[] [] சிறுகதை தொகுப்புகள்                                  சுழல் களந்தை பீர்முகமது                                     நூல் : சுழல்  ஆசிரியர் : களந்தை பீர்முகம்மது  வகை : சிறுகதைகள்     அட்டைப்படம் மற்றும்  மின்னூலாக்கம் :   அ.ஷேக் அலாவுதீன்     தமிழ் இ சர்வீஸ், tamileservice17@gmail.com     வெளியீடு :  FreeTamilEbooks.com     உரிமை :  CC-BY-SA                                     நிலா புக்ஸ்   "உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழ் சமுதாயத்திற்கு தமிழ் இலக்கியங்களை படிக்க வாய்ப்பளிப்பதும், வளரும் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவதும், வருங்கால சந்ததிகளுக்கு தமிழ் இலக்கிய பொக்கிஷங்களை பாதுகாத்துத் தருவதுமே 'நிலா புக்ஸ்' -ன் இலட்சியம்"   TERMS OF USE: - You may not sell, exchange, distribute or otherwise transfer this book in any form what so ever. - You may make one (1) printed copy of this book for your personal use. You may not sell, exchange, distribute or otherwise transfer this copy to any other person for any reason. - You may make one (1) electronic copy each of this book for archival purposes. Except for the single (1) permitted print copy and the single (1) archival copy, you may not make any other copies of this book in whole or in part in any form. ****** உபயோக நிபந்தனைகள்: -  நீங்கள் இந்த நூலை எந்த வடிவத்திலும் விற்கவோ, பண்ட மாற்றம் அல்லது விநியோகம் செய்யவோ அல்லது வேறு எந்த விதத்தில் கைம்மாற்றுவதோ கூடாது. - நீங்கள் இந்த நூலின் ஒரு (1) பிரதியை உங்கள் சொந்த உபயோகத்துக்கு அச்சிட்டுக் கொள்ளலாம். அந்த அச்சுப்பிரதியை எந்த ஒரு நபருக்கும் எக்காரணம் கொண்டும் விற்கவோ, பண்ட மாற்றம் அல்லது விநியோகம் செய்யவோ அல்லது வேறு விதத்தில் கைமாற்றுவதோ கூடாது. - நீங்கள் இந்நூலின் ஒரு (1) மின் பிரதியை ஆவணத்திற்காக உருவாக்கிக் கொள்ளலாம். ஒரே ஒரு (1) அனுமதிக்கப்பட்ட அச்சுப் பிரதியையும் ஒரே ஒரு (1) ஆவணப் பிரதியையும் தவிர இந்நூலின் முழுதையுமோ அல்லது பாகத்தையோ எவ்விதத்திலும் வேறு பிரதிகள் எதுவும் எடுக்கக்கூடாது.   ******             பொருளடக்கம் ஆசிரியர் குறிப்பு 6  கனவுகள் 8  ஒரு கனவு அரங்கேறிய பின்னும் 18  அன்றிரவு - 22  சுழல் 24  உதிரி வாழ்க்கை 29  சந்திரா 33  டாக்டர் ரேணுகா 40  சிறையிலிருந்த நிலா 46  பணிவன்பு 54  மீட்சி 59  ஆயத்தமாய் இருந்தவர்கள் 65  சாத்தியமானது 72  எப்போதும் உள்ள ஞாபகம் 77  இதர அம்சங்கள் 83  வேற்றாள் 92  வலை 98  மனதின் பாஷைகள் 105  அப்பாற்பட்ட உலகம் 110  முகவரி வேண்டாத முகங்கள் 114                    ஆசிரியர் குறிப்பு   திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டைச் சேர்ந்தவர் களந்தை பீர் முகம்மது. 30 ஆண்டுகளாக கதைகளும், கட்டுரைகளும் எழுதி வருகிறார். இந்தியா டுடே , காலச்சுவடு , குமுதம், அவள் விகடன், தீராநதி, ஸன்டே இந்தியன், தாமரை, செம்மலர், கணையாழி, புதிய பார்வை, ஓம் சக்தி, ஜன சக்தி, தீக்கதிர், கல்கி, தமிழர் கண்ணோட்டம் போன்ற பத்திரிக்கைகளில் இவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் வழியாக உருவான படைப்பாளி இவர். காலச்சுவடு மாத இதழில் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருக்கின்றார். கலை இலக்கிய பெருமன்றம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இலக்கிய சிந்தனை, திருப்பூர் தமிழ்ச்சங்கம், இஸ்லாமிய இலக்கியக் கழகம் போன்ற அமைப்புகளில் தன்னுடைய படைப்புகளுக்காக பரிசுகளைப் பெற்றிருக்கிறார். கோவை லில்லி தேவசிகாமணி நினைவு பரிசு, ஜோதி விநாயகம் நினைவுப் பரிசுகளையும் பெற்ற பெருமை இவருக்கு உண்டு. 60க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.     சமர்ப்பணம் ஈரமான நெஞ்சத்துடன் வாப்பாவின் மறைவுக்குப் பிறகு அந்த ஸ்தானத்தில் இருந்து எங்களை ஆளாக்கிய அன்பு மச்சான் MMU சாகுல் ஹமீது அவர்களுக்கும் உறுதுணை புரிந்த அன்பு காக்கா M.M. பீர் முகம்மது அவர்களுக்கும் சில விநாடிகள் மட்டும் ... நன்றிகளுக்காக!   -   தொகுப்பாக்கும் முயற்சியில் எனக்குப் பேருதவி புரிந்த அன்பு நண்பர் எஸ். சங்கர  நாராயணன் - கதைகளை வெளியிட்டத் தாமரை, செம்மலர், கணையாழி, கவிதாசரண், சதங்கை, சிந்தனை , குமுதம், குங்குமம், இலக்கு, வைகறை, மற்றும் தக்கலை பீரப்பா கல்வி மையம். - இன்னும் கடுமையாக விமர்சித்தும், வெகுவாகப் பாராட்டியும் வழிப்படுத்திய அன்பு நெஞ்சங்கள். -  இந்த தொகுப்பை வெளிக் கொண்டு வரும் 'மதி நிலையம். -  பிழை திருத்தி உதவிய 'ஹைகூ’ முருகேஷ் அனைவருக்குமாக என்றென்றுமான நன்றிகள்! - களந்தை பீர்முகம்மது       கனவுகள்   அந்தக் கடற்கரையோரத்து நடுத்தர நகரம். மேற்கே தன்னுடைய பகலைத் தொலைத்துக் கொண்டிருந்தது. கதிரவனின் ஒன்றிரண்டு கிரணங்கள் மட்டுமே இன்னும் விடைபெற்றுப் போக வேண்டியிருந்தது. ஊரின் வடக்கு ஒதுக்குப்புறத்தில் நாலைந்து பேர் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் திட்டமெல்லாம் இன்னும் சிறிது நேரத்தில் திருப்திகரமாக நிறைவு பெற்ற விடும் (என்ற தன்னம்பிக்கை). ஆள் அரவம் எதிர்பார்த்தபடி அதிகமாய் இல்லையென்பதாலும் எப்போதாவது மட்டுமே சில வாகனங்கள் அடுத்துள்ள சாலையில் சென்று கொண்டிருந்தன என்பதாலும் அவர்கள் மகிழ்ச்சியுடனேயே இருந்தார்கள் என்பதும் அவர்களின் முகபாவனைகள் மூலம் தெரிந்தன. இருள் கவ்வத் தொடங்கி மேலும், மேலும் அதன் ஆதிக்கம் விரிந்தது. அதில் ஒருவன் மட்டும் வேகமாய் ஒரு சைக்கிளில் ஏறி எங்கோ சென்றான். சிறிது நேரத்தில் ஓர் அம்பாசிடர் அவ்விடமாய் வந்து நின்றது. டிரைவர் இறங்கினார். கடல் அலைகளின் இரைச்சல் உக்கிரமாய்க் கேட்கத் துவங்கியது. இன்னும் கூட அவர்கள் பரபரப்படையாமல் அமைதியாகவே இருந்தனர். ஒருவன் சுகமாக விசிலடித்தபடியே பாடத் தொடங்கினான். அதுவும் அச்சமயத்தில் ரம்மியமாக இருந்தது. அந்தக் குஷியில் அடுத்தவன் பற்ற வைத்த சிகரெட்டை நான்கு பேரும் பகிர்ந்து புகை வளையத்தை வானில் சுழல விட்டனர். ஒவ்வொருத்தரின் முகமும் மறைய ஆரம்பித்த நேரம். பேச்சுக் குரலில் மட்டுமே இது இன்னார் என்று அடையாளம் கண்டு கொள்ளக் கூடியதாயிருந்தது. அவர்கள் முன்னே சலங்கை ஒலிக்க அமைதியாக வந்து நின்றாள் ஸாஹிரா பேகம். கையில் சற்றே பெரிய சூட்கேஸ். தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நிற்கிறாளோ? அவள் பக்கத்தில் நின்றதும் அடுத்த வீட்டு ராமசாமி ஆச்சாரி மகள் முத்துலட்சுமி. உடன் நால்வரும் சுறுசுறுப்பாயினர். சின்னத்துரை ஸாஹிராவின் கையிலிருந்த சூட்கேஸைப் பத்திரமாக வாங்கிக் கொண்டான். டிரைவர் பெருமாள் ஓடோடிப் போய் தனது டாக்ஸியை ஸ்டார்ட் செய்தான். கூட இருந்த தேவராஜும், ஆறுமுகமும் பாதுகாப்பாய் அங்குமிங்கும் திருட்டு முழியோடு பார்க்க ஆரம்பித்தனர். ஏனோ இருவருக்கும் இப்போது தங்களையறியாமலேயே கை, கால் உதறியது. ஆனால் சின்னத்துரை படபடப்போ, பயமோ இல்லாமல் செயல் பட்டான்.   'ஸாஹிரா! கரெக்ட் டயத்துக்கு வந்துட்டியே! என்று பரவசமாய்ச் சொன்னான் சின்னதுரை.   "சரி தான்! ஆனா இப்போ பேசிக்கிட்டிருக்குறதுக்கு நேரமில்லை. இன்னும் கொஞ்சம் நேரம் போனா எல்லாரும் தேட ஆரம்பிச்சுடுவாங்க. அதுக்கு முன்னால போயிடணும். அதோட தொழுதுட்டு வாப்பா வரக் கூடிய நேரமாச்சு. அவங்களுக்கு நான் இல்லாம் எதுவும் நடக்காது. அதனால் சீக்கிரமா கிளம்புங்க!” என்றாள் ஸாஹிரா.   சூட்கேஸ் அம்பாசிடரில் இடம் பிடித்துக் கொண்டது. ஸாஹிராவைப் பின் பக்கமாக ஏறச் சொன்னான் சின்னத்துரை. பக்கத்திலேயே தானும் அமர்ந்து கொண்டான். இருவர் மூச்சும் உரச ஆரம்பித்தது. ஆறுமுகமும், தேவராஜும் முன்னால் ஏறிக் கொண்டனர். பெருமாள் ஆணை கிடைத்ததும் பறக்கத் தயாராயிருந்தான். வெளியே நின்று கொண்டிருந்த முத்துலட்சுமியின் கைகளை ஸாஹிரா பற்றினாள்; தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.   "போய்ட்டு வர்றேன் லட்சுமி! உன்னை ஆயுசுள்ள வரைக்கும் நான் மறக்க மாட்டேன்டீ! யாரு எதக் கேட்டாலும் கல்லோ, மரமோன்னு பேசாமயே நின்னு சாதிச்சுடு. என்னை மறந்துட மாட்டீயே?”   "சீச்சீ! மறக்கற மாதிரியா காரியம் நடக்குது. போய்ட்டு வா. அல்லா உங்களைக் காப்பாத்தட்டும்!" என்று விடை கூறினாள் முத்துலட்சுமி.   "ம்! புறப்படுங்க!” - ஆணையிட்டாள் ஸாஹிரா.   கார் நகர்ந்தது. இது இருளில் ஒடுங்கிக் கிடந்த சாலையைத் தனது வெளிச்சக் கைகளால் பற்றிப் பிடித்து வேக வேகமாக ஊர்ந்தது. யாரும் பார்க்கவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்ட முத்துலட்சுமி அந்த நிமிசமே பறந்தோடினாள். அடுத்த வீட்டில் இன்னும் சில நேரத்தில் நடக்கப் போகும் களேபரத்தை எண்ணிப் பார்த்த அவளுக்கு சற்று சிரிப்பும் கூடவே அச்சமும் சேர்ந்து வந்தது.   மெயின் ரோட்டைக் கடந்து கொண்டிருந்தது கார். நான்கு பக்கக் கண்ணாடிகளும் உயர்த்தி விடப்பட்டிருந்தன. ஸாஹிரா வாப்பா மொன்னா முகம்மது தனது தொழுகையை முடித்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருப்பதை இவள் உள்ளிருந்தே பார்த்தாள். இன்னும் சிறிது நேரத்தில் அவர் 'எல்லோரும் கூடவே இருந்தும் அவர்கள் இல்லவே இல்லாதது தான் ஓர் அனாதை நிலையை அடையப் போகிறாரோ என்பதை எண்ணிப் பார்த்தாள் ஸாஹிரா . தன்னையும் அறியாமலேயே அழ ஆரம்பித்தன அவள் கண்கள். சின்னத்துரையின் கைகளால் அந்தக் கண்ணீர் துடைக்கப்பட்டது. அவள் வாப்பா கடந்து போனதை அவனும் பார்த்தான். அவனுக்கும் ஒரு மாதிரியான எண்ணங்கள். துயரை அகற்ற அவளின் கன்னங்களில் மெல்லவே இதழ்களால் ஒற்றிக் கொண்டான்.   அதே சமயத்தில், வடக்குத் திசையை நோக்கி மைல்களை ஏப்பம் விட்ட வண்ணம் வண்டி பறக்கத் தொடங்கியிருந்தது.   ஒரு மணி நேரமே ஆகியிருந்தது. ஒரு சேரிக்குள் புகுந்த கார் தெருவின் மையத்திலிருந்த ஒரு ஓடு வீட்டின் முன் வந்து நின்றது. அது வந்ததும் அதன் பின்னே குழந்தைகள் எல்லாம் அரக்கப் பரக்க ஓடி வந்தன. 'ஹே ஹே' என்று காணாததைக் கண்டதாகக் கூச்சல் இட்டன. தெருவில் திண்ணையில் உட்கார்ந்து பாடு பேசிக் கொண்டிருந்தவர்களெல்லாம் எழுந்து என்னவோ ஏதோ என்று விழியுருள ஆரம்பித்தனர். சிலர் வீட்டருகேயே வந்தனர். தண்ணீர் அடித்துக் கொண்டிருந்த பெண்களெல்லாம் அதை அப்புறமாய்க் கவனித்துக் கொள்ளலாம் என்று லீவு விட்டு வந்தனர். சுற்றிலும் ஒரே கூட்டம். தெரு விளக்குத் தன் பங்குக்கு ஒளியை வீசியது. அவசரம் தாளாமல் சிலர் எட்டிப் பார்த்தனர். எதுவும் தெரியவில்லை.   சின்னத்துரைதான் முதலில் கதவைத் திறந்தான். சூட்கேஸை எடுத்தான். உள்ளே ஒரு பெண் இருக்கிறாள் என்பதை இப்போது எல்லோரும் கண்டு கொள்ள முடிந்தது. அவர்களுக்கோ ஆச்சரியமோ ஆச்சரியம்.   "ஸாஹிரா! வெளியே வா. எல்லாம் நம்ம ஜனங்க தான்!” என்றான் சின்னதுரை. அவள் கால் வைத்தாள். அடடா! என்ன அற்புதமாக அவள் கால்கள் பூமியில் பதிந்தன. பதிந்த கால்கள் மேலே நடக்காமல் நின்றன. பெரியவர்களெல்லாம் கூட கண்களை இமைக்க மறந்தனர். நேர்த்தியான அழகு ஒன்று தங்களின் நேரில் வந்ததும் அவர்கள் பட்ட பாடு ஆனந்தம்.   ஒருவர் சொன்னார், "இந்தக் கிளி எப்படிவே சின்னத்துரையக் கொத்திடுச்சு?" "எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாதிரும். அதுவா கொத்தியிருக்கா இல்லே இவன் தான் கொத்தியிருக்காணாங்குறதே இனிமே தான் தெரியும்!” என்று முன்னவர் காதில் முணுமுணுத்தார் பின்னவர்.   சின்னத்துரையின் அப்பா பிச்சை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார். வீட்டு வாசலில் நின்று தன் கைகளைக் கிள்ளிப் பார்த்தார். 'சுரீர்' என்ற து.   பெருமாள் பின்னால் இறங்கியதும் அந்த ஊரிலுள்ள மற்றவர்கட்கும் ஆச்சரியம். அவன் முன்பு இந்த ஊரில் வசித்தவன் என்பதே காரணம். ஆறுமுகமும், தேவராஜும் அப்பறமாய் இறங்கினர். அவர்களையும் கீழ் மேலாகப் பார்த்தது ஊர்.   "பெருமாளு! என்ன நடந்துச்சு முதல்ல அதச் சொல்லு!” என்று ஓடி வந்து அவர்களை அண்டி நின்று கேட்டார் பிச்சை. "அவசரப்படாதீங்க! சாவகாசமாய்ச் சொல்லுறேன். நாம் இப்ப வீட்டுக்குள்ளாரப் போவோம்.” என்றான் பெருமாள்.   உள்ளே வந்தவங்களைப் பாயில் அமரச் சொன்னாள் சின்னத்துரையின் தாய். ஒன்றுமே விளங்காமல் - அதே சமயத்தில் அந்தப் பெண்ணின் அழகை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.   மூணே முக்காலடி குடிசைக்குள், வந்தவர்கள் ஒடுங்கினார்கள். ஊர் ஜனம் ஊமை ஜனமாய் வெளியே நின்று கொண்டிருந்தது.   பிச்சை மறுபடியும் படபடப்புடன் கேட்டார், "ஏடா கூடமா எதுவும் நடந்துடலியே?” என்று.   "அப்படியெல்லாம் ஒண்ணும் நடந்துடலையா. அந்தப் பொண்ணு நம்ப பக்கத்து ஊரு தான். மொத்தமே நாலஞ்சு சாய்புமாறு குடும்பம் தான் அந்த ஊரிலேயே இருக்குது. நம்ம சின்னத்துரை முதல்ல இவங்களோட பலசரக்குக் கடையில் தான் வேலை பாத்துக்கிட்டிருந்தான். சாமான் எடுக்கப் போகவும் வரவுமா இருந்ததுனால அந்தப் பொண்ணுக்கும், இவனுக்கும் பழக்கம் உண்டாயிடுச்சு. விசயம் ஒரு நாள் அவங்க வீட்டுக்குத் தெரிஞ்சதும் இவன் கடையிலேர்ந்து விலக்கிட்டாங்க. அப்புறமா இவங்க இரண்டு பேருமே மூணாவது நபரை வச்சிக்கிட்டுத் தான் கடிதத் தொடர்பெல்லாம் நடத்திக்கிட்டாங்க. இன்னும் நாலஞ்சு நாள்ல இவளப் பொண்ணு பாக்குறதுக்காக மாப்ள வூட்டுக்காரங்க வராங்க. இவளும் வாழ்ந்தா சின்னத்துரையோட தான் வாழுவேன்னு பிடிவாதமா நிக்குறா அவதான் தப்பிச்சு வர்றதுக்கு ஐடியா கொடுத்தார். சின்னத்துரையும் சம்மதிச்சதுனாலே அவசரம், அவசரமா தப்பி வந்துட்டாங்க. நானும் என்னோட காருலேயே அவங்களைப் பத்திரமா கொண்டு வந்து சேர்த்துட்டேன். நான்தான் இவங்களுக்கு ஹெல்ப் பண்ணியிருக்கேன்னு தெரிஞ்சா சாகிபுமாறுங்க என் குடலைப் பிடுங்கிடுவாங்க. அதனால நானும் சரி, நீங்களும் சரி இனிமே கவனமா இருந்துக்கிடணும்.” என்று பேசி முடித்தான் பெருமாள்.   "பெரிய இடத்து பொல்லாப்பெல்லாம் சம்பாரிச்சுட்டு வந்து நிக்கறீங்களே; அவங்களுக்குத் தெரிஞ்சா இங்குள்ள நம்ம கதியெல்லாம் என்ன ஆவும்னு யோசிச்சுப் பாத்தீங்களா?”   “இதச் செய்யலேன்னா ஸாஹிராங்குற இந்தப் பொண்ணு செத்துப் போயிடுவா!'   "சாவட்டும்! சந்தோசமா சாவட்டும்! அதப்பத்தி நமக்கென்ன? நம்ம உசிருதாய்யா நமக்கு முக்கியம். நாளக்கே இவங்க ஏதாவது எசகுபிசகா நடந்தா நம்ம ஊருக்காரங்க என்னையக் கொன்னு போட மாட்டாங்களா?”   "அப்படில்லாம் நடக்காதுப்பா! அனாவசியமா பயப்படாதீங்க!” என்று இடைமறித்துச் சொன்னான் சின்னதுரை.   "அடி செருப்பாலே! படுக்காளிப் பயலே - நீ இதுவும் பேசுவே இதுக்கு மேலேயும் பேசுவேலே!” என்று கூறிய படி எழுந்து சின்னத்துரையைப் பிடித்து இழுத்து ஓங்கி, ஓங்கி அடித்தார் பிச்சை.   "ஐயோ! அவர அடிக்காதீங்க!” என்றபடி சின்னத்துரையின் மேல் பற்றிப் படர்ந்தது ஸாஹிராக் கொடி. ****   இரண்டொரு நாளில் சேரி வாழ்க்கையில் தன்னை ஐக்கியப்படுத்த முயன்றாள் ஸாஹிரா . வருவோரும், போவோரும் அவள் அழகைப் பருகத் தவறுவதில்லை. ஆயினும் ஊர்ப்புள்ளிகளில் பலர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருந்தனர் - எந்த நிமிஷமும் எந்த ஆபத்தும் வரலாம்.   தெருவிலுள்ள பம்பில் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தாள் ஸாஹிரா. 'சர்‘ரென்று பக்கத்தில் ஜீப் வந்து நின்றதும் பார்த்தாள். குடத்தைப் போட்டு விட்டு வேகமாய் ஓடினாள். பின்னாலேயே அவளது அண்ணன் உமர் ஜவஹரும் அவன் கூட்டாளிகளான பொன்னையா, சுப்பு, தாஜுதீன், ஜஹாங்கீர், பாபு முதலானோரும் ஓடிவந்தனர். அவள் குடிசைக்குள் சிட்டாய் பறந்து தாழ் போட்டாள். வேகமாய் அந்தக் குடிசையை அடைந்த ஆறு பேரும் கத்தினார்கள்; கதவை மடமடவென்று தட்டினார்கள்.   "வம்பை விலைக்கு வாங்கிக் கொண்ட"ஜனங்கள் எல்லாம் சின்னதுரை வீட்டின் முன் குழுமினர். சில பெரியவர்கள் அவர்களை அணுகி, "ஐயா, முதலாளிங்களா! என்ன விசயம்னு சொல்லுங்க!' என்றனர்.   "என்னய்யா ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாதவங்க மாதிரி கேக்குறீங்க. ஊருக்குள்ள ஒரு பெண்ணை ஒருத்தன் கடத்திக்கிட்டு வந்திருக்கான். என்ன ஏதுன்னு யாராவது விசாரிச்சீங்களாய்யா?” என்று சீறினான் உமர் ஜவஹர். "கேட்டோம்யா கேட்டோம்! அந்தப் பொண்ணு தான் அவனோடு தான் வாழ்வேன்; இல்லேன்னா செத்துப் போயிடுவேன்னு சொல்லிக்கிட்டு ஓடி வந்துடிச்சாம்."   "ஆமா! அவன் பெரிய சீமா ஊட்டுப் புள்ள. அதனால் தான் அவ அவனவுட்டா வேற நாதியே கிடையாதுன்னு ஓடி வந்திட்டாளாக்கும்?” என்று பாபு எகத்தாளமாய்க் கேட்டான்.   "அவன் கெட்ட கேட்டுக்கு அவனோட ஒருத்தி ஓடி வேற வரளாக்கும்? நல்லா இருக்குய்யா நீங்க பேசுறது” என்று தாஜீதீனும் களத்தில் இறங்கினான்.   "கோபப்படாதீங்க முதலாளி! சின்னஞ்சிறுசுக ஏதோ தப்புத் தண்டவா நடந்திடுச்சுங்களா, நீங்க தான் பொறுத்துக்கணும்” என்றார் ஊர்ப் பெரியவர் முத்தன்.   "என்னய்யா சின்னஞ்சிறுசுக? ஒரு பெண்ணையே ராவணன் மாதிரி தூக்கிட்டு வந்திருக்கான். இதாய்ய சின்ன விஷயம்?” என்று கேள்வி கேட்டான் உமர் ஜவஹர்.   "பொறுங்க! அவங்களையே கூப்பிட்டு விசாரிப்போம்” என்றபடி முத்தன் கதவைத் தட்டினார். சின்னத்துரை கதவைத் திறந்தான். அவனுக்குப் பக்கத்தில் பயரேகைகள் கண்களில் ஓட நின்று கொண்டு இருந்தாள் சின்னத்துரையின் தாய். "இந்த நேரம் பாத்து அவரு காட்டுக்குப் போயிட்டாரே! ”   "வெளியே வாடா ராஸ்கல்! உன்னை ஒரு கை பாக்குறேன்!” என்று முஷ்டியை ஓங்கினான் உமர் ஜவஹர்.   "முதலாளி நில்லுங்க! அவங்க கிட்டேயும் விசாரிச்சுக்கிடுவோம். ஏம்ப்பா சின்னத்துரை - அந்தப் பொண்ணைக் கடத்திக்கிட்டு வந்துட்டேன்னு இவங்க எல்லாருமா சேர்ந்து சொல்றாங்களே! அது உண்மையா?” என்று வினவினான் முத்தன்.   "இல்லேங்க! அவ தான் என்னைக் கூட்டிட்டுப் போன்னு சொன்னா.   "பொய்யி! பொய்யி! டேய் எவ்வளவு தைரியமா பொய் பேசுறே. உன் நாக்கு அழுகிப் போயிடும்டா!” என்று உறுமினான் உமர் ஜவஹர்.   "வேணும்ணா ஒங்க தங்கச்சிய நீங்களே கேட்டுப் பாருங்க!"   "அந்தச் சிறுக்கிமவள் வெளியே வரச்சொல்லு!"   "ஸாஹிரா! ஒங்க அண்ணன் கூப்புடறாரு. வெளியே வந்து நீயே எல்லாத்தையும் சொல்லு!" அவள் மெல்ல வந்தாள். மானின் விழிகள் மருண்டோடின. தன்னைச் சுதாரித்துக் கொண்டு தன் கால்களை அழுத்தமாக ஊன்றினாள். பொங்கி வந்த அனைத்து ஆத்திரங்களாலும் உமர் ஜவஹர் அவளை அங்கேயே கொன்று விடவும் சித்தமாயிருந்தான். எனினும் தன்னைக் கண்டு பயந்து அவள் வழிக்கு வந்து விட மாட்டாளோ? தாஜுதீன் அவள் முன்னால் போய் நின்றான். “இந்தாப் பாரும்மா! ஸாஹிரா! உன்ன யாரும் எதுவும் செய்ய முடியாது. இதுக்குத் தான் நாங்கள்லாம் வந்துட்டோமே! இன்னாபாரு பாபு, பொன்னையா, சுப்பு, ஜஹாங்கீர்னு எல்லோருமே வந்துருக்கோம். அதனால நீ பயப்படாம உண்மையைச் சொல்லு. தப்பு தண்டாவா எது நடந்திருந்தாலும் நாங்க மன்னிச்சுடறோம்; வெளியே எதுவுமே பரவாமல் பாத்துக்கிடறோம்.”   "இப்ப நான் என்ன சொல்லணும்?” - ஸாஹிரா.   "சின்னத்துரை தான் என்னைக் கடத்திட்டு வந்தான்னி இவங்க முன்னால சொல்லிடு. "இந்தச் சேரிக்கு நான் தான் சின்னத்துரையைக் கடத்திக்கிட்டு வந்தேன். போதுமா?”   புலிப் போலப் பாய்ந்தான் உமர் ஜவஹர். அடிபட்டுக் கீழே விழுந்த வேகத்தில் ஸாஹிராவின் வாயிலிருந்து ரத்தம் ஒழுகியது. கண்களின் பக்கத்தில் அடிபட்டு வேகமாக வீங்க ஆரம்பித்தது. எனினும் அழாமல் எழுந்திருக்க முயன்றாள். ஓடோடிப் போய் ஜஹாங்கீர் அவளைத் தூக்க முயன்றான். சின்னத்துரையும் சேர்ந்து தூக்கினான்.   "நாயே! கையை எடுடா. நீ என்னடா அவள தூக்குறது?” என்று மேலும் கோபமாய்க் கத்தினான் உமர் ஜவஹர்.   "நான் தொட்டு தாலி கட்டப் போற பொண்டாட்டி அவ.”   சின்னத்துரை இவ்வாறு சொல்லியதும் உமர் ஜவஹரின் நண்பர்கள் அவனை அடிக்கப் பாய்ந்தார்கள்.   ஆனால் அவ்வாறு அசம்பாவிதமாக எதுவும் நடந்துவிடா வண்ணம் அங்கு கூடியிருந்த ஜனங்கள் சுற்றி வளைத்தார்கள்.   "எங்க கண்ணு முன்னாலேயே எங்க ஊருக்காரவுங்கள் அடிச்சா நாங்க எப்படி பொறுத்துக் கொள்ளுவோம்” என்று முத்தன் கோபப்பட்டார்.   அப்போது ரவிராஜ் - அந்தச் சேரிப் பள்ளிக்கூடத்து வாத்தியார் - முன் வந்து சமாதானம் செய்தார். “யாரும் கோபப்படாதீங்க - நான் பேசிப் பாக்குறேன்.”   பின்னர் ரவிராஜ் அவர்களைனைவரையும் அழைத்துப் பேசினார். கூடவே முத்தனும் இருந்தார்.   அந்த ஊர் ஜனம் ஆத்திரத்தில் இருக்கின்றதை ஜகாங்கீரும், பாபுவும் நன்கு உணர்ந்தனர். "சரி சார் ! ஸாஹிரா கூட நாங்க நினைச்சு வந்த மாதிரி பேசல. அவ விரும்பியே வந்திருக்குறதா தெரியுது. ரெண்டு, மூணு ராத்திரி அவளும் அவனும் அந்தக் குடிசையில் தான் தங்கியிருக்காங்க. அதனால அவங்களுக்குள்ள எதுவும் நடந்திருக்கலாம். பேசாம சின்னத்துரையை எங்க மதத்துல சேத்துக்கிடறோம். அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழுறதுக்கு அந்த ஒண்ணு தான் வழியாத் தெரியுது.”   "டேய் ஜஹாங்கீரு! என் தங்கச்சி தலைவிதியை நீ என்னடா நிர்ணயம் பண்ணுறது? உனக்கு எவண்டா அதிகாரம் தந்தான்? கன்னாபின்னான்னு என்னென்னலாமோ வாய்க்கு வந்த படி பேசுறே! முதல்ல உன் மூளையைச் சலவைக்குப் போடு!”   "உமரு கோபப்படாதே. முதல்ல இவங்க ரெண்டு பேரையும் நம்ம இடத்துக்குக் கூட்டிகிட்டு போகணும். அப்பதான் நாம நெனச்ச மாதிரி எல்லாக் காரியத்தையும் கச்சிதமா நடத்த முடியும். இதுக்கா வேண்டித்தான் ஜஹாங்கீரு இப்படிப் பேசுறான்னு நான் நெனக்கிறேன்" என்று உமர் ஜவஹரின் காதைக் கடித்தான் பொன்னையா. அது தான் உண்மை போலும் என்று நம்பிய உமர் ஜவஹர் ரவிராஜிடம் கூறினான்.   "இத பாருங்க சார்! நாங்க முதல்லே இவங்க ரெண்டு பேரையும் எங்க வூட்டுக்குக் கூட்டிட்டுப் போறோம். அங்க வச்சு சின்னத்துரையை எங்க மதத்துல சேத்துக்கிடறோம். அப்புறம் ஒரு நல்ல நாளா பாத்து முறைப்படி கல்யாணம் நடத்திக்கிடறோம். ஒங்களுக்குச் சம்மதம் தானே!”   ரவிராஜ் வாத்தியார் இதனை அங்கு கூடியிருந்த சின்னத்துரை, ஸாஹிரா மற்றும் அனைவரிடமும் கூறினார். யாரும் ஆட்சேபம் எழுப்பிக் கொள்ளவில்லை.   சின்னத்துரையும், ஸாஹிராவும் சாமான்களை எடுத்துக் கொண்டு ஜீப்பில் ஏறினர். மற்றவர்களும் ஏறிக் கொள்ள வந்த வழியை ஞாபகம் வைத்துத் திரும்பச் சென்றது ஜீப்.   நேராக ஊர் வந்து சேர்ந்த ஜீப் போலீஸ் ஸ்டேஷனின் முன்போய் நின்றது. சின்னத்துரையும், ஸாஹிராவும் உள்ளூர அச்சப்பட்டனர். இத்தனை நேர மகிழ்ச்சியையும் இந்த ஒரு கனம் துன்பமாக ஆக்கிவிட்டது போல் இருந்தது.   “ம்ம்! இறங்குங்க” என்று கடுகடுப்பாய்ச் சொன்னான் உமர் ஜவஹர்.   "அண்ணே! வீட்டுக்குப் போக வேண்டாமா?” என்று கேட்டாள் ஸாஹிரா.   "முதல்ல மாமியார் வீடு. அப்புறம் தான் நம்ம வீடு” என்று கேலி செய்தான் உமர் ஜவஹர். "ஜவஹர், நாம் பேசி வந்தது என்ன? இப்போ நீ செய்யறது என்ன?” வினவினான் ஜஹாங்கீர்.   "என் நியாயம் எனக்குத் தெரியும். நீ ஒண்ணும் புத்தி சொல்ல வேண்டாம். இஷ்டமில்லேன்னா இறங்கிப் போயிடு!"   "ஒரு பொண்ணுக்குத் துரோகம் பண்ணாதேடா?   "அந்தப் பொண்ணு என் தங்கச்சி தான். உன்னோட வேலை என்னவுண்டோ அதப் பாத்துட்டுப் போ!”   "குட் பை” என்று தன்னைப் பிரித்துக் கொண்டான் ஜஹாங்கீர்.   அதே சமயத்தில் ஜீப்பிலிருந்து இடையிலேயே இறங்கியிருந்த பொன்னையா, ஸாஹிராவின் வாப்பாவை சைக்கிள் ரிக்ஷாவில் அழைத்து வந்தான்.   ஜீப்பிலிருந்து ஸாஹிராவின் கையைப் பிடித்து இழுத்தான் உமர் ஜவஹர். சின்னத்துரையின் கழுத்தில் கையை வைத்துத் தள்ளினான் சுப்பு. உள்ளே சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரனும் ஒன்றிரண்டு போலீஸ்காரர்களும் ஏதோ பேசிக் கொண்டு இருந்தனர். "குற்றவாளி” களை அவர் முன்பு கொண்டு போய் நிறுத்தினர். பேச்சை நிறுத்திய பாஸ்கரன் அவர்களின் மீது கவனம் செலுத்தலானார். ஸாஹிராவின் பேரழகில் அப்படியே ஸ்தம்பித்துப் போனார் பாஸ்கரன். பார்த்த மாத்திரத்திலேயே அவள் ஒரு முஸ்லீம் என்பதைக் கண்டு கொண்டார். அவர் மனதுக்குள் பாராட்டி மகிழ்ந்து கொண்டார்.   உமர் ஜவஹர், சுப்பு, பொன்னையா மூவருக்கும் சம்பவங்களை விவரித்து இவளை அவன் கடத்திப் போனதாக கூறினார்கள். சின்னத்துரையையும், ஸாஹிராவையும் விசாரித்த போது கதையே தலை கீழாக மாறிப் போவதை அறிந்தார். "இருந்து இருந்து இந்தப் பேரழகி இந்தப் பறையனையா காதலிச்சிட்டு ஓடினா” என்று மனத்துக்குள் உஷ்ணப்பட்டுக் கொண்டார். அவள் மீண்டும் சின்னத்துரைக்கு சாதகமாகப் பேசினது அங்கிருந்தவர்களுக்குச் சங்கடமாகவே இருந்தது.   பாஸ்கரன் கேட்டார், "நீங்க என்ன சொல்றீங்க? ரெண்டு பேருமே ஒரே கதை தான் சொல்றாங்க. இதுல நான் என்ன பண்ணணும்னு நீங்களே சொல்லுங்க!''   "சப்-இன்ஸ்பெக்டர் சாரு! அவன் என் மவளக் கடத்திக் கிட்டுப் போயி ஏதோ மருந்து மாயம் பண்ணி தனக்குச் சாதகமாகப் பேச வைச்சிருக்கான்” என்றார் மொன்னா முகம்மது.   "அப்படில்லாம் சொல்லாதீங்க வாப்பா! எனக்கு எந்த மருந்து மாயமும் பண்ணலே!" என்று இடை மறித்தாள் ஸாஹீரா.   "சும்மா இருடி, கழுதே, அனாவசியமா தலையிட்டுப் பேசாதே. அப்படிப் பேசினா தொலைச்சுப் போடுவேன்” - உமர் ஜவஹர்.   "சார் என் மவ ஒண்ணும் அறியாதவ. நீங்க தான் காப்பாத்திக் குடுக்கணும்” என்று பரிதாபமாய்க் கூறினார் அவள் வாப்பா.   "ஒங்க பொண்ணுக்கு வயசு என்னாச்சு?”   உமர் ஜவஹர் மின்னல் வேகத்தில் யோசித்துப் பட்டென்று பதில் சொன்னான். "வயது பதினாறு தான் ஆவுது சார்”   அப்படீன்னா இது குற்றமாச்சே. அவங்க ரெண்டு பேருக்கும் திருமணம் பண்ணி வைக்க முடியாது, இனி நான் கவனிச்சுக்குறேன். "அப்படியே செஞ்சிடுங்க சார்!” என்று இளித்தான் உமர் ஜவஹர்.   "நீ வீட்டுக்கு வாம்மா. ஒனக்கு வேறே நல்ல இடமா பாத்துக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்றார் மொன்னா முகம்மது.   "வேண்டாம், வேண்டாம். என்ன இப்படியே உட்டுடுங்க' என்று அவள் மீண்டும் தன் வலுவைக் காட்டி நகர மறுத்த போது அவளைச் சுருட்டி வாரி எடுத்து ஜீப்பில் திணித்தான் உமர் ஜவஹர்.   "இன்ஸ்பெக்டர் சார்! அவளக் காப்பாத்துங்க. அவ இல்லாம என்னால வாழ முடியாது. எங்கள் ஏமாத்திக் கூட்டிட்டு வந்துட்டாங்க!' என்று கத்தினான் சின்னத்துரை.   "கழுதை! நீ கெட்ட கேட்டுக்கு உனக்கு காதல் வேற வாழுதோ?” என்று ஓங்கி ஒரு குத்து விட்டார் பாஸ்கரன். அவன் உள்ளே போய் விழுந்தான்.   (தாமரை - நவம். 85) ஒரு கனவு அரங்கேறிய பின்னும்   அது அப்பாவினுடைய நீண்ட நாள் ஆசை என்று மட்டுமா சொல்லி விடுவது ? இல்லை. எங்கள் வீட்டில் ஒவ்வொருவரின் நீண்ட நாள் ஆசையும் தான் அது. பெரிய விசயமல்ல; ஒரு சாதாரண விசயம் தான். ஆனாலும் எங்கள் வீட்டு பட்ஜெட்டில் என்றைக்குமே அதனை உடனடியாகச் சேர்த்துக் கொள்ள முடிந்ததில்லை. ஆதலால் சீட்டுப் போட்டு வந்தோம். அதிலே கணிசமான தொகை சேர வேண்டும் அல்லது அதன் விலைக்குப் பாதியாவது சேர்ந்து விட வேண்டும். அப்போது தான் ஒரு டேபிள் ஃபேன் வாங்கி விடக் கூடிய சாத்தியம் இருந்தது.   இப்படியாக அதில் பாதித் தொகை சேரவே கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன. மாதந்தோறும் பத்து ரூபாய் அப்பா செலுத்தி வந்தார். தீபாவளி போனஸ் வாங்கியதில் ஒரு முறை இருபது ரூபாயாகப் போட்டார். ஆனால் அது ஒரு மடத்தனமான விஷயமாக மறுநாளே எங்கள் அனைவரையும் எண்ண வைத்தது. தீபாவளி வகைக்கான துணிமணிச் செலவுகள், பட்டாசு வகைச் செலவுகள், பண்ட வகைச் செலவுகள் என்று அந்த எக்ஸ்ட்ரா பத்து ரூபாயைச் செலவு பண்ணி இருக்கலாம். அதன் பின்னர் தீபாவளி போனஸ் பெற்ற சமயங்களிலும் பத்து ரூபாய் தான் செலுத்தினோம். ஒரு மாதம் மட்டும் அதிகப்படியாய்ப் பத்து ரூபாய் கட்டி விடுவதில் பிரமாதமாய் என்ன வந்து விடப் போகிறது என்கிற எண்ணம் வேறு சேர்ந்து கொண்டது. இது போக மருந்து மாத்திரைச் செலவு என்று போனாலும், விருந்தினர் யாராவது வந்து ’தண்டச் செலவை' உண்டாக்கி இருந்தாலும் கூட பத்து ரூபாய் சீட்டுக் கட்டுவது என்பது சிரமமாகிப் போய் விட்டது. அப்படிப்பட்ட சமயங்களில் ஐந்து ரூபாயும் கட்டியிருக்கிறோம். அப்போது கம்பெனிக்காரன் கூடக் கேட்டுத் தொலைத்திருக்கிறான். "என்ன வெறும் அஞ்சும் சேத்து பத்தா போட்டுற வேண்டியது தான?” என்று. அவனுக்கென்ன? அந்த அஞ்சு ரூபாய் சாமானியப்பட்ட தொகையாகத் தெரிந்திருக்கிறது. எங்களுக்கல்லவா அதன் அருமை பெருமையெல்லாம் தெரியும்.   சினிமா பார்ப்பதைக் கூடக் குறைத்துக் கொண்டு விட்டோம். எப்படியாவது காசை மிச்சப்படுத்தியாவது ஒரு டேபிள் ஃபேன் வாங்கியாக வேண்டும் என்பது மட்டுமே எங்கள் எல்லோரின் குறியாகி விட்டது.   அக்கம் பக்கத்து வீடுகளில் அவரவர் அப்பாமார்களும் அண்ணன்மார்களும் எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு டேபிள் ஃபேனோ, சீலிங் ஃபேனோ கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். எங்கள் வீட்டுக் கதை மட்டும் இப்படிப் போய்க் கொண்டு இருந்தது. அப்பாவிடம் அம்மா இதைக் குத்திக் காட்டுவதும் உண்டு. அப்பா தீர்க்கமாய் பதில் சொல்லுவார், "அவங்களுக்கென்ன? அப்பாவும், பிள்ளையும் சம்பாதிக்கிறாங்க. அப்படியே ஒரு ஆளா சம்பாதிச்சாலும் கை நெறைய சம்பளம் வாங்குறாங்க. நம்மளப் போலயா வாய்க்கும் கைக்கும் இல்லாம அலையுறாங்க."   அப்பா மேலும் தொடர்ந்தார். "எனக்கும் இந்தப் பிச்சைக்காரப் பய கம்பெனின்னு இல்லாம ஒரு கவர்ன்மெண்டு உத்தியோகம்னு போயிருந்தா இப்படி என் ஒண்டுக் குடித்தனத்துல கெடக்கப் போகிறோம்? வாடகை வீட்டுல உக்காந்துக்கிட்டு அவன் கிட்ட ஏன் கையைக் கட்டப் போறோம்?" இதில் என்னையும் சேர்த்து இழுத்து விடுவார். "இவனும் படிச்சுப் பெரியவனாயி ஒரு உத்தியோகம்னு போயிச் சேர்ந்தான்னா நம்ப கஷ்டம் ரொம்பவும் கொறைஞ்சி போயிருக்கும்! என்ன செய்ய? நான் ஒண்டிக்கட்டையா கிடந்து சாக வேண்டி இருக்கு!” அப்போது அம்மா எதிர்த்துப் பேசுவாள். "ஏன் இப்படியெல்லாம் கூப்பாடு போடுறீங்க? கல்யாணமாயி 10 வருஷமா குழந்தை இல்லாம இருந்ததுக்கு ஏதோ கடவுளு கண் திறந்து பாத்து இந்த மூணையும் கண் நெறஞ்சாப்புல அனுப்பி வச்சிருக்காரு. அத நெனச்சிப் பாருங்க. இல்லேன்னா என்ன செய்ய முடியும்?”   இப்படியாக மாதங்கள் ஊர்ந்து போய்க் கொண்டு இருந்தன. சரியான வெயில் காலங்களில் புழுக்கமான நாட்களில் அந்த வீட்டில் நாங்கள் அனுபவித்த இன்னல்கள் கொஞ்சமல்ல. தாழ்வான ஓட்டு விடு. 'குப்’ பென்று வெக்கை தாக்கும். சட்டை, பனியனைக் கழற்றிப் போட்டு அப்பா வெறுமனே கைலியோடு 'சூசூ’ என்று சூள் கொட்டிக் கிடப்பார். எங்களுக்கும் அந்த வெக்கையைத் தாங்கிக் கொண்டிருக்க முடியாது. அம்மா மல்லாக்கப் படுத்தபடி சேலைத் தலைப்பை விசிறி போல் பாவித்துக் கொண்டு மேலும் கீழுமாக வீசிப் வீசிப் பார்ப்பாள். ம்ஹும்! காற்று கொஞ்சமாவது அசைந்து கொடுக்க வேண்டுமே!   அப்படியும் இப்படியுமாக இருநூறு ரூபாய் வரைக்கும் சேர்ந்ததும் ஃபேன் வாங்கி வரலாமென்று அப்பா போனார் கம்பெனிக்கு. ஆனால் பாதித் தொகைக்கு மேல் சேராமல் ஃபேன் தர முடியாது என்று சொல்லி விட்டதாக அப்பா வந்து சொன்னார். "சீ! என்ன பொழப்பு இது? யாருக்கு என்ன பாவம் செஞ்சோம்னு இப்படியெல்லாம் கெடந்து உழல வேண்டிக் கெடக்கு? மனுசனுக்கு ஒரு ஃபேன் வாங்கியாறதுக்குள்ளேயே அவன் ஆயுசெல்லாம் முடிஞ்சிப் போயிடும் போலயிருக்கு. இதுக்கு மேல புள்ளங்கள் படிக்க வச்சு... கல்யாணம் சீரு செனத்தின்னு.... அப்பப்பா ஒவ்வொருத்தனும் வாழ்க்கையில் எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கு?” அப்பா எல்லோருக்குமாகவே கசிந்துருகினார் போன்றிருந்தது. பின்னர் சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக அப்பாவின் கம்பெனியில் வேலை நிறுத்தம் நடந்து இறுதியில் வெற்றி பெற்றது. அப்போது இனிமேல் பணம் கட்ட அவ்வளவு சிரமாயிராது என்று எண்ணினோம். ஆனாலும் சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தேக்க நிலை திரும்பிற்று.   கோடை காலம் திரும்பி விட்டது. சீட்டுக் கம்பெனி நபர் வந்தபோது அம்மா கேட்டாள், "ஏம்ப்பா! இப்பவாவது ஒரு பேன் தருவீங்களா? வெக்கை காலம் வேற வந்து சேந்துட்டுதே!” உடனே அவன் கணக்குப் போட்டுப் பார்த்துச் சொன்னான்: "இப்ப நீங்க தாராளமா ஃபேன் வாங்கிக்கிடலாம். ஆனா மாசா மாசம் தவறாம சாக்குப் போக்கு சொல்லாம பணம் கட்டிடணும். அதோட இப்ப கட்டுற மாதிரி பத்து ரூபாயா கட்ட முடியாது. கொஞ்சம் கூடுதலா சேத்து கட்ட வேண்டி இருக்கும்.”   அம்மா அதற்கு உடன்பட்டாள். ஆனாலும் அவளது முகத்தில் மாசா மாசம் கண்டிப்பா - அதுவும் கூடுதலாகக் கட்ட வேண்டியதன் அவசியம் சற்று கவலையை உண்டாக்கியது. இருப்பினும் வெளிக் காட்டவில்லை. கம்பெனியிலிருந்து அப்பா வந்ததும் அம்மா இதை விஸ்தாரமாக விளக்கிச் சொன்னாள். கெட்ட பெயர் வந்து விடக் கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வு. அப்பா நீண்ட நேரம் அன்றிரவில் சிந்தித்துப் பார்த்தார். அவர் எது பற்றியும் ஒன்றும் பேசவில்லை. வழக்கமாக எதிர்வீட்டில் ராத்திரி தோறும் வாங்கிப் படிக்கும் பேப்பரைக் கூட அன்றிரவில் வாங்காமல் யோசித்தபடியே இருந்தார். ஒரு சாதாரண விசயம் கூட எவ்வளவு பாரமாகவும் யோசிக்க வைக்கக் கூடியதாகவும் இருக்கிறது? அவர் எப்போது தூங்கினார் என்பதை அறிய முடியாதபடிக்கு நாங்களும் உறங்கி விட்டோம்.   மறுநாள் மாலை வழக்கமாக வீட்டுக்கு வரும் நேரத்திற்கு அப்பா வரவில்லை. சற்றுத் தாமதமாக வந்தார். அவர் வந்து இறங்கும் போது நாங்கள் சாப்பிட்டு முடித்திருந்தோம். இப்போது அவர் வந்தது ஃபேனோடு! ஓட்டைச் சைக்கிளில் அந்த ஃபேனை வைத்துக் கொண்டு அப்பா இறங்கினதுமே நானும், தம்பி, தங்கையும் உற்சாகமாக தார்சாவிலிருந்து தெருவில் இறங்கி, அப்பாவின் அருகே ஓடினோம்.   "டேய்! டேய்! கழுதைங்களா! சும்மா சத்தம் போடாதீங்கடா!' என்று அவர் எங்களை விரட்டினார். நாங்கள் மறுபடியும் சப்தம் போட்டுக் கொண்டு வீட்டுக்குள் ஓடினோம். அம்மாவும் சிரித்த முகத்தோட விளங்கினாள். அப்பா அதைக் கொண்டு வந்து உள்ளே வைத்தார்.   ஃபேன் பார்க்க நன்றாக இருந்தது. பச்சைக் கலரில் - லைட்டாக - ஒளிர்ந்தது. பளபள என்று அதன் வலைக் கம்பிகள் மின்னின. பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக அது இருந்தது! எத்தனை வருஷத்துக் கனவு? அம்மா பழைய சீலையைக் கொண்டு வந்து அதனைத் துப்புரவாகத் துடைத்தாள். பின் ஒரு ஸ்டூலை இழுத்துப் போட்டு அதன் மேல் ஃபேனை வைத்து பிளக்கை மாட்டினாள். சுவிட்சைத் தட்டினாள். எங்கள் கனவுகளை சுழற்றிச் சுழற்றி வீசி நனவாக்கிய வண்ணம் எங்கள் அனைவர் மீதும் காற்றைச் சொகுசுடன் தந்தது. அப்பா அப்படியே அதற்கு முன்னால் சம்மணம் கட்டி உட்கார்ந்து சட்டை பொத்தான்களைக் கழற்றி விட்டுக் கொண்டு ‘அப்பாடா' என்று பெரு மூச்சு விட்டார். அம்மாவும் பக்கத்தில் உட்கார்ந்து அந்தச் சுகத்தை அனுபவிக்க ஆரம்பித்தாள். நானும், தம்பி, தங்கையும் இன்னும் குதூகலமாய் அதற்கு முன் நின்று ஆடினோம். அம்மாவுக்குச் சிரிப்புத் தாள முடியவில்லை. அப்பாவுக்கும் அப்படித்தான்.   அம்மா கேட்டாள் அதன் விலையை. அப்பாவும் விலையைச் சொன்னார். "எப்படியோ நமக்குன்னு ஒண்ணு வந்து சேர்ந்ததே அது போதும்” என்று அம்மா திருப்திப்பட்டுக் கொண்டாள்.   போதுமாவா? படுபாவிப் பசங்க. மத்த கடையை விட 80 ரூவா ஜாஸ்தியா சொல்றானுங்க. நான் வாங்கிட்டு வரும் போது கடைசி வீட்டுச் சிங்காரம் பய கேட்டான். 'இது எவ்வளவுண்ணே’ உன்னான். சொன்னேன். 'அடேயப்பா! நான் ரொக்கமா வாங்கினேன். அதை விட இதுக்கு எண்பது ரூவா கூடுதலா வச்சிருக்காங்கண்ணே ன்னான். எனக்கு அப்பவே பகீர்னு ஆயிடுச்சி. யோசிச்சுப் பார்த்தேன். நாம் வேற என்ன தான் செய்யிறது? ரொக்கமா கையில குடுத்து வாங்குறதுக்கெல்லாமா நமக்கு வழி இருக்கு? மூச்சு பேச்சு காட்டாம வந்துட்டேன். ஏண்டா சொன்னோம்னு வேற ஆயிப் போச்சி. இந்த விசயம் ஊருல மத்தவனுங்களுக்குத் தெரிஞ்சா நம்மள பைத்தியக்காரப் பயன்னு வேற எளக்காரம் பண்ணுவாங்க!"   "நீங்க ஒண்ணு. சும்மா கெடங்க. ஊருல எல்லோரும் தான் சீட்டுப் போட்டிருக்காங்க. அவங்களுக்கும் நாளைக்கு இப்படித் தான் நடக்கும்” என்று அம்மா நியாயம் கற்பித்துக் கொண்டாள்.   அன்றிரவு -   அந்த ஃபேன் ஒரு வித 'கும்' என்ற சப்தத்தோடு எங்கள் எல்லோருக்கும் பேருபகாரம் செய்தது. நன்றாகத் தூங்கினோம். தூங்கும் முன் நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு ஃபேன் முன் போனோம். "ஏ! மடப்பயலுக்குப் பொறந்தா பசங்களா! கிட்டப் போயி படுக்காதீங்கடா. தள்ளிப் படுங்க; என்று அப்பாவே எங்களை அருகில் விடாமல் தடுத்தார். மறுநாள் காலையில் நாங்கள் புத்துணர்ச்சியோடு எழுந்தோம். அப்போதும் அப்பா மட்டும் தூங்கிக் கொண்டிருந்தார். ஃபேன் ஓடியபடியே இருந்தது.   அன்று மாலை பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் ஆசையாகப் போய் ஃபேனைத் தட்டினேன். அது ஓடவில்லை . அசைவின்றிக் கிடந்தது. விளக்கைப் போட்டுப் பார்த்தேன்; எரியவில்லை. ஆனால் அடுத்த வீட்டில் ரேடியோ பாடிக் கொண்டிருந்தது. அது தான் வீட்டுச் சொந்தக்காரரின் வீடு.அங்கு கரண்ட் இருக்கும் போது இங்கு மட்டும் எப்படி இல்லாமல் போனது? என் தம்பி, தங்கையின் முகங்கள் வாடிப் போய் விட்டன. அம்மா எங்களை ஏக்கத்தோடு பார்த்தாள். நான் அம்மாவிடம் கேட்டேன். "ஏம்மா நம்ம வீட்ல கரண்ட் இல்ல?” என்று. அவள் பதிலொன்றும் கூறாமல் அடுக்களைக்குள் புகுந்து விட்டாள். காரணம் புரியாமலும் மாலை நேர விளையாட்டிலும் ஆர்வம் இல்லாமலும் வீட்டில் முடங்கி விட்டோம்.   அப்பா வந்தார். "அப்பா நம்ம வீட்ல பேன் ஓடல. கரண்ட்டும் இல்லை!” என்று தங்கை சொன்னாள். அப்பாவை அம்மா, 'இங்கே வாங்க' என்று கூப்பிட்டு உள்ளே போனாள். அடுக்களையில் இருவரும் மெல்லிய குரலில் பேசிக் கொண்டது என் காதில் விழுந்தது. ஓரிரு நிமிஷம் கழித்து அப்பா அறைக்குள் வந்தார். சட்டையைக் கழற்றி டவலைப் போர்த்திக் கொண்டார். மணி ஆறாகி மேலும் சில நிமிஷங்கள் ஆகி விட்டிருந்தது. வீட்டில் இருள் சூழ ஆரம்பித்தது! அப்பா மெதுவாக வீட்டுக்காரர் வீட்டை நோக்கிப் போனார்.   “என்னங்க வீட்ல மட்டும் கரண்ட் இல்லாம இருக்கு?” என்று போனதும் அப்பா கேட்டார்.   ` "அப்படி வாங்க வழிக்கு. இப்ப தெரியுதா கரண்ட்டோட அருமை?” அப்பா பதிலேதும் பேசாமல் நின்றார். "புதுசா வீட்டுக்கு ஃபேன் கொண்டு வந்திருக்கீங்களே. யாருகிட்டே கேட்டு கொண்டு வந்தீங்க?”   "இதுல என்னங்க கேக்க வேண்டியிருக்கு?"   "ஓஹோ .... அப்படியா சமாச்சாரம்... அது சரி. உங்களுக்கு எங்க அதுல உள்ள கஷ்டம் தெரியப்போவுது. அதுக்கெல்லாம் சொந்த வீடு வாசல்னு இருந்தால் அது அதோட அருமை தெரியும்” என்றார் வீட்டுக்கார சாம்பசிவ பெருமாள்.   எனக்கு எங்கோ உறைத்தது. ரொம்ப குத்தலான கேள்வி. இயலாமையையும், ஏழ்மையையும் அவர் கடுமையாகக் கேலி செய்கிறார். ஆனாலும் என்ன செய்ய முடிந்தது?   "இப்ப அதுக்கு என்ன செய்யச் சொல்றீங்க?” என்று அப்பா வேறு வழியில்லாமல் கேட்டார்.   "வீட்டு வாடகையை இந்த மாசத்துலே இருந்து பத்து ரூபா கூட்டிக் கொடுங்க. கரண்ட் சார்ஜ் தான் இது. அப்படி ஒம்மாலே கூட்டிக் குடுக்க முடியாதுன்னா ஃபேனைத் தூக்கித் தூர எறியும். இல்லே வீட்டைக் காலி பண்ணிக் குடுங்க” என்றார் சாம்பசிவம். அக்கம், பக்கத்தில் உள்ளவர்களெல்லாம் இப்போது எட்டிப் பார்த்தார்கள். அது எங்களுக்கு கூச்சமாக இருந்தது. சாம்பசிவத்துக்கு அப்படித்தான் பேசத் தெரியும். அப்படியே ஒளிவு மறைவு இல்லாமல் பேசி விட்டார். அப்பாவின் நிலை தான் தர்ம சங்கடமானது. அவர் பதிலேதும் பேசாமல் குனிந்த தலையோடு வீட்டிற்கு வந்தார்.   ஏழு மணி அளவில் சாம்பசிவம் கருணைப்பட்டு ஃப்யூஸ் மாட்டினார். வீட்டில் ஒளி படர்ந்தது. ஆனால் அனைவர் முகங்களிலும் இருள் மட்டும் நீங்க வில்லை. இரவில் மன வெக்கையுடன் படுத்திருக்கிறோம். 'கும்' என்ற ஓசையுடன் ஃபேன் எங்களுக்கு அருகில் தன் சிறகுத் தலையைத் திருப்பி திருப்பி சுழன்று ஓடிக் கொண்டு தான் இருக்கிறது..... (செம்மலர் - அக். 87) சுழல்   சோர்வாக இருந்தது நஜ்முன்னிஸாவுக்கு அமைந்திருந்த உற்சாக மனநிலை மெல்ல மெல்ல அழிந்து போய் விட்டது. களங்கத்தையே சுமந்து கொண்டு திரிந்த வாழ்க்கையில் அப்படியென்ன தனக்கென்று ஒரு உற்சாகம்? வாழ்க்கை அவளுக்கு ஒரே வழித் தடத்தைத் தான் கொடுத்திருந்தது. ஆயினும் கூட உயிர் வாழ்தலில் கொண்ட தாகத்தின் பொருட்டு 'சந்தோஷமாக இருத்தல்' என்றே தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள். தான் வளர்த்து ஆளாக்கி விட்ட மகளுக்கு இனியும் அவளே சம்பாத்தியம் பண்ணுவதும் அதற்காகவே மேலும் நசிந்து போவதும் ஆகாது. ஓய்வு பெற்றாக வேண்டும்; காலம் அந்தக் கட்டளையைக் கொடுத்து விட்டது. கிடைக்கப் போகிற ஓய்வை இனி நன்கு அனுபவிக்க வேண்டும். தன் மகளும் தன்னைக் காத்துக் கொள்கிற அதே சமயத்தில், தன்னையும் ஒரு பொருட்டாக நினைத்துப் பேணிக் காக்க வேண்டும்.   இந்த நிலைக் கண்ணாடி; அதன் முன்னே உள்ள சின்ன மேஜை மீது வாசனைப் பவுடர். சீப்பு, கண் மை, ஹேர் ஆயில், கலர் கலராய் இதர அழகு சாதனப் பொருட்கள். அவை ஒரு பாரத்தையும் மனக் கஷ்டத்தையும் கொடுத்தது.   நஜ்முன்னிஸாவை வாழ்வித்தவை அவையே! தேய்ந்து போன இளமையைக் கூட ஜொலிக்கச் செய்தவை அவையே! கலைந்து போக விருந்த வாழ்க்கையை, காணாமல் போகவிருந்த வாழ்க்கையை அவளுக்குச் சிறிதளவாக வேனும் வசப்படுத்திக் கொடுத்தவை. இவை இனி தன் மகளுக்கு! கண்ணீர் திரண்டு தளும்பியது.   கடைசியாகக் கண்ணாடியின் முன் நின்று தன்னைப் பார்த்துக் கொண்டாள். அவள் உருவம் தெரிகிற இடத்தில் ஓர் அழுக்கான பிம்பம்; அவளாலேயே அடையாளம் கண்டு கொள்ள முடியாத அளவில், எத்தனையோ வருஷங்களாக அவளது அழகுக்குச் சான்றிதழ் வழங்கி, இப்போது தர மறுத்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் தொழில் நடத்திய காலம் வரை இணை பிரியாத் தோழியான அந்த நிலைக் கண்ணாடியைத் தடவிப் பார்த்துக் கொண்டாள். அன்று இந்தக் கண்ணாடிக்கு இருந்த துல்லியமும், பளபளப்பும் இப்போது இல்லை. ஆயினும் தன்னைப் போல் காலாவதி ஆகி விடவில்லை. ஒரு பெருமூச்சு எழுந்து அடங்கியது. அதனைத் தடவிக் கொண்டபடி சொன்னாள், "என் குழந்தைக்கும் உதவியா இருந்து வா!" அழுகை பீறிட்டுக் கிளம்பியது. வாயில் முந்தானையை வைத்து அடக்கிக் கொண்டாள்.   “மஹ்மூதா!"   தாய் அழைத்த மறு நிமிஷம் வந்து நின்றாள் மஹ்மூதா. அவள் கண்ணே பட்டுவிடும் போல் இருந்தது. என்ன பேரழகு! எழுந்து நின்று ஆதரவாய்ப் பற்றினாள். நேருக்கு நேர் நின்று இந்தக் கோலத்தில் தன் மகளைக் காணுகையில் இது நாள் வரை தான் அனுபவித்த சோகம் அனைத்தும் ஒரே வடிவாய் திரண்டு வந்து நெஞ்சைப் பிசைந்தது. முன்னும், பின்னுமாக காலங்கள் அர்த்தம் இழந்து போய் நின்றன. யாரோ கைகொட்டிச் சிரிக்கிறதான உணர்வு எழுந்தது. மனதைக் கல்லாக்கிக் கொண்டு தன்னுடைய துயரத்தையும் ஆசாபாசத்தையும் வெளிப்படுத்தாமல் வெறுமனே முறுவலைத் தவழ விட்ட படி நின்றாள் நஜ் முன்னிஸா.   "கண்ணே! உன் அம்மாவோட வாழ்க்கை எப்படியெல்லாம் சகதிக் குழியிலேயும் குப்பை மேட்டிலேயும் பொரண்டுக்கிட்டு கெடந்துச்சின்னு உனக்கும் தெரியக் கூடிய காலம் வந்திடுச்சி. அனுபவத்துல உணரும் போது நீ என்னைய மனசால வெறுத்து உதறினாலும் உதறி விடுயோன்னு பயம்மாவும் இருக்கு. ஆனாலும் என்னால் ஆன மட்டுக்கும் உன்னை வளத்து ஆளாக்கி விட்டுட்டேன். இன்னும் நான் தான் உன்னக் காப்பாத்தி ஆகணும்னு நெனச்சாலும் அதுக்குக் காலம் கை கொடுக்காது. சொல்லப் போனா மூணு வருஷக் காலமாக என்னைத் தேடி லாட்ஜுக்கும் வீட்டுக்குமா வந்தவங்க எந்த அளவுக்கு கொறைஞ்சு போயிட்டாங்கங்குறது எல்லாத்துக்குமே நல்லா தெரியும்."   மஹ்மூதாவைக் கண்ணாடியின் முன்னிருந்த ஸ்டூலில் உட்கார வைத்தாள். எப்போதுமே இந்த இடத்தில் அவள் உட்கார்ந்ததில்லை. உட்காரப் பிரியப்பட்டதுமில்லை. தன் தாய்க்கே உரித்தான அந்த இடம் தனக்கும் வந்து சேரும் என்று அவள் நம்பியதுமில்லை; விரும்பவுமில்லை. மனத்தளவில் அவளால் காறி உமிழப்பட்ட இடம் அது, அதனாலென்ன? அதற்காகவே அந்தத் தாயின் வாழ்க்கை இவளுக்கும் தொடர்ச்சியாக வராது என்றாகி விடுமா? இவளுடைய விருப்பம் மட்டுமே இவளது வாழ்க்கைளை நிர்ணயம் செய்து விடுகிறதான எந்தவொரு வலிமையும் இல்லையே!   அந்த ஸ்டூலில் அவள் அமர்ந்ததும் மின்னல் வெட்டு போன்ற கேவல உணர்ச்சிகள் அவள் உடலெங்கும் பரவிப் பாய்ந்து கூனிக் குறுகச் செய்தது. அருவருப்பானதைத் தொட்டு விட்டதைப் போன்ற அவல உணர்ச்சிகள். தன்னையே வெட்டி விடத் துணிகின்ற அவ்வளவு கொடிய துயரம். தன் தாயை ஏறிட்டு நோக்க முடியாமல் தலை கவிழ்ந்தாள். அது நஜ்முன்னிஸாவை வதைத்தது. எவளொருத்தி அது குறித்து வெட்கப்பட வேண்டுமோ அவளே தலை நிமிர்ந்திருக்க, புதியவள் ஏன் தளர வேண்டும்? அவள் முகவாயைத் தொட்டு தன் முகத்துக்கு நேரே நிமிர்த்தினாள். இப்போதும் தாயைக் காணும் மனப்பக்குவம் இன்றி மக்மூதா தலை கவிழ்ந்தாள். மெளனம் இடையில் குறுக்குச் சுவராய் எழுவதை விரும்பாமல் மீண்டும் மகளிடமே கூறினாள்.   "எந்தத் தாய் தான் மகளுக்கும் இந்த வாழ்க்கையை கைப்புடிச்சிக் கொடுப்பாங்க? இந்த வட்டத்துக்கே வரவுடாம் உங்களைக் கரையேத்தணும்னு தான் நான் நெனச்சேன். ஆனா தங்கமாளவளே, நல்லா யோசிச்சுப் பாரு! நமக்குன்னு யாரு இருக்காங்க? சிலோன்ல அள்ளிக் குவிச்சுட்டு வாரேன்னு போன உங்க வாப்பா கிட்டேயிருந்து ஒரு கடிதம் உண்டா? சொந்தக்காரி தானேன்னு யாராவது நமக்கு கை கொடுத்தாங்களா? ஊரை விட்டே ஓடி வந்தோம், யாராவது தடுத்து நிறுத்துனாங்களா?"   மஹ்மூதாவின் கண்கள் தாயை அளந்தன. அவள் பார்வை மீனைப் போல அங்குமிங்குமாகத் தாவியது.   "உனக்குத் தெரியுமா? நீ காய்ச்சல்ல கிடந்தேனு தான் அடுத்து வீட்டு நவாபுகிட்டே மாத்திரை வாங்கி வரச் சொன்னேன். மாத்திரை வாங்கி வீட்டுக்குள்ளேயே நுழைஞ்சு குடுத்துட்டுப் போன ஒரு விஷயத்துக்காவத் தான் என்னை 'தேவடியா’ ன்னு ஊர்க்காரனுவ சொன்னானுங்க.” விம்மினாள், அழுதாள். நிலைக்குத்தின் கண்களோடு தாயின் அவஸ்தையை எதுவும் சொல்லாமல், எந்த உணர்ச்சியும் காட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தாள் மஹ்மூதா.   "எத்தனையோ ஊருதாண்டி இங்கு வந்தப் பொறவும் 'உனக்கு இது தான் வாழ்க்கை’ ன்னு ஆண்டவனே எழுதி வச்சிட்டப் பொறவு நாம என்ன செய்ய முடியும்? இது பாவம் தான் அப்படின்னு சொன்னா அதை நானா ஏத்துக்கலியே. இதை விதிச்சவன் யாரோ அவனுக்குத் தான் பாவமும் பழியும்.”   கொல்லைப்புறம் சென்று மூக்கைச் சிந்திப் போட்டு விட்டு சேலையில் துடைத்துக் கொண்டாள். சூரியன் இன்னும் கீழே கீழே இறங்கி மேலைத் திசையில் காலூன்ற ஆரம்பித்தது. நேரம் நெருங்கிக் கொண்டே இருப்பதை எண்ணக் குழப்பமும் கவலையும் மனதில் வியாபித்தன. ஸ்டூலில் உட்கார்ந்திருந்த மஹ்மூதாவை ஒரு கணம் உற்றுப் பார்த்து விட்டு பீரோவைத் திறந்து, உள்ளிருந்த லாக்கரையும் திறந்தாள். வியப்பால் விரியும் வண்ணம் அவள் முன்னே நெக்லஸ், வளையல், சங்கிலி, காசுமாலை என்று அத்தனை தங்கச் சாமான்களை வைத்தாள். இதற்கு முன் இதைப் பார்த்திராத மஹ்மூதாவின் கண்களில் சந்தேகமும், குதூகலமும் மின்னியது. சில கண்களில் அதிர்ச்சி தோன்றி மறைந்தது.   "ஆச்சரியப்படாதே! உனக்காக நான் சேத்து வச்ச நகை நட்டு தான் இது. பேங்குலேயும் பணம் போட்டிருக்கேன். ஆனா எந்தப் பய சீந்தறான்? நஜ்மூன்னிஸா மகதானேன்னு ரொம்ப சுலபமா சொல்லிட்டுப் போயிடறான். எவ்வளவோ முட்டி மோதிப் பாத்த பொறகு தான் உனக்கு ஒரு கல்யாணம் காட்சின்னு நடத்த முடியாதுங்குறது தெரிஞ்சுக்கிடுச்சு. அப்படி நடத்திப் பாக்கணுமின்னா ஊரு மாறணும்... தொழில் மாறணும்...... இது போதாதுன்னு நகை நட்டு பணம்னு குவிக்கணும். இந்த ஜென்மத்துல இதெல்லாம் நடக்கும்னு தோணலியே என் தங்கமே!”   இறுகிப் போன, உணர்வுகளை வெளிக்காட்டாத வெறித்த பார்வையைத் தாயின் இதயக் குமுறலின் அலைகள் அவளை ஓங்கி ஸ்பரிசித்தன.   "இன்னும் சொல்றேன் கேளு. உன்னை ஒரு நாள் பொண்டாட்டியா பாவிக்குறதுக்குத் தான் இந்த ஊரு மனுசனுங்க விரும்புவாங்க. வாய்க் கூசாம சொல்றனே, என்கிட்டே இருக்குறப்பவே கேட்டான் மஹ்மூதாவ எப்ப கொண்டு வரப் போறேன்னு? எவ்வளவு ஈனத்தனம், நெஞ்சழுத்தம் பாத்தியா? "பெத்த தாய்க்கிட்டயே கேக்குறியே - நீயெல்லாம் மனுஷந்தானா? அவள் உத்தமமா வளத்து நல்லபடியா ஆளாக்குவேண்டா அப்படின்னு சொன்னேன். இப்ப .... இப்ப... வார்த்தைகள் வெளி வராமல் தேங்கின. வினாடிகள் காற்றில் கரைந்தன. "அவனுங்க மூஞ்சியில் எப்படி முழிக்கிறது? உடம்பு முழுக்கக் காட்டுணப்போ இல்லாத வெக்கம் எனக்கு என்னவோ இப்பதான் பெரிசாத் தோணுது. நான் தோத்துப் போயிட்டேம்மா. எந்த வாழ்க்கை இனி யாருக்குமே வாய்க்கக் கூடாதுன்னு நெனச்சேனோ இப்ப அந்த வாழ்க்கை என் மகளுக்கே வந்து சேந்துட்டுது. நான் பாவி ... பாவி... "என்று நெஞ்சில் அறைந்து கொண்டாள்.   மஹ்மூதா எழுந்து நின்று தாயின் கையைப் பற்றினாள். இளந்தென்றல் பூவைத் தொட்டது போன்ற உணர்வால் நஜ்முன்னிஸா மஹ்மூதாவைக் கட்டியணைத்து முத்தங்கள் பொழிந்தாள். ஓசையில்லாது தாயும், மகளும் அழுதார்கள்.   வீட்டைத் துப்புரவாகக் கழுவினாள். சூரியன் பணி முடித்து மறைந்து விட்டான். காற்றை நன்கு உள்ளிழுத்து சுவாசித்தாள். தலையில் முக்காடு போட்டுக் கொண்டு தெருவிற்கு வந்தாள். புதியதான வெட்க உணர்ச்சி கவ்வ, தெருவின் இரு புறங்களிலும் நோட்டம் விட்டாள். பாதசாரிகள் இயக்கம் கொண்டிருந்தார்கள். எல்லா வீட்டு வாசல்களின் முன்னும் கோலங்கள் வரைந்திருந்தார்கள். பையன்கள் அங்குமிங்கும் ஓடி விளையாடியபடி சந்தோஷித்துக் கொண்டிருந்தார்கள்.   பூமியும் நோகாத படி கால்களும் வருந்தாதபடி மெல்ல நடந்து சென்றாள் நஜீமுன்னிஸா. தெற்கு ரத வீதியிலிருந்து கீழ ரத வீதிக்குத் திரும்பினாள். மல்லிகைச் சரம் வாங்கி, தலையில் வைக்கவென்று கூந்தலை நெகிழ்த்தி விட்ட போது தானாகவே மேலே வர கை மறுத்தது, சில கண்கள் குரூரமாகத் தன்னைக் காம நோக்கில் வெறிப்பதை உணராது, தனக்கும் முற்பட்ட நாளின் தொழிலுக்கும் எவ்வித சம்பந்தமே இல்லாதது மாதிரி தன் வீட்டை நோக்கி நடக்கலானாள். எப்போதும் போலில்லாமல், இன்று மல்லிகைச் சரமானது அவளது கையில் இருப்பதைக் கண்டதும் சிலரது நாவில் எச்சிலூறியது. சிலரின் உள்ளமெங்கும் மகிழ்ச்சிப் புனல் பெருக்கெடுத்தோடியது. எப்போது என்று காத்திருந்தோர்க்கெல்லாம் இன்று மேனியெங்கும் உணர்ச்சி மயமானது. அவளைக் கண்ட விசுவநாதய்யர் மட்டும் பிரலாபித்துக் கொண்டது நஜீமுன்னிஸாவின் செவிகளில் வந்து மோதியது.   "கடவுளே, நீ இன்னும் குருடனாத் தான் இருக்கியா?”   (தாமரை)   சந்தோஷமான மனநிலையில் இருந்தார் மாமா அன்று. ஒரு ராஜ கம்பீர நடை நடந்து வந்து, ஜஹாங்கீரின் முன் நின்று அப்படியே ஒரு சல்யூட்டும் அடித்து நின்ற போது இருந்த அனைவரும் சிரிப்பார்கள் என்று தான் அவர் எதிர்பார்த்தார். ஆனால் மற்றவர்களுக்கு அந்த மனநிலை இல்லை. எல்லோரும் ஏனோ ரசனையற்றுப் போயிருந்தார்கள் அந்நேரம். ஆனாலும் அவர் தன் உற்சாகத்தை இழந்து விடாமலே ஜஹாங்கீரிடம் கேட்டார், "பணத்தைத் தாங்க மருமவனே!". அவனும் எடுத்து முன் வைத்து ''முதலாளிட்ட கொடுத்து எண்ணி வாங்கிட்டுப் போங்க!" என்றான். மிதமிஞ்சிய உற்சாகத்தில் அவர் ஒன்று சொல்ல, சுற்றி நின்றவர்கள் ஒன்று சொல்ல, அப்படிச் சொல்லப்பட்ட சொற்கள் மாமாவின் உடம்பை அதிர வைத்த்து. கூசிக் குறுகிப் போனார். வேண்டுமென்றே தான் இவ்வளவு தூரம் இழிவு படுத்தப்பட்ட அவர்களுக்கு என்ன கோபம் தன் மீது? அவரும் தான் இதைக் கேட்டுக் கொண்டு ஏன் சும்மா இருக்க வேண்டும்? ஆனால் சும்மா தான் இருந்தார்! கண்களின் முன்னே அலையலையாய் அவமானப் பூச்சிகள் ஊர்ந்தன! எல்லாம் மறந்து போயிருக்கும் என்று இவரே அதனை மறந்து போயிருக்கிற நாள்களில் பழையது இப்படி விசுவரூபம் எடுப்பதும், அதனைத் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்குத்தான் உண்மையிலேயே பலவீனப்பட்டு விட்டமைக்கும் யாரை - எதைக் குற்றம் சொல்ல? எதையும் யாரும் மறப்பதில்லை. சமயங்கள் வரும் போது பழைய பாத்திரத்தை எடுத்துப் பூசிக் கழுவிச் சுத்தமாக்கி பளபளக்க வைத்து விடுவதைப் போலவே ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொன்றையும் தக்க சமயத்தில் எடுத்து அழகாகக் கொட்டி விடுகிறான் கொட்டி. தேளின் விஷம், பாம்பின் விஷம் என்பதெல்லாம் எம்மாத்திரம் என்று ஆகி விடுகிறது. இம்மாதிரித் தருணங்களில், ஒன்று நிகழ்ந்து விட்டால் அதனைக் கொண்டவனும், கண்டவனுமாகக் கட்டை மண்ணோடு வெந்து மக்குகிற வரைக்கும் சுமந்து கொண்டுதான் வருகிறான். அது தான் இப்படி, ஆனாலும் மாமா அந்த இடம் விட்டு எழுந்திரிக்கவில்லை. அப்படியே உட்கார்ந்திருந்தார். சொன்னவர்களும் அந்தச் சமயத்துக் கடமையைத் தீர்த்து விட்டவர்கள் மாதிரி தங்களின் அடுத்த வேலைக்குத் தாவிப் போயிருந்தார்கள்.   'மருமகனே' என்று மாமா வாய் நிறைய அழைத்த ஜஹாங்கீர் இவருக்கு உண்மையிலேயே மருமகனாய் அமைந்து விட்டது தான் வினோதம். ஜஹாங்கீர் மட்டுமே 'மாமா' என்று அழைக்க வேண்டிய இடத்தில், கம்பெனியில் வேலை பார்க்கிற அனைவருமே 'மாமா' என்று தான் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது முப்பது பேருக்குச் சாப்பாடு போட்டு வேலையும் தந்திருக்கிற கம்பெனி. மாமா மட்டும் வயதில் கூடுதலானவர். ஆதலால் பிச்சைக்கண் முதலாளி அவரைக் கண்ணியமாகக் கூப்பிட வேண்டும் என்பதற்காக தன் உறவு முறையான படிக்கே 'மாமா' என்று அழைத்தார். எப்போது தேவையென்றாலும் "மாமாவைக் கூப்பிடுங்க” என்பார் முதலாளி. அப்படி அவர் சொல்லிக் கொண்டே வந்ததால் மற்றவர்களுக்கும் 'மாமா'வாகிப் போனார். இப்படி மாமாவாகிப் போனதில் அன்வர் அவர்களுக்கும் பெருமையே! இவரும் சகட்டு மேனிக்கு 'மருமவனே' என்று முப்பது பேரையும் மருமகனாக்கிக் கொண்டார். முப்பது பெண் மக்களைப் பெற்றிருந்தால் கூட கவலை இல்லை. இந்தக் கருப்பும், சிவப்பும், படித்தும், படிக்காமலும் கணக்கு எழுதுகிறவனும், பண்டல் போடுகிறவனுமான இப்படியாகப்பட்ட இவர்களுக்குத் தான் முப்பது பெண் மக்களைப் பெற்றிருந்தால் ஜாதி சன வித்தியாசம் பார்க்காமல் கட்டிக் கொடுத்து விடுவேன் என்கிற ரீதியில் எப்போதும் உற்சாகப் பேச்சு. அரட்டை! அவருக்கு வாழ்க்கை தான் அபகீர்த்தியைத் தந்து விட்டது. நிஜம் என்று வரும் போது தான் பெற்றெடுத்து வளர்த்துக் கொண்டு வருகிற இப்போது மீதமுள்ள இரண்டு பெண் மக்களில் ஒருத்தியைக் கூட இவர்களுக்குக் கட்டிக் கொடுக்க முடியாமல் போகவும், அதற்காகக் கேவலப்பட்ட விஷயமும் தானே இப்படி தலை குனிய வைத்தது! ஜஹாங்கீர் மருமகன் எல்லா வேலைகளையும் முடித்து விட்டுத்தான் இனி பணத்தை எடுப்பான் போல! அவன் அவ்வளவுக்குத் தீவிரமாய் கணக்குப் பேரேட்டில் அவசரமாக எழுதிக் கொண்டு இருக்கிறான். உட்கார்ந்திருப்பது மாமா தானே என்று இவனுக்கும் தன் மீது மரியாதை இல்லாமல் போய் விட்டதா என்ன? கம்பெனி பாஷையில் சொன்னால் "நேத்திக்கு வந்த பய இவன். தனது பெரியப்பா பெற்றெடுத்தத் தங்கையின் மகன். முதலாளிக்கு அடுத்து உரிமையான உறவுக்காரன். வயது வித்தியாசங்கள் என்று பாராமல் இருந்தால் தனது மூன்றாவது மகளை இவனுக்கே கூட கட்டி வைத்து விடலாம் தான். ஆனால் இவனைப் பெற்றெடுத்து படிக்க வைத்தது இப்படியொரு, நாளும் கஷ்டப்படும் கடைச் சிப்பந்தியின் மகளுக்காக அல்ல என்று வாழ்க்கைத் தர்மம் அடித்துச் சொல்கிறது.   இவன் இது வரைக்கும் இப்போது இவர்கள் சொன்னார்களே அதற்கு மூலகாரணமான சம்பவத்தை அறிந்தா இருந்திருப்பான்? இவன் இவ்விடம் வந்த போது யார், யார் எப்படி என்று ஒவ்வொருத்தனும், ஒவ்வொருத்தனைப் பற்றிக் கூறி வந்திருப்பான்களோ? முடிவு காண முடியவில்லை.   "இன்கம்டாக்ஸ் கட்ட பணம் தாங்க மருமவனே” என்று எப்பவும் போல பேச்சைத் துவக்கினார். அவன் கணக்கு வேலையில் தீவிரமாக இருந்தான். அவசரமாய் முதலாளி கேட்ட சில விவரங்களுக்காக அவன் பரபரப்பாய் இருந்த நேரம். அதனால் தானோ என்னவோ தானே ஆறாயிரம் ரூபாயையும் எண்ணிக் கொடுக்க நேரமாகும் என்று மொத்த ரூபாயையும் அவர் கையிலேயே கொடுத்து, "முதலாளிட்ட கொடுத்து எண்ணி வாங்கிட்டுப் போங்க மாமா” என்றான். அப்போது அவன் சொல்வதையும் மாமா வாங்குவதையும் எதிரெதிர் சீட்டுக்களில் இருந்த இரண்டு பேரும் பார்த்தார்கள். மாமாவும் பழைய விஷயமெல்லாம் கருதி அப்படியே மொத்தப் பணத்தையும் எடுத்துக் கொண்டு போய் முதலாளியிடமே கொடுத்து எண்ணி வாங்கிக் கொண்டு போய் இருக்கலாம் தான். அவர் தான் உற்சாகப் பேர் வழியாயிற்றே. பழையதெல்லாம் மறந்து போனவராயிற்றே! என்ன சொன்னார்? "அதுக்கென்ன மருமவனே! நானே எண்ணி ஆறாயிரமும் எடுத்துக்குறேன்” என்றார். அப்படிச் சொன்னது தான் எதிரே இருந்த இருவரையும் உள்ளே நுழைந்து வந்து கொண்டு இருந்த இன்னொருத்தனையும் தூக்கிப் போட வைத்துவிட்டது. “என்ன அவசரம்னு இப்படி செய்யிறே! நீயே கரெக்டா எண்ணிக் குடுத்துற வேண்டியது தானே!' என்று ஒருத்தர் சொல்ல, இன்னொரு நபரோ இன்னும் ஒரு படி மேலேறி, "நீங்க அந்தப் பணத்த ஜஹாங்கீர் கிட்டேயே குடுங்க மாமா! அவனே எண்ணித் தந்துருவான்” என்றார். வந்த மூன்றாமவனுக்கு என்ன வேலை? இருவர் சொன்னதையும் ஆமோதிக்க ஒருத்தன் வேண்டுமே! அதற்காக அவன், "ஆமா! அப்படியே செய்துக்குங்க.” அதன்பின் தன் வேலை என்று என்ன உண்டோ அதைப் போய் பார்க்க போய் விட்ட பின் அவர் கண் முன்னாலேயே, அவர் சம்மதத்தின் பேரிலேயே, அவர் இதயத்தை எடுத்துக் கீறுகிற மாதிரி இப்படியான பேச்சுக்கள் அமைந்து விட்டன! மாமா எழுந்து போக நினைத்தும், கால்கள் பூமியோடு இறுகி விட்டன. தலை தாழ்ந்து இமைகள் மூடிவிட்டன.   ஜஹாங்கீர் இடையில் என்ன நினைத்தானோ வேலையை நிறுத்தி விட்டுப், பணத்தை எடுத்து எண்ணலானான். எல்லாம் பத்து, ஐந்து என்று பொடி நோட்டுக்கள்! அழுக்காகி ஒன்றோடொன்று ஒட்டிப் பிரிய மறுத்த கரன்ஸிகள்! பத்து நிமிசத்துக்கு சிரமப்பட்டு எண்ணி அன்வர் மாமாவின் கையில் திணித்தான்!   முன்பொரு முறை இப்படித் தான்! ஜஹாங்கீருக்கு முன்பு வேலை பார்த்த கணக்குப்பிள்ளை பேங்கில் பணம் போடச் சொல்லி எண்ணிக் கொண்டிருக்கும் போது இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை இடுப்பு பெல்ட்டுக்குள் திறமையாய்ச் சொருகி விட்டார். இருபத்து நான்காயிரம் பேங்கில் போட வேண்டிய தருணத்தில் மாமா இருபத்தைந்தாயிரமாகப் போனார். மீதித் தொகையை முதலாளி கேட்கும் போது சாயங்காலம் ஆகியிருந்தது. கணக்குப் பிள்ளையோ குறைவான ரூபாயும், தலை சொறிதலுமாக அவர் முன் போய் நிற்கிறார். கம்பெனியே ஒரு நிமிஷத்தில் கூகூ என்று ஆகி விட்டது. யாருடைய கைவேலை? தெரியவில்லை. கணக்காளர் கணக்கில் ரூபாய் ஆயிரம் பற்று எழுதப்பட, வாழ்க்கையே 'சீ . என்று ஆகிவிட்டது அவருக்கு. மாமா எல்லாவற்றையும் மூக்குக் கண்ணாடி வழியே கம்பீரமாகப் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்.   இந்த வெற்றி வேறு இடத்தில் நிற்க வில்லை. இந்த நிறுவனத்துக்குப் பணம் தர வேண்டிய இன்னொரு நிறுவனத்திலும் தன் வேலையை மாமா காட்டியிருக்கக் கூடாது. இம்முறை அந்தக் கை சாமர்த்தியம் அவரைக் கையும் களவுமாகப் பிடிபட வைத்து விட்டது. முதலாளிக்கு மாமா முறை என்று அவன் கண்டானா? அப்பவும் தான் என்ன செய்ய முடியும்? புராணங்கள் வாசிக்கப்பட்டன. மாமா கேவலப்பட்டு விட்டார். மருமகன் அந்தஸ்தில் முதலாளி! எவ்வளவு தீ அவர் பார்வையில்? என்னென்ன கேள்விகள்? உடனே எப்படி எப்படியெல்லாம் இவர் நடந்து கொள்ளாத - ஆனால் இவர் நடந்து கொண்டதாகவே இவரே அறியாத கதைகள் வலம் வந்து விட்டன? பழையன, புதியன என்று எல்லா திருட்டுக்களும் அன்வர் மாமாவின் தலை மேல்! அவர் தாங்கிக் கொண்டிருக்கலாம்! ஆனால் கம்பெனி அதைத் தாங்கிக் கொள்ளத் தயாராயில்லை! அவருக்கு உடனே தீர்ப்பு கிடைத்தது. "இனிமே இங்க வேலையில்ல. போயிட்டு வாங்க!” இறுகிய முகத்தோடு கேட்டார். எதுவும் சொல்லவில்லை. வெளியே வந்து விட்டார். நிறைய யோசிக்க அவருக்கு என்ன உண்டு? வீட்டின் சம்பாத்தியக் கைகள் அவரிடம் மட்டுமே! ஒரு மகளைத் தான் கட்டிக் கொடுத்திருக்கிறது இன்னும் இரண்டு பெண்களின் கழுத்துக்கு வழி தேட வேண்டிய நேரம் அது. அதிலும் நடுவில் உள்ளவளுக்கு நிக்காஹ் என தீர்மானமாகியுள்ளது! எங்கு போக? என்ன செய்ய? தலை சுற்றும் குழப்பங்களில் மாமா சிக்கவில்லை ! இரவு வரை அமைதியானார். காலையில் மருமக முதலாளியின் வீட்டிற்கு ஒரு நடை நடந்தார். எதுவுமே பேசாமல் அவர் பசியாறிக் கொண்டிருக்கும் போதே கால்களைப் பற்றிக் கொண்டார். மருமகனின் காலடியில் மாமா! இப்படி ஒரு சித்திரம் போட்டுப் பார்க்க காலத்திற்கு கல் மனசு இருந்திருக்கிறது. கால்களைப் பற்றிய படியே குனிந்த தலை நிமிராமல் வார்த்தைகள் பல சொல்லி அழுதார். வீட்டில் பெண்டுகளும், பிள்ளைகளும் நிறைந்திருந்த நேரம் அது. அந்தச் சபையில் மாமாவுக்கு பெருந்தன்மையான மன்னிப்பு தரப்பட்டது. உறுதிமொழி வாங்கப்பட்டது. மேலும் 'கம்பெனிக்கு மாமாவின் சேவை ரொம்பவும் தேவை! இவர் இடத்தில் வேறு யாரோ ஒருவன் தவறு செய்தால்... இப்படியெல்லாம் வியாபார நிறுவனத்துக்கே உரிய பல சிக்கல்கள் மாமாவின் வேலைக்கு வழி தந்தன! மாமா மீண்டும் வந்த வரலாறு அதுதான்!   அன்வர் மாமா இப்போது அவசரப்படாமல் பணம் பெற்றுக் கொண்டார். அவர் யாரோடும் எதுவும் பேசவில்லை . பணம் எண்ணும் போது மட்டும் அவர் வாய் ஒரு மந்திர உச்சரிப்பைப் போல திறந்து திறந்து மூடியது. பின் புறப்பட்டு விட்டார். அவர் புறப்படுவதற்காகக் காத்திருந்தவர்கள் உடனே ஜஹாங்கீரைச் சூழ்ந்து கொண்டார்கள். "இங்க பழைய கதை என்னெல்லாம் நடந்திருக்கு தெரியுமா தம்பி? எந்த தைரியத்துல அவரு கிட்ட ஒட்டு மொத்தமா பணத்த குடுத்த? மனுஷன் அப்படியே முழுங்கிடுவாரே! மலைப் பாம்பு மாதிரி முழுங்கின் சுவடு கூட இல்லாம கிடப்பாருப்பா! ரொம்ப கவனமா இருப்பா நீ!" என்றார்கள்.   “எனக்கும் எல்லாம் தெரியும். அன்வர் மாமா ஒரு மாதிரி ஆளு. அவருகிட்ட சாவகாசம் வச்சுக்காதே. கொஞ்சம் நெருக்கமா இருந்தாலும் அவரு பெண்ண உன் தலையிலக் கட்டி வச்சாலும் வச்சிருவாரு. அதனால அவரு கிட்டேயிருந்து விலகியே இரு. கை அப்பப்ப நீளும். ஒரு மாதிரி திருட்டுப் புத்தில்லாம் அவருக்கு உண்டுன்னு எங்கம்மாவும் நான் இங்க வரும் போது சொல்லித் தான் அனுப்புனாங்க. அது உண்மையா, பொய்யான்னு பாக்கலாமேன்னு தான் நானும் ஒண்ணும் தெரியாதவன் மாதிரி நடந்துக்கிட்டேன்” ஜஹாங்கீர் சொல்லி முடித்த போது அன்வர் மாமா ரொம்ப தூரத்தில் போய்க் கொண்டிருந்தார். (பாவு)   சந்திரா   மலைக்காட்டின் வனப்பு அவள் தேகத்திற்கு இறங்கி வந்திருந்தது. எந்த வினாடியிலும் சிரித்து விடத் தயாரான புன்னகை குடியிருந்த முகம். படிப்பில் வேகமாய் ஓடி வந்தவள் இல்லையென்றாலும் வெற்றி வீரர்களின் அடுத்த வரிசையில் வரக் கூடியவள். நட்புக்கு இனிமையானவள். எனக்கு வேண்டப்பட்டத் தோழியாயிருந்தாள் அந்தச் சந்திரா.   தலையில் விறகுக் கட்டும் ஓங்கி எழுப்பும் கூக்குரலுமாய் அந்தப் பொழுதுக்கு அந்த இடத்தில் வருவாள் என்று நான் எண்ணியே பார்க்கவில்லை.   இந்தக் கோலத்தில் சந்திரா என்னிடம் மட்டும் அல்ல தன் தாயைத் தவிர்த்த வேறு யார் முன்னிலையிலும் கூட இப்படி நிற்க நூறு பணம் கொடுத்த போதும் மனம் ஒப்ப மாட்டாள். தன்னோடு படித்த மிகவும் நெருக்கமான சினேகிதனை இந்நிலையில் பார்க்க பெண்ணாய்ப் பிறந்த யாருக்குமே மனசு வந்திருக்காது. தலைமுடியை இடது கையால் கோதி அதனைப் படிய வைத்தாள். மேலே அப்பியிருந்த தூசு தும்புகளை இரண்டு கைகளாலும் தட்டிக் கிளப்பிச் சேலையைச் சரி செய்து கொண்டாள். கால்கள் பனை ஓலைச் செருப்புகளை மிகச் சரியாக மாட்டிக் கொண்டன. இப்படியெல்லாம் கையும், காலும் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் அவள் புன்னகை மாறாமல் கண்களை என் மீதே பதித்திருந்தாள்.   "மொகமது எப்படியிருக்கே? என்னைப் பார்க்காமலேயே வேகமாப் போயிட்டிருக்கியே?”   "உன்னைக் கவனிக்கவே இல்லை சந்திரா. போட்ட சத்தத்தைக் கொண்டு கூட அது நீயாத் தான் இருப்பேன்னு நான் நினைக்கவேயில்லை. சினிமா ஆரம்பிக்கிற நேரம். அதானோ என்னவோ அவ்வளவு அவசரமாயிட்டேன்."   "இருந்தாலும் எப்பவும் நீ மெல்ல நடக்குறவன் பாரு?" இப்ப எப்படியிருக்கே மொகமது?   "நல்லா இருக்கேன் சந்திரா. நீ ஏன் இந்தக் கோலத்துல..?”   "விதி! வேற என்ன சொல்லப் போறேன்?”   நான் வெறித்துப் பார்த்தேன். பின் சிரித்து விட்டேன்.   "ஏன் சிரிக்குறே? நீ இதெல்லாம் நம்ப மாட்டே. அது எனக்குத் தெரியும்.”   நான் சிரித்திருந்தாலும் மனதை அழுத்தியிருந்த வேதனையைச் சொல்லி முடியாது. ஆனாலும் அவள் என்னைப் புரிந்து கொண்டாள்.   "பேச மாட்டேங்குறியே! படம் பாக்குறத கெடுத்துட்டான்னு நீ நெனச்சுட்டியா? சொல்லு படம் பாக்கத் தான் வேணுமா? அப்படின்னா போ!   "உன்னைப் பாத்த பெறகு சினிமான்னு நெனப்பே இல்லே. இந்தக் கோலத்துல இருந்தாலும் என்னையப் பாக்கணுமின்னு உனக்கு எப்படி முடிஞ்சுதோ? அந்த மனச நெனச்சுத்தான் நான் இப்போ சந்தோசப்பட்டுகிட்டு இருக்கேன்.”   "அன்பான மனச விடவும் நமக்கு இந்த உலகத்துலே வேற என்ன வேணும் மொகமது? உன்னையப் பாத்துட்டும் நான் விறகுக் கட்டை விக்குறது தான் பெரிசுன்னு போயிட்டா என் முகத்த கண்ணாடியிலே பார்த்து நானே காறித் துப்பிடுவேன். நாம ஒண்ணா சேர்ந்து படிச்ச அந்த நாள் தான் இன்னைக்கு நினைக்கும் போதும் சந்தோஷமாகவும், திருப்தியாகவும் இருக்கு. அதப் போல நம்ம வாழ்க்கையிலே இனிமே ஒரு சந்தோஷம் வரவா போகுது?”   "அதை விட அதிகமாவே வரும் சந்திரா. கல்யாணம் வரும். நல்ல புருசன், நல்ல குழந்தை குட்டிங்க எல்லாம் இனிமே தான் வரப் போறாங்க! இப்படி நெறைய சந்தோஷங்கள் இருக்கு.”   "இந்தா பாரு மொகமது. அதெல்லாம் அப்புறம். படிக்குற காலத்துல நானும், நீயும் கட்டுரை எழுதலியா கலெக்டராவப் போறேன், எஞ்சினியர் ஆவப் போறேன்னு . அத மாதிரி இதுவும் ஒரு கனவு தான். ஒவ்வொரு மனுசங்களும் சிக்கி சீரழிஞ்சிக் கெடக்குறதைப் பார்த்தா என்ன கல்யாணம் என்ன குடும்பம்னு ஆயிடறது!”   சுற்று முற்றும் பார்த்தவளாக மறுபடியும் தலைமுடியைக் கோதி விட்டு சந்திரா சொன்னாள், "இந்த விறகுக் கட்டை காட்டுல இருந்து சுமந்துகிட்டு ஊருக்குள்ளே இவ்வளவு தூரம் வரும் போது அப்படியே நரகத்துல போயி விழுந்தாலும் சுகமாயிருக்கும்னு நெனப்பு வரும். இதச் சொமந்து இந்த வெயில்ல நடந்து பாத்தால்ல தெரியும். இடுப்பெலும்பே ஒடிஞ்சி போயிரும் மொகமது. மனசு நொந்து உடம்பு வெந்து வந்துகிட்டு இருப்பேன். ஆனா அப்பல்லாம் நான் என்ன நெனச்சுக்கிட்டு வருவேன் தெரியுமா? நாம் படிச்சு விளையாட்டும், சண்டையுமா இருந்த அந்தக் காலத்தத்தான். உன்னைப் பத்தி ரேணுகாவைப் பத்தி, மரியத்த பத்தி, நெல்லையப்பன், அப்துல் ஹமீத்கான், பக்கத்துல உக்காந்து, மண்டையில் குட்டித் தெரியாத பாடத்த எல்லாம் சொல்லித் தருவாளே அந்த அருணாசலத்தம்மாவைப் பத்தி... இப்படியே நெனப்பாத் தான் வருவேன். மத்தவங்க நெனப்பு வந்தாலும் வராட்டாலும் உன்னையும், ரேணுகாவையும் பத்தி ரொம்ப நெனச்சுக்குவேன். ஏன்னா நீங்க ரெண்டு பேரும் அப்படி ஆயிட்டீங்க!”   அவள் சொல்லச் சொல்ல அந்த உலகத்துக்குள் நானும் போய் விட்டேன். அது மீள் விரும்பாத சொர்க்க நாள்கள். அவள் அதைச் சொல்லும் போதே இருவரின் கண்களும் ஈரமாகி விட்டன.   "ரேணுகாவைப் பாத்தியா, அவ என்ன படிச்சிட்டிருக்கான்னு தெரியுமா?”   ரேணுகாவைப் பற்றிப் பேசப் பேச எனக்கு உள்ளம் குளிர்ந்தது. நான் தான் அவளைப் பற்றித் தெரிந்திருப்பேன் என்ற நினைப்பில் அவள் விசாரித்தது இதமாய் இருந்தது. நான் சொன்னேன், "இல்ல....... நான் மறுபடியும் அவளப் பார்க்கவேயில்ல. இப்ப அவ என்ன படிக்கறான்னும் தெரியாது. ஆனா நிச்சயமா அவ டாக்டருக்குத் தான் படிப்பா. ஏன்னா அவ என்கிட்ட பல சமயங்கள்லேயும் அப்படித்தான் சொல்லிட்டிருந்தா.”   "ஏன் மொகமது அவள அப்படி விட்டுட்ட. அவளத் தேடி நீ போயிருக்க வேண்டாமா?”   எனக்கோ மனந்திறந்து எதையும் அவளிடம் சொல்ல முடியவில்லை.   சந்திரா இன்னும் நெருக்கமாய் வந்து நின்று என்னைப் போலவே சுவரில் சாய்ந்தபடி சொன்னாள், "அவ உன்னை மறந்திருக்க மாட்டா. நீயும் இப்படியே இருந்துறாத. நிச்சயம் அவ உனக்குத்தான். வேண்ணா பாரேன்! ஒரு நாள் அவளே உன்னைத் தேடியாந்துருவா!”   எனக்குச் சந்திராவின் கைகளைப் பற்றிக் கொள்ள வேண்டும் போல இருந்தது. பகல் காட்சி ஆரம்பமாகி கொஞ்சம் ஓடியிருக்கும். அதன் அடையாளம் தெரிவதாக ஜனங்களின் நடமாட்டம் குறைந்து போயிருந்தது. களைத்துப் போன மாடுகள் வாயில் நுரை தள்ள மெதுவாக இழுத்துச் செல்லும் வண்டிகள் சீரற்ற தார்ச் சாலையில் கடக், கடக் சப்தங்கள் எழுப்பிச் சென்றன. பழரசக் கடைகள் இல்லை. சந்திராவுக்கு டீயாவது வாங்கிக் கொடுக்க வேண்டும்.   “இந்த நேரத்துக்கு வாறியே! காலையிலேயே வந்து திரும்பலாமில்லே! சாப்புட்டியா நீ?”   "ஹும்... காலையிலே குடிச்ச நீத்தண்ணி தான். இனிமே வீடு திரும்புனாத் தான் கஞ்சியோ , கூழோ வாயில்படும். விறகு வெட்டி என் தலையிலே ஏத்தி விடறதுக்கே பதினொண்ணு பதினொன்றை ஆயிரும். நான் அங்கேயிருந்து காடு மலை வயலு வரப்புன்னு தாண்டி வர்றதுக்கு இம்புட்டு நேரமாயிடும். எப்பவுமே இப்படித்தான் மொகமது."   "வாறியா ஹோட்டலுக்கு டீ காபின்னு ஏதாவது சாப்பிடலாம்.”   "வேண்டாம் மொகமது” “ஏன்?”   நிதானித்தவாளாகச் சொன்னாள். “இன்னிக்கு நீ வாங்கித் தந்துருவே. நாளைக்கு இந்த மாதிரி வரும் போது இடையில் ஒரு டீ சாப்ட்டா தேவலாமேன்னு தோணும். அப்புறம் அதுவே பெரிய பழக்க தோசமா ஆயிரும். என்னைக்கும் அது எனக்கு சரிப்பட்டு வராது. வேண்ணா நீ போயி சாப்ட்டு வா . நான் இங்குனயே நின்னுக்கிடுதேன். பாத்தமட்டுக்கும் உன் கூட நெறைய பேசிட்டுத் தான் போவேன். அது எம்புட்டு நேரமான்னாலும் பரவாயில்லே!"   நான் விடவில்லை. வற்புறுத்தினேன். ஆனால் விறகுக்காரி என்ற தோற்றத்தோடு என்னோடு வர அவள் சங்கடப்படுவது தெரிந்தது. எல்லா இடங்களிலும் தூசு தும்பு இல்லாமல் தட்டி விட்டாள். எல்லோருமே ஒரு மாதிரியாகப் பார்ப்பது இருவருக்குமே துன்புறுத்தலாக இருந்தது. ஒரு வழியாக ஹோட்டலை எட்டிப் பிடித்து விட்டோம்.   "என்ன சாப்புடுறே?”   “டீன்னு தான் சொல்லிக் கூப்புட்டே?”   "வேண்டாம் சோறு சாப்புடு. பசியாயிருக்கேல்ல.”   அவள் கடுமையாக மறுத்தாள். தேநீரே போதுமென்றாள். எனக்கு அவளை அப்படி விட்டு விட மனசே இல்லை. கல்லாவுக்கு எதிரிலேயே புரோட்டா தட்டிக் கொண்டிருந்தது என் கவனத்தில் ஆயிற்று. "புரோட்டா சால்னா சாப்பிடு” எத்தனை நாள் ஆசையில் இருந்தாளோ? சந்தோசம் பூத்த முகமாகத் தலையாட்டினாள். திரும்பி பார்த்துச் சொன்னாள்,   "நான் சாப்புடுறேன். ஆனா நீயும் என் கூட சாப்பிடணும்.”   தனியாக ஒரு தடுப்புக் கட்டை போட்டு... என்று எழுதியிருந்த ஒரு அறையில் இருந்தோம். அவள் என்னை நெருங்கி அமர்ந்திருந்தாள். ஹோட்டல் காற்றாடியது. சர்வர்கள் எல்லாம் ஒரு மாதிரியான பார்வையை வைத்திருந்தார்கள்.   "மொகமது! எனக்கு இந்தப் புரோட்டா சால்னா சாப்புடணும்னு எவ்வளவு நாள் ஆசை தெரியுமா? இது வரையிலே ஆச்சே. ஒரு துண்டு கூட என் வாயில் பட்டதே இல்ல. பாரேன்! இன்னைக்கு உன் செலவுல நான் சாப்புடணும்னு இருக்கேன்.”   எனக்கென்றிருந்த ஆம்லேட்டையும் நான் அவள் பக்கமாக நகர்த்தினேன். "இதையும் சாப்புடு” என்றேன்.   "வேண்டாம்.” என்றாள். "பிகு பண்ணாதே. என்னை மறக்காம இருக்கணும்னா இதையும் சாப்பிட்டிரு" என்று நான் சொல்லவும் அவளே முன் வந்து எடுத்துக் கொண்டாள்.   "நாம ஒருத்தரயொருத்தர் மறக்குற அளவுலயா பழகி இருக்கோம்? என் மனசுல உனக்குன்னு ஒரு தனியிடம் இருக்கு. எந்த ஜென்மத்திலேயும் அழியாது. இதச் சாப்புட்டுத் தான் நான் உன்னை மறக்காம இருக்கணுமா?”   ரசித்துச் சாப்பிட்டு மென்று விழுங்கியபடியே அவள் பேசுவதை நான் ரசித்தேன்.   "உனக்கு இன்னும் மாப்பிள்ளை பேசலியா?”   "ம்... எல்லாம் பேசி வச்சாச்சு. இன்னும் ஒரு வருசம் இல்லே ஆறு மாசம்... கல்யாணம் தான்.”   "மாப்பிள்ளைக்கு என்ன வேலை?”   "என்ன வேலை? வெறகு வெட்டுவான் ..... வயலுக்குப் போவான்... களை புடுங்குவான். வண்டி ஓட்டுவான்.”   இப்படித் தான் இவளுக்கு அமையுமா? அதை அவள் சொல்லிக் கேட்கும் போது தீச்சரங்கள் இதயத்தில் பாய்வது போல் இருந்தன.   “வேற இடம் அமையாதா?”   "இனிமே அது பத்தி யோசிக்க முடியாது. ஆனா எந்தத் தொழிலும் கடைசி வரை அப்படியே ஆயிறப் போறதில்ல. மாறும்! எல்லாமே மாறும்னு நம்பிக்கை வச்சிருக்கேன் நான்."   அவள் இப்படிப் பேசினது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இவள் என் சக தோழி தான் என்கிற எண்ணம் உறுதிப்பட்டது. கால வெள்ளத்தில் இவள் காணாமல் போய் விடும் துரும்பல்ல.   "இன்னும் ரெண்டு புரோட்டா சாப்பிடு!” மறுக்கவில்லை. "இவ்வளவு பசிய வச்சுக்கிட்டுத்தானா ஒரு டீ சாப்புட கூட மனசில்லாம சுத்திக்கிட்டு இருக்கே? நீ கல்யாணம் முடிஞ்சி உன் மாப்பிள்ளையோட என் வீட்டுக்கு விருந்துக்கு வா. உங்க ரெண்டு பேருக்கும் புரோட்டா செட் மல போல குவிச்சுறேன்."   அவள் மிகவும் முகம் மலர்ந்தவளாய், "கண்டிப்பா வருவேன் மொகமது. இது வெறும் பேச்சில்லை. பாரு! எனக்கு எப்படிப்பட்ட மனுசங்கள்லாம் இருக்காங்கன்னு என் புருசனுக்குக் காட்ட வேண்டாமா? படிப்பு வாசன அவனுக்கு இல்லேன்னாலும் நல்ல மனசுக்காரன். என் கல்யாணத்துக்கு நான் உன்னைக் கூப்பிட்டு விடுவேன். நீ கண்டிப்பா வரணும்."   காசு கொடுத்து விட்டு வெளியே வர எத்தனிக்கும் போது எங்களோடு படித்த நல்ல தம்பி உள்ளே வந்தான். "யாரு மொகமதுவும், சந்திராவுமா? எங்க இவ்வளவு தூரம்?”   “டீ சாப்டுட்டு போறோம்” என்று தொடங்கி அவனிடம் நாலு வார்த்தை பேசுவதற்குள் "அவன் கிட்ட அப்புறமா பேசு! சீக்கிரமா வா!" என்றாள் சந்திரா. "பழைய புத்திய விடாம இருக்கா பாரேன்” என்றபடி அவன் சிரித்தான்.   நாங்கள் சந்தித்த இடத்தை அடையாளம் காட்டி கட்டு காத்திருந்தது. நாங்கள் இன்னும் பேச ஆர்வமாய் அந்த இடத்தை நெருங்கும் போது "விறகுக் கட்டு என்ன விலைம்மா?” என்று ஒருத்தர் வந்தார். அவள் விலை சொன்னதும் அவர் அதற்குப் பாதியாகக் கேட்டார்.   "அதுக்கு வேற ஆள் வரும் பாத்துக்கிடும்” என்றாள். அவள் அதை அப்படி வேகமாகச் சொன்ன விதத்தையும் அதற்கு அவள் முகம் போன போக்கையும் நான் ரொம்பவும் ரசித்தேன். எந்த உணர்ச்சிகளிலும் அழகை வாரிக் கொட்டும் அந்த முகத்தை இப்படி வெகுநாள் கழித்துப் பார்க்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.   "சரி! நீயே ஒரு வெல சொல்லும்மா!” அவள் சொன்ன விலைக்கு அவர் சம்மதிக்க வில்லை .   "சினிமா பாக்கணுமின்னா நாலு ரூபா டிக்கெட்டுக்கு நாப்பது ரூபாயும் குடுத்துப் பாப்பீங்கையா. நாங்க காடு மேடுன்னு சுத்திக் கல்லு, முள்ளுன்னு மிதிச்சு வந்தா காவாசியும், அரைவாசியுமா கேட்டு ஏன்யா எங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறீங்க?”   அவர் போய் விட்டார். அவர் போனதையே பார்த்துக் கொண்டிருந்தவள், "நியாயமான விலைக்குக் கேட்டு இருந்தார்னா தள்ளி விட்ருக்கலாம்! அப்புறம் எவ்ளோ நேரமானாலும் பேசிக்கிட்டு இருந்திருக்கலாம் சே! என்ன மனுசன் போயிட்டாரே!”   "நீ கொடுத்த சூட தாங்காம தான் ஓடிட்டாரு மனுசன்.”   ஆனால் அவர் திரும்பவும் வந்தார். சந்திரா சொன்ன விலைக்குக் கிட்டதட்ட சமமாக வந்தார்.   "என் வீட்டுக்கு வந்து போட்டுருதியா” என்று கேட்டார்.   "வீடு எங்கேன்னு சொல்லுங்க. நான் வந்து போட்டுருதேன். அவர் கிட்ட பேசிட்டு கொஞ்ச நேரம் கழித்துத் தான் வருவேன்” என்றாள்.   "கொஞ்ச தூரமா போவணும். நான் வள்ளியூர் சந்தைக்குப் போகுற அவசரத்துல இருக்கேன். என் பின்னாலேயே வந்துட்டியானா நல்லது. இல்லேன்னா வீட்டக் கண்டுபிடிக்க தோதுப்படாது” என்றார்.   அன்பு பிரவகிக்கும் கண்கள் தீர்ந்து போகாத நட்பை வெளிப்படுத்த கனத்த இதயத்துடன் விறகுக் கட்டுக்கு முட்டுக் கொடுத்துத் தலையில் ஏந்திக் கொண்டாள். ஒரு சுகானுபவம் கரைந்து போவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் நான் ஈரவிழிகளால் தடுமாறினேன். தகிக்கிற வெயிலில் தலைச்சுமை ஏந்தி தெருவில் கூவியலைகிற இந்த அவலத் தொழிலோடு சம்பந்தமில்லாமல் மீண்டும் அந்தக் குரலைக் கேட்க வேண்டும் எனக் காத்திருக்கிறேன் பல ஆண்டுகளாக! (குமுதம் - நவம்.95)   டாக்டர் ரேணுகா சாலை முழுதும் மரங்கள் இருந்தாலும், பொழுது சாய்கிற நேரமாயினும் சூரியத் தகிப்பு அதிகம். இடது புறத் தோளில் குழந்தையைத் தூங்கப் போட்டு, மேலே ஒரு டவலைப் போர்த்தியவனாகப் போய் கொண்டிருந்தான் ஷேக் பரீத். குழந்தையைப் பார்க்க ஊருக்கு வரும் போது இருந்த குதூகலம் என்ன? தளர் நடையாய் ஓடி வருகிற மகனைக் காணப் போகிற உற்சாகமாய் வீட்டுக்குள் நுழைந்த போது, அவன் சுகமில்லாமல் கிடந்தான். மனைவியின் பக்கத்தில் வந்து விட்டோம் என்கிற சந்தோஷத்தை விட, மகன் இப்படிக் கிடந்தது அவன் மனதை நெருடியது.   "இன்னைக்கு ஒரு நாள் டாக்டர்ட்ட காட்டிட்டாப் போதும் சொகம் கிடச்சுரும்.” என்ற மனைவியின் வாய்மொழி அவனை உயிர்ப்பித்தது.   பையனை ஒரு பக்கமாகச் சுமந்தே வந்ததில் தோள்ப் பட்டை வலித்தது. ஆனால் இந்த வலி தானே சுகம்! பேருந்து நிலையத்தின் அருகில் இருந்தது பார்வதி கிளினிக். பாதிக் கட்டி முடிந்த நிலையில் இருந்த்து பார்வதி கிளினிக். அருகில் செல்லவும் டாக்டரின் பெயர் கண்ணில் பட்டது. டாக்டர் ரேணுகா!   உடம்பும், மனமும் சிலிர்த்தன. அடுத்தடுத்த கணங்கள் பரவசமான உணர்வுகளைக் கொண்டு வந்தன. ரேணுகா! அவள் தானா? அப்படியில்லாமல் போய் விட்டால்...... மறுபடியும் பார்த்தான். உச்சரித்தான். டாக்டர் என்ற அடைமொழியோடு அவள் பெயரைச் சொல்லிப் பார்ப்பதே புதிய சுகமாயிற்று. மயிர்க்கால்கள் சிலிர்த்தன. பக்தி உணர்வுடன் உள்ளே நுழைந்தான் ஷேப் பரீத்.   ஹால் விசாலமாகப் பளிங்குத் தரையுடன் இருந்தது. அவனுக்கு முன்னதாக இரண்டு பெண்கள் மட்டுமே குழந்தைகளோடு! டாக்டர் அறை வெளிப் பார்வைக்கே அழகாய் தெரிந்தது. அதிலும் அவள் பெயர் - டாக்டர் ரேணுகா.   ரேணுகா - சிவப்பாக, நடுத்தரமான உடல் வாகோடு, நீண்ட சுருள் சுருளான கூந்தலோடு சிரித்த முகமும் ஒளி வீசும் கண்களுமாக இருக்கிறவள்! எந்த உடையிலும் தேவதை போல் இருப்பாள்.   எட்டாம் வகுப்பில் இருந்து எஸ்.எஸ்.எல்.சி வரை ஷேக் பரீத்துடன் ஒரே வகுப்பில் இணைந்து படித்து வந்தாள் ரேணுகா. ஒரு தேர்வில் அவள் முதல் ரேங்க் வந்தால், இவன் இரண்டாம் ரேங்க். அடுத்த தேர்வில் அவன் முதல் ரேங்க் வந்து, இவளை இரண்டாம் இடத்தில் நிறுத்தி வைப்பான். ஆனால்இடையில் ஒரு சரிவு. ரேணுகா, நெல்லையப்பன், பழனி, பாத்திமா, சந்திரா.... என்று நீண்டு எட்டாம் ரேங்கில் போய்க் கிடந்தான் ஷேக். ஆசிரியர்களுக்கே வியப்பு. எப்படி நேரும் இது? அவனது விடைத் தாள்களை வாங்கி திருப்பித் திருப்பி உற்றுப் பார்த்து அந்த வீழ்ச்சி எங்கே நேர்ந்தது என்று உணரத் துடித்த வேகம்...... கண்களில் தெரிந்த வேதனைகளின் கொந்தளிப்பு.... "என்ன ஆச்சு உனக்கு? அந்த குரங்கு மூஞ்சி பழனி கூட உனக்கு முன்னால் வந்துட்டான். என்னால் பொறுக்க முடியல ஷேக். எங்க அம்மாகிட்ட சொன்னா, அவங்க கூட நம்ப மாட்டாங்க" ரேணுகா அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். அவன் பதில் பேசாமல் நடந்தான்.   “சரியா படிக்கலியா? என் கிட்டே கூட நீ பேசமாட்டே இல்லே?” என்று ரேணுகா கேட்ட போது அவள் கண்களில் கண்ணீர் தளும்பிற்று. அதுவே அவனுக்கு சவாலாக நின்றது. அடுத்த தேர்விலேயே பழைய வெற்றியைப் பெற்று, முன்னிருந்தவர்களை நிரந்தரமாகவே பின்னுக்குத் தள்ளி விட்டு ரேணுகாவுக்கு அந்த வெற்றியைக் காணிக்கை ஆக்கினான் ஷேக். அந்தக் காணிக்கைக்கு ஈடாக அவனைப் பெருமை பொங்கப் பார்த்து அவள் சிரித்த சிரிப்பு அவன் இதயத்தில் பதிவாகி விட்டது.   அந்த நாளிலிருந்து ரேணுகா, அவனுடன் சேர்ந்தே வர ஆரம்பித்தாள். காலையில் போகும் போதும் கூட இவன் நாவல் மரத்தடியிலேயே ரேணுகாவுக்காகக் காத்திருக்கலானான். நாவல் பழ சீசனில் ரேணுகாவுக்காகப் பழங்களைப் பொறுக்கியெடுத்து அவள் கையில் திணிப்பான். சிரிப்பும் விளையாட்டுமாய் காலமும் அவர்களோடு நடந்து போனது.   ரேணுகாவின் கண்ணியமான அன்பை பின்னொரு நாளில் தான் அனைவரும் காண முடிந்தது. அது ஷேக் பரீதை உலுக்கி விட்டது.   ராமையா சார் சயன்ஸ் பாடத்தில் கேள்வி கேட்டார். ரேணுகாவையும், ஷேக்கையும் தவிர அனைவரும் பதில் தெரியாமல் விழித்தார்கள். இருவரில் யாரிடம் கேட்டாலும் உடனே பதில் வந்து விடும். ஆனால் ஷேக்கும் அன்று பதில் தெரியாமல் நின்று விட்டான். ரேணுகா சரியான பதில் சொன்னாள். ராமையா சார் அனைவரையுமே வெறுப்பாகப் பார்த்தார். "வெக்கமாயில்ல? இந்தப் பொட்டப்புள்ள கையால இன்னும் எத்தனை நாளைக்குத் தான் குட்டு வாங்கப் போறீங்களோ. ரேணுகா எல்லோர் தலையிலும் குட்டுப் போடு..." என்று ரேணுகாவுக்கு உத்தரவு வழங்கி உட்கார்ந்தார். ரேணுகாவும் கட்டளையை நிறைவேற்ற ஆரம்பித்தாள். இனி எந்தக் காரணம் கொண்டும் ஷேக்கைப் பின் தள்ளி மதிப்பெண்கள் வாங்குவதில்லை என்று அன்று அவள் தீர்மானம் செய்திருக்க வேண்டும்.   ராமையா சார் மீண்டும் பாடம் ஆரம்பிக்கப் புத்தகம் திருப்பினார்.   "சார்! ஷேக்கு தலையிலே மட்டும் ரேணுகா குட்டமாலேயே போயிட்டா சார்!” என்று ஒரு குரல் கிளம்ப, இருவருமே அதிர்ந்து விட்டனர். ராமையா சார் திடுக்கிட்டார். அவன் அருகில் வந்தார்.   "அவ குட்டுனாளா, இல்லியா?”   "குட்டினா சார்!”   பின் ரேணுகா பக்கமாய் நகர்ந்தார்.   "அவனைக் குட்டுனியா, இல்லியா உண்மையச் சொல்லிரு" நடுக்கமின்றி சொன்னாள் "குட்டினேன் சார்!”   "சார் பொய் சொல்றாங்க சார்!”   பல குரல்கள் ஒரே சமயத்தில் எழுந்தன.   "உன்னைச் சொல்றேன். அவ பொய் சொன்னதுக்கு நீ போடு குட்டு அவ தலையிலே.” கடுமையான குரலில் அக்னிப் பார்வையுடன் வந்தது உத்தரவு. ஆனால் அது செயல்படுத்தப்படவில்லை. அவருள் கோபம் பொங்கியது. ராமையா சார் விருட்டென்று வெளியே போனார். ரேணுகா ஷேக் முகத்தையே பார்த்தவாறிருந்தாள். அவள் அவனுக்கு மட்டுமே கேட்கும் குரலில் சொன்னாள், “பயப்படாதே.” வேகமாய்ப் போன ராமையா, வேலாயுதம் சாரிடமிருந்து புளிய மிலாறு கொண்டு வந்தார். ஷேக் பரீத்தை விளாசித் தள்ளினார். அடியின் வேகம் தாங்காமல் அவன் அலறினான். அவன் கையும், காலும் வீங்கிப் போயின. ரேணுகாவை இழுத்தார். மிலாறு அவரின் கோபத்தை அவள் உடம்பில் பதம் பார்த்தது. அவள் முணங்கவில்லை, அழவில்லை. கண்ணீர் வடிக்கவில்லை. அவள் அழாமல் இருந்தது அவரது ஆத்திரத்தை வளர்த்தது. அவள் கூந்தலைப் பற்றினார். அவள் திமிற, கூந்தல் அவரது கையை விட்டு நழுவ, எதிரே கிடந்த பெஞ்சின் மேல் மோதினாள். அதன் கூரிய முனை அவளின் நெற்றியைத் தாக்க, "அம்மா" என்ற முனகலோடு நெற்றியைப் பொத்தியவளாய் கீழே விழுந்தாள்.   இதர ஆசிரியர்கள் ஓடி வந்தார்கள். பலரும் ஸ்தம்பித்து நின்ற அந்த நேரம். அந்தப் பள்ளியின் வரலாற்றில் கூடவே ஒட்டிக் கொண்டது.   அன்று நெற்றியின் நடு மத்தியில் உண்டான ஆழமான காயம் ரேணுகாவிடம் நிரந்தரமாகத் தங்கி விட்டது.   பள்ளி இறுதித் தேர்வு முடிந்ததும் தான் அவளாலும் அழ முடியும் என்பது இவனுக்குப் புரிந்தது. இனி எங்கே... எப்போது..... எப்படி? கேள்விகள் அவளை உலுக்கி அழ வைத்தது. கடைசிப் பரீட்சை எழுதிவிட்டு அவர்கள் இருவரும் பேசிய படியே நடந்து வந்தது, அப்புறம் ஒரு போதும் அந்த வசந்தம் திரும்பி வராமலே போவதற்குத் தான். அன்று மட்டும் அவன் அவளோடு அவளது கிராமத்தின் எல்லை வரைக்கும் போய், வழியனுப்பிவிட்டு உள்ளமே இழந்து போனவனாய் திரும்பினான்.   நர்ஸ் கையைக் காட்டி இவனை அழைத்ததும் "உள்ளே நுழைந்த வேகத்திலேயே அவள் தான் என்பதைக் கண்டு கொண்டான். அந்த நெற்றிக் காயம்! எட்டுத் திக்கும் அவன் பெயரைச் சொல்லி வந்த பின்னும் ஒளி குன்றாமல் திகழும் காயம்!   'ஷேக்' என்று கூவினான்.   பல்லாண்டுகள் ஆன பின்பும் இதற்கு முந்திய நிமிஷத்தில் தான் பிரிந்து, மறு நிமிஷத்திலேயே திரும்பி அழைத்ததைப் போல அவ்வளவு துல்லியமாக அடையாளம் கண்டு, அவன் பெயர் சொல்லி நின்றாள். அவள் கண்களில் கண்ணீர் திரண்டு, கன்னங்களில் வழிந்து பூமி தொட்டு நின்றது.   இந்தத் தேய்ந்து போன உடம்பை அடையாளம் கண்டு கொண்டாளா என அவனுக்குச் சிலிர்த்தது.   "ரேணுகா, சுகமாயிருக்கியா?”   பதில் சொல்ல வந்தும், முடியாமல் தலையை ஆட்டினாள். இருவரும் எங்கேயோ வானத்தின் தனி மூலைக்கு, வசந்தம் நிரம்பிய ஒரு பொன்னுலகச் சோலைக்குப் போய் விட்டதாக உணர்ந்தனர்.   நீண்ட பொழுதின் சிறகடிப்புக்குப் பின் அவள் கேட்டாள்.   “இவ்வளவு நாளும் என்னைப் பார்க்காம எங்க போயிட்டீங்க? ஏன் இப்படி மெலிஞ்சுட்டீங்க?"   பேசும் சக்தியையே ஷேக் இழந்து போயிருந்தான். ஆனால் எவ்வளவு பேச ஆசை! திக்கித் திணறிப் பேசினான். "என்னமோ இப்படி ஆயிட்டுது! அர்த்தமே இல்லாத வெறும் வயித்துப் பொழைப்பு. அப்புறம் எப்படி இருக்க முடியும்?”   அவன் கண்களை ஊடுருவினாள். "ஆனா உங்க கண்களில் உள்ள ஒளியை மட்டும் இன்னும் யாராலும் பறிக்க முடியல்ல.." அவன் முகத்தை பார்வையால் லேசாக வருடிக் கொடுத்தாள். இதயம் மலர்ந்த புன்னகைகள் வலம் வந்தன.   "எத்தனை வருஷ காலமா இந்த முகத்தையும், இந்தச் சிரிப்பையும் நான் தேடிக்கிட்டே இருக்கேன் தெரியுமா ஷேக்?” அவள் சேலைத் தலைப்பால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். பேச முடியாமல் விம்மித் துடித்தன இதழ்கள்!   "ஷேக்... சொல்லுங்க. என்ன படிச்சீங்க? என்ன வேலை பாக்குறீங்க? வீட்ல அம்மா, அப்பா, அண்ணன், தங்கச்சி எல்லாரும் சுகம்தானா?”   அவள் எதைத்தான் அறிவாள்? வாப்பா இறந்து போனதும், இவன் மேலே படிக்க வழியில்லாமல் சென்னை போனதும், வேலை தேடி அலைந்ததும், காயலான் கடையே கதியாகிப் போனதும்.... அவள் எதை அறிவாள்?   ஆனால் எல்லாவற்றையும் இப்போது சொல்லித் தீர்த்தான். குழந்தை பிறந்த பின், அதன் முகத்தைப் பார்க்க முதன் முதலாக இன்று காலையில் அவன் வந்தது, வாடகை குடிசை வாசம் என்று எல்லாவற்றையும் ஒப்புவித்தான்.   "என் வாழ்க்கையில் இதுவரைக்கும் நான் காணாத வெற்றி. அதை, இப்போ உன்னோட வாழ்க்கையில் பாக்கறேன் ரேணுகா ! இது போதும்..."   அவள் முகத்தில் உண்டாகி விட்டிருந்த மலர்ச்சி இப்போது வந்த சுவடே இல்லாமல் போயிருந்தது. நூறு வாசல்கள் திறந்து வந்த மகிழ்ச்சியும் காணாமல் போனது.   "அப்படின்னா இது உங்க குழந்தை தானா?”   "ஆமா!”   "அப்போ நேத்து வந்ததுதான் உங்க..."   "ஆமா!"   குழந்தையை உற்று நோக்கினான். தன்னுணர்வு அடைந்தவனாக அந்தக் குழந்தையை அப்படியே தூக்கி நெஞ்சோடு அணைத்தாள். முத்தம் பொழிந்தாள். குழந்தையைப் பரிசோதித்த பின் நர்ஸை அழைத்து எல்லா மாத்திரைகளையும் டானிக்கையும் வாங்கி வரச் சொன்னாள். அவன் “வேண்டாம்” என்று மறுத்தும்,   "உஸ்... உட்காருங்க” என உத்தரவிட்டாள்.   “வரட்டுமா?” அவன் புறப்பட்டான். அவள் முகம் இருண்டது. கண்கள் படபடக்க கேட்டாள், "போகப் போறீங்களா?”   "வெளில ரொம்ப நேரமா மத்தவங்க காத்திருப்பாங்க? ஒரு மாசம் நான் இங்கே தான் இருப்பேன். அடிக்கடி வந்து..." தொடர தகுதியில்லாதவன் போல நிறுத்தி விட்டான்.   "என்னை மாதிரி படிச்சு முன்னுக்கு வர எல்லாத் தகுதியும் இருந்த உங்களுக்காக இந்த கதி வரணும்? ஷேக், நீங்க எங்கேயோ ஒரு ஆபிசரா, ஒரு பேராசிரியரா இருப்பீங்கன்னு இவ்வளவு நாளும் ஒரு கனவச் சுமந்துகிட்டு சுகமா இருந்தேனே.... அது கூடவா எனக்கு இப்போ கெடைக்காமப் போவணுமா? ஒரு கூலி ஆளா வந்து உடம்பு உருக்குலைஞ்சு நிக்கிறீங்களே...” என்றபடி குலுங்கிக் குலுங்கி அழுதாள். அவன் அந்த நெற்றித் தழும்பை வருடிக் கொடுத்தான். அதற்காகவே அவளும் காத்துக் கிடந்தவள் போல கண்மூடி நின்றாள். (குங்குமம் - 94)   சிறையிலிருந்த நிலா   நேரம் விரைந்து கொண்டிருந்தது. லைலா சேலையைச் சீராக அணிந்து கொண்டு எதிரேயுள்ள நிலைக் கண்ணாடியைப் பார்த்தாள். அளவுக்கு அதிகமான அழகுடன் அவளைக் காட்டவென்று கண்ணாடி பிரியப்பட்டிருக்க வேண்டும். லைலா ஒரு சுற்று சுற்றி முன்னும், பின்னுமாய்ப் பார்த்துக் கொண்டதில் அவளுக்குத் திருப்தி உண்டானது.   கிதுரு சின்னாப்பா இவளுக்காகக் காத்திருந்தார். நேரம் கழிவதைப் பிரயோஜனப் படுத்த வேண்டுமென்று எண்ணியவராய் ஒரு ஹதீஸ் - குர் - ஆன் விளக்கப் புத்தகத்தைப் புரட்டி படித்துக் கொண்டிருந்தார். இவள் ஜன்னலில் இருந்த பவுடரை தட்டி முகத்தில் பூசிக் கொண்டாள். அது போதுமானதாக இல்லை. மீண்டும் கொஞ்சம் தட்டிப் பூசிக் கொண்டாள். லைலாவின் இன்றைய அலங்காரத்தைப் பொறுத்த மட்டில் அது சற்றே வரம்பை மீறிப் போவதாக, கவனித்துக் கொண்டேயிருந்த நபீசம்மாவுக்குப் பட்டது. லைலாவின் பக்கத்தில் நெருங்கி வந்து, தன் கொழுந்தனின் காதில் விழாத படிக்குச் சொன்னாள். "சமைஞ்ச புள்ளைக்கு இவ்வளவு அலங்காரம் கூடாது. யாரும் பாத்தா என்ன நெனப்பாங்க? கிதுரு கொழுந்தன் காத்திக்கிட்டிருக்காரு, சீக்கிரமா புறப்படும். பூசுனது போதும்.” லைலாவுக்கு அம்மாவின் சொல் உறைத்தது. ஆனாலும் அம்மாவுக்குப் பதிலுக்கு எதுவும் சொல்ல முடிவதில்லை எப்போதுமே. ஏனெனில் வாப்பா ஊருக்கு வரும் நாள்களில் அவள் சற்றே அலங்காரம் செய்தாலும் அதற்காக அம்மாவைத்தான் கண்டிக்கிறார். "புள்ளய இன்னும் வளக்கத் தெரியலியே!” என்று குற்றம் சாட்டுகிறார். அதனை லைலாவும் அறிவாள். வாப்பாவுக்கு மதப்பற்றும் இறையச்சமும் உண்டு தான். ஆனால் அதற்காக இந்த மாதிரி விஷயங்களிலும் அது தலை காட்டுவதை லைலா விரும்புவதேயில்லை. அதனாலேயே வாப்பா ஊரில் இல்லாத நாள்களிலும் அம்மா தாராளம் காட்டுவதில்லை.   மாலை விழுந்து விட்டது. சூரியன் கதிர்களைச் சுருட்டிய படி அடங்கிக் கொண்டிருந்தது. கிதுரு கொழுந்தன், நபீசா மச்சி கொடுத்த காப்பியை ரசித்து உறிஞ்சிக் குடித்தபடி, லைலாவின் வருகைக்காகக் காத்திருந்தார். "போவோமா சின்னாப்பா?” என்றபடி எதிரில் வந்து நின்றாள் லைலா . நபீசா, கொழுந்தன் பக்கமாய் வந்து நின்றபடி, “பஸ் ஸ்டாண்டு வழியாப் போவ வேண்டாம் கூட்டமாயிருக்கும். வயக்காட்டு வழியாவே கூட்டிட்டுப் போங்க கொழுந்தன்” என்று கூறினாள்.   தலையசைத்தவராக எழுந்தார். "நீங்க நாளைக் கழிச்சி ராத்திரிக்குத் தான் வரணும்னு இருக்காதீங்க மச்சி. நாளைக்கு மத்தியானச் சாப்பாட்டுக்கே வந்து, ரெண்டு நாளு தங்கி இருந்துட்டுத்தான் வரணும்?" என்று நபீசா மச்சியிடம் சொன்னார் கொழுந்தன். பின் லைலாவை அழைத்துக் கொண்டு தெருவில் இறங்கினார். லைலா தாத்தாவின் (அக்காவின்) கையைப் பிடித்துக் கொண்டே அவள் தம்பியும் கூடவே போனான்.   சாயங்கால நேரமானதால் அநேக பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் நின்றபடி அக்கம் பக்கம் வீடுகளிலுள்ள இதர பெண்களோடு பேசிய வண்ணம் இருந்தார்கள். வயசுக்கு வந்த பெண்கள் வாசல் கதவுக்குப் பின்னரோ, ஜன்னல்களுக்குப் பின்னரோ நின்றபடி போவோர் வருவோரைப் பார்த்தபடியிருந்தார்கள். புது வீட்டு மைமூன் மச்சி மட்டும் கிருதுவைப் பார்த்து, "காக்கா புள்ளங்கள கந்தூரிக்காகவே கூட்டிட்டுப் போறீரு?” என்று கீச்சுக் குரலில் கேட்டாள். கிதுரு சிரித்த படியே தலையை ஆட்டினார். "என்னையும் கூட்டிட்டு போரும் வே . நானும் உம்மக் கூட ஜாலியா வாரேனே!” என்று தன் மச்சியின் ஸ்தானத்தில் நின்று கேலியாய்க் கேட்டாள். மற்ற வீட்டுப் பெண்கள் மனம் விட்டுச் சிரித்தார்கள். "மச்சி மாருங்க கையப் புடிச்சிக்கிட்டு கூடவே வாராங்கன்னு, கொழுந்தன் மாருக்கு கசக்கவா செய்யும்?” என்று அவரும் சொல்லவும் அந்தப் பகுதியே கலகலவாகி விட்டது. "எப்பவும் வீட்டுக்குள்ள தான அடஞ்சிப் போயி கெடக்குதுங்க. நாலு நாளைக்கு அங்கு வந்து கந்தூரி, சந்தனக் கூடுன்னு பாத்துட்டு வரட்டுமேன்னு தான் எங்க வீட்டுக்குக் கூப்பிட்டுப் போறேன். என் புள்ளைங்களும் தாத்தாவக் கூட்டிட்டு வாங்கப்பான்னு ஒரே கரைச்சல் பண்ணுதுவ" என்றபடி அகன்றார்.   வாய்க்காலைத் தாண்டி வயல் வெளிகளின் வழியே அவர்களை அழைத்துக் கொண்டு போனார். முற்றிய கதிர்கள் வரப்புகளில் தலை சாய்ந்து அவர்களின் பாதங்களை உரசியது. தானிய மணிகள் உதிர்ந்தன. சலசலத்துக் கொண்டே வயல்களின் ஊடாய் ஓடிக் கொண்டிருந்த நீரோடையில் கால்களை நனைத்துத் தண்ணீரைத் தெறித்துக் கொண்டே போனான் லைலாவின் தம்பி. நீர் முள்ளிச் செடிகள் இருபுறமும் வளர்ந்து நின்று அவளது பாவாடையை இழுத்து இழுத்து விட்டது.   அவர்கள் மூவரும் போய்க் கொண்டிருப்பதைத் தோட்டத்தில் கிணற்றடி அருகே நின்ற அசன்பாத்து அம்மாள் கவனித்தவளாகவே நின்றிருந்தாள். பின்புறமாக தன் வீட்டைத் தாண்டி அவர்கள் போக நேர்ந்த அந்த நிமிஷத்திலிருந்து தன் கண்களை அவர்கள் மேலயே பதித்து மனத்தளவில் அந்த மூவரின் பின்னாலுமே செல்கிறவளாய் இருந்தாள். அவர்களோ எதையுமே லட்சியம் செய்யாமல், இன்னும் திரும்பிக் கூடப் பார்க்காமல் போவது அவளுள் சினத்தினைக் கிளர்ந்தெழ வைத்தது. அவர்கள் சென்ற திசையையே வெளித்துப் பார்த்தபடி நின்றாள். தன்னையும், தன் மகனையும் எல்லோரும் அலட்சியம் பண்ணுகிறார்கள் என்ற விதமாய் அசன்பாத்தம்மாள் இடம் ஆவேசம் கனன்றது. அவர்கள் மூவரும் கவிந்த இருளினூடே அவள் கண்களிலிருந்து மறைந்து போனார்கள். அந்த வேகம் தணியாமலே லைலாவின் வீடு நோக்கிச் சென்றாள். வீட்டின் பின்புற வாசல் வழியே நுழைந்ததும், நபீசாம்மா தென்பட்டாள். "வாங்க மச்சி” என்றாள். அசன்பாத்தாம்மாளுக்கு வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை. எடுத்த எடுப்பிலேயே கேட்டாள். "உங்க கொழுந்தனோட லைலா எங்கே போறா?”   நபீசாம்மாவுக்கு தீ சுட்டது போல் இருந்தது. தான் பெரிய தப்பு செய்துவிட்டதாக அதிர்ந்தாள். முகம் சுண்டிப் போனது. இனி என்ன செய்வது? மச்சியை எப்படி எதிர் கொள்வது என்கிற பரிதவிப்பு உண்டானது. தக்க பதிலை எப்படி உருவாக்கிச் சொல்வது என்ற தடுமாற்றம் பரவி அவளைக் குழம்ப வைத்தது.   "அவங்க தெருவுல சந்தனக்கூடு - கந்தூரி நடக்குங்குறதுன்னால வந்து நாலு நாளைக்கு இருந்துட்டு வரட்டுமேன்னு விருப்பப்பட்டாங்க கொழுந்தன். இவளும் வீட்டோட தான் கிடக்குறா, நாலு நாளைக்கு அங்கு போயி கலகலப்பா இருந்துட்டு வரட்டுமேன்னு அனுப்பி வச்சேன்.”   "இங்க பாரு நபீசா. இது கொஞ்சம் கூட நல்லால்லே. நாலு பேரு எங்கிட்ட கேட்டாங்கன்னா நானோ எங்க வீட்டுக்காரவுங்களோ என்ன பதிலு சொல்ல முடியும்? தாலி கட்டி வீட்டுக்கு வர்ற மருமக, அதுக்குத் தக்க மாதிரி அடக்கம், ஒடுக்கமா வீட்டுக்குள்ள இருக்கணும்னு தான் எல்லோரும் பிரியப்படுவாங்க. அங்க இங்கேன்னு சுத்திக்கிட்டு இருக்கிறது ஒரு பொண்ணுக்கு அழகில்ல. மாப்பிள்ளை பொண்ணுன்னு பேசி முடிச்சாச்சுன்னா எல்லா விஷயத்துலயும் அதுக்குத் தக்க மாதிரி நடக்க வேண்டாமா?” மூச்சு விடாமல் பேசினாள். நபீசாம்மாவின் கையையும், காலையும் கட்டி எறும்புக் கூட்டத்துக்குள் வீசினாற் போலிருந்தது.   “இனிமே இதுல கவனமா இருந்துக்கிடுறேன்” என்று திக்கித் திணறியவளாகச் சொன்னாள்.   "அவள் அங்க அனுப்புறதுக்கு முன்னால நீங்க எங்க்கிட்டேயில்ல கேட்டிருக்கணும், உங்க இஷ்டத்துக்கு அனுப்பி வெச்சுட்டா? என் வீட்டுக்காரருக்கு விஷயம் தெரிஞ்சு இப்ப வீட்டுல வந்த தை, தைன்னு கெடந்து குதிக்கப் போறாரு. அவருகிட்ட எந்த முகத்த வச்சிக்கிட்டு நான் பேச முடியும்?”   "நான் வேண்ணா மன்னிப்பு கேட்டுக்குறேன்.”   நபீசாம்மாவுக்கு வேறு எப்படித் தான் சொல்வது என்பது புரிபடவில்லை. தெவுங்கிப் போனாள்.   "நாங்க ரெண்டு பேருமே பொறுத்துப் போயிட்டாலும் மாப்பிள்ளைக்காரன் என்ன மாதிரி வந்து ஆடப் போறான்னு தெரியலியே. அன்னிக்கு உங்க வீட்டுக்கு யாரோ ரெண்டு ஆம்பளைங்க வந்து ரொம்ப நேரமா இருந்து பேசிட்டுப் போனாங்களாம். அதுக்கே மனசு பொறுக்க முடியாம் வந்து எங்கள் நச்சரிச்சான். இனிமே ஆம்பளைங்க யாரும் அங்க போயி வந்துக்கிட்டு இருக்காம கண்டிஷனா சொல்லி வைங்கன்னு எங்க கிட்டே வந்து குதிச்சான். இப்ப இது வேற நடந்தாச்சு. அன்னைக்கே வந்து சொல்லாம போனது பெரிய தப்பா போச்சுன்னு இப்ப தான் தெரியுது.”   மிக வெட்கமாகவும் தர்ம சங்கடமாகவும் இருந்தது. வீட்டுக்கு வந்த சம்பந்தக்காரியை உட்கார வைத்துப் பேசக் கூடப் பயமாகவும் இருந்தது. நபீசாம்மா கூரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். செய்து வைத்த ஏற்பாடுகள் எங்கே கை நழுவிப் போய் விடுமோ என்கிற அச்சத்தினால் நபீசாம்மாவின் கை, கால்கள் அவளையறியாமலே நடுங்க ஆரம்பித்தது. வேறு எதுவும் சொல்வதற்கில்லையென அசன் பாத்தம்மாளும் வெளியேறினாள்.   காலையில் மதுரையிலிருந்து வந்த வாப்பாவின் கடிதம் நபீசம்மாவை சிந்தனையில் தள்ளியது. லைலாவும் ம்மாவின் நடவடிக்கையைக் கவனித்தவளாய் வாப்பாவின் கடிதத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தாள். வாப்பாவின் எழுத்து அந்தக் காலத்துப் பத்திரத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளதைப் போன்றது. கடித எழுத்துக்கள் அழகாய் இருந்தாலும் விஷயங்கள் கவலையைத் தான் தந்தன. திருமணச் செலவை எதிர் நோக்கி நிற்கின்ற ஒரு தந்தைக்கே உரிய கவலை பற்றிய அம்சங்கள். எப்போதும் போல் அல்லாமல் ஒவ்வொரு வரிகளையும் ஆழமாய்ப் படிக்கலானாள். தானே முதுமையடைந்து அந்தப் பளுவை ஏற்றுக் கொண்டிருப்பதான உணர்வையடைந்தாள். இதனூடே லைலாவின் பெயரில் மதுரை பேங்க் ஒன்றில் போட்டிருந்த பணத்தை - மேஜராகி விட்டதால் அவள் தான் வந்து கையெழுத்துப் போட்டு பெற வேண்டும். இந்த இரண்டாவது விஷயம் தான் ம்மாவை உடனடியாக அதிகக் கவலைப்படச் செய்திருக்க வேண்டும் என்று எண்ணினாள். ம்மாவின் எண்ணம் முழுவதும் லைலாவின் மனதிலும் பதிவாகிக் கொண்டு தான் இருந்தது.   சாப்பாட்டை முடித்ததும் நபீசாம்மா புறவாசல் வழியே சம்பந்தக்காரர் வீட்டிற்குப் போக கதவைத் திறந்தாள். "எங்கேம்மா போறே?” என்று லைலா கேட்டாள். யோசித்தவளாக சிறிது நேரம் நின்று விட்டுச் சொன்னாள். "அங்கே தான் போறேன். உங்க வாப்பா போட்ட கடிதத்தைக் காட்டி மதுரைக்குப் போற விஷயமா கேட்டுட்டு வாரேன்.”   "ஸ்.... சும்மா உக்காரும் அவங்க கிட்டே போயி என்ன கேக்க வேண்டிக் கெடக்குது?”   "ஏற்கனவே என்ன நடந்துச்சுன்னு உனக்கு தெரியத்தான் செய்யும்?”   “நல்லாத் தெரியும்.” ‘ "தெரிஞ்சுமா இப்படி கேக்குற? இன்னொருக்கா அவங்ககிட்ட கைகட்டி நின்னு பதில் சொல்றது யாரு?”   "வாப்பா எழுதியிருக்காங்க. நான் போறேன். இதுக்குப் போயி யாரு கிட்டேயும் கைகட்டணும்னு அவசியமில்ல.”   லைலா இவ்வாறு பேசுவது நபீசாம்மாவுக்குப் பயமாகவும் படபடப்பாகவும் இருந்தது. முகத்தையும், குரலையும் கடுமையாக வைத்தவளாய்ச் சொன்னாள், “நிதானமா பேசு லைலா.”   "நிக்காஹ் பந்தல்லேயே எத்தனையோ கல்யாணம் நின்னு போயிருக்கு. உனக்கு இதெல்லாம் தெரியாது. நீ சின்னப்புள்ள. பொட்டப் புள்ளைங்களுக்கு ரொம்ப வாய் ஆகாது. அடக்க ஒடுக்கமா இருக்க முதல்ல கத்துக்க,” என்று மேலும் கூறினாள்.   "அதுக்காக தாலி கட்டுறதுக்கு முன்னாலேயே ஒவ்வொரு விஷயத்துக்கும் இப்படி கைகட்டி நிக்கணும்னு என்ன சட்டம்?"   "சட்டம்! பெரிய சட்டத்தப் படிச்சவ மாதிரி பேசாத, பாய விரிச்சு கொஞ்ச நேரத்துக்குப் படு போ” என்று கூறி விட்டு தெருவுக்குள் இறங்கினாள்.   லைலாவுக்கு விதிர் விதிர்த்தது. ஜன்னலோரம் போய் உட்கார்ந்தாள். சுடுகாடு போன்று அமைதி தழுவிக் கிடந்தது தெரு. வெயிலின் உக்கிரம் யாரும் வெளியே அனாவசியமாய் நடந்து போவதைத் தடை பண்ணியிருந்தது. சிறிது நேரம் போனதும், கதவைத் திறந்து ம்மா வந்ததைப் பார்த்தாள். அவளது முகக் குறிப்பிலிருந்து லைலாவால் எதையும் யூகிக்க முடியவில்லை. "மருமகனும் அவங்க வாப்பாவும் வெளில போயிருக்காங்க. வரவுட்டு கேட்டுச் சொல்றேன்னு அசன் பாத்து மச்சி சொன்னாங்க.” என்று லைலாவின் காதில் விழட்டும் என்று வலி லைலாவுக்கு ஆத்திரம் முட்டிக் கொண்டு வந்தது. "இப்பவே இப்பிடி நடந்தா கல்யாணமானப் பொறவு எப்படியெல்லாம் நடப்பாங்கன்னு யோசிச்சுப் பாத்தியா.”   மகளை ஆவேசமில்லாமல் பார்த்தபடி, "நீ தான் எதையுமே யோசிச்சுப் பார்க்காம பேசுற! ரெண்டு எழுத்து படிச்சவுடனேயே இப்படியெல்லாம் பேச வாயி வந்துருது. பல கஷ்டப்பட்டுத் தான் உனக்கு உள்ளூர்லன்னு ஒரு மாப்பிள்ளய பாத்து வச்சிருக்கு. நல்லதோ, கெட்டதோ கண்ணுக்கு முன்னாலேயே இருந்துக்கிடலாம். நீ இல்லேன்னா அவங்களுக்கு இன்னொரு பொண்ணு. அதனால நாம அப்படித் தான் நடந்தாகணும்.”   லைலா ம்மாவையே வெறித்துப் பார்த்தாள். ம்மா இப்படிப் பேசுவது இன்னும் எரிச்சலாகத் தான் இருந்தது. கையை ஓங்கி எதிலாவது முட்டி பெயர்கிற வரை குத்த வேண்டும் போலிருந்தது. நேரம் செல்வது தெரியாமலேயே ஜன்னலில் பூத்து விட்ட மலராக அங்கேயே கிடந்தாள். மனிதர்கள் எதற்கோ கட்டுப்பட்டு எங்கெங்கோ விரைவதாக உணர்ந்தாள். அமைதியாகக் கிடந்த தெருவில் இந்த இயக்கத்தைக் கொண்டு வந்தது யார்? மாலைப் பொழுது தானா?   இருள் கவிய ஆரம்பித்ததும் பெண்கள் கூடுகளை விட்டு வந்த பறவைகள் போல தெருவில் தண்ணீர் எடுக்கவும் கொல்லைப்புறம் செல்வதற்கு என்றும் "சுதந்திரமாக இயங்கலானார்கள். பெண்களின் இடுப்பில் குடமிருப்பது இந்தப் பொழுதுக்கு ஒரு அவசியமான விஷயம் போல் இருந்தது. லைலாவும் அவ்வாறே ஒரு குடம் சுமந்தவளாக எதிர்த்த வீட்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்தாள். பானு வரவென்று காத்திருந்தாள். கலகலப்பும், சப்தமும், இனிமையும் தெருவில் மேன்மேலும் கூடி வந்த பொழுதே உயிரோட்டமாய் இருந்தது. பெண்களின் நடமாட்டத்திற்கென்று இந்தப் பொழுதினை ஒதுக்கி விட்டது போல் ஆண்களின் "பெருந்தன்மை" காணக் கிடந்தது. ஒவ்வொரு நிகழ்வையும் திண்ணையில் உட்கார்ந்த படியே ரசித்துக் கொண்டிருந்தாள். பானு வந்ததும் அவளோடு ஆற்றங்கரை நோக்கி நடக்க ஆரம்பித்ததும் அவளின் மாமியார் தன் வீட்டினுள் வேகமாக நுழைவதைப் பார்த்தாள்.   வெள்ளிக் கிழமை நல்ல நாளாம். நிறை பிறை வேறு. அன்று அதிகாலையிலேயே களக்காட்டிலிருந்து மதுரைக்குப் புறப்பட்டுப் போவதென்றும், பேங்க் சென்று கையெழுத்துப் போட்டு பணத்தை எடுத்த உடனேயே அன்றைக்கு ராத்திரிக்குள்ளேயே எப்படியாவது களக்காடு வந்து சேர்ந்து விட வேண்டுமென்றும் மாமானார் வீட்டில் மாப்பிள்ளைக்காரனின் சம்மத்ததுடன் தீர்மானிக்கப்பட்டதாம். அதன் படி, சுபுஹு தொழுகையை முடித்த கையோடு லைலாவின் வீட்டுக்கு சின்னாப்பா வந்து உட்கார்ந்து விட்டார். இதே மாதிரி அசன் பாத்தம்மாளும் வந்தாள். புறப்படத் தயாரானவளாக லைலா லேசாக பவுடரைப் பூசினாள். அசன் பாத்துமாவின் கண்ணில் இக்காட்சி படவேண்டுமென்று தான் அவள் அதிலேயே அதிக சிரத்தை கொண்டு இருந்தாளோ என்னவோ? அது உண்மையில் அசன் பாத்தம்மாளைத் துணுக்குறச் செய்தது. லைலா பக்கத்திலிருந்த தோல் பையை எடுத்துப் பையில் பதமாய் வைத்தாள். சீப்பையும், ரிப்பனையும் எடுத்துப் போட்டாள் உள்ளே.   "ஏன் இதெல்லாம் எடுத்து வைக்குற? போய்ட்டு உடனே திரும்புறதுக்கு எதுக்கு புத்தகமும், இவ்வளவு துணிமணியும்?” என்று கேட்டாள் மாமியார்.   மாமியாரின் முகத்தைப் பாராமலே சொன்னாள், "மதுரைய பாக்காதவன் கழுத. எனக்கு அந்த ஊரப் பாக்க ரொம்ப நாளா ஆசை. அதனால கூட ரெண்டு நாள் உக்காந்து பாத்துட்டு வாரேன்."   "கல்யாணத்துக்கு அப்புறமா போயி மதுரைய நல்லா பாத்துட்டு வரலாம். கல்யாணமாவப் போறவ போனோமோ வந்தோமான்னு இருக்கணும். சுத்திகிட்டு அலையக் கூடாது.”   "வேணும்னா உங்க மகனோட போயி இன்னொருக்க பாத்துட்டு வாரேன். இப்ப எங்க சின்னாப்பாவோடயும், எங்க வாப்பா கூடயும் போயிட்டு வந்துடறேன்.” அவளது இதயப் பிடிப்பு வேகமாக அடித்தது.   கொந்தளித்துப் போனவளாய் வந்தாள் நபீசாம்மா. “லைலா! யாரு கிட்டே நீ என்ன பேசுற? வாய மூடு கழுத!" என்று ஆவேசமாய் மகளின் முன்னே நின்றாள்.   "யாராயிருந்தா என்ன? என் வாப்பா கூப்புட்டு நான் போறேன். இத யாரும் தடுக்க முடியாது. கல்யாணமான பொறவு அவங்க அதிகாரத்த வச்சுக்கட்டும்.''   "என்ன இப்படி நீ மருவாதி இல்லாம பேசுற? நாங்களா வலிய வந்ததுக்கு நீ தலை கொழுத்துப் பேசுறியாக்கும்! என் மவனுக்குக் கியூவுல நிக்குது பொண்ணு. ஞாபகம் வச்சுக்க.”   "அப்படின்னா க்யூவுல நிக்குறதுலேருந்து ஒரு பொண்ண உருவி எடுத்து வந்து உங்க புள்ளைக்கு கட்டி வையிங்க. யாரு வேண்டாம்னா?” இதெல்லாம் நம்ப முடியாமல் நபீசாம்மா தன் உணர்விழந்து போய் நின்றாள். "ஆளா விடும்மா நல்ல வேளை. நீ ஒரு அடங்காப் பிடாரின்னு இப்பவாவது தெரிஞ்சுதே” என்று அலறியபடி வீட்டைக் காலி பண்ணி விட்டு ஓடினாள் அசன் பாத்தம்மாள்.   சின்னாப்பாவும் ம்மாவும் கல்லாய்ச் சமைந்தது சமைந்தது தான். அவர்களுக்கு ஒரு கனவு தானோ என்கிற மாதிரியே எண்ணம் உண்டானது. ஆனால் லைலா கால்களில் செருப்பை மாட்டியவளாய் தோல் பையைத் தோளில் போட்டபடி, "வாங்க சின்னாப்பா புறப்படலாம். நேரமாச்சு. போய்ட்டு வாரேம்மா” என்று ம்மாவை நோக்கிச் சொல்லி வீட்டிலிருந்து வெளியே வந்தாள். எதுவும் புரியாமலே ஒரு சக்திக்கு உட்பட்ட மனிதராக சின்னாப்பா அவள் பின்னாலேயே நடை போடத் துவங்கினார். உணர்வு கொண்டு, தலையில் அடித்து அடித்து அழ ஆரம்பித்தாள் ம்மா. எதையும் காதில் வாங்க நேரம் இருப்பதாகக் கருதவில்லை.   தெருவின் கீழக்கடையில் பஞ்சாயத்து போர்டு ரேடியோ ரூம் அருகில் வளர்நதோங்கி நின்ற வேப்பமரத்தின் கீழ் “அவன்” சாய்ந்து நின்று இவளது வருகைக்காகக் காத்துக் கொண்டு நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தான். ஒவ்வொரு வினாடியையும் காலால் எட்டி உதைத்து விரட்டியது போன்ற களைப்பு. அந்தக் களைப்பும் அவளுக்கான காத்திருப்புமே ஒரு சுகமாகவும் அவளின் நல்வரவு நோக்கி நின்றிருந்தான். தெருவின் திருப்பத்தில் வர நேர்ந்ததும் இவள் அவனை லகுவாய் அடையாளம் கண்டு கொண்டு ஏறிட்டு நோக்கினாள். அதையே தனக்கொரு அங்கீகாரமாகக் கருதி அவன் இதழ்களில் புன்னகையைத் தவழ விட்டான். அவன் பார்வையை உதறுவதான பாவனையில் தன் ஜாக்கெட்டின் மீது படிந்திருந்த தூசியைத் தட்டுவது போல் தட்டி விட்டு, இரக்கமற்ற பார்வையால் அவனை முறைத்துப் பார்த்து, பின் அதனையும் விலக்கி பாதையில் பார்வையை வைத்து சீராக நடக்க ஆரம்பித்தாள் - லைலா! ஸ்தம்பிதமானான் அவன். (தாமரை) பணிவன்பு   என்றைக்கோ ஒரு நாள் சினிமாவில் பார்த்துப் பெரு மூச்சுடன் வெளிப்பட்ட கனவுலகம் அது. இந்த மாதிரிப் பட்டணக் கரைக்கெல்லாம் நம்மால் போகவா முடியும் என்கிற மலைப்பு ஆட்டிப் படைத்திருந்தது ஒரு காலம். இப்போது சென்னையை என்ன, அதனையும் தாண்டி அற்றை நாள் மும்பைக்கே சென்று சேர்ந்து விட்டான் ஜெய்லானி. ஒரு பெரிய நிறுவனம் தமிழ் நாட்டு ஆசாமியுடையது.   ஜெய்லானியின் சின்னஞ்சிறு படிப்புக்கேற்ற படி அவனுக்குப் பணியாள் வேலை. டீ வாங்கி வருவது. முதலாளிக்கு வெற்றிலைப் பாக்கு வாங்கி வருவது. யாராவது ஏவி விட்டால் கடை, கண்ணிகளுக்கு விழுந்தடித்துக் கொண்டு ஓடுவது. இவ்வளவு பெரிய நிறுவனத்தில் சின்னத்தனமான வேலை. ஆனால் 'சின்னத்தனம் என்கிறதை உணர்ந்தறியவே ஒரு மாமாங்கம் ஆனது. உணரும் போது அந்த வேலை அவன் இயல்புகளோடு ஒட்டி இருந்தது. ஒழுங்காய் நான்கு வரிக் கடிதம் ம்மாவுக்கும் வாப்பாவுக்கும் எழுதத் தெரியாத போது வேலையற்றோரால் பிதுங்கி வழிகிற மும்பையில் தனக்கு இப்படி ஒரு வேலை வாய்த்தது குறித்து அந்தக் காலத்தில் கொண்டிருந்த பெருமை வேறு உடன்பிறப்பாய் இருந்தது. வருச லீவில் ஊருக்குக் கம்பெனி செலவிலேயே திரும்பிச் செல்லும் போது, யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்திருக்கிற சில மொடமொடப்பான கரன்சிகளை நாலு பேர்களுக்கு மத்தியில் வைத்துப் புழங்கும் போது உண்டான பெருமிதத்துக்குக் கித்தாப்பு ஏறியிருந்தது. (அப்போது அதைத் தாங்கொணாத ஆச்சரியமாகப் பார்த்து மலைத்த நண்பர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இன்றைய தினம் அவனை விடப் பன்மடங்குப் பணத்தைத் தங்கள் சட்டைப் பைக்குள்ளேயே வைத்துக் கொண்டு சாதாரணமாக அலைந்து திரிவது இன்னும் அதிகப்படியான உண்மையாகும்)   இந்த நிறுவனத்துப் பணியாளாகவே ஜெய்லானி திருமணமும் செய்து கொண்டான். அந்த நிறுவனத்தின் பெயருக்கு ஊரில் கடுமையான புகழ் நிலவியதால் ஜெய்லானியைக் கைபிடிக்கப் போன சீமாட்டிக்கும் ஊரில் எக்கசக்க மரியாதை. இதென்ன பெரிய பிசாத்து வேலை என்று யாராலும் அப்போது உதடுகளைச் சுளுக்கிக் கொள்ள முடியவில்லை. ஜெய்லானி தனக்குப் பையனும், பெண்ணும் அடுத்தடுத்துப் பிறந்த காலத்திலேயே சென்னைக்கு மாற்றலாகி வந்து விட்டான். முதலாளியின் மகன் கபூர் அப்போது உயர் கல்வி முடித்து ஏதோ ஒரு பட்டமும் வாங்கி சென்னைக் கிளை அலுவலகத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். அவனுக்கு ஒரு நல்ல வேலையாள் வேண்டியிருக்க, மும்பையில் முன்னமொரு தரம் கண்டு மனத்துக்குப் பிடித்தமானதாய்ப் போயிருந்த ஜெய்லானியை ஒரு அலுவலகக் கடிதத்தின் கீழ் குறிப்பாக வெறும் ஒற்றை வரியிலேயே அவனது பெயரைக் குறிப்பிட்டு இவ்விடம் அனுப்பச் சொல்லி ஏவலாளாக வரித்துக் கொண்டான்.   மும்பையின் ஆரம்ப வாழ்க்கையை மீண்டும் ஒரு முறை சென்னையில் துவங்க வேண்டியதாயிற்று ஜெய்லானிக்கும். முதலாளியின் மகன் கபூரைப் பார்க்க வருவோர்கள் முதலில் ஜெய்லானியின் கடைக்கண் பார்வைக்குப் போக வேண்டியிருந்தது. ஜெய்லானியின் மேல் ஒட்டியிருந்த அந்தஸ்து இதுவே. அப்புறம் முதலாளியின் முன்னால் கையைக் கட்டிக் கொண்டு மிகவும் குறைந்த பட்ச வார்த்தைகளை மட்டுமே காற்றில் மிதக்க விட்டு பதிலைப் பெற்று வர வேண்டிய சூழ்நிலையே நிலவியது - ஜெய்லானிக்கு.   வாழ்க்கையை இப்படியே கடைசி வரைக்கும் ஒட்டிக் கொண்டு இருக்க முடியாது என்கிற எண்ணம் ஜெய்லானிக்கும் வந்து விட்டது. படித்துப் பட்டம் பெற்று ஆங்காங்கே நல்ல வேலைகளில் போய் அமர்ந்து விட்டச் சிலரை ஜெய்லானி ஊர் வரும் நேரங்களில் காண முடிந்தது. அவர்களின் பேச்சு, போக்கு எல்லாமே தனி விதமாக இருந்தன. இதனாலேயே எங்காவது ஓரிடத்தில் தனக்கும் தன் நிறுவனத்திற்கும் இடையில் ஒரு முறிவு உண்டாகி விட வேண்டும் என்று பரபரத்தார் ஜெய்லானி. இந்த எண்ணம் வளர்ந்தே வருகிறது மனதுக்குள். அந்த மனம் கோபப்படும் முதலாளி மீது கோபப்படுகிறது. ஏசக்கூடிய மனிதர்களைத் திருப்பி ஏசுகிறது. அவமதிக்கிறவர்களை அவமதிக்கிறது.   நெருங்கிய உறவுக்காரர் திருமணத்துக்காக ஜெய்லானியின் மனைவியும், பிள்ளைகளும் சென்னைக்கு வந்திருந்தனர். இவர் பணி புரிந்த இடத்துக்கு அவர்களை அழைத்துக் கொண்டு வந்திருந்தார் ஜெய்லானியின் சகலை. அந்தச் சமயத்தில் அப்படி அழைத்து வந்திருக்கக் கூடாது என்று சகலையிடம் கண்டிப்புக் காட்ட முடியவில்லை. ஆகவே, கூடுதலான எரிச்சல் சகலை மீது. காரிலிருந்து இறங்கி அலுவலகத்துக்குள் நுழைகிற கபூர். ஜெய்லானியை வேலை ஏவ வாயெடுத்தாலும் உள்ள நிலைமையை உணர்ந்து ஒரு நல்ல மனிதனாய் வாய்மூடிக் கொண்டு உள்ளே போய் விட்டான். ஜெய்லானி அது குறித்து ஆகாச அளவுக்கு மகிழ்ந்திருக்கையிலும் அந்த அசம்பாவிதச் சம்பவத்தை தவிர்த்து விட்டதற்காக ஆண்டவனுக்கு உளமுருகி நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கும் வேளையிலும், இன்னொரு குமாஸ்தா ஜெய்லானியை அணுகி நின்று, "கார்ல இருக்கிற சூட்கேஸ் எடுத்திட்டு உடனே வரணுமாம்” என்று ஆர்டர் கொடுத்து விட்டுப் போனான். சம்மட்டி அடியை வாங்கிக் கொண்ட இதயம் நொறுங்கிப் போக, மெதுவே நடந்து சென்று சூட்கேஸைத் தூக்கி கொண்டு மனைவி, மக்கள். சகலையைக் கடந்து சென்றார். வாழ்வில் முன்பு கண்டறியாத ஒரு முதலாளி. தன் கணவரைக் கார் திறந்து சூட்கேஸ் எடுத்துப் போகும் அளவுக்கு உரிமை வழங்கி இருப்பது கண்டு திருமதி ஜெய்லானி உளம் உருகிக் கொண்டாள். மூத்த மகன் ஹிதாயத்துல்லாவுக்கு அது கேவலமாகப் பட்டது.   வாப்பா அப்பறமாய் ஒரு கால் மணி நேரத்துக்கும் தங்கள் பக்கமே தலைகாட்டாமல் இருப்பது பற்றியும் பையன் சிந்தித்தான். பின்னர் வந்த ஜெய்லானி, சகலையிடம் மனைவி மக்களைத் திருமண இல்லத்திற்கே அழைத்துச் செல்லும் படியும், முடிந்தால் அன்று இரவு அல்லது மறுநாள் காலை நிக்காஹ் நேரத்துக்கு வந்து விடுவதாக ஒரு வாக்குறுதியும் கொடுத்து விட்டு அலுவலகக் கட்டிடச் சுவர்களுடன் ஐக்கியமாகி விட்டார். பின்னர் சகலை அவர்களை வெளியே அழைத்து வந்து, ஜெய்லானியின் சார்பாக பக்கத்து டீ ஸ்டாலில் வடையும், டீயுமாக வாங்கிக் கொடுத்து அழைத்துச் சென்றார்.   ஜெய்லானியின் இன்று அல்லது நாளை இந்த நிறுவனத்தையே தலை முழுகி விட்டு வேறொரு நல்ல இடமாகப் பார்த்துப் பாய்ந்து சென்று விடப் போவதாக உறுதி பூண்டுள்ளார். அவரது மகன் ஹிதாயதுல்லா பள்ளிப் படிப்பை முடித்து விட்டிருந்தான். மேற்படிப்பில் ஆசை கொண்டிருந்தான். வாப்பாவுக்கு அது பற்றி முன்பே கடிதம் எழுதியிருந்தும் அவர் மகனுக்கு எங்கேயாவது வேலைக்குச் சென்று சாமர்த்தியம் பண்ணிக் குடும்பத்தைக் காப்பாற்றட்டும் என்கிற ரீதியில் எழுதி விட்டார். இது பிடிக்காமல் சென்னைக்குப் புறப்பட்ட ஒரு நபருடன் அவனும் வாப்பாவைப் பார்க்கும் வகையில் புறப்பட்டு வந்து விட்டான். வாப்பாவின் நிறுவனம் பழைய சந்திலிருந்து தள்ளி அடுத்த தெருவில் சொந்தக் கட்டிடமாய் உயர்ந்து நின்றது. மீண்டும் அவன் கபூரையும், வாப்பாவையும் பார்க்கும் சந்தர்ப்பம். கபூர் காரில் இருந்து இறங்கிச் செல்லவும் பின்னாலே ஒரு ஓட்டமான நடையுடன் சூட்கேஸையும் சில ஃபைல்களையும் தூக்கிக் கொண்டு வாப்பா பின்னாடியே செல்வதையும் கண்டான்.   வாப்பாவைத் தனியே சாவகாசமாகக் கண்டு பேச நீண்ட நேரம் போனது. அவருக்கு இவனின் திடீர் வருகையும் ஆசைகளும் ஆச்சரியமாயிருந்தன. ஆன போதும் அவன் சொல்லும் விவரங்களை ஜெய்லானி ஒரு வித படபடப்புடனேயே செவியில் வாங்கியும், வாங்காமலும் கேட்டுக் கொள்கிறவர் போல தோன்றினார். ஆனால் அடுத்த நிமிசத்துக்கு அவருக்கு அழைப்பு மணி. பாய்ந்து போனார். மீண்டும் கணநேரம் போனது. ஹிதாயதுல்லா பொறுமை காத்து வாப்பா வந்த பின் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தான். மீண்டும் அவருக்கு அழைப்பு வரவும் கோபம் திரண்டு மூக்கு சிவந்து போனார், "பேய்க்கு பொறந்த பய. அவன் அப்பன் மாதிரியே பேயால்லா இருக்கான். உக்காந்து நாலு நிமிஷம் பேச விடுறானா? மரியாத கெட்டவன், சீரழிஞ்சு தான் போவானுவோ!” என்று கபூருக்கு அர்ச்சனை செய்தார். வாப்பாவின் கோபம் ஹிதாயத்துல்லாவுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. எல்லோரும் ஊரில் சொல்லிக் கொள்வதைப் போல அவர் சுரணையற்ற ஆசாமி அல்ல என்பதை நேரடி அனுபவமாய்ப் புரிந்து கொண்டான். இந்த வகையில் அவன் மனம் பெருமிதத்தால் விம்மியது. எப்படியும் கபூர் இடம் சொல்லி பணம் பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் ஹிதாயதுல்லாவை இரண்டு தினங்கள் சகலையின் பொறுப்பில் இருக்கச் செய்தார். எல்லாவற்றிலும் இனிக்க இனிக்கப் பேசுபவர்கள், மகனின் படிப்புச் செலவுக்கு என்று உருகுகிற விதமாய் எடுத்துச் சொல்லியும் ஒரு பத்தாயிரம் ரூபாய் தர மறுத்து விட்டார். தான் இது நாள் வரை பணியாற்றியதை மனதில் கொண்டு கடனாக கேட்டும் கூட மலை அசைய மறுத்தது. இரு நாள்கள் காத்திருந்தும், ஏமாற்றமே மிச்சம் என்ற வேகத்தில் ஹிதாயதுல்லா மனம் நொறுங்கினான். "இவனுங்க கிட்டே வேலை பாக்குறதைக் காட்டிலும் குப்பை பொறுக்கி நல்லபடி வாழலாம். இத்தன வருச காலம் வேல பாத்தத்துக்கும் கொஞ்சம் கூட மரியாதை இல்லாம போச்சுதே” என்று குமைந்தார் ஜெய்லானி. இருப்பினும் அவனின் ஆர்வம் சிதையலாகாது என்கிற எண்ணத்தில் தன் மகளின் திருமணச் செலவுக்கென்று வங்கியில் போட்டு வைத்த பணத்தை எடுத்துக் கொள்ளும்படி வேண்டினார். கொதி நிலையின் உச்சத்தில் இருந்த ஹிதாயதுல்லாவுக்கு இது ஆறுதல் தருவதாய் அமைய, ஊர் திரும்பினான்.   ஆண்டு தோறும் குறிப்பிட்ட நாள்களை விடுமுறையாகக் கொண்டு ஊர் வந்து திரும்புவது ஜெய்லானிக்கு வழக்கமாக இருந்தது. குறிப்பிட்டுச் சொன்ன நாள்களுக்குள் பணிக்குத் திரும்பவில்லையென்றால் வேலை காலி. அல்லது இன்னும் நீண்ட நாள்களுக்கு ஊரில் இருக்க விட்டு, வாட்டியெடுத்துத் தாமதமாக வரச் சொல்லி கடிதம் அனுப்புவார்கள். ஆனால் ஜெய்லானிக்கு இம்மாதிரி அவலம் நேரவில்லை. மேலும் சில நாள்கள் குடும்பத்தோடு இருந்து விட்டு அப்புறமாய்த் திரும்ப ஆசைப்பட்டாலும், எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு பறந்தோடி விடுவார்.   இந்த முறை ஜெய்லானி ஊர் வந்திருந்த போது மிகவும் மனம் நொந்து போய் இருந்தார். கட்டிட நன்கொடை என்று ரூபாய் பத்தாயிரம் போக, மேலும் சில ஆயிரங்கள் உருண்டோடி விட்டன. மகனின் படிப்புச் செலவை நோக்கி. மகளோ வீட்டில் குத்துக்கல் மாதிரி இருக்கின்றாள். அவளுக்கானதில் கணிசமான தொகை கரைந்து விட்டது. ஏதோ ஒரு நல்ல நேரமாக மகளுக்கென்று தக்க வரன் வாய்த்தால் பணத்துக்கு என்ன செய்வது என்ற சங்கடம் வேறு. ஒரு அடிமை மாதிரி. காலம் காலமாகப் பணிபுரிந்தும், பயனற்ற நிலை என்கிற சலிப்பு. விடுமுறை நிறைவாகியும் வேலைக்குத் திரும்பிச் செல்லும் மனநிலை இன்றி இருந்தார் ஜெய்லானி. வந்த நாளிலிருந்து, "இனிமே இவங்க கிட்ட போயிக் கை கட்டி வேலை பாக்குறதாவது? வேற எங்கியாவது போயிற வேண்டியது தான். இல்லேன்னா ஒரு பெட்டிக் கடை போட்டு உக்காந்துரணும்” என்றே சொல்லிக் கொண்டு வந்தார். ஆனால் ஆசை கனியும் வண்ணம் எந்தக் காற்றும் வீசவில்லை. வழிகளற்றுப் போன நிலையில் பகலும் ஓர் இரவு போன்றே பயமுறுத்தியது. திக்கு முக்காடியது மனம்.   கடைசியில் கபூர் முதலாளிக்கே கடிதம் எழுதினார். அங்கிருந்து பதில் வரும் முன்பே அதிர்ஷ்டக் காற்று எங்கிருந்தாவது வீசி விடாதா என்கிற நப்பாசையும் இருந்தது. ஆனால் பதில் சுணக்கமானது. ஒரு வேளை தான் எழுதிய கடிதம் சரியான இலக்கணத்துடன் இல்லாமல் போயிருக்கலாம் என்ற அச்சம் உண்டாயிற்று. எனவே, மீண்டும் ஒரு கடிதம் எழுத எண்ணி ஹிதாயத்துல்லாவை அணுகினார். "மதிப்பிற்குரிய முதலாளி அவர்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும். (வரஹ்) தாங்கள் அறிவதாவது, எனது விடுமுறை கடந்த மாதம் 30ம் தேதியோடு முடிந்து விட்டது. எனவே நான் மீண்டும் பணியில் சேர உங்களின் தயவை எதிர் நோக்குகிறேன். அவன் வாப்பா சொன்னதை எழுதினான். "நான் சொன்னதை அப்படியே எழுதிட்டியா வாப்பா?'' என்று கேட்டார். அவன் தலையாட்டினான். "வஸ்ஸலாம்". கடிதம் முடிந்தது. அவர் ஒரு முறை வாசித்தார். இதே வாசகங்களையே அவரும் எழுதி அனுப்பியிருந்தார். பதில் வரவில்லை. ஆனால் இப்போது மகனின் கையெழுத்தில் கடிதத்தைப் பார்க்கவே அழகாக இருந்தது. ஆகையால் பதில் வந்துவிடும். "சரியா எழுதி இருக்கே வாப்பா. இப்போ கடைசியா எழுது தங்களின் பணிவன்பான ஊழியன். எழுதிட்டியா... கொண்டா நான் கையெழுத்துப் போடுறேன்.” சிரமமில்லாமல் அந்தக் கையெழுத்தைப் போட முடியவில்லை. அவனிடமே தபாலில் சேர்க்கச் சொன்னார்.   கல்லூரிக்குப் போகும் வழியில் கடிதத்தை எடுத்துக் கொண்டான். வாப்பாவின் இன்னல் வேதனைப்படுத்தியது. வாப்பா கடிதம் எழுதச் சொன்ன முறை ஞாபகம் வந்தது. தங்களின் பணிவன்பான ஊழியன் என்று அவர் சொல்லவும் இவனும் மறு யோசனையின்றி எழுதி விட்டானே! அந்த கபூரின் மீது வாப்பாவுக்கு உண்மையிலேயே பணிவும் அன்பும் ஒரு சேரக் கலந்து இருக்கின்றனவா? தனது படிப்பையும் குடும்ப நிலையையும் காக்காத ஒருவன்மீது வாப்பா பணிவைக் காட்டுவதும் அன்பைச் செலுத்துவதும் என்ன நியாயம்? கண்ணியமான 'அன்பு' என்ற வார்த்தையை மேன்மையான நிலைக்குக் கொண்டு போய் நிறுத்தி யாரோ எவருக்காகவோ விரயம் செய்வது. தனது வாப்பாவுக்கும் அதனை எழுதிய தனக்கும் இழிவு தருவதாகவே தோன்றியது! வாப்பா அறியாமல் செய்யும் பிழைக்கு. தான் அறிந்தே பணிவது எரிச்சலாகவும், கடும் வெறுப்பாகவும் இருந்தது. வாப்பாவிடம் இது பற்றி கேட்க வேண்டும் என உடனே அவன் சைக்கிளைத் திருப்பினான். எதிர்க்காற்றில் சைக்கிளை அழுத்தம் கொடுத்து ஓட்டினான். கையிலிருந்த கடிதம் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. (சிந்தனை - ஏப் 99)   மீட்சி   இப்படி அலைந்து திரிந்ததற்கும், ஓர் இடம் பாக்கி விடாமல் சுற்றிப் பார்த்தற்குமான களைப்புக் கடைசியில் முழுமையாக வந்து விட்டது. பஸ் ஸ்டாண்டு இன்னும் தூரத்தில் உள்ளது. போகிற இந்த வழியிலேயே பஸ் வந்து விட்டால் எவ்வளவு நல்லது? எந்த பஸ்சும் வரவில்லை . தன் மனைவியும், பிள்ளைகளும் தங்களின் சக்தியை எல்லாம் இழந்து தள்ளாடி வருவதைக் காண நாசர் மனம் துவண்டு போனான். அவன் மட்டும் தெம்பாக நடந்தான். பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் ஃப்ரூட்டி வாங்கிக் கொடுத்தான். அதில் உண்டான தெம்பு மேலும் சிறிது நேரத்திற்குத் தாக்குப் பிடிக்கும்.   பேருந்து நிலையம் அதிக ஜனத்திரளோடு பரபரப்பாகக் காட்சியளித்தது. அந்தக் கூட்டத்தையும் பஸ்ஸுக்காக மக்கள் அங்கேயங்கே என்று பாய்ந்தோடுவதையும் பார்க்க நான்கு பேருமே மருண்டு விட்டார்கள். கோயமுத்தூர் பஸ் ஒன்று கூட இல்லை. அந்த பஸ் வரும் போது இப்படியொரு பரபரப்பான ஓட்டத்தை மனைவி குழந்தைகளுடன் கூடவே கையில் வைத்திருந்த சாமான்களுடனும் எப்படிப் பிடித்து இடம் தேடிக் கொள்வது என்கிற எண்ணம் ஒரு பயமாகவே ஆகிவிட்டது. இதே களைப்புடன் கோயமுத்தூர் வரைக்கும் நின்று கொண்டே போகணுமா? ஊட்டிக்கு ஏன் வந்தோம் என்று தன் மீதே கோபம் கொண்டான் நாசர். ஆனால் கோவைக்கு இரண்டு பஸ்கள் அடுத்தடுத்து வந்தாலும் - எதிர்பார்த்த ஜனத்திரள் கோயமுத்தூருக்கு அல்ல என்பதாலும் சுலபமாக நால்வருக்கும் இடம் கிடைத்துவிட்டது. நாசரும், அவன் மகள் பர்வீனும் ஒர சீட்டில் உட்கார அவன் மனைவியும் மகனும் இன்னொரு சீட்டில் உட்கார்ந்து கொண்டார்கள். இடம் கிடைத்த உற்சாகத்தில் சற்று நேரம் கலகலப்பாகப் பேசி விட்டு பர்வீன் அவன் மடியிலேயே படுத்து விட்டாள். முன் சீட்டைக் கவனித்தான். தாயும் மகனும் எப்போதோ உறங்கி விட்டிருந்தார்கள். நாசருக்கு இப்போது நிறைய சிந்திக்கவும் கவிதை எழுதவுமான மனநிலை சிறகடித்து வந்து சேர்ந்தது. கவிதையின் முதல்வரி நெஞ்சில் கோடு இழுக்கவும் அடுத்தடுத்து சில வரிகள் வந்து சேர்ந்தன. உதயமான வரிகளை திரும்பத் திரும்பச் செப்பனிட்டுப் பார்த்தான். இன்றைக்கு இந்தக் கவிதையை பேனா பிடித்து எழுத அவகாசமே இல்லை. கோயமுத்தூர் போய்ச் சேர்ந்து அங்கிருந்து சீரநாயக்கன்பாளையம் முருகேசன் மாமா வீடு போய்ச் சேர அகாலமாகி விடும். தங்கியிருக்கும் இடத்தில் உரிமை தேட முடியாது. அவர்களின் தூக்கம், வசதியை புறந்தள்ளி விளக்கெரிக்க இயலாது. நாளைக் காலையில் எழுந்து எப்படியும் கவிதையை எழுதிவிட வேண்டுமென எண்ணி, வசப்பட்ட வரிகளை இழந்து விடாதிருக்க கண்களை மூடி மீண்டும் மீண்டும் மனத்துக்குள் பதித்துக் கொண்டிருந்தான்.   டிரைவர் தன் சீட்டில் உட்கார்ந்து விட்டார். பயணம் சுகமாகவே இருக்கும். ஆனால் ஊட்டி மறைந்து விடும். ஊட்டி எத்தனையோ பேரைக் கண்டிருக்கிறது. வந்தவர்களை வழியனுப்புவதில் ஊட்டிக்கு என்று ஏதும் வருத்தம் இருக்கப் போவதில்லை. எல்லாம் இவனுக்குத்தான். ஒரு கனவு போல கிடந்த ஆகாச நகரம். இன்று அவன் குடும்பத்திற்கே மன விருந்தாகி விட்டது.   ஊட்டியை விட்டுப் பிரியப், பிரிய இரவுக் குடையும் கவிழ்ந்து கொண்டே இருந்தது. ஊரில் இந்த மின் விளக்குகளுக்கு இல்லாத அழகு இந்த மலை நகரில் கிடைத்திருக்கிறது. முன்னும், பின்னும், மேலும், கீழும் என்று இருள் கிழிக்கும் விளக்குகள் மண்ணுலகில் பதிந்த நட்சத்திரங்கள் போல் மாயம் செய்தன. இரவிலும் காண வேண்டிய ஊராக இருக்கும் ஊட்டியை இவ்விதம் பிரிய நேர்வது அன்புமயமான தோழியைப் பிரிகிற வேதனையாக இருந்தது. நாளைக்குக் கிடைக்காத இந்தக் குளிர் காற்று ஜன்னல் வழியே அனைவரையும் தொட்டு வழியனுப்பிக் கொண்டிருந்தது.   போகிற வழியில் பஸ் நின்று பயணிகளை மேலும் ஏற்றிக் கொள்ள, எல்லா இருக்கைகளும் நிரம்பி, சில பேர் நிற்கவும் ஆரம்பித்தார்கள். குன்னூர் வந்த போது கூட்டத்தோடு கூட்டமாய் அந்த மனிதனும் ஏறிக் கொண்டான். அவன் பஸ்ஸைத் துழாவிப் பார்த்த போது இடையில் ஓர் இருக்கையில் ஒரு ஆள் மட்டுமே இருப்பது போல் அவன் பார்வைக்குப் பட்ட்து. ஆனால் அந்த இருக்கையின் அருகிலும் ஆள்கள் நின்று கொண்டிருக்கிறார்கள் என்பது அவனுக்கு உறைக்கவில்லை. எட்டி நடை போட்டு இடையிடையே நின்றிருந்தோரையும் கைகளால் துடுப்பு போல் விலக்கி விட்டு நாசரின் இருக்கை அருகே வந்தான். பர்வீன் வாடி வதங்கிப் போனது போல் எந்தவித அசைவும் இன்றி தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். நாசர் மனதிலுள்ள கவிதை வரிகள் இன்னும் வளைய வந்து உற்சாகக் களி ஏறி முடிக்க மனமில்லாமல் அந்த ரசத்திலேயே மூழ்கிக் கிடந்தான். வந்தவன் குரல் அவனை வெளியே இழுத்துப் போட்டது.   "குழந்தைக்கு டிக்கெட் வாங்கியாச்சா?” என்று மீசை துடிக்கும் அதிகாரத் தோரணையில் வினாவை வீசினான். நாசர், ''வாங்கியாச்சு” என்றான். சொல்லி விட்டுக் கவிதையின் அடுத்த வரி குறித்து யோசிக்கலானான். "குழந்தைக்கு அரை டிக்கட் தானே வாங்கியிருப்பீங்க? ஆனா ஒரு ஆளு இருக்கிற முழு சீட்டையும் அது படுத்துக் கெடக்குது” என்றான். பார்வை குத்திட்டு நின்றது.   நாசர் கவிதை வரிகளைத் தூக்கியெறிந்தான். அவன் கேட்ட முதல் கேள்விக்கே மிக அமைதியாக எந்த உறுத்தலும் இல்லாமல் அடங்கி நின்று பதில் சொன்னது ஏன் என்று தன் மீதே கோபம் வந்தது. அந்தக் கோபத்தை அந்த டிப் - டாப் ஆசாமி மீதே திருப்பி விட்டான். ஊட்டியை ஓடியாடிக் களித்து, ரசித்துப் பரவசமிட்டு, சிரித்துக் கும்மாளமிட்டு இப்போது மடியில் அசைவற்று, தந்தை மடியே ஒரு சொர்க்கமாகக் கருதி சுகமாய்த் தூங்குபவளின் தூக்கத்தை இவன் கெடுக்க வருகிறதா என்கிற ஆவேசமாக வெடித்தான். "நீ நில்லு. என் குழந்தையோட தூக்கத்தை விட நீ உட்கார வேண்டியது அப்படியொண்ணும் அவசியமில்லை.”   நாசரின் குரல் வேகப்பட அவன் மனைவி உறக்கம் கலைந்து முழித்தாள். மற்றவர்களும் அப்படித்தான். எல்லோரின் கவனமும் இவர்கள் மீது பதிந்தன.   "நான் இப்போ அந்த இடத்துல உட்காரணும். குழந்தைய எழுப்பு.”   பக்கத்தில் நின்றிருந்த பலரும், "பார்த்தா நல்ல தோரணையா இருக்கீங்க. ஒரு குழந்தை அசந்து தூங்குது. நாங்களே இவ்வளவு நேரமும் அந்தக் குழந்தை தூக்கம் கெடக் கூடாதுன்னு நின்னுக்கிட்டே வர்ரோம். நீங்களும் அப்படி விட்டுக் கொடுக்கணும்” என்றனர்.   "இல்லே நான் விட முடியாது. எனக்கு உட்கார இடம் வேணும்.”   இன்னொருத்தர் சொன்னார். “அப்படின்னா உங்களுக்கு முன்னால நாங்க ஏறிட்டோம். இப்ப அந்த இடத்துல நான் உட்கார்ந்திருக்கிறதா நெனச்சுக்கிடுங்க.”   "இவ்வளவு நேரமும் உட்கார இடம் கேக்கத் தெரியல்ல. இப்ப நான் போய் உட்கார்றேன்னதும் உங்களுக்கும் உணர்வு வந்துடுச்சா?”   "எங்களுக்கு உணர்வு இருக்கிறதுனால தான் அந்தக் குழந்தைக்கும் இடத்தை விட்டுக் கொடுத்து மனுசத்தனமா நாங்க நின்னுகிட்டு வர்றோம். உங்களுக்கு முதல்ல அந்த உணர்வு வரட்டும்.”   "இவரு இந்தக் குழந்தைக்கு டிக்கெட் வாங்கியிருக்க மாட்டாரு. ஒரு வேளை வாங்கியிருந்தாலும் அரை டிக்கெட் தான் வாங்கியிருப்பாரு. அப்ப அவர் குழந்தையை தன்னோட மடியில் தான் தூக்கி வச்சிருக்கணும்.”   நாசர் மீண்டும் உள்ளம் பதறினான். "டேய் போடா! அனாவசியமா ஏதாவது பேசினே, கன்னத்துல அறை தான் விழும்.” என்றான். எழுந்திருக்க விரும்பினான் அவனை அடிக்க. ஆனாலும் எழுந்திருக்கவில்லை. இந்த மனிதனைப் பற்றிப் பர்வீன் தெரிந்து கொள்ள வேண்டாம். பர்வீன் பெருந்தன்மையும், இரக்க சுபாவமும் மிக்க குழந்தை. தெருவில் ஒரு பிச்சைக்காரர் போகவும் கூடாது. வலிய சென்று கையில் காசு கொடுத்த குழந்தை அது. பிச்சை போடச் சோறு இல்லை என்று ம்மா வெறுங்கையுடன் அனுப்பிய வயசான பிச்சைக்காரியைக் கூட்டி வந்து "ம்மா! நான் திங்குற சோறு போடும்மா!” என்று சிரிப்பும் கெஞ்சலுமாய் ம்மாவிடம் விண்ணப்பித்த அன்புக் கடல் இந்த பர்வீன். அடுத்தவர்கள் குழந்தையை "ம்மா! குழந்தைய வாங்கி உன் மடியில் வையேன்” என்று சொல்லி, அது ம்மாவின் மடிக்கு வந்ததும் கையிலிருந்த பிஸ்கெட்டுக்களை அதன் வாயில் வைத்து சுவைக்கச் சொன்ன மகள் இவள். வாப்பா ம்மாவின் கையில் காசில்லாத போது ஆசைப்பட்ட பொருட்களுக்கு அலையாமல் அமைதியாகி விடும் இயல்பு. இவள் கண்களில் அந்த மனிதன் பட வேண்டாம் என எண்ணித் தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்றாலும் முடியவில்லை. ஆனாலும் இப்போது சூழ்ந்திருந்த எல்லோரின் ஆவேசங்களுக்கும் அவன் தாக்குப் பிடிக்க முடியவில்லை. "உன்கிட்டே அவர் எதையும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் மதிப்பு கொடுத்து பேசினாரு. அதுக்கு மரியாத இல்லாம நீ பேசிக்கிட்டே இருந்தா என்னடா அர்த்தம்?” என்று உட்கார்ந்திருந்த இன்னொரு மனிதர் எழுந்தார் கோபமாய். மற்றவர்கள் அவரை அழுத்திப் பிடித்து உட்காரச் செய்தார்கள். "உனக்குக் கோபம் வர்ற மாதிரி எனக்கும் வரும்” என்றான் இந்த ஆசாமி. கண்டக்டர் இவர்கள் பக்கமாய் வேகத்துடன் வந்தார். டிப்டாப் ஆசாமி கேட்டான், "சார்! இவரு குழந்தைக்கு டிக்கெட் வாங்கிட்டாரா?”   "அது என் வேலை. அதப் பத்தி உங்களுக்கு என்ன கவலை? இடம் இல்லேன்னு தெரிஞ்சுதான் ஏறினீங்க! இப்போ வந்து தகராறு பண்ணக்கூடாது!” என்று பதில் கொடுத்தார் கண்டக்டர்.   "குழந்தைக்கு அரை டிக்கெட் தான் வாங்கியிருப்பாரு. எப்படி முழு இடத்தையும் அடைச்சிக்கிடலாம்?”   பின்னால் இருந்து ஒருவர் எழுந்தார். அவன் சட்டையை இறுக்கமாய்ப் பற்றி தன் பக்கத்துல இழுத்து கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். அந்த அடி அழகாகத் தன் வேலையைச் செய்தது. நாசருக்கு அவன் அடிபட்டது ரசனையாக இருந்தாலும் மனம் வருந்தவும் செய்தான். அவன் சப்த நாடிகளும் ஒடுங்கி நின்று விட்டான். "இனி மேலும் ஏதாவது பேசின், படுவா தூக்கி வெளியில் இப்படியே வீசிடுவேன்” என்றார். கண்டக்டர் அவனைத் தள்ளிக் கொண்டு முன்னே போனார்.   "உங்க குழந்தை இப்படித் தூங்கிக்கிட்டு இருந்தா அந்தக் குழந்தைய எழுப்பி இன்னொருத்தருக்கு இடம் கொடுப்பீங்களா?” என்று கண்டக்டர் கூறியபடியே அவனை முன் பக்கமாகத் தள்ளினார். “இது சரியான கேள்வி!” என்றார் பெரியவர்.   எத்தனையோ முறை பஸ்களில் பெரியவர்களுக்கோ பெண்களுக்கோ, இடம் தேடி பரிதாபமாய்ப் பார்த்துச் சிரிக்கும் குழந்தைகளுக்கோ தான் மனமுவந்து இடத்தைக் காலி செய்து உட்கார வைத்திருக்கிறோம்! சூழ்நிலைகள் பொருத்தமற்ற இடத்தில் எத்தனைக் குழந்தைகளை இதே மடியில் சுமந்து வந்திருக்கிறோம்! இத்தனைக்கும் இன்று அர்த்தமில்லாமல் போய் விட்டதே. தன்னையும் ஒரு முரடன் மாதிரி பேச வைத்துவிட்டானே! தூங்கிக் கொண்டு இருக்கிற பர்வீனைத் தடவிக் கொடுத்தான். மீண்டும் கவிதை வரிகள் மனத்தில் வர மறுத்தன. அவை போய்ப் பதுங்கிய இடத்துக்கு அவனால் போக முடியவில்லை. உல்லாசமாய்ப் பறந்து திரிந்த ஒரு நல்ல நாளில் இந்த அசம்பாவிதம் ஆனது வேதனையைக் கொடுத்தது. இனி ஊட்டியின் இன்பத்தை நினைக்கும் போதுகளில், இச்சம்பவமும் நினைவுக்கு வந்து தொலையுமே என்ற வருத்தம் வெகுவாய் வளர்ந்தது.   மேட்டுப்பாளையம் வருவதற்கு இன்னும் அரை மணி நேரம் இருந்திருக்கும். நின்று பயணித்த இரண்டு பேர் பேசிக் கொண்டு வந்தார்கள். நெரிசலில் யார் காலை யாரோ மிதித்து விட ஒரு சின்ன சலசலப்பு உண்டானது. அந்த சலசலப்பு அடங்கவில்லை. சண்டை போட ஆரம்பித்தார்கள். சில பயணிகள் தூக்கம் கலைந்து மலங்க மலங்க விழித்தார்கள். மறுபடியும் சண்டையா? நாசருக்கு எரிச்சலாக இருந்தது. தெரியாத்தனமாய் இந்த பஸ்ஸில் ஏறி விட்டோமே என்று சங்கடப்பட்டான். தகராறு செய்பவர்களுக்குள் ஒரு வார்த்தை வித்தியாசமாய் விழுந்து விட்டது. மறுபடியும் கூச்சல். ஒருத்தரையொருத்தர் அடித்துக் கொண்டு புரளப் போகிறார்கள் என்னும் நிலைமை. பர்வீன் அடித்துப் பிடித்து எழுந்தாள். நடக்கும் வாய்த் தகராறை திரு திருவென்று பார்த்தது. வாப்பாவின் முகத்தையும் கவனித்தது. மீண்டும் படுத்துக் கொண்டது. ஆனால் பெருகி வரும் கூச்சலும், குழப்பமும் அவளை தூங்க விடவில்லை. மீண்டும் எழுந்து வாப்பாவின் தோள்களில் சாய்ந்து கொண்டாள். தகராறு செய்பவர்களையும் சமாதானப் படுத்துபவர்களையும் கூர்ந்து கவனித்தாள். வாப்பாவின் காதருகே பேசினாள். “ஏம்பா இப்படிச் சண்டை போடுறாங்க? சத்தம் போடாம இருக்கச் சொல்லி நீங்களும் சொல்லுங்கப்பா!” ஆச்சரியமான முறையில் அந்தத் தாவா அப்போது நின்று விட்டது. அதற்கு முத்தாய்ப்பாக இரண்டு தரப்பும் சொன்ன சொற்கள் மட்டும் ஒரே வாக்கியம் தான்.   "மேட்டுப்பாளையம் வா! அங்க பாத்துகிடுதோம்.”   "மேட்டுப்பாளையம் போய் சண்டை போடுவாங்களாம் வாப்பா. வேண்டாம்னு சொல்லுங்க." "சொல்வோம். மேட்டுப்பாளையம் வரட்டும்.” பின்பு அவள் தூங்கவில்லை. தோளில் சாய்ந்த படியே முழித்துக் கொண்டு தான் இருந்தாள். பஸ் மலைப் பாதையை விட்டுச் சமதளத்திற்கு வந்துவிட்டது போல இருந்தது.   பேருந்து நிலையத்தை நெருங்கி வரவும் மீண்டும் கசமுசா ஆரம்பமானது. இறங்கினால் யாராவது ஒருத்தருக்கு அரிவாள் வெட்டு நிச்சயம் என்கிற மாதிரி பதற்றம் பரவியது. கொச்சை வார்த்தைகள் அனல் கக்கின. பெண்களின் முகபாவனை எட்டுக் கோணலாகியது. கண்டக்டரும் வேறு பலரும் இரண்டு தரப்பையும் உயிரைக் கொடுத்து சமாதானம் செய்வித்தபடி இருந்தார்கள். அந்தப் பணியில் இடுபட்டிருந்த ஒரு முகம் பார்த்ததும் நாசருக்குத் திகைப்பு உண்டாயிற்று. சாட்சாத் அந்த டிப்டாப் ஆசாமி தான். இரு தரப்புகளுக்கும் இடையில் நின்றிருந்த அவனை அங்குமிங்கும் தள்ளிக் கொண்டு இருந்தார்கள். அவனோ கவலைப்படாமல் சமரசத்தில் மூழ்கிப் போயிருந்தான். அவனையே கவனித்துப் பார்த்த பர்வீன் சொன்னாள், "அந்த மாமா பாவம். அவர் மேலயும் அடி விழுது வாப்பா.”   அந்த ஆள் உரக்கக் கத்தினான். "கண்டக்டர் சார்! போற போக்கைப் பாத்தா நம்ம தல தப்பாது போலயிருக்கு. வண்டிய நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கு விடுங்க” என்று கூக்குரலிட்டான். யார் சொல்லும் எவர் செவிகளிலும் ஏறவில்லை. மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தை வண்டி நெருங்கும் போதே வண்டியின் வேகக் குறைவைப் பயன்படுத்திக் கொண்டு அவனவனும் பொத்பொத்தென்று குதித்துக் கொண்டிருந்தார்கள். டிப் - டாப் ஆளும் சேர்ந்து குதித்தான். இருதரப்பிலும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஆக மொத்தமே நாலு பேர்தான் சண்டைக் கோழிகள். சமாதானப் படுத்துவதோ பலப் பலர். கண்டக்டரும் குதித்தார். கண்டக்டரும் டிப் - டாப் ஆளும் ரொம்பவும் தான் அல்லாடிக் கொண்டு இருந்தார்கள். ஆனாலும் பம்பரமாய்ச் சுழன்றார்கள். இதை வேடிக்கைப் பார்க்க ஒரு பெருங்கூட்டம். ஒருத்தனின் தலைமுடியைப் பிடித்தாட்ட இன்னொருவன் முயலும் போது வசமாகச் சிக்கிக் கொண்டது டிப்டாப் ஆளின் தலை.   "ஏய் விடுங்கப்பா! விடுங்கப்பா. சமாதானமா போங்க. என் தலை முடிய விடுங்கப்பா!" என்று கூக்குரல் இட்டான் அவன். இறுதியில் மேலும் பலர் தலையிட்டு சண்டைக்காரர்களை விலக்கி வெகுதூரத்துக்கும் அப்பால் கொண்டு போய் விட்டார்கள். சமாதானப் பிரியர்கள் களைப்புடன் காணப்பட்டார்கள். கூச்சல் மெல்ல மெல்லத் தேய்ந்தது. டிப் டாப் ஆள் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாய் ஓடி ஓடிப் போய் இன்னும் அமைதிப் பணியில் ஈடுபட்டவனாய் இருந்தான். இறுதியாகத் தன்னோடு நின்ற கண்டக்டரையும் டிரைவரையும் அழைத்துச் சென்று டீ வாங்கிக் கொடுத்தான். ஒரு சிகரெட்டை வாங்கி பற்ற வைத்து தன்னை மறந்த லயத்தில் வளையங்களை விட்டுக் கொண்டிருந்தான். அவன் களைப்பை கைப்பற்றிக் கொண்டு புகை வளையங்கள் மறைந்தன. பஸ் புறப்படவும் ஓடி வந்து ஏற ஆசைப்பட்டு, பஸ் வேகப்படும் வரைக்கும் கைப்பிடியைப் பிடித்து கூடவே ஓடி வந்து அப்புறம் தாவியபடி உள்ளே ஏறினான். அவனைத் திரும்பிப் பார்த்தாள் பர்வீன். அவனும் இவளைப் பார்த்தான். அவனைப் பார்த்துச் சிரித்தபடி பர்வீன் கையை ஆட்ட, அவனும் ஒரு தயக்கத்தின் பின் கையை உதறி விட்டு பர்வீனை நோக்கி கையசைத்தான். இதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த, அவனைக் கன்னத்தில் அறைந்த அந்தப் பெரியவர் இப்போது இருவரையும் மாறி மாறிப் பார்த்து சிரிக்கலானார். பரஸ்பரம் புன்னகைகள் பெருகின. பதுங்கிய கவிதை வரிகள் மீண்டும் வெளிப்பட நாசர் தன் கவிதையுலகுக்குள் நுழையலானான். (சதங்கை - ஜன. மார்ச். 99)   ஆயத்தமாய் இருந்தவர்கள்   "ராமன் நாயர ராத்திரிலேர்ந்து ஆளக் காணல. என்ன நேரம் பாருங்கோ! இப்ப பாக்க காணாமப் போயிட்டாரு!"   சொல்லி விட்டு, குமார் டிராயரைத் திறந்து, கொண்டு வந்த டைரியையும், கைப்பையையும் உள்ளே வைத்தார். அலுவலகத்திலிருந்த அத்தனை பேரின் கண்களும் இப்போது அவர் மேல் தான் இருந்தன என்பது மிகையல்ல. எனக்கும் அதிர்ச்சி தான். என்ன இவர் இவ்வளவு சாதாரணமாகச் சொல்லி அமர்ந்து விட்டாரே யென்று! ஒல்லியான உடம்பு, கருணையற்ற கண்கள், கருப்பும் வெள்ளையுமாய்க் குச்சிக் குச்சியாய் குத்திட்டு நின்ற சிகை, முகத்திற்குப் பொருத்தமில்லாத மூக்கு, கவலைப்படாமல் வளரும் தாடி... இப்படியிருந்தும் தன்னைத்தானே ஒரு கண்காணிப்பாளனாக நியமித்துக் கொண்டிருக்கிற ஆணவப் பார்வைக்குரிய ராமன் நாயர். அவரை நானும் பார்த்திருக்கிறேன்.   உட்கார்ந்ததும் ரிஜிஸ்தரில் கையெழுத்துப் போட மறந்ததை எண்ணி எழுந்து வந்து என் முன்னின்று கையெழுத்திட்டார். அவர் முகத்தைக் கூர்ந்து கவனித்தேன். எப்போதுமே அந்த முகத்தில் தென்படும் குறிகளே தவிர விசேஷகமாக வேறு எதுவும் தென்படவில்லை.   நான் தான் முதலில் கேட்டேன், "என்ன குமார், ரொம்பச் சாதாரணமா சொல்லிட்டீங்க. நீங்க தேடிப் பாக்க ஏதாவது முயற்சி செஞ்சீங்களா?” "அது தான் சொன்னேனே சார் ! மோசமான நேரம்னு. நமக்கு இல்ல அது; அவருக்குத் தான். இப்ப பாக்க காணாமப் போவாரோ?”   எல்லோருக்கும் இன்னும் ஆச்சரியம். டிராப்ட்ஸ்மேன் நாராயணப் பெருமாளும் வேலையை நிறுத்தி வராந்தாவில் இருந்த படியே இங்கே நோக்கிக் கொண்டிருந்தார். சூப்பர் வைசர் ரகுநாத் நின்றபடியே கவனித்தார். கன்னடத்துக்காரர் பி.கெ. ஷெனாய் எதுவும் புரியாமல், எல்லோருடைய முகப்பாவனையையும் கவனித்துக் கொண்டு அதற்கேற்றபடி தன் முகத்தையும் வைத்துக் கொண்டிருக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். சேல்ஸ் மானேஜர் ஆறுமுகம் சாருக்கு அதிக மன வருத்தம். அவர் அக்கவுண்டண்ட் ரகோத்தம ராவை நன்றாக மட்டம் தட்டிப் பிறர் மத்தியில் கேவலப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் குமார் வந்து குடும்ப் பிரச்சனையைக் கூறி கவனத்தைத் தன் பக்கமாய் இழுத்துக் கொண்டார் அல்லவா? இந்த நேரம் பார்த்து மானேஜர் விஜயசாரதி எப்பவும் அணிந்து வரும் அடர் நீல வண்ண பேண்ட்டும், அரைக்கை வெள்ளைச் சட்டையுமாக நுழைந்திருக்கக் கூடாது. சுதாரித்துக் கொண்ட காலை வணக்கங்கள் அவருக்குப் போய் சேரவில்லை.   ராமன் நாயருக்கும், இங்குள்ளவர்களுக்கும் அப்படியென்ன ஒட்டுறவு? ஒரு புடலங்காயும் கிடையாது. யாருமே என்னைத் தவிர - அவரை பார்த்தறியாதவர்கள். குமார், வீட்டு விசயங்களை அவ்வப்போது போட்டு உடைத்து விடுவதால் ராமன் நாயர் பலருடைய மனங்களிலும் பல்வேறு விதமாகப் பதிந்து போயிருந்தார்.   "குமார் இப்படில்லாம் சொல்லிட்டீங்கன்னா என்ன அர்த்தம்? அறுபத்தஞ்சு வயசுல காணாமப் போற ஒரு மனுசனப் பத்தி கவனமில்லாம இருந்தீங்கன்னா அது நல்லாயில்லே. எங்கேயாவது வழி தெரியாமப் போயிருக்கலாம். உடனே போலீஸ்லயாவது எழுதிக் குடுங்க. வாங்க போகலாம்.”   "வேண்டாம் சார் ! வழி தெரியாம அவரு போகல்ல. வீட்ல சண்டை போட்டுட்டுத் தான் போயிருக்காரு. வீடு வேணும்னா ரெண்டு நாள்ல தானா வந்து சேர்ந்துடுவாரு சார்!"   ரகோத்தம ராவுக்கு நான் அசிஸ்டெண்ட். என்னை மிகவும் நெருங்கி, "என்னப்பா தம்பி! என்ன சொல்றான் பையன்? உண்மையாகவே தான் காணாமப் போயிட்டாரா?”   "உண்மையாகவே இருக்கும். நம்பலாம் சார்!” "நீ அதுக்கு மேலே குண்டுத் தூக்கிப் போடறியேப்பா! யாரோ ஒருத்தரு காணாமப் போன மாதிரில்ல சொல்றான் பையன் தனது சோடா புட்டி கண்ணாடி வழியே திருதிருவென்று விழிகளை அங்குமிங்குமாய் அலைய விட்டபடி ஒரு நாடக பாணியில் கேட்டார்.   தந்தையே ஆனாலும், "ராமன் நாயர்” என்றே குமார் எப்போதும் செல்வார். அவருக்குத் தந்தை மீதான கோபம் ரொம்பப் பழசானது. ஆனால் விசயம் இப்போது புதுசு. இப்படியும் நடக்கலாம் என்பதற்காகத் தயாராய் இருந்து விட்டது போன்று ஓர் ஆயத்த நிலை.   ராமன் நாயர் மூன்று நாட்களுக்குப் பின்னரும் வீடு வந்து சேரவில்லை என்று தெரிந்தது.   “என்ன செய்யப் போறீங்க? இப்பவாச்சும் ஏதாவது செய்ய வேண்டாமா?   "அட என்ன சார், நீங்க வேற?” ரொம்பவும் சலித்துக் கொண்டபடியே என்னிடம் சொன்னார். "சுசீலாவுக்கு வரன் பேசி வர்றாங்க சார். அதப்பத்தித்தான் நாங்க ரொம்ப யோசிச்சிக்கிட்டு இருக்கோம். அதுல ரெண்டுல ஒண்ணு தெரியிற வரைக்கும் அவரத் தேடியலஞ்சிட்டு இருக்க முடியாது."   விதிர் விதிர்த்தேன்.   மாலையில் வீட்டுக்குப் போக இருந்தபோது ஜி.எச்.சிலிருந்து வஜ்ரவேலு போன் செய்தான்.   "ஹலோ! குமார் இருக்காரா?” நான் அவரிடம் கொடுத்தேன்.   "குமார்! நேத்து எக்மோர்ல ஒரு விபத்து. இங்க ஒரு பாடி வந்திருக்கு. நீ வர்றியா. வந்து பாரேன்.”   குமார் அளித்த பதில் வஜ்ரவேலுவை அதிர்ச்சியாக்கி இருக்க வேண்டும். "அது அவரா இருக்காது வேலு.”   நாங்கள் அனைவரும் சேர்ந்து வற்புறுத்தியதின் பேரில் போய் விட்டு மறுநாள் காலையில் வந்த குமார் சொன்னார், "ராமன் நாயரோட பாடி இல்ல அது. அவரப் பத்தி எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். இப்படிப்பட்ட கேசுல எல்லாம் அடிபட்டு அவரு வீணா செத்துப் போக மாட்டாரு! ரொம்ப எச்சரிக்கையான ஆசாமி அவரு!"   குமாரை நான் இன்னும் அதிகமாய்ப் புரிந்து கொள்ள வேண்டியவனாகவே இருக்கிறேனோ? இந்த நிறுவனத்திற்கு வந்த நாளிலிருந்து என்னை நெருங்கியிருப்பவர் அவர். மற்றவர்களுடான அவரது பழக்கம் சில வரையறைகளைக் கொண்டிருந்தது. அவருடனான எனது நெருக்கம், அவர் வீடு வரைக்கும் என்னை அழைத்துச் சென்று நட்புறவு கொள்ளச் செய்திருக்கிறது.   குமாரின் தாயார் பார்வதி அம்மாள் என்னைக் கனிவுடன் உபசரித்திருக்கிறார்கள். நான் போன இரண்டு மூன்று முறைகளிலும் ராமன் நாயரைப் பார்த்திருக்கிறேன். அம்பத்தூரிலுள்ள வேப்ப மரத்தின் நிழலில் துண்டை விரித்துப் போட்டு உட்கார்ந்திருப்பார். குறுகலான தெருவே ஆனாலும் அங்கு அவரை யாரும் பொருட்படுத்தாமல் போய் வந்து கொண்டிருப்பார்கள். வீட்டிற்குள் இருப்பது இல்லை. சாப்பாட்டு நேரம் போக. சுருட்டு குடிப்பவராய் இருந்தும் அவர் வயதுக்கு இன்னும் இளமையானவராய் இருப்பார். மழை பெய்யும் நாள்களில் எதிரேயுள்ள பள்ளிக்கூட வராந்தா; இதர தினங்களில் வேப்ப மரத்தடி - இது அவரின் படுக்கை ஸ்தலங்கள். ராமன் நாயருக்கும், பார்வதியம்மாளுக்கும் பேச்சு வார்த்தை நின்று போனதற்கு ஆண்டுக் கணக்கில் குறிப்பிடுவார் குமார். தங்கைகள் சுசீலாவும், வித்யாவும் ராமன் நாயருக்குச் சாப்பாடு போட்டு அனுப்புபவர்கள். மூன்றாவது முறையாகப் போயிருக்கும் போது தான் நான் கூட குமாரிடம் கேட்டேன், "யாரு சார் இவரு? எப்பப் பார்த்தாலும் இங்குனேயே சுருட்டு குடிச்சிட்டு உக்காந்திருக்காரே?”   "அவர்தான் ராமன் நாயர், ராமன் நாயர்னா தெரியுதுல்ல.”   அந்தத் தடவை நான் அவர்கள் வீட்டில் பேசிக் கொண்டு இருக்கும் போது ஒரு விதமான நெருடலாகவே இருந்தது. வீட்டின் தென்னந்தட்டி வேலிக்குப் பின்னாலிருந்த வேப்ப மரத்தடியில் இருந்து அவர் எங்களையே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தது எனக்குத் தர்ம சங்கடமாய் இருந்தது. ஏதும் எண்ணிக் கொள்வாரோ என்னவோ? என்று நான் என்னிடமே கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்த வேளை அது.   நான் மாலையில் குமாருடன் வீடு சென்றேன். தெருவில் உள்ள கிணற்றடியில் பார்வதி அம்மாள் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டதும் புன்னகைத்தார்கள். வீட்டில் போய் அமர்ந்தேன். தண்ணீர் எடுத்து உள்ளே வரும் போது என்னை நலம் விசாரித்தார்கள். ராமன் நாயர் காணாமல் போனதை ஒரு துஷ்டி சம்பவம் போன்று நான் விசாரிக்க வந்தது சரியில்லை என்று உணர்ந்து விட்டேன். வேண்டுமானால் இங்கே இருக்கப் போகிற ஒரு மணி நேரத்துக்குள் பேச்சோடுப் பேச்சாக இதைக் கிளறிப் பார்க்கலாம். ஆனால் பார்வதி அம்மாளுடன் நான் பேசிக் கொண்டிருந்த போது இந்த விசயத்துக்குள் தானும் நுழையாமல், என்னையும் நுழைய விடாமல் எங்கெங்கோ போய்க் கொண்டிருந்தது பேச்சு.   வேலை முடிந்து சுசீலா வரவும் தான் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது மாதிரி ஆயிற்று. எனக்குப் புன்னகை கலந்த வணக்கம் சொன்னவள் அப்படியே கடந்து சென்று எங்களை நோக்கி உட்கார்ந்து கொண்டாள்.   "சுசீலாவை எப்ப பொண்ணு பாக்க வர்றாங்க?"   "இன்னும் ரெண்டு நாள்ல" என்றாள் பார்வதி அம்மாள்.   இலேசாகப் படிந்திருந்த வியர்வையைக் கைத்துண்டால் துடைத்துக் கொண்ட படி கேட்டேன், "மாப்பிள்ளை எங்கே வேலை செய்யறார்?"   சுசீலா முந்திக் கொண்டு ஒரு கம்பெனியின் பெயரைச் சொன்னாள். நான் விழிகள் விரிந்து வியப்புறும் வேளையில் அவள் நாணம் பெற்றுக் கொண்டவள் போல ஒளிரும் புன்னகையுடன் தலை கவிழ்ந்தாள்.   "தம்பி, ஊருக்கெல்லாம் போகணும்னு சொன்னியே?” எப்ப போற?   "போகணும்மா. திருநெல்வேலிக்கு தெக்கே போயிட்டு வரணும்னா என்ன செலவாகும்றீங்க? அண்ணனுக்குச் சீக்கிரமா கல்யாணம் வருது. ஒரேடியா அப்ப போனாப் போச்சு! “   விட்டால் பேச்சு வேறு திசைகள் தேடிப் போய்விடும். உடனே கேட்டேன், "ஐயாவ நாலஞ்சு நாளா காண்லேன்னு குமார் சொன்னாரா, என்ன செய்தி?”   ஒரு பரபரப்பான கட்டத்தை எவ்வளவு சாதாரணமாகத் தாண்டி வந்து விட்டோம் என்கிற பெருமித உணர்வை என்னால் தான் உணர்ந்து கொள்ள முடியும். அதன் பின்பே நான் இயல்பாய் இருக்க முடிந்தது.   "அந்த மனுசன் எங்க போயித் தொலைஞ்சாரோ தெரியல தம்பி. நாம வேணுமின்னா அவர் தானா வந்திடுவாரு!”   “நீங்க எதுக்கும் முயற்சி பண்ணிப் பாக்கலாமில்லையா?”   குமார் பதில் பேச எத்தனித்தாலும், பார்வதி அம்மாள் முந்திக் கொண்டார். "அதெல்லாம் வேணா தம்பி. போன மவராசன் எங்கினேயும் போயி நல்லாருக்கட்டும். விட்டுப் போனதே பெரும் புண்ணியம்.” என்று மென்மையாகச் சிரித்தார்.   பட்டென்று பேசுவதற்கு வேறு செய்தி எதுவுமே இல்லாதது மாதிரி ஆகிவிட்டது. வெறுமையான ஒரு சூழ்நிலை படர்ந்து விட்டது.   சுசீலா காப்பி கொண்டு வந்து தந்தாள். உறிஞ்சினேன். சரியான சூடு. நுனி நாக்கு துடிதுடித்துச் சுருண்டது.   என் துடிதுடிப்பு சுசீலாவைப் பற்றிக் கொண்டதும் "இவ்வளவு அவசரப்படணுமா?” என்றபடி என் கையிலிருந்த கோப்பையைப் பெற்றுக் கொண்டு ஆற்றித் தரலானாள். ஆவி பறக்கும் சூடு பற்றிய கவலை இல்லாமல் குமார் குடித்து முடித்து விட்டிருந்தார்.   "சுசீலா கல்யாணத்துக்காவது அவரு இருக்க வேண்டாமா?”   "அப்படியெல்லாம் பாத்துக்கிட்டிருந்தா ஒண்ணும் நடக்காது சார், அவரு நடந்து கொண்ட முறைக்கு அனுபவிச்சே ஆகணும்” என்றார் குமார்.   பார்வதி அம்மாள் இடை புகுந்து பேசினார். "எதைச் சொல்லி எதை விடுறது? என் புள்ளைங்க கண்ணு முன்னாலேயே நான் பட்ட அடி தான் கொஞ்சமா? நஞ்சமா? சுசீலாவுக்கு வந்த வாய்ப்பையெல்லாம் 'அவ நடத்தை கெட்டவ’ன்னு சொல்லியே விரட்டியடிச்சாரு. இத்தனைக்கும் இவதான் அவருக்கு ரொம்ப மரியாதை கொடுத்து நடத்தினார். வேளா வேளைக்குப் பட்டினி போடாம கவனிச்சதும், காய்ச்சல் நோய் நொடின்னு வந்தா ஓடோடிப் போய் மருந்து மாத்திரை கொடுத்ததும் இவ தான். ஒரு முறை நீங்க இங்க வந்தப்போ, உங்ககிட்ட பேசினதுக்காக நீங்க போனவுடனேயே வந்து இவள் எட்டி உதைச்சு இம்சைப் படுத்துனாரு. "எவன் வந்தாலும் சிரிச்சுப் பேசுவியா?”ன்னு மூஞ்சில குத்துனாரு...” பார்வதி அம்மாள் பேசிக் கொண்டிருந்ததில் இருந்தும், என் கவனம் உடனே சிதைந்து விட்டது. எனக்காகவும், சுசீலா இம்சைபடுத்தப்பட்டிருக்கிறாள் என்ற பரிதாப எண்ணம் ஓங்க நான் சுசீலாவை நோக்கிப் பார்வையைத் திருப்பி விட்டேன். அவளிடம் அன்று பட்ட இம்சைக்கான வேதனை இப்போதும் உள்ளத்தில் சுருண்டு கிடக்குமோ என்ற எண்ணப் பரவலில் நான் சுசீலாவுக்கு என் அன்பான பார்வை சமிக்ஞைகளை அனுப்பிக் கொண்டிருந்தேன். ராமன் நாயர் என் கண் முன்னாலேயே சுசீலாவை வரைமுறைகளற்று அடிப்பது போல் இருந்த்து. அந்த அவமானகரமான அடிகளை ஏற்றுக் கொண்டவள்தானா சற்று முன் என்னிடம் பேசவும், அக்கறையாய்க் காப்பி தயாரித்துத் தருபவளுமாய் இருந்தது? குமார் இது பற்றி என்னிடம் இது வரை வாய் திறவாமல் மௌனம் காத்து எவ்வளவு பெருந்தன்மை காட்டியிருக்கிறார்?”   "இன்னும் சில நாள்கள்ல இவ வேல பாத்துத் திரும்பும் போது இவளுக்குத் தெரியாமலேயே பின்னால் வந்து கண்காணிச்சு இருக்காரு. இவ சம்பளத்த கம்பெனி வாசல்லயே போயி அடிச்சுப் பிடிச்சு வாங்கிட்டுப் போயிடுவாரு!”   நீண்ட பேச்சுக்குப் பின் பார்வதி அம்மாள் இளைப்பாறுவது போல் தோன்றினாலும் பேச நிறைய ஆர்வமும் இருந்தது.   “இதுக்கெல்லாம் என்ன தான் காரணம்?”   "என்ன காரணம் வேண்டிக் கெடக்கு தம்பி. அவரு ஒரு ஆம்பளையா இருக்காரே அது போதாதா? அவரு எதச் சொல்றாரோ அதை நான் செய்யணும். என் வாழ்நாள்ல அவர் எதிர்த்து நான் எதுவும் பேசினதில்ல. ஆனா கேள்வி மாதிரி தோணிடுச்சுன்னா, அதுக்கு அவரு வாய் பேசாது, கை தான் பேசும். கடேசில என் வீட்டுலயே ஒருத்திய கூட்டிட்டு வந்து உக்கார வச்சாரு. அவள் எங்கிருந்து தான் பிடிச்சுக் கொண்டு வந்தாரோ? அவளுக்கும் நான் பணியனும்னார். அது முடியிற காரியமா? அப்ப இந்த தாலிக்கு என்ன அர்த்தம்னு கேட்டேன். அன்னைக்குப் புடிச்ச சனியன்தான். கடேசி வரைக்கும் தீரல்ல."   “இந்தப் பிள்ளைங்களுக்குன்னு என்னைக்கும் அவரு உழைச்சதில்ல. அப்புறம் நான் தான் இதுங்களப் படிக்க வச்சி ஆளாக்குனது. அப்படி நான் உழைக்க ஆரம்பிச்ச நாள்லே இருந்து அவரு கண்ணுல சந்தேகப் பூதம் தான். இன்னும் சொல்லப் போனா ராமாயணமா விரிஞ்சிரும் தம்பி.”   பார்வதி அம்மாள் முன்னிருந்த காப்பி ஆறி ஆடை படர்ந்து காற்றின் சிலும்பலுக்கு மென்மேலும் சுருங்கிக் கொண்டிருந்தது. அதை அவர்கள் குடிக்காமலே விட்டு விடக் கூடும்; அல்லது மீண்டும் சூடு படுத்திக் குடிக்கலாம் என்று நினைத்தேன். ஒரே மடக்கில் அதைக் குடித்து விட்டு கீழே வைத்தார்கள்.   "அப்ப குமாராடே அப்பா தானாப் போனது உங்களுக்கு நல்லதாச்சுன்னு சொல்லுங்க” என்றேன் நான். "ராமன் நாயர்னு சொல்லுங்களேன்” என்று சலித்துக் கொண்ட குமார் உறவுமுறையை இனியும் ஞாபகப்படுத்த வேண்டாம் என்று சிரித்தபடியே கும்பிட்டுக் கேட்டுக் கொண்டார். கருக்கல் ஆகி விட்டது. புறப்பட எத்தனித்தேன். "சாப்பிட்டுப் போகலாமே!” என்றார் பார்வதி அம்மாள். "எல்லாத்துக்கும் சேத்து சுசீலா கல்யாணத்துல ஒரு கை பாத்துக்கிடுறேன்” என்று நான் சொன்னதும் மகிழ்ச்சி தவழ்ந்தது.   சுசீலா என்னருகில் வந்தாள். “இன்னைக்கு என்னோட பிறந்த நாள் அண்ணே, சுவீட் சாப்பிடுங்க,” என்றவளாய் சாக்லெட் தட்டினை நீட்டினாள். விலை கூடின சாக்லெட் ஒன்றைப் பிரித்து வாயில் போட்டேன். “இன்னும் எடுத்துக்குங்க அண்ணே!” என்று சொல்லி கை நிறைய அள்ளித் தந்தாள். அந்த இனிப்பை என்னோடு பங்கு போட எனது அறை நண்பர்கள் உண்டு என்ற எண்ணத்தில் சின்னப் பிள்ளை போல பேண்ட் பாக்கெட்டில் திணித்துக் கொண்டதும் மூவருக்கும் சிரிப்பு வந்து விட்டது. நான் நகர ஆரம்பித்ததும் பார்வதி அம்மாள் சொன்னார், "தம்பி! நாம எல்லோருமா சேர்ந்து சுசீலா கல்யாணத்த நடத்தப் போறோம்.”   அவர்களை நோக்கித் திரும்பியவனாய், "ஆமாம்மா! அது நம்ம வீட்டுத் திருமணம் தான்” என்று புன்னகை புரிந்தேன். அன்பின் சுமை கூடக் கூட சுகம் தானே! அந்த எண்ணமாய்த் தான் வீட்டை விட்டு வெளியே வந்தேன். அந்த வேப்ப மரத்தைச் சற்று நின்று கவனித்தேன். என்னைப் பின் தொடர்ந்து அவர்களும் நின்றார்கள்.   ராமன் நாயருக்கு இனி எப்போதுமே அந்த வேப்ப மரத்து நிழல் கிடைக்காது என்று தான் அந்த மரத்தைக் கடக்கும் போது எனக்குத் தோன்றியது. (அகில இந்திய வானொலி, மதுரை)     சாத்தியமானது   இதயம் முழுவதும் படபடவென்று ஓங்காரமாய் அடித்துக் கொண்டே இருக்கிறது. என்ன சொல் சொல்லி விட்டோம்? அவளின் நாணத்தை எல்லாம் புரட்டிப் போட்டு விட்டன அவை.   மோகனின் வார்த்தைகள் அவளைக் கனவுலகின் மிச்சமுள்ள பகுதிகளில் எல்லாம் புரட்டியெடுக்கிறது. உண்டான கிளர்ச்சி அவளை ஏந்திக் கொண்டு வான வெளியில் தங்கு தடையின்றி கங்கு கரை காணாமல் பறக்கிறது. அவன் கைகள் அவளை உடல் முழுக்கவும் வர்ஷித்துக் கொண்டிருக்கிற கற்பனையை அவள் மனத்தினால் இன்னும் உதறி எறிய முடியவில்லை. ஒரு தீர்க்கமான முடிவுக்கும் வர இயலவில்லை . அக்காவின் மாசு மருவற்ற முகம், இந்த எண்ணங்களின் ஊடே, மாடே வந்து அவனை இன்னும் வதைப்பதையும் தவிர்க்க முடியாது தவித்தான்.   சிவகாமிக்கு என்ன தான் ஆயிற்று என்றே ஆனந்தியால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. தோழி மாதிரி இருந்து எல்லாம் கொட்டி விடுவாளே! காரண காரியமற்ற தங்கையின் பேச்சுக் குழறல், உடல் தடுமாற்றம் ஆனந்தியின் மனத்தில் சலன அலைகளாய்ப் பரவியது.   வழக்கம் போல காடு, கரைகளில் அம்மா வெட்டித் தரித்து இழுத்து வந்த உடைமரக் கொப்புக்களை கூர் மழுங்காத அரிவாளால் மீண்டும் சிறு சிறு துண்டங்களாக வெட்டும் ஓசை அந்த வீட்டின் எல்லையை நிறைத்திருந்தது. அந்த வெட்டுக்கள் சிவகாமியின் படர்ந்து கிளர்கிற உணர்ச்சிக் கிளைகளை வெட்டித் தரித்தால் சலனமற்ற அமைதி எட்டி விடும். அந்த அமைதியை அவள் விரும்பினாள்.   "ஒரு மாதிரியா இருக்கே நீ .” நீண்ட நேரம் கழித்தே ஆனந்தி இவ்வாறு பேசினாள். சிவகாமிக்குத் தூக்கி வீசியது போல் இருந்தது. அதிர்ந்தாள். அக்காவின் கண்களில் இருந்து தான் தப்பிக்க முடியாத குற்றவாளி ஆகி விட்டோம் என்று உணர்ந்ததும் அந்த இடம் விட்டு மெல்ல நகர்ந்து விட்டாள். மெல்ல நகர்ந்தவளை மோகனின் இரண்டு கைகளும் வாரியெடுத்துக் கொண்டன (போல் இருந்தது). அந்த இனிய வாழ்விலிருந்து மீள விரும்பாத சிவகாமி தோட்டத்தில் நின்ற சின்ன மாமரத்தோடு இழைந்து நின்றாள். தங்கையின் பதிலாய் ஒரு வார்த்தையும் கிடைக்காத நிலையில் ஆனந்தி அவள் பின்னே சென்று இன்னும் கலவரமாய் நின்றாள்.   சிவகாமி எத்தனையோ ஆண்களோடு பேசிப் பழக நேர்ந்தாலும் மோகனிடம் மட்டும் ஓர் ஈர்ப்போடு பழகும்படியாய் ஆதி நாள் தொட்டே ஆகி வந்தது. கசங்கிய நாகரீகமில்லாத துணிமணிகளையே இருவரும் அந்த நாள் தொட்டு அணிந்து வந்தவர்கள். ஆனால் இன்று மோகனுக்கு எல்லாமே நாகரீகமான உடைகள். சிவகாமிக்கு இன்னும் மாறாத பழைய தடம். மோகன் பம்பாய்ப் பக்கம் போய் எப்படியோ நிறைய காசு சம்பாதிக்கிறான். மனைவியுடனும் இரு பையன்களுடனும் அந்தப் பக்கமே சென்று நிரந்தரமாய் வாழும் அளவுக்கு வசதியாகி விட்டான். அடிக்கடி ஊர்ப்பக்கம் வருகிறான். அம்மாவையும், அப்பாவையும் பார்க்க என்று அவ்வப்போது வந்தாலும் இப்போது பள்ளிக்கூட விடுமுறை என்று மனைவி மக்களுடனே ஒரு மாதமாவது தங்கி விட்டுப் போகலாம் என்று வந்திருக்கிறான்.   காய்கறிகளோடு மோகனின் வீட்டுக்கு சிவகாமி வந்ததும், "அடுத்த முறை பாத்துக்கிடலாம்” என்று செண்பகத்தம்மாள் சொல்லி விட்டாள். இடையே புகுந்தான் மோகன் "சிவகாமி எப்ப எது கொண்டாந்தாலும் வாங்கிரும்மா. ஒரு நாளும் திருப்பி அனுப்பிறாத” என்றான்.   மோகனுக்குத் துயரமாகவே இருந்தது. "சிவகாமி! இன்னும் உன் கழுத்து மொட்டையாவே இருக்கு” பாசம் இழையோடிய அந்தக் குரல் வெளியே செல்ல இருந்தவளை நிறுத்தியது. அவளுக்குத் திருமணம் என்று கைகூடினால் இவனுக்குக் கடிதம் எழுதச் சொல்லி தன் முகவரியை யாரும் அறியாமல் சிவகாமியிடம் கொடுத்தருளி இருக்கிறான் மோகன். கணிசமான தொகையை அன்பளிப்பு செய்யவும் உத்தேசித்திருந்தான். ஆனாலும் அப்படி ஒரு கடிதம் எழுதவே அவளால் இன்னும் முடியாமல் இருக்கிறது.   "முப்பத்தெட்டு வயசுல இன்னும் ஒரு அக்கா இருக்காளே! அவள் எங்க கொண்டு போட?"   ஆனந்தியை விசாரித்தறியாமல் இவளை அறிய முயன்றதில் அவனுக்கு வருத்தமாக இருந்தது.   "அப்போ அவளுக்கு மாப்பிள்ளை பாத்தாச்சா?” "தேடிப் போற நிலையிலயா நாங்க இருக்கோம். அப்படிப் போய்ப் பாத்தும் ஒண்ணும் அமையல" இரண்டு சிட்டுக் குருவிகள் அவள் கண் முன்னே ஏவி விட்ட அம்புகள் போல் ஜிவ்வென்று பறந்து வீட்டிலிருந்தும் வெளியே பாய்ந்தன.   "ஒரு வேளை எனக்கும், எங்க அக்காவுக்கும் அந்த சுகம்னா என்னான்னு கூடத் தெரியாமலேயே போயிருமோ என்னமோ?”   மோகனை மின்னல் வெட்டி துண்டாக்கியது போல் இருந்தது. புரிந்த அர்த்தங்களும், புரியாத அர்த்தங்களுமாய்த் திரண்டன அவனுள்.   "நான் இருக்கேன் சிவகாமி. அதுக்காக கலங்கிறாத” எதையோ பார்த்து யாரிடமோ சொல்வது போல் சொல்லி விட்டான். அவனை அழைத்துக் கொண்டே அம்மா வருவது போல் உணர்ந்தும் தலை நிமிர்ந்து பார்த்தான். சிவகாமி இல்லை. வாசற்படியின் அருகே சூரிய ஒளி பட்டுப் பிரகாசித்துக் கிடந்தன இரு சொட்டுக் கண்ணீர்த் துளிகள்.   சிவகாமி மீண்டும் மீண்டும் சிந்தனையில் சுழன்றாள். வெளிப்படையாகத் தன்னால் எப்படிப் பேச முடிந்தது என்பதை எண்ண, தன்னையே குற்றவாளியாக்கி சித்ரவதை செய்து கொண்டாள். தனது துயரில் மனம் பொருந்தி தனக்கு உதவ விரும்பியவனிடம் தான் சொன்ன விதமும் மர்மக் குகையின் ஆழத்தில் அவிழ்க்க முடியாத முடிச்சாகக் கிடந்தது. மோகனின் மனவுலகம் தன்னை ஆடை உரிக்குமோ என்ற நாணமான பயம் அவளின் சுவாசத்தில் அதிர்வுத் தடைகளை எழுப்பியது. பம்மிக் கொண்டு படுத்தாள்.   அப்பாவின் சைக்கிளை எடுத்துக் கொண்டு மறுநாள் காலையில் சிவகாமி வரும் வழியில் அவளை எதிர்நோக்கி அழுந்த மிதித்தான் மோகன். சிவகாமியின் நடையும் உருவமும் அவனுக்குத் தெரிந்து விட்டன. எதிர் வழியிலே அவனைப் பார்க்க நேர்ந்ததுமே சிவகாமியின் மனம் ஒரு நடுவாந்தரத் தீவில் சிக்கிக் கொண்டது. மனம் படபடத்தது. அவனைப் பார்க்கவும் பார்க்கவியலாமலும் நடந்தாள். தன்னைச் சமநிலைப் படுத்துவதற்குள் அவன் அவளருகே வந்து இறங்கினான். பையை வாங்கி கேரியரில் வைத்து அவளோடு இணைந்து நடக்கலானான். அவனது அண்மை அவள் நரம்புகளின் மீதான நாதங்களை எழுப்பியது. பழக்கப்பட்ட அந்தப் பாதை பழைய பாதை அல்ல என்று அவள் கண்கள் கண்டன.   பறவைகளின் ஒலியும் தூரத்தில் ஒலித்த பாட்டின் இசையும் சூடாகித் தகிக்க வரும் வெயிலைச் சமாதானப் படுத்தும் இளந்தென்றலும் அவள் மனத்தினை ஆக்ரமித்தன. பொல்லாங்குத் தனமாக இருந்தது அவள் அறிந்த அந்தச் சூழல்.   "சிவகாமி என் பின்னால் ஏறிக்கிறியா?” நாம அந்த சுத்துப்பாதையிலே பேசிக்கிட்டே போயிறலாம்.”   "சுத்துப் பாதையிலியா? வேடிக்கையாத்தான் இருக்கும். பாக்கறவங்களுக்கு மாப்பிள்ளையும், பொண்டாட்டியும் மாதிரி தோணும்."   அவன் சிக்கெனப் பற்றிக் கொண்டு சொன்னான். “கொஞ்ச நேரத்துக்கு அப்படியும் தான் நெனச்சுக்குமோமே!”   இருவரும் சட்டென்று நின்று விட்டு ஒருவரையொருவர் பார்த்தார்கள். சூழ நின்ற தென்றலில் அனல் ஏறியது. அந்தப் பாதை சற்றே நெளிந்து புரண்டது. அவளின் கையும் காலும் நடுங்கின. கண்களில் அனாயசமான ஒளி புகுந்து அலைப்புண்டது.   யாருடைய அண்மையும் இல்லை. பாதை விச்ராந்தியாய்க் கிடந்தது. மரங்களின் மௌனங்கள் அவளைத் தூது சென்றடைந்தன. அந்தத் தனிமை, புதர்களின் அடர்த்தி, அவனின் சொல். அவளின் மனம் நழுவியது இறுக்கமான பிடிமானமின்றி.   சைக்கிளைப் பிடித்து நிற்கும் அவன் கைகளின் மீது சிவகாமி தன் கைகளை மெல்ல வைத்தாள். சூடு சகித்த அந்தக் கைகள் அவனுக்கு இதமாக இருந்தன. அவர்கள் பாதை விலகினார்கள். அவளின் தேய்ந்து போன செருப்புக்களை மீறி முட்கள் குத்தின. அவனது செருப்புக்களின் கீழ் அவை மொர மொரத்து நொறுங்கின. சூரியனுக்குத் தப்பிப் பம்மிக் கிடந்த இருட்டில் அவன் அவள் தோள்களின் மீது கையை வைத்தான். வெகு தொலைவுக்கப்பால் நசுக்கப்பட்டுக் கிடந்த உணர்ச்சிகள் ஒன்று இரண்டு ஆவேசமாய் எழுந்து அலைகளாகி அவளைச் சமுத்திரத்தின் ஆழத்தில் புதைத்தன.   "அக்கா, உன்கிட்டே ஒரு விசயம் சொல்லணும்.”   "சொல்லேன்."   அவள் வாழைப்பூப் போல கவிழ்ந்து கிடந்தாள். சூரியனின் அந்தி ஒளியில் அவள் ஜொலிப்பது போல் மிணுங்கினாள். ஆனந்திக்குத் தாங்க முடியாததாக இருந்தது.   "சொல்லாமலே இருந்துறலாம் போல இருக்கு அக்கா!" "ஏன்?” “நீ தப்பா நெனச்சுப்பியோ?” "நான் உன் அக்காகுங்கறத மறந்துட்டியா? என் கிட்ட மறைக்க முடியுமா உன்னால? சொல்லு யாரு அவன்?''   "மோகன்.”   "தெரியல எனக்கு!”   "நான் வழக்கமா அவரு வீட்டுக்கும் காய்கறி கொண்டு போவேன். இப்ப நல்ல வசதி."   "உன்னைக் காதலிக்கிறேன்னு சொல்லிட்டானாக்கும்? கல்யாணம் பண்ணிக்கிடுவானா? இல்லே..." "இல்லேக்கா. அவன் கல்யாணமானவன்.”   "அப்போ?” அவள் சிவகாமியின் முகத்தை நிமிர்த்தப் படித்தபடி கண்களைக் கூர்மையாகத் தைக்கும் வண்ணம் ஒருவித படபடப்பாய் கேட்டாள்.   கண்களை மூடிக் கொண்டு சொன்னாள், "அப்படித்தான் அக்கா... நீயும், நானும் அறியாத அந்தச் சுகத்தை இன்னைக்கு ...."   ஆனந்தி லேசாக நடுங்கினாள். அதனைக் கட்டுப்படுத்திப் பார்த்தாள். மேலும் நடுங்கினாள். கண் மூடிக் கிடந்த சிவகாமியின் தலையை இதமாய் வருடிய படி செல்லமாக மோதிக் கொண்டாள் அவள். ''அந்த மட்டுக்கும் நீ கொடுத்து வச்சவ தாண்டி.” காதோடு காதாய்ச் சொன்னாள். தங்கையை வலுவாய் அணைத்தாள். மெல்லிய விசும்பலில் இருவரும் குலுங்கினார்கள். (குமுதம் ஸ்பெஷல் - ஏப். 97)   எப்போதும் உள்ள ஞாபகம்   அவனையொத்த பலரும் திருமணமாகி, குழந்தை குட்டிகளைப் பெற்று, சீராட்டி வளர்த்து, பள்ளிக்கூடம் அனுப்பி வைத்து விட்ட நாள் வரைக்கும் ஜியா மட்டும் தனியாளாகவே இருந்தான். சந்தோச நிமிசங்களுக்காக அவனும் மற்றவர்கள் போல் பரிதவித்திருக்கவே செய்வான். யாரும் அந்த நிமிசங்களை கொடுக்கத் தயாராயில்லை.   ஆனாலும் ஜியாவுக்கும் திருமணம் நடந்து விட்டது. நெடுந்தூரம் போய் விட்டவர்களைப் பிடிக்கும் வேகத்துடன் அவனும் முதலாண்டின் நிறைவுக்குள்ளாகவே தன்னைப் போன்ற அழகிலும் நிறத்திலும் ஆண் குழந்தை ஒன்று பெற்றான். அது வளர்ந்து அவனை இனம் கண்டு "வாப்பா” என்று அழைக்கப் போகும் இன்பத்துக்காகத் தவமிருந்து துடித்தவன் நேற்று மாலையில் காலமாகிப் போனான். ஊர் கூடி இன்று காலையிலேயே அவன் பூத உடலை நல்லடக்கம் செய்ததற்கு எல்லோரும் சாட்சியாகி விட்டார்கள்.   அவன் மையத்தைச் சுமந்து சென்ற வழியிலும், மையம் அடக்கமான இடத்திலும் அவனது வாழ்க்கை பற்றிய பேச்சுக்கள் உண்டாகி, வருத்தம் மண்டிப் போய் இருந்தது. "கல்யாணம் ஆவாமலே கிடந்தான். அவன் அப்படியே போய்ச் சேர்ந்திருக்கக் கூடாதா? கல்யாணம் பண்ணி அழகாய் ஒரு குழந்தையும் பெத்துட்டு அப்புறமா இப்படி அநியாயமா போய்ச் சேர்ந்துட்டானே!”   ஒரு நண்பனின் வாழ்க்கை இப்படிச் சுருக்கமான வரிகளிலேயே அடக்கி விட்டதையும் அவன் இழப்பையும் எண்ணி பெருந்துயரில் மூழ்கிப் போனான் திவான். இராத் தூக்கம் முழுவதும் கெட்டுப் போய். அவன் வீட்டிலேயே அவன் உடம்பைப் பார்த்து பார்த்தே உருகிப் போனான். ஆனால் ஊர்க்காரர்கள் இப்படி மாய்ந்து, மாய்ந்து பேசுவதைத் தான் அவனால் ஏற்கவே முடியவில்லை.   ஜியாவுக்கு சொல்லிக் கொள்கிற மாதிரி வருமானமில்லை. ஊருக்குள்ளேயே வீடுகள் எத்தனை? தகுதிக்குச் சம்பந்தப்பட்டு வரும் வாய்ப்புள்ள அத்தனை வீடுகளிலும் அவன் ம்மா கால் கடுக்க, கடுக்க, வெட்கம் பாராமல், மீன் வாங்குகிற பேரமாய்ப் பெண் கேட்டுப் போயிருக்கிறாள். இவன் இன்னும் சில நாளில் மவுத்தாகிப் போவான் என்றா நினைத்தார்கள்? அப்படி ஒரு நினைப்பு இல்லையென்றால் சிவப்பாகவும், வளர்த்தியாகவும் பார்க்கக் களையாகவும், சுருண்ட முடிக்காரனாகவும் இருந்த அவனுக்கு ஊரில் ஒருத்தர் கூட பெண் தர விருப்பமில்லாமல் போக என்ன காரணம்? இந்த ஆச்சரியம் ஜியாவுக்கும் கூட கடைசி வரை மிஞ்சியிருந்தது. ஆனால் ஊரார் மேல் திவானுக்கு உண்டாகி இருந்த கோபம் ஏனோ ஜியாவுக்கு இருக்கவில்லை.   கடைசியாக ஜியாவின் ம்மா சுஹராள் மரைக்காயர் வீட்டில் போய்க் கெஞ்சியிருக்கிறாள். அவள் அறிந்த வரையில் அந்த மரைக்காயர் குடும்பம் தான் பெண் தேடி அலைவதற்காக கடைசிப் படியில் இருந்திருக்கிறது. அதற்குப் பிறகும் சுஹராள் பெண் கேட்டு அலைய வேணுமென்றால் பெண்கள் சமைஞ்சு வந்தால் தான் உண்டு. மரைக்காயர் வீட்டில் போய் பெண் கேட்ட செய்தி தான் ரொம்பவும் பிரசித்தம். "உங்களால ஏண்டத போட்டு உங்க மவளைக் கட்டிக் குடுங்கோ. உங்க சக்திக்கு முடிஞ்சத தாங்க. நான் வேற ஒண்ணும் அதக் கொண்டா இதக் கொண்டான்னு கேக்கல." என்று மூச்சு விடாமலேயே சொல்லியிருக்கிறாள். அந்தப் பரிதாபமான கெஞ்சலுக்கும் பதில் தரவில்லை மரைக்காயர். அவர் வெறுமனே பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார். அந்த நேரம் பார்த்து இவள் மகனுக்காய்ப் கேட்டு வந்த பெண்ணும் அடுப்படியில் நின்று சோறாக்கும் வேலையில் இருந்தாளாம். அவளின் செக்கச் செவேர் அழகும், முட்டைக் கண்ணும் சற்று தாட்டியான உடம்பும் இவளைக் கிறங்கடிக்க, ''எங்க பையனுக்கும், ஒங்க பொண்ணுக்கும் ரொம்பப் பொருத்தமா இருக்கும். கல்யாணம் முடிஞ்சு மாப்பிள்ளையும், பொண்டாட்டியுமா வெளில் போனாங்கன்னா பாக்குற மனுஷாளுவோ மூச்சு விடாம நிப்பாங்களே”ன்னாளாம்.   அப்பவாவது ஏதோ ஒரு பதில் வந்து சேர்ந்திருக்க வேண்டும். வரவில்லை. ஓடோடிப் போய் அடுப்படியில் நின்றிந்தவளின் கையைப் பிடித்துக் கொண்டு, "சரின்னு சொல்லுங்க. நான் இப்படியே இவளைக் கையைப் பிடிச்சி இழுத்துட்டுப் போயிடுறேன்,” என்று சொல்லியிருக்கிறாள். பெத்த தகப்பனுக்கு கோபம் வந்துடுச்சி. "சீ! கையை விடு. பேசாம போ வீட்டை விட்டு!" என்று கோபமாய்க் கத்தினாராம். தெருவில் வந்து நின்று அழுது கொண்டே திரும்பியதாகத் தகவல் உண்டு. விசயம் கேள்விப்பட்டவர்கள், பார்த்ததாகச் சொன்னார்கள். இதை ஒரு அக்கப் போர் அடிக்காத விசயமாக நேற்று வரை பேசி மகிழ்ந்திருந்தது தான் இந்த ஊர்.   "அவன் என்ன நொண்டியா நோக்காடா? அவனுக்குப் பின்னால பொறந்தவன்லாம் இம்புட்டு, இம்புட்டு உயரத்துல புள்ளையப் பெத்து வச்சிருக்கானுவளே! என் புள்ளைக்கு என்ன சாபம்னு தெரியலியே! ஒரு பெண்ணைப் பெத்து வச்சு கரையேத்துறவ தெவுங்குன மாதிரி நான் தெவுங்கிக்கிட்டு இருக்கேனே இப்படியாகவும் சிலர் மத்தியில் பேசி, அதிலும் காரியம் பலிதமாகாமல் போய், மனம் தரிசாகிக் கிடந்த வேளையில் தான் திவானிடமும் பேச்சோடு பேச்சாக இந்த ஆற்றாமையைச் சொன்னாள். ஜியாவும் இருக்கத் தான் செய்தான். இருவரும் வெளிக் கிளம்பிப் போனார்கள். எதையும் காட்டிக் கொள்ளாமல் ஜியா மௌனமாகவே வந்தான்.   இரவில் திவானுக்கு நிறைய யோசனைகள். ஒரு மாதிரி வழி கிடைத்தது. தன் நண்பனுக்காக வேண்டி ஒரு முயற்சி. காலையில் முழித்த கண்ணுக்கு சின்னாப்பா வீட்டுக்குப் போய் விட்டான். குளிக்கப் புறப்பட்டுக் கொண்டிருந்த சின்னாப்பா திவானைக் கண்டதும் நின்று விட்டார். வயது வித்தியாசம் பாராமல் சின்னாப்பா எப்போதுமே நாகரிகமாய் நடந்து கொள்வது விசேசமானது தான். சடங்காகி வீட்டில் இருக்கிற தங்கச்சியை ஜியாவுக்கு பேசி முடித்து விட்டால் என்ன என்று உற்சாகமாகக் கேட்டான். திவான் பேசியது அவன் சின்ன வாப்பாவுக்குத் தமாசான விசயமாகப் போய்விட்டது. சாச்சியும் கூடவே சேர்ந்து சிரித்தாள். "இப்பத்தான் அவளும் சடங்காயி இருக்கா. அதுக்குள்ளேயே கல்யாணமா? அப்புறம் பெரியவன் வேற பாம்பேல இருக்கான். அதுலயும் பொதுவாவே தங்கச்சிய நல்லா படிச்ச மாப்புள்ளக்கி தான் குடுக்கணும்னு அவன் ரொம்ப நாளா சொல்லிக்கிட்டே இருக்கான். நீயே சொல்லு. அவன் நெனக்கிற மாதிரி இந்த மாப்பிள்ளை கிடையாதே!" இதை சின்னாப்பா சொல்லி முடித்ததும் சாச்சி உள்ளே போய்விட்டாள்.   அவனுக்கென்று பிறந்து வளர்கின்றவள் இந்த ஊரில் இல்லையாம். அப்படி அவனுக்கானவள் பிறந்திருந்தால் இங்கேயே திருமணமாகி இருக்குமாம். அல்லாவின் ஏற்பாட்டை யார் மிஞ்ச முடியும்? இந்த சூத்திரப்படி இவனுக்கென்று பிறந்தவள் திசையன்விளைக்குப் பக்கமாய் ஒரு செம்மண் தேரிக்குள் ஒடுங்கிப் போயிருந்த கிராமத்தில் தான் பிறந்து வளர்ந்திருக்கிறாள். இது யாருக்குமே தெரியவில்லை. இந்தப் புதிருக்கான விடை நிக்காஹ் என்று ஒன்று அவர்களுக்குள்ளே நடக்கப் போய்த்தான் தன் முகம் திறந்து காட்டி இருக்கிறது. "கஷ்டம்னா கஷ்டம் இப்படி அப்பிடியான கஷ்டம் இல்லை,” என்று சொல்லப்பட்ட ஒரு குடும்பத்தின் தாரகை இவனின் தாரமானாள். அவளுக்குக் கூடப் பொறந்த பொறப்புகள் என்று ஒரு தாத்தா (அக்கா)வும், ஒரே ஒரு வயசு கூடுதலான காக்காவும் தான். ஆகையால் காக்காவும், தாத்தா புருஷனுமான மச்சானுமாகச் சேர்ந்து கொஞ்சம் போல நகை நட்டு போட்டு, கல்யாணச் செலவுக்கென்று ஊர் ஜமாத்துப் பெரியவங்க கிட்டே கையேந்தி வசூல் பண்ணிச், சின்னதா ஒரு விருந்து வச்சி, நிக்காஹ் செய்து மாப்பிள்ளைக்காரனுடன் அனுப்பி வைத்தார்கள்.   இதில் சந்தோஷமானது யாருக்கு அதிகம் என்றால், சொல்லவே வேண்டியதில்லை. பெண்ணின் மாமியாராகி விட்டவளுக்குத் தான். வீட்டுக்கு விளக்கேத்த என்று அவளுக்கும் ஒரு மருமகளை ஆண்டவன் உண்டாக்கித் தானே இருக்கிறான். பெண் தராத ஊருக்குள் தலை நிமிர்ந்து நடக்கச் செய்யும் சந்தர்ப்பம் தந்த மருமகளைத் தலையில் வைத்துக் கொண்டாடினாள். தானே பூ வாங்கிக் கொடுத்தாள். காலையில் தோழியும், தோழியும் என்னும் படிக்கு வாய்க்காலுக்குக் கூட்டிப் போனாள். மகன் திரும்பி வரும் வரை வாசல் படிக்கட்டில் உட்கார வைத்துக் கதைகளும் ஊர் வம்புகளும் சொல்லி வாழ்க்கைப் பயிற்சி அளித்தாள். சிறப்புக்கும், பெருமைக்கும் உரிய அவள் மருமகளைப் பார்த்து வந்தவர்கள், "அழவு போல மாப்பிள்ளைக்கி இப்படி ஒரு கரிக் கட்டைய எங்கேருந்து தான் தேடிக் கண்டு பிடிச்சு கட்டி வச்சாளோ? இந்தப் பாவி மட்டைக்கு எப்படி இந்த மனசு வந்துச்சுன்னே தெரியலியே... கண்றாவி...." என்று ஊர்ப் பேச்சாக்கி விட்டார்கள்.   ஒரு நாளில் ஒரு பொழுதேனும் கூட தன் மனைவி பற்றி ஒரு வார்த்தையும் திவானிடம் பேசியதில்லை ஜியா. அவன் கடையில் வேலை பார்த்து வெள்ளிக்கிழமை விடுமுறையில் திவானுடன் ஊர் சுற்றும் போது தானும் கல்யாணமாகி விட்டவன் என்ற அந்தஸ்தைக் காட்டிக் கொள்ளவில்லை. ஜியாவின் வீடு போயிருந்த சமயங்களில் அவளும் திவான் முன் காட்சி தந்ததில்லை. அவன் தன் மனைவியை அறிமுகம் செய்யவும் இல்லை. இவன் பார்வைக்கு அந்த வீடு எப்பவும் போல மருமக நடமாட்டம் இல்லாத வீடாகவே காட்சி கொடுத்தது. ஒரு கட்டையான உருவம். பளபளப்பும் அழகுமற்ற ஒரு கரிக்கட்டை. நவீன காலத்தின் நடப்புகளை உட்கொள்ளாமல் ஒரு மூலையில் பதுங்கிக் கிடக்கும் செம்மண் காட்டின் கடைத் தட்டு பிரதிநிதி. இதனால் தான் இவைகள் நடக்கவில்லையோ? தானே விசாரித்துப் பார்க்கலாம் என்று திவான் ஒரு நாள் விசாரித்த போது "அவ நல்ல பெண்ணு தான். நல்லா நடந்துக்குறா” என்று சொன்னான். ஆனால் திவான் வீட்டுக்கு ஜியா வரும் போதெல்லாம், ஜியாவே வெட்கப்பட்டு ஓடி விடும் அளவுக்கு திவானின் மனைவி நையாண்டியும், கேலியும் என்று அட்டகாசம் பண்ணியிருக்கிறாள். தானே நேரில் வந்து, முன்னே நின்று சாயா கொடுத்திருக்கிறாள், விக்கல் வந்த அவசரத்துக்கு இவனே ஓடிப் போய் அவளிடம் தண்ணீர் வாங்கிக் குடித்திருக்கிறான். இப்படி ரசமான துளிகளில் ஒன்றேனும் ஜியாவின் வீட்டில் இல்லை.   அப்படிப்பட்ட அந்தக் கரிக் கட்டையைத் திவான் பார்த்தது நாலைந்து நாள்களுக்கு முன்பு தான். அதுவும் அரசு மருத்துவமனையில் வைத்து தான். ஊரில் சொல்லப்பட்ட அடையாளங்களால் அவளை இவன் கண்டு கொண்டான். திவானை யார் என்றே அறியாதவள் மாதிரி தான் அவள் அங்கே வந்ததும் போனதும். தன் நோயிலிருந்து தப்பிப் பிழைத்து அவன் மீண்டும் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் தான் அவள் தெம்பாய் இருந்தாள்.   அந்த நம்பிக்கை அவளின் அன்பான பேச்சினில் மிளிர்ந்தது. அவனது உடம்பைத் தளமாய்க் கொண்டு மஞ்சள் காமாலை தீவிரமாய் இயங்கிக் கொண்டிருந்தது. கைப்பிள்ளைக்காரி அவனை அடிக்கப் பார்க்க வராமல் இருக்க வேணுமென்ற நினைப்பில் சுஹாரம்மா தான் மகனை அருகிலிருந்து கவனித்து வந்தாள்.   கணவனைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்த போது கூட அவனருகில் குழந்தையை கொண்டு செல்ல வேண்டாமென்று யாரோ இரண்டு பேர் வற்புறுத்தித் தடுத்ததால் வெளியே நின்றிருந்த திவான் தான் அந்தக் குழந்தையை வாங்கிக் கொண்டான். தன் குழந்தையைத் தீண்டவும் அன்பு கலந்து கொஞ்சவும் அவன் கொடுத்து வைக்கப்படவில்லை. சுகம் பெற்ற பின் மகனை ஆரத் தழுவிக் கொஞ்சலாம் என்று நினைத்திருந்தவன் வேறு மார்க்கத்தில் இன்று மண்ணறைக்குள் போய்விட்டான். மீள முடியாத இருட்டறை! யார் நினைப்பும் இல்லாமல், எந்த முகக் குறிப்பும் காட்டாமல் ஒரு கொடிய நித்திரை! திவான் நொறுங்கிப் போய் விட்டான்.   அவள் என்ன பாடுபடுகிறாளோ? ஆறுதல் கூறத் தந்தையும் தாயுமற்ற ஒரு தாயாகிப் போனவளுக்கு எந்தக் கைகளால் யாருடைய வார்த்தைகளால் விமோசனம் கிட்டும்? அவள் ஊருக்கு சொல்லி விட்ட போது கூட மூன்றே மூன்று பேர் தான் வந்தார்கள். அதில் அவன் தாத்தா, மச்சான், இன்னொரு கிழவி. கல்கத்தாவில் இருக்கக் கூடிய அவள் காக்காவுக்கு இந்த நிமிஷம் கூட செய்தி போய்ச் சேர்ந்திருக்காது. கோடானு கோடி ஜனங்களால் பிதுங்கி வழிகிற நேசத்தின் ஒரு அழகற்ற, பொருளற்ற பெண்ணுக்கென்று உள்ள உறவினர்கள் ஒரு கை விரலில் அடங்கிப் போக, இன்னும் எண்ணப்படுவதற்கு விரல்கள் உள்ள நிலை தான். துயரங்கள் நிரம்பிய திவானின் மனசு, தடுமாறி முட்டிப் போய் சிக்குற்றுக் கிடந்தது.   கலகலத்தும், கலகலப்பற்றும் பேசியும் பேசாது திவானுக்கென்று எப்போதும் அருகிருந்த நண்பன் இல்லாமலே போனான். மண்ணின் பசி தீர்க்க நண்பனின் உடம்பை ஒரு பண்டம் போல வெள்ளைத் துணியில் பொதிந்து வைத்து விட்டார்கள். ஈர மண்ணோடு மேடிட்டு உயர்ந்த அவனின் கடைசி இருப்பிடம் திவானின் கண்களுக்கு ஒரு தண்டனை என ஆகி விட்டது. அழுக்கடைந்த ஆஸ்பத்திரியின் மூலையில் கிடந்து நாறிப் போனவனின் கபர்ஸ்தானின் மேலே இப்போது மணம் வீசும் ஊதுவத்திகளும், மலர்களும்!   வீடு திரும்பும் போது சின்னாப்பா வீடு தாண்ட வேண்டி இருந்தது. அவர் இவனைக் கண்டதும் கை தட்டிக் கூப்பிட்டு "இங்கு வந்திட்டுப் போயேன்பா!' என்றார். அங்கு செல்ல மனமில்லை. ஆனால் சின்னாப்பா மரியாதைக்குரியவர். அவனைப் பற்றித்தான் அவரும் பேசினார். அவரது துயரம் முழுதாய் வெளிப்பட்டது. இருவரும் துடிப்பற்ற வார்த்தைகளால் ஏதோ பேசிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த சாச்சியும் குறுக்கிட்டாள். அவள் பேச்சைக் கவனிப்பார் இல்லாமல் அது சகதிக்குள் விழுந்த கல் போல அமுங்கியது. வாப்பாவுக்கும், அண்ணனுக்கும் என்று சின்னாப்பாவின் மகள் சூடானா கடுங்காப்பி கொண்டு வந்து வைத்த போது ஏற்பட்ட பேச்சு இடைவெளியில் சாச்சி நுழைந்தாள். "அவன் உன் கூட்டாளின்னு வந்து சொல்லிக்கிட்டு என் புள்ளையக் கட்டி வைக்கச் சொன்னியே? இப்ப பாத்தியா? அப்படி அவசரப்பட்டு செஞ்சிருந்தா முன்னா என்னாயிருக்கும்? என் மவ கழுத்துல கட்டுன கருகமணி அறுந்து போயிக் கெடப்பாள்! நல்ல வேளை ஆண்டவனா பாத்து என் புள்ளயவும், என் குடும்பத்தையும் காப்பாத்துனான்.”   திவானின் உடம்பு அதிர்ந்தது. அத்துவான இருட்டுக்குள் தூக்கி வீசியது போல் மருண்டான். உச்சாணிக் கொம்பில் ஏறிய கோபம் பிடித்தாட்டியது. ஆனாலும் எதுவும் பேச வாய் வராத சிலையாய்ப் போனான். வீட்டுக்குப் போக எழுந்த போது சற்று தடுமாற நேர்ந்ததை தன் இளமைக்கு நேர்ந்த களங்கமாய் உணர்ந்தான். அவனைப் புரிந்து கொண்ட சின்னாப்பா, "சரி, சரி, வாயை மூடு! எல்லாம் தெரிஞ்சவ மாதிரிப் பேசிக்கிட்டு" என்று தன் மனைவியை அதட்டியவராக “நீ போப்பா வீட்டுக்கு” என்று கூறினார். சாச்சி தன் கட்சியை விட்டுக் கொடுக்கத் தயாராயில்லை. "நான் மட்டுமா சொல்றன்? ஊருல எல்லாப் பொம்பளைங்க கிட்டேயும் இதே பேச்சாத்தான் போச்சு. ஒரு வீட பாக்கி இல்லாம அவன் ம்மாக்காரி ஏறி வந்து பொண்ணு கேட்டாளே! இன்னா நெனச்சுப் பாக்க முடியாத மாதிரி போய்ச் சேந்துட்டானே. யாராலும் காப்பாத்த முடியாம ஆயிடுச்சே. நம்ப புள்ளங்களை ஆண்டவன் காப்பாத்திட்டான்னு மனசு நெறைஞ்சு போயி எல்லாப் பொம்பளைங்களும் சொல்லத்தான் செய்யிறாளுவோ! சாச்சியின் பேச்சு திடீரென்று நிறுத்த முடியாத விமானம் மாதிரி போய்க் கொண்டே இருந்தது. அவள் பேச்சு நின்றது மேலும் பேச ஏதும் இல்லாமல் தான்.   சின்னாப்பா அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டு சொன்னவர், "வாஸ்தவம் தான். ஆண்டவன் இந்த ஊருல உள்ள பொம்பளைங்க, சமைஞ்ச புள்ளைங்க எல்லாத்தையும் காப்பாத்திட்டு, திசையன்விளைக்குப் பக்கத்துல பொறந்த பொண்ணையும், அவ குடும்பத்தையும் கண்ணு தெறந்து பாக்காம நட்டாத்துல் வுட்டுட்டான். பாரேன்! அப்பவும் பாத்தியா - ஒரு குடும்பத்தைக் காப்பாத்துறதா இருந்தா, இன்னொரு குடும்பத்த பலி கொடுக்க வேண்டியதாயிருக்கு. கால் வயிறும் அரை வயிறுமா குடிச்சிட்டுக் கெடந்தவளுக்கு ஒருத்தன் புருஷனா வந்தும் வாழ முடியாம ஆனது தான் உங்க பார்வையில் நல்லதாப் படுதாக்கும்?”   சின்னாப்பாவிடமா இவ்வளவு விஷய ஞானம்? அவரின் கால்களைக் கட்டிப் பிடித்துக் கொள்ளணும் போல இருந்தது. சாச்சி வீசி எறிந்த இருளுக்குள் இருந்து மீண்டு வர ஒரு புதிய ஒளி கிடைத்தவனாய் சின்னாப்பாவையே பார்த்தான் திவான்.   மண்டிக் கிடந்த துக்கத்தை விலக்கி விட்டு சந்தோசப்பட முயன்றது அவன் மனம்.   (கவிதா சரண் -94)   இதர அம்சங்கள்   மணி போல் மிளிர்ந்தது எப்படியோ கிடந்த வீடு. எந்த வழியும் இல்லாமல் சீந்துவாரின்றி இருண்டு போனதாக இருந்தது. நீண்டு, ஒடுங்கித், தளம் சிதைந்து போய் மனதுக்குப் பிடிக்காமல் இருந்ததெல்லாம் ஒரு காலத்துக் கதையாக ஆகி விட்டது. முன் பின்னாக முள்ளும், புதரும் மண்டிக் கிடந்ததும் கெட்ட புழுக்கம் காற்றோடு கலவாமல் நாசியைத் துளைத்துத் திணறியடித்ததும் இப்போதும் இல்லாமல் போனது. ஹாலியத் பாத்திமாவின் கைபட்டுத்தான். இந்த வீடு எவர் பார்வைக்கும் புதுப்பிறவியாக கம்பீரமாக நிற்கிறது. நாகூர் மீரான் ராவுத்தர் ஒரு முறை பார்த்துக் கொண்டார். தனக்கே அந்நியமாகிப் போன தன் வீட்டுக்கு முன் ராவுத்தர் வந்து நின்றதும் ஹாலியத் பாத்திமா ஓடி வந்து வரவேற்றாள். அவள் பின்னாலேயே அவள் மகள் ரெஜினாவும் வந்து நின்றதை அவர் பார்த்தார்.   “வராதவங்க வந்திருக்கீங்க! உள்ளே வாங்களேன்.”   "ம்ம்.. ம்ம்....... " நாகூர் மீரான் ராவுத்தர் வீட்டுத் திண்ணையிலேயே பம்மிக் கொண்டார். ஆனால் ஹாலியத் பாத்திமாளின் முகம் பார்க்காமலேயே கேட்டார், "ஏம்மா.... நீ இந்த வீட்டுக்கு வந்து எம்புட்டு வருசமாச்சு?”   ஹாலியத் பாத்திமா டக்கென்று கணக்கு போட்டுச் சொன்னாள் “இந்த மௌலூத்துப் பொறை வந்தா சரியா பதினெட்டு வருசமாயிடும்.”   "ம்ம்....... உன் வீடு மாதிரியே இத்தனை நாளும் உக்காந்துட்டே. உன் நெலமையும் பழைய மாதிரி இல்லே. மெச்ச வேண்டியது தான் உன்னை .”   "எல்லாம் உங்க கருணையால் தான் அண்ணே !"   "ம்... அதுவும் சரி தான்.”   நாகூர் மீரான் ராவுத்தர் ஒரு முறை தலை சாய்த்து வீட்டின் உள்புறத்தைப் பார்த்தார். பின் கட்டிலிருந்து வந்த காற்று அவர் முகத்தை இதமாய்த் தடவிச் சென்றது. பதினெட்டு வருசங்களுக்கு முன் இந்த சுகந்தமான தென்றல் இப்படி வீசி வரவில்லையே! எப்படியோ அந்த அவலம் நடந்து விட்டது. இவர் வீட்டில் வசிக்க யாதொரு ஜீவனும் முன் வரவில்லை. எவனோ முன்பு குடியிருந்தவன் ராவுத்தர் மீது கொண்ட கோபத்தால், "இது பேய் வீடு. இங்க மனுச மக்க வசிக்க முடியுமாவே” என்று சொல்லிவிட்டுச் சென்ற வார்த்தைக்கு ஊர் அரண்டு போய் அந்த வீட்டுப் பக்கமே போகாமல் நின்று விட்டது. "அவன் ஒரு கிறுக்குப் பய. என்னமோ கோவத்துல புலம்பிக்கிட்டு அலையிதான்” என்று ராவுத்தர் எவ்வளவோ தட்டிக் கழிக்கப் பார்த்தாலும், அந்த வீட்டைக் கடக்கும் போது அச்சமாய்க் கால்கள் பாய்ந்து சென்றது தான் உண்மை.   கடைசியாக ஹாலியத் பாத்திமா தான் தன் புருசனோடும், கைக் குழந்தையோடும் - இந்தா எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கிறாளே இந்தப் பெண்ணோடு - வந்து சேர்ந்தாள். "ஒன்னால முடிஞ்சத வாடகையாத் தா . இல்லே ஒண்ணும் தராம சும்மாவே இருந்தாலும் சரி தான்” என்று ராவுத்தர் ஹாலியத் பாத்திமாவிடம் சொன்ன மொழி கரையாமல் காதிலேயே நிற்கிறது. அப்படியாவது அந்த வீட்டில் ஆள் புழக்கம் இருந்து அதற்கு ஒரு நல்ல காலம் பிறக்க வேண்டும் என்பது தான் ராவுத்தருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் உள்ள எண்ணம்.   "சேச்சே! அப்படில்லாம் சும்மா இருக்க மாட்டோம் அண்ணே. எங்களால ஏண்டத மாசா மாசம் தந்திருவோம். அவள் மனசுக்குள் பொதிந்து கிடந்த உழைப்பின் உறுதியை ராவுத்தர் அப்போதே தன் அனுபவப் பாங்கின் வழியே கண்டு கொண்டார். அப்படியே மாதம் பத்து ரூபாய் வாடகையாகக் கொடுத்து வந்தாள். இப்போது அந்த வாடகை தான் விருத்தியாகி நூற்று ஐம்பது ரூபாய்க்கு வந்து நிற்கிறது. பத்து ரூபாய் கொடுக்கும் போது மொட்டைக் கையாக ஒரு வித நடுக்கத்துடன் தந்தவள், இப்போது தங்கக் காப்புகள் குலுங்கிடும் படி திடமுற்ற கைகளுடன் கொடுத்து விடுகிறாள். ராவுத்தர் வீட்டுப் பக்கம் வர வேண்டிய அவசியமே இல்லாமல் அவரைத் தேடிப் போய் நிற்கிறது அந்த வாடகை.   கொஞ்சம் யோசனையாகவே நின்றாள் ஹாலியத் . இப்படி ஒரு நாளும் இந்த வீட்டுப் பக்கமாய் வராத மனுசர் வந்திருக்கிறாரே! அவள் கணவர் போய்ச் சேர்ந்து விட்ட பின், இப்படி ஒரு ஆம்பளையைப் பேசாமல் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா அவளால்? ஏதோ யோசனையாய் உள்புறமாய் எட்டிப் பார்த்த அவரும் முகவாய்க் கட்டையைத் தடவிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார் ஒரு வார்த்தையும் பேசாமல்.   "உக்காந்திரிங்கோ அண்ணே. உங்களுக்குச் சாயா போட்டுக் கொண்டு வந்திர்றேன்" என்றவள் உள்ளே தன் மகளோடு ஓடிப் போக முயன்றாள்.   ''சும்மா இரி. அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நான் உன் கிட்டே ஒரு விசயம் சொல்லிட்டுப் போயிறலாம்னு தான் வந்தேன். அத எப்படிச் சொல்றதுனுதான் யோசிச்சிட்டு இருந்தேன்.   "அது என்னான்னு சொல்லுங்களேன். நானும் தெரிஞ்சுக்கிறேன்.”   "அவர் தான் .... அது என் கடைசி மருமவன் திருச்சில வேல பாத்துக்கிட்டு இருந்தாரே.... நீ அவர பாத்து இருக்கியா? தெரியுமா உனக்கு?” என்றபடி அவர் ஹாலியத் பாத்திமாவைத் தலை ஆட்டலுடன் பார்த்தார்.   "நான் தான் அவங்கள் கல்யாணத்தன்னைக்குப் பாத்து இருக்கேனே. ஆனா அதுவும் தான் எத்தனையோ வருசக் கணக்கா ஆச்சுதே." ஹாலியத் அந்த கல்யாணத்துக்கு நூற்றி ஒரு ரூவா மொய் செய்து இருந்தாள். மொய்ப் பணம் கணக்கு எழுதும் போது வீட்டில் வாடகைக்கு இருப்பவள் இவ்வளவு பணம் மொய் செய்தது பற்றி ஆச்சரியமான பேச்சு நிலவியதாம். அந்த விசயம் இந்த பாத்திமாவின் கவனத்துக்கு வராமலா இருந்தது?   "இப்போ அவருக்கு இரண்டு பொண்ணும், ஒரு பையனும் இருக்கு. எல்லாம் இங்கிலீஸ் படிப்பு. வீடு பூரா ஒரே தாட்பூட்னு இங்கிலீஷ் பேச்சுதான் பாத்துக்கோ. நமக்குத்தான் ஒரு எழவும் மண்டையில ஏறமாட்டேங்குதே. பொல்லாத பய புள்ளைளுவோ காலமால்லா போச்சு... நாகூர் மீரான் ராவுத்தர் இவ்வளவு தூரம் இழைந்து பேசுவதும் அவர் பேசிய தோரணையும் தாய்க்கும், மகளுக்கும் ரொம்பப் பிடித்திருந்தது. கலகலவென்று சிரித்துக் கொண்டார்கள்.   "என் மவளுக்கு வீட்டு வாசப்படி தாண்டி என்ன இருக்குது ஏது இருக்குதுன்னு தெரியாது. அவரக் கைபுடிச்ச நாள்லேருந்து இந்தப் பாதவத்தி மவளும் சேர்ந்து டிவில கண்ட கண்ட அசிங்கம் புடிச்ச படமெல்லாம் பாத்துட்டு கெக்கே பிக்கேன்று பேசி சிரிச்சுக்கிட்டு ஒரே கண்றாவியா போச்சுது பாத்துக்கோ. உனக்குத் தான் தெரியுமே... நமக்கு இந்த மாதிரி ஹரவாப் போன விளையாட்டெல்லாம் புடிக்காதுன்னு.... " என்று பழைய தோரணையிலேயே அவர் தலையை ஆட்டவும், இதை எல்லாம் ஹாலியத்தும், ரெஜினாவும் மிகவும் ரசித்தவர்களாய் மறுபடியும் சிரித்து மகிழ்ந்தார்கள்.   "அவங்களுக்கு இப்ப என்னவாம்?” ஹாலியத் ரசனையை விட்டு விடாமல் கேட்டாள்.   "ஆங்.... அப்படி வா வழிக்கு. இப்போ அவரு வேல மாத்தலாயி நம்ம திருநெல்வேலிக்கே வர்றாரு. அதுவும் என்னமோ அவரு புரோமோசோன்னு என்னவோன்னு ஒண்ணு சொல்றாங்களே. அப்படின்னா பதவி கூடிப் போயிருச்சாம். அப்புறம் என்ன? எல்லோரும் மூட்டை கட்டி இங்கே வர வேண்டியது தான். திருநெல்வேலி வந்து அங்கு ஒரு வீடு பாத்து தங்க இருக்குறத விட நம்ம ஊரோடேயே வந்து தங்கிக்கிட்டு இங்கு இருந்து தினமும் டவுன் பஸ்ஸுல வேலக்குப் போயிட்டு வந்தா நல்லதுன்னு எங்க எல்லாத்துக்கும் படுது.... வேற என்ன? கதை இம்புட்டுத் தான்... நீயும், உன் மகளும் எனக்கு வீட்டைக் காலி பண்ணிக் குடுத்துருங்கோ. அதச் சொல்லிட்டுப் போவத் தான் இவ்வளவு தூரம் வந்தேன்.”   அடச் சண்டாளா! எவ்வளவு ரசனையாகவும் சிரிப்போடும் நயமாகப் பேசினார். அவரின் பேச்சின் இழை பிடிபட்டு ஒருவாறு தானே விபரீதமாக எண்ணுவதற்குள் அனாயசமாய் வெடிகுண்டை வீசி விட்டாரே ஈவு இரக்கமில்லாமல். ஹாலியத்தும், ரெஜினாவும் பதறப் பதற எழுந்தார்கள்.   “யா ரப்பே! ஹாலியத் பாத்திமாவின் தலைமேல் இடியே விழுந்தது போல் துடித்து விட்டாள். ரெஜினா உடனே விம்மினாள். கண்ணீர் பெருகி அழுதாள். அவள் நடை பயின்றதே இந்த வீட்டில் தான். தவழ்ந்து விளையாடி இன்று அவளும் ஒரு குமரியாகி உருக்கொண்டு நிற்பது வரை அவளுக்கு சக்தி அளித்தது இந்த வீடு தான். அவள் எண்ணங்களில் 'இது தன் சொந்த வீடு’ என்பதற்கான செயல்களே இருந்தன என்பதன்றி வேறு இருந்ததில்லை. ராவுத்தர் இடத்தைக் காலி செய்து விட்டுப் போன பின்னும் கூட அவர் இன்னும் அங்கேயே இருப்பதான நினைப்பில் பயத்துடன் கை நடுங்க, கால் நடுங்க நின்ற அம்மாவைப் பார்த்தாள் ரெஜினா. மகளின் 'விம்மல் ஹாலியத்தை உலுக்கியது. அவள் திரும்பி மகளைக் கட்டி பிடித்துக் கொண்டாள். "அழாத! நம்மள படச்ச ஆண்டவன் நட்டாத்துல விட்டுற மாட்டான்” அப்படிச் சொன்னாலும் அவள் மனம் பேதலித்துப் புரண்டது. கால் குழலாடியது. கொச்சையான வார்த்தைகளைக் கோர்த்து அவள் மனம் ராவுத்தரை வசைபாடிச் சபித்தது.   மனதை இருவரும் இறுகக் கட்டிப் போட்டிருந்தார்கள். வெளிப் பார்வைக்கு சோர்ந்து போன முகத்தைக் காட்டவில்லை. எப்போதும் போல் அவர்கள் நடத்தி வரும் வியாபாரத்தில் எவ்விதத் தொய்வும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள். இட்லி, இடியாப்பம், வடை வியாபாரம் தான் முதுகெலும்பாய் தாயையும், மகளையும் நிமிர்த்தி வைத்திருக்கிறது. வேறு வீடு பார்த்துப் போக வேண்டிய இந்தக் கட்டாயத்தில் அங்கும் வியாபாரத்தை இதே அளவில் நடத்தி வாழ்க்கைக் கணக்கைச் சரிபடுத்திக் கொள்ள வழியிருக்குமா? முன்பு தன் கணவனுடன் அனாதவராய் வந்து இந்த ஊரில் ஒரு நிலையிடம் அமைத்துக் கொண்டதைப் போல இனியும் வேறு ஊர் போக வேண்டி இருக்குமோ? சிந்தனைகள் ஆவியாய் அலை புரண்டன. தூக்கம் பறி போன இரவுகள்.   கண் நிறைய இருந்த தூக்கம் கரைய வேண்டும். உடம்பில் மிச்சப்பட்டிருந்த அசதியும் பறந்தோட வேண்டும். ஒரு குட்டித் தூக்கம் தேவையாய் ஹாலியத் புரண்டாள். சுவரின் மீது லேசான கருப்பு பிம்பம் அசையவும் வாசல்புறமாய் அவள் திரும்பிப் பார்த்தாள். பாத்திமுத்து வந்து கொண்டிருந்தாள்.   "வாங்க. இப்படி உக்காருங்க” என்ற ஹாலியத் தலையணையைத் தன் காலுக்கு இடையில் அண்மை போட்டு, கொண்டை முடித்து பாத்திமுத்து உட்காருவதற்காகப் பாயை விரித்துப் போட்டாள். ரெஜினாவும் சற்று தயக்கமாகவே எட்ட உட்கார்ந்தாள். அவளுக்கு சுபுஹானியின் சொல்லில் இருந்த நம்பிக்கை சில தினங்களாகவே இந்தப் பாத்திமுத்துவின் வருகையை எட்டிப் பார்க்க வைத்திருந்தது. அவளும் வந்தவுடன் ரெஜினாவைப் பார்த்து சிரித்தாள்.   "இவளுக்கு ஒரு நல்ல நேரம் வந்துடுச்சு” என்று பாத்திமுத்து சொல்லவும் ஹாலியத் கவலையை மறந்து விட்டாள்.   "புரியும் படியாச் சொல்லுங்களேன்” என்று ஹாலியத் கேட்டாலும் இது அவளுக்குத் தெரியாத விசயமில்ல. அவ்வப்போது காதில் விழுந்த சேதி சரி என்பது போல் ஆகி விட்டது. தகப்பன் இல்லாமல் வளரும் மகளை எப்படிக் கண்டிப்பது என்று வழி தெரியாமல் விழி பிதுங்கியவளுக்குப் பாத்திமுத்துவின் வரவும், சொல்லும் பாலைவனத்தில் கிடைத்த நீராய் இனித்தன.   "எவ்வளவு வச்சிருக்கீங்க இவளுக்கு?” மாப்பிள்ளை வீடு கேட்டது.   "என் சம்பாத்தியமெல்லாம் இவளுக்குத்தான்!” என்று பெண் வீட்டின் குரல் தெளிவாய் ஒலித்தது.   "எத்தனை பவுன் போடுவீங்க?”   "பன்னிரெண்டு ரெடியாயிருக்கு."   கொஞ்சம் தொய்வானது மாப்பிள்ளை வீடு.   "காலம் எப்படி காலம்? நீங்க என்ன இம்புட்டுப் போல சொல்றீங்க?”   "வேண்ணா கூட ரெண்டு போடலாம். அதுக்கு மேல வழியல்ல  பாத்திமுத்து."   ''அது என்ன கணக்கு பதினாலு? அங்கையும் இல்லாம, இங்கையும் இல்லாம! வவுசா பதினஞ்சுன்னு போட்டுருங்க.”   ஹாலியத்துக்கு சில வினாடி யோசனை தேவைப்பட்டது. முகம் வாடாமல் ஹாலியத் சொன்னாள், "சரி ஒத்துக்கிடுறேன். ஆனா முதல்ல பன்னிரெண்டுதான். ஒரு வருசமோ இல்ல, இரண்டு வருசமோ போக விட்டு மிச்சமுள்ளத போடுறேன். வெற்றியைச் சுலபமாய்த்தட்டிப் பறிக்கும் பாத்திமுத்துவுக்கு இது மகிழ்ச்சியாக இருந்தது. “இத மாதிரி வேற யாரும் சொன்னா ஒத்துக்க மாட்டேன். ஆனா சொல்றது ஹாலியத்து! மாறாத வாக்குக்கு சொந்தக்காரின்னு ஊரே சொல்றதுன்னால சரின்னு ஒத்துக்கிட்டேன். ரொக்கமா என்ன தருவீங்க?   "அதுலயும் இந்தக் கணக்கு தான்.”   "இருபதா தாங்க”.   "அம்மாடி நம்மால முடியாதுக்கா. ஏதோ சின்னஞ் சிறுசுக ஒண்ணவொண்ணு ஆசைப்பட்டுருச்சிங்க. அதுக்காவ நானும் ஒண்ணும் தராம இருக்க முடியாது! நீங்களும் அடிச்சுப் புடிச்சுக் கேக்கக் கூடாது."   பேச்சின் போக்கும், பேரங்களும் ரெஜினாவுக்கு அருவருப்பாய் இருந்தது. சுபுஹானி அன்று பேசி விட்டுப் போகும் போது இவை பற்றி எதுவுமே சொல்லவில்லை. "நீதான் எனக்கு மனைவியா வரணும். வேற எதப் பத்தியும் இந்த உலகத்துல நான் நினைக்கத் தயாராயில்ல” என்று உறுதியாகச் சொல்லி விட்டுப் போயிருந்தான். ஒரு வேளை இறுதிப் பேரம் பேசும் நிலை பற்றி சுபுஹானிக்கு எதுவுமே தெரியாமல், அவன் வீட்டுக்காரர்களே இந்த நிலைக்கு வந்திருக்கக் கூடும் என்று ரெஜினாவும் எண்ணிக் கொள்ள வேண்டி இருந்தது. தினமும் காலையிலும், மாலையிலும் பலகாரங்கள் தயாரித்து தாயும், மகளும் விமரிசையாக நடத்தி வரும் வியாபாரம் பற்றி அவன் சந்தித்த முதலும் கடைசியுமா அந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுத் தெரிந்து கொண்டானே தவிர வேறு எது பற்றியும் அவன் பிரஸ்தாபித்துக் கொள்ளவில்லை. ஒரு வேளை மீண்டும் அவன் சந்திக்க வந்தால் இது பற்றி கேட்டுத் தெரிந்து தன் ஆட்சேபணையை நேரிலேயே தெரிவித்து விட வேண்டும் என்று நினைத்தாள்.   ஹாலியத்தும், பாத்திமுத்துவும் சம்பாஷணையை நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து கொண்டு தான் இருந்தார்கள்.   "அத நீங்க சொல்லவே வேண்டாம். நான் இத்தனை நாளாவும் யாருக்காவக் கெடந்து இப்படிக் கஷ்டப்படறேன். இத நீங்க புரிஞ்சிக்கிட்டா சரிதான்,” என்று ஹாலியத் சொன்னாள்.   பதினைந்து வருச வியாபாரத் தேர்ச்சி ஹாலியத் பேசுவதற்கு உதவியாக அமைந்தது. "நீங்க கேக்குறது எவ்வளவா இருந்தாலும் என் கையும், காலும் துணையாயிருந்தா கஷ்டப்படாம கொடுத்துருவேன். ஆனா இப்போ நான் எந்த நெலைமையிலே இருக்கேன்னு உங்களுக்குத் தெரியுமா? நாகூர் மீரான் ராவுத்தர் வந்து இந்த வீட்டைக் காலி பண்ணிக் குடுக்கச் சொல்லிட்டாரு. அது தான் இப்ப எனக்கு புத்தி புலப்பமா இருக்கு. நான் இனி எங்க போவ? நல்ல இடம் கெடைச்சா மட்டும் போதுமா? இந்த மாதிரி வியாபாரம் பண்ணிச் சம்பாரிக்கிறதுக்குத் தோதா வருமா? என் மவள் இங்கே கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டு என்னை எந்த தெசைக்கு அனுப்பணும்னு ஆண்டவன் முடிவு பண்ணி வச்சிருக்கானோ தெரியலை.   பாத்திமுத்துவுக்கும் இது கவலையாக இருந்தது. “ரொம்பவும் யோசிச்சு மூளை குழம்பாதீங்க அக்கா . ஆண்டவன் ஒரு வழி காட்டாம போவ மாட்டான். எல்லாம் அவனால் நடக்குறது. நீங்களும், நானும் கவலைப்பட்டு ஆவப் போறது ஒண்ணுமில்லே. நானும் இப்பவே போயி எங்க மச்சான் கிட்டேயும் எங்க அக்காகிட்டேயும் சொல்லி கலந்துக்குறேன்.”   பாத்திமுத்து போன பின் ரெஜினாவால் அம்மாவை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. ஒரு பொல்லாத வெட்கம் தாவி வந்து மனதில் உட்கார்ந்து விட்டது. ஆசைப்படுவதைப் பெற்றவளும் தெரிந்து கொள்ளக் கூடாது என்று மனசு முதலில் எண்ணுகிறது. தெரிந்து சம்மதம் கிடைக்கும் போதும் மனதில் விரியும் பசுமையின் பரப்பு முழுவதும் வண்ணத்துப் பூச்சிகளின் இன்ப சிறகடிப்புக்கள் ஆயிரமாயிரம் பாடல்களை எழுப்பி விடுகின்றன. அவள் இதயம் வேகத் துடிதுடிப்பில் மூழ்கி விட்டது.   "என்னவோ உன் நல்ல நேரமோ இல்லே என்னோட நல்ல நேரமோ ஆண்டவனாப் பாத்து நீ விரும்புன மாப்புள்ளைக்கே வழியமைச்சுட்டான். ஊருக்காரங்க கண்ணும், மூக்கும் வச்சு பேசுறதுக்குள்ள அவங்களாவே பொண்ணு கேட்டு வந்தாங்களே அது போதும்” என்ற அம்மாவின் சொற்கள் மனதில் பதியாமல் எங்கும் வீசிக் கொண்டிருந்தது காதல் அனல்.....   பாத்திமுத்து நம்பிக்கை வார்த்தையோடு வந்தாள். "அக்கா! இனிமே எங்க போயி பொழைக்குறதுன்னு கவலைப்பட வேண்டாம். நாலாம் தெருவுலேயே நல்லதா ஒரு வீடு வருது. நாங்க போயி வீட்டப் பாத்துட்டு வந்துட்டோம். நல்லா இருக்கு. உங்களுக்கு வசதியாத்தான் இருக்கும். அங்கேயும் உங்க வியாபாரத்துக்கு ஒண்ணும் கொறைச்ச இருக்காது.”   ஹாலியத்தின் மனசு ஊசலாடாமல் நின்றது. முகம் மலர்ந்தது. "நீங்க எல்லாருமா பாத்து சொன்னீங்கன்னா சரிதான். உள்ளூரிலேயே நல்ல முறையில் வாடகைக்கு வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையே இல்லாமல் நாளும் மனதில் புலம்பித் தவித்துக் கொண்டிருந்தாள் ஹாலியத். "என் புள்ளையக் கட்டிக் குடுத்துட்டு இருக்க இடமில்லாம தவிக்க வேண்டி இருக்குமோன்னு இத்தனை நாளும் எவ்வளவு கவலையா போச்சு தெரியுமா? வயித்துல பால் வார்த்துட்டே பாத்திமுத்து.”   "ஆனா நீங்க நெனக்கற மாதிரி அது வாடகைக்கு இல்லேம்மா!”   "அப்போ ?”   "வீட்டுக்காரங்க குடும்பத்தோட இன்னும் கொஞ்ச நாள்ல மெட்ராசுக்குப் போறாங்களாம். அதனால் ஒரேடியடியா வித்துட்டுப் போயிரலாம்னு நெனக்குறாங்க. எத்தனை காலத்துக்குத் தான் வாடகை வீட்டிலேயே இருக்கப் போறீங்களாம்? நமக்குனு சொந்தமா ஒரு வீடு வேண்டாமா?”   ஹாலியத் இடிந்து போனாள். தலையில் கை வைத்து உட்கார்த்து தான் பாக்கி.   "யா அல்லா! என்னைப் பாத்தா வீடு வாங்குற மூஞ்சியாவா தெரியுது. இவளுக்குக் கல்யாணத்தையும் முடிச்சு வச்சி வீடும் வாங்குறதுக்கு நான் என்ன பூட்டியா வைச்சிருக்கேன்?”   "ஏன் அக்கா நீங்க இவ்வளவு தூரம் யோசிக்கும் போது நாங்க எப்படியெல்லாம் யோசிச்சுப் பாத்திருப்போம். அத நெனச்சு பாக்கலியே நீங்க.”   ஹாலியத் கேள்விக் குறியோடு பாத்திமுத்துவை ஏறிட்டாள். புன்னகை படரும் முகமாக பாத்திமுத்து சொன்னாள். நீங்க உங்க மவளுக்குப் போடுற நகை - நட்டு ரொக்கம் பூராவையும் சேத்துட்டோம்னா மேலே இன்னும் கொஞ்சம் பணம் தான் உங்க கையிலேயிருந்து போடணும். அப்படி சேந்த மொத்த பணத்தையும் வச்சு அந்த வீட்டைக் கிரயம் பண்ணிறலாம். ஆனா அதுக்கு ஒரே ஒரு நிபந்தனை. பாத்திமுத்து பேச்சை நிறுத்தினாள். ஹாலியத்தும் கூடவே கேட்டுக் கொண்டிருந்த ரெஜினாவுக்கும் ஒன்றுமே ஓடவில்லை. படபடப்பான நெஞ்சத்தோடு கேட்டுக் கொண்டு இருந்தார்கள். பாத்திமுத்து தானே மீண்டும் சொன்னாள், "அந்த வீட்டை எங்க அக்கா மகன், அதான் உங்களுக்கு மருமவனா வரப் போறானே அவன் பேருக்கு எழுதி வச்சிரணும்.”   ரெஜினா அதிர்ந்தாள். ஹாலியத்தின் சுவாசம் தடைபட்டு சற்று நேரம் கழித்து மீண்டது, "அவர வரச் சொல்லுங்க. நான் பேசிக்கிடுதேன்” என்று சொல்லி விடலாமா என யோசித்தாள் ரெஜினா. அம்மா குழம்பிப் போய் நிற்பதைப் பார்க்க அவளே தவித்து விட்டாள். தான் நினைத்ததைப் பேசி விட்டால் என்ன குடி முழுகிப் போய் விடும்? எல்லாம் வெட்ட வெளிச்சமான பின் தானே இந்தத் திருமணப் பேச்சே துவங்கியது, அப்புறம் என்ன?   "நீங்க அவங்கள வரச் சொல்லுங்க. நானே நேர்ல கேட்டுக்குறேன்.”   பிதுங்கிய விழிகளோடு இரண்டு முகங்களும் அவளை நோக்கித் திரும்பின. மகளின் ஆவேசமான பேச்சு தாய்க்குப் பீதியாக இருந்தது. "ரெஜினா! என்ன மட்டு மரியாத இல்லாம? வாயை மூடு!”   "இதுல என்னம்மா தப்பு? அவங்க அப்படி கேக்க மாட்டாங்க. அவங்க வாப்பாவும், ம்மாவுவா சேர்ந்து பேசி இப்படி அநியாயமா வந்து கேக்கறாங்க.''   ஹாலியத் ஏதோ சொல்ல வந்தாள். பாத்திமுத்து இடை புகுந்து சொன்னாள், "உனக்குத் தாலி கட்டுனதுக்கு அப்புறம் நீயே அவன் கிட்டே தாராளமா கேட்டுக்க.”   "முடியாது. முதல்ல அவங்களுக்கு இந்த விசயம் தெரியுமான்னு.....”   "பேச்ச வளத்தாத ரெஜினா, சுபுஹானி கிட்ட எல்லாத்தையும் பக்குவமா சொல்லி வச்சிட்டோம். எது எப்படி இருந்தாலும் எங்க சொல்ல மீறி அவன் வந்து உனக்கு தாலி கட்டிருவானாக்கும்? அவன் சம்மதத்துப் பேர்ல தான் நான் இப்ப இங்க வந்துருக்கேன்.”   அருவருப்பு தாளாமல் ரெஜினா குமைந்தாள். ஆவேசமும், கொந்தளிப்பும் அவளுள் திரண்டன. கண்ணுக்கு முன் நிற்கின்ற அவளின் உருவம் மெல்ல மெல்லக் கரைந்து சுபுஹானியாகத் தோற்றம் எடுத்தது. கை நீட்டிக் கை நீட்டி அவளை ஏதோ கெஞ்சுகிறது. அந்த யாசகத் தொனியுடன் மேலும் பல குரல்கள் கலந்தன. அவள் செவிகளைப் பொத்திக் கொண்டாள். ஏதோ ஒன்று கருகும் நெடி அவள் நாசியைத் தாக்கியது. பலமாகத் தாக்கியது. இம்சையாக இருந்தது. (தாமரை - மார்ச், 97)   பையன்கள் நான்கு பேரையும் நான் முதலிலேயே பார்த்து விட்டேன். இந்தியாவையே இணைத்துச் செல்லும் நரம்புச்சாலையில், குடியரசு தின லீவுக்காக மூடிக் கிடந்த ஒரு வணிக நிறுவனத்தின் முன்னால் இரண்டு பேர் ஒரே சிகரெட்டை மாற்றி மாற்றிக் குடிக்க, இதர இரண்டு பேரும் வாய் மூடாமல் பேசிக் கொண்டிருக்க, தூரத்தில் இருந்தே அவர்களைப் பார்த்து நடந்த நான் இப்போது அவர்களைக் கடந்து கொண்டிருந்தேன்.   இவர்கள் இப்படித் தானே இருப்பார்கள். பரட்டைத் தலையும், அழுக்கு உடம்பும் பிய்ந்த துணிமணிகளும்! தண்ணீரைக் கண்டாலும் குளிக்க மாட்டார்கள் என்பது தெரிந்தது. எனக்கு அது தான் கோபம். ஒரு ஆற்றங்கரையின் ஓரத்தில் இந்த டிரவுசர்களைக் கழற்றி வைத்து அம்மணமாக நீந்தி எழுந்து விடலாம். நானும் கல்லூரி வரைக்கும் போய்ப் படித்து விட்டு வந்தவன் தான். இவர்களின் இதே பருவத்தில் நான் கெட்டிக்கார மாணவனாகச் சில பரிசுகளும் நிறைய நிறைய மதிப்பெண்களும் பெற்று வீட்டில் இன்பப் புனலை ஓடவிட்டவன். எல்லாப் பெரியவர்களிடத்திலும் கண்ணியமும், மரியாதையும் வைத்து பழகி எங்கள் சின்னஞ்சிறு கிராமத்தில் புகழ் பெற்றவன் நானில்லையா? ஆனாலும் நிரம்பி வழியும் குளங்களிலும், பொங்கிப் பாயும் புதுப் புனலிலும் நான் என் சக நண்பர்களோடும், வகுப்புத் தோழன்மார்களோடும் சேர்ந்து, வீட்டுக்குத் தெரியக் கூடாது என்று சொல்லி சட்டையையும், டவுசரையும் கழற்றிப் போட்டு எத்தனை எத்தனை முறை குளித்து விட்டேன்?   ஊரைச் சுற்றிலும் ஊருக்கு உள்ளேயும் கிடந்த தாமரைக் குளம், நாகன் குளம், மாணிக்கம் குளம், குடிதாங்கிக் குளம், கருவேலன் குளம் என்று அத்தனைக் குளங்களிலும் குளிக்க வேண்டும் என்கிற முறை வைத்து, வெள்ளி, ஞாயிறு விடுமுறை நாள்களில் எல்லாம் போய்க் குளித்த பின்னும் "நல்ல பிள்ளை ”யாகவே ஊராருக்குக் காட்சி தரவில்லையா? பள்ளி விட்டு வரும் போது ஓடி வரும் ஆற்று நீரில், கழுத்து வரை முங்கி எழ ஆசைப்பட்டு என் மச்சி மகள் சித்தி கதீஜா கையில் எல்லாவற்றையும் கழற்றிக் கொடுத்து அவள் முன்னிலையிலேயே தெம்மாங்குப் பாட்டுப் பாடி ஆட்டம் ஆடி, உருவான குஷியில் அவளையும் கையைப் பிடித்து ஆற்றில் இழுத்துப் போட்டு புத்தகங்கள் நனைந்து, பாவாடை - தாவணி - சட்டை - டவுசர் என எல்லாம் நனைந்து வீட்டுக்குப் பயந்து அழுது கொண்டே போன இன்ப வரலாறுகள் இன்னும் என் இதய ஏட்டில் அல்லவா உள்ளன?   சின்ன வயசில் இதற்கெல்லாம் அர்த்தம் பார்த்தா அலைவது? இந்தப் பையன்கள் நால்வருமே இப்போது படிக்க நல்ல வசதி இருந்து படித்தாலுமே, அப்போது நான் நிகழ்த்திய எந்த சாதனையையும் இவர்களில் யாராவது ஒருத்தர் கூட இன்று செய்து முடிப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை ! அப்படியிருக்க, வைகையில் வெள்ளம் புரண்டோடிப் போகிற இன்றைக்கும் கூட இப்படிக் குளிக்காமல் அட்டுப் பிடித்துக் கிடக்கிறார்களே என்று எனக்குக் கோபம் வந்தது. அவர்களை நான் கடந்து வரும் போது அவர்களில் ஒருவனைத் தவிர மற்ற மூன்று பேர்களும் அவர்களின் உயரத்துக்குத் தக்கதான கோணிப் பைகள் தங்களின் காலடியில் கிடக்குமாறு வைத்திருந்தார்கள். அவை ஓரளவு நிரம்பியும் இருந்தன. சற்று தூரம் போன பின் நான் அவர்களைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்தேன். அப்படி இவர்களைத் திரும்பப் பார்த்த படிக்கே முன்னே நடந்து போகிற அளவுக்குச் சரியான நடைபாதையாக அது இல்லாததால் அப்படியே நின்றபடி தான் அவர்களைப் பார்த்தேன். அவர்கள் உற்சாகமாக இருந்தாலும் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. ஆனாலும் அவர்கள் குளிக்காத கோபம் என் மனம் விட்டுப் போகவில்லை . நான் பார்ப்பதைப் பேச்சு வாக்கில் கவனித்து விட்ட அவர்கள் என்னை உற்றுப் பார்த்தார்கள். பையன்களின் பார்வை ஒரு மாதிரியாகப் போனது. இனி மேலும் நான் நின்று கவனித்தால் வாய்க்கு வந்தபடி ஏதாவது ஏறி விடுவான்களோ என்று பயமாக இருந்தது. வேண்டாம்! இவர்கள் பேச ஆரம்பித்து விட்டால் அவர்களின் வசைச் சொல்லை வாங்கும் சக்தி எனக்கோ வேறு யாருக்குமோ இருக்கவே முடியாது. பேசாமல் நடையைக் கட்டி விட்டேன்.   நான் சீக்கிரமாக இதே பாதையில் திரும்பி வர வேண்டும். ஏதோ புத்தகம் வாங்கணும்னு சொன்னீங்களே! வாங்கிட்டு ஜல்தியா வாங்க, நாங்க அதுக்குள்ளே நாஸ்தா பண்ணிட்டு ரெடியாயிருவோம். சீக்கிரமா போனா காலைக் காட்சியில் ப்ரீயா படம் பார்த்துடலாம் என்று என் நண்பர்கள் கூறியிருந்தார்கள். மணி பத்து தான் ஆகியிருந்தது. நான் இரண்டு தியேட்டர்களைத் தாண்டணும். பதினொன்றரை மணிக் காட்சிக்கு ஒரு பெரிய வாலிபப் பட்டாளம், திறக்கவே இல்லாத கவுண்டர் வாசலில் முண்டியடித்துக் கொண்டு சுள்ளாப்பாய் விழும் வெயிலைத் தூசி போல தட்டி விட்டுக் குவிந்து போய் கிடந்தார்கள். நாங்கள் போக வேண்டியிருந்த வேறு தியேட்டர்களிலும் கூட இது போல ஒரு கூட்டம் தவமிருக்குமோ என்ற எண்ணம் கவலை தந்தது. இன்னும் சிறிது நேரத்தில் நானும் அப்படி ஒரு தவமுனியாய் மாறி இருப்பேனோ என்ற வருத்தம் உண்டாகி விட்டது. இந்த வருத்தங்களோடு நான் புத்தகக் கடை முன் போய் நின்று கொண்டிருந்தேன். ரூபாய் சரியாயிருக்கிறதா என்பதைத் தெரிந்த பின் மாத இதழ்கள் மூன்றையும் வாங்கிக் கொண்டேன்.   முண்டியடித்துக் கொண்டிருந்த மகா ஜனங்களின் ரசனைக்குரிய படத்தின் பாடல் எதிர் டீக்கடையில் ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரு போதும் கடையில் போய் தனியே உட்கார்ந்து ஒரு டீ சாப்பிடாத எனக்கு ஏனோ இந்த பாடலை ரசித்தபடிக்கே ஒரு டீ சாப்பிடுவோமே என்று ஆசை வந்து விட்டது. அருகில் போனேன். டீயின் விலை அதிர வைத்தது. நைசாகத் திரும்பி விட்டேன். காதில் விழுந்த இனிமையான பாட்டு மட்டும் உன் கூடவே வருகிறேனே என்று வந்து கொண்டிருந்தது.   அந்தப் பையன்களைக் கடந்து நான் புத்தகங்கள் வாங்க திரும்பி வர ஏழெட்டு நிமிசங்களுக்குள் தான் ஆகி இருந்தது. அதற்குள் இப்போது சாலையிலிருந்து பிரியும் பெரிய தெருவின் முதல் கட்டிடத்தின் விரிந்த நிழலின் கீழே உட்கார வைக்கப்பட்டிருந்தார்கள். சுற்றிலும் ஆறு பேர் நின்று அவர்களை மிரட்டிக் கொண்டிருந்தார்கள். நான் பக்கமாய்ப் போனேன். பையன்கள் நால்வரும் பீதியால் உறைந்து போயிருந்தார்கள்.   கண்களின் அலைவுகள் போதுமான பயத்தை வெளியிட்டபடி இருந்தன. பயத்தின் உச்சியில் கைகள் நடு நடுங்கின. ஆறு பெரிய (இடத்து) மனிதர்கள். இந்தப் பெரிய மனிதர்கள் வந்த காரை இரும்பு ஆணியினாலோ வேறு எந்தப் பொருளாலோ கோடு கிழித்து அசிங்கமாக்கி விட்டான்களாம்.   கார் டிரைவர் என்று யாரும் எனக்கு தோன்றவில்லை. இவர்களில் ஒருவரே காரோட்டி வந்திருக்கலாம். காரை நிறுத்தி விட்டு இந்த சில நிமிசங்களுக்குள் இவர்கள் எங்கே போய் விட்டு வந்தார்கள்? ஒன்றும் புரியவில்லை. நான் பார்த்தேன். பையன்களை அடிப்பது போல் மிரட்டிக் கொண்டிருந்தார்கள். போலீஸில் பிடித்துக் கொடுப்போம் என்று மிரட்டினார்கள். அங்கிருந்தது நானும், ஒரு கிழவியும் தான். நான் சாதாரணமாக ஒரு கைலியும், டிப்-டாப்பாயில்லாத சட்டையும் தான் போட்டிருந்தேன். குளித்து முடித்தும் தலைக்கு எண்ணெய் தேய்க்கவில்லை. நான் ரொம்பச் சாதாரண ஆளாய்ப்பட்டு விட்டேன். கொஞ்சம் வாட்ட சாட்டமாய் இருந்த மனிதர் எதிரேயுள்ள சாக்குப் பைகளைக் கவனித்தார். என்னையும் பார்த்தார். "இங்க வாய்யா. இந்த மூணு கோணியையும் கொஞ்சம் எடுத்துக் கவுத்துப் போடு. அதுக்குள்ளாற என்ன இருக்குன்னு பாத்துடலாம்.”   காரில் ஏறி வரும் திமிருக்குக் கனம் அதிகம் தானே. எனக்கு விறுவிறுவென்று ஆத்திரமும் கோபமும் பற்றியெரிந்தன.   'பசங்க இதையெல்லாம் செஞ்சிருக்க மாட்டாங்க’ என்று நான் முதலிலேயே சொல்ல நினைத்தேன். சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அவர் முந்திக் கொண்டு விட்டதுடன், எனக்கும் வேலை தருகிறார்? என்னால் சகிக்க முடியவில்லை . ஏன் கோபம் இருந்த அளவுக்கு என் வாய் வார்த்தைகள் வெளியே வரவில்லை. எந்தச் சொல் முந்தி வருவது என்று என் வாய்க்குள்ளேயே ஒரு பெரும் முண்டியடிப்பு நிகழ்ந்தபடி இருந்தது. நான் தவியாய்த் தவித்தேன்.   “என்னய்யா நீ செய்ய மாட்டியா?”   என் ஆவேச வார்த்தைகளைப் பின் தள்ளி விட்டுப் பேசினேன்.   "இந்தப் பசங்க இதையெல்லாம் செய்ய மாட்டாங்க. பாக்க அருவருப்பா இருக்கானுங்களேன்னு சின்னப் பசங்கள தப்பாப் பேசி ரவுடியா வளத்து விட்டுறாதீங்க!”   ஒருவர் வேகமாய் திரும்பினார். "மிஸ்டர் இடத்தைக் காலி பண்ணு!” என்று கத்தினார். எனக்குத் தைரியம் போதவில்லை . மீறிப் பேசினால் என்னையும் தாக்கி விடுவார்கள் என்று எண்ணினேன். என்னிடம் கத்திய நபரே, மூன்று கோணிப் பைகளையும் இரு விரல்களின் நுனியால் தூக்கித் தூக்கிக் கீழே கவிழ்த்தார். உள்ளே கிடந்த எல்லா கழிவுத் தாள்களும் கீழே விழுந்து, காற்றில் சடசடத்துக் கொஞ்சம் கொஞ்சமாய்த் தூரப் போயின. சிலது வேகமாகத் தெரு முனையைத் தாண்டி விட்டன. பையன்கள் திரும்பித் திரும்பி தாள்கள் பதறியடித்து பறப்பதையும், மிரட்டுகிற ஜாம்பவான்களையும் பார்த்து முழித்தார்கள்.   இப்போது கோணியில்லாத பையன் மாட்டிக் கொண்டான். அவனை முன்னே இழுத்தார். கையைச் சுவரில் அங்குமிங்குமாகத் தடவிக் கொண்டார். 'உன் டவுசர் பையில் என்னடா இருக்கு? எடுத்துக் காட்டு ’   "ஒண்ணுமே இல்ல ஐயா. எங்கள் விட்டுடுங்க.”   "பையில ஏதோ தெரியுது. எடுடா கையை விட்டு.”   எடுத்தான்....   சின்னதொரு அட்டை டப்பா. அதை நுனி விரல் கொண்டு பற்றி லேசான குலுக்கினார். சத்தம் இல்லை . தூர வீசி எறிந்தார்.   "படுவா! உண்மையைச் சொல்லேலன்னா உங்க முதுவுத் தோலு பிஞ்சிடும். அவன் அழ ஆரம்பித்தான்.   "ஒழுங்கா வாய மூடு. பேசாம உன் சட்டையையும் டவுசரையும் கழட்டு. உள்ளே என்ன மறைச்சி வச்சிருக்கேன்னு தெரிஞ்சிடும்.” என்றார் இன்னொருவர். அந்தப் பையன் கையெடுத்துக் கும்பிட்டான். "ஐயா! அப்படிச் சொல்லாதீங்கய்யா!'' என்றான். "சட்டையைக் கழட்டு இல்லே அடி விழும்.” என்றதும் திருதிருவென்று முழித்தான். எங்கள் எல்லோரையும் ஒரு முறை பார்த்தான். எனக்குள்ள ஆத்திரம் தீரவில்லை . "ஒரு சின்ன விசயத்துக்கு இப்படி மிரட்டுறாங்களே!” நான் தான் சொன்னேன்.   "எங்க வயித்தெரிச்சல் எங்களுக்கு. பேசாம இரும்.”   இப்போது வெளியாள்கள் நாங்களும் ஐந்து பேர் இருந்தோம். ஆனாலும் எதிர்ப்பு பலமாய் இல்லை . எங்களில் ஒருவனைக் கூப்பிட்டார். அவன் உடனே பணிந்து பையனின் சட்டையைக் கழற்ற முனைந்தான். பையன் பின் வாங்கினான். இருந்தாலும் வலுக்கட்டாயம் பண்ணி கழற்றி விட்டான். கழற்றும் போதே நல்ல வார்த்தை வேறு. ”ஒண்ணும் இல்லேன்னா ஏண்டா பயப்படுற?”   அந்தப் பையன் நல்ல சிவப்பு. அவன் மேனியெங்கும் அழுக்கு நீக்கமறப் பரவித் திட்டாக உறைந்திருந்தது. வந்தவர்களுக்கோ இன்னும் ஆத்திரம். ஏதாவது தட்டுப்பட வேண்டாமா?   "எல்லாப் பசங்களையும் டவுசரக் கழட்டி வெயில்ல நிக்க வெச்சுட்டா உண்மையக் கக்கிறப் போறானுங்க. இனி அதைத் தான் செய்யணும்.” என்று ஆறு பெரிய மனுசங்களும் முடிவெடுத்தார்கள்.   சட்டையை முதலில் பறி கொடுத்தவன், "அப்படியெல்லாம் செஞ்சிடாதீங்கையா!” என்று அழவும், மற்றப் பையன்களும் அழக்கூடிய கட்டத்துக்கு வந்து கொண்டிருந்தார்கள். சட்டையை இழந்ததால் டவுசரைச் சுற்றிலும் அரைஞாண் கயிறு கொண்டு இறுகக் கட்டியிருப்பது தெரிந்தது. உடனே கையாளாகச் செயல்பட்டவன் யாரும் எதிர்பார்க்காத வேகத்தில் அந்தக் கயிறைப் பிடித்து இழுத்தான். கூடவே அந்தப் பையனும் தடுமாறி மூன்றடி தூரம் முன்னே வர , 'டப்' என்ற சத்தமாய் அரைஞாண் கயிறு அறுந்தது.   டவுசர் மளமளவென்று கீழே இறங்கி விட்டது. அவன் கைகளால் மறைத்துக் கொண்டு கீழே உட்கார்ந்து விட்டான்.   இதெல்லாம் அநியாயம்! கேக்க ஆளில்லேன்னு நினைச்சுக்கிட்டீங்களா?” என்று கத்தினேன் நான்.   பெரிய மனுசனாய்த் தோன்றியவன், "ஏய்! உன் சோலி மசுரப் பாத்துட்டுப் போடா! பெரிய புத்த பகவான் மாதிரி” என்றான்.   "ஏய் மிஸ்டர் உன்னை அப்பவே இடத்தைக் காலி பண்ணச் சொன்னோமுல்ல. யோக்கியரு மாதிரி பேசிட்டு வேடிக்கையும் பாக்குறியா?” என்று கிட்டே வந்தான் இன்னொருவன். கூட நின்ற கிழவியும் வேகமானாள். அவளும் ஆவேசமாய்ப் பேசினாள். பெரிய மனுசனில் ஒருத்தன், "பேசாம போ கிழவி” என்று அவள் கையில் வைத்திருந்த பெட்டியோடு இழுத்து நகர்த்தி விட்டான். என்னையும் அப்படியே நெருங்கி ’சொன்னா கேக்கமாட்டியா?' என்றான். நான் முழுவதுமாய்க் கலைந்து போனேன். கையும், காலும் படபடக்க எதுவுமே செய்ய முடியாமல் தூரமாய் நின்ற அந்தக் காரைப் பார்த்தேன். இப்போது அந்த ஆறு பேரின் பார்வையும் என்னை மொய்த்தன. நான் திரும்பி நடக்கலானேன். என் மனசு என்னோடு வர வில்லை.   அந்தக் கார் நூறடி தூரத்தில் நின்றது. நான் அப்படித் தான் போக வேண்டும். வந்து பார்த்தேன் காரில் அங்கும் இங்குமாக இரண்டு கோடுகள் இழுத்து விடப்பட்டிருந்தன. வெள்ளைப் பெயிண்டில் அந்தக் கோடுகள் பளிச்செனத் தெரிந்தன.   நான் சில அடிகள் அந்தக் காரைக் கடந்து வந்திருந்தேன். இரண்டு புறமிருந்தும் இப்போது வாகனங்கள் வராமல் அமைதியாய்க் கிடந்தது நெடுஞ்சாலை. நடைபாதையில் இருந்த தண்ணீர் குழாயைச் சுற்றிக் கட்டப் பட்டிருந்த சிறிய தடுப்புச் சுவர்களுக்கு இடையே குடங்களுக்காக அண்டை கொடுத்து நிற்க வைக்கவென சிறிசும் பெரிசுமாய் சில கற்கள். சற்றே பெரிதாய் எடுத்தேன்.   இப்போது சாலையின் அமைதி குலையும் படி இரு புறத்திலிருந்தும் பலப்பல வாகனங்கள் தத்தமது வேகத்தில் பெரும் இரைச்சலெடுத்தபடி வரலாயின. சாலை தடதடத்தது. இது தான் நல்ல சமயம். கார் பக்கம் போனேன். என்னைத் தாண்டிப் போகும் இந்த வாகனங்களில் என்னைத் தெரிந்தவர்கள் இருக்கலாம். எனக்கு வேண்டப்பட்டவர்களும் என் மீது மரியாதை கூடியவர்களும் கூட இருக்கலாம். வழக்கமற்ற பார்வைகள் கொண்ட என் முகம் கண்டும், என் இயல்பில்லாத நடையும் கண்டு ஏதேனும் நினைக்கலாம். இந்த ஆறு பெரிய மனுஷங்களுக்கும், காரின் பின் பக்கம் நான் அதனை நெருங்கிச் செல்லும் காட்சியை மறைத்து விடும் என்று திடமாய் நம்பிக்கை கொண்டேன். சீறி வரும் லாரிகளின் பேரிரைச்சல்கள் என்னையும் அதிர வைத்த அந்தப் பொழுது இனிமையானது. என் கோபமும் ஆத்திரமும் அந்தப் பேரிரைச்சல்களின் உற்ற துணையோடு எனது கைவழியே கல்லில் இறங்கி காரின் முன் கண்ணாடியில் அழுத்த, என் மகிழ்ச்சியின் அல்லது கோபத்தின் எண்ணிக்கை அளவுக்கு அதுவும் மின்னல் வேகமாய் கீறல் கீறல்களாக உடைபட்டு விகாரமாகி விட்டது. திரும்பிப் பாராமல் நடந்தேன். (தாமரை - மே. 1995)   வலை   அண்ணன் தம்பியான பக்கீரும், முசாபுரும் காரசாரமான வாக்குவாதத்துடன் சண்டை போட்டுக் கொள்வதைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். எந்தக் காரணத்தை முன் வைத்தும் சண்டை போட்டுக் கொள்ள அவர்களால் மட்டுமே முடியும். உப்புச் சப்பற்றதுக்கும், உயிர் வாதைப் பிரச்சனைக்கும் கூட ஒரே நிறை தான். ஊராருக்குச் சந்தோஷமும் பொழுது போக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு தகராறு பண்ணுவதாக ஒரு சாரார் சொல்கிறார்கள். அது உண்மை தானோ! குடும்பத்தை உலுக்கியெடுக்கும் பிரச்சினைகளிலும் அவர்கள் இதற்குத்தான் சண்டை போட்டுக் கொள்கிறார்களா என்பது பற்றி யோசிக்கவும் வேண்டும்.   "மீயன்னா சாவன்னா வீட்டுல சினிமா ஆரம்பிச்சாச்சு டோய்” என்று கூவிய படி தெரு முழுக்க நிற்கிற குழந்தைகள் ஓடி வந்து கூடும். குழந்தைகளின் சப்தத்தால் உஷாராகி வீட்டு வேலைகளை விட்டு விட்டுப் பெரியவர்கள் வருவார்கள். முளைத்து மூணு இலை விடும் முன்னரே அந்த ஊர்க் குழந்தைகள் பேசிக் கொள்கிற கெட்ட வார்த்தைகளும் தூஷணைகளும் இந்த அண்ணன் - தம்பியின் உபயம் தான்.   ஒவ்வொரு நிமிஷமும் பரபரப்பாய் இருக்கும். யாரோ ஒருவர் அடித்து யாரோ ஒருவர் இப்போது தெரு முழுக்க ரத்தம் கொட்டி ஆஸ்பத்திரிக்குப் போகப் போகிறார்கள் என்பது மாதிரி இருக்கும். யாருமே இடையிலே புகுந்து சமாதானமான முறைக்கு அவர்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமே இல்லாமல் அவர்கள் தங்களைத் தாங்களே நெருங்கிக் கொண்டும், அப்புறம் தாங்களாகவே விலகிக் கொண்டும் விடுவார்கள். நெருங்குவதும், பிரிவதும் ஒரு நுட்பமான முறையில் நடக்கும். இத்தனை சண்டையில் மீயன்னா சாவன்னா வீட்டின் முக்கிய உறுப்பினர்கள் அனைவருமே அங்கே பிரசன்னமாகி இருப்பார்கள். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், சண்டையிட்டுக் கொள்வதின் மூலம் தான் ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.   வயதான அத்தா; ஒரு கண் போயே போய் விட்டது. இருவரின் வீட்டையும் இணைக்கும் பொதுவான திண்ணையில் மூலைக்கு ஒரு அடி கிழக்காகத் தள்ளி குத்த வைத்தே சாய்ந்திருப்பார். உரித்த கனிந்த வாழைப்பழம் போன்ற முதுமை. எழுந்து நடமாட இன்னும் இருவர் தேவை. சம்பாதித்து சிறப்பாக வாழும் திறம் கொண்ட இரண்டு பிள்ளைகளும், கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிற கடைசிப் பையனும் நன்கு கவனித்துக் கொள்கிறார்கள். சண்டை நடப்பது பொறாமல் இடைக்கிடை அவர் குரல் கொடுத்தபடிக்கே இருப்பார். "ஏ, தேவடியா மக்கா எதுக்குச் சண்டை போட்டுக்கிட்டு சாவுறீங்க. வீட்டுக்குள்ள வாங்கலே லேய்...” இந்த நேரத்தில் அத்தாவின் சொல்லுக்கோ, கட்டளைக்கோ மதிப்பே இருப்பதில்லை.   பெற்ற தாய் தான் இரண்டு பேருக்கும் இடையில் கிடந்து அல்லாடுவாள். 'ஏலே, வாயை மூடேம்ல . அவன் பேசிட்டுப் போனா அவனுக்கு. நீ சும்மா இரியம்லட' என்று யாராவது ஒருத்தரைப் பார்த்துச் சொல்வாள். "நீ போலா” - "நீ போலா!” என்று இருவருமே தாயைப் பிடித்துத் தள்ளி விடுவார்கள். மீண்டும் இடையில் புகுந்தால், திண்ணையிலே தூக்கி வைத்துவிடுவார்கள். இத்துடன் களத்தில் இருவரின் பொண்டாட்டிமார்களும் ஆளுக்கு ஒரு மூலை நோக்கி, பொதுவாக நின்று தங்கள் தரப்பிலே ஏதோ நியாயத்தை விளக்குவதாகக் கருதி ஒருவரை யொருவர் ஏசி சாபமிட்டுக் கொள்வார்கள். திடீரென்று தம்பியின் பொண்டாட்டி தன் சொக்காரியை நோக்கி ஓடி வந்து எதிரில் நின்று, "நெஞ்சை வகுந்துருவேன் வகுத்து. செருக்கி , பேசாம அங்கிட்டுப் போ!' என்று உத்தரவு சொல்வாள். எதிர்த் தரப்பில் ஓங்கிய குரல் இல்லையென்பதால் 'கீச்... கீச்...’ என்ற குரலின் வழியே உச்சஸ்தாயிருக்குச் சென்று அவள் சொன்ன அதே வார்த்தைகளையே (பெரும்பாலும் அப்படித்தான்) திரும்பச் சொல்லித் தன் பங்கினை நிறைவேற்றிக் கொள்வதும் உண்டு. மூத்தவளின் கொண்டையை இழுக்க ஓடிய இளையவள், அப்படியே ஒரு ரவுண்டு அடித்து மீண்டும் தன் பழைய இடத்தைத் தக்க வைத்துக் கொண்டு தூஷிக்க ஆரம்பித்து விடுவாள். ஆனால் எந்தக் காரணம் கொண்டும் மூத்த மருமகள் மட்டும் தன் நின்ற இடத்தை விட்டு அசைந்து கொடுக்க மாட்டாள். அது விதிக்குப் புறம்பான விஷயம் என்பது போல, அவளுக்கோர் எண்ணம் உண்டு. இளைய மருமகள் மட்டும் தன் இடம் விட்டு ஓடி ஓடிப் போய் எந்தவொரு சண்டையிலுமே இப்படி நடந்து கொள்வதன் காரணம், அவள் சென்னை நகரத்துச் சேரிப் பகுதியிலிருந்து வந்ததே என்று ஊரார் சொல்லுகிறார்கள். மூத்த மருமகள் அப்படி அல்ல, அவள் எப்போதுமே கிராமிய மணத்தோடு திகழ்பவள் என்றும், அவளுக்கு அடக்கமான சுபாவம் தான் என்றும் பாராட்டுவார்கள்.   பெரியத்தா - சின்னத்தா சண்டையிடுவதை இருவரின் குழந்தைகளும் கைகோர்த்தவர்களாய் நின்று பார்த்திருப்பார்கள். மாம்பழ ஸீஸன் சமயங்களில் கண்டிப்பாக குழந்தைகளின் கையில் மாம்பழம் இருக்கும். சூப்பிக் கொண்டே சண்டையைப் பார்க்கம் குழந்தைகளின் விரல்களிலிருந்து சாறு இறங்கி, கை முழுக்க ஓடி வந்து சொட்டுச் சொட்டாய்ப் பூமியில் பரவும்.   சண்டை எப்போது - எப்படி முடிந்து போகும் என்றெல்லாம் சொல்ல முடியாது. "உன்னைய நான் வெட்டிடுவேன் வெட்டி” என்று சொல்லியவாறே வீட்டுக்குள் நுழைந்து யாராவது ஒருவர் உட்கார்ந்து கொள்வதின் மூலம் சண்டை நின்று போயிருக்கும். ஒரு வேளை சொல்லி விட்டுப் போனவர் சொல்லியதற்குத் தக்கபடி அரிவாளுடனோ, கத்தியுடனே வரலாம் என்று எதிர் பார்த்து நிற்பவர்கள் ஐந்து நிமிஷம் காத்திருந்து பார்த்து விட்டு அதன் பிறகு ஒன்றுமே இல்லாமல் இருக்கக் கண்டு, குழந்தைகளைக் கையைப் பிடித்து அழைத்தவர்களாய் வீட்டுக்குப் போய் விடுவார்கள். கடைசியாக அம்மா மட்டும் அவிழ்த்து கிடந்த கொண்டையை எடுத்து முடித்தவளாக ’புளிச்’ என்று வெற்றிலையைத் துப்பி விட்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்து விடுவாள்.   சண்டை நடந்த மூன்றாம் நாளைக்கு வாய்க்காலில் நின்று அண்ணனும், தம்பியும் பேசிக் கொள்வார்கள். தாய், தந்தைக்கு உரிய பொதுச் செலவினங்கள், குடும்ப விவகாரங்கள், பாக்கி வரவு செலவுகள், நேற்று செகண்ட் ஷோ சிவாஜி - சாவித்ரி நடித்த படம் வரைக்கும் தகவல் பரிமாறிக் கொள்வார்கள். இருவருக்குமே மீன், கருவாடு வியாபாரம் தான். ஆனால் தம்பியின் கையே வலுவானது. நுணுக்கமுள்ள கை தம்பிக்கும். வட்டிக்கு விட்டு வாங்குவதிலும் ஊறிப் போனவர். இருவருமே சினிமாக் கதாநாயகர்கள் போல வெரி ஸ்டைலாகவே இருப்பார்கள். பெரியவர் பீடிக்கும், சிறியவர் சிகரட்டுக்கும் விருப்பமுடையவர்கள். ஆனால் பரஸ்பரம் ஒருவரின் வீட்டுக்குள் மற்றவர் புகுந்து சட்டைப் பைகளில் இருக்கிறதை அவசரத்துக்கு எடுத்து வந்து குடிப்பதுண்டு. சின்னவருக்கு மட்டும் கொஞ்சம் சரச சல்லாப நாட்டங்கள் உண்டு என்று ஊரில் சொல்லிக் கொள்வார்கள். இவர்கள் வாய்க்காலில் பேசும் போது நேற்று முன் தினம் கடுமையாகத் தகராறு பண்ணிக் கொண்டார்கள் என்று யாருமே நினைக்க முடியாது.   ` இப்படிப் பொதுவாக் தன்மைகளுடைய தகராறுக்கு மத்தியில் தான் இன்றைக்கென்று சற்றுக் குரூரமான மோதல் உண்டாயிருக்கிறது. வழக்கம் போல எல்லாக் குடும்ப உறுப்பினர்களும் களத்தில் இருக்கிறார்கள். நியம விதிகளின் படி எல்லாம் முறையாகவே நடந்து வருகிறது. அண்ணன் மட்டும் இன்று கூடுதலாக ஒரு கெட்ட வார்த்தையும் அதனூடே தம்பியின் 'பொட்டை விளையாட்டு’ பற்றியும் முதன் முதலாகப் பிரஸ்தாபித்திருக்கிறார். காலேஜில் இருந்து வந்த தம்பியும் களத்தில் இருந்தான். ஐம்பது மைல் தூரத்தில் அவன் கல்லூரிப் படிப்பு இருந்தாலும், அவன் ஒரு நாடார் வீட்டுப் பெண்ணைக் காதலித்து வருகிற உண்மை எல்லோரின் காதுகளுக்கும் வந்து சேர்ந்திருக்கிறது. இப்போது தகராறுக்கு அவன் தான் பின்னணி. அவன் ஹாஸ்டலில் கட்ட வேண்டியது, இதர செலவினம் என்று கூறி ரூபாய் நானூறுக்குப் பட்ஜெட் போட்டு அனுப்பியும் அண்ணன்மார்கள் பணம் அனுப்பித் தரவில்லை. நாடார் வீட்டுப் பெண்ணைக் காதலிக்கிறவன் தங்கள் எதிர்பார்ப்பிலே மண்ணை அள்ளிப் போட்டு விட்டு அவளோடு போய் விட்டால் என்னாவது என்ற பயம். ஏற்கனவே பார்த்த சினிமாப்படங்கள் அவர்கள் பயத்தை உறுதிப் படுத்தி வைத்திருந்தது. அவனைப் படிக்க வைத்தது பெரிய சம்பாத்தியத்தை எதிர்பார்த்து தான். விபரீதமானால் எல்லாம் பாழாய்ப் போகும். செலவு செய்யப்பட்ட தொகையின் கணக்கின்படி பார்க்கையில் இப்போது பெரியவர் தான் பணம் கொடுக்க வேண்டும். ஆனால் மழை விடாமல் பெய்ததில் கருவாட்டு வியாபாரம் நசிந்து போய்விட்டதென்றும், வியாபாரம் பண்ண மழை நின்றால் தான் முடியும் என்று தன் கட்சியைக் கூட்டினார். “இதே தான் எனக்கும்" என்று தம்பியும் தன் கஷ்டத்தை விவரித்தார். இப்போது நானூறு ரூபாய் கொடுத்தால் இவன் காலேஜுக்குப் போய் நேராகத் தன் காதலியை அழைத்துக் கொண்டு கல்யாணம் பண்ணி விடுவானோ என்ற அச்சம் தான் இரண்டு பேர் மனங்களிலும் இருந்தது. விஷயம் தெரிந்த பின்னர் ஒரு தம்பிடியைக் கூட இழக்கத் தயாராயில்லை .   "ஆளுக்கு இருநூறா குடுங்களேன்!” என்று அத்தாவும், அம்மாவும் சமாதானமாய்ப் பேசிப் பார்த்தார்கள். "வாயை மூடுங்க. கண்ட மாதிரி பேசாதீங்க. நான் தான் நெறையக் கொடுத்திருக்கேன்! இப்ப உங்க பெரிய மவன் கொடுக்க வேண்டிய முறை. அவனைக் கஷ்டப்பட்டாவது கடன் உடன் பட்டாவது குடுக்கச் சொல்லு" என்றார் சின்னவர். "எனக்கு இப்ப எதுவும் முடியாது. உனக்கு பேங்குல கிடக்கு பணம். அத எடுத்துக் குடேன். கூடப் பொறந்தவனுக்குத் தான் குடுக்குற . கொறைஞ்சாப் போயிரப் போற!” என்றார் பெரியவர்.   "ஏ, மாடானுவளா! இப்படி ரெண்டு பேருமா சண்டை போட்டா என்னல அர்த்தம்? நாளைக்கு அவன் கல்யாணத்துல கெடைக்கப் போறதையெல்லாம் நீங்க தான் கொட்டி அளக்கப் போறீங்க! என்று கூறினாள். சின்னவருக்கு அளவுக்கு அதிகமான கோபம் வந்து விட்டது. "போற போக்குல நீயே உன் பெரிய மவனுக்கு எல்லாத்தையும் அளந்து குடுத்துருவ போல இருக்கே. நான் தான் இது வரைக்கும் அவன் படிப்புக்கு ரொம்ப அதிகமாச் செலவு பண்ணி இருக்கேன். இப்ப அவன் ஒரு நாடாரு மவளக் காதலிச்சிட்டு அவள் கல்யாணம் பண்ணனும்னு இருக்கான். அப்படி நடந்தா எவன் நஷ்டப்படறது? இது வரைக்கும் செலவழிச்சதெல்லாம் போச்சே!” என்று அங்கலாய்த்தார். பெரியவரும் செலவே பண்ணாதவரா என்ன? "அட சண்டாளா! போற போக்குல படிப்புக்கு நீ தான் எல்லாம் பண்ணுன மாதிரி காட்டிட்டு எனக்கு எதுவும் இல்லாம ஆக்கிப் போட்டுருவியா! நானும் தான் கண்டும் காணாம செலவழிச்சேன். நீ இப்பவே எல்லாத்தையும் திருடப் பாக்குறியே... " என்று ஒரு கெட்ட வார்த்தையை வீசினார். அதைச் சுற்றி இதர வார்த்தைகளும் வந்து ஒரே நாராசமாய் விட்டது. உச்சக் கட்டத்துக்கு வந்தாயிற்று. அதனால் பெரியவர் வீட்டுக்குள் புகுந்தார். வீட்டுக்குள் புகுந்தால் அப்புறம் வெளி வந்த வரலாறே கிடையாது. ஆனால் இன்று போனார். உடனே திரும்பினார். கையில் பலத்த, சிராய்ப்பாய் உள்ள விறகுக் கட்டை தான் அவசரத்துக்கு கிடைத்தது. அதனால் வெலவெலத்துப் போன தம்பியும் வீட்டுக்குள் ஓடி உடனே வெளிப் பார்த்தார். அவர் கையில் கூர் மழுங்கிப் போன விறகு தரிக்கும் அரிவாள் கூச்சப்பட்டுப் பளபளத்தது.   வேடிக்கை பார்க்க நின்றவர்கள் எல்லாம் சுதாரிப்பாய் விட்டார்கள். கூட்டமும் கூடி விட்டது. என்ன நடக்கப் போகிறது என்கிற ஆவலாய் ஆளாளுக்கும் ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டும் இடித்துக் கொண்டும் நின்றார்கள். காட்சி கிடைக்கப் பெறாதவர்கள் தலையை எட்டி எட்டிப் பார்க்கலாயினர். “படுவா! அரிவாளையா எடுத்து வந்திருக்க? உனக்குத் தைரியமிருந்தா நீ வா பக்கத்துல. நான் குடல உருவிடுதேன்.”   “நீ தானே முதல்ல கம்ப எடுத்தவன். கிட்ட வால்! குடல உருவிடுதேன்!"   "பெரிய அருவா! போடா... ! நீ என் குடல உருவுன, நான் இந்தக் கட்டையால் உம் மண்டையில் ஒரே போடா போட்டுருவேனாக்கும். போட்டுட்டு எம்பாட்டுலே ஜெயில்ல போயி உக்காந்துக்கிடுவேன்.”   "அது வரைக்கும் நான் பூப்பறிச்சுட்டா நிப்பேன். உன் குடல மாலையா உருவி என் கழுத்துல போட்டுட்டு மசுரே போச்சுன்னு நானும் ஜெயில்ல போயி உக்காந்துக்கிடுவேன்.”   ஆவேசமாகப் பெரியவர்! கையை நீட்டிப் பேசவும் விறகு கட்டை உள்ளங்கையைச் சிராய்த்துக் கொண்டு கை நழுவிப் போய் விழுந்த இடத்துக்குப் பத்தடி தள்ளி தம்பி நின்றிருந்தார். உடனே "கொலை .... கொலை” என்று கத்தியபடி அரிவாள் மேலே உயரமாய்த் தூக்கிக் கொண்டு அங்கேயும், இங்கேயுமாக அலை பாய்ந்தார்; ஓடினார்; தாவினார். முக்கிய இலக்கான அண்ணனை விட்டுவிட்டுச் சுற்றி சுற்றி வந்தார். எல்லோருடைய அனுதாபத்தையும் திரட்டுவதற்காகக் கடும் பிரயத்தனம் செய்தார்.   "ஏது இன்னைக்கு யாராவது ஒருத்தன் சாஞ்சாத்தான் கதை முடியும் போல இருக்கே!” என்று அங்கலாயத்தாள் ஒரு பெத்தா (மூதாட்டி)   "பெத்தா , சண்டைன்னு சொல்லிக்கிட்டு இன்னைக்கித் தான் கம்பையும், அருவாளையும் எடுத்திருக்காங்க. கொஞ்சம் முன்னேத்தம் கண்டுருக்கு. சத்தம் கித்தம் போடாம பாத்துட்டே இருங்க!” என்றான் உள்ளூர் பள்ளிக்கூடத்தில் படிக்கும் ஒரு பையன்.   “பாவிப் பயலுவளா - எவம்ல கோர்ட்டு, ஸ்டேஷன்னு அலையிறது?” என்று பெத்தா அவன் தலையில் தட்டி விட்டுக் கொலை நிகழ்ந்து விட்டால் என்னாவது என்ற பயமாக ஸ்தலத்தை விட்டே ஓடினாள்.   புதிய மாற்றம் கண்டிருக்கிற இந்நிலையைக் கண்டு, அம்மாவும், தம்பியும் சின்னவரைப் போய் இறுகப் பிடித்தார்கள். "ஒருத்தன ஒருத்தன் வெட்டி சாயுங்கலே! அப்போ தான் நிம்மதியா இருக்கும்!" என்று திண்ணையிலிருந்த அத்தா கத்தினார். கொலை, கொலை என்று கத்தியபடியே அங்கும் இங்கும் சின்னவர் அரிவாளோடு அலைபாய்ந்த நேரத்தைப் பயன்படுத்தி பெரியவர் விறகுக் கட்டையைக் கைப்பற்றி விட்டார். அம்மா - தம்பியின் பிடிக்குள் "வசமாக” சிக்கிக் கொண்டவரைப் போல தம்பியா பிள்ளை இருந்தாலும் அண்ணனை வெட்டிச் சாய்க்கப் போகிற மாதிரியான ஆவேசத்தைக் காட்டிக் கொண்டே இருந்தார். அவரும் விறகுக் கட்டையைத் தூக்கி தம்பி தன்னருகில் வந்தால் மண்டையில் ஒரே போடாகப் போட்டு எமலோகம் அனுப்பி விடுகிற மாதிரி உறுமிக் காட்டினார்.   அம்மாவுக்கு முடியாததால் "அடிச்சுக்கிட்டுச் சாவுங்கலே!" என்று கூறி விட்டுக் கொண்டையை எடுத்து முடிந்தவளாகத் திண்ணையில் போய் உட்கார்ந்து முகத்தை வேறேதோ திசை நோக்கி திருப்பியவண்ணம் புலம்பினாள். தம்பியும், "சரி, சரி, நீங்க இனிமே அடிச்சாலும் சரி, புடிச்சாலும் சரி, இனிமே காலேஜிக்கே நான் போவப் போறதில்ல. உங்க கண் காணாம நான் நாளைக்கே மெட்ராஸுக்கு ஓடிப் போயிடுதேன்!" என்று தன் முடிவைப் பிரகடனப்படுத்தி விட்டு அவனும் திண்ணை மீதில் அம்மா அருகில் வந்து உட்கார்ந்து விட்டான். களத்தில் விறகுக் கட்டையோடும், விறகு தரிக்கும் அரிவாளோடும் ஆயுத சன்னத்தர்களாக நின்ற அண்ணனும், தம்பியும் பரஸ்பரம் , "வெட்டிப் புடுவேன் தாயோளி!” என்றும், "ஜாக்கிரதையா இருந்துக்க. தொலைச்சுப்புடுவேன் தொலைச்சு!” என்றும் எச்சரிக்கை விடுத்தவர்களாக தத்தமது வீட்டின் படியில் கால் வைத்தார்கள். இருவருக்கும் இடைப்பட்டிருந்த திண்ணைப் பகுதியில் இருந்த தம்பியை நோக்கி பெரியவர், "இங்க பாருடா! நாளைக்கு உன் மச்சி கழுத்துல கெடக்குற பூசந்தரத்த (தாலியை) அடகு வச்சாவது நான் உனக்கு பீஸ் தாரேன். அந்த ஏசாமவன் கிட்ட இனிமே சங்காத்தமே வச்சுக்காத!" என்று கூறியவராய்த் தலைமுடியில் கையை அளைந்து கேசத்தைச் சுருட்டி வளைத்து நெற்றியில் புரள் விட்டுத் தன் வீட்டுக்குள் போனார். "அவன் கெடக் காண்டா பொறுக்கிப்பய. ஒரு காசுக்கு பெறாதவன். நாளைக்கு காலையிலே முழிச்சவுடனேயே நீ என் கூட வாடா! மானேஜர கையோட இழுத்துட்டுப் போயி உனக்குப் பேங்குல இருந்து பணத்தை எடுத்து வரச் சொல்லுதேன்! எல்லாத்தையும் சுருட்டுறதுக்கு இப்பவே நேரம் பாக்குறான் மசுராண்டி!” என்று கூறி விட்டு தம்பியா பிள்ளையும் வீட்டுக்குள் நுழைந்து விட்டார். தங்கள் கணவன்மார்கள் மிச்சம் வைத்து விட்டுப் போன சொற்களை எடுத்து இரண்டு மருமகள்களும் வாரிக் கொட்டி விட்டு தங்களின் பதிகளின் சுவடுகளிலேயே கால் பதித்து நுழையப் போனார்கள். போகும் போது சின்ன மருமகள் 'தூ' என்று வாசலில் துப்பி விட்டுப் போனாள். "இனிமே தூன்னு துப்பு , உன் நாக்க அறுத்து வீசறனா இல்லியா பாரு!" என்ற படி பெரிய மருமகளும் போனாள்.   திண்ணையில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்த மாமியாருக்கு எரிச்சல் அடங்க வில்லை. "பேசிக் கிட்டே உள்ளுக்கு ஏம்லா போறியளுவோ? வந்து ஒருத்தரு கொண்டைய ஒருத்தரு புடிச்சுக்கிட்டு நடுத் தெருவுல, உருளுங்களா? யாருக்கு வெத்தி கிடைக்குன்னு பார்ப்போம்! வந்து புருஷன்மாருக்குப் பொண்டாட்டியாள வந்து வாய்க்கவா செஞ்சிங்க வாய்க்க! தூ... " என்று காறித் துப்பினாள். மாமியார் சொல் காதில் ஏறாதவர்கள் போல இரண்டு மருமகள்களும் மாமியாருக்குப் பின்னால் முறைத்துப் பார்த்த வண்ணம் வீட்டுக்குள் ஐக்கியமானார்கள்.   பார்த்துக் கொண்டிருந்தவர்களும் துயரமாய் வெளியேறினார்கள். இந்த முறை ஒரு திருப்பு முனை உண்டானது. ரத்தக் களறி உண்டானதும் போய்த் தலையிட வேண்டும் என்று இருந்தார்கள். ஆனால் பொசுக் கென்று போய் விட்டது. எப்போதுமே உள்ள "பார்வையாளர்கள்” என்ற அந்தஸ்துடனேயே அவர்கள் திரும்பிப் போக வழி வகுத்தார்கள் மீயன்னா சாவன்னாவின் வாரிசுகள். எல்லோரும் திரும்பவும், பள்ளிவாசலில் பாங்கு சப்தம் கேட்கவும் சரியாக இருந்தது. கலைந்து கொண்டிருந்த கூட்டத்துக்குப் பின்னாலே வந்து, பின் அவர்களையும் முந்தி விட்டு தலையில் தொப்பியை மாட்டியவர்களாய்ப் பள்ளிவாசலுக்குப் போனார்கள் மீயன்னாவின் வாரிசுகள்   இரண்டாம் நாள் காலை.   வாய்க்காலில் அலை புரண்டு புது வெள்ளம் போனது. பெரியவர் துணிமணிக்குச் சோப்பு போட்டு விட்டு தண்ணீருக்குள் 'டைவ்’ அடிக்கத் தயாரானார். கரையில் சைக்கிள் சத்தம் கேட்டது. திரும்பினார். தம்பியா பிள்ளையாகிய சின்னவர் நின்று கொண்டிருந்தார் . "அவனுக்கு நேத்து பாங்குல பணம் எடுத்துக் குடுத்திட்டேன். அவன் இப்ப காலேஜுக்குப் பொறப்பட்டுக் கிட்டிருக்கான். உங்களப் பாத்துக்கிட்டு போவறதுக்காவ வெயிட் பண்ணுறான். அவன் அந்த நாடாரு பெண்ண காதலிச்சுட்டு இருக்கான் போலத்தான் தெரியுது. போய் ரொம்ப கறாராச் சொல்லி வைங்க. இல்லேன்னா, இது நா வரையில் பண்ணு செலவெல்லாம் வேஸ்ட்டாப் போயிரும்!" என்றார்.   "அந்த விஷயத்த நீ என்கிட்ட விட்டுரு தம்பி. அதப்பத்தி நீ கவலையே படாதே. எடக்கு மடக்கா அவன் ஏதாவது பண்ணினானா அவன் உண்டு இல்லேன்னு ஆக்கிப்புடுதேன். நான் அப்பப்ப போயி அங்க கவனிச்சுட்டு வாரேன்!"   “பஜாருக்கு போறன். வரட்டுமா!” என்று கிளம்பினார் சின்னவர்.   "தம்பி! வரும் போது ஒரு பீடிக் கட்டு வாங்கி வந்துரு. சுத்தமா காலி! என்று கூவினார்.   "வாங்கிட்டு வாரேன். அவசரமா வேணும்னா உங்க கொழுந்தியா கிட்ட கேட்டு சிகரெட்டு வாங்கிக்கங்க!” என்று கூறி விட்டு அவரும் ஜல்தியானார்.   திரும்பிப் பார்த்தார். அலைபாயும் வாய்க்கால். நுரை பாய்ந்து ஓடும் புதுப்புனல். "எல்லாரும் தள்ளுங்கடே!" என்று ஒதுங்க வைத்து புதுப் புனலுக்குள் விரால் பாய்ச்சல் பாய்ந்தார்.   அவர் நீரில் முங்கி எழும் முன், கரையிலிருந்தவர்கள் எல்லாம் கேலியாகச் சைகை காட்டிச் சிரித்து அடங்கினார்கள். (கணையாழி - செப். 91)   மனதின் பாஷைகள்   ஜானகி அம்மாளுக்குக் கண்கள் கூசின. சர்வாங்கமும் நடுநடுங்கியது. நெஞ்சத்தில் புயல் மையம் கொள்ள வைத்த வினாடிகள் அவை. மீண்டும் ஏறிட்டு நோக்கவோ, அங்கே மேலும் ஒரு வினாடி நிற்கவோ முடியாத நரக நெருப்பு அவளைத் தன் நாக்குகளால் தீண்டிச் சித்ரவதை செய்து ரசித்தது. தனது கடையின் முன்னால் நிற்பது அவளுக்கே அவமானமாய் இருந்தது. வாடிக்கையாளர்கள் வருவதும் வருவதும் சாதாரணமாய் ஏறிட்டு நோக்குவதும் கூட அருவருப்பாய் இருந்த்து, அங்கேயிருந்து ஓடி விட முயன்றன அவளின் கால்கள்! வீட்டுச் செலவுக்கான பணத்தை எண்ணி, அம்மாவிடம் கொடுத்த கையோடு டிபன் பாக்ஸையும் நீட்டினான் வேலாயுதம். உடனே நரகத்திலிருந்து தப்பி விடுகிறதான எண்ணமாக, வீடு நோக்கிப் பாய்ந்து செல்லத் தொடங்கினாள் ஜானகி அம்மாள். ஆனாலும் இதென்ன திருப்தி? தான் அறியாமலேயே இத்தனை வருஷங்களாக தனக்கும், தன் மக்களுக்கும் இப்போது உணரத் தலைப்பட்டுள்ள இந்த நரகத்தில் இருந்தல்லவா ஜீவிதம் நடந்துள்ளது? ஆகாயத்தை வாய்க்குள் திணித்து விட்டாற் போன்ற ஓங்கரிப்பு; குமட்டலான எண்ணங்கள்! மூத்த மகளைச் சீர் செனத்திகளோடு சிறப்பாகக் கட்டிக் கொடுத்ததில் இருந்து இப்போது சந்தோஷமாகச் சாப்பிட்டுக் காலம் தள்ளுகிற வரை எல்லாமே இப்படியும், அப்படியுமாய் ஒரு பக்கமாக நடந்து வந்திருக்கிற வியாபாரத்தில் இருந்தும் தானா?   கடையின் இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கம் வரைக்கும் மிக நீளமாகத் தொங்க விடப்பட்டுள்ள அந்த ஆபாசப் புத்தகங்கள்... எஞ்சிய ஒரு துணியையும் உருவி விடத் தயாராக நின்ற அந்த நிர்வாண நங்கையின் அங்கத் திரட்சிகள்...   பதற்றமாய் ஓடி வந்ததில் டிபன் பாக்ஸ் கீழே விழுந்து கணகண ஓசை எழுப்பவும் தான் சாந்தியின் ஞாபகம் பற்றிக் கொண்டு வந்தது. சாந்தி தான், நேற்று மத்தியானம் கூட அவள் தான் அவனுக்குச் சாப்பாடு கொண்டு போனது. அவள் இந்தப் படங்களைப் பார்த்திருக்க மாட்டாளா? அதனால் தானோ இன்று காலையில் இவனுக்கு டிபன் கொண்டு வர ஆர்வம் காட்டினாள்? அந்தப் படங்களை சாந்தி விரும்பிப் பார்த்துக் கொண்டிருப்பது போன்று ஒரு காட்சி அவள் விரும்பாமலேயே கற்பனையாக விரிந்தது. ஜானகி அம்மாளின் உடலை இரு கூறிட்டுப் பிளந்தாலும் கூட இவ்வளவு வேதனை உண்டாகி இருக்காது. கணவர் மணவாளம் பிள்ளை இரண்டு நாள்களாக சுகமில்லாமல் ஆனதால் வந்த விளைவுகள் இவை. வெள்ளை மனசோடு வந்த வேலாயுதம் இதையெல்லாம் தன் கைப்படவே நேற்றும் இன்றும் எடுத்து வைக்கவும் கோர்த்துப் போடவுமாக அல்லவா இருந்திருப்பான்? தன் குடும்பமே சாக்கடையில் மூழ்கி விட்டதா? தென்றல் வரும் வழியல்லை. எல்லாத் திசைகளிலிருந்தும் அனல் காற்று தான். மனசு காலூன்ற வழியில்லாமல் பரபரத்துக் கொண்டிருக்கும் போதே, அவள் கால்கள் படபடப்பாய் ஓடிக் கொண்டிருந்தன.   மணவாளம் பிள்ளை மிக்க ஆயாசமாய்ப் படுத்துக் கிடந்தார். இரண்டு நாளாக அவர் படுகிற பாடு அவரே அறிவார். உடம்புக்கு வேறேதோ என்று அவராய்க் கற்பித்துக் கொண்ட அவஸ்தைகள் வேறு! சாந்தி அப்பாவுக்கென்று வெந்நீர் போட்டு அவர் முன் வைக்கையில், அம்மா திருதிருவென்று நூறு பாம்புகள் விரட்டி வருவதே போன்ற நடுக்கத்துடன் உள்ளே பாய்ந்தாள். சின்னச் சின்ன வேர்வை நதிகளோடு ஜானகி அம்மாள்.   "வெயில் ஜாஸ்தியா? இப்படி ஓடியாறியே?” என்று கேட்டார் பிள்ளை.   "ஆமா” என்றவளாக சாந்தியின் முகத்தை ஏறிட்டு நோக்கினாள் ஜானகி அம்மாள்.   ரோஜாப்பூ போல தூய்மையாக, கவிதைகளை வாரி வழங்குகிற முகமாகப் புத்தொளி கொண்டிருந்தது சாந்தியின் முகம். முகத்தின் ரேகைகளில் ஊடுருவினாள் ஜானகி அம்மாள். அப்பாவின் பக்கத்தில் இருந்தவள் எழுந்து நின்று, “என்னம்மா?” என்று மந்தகாசப் புன்னகை தவழும் முகமாய்க் கேட்டாள். எதுவும் கூறாமல் மனமும் பூரண அமைதி பெறாமல் சமையலறையில் நுழைந்த ஜானகி அம்மாள், டிபன் பாக்ஸை வைத்த அதே வினாடியில் பிள்ளையின் அருகில் வந்து நின்றாள்.   "சாந்தி போயிச் சாப்பிடு"   "உனக்காத்தம்மா காத்திருக்கேன்.”   “எனக்குப் பசிக்கல. நீ போ!”   அம்மாவின் நடவடிக்கைகளில் இன்றொரு விபரீதம் கண்டாள். பேசாமல் போனாள். நீளமான வீட்டின் இறுதிக் கட்டத்தை சாந்தி போய்ச் சேருவதைக் கடைசி வரைக்கும் பார்த்தாள் ஜானகி அம்மாள். முகத்தை துடைத்தும் வேர்வை நிற்கவில்லை.   "ஏங்க, உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்?”   வினோதமாய் ஏறிட்டார் பிள்ளை . "என்ன ?"   படபடப்போடு வார்த்தைகள் துண்டு துண்டாய் சிதறி விழ கேட்டாள். "நம்ம கடையில் கண்கொண்டு பாக்க முடியாத அளவுக்குப் புஸ்தகமா தொங்கப் போட்டிருக்கீங்களே!”   இதற்குத்தானா இவள் இவ்வளவு தரம் அங்கலாய்த்திருக்கிறாள்?   "இதெல்லாம் இப்ப சகஜம் ஜானகி. யாரும் அத ஒரு தப்பா எடுத்துக்க மாட்டாங்க!” மணவாளம் பிள்ளையின் பேச்சு அதிர்ச்சியாக இருந்தது.   "எதுங்க சகஜம்? இந்த அசிங்கமா இப்போ சகஜமாப் போச்சு? உங்க பேச்சு கொஞ்சம் கூட நல்லாயில்லே! நம்ம புள்ளைங்களைப் பத்தி யோசிச்சீங்களா? பள்ளிக்கூடத்துல படிக்குற பையன் அந்த இடத்துல உக்கார வெச்சு இப்படிப் புத்தகங்கள்லாம் விக்கச் சொன்னா அவன் படிப்பு என்னாவும்? அவன் வாழ்க்கை என்னாவும்முன்னு யோசிச்சுப் பாத்தீங்களா? நம்ம குடும்பத்தோட மானம், மருவாதியெல்லாம் என்ன ஆவும்ணு பாருங்க!” ஜானகி அம்மாள் அழுது விட்டாள்.   மணவாளம் பிள்ளைக்கு இப்போது தான் உணர்வு தட்டியது. பகீரென்றது. என்னதான் பகிரங்கமாய் இந்த அரை குறை ஆபாசப் புத்தகங்களை விற்றுக் கொண்டிருந்தாலும், இதை விட அருவருப்பான, பார்க்கவே சகிக்காத, கூடாத புகைப்படங்களும், கதை கட்டுரைகளும் அடங்கிய ஒரு களஞ்சியமே கடையில் உண்டே! கடைப் பக்கமாய் எப்போதுமே வந்து போயிருக்கும் தன் மகன் தொங்க விடப்பட்ட இந்த அரை நிர்வாணப் புத்தகங்களைப் பார்த்திருப்பான் தான். ஆனால் உள்ளே உள்ளது... அவன் இது வரை பார்க்காதது! வேறு இடங்களில் கூட அவனால் அவற்றைப் பார்த்திருக்க முடியும் என்று எண்ண வழியில்லை. கடைசியில் தகப்பனே மகனுக்கு வழியமைத்துக் கொடுத்து விட்ட கதையாகி விட்டதே! பல முக்கிய நபர்களோடு இந்த கிராமத்தில் தான் மட்டுமே பரம ரகசியமாக நடத்தி வந்த விற்பனை அது! நேற்று முன் தினம் இரவில் வீட்டுக்கு வரும் போது அவைகளையெல்லாம் எப்போதும் போல் அஜாக்ரதையாக வெறுமனே ஒரு ஓரமாய் வைத்து விட்டு வந்தது. அது பற்றிய சிந்தனை அதன் பின் இல்லாமலே போய்விட்டதே! அது ஞாபகம் இருந்திருந்தால் நேற்று காலை தானே சென்று அவற்றையெல்லாம் அப்புறப்படுத்தி விட்டு அவனைக் கடையில் உட்காரச் செய்திருக்கலாம். வெள்ளம் தலை தாண்டிப் போய் கொண்டிருக்கிறது. பேயாட்டம் போட்டது அவர் மனம். சாதாரணப் புத்தகங்களுக்கே நிலை தடுமாறிய ஜானகி, இந்த ரகசியமெல்லாம் அறிய நேர்ந்தால் ரெளத்ரமாகி விடுவாள் தானே! ஒன்றும் புரியவில்லை பிள்ளைக்கு.   முந்தா நாள் ராத்திரி லேசான தலைவலியோடு தான் மணவாளம் பிள்ளை வீடு வந்தார். நேற்று காலை தான் உடம்புக்கு ரொம்பவும் ஆகாமல் போய் விட்டது. நிற்க, நடக்க முடியாத அளவு பலவீனம்! அதனால் தான் விடுமுறையில் இருந்தவனிடம் சாவியை நீட்டி "போய் கடையைத் திற" என்று போட்ட உத்தரவுக்குப் பணிந்து நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி அலைவது கெட்டுப் போகுதே என்ற ஆதங்கம் மனதில் முட்ட முணுமுணுத்த படிக்குப் போனான் வேலாயுதம். "கடையைத் திற" என்று சொன்னதற்குக் "கெட்டுப் போகும் வழியைப் பார்” என்று அர்த்தம் ஆகிவிட்டது.   “என்ன பதிலே பேசாம இருக்கீங்க?” ஜானகி அம்மாள் அவரை உலுக்கினாள்.   மனைவியின் கேள்விக்குப் பதில் கூறும் வார்த்தைகளைத் தேடி அலைந்தது மணவாளம் பிள்ளையின் மனம். நிமிஷங்களை மௌனங்களாய் நீடிக்க விட்டார். "நம்ம வயித்துப்பாடு அதோட சேர்ந்து தான் போயிட்டிருக்கு ஜானகி.”   "நேத்து மத்தியானம் அவதான் அவனுக்குச் சாப்பாடு கொண்டுட்டுப் போனா! நேத்தே சாந்தி அந்தப் படத்தையெல்லாம் பாத்திருப்பா. அதனால தான் இன்னைக்குக் காலைலயும் நானே டிபன் கொண்டு போறேன்னு ரொம்ப ஆர்வமா போன மாதிரி தெரியுது. இது தான் எனக்கு பயம்மா இருக்கு.”   "நம்ப பொண்ணு அப்படியெல்லாம் இல்லே ஜானகி. நீ ரொம்பவும் பயப்படுற மாதிரி தெரியுது?”   "ஆசை தாங்க. நீங்க சொல்ற மாதிரி இருக்கலாம். நேத்து அவ சாப்பாடு கொண்டு கொடுத்தப்பவே அவ கண்ணுல இதெல்லாம் பட்டிருக்கும் தானே. அப்போ அவளுக்கும் சங்கடமா இருந்திருந்தா இன்னைக்கு காலைல நாமளே கொண்டு போன்னு சொன்னாலும் போயிருப்பாளா? ஊரு உலகத்துல ஒவ்வொன்னும் நடக்குறதப் பார்த்தா யாரு எப்படின்னு நினைச்சுக் கூட பாக்க முடியலியே! ”   ஒவ்வொரு கவலையும் அணி வகுக்கிறது. எதையும் இனம் காண முடியவில்லை . மனம் துயரப்படுகிறது. அவள் பகிர்ந்தது போல் இவர் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. இதுநாள் வரை வேடிக்கையும், துள்ளலுமாய் இருந்த விஷயங்கள் நெருப்பாகவும், விழுங்கும் நரகமாகவும் ஆகி விட்டன. அவள் மனம் அலை பாய்ந்திருக்குமா? தம்பி ஒருவன் அருகில் இருப்பதை உணரத் தவறி இருப்பாளா? இதுவரையிலும் கோயில் போய் வரதே துணிந்தாளென்றால் அதற்கு ஒரு மோசமான காரணத்தைத் தானே உண்டாக்கிக் கொடுத்து விட்டோமோ? தன்னிடம் வாங்ச் செல்லும் வாடிக்கையாளர்கள் இப்போது மகனிடமும் விளக்கம் சொல்லி கேட்டு வாங்கியிருப்பார்களா? கெளரவமாய் ஒதுங்கியிருக்கக் கூடாதா அவர்கள்?   ”நமக்கு அந்தத் தொழிலு எவ்வளவு தான் சோறு போட்டிருந்தாலும் இனி அது வேண்டாமுங்க. நாம வக்கிற வினை நமக்கே வந்துட்டா அப்புறம் தலை நிமுந்து வாழ முடியாமப் போயிடும். கம்முன்னு இருக்கீங்களே. சொன்னாக் கேளுங்கய்யா...” முகம் புதைத்தாள் கணவனின் மடியில், சாந்தி அவ்விடம் வந்தபோது தந்தையின் மடியில் தாய் உறங்குவதைக் கண்டாள்.   மணவாளம் பிள்ளை எப்போதும் வீட்டுக்கு வந்து சேரும் அந்த நேரத்திலேயே தான் வேலாயுதமும் வந்தான். அன்றைய வியாபார நிலை பற்றி போதுவாகப் பேசினான். கொண்டு வந்திருந்த பையை ஓரமாத் தொங்க விட்டான். சாந்தி அவனுக்காகக் காத்திருந்து சாதம் பரிமாறினாள். இன்னும் முழுமையான தூக்கத்தில் இல்லாத மணவாளம் பிள்ளை புரண்டு கொண்டிருந்தார். வேலாயுதம் சாப்பிட ஆரம்பிக்கவும் சாந்தி எழுந்து கொண்டாள். தன் கால்களை மெதுவாகப் பதித்து பையைத் தொங்க விட்டிருந்த இடத்திற்கு வந்தாள். தம்பியை உற்றுக் கவனித்தவளாகப் பையைத் துழாவ ஆரம்பித்தாள். தூக்கம் வராமல் தவித்த பிள்ளையின் கண்களில், கையிலகப்பட்ட ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு சாந்தி உள் அறை நோக்கி வேகவேகமாக நகர்வது தெரிந்தது. உடம்பு முழுவதும் உஷ்ணத்தால் கொதிக்க ஆரம்பித்தது.   "சாந்தி கொஞ்சம் சுடுதண்ணி கொண்டாம்மா!" என்று அவரை அறியாமலேயே அவர் உரத்துச் சொன்னார். குரல் கேட்டதும் சர்வாங்கமும் நடுநடுங்க வேகப்பட்டுத் திரும்பியவள் படுக்கையில் அப்பா எழுந்து உட்காருவதைக் கண்டதும் ஒன்றும் ஓடாதவளாய் "இதோ வந்துட்டேம்பா!" என்றவளாய்ப் புத்தகத்தைப் பீரோவின் மேல் போட்டு விட்டு அடுக்களை நோக்கிப் பாய்ந்தாள். சொல்ல முடியாத துக்கம் பிள்ளையின் நெஞ்சில் நிரம்பியது. பீரோவின் மேல் என்ன புத்தகம் என்று பார்க்கவும் கூட அவருள் ஒரு நடுநடுக்கம். நடு வீட்டிலிருந்தபடிக்கே அடுக்களையில் பம்பரமாய்ச் சுழலும் சாந்தியைக் கண்டார். இது வரை எவ்வித கவலைக்கும் இடமளிக்காத செல்வ மகள் அவள்!   உடம்பு இப்போதும் கூட அதே பலவீனத்தைத் தான் கொண்டிருந்தது. ஆனால் நெஞ்சில் வலிமையான தீர்மானம் இருக்கிறது. அனைவரும் தூங்க ஆரம்பித்ததும் எழுந்தார். மெதுவாகக் கதவைத் திறந்து வெளியே வந்தார். நடக்க ஆரம்பித்தார். கடை வைத்து இத்தனை வருஷங்களிலும் அவர் இந்த அகாலத்தில் இப்படி வந்ததில்லை. ஆனால் இப்போது அவர் கையிலிருந்த தீப்பெட்டியின் கோரப் பசிக்குத் தீனி போட வேண்டி இருந்தது.   (வைகறை - நவம். 95)   அப்பாற்பட்ட உலகம்   இன்று காலையில் தான் வீட்டுக் கொல்லையில் இருந்த பூவரசு மரத்தின் கிளையில் ஒரு முழக் கயிற்றில் பிச்சுமணி தொங்கினார். முழிகள் பிதுங்கி நாக்கு வெளித்தள்ள கோரமான முறையில் தோற்றமளித்த அப்பாவின் சடலத்தைப் பார்க்க நேர்ந்ததுமே ஜெயபால் வீறிட்டு அழ ஆரம்பித்தான். ஊர்க்காரர்கள் அவசரமாய்க் கூடி முடிவெடுக்கும் வரை பிச்சுமணியின் சடலம் வீட்டின் தென்மேற்கு மூலையில் சாத்தி வைக்கப்பட்டிருந்தது. செண்பக வடிவு தன் குழந்தைகள் இரண்டையும் கட்டிப் பிடித்து அழுதாள்.   போலீஸுக்குத் தகவல் போய் விடும் முன்பே அவர் சடலம் புதைகுழிக்குப் போய் மேடானது. அதன் பின் அமைதியாகி விட்டது. விசயம் கேள்விப்பட்டு ஒரு வாரம் கழித்துத் தான் செண்பக வடிவை பார்க்க சென்னையிலிருந்து வந்தார் ரங்கசாமி. அவர் வந்ததும் அம்மாவின் துக்கம் பல மடங்கு வீறிட்டுக் கிளம்பியதையும் அவள் வைத்த ஒப்பாரியையும் கேட்டுக் குழந்தைகள் இது நாள் வரை கொண்டிருந்த துக்கம் கலைந்து சற்றே பயமாகக் கதவுப் பக்கம் ஒருக்களித்துச் சாய்ந்து நின்றனர். அம்மா தலைவிரி கோலமாய்க் கதறிக் கதறி அழுத்தையும் ரங்கசாமி சற்றே துக்கம் மண்டிய முகத்தோடு அவளையே உற்றுப் பார்ப்பதையும் மருண்ட கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.   "அய்யா, இனி நான் என்னத்த செய்யப் போறேன்? அவுக என்னை இப்படி ஆக்கி வச்சுட்டுப் போய்ட்டாகளே! லே, நான் பெத்த மக்கா! இப்படி தவப்பன் இல்லா அனாதயப் போய்ட்டீங்களே!" செண்பக வடிவு மார்பில் அடித்துக் கொண்டாள்.   திருவாளர் எம்.ஆர். என்று அழைக்கப்படும் ரங்கசாமி ஊருக்கு வந்தால் செண்பக வடிவைப் பார்க்கவென்று பிரத்யேகமான நடைகள் நடப்பார். ஏழ்மையிலும் பூத்துக் கரிசல் மண்ணின் கருப்போடு பூசி விட்ட குத்து விளக்குப் போல் துலங்குகின்ற செண்பகவடிவைப் பார்க்கத் தவறாமல் வந்துவிடுவார். ஒவ்வொரு ராத்திரிகளிலும் அளவு கடந்த பிரியம். அங்கேயே அவளோடயே படுத்துக் கொள்வார். பிச்சுமணி வந்து கதவு தட்டுகிற வரைக்கும். கதவு திறந்து அவர் உள்ளே வரும் போது ரங்கசாமி புழக்கடை வழியே தன் வீடு எத்துணை இருட்டானாலும் நடந்து கொண்டிருப்பார்.   செண்பக வடிவை நாடி ரங்கசாமி வந்தால், அவள் மகளின் மீது அதிக பிரியம் காட்டுவார். அதற்கொரு காரணம் இருந்தது. திருவாளர் எம்.ஆர்.ன் மூக்கைக் கிள்ளியபடியே செண்பக வடிவு ஒரு நாள் சொன்னாள், "ஆயரந்தே இருந்தாலும் நீங்க என்கிட்ட வந்துட்டுப் போறதுக்கு நான் என்னைக்கும் பாத்துகிட்டு இருக்காப்போல ஒரு அடையாளம் வேணுமில்ல. இந்தப் பய ஜெயபாலோடு சேத்து நான் அதையும் கவனிச்சுக்கப் போறேன். என்னய்யா உம்முன்னு பாக்குறீக? சொல்லுங்க எதுனாச்சும்!” அவளின் குறையை நிவர்த்தி செய்தார் அவர். அவரது முகத்தை உரித்துக் கொண்டு ஜெயராணி பிறந்தாள்.   அந்த முகம் பார்த்து நிறம் பார்த்து ஊர்ச்சனம் தெரிந்து கொண்டாலும், "அது ஜெயபாலு அப்பாருக்குப் பொறந்தது” என்று கூறினாள் வடிவு. காற்றின் உதவி கொண்டு செண்பக வடிவின் அம்மையையும், அப்பனையும் இந்தச் செய்தி உலுக்கியது. தொணதொணத்த அம்மையின் கைப்பிடித்து ஓங்கி ஒரே போடாகச் சத்தியம் பண்ணிச் சொன்னாள், "ஏளா! இது உன் மருமவனுக்குப் பொறந்ததுதாமுளா!”   அத்தைக்கும், மாமனுக்கும் பிச்சுமணி மீது வருத்தமுண்டு. ஊருக்கு இந்தப் பக்கம் கிடந்த சாராயக் கடையில் இருந்து அந்தப் பக்கமாய் வயலுக்குள் பிரகாசமாய்க் கிடந்த டூரிங் சினிமா வரைக்கும் - சமயங்களில் விடிய விடிய - ராஜ்யம் நடத்தி வந்தான் பிச்சுமணி. தன் தொழிலில் ஆர்வமின்றித் திரிந்தான். "இந்தப் பிச்சுமணி பயதான் அவளக் கூட்டிக் கொடுத்து சம்பாரிக்காம்லே!” என்றும் பேச்சு வந்தது. இதனால் எப்படியோ பிச்சுமணியின் உயிர் போய்விட்டது.   ரங்கசாமி முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டாள். "செய்பாலப் படிக்க வச்சு ஆளாக்கிறணும். அவனும் அவங்க அப்பன் மாதிரி இந்தக் குலத்தொழிலயே செஞ்சுக்கிட்டு இருந்தா இந்த வம்சமே உருப்படாமல் போயிரும். அதனால நீங்க தான்யா அவனுக்கு உதவணும். உங்களுக்கு கோடிப் புண்ணியமா போயிடும்.   ரங்கசாமி உடனே சரி சொல்லவில்லை. யோசித்தார். "அதுக்கென்ன வடிவு? அவனுக்கு நானாச்சு. இதுக்கெல்லாமா போயி கவலைப் படறது. விட்டுத் தள்ளு சவத்த... "   செண்பக வடிவுக்குப் பால் வார்த்தது போல இருந்தது.   ஒரு நாள் சென்னையில் அவனைத் தன் கண்காணிப்பில் வைத்து படிப்பிக்க ரங்கசாமி கூட்டிப் போனார். செண்பக வடிவு நிம்மதியானாள். சோகப் பிடி மெல்லவே விடுபட்டு விட்டது. அந்தக் கரிசல் காட்டுப் பூமியில் தன் உழைப்பை எப்படியெல்லாம் செலுத்தினால் வாழ்வை நகர்த்த முடியுமோ அப்படியெல்லாம் உழைத்தாள். அவளைத் தனியே சந்திக்கிற பொழுதுகளில் பல மனுஷர்களும் உள்ளத்தளவில் எவ்வளவு நிர்வாணமாய் ஆகிப் போனார்கள்? ஒரு கையாலாகாத மனிதனுக்குத் தன்னைக் கொடுத்துத் தன் வாழ்வைச் சீரழித்த பெற்றோர்களையும் இப்போது கூச்ச நாச்சமில்லாமல் கேட்டுக் கொண்டு முன்னே நிற்கிற ஈனப் புத்திக்காரர்களையும் ஒரே வீச்சாக வீசித் தள்ளி விட்டால் என்ன என்ற அளவிற்கு அவள் சினம் வளர்ந்தது.   ஆனால் ரங்கசாமியை நினைக்கிற போது மனம் குளுமை ஆகி அந்தரத்தில் சஞ்சரிக்கிறது. அவருக்காக அவள் வாழ்ந்து முடிந்தால் அது வாழ்க்கை . அவர் சிற்பியாக இருந்து தன் மகனை வார்த்துக் கொடுத்து விட்டால் போதும். தன் மகனும் மற்றும் குழந்தைகளைப் போல நாலு வார்த்தையாவது இங்கிலீசில் பேசிவிட வேண்டும். அவனை உருவாக்கும் ரங்கசாமியின் கால்களில் செருப்பாகி விடலாம்.   பாவி மட்டைக்கு நாலு வார்த்தை எழுதத் தெரியவில்லை . தெரிந்தால் அவள் மனத்திலுள்ள சித்திரங்களைப் பூரா எழுதி விடலாம். அதனால் அவர் நேரில் இருப்பதாக நினைத்து ராத்திரி நேரங்களில் என்னவெல்லாமோ சொல்லித் தீர்க்கிறாள். எல்லாவற்றுக்கும் ரங்கசாமி புன்னகை சகிதமாய்த் தலையை ம்... ம்..... என்ற ஆட்டிக் கொண்டு கேட்டபடி இருக்கிறாரே தவிர பதிலே பேசுவதில்லை . பேச மாட்டீரோ? கன்னத்தைக் கிள்ளுகிறாள். ரங்கசாமி இருளுக்குள் கரைந்து விடுகிறார்.   அவர் ஊர் வந்திருக்கிற செய்தி ஒரு நாள் செண்பக வடிவைச் சந்தோசக் கிறக்கத்தில் தள்ளியது. அவர் இன்று இரவு தன் வீட்டுக்கு வருவாரல்லவா? அவள் காடு கரைக்கே போகவில்லை. எம். ஆர். என்ற சொல் அவள் காதில் விழும் போது அது அவளுக்கே உரிய பெருமையாக எத்தனை தூரம் மகிழ்ந்திருக்கிறாள். சென்னைக்குப் போய் கஷ்டப்பட்டு முன்னேறி இன்று அவர் நாலைந்து பலசரக்குக் கடைகளின் அதிபதி. சென்னை சம்பாத்தியம் ஊரில் தோட்டங்களாய், வீடுகளாய், வயல்களாய் விளைகிறது. எப்பேர்ப்பட்ட மனுசராய் இருந்தால் என்ன? என் மடியில் கிடக்கிற மனுசன் தான் என்று அவள் மனசு கர்வப்பட்டிருப்பினும் பல சமயங்களில் நடந்தது. பெரிய பங்களாவாசி தான் என்றாலும் இந்தக் குடிசைக்குள்ளும் கிடந்து இந்த உடம்பை எத்தனை முறை தின்னு விட்டார்? அதைப் பெருமையாகவும், வாழ்க்கைத் தடத்தையோ மாற்றிப் போட்டதொரு அவலமாகவும் சில சமயங்களில் தோன்றும்.   ரங்கசாமி கதவைத் தட்ட நினைத்த போது அது தானே திறந்து கொண்டது. இரண்டு கைகளும் அவரை அலக்காகத் தூக்கி விடும் பலத்தைக் காட்டின. மூச்சு முட்டியது இருவருக்குமே. பேச்சு வார்த்தையே தேவையற்ற நாகமும், சாரையுமாக கட்டுண்டு கிடந்தனர். பூக்களின் வாசனையில் கரைந்து நழுவின் வெட்க உணர்வுகள்.   “நல்லாருக்கானய்யா நான் பெத்த புள்ள?”    "நல்லாருக்கான் வடிவு."         “உம்ம கிட்டே எப்படி நடந்துக்குறான்?”   "அடேயப்பா! அதையெல்லாம் அவனுக்குச் சொல்லியாக் காட்டணும்?”   அவரை ஒருச்சாய்த்துத் தன் தோளில் கிடத்தினாள்.   "அவன் என்னையத் தேடுவானாய்யா?”   "பெத்த அம்மையில்லா நீ. தேடாமயா இருப்பான்? அடிக்கடி உன்னைப் பத்திச் சொல்லிக் காட்டுவான். நான் தான் ஆறுதல் சொல்லி அவன் சந்தோசமா இருக்க வச்சிருக்கேன்.”   "இங்க உங்க புள்ளைங்களோட சேர்ந்தா அவன் சினிமா விளையாட்டுன்னு கெட்டுப் போவான்னு வயந்து தான் ஜெயபால உம்ம கண்காணிப்புலேயே படிக்க வக்க அனுப்புனேன். ஊரெல்லாம் கேலி பேச்சுத் தானாம். பேசட்டும். எனக்கு அதப்பத்தி "கவலையிலே லே.... "   "உன் பையன் கெட்டிக்காரனாயிடுவான் வடிவு. நீயே அதிசயிச்சுப் போயிடுவே.. அவர் இடை புகுந்தார் அவள் அது பற்றியே பேசி உழல்வதை விரும்பாதவர் போல. சொற்கள் கூட தேனாய் இனிக்கும் என்பதை அவள் அனுபவத்தில் இன்று தான் உணர்கிறாள். அவள் ஆசை நிறைவேறும். தெருவில் தலை நிமிர்ந்து அவள் செல்லும் காலம் வரும். ஏளனப் பார்வைகளுக்கு அன்று விழப் போகிறது சவுக்கடி.   அவள் அவனிடம் தயவாய்ச் சொன்னாள். "ஜெயபால்; உம்ம மவன் மாதிரி நெனச்சுங்கோங்க. உம்ம உப்பத்தின்னு வளர்றான். அப்பப்ப உம்ம சொல்லக் கேக்காம் சரியாப் படிக்காம இருந்தாக்கூட அவனக் கண்டிச்சு நல்லா படிக்க வையுங்கய்யா. நம்ம புள்ளேன்னு சொல்லிட்டாளேன்னு நெனச்சு அவனுக்கு செல்லம் கொடுத்து தறுதலை ஆக்கிறாதீங்க. அவன் ஆளாகணும்... பெரிய ஆளாகணும்...” சொல்லும் போதே அழுதாள். அழுது கொண்டே இருந்தாள். திருவாளர் எம்.ஆர் வெறித்து நோக்கினார். அந்த நோக்கில் சென்றவாரக் காட்சி தெரிந்தது. "ஆக்கங் கெட்ட மூதி. அங்க என்னல வம்பு பண்ணிக்கிட்டு கெடக்க? கடையில் உள்ள வேலய ஒழுங்கா பாருல. பின்னால் கடை வைக்க ரொம்ப பிரயோஜனமாயிருக்கும்” என்று இரவு பதினொன்றரை மணிக்குக் கடையை அடைக்கச் சிறிது நேரம் இருக்கும் போது அவன் மீது படிக்கல்லைத் தூக்கி எறிந்ததும், அது தோள் பட்டையைத் தாக்கியதும், அவன் அம்மா, அம்மா என்று அலறியபடி அப்படியே கீழே சரிந்ததும் விசுவ ரூபமெடுத்துத் திணறச் செய்தது.   அழுது கொண்டிருந்த போதும் செண்பக வடிவின் கண்களில் ஜெயபால் புன்னகைத்துக் கொண்டிருந்தான். (இலக்கு - மார்ச், 98)   முகவரி வேண்டாத முகங்கள்   திரிசங்கு எங்கு போனான் என்றே தெரியவில்லை. சுந்தரி கைக்குழந்தையை வைத்துக் கொண்டு அழுதாள். அக்காவின் அழுகையில் மனம் கரைந்த ஜெயபால், வேகமாகச் சென்று அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னான். விஷயம் கேள்விப்பட்டதும் விஜயா சற்று நேரம் நிலைகுத்தி நின்றாள். திரிசங்கு போக வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டது நிறைவேறி விட்டது.   மானேஜரை அணுகி விவரம் கூறி, வீடு திரும்ப உத்தரவு கேட்டாள். தீபாவளி நேரம். விஜயா இப்படி ஒரு காரணம் கூறி வீட்டுக்குப் போனால், மானேஜர் கறார் தன்மையின் மேல் முதலாளிக்குள்ள நம்பிக்கை பறி போய் விடும். ராமலிங்கம் கறுத்த முகம் காட்டினார். விஜயா ராமலிங்கத்தைக் கெஞ்சினாள். அம்மா கெஞ்சுவதும், மானேஜர் ராமலிங்கம் விறைப்பு காட்டுவதும் ஜெய்பாலுக்கு மனக் கூச்சத்தைக் கொடுத்தது. அவன் இருவரையுமே பார்க்க விரும்பாமல் சற்று விலகிப் போய் நின்றான். ஜெயபாலின் வயதுக்கு இணையான பையன்கள் செய்யக் கூடிய படு சுறுசுறுப்பான வேலைகளில் வெறித்து நின்றான்.   விஜயாவும், ஜெயபாலும் பேசிக் கொண்டே வந்தார்கள். சுந்தரி சமாதானமாகி விடுவாளா என்ற கவலை தான் விஜயாவுக்கு. மாமா இப்படி ஓடித் தலைமறைவானதை ஜெயபால் அக்காவுக்காக வேண்டி, ரொம்ப சீரியஸாகவே எடுத்துக் கொண்டான். சொந்தக்காரர்களின் வீடுகளுக்குச் சென்று பார்த்து வரலாமா என்ற கேள்வியை அம்மாவின் முன் வைத்தான். "ஏலே, ஊரெல்லாம் தெரிய வைக்கிறதுக்கா? பேசாம இரி. போனா போனவன் திரும்பி வர்ற வரைக்கும் மூச்சுக் காட்டாம இருக்கணும். இந்த சுந்தரி மூதிய எப்படி சமாளிக்கிறதுங்குற கவல தான் எனக்கு”   நடையைச் சுருக்கிக் கொண்டு, ஜெயபாலின் கையைப் பிடித்து மெதுவாக நிறுத்தினாள் விஜயா.   "இங்க பாருல... அவ கிட்டே வச்சு நான் சொல்லுவேன். நீ தூத்துக்குடி பாட்டி வீட்டுல போயி அங்க இருக்கானா பாத்துட்டு வான்ன சொல்லுவேன். நீ என்ன செய்யிறேன்னா, பொறப்பட்டுப் போற மாதிரி போயி உனக்குப் புடிச்ச படமா ஒண்ணோ , ரெண்டோ பாத்துட்டு அப்புறமா பஸ் ஏறி இங்கியே வந்திடு. அவன் அங்கே இல்லேன்னு உன் அக்காட்ட சொல்லிடு. அப்படி வந்தா வீட்டுக்கு வரச் சொல்லி சொல்லிட்டு வந்ததா அவகிட்ட புளுவிடு” என்று சொன்னாள்.   ஜெயபால் என்ன செய்வான்? அம்மா பொய் பேசச் சொல்கிறாள். வலிந்து சினிமாவுக்குப் போ என்கிறாள். அக்காவுக்கு ஒரு மனசும், அம்மாவுக்கு ஒரு மனசுமாக ஆனான். வீட்டை எட்டினார்கள். கடுமையான வெயிலில் வியர்வை பெருக்க நடந்து வந்து வாசல் படியில் கால் வைத்ததும் குளிர்ந்த காற்று வந்து தழுவிக் கொண்டு போனது. சுந்தரி சோகம் தழுவிக் கிடந்தாள். விஜயாவும், ஜெயபாலும் எதிர்பார்த்து வந்த மாதிரி அவள் இல்லை தான். ஆனாலும், தாய் மாமனைக் கட்டிய நாளில் இருந்து இப்படி ஏதாகிலும் ஒரு காரணம் தொட்டு அழுது தீர்த்த படியே இருக்க வேண்டும் என்று ஆகி விட்டாள்.   கண்ணீரின் வற்றிய கோடு சுந்தரியின் கன்னத்தில் சிறிய அளவில் பளபளத்தது. விஜயா அவளிடம் விவரம் கேளாமலும் ஆறுதல் கூறாமலும் நின்றாள். அவள் மடியில் கிடந்த பேரப்பிள்ளையைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள். இவ்வளவு சின்ன வயதிலேயே தானும் ஒரு பேரனைச் சுமக்க வேண்டி வந்த காலக் கொடுமையை எண்ணி விஜயா வேதனையோடு உள்ளே போனாள். ஆனால் விஜயா ஜெய்பாலை தூத்துக்குடி வரை போய் வரச் சொன்ன நாடகம் அன்று நடக்க வில்லை.   இரவு பத்து மணி வாக்கில் மானேஜர் ராமலிங்கம் நடை வாசல் ஏறி வந்தார். தன் வீட்டுக்குப் போகிற பாதையை விட்டு விஜயாவின் வீடு வரை களைப்பாய் வந்தார். அது தான் பாய் விரித்து எல்லோரும் படுக்க இருந்த நேரம். லேசில் கிளம்பிப் போகிற மனுஷனா இவர்? சுந்தரிக்கு எரிச்சல் முட்டி வந்தது. அம்மாவுக்காக வாய் மூடிக் கிடந்தாள். ஆனால், விஜயாவோ அவரைக் கண்ட உற்சாகத்தில் சில அடி தூரம் எதிரிலேயே உட்கார்ந்தாள். காலையில் அவள் அனுமதி கேட்டு நின்ற போது ராமலிங்கம் வேறொரு முகத்துடன் இருந்தார். இப்போது பார்க்க நேரும் முகத்துக்கும் எப்போதும் அலுவலகத்தில் பார்க்க நேர்ந்த முகத்துக்கும் துல்லியமான வேறுபாட்டை ஜெயபால் உணர்ந்தான். "என்ன ஆச்சு? வந்தானா... வராம தொலைஞ்சே போனானா?” என்று ராமலிங்கம் கேட்டார்.   சுந்தரிக்கு ஆத்திரமாக வந்தது. அம்மாவைத் திரும்பிப் பார்த்தாள். "அவன் எங்கே போயிருக்கப் போறான்? வருவான்” என்றாள் விஜயா. ராமலிங்கம் சொல்லியதற்கு அம்மா சரியான கண்டிப்பு காட்டவில்லை என்பதே சுந்தரிக்குக் கோபமானது.   "அப்ப நீ ஏன் பதறித் துடிச்சு வந்தே?” என்று ராமலிங்கம் கேட்டார்.   "எனக்காகவா வந்தேன்? இவ அழுது கிட்டு இருப்பாளோன்னு பயந்து போயி தான் வந்தேன்.”   "சரி சரி. இது தீபாவளி நேரம். இனிமே இப்படில்லாம் சொல்லிட்டுத் திடுதிப்புன்னு வந்திடாத. முதலாளிப் பசங்க கண்ணுல எண்ணெய் விட்டுக் கிட்டு அலையிறானுங்க. விஜயாவ எங்க, விஜயாவ எங்கன்னு ஒவ்வொருத்தனா வந்து எட்டிப் பார்த்துட்டுப் போறானுங்க. என் பேருல பஞ்சராயிடும். நான் என்ன பாடுபட்டு சமாளிச்சிக்கிட்டுருப்பேன்னு நீயே நெனச்சிப் பாரேன்.”   விஜயாவுக்கு இதைக் கேட்க சங்கடமாக இருந்தது. சுந்தரியின் முன்னே வந்து நின்று இப்படிப் பேசித் தொலைகிறாரே என்று நெளிந்தாள். சுந்தரியும் ஊடுருவலாய்ப் பார்த்தாள். சுந்தரி போய்ப் பாயை விரித்தாள். திரிசங்கு எங்கு போயிருப்பான் என்று சுந்தரி யோசிக்கலானாள்.   அவன் ரொம்பவும் தொந்தரவு பண்ணித்தான் சுந்தரியைக் கட்டிக் கொண்டான். விருப்பமே இல்லை விஜயாவுக்கு. தன் மகளின் சின்ன வயசுக்குக் கல்யாணம் தேவையில்லை இப்போது. எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள் தம்பியிடம். "அவ முளைச்சு மூணு இலை விடல்ல. அவளுக்கு என்னலே தெரியும் குடும்பம் நடத்துறதப் பத்தி . வாய மூடிட்டுப் பேசாம இருல்ல” என்றாள். "அத்தான் போய்ச் சேந்துட்டாரு. நீ என்னத்துக்கு இவள் சுமையா வச்சுக்கிட்டிருக்கே. வேலைக்கு நீ போன பெறவு இவள எவன் கவனிச்சிட்டிருப்பான்? என்றான். சுற்றிச் சுற்றி வந்தான் சுந்தரியை. தான் வேலைக்குப் போகும் நேரத்தில் ஏதாவது ஏடாகூடம் பண்ணி விடுவானோ என்ற பீதி வந்தது. எதற்கு மடி நெருப்பு என்று கட்டிக் கொடுத்து விட்டாள். தாலி ஏறிய பின், உள்கட்டுத் தாண்டி சுந்தரி வீட்டுத் திண்ணைப் பக்கம் கூட வந்து நிற்கக் கூடாது என்று கூறினான். தெருப்பையன்களின் மீது அவநம்பிக்கை விரிந்தது. மனைவியை அடிப்பதும், பரிந்து பேசும் அக்காவைப் பார்த்து நாக்கைத் துருத்தி, எச்சரிப்பதும் என அதிலிருந்து திரிசங்குக்கும், சுந்தரிக்கும் எல்லைக் கோட்டுப் பிரச்னை வளர்ந்தது. விஜயா, சுந்தரியின் நிம்மதி குலைந்து, தினமும் உதறல் ஆனது.   அம்மாவின் பேச்சும் ராமலிங்கத்திடம் இது பற்றித் தான் நடந்து கொண்டிருந்தது. சுந்தரிக்குத் தூக்கம் அசத்தும் வேளையில் விஜயாவும், ஜெயபாலும் ராமலிங்கத்தை அனுப்பி விட்டு வந்து அவளருகில் படுத்தனர்.   சில நாள்கள் ஆயின. விஜயாவுக்கு கவலை வந்தது. தீபாவளிக்கு இன்னும் ஒரே வாரம். மனசு குழைந்து குழைந்து வந்தது. நினைவுகள் எங்கெங்கோ இழுத்துக் கொண்டு போயின. "எங்கையாவது போயி செத்துத் தொலைஞ்சிருவானோ?” என்ற அச்சம் வளைத்தது. சுந்தரியை எண்ணும் போது விஜயாவுக்குப் பல குழப்பங்களும் கூடின. "ஏல, நீ போயி தூத்துக்குடில பாட்டி வீடு, அத்தை வீடுன்னு மூச்சுக் காட்டாம சுத்திப் பாத்துட்டு வர்றியா?” என்று ஜெயபாலிடம் கேட்டாள். ஒப்புக் கொண்டு அம்மாவிடம் பணம் வாங்கிக் கொண்டான். விஜயாவுக்கு வேலைக்குப் போகிற அவசரம் வேறு. "தீபாவளிக்கு வரணுமாம். சாவ ஆசை இருந்தா அதுக்கு அப்புறமா போயி சாவலாமாம்னு சொல்லி இழுத்துட்டு வா கழுதய” என்று பொரிந்து தள்ளி விட்டு வேலைக்கு ஓடினாள். ஜெயபால் பேண்ட் மாட்டினான். புறப்பட்டான். குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த சுந்தரி, "ஒங்க மாமா அங்க இருந்தா தீபாவளி கழிச்சு வந்தாப் போதும்னு சொல்லிடு. இல்லே வராமயே இருந்தாலும் சரிதான். கையோட மட்டும் கூட்டிட்டு வந்து தொலைச்சிடாதே. கொஞ்ச நாளைக்காவது நிம்மதியா இருந்துக்குறன். இல்லே, என் பிராணன் போயிடும். போ! நான் சொன்னதை நல்லா ஞாபகம் வச்சுக்க. அம்மா கேட்டா ஏதாவது பொய் சொல்லி சமாளி, அப்படியே பாட்டி கிட்ட காசு வாங்கி பட்டாசும் வாங்கிட்டு வந்துடுல!” என்றாள்.   ஜெயபாலுக்குத் தலை கிறுகிறுத்தது. கண்ணுக்கு முன்னே திட்டுத் திட்டாய் இருள் மேகங்கள் கலைவதும் இணைவதுமாய் இருந்தன.   "உன் மாமா அங்க இருக்க மாட்டாரு. அப்படி இருந்தாலும் ஒண்ணும் சொல்லிடாத. எங்கே வந்தேன்னு கேட்டா சும்மா பட்டாசு வாங்கிட்டுப் போவலாமுன்னு வந்தேன்னு சொல்லு. வேற ஒண்ணும் கண்டுக்காத.” அவனின் பயண ஆர்வம் கலைந்தது. தான் எப்படி நடந்து கொள்வது என்றும் அவனுக்குத் தெரியவில்லை . பக்குவமற்ற மனம் புரண்டது. சுந்தரிக்குப் போக்குக் காட்டி விட்டு அவன் நடந்த வழி அம்மாவின் வேலை நிறுவனத்துக்குப் போகக் கூடியது. (அவள் விகடன் )