்திருக்க வேண்டியது. ஆனால் இரண்டாவது லெஃப்டில் திரும்பி, பிறகு தேடியதில் அப்படி ஒரு ஸ்கூல் இருக்கிற சுவடே இல்லை. ஆகவே அந்தத் தெருவில் ஒரு கடையருகே பராக்குப் பார்த்தபடி நின்றிருந்த ஒருவரிடம் வண்டியை நிறுத்தி அங்கே ஒரு ஸ்கூல் இருக்கிறதா என்று விசாரித்தேன். ஏண்டா கேட்டோமென்று ஆகிவிட்டது. அவர் விஸ்கி போன்ற ஏதோ வாசத்துடன் லேசாய்த் தள்ளாடியபடி.. ”எந்த ஸ்கூலு?” பள்ளியின் பெயரைச் சொன்னேன். “அந்தப் பேர்ல ஒரு ஹோம் அப்றோம் ஒரு ஸ்கூல் ரெண்டுமே கீது.. நீ எங்கப் போணும்” ”ஸ்கூல்” ”ஸ்கூல் இங்க கடியாது. அது வேற எடத்துல கீதுபா. ஹோம்-ன்றது வேற. ஸ்கூல்ன்றது வேற. ஸ்கூல்-ல இன்னா வேல ஒனிக்கு? “ஸ்கூல்-ல எதும் வேலையில்ல. எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் புதுசா குடிவந்திருக்கார்.. அவர் வீட்ட தேடிட்டிருக்கேன்” “தின்னவேலிலேந்து வந்துக்கிறாரே அவுரா.. வாத்தியாரா?” “இல்ல. இந்த ஸ்ட்ரீட்-ல ஸ்கூல் இருக்கா இல்லியா?” “ஸ்கூலா? ஹோமா.. கரீட்டா சொல்லு.. அட்ரஸ் எதுனா வெச்சுனுருக்கியா?” “அட்ரஸ்லாம் இல்ல.. செகண்ட் லெஃப்ட்-ல ஸ்கூல்-க்கு எதுத்தா மாதிரின்னார்..” “த்தோடா... அட்ரஸ் இல்லேன்ற! எப்டி கண்டுபுடிப்ப? ஒனிக்கு எங்காப் போணும் சொல்லு.. அவரு முதலியாரா.. நாலு மாசத்துக்கு முன்னாடி வந்தாரு?” “இல்ல. இன்னிக்கு மத்தியானம்தான் வந்தார்.. செகண்ட் லெஃப்ட் இதான?..” “இத்தான்.. இன்னாபா ப்ரெண்ட்டூன்ற..ஃபோன் வெச்சிகிறாரா? வண்டிய ஆஃப் பண்ணுபா.. அவர் கைல போனப் போடு.. ந்தா.. ஓரமா நில்லு.. ஆட்டோ வர்து பாரு. இட்ச்சுறப்போவுது..” “அப்ப அந்த ஸ்கூல் இங்க இல்லயா..” “ஸ்கூல் மெயின் ரோட்டாண்ட கீது.. நீ அவரு கைல போன போட்டு அட்ரஸ் கேளுபா.. நான் சும்மாங்காட்டி சொன்னா அப்பால நீ இன்னிக்கு பூரா அலஞ்சுன்னேருப்ப. வோணுமா?!” இந்த ஆளிடம் கேட்டுக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என்றுணர்ந்து நான் வண்டியை ஆஃப் பண்ணிவிட்டு போனை எடுத்து நம்பரை அழுத்தி நண்பரை விளித்தேன்.. “த பாரு.. நான் தான் இந்த ஏரியா டி.வி கேபிள் கனெக்‌ஷனு ... எங்க குடிவந்துக்குறாருன்னு கரீட்டா சொல்லு. வோணும்னா நான் வந்து வூட்ட காட்டுறேன். டி.வி வெச்சுக்கிறாரா?” “வீடு தெரியாமதான உங்ககிட்ட கேட்டுக்கிட்டிருக்கேன்..” “போன என்னாண்ட குடு... நான் தெளீவா கேட்டு சொல்றேன்.. நீ பாட்டுக்கு எதுனா கேட்டுகினுருக்காத.. அப்றம் இன்னோரு தபா நீ வேற எங்கணா பூடுவ” நண்பரிடம் போனில் பேசவிடாமல் சைடில் கூடவே விஸ்கி பேசிக்கொண்டிருந்தார். ‘அட குடுன்றன்ல.. இன்னா.. சொல்றது புர்ல?” கொஞ்சம் விட்டால் என் கையை முறுக்கி என் பிடரியில் ஒன்று போட்டுவிடுவாரோ என்று பயம் வந்தது. நான் அங்கிருந்து உடனே அகலுவதுதான் நல்லது என்கிற முடிவில் அவசரமாக நண்பரிடம் நான் இருக்குமிடத்தைச் சொல்லி எப்படி வரவேண்டுமென்று கேட்டேன். நண்பர் “ஸாரிங்க.. நீங்க வந்தது சரிதான். ஆனா செகண்ட் லெஃப்ட்- இல்ல லாஸ்ட் லெஃப்ட்.. அப்டியே திரும்பி மெயின் ரோட்லயே வாங்க.. கண்டு புடிச்சிரலாம்.” என்றார். “இன்னாபா.. இன்னான்றாரு ப்ரண்டு... ஒனிக்கு ஸ்கூலுக்கு போணுமா.. ஹோமுக்கு போணுமா..” ’ஸ்கூலுக்கு பக்கத்துல இருக்கற ப்ரெண்டோட ஹோமுக்கு’ என்று மனதில் நினைத்துக் கொண்டு “இல்லீங்க. அவர் கரெக்டா வழி சொல்லிட்டாரு.. நான் கண்டுபுடிச்சு போய்க்கிறேன்..” வண்டியைக் கிளப்பினேன். “இன்னாத்த கண்டுபுட்ச்ச.. ஒரு அட்ரஸ் சரியா வச்சுகினு வரமாட்ட? ந்தா.. நில்லுன்றன்ல?’ “ரொம்ப தேங்க்ஸ்-ங்க நான் போய்க்கிறேன்..” நான் சட்டென்று தெருவில் U போட்டுக் கிளப்பினேன். “இன்னாத்துக்கு தேங்க்ஸூ.. த.. பார்ரா தொர போய்க்கினேக்றாரு... நேரப் போயி லெஃப்ட்-ல.. அட.. நில்லுன்றேன்.. அந்த ஸ்கூலு.. த்*** டேய்ய்... அங்க போய் அலஞ்சுகினுருக்காத.. வண்ட்டான் பாரு... பேமானி.. அட்ரஸ் கேட்டுக்கினு... விஸ்கியின் குரல் தேய்ந்து மறைய நான் விரைந்து லாஸ்ட் லெஃப்ட்-டில் இருந்த ஸ்கூலுக்கு எதிர்புறம் இருந்த நண்பரின் வீட்டை சரியாக சென்றடைந்துவிட்டேன். அங்கே விஸ்கி சொன்ன ஸ்கூலும் ஹோமும் அடுத்தடுத்து இருந்தது. நண்பர் வீட்டில் அரைமணி நேரம் உட்கார்ந்து பேசிவிட்டு வந்த வழியிலேயே திரும்பும்போது, ரோட்டோரமாய் ஒரு ஆட்டோ நின்றிருக்க அதன் ட்ரைவர் ஆட்டோவுக்குள் உட்கார்ந்திருந்தவரிடம் சத்தமாய்க் பேசிக் கொண்டிருந்தார். “யோவ்..  சாவு கிராக்கி.. ஒனக்கு எங்கதான்யா போணும்? ஒழுங்கா சொல்லித் தொலை.. கய்தே.. அட்ரஸூ கேட்டா  தெரியாதுன்ற.. என்னோட ஆட்டோல ஏறி ஏய்யா உசுர வாங்கற? பேமானி...” திரும்பிப் பார்த்த போது ஆட்டோவினுள் மேலதிக போதையில் விஸ்கி சரிவாய்ப் படுத்திருந்தார். என் கண்ணில் உன்னைக் கண்டேன் தலைப்பைப் பார்த்தால் ஏதோ பருவ விடலை எழுதிய காதல் கவிதையின் தலைப்பு மாதிரிதான் இருக்கும். ஆனால் தலைப்புக்கான விஷயம் கொஞ்சம் பேஜாரானது. உங்களிடம் ஒரு பைக் இருக்கிறது. அதை தினமும் அலுவலகம் போகும் பொருட்டு குறைந்தது ஒரு பத்து கிலோமீட்டராவது ஓட்டவேண்டியிருக்கிறது. எதிர்பாராத குழிகள், பள்ளங்கள், சாலையெங்கும் பறக்கிற புழுதி, சடாரென முன்னறிவிப்பின்றி உங்கள் வழியில் குறுக்கிடுகிற வாகனங்கள். எல்லாவற்றிலும் புரண்டெழுந்து அரசாங்க இயந்திரம் சரியாக செயல்படவில்லையே என்ற மன உளைச்சல்களோடு, இடுப்பொடிய மேற்கொள்கிற பயணத்தில் சடாரென்று உங்கள் கண்ணுக்குள் என்னவோ விழுந்து விடுகிறது. ஏதாவது சின்ன புழுதித் துகள் விழுந்திருக்கும், வீட்டுக்குப் போய் முகம் கழுவினால் வெளியே போய்விடும் என்று நினைத்து இன்னும் வேகமாய் ஆக்ஸிலேட்டரை முறுக்குகிறீர்கள். கண்ணில் உறுத்தல் தொடர்கிறது. இப்படித்தான் இன்று நிகழ்ந்தது. வீட்டுக்கு வந்து பல தடவை முகம் கழுவியும் உறுத்தல் தொடர, உருவங்களை ஓரிரு மடங்கு பெரிதாக்கிக் காட்டுகிற முகம் பார்க்கும் கண்ணாடி, சோனி எரிக்ஸ்ஸன் கே எழுநூற்று ஐம்பது என்கிற செல்பேசியில் அடங்கியிருக்கிற குட்டி லைட் சகிதமாய் இடது கண்ணை ஆராய்ந்தபோது கருவிழியின் நடுவே ஏதோ ஒட்டிக்கொண்டிருப்பதைக் கண்டேன். ஒட்டியிருக்கிறதா, குத்தியிருக்கிறதா? கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும். ஒவ்வொரு முறை இமைக்கும்போதும் உறுத்தலாக இருந்தது. இதற்கு முன் இதே மாதிரி ஏற்பட்ட ஓரிரு அனுபவங்கள் ஞாபகம் வர உடனே கண் மருத்துவமனையொன்றைச் சரணடைவது உசிதம் என்று தோன்றியது. இரவு மணி ஒன்பது. உடனே கிளம்பினேன். ஒரு ஃப்ளாஷ்பேக்: ------------------------------------- நான்: டாக்டர், இடது கண்ணுல என்னவோ உறுத்துது. ப்ளிங்ங் பண்ணும்போது வலிக்குது. டாக்டர் கண்ணில் ஒரு பூதக் கண்ணாடியை மாட்டிக்கொண்டு கண்ணுக்குள் டார்ச் அடித்துப்பார்த்து. “ஆமா. ஃபாரின் பாடி இருக்கு. எடுத்துரலாம்.” ஒரு குப்பியை எடுத்து என் இடது கண்ணில் இரண்டு துளிகள் கவிழ்க்கிறார். “அனஸ்தீஸியா ட்ராப்ஸ்.. வலிக்காது. அங்க உக்காருங்க..” ஒரு மைக்ரோஸ்கோபிக் சாதனத்தின் முன் அமரவைத்து என் மோவாக்கட்டையை அதில் நிலை நிறுத்துகிறார். கண்ணுக்குள் அதிபிரகாசமான ஒரு லைட்டைப் பாய்ச்சிவிட்டு ஒரு ஊசியை எடுக்கிறார். நான் மிரள்கிறேன். “இமைக்காம நேரா என்னையே பாருங்க..” மெல்ல கண்ணுக்கு அருகில் கொண்டுவந்து, கண்ணில் மாட்டியிருக்கும் துகளை நிரடுகிறார். ஊசி நிரடுகிற உணர்வு தெரிந்து செய்தியாய் மூளைக்கு அனுப்பப்பட நான் விருட்டென்று பின் வாங்குகிறேன். டாக்டர் துணுக்குற்று “ஊசி ஃபீலிங் தெரியுதா?” “ஆமா” ”அனஸ்தீஸியா போட்டுமா?” ஆச்சரியத்துடன் மறுபடி அந்த குப்பியை எடுத்து இன்னும் கொஞ்சம் கண்ணுக்குள் கவிழ்க்கிறார். மீண்டும் நிரடல். இந்த முறை குத்துகிற இடத்தில் எந்த உணர்வும் இல்லை. ஊசியால் நோண்டி எடுத்த சின்ன கருப்புத் துகளை எனக்கு காண்பிக்கிறார். “மெட்டல் பீஸ்தான். எடுத்துட்டேன். மறுபடி பிரச்சனைன்னா வாங்க. இப்போ போய் டி.வி, கம்ப்யூட்டர் எல்லாம் பாக்காம ரெஸ்ட் எடுங்க” கண்ணில் பஞ்சு வைத்து பெரிதாக கட்டுப்போட்டு அனுப்புகிறார். ஒற்றைக் கண்ணால் பைக் ஓட்டியபடி வீடு வந்து சேர்கிறேன். *** இன்று நிகழ்காலத்தில் பேஷண்டுகள் காத்திருக்க, இரவு டின்னரை முடித்துவிட்டு சாவகாசமாக வந்த லேடி கண் டாக்டரிடம் “மேடம், கண்ல என்னவோ குத்தியிருக்கு. ரெட்டினா-க்கு நடுவுல..டார்ச் அடிச்சுப் பாத்தேன்.. எனக்கே தெரிஞ்சுது.” “ஓ.. நீங்களே பாத்துட்டீங்களா? நல்லது..” டார்ச் அடித்துப் பார்த்து.. “ஆமா.. இருக்கு.. ஒயிட் பார்ட்டிக்கிள்.. ஆனா அது குத்தியிருக்கறது ரெட்டினா இல்ல. கார்னியா..” என்று சிரிக்கிறார். பழைய ப்ளாஷ்பேக்கில் கண்ட அதே மாதிரி ட்ராப்ஸ். அதே மைக்ரோஸ்கோப், ஊசி. ஓரிரு விநாடிகளில் வேலை முடிந்தது. குத்திய இடம் செப்டிக் ஆகாமல் இருக்க ஒரு சில கண் மருந்துகளைப் பரிந்துரைத்து ஃபீஸ் வாங்கிக் கொண்டார். ஆனால் நல்லவேளை இந்த முறை கண்ணை மறைக்கும் பெரிய கட்டு இல்லை. வீட்டுக்கு வந்து சோனி எரிக்ஸனின் டார்ச் அடித்துப் பார்த்தேன். போயே போச்சு, போயல்லோ, போயிந்தே, இட்ஸ் கான்ன்ன்ன்ன்ன். இதனால் அறியப்படும் நீதி? நீதியெல்லாம் பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. அரசாங்க ரோடுகள் அப்படி இப்படித்தான் இருக்கும். நீங்கள்தான் உங்கள் கண்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளவேண்டும்.  ஜீவகாருண்யம் எங்கள் தெருவில் நிறைய நாய்கள் இருக்கின்றன. தெருவில் என்று சொன்னதாலேயே அவைகள் தெருநாய்கள்தான் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு பதினைந்து இருபது இருக்கலாம். ஒரே பிரசவத்தில் 15 குட்டிகளை ஈன்றுதல் போன்ற நிகழ்வுகளால் அவைகளின் வம்சம் அனுதினம் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. கடிப்பது, ஆளைப்பார்த்தால் உறுமுவது போன்ற உபத்திரவங்கள் தராத சாது நாய்கள்தான். இரவில் ஊர் அடங்கியபின் அவைகளின் இன்னிசைக் கச்சேரி ஆரம்பமாகிவிடும். அவைகளுக்கிருக்கிற டெர்ரிடரி மற்றும் இன்னபிற பிரச்சனைகள் காரணமாக கர்ணகடூரமான குறைப்புகள், ஊளையிடுதல் என்று விதம் விதமாக சப்தங்கள் கோரஸாகத் தொடரும். இந்த வீட்டுக்குக் குடிவந்த துவக்கத்தில் இது மிக மிக எரிச்சலைத் தருவதாக இருந்தது. பல தினங்களில் இரவு சரியாக 11.45க்கு நாய்களின் ஊளைச் சத்தம் ஆரம்பிக்கும். இந்த அமானுஷ்யமும் புரிபடாமலேயே இருக்கிறது. ஒரு நாள் இரவு வெகுநேரம் மொட்டைமாடிக்கு மேல் இருக்கும் தண்ணீர்த் தொட்டியின் மேலமர்ந்து நானும் என் மச்சினரும் பேசிக்கொண்டிருக்கும்போது இதேபோல் நாய்கள் ஊளையிட ஆரம்பித்தன. உடனே நான். ’சரி வாங்க கீழே போவோம். மணி பதினொன்னே முக்கால் ஆயிருச்சு’ என்று சொல்ல அவர் உடனே மொபைலில் மணி பார்த்து, ‘எப்படி இவ்வளவு சரியா சொல்ற?’ என்று கேட்டார். நாய் ஊளைச் சத்தத்தை வைத்துச் சொன்னேன். டெய்லி இதே நேரத்துக்கு சரியா ஆரம்பிக்கும்’ என்று சொன்னதும் பயந்துபோய் ’வா.. போகலாம்.’ என்று வேகமாக படியிறங்க ஆரம்பித்தார். விஷயம் இதுவல்ல. எதிர் அபார்ட்மெண்டில் ஒருவர் இருக்கிறார். ரிடையர்டு ஆசாமி. அவரிடம் ஒரு பேஷ்ஹௌண்ட் வகை நாய் இருக்கிறது. அதை மேய்ப்பதற்காக தினமும் ரோட்டுக்கு வரும்போது கூடவே தெருநாய்களும் அவருடன் ஊர்வலமாகப் போகும். அவரது மனைவி, வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கும் கடைக்குச் சென்று (தெரு நாய்களும் கூடவே போகும்) ரொட்டி வாங்கி அதைத் துண்டுகளாக்கி நாய்களுக்குப் போடுவார். அவரது மகள் காலேஜூக்கோ, வேலைக்கோ போய்விட்டு ஸ்கூட்டியில் திரும்பியவுடன் நேராகக் கடைக்குச் சென்று பிஸ்கட் பாக்கெட் வாங்கி அந்த நாய்களுக்கு விநியோகம் செய்துவிட்டு பிறகுதான் வீட்டுக்கே செல்வார். காலேஜ் படிப்பது போலிருக்கிற அவரது மகன் அவ்வப்போது ஒரு ஸ்ப்ரேயர் போன்ற டப்பாவுடன் வீட்டிலிருந்து வெளிப்பட்டு ஏதாவது ஒரு தெரு நாயைப் பிடித்து வைத்துக்கொண்டு, ரோட்டிலேயே குத்தவைத்து உட்கார்ந்து அதைத் தடவிக்கொடுத்து அதற்கு ஏதோ ஸ்ப்ரே எல்லாம் அடித்து, புண்களுக்கு மருந்து போட்டு, பஞ்சால் ஒற்றி வைத்தியம் செய்வதைப் பார்த்திருக்கிறேன். பராமரிப்பு முடியும்வரை நாய்களும் சொகுசாக இணங்கி நிற்கும். அவர்களுடைய காம்பவுண்ட்டுக்கு வெளியே இரண்டு சின்னத் தொட்டிகளில் தெரு நாய்கள் குடிப்பதற்கு தண்ணீர் இருக்கும். அதில் Blue Cross என்று பெயிண்டில் எழுதப்பட்டிருக்கிறது. இந்தத் தெருநாய்கள் கூட்டாகத் தூங்குவது அதிகபட்சம் அவர்களுடைய அபார்ட்மெண்ட் வாசலில்தான். இவையெல்லாம் தினசரி என் வீட்டு ஜன்னல்வழிக் காட்சிகள். ’உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்’ என்பதற்கு உதாரணமாக, ஒரு குடும்பமே இந்த தெருநாய்கள் விஷயத்தில் மிக ஈடுபாட்டுடன் இருப்பதும், அன்பு செலுத்துவதும், அவைகளுக்கு உணவளித்து, உடல்நலம் பேணுவதும் மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது. அது அவர்களுடைய தினசரி கடமைகளில் ஒன்றாகவே மாறிவிட்டதைப் பார்க்கிறேன். இப்போதெல்லாம் இரவில் தெருநாய்கள் குறைத்தாலோ ஊளையிட்டாலோ நான் எரிச்சலடைவதில்லை. ஏதோ என்னால் முடிந்தது. சாகசம் சென்னையின் பெருகிவரும் ட்ராஃபிக்-குள் புகுந்து ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு பயணம் பண்ணுவதை நிச்சயம் அறுபத்தைந்தாவது ஆயகலை எனலாம். வீட்டிலிருந்து கிளம்பினால் அலுவலகமோ அல்லது வேறு எங்காவதோ போய்ச் சேருவதற்குள் எதிர்கொள்ள நேருகிற இடர்ப்பாடுகள் ஒவ்வொரு சென்னை வாசியையும் வாழ்க்கையின் சாகசக்காரர்களாக மாற்றிவிடுகின்றன. நெருக்கடி நிறைந்த ரோடுகளில் கூட 'ரோடு காலியாக இருக்கிறது' என்பது போன்ற மனோபாவத்தை வரவழைத்துக்கொண்டு பைக்குகளும் கார்களும் போட்டியிட்டபடி அசுர வேகத்தில் விரைவதைப் பார்த்தால் எல்லோருமே ஒரு விதத்தில் 'வீட்டில் சொல்லி விட்டு' வந்தவர்கள் போலவே காணப்படுகிறார்கள். அதுவும் காலையில் பள்ளிகூடங்களுக்குக் குழந்தைகளை  சுமந்து செல்லும் எந்த வாகனத்தைப் பார்த்தாலும் அடிவயிற்றில் பந்து சுருள்கிறது. எல்லோருக்கும் எப்போதும் அவசரம். எல்லோருமே வேலைக்கோ ஸ்கூலுக்கோ லேட் ஆகாமல் போயே ஆகவேண்டும். அதற்கு ஒரே வழி நெருக்கும் ட்ராஃபிக்கில் கிடைக்கிற இடைவெளிகளில் அடுத்தவனை பொருட்படுத்தாமல் நுழைந்து வெளியேறுவதுதான். ஏதோ யோசனையில் இரு புறமும் பாராமல் கண்ட இடங்களில் சாலையைக் கடப்பவர்களின் அருகில் வாகனங்கள் டயர் தேய பிரேக் போடும் சப்தம் திடுக்கிட வைக்கிறது. ரோடே தனதுதான் என்பது போல் ஆட்டோக்கள் முன்னறிவிப்பின்றி அரைவட்டம் போட்டுத்திரும்பி பின்னால் வரும் வாகனங்களை அதிர வைக்கின்றன. சைக்கிள் Gap-ல் லாரி ஓட்டுதல் என்றால் என்ன என்று சென்னையில் நிச்சயம் தெரிந்து கொள்ளலாம். சிவப்பு சிக்னலை அடிக்கடி ஊதாசீனம் செய்யும் மாநகரப் பேருந்து குறுகலான சாலைகளில் கூட வேகம் குறையாமல் ச்ச்ச்ஸ்ஸ்ஸ் என்று காதருகே பிரேக்கிட்டு பயமுறுத்துகிறது. பைக் பில்லியனில் அம்மா மடியில் கைக்குழந்தைகள் அபத்திரமாய் தொங்கிக்கொண்டு போகின்றன. சிக்னலில் பச்சை விழுவதற்கு முன்பே ஆக்ஸிலரேட்டரை முறுக்கிப் பாய்ந்து எதிர்புற சிக்னல்காரர்களை திகைக்க வைக்கிறார்கள். No entry-யில் பயணிப்பவர்களின் வேகம், எதிரில் ஒழுங்கான வழியில் வருபவர்களைவிட அதிகமாக இருக்கிறது. சைக்கிள்காரர்களுக்கு எப்போதுமே சிக்னல் கிடையாதா? மேலும் அவர்கள் நடுரோட்டில் எந்தப்பக்கம் சாய்த்து ஓட்டுவார்கள் என்பது su|do|ku - வை விட சுவாரஸ்யமான புதிர். காருக்குள் ஓனர் இல்லாதபோது ட்ரைவர்கள் ரோட்டை இருங்காட்டுக்கோட்டை ரேஸ் ட்ராக்-ஆக நினைத்துக் கொள்கிறார்கள். நான்கு ரோடுகள் சந்திக்கிற இடங்கள் ரொம்ப திரில் ஆனவை. விரைகிற போக்குவரத்துக்கு நடுவே, சரக்கென்று 90 டிகிரியில் மூக்கை நுழைத்துச் சொருகி ஸ்தம்பிக்க வைத்து லாவகமாய் எதிர்புறம் போய்விடுகிறார்கள். இரு சக்கர வாகனதாரர்கள் ஹெல்மெட்டை அதற்கான லாக்கில் பத்திரமாய் மாட்டி வைத்துக் கொண்டு ஓட்டுகிறார்கள். வலதுபுறம் இன்டிகேட்டர் போட்டுவிட்டு இடதுபுறம் சகஜமாய் திரும்புகிறார்கள். இன்டிகேட்டரே போடாமலும் கூட. சந்து முனையில் வேகத்தைக் குறைக்காமல் திரும்பும்போது எதிரில் யாருமே வரமாட்டார்கள் என்று எப்படியோ திடமாய் நம்புகிறார்கள். கையில் சிகரெட் வைத்தபடி பைக் ஓட்டுகிறவன் தட்டுகிற சாம்பல் பின்னால் வருபவன் கண்ணில் போய் விழுகிறது. தலையை சாய்த்தபடி தோளுக்கும் காதுக்கும் இடையே செல்ஃபோனைப் பொருத்தியபடி பறக்கிற வாகனத்தின் பில்லியனில் உயிரைக் கையில் பிடித்தபடி யாரோ பயணிக்கிறார்கள். போகிற போக்கில் பான்பராக்கை கிடைத்த இடத்தில் துப்பிவிட்டு விரைகிறார்கள். நடு ரோட்டில் டெலிஃபோன் இலாக்காவோ, குடிநீர் வாரியமோ தோண்டி வைத்திருக்கிற குழிகள், திறந்திருக்கிற பாதாள சாக்கடை மூடி ஆகியவற்றில் விழாமல் பயணிக்கிற வித்தையை எல்லோரும் பழகிவைத்திருக்கிறார்கள். பஸ் கூரை மேல் நின்று கொண்டு பயணிக்கிற மாணவர்கள் மரக்கிளை வரும்போது குனிந்து கொள்கிறார்கள். மழை நாளில் தவறாமல் பாதசாரிகளின் உடைகளில் சேறு தெளித்து single color ஹோலி கொண்டாடுகிறார்கள். பொறுமையில்லாமல் காதுக்கருகில் ஹாரன் அலறுகிறது. ரயில் வரும் என்று போட்டிருக்கிற கேட்டின் அடியில் நுழைந்து வாகனங்கள் பயமில்லாமல் இருப்புப் பாதையைக் கடக்கின்றன. இத்தனையும் எப்படியோ சமாளித்து எல்லாரும் அவரவர் வீடுகளுக்கு தினமும் போய்ச் சேர்ந்துவிடுகிறார்கள். The real risk lies in riskless living என்று யாரோ சொன்னதை வேறு விதமாகப் புரிந்து வைத்திருக்கிறார்களோ என்னமோ?! இல்புல இமிலி - அல்புல ஆம் இதை எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு திடீரென்று இரு சாக்லேட்டுகள் (அல்லது கேண்டி) அறிமுகப்படுத்தப்பட்டன. ஒன்றின் பெயர் இல்புல இமிலி. இன்னொன்று அல்புல ஆம். இதில் ஒன்று நாம் வாண்டுகளாக இருந்த வயதில் சாப்பிட்ட இலந்தவடை என்ற ஒரு தின்பண்டத்தின் சுவையை அப்படியே காப்பியடித்து செய்யப்பட்டிருந்தது. இன்னொன்று கமர்கட்டு என்ற நம் பற்களை வலுவுறச் செய்த ஒரு `கடக் முடக்’ சாதனத்தின் சுவையைக் கொண்டிருந்தது. சின்னவயது தின்பண்ட சந்தோஷங்களின் பொற்காலம் திரும்ப வந்துவிட்டது என்று மகிழ்வுறும் முன்பே மார்க்கெட்டிலி்ருந்து திடீரென்று  இவைகள் காணாமல் போய்விட்டன. ஒரிஜினல் இலந்தவடை, கமர்கட்டைப் போன்று இவை இல்லை என்ற காரணத்தால் யாரும் வாங்கவில்லையோ என்னமோ. அதற்கப்புறம் இவைகள் எங்கேயும் கிடைக்கவில்லை. இலந்தவடை கம்மர்கட்டுகள் போன்றவைகள் இன்றைக்கு நகர்ப்புறங்களில் மறைந்து, இப்போது ஒரு தலைமுறை தாண்டிய கால மாற்றத்தில் தின்பண்டங்களும் பரிணாம வளர்ச்சி கொண்டுவிட்டன. கீழ்கண்ட லிஸ்ட்டைப் பார்த்தால் எப்படி என்று புரியும். பஞ்சுமிட்டாய், பம்பாய் மிட்டாய், கடலை உருண்டை, கடலை பர்பி, மிட்டாய், கமர்கட்டு, எலந்தப் பழம், பொரிவிளங்காய் உருண்டை, குழல் (குடல்), நெல்லிக்காய், குச்சிக் கிழங்கு, சக்கரவள்ளிக் கிழங்கு, புளிப்பு மிட்டாய், பல்லி மிட்டாய், தேங்காய் பர்பி, இஞ்சி முரப்பா, குச்சி ஐஸ், எள்ளுரண்டை, எலந்தவடை, குருவி பிஸ்கெட், தேங்கா பன், ரஸ்க், வர்க்கி, நுங்கு, பாப்பின்ஸ், தேன் மிட்டாய், தேன் குழல், பபிள்கம், நகாப்பழம், சர்பத், டொரினோ, கோலி சோடா, பால்ஐஸ், கப் ஐஸ், ஆரஞ்சு மிட்டாய், முந்திரி கேக், கீற்று மாங்காய், வெள்ளரிப் பிஞ்சு, பட்டாணிக்கடலை, அச்சுவெல்லம், பொட்டுக்கடலை, வறுகடலை, பொரி, உருளைக்கிழங்கு சிப்ஸ், தட்டை முறுக்கு, சீடை, சுண்டல், அப்பம், குழிப்பணியாரம், கொழுக்கட்டை, இட்லி, வடை, உப்புமா, பொங்கல், தோசை, பூரி, வடை, பஜ்ஜி, போண்டா, லட்டு, ஜிலேபி, மைசூர்பா, பாதுஷா, குலோப் ஜாமூன், காபி, டீ, பால், ரோஸ்மில்க், டைரிமில்க், காராமில்க், 5ஸ்டார், ஜெம்ஸ், லேக்டோகிங், பெர்க், மில்கிபார், மஞ்ச், காஃபி பைட், ஆல்ஃபென் லிபி, கிண்டர்ஜாய், செண்டர் ஃப்ரெஷ், செண்டர் ப்ஃரூட், புபாலு, பூமர், லேஸ், குர்குரே, பைட்ஸ், எக்ளேர்ஸ், ஃபிப்டி-ஃபிப்டி, குட் டே, சாக்கோஸ், கார்ன்ப்ஃளேக்ஸ், சீட்டோஸ், சீஸ் பர்கர், ஸ்ப்ரிங் ரோல், ஃப்ரென்ஞ் ஃப்ரைஸ், சமோசா, வெஜ் பஃப்ஸ், கட்லெட், சாக்கோ ட்ரஃபிள்,ஸாண்ட்விச், மாகி நூடுல்ஸ், பாஸ்தா,  மாக்ரோணி, பீட்சா, கார்லிக் ப்ரெட், பேல்பூரி, பாணி பூரி, பாவ் பாஜி, அமெரிக்கன் கார்ன், கார்னெட்டோ ஐஸ்க்ரீம், வனிலா, பிஸ்தா, ஸ்ட்ராபெரி, கஸாட்டா, கோக், பெப்ஸி, மிராண்டா, ஸ்லைஸ், ஆப்பி, மாஸா, ட்ராப்பிகானா, ஸ்வீட் கார்ன் சூப், பட்டர் நான், ரோட்டி, குல்ச்சா, புல்கா, புலாவ், சில்லி கோபி, கோபி மஞ்சூரியன், பனீர் பட்டர் மசாலா, ஃபலூடா, ப்ரெட் ச்சன்னா, காஜு கத்லி, தந்தூரி சிக்கன் 65, காப்பிச்சினோ, எக்ஸ்பிரஸ்ஸ்ஸோ, காம்ப்ளான், மைலோ, பூஸ்ட்.. இன்னபிற.. பையனுக்கு குர்குரே வாங்க கடைக்குப் போகும்போது கடலை உருண்டை பாக்கெட் கண்ணில் பட்டால் உடனே வாங்கி வந்து விடுகிறேன். ஆர்க்கெஸ்ட்ரா அது ஒரு கோவில் வாசலாகவோ அல்லது தெருமுனையாகவோ இருக்கும். அங்கே பலகைகளால் அமைக்கப்பட்ட மேடையில் ஜமுக்காளம் விரித்து உயரமாய் ஸ்பீக்கர்கள் கட்டப்படும். சுற்றிலும் நிறைய ட்யூப் லைட்கள் நடப்பட்டு ஆம்ளிஃபையர், மைக்குகள், வாத்தியங்கள் வந்து இறங்கும்போதே தெருகொள்ளாத உற்சாகம் தொற்றிக் கொள்ளும். மேடை முழுக்க ஓடும் ஒயர்களை ஒருவர் அங்கங்கே இணைப்புப் கொடுத்துக் கொண்டிருக்க ஹலோ ஹல்லோ மைக் டெஸ்டிங் என்று சுற்றுவட்டாரங்களில் அறிவிப்பாளர் குரல் ஒலிக்கும். ஆர்வம் நிரம்பிய கூட்டம் முதல் பாட்டுக்காக காத்திருக்கத் தொடங்கும். அடுத்து வரப்போகும் பாட்டின் interlude துணுக்கை கிதாரிலோ ஃப்ளூட்டிலோ விரல்கள் நிரட கூட்டம் லேசாய் சிலிர்க்கும். தடதடவென ட்ரம்மை அதிர்ந்து வாசித்து "சொய்ங்ங்ங்ங்" என்று சிம்பல்ஸ்-ல் (cymbals) முடித்து ஒருவர் ரிஹர்சல் பார்க்க சிறுவர்கள் ஆரவாரமிடுவார்கள். அறிவிப்பாளரின் ஒவ்வொரு வார்த்தையும் மூன்று தடவை தவறாமல் மைக்கில் எதிரொலித்து ஆர்க்கெஸ்ட்ரா அமர்க்களமாய் "கலைவாணியேஏஏஏஏ" என்று சாமி பாட்டுடன் ஆரம்பிக்கும். அடுத்ததாக "பொதுவாக எம்மனசு தங்கம்..." அல்லது "ராஜராஜ சோழன் நான்..." அல்லது "வெள்ளைப் புறா ஒன்று..." இன்ன பிற. நான் சொல்வது ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன். இன்று நான் வழக்கமாய் ஆஃபிஸ் போகிற வழியில் ஒரு ரோட்டை அடைத்து மேடை அமைக்கப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்தபோதே சாயங்காலம் வீடு திரும்ப வேறு வழியை தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும் என்று ஞாபகம் வைத்திருந்தேன். வழக்கம்போல மறந்துபோய் அதே வழியில் வந்தபோது அங்கே ஆர்க்கெஸ்ட்ரா. கர்நாட்டிக் பாணியில் அமைந்த ஒரு சினிமா பாடலை ஒருவர் உயிரைக் கொடுத்துப் பாடிக்கொண்டிருக்க, ஒன்றிரண்டு பெண் பாடகிகள் அடுத்து பாடுவதற்காக காத்திருந்தனர். வாத்தியங்கள் அதிர்ந்தன. அந்த ரோட்டில் குடியிருக்கிறவர்களில் ஏழெட்டுப் பேர்களைத் தவிர ரோடே காலியாயிருந்தது. நேராய் போக வழியில்லாத நான் வேறு வழியில்லாமல் ஒரு பாட்டை மட்டும் நின்று கேட்டுவிட்டு வண்டியைத் திருப்பினேன். "அடுத்து வரும் பாடல்...." என்று மூன்று முறை எக்கோ-வுடன் சளைக்காமல் அறிவித்தது ஆர்க்கெஸ்ட்ரா ஒலிபெருக்கி. க்யூப்ரிக்ஸ் கோல்ட் கலோரிக் டெஸ்ட் இன்று நண்பர் ஒருவரின் புலம்பலைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் எந்தப் பிரச்சனைக்காக எப்போது எந்த டாக்டரிடம் போனாலும் தவறாமல் இரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், MRI ஸ்கேன் என்று எதையாவது ஒன்றை மேற்கொள்ளச் சொல்லி எழுதித் தருகிறார்கள். எல்லா டாக்டர்களுக்கும் இம்மாதிரியான லேப் மற்றும் ஸ்கேன் சென்டர்களுடன் ஒப்பந்தம் உள்ளது என்பதே அவர் அங்கலாய்ப்பின் மையக் கரு. டெஸ்ட் ரிசல்ட்டைப் பார்த்துவிட்டு எல்லாம் சரியாகவே வேலை செய்கிறது. கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் கடைசியில் சொல்லிவிடுகிறார்களாம். அதுதான் நமக்கே தெரியுமே. இப்படிப் போய் அப்படி வருவதற்குள் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாயாவது பழுத்துவிடுகிறது என்றார். உண்மையான கவலைதான். இந்தப் புலம்பலைக் கேட்டபோது ஏழெட்டு வருடங்களுக்கு முன் எனக்கொரு பிரச்சனை ஏற்பட்டு இதுமாதிரி ஒரு சில சோதனைகளைக் கடந்த ஞாபகம் தலை தூக்கியது. அப்போது எனக்கு அடிக்கடி முன் அறிவிப்பில்லாமல் தலை சுற்றல் நிகழும். அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருப்பேன். திடீரென்று அறை சுழல்வது போல் தோன்றும். நான் மட்டும் நிலையாய் உட்கார்ந்திருக்க அறையில் இருக்கிற பொருட்களும், மேசை நாற்காலிகளும் ஏதோ ஒரு திசையில் நகர ஆரம்பிப்பதுபோல பிரமை ஏற்படும்.  பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதை நான் மட்டும் உணர்வதுபோல் இருக்கும். இந்த சுற்றலின் விளைவாக உடலில் - குறிப்பாக உடலுக்குள் இருக்கும் வயிற்றில் - ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டு, ஒரு குமட்டல் மேல் நோக்கிப் புறப்படும். பிறகு செய்து கொண்டிருக்கும் வேலையை அப்படியே போட்டுவிட்டு தள்ளாடியபடி வாஷ்பேசினை நோக்கி உடனடியாக விரையவேண்டியிருக்கும். வயிற்றுக்குள் இருக்கும் பகுதிகள் வெளியே வந்து விழுவதுபோல தொடர்ந்து தீவிர வாந்தியவாதியாக கொஞ்ச நேரம் இருக்க நேரிடும். சிறிது நேரத்தில் எல்லாம் சரியாகிவிடும். இது போல மாதத்திற்கு ஒரு முறை ஏற்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு தடவை சலூனில் முடி திருத்தம் செய்துகொண்டிருந்தபோது இப்படி நேர்ந்து பாதியிலேயே எழுந்து வெளியே வந்து ஆட்டோ பிடித்து நான்கு பில்டிங் தள்ளியிருக்கிற என் வீட்டில் இறங்கி பாக்கெட்டில் அகப்பட்டதை ட்ரைவரின் கையில் திணித்து வாஷ்பேசினை நோக்கி ஓடினேன். இதை இப்படியே விட்டுவிட்டால் சரியாகாது என்று வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு கேஸ்ட்ரோஎண்ட்ராலஜிஸ்ட் டாக்டரை அணுகினேன். பிரச்சனையைக் கேட்டுவிட்டு ஒரு சில பரிசோதனைகளைச் செய்யவேண்டுமென்றார். நான் என் உடம்புக்குள்ளிருந்து ரத்தம் முதலான திரவப் பொருட்களை சாம்பிள் கொடுத்துவிட்டு அடுத்த நாள் அவரைப் பார்க்கப் போனேன். எல்லாம் சரியாகவே இருப்பதாக அறிவித்தார். பிறகு கொஞ்சம் கூட யோசிக்காமல் பக்கத்திலேயே ஒரு காது மூக்கு தொண்டை நிபுணர் இருப்பதாகவும் அவர் எனக்கு "க்யூப்ரிக் கோல்டு கலோரிக் டெஸ்ட்- என்று ஒன்றைச் செய்வார் என்றும் அறிவித்தார். கேட்பதற்கே கவர்ச்சிகரமாக இருக்கும் இந்தப் பரிசோதனை எதற்கு என்று கேட்டபோது அவர் சொன்னது: நாம் நிற்கும் போதும் நடக்கும்போதும் உடம்பை பேலன்ஸ் செய்வது நம் காதுகள்தாம். காதுக்குள் இன்ஃபெக்ஷன் ஆகி பேலன்ஸ் தவறினால் இது போல தலைசுற்றலோ, நடக்கும்போது தள்ளாடலோ ஏற்படும் என்றார். இந்த க்ளினிக்-லிருந்து இரண்டு வீடுகள் தள்ளி  அந்த இளம் கா.மூ.தொ நிபுணரின் க்ளினிக் இருந்தது. அவரிடம் அப்பாயின்ட்மெண்ட் வாங்கிக்கொண்டு ரிஷப்ஷனில் உட்கார்ந்து சுவரில் "For Sale" என்று எழுதி மாட்டியிருந்த அவர் மனைவியின் தஞ்சாவூர் பெயிண்டிங்குகளை பார்த்தவாறே டாக்டர் செய்யப்போவது எந்த மாதிரியான டெஸ்ட் என்பதை யோசித்துக்கொண்டிருந்தேன். எவ்வளவு யோசித்தும் கிஞ்சித்தும் பிடிபடவில்லை. பிறகு நான் அந்த டாக்டரை சந்தித்தபோது என்னை அடுத்தநாள் காலை எட்டுமணிக்கு வயிற்றைக் காலியாக வைத்துக்கொண்டு வரச்சொன்னார். போனேன். இளம் நர்ஸ்கள் சகிதம் வந்த டாக்டர் என்னை அறை நடுவாந்திரம் இருந்த ஒரு படுக்கையில் ஒரு பக்கமாக ஒருக்களித்துப் படுக்கச் சொன்னார்.  பிறகு ஒரு பெரிய சிரிஞ்சை எடுத்தார். நர்ஸ்கள் ஒரு மினி குளிர்சாதனப் பெட்டியிலிருந்து சில ஐஸ்கட்டிகளை எடுத்து ஒரு ட்ரேயில் வைத்தார்கள். பனிக்கட்டி உருகி உருவாகிய நீரை சிரிஞ்சால் உறிஞ்சினார். பின்னர் கொஞ்சம் பொறுத்துக்கங்க என்று சொல்லிவிட்டு எனது வலது காதுக்குள் சிரிஞ்சை வைத்து பீய்ச்சினார். சிலீர் என்ற பனி நீர் காது ஜவ்வை முத்தமிட உடம்பு முழுக்க ஓடியது ஒரு மின்சாரச் சிலிர்ப்பு. உடலின் ஒவ்வொரு அணுவும் ஜில்லென்று கூச, அந்த உணர்வை எப்படிச் சொல்வது? “உச்ச மகிழ்வுக்கும் உச்ச வலிக்கும் அனுபவிப்பவனிடம் அடைமொழி இல்லை. மேலும் எம் வலி ஆகாது உம் வலி” என்று கல்யாண்ஜியின் கவிதை வரிகளை இந்த உணர்வுக்கும் பொருத்திப் பார்க்கலாம். இப்போது லேசான தலை சுற்றல் ஏற்பட்டு அறை மெதுவாகச் சுழல ஆரம்பிக்கும். டாக்டர் தன் கைக்கடிகாரத்தை பார்ப்பார். தலை சுற்றுகிறதா? எந்தத் திசையில் சுற்றுகிறது என்று கேட்பார். சரியாக இரண்டு நிமிடம் கழித்து தலை சுற்றுவது நிற்கும்.  டாக்டர் ஒரு தாளில் எதையோ குறித்துக் கொள்வார். பிறகு ஐந்து நிமிடம் எனக்கும் அவருக்கும், செவிலிகளுக்கும் ஓய்வு. பின்னர் எதிர் திசையில் ஒருக்களித்துப் படுக்கச் சொல்லிவிட்டு மீண்டும் சிரிஞ்ச், குளிர் நீர் உறிஞ்சல், இடது காதுக்குள் பீய்ச்சல். இப்போதும் தலை சுற்றல் ஏற்படும். ஆனால் முன்னர் ஏற்பட்டதற்கு எதிர் திசையில். சரியாக இரண்டு நிமிடம். பின்னர் நின்றுவிடும். இரண்டு வெவ்வேறு திசைகளிலான, செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட தலைசுற்றல்களினால் தள்ளாடி இருக்கையில் அமர்ந்த என்னிடம் “பேலன்ஸ் சரியாத்தான் இருக்கு. எதுவும் ப்ராப்ளம் இல்லை” என்றார் டாக்டர். நான் வீட்டுக்கு வந்துவிட்டேன். இதுதான் க்யூப்ரிக்ஸ் கோல்ட் கலோரிக் டெஸ்ட். கேஸ்ட்ரோ எண்டராலஜிஸ்ட் டாக்டரின் பிள்ளைதான் இந்த இளம் காது மூக்கு தொண்டை டாக்டர் என்று பின்னர் தெரிந்தது. அதன்பிறகு எனக்கும் அந்த பிரச்சனை சட்டென்று நின்றுவிட்டது. பன்னிரண்டாவது இரவு - ஒரு காதல் கதை ‘ஒலிவியாவை உண்மையாகவும் ஆழமாகவும் நீ காதலிப்பது போலவே உன்னைக் காதலிக்கும் இந்த இளம் பெண்ணுக்கு என்ன நிலைமை ஏற்படும்? உன் காதலை அவள் பெற முடியாதென்று நீ அவளிடம் சொல்லியிருந்தால் அந்த பதிலால் அவள் திருப்தியடைந்திருக்க மாட்டாளல்லவா?’ ‘ஒரு ஆண் ஒரு பெண்ணைக் காதலிக்கிற அளவு ஒரு பெண்ணால் ஆணைக் காதலிக்க முடியாது. பெண்களின் இதயம் இம்மாதிரி ஆழமான காதலையெல்லாம் தாங்காது’ ‘அவளிடம் என் காதல் கதையையும் அதனால் நானடைந்த கஷ்டத்தையும் அவள் இதயம் உருகும்வரை சொல்.” ‘என் எஜமானன் போலவே நானும் உன்னைக் காதலித்தால், நீ அதை ஏற்றுக்கொள்ளும்வரை விடமாட்டேன். காற்று முழுவதையும் உன் பெயரால் நிரப்புவேன். மலைகள் முழுவதும் உன் பெயரை எதிரொலிக்க வைப்பேன்.’ தற்செயலாக பையன் படித்துக்கொண்டிருந்த பாடபுத்தகத்தை வாங்கிப் பார்த்தபோது மேற்கண்ட வரிகள் கண்ணில் பட்டன. அது ஒரு ஆங்கில நான் - டீடெய்ல் புத்தகம். ஷேக்ஸ்பியரின் (சிறு)கதைகள். ஜெயராஜ் படம் வரைந்திருந்தார். “ Twelfth Night"  என்ற ஒரு கதையில்தான் இதெல்லாம் வருகிறது. கதையில் சரமாரியாக யார் யாரோ யாரையெல்லாமோ காதலித்து உருகிக்கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு முக்கோண அல்லது நாற்கோண காதல் கதையாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். முழுதாகப் படிக்கவில்லை. குறிப்பிட்ட வரிகளை மட்டும் கொஞ்சம் மொன்னையாக மொழிபெயர்த்திருக்கிறேன். பாடத்துக்குக் கீழே சில கேள்விகள் கொடுத்திருந்தார்கள். அந்த கேள்விக்கான பதில்களை படித்து பையனாகப்பட்டவன் பரீட்சையில் எழுத வேண்டும். அவற்றில் சில: வயோலா ஆர்ஸினோவின் மேல் எப்படிக் காதல் வயப்பட்டாள்? அதை எவ்வாறு அவனிடம் அதை வெளிப்படுத்தினாள்? ஒலிவியா சிசாரியோவிடம் எப்படித் தன் காதலைச் சொன்னாள்? ஒரு ஆணாகவும் ஒரு காதலனாகவும் இருந்த செபாஸ்டியனைப் பற்றி என்ன நினைக்கிறாய்? பிறகு என் மனைவி இந்தக் கேள்விகளையெல்லாம் மகனிடம் கேட்க அவன் படித்தவற்றை ராகம் போட்டு ஒப்பித்துக் கொண்டிருந்தான். வீடு முழுக்க காதல் வழிந்துகொண்டிருந்தது. நான் எதுவும் கேட்க முற்படுவதற்குள் மனைவிக்கு ஒரு ஃபோன் வந்தது. மகனின் வகுப்பில் படிக்கும் இன்னொரு பையனின் அம்மா. கொஞ்சம் ஒட்டுக்கேட்டதில் இந்த ஒலிவியா- வயோலா- சிசாரியோவின் காதல் விவகாரத்தைப் பற்றித்தான் அக்கப்போர் பேசிக்கொண்டிருந்தார்கள் என்று தெரிந்தது. மனைவி ஃபோனை வைத்த பிறகு ரகசியமாய் என்ன விஷயம் என்று கேட்டபோது ஐந்தாம் வகுப்புப் படிக்கும் சின்னப் பசங்களுக்கு இந்த மாதிரி காதல் கதையெல்லாம் கொஞ்சம் ஓவர் இல்லையா என்று அந்தப் பையனின் அம்மா அங்கலாய்த்தார்களாம். பள்ளி வளாகத்தில் ஆர்.ஐஸ்வர்யா-வின் அம்மா கூட இதையேதான் சொல்லி ஒருபாட்டம் புலம்பியிருக்கிறார். “அதுவும் ஸ்ட்ரெய்ட்டான ஒரு நல்ல லவ் ஸ்டோரிய சொல்லிக்குடுத்தாக்கூட பரவாயில்லை. இதென்னமோ கொளப்பமான காதல் கதையால்ல இருக்கு”. என்றாராம். “எப்படி டீச்சர் இதையெல்லாம் பசங்களுக்கு சொல்லித்தர்ராங்க? இதெல்லாம் இப்பவே தெரிஞ்சு பசங்க கெட்டுப்போயிர மாட்டாங்களா?” மனைவியின் கேள்வி வந்து விழுந்தது. “டிவி. சொல்லித்தராததையா டீச்சர் சொல்லிக்குடுக்கப் போறாங்க..” என்றேன். உலகக் கொட்டாவி இந்த வார ‘கற்பனை எக்ஸ்ப்ரஸ்’ இதழுக்காக நான் எழுதிய தலையங்கம்: இப்போதெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆனவுடனேயே ரசிகர்கள் ஒவ்வொருவரையும் அந்தப் படம் அல்லது அதற்கான விமர்சனங்கள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை வலைப்பதிவுகளில் எல்லோரும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இணையத்தில் கச்சேரி களைகட்டிவிடுகிறது. சிலர் பார்த்துவிட்டும் சிலர் பார்க்காமலும் எழுதுகிறார்கள். விமர்சனங்களைப் படித்தவர்களில் சிலர் உஷாராகி தன் பர்ஸைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள். ரிஸ்க் பிரியர்கள் அவற்றைப் புறக்கணித்துவிட்டு குடும்பத்தோடு தியேட்டரில் ஆஜராகி விடுகிறார்கள். சிலர் டிவிடியும் டோரண்டும் தேடுகிறார்கள். நடிகர் நடிகைகளின் அல்லது இயக்குநர்களின் ரசிகர்களை ஒன்றும் செய்வதற்கில்லை. எப்படியிருந்தாலும் பார்த்துவிட்டுத் தன் அபிமானத்தைப் பதிவுசெய்துவிடுவார்கள். உள்ளங்கையில் எதையோ ஒளித்து மூடி எதிரிலிருப்பவரிடம் என்ன இது என்று கேட்டு நிறைய பதில் வாங்கிப் பின்பு இதுதான் என்று திறந்து காட்டுவதும் மற்றவர் ’ச்சே!.. பத்து பைசாவா.. இதுக்குத்தான் இந்த பில்டப்-பா.. நான் என்னமோ என்று நினைத்தேன்’ என்று வழிவதுமான விளையாட்டுப் போல இருக்கிறது சில நேரத்தில். வெளியாகிற படங்களைச் சொல்கிறேன். இப்பொழுதெல்லாம் புதிதாக எந்தப் படம் வந்தாலும் எப்படியிருக்கிறதென்று படம் பார்த்தவர்களைக் கேட்டால் “கதை சரியில்லை. ஆனால் Making is good” என்கிற திருவாசகம் தவறாமல் எல்லோர் வாயிலும் வந்துவிடுகிறது. ஸ்டைலான எடிட்டிங், அசத்தும் சினிமோட்டோகிராபி, ஆடத் தூண்டும் கொரியோகிராபி மற்றும் இன்னபிற கிராபிகளில் திரைக்குத் தேவைப்படும் மற்ற தொழிற்நுட்ப வல்லுநர்கள் படத்தின் கதையை மீறி தங்கள் திறமையை வெளிப்படுத்திவிடுகிறார்கள்தான். தப்பில்லை. திரைப்பட ஆர்வமிருக்கிற யாராயினும் கிடைத்த டிஜிட்டல் கேமராக்களை வைத்துக் கொண்டு குறும்படங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆக ஒரு லட்சம் ரூபாய் இருந்தால் யார் வேண்டுமென்றாலும் அழகாக ஒரு படம் பண்ணி டைரக்டர் கார்டு போட்டுக்கொள்ளலாம் என்கிற இந்தச் சூழலில் ஏற்கெனவே கோடம்பாக்கத்தில் தன் கால்களை பலமாகப் பதித்தவர்கள் எத்தனை கவனமாக இருக்கவேண்டும்? நான் பார்த்த ஒரு சில குறும்படங்கள் அருமையாகவே இருக்கின்றன. வாய்ப்புகள் சரியாக அமையும் பட்சத்தில் இவர்கள் ஒரு புயலாக கோ.பாக்கத்திற்குள் பிரவேசித்து மக்களை ஆச்சரியத்திலாழ்த்தும் படங்களைக் கொடுக்கத் தவறமாட்டார்கள் என நம்புகிறேன. வெறும் ஆர்ப்பாட்டங்கள் எதையும் நிரூபிக்கப்போவதில்லை. இறுதியில் வெல்வது சரக்கு (திரைக்கதை) மட்டுமே. உலகத் திரைப்பட டி.வி.டிக்களை லாரியில் அள்ளிக் கொண்டு போகிற கோலிவுட்டுக்கு இது தெரியாததல்ல. ரசிகர்கள் மனதில் லோடு லோடாக ஏற்றிவைத்துக் கொண்டிருக்கிற எதிர்பார்ப்புகளுக்கு ஈடாக எதுவும் அளித்துவிடவில்லையென்றால் பின்னர் ‘படம் குப்பை’ என்கிற வார்த்தை எளிதாய் வந்து விழுந்துவிடும். படம் பற்றி மாதக் கணக்கில் செய்துவந்த பில்டப்-புகளும் அது வரை செய்து வந்த அதிரடி விளம்பரங்களும் நொடியில் தலை குப்புற விழும் நிலை ஏற்படும். கோடிகள் கொட்டுகிற உழைப்பு என்றாலும் கதையோ திரைக்கதையோ காட்சியமைப்புகளோ வசனங்களோ சொதப்பும் பட்சத்தில் எத்தனையோ பேர் தூக்கங்கெட்டு மெனக்கெட்டு கல்லிலும் முள்ளிலும் கால் கடுக்கப் பாடுபட்டதை ஒரு கொட்டாவியால் சிம்பிளாகப் புறக்கணித்துவிடுவான் ரசிகன். ஆனாலும் கொடுத்த காசு விரயமான உணர்வைக் குறைக்க “படத்துல ஃபோட்டோகிராபி அசத்துது. அதுக்காகவே பாக்கலாம்” என்று பிறரிடம் சொல்லி சமாதானமடைந்து கொள்ள நேரிடுவது வேறு கதை. சினிமாவில் நடிகர்களையும் இயக்குநர்களையும், பாடகர்களையும், இசையமைப்பாளர்களையும் மட்டுமே அறிந்து வைத்திருந்த காலம் போய் இருபதாண்டுகளுக்கு முன்னமிருந்தே மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களையும் மக்கள் இனங்காணத் துவங்கிவிட்டார்கள். தோட்டா தரணியிலிருந்து ஆரம்பித்து விக்ரம் தர்மா, லெனின் - வி.டி.விஜயன், சாபு சிரில், சந்தோஷ் சிவன், ஆண்டனி, ஸ்ரீதர், நீரவ் ஷா என்று நிறைய பேரை வாயிலிருந்து உதிர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் கொஞ்ச நாளில் கொரியப் பட கொரியோகிராபர்களின் பெயர்களைக் கூடச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். ஆக ஒரு டைரக்டர் தோல்வியடையும் இடத்தில் குறிப்பிட்டுச் சொல்ல படத்தில் மற்ற கலைஞர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். அவர்களுக்கு அது ப்ளஸ்தான். ஆனால் தயாரிப்பாளர் பாவமல்லவா? தொழில்நுட்பத்தை மட்டுமே வைத்துக்கொண்டு எந்தப் படமும் வெற்றியடைந்துவிட முடியாது. சினிமா என்பது கூட்டு முயற்சி. திரைப்படமெடுக்கும் ஒவ்வொரு டீமுக்கும் தாங்கள் கூட்டாக ஜெயிக்க வேண்டும் என்பதுதான் அவா. மறுப்பதற்கில்லை. ஆனால் நடுக்கடலிலும், மலை உச்சியிலும் கயிறு கட்டித் தொங்கி எடுத்த படத்தில் கதை சரியில்லையென்றால் அப்புறம் திரையரங்கில் பாப்கார்ன் வாங்க ஆளிருக்காது என்பதை இயக்குநர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.  பிரம்மாண்டங்கள் என்பதெல்லாம் தாண்டி சும்மா ஒரு சின்ன அழகான கதையை அதிராமல் சொன்னாலே அது நிச்சயம் வெற்றி பெறும். தியேட்டருக்குள் இரண்டரை மணி நேரம் அடைபடுகிற ரசிகர்களை சிரிக்க வைத்து, அழ வைத்து, உணர்வுகளைக் கிள்ளி, நெகிழவைத்து, நினைவலைகளைக் கிளறி, நெஞ்சம் நிறைத்து வீட்டுக்கு அனுப்பிவைப்பதென்பது ஒரு டைரக்டருக்கு சாதாரணப் பொறுப்பு கிடையாது. கரணம் தப்பினாலும் கொட்டாவிதான். உலகப் படமெடுப்பவர்களுக்கும் இது பொருந்தும். வடிவேலகராதி 2050-ல் நடந்த தமிழ் செம்மொழி மாநாட்டில் முனைவர் பேராசிரியர் ஆ.கா. தமிழ்ச்செங்கோட்டுவரியன் அவர்கள் வாசித்த கட்டுரையிலிருந்து ஒரு பகுதி: ----------------------------------------------- ....தமிழில் வடிவேலகராதி என்று ஒன்றைக் கொண்டுவந்துவிடலாம் என்கிற அளவுக்கு புதிய சொற்றொடர்களும், வார்த்தைகளும் இனிய தமிழில் அக்காலகட்டத்தில் இயற்றப்பட்டிருப்பது காணவும் கேட்கவும் கிடைக்கின்றன. சினிமா என்ற ஒன்று இதற்கென மெனக்கெட்டு தன்னாலான சிறு பங்கை ஆற்றிக்கொண்டிருந்தது என்பது தற்கால அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று.  ”உதாரணத்திற்கு இஸ்.. யப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே” என்கிற ஒரு சொற்றொடர். இதுவரை நிகழ்ந்த நிகழ்வுக்கே கண்கள் சோர்ந்து ஒருவித மயக்க நிலையை உடலானது அடையத் தொடங்கிவிட்டபோது இனிவரும் நிகழ்வுகளை எப்படித் தாங்கிக்கொள்ளமுடியும் என்று பொருள்பட அமைந்த இந்த வாக்கியம் வடிவேலடிகளாரால் 2003 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. வெற்றியாளன் என்ற அர்த்தம் கொண்ட தலைப்புடன் வந்த ஒரு சீரிய திரைப்படத்தில்தான் இவர் மிகவும் பரவலான புகழடைந்தாரென்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. பேச்சுத்தமிழில் மிக முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்தவர் இவர். திரைப்படங்களில் இவர் கோலோச்சி வந்த காலகட்டத்தில் இவர் பேசின வசனங்கள் மக்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்தது மட்டுமல்லாமல் அவை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அன்றாடப் புழக்கத்திலும் சரளமாக உபயோகப்படுத்தப்பட்டன. இந்தியாவிலுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் சிலவற்றில்கூட ஊழியர்களிடையே இவை பரவலான சொல்லாடல்களாக இன்றும் காணப்படுகின்றன. உதாரணம் “நீ இதுவரை பணிபுரிந்ததுபோதும். இனிமேல் நீ வேறு எதுவும் செய்யவேண்டியதில்லை” என்று பொருள்பட சொல்லப்படும் வாக்கியம் “ஆணியே புடுங்க வேண்டாம்..”. ஓரிரு வார்த்தைகளிலேயே சுருக்கமாக பல அர்த்தங்களை இது விளக்கிவிடுகிறது என்ற வகையில் இதை ஒரு மிக முக்கியமான பேச்சு வழக்குப்பிரயோகமாகக் கொள்ளலாம். இது மாதிரி கமல்ஹாசன் என்கிற நடிகர் நடித்த சிகப்பு ரோஜாக்கள் என்கிற திரைப்படத்தில் ”என்ன வூட்ல சொல்ட்டு வந்தியா” என்று பேசப்படுகிற வசனமானது “சாலையில் கவனமாகப் போகவில்லையெனில் கார் போன்ற வாகனத்தில் அடிபட்டு பரலோக பதவி அடைந்துவிட நேரிடும்” என்கிற எச்சரிக்கையை மறைமுகமாகச் சொல்வதுடன் “போய்வருகிறேன். நான் இனி திரும்பி வரமாட்டேன்” என்று சம்பந்தப்பட்டவர் வீட்டில் ஏற்கெனவே சொல்லிவிட்டு வந்து அதற்கேற்ப சாலைக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி நடந்துகொள்கிறார் என்பதையும் மிக அழகாக எடுத்தியம்புகிறது. இவ்வகையில் இது தமிழின் அழியாப் புகழ்பெற்ற ஒரு வாக்கியமாகவும் நிலைபெற்றுவிட்டதென்றே சொல்லலாம். இது போன்ற சொலவடைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போனால் ஒரு ஆயிரம் பக்க ஆய்வுக்கட்டுரையாகத்தான் அதை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் என்பதால் அவைகளில் சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுதல் நலம் என்று தோன்றுகிறது. ‘ஒய் பிளட்? சேம் பிளட்’ என்கிற ஒன்று தனக்கேற்பட்ட அவமானகர கதிநிலை மற்றவருக்கும் ஏற்பட்டத்தை அறிந்து சந்தோஷம் கொள்ளும் மனப்பான்மையை எடுத்துச் சொல்கிற மிக எளிய வாக்கியம். இதில் ஆங்கில மொழியானது தாறுமாறாக சிதைக்கப்பட்டிருப்பது ஒரு முக்கிய விடயமாக இருந்தாலும் தமிழின் மிக முக்கிய வாக்கிய இணைப்புகளில் தலையானதாகக் கருதலாம். இதே போல் ‘முடியல’ என்கிற வார்த்தை, சூழலையும் சந்தர்ப்பங்களையும் பொறுத்து அவரவர் வேவ்வேறு பொருள்கொள்ளும் வகையில் அமைந்த ஒரு சிறப்பான வார்த்தையாகும். வடிவேலழகர் தவிர கவுண்டமணியார் என்கிறவரும் இதேபோல் புதிய அர்த்தங்களுடன் கூடிய தமிழ்ச் சொற்றொடர்களை தமிழுக்கு வழங்கியதில் குறிப்பிடத்தக்கவராகக் கருதப்படுகிறார். இவர் உருவாக்கின ”அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” என்கிற வாக்கியம் பொது இடங்களில் பிறர் முன்னிலையில் தன் கையாலாகத்தனம் தெரிந்து கேவலமாக மாட்டிக்கொண்டு அவமானப்பட்டாலும்கூட அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் மித மிஞ்சிய நகைப்புடன் இந்த வாக்கியத்தை நீட்டி முழக்கி உச்சரிப்பதன் மூலம் அந்நிலையை சமாளித்துவிட முடியுமென்கிற வலையில் முக்கியத்துவம் வகிக்கிறது. இந்த வாக்கியம் இன்னும் சில நூற்றாண்டுகளாவது தமிழில் வழக்கத்தில் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். இவர் உருவாக்கின மற்ற சில அரிய சொற்றொடர்கள் ‘கொசுத்தொல்ல தாங்க முடியல’ என்பதும் ‘ஸ்டார்ட் த மீஜிக்” என்பதும். இதுபோல் தமிழில் இப்போதைய வாழ்க்கை நடைமுறையில் புழக்கத்தில் இருக்கும் அரிய தமிழ் வாக்கியங்கள் சில: 1.   எப்படியிருந்த நான் இப்படியாயிட்டேன் 2.   ஏன் இந்தக் கொலவெறி? 3.   என்ன கொடும சரவணா இது? 4.   வந்துட்டான்யா வந்துட்டான்யா.. 5.   ரிஸ்க் எடுக்கறதெல்லாம் ரஸ்க் சாப்டற மாதிரி 6.   இப்புடுச் சூடு 7.   வேணாம்.. வலிக்குது.. அழுதுருவேன்.. 8.   வரும்ம்ம்.. ஆனா.. வராது.. 9.   பில்டிங் ஸ்ட்ராங்கு. பேஸ்மெண்ட் வீக்கு. 10.  அது போன மாசம். இது இந்த மாசம். 11.  ஐயோ வட போச்சே.. 12.  என்ன வெச்சு காமெடி கீமடி எதும் பண்ணலையே.. சொல்ல வருகிற விஷயத்தை மறைமுகமாகவோ நேராகவோ மிக எளிய முறையில் சொல்வதற்கு உதவுகின்றன என்பதனால் செம்மொழியாம் தமிழ்மொழியில் இந்த வாக்கியப் பிரயோகங்கள் வரலாறுகள் தாண்டி நீடித்து நிலைத்திருக்கும் என்று மொழி ஆராச்சியாளர்கள் கருதுவதுடன் மேலும் இதுபோன்றவைகளை அதிக அளவில் திரைப்பட மின்தகடுகளிலிருந்து மக்கள் பெற்றுப் பயனடைய வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். நாமும் இவைகளை செவ்வனே பின்பற்றுவோமாக.... சில்லறை வரங்கள் எலியட்ஸ் பீச் கடற்கரை.  வானத்தில் கருமேகங்களுக்கு நடுவில் சற்றே தேய்ந்த பவுர்ணமி. மழைவரும் போல அடிக்கிற காற்றில் ஆர்ப்பரிக்கிற கடல். அலை வந்து திரும்புகிற இடத்தில் நான், சரசுராம், பொன்.சுதா மூவரும் அமர்ந்திருந்தோம். நீண்ட நாட்களுக்கப்புறம் நிகழ்ந்த சந்திப்பின் உற்சாகத்தில் இலக்கியம் திரைப்படம் என்று நிறைய கலந்து நிறைந்திருந்தது பொழுது. சுஜாதா, ஜெயமோகன், ராமகிருஷ்ணன், ஜே.பி.சாணக்யா, சதத் ஹஸன் மாண்டோ, கிம்கி டுக், கோங்லி என மானாவாரியாக எடுத்துக் கோர்த்துக்கொண்டிருந்தோம். கடலில் கால் நனைக்கிற கூட்டம், டிஜிட்டல் கேமராக்களின் பளிச்சிடல், தீப்பொறி பறக்க மக்காச்சோள வண்டி, பஞ்சு மிட்டாய் கிணிமணி என்று எதுவும் கவர்ந்து கவனத்தைக் கலைத்துவிடவில்லை. ஆனால், இடையிடையே மிகப் பெரிய தொந்தரவாக பிச்சைக்காரர்கள். என்றைக்கும் பார்த்திராத அளவுக்கு இன்றைக்கு மிக மிக அதிகமாக. சிறுவர்கள், சிறுமிகள், தூங்கும் குழந்தையை தோளில் போட்ட இளைஞன், வெற்றிலையைக் குதப்பியபடி ஒரு யுவதி, முதுமை தள்ளாட்டத்துடன் மிக வயதானவர்கள் என்று விதவிதமாக, பரவலாக கடற்கரையெங்கும் பிச்சையெடுக்கிறார்கள். திரும்புகிற, நகர்கிற இடமெல்லாம் கண்முன்னே வந்து நிற்கிறார்கள். மனதில் வழக்கமாக ஓடுகிற “கையும் காலும் நல்லாதானே இருக்கு. உழைச்சு சாப்புடறதுக்கென்ன?” மற்றும் “பிச்சைக்காரர்களை என்கரேஜ் பண்றது ரொம்ப தப்பு” போன்ற வசன வரிகளை ஒரு சில சமயம் ஒரு மூன்றாந்தர மனிதாபத்தோடு புறந்தள்ளிவிட்டு ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ சில்லறை இருப்பைப் பொறுத்து அளிப்பதும் நடந்துவிடுகிறதுதான். இந்தப் ”பெரிய மனசு” எப்போது வெளிப்படுகிறதென்றால் கடற்கரைக்குப் போய்ச் சேர்ந்ததும் மூன்றாவது அல்லது நான்காவது பிச்சைக்காரர் எதிரில் வந்து நிற்கும்போதுதான். முதல் இரண்டு பேரை மேற்கண்ட வசனங்களை மனதிற்குள் ஓடவிட்டு புறக்கணித்து விடுவது வழக்கமாகிவிடுகிறது. மேலும் சில பேர் நகராமல் நின்று கொண்டு தொடந்து குரலெழுப்பிக்கொண்டிருக்கும் போது வேறு வழியில்லாமல் ஒரு தப்பித்தலுக்காக கொடுக்க வேண்டியிருக்கிறது. நாங்கள் மூன்று பேரும் இருந்த சில்லறைகளை தலா ஒருவருக்கோ இருவருக்கோ கொடுத்து காலியாகிவிட்டது. பேச்சு சுவாரஸ்யமாய் எங்கெங்கோ போய்விட்டிருந்தது. ஒரு கூன்விழுந்த கிழவி அருகில் வந்தாள். அவள் முகம் இருளில் சரியாய்த் தெரியவில்லை. என்னைப்பார்த்து கையை நீட்டினாள். ’செல்லம்.. எதுனா குடுப்பா’ என்றாள். ’பசிக்கிறது’ என்றாள். பேச்சு தடைபட்டதில் நான் அவளைப் போகச் சொன்னேன். அவள் போகவில்லை. நண்பர்களும் அவளை விரட்ட முயற்சிக்க, எதுவும் பலிக்கவில்லை. இன்னும் ஈனமான குரலில் “மகனே” என்றாள் என்னைப்பார்த்து. “போச்சுடா” என்று சிரித்தேன் நான். ”எதுனா குடு மகனே” என்று கெஞ்சல் அதிகமானது. கிழவி போகிற மாதிரி தெரியவில்லை. “மகனேஏஏஏஏ.. செல்லம்ம்ம்ம்ம்ம்..” இதென்ன வம்பாகப் போயிற்று என்று நினைத்தேன். என்னையே குறிவைத்து செண்டிமெண்டாய் அம்புவிடுகிற கிழவியை நிமிர்ந்து பார்த்தேன். அவள் அசையாமல் நின்றுகொண்டிருந்தாள். அங்கிருந்து நகர்கிற மாதிரி தெரியவில்லை. மீண்டும் ”மகனேஏஏ” என்றாள். அதற்குமேல் தாங்காதவனாக நான் சில்லறையைத் தேட நல்ல வேளையாக ஒரு ரூபாய் நாணயம் ஒன்று கிடைத்தது. ‘இந்தா..” என்று கொடுத்தேன். “மவராசனா இரு.. உனக்கு நல்லதா ஒருத்தி பொண்டாட்டியா வருவா” என்று சொல்லிவிட்டுப் போனாள். இன்னொரு நல்ல பெண்டாட்டியா? ஆறாங்கிளாஸில் ஃபெயிலான பன்றிக் காய்ச்சல் மெக்ஸிகோ பன்றிகளிடமிருந்து ஏற்றுமதியாகி பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு இந்தியாவில் இறக்குமதியாகி இருக்கும் swine flu (எ) பன்றிக் காய்ச்சல் சமீபமாய் பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது சென்னையில். விளைவு: பள்ளிகளுக்கு விடுமுறை, பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கவும் என்கிற எச்சரிக்கை, முகத்தில் திடீர் மாஸ்க்குகள். தொலைகாட்சிகளில் ஸ்க்ரால் நியூஸில் இடைவிடாமல் இதைப் பற்றிய செய்திகள். தினப்பத்திரிக்கைகளில் பக்கத்துக்குப் பக்கம் படம் போட்டு விளக்கங்கள். மக்களைக் கொஞ்சம் உஷார்படுத்தி, கொஞ்சம் குழப்பி, கொஞ்சம் பயமுறுத்தி, கொஞ்சம் விஷய ஞானமூட்டும் அரசாங்க அறிக்கைகள். மாஸ்க் அணிந்த ஊரில் வெறும் மூஞ்சிக்காரன் முட்டாள் என்கிற மாதிரி ஆகிவிட்டது முகமூடி அணியாதவர்களின் நிலைமை. 50 பைசா என்று விற்றுக் கொண்டிருந்த மாஸ்க் பத்து பதினொன்று என்று போய்க்கொண்டிருக்கிறது. வியாதி, பீதி, நீதி என்று எதுவாக இருந்தாலும் அதை அரசியலாகவோ, வியாபாரமாகவோ அதி அற்புதமாய் மாற்றத் தெரிந்த மனிதர்கள் நிரம்பிய நாட்டில் ‘டாமிப்ளூ’வும் மாஸ்குகளும் பதுக்கப்பட்டு தட்டுப்பாடாகி கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு வருகிற நிலைமையும் ஏற்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். ‘வரும்முன் காப்போம்’ என்பது இவர்களுக்காகவே சொல்லப்பட்டதோ என்னவோ! பன்றிக் காய்ச்சல் வராமலிருக்க வழி என்கிற வகையில் மின்னஞ்சலாகவும் குறுஞ்செய்தியாகவும் ஏகப்பட்ட தடுப்பாலோசனைகள் வந்த வண்ணம் உள்ளன. எதைப் பின்பற்றினால் அதிக பலன் என்ற குழப்பம் தெளியாத நிலையில் இதோ அவற்றில் சில: 1. அதிகாலையில் வெறும் வயிற்றில் இரு ஸ்பூன் வெல்லத்தை தண்ணீரில் கரைத்துக் குடித்தல் மற்றும் இரவு படுக்கைக்கு முன் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூளை அரை தம்ளர் பாலில் கலந்து விழுங்குதல் என்பதை அன்றாடம் செய்துவந்தால் ப. காய்ச்சல் பக்கத்திலேயே வராது. 2. பக்கத்து வீட்டின் மாடத்திலிருந்து கடன் வாங்கியாவது துளசிச் சாறு காலை மாலை இரு வேளை அருந்துவது நிச்சயம் நோய் தடுக்கும் என்பது ஒரு யோக நிபுணரின் ஆலோசனை. 3. Calcarea Carb - 30 C என்கிற ஹோமியோபதி மாத்திரைகள் தினம் மூன்று எடுத்துக்கொண்டால் ப.கா பயமில்லாமல் இருக்கலாம். 4. பிரியாணியில் போடுகிற “தக்கோலம்” (என்ன சமாச்சாரம் இது? கேள்விப்பட்ட மாதிரியே இல்லை. யாருக்காவது தெரியுமா?) என்கிற சாதனத்தைப் பொடி செய்து தண்ணீரில் கரைத்துச் சாப்பிடவேண்டும். (பிரியாணியாகவே சாப்பிட்டால்?) 5. சின்ன வெங்காயத்தைத் தட்டி நசுக்கி தினம் இருவேளை சாப்பிடலாம். 6. எலுமிச்சை சாறு அடிக்கடி குடித்தல். 7. டாபர் சவனப்ராஸ் லேகியம் ஒன்றே போதுமாம். அதிலேயே எல்லாம் இருக்கிறதாம். 8. மேற்கண்ட அயிட்டங்கள் கிடைக்காதவர்கள் குறைந்த பட்சம் யூக்கலிப்டஸ் திரவத்தின் ஒரு துளியை ஒரு கைக்குட்டையில் நனைத்து மூக்கில் கட்டிக் கொள்ளலாம். இது தவிர இன்னும் எக்கச்சக்கமாக எச்சரிக்கைகளும் ஆலோசனைகளும் வந்து கொண்டே இருக்கின்றன. ‘இம்யூன் ஸிஸ்டம்’ எனப்படுகிற நோய் எதிர்ப்பாற்றல் என்று ஒன்று இருப்பதே பல பேருக்கு நோய் வந்தபிறகுதான் தெரிய வருகிறது. எங்களுக்கு வந்து போன சிக்குன் குனியாவின் தாக்கமே இன்னும் தீர்ந்தபாடில்லை அதுக்குள் இது வேறா என்று முட்டியைப் பிடித்துக் கொண்டு அலுத்துக்கொள்கிறவர்களும் இருக்கிறார்கள். ஊரிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் “சென்னையில் பூகம்ப எதிரொலி, சுனாமி எச்சரிக்கை” எல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டு ‘பன்றிக் காய்ச்சலாமே. பாத்து இருந்துக்கோ” என்பதைத்தான் அதிகம் குசலம் விசாரிக்கின்றன. ‘தனக்கு ஸ்வைன் ஃப்ளூ இருக்கான்னு என்கிட்ட வர்ரவங்களுக்கு எப்படி கண்டுபிடிச்சுச் சொல்லறதுன்னும் தெரியல. இல்லன்னு திருப்பி அனுப்பவும் முடியல. இருந்தா அதுக்கு கரெக்ட்டா என்ன பண்ணனும்னு தெரியல. இந்த வியாதியைப் பத்தி அதிகமா எதுவுமே எங்களுக்குத் தெரியல. வர வர எங்க பொழப்பு ரொம்ப மோசமாயிருச்சு. எங்களையெல்லாம் டாக்டர்ன்னு சொல்லிக்கிறதுக்கே வெக்கமாயிருக்கு’ என்று ஊரில் என் உறவினரிடம் ஒரு டாக்டர் புலம்பித் தள்ளியதாகச் சொன்னார். அதெல்லாம் இருக்கட்டும். இங்கே சென்னையில் ஒரு பிரபல உயர்நிலைப் பள்ளி ஒன்றில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அஞ்சாங்கிளாஸ் வரை மட்டுமே லீவு விட்டிருப்பதாக சொல்கிறார்களே அது ஏன் என்று ஒரு வாரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன். FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/ Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/     உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !