[]           சேரன் செங்குட்டுவன்    மு. இராகவ ஐயங்கார்    அட்டைப்படம் : லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியிடு : FreeTamilEbooks.com    உரிமை : Public Domain – CC0  உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.                                  பொருளடக்கம் முகவுரை 7  8  அதிகாரம் - 1 9   அதிகாரம் - 2 11  20  அதிகாரம் - 3 21  அதிகாரம் - 4 25  அதிகாரம் - 5 31  அதிகாரம் - 6 43  அதிகாரம் - 7 52  அதிகாரம் - 8 54  அதிகாரம் - 9 58  அதிகாரம் - 10 61  அதிகாரம் - 11 70  அதிகாரம் - 12 76  அதிகாரம் - 13 81  அதிகாரம் - 14 91        []     சேரன் - செங்குட்டுவன்.  மு. இராகவையங்கார்  cEran cengkuTTuvan  by mu. irAkavaiyangkAr  In tamil script, unicode/utf-8 format   Acknowledgements:  Our Sincere thanks go to the Digital Library of India  for providing us with scanned images version of the work online. Etext preparation and proof-reading:  This etext was produced through Distributed Proof-reading approach.  We thank the following persons in the preparation and proof-reading of the etext:  R Arvavind, V Devarajan, Senthan Swaminathan,  K. Lakshmanan, L. Parthipan, R. Navaneethakrishnan, P. Thulasimani, N Pasupathy, V. Ramasami, Thamizhagazhvan,  Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.  © Project Madurai, 1998-2012. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation  of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.  Details of Project Madurai are available at the website  http://www.projectmadurai.org/  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.  மு. இராகவையங்கார் அவர்களின்  "சேரன் - செங்குட்டுவன்"   source:  சேரன் - செங்குட்டுவன் --- மு. இராகவையங்கார் -- 1915 1915  உரிமையுரை.   சிந்தைவரு புகழ்ச்சேரன் செங்குட்டுவன்       சரிதந் திகழு மிந்நூல் விந்தைமிகு தருமதுரை வியனகரிற்       றமிழ்ச்சங்கம் விழைந்து கூட்டிச் செந்தமிழின் வளம்பெருக்கிச் சிறியேனும்       பெருமைபெறச் செய்த வண்மைச் சுந்தரனாம் தமிழ்ப்பாண்டித் துரைக்குரிமை       யாகிநலந் துலங்க மன்னோ.             ஆக்கியோன். ----------------       PREFACE.  It does not require any very detailed statement of the reasons why a very correct knowledge and appreciation of the literature of a country are needed. For, the literature of a country is a mirror which reflects the civilisation and institutions of a country very vividly in all its stages of development. That a knowledge of the country's past and of the progress or transition is essential by way of stimulus to future progress, is conceded by all. The Tamil land owes a deep debt of gratitude to Mahamahopadhyaya V. Swaminatha Ayer; for re-introducing the great classical epics and pieces of heroic poetry, that possess in a pre-eminent degree the merits and excellences due to literary masterpieces. Of them Pathiruppatu wholly, and Silappathikaram partly, deal with the Chera dynasty of the immortal lines of Tamil Kings. The history of that dynasty is still shrouded in considerable obscurity. Any works that bear upon them, and any exposition of works that would serve to enlighten the public as regards their history and and the achievements of their Kings in peace and war, any narrative that would popularise the stories of those Kings, would meet with a sure welcome from the eager Tamil reading public.  It gives me considerable pleasure to write a short prefatory note to the work of my friend who in undertaking to write in an easy elegant and classic prose, the life and times of such of the Chera Kings as can be gleaned from the said works and from the other historical sources has rendered a public service. Mr. Pethachi Chettiar's love of Tamil, and his readiness to help Tamil writers, and institutions, are well-known to the public. And his encouragement of the author in bearing the cost of this publication is highly praiseworthy. This short work is certain to give a correct insight into the social and governmental polity of those times, and in particular those of Cheran Senguttuvan. His prowess, his knightly virtues, his generous appreciation of his rival kings, his sense of responsibilities of a king for the welfare, prosperity and progress of his subjects, and his solicitude for the same,his piety, his councils of ministers, generals and learned men, and his deference to their advice, the equipment of his army and his victorious march right up to Himalayas and his generous recognition of the heroism of his victorious troops by personally conferring on them decorations and honours on the banks of the Ganges are described by Mr. M.Raghava Ayengar in the present work in easy and interesting prose with apt quotations at intervals. The major portion of his work is based on some of the chapters of the third book of Silappathikaram.The illuminating commentary of Adiyarkunallar not being available for the Vanchikkandam of Silappathikaram,the students that seek to study that portion of the epic are sure to find instruction and guidance in the pages of this book.And it goes without saying that Silappthikaram is itself a unique work in the literature of this world; for we have no instance of a similar work in any other literature by a Royal author who had given up the worldly pursuits, and taken holy orders, and yet was called upon to compose an epic dealing with many lay and temporal institutions, pleasures, and pastimes, the lives and habits and ideals of various castes and professions,in commemorating the life of an ideally chaste and virtuous woman. Nor can we find a similar instance anywhere of a same Royal author dealing impartially with the life and times of his brother and King Senguttuvan as also those of his rival kings.The moral fervour and the aesthetic* perfection of that work are unsurpassed;and the descriptions of natural scenery are vivid and his narration of the story is entrancing. A stimulus to the study of the work and similar works is greatly added to by Mr. M. Raghava Ayengar in writing and publishing this work. His dedication of the book to the memory of the founder and first President of the Madura Tamil Sangam, while it expresses the author's gratitude for him is also appropriate in illustrating the principle for which late Mr. Pandithurai Thevar, lived and worked, namely, the popularisation and improvement of the Tamil Language and Literature. Further Mr. Pandithurai's labours in the vindication of the claims of the Tamil Language and Literature somewhat bear an analogy to the achievement of the hero of this work in vindicating the greatness of the Tamil Kings of those times. Madura T.C. SREENIVASA AYENGAR,         Secretary,  31-8-1915 The Madura Tamil Sangam -----------------------------------------------------------   முகவுரை   சேரன்-செங்குட்டுவனைப்பற்றி முன்னூல்களிற்கண்ட விஷயங்களை, நவீநமுறையில் ஆராய்ந்து ஒரு சரித்திரமாகத் தொகுத்தெழுதவேண்டும் என்பது எனது நெடுநாளவாஆகும். இச்சேரனை நான் எடுத்துக்கொண்டதற்கு இரண்டு காரணங்கள் உண்டு; முதலாவது--பண்டைத்தமிழ்வேந்தருள்ளே இவன் பெருமை பெற்றவனாதலோடு, ஏனைத் தமிழரசரினும் இவனது வரலாறு சிறிது அதிகமாகவும் காணப்பட்டது. இரண்டாவது-- என்னாராய்ச்சியிற்கண்ட சிலகருத்துக்களை வெளியிடுதற்கு இவன் சரித்திரமே ஏற்றதாயிருந்ததாகும். இவ்விருவகையாலும் நிகழ்ந்த என் சிறுவிருப்பத்தை இப்போது கைகூட்டுவித்த திருவருளைச்சிந்தித்து வந்திக்கின்றேன். இவ்வாராய்ச்சிக்குச் செங்குட்டுவனைப்பற்றிய சிலப்பதிகார வஞ்சிக்காண்டம், சிறந்த கருவியாயாயிற்று.அடியார்க்குநல்லாருரை இப்பகுதிக்குக் கிடையாதது விசனிக்கத்தக்கதாயினும், அவர்க்கும் முற்பட்ட அரும்பதவுரையொன்று வெளிவந்திருப்பது ஒருவாறு மகிழத்தக்கதே. இவ்வரும்பதவுரையைப் பெரும்பான்மை தழுவி, அக்காண்டத்தின் செய்யுணடையை இயன்றளவில் உரைநடைப்-படுத்தலானேன். செந்தமிழ்வளஞ் செறிந்துள்ள இளங்கோவடிகளது 'பழுதற்ற முத்தமிழின் பாடற் குரையின்-றெழுதத்தொடங்கினேன்" இல்லையாயினும், அவ்வடிகளது அரும்பெருங் கருத்துக்களைத் தமிழபிமானிகளெல்லாம் அறிந்து மகிழவேண்டும் என்னும் பேரவாவே இம்முயற்சியில் என்னைத்தூண்டியது.  இவ்வுரை நடையை "வடநாட்டியாத்திரை" "பத்தினிக் கடவுளைப் பிரதிஷ்டித்தல்" என்ற இரண்டதிகாரங்களாலும் அறியலாம். "வஞ்சிமாநகரம்" "செங்குட்டுவன் காலவாராய்ச்சி" என்ற விஷயங்கள் விவாதப்பட்டவையாதலால், அவற்றைப்பற்றிய என்னபிப்பிராயங்களைச் சிறிது விரித்தெழுதல் ஆவசியகமாயிற்று. இவ்வதிகாரங்களில் விவகரிக்கப்பட்ட என் கொள்கைகளை அறிஞர் சோதித்துக்கொள்வார்களாயின், தமிழ்ச்சரித்திரத்தின் முக்கியமான பகுதியொன்று முடிவு பெற்றதாகும். செங்குட்டுவனைப்பற்றி ஆராய்வதற்கு இன்றியமையாதகருவிகளெல்லாம், எவர்கள் வாயிலாக நமக்குக் கிடைத்தனவோ, அப்பெரியாரை இங்கே மறவாதுவந்தித்தல் நம் கடமையாகும். மஹாமஹோபாத்யாய-ஐயரவர்கள் நம் பாஷைக்குப் புரிந்துள்ள மஹோபகாரமன்றோ, இத்தகைய ஆராய்ச்சிகட்கெல்லாம் காரணமாகும்? இவ்வாராய்ச்சிக்கு இன்றியமையாத அகநானூற்றுக்குறிப்புக்களை உதவிய ஸேது ஸம்ஸ்தானவித்வான் ஸ்ரீ-ரா. இராகவையங்கார் அவர்கட்கு என் வந்தனங்களை ஸமர்ப்பிக்கின்றேன். இவற்றுடன் யானெழுதிய இச்சிறுநூலை அபிமானித்துத் தம்மியற்கையான உதாரகுணத்தாலும் தமிழபிமானத்தாலும் இதன் பதிப்புக்கு வேண்டிய உதவிபுரிந்த ஸ்ரீமாந். S.Rm. M. Ct. பெத்தாச்சி செட்டியாரவர்கள் பெருந்தகைமை என்னால் ஒருபொழுதும் மறக்கத்தக்கதன்று  இச்சரித்திரநாயகனான சேரர்பெருமான் வீற்றிருந்தாட்சிபுரிந்த வஞ்சிமாநகரின் பரிபாலனத்தலைமை பூண்டுள்ள இப்பிரபுவுக்கு, அவனது சரித்திர நூலை ஆதரிக்கும் உரிமையும் இயல்பிலுண்டன்றோ? இவர்கள், அறிவுதிருவாற்றல்களுடன் நீடுவாழ்ந்து தமிழ் வளர்ச்சி புரிந்துவரும்படி திருவருள்பெருகுவதாக. இச்சரித்திரநாயகனால் தெய்வமாக வணங்கப்பெற்ற பத்தினிதேவி (கண்ணகி)யின் செப்புத்திருமேனி யொன்று "லண்டன்-பிரிட்டிஷ்-மியூசிய"த்தில் இருந்ததை டாக்டர். ஆநந்தகுமாரசாமியவர்கள் பிரதிசாயையெடுத்துப் பிரசுரித்திருக்கிறார்கள்.* அப்பிரதிமை, இலங்கையினின்று 1830-ம் வருஷம் இங்கிலாந்துக்குக் கொண்டு போகப்பட்டதாம். அப்பத்தினிதேவி படிவத்துக்கு ஒரு பிரதியெடுத்து இந்நூலுட் சேர்த்திருக்கிறேன். இளங்கோவடிகள் கூறியபடி செங்குட்டுவன் காலத்தே இலங்கையிற் கயவாகுவால் பிரதிஷ்டிக்கப்பட்ட பத்தினியின் சரியான சாயலை இது காட்டுவதுபோலும். ------------ *Selected Examples of Indian Art, Plate XXXIII, Pattini Devi. சிலப்பதிகார மணிமேகலைப்பதிப்புகளில், ஐயரவர்களால் நன்கெழுதப்பட்டுள்ள கண்ணகி மணிமேகலைகளின் சரித்திரச் சுருக்கங்களைப் பெரும்பான்மை தழுவியே, "செங்குட்டுவன் காலத்து இரண்டு சரிதநிகழ்ச்சிகள்" என்ற அதிகாரம் வரையப்பட்டது. இப்பதிப்பினிறுதியிற் சேர்த்திருக்கும் அநுபந்த முதலியவைகளை நூலுடன் சேர்த்துப் படித்துக் கொள்ளுதல் முக்கியமாகும். இவற்றுள், பொருட்குறிப்பிலே சில அரும்பதங்கட்கு அருத்தங்களும் காட்டப் பட்டிருக்கின்றன. இந்நூற்பதிப்பைச் சிறப்பித்தற் குரியவற்றை யெல்லாம் அன்புடன் செய்துதவிய மதுரைத் தமிழ்ச்சங்கத்தார்க்கு என்றும் நன்றியறிதற் கடப்பாடுடையேன். இதுபோலும் சரித்திர கிரந்தங்களில் அபிப்பிராய பேதங்கள் நிகழக்கூடியது இயல்பாதலால், அறிஞர் என் குற்றங்குறைகளைப் பொறுத் தருள்வாராக. மதுரை,} இங்ஙனம், 1-2-15. } மு. இராகவையங்கார், "லெக்ஸிகன் கமிட்டி" --- தமிழ்ப்பண்டிதர். ----------------  (An Image of Kannagi precedes this text) பத்தினிதேவி ஆகிய கண்ணகி [முகவுரை பார்க்க.] --------  அதிகாரம் - 1   முன்னுரை =========   புண்ணிய பூமியாகிய இப்பரதகண்டத்துள்ள புராதன ராஜ்யங்களுள்ளே, சேர சோழ பாண்டிய நாடுகள், தக்ஷிணத்தில் விளங்கிய முக்கிய தேசங்களென்பது யாவரும் அறிந்ததே. இவ்வரசியல்களை முதன்முதல் நாட்டிய முன்னோர் இன்னாரென்றேனும், இவை தாபிக்கப்பெற்ற காலம் இஃதென்றேனும் இதுவரை எவரும் அளந்து கண்டவரல்லர். வான்மீகம் போன்ற புராதன வடமொழிக் காவியங்களிலும், அசோக சக்கரவர்த்தியதுபோன்ற ஆதி சிலாலிகிதங்களிலும் இம்மூன்று தமிழ்நாட்டாரையும் பற்றிக் கௌரவமான பிரஸ்தாபங்களே கேட்கப்படுதலால், இன்னோரது பழமையும் பெருமையும் ஐயமின்றி அறிஞர்களாற் கொள்ளப்படுகின்றன. சுருங்க உரைக்குமிடத்து, 'படைப்புக்காலந்தொட்டு மேம்பட்டுவருங் குடிகள் இம் மூவேந்தரும்' என்று பரிமேலழகியார் எழுதிய முறையே* நாமுங்கூறுதல் பொருந்து மெனலாம். இவ் வேந்தர்களாட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பு முழுதும் 'வடவேங்கடந் தென்குமரி'கட்கு இடைப்பட்டதாகும். "வண்புகழ்மூவர் தண்பொழில்வரைப்பின்" †என்றார் தொல்காப்பியனாரும். இந் நிலப்பரப்பு, தமிழ்நாடு, தமிழகம்** என வழங்கப்படும். ------------- *திருவள்ளுவர். குடிமை. 5 உரை. † தொல்காப்பியம்.பொருளதி. செய்யு.79 ** சிலப்.3.37; பதிற்றுப்.2-ம் பதிகம்; புறம்-168. இங்ஙனம் பழமையும் பெருமையும் படைத்த சேர சோழ பாண்டியர்களுள், முதற்கணுள்ளவரே இவ் வாராய்ச்சிக்கு ஏற்புடையவர். இவர்கள், சேரர் சேரலர் எனத் தமிழினும், கேரளர் என வடமொழியினும் வழங்கப்படுவர். இவ் வேந்தரது பூர்வசரித்திரமானது, ஏனைச் சோழபாண்டியருடையவைபோலவே செவ்விதின் அறியப்பட்டிலதேனும், பண்டை யிலக்கியங்களிற் கூறப்படுமளவில், இவரது அருமையும் பெருமையும் வேண்டியவளவு விளங்குகின்றன. செந்தமிழ் வளர்த்தவர் என்ற பெருமை பாண்டியர்க்குரியதாகப் பழையவழக்குள்ளதென்பது உண்மையே. ஆயினும், தற்காலத்து வெளிவந்துள்ள சங்கநூல்களை ஆராய்வோமாயின், தமிழ்வளர்த்த பெரும்புகழிற் சேரருந் தக்க பகுதி பெறுதற்குரியர் என்பதோடு, அறிவுதிருவாற்றல்களில் இன்னோர் ஏனைத் தமிழ்வேந்தர்க்குக் குறைந்தவரல்லர் என்பதும் புலப்படும். இங்ஙனம் நூல்களிற்கண்ட சேரர் பெருமையனைத்தையும் இங்கே விவரிப்பது எம் கருத்தன்று. ஆனால், இவ் வமிசத்தவருள்ளே, கடைச்சங்கநாளில் விளங்கிய பிரசித்த வேந்தனொருவனைத் தமிழறிஞரும் சரித்திர நூலோரும் சிலகாலமாக நன்கு தெரிந்திருக்கின்றனர். இவன் பெயர் சேரன் செங்குட்டுவன் என்பது. தமிழ் நாட்டின் பழைய நிலைகளை ஆராயப்புகுந்த பண்டிதர் சிலர் தமிழ்ச் சரிதவுண்மைசிலவற்றைக் கண்டு வெளியிட்டதற்குப் பேருதவியாக நின்றது, இச் சேரவேந்தனது வரலாறேயாம். அதனால், வழிதிசை தெரியாமலிருந்த தமிழ்ச்சரிதத் துறையொன்றைக் காட்டிநிற்கும் தீபஸ்தம்பமாக இச் செங்குட்டுவனைக் கூறல் தகும். இவ்வரசனது வரலாறுகளாக முன்னூல்களுட் கூறப்பட்டவற்றை ஒருசேர ஆராய்வதானால், சேரவமிசத்தின் பழைய செய்திகள் மட்டுமின்றி, தமிழ்ச் சரித்திரத்தின் முக்கியமான பகுதியையும் நம்மவர் அறிந்துகொள்ள இடமுண்டாம். ஆனால், செங்குட்டுவன் சரித்திரத்திற்குப் பழைய நூல்கள் சிலவேயன்றிச் சாஸன உதவியொன்றும் இதுவரை நமக்குக் கிடைத்திலது. இதனால் எத்துணை இலக்கியப் பிரமாணங்களைக்கொண்டு விளக்கினும், சாஸன பரிசீலனை ஒன்றேயுடையார்க்கு நம்மாராய்ச்சியில் முழு நம்பிக்கையும் உண்டாதல் அரிதேயாம். ஆயினும், பண்டை நூல்கள் ஒற்றுமையுடன் கூறுஞ்செய்திகளை மதித்துத் தழுவிக்கொள்ளுதல் ஆவசியகமென்பதை நல்லறிஞரெவரும் மறுக்கார். பழையவிலக்கியங்களிற் கண்ட சரித்திரவுண்மைகள் காலாந்தரத்திற் கிடைக்கும் சாஸனவுதவியால் வலிபெற்று வருதலை நாம் கண்டுவருதலால், சங்கச் செய்யுள்களையே முக்கிய ஆதாரமாகக்கொண்டு நிகழ்த்தப்பெறும் இவ்வாராய்ச்சியும் பயன்றரத்தக்கதென்றே நம்புகின்றோம். இனி, செங்குட்டுவனது வரலாறுகளை அறிவதற்குச் சாதனமாகக் கிடைத்துள்ள இலக்கியக்கருவிகளை நோக்குமிடத்து, அவை பெரிதும் மதிப்புக்குரியன என்பதில் ஐயமில்லை. என்னெனின், இவ் வேந்தர் பெருமானுடன் பிறந்தவரான இளங்கோவடிகள் தாமியற்றிய சிலப்பதிகாரத்தில் ஒரு காண்ட முழுதும், தம் தமையனது வாழ்க்கையின் ஒரு பகுதியைத் தாம் நேரிலறிந்தவாறு விளக்கியிருக்கின்றார். இவ்வாறு வெற்றிவேந்த னொருவன் செய்திகள் அவன் சகோதரராலே விரித்துரைக்கப்படுமாயின் நாம் அவற்றை நம்பத் தடையுமுண்டோ?  அன்றியும், அங்ஙனம் பாடியவர் தமது பெரும்பதவியையும் துறந்துநின்ற ராஜருஷியாயிருப்பது, அவரது வாக்கின் றூய்மையையே வற்புறுத்தவல்லது; "முடிகெழு வேந்தர் மூவர்க்கு முரியது - அடிகள் நீரே யருளுக" என்று, அவரது நடுநிலையைப் புகழ்ந்தனர் அவர் காலத்துப் புலவரொருவரும். இதற்கேற்ப, செங்குட்டுவன் வரலாறு பற்றிய சிலப்பதிகார வஞ்சிக்காண்டத்தைப் படித்து வருவோரெவர்க்கும் கற்பனைகள் கலவாதது அப்பகுதி-யென்பதும் விளங்கத் தடையில்லை. இனி, செங்குட்டுவனாலும் இளங்கோவடிகளாலும் நன்குமதிக்கப்பெற்றவரும் புலவர் பெருமானுமாகிய சாத்தனாரால் இயற்றப்பெற்ற மணிமேகலை யென்னும் நூலினும், இளங்கோவடிகள் கூறியவற்றோடொத்த செய்திகள் பல காணப்படுகின்றன. இவற்றுடன், பழைய புலவர் பலரால் சேரவரசர் பெருமைகள் புகழ்ந்து கூறப்பட்ட பதிற்றுப்பத்து என்னுந் தொகைநூலுள், பரணர் பாடிய ஐந்தாம்பத்துமுழுமையும் இச்சேரனைப்பற்றி அமைந்துள்ளது. இப்பத்தினை, அப்புலவர்பெருமான் செங்குட்டுவன் முன்னர்ப்பாடி, அவனால் மிகுதியும் சம்மானிக்கப்பெற்றவர் என்பது, அதனிறுதி வாக்கியங்களால் தெளிவாகின்றது. ஆகவே, இவ் வாராய்ச்சிக்குச் சிலப்பதிகாரம், மணிமேகலை, பதிற்றுப்பத்து என்பவை சிறந்த சாதனங்களாகும். இவையன்றிச் சங்கச் செய்யுள்கள் சிலவும் வேறு புறக்கருவிகளும் உரியவளவில் உபகாரப்படுவன. இங்ஙனங் கிடைத்துள்ள சாதனங்களைக்கொண்டு செங்குட்டுவன் வரலாற்றையும், அவன் முன்னோரைப் பற்றிய செய்திகளையும், அவன் காலத்து அரசர் புலவர் சரிதங்களையும், மற்றும் பல நிகழ்ச்சி நிலைமைகளையும் இனி விரித்துக்கூற முயல்வோம். -----------------------------------------------------------                                           அதிகாரம் - 2   சேரவமிசத்தோர். ~~~~~~~~~~~~~ செந்தமிழ்வேந்தர் மூவருள்ளே, செங்குட்டுவன் பிறந்த சேரவமிசத்தின் ஆதியுற்பத்தி எதனிலிருந்து தொடங்கியது என்பதை அறிதல் இப்போது அரிதாகும். சோழர் சூரிய வமிசத்தவராகவும்* பாண்டியர் சந்திரவமிசத்தவராகவும்† பண்டைநூல்களிற் கூறப்பட்டிருத்தல்போல, சேரவரசர் இன்னமரபினரென்பதை நூல்கள் தெளிவு படுத்தினவல்ல. பிற்காலத்தோர் இவ்வேந்தரை அக்கினிகுலத்தவராக வழங்கினரேனும், அக்கொள்கைக்குப் பழைய தமிழாதாரங் கிடையாதிருத்தல் வியப்பாயுள்ளது.‡ ஆயினும், இவரை வானவர் என்ற பெயராற் பண்டை நூல்களும் நிகண்டுகளும் குறிக்கின்றன. இதனால், இவ்வமிசம் ஆதியில் தெய்வ சம்பந்தம் பெற்றதென்ற மட்டில் தெளிவாகும்.§ சோழபாண்டியர் வமிசங்களின்ன என்பதைக் குறித்துப்போந்த பண்டை நூல்கள், சேரவமிசத்தின்மூலத்தைமட்டும் அறியாதொழிந்ததை நோக்குமிடத்து, அம்மரபு ஏனையவற்றினும் புராதனமான தென்றே புலப்படுகின்றது. ---------- *மணிமேகலை. பதிகம்.9. †சிலப்பதிகாரம்.11.23. ‡சோழபாண்டியரை, சந்திரவமிசத்து யயாதிவழியிலுதித்த ஒரு கிளையினராக ஹரிவம்சம் கூறுமென்பர். ஆனால் இதற்குப் பண்டைத் தமிழாதாரம் காணப்பட-வில்லை. § வானவர் (Celestials) என்றபெயர் சீனர்க்கு இன்றும் வழங்கி வருதலால், சேரர் ஆதியில் சீனதேசத்தினின்று வந்தவராக ஸ்ரீ.வி. கனகசபைப் பிள்ளையவர்கள் கருதினர். (The Tamils 1800-yearsago.) இக் கொள்கையை வலியுறுத்தும் மற்றொரு குறிப்புமுண்டு. அஃதாவது, வழக்கிலுள்ள 'சேர சோழ பாண்டியர்' என்னுந்தொடரில் சேரர் முற்படக் கூறப்படுதலேயாம். இங்ஙனங் கூறுவது, உலகவழக்கின் மட்டுமன்றிச் செய்யுள் வழக்கிலும் அடிப்பட்ட-தொன்றாகும். புறநானூறு தொகுத்த புலவர் மூவேந்தருட் சேரரைப்பற்றிய பாடல்களை முதலிலும், ஏனையிருவர் பாடல்களைப் பின்னரும் வைத்து முறைப்படுத்திருத்தலும், சிறுபாணாற்றுப் படையுள்ளும் இங்ஙனமே குட்டுவன் (சேரன்), செழியன், செம்பியன் என்னுமுறை கூறப்படுதலும்* இங்கு ஆராயத்தக்கன. "போந்தை வேம்பே யாரென வரூஉ - மாபெருந் தானையர்"† என, இச்சேரர்மாலையினையே முதற்கண் ஓதுவாராயினர் தொல்காப்பியரும். மேற்காட்டியவற்றுள், சேர பாண்டிய சோழர் என்னும் முறைவைப்புக் காணப்படினும், சேரரை முன்னோரெல்லாம் முதற்கண் வைத்துக் கூறுவதில் ஒத்திருத்தல் குறிப்பிடற்பாலதாம். ---- * அடி-49,65,82. †தொல்காப்பியம். பொருளதி.புறத்.5 இனி, இச்சேரரது நாடுமூரும் புராதன வடநூல்களினும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன. ஆதிகாவியமாகிய வான்மீகராமாயணத்தே, சீதா பிராட்டியை வானரவீரர் தேடிவரும்படி, சுக்ரீவன் குறிப்பிட்ட இடங்களுள், கேரள நாடும், முரசீபத்தனமும் கூறப்படுகின்றன. இவற்றுள், முரசீபத்தன மென்பது‡ மேல்கடற்கரையிலுள்ள முசிரி என்னும் பட்டினமாகக் கருதப்படுகின்றது.  ---------  ‡ கிஷ்கிந்தாகாண்டம் 43-ம் சர்க்கம்.12-ம் சுலோகம். இது, முற்காலத்தே சுள்ளியென்னும் பேரியாறு கடலுடன் கலக்குமிடத்து விளங்கிய பெருந் துறைமுகமாகவும், சேரருடைய தலைநகரங்களுள் ஒன்றாகவும் இருந்ததென்றும், மேனாட்டு யவனரது மரக்கலங்கள் மிளகு முதலிய பண்டங்களை ஏற்றிச்செல்வதற்கு இதுவே அக்காலத்தில் ஏற்ற நகராயி யிருந்ததென்றும் தமிழ்நூல்களாலும் தாலமி முதலிய பழைய யவனாசிரியர் குறிப்புகளாலுந் தெளிவாகின்றன.* ஆகவே சேரநாட்டையும், அதன் முக்கிய நகரமொன்றையும் வான்மீகிமுனிவருங் குறிப்பிட்டமை காண்க. இனி, மற்றொரு புராதன இதிகாசமாகிய மஹாபாரதத்தும் சேரர் செய்திகளை நாம் காணலாம். பாரதப்போரில், பாண்டவர் பக்கத்தினின்று சேரர் துணைபுரிந்தனரெனப் பொதுவாக அவ்விதிகாசத்தால் அறியப்படினும், உதியஞ்சேரல் என்பான் அப்பெரும்போர் முடியுங்காறும் பாண்டவ சேனைக்கு உணவளித்தவ-னென்று தமிழ்நூல்களிற் சிறப்பித்துக் கூறப்படுகின்றான். இதனைச் தலைச்சங்கப் புலவராகக் கருதப்படும் முரஞ்சியூர் முடிநாகராயர் என்பவர். "அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை யீரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்." ** என அவ்வரசனை நேரிற் பாடுதலால் அறிக.  ----------- * அகநானூறு.149. இதனை மரீசிபத்தனம் என்பர், வமிகிரர் பிரஹத்ஸம்ஹிதை  ** புறநானூறு.2. இச்செய்தியையே இளங்கோவடிகள்-- "ஓரைவ ரீரைம் பதின்ம ருடன்றெழுந்த போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த - சேரன்" --- சிலப்பதிகார வாழ்த்துக்காதை. ஊசல் வரி. எனவும், மாமூலனார் என்ற புலவர்— "மறப்படைக் குதிரை மாறா மைந்திற் றுறக்கமெய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ் சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை" (அகநானூறு.233) எனவும் கூறுவாராயினர். இனிச் சாஸனவழியே நோக்குமிடத்தும், இச்சேரவமிசத்தின் பழமை தெளியப்படும். இற்றைக்கு 2150- வருஷங்கட்குமுன் விளங்கியவனும் மௌரிய சக்கரவர்த்தியுமாகிய அசோகன் காலத்தே இவ்வமிசத்தவர் கேரளபுத்திரர் என வழங்கப்பெற்றுத் தென்னாட்டில் பிரபலம் பெற்றிருந்த செய்தி அவன் சாஸனத்தால் நன்கறிந்தது. † (†V.A. Smith's Early History of India. p.173)இச்சக்கரவர்த்தியின் குடைக்கீழ் இப்பரதகண்டத்தின் பெரும்பாகம் அடங்கியிருந்த காலத்தும், தமிழ்நாடு தனியே சுதந்தரம் பெற்றிருந்ததெனின், சேரர் முதலிய பழைய தமிழரசரின் பெருமை இத்தகைத்தென்பது கூறவும் வேண்டுமோ? இனி, இவற்றை விடுத்துச் சங்கச்செய்யுள்களிற் கூறப்பட்ட சேரவரசரை நோக்குவோம். பதிற்றுப்பத்து, புறநானூறு முதலிய நூல்களிலே சேரவரசர் பலரைக் காணலாம்.இவற்றுட் பதிற்றுப்பத்து முழுமையும் சேரவமிசத்தவரைப் பற்றியதென்பது முன்னரே கூறப்பட்டது. இதுவரை காணப்படாத இதன் முதலும் இறுதியுமாகிய பகுதிகள் நீங்க ஏனையெட்டுப் பத்துக்கள் மஹாமஹோபாத்தியாய: ஸ்ரீ உ.வே. சாமிநாத ஐயரவர்களால் நன்கு ஆராயப்பெற்று நமக்குக் கிடைத்துள்ளன.  ஒவ்வொரு பத்தும் ஒவ்வொரு சேரனது அருமைபெருமைகளைக் கூறுவதாய், ஓரொரு புலவராற் பாடப்பெற்றதாம். இப்பத்துக்கள் ஒவ்வொன்றன் முடிவிலும் பதிகங்களும் வாக்கியங்களும் இந்நூலைத் தொகுத்த புலவரால் அமைக்கப்பட்டுள்ளன. தொகுத்த புலவர் இன்னாரென்று தெரியவில்லையேனும் பழமையுடையவராகவே தோற்றுகின்றார். இவர் கூற்றாகவுள்ள பதிகங்களும் வாக்கியங்களும் அவ்வச்சேரனைப் பற்றிய செய்திகள் பலவற்றை அறிவிப்பதோடு, பாடினார் பெயர்முதலிய வரலாறுகளையும்,அப்புலவர் பெற்ற பரிசில்களையும், பாடல்பெற்ற அரசனது ஆட்சிக்காலங்களையும் நன்கு விளக்குவன. இந்நூலிற்கண்ட விஷயங்களால், செங்குட்டுவனுள்ளாகச் சேரர் எண்மர் வரலாறுகளைச் சுருக்கமாகத் தெரியலாம். அவர்களை அடியில் வருமாறு காண்க. (1) இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் (2) பல்யானைச் செல்கெழுகுட்டுவன் (3) களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல். (4) கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன். (5) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன். (6) செல்வக் கடுங்கோ வாழியாதன். (7) பெருஞ்சேர லிரும்பொறை (8) இளஞ்சேர லிரும்பொறை ----------------------------------------------------------- சேரன் செங்குட்டுவன் தந்தையும் அவன் மாற்றாந்தாய்ச் சகோதரரும். ------------------------------------------------ மேற்கூறிய சேரர்கட்கும் செங்குட்டுவனுக்கு முள்ள தொடர்பை இனி ஆராய்வோம். செங்குட்டுவனைப் பற்றிய ஐந்தாம் பத்துப்* பதிகத்துள், அவன், "வடவருட்கும் வான்றோய் நல்லிசைக் - குடவர் கோமான் நெடுஞ் சேரலாதனுக்கு" மகன் என்று கூறப்படுகின்றான். இதனால் இரண்டாம்பத்திற் புகழப்படும் இமயவரம்பன் – நெடுஞ்சேரலாதனே நம் சேரன் தந்தை என்பது விளங்கும். "ஆரியர் துவன்றிய பேரிசை யிமயந் - தென்னங் குமரியொ டாயிடை, மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே" † என இவனது வடதிசை வெற்றியை அவ்விரண்டாம்பத்தே கூறுதல் காண்க. செங்குட்டுவன் உடன்பிறந்தவரான இளங்கோவடிகள், இமயம் வரை வெற்றிப்புகழ் பரப்பிய தம் தந்தை செயலை, "குமரியொடு வடவிமயத் – தொரு மொழிவைத்- துலகாண்ட சேரலாதற்கு" எனக் கூறுதலும் இங்கு அறியத் தக்கது. --------- * இங்ஙனங் குறிக்குமிடமெல்லாம், பதிற்றுப் பத்தினையே கொள்க.  †பதிற்றுப். 1. இந்நெடுஞ்சேரலாதன், உதியஞ்சேரலென்ற வேந்தனுக்கு வெளியன் வேண்மான்‡ மகள் நல்லினியிடம் பிறந்தவன். இவனது அரிய செயல்களாவன:--இமயம்வரை படையெடுத்துச் சென்று அம்மலைமேல் தன் இலாஞ்சனையாகிய வில்லைப் பொறித்தது; தமிழக முழுமையுந் தன் செங்கோலின் கீழ் வைத்தாண்டது; தன்னுடன் பொருத ஆரியவரசரை வென்றுஅவரை வணங்கச் செய்தது; யவன அரசரைப் போரிற்பிடித்து, அக்காலவழக்கின்படி, நெய்யை அவர்தலையிற்பெய்து கையைப் பின்கட்டாககக் கட்டி, அவரிடத்தினின்று விலையுயர்ந்த அணிகளையும்  வயிரங்களையும் தண்டமாகப்பெற்று, அவற்றைத் தன் தலை ந‌கராகிய வஞ்சியிலுள்ளார்க்கு உதவியது; கடலிடையே தீவொன்றில் வசித்த தன் பகைவர் மேற் கப்பற்படையுடன் சென்று, அவரது காவன்மரமான கடம்பை வெட்டியெறிந்து, அப்பகைவரைப் போர்தொலைத்தது முதலியனவாம்*.  -----  ‡"வீரைவேண்மான் வெளியன் தித்தன்" எனப்படுமவன் இவன் போலும். (தொல். பொருளதி. 114 உரை) * பதிற்றுப்பத்து 2-ம் பதிகம் இவற்றுள், இறுதியிற் கண்ட சேரலாதன்பகைவர், கடம்பைத் தம் குலமரமாகக் கொண்டு, மைசூர்தேசத்தின் மேல்பாலை ஆண்ட கதம்ப வேந்தராகக் கருதப்படுகின்றனர். (Mysore and Coog from the Inscriptions. 21. இக்கடம் பெறிந்த அரிய செயலைச் செங்குட்டுவன் காலத்தவரான மாமூலனார் என்ற புலவரும்,  "வலம்படு முரசிற் சேரலாதன் முந்நீ ரோட்டிக் கடம்பறுத் திமயத்து முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து நன்னகர் மாந்தை முற்றத் தொன்னார் பணிதிறை தந்த பாடுசால் நன்கலம். (அகநானூறு 127) எனக் கூறுதல்காண்க. இச்சேரலாதனை 2-ம் பத்தாற்பாடிய அந்தணரான குமட்டூர்க் கண்ணனார், இவனால் உம்பற்காட்டில் ஐந்நூறூர் பிரமதாயமும் (அந்தணர்க்கு இறையிலியாக விடப்படுவது.) தென்னாட்டு வருவாயிற் பாகமும் பெற்றனர். இவ்வேந்தன் 58-வருஷம் வீற்றிருந்தான்.(பதிற்றுப்பத்தின் 2-ம் பதிகத்து வாக்கியம்.) இனிச் சேரலாதர் இருவராகக்கொண்டு, இமயவரம்பனும் செங்குட்டுவன் தந்தையும் வேறுவேறாவர் என்று கருதற்குச் சிறந்த சான்றொன்றும் காணப்பட்டிலது.* இந் நெடுஞ்சேரலாதனுக்குத் தம்பியாக விளங்கியவன், பல்யானைச் செல்கழு குட்டுவன் என்பவன்; எனவே, செங்குட்டுவனுக்கு இவன் சிறியதந்தை என்பது தானே விளங்கும். இச்செல்கழு குட்டுவனை 3-ம்பத்தாற்பாடிய பாலைக் கௌதமனார் வேண்டுகோளின்படி, இவன் பத்துப் பெருவேள்விகளை நடப்பிக்க, முடிவில் அப் பார்ப்பனப்புலவரும் அவர் மனைவியுஞ் சுவர்க்கம்புக்கனர் எனப்படுகின்றது; இங்ஙனம் சுவர்க்கம்புக்க வரலாறு மலைநாட்டில் இன்றுங் கன்னபரம் பரையில் வழங்குவதென்பர்.† இவ்வேந்தன் வீரனும் ஞானியுமாக இருபத்தையாண்டு வீற்றிருந்தான்..‡ இனி, இமயவரம்பனுக்கு மனைவியர் இருவராவர்; இவருள் ஒருத்தி சோழன் - மணக்கிள்ளியின் மகளாகிய நற்சோணை என்பாள். இந் நற்சோணையிடம் பிறந்த மக்களே, செங்குட்டுவனும் இளங்கோவடிகளும்; "நெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளியீன்ற மகன்"§ "சேரலாதற்குச் சோழன் மகள் நற்சோணையீன்ற மக்களிருவருள்"* எனப்படுதல் காண்க.  ------- *செங்குட்டுவனை அவன் சகோதரர் - "மாநீர் வேலிக் கடம்பறுத்திமயத்து, வானவர் மருள மலைவிற் பூட்டிய, வானவர் தோன்றல்" என்று கூறுதலாலும் (சிலப். காட்சிக். 1-3) அங்ஙனங் கடம்பறுத்த இமயவரம்பன் மகனே நம் சேரன் என்பது உணரப்படும். † பதிற்றுப்பத்துப் பதிப்பில் மஹாமஹோபாத்தியாயர் ஐயரவர்கள் எழுதிய நூலாசிரியர்வரலாறு பார்க்க. சிலப்.23, 63-64; பழ மொழி.316 ‡ பதிற்றுப்.3-ம் பதிகம். § ௸. 5-ம் பதிகம். இனி, நெடுஞ்சேரலாதனுடைய மற்றொரு மனைவி, வேளாவிக் கோமானான பதுமன் என்பவன் மகள். இவளிடம் அச் சேரனுக்குப் பிறந்த மக்கள், களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுமாவர்.† இவருள், முன்னவன், முடிசூடுஞ் சமயத்தில் முடித்தற்குரிய கண்ணியுங்கிரீடமும் பகைவர் கவர்ந்ததனால் உதவாமைபற்றி, அவற்றுக்குப் பிரதியாகக் களங்காயாற் கண்ணியும் நாரால் முடியுஞ்செய்து புனைந்து கொண்டமையின் 'களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்' என்னும் பெயர் பெற்றான்.‡ இச்சேரனுக்குப் பெரும்பகைவனாகி அவனாட்டைக் கவர்ந்தவன், கடம்பின் பெருவாயில் என்ற ஊர்க்குரிய நன்னன் என்பவன். இவனை, மேற்றிசையிலுள்ள வாகைப் பெருந்துறை என்னுமிடத்தில் நடந்த பெரும்போரிற் கொன்று, தானிழந்த நாட்டை இவ்வேந்தன் திரும்பப்பெற்றான் என்று கல்லாடனார் கூறுவர். # இங்ஙனம் இவன்பெற்றது பூழிநாடென்பது, "பூழிநாட்டைப் படையெடுத்துத்தழீஇ" என இவன் பதிகங் கூறுதலினின்று புலப்படுகின்றது ---------------- * சிலப்பதிகாரப் பதிகம், அடியார்க்கு நல்லாருரை. † 4, 6-ம் பத்துப் பதிகங்கள். ‡ பதிற்றுப்பத்து. 38-உரை # "குடாஅது, இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவிற், பொலம்பூ ணன்னன் பொருதுகளத் தொழிய, வலம்படுகொற்றந் தந்த வாய்வாட், களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், இழந்தநாடு தந்தன்ன" (அகநானூறு. 199) ----  இவனை 4-ம் பத்தாற்பாடிய புலவர் காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் அந்தணர். இவர் இவனைப்பாடி, 40-நூறாயிரங் காணமும்* அவனாட்டிற் பாகமும் பரிசுபெற்றார். இச்சேரல் இருபத்தைந்தாண்டு வீற்றிருந்தான்.† இந்நார்முடிச் சேரலின் தம்பியாகிய சேரலாதன் செங்கோற்பெருமையாற் சிறந்தவன். இவனது வீரச்செயல்களிலே, தண்டாரணியத்திலுள்ளரால்‡ கவரப்பட்ட பசுநிரைகளை மீட்டுத் தொண்டியிற் கொணர்ந்துசேர்ப்பித்ததே முக்கியமானது. இதுபற்றியே 'ஆடுகோட்பாட்டுச்சேரலாதன்' எனப்பட்டான். இவ்வேந்தன் தன்னை 6-ம் பத்தாற்பாடிய காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்னும் பெண்புலவர்க்கு, அணிகலன் செய்துகொள்வதற்காக ஒன்பது காப்§பொன்னும் நூறாயிரங் காணமுங்கொடுத்து அவரைத் தன் ஆஸ்தானத்தில் வைத்துக்கொண்டு அபிமானித்தனன். இச்சேரலாதன் முப்பத்தெட்டாண்டு வீற்றிருந்தவன். $ இனி, பதிற்றுப்பத்துத் தொகுத்த புலவர் நார்முடிச் சேரலைப்பற்றிய பகுதியை நான்காவதாகவும், அவன் தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதனது பகுதியை ஆறாவதாகவும் வைத்து, இடையிற் செங்குட்டுவனைப் பற்றியதை அமைத்திருக்கின்றார். ------- * இது, சேரரின் பழைய நாணயமாகப் பதிற்றுப்பத்துப் பதிகங்களால் தெரிகிறது. மலைநாட்டில் 3-கழஞ்சு அல்லது 1 1/2 பணம், காணம் என இப்போது வழங்குகின்றது. (Dr.Gundert's Malayalam Dictionary) † 4-ம் பத்துப்பதிகம். ‡தண்டாரணியம் - ஆரிய நாட்டிலுள்ளதோர் நாடு. இஃது இப்போது பம்பாய் மாகாணத்தைச் சார்ந்ததாகும். (Dr. Bhandarkar's History of Dekkan. p. 136) § கா - ஒரு பழைய நிறை. $ 6-பத்துப் பதிகம். இதனால், நார்முடிச்சேரல் செங்குட்டுவனுக்கு முற்பட்டவனாகவும், அவன் தம்பி சிறிது பிற்பட்டவனாகவுங்கருத இடமுண்டாகின்றது. காலமுறையில் வைத்தே, பதிற்றுப்பத்துத் தொகுக்கப்பட்டிருத்தலை அதனுட்கண்ட பதிகங்களாலும் வாக்கியங்களாலும் உய்த்துணரலாகும். சேரன் செங்குட்டுவனது 5-ம் பதிகத்தால் அவன் தாய்ப்பாட்டனாகத் தெரியும் மணக்கிள்ளி, உறையூரிலிருந்தாட்சி புரிந்த சோழனாவன். செங்குட்டுவன் மாற்றாந்தாயைப் பெற்றவனாக 4, 6-ம் பதிகங்கள் கூறும் வேளாவிக்கோமான் பதுமன்என்பவன் பொதினிமலைக்குரிய* ஆவியர்குலத்தோன்றல். இவ்வேளாவியின் பெயரால் வஞ்சியின்புறத்தே ஒரு மாளிகை அமைக்கப்பட்டிருந்ததென்று தெரிகின்றது.† -------------- * பொதினி என்பது பழனியின் பழைய பெயர். இவ்வாவியர் இதனை-யாண்டமைபற்றியே, இஃது ஆவிநன்குடி என வழங்கப்பெற்றது. இவ்வாவியர்குடியில் உதித்தவருள், வள்ளலான பெரும்பேகனும் ஒருவன். (யாமெழுதிய வேளிர் வரலாறு பார்க்க) † சிலப்பதிகாரம். 28: 196-8; புறநானூறு. 13. ----------------  சேரரின் மற்றொரு கிளையினர். இனி, பதிற்றுப்பத்தின் இறுதிமூன்று பத்துக்களாற் புகழப்பட்ட அரசர், சேரமரபின் மற்றொரு கிளையினராகத் தோற்றுகின்றனர். அந்துவஞ்சேரல் இரும்பொறை என்பவன் இம்மரபின் தலைவன் என்பதும், இவன் மகன் செல்வக் கடுங்கோ வாழியாதனென்பதும் 6-ம்பத்துப்பதிகத்தால் அறியப்படும். இவ்வந்துவஞ்சேரல், முடித்தலைக்கோப் பெருநற்கிள்ளி என்ற சோழனுக்குப் பகைவன்.(புறநானூறு 13) இச் சேரன் மகனான செல்வக்கடுங்கோ, பெருங்கொடையாலும் அருங்குணங்களாலும் பெயர்பெற்றவன்; திருமால் பத்தியிற் சிறந்து விளங்கியோன்.('மாயவண்ணனை மனனுறப்பெற்று' என இவன்பதிகங் கூறுதல் காண்க.)  கபிலர் என்னும் புலவர் பெருமான் தம் உயிர்த்துணைவனாக விளங்கிய வேள் - பாரி உயிர்நீத்ததும், அப்பாரியின் உத்தமகுணங்கள் பலவும் இச் செல்வக்கடுங்கோவிடம் உள்ளனவாகக் கேள்வியுற்று இவனைக் காணச்சென்று ஏழாம்பத்தை இச்சேரன்முன் பாடினர். (இவ்வேழாம்பத்தின் முதற்பாட்டில், இச்செய்தியைக் கபிலரே கூறுதல் காணலாம்.) அவர் பாடலைக்கேட்ட செல்வக்கடுங்கோ அவ்வந்தணப் பெரியார்க்குச் சிறுபுறமாக (சிறுபுறம்-சிறுகொடை) நூறாயிரங் காணம் அளித்ததோடு,நன்றா என்னுங்குன்றில் தானும் அவரும் ஏறிநின்று தன் கண்ணிற்கண்ட நாடெல்லாங்காட்டி அப்புலவர்க்-களித்தான். (7-ம் பத்துப்பதிக வாக்கியம்.) இவ்வருங்கொடையை "நனவிற்பாடிய நல்லிசைக் - கபிலன் பெற்ற ஊரினும் பலவே" எனப் பிற்காலத்தவரும் புகழ்தல் காண்க.(பதிற்றுப். 85) இவன் மனைவி (நெடுஞ்சேரலாதற்கு மகட்கொடுத்த) வேளாவிக் கோமானுடைய மற்றொரு மகளாவள்.(8-ம் பதிகம்) ஆகவே, நெடுஞ்சேரலாதனும் செல்வக்கடுங்கோவும் சகலமுறையினரென்பது விளங்கும். இவ்வேந்தர்பிரான் இருபத்தைந்தாண்டு வீற்றிருந்தவன்.(7-ம் பதிகவிறுதி). இவன் சிக்கற்பள்ளி என்னுமிடத்திற் காலஞ்சென்றவனென்று தெரிகின்றது.(புறநானூறு 387) இச் செல்வக்கடுங்கோவுக்குப் பிறந்த வீரமகன் பெருஞ்சேரலிரும்பொறை என்பான். இவன் அதியமானது தகடூர் மேற்படையெடுத்துச் சென்று பெரும்போர் புரிந்து, அவ்வூரையும் அவ்வதியமானையும் அழித்தனன். இப் போர்ச்செயலே தகடூர் யாத்திரை(இதனுட் சில பாடல்கள், தொல்காப்பியவுரை, புறத்திரட்டு முதலியவற்றிற் காணப்படுவதன்றி, நூன்முழுதும் இதுவரை வெளிவரவில்லை.) என்னும் பண்டைநூலிற் சிறப்பித்துக் கூறப்படுவது. இவ் வெற்றிபற்றித் 'தகடூரெறிந்த’ என்னும் அடையுடன் இவன் வழங்கப்படுவன். இப்பெருஞ்சேரலை 8-ம்பத்தாற் புகழ்ந்தவர் அரிசில் கிழார் என்ற புலவர்பெருமான்.இவர் பாடல்களைக்கேட்டு மகிழ்ந்த இச்சேரன், தானுந்தன் மனைவியும் வெளியே வந்துநின்று 'தன் கோயிலிலுள்ளனவெல்லாம் கொள்க’ என்று ஒன்பதுநூறாயிரங் காணத்தோடு தன் அரசுக் கட்டிலையும் (சிங்காதனம்.) புலவர்க்குக் கொடுப்ப, அவர் 'யானிரப்ப நீ யாள்க’ என்று அவற்றைத் திரும்பக்கொடுத்து அவ்வரசனுக்கு அமைச்சுப் பூண்டார். இச்சேரன் பதினேழாண்டு வீற்றிருந்தான்.(8-ம்பத்துப் பதிகம்.) இப்பெருஞ்சேரற்கு மனைவியாகிய அந்துவஞ்செள்ளை வயிற்றில் உதித்தவன் இளஞ்சேரலிரும்பொறை என்பான். இவன், தன்னை 9-ம்பத்தாற்பாடிய பெருங்குன்றூர் கிழார்க்கு "மருளில்லார்க்கு மருளக் கொடுக்க" என்று உவகையின் முப்பத்தீராயிரங் காணங்கொடுத்து, அவரறியாமை ஊருமனையும் வளமிகப்படைத்து,ஏருமின்பமும் இயல்வரப் பரப்பி, எண்ணற்காகா அருங்கல வெறுக்கையொடு, பன்னீராயிரம் பாற்படவகுத்துக், காப்புமறந்தான் விட்டான்" என்று கூறப்பட்டுளது.($ 9-ம்பத்துப் பதிகம்.)  இங்ஙனமாகப் புலமையைக் கௌரவித்த அரசர் முற்காலத்தே வேறெவருங் காணப்பட்டிலர்.[** பெருங்குன்றூர்க்கிழார் இவ்வேந்தனைப் பாடியனவாகப் புறநானூற்றிற் காணப்படும் 210, 211-ம் பாடல்களால், அப்புலவரை நெடுங்காலங் காக்கும்படிவைத்துப் பின் ஒன்றுங்கொடாமலே இவ்வேந்தன் அனுப்ப, அதுபற்றி மனமுடைந்துசென்றனர் புலவர் என்பது தெரிகின்றது. இதனால், பெருங்குன்றூர் கிழாரது நல்வாழ்வுக்கு வேண்டியவனைத்தையும் அவரூரில் அவரறியாமலே அமைத்து வைத்துப் பின்னர் வெறுங்கையோடு அவரைவிடுத்தனன் இப்பெருஞ்சேரல் என்பது உய்த்துணரப்படுகின்றது. இச்சரிதம்போலப் பிற்காலத்து வழங்குவது சத்திமுற்றப் புலவர் என்பவர் வரலாறொன்றேயாம்.)] இவ்விளஞ்சேரல் பதினாறாண்டு வீற்றிருந்தவன். இனி, இவ்விளஞ் சேரலின் முன்னோருள், மாந்தரன்('அறன்வாழ்த்த நற்சாண்ட, விறன்மாந்தரன் விறன்மருக’ எனக்காண்க. (பதிற். 90.))என்பவனும், கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலிரும்பொறை என்பவனும் பிரசித்தர்களாகக் காணப்படுகின்றனர்.இவருள் முன்னவனே 'மாந்தரம் பொறையன் கடுங்கோ’எனப் பரணராலும் பாடப்பட்டவனாதல் வேண்டும்.(அகம். 142.)மற்றொருவனாகிய கோப்பெருஞ்சேர லிரும்பொறையை நரிவெரூஉத்தலையார் என்ற புலவர் கண்டதும் அவர் தம் பழைய நல்லுடம்பு பெற்றனர் எனப்படுகின்றது.(புறம். 5)மேற்குறித்த மாந்தரனின் வேறாக, யானைக்கட் சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை என்பவனொருவன் புலவனும் வள்ளலும் போர்வீரனுமாக நூல்களால் அறியப்படுகின்றான். இவன் கபிலர் காலத்திற்குச் சிறிது பிற்பட்டிருந்தவன்.(புறம். 53.) ஐங்குறுநூறு இவனால் தொகுப்பிக்கப்பெற்ற தென்பர். இவன் மேற்குறித்த இளஞ்சேரலிரும்பொறைக்குத் தம்பி அல்லது மகன் போன்ற சமீபித்த உறவினன் போலும்.  இவர்களன்றிப் பிற்காலத்தில் கணைக்காலிரும்பொறை (புறம் 74. களவழி நாற்பது என்னுஞ் சிறுநூல், இவ் விரும்பொறைக்கும் சோழன் செங்கணானுக்கும் நிகழ்ந்த கழுமலப்போரைப்பற்றிப் பொய்கையாராற் பாடப்பெற்றது.) என்பவனொருவனும் இவர் வழியில் ஆண்டனன். இவரையெல்லாம் இரும்பொறை மரபினர் என்று நாம் கூறுதல் தகும். செங்குட்டுவன், இவ்விரும்பொறைமரபின் முன்னோருள் ஒருவனாகவும் கூறப்படுதலால்,+ ('கடலிருப்ப வேலிட்டும்' என்பது செங்குட்டுவன் செய்தியாகும். (பதிற். 90)) இம்மரபினரும் நம் சேரன்மரபினரும் நெருங்கிய தாயத்தார் என்பது தெளிவாகின்றது.  ------------- இரும்பொறை மரபினர். 1. மாந்தரம் பொறையன் கடுங்கோ 2. கருவூரேறிய ஒள்வாட் கோப் பெருஞ்சேர லிரும்பொறை. 3. அந்துவஞ் சேர லிரும்பொறை. 4. செல்வக் கடுங்கோ வாழியாதன் X பதுமன்றேவி. 5. தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை X அந்துவஞ் செள்ளை. 6. இளஞ்சேர லிரும்பொறை. 7. யானைக்கட் சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை. 8. கணைக்கா லிரும்பொறை. மேற்குறித்தவர் அல்லாத வேறுசில சேரவரசரும் புறநானூறு முதலிய சங்கச்-செய்யுள்களிற் காணப்படுகின்றாராயினும், அவர்கட்கும் செங்குட்டுவனுக்குமுள்ள தொடர்பு விளங்கவில்லை. இனி, இமயவரம்பன் பெருந்தேவியரிடம் பிறந்த மக்களும், இரும்பொறைமரபினரும் சேரநாட்டில் வேறுவேறு தலைநகரங்களில் ஆட்சிபுரிந்தவர்கள். இம்முறையில், கருவூராகிய வஞ்சிமாநகரம் செங்குட்டுவனுக்குத் தலைமைநகராக விளங்க, மாந்தையென்பது நார்முடிச்சேரலுக்கும், தொண்டி இரும்பொறை மரபினர்க்கும் இராஜதானிகளாகவிருந்தன எனத் தெரிகின்றது. மாந்தையுந் தொண்டியும் சேரதேசத்தின் முக்கிய நகரங்கள் என்பது, "சேரலாதன் ... நன்னகர் மாந்தை முற்றத்து" (அகம் 127) "குட்டுவன் மாந்தை"(தொல். பொரு. 107 உரை.) எனவும்,"குட்டுவன் தொண்டி" எனவும் நூல்கள் கூறுதலால் அறியலாம். இவ்விரண்டு தலைநகரங்களும் கடற்கரையில் அமைந்தவை. (கடல்கெழு மாந்தை" (தொல். பொரு. 150 உரை) "கானலந்தொண்டி" (புறம் 48) எனக் காண்க இவற்றுள், தொண்டி என்பது முற்காலத்தே பலதேச மரக்கலங்கள் வந்துதங்கும் பெருந்துறைமுகமாக விளங்கிய தென்பது, முன்னூல்களாலும்,தாலமி(Ptolemy)முதலிய யவனாசிரியது குறிப்புக்களாலும் அறியப்படுகின்றது. இப்போது, அகலப்புழையையடுத்துள்ள தொண்டிப்பாயில் என்னுஞ் சிற்றூரைப் பழைய தொண்டியாகக் கருதுவர்.) மேற்கூறிப்போந்த சேரமரபினரெல்லாம் அறிவுதிருவாற்றல்களால் தங்காலத்தே ஒப்புயர்வற்று விளங்கியவரென்பதும் செந்தமிழ்வளர்ச்சி செய்ததில் இன்னோரே அக்காலத்துச் சிறந்து நின்றவரென்பதும் நன்கு வெளியாதல் காண்க. செங்குட்டுவன் சகோதரர். செங்குட்டுவன் தந்தையாகிய நெடுஞ்சேரலாதன், வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி என்னுஞ் சோழனுடன் பெரும்போர் புரிந்தபோது, அவ்விருவருமே போர்க்களத்தில் ஒருங்கிறந்தனர் என்பது, அவர்களிறந்துகிடந்த நிலையை நேரிற்கண்டு கழாத்தலையாரும் பரணரும் உருகிப்பாடிய பாடல்களால் தெரியவருகின்றது. (புறநானூறு 62, 63.)இந் நெடுஞ்சேரலாதன் 58-ஆண்டு வீற்றிருந்தவன். இவன் பேராற்றலுடன் விளங்கியதற்கேற்ப, இவன் மகன் செங்குட்டுவனும் பெருவீரனாய் அவனது சிங்காதனத்துக்கு உரியவனாயினான். நெடுஞ்சேரலாதன் சிவபிரான் திருவருளை நோற்றுச் செங்குட்டுவனைப் பெற்றவனென்பது உய்த்துணரப்-படுகின்றது.(சிலப்பதிகாரம் 26; 98-99. 30; 141-142) இவன் அரசாட்சிபெற்றதில் விசேடச் செய்தியொன்றுஞ் சொல்லப்பட்டுள்ளது. நெடுஞ்சேரலாதனுக்குச் செங்குட்டுவனுடன் இளங்கோ ஒருவனும் பிறந்திருந்தனன். இவ்விளங்கோ,பேரறிவும் உத்தமகுணங்களும் வாய்ந்தவன். ஒருநாள் பேரத்தாணியில் மன்னர்கள் புடைசூழ, நெடுஞ்சேரலாதன் தன் மக்களிருவருடனும் வீற்றிருந்தபோது, நிகழ்வது கூறவல்ல நிமித்திகனொருவன் அம் மண்டபத்தை அடைந்து,அரசனையும், அவன் மக்களையும் அடிமுதன் முடிவரை நோக்கி- "வேந்தர் வேந்தே! இனி நீ விண்ணுலகு செல்லுங்காலம் நெருங்கியது; நீ தாங்கியுள்ள செங்கோலை நின் மக்களிருவருள் இளையோனே வகித்தற்குரியனாவன்" என்று பலருமறியக் கூறினான்.  இதுகேட்ட மூத்தவனான செங்குட்டுவன் மனமுளைந்து நிற்க, அஃதறிந்த இளங்கோ, அந்நிமித்திகன் முறைமைகெடச் சொன்னதற்காக அவனைவெகுண்டு தந் தமையன்கொண்ட மனக்கவலைநீங்கும்படி அவ்வத்தாணிக்கண்ணே அரசாளுரிமையை முனிந்து துறவுபூண்டு,வீட்டுலகத்தை ஆளற்குரிய பெருவேந்தராய் விளங்கினர்-என்பதாம். கருவிலே திருவுடையராயிருந்தும் இளமையில் தாம் துறவுபூணும்படி நேர்ந்ததைத் தம் அழகிய வாக்கால் இவ் விளங்கோவே கூறியிருத்தல் அறிந்து மகிழற்பாலது. செங்குட்டுவனுடன் பத்தினிக்கடவுளை வழிபட்டுத் திரும்பும்போது, தேவந்தியின்மேல் அக்கடவுள் ஆவேசித்துத் தம்மைநோக்கிக் கூறியதாக இவ்வடிகள் கூறுவதாவது:- "வேள்விச் சாலையில் வேந்தன் பெயர்ந்தபின் யானுஞ் சென்றேன், என்னெதி ரெழுந்து தேவந் திகைமேற் றிகழ்ந்து தோன்றி 'வஞ்சி மூதூர் மணிமண் டபத்திடை நுந்தை தாணிழ லிருந்தோய்! நின்னை அரசுவீற் றிருக்குந் திருப்பொறி யுண்டென்று உரைசெய் தவன்மே லுருத்து நோக்கிக் கொங்கவிழ் நழுந்தார்க் கொடித்தேர்த் தானைச் செங்குட் டுவன்றன் செல்லல் நீங்கப் பகல்செல் வாயிற் படியோர் தம்முன் அகலிடப் பாரம் அகல நீக்கிச் சிந்தை செல்லாச் சேணெடுந் தூரத்து அந்தமி லின்பத் தரசாள் வேந்து'என என்றிற முரைத்தஇமையோ ரிளங்கொடி"(சிலப்பதிகாரம் 30: 170-183.) என்பது. இவ்வரலாற்றையே அடியார்க்குநல்லார் சிலப்பதிகாரப் பதிகவுரையிற் சிறிது விரித்துக்கூறினர்.  இவற்றால், செங்குட்டுவன் பட்டமெய்துவதற்கு முன்பு நிகழ்ந்த இளங்கோவின் துறவுவரலாறு வெளியாம். இங்ஙனம் துறவு பூண்ட பின், இளங்கோவடிகள் என வழங்கப்பெற்று, வஞ்சிமாநகரின் கீழ்பாலுள்ள 'குணவாயிற் கோட்டம்' என்றவிடத்தில் வசித்து வந்தனர்.('குணவாயிற் கோட்டத் தரசுதுறந் திருந்த-குடக்கோச் சேரல்இளங்கோவடிகட்கு' என்பது பதிகம்.) இவர், பெருந் துறவியாக இருந்தது மட்டுமன்றி, அக்காலத்திருந்த உத்தம கவிகளுள் ஒருவராகவும் விளங்கினர். தமிழைம்பெருங் காவியங்களுள் ஒன்றாகச் சிறப்பிக்கப்படும் சிலப்பதிகாரம் இவ்வடிகள் இயற்றியதென்பதையும், அதன் சொற்பொருள்வளங்களையும் அறிந்து வியவாத அறிஞருமுளரோ? இந்நூலை அடிகள் பாடுதற்குக் கருவியாக நின்ற பெரும்புலவர், மதுரைக்கூலவாணிகன் சாத்தனார்(இவர் வரலாற்றை 'இருபெரும் புலவர்' என்னும் இந்நூற்பகுதியுட் காண்க.) என்பவர். இப்புலவரைத் தலைமையாகக்கொண்ட அவைக்கண்ணே அடிகள் தம் நூலை அரங்கேற்றினர்.("உரைசா லடிக ளருள மதுரைக்-கூலவாணிகன் சாத்தன் கேட்டனன்." (சிலப்-பதி.88-9)) அவ்வச் சமயநிலைகளையும், தமிழ்மூவேந்தர் பெருமைகளையும் நடுநிலைபிறழாது கூறிச்செல்வதிலும் இயற்கைச் சிறப்புக்களை எடுத்துமொழிவதிலும், உலகத்தின் தர்மங்களை உணர்த்துவதிலும் இவ்வடிகட்கிருந்த பேராற்றல் மிகவும் வியக்கற்பாலது. இவ்வடிகள் ஜைநமதத்திற் பற்றுள்ளவராகவே இவரது வாக்கின் போக்கால் உய்த்துணரப் படுமாயினும்,வைதிக சமயத்தவராகக் கருதற்குரிய சான்றுகளுமுள்ளன.  எங்ஙனமாயினும், மதாந்தரங்களில் அபிமானமும் ஆழ்ந்த ஆராய்ச்சியுமிக்கவர் இவ்வடிகள் என்பதில் ஐயமில்லை.மற்றும் இவர் அருமை பெருமைகள் இந்நூலில் உரியவிடங்களிற் கூறியுள்ளோம். ---------------  செங்குட்டுவன் மனைவிமக்கள் முதலியோர். சேரன் - செங்குட்டுவனுடைய கோப்பெருந்தேவியாக விளங்கியவள் இளங்கோவேண்மாள் என்பாள். " இளங்கோவேண்மா ளுடனிருந் தருளி" (சிலப்பதிகாரம். 25,5)"வதுவைவேண்மாள் மங்கல மடந்தை"(சிலப்பதிகாரம் 28:51) எனச் சிலப்பதிகாரம் குறிப்பது காண்க. இதனால், இப்பெருந்தேவி வேளிர் குலத்தவள் என்பது பெறப்படும். இவளொருத்தியையன்றி வேறு மனைவியரைச் செங்குட்டுவன் மணந்திருந்தவனாகத் தெரியவில்லை. (இளங்கோ வேண்மாள் என்ற பெயரால் இவளை இளைய மனைவியாகக் கருதக்கூடுமேனும், செங்குட்டுவற்கு மூத்தமனைவியொருத்தி இருந்ததாக இளங்கோவடிகள் உரியவிடங்களிலும் உணர்த்தாமையால், அவ்வாறு துணியக்கூடவில்லை. ஒருகால் மூத்தவளிருந்து இறந்தனளாக, அடுத்துமணம் புரியப்பெற்ற இவள் இங்ஙனம் வழங்கப் பெற்றாள்போலும்.) செங்குட்டுவனுக்குக் குட்டுவஞ்சேரல் (குட்டுவஞ்சேரல்-(செங்)குட்டுவனுக்கு மகனாகிய சேரல் எனப்பொருள்படும்.) என்னும் பெயர்பூண்ட மகனொருவனிருந்தனன்.  பரணரென்னும் புலவர் பெருமான் ஐந்தாம் பத்தால் தன்னைப் பாடியதுகேட்டு மகிழ்ந்த செங்குட்டுவன், அவ்வந்தணர்க்குப் பெரும்பொருளோடு, இக்குட்டுவஞ்சேரலையும் பரிசாக அளித்தானென்று அப் பத்தின் இறுதிவாக்கியங் கூறுகின்றது. இங்ஙனம் 'மகனைப் பரிசளித்தான்’ என்பது, பரணரிடங் கற்று வல்லனாம்படி அவனைக் குருகுலவாசஞ் செய்ய நியமித்ததைக் குறிப்பதுபோலும். இக் குட்டுவஞ்சேரல் மேற்குறித்த கோப்பெருந்தேவியிடம் பிறந்தவனாதல் வேண்டும். இம்மகன் பட்டம் பெற்ற பின்னர்,முற்காலமுறைப்படி வேறுபெயரும் இவனுக்கு வழங்கியிருத்தல் கூடும். ஒருகால், சோழன் பெருநற்கிள்ளி, பாண்டியன் உக்கிரப்பெருவழுதி--இவருடன் நட்புப்பூண்டிருந்த சேரமான் மாவெண்கோ என்பவன்,(புறநானூறு--367.) இக்குட்டுவஞ்சேரலோ என்று கருதுதற்கும் இடமுண்டு. செங்குட்டுவன் தாயுடன் பிறந்த அம்மான் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்பவனென்றும், அவ் வம்மானுக்கு மகன் சோழன்-இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியென்றும் புலப்படுகின்றன. இதற்குற்ற காரணங்களைச் "செங்குட்டுவன் காலத்தரசர்" என்ற அதிகாரத்துள் விளக்கியுள்ளோம்.இவ்வாறு பண்டைநூல்களாற் றெரிந்தவளவிற் செங்குட்டுவன் சுற்றத்தாரைப் பின்னர் வருமாறு தொகுத்துக் காட்டலாம். இவரைப்பற்றிய விவரங்களை ஆங்காங்கு அறிந்துகொள்க. -------------  [செங்குட்டுவன். ... ... சுற்றத்தார்.] 1. தந்தையைப்பெற்ற பாட்டன் -- உதியஞ்சேரல். 2. தந்தையைப்பெற்ற பாட்டி -- வேண்மாள் நல்லினி. 3. தந்தை -- இமயவரம்பன்-நெடுஞ்சேரலாதன். 4. தாய் -- நற்சோணை. 5. இளைய சகோதரர் -- இளங்கோவடிகள். 6. மனைவி -- இளங்கோவேண்மாள். 7. மகன் -- குட்டுவஞ்சேரல். 8. சிறியதந்தை -- பல்யானைச் செல்கெழு குட்டுவன். 9. தாய்ப்பாட்டன் -- சோழன் மணக்கிள்ளி. 10. அம்மான் -- காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி. 11. அம்மான் சேய் -- இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி. 12. மாற்றாந்தாய் -- பதுமன்றேவி. 13. மாற்றாந்தாய் வயிற்றுச் சகோதரர் -- நார்முடிச்சேரல்.  ஆடுகோட்பாட்டுச் சேரலாதன். 14. மாற்றாந்தாய்ப் பாட்டன் -- வேளாவிக்கோமான் பதுமன். 15. தாயத்தார் -- இரும்பொறை மரபினர். -----------------------------------------------------------    அதிகாரம் - 3   செங்குட்டுவன் போர்ச்செயல்கள் நெடுஞ்சேரலாதன் விண்ணுலகஞ் சென்றபோது செங்குட்டுவனுக்கு உத்தேசம் 20-வயது கொள்ளலாம். ஆயின்,55-ஆண்டு செங்குட்டுவன் வீற்றிருந்ததாகப் பதிற்றுப்பத்துக் கூறுதலால், குறைந்தது 35-வருஷகாலம் இவன் ஆட்சி செய்தவனாதல் வேண்டும். இந்நீடித்த ஆட்சியில் நிகழ்ந்த இவன் செய்திகள் முழுதுந் தெரியக் கூடவில்லை. ஆயினும்,சிலப்பதிகாரமும் பதிற்றுப்பத்தும், இவனால் நிகழ்த்தப்பட்ட அருஞ்செயல்கள் சிலவற்றைக் குறித்திருக்கின்றன.அவற்றிற்கண்ட செங்குட்டுவன் வீரச்செயல்களிலே சிறப்புடையவை அடியில் வருவனவாம். 1. தன் தாயின்பொருட்டுச் சமைத்த படிமத்தைக் கங்கைநீராட்டச் சென்றபோது, ஆங்கெதிர்த்த ஆரியவரசருடன் நடத்திய போர். 2. கொங்கர் செங்களத்து நடத்திய போர் 3. கடல்வழியே சென்று நடத்திய போர் 4. பழையன் மாறனுடன் நடத்திய போர் 5. ஒன்பது சோழருடன் நடத்திய போர் என்பன. இப்போர்களிற் சில, இன்னகாரணம்பற்ரி நிகழ்ந்தன என்ற விவரத்தைச் செங்குட்டுவன் சகோதரரே விளக்கின ஆயினும் முன்னூல்களின் குறிப்புக்கொண்டு அடியில்வருமாறு அறிதற்பாலன;  இப்போர்களுள்-- (1) செங்குட்டுவன் தாயான நற்சோணை இறந்தபோது,அவள்பொருட்டுச் சமைத்த பத்தினிக்கல்லை(சககமனஞ்செய்த பத்தினியினுருவம் வரைந்த சிலை; இதனை, மாஸ்திகல் என்பர், கன்னடநாட்டார்.) நீராட்டித் தூய்மை செய்தற்குச் சென்ற கங்காயாத்திரையில், ஆரியவரசர் பலர் திரண்டுவந்து செங்குட்டுவனை எதிர்த்துப் பெரும்போர் விளைத்தனரென்றும், அவரையெல்லாம் அப்பேராற்றங் கரையில் இச்சேரன் தனியனாகப்பொருது வெற்றி கொண்டனனென்றும் தெரிகின்றன. இதனை, "கங்கைப் பேர்யாற்றுக் கடும்புன னீத்தம் எங்கோ மகளை யாட்டிய வந்நாள் ஆரிய மன்ன ரீரைஞ் ஞூற்றுவர்க்கு ஒருநீ யாகிய செருவெங் கோலங் கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம்." (சிலப். 25: 160-64) என்னும் இளங்கோவடிகள் வாக்கால் அறிக. செங்குட்டுவன் தந்தை நெடுஞ்சேரலாதன், முற்கூறியபடி பெருநற்கிள்ளியுடன் பொருது இறந்தபோது, அவன் மனைவியும் செங்குட்டுவன் தாயுமாகிய நற்சோணை உடனுயிர்நீத்தனள் என்பது, புறநானூற்றின் 63-ம் பாடலாற் புலப்படுகின்றது.இங்ஙனம் சககமனஞ்செய்த தாயின்பொருட்டுச் செங்குட்டுவன் பத்தினிக்கல் அமைத்தனன் போலும். இங்ஙனமன்றாயின்,தனிமையாக இறக்கும் மகளிர்க்குப் பத்தினிக்கல் எடுத்தல் சிறவாதாகும். இவ்வாறு, தாயின் படிமத்தை நீராட்டச் சென்றபோது, கங்கைக்கரையில் செங்குட்டுவன் நிகழ்த்திய இவ்வரியசெயல் அவனது கன்னிப்போர்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. (2) இனிக் கொங்கர் செங்களத்தே செங்குட்டுவன் ஒரு போர் நடத்தியதாகத் தெரிகிறது. இதனில், சோழபாண்டியருஞ்சேர்ந்து எதிர்த்தனரென்றும், அவரது கொடி படைகளையெல்லாம் கைக்கொண்டு, அப்போரில் யாவரும் புகழத்தக்க பெரிய வெற்றியைச் செங்குட்டுவன் பெற்றனனென்றும் சில‌ப்பதிகாரங் கூறுகிறது. "நும்போல் வேந்தர் நும்மோ டிகலிக் கொங்கர்செங் களத்துக் கொடுவரிக் கயற்கொடி பகைப்புறத்துத் தந்தன ராயினு மாங்கவை திசைமுக வேழத்தின் செவியகம் புக்கன." (சிலப்.25: 152-55) எனக்காண்க. கொடுகூர் என்ற நகரம் இக்கொங்கர் போரிலே செங்குட்டுவனால் அழிபட்டதாகும். "கொடுகூரெறிந்து" என்பது பதிற்றுப்பத்து. கொடுகூர் நாடு என்பதொன்று, இப்போது மைசூரிராஜ்யத்தின் தென்பகுதியாகிய பன்னாடு விஷயத்தின் ஒரு பிரிவாகவும், சேரமானுக்குரிய பூமியாகவும் இருந்ததென்று பழையசாஸனமொன்று(இரவிதத்தனது குமாரலிங்க சாஸனம். இக்கொடுகூர் நாடு சேரனுக்குரியதாயிருந்ததென்பது,மேற்படிஇரவிதத்தன் என்றசிற்றரசன்,சேரன் அநுமதிபெற்றுப் பிராமணனொருவனுக்கு அந்நாட்டிலுள்ள கிராமமொன்றைத் தானஞ்செய்தான் என்பதனால் அறியப்படும்.( Indian Antiquary.Vol.XVIII, 1889.p.367.)) கூறுகிறது. இக் கொடுகூர்நாட்டின் தலைநகரே சேரனால் அழிக்கப்பட்டதாதல் வேண்டும். (3). இனிப் பரணரென்ற புலவர் பெருமான் பாடிய ஐந்தாம்பத்தில் மிகுதியாகப் பாராட்டப்படும் செங்குட்டுவன் வீரச்செயல்கள், அவன் கடலில் சைந்நியங்களைச் செலுத்தியதும் பழையனென்பவனை அழித்ததுமாம்.  இவற்றுள் முதற்செயல், கடலை அரணாகக்கொண்டு இடர்விளைத்த பகையரசரை, எண்ணிறந்த மரக்கலங்கள்மூலம் படையெடுத்துச் சென்று வெற்றிகொண்டதைக் குறிக்கின்றது. "இனியா ருளரோ முன்னு மில்லை வயங்குமணி யிமைப்பின் வேலிடுபு முழங்குதிரைப்பனிக்கடல் மறுத்திசி னோரே." (45) " கோடுநரல் பவ்வங் கலங்க வேலிட் டுடைதிரைப் பரப்பிற் படுகட லோட்டிய வெல்புகழ்க்குட்டுவன். " (46)  "கெடலரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்குக் கடலொ டுழந்த பனித்துறைப் பரதவ." (48)  எனப் பதிற்றுப்பத்தினும், "படைநிலா விலங்குங் கடன்மரு டானை மட்டவிழ் தெரியன் மறப்போர்க் குட்டுவன் பொருமுரண் பொறாது விலங்குசினஞ்சிறந்து செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி ஓங்குதிரைப் பௌவ நீங்க வோட்டிய நீர்மா ணெஃக நிறுத்துச்சென் றழுந்தக் கூர்மத னழியரோ நெஞ்சே. " (212) என அகநானூற்றினும் வரும் பரணர் வாக்குக்களால், செய்தற்கரிய கடற்போரொன்று செங்குட்டுவனால் நிகழ்த்தப்பட்டமை தெளியப்படும். இளங்கோவடிகள், "நெடங்கட லோட்டி, உடற்றுமேல் வந்த வாரியமன்னரைக் கடும்புனற் கங்கைப் பேர்யாற்று வென்றோய். " (28;119-21) "மறத்துறை முடித்த வாய்வாட் டானையொடு பொங்கிரும் பரப்பிற் கடல்பிறக் கோட்டிக் கங்கைப் பேர்யாற் றுக்கரை போகிய செங்குட்டுவன்." (சிலப். இறுதிக்கட்டுரை.) என, கடலோட்டிய செய்தியோடுசேர்த்து ஆரியரை வெற்றி கொண்டதை இருமுறை இணைத்துக் கூறுதலால், செங்குட்டுவன், தன் தாயின் படிமத்தை நீராட்டுதற்குக் கங்காயாத்திரை செய்தபோது, இங்ஙனம் பகை வென்றவனாகவே தோற்றுகிறது. கடலிற்செய்த இவ்வருஞ்செயல்பற்றியே "சேரமான் கடலோட்டிய வேல் கெழுகுட்டுவன்" (புறம்-369.) "கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன்"(பதிற்றுப்பத்து 5-ம் பத்துப்பதிகம்) என இவ்வேந்தன் புகழப்படுகின்றான்.இவனது கடற்படையெடுப்பில், தனக்குச் சிறந்த வேலையேற்றிக் கலங்களைச் செலுத்தி, தன்னுள் வாழ்வார்க்கு அரணாயிருந்த கடல்வலியை அழித்தமையால், மேற்குறித்த பெயர்கள் வழங்கலாயின என்க.(பதிற்றுப்பத்து 5-ம் பத்துப்பதிகம் 45, 46, உரை காண்க.) இவன் தந்தை நெடுஞ்சேரலாதனும் இங்ஙனமே கடனடுவிலிருந்த தன் பகைவர் மேற் படையெடுத்துச் சென்று வென்ற செய்தி முன்னரே குறிக்கப்பட்டது.(இந்நூல் வேறு பக்கங்காண்க) இனி, இளங்கோவடிகள், "கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர் பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர் வடவா ரீயரொடு வண்டமிழ் மயக்கத்துன் கடமலை வேட்டமென் கட்புலம் பிரியாது." (சிலப். 25:156-59) என்று கூறிய செய்தி, இப்போருடன் தொடர்புடையதோ அன்றித் தனியானதோ தெரிந்திலது.  இதனால், தன் காலத்தரசர் பலர்க்குப் பேரச்சம்விளைத்த பெருவீரனாக விளங்கியவன் செங்குட்டுவன் என்பது பெறப்படும். (4) இனிச் செங்குட்டுவனது வெற்றிப்புகழ்க் கேதுவாகிய மற்றொரு போர், பழையன் என்பானுடன் நிகழ்ந்ததாகும்.பழையன் என்பவன் பாண்டியன் படைத்தலைவனாகிய பெருவீரன். இவன் மோகூர் என்னும் ஊருக்குரியவன்; "பழையன் மோகூ ரவையகம்" என்பது மதுரைக்காஞ்சி. இப்பழையனை "மோகூர்" எனவும் வழங்குவர்;"மொய்வளஞ் செருக்கி மொசிந்துவரு மோகூர்" (பதிற்றுப்பத்து.44)"மோகூர் பணியாமையின்" (அகம். 251) எனக் காண்க. மோரியவரசர் திக்குவிசயஞ் செய்துகொண்டு தென்றிசை நோக்கி வந்தபோது, இப்ப‌ழையன் அவர்க்குப் பணியாமையால், அவர்க்கும் இவனுக்கும் பொதியமலைப் பக்கத்தே போர் நிகழ்ந்ததென்று தெரிகிறது. செங்குட்டுவன் இப்பழையனுடன் பகைமை பூண்டு போர்புரிந்தது,நெடுந்தூரத்திருந்த தன் நட்பரசனாகிய அறுகை என்பவனுக்கு இப்பழையன் பகைவனாயிருந்தமையால், அந் நண்பனுக்கு உதவி செய்வற்காகவே என்பது, "நுண்கொடி யுழிஞை வெல்போ ரறுகை சேண னாயினுங் கேளென மொழிந்து புலம்பெயர்ந் தொளித்த களையாப் பூசற் கரண்கடா வுறீஇ யணங்கு நிகழ்ந்தன்ன மோகூர் மன்னன் முரசங் கொண்டு." என்னும் பரணர்வாக்கால் அறியப்படுகிறது. ஈண்டு அறுகையெனப்பட்டவன் மோரியவமிசத்துதித்த அரசன் போலும்.செங்குட்டுவன் நிகழ்த்திய இப்பெரும்போரில், பழையனது.  காவன் மரமாகிய வேம்பினைத் துண்டந்துண்டங்களாகத் தறிப்பித்து, அப்பழையன் யானைகளையே கடாவாகவும், அவன் மகளிரது கூந்தலை அறுத்துத்திரித்து அதனைய் கயிறாகவுங் கொண்டு வண்டியிலிழுப்பித்தனன் எனக் கூறப்பட்டுள்ளது. (பதிற்றுப்பத்து. 44) இப்போரைப்பற்றி, இளங்கோவடிகளும், "பழையன் காக்குங் குழைபயி னெடுங்கோட்டு வேம்புமுதல் தடிந்த ஏந்துவாள் வலத்துப் போந்தைக் கண்ணிப் பொறைய" ( சிலப்.27.124-26.) என்று கூறினார். (5) இனி, கடற்கரையிலுள்ள வியலூரை ஒருபோரிற் செங்குட்டுவன் எறிந்தனனென்றும், இதனையடுத்து நேரிவாயிலிற் சோழமன்னரொன்பதின்மரை அழித்ததோடு, இடும்பாதவனத்தும் (இது, சோழநாட்டில் திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ளதும், தேவாரப்பாடல் பெற்றதுமான இடும்பாவனம் என்ற தலம் போலும்.) வெற்றி பெற்றனனென்றும் சிலப்பதிகாரங்குறிக்கின்றது. "சிறுகுர னெய்தல் வியலூ ரெறிந்தபின் ஆர்புனை தெரிய லொன்பது மன்னரை நேரிவாயில் நிலைச் செரு வென்று நெடுந்தேர்த் தானையொ டிடும்பிற் புறத்திறுத்துக் கொடும்போர் கடந்து." (சிலப்.28:115-19.) இவற்றுள் ஒன்பதுமன்னரென்றது,சோழர்குடியிற் பிறந்த இளங்கோவேந்தர் ஒன்பதினமரை. செங்குட்டுவனுக்கு அம்மானாகிய சோழன் இறந்ததும், அவன்மகனும் தன் மைத்துனனுமாகிய, இளஞ்சோழன் பட்டத்தை அடைந்த காலத்தே, அதுபொறாமல் பெருங்கலகம் விளைத்துச் சோணாட்டை அலைத்து நின்ற சோழவமிசத்தவர் ஒன்பதின்மரை உறையூர்க்குத் தென்பக்கத்துள்ள நேரிவாயில் (நேரிவாயில் – உறையூர்த் தெற்கில் வாயிலதோர் ஊர்' என்றார்.சிலப்பதிகார அரும்பதவுரைகாரர் (பக்-73).  இப்பெயர் கொண்ட ஊர், உறையூரைச் சூழ்ந்த நாட்டுக்குப் பிற்காலத்து வழங்கிய பெயராகிய க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டைச் சார்ந்திருந்த தென்பது, "க்ஷத்திரியசிகாமணி வளநாட்டுப் பனையூர்நாட்டு நேர்வாயிலுடையான்... வானவன் பல்லவ தரையன்" என்னும் சாஸனப்பகுதியால் விளங்கும். (South Indian Inscriptions. Vol.III.No.21)) என்ற ஊரில் நிகழ்ந்த போரிலே ஒருபகலிற்கொன்று, தன் மைத்துனச் சோழனைப் பட்டத்தில் நிறுவினன் செங்குட்டுவன். தன் தமையனது இவ்வரியசெயலை வியந்து:- "மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பின ரொன்பது மன்னர் இளவரசு பொறாஅர் ஏவல் கேளார் வளநா டழிக்கு மாண்பின ராதலின் ஒன்பது குடையு மொருபக லொழித்தவன் பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்." (சிலப்.27:118-23) என இளங்கோவடிகளே கூறுதல் காண்க. "ஆராத் திருவிற் சோழர்குடிக் குரியோர் - ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத்திறுத்து" என்றார் பதிற்றுப்பத்தினும். செங்குட்டுவன் மைத்துனனாகிய இவ்விளஞ்சோழன் பெயர் பெருங்கிள்ளி யென்பது சிலப்பதிகாரத்து உரைபெறு கட்டுரையாற் புலப்படும்.(இவனைப் பெருநற்கிள்ளி என்பர், அடியார்க்கு நல்லார்.(சிலப்.பக்.32)) இன்னும் இதன் விரிவை 'செங்குட்டுவன் காலத்தரசர்' என்ற பகுதியிற் காண்க. இவ் வரலாறுகளால்,செங்குட்டுவ னிகழ்த்திய போர்களிற்சில பொதுவாக ஒருவாறு அறியப்படுதல் கண்டுகொள்ளலாம். --------------------------------  அதிகாரம் - 4   செங்குட்டுவன் காலத்து இரண்டு சரித நிகழ்ச்சிகள் செங்குட்டுவனது நீடித்த ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த விசேடங்களுள்ளே, இரண்டு சரிதங்கள் முக்கியமானவை. அவை, கோவலன் கண்ணகிகளைப் பற்றியதும், கோவலனுடைய கணிகைமகள் மணிமேகலையைப் பற்றியதுமாம். இவ்விருவர் சரிதங்களில், முன்னதைச் செங்குட்டுவன் சகோதரரான இளங்கோவடிகள் சிலப்பதிகாரமென்ற காவியத்தாலும், பின்னதை அவ்வடிகள் காலத்துப் புலவராகிய மதுரைக் கூல வாணிகன் சாத்தனார் மணிமேகலையென்ற காவியத்தாலும் மிக வழகாகப் பாடியிருக்கின்றனர். இவ்விரண்டு நூல்களும் அகவற்பாவில் தனித்தனி முப்பது காதைகளுடையனவாக அமைந்துள்ளன. இவற்றிற்கண்ட அவ்விருவர் சரித்திரச் சுருக்கங்களும் அடியில் வருமாறு:- I. கோவலன் கண்ணகிகள் வரலாறு சோணாட்டில், காவிரி கடலொடு கலக்குமிடத்தமைந்ததும் சோழரது பழைய இராஜதானியுமாகிய புகார் என்ற காவிரிப்பூம்பட்டினத்தில், வணிகர் தலைவனாகிய மாசாத்துவான் என்பவன் தன்மகன் கோவலனுக்கு, மாநாய்கன் என்ற வணிகன் மகள் கண்ணகியை மணம்புரிவித்துத் தனிமாளிகையில் அவர்களை வாழ்ந்து வரும்படி செய்ய, அவர்களும் அறவோர்க்களித்தல் அநதணரோம்பல் முதலிய தருமங்களைச் செய்து இல்லறத்தை இனிது நடத்தி வந்தனர்.  இங்ஙனம் நிகழ்ந்துவருங்கால், மிக்க அழகும் ஆடல் பாடல்களிற் றேர்ச்சியுமுடைய மாதவி என்னும் நாடகக் கணிகையைக் கோவலன் காதலுற்று, தன்பாலுள்ள பொருள்களை நாளும் அவள் பொருட்டுச் செலவிட்டு அவளுடன் மகிழ்ந்து வருவானாயினன். கண்ணகி தன் கணவனது பிரிவுக்கு வருந்தினளாயினும், அதனை வெளிக்காட்டாதிருந்தாள். இங்ஙனம் நிகழ, சோழர்கள் இந்திரன் பொருட்டு ஆண்டுதோறும் நடத்தும் இந்திர விழாவானது அக்காலத்து நடைபெற்றது. அதன்முடிவில் நகரத்துள்ளார், வழக்கம்போலத் தத்தம் பரிவாரங்களுடன் கடலாடுதற்குச் சென்றனர். கோவலனும் மாதவியுடன் கடற்கரையடைந்து ஓரிடத்திருந்து பலவகைப் பாடல்ளைப் பாடிக்கொண்டு வீணையை எடுத்து வாசித்தான். அவன் பாடியவை, வெவ்வேறு அகப்பொருட்சுவை தழுவியிருந்தமையால், மாதவி, ' இவன் வேறு மகளிர்பால் விருப்புடையன் போலும்' என்றெண்ணிப்புலந்து, அவன் கையாழை வாங்கித், தான் வேறுகுறிப்பில்லாதவளாயினும், அக் குறிப்புக்கொண்ட அகப்பொருட்சுவை தழுவிய பாட்டுக்களைப் பாடிக்கொண்டு வீணையை வாசித்தனள். அவள் பாடியவற்றைக் கேட்டிருந்த கோவலன் ' வேறொருவன்மேற் காதல்கொண்டு இவள் பாடினள்' என்றெண்ணி, ஊழ்வசத்தால் அவளைத் துறந்து தன் மனையடைந்து கண்ணகியைக் கண்டு, " பொய்யை மெய்யாகக் காட்டியொழுகும் பரத்தையை மருவி வறுமையுற்றுக் கெட்டேன்; அஃது எனக்கு மிகவும் நாணைத்தருகின்றது" என்றான்.  கண்ணகி, ' மாதவிக்கு மேலுங்கொடுக்கப் பொருளின்மையால் இங்ஙனம் கவல்கின்றான்' என்று கருதி,' அடியேனிடத்து இரண்டு சிலம்புகள் உள்ளன: அவற்றைக் கொண்டருள்க' என்றாள். இதுகேட்ட கோவலன், ' ஆயின் மதுரையடைந்து அச்சிலம்பையே முதலாகக்கொண்டு வாணிகஞ்செய்து பொருள்தேட எண்ணுகின்றேன்; நீயும் உடன்வருக' என்றான்.இதற்குக் கண்ணகியும் சம்மதிக்க,அவ்விரவின் கடையாமத்தே ஒருவருமறியாவகை அவ்விருவரும் புறப்பட்டுக் காவிரியின் வடகரை வழியே சென்று,ஆங்கொரு சோலையில் மதுரைக்குப் புறப்படச் சித்தமாயிருந்த கௌந்தியடிகள் என்ற ஜைநசந்யாஸிநியுடன் கூடிப்பிரயாணஞ் செய்துகொண்டு உறையூர் வந்து சேர்ந்தார்கள். இங்ஙனம் வந்தவர்கள், மறுநாள் அவ்வூரினின்று புறப்பட்டு இடைவழியிலெதிர்ப்பட்ட அந்தணனொருவனால் மதுரைக்கு மார்க்கந் தெரிந்துகொண்டு அப்பாற் சென்றனர். செல்கையில், காலைக்கடன் கழிப்பதற்காகக் கோவலன் ஒரு பொய்கைக்கரையை அடைந்துநிற்க, ஆங்குத் தன் நாடகக் கணிகையால் விடுக்கப்பட்டுத் தன்னைத் தேடிவந்த கௌசிகன் என்ற பார்ப்பனனைக்கண்டு, தன் தந்தைதாயரின் துயரங்களையும் மாதவியின் பிரிவாற்றாமையையும் அவன் சொல்லக்கேட்டு வருந்தி, தான் புறப்பட்ட காரணத்தைத் தன் பெற்றோர்க்குக்கூறித் தன் வந்தனங்களையும் தெரிவிக்கும்படி சொல்லி, அவனை யனுப்பிவிட்டு, முன் போலவே கௌந்தியடிகளுடன் பிரயாணமாகி மதுரையை நெருங்கி, வையையாற்றைத் தொழுது படகேறி, அந்நகரின் மதிற்புறத்துள்ள ஜைனமுனிவரிருக்கையில் அவ்வடிகளுடன் தங்கினான். மறுநாட்காலையில், கோவலன் கௌந்தியடிகளை வணங்கித் தன் துன்பங்களைக்கூறி வருத்தமடைய, அவளால் தேற்றப்பட்டு, கண்ணகியை அவ்வடிகள் பார்வையில் வைத்துப்பின், வாணிகஞ்செய்தற்குரிய இடமறிந்து வரும்பொருட்டு மதுரையினுள்ளே பிரவேசித்து அந் நகரவளங்களைக்கண்டு மகிழ்ந்து திரும்பிக் கௌந்தியிடம் வந்து சேர்ந்து, தன்பழைய நட்பாளனும் தலைச்செங்கானம் என்னும் ஊரிலுள்ளவனுமாகிய மாடலனென்னும் அந்தணனை அவ்விடத்துக்கண்டு அளவளாவிக் கொண்டிருந்தான். அப்போது கௌந்தியடிகள்,தம்மிடம்வந்த இடைச்சியர் தலைவியாகிய மாதரி என்பவளது உத்தமகுணங்களை நோக்கி, அவள்பாற் கண்ணகியை அடைக்கலமாக ஒப்பிக்க, அவள் மகிழ்ச்சியுடனேற்றுக் கண்ணகியைக் கோவலனுடன் அழைத்துக்கொண்டு ஆயர்பாடியிலுள்ள தன் மனையொன்றில் அவர்களையமர்த்தி, சமைத்துண்ணுதற்கு வேண்டிய பண்டங்களுமளித்துத் தன் மகள் ஐயையைக் கண்ணகிக்குத் துணையாகவைத்துப் பெரிதும் உபசரித்தனள். கண்ணகியும் தான் பெற்றவற்றைப் பக்குவமாகச் சமைத்துத் தன் கணவனுக்கு முறைப்படி பரிமாறக்,கோவலன் இனிதாக உண்டு, பின் தன் மனைவியை அருகிலழைத்துத் தான் அவட்குச்செய்த தவறுகளையும் தன் கூடாவொழுக்கங்களையும் கூறி முன் புரிந்தவற்றுக்கு இரங்கி அவளை யருமைபாராட்டி விட்டு, 'இனி உன் சிலம்புகளில் ஒன்றைக்கொண்டு நகரத்துள்ளே சென்று விற்று விரைவில் வருவன்; அதுவரையில் நீ ஆற்றியிரு;' என்றுசொல்லி,அவளது சிலம்புகளிலொன்றை வாங்கிக்கொண்டு சென்று,எதிர்ப்பட்ட துன்னிமித்தங்களையும் அறியாதவனாய் மதுரையின் ஆவணவீதியினுள்ளே புகுந்தனன். இங்ஙனம் புகுதலும், பொற்கொல்லர்நூற்றுவர் தன் பின் வர மிக்க ஆடம்பரத்துடன்  வருகின்ற பொற்கொல்லர் தலைவனைக் கோவலன் கண்டு, 'இவன் அரசனாற் பெயர்பெற்றவன்போலும்' என்றெண்ணி அவனருகிற்சென்று, "அரசன்தேவி அணிதற்குத் தகுதியான சிலம்பொன்றை விலை மதித்தற்கு நீ தகுதியுடையையோ" என்று அவனை யுசாவ,அக்கொல்லனும் மிக்கபணிவுடன் தான் வல்லனாதலைக் குறிப்பிக்க கோவலன் தான்கொணர்ந்த சிலம்பினை அவனிடங் காட்டினான். அவன் பார்த்து, 'இதனை அரசனுக்கு நான் தெரிவித்து வருமளவும் இவ்விடத்தே நீவிர் இரும்' என்று ஓரிடத்தைக் கோவலனுக்குக் காட்டிச் சென்றான். சென்ற பொற்கொல்லன், முன்பு அரசன்மனையுள் சிலம்பொன்றை வஞ்சித்துத் திருடிக்கொண்டவனாதலால், 'யான் கவர்ந்த சிலம்பு என்னிடத்தேயுள்ளது என்று அரசன் அறிதற்குமுன்னே அதனோடொத்த சிலம்பைக் கொணர்ந்த இப்புதியவனால் என்மீதுண்டாகும் ஐயத்தைப் போக்கிக்கொள்வேன்'என்று தனக்குள்ளே சூழ்ந்து, அரண்மனையை-யடைந்து, காமபரவசனாய் அந்தப்புரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பாண்டியனைக்கண்டு வணங்கி - 'அரசே! கன்னக்கோல் முதலியவையில்லாமலே அரண்மனையுள்ளிருந்த சிலம்பைத் திருடியகள்வன் அடியேனுடையமனையில் வந்திருக்கிறான்.' என்று சொல்ல, பாண்டியன் உடனே காவலாளரை அழைத்து,'என் மனைவியின் சிலம்பு இவன்கூறிய கள்வன் கையிடத்ததாயின் அவனைக் கொன்று அச்சிலம்பைக் கொணருதிர்' என்று ஆராய்ச்சியின்றியே கட்டளையிட்டனன். பொற்கொல்லன் தனதெண்ணம் பலித்ததென்று அகமகிழ்ந்து அக்காவலாளர்களுடன் சென்று கோவலனையடைந்து அவனை நோக்கி, 'இவர்கள் அரசன் கட்டளைப்படி சிலம்புகாண வந்தவர்கள்' என்று கூறவும், கோவலன் முகக்குறி முதலியவற்றைக் கண்டு 'இவன் கள்வனல்லன்' என்று கூறிய காவலாளர்க்கு 'இவன் கள்வனே' என்பதை வற்புறுத்திப் பக்கத்தில் நின்றான். அப்போது, அவர்களிற் கொலையஞ் சாதானொருவன் விரைந்து சென்று தன் கைவாளாற் கோவலனை வெட்டி வீழ்த்தினன். இப்பால், கண்ணகியிருந்த இடைச்சேரியிலே பலவித உற்பாதங்கள் உண்டாயின. அவற்றைக்கண்ட மாதரி முதலியோரால் உற்பாத சாந்தியாகத் திருமாலைக்குறித்துக் குரவைக் கூத்தொன்று நிகழ்த்தப்பட்டது. அதன் முடிவில் மாதரி நீராடுதற் பொருட்டு வையையாற்றுக்குச் சென்றாள்.அப்பொழுது, சிலம்பு திருடியவனென்று கோவலனைக் காவலாளர் கொன்ற செய்தியை மதுரையுள்ளிருந்துவந்த ஒருத்தி சொல்லக்கேட்ட கண்ணகி, பதைபதைத்து மூர்ச்சித்துப் பலவாறு புலம்பித் தானும் அவனுடன் இறக்கத் துணிந்து, இடைச்சியர்மத்தியில் நின்று, சூரியனை நோக்கி 'செங்கதிர்ச் செல்வனே! நீ யறிய என் கணவன் கள்வனோ?'என்றாள். அவன், 'நின் கணவன் கள்வனல்லன்; அவனை அவ்வாறுசொன்ன இவ்வூரை விரைவில் தீயுண்ணும்' என்று அசரீரியாகக் கூறினன். அதனைக்கேட்ட கண்ணகி மிகுந்த சீற்றத்தோடும் தன்னிடமுள்ள மற்றொருசிலம்புடனே புறப்பட்டுக் கண்டார்நடுநடுங்கும்படி வீதிவழியேசென்று அங்கு நின்ற மகளிரை நோக்கிப் பலவாறு புலம்பி வெட்டுண்டு கிடந்த கோவலனைச் சிலர் காட்டக்கண்டு அளவுகடந்த துன்பத்திலாழ்ந்து அவனை முன்னிலைப்படுத்திப் பலவாறு பிரலாபித்து அவனுடம்பைத் தழுவிக் கொள்ளவும், அவ்வளவில்  அவன் உயிர்பெற்றெழுந்து 'மதிபோன்ற முகம் வாடியதே' என்று சொல்லித் தன் கையாலே அவள் கண்ணீரை மாற்ற, கண்ணகி அவன் பாதங்களைப் பணிந்தனள். உடனே, அவன் 'நீ இங்கிரு' என்று சொல்லி அவ்வுடம்பை ஒழித்துவிட்டுத் தேவருலகம் புகுந்தான். இங்கே இவ்வாறு நிகழப், பாண்டியன் மனைவி தான் கண்ட தீச்சகுனங்களைத் தன் கணவனுடன் பேசிக்கொண்டிருக்கு நிலையிலே, கண்ணகி கோபமிக்கவளாய் அரண்மனை யடைந்து, வாயில்காவலனால் தன் வரவை அரசனுக்கறிவித்து, அநுமதிபெற்று அரசன்முன்சென்று, அவன்கேட்பத் தன் ஊர் பெயர் முதலியவற்றையும், ஆராயாது கோவலனைக் கொல்வித்த அவனது கொடுங்கோன்மையையும் மிகுந்த துணிவுடன் எடுத்து மொழிந்தனள். இதனைக்கேட்ட பாண்டியன் 'கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று – வேள்வேற் கொற்றங்காண்' என்று கூற, கண்ணகி தன் கணவன் கள்வனல்லன் என்பதைக் காட்டும் பொருட்டுத் 'தன் சிலம்பினுள்ளேயிருக்கும் பரல் மாணிக்கமாம்' என்றாள். இதுகேட்ட அரசன் 'நன்று; தேவிசிலம்பின் பரல் முத்து' என்றான். உடனே, அவற்றின் உண்மையைச் சோதிப்பதற்காகக் கோவலனிடமிருந்த சிலம்பு வருவிக்கப்பட்டது. அதனைக் கண்ணகி வாங்கித் தன்கையால் உடைக்கலானாள். உடைக்கவும் அதனுள்ளிருந்த மாணிக்கப்பரல் பாண்டியனது வாயடியிற்சென்று தெறித்தது. அதுகண்டு அரசன் பதை பதைத்து - "இழிந்த பொற்கொல்லன் சொல்லைக் கேட்ட கொடுங்கோலனாகிய யானோ அரசன்; யானே கள்வன்; அந்தோ! மிகப் புகழ்படைத்த இவ்வருமந்த குலம் என்னாற் பெரும் பழியடைந்ததே; என் ஆயுள் இப்போதே அழியக்கடவதாக" என்றுகூறிப் புலம்பி மனமுடைந்து தானிருந்த ஆசனத்தே வீழ்ந்து உயிர்விட்டனன். தன் கணவனிறந்தசெய்தி யறிந்த சிலநேரத்துக்குள், அத்துக்க மாற்றாது அவன் கோப்பெருந்தேவியும் உயிர் நீங்கினள். இங்ஙனம், கண்ணகி, தன் கணவன் கள்வனல்லன் என்பதைப் பாண்டியன்முன் வழக்காடி மெய்ப்பித்து, முன்கொண்ட கோபஞ் சிறிதுந் தணியாளாய், 'நான் பத்தினியா யிருப்பது உண்மையாயின் இவ்வூரை அழிப்பேன்' என்று சபதஞ் செய்து கொண்டு அரண்மனையைவிட்டுப் புறப்பட்டாள். புறப்பட்டு, மதுரையினுள்ளே பிரவேசித்துத் தன் இடக்கொங்கையைத் திருகி யெடுத்து அதனை அந்நகரின் மீதெறிய, அவள் சொல்லியவண்ணமே, அந்நகருள் தீப்பற்றிக் கொண்டு பலவிடங்களையும் எரித்தது. அதன் வெம்மையை ஆற்றாத மதுரையின் அதிதேவதையானவள் கண்ணகிமுன் வந்து நின்று, அவளை நோக்கி, 'யான் இந்நகரின் தெய்வம்; உனக்குச் சிலவுண்மை கூற வந்தேன்; அவற்றைக் கேட்பாயாக; இந்நகரத்தில் முன்பிருந்த பாண்டியர்களுள் ஒருவரேனுஞ் சிறிதுங் கொடுங்கோன்மை யுடையவரல்லர். இந்நெடுஞ்செழியனும் அத் தன்மையனேயாவன்; ஆயினும் இத்துன்பம் உனக்கு வந்தவரலாற்றைக் கூறுவேன்; முன்பு கலிங்கநாட்டுச் சிங்கபுரத்தரசனாகிய வசு என்பவனும், கபில புரத்தரசனாகிய குமானெனபவனும் தம்முட் பகைகொண்டு ஒருவரையொருவர் வெல்லக் கருதியிருந்தனர். அப்போது சிங்கபுரத்துக் கடைவீதியிற் பண்டம் விற்றுக் கொண்டிருந்த சங்கமனென்னும் வணிகனை, அந் நகரத்தரசனிடம் தொழில் செய்துகொண்டிருந்த பரதனென்பவன், இவன் பகைவனது ஒற்றனென்றுபிடித்து அரசனுக்குக்காட்டி அவனைக் கொலை செய்துவிட்டான். அப்போது அச் சங்கமன் மனைவியாகிய நீலியென்பவள் மிகுந்த துயரமுற்று பதினான்குநாள் பலவிடத்தும் அலைந்து, பின்பு ஒருமலையின்மீதேறிக் கணவனைச் சேர்தற்பொருட்டுத் தன்னுயிரை விட நினைந்தவள்,'எமக்குத் துன்பம்விளைத்தோர் மறுபிறப்பில் இத்துன்பத்தையே அடைவார்களாக' என்று சாபமிட்டிறந்தனள். அப் பரதனே கோவலனாகப் பிறந்தான். ஆதலால் நீங்கள் இத் துன்பம் அடைந்தீர்கள். இற்றைக்குப் பதினான்காவது நாளில் பகல் சென்ற பின்பு, நீ உன் கணவனைக்கண்டு சேர்வாய்" என்று சொல்லி அவளைத்தேற்றி மதுராபதியாகிய அத்தெய்வஞ் சென்றது. பின்பு கண்ணகி மதுரையை விட்டு நீங்கி, வையைக் கரைவழியே மேற்றிசை நோக்கிச் சென்று மலைநாடடைந்து செங்குன்றென்னும் மலையின்மேலேறி ஒரு வேங்கைமரத்து நிழலில்நிற்க, பதினான்காந்தினத்துப் பகல்சென்றபின்பு, அங்கே தெய்வவடிவோடு வந்த கோவலனைக் கண்டு களித்து அவனுடன் விமானமேறித் தேவர்கள் போற்றும்படி விண்ணுலகடைந்தாள். இவ்வளவே, சிலப்பதிகாரத்தின் மதுரைப்புகார்க் காண்டங்களிற் சிறப்பித்துக் கூறப்படுவது. மூன்றாவதான வஞ்சிக்காண்டமென்னும் பகுதியில், கண்ணகி விண்ணுலகஞ் சென்றதைக் கண்ணாரக்கண்ட வேடுவர்கள் திரண்டு, அவ் விசேடத்தைத் தம்மரசனாகிய செங்குட்டுவனுக்குத் தெரிவித்தது முதலிய செய்திகள் விவரிக்கப்படுகின்றன. இவற்றைச் 'செங்குட்டுவன் வடயாத்திரை'யிற் கூறுவோம். ------------ II. மணிமேகலை வரலாறு. காவிரிப்பூம் பட்டினத்தே பெருங்குடிவாணிகர் மரபிலுதித்த கோவலனுக்கு, மாதவியென்னும் நாடகக்கணிகையிடம் மணிமேகலை என்பவள் பிறந்திருந்தனள். இவள் தாயாகிய மாதவி, தன் காதலனான கோவலன் மதுரையிற் கொலை-யுண்டிறந்தது கேட்டுத் தன் குலத்தொழிலை முற்றும் வெறுத்துப் பௌத்தமுனிவராகிய அறவணவடிகளைச் சரணமடைந்து அவரால் வாய்மை நான்குஞ் சீலமைந்தும் உபதேசிக்கப்பெற்றுப் பௌத்தசங்கத்தைச் சேர்ந்து பிக்ஷுணியாயினள். அவள்மகள் மணிமேகலையோ, தன் தாயுடன் பழகிவந்ததாற் சிறுபிராயத்தே பௌத்ததருமங்களை அறிதற்கேற்ற உணர்ச்சிபெற்றிருந்தாள். ஒருநாள் மணிமேகலை தாயின் கட்டளைப்படி தன்தோழியாகிய சுதமதியுடன் பூக்கொய்து வருவதற்கு உபவனஞ்செல்ல, ஆங்குத் தன்னை விரும்பிவந்த சோழன்-கிள்ளிவளவன் மகனாகிய உதயகுமரனுக்கு அஞ்சியவளாய், ஆங்கிருந்த பளிக்கறையொன்றிற் பதுங்கியிருந்து அவன் போயினபின்பு வெளியே வந்தாள்.பின்னர், அவள் குலதேவதையான மணிமேகலா தெய்வம் தோன்றி, மணிபல்லவம் என்னுந்தீவிற்கு அவளை அழைத்துக் கொண்டு போயிற்று. அத்தீவிற்சென்ற மணிமேகலை அங்குள்ள புத்தபீடிகைக்காட்சியால் தன் பழம்பிறப்பில் நிகழ்ந்த விசேடங்களை அறிந்ததோடு, அத்தெய்வம் அறிவுறுத்திய மூன்று மந்திரங்களை உணர்ந்து, முற்பிறப்பில் தன் கணவனாகவிருந்த இராகுலன் என்பவனே இப்பிறப்பில் உதயகுமரனாக வந்தான் என்பதையும் அத்தேவதையால் அறிந்தனள்.  பின்னர், அப்பீடிகையின் காவற்றெய்வமான தீவதிலகையினுதவியால் அங்கேயுள்ள கோமுகியென்னும் பொய்கையை அடைந்து, அதிலிருந்த அமுதசுரபி என்னும் அக்ஷய பாத்திரம் தன் கையில் வரப்பெற்று, அப்பாத்திரத்துடன் தன் நகராகிய புகாரையடைந்து, அறவணவடிகளிடஞ் சென்று நிகழ்ந்தது கூறி வணங்கினாள். அம்முனிவர், ஆபுத்திரன் வரலாற்றையும், அவனுக்கு மதுரையிற் சிந்தாதேவி யளித்த அமுதசுரபியே அவள்கைப் புகுந்ததையும், அப்பாத்திரத்தாற் பசித்தவுயிர்கட்கு உணவளித்தலின் சிறப்பையும் மணிமேகலைக்கு உணர்த்தினர். அவர் கூறியவாறே, உணவளித்தற் பொருட்டு, தான்பெற்ற அமுதசுரபியைக் கையிலேந்தினவளாய் மணிமேகலை வீதியிற்செல்ல, அவளது அக்ஷய பாத்திரத்தில் உத்தம பத்தினியாகிய ஆதிரையென்பவள் வந்து முதலில் பிச்சையிட்டனள். பின்பு மணிமேகலை அப் பாத்திரத்தினின்று எடுத்துதவிய ஒருபிடியமுதால், காயசண்டிகை யென்னும் வித்யாதரமங்கையின் தீராப்பசியைப்போக்கி, அப்பாத்திரத்தில் மேன்மேலும் அமுது வளரப்பெற்று, அந்நகரிலுள்ள உலகவறியென்னும் அம்பலத்தையடைந்து, அங்கே வந்த எல்லாவுயிர்களின் பசியையும் போக்கி, அவ்வறஞ் செய்தலையே நித்யநியமமாகப் பூண்டிருந்தனள். அங்ஙனமிருக்கும்போது, சோழன் மகனான உதயகுமரன் தன்னை விரும்பி மறுமுறை அவ்விடம் வர, அதனையறிந்த மணிமேகலை அவன் தன்னை அறிந்துகொள்ளாவண்ணம் வித்யாதர மங்கையாகிய காயசண்டிகையின் வடிவங்கொண்டு அந்நகரத்துச் சிறைச்சாலையை யடைந்து ஆங்குப் பசித்திருப்பவர்க் கெல்லாம் உணவளித்து அதனை அறச்சாலை யாக்கினாள்.  அப்போது அவ்விடத்துந் தன்னை விடாதுதொடர்ந்த உதயகுமரன், காயசண்டிகையின் கணவனாகிய வித்யாதரனால் தன் மனைவியை விரும்பி வந்தவனென்றுகருதி, வாளால் வெட்டப்பட்டு வீழ்ந்ததுகண்டு மனங்கலங்கிப் பின்பு கந்திற்பாவையென்னுந் தெய்வந்தேற்றத் தேறி, உதயகுமரன் றந்தையாகிய சோழனால் சந்தேகத்தின்மேற் சிறை வைக்கப்பட்டு அவன்மனைவி இராசமாதேவியின் முயற்சியாலே அச்சிறையினின்றும் விடுபட்டனள். பின் மணிமேகலை, காவிரிப்பூம்பட்டினத்தினின்று சாவகநாட்டுள்ள நாகபுரத்தை யடைந்து, அதனரசனான புண்ணியராசனோடு மணிபல்லவஞ் சார்ந்து, அங்குள்ள புத்தபீடிகையை அவனுக்குக் காட்டி அதனால் அவ்வரசனது பழம்பிறப்பை அவனுக்கறிவித்தாள். அக்காலத்துக் காவிரிப்பட்டினம் கடல்கொள்ளப்பட்டதென்ற செய்தியையும், தன் தாயான மாதவியும் அறவணவடிகளும் வஞ்சிமாநகரிலிருத்தலையும் தீவதிலகையால் அறிந்து, அவ் வஞ்சிநோக்கி எழுந்தவள், முதலில், செங்குட்டுவனா லெடுப்பிக்கப்பட்ட கண்ணகிகோட்டமடைந்து தாயாகிய அப் பத்தினிக்கடவுளைத் தரிசித்துத் தன்னெதிர்காலச்செய்திகளை அக்கடவுளாலறியப்பெற்றபின், செங்குட்டுவனாளும் அந் நகரையடைந்து, அதனுள்ளே பிரவேசித்தாள்; பிரவேசித்தவள், அதன் வளங்களையெல்லாங் கண்டு மகிழ்ந்து, ஆங்கு வசித்த சமயவாதிகள் பலரோடும் அளவளாவி அவ்வச்சமயத் திறங்களை அறிந்துகொண்டனள். அதன்பின்பு, அந்நகரத்துள்ள பௌத்த விகாரத்தில் தவஞ் செய்துகொண்டிருந்த கோவலன் தந்தை மாசாத்துவானைக்கண்டு பணிய, அவன், அவள் தாயும் அறவணவடிகளும் காஞ்சிமாநகரஞ் சென்றிருத் தலையும் அவ்வடிகள் அவட்குத் தருமோபதேசஞ்செய்ய எண்ணியிருத்தலையுங் கூறியதோடு, அந்நாட்டில் மழையின்மையால் உயிர்கள் வாடுதலின், அமுதசுரபியுடன் அவள் அங்குச் செல்லவேண்டிய ஆவசியகத்தையும் மணிமேகலைக்கு வற்புறுத்தினன்.  இவற்றைத் தன் பாட்டன்வாய்க் கேட்டதும் அவள் வஞ்சியினின்றும் உடனேபுறப்பட்டுக் காஞ்சி மாநகரமடைந்து, அந்நகரிற் பசியால் வருந்திவாடிய உயிர்கட்கெல்லாமுணவளித்துத் தன்தாயுடன் அறவணவடிகளையும் ஆங்குக் கண்டு வணங்கி, அவ்வடிகளால் பௌத்தமத தருமங்களனைத்தும் உபதேசிக்கப்பெற்றுப் பின் முத்திபெறுதற்பொருட்டு அக்காஞ்சியிலேயே தவஞ்செய்து கொண்டிருந்தனள். மேற்காட்டிய இரண்டு சரித்திரங்களும் செங்குட்டுவன் சம்பந்தம் பெற்று அவன் வரலாறுகள் பலவற்றை அறிவிக்கக் கூடியனவாயிருக்கின்றன. இவ்விரண்டு சரித்திரநூல்களுள், சிலப்பதிகாரத்தின் இறுதிப்பகுதியான வஞ்சிக்காண்ட முழுதும், செங்குட்டுவன், கண்ணகியின் படிவஞ் சமைக்கவேண்டி இமயமலையிற் கல்லெடுத்துக் கங்கையில் நீராட்டுவதற்கும், அம்முயற்சியில் தன்னையிகழ்ந்த ஆரியவரசரை வெற்றிகொள்வதற்குமாக நிகழ்த்திய வடநாட்டு யாத்திரையையும், அதன்பின் நிகழ்ந்த அச்சேரன் செய்திகளையும் மிகுதியாகக் கூறுவது. ஆதலின், அக்காண்டத்தே இளங்கோவடிகள் கூறியிருப்பவை பெரும்பாலும் இவ்வாராய்ச்சிக்குப் பெரிதும் உபகாரமாயிருத்தலால், அவ்வடிகளது செய்யுணடையை ஏற்றபெற்றி வசனநடைப்படுத்துகின்றேம்: இக்காண்டமானது (1) குன்றக்குரவை, (2) காட்சிக்காதை, (3) கால்கோட்காதை, (4) நீர்ப்படைக்காதை,(5) நடுகற்காதை,(6) வாழ்த்துக்காதை, (7) வரந்தருகாதை என இளங்கோவடிகளால் ஏழு பிரிவுகளாக்கப்பட்டுள்ளது. --------------------------------          அதிகாரம் - 5   செங்குட்டுவனது வட நாட்டியாத்திரை. 1. குன்றக்குரவை. வேடுவர் தங்கள் குறிச்சியில் கண்ணகி பொருட்டுக் குரவைக் கூத்தாடியது. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~   கண்ணகி தன் கணவனையிழந்த பெருந்துயரோடும் வையைக்கரை வழியே மேற்றிசைநோக்கிச் சென்று, செங்குன்று என்னும் மலையடைந்து ஆங்கு ஒரு வேங்கை மரத்தின் கீழேநிற்ப, அவ்விடத்திருந்த மலைவேடுவரிற்சிலர் அக்கண்ணகியைநெருங்கி அவளைநோக்கி, 'மலைவேங்கை நறுநிழலின் வள்ளிபோல்வீர் மனநடுங்க - முலையிழந்து வந்து நின்றீர் யாவிரோ?' என்று கேட்ப, அதற்கவள் சிறிதுங் கோபியாமலே, 'மணமதுரையோ டரசுகேடுற வல்வினைவந் துருத்த காலைக் - கணவனையங் கிழந்துபோந்த கடுவினையேன் யானென்றாள்.' இங்ஙனம் கண்ணகிகூற, மலைவாணர் கேட்டு அஞ்சி அவளை வணங்கிநின்றபோது, தேவர்குழாம் ஆங்கு வந்து மலர்மழை பொழிந்து அங்குள்ளவர் கண்முன்பே கண்ணகிக்கு அவள் கணவன் கோவலனைக்காட்டி, அவளை யுமுடனழைத்துக் கொண்டு விண்ணுலகஞ் செல்வாராயினர். இவ்வற்புத நிகழ்ச்சியை நேரிற்கண்டு களித்த அவ்வேடுவர், இங்கு வந்து நின்ற மாதராள் நம் குலத்துக்கே ஒரு பெருந் தெய்வமாவள்; இவள்பொருட்டு நாம் குரவையாடிக்கொண்டாடுவோம்' என்று, தம்மவரயெல்லாம் ஒருங்கழைத்து - "சிறுகுடியீரே! சிறுகுடி யீரே! தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே! நிறங்கிள ரருவிப் பறம்பின் தாழ்வரை நறுஞ்சினை வேங்கை நன்னிழற் கீழோர் தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே!  தொண்டகந் தொடுமின் சிறுபறை தொடுமின் கோடுவாய் வைம்மின் கொடுமணி யியக்குமுின் குறிஞ்சி பாடுமின் நறும்புகை யெடுமின் பூப்பலி செய்ம்மின் காப்புக்கடை நிறுமின் பரவலும் பரவுமின் விரவுமலர் தூவுமின் ஒருமுலை யிழந்த நங்கைக்குப் பெருமலை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே" என்று ஆர்ப்பரித்தெழுந்து, மலைநாட்டு முறைப்படி, குரவைக்கூத்தாடியும், அதற்குரிய பாடல்களைப்பாடியும் பெருஞ் சிறப்புச் செய்தார்கள். இங்கு இங்ஙனம் நிகழ்ந்தது. ---------------------------------- 2. காட்சிக்காதை. கண்ணகியின் வரலாறறிந்த செங்குட்டுவன், பத்தினிக்குப் படிவஞ் சமைத்தற்கு இமயத்தினின்று கல்லெடுத்துவர எண்ணியது. - ------------------------------ இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் தோன்றலாகிய செங்குட்டுவன் வஞ்சியிலுள்ள இலவந்திகை வெள்ளிமாடம் என்ற மாளிகையில் தன்தேவி இளங்கோவேண்மாளுடன்* வசித்து வந்த காலையில், மஞ்சுசூழுஞ்  சோலைகளையுடைய மலைவளத்தைக் கண்டுகளிக்க எண்ணியவனாய் –  -------- * 'இளங்கோ வேண்மா ளுடனிருந் தருளி' எனவரும் மூலத்துக்கு அரும்பதவுரையாசிரியர் "இளங்கோ வேண்மாள் - பெயர்; நன்னன் வேண்மாள், உதியன் வேண்மாள் என்பதுபோல; வேண்மாளுடனிருந்து இளங்கோவை அருளப் பாடிட்டு என்றுமாம்." என்றெழுதினார். இதனால், தம்பி இளங்கோவடிகளுடனும், மனைவி வேண்மாளுடனும் செங்குட்டுவனிருந்தான் என்று அத்தொடர்க்கு உரைகூறுவதும் அவ்வுரையாசிரியர் கருத்தாதல் விளங்கும். இளங்கோவடிகள், தம் தமயனுடன் தங்கியிருந்தவ ரென்பது, பதிகத்தாலும் தெரிதலால் பிற்கூறியதும் பொருந்துவதேயாம். அரமகளிருடன் விளையாடலை விரும்பிய தேவேந்திரன் தன் படைகளை நூற்று நாற்பதியோசனைதூரம் பரப்பி ஐராவதத்தில் ஆரோகணித்துச் செல்வதுபோல - தன் பெரும்பரிவாரங்கள் சூழச்சென்று, திருமாலின் மார்பிடையே விளங்கும் முத்தாரம் போல், மரங்களால் அழகுமிக்க மலையினின்றிழியும் பேரியாறு என்னும் ஆற்றங்கரையின் மணல்மிக்க எக்கரிலே தங்குவானாயினன். அக்காலத்து, குன்றக்குரவை நிகழ்த்தும் மலைமகளிர் பாடல்களும், அம்மலையில் முருகபூசைசெய்யும் வேலவனது பாட்டும், தினைமாவிடிப் போருடைய வள்ளைப் பாட்டும், தினைப் புனங்களினின்றெழும் ஒலியும், தேனெடுக்குங் குறவர் நிகழ்த்தும் ஓசையும், பறையோசைபோன்ற அருவியின் ஒலியும், புலியோடு பொருகின்ற யானையின் முழக்கமும், தினைப்புனங் காவலிற் பரண்மிசையிருப்போருடைய கூப்பீடுகளும், யானை பிடிக்கும் இடங்களிலே குழியில்வீழ்ந்த வேழங்களைப் பாகர் பழக்குமு் சப்தமும், ஆங்குச்சென்ற சேனைகளது ஆரவாரத்தோடு கலந்தொலித்தன. அந்நிலையில், மலைவாணராகிய வேடுவர் பலர் ஒருங்குகூடி, "யானைவெண் கோடு மகிலின் குப்பையும் மான்மயிர்க் கவரியும்* மதுவின் குடங்களும் சந்தனக் குறையும் சிந்துரக் கட்டியும் அஞ்சனத் திரளும் அணியரி தாரமும் ஏல வல்லியும் இருங்கறி வல்லியும் கூவை நீறுங் கொழுங்கொடிக் கவலையும் தெங்கின் பழனுந் தேமாங் கனியும் பைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும் காயமுங் கரும்பும் பூமலி கொடியும் கொழிந்தாட் கமுகின் செழுங்குலைத் தாறும் பெருங்குலை வாழையி னிருங்கனித் தாறும் ஆளியி னணங்கும் அரியின் குருளையும் வாள்வரிப் பறழும் மதகரிக் களபமும் குரங்கின் குட்டியும் குடாவடி யுளியமும் வரையாடு வருடையும் மடமான் மறியும் காசறைக் கருவும் மாசறு நகுலமும் பீலி மஞ்ஞையும் நாவியின் பிள்ளையும் கானக் கோழியும் தேமொழிக் கிள்ளையும்" ---- *மான்மயிராகிய வெண்சாமரை. (படலையும்- பச்சிலைமாலை காயமுங்-வெள்ளுள்ளி அணங்கு-குட்டி வாள்வரி-புலி குடாவடியுளியும்-பிள்ளைக்கரடி காசறைக்கரு-கத்தூரிக்குட்டி.) என்ற பண்டங்களைத் தங்கள் தலைமேலே தாங்கிக்கொண்டு—வஞ்சி மாநகரில் அரசனது சமயம்பெறாது தத்தம் திறைகளுடன் வாயிலிற் காத்துநிற்கும் பகையரசர்போல, அம் மலைவாணர் செங்குட்டுவன் திருமுன்பு வந்து நின்று 'ஏழ்பிறப்படியேம், வாழ்கநின் கொற்றம்' என்று அவனடி பணிந்து," வேந்தர் வேந்தே! யாம் வாழும் மலையின்கணுள்ள காட்டு வேங்கையின் கீழே, மங்கையொருத்தி, ஒருமுலையிழந்தவளாய்ப் பெருந்துயரோடும் வந்துநிற்க, தேவர்கள் பலரும் அவளிடம்வந்து அம்மங்கைக்கு அவள் காதற் கொழுநனைக் காட்டி, அவளையும் உடனழைத்துக்கொண்டு எங்கள் கண்முன்பே விண்ணுலகஞ் சென்றனர்; (இச்செய்தி சிலப்பதிகாரப் பதிகத்துக் கண்டது.)அவள் எந்நாட்டாள் கொல்லோ! யாவர் மகளோ, அறியேம். இது பெரியதோர் அதிசயந்தரா நின்றது; தேவரீர் நாட்டில் நிகழ்ந்த இதனை அறிந்தருளல் வேண்டும்" என்று தாங்கள் நேரிற்கண்ட செய்திகளை அரசனுக்குக்கூறி அவனை வாழ்த்திநின்றனர். அப்போது அரசனது பெருஞ்சிறப்பினையும், மலைவளத்தின் மாட்சியையுங் கண்டு களிப்புற்றிருந்த மதுரைச்சாத்தனார், (கோவலன் கொலையுண்டது முதலாய செய்திகள் தம்மூரில் நிகழ்ந்தவற்றை நேரில் அறிந்தவராதலால்) செங்குட்டுவனை நோக்கி "வேந்தே! யானறிவேன், அது நிகழ்ந்தவாற்றை" என்று தொடங்கி, தன்தேவியின் சிலம்பு திருடியவனென்று கண்ணகி கணவனைப் பாண்டியன் கொலைபுரிவித்ததையும், அஃதறிந்த கண்ணகி பெருஞ்சினங்கொண்டு பாண்டியன்முன் சென்று வழக்காடி வென்றதும், பாண்டியன்தேவி முன்பு மற்றொரு சிலம்பை வீசியெறிந்துவிட்டுக் கண்ணகி வஞ்சினங்கூறித் தன் ஒருமுலையைத் திருகிவீசி, அதினின்றெழுந்த தீயால் மதுரை மூதூரைச் சுட்டெரித்ததும், சிங்காதனத்திருந்து கண்ணகியின் வழக்கைக்கேட்ட நெடுஞ்செழியன் தான்செய்த கொடுங்கோன்மைக்கு ஆற்றாது தன் ஆசனத்தே வீழ்ந்திறந்ததும், இங்ஙனம் பாண்டியன் இறக்கவும், அவன் கோப்பெருந்தேவியும் கலக்கங்கொள்ளாதே உடனுயிர் விட்டதும் விளங்கக்கூறிவிட்டுப் பின், 'பாண்டியனது கொடுங்கோன்மை இத்தன்மைத்து என்பதைப் பெருவேந்தனாகிய உன்னிடத்துக் கூறவந்தவள்போலத் தனக்குரிய சோணாடு செல்லாது நின்னாடு அடைவாளாயினள் அந்நங்கை' என்று அச்சாத்தனார் சொல்லி முடித்தனர். இங்ஙனம் பாண்டியனுக்கு நேர்ந்த தீவினைத்திறங்களை யெல்லாங்கேட்ட செங்குட்டுவன், வருத்தமிக்கவனாய்ச் சாத்தனாரை நோக்கி " புலவீர்! தான் செங்கோலினின்று வழுவிய செய்தி எம்மையொத்த அரசர் செவிகளிற் சென்றெட்டுவதற்கு முன்பே பாண்டியன் உயிர் நீங்கியதானது, அவனது தீவினையால் வளைக்கப்பட்ட கோலை உடனே நிமிரச் செய்து செங்கோலாக்கிவிட்டது. அரசராயுள்ளார்க்கு, நாட்டில் மழை காலத்திற் பெய்யாதாயின் அச்சம்; உயிர்கள் தவறு செய்யுமாயின் அச்சம்; கொடுங்கோற்கஞ்சி மன்னுயிர்களைக் காத்தற்குரிய உயர்குடியிற்பிறத்தலிற் றுன்பமல்லது சுகமேயில்லை" என்று கூறிவிட்டுத் தன் தேவியை நோக்கி " நன்னுதால்! கணவனாகிய பாண்டியனுடன் தன்னுயிரை நீத்த அவன் தேவியும், சினத்துடன் நம் நாடுநோக்கிவந்த கண்ணகியுமாகிய இவ்விருபெரும்பத்தினிகளுள்ளே யாவர் வியக்கத் தக்கவராவர்?" என்று உசாவ, அதற்கு வேண்மாள் ' தன் கணவனது துன்பத்தைக் காணாது உயிர்நீத்த பாண்டியன் பெருந்தேவி விண்ணுலகத்தே பெருந்திருவுறக்கடவள்.அதுநிற்க; நம் நாட்டை நோக்கிவந்த பத்தினியை நாம் வழிபடுதல் இன்றியமையாதது' என்று கூறினாள். அது கேட்ட அரசன், அவள் கூறியதை விரும்பியேற்றுத் தன் அமைச்சரை நோக்கவும், அவர்கள், 'நம் நாடு நோக்கிவந்த அப்பத்தினிக்கடவுட்குப் படிவஞ்சமைத்தற்குரிய சிலையைப் பொதியமலையினின்றேனும் இமயமலையினின்றேனும் எடுத்துவருதலே தக்கதாம். ஆயின், பொதியத்தினின்று கொணர்வதைக் காவிரியினும் இமயத்தினின்று கொணர்வதைக் கங்கையினும் நீராட்டித் தூய்மைசெய்வித்தல் மிகப் பொருத்த முடையதாகும்' என்று கூறினர்.  கூறக்கேட்ட செங்குட்டுவன் 'பொதியமலையிற் கல்லெடுத்துக் காவிரித்துறையில் நீராட்டுதல் பெருவீரராகிய சேரவமிசத்தவர்க்குச் சிறப்பைத் தருஞ் செய்கையன்று; ஆதலால், இமயத்திலிருந்து கல்லெடுப்பித்துக் கங்கையில் நீராட்டிவருதலே நம் பெருமைக் கேற்றதாம். இமவான் நம் விருப்பத்திற் கிணங்கானாயின்(அப்பக்கத்தார் நங்கருத்துக் கிணங்காது தடுத்து நிற்பராயின் என்பது கருத்து.) இங்குநின்றும் வஞ்சிமாலை சூடிச் சேனைகளுடன் சென்று புறத்துறைக்கமைந்த நம் வீரச்செயல்கள் பலவற்றையும் ஆங்குக்காண்பிப்பேன்' என்று வீராவேசத்துடன் கூறினான். இங்ஙனம் செங்குட்டுவன் கூறிய வீரமொழிகளைக் கேட்ட வில்லவன் கோதை என்ற சேனாபதி அரசனை வாழ்த்திக்கொண்டு கூறுவான்:- "வேந்தர் வேந்தே! நும்மையொத்த வேந்தரான சோழபாண்டியர் நும்மோடு பகைத்துக் கொங்கர் போர்க்களத்தே தம் புலிக் கொடியையும் மீனக்கொடியையும் யுத்தகளத்திலிழந்து ஓடினராயினும், அச் செய்தி திக்கயங்களின் செவிவரை சென்று பரவலாயிற்று. கொங்கணர், கலிங்கர், கருநடர், பங்களர், கங்கர், கட்டியர் வடவாரியர் இவருடன் தமது தமிழ்ப்படை கலந்துபொருத செருக்களத்தில் தாம் யானையைவிட்டுப் பகைவரை யழித்த அரியசெய்கை இன்னும் எங்கள் கண்களைவிட்டு நீங்கவில்லை.அன்றியும் எம்கோமகளாய் விளங்கிய ("எங்கோமகளென்றது செங்குட்டுவன்மாதாவை; இவளை இவன் கொண்டுபோய்த் தீர்த்தமாட்டினதொரு கதை" என்பர், அரும்பதவுரையாசிரியர். இவ்வாக்கியத்தினின்று, செங்குட்டுவன் தன் தாயின் சிலையையன்றி அவளையே உடனழைத்துச் சென்று நீராட்டுவித்தான் என்பதும் அவ்வுரையாசிரியர் கருத்தாகத் தெரிகின்றது.)  தம் தாயின்சிலையைக் கங்கையிற் றீர்த்தமாட்டியகாலத்தே எதிர்த்துவந்த ஆரிய வரசர் ஆயிரவர்முன் தாம் ஒருவராகநின்று பொருத போர்க் கோலத்தைக் கடுங்கட்கூற்றமும், கண்விழித்து நோக்கிய தன்றோ. இங்ஙனம், நீர்சூழ்ந்த இந் நிலவுலகத்தை வென்று தமிழ்நாடாகச்செய்த தாம் வடநாட்டில் யாத்திரைசெய்யக் கருதின், ஆங்கு நும்மை எதிர்ப்பவர் யாவரோ? இமயமலைக்கு எங்கோனாகிய நீவிர் செல்லக்கருதியிருப்பது பத்தினிக் கடவுளைச் சமைத்தற்குரிய சிலையின்பொருட்டே யாதலால், ஆங்குவாழும் அரசர்க்கெல்லாம், வில்கயல் புலியிவற்றை இலச்சினையாகக் கொண்ட நும் திருமுகத்தை முன்னே விடுத்தருளல் வேண்டும்' என்று கூறினன். இதுகேட்ட அழும்பில்வேள் என்னும் அமைச்சன் "இந் நாவலந்தீவில் நம் பகைவராயுள்ளாரது ஒற்றர்கள் இவ் வஞ்சிமாநகரைவிட்டு நீங்குபவரல்லர். இவ் வொற்றுக்களே பகையரசர் செவிகளில் நம் வடநாட்டியாத்திரைபற்றிய செய்திகளை அறிவிக்கத் தக்கன. அதனால் நம் யாத்திரையைப்பற்றி, இவ்வூரிற் பறையறைந்து தெரிவித்தலொன்றே போதியது" என்று உரைக்கச் செங்குட்டுவனும் அதற்கு உடம்பட்டனன். பின்னர்ப் பேரியாற்றினின்றுசு புறப்பட்டு அரசன் தன் பெரும் பரிவாரங்களுடன் வஞ்சிமா- நகரடைந்தான். அடைந்ததும், யானைமேல் முரசேற்றப்பெற்றுச் செங்குட்டுவனது வட நாட்டியாத்திரைபற்றியும், பகையரசர் வந்து பணியாவிடில் அவர்க்கு நேருங் கேடுகளைப்பற்றியும், "வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை ஊழிதோ றூழி யுலகங் காக்கென விற்றலைக் கொண்ட வியன்பே ரிமயத்தோர் கற்கொண்டு பெயருமெங் காவல னாதலின் வடதிசை மருங்கின் மன்ன ரெல்லாம் இடுதிறை கொடுவந் தெதிரீ ராயின் கடற்கடம் பெறிந்த கடும்போர் வார்த்தையும் விடர்ச்சிலை பொறித்த வியன்பெரு வார்த்தையுங்* கேட்டு வாழுமின் கேளீ ராயின் தோட்டுணை† துறக்குந் துறவொடு வாழுமின் தாழ்கழன் மன்னன் தன்றிரு மேனி‡ வாழ்க சேனா முகம்." என்று ஊரெங்கும் பறை அறையப்பட்டது. --------- * 'எதிரேற்றுக் காணீராயின், கடலுட்புக்கும் மலையினேறியும் வாழுமின் என்பார், இரண்டுவார்த்தையுங் கேட்டு வாழுமின் – என்றார்' என்பது அரும்பதவுரை. † தோட்டுணை-மனைவியர் ‡ 'திருமேனியாகிய சேனாமுகம்; சேனாமுகம் அரசனுக்குச் சிறந்தமையின், திருமேனி என்றார்' என்பது அரும்பதவுரை. --------------------------- 3. கால்கோட் காதை. செங்குட்டுவன் வடநாட்டிற்செய்த பெரும்போரும், இமயஞ்சென்று பத்தினிக்குக் கல்லெடுப்பித்ததும். ~~~~~~~~~~~~~~~~~~~ இங்ஙனம் வஞ்சிமாநகரிற் பறையறையப்பட்டபின்னர், சேரன் - செங்குட்டுவன் அன்று மாலையில் ஆசான் பெருங்கணி அமைச்சர்களும் தானைத்தலைவருந் தன்னை வாழ்த்தி நிற்கச் சிங்காதனத்தே வீற்றிருந்து தன் சேனாதிபதிகளை நோக்கி அடியில் வருமாறு கூறுவானாயினான்:- "ஆரியமன்னர் பலரும் தம்நாட்டில்நிகழ்ந்த சுயம்வரமொன்றன் பொருட்டுக் குழுமியிருந்த பெருங்கூட்டத்தே - 'தென்றமிழ் நாடாளும் வேந்தர் செருவேட்டுப் புகன்றெழுந்து - மின்றவழு மிமய நெற்றியில் விளங்குவிற்புலி கயல்பொறித்த நாள் –  எம்போலும் முடிமன்னர் ஈங்கில்லைப்போலும்' என்று நகைத்திகழ்ந்எனர் எனத், தீர்த்த யாத்திரை செய்து கொண்டு இங்குவந்த இமயத்தாபதரால் அறிந்தேம். (இச் செய்தி, வாழ்த்துக் காதையின் உரைப்பாட்டு மடையிற் கண்டது.) அவ் விழிமொழி நம்பாலே தங்குமாயின், அஃது எமக்குமட்டு மன்றி எம்போன்ற சோழபாண்டியராகிய தமிழ் வேந்தர்க்கும் இகழ்ச்சி விளைக்கக் கூடியதன்றோ? ஆதலின், அங்ஙனம் இகழ்ச்சிசெய்த வடதிசை மன்னரது முடித்தலையில் பத்தினிக்கடவுளைச் சமைத்தற்குரிய கல்லை ஏற்றிக்கொண்டு வருவேன். அங்ஙனஞ் செய்யாது என் கைவாள் வறிதேவருமாயின், என்னொடு முரணிய பகையரசரை நடுங்கச்செய்தடக்காமல், வளந்தங்கிய என்னாட்டுக் குடிகளை வருத்துங் கொடுங்கோலனாகக் கடவேன்" - என்று அப்பேரத்தாணியிற் சினத்துடன் வஞ்சினங்கூறினன். இங்ஙனம் அரசன் கூறியதைக் கேட்ட ஆசான் (புரோகிதன்) 'இமயவரம்ப! வடவரசர், சோழ பாண்டியரையன்றி, நின்னை இகழ்ந்து கூறினவரல்லர்; நீ இங்ஙனம் வஞ்சினங்கூறுதற்கு நின்னொடு எதிர்க்கும் மன்னரும் உளரோ? ஆதலால் கோபந்தணிக.' என்று அவன் சீற்றத்தைச் சமனஞ் செய்வானாயினன். உடனே, சோதிடம் வல்லானாகிய மௌத்திகன் எழுந்து நின்று 'அரசே! நின் வெற்றி வாழ்வதாக; இவ் வுலகிலுள்ள பகையரசரெல்லாம் நின் அடித் தாமரைகளைச் சரணடையத் தக்க நன்முகூர்த்தம் இதுவே; நீ கருதிய வடதிசை யாத்திரைக்கு இப்போதே எழுதல் சிறந்தது' என்றான்.  இந் நிமித்திகன் வார்த்தை கேட்ட செங்குட்டுவன் மகிழ்வுற்று, உடனே தன் வாளினையுங் குடையையும் அந் நன்முகூர்த்தத்தில் வடதிசைப் பெயர்த்து நாட்கொள்ளும்படி ஆஞ்ஞாபித்தனன். ஆணை பிறந்ததும், போர்வீரரது ஆரவாரத்தோடு முரசங்கள் பூமி அதிரும்படி ஒலித்தன. பகைவர்க்கு வேதனைவிளைக்குஞ் சேனைகள், மணிவிளக்குகளுடனும் துவசங்களுடனும் முன் செல்லவும், ஐம்பெருங்குழுவும்(ஐம்பெருங்குழு - அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதுவர், சாரணரென்போர். எண்பேராயத்தை, 'கரணத் தியலவர் கருமவிதிகள், கனகச் சுற்றங் கடைகாப்பாளர், நகர மாந்தர் நளிபடைத்தலைவர், யானை வீர ரிவுளி மறவர், இனைய ரென்பே ராய மென்ப'என்பதனாலறிக.) எண்பேராயமும் அரசாங்கத்தை நடத்தும் கருமவினைஞரும் கணக்கியல் வினைஞரும் தருமவினைஞரும் தந்திர வினைஞரும் தம் அரசனான 'செங்குட்டுவன் வாழ்க' என்று கூறவும், பட்டவர்த்தன யானையின் பிடரிமேல் ஏற்றப்பட்ட அரசவாளும் வெண்கொற்றக் கொடையும் வஞ்சிப்புறத்துள்ள கோட்டையிற் புகும்படிசெய்து செங்குட்டுவன் தன்னரசிருக்கையை யடைந்தான். அன்றிரவில் போர்விருப்பத்தாற் களிப்புற்றுத் தன்னுடன் வருதற்கிருக்கும் தானைகளுக்கும் தானைத் தலைவர்க்கும் பெருஞ்சோறளித்துபசரித்து உற்சாகப்படுத்தி, மற்றொருவேந்தனைக் கொற்றங்கொள்ளநிற்கும் தன் கொள்கைக்கேற்ப, வஞ்சிமாலையை மணிமுடியிலணிந்து மறுநாட்காலையில் யாத்திரைக்குச் சித்தமாயிருந்தனன், செங்குட்டுவன். அன்றிரவு இங்ஙனம் கழிந்தது. பொழுதுவிடிந்ததும், அரண்மனையிலே அரசரிடுதற்குரிய திறைகொணர அழைக்கும் காலைமுரசம் முழங்கியது.  அதுவே யாத்திராகாலமாதலால், காலைக் கடன்களை யெல்லாம் முடித்துச் சித்தனாயிருந்த சேரன்-செங்குட்டுவன், தன்வழிபடுகடவுளாகிய சந்திரசடாதரரது திருவடிப் பாதுகைகளை, யாவர்க்கும் வணங்காததும் வஞ்சிமாலை சூடியதுமான தன் சென்னியால் வணங்கித் தரித்துக்கொண்டு, அந்தணர்கள் வளர்க்கின்ற அக்கினிஹோத்திரங்களையும் நமஸ்கரித்துத் தன் பட்டவர்த்தனக் களிற்றின்மேல் உரிய நன்முகூர்த்தத்தில் ஆரோகணித்தனன். அப்போது, 'குடவர் கோமானாகிய செங்குட்டுவன் கொற்றங்கொள்வானாக' என்று வாழ்த்தினவராய், ஆடகமாடமென்னுங் கோயிலின்றும் திருமாலின் பிரசாதத்துடன் வந்து சிலர் அரசன்முன் நிற்க, தான் சிவபிரான் பாதுகைகளைச் சென்னியிற்றாங்கியிருந்தமையால், அத்திருமால் பிரசாதத்தை வாங்கித் தன் மணிப்புயத் தேந்தியவனாய் அங்கிருந்தும் பிரயாணிப்பானாயினன். அவன் செல்லும்போது நாடகக் கணிகையர்கள் அரங்குகடோறும் நெருங்கிக் கூடிநின்று இருகையுங் கூப்பிக் கொண்டு 'யானைமேல் வெண்கொற்றக்குடை நிழலில் விளங்கும் அரசனது காட்சி எங்கட்கு என்றும் இன்பம்பயந்து விளங்குவதாக' என்று துதித்தனர். சூதரும் மாகதரும் வேதாளிகரும் செங்குட்டுவனது வெற்றிப்புகழ் தோன்றும்படி வாழ்த்திக் கொண்டு உடன்சென்றனர். யானைகுதிரை வீரர்களும் வாட்படை தாங்கிய சேனைகளும் தங்கள் வேந்தனது வாள் வலியை ஏத்தி ஆர்ப்பரித்தனர். இங்ஙனமாக, அசுரர்மேற் போர்குறித்து அமராவதியினின்று நீங்கும் இந்திரன்போல, செங்குட்டுவனும் வஞ்சியினின்றும் புறப்பட்டு, தூசிப்படையானது கடற்கரையைத் தொடும்படி பரவிய தன்சேனைகளால் மலைகளின் முதுகு நெளியவும், நாட்டில் வழியுண்டாகவுஞ் சென்று இறுதியில் நீலகிரி என்ற மலையின் அடிவாரத்தமைக்கப்பட்ட பாடியையடைந்து, யானையினின்றிழிந்து, வீரரெல்லாம் ஆர்ப்பரித்தேத்தக் காவல்மிக்க தன்னிருக்கையிற் புகுந்து அமளிமிசைத் தங்கி இளைப்பாறலாயினன். இங்ஙனம், அரசன் இளைப்பாறிய சிறிது நேரத்துக்கெல்லாம் அந்தரசாரிகளாகிய முனிவரர் சிலர், ஆங்குவந்த வேந்தனைக் காண்போமென்று கீழேயிறங்கி அரசிருக்கையை நோக்கி ஒளிமிக்க மேனியுடன் வரவும், அவரைக்கண்டதனால் உண்டான சேனைகளின் ஆரவாரத்தாற் செங்குட்டுவன் முனிவர்வருகையை அறிந்து, அமளியினின்றெழுந்து வந்து அவரடி வணங்கி நின்றனன். நின்ற அரசனை நோக்கி அம் முனிவர்கள் "சிவபிரான் திருவருளால் வஞ்சிமாநகரில் தோன்றிய அரசே! யாங்கள் பொதியமலைக்குச் செல்கின்றோம். இமயபர்வதம்வரை செல்வது நின்கருத்தாதலால், ஆங்கு வாழும் அருமறையந்தணர்களைத் துன்பமின்றிக் காப்பது, நின் கடமையாகும்" என்று கூறிச் செங்குட்டுவனை வாழ்த்திச் சென்றனர். சென்றதும், கொங்கண நாட்டுக் கூத்தர்களும், கொடுங்கருநாடர்களும் தத்தங்குலத்திற்கேற்ற அலங்காரமுடையவராய்க் குஞ்சியில் தழைத்த மாலையணிந்து அழகுவாய்ந்த தம் மகளிருடன் வரிப் பாட்டுக்களைப் பாடிக்கொண்டும், குடகுநாட்டவர் தம் மகளிருடன் கார்காலத்தைப் பற்றிய பாடல்களைப் பாடிக்கொண்டும்,தங்கள் சுற்றத்தோடு அலங்காரமாக ஓவர் என்ற சாதியார் அரசனை வாழ்த்திக்கொண்டும் சேரன்முன்னே தோன்றினர்.  இவர்களது ஆடல் பாடல்களையெல்லாங் கண்டுவந்து, தன் ஆஸ்தான-ஆடலாசிரியன் குறிப்பிட்ட முறைப்படியே அன்னோர்க்கெல்லாம் வேண்டிய அணிகலன்களைச் சம்மானித்துச் சேரர்பெருமான் வீற்றிருந்தான். அந் நிலையில் வாயில் காவலன் செங்குட்டுவன் திருமுன் வந்துநின்று, "அரசே! நாடகமகளிர் ஐம்பத்திருவரும், குயிலுவர் (வாத்தியகாரர்) இருநூற்றெண்மரும், தொண்ணூற்றறுவகைப் பாசண்ட நூல்களிச் வல்ல நகைவிளைத்துமகிழச்செய்யும் வேழம்பர் நூற்றுவரும், நூறுதேர்களும், ஐந்நூறு களிறுகளும், பதினாயிரம் குதிரைகளும், இன்னின்னசரக்கென்று எழுதப்பட்டு, யாத்திரைக்குவேண்டிய பண்டங்கள் ஏற்றப்பட்ட சகடங்கள் இருபதினாயிரமும், தலைப்பாகையுஞ் சட்டையுந் தரித்தவர்களும் சஞ்சயன் என்பவனைத் தலைமையாகக் கொண்டவர்களுமான கருமத் தலைவர் ஆயிரவரும் நின் வாயிற்கண்ணே வந்து காத்திருக்கின்றார்கள், அறிந்தருள்க" என்றான். எனலும் "அவர்களுக்குள்ளே, சஞ்சயனுடன் நாடக மகளிரும் கஞ்சுகமுதல்வரும் (கருமத்தலைவர்), குயிலுவரும் இங்கு வரக்கடவர்" என்று அரசன் ஆணையிட, அன்னோருடன் அத்தூதர்தலைவன் அரசவைபுகுந்து செங்குட்டுவனை வணங்கி, உடன்வந்தவரையெல்லாம் அரசனுக்கு முறைப்படி காட்டிப் பின்னர், "தேவரீர் வடநாடுசெல்வது பத்தினிக்கடவுளைச் சமைத்தற்குரிய சிலையொன்றன் பொருட்டேயாயின்,'இமயமலையிற் கல்லெடுப்பித்துக் கங்கையாற்றில் அதனை நீர்ப்படைசெய்துதர யாங்களே வல்லோம்’ என்று, தேவரீருடன் வேற்றுமையின்றிக் கலந்த நட்பரசராகிய நூற்றுவர் கன்னர் தெரிவித்திருக்கின்றனர்" என்றறிவித்து வாழ்த்தி நின்றனன்.  இதுகேட்ட செங்குட்டுவன் 'நன்று, வடநாட்டரசனான பாலகுமரன் மக்களாகிய கனகன் விசயனென்ற இருவரும் தம்நாக்களைக் காவாதவராய், விருந்தொன்றிலே வடவரசர் பலருடன்கூடித் தமிழ் வேந்தரான எம்முடைய ஆற்றலறியாது இகழ்ந்துரையாடினராம்; அதனால் பத்தினிக்குக் கல்லெடுப்பித்தலோடு அவரிடம் நம்மாற்றலைக் காண்பிப்பதற்காகவும் இச்சேனை சீற்றத்தொடுஞ் செல்லா நின்றது; இச்செய்தியை நம் நட்பினராகிய அக்கன்னர்க்குத் தெரிவித்து, ஆங்குக் கங்கைப்பேரியாற்றை நம் சேனைகள் கடப்பதற்குவேண்டிய மரக்கலங்களை அவருதவியால் சித்தஞ் செய்வதற்கு நீ முன்னர்ச் செல்லக்கடவாய்" என்று செங்குட்டுவன் கற்பனைசெய்ய, சஞ்சயனும் அவ்வாணையைச் சிரமேற்கொண்டு முற்படப் போயினன். அவன் போனதும், பேசுதலில்வல்ல கஞ்சுகமுதல்வர், அரசன்முன்னர்ப் பாண்டியரிட்ட சந்தனம் முத்து முதலிய திறைகளைக் கொண்டுவந்துநின்றனர். இவர்க்கு அரசன் தன் இலச்சினையிட்ட திருமுகங்களைக் கண்ணெழுத்தாளரைக் கொண்டு (கண்ணெழுத்தாளர் – திருமுக மெழுதுவார்.) எழுதுவித்து அத்தூதர்கள் கையிற் கொடுத்து அரசரிடம் அவற்றை முறைப்படிசேர்ப்பிக்குமாறு ஆணையிட்டு அவர்களையும் அனுப்பினன். அவர்களெல்லாம் போயினபின்னர்,சேரர்பெருமான், மற்றைய மன்னர் தன் பெருமையை ஏத்தும்படி தன்னுடைய பெரும்பரிவாரங்களுடன் நீலகிரிப் பாடியினின்றும் நீங்கி வடநாடு நோக்கிப் பிரயாணிப்பானாயினான். இங்ஙனம், தன் பெருஞ்சேனைகளுடன் சென்ற செங்குட்டுவன் முடிவில் கங்கைப் பேரியாற்றை நெருங்கினன்.ஆங்கு, முன்னரே சென்றிருந்த சஞ்சயனால் நூற்றுவர் கன்னர் உதவிகொண்டு கங்கையைச் சேனைகள் கடத்தற்கு வேண்டிய மரக்கலங்கள் சித்தஞ்செய்யப்பட்டிருந்தன.  அப்பெரிய நதியை அடைந்த சேரர்பெருந்தகை தன் சகல சைந்யங்களுடனும் அதனைக்கடந்து அவ்வாற்றின் வடகரையை அடைந்தான். அப்போது தம் நட்பாளனாகிய செங்குட்டுவனை அந்நாடாளும் நூற்றுவர்கன்னர் எதிர்கொண்டு உபசரித்தனர். அவருபசாரத்தைப் பெற்றுச் செங்குட்டுவன் அங்கு நின்றும் புறப்பட்டுத் தன் பகைவரது நாடாகிய உத்தர கோசலத்தை நெருங்கினான். இங்ஙனம் சேரவரசன் பெரும்படையுடன் தம் தேசத்தை நெருங்குகின்றான் என்ற செய்தி தெரிந்ததும், அந்நாட்டரசர்களான உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன் என்பவருதவியுடன் கனகவிசயரென்ற வேந்தர், தமிழராற்றலைக் காண்போமென்று செருக்கிப் பெருத்த சேனையுடன் போர்க்கோலங்கொண்டு எதிர்ந்தனர். இங்ஙனம் வடவரசர் திரண்டு வருதலும், இரையைத்தேடி வேட்டைக்குச் சென்ற சிங்கமொன்று யானையின் பெருங்கூட்டத்தைக் கண்டு உள்ளம்பூரித்துப் பாய்ந்தவாறுபோல, தன்னை எதிர்த்து வந்த வடவேந்தரது சேனைகண்டு களித்து, அவற்றின்மேல் விழுந்து செங்குட்டுவன் பொருவானாயினன். வடவரும் தமிழரும் பொருதுநின்ற அப்பெரும் போரில், துகிற்கொடிகளின் பந்தர்களாற் சூரியகிரணங்கள் மறைப்புண்டன. கொடும்பறைகளும் சங்கங்களும் நீண்ட கொம்புகளும் பேரிகைகளும் மயிர்க்கண் முரசங்களும் திக்குகளினின்று எதிரொலியுண்டாகும்படி ஒலித்தன.  வில், வேல், கேடயமிவற்றைக் கொண்ட மறவர்களும், தேர்வீரர் யானைவீரர் குதிரைவீரர்களும் கலந்தெதிர்த்த அப்போர்க்களத்தில் பூமி தெரியாமலெழிந்த புழுதியானது, யானைக்கழுத்திற் கட்டிய மணிகளின் நாக்களிலும் கொடிகளிற்கட்டிய சங்குகளின் நாக்களிலும் புகுந்து அவற்றை ஒலிக்காவண்ணஞ் செய்து விட்டன. தூசிப்படைகள் தம்மிற் கலந்து புரிந்த அப்போரிலே தோளுந் தலையுந் துணிபட்டு வேறாகிய வீரரது உடற்கும் பலிற்றுள்ளியெழுந்த குறையுடலாகிய கவந்தங்கள், பேயினது தாளத்துக்கொப்பக் கூத்தாடின. அப்பிணக்குவியலினின்று வழிந்தோடும் ஊன்கலந்த குருதியிலே, கூட்டங்கொண்ட பேய்மகளிரது நாக்களெல்லாம் ஆடலாயின. இங்ஙனம் ஆரியவரசரது சேனாவீரரை அக்களத்தே கொன்று குவித்து அவரது தேர்யானை குதிரைகளில் ஆட்களில்லையாகக்கொன்று (நூழில்-வீரக்கழன் மன்னர் சேனையைக்கொன்று அழலும் வேலைத் திரித்து விளையாடுதலைவிரும்பல் என்பர்.)நூழிலாட்டிய சேரன்-செங்குட்டுவன், எருமையூர்தியுடைய கூற்றுவன், உயிர்த்தொகுதியை ஒரே பொழுதினுள் உண்ணவல்லவன் என்பதை அறிவித்துத் தும்பைசூடி விளங்கினான். இவனது சினவலையின் கண்ணே, தம் நாவைக்காவாது தமிழரசரையிகழ்ந்த கனகவிசயருடன் தேர்வீரர் ஐம்பத்திருவர் அகப்பட்டுக் கொண்டனர். மற்றப் பகைவர்களோ தத்தம் ஆயுதங்களை எறிந்துவிட்டுச் சடை, காஷாயவுடை, சாம்பல் இவற்றைத் தரித்த சந்நியாசிகளாகவும் பீலி கைக்கொண்ட சைநமுனிவராகவும், பாடகராகவும், பற்பல வாத்தியக்காரராகவும், ஆடுவோராகவும் தாந்தாம் வல்ல துறைக்கேற்ற வேடம் பூண்டு வேண்டுமிடங்களிலே பதுங்கி-யொளிந்தனர்.  இவ்வாறு வடவரசர்கள் நடுநடுங்கும்படி, களிறுகளே எருதாகவும், வாளே பிடிக்குங்கோலாகவும், பகைவர்சேனைகளே சூட்டடிக் கதிர்களாகவுங் கொண்டு, வாளையுடைய தான் உழவனாகநின்று அப்போரிலே* அதரிதிரித்துக் கலக்கினான் செங்குட்டுவன். இவ் வரசனது மறக்களத்தைப் புகழ்ந்து, பேய்களெல்லாம் நெடியகைகளைத் தம் கரியதலைமிசை உயர்த்தியவைகளாய், திருமால் பாற்கடல்கடைந்தபோது நிகழ்த்திய தேவாசுரயுத்தத்தையும், அவன் இலங்கையில் நடத்திய போரையும், தேரூர்ந்து நிகழ்த்திய அவனது பாரதச் செருவையும் இதனோடு ஒருசேரவைத்துப் பாடியதுடன், இப்போர்க்களத்தே பகைவரது முடித்தலைகளையே அடுப்பாகவும், பிடரிகளையே தாழியாகவும், வலயமணிந்த தோள்களையே துடுப்பாகவும் கொண்டு சமைத்த ஊன்சோற்றைப் பேய் மடையன் அவ்வப்பேயின் தகுதியறிந்து பரிமாற வயிறார உண்டு களித்துத், தருமயுத்தத்தால் தமக்கித்தகைய பெருவிருந்துசெய்த செங்குட்டுவனை 'ஊழியளவு வாழ்க' என்று வாயார வாழ்த்துவனவும் ஆயின. ---  * நெற்களத்திற் கடாவிட்டுழக்குதல். இங்ஙனமாக, ஆரியப்படையைவென்று தானினைத்த காரியங்களுளொன்றை முடித்துக்கொண்ட செங்குட்டுவன் தன் தானைத்தலைவனாகிய வில்லவன்கோதையை நோக்கி, 'வடதிசையுள் நான்மறையாளும் நித்யாக்கினி வளர்த்தலையே பெருவாழ்வாக உடையவருமாகிய அந்தணப்பெரியோரைச் செல்லுமிடங்களிலெல்லாம் போற்றிக் காக்கக் கடவீர்' என்று கூறிப் பெரும்படையுடன் அவனையேவி, பத்தினிக் கடவுளைப் பொறித்தற்குரிய சிலையை இமயமலையினின்று கொண்டுவரும்படி செய்து அக்காரியத்தையும் முடித்துக் கொண்டனன்.  ----------------------------------------------- 4.நீர்ப்படைக்காதை. செங்குட்டுவன் பத்தினிப்படிவத்தைக் கங்கை நீராட்டியதும், தன்னாடு திரும்பியதும். ----------------------- மேற்கூறியவாறு, தமிழரது ஆற்றலையறியாது தன்னுடன் மலைந்த ஆரியச் சேனைகளைக் கூற்றுவனுக்குத் தொழில் பெருகும்படி கொன்று, தேவாசுரயுத்தம் பதினெட்டாண்டிலும், இராமராவணயுத்தம் பதினெட்டு மாதத்தும், பாரதயுத்தம் பதினெட்டு நாளிலும், செங்குட்டுவனும் கனவிசயரும் புரிந்தபோர் பதினெட்டு நாழிகையிலும் முடிந்தனவென்று, உலகோர் இப்போரையும் கூட்டியெண்ணிக் கொள்ளும்படி ஒருபகற்குள்ளே பகைவரை வென்றுவிளங்கிய சேரன்-செங்குட்டுவன், சினமிக்க தன் சேனைகளால் பத்தினிக் கடவுட்குரிய சிலையை இமயத்தினின்று மெடுப்பித்த பின்னர், தன்னுடன் போர்க்கோலங்கொண்டெழுந்த கனக விசயரது கதிர்முடிமேல் அச்சிலையையேற்றிக்கொண்டு அதனை நீராட்டித் தூய்மை செய்தற்பொருட்டுக் கங்கைப்பேரியாற்றின் வடகரைவந்து சேர்ந்தான். அவன் அங்கு வந்ததும், பத்தினியின்சிலை ஆகமம்வல்லோரால் கங்காநதியில் முறைப்படி நீராட்டப்பட்டது. இது முடிந்தபின்னர்ச் சேனையுடனும் பரிவாரங்களுடனும் சேரர் பெருமான் நாவாய்கள் மூலம் அப் பேரியாற்றைக் கடந்து அதன் தென்கரையிற் பிரவேசித்தனன். அம்மாநதியின் தென்கரை வெளிப்பரப்பிலே, ஆரிய மன்னரும் நட்பாளருமாகிய கன்னரால் ஜயசீலனாகவருஞ் சேரர் பெருந்தகை படைகளுடன் வந்து தங்குதற்கென்று, அரசர்க்குரிய கோயிலும் அழகிய மண்டபங்களும் இராச சபைகளும்  பூம்பந்தரும் உரிமைப் பள்ளியும் தாமரைப் பொய்கையும் ஆடரங்குகளும் மற்றும் பெருவேந்தர்க்கு வேண்டியனவெல்லாம் மிகவும் அழகுபெற அமைக்கப்பட்டிருந்தன. செங்குட்டுவன் தென்கரை புக்கதும் அவ்வழகியபாடியில் தன் பரிவாரங்களோடுஞ் சென்று தங்கினான். இங்ஙனம் பாடியிற்றங்கியபின், சேரர்பெருமான், எதிர்த்த மாற்றரச‌ரது மனவூக்கங் கெடும்படி போரில் தம் வீரச் செயல்களைக் காட்டி வீரசுவர்க்கமடைந்த தானைத் தலைவர்களும், அப்போரிலே அடர்ந்துழக்கித் தலையுந் தோளும் விலைபெற அறுபட்டுக்கிடந்தவர்களும், வாளாற்செய்யும் வினைகளெல்லாஞ்செய்து பகைவரை அழித்துமுடிந்தவர்களும், உறவினரோடு தம்மகளிரும் உடன்மடியும்படி வீழ்ந்தவர்களுமாகிய இறந்துபட்ட வீரர்களுடைய மைந்தரையும்; தூசிப் படையில் நின்று மாற்றாரைவென்று வாகைமாலை சூடியவர்களும், பகைவரது தேர்வீரரைக்கொன்று அவர்களுடைய குருதியோடு பொலிந்துநின்றவர்களும், பகைவரது கருந்தலைகளைக் கூற்றுவனுங் கண்டிரங்கும்படி ஒருசேர அறுத்து வெற்றிபெற்றவர்களும், கவசஞ்சிதைய மார்பில் விழுப்புண்பட்டு மாற்றாரைப் புறங்கண்டு மீண்டவர்களும் ஆகிய (இறவாத) எல்லாவீரர்களையும் தன்னிடத்து வரும்படியழைத்து,அவரடைந்த வெற்றிக்கு அறிகுறியாக அவர்கட்கெல்லாம் பொன்னாலாகிய வாகைப்பூக்களை, தான் பிறந்தநாளிற் செய்யும் பெருங்கொடையினும் மிகுதியாக நெடும்போதிருந்து கொடுத்து வெகுமானித்தான். இங்ஙனம் பனம்பூவைத் தும்பை மாலையுடன் சூடிப் புலவர்பாடுதற்குரிய புறத்துறைகளெல்லாம் முடித்து ஜயசீலனாகச் சேரன் - செங்குட்டுவன் தன்னரசிருக்கையில் வீற்றிருக்கும்போது,  மாடலன் என்னும் மறையவன் ஆங்கு எதிர்பாராதே வந்துநின்று அரசனை ஆசிகூறிவாழ்த்தி விட்டு, ' எங்கோவே! மாதவியென்னும் நாடகக்கணிகையின் கடற்கரைப்பாடலானது, கனகவிசயரது முடித்தலைகளை இங்ஙனம் நெரித்துவிட்டது; இது வியக்கத்தக்கதாம்' என்று ஒரு வார்த்தையைக் கூறினான். இதனைக்கேட்ட செங்குட்டுவன் அவன் கருத்தை அறியாதவனாய், 'நான்மறையாளனே! பகைப்புலத்தரசரும் அறிந்திராத நகைச்சொல்லொன்றை இங்குவந்து திடீரெனக் கூறினை; நீ சொன்ன உரைப்பொருள் யாது? விளங்கச்சொல்லுக' என்றான்; எனலும் அம்மறையவன் சொல்லலுற்றான். "குடவர்கோவே! காவிரிப்பூம்பட்டினத்தில் நிகழ்ந்த கடல்விளையாட்டிற்குத் தன் காதலனாகிய கோவலனுடன் சென்றிருந்த மாதவியென்னும் நாடகக்கணிகை கருத்துவேறுபடப் பாடிய கானல்வரிப்பாட்டுடன் ஊழ்வினையும் உடன் சேர்ந்துருத்தமையால் கோவலன் அக்கணிகையை வெறுத்துப்பிரிந்து, தன்மனைவி கண்ணகியை உடனழைத்துக்கொண்டு மதுரைமாநகரம் புகுந்தான்; புகுந்தவன், அந்நகரத்தரசனான பாண்டியன் உயிர்நீத்து விண்ணுலகடையும்படி கொலையுண்டன னன்றோ. அங்ஙனங் கொலையுண்ட கோவலன் கற்புடைமனைவியானவள் உன் நாட்டை அடைந்தமையாலன்றோ, அப்பத்தினி இப்போது வடதிசையசருடைய மணிமுடியிலேறி விளங்குவாளாயினள்" என்று,முன்னிகழ்ந்த கோவலன்சரிதத்தைச் சுருங்கக்கூறிப் பின்னும், செங்குட்டுவனை நோக்கி, 'வேந்தர்வேந்தே! யான் ஈண்டு வருதற்கு அமைந்த காரணத்தையும் கேட்பாயாக;  அகத்திய முனிவருடைய பொதியமலையை வலஞ்செய்துகொண்டு கன்னியாகுமரித்துறையிற் றீர்த்தமாடி மீண்டுவருகின்ற யான்,என் ஊழ்வினைப் பயன்போலும், பாண்டியனது மதுரைமாநகரம் சென்றேன். அங்கே நான் தங்கியபோது, பாண்டியன் தன்கணவனை அநியாயமாகக் கொல்வித்த கொடுங்கோன்மையைத் தன் சிலம்பைக்கொண்டு அவ் வரசனுக்கு விளக்கி வழக்காடிவென்றாள் கண்ணகி என்றசெய்தி ஊர்முழுதும் பரவியது. இக்கொலைச்செய்தி கேட்ட ஆய்ச்சியர்தலைவியாகிய மாதரி (கோவலன்கண்ணகியை அடைக்கலமாகப்பெற்றவள்) இடைத்தெருவிலுள்ள தாதெருமன்றத்தினின்றும் எழுந்துசென்று, 'இடைக்குலமக்காள்! அந்தோ, அடைக்கலப்பொருளை இழந்துகெட்டேன்; கோவலன் குற்றமுடையவனல்லன்; அரசனே தவறினான்; செங்கோலும் வெண்குடையும் இங்ஙனம் பிழைபடுங்காலமும் நேர்ந்தனவோ!'என்றலறி இரவின் நடுச்சாமத்தே எரியிற்புகுந்து மாய்ந்தனள். கோவலன் கண்ணகி இருவரையும் தம்முடனழைத்துக்கொண்டு மதுரைவந்த கவுந்தியடிகள், கோவலனை அரசன் கொலை செய்ததுகேட்டதும் உண்டாகிய பெருஞ்சீற்றமானது அவ்வரசனது மரணத்தால் மாறியதாயினும், 'என் அன்புக்குரிய இவர்கட்கு இவ்வினையும் வரக்கடவதோ' என்றிரங்கி உண்ணாநோன்புகொண்டு உயர்கதியடைந்தனள். அன்றியும், கண்ணகியின் சீற்றத்தால் மதுரைமாநகரம் எரிக்கப்பட்டது. இவற்றையெல்லாம் மதுரையில் நேரிலுணர்ந்த யான், பின்பு என்னூராகிய காவிரிப்பூம்பட்டினம் சென்று, என்னண்பனான (கோவலனுக்கு இவன் நண்பனென்பதும், மதுரையில் அவனுடன் இவ்வந்தணன் அளவளாவியதும், இந்நூல் 38ம் பக்கத்துக் காண்க.) கோவலன் கொலைமுதலியவற்றால் யானடைந்த துயரங்களை ஆங்குள்ள பெரியோர்கட்கு உரைக்கலாயினேன். அவ்வாறுரைத்த செய்தி சிறிதுசிறிதாக ஊரெங்கும்பரவி முடிவில் கோவலன்தந்தை மாசாத்துவானுக்கும் எட்ட, அவ்வணிகர் தலைவன், தன்மைந்தனுக்கும் மருகிக்கும் பாண்டியனுக்கும் நேர்ந்த கொடுந் துன்பங்களைச் சகியாதவனாய், இல்லறத்தைவெறுத்துத் தான்படைத்த பெரும்பொருளனைத்தையும் உத்தமதானங்களிற் செலவு செய்துவிட்டுப், பௌத்த சங்கத்தார் இருக்கையாகிய இந்திரவிகாரத்தைச் சார்ந்து அங்கே தவஞ்செய்து கொண்டிருந்த முனிவர் நூற்றுவரைச் சரணமடைந்து துறவியாயினன். அம் மாசாத்துவான் மனைவியாகிய கோவலன்தாயோ, தன் செல்வப்புதல்வனுக்கு நேர்ந்த விபத்தைப் பொறாதவளாய் அளவிறந்த துயரால் நொந்து உயிர்விட்டனள். இனிக் கண்ணகியின் தாதையான மாநாய்கன் தவமுனிவராகிய ஆசீவகரையடைந்து தன் பொருள்களாற் புண்ணிய தானங்களைப் புரிந்து துறவுபூண்டனன். அவன் மனைவியாகிய கண்ணகியின் தாய் சில நாள்களுள்ளே உயிர் நீத்தனள். இச்செய்தியெல்லாங் கேட்ட கோவலன் கணிகையாகிய மாதவி பெரிதுந் துக்கித்து, துன்பம் விளைவிக்கும் பரத்தையர்கோலத்திலே தன்மகள் மணிமேகலையைப் புகவிடாதபடி தன் தாயான சித்திராபதிக்குக் கூறி விட்டு, மாலையுடன் தன் கூந்தலையுங்களைந்து பிக்ஷுணியாகிப் பௌத்தவிகாரமடைந்து தருமோபதேசம் பெற்றனள். இங்ஙனமாக, யான் மதுரையிலிருந்து கொணர்ந்த கொடுஞ்செய்திகேட்டு இறந்தவர்சிலரும் உண்மையால் அப் பாவவிமோசனத்தின்பொருட்டுக் கங்கையாடவெண்ணி இங்குவரலாயினேன்; இதுவே என்வருகைக்குக் காரணம்; வேந்தே! நீ வாழ்க' என்று அம்மாடலமறையோன் முன்னிகழ்ந்தவை யெல்லாம் விளங்கச் செங்குட்டுவனுக்குக் கூறிமுடித்தனன். இவற்றைக் கேட்டிருந்த அவ்வஞ்சி வேந்தன் 'நான்மறையாள! பாண்டியன் தான்புரிந்த கொடுங்கோன்மையை நினைந்து உயிர்நீத்தபின்னர் அப் பாண்டிநாட்டில் நிகழ்ந்த விசேடம் என்னை?' என்று உசாவினான். மாடலனும் அரசனைநோக்கி, 'சோழர் குடிக்குரிய தாயத்தாரொன்பதின்மர் தம்மிலொன்றுகூடி நின்மைத்துனச் சோழனாகிய கிள்ளியோடு பகைத்து அவனது இளவரசியலையேற்று ஏவல்கேளாது சோணாட்டைப் பெரிதும் அலைத்துவந்தகாலையில், அவ்வொன்பதின்மருடனும் பொருது ஒருபகலில் அவர்களை யழித்து மைத்துனனது ஆஞ்ஞாசக்கரத்தை ஒருவழியில் நிறுவியவனும், பழையன்மாறனது காவன்மரமாகிய வேம்பை அடியோடு அழித்துவென்றவனும், போந்தைக்கண்ணி யுடையவனுமாகிய பொறையனே! கேட்டருள்க; கொற்கை நகரத்தே இளவரசாய் விளங்கிய வெற்றிவேற்செழியன் என்பவன் தன்னாட்டுக்கு நேர்ந்த விபத்தையறிந்து பெருஞ்சினங்கொண்டு, ஒருமுலைகுறைத்த திருமா பத்தினியாகிய கண்ணகிக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைப் பலியிடுவித்துப்பின், தன் அரசனை இழந்துவருந்தும் மதுரைமூதூரில் தென்னாடாட்சிக்குரியதாய்த் தொன்றுதொட்டு வருஞ் சிங்காதனத்தே,தெய்வத்தன்மை வாய்ந்த ஒற்றையாழியந்தேர் மேற் காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறி விளங்கியவாறுபோல, சந்திரவமிசத்தோனாகிய அவ் விளஞ்செழியன் ஏறி விளங்குவானாயினன்;அரசே! வாழ்க' என்று முடித்தான்.  கங்கைக்கரைப் பாடியிலே செங்குட்டுவன் இவற்றையெல்லாம் நெடுநாட்களுக்குப்பின் மாடலன் வாயினின்றும் கேட்டறிந்து வியப்புற்றிருந்த காலையில், விரிந்தஞாலத்தைப் பேரிருள் விழுங்கும்படி வந்த மாலைக்காலத்தே, செந்தீப் பரந்ததுபோன்ற மேலைத்திசை விளக்கமெய்த வெண்பிறை தோன்றியது. அங்ஙனமெழுந்த பிறையைப் பெருந்தகையான செங்குட்டுவன் நோக்கினான்.அப்போது பக்கத்திருந்த நிமித்திகன் (பெருங்கணி) சமயமறிந்து அரசனை வாழ்த்தி, 'வேந்தர் வேந்தே! வஞ்சியினின்றும் தேவரீர் புறப்பட்டு இன்றோடு முப்பத்திரண்டு மாதங்களாகின்றன' என்றான். எனலும், செங்குட்டுவன் அக்கங்கைப்பாடியில், மரமுளைகளால் ஒழுங்காக நிரைக்கப்பட்டுப் படங்குகளையே மதிலாகவுடைய தேர்வீதியுள்ளே, சிறிதும் பெரிதுமாய்க் குன்றுகளைக் கண்டாற்போல் விளங்கும் கூடகாரங்களமைந்த முடுக்கின் ஒரு பக்கமாகச் சென்று, வேலைப்பாடு மிக்கதும் சித்திரவிதான மமைந்ததுமான அத்தாணி மண்டபத்தை அடைந்து, ஆங்குள்ள பொற்சிங்காதனத்தே வீற்றிருந்து வாயில் காவலரால் மாடலமறையோனை ஆங்கழைக்கச் செய்தனன். அவன் வந்ததும், செங்குட்டுவன் அவ்வந்தணனை நோக்கி 'என் மைத்துனனாகிய சோழனுடன் பகைத்த இளங்கோவேந்தர் போரில் இறந்தபின்னர், அச்சோணாட்டரசனது கொற்றமும் செங்கோலும் கேடின்றியுள்ளனவோ'என்று உசாவ, மாடலனும், அரசனை வாழ்த்தி 'வேந்தே! தேவரும் வியப்பத் தூங்கெயில் மூன்றையும் (இவன் ஆகாசத்திற் சரித்துவந்த அசுரர்களது மூன்றெயில்களையும் அழித்தவனென்று தமிழ்நூல்களிற் புகழப்படுவன்.) எறிந்தவனது வேல்வெற்றியும், குறுநடையுடைய புறாவின் பெருந்துயரமும் அதனைத் துரத்திவந்த பருந்தினிடும்பையும்  ஒருங்குநீங்கத் தன்னுடம்பையே அரிந்து துலையிற் புகுந்தோனது (சிபிச்சக்ரவர்த்தி; முன்னவனும் இவனும் சோழவமிசத் தலைவர்களாதலால், இவர்கள் செயல்களைச் செங்குட்டுவனுடைய மைத்துனச் சோழன்மேல் ஏற்றியுபசரித்தாரென்க.) செங்கோலும், மாறுங்காலமும் உண்டாமோ? காவிரியாற் புரக்கப்படும் சோணாட்டுவேந்தற்கு அத்துன்பக்காலத்துங் கேடில்லை' என்று கூறினன். இவ்வாறு மாடலன் சொல்லக்கேட்டுச் செங்குட்டுவன் மகிழ்வுற்றுத் தன்னிறையளவாக ஐம்பதுதுலாபாரம் பொன்னை அம் மறையவனுக்குத் தானஞ்செய்து வெகுமானித்தனன். இதுமுடிந்ததும் சேரர் பெருமான் தன் யாத்திரைக்கு உதவிபுரிந்த ஆரியவரசராகிய கன்னர் நூற்றுவரையும் அவருடைய வளமிகுந்த நாட்டுக்குச் செல்லுமாறு விடுத்துப், பின் தன் தூதுவராயிரவரை அழைப்பித்துத் தமிழரது பேராற்றலையறியாது போர்க்கோலங்கொண்டுவந்து தோற்றுத் தாபதவேடம் பூண்டொளித்த இராசகுமாரரைத் தமிழரசரான சோழபாண்டியர்க்குக் காட்டிவருமாறு ஆணையிட்டு அவர்களை முன்னதாகப் பிரயாணப்படுத்தி அனுப்பிவிட்டுப் பின் தன் சிரமம் நீங்கப் பள்ளிமேவித் துயில் கொள்வானாயினன். இங்கு இவ்வாறாக:- சேரராஜதானியாகிய வஞ்சிமாந‌கரிற் செல்வமிகுந்த அரண்மனையுள் வானளாவிய அந்தப்புரத்தே, முத்துக்களாலாகிய சல்லியும் தூக்குமிவைகளால் முழுதும் வளைக்கப்பட்டதும் விசித்திரமான மேற்கட்டியமைந்ததும் மணிநிரைகளை இடையிடையே வகுத்து வயிரமழுத்தப்பெற்ற பொற்றகட்டினொளி ஒழுகப்பெற்றதும், வேலைப்பாடுமிக்க புடைதிரண்ட பொற்காலையுடையதுமான அழகிய பெரிய அமளிக்கட்டிலின் மேல்,  புணர்ச்சியுற்ற அன்னங்களது புளகிப்பால் வீழ்ந்த இளந்தோகைகளைச் செறித்து இரட்டையாக விரிக்கப்பெற்ற பள்ளியிடையே, கோப்பெருந்தேவியாகிய இளங்கோ வேண்மாள் தூக்கமென்பதின்றித் தனித்திருக்க, அத்துயரைச் செங்குட்டுவனது வடநாட்டு வெற்றியை அறிந்தவராகிய செவிலிமார்கள் 'அன்னாய்! காதற்கொழுநனைக் காணாதிருந்த நின்கவலையை இனி யொழியக்கடவாய்" என்று கூறிப் பாசுரங்களோடு சேர்த்துப் பல்லாண்டு பாடுவாராயினர். அவ்வாறே, அரசிக்கு ஊழியஞ்செய்யுஞ் சிந்தருங் கூனருஞ் சென்று அடி வணங்கி 'தேவீ! எம்பெருமான் வந்துவிட்டனன்; இனி நீ முகமலர்ச்சியுடன் கூந்தலில் நாளொப்பனைபெற்று நலம்பெற விளங்குக' என்றார். இங்ஙனம் ஆயத்தார் அரசியின் பிரிவாற்றாநிலையை ஒருசார் ஆற்றிநிற்க, மலைகளிற் புனங்காவல்செய்யுங் கானவன் ஆங்கு மூங்கிலிற்கட்டப்பட்ட தேனையுண்டு களித்து அக்களிப்பால் கவண்விட்டுக் காவல் புரிதலை நெகிழ்ந்தமையின், அச்சமயமறிந்து செழித்தபுனக் கதிர்களை உண்ணுதற்கு வந்த பெரியயானைகள் நல்ல துயிலடையும்படி மலைமகளிர் புனப்பரண் மேலிருந்து கொண்டு 'வட திசைச்சென்று வாகையுந்தும்பையுஞ் சூடிய போர்க்களிறுகள் திரும்பும்வழி சுருங்கக் கடவது' என்று தாந்தாம் அறிந்தவாறு பாடிய குறிஞ்சிப் பாட்டுக்களும், 'வடவரசரது கோட்டைகளைத் தகர்த்துக் கழுதைகளை ஏரிலே பூட்டியுழுது கொள்ளைவிதைத்த உழவனாகிய குடவர்கோமான் நாளைவந்து விடுவான்; ஆதலாற் பகடுகளே! நுகம்பூண்டுழுது நாட்டைப் பண்படுத்துவீராக; பகைமன்னரைச் சிறைநீக்கும் அவன் பிறந்தநா ளொப்பனையும் வருகின்றது' என்று பாடும் உழவரது ஒலியமைந்த பாடல்களும்,  அரசனது ஆனிரைகளைக் காக்கும் கோவலர்கள், குளிர்ந்த ஆன்பொருநையாற்றில் நீராடுமகளிரால் விடப்பட்ட வண்ணமுஞ்சுண்ணமும் மலரும் பரந்து இந்திரவிற்போல் விளங்குகின்ற பெரிய துறையருகிலுள்ள தாழைமரங்களின்மேல் இருந்துகொண்டு தம் பசுக்களை அப் பெருந்துறையிற் படியவிட்டுத் தாமரைகுவளை முதலிய பூக்களைத் தலையிற்சூடியவராய் 'ஆனிரைகளே! வில்லவனாகிய நம் வேந்தன் வந்தனன்; அவன் இமயப் பக்கத்தினின்று கொணர்ந்த பெருத்த பசுநிரைகளோடு நீரும் நாளைச்சேர்ந்து மகிழக்கடவீர்’ என்னுங் கருத்துப்பட ஊதும் ஆயரது வேய்ங்குழலோசையும், வெண்டிரைகளால் மோதப்பட்ட கடற்கரைக்கழிகளின் பக்கத்துள்ள புன்னைக்கீழ் வலம்புரிச் சங்கமீன்ற முத்துக்களே கழங்காக நெய்தனிலமகளிர் தங் கைகளில் ஏந்திக்கொண்டு, நெடுநாட்பிரிந்த நம் மரசியோடு கூடிமகிழும்படி வானவனாகிய நம் வேந்தன் வெற்றியோடும் மீண்டனன்; அவன் சூடிய தும்பையையும் பனம்பூவையும் வஞ்சிநகரையும், நங்கைமீர்! நாம் பாடுவோமாக’ என்று நுளைச்சியர் பாடிய இனிய பாடல்களுமாக நால்வகை நிலங்களினின்றும் எழுந்த இன்னிசைகளைக் கூர்ந்து கவனித்துக்கொண்டு உறங்காதிருந்த கோப்பெருந்தேவியானவள், தன் கைவளைகளைச் செறித் தணிந்துகொள்ளவும், நகரில் வலம்புரிச் சங்கங்கள் வலமாகவெழுந்து முழங்கவும், செங்குட்டுவன் முத்துமாலைகளமைந்த வெண்கொற்றக்குடையின் கீழ் வாகையணிந்த சென்னியோடும் தன் பட்டத்தியானையின் மேல் விளங்கியவனாய்,குஞ்சரங்கள் பூட்டிய இரதங்களுடன்  கோநகர் முழுதும் வந்தெதிர்கொள்ள வஞ்சிமூதூரிற் பிரவேசஞ்செய்து தன் கோயிலை அடைவானாயினன். _____________    அதிகாரம் - 6   செங்குட்டுவன் பத்தினிக்கடவுளைப் பிரதிஷ்டித்தல். 5. நடுகற்காதை.  தண்மதிபோன்றதும் பொன்னாலாகியதுமான வெண்கொற்றக் குடையால் மண்ணகத்தைக் குளிர்வித்த நிலந்தரு திருவினெடியோனாகிய செங்குட்டுவன், விஜயம் விளங்கும் அவ் வஞ்சிமாநகரிற் புகுந்தபின்னர், மகளிரெல்லாங்கூடி மலர்களைப் பலியாகத் தூவித் திருவிளக்குகளைக் கொணர்ந்து நின்று 'உலகமன்னனாகிய நம்மரசன் நீடுவாழ்க' என்றேத்தும்படி, மாலைக்காலமும் வந்தது. பலரும் தொழத்தக்கதும் மலர்கள் விரிதற்குக் காரணமாகியதுமான அவ்வழகிய காலத்தே பனம்பூங் கண்ணியைப் பூமாலையோடணிந்தவர்களும் தம் அரசனது போர்வினையை முடித்தவர்களுமான வாள்வீரரது யானைக்கோடழுத்தினவும் வேல் கணைகளாற் கிழிப்புண்டு புண்பட்டனவுமான மார்புகளை, அவர்கள் வீரபத்தினியர் தம் அழகிய தனங்களால் வேது கொண்டு ஆற்றுவித்தனர். இங்ஙனம் ஆற்றுவிக்க அவ்வீரரர்கள் மன்மதபாணம் பாய்ந்தவர்களாய் 'இம்மகளிரது கடைக் கண்கள் முன்பு நமக்குப் பாசறைக்கண்ணே வருத்தஞ்செய்தனவாயினும், இம்மாலைக் காலத்து அதற்கு மருந்துமாயுள்ளன' என்று புகழ்ந்தேத்த, அதுகேட்டு அம்மகளிர் தம் பவள வாயினின்று நிலவெழக் கடைக்கண்ணோக்குடன் புன்சிரிப்பாகிய விருந்தூட்டி மகிழ்வித்தனர்.  மற்றுமுள்ள இளைஞரான வீரர்கள் இசைவல்ல மகளிரது இன்பக்கடலிலாடித், தங்குலைந்த கோலத்தைக் கண்ணாடியாற் றிருத்திக்கொண்டு யாழ்தழுவிக் குறிஞ்சிப்பணணை இனிதுபாடிய அந்நங்கையரால் கானவிருந்து செய்யப் பெற்றனர். இங்ஙனம், அவ்வழகிய மாலைக்காலமானது வீரர்க்கெல்லாம் இன்பவிருந்தயர்வித்துப் பின், சேரன்-செங்குட்டுவன் குடிகளது குறைதீர வெளிப்போதருங் காலத்து விளங்கும் அவனது திருமுகம்போல, உலகந்தொழும்படி தோன்றிய பூர்ணசந்திரனை அவ்வஞ்சிமுதூர்க்குக் காட்டித் தான் நீங்கியது. அப்போது மைந்தரும் மகளிருந் தன்னாணைப்படியே நடக்குமாறு ஐங்கணைக்கிழவனான மன்மதன் அரசுவீற்றிருந்த நிலாமுற்றங்களும், பூம்பள்ளிகளும், நடனசாலைகளும்,மலர்ப்பந்தர்களும், மஞ்சங்களும், விதானமமைந்த வேதிகைகளும் அத்தண்கதிரால் விளக்கமுறுவனவாயின. கடல் சூழ்ந்த இவ்வுலகிற்கு இடைநின்று விளங்கும் மேருப்போல,அவ் வஞ்சிமாநகரின் நடுவுநின்றோங்கும் பொன்மயமான அரண்மனையிலுள்ள நிலாமுற்றமாகிய மணியரங்கில் அப்பூர்ணசந்திரனது காட்சியைக் காணவேண்டி, மகளிர் தம் வளைக்கைகளில் விளக்குகளை ஏந்திப் பல்லாண்டு பாடிக்கொண்டு ஒருபுடை வரவும், மத்தளம் வீணைகளுடன் பண்கனிந்த பாடலிசைகள் ஒருசார் பரவவும், கூனரும் குறளரும் கஸ்தூரி வெண்கலவைச் சாந்தங்களை ஏந்தினவராய் ஒருபுடை செல்லவும், பெண்கோலம்பூண்ட பேடியர் வண்ணஞ்சுண்ணம் மாலையிவற்றைத் தாங்கிவரவும், பூவும் நறும்புகைகளும் வாசனைப்பண்டங்களும் பரவவும், கண்ணாடி தூமடி அணிகலன்களைக் கொண்டு சேடியர் சூழவும், இவ்வாறாக எழுந்தருளிய தன் தன்மபத்தினியாகிய இளங்கோ வேண்மாளோடுங் கூடி வேந்தர்பெருமானான செங்குட்டுவன் அவ்வரங்கினை அடைந்து அதனில் வீற்றிருப்பானாயினன். அப்போது, மறையவர்நிறைந்த பறையூர்வாசியும், கூத்தில் வல்லவனுமாகிய சாக்கையன் ஒருவன் அரசன்முன் வந்து நின்று, சிவபிரான் திரிபுரங்களை எரித்தவிடத்தே உமையவளை ஒரு பாகத்துக்கொண்டு ஆடிய கொட்டிச்சேதம்* என்னுங் கூத்தினை அப்பெருமான் ஆடியமுறையே நடித்துக் காட்டக், குடவர் கோமானும் கோப்பெருந்தேவியும் அதனைக் கண்டு மகிழ்ந்தனர்.  இங்ஙனம், அவ்விருவரது நன்குமதிப்பையும் பெற்றுக் கூத்தச்சாக்கையன் விடைபெற்று நீங்கியபின், செங்குட்டுவன் மனைவியுடன் அந்நிலா முற்றத்தை விட்டுப் புறப்பட்டு அரசிருப்பாகிய பேரோலக்கத்தை அடைந்தான். அடைந்தபின்னர், நீலன் முதலாய கஞ்சுகமாக்கள் மறையோனான மாடலனுடன் அவ்விடம்வந்து, வாயில் காவலரால் தம்வரவை மன்னனுக்கறிவித்து, அவனாணைபெற்று உட்சென்று அரசனை வணங்கிச் சொல்லுகின்றார்:- "வெற்றி வேந்தே! தேவரீர் எங்களுக்கிட்ட கட்டளைப்படியே, சோழரது பழமைதங்கிய நகரஞ்சென்று, அங்கே, வச்சிரம் அவந்திமகத நாட்டரசரால் அளிக்கப்பெற்ற பந்தருந் தோரண வாயிலுங் கொண்ட சித்திரமண்டபத்தில் வீற்றிருந்த செம்பியர் பெருமானைக்கண்டு, வடநாட்டுப் போரில் அகப்பட்ட ஆரிய மன்னரை அவ்வேந்தனுக்குக் காட்டி அவனடி வணங்கி நின்றேம்.  -----  * இது, கொடுகொட்டி, கொட்டி எனவும் வழங்கும்; 'திரிபுரந்தீமடுத் தெரியக்கண்டு இரங்காது கைகொட்டி நின்றாடுதலிற் கொடுமையுடைத்தாதல் நோக்கிக் கொடுகொட்டி என்று பெயர் கூறினார்' என்பர் அடியார்க்குநல்லார். (சிலப். 6, 43). அஃதறிந்த அவ்வரசன் 'போர்க்களத்தே பேராண்மைகாட்டிப்பொருது தங்கள் வாளையும் குடையையும் அக்களத்திட்டு உயிர்தப்பியோடிய வேந்தரைப் போரிற் பிடித்துக் கொண்டுவருதல் வெற்றியாகாது' என்று தன்சேனாபதியை நோக்கிக் கூறினான். பின்னர் அரசே! அவன் தலைநகரைவிட்டுநீங்கி மதுரைசென்று பாண்டியனைக்கண்டேம். 'அமர்க்களத்தே தங்கள் குடைக்காம்பை நட்டுவத்தலைவர் போலக் கையிலே பிடித்துக்கொண்டு, இமயப்பக்கத்துள்ள குயிலாலுவம் என்னும் போர்க்களத்தைத் துறந்து புறங்கொடுத்து, ஆங்குள்ள சிவபிரானை வணங்கியவராய்த் தவக்கோலங் கொண்டோடின ஆரியமன்னர்கள்மேல் இவ்வாறு மிகுந்த சீற்றங்கொண்ட அரசனது வெற்றி, இதுவரையில்லாத புதுமையாகும்' என்றான் அப்பாண்டியன்" எனச் சேரர்பிரானுக்குத் தூதர்தலைவனான நீலன் அவ்வேந்தர்கூறிய வார்த்தைகளைச் செப்பிநின்றனன். இவற்றைச் செவியுற்றுக்கேட்ட செங்குட்டுவன், தன்வெற்றியை அவ் வரசர்கள் இகழ்ந்ததனாற் கோபம் பெருகித் தாமரைபோன்ற கண்கள் தழனிறங்கொள்ள நகை செய்தனன். இங்ஙனம் அரசனுக்குச் சோழ பாண்டியர்மேற் சீற்றம்பெருகுதலை மறையவனாகிய மாடலன் கண்டு அச்சபையிலெழுந்து நின்று 'வேந்தர்வேந்தே! நின் வெற்றி விளங்குவதாகுக' என்றேத்திப் பின்வருமாறு கூறுகின்றான். "மிளகுக்கொடிமிக்க மலைப்பக்கத்துறங்கும் யானைக் கூட்டங்களையுடைய பகைவரது வியலூரை யழித்தும், ஆத்திமாலை-யுடையவரும் சோழர்குடியினருமாகிய ஒன்பதின்மருங் கூடிவிளைத்த பெரும்போரை நேரிவாயில் என்ற ஊரில் வென்றும், பெரிய தேர்ச்சேனைகளுடன் இடும்பாதவனத்துத் தங்கி ஆங்குவிளைந்த போரைக்கடந்தும்,  நெடுங்கடலில் மரக்கலங்களைச் செலுத்தியும், முன்னொருகாலத்தில் எதிர்த்துவந்த ஆரியமன்னரைக் கங்கைக்கரையிற் செயித்தும் இங்ஙனம் வெற்றிமாலைசூடி, உயர்ந்தோர் பலருடன் அறிய வேண்டுவனவற்றை அறிந்த அரசரேறே! நீ வாழ்க; நின் கோபம் அடங்குவதாக; நின் வாழ்நாட்கள் ஆன்பொருநையாற்று மணலினும் அதிகமாக விளங்குக; யான் கூறுஞ் சொற்களை இகழாது கேட்டருள்வாய்; உலகங் காத்தலை மேற்கொண்டுவிளங்கும் உனது சிறந்த ஆயுட்காலத்தே ஐம்பதி யாண்டுகள்வரை கழிந்தும் நீ அறக்கள வேள்வியைச் செய்யாது எப்போதும் மறக்கள வேள்வியே செய்து வருகின்றாய்; இராச காரியங்களை யெல்லாம் முற்றச்செய்து கொற்றவாளை வலத்தேந்தி நிற்கும் உன்னுடைய தலைநகரத்தில், முன்னிருந்த புகழ்மிக்க உன் முன்னோரிலே, * "கடற்கடம் பெறிந்த காவல னாயினும் 1 விடர்ச்சிலை பொறித்த விறலோ னாயினும் 2 நான்மறை யாளன் செய்யுட் கொண்டு மேனிலை யுலகம் விடுத்தோ னாயினும் 3 போற்றி மன்னுயிர் முறையிற் கொள்கெனக் கூற்றுவரை நிறுத்த கொற்றவ னாயினும் 4 வன்சொல் யவனர் வளநா டாண்டு பொன்படு நெடுவரை புகுந்தோ னாயினும் 5 இகற்பெருந் தானையொ டிருஞ்செரு வோட்டி அகப்பா வெறிந்த அருந்திற லாயினும் 6 உருகெழு மரபி னயிரை மண்ணி இருகட னீரு மாட்னோ னாயினும் 7 சதுக்கப் பூதரை வஞ்சியுட் டந்து மதுக்கொள் வேள்வி வேட்டோ னாயினும்" 8 --------- * இவ் வடிகளிற் கூறப்பட்ட செங்குட்டுவன்முன்னோர் செயல்களைப் பதிற்றுப்பத்துப்பாடல்களிலும் பதிகங்களிலும் கண்ட சேரர் செய்திகளோடு ஒப்பிடும்போது, பல (3, 6, 7) ஒருவர் செய்கைகளாகவும், சில (8) செங்குட்டுவனுக்குப் பிற்பட்ட சேரர்செயலாகவும், முறை பிறழ்ந்தும் காணப்படுகின்றன. இதனால், செங்குட்டுவனுக்கு முன்னோர்களை, இவ் வடிகளைக்கொண்டு முறைப்படுத்தல் அருமையாகும். இன்றுவரை ஒருவரும் நிலைத்தவராகக் காணப்படாமையின் இவ்யாக்கை நிலையற்றதென்பதை நீயே யுணர்வாய்; விரிந்தவுலகத்திற் பெருவாழ்வுடையராகிய செல்வரிடத்தே அச் செல்வந்தானும் நிலையாதென்பதைத் தமிழரசரை யிகழ்ந்த இவ்வாரியமன்னரிடத்தில் நீயே கண்டனையன்றோ? இனி இளமை நிலையாதென்பதை அறிஞர் உனக்கு உரைக்க வேண்டுவதேயில்லை; என்னெனின், திருவுடை மன்னனாகிய நீயும் உனது நரைமுதிர்ந்த யாக்கையைக் காண்கின்றாய்; தேவயோனியிற் பிறந்த ஒரு நல்லுயிர் அதனிற்றாழ்ந்த மக்கட் பிறவிக்குத் திரும்பவுங் கூடும். மக்கள்யாக்கையிற் பொருந்திய ஆன்மா அவ்வாறே விலங்குடலையெடுத்தலும், அவ்விலங்குடலை யெடுத்தது துக்கமிகுந்த நரக கதியையடைதலும் உண்டாம். ஆதலால், இவ்வுயிர்கள் ஆடுகின்ற கூத்தரைப் போல ஓரிடத்தே ஒரு கோலங்கொண்டு நிலைத்தல் ஒருபொழுதுமில்லை. தான்செய்கின்ற கருமவிதிக்கேற்ப உயிர்கள் அவ்வக்கதியை அடையுமென்பது குற்றமற்ற அறிஞரது மெய்யுரையாகும்; ஆதலால், இவற்றை நன்குணர்ந்து, எழுமுடியாரந் தாங்கிய வேந்தே! வழிவழியாக நின்னாணை வாழ்வதாக; யான் இவற்றைப் பிறர்போலப் பொருட்பரிசில் காரணமாக உன்பாற் சொல்லவந்தவ னல்லேன். மற்று, நல்வினைப் பயனால் உத்தமசரீரம்பெற்ற ஒரு நல்லுயிர், செய்யவேண்டிய கருமங்களைச் செய்தலின்றி,  இவ்வுலகத்துப் பிறந்திறப் போரெல்லாரும் போம்வழியிலேபோய் வீணேகழிதலை யான் பொறுக்க க்கூடாதவனாக இவைகூறினேன். ஆதலின், அறிவு முதிர்ந்த அரசே! மோக்ஷ-மார்க்கத்தை அளிக்கும் யாகவேதியர்கள் காட்டுகின்ற வேதவழிப்படியே அரசர்க்கெடுக்கப்பட்ட பெரியயாகங்களை நீ செய்தல் தகும். அவ்வறங்களை நாளைச்செய்வோம் என்று தாழ்ப்போமாயின், கேள்வியளவேயான இவ்வான்மா நீங்கிவிடின் என் செய்வது? தம் வாணாளை இவ்வளவென்று வரையறுத்துணர்ந்தோர் கடல் சூழ்ந்த இப்பேருலகில் ஓரிடத்தினும் இலர். ஆதலால், யாகபத்தினியாகிய இவ்வேண்மாளுடன் கூடி, அரசரெல்லாம் நின்னடி போற்ற அவ்வேள்வியை உடனே தொடங்கி ஊழியளவாக உலகங்காவல்புரிந்து, நெடுந்தகாய்! நீ வாழ்வாயாக" என்று அம்மறையவன் உபதேசித்தனன். இவ்வாறு, மாடலன், செங்குட்டுவனது செவியே வயலாக வேதம்வல்ல தன்நாவைக்கொண்டுழுது உத்தம தர்மங்களாகிய வித்துக்களை விதைத்தமையின், அவ்விதைகள் அப்போதே விளைந்து பக்குவம்பெற்ற உணவாய்ப் பெருகவும், அவற்றை விரைந்துண்ணும்வேட்கை அவ்வரசனுக்கு உண்டாகியது. அதனால், சேரர்பெருமான், வேதவழிப்பட்ட தர்மங்களை நன்கறிந்த சிரௌதியராகிய வேள்வியாசிரியர்களுக்கு, மாடலமறையோன் கூறிய முறையே, யாகசாந்திக்குரிய விழாவைத் தொடங்கும்படி ஆஞ்ஞாபித்தனன்.பின்னர்த் தன்னாற் சிறைப்படுத்தப்பட்ட ஆரியமன்னராகிய கனகவிசயரைச் சிறையினின்று மீட்பித்து, பொய்கைசூழ்ந்ததும் குளிர்ச்சிதங்கிய மலர்ச்சோலைகளுடையதுமாகிய வேளாவிக் கோமந்திரம் என்னுமாளிகையில் அவர்களை வசிக்கும்படி செய்வித்துத் தான் நிகழ்த்தும்  யாகமுடிந்ததும் அவரை அவரது நாட்டுக்கனுப்புவதாக அறிவித்து, அது வரை அவ்வாரியவரசர்க்கு வேண்டிய உபசாரங்களைச் செய்துவருமாறு வில்லவன்கோதை என்னும் சேனாபதிக்கு மகிழ்ச்சியுடன் கட்டளையிட்டான். அவ்வாறே, அழும்பில்வேள் என்னும் அமைச்சனோடு ஆயக்கணக்கர்களையேவி, நீர்வளமிக்க நகரங்களிலும் மற்றையூர்களிலும் சிறைப்பட்டவரை யெல்லாம் வெளியேற்றிச் சிறைச்சாலைகளைத் தூய்மைசெய்யவும் ஆணையிட்டனன். இவ்வாறு, சேரர்பெருமான் ஆணையிட்டபின், உலகமுற்றுந் தொழுகின்ற பத்தினியாகத் தான் (கண்ணகி) விளங்குதலால், 'அருந்திற லரசர் முறைசெயி னல்லது - பெரும் பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது' என முன்னோருரைத்த மொழியினுண்மையை ஆத்திமாலைசூடிய சோழனைக் கொண்டு விளக்கியும், செங்கோல் வளையுமாயின் அரசர் உயிர்வாழார் என்ற உண்மையைத் தென்னாடாளும் பாண்டியனைக்கொண்டு விளக்கியும், தாஞ்செய்த சபதம் நிறைவேறினாலல்லது தம் கொடுஞ்சினந் தணியார் அரசரென்பதை ஆரியவரசர் அறியும்படி சேரன்-செங்குட்டுவனைக்கொண்டு விளக்கியும், மதுரைமாநகரம் கேடடையும்படி கொடிய அழலைக் கொங்கையினின்று விளைவித்தும் (இங்ஙனம் அருஞ்செயல்களைப் புரிந்து) சேரநாட்டை யடைந்து வேங்கைமர நீழலில் தங்கிய நங்கையின்பொருட்டு, அந்தணர் புரோகிதன் நிமித்திகன் சிற்பாசாரிகள் இவர்கள்சென்று அழகுபெற அமைத்த பத்தினிக்கோயிலுள்ளதும், இமயத்தினின்று கொணர்ந்த சிலையில் கைத்தொழிற்றிறமையால்  முற்றுவிக்கப்பெற்றதுமான பத்தினிக்கடவுளின் பிரதிமைக்கு அணிகலன்களெல்லாம் பூட்டியலங்கரித்துப் புஷ்பாஞ்சலி செய்து,திக்தேவதைகளையும் கடைவாயிலிலே தாபித்து, யாகவேள்வியோமங்களும் உற்சவங்களும் நிகழுமாறு கடவுண்மங்கலமாகிய பிரதிஷ்டைநிகழ்த்தச் செல்லுக" என்று சாத்திரம் வல்ல மக்களை நோக்கி, வடதிசைவணங்கிய சேரன்-செங்குட்டுவன் கற்பனை செய்தனன். --------------  6-வது வாழ்த்துக்காதை. கண்ணகியின் உற்றார் அவள்கோயிற்கு வருதலும் அவருடன் செங்குட்டுவன் பத்தினியை வாழ்த்தியதும். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ மேலே கூறியவாறு, குமரிமுதல் இமயம்வரை தன் ஆணைநடத்தி உலகாண்ட சேரலாதனுக்குச் சூரியவமிசத்துச் சோழன்மகள் பெற்ற மைந்தனும், முன்னொருகாற் கொங்கருடன் போர்புரியவிரும்பிக் கங்கையாற்றுக்கரைவரை படையெடுத்துச் சென்றவனுமாகிய சேரன்-செங்குட்டுவன் ஆரியரிடத்தேகொண்ட சினத்தோடுந்திரும்பித் தன் தலைநகரான வஞ்சியுள்வந்து தங்கியிருந்தகாலத்தே, வடநாட்டு ஆரியவரசர்பலர் அப்பக்கத்துநடந்த சுயம்வரமொன்றன்பொருட்டுக் கூடியிருந்தவிடத்தில், 'தமிழ்நாடாளும் வேந்தர் போர் விரும்பிப் படையெடுத்துவந்து இங்குள்ள ஆரியவரசர்களை வென்று இமயவரைமேல் தங்கள் இலச்சினைகளாகிய வில் புலி மீன்களைப் பொறித்துச்சென்ற காலங்களில் எங்களைப் போலும் பெருவேந்தர்கள் இந்நாட்டில் இருந்திலர்போலும்' என்று தம்மில் ஒத்துப்பேசித் தமிழரசரையிகழ்ந்து நகையாடிய  செய்தியை ஆங்கிருந்துவந்த மாதவர்சிலர் சொல்லக்கேட்டு, இயற்கையிலுருள்கின்ற உருளையொன்றைக் குணிலைக்கொண்டு உருட்டினாற்போலப் பத்தினியின் பொருட்டுக் கற்கொணர வேண்டு-மென்றெண்ணியிருந்த அவ்வரசனுள்ளத்தை அம்மாதவர் வார்த்தை கிளரச் செய்தமையால் உடனே தன்படைகளைத் திரட்டிச்சென்று ஆரியநாட்டரசரைப் போரில் வென்று அவர் முடித்தலையிற் பத்தினியின் படிமத்துக்குரிய இமயக்கல்லைச் சுமத்திக்கொண்டு அங்கிருந்து திரும்பி வெற்றிமகிழ்ச்சியுடன் கங்கையாற்றிற் றங்கி அப்படிமத்தைக் கங்கையாட்டித் தூய்மைசெய்து தன் சினநீங்கி வஞ்சிமாநகரமடைந்து வேந்தர் பலருந் தொழத்தக்க படிமஞ் செய்வித்துப் பத்தினிக்கடவுளைப் பிரதிஷ்டை செய்ததோடு,அக்கோயிலில் அரசரெல்லாம் தத்தம் திறைகளைக்கொண்டு வந்து வணங்கும்படியும் செய்வித்தனன். இஃது இங்ஙனமாக, மதுரைமாநகரில் முன்னைவினையாற் கோவலன் பொற்கொல்லனாற் கொலையுண்ண அது கேட்ட அவன் மனைவி கண்ணகி துன்பமிக்குக் கண்ணீர் பெருக்கி புழுதியிற்புரண்ட கூந்தலைவிரித்துத் தருமதேவதையைப் பழித்துக்கொண்டு பாண்டியன்முன் சென்று வழக்காட, அவளது துக்கத்தைக்கண்டு பொறாத அவ்வரசன் தன் செங்கோல் வளைந்தமையால் உயிர்நீத்ததையும், கோவலன் கொலையுண்டதுகேட்டு அவன் தந்தை துறவுபூண்டதையும்,தாய் இறந்தமையையும், மாடலனென்னும் அந்தணன் மூலங்கேள்வியுற்று மிகவும் துக்கித்துக் கண்ணகியின் செவிலித்தாயும், அடித்தோழியும் (முக்கியத்தோழி), சாத்தன் கோயிலில் வாழும்  தேவந்தியென்னும் பர்ப்பனத்தோழியும் ஆகிய மூவருஞ் சேர்ந்து கண்ணகியைக் காணவேண்டி மதுரைக்கு வரவும், அப்பத்தினியின் சீற்றத்தால் அந்நகரம் வெந்தசெய்தியை யறிந்து, கண்ணகியை அடைக்கலமாகப்பெற்று அவளது துன்பம் பொறாமலுயிர்விட்ட மாதரியின்மகள் ஐயை என்னும் இடைக்குலமகளையடைந்து அவளுடன் சேர்ந்து மதுரைநீங்கி வையைக்கரை வழியே சென்று திருச்செங்குன்று என்னும் மலைமீதேறி,ஆங்குப் பிரதிஷ்டிக்கப்பெற்ற கண்ணகி கோட்டத்தையடைந்து அப் பிரதிஷ்டையைச் செய்து சிறப்பித்து நின்ற சேரன்-செங்குட்டுவனை ஆங்குக்கண்டு அவனுக்குத் தங்கள் வரலாறுகளையெல்லாம் முறையே உரைத்தனர். உரைத்தபின்,அவர்களுள் தேவந்தி என்னும் பார்ப்பனத் தோழியும் செவிலியும் அடித்தோழியும் -கண்ணகியின் துயர்பொறாது அவள்தாயும் தம்மாமியும் உயிர்நீத்ததும், மாமனாகிய மாசாத்துவானும், தந்தை மாநாய்கனும், கோவலன்காதற்கணிகை மாதவியும், அவள்மகள் மணிமேகலையும் துறவு பூண்டதுமாகிய செய்திகளை அப்பத்தினிக்கடவுள் முன் சொல்லிப்,பின் தம்முடன்வந்த ஐயையை அக்கடவுட்குக் காட்டி 'நின்னை அடைக்கலமாகப் பெற்று அவ்வடைக்கலப் பொருளைக் காத்தோம்பமுடியாமல் உயிர்துறந்த மாதரி என்னும் இடைக்குல முதியாளின் மகளையும் பார்' என்று கூறி அழுதரற்றி நின்றார்கள்.இங்ஙனம் இவர்கள் அரற்றுகின்றபோது, பொற்சிலம்பும் மேகலாபரணமும் வளைக்கைகளும் வயிரத் தோடணிந்த காதுகளும் மற்றும்பல அணிகளும் அணிந்துகொண்டு மின்னற்கொடி போன்ற உருவமொன்று மீவிசும்பிற் றோன்றியது.  அதனைக்கண்ட செங்குட்டுவன் பெரிதும் அதிசயமடைந்தான். அப்போது அவ்வரசனுக்குக் கண்ணகி, தன் கடவுணல்லணி காட்டியதோடு, தன்னைக் காணவந்த மகளிரைநோக்கித் "தோழிகாள்! தென்னவனாகிய பாண்டியன் சிறிதுங் குற்றமுடையவனல்லன். அவன் தேவேந்திரன் சபையில் நல்விருந்தாய் விளங்குகின்றான். நான் அவ்வரசன் மகள் என்றறியுங்கள். முருகன் வரைப்பாகிய இம்மலையில் விளையாடல்புரிய எனக்குப் பெருவிருப்பமாதலால் இவ்விடத்தைவிட்டு யான் நீங்கேன். என்னோடு என் தோழிகளாகிய நீவிரும் சேர்ந்து விளையாடவருதிர்" என்று தன் பழமைகொண்டாடி அப்பத்தினி கூறினள். இங்ஙனம் பத்தினித்தெய்வம் நேர்நின்றுகூற அவற்றைக் கேட்டிருந்தவராகிய வஞ்சிமகளிரும் செங்குட்டுவன் ஆயமகளிரும் வியப்புற்றுத் தங்களிற்கூடி, அத் தெய்வத்தையும் அத்தெய்வஞ் சஞ்சரித்த தமிழ்நாடாளும் அரசர் மூவரையும் அம்மானை கந்துகம் ஊசல்வரிகளாலும் உலக்கைப்பாட்டாலும் பலவாறு வாழ்த்திக்கொண்டு பாடினர். முடிவில் 'சேரன்-செங்குட்டுவன் நீடூழிவாழ்க' என்று அத் தெய்வவுருவமும் அரசனை வாழ்த்தி மறைந்தது.  --------------  7-வது வரந்தருகாதை. பத்தினி, செங்குட்டுவனையும் பிறரையும் அநுக்கிரகித்தது. வடதிசையை வென்றுவணக்கிய சேரலர்பெருமானான செங்குட்டுவன், பத்தினிக் கடவுளது தெய்வவுருவை மேற் கூறியவாறு தரிசித்தபின்னர், தேவந்தியென்னும் பார்ப்பனியைநோக்கிச் 'சிறிதுமுன்னர் நீங்கள் அழுதரற்றிக்கொண்டு பத்தினிமுன்பு கூறிய மணிமேகலையென்பவள் யார்?  அவள் துறவு பூண்டதற்குக் காரணம் யாது? சொல்லுக' என்று கேட்டனன். தேவந்தியும், கணிகையர்குலத்து ளுயர்ந்தவளான மணிமேகலையின் துறவைக் கூறத்தொடங்கி - "அரசே! நின்வெற்றி பெருகுக: நின்னாடு வளஞ்சிறப்பதாக; கோவலனுக்கு மாதவிவயிற்றுதித்த மணிமேகலையானவள் கன்னிப் பருவமடைந்ததற்கேற்ற அறிகுறிகளெல்லாம் நிரம்பினளாயினும், காமக்குறிப்புச் சிறிதேனும் இல்லாதவளாயினள். அதனால், நட்டுவனார் கூத்துமுதலியன பயில்வியாமையின் குலத்தலைவர்களாகிய செல்வர்கள் அவளைக் கொள்ளுதற்கு நினைந்திலர். இங்ஙனமாதலறிந்து மணிமேகலையின் பாட்டி சித்திராபதி, தன்மகள் மாதவிக்கு அவள்நிலைமைகூறி மன வருத்தமடையத் தாயின்கருத்தறிந்த அம்மாதவி, மணிமேகலையை உடனழைத்துக்கொண்டு அவளைக் கணிகையர்குலத்திற் புகவிடாது, மன்மதன் தானினைத்திருந்த எண்ணம் பழுதாகித் தன்கரும்புவில்லையும் மலர்வாளிகளையும் வெறுநிலத்தெறியும்படி, மணிமேகலையின் கூந்தலை மாலையுடன் களைவித்து இந்திரவிகாரமடைந்து பௌத்ததருமத்தே சேர்த்தனள். இச்செய்திகேட்ட அரசனும் நகரத்தாரும், கிடைத்தற்கரிய நன்மணியைக் கடலில் வீழ்த்தவர்போலப் பெருந் துன்பமடைந்தனர். மணிமேகலை தன் வைராக்கியத்தைச் சங்கத்தாரான அறவணவடிகளிடம் சென்றுகூறிப் பிக்ஷுணியாயமர்ந்த செய்தியை, அவ்வடிகளே அன்போடும் எமக்குக் கூறினார். இவ்வாறு, இளம்பருவத்தே மணிமேகலை தன் அழகிய கோலத்தை அழித்துத் துறவு பூண்டாளாதலின் நான் கதறியழலாயினேன்" என்று முன்னடந்த வரலாறுகளைத் தேவந்தி கூறிமுடித்தாள். பின்னர்ச் சாத்தனென்னுந் தெய்வம் திடுக்கென்றேறியதனால் ஆவேசங்கொண்டு, அத்தேவந்தி, கூந்தல்குலைந்து விழவும், புருவந்துடிக்கவும், செவ்வாய்மடித்துச் சிரிப்புத் தோன்றவும், மொழிதடுமாறி முகம்வியர்க்கவும், செங்கண் சிவக்கவும், கைகளையோச்சிக் கால்பெயர்த்தெழுந்து, பலருமின்னதென்று தெரியவாராத அறிவுமயக்கமுடையவளாய் நாவுலர்ந்து தெய்வம்பேசும் பேச்சுக்களைக் கூறிக்கொண்டு,செங்குட்டுவன் திருமுன்பிருந்த மாடலனைநோக்கி "மாடல! யான் பாசண்டச் சாத்தன். இப்போது இத் தேவந்தியின் மேல் ஆவேசித்துள்ளேன். பத்தினிக்கடவுளின் பிரதிஷ்டையைத் தரிசிக்கவேண்டி இங்குவந்துள்ள மகளிருள்ளே அரட்டன்செட்டியின் இரட்டைப்பெண்களும் ஆடகமாடத்துத் திருமால் கைங்கரியம்புரியும்[*] சேடக்குடும்பியின் இளம்பெண்ணும் ஈங்கிருக்கின்றனர். மங்கலாதேவியின் கோயிற் பக்கத்துள்ள மலையிடத்தே, மயிற்கல்லின் பிடர்தலையினின் றிழிகின்ற நீரால் நிரம்பும் பொய்கைகள் பலவற்றுள்ளே இடையிலிருப்பதும், சிறியஅழகிய கற்களோடு மாவைக் கரைத்தாலொத்துவிழும் நீருடையதுமாகிய சுனையொன்றிற் புகுந்து நீராடுவோர் பண்டைப்பிறப்பின் செய்திகளை அறிந்தோராவர் என்பதுபற்றி, அம்மங்கலாதேவி கோயிலின் வாயிலிலே நீ இருந்தபோது, அந்நீருள்ள கரகத்தை 'இது நீ கொள்ளத்தக்க'தென்று நான் உன்பாற கொடுத்தேனன்றோ.  ---- [*] சேடக்குடும்பி என்பதற்குத் திருவடிபிடிப்பான் என்று கூறுவர், அரும்பத-வுரையாசிரியர் (பக். 75). திருவடிபிடிப்பான் - அருச்சகனென்பது 'நடுவிற்கோயிற் றிருவடிபிடிக்கும் ஸ்ரீதரபட்டனும்' என்னும் சாஸனப்பகுதியால் தெரிகின்றது.* ( South Indian Inscriptions, Vol. III. p.84.) அந்நீர்க்கரகமும் இப்போது உன் கையின்கண்ணே உள்ளது. சந்திராதித்தர் உள்ளவளவும் அந்நீரின் கடவுட்டன்மை ஒழியாது. இக்கரகத்துநீரைச் செங்குட்டுவன் முன்னேயுள்ள இவ்விளம்பெண்கள் மூவர்மீதும் தெளிப்பாயாயின், இன்னோர் முற்பிறப்பினை அறிந்தோர் ஆவர்; இதனுண்மையை நீயே சோதித்துப் பார்." என்று கூறினாள். இங்ஙனம் தேவந்தி ஆவேசமுற்றுக்கூறிய வார்த்தைகளைக் கேட்டலும், செங்குட்டுவன் மிகவும் விம்மிதமுற்றுப் பக்கத்திருந்த மாடலன்முகத்தை நோக்கினான்.அப்போது அவ்வந்தணன் மகிழ்ச்சியுற்றவனாகிச் செங்குட்டுவனை வாழ்த்தி-'அரசே! இது கேட்பாயாக;மாலதியென்னும் பார்ப்பனமாது தன்மாற்றாள்குழந்தையை எடுத்துப் பால் கொடுக்கப் பழவினைவயத்தால் அப்பால்விக்கிக் குழந்தை கையிலேயிறக்கவும், அதன்பொருட்டு ஆற்றாளாய்ப் பெருந்துன்பமடைந்து, பாசண்டச்சாத்தன் கோயில் சென்று அத்தெய்வத்தின்பால் வரங்கிடந்தாள். அவளது பெருர்ந்துயர்க்கிரங்கி அச்சாத்தன் குழந்தையுருக்கொண்டு வந்து ’அன்னாய்! யான் வந்தேன்;இனி உன் துயரொழிக' என்று கூறவும், அம்மாலதியும் மாற்றாந்தாயும் அதனை வளர்க்கக் காப்பியம் என்னும் பழங்குடி பொலிவடைய வளர்ந்து,பக்குவம் வந்ததும் அப்பிள்ளை இத்தேவந்தியை மணந்து இவளோடும் எட்டியாண்டு இல்லறம் நடத்திவந்தான்.*  இவ்வாறு நிகழுங்கால், ஒருநாள், தன் மனைவியாகிய இவட்கு அச்சாத்தன் தன் தெய்வவுருவை வெளிப்படுத்திக் காட்டித்  --------------- * இங்ஙனமே, கண்ணகியின் பார்ப்பனத்தோழியான தேவந்தியின் வரலாற்றை, இளங்கோவடிகள் கனாத்திறமுரைத்த காதையினும் விரித்துக் கூறுவர். தன் கோட்டத்திற்கு வரும்படி இவளுக்குக் கட்டளையிட்டு மறைந்தனன்.மறைந்தவன், நான் மங்கலாதேவியின் கோட்டத்திலிருக்கும் போது, அந்தணனுருக்கொண்டு வந்துதோன்றி, உறியிலமைந்த இக்கரகத்தை என்கைக்கொடுத்து நிகழ்வதுகூறி, இதனைச் சேமமாக வைத்திருக்கும்படி எனக்குக் கூறிச்சென்றான். அங்ஙனஞ் சென்றதுமுதல் இதுவரை அவன் திரும்ப என்பால் வந்திலன்; அதனால் இக்கரகத்தைத் தவறவிடாது என்னுடன் கொண்டுவந்தேன். இவ்வாறாதலால், அச்சாத்தனென்னுந் தெய்வமே தன் பார்ப்பனியாகிய இத்தேவந்தியின்மேல் இப்போது ஆவேசித்து இக்கமண்டலநீரைத் தெளிக்கும்படி கூறினான். வேந்தர்வேந்தே! இங்குள்ள இச் சிறுமியர்மேல் இதனீரைத் தெளித்துச் சாத்தன்கூறிய அவ்வுண்மைகளை நாம் இனியறிவோம்" என்று அம் மாடலமறையோன் நிகழ்ந்த வரலாறுகளைக்கூறித் தான் கொணர்ந்த கமண்டலத்து நீரை, அங்கிருந்த பெண்கள் மூவர்மேலும் புரோக்ஷித்தனன். உடனே, அச்சிறுமிகட்குத் தங்கள் பழம் பிறப்புணர்ச்சி வந்தடையவும், அம்மூவருந் தனித்தனியாக அடியில்வருமாறு புலம்பலானார்கள்:- (முதலாமவள்) "யான்பெற்ற மகளே! யாவரும் புகழத் தக்க உன்கணவன் கூடாவொழுக்கத்தனாய் உன்னை இகழ்ந்துநின்ற நிலைமைக்கு வருந்திநின்ற உன்தாயாகிய யானும் அறியாமலே அந்நியநாடுசென்று, உற்றாரொருவரும் இல்லாதவிடத்தில் தன்னந்தனியையாய்க் கணவனுடன் கடுந்துயரமடைந்தனையே" (என்றரற்றினாள்). (இரண்டாமவள்) "என்னுடன் கூடவேயிருந்துவந்த உன்மனைவியும் என்மருகியுமாகிய கண்ணகியை  அழைத்துக் கொண்டு, நடுநிசியில் பெருந்துயரத்தோடு சென்றனையே; இதனை நினைக்குந்தோறும் என்னெஞ்சம் வருத்தமிக்குப் புலம்புகின்றது; இத்துயரம் என்னாற் பொறுக்கக்கூடவில்லை;என் அருமை மகனே! என்பால் ஒருகால் வாராயோ"(என்று கதறினாள்). (மூன்றாமவள்) "இளையோனே! நீ என்மனையிற் றங்கியிருந்த காலத்தே வையையாற்றில் நீராடச்சென்றிருந்த நான் திரும்பிவந்தபோது ஊராரால், ஐயோ! நீ கொலையுண்டதைக் கேட்டேன். கேட்டதற்கேற்ப, மனையில்வந்து நான் பார்த்தபோது நின்னைக் கண்டிலேன். எந்தாய்! என்னையறியாது எங்குச்சென்றனையோ, தெரிந்திலனே!" (என்றழுதாள்). இவ்வாறாக அச்சிறுமிகள் மூவரும் முதியோர் பேசும் பேச்சால் செங்குட்டுவன் திருமுன்பே அக் கோட்டத்தில் அரற்றியழவும், போந்தைமாலையணிந்த அவ் வேந்தர்பெருமான் வியப்புற்று மாடலன்முகத்தை மறுமுறையும் நோக்க,அரசனது குறிப்பறிந்து அவனையாசீர்வதித்து அம்மறையவன் கூறுவான்:- "அரசே! ஒருகாலத்தில், மதயானை கைக்கொண்டதனால் உயிர்போகும் நிலைமையிலிருந்த அந்தணனொருவனது பெருந்துயர் ஒழியும்படி அவனை அவ்யானையின் கையிலிருந்து தப்புவித்துத் தானே அதன் கையிற் புகுந்து, கொம்புகளின் வழியாக அதன் பிடர்த்தலையிலேறி வித்யாதரன்போல விளங்கித் தன்னருஞ்செயலைக் காட்டிய கோவலனது (இவனது இவ்வரிய செயலை அடைக்கலக்காதை (42-53)யிலும் இளங்கோவடிகள் கூறினர்.)  அன்புடை மனைவிமேல், இம் மூவரும் பெருங்காதல் வைத்தவராதலால், விண்ணாடுசென்ற அவரோடு தாமுஞ் செல்லத்தக்க நல்லறத்தை இன்னோர் செய்யாதுபோயினர். அதனால், இவர்கள் கண்ணகியின்பாற் பேரன்புடையராய், அரட்டன்செட்டி மனைவிவயிற்றில் இரட்டைகளாகச் சேர்ந்து வஞ்சிமூதூரிற் பிறந்தனர்; ஆயர் முதுமகளாகிய மாதரி முற்பிறப்பிற் கண்ணகிமேல் வைத்த காதன்மிகுதியாலும், திருமால்பொருட்டுக் குரவைக்கூத்தாடிய விசேடத்தாலும் சேஷசாயியாகிய அப்பெருமானது திருவடிபிடிப்பான்குலத்திற் சிறுமகளாகத் தோன்றினள். இதனால் நல்லறஞ்செய்தவர் பொன்னுலகடைதலும், ஒன்றிற் காதல் வைத்தோர் பூமியிற் பற்றுள்ளவிடத்தே பிறத்தலும், அறம்பாவங்களின் பயன் உடனே விளைதலும், பிறந்தவர் இறத்தலும்,இறந்தவர் பிறத்தலும் புதியனவன்றித் தொன்மைப்பட்டன என்பது நன்குவிளங்கும். இடபாரூடனாகிய சிவபிரான் திருவருளாலுதித்துப் புகழ்மிகுந்த மன்னவனாக நீ விளங்குதலால், அரசே! முற்பிறவியிற் செய்த தவப்பயன்களையும் பெரியோர் தரிசனங்களையும் கையகத்துப் பொருள்போற் கண்டு மகிழப்பெற்றாய்; ஊழியூழியாக இவ்வுலகங்காத்து வேந்தே!நீ வாழ்வாயாக" என்று கூறித், தம்முன் அழுது புலம்பிய அவ்விளம்பெண்கள் மூவரும் முற்பிறப்பில் முறையே கண்ணகியின் தாயும், கோவலன் தாயும், ஆய்ச்சியாகிய மாதரியுமாயிருந்த செய்திகளைச் செங்குட்டுவனுக்குத் தெளிய மாடலன் விளக்கினான். இவற்றைக் கேட்டுப் பெரிதும் வியப்புற்ற சேரர்பெருமான், பாண்டிநாட்டுத் தலைநகரான கூடன்மாநகரம் எரியுண்ணும்படி தன்முலைமுகத்தைத் திருகியெறிந்த பத்தினியாகிய  கண்ணகியின் கோயில்படித்தரங்களுக்கு வேண்டிய பூமிகளளித்து நித்யோற்சவம் நிகழ்த்தி,ஆராதனை அத்தேவந்தியால் நடந்துவரும்படி நியமித்து, அப் பத்தினிக்கடவுளை மும்முறை பிரதக்ஷிணஞ்செய்து வணங்கிநின்றான்.இங்ஙனம் இவனிற்க,கனகவிசயரென்னும் ஆரியவேந்தரும், பண்டே வஞ்சியிற் சிறைப்பட்டு விடுபட்ட மன்னரும், குடகநாடாளும் கொங்கிளங் கோசரும், மாளுவ வேந்தரும், கடல்சூழ்ந்த இலங்காதிபனான கயவாகு வேந்தனும் செங்குட்டுவன் முன்னர் அப் பத்தினியை வணங்கினவர்களாய் "தேவீ! எங்கள் நாட்டிற்கும் எழுந்தருளிவந்து, சேரர் பெருமான் செய்த பிரதிக்ஷ்டையிற்போலப் பிரஸந்நையாகி எங்கட்கும் அருள்புரிய வேண்டும்" என்று பிரார்த்தித்தனர்.இங்ஙனம் அவர்கள் வேண்டிநின்றபோது, 'தந்தேன்,வரம்' என்று ஒரு தெய்வவாக்கு ஆங்கு யாவருங்கேட்ப எழுந்தது.அது கேட்டுச் செங்குட்டுவனும் ஏனையரசர்களும் சேனைகளும் வியப்புற்று, வீட்டுலகத்தையே நேரிற்கண்டவர்போல ஆரவாரித் தானந்தித்தார்கள். பின்னர், அரசரெல்லாம் தன்னடி வணங்கியேத்த, தத்துவஞானியாகிய மாடலனுடன் சேர்ந்து, அப்பத்தினிக் கோட்டத்து யாகசாலையினுள்ளே சேரன்-செங்குட்டுவன் பிரவேசிப்பானாயினன்.இங்ஙனம் அரசன் சென்றபின் யானும் (#* இளங்கோவடிகள் தம் வரலாறுபற்றிக் கூறுங் கூற்று) ஆங்குச் செல்லவெழுந்தேன்; அப் பத்தினிக்கடவுள் தேவந்தியென்னும் பார்ப்பனிமேல் ஆவேசித்தவளாகி என் முன்னர்த் தோன்றி "மூதூராகிய வஞ்சிமாநகரத்தே பேரோலக்க மண்டபத்தில் உந்தையாகிய சேரலாதனோடு நீ சேர்ந்திருந்தகாலையில், நிமித்திகனொருவன் வந்து நின்னைப்  பார்த்து, அரசு வீற்றிருத்தற்குரிய இலக்கணம் நினக்கேயுண்டென்று கூற, 'என் தமையனான செங்குட்டுவனிருப்ப நீ முறைமைகெடச் சொன்னாய்' என்று அந்நிமித்திகனை வெகுண்டு நோக்கி, இராச்சியபாரத்தை அகலத்தள்ளிக் குணவாயிற் கோட்டத்தில் துறந்த முனிவனாய் வசித்து,தமையனான செங்குட்டுவனது ஆட்சியுரிமைக்குக் கேடுவாராதபடி மோக்ஷ சாம்ராஜ்யத்தை ஆளநிற்கும் வேந்தனல்லையோ, நீ" என்று, முன்னிகழ்ந்ததும் இனி நிகழ்வதுமாகிய என்னுடைய வரலாறுகளையும் உரைத்தருளினாள். இங்ஙனமுரைத்த இமையோரிளங்கொடியாகிய கண்ணகியின் பெருமைதங்கிய இச் சரிதத்தை விளங்கக்கேட்ட செல்வமிக்க நல்லோர்களே! "பரிவு மிடுக்கணும் பாங்குற நீங்குமின் தெய்வந் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின் பொய்யுரை யஞ்சுமின் புறஞ்சொற் போற்றுமின் ஊனூண் டுறமின் உயிர்க்கொலை நீங்குமின் தானஞ் செய்ம்மின் தவம்பல தாங்குமின் செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட் பிகழ்மின் பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின் அறவோ ரவைக்கள மகலா தணுகுமின் பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின் பிறர்மனை யஞ்சுமின் பிழையுயி ரோம்புமின் அறமனை காமி னல்லவை கடிமின் கள்ளுங் களவுங் காமமும் பொய்யும் வெள்ளைக் கோட்டியும் விரகினி லொழிமின் இளமயுஞ் செல்வமும் யாக்கையு நிலையா உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின் மல்லன்மா ஞாலத்து வாழ்வீ ரீங்கென." மேற்கூறியவாறு, கண்ணகியின்பொருட்டு இமயத்திற் கல்லெடுக்கச் சென்ற செங்குட்டுவன், வடநாடு சென்று தன் பகைவரைப் போரில் வென்று கல்லெடுப்பித்து, அதனைக் கங்கைநீராட்டி இரண்டேமுக்கால் வருஷங்கட்குப்பின் தன்னூர் புகுந்து பத்தினியைப் பிரதிஷ்டைசெய்த வரலாறுகளைச் செங்குட்டுவன் சகோதரராகிய இளங்கோவடிகளே இனிமையும் கம்பீரமுமான தம் வாக்காற் பாடி, அப்பத்தினிக் கடவுள் தம்மை நோக்கிக் கூறிய வாக்கியங்களோடும் நூலைமுடித்திருத்தல் அறியத்தக்கது. இப்பத்தினியின் பிரதிஷ்டாகாலத்தில் வந்திருந்த வேற்றுநாட்டரசர் சிலரும் சோழபாண்டியரும், செங்குட்டுவன் செய்தவாறே, கண்ணகிக்குத் தத்தம் நகரங்களில் கோயிலெடுத்துத் திருவிழா நடத்தியதுமுதலிய செய்திகளை அவ்வடிகள் சிலப்பதிகார முகப்பில் உரைபெறுகட்டுரை என்னும் பகுதியிற் கூறியிருக்கின்றனர்; அது வருமாறு:- ( 1 ) "அன்றுதொட்டுப் பாண்டியநாடு மழைவறங் கூர்ந்து வறுமையெய்தி வெப்புநோயுங் குருவுந்தொடரக் கொற்கையிலிருந்த வெற்றிவேற்செழியன் நங்கைக்குப் பொற்கொல்லராயிரவரைக் கொன்று களவேள்வியால் விழவொடு சாந்திசெய்ய நாடுமலிய மழைபெய்து நோயுந் துன்பமும் நீங்கியது. ( 2 ) "அதுகேட்டுக் கொங்கிளங்கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்திசெய்ய மழைதொழிலென்றும் மாறாததாயிற்று. ( 3 )"அது கேட்டுக் கடல்சூழிலங்கைக் கயவாகுவென்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்டமுந்துறுத்தாங்கு அரந்தைகெடுத்து வரந்தருமிவளென ஆடித்திங்களகவை யினாங்கோர் பாடிவிழாக்கோள் பன்முறையெடுப்ப மழைவீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையாவிளையு ணாடாயிற்று. (4) "அது கேட்டுச் சோழன்-பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத்தானும் வரந்தருமிவளோர் பத்தினிக்கடவுளாகுமென நங்கைக்குப் பத்தினிக்கோட்டமுஞ் சமைத்து நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே"-எனக் காண்க. -----------------------  அதிகாரம் - 7 செங்குட்டுவன் சமயநிலை சேரன்-செங்குட்டுவன் கொண்டொழுகியமதம் பொதுவாக வைதிக சமயமேயாயினும், சிறப்பாக இவனைச் சைவாபிமானவமுள்ளவன் என்று சொல்லுதல் தகும். இவ்வேந்தன் சிவபெருமான் திருவருளால் உதித்தவனென்றும், அப்பெருமானருள் கொண்டு விளங்கியவனென்றும் இவன் சகோதரரே கூறுவர். "செஞ்சடை வானவன் அருளினில் விளங்க வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்" (சிலப்.26.98-9.)  "ஆனே றுயர்த்தோ னருளில் விளங்க மாநிலம் விளக்கிய மன்னவன்" (சிலப்.80.141-2.) இவனது சைவாபிமானத்தை அடியில்வரும் மற்றொரு செய்தியும் விளக்குவதாம். வஞ்சியினின்று வடநாட்டியாத்திரைக்குப் புறப்படுங்காலத்தே, இவ் வேந்தன், சிவபிரான்  பாதுகைகளை வணங்கிவாங்கிச் சிரசில் தரித்துக்கொண்டு தன் அரசுவாவின்மேல் ஆரோகணித்தனனென்றும்,அப்போது ஆடகமாடமென்னுங் கோயிலிற் பள்ளிகொண்ட திருமால் பிரசாதத்துடன் சிலர் வந்து இவனை வாழ்த்திநிற்க, தன்முடியிற் சிவபிரான் திருவடிநிலைகளைத் தரித்திருந்தமையின்,அத் திருமால் பிரசாதத்தை வாங்கித் தன் மணிப்புயத்தில் தாங்கிக்கொண்டு சென்றனனென்றும் இளங்கோவடிகள் குறிக்கின்றார். இவற்றை,  "நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி உலகுபொதி யுருவத் துயர்ந்தோன் சேவடி மறஞ்சேர் வஞ்சி மாலையோடு புனைந்து இறைஞ்சாச் சென்னி யிறைஞ்சி வலங்கொண்டு" (சிலப்.26:62_67)  "கடக்களி யானைப் பிடர்த்தலை யேறினன் குடக்கோக் குட்டுவன் கொற்றங் கொள்கென ஆடக மாடத் தறிதுயி லமர்ந்தோன் சேடங் கொண்டு சிலர்நின் றேத்தத்  தெண்ணீர்க் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின் ஆங்கது வாங்கி யணிமணிப் புயத்துத் தாங்கினனாகி-(சிலப்.26:60-67) என்னும் அடிகளால் அறியலாம். இவற்றால்,சிவபிரான்பால் இவ் வரசனுக்கிருந்த பத்தி விளங்கத்தக்கது. ஆயினும்,பிற்காலத்தரசர் சிலர்போல மதாந்தரங்களில் வெறுப்புக் காட்டுதலின்றித் தன்காலத்து வழங்கிய எல்லாச்சமயங்களிலும் அன்புவைத்து ஆதரித்து வந்தவன் செங்குட்டுவனென்றே தெரிகின்றது.  இவனாட்சிக் காலத்திலே, வஞ்சிமூதூரில், வைதிகரும் சைநரும் ஆசீவகரும் (ஆசீவகம் - சமணசமயத்தின் பாகுபாடுகளுள் ஒன்று; இம்மதத்தினர்க்குத் தெய்வம் மற்கலியென்றும், நூல் நவகதிரென்றும் கூறுவர். (மணிமே. 27: 112 அரும்பதவுரை.)) பௌத்தரும் தம்மிற் கலந்து வாழ்ந்து வந்தனர். மணிமேகலை, அந்நகர்க்குச் செல்லநேர்ந்தபோது, சமயவாதியரோடெல்லாம் அவள் அளவளாவினள் என்பதனால் இதனையறியலாம். இஃது என்? செங்குட்டுவனுக்கு உடன்பிறந்தவரான இளங்கோவடிகள் அநுஷ்டித்தமதம் சைநமேயாதல் வேண்டுமென்று, அவரது வாக்கின்போக்கால் தெரிகின்றது. செங்குட்டுவனுக்கும் அவன் சகோதரர்க்கும் மிகுந்த நட்பினரான கூலவாணிகன் சாத்தனார் கொள்கையோ, பௌத்தமதமென்பதில் ஐயமில்லை.இனிச் செங்குட்டுவனால் தெய்வமாக வணங்கப்பெற்ற கண்ணகியுங்கோவலனுங் கொண்டிருந்த மதமும் அப்பௌத்தமேயாமென்பது, மணிமேகலையை நோக்கிக் கண்ணகிக்கடவுள் தன்னிகழ்ச்சிகூறிய வாக்கியங்களால் நன்கறியப்படும். (மணிமே. 29: 42-61.)இங்ஙனம், பௌத்தச்சார்பினரான கோவலன் கண்ணகிகளின் தந்தையர் கொண்ட சமயங்களோ, முறையே பௌத்தமும் ஆசீவகமும் ஆகும்.(சிலப். 27: 90-100.) இவற்றால், செங்குட்டுவன் காலத்திருந்த தென்னாட்டுச் சமயநிலையை நோக்குமிடத்து, அஃது இக்காலத்துப்போற் பரம்பரையநுஷ்டானத்துக் குட்படாது அவ்வவர் அறிந்துகடைப்பிடித்த கொள்கைமாத்திரையாகவே இருந்ததென்பது விளக்கமாம். தந்தைமதம் மகனுக்கும் தம்பிமதம் தமையனுக்கும் உரியதாக அக்காலத்திருந்ததில்லை. ஆயினும், உறவுமுறையிலும் நீதிமுறையிலும், தம்முளிருந்த கொள்கை வேறுபாடுபற்றி அவர்கள் ஒருகாலும்  பிரிந்திருந்தவரல்லர். அக்காலவியல்பு அங்ஙனமாதலின்,சேரன் -செங்குட்டுவன் தன்னைச்சார்ந்த அந்நியமதத்தவரை அபிமானித்ததும் ஆதரித்ததும் வியப்புடையனவல்ல எனலாம். இவ்வாறே, பிற்காலத்துத் தமிழரசரும் மதாந்தரங்களை அபிமானித்திருக்குஞ் செய்தி சாஸனங்களால் அறிந்தது.(இராஜராஜசோழன் 1, முதலியோர் சைவாபிமான மிக்கவர்களாயிலும், இவ்வாறே சைநபௌத்த மதங்களை அபிமானித்து வந்தவர்கள் என்பது அவர்கள் சாஸனங்களால் அறியப்படுகின்றது. (கோபிநாதராயரவர்களெழுதிய சோழவமிச சரித்திரம். பக். 17.)) இனிச் செங்குட்டுவன் தன் வைதிகச்சார்புக்கேற்ப, பிராமணரைப் பெரிதும் ஆதரித்து, அவர்கள் கூறும் உறுதிமொழிப்படியே ஒழுகி வந்தவனென்பது, மாடலனென்ற மறையவனிடம் அவன் காட்டிப்போந்த கௌரவச் செய்கைகளாக முன்பறிந்தவற்றால் விளக்கமாகும். இவன் தமிழ்வேந்தனாயினும் க்ஷத்திரிய வருணத்தவனாதலால், அவ் வகுப்பினர்க்குரிய யாகாதிகளை அந்தணரைக்கொண்டு செய்துவந்ததும்(சிலப். 28: 175-194.) பிராமணரையும் அவர் தர்மங்களையும் பெரிதும் போற்றி வந்தமையும்(சிலப். 26: 247-250.) அறியத்தக்கன. -----------------------------------------------------------                          அதிகாரம் - 8   செங்குட்டுவன் சமகாலத்தரசர். ------------------------------------------------------- செங்குட்டுவன் காலத்தே, தமிழ்ப் பெருவேந்தர்களாகிய சோழபாண்டியரோடு அவர் கீழடங்கிய சிற்றரசர் பலரும் மிகுந்திருந்தனர். தமிழ்ப்பெருவேந்தருள்ளும் பலகிளையினர் தத்தம் நாட்டின் ஒவ்வொருபகுதிகளைப் பிரித்தாண்டு வந்தனரென்பது முன்னூல்களால் உய்த்தறியப்படுகின்றது. சேரரில் தொண்டியையும் மாந்தையையும் தலைநகராகக்கொண்டு ஆட்சிபுரிந்தவர்களை முன்னரே குறிப்பிட்டோம். இவ்வாறே சோழபாண்டியரிலுமிருந்தனரென்பது புறநானூறு முதலியவற்றை நோக்குமிடத்துப் புலப்படக்கூடியதே. ஒரு புலவர் ஒரே வேந்தர்வமிசத்திற் பலரைப்பாடும்படி நேர்ந்ததற்கு இதுவே காரணமாகும். இவ்வாறு கொள்ளாவிடத்து, பலவரசர் ஒரே வமிசத்தில் ஏககாலத்தில் இருந்தவராகக் காணப்பட்டுச் சரித்திரவொற்றுமை பெறுவதில் மயக்கங் கொள்ள நேரும். இங்ஙனம் மூவேந்தர் வமிசங்களும் தனித் தனிக் கிளைகளுடையனவாயினும், செங்குட்டுவன் காலத்துச் சோழ பாண்டியருள்ளே தலைசிறந்துநின்ற அரசர்சிலரை நாம் முன்னூல்களினின்று குறிப்பிடலாகும். அன்னோரகளை அடியில் வருமாறு காண்க :-- [சோழர்.] செங்குட்டுவன்காலத்திற் சோணாடாண்ட அரசர்கள் பலராயினும், முக்கியமாக, உறையூர்ச்சோழரும் புகார்ச்சோழருமென இருபகுதியினராகக் கொள்ளலாம். " மாடமதுரையும்  பீடா ருறந்தையும் - ஒலிபுனற் புகாருங் கலிகெழுவஞ்சியும்"(சிலப்பதி. 8: 3-4.) எனச் சோணாடு தங்காலத்தில் இரண்டு இராஜதானிகளு டையதாயிருந்ததை இளங்கோவடிகளும் குறிப்பிடுவர்.(கரிகாற்பெருவளத்தான், உறையூரை நீங்கிப் புகாரைத் தன் தலைநகராகக் கொண்டானென்று பட்டினப்பாலை (அடி. 285.)) குறிப்பிக்கும்.)செங்குட்டுவன் தாயுடன் பிறந்த அம்மானும் சோழன் மணக்கிள்ளியின் மகனுமாகிய நெடுங்கிள்ளி உறையூரை ஆண்டு வந்தனன்.(புறம். 44, 45, 47-ம் பாடல்கள்) இவ்வுறையூர்ச் சோழர்க்கும் புகார்ச்சோழர்க்கும் பெரும்பகைமூண்டு போர் நிகழ்ந்து வந்ததாகப் புறநானூற்றால் அறியப்படுகின்றது. புகார்ச்சோழரென்பவர், கரிகாலன்மகனாகக் கருதப்படும் கிள்ளிவளவனும் (இவனே, மணிமேகலையிற் கண்ட சோழன்.) அவன் தம்பியாகிய நலங்கிள்ளியுமாவர். இவருடன் காரியாற்றங்கரையில் நடந்த போரிலே, செங்குட்டுவனம்மானாகிய நெடுங்கிள்ளி இறந்தான் என்பது, 'காரியாற்றுத் துஞ்சிய' என அவன் விசேடிக்கப்படுதலாலும்(புறம். 47.) அப்போரில் கிள்ளிவளவன் தம்பியே வெற்றிபெற்றவனென்பது, "ஆர்புனை தெரிய விளங்கோன்றன்னால், காரியாற்றுக்கொண்ட காவல் வெண்குடை, வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி" எனச் சாத்தனார் மணிமேகலையிற் கிள்ளிவளவனைக் கூறுதலாலும் (மணி. 19: 126-128.) புலப்படுகின்றன.செங்குட்டுவன் அம்மானாகிய நெடுங்கிள்ளி இங்ஙனமிறந்ததும், அவன் மகனான பெருங்கிள்ளி உறையூரிற் பட்டமெய்தினன். திருக்கோவலூர்ச் சிறறரசனும் பெருவீரனுமாகிய மலையமான் திருமுடிக்காரி(இவனே கடையெழுவள்ளல்களுள் ஒருவனாகிய காரி.) என்பவன் உறையூர்ச் சோழர்க்குச் சேனாபதியாகவிருந்து  உதவிபுரிந்து வந்தான்; ஆனால், இவனும் அதிர்ஷ்டவீனத்தால் இடையில் இறந்து விட்டான். விடவே,ஆண்டில் இளையனாய்ப் பட்டமெய்திய பெருநற்கிள்ளிக்கு விரோதமாக அவன் ஞாதியரசரெல்லாம் கிளம்பிப் பெருங்கலகம் விளைப்பாராயினர். இக்காலத்தே, அவ்விளஞ் சோழன் தனக்குப் பெருந்துணைவனாக- விருந்த மலையமானது முள்ளூர் மலையில் ஓடி ஒளிக்கும்படி நேர்ந்தது. இவனை இவ்வாபத்துக்காலத்திற் காத்துவந்தவன், முற்கூறிய மலைய மான்மகன் திருக்கண்ணன் என்பான்.*இங்ஙனம் தன் அம்மான்மகனுக்கு நேர்ந்த ஆபத்தைக் கேட்டதும்,செங்குட்டுவன் விரைந்துசென்று,அவனுக்குப் பகைவராய்த் தோன்றிய சோழரொன்பதின்மரை உறையூரையடுத்த நேரிவாயிலில் அழித்துத் தன் மைத்துனச்சோழனைப் பட்டத்தில் நிறுவினான்.† இச்செய்தி முன்னரும் விளக்கப்பட்டது. இங்ஙனம் செங்குட்டுவன் செய்தது, அவன் இரண்டாமுறை  வடநாடு சென்று வந்ததற்கு இரண்டொரு வருஷங்கட்கு முந்தியதாகும்;அஃதாவது -அவனது 45-ம் வயதை ஒட்டியதாதல் வேண்டும். இவ்வாறு,செங்குட்டுவனால் உதவி  புரியப்பெற்றவனே,பிற்காலத்தில் பெருவீரனாய்,'இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி' எனச் சிறப்பிக்கப் பெற்றவன் எனத் தெரிகின்றது. ‡ இவனே,செங்குட்டுவன், கண்ண கிக்குக் கோயிலெடுத்துச் சிறப்பித்த செய்திகேட்டுத் தானும் உறையூரிற் கோயிலொன்றுகட்டி,அப்பத்தினிக்குத் திருவிழாவெடுத்துச் சிறப்பித்தனன்.$ செங்குட்டுவனம்மானையும் ---------- * .(புறநானூறு.174-ம்பாட்டில் இச்செய்தி குறிப்பிடப்படுதல் காண்க.)  †(சிலப்.27:118-23)‡ (புறம்.16). $(சிலப். உரை பெறு கட்டுரை.)  அம்மான் சேயையும் பற்றி யாமீண்டெழுதியவற்றிற் சில புறநானூறு முதலியவற்றைக் கொண்டு ஊகித்தனவாம்; ஆதலின்,அறிஞர் அவற்றை ஏற்றபெற்றி ஆராய்ந்துகொள்ளக் கடவர். இவற்றால், செங்குட்டுவன் காலத்துச் சோழரை  அடியில்வருமாறு குறிக்கலாம். [உறையூர்] [புகார்] மணக் கிள்ளி கரிகாற்பெருவளத்தான்  | | (காரியாற்றுத் துஞ்சிய) |  நெடுங்கிள்ளி கிள்ளிவளவன் | | (இராசசூயம் வேட்ட) (சேட்சென்னி) பெருநற்கிள்ளி. நலங்கிள்ளி. ----------- [பாண்டியர்.] இனிச் செங்குட்டுவன்காலத்து விளங்கிய பாண்டியர் ஆரியப்படைதந்த நெடுஞ்செழியனும், அவன் தம்பியோ மகனோவாகிய வெற்றிவேற் செழியனுமாவர்.செங்குட்டுவன் சிறிய தந்தையும் இமயவரம்பன்-நெடுஞ்சேரலாதன் தம்பியுமாகிய பல்யானைச் செல்கெழுகுட்டுவனும், ஆரியபடை தந்த நெடுஞ்செழியனும் சமகாலத்தவராகத் தெரிகின்றது.* பிற்கூறிய செழியனே கோவலனை அநியாயமாகக் கொல்வித்து அவ்வநீதியை உணர்ந்து தன்மனைவியுடன் உயிர்விட்டவன். "வடவாரியர் படைகடந்து,தென்றமிழ்நா டொருங்குகாணப்,  புரைதீர்கற்பிற் றேவிதன்னுடன், அரசுகட்டிலிற்றுஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்" என்று இவனைச் சிறப்பித்துக் கூறுவர் இளங்கோவடிகள்.** ------------------- * இது, சிலப்பதிகாரம் கட்டுரைகாதையில் வரும் பராசரனென்னும் பார்ப்பான் வரலாற்றால் அறியப்படும்.) ** சிலப்.மதுரைக்காண்டத்தினிறுதிக் கட்டுரை இப்பாண்டியன் பெரிய வீரனும் அரியபுலமையும் உடையவன். இவன்பாடிய பாடலொன்று புறநானூற்றிற்(183) காணப்படுவது கொண்டு, இவனது புலமையும் தருமசிந்தையும் அறியலாம். இச்செழியன் கண்ணகிவழக்கைக் கேட்டு இறந்ததும், கொற்கையில் இளவரசாய் ஆட்சிபுரிந்துவந்த வெற்றிவேற்செழியன் தென்னாட் டாட்சிக்கு உரியவனாயினன்.செங்குட்டுவன் வடக்கே யாத்திரை சென்றிருந்த காலத்தில், இச் செழியனுக்கு முடிசூட்டுற்சவம் நடைபெற்றது.+ இவன் பட்டமெய்தியதும், ன்மாறன் என்னும் வேறுபெயர் பூண்டனனென்று கருதப்படுகிறது. கோவலன் கொலையுண்டமைக்குப் பொற்கொல்லனே காரணமாயிருந்தமையால் அச்சாதியா ரனைவர்மேலும் இப்பாண்டியன் பெருஞ்சீற்றங்கொண்டு, அவர்களு ளாயிரவரைக் கண்ணகியின்பொருட்டுக் களவேள்விசெய்து கொன்றானென்றும், அதற்கு அப்பத்தினி உவந்தருளினளென்றுங் கூறுவர்.** இவ்வரசன் சிலகாலமாட்சி புரிந்து இறந்ததும், இவன்மகனாய்ப் பட்டமெய்தியவன் நெடுஞ்செழியன் என்பவனாகத் தோற்றுகின்றான். மிகச்சிறுபிராயத்திலே சிறந்தவீரனென்று பேர்பெற்றவன், இச்செழியன். தன்னுடனெதிர்த்த தமிழரசர் எழுவருடன் இவன் அதிபால்யத்தில் தலையாலங்கானம் என்றவிடத்துநிகழ்ந்த போரில் வெற்றிபெற்ற செய்தி முன்னூல்களிலே பெரிதும் புகழப்படுகின்றது.++  ------------------------- + சிலப்.27:114-138 ** இந்நூல். பக் - 96. ++ புறம்.77;அகம்-36.சின்னமனூர்த் தாமிர சாஸனமும் இவன் போர்ச்செய்தி  கூறுதல் அறியத்தக்கது. (Vide Madras G.O. No. 508 Public dated 27-6-07.)) இந்நெடுஞ்செழியனுக்குப் பின் பட்டமெய்தியவன் உக்கிரப்பெருவழுதி என்பவனாதல் வேண்டும்.கடைச்சங்கமிருந்த பாண்டியருள் இவனையே இறுதியில்வைத்து நூல்கள் கூறுதல் காண்க.* இச் செழியன்,கானப்பேர்† என்ற ஊரைப்பிடித்து அதன்  தலைவனான வேங்கைமார்பனைப் போரில்வென்றவன்,எட்டுத் தொகையுள் ஒன்றாகிய அகநானூறு தொகுத்தவனும் இவ்வரசனேயாவன்.செங்குட்டுவன் அம்மானாகிய பெருநற்கிள்ளியும், சேரமான் மாவெண்கோவும், இவ்வுக்கிரப்பெரு வழுதியும் மிக்கநட்பாயிருந்த செய்தி ஔவையார் பாடலொன்றால்‡ (*புறம்.367) அறியப்படுகின்றது. இவற்றால்,நம் சேரர் பெருமான்காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியரை அடியில் வருமாறு கொள்ளலாம். ஆரியப்படைதந்த நெடுஞ்செழியன்  | வெற்றிவேற்செழியன் என்ற நன்மாறன் | தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் | கானப்பேர்தந்த உக்கிரப்பெருவழுதி.  ----------------------  * இறையனார் களவியல் உரைப்பாயிரம். † இஃது, இப்போது பாண்டி நாட்டுள் காளையார்கோயில் என வழங்கும் தலமாகும். ‡ புறம்.367. [சேரர் கிளையினர்.] செங்குட்டுவனுடைய மாற்றாந்தாய்மக்களையும் அவன் ஞாதியரான இரும்பொறைகளையும் 'சேரவமிசத்தோர்' என்னும் பகுதியுள் விரித்துக் கூறினேம்.  இவருள், மாற்றாந்தாய்ச் சகோதரரான நார்முடிச்சேரலும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும், ஞாதியராகிய செல்வக்கடுங்கோவும் பெருஞ்சேரல் என்பவனும், செங்குட்டுவன் காலத்தவராகத் தெரிகின்றனர். மேலேகூறிப்போந்த முறையே, பண்டைநூல்களிற் கண்ட செய்திகள் பலவற்றுக்கும் மிகப் பொருந்துவதென்பது, அறிஞர் நுணுகி அறியத்தக்கது*.  ----  *காலஞ்சென்ற ஸ்ரீ கனகசபைப்பிள்ளையவர்கள் தம் '1800- வருஷத்துக்கு முற்பட்ட தமிழர்' (The Tamils 1800 - years ago)என்னும் அரியநூலில், செங்குட்டுவன் மரபை முற்றும் வேறுபடக் குறித்திருப்பதோடு, ஏனைச் சோழர்வமிசத்தையும் சிறிது மாற்றியெழுதியிருக்கின்றனர். அவர்கள் கருத்துப்படி, செங்குட்டுவன் தந்தை - செல்வக்கடுங்கோ வாழியாதனும், தாய் - கரிகாலன் மகளுமாவர்.ஆனால், பதிற்றுப்பத்தின் 5-ம் பதிகத்தில் "குடவர்கோமான் நெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி" மகளீன்ற மைந்தன் எனச் செங்குட்டுவன் கூறப்படுகின்றான். இதனால், இவன்றந்தை நெடுஞ்சேரலாதனென்பதும், தாய் மணக்கிள்ளியின் மகளென்பதும் விளக்கமாகும்.இனிப் பிள்ளையவர்கள், மாந்தரஞ்சேர லிரும்பொறையைச் செங்குட்டுவன் மகனாகக் கருதினர். செங்குட்டுவன் மகன் குட்டுவஞ்சேரலென்பது பதிற்றுப்பத்தின் 5-ம் பதிகத்தால் நன்கறியப்படும். மாந்தரஞ்சேரல், சேரர் கிளையினராய்த் தொண்டியாண்ட இரும்பொறை மரபினனாவன். இம்மாந்தரன் மகனாகப் பெருஞ்சேரலிரும்பொறையைப் பிள்ளையவர்கள் குறித்திருப்பதும் மாறாகும். இப்பெருஞ்சேரல், செல்வக்கடுங்கோ-வாழியாதன் மகனாவான். இஃது அவனைப் பற்றிய 8-ம்பத்துப் பதிகத்துவரும் 'பொய்யில் செல்வக்கடுங்கோவுக்கு வேளாவிக்கோமான் பதுமன் தேவியீன்ற மகன்' என்னுந் தொடரால் விளக்கமாம். ஆகவே, இந்நூலின் முதலிற்குறித்த முறைப்படி சேரர் மரபினரைக்கொள்ளுதலே பெரிதும் பொருத்தமென்பது ஆராய்ந்தறியத்தக்கது. இனிச் சோழர்மரபினரை முன்குறித்தபடி இருபகுதியினராகக் கொண்டு, உறையூர்ச் சோழர் கிளையில்,மணக்கிள்ளியையும், அவன் மகனாக நெடுங்கிள்ளியையும், அவன் மகனாகப் பெருநற்கிள்ளியையும் காட்டுதலும்;புகார்ச்சோழர்கிளையில்,கரிகாலன், கிள்ளிவளவன், நலங்கிள்ளி என்பவரை முறையே காட்டுதலும் பொருத்தமாம். மணக்கிள்ளியின் மகளும் நெடுங்கிள்ளிக்குடன்பிறந்தவளுமாகிய நற்சோணை, செங்குட்டுவன்தாயென்பதுங் குறிக்கத்தக்கது. பாண்டிய வமிசாவளியாகப் பிள்ளையவர்கள் குறிப்பிட்டவை, முன்னூல்களோடு பொருந்தும்.  [வேறு அரசர்கள்.] இனிச் சேரன்-செங்குட்டுவன் காலத்திருந்த அந்நியரான அரசர்கள்:-- (1) கொங்கிளங்கோசர், (2) கயவாகு, (3) நூற்றுவர் கன்னர், (4) அறுகை என்போர். இவருள் கொங்கிளங்கோசரென்போர் குடகுநாட்டை ஆண்டவர்கள்.*கயவாகு இலங்கையை ஆட்சிபுரிந்தவன். நூற்றுவர்கன்னர் என்போர் கங்கையின் வடகரையிலுள்ள பிரதேசங்களையும் மாளுவநாட்டையும்† ஆட்சிபுரிந்தோர். அறுகையென்பவனும் அவ்வட நாட்டரசரில் ஒருவனாகத் தெரிகின்றது. இவரெல்லாம் செங்குட்டுவனுக்கு மிக்க நட்பாளராக விளங்கியவரென்பது சிலப்பதிகாரம் பதிற்றுப்பத்து முதலியவற்றால் தெளிந்தது. இன்னோர் செய்திகள் "செங்குட்டுவன் காலவாராய்ச்சி" என்ற பகுதியினும் விரிவாக வருதலால், இங்குக் கூறப்பட்டில. ---------------  *இதனால்,முற்காலத்துக் கொங்குதேசம், குடகுநாடாயிருந்தமை பெறப்படும். † 'குடகக் கொங்கரு மாளுவவேந்தரும்' என்புழி இளங்கோவடிகள் குறித்த மாளுவவேந்தர், செங்குட்டுவன் நட்பரசரான கன்னரேயாதல் வேண்டும். ஏனெனில்,கண்ணகியின் சிலைக்கு மிகவும் உதவிசெய்த கன்னர், அப்பத்தினிப் பிரதிஷ்டைக்கு வந்திருக்கத் தவறாராதலால், அவர் வருகையை அடிகள் குறியாதிரார் என்க. இவர்களன்றித் தமிழ்நாட்டில் செங்குட்டுவன் காலத்து விளங்கிய சிற்றரசரும் பலராவர். புறநானூறு அகநானூறு முதலிய சங்கச் செய்யுள்களை ஆராயுமிடத்து, அவற்றிற் குறிக்கப்பட்ட சிற்றரசரில் அநேகர் இவன் காலத்தவராக அல்லது இவன்காலத்தை ஒட்டியிருந்தவராகவே புலப்படும்.அவரையெல்லாம் ஈண்டுக் காட்டின் விரியும். இனிச் செங்குட்டுவனுக்குப் பகையரசராய் இருந்தவரைப்பற்றி இவனது போர்ச்செய்தி கூறப்பட்டவிடத்தும் பிறவிடங்களிலும் கூறியுள்ளோம். --------------------        அதிகாரம் - 9   செங்குட்டுவனைப் பாடிய இருபெரும் புலவர்கள். சேரன்-செங்குட்டுவன்காலத்தே, தமிழ்நாட்டிற் புலவர் பெருமக்களாக விளங்கியவர், பலர்; இவரெல்லாம் தமிழ்ப் பேரரசர்களாலும் சிற்றரசர்களாலும் பெரிதும் அபிமானித்து ஆதரிக்கப்பட்டுவந்தனர். எட்டுத்தொகை நூல்களிற் காணப்பட்ட புலவர்பெருமக்களிற் பலர், செங்குட்டுவன்காலத்தும் அவனையொட்டியும் ஒருநூற்றாண்டுக்குள் விளங்கியிருந்தவராகவே, அன்னோர்பாடிய அரசர் முதலியவரின் தொடர்புகள்கொண்டு அறியப்படுகின்றனர். இங்ஙனம் இச்சேரனை அடுத்திருந்த புலவர் வரலாறுகளையெல்லாம் விரிப்பிற்பெருகும்;ஆயினும், செங்குட்டுவனால் நேரில் அபிமானிக்கப்பட்ட புலவரிருவரை மட்டும் இங்கே குறிப்பிடல் தகும். அவராவார்:- பரணரும் சாத்தனாரும்.  [பரணர்.] இவருட் பரணரென்பவர், கடைச்சங்கமிருந்த புலவர் பெருமக்களுள் ஒருவர். இவரைப்போல அக்காலத்தே புகழ் பெற்றிருந்தவர், கபிலர் ஒருவரேயெனலாம். அந்தணர்குல திலகராகிய இப்பரணர், செங்குட்டுவனைப் பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பதிகத்தாற்பாடி, அவனது வீரங்கொடை முதலியவற்றை விளக்கியிருக்கின்றார். இவர் பாடல்களைக்கேட்ட சேரர் பெருமான் ம‌கிழ்வுற்று உம்பற்காடு என்னும் சேரநாட்டுப் பகுதியின் அரசிறைவருவாயையும், தன் மகன் குட்டுவஞ்சேரலையும் பரணர்க்குப் பரிசாகக்கொடுத்தான் என்று, அப்பத்தின் இறுதிவாக்கியங் கூறுகின்றது. தன் மகனைப் பரிசளித்தான் என்பதற்கு, பரணரிடம் அவனை மாணாக்கனாக ஒப்பித்தசெய்தியைக் குறிப்பதாகக் கொள்ளுதலே பொருந்தும். இப்பரணர் தம் பாடல்களிலே, செங்குட்டுவன் கடலிடையிருந்த தன்பகைவர்மேற் படையெடுத்து மரக்கலங்களைச் செலுத்திய பேராற்றலையே மிகுதியாகப் புகழ்கின்றனர். செங்குட்டுவன் தந்தை நெடுஞ்சேரலாதனாலும் இப்புலவர் அபிமானிக்கப்-பட்டவரென்பது, அச்சேரலாதன் சோழனுடன்புரிந்த பெரும்போரில் இறந்துகிடந்தபோது, இவர் உருகிப்பாடிய பாடலொன்றால்(புறம்-62.) உணரப்படுகின்றது. மற்றும், இவராற்பாடப்பெற்றதமிழரசர், உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியும் (இவன், காரிகாற்பெருவளத்தான் தந்தை) வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியும்,வையாவிக்கோப்பெரும்பேகனும்(பேகனும் அதிகனும் கடையெழுவள்ளல்களைச் சேர்ந்தவர்.) அதிகமானஞ்சியும் வேறு சிலருமாவர். ஔவையாராலும் அருமையாகப் புகழ்ந்து கூறப்பட்டவர்  இப்புலவர் பெருமானெனின் வேறு மிகுத்துச் சொல்வதென்னை?* எட்டுத்தொகைநூல்களிலே, இவர் பாடியனவாக 82-செய்யுட்கள் காணப்படுகின்றன. இப்பாடல்களால் அறியப்படும் விசேடங்களையெல்லாம், மஹாமஹோபாத்யாய-ஐயரவர்கள் பதிற்றுப்பத்துப் பதிப்பின் முகவுரையில் நன்குவிளக்கியிருத்தலால், இங்கு அவற்றை எடுத்தெழுதுவது மிகையென விடுத்தோம். [சாத்தனார்] இனிச் சாத்தனார் என்பவரும், கடைச்சங்கப் புலவருள் ஒருவரே; இவர் மதுரையில் நெல்லுப்புல்லு முதலிய கூல** வியாபாரஞ் செய்துவந்தமையால், மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் எனப் பெயர்பெற்றனர். சங்கத்தில் அரங்கேற்றற் பொருட்டுப் பிறர் பாடிவரும்நூல்களிற் குற்றங்காணுந்தோறும், அவற்றுக்கு மனம்பொறாது தம்விதியைநொந்து தலையிற் குத்திக்கொண்டு வந்தவர் இவரென்றும், அதுபற்றிச் சீத்தலைச்சாத்தனார் என வழங்கப்பெற்றார் என்றுங் கூறுவர்.இவரது தலைக்குத்துத் திருவள்ளுவரது முப்பாலைக் கேட்டபோது முற்றும் நீங்கியதென்பது:- "சீந்திநீர்க் கண்டந் தெறிசுக்குத் தேனளாய்  மோந்தபின் யார்க்குந் தலைக்குத்தில்-காந்தும் மலைக்குத்து மால்யானை வள்ளுவர்முப் பாலாற் றலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு" ---- * புறம்-99 **கூலம் என்பன - நெல்லுப் புல்லு வரகு தினை சாமை இறுங்கு தோரை இராகி என்பன.) என்னும் மருத்துவன்-தாமோதரனார் வாக்கால் (திருவள்ளுவமாலை. 11.) அறியப்படுகின்றது. இச் சாத்தனார் பௌத்தமதச் சார்புடையவரென்பது, மணிமேகலையில், அம் மதவிஷயங்களை உணர்ச்சியுடனும் உருக்கத்துடனும் மிகவழகாக இவர் பாடுதலினின்றும் ஏனைய மதங்களை அங்ஙனம் கூறாமையினின்றும் உய்த்தறியலாம். முற்காலத்து வழங்கிய சமயநூல்களிலும் தருக்கமுதலியவற்றினும் மிகுந்த ஆராய்ச்சியுடையார் இவரென்பதும்,வடநூற்பயிற்சி பெரிதுடையவரென்பதும் மணிமேகலையால் தெளிவாகின்றன. கோவலன் கொலையையும், கண்ணகியின் சீற்றத்தால் விளைந்த மதுரைக் கேட்டையும், கோவலன் மகள் மணிமேகலை துறவையும் இப்புலவர் நேரில் அறிந்தவர். செங்குட்டுவன் தன் சகோதரருடன் பெரியாற்றங்கரையில் தங்கியிருந்தபோது, இப் புலவர்பெருமானும் அவனுடன் சென்றிருந்தார். அப்போது மலைவாணர்பலர் வந்து, தங்கள்மலையில் கண்ணகி சுவர்க்கம்புக்க செய்தியைச் செங்குட்டுவனுக்குத் தெரிவிக்க, இச் சாத்தனார், தாம் மதுரையில் நேரிலறிந்த அவள்வரலாறுகளை அரசனுக்கு விரித்துரைத்தனர். இவர் தெரிவித்த செய்திகளைக்கொண்டே, இளங்கோவடிகள், கண்ணகியின் சரித்திரத்தைச் சிலப்பதிகாரமென்னுஞ் சிறந்த காப்பியமாகப் பாடுவாராயினர். இவ்வடிகள் சிலப்பதிகாரத்தைப் பாடிமுடிப்பதற்கு முன்பே, சாத்தனார் கோவலன்மகள் மணிமேகலையின் துறவைப்பாடி முடித்திருந்தனரென்பது, "மணிமேகலைமே லுரைப்பொருண் முற்றிய சிலப்பதிகாரமுற்றும்' என்ற இளங்கோவடிகள் கூற்றே அறிவிக்கின்றது. கண்ணகி மணிமேகலையிருவர் சரிதங்களையும்  செங்குட்டுவன் சகோதரரான அவ்வடிகளே பாடக் கருதியிருந்தனரென்றும், சாத்தனார் மணிமேகலை துறவைப் பாடி முடித்துவிட்டமை தெரிந்து சிலப்பதிகாரத்தை மட்டும் அவரியற்றினரென்றும் அடியார்க்குநல்லார் பதிகவுரையிற் குறிப்பிடுவர். சாத்தனார் தாம்பாடிய மணிமேகலையை இளங்கோவடிகளைத் தலைமையாகக்கொண்ட அவைக்கண்ணே அரங்கேற்றினரென்பதும், இளங்கோவடிகளும் தம் சிலப்பதிகாரத்தைச் சாத்தனார் முன்பு அரங்கேற்றினரென்பதும் அவ்விருவரும் பாடிய பதிகங்களால் தெரிகின்றன. சாத்தனார் செங்குட்டுவனாற் பெரிதும் அபிமானிக்கப்பட்டதோடு அவன் சபையை அலங்கரித்த புலவர்பெருமானாகவும் விளங்கினர்.(சிலப். பதிகம்.10; சிலப் 25: 106.) மலைவளங் காணவேண்டிச் செங்குட்டுவன் பேரியாற்றங்கரையில் தங்கியிருந்தபோது, இவரும் அவனுடன் சென்றிருந்து, சேரனது செல்வப்பொலிவைக் கண்டுவியந்தனர் என்பது "கண்களி மயக்கத்துக் காதலோடிருந்த-தண்டமி ழாசான் சாத்தன்"என அடிகள் கூறுதலால்(சிலப்25:65-66) அறியலாம். தம் நகரத்தரசனாக விளங்கிய ஆரியப்படைதந்த -- நெடுஞ்செழியன் கோவலன் கொலைகாரணமாக இறந்ததும், சாத்தனார் வஞ்சிசென்று செங்குட்டுவனால் ஆதரிக்கப்பட்டார் என்பதும், பின் பாண்டிநாட்டை அந்நெடுஞ்செழியன் தம்பி வெற்றிவேற்செழியன் என்ற நன்மாறன் ஆட்சிபுரியத் தொடங்கியதும், இவர், தம் ஊராகிய மதுரைசென்று அப்பாண்டியனால் அபிமானிக்கப் பட்டனரென்பதும் உய்த்தறியப்படுகின்றன. சாத்தனார் இந் நன்மாறனைப் பாடிய பாடலொன்று புறநானூற்றுள் (59) காணப்படுதல் அறியத்தக்கது --------- *(சிலப். பதிகம்.10; சிலப் 25: 106.) †(சிலப்25:65-66) இம்மாறன்,'சித்திரமாடத்துத் துஞ்சிய' என்னும் அடையுடன் பிற்காலத்தில் வழங்கப் பட்டான். நக்கீரர் முதலியோராற் பாடப்பட்டவனாக அந்நூலிற்கண்ட 'இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாற'னின் இவன் வேறானவன். நற்றிணை முதலிய தொகை நூல்களிலே இச்சாத்தனராற் பாடப்பட்டனவாகக் காணப்படும் செய்யுள்கள் சிலவுண்டு. இப் புலவர்பெருமானது வாக்கினிமையும் பெருமையும் பிறசிறப்புக்களும், மஹாமஹோபாத்யாய-ஐயரவர்கள் வெளியிட்ட மணிமேகலைமூலம் அறிஞரெல்லாம் அறிந்து மகிழ்ந்தவையாதலால், இங்கு விரித்திலேம்.  --------------------------                      அதிகாரம் - 10   செங்குட்டுவன் நாடும்- வஞ்சி மாநகரமும் ----------------------- 1. நாடு. சேரதேசம் என்பது கருவூர்ப்பிரதேச முட்படக் கோயம்புத்தூர் சேலம் நீலகிரி 'ஜில்லா'க்களும்,மைசூர்நாட்டின் தென்பகுதியும் மேற்குத்தொடர்ச்சிமலை நெடுகவுள்ள  கடற்கரைப் பக்கங்களுமாம்.இந்நாடு, ஒவ்வொருகாலத்து விரிந்துங் குறைந்து மிருந்தமையால்,இதனெல்லையை வரையறுத்துக் கூறுதல் அரிது. செங்குட்டுவன், அவன் காலத்தே சிறந்துவிளங்கிய பெருவீரனாதலின், அவன் நாடு,பண்டையினும் விரிவுடையதாகவே இருந்திருத்தல் வேண்டும். இவன் வென்றடிப் படுத்திய நாடுகளில், கொடுகூர் என்பதும்  ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது. இஃது இப்போது மைசூரி ராஜ்யத்துள் ஒரு பகுதியாக அடங்கும்.இதனை இச்சேரன் வென்றான் என்றதற்கேற்பப், பழைய சாஸனமொன்று,கொடுகூர் நாட்டைச் சேரமானுக்குரிமைகூறிச் செல்கின்றது.* அன்றியும், மைசூரின் பெரும்பகுதி சேரநாடாயிருந்த தென்று வேறு சாஸனங்களாலும் விளங்குதலால், † முற்காலத்தே சேரதேசம் அதிகவிஸ்தீரணம் பெற்றிந்ததாகவே கொள்ளலாம். இத்தேசத்துள்ளே, மேற்குமலைத்தொடர்ச்சிக்கு உள்ளடங்கிய மலைநாட்டில் செங்குட்டுவனுக்கும் உரிமை யுண்டாயினும், அதன் பெரும்பகுதியை அவன் ஞாதியரசர் ஆண்டு வந்தனரென்பது முன்னரே குறிப்பிட்டோம். ஆயினும், நம் சேரனுக்குவழங்கிய செங்குட்டுவன் என்ற பெயர்க்கேற்பக் கொள்ளுமிடத்துக் குட்டநாடு‡ இவனாட்சிக்குட் பட்டதாகச் சொல்லல் பொருந்தும். இதுபற்றிப் போலும், அக்குட்ட நாட்டிற்குள் அடங்கிய பேரியாற்றுக்கு மலைவளங் காண்டல் வேண்டிச் செங்குட்டுவன் சென்றிருந்ததூஉம் என்க. ஆயின், அப் பேரியாறு சங்கமமாகு-மிடத்தமைந்த முசிறி என்னும் கடற்கரைப்பட்டினம் நம் சேரனைச் சேர்ந்ததாதல் வேண்டும். இம்முசிறி அந்நிய தேசங்களுடன் "ஏற்றுமதி' 'இறக்குமதி'ச் சம்பந்தம் பெற்றுப் பழையகாலத்தில் மிகப் பிரசித்தி பெற்றிருந்தது.  ------- *இந்நூல் 29ஆம் பக்கத்துக் கீழ்குறிப்புப் பார்க்க. † Dr Fleet’s History of deccan. P.189 ‡ இது, கொடுந்தமிழ் நாடுகளுள் ஒன்று; இன்றும் இப்பெயருடன் வழங்குகின்றது; கோட்டயத்துக்கும் கொல்லத்துக்குமிடையில், பாலையாற்றாற் பல ஏரிகளும் தீவுகளுமுடையதாகி இப்பிரதேசமிருத்தலால் 'குட்டநாடு' என வழங்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. ----------------------------------------------------------- 2. வஞ்சிமாநகரம்  -------------------------- தமிழ்நாட்டை ஆண்டுவந்த மூவேந்தருள்ளே,சோழ பாண்டியர்க்கு உறையூர் புகார் மதுரைகள் எவ்வாறு பழைய தலைநகரங்களாக விளங்கினவோ,அவ்வாறே, சேரரது தொன்றுதொட்ட இராஜதானி *வஞ்சி மாநகரமாகும். மேல் கடலில் தொண்டி மாந்தை என்னுந் துறைமுக நகரங்களும்,சேரர்க்குச் சிறந்த தலங்களாயினும் வஞ்சிமா நகர்க்கு அவை அடுத்த தரத்தனவேயாம். இவ்வஞ்சிக்குக் கருவூர் என்பதும் ஒரு பழம் பெயர். இந்நகரம் ஆன்பொருநையாற்றங் கரையில் அமைந்து விளங்கியதாம். " நெடுந்தேர்க்கோதை-- திருமா வியனகர்க் கருவூர் முன்றுறைத்  தெண்ணீ ருயர்கரைக் குவைஇய  தண்ணான் பொருநை மணலினும் பலவே"  (அகநானூறு.93.) "தண்பொருநைப் புனற்பாயும் விண்பொருபுகழ் விறல்வஞ்சி" (புறம்.11) "தண்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான்"(சிலப்-29.) எனக் காண்க.ஆன்பொருநையாற்றின் அலை, வஞ்சிக்கோட்டைமதிலிற் றாக்கும்படி அவ்யாறு நெருங்கிச் செல்வதென்பது, "வஞ்சிப் புறமதி லலைக்குங் கல்லென் பொருநை" என்னும் புறப்பாட்டடியால்(387) விளங்கும். ------- *இந்நகரத்தைப் பூவாவஞ்சி(சிலப்.26.50),வாடாவஞ்சி(28-180) பொற்கொடிப் பெயர்ப்படூஉம் பொன்னகர்(மணி.92.) கோநகர் (சிலப்.27.255) என முன்னூல்கள் அணிந்து கூறும். இவ் வான் பொருநை--ஆனி,வானி,ஆன்பொருந்தம்,தண்பொருநை, சூதநதி எனவும் கூறப்படும்.* கருவூராகிய வஞ்சிக்குப் பக்கத்தோடும் ஆன்பொருநையோடு நேர்கிழக்கிற் செல்லும் காவிரியும்,குடவனாறும் சங்கமமாகும் கூடலொன்று உண்டு; இதனை-- "செங்குணக் கொழுகுங் கலுழி மலிர்நிறைக் காவிரி யன்றியும் பூவிரி புனலொரு மூன்றுடன் கூடிய கூட லனையை" (பதிற்-50) எனச் செங்குட்டுவனைப் பரணர் பாடுதலால் அறியலாம். "மூன்றுடன் கூடிய கூடலென்றது,அக்காவிரிதானும் ஆன்பொருநையும், குடவனாறுமென இம்மூன்றுஞ் சேரக்கூடிய கூட்டம்" என்பது பழையவுரை.இந்நதிகளன்றிக் காஞ்சியென்னும் †ஓர் யாறும் செங்குட்டுவனாட்டிற் பிரபலம்பெற்றது; ' தீனம்புன லாய மாடுங்-காஞ்சியம் பெருந்துறை ' எனக் காண்க. இவ்வஞ்சிமாநகரின் பழைய அமைப்பு,முன்னூல்களில் அடியில் வருமாறு சிறப்பிக்கப்படுகின்றது.இம்மூதூரின் கோட்டைக்கு வெளியே தேவர் கோட்டங்களும் பொது ஸ்தலங்களும் ஜைநப்பள்ளிகளும் பொழில்களும் பொய்கைகளும் மிகுந்திருந்ததோடு, அவ்விடங்களில் தவமுனிவரும் ஞானிகளும் சாஸ்திரவறிஞரும் எங்கும் நிறைந்திருந்தனர். ------------- *பிங்கல நிகண்டு,4.118 பொருநை என்பது தாமிரபர்ணிக்குத் தனித்த பெயராதலால்,அதனின் வேறென்பதைக் குறித்தற்கு ஆன்பொருநை என விஷேடிக்கப்பட்டதாகத் தெரிகின்றது. † குடவனாறு, கருவூர்க்குத் தென்கிழக்கே 12-மைலில், ஆம்பிராவதியுடன் சங்கமாகின்றது. இதனைக் காவிரியுடன் கலப்பதாக உரைகாரர் எழுதியற்குக் காரணந்தெரியவில்லை. கோட்டையைச் சூழ்ந்துள்ள புறக்குடி அல்லது புறஞ்சேரியில் அரண்காவல்புரியும் படையிருப்புகளும் அந்நியவரசர் தங்குதற்கமைந்த மாளிகைகளும் இருந்தன. கோட்டையை,ஆழ்ந்தகன்ற அகழி சூழ்ந்திருந்தது. அதனிற் பல வகை முதலைச் சாதிகளும் பெருமீன்களும் நிறைந்திருந்தன.வஞ்சிமாநகருள்ளே பெருகியோடுங் கழிநீரெல்லாம் முடிவில் அவ் வகழிக்கண்ணே சென்று சேர்வதாம். இவ்வகழுக்கும் கோட்டைக்கும் இடையிலே காவற்காடொன்று உண்டு.கோட்டைமதில், பகைவரை அழிக்கத்தக்க எந்திரங்கள் பலவற்றால் மாட்சிமைபெற்றிருந்தது. அதன் வாயிலானது, வேலைப்பாடு மிகுந்து, பல நிலைகொண்ட கோபுரத்தோடுங் கொடிகளோடும், வெள்ளிமலையொன்று உள்கிழிந்தாற்போல விளங்கியது. இவ்வாயிலைக் கடந்து செல்லின், கோட்டை வாயில் காக்கும் காவலாளர் நெருங்கியுறையும் வீதிகளும் மீன்விலைஞரும் உப்புவாணிகரும் கள்விற்போரும் பிட்டு அப்பங்கள் விற்போரும், வாசனைப்பண்டம் விற்போரும் இறைச்சிவிற்போரும் வசிக்கின்ற வீதிகளும் அமைந்திருந்தன.இவ்வீதிகளையடுத்து - மட்கலஞ்செய்யுங் குயவர்,செம்பு கொட்டிகள், வெண்கலக்கன்னார், பொற்கொல்லர்,தச்சர், நட்பாவைசெய்வோர், தையற்காரர், மாலைகட்டுவோர்,சோதிடர், பாணர்முதலியோர் தெருக்களும், சங்கறுப்போர் இரத்தினப்பணியாளர் வீதிகளும், நாடகக்கணிகையர் வீதியும்,நெல்லுப் புல்லு முதலிய கூலவகை விற்போர் தெருவும்,சூதர் மாகதர் வேதாளிகர், பொதுமகளிர் தெருக்களும்,  ஆடைநெய்து விற்போர்,பொன்வாணிகர்,இரத்தின வியாபாரிகள் வீதிகளும், அந்தணர் அக்கிரகாரமும், இராச வீதியும், மந்திரிகள் வீதியும், பல்வகை அரசாங்க அதிகாரிகள் வாழுந் தெருக்களும் அப்பெருநகரில் முறையே அமைந்திருந்தன. இவையன்றி, யாவரும் வந்து தங்குதற்குரிய மரத்தடிகளும், அம்பலமும்,முச்சந்தி நாற்சந்திகளும், அருவியோடும் அழகிய செய்குன்றுகளும், இளமரக்காக்களும், பொய்கைகளும், அறச்சாலைகளும், பொன்னம்பலமும், தவப்பள்ளிகளும் விளங்கின. மிகவழகாக அமைக்கப்பட்ட பௌத்த சைத்தியமொன்றும்* அவ்வஞ்சியினுள்ளே திகழ்ந்தது.(மணிமே. காதை.28) சேரருடைய அரண்மனையானது அம்மூதூரின் மத்தியில்,பொன்மயமானதொரு சிறு மேருப்போலப் பிரகாசித்தது; "நெடுநிலை மேருவிற்,கொடிமதின் மூதூர் நடுநின் றோங்கிய,தமனிய மாளிகை" என்பர் இளங்கோவடிகள்.† அதனுள் அத்தானி மண்டபமும் (கொலுவிருக்கை), வேத்தியன்மண்டபமும் (மந்திராலோசனைச்சபை), மணியரங்குகளும் (நடனசாலை), பிறவும் மாட்சிமைபெற்று விளங்கின. அரசன் தன் மனைவியுடன் வசந்தகாலத்தைக் கொண்டாடு தற்கென்று அமைந்த 'இலவந்திகை வெள்ளிமாடம்' என்னும் மாளிகை யொன்றுண்டு‡ .இஃதன்றி, நகர்ப்புறத்தே,பொய் கைகளாலும் சோலைகளாலும் சூழப்பட்ட 'வேளாவிக் கோமாளிகை' (சிலப்பதி 28: 197-198.)என்னும் ஓர் அழகிய மந்திரமும் அமைந்திருந்தது. --------- *கோவலனுக்கு ஒன்பதாந்தலைமுறைப் பாட்டனான கோவலனால் வஞ்சிநகரிற் கட்டப்பட்டதாக மணிமேகலையிற் கூறப்படும் பௌத்த சைத்தியம் இதுபோலும். (காதை-28. 123-31) †சிலப்.28 ‡ ௸.25.4. இது 'வேண்மாடம்' எனவும் வழங்கப்படும்.(புறநானூறு 13.) செங்குட்டுவன் மாற்றாந்தாய்ப் பாட்டனும், பொதினிமலைத் தலைவனுமான வேளாவிக்கோமான் பெயர்பெற்றிருத்தலால், இம்மாளிகை அவன் வசித்துவந்தது போலும். இவ்வழகிய மாடம் செங்குட்டுவன்காலத்தே அந்நியவரசர் தங்குதற்கென்று உபயோகப்பட்டது. (சிலப் 28.198.) திருமால் பள்ளிகொண்டருளும் ஆடகமாடம் (சிலப் 26. 62; 30.51.) என்ற ஆலயமொன்றும் வஞ்சிக்குப் பக்கத்திருந்ததாகக் கருதப்படுகின்றது. இங்ஙனம், சேரரது பழைய இராசதானியாகச் சிறப்பிக்கப்பட்ட வஞ்சியென்பது யாதென ஆராயுமிடத்து, அஃது,இப்போது திருச்சிராப்பள்ளி ஜில்லாவைச் சார்ந்துள்ளதும், கொங்குநாட்டுத் தலங்களுள் ஒன்றுமாகிய கருவூரே(கர்ப்பபுரி என்பர் வடநூலார்.) என்பதற்கு வேண்டிய பிரமாணங்கள் எதிர்ப்படுகின்றன. முன்னூல்களிற் கூறப்பட்டவாறே, இவ்வூர் ஆம்பிராவதி நதிக்கரையில் உள்ளதாம்; ஆம்பிராவதி என்பது, ஆன்பொருநையின் வடமொழிப்பெயர்; "பொற்பு மலியாம் பிரவதியான் பொருநை யெனவும் புகலுவரால்" என்பது கருவூர்ப்புராணம்(இப்புராணம் இற்றைக்கு 290-வருஷங்கட்குமுன் இயற்றப்பட்டதென்பது. அதன் பாயிரச் செய்யுளால் அறியப்படுகின்றது; இனிய வாக்குடையது; நூலாசிரியர் பெயர்முதலிய வரலாறுகள் விளங்கவில்லை.) [ஆம்பிரம்-மாமரம்] சூதநதி என்று பிங்கலநிகண்டு இதற்கொரு பெயர் கூறுவதும் ஆம்பிராவதி என்பதோடு ஒத்த பொருளுடையதேயாகும்; [சூதம் -மா]. இந்நதி வராக மலையில் உற்பத்தியாகி மாமரச்சோலைவழியே செல்லுதலால் இப்பயர்கள் பெற்றதென்பர். "வஞ்சிப் புறமதிலலைக்கும் கல்லென் பொருநை" "தண்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான்" என முன்னோர் கூறியவாறே,இக்  காலத்தும், இவ் வாம்பிராவதி கருவூரையொட்டித் தென்றிசையிலிருந்து கீழ்புறமாகவோடி வடக்கேதிரும்பிக் காவிரியுடன் கலக்கின்றது. இக் கருவூரே, வஞ்சி எனத் தமிழிலும், வஞ்சுளாரணியம் என வடமொழியினும் வழங்கப்படுவதாம்; "வஞ்சுளா ரணியம் வஞ்சி கருவூர்" என்பது கருவூர்ப் புராணம்.இதற்கேற்ப, இந்நகரத்தின் தென்றிசையில் நதிக்கரையிலுள்ள துர்க்காதேவிக்கு வஞ்சியம்மன் என்னும் பெயர் இன்றும் வழங்கிவருதலும், இவ்வூர் அரங்கநாதப் பெருமாள் கோயிற் கர்ப்பக்கிரகத்தின் தென்பக்கத்துக் காணப்படும் சாஸனத்துள்ளே "வஞ்சி...ஸ்ரீவைஷ்ணவரோம்" என்னுந் தொடர் காணப்படுதலும், ஆம்பிராவதிக்கு வடக்கே கோயில் கொண்ட †சிவபெருமான் வஞ்சுளேச்சுர லிங்கம் என  அழைக்கப்படுதலும் இங்கு அறியத்தக்கன. கருவூர்க்கு வடகிழக்கே, ஆம்பிராவதி மணிமுத்தாநதி காவேரி மூன்றுங்கூடுந் திருமுக்கூடல் உள்ளது; "வஞ்சுளாடவிக்குத் தரகுணக்காக வாம்பிர வதிநதி மதிபோல், விஞ்சுமா மணிமுத் தாறுகாவேரி மேவுழி மேவு மேவுதலால், எஞ்சலில் திருமுக்கூடலென் றிசைப்ப" என்பது கருவூர்ப் புராணம்.‡ இம் முந்நதியின் கூடலே "காவிரி யன்றியும் பூவிரி புனலொரு மூன்றுடன் கூடிய கூட லனையை" எனப் பரணர் செங்குட்டுவனுக்கு உவமித்ததாம். --------- * வஞ்சிமரம் நிறைந்த காடாதலின் இப் பெயர்பெற்றதென்பர்.  † திருவானிலைப் பசுபதீசுவரர் கோயிற்குத் தென்பாலுள்ளது. ‡ ஆம்பிராவதிச்சருக்கம். 45-மணிமுத்தாநதி, காவிரியுடன் கலக்குமிடம் இப்போது மேற்கே வெகுதூரத்துள்ளது. முற்காலத்து இந்நதி ஆன்பொருநையுடன் சேர்ந்து காவிரியிற் சங்கமித்தது போலும்.)) இனிக் காஞ்சி என்னும் யாறும் செங்குட்டுவனாட்டிற் சிறப்புடைய நதிகளுளொன்றென்பது "காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே" என அப்புலவர் நம் சேரனை வாழ்த்துதலாற் றெரியலாம். இவ் ஆறு, நொய்யல், காஞ்சிமாநதி(இந்நதி 108-மைல் நீளமுடையது; ஈரோடு கருவூர்த் தாலூகாக்கள் கூடுமிடத்து நெய்க்குப்பத் தருகில் காவிரியுடன் சங்கமமாகிறது.) என அப் பிரதேசத்தில் இன்றும் வழங்கி வருகின்றது; இந்நதிக்கரையிலுள்ள பேரூர் என்னுந் தலத்தைக் காஞ்சிவாய்ப்பேரூர் எனப் பழையசாஸனமும்(செந்தமிழ், தொகுதி-4, பக்.342; ஏயர்கோன்.88.) பெரிய புராணமும் குறிப்பிடுதலுங் காண்க. இவற்றால், சேரன் செங்குட்டுவனை அவன் தேசத்திலும் நகரத்திலும் ஓடும் நதிகளோடும் உவமித்து முற்கால வழக்குக்கிணங்கச் சிறப்பித்தனர் பரணர் என்பது நன்கறியப்படும். இக்கருவூர்க்குக் கிழக்கே ஆம்பிராவதிக் கரையிலுள்ள அரசவனம் என்னும் பிரதேசத்தில் திருமால் பள்ளி கொண்டருளும் ஆலயமொன்றுண்டு என்று கருவூர்ப்புராணங் கூறுகின்றது (ஆம்பிராவதிச்சருக்கம்.) இஃது இப்போது கருவூரில் அரங்கநாதப் பெருமாள் கோயில் என்று வழங்கப்பட்டு, அப்பெருமாள் பள்ளி கொண்டருளுந் தலமாயுள்ளது. ஆடகமாடம் என்ற பெயருடன் திருமால் பள்ளிகொண்டருளுங் கோயிலொன்று,இளங்கோவடிகளாற் குறிக்கப்பட்டிருப்பது, மேற்கூறிய சந்நிதியே யாதல்வேண்டும்.  சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர், "ஆடகமாடம்-திருவனந்தபுரம்; இரவிபுரம் என்பாருமுளர்" (பக்.68) என்றெழுதினார். ஆனால், செங்குட்டுவன்,ஒரேயிரவில் சித்தஞ்செய்து, வடநாட்டிற்குப் பிரயாணித்த அவசர தருணத்தில், ஆடகமாடத்துத் திருமாலின்கோயிற் பிரசாதத்துடன் சிலர் வந்து அவனைக்கண்டனர் என்று அடிகள் கூறுவதை(இந்நூல் வேறிடம் காண்க‌) நோக்குமிடத்து, அக்கோயில், வஞ்சியாகிய கருவூர்க்குப் பக்கத்திருந்ததாகுமே யல்லது, 300-மைலுக்கப்பாலுள்ள திருவனந்தபுரமாகாதென்பது திண்ணம்; ஆதலால், மேற்கூறிய அரங்கநாதப்பெருமாள் சந்நிதியே பழைய ஆடகமாடமாகக் கொள்ளுதல் பொருந்துமெனலாம்.(கருவூர்-அரங்கநாதர்சந்நிதியை யாம் நேரிற்சென்று தரிசிக்க நேர்ந்தபோது, அக்கோயில் சிறியதாயினும் பழமையே காணப்பட்டது; கர்ப்பக்கிரகத்துள்ளே அரவணையிற் பள்ளிகொண்டருளும் பெருமாள் சாந்தாகார முடையவரென்று விசாரணையில் தெரிந்தோம். ஆனால், கர்ப்பக்கிரகத்தின் மேற்குவெளிப்பிரகாரத்தை யாம் அடைந்தபோது,ஒரு சிறுபந்தருள், சேஷசாயியாகத் திருமாலினுருவம் வகுக்கப்பட்ட பெரிய சிலையொன்று அற்புதமாக ஆங்குக் காணப்பட்டது. அம்மூர்த்தியின் வரலாற்றை விசாரித்ததில், மடைப்பள்ளியைத் திருப்பணிக்காகப் பிரித்தபோது, பூமியின்கீழ் அவ்வழகிய சிலை அகப்பட்டுச் சில மாதங்களே ஆயினவென்று தெரியவந்தது. இவற்றை நோக்குமிடத்து அவ்வரவணைக்கிடந்த மூர்த்தியே, செங்குட்டுவன்காலத்து "ஆடக மாடத் தரவணைக் கிடந்தோ"னாக வேண்டுமென்றும், ஏதோ ஒரு காலவிசேடத்தால் அம்மூர்த்தி பூமியில்மறைந்து, அதற்குப் பிரதியாக சாந்தாகாரமூர்த்தி அக்கோயிலுள் எழுந்தருளப்பண்ணப்பட்ட தென்றும் கருதப்படுகின்றன.) செங்குட்டுவன் சிவபிரான்பாற் பக்திமிகுதியுடையனென்பதை முன்னமே விளக்கினோம்.(இந்நூல்,வேறிடம் காண்க‌)  இளங்கோவடிகள் வஞ்சியிலிருந்த சிவாலயத்தைப்பற்றி ஒன்றுங் கூறநேராமற் போயினும், 'ஆனேறுயர்த்தோன்', 'செஞ்சடைவானவன்' 'உலகுபொதியுருவத் துயர்ந்தோன்' எனத் தம் தமயனாற் பக்திசெய்யப்பட்ட சிவபெருமானைச் சிறப்பித்தலால், அப் பெருமானுக்கு ஆலயமொன்று அந்நகரில் அமைந்திருந்ததாகக் கொள்ளத் தடையில்லை. ஆயின், அஃது, இப்போதுள்ள பசுபதீசுவரர் கோயிலே ஆதல்வேண்டும். இவ்வாலயம், கருவூர்த் திருவானிலை எனத் தேவாரப்பாடல் பெற்றிருத்தலோடு, சோழர் சாஸனங்கள் பல கொண்டதாகவும் உள்ளது. காமதேனுவாகிய பசுவினாற் செய்யப்பட்ட ஆலயமாதலின் இதற்கு 'ஆனிலை' எனப் பெயர்வழங்கியதென்பர்.இதுபற்றியே, இக்கோயிற் சிவபிரான், பசுபதீசுவரர் எனப் பட்டார். இங்ஙனம் கருவூர்க்கு ஆனிலை என்ற பெயரிருத்தல் போலவே, அவ்வூரையடுத்துச் செல்லும் ஆம்பிராவதிக்கு,ஆன்பொருநை ஆன்பொருந்தம் எனப் பெயர்கள் வழங்குதல் ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. இனி "பங்குனி விழவின் வஞ்சியொடு, உள்ளி விழவி னுறந்தையுஞ் சிறிதே" எனவரும் முன்னோர் கூற்றும், (தொல்-பொருளதி. பக். 320) "மதுரை ஆவணியவிட்டமே, கருவூர்ப் பங்குனியுத்திரமே, உறையூர் உள்ளிவிழாவே" எனவரும் இறையனார் களவியலுரை வாக்கியமும்,(மேற்படி. களவியல். 17-ம் சூத்திரவுரை காண்க.; இதனுள்,'உறையூர்ப் பங்குனியுத்திரமே, கருவூர் உள்ளிவிழாவே' என மாறிக் காணப்படுகின்றது; ஆயினும் முன் காட்டிய பழையவாக்கிற்கிணங்கக் 'கருவூர்ப் பங்குனியுத்திரமே" என்று பாடங்கொள்ளுதலே பொருத்தமாகும்.) கருவூரில் நிகழ்ந்த திருவிழாநாளொன்றைக் குறிப்பிடுதல் காணலாம். இக்குறிப்பின்படி, வஞ்சிப்பங்குனி விழா என்பது, கருவூர்ப் பசுபதீசுவரர்க்கு ஆண்டுதோறும் இக்காலத்தும் நடைபெறும் பங்குனியுத்தரத் திருவிழாவாகவே கருதப்படுகின்றது. இனி, வஞ்சியை மேற்கூறிய கருவூராகக் கொள்ளாது,மலைநாட்டுக் கொடுங்கோளூர் அல்லது திருவஞ்சைக்களம் என்று கருதுவாரும்;, அந்நாட்டு மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்துப் பேரியாற்றங்கரையிலுள்ள திருக்கரூர்(திருக்கரூர் (Tiru-karur), கொச்சிக்கு வடகிழக்கே 28-மைலிலும், கோதைமங்கலத்துக்கு 3-ம் மைலிலும் உள்ளதென்றும், அஃது இப்போது பாழூராயிருப்பினும் கிலமான பலபெரிய கட்டிடங்களும் கோயிலும் உடையதென்றும் கூறுவர். (The Tamils 1800-years ago. p. 15).) என்று கருதுவாருமெனச் சரித்திரவறிஞர் பலராயினார். இவற்றுள் முதலிற் கூறியது, அடியார்க்குநல்லார்க்கும் ஒத்த கொள்கையாயிருத்தலே வியப்பைத்தருவதாம்.(சிலப்பதி. பதிகம். 3. உரை.) ஆனால், இவ்விரண்டுபக்ஷங்களும், ஆராயுமிடத்துச்சிறிதும் உறுதிபெற்றனவாகக் காணப்படவில்லை. முதலாவது - திருவஞ்சைக்களம் என்பது கொச்சிக்கு வடக்கே 10-மைல் தூரத்தில் பேரியாறு மேல்கடலிற் சங்கமமாகுமிடத்து உள்ளதாம். மகோகை என்னும் கொடுங்கோளூரையடுத்துள்ள இவ்வூர், பாடல் பெற்ற பழைய சிவதலங்களுள் ஒன்றாகும். இத்தலத்தைப் பற்றிச் சுந்தரமூர்த்திநாயனார் பாடிய பதிகத்தில் - "கடலங்கரைமேன் மகோதை யணியார்பொழில் அஞ்சைக்களத் தப்பனே" என்ற தொடரே பாட்டிறுதிதோறும் பயின்றுவருகின்றது. எனவே, அந்நாயனார் காலத்துக்கு முன்பு அத்தலத்துக்கு வழங்கிவந்த பழையபெயர் அஞ்சைக்களம் என்பதே விளக்கமாகும். ஆகவே, அத்தலத்தை வஞ்சியோடும் சம்பந்தமுடையதாகக் கருதற்குச் சிறிதும் ஆதாரமின்மை காண்க. இனிப் பழைய சேரர்தலைநகரான வஞ்சிமாநகரம் கடற்கரைக்கண்ணதாயின், அதனைச் சிறப்பிக்கப்புகுந்த சிலப்பதிகார மணிமேகலைமுதலிய முன்னூல்கள், உடனொத்த புகார் கொற்கைமுதலிய பட்டினங்களைப்போலவே வஞ்சியையும்(செங்குட்டுவனது வடயாத்திரையில் அவன்சேனை சென்றதைக் கூறுமிடத்து "வஞ்சிநீங்கித்- தண்டத் தலைவருந் தலைத்தார்ச் சேனையும், வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ் போத" என இளங்கோவடிகள் கூறியிருப்பது, அச்சேனையின் பரப்புமிகுதியை வருணித்த படியேயன்றிப் பிறிதன்று. வஞ்சி கடற்கரைக்கண்ணதாயின், தானைகளின் பெருக்கைக் கூறவந்த அவ்விடத்தே, அவை கடற்கரை விளிம்புவரை சென்றனவென்று அடிகள்கூறுவதில் பெருமையும் வியப்புமில்லையென்க. இனி, செங்குட்டுவன் வடநாட்டினின்று திரும்பிவரும்போது, நால்வகை நிலத்தாரும் அடைந்த மகிழ்ச்சிகளை வருணிக்கு முறையில், நெய்தனிலமாக்கள் செய்தியும் கூறப்பட்டதன்றி, கடற்கரைச் சம்பந்தம்பற்றி யன்றென்பதும், அறியத்தக்கது.) அதன் கடல்வளச் சிறப்பால் வருணித்துக் கூறாமற்போகுமா? ஒருகாலுமில்லை. அங்ஙனம் கடற்கரைச்சம்பந்தம் வஞ்சிக்குக் கொஞ்சமும் காணப்படாமையே, அஃது உள்நாட்டு நகரமென்பதை(தாலமி (Ptolemy) என்னும் பூர்வயவனாசிரியர், கருவூரை நேரிற் கண்டெழுதிய குறிப்பில், அஃது உள்நாட்டிலிருந்த நகரமாகவே கூறினர் என்பர். (The Tamils 1800 years ago. p.20).) விசதமாக்கவல்லது. மேலும், கருவூர் என்ற பெயர் கொடுங்கோளூர் அல்லது திருவஞ்சைக்களத்துக்கு உள்ளதாகப் பிரமாணமொன்றுங் காணப்படாமையும் அறிக. இனி, ஸ்ரீ:கனகசபைப்பிள்ளையவர்கள் மேற்குத்தொடரையடுத்துப் பேரியாற்றங் கரையிலுள்ள திருக்கரூரே (Tiru-karur) வஞ்சியாதல் வேண்டுமென்றும், அதற்கேற்ப அங்குள்ள பேரியாறே நூல்களிற் கூறப்பட்டபடி, ஆன்பொருநையாதல் வேண்டுமென்றும் ஒரு புதியகொள்கையை நாட்ட, அதனையே சரித்திரவறிஞர் பலரும் பின்பற்றுவாராயினர். இக் கொள்கைக்கு ஆதாரமாயிருப்பதெல்லாம், கருவூரென்ற பெயரொற்றுமை யொன்றைத்தவிர, வேறு சாதனமில்லை. இங்ஙனம் பெயரொப்பொன்றையே கொண்டு, நாம் ஒரு முடிவுபடுத்தல் எங்ஙனம் கூடும்? இனி, வஞ்சியிலிருந்த செங்குட்டுவன் 'மஞ்சுசூழ்சோலை மலைகாண்குவம்'என்று, தன் பரிவாரங்களுடன் புறப்பட்டுப் பேரியாற்றை யடைந்தானென்று முன்னமே சொன்னோம். இதனால், மலைவளமில்லாததோர் இடத்தே அவன் தலைநகர் அமைந்திருந்ததாதல் வேண்டுமன்றோ? மேற்குமலைத்தொடரின் அடிவாரத்துள்ள திருக்கரூரே செங்குட்டுவன் தலைநகராயின், மலைவளங் காண்டல்வேண்டி அவன் பேரியாற்றங்கரை சென்றானென்று சிலப்பதிகாரங் குறிப்பதில் வியப்புத்தான் என்னை? இதனால், வஞ்சியென்பது, ஆம்பிராவதி அல்லது ஆன்பொருநைப் பக்கத்ததும், மலைவளமில்லாததுமான கருவூரேயாதல் திண்ணமென்க. இங்ஙனமாயின், இக்கருவூரிலிருந்து செங்குட்டுவன் பிரயாணித்த பேரியாற்றங்கரை உத்தேசம் 300-மைல் தூரமுடைய தாகல்வேண்டும்.(அறுபதின்காத தூரமென்பர், அடியார்க்குநல்லார். (சிலப்.பதிகம். 3. உரை).)இவ்விடத்தே ஓர் ஆக்ஷேபத்தைச் சிலர் கூறுகின்றனர்; அஃதாவது - மலைவளங் காணச் சென்ற செங்குட்டுவன் 300-மைல் பிரயாணித்தவனாயின், அந்நெடும் பிரயாணத்தில் அவன் இடையிற்றங்கியே சென்றிருத்தல் வேண்டும்;  அங்ஙனஞ் சென்ற செய்தியை அடிகள் குறிக்கவில்லை-யாதலால், அரசன் சென்றுவந்த பேரியாற்றங்கரை அவன் தலைநகர்க்கு அணித்தாதல் வேண்டும்--என்பதாம்; "அரசனும் உரிமையும் மலைகாண்குவம் என்று வந்து கண்டவன்றே வஞ்சி புகுந்தமையானும்" என அடியார்க்குநல்லாரும் இக்கருத்தேபட எழுதினார். ஆனால், செங்குட்டுவனது நீண்ட யாத்திரையைக் கூறுமிடமெங்கும்  அவன் இடையிற்றங்கிய விவரத்தையும் இளங்கோவடிகள் கூறிச்செல்லு மியல்புடையரோ எனின், இல்லை. இதற்கு நீலகிரியினின்று செங்குட்டுவன் கங்கைக்கப்பால்வரை சென்று வந்த நெடும்பிரயாணத்தை அடிகள் மிகச் சுருக்கிக் கூறிச்செல்வதே, தக்க சான்றாகும். அன்றியும், வஞ்சியாகிய கருவூருக்கும் பேரியாற்றங்கரைக்கும் நெடுந்தூர முண்டென்பதற்குச் சிலப்பதிகாரத்தே மற்றொரு சிறந்த சான்றுமுண்டு; இளங்கோவடிகள் தம் தமயனது வடயாத்திரையை வருணிக்குமிடத்து "ஒரு நூற்றுநாற்பது யோசனைதூரம், இந்திரன் யானைகளைப் பரப்பிச் செல்வதுபோலச் சென்றான்" என்கிறார்.* ஈண்டு 'ஒருநூற்றுநாற்பது' என்னுந்தொடர் இந்திரனது யானைப்பரப்பின் தூரத்தைக் குறிப்பதென்பதினும் செங்குட்டுவனது பிரயாணதூரத்தைக் குறிப்பதென்பதே பொருத்தமாகும். இன்றேல், நூற்று நாற்பதென்ற எண்ணை அடிகள் குறிப்பிடுவதற்குத் தக்ககாரணம் வேண்டுமன்றோ? இந்திரனுக்கே அத்தொடர் விசேடிக்கப்பட்டதாயினும், அத்தொ கையினளவு தூரத்தை, அடிகள் சேரன் பிரயாணத்துக்கு உவமித்திருப்பது, அவன் சென்றுவந்த பேரியாற்றங்கரை வஞ்சிமாநகர்க்குச் சமீபித்ததன்று என்பதை வெளியாக்கும் என்பதில் ஐயமில்லை.** --------- * "விளையாட்டு விரும்பிய விறல்வேல் வானவன்-ஒருநூற்று நாற்பது யோசனை விரிந்த-பெருமால் களிற்றுப் பெயர்வோன் போ ன்று" என்பது மூலம் (சிலப்.25-11,15,16.)) ** யோசனையினளவு பலபடியாக வழங்கிவருகின்றது (சீவகசிந்தாமணி. இரண்டாம் பதிப்பு. வீசேடக்குறிப்பு. பக். 84 பார்க்க.) மலைநாட்டு வழக்கப்படி, யோசனை-யொன்றுக்கு 4 நாழிகை அல்லது 6 மைலாகக் கொண்டால், 140-யோசனைக்கு 840-மைலாகும். கருவூருக்கும் பேரியாற்றங்கரைக்கும் உத்தேசம் 300-மைலேயாதலின், இது மிகவும் அதிகமேயாம். இதனால், இளங்கோவடிகள் காலத்து ஒருயோசனையினளவு 2 1/2 மைலுக்குட்பட்டதாக இருந்ததுபோலும். மேற்கூறியவாறு, கருவூரையடுத்து ஆம்பிராவதியும் காவிரியுங்கலக்கும் கூடலையும், நொய்யல் அல்லது காஞ்சிமாநதியையும் பரணர் செங்குட்டுவனுக்கு உவமையாகக் கூறியிருத்தலும், ஆன்பொருநைக் கரையில் வஞ்சியுள்ளதாகச் சொல்லப்படுதலும், கருவூர்க்கும் பேரியாற்றுக்கும் பெருந்தூரமுண்டென்பதை இளங்கோவடிகள் குறிப்பிப்பதும்-சேரரது பழைய தலைநகரம் அந்நதிகள் பாயுமிடங்களுக்குப் பக்கத்தது என்பதற்குத் தக்கசான்றாதல் காணலாம். கொச்சிராஜ்யத்துள்ள கொடுங்கோளூர் அல்லது திருவஞ்சைக்களமாயின், அம் மலைநாட்டு நதியொன்றையும் பரணர் செங்குட்டுவனுக்கு உவமிக்காமல், மேற்காட்டிய ஆறுகளையே† கூறிச்செல்வதற்குத் தக்க காரணம் வேண்டுமன்றோ? ----------- † இந்நதிகளன்றி, அயிரை என்ற நதியும் (சிலப். 28. 145) அப்பெயரேகொண்ட மலையும் (பதிற்றுப். 21) சேரநாட்டில் உள்ளனவாகச் சொல்லப்படுகின்றன. இவற்றுள், அயிரையாறு, சேரர்க்குரிய கொல்லிமலையில் (அகநா. 33. 281) உற்பத்தியாகிக் காவிரியுடன் மேலணையிற் சங்கமிக்கும் அய்யாறு என்ற நதியாகக் கருதப்படுகிறது. இனி, அயிரிமலை என்பது, குழித்தலைக்கு மேற்கே 4 1/2-மைலில் உள்ள இரத்தினகிரி போலும்; இதற்கு அய்யர்மலை என்னும் பெயரும் அப்பக்கத்து வழங்குதல் காண்க. கருவூர்க்குக் கீழ்பாலுள்ள செங்குத்தான இவ்வழகிய குன்றினுச்சியில் மிகப்பழைய சிவாலயமொன்று உண்டு. பதிற்றுப்பத்துக் கூறுமாறு, சேரர்களது குலதெய்வமாக விளங்கிய கொ1ற்றவைக்கடவுட்கு இக்குன்று முற்காலத்துச் சிறந்த தலமாயிருந்தது போலும். இனி, முசிரி என்ற பெயர்கொண்ட ஊரொன்று இப்பக்கத்துள்ளதை நோக்குமிடத்து, சேரர்க்குச் சிறந்த துறைமுகமாய் மேல்கடற்பக்கத்தமைந்த முசிரியை ஞாபகப்படுத்தற்கு உண்ணாட்டில் அவ்வரசர் அதன் பெயரிட்டதுபோலத்; தோற்றுகிறது.இப்பக்கத்துத் தோட்டியமுதலியவிடங்களில் மதுரைக்காளியம்மன் என்ற பெயராலும் பிறவகையாலும் பிடாரிவழிபாடு பெரிதும் நிகழ்ந்து வருவதானது, பூர்வத்திற் பத்தினிவணக்கமாயிருந்ததே காலாந்தரத்தில் அங்ஙனம் மாறியதோ என்று கருதவும் இடந்தருகின்றது. ---  இதற்கேற்ப, வஞ்சி வஞ்சுளாரணியம் என்றபெயர்கள் முன்குறித்தபடி, ஆம்பிராவதிக் கருவூர்க்கு இன்றும் வழங்கிவருதல் அறியத்தக்கது. இவையன்றி, பழைய ரோம சக்கரவர்த்திகளாகிய அகஸ்டஸ் (Augustus) டைபீரியஸ் (Tiberius), கிளாடியஸ் (Claudius) முதலியோர் நாணயங்கள் இக்கருவூர்ப்பக்கத்தே 1806-ம் வருஷத்துக் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருவதும்,(Gazetteer of Trichinopoly. p. 260) இதன் பழைமை பெருமைகளை நன்கு விளக்குவதாம். கருவூர்க் கோட்டை இப்பொழுது அழிபட்ட நிலையிற் காணப்படுகின்றது. இங்ஙனம் ஆம்பிராவதி அல்லது ஆன்பொருநைக் கரையிலுள்ள கருவூரே, சேரரது பழமை பெருமை வாய்ந்த தலைமைநகராயிருப்பவும், அச்செய்தியைச் சங்க காலத்துக்குப் பிற்பட்ட தமிழ்மக்கள் முற்றும் மறந்துவிட்டனரென்றே தோற்றுகிறது. இவ்வூர்த் திருவானிலைக் (திருவானிலை என்பது, கருவூர்ப் பசுபதீசுவரர் கோயிலே.) கோயிலைப்பற்றிய தேவாரப் பதிகங்களிலேனும் அக்கோயிலிற் கண்ட சாஸனங்களிலேனும் (இப்பசுபதீசுவரர் ஆலயத்தில், வீரராஜேந்திரன் 1, இராஜேந்திரன் 1, குலோத்துங்கன் 3, வீரசோழன் என்ற சோழவரசர் சாஸனங்களாகக் கண்டவற்றை, சாஸனபரிசோதகர் வெளிப்படுத்தியிருக்கின்றனர். (South Indian Inscriptions. Vol. III. No. 20-26).)  வஞ்சியின் பழஞ்செய்தி சிறிதுங் குறிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், இக்கருவூரின் ஸ்தானத்தில் மலைநாட்டுக் கொடுங்கோளூர் சேரராஜதானியாகப் பின்னூல்களிற் கூறப்படுதல் காணலாம்; "சேரர்குலக் கோவீற்றிருந்து முறைபுரியுங் குலக்கோமூதூர் கொடுங்கோளூர்" என்றார் சேக்கிழாரும். (சேரமான் பெருமாணாயனார் புராணம். 1.) இங்ஙனம் சேரர் தலைநகரமானது பிற்காலத்து முற்றும் மறக்கப்பட்டதற்கும் அதற்குப் பிரதியாக வேறு தலைநகரம் மலைநாட்டில் உண்டானதற்கும் தக்க காரணங்களும் உள்ளன. கருவூர், சோணாடு பாண்டிநாடுகளின் எல்லையில் அமைந்தமையால், (கருவூர்க்குக் கீழ்பால் 8-மைலில், காவிரிக்கரையிலுள்ள மதுக்கரையைச் சேர- சோழ -பாண்டிய நாடுகளின் எல்லையாக இக்காலத்தாரும் கூறுவர். சோணாட்டின் மேற்கெல்லை கருவூர் என்பர், யாப்பருங்கலக்காரிகை உரைகாரர். (ஒழிபி. 7. உரை).) சேரருடன் விவாதம் நேரிட்டபோதெல்லாம் தமிழ்வேந்தர்க்குள் போர்நிகழ்வதற்கு அஃது உரியகளமாயிற்று. இச்செய்தி புறநானூறு முதலிய சங்கச்செய்யுள்களால் நன்கறியப்படும். பிற்காலத்திற் சோழரது ஆதிக்கம் பெருகியபோது, கருவூர் சோணாட்டின் முக்கியநகரங்களுள் ஒன்றானசெய்தி சாஸனங்களாலும்$$ (கி.பி. 10-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கருவூர் சோணாட்டைச் சார்ந்ததென்பர்.  சாஸனபரிசோதகர் (Government Epigraphist report. 1891.)) நூல்களாலும் தெரிகின்றது; "அநபாயன் சீர்மரபின் மாநகரமாகுந் தொன்னெடுங் கருவூர்" (எரிபத்த.2) "தங்கள் குல மரபின்முதற் றனிநகராங் கருவூரில்" (புகழ்ச்சோழ. 12) எனச் சேக்கிழாரும் இச்செய்தி கூறுதல் காண்க. ஏறக்குறைய 900-வருஷங்கட்குமுன் சோழ சக்கரவர்த்திகளாகப் பிரபலம் பெற்றிருந்த இராஜராஜன் 1. அவன்மகன் இராஜேந்திரன் 1 காலங்களில், இக்கருவூரைச் சூழ்ந்த வெங்காலநாட்டிற்குக் கேரளாந்தகவளநாடு என்றும், இவர்களை அடுத்த குலோத்துங்கசோழன் காலத்தில் சோழகேரளமண்டலம் என்றும் பெயர்கள் வழங்கிவந்தன என்பது(S.I.I Vol. III No. 30, 31.) கருவூர்ப் பசுபதீசுவரர் கோயிலிலுள்ள சாஸனங்களால் வெளியாகின்றது. இப்பெயர்களால், சோழராதிக்கத்துக்கு முன்பு கருவூர்ப்பிரதேசம் சேரர்க்குச் சிறந்தபூமியாகக் கருதப்பட்டிருந்தமை பெறப்படும். சோழர்க்குமுன் இம்மண்டலம் கொங்கு தேச ராஜாக்கள் ஆட்சிக்குட்-பட்டிருந்ததென்றும், (கருவூர், கொங்குநாட்டுத் தலங்களுள் ஒன்றாகக் கூறப்படுதல் காண்க. ஆனால், சங்கநாளிலே, கொங்குதேசம் குடகுநாடாயிருந்தமை "குடகக்கொங்கரும்" என்னும் அடிகள் வாக்கால் அறியலாம்.(சிலப். 30. 159)) அவர்க்கும் முற்பட்ட சங்ககாலத்தேதான், அது சேரரது சிறந்த தேசமாகி வஞ்சி எனப்பட்ட இக்கருவூரை தலைமை நகரமாகக்கொண்டு விளங்கியதென்றும் அறியத்தக்கன. சங்ககாலத்துக்குப் பின்னர்ச் சோழராற்றற்கு அஞ்சிய சேரர், வஞ்சியைவிட்டுநீங்கித் தங்கட்குரிய மலை நாட்டிற் கடற்கரையிலுள்ள கொடுங்-கோளூரைத் தலைமை நகரமாகக் கொள்ளலாயினர். பிற்பட்ட சேரராஜதானியாகத் தெரிகின்ற இவ்வூரைப் பழையவஞ்சி அல்லது கருவூரென்று கொள்வதற்குச் சங்கநூற்பிரமாணம் ஒன்றுமே கிடையாதாயினும் அடியார்க்குநல்லாருள்படப் பலரும் இதனையே மாறிக்கருதுவாராயினர்.  கொடுங்கோளூர் என்ற பெயரோ பழைய நூல்களுக்குச் சிறிதுந் தெரியாத தொன்றாகும். இதனையடுத்துள்ள திருவஞ்சைக் களத்துக்கும் வஞ்சிக்கும் எவ்விதப் பொருத்தமும் இல்லாமையால், சரித்திரவறிஞர் அவ்விரண்டனையும் பொருத்தி யெழுதுவனவெல்லாம் முன்னைவழக்கோடு முரணுவதேயென்க. இனிச் சிலர், சிலப்பதிகார மணிமேகலைகளில், இக்காலத்துவழங்கும் மலைநாட்டுச் சொற்களும் வழக்குகளும் காணப்படுவது கொண்டு, செங்குட்டுவனது தலைமை நகரும் அம்மலை நாட்டிருந்ததாகக் கருதுவர். மலைநாட்டு வழக்கென்று அவர்கள் காட்டுவனவெல்லாம் பொதுவாகப் பழைய தமிழ்வழக்குகளேயன்றி வேறில்லை. அதனால், நம் காலத்து வேறுபட்டதுபோலவே, செங்குட்டுவன் காலத்தும் அவ்வழக்குகள் வேறுபட்டிருந்தன என்று கருதுதல் பொருந்தாதென உணர்க. ஒருகால், சிற்சில வழக்குகள் மலைநாட்டுக்கே சிறப்புடையவாயினும் நம் சேரனுக்கு அம்மலைநாட்டினும் உரிமையுந் தலைமையுமுண்டாதலால், அதுபற்றி அவனைப்பற்றிய பாடல்களில் அவ்வழக்குகள் பயின்றன என்று கருதுதலும் இழுக்காது. இதுவரை யாம் கூறிவந்த பிரபல பிரமாணங்களால் சேரராஜதானியாகிய வஞ்சியென்பது, ஆம்பிராவதிக் கரையிலுள்ள கருவூரேயன்றிக் கொடுங்கோளூரேனும் திருவஞ்சைக்களமேனும் ஆகாவென்பதும், கனகசபையவர்கள் கருத்துப்படி, பேரியாற்றங்கரைத் திருக்கருவூரைப் பழைய வஞ்சியாகவும், அப்பேரியாற்றையே பொருநையாகவும் கொள்வதற்குப் பொருத்தமும் பிரமாணமும் இல்லையென்பதும் நன்கு விளங்கத்தக்கன. இனி, செங்குட்டுவன் சென்றிருந்த பேரியாற்றங்கரைக்குச் சமீபித்ததும், கண்ணகி விண்ணாடு சென்றதுமான செங்குன்று(கண்ணகி சுவர்க்கம்புக்க மலை, செங்கோடு என்பது, அரும்பதவுரையாசிரியர் கருத்து (சிலப். அரும்பத. பக். 74); அடியார்க்கு நல்லார், அவரெழுதிய செங்கோடென்பது இப்போது சேலம் ஜில்லாவைச்சேர்ந்த திருச்செங்கோடாகக் கருதி, அவ்வூர் கண்ணகி விண்ணாடு சென்ற இடமாகாதென்றும், செங்குட்டுவன் சென்றிருந்த பேரியாற்றங்கரையை அடுத்த செங்குன்றே அவ்விடமாதல் வேண்டும் என்றும் எழுதினர். (சிலப். பதிகம். 3. உரை).) என்னும் மலையே, அச்சேரன் பத்தினிதேவிக்குக் கோயிலெடுத்துச் சிறப்பித்த இடமாகும். கண்ணகியின் உற்றார் அவள்கோயிலை அடைந்ததையும், அவரை நோக்கி அப்பத்தினிக்கடவுள் கூறிய வார்த்தையையும் இளங்கோவடிகள் எழுதுமிடத்து:- "வையையொரு வழிக்கொண்டு, மாமலைமீ மிசையேறிக் கோமகடன் கோயில்புக்கு" (சிலப். 29. உரைப்பாட்டுமடை) "வென்வேலான் குன்றில் விளையாட்டி யானகலேன் என்னோடுந் தோழிமீ ரெல்லாரும் வம்மெல்லாம்"  (சிலப். 29. உரைப்பாட்டுமடை) என முறையே கூறுதலால், பத்தினிக்கோயில் கருவூர்க்கு வெகுதூரத்தில் மலைமேலமைந்திருந்தமை புலப்படும். அன்றியும், பத்தினிப் பிரதிஷடைக்குரிய முற்காரியங்களைச் செங்குட்டுவன் வஞ்சியிலிருந்தே செய்துவந்தவனென்பது:- "சிறப்புடைக் கம்மியர் தம்மொடுஞ் சென்று பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து கடவுண் மங்கலஞ் செய்கென ஏவினன்" (சிலப். 28-223, 225, 233) என்னும் அடிகளது வாக்கின்போக்கால் அறியப்படுகிறது.மணிபல்லவத்தினின்று புறப்பட்ட மணிமேகலையும் முதலில் இச்செங்குன்றையடைந்து, தன் தாயாகிய அப் பத்தினியை ஆங்குத் தரிசித்தபின்பே வஞ்சிநோக்கிச் சென்றனளென உணர்க. (மணிமேகலை 25-ம் காதை முடிவும், 26-ம் காதை முதலுங் காண்க.) இச்செங்குன்று இப்போது செங்குன்றூர் என்னும் பெயருடன் மலைநாட்டில்(செங்குன்றூர், மலைநாட்டில் அகலப்புழைக்குத் தென்கிழக்கிலும் கோட்டயத்துக்குத் தெற்கிலும், உத்தேசம் 20-மைல் தூரத்துள்ளது.) உள்ளது. இவ்வூரிலுள்ள குன்றின்மேல் மிகப்பிரபலம் பெற்ற பகவதிகோயிலொன்று உண்டு. இத்தேவிக்குத் திருவிழா முதலியவை பெருஞ் சிறப்புடன் நடைபெறுகின்றன. இப்பகவதியை மதுரை மீனாக்ஷியம்மனாக அப்பக்கத்தார் இன்றும் வழங்கிவருவதாகத் தெரிதல் ஆராயத்தக்கதேயாம். ------------------------  அதிகாரம் - 11   செங்குட்டுவன் அரசியல் நம் சேரர்பெருமானது இராஜாங்கமுறைகளை இனி நோக்குவோம். பொதுவாகச் சொல்லுமிடத்து, செங்குட்டுவன் காலத்தனவாகிய சங்கநூல்களிலே அரசியன் முறைகளாக அமைந்தவை யாவும் நம் வேந்தனுக்கும் உரியவையென்றே சொல்லலாம். இவ்வாறு கூறப்பட்ட அரசியல்களை விடாது இங்கு விவரிப்பதாயின் இவ்வதிகாரம் அளவு கடந்துவிடும். அதனால், வேற்றுநூல்களுட் புகாமல், செங்குட்டுவன் சம்பந்தமான செய்யுள்களிலிருந்து தெரியவரும் விசேடச்செய்திகளை மட்டும் இங்கு விளக்குவோம். நம் சேரர்பெருந்தகை, சங்ககாலத்துத் தமிழ் வேந்தருள்ளே சிறந்து விளங்கியவன். இவன் தந்தை நெடுஞ்சேரலாதனும், அவன் முன்னோரும், வடவாரியருடனும் அயலரசருடனும் அடுத்தடுத்துப் போர்புரிந்து வந்தவராதலால், அவரது பகைமையெல்லாம் இவனுக்கும் இருந்ததென்றே தெரிகின்றது. அதனால், கடல்வழியாகவும் தரைவழியாகவும் பகைவர் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கேற்ற கப்பற்படையும் தரைப்படையும் இவன் உடையனாகவேயிருந்தான். "சினமிகு தானை வானவன் குடகடற் பொலந்தரு நாவா யோட்டிய ஞான்றைப் பிறர்கலஞ் செல்கலா தனையேம்" (புறநா.126.) என, மரக்கலப்படையின் மாட்சியால் கடற்றலைமையை அக்காலத்துச் செங்குட்டுவன் வகித்திருந்த சிறப்பைப் பெயர் கூறாது வியந்தனர் ஒரு புலவர்.  கடற்படையைக் கொண்டு இவன் ஒரு காலத்துச் செய்த வீரச்செயலையும், அது பற்றி இவன் "கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் " என வழங்கப்பட்டதையும் இவனது "போர்ச்செயல்கள்" கூறிய விடத்தே விளக்கினோம்: இவ்வேந்தனது தரைப்படையும் அங்ஙனமே அளவாலும் ஆற்றலாலும் மேம்பட்டிருந்தது. பத்தினிக்குப் படிமச்சிலை எடுத்தற்கும், ஆரியரை வெற்றி கொள்வற்குமாக இவன் வடக்கே சென்றுவந்த முப்பத்திரண்டு மாதம் வரை இவனாட்டிற் குழப்பொன்றும் இல்லாதிருந்ததோடு, குடிகளெல்லாம் இவனாட்சியில் மகிழ்ச்சி மிக்கவர்களாய்த் தம் அரசன் வெற்றியைத் தமக்குரிய பெருமையாகவேகொண்டு விளங்கினர் என்றுந்தெரிகிறது. *  செங்குட்டுவனது அரசியலில், முற்காலமுறைப்படி, அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதுவர், சாரணர் என்ற ஐவருமே சிறந்திருந்தவர்கள். இவர்களை அரசர்க்குரிய ஐம்பெருங்குழு என்பர் முன்னோர்.† இவர்களன்றிக் கரும வினைஞர், கணக்கியல் வினைஞர், தருமவினைஞர், தந்திர வினைஞர், பெருங்கணி என்ற அரசியல்வகிக்குந் தலைவரும் இருந்தனர். ‡ கருமவினைஞர் என்போர் தேசத்தின் ஆட்சியை நடத்துவோரென்றும், கணக்கியல்வினைஞர் என்போர் தேசத்தின் வரிவருவாய்களைக் கவனிக்கும் அதிகாரிகளென்றும்,தருமவினைஞர் நாட்டினறங்களைப் பாதுகாப்போரென்றும், தந்திரவினைஞராவார் படைகளின் சம்பந்தமான தலைமைவகிப்போர் என்றும், பெருங்கணி அரசனது காரியங்கட்குரிய காலங்களையும் நிமித்தங்களையும் கணித்துரைப்போன் என்றுந் தெரிகின்றன. ------------ *இந்நூல், 74--5 -ம் பக்கம். †௸.58-ம் பக்கக் கீழ்க்குறிப்பு. ‡ சிலப்,26. 40-1 இவரெல்லாம், அரசனது மந்திராலோசனைக்கு உரியவராவர். செங்குட்டுவனது தரைப்படைக்குத் தலைமை வகித்தவீர‌ன் வில்லவன்கோதை என்பான். இவனே செங்குட்டுவனது வடயாத்திரையில் அவனுடைய சேனைகளை நடத்திச்சென்று ஆரியவரசருடன் நிகழ்ந்த பெரும்போரில் வெற்றிபெற்றவன். "வில்லவன் கோதையொடு வென்று வினைமுடித்த-பல்வேற் றானைப் படை" என்றார், இளங்கோவடிகளும் (சிலப்.26.251-2). இவனைப்போலவே,தேசவருவாயின் தலைமையைவகித்த அமைச்சன், அழும்பில்வேள்(சிலப்.28.204-5) என்பவன்; இவன் அழும்பில் எனப்படும் வளம் பெருத்த நாட்டின் தலைவன்; இவனுக்கு 'வானவிறல்வேள்' என்ற பெயரும் வழங்கியது. ("வானவிறல்வேள், அழும்பி லன்ன நாடிழந் தனரும்" என்பது மதுரைக்கைகாஞ்சி (344-5). சேரன் படைத்தலைவனாகிய நன்னனுக்கும் இப்பெயரே வழங்கப்பட்டுள்ளது.இதனால், சேரரது அரசியலில் தலைமைவகித்த ஒருசாரார்க்கு இப்பெயர் வழங்கிவந்ததாகக் கருதப்படுகிறது. (யாம் எழுதிய வேளிர் வரலாறு; 67-ம் பக்கம் பார்க்க.)) இவ்வமைச்சன் செங்குட்டுவற்குச் சமயோசிதமாகச் சூழ்ச்சியுரைக்க வல்லனாயிருந்தான்.(சிலப்.25.173-7.)  இனி, நம் வேந்தனது தூதுவருள்ளே தலைமை வகித்தவன் சஞ்சயன் என்றும்,(சிலப் 26.137) இவனுக்கு அடுத்தபடியிலிருந்தவன் நீலனென்றும்(சிலப் 28.109) தெரிகின்றன. இவர்கள்கீழடங்கிய தூதுவரெல்லாம் தம்மரசனிடமிருந்து வேற்றரசரிடம் சமாசாரங்களைத் தெரிவித்து வருதற்குரியர்;  அன்றியும் யுத்தத்திற்கு அரசனுடன் சென்று வேண்டியகாரியங்களை நிர்வகிக்கவும் வல்லவர். இன்னோர் இராஜ சமுகங்கட்கு அடுத்தடுத்துச் சென்று வருபவராதலால், சட்டையும் தலைப்பாகையுந் தரித்திருப்பர். இவரைக் கஞ்சுகமுதல்வர் எனவும் வழங்குவர்; "சஞ்சயன் முதலாத் தலைக்கீடு பெற்ற-கஞ்சுக முதல்வ ரீரைஞ் ஞூற்றுவர்" எனத் தம் தமையனுக்கிருந்த தூதுவரைப்பற்றி இளங்கோவடிகள் குறித்தல் காண்க.* இனிச் சாரணரென்போர் ஒற்றராவார். இன்னோர், இக்காலத்துப்போலவே, முற்காலத்தும் அரசர்க்குக் கண்போன்று விளங்கினர். செங்குட்டுவனுடைய ஒற்றர்கள் அந்நியநாடெங்கும் சஞ்சரித்து வந்தனரென்றும், அவ்வாறே வேற்றரசரொற்றர்களும் பெருவீரனான நம் சேரன் நாட்செய்திகளைத் தெரிதற்பொருட்டு வஞ்சிமாநரில்  மறைந்து வசித்தனரென்றும் சொல்லப்பட்டுள்ளன.† மேற்கூறியவர்களன்றிக் கரணத்தியலவர் (கணக்கர்),கருமவிதிகன் (ஆணைநிறைவேற்றும் அதிகாரிகள்), கனகச்சுற்றம் (பண்டாரம் வகிப்போர்), கடைகாப்பாளர் (அரண்மனை காவலர்),  நகரமாந்தர், படைத்தலைவர், யானைவீரர், குதிரைவீரர் எனப்பட்ட எண்பேராயத்தாரும் செங்குட்டுவன் அரசியலில் தலைமைபூண்டிருந்தனர்.‡ செங்குட்டுவனது அரசியல்முத்திரையானது வில், கயல்,புலி என்னும் மூன்றும் அமைந்ததோர் இலாஞ்சனையாகும். இதனைத் "தென்றமிழ் நாட்டுச் செழுவிற் கயற் புலி, மண்டலை யேற்ற வரைகீ" என்பதனால் அறிக. $ ----------- *சிலப். 26. 137-8. †௸.25 173- 6. ‡௸ 26.38. $ ௸.25.171-2. சோழபாண்டியர் அடையாளங்களாகிய புலியையும் மீனையும் தனக்குரிய வில்லோடுசேர்த்து நம்சேரன் இலச்சினையாகக் கொண்டிருந்ததை நோக்குமிடத்து, அக்காலத்துத் தமிழ் வேந்தருள் இவனே தலைமை வகித்தவனென்பது புலப்படுகின்றது. இவ்வாறே, இவ்வேந்தன் சோழபாண்டியர்க்கும் மேம்பட்டவன் என இளங்கோவடிகள் பல முறை கூறுவர்.*  செங்குட்டுவனது தலைமையதிகாரிகளும்,அந்தணர் புலவர் குடிகளும் அவனிடம்வந்து ஒன்று கூறும்போது, பேச்சின் தொடக்கத்தும் முடிவிலும் "அரசே!வாழ்க" என்று அவனை வாழ்த்துதல் பழைய முறையாக இருந்ததென்பது இளங்கோவடிகள் வாக்கால் நெடுகவும் உணரப் படுகின்றது. இதனை, "வடநாட்டியாத்திரை" "பத்தினிக் கடவுளைப் பிரதிஷ்டித்தல்' என்ற அதிகாரங்களைக் கொண்டு அறியலாகும். செங்குட்டுவன் திருமுகமெழுதுவோர் 'கண்ணெழுத்தாளர்' எனப்படுவர்; "கண்ணெழுத் தாளர் காவல் வேந்தன், மண்ணுடைமுடங்கலம் மன்னவர்க்களித்து" எனக் காண்க.† கண்ணெழுத்து என்பது சங்கநாளில் வழங்கிய தமிழெழுத்தின் பழையபெயராத் தோற்றுகிறது. செங்குட்டுவனது வடயாத்திரையில் பண்டங்கள் ஏற்றிச்சென்ற வண்டிகள் இன்னின்ன சரக்குடையவை என்றெழுதப்ட்டிரிருந்தன என்பதை அடிகள் கூறுமிடத்து, "இருபதினாயிரங் கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும்" என்கிறார்;  --------------- *சிலப். 25.87-90; 26.168-71. † ௸. 26.170-1 ‡௸.26.186;5.112. இதனாலும் கண்ணெழுத்து, பண்டைத்தமிழெழுத்தின் பெயரேயாதல் காணலாம். இங்ஙனமாயின், சாஸன பரிசோதகரால் வட்டெழுத்து எனப்படும் பழைய தமிழெழுத்தைச் செங்குட்டுவன் காலத்துக் கண்ணெழுத்தாகக்கொள்ளல் பொருந்தும்  போலும். பழையதமிழெழுத்தாய்ச் சாஸனங்களில் மட்டும் காணப்படும் வட்டெழுத்து நம்நாட்டில் வழக்குவீழ்ந்து பல நூற்றாண்டுகளாயினும், மலைநாட்டுள்ள சோனகர்க்குள் கோலெழுத்து என்று வழங்கப்பட்டு இன்றும் அது வழங்குகின்றதென்பர்.* கண்போன்றிருத்தலாற் கண்ணெழுத்து என்றும், வட்டமாக விருத்தலின் வட்டெழெத்து என்றும், சித்திரித்தெழுதப்படுலாற் கோலெழுத்து என்றும் ஒன்றே பல பெயர் பெற்றதென்க. இனி ஸ்ரீமாந்- கோபிநாதராயரவர்கள்,  இதுவரை கண்ட சாஸனங்களுக்ளுள்ளே பழமைவாய்ந்த தமிழ்ச் சாஸனமொன்றைச் செந்தமிழ்ப்பத்திரிகையில் வெளியிட்டிருக்கின்றனர்.† செஞ்சிக்கடுத்த திருநாதர் குன்றுப் பாறையில் வெட்டப்பட்ட அச்சாஸசனம்,ஜைந ஆசிரியரொருவர் ஐம்பத்தேழுநாள் அநசநவிரதம் (உண்ணாநோன்பு) பூண்டு உயிர்துறந்த செய்தியைக் குறிப்பது. அடுத்த பக்கத்துக்கண்ட அத்தமிழ்ச்சாஸனம் வட்டெழுத்துமுறையினின் றும் சிறிது மாறியுள்ளதென்பது இராயவர்கள் கொள்கை; ஆயினும் அதன் தமிழெத்துக்கள், ஏறக்குறையச் செங்குட்டுவன் காலத்து வழங்கியவை என்பது அவர்களெழுதிய குறிப்பால் அறியப்படுதலால், அத் தமிழெழுத்தின் மாதிரிகையை நம்மவர் அறிந்துகொள்ளுமாறு அச்சாஸனத்தையே தருகின்றேம். ----------------- * Dr.Cundert’s Malayalam Grammar (art)) †தொகுதி-5,பக்-410-1. (graphics to be inserted here) ( இங்கு நான்கு வரிகள் வட்டெழுத்தில் காமப்படுகின்றன.) 1. ஐம்பத்தேழன-- 2. சனந்நோற்ற 3. சந்திரநந்தி ஆ-- 4. சிரிகர் நிசீதிகை. செங்குட்டுவன் அத்தாணிமண்டபத்தை யடைந்து அமைச்சர் முதலியவருடன் மந்திராலோசனை புரியும்போது, அவனுடைய கோப்பெருந்தேவியும் (இளங்கோவேண்மாள்) கூட வீற்றிருந்து தன்னபிப்பிராயத்தையும் தடையின்றி வெளியிடற்கு உரியவளாயிருந்தனள். * அரசன் தன் பெருந்தேவியுடன் அத்தாணிக்குவரும் மத்தியிலே அரண்மனையினுள்ள அரங்குகளிற் கூத்தர்கள் நிகழ்த்தும் அழகிய ஆட்டங்களைக்கண்டு மகிழ்வதுமுண்டு. செங்குட்டுவனது ஆஸ்தாநக் கூத்தரிற் சாக்கையர் என்போர் சிறந்தவராகக காணப்படுகின்றனர் (சிலப்.28.65-79). ----------- * ;சிலப்.25.107--114; 28.65--6 இச் சாக்கையர் என்ற கூத்தவகுப்பார் மலைநாடுகளில் தம் பூர்வவிருத்தியையே இன்றும் நடத்திவருதல் அறியத்தக்கது.(இச்சாக்கையர் வரலாற்றை ஸ்ரீ.T.K.கோபால பணிக்கர் எழுதிய "மலையாளமும் அதில் வாழ்நரும்"(Malabar and its folk) என்ற ஆங்கில நூலின் 184,185-ம் பக்கங்களிலும், செந்தமிழ் 7-ம் தொகுதி, முதற்பகுதியில் யாமெழுதிய 'மூன்று தமிழ்க்குடிகள்' என்ற வியாசத்தினும் கண்டுகொள்க.) நம் சேரர்பெருமானுக்கு அடங்கியிருந்த அரசர்கள் தத்தம் திறைகளைக்கொண்டுவந்து தலைநகர்ப் பெரியபண்டாரத்திற் சேர்க்குங்காலம் விடியற்காலையாகும். அங்ஙனம் திறைகொணரும்படி அரண்மனையுள் முரசம் அறையப்பட்டு வந்ததென்று தெரிகிறது; " ஞாலங் காவலர் நாட்டிறை பயிருங், காலை முரசங் கடைமுகத் தெழுதலும்" எனக் காண்க.(சிலப்.26.52-3.) அரசனது பிறந்தநாளானது நகரத்தாரால் ஆண்டுதோறும் ஒரு புண்ணிய தினமாகக் கருதிக் கொண்டாடப்படும்.(மணிமே.28.9) இப்பிறந்தநாள் பெருநாள்(சிலப்.27.44) எனவும் பெருமங்கலம் எனவும் வழங்கும். இக்காலத்தே, அரசன் உயிர்களிடங்காட்டும் கருணைக்கறிகுறியாக மங்கல வண்ணமாகிய வெள்ளணி அணிந்து, சிறைப்பட்டவரை-யெல்லாம் விடுவிப்பதும், தன் தானைவீரர்களைத் தக்கபடி கௌரவிப்பதும் மரபாகும். இதனையே தொல்காப்பியனாரும் "சிறந்த நாளணிசெற்ற நீக்கிப்-பிறந்த நாள்வயிற் பெருமங்கலமும்" என்று சிறப்பிப்பர்.*  இக்காலத்தே, நகரத்தாரெல்லாம் உற்சாக மிக்கவர்களாய் துருத்தி முதலியவற்றால் நீர்கொண்டு இறைத்து விளையாடி மகிழ்வர்.மணிமேகலை மணி பல்லவத்தினின்று வஞ்சிநகர் புகுந்தபோது, செங்குட்டுவன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டதென்று தெரிகின்றது.இக்காலத்தும், திருவனந்தபுர அரசர்க்குள் ஜன்மதினக் கொண்டாட்டம் சிறப்பாகவே நடைபெறுதலோடு, அவ்வரசர் 'மூலந்திருநாள், விசாகந்திருநாள்'எனத் தங்கள் பிறந்தநாள்களையே பெயராகக்கொண்டு விளங்குதலும் கண்டுகொள்க. விசேட நாள்களிலே, அரசன் ஒருதட்டிற் பொன்னும் ஒருதட்டிற் றானுமாகத் துலையிலேறித் தன்னை நிறுத்து அந்நிறுத்த பொன்னை மறையவர்க்குத் தானஞ்செய்தல் மரபாகும். செங்குட்டுவன் கங்கைக் கரையிலே பத்தினிப் படிமத்தை நீராட்டித் தூய்மைசெய்தபின்னர், மாடலன் என்னும் அந்தணனுக்கு மேற்கூறியபடி தானஞ்செய்தான் என்று அடிகள் கூறுவர்.† இவ்வாறு "துலாபாரதானம்" செய்வது  மலைநாட்டரசர்க்குள் இன்றும் நடைபெற்றுவரும் வழக்கமென்பது யாவரும் நன்கறிந்தது. அரசன் மலைப்பிரதேசங்கட்குச் செல்லும்போது, அம் மலைவாணராகிய குன்றக்குறவர் தம் நாட்டிற் கிடைக்கக்கூடிய அரும்பொருள்களைச்சேகரித்து அவற்றைத் தலைமேற் சுமந்துகொண்டு கூட்டமாக வந்து அரசனை அடிபணிந்து  அவன் திருமுன்பு காணிக்கை வைப்பர்.‡ இம்மரியாதை திருவனந்தபுரம் கொச்சி முதலிய மலைநாட்டரசர்களுக்கு இன்றும் நடந்துவருவதொன்றாகும். ------------- .* தொல். பொருளதி.91 . † சிலப். 27.175-6) ‡ சிலப்.25. 35-56; அப்போது மலைநாட்டுக் கூத்தர்கள் வந்து தங்களாட்டத்தால் அரசனை மகிழ்விப்பதும் அவர்கட்கெல்லாம் ஆஸ்தானத் தலைமைகூத்தன் கூறிய முறையே அரசன் பரிசளிப்பதும் பூர்வ வழக்கம்.(சிலப். 26.125-126.) அரசன் யுத்தயாத்திரையாகப் புறப்படுமுன்னர்த் தன் படைத்தலைவர்க்கும் சேனைகட்கும் பெருவிருந்து செய்து அவர்களை மகிழ்விப்பதும் வழக்கமாம்: இதனைப் 'பெருஞ்சோற்றுநிலை' என்பர் தொல்காப்பியர்.(தொல். பொருளதி. 63.; பக். 130.) "வேந்தன் போர் தலைக்கொண்ட பிற்றைஞான்று போர்குறித்த படையாளருந் தானும் உடனுண்பான்போலவந்து ஒருமுகமன் செய்தற்குத் தானே பிண்டித்துவைத்த உண்டியைக் கொடுத்தல்' என்பர் நச்சினார்க்கினியர். அரசன் யுத்தத்திற்காக யாத்திரைசெய்ய நேரும்பொழுது, குறித்த நன்முகூர்த்தத்தில் தான் பிரயாணஞ்செய்ய இயலாதாயின், தன் வெற்றிவாளையும் கொற்றக்குடையையும் யானைமேலேற்றி மிக்கஆடம்பரத்துடன் கோட்டைக்கு முதலிற் 'பரஸ்தானம்' செய்துவைப்பது தமிழ் வேந்தரது பண்டை மரபாகும்.(தொல். பொருளதி 33-45.) இதனை நாட்கோள் என்பர் தொல்காப்பியனார்.(தொல். பொருளதி. 68.) இதன்பின்பே, அலங்கரிக்கப்பட்ட அரசுவாவின் மேல் அரசன் ஆரோகணித்துப் பிரயாணமாவான். இங்ஙனம் புறப்படும்போது, சிவபிரான் திருமால் முதலிய தெய்வங்களின் பிரசாதங்களை வணங்கிப் பெற்றுக்கொண்டும், நான்மறையோர் வளர்க்கும் நித்தியாக்கினிகளை நமஸ்கரித்தும் செல்வது வழக்கமாகும்.(இந்நூல்.வேறு பக்.) இங்ஙனமாக அரசன் யாத்திரைசெல்லுங் காட்சி மிக்க ஆடம்பரமும் அழகும் வாய்ந்ததாம்: வழிநெடுகவும், நாடகக்கணிகையரும், சூதர் மாகதர் வேதாளிகரும், யானை குதிரை காலாள்வீரர்களும் தம்மரசனை மனமாரவாழ்த்திப் பெரிதும் ஆனந்திப்பர். இவ்வாறு செல்லுகின்ற அரசனுடன்,நால்வகைச் சேனைகள்மட்டுமன்றி, நாடகமகளிரும், நகை விளைத்து மகிழச்செய்யும் வேழம்பர் என்போரும், வாத்தியம் வாசிப்போரும் உடன்செல்வது முண்டு. செங்குட்டுவனது வடயாத்திரையிற்சென்ற அளவற்ற காலாட்படையுடன் அடியிற் குறித்த சேனைகளும் பரிவாரங்களுஞ் சென்றன என்று இளங்கோவடிகள் கூறுவர்.(சிலப். 26. 128-140.) நாடகமகளிர் 52; யானை 500;  குயிலுவர் (வாத்தியகாரர்) 208; குதிரை 10,000;  நகைவேழம்பர் 100; பண்டங்களேற்றிய வண்டிகள் 20,000;  தேர் 100; சட்டையிட்ட அதிகாரிகள் 1000. இன்னின்ன சரக்குடையது என்றெழுதப்பட்ட பண்டங்களேற்றிய சகடங்கள் இருபதினாயிரமும், அவற்றைக் கண்காணிக்கும் அதிகாரிகள் தொகை ஆயிரமுமாயின், நம் வேந்தனுடன் சென்ற காலாட்படையினளவு கணக்கிறந்தது என்பது சொல்லவும் வேண்டுமோ?  இளங்கோவடிகளும், இச்சேனைப்பெருக்கை வரையறுக்கவியலாமல், "தண்டத்தலைவருந் தலைத்தார்ச் சேனையும், வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ் போத, மலைமுதுகு நெளிய நிலைநா டதர்பட,உலக மன்னவன்" சென்றான் என்றார்.(சிலப். 26. 80-83.) யாத்திரையிற் சேனைகட்குத் தளர்ச்சியுண்டாகாது உள்ளக் கிளர்ச்சியடையுமாறு நாடகமகளிரும், நகைவேழம்பரும், குயிலுவரும் தங்கள் ஆடல் பாடலழகுகளாலும், விநோதப் பேச்சாலும், வாத்திய இசைகளாலும் மகிழ்ச்சி விளைத்தற்கு உடன்செல்வது பண்டைமரபென்பது இதனால் விளக்கமாகும். செங்குட்டுவன் காலத்து நடந்த யுத்தமுறைமையானது தொல்காப்பிய முதலிய முன்னூல்களிற் கண்ட புறத்துறைகட்கும், பழைய தமிழ்வழக்குகட்கும் ஒத்ததாகவே புலப்படுகின்றது. எனவே, செங்குட்டுவன் காலம்வரை அத்தொல்காப்பியமரபுகள் சிதைந்தன வல்லவென்பது பெறப்படும். அம் முறைகளையெல்லாம் இங்கு விவரிப்பதாயிற் பெருகும்; இளங்கோவடிகளது வஞ்சிக் காண்டத்தைக்கொண்டு அறிக. போரில் அரசன் வெற்றியடைந்தபின்னர், விழுப்புண்பட்டு இறவாதிருந்த வீரர்களையும், வீரசுவர்க்கம் பெற்ற சூரர்களுடைய மைந்தர்களையும் தன் ஆஸ்தானத்தில் அழைத்து அவர்களையெல்லாம் பெரிதும் அபிமானித்து ஊக்குதல் பழைய மரபாயிருந்தது. நம் வேந்தர்பெருந்தகை,கங்கைக்கரையில் அமைக்கப்பட்ட பாடியிற் பேரோலக்கமாக வீற்றிருந்து, மேற்குறித்த வீரர்க்கெல்லாம் பொன்னாலாகிய வாகைப்பூக்களைச் சூட்டிப்புகழ்ந்து அவர்களை உற்சாகப் படுத்திய செய்தியை இளங்கோவடிகள் அழகுபெறக் கூறுதல் அறிந்து மகிழத்தக்கது.(சிலப் 27.23-44.) இக்காலத்து நம்மையாளும் அரசாங்கத்தாரும் போரிற் பெருந்திறல் காட்டும் வீரசிகாமணிகட்குப் பட்டமும் பதக்கமும் (Victoria Cross) அளித்துப்பாராட்டிவரும் முறையானது, பழைய தமிழ்வேந்தராற் கைக்கொள்ளப்பட்டதொன்றே என்பதையறிய நம்மவரில் யார்தாம் மகிழார்? இவ்வளவோ? போரிற் பகைவரை வென்றுகவர்ந்த பொருள்கள் எத்துணை அருமையும் பெருமையும் உடையவையாயினும், அவற்றைத் தம் வீரர்களுக்கும், போர்க்களம்பாடும் புலவர்க்கும், மற்ற இரவலர்க்கும் வேண்டிய வேண்டியாங்கு அளித்து மகிழ்வதும் பண்டை அரசர்கொண்ட ஒழுக்கமாகவுந் தெரிகின்றது. செங்குட்டுவன் தந்தை இங்ஙனமே "நன்னகர் மாந்தை முற்றத் தொன்னார்-பணிதிறை தந்த பாடுசால் நன்கல"ங்களை வேண்டியவர்க்கு அளித்தானென்று மாமூலனாரும்,(அகநானூறு.127) அச்சேரலாதன் மகனான செங்குட்டுவன் "பெரிய வாயினு மமரகத்துப் பெற்ற-தரியவென்னாது ஓம்பாது வீசி" னானென்று பரணரும்(பதிற்றுப்பத்து.44.) கூறியிருத்தல் குறிப்பிடத்தக்கது. போரில் தம் பெருந்திறமையைக் காட்டி இறந்த வீரர்க்கு வீரக்கல் என்ற நடுகல் நாட்டி அவரைக் கௌரவிக்குமுறை தொல்காப்பிய முதலிய முன்னூல்களில் விளங்கக் கூறப்பட்டுள்ளது.(தொல்.பொருளதி.60.) ஆனால், தம் கணவருடன் உயிர் நீத்த பத்தினிகளுக்கு அவ்வாறு கல்லமைத்துக் கௌரவிக்கும் வழக்கை அந்நூல்களிற் காணுதல் அரிதாம்.  ஆயினும், செங்குட்டுவன் காலத்தே கற்பின்மாட்சியை நிறுவிய பத்தினிகளிடம் தெய்வபாவனை வைத்து-வீரர்க்குச்செய்வதுபோலக்-கற்காண்டலும், கல்லெடுத்தலும், அதனை நீர்ப்படுத்துத் தூய்மைசெய்தலும், பிரஷ்டித்தலும், வாழ்த்துதலும் பெருமரபாயிருந்தன என்பது மேற்குறித்த வஞ்சிக் காண்டப் பகுதிகளால் நன்கறியப்படும். கண்ணகியின் கற்பினை வீரக்கற்பு அல்லது மறக்கற்பு என்றும், அவளை வீரபத்தினி யென்றும் (('ஆரஞருற்ற வீரபத்தினி'(பதிகம்)) அடிகள் கூறியதற்கேற்ப வீரர்க்குரியதாக நடைபெற்றுவந்த நடுகல்வழக்கத்தைக் கண்ணகி முதலியோர்கும் பண்டையோர் கொண்டனர் போலும். இவ்வாறு வீரசுவர்க்கம் பெற்ற சூரர்கட்குமட்டுமன்றி, சககமனஞ்செய்த பத்தினிகட்கும் கல்நாட்டிவந்த வழக்கமானது,பிற்காலத்தே பிரபலமாகவிருந்த தென்பது, தென்னாட்டின் பலபாகங்களிலும் அத்தகைய வீரக்கற்களும் ஸதிகற்களும் விசேடமாகக் காணப்படுதலால் விசதமாகின்றது. பிற்கூறிய ஸதிகல்லை மாஸ்திகல் என்பர் கன்னடநாட்டார். [இது மஹா ஸதி கல் என்பதன; மரூஉ] ஸ்ரீமாந்-கோபிநாதராயரவர்கள் செந்தமிழ்ப் பத்திரிகையில் எழுதிய சிறந்த ஆராய்ச்சியுரை யொன்றில் அவ்விருவகைக் கற்களின் மாதிரிகளாகக் காட்டிய படங்களை அடுத்த பக்கங்களிற்(*modify) கண்டுகொள்க. பண்டையரசர்கள் மேற்கூறியவாறு வீரபத்தினிகளைச் சிறப்பித்தற்குரிய சிலைகளை இமயம் பொதியம்போன்ற பெரிய பர்வதங்களினின்றும் எடுத்து வருதலும், அவ் வெடுத்தவற்றைக் கங்கை காவிரிபோன்ற புண்ணியநதிகளில் நீராட்டித் தூய்மை செய்வித்தலும், அம்முயற்சியில் இடையூறு விளைக்கும் பகையரசரை அடக்கி மீளுதலும் வழக்கமென்பது, செங்குட்டுவன் செய்திகளினின்றுந் தெரியலாம். பண்டைத் தமிழ்வேந்தரது அரசியலுரிமை, பொதுவாக, மக்கட்டாயமாய் ஜேஷ்டாநுக்கிரமமாக வந்ததேயாகும். அம்மானுரிமை மருமகனுக்கு வரும் மருமக் கட்டாயம் செங்குட்டுவன் போன்ற சேரர்காலத்து வழங்கியதேயன்று. சரித்திரவறிஞர் சிலர், நம் சேரன்காலத்தில் மருமக்கட்டாயமே வழங்கியதாகக்கொண்டு, அக்கொள்கைக் கேற்பப் பழைய பாடல்களைத் திருத்திச் செல்வர். சேரலாதனை இளங்கோவடிகட்கு மாமன் என்ற முறையிற் கூறாது, தந்தையென்ற முறையில் வைத்து "நுந்தை தாணிழலிருந்தோய்"(சிலப்.30.174.) எனத் தேவந்தி அவ்வடிகளை அழைத்திருப்பதும், சேரவரசுக்குரியவர்களை, மருகரென்னாது புதல்வர் என்னுமுறையிற் பதிற்றுப்பத்துக் கூறுதலும் (70, 74). அவர்கொள்கைக்கு முழு விரோதமாதலோடு, முன்னூல்வழக்கே யின்மையாலும் அது பொருந்தாதென உணர்க. நம் சேரர்பெருமானது மற்ற அரசியலடையாளங்கள்,சேரர்க்குப் பொதுவாக நூல்களிற் கண்டனவெல்லாம் அமையும். முக்கியமாக, செங்குட்டுவன் முன்னோர் 'எழுமுடி' என்று பெயர்பெற்ற மாலையொன்று உடையராயிருந்தனர் எனப்படுகின்றது (பதிற்றுப்.14,16,40,45.). செங்குட்டுவனும் அதனை அணிந்திருந்தவன் என்பது "எழுமுடி மார்ப"(சிலப்.28.169.)என்னும் இளங்கோவடிகள் வாக்கால் தெரியலாம். அரசரெழுவரைச் சேரர் முன்னோர் வென்று, அவ்வெற்றிக் கறிகுறியாக அவரது எழுமுடிபோலச் செய்யப்பட்ட மாலையை அணிந்துவந்தவராதலால், அஃது அப்பெயர்பெற்ற தென்பர்(பதிற்றுப்.14.உரை.).         அதிகாரம் - 12   செங்குட்டுவன் குணாதிசயங்கள். சேரன்-செங்குட்டுவன் இந்நிலவுலகில் ஐம்பத்தைந்து வருஷம் வீற்றிருந்தவனென்பது, பதிற்றுப்பத்துள் இவனைப்பற்றிய பதிகவாக்கியத்தால் அறியப்படுகின்றது. இவன் தந்தை நெடுஞ்சேரலாதன் தன் மக்களது இளமைக்காலத்து இறந்தவனென்று தெரிதலால், 20-ம் வயதிற் செங்குட்டுவன் பட்டமெய்தியவனாயினும், குறைந்தது 35-வருஷம் இவன் ஆட்சிபுரிந்தவனாதல் வேண்டும். இவ்வரசன் இரண்டாம் முறையாகச் சென்ற வடயாத்திரையில் 32-மாதங்கள் செலவிட்டனனென்றும்,(சிலப்.27.149.) அவ் யாத்திரை முடித்துக்கொண்டு வஞ்சிமாநகரம் புகுந்தபோது இவனுக்கு 50-ம் வயது நடந்ததென்றும்(சிலப்.28.130.) இளங்கோவடிகள் தெளிவாகக் கூறுகின்றார்.எனவே, செங்குட்டுவன், 47-ம் வயதாரம்பத்தே அவ்வட யாத்திரை தொடங்கினனென்று தெளியலாகும். இவனது 47-ம் வயதிற்குச் சிலகாலத்துக்கு முன்புதான், தன் மைத்துனச்சோழற்கு அனுகூலமாகச் சோணாட்டில் இவன் போர் நிகழ்த்தியது. போரின் விவரம் முன்னரே விளக்கப்பட்டது.செங்குட்டுவனது வடயாத்திரைக்குச் சிறிதுமுன்பே இவன் மைத்துனச்சோழனைப் பட்டத்தில் நிறுவியசெயல் நிகழ்ந்ததென்பது, கங்கைக்கரைப்பாடியில், மாடலனை இவன் சந்தித்தபோது, அச்சோழனது க்ஷேமத்தைப்பற்றி உசாவிப்போந்த குறிப்பால் புலப்படும். (சிலப்.27.159-172.)  இச்சேரன் தன் பெரிய யாத்திரையை முடித்துத் திரும்பியபின்னர், மாடல மறையவனது உபதேசமாட்சியால் பரகதிவழிகளையே பற்றியவனாய்,5-வருஷம் அமைதியுடன் ஆட்சிபுரிந்து பின் "காலனென்னும் கண்ணிலி யுய்ப்ப-மேலோருலகம் எய்தினன்" இதுகாறும் எழுதிவந்த சரித்திரத்தால் தமிழ்நாட்டின் மகோந்நதநிலைமைக்குச் செங்குட்டுவனது ஆட்சிக்காலமே சிறந்த இலக்காகவிருந்ததென்பது வெள்ளிடைமலைபோல் விளக்கமாகும். பண்டைத் தமிழிலக்கியங்களைச் சோதித்து வருமிடத்து, நம் சேரர்பெருமான் போன்ற அறிவுந் திருவும் பெற்ற அருந்திறலரசர் தென்னாட்டில் அதிகமிருந்திலர் என்பது புலப்படத் தடையில்லை. பழைய தமிழ் வேந்தருள்ளே, இவன்றந்தை சேரலாதனும் சோழன் கரிகாற்பெருவள‌த்தானுந் தவிர, வேறெவரும் இவனுக்கிணை கூறத் தக்கவரல்லர்; அவ்விருவரும் தங்கள் வீரப்புகழை நாவலந்தீவ முழுதும் விரித்துநின்றவர்களாயினும், தமிழ்வேந்தர்க்கே அப்பெருமையுரியதென்பதை வடவேந்தர்கள் நன்கறியச் செய்து, அவர்கள் விரித்தபுகழை நிலைநிறுத்திய வீரசிகாமணி நம் சேரர்பெருமானே யாவன். பிற்காலத்திலே இவனுக்கிணையாகச் சொல்லத்தக்க தமிழ்வேந்தன் முதலாம் இராஜேந்திரசோழன் ஒருவனே எனலாம். சேரன்-செங்குட்டுவனது உத்தமகுணங்களுள்ளே இவனது தெய்வபக்தியை முதலில் வைத்துப் பாராட்டல்தகும்.சிவபிரான் திருமால் முதலிய தெய்வங்களிடத்தும் முனிவர்(சிலப்.26.93-97.)அந்தணர் முதலிய பெரியோர்கள்பாலும் இவன் வைத்திருந்த பக்தியும், மதாந்தரங்களில் இவனுக்கிருந்த பொது நோக்கமும் முன்னரே அறியப்பட்டன.  இவையன்றி, வீரபத்தினிகளாக விளங்கியவரிடம் இவன் கொண்டிருந்த பெருமதிப்பும் பிரேமையும் ஈண்டும் விரித்தெழுதவேண்டுமோ? கண்ணகிக் கடவுளின் வணக்கம் தமிழகத்தினும் இலங்கை முதலிய தேசாந்தரங்களினும் பரவியிருந்ததற்குக் காரணமானவன் இச்சேரனேயன்றோ? நம் சேரனுக்கிருந்த உயர்குணங்களுள்ளே அடுத்துப் புகழத்தக்கது, இவனது ஏகதார விரதமேயாம். இவனுடைய தர்மபத்தினியாகவும் பட்டமகிஷியாகவும் விளங்கிய இளங்கோவேண்மாள் என்பவளைப்பற்றி முன்னரே கூறினோம். (இந்நூல்.வேறு பக்)வேளிர்குலக் கொழுந்தாகிய இத்தேவி, அறிவு திரு அழகு அமைதி முதலிய உயர் குணங்களெல்லாம் ஒருங்கு வாய்ந்திருந்ததோடு, தன் நாயகனுக்கு உற்றசமயங்களில் உறுதி கூறும் ஆற்றலுடையவளாகவும் விளங்கினள். செங்குட்டுவன் பத்தினிக்கடவுளைச் சிறப்பித்ததற்கும், வீரப்புகழை இமயம்வரை பரப்பியதற்கும் இவ்வுத்தமிகூறிய சமயோசிதமான ஒருசொல்லன்றோ காரணமாயிற்று?(சிலப்.25.110-114.) தன் கணவனைப் பிரியநேர்ந்த 32-மாதங்கள்வரை ஊணுமுறக்கமும் கொள்ளாது நாளொப்பனையுஞ் செய்யாது இப்பெருந்தேவி இருந்த பிரிவாற்றாநிலையையும், அவன் ஜயசீலனாகத் திரும்புகின்ற தறிந்ததும் இவளடைந்த பெருமகிழ்ச்சியையும் அடிகள் புகழுந்திறம் பலமுறைபடித்து ஆனந்திக்கத்தக்கது. இத்தகைய ஒப்புயர்வற்ற கற்புடையாட்டியை மனைவியாகப்பெற்றிருந்த நம் சேரர்பெருந்தகைக்குச் சீராமமூர்த்தியன்றி வேறியாவர் சிறந்த உவமையாவார்? சேரன்-செங்குட்டுவனது இயற்கைக்குணங்கள் பலவற்றுள்ளே அவனது வீரத்தன்மையே மேம்பட்டு விளங்கியிருந்ததென்பது, இவன் சகோதரரும் பரணரும் அக்குணத்தையே அதிகமாகப் புகழ்வதால் தெரிகின்றது. இவனுக்குக் காமவேட்கையினும் போர்வேட்கையே மிக்கிருந்தது என்று புகழ்வர், பிற்கூறிய அந்தணராகிய புலவர்.(பதிற்றுப். 50.)இவ்வேந்தனது அந்தியகாலத்துக்கு ஐந்துவருஷம் முன்வரை பகைவரையடக்குவதும் நாட்டைப் பெருகச்செய்வதுமே இவன் மேற்கொண்டிருந்த பெருங்கருமமாக இருந்தன.மாடலமறையோன் ஒருகாற் செங்குட்டுவனுக்கு உபதேசிக்கப்புக்கவிடத்தில், அவனது இக்குணத்தையே சுட்டி, "வையங் காவல்பூண்டநின் னல்யாண்டு ஐயைந் திரட்டி சென்றதற் பின்னும் அறக்கள வேள்வி செய்யாது யாங்கணும் மறக்கள வேள்வி செய்வோ யாயினை." (சிலப்.28.129-132.) எனக் கூறுதல் காண்க. இதனால், தன்னாயுட்காலத்தின் பெரும்பகுதியைப் போர்புரிவதிலே செலவிட்டவன் செங்குட்டுவன் என்பது வெளியாகும். பரணரும் இவன் வீரத்திறத்தையே வியந்து, "அனைய பண்பிற் றானைமன்னீர், இனியா ருளரோ முன்னுமில்லை" எனக் கூறினர்.(பதிற்றுப்.45.) தமிழரது வீரத்திற் செங்குட்டுவனுக்கு மதிப்பும் அபிமானமும் அதிகமாகவே யிருந்தன.  தன்னையும் மற்றைத் தமிழரசரையும் வீரக்குறைகூறி இகழ்ந்தார் என்பதுபற்றியன்றோ, இமயச் சாரலிலுள்ள குயிலாலுவம்(குயிலாலுவம், என்பது இமயமலையின் ஒரு பகுதியாய், உத்தரகோசலத்தைச் சார்ந்த ஒரு தலமாகத் தெரிகிறது. இங்குச் சிவபிரானுக்கு ஒரு கோயிலும் இருந்ததென்பது, 'இமயச் சிமயத் திருங்குயிலாலுவத்து -- உமையொரு பாகத் தொருவனை வணங்கி' என்னும் இளங்கோவடிகள் வாக்கால் அறியலாம். (சிலப். 28. 102-3) புத்தரது பூர்வ அவதாரஸ்தலங்களுள் ஒன்றாகச் சொல்லப்படும் குயிலாலபுரம் என்பது இதுபோலும். (மணிமே. புத்தசரித். பக்கம். 2 கீழ்க்குறிப்பு) என்னும் போர்க்களத்தில், இவன் வடவரசர் பலரை "அமையா வாழ்க்கை யரசர் வாய்மொழி நம்பால் ஒழிகுவ தாயின் ஆங்கஃது எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியுந் தரூஉம்." (சிலப். 26. 10-12) "காவா நாவிற் கனகனும் விசயனும் விருந்தின் மன்னர் தம்முடன் கூடி அருந்தமி ழாற்றல் அறிந்தில ராங்கெனச் சீற்றங் கொண்டிச் சேனை செல்வது" (சிலப். 26. 159-62) என இவனது தமிழபிமானத்தை இளங்கோவடிகளே எடுத்துரைத்தல் காண்க. செங்குட்டுவனது பெரும்புகழ் தமிழகத்தின் மட்டுமின்றி, வடநாடெங்கும் பரவியிருந்ததென்பது, இவனது யாத்திரையில், நட்பரசராகிய நூற்றுவர் கன்னர் இவனுக்குச் செய்துபோந்த உபசாரங்களாலும், பிறவற்றாலும் தெளிவாகும்.  ஆயின், அசோகன் சமுத்திரகுப்தன் முதலிய வடவேந்தரது தென்னாட்டு விஜயங்களை விளக்கும் சாஸனங்கள் தஷிணத்துக் காணப்படுதல்போலச் செங்குட்டுவனது வடநாட்டு வெற்றிபற்றிய சாஸனமொன்றுமே அத்தேசத்தில் இதுகாறும் காணப்படவில்லை. அதனால், இவனது வடதேசத்துப் படையெடுப்பில் நவீனர் சிலர் ஐயுறுவர். ஆயினும், இவனுடன்பிறந்த சகோதரர் மட்டுமின்றி இவன்காலத்துப் புலவர்களிருவரும்,(பதிற்றுப்.43:) அவ்வடவெற்றியை விரிவாகவும் தெளிவாகவுங் கூறியிருத்தலால், அதனை எளிதிற் றள்ளிவிடுதல் எங்ஙனம் இயலும்? அன்றியும் சேரநாட்டை அடுத்திருந்தவரான கங்கவமிசத்தரசர்கள் இற்றைக்கு 800-வருஷங்கட்கு முன்னர், இமயம்வரை படையெடுத்துச்சென்று நேபாளதேசத்தைச் செயித்து அதனைப் பலதலைமுறை ஆண்டுவந்தனர் எனச் சாஸனமூலம் அறியப்படுகின்றது.(It is curious that a Karnataka dynasty was set up even in distant Nepal, apparently in 1097, which was presumably of Ganga origin. The founder, Nanya Deva (perhaps? Nanniya Deva), came from the South. He was succeeded by Ganga Deva and four others, the last of whom removed the capital to Khatmandu, where the line came to an end. - Ins. from Nepal, by Dr. G. Buhler -- (Lewis Rice's Mysore and Coorg from the Inscriptions p.48)) ஆயின், அவரினும் பெருமைவாய்ந்தவராய்ப் பக்கத்திருந்த சேரவரசர் வடநாட்டில் தம்வீரப்புகழ் பரப்பினர் என்றுகூறும் இலக்கியப் பிரமாணங்களைமட்டும் கற்பனையாகக் கருதுவதென்னோ? பிற்காலத்துத் தமிழ்வேந்தருள் முதலாம் இராஜேந்திரசோழன் கங்கையும் கடாரமும் (பர்மா) வென்றுகொண்டானென்ற சரிதம் நம்மவரால் முற்றும் நம்பப்பட்டுவருகின்றது;  ஆயின், பழைய சேரனொருவன் பெருவீரனாய் அக்காரியத்தையே செய்திருத்தலும் கூடியதன்றோ? செங்குட்டுவனது பிரஸ்தாபத்தைப் பற்றிய தென்னாட்டுச் சாஸனம் ஒன்றுமே இதுவரை காணப்படவில்லை; அதுபற்றி அத்தகைய வேந்தனொருவனே இருந்தவனல்லன் என்று கூறிவிடலாகுமோ? கடைச்சங்கநூல்களிற் கண்ட அரசரைப்பற்றிய சாஸனக்குறிப்புகளே இல்லை என்றிருந்தகாலத்து, முதுகுடுமிப்பெருவழுதி, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், கரிகாலன், கோச்செங்கணான் போன்றவரைப்பற்றிய சாஸனக்குறிப்புக்கள் சிறிது சிறிதாகச் சமீபத்திற்றான் காணப்பட்டுவருகின்றன. அதுபோலவே, செங்குட்டுவனது அருமை பெருமைகளும் நாளடைவில் வெளிப்படுதல் கூடியதே. ஆதலால்,சாஸனசாக்ஷிக ளில்லாமைபற்றி இலக்கியச் செய்திகளையெல்லாம் புறக்கணித்துவிடுதல் கூடாதென்பதே எங்கருத்து.செங்குட்டுவன் வடநாட்டிற் படையெடுத்துச் சென்றதற்குக் காரணம் 'தமிழ்வேந்தர்கள் தம் முத்திரைகளை இமயத்திற் பதித்தவர்' என்ற பெருமையை வடவரசர்சிலர் இகழ்ந்து கூறியதனால், அப்பெருமை தங்கட்குண்டென்பதை மெய்ப்பிப்பதற்காகவே என்பது இளங்கோவடிகள் வாக்கால் நெடுக உணர்ந்தோம். அங்ஙனம் தமிழராற்றலை வடவர்க்கு மெய்ப்பித்த நம் சேரர்பெருமானது அருஞ்செயலைச் சாஸன ஆதாரமின்மைபற்றிச் சிலர் எளிதாக்கிவிடுவாராயின், அஃது அவ் வடவேந்தர் செயலினும் அதிசயிக்கத் தக்கதேயன்றோ! செங்குட்டுவன், வீரமிகுதியோடு மதிநுட்பமிக்கவனாகவும் இருந்தான். அறிஞர்பலருடன் அனவளாவி அறிய வேண்டுவனவற்றை நன்கறிந்தவன் இவனென்பது, "புரையோர் தம்மோடு பொருந்தவுணர்ந்த-அரசரேறே(*சிலப்.28.123-4) எனவும், "புலவரையிறந்தோய்" (*சிலப்.28.174) எனவும், தத்துவ ஞானியாகிய மாடலமறையோனே நம் சேரனை அழைத்தலால் அறியலாம். மதுரையிற் கோவலனைக் கொல்வித்து, அத்தவற்றை யறிந்ததும் பாண்டியன் தன்னுயிர் நீத்த செய்தியைச் சாத்தனார் வாயாற் செங்குட்டுவன் முதன் முதற்கேட்டபோது அவ்வரசனது செய்திக்கு மிகவும் வருந்தி, "எம்மொ ரன்ன வேந்தர்க் கிற்றெனச் செம்மையி னிகந்தசொற் செவிப்புலம் படாமுன் உயிர்பதிப் பெயர்ந்தமை யுறுக வீங்கென வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது; மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம் பிழையுயி ரெய்திற் பெரும்பே ரச்சம் குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்ப மல்லது தொழுதக வில்லை" (சிலப்.25.95-104) என்று கூறிப்போந்த வார்த்தைகள், உண்மையில் எவ்வளவு பொருள் பொதிந்துள்ளன? இளங்கோவடிகள் பேரியாற்றங்கரையில் தம் தமையனுடனிருந்து அவன் வாய்ப்படக் கேட்டெழுதிய அழகிய வசனங்களன்றோ இவை? புலவர்பெருமக்களிடம் இவன் வைத்திருந்த மதிப்பும் அன்பும் முற்கூறிய "இருபெரும்புலவர்" என்ற அதிகாரத்தால் விளங்கற்பாலன.  நம் சேரவேந்தனது செங்கோற்பெருமையும் மதிக்கத்தக்கதே. தன்னாட்டுக் குடிகளைப் பெரிதும் அபிமானித்து ஆட்சிபுரிவதிற் பெருநோக்-குடையவன் இவனென்பது, ஒருசமயத்து இவன் செய்த சபதத்தில் "வறிது மீளுமென் வாய்வா ளாகிற் - குடிநடுக் குறூஉங் கோலே னாகுக"(சிலப்.26.15,18)என்று கூறியிருப்பதொன்றானே தெளிவாகும். குடிகளும் அங்ஙனமே இவன்பாற் பேரன்பு பூண்டிருந்த செய்தி முன்னரே குறிப்பிட்டோம். இவ்வேந்தனது சகோதர அபிமானத்தையும் ஈண்டுக் குறித்தல் தகும். தன் சகோதரரான இளங்கோவடிகள் முற்றத்துறந்த முனிவரராயிருப்பினும்,அவசியமான காலத்தன்றி அவ்வடிகளை இவ்வரசன் விட்டு நீங்கியவனல்லன்.(சிலப் 25,5 அரும்பதவுரை. பக்.66) அவ்வாறே, "ராஜருஷி"யாகிய அடிகளும் தன் தமையனிடம் பிறவிக்குற்ற அன்பைப் பெற்றிருந்தவரேயாவர். ஆனால், அதுபற்றி, மூவேந்தர்க்கும் பொதுவாக ஒரு காப்பியஞ்செய்யத் தொடங்கிய தாம், நடுநிலை பிறழ,தம் தமையனை அதிகமாகப் புனைந்துகூறினவராகத் தோற்றவில்லை. அடியார்க்கு நல்லாரும் இவ்வடிகளது பொது நோக்கை அடிக்கடி புகழ்தலுங் காணலாம்.(சிலப்18-ம் காதை. "முந்நீரினுள்புக்கு" உரை) ஆனால், வஞ்சிக்காண்ட முழுதும், செங்குட்டுவன் புகழையே அவ்வடிகள் கூறியதென்னெனின், கண்ணகிபொருட்டு அரியபெரிய செயல்களைப்புரிந்து சிறப்பித்த பெருமை செங்குட்டுவனதேயாதலின், எடுத்துக்கொண்ட காப்பியநிலைக்கேற்ப அவனைப் பாராட்டுதலும் இன்றியமையாத தாயிற்றென அறிக. இவ்வளவு பெருமையுடன், நம் சேரர்பெருமான் சிறிது முன்கோபமுடையவனாகவுந் தோற்றுகிறான். ஆயினும், பெரியோர்கூறும் நன்மொழிகளை ஏற்றுக்கொள்வதில் இவன் முந்துகின்ற இயல்புடையவனாயிருந்தனன்.  இவ்விஷயம் சோழபாண்டியரிடம் இவன் கோபங்கொள்ள நேர்ந்தபோது, மாடலமறையோன் கூறிய சாந்தவசனங்களை விரைந்தேற்றுக் கோபமடங்கியதும், தன்னால் வென்று சிறைபிடிக்கப்பட்ட கனகவிசையரைச் சிறைநீக்கியதோடு, அவர்களைச் சிறைப்படுத்திய வில்லவன்கோதை என்ற படைத்தலைவனைக் கொண்டே அன்னோரை உபசரிக்க ஏவியதும், பின்னர் அவ்வந்தணன் கூறிய தர்மமார்க்கங்களையே அநுஷ்டித்ததுமாகிய வரலாறுகளால் விளங்கும். "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்-நின்றது மன்னவன் கோல்" என்றபடி நம் வேந்தன் பிராமண தர்மங்களைத் தன்னாட்டில் மட்டுமன்றித் தான் சென்றவிடங்களிலும் ஆதரித்துக் காத்துவந்தவன்.சிலப்.26.247-250.) இக்காலைச் சேரவரசர்க்கும் இஃது இயல்பேயன்றோ? இனி, நம் சேரர்பெருந்தகை, குட்டுவன் எனத் தனித்தும் வழங்கப்படுவன். (சிலப்.26:61,247.) இதனால், இவனுக்குரிய அடைசொல் இவனது நிறம்பற்றி வழங்கப்பட்டதென்பது பெறப்படும்.இவன் சிறியதந்தைக்கும் குட்டுவன் என்பது பெயராயினும் 'பல்யானைச் செல்கழு' என்பது அவனுக்கு விசேடணமாகும். [குட்டுவன் - குட்டநாட்டுக்குரியோன்.] இங்ஙனம் செங்குட்டுவன் என்றதற்கேற்பப் பிறரெல்லாம் கண்டுமகிழும் கட்டழகும் உடையவனாகவிருந்தான்.(சிலப்.26.73.) இவற்றுடன் பலமும் பருமனும் கொண்டவனாகவும் காணப்படுகின்றான். கங்கைக்கரைப்பாடியில் மாடலனுக்குச் செங்குட்டுவன் தன் நிறையளவு பொன்னை நிறுத்துத் தானஞ் செய்தானென்பதை எழுதுமிடத்தில் இளங்கோடிகள், "பெருமகன் மறையோற் பேணி யாங்கவற்கு ஆடகப் பெருநிறை ஐயைந் திரட்டி தோடார் போந்தை வேலோன் தன்னிறை மாடல மறையோன் கொள்கென் றீத்தாங்கு" (சிலப்.27.173 -76) எனக் கூறுகின்றார். இதனுள்ளே, இவனது நிறையளவாகக் குறிக்கப்பட்ட "ஆடகப்பெருநிறை ஐயைந்திரட்டி" என்பதற்கு,அரும்பதவுரையாளர் "ஐம்பது துலாம் பாரம் பொன்" என்று கூறுவர். ஒரு துலாம் என்பது 100-பலமாகும்;(பிங்கலந்தை. சூத்திரம் - 2254 - 55.)ஆகவே, 50 - துலாத்துக்கு 5000 - பலமாகின்றன.ஒரு பலமென்பது 3 -ரூபா எடையாகவும், 6 -ரூபா எடையாகவும் இக்காலத்தார் பலபடியாக வழங்குதலால், பழைய காலத்துப் பலவளவு இதுவென்று துணியக்கூடவில்லை. எனினும்,குறைந்தமுறையிலே, தற்காலத்து 3 - ரூபா எடைப் பிரமாணத்தையே கொண்டு பார்ப்போமானால், 40-ரூபா நிறைகொண்ட பௌண்டுக் கணக்கில் 375 - பவுண்டு செங்குட்டுவனது நிறையாகவேண்டும். இது சிறிது மிகுதிபோலத் தோற்றுமாயினும், பழையகாலத்து மக்களுக்குள்ளே பெருவீரனாக விள‌ங்கிய வேந்தர் பெருந்தகை யொருவனுக்கு மேற்குறித்த நிறையளவு அதிகமாகாதென்றே தெளியலாம். ஒருகால், மூன்றுரூபா நிறைக்குங் குறைந்ததாகப் பழையபலவளவு இருந்திருத்தல் கூடுமாயின், அஃது இக்காலவியல்புக்கும் ஒத்ததாகலாம்.  எங்ஙனமேனும், தற்காலத்தும் 300 பவுண்டு நிறையளவுள்ள மக்களை நாம் காணக்கூடியதாகவே இருத்தலால், இளங்கோவடிகள் தம் தமையனுக்குக் குறித்த 50-துலாமளவு, புனைந்துரையன்றிப் பொருத்த முடையதாகுமென்பதில் ஐயமில்லை. இது நிற்க. சேரன்-செங்குட்டுவனது 50-ம் வயதில் "நாற்பதும் வந்தது நரைத்தூதும் வந்தது" என்ற முன்னோர் மொழிப்படி, அவன் நரை முதிர்ந்தவனாகவே இருந்தனன்; "திருஞெமி ரகலத்துச் செங்கோல் வேந்தே-நரைமுதிர் யாக்கை நீயுங் கண்டனை"(சிலப்.28.157-158.)என மாடலன் இவனைநோக்கிக் கூறுதலால் இதனையறிக.சேரவரசர் பலருள்ளே, செங்குட்டுவனும் இவன்றந்தை சேரலாதனும் அதிககாலம் ஆட்சிபுரிந்தவர்கள் என்பது, பதிற்றுப்பத்தின் பதிகங்களாற் புலப்படுகின்றது. -----------------------------------------------------------      அதிகாரம் - 13   செங்குட்டுவன் காலவாராய்ச்சி. இனி, செங்குட்டுவன்காலத்தை ஆராய்வோம். இவ்வேந்தன் வாழ்ந்த காலத்தை ஆராய்வதினின்று, தமிழ்ச்சரிதத்தின் முக்கியமான பகுதியொன்றையே நாம் தெரிதல் கூடும். எவ்வாறெனின், இச்சேரனைப் பாடிய பரணரும் சாத்தனாரும் அவர்கள் காலத்துப் புலவர்கள்பலரும் கடைச் சங்கத்தவரென்பதும், அப்புலவர்களாற் பாடப்பட்ட பேரரசருஞ் சிற்றரசரும் அக்காலத்தையே சூழ்ந்திருந்தவரென்பதும் சங்க நூல்களால் நன்கறியப்படுகின்றமையால், இவ்வாராய்ச்சியிலிருந்து அப்புலவர் அரசர்களது காலநிலையும் தெளிவாகக்கூடுமன்றோ? இதுபற்றியே, தமிழறிஞர் சிலர் இவ்வேந்தன் காலத்தையாராய முற்படுவாராயினர். இன்னோருள், காலஞ்சென்ற ஸ்ரீ.கனகசபைப்பிள்ளையவர்களை இங்கே குறிப்பிடல் தகும். கடைச்சங்க காலம்பற்றி இவர்கள் எழுதிப்போந்த காரணங்களுள் முக்கியமானவை இரண்டெனலாம். முதற்காரணம்-செங்குட்டுவன் காலத்தவனாக இளங்கோவடிகள் கூறிய இலங்கைவேந்தன் -கயவாகுவின் காலத்தைக்கொண்டு அச்சேரன்காலத்தை அளந்ததாம்; அஃதாவது, இலங்கைச் சரித்திரத்துட்கண்ட கஜபாகு என்ற பெயருடையார் இருவருள், முன்னவன் கி.பி. இரண்டாநூற்றாண்டிலும், பின்னவன் 12-ம் நூற்றாண்டிலும் ஆண்டவர் எனப்படுகின்றனர். இவருள் இரண்டாமவன், மிகப்பிந்திய காலத்தவனாதலின், கி.பி. 113 - 135 வரை ஆட்சிபுரிந்தவனாகத் தெரியும் முதற்கயவாகுவே நம் சேரன்காலத்தவனாதல் வேண்டும் என்பதாம். இரண்டாங் காரணம் - செங்குட்டுவனுக்கு நட்பரசராக இளங்கோவடிகள் குறித்த நூற்றுவர்கன்னரைப் பற்றியது.நூற்றுவர்கன்னர் என்போர், மகதநாடாண்ட சாதகர்ணி என்ற ஆந்திரவரசரைக் குறிக்கும் தமிழ்வழக்கென்றும், மச்ச புராணத்தின்படி, அப்பெயர்தரித்த அரசனது காலம், கி.பி.77 - 133 வரையாகுமென்றுங் கூறப்படுகின்றன. இங்ஙனம்,நூற்றுவர் கன்னர் என்ற அரசன் காலமும், மேற்குறித்த கயவாகுவின்காலமும் மிகநெருங்கியிருத்தலால், அவ்விருவருடன் நட்புப்பூண்டிருந்த செங்குட்டுவனுக்கு மேற்படி 2 - ஆம் நூற்றாண்டையே கொள்ளுதல் பொருந்தும் என்பது.(ஸ்ரீ மாந் - S.கிருஷ்ணஸ்வாமி ஐயங்காரவர்கள் M.A., கயவாகுவின் காலம் 179 - 201 வரை ஆகுமென்றும், நூற்றுவர் கன்னர் எனப்பட்ட சாதகர்ணி என்பான் 172 - 202 வரை ஆட்சிபுரிந்த யஜ்ஞஸ்ரீ சாதகர்ணி ஆதல்வேண்டுமென்றும் சில மாற்றங்கள்செய்து எழுதுவர்; இவர்கள் கருத்துப்படி, செங்குட்டுவன் 2 அல்லது 3 - ம் நூற்றாண்டினனாவன் (செந்தமிழ். 4 -ம் தொகுதி.பக்.525 - 27).) இவ்வாறு, செங்குட்டுவன்காலம், 2 -ஆம் நூற்றாண்டாக எழுதப்பட்ட கொள்கையானது, நம்மவருட் பெரும்பாலாருடைய நன்மதிப்பும் சம்மதமும் பெற்றிருத்தலை நாம் அறிவோம். ஆயினும், சமீபத்தில் நிகழ்ந்த எமதாராய்ச்சியில், அம் 'முடிந்த' கொள்கையை விரோதித்து நிற்கும் முக்கியமான விஷயங்கள்சில எதிர்ப்படலாயின. இவற்றினின்று, நம் சேரன், மேற்குறித்த காலத்துக்கும் இரண்டு மூன்று நூற்றாண்டுவரை பிற்பட்டவனாகத் தோற்றுகின்றது. இதற்குரிய காரணங்களை இங்கு விவரிப்பதால், சங்ககாலத்தைப்பற்றி ஐயுறாது சமாதானம் பெற்றிருக்கும் உள்ளங்கட்கு இடையூறாகுமோ என்றஞ்சுகின்றேம். எனினும், அபிப்பிராயங்களை மறைப்பதனாற் சரித்திரவுண்மை வெளிப்படுதல் தடைப்படுமாதலின், அறிஞர் ஆராய்ந்து ஏற்றபெற்றி கொள்ளுமாறு,அவற்றை ஈண்டு வெளியிடுவேம். கடைசங்ககாலத்தில் விளங்கிய புலவருள்ளே,கபிலர், பரணர், நக்கீரர், மாமூலர், சாத்தனார் முதலியோர் சிறந்தவர்களென்பது, யாவரும் நன்கறிவர். இவருள், மாமூலனார் - சோழன் கரிகாலன், சேரலாதன், கள்வர்கோமான் புல்லி முதலிய அரசர்காலத்தவர் என்பதும், தமிழ் நாட்டின் பலபாகங்களிலும் வடநாடுகளிலும் இவர் சஞ்சரித்து வந்தவரென்பதும், அகநானூற்றிற்கண்ட இவர் பாடல்களால் அறியப்படுகின்றன. இப்புலவர், செங்குட்டுவனாற் போரில் வெல்லப்பட்ட பழையன்மாறனுக்கும் மோரியருக்கும் நிகழ்ந்த போரொன்றையும் குறிப்பிடுதலால் (அகநானூறு. 251.) அச்செங்குட்டுவன் காலத்தவராகவும் தெளியப்படுகின்றார்.இனி, இம்மாமூலனார் வாக்காகவுள்ள, அகநானூற்றின் 265 -ம் பாட்டிற்கண்ட அரிய செய்தியொன்று ஈண்டு ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளத்தக்கது: அஃதாவது -  "பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்  சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை  நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ." என்பது. இவ்வடிகளிலே, நந்தருடைய புராதன ராஜஸ்தலமாகிய பாடலீபுரத்துள் கங்காநதி பிரவேசித்து அதன் வளங்களை அழித்துப்போந்த செய்தி குறிக்கப்படுதல் காணலாம். இவ்வாறு கங்காப்பிரவாகத்தால் பாடலீபுரம் தன் வளங்களையிழந்து வறுமையுற்ற விசேடம் எக்காலத்து நிகழ்ந்தது? என்பதை இனி நோக்குவோம். பாடலீபுரமானது, நந்தர் மௌரியர் ஆந்திரர் முதலிய பிரபல சக்கரவர்த்திகளது ஆட்சித்தலமாய், இப்பரதகண்டத்துக்கே ஒரு சிரோரத்தினம்போல் மிகுந்த பிரசித்தம்பெற்று விளங்கியதாகும். இதன் வரலாறு, தக்க சாஸனங்கள் மூலமாகப் பல நூற்றாண்டுகள்வரை தெரியக்கூடிய நிலையில் உள்ளது.(பழைய பாடலீபுரமானது, சோணைநதியின் (Son) வடகரையிலும், கங்கைக்குச் சிறிது தூரத்தும் அமைந்திருந்ததென்றும், 9-மைல் நீளமும் 1 1/2 - மைல் அகலமும் உடையதென்றும், 64-வாயில்களும், 574 கோபுரங்களும், சோணைநதியின் ஜலத்தால் நிரம்பிய அகழும் உடைத்தா யிருந்ததென்றும் பூர்வீகர்பலர் எழுதிய குறிப்புக்களால் தெரிகின்றன. (V.A. Smith's Early History of India. p.119-120.))மௌரியவரசருள் முதல்வனாகிய சந்திரகுப்தனும், அவன்பெயரன் அசோகசக்கரவர்த்தியும் வீற்றிருந்து ஆட்சிபுரிந்த அரண்மனை, கி.பி. 4-ம் நூற்றாண்டுவரை அதன் பழைய நிலைப்படியே இருந்து வந்ததென்பது, பா-ஹியான் (Fa-Hian) என்ற சீனவித்வான் அம்மஹாநகரத்தை நேரிற் கண்டு புகழ்ந்திருத்தலால் தெளிவாகின்றது. இதனால்,அசோகன் காலந்தொட்டு பாஹியான் வரவுநிகழ்ந்த 4-ம் நூற்றாண்டிறுதிவரை எவ்வகைச் சிதைவுமின்றித் தன் பழைய நிலையில் அந்நகரம் இருந்துவந்ததென்பது நன்கு விளங்கும். இனி, அந்நகரம், மேற்குறித்தபடி, இன்னகாலத்தில் அழிவுற்றது என்பதை விளக்கற்கு நேரான பிரமாணம் இப்போது காணப்படவில்லை.  ஆயினும், கி.பி.7-ம் நூற்றாண்டில் சீனதேசத்தினின்று வந்து நம் நாடெங்கும் சஞ்சரித்த பிரசித்த யாத்திரிகரான ஹ்யூந்-த்ஸாங் (Hiuen-Tsung) என்பவர் இந்நகரத்தை நேரிற் பார்த்து வருதற்பொருட்டுச் சென்றபோது, அது தன் பூர்வநிலையை முற்றுமிழந்து, கங்கைக்கரையில் 200, 300-வீடுகளுடையதாய் 1000-ஜனங்கள் வசித்துவந்த ஒரு சிறு கிராமமாக மாறிவிட்ட நிலையை அவர் குறித்திருக்கின்றார். இதனால், கி.பி. 400-ல் தன் பழைய பெருமையோடு விளங்கிய பாடலீபுரம், ஹ்யூந்-த்ஸாங் வந்த காலமான கி.பி.650-க்கு முன் கங்கையால் அழிவுற்றிருத்தல் வேண்டுமென்பது ஐயமின்றிப் பெறப்படும். சந்திரகுப்தன் காலத்தவரான மெகஸ்தனிஸ் என்ற யவனதூதரால் குறிக்கப்பட்டதும், பாடலியைச் சூழ்ந்திருந்ததுமான பெரிய மர‌க்கோட்டை சமீபத்திற் கண்டெடுக்கப்பட்ட விவரத்தை எழுதுமிடத்தில், ஸ்ரீ.ரோமேசசந்திர தத்தர் தம் நூலிற் காட்டியுள்ள கீழ்க்குறிப்பு ஈண்டுக் கவனிக்கத்தக்கது. "சீனதேச யாத்திரிகரான பாஹியான் வந்து பார்த்தபோது, கி.பி.5-ம் நூற்றாண்டில் அம்மரச்சுவர்கள் அழியாதிருந்தன. பாஹியான் எழுதுவதாவது-'அந்நகரத்துள்ள அரண்மனைகள்(இப்பழைய அரண்மனை, பாங்கிபூர் (Bankipore) பாட்னா (Patna) நகரங்கட்கு இடைப்பட்ட ரயில்வேயின் தென்பாரிசத்து,குமாராஹார் (Kumarahar) கிராமத்தின் வீடுவயல்களின்கீழ்ப் புதைவுண்டிருந்ததாகத் தெரிகிறது. (V.A. Smith's Early History of India. p. 120. note.)) பூதகணங்கள் கொணர்ந்துசேர்த்த கற்களால் நிருமிக்கப்பட்ட சுவர்களுடையனவாகும். அக்கட்டிடத்துச் சாளரங்களை அலங்கரித்து நிற்கும் சித்திரங்களும் பிரதிமைகளும், இக்காலத்தவராற் செய்யமுடியாத அவ்வளவு வேலைத்திறம் வாய்ந்தவை.  அவைகள், முன்பிருந்தவாறே இன்றும் உள்ளன'-என்பது. பாடலிபுரத்தின் அழிவானது,பாஹியான் காலத்துக்குப்பின் மிகவும் அடுத்து நிகழ்ந்ததாம். ஏனெனின்,7-ம் நூற்றாண்டில் ஹ்யூந்-த்ஸாங் என்ற மற்றொரு சீனயாத்திரிகர் ஆங்கு வந்து பார்த்தபோது,அந்நகரத்தின் அழிவுபாட்டையும், 200,300-  வீடுகளுடைய ஒருசிறு கிராமத்தையுந்தவிர,வேறொன்றையும் அவர் அங்குப் பார்க்கவில்ல்லை"-எனக் காண்க.*  மேற்கூறியவற்றால்,பாடலீபுரம் கி.பி.5,7ஆம் நூற்றாண்டுகட்கிடையில் அழிவுற்ற செய்தி தெளிவாகின்றது. பழைய பாடலிக்குச் சிறிது தூரத்தோடிய கங்கையானது  இப்போது அதன்பக்கத்துச் செல்வதால், அம்மஹா நதியின் திடும் பிரவேசத்தாலுண்டான நிலைமாற்றமே அவ்விராஜ ஸ்தலத்தின் பேரழிவுக்குக் காரணமாகியதெனெக் கருதலாம். ஆகவே செங்குட்டுவன் காலத்தவராகிய மாமூலனார்,"சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை, நீர்முதற் கரந்த நிதியம்" என்று பாடியிருப்பது, முற்கூறிய பாடலியழிவுச் செய்தியையே குறிப்பதென்பதில் தடையென்னை? ஹ்யூந்-த்ஸாங் வந்து பார்த்தபோது பாடலீபுரம் ஒரு குக்கிராமமாக மாறியதென்று அவர் எழுதினராயினும், அவ்வழிவு தமக்கு முன் இன்னகாலத்து நிகழ்ந்ததென்று அவருங் குறித்திலர்; தமது காலத்தையடுத்து அது நிகழ்ந்திருந்ததாயின் அச் செய்தியையும் அவர் கூறாமற் போகார்; அங்ஙனமின்மையால், அவர் வருகைக்கு இரண்டொரு நூற்றாண்டுகளுக்கு முன்பே அவ்வழிவு நேர்ந்திருத்தல் வேண்டும்;  ---------------------- *Civilization in ancient India. P. 217 அஃதாவது ஹ்யூந்-த்ஸாங்க்கு முன் வந்தவரான பாஹியான் காலத்தை யொட்டி (கி.பி. 5-ம் நூற்றாண்டில்) அது நிகழ்ந்த தென்பதாம். * தத்தரவர்களும் இவ்வபிப்-பிராயப்படுதல், முன் குறித்த அவர்குறிப்பைக் கொண்டு அறியத்தக்கது. இவற்றால்,பாடலியழிவைப் பாடிய மாமூலனாரும் அவர்காலத்து விளங்கிய செங்குட்டுவனும் ஏறக்குறைய அவ்வைந்தாம் நூற்றாண்டில் இருந்தவராதல் பெறப்படுகின்றது. இனி, சேரன் செங்குட்டுவன் மாமூலனார் இவர்கட்கு, பாஹியான், ஹ்யூந்-த்ஸாங்-இருவர்க்கும் இடைப்பட்ட 6, 7-ம் நூற்றாண்டுகளையே, பாடலியழிவைக் கொண்டு, கூறுதல் கூடாதோ என்று ஒரு கேள்வி இங்குநிகழ்தல் கூடியதே. அவ்வாறு கொள்வற்கு,ஒரு முக்கியமானகாரணந் தடையாகின்றது. அஃதாவது,6 அல்லது 7 -ஆம் நூற்றாண்டே சங்கத்தரசர் புலவர்க்கு உரியதாயின், அது, பல்லவ சக்கரவர்த்திகளது ஆதிக்கம் தென்னாட்டில் நிகழ்ந்த ஒரு கால விசேடமாகும்; ஆம்போது,தமிழ்ச்சிற்றரசர் பேரரசர்க்குள்ளும், அந்நியவரசர்க்குள்ளும் நிகழ்ந்த எத்தனையோ போர்களைக்  குறித்துவரும் அகநானூறு புறநானூறு முதலிய பண்டை நூல்கள், பெருவலி படைத்தவரும், யுத்தப்பிரியரும், தமிழ் நாடு முழுதும் தம்மடிப்படுத்து ஆண்டு வந்தவருமான பல்லவரது பெயரையேனும்,அவர் வரலாறுகளுள் ஒன்றையேனும் சிறிதுங்கூறாமலே செல்வற்குத் தக்க காரணம் வேண்டுமன்றோ? நம் நாட்டிற் காணப்படும் பல்லவ சாஸனங்களிலாயினும், சங்ககாலத்தரசர் செய்தி அறியப்படுவதுண்டா? அதுவுமில்லை. ----------- *சமுத்திரகுப்தனுக்குப் பிந்திய அரசர்,பாடலீபுரத்தைத் தங்கள் ராஜஸ்தலமாக்காது நெகிழவிட்டதாகத் தெரிதலாலும்,அந்நகரம் அக்காலத்தே நிலைமாறிய செய்தி ஊகிக்கப்படுகிறது. V.A.Smith’s Early History of India p.278.) அதனால், பல்லவர்கள் தென்னாட்டில் தங்கள் பெருமையை நிலை நாட்டுவதற்கு முன்னதான காலமொன்றில்தான்,செங்குட்டுவன்போன்ற சங்ககாலத்தவரான அரசர் திகழ்ந்திருத்தல் வேண்டும் என்பது, ஒருபோதும் தவறான  ஊகமாகாது. அக்காலமாவது 4,5-ம் நூற்றாண்டே என்க. பல்லவர் இக்காலத்தே தமிழ்நாட்டிற் பிரவேசித்திருத்தல் கூடுமேனும்,6 அல்லது 7-ம் நூற்றாண்டிற்போலப் பிரபலம் பெற்றவரல்லர் என்பது,சரித்திரமூலம் அறியப்பட்டது.  முற்குறித்த நூற்றாண்டுகளே சங்ககாலமாகக் கொள்ளல் பொருந்துமென்பதற்கு மற்றொரு சிறுசான்றுமுண்டு; திகம்பரதரிசனமென்னும் சைநநூலில்,விக்கிரமாப்தம் 526 (கி.பி.470)-ல் வச்சிரநந்தி என்பவரால் தென்மதுரையில் ஒரு திராவிடசங்கம் கூட்டப்பட்டதாகச் சொல்லப் படுகின்றது.* சிலர்கருத்துப்படி,இத்திராவிட சங்கத்தையே கடைச்சங்கமென்று கொள்வற்குத் தகுந்த ஆதாரமில்லை.ஆனால், எக்காரணத்தாலோ கடைச்சங்கம் குலைந்ததை உத்தேசித்து,அதனையடுத்துத் தமிழ்வளர்ச்சி சமய வளர்ச்சி செய்வதற்கு ஒரு சங்கம் ஸ்தாபிக்கச் சைநர் இம்முயற்சி செய்திருக்கலாம். இச்சைநதிராவிட சங்கத்தினின்றே நாலடியார் முதலிய தமிழ்நூல்கள் எழுந்தனபோலும். இச்சங்கத்தின் நோக்கம்,குலைந்த கடைச்சங்கத்தைப் புனருத்தாரணஞ் செய்வதேயாயின், அக்கடைச்சங்கம் இச்சைந சங்கத்துக்குச்  சிறிது முற்பட்டதாதல் வேண்டும். அஃதாவது 5-ம் நூற்றான்டின் முற்பகுதி அல்லது 4-ம் நூற்றாண்டு ஆகும்; எங்ஙனமாயினும்,இத்திராவிட சங்கத்தின் எழுச்சியானது, கடைச்சங்கம் 5-ம் நூற்றாண்டுக்கும் முந்தியதென்பதைக் குறிப்பதுமட்டில் நிச்சயமெனலாம். ------------- *Bombay Royal Asiatic society’s journal.Vol.XVII. No.XLIV.pp.74 சேரன்-செங்குட்டுவன்காலம் 4, 5-ம் நூற்றாண்டுகளே எனக்குறிப்பிடும் மேற்கூறிய பிரமாணங்களை, மற்றோர் அரியசெய்தியும் ஆதரியாநின்றது. வடநாட்டில் மகதநாடாண்ட ஆந்திரசக்கரவர்த்திகளது வீழ்ச்சிக்குப்பின், பிரபலம்பெற்று விளங்கிய குப்தவமிச சக்கரவர்த்திகளுள்ளே,சமுத்திரகுப்தன் என்பான் திக்விஜயஞ்செய்து, இப்பரதகண்ட முழுமையும் தன் வெற்றிப்புகழைப் பரப்பியவனென்பது,சாஸனமூலம் அறியப்படுகின்றது. இம்மன்னர்பெருமான் கி.பி. 326.ல் பட்டமெய்தியவன். இவனது தென்னாட்டுப் படையெழுச்சியில் ஜயிக்கப்பட்ட வேந்தருள்ளே கேரள தேசத்து மாந்தராஜா ஒருவனென்று கூறப்படுகின்றது.(Gupta Inscriptions. p. 12-13; Dr. Fleet's Dynasties of the Kanarese Districts. p. 280; Indian Antiquary, Vol.XIV, p. 1891.} இம்மாந்தராஜா என்பவன் சங்கநூல்களிற் கூறப்படும் மாந்தர‌ன் என்பவனாகவே தோற்றுகின்றான். ஆனால் இப்பெயர் கொண்டவரிருவர் இருந்தனரென்பதும், அவருள் ஒருவன் செங்குட்டுவனுக்குச் சிறிதுமுன்னும், மற்றொருவன் அவனுக்குச் சிறிதுபின்னும் இருந்தவரென்பதும் முன்னமே குறிப்பிட்டோம்.+ (+ இந்நூல் பக். 18. ) இவருள் முன்னவனே, சமுத்திர குப்தனால் வெல்லப்பட்டவனாகக் கருதினும், அச்சேரன் 4-ம் நூற்றாண்டின் பிறபகுதியிலிருந்தவனாதல் வேண்டும். அம்மாந்தரஞ்சேரலைப் பாடிய பர‌ணரே செங்குட்டுவனையும் பாடியிருத்தலால், நம் சேரன் அம்மாந்தரனுக்குச் சிறிது பிற்பட்டவனென்பது பெறப்படும்;("மாந்தரஞ் சேரல்" என்ற பெயரைச் சேரனொருவனுக்கு இளங்கோவடிகள் கூறியிருப்பதாலும், அவன், செங்குட்டுவனுக்கு முற்பட்டவனாதல் புலப்படுகின்றது. (சிலப். 23. 84)) அஃதாவது, 5-ம் நூற்றாண்டின் முற்பாகமென்க. இது நிற்க. சமுத்திரகுப்தனது சாஸனத்துக் கண்ட மாந்தராஜா என்னும் பெயர் தமிழ் நூல்களிற் பயிலுதலறியாமையால், அவனை வேற்று நாட்டரசனாகச் சரித்திரநூலோர் சிலர் கருதுவாராயினர். இனி, சமுத்திரகுப்தன் சங்ககாலத்தவனான மாந்தரஞ்சேரலை வென்றவன் என்றதற்கேற்ப, மற்றோர் அரிய செய்தியும் சங்கநூல்களில் குறிப்பிடப்படுதல் கவனிக்கத்தக்கது.மேற்கூறியபடி பாடலியழிவைப்பற்றிப் பாடிய மாமூலனாரே,தம் காலத்தில், வடவாரிய வேந்தனொருவன் தென்னாடுநோக்கிப் படையெடுத்துப்போந்த பெருத்த திக்விஜய விஷயம் ஒன்றையும் இருமுறை குறிப்பிடுகின்றார். அவர் கூறுவன:- "முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர் தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு விண்ணுற வோங்கிய பனியிருங் குன்றத் தொண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த ...வரை" (அகம். 281). "வெல்கொடித்- துனைகா லன்ன புனைதேர்க் கோசர் தொன்மூ தாலத் தரும்பணைப் பொதியில் இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத் தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர் பணியா மையிற் பகைதலை வந்த மாகெழு தானை வம்ப மோரியர் புனைதேர் நேமி யுருளிய குறைத்த...அறைவாய்"  (௸251.) எனக் காண்க.இவ்வடிகளிலே, மோரியர் திக்விஜயஞ் செய்துகொண்டு தென்னாடு நோக்கிப் படையெடுத்து வந்த காலத்தே,அவர்க்குப் பணியாமல் எதிர்த்துநின்ற மோகூர் அரசனுடன் அவர்கள் பொதியமலைப்பக்கத்தில் போர் புரிந்தனர் என்ற அரிய செய்தி கூறப்படுதல் காணலாம். இதனுட்கண்ட மோகூர் அரசனாவான்,பாண்டியன் சேனாபதியான பழையன்மாறன் என்பவன்; இவனே மோகூர் என வழங்கப்பட்டவன் என்பதும்,செங்குட்டுவனால் இவன் அழிக்கப்பட்ட செய்தியும் முன்னரே குறித்தோம்.* இதனால், மௌரியவரசரது தென்னாட்டு விஜயம், செங்குட்டுவனாற் போரில் வெல்லப்பட்ட பழையன் மாறன் காலத்து நிகழ்ந்ததென்பது தெளிவாகின்றது.இப்பெரு வேந்தர் வருகையே நம் சேரனைப்பாடிய பரணரால்-- "விண்பொரு நெடுவரை யியறேர் மோரியர் பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த....வரை" எனவும்  (அகம்.69.) கள்ளில் ஆத்திரையனார் என்ற புலவரால்-- "விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர் திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த உலக விடைகழி" எனவும் (புறம்.175.) ------ இந்நூல். பக்-32, 33 பாராட்டப்பட்டிருத்தலும் அறியத்தக்கது. (மோரியரது தென்னாட்டுப் படையெழுச்சியில், அவரது சேனையுடன் தேர் செல்லுதற்குத் தடையாயிருந்த மலையொன்றைக் குடைந்து வழிசெய்துகொண்டு அவர் தெற்கே வந்தனரென்பது, மேற்கூறிய,மாமூலர், பரணர், ஆத்திரையனார் வாக்குக்களால் அறியலாம்.ஆயின், அங்ஙனம் வழியுண்டாக்கப்பட்ட மலை இன்னதென்பது இப்போது விளங்கவில்லை. இப்புலவர்பாடல்களால், புறநானூற்றுரைகாரர் கொண்ட 'ஓரியர்' என்றபாடம் பொருத்தமாகாமை காண்க.) இனி, இம் மோரியர் என்பவர் யாவர்? என்பதே கேள்வியாம். மகதவேந்தராய்ப் பாடலீபுரத்திருந்தாண்ட மௌரிய சக்கரவர்த்திகளுள் ஆதி முதல்வனானவன், கி.மு. 321-ல் பட்டமெய்திய சந்திரகுப்தன் என்பான். இவன் காலத்து உற்பத்தியாகிய மௌரியவமிசம், சுங்கவமிசத்தவனாய் கி.மு.184-ல் பட்டமெய்திய புஷ்யமித்திரனால் முடிவடைந்ததென்பது புராணங்களாலும் சரித்திரவாராய்ச்சியாலுந் தெளியப்பட்டது.இதற்குபின், மௌரியர் பிரஸ்தாபம் வடதேச வரலாறுகளிற் காண்டல் அருமையாம். ஆனால், தக்ஷிணத்திற் கொங்கணமுதலிய சில பிரதேசங்களில், மௌரியவமிசத்தவர் சிலர் கி.பி.6,7-ஆம் நூற்றாண்டுகளில் இருந்தனர் எனப்படுகின்றது.(V.A. Smith's Early History of India. p.183) இவர்களைப்பற்றிய பெருமையாவது பிற வரலாறுகளாவது சரித்திர நூல்களால் விளங்கக்கூடிய நிலையில் இல்லை. இவ்விருவகை மௌரியருள்ளே, முன்னவர் மிகவும் முற்பட்டவராகவும், பின்னவர் மிகவும் பிற்காலத்தவராதலோடு பிரபலமற்றவராகவும் காணப்படுதலால்,அவ் விருவகையினருள் ஒருவரைப்பற்றியும் மாமூலனார் முதலியோர் கூறினரென்று கருதக்கூடவில்லை. ஆயினும்,மௌரியர் பிரஸ்தாபத்துக்கு இடமே கிடையாததும்,  ஆந்திர வமிசத்தரசர் பிரபலங் குன்றியதுமான கி.பி 4-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மௌரியமுதல்வனான சந்திரகுப்தனது பெயர்பூண்டு, அவன் தலைநகரான பாடலீபுரத்தில் பிரசித்த வேந்தனொருவன் தோன்றினனென்று சொல்லப்படுகின்றது. இவனையடுத்து மஹாவீரர்களாக சமுத்திர குப்தனும், அவன் மகன் சந்திரகுப்த-விக்ரமாதித்தனும் விளங்கினர். இவர்களைக் "குப்தவமிசத்தவர்" என்று பொதுவாகவே சாஸனம் குறிக்கின்றதாயினும், இன்ன மரபினரென்பதைத் தெளிவாக அறியவிடமில்லை. மேற்குறித்த புதிய சந்திரகுப்தனைத் தலைமையாகக் கொண்டு பாடலியையாண்ட குப்த மரபினரையே மாமூலனார் மோரியரென்று குறித்தனர்போலும். இதற்கேற்ப, அப்புலவர், இவர்களை "வம்ப மோரியர்" என்கின்றார்.இதற்குப் 'புதிய மோரியர்' என்பது பொருளாதலால், பழைய மோரியரை விலக்கற்கே இவ்வடை கொடுக்கப்பட்டதாகலாம். எங்ஙனமாயினும், பிற்பட்ட சந்திரகுப்தன் மகன் சமுத்திரகுப்தன் என்பான், பரத கண்டமுழுதுந் திக்விஜயஞ்செய்து தன் வீரப்புகழை எங்கும் பரப்பிய சக்கரவர்த்தியாதலோடு, (இவன், சேரநாட்டை யடுத்திருந்த கடம்பவேந்தனான காகுஸ்தன் மகளை மனம்புரிந்தவனென்றுந் தெரிகிறது. (Mysore and Coorg. p. 23).) அவன் சேரவேந்தனான மாந்தரனை வென்றவனென்றுஞ் சிறப்பிக்கப்படுகின்றான். (இதனை முன்னரே விளக்கினேம்). ஆதலால், இச்சக்கரவர்த்தியின் தென்னாட்டு வருகையையே - "வடுகர் முன்னுற மோரியர் - தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு" என்னும் மாமூலனார் வாக்குக் குறித்ததாகல் வேண்டும். இக்குப்த சக்கரவர்த்திகட்கு வடுகர்சேனை கூறப்-பட்டிருப்பதும் பொருந்தும்; என்னெனின்,சமுத்திரகுப்தனும் அவன் தந்தையும், ஆந்திரர் மகதநாட்டிற் றம்பழையநிலை தவறியபின்,அவர் ஸ்தானத்திற்றோன்றியவராதலால், போர்வலிமை பெற்ற அவ்வாந்திரரை இவ் 'வம்பமோரியர்' தம் படையாளரிற் சிறந்தவராகக் கொண்டிருத்தல் கூடியதேயாம்.வெல்லப்பட்ட குடிகளை இங்ஙனமமர்த்திக் கொள்ளுதல், இக்காலத்தரசர்க்கும் இயல்பேயன்றோ? இக்குப்தர் வருகையன்றி, பிற்காலத்துக் கொங்கண-மௌரியரைப் பற்றியதே மாமூலனார் விஷயமாயின், சேரநாட்டையடுத்துப் பிரபலமற்றிருந்த சிற்றரசரும், சளுக்கியரால்* அடக்கப்பட்டவருமான அன்னோரை 'வடுகர் முன்னுற மோரியர்,தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு' என்றிங்ஙனம் திக்குவிசயப் பெருமைக்கேற்ற சொற்களாற் சிறப்பியார் என்க."தென்றிசை மாதிர முன்னிய வரவு"என்பதனால், அங்ஙனம்வந்த மோரியர்,தென்னாட்டையடுத்த கொங்கணத்தவரன்றி,வடவாரியரே என்பதும் பெறப்படுதல் காணலாம். ----- *கீர்த்திவர்மன் என்ற சாளுக்கிய வேந்தன் இம்மௌரியரை வென்று தன்கீழ்க் கொண்டான் என்பர். (Mysore and coorg from the Inscriptions.p.62.)  இனிப்பாண்டியன் சேனாபதியான பழையன்மாறனுக்கும் மோரியர்க்கும் நிகழ்ந்ததாக மாமூலனார்கூறிய பொதியப்போர், சமுத்திரகுப்தனது தென்னாட்டுப் படையெழுச் சியில் அவன் பாண்டிநாட்டைத் தாக்கிய செய்தியைக் குறிக்கின்றது.முற்கூறியபடி, மாந்தரனை இக்குப்தவரசன் வென்றவனாதலின், அங்ஙனஞ் சேரனை அடக்கியவன் பாண்டிநாட்டையும் வெல்லக் கருதினன் போலும்.  இக்குப்தனால் வெல்லப்பட்ட தக்ஷிணதேசத்து ராஜாக்களுக்குள்ளே கேரளனைமட்டும் இவன் சாஸனங்குறித்து மற்றச்சோழபாண்டியரைக் குறிக்காமையால், அத்தமிழ்வேந்தர் இவனுடன் எதிர்த்துநின்று அடாங்காதிருந்தவாராதல் வேண்டும். பாண்டியன் சேனாவீர னான பழையன்மாறன் அங்ஙனமே அடங்கவில்லை யென்பது மாமூலனார் வாக்கே காட்டுதல் காணலாம். சமுத்திரகுப்தன் காலத்துச் சோழபாண்டியர் முறையே கரிகாலனும்,நெடுஞ்செழியன் அல்லது மாறன்வழுதி போன்றவருமாதல் வேண்டும். இவர்களுட் கரிகாலன் வச்சிரம்அவந்திமகத நாட்டரசரை வென்றவன் எனப்படுதலும்* நெடுஞ்செழியன் "ஆரியப்படைதந்த"வன் என்றும்† மாறன்வழுதி "வடபுல மன்னர் வாட அடல்குறித்த"வனென்றும்‡ கூறப்பட்டிருத்தலும் இச்சமுத்திரகுப்தன் போன்ற வடவரசர் விடுத்த சேனையை அக்காலத்துத் தமிழ்வேந்தர் அஞ்சாதெதிர்த்து  நின்ற செய்தியைக் குறிப்பிக்கும். ---------- * சிலப்பதிகாரம். 5-ம் காதை.99--104 † ௸. மதுரைக்காண்டத்தினிறுதிக் கட்டுரை. ‡ புறம்.52. இச்சமுத்திரகுப்தன் கி.பி.375-வரை ஆட்சிபுரிந்தவன் எனப்படுகின்றான். எனவே, இவனால் வெல்லப்பட்ட மாந்தரன், முற்கூறியபடி செங்குட்டுவனுக்குச் சிறிது முற் பட்டவனாகவும், பழையன்மாறன் அக்குட்டுவனுக்குச் சமகாலத்தவனாகவும் தெரிதலின்,நம் சரித்திரநாயகனான சேரன் காலமும் 4-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 5-ம் நூற்றாண்டின் முற்பகுதியாகக்கொள்ளல் பொருத்தமாம்.ஆயின், சமுத்திரகுப்தன் மகனான சந்திரகுப்த-விக்கிரமாதித்தன் (கி.பி. 375-418) அல்லது அவன் மகனான குமாரகுப்தன் (413-455) காலங்களும், நம் சேரர்பெருமான் காலமும் ஒன்றாகச் சொல்லலாம். இனித் தமிழ்ச்செய்திகளைக்கொண்டு,செங்குட்டுவன் வாழ்ந்த சங்ககாலத்தை நோக்குவோம். நக்கீரனாரைப் பற்றித் தமிழ்மக்களெல்லாம் நன்கறிவரன்றோ? இவர் கடைச்சங்கத்தை அலங்கரித்த பெரும்புலவெரெனக் கருதப்படுதலின்,அச்சங்கத்தைச் சார்ந்தவராய்ச் செங்குட்டுவனைப் பாடிய பரணர்சாத்தனார் முதலியோருக்கு, ஏறக்குறைய சமகாலத்தவரென்பது சொல்லாதே அமையும். (நம் சேரனுடன் பொருத பழையன்மாறன்,கிள்ளிவளவன் என்ற சோழனை (இந்நூல்.*வேறு பக்கம்) வெற்றிகொண்ட செய்தியை நக்கீரனார் பாடுதல் (அகம்-346) அப்புலவரும்நம் சேரனும் சமகாலத்தவெரன்பதைக் காட்டுகின்றது.) இந்நக்கீரர் இறையனார் களவியலுக்குப் பொருள் கண்டவராகக் கூறப்படுகின்றார். இப்போது வெளிவந்துள்ள அக்களவியலுரை இந்நக்கீரர் செய்ததாகவே வழக்குளதேனும்,அவரால் நேராக எழுதப்பட்டதன்றி அவரதாசிரியபரம்பரையின் கீழ் வழங்கியதென்பது அந்நூலின் உரைப்பாயிரத்தை ஆராய்ச்சி செய்யும்போது உணரப்படுகின்றது. அவ்வுரைப்பாயிரத்தில், நக்கீரனார் முதலாக, மாணாக்கர் பதின்மர்தலைமுறைகள் கூறப்பட்டு 'இங்ஙனம் வருகின்றதுரை' என்று முடிந்திருத்தலால், நக்கீரனார்முதல் வாய்ப்பாடமாகச் சொல்லப்பட்டு வந்த அவ்வுரை,அவர்க்குப் பத்தாந் தலைமுறைக் காலத்தேதான் நூலாக எழுதப்பட்டதென்பது விளக்கமாமன்றோ? (இவ்வுரை வரலாற்றைப்பற்றி "இளம்பூரணவடிகள்" என்ற ஆராய்ச்சியினும் விரித்தெழுதியுள்ளேம். (செந்தமிழ்.தொகுதி-4,பகுதி.7.)  இக்களவியலுரை எழுத்துருவடைந்தது எக்காலத்து? என்பது இனி ஆராயற்பாலது. அவ்வுரையெழுதியோராற் காட்டப்பட்ட உதாரணச் செய்யுள்களில் அரிகேசரி, பராங்குசன், நெடுமாறன் முதலிய பெயர்கள் தரித்த பாண்டியனொருவன்,சங்கமங்கை நெல்வேலி முதலிய இடங்களிற் போர் வென்றவனென்று விசேடமாகப் புகழப்படுகின்றான். சமீபத்துக்கண்ட சின்னமனூர் வேள்விக்குடித் (Epigraphical Annual Report. 1907-8. P.62. 68) தாமிரசாஸசனங்களிற் குறிக்கப்பட்ட பாண்டிய வமிசாவளியால், அப்போர்களிலே வெற்றிபெற்ற அரிகேசரி-பராங்குசன் என்பான்2 (இவன், கி.பி.760-ல் இருந்த நந்திபோதபல்லவமல்லனுடன் மேற்படி இடங்களிற் போர் நிகழ்த்தியவனென்பர்.) கி.பி.770-ல் விளங்கிய (இவன் காலம் கி.பி.770 என்பது யானைமலைச்சாஸனத்தால் அறிந்தது.(செந்தமிழ்.தொகுதி-4.பக்336.))ஜடிலவர்மன்-பராந்தகனுடைய தந்தையென்பது தெளிவாகின்றது.இதனால் தந்தை அரிகேசரியின் காலம் கி.பி.770-க்கு முற்பட்டதென்பது பெறப்படும். படவே,களவியுலரை இயற்றப்பட்ட காலம் அவ் எட்டாநூற்றாண்டுக்கும் பிற்பட்டதாகுமென்பது விளங்குகின்றது. அன்றி,உரையெழுதியவர்,தாம் காட்டும் உதாரணச்செய்யுளிற் கண்ட பாண்டியனது காலம் அவ் எட்டாநூற்றாண்டுக்கும் பிற்பட்டதாகுமென்பது விளங்குகின்றது.அன்றி, உரையெழுதியவர், தாம் காட்டும் உதாரணச்செய்யுளிற் கண்ட பாண்டியனது காலத்தவரே (கி.பி.760) என்றாலும், அவரிலிருந்து 10-தலைமுறை முற்பட்ட நக்கீரனார்க்கு ஐந்தா நூற்றாண்டே உரியகாலமாதல் வேண்டும். எவ்வாறெனின், பரம்பரை வமிசங்களைத் தலைமுறை ஒன்றுக்கு 30-வருஷங் கொண்டளக்கும் முறைப்படி, (பதிற்றுப்பத்திற் கண்ட சேரவரசர் எண்மருக்கு, அவரவர் பதிகங்கூறும் காலத்தைக்கொண்டு நோக்குமிடத்தும், தலைமுறையொன்றுக்கு 30-வருஷங்கொள்ளுதல், பழையதமிழ்மக்களுக்கு அதிகமாகாதென்பது விளங்குகின்றது.)  அக்களவியலுரைக்காலமாகிய 8-ம் நூற்றாண்டைவைத்து அதனிலிருந்து 10-தலைமுறை முற்பட்ட நக்கீரர்காலத்தைக் காணுமிடத்து,அப்புலவர்பெருமான் உத்தேசம் 5-ம் நூற்றாண்டிலிருந்தவராதல் பெறப்படும்.அஃதாவது,--(கி,பி, 770-10 x 30) 470-ல் வாழ்ந்தவர் என்பதாம். ஆகவே, அந்நக்கீரனார் காலத்தை ஏறக்குறைய ஒட்டியிருந்தவனாகத் தெரியும் செங்குட்டுவன்முதலியோர்க்கும் அந்நூற்றாண்டின் முற்பகுதியைக் கொள்ளத்தடையில்லை என்க.இவ்வரையறை, களவியலுரையெழுதியவர் தாங்காட்டிய பாண்டியனுக்குச் சமகாலத்தவாராயிற் பொருந்துமல்லது,பிற்பட்டவராயின் நக்கீரர் காலம் இன்னும் குறைவுபடுமென உணர்க. எங்ஙனமாயினும்,5-ம் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலத்தை நக்கீரனார்க்குக் கூறுதல் ஏற்புடைத்தன்றென்பதை இச்செய்தி விளக்குமென்பது ஒருதலையாகும்.*  சேரன்-செங்குட்டுவனது வடயாத்திரையில் அவனுக்குப்பேருதவி புரிந்தவர் கன்னர் என்போர்; இளங்கோவடிகள் இவரைக் கூறுமிடங்களிலெல்லாம் கன்னரெனப் பன்மையாக்குவதோடு, நூற்றுவர்கன்னர் ஆரியவரசர் ஐயிருபதின்மர் எனத் தொகைப்படுத்துவதாலும், அவர் ஒரு கூட்டத்தவராயிருந்தனர் என்பது விளங்குகின்றது. இவரையே அவ்வடிகள் மாளுவவேந்தர் என்றும் குறிப்பிடுதல் முன்னரே விளக்கப்பட்டது#. இவற்றால் மாளுவதேசத்தை (Malwa) பலபகுதிகளாகப் பிரித்தாண்ட அரசர் கூட்டத்தவராகவே --------- *ஸ்ரீமந்-து.அ.கோபிநாதராயவர்களும் இவ்வபிப்பிராயமே கொள்வர். (செந்தமிழ்.தொகுதி-6.பக்58-59) # இந்நூல் பக்-108  இவரைக்கொள்ளுதல் பொருந்துமென்றுதோற்றுகின்றது. சமுத்திரகுப்தனால் மாளுவதேசம் வெல்லப்பட்ட காலத்தில் அந்நாட்டின் பெரும்பாகம் ஒருவரன்றிப் பலகூட்டத்தாரால் ஆளப்பட்டுவந்ததென்றும், அவன் மகன் சந்திரகுப்தனால் அத்தேசம் குப்த-ஏகாதிபத்யத்துள் ஒன்றாக்கப்பட்டதென்றும் சரித்திர நூலோர்* கூறுவர். சேரன்-செங்குட்டுவன் 5-ம் நூற்றாண்டினனாயின், அவனட்பரசராய் மாளுவ நாட்டை ஆண்டுவந்த கன்னரென்ற கூட்டத்தார் மேற்கூறிய குப்தர் காலத்துச் சிற்றரசர்களே என்று கருதல் தகும். இனி, தமிழறிஞர் சிலர், இளங்கோவடிகள் குறித்த "நூற்றுவர் கன்னர்" என்பது ஆந்திரவரசர் பட்டப்பெயரான "சாதகர்ணி" என்பதன் தமிழ்மொழிபெயர்ப்பென்றும், அதனால் "நூற்றுவர்கன்னர்" என்பது செங்குட்டுவன் காலத்து ஆந்திரவரசனான ஒருவனையே குறிக்க வேண்டுமென்றுங் கருதுவர். இளங்கோவடிகள் வாக்கை நோக்குமிடத்து, கன்னன், கன்னி என ஒருமையாற் கூறாது கன்னர்† எனப் பன்மையாகவும், கங்கைக்கரையிலிருந்த செங்குட்டுவன் அக்கன்னரை அவருடைய வளந்தங்கிய நாட்டிற்கனுப்பியதைக் குறிக்கும்போது, "ஆரியவரசர் ஐயிரு பதின்மரைச்-சீரியல் நாட்டுச் செல்கென் றேவி" என்றும்‡, "மாளுவ வேந்தர்" என்றும் ஒருகூட்டத்தாராகவும் பாடப்பட்டிருத்தலால் "நூற்றுவர் கன்னர்" என்றதொடர் அரசனொருவனைக் குறிப்பதாகப் புலப்படவில்லை.  ---------- * V.A. Smith's Early History of India. p.271,276 † சிலப்.26, 176. ‡சிலப். 27, 176-7 ஒருகால், சாதகர்ணி என்பதன் மொழிபெயர்ப்பாகவே அத்தொடரமைந்ததாயினும், அஃது ஆந்திரவரசரின் குலப்பொதுப் பெயராதலால்,5-ம் நூற்றாண்டினனான செங்குட்டுவன்காலத்து ஆந்திரவரசனொருவனுக்கு அது வழங்கியிருத்தலுங் கூடும்;அதனால்,2-அல்லது 3-ம் நூற்றாண்டுச் சாதகர்ணியே நம் சேரன்காலத்தவனா தல் வேண்டும் என்னும் நியதியில்லை என்க. சாஸனபரிசோதகரும் வேறு அறிஞர்சிலரும்,கடைச் சங்கத்துக்கு எட்டாம் நூற்றாண்டையே ஏற்புடைய காலமாக்கி யெழுதுவர்.இங்ஙனமாயின், அஃது, அப்பர்  சம்பந்தர் முதலிய நாயன்மார்களையொட்டிய காலமாதல் வேண்டும்.இந்நாயன்மார் அக்காலத்தவரென்பது,சாஸன பண்டிதருட்படச் சரித்திரவறிஞர் பலராலும் முன்னரே  துணியப்பட்டதொன்றாம். திருமாலடியாராகிய ஆழ்வார்களிற் சிலரும் இக்காலத்தவரே யாவர். இவ்வடியார்களுக்குரிய காலவிசேடத்தையே சங்கத்தரசர் புலவர்க்குங் கூறுவதாயின், அதன்முன் எத்தனையோ ஆக்ஷேபங்கள் எதிர்ப்படுதல் ஒருதலையாம். மேற்கூறிய நாயன்மார்க்கு நெடுங்காலத்துக்கு முன்பே கடைச்சங்கம் நடைபெற்றதென்பது,சங்ககாலத்தரசனான சோழன்-கோச்செங்கணான் பூர்வஜென்மத்திற் சிலந்தியாகப்பிறந்ததையும்* நக்கீரனார் சரிதப்பகுதியான  'தருமிக்குப் பொற்கிழியளித்த' வரலாற்றையும் † அவ்வடியார்கள் பாடுதலால் நன்குவிளங்குவதன்றோ? இன்னும் கி.பி. 770-ல் விளங்கிய ஜடிலவர்மன்-பராந்தகன் முன்னோராகப் பாண்டியரெண்மர் சின்னமனூர் வேள்விக்குடிச் சாஸனங்களிற் கூறப்படுகின்றனர். ------------- * தேவாரம்.திருப்பாசூர்ப்பதிகம்.விண்ணாகி-6 (அப்பர்.) † ௸. தேவாரம்.திருப்புத்தூர்ப்பதிகம்.புரிந்தமரர்-3 (அப்பர்.) இம்முன்னோருள், கடைச்சங்கமிருந்தவராக முன்னூல்களுட்கண்ட பிரபலபாண்டியர் பலருள் ஒருவரேனும் காணப்பட்டிலர். இதனாலும் 8-ஆம் நூற்றாண்டுக்குப் பல தலைமுறைகள் முற்பட்டவர் சங்ககாலத்தரசர்கள் என்பது வெளிப்படையன்றோ? இன்னும் இதனை விரிப்பிற் பெருகும்; சுருங்கவுரைக்குமிடத்து, இலக்கியப் பிரமாணங்களும் சாஸனவாதரவுகளும் அக்கொள்கைக்கு முற்றும் மாறானவை-யென்றே சொல்லலாம். இனி, செங்குட்டுவன்காலத்தவனாகச் சிலப்பதிகாரங் குறிக்கும், 'இலங்கைக்கயவாகு' என்ற அரசன்பெயர், மகா வமிசத்துள் 2-ம் நூற்றாண்டிலிருந்த ஒருவனுக்குக் காணப் படுகிறது; ஆயினும், அக்கஜபாகுவே நம் சேரன்காலத்தவன் என்பதற்குப் பெயரொற்றுமை ஒன்றைத்தவிர, உட்பிரமாணமொன்றும்* அந்நூலாற் பெறப்படவில்லை என்பது சரித்திர அறிஞர் நன்கறிவர். இங்ஙனம் பெயரொப் பொன்றையே பற்றி ஒரு முடிவுபடுத்தல் எங்ஙனம் இயலும்? இதனால், மேற்கூறிய எங்கொள்கைக்கமைந்த பிரமாணபலங்களை நோக்குமிடத்து, அக்கயவாகுபற்றிய கொள்கை உறுதி பெற்றதாகக் கருதக்கூடவில்லை. கயவாகு என்றபெயர், 5-ம் நூற் றாண்டின் முற்பகுதியுள் இலங்கையாண்ட ஒருவனுக்கு  ---------------- * மகாவமிசமானது, கி.மு. 501 முதல் கி.பி. 301 வரை இருந்த இலங்கையரசர் வரலாறுகளையே கூறுவதாதலால், 5-ம் நூற்றாண்டினனாகிய நம் சேரன்காலத்திருந்த இலங்கைவேந்தன் செய்தியை அந்நூலிற் காண்டல் இயலாதாம். கி.பி. 301-க்குப் பிற்பட்ட இலங்கையரசர் வரலாறுகள், 1262, 1295-ம் வருஷங்களில் (ஏறக் குறைய மகாவமிசம் செய்யப்பட்டதற்கு ஆயிரமாண்டுக்குப்பின்) எழுதப்பட்டதென்பர். (Sketches of Ceylon History by Sir- P. Arunachalam. p. 29-30.) முன்புவழங்கிப் பின்பு மறக்கப்பட்டதுபோலும். இவ்வைந்தாம் சதாப்தத்தில். ததியன்(Dathiya) பிதியன்(Pithiya) முதலிய தமிழரசரறுவர் இலங்கையை வென்றவரெனப்-படுகின்றனர்.* இவருள், ததியன் என்பவன், தலையாலங்கானந் தந்த நெடுஞ்செழியனால் வெல்லப்பட்டவனாக அகநானூற்றால் (39) அறியப்படும் திதியன்† என்பவன்போலும்; இவ்வாறாயின், இவன் ஏறக்குறைய நம்சேரன் காலத்தவனேயாதலால், மேற்கண்ட கொள்கைக்கு இதுவும் ஓராதாரம் ஆகும். இது வரை கூறிப்போந்தவற்றால், சேரன்-செங்குட்டுவனும் அவனையொட்டியிருந்த அரசரும் புலவரும் 5-ம் நூற்றாண்டில்--அஃதாவது இற்றைக்கு 1450-வருஷங்கட்குமுன்--விளங்கியவரென்ற கொள்கையையே, பற்பல காரணங்களும் வற்புறுத்துதல் கண்டுகொள்க. ___________ ----------- *Ibid,See-List of the Kings and Suluvamsa †இவன், பொதியின்மலையும் (அகம்.321) அறந்தை என்னும் ஊரும் (அகம்.196) உடையவன்; அன்னி என்பவனைப் போரில் அழித்தவன் (அகம் 45,126,145); அவ்வன்னிமகன் மிஞிலியால் அழிவுற்றவன் (அகம்.196,262). இனி, ததியன் என்ற பெயரும் பழையன்மாறன் என்ற பெயரும் கி.மு. முதனூற்றாண்டில் இலங்கைவென்ற தமிழரசர் சிலருக்கும் மகாவமிசத்திற் காணப்படுகின்றன. இவர்கள், செங்குட்டுவன் காலத்திருந்த திதியன் பழையன் இவர்களுக்கு முன்னோராதல் வேண்டும். இவர்களை நம் சேரனோடு ஒட்டிக்கூறுவதில் தடைகள் பலவுள. -----------------------------------------------------------        அதிகாரம் - 14   முடிவுரை. --------------- மேலே விரிவாக எழுதிப்போந் த பல அதிகாரங்களாலும், சேரன்-செங்குட்டுவனது பெருவாழ்வின் வரலாறு ஒருவாறு வெளியாகும்.இச்சேரர்பெருமானது பெருமையை நோக்குமிடத்து, இவனையே நாம் "தென்னாட்டு அசோகன்" என்றே சொல்லல் தகும்.அறிவாற்றல்களால் மட்டுமன்றி,சரித்திர உண்மையாலும் எவ்வாறு அசோகச்சக்கரவர்த்தி வடநாட்டில் மதிக்கப்பெற்றவனோ,அவ்வாறே,தென்னாட்டின் பழைமைக் குற்றவருள் செங்குட்டுவனே சிறந்தோனாவன்.சங்கச் செய்யுள்களில் எத்தனையோ அரசர் செய்திகள் கூறப்பட்டிருப்பினும், இச்சேரன்போன்ற அத்துணைப் பெருமையுடையவராக அன்னோர் அறியப்படாததோடு, இவ்வளவாக அவர்  வரலாறுகளை ஆராய்ச்சி செய்வற்கும் இடமில்லை. இங்ஙனம்,"புலவர் பாடும் புகழுடையோ"னாய், வீரம் நியாயம் தியாக முதலியவற்றால் விளங்கிநின்ற இச்சேரனுக்குப்பின், இவன் மகன் குட்டுவஞ்சேரலே பட்டமெய்தியவானாதல்  வேண்டும். ஆனால், செங்குட்டுவன் பரம்பரையோர், அவனுக்குப்பின் தம் பழைய பெருமையினின்று சுருங்கி விட்டவராகவே தோற்றுகின்றனர். இவர் வலிசுருங்கியகாலத்தே சோழபாண்டியரும்,அந்நிய அரசராகிய பல்லவர் கங்கர்  போன்றவரும் தென்னாட்டில் மாறிமாறி ஆதிக்கம் பெறுவாராயினர். இதனால், சேரவரசர் தம் புராதன ராஜஸ்தலமான வஞ்சிமாநகரை நெகிழவிட்டு. இயற்கையரண்பெற்ற மலைநாட்டுள்ள கொடுங்கோளூரை (Cranganore), தங்கள் தலைநகராகக் கொள்ளலாயினர்.  அவ்விராஜதானியில் இருந்து மலைநாடாண்ட சேரமான்கள் பலராவர். இவருள்ளே, திருமாலடியாராகிய குலசேகர ஆழ்வாரையும், சிவனடியாராகிய சேரமான் பெருமாள் நாயனாரையும் நம்மவரெல்லாம் நன்கறிவர். இத்தகைய தனித்தமிழ் வேந்தர்களது ஆட்சியிடமாய்ச் செந்தமிழ்ப்பயிர் செழித்துவளர்ந்த அம்மலை நாடானது பிற்காலத்தின் மாறியநிலையை என்னென்பேம்! அச்சேரநாடு சில நூற்றாண்டுக்குள் பாஷையாலும் நடையுடைபாவனைகளாலும் வேறுபட்ட ஒரு தனித்தேசம்போல் இப்போது நிற்பது அதிசயமேயன்றோ? இவ்வாறாயினும், பழைய சேரவரசர் கிளைகள்மட்டும் இன்றும் அந்நாடாட்சி செய்து வருகின்றன. சோழபாண்டிய வமிசங்கள் மறைந்துபோய்ப் பல நூற்றாண்டுகளாயினும், சேரமரபினர்சிலர் திருவனந்தபுரம் திருசூர்களைத் தலைநகர்களாகக் கொண்டு அரசியல் புரிந்து வருவது, தென்னாடுசெய்த பாக்கியமே என்னலாம். இவர்களுள், திருவனந்தபுரவரசர் வஞ்சிபாலர் என்ற பட்டப்பெயரால் இன்றும் வழங்கப்பெற்று வருதல் இங்கே குறிப்பிடத்தக்கது. இதனால், இவ்வேந்தர் வஞ்சிமாநகரையே தம் பூர்வராஜஸதலமாகக் கொண்டிருந்தவர் என்பது நன்கு விளங்கும். இவ்வமிசத்தரசரும், இவரால் ஆளப்படும் குடிகளும் பாஷை நடையுடை பாவனைகளால் வேற்று நாட்டார் போல இக்காலத்தில் மாறிநின்றனராயினும், பழைய தமிழ் வழக்க ஒழுக்கங்களையும், சொற்பொருண் மரபுகளையும் அவரிடத்துப்போலச் செந்தமிழ்நாட்டு மக்களுள்ளும் நாம் காணமுடியாவென்றே சொல்லலாம். அவற்றையெல்லாம் ஈண்டு விரிப்பிற் பெருகும். முற்றும். ________