[] []                                                                                   சில ரகசியங்கள                                                                        இரா.நடராஜன்  நூல் : சில ரகசியங்கள் ஆசிரியர் :  இரா.நடராஜன் மின்னஞ்சல்  : mrn62@rediffmail.com    மின்னூலாக்கம் : த . தனசேகர் மின்னஞ்சல் : tkdhanasekar@gmail.com வெளியிடு : FreeTamilEbooks.com   உரிமை: Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International  License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். பொருளடக்கம் அணிந்துரை 6  வாழ்த்துரை 7  என்னுரை 10  1. சில ரகசியங்கள் 12  2. எருமை சவாரி 18  3. ஒரு பொண்ணு... ஒரு பையன் 24  4. பல்லி 29  5. ...எனவே, இந்தக்கதை முடியவில்லை 35  6. நாய் பட்ட பாடு 40  7. செல்லாக் காசு 46  8. ஒரு வழிப்பாதை 52  9. செல்வி 58  10. இரண்டும் ஒன்று 63  11. அண்டங்காக்கை 67  12. கோயில் அத்தை 73  13. இனி எல்லாம் நீயாக 79  14. வல்லவன் 84  15. தலைச்சன் 89  16. வா! வா! விரைந்து வா! 96  17. போடு! சண்டை போடு ! 100  18. கூவத்தில் பிணம் 106  19. தூண்டில் 110  20. தருமி 2007 113  21. தேடிச் சோறு நிதந்தின்று.... 120  22. சந்தோஷத் தீவு 123  23. சிக்கியது பறவை 129  24. ஆபரேஷன் மோகினி 135  25. விடமாட்டேன் 140  26. பொதுக்கூட்டம் 145  27. ரசிகன் 151  28. கொல்வதற்கு வருகிறேன் 157  29. இது, அது அல்ல 162  30. தங்கக்கூரை 164  2007 விகடன் தீபாவளி மலர் 165  31. சின்ன விஷயம் 166  32. ஓடாதே.. யோசி 168  33. என்னைப் போல் ஒருத்தி 170  34. கிரீடம் 172  35. இல்லையா? இருக்கா? 174  36. தனியே.. தன்னந்தனியே 176  37. புதுசா ஒரு கடை 178  38. நடு இரவில் 180  39. போராட்டம் 182  40. தேவை ஒரு குடும்பம் 184  41. நதியின் குற்றமா? 186  42. அந்த ஒரு கேள்வி 188  43. க்ருஹபிரவேசம் 190  44. பூதரேக்கலூ 192  45. எது சிக்கனம்? 194  46. ராணி வர்றா!!! 196  47. பார்க்காமலே 198  48. நான் நானாக 200  49. பூமராங் 202  50. விலகிப் போ காதலா 204  51. விசுவாசத்தின் விலை 207  52. சின்னு 210  53. இருள் வழிப் பயணம் 214  54. கல்யாணத்தில் கலாட்டா 217  55. அஞ்சு பலி 222  56. காதலைச் சொல்லிவிடு 224  57. அப்பா 228  58. எது வாழ்க்கை? 232  59. எல்லாம் ஒரு பேச்சுக்கு 234  60. எதிரும் புதிரும் 237  61. விடியும்? 246  62. பலி 253  63. தெய்வம் நின்று கொல்லும் 262  64. தேவை ஒரு சர்ஜரி 272  65. தெய்வம் தந்த வீடு 274  66. இன்னும் இருபத்துநான்கு மணி 276  67. எங்கே ஊனம்? 279  68. கல்வெட்டு 281  69. காக்க. காக்க. ரகசியம் காக்க 283  70. முற்பகல் செய்யின் 285  71. யாரிவன்? 288  72. கீதா காதல் செய்கிறாள் 290  73. புது வரவு 292  74. பணம் 294    அணிந்துரை   நான் வியந்த பல எழுத்தாளர்களில் மெலட்டூர் நடராஜனும் ஒருவர். இப்பவும் காலேஜ் படித்துக்கொண்டிக்கும் ஜாலி மாணவன் போன்ற தோற்றம் கொண்டவர். ஆனால் அவரது நட்பு வட்டம், இலக்கிய வட்டம், தத்துவ வட்டம் ரொம்ப பெரியது. அவர் எங்கள் 'அக்கறை' கூட்டத்தின் முக்கிய புள்ளிகளில் ஒருவர். சென்னைவாசியாக இருந்தவரையில் தவறாது 'அக்கறை' கூட்டத்தில் கலந்து கொள்வார். தூத்துக்குடியில் தற்போது வேலை நிமித்தமாக வசித்து வந்தாலும் அவ்வப்போது திடீர் தீடீரென 'அக்கறையுடன்' தலை காட்டுவார். தகவல் களஞ்சியமாக, அனுபவப் பெட்டகமாகப் பல நாட்டு நடப்பு விஷயங்களைக் கூறுவார். அந்தச் செய்திகளைப் பத்திரிகையில் படித்துவிட முடியாது. பின்னணிகளும் inside information களும் சுவையான திகைப்புகளாக மலரும்.     அஸ்ஸாமில் போலிங் பூத் ஆபீசராக இருந்த போது, நடந்த திகில் அனுபவங்களை சொல்லி, எப்படி நம் மின்னனு வாக்கு இயந்திரம் மிக சிறப்பானது என்று விளக்கி சொல்வார். படித்தது, பார்த்தது, கேட்டது என்று அவரின் பேச்சு ஒரு பத்திரிக்கையாளனின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இருக்கும்    இந்தத் தொகுதியிலுள்ள கதைகள் அத்தனையையுமே தமது அனுபவங்களால் பின்னியிருக்கிறார். எல்லாக் கதைகளிலுமே அவரது சொடுக்கு நடையைக் காணலாம். விறுவிறுப்பும் சிறுகதைக் களத்துக்கான கச்சிதமும் சகல கதைகளிலும் இருப்பதால் தனியன்கள் சாத்தியமில்லை. ஆழ்ந்த தத்துவங்களை அனாயாசமாக மனத்தில் பதிய வைக்கிறார்.   சுஜாதாவை வழிபட்டு வழிபட்டு அரை சுஜாதாவாக ஆகிவிட்டார். பத்திரிகாசிரியர்கள் வழி வகுத்துத் தந்தால் குறைந்த பட்சம் 'முக்கால் சுஜாதாவாக முற்றுவதற்கு' வாய்ப்பு உண்டு.   என்றைக்கும் உங்கள் பிரியத்துக்கு உரிய   பாக்கியம் ராமசாமி வாழ்த்துரை   நண்பர் நடராஜன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பை வாசிக்கும் போது சந்தோஷமாக இருந்தது. இந்த தொகுப்பில் உள்ள எல்லாக் கதைகளையும் தனித்தனியாக பத்திரிக்கைகளில் வந்தபோது படித்திருக்கிறேன். இப்போது  மீண்டும் ஒரு தொகுப்பில் அவைகளை படிக்கும்போது இன்றளவும் அதன் சுவையும் உணர்வும் கொஞ்சமும் குறையாமலிருப்பது ஆச்சர்யமளிக்கிறது.   இந்த தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையும் வேறு வேறு களங்களில் நடப்பது ஒரு சிறப்பு அம்சமாகும். ஒரு நல்ல எழுத்தாளன் தன் பன்முகத்திறமையை தன் படைப்புகளில் வெளிப்படுத்துகிறான். தானும் அப்படித்தான் என்பதை இந்த கதைகளின் மூலம் அவர் வாசகர்களை உணர வைக்கிறார். அவரது பல்வேறுபட்ட ஆர்வமும், அனுபவங்களும் அதற்கு காரணம் என நினைக்கிறேன்.   வங்கிப் பணி அவருக்கு நமது பாரத தேசத்தின் வடக்கிலிருந்து தென்மாநிலங்கள் வரை வாழும்  பணிச்சூழலை உருவாக்கித் தந்தது. அதனைச் சாபமென்று நினைக்காமல் மக்களோடும், மண்ணோடும் இணைந்ததால் பல நல்ல கதைகள் விளைந்திருக்கின்றன.  எங்கள் குருகுலம் நாடககுழுவில் அவர் பெற்ற பயிற்சி உரையாடல்களில் ஒரு அழுத்தத்தையும், நிஜத்தை பிரதிபலிக்கிற நடையையும் அவருக்குத் தந்திருக்கிறது. சுஜாதாவின் எழுத்தின் கவர்ச்சி அவருக்கு சொல் சிக்கனத்தையும், சொல்லாமல் உணரவைக்கும் யுக்தியையும் கொடுத்திருக்கிறது.  சின்ன வயது அனுபவங்களை அவர் சொல்லும் நேர்த்தி அவரது வர்ணனைகள் நம்மை நம் சிறுவயதிற்குக் கொண்டு செல்வது ஒரு சீரிய அனுபவம்தான். உறவுகளின் உன்னதம் வெளிப்படுகிற சந்தோஷங்களுக்கு உள்ளே உறைந்திருக்கிற சோகத்தை ஒரு எதிர்பாராத கணத்தில் அளித்து வாசகனுக்கு பாத்திரத்தின் மேல் ஒரு இரக்கத்தையும் நெருக்கத்தையும் ஏற்பட வைப்பது நம் நடராஜனின் வெற்றியாகக் கொள்ளலாம். சில ரகசியங்களில் இந்த திடீர் தாக்குதலை நாம் எதிர் கொள்கிறோம்.  உலகில் வாழும் அனைத்து உயிர்களும் வாழத் தகுந்தவை வாழ வேண்டியவை அவை நம் சுயநலத்தால் அழியும்போது மனிதத்தன்மை இழந்து விடுகிறோம் என்பதை அவர் எருமை சவாரியில் வலியுறுத்தும் போது அவர் மனம் மரம் மற்றும் விலங்குகளின் பால் அவர் கொண்ட பாசத்தையும்   கருணையையும் நமக்கு வலியுறுத்துகின்றன.  நகைச்சுவை வெளிக்கொண்டுவரும் கதையாக நாய் பட்ட பாட்டைக் குறிப்பிடலாம். விஞ்ஞானம், கம்யூட்டர் போன்ற துறைகளில் அவர் படித்த செய்திகளை தகுந்த இடங்களில் கையாண்டிருப்பதும் பாராட்டுக்குரியது.  அவரது இந்த முயற்சிக்கு வாசகர்கள் ஆதரவு அளித்து ஒரு நல்ல தொகுப்புக்குரிய அங்கீகாரத்தைக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  வாழ்ந்த்துகளுடன் மாதவ. பூவராக மூர்த்தி  இயக்குனர், குருகுலம் நாடக குழு, சென்னை   மெலட்டூர்.இரா.நடராஜன்   பாரம்பரியம் மிக்க இசைக்கும், பரதத்திற்கும் பெயர் போன தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மெலட்டூர் என்ற அழகிய கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் இந்த நூலின் ஆசிரியர். இவரது சிறுகதைகள் பெரும்பாலான முன்னணி தமிழ் இதழ்களில் வெளியாகி பேரும் புகழும் ஈட்டியிருக்கின்றன. மனித நேயம், உறவுகளின் மேன்மை, நமது கிராமிய கலாச்சாரம் ஆகியவைகளை நுட்பமான உணர்வுகளோடு, எளிய எழுத்துக்களில் வடித்திருக்கிறார். எனவே இவரது கதைகளை படிக்கும் போது, நம் இயல்பு வாழ்க்கையில் எதிர் படும் மனிதர்களையே அதிகம் காணமுடியும். அந்த அனுபவங்களை மறுபடி உணரமுடியும். தேசிய அளவிலான வங்கி ஒன்றில் மேலதிகாரியாக பணியாற்றிக் கொண்டு, இலக்கியப் பணியை தொடர்ந்து செய்து வரும் இவர், வளர்ந்து வரும் முன்னணி சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர். 2007 விகடன் தீபாவளி மலரில் இவர் எழுதிய 12 ஒரு பக்க கதைகள் 'நட்சத்திர கதைகளாக' வெளியானதும், 2008ல் திலமலர்-வாரமலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை பரிசு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.   என்னுரை   ஒரு எழுத்தாளனின் ஒவ்வொரு ஆக்கமும் கிட்டத்தட்ட பிரசவம் மாதிரிதான். அவன் மூளையில் மின்னலென கதையின் கரு உதயமாகிவிட, அதன் பிறகு அவன் படும் அவஸ்தைகள் ஏராளம். விறுவிறுப்பான தொடக்க வார்த்தைகள், தெளிந்த நீரோடை மாதிரி வளைந்து நெளிந்து செல்லும் மையப்பகுதி, நெத்தியடியான கடைசி வாக்கியம் என்று அவனுக்குள் எண்ணங்கள் கூழாங்கற்களை போல உருண்டு கொண்டே இருக்கும். எல்லாம் சரியாக அமைந்துவிட்ட வேளையில் அது எழுத்து வடிவம் பெற்றுவிடும். அதை அவன் வாசகர்கள் பாராட்டிச் சொல்லும்போது ஒரு தாயைப்போல அவன் மகிழ்ந்து போகிறான். எனது ஒவ்வொரு கதையையும் என் கைபிடித்து நடந்து வரும் குழந்தையாகவே பாவிக்கிறேன். என் கல்லூரி காலத்தில் (1982) எனது முதல் பிரசவம் நிகழ்ந்தது. என் அன்பிற்குறிய தமிழ் பேராசிரியர் திரு மெய்ப்பொருள்தான் எனக்கு வழிகாட்டினார். 1995ல் 'இதயம் பேசுகிறது' வார இதழில் இரண்டு கதைகள் வந்தன. கதைகள் எழுதுவதை நிறுத்திவிட்டு கல்கியிலும், குங்குமத்திலும் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன். அப்போது குங்குமத்தில் பொறுப்பாசிரியராக இருந்த கவிஞர் சுகுமாரன் அவர்கள் கொடுத்த ஊக்கத்தின் விளைவாக மீண்டும் கதைகள் பக்கம் திரும்பினேன். குங்குமத்தில் ஒரு சில கதைகள் வெளிவந்தன. அதன் பிறகு எழுத்தை ஏறகட்டிவிட்டு மேடை நாடகத்தில் என்னை ஈடுபத்திக் கொண்டேன். அந்த சமயத்தில் திரு சுஜாதா அவர்களை ஏதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. வார இதழ்கள் மீது எனக்குள்ள கோபத்தை கொட்டினேன். அப்போது அவர் ஒரு சில டிப்ஸ் கொடுத்தார். அது எனக்கு வேதமாகவே தோன்றியது. "நடராஜன், ஒரு பத்திரிக்கை உங்கள் கதையை திருப்பியனுப்பிவிட்டால் அதை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் என்ன மாதிரி எதிர்பார்க்கிறார்கள் என்பதை நுட்பமாக கவனியுங்கள். அதற்கு ஏற்றமாதிரி உங்கள் கதைகளை அமையுங்கள். சோம்பல் படாமல் அடித்து, திருத்தி, மாற்றியமையுங்கள். உங்கள் சிந்தனை முற்றிலும் புதிய கோணத்தில், வித்தியாசமான களன்களில் இருந்தால் நல்லது. பளிச்சென்று தொடங்குங்கள். தொய்வில்லாமல் விறுவிறுவென சொல்லுங்கள். முடிவை வாசகன் நெருங்கும் போது 'அட' என்று அவன் வியக்கும்படி செய்ய வேண்டும். அதுதான் உங்கள் வெற்றி" என்றார். மிகுந்த போராட்டங்களுக்கு பிறகு கல்கியின் கதவு திறந்தது. அதை தொடர்ந்து, விகடனிலும் எனது கதைகள் வெளிவர ஆரம்பித்ததும் எனக்குள் புது ரத்தம் பாய்ந்த மாதிரி உணர்ந்தேன். எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசன் அவர்கள் கொடுத்த உற்சாகத்தில் ஒரு சில நகைச்சுவை கதைகளும் எழுதினேன். கால மாற்றத்துக்கு ஏற்றாற் போல் எனது படைப்புகளை இணையதளங்களிலும் பதிக்க ஆரம்பித்தேன். உலகளாவிய வாசகர் வட்டம் எனக்கு கிடைத்தது. நான் சாதிப்பின் ஆரம்பக் கட்டங்களில் இருக்கிறேன். இன்னும் போக வேண்டியது வெகு தூரம். இன்றைய சூழலில், ஒரு சிறுகதை எழுத்தாளனாக உருபெற எவ்வளவு கடின முயற்சிகள் எடுக்க வேண்டியுள்ளது என்பதை பதிவு செய்ய விரும்பியே எனது சுய விமர்சனம் அமைந்துள்ளது. எனது எழுத்துக்களுக்கு மேடையமைத்து கொடுத்து வரும் அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும், உந்து சக்தியாக இருக்கும் வாசகர்களாகிய உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. மெலட்டூர்.இரா.நடராஜன் 1. சில ரகசியங்கள்   மாலதி ஈமெயில் அனுப்பியிருந்தாள். 'உன் ரிடர்ன் டிக்கெட்டை உடனே கேன்செல் செய். வெள்ளி இரவு ஹாம்பர்கிலிருந்து லுப்தான்ஸாவில் நான் மும்பை வருகிறேன். நாம் இருவரும் சேர்ந்து திருப்பனந்தாள் போய் மாமாவை பார்க்கிறோம்'. மாமா! திருப்பனந்தாள் சேது மாமா! நினைத்ததுமே இனிக்கும் அந்த வார்த்தைகள் என்னை கிறங்க அடித்து பின்னோக்கி இழுத்துச் சென்றன. எங்கள் சின்ன வயசு விஷம காலங்களில் மாமாவைப் போல் இனிதான விஷயம் வேறு எதுவும் இருந்ததாக நினைவில்லை. என் அப்பாவுக்கு உகான்டா இந்திய தூதரகத்தில் வேலை என்பதால் நாங்கள் எங்கள் பாட்டி வீட்டில்தான் வளர்ந்தோம். செங்கல்பட்டில் வேலை பார்த்துக் கொண்டு சனி ஞாயிறுகளில் வந்து போகும் சேதுதான் எங்கள் உற்ற நண்பன். அதனால்தான் என்னவோ எங்களுக்கு சேதுவுக்கு மாமா என்ற சஃபிக்ஸ் கூட தேவையில்லாத வார்த்தையாக இருந்தது. வெள்ளிக்கிழமை நெருங்க நெருங்க எங்கள் பேச்சு சேதுவைப் பற்றியே இருக்கும். அதே மாதிரி ஞாயிறு இரவு பழி சோகம் அப்பிக்கொள்ளும். வெள்ளிக்கிழமை வரை எங்களோடு ஒட்டிக் கொண்டிருக்கும் உள்ளூர் தோழர் தோழிகளை சனி ஞாயிறுகளில் டூ விட்டு விடுவோம். ஒவ்வொரு முறையும் இந்த தடவை சேது வரும் வரை எப்படியாவது முழித்துக் கொண்டிருப்பது என்று நாங்கள் தீர்மானம் செய்வோம். ஆனால் அது நடக்காது. எட்டரை மணி ஆனதும் என் தலையாட்டம் ஆரம்பித்துவிடும். மாலு அடிக்கடி மூஞ்சி அலம்பி விட்டு என்னை கவலையாக பார்ப்பாள். தாத்தாவின் ரயில் வண்டி புகை மாதிரியான தொடர் திட்டுகள் ஆரம்பித்து விடும். 'போடு லெட்டரை. உகான்டாவுக்கு அனுப்பு இந்த வானரங்களை. கல்யாணம் பண்ணி விட்டாச்சு. கடமை முடிஞ்சுது. எனக்கெதுக்கு இந்த தலைவலி?' என்று ஆரம்பித்துவிடுவார். மாலு விறுக் விறுக்கென்று என்னையும் இழுத்துக் கொண்டு தேரடி பஸ் ஸ்டாப் வரை நான்கைந்து முறை போய் வருவாள். 'எனக்கு தூக்கம் வர்றதுடி' என்று நான் நச்சரிக்க ஆரம்பிப்பேன். தூரத்தில் தெரியும் ஒவ்வொரு இரட்டை வெளிச்ச புள்ளிகளையும் காண்பித்து அதுதான் சேது வரும் பஸ் என்பாள். ஆனால் அது அதுவாக இருக்காது. கடைசியில் வெறுத்துப்போய் என் பிடுங்கல் தாங்காமல் வீட்டுக்கு வந்துவிடுவோம். இத்தனைக்கும் பத்து மணிகூட ஆகியிருக்காது. சொல்லி வைத்த மாதிரி ஒவ்வொரு தடவையும் எங்கள் தலை சாய்ந்த பிறகே மாமா வருவாராம். 'பேய் மாதிரி ராத்திரி பதினோரு மணிக்கு என்னடா சாப்பாடு? செங்கல்பட்டுலேயே சாப்புட்டு வரக் கூடாது. இதே வழக்கமாப் போச்சு. அதுகள் அஞ்சு நாள் அடிக்கற லூட்டிய தாங்கமுடிலைன்னா, இவனும் அதுகளோட சேர்ந்துக்கிட்டு...' என்ற தாத்தாவின் கீறல் விழுந்த பிளேட்டை எங்களை மாதிரியே மாமாவும் சட்டை செய்யமாட்டாராம். விடிகாலையில் அரைத் தூக்கத்தில் நான் காலை தூக்கி போடவும் அதில் மாமாவின் ஸ்பரிஸம் புரியும். 'சேது' என்று விழி அகல ஆச்சர்யப்பட்டு மாமாவை கட்டிக் கொள்வேன். அந்த சந்தோஷத்திலேயே ஒரு பத்து நிமிஷம் குட்டித் தூக்கம் போடுவேன். ஒவ்வொரு முறையும் நாங்கள் 'சேது' என்று  உரக்க சப்தமிட்டுக் கூப்பிட 'அவன் முழங்கால் அளவு கூட இல்லை, என்னவோ இதுக பேரு வச்சமாதிரி சேதுன்னு கூப்பிடறதுக. டேய்! மாமான்னு சொல்லணும் புரிஞ்சுதா' என்று பாட்டி எவ்வளவோ சொல்லியும் நாங்கள் கேட்டதே இல்லை. அஞ்சரை அடி ஒல்லிப்பிச்சான் சேது எங்களோடு பழகும் போது மூன்றடி சிறுவனாகிப் போய்விடுவார். வார நாட்களில் வீட்டுக் கொல்லையிலேயே பல் தேய்ப்பது, குளிப்பது என்றால் சனி ஞாயிறுகளில் எங்களுக்கு எல்லாம் மண்ணியாற்றில்தான். மாமா ஒரு துண்டை எடுத்து முண்டாசு கட்டிக் கொள்வார். இடுப்பு வேட்டியில் பிரஷ், பேஸ்ட், சோப்பு டப்பா வகையறாக்களை முடிந்து கொண்டு எனக்கும் ஒரு சின்ன முண்டாசு கட்டி விடுவார். 'சேது. சங்கரை அழைச்சிகிட்டு போ. மாலு வேண்டாமே' என்று பாட்டி சொல்லிக் கொண்டே இருப்பாள். 'போ பாட்டி. முடியாது. நானும் போவேன்' என்று மாலு எங்களுக்கு முன்னால் கிளம்பிவிடுவாள். தெரு தாண்டும் வரைதான் அமரிக்கையாக வருவாள். செல்லியம்மன் கோயில் வந்ததும் அவளும் ஆம்பிளை காமாட்சி ஆகிவிடுவாள். கலியமூர்த்தி கடையில் இரண்டு வாடகை சைக்கிள் எடுத்துக் கொள்வோம். மாமா என்னை டபுள்ஸ் ஏற்றிக் கொள்ள மாலு இன்னொரு சைக்கிளில் வருவாள். மண்ணியாற்றில் ஒரு மூலையில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். அரையடி ஆழ தண்ணீரில் எதிர்பக்கமாக தடதடவென ஓடி பொத்தென்று விழுவோம். கண்கள் சிவந்து போகும் வரை கைகால்கள் பரப்பி மல்லாந்து படுத்துக் கொண்டு தண்ணீரில் ஊறிக் கொண்டிருப்போம். குளித்து கரையேறியதும் கரையோரம் வந்து இடுக்குகளில் ஒளிந்திருக்கும் தண்ணீர் பாம்புகளை சீண்டுவோம். மாமா பாம்பின் தலை எந்த பக்கம் இருக்கிறது என்று பார்த்துக் கொண்டு வால் பக்கம் குத்துவார். பாம்பு சீற்றத்தோடு வெளியே வரவும் கவட்டை மாதிரி இருக்கும் குச்சியால் தலையை அமுக்கிவிடுவார். சரண்டர் ஆன பாம்பின் வால் சரசரவென வெளியே வரும். நிதானமாக வாலை பிடித்து தீபாவளி பட்டாசில் சாட்டையைப் பிடிப்பது மாதிரி தூக்கிப் பிடிப்பார். அது ஸ்ப்ரிங் ஆக்ஷனில் சுழன்று சுழன்று வாயை பிளக்கும். நான் பயந்து ஓடுவேன். ஆனால் திரிதண்டி மாலு கொஞ்சமும் பதட்டப்படாமல் மாமாவின் தைரியத்தில் கொஞ்ச நேரம் பிடித்துக் கொண்டு என் பக்கம் ஆட்டுவாள். மாமா ஒரு வீர விளையாட்டுக்காக பாம்பைப் பிடிப்பாரே தவிர அதைக் கொல்ல மாட்டார். மறுபடியும் தண்ணீரில் வீசி எறிந்து விடுவார். அது தண்ணீரில் எஸ் போட்டுக் கொண்டே போவது வேடிக்கையாக இருக்கும். ஆற்றங்கரைக்கு பக்கத்திலேயே நிறைய மாந்தோப்புகள் உண்டு. மாமாவும் மாலுவும் வேலியைப் பிரித்து தோட்டக்காரனுக்குத் தெரியாமல் மரத்தில் ஏறுவார்கள். வடு மாங்காய்களைப் பறித்து ஆற்றில் வீசி எறிவார்கள். என் வேலை அதை பொறுக்கி வைத்துக் கொள்வதுதான். இத்தனைக்கும் அந்த தோட்டத்தின் முதலாளி மாமாவுக்கு தெரிந்தவர்தான். என்ன இருந்தாலும் திருட்டு மாங்காயின் ருசியே தனிதான்.    மாமாவுக்கு இயல், இசை நாடகம் எல்லாமே அத்துப்படி. எல்லாவற்றிலும் நகைச்சுவை கொஞ்சம் தூக்கலாக இருப்பதுதான் ஸ்பெஷாலிடி. மாமாவுக்கு நல்ல சங்கீத ஞானம் உண்டு. லேட்டஸ்ட் சினிமா பாடல்களை சுருதி சுத்தமாக பாடிக் காட்டுவார். வேடிக்கைக்கு சோகப் பாடல்களை டப்பாங்குத்து மெட்டில் பாடி எங்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். சினிமா கதை சொன்னால் முதல் எழுத்து போடுவதில் ஆரம்பித்து சீன் பை சீனாக பிஜிஎம்மோடு சொல்வார். நம்பியார் அப்படி திரும்பிப் பார்ப்பார், 'டண்ட்ர டைன்' என்று ம்யூசிக் எஃபக்டோடு சொல்லும் போது நாங்கள் நம்பியாரையே நேரில் பார்ப்போம். பைட் சீன் சினிமாவில் பத்து நிமிடங்கள் வந்தால் மாமா குறைந்த பட்சம் அதை மூன்று நிமிடங்களுக்கு குறையாமல் 'எம்.ஜி.ஆர். இப்படி கையை மடக்கி குத்து விட்டார். ஜெஸ்டின் அப்படி உருண்டு விழுந்தான்' என்று விளக்கிச் சொல்வார். அவர் சொல்லச் சொல்ல என் கை மற்றும் முக பாவனைகள் அதற்கு ஏற்ற மாதிரி போகும். மாலுவும் நானும் சண்டை போட்டுக் கொள்ளும் போது கூட அந்த உத்திகள் வெளிப்படும். அதே மாதிரி மாமா தான் அமர்சித்ரகதாவில் படித்த டூப்டூப் முதலை, சமடாகா நரி, காலியா காக்கை பற்றிய கதைகள் சொல்லும் போது முகத்தில் ஏக சேஷ்டைகள் செய்து சொல்வார். திருப்பனந்தாளில் பச்சைக் காளி பவழக் காளி திருவிழா நடக்கும். பச்சையிலும் சிவப்பிலும் பெரிது பெரிதாக முகமூடிகளை கட்டிக் கொண்டு நடு ரோட்டில் நடனம் ஆடிக் கொண்டு காளிகள் வரும். அந்த வாரம் எங்களுக்கு மாமா பச்சைக் காளி பழவக்காளி டான்ஸ் ஆடி காட்டுவார். அதற்கும் வாயாலேயே 'டன்டனக்கா, டன்டனக்கா' என்று ம்யூசிக் போட்டுக் கொள்வார். அப்போதெல்லாம் சினிமாவில் ட்விஸ்ட் நடனம் ரொம்பவும் பாபுலர். ஒரு முறை மாலு அது மாதிரி எப்படி ஆடுவது என்று கேட்டு வைக்க, மாமா எளிதாக கற்றுக் கொடுத்தார். 'ரொம்ப சிம்பிள். மாலு. தையல் மிஷினில் டைலர் துணியை தள்ளுவது பார்த்திருக்கிறாயா? அதே மாதிரிதான் இதுவும்' என்று சொல்லி அதே மாதிரி செய்து காட்டுவார். இதை நான் என் ஸ்கூலில் அபிநயம் செய்து ஹெட்மாஸ்டரிடம் பேர் வாங்கினேன். மாமா சீட்டுக் கட்டில் பல பிரமிக்கதக்க விளையாட்டுக்கள் செய்வார். அதில் சில விளையாட்டின் சூட்சுமங்களை சொல்லியிருக்கிறார். அது தெரிந்ததும் சே! இவ்வளவுதானா என்று தோன்றும். சிலவற்றுக்கு எவ்வளவு கெஞ்சியும் சொல்ல மாட்டார். 'வேண்டாம் சங்கர். சில ரகசியங்கள் ரகசியங்களாகவே இருக்கட்டும். அப்பத்தான் அதுக்கு மதிப்பு' என்பார். அதில் முக்கியமான விளையாட்டு இன்னும் ஞாபகம் இருக்கிறது. சீட்டுக் கட்டிலிருந்து பத்து கார்டுகளை எடுத்து தான் பார்த்துவிட்டு பத்து பேர்களிடம் கொடுப்பார். பத்து பேர்களும் அவர் சொன்ன இடத்தில் நிற்க வேண்டும். தங்கள் கார்டை இன்னொருவரிடம் எத்தனை முறை வேண்டுமானலும் யாரிடமும் மாற்றிக் கொள்ளலாம். பத்து பதினைந்து பரிவர்தனைகளுக்கு பிறகு மாமா யாரிடம் என்ன கார்டு இப்போது இருக்கிறது என்று சரியாக சொல்வார். அது எப்படி சாத்தியம் என்று இன்று வரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 'ரொம்ப சிம்பிள் சங்கர். என்னென்னு தெரிஞ்சா ஒண்ணுமேயில்லை' என்பார். மாலு பெரியவள் ஆனதும் தாத்தாவின் நச்சரிப்பு அதிகமானது. அந்த சமயத்தில் அப்பாவுக்கும் இங்கிலாந்துக்கு டிராண்ஸ்பர் ஆனது. எங்கோ ஒரு பலவீனமான சந்தர்பத்தில் பாட்டி ஏதோ யாரிடமோ சொல்லப்போக அதற்கு கைகால் முளைத்து வேறு விதமாக என் அப்பாவுக்கு போய் சேர்ந்தது. அதன் பலன் ஒரே வாரத்தில் நாங்கள் திருப்பனந்தாளிலிருந்து பிடுங்கப்பட்டு லண்டனில் நடப்பட்டோம். மாலு சமாளித்துக் கொண்டாள். நான்தான் ரொம்ப கஷ்டப்பட்டேன். அதைப்பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. பெரியவர்கள் போட்ட யுத்த சத்தத்தில் எங்கள் மாமா கோவில் குளத்தில் கரைத்த வெல்லம் மாதிரி காணாமல் போனார். மாலு கல்யாணம் ஆகி ஹாம்பர்க் போனாள். நான் படிப்பை முடித்ததும் நாரதர் மாதிரி திரிலோக சஞ்சாரி ஆகி தற்போது சிட்னியில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன். இப்போது மாலுவுக்காகக் காத்திருக்கிறேன். சொல்லி வைத்த மாதிரி மாலு வெள்ளி இரவு வந்தாள். படபடவென திருப்பனந்தாள் போக எல்லா ஏற்பாடுகளும் செய்தாள். சென்னை போய் டூரிஸ்ட் டாக்சியில் அமர்ந்து தாம்பரம் தாண்டியதும் மாமாவைப் பற்றிய அதிர்ச்சியான விஷயங்களை சொல்ல ஆரம்பித்தாள். என்னால் நம்பவே முடியவில்லை. "ஏன் மாலு. மாமா கல்யாணமே பண்ணிக்கலை. மாமாவுக்கு இப்ப 60 வயசு இருக்குமா?" "இருக்கும். சிரிக்கச் சிரிக்க பேசறவங்க பின்னாடி ஒரு சோகம் இருக்கும்னு சொல்வாங்க இல்லையா? அது மாமாவுக்கும் ஒட்டிக்கிடுச்சுன்னு நினைக்கிறேன். மாமாவுக்கு குழந்தை மாதிரி வெள்ளை மனசுடா. வெள்ளந்தியா எல்லாகிட்டையும் பழகுவாரு. அதுவே அவருக்கு பல சமயங்கள்ல பலவீனமா போயிருக்கு. ஒரு பொண்ணை உயிருக்கு உயிரா காதலிச்சாராம். அது அவரை ஏமாத்தின அதிர்ச்சியை அவரால தாங்க முடியலையாம். ஒரு வழியா சமாளிச்சு எழுந்து நின்னவரை பிசினெஸ் பண்ணலாம் வான்னு சொல்லி அவரோட ஒரு சில நண்பர்களே அவரை கவுத்துட்டாங்களாம். இதெல்லாம் நடந்து இருபது வருஷத்துக்கும் மேல ஆயிருக்குது. திடீர்னு ஒரு நாள் மாமா ஊரை விட்டு ஓடிப் போய் எங்கேயோ கண்கணாத இடத்தில இருந்தாராம். போன வருஷம்தான் ஏதோ கொஞ்ச காசு பணம் சேர்த்துக்கிட்டு ஊருக்கு திரும்பி வந்திருக்கிறாராம். சொல்லிக்கிற மாதிரி இல்லையாம். ஒரு வாடகை வீட்டிலே இருக்காராம். இதெல்லாம் நம்ப அப்பா அம்மாவுக்குத் தெரிஞ்சிருக்குடா. நம்ம கிட்டே சொல்லவே இல்லை. எனக்கு போன வாரம்தான் தெரிஞ்சுது. ஆடிப் போய்டேன்டா." மாலு அழ ஆரம்பித்தாள். டிரைவர் திரும்பி பார்க்கவும் கொஞ்சம் நாசூக்காக குறைத்துக் கொண்டாள். ஒரு தலைகாணியை எடுத்து வயிற்றில் கட்டிக் கொண்டு, பொட்டலம் கட்டுவது போல பேப்பரை கூம்பு மாதிரி சுருட்டி தலையில் குல்லாவாக வைத்துக் கொண்டு, 'ஜின்ஜினுக்கான் சின்னக்கிளி, சிரிக்கும் பச்சைகிளி' என்று பஃபூன் மாதிரி ஆட்டம் ஆடின சேதுதான் மனதில் வந்து போனார். அவருக்கு இப்படி ஒரு நிலைமையா? திருப்பனந்தாள் வந்ததும் மாமாவை இதுதான் அந்த சேது என்று அடையாளம் காண வெகு நேரம் ஆயிற்று. அதை வீடு என்று கூட சொல்ல முடியாது. பத்துக்கு பத்து ஒரு ஷெட் என்றுதான் சொல்ல வேண்டும். சுத்தமாக ஓட்டையாண்டி. எங்களுக்கு டீ வாங்கிக் குடுக்க காசுக்கு தடுமாறினார். கூடு விழுந்த கண்கள். அழுக்கான தாடி. இரும ஆரம்பித்தால் சங்கிலியாக ஐந்து நிமிடங்களுக்கு குறைவில்லாமல் இருமினார். கைகள் நடுங்கின. எங்களைப் பார்த்ததும் கூட்டம் கூடி விட்டது. எல்லோரும் கோரஸாக 'நீங்கள் கூட்டிக் கொண்டு போய்விடுங்கள்' என்று சொன்னார்கள். மாமா ரொம்பவும் முரண்டு பிடித்தார். அதிர்ச்சியில் உறைந்து போய் பேச்சற்றுப் போன நான் ஏதோ ஒரு வேகத்தில் மாமாவை தரதரவென காரை நோக்கி இழுத்து வந்தேன். பின் கதவைத் திறந்து நின்ற டிரைவர் கூட அசூயையாக பார்த்தான். மாமாவை உள்ளே தள்ளி 'வண்டியை எடு' என்று சத்தம் போட்டேன். அடுத்த சில நிமிடங்களில் மாலு அங்கு உள்ள எல்லா கணக்குகளையும் செட்டில் செய்தாள். வண்டி அணைக்கரையைத் தாண்டும் வரை நாங்கள் இருவரும் பேச்சற்று இருந்தோம். பிறகு எனக்குதான் பேச தைரியம் வந்தது. “என்ன ஆச்சு மாமா? ஏன் இப்படி? எங்ககிட்ட சொல்லியிருக்கலாம் இல்லையா ? " மாமா கண்ணை மூடிக் கொண்டார். "சங்கர், சில விஷயங்கள் ரகசியங்களாகவே இருக்கட்டுமே. விட்டுடேன்" மாமாவின் மூடிய கண்களிலிருந்து நீர் கோடாக இறங்கிக் கொண்டிருந்தது. (ஆனந்த விகடன் -  06 பிப்ரவரி 2008)     2. எருமை சவாரி   'எச' ராமசாமியை நான் சந்திப்பேன், அதுவும் நான் பயணித்துக்கொண்டிருக்கும் விமானத்தின் பைலட்டாக அவன் இருப்பான் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அந்த ஒல்லி குச்சி ஏர் ஹோஸ்டஸ் என்னை நோக்கி வந்தாள். பவ்யமாக குனிந்து கொழ கொழ ஆங்கிலத்தில் புரிந்ததும் புரியாதுமாக என் சொந்த ஊர், பள்ளிப் படிப்பை பற்றி விசாரித்தாள். பிறகு தன் ஸாட்டின் உள்ளங்கையால் என் கைகளை ஆராதித்து விட்டு, கேப்டன் டி.ஜி.ராம்சே உங்களை சந்திக்க ஆவலோடு இருக்கிறார் என்றாள். 'பத்து நிமிடங்கள் பொறுங்கள். உங்களுக்கு அழைப்பு வரும்' என்று சொல்லிவிட்டு போனாள். அந்த நிமிடங்கள் போதும், என்னை பற்றி சொல்வதற்கு. அதற்கு வசதியாக கொஞ்சம் தரைக்கு வருவோமா? நான் ப்ளூ க்ராஸ் ராகவன் என்று மரியாதையோடும், மாட்டு சாணி, பூனை மூத்திரம், கொக்கு, குரங்கு, ஈ, கொசுக்களோடு வசிப்பவன் என்று வசையோடும் அழைக்கப்படுபவன். அதைப் பற்றி நான் கவலைப் படவில்லை. என் கவலையெல்லாம் இந்த உலகத்தின் ஏகபோக உரிமை மனிதனுக்கு மட்டுமே இருக்கிறதே என்பதுதான். நகரம், மனித சுயநலத்தின் மொத்த உருவம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். சென்னை நுங்கம்பாக்கம் சாலையில் ஒரு பென்ஷனர் இடமிருந்து வலமாக சாலையை கடக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த மூலையில் அவர் இருக்கும் போது பென்ஷனாக இருக்கும் அவரது ஃபைல், அவர் அந்தப் பக்கம் போய் சேரும்போது ஃபாமிலி பென்ஷனாகிவிடும். அந்த அளவுக்கு பாதசாரிகளை துச்சமாக மதிக்கிறார்கள், நம் வாகன ஓட்டிகள். இதில் அற்ப ஜந்துக்களான நாய்களுக்கும் மாடுகளுக்கும் எங்கே இடம்? ஏது மரியாதை? என் அவசரமும் வேகமும் என்னது, உன் விதியும் உயிரும் உன்னது என்பதாகப் போய்விட்டது. நாய் மட்டும் ஏதோ ஓரளவுக்கு நகரசாலை போக்குவரத்தைப் புரிந்து வைத்துக் கொண்டுள்ளது என்று சொல்லலாம். அந்தப் பக்கம் போகும் வரை உயிருக்கு க்யாரண்டி இல்லை என்றாலும் கொஞ்சமாவது பதட்டப் பட வேண்டுமே? ம்ஹும். சிரித்த முகத்தோடு பொறுமையாக வாகன போக்குவரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும். டென்ஷன்! அது! இது! என்று ஆலாய் பறக்கும் அல்ப மானுடர்கள், அந்த திருமுகத்தைப் பார்தாலே போதும். அதில் மிகப் பெரிய மேலாண்மைத் தத்துவங்கள் உள்ளடங்கி இருக்கின்றன. ஓரக்கண்ணால் அப்படி இப்படியுமாக பார்த்துக் கொண்டே இருந்து, சில நொடிகளுக்கு வாகனங்கள் வருவது குறையும்போது 'விலுக்கென்று' ஒரு பாய்ச்சலில் அந்தப் பக்கம் வந்துவிடும் அந்த அதி புத்திசாலி ஜந்து. அந்த மாதிரி வெற்றி நிகழ்சிகளை கண்டு களித்த நான், 'அறிவார்ந்த நாய் அவர்களே! நீவீர் அடுத்த ஜன்மம் என்று ஒன்று இருந்தால், புத்திசாலி மனிதனாக பிறப்பீராக. எத்தனை ஹார்ன் அடித்தாலும் அதை கிஞ்சித்தும் மதிக்காது அன்கண்டுகபிளாக இருக்கும் அற்ப மனிதர்கள் மண்டு நாய்களாக பிறந்து நகரத் தெருக்களில் லோல் படுவார்களாக' வரமும் சாபமும் அளித்திருக்கிறேன். பாவம் ஆடுமாடுகள்! எங்கேயாவது ஹைவேயில் கூட்டம் கூட்டமாக போய் கொண்டிருக்கும். தன் சுயநல தேவைகளுக்காக ஓடிஓடி சம்பாதிக்க மனிதன் போட்டிருக்கும் ராஜ பாட்டையை நாம் அடைத்துக் கொண்டு போகிறோம் என்று நினைவே இல்லாமல் இருக்கும் முட்டாள் ஜீவன்கள் அவை. புழுதி பறக்கும் அந்த காட்சியை பார்த்த மாத்திரத்திலேயே நம் வாகன ஓட்டிகளுக்கு பொறுமை போய்விடும். காதே கிழிந்து போகும் அளவுக்கு ஹார்ன் அடிப்பார்கள். அமெரிக்கையாக சென்று கொண்டிருந்தவைகளை மிரள வைத்து அங்கும் இங்கும் ஓட விடுவார்கள். மாட்டு இடையனை காது கூசும் அளவுக்கு திட்டித் தீர்ப்பார்கள். நான் மட்டும் அந்த காலத்து ராஜாவாக இருந்து இவர்கள் என் கண்களில் பட்டால் ஒரே ஒரு அமுக்கு அமுக்கி கழுமரத்தின் கூர்முனையை அவர்களின் ஆசனவாய் சந்திக்க வைத்திருப்பேன். நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் தஞ்சாவூருக்கு பக்கத்தில் வெட்டாற்றங்கரையில் இருக்கும் ஒம்பத்து வேலி எனப்படும் இயற்கை எழில் கொஞ்சும் குக்கிராமம். ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன், தவளை, வாத்து, பாம்பு, பல்லி, எலி, புறா, குரங்கு, நாய், கிளி, மைனா, வண்ணத்துப் பூச்சி, மண்புழு என்று விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகள் என்ற சூழலில் பிறந்து வளர்ந்திருக்கிறேன். எனவேதான் நகரத்தின் வாழ்வுரிமையில் அடிக்கடி முரண்பட்டுப் போகிறேன். இன்றைக்கு ஒம்பத்து வேலியில் பட்டணத்து பவுடர்கள் ஆங்காங்கே தென்பட்டாலும், கிராமமும் மக்களும் இன்னும் நகரம் அளவுக்கு மோசமாகிவிடவில்லை. நானும் 'எச' ராமசாமியும் வாழ்ந்த அந்த இளமை பள்ளிப் பருவம் எங்களின் பொற்காலம். எதிர் வீடுதான் அவன் வீடு. வாய் பேசாத ஜீவன்களோடு எங்களுக்கு தொடர்பு மூன்று வயதிலேயே எற்பட்டது. எங்கள் வீட்டு காமாட்சி கன்று ஈன்றதைப் பார்க்க என் அம்மா விடாவிட்டாலும் கட்டை சுவர் ஏறி மரத்துக்கு தாவி தூரத்திலிருந்து பார்த்தோம். அவனை முசுகட்டை கடித்து கைகால்கள் கண்டு கண்டாக வீங்கியது ஒரு தனி கதை. பசுவும் கன்றும் என்று ஆரம்பித்த எங்களது இனிய பொழுது போக்குகள் நாளுக்கு நாள் விரிவடைந்தன. துள்ளிக் குதிக்கும் கன்றை நான் வெளியே அழைத்து வந்தால் அனைத்து பால்ய கூட்டமும் கூடிவிடும். கன்று மண் தின்று விடக் கூடாது என்பதற்காக ஒரு ஓலைக் குவளையை அதன் வாயில் கட்டியிருப்பார்கள். அதை ஒரு முறை ராமசாமி எடுத்து வந்து அவன் வாயில் கட்டிக் கொண்டு கன்றுக் குட்டி மாதிரி குதிக்க அவன் அம்மாவிடம் மொத்து வாங்கினான். ராமசாமி சும்மாவே இருக்க மாட்டான். படுத்திருக்கும் காமாட்சியின் கழுத்தில் இரண்டு கால்களையும் போட்டுக் கொண்டு அதன் மேல் உதடுகளை இரண்டு பக்கமும் உயர்த்தி 'ஈ' என செய்ய வைப்பான். தன் குட்டி வாலை சுழித்துக் கொண்டு ஓடும் பன்றிக் குட்டிகளை ஓட ஓட விரட்டுவான். உடம்பு முழுக்க துணியை சுற்றிக் கொண்டு நாவல் பழ மரம் ஏறி கிளிக் குஞ்சை பிடித்து வருவான். மழைக் காலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் நீட்டிக் கொண்டிருக்கும் மண்புழுக்களை வெடுக்கென பிடிப்பான். அதற்காக நானும் அவனும் கட்டிப்புரண்டு சண்டை போட்டிருக்கிறோம். அவன் வண்ணத்துப் பூச்சி பிடித்து வந்தால் நான் அவன் கதறக் கதற வெளியே விட்டு விடுவேன். அதே நேரத்தில் தேனடை எடுக்கப் போய் குளவி கொட்டி வந்தால் நான் தான் அவனுக்கு வெங்காயம் தேய்த்து விடுவேன். இரட்டை மாட்டு வண்டி ஓட்டுவது என்பது மனதைக் கொள்ளை கொள்ளும் இனிய அனுபவம். ராமசாமிக்கு நான்தான் ஸ்டியரிங் பிடிக்க கற்றுக் கொடுத்தேன். வலது பக்கமாக திரும்ப வேண்டுமென்றால், முதலில் வலது மாட்டின் மூக்கணங்கயிறை இழுத்துப் பிடிக்க வேண்டும். அது நின்று விடும். பிறகு இடது மாட்டின் கயிறை லூசாக விட்டு அதன் பின்பகுதியை இடது பக்கமாக தள்ளினால் அது திரும்ப ஆரம்பிக்கும். மறு நாளே ராமசாமி வண்டி ஓட்டக் கற்றுக் கொண்டுவிட்டான். 'இங்கே பார். நான் ஹை ஸ்பீட் டிரைவிங் காட்டுகிறேன்' என்று சொல்லி இரண்டு மாடுகளின் கால்களுக்கு நடுவே அவன் கால்களை விட்டு ஒரு மாதிரியாக உராய, மாடுகள் பிய்த்துக் கொண்டு ஓடின. இன்றைக்கும் எனக்கு நகைச்சுவை மேலோங்கி இருப்பதற்குக் காரணம் ராமசாமி. ராமசாமியின் ஆசை வண்டி மாட்டு சவாரியோடு நிற்கவில்லை. எருமை மாட்டின் மீது உட்கார்ந்து கொண்டு போக வேண்டும் என்ற பேராவல் அவனுக்கு திடீரென வந்து விட்டது. எங்கள் வீட்டில் எருமை மாடு கிடையாது. ஒத்தைத் தெரு கலியமூர்த்தி வீட்டில்தான் இருக்கிறது. எருமை மாட்டின் மீது உட்காருவது மிக மிக அசௌகர்யமானது. எங்கும் பிடிமானமே இருக்காது. முதுகு எலும்பு கொஞ்சம் உறுத்தும். தவிர, எருமைகள் சோம்பல் சாவடிகள். நகரவே பத்து நிமிடங்கள் யோசிக்கும். நாங்கள் அவைகளை 'பிரேக் இன்ஸ்பெக்டர்கள்' என்று அழைப்போம். ராமசாமியின் அதீத ஆசையை கலியமூர்த்தி லேசில் ஒத்துக் கொள்ளவில்லை. ஒரு மாதிரியாக அவரை சமாளித்து ராமசாமியை சிவன் கோயில் தேரில் ஏற்றுவது மாதிரி ஏற்றிவிட்டேன். ராமசாமி உருண்டையாக கொஞ்சூண்டு இளைத்த பக்கோடா காதர் மாதிரி இருப்பான். அவனது சவாரி முயற்சிகள் எருமைக்கே பிடிக்கவில்லை. தலையை ஆட்டியும் பின்பக்க கால்களை உதைத்தும் தன் எதிர்ப்பை பதிவு செய்தது. மாப்பிள்ளை கார் மாதிரி நகர்ந்து கொண்டிருந்த எருமையை ராமசாமி என்ன செய்தான் என்று தெரியவில்லை. திடீரென நாலுகால் பாய்ச்சலில் ஓட ஆரம்பித்தது. எருமை ஓடினால் பயங்கரமாக இருக்கும். விஷயம் கைமீறி போய்விட்டது. கலியமூர்த்தி கத்திக் கொண்டே பின்னால் ஓடி வந்து கொண்டிருந்தார். எருமையின் கழுத்து பகுதிக்கு வந்து முன்னே சரிந்தவனை அது ஒரு உதறு உதற தலை குப்புற விழுந்தான். எருமையின் 'பேக் வீல்' அவன் தொடையை சரியாக பதம் பார்த்துவிட்டது. அன்றிலிருந்து ராமசாமிக்கு 'எருமை சவாரி' என்ற அடைமொழி சேர்ந்து கொண்டது. விமானத்தில் அடிக்கடி போயிருந்தாலும் காக்பிட்டுக்குள் போகும் சந்தர்ப்பங்கள் வந்ததில்லை. எருமை சவாரி ராமசாமி.. இல்லை... கேப்டன் டி.ஜி.ராம்சே அந்த புண்ணியத்தைக் கட்டிக் கொண்டார். என்னைப் பார்த்ததும் ராம்சே 'எச' ராமசாமி ஆகிப் போனான். நிறைய பேசினோம். "டேய். அன்னிக்கு எருமை சவாரி செஞ்சே. இப்ப ஆகாச எருமை, அதான் அலுமினிய எருமைய மேய்க்கிற. எப்படிடா இருக்கு." "அடப் போடா. எருமை சவாரில இருக்கிற த்ரில் இதுல சுத்தமா இல்ல. இது வேகமா போனாலும் அந்த எருமையை விட மோசம். டேக் ஆஃப் செஞ்சு, எலக்ட்ரானிக் பாதையில பிக்ஸ் செஞ்சதும் எங்க வேலை முடிஞ்சிடும். டர்புலண்ஸ் வந்தாத்தான் வேலை. அதையும் இந்த எல்லா மெஷின்களூம் பார்த்துக்கும். ஏ.எல்.எஸ் வந்ததும் லாண்டிங் கூட ஈசியா போச்சு. ஒரு மாசத்துக்கு எல்லாத்தையும் மூட்டை கட்டி வைச்சிட்டு, ஒம்பத்து வேலிக்கு போய் எருமை சவாரி போகனும்டா. அது சரி, உன் ப்ளூகிராஸ் எப்படி இருக்கு." என் கவலையை கொட்டினேன். பூமியில் குறிப்பாக நகரங்களில் வாயில்லா ஜீவன்களுக்கு இடமில்லை என்பதை சொன்னேன். "ஆமா. முன்னல்லாம் காக்காய் குருவிகள் உட்கார டி.வி. ஆன்ட்டனாக்கள் மொட்டை மாடியில் இருந்துச்சு. கேபிள் டி.வி. வந்து அதுவும் போயிடுச்சு. இன்னும் கொஞ்ச நாள் போனா காக்காய்களையும் குருவிகளையும் நகர குழந்தைகள் ஜூலதான் பார்க்க முடியும் போலிருக்கு." ராம்சே அலுத்துக் கொண்டான். "நல்ல வேளை. உன் ஆகாயம் மட்டும்தான் இன்னும் பறவைகளுக்காக இருக்குது. இல்லைலேன்னா அதையும் ப்ளாட் போட்டு வித்து காசு பார்த்துடுவாங்க நம்ம மக்கள்." என்றேன். "அடப் போடா. எங்கள் உலகத்தில பார்டு ஹிட்னு ஒண்ணு இருக்குது. நாங்கள் தரை இறங்கும் சமயத்தில பறவைகள் எங்கள் பாதையில வந்துடக் கூடாது. பறவையோட அல்ப உயிரைவிட விமானத்தோட பாதிப்புதான் எங்கள் முதலாளிகளோட கவலையா இருக்கும். விமான இறக்கைகளில ஃபான் மாதிரி ஒண்ணு ஓடிக்கிட்டிருக்குமே, அதுல பறவைகள் சிக்கிக்கிட்டா அவ்வளவுதான். விமானம் மறுபடி பறக்கத் தயாராக நாட்கள் பிடிக்கும். என்கொயரியில ஆளுக்கு ஆள் குற்றம் சாட்டிப்பாங்க. ஏர்போர்டைச் சுத்தி பறவைகளே தென்படாதவாறு பார்த்துக்க ஒரு பெரிய டீமே வேலை செஞ்சுக்கிட்டு இருக்கு." "ஆமா. நமக்கு நெல்லு வேணும். ஆனால் பூச்சிகள் கூடாது. அடுக்கு மாடி வீடுகள் வேணும். ஆனா அங்க பாம்போ, பல்லியோ, பூரானோ, எலியோ வந்துடக் கூடாது. அதி வேக சாலைகள்  வேணும். அங்க தப்பித் தவறி மாடோ நாயோ குறுக்கே வந்துடக் கூடாது. விமானம் வேணும். பறவைகள் அங்க வந்து பறக்கக் கூடாது." "சுயநலம் பிடித்த மனிதர்கள் ஒழிந்து போவார்களாக" ரெண்டு பேரும் கோரஸாகச் சொன்னோம். விமானம் தரை இறங்க தன்னை தயார் செய்து கொள்ளஆரம்பித்தது. இந்தக் கதையின் கருவுக்கான தீப்பொறி..... 1. ரஜினிகாந்தின் புன்னகை ஒரு காட்டுப்பகுதியில் ரஜினி படத்தின் அவுட்டோர் ஷூட்டிங். ஒரு பாம்பு படப்பிடிப்பு பகுதியில் வந்துவிட யூனிட்டே அல்லோலப் பட்டிருக்கிறது. ஒருவர் ரஜினியிடம் வந்து பாம்பு வந்ததினால் படப்பிடிப்பு தடைபட்டுப் போய்விட்டது என்று அலுத்துக் கொண்டாராம். ரஜினியிடமிருந்து மெல்லிய சிரிப்பு வந்ததாம். காரணம் கேட்டதற்கு, 'பாம்பு அதன் இடத்திலேயேதான் இருக்கிறது. நாம்தான் அன்னியர்கள்' என்றாராம். 2. சிவகுமாரின் கோபம் சென்னை நாகேஸ்வரன் பார்க்கில் 'சித்தி' தொலைகாட்சித் தொடர் ஷூட்டிங். புல்லாங்குழல் ஊதிக் கொண்டிருக்கும் பார்வையற்றப் பிச்சைக்காரனாக எனக்கு சிறு வேடம். வாழ்கையின் விரக்தி விளிம்பில் சிவகுமாரும் சுபலேகா சுதாகரும் என்னைத் தாண்டி போவார்கள். என்னைப் பார்த்ததும் அவர்களுக்கு வாழ்க்கையில் போராடி ஜெயிக்க வேண்டும் என்ற உத்வேகம் வரும். இதுதான் ஸீன். இருவரும் நடந்து வந்து கொண்டிருக்கும் போது திடீரென ஒரு வால் சிறுவன் குறுக்கே ஓடினான். டைரக்டர் கத்தி விட்டார். சாது சிவகுமாருக்கு வந்ததே கோபம். 'டைரக்டருக்கு திருப்தி இல்லை என்றால் கட் சொல்ல வேண்டியதுதானே. இது அவர்கள் விளையாடி மகிழ்வதற்கான பொது இடம். இங்கு நாம்தான் குறுக்கீடு செய்தவர்கள். அப்படியிருக்க எதற்கு கத்த வேண்டும்.' என்று பொங்கித் தள்ளிவிட்டார். (ஆனந்த விகடன் - 06 ஜூன் 2007)   3. ஒரு பொண்ணு... ஒரு பையன்   ஃபோர்டு ஐகான் அதற்குறிய நான்கு மூலை மஞ்சள் கோட்டு எல்லைக்குள் இல்லாமல் கோணலாக நிறுத்தியதிலிருந்தே மாயாவின் மூடு சரியில்லை என்று தெரிந்து விட்டது. காலையில் படு பிரகாசமாக ஆபீஸ் போனவளுக்கு இப்போது என்ன வந்தது? யோசித்துக் கொண்டே லிஃப்ட் வரை போன ஸ்ரீநிவாசன் திரும்பி வந்தார். திகம்பர் சென்குப்தாவின் காரை கிட்டத்தட்ட முத்தமிட்டுக் கொண்டிருந்தது ஐகான். அந்த தடியன் முதலில் ரிவர்ஸ் எடுத்து அப்புறம்தான் திருப்ப முடியும். சென்டிமெண்டலாக அதற்கு அவன் ஒத்துக்கொள்ள மாட்டான். நாலு பேரை கூட்டி அமர்க்களம் செய்வான். கொஞ்சம் யோசனையோடு ஐகான் கதவில் கை வைக்க அது திறந்து கொண்டது. ஸ்டியரிங் கழுத்தில் சாவி! முன் ஸீட்டில் ஹேண்ட் பேக்! சே! என்ன பெண் இவள்! உள்ளே உட்கார்ந்து நிதானமாக ஸ்டார்ட் செய்து, கொஞ்சம் முன்னே போய் வலது பக்கமாக ஒடித்து திரும்பி வந்தார். குதிரையை அதன் லாயத்தில் சரியாக கட்டிவிட்ட திருப்தியில், காரை பூட்டி நிமிர வாட்ச்மேன் ராஜு நின்று கொண்டிருந்தான். கைகளில் சில கடிதங்கள். "ஐயா! இந்தாங்க." "ரொம்ப நன்றிப்பா. ஆமா, உன் பேத்தி உடம்பு இப்ப எப்படி இருக்கு? வயித்துப்போக்கு நின்னிடுச்சா ?" "முன்னைக்கு பரவாயில்லைங்க. முழுக்க குணமாக இன்னும் ரெண்டு நாள் ஆகுமுங்க. சமயத்தில நீங்க பணம் கொடுத்து உதவலைன்னா என் பேத்தி என்னிக்கோ போயிருக்குங்க. ரொம்ப நன்றிங்க." "சரிப்பா. பார்த்துக்க." நகர்ந்தவருக்கு, அவன் ஏதோ செல்ல தயங்குவதாகப் பட்டது. "என்னப்பா? இன்னும் ஏதாவது சொல்லணுமா? "ஒண்ணுமில்லீங்க. அது வந்துங்க. இந்த கடுதாசுகள உங்க பொண்ணு வந்தப்ப அவங்ககிட்டே கொடுக்கலாம்னு போனேன்.  என்னவோ ரெண்டு வார்த்தை இங்கிலீசுல திட்டிபுட்டு போயிடுச்சுங்க. ரொம்ப கோவமா இருக்காங்க போல. வந்து அரை மணி ஆவுது. போய் சமாதானம் செய்யுங்க." ஸ்ரீநிவாசன் கொஞ்சம் கவலையுடன் லிஃப்ட் கதவை சாத்தி நாலாவது மாடி பட்டனை அழுத்தினார். எதிர்ப்பார்த்த மாதிரியே வாசல் கதவு 30 டிகிரி கோணத்தில் திறந்திருந்தது. உள்ளே வெளிச்சமில்லை. ஹால் விளக்கை போட்டார். அமைதியோ அமைதி. பிரம்பு கூடை ஊஞ்சலில் செல் குப்புற கிடந்தது. எடுத்துப் பார்த்ததில் உயிரற்று இருந்தது. வேறென்ன? தீபக்கோடு சண்டை போட்டிருப்பாள். அவன் போன் வரக்கூடாது என்று ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்திருக்கிறாள். காதலிக்கும் போதே இவ்வளவு சண்டை என்றால் ஜனவரிக்கு அப்புறம் எப்படி இருக்கப் போகிறதோ? பாவம் தீபக். கொஞ்சம் சிரிப்பு வந்தாலும் அது சரியா என்ற கேள்வி உள்ளே எழுந்தது. சிவப்பு புள்ளியோடு மௌனமாக இருந்த டி.வியின் ஸ்விட்சை ஆஃப் செய்தார். இறைந்திருந்த சி.டிக்களை ஒரளவுக்கு அடுக்கி வைத்தார். மாயாவுக்கு ஜக்ஜித் சிங்/சித்ரா சிங் கஸல் பிடிக்கும். அவர் தேடிய சி.டி. எளிதாக கிடைத்தது. டி.வி.டியின் ரிமோட்டை அமுத்த டி.வி.டி. தன் தவளை நாக்கை நீட்டி, ஜக்ஜித் சிங்கின் கஸலை உள் வாங்கிக் கொண்டது. 'சிட்டி ந கொயி சந்தேஸ்' என்று தொடங்கும் பாடல். ஒரு கடிதமோ எந்த தகவலோ இல்லாமல் நீ எங்கே போய்விட்டாய் என்று ஜக்ஜித் சிங் உயிரின் உயிராக மெல்லிய குரலில் உருக ஆரம்பித்தார். காலில் இடறிய மஞ்சள் நிற மூடியை எடுத்து நோட்டம் விட்டதில் டைனிங் டேபிள் மேல் திறந்து கிடந்த டொமேட்டோ கெச்சப் பாட்டில் நீ தேடும் வஸ்து நான்தான் என்றது. மூடியை திருகி ஃப்ரிட்ஜில் வைத்தார். சுருட்டி வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் பாதி பீட்ஸா இருந்தது. அதைத்தவிர சாப்பிட எதுவும் இல்லை. பசிக்கு எதையாவது சாப்பிட்டு வைக்க வேண்டும். மாயா எழுந்து வருவதாக தெரியவில்லை. ரூம் கதவை லேசாக தள்ளியதில் ஜில்லென்ற ஏ.சி.காற்று தாக்கியது. மரவட்டை மாதிரி உடம்பை குறுக்கி சுருண்டிருந்தாள். சண்டை போட்டுவிட்ட களைப்பில் தூங்கி போயிருக்கலாம். கதவை திறந்து தெரியாமல் மெதுவாக சாத்தினார். இன்றைய பிரச்னையை சமாளிப்பது பெரிய சவாலாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. நாலு வயசில் இவளை கையில் ஒப்படைத்து விட்டு போய் சேர்ந்துவிட்ட உஷாவை அப்படியே ஞாபகப்படுத்துகிறாள். அவளும் அப்படித்தான். பழியாய் சண்டை போடுவாள். ஆனால் அடுத்த கணமே இரண்டு மடங்கு அன்பை பொழிவாள். எல்லா சண்டையிலும் கணவனை ஜெயித்தவள், கடைசியில் ஒரு கான்சர் நோயிடம் போராடி தோற்றுப் போனாள். சமையல் அறைக்கு வந்து எதேச்சையாக குப்பை கூடையை எட்டிப் பார்த்ததில் அதில் சோனு நிகம் இசைக்கச்சேரியின் டிக்கெட்டுகள் நாலாக கிழிந்து கிடந்தன. இன்று மாலைக்கான நிகழ்ச்சி! புரிந்து விட்டது. ஒரு வாரமாக இந்த நிகழ்ச்சியை பற்றியே பேசிக் கொண்டிருந்தாள். கடைசி நிமிஷத்தில் தீபக் வரமுடியாமல் போயிருக்கலாம். உடனே இவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்திருக்கும். தீபக் எதிர் பிளாக்கில் இருக்கிறான். சட்டையை போட்டுக் கொண்டு யோசித்தவாறே படியிறங்கினார். கதவை திறந்த தீபக் முகத்தில் இருந்த இறுக்கம் பிரச்சனையின் தீவிரத்தை சொல்லியது. எதுவும் பேசாமல் முன்னால் நடந்து போய் தான் ஒரு கூடை சேரில் உட்கார்ந்து கொண்டு ஸ்ரீநிவாசனுக்கு எதிர் இருக்கையை காட்டினான். அவஸ்தையான அரை நிமிட மௌனத்தை அவனே பிறகு உடைத்தான். "அங்கிள். நீங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு புரியுது. பட், இட் ஈஸ் எ க்ளோஸ்டு சாப்டர்" "தீபக். எனக்கு எதுவும் தெரியாது. ஆனா எதுவோ பெரிசா ஆகியிருக்குன்னு தோணுது. நீயே சொல்லு." "அங்கிள். என்னோட ஜாப் நேச்சர் உங்களுக்கே தெரியும். 600 கோடி ரூபாய் இன்டர்நேஷனல் ப்ராஜக்ட் ஃபைனல் ஸ்டேஜ்ல இருக்கு. ஒரு வாரமா ராத்திரி பகல் தெரியாம உழைச்சிக்கிட்டு இருக்கோம். அதை புரிஞ்சுக்காம இப்பவே சோனு நிகம் ப்ரோகிராமுக்கு வந்தாதான் ஆச்சுன்னு அடம் பிடிச்சா எப்படி? உனக்கு என்னை விட அந்த வெள்ளக்காரிகளோட டிபன் சாப்பிடறதுதான் முக்கியமான்னு ... ஷி க்ரியேடட் எ சீன். ஐ ஆல்ஸோ லாஸ்ட் மை கூல். எக்கச்சக்கமா ஆயிடுச்சு." "ஐயாம் சாரி. தீபக். அவ இன்னும் சைல்டாதான் இருக்கா. ஷி நீட்ஸ்.." "நோ. அங்கிள். எனக்கு பயமாயிருக்கு. மூச்சு திணறுது. நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுகிட்டு ஹாப்பியா இருக்கமுடியாதுன்னு இப்பவே தோணுது. அவளே நீ வேண்டாம் போன்னு சொல்லிட்டா. ஐயாம் சாரி. உங்க பொண்ணு பத்தி உங்க கிட்டயே கம்ப்ளெயிண்ட் சொல்ல வேண்டியதாயிடுச்சு. பட், வேற வழியில்லை. உங்ககிட்ட என் முடிவையும் சொல்லிட்டு அம்மாவுக்கு போன் செய்யலாம்னு இருக்கேன். அம்மா இப்ப நீயூஜெர்ஸில இருக்காங்க. நாளைக்கு காலைலதான் ஹூஸ்டன் திரும்பறாங்க.... அப்பறம்... நாளைக்கே இந்த ஃப்ளாட்டை காலி செய்யலாம்னு இருக்கேன்." ஸ்ரீநிவாசன் பதில் பேசாமல் தீபக்கையே உற்று பார்த்தார். அந்த பார்வையும் மௌனமும் அவனை கொஞ்சம் சங்கடப்படுத்தியது. அது அவசியம் என்றே அவருக்கு பட்டது. பிறகு நிதானமாக ஆரம்பித்தார். "தீபக். உன்னோட முடிவு உன்னோடது. அதை நான் இன்ஃப்ளுயன்ஸ் செய்ய முடியாது. பட், நீ பிரச்சனைகளை சமாளிக்காம ஓடி ஒளியறதை பார்த்தா வருத்தமா இருக்கு. நீங்க ரெண்டு பேரும்தான் வந்து லவ் பண்ணறோம்ன்னு சொன்னீங்க. நான் ஜாப்ல நல்ல ஒரு பொஷிஷன் வந்த பிறகு மாயாவை கல்யாணம் செஞ்சுக்கிறேன்னு நீதான் சொன்னே. அந்த மாதிரியே ஜனவரில தேதியும் குறிச்சாச்சு. இப்ப நீங்க ரெண்டு பேருமே வேண்டாம்னு முடிவு செஞ்சுருக்கீங்க. சரி. இதையும் ஏத்துக்கிறேன். ஆனா ப்ளாட்டை காலி செஞ்சுகிட்டு ஓடி போயிடறேன்னு சொல்லறயே, அப்ப என் மேல உனக்கு நம்பிக்கையில்லையா?" "இல்லை அங்கிள். நான் உங்களை ரொம்பவும் மதிக்கிறேன். நீங்க இல்லைன்னா நான் லைஃப்ல இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது. உங்களுக்கும் மாயாவுக்கும் தர்மசங்கடத்தை கொடுக்க வேண்டாம்னுதான் நான் ஒதுங்கிக்கப் பார்த்தேன். நீங்கதான் அங்கிள் எனக்கு எப்பவும் குரு" அப்பாடி! ஸ்ரீநிவாசனுக்கு சிக்கலை எடுப்பதற்கான முதல் நுனி கிடைத்து விட்டது. "ஒகே தீபக். ஐயாம் ப்ரௌட் ஆஃப் யூ. நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்க விரும்பறேன். என் கண்ணை பார்த்து தயக்கமில்லாம உடனடியா எனக்கு பதில் சொல்லணும். அது உன் அடிமனசிலேர்ந்து வரணும்..... டு யூ லைக் ஹர் ?" தீபக் இந்த அதிரடி தாக்குதலை எதிர் பார்க்கவில்லை. கொஞ்சம் தடுமாறினான். ஸ்ரீநிவாசன் தீவிரமாக அவனை உற்று நோக்கினார். "யெஸ் அங்கிள். ஐ லைக் ஹர். பட்..." அதன் பிறகு ஸ்ரீநிவாசனுக்கு எல்லாம் இலகுவாக போயிற்று. பத்தே நிமிடங்களில் அவனை சகஜ நிலைக்கு கொண்டு வந்து விட்டார். சிறு பையன். அப்பா இல்லாதவன். ஐந்து வயது சிறுவனாக அறிமுகம் ஆகி இன்றைக்கு தன் தோளுக்கும் தாண்டி வளர்ந்திருக்கிறான். ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப் பட்டவனை எழுந்து அரவணைத்துக் கொண்டார். அடுத்து மாயாவின் ஞாபகம் வந்தது. "தீபக். நான் வரேன். மாயாவை சரி செய்துட்டு உன்னை கூப்பிடறேன். அப்ப வா". ஸ்ரீநிவாசனை வாசல் வரை வந்து வழியனுப்பினான் தீபக். மாயாவை சமாளிப்பதில் ஸ்ரீநிவாசனுக்கு அவ்வளவு சிரமம் ஏற்படவில்லை. ‘உன்னோடு பொம்மைகள் வைத்துக் கொண்டு விளையாடிய தீபக்கை இன்னமும் அப்படியே மனதில் வைத்துக் கொண்டிருக்காதே. அவன் உன் பொம்மையில்லை. உனக்கு கணவனாக வரப் போகிறவன்' என்று மென்மையாக புரியவைத்தார். மாயாவையும் நார்மலுக்கு கொண்டு வந்த பிறகு தீபக்கையும் வரவழைத்து இருவரையும் வலுக்கட்டாயமாக ஐஸ்க்ரீம் பார்லருக்கு அனுப்பி வைத்தார். அரை மணியில் மாயா ஆர்பாட்டமாக வந்தாள். "யூ ஆர் க்ரேட்! எப்படிப்பா?  சைக்காலஜி படிச்சிருக்கியா? பேசாம நீ வி.ஆர்.எஸ். வாங்கிக்கிட்டு கவுன்சலிங்  செய்யலாம். தாங்க்யூப்பா" மாயா ஸ்ரீநிவாசனின் கைகளை பிடித்து குலுக்கினாள். இரண்டு கைகளாலும் மாலையாக ஸ்ரீநிவாசனின் கழுத்தை கட்டி கொண்டாள். ஸ்ரீநிவாசன் அவள் தலையை அன்புடன் கலைத்தார். "மை டியர் ஃபூலிஷ் கேர்ள். முன்ன ஜாயிண்ட் ஃபாமிலி சிஸ்டம் இருந்துது. சித்தப்பா, பெரியப்பா, அத்தைன்னு பெரிய கூட்டமே இருக்கும். வீட்டில எந்த ஜோடியாவது முறுக்கிக்கிட்டு இருந்தாக்க அவங்களோட ரியாக்ஷனை வைச்சே ஏதோ ப்ராப்ளம்ன்னு அவங்க கண்டுபிடிச்சுடுவாங்க. சரியான நேரத்துல உள்ள நுழைஞ்சு சரி செய்வாங்க. இப்ப அதெல்லாம் போச்சு. எல்லாம் காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கு. அதுக்கும் வழி தெரியாம எத்தனையோ விவாகரத்துக்கள் நடக்குது. அப்பறம்... " ஏதோ சொல்ல வந்ததை மென்று முழுங்கியதை மாயா கவனித்துவிட்டாள். "டாடி. ஏதோ சொல்ல வந்தீங்க. என்ன? சொல்லுங்க." "அது வந்தும்மா... முன்னைக்கும் இப்பைக்கும் ஒரு சின்ன வித்தியாசம். அப்ப கல்யாணத்துக்கு அப்புறம் கவுன்சலிங் தேவையா இருந்துது. இப்ப கல்யாணத்துக்கு முன்னயே கவுன்சிலிங் செய்ய வேண்டியிருக்கு. அவ்வளவுதான்." "போ. டாடி. யூ த ஃபூலிஷ் ஃபாதர்." ஸ்ரீநிவாசனின் நெஞ்சில் மாயா செல்லமாக குத்தினாள். அந்த இறுக்கத்தில் கண்களில் கண்ணீர் கொப்பளிக்க அதில் உஷா தெரிந்தாள். (ஆனந்த விகடன் -  5 செப்டம்பர் 2007)   4. பல்லி   வித்யாதரனின் பார்வை எதேச்சையாக அந்த பல்லியின் பக்கம் திரும்பியது. பிறகு அதிலேயே நிலைத்து விட்டது. தன்னை சுற்றி கோலம் போட்ட மாதிரி புள்ளி புள்ளிகளாய் பச்சை நிற பூச்சிகள் உட்கார்ந்து கொண்டு, பறந்து கொண்டு இருந்தாலும் அந்த பல்லி அவற்றைக் கண்டு கொள்ளவே இல்லை. எதற்கோ காத்திருந்த மாதிரி இருந்தது. உடம்பில் துளி கூட அசைவில்லை. அதன் வால் மட்டும் மெதுவாக சுழன்று கொண்டிருந்தது. சாம்பாரும், ரசமும் சாப்பிட்டு சாப்பிட்டு நமக்கு அலுத்து போன மாதிரி ஒரு வேளை பச்சை பூச்சிகள் அதற்கு அலுத்துப் போயிருக்கலாம். அவர் முகத்தில் ஒரு ஏளன சிரிப்பு வெளிப்பட்டது. இதை கவிதாவிடம் சொன்னால் அவள் வேறு கோணத்தில் சொல்லுவாள். 'ஒருவன் மா மரத்தின் மாங்கனியை சாப்பிட குறி வைக்கிறான் என்றால், அதை சுற்றியிருக்கும் மாவிலைகளை சாப்பிட்டு அலுத்துப் போனவன் என்றா எடுத்துக் கொள்ள முடியும்? பச்சை பூச்சிகள்தான் அதன் உணவு என்று நீங்கள் எப்படி தீர்மானிக்கலாம்?' என்று மடக்குவாள். வர வர தான் என்ன யோசிக்கிறோம் என்பதை விட, இதில் கவிதாவின் பார்வை எப்படியிருக்கும் என்ற எண்ணம், வெளிச்சத்தை ஒட்டிய நிழல் மாதிரி கூடவே அவர் மனசில் வந்து அமர்ந்து விடுகிறது. பல்லி திடீரென்று சுறுசுறுப்பானது. தலை தூக்கி கழுத்தை முறுக்கிக் கொண்டது மாதிரி பக்கவாட்டில் பார்த்தது. ஆமாம்! இளம் சிவப்பும் மஞ்சளும் கலந்த ஒரு எறும்புக்கு கண்ணாடி இழைகளால் ஆன இறக்கை முளைத்தது மாதிரியான ஒரு ஈசல் அப்போதுதான் சுவற்றில் அமர்ந்திருந்தது. பல்லி தன் கால்களை நிதானமாக அகட்டி, அகட்டி முதலை தண்ணீரில் நீஞ்சுவது மாதிரி சலனமில்லாமல் அதன் பின்பக்கம் பார்த்து முன்னேறியது. ஓரளவுக்கு நெருங்கியவுடன் ஒரு அசுர பாய்ச்சல்! அடுத்த வினாடி, அந்த ஈசல் பல்லியின் வாயில்! நாக்கை சுழற்றி உள்ளே தள்ளியது. பிறகு ஏதோ ஒரு அதிர்வை உணர்ந்ததும், கலவரப்பட்டு ஓடி மறைந்துவிட்டது. பல்லி ஓடிவிட்டாலும் அந்த காட்சி மட்டும் வித்யாதரனின் மனசைவிட்டு விலகவில்லை. தான் ஏன் அதில் அதிக கவனம் கொண்டோம் என்று யோசிக்கலானார். அந்த வன்முறை பிடித்திருந்ததா? இல்லை.... மை காட்! அவர்தான் அந்த பல்லியா? அப்படியென்றால் இளஞ் சிவப்பு...மஞ்சள்... கண்ணாடி இழை.... ஆமாம்! கவிதாவும் கிட்டத்தட்ட அந்த நிறம்தான். கண்ணாடி அணிந்திருக்கிறாள். சே! என்ன மட்டரகமான உருவகம்!! ஏன் இப்படி சிந்தனை போகிறது? உயர்ந்த சிந்தனைகள், தர்க்க வாதங்களை உள்வாங்கும் மனசு, ஏன் இப்படி அடிக்கடி குப்பை தொட்டியாகி விடுகிறது? வித்யாதரனின் மனைவி சரளா அவரிடமிருந்து சட்டப்படி விடுதலை பெற்று மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. திருமணம் செய்து கொண்டு, மன வேறுபாடுகளால் ஒருவரை ஒருவர் கீறிக் கொண்டது அவர் வாழ்வில் மிக கொடுமையான துன்பியல் சம்பவங்கள். எழுத்துலகில் எந்த அளவுக்கு மலை உச்சிகளை எட்டினாரோ, அந்த அளவுக்கு நேர் எதிராக சொந்த வாழ்க்கையில் பெரிய பெரிய பள்ளத்தாக்குகளில் விழுந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் எதற்கு இந்த மன உளைச்சல்? பிரிந்திருந்தால் இருவருக்குமே மகிழ்ச்சிதானே என்பது புரிந்தவுடன், அந்த முடிவுக்கு தயாரானார். விண் விண்ணென்று தெரித்துக் கொண்டிருக்கும் கட்டி உடைந்து, சீழ் வெளியேறி, மருந்து கட்டு போட்டதும் ஒரு நிம்மதி வருமே அந்த மாதிரி விவாகரத்து பெற்ற அன்று உணர்ந்தார். கவிதா ஒரு ரசிகையாகத்தான் வித்யாதரனுக்கு அறிமுகமானாள். தன் வீட்டு பெண்ணோடு அவரால் சுமுகமாக இருக்கமுடியவில்லையே தவிர, அவரது கதைகளில் வரும் கற்பனை கதாநாயகிகள் உயர்தர பெண்ணியம் பேசுவார்கள். உளவியல் ரீதியாக பல பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு கொடுப்பார்கள். அதனால் அவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். அவர்கள் நேரிலும், போனிலும் மணிக்கணக்காக பேசியிருக்கிறார்கள். அவர்களில் கவிதா மட்டும் வித்தியாசமாக தெரிந்தாள். சரளாவுக்கு நேர் எதிர். முதலில் அவரது கதைகளை பற்றி ஆழமாக விமர்சித்து வந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக அவரின் மீது தன் ஆளுமையை தொடர்ந்தாள். அதை அவர் அனுமதித்தார் என்றே சொல்ல வேண்டும். பேனாவும், வெள்ளை பேப்பருமாக எழுதிக் கொண்டிருந்தவரை, அவள்தான் கணினியில் நேரடியாக தட்டச்சு செய்ய பழக்கினாள். முதலில் அடம் பிடித்தவரை, தட்டி கொட்டி அவள் விருப்பத்திற்கு கொண்டு வந்தாள். கணினி பழகியதும், அவரால் நிறைய எழுத முடிந்தது. பத்திரிக்கைகளுக்கு உரிய நேரத்தில் கொடுக்க முடிந்தது. அடுத்த பாய்ச்சலாக, இணைய தளத்தில் வித்யாதரனுக்காக ஒரு வலைமணையை உருவாக்கிக் கொடுத்தாள். அதில் வரும் கடிதங்களுக்கு பதில் எழுதவும், அவ்வப்போது அதை புதுப்பிக்கவும் அடிக்கடி வர ஆரம்பித்தாள். பிறகு அவருக்கு உதவியாளர் என்ற பொறுப்பை அவளே ஏற்றுக் கொண்டாள். அவர் சொல்லச் சொல்ல அவள் கணினியில் சேர்ப்பாள். இடையிடையே விவாதமும் செய்வாள். பல சமயங்களில் எப்படி இந்த சின்னப் பெண்ணை இவ்வளவு தூரம் அனுமதித்தோம்? இது சரியா? இல்லை தவறா? என்று யோசித்து குழம்பியிருக்கிறார். கடந்த ஒரு சில மாதங்களாக கவிதா இல்லாமல் அவரால் ஒரு வாக்கியம் கூட எழுத முடியவில்லை. வாசலில் காலிங் பெல் ஒலித்தது. அது ஒலித்த விதத்தில் கவிதாதான் வந்திருக்கிறாள் என்று புரிந்தது. வித்யாதரன் இருபது வயது இளைஞன் மாதிரி ஓடிச் சென்று கதவை திறந்தார். கவிதாவேதான்! "கவிதா! வா! இப்போதான் ஒரு பல்லி, பூச்சியை வேட்டையாடினத பார்த்துகிட்டுருந்தேன்." "ஆமாம். வீழ்த்துவதும். வீழ்ந்தபின் வெற்றிக் கொடி நாட்டுவதும் ஆண்களின் வழக்கமல்லவா?" "என்ன கவிதா! வந்ததுமே கத்தியை சுழற்ற தொடங்கிட்டே. இன்னிக்கு என்னை ஒரு வழி செஞ்சுட்டு போறதா எண்ணமா?" "ஐய்ய! நான் சொன்னது உங்க வசனம்தான். மகரந்த பூக்கள் நாவல்ல உங்க கதாநாயகி ரம்யா சொல்லறதுதான் அது." "நதியின் நீரை எடுத்து நதிக்கே அர்ப்பணம் செஞ்ச மாதிரி" என்று சொல்லிவிட்டு அவளை முதன் முறையாக கூர்ந்து கவனித்தார். மனசு மீண்டும் குப்பைக் கூடை ஆனது. "என்ன சார்! மணிரத்னம் படத்திலே ஹீரோ ஹீரோயினை பார்க்கிற மாதிரி பார்க்கிறீங்க?" வித்யாதரன் உள்ளுக்குள் விகிர்த்து போனார். கிராதகி! ஒரு நொடியில் உள் மனதை புரிந்து கொள்கிறாளே! "இல்லே. எங்கிருந்தோ வந்தாய். எழுத்து சாதி நான் என்றாய். எழுத்தையும் தாண்டி எனக்கு பல விதங்களில் உதவியாய் இருக்கிறாய். வம்பு சண்டையும் போடுகிறாய். நீ யார்? ஏன் என் பக்கம் வந்தாய்? உன்னை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை." அவருக்குள் காமத்தீ கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. "சார். பேச்சு தடம் மாறி எங்கேயோ போகுதுன்னு நினைக்கிறேன். என்ன சொல்லணுமோ சொல்லிடுங்க" "கவிதா. தப்பா எடுத்துக்காதே. மணிரத்னத்துக்கு கூட ரெண்டாவது படம்தான் ஹிட்டு. அது மாதிரி முதல் முயற்சியில தோல்வியடைஞ்சிட்டு, ரெண்டாவதுல வெற்றி பெற்றவங்க நிறைய பேர் இருக்காங்க....." தட்டு தடுமாறி தன் உள்ளத்து ஆசையை போட்டு உடைத்துவிட்டார். அது கவிதாவுக்கு ஷாக்காக இருந்திருக்க வேண்டும். மௌனமாக தலையை குனிந்த படி இருந்தாள். மூச்சு மேலும் கீழுமாக போனது. கைகள் இரண்டும் இறுகின. நிமிர்ந்ததில் கண்களில் கண்ணீர். "சார்! இதை நான் எதிர்பார்க்கல. நீங்களும் ஒரு சாதாரண ஆம்பிளைன்னு நிரூபிச்சிட்டீங்க." "நானும் சாதாரண ஆம்பிளைதான் கவிதா. எழுத்தாளர்னா ஏதோ ஆகாசத்துலேர்ந்து குதிச்சவங்க இல்லே. நான் என் எண்ணத்தைச் சொன்னேன். உனக்கு இஷ்டம்னா ஒத்துக்க. இல்லேன்னா விட்டுடு" "அது எப்படி? எப்படி நீங்க என்னை அந்த மாதிரி கேட்கலாம்? நீங்க என்ன வேணும்னாலும் கேக்கலாம். அதுக்கு நாங்க உண்டு இல்லேன்னு மட்டும் பதில் சொல்லணும். இந்த ஆம்பளைங்களே இப்படித்தான். இந்த சுடிதார்க்குள்ள என்ன இருக்குன்னு பார்க்கிற ஆசை உங்களுக்கு வந்திடுச்சு. உங்க அல்டிமேட் கோல் அதுதான். என்னை உரிச்சு பார்த்துட்டீங்கன்னா..." "கவிதா! ப்ளீஸ். ஸ்டாப். என்ன தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கே. ஏதோ உடல் இச்சைக்காக அலைபவன்னு நினைச்சுக்கிட்டே" "அதுதானே உண்மை." அவள் குரல் கூடியது. கத்தி மாதிரி அந்த வார்த்தைகள் பாய்ந்து வந்து அவரை தாக்கின. படபடப்புடன் எழுந்தாள். சரிந்த கண்ணாடியை நடுங்கும் கைகளால் பிடுங்கி கை பைக்குள் போட்டுக் கொண்டாள். மீண்டும் ஆரம்பித்தாள். "உங்களோட எழுத்துக்கள் அனைத்தும் போலி" "ஆமாம். எழுத்துக்கள் எல்லாமே கற்பனைகள். போலிதான். ஒரு கதையிலே கொலை செய்யறது மாதிரி விவரிச்சுருக்கேன். அதுனால நான் கொலைகாரன்னு ஆகிவிட முடியுமா? "ஓ! பிரபல எழுத்தாளர்! வார்த்தைகளின் வித்தகர்! எல்லாத்துக்கும் ரெடியாக பதில் வைச்சுருக்கீங்க. பொய்யாக யோசித்து, பொய் வாழ்க்கை வாழ்ந்து..... இரட்டை வேடதாரி.... நீங்க ஒரு ஹிப்போக்கிரேட்." "வானத்து நட்சத்திரங்களை வியந்து பார்த்துக் கொண்டே, யதார்த்தம் புரியாமல் பள்ளத்தில் விழுபவன்தான் எழுத்தாளன், கவிதா. என்னை நம்பு. எனக்கு கொஞ்சம் இரக்கம் காட்டேன்." கண்ணீர் கொப்பளித்த சிவந்த கண்களுடன் 'இதுதான் உன்னோடு கடைசி' என்ற மாதிரி ஒரு அம்பு பார்வையை வீசி விட்டு, விறு விறுவென தன் தோள் பையை எடுத்து மாட்டிக் கொண்டு, வாசல் கதவை படீரென சாத்திக் கொண்டு போய்விட்டாள். வித்யாதரனை அந்த தனிமை கொல்லத் தொடங்கியது. சே! அவசரப்பட்டு விட்டோமோ? ஒரு தீவிர ரசிகையை கொச்சைப்படுத்திவிட்டோமோ? அவள் செல்லுக்கு முயற்சி செய்தார். முதல் முறை ரிங் போனது. பிறகு கட் செய்யப்பட்டது. அடுத்த முறை ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு விட்டது. வித்யாதரனுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவளுடைய ஒர்கிங் வுமன் ஹாஸ்டலுக்கு போனார். அங்கேயும் இல்லை. அவளுக்கு நண்பர்கள் வட்டம் மிக குறைவு. அவர்களிடம் இவளை பற்றி விசாரித்தால் பல எதிர் கேள்விகள் வரும். திடீரென அந்த பல்லி ஈசலை சாப்பிட்டது நினைவுக்கு வந்தது. மாறுபட்ட பல யோசனைகளுடன் அங்கும் இங்கும் அலைந்தார். உணர்ச்சி மிகுதியில், ஒரு வேளை அவள் ஏதாவது விபரீதமான முடிவுகளை எடுத்துவிட்டால்? அவள் செய்யக் கூடியவள்தான். எல்லாவற்றிலும் தீவிரம். ஆசை காட்டுவதிலும் தீவிரம். எதிர்ப்பதிலும் தீவிரம். எங்கே போய் அவளை தேடுவது? எப்படி தடுப்பது ? தன்னைத்தானே நொந்து கொண்டார். இரண்டு மணி நேர அலைச்சலுக்கு பிறகு அவர் வீடு திரும்பியதில் ஆச்சர்யம் இருந்தது. கவிதா அவருக்காக வீட்டு வாசலில் காத்திருந்தாள். முகம் காட்டாமல் திரும்பியிருந்தாள். கதவை திறந்து, உள்ளே வந்த பிறகும் அமைதி தொடர்ந்தது. வித்யாதரன் பொறுமை காத்தார். பிரம்பு கூடை ஊஞ்சலில் உம்மென்று தலை குனிந்து உட்கார்ந்திருந்தாளே தவிர ஒன்றும் பேசவில்லை. "கவிதா! நான் ரொம்பவும் டயர்டா இருக்கேன். இன்னொரு தடவை உன்னோட சண்டை போட ......" "நான் ஹாஸ்டலை காலி பண்ணப் போறேன்." "லுக்! நான் ஏதோ சொன்னதுக்காக, ஹாஸ்டலை காலி பண்ணி, வேலையை விட்டுட்டு, வேற ஊருக்கு போயி...." "நான் ஏன் வேற ஊருக்கு போகணும்?" பளீரென நிமிர்ந்தவளின் முகத்தில் கோபமில்லை. ஒரு புன்னகை கூட்டமே வெடித்து சிதற காத்திருந்தது. "என் வீடுதான் இங்க இருக்கே! இங்க வந்துட்டா போச்சு" ஓடிவந்து வித்யாதரனின் தோள்களைப் பற்றிக் கொண்டாள். கவிதாவை இவ்வளவு நெருக்கத்தில் அவர் பார்த்ததில்லை. அடுத்த நொடியிலேயே அந்த நெருக்கம் இன்னும் அதிகரித்தது. "கவி! நான் ஒண்ணு சொல்லட்டுமா? அறிவுப்பூர்வமாக எடுக்கப்பட்ட சில முடிவுகளைவிட முட்டாள்தனமாக எடுக்கப்பட்ட பல முடிவுகள்தான் ஜெயிச்சுருக்கு. நான் முட்டாளாகவே இருக்க ஆசைப்படறேன்." "நானும்தான்."    எழுச்சியும் வீழ்ச்சியும் தொடர்வது என்பது பிரபஞ்சத்தின் இயக்கம். இது ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் பொருந்தும். அதில் எது வீழ்ச்சி? எது எழுச்சி? என்பதை அனுமானித்தல் மிக கடினம். இது சரி, அது தவறு என்பது மானுடப்பார்வையின் பேதம். ஆளுக்கு ஆள், நேரத்துக்கு நேரம் கோணங்கள் மாறுபடும். கவிதாவின் அணைப்பில் வித்தியாதரன் ஒரு எழுச்சி பெற்று உயரே பறப்பது போல உணர்ந்தார். அடுத்த வாரம் பத்திரிக்கைகளுக்கு செம தீனி காத்திருக்கிறது. அது வித்யாதரனின் எழுச்சியா? வீழ்ச்சியா? (ஆனந்த விகடன் - 03 டிசம்பர் 2008)   5. ...எனவே, இந்தக்கதை முடியவில்லை   காலை மெரீனா மிகவும் உற்சாகமாக இருந்தது. ப்ளூ டூத் அணிந்த தொப்பையர்களும் வழுக்கையர்களும் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தார்கள். வளப்பமான பெண்கள் தங்கள் கணவருடனோ அல்லது சடை நாயுடனோ வாக்கிக் கொண்டிருந்தார்கள். அர்த்தமில்லாமல் ஒரு கூட்டம் உரக்க சிரித்துக் கொண்டிருந்தது. பழுப்பு நிற சூரிய கிரணங்கள் அம்புகளாய் இறங்க ஆரம்பிக்க, வியர்க்க தொடங்கி விட்டது. அவ்வளவுதான்! என் வாங்கிங் முடிந்து விட்டது. எனது காரை நோக்கி விரைந்து கொண்டிருந்தேன். அப்போதுதான் அவனை கவனித்தேன். என்னை தொடர்ந்து வந்து கொண்டிருந்தான், நிழல் மாதிரி. "சார்! போட்டோஸ் பார்க்கறீங்களா?" மெரீனாவில் இது போன்ற தொந்திரவுகள் நிறைய உண்டு. வேண்டாம் என்றாலும் விடமாட்டார்கள். அவனை ஒதுக்கி, எனது காரை பார்க்கிங் ஸ்லாட்டிலிருந்து ரிவர்ஸ் எடுத்தபோதுதான் அவன் டோன் மாறியது. "ரமேஷ் சார். உங்க போட்டோஸ்தான் பார்க்கறீங்களா?" விருட்டென நிமிர்ந்தேன். கார் கண்ணாடியில் ஒரு சாம்பிள் போட்டோவை ஒட்டிய மாதிரி எனக்கு மட்டும் காட்டினான். வெலவெலத்து போனேன். நானும், நம்ருதாவும் தப்பு காரியம் செய்து கொண்டிருந்தோம். இது எப்படி இவனிடம்? யார் எடுத்தார்கள்? எப்படி எடுத்தார்கள்? சுறுசுறுவென வெப்பம் தலைக்கேறியது. ஸ்டியரிங்கிலிருந்த கை நழுவியது. "டேய்! யார் நீ? ஏது இந்த போட்டோஸ்?" படீரென வெளியே வந்தேன். "கூல் டவுன் சார். கூல் டவுன். கொஞ்சம் அப்படி ஒதுக்குபுறமா போய் பிசினெஸ் பேசுவோமா?" என்னை ஆபத்து சூழ்கிறது. பிளாக் மெயில் செய்கிறான். பொறுக்கி! சட்டையை பிடிக்கப் போனேன். வேண்டாம்! மக்கள் அங்கும் இங்குமாக போய் கொண்டிருக்கிறார்கள். காரை வேகமாக ரிவர்ஸ் எடுத்து லைட் ஹவுஸ் தாண்டி ஒரு அமைதியான இடத்தில் நிறுத்தினேன். அதற்குள் அவன் கையில் ரம்மி விளையாடுவது மாதிரி போட்டோக்களை விசிறியாக்கியிருந்தான். அவன் கையிலிருந்து அனைத்தையும் பிடுங்கினேன். சரக் சரக்கென ஒவ்வொன்றாக பார்த்தேன். எல்லாம் அசிங்கமோ அசிங்கம். நம்ருதா தன் காது, மூக்கு, தொப்புள் வளையங்களைத் தவிர வேறு எதுவும் அணிந்திருக்கவில்லை. அதில் வெட்கமும் இல்லை. நானும் முழுக்க உரிக்கப்பட்டிருந்தேன். பிளடி பிட்ச்! ஆசை காட்டி லைட் போட்டு ஏமாற்றியிருக்கிறாள். ஒரு கூட்டமாக செயல்பட்டு என்னை பொறி வைத்து மாட்ட வைத்திருக்கிறாள். போட்டோக்களை அவன் முகத்தில் விசிறியடித்தேன். கிட்டத்தட்ட ஒரு எலி மாதிரிதான் என்னால் முழிக்க முடிந்தது. அவமானத்திலும் வெறுப்பிலும் மூச்சுக்காற்று தாறுமாறானது. நெஞ்சை அடைத்தது. "மிஸ்டர் ரமேஷ். ஆர்.எல்.எம்.இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர். இளம் தொழிலதிபர். வயசு நாற்பது. சொத்து மதிப்பு ஐநூறு கோடி இருக்கலாம். சமூகத்தில் ரொம்ப நல்ல பெயர். ஆனால் கொஞ்ச சபல புத்தி. ரகசியமாக சில தப்புகள் அடிக்கடி செய்வார். அது தெரியாமல் இருக்க என்ன விலை வேண்டுமானலும் தருவார். வீடியோவும் இருக்கு, ரமேஷ் சார். பார்க்கறீங்களா?" "ராஸ்கல். என்ன திமிரு இருந்தா என் பேர் சொல்லி கூப்பிடுவே?". கையை ஓங்கினேன். அது இயலாமையில் அப்படியே நின்றது. அவன் கொஞ்சமும் கவலைப்படவில்லை. நிதானமாக போட்டோக்களை பொறுக்கிக் கொண்டிருந்தான்.. "எனக்கு அர்ஜெண்டா இருபது லட்சம் வேணும். அதுவும் நாளைக்குள்ளே. எங்கே வரட்டும்" என்றான். அவன் சிரித்தபோது பல்வரிசை வாழைப்பூவை ஞாபகப்படுத்தியது. என்னால் ஆரம்ப ஷாக்கிலிருந்தே வெளிவர முடியவில்லை. பத்தே நிமிஷ சபலம் எப்படி கொண்டுபோய் விட்டிருக்கிறது? என்னை நானே நொந்து கொண்டேன். வெறுப்பில் ஸ்டியரிங்கை குத்தினேன். "போடா. என்ன மிரட்டரயா? நீ யார் கிட்டே வேணுமின்னாலும் காட்டிக்க. நான் ஒரு பைசா கூட தர முடியாது? "ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க. உடம்புக்கு ஆகாது. நான் வரேன் சார். நாளைக்கு ஹோட்டல் ப்ரசிடெண்ட்ல எட்டு மணிக்கு சந்திக்கிறோம். அடுத்த ரவுண்டு பேச்சு வார்த்தை நடத்தறோம். மொதல்ல ஒண்ணு புரிஞ்சுக்குங்க. போலீசுக்கு போனீங்க, அப்பறம் நடக்கறதே வேற. ஜாக்கிரதை. வர்ட்டா" போய்விட்டான். அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். பிளாட்பாரத்தில் காரை ஏற்றி அவனை கொன்று விடலாமா என்று கூட தோன்றியது. அது முடியாது என்றே பட்டது. அவன் காற்றில் கரைந்து போய் விட்டான். 'ரமேஷ். நான் உன்னை நினைத்து வெட்கப்படுகிறேன். ச்சீ! நீ இவ்வளவு கேவலமானவனா நீ" இது அனிதா. "உன்னை அப்பான்னு சொல்லிக்கவே பிடிக்கலே." இது ப்ரீதி. 'இளம் தொழிலதிபரின் காம லீலைகள்' பத்திரிக்கைகளில் பரபரப்பு செய்திகள். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன். இருபது லட்சமென்ன, ஒரு கோடி கொடுத்தாலும், அவன் கேட்டுக் கொண்டே இருப்பான். என்னால் நிம்மதியாக இருக்கமுடியாது. ஆனால் போலீஸ் வேண்டாம். திடீரென கிரீஷ் ஞாபகம் வந்தது. டாஷ் போர்டில் குடாய்ந்ததில் அவன் கார்டு கிடைத்தது. சென்னை ப்ரைவேட் போலீஸ்! "கிரீஷ். ஐயாம் இன் ட்ரபுள்" எல்லா விவரங்களையும் சொன்னேன். "குட். நீ நேரடியாக என் அலுவலகத்துக்கு வராமல் செல்லில் பேசினாயே அதுவே ஒரு புத்திசாலித்தனம். இனி உன்னோட ஒவ்வொரு அசைவையும் அந்த கூட்டம் கவனிக்கும். அதனால ஜாக்கிரதை. இன்னிக்கு பதினொரு மணிக்கு உன் கம்பெனிக்கு வாட்டர் கூலர் விற்கும் மார்கெடிங் ஆசாமி மாதிரி என் ஸ்டாப் ரெண்டு பேர் வருவாங்க. அவங்க அடிப்படை தகவல்கள் சேகரிப்பாங்க. நீ கவலைப்படாதே. கோழியை அமுக்குவது மாதிரி எல்லாரையும் அமுக்கிடறேன்." கிரீஷ் சொன்ன மாதிரியே இருவர் வந்தனர். வாய்ஸ் ரெக்கார்டரில் ஆதி முதல் அந்தம் வரை எல்லா விஷயங்களையும் துருவித் துருவி கேட்டனர். நம்ருதா சம்பந்தப்பட்ட எல்லா குப்பைகளையும் கேட்டு வாங்கிக் கொண்டனர். "சார். எங்கள் வேலை முடிஞ்சிடுச்சு. எங்கள் தலைவர்கிட்டேயிருந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான விவரங்கள் உங்களுக்கு வரும். மனசுல நோட் பண்ணிக்குங்க, இந்த கேஸின் ரகசிய சங்கேத வார்த்தை 'ரமேஷ் சிவலிங்கம் 45' அதாவது 'ஆர்.எஸ்.45'. நாங்கள் வர்றோம்." ஐந்து மணிக்கு கிரீஷ் போன் செய்தான். "ரமேஷ் நாளைக்கு அந்த ஆளை சந்திக்கப் போ. சும்மா இரண்டு லட்சம் கொடு. இன்னும் டைம் வாங்கு. தைரியமாக எதிர் கேள்விகள் கேள். நீ எந்த டேபிளில் உட்காருகிறாயோ, அந்த டேபிளுக்கான சர்வர்களாக எங்கள் ஸ்டாப் இருப்பார்கள். ரகசியமாக போட்டோக்கள் எடுப்பார்கள். இன்னும் அரை மணியில் உனக்கு ஒரு கூரியர் வரும். அதில் ஒரு மோதிரம் மாதிரி ஒன்று  இருக்கும். அதை உன் கையில் போட்டுக்கொள். அது பவர்ஃபுல் மைக்ரோ போன். பார்த்தால் அப்படி தெரியாது. கார் பார்கிங்கிலிருந்து எங்கள் ஆட்கள் உன் பேச்சு அனைத்தையும் ரிகார்ட் செய்வார்கள்." "கிரீஷ்! எந்த சிக்கலும் இல்லாமல் விஷயத்தை முடித்துவிடுவாய் அல்லவா. எனக்கு பயமாயிருக்கிறது. பணம் பெரிதில்லை. ஆனால்....?' "நான் எதிர்பார்த்ததை விட அவர்களின் நெட்வொர்க் கொஞ்சம் சிறியதுதான் என்று நினைக்கிறேன். அவர்களை ரவுண்டு கட்டி பிடிப்பதை விட அவர்கள் பிளாக் மெயில் செய்கிறார்கள் என்பதற்கான ஆவனங்களை தயார் செய்ய வேண்டும். அப்போதுதான் போலீஸ் எங்களை நம்பும். சினிமா மாதிரி அதிரடியாக செய்துவிடலாம் என்று நினைக்காதே. எங்களுக்கு பல சட்ட சிக்கல்கள் இருக்கின்றன." மறுநாள் எட்டு மணிக்கெல்லாம் நான் அங்கே போய்விட்டேன். ஆனால் அவன் அரை மணி கழித்துதான் வந்தான். கொடுத்த இரண்டு லட்சத்தை முகத்திலடித்தான். நான் அசரவில்லை. 'சிங்கிள் பேமெண்ட். எவ்வளவு வேண்டுமானலும் சொல்' என்றேன். ஒரு கோடி கேட்டான். ஒரு வாரம் டைம் கேட்டேன். 'அதன் பிறகும் உன் தொந்திரவுகள் தொடர்ந்தால் என் நடவடிக்கைகள் வேறு விதமாக இருக்கும்' என்று மிரட்டினேன். முனகிக் கொண்டே போனான். மூன்றே நாட்களில் ஒரு மாலை வேளையில் கிரீஷிடமிருந்து தகவல் வந்தது. "ஆர்.எஸ்.45 சக்ஸஸ். உடனே என் அலுவலகத்து வருகிறாயா?" என்றான். போனேன். "ரமேஷ். பார்ட்டி இந்த வேலைக்கு கொஞ்சம் புதுசு. மாமா வேலையிலிருந்து இப்போதுதான் பிளாக் மெயிலுக்கு வந்திருக்கிறான். உன்னை அவன் சந்தித்த அன்றைய தினமே அவன் செல் போனையும் பர்ஸையும் ஆள் வைத்து அடித்து பிடுங்கினோம். அதன் மூலம் அவன் கூட்டத்தினரின் யார்? எங்கே இருக்கிறார்கள் என்ற விவரங்கள் செல் கம்பனிகள் மூலமாக கிடைத்தது. கிரெடிட் கார்டுகள், வங்கிக் கணக்குகள் எல்லாவற்றையும் அசுர வேகத்தில் முடக்கினோம். போதுமான விவரங்கள் கிடைத்ததும், பைல் தயார் செய்து, போலீஸ் உதவியுடன் ஒவ்வொருவராக அமுக்கிவிட்டோம். அவர்கள் மேல் ஏற்கனவே பல கிரிமினல் வழக்குகள் இருந்ததால் அவர்களை பிடிக்க நாங்கள் போலீசுக்கு உதவிய மாதிரி ஆகிவிட்டது. ஸ்டில் காமிரா, மூவி காமிரா, கம்ப்யூட்டர், ஹார்ட் டிஸ்க், சிடி, பென் டிரைவ் என்று சகலத்தையும் அள்ளிக் கொண்டு வந்துவிட்டேன். எல்லாம் பிடுங்கப்பட்டதும் அவன் குதியாய் குதித்தான். போலீஸ் அனுமதியுடன் மூஞ்சியில் ஒரு குத்து விட்டேன்." "ரொம்ப தாங்கஸ் கிரீஷ். நான் ஒழிந்தேன் என்று நினைத்தேன். நீதான் காப்பாற்றியிருக்கிறாய். என்ன வேண்டும் என்று சொல். தருகிறேன்." "இந்த நாலு நாட்களில் எக்கசக்கமாக என் ஆட்கள் உழைத்திருக்கிறார்கள். ஒரு பெரிய அமௌண்டுக்கு எங்கள் கம்பனியின் சின்ன பில் வரும். செட்டில் செய்துவிடு. இது பார்ட் ஒன்" "என்ன பார்ட் ஒன்னா?" "ஆமாம். பார்ட் டூ. உன்னோடு இன்னொரு முக்கியமான விஷயம் பேசணுமே" என்றான் நமுட்டு சிரிப்புடன். நான் அதிர்ந்து போனேன். "டேய்! நீ.... நீ...." "முட்டாளே. பதறாதே. நான் உன்னிடம் நிதி கேட்கப்போவதில்லை. நீதி சொல்லப்போகிறேன். கையில் கோடிக்கணக்கில் காசு புரண்டால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்காதே. கொஞ்சம் நிதானமாக இரு. ஒழுங்காக வாழு." "அப்படியே ஆகட்டும் என் குருவே" ஜப்பானிய ஸ்டைலில் குனிந்து கிரீஷுக்கு வணக்கம் தெரிவித்தேன். பின் குறிப்பு: இந்தக் கதை இத்துடன் முடிவடையவில்லை. சென்னை ப்ரைவேட் போலீஸ் அந்த பிளாக் மெயில் ஆசாமியை சுற்றி வளைப்பதற்கு முன்னால், அவன் தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் கிராமத்தில் இருக்கும் தன் நண்பனுக்கு 'ஜாக்கிரதையாக பத்திரப்படுத்து' என்ற குறிப்புடன் ஒரு சின்ன பார்சல் அனுப்பியிருந்தான். அதற்குள்ளே இருந்த சிடியில் ரமேஷும், நம்ருதாவும் தப்பு காரியம் செய்து கொண்டிருந்தார்கள். புதிய நீதி - எந்த குற்றத்தையும் முழுமையாக அழிக்க முடியாது. எனவே இந்தக் கதை இன்னும் முடிவடையவில்லை. (ஆனந்த விகடன் - 16 ஜூலை 2008)       6. நாய் பட்ட பாடு   இடுக்கண் வருங்கால் நகுக என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் ஐயன் திருவள்ளுவர். அவருக்கென்ன? சொல்லுவது யாவர்க்கும் எளிய. அனுபவப்பட்ட எனக்குத்தானே தெரியும். வாழைப்பழத்தோலில் வழுக்கி மடேரென பின்னங்கால் தூக்கி பிருஷ்டம் வலிக்க விழுந்தால் அது உங்களுக்கு 'கொல்' சிரிப்பாய் இருக்கும். வலி எனக்கு. சிரிப்பு உங்களுக்கு. அதே மாதிரி இந்த வாய் மற்றும் வாய்வு உள்ள அப்பிராணியை ஒரு வாயில்லா மற்றும் வாலுள்ள நாலு கால் பிராணி ஒரு வார காலத்துக்கு பாடாய் படுத்தி சிரிப்பாய் சிரிக்க வைத்ததை கேட்டால் உங்கள் வயிறு புண்ணாகி போக நான் கியாரண்டி. மிக பெரிய சிந்தனைகள் ஒரு சிறு நொடித்துளியில் உருவாகிவிடும் என்று யாரோ ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறாராம். அந்த மாதிரி நான் மிகவும் விரும்பும் பருப்பு உசிலியை வெண்டைக்காய் மோர் குழம்போடு ஒரு வெட்டு வெட்டிக் கொண்டிருக்கும் போது என் ஆசை மனைவி கமலாவின் சிந்தனையில் உதித்த ஐடியாதான்.... "ஏங்க, நம்ம வீட்டுல நாய் ஒண்ணு வளர்த்தா என்ன?" ரசம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அதில் பாயசத்தை ஊற்றின மாதிரி எனக்கு அதிர்ச்சி. உங்களை வளர்ப்பதோடு அல்லாமல் நாய் வேறு வளர்க்க வேண்டுமா என்று கேட்டு வைத்தால் மேல்கொண்டு மோர் குழம்பு கிடைக்காது. கிடைத்தாலும் ருசிக்காது. என் மெளனம் கமலாவை சங்கடப் படுத்தியிருக்க வேண்டும். பாருங்கள். இந்த சமயங்களில்தான் ஏழரைநாட்டு சனி உச்சம் பெறுகிறது. "எனக்கொண்ணும் ஆசையில்லை. சின்னதுதான் அடம் பிடிக்கிறது." அம்மாவின் புடவைக்கு பின்னாலிருந்து பாரதிராஜா ஸ்டைலில் ஒரு கண், அரை மூக்கு, அரை வாய் புன்சிரிப்போடு என் சின்னப் பெண் ஒண்ரையடி ஸ்வேதா எட்டிப் பார்க்க என் போதாத வேளை நானும் சிறிதாய் சிரித்து வைக்க பிடித்தது சனி. "ஹாய். அப்பா ஓக்கே சொல்லிட்டார்." எனது இரண்டு வாண்டுகளும் கோரஸாக கத்திக் கொண்டே ஓடிவிட நான் நிராயுதபாணியானேன். கமலாவின் முகத்தில் இரண்டு பீட்ஸா சாப்பிட்ட பெருமிதம். "அதெப்படீங்க. குழந்தைகள் கேட்டா உடனே சரின்னு சொல்லிடறீங்க. நான் ஏதாவது கேட்டால் நாலு நாளுக்கு பதிலே வராது." கமலா தன் கவலையை இலவச இணைப்பாக வைத்தாள். நான் எங்கே சரின்னு சொன்னேன் என்று இந்த கேடு கெட்ட நேரத்தில் போட்டு உடைத்தால் பெரிய பிரளயமே வந்துவிடுமோ என்ற அச்சத்தில் எல்லாம் வல்ல அந்த சனியின் மீது பாரத்தை போட்டு விட்டு வரப்போகிற சிக்கல்களுக்கு என்னை நானே நொந்து கொண்டேன். அதன் பிறகு எல்லாம் கிடுகிடுவென நடந்தன. மறுநாள் மாலையில் நான் 150 வவுச்சர்கள், மேனேஜரின் 1000 வாலா வசவுகளோடு சிக்கிக் கொண்டு திண்டாடிக் கொண்டிருக்கும் போது எனது இரண்டு பெண் பிள்ளைகளின் தலைகள் லெட்ஜருக்கு மேலே ஏத்தலும் குறைச்சலுமாக தெரிந்தன. “அப்பா. ஷாலுவை பாக்க போவேண்டாமா? அம்மா கீழ வெயிடிங்.” இது பெரிய பெண் சஞ்சனா. “ஷாலுவா?” “ஐய்ய. இது கூட தெரியலையா, நம்ம வாங்கப்போற டாகியோட பேரு. டாகின்னா டாக். டாக்னா நாய். சீக்கிரம் வாப்பா.” இது என் அரை டிக்கெட் ஸ்வேதா. மேனேஜரிடம் கைகால்களில் விழுந்து கெஞ்சி கூத்தாடி கையதுகொண்டு மெய்யது பொத்தி தலையை சொறிந்து அசடு வழிந்து எப்படியோ பர்மிஷன் வாங்கி கீழே வருவதற்குள் கமலாவின் கமலா ஆரஞ்சு சைஸ் முகம் பூசணிக்காயாக இருந்தது. “இப்பவாவது வந்தீங்களே. அஞ்சரைக்கெல்லாம் கென்னல் ஷாப் குளோஸ் ஆயிடும்ன்னு காலைல படிச்சு படிச்சு சொன்னேனே.” என்சைக்ளோபீடியா மாதிரி ஏதோ ஒரு தடிமனான புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தாள். வழ வழ பேப்பரில் கலர் கலராய் நாய் படங்கள். சம்திங் ராங். சனீஸ்வரா! “அப்பா. ஷாலுவ எப்படி பாத் செய்யனும். என்ன ஃபுட் குடுக்கனும்னு யாரையும் கேட்கவே வேண்டாம். அம்மா ஒரு புக் வாங்கியிருக்கா. ஜஸ்ட் செவன் ஹன்ட்ரட் ரூபீஸ் ஒன்லி.” “20  டிஸ்கவுன்ட்ன்னு சொல்லுடி” “ஆமாப்பா. அப்பறம் அந்த செயின்...” “சஞ்சு சும்மாயிரு. எல்லாத்தையும் இப்பயே சொல்லனுமா?” காரின் பின்ஸீட்டில் ஏகமாய் கேரிபேக்கில் சிக்கலாய் என்னென்னவோ இருந்தன. கிரெடிட் கார்டில் ஆட் ஆன் கார்ட் வாங்கி கொடுத்தது எவ்வளவு பெரிய தவறு என்று இப்பத்தான் உறைத்தது. கென்னல் ஷாப்பில் ஏகமாய் நாய் குட்டிகள். விதவிதமான குரைப்புகள். கன்னுக்குட்டி சைசில் அல்சேஷன்களை பார்த்ததும் அஞ்சு தலை ஆதிசேஷனை பார்த்த பயம். அதன் முதலாளிக்குக் கூட பாதி முதுகு வரை முடியிருந்தது. அந்த கறுப்புக் கண்ணாடியும் ஒற்றைக் காது தோடும் என்னை கொஞ்சம் கலவரப்படுத்தியது. அவர் ஹவ் டு யூ டூ என்றதற்கு நான் அசடு வழிந்து அக்கம் பக்கத்தில் நாய் ஏதாவது இருக்கிறதா என்ற தேடலிலேயே இருந்தேன். கமலா என்னவோ தன் ஒன்றுவிட்ட மாமாவிடம் பேசுவது மாதிரி ஆரம்பித்துவிட்டாள். ஊதுகுழலுக்கு கால்கள் முளைத்தமாதிரி ஒரு குட்டி ஒன்று என் கால்களை நக்க நான் சுவற்றில் பூச்சி மாதிரி ஒட்டிக் கொண்டேன். அதன் பக்கத்திலேயே நூல்கண்டுக்கு நடுவகிடு எடுத்து வாரிவிட்ட மாதிரி இன்னோரு குட்டி நாய். பூதாகரமாய் ராமாயணத்தில் திரிசடையை பற்றி படித்திருக்கிறேன். இந்த சின்ன முழு சடை நாயின் முன்பகுதி எது என்று நான் கேட்டுவிட ஏதோ கிண்டல் செய்வதாக செல்லமாக கோபித்து கொண்டுவிட்டார்கள். ஒருவழியாக ஷாலு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் உடனடியாக அனைவருக்கும் ஸ்வீட்ஸ் வழங்கப்பட்டது. ஏதோ ஒரு அரையடி ஸ்கேல் சைசுக்கு நாய் வரப்போகிறது என்று பார்த்தால் அரைகிலோ சதையை ஒரே கவ்வில் எடுக்கக் கூடியதைத்தான் எனக்கு ஷாலு என்று அறிமுகப்படுத்தினார்கள். நான் பார்த்த கோணம் தவறா என்று தெரியவில்லை. அது என்னை அந்நியனாய் பாவித்து உர் என்றது. மேடையில் தலைவருக்கு மரியாதை அளிப்பது போல ஷாலுவுக்கு புத்தம் புதிய சீப்பால் வாரப்பட்டது. அலங்கார கழுத்துப்பட்டையென்ன, வாசனாதி திரவியங்களென்ன, பாண்டு வாத்தியங்கள் மட்டும்தான் குறைச்சல். காலனியில் கமலாவை பிடிக்கமுடியவில்லை. ஸ்வீட்சும் கூல்டிரிங்க்சும் தண்ணிபட்ட பாடாயின. “கங்கிராசுலேஷன்ஸ். நாய் வாங்கியிருக்கீங்களாமே. எவ்வளவு ஆச்சு?” நான் முழியாய் முழித்தபோதெல்லாம் ஆபத்பாந்தவியாய் கமலாதான் வந்தாள். என்ன ஜாதி? என்று ஒருவர் கேட்டுவிட 'பாமரேனியன்' என்று எனக்கு தெரிந்ததை சொல்லி வைத்து என் அறியாமையை வெளிப்படுத்திவிட மறுபடியும் கமலாதான் வரவேண்டியிருந்தது. “பமரேனியனா? என்ன உளர்றீ£ங்க? (வழக்கம் போல என்று சேர்த்துக் கொள்ளவில்லை). இது அல்சேஷன் டாபர்மேன் கிராஸாக்கும்.” 'மம்மி. கிராஸ்னா என்ன?' என்று ஸ்வேதா கேட்டு வைக்க டாப்பிக்கை மாற்ற பெரும்பாடு பட வேண்டியதாகிவிட்டது. காலையில் தினமும் கண்விழித்தால் கைதொழும் தேவதையம்மா என்று உருகும் உண்ணியின் பாடல் எனக்கு பிடிக்காமல் போனதுக்கு காரணமே இந்த ஷாலுதான். எனக்கு காலையில் நாலு மணியிலிருந்து ஆறு மணி வரைதான் நல்ல தூக்கம் வரும். அந்த அர்த்த ராத்திரி நித்திரையிலிருந்து என்னை மூஞ்சியில் தண்ணீர் ஊற்றாத குறையாக எழுப்பி என் கையில் ஷாலுவை கொடுத்துவிடுவாள். எனக்கோ தூக்கக் கலக்கம். இதுவோ கீழே படி இறங்குகிற வரைக்கும் கொஞ்சலோ கொஞ்சல். தாடை தொடை என்று அனைத்து பாகங்களையும் நக்கி என்னை கிட்டத் தட்ட ஆங்கில எஸ், இசெட் வடிவங்களாக்கி பாடாய்ப் படுத்தும். ரோட்டில் போனதும் அதை கன்ட்ரோல் செய்யவே முடியாது. புதிதாக ஆட்டோ ஓட்டினால் எப்படி ஒரு பக்கமாக இழுத்துச் செல்லுமோ அது மாதிரி போய் கொண்டேயிருக்கும். சங்கிலி என் மணிக்கட்டில் இழுபட்டு இழுபட்டு காய்த்துப் போய்விட்டது. வலக்கையில் சங்கிலியின் டென்ஷன் என்றால் இடக்கையில் ஒரு குச்சி. வேறென்ன?  மற்ற தெரு நாய்களை விரட்ட. எங்கோ ஒரு தெரு நாய் தான் பாட்டுக்கு போய்க் கொண்டிருக்க ஷாலு அனாவசியமாக அதை வம்பிழுக்கும். அப்புறம் என் பாடு திண்டாட்டம். குச்சுபுடி டான்ஸ் மாதிரி என் குச்சிபிடி டான்ஸ் நடக்கும். மாஜிக் நிபுணன் மாதிரி என் வலதுகை சங்கிலியும் இடதுகை குச்சியும் தெருநாய் ஷாலு பொசிசனுக்கு ஏற்ப மாறி மாறி.... ஏக அவஸ்தை போங்கள். இதைவிட கொடுமை இன்னொன்று நடந்தது. ஷாலு தெரியாத்தனமாக ஒரு மெகா வில்லனை சீண்டிவிட ரிவர்ஸ் கியர் விழுந்துவிட்டது. ஷாலுவின் வால் உள் பக்கமாக போய்விட என் குச்சிபிடி நடனம் களறி பயிட்டு லெவலுக்கு போய்விட்டது. எதிரியின் அதிரடி தாக்குதலை தாக்குபிடிக்கமுடியாமல் ஷாலு சங்கிலியை பிடுங்கிக் கொண்டு ஓடிவிட நான் அந்த சங்கிலியை பொறுக்க வட இந்தியர்கள் செய்யும் நமஸ்காரம் மாதிரியும் நூலறுந்த பட்டத்தை பொறுக்கும் சிறுவன் மாதிரியும் சந்தி சிரிக்க ஓடியிருக்கிறேன். வெறும் கையோடு வீட்டுக்கு வந்து விஷயத்தை சொன்னதில் மூவரும் நானே போய்விட்ட மாதிரி ஒப்பாரி வைக்க ஆட்படையை திரட்டிக் கொண்டு அரை மணி தேடுதலில் ஷாலு மறுபடி கிடைத்து கமலாவின் வயிற்றில் பாலை வார்த்தது. என் காஸ்ட்லியான பேன்ட் நாசமாய் போனது. கீழே விழுந்து முட்டியை சிராய்த்து கொண்டதற்கு டாக்டர் மற்றும் மருந்து செலவு மட்டும் 150 ரூபாய் ஆனது. ஷாலு என் நிம்மதி மற்றும் சரீரத்தை மட்டும் பதம் பார்க்கவில்லை. பர்சையும் சேர்த்துதான். வீட்டில் நாய் வளர்ப்பை பற்றி விதவிதமான புஸ்தகங்கள். சஞ்சுவும் ஸ்வேதுவும் சாப்பிட்டார்களோ என்னவோ ஷாலுவுக்கு ராஜ உபசாரம். ராத்திரியில் அதுவும் எங்களோடு ஏசி ரூமில்தான் இருக்கும். நல்லவேளை பெட் மேலே இல்லை. ஒரு முறை நடுராத்திரியில் முழிப்பு வந்து தொலைக்க நான் இருட்டில் ஷாலுவின் கண்களை பார்த்து கிட்டதட்ட பேய் என்றே தீர்மானித்துவிட்டேன். முட்டை என்று எழுதினாலே குமட்டிக் கொண்டு வரும் கமலா வாட்ச்மேனிடம் நூறு ரூபாய் கொடுத்து ஷாலுவுக்கு மட்டன் கொடுக்கச் சொன்னாள். வெட்டினரி டாக்டரோடு ஷாலு சம்பந்தமாக விசாரித்ததற்கே போன் பில் 500 ரூபாய் ஆகியிருக்கும். பார்ப்பதற்கு சின்ன கன்னுகுட்டி மாதி இருந்தாலும் ஷாலு இன்னமும் குழந்தைதான். வீட்டு ஹால் என்ன பெட்ரூம் என்ன என்று விவஸ்தையே இல்லாமல் எல்லா இடங்களிலும் நம்பர் ஒன் மற்றும் இரண்டு போய்விடும். அந்த நேரங்களில் கமலா சந்தேகத்துக்கு இடமில்லாமல் பிசியாக இருப்பாள். சமையல்கட்டில் தோசைக்கு 'சொய்ங்' என்று சத்தம் வந்தாலே ஷாலுவுக்கு மூக்கில் வியர்த்துவிடும். அதற்கு ரெண்டு போடுகிற வரை அதன் விதவிதமான சத்தங்கள் நிற்காது. இப்படியாக இந்த சனி திசையிலிருந்து எப்படி விடுபடப்போகிறேன் என்று தினமும் புலம்பிக் கொண்டிருந்த போது திடீரென ஒரு மத்தியான வேளையில் எனக்கு போன் வந்தது. சஞ்சுதான் பேசியது. “அப்பா. ஷாலு அம்மாவை கடிச்சுடுத்து. கீழாத்து மாமி அம்மாவை சரண்யா நர்சிங் ஹோமுக்கு அழைச்சிண்டு போயிருக்கா. நீ நேரா அங்க வந்துடு. வரும் போது அம்மா ஏடிஎம்ல ஃபவ் தெளசண்ட் எடுத்துண்டு வரச் சொன்னா. உடனே வா.” அலறியடித்துக் கொண்டு போனால் நர்சிங் ஹோம் வாசலில் ஸ்வேது கமலாவின் செல்லும் கையுமாக நின்று கொண்டிருந்தது. “அப்பா. ஷாலு பேட். அம்மாவை பைட் பண்ணிடுத்து.” கமலாவை பார்க்க பாவமாக இருந்தது. குதிகாலுக்கு சற்று மேலே நன்கு வெடுக்கென கடித்திருக்கிறது. சாதாரணமாகவே கொஞ்சம் ஸ்தூல சரீரம். வீக்கத்தில் இன்னும்... வேண்டாம். கடியைவிட போடப்போகிற ஊசிகளை பற்றிய பயம் அவளுக்கு. சாதாரண ஊசிக்கே கத்தி அமர்க்களம் செய்யும் குழந்தை குணம். மெதுவாக மூடு பார்த்து ஆரம்பித்தேன். “நான் சொல்லலாம்னுதான் இருந்தேன். நாயெல்லாம் நமக்கு சரிபட்டு வராதுன்னு. நீங்கள்ளாம் கேட்டாதானே.” “ஆமாங்க. நீங்க சொல்லறதுதான் சரி.” இந்த சமயத்தில்தான் என் ஆசை மனைவி தேனாய்ப் பாயும் ஒரு விஷயத்தை திருவாய் மலர்ந்தருளினாள். “நான் கென்னல் ஷாப்ல பேசிட்டேங்க. அவங்க ஷாலுவ திருப்பி எடுத்துக்கறதா சொல்லிட்டாங்க. இப்பவே கொண்டு விட்டுட்டு வாங்க.” கமலாவுக்கு எதை செய்தாலும் இன்னிக்கே இப்பவே இந்த நிமிடமே என்பதுதான். வீட்டுக்கு போனால் எதுவுமே நடக்காத மாதிரி ஷாலு ஒரே ஆர்பாட்டம். “ஷாலு நீ திரும்பி போகிற வேளை வந்துடுத்து.” நான் சங்கிலியை கழற்றினேன். ஷாலுவுக்கு ஒன்றும் புரிந்ததாக தெரியவில்லை. வழக்கம் போல வாக்கிங் என்று நினைத்துவிட்டது. காரில் போகும் போது ஏகத்துக்கு அட்டகாசம் செய்தது. ஆனால் எல்லாமே கொஞ்சலும் குதூகுலமும்தான். கென்னல் ஷாப்பில் விட்டபோது எனக்கே கொஞ்சம் தர்மசங்கடமாகி போய்விட்டது. நான் ஷாலுவை விட்டு விலகி வந்து காரில் ஏறி ஸ்டியரிங்க் பிடித்து திரும்பி பார்த்த போது அதன் கண்களில் வெளிபட்ட சினேகம் என்னைத் தடுமாற வைத்தது. மறுபடியும் தப்பு செய்கிறோமோ? ஷாலு. நீ என்னை படுத்தியெடுத்தாலும் ஐ லவ்யூடா. கமலாவின் வாத்தைகளை என்னால் மீற முடியவில்லை. கண்கள் கசிய, காரை நகர்த்தி, வேகமெடுத்தேன். (ஆனந்த விகடன் - 14 மே 2006)   7. செல்லாக் காசு   தெரு முனையில் என்றும் இல்லாத அளவுக்கு ஏகமாய் கூட்டம்.  சாதாரணமாக சிவராமன் தான் உண்டு தன் வேலை உண்டு என்று மாலை வாக்கிங்கை முடித்தோமா வீட்டுக்குள் சென்று அடைந்தோமா என்ற டைப்தான். ஆனால் கூட்டத்திலிருந்து வந்த சத்தமும் மக்களின் பரபரப்பும் அவரை சலனமடைய செய்தன. ஏழரை மணிக்குத்தான் டி.வி. சீரியல். அது வரை என்ன செய்ய? கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு வந்தால் என்ன? கூட்டம் அடர்த்தியாக இருந்தது. இலேசில் உள்ளே நுழைய முடியவில்லை. கொஞ்சம் இங்கே அங்கே சுற்றி இண்டு இடுக்கை ஆராய்ந்து ஒரு வழியாக உள்ளே நுழைந்துவிட்டார். எட்டிப் பார்த்ததில்... ஒரு சோனிக் கிழவன் சைக்கிளில் சுற்றிக் கொண்டிருந்தான். மத்தியில் ஒரு அழுக்குத் துணி விரிந்து கிடக்க, அங்கும் இங்குமாக சில்லறைகள். ஒரு பெண் தண்ணீர்க் குடம் ஒன்றை வட்டத்துக்குள் வைத்தாள். இரண்டு முறை சாதாரணமாகச் சுற்றி வந்த கிழவன் திடீரென குனிந்து தண்ணீர் குடத்தை எடுத்து தலை மீது வைத்துக் கொண்டான். கைகளை விட்டுவிட்டான். கூட்டத்தினர் கைதட்டி ஆர்பரிக்க சில்லறைகள் விழுந்த வண்ணம் இருந்தன. சிவராமன் போய் விடலாமா என்று யோசித்தார். வித்தையில் என்ன வேடிக்கை? மக்கள் என்னவோ ஆர்ப்பரித்து மகிழ்ந்தாலும் அதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கிழவனுக்கு அறுபது வயசு இருக்கலாம். வித்தை காட்டுகிற வயசா இது? எழுபத்து மூன்று வயதில் இரண்டு முறை இரண்டாவது மாடி ஏறவே மூச்சு வாங்குகிறது. கிழவன் இந்த வயதில் தன்னை இப்படி வருத்திக் கொண்டு வீதி வீதியாகப் போய் வித்தை காட்டி பிழைக்க வேண்டிய அளவுக்கு என்ன கஷ்டமோ? மனசு பொறுக்கவில்லை. வெளியே வந்து விட்டார். விடுவிடுவென  நடையை போட்டார். ஏன் போய்ப் பார்த்தோம் என்றாகிவிட்டது. அது சரி, கிழவன் அவன் பிழைப்புக்காக தன்னை வருத்திக் கொள்கிறான். இதில் தான் வருத்தப்பட என்ன இருக்கிறது? கிழவனில் தன்னைப் பொறுத்திப் பார்த்ததில் வந்த விளைவோ? சிவராமன் ரிடையர் ஆகி பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. ரிடயர் ஆன போது பிராவிடண்ட் பண்டு பணம்தான் கிடைத்தது. பென்ஷன் இல்லை. கிராஜுவிட்டி எல்லாம் சேர்த்து மொத்தமாக ஒரு லட்சத்து இருபத்தி எட்டாயிரம் கொடுத்தார்கள். நல்லவேளையாக ரிடையர் ஆவதற்கு முன்பே மூன்று பெண்களுக்கும் திருமணம் செய்துவிட்டார். அடித்து பிடித்து என்பதினாயிரத்தில் அறுநூறு சதுர அடியில் இரண்டாவது மாடியில் தண்ணீருக்கு ஆலாய் பறக்கும் மேற்கு மாம்பலத்தில் பிளாட்தான் வாங்க முடிந்தது. அதை ஆத்மா பெயரில் வாங்கியது எவ்வளவு பிசகு என்பதை பிறகுதான் உணரமுடிந்தது. ஆத்மா ஒரே மகன். இன்னமும் நிலையான வேலையில்லை. நாற்பது வயதிலும் கம்பனிக்கு கம்பெனி மாறிக் கொண்டிருக்கிறான். பையன் துரதிர்ஷ்டம் என்றால் வாய்த்த மருமகள் அதிர்ஷ்டம். சாந்தியின் சப்போர்ட் மட்டும் இல்லையென்றால் இந்நேரம் இந்த கிழவன் மாதிரி வீதிக்கு வந்திருப்பாரோ என்னவோ? பி. எஃப் பணத்தின் மிச்சத்திலிருந்து சில ஆயிரங்களுக்கு தன் மூன்று பெண்களுக்கும் கிரைண்டர், பீரோ மாதிரி சிலவற்றை வாங்கிக் கொடுத்தார். அது ஆத்மாவுக்கு பிடிக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக உரசல்கள் அதிகமாகி ஒரு வழியக இருவருக்கும் பேச்சுவார்த்தை நின்றே போனது. அதன் பிறகு எல்லாமே சாந்தி மூலமாகத்தான். ரிடையர் ஆனதில் கசண்டு போல மிச்சமிருந்த இருபதினாயிரம் ரூபாய்க்கும் பிறகு கேடு வந்தது. சாந்தியின் இரண்டாவது பிரசவத்தில் ஏகப்பட்ட சிக்கல். என்ன ஏது என்றே புரியாமலே தொடர்ச்சியாய் சில ஆபரேஷன்கள். சாந்தியை வீட்டுக்கு அழைத்து வர தன்னிடம் உள்ள பணத்தை கொடுத்தால் ஒழிய வேறு வழியில்லை என்ற நிலைமை. கொடுத்துவிட்டார். ஆத்மா வீராப்பாக ஆறே மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவதாகச் சொன்னான். தண்ணீரில்தான் எழுதி வைக்க வேண்டும். ஆயிற்று. மூன்று வருடங்கள். சிவராமன் கையில் சுத்தமாக சல்லி காசில்லை. புகையிலைக்கும் புளிப்பு மிட்டய்க்கும் சாந்தி மூலமாக கேட்டு பெற வேண்டியிருக்கிறது. சாந்தி அவ்வப்போது கொஞ்சம் அதிகமாகவே கொடுத்தாலும் ஆத்மா கணக்கு எழுதுகிறேன் பேர்வழி என்று நோகடிப்பான். ஒரு முறை பேரன் ராகவ் மூன்று சக்கர சைக்கிள் வேண்டும் என்று தாத்தாவை நச்சரிக்க 'அப்பாவிடமிருந்து என் பணம் வரும். அதில் வாங்கித் தருகிறேன்' என்று சாந்தி மூலமாக சொன்னதற்கு, 'ராகவுக்கு எப்போது சைக்கிள் வாங்கித்தர வேண்டும் என்று எனக்கு தெரியும். அப்பாவை வம்பு செய்யாமல் சும்மாயிருக்கச் சொல்' என்று அவன் கத்த என் பணம் உன் பணம் என்று வீடே ரகளையானது. சிவராமன் செல்லாக்காசாய் போய்விட்டார். சரி. இங்கே இருந்தால்தான் மனஸ்தாபம் என்று சில நாட்களுக்கு தன் பெண்களை பார்க்க சென்றால், 'எனக்கு செலவு வைக்க வேண்டுமென்றே அப்பா அடிக்கடி அக்காக்களை பார்க்க போய்விடுகிறாரா?' என்று மூச்சைப் பிடித்துக் கொண்டு கத்துவான். இத்தனைக்கும் மூன்று டஜன் வாழைப்பழங்களும் சில பிஸ்கட்டுகளும்தான். ஆத்மா ஒன்றை புரிந்துகொள்வில்லை. தான் பணத்தைத் திருப்பி கேட்பது ஏதோ தொடர்ச்சியாகச் செலவு செய்வதற்கு என நினைத்துக் கொண்டிருக்கிறான். தன்னிடம் பணம் இருப்பது ஒரு பாதுகாப்புக்கும் ஒரு மரியாதைக்கும் என்பதை எப்படி புரிய வைப்பது? சாந்தியும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாயிற்று. அவளுக்கு தன்னால்தான் அப்பாவுக்கு அவஸ்தை என்ற சுயப்பச்சாதாபம் வேறு. போன வாரம் ஒரு வழியாக சொல்லி முடித்து விட்டான். அவனுக்கு ஆபீஸில் ஏகப்பட்ட டென்ஷனாம். தன்னைத்தான் சரியாக படிக்க வைக்க வில்லை. நல்ல வேளையில் சேர்த்து விடவில்லை. தன் அக்காக்களை கவனித்துக் கொண்ட மாதிரி தன்னைக் கவனிக்கவில்லை. இனி மேல்கொண்டாவது தனக்கு மன கஷ்டங்களை கொடுக்காமல் சும்மயிருக்கச் சொல் என்று வழக்கம் போல சாந்தி மூலமாகச் சொல்லிவிட்டான். பாவம். அந்த பெண். ஸ்விட்ச் போட்ட மாதிரி அழுகிறது. எங்கே இந்த பிரச்சனையால் மீண்டும் ஏதாவது அவள் உடம்புக்கு வந்துவிடக் கூடாதே என்று முற்று புள்ளி வைத்து விட்டார். செல்லாக் காசாய் சொச்ச காலத்தை தள்ள வேண்டும் என்பது தலையெழுத்து என்பதை மனசளவில் ஏற்றுக் கொண்டு விட்டார். எல்லாவற்றுக்கும் மரணம்தான் சரியான தீர்வு. ஆனால் அது வர மாட்டேன் என்கிறதே. வாசலில் இருந்த வாட்ச்மேன் சாந்தி வெளியே போயிருப்பதாகச் சொன்னான். சாவி வாங்கிக் கொண்டு தானே கதவை திறந்து தனியாக வீட்டில் இருக்க அலுப்பாக இருந்தது. நேரம்தான் இருக்கிறதே. அந்த கிழவனை மீண்டும் ஒரு முறை போய் பார்த்துவிட்டு வந்தாலென்ன? சைக்கிள் கூத்தும் இந்நேரம் முடிந்திருக்கும். எதிர்பார்த்த மாதிரியே கிழவன் சில்லறை காசுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தான். சைக்கிள் ஓரமாக சாத்தப்பட்டு இருந்தது. அதுவும் அவனை மாதிரியே நோஞ்சானாய் இருந்தது. அப்போதுதான் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. எல்லோரும் சில்லறை போட்டார்களே, தான் ஒன்றுமே அவனுக்கு கொடுக்கவில்லையே வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு ஒன்றும் கொடுக்காமல் போவது பிசகல்லவா? சட்டைப் பையை துழாவினார். ஒரே ஒரு ஐம்பது ரூபாய் நோட்டு இருந்தது. தனக்கு பாதுகாப்பும் மரியாதையும்தான் பிரச்சனை என்றால் இவனுக்கு சோறு கிடைப்பதே பெரிய பிரச்சனை. எதோ ஒரு வேகத்தில் ஐம்பது ரூபாயை அவன் அழுக்கு துணியில் போட்டார். குனிந்து சில்லறைகளை எண்ணிக் கொண்டிருந்தவன் ஐம்பது ரூபாய்த் தாளை பார்த்ததும் திடுக்கிட்டு நிமிர்ந்தான். அவன் பார்வையில் மிரட்சி இருந்தது. "ஐயா ரொம்ப நன்றிங்க". "ஏம்பா. இந்த வயசுல சைக்கிள் மிதிச்சு வித்தை காட்டறயே. கஷ்டமாயில்லை? உடம்பு தாங்குமா?" "என்னங்க செய்யறது. மூனு பசங்க இருக்காங்க. இருந்தும் சரியில்லை. ஒரே ஒரு பொட்டை புள்ளே இருக்குது. அதுவும் சீக்காளியா போக சொல்ல அவ வூட்டுக்காரன் வுட்டுட்டு போயிட்டான். கொஞ்ச நாள் பிச்சை எடுத்துப் பார்த்தேன். ரொம்ப அவமானமா இருந்திச்சு. சரி, எனக்கு தெரிஞ்சது இது ஒண்ணுதான். ஏதோ தெம்பு இருக்கங்காட்டிப் பொழப்பு ஓடுது. அப்பால... அவன் பார்த்துப்பான்." கிழவன் மேலே காட்டினான். "சரிப்பா. ஒடம்பு வலுவுக்கேத்த வேல செஞ்சு பொழச்சுக்கோ. வருமானம் கம்மியா இருந்தாக்கூட பரவாயில்ல. ஏடாகூடமா நாம ஏதாவது செஞ்சுட்டு மத்தவங்களுக்கு பாரமா போயிடக் கூடாதில்லையா? அந்த ஆதங்கத்துல சொல்லறேன்." "ஒங்க நல்ல சொல்லுக்கு எனக்கு அது மாதிரி எதுவும் வராதுங்க. ரொம்ப நன்றிங்க." சிவராமனுக்கு ரொம்ப திருப்தியாக இருந்தது. மனசு ஒப்பிக் கொடுக்கும் போதுதான் எவ்வளவு மகிழ்ச்சி. திரும்பி பாதி தூரம் வந்தவருக்கு சொரேலென்றது. சாயந்திரம்தான் சாந்தி அந்த ஐம்பது ரூபாயை கொடுத்தாள். ராகவுக்கு நாளை ஸ்கூல் திறக்கிறது. பிரட்டும் பட்டரும் வாங்கி விட்டு மிச்ச பணத்தை கைசெலவுக்கு வைத்துக் கொள்ள சொல்லியிருந்தாள். ஐயைய்யோ. இப்போது என்ன செய்ய? சாந்தியிடம் போய் விஷயத்தைச் சொல்லி மேலும் இருபது ரூபாய் கேட்பதா? கேட்டால் என்ன நினைப்பாள்? ஆத்மாவை எப்படிச் சமாளிப்பது? நானே ஒரு செல்லாக் காசு. இதில் கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தாயிற்று. செய்வதறியாமல் தவித்தார். கிழவனிடம் மீண்டும் போய் இருபது ரூபாயை மட்டும் கேட்டால் என்ன? ஆனால் அதை உடனே நிராகரித்தார். சே! தானம் கொடுத்தைத் திருப்பிக் கேட்பது கேவலம். வேண்டாம். சாந்தியிடமே....  சாந்தி வேறு வீட்டில் இல்லையே.   இரண்டு தப்படி முன்னே போவதும், திரும்பி வருவதுமாக திண்டாடினார். கடைசியில் கிழவனிடம் வெட்கத்தை விட்டுக் கேட்டுவிடுவது என்று தீர்மானித்துவிட்டார். கிழவன் சைக்கிள் அருகில் நின்று கொண்டிருந்தான். தயங்கி, தயங்கி, அவன் அருகில் போய் தலையை சொறிந்தவாறே நின்றார். எப்படி கேட்பது? பேச்சு வரவில்லை. "என்னங்கய்யா" "அது வந்துப்பா. எங்கிட்ட சில்லறை இல்லே. உன் கஷ்டத்தைப் பார்த்த போது சில்லறை மாத்தறது பெரிசாப் படலை. அதான் ஐம்பது ரூபாயையும் அப்படியே போட்டுட்டேன். அப்பறந்தான் என் மண்டைக்கு ஒறைச்சது. இருபது ரூபாய்க்கு இப்போ உடனடியா செலவு இருக்கு. அதனால நீ முப்பது ரூபா எடுத்தின்டு" "என்னாங்க சாமி.  என்ணெண்வோ பேசிக்கிட்டு, உங்களோட பெரிய மனசே போதுங்க. இந்தாங்க இருபது ரூபா." கிழவன் கொடுத்த அந்த இருபது ரூபாயை லட்சரூபாய் மாதிரி பத்திரமாக பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு மிகுந்த தளர்வோடு திரும்பினார். சே! என்ன முட்டாள்தனம். செல்லாக் காசுக்கு தானதர்மம் ஒரு கேடா? கொஞ்ச தூரம்கூட தாண்டியிருக்கமாட்டார். பின்னாலிருந்து அவர் தோளை யாரோ தொட்டார்கள். திரும்பியதில், கிழவன் சைக்கிளோடு நின்று கொண்டிருந்தான். "ஐயா, மன்னிச்சுக்கணும். என் பேச்சுக்கு கோவிச்சுக்க கூடாது. எனக்குள்ள எவ்வளவு துக்கமிருக்குதுன்னு நீங்க எப்படி உணர்ந்தீங்களோ அந்த மாதிரி உங்களுக்குள்ளேயும் ஏதோ நோவு இருக்குதுன்னு எனக்கு தோணுதுங்கய்யா. என்னோட கஷ்டத்தை விட்டுத் தள்ளுங்க. அது என்னோட விதி. என் கூடவே பொறந்தது. அதை நான்தான் கவனிக்கோணும். உங்களை கஷ்டப்படுதறது ரொம்ப பாவங்க. அதனால தயவு செஞ்சி தப்பா எடுத்துக்காம இந்த முப்பது ரூபாயையும் வாங்கிக்குங்க. உங்களை காட்டியும் எனக்கு கொஞ்சம் வலு இருக்குது. உங்க நல்ல மனசுக்கு நீங்க சுகமா இருந்தா அது போதுங்க. இந்தாங்க." சட்டைப்பையில் மூன்று பத்து ரூபாய் தாள்களை திணித்து விட்டு சைக்கிளை மிதித்து போய்விட்டான் கிழவன். (கல்கி - 24 ஜூன் 2001)     8. ஒரு வழிப்பாதை   "ஃபேன் ஆஃப்." ராட்சஸ மின்விசிறிகள் மெளனித்தன. "லைட்ஸ் ஆன்." பளீரென்று வெள்ளையும் நீலமுமாய் அத்தனை விளக்குகளும் உயிர்பெற்றன. "ஸ்டார்ட்." இயக்குனர் மிச்சமிருந்த சிகரெட்டை கீழே போட்டு காலால் நசுக்கினார். ப்ளெக்டர்களையும், கம்பி வலைகளையும் பிடித்திருந்தவர்களின் முகங்கள் சீரியஸ் ஆகின. "ரோலிங்." காமிராமென் மெல்லிய குரலில் இயக்குனர் காதில் விழும்படித் தெரிவிக்க, ஒருவன் கிளாப் கட்டையை காமிராவின் மூஞ்சிக்குக் காட்டிவிட்டு வேகமாக ஒதுங்கிக் கொண்டான். "ஆக்ஷன்". ஏதோ ஸ்விட்சை தட்டிவிட்ட மாதிரி உடனடியாக அவள் அழ ஆரம்பித்தாள். அழுகை என்றால் சங்கிலித் தொடராய் அழுகை. அவள் எவ்வளவு நேரம் அழ வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்காக இயக்குனர் சைகை செய்ய காத்திருந்தார். அந்த பெண் ஒரு ரவுண்டு அழுது முடித்து கர்ச்சீப்பை மூக்கின் மீது வைத்து  'டொர்' ரெனச் செய்யவும் இயக்குனரின் விரல் அசைந்தது. வேலுச்சாமி தளர்வாக உள்ளே வந்து அந்த பெண்ணின் அருகில் நின்றார். "ஏம்மா அழுவுறீங்க. என்னைத் தெரியுதா?" "கட். யோவ். பெரிசு. ப்ரியா டயலாக் முடிச்ச அப்பாலதாய்யா ஒங்க டயலாக். ஏன்யா உசிர வாங்குறீங்க?" கருப்புத் துணிக்குள் தன் தலையை விட்டுக்கொண்டு மானிடரில் பார்த்துக் கொண்டிருந்த இயக்குனர் துணியை விலக்கிக்கொண்டு கத்தினார். "ஸார். அவங்க டயலாக் சொல்ல விட்டுட்டாங்க. அதுனால நான் தொடங்கிட்டேன்." "பேசாத. என்னவோச் சொல்ல வருது. நீ என்ன செய்யணுமோ அதைச் செய்தா போதும். புரிஞ்சுதுதா? காலைல பத்து மணிக்கு ஷாட்டு வச்சு இன்னும் ரெண்டு சீன் கூட முடியல்ல. எல்லாம் என் நேரம். பாலு, பெரிசுகிட்ட விவரமாச் சொல்லு. அடுத்த ஷாட்ல ஓகே ஆகல்ல, எனக்கு கெட்ட கோபம் வரும்." 'சாவு கிராக்கிங்க' என்று அவர் மெல்லிய குரலில் முடித்தாலும் வேலுச்சாமிக்கு தெளிவாகக் கேட்டது. ஒளிர்ந்த விளக்குகள் அணைந்து மின்விசிறிகள் தங்கள் பேரிரைச்சலைத் தொடர்ந்தன. வேலுச்சாமிக்கு ஆத்திரமாக வந்தது. அவமானமாகவும் இருந்தது. அவரை இதுவரை யாரும் பெரிசு என்று தரக்குறைவாக அழைத்தது இல்லை. பார்ப்பதற்கு கொஞ்சம் ஏழ்மையின் பிரதிபலிப்பு இருப்பதால் ஆளாளுக்கு என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று ஆகிவிட்டது. முதல் டேக்கில் கொஞ்சம் காமிராக் கோணத்திலிருந்து விலகி நின்றுவிட்டார். அதற்கு ஒரு கேலி இருந்தது. அப்புறம் தவறுதலாக கொஞ்சம் டயலாக் கூடிவிட, 'ஸ்க்ரிப்டில் உள்ளதை மட்டும் சொன்னால் போதும்' என்று அறிவுரை சூடாய் வந்தது. ஆனால் இரண்டாவது டேக்கில் அந்த பெண் சொதப்பியபோதும் அடுத்தடுத்த ஷாட்டுகளில் டயலாக்குகளை தன் இஷ்டத்துக்கு மாற்றியமைத்த போதும் யாரும் கண்டு கொள்ளாதது ஏன்? வேலுச்சாமியும் ஒரு காலத்தில் பிரபலம்தான். ஆனால் அறுபதுகளில் உச்சத்தில் இருந்த யதார்த்தம் பொன்னுசாமி பாய்ஸ் கம்பனியை பற்றி இங்கு ஒருவருக்கும் தெரியவில்லை. "அப்படியா. இப்ப என்ன சீரியல் செய்யுறீங்க". நாடகங்கள் ஓய்ந்து சென்னை சபாக்களில் சுருண்டபோது ஏதோ அவ்வப்போது தலைகாட்டிக் கொண்டிருந்தார். பிறகு அதையும் குறைத்துக் கொண்டு தான் உண்டு நங்கநல்லூர் ஆஞ்சனேயர் உண்டு என்று இருந்துவிட்டார். இப்படியே பல வருடங்கள் போய்விட்டன. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன வழி என்ற நிலை வந்த போதுதான் எதிர் பிளாட் சிவா ஐடியா கொடுத்தான். "தாத்தா. நீங்க ஏன் சீரியல்ல நடிக்க முயற்சி செய்யக்கூடாது? உங்களுக்குத்தான் டிராமா எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறதே". அவன் அப்படியும் இப்படியுமாக சில சீரியல்களில் தலை காட்டுவான். பல டிவி கம்பனிகளில் ஏறி இறங்கினார். அதன் பலன் இன்று. எட்டு மணிக்கு அங்கு இருக்க வேண்டும் என்று சொன்னதால் மூன்று பஸ் பிடித்து வேர்க்க விறுவிறுக்க அங்கே போனால் ஷூட்டிங் நடப்பதற்கான அறிகுறியேயில்லை. ஒன்பது மணிக்குத்தான் ஒவ்வொருவராக வந்தார்கள். மணி பன்னிரெண்டான போதுதான் அவரை அழைத்து டயலாக் சொன்னார்கள். மேக்கப்புக்காக இருந்த ஒரே சேரில் தடியான ஒரு பெண் அமர்ந்திருந்ததால் அருகிலிருந்த ஸ்டூலில் உட்கார வைத்து இரண்டே நிமிடத்தில் மேக்கப் போடப்பட்டது. இந்த மூஞ்சிக்கு இது போதும் என்ற மாதிரி இருந்தது. இதிலென்ன தப்பு என்று மேலோட்டமாக தோன்றினாலும் எங்கோ இடிப்பதாகவே அடிமனதில் பட்டது. "வேலுமணி சார். இங்க வாங்க. உங்க டயலாக்கை மறுபடி சொல்லுங்க." கிளிப் பேடு அஸிஸ்டென்ட் அழைத்தான். "தம்பி.. என் பேரு வேலுச்சாமி.. வேலுமணி இல்லே." "ம். அதனால் என்ன. வேலுங்கறது சரிதானே." "அதெப்படி தம்பி சரியாகும். உங்களை பாலுன்னு கூப்பிடறாங்க. அதை மாத்தி கோபாலுன்னு கூப்பிட முடியுமா?" "ஏங்க நீங்க நடிக்க வந்தீங்களா, இல்லே வம்பு செய்ய வந்தீங்களா?" எதேச்சையாக அருகில் சென்ற இன்னொரு அஸிஸ்டென்ட், "என்ன பெரிசு இன்டஸ்ட்ரிக்கு புதுசா, அதான். டைரக்டரான்ட பதிலுக்கு பதில் பேசற. சொல்லறத மட்டும் கேளுய்யா. அவரு எவ்வளோ பெரிய டைரக்டரு தெரியுமா?" "சார். வேலுச்சாமி ஸார். உங்க விளக்க உரையெல்லாம் வேண்டாம். புரியுதா. எங்களுக்கு கேக்க பொறுமையில்ல. மூன்று மானிடர் ஷாட்ஸ் முடிந்து இது ஐந்தாவது டேக். யாருக்குதான் கோவம் வராது," நல்லவேளையாக அடுத்த ஷாட் ஓக்கே ஆனது. அது கூட கொஞ்சம் அரை திருப்தி, முக்கால் திருப்தியோடு சொன்னமாதிரி இருந்தது. அதன் பிறகு பிட்டு பிட்டாக சில சீன்கள் வந்தன. போகலாம் என்று சொல்லிவிட்டார்கள். பணம் செட்டில் செய்யக்கூடிய நபரை தேடிக் கண்டுபிடிப்பதில் அரை மணியும் ஒரு கிலோ மீட்டர் நடையும் ஆனது. "பேமென்டா. உங்க பேமென்டை உங்க ஏஜென்டுகிட்டத்தான் கேட்கனும். என்கிட்டே கேட்டா?" "மிஸ்டர். நான் டயலாக் ஆர்டிஸ்ட். உங்க குமார் சார் சொல்லி வந்திருக்கேன்." "அப்படியா. அதுக்கு எதுக்கு சார் சூடாகிறீங்க," "நீங்களா ஒரு கற்பனை செஞ்சுக்கிட்டு பேசினா நான் என்ன செய்ய முடியும்?" "வில்லங்கம் புடிச்ச ஆளா இருப்பே போலிருக்கே. சரி.. சரி... டப்பிங் சமயத்துல வாங்கிக்க." சிவா தெளிவாக சொல்லியிருந்தான். வேலுச்சாமி விடவில்லை. "இல்லை சார். எனக்கு செட்டில் செஞ்சுடுங்க. எனக்கு பல செலவுகள் இருக்கு." வேலுச்சாமி அடித்து பிடித்து ஒரு மணி நேரம் காத்திருந்து பணம் வாங்கிவிட்டார். விட்டால் போதும் என்று வீட்டுக்கு வந்து விழுந்த போது மணி ஆறு ஆகிவிட்டது. இரவு ஒன்பது மணிவாக்கில் சிவா வந்தான். "என்ன தாத்தா. எப்படி இருந்திச்சு முதல் நாள் அனுபவம்?" "அத ஏன் கேக்கிற போ. பாடா படுத்திட்டாங்க. மரியாதைன்னா என்ன விலைன்னு கேக்கறாங்க." "அப்படியா. பொதுவாவே என்ன வாழுதாம்? அது சரி... எந்த கம்பனிக்கு போனீங்க." வேலுச்சாமி சொன்னார். "ஓ. அதுவா. பணம் கொடுத்தாங்களா? இழுத்தடிச்சிருப்பாங்களே," "கொஞ்சம் முரண்டு புடிச்சாங்க. நான் விடல. வாங்கிட்டேன்." "நல்லது. அந்த கம்பனியோட சீரியல் எல்லாம் இப்ப டவுன். அதான்... அப்பறம் தாத்தா.... நீங்க நினைக்கற மாதிரி எல்லா கம்பனிகளும் இப்படி இல்லே". "எனக்கென்னவோ சரியாப்படல சிவா. இனிமே வேண்டாம்னு மனசுக்கு படுது. நாலு காசு சம்பாரிச்சாலும் மரியாதை முக்கியமில்லையா, தலையில குட்டி போடற சாப்பாடு வேண்டாம்." வேலுச்சாமி வேதனையோடு சொன்னார். "அட போங்க நீங்க. போகப் போக பழகிடும். இண்டஸ்ட்ரில இதெல்லாம் சகஜம்." "என் டிராமா அனுபவத்துல இதுமாதிரி அனுபவிச்சதில்லே." வேலுச்சாமியின் கண்களில் நீர் முட்டிவிட்டது. "தாத்தா. அது அந்தக் காலம். இப்ப எல்லாமே மாறிப்போச்சு. எல்லா எடத்திலும் மரியாதை சரியா சமமா கிடைப்பதில்லே. வாழ்வா சாவான்னு இருக்கும்போது நீதியாவது நியாயமாவது, இப்ப மெகா சீரியல்னு ஞாயிற்று கிழமைகூட விடாம ஷூட்டிங் நடத்தறாங்க. காலைல ஆரம்பிச்சு ராத்திரி வரைக்கும். அது தவிர எடிட்டிங், மிக்சிங், டப்பிங்னு ஏகப்பட்ட வேல. இத்தனைக்கும் மத்தியில அவங்களுக்கு கொடுக்கற சம்பளம் கம்மி. ஸ்டார்களுக்குத்தான் மரியாதை. பணம் வரலன்னா ஸ்பாட்டுக்கு வர மாட்டாங்க. டப்பிங்கை இழுத்தடிப்பாங்க. அதுனால ப்ரொடக்ஷன் ஆசாமிங்க நம்ம மாதிரி ஆசாமிகள் கிட்டத்தான் மிச்சம் புடிக்கறாங்க." வேலுச்சாமிக்கு ரொம்ப ஆயாசமாக இருந்தது. வெகுநேரம் தூக்கமில்லை. 'ஏய் பெரிசு' என்று இப்பவும் யாரோ கூப்பிடுவது போல இருந்தது. அடுத்த சில நாட்களில் மறந்தே போய்விட்டார். அதன் பிறகு யாரும் நடிக்க கூப்பிடவும் இல்லை. ஒரு மாதம் கழித்து திடீரென்று அவர் நடித்த சீன் வந்ததும் சிவா ஓடிவந்து கூப்பிட்டான். எத்தனையோ நாடகங்களில் நடித்திருந்தாலும் மின்னும் திரையில் தன் பிம்பத்தை பார்த்ததில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. அவருக்கு பதிலாக யாரோ டப்பிங் கொடுத்திருந்தார்கள்.   வேலுச்சாமி அந்த காலனியின் திடீர் பிரபலம் ஆகிவிட்டார். சீரியல் முடிந்ததுமே ஏகப்பட்ட போன் கால்கள். நேரில் சந்திக்க பல பேர் வந்து விட்டனர். விசாரிப்புகள் மறுநாளும் தொடர்ந்தன. பால் வாங்கும் போது பார்த்தவர்கள் விசாரித்தார்கள். ஆட்டோ ஸ்டாண்டில் சூழ்ந்து கொண்டார்கள். ஸ்கூல் போகும் குழந்தைகள் கூட 'ஹேய் டிவி சீரியல் தாத்தா' என்று சொல்லிவிட்டு போனார்கள். ஒரு சிலர் வேலுச்சாமியிடமே சான்ஸ் கேட்டார்கள். "ஸார் ரஜினி காந்த் படம் ஒண்ணு புதுசா வரப்போவுதாம். போய் ஃபோட்டோ கொடுங்க. அதுல உங்களுக்கு சான்ஸ் மட்டும் கிடைச்சுது, நீங்க எங்கயோ போயிடுவீங்க." அன்று மதியமே இன்னோரு கம்பனியிலிருந்து அவருக்கு போன் வந்தது, சிவா வீட்டு நம்பரில். "ஒரு நாள் ஷூட்டிங். நானூறு ரூபாய். பயணப்படி கிடையாது. வரீங்களா?" வேலுச்சாமி யோசிக்கத் தொடங்கினார். "என்ன? சீக்கிரம் சொல்லுங்க." "சரி. வர்ரேன்." தான் ஏன் அப்படிச் சொன்னோம் என்பது அவர் புத்திக்கு எட்டவேயில்லை. (கல்கி - 26 பிப்ரவரி 2006)   9. செல்வி   இரண்டு சின்ன தோள்களிலும் ஈரத்துணிகளை பெருமாளுக்கு சாத்திய துளசி மாலைகள் மாதிரி நிறைத்துக் கொண்டு செல்வி பால்கனிக்கு மூச்சு முட்ட வந்தபோது கிட்ட தட்ட விடிந்தேவிட்டது. லேட். அரை மணிக்கும் மேல் லேட். துணிகளை வீசி வீசி கொடிகளில் போட்டு வேகம் வேகமாக கிளிப்புகள் போட்டாள். இன்னும் ஐந்தே நிமிடங்களில் குழந்தைகள் எழுந்துவிடும். அப்புறம் திண்டாட்டம்தான். வேலை செய்ய பத்து கைகள் வேண்டும். பனி கொட்டிக்கொண்டு இருந்தாலும் செல்விக்கு வியர்த்துக் கொட்டியது. கடைசியாக பெரிய சைஸ் போர்வையை பால்கனி கட்டையில் தொங்கவிட்டுவிட்டு நிமிர்ந்து, வலது பக்கம் பார்த்தபோது.... அப்பா வந்து கொண்டிருந்தார். 'அப்பா'. சந்தோஷ உச்சத்தில் செல்வி துள்ளலோடு திரும்பியதில், கீழே இருந்த பூந்தொட்டியை கவனிக்கவில்லை. கால் இடறியதில், அது நிலை தடுமாறி ஒரு பக்கமாக உருண்டு எதிர் சுவரில் முட்டி உடைந்தது. ஹாலில் டி.வியும் ரிமோட்டுமாய் செல்வியையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த கிழவி டிவி சத்தத்துக்கும் மேலாக கத்த ஆரம்பிக்க அந்த வீடே களேபரம் ஆனது. செல்வியின் சின்ன பாதங்கள் ஈரமண்ணோடு இருந்த பூந்தொட்டியை மோதியதில் உயிரே போகிற மாதிரி வலித்தது. இரண்டு கைகளாலும் பாதத்தை பிடித்துக் கொண்டு முட்டியை அணைத்தபடி உட்கார்ந்துவிட்டாள். கட்டைவிரல் நுனியில் லேசாக ரத்தம் எட்டிப்பார்த்தது. தூக்க கலக்கத்தோடு புயல் மாதிரி வந்த சுமதி மண் குவியலுக்கு மத்தியில் சோகமாய் சரிந்து கிடந்த ரோஜா செடியை பார்த்தாள். சுறுசுறுவென ஆத்திரம் கொப்பளிக்க செல்வியின் கன்னத்தில் ஓங்கி அறைய, காலிங் பெல் ஒலித்தது. ஆறுமுகத்துக்கு வரவேற்பே பிரமாதமாக இருந்தது. கிழவி ஓயாமல் கத்திக் கொண்டே இருந்தது. சுமதி ஆறுமுகத்தை இழுக்காத குறையாக பால்கனிக்கு அழைத்துபோனாள். "வாங்க. வந்து பாருங்க. உங்க பொண்ணு செஞ்சிருக்கும் அக்கிரமத்தை. கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? நேத்து ஒரு லிட்டர் நல்லெண்ணைய கொட்டினாள். இன்னிக்கி ஒரு பூந்தொட்டி போச்சு. பால்கனி முழுக்க மண்ணு. போச்சு. எல்லாம் போச்சு." முதலில் ஆறுமுகத்துக்கு ஒன்றுமே புரியவில்லை. அரண்டு போய் நிற்கும் செல்வியை தேற்றுவதா? பொருள் நஷ்டத்தை சொல்லி சொல்லி புலம்பும் வீட்டுக்கார அம்மாவுக்கு பதில் சொல்வதா? என்று தெரியாமல் குழம்பினார். அவருக்கு பூந்தமல்லியில் உள்ள ஒரு ஃபாக்டரியில் வாட்ச்மேன் வேலை. அதன் முதலாளி பெரிய மனது பண்ணியதில் அவர் குடும்பம் ஒண்டுவதற்கு அங்கேயே இடம் கிடைத்தது. அதை வசிக்கும் இடம் என்று சொல்லுவதே கடினம். வெயில் காலத்தில் சுட்டு பொசுக்கும். மழை காலத்தில் நாலா பக்கமும் ஒழுகி கொட்டும். இந்த அழகில் அவர் மனைவி வடிவு ஆறு மாதமாக படுத்த படுக்கையாக இருக்கிறாள். என்ன வியாதி என்றே தெரியவில்லை. அவள் சம்பாத்தியமும் நின்று போனதில் பண கஷ்டத்தில் குடும்பம் நிலை தடுமாறியது. வேறு வழி இல்லாமல் கனத்த மனசோடுதான் பதிமூன்றே வயதான செல்வியை வீட்டு வேலைக்கு அனுப்பினார். செல்வி வண்டி மாடு மாதிரி முரண்டு பிடித்துக்கொண்டிருக்கிறாள். வேலைக்கு சேர்த்துவிட்ட மூன்றே மாதத்தில் பத்து தடவைக்கு மேல் வந்து பஞ்சாயத்து செய்தாகிவிட்டது. நேற்று எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தால் போல ஃபோனில் பிழிய பிழிய அழ, ஒரு தீர்மானத்தோடு விடிகாலையிலேயே புறப்பட்டு வந்தால்... "இங்க பாருங்க ஆறுமுகம். போறும். பேசாம உங்க பொண்ணை கூட்டிக்கிட்டு போயிடுங்க. ரொம்ப தாங்க்ஸ். நான் வேற ஆள் பார்த்துக்கறேன். இவ கொடுக்கற டார்ச்சர்ல என்னால ஆபீஸ்ல நிம்மதியா வேலை பார்க்க முடியலை. நேத்திக்கி டயர்டா ஆபீஸ் விட்டு வீடு வந்தா.... கிச்சன் முழுக்க எண்ணெயை கொட்டி... நாலு மணி நேரம் ஆச்சு, எல்லாத்தையும் சரி செய்ய. இவளால ஏற்படற நஷ்டம் இவளுக்கு கொடுக்கபோற சம்பளத்தை விட அதிகம். எத்தனை தடவை சொல்லியாச்சு? ஒழுங்கா வேலைய பாருன்னு. ஏதாவது அவசர வேலையா ஆள் தேடினா எங்கையாவது ஒரு மூலையில நின்னுகிட்டு அழுதுகிட்டு இருப்பா. வேணாம்.... போதும்.... கூட்டிக்கிட்டு போங்க." "அம்மா. கொஞ்சம் பொறுங்க. செல்வி சின்ன பொண்ணு.  அவ்வளவு விவரம் பத்தாது. நான் இன்னிக்கு தெளிவா எடுத்து சொல்லிடறேங்க. அரை மணி செல்விய வெளில கூட்டிக்கிட்டு போறேங்க. எல்லாம் சரியாயிடும். அம்மா. நீங்க செய்யற தயவாலத்தான் அங்க என் குடும்பத்துல அரை வயிராவது சாப்பிட முடியுதுங்க. கொஞ்சம் தயவு செஞ்சி...." ஒரு வழியாக செல்வியை பக்கத்தில் உள்ள பார்க்குக்கு அழைத்து போனார். பாவம். செல்வியால் நடக்கக்கூட முடியவில்லை. விந்தி விந்திதான் நடக்க முடிந்தது.   மூன்றே மாதத்தில் உதிர்ந்து விழுந்த கருவேலங் குச்சி மாதிரி... ஆறுமுகத்துக்கு நெஞ்சு வலித்தது. "என்னம்மா. உன்னால அங்க இருந்து வேல செய்ய முடியலயா?" செல்வியால் நேரடியாக அப்பாவை பார்க்க முடியவில்லை. "இல்லப்பா. அம்மாவையும் தம்பிப்பயலையும் விட்டுட்டு இங்க என்னால இருக்க முடியல. அவங்க வீட்டு ஐயா குழந்தைகளோடு விளையாடுவாரு. உப்பு மூட்டை தூக்குவாரு. அதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு தம்பி ஞாபகம் வருதுப்பா. அந்த கெளவி வேற ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கு." "செல்வி. இங்க பாரு. பொறுமையா இரு. உனக்கு பதிமூனு வயசு ஆயிட்டு. இன்னமும் நீ சின்ன புள்ள இல்லே. அம்மா சீக்காளியா படுத்திருக்கு. என் சம்பளமும் பத்தல. சின்னப் பயலுக்கு போன வாரம் ஒரேயடியா பேதியாகி கிளிச்சு போட்ட நாரு மாதிரி கெடக்கு. நீயும் அங்க வந்திட்டா என்னால எப்படிப்பா சமாளிக்க முடியும்." செல்விக்கு பதில் சொல்ல வார்த்தைகள் வரவில்லை. மெல்லியதாக கண்ணீர் முட்டியது. "போப்பா. அந்தம்மா என்ன வாளில தண்ணீ எடுத்தார சொல்லறாங்க. மூனு மாடி என்னால தூக்கியாற முடியல. கையெல்லாம் காச்சு போவுது. மீந்து போனதெல்லாம் சாப்பிட கொடுக்கிறாங்கப்பா. அந்த கொளந்தங்க தப்பி தவறி ஏதாவது திங்க கொடுத்திட்டா அந்த கெளவி கத்தி கூப்பாடு போடுது. அடிக்குது." "அப்படியா. நான் தெளிவா சொல்லிட்டு போறேன். எதுவானாலும் எங்கிட்ட சொல்லுங்க. அடிக்காதீங்கன்னு. நீ புத்திசாலி பொண்ணு இல்லையா. நெலமைக்கு ஏத்த மாதிரி நடந்துக்கம்மா. உன்னால முடியலைன்னா தைரியமா எடுத்து சொல்லிடு. பயப்படாதே. சரியா." "   ". செல்வி விசும்புவதை ஆறுமுகத்தால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. "இன்ணும் மூனே மாசம்மா. மொதலாளி சம்பளத்தை கூட்டி தரேன்னு சொல்லியிருக்காரு. பதினாலு வயசு ஆகட்டும். அந்த கம்பனிலேயே உனக்கும் ஏதாவது வேலை போட்டு தரேன்னு சொல்லியிருக்காரு. கொஞ்சம் பொறும்மா." சொல்லிக்கொண்டே வந்தவர் சட்டென கண் கலங்கி... "என்ன கஷ்டம்மா. நம்ம பொழப்பு நாய் பொழப்பு. வேண்டாம்மா. அடுத்த ஜன்மத்துலயாவது நீ கொஞ்சம் வசதியானவங்க குடும்பதுல பொறந்து தொலை. என்ன பாவம் செஞ்சேனோ, உன்னை இப்படி வாட்டுது. நீ சம்பாரிச்சு நாங்க சோறு திங்கனும்கிற அளவுக்கு இப்படி கேவலமா போய்ட்டேனே. என்னை மன்னிச்சுடும்மா." நடுங்கும் கைகளால் செல்வியின் சவலை கைகளை பிடிக்க, " என்னப்பா. இந்த பேச்சை இத்தோட நிறுத்துப்பா. வசதி இல்லாட்டாலும் உன்ன மாதிரி அப்பா எனக்கு இனிமே கெடைக்கமாட்டாங்க. அது நிச்சயம். எனக்கு வசதியெல்லாம் வேண்டாம்பா. நீங்க, அம்மா, சேகரு போதும்.... சரிப்பா. இன்னும் மூனு மாசம்தானே. நான் பார்த்துக்கறேன். நீங்க நிம்மதியா போங்க. போறதுக்கு முன்னாடி அந்த கெளவிய பத்தி அந்தம்மாகிட்டே தெளிவா சொல்லிடுங்க... அப்பறம்.... சரி... நான் சமாளிச்சுக்கறேன்..." பேச்சு அழுகையோடு கலந்துதான் வந்தது. திமிறி வந்து கன்னங்களில் வழிந்த கண்ணீரை இனிமேல் அழப்போவதில்லை என்ற மாதிரி பிஞ்சு விரல்களால் வழித்துப் போட்டாள். தன் நெஞ்சு வரை வளர்ந்திருந்த செல்வியை அப்படியே சில நிமிடங்கள் மௌனத்துடன் அணைத்துக் கொண்டார் ஆறுமுகம். மனசு கசங்கிய காகிதம் மாதிரி ஆகிவிட்டது. கால்கள் துவண்டு உடம்பு முழுவதும் ஒரு ஆயாசம் இருந்தது. வீட்டுக்கு திரும்பி வந்ததும் குழந்தைகள் செல்வியை கண்டதும் மகிழ்ச்சியில் ஓலமிட்டன. கிழவி பேச்சற்று ஒரு விரோத பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தது. ஆறுமுகம் கெஞ்சி கூத்தாடி வீட்டுக்கார அம்மாவை சம்மதிக்க வைத்துவிட்டார். செல்வி ஓடியாடி சகஜமாக வேலை செய்வதை பார்த்த திருப்தியோடு ஆறுமுகம் போனார். செல்வி பால்கனியிலிருந்து கையசைத்ததில் நம்பிக்கை தெரிந்தது. சுமதி ஆபீஸ் போய்விட்டாள். கிழவி தூங்க போய்விட்டது. குழந்தைகளை குளிப்பாட்ட வேண்டும். ஆளுக்கு ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் உட்கார்ந்து கொண்டு அட்டகாசம் செய்ய ஆரம்பித்தன. செல்விக்கு சேகரோடு கிராமத்து பம்ப் செட்டில் குளித்தது ஞாபகத்துக்கு வந்தது. ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் கொட்டமடிப்பார்கள். பெரிய குழந்தை தண்ணீரை வாரி சின்னதின் மேல் அடிக்கவும், அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அது செல்வியின் பின்னால் ஒளிந்து கொண்டது. சேகருக்கு வலது காலை விட இடது கால் சற்று சிறியது. கொஞ்சம் இழுத்து இழுத்துதான் நடப்பான். ஆனாலும் துரத்தினால் ஓட்டமாய் ஓடுவான். அவளுக்குள் இருந்த குழந்தை குணம் அவளை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்க, செல்வி அழத்தொடங்கினாள். ஆனால் இந்த முறை ஒரு வித்தியாசம், யாருக்கும் தெரியாமல். (கல்கி - 25 ஜூன் 2006)     10. இரண்டும் ஒன்று   ராகவன் அவர்கள் வந்ததினால் கண் விழித்தானா அல்லது அவன் கண் விழித்தபோது அவர்கள் வந்தார்களா என்பது தெரியவில்லை. புன்னகையோடு அவனையே கவனித்துக் கொண்டிருந்தார்கள். மிகவும் தெரிந்தவர்கள். நெஞ்சு வரை நினைவிருக்கிறது. ஆனால் யார் என்று உடனே சொல்லத் தெரியவில்லை.   "உங்களை அறிந்திருக்கிறேன். ஆனால் யார் என்று தெரியவில்லை." "நீயாகவே கண்டுபிடியேன் பார்க்கலாம்." அதற்கும் சிரிப்பு. ஆஸ்பிடலின் தூக்கலான டெட்டால் வாசனை ராகவனை சங்கடப்படுத்தியது. வலது கையை பார்க்க முடிந்ததே தவிர அசைக்க முடியவில்லை. தலையின் மேல் ஒரு கல்லை வைத்திருப்பது மாதிரி அவஸ்தை. கொஞ்சம் இடுப்புப் பகுதியை அசைக்கலாம் என்று முயற்சித்ததில் 'சுரீர்' என்று மின்னல் மாதிரி ஒரு வலி தண்டுவட நுனியில் புறப்பட்டு கழுத்து வரை வந்தது. "உங்களை யார் உள்ளே விட்டார்கள். இங்கு யாருக்கும் அனுமதியில்லை." "சிறப்பு அனுமதி  உண்டு" "சரி, அப்படித்தான் உள் மனது சொல்கிறது. எதற்கு வந்திருக்கிறீர்கள், நீங்கள் இருவரும்." "இருவரும்?" ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். "நாங்கள் ஒருவர்" என்றார்கள் கோரஸாக. அது ராகவனுக்கு எரிச்சலை தந்தது. கோபமாக வெற்றுப் பார்வை பார்த்தான். "சரி. சரி. நாங்கள் இருவர். அப்படியே வைத்துக் கொள்வோம், ஒரு பேச்சுக்கு?" என்று சொல்லிவிட்டு மறுபடியும் சிரித்தார்கள். "என்ன சிரிக்கிறீர்கள். என் கண் முன்னால் இருவரும் தெளிவாக தெரிகிறீர்கள். என் கண்கள் பழுதில்லை. இன்னொரு முறை கெக்க பிக்கே என்று சிரித்தீர்களானால் சத்தம் போட்டு உங்களை வெளியேற்றி விடுவேன்." சிரிப்பது நின்று கொஞ்சம் சீரீயஸ்னஸ் வந்தது. "ஒரே மூச்சில் இரண்டு கேள்விகள் கேட்டாலும் பதில் ஒன்றுதான். இருப்பதும் பார்ப்பதும் வெவ்வேறு நிலைகள்." "புரியவில்லை." "மணியும் நூலும் இரண்டாக இருந்தாலும் மாலை ஒன்றுதான் அல்லவா. கண்கள் இரண்டானாலும் பார்வை ஒன்றல்லவா. சாதாரண மனிதனுக்கு கல் கல்லாகத்தான் தெரியும். ஒரு சிற்பிக்கு அதனுள் இருக்கும் சிலை புரியும். கல் ஒன்று. பார்வை இரண்டு. ஆனால் இரண்டும் ஒன்று." "சபாஷ். நீங்கள் இருவரும் ஒருவரா? நான் நம்ப வேண்டும். அப்படியானால் நான் இருவரா?" "ஆமாம். உடல் தெரிகிறது. உயிர் உன்னிலும் உன்னைச் சுற்றியும் இருக்கிறது. அது தெரியவில்லை. ஆனால் இரண்டும் ஒன்றே." ராகவனுக்கு தலை சுற்றியது. "இல்லை. நாத்திகனான நான் உங்கள் ஆத்திக கருத்துக்களை ஏற்க மாட்டேன்." "அதில் தவறில்லை. இரண்டும் ஒன்றே." "இதென்ன புது குழப்பம்." "ஆமாம். ஒன்று இருப்பதாக நம்புபவர்கள் ஆத்திகர்கள். அதை பூஜ்ஜியம் என்று சொல்பவர்கள் நாத்திகர்கள். அவ்வளவே. இரண்டும் ஒன்றே." "நீங்கள் சொல்வது லாஜிக்கலாக இருந்தாலும் என் புத்தி ஏற்க மறுக்கிறது. இருக்கிறது. இல்லை. இவைகள் இரண்டு மட்டும்தான் இருக்கின்றனவா?" "ஆமாம். கம்ப்யூட்டரில் பைனரி கோட் என்று சொல்லுகிறீகளே. அது என்ன? இரண்டு என்பது பெயரளவுக்குத்தான். அதாவது, ஒன்றுமில்லை என்பதாக பூஜ்ஜியம். இருப்பதாக ஒன்று. இரண்டு இருக்கின்றன. ஆனால் இரண்டு என்ற எண் இல்லவே இல்லை." "சரி. இதை மெனக்கெட்டு என்னிடம் வந்து சொல்லக் காரணம்? நான் உங்களையும் உங்கள் பேச்சையும் நம்பிவிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை." "அது உன் இஷ்டம். உன் கண்களுக்கு புலப்படவில்லை என்பதற்காக ஒரு உண்மையை இல்லை என்று சொல்வது முட்டாள்தனம். சூரியனில் இரண்டு ஹைட்ரோஜன் துகள்கள் ஒன்று சேர்ந்து ஒளியாகிறது. அதுவே பல வண்ணங்களாகிறது. இரண்டு உயிரனுக்கள் ஒன்று சேர்ந்து ஒரு உயிரை உண்டாக்குகின்றன. இல்லையென்பது உருவாகும். உருவானது இல்லையென்பது ஆகும். ஆக இரண்டும் ஒன்று." அப்போதுதான் ராகவன் கவனித்தான். அவர்கள் இருக்கிறார்கள் என்பது புத்திக்கு எட்டியதே தவிர, அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை உணர முடியவில்லை. அவர்கள் இருவருமே ஒரே மாதிரி இருந்தார்கள். முகம் வட்டமாக இருந்தது. சில கணங்களில் அவர்களே ஒரு வட்டத்துக்குள் இருந்த மாதிரி இருந்தது. பின் அதுவே நீள் வாக்கில் இருப்பதாகப் பட்டது. மனதுக்கு பிடித்த பிரகாசமான ஜோதி ரூபமாக தெரிந்தார்கள். அவர்களை உருவத்தில் சேர்ப்பதா இல்லை அருவத்தில் சேர்ப்பதா என்ற குழப்பம் இருந்தது. "எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது. நீங்கள் பேய்களா? அல்லது நான் செத்துப் போன பின் என்னை அழைத்து போக வந்திருக்கும் எம கிங்கிரர்களா? பேய்களும் எம கிங்கிரர்களும் கோரமாக இருப்பார்கள் என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் அப்படி இல்லையே? யார் நீங்கள்?" "மரண பயத்தின் கற்பனை வெளிப்பாடுதான் பேய்களும் எம கிங்கிரர்களும். பிறப்பு எப்படி ஒரு நிகழ்வோ அப்படித்தான் மரணமும்." "அப்படியானால் எனக்கு மரணமா? என் வாழ்க்கை முடியப் போகிறதா? இதோ நான் கத்தப் போகிறேன். நீங்கள் யார். சொல்லுங்கள். என் மன பிரமைதானே? "கொஞ்சம் நெருங்கி வந்திருக்கிறாய்." "யார் நீங்கள். எனக்கு பொறுமை இல்லை. சொல்லுங்கள். சொல்லுங்கள். சொல்லுங்கள்." "சரி. சொல்லும் வேளை வந்துவிட்டது என்றே நினைக்கிறோம். நாங்கள் யாரா? ஒன்று இல்லை. மற்றொன்று இருக்கிறது. ஆக இரண்டுமாக ஒன்று. அதாவது நீதான் நாங்கள்." "மை காட். நானா? என்ன விளையாடுகிறீர்களா?" "இதோ உன் இந்த விளையாட்டு முடிந்து கொண்டிருக்கிறது.  ரிலே ரேஸ் மாதிரி அடுத்த ஓட்டத்துக்கான குச்சி உன்னிடமிருந்து எங்களிடம்  வந்து கொண்டிருக்கிறது. நீ நினைப்பது போல் இது முடிவல்ல. சுழற்சியின் ஒரு அங்கம். இப்போது வரை நீ ஒன்று. இனிமேல் நீயான நாங்கள் இரண்டானோம். பிறகு மீண்டும் ஒன்றாவோம். இது தொடர்ந்து கொண்டே இருக்கும். வருகிறோம்." ராகவனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. அடுத்த இரண்டாவது நொடியில் செத்து போனான். மறுநாள் ராகவனுக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. "ஒரு சகாப்தம் நிறைவு பெற்றது" என்றார் ஒருவர். "ராகவனின் உடல் மறைந்தாலும் அவர் அவரது நினைவுகளால் நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்" என்றார் இன்னொருவர். இரண்டும் ஒன்று. (கல்கி - 14 ஜனவரி 2007)     11. அண்டங்காக்கை   முருகேசனின் அன்றைய காலைப் பொழுது வழக்கத்துக்கு மாறாகத்தான் விடிந்தது. அலாரக்கடிகாரம் மாதிரி தினமும் விடிகாலையில் வந்தெழுப்பும் காகம் இன்று ஏனோ வரவில்லை. மற்ற காக்கைகள் 'கா..கா' என்று கத்தினால் இந்த கிழட்டு அண்டங்காக்கை மட்டும் ஒரு மாதிரி 'க்ர்ர்ஹ்... க்ஹ்' என்று பால்கனி கட்டையில் உட்கார்ந்து கொண்டு அவனை பார்த்து கத்தும். அதன் நாலாவது ரவுண்டில் முருகு கிட்டத்தட்ட விழித்துக் கொள்வான். அரை தூக்கத்தில் அவன் தரையில் சிதறவிடும் மிக்சர் துகள்களையும், நேற்றைய உணவு மிச்சங்களையும் தத்தி தத்தி உள்ளே வந்து உரிமையோடு கொத்திக்கொண்டு போகும். இனி மீண்டும் மறுநாள் காலைதான்! அவனைப் போலவே அந்த காக்கையையும் அவனைத்தவிர யாரும் ரசிப்பாரில்லை, ரட்சிப்பாரில்லை. விழிப்பு வந்தபோது, அவன் ஒரு சாக்கடைக்கு பக்கத்தில் உருண்டு கிடப்பது மாதிரி உணர்ந்தான். காரம் கலந்த கெட்ட வாடை அவனை சுற்றியிருந்தது. தலையை தூக்க முடியவில்லை. கைகளை அசைத்ததில் பிசுபிசுப்புடன் கம்பிகளாய் என்னவோ ஒட்டிக் கொண்டு வந்தது. ரிஃப்ளெக்ஸ் வேகத்தில் அடுத்த கையை சோர்வாக வீசியதில் 'சுரீரென' சுட்டது. மண்டைக்குள் தீப்பொறிகள் சிதற.... விழித்துக் கொண்டான். சுற்றியிருந்த பகுதிகள் 'அவுட் ஆஃப் போக்கஸில்' மங்கலாக தெரிந்தன. கண்ணுக்குள் ஒரு பிடி உப்பை கொட்டிய மாதிரி எரிச்சலாக இருந்தது. 'பிளாக்கவுட்' குழப்பங்கள் தீர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக நேற்றைய இரவின் மன கசப்புகள் அறுபட்ட காட்சிகளாக வந்து போயின. நினைவுகளின் வேகம் கூட இன்னும் தலையை வலித்தது. பால்கனி கதவு திறந்திருக்க, அதன் வழியாக வந்த காலைச் சூரியகிரணங்கள் அவன் கால்களை சுட்டன. 'விசுக்கென' கால்களை உள்நோக்கி இழுத்ததில் நிலை தடுமாறி இடதுபக்கமாக சரிந்தான். வயிற்றில் இருந்த அமில மிச்சங்கள் அவன் குரல்வளைப்பகுதியை சங்கடப்படுத்தின. கொரடாச்சேரி சண்முகநாதன் முருகேசன் என்ற பெயரைச் சொல்வதும், எங்கோ ஒரு புற்றில் போய் கொண்டிருக்கும் ஒரு எறும்பை கை காட்டி சொல்வதும் ஒன்றுதான். கொஞ்சம் உணர்வுபூர்வமாக சொல்வதென்றால் முருகேசன் என்ற பெயருக்கு முகமும் இல்லை, முகவரியும் இல்லை. ஆனால், அதே முருகேசன் என்ற நிழல் முகத்துக்கு வெளிச்சம் தந்த செந்தமிழ்ச்செல்வன் என்ற புனைப்பெயரை சொன்னதும் தமிழ் திரைப்படத்துறை வரலாறு சற்று பத்து வருடங்கள் பின்னோக்கி போய் பவ்யமாக தன் பக்கங்களை திறந்து காட்டும். அந்த காலம், முருகேசனின் வசந்த காலம். இரண்டே வருடங்களில் மூன்று மெகா ஹிட்டுகள். அதன் பிறகு ஒன்று சுமாராக ஓடி பெயரை காப்பாற்றியது. அதை தொடர்ந்து மீண்டும் இரண்டு ஹிட்டுகள். இன்றைக்கு முன்னணியில் இருக்கும் ஒல்லிப்பிச்சான் ஹீரோவுக்கு செந்தமிழின் முதல் படத்தால்தான் பிரேக் கிடைத்தது. செந்தமிழ் அறிமுகப்படுத்திய எல்லா ஹீரோயின்களும் இன்றும் காசை அள்ளி ரியல் எஸ்டேட்டில் குவித்து வருகிறார்கள். எங்கும் எப்போதும் பேசப்பட்டவனை அடுத்தடுத்து மூன்றே முன்று படங்கள் ஒரேயடியாக கவிழ்த்து போட்டன. அதில் கடைசியாக அவனை ஒரே வாரத்தில் 'ஊத்தி மூடியது' அவனுடைய சொந்தப்படம். கார், வீடு எல்லாம் போனது. செக் மோசடி வழக்குகள் அவனை நிம்மதியற்று ஓடஓட விரட்டின. சுவரோரம் குவிக்கப்பட்ட குப்பை போல ஆனவனுக்கு குடி உற்ற துணை ஆனது. சினிமா பார்த்து வெளியே வந்ததும், பிரக்ஞையின்றி நழுவவிடப்படும் சினிமா டிக்கெட்டாக செந்தமிழ்ச்செல்வன் பிடிகள் அற்று காலவெள்ளத்தில் காணாமல் போனான். எழுச்சியை தந்த அதே வேகத்தில், வீழ்ச்சியையும் கொடுத்தது தமிழ் திரைப்பட உலகம். 'நன்றி கெட்ட ....கள்' என்று செந்தமிழ் அடிக்கடி சொல்வது ஒரு ரசிக்கப்படாத காமெடி டிராக் மாதிரி ஆகிவிட்டது. ஒன்பது மணிவாக்கில்தான் செந்தமிழால் இயல்பாக எழுந்து கொள்ள முடிந்தது. வயிறு முதுகோடு ஒட்டிக்கொண்ட மாதிரி வலித்தது. சட்டைப்பையில் இருக்கும் பனிரெண்டு ரூபாய் காலை நாஷ்டாவுக்கு போதும். அப்புறம்? யோசிக்க யோசிக்க வெறுமைதான் மிஞ்சியது. சம்பந்தமே இல்லாமல், இன்று வராமல் போய்விட்ட காக்கா என்ன ஆனது என்ற கவலையும் மனசை அப்பிக் கொண்டது. அனிதா அவனைவிட்டு பிரிந்து போய் ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவள் இருக்கும் வரை சில்லறை செலவுகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. டான்ஸ் மாஸ்டர் செல்லாவின் குழுவில் பத்தோடு பதினொன்றாக ஆடிக் கொண்டிருந்தவள், தற்போது உதவி நடன இயக்குனராக உயர்ந்திருக்கிறாள். செல்லா அவள் மீது அதிக அக்கறை காட்டுவதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அன்றைக்கு செல்லாவை கைநீட்டி அடித்திருக்கக் கூடாது. இரண்டு தெரு தாண்டிதான் அனிதாவின் அப்பா விடு இருக்கிறது. வீட்டை நெருங்கியபோது வாசலில் இரண்டு காகங்களை பார்த்தான். அதில் அவன் காகம் இல்லை. இரண்டும் அழகாய் இருந்தன. ஒன்று அனிதா என்றால் இன்னொன்று? வேண்டாம்.... செல்லா நினைவுகளை ஓரம் கட்டினான். அனிதாவின் அப்பா வீட்டுக்கு வெளியே சேர் போட்டுக்கொண்டு ஒரு பீடியுடன் லொக் லொக்கிக் கொண்டிருந்தார். நிமிர்ந்து 'எதற்கு வந்தாய்?' என்பது மாதிரி பார்வையை வீசிவிட்டு, எதிர் பக்கம் திரும்பிக் கொண்டு, தோள் இடுக்குகளில் சொறிந்து கொண்டார். செந்தமிழுக்கு பட்டாசு திரியில் பற்ற வைத்த மாதிரி கோபம் கிளர்ந்தெழுந்தது. அடக்கிக் கொண்டான். அனிதா நைட்டியுடன் காலை நாளிதழின் சினிமா பக்கங்களில் மூழ்கியிருந்தாள். அவளும் அப்பனைப் போலவே நிமிர்ந்தாள். வெறுப்புடன் விடுவிடுவென போய், தன் கைப்பையை திறந்து நூறு ரூபாய் தாளை அருகில் இருந்த டேபிள் மீது வைத்தாள். "அனிதா. இதுக்கு பதிலா என் மேல காறி துப்பியிருக்கலாம்." "மானம், மரியாதையெல்லாம் போன உனக்கு காசுதான முக்கியம். எடுத்துக்கிட்டு போ." "அனிதா. அன்னிக்கி நான் செஞ்சது தப்புதான். எல்லாரும் கைவிட்டுட்டாங்க. நீயும் அப்படி செஞ்சா எப்படி?" வாசல் கதவு அருகில் லொக்லொக் கேட்டது. "மொதல்ல உன்னை மாத்திக்க முயற்சி பண்ணு. இன்னமும் உன்னோட பழசை புடிச்சுக்கிட்டு தொங்கிக்கிட்டு இருக்கே. விழுந்தவன் வெறியோடு எழுந்திருக்கணும். அடுத்து அடுத்துன்னு அலை பாயணும். புதுசு புதுசா கத்துக்கணும். முதல்ல, தோத்தவன் குடிக்கக் கூடாது. குடிய விடு. எவ்வளவோ கெஞ்சி கூத்தாடி ஒரு ஸ்டோரி டிஸ்கஷனுக்கு சான்ஸ் வாங்கி கொடுத்தேனே? என்ன செஞ்சே? என் மானம் போச்சு" "நீ நெனைக்கற மாதிரி அவங்கள்லாம் நல்லவங்க இல்லே. என்னை ஏதோ வேண்டா வெறுப்பா சேர்த்துக்கிட்ட மாதிரி, பிச்சை போடற கணக்கா என்கிட்ட நடந்துக்கிட்டாங்க. நான் சொன்ன ஐடியாவையெல்லாம் நேத்து முளைச்ச அசிஸ்டண்ட் டைரக்டர் பசங்க அவங்களுக்குள்ள சிரிச்சு கேவலப்படுத்தினாங்க. குப்பையா படம் எடுக்கிறாங்க." "கான்டக்ட் சர்டிஃபிகேட் கொடுக்க உன்னை அனுப்பல. சொல்ல சொல்ல கேட்காம ஆடினதோட பலனை இப்ப அனுபவிக்கிற. இன்னிக்கி சினிமா எவ்வளவோ மாறிடுச்சு. உன்னோட ஆகாசத்தில பறக்கறத விட்டுட்டு, தரையில நடக்க பாரு. இப்ப இங்கிருந்து போ." அதற்குள் அவள் அப்பா செந்தமிழை தரதரவென கையைபிடித்து வெளியே இழுத்தார். பீடி நாற்றம் குடலை பிடுங்கியது. நூறு ரூபாய் தாளை சட்டைப்பையில் வலுக்கட்டாயமாகச் சொருகினார். "இதான் கடைசி. இனிமே இந்த பக்கம் வராத. நீ வர்றதை பார்த்தா உன் கடன்காரங்க என் வீட்டு சாமான் செட்டை தூக்கிக்கிட்டு போயிடுவானுங்க. எங்களையாவது நிம்மதியா இருக்கவுடு" கிழவனை எதிர்த்து மல்லுக்கு நிற்க செந்தமிழிடம் மனசிலும், உடம்பிலும் வலுவில்லை. சிற்றுண்டிக்கும், ஒரு பாக்கெட் சிகரெட்டுக்கும் சேர்த்து நாற்பது ரூபாய் ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு முன்னாலேயே, காசு கொடுத்தால்தான் சாப்பாடு என்று தெளிவாக சொல்லிவிட்டார் ஹோட்டல் முதலாளி. "அண்ணே, மீதி காசு கொடுங்க" அனிதா கொடுத்த நூறை நீட்டினான். "அதெப்படி? உன்னோட பழைய கணக்கெல்லாம் எவன் தருவான். போவயா?" முதலாளி செந்தமிழை ஒரு செத்த எலி மாதிரி பார்த்தார். "அண்ணே, ஒண்ணு தெரிஞ்சுக்கிட்டேன். ஒருத்தன் கீழே விழுந்தா ஒரேயடியா போயிடணும். இல்லேன்னா இரக்கமே இல்லாம கல்லால அடிச்சே கொன்னுடுவீங்க" "முருகு. உன்னோட எனக்கு மல்லுகட்டி பேச நேரமில்லே. வியாபாரம் ஆகணும். இடத்தை காலி பண்ணு" வெளியே ஒரு சிகரெட்டை பற்ற வைத்தபோது, காக்கைகளின் பேரிசைச்சல் கேட்டது. காக்கை ஏதாவது இறந்து போனால் மற்ற காக்கைகள் இதே மாதிரிதான் கத்தும். கரையும் காகங்களுக்கு மத்தியில் தன்னுடைய காகம் இருக்கிறதா என்று தேடினான். எதுவுமே அவன் வீட்டுக்கு வரும் அண்டங்காக்கையை போலில்லை. இன்று மதிய சாப்பாட்டுக்கு என்ன செய்வது? ஒரு டி.வி. சீரியலுக்கு இருபது எபிசோடுகள் அவன் இயக்கியிருந்ததற்கு இன்னும் பணம் தரவில்லை. அதில் கொஞ்சம் கேட்டு வாங்கினால் என்ன? அந்த டி.வி. சீரியல் தயாரிப்பு அலுவலகம் வெறிச்சோடியிருந்தது. வாட்ச்மேன் கூட செந்தமிழை மதிக்கவில்லை. இரண்டு மணிநேரம் கழித்து வரச்சொன்னான். அது மாதிரி நான்கு முறை ஆனது. மாலை ஆறு மணிக்குதான் சீரியல் தயாரிப்பாளர் வந்தார். ஒரு மணி நேரம் கழித்துதான் அவனை உள்ளே அழைத்தார். "என்னைய்யா வேணும்? ஏன் தொந்திரவு பண்ணறே?" எடுத்த எடுப்பிலேயே எரிந்து விழுந்தார். "சார். என் கணக்கை செட்டில் பண்ணுங்க" "சரி. நான் செட்டில் பண்ணிடறேன். நீ மத்தவனுக்கெல்லாம் போட்டிருக்கியே பட்டை நாமம், அதை யார் செட்டில் பண்ணறது? அவங்க நோட்டீஸ் கொடுத்திருக்காங்கய்யா." "சார். வெக்கத்தை விட்டு கேக்கறேன். அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாம இருக்கேன். ஏதாவது கொஞ்சமாவது கொடுங்க" இருக்கும் சேரையெல்லாம் விலக்கிவிட்டு குறுக்குவாட்டில் அப்படியே அவர் கால்களில் கீழே விழுந்தான். "யோவ். எழுந்திருய்யா. செத்து கித்து போய்டப்போறே. இருக்கிற பிரச்சனை பத்தாதுன்னு, நீ வேற வில்லங்கம் எதுவும் செஞ்சிடாதே" திடீரென மனசு மாறி இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை அவன் சட்டைப்பையில் திணித்தார். 'இனி மேல் காசு கேட்டு இந்த பக்கம் வரக்கூடாது' என்று தீர்மானமாக சொல்லிவிட்டார். செந்தமிழ் வெளியே வந்தபோது இருட்டிவிட்டது. மதியம் சாப்பிடாதது வயிற்றை சுண்டி இழுத்தது. ஒரு ஹோட்டலை தேடிய அவன் கண்களில் டாஸ்மாக் கடை கண்களில் பட்டது. மனசு அலைபாய்ந்தது. குவாட்டரை பேண்ட் பாக்கெட்டுக்குள் சொருகிக் கொண்டு, ஆம்லெட்டுக்கு ஆர்டர் கொடுத்தபோது அவன் தோள்களின் மீது இரண்டு கைகள் விழுந்தன. திரும்பியதில்... "என்ன முருகு. ஆயிரம் ரூபாயை அப்படியே வலிச்சுக்கினு போயிடாலாம்னு பார்க்கிறயா? எங்களுக்கு அதிலே பங்கு வேணாம்?" "வேணாம் சேகரு. நான் ரொம்ப நொந்திருக்கேன். உன் கணக்கை சீக்கிரம் செட்டில் பண்ணிடறேன்." செந்தமிழ் சொல்வதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல், சேகர் என்பவன் செந்தமிழை இறுக்கி பிடித்துக் கொள்ள அவன் கூட வந்தவன், சட்டை பையிலிருந்த அத்தனை பணத்தையும் காலி செய்தான். திமிறிய செந்தமிழை கீழே தள்ளிவிட்டான். சுதாரித்து எழுந்த செந்தமிழ் காசு போன விரக்த்தியில் அவர்களை நோக்கி ஓடினான். ஏதோ ஒரு யோசனையில் அவர்களை நோக்கி குவார்டரை வீசியடித்தான். அது குறி தப்பி ரோட்டில் விழுந்து உடைந்தது. திரும்பிய அவர்கள் ஒரு வேகத்துடன் வந்து, செந்தமிழை சரமாரியாக தாக்கினார்கள். கோடிக்கணக்கான பட்ஜெட்டில் படங்களை இயக்கிய செந்தமிழ்ச்செல்வன் ஒரு சாலையோர சாக்கடைக்கு பக்கத்தில் இரண்டு மணி நேரம் அப்படியே கிடந்திருந்தான். மயக்கம் தெளிந்து எழுந்தபோது அவனிடம் எல்லாம் போய்விட்டிருந்தது. அழ எத்தனித்தான். அது கூட வரவில்லை. 'க்ர்ர்ஹ்... க்ஹ்' என்ற ஓசையே வெளிப்பட்டது. முதல் முறையாக அவன் தேடிவந்த அந்த அண்டங்காக்கை அவனுக்குள்ளே இருப்பதை உணர்ந்தான்.                                                                                         (கல்கி - 31 ஆகஸ்ட் 2008)   12. கோயில் அத்தை   (2008 தினமலர் வார மலர் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை) பெரிய அத்தையின் விரல் நிரடல்களில் கோலமாவு வளைந்தும் நெளிந்தும் ஓடிக்கொண்டிருந்தது. அவள் போடும் கோல அழகைக் காண்பதற்கு கருவறையில் வீற்றிருக்கும் அந்த லஷ்மிநாராயணரே வெளியே வந்து விட்டலநாராயணன் மாதிரி இடுப்பில் கை வைத்துக்கொண்டு ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்ப்பார் என்றே நினைக்கிறேன். சரி, அத்தையாகவே நிமிர்ந்து பார்க்கட்டும், அது வரை நானும் ரசிப்பது என்று தீர்மானமாக நின்று கொண்டிருந்தேன். கோலத்தை நிறைவு செய்த்துவிட்ட திருப்தியுடன் அதை பார்த்துக் கொண்டே பிரதட்சிணமாக வலம் வந்தவள், காதோரத்தில் அரும்பியிருந்த வியர்வையை கட்டைவிரலால் வழிக்கப்போனவள், குறுக்கிட்ட என்னை நிமிர்ந்து பார்த்து திகைத்துப் போனாள். சிரமப்பட்டு அடையாளம் கண்டு கொண்டாள். பரவசத்தில் கண்கள் அகலமாக விரிந்தன. "சுரேஷ்! நீயாடா? எப்படா வந்தே? யாரோ அர்சனை செய்ய வந்திருக்காங்கன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன். சே! என்ன முட்டாள் நான்? இவ்வளவு நேரம் காக்க வைச்சிட்டேனே? என்னடா இப்படி திடீர்னு?" அகன்ற புன்னகையை மட்டுமே பதிலாக வைத்தேன். சாதாரணமாகவே அத்தைக்கு என்னைக் கண்டால் தலைகால் புரியாது. அதுவும் பல வருடங்கள் கழித்து அவளை பார்ப்பதற்காகவே டெல்லியிருந்து களஞ்சேரிக்கு திடீரென எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வந்திருக்கிறேன் என்றதும் பதட்டம் கூடிப் போனது. நடுங்கும் கைகளோடு என் கையை பிடித்துப் பார்த்தாள். கோலமாவு கையாலேயே தலையை கோதினாள். என்ன செய்கிறோம் என்று புரியாமல் சின்னக் குழந்தை மாதிரி அங்கும் இங்கும் ஓடினாள். விறுவிறுவென என்னை கோயிலுக்கு வெளியே இழுத்து வந்து வெளிச்சத்தில் ஆசை தீர பார்த்தாள். என்னென்னவோ தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டே வந்தாள். எதிர்ப்படுபவர்களிடம், "என் மருமவன். என்னை பார்க்கணும்னு வந்திருக்கான். டெல்லியிலே நல்ல வேலையிலே இருக்கான்." என்று சொல்லி பெருமை பட்டுக் கொண்டே இருந்தாள். "அத்தை. உங்க கோயில் வேலை முடிஞ்சிடுச்சா? வீட்டுல போய் நிதானமா பேசலாமே? எதிர் வீட்டுல என் பொட்டிய கொடுத்திட்டு வந்திருக்கேன்" "இன்னும் பத்து நிமிஷ வேலைதான்டா. கொஞ்சம் பொறு. இல்லைன்னா, பிரகாரத்தை நாலு தடவை சுத்து. வாச படியிலே வந்து உட்கார்ந்துக்க. இதோ வந்திட்டேன்" எழுபது வயது ஆனாலும், எவ்வளவோ கஷ்டங்கள் வந்து அவளை அலைக்கழித்தாலும், அதை துளி கூட பொருட்படுத்தாமல் சிரித்த முகத்தோடு இயங்கிக் கொண்டிருக்கும் என் அத்தையை பார்க்கும்போது நெஞ்சில் ரத்தம் கசிந்தது. பின்னுக்கு போய்விட்ட நினைவுகள் மீண்டும் சிலிர்த்தெழுந்து என்னுள் முட்டி மோதின. எனக்கு அத்தைகள் இரண்டு என்றாலும் அத்தான் ஒன்றுதான். கிரிஜா அத்தைதான் பெரிய அத்தை. சொந்த மாமாவுக்குதான் கட்டிக் கொடுத்தார்கள். அத்தானுக்கு மேலக்குளத்துக்கு பக்கத்தில் சின்னதாக ஒரு ரைஸ் மில் இருந்தது. அது நஷ்டத்தில்தான் ஓடிக் கொண்டிருந்தது. அத்தை தன் உழைப்பை கொட்டி ஒரே வருடத்தில் லாபம் காட்டினாள். அந்த வருடமே கடைத்தெருவில் ஒரு மளிகை கடை போட்டு அதில் அத்தானை உட்கார வைத்துவிட்டு தான் ரைஸ்மில்லின் முழு பொறுப்பையும் எடுத்துக் கொண்டாள். காசு பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டியது. ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை என்று எல்லோரும் சொல்ல ஆரம்பிக்க, ஒரு துணிச்சலோடு என் சின்ன அத்தை வனஜாவையே, அத்தானுக்கு இரண்டாம் தாரமாக கட்டி வைத்தாள். அக்காளும், தங்கையுமாக இருந்தால், சொத்து பிரச்சனை, சக்களத்தி சண்டை வராது என்பதை பொய்யாக்கியவள் என் சின்ன அத்தை. அப்போதெல்லாம் எனக்கு பள்ளிக்கூடம் போகும் வயது. சின்ன அத்தை, பெரிய அத்தையை பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்வதும், இரண்டு பேர்களுக்கு நடுவே என் அத்தான் தடுமாறி தவிப்பதும், ஆளாளுக்கு வந்து வக்காலத்து வாங்குவதும் அடிக்கடி நடக்கும். பெரிய அத்தை உழைக்கும் வகை என்பதால் எப்போதும் தன்னை அலங்கரித்து கொள்வதில் நாட்டம் கொண்டதில்லை. தனி ஆளாக ஒரு மூட்டை நெல்லை எடுத்து ஹல்லரில் கவிழ்ப்பாள். பெரும்பாலும் இரவில்தான் கரண்டு வரும் என்பதால் சில நாட்கள் நெல் மூட்டை மீது படுத்து தூங்கிவிடுவாள். வேலையாள் இல்லையென்றால் அவளே மாவரைப்பாள். தவிடு பிடிப்பாள். வீட்டில் தன் பிடி அற்று போவது தெரியாமல் பொன்னும் பொருளும் சேர்த்து கொடுத்துக் கொண்டிருந்த சொந்த அக்கா, தன் தங்கையாலேயே ஏமாற்றப்பட்டாள். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அது ஒரு நவராத்திரி வெள்ளிக்கிழமை. வனஜா அத்தை தலைவிரி கோலமாக நடுதெருவில் நின்று கொண்டு ஏகத்துக்கும் சத்தம் போட்டு தகாராறு செய்ய, ஊரே கூடியது. என் அப்பாவும் தாத்தாவும் மற்ற உறவுக்காரர்களும் வரவழைக்கப்பட்டு விடிய விடிய பேசினார்கள். அதன்படி கோயில் பக்கத்தில் அரதபழசான, ஓடு வேய்ந்த வீட்டுக்கு மட்டும் பெரிய அத்தை சொந்தக்காரியானாள். அத்தான் பெயரிலும், பெரிய அத்தை பெயரிலும் இருக்கும் மற்ற எல்லா சொத்துக்களும் வனஜா அத்தையின் பெயருக்கு உடனடியாக மாற்றி கொடுத்துவிட வேண்டும் என்பதாக முடிவானது. சின்ன அத்தையை அடிக்கப்போன அத்தானை பெரிய அத்தைதான் தடுத்தாள். சொத்துக்கள் தன் கைக்கு வந்ததும், கொஞ்ச நாட்களிலேயே எல்லாவற்றையும் விற்று விட்டு தன் மூன்று பெண் குழந்தைகளுடன் தஞ்சாவூர் போனாள் சின்ன அத்தை. அங்கு மளிகை கடை வைத்தாள். அத்தான் சின்ன அத்தைக்கு தெரியாமல் அவ்வப்போது களஞ்சேரிக்கு வந்துவிட்டு போவார். அந்த சமயத்தில்தான் அத்தானின் முகத்தில் நிம்மதியை பார்க்கமுடியும். ரைஸ் மில் கையைவிட்டு போய்விட்டாலும், பெரிய அத்தை உழைப்பதை நிறுத்தவில்லை. ஊரில் ஒரு வீடு பாக்கியில்லாமல் எந்த வேலையென்றாலும் முகம் சுளிகாமல் இழுத்து போட்டுக் கொண்டு செய்வாள். பெரிய அத்தைக்கு நன்றாக பாட வரும். கிணற்றடியில் துணி தோய்க்கும் கல்லில் பெரிய அத்தை குத்துகாலிட்டு மெல்லிய குரலில் பாடிக்கொண்டிருக்க அத்தான் அதற்கு பக்கத்திலிருக்கும் தூணில் சரிந்தவாறு ரசித்துக் கொண்டிருப்பார். காதல் கசிந்துருகிக்கொண்டிருக்கும் போது நான் கரடியாய் பல தடவை நுழைந்திருக்கிறேன். "வாடா மீசை மொளைச்ச என் மருமவனே! ரம்யாவை கட்டிக்கிறயா?" என்பாள். ரம்யா வனஜா அத்தையின் மூத்தப் பெண். "போ அத்தை! வனஜா அத்தை மாமியார்னா வேண்டாம். நீ எனக்கு மாமியாரா இருக்கியா? கட்டிக்கறேன்" "பார்த்தீங்களா, உங்க மருமவன் பேசறத" அத்தான் சாமர்த்தியமாக பேச்சை மாற்றிவிடுவார். பெரிய அத்தையிடம் வசதிகள் குறைவாக இருந்தாலும் எனக்கு பெரிய அத்தைதான் பிடிக்கும். நான் படிப்பதற்க்கு சென்னை போனதும் பெரிய அத்தையிடமிருந்து தொடர்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. படிப்பு முடித்து, எனக்கு டெல்லியில் வேலை கிடைத்ததும், நான் அப்பா, அம்மாவை அழைத்துக் கொண்டு டெல்லி வந்துவிட்டேன். அதன் பிறகு இரண்டு சம்பவங்கள் மிக முக்கியமானது. சின்ன அத்தையின் மூத்த பெண், கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே யாரோ ஒருவனை காதலித்திருக்கிறாள். கொஞ்சம் வசதி குறைவு. கீழ் ஜாதி வேறு. சின்ன அத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ரம்யா ஒரு நாள் யாருக்கும் தெரியாமல், அந்த பையனுடன் களஞ்சேரி பெரிய அத்தை வீட்டில் தஞ்சம் புகுந்து விட்டாள். பெரிய அத்தை எல்லாவற்றையும் விசாரித்து விட்டு, அத்தானை வர வழைத்து, அவர் கையாலேயே ஆசிகள் வாங்க வைத்து திருமணத்தை நடத்திவிட்டாள். சின்ன அத்தை போலீசை வரவழைத்து ஊரே வேடிக்கை பார்க்கும் படி செய்தாளாம். ஆனால் பெரிய அத்தையின் உறுதியை கண்டு, அத்தானே மிரண்டு போனாராம். அடுத்து என் அத்தான் காலமானது. நாட்கள் போக போக, அத்தான் அதிக நாட்கள் பெரிய அத்தை வீட்டிலேயே இருப்பது அதிகமானதாம். அத்தான் உடலளவில் திடமாக இருந்து வந்தாலும், மனசளவில் அதிகமாகவே பாதிக்கப்பட்டிருந்தார். களஞ்சேரி வீட்டில் இருந்தபோது அவர் இறந்து போயிருக்கிறார். அதுவும் பெரிய அத்தையின் மடியில். சின்ன அத்தைக்கு தகவல் போனதாம். அதன் பிறகு அவள் செய்ததுதான் மிகக் கொடூரம். எல்லோர் பேச்சையும் மீறி அத்தானின் சவத்தை தஞ்சாவூர் எடுத்துக் கொண்டு போனாள். பெரிய அத்தையை அந்த சமயத்திலிருந்து எந்த சடங்கிலும் சேர்த்துக் கொள்ளவேயில்லை. பெரிய அத்தை அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும், எங்கள் உறவிலும், உள்ளூர் மக்களும் ரொம்பவே வருத்தப்பட்டார்கள். அதன் பிறகு பெரிய அத்தையின் உழைப்பு பெருமாளை நோக்கி திரும்பி விட்டது. சதா சர்வகாலமும் லஷ்மிநாராயணரே கதி என்று இருந்துவிட்டாள். 'என் சன்னிதி சுத்தமோ சுத்தம். ஆஹா!' என்று அந்த கடவுளே பெருமை பட்டுக்கொள்கிறார் என்றால் அதற்கு பெரிய அத்தைதான் காரணம். கோயிலுக்காகவே தன்னை கட்டிப்போட்டுக் கொண்டுவிட்டதால் பெரிய அத்தை ஊருக்கு கோயில் அத்தை ஆனாள். பெருமாளுக்கு சாயரட்சை ஆனது. அதன் பிறகுதான் பெரிய அத்தை வந்தாள். நானும் பெரிய அத்தையும் ரொம்ப நேரம் பேசிக் கொண்டே இருந்தோம். நாளைக்கே போக வேண்டும் என்றதும் பொய்யாக கோபித்துக் கொண்டாள். அப்புறம் தானே சமாதானம் செய்து கொண்டாள். அடிக்கடி வரச்சொன்னாள். குடும்பத்தோடு வரச்சொன்னாள். அவசியம் தஞ்சாவூர் போய் சின்ன அத்தையையும் பார்த்துவிட்டு போகச் சொன்னாள். அதற்கு என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டாள். சின்ன அத்தைக்கு இப்போது படுத்த படுக்கையாக இருக்கிறாளாம். ஆனால் வசதிக்கு எந்த குறைவும் இல்லையாம். நான் களஞ்சேரிக்கு வந்த வேலை இனிமேல்தான் ஆரம்பிக்க இருக்கிறது. அத்தையை எப்படியாவது சமாளித்து, டெல்லிக்கு அழைத்து வந்துவிட வேண்டும் என்று என் மனைவி சொல்லியனுப்பியிருக்கிறாள். ஆனால், அத்தையின் போக்கை பார்க்கும் போது எனக்கு நம்பிக்கையில்லை. இருந்தாலும், மெதுவாக ஆரம்பித்தேன். "அத்தை! நீங்க இங்க ஒண்டியா இருந்துக்கிட்டு எதுக்கு கஷ்டப்படனும். என் கூட வந்திடுங்களேன். சரளா நீங்க டெல்லிக்கு வரப்போறதை ஆவலோட எதிர்பார்த்துக்கிட்டு இருக்கா?" என் பேச்சை பெரிய அத்தை எதிர்பார்க்கவில்லை. கொஞ்ச நேரம் கண் மூடி யோசித்தாள். பிறகு நிதானமாக கீழ் குரலில் ஆரம்பித்தாள். "சுரேஷ் ! மஹாபாரத போர்ல கிருஷ்ணன் யார் பக்கங்கிறதுலேங்கறதுல துரியோதனனுக்கும், அர்ஜுனனுக்கும் போட்டா போட்டி நடந்துச்சாம். அந்த கதை தெரியுமா?" "ஏதோ ஓரளவுக்கு தெரியும். இருந்தாலும் நீங்களே சொல்லுங்களேன்" "கதை ரொம்ப பெரிசு. அதனால சுருக்கமாச் சொல்லறேன். கிருஷ்ணர் துரியோதனன்கிட்டே, 'உனக்கு நான் மட்டும் வேணுமா? இல்லே, என்னுடைய யாதவ சேனை மொத்தமும் வேணுமா?'ன்னு கேட்டாராம். அதுக்கு துரியோதனன், 'உன் யாதவ சேனைதான் வேணும்'னு சொன்னானாம். 'கிருஷ்ணா! எனக்கு நீ மட்டும் இருந்தா போதும்'னு அர்ஜுனன் சொன்னானாம். துரியோதனன் போன பிறகு, கிருஷ்ணர் அர்ஜுனன் கிட்டே அதுக்கான விளக்கம் கேட்டாராம். 'கிருஷ்ணா! நீ எங்கே இருக்கே என்பதுதான் முக்கியம். எனக்கு யாதவ சேனை எவ்வளவு பெரிசு என்பது முக்கியமில்லை'ன்னு அர்ஜுனன் அதுக்கு பதில் சொன்னானாம். அந்த மாதிரி என்கிட்டே காசு பணம் வேணுமானா கொறைவா இருந்திருக்கலாம். ஆனா உங்க அத்தான் மனசு எப்போதும் என்னோடதான்டா இருந்துச்சு. அவர் மனக்கஷ்டத்தோட நொந்து வரும்போதெல்லாம் நாந்தான்டா அவருக்கு மருந்தா இருந்திருக்கேன். அவருக்கு சாவு வந்தபோதுகூட, அது என் மடியிலேதான் வந்திச்சு. நிம்மதியா செத்தார். அதுக்கப்பறம் அந்த உடம்புதான் அவ கிட்டே போச்சு. நான் எப்போதுமே அவர் என்னை விட்டு பிரிஞ்சதா நெனைக்கலே. கிருஷ்ண பரமாத்மா மாதிரி என்னோட எப்பவும் இருக்காரு. அவருக்கு ரெண்டு பொண்டாட்டி மாதிரி நம்ம ஊரு பெருமாளுக்கும் ருக்மணி, சத்யபாபான்னு ரெண்டு பொண்டாட்டி. இப்ப நான் அவருக்கு ஊழியம் செஞ்சுக்கிட்டு இருக்கேன். எனக்கு ஒரு குறைவும் இல்லாம அவர் என்னை காப்பாத்திக்கிட்டு வராரு. ஊரே 'கோயில் அத்தை! கோயில் அத்தை!'ன்னு என்னை கொண்டாடுது. நான் இன்னமும் பெருமாளை வேண்டறது என்ன தெரியுமா? 'பெருமாளே! அந்த வனஜாவுக்கு நல்லதை செய். அவ சம்சாரி. அவளை ஏதாவது தண்டிக்கணும்னா, அந்த தண்டனையை எனக்கு கொடு' ன்னு கெஞ்சுவேன். சுரேஷ்! நான் என்னிக்கும் தைரியமா இருக்கறதுக்கு ஒரே காரணம், அத்தான் இருந்த வரைக்கும் அத்தான். அவர் போன பிறகு நம்ம பெருமாள். காசு பணமெல்லாம் யாதவ சேனை மாதிரி. அது முக்கியமேயில்லே....." "அது சரி அத்தை, உங்களுக்கு வயசாகிறது இல்லையா?" "அதை பத்தி நான் கவலைப்பட்டதே இல்லே, சுரேஷ். பாஞ்சாலி முழு சரணாகதி அடைஞ்ச மாதிரி நான் பெருமாள் கிட்டே என்னை கொடுத்திட்டேன். அவர் பார்த்துப்ப்பார். அத்தான் போகும் போது, எனக்கு பெருமாள் கிட்டே கை காமிச்சு விட்ட மாதிரி, பெருமாளே ஒரு நாள், 'சுரேஷ்! உன் அத்தையை கூட்டிக்கிட்டு போ'ன்னு சொல்லுவாரு. அப்படி ஒரு நிலை ஏற்பட்டா நான் வந்துதானே ஆகனும்." என் கண்களுக்கு பெரிய அத்தை தெரியவில்லை. தாயார் சன்னிதியில் கொலுவீற்றிருக்கும் அந்த கற்சிலையே உருமெடுத்து எதில் அமர்ந்திருப்பதாகப் பட்டது. எழுந்து, நெற்றி நிலத்தில் பட அவளை நமஸ்கரித்தேன். கோயில் அத்தை அப்போதும் புன்னகை பூத்திருந்தாள். (தினமலர்-வாரமலர்  21 டிசம்பர் 2008)     13. இனி எல்லாம் நீயாக   சிவகாமி தனக்கு முன்னால் செத்து போய் விடுவாள், தான் தனிமை பட்டு போய்விடுவோம் என்பதை பரசுராம் கனவிலும் நினைத்துப் பார்த்ததேயில்லை. அவருக்குத்தான் கர்ணனின் கவச குண்டலங்கள் மாதிரி ஆஸ்துமாவும் இருதய நோயும் உடம்பின் ஒட்டுண்ணிகளாக ஆகி பல வருடங்கள் ஆகி விட்டன. சிவகாமி லேசாக தலைவலி என்று ஒரு நாள் கூட படுத்துக் கொண்டதில்லை.  ஆனால் விதி யாரை விட்டது? எதிர்பாராத நேரத்தில் முதுக்குக்கு பின்னால் தடதடவென எருமை மாடு  ஓடி வந்து முட்டி தள்ளிவிட்டு போய்விட்ட மாதிரி இன்று காலையில் அது நடந்தே விட்டது. வழக்கம் போல காலை வாக்கிங் போய்விட்டு வந்து, ஹிண்டுவில் முதல் பக்கத்தையும், புரட்டிப்போட்டு ஸ்போர்ட்ஸ் பக்கத்தையும் மேய்ந்துவிட்டு இடது பக்க முக்காலியை பார்த்தபோது.... அங்கு காப்பி இல்லை. அப்போதே எச்சரிக்கை மணி அடித்துவிட்டது. ஒரு வேளை உடம்பு சரியில்லாமல் இருக்கலாம். என்ன ஏது விசாரித்தால் போயிற்று? என்று மனசை திடப்படுத்திக் கொண்டு குரல் விட்டு பார்த்தார். அதற்கும் பதிலில்லை. பயம் நெஞ்சுக்கூட்டுக்குள் சுறுசுறுவென மெல்லிய புகையாக பரவ,  ரத்த அழுத்தம் சூடேறியது. மூச்சிறைத்தது. தட்டு தடுமாறி எழுந்ததில் டைனிங் டேபிள் முனையில் இடித்துக் கொண்டார். படுக்கையறைக்குப் போனதில்.... அங்கு இல்லை. கிச்சனில் எட்டிப் பார்த்தபோது, கடவுளே..... சிவகாமி சுவரோரமாக பிரிந்த தவிடு மூட்டை மாதிரி உட்கார்ந்திருந்த வாக்கில் சரிந்திருந்தாள். மூத்திரம் சற்று தூரம் ஓடி குளம் கட்டியிருந்தது. 35 வருட போலீஸ் அனுபவம் உண்மையை புத்திக்கு உடனடியாக தெரிவித்துவிட்டாலும், அதை ஏற்றுக்கொள்ளாத பரசுராம் கன்னங்களைத் தட்டினார். கீழே படுக்க வைத்து நெஞ்சை பிசைந்து பார்த்தார். ம்..ஹூம்... உயிர் போய் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது ஆகியிருக்கும். சிவகாமி அசைவற்று படுத்திருந்தாள். மளமளவென கண்கள் இருட்டிக்கொண்டன. தொண்டை வறட்சியில் பேச்சு வரவில்லை. துக்கமும் பயமும் ஒன்று சேர, இருக்கும் ஆற்றலையெல்லாம் ஒன்று திரட்டி நெஞ்சை பிடித்துக்கொண்டு பரசுராம் சங்கிலித் தொடராய் அலறியதில்.... 'டொம்' என சத்தத்துடன் மடியிலிருந்த பிளாஸ்க் கீழே விழுந்து உடைந்தது. பரசுராம் சுதாரித்து எழுவதற்குள் அங்கு கூட்டம் கூடிவிட்டது. வார்டு பாய் ஓடி வந்து அவரை தூக்கி நிறுத்தினான். கூட்டத்தை விலக்கி சிதறிய கண்ணாடி துகள்களை அப்புறப்படுத்த ஆட்களை அழைத்தான். பரசுமாம் பிளாக் அவுட் குழப்பத்தில் தடுமாறினார். முதுகில் வெயில் சுட்டது. மதிய வேளை. நர்சிங் ஹோம். ஆமாம்! ஞாபகம் வந்துவிட்டது. நேற்று விடியக்காலையில்தான் சிவகாமியை இந்த நர்சிங் ஹோமில் சேர்த்தார். இரண்டு நாள் இடைவிடாத அலைச்சலில் சற்று கண் அயர்ந்துவிட.... தேங்க் காட்! சிவகாமி இருக்கிறாள். கால்கள் சிக்க வேகத்தை கூட்டி ஸ்பெஷல் வார்டு அறை 18ல் எட்டிப் பார்த்ததில்... சிவகாமி இருந்தாள். உயிரோடு... பரசுராமின் பதட்டத்தை கண்டு கொஞ்சம் மிரட்சியோடு எழுந்து உட்கார முயற்சித்தாள். டி.ஜி.பி பரசுராம் ரிடயர் ஆகி பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. இருந்தாலும் இன்றைக்கும் கூட அவர் பட்டி தொட்டிகளில்  பிரபலம். அவர் அதிகாரத்தின் கீழ் அந்தியூர் காட்டு வீரப்பன் முதல் அயோத்தியா குப்பம் வீரமணி வரை அடங்கிப் போயிருக்கிறார்கள். போலீஸ் அதிகாரிகளே அவரின் கத்திமுனை பார்வைக்கு எதிரில் இயல்பான பேச்சுக்கு திணறுவார்கள். எல்லாம் நேரப்படி நடக்க வேண்டும். அதில் ஒழுங்கு இருக்க வேண்டும். பேச்சிலும் செயலிலும் ஒரு மிடுக்கு இருக்கும். போலீஸ் உடுப்பில் கேடிகளுக்கு எந்த அளவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தாரோ அதே அளவுக்கு வீட்டிலும் கெடுபிடிகள்தான். டாக்டரின் கையெழுத்து கம்பெளண்டருக்கு அத்துபடி என்பது மாதிரி சிவகாமிக்கு அவர் கண் அசைவிலேயே அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து விடும். பத்து வேலையாட்கள் இருந்தாலும் அவருடைய தனிப்பட்ட தேவைகள் அனைத்தையும் சிவகாமிதான் செய்ய வேண்டும். அதில் கண்டிப்பாய் இருப்பார். தெருவில் நடந்து போகும் போது கூட மிடுக்காக நாலு அடி அவர் முன்னே நடக்க, சிவகாமி அவர் ஓட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மூச்சிறைக்க பின்னால் வந்து கொண்டிருப்பாள். சிரிப்பென்றால் பிறை சந்திரன் மாதிரி துளியூண்டு வந்து போகும். கேலியோ கிண்டலோ அவர் அறிந்திராதது. பேச்சு மிகவும் குறைவு. வீட்டில் கிச்சன் எங்கே இருக்கும் என்று கூட தெரியாது. தனக்கு என்ன உடுப்பு எப்போது வேண்டும்? குளிக்கும் வெந்நீர் எவ்வளவு வெதுவெதுப்பில் வேண்டும்? சிவகாமிக்குதான் தெரியும். எல்லா வசதிகளுக்கும் உடனுக்குடன் ஏற்பாடு செய்தார். ஒரு குறையும் வைத்தில்லை. குழந்தை பாக்கியத்தை தவிர. "அம்மா. நீங்க இங்க வந்ததிலேர்ந்து அய்யா ஒன்னும் சரியா சாப்பிடலங்க. வெறும் டீயா குடிச்சி பொளுத ஓட்டறாரு. பசி மயக்கத்துல பிளாஸ்க்கை வேற உடைச்சிட்டாரு." பரசுராமின் பின்னாலிருந்து  முளைத்த வார்டு பாய் சொல்லிக் கொண்டே போனான். சிவகாமி கேள்வியாக பரசுராமை பார்த்தாள். "என்னங்க? போய் சாப்பிட்டு வாங்க. பார்த்தா உங்களுக்குத்தான் நோவு வந்த மாதிரி இருக்கு. போங்க. எனக்கு சரியாயிட்டு."  ஈனஸ்வரத்தில் கண்களில் கவலை கொப்பளிக்க அவரை விரட்டினாள். பரசுராம் கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்ளாமல் சிவகாமியின் கைகளை இறுகி பற்றியபடி இருந்தார். நிமிர்ந்த போது அவர் கண்கள் கலங்கியிருந்தன. "நான் எப்ப சாப்பிடணும்? என்ன சாப்பிடணும்? எவ்வளவு சாப்பிடணும்னு எனக்கு தெரியாதே செல்லம். நீ சட்டுனு கால் நீட்டி படுத்ததும் எனக்கு ஒண்ணும் விளங்கல. அதான்." அவசர கதியில் பைபாஸ் சர்ஜரிக்கு ஆயத்தங்கள் செய்தபோது கூட கலங்காத பரசுராம் தற்போது உடைந்து போன கண்ணாடி சில்லுகளாக இருப்பதை பார்ப்பதில் சிவகாமிக்கு நெஞ்சு கனத்தது. "நீ பொழைச்சு வந்தா சாப்பிடலாம். இல்லேன்னா, அப்படியே போயிடலாம்னு இருந்தேன்." பதறிப் போனாள் சிவகாமி. "என்னங்க. முதல்ல இந்த பேச்சை விடுங்க. எனக்கு ஒண்ணுமில்லே... ஒரு டிஜிபி பேசுற பேச்சா இது?" முகம் பார்ப்பதை தவிர்த்து வெறுமையாக வெளி வாசலையே பார்த்துக் கொண்டே இருந்தவர், ஒரு நீண்ட மௌனத்திற்கு பிறகு திடீரென நினைவுக்கு வந்தவராய் "அடப்போ செல்லம். டிஎஸ்பி, ஐஜி, டிஜிபின்னு, போலீஸ் உடுப்பை கழட்டின பிறகும் கூட வித்தியாசமே இல்லாமல் இருந்தது எவ்வளவு பெரிய தப்புன்னு காலம் தப்பி இப்ப புரியுது. உனக்கு நல்ல கணவனா எதுவுமே செய்யலையேன்னு என்னை ரெண்டு நாளா மார்ல ரம்பம் வச்சி அறுக்கிற மாதிரி வலிக்குது. எவ்வளவு சீப்பா சுயநலமா நடந்துக்கிட்டிருக்கேன்கிற உணர்வு என்னை ஊசியா குத்துது." சிவகாமி மிகுந்த முயற்சிகள் செய்து கொஞ்சமாக ஒருக்களித்து வலக்கையை ஊன்றி இடது கையை தூக்க எத்தனித்தாள். அவரை கொஞ்சம் நெருங்கலாம் என்றால், முடியவில்லை. அப்படியே சரிந்தவள் கண்களை மூடி நெஞ்சுக்குள் விசும்பினாள். "அழறையா. வேணாம். என்னோட துக்கத்தை உங்கிட்ட சொல்லி இன்னும் உன்னை கஷ்டப்படுத்த விரும்பல" பரசுராம் தன்னைத்தானே ஆசுவாசப் படுத்திக் கொண்டு கஷ்டப்பட்டு இயல்புக்கு வர முயற்சித்தார். மீண்டும் அந்த மௌனம் அவரை  கொன்று தீர்த்தது. "நான் ஒண்ணே ஒண்ணு கேட்கட்டுமா? நீ ஏன் எதுவுமே கேக்கல?" சிவகாமிக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. "அட போங்க. வேற பேச்சு ஏதாவது பேசுங்க." வெட்கமாக இருந்தது. "இல்ல சொல்லு. எனக்கு தெரிஞ்சுக்கணும். வீட்ல ஒரு பொருளை எடுத்து வச்சதில்லே. பிறந்த நாள் திருமண நாள்னு ஒரு தடவை கூட துணிமணி எடுத்துக் கொடுத்ததில்லே. பூ கூட நீயேதான் வாங்கி வச்சிப்பே. அதக் கூட நான் வாங்கித் தரணும்னு எனக்கு இப்ப வரைக்கும் மனசுல வர்லே." சிவகாமி அவரையே கண்கொட்டாமல் பார்த்தாள். விழியோரங்களில் கண்ணீர் முட்டி நின்றது. நீண்ட பெருமூச்சுக்குப் பிறகு நிதானமாக ஆரம்பித்தாள். "நீங்க என்னைக் கல்யாணம் செஞ்சுக்க முடிவு செஞ்சீங்களே, அப்பவே தீர்மானம் செஞ்சிட்டேங்க. என் அம்மாவுக்கு லுக்கோர்டாமா இருந்ததைக் காரணம் காட்டி உங்க வீட்ல கல்யாணத்தை நிறுத்த பல பேர் குறுக்க நின்னாங்களாம். ஆனா நீங்கதான் தனி ஆளா போராடி என்னைக் கட்டிக்கிட்டீங்களாம். இது ஒண்ணே போறுங்க, உங்க மனச தெரிஞ்சிக்க. நீங்க போலீஸ் வேலைய ஒரு தவம் மாதிரி செஞ்சிங்க. அதுக்கு எந்த பங்கமும் வந்திடக் கூடாதுன்னு என்னை நானே குறுக்கிக் கிட்டேங்க. உங்ககிட்ட இருக்கிற சமூக அக்கறை, நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு இவைகளையெல்லாம் பார்த்து பிரமிச்சிருக்கேங்க. என்ன, மத்த ஆம்பிள்ளைக மாதிரி பொளுதன்னிக்கும் கட்டிப்புடிச்சுக் கிட்டு ஆட்டுக்குட்டி மாதிரி நீங்க இல்லை. அது உங்க சுபாவம் இப்படித்தான்னு புரிஞ்சிக்கிட்டேங்க. உங்க மனசு என்ன சொல்லுதுன்னு எனக்குப் புரியுங்க. அப்ப அப்ப செல்லம்ன்ணு கூப்பிடுவீங்களே, அது ஆயிரம் பட்டுப் புடவைகளுக்கு சமானங்க." "யு ஆர் க்ரேட் செல்லம். ஒரு துடிப்பான ஏஎஸ்பி டிஜிபியா உயர்ந்தேன்னா அது உன்னாலத்தான். இன்னும் ஒண்ணே ஒண்ணு கேட்கட்டுமா? இதிலும் சுயநலமிருக்கு. என்ன செய்ய?" "சொல்லுங்க." "கலியுகத்தில சொர்க்கம், நரகமெல்லாம் இங்கயேத்தான் சொல்லுவாங்க. அதே மாதிரி செஞ்ச தப்புக்கு பரிகாரம் செய்யவும் வாய்ப்புகள் வரும் போலிருக்கு. இவ்வளவு காலம் பளபளப்போட உயரத்துல பறக்குற பட்டமா நான் இருந்தேன். நீ எனக்கு எல்லாமா இருந்தே. உன்னை இப்படி திடீர்ன்னு படுக்கைல போட்டு ஆண்டவன் என் கண்ணை திறந்திட்டான். இனி உன்னை உட்கார வச்சி, வாழ்நாள் முழுக்க நான் உனக்கு எல்லாமா இருக்கப் போறேன். அதனால....." "என்னங்க? என்ன தயக்கம்? சொல்லுங்க." "எனக்கு முன்னாடி நீ போயிடாதே செல்லம்.. உனக்கு என்ன வேணுமின்னாலும் நானே செய்யறேன். நீ இரு. என்ன பார்த்துக்கிட்டே இரு. அது போதும்." சிவகாமி பதிலேதும் சொல்லவில்லை. கொஞ்சம் அவஸ்தையாக நெளிந்தாள். "ஏங்க நர்ஸை கூப்பிடுறீங்களா. பாத்ரூம் போனுங்க." டக்கென்று எழுந்து கதவு வரை போனவர், புன்னகையோடு திரும்பி வந்து, "செல்லம், வா. நான் கூட்டிக்கிட்டு போறேன்." சிவகாமி திடுக்கிட்டவளாய், வெட்கத்துடன், "நீங்களா? அடச் சீ. விளையாடாதீங்க. போய் நர்ஸை கூப்பிடுங்க" "ஏன். என்னால முடியாதா? நான் உன் ஹஸ்பண்டுதானே இதிலென்ன வெட்கம்?" "இல்லங்க. எனக்கு இடது பக்கம் மூவ்மெண்ட் கொஞ்சம் சிரமப்படுங்க. ரொம்ப கவனமா அழைச்சுகிட்டு போவணும். உங்களுக்கு பழக்கமிருக்காது. அதுக்குத்தான் சொல்லறேங்க." "அடப்போ. பழகினாப் போச்சு. நீ வா". பரசுராமுக்கு எங்கிருந்து வலு வந்தது என்று தெரியவில்லை. சிவகாமிக்கு வசதியாக அவளை தன் இடது தோள்களில் அணைத்தவாறு பாத்ரூமை நோக்கி நடக்கலானார். எதேச்சையாக வார்டு 18க்குள் எட்டிப் பார்த்த நர்ஸ், "பார்த்து டிஜிபி சார். மேடமை கெட்டியா பிடிச்சுக்குங்க. விடாதீங்க. அப்படியே ஒரு பாதி எடுத்துக்குங்க" என்று சொல்லி சிரிக்கவும்... சிவகாமிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. நெஞ்செல்லாம் பூரித்து கண்களிலும் கன்னங்களிலும் ஆனந்தக் கீற்று  வழிந்தோடியது. ஆனால் மெல்லியதாக அழுகையும் கூடவே வந்தது. (தினமலர்-வாரமலர் 23 செப்டம்பர் 2007)   14. வல்லவன்   கொல்கத்தா விமானம் தரை இறங்கிவிட்டது. இன்னும் பத்து நிமிடங்களில் எங்கள் புதிய மண்டல மேலாளார் ம்ருனாள் தாஸ் குப்தா யார் என்பது தெரிந்துவிடும். இப்போதைக்கு எனக்குப் பெயர் மட்டும்தான் தெரியும், ஆள் எப்படி இருப்பார் என்பது தெரியாது. இந்தப் பெயருக்கு ஒரு முலாம்பழத் தலையும் சரிந்த தொந்தியுமாக ஒருவரைத்தான் கற்பனை செய்து வைத்திருக்கிறேன். ‘டால்பின் ரிஸார்ட்ஸ் உங்களை அன்புடன் வரவேற்கிறது' (சுத்தப் பொய்!) என்று ஆங்கிலத்தில் எழுதிய  'டி' வடிவ தட்டியை பெருமாள் கோவில் தீவட்டி மாதிரி பயபக்தியுடன் உயர்த்தி பிடித்திருந்தான் டிரைவர் சுந்தரம். எங்கே கொஞ்சம் அசிரத்தையாக இருந்து, ஆரம்பமே கோணலாகிவிட்டால் என்ன செய்வது என்ற கவலை அவனுக்கு. எங்கள் கம்பெனிக்கு சனி திசை கடந்த மூன்று வருடங்களாக ரொம்பவே உச்சத்தில் இருக்கிறது. விஸ்வநாத பிரதாப சர்மா (அப்படித்தான் சொல்லவும் வேண்டும். எழுதவும் வேண்டும். விஸ்வநாதவுக்கோ பிரதாபவுக்கோ புள்ளி வைத்தீர்கள் என்றால் நிச்சயம் சம்பள உயர்வுக்கு முற்றுப் புள்ளி) என்ற கிழம்தான் சென்ற சனிக்கிழமை வரை எங்களுக்கு பாஸ். திடீரென எங்கள் முதலாளி மீது கோபித்துக் கொண்டு ராஜினாமா செய்துவிட்டு அடுத்த பிளைட்டில் தன் சொந்த ஊரான டில்லிக்கு போய்விட்டது. கொல்கத்தா பிரயாணிகள் வெளியே வருவது அதிகரித்து விட்டது. ஒரு கிழம் கிட்டதட்ட என் எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால் அது என்னைத் தாண்டிச் சென்று ஒரு கவுன் போட்ட கிழவியை அணைத்துக் கொண்டு சென்றுவிட்டது. அதன் பிறகு ஒரு சொட்டையை பார்த்து சந்தேகப்பட்டேன். அதுவும் இல்லை. நேரம் ஆக ஆக எனக்குள் உதறல் ஆரம்பித்து விட்டது. முலாம்பழத்தை கோட்டை விட்டு விட்டேனா? அது எங்கயாவது போய் சந்தி சிரித்து கடைசியில் அலுவலகத்துக்கு வந்து என் சீட்டை கிழித்துவிட்டால்? நிற்க முடியவில்லை. ஆனால் விட்டுப் போக மனசில்லை. இப்படியாக யோசித்து யோசித்து முடியை பிய்த்துக் கொள்ளாத குறையில் இருக்கும் போது நீல ஜீன்ஸ், கருப்பு டி சர்ட், ரேபான் பச்சை கண்ணாடி, லோட்டோ கான்வாஸ், ஆறடி உயரம், அத்லெடிக் பாடி, கோதுமை நிறம், மொத்தத்தில் ஹிந்தி சினிமா ஷூட்டிங்கிலிருந்து தப்பித்து வந்தவன் மாதிரியான ஒருவன் (ஸாரி ஒருவர்) எங்கள் தட்டியை அடையாளம் கண்டு கையசைக்க.... மை காட்! இவர்தான் ம்ருனாள் தாஸ் குப்தாவா? பாண்ட். ஜேம்ஸ் பாண்ட் என்று 007 ஸ்டைலில் "நான் தாஸ் குப்தா. ம்ருனாள் தாஸ் குப்தா" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். நல்லவேளை கையில் சாக்பீஸ் சைஸில் கைதுப்பாக்கி இல்லை. கைகுலுக்கலில் கொஞ்சம் பெண்மை இருந்தது. சே! மிகப் பெரிய பதவியில் இருப்பவர் இப்படி கெளபாய் மாதிரி... என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எனக்கு குப்தாவை சுத்தமாக பிடிக்கவில்லை. நானும் பதிலுக்கு "ஐ ஆம் கிருஷ்ணன் வினயா. கிருஷ்ணன் தாமோதரன் வினயா. டால்பின் ரிசார்ட்ஸின் சென்னை மண்டல அலுவலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது." என்றேன். சுந்தரத்திடமிருந்து ரோஜா மாலையை வாங்கி அணிவித்தேன். அதற்குள் கார் வந்து விட்டது. நானும் மடமடவென்று அலுவலக ரீதியாக சொல்ல வேண்டியவைகளை சொல்லித் தீர்த்து விட்டேன். அது மனதுக்குள் சென்றதா என்று தெரியவில்லை. பார்வை என்னவோ பல இடங்களில் மேய்ந்து கொண்டிருந்தது. இனி எங்கள் ஆபீஸ் உருப்பட்ட மாதிரிதான். சர்மா ஆடியது ருத்ர தாண்டவம். இது ஆடப்போவது ப்ரேக் டான்ஸாகத்தான் இருக்கும். தமிழ் பேசியது ஆச்சர்யம் என்றால் (அம்மா தமிழச்சி) காரில் சுந்தரத்தோடு சமமாக உட்கார்ந்து கொண்டு பேசியது எரிச்சலோ எரிச்சல். ஹோட்டல் ரூமில் விட்டுவிட்டு அவசரம் அவசரமாக வீடு திரும்பினேன். என் மனைவியும் எங்கள் கம்பெனியிலேயே வேலை பார்க்கிறாள். எதிர்பார்த்த மாதிரியே வித்யா மாடிப்படிகளில் இறங்கிக் கொண்டிருந்தாள். "ஏங்க புது பாஸ் எப்படீங்க, கலகலவா சிடுசிடுவா," "இரண்டும் கெட்டான். இனிமே ஆபீஸ் ஆபீஸாக இருக்காதுன்னு நினைக்கறேன்." வித்யாவை ஆபீஸ் வாசலிலில் இறக்கிவிட்டபோதுதான் ஞாபகம் வந்தது. ஸ்வீட் பாக்கெட்டுகளுக்கு சொல்லியிருந்ததை வாங்கிவரவில்லை. வேலையை முடித்துக்கொண்டு செக்ஷனில் வந்து அமரவும் குப்தா அழைப்பதாக சுந்தரம் சொல்லிவிட்டுப் போனான். காபின் கதவை டொக் டொக்கி விட்டு உள்ளே சென்ற எனக்கு ஆயிரம் வோல்டில் ஷாக். சாம்பல் கலரில் உயர் தர கோட் சூட். தங்க பிரேமில் முட்டை வடிவ கண்ணாடி. குப்தா... அப்படியே உல்டா. என்னால் நம்பவே முடியவே இல்லை. ஏர்ப்போர்ட்டில் கெளபாய் மாதிரி இருந்தவர் இங்கு அனில் அம்பானிக்கு தம்பி மாதிரி இருந்தார். "மிஸ்டர் வினயா. இன்னும் ஐந்து நிமிடத்தில் நான் எல்லோரையும் சந்திக்கப்போகிறேன். தகவல் அனுப்பிவிடுங்கள். கான்பரன்ஸ் ஹாலை தயார் செய்து வையுங்கள்." முக்கிய ஆபீஸ் கோப்புகளில் அவர் சொன்ன குறிப்புகள் என்னை வியப்பில் ஆழ்த்தின. சர்மா விட்டுவிட்டுப் போன எல்லா பென்டிங் வேலைகளும் க்ளியர் ஆகியிருந்தன. கான்பிரன்ஸ் ஹாலில் குப்தா வெளுத்து வாங்கினார். ரிசார்ட்ஸ் பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்திருந்தார். பல தகவல்கள் எங்களுக்கு புதிதாக இருந்தன. வந்து இரண்டு மணி நேரம்கூட ஆகியிருக்காது. அதற்குள் பொது மேலாளரிலிருந்து டிரைவர் வரை அனைவரின் பெயர்களும் டாண் டாண்னென்று வந்து விழுந்தன. தமிழில் மெல்லிய நகைச்சுவை இருந்தது. மதியம் குப்தாவிடமிருந்து மறுபடி அழைப்பு வந்தது. லாப்டாப்பில் மூழ்கியிருந்தார் குப்தா. "ஸார். ஏர்ப்போர்ட்டில் அதிகப்பிரசங்கித்தனமாக பேசியதற்கு மன்னிக்கவும். உங்கள் புத்திசாலித்தனம் எங்களை பிரமிக்க வைக்கிறது." "நோ. நோ. வினயா. நீங்கள் ஒரு தவறும் செய்யவில்லை. நான் கம்பெனியை விட்டு வெளியே வந்து விட்டால் மிக சாதாரண இளைஞன் மாதிரிதான் இருப்பேன். என் கண்டிப்பும், அதிகாரமும் அலுவலகத்துக்குள் மட்டும்தான். அதை விடுங்கள். இந்தக் கம்பெனியில் உங்கள் வேலைகள் என்ன?" "ஸார். நான் உங்களுக்கு செகரெட்டரி. கம்பெனிக்கு பி.ஆ.ஓ. வெளிநாட்டு வி..ஐ.பி. வந்தால் அவர்களோடு கூடவே செல்லும் சிறப்பு அதிகாரி. சில சமயங்களின் நம் ரிஸார்டுட்களில் தொழிலாளிகள் பிரச்னை வந்தால் அதை சமாளிக்கப் போவது உண்டு." "போதும் போதும். எனக்கு புரிந்து விட்டது. உங்கள் பளுவை உடனடியாக குறைக்க வேண்டும். ம்... ம்... என்ன செய்யலாம். ... சரி... எனக்கு தனி செக்ரெட்டரி தேவை. மற்ற வேலையெல்லாம் நீங்களே இப்போதைக்கு பார்த்துக் கொள்ளுங்கள். நம் ஆபீஸில் தகுதியானவர்கள் இருக்கிறார்களா?" எனக்கு வித்யாவின் ஞாபகம் வந்தது. அக்கெளண்ட்ஸ் செக்ஷனில் இடுப்பொடிய வேலையிருப்பதாகவும் வேலையை விட்டுவிடலாமா என்று நச்சரித்து கொண்டிருக்கிறாள். "ஸார், உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் அக்கெளன்ட்ஸ் செக்ஷனில் வேலை பார்க்கும் வித்யாவை போடலாம். என் மனைவி என்பதற்காக இல்லை. திறமையானவள்." "ஓக்கே. உடனடியாக என்னை பார்க்கச் சொல்லுங்கள். நான் வேலையில் காம்ப்ரொமைஸ் செய்து கொள்ள மாட்டேன். திறமையிருந்தால் நிச்சயம் கிடைக்கும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியானால் உங்கள் வீட்டில் வைத்து எனக்கு விருந்து அளிப்பீர்களா?" "நோ ப்ராப்ளம் சார். உங்களுக்கு இல்லாத விருந்தா? அது எங்கள் பாக்கியம் சார்." வித்யா உள்ளே போய் ஐந்தாவது நிமிடத்தில் மலர்ந்த முகத்துடன் வந்தாள். துள்ளிக் குதித்து போய் அவளே ஆர்டரை டைப் செய்தாள். கையெழுத்து ஆகி வந்ததில் சம்பளம் கிட்டத்தட்ட இரட்டிப்பு ஆகியிருந்தது. நாலு மணிக்கெல்லாம் குப்தா பிசினெஸ் விஷயமாக வெளியே போய்விட்டார். முன்பெல்லாம் சர்மா கிழம் வெளியே போனது என்றால் நாங்களெல்லாம் `ஹுர்ரே என்று வெஸ்ட் இண்டீஸ் மாதிரி கைகளை மேலும் கீழுமாக தட்டிக் கொள்வோம். இப்போது அடியோடு மாறிவிட்டது. அவரவர்கள் அவர்கள் வேலையில் மூழ்கியிருந்தாகள். குப்தா பொறுப்பேற்றுக் கொண்டதைப் பற்றி ரிப்போர்ட் ஒன்றை எங்கள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். மிக நேர்த்தியாக ரிப்போர்ட் தயார் செய்திருந்தார். உயர்தர ஆங்கிலம். ஹார்வர்டில் எம்.பி.ஏ என்றால் சும்மாவா? ஃபேக்சுக்கு எண்களை தட்டித் தட்டி பொறுமை போனது. சில சமயங்களில் இப்படித்தான் ஆகும். ஃபேக்ஸ்தான் சண்டித்தனம் செய்கிறதே. ஈமெயிலில் அனுப்பி விடலாமா என்று கேட்க எங்கள் கொல்கத்தா முதலாளியின் பி.ஏ.வை டெலிபோனில் பிடித்தேன். "வணக்கம். நான் வினயா. சென்னை மண்டல அலுவலகம். திரு குப்தா அவர்கள் இன்று பொறுப்பேற்று கொண்டிருக்கிறார்கள். அது பற்றிய ரிப்போர்ட் அனுப்ப வேண்டும். ஃபேக்ஸில் ஏதோ ப்ராப்ளம். ஈமெயில் அனுப்பிவிடவா?" "குப்தாவா. யார் ம்ருனாள் தாஸ் குப்தாவா?" (இங்கும் ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலா!) "ஆமாம்." லேசாக நக்கலாக சிரிப்பது தெளிவாகக் கேட்டது. என்னால் பொறுக்க முடியவில்லை. "என்ன விஷயம். எதற்கு சிரித்தீர்கள்? ஏன் ரொம்ப புத்திசாலியாகத்தானே தெரிகிறார்." "அதிலெல்லாம் கில்லாடிய்யா. முதலாளிக்கும் ரொம்பப் புடிச்ச ஆள்தான். ஆனா... எனக்கு எதுக்கு வம்பு? நீங்களே தெரிஞ்சுப்பீங்க." "சார், சொல்லிடுங்களேன். எனக்கு மண்டை வெடிச்சுடும் போல இருக்கு." "சரி. சொல்லறேன். ஆனா யாருக்கும் தெரியக்கூடாது. அதுவும் நான் சொன்னேன்னு." "சரி. சொல்லுங்க." "அந்த ஆளு பொம்பள விஷயத்திலயும் ரொம்ப கில்லாடிப்பா. அதுவும் கல்யாணமான பொண்ணுகள அவன் ப்ராக்கெட் போடற மாதிரி ஒரு பய போடமுடியாது. மும்பைலகூட இந்த பிரச்னை இருந்ததா கேள்வி." எனக்குத் தலை சுற்றியது. (குங்குமம் - 24 செப்டம்பர் 2006)   15. தலைச்சன்   இந்த கதை தொடங்கும் காலத்தை எப்படி சொல்வது என்பதில் கொஞ்சம் குழப்பம் இருக்கிறது. ஆண்டு, மாதம், நாள் என்ற கால அளவீடுகள் எல்லாம் ஒழிந்து போய், உயிர் வாழ்தலே ஒரு சவாலாக இருக்கும் ஒரு சூன்யமான காலகட்டம் என்று சொல்ல முடிகிறது. இந்த நூற்றாண்டிலிருந்து குறைந்த பட்சமாக ஆறு நூற்றாண்டுகள் கடந்துவிட்டன எனக் கொள்ளலாம். அரசாங்கம், பொருளாதாரம், சமூகம் என்ற வரையறைகள் அற்றுப் போய்விட்ட காலம் என்று சொல்லி உங்களை பயமுறுத்த வேண்டியிருக்கிறது. ஏன் இப்படி ஆயிற்று ? அதற்கு பல காரணங்கள். சுற்று சூழல் ஆர்வலர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கொஞ்சமும் கவலைப்படாமல் இருந்த உலக நாடுகளுக்கு 2192ல் முதல் அடி கிடைத்தது. நியூஸிலாந்தின் தென் கோடி நகரமான டுநோடினை கடல் கொண்டது. அதற்கு அன்டார்டிக் பனிப்பாறைகள் உருகி வருவதே காரணம் என்றார்கள். அதன் தொடர்ச்சியாக கனடாவின் க்யூபெக் தீவுக் கூட்டங்களில் பல தீடீர் திடீரென கானாமல் போயின. ஒரே மாதத்தில் மாலத்தீவுகள் அனைத்தும் கடலில் மூழ்கின. பசிபிக் தீவுகள் பலவும் இதே நிலைமைக்கு ஆளாயின. இயற்கை ஒரு பக்கம் வஞ்சித்துக் கொண்டிருக்க, மறுபக்கத்தில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஒரு கூட்டமைப்பை உருவாக்கிக் கொண்டு தொடர்ந்து மற்ற நாடுகளை பொருளாதார சிக்கலில் லோல்பட வைத்து தங்களின் சுகமான வாழ்க்கையை தொடர்ந்தார்கள். அதன் விளைவாக அரசியல் பகை மேலும் மேலும் வலு பெற்றது. இரான், இராக், வட கொரியா, லெபனான், சிரியா, லிபியா, பிரேசில், பெரு போன்ற நாடுகள் ஒன்று சேர்ந்து மேலை நாடுகளை நேரடியாக எதிர்க்க ஆரம்பித்தன. உகலளாவிய தீவிரவாதம் ஒரு மாபெரும் தீய சக்தியாக உருவெடுத்து கொண்டிருந்தாலும், பேரழிவின் ஆரம்பம் 2356ம் ஆண்டு என்று சொல்லலாம். அந்த ஆண்டு, ஒரு உயிரியல் போர் தாக்குதலில் அமெரிக்காவின் மேற்கு பகுதியில் ஒரு கோடி பேர் மாண்டார்கள். அதற்கு உடனடி பதிலடியாக இரானின் பாதி பகுதியை அமெரிக்க படைகள் குண்டு வீசி அழித்தன. அதன் பிறகு எல்லாமே கோளாறு. டன் டன்னாக யுரேனியமும் தோரியமும் விண்ணிலும் மண்ணிலும் தன் சாகசங்களை நிகழ்த்தின. சரித்திரத்தில் குறிப்பெழுத அவசியமில்லாவிட்டாலும் நாம் அதனை கடைசி உலகப்போர் என கொள்ளலாம். நிலம், நீர், காற்று, ஆகாயம் விஷமாக போய்விட, உலக சீதோஷ்ண நிலையே நிலை தடுமாறி போனது. அதன் பிறகு இரண்டே நூற்றாண்டுகளில் கிட்டதட்ட 95% உயிரினங்கள் அழிந்து போய்....  போதும். கதைக்கு வருவோமா ? மெல்லிய இருட்டின் சில்லவுட்டில் அவர்கள் இருவரும் பெண்கள் என்று தெரிகிறது. இருவரும் வேகவேகமாக எங்கிருந்தோ தப்பித்து வருகிறார்கள் என்பது அவர்களின் பதட்டத்திலிருந்து புரிகிறது. இருவருக்குமே இலைகளும் தழைகளும் உடைகளாக இருக்கின்றன. இருவரில் ஒருத்தி நிறைமாத கர்பிணி. மூச்சு வாங்க சற்று பின்னால் ஓடி வந்தவள் ஒரு கட்டத்தில் களைத்துப் போய் கால்பரப்பி உட்கார்ந்து விட்டாள். வலியில் ஓலமிட முன்னால் சென்றவள் ஓடி வந்து அவள் வாயை பொத்தினாள். "டேரா, வா. இன்னும் கொஞ்ச தூரம் போய்விடுவோம். உன் அலறல் அவர்களுக்கு கேட்டுவிட்டால் காரியம் கெட்டுவிடும்." "என்னால் இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது.  சிகா, விட்டுவிடு. நடப்பது நடக்கட்டும்." சிகா ஒரு தீர்மானத்தோடு டேராவை கைகளில் தூக்கிக் கொண்டு ஓடினாள். சகதியான ஒரு ஓடையை தாண்டி மேட்டில் ஏறத் தொடங்கும் போது டேராவின் அலறல் வேகமெடுத்தது. ஒருவித திருப்தியோடு அவளை அந்த பாறையில் படுக்க வைத்தாள். பரபரவென இயங்கினாள். டேராவின் உச்சபட்ச கத்தலின் தொடர்ச்சியாக, கொஞ்ச நேரத்திலேயே ரத்தமும் சதையும் அப்பியவாறு ஒரு குழந்தை வெளிப்பட்டது. "என்ன குழந்தை சிகா?" "தலைச்சன்" "அப்படியென்றால் ?" "முதல் குழந்தை பிள்ளையென்றால் அந்த காலத்தில் தலைச்சன் என்று சொல்வார்கள்." "போச்சு. அப்படியானால் இவர்களின் சட்டப்படி இதை கொன்று விடுவார்களே. என்ன செய்ய ?" "கவலைப்படாதே. நான் பார்த்துக் கொள்கிறேன். இவர்களின் கூட்டத்திலிருந்து தப்பித்து போக முயற்சி செய்வோம். நான் உன் குழந்தையை காப்பாற்றித் தருகிறேன். குழந்தை சோனியாகத்தான் இருக்கிறது. பிழைத்துக் கொள்ளும் என்றே நினைக்கிறேன்." கொஞ்ச தூரம் போய் ஓடையின் அழுக்குத் தண்ணிரில் குழந்தையை கழுவி எடுத்து வந்தாள். பாறையின் இடுக்கில் ஒளித்து வைத்திருந்த இலைப் பசையை எடுத்து டேராவிடம் தின்ன கொடுத்தாள். "போதும், இந்த இலைப் பசை வயிற்றை குமட்டுகிறது. கிழங்குமாதிரி எதுவும் கிடைக்கவில்லையா ?" "பிறகு தருகிறேன். அவர்களின் சேமிப்பிலிருந்து திருடி வைத்திருக்கிறேன். இப்போதைக்கு பிழைக்கும் வழியைப் பார். அவர்கள் தேடி வருவதற்குள் நாம் வெகு தூரம் போய்விட வேண்டும்." சிகா குறிப்பிட்ட 'அவர்கள்' கூட்டமாக அங்கே குழுமியிருந்தனர். ஆற்றங்கரையை ஒட்டி  ஆண்களும் பெண்களுமாக சுமார் இருபது பேர் நிறுத்த வைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் கைகளும் வாயும் கொடிகளாலும் தழைகளாலும் கட்டப்பட்டிருந்தன. கூட்டத் தலைவன் ஜோடோ அமைதியாக வந்து அவர்கள் எதிரே வணங்கினான். "நம் நிலைமையை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நம் குறிக்கோள் இந்த மனித சமுதாயத்தை நீட்டிக்க வேண்டும் என்பதே தவிர நாம் வாழ வேண்டும் என்பது அல்ல. நீங்கள் பசியில் வாடி செத்துப் போவதைவிட இப்போது ஆற்றில் மூழ்கி செத்துப் போய்விடுவதே நல்லது. உணவு கையிருப்பு ரொம்பவும் குறைந்து விட்டது. அனைவரும் ஒட்டு மொத்தமாக செத்துப் போவது தவிர்கப்பட வேண்டும். வயதான ஆண்களான உங்களால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. அதே மாதிரி அளவுக்கு அதிகமாகவே பிள்ளை பேற்றை பெற்று நலிந்து போய்விட்ட பெண்களான உங்களாலும் எந்த பயனும் இல்லை. எனவே உங்கள் சம்மதத்தோடு உங்களை ஆற்றில் தள்ளிவிட உத்திரவிடுகிறேன். சரியா ?" ஜோடோ அவர்களை உற்று பார்த்தான். கொஞ்சம் மிரட்சியோடு அவர்கள் தலையாட்டினார்கள். ஆற்றை நோக்கி திரும்பி நின்று கொண்டார்கள். வேறு வழியில்லை. அவர்களுக்கு நேற்று முழுவதும் உணவு தரப்படாததால் மிகவும் களைத்திருந்தார்கள். ஜோடோ ஒருவனுக்கு சைகை காட்டினான். அவன் மரக்குச்சியால் ஒவ்வொருவரையும் ஆற்றில் தள்ளிவிட்டான். நதியில் அவர்கள் அடித்து போவதை எந்த சலனமும் இல்லாமல் கூட்டம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. "போச்சு. எல்லாம் போச்சு. நாம் ஒட்டு மொத்தமாக அழிந்து போகப் போகிறோம். நம் மக்கள் குறைந்து கொண்டிருக்கிறார்கள். சுகா அவர்களே, ஏன் ஒன்றும் பேசமாட்டீர்களா ?" ஜோடோ இயலாமையில் கத்தினான்.    கண்ணெதிரே உயிர்கள் கொல்லப்படுவதின் தாக்கத்திலிருந்து விடுபடமுடியாமல் சுகா தடுமாறிக் கொண்டிருந்தார். அந்த கூட்டத்தில் அதிகம் விஷயம் தெரிந்தவர் அவர்தான். பதிலுக்காக ஜோடோ இன்னும் காத்திருப்பதைப் பார்த்ததும் அவர் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு தொண்டையை செருமினார். "பேச என்ன இருக்கிறது?  இனிமேலும் நம் உயிர் வாழ்தல் ரொம்பவும் சிரமம் என்றே தெரிகிறது. முன்பெல்லாம் நம் உணவு சேமிப்பையும், சந்ததிகளை உண்டாக்க வேண்டும் என்பதற்காக இளம் பெண்களையும் கொள்ளையடிக்கும் கூட்டம் அடிக்கடி வரும். அவர்கள் எங்கே போனார்கள்? உயிரோடு இருக்கிறார்களா? தெரியவில்லை. இலைப் பசை அதிகம் கிடைக்கிறது. ஆனால் மீன்களும் கிழங்குகளும் குறைந்துவிட்டன. அந்தப் பகுதியில் ஒரு பாறையை விலக்கிப் பார்த்தேன். நீளநீளமாக புழுக்களைப் பார்த்தேன். இனிமேல் அதை சாப்பிட வேண்டியதுதான். நாம் அழிந்து போனாலும் அவைகள் இருக்கும் என்றே நினைக்கிறேன். எனவே உலகம் ஒட்டு மொத்தமாக அழிந்துவிடாது என்றே நினைக்கிறேன்." "முன்பெல்லாம் ஆகாயத்தில் சிவப்பாக ஒன்று வருமாமே. கண்கள் கூசுமாமே. நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?" "இல்லை. எனக்கு முன்னால் இருந்தவர்கள் சொல்ல நான் உங்களுக்கு சொல்கிறேன். அதற்கு சூரியன் என்று பெயர். பெரும் தூசு மண்டலம் அதை மறைத்திருக்கிறது. அது எப்போது விலகுமோ அப்போதுதான் நமக்கு வாழ்வு. நேரடியான சூரிய  வெளிச்சம் நமக்கு வேண்டும். முதலில் இந்த அழுக்கு மழை நிற்க வேண்டும். அது வரைக்கும் நாம் இழுத்து பிடித்து வாழவேண்டும். இல்லையேல் அது எந்த பகுதியில் தெரிகிறதோ அங்கே போக வேண்டும். அந்த காலத்தில் படு வேகமாக இந்த பகுதியிலிருந்து அந்த பகுதிக்கு விண்ணிலும் மண்ணிலும் செல்வார்களாம். இது போல பல விஷயங்கள் வெறும் செய்திகளாக நம்மிடம் இருக்கின்றன. அதை எப்படி செய்வது என்று தெரியவில்லை." "சுகா. கொஞ்சம் பொறுங்கள். ஒரு வேளை அந்த பகுதி நமக்கு கிடைத்துவிட்டால் கூட அங்கு உயிர்வாழ்தல் கடினம் என்று ஒரு முறை சொன்னீர்களே?" "ஆமாம். அந்த அச்சுறுத்தலும் இருக்கிறது. வேண்டாம். நாம் இங்கேயே இருப்போம்." ஜோடோ தன் கூட்டத்திலிருப்பவர்களை கணக்கெடுக்கச் சொன்னான். 320 பேர். அதில் நாற்பது பேர்களே பெண்கள். அதிலும் 15 பெண்களே பிள்ளைபேறு பெறக் கூடியவர்கள். "மக்களே! கேட்டுக் கொள்ளுங்கள். நமக்கு உடனடியாக இரண்டு தேவைகள் இருக்கின்றன. ஒண்று உணவு. சாப்பிட நிறைய உணவு வேண்டும். இரண்டாவது, நமது எண்ணிக்கையை அதிகரிக்க பெண் குழந்தைகள் அதிகம் வேண்டும். மீன்கள் அதிகமாக கிடைக்கும் வரை உணவாக இலை பசையே தரப்படும். இனி ஒரு வேளை மட்டுமே கிழங்கு தரப்படும். அரைகுறை வெளிச்சம் இருக்கும் போது எவ்வளவு உணவு கிடைக்குமோ அவ்வளவையும் கொண்டு வாருங்கள். புதிதாக ஏதாவது தென்பட்டால் அவசரப்பட்டு எதுவும் செய்து விடாதீர்கள். அது விஷப் பொருளாகவும் இருக்கலாம். சுகாவை கேட்டுச் செய்யுங்கள்." அப்போது ஒருவன் கொஞ்சம் தயக்கத்தோடு முன்னே வந்து நின்றான். "ஜோடோ! டேராவையும் சிகாவையும் காணவில்லை." "என்ன ! டேராவை காணவில்லையா? அவளுக்கு எந்த நேரமும் குழந்தை பிறக்கும்படியாகத்தானே இருந்தது." "ஆமாம் ஜோடோ. ஆனால் அவள் கொஞ்ச நாட்களாகவே சரியில்லை. நம் கொள்கைபடி நான்காவதாக பிறக்கும் ஆண்மகவை மட்டுமே வைத்துக்கொள்ள ஒரு பெண்ணுக்கு உரிமையுண்டு என்பதை அவள் ஏற்றுக் கொள்ளமாட்டாளாம். அதற்கு சிகாவும் உடந்தை. சிகாவுக்கு இனிமேல் பிள்ளை பெறும் வாய்ப்பில்லை. அவளுக்கு செத்துப் போக விருப்பமில்லையாம். எனவே அவர்கள் தப்பித்து போயிருக்கலாம் என்று தெரிகிறது." ஜோடோவின கண்கள் சிவந்தன. ஆத்திரத்தில் பற்களை நரநரவென கடித்தான். "போங்கள். போய் டேராவை தேடுங்கள். சிகா தேவையில்லை. டேராவும் அவள் குழந்தையும் நமக்கு அவசியம் தேவை." "அதற்கு அவசியம் இல்லை". ஜோடோவின் பெயரை உரக்க அழைத்துக் கொண்டு இருவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு மையப் பகுதிக்கு விரைந்து வந்தனர். அவர்களின் பின்னால் டேராவும், சிகாவும். சிகா டேராவின் குழந்தையை இறுக பற்றியிருந்தாள். கொஞ்ச நேரம் அங்கே அமைதி நிலவியது. "சுகா அவர்களே. நீங்களே விசாரணையை நடத்துங்கள். முதலில் அந்த குழந்தை என்னது என்பதைச் சொல்லச் சொல்லுங்கள்." "தலைச்சன். ஆண் பிள்ளை. ஆனால் இதை கொல்ல நான் அனுமதிக்க மாட்டேன். எந்த உயிரையும் கொல்ல யாருக்கும் உரிமையில்லை தெரியுமா?" சிகா வெடித்தாள். "அது அந்தக் காலம். இப்போது நாங்கள் என்ன சொல்கிறோமோ அதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்." ஜோடோ கத்தினான். டேரா சுகாவின் முன்னால் மண்டியிட்டாள். " சுகா அவர்களே. என் குழந்தையை கொன்று விடாதீர்கள். அடுத்த குழந்தை நிச்சயம் பெண்ணாக பிறக்கும். உங்களுக்கு என் வாழ்நாளில் பத்து குழந்தைகள் வரை பெண்களாய் பெற்று தருகிறேன். இதை மட்டும் விட்டுவிடுங்கள். என் முதல் குழந்தை. எனக்கு மட்டும் உணவு கொடுங்கள். போதும். நான் சமாளித்துக் கொள்கிறேன்." "உனக்கு உணவு குறைந்து போனால் எப்படி அடுத்தடுத்து குழந்தைகள் பெற்றுக் கொள்வாய். முட்டாள்தனமாக பேசாதே. ஜோடோவிடம் குழந்தையை ஒப்படைத்துவிடு. அதுதான் உனக்கு நல்லது." சுகா ஆகாயத்தை பார்த்துக் கொண்டே பதிலளித்தார். அதற்கு பிறகு அதிகம் பேச்சில்லை. ஒருவன் டேராவை தரதரவென இழுத்துக் கொண்டு போனான். சிகாவிடமிருந்து குழந்தை வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டது. அதன் கைகளும் வாயும் கட்டப்பட்டன. சிகா ஒரே பாய்ச்சலில்  ஜோடோவை நெருங்கி அவனை பிராண்டினாள். மற்றவர்கள் விலக்குவதற்குள், ஜோடோவின் இடது தோள்பட்டை பகுதியில் தோல் கிழிந்து ரத்தம் பீறிட்டது. ஜோடோ மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் அமைதி திரும்பியது. "ஜோடோ! என்ன சொல்கிறாய் ?" சுகாவின் குரல் கம்மியிருந்தது. "சொல்வதற்கு என்ன இருக்கிறது. நம்மிடம் நிறைய ஆண்கள் இருக்கிறார்கள். விதிகளை மாற்ற இப்போதைக்கு அவசியமில்லை. ஆற்றில் வீசிவிடச் சொல்லுங்கள்." ஜோடோவின் ஆணை நிறைவேறுவதைப் பார்க்க சகிக்காமல் சுகா சிறிது தூரம் விலகிப் போய் திரும்பி நின்று கொண்டார். "சுகா அவர்களே! மிகவும் உணர்ச்சிவசப் பட்டுவிட்டீர்களா? நீங்களே இப்படிச் செய்தால் நான் என்ன செய்ய? எனக்கு எதற்கு இந்த தலைவர் பதவி ?" ஜோடோ பின் தொடர்ந்தான். "ஜோடோ என்னை மன்னித்து விடு. என் புத்தி ஒத்துக் கொண்டாலும் மனசு ஒத்துக் கொள்ள மறுக்கிறது. டேராவின் அலறல் இன்னமும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ? அந்தக் காலத்தில் பெண் குழந்தைகளை கொன்று விடுவார்களாம் !" " அப்படியா ! பைத்தியக்கார்கள். " ஜோடோ ஆச்சர்யப்பட்டான். (குங்குமம் - 6 மார்ச் 2008)     16. வா! வா! விரைந்து வா!   "உட்கார்" தீபக் சோப்ராவின் அந்த வார்த்தையில் அதிகாரமும் மிரட்டலும் இருந்தது. சோனாலி பொறியில் சிக்கிக் கொண்ட எலி மாதிரி முழித்தாள். எதிரே இருந்த கையில்லா நாற்காலியின் நுனியில் அவஸ்தையுடன் அமர்ந்தாள். சோப்ரா அவளை ஒரு கேவலமான ஜந்துவை பார்ப்பது மாதிரி பார்த்தான். "இந்த மாதிரி எத்தனை நாள... இல்லை மாசமா, வருஷமா செஞ்சுக்கிட்டு இருக்கே?" "சார். இதுதான் முதல் தடவை. ஏதோ இல்லாமையிலே தப்பு செஞ்சுட்டேன் சார். தயவு செஞ்சு மன்னிச்சுடுங்க. உங்களை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்." எழுந்து நின்று கொண்டாள். சோப்ரா மீண்டும் கைகளை உயர்த்தி அவளை உட்காரச் சொன்னான். "உன்னை அவ்வளவு சுலபமா விட்டுட முடியுமா? நான் யார் தெரியுமா? இருபது வருஷம் மிலிட்டிரியில ஆபீசரா இருந்தவன். எதை வேணும்னாலும் மன்னிப்பேன். திருட்டுக்கு மன்னிப்பே கிடையாது. புரிஞ்சுதா, மை டியர் யங் அண்ட் ப்யூட்டிஃபுல் கேர்ல்" சோனாலி அடிபட்ட கோழிக்குஞ்சு மாதிரி தலையாட்டினாள். "நீ திருடியிருக்கியே, அந்த ஸ்கர்ட் என்ன விலை இருக்கும் தெரியுமா?" "சார். என் வீட்டுக்காரருக்கு சரியான வேலை இல்லே. என் சம்பளத்தை நம்பி வீட்டுல ஆறு பேரு இருக்காங்க. அதுவும் பத்தலே. என் பக்கத்துவீட்டுக்காரிதான் ஒண்ணு, ரெண்டு ஸ்கர்ட்டுங்கள எடுத்தா. நான் வித்துத் தரேன். ஆபத்துக்கு பாவமில்லேன்னா. எனக்கு திருடத் தெரியாது சார். அதான் மாட்டிக்கிட்டேன்." "அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் செக்யூரிடி ஆபீஸர். நீ திருடினத மறைவா இருந்த க்ளோஸ் சர்க்யூட் கேமிரா படம் புடிச்சிடுச்சு. வசமா மாட்டிக் கிட்டே. இப்ப நான் என் ட்யூட்டிய செஞ்சே ஆகனும்." "சார். மொதலாளிக்கு தெரிஞ்சா வேலை போயிடும். தவிர, திருடி பட்டத்தோட வெளியில போனா, எங்கையும் வேலை கிடைக்காது. சார்.. சார்.. உங்களை கடவுளா நெனைச்சு...." "நான் சென்ஸ். உனக்கு ஏதாவது பிரச்சனை இருந்தா, எம்.டி.கிட்டே சொல்லியிருக்கணும். அல்லது அட்லீஸ்ட் எங்கிட்டேயாவது சொல்லியிருக்கணும். அதை விட்டுட்டு திருடினா எப்படி?" "தப்புதான் சார். இந்த தடவை, பெரிய மனசு வைச்சு, விட்டுடுங்க. இனிமே செத்தாலும் திருடமாட்டேன்." சோப்ரா பதிலேதும் சொல்லாமல் அவளையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான். "சார். ப்ளீஸ்." "ஓகே. நான் உன்னை காப்பாத்தறேன். ஆனா, உன்னை காப்பாத்தறதுல எனக்கு என்ன லாபம்?" சோப்ரா கோணலாக சிரித்தான். சோனாலியை கீழ் பார்வையில் பார்த்தான். "உனக்கு தண்டனையும் கொடுக்கணும். அதே சமயத்துல எனக்கு லாபமும் இருக்கணும். டூ இன் ஒன். அந்த மாதிரி எங்கிட்டே ஒரு திட்டம் இருக்கு." "சார். நீங்க சொல்ல வர்றது எனக்கு புரியல" "வேலையில்லாதவன் பொண்டாட்டியா இருந்தாலும், இளமையாகவும், அழகாகவும் இருக்கே....." சோனாலி விலுக்கென்று எழுந்து கொண்டாள். கண்களில் கோபம் கொப்பளித்தது. "சார். எனக்கு வேலை போனாலும் பரவாயில்லை. நான் அந்த மாதிரி பொண்ணு இல்லே" எழுந்தவளை மீண்டும் அதட்டினான். "நான் சொல்லறதை முழுசா கேட்காம நீயே ஒரு முடிவுக்கு வந்தா எப்படி? சோனாலி தன் புடவை தலைப்பை சரி செய்து தோள்களை போர்த்திக் கொண்டாள். "சோனா, நீ நெனைக்கிற மாதிரி உன்னை நான் தப்பு காரியம் செய்ய சொல்லப்போறதில்லே. எனக்கு சில வெளிநாட்டு நண்பர்கள் இருக்காங்க. அவங்கெல்லாம் ஆர்மியில இருந்து ரிடயர் ஆனவங்க.  அவங்களுக்கு இந்திய பெண்கள் மேல எப்பவுமே ஒரு கண்ணு உண்டு. அவங்களுக்கு தேவையான பெண்களை தேடி பிடிச்சு, அப்பப்ப நான் கொடுப்பேன். இன்னிக்கு என்னோட ஒரு நண்பருக்கு ஒரு புது மாதிரியான கஸ்டமர் தேவைப்படுது. அவருக்கு வயது எழுபதுக்கு மேலே. உன்னை ஒண்ணும் செய்யமாட்டார். நீ அவருக்கு துணையா இருக்கணும். அப்பப்ப தோள்ல உரசுவாரு. கன்னத்துல முத்தம் கொடுப்பாரு. இடுப்பை பிடிப்பாரு. அவ்வளவுதான். நீ அதை கொஞ்சமும் கண்டுக்காம அவருக்கு டிரிங்க்ஸ் கலந்து கொடுக்கணும். சாப்பிட ஹெல்ப் செய்யணும். ஆனா எல்லை மீற மாட்டார். இதை அவரே சொல்லியிருக்கார்." "சார். நான் இப்பவும் முடியாதுன்னு சொன்னா?" "இந்த வேலை போயிடும். குடும்பம் நடு ரோட்டுக்கு வரும். லுக் சோனாலி. இன்னிக்கு, ஒரே ஒரு நாள். உன்னோட பிக் அப்புக்கும், டிராப்புக்கும் பக்காவா ஏற்பாடு செய்யறேன். நாளை காலையிலேர்ந்து நீ ஃப்ரீ" சோனாலி கெஞ்சினாள். என்னென்னவோ சொல்லி சொல்லி பார்த்தாள். சோப்ரா அசைவதாக இல்லை. "சார். நீங்க என்னை அப்பறம் ஏமாத்த மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?" "ஓ. உனக்கு அந்த சந்தேகம் இருக்கா. இங்க பாரு. நீ இப்ப பார்த்தியே, நீ திருடினதை. அதை சிஸ்டத்துலேர்ந்து எடுத்து, இந்த சி.டி.யில போட்டுட்டேன். நீயே வேணும்னாலும் செக் பண்ணிக்க. ஆபீஸ்ல எந்த பைல்லையும் இல்லே. நீ எனக்கு இன்னிக்கு ஒத்துழைப்பு கொடுத்துட்டா, அடுத்த நிமிஷமே அந்த சி.டி.ய உங்கிட்டே கொடுத்துடறேன். இப்ப நாம பேசிக்கிட்டு இருக்கிறத அப்படியே ஒரு ஆடியோ பைலா போட்டு உங்கிட்டே கொடுத்துடறேன். நான் எல்லை மீறினா, இதை மொதலாளிகிட்டே போட்டு காட்டி, என் வேலைக்கு வேட்டு வை. எப்படி! என் ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட்" போய்யா, நீயும். உன் ஜெண்டில்மேன் அக்ரிமெண்டும். சோனாலி மனதுக்குள் சோப்ராவை சபித்தாள். "சார். இப்பவே சொல்லறேன். பல்லை கடிச்சுக்கிட்டு, ஒரு தாத்தாவுக்கு, ஒரு தாதி மாதிரி வேலை செஞ்சு ஒப்பேத்திடறேன். எங்கையாவது என்னை கவுக்க முயற்சி செஞ்சீங்கன்னா... நான் உயிருக்கும் அஞ்சாம உங்களை ஒரு வழி செஞ்சுடுவேன். திருட்டு மாதிரியே எனக்கு இதெல்லாம் பழக்கமில்லே." "அப்ப. நீ வற்ர" மிகுந்த மகிழ்சியுடன் கைகுலுக்க வந்தவனை தவிர்த்தாள். அவள் வர வேண்டிய இடம், நேரம் ஆகியவற்றை குறித்துக் கொண்டாள். விருட்டென அவன் அறையை விட்டு வெளியேறினாள். கீழ்தளம் வந்ததும், தீடீரென அவளுக்குள் ஒரு புதிய சிந்தனை வந்தது. திருடியது தப்பு. அதிலிருந்து தப்பிக்க, அதைவிட கொடுமையான இன்னொரு தப்பை செய்வதா? முதலாளியிடம் சோப்ராவின் கெட்ட எண்ணத்தை சொல்லி அவரிடமே மன்னிப்பை கேட்டால்? அது சரி. ஆனால் திருட்டை அவர் எப்படி எடுத்துக் கொள்வார்? ஆனால் நிச்சயமாக சோப்ரா சொன்ன இடத்துக்கு போகப் போவதில்லை. சோனாலி தீர்மானித்து விட்டாள். இந்தக் கதை முடிவு பெற ஒரு சில குறிப்புகளை பின் இணைப்பாக தர அவசியம் இருக்கிறது. சோப்ராவின் வெளிநாட்டு கிழம் தங்கியிருந்த ஹோட்டல், மும்பையில் உள்ள ஏழு நட்சத்திர தாஜ் ஹோட்டல். வரச் சொன்ன தேதி 26-12-2008. இரவு 9.00 மணி. சோப்ராவும், அந்த கிழமும் தரைதள லவுஞ்சில் சோனாலியின் வருகைக்காக காத்திருந்தார்கள். மறுநாள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் பட்டியலில் இருவர் பெயர்களும் இருந்தன. (குங்குமம் - 01 ஜனவரி 2009)   17. போடு! சண்டை போடு !   முட்டை முழி சாரங்கனை ஒரு பேக்குடு என்று நினைத்தது தவறு. சரோஜாவோடு சண்டை போட்டு அவளை ஊருக்கு அனுப்பு என்ற இந்த ஒன் லைனை அவன் ஆரம்பித்ததே மணிரத்னம் படத்தின் முதல் ஸீன் மாதிரி இருந்தது. "ஆத்மா, பொண்டாட்டின்னா சண்டை போடணும்டா. சண்டையே வர்லேன்னா, மேட்டரே வேற" என்றான். என்ன அமர்க்களமான ஓப்பனிங்! அவனுக்கு இல்வாழ்க்கையில் கரைகண்ட வித்தகன் என்ற பட்டத்தை தரலாம். சரி, விஷயத்துக்கு வருகிறேன். சாதாரணமாக ஆபீஸ் விட்டதும் எங்களை மாதிரியான சம்சாரிகள் சாரைப் பாம்பு மாதிரி ஒவ்வொருவராக வீட்டுக்கு ஓடுவதுதான் வழக்கம். ஆனால் சில மாதங்களாகவே கொஞ்சம் மாறியிருக்கிறது. என்னை விட்டுவிட்டு மற்றவர்களெல்லாம் ரகசியமாய் பேசிக்கொள்கிறார்கள். ஐந்து மணிக்கு அப்புறம் ஆர்கேயையும் ஜேபியையும் ஆபீஸில் பார்ப்பது என்பது நூறு எபிசோடுகளிலேயே முடிந்துவிட்ட சீரியல் மாதிரி. போன வாரம் அவர்களோடு டேனியல் ராஜும் கூட்டணி. திருட்டுப் பயல்கள். உலகத்திலேயே மிகக் கொடுமையான விஷயம், நண்பர்கள் கூட்டத்தில் காரணம் சொல்லாமல் நம்மை ஒதுக்கி வைப்பதுதான். நேற்று என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. மழைக்கு முன்னால் அங்கும் இங்கும் பறக்கும் கரப்பான் பூச்சிகளாக மூணு மணியிலிருந்தே மூர்த்தியும் ப்ரகாஷும் பிஸியோ பிஸி.  இவ்வளவிலும் சாரங்கனிடம் கலக்ஷனுக்கு வந்து, அவன் ஸ்டைலாக பர்ஸைப் பிரித்து ஜொள் ஒழுகக் கொடுத்த நூறு ரூபாயைக் கொத்திக் கொண்டு ஓடினார்களே தவிர என்னை கண்டு கொள்ளவேயில்லை. அவர்கள் போனதும், சாரங்கனை பிறாண்டியதில்... மூர்த்தி வொய்ப் டெலிவரிக்கு நேற்று ஊருக்குப் போயிருக்கிறாளாம். இன்று அவன் வீட்டில் பார்ட்டியாம். எல்லாம் உண்டாம். ஏன் என்னை சேர்த்துக் கொள்ளவில்லை என்று கேட்டதற்கு,  அளித்த விவரங்களில் சாரங்கன் எனக்கு கிருஷ்ணனாகவே தெரிந்தான்.  சில துளிகளை இங்கே கொஞ்சம் சிந்தியிருக்கிறேன். நீங்களும் ஞானம் பெறுவீர்களாக. ஒரே மனம் இரு உயிர் என்பதெல்லாம் சுத்த பேத்தல். வெறும் இனிப்பே வாழ்க்கை அல்ல. நடுநடுவே காரம் வேண்டும். பொண்டாட்டி ஊர்ல இல்லையென்றால் பல சௌகர்யங்கள். கல்யாணத்துக்கு முன்னால் சுதந்திரமாக சுற்றித் திரிந்த ஹாஸ்டல் வாழ்க்கையை மீண்டும் ரீப்ளே செய்யமுடியும். காலையில் இஷ்டம் போல் எழுந்திருக்கலாம். ஷேவிங் பிரஷை உடனே அலம்பி வை என்று யாரும் கண்டிக்கமாட்டார்கள். சத்தமாய் பாட்டு கேட்கலாம். அபஸ்வரமாக பாடலாம். ராத்திரிக்கு எப்போது வேணும்னாலும் வீட்டுக்கு போகலாம். நோ வெஜிடபிள் பர்ச்சேஸ். நோ அழுகாச்சி ஸீரியல்ஸ். இது மாதிரி எவ்வளவோ. அதுவும் சண்டை போட்டுட்டு போவது என்பது பூர்வ ஜன்ம பூஜா பலன். போன பிறவியில் பசு மாட்டுக்கு வாழைப்பழம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே அந்த பாக்கியம் கிட்டும். சமாதானம் ஆன பிறகு கிடைக்கும் இன்பத்தை எழுத்தில் தேடுபவர்கள் படு அசடுகள். அவர்களுக்காக சொல்லித் தொலைக்க வேண்டுமென்றால் தகதக தங்க வேட்டை சட்டியில் உள்ள அனைத்து தங்கக் காசுகளும் அவர்களுக்கே கிடைத்த மாதிரி. கணவன் மனைவி சண்டையில் ஒருவரை ஒருவர் மொத்திக் கொண்டே பலர் வேடிக்கை பார்க்கச் செய்வது வல்லினம். 'காச்' 'மூச்' என்று கத்திக் கொண்டு ப்ளட் பிரஷர் எகிற கோபாவதாரம் எடுத்து தங்களையும் குழந்தைகளையும் ஏக டென்ஷனுக்கு உள்ளாக்குவது இடையினம். இங்கிலீஷ் சினிமா பாணியில் டைட்டோ டைட் க்ளோசப்பில் மூஞ்சிக்கு முன்னால் லிமிட்டாக சுள்ளென இரண்டு வார்த்தைகள் சொல்லிவிட்டு, அதன் பாதிப்பிலேயே விறைத்துக் கொண்டு விலகி போய்விடுவது மெல்லினம். முதல் இரண்டும் அணுகுண்டு, சர வெடிகளாக உள்ளும் வெளியிலும் பாதிப்பு இருக்கும். மூன்றாவதில் போலீஸ் அடிப்பது மாதிரி. வெளிக்காயங்களே இருக்காது. மனசுக்குள் பூகம்பமும் சுனாமியும் நிகழ்ந்து கொண்டே இருக்கும். "நான் மூன்றாவதை டிக் செஞ்சுக்கறேன்" என்றேன், அவசரமாக. சாரங்கன் சங்கு, சக்கரத்தை இன்னும் விடவில்லை. "ஆத்மா, இதெல்லாம் ஒரு ஜாலிக்குடா. ஆபீஸ்ல, வீட்ல, வெளில எவ்வளவு டென்ஷன் இருக்கு. அதையெல்லாம் கொறைக்க வேண்டாமா. அவங்களோட கும்மாளம் போடும் போது பத்து வயசு சல்லுன்னு கொறையுது. குஜால்தான். வர்ற சனிக்கிழமை உன் வீட்டில் பார்ட்டி. போ, சண்டை போடு. ஆல் த பெஸ்ட்." ப்ளூடோவிடம் மாட்டிக் கொண்ட டாம் மாதிரி மேலும் கீழுமாக தலையாட்டினேன். சரோஜா என் மாமா பெண்தான். நான் இவ்வளவுதான் என்று அவளுக்கு முன்னமேயே தெரியும் என்பதால், எங்களுக்குள் இதுவரை சண்டையே வந்ததில்லை. தவிர, அவளைப் பொறுத்தவரை கணவர் பரமசிவனுக்கு சமானம். அவருக்கு எல்லா சௌகர்யங்களையும் செய்வதுதான் ஒரு பதிவிரதையின் தலையாய கடமை என்பதை ஒரு வேத வாக்கியமாக எடுத்துக் கொண்டவள். சரோஜாவிடம் எப்படி சண்டை போடுவது? கருமமே கண்ணாயினனாக இரவு முழுவதும் கண்துஞ்சாமல் ரிஹர்சல்கள் செய்து, வீராவேசத்தோடு 'டாய்' என்று போர்வீரன் மாதிரி கத்தியை சுழற்றிக்கொண்டு களத்தில் குதித்தால், அதை கொஞ்சம் கூட அன்கண்டுகபிளாக இருந்து, என்ன சின்னப் புள்ளத்தனமாக இருக்குன்னு ஒரு ப்ளெயின் லுக் விட்டால் என்ன ஆவது?  இம்சை அரசன் 23ம் புலிகேசி லெவலுக்கு நான் ஆனதுதான் செம காமெடி. ஒவ்வொன்றாய் வருகிறேன்.  பல கல்யாணங்களில் காப்பியில்தான் சண்டை ஆரம்பிக்கும். அதை நம்பி, "தூ... காப்பியா இது ? இல்லே, காப்பி பாத்திரம் அலம்பின தண்ணியா?" என்று கத்தி விட்டு பார்த்தால், ஏதோ இமாலய தவறு செய்துவிட்டவளாக கைகள் நடுங்க, "அப்படியா. கொஞ்சம் பொறுங்க. நல்ல காப்பி கொண்டு வர்றேன்." என்று சொல்லிக் கொண்டே கிச்சனுக்குள் ஓட, டெண்டுல்கர் முதல் பந்தில் அவுட். அதனால் என்ன? உடனே அடுத்த அஸ்திரம். "ஆமா, என்னிக்கி காப்பி நல்லா போட்டிருக்கே. உன் மூஞ்சி." இதற்கு நிச்சயம் கோபம் வரப் போகிறது. பாதி தூரம் போனவள், திரும்பிப் பார்த்து, " ஏங்க? என்ன ஆச்சு? ராத்திரி சரியா தூங்கலையா? யார் மேலயோ இருக்கும் கோவத்த என்கிட்டே ஏங்க காட்டுறீங்க." போய்விட்டாள். இங்கே ரன் அவுட். 'உன் மேலத்தாண்டீ' என்று கத்த வேண்டும் போலிருந்தது. ஆனால் அது மெல்லினமாக இருக்காது. கிச்சனுக்குள் துரத்திக் கொண்டு போய் அடுத்தடுத்த சீண்டல்களில்... ம்ஹும்.. அசரவில்லை.  ஒரு கட்டத்தில் என் பிடுங்கல்கள் அதிகமாகிப் போய் அழ ஆரம்பிக்க, எனக்குள்ளும் அழுகை வர, இண்டர்வல் விட்டுவிட்டேன். 'டேய் ஆத்மா. ரூட்டை மாத்து.' ஐடியா வறட்சியில் தடுமாறினேன். எது எதற்கோ புத்தகம் எழுதுகிறார்கள். இதற்கு எழுதியிருந்தால் டா வின்சி கோட் தோற்று போயிருக்கும். ஒன்பது மணிக்கெல்லாம் என் அழகான ராட்சசி சுடச் சுட மொறு மொறு தோசையை அதன் பக்க வாத்தியங்களோடு கொண்டு வந்து நீட்டினாள். ஐடியா! அம்மா வந்தாள். என்னதான் சொந்த அத்தை என்றாலும் மாமியார் அல்லவா? "என்ன செய்யி. என் அம்மா சுடற தோசை மாதிரி செய்ய உனக்கு வராது" எப்படி கும்ப்ளே கூக்ளி ! "ஆமாங்க. நானே உங்க கிட்டே சொல்லணும்னு இருந்தேன். ஒடனே ஃபோன் போட்டு அத்தைய வரச் சொல்லுங்க. ரொம்ப நாளாச்சு. எனக்கும் தோசை, அடையெல்லாம் சுட கத்துகிட்ட மாதிரி ஆச்சு". போச்சு. எனக்குள் கண்ணாடிக் கோட்டை தடதடவென சரிந்தது. கிரேசி மோகன் பாணியில் 'என்ன எழவுடா இது' என்று சொல்லத் தோன்றியது. அம்மா சென்டிமெண்டே எடுபடாத போது நாத்தனார் சென்டிமெண்ட் எப்படி எடுபடும்? அடுத்த வாரம் வரப்போகிற அவள் பிறந்த நாளுக்காக ரகசியமாக வாங்கி வைத்திருந்த காஸ்ட்லியான ஜோதிகா புடவையை என் தங்கை கல்யாணிக்கு கொடுக்கப் போகிறேன் என்று அரை மனசோடுதான் சொன்னேன். அதுவும் சானியா எதிர் கொண்ட செரீனா மாதிரி ஆகிவிட்டது. விட்டால் போதும் என்று ஆபீஸ் வந்துவிட்டேன். கிருஷ்ண பரமாத்மா சாரங்கன் விஸ்வரூபம் எடுத்தான். "நீ சுத்த பேக்குடு. (தேவையா?) டேய். சண்டைக்கான நுனி லேசுல கிடைக்காது. தேடணும்டா. நூல் கண்டு நுனியத் தேடாம உன் இஷ்டத்துக்கு கட் பண்ணி இழுக்கக் கூடாது. போ. நல்லா ஹோம் வொர்க் செய்.  வெய்ஃபுக்கு எந்த விஷயம் ரொம்ப பிடிக்கும்னு பார்த்து, அதுல சீண்டுடா, மடையா (போதும்டா, சாமி!)." முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனாலென்ன? இரண்டாவது இன்னிங்ஸில் சென்சுரிதான். மூஞ்சியில் மூட் அவுட்டை தக்க வைத்துக் கொண்டே ஐடியாவுக்கு குட்டி போட்ட பூனை மாதிரி அலைந்தேன். பேப்பரை புரட்டி... மேஜை டிராயரில் தேடி... ஃப்ரிட்ஜை திறந்து பார்த்து.. டிவி.... யெஸ். கிடைத்து விட்டது. சப்பை மேட்டர்தான். ஆனால் ஒர்க்கௌட் ஆகும். சரியாக ஆறரை மணியானதும் சரோ டிவியை போட, விடு ஜூட். "இனிமே இந்த வீட்ல சீரியலே கிடையாது" ரிமோட்டை பிடுங்கி, சிவப்பு பட்டனை அழுத்தினேன். அது 'க்யிக்' என்ற சத்தத்தோடு மௌனமானது. தீபாவளி பட்டாசில் சுறுசுறுவென தீப்பிடித்து கொண்டே வந்து கடைசியில் பாரம் தாங்காத வண்டி மாடாக உமைக் கோட்டானாகி எரிச்சலைத் தருவது ஒரு வகை. இரண்டாவது, 'பிசற்ட்' 'பிசற்ட்' என்று அடிபட்ட கரப்பான் பூச்சி மாதிரி  ஆறஅமர இழுத்துக் கொண்டே போய், இது தேறாது என்று நினைக்கும் போது காதை பிளக்கும் ஓசையில் வெடித்து தூள் கிளப்பும். சரோ இரண்டாவது வகையில் வந்தாள். ஆனந்தத்தை அரை மனசோடு விட்டுக் கொடுத்து விட்டு சட்டி மாதிரி மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டு பால்கனிக்கும் கிச்சனுக்கும் அலைந்தாள். அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து முஹூர்த்தம் டைட்டில் சாங் அலைஅலையாய் வர, முணுமுணுக்கத் தொடங்கினாள். கொஞ்சம் கெஞ்சிப் பார்த்தாள். ம்.. ஹூம். இது தேறாது என்று இருந்த போது, வந்ததே பாருங்கள் கோபம்... ரகசிய போலீஸ் 115 எம்.ஜி.ஆர். ஜெயலலிதா மாதிரிதான் எங்கள் சண்டை ஆரம்பித்தது. "எனக்கு ரோஜா பார்க்கணும். உங்களுக்கு பிடிக்கலைன்னா பெட் ரூமுக்கு போய் கதவை சாத்திக்குங்க. நான் பார்க்கத்தான் போறேன்." "கூடாது" டிவிக்கு குறுக்கே எக்ஸ் மாதிரி நின்று கொண்டேன். 'பார்ப்பேன்' 'கூடாது' என்பதை அடுத்தடுத்து ஐந்து முறை கூட்டிக் கொள்ளுங்கள். "இது எங்கப்பா வாங்கிக் கொடுத்தது. நான் பார்ப்பேன்" என்னைத் தள்ளி விட்டு  தீர்மானமாக டிவியை போட எத்தனித்தாள். "அப்படியா? உங்க அப்பாவோட ஓட்டை டிவிய எடுத்துக்கிட்டு அங்கயே போய் பாரு. இப்ப இங்க டிவிய போட்ட ஒரு கொலை விழும். ஆமா. தெரிஞ்சுக்க." சிவப்பு துணியை கண்ட ஸ்பெயின் காளையாக ஆனாள் சரோ.  புழுதி பறக்க மகா யுத்தம் தொடங்கி விட்டது. பற்றி எரியும் வைக்கோல் போர் அளவுக்கு கோபம் கொப்பளிக்க திகட்டத் திகட்ட சண்டையோ சண்டை. ஏ ஒன் சண்டை. "உங்களுக்கு எல்லாம் செஞ்சு செஞ்சு கொழுப்பு அதிகமாயிடுச்சு. அதான் துள்ளறீங்க. நான் இல்லாம ஒரு மாசம் இருந்து பாருங்க. அப்ப என் அருமை தெரியும்." விறுக் விறுக்கென்று ஃபோனை எடுத்து பட்டன்களை தட்டினாள். தம்பியை வரச் சொன்னாள். "டேய்! வர்றதுதான் வர்ற. கோலங்கள் ஸ்டார்ட் ஆகறத்துக்கு முன்னால வா. சீக்கிரம். இன்னிக்கு அபிக்கு என்ன ஆச்சோ தெரியலையே?" மச்சினன் சேது வந்தான். என்னை அலட்சியமாகப் பார்த்தான். அக்காவை அழைத்துக் கொண்டு போய்விட்டான். போகும் போது அவன் அப்பா என்கிற என் மாமாவை ஞாபகப் படுத்திவிட்டுப் போனான். ஜெயித்து விட்டோம் என்று துள்ளிக் குதித்த குத்துச் சண்டைக்காரன் கயிறு தடுக்கி கீழே விழுந்த மாதிரி ஆனேன். எனக்கு மாமா என்றால் இன்றைக்கும் பயம். கலாபவன் மணி மாதிரி முக பாவனைகளிலேயே மிரட்டுவார். மாப்பிள்ளையாயிற்றே என்கிற மரியாதை துளியும் கிடையாது. கீழே நெருப்பை மூட்டி அதற்கு மேல் நான் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்க கலாபவன் மணி மாமா கெக்க பிக்கெ சிரிப்புடன் குட்டிக்கரணம் அடித்து சுற்றி சுற்றி  வருவது போல இருந்தது. சரோவை அனுப்பியாயிற்று. மாமாவை எப்படி சமாளிப்பது? இருக்கவே இருக்கிறான் சாரங்கன். ஆபீஸ் வந்ததும் விஷயத்தை சொன்னால் சாரங்கன் முதற்கொண்டு எல்லோரும் பார்ட்டியில் குறியாய் இருந்தார்களே தவிர மணி மாமா மேட்டருக்கு யாரும் ஐடியா தரவில்லை. மனசளவில் நொந்து நூலாகி ஏழு மணிவாக்கில் வீடு திரும்பிய எனக்கு ஆயிரம் வோல்ட் அதிர்ச்சி. வீட்டில் லைட் எரிந்து கொண்டிருந்தது! சரோ வந்துவிட்டாளா? பீர் பாட்டில்களும் ஆம்லெட் தட்டுகளும் என் கண் முன்னே வந்து மோதி விலக பேக்கிரவுண்டில் சரோ பத்திரகாளியாய் தெரிந்தாள். பின்னங்கால் பிடறி பட இரண்டாவது மாடிக்கு இரண்டே செகண்டில் ஓடி மூச்சிறைக்க நின்றால்... மச்சினன் சேது வரவேற்றான். "எனக்கு இங்க இருக்க இஷ்டமேயில்ல. அக்காதான் சொல்லிச்சு. அத்தான் மனசு சரியாற வரைக்கும் நீ அங்கன இருந்து ஹெல்ப் பண்ணுன்னு. உங்களுக்கு சமைக்க தெரியாதாம். அப்படியே செஞ்சாலும் சரியா சாப்பிட மாட்டீங்களாம். அதனால என்னை செய்ய சொல்லியிருக்காங்க. எவ்வளவு நல்ல அக்கா. நீங்களும் இருக்கீங்களே..." இன்னும் அரை மணியில் பார்ட்டி கோஷ்டிகள் வந்துவிடும். முதலில் அவர்களை வந்துவிடாமல் தடுப்பதா இல்லை இவனிடமும் சண்டை போட்டு துரத்தியடிப்பதா என்ற மாறுபட்ட சிந்தனைகள் இரண்டு ஜப்பானிய சுமோக்களாக என் தலைக்குள் நெருங்கி வந்து தொந்தியால் அழுத்த, மயங்கி சரியும் வேளையில் கலாபவன் மணி மாமாவின் பிரும்மாண்ட உருவம் கண்ணுக்குள் தெரிந்தது. (குங்குமம் - 11 பிப்ரவரி 2007)     18. கூவத்தில் பிணம்   அந்தப் பாலத்தின் இடது புறம் ஏகமாய் மனிதத் தலைகள். ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு பாலத்தின் கீழே பார்த்த வண்ணம் இருந்தார்கள். ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த எனக்கு ஆர்வம் மேலிட, உடனடியாக ஸ்கூட்டரை ரோட்டோரத்தில் பார்க் செய்து விட்டு பாலத்தை நோக்கி விரைந்த போது எதிர்ப்பட்டவரை மெல்ல விசாரித்தேன். "என்ன சார். இவ்வளவு கூட்டம்? என்ன விஷயம்?" "அதுவா... ஒன்னுமில்லப்பா... ஒரு பிணம் மிதக்குது. அதான்" சொன்னவர் அதோடு பேச்சைத் துண்டித்துவிட்டு தன் நண்பனிடம் பேச்சைத் தொடர்ந்தவாரே, "எனக்கென்னவோ அது சிவப்பு மிடி மாதிரிதான் தெரியுது. நிச்சயம் காலேஜ் பொண்ணாத்தான் இருக்கும். என்ன சொல்ற?" போய்விட்டார். காலேஜ் பெண்!  தற்கொலை கேஸ்!! காதல்... என் கற்பனை விரிந்து கொண்டே போனது. லேசில் பாலத்தின் கைப்பிடிச்சுவரை நெருங்க முடியவில்லை. இங்கே தள்ளி அங்கே தள்ளி ஒருவழியாக கான்கிரீட் கிராதியை நெருங்கிவிட்டேன். அப்படியும் கட்டைமேல் தொற்றிக் கொண்டு பார்க்கும் ஒரு சிறுவனின் தலை மறைக்க, அவன் தலையை எட்டிப் பிடித்து ஒரு அழுத்து அழுத்த, ஆமாம். பாலத்தின் கீழே ஒரு பிணம் அசைவற்று மிதந்து கொண்டிருந்தது, சாய்வாகக் குப்புறக் கவிழ்ந்த நிலையில். கட்டியிருப்பது புடவையா, பாவாடையா, மிடியா என்று சொல்லமுடியாத அளவுக்கு குப்பலாய் சுற்றியிருந்தது. கண்களை சற்று ஓடவிட்டேன். கரையில் மூன்று பேர் பிணத்தை எடுக்க ஆயத்த வேலைகள் செய்து கொண்டிருந்தார்கள். கழிவு நீரில் இறங்குவது சரிவராது என்பதால் கயிறுகளிள் கொக்கிகளைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். கொக்கிகளை வீசி பிணத்தை இழுத்து கரையில் போடுவது அவர்கள் திட்டம் போலும். என்னால் சும்மாயிருக்க முடியவில்லை. பக்கத்தில் இருந்தவரிடம் வாயைக் கிண்டினேன். "என்ன சார் விஷயம்?" "ஏதோ ரேப் கேஸாம் சார். சிந்தாதிரிப்பேட்டையிலே இதுக்கு வூடு இருக்குதாம். ரேப்பான துக்கம் தாளாம இங்கே வந்து குதிச்சிடிச்சின்னு பேசிக்கிறாங்க." சொன்னவரின் வாய் பேசிக் கொண்டிருந்தாலும் கண்கள் என்னவோ பிணத்தின் அங்க ஆராய்ச்சிகளில்தான் இருந்தன. திடீரென பக்கத்தில் கசங்கிக் கொண்டிருந்தவர் அதை மறுத்தார். "இல்லை சார். இது மர்டர் சார். மர்டர். நாலு காலேஜ் பசங்க இதை ரேப் பண்ணிட்டாங்களாம். ரேப்பிலேயே செத்திடுச்சாம். ராத்திரியே காதும் காதும் வச்ச மாதிரி இங்க கொண்டாந்து போட்டுட்டு ஓடிட்டாங்களாம். ஒரு பச்சை வேன் நின்னதை ஆட்டோ ஸ்டாண்டுலேர்ந்து பார்த்திருக்காங்க. நாட்ல என்ன அநியாயம் நடக்குது பார்த்தீங்களா? இந்த காலத்திலே பசங்க காலேஜுக்கு படிக்கவா வரானுவங்கிறீங்க?"    கொக்கியை வீசிவிட்டார்கள். அவ்வளவுதான்! கூட்டம் அலை பாய்ந்தது. நான் கிட்டத்தட்ட பாலச் சுவரோடு நசுக்கப்பட்டேன். போலீஸ் விசில் சத்தம் கேட்டது. கரும்புச் சக்கை மாதிரி நசுக்கப்பட்டு பிதுக்கி வெளியே எறியப்பட்டேன். எல்லோரும் எக்கி எக்கி பாத்துக் கொண்டிருக்க எனக்கும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகியது. மீண்டும் இங்கே தள்ளி அங்கே தள்ளி கூட்டத்தினுள் புக முயற்சித்தேன். ம்ஹூம்! மூஞ்சியில் கை வைத்துத் தள்ளாத குறை. "என்ன சார் விஷயம்?"  என்னிடமே ஒருவர் கேட்டார். யோசித்துக் கொண்டிருந்த நான் தயங்கவே, பக்கத்தில் இருந்தவர், கொஞ்சம் படித்தவர் போலும். மூக்கின் மீது இருந்த கர்ச்சீப்பை லேசாக விலக்கி, "ஏதோ எக்ஸ்ட்ரா மாரிட்டல் அஃப்பையராம். இதுக்கு சேலமாம். மேரேஜ் ஆகி குட்டிங்க இருக்காம். ஒரு வயசுப் பயலோட எலோப் பண்ணிடுச்சாம். இங்க பக்கத்து லாட்ஜிலதான் தங்கியிருந்தாங்களாம். காசல்லாம் தீர்ந்து போனதும் தட் பாய் வானிஷ்டு. தென் வாட் டு டூ? இங்க வந்து சூய்சைடு." எனக்கு எதை எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. போலீஸ் சடசடவென லத்தியால் மொத்திக் கொண்டு வர நான் சற்று விலகி அந்தப் பக்கமாய் போய் கிடைத்த இடைவெளியில் உள்ளே புகுந்துவிட்டேன். பிணத்தை எடுத்து கரையில் போட்டிருந்தார்கள். என்னால் மிகச் சிரமப்பட்டு இடுக்குகள் வழியாகத்தான் பார்க்க முடிந்தது. பிணத்தை ஒரு கந்தல் துணியால் போர்த்தியிருந்தாலும் நீள அகலம் போதாததால் ஓரளவுக்குத்தான் தெரிந்தது.  நன்கு ஊறிப்போய், கருநீலம் பாய்ந்து கட்டையாய் இருந்தது. கைகள் தூக்கிய மாதிரியே இருந்தன. கால்-அரை நிர்வாணமாய் இருந்ததை கவனித்த அந்த ஆசாமிகள் இன்னும் சில கந்தல் துணிகளை போட்டு மூடிவிட்டனர். கூட்டத்தின் ஆர்வம் அடியோடு குறைந்து போனது. ஏதோ சினிமா விட்டது போல மக்கள் சாரை சாரையாய் விலக ஆரம்பித்தனர். புதிதாக வந்தவர்கள் அதையாவது பார்த்து வைப்போம் என்று அவசரப்பட்டார்கள். அப்போதுதான் நான் ஒன்றை கவனித்தேன். நான் அங்கே பார்த்து இங்கே பார்த்து கடைசியில் பாலத்தின் இந்த பக்கத்துக்கு வந்து விட்டேன். என் ஸ்கூட்டர் எதிர்ப் பக்கத்தில் இருந்தது. மெல்ல நடையை கட்டினேன். "பார்த்தியா வயிறு எப்படி உப்பியிருக்கு? இது நிறைமாசந்தான்." "அடப்போடா. தண்ணி உள்ள போனா வயிறு உப்பும். நான் தஞ்சாவூர் அய்யன் குளத்திலே எவ்வளவு தற்கொலை கேஸ் பார்த்திருக்கேன்." "அது இருக்கலாம். ஆனா இது நெசம்மாவே மாச கேசாம். பேசிக்கிட்டாங்க. எவனோ சினிமால சான்ஸ் வாங்கித்தரேன்னு இட்டாந்து ஏமாத்திப்பிட்டானாம். உயிரோட இருந்தப்ப நல்லா வெள்ளையா இருந்திருக்கும்னு நெனைக்கிறேன்." இரண்டு பேர் கெக்கே பெக்கே என்று சிரித்து கொண்டு சென்றனர். ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து பாலத்தின் மீது வந்தேன். போலீசுக்கு பொறுமை எல்லை மீறிவிட்டது. நிற்கும் நபர்களையெல்லாம் காலரைப் பிடித்து வீசியெறிந்தார்கள். அப்படியும் பாலத்தில் வாகனங்கள் போக குறுகிய வழிதான். பஸ்கள் பாலத்தை நெருங்கவும் பஸ் பிரயாணிகள் எல்லோருமே இடது புற ஜன்னலுக்கு வந்து விட்டார்கள். ஆபீஸ் வந்து சேர்ந்த அரைமணியில் இந்த விஷயம் சுவாரஸ்யம் இழந்து, மறந்து போனது. ஒரு ஞாயிற்றுக் கிழமையில் சந்துரு வீட்டுக்கு வந்திருந்தான். சந்துரு ஜீ. ஹெச்சில் டாக்டர். போஸ்ட் மார்ட்டம் கேஸ்களை கவனிக்கிறவன். அடிக்கடி என்னிடம் பல கிரைம் கேஸ்களைப் பற்றி போரடிக்கும் வரை அளப்பான். அவனைப் பார்த்ததும் கூவத்தில் மிதந்த அந்தப் பிணம் ஞாபகம் வந்தது. கேட்டேன். நிறைய கேஸ்கள் வருவதால் அவனால் எளிதில் நினைவுகூற முடியவில்லை. எனக்கும் சரியான தேதி ஞாபகம் இல்லை. நிறைய யோசனைகளுக்குப் பிறகு, "ஓ.. அந்த பார்வையிழந்த பெண் கேஸ்?" "பார்வையிழந்த பெண்ணா?" "ஆமாம்பா. ரொம்ப பேதடிக். அந்த பெண் ராத்திரிலே பாலம் ஓரமா வந்திருக்கு. ரெண்டு நாள் முன்னாடி பேஞ்ச மழையிலே பாலத்தின் ஓரத்திலே அரிப்பு ஏற்பட்டிருக்கு. பள்ளம் தெரியாம உருண்டு தண்ணீர்ல விழுந்திருக்கு. ராத்திரியா இருந்ததுனால யாரும் கவனிக்கலை." "ஏதோ ரேப்பு கீப்புன்னு பேசிக்கிட்டாங்க." "இல்லை. ரேப்புக்கான ஒரு இன்டிகேஷனும் இல்லை. கர்ப்பமும் இல்லை. உருண்டதிலே சில சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்கு. மண்டையிலே லேசான அடி. அவ்வளவுதான்." மை காட்! அன்று பாலத்தில் எப்படிப்பட்ட மட்டரகமான வதந்திகள். அவர்கள் பேசி மகிழ்ந்தது ஒரு பக்கம் இருக்கட்டும், இதில் நானுமல்லவா பங்காளி? ஒருவித குற்ற உணர்வு என்னை ஆக்கிரமிக்க, நான் செய்வதறியாது திகைத்துப் போனேன். (குங்குமம் - 16 மே 1997)   19. தூண்டில்   "சார்". தன் மேசைக்கு எதிரே வந்து நின்றவனை அவன் அலுவலகத்துக்குள் நுழையும்போதே ராமதுரை கவனித்துவிட்டார். ஆனால் வேலையில் படு மும்முரமாக இருப்பதுபோல பாசாங்கு செய்தவாறு இருந்தார். கடந்த ஒரு வார காலமாகவே வருமானம் டல்லடிக்கிறது. வந்திருக்கும் பார்ட்டியை சரியான கோணத்தில் மடக்கிவிட்டால் சுளையாய் சில காந்தி நோட்டுகள் தேற்றலாம். காலையிலேயே நல்ல சகுனம். மனதுக்குள் மகிழ்ந்து கொண்டார் ராமதுரை. "சார்". இரண்டாம் முறையாக அவன் பணிவோடு அழைக்க.. அப்போதுதான் முதன் முறையாகப் பார்ப்பதுபோல் ஒரு பார்வையை வீசிவிட்டு... "ஓ நீங்களா? உங்க கேஸ் இன்னும் ஒப்புதல் ஆகலையே. இன்னும் பத்து நாள் கழிச்சு வாங்க" சொன்னவர் சட்டென பின்பக்கம் திரும்பி... "சுந்தரம், இங்க வாய்யா... இந்த பைலை அந்த கேபின்ல வைச்சுடு" என்று இயந்திரத்தனமாய் சொல்லிவிட்டு மறுபடியும் வேலையில் மூழ்கிவிட்டாற் போல் தனது பாசாங்கு நாடகத்தைத் தொடர்ந்தார்.  இரண்டு மூன்று முறை சூள் கொட்டி வேலையில் உள்ள சலிப்பைக் காட்டிக் கொண்டார். திடீரென யதேச்சையாய் நிமிர்ந்து பார்ப்பதுபோல பார்த்து அவன் இன்னும் நின்றிருப்பது பிடிக்காதது போல... "என்னய்யா? சொன்னேனில்லே? போய்யா. ஒரு வாரம் கழிச்சு வாய்யா. சும்மா நிக்கிறதுல பிரயோஜனமில்லே. அவ்வளவுதான்." வந்தவன் உடைந்து போனான். "சார். அப்படிச் சொல்லாதீங்க சார். மழை வர்றதுக்குள்ள வீட்டு வேலையை தொடங்கிடணும் சார். இந்த அப்ரூவலுக்கு அப்பறம் எங்க பாங்குல லோன் சாங்ஷன் வாங்க அலையணும் சார். ப்ளீஸ்... கொஞ்சம் சீக்கிரம்... தயவு பண்ணி..." ராமதுரைக்கு பொய்யாய் உடனடி கோபம் வந்தது. "சீக்கிரம்னா... என்னை என்ன பண்ணச் சொல்லற? இப்ப இங்க இருக்கிற ஸ்பெஷல் ஆபீஸர் ஒரு வார லீவு முடிஞ்சு நேத்திக்குத்தான் வந்தாரு. ஆனா அவருக்கு போன சனிக்கிழமை தேதி போட்டு டிரான்ஸ்பர் உத்திரவு வந்திடுச்சு. புது ஆளு இன்னும் வரல. இந்த ஆபீஸருங்க பண்ற லொள்ளு பாலிடிக்ஸ்ல நாங்க மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டியிருக்கு. போங்க சார். உங்களுக்கு இதெல்லாம் புரியாது. பத்து நாள் கழிச்சு வந்து பாருங்க. இப்ப எடத்தை காலி பண்ணுங்க." வந்தவனுக்கு வியர்வை வெள்ளம். மிரண்டு போய் முழித்துக் கொண்டு மேலும் கீழும் பாத்துக்கொண்டிருந்தான். ராமதுரை சரியான நேரத்துக்கு காத்திருந்தார். "சார். வேற வழியே இல்லையா சார்?" அப்பாடி வந்துவிட்டான்! "சார். வேற வழி எதுவுமே இல்லையா சார்?" குரல் ஈனஸ்வரத்துக்கு போனது. ரொம்பவும் ஆடிப்போயிருந்தான். ராமதுரை எழுந்தார். அவன் அருகில் வந்து மெதுவான கிசுகிசு குரலில்..."ஒரு வழி இருக்கு. ஆனா கொஞ்சம் செலவாகும். பரவாயில்லையா?" வந்தவன் நாற்காலி நுனியில் அசெளகர்யமாக உட்கார்ந்து கொண்டான். மிரட்சியில் பேச்சு உடனே வரவில்லை. "ம்ம்ம்... என்ன சொல்ற? சீக்கிரம். எனக்கு ஆயிரம் வேலையிருக்கு." ராமதுரை அவனை அவசரப்படுத்தினார். "சொல்லுங்க சார். பரவாயில்லை. கொடுத்திடலாம்." "தம்பி. உன்னைப் பார்த்தா பாவமாத்தான் இருக்கு. ஒரு வாரமா அலையா அலையுறே. என்ன பண்றது? இந்த ஆபீஸருங்க பண்ற லொள்ளு தாங்கல. பல லட்சரூபா செலவு பண்ணி வீடு கட்றீங்க. கொஞ்சம் அப்படி இப்படின்னு செலவு செஞ்சாத்தான் வேலை சுளுவுல முடியும். இதுலயெல்லாம் ஜாஸ்தி யோசனை செய்யக்கூடாது. என்ன? நான் சொல்றது சரிதானே?" ஒரு இடைவெளி கொடுத்து விட்டு மீண்டும் விரைப்பு நிலைக்கு வந்து, "நீங்க என்ன பண்றீங்க... ஒரு மூணு மணி சுமாருக்கு ரெண்டாயிரம் ரூபாய் ரெடி பண்ணிக்கிட்டு வர்றீங்க... நம்ப பியூன் சுந்தரம் இருக்கான்ல அவனை பார்க்கறீங்க. அவன் படு ஸ்மார்ட்டு. அவன் உங்க கேஸை ஆபீஸர் வீட்டுக்கே எடுத்துக்கிட்டு போயி போன வாரத் தேதி போட்டு காரியத்தை கனகச்சிதமாக முடிச்சிடுவான். ஆமா... ஒன்ணு சொல்ல மறந்துட்டேனே. இன்னிக்கு விட்டா போச்சு. ஆபீஸர் இன்னிக்கு நைட் சிதம்பரம் போயிடறாரு." "சரி சார். இப்பவே போறேன் சார். நிச்சயமா இன்னிக்குள்ள கெடைச்சுடுமா சார்?" "கெடைச்சுடுமாவாவது. கெடைச்சாப்பல. நீங்க நான் சொன்ன மாதிரி மூணு மணிக்கு வாங்க. அதை செய்யுங்க." ராமதுரையின் குரலில் கரிசனம் பொங்கி வழிந்தது. நல்ல தேட்டையாயிற்றே. போய்விட்டான்! ராமதுரைக்கு தலைகால் புரியவில்லை. அவர் கணக்கில் நிச்சயம் ஆயிரமாவது தேறும்!! போன் ஒலித்தது. ராமதுரை நிமிர்ந்தார். ரிசீவரின் காதை பொத்தி கிளார்க் "ராமதுரை சார். உங்க மகன் சுரேஷ் லைன்ல." சுரேஷ்!!  இவன் எதுக்கு இப்ப போன் செய்யறான்? "அப்பாவா? நான் சுரேஷ்பா. எம். சி. ஏ. சீட்டுக்காக நீங்க சொன்ன ஆசாமியை போய் பார்த்தேம்பா. சீட்டு நிச்சயம் தரேன்னு சொல்லறார். ஆனா நீங்க கொடுத்த ஐயாயிரம் பத்தாதாம். இன்னும் கொறைஞ்சது ஆயிரமாவது வேணுமாம். அதுவும் இன்னிக்கு சாயங்காலத்துக்குள்ளே கொடுத்துடணுமாம். அம்மாகிட்டே சொன்னேன். அம்மா உங்களுக்கு போன் போடச் சொன்னா. அப்பா ப்ளீஸ்பா... எப்படியாவது பணத்துக்கு ஏற்பாடு பண்ணுப்பா. ஃபிரண்ட்ஸ்கிட்டேல்லாம் சொல்லிட்டேம்பா... ப்ளீஸ்." ராமதுரை யோசனை செய்ய.... பையன் விடவில்லை. "அப்பா..." "சரிடா. நீ என்ன பண்றே. ஒரு நாலு மணி சுமாருக்கு நேரா இங்க வா. ஆயிரம் ரூபா ரெடி பண்ணி வைக்கிறேன். இதுக்கும் மேலே கொடுக்க முடியாதுன்னு தீர்மானமா நான் சொன்னதா சொல்லிடு.. என்ன சரியா?" "ஓகே... ஓகே... அப்பா... என் நல்ல அப்பா... போனை வச்சிடட்டுமா?" ராமதுரை களைப்புடன் ரிசீவரை வைத்தார். கொஞ்சம் சிரிப்புகூட வந்தது. சோர்வுடன் தன் டேபிள் பக்கம் திரும்பி நோட்டம் விட்டவரின் முகம் பிரகாசம் அடைந்தது. அவர் மேஜையின் அருகே இரண்டு பேர் காத்துக்கொண்டிருந்தார்கள். ராமதுரை தனது அடுத்த தூண்டிலுக்குத் தயாரானார்.                                            (குங்குமம் - 01 ஆகஸ்ட் 1997) 20. தருமி 2007   பேங்க் ஆஃப் டுபாகூர் வங்கியின் சென்னைக் கிளை. நோடீஸ் போர்டில் போட்டிருக்கும் சர்குலரை ஒருவர் சத்தமாக படிக்கிறார். "நம் வங்கி அலுவலர்க்கோர் நற்செய்தி. நம் சேர்மனுக்கு வெகுநாட்களாக ஒரு சந்தேகம் நிலவி வருகிறது. அதை நல்ல ஆபீஸ் நோட் வாயிலாக தீர்த்து வைப்பவருக்கு ஆயிரம்  டாலர் பரிசாக அளிக்கப்படும்." தருமி அங்கு வருகிறான். "ஏம்பா? பரிசுத் தொகை எவ்வளவு?" "ஆயிரம்  டாலர்." தருமி தனிமையில் புலம்புகிறான். "ஐய்யோ ஆயிரம்  டாலராச்சே! ஆயிரம் டாலராச்சே!! எனக்கு மட்டும் அந்தப் பரிசு கிடைச்சிட்டா முதல்ல பையன் இஞ்சினீரிங் காலேஜ் ஃபீஸ் கட்டிடுவேன். அப்பறம் மிச்சம் இருக்கிற பணத்தில... கிரெடிட் கார்டு ட்யூஸ் கட்டிடலாம். ஐய்யோ... அடுத்தவன் எவனாது இதை கேட்டு நோட்டு போடறதுக்கு முன்னாடி நான் போடணுமே... இந்த சமயம் பார்த்து நோட்டு போட ஒரு ஐடியாவும் வரமாட்டேங்கிறதே. என்ன செய்வேன்? யாரைப் போய்க் கேப்பேன்?" சொக்கன் ஞாபகம் வருகிறது. "சொக்கா.. உன்னை விட்டா வேறு யாரு இருக்கா? ப்ளீஸ் ஹெல்ப் மீ." சொக்கன் வருகிறார். "வங்கி அதிகாரியே" "யாருய்யா நீ?" "நான் யார் என்பது இருக்கட்டும். உமக்கு மட்டும் அந்த நோட் கிடைத்துவிட்டால்..." "ஆஹா அது மட்டும் கிடைச்சிடுச்சுன்னா என்னோட முக்கியமான பிரச்சனை ஒண்ணு தீர்ந்துடும்.! அட நீயும் அறிவிப்பைக் கேட்டாச்சா!! போச்சு. எல்லாம் போயே போச்சு. போயிந்தே. ஹோ கயா. இட்ஸ் கான்." "எனக்கு வேண்டாம். நீயே எடுத்துக் கொள்." "என்னது. உன் நோட்டை நான்.. நான்.. எடுத்துகறதா? இங்கப்பாரு நான் பார்க்கறதுக்கு சாதாரணமாக இருக்கலாம். அஞ்சு வருஷத்துல ரெண்டு பிரமோஷன் வாங்கிருக்கேன்." "எங்கே, என் திறமையின் மீது உமக்கு சந்தேகம் இருந்தால் சோதித்துப் பாரேன்? உனக்குத் திறமையிருந்தால். கேள்விகளை நீ கேட்கிறாயா? இல்லை, நான் கேட்கட்டுமா?" "ம்ஹும். எனக்கு கேள்வி கேட்டுத்தான் பழக்கம். தட்ஸ் ஆல்." "எங்கே, கேள்விகளைத் தொடங்கு" பிரிக்க முடியாதது என்னவோ? நாமும் நம் கோரிக்கைகளும் பிரிந்தே இருப்பது ? யூனியனும் மேனேஜ்மென்டும் சேரக்கூடாதது?      பிரமோஷனும் டிரான்ஸ்பரும் சேர்ந்தே இருப்பது? ஏடிஎம்மும் டெபிட்கார்டும் சொல்லக்கூடாதது? டேக் ஹோம் பே சொல்லக்கூடியது? டெல்லர் டோக்கன் நம்பர் பார்க்க முடியாதது? சர்வீஸ் ஃபைல் பார்த்து ரசிப்பது?                 சம்பள பில் சம்பளம் என்பது? மாதம் ஒரு முறை வருவது டூர் என்பது? அடிக்கடி வருவது அதிரடி சர்வீசுக்கு? சானியா மிர்சா அபார சிக்ஸுக்கு? மஹேந்திர டோனி சூப்பர் ஜோடிக்கு? சூர்யா - ஜோதிகா சண்டை பார்ட்டிக்கு? சாப்பல் - கங்கூலி லோக்கல் டூருக்கு? நீ ஃபாரின் டூருக்கு? நான் "அப்பா!! ஆள விடு. எனக்கு தெரிஞ்சது இவ்வளவுதான்.  நீர்தான் சகலகலாவல்லவர். நீங்கள் எழுதிய நோட்டை கொடுங்கள். அதை அப்படியே பார்வெர்டு செய்கிறேன். " கொஞ்ச தூரம் சென்றுவிட்டு திரும்பி வந்து. "அது சரி.. பரிசு கொடுத்தால் வாங்கிக்கறேன். மெமோ, சஸ்பென்டு மாதிரி வேறு எதாவது கொடுத்தால்? " "என்னிடம் வா. நான் பார்த்துக் கொள்கிறேன். " "என்ன, சஸ்பென்ஷன் ஆர்டரை படிச்சு காட்டவா?" சொக்கன் சிரிக்கிறான். "கவலைப்படாதே சகோதரா. யூ வில் கெட் த ரிவார்டு. வெற்றி நிச்சயம்." "என்ன சிரிப்பய்யா, உன் சிரிப்பு! சூர்யா மாதிரி சிரிப்பு!!" சேர்மன் செயலகத்தில் உள்ள கான்ஃபரன்ஸ் ஹாலில் தருமி. சேர்மன் கையில் தருமி எழுதிய நோட் இருக்கிறது. "மிஸ்டர் தர்மராஜன் அலியாஸ் தருமி அவர்களே! நீங்கள்தானே இந்த நோட்டை  பார்வெர்டு செய்தது." "ஆமாம். உங்கள் ஐயப்பாட்டை நீக்கும் அந்த அற்புத நோட்டை நானேதான் எழுதினேன். " "எங்கே, நீரே படித்துக் காட்டும்." தருமி படிக்க படிக்க சேர்மன் முகம் பிரகாசம் அடைகிறது. "ஆஹா! அம்சமான ஆபீஸ் நோட்டு!! ஆழமான கருத்துக்கள்!!! என் டவுட்டை க்ளியர் செய்துவிட்ட சூப்பர் நோட்டு!!!!" தன் செகரெட்ரியை அழைத்து பரிசை கொண்டுவரச் சொல்லுகிறார். அப்போது ஜி.எம். என். கீரன் எழுந்திருக்கிறார். "சேர்மன் அவர்களே! ப்ளீஸ் வெயிட். அந்த நோட்டில் பிழை உள்ளது." "யூ மீன் மிஸ்டேக்?" சேர்மன் திடுக்கிடுகிறார். ஆனால் தருமியோ.... "பிழை இருந்தாலென்ன? எவ்வளவு பிழையோ அவ்வளவு பரிசுத் தொகையை குறைத்துக் கொடுங்களேன்." ஆனால் அதற்கு என். கீரன், "மிஸ்டர் தர்மராஜன்! நீர்தானே இந்த நோட்டை எழுதியது? " "எஸ். நானேதான் எழுதினேன். பின்னே ஆபீஸ் கான்டீன்ல யாராவது எழுதிக்கொடுத்ததை கொண்டு வந்து கொடுப்பேனா? நானே... நானேதான் எழுதினேன்." "அப்படியானால் அந்த நோட்டில் எழுதியுள்ளதை விளக்கி விட்டு பரிசை பெற்றுச் செல்லுங்களேன்." "சேர்மனுக்கே விளங்கி விட்டது. நீங்க யாரு குறுக்கே?" "நான் இந்த டூபாகூர் வங்கியின் தணிக்கை பிரிவின் தலைவர். என். கீரன். ஜெனரல் மேனேஜர். எமது சேர்மன் மிக சரியான ஆபீஸ் நோட்டுக்கு பரிசளிக்கிறார் என்றால் அதை பார்த்து சந்தோஷப்படும் முதல் ஆள் நான்தான். அதே நேரத்தில் பிழையுள்ள நோட்டுக்கு பரிசளிக்கிறார் என்றால் அதற்கு வருத்தப்படுபவனும் நான்தான்." "ஒஹோ. இங்க எல்லாமே நீங்கதானா. ஒரு சில பேர், ஏகப்பட்ட பைல்களை பார்த்து அதையெல்லாம் ரெஃபர் செஞ்சு நோட்டு போட்டு பேர் வாங்குவாங்க. ஒரு சில பேர், போட்ட நோட்டுல எங்கடா குற்றம் இருக்குன்ணு தேடி கண்டு பிடிச்சு பேர் வாங்கிட்டு போவாங்க. இதுல நீங்க எந்த வகையை சார்ந்தவர் என்று உங்களுக்கே புரியும். ஒண்ணு மட்டும் நிச்சயமய்யா. உங்கள மாதிரி ரெண்டு பேர்.. இல்லை நீங்க ஒருத்தரே போதும். இந்த பேங்க் உருப்பட்டாப்பலத்தான். சேர்மனிடம் சொல்லிவிடுங்கள். எனக்கு பரிசு வேண்டாம். நான் வருகிறேன்." தருமி வேகமாக போக என். கீரன் அழைக்கிறார். " தருமி அவர்களே!"  அழைப்பை நிராகரித்து தருமி இன்னும் வேகமாக ஓட, கான்ஃபரன்ஸ் ஹாலில் சிரிப்பலை. சேர்மன் மிகுந்த சோகத்துடன் அமர்கிறார். "நல்லவேளை! என்னை காப்பாற்றினீர்கள் ஜி.எம். அவர்களே!! இல்லையென்றால் என் மீது விஜிலென்ஸ் என்கொயரி வந்திருக்கும். தாங்க்ஸ்." அங்கே தருமி புலம்பிக் கொண்டிருக்கிறான். "எனக்கு வேணும். இன்னமும் வேணும். ஐயையோ யாரோ இன்னமும் தொரத்தர மாதிரியே இருக்கே. இனிமே நான் எந்த நோட் போட்டாலும் ஏம்பா இது உன் நோட்டா? இல்லே, ஆபீஸ் கான்டீனுக்கு வந்த யாராவது எழுதிக் கொடுத்ததான்னு கேப்பாங்களே? இதுக்குத்தான்... இதுக்குத்தான் கண்டவனை நம்பி காரியத்துல எறங்கப்படாதுங்கறது. மாட்டிக்கிட்டல்ல. நல்லா அவஸ்த படு. ஏன்டா... ஏன்டா... ஏன்? ஐயோ இப்படி தனியா பொலம்பற அளவுக்கு கொண்டுவிட்டானே. சொக்கா. அவனை எதுக்குக் கூப்பிடணும். அவனை நம்பாதே. அவன் வரமாட்டான். அவன் இல்லை." சொக்கன் வருகிறார். "தருமி. பரிசு கிடைத்ததா?" "வாய்யா. எல்லாம் கிடைச்சுது. நல்லவேளை டிஸ்மிஸ் செய்யல. நான் உனக்கு என்னய்யா துரோகம் செஞ்சேன்." "வங்கி அதிகாரியே கான்ஃபரன்ஸ் ஹாலில் என்ன நடந்தது?" "ம்... இதெல்லாம் நல்லா ஏத்த எறக்கமா பேசு. நோட் போடும் போது கோட்டை விட்டுடு." "என்ன நடந்தது?" "உன் நோட்டில் குற்றம் என்று சொல்லிட்டாங்கையா." "என் நோட்டில் குற்றமா. சொன்னவன் எவன்?" "உன் பாட்டன். அங்க ஒருத்தன் இருக்கான். எல்லா சர்க்குலரும் அவருக்கு அத்துபடியாம்." கான்ஃபரன்ஸ் ஹாலுக்குள் தருமியும் சொக்கனும் வேகமாய் வருகிறார்கள். சொக்கன் நெருப்பாய் கக்குகிறார். "இச்சபையில் என் நோட்டை குற்றம் சொன்னவன் எவன்?" சேர்மன் எழுந்து நின்று, "என். கீரன்.  அவன் இவன் என்ற ஏகவசனம் வேண்டாம். ஹவ் சம் டீசன்ஸ்சி. மரியாதையோடு கேள்வி கேட்டால் தக்க பதில் கிடைக்கும்." "யார் இந்த கிழவன்?" "பேங்க் ஆஃப் டுபாகூரின் தலைமை தணிக்கையாளர்! என்.கீரன்!! ஜி.எம். மிகுந்த அனுபவம் உள்ளவர்!!" "அதிகம் அனுபவம் இருந்துவிட்டால் அனைத்தும் அறிவோம் என்ற அகம்பாவமோ?" கீரன் எழுந்து, "முதலில் நீங்கள் எழுதிய நோட்டை இன்னொருவர் மூலமாக அனுப்பியதின் காரணம்?" "அது நடந்து முடிந்த கதை. தொடங்கிய பிரச்சனைக்கு வாரும். எங்கு குற்றம் கண்டீர்? ஸ்பெல்லிங்கிலா? அல்லது ஃபார்மெட்டிலா?" "ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தாலும் அவை மன்னிக்கப்படலாம். காரணம் எங்களிடம் எம்.எஸ். வேர்ட் இருக்கிறது. ஸ்பெல் செக் போட்டுக் கொள்வோம். ஆனால் பொருளில்தான் குற்றம் இருக்கிறது." "கூறும். கூறிப் பாரும்." "எங்கே நீங்கள் எழுதிய நோட்டை சொல்லும்." நோட்டைப் படிக்கிறார். "போதும். போர் அடிக்கிறது. சுருக்கமாக சொல்லும். இதனால் தாங்கள் சொல்லவரும் கருத்து..." "புரியவில்லை? இந்தியாவில் உள்ள மற்ற வங்கிகளில் என்ன Work Culture இருக்கிறதோ அதேதான் நம் வங்கி கிளைகளிலும் உள்ளது என்பதுதான் என் வாதம்." "ஒருக்காலும் கிடையாது. இதோ. எங்கள் வங்கி சர்குலர்களின் தொகுப்பு சி.டி இருக்கிறது. இதில் எங்குமே நீங்கள் சொன்ன கல்சர் குறிப்பிடப்படவில்லை. சர்குலர்களில் சொல்லப்படாத எந்த விஷயத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம்." "நிச்சயமாக?" "சத்தியமாக." "நீ தினம் தினம் பார்க்கும் இன்ஸ்பெக்ஷன் மான்யுவல் மீது ஆணையாக.." "அதென்ன ஜுஜுபி மேட்டர்? நம் எல்லோரும் மறை பொருளாக மதிக்கும் பேங்கிங் ரெகுலேஷன் ஆக்ட் மீது ஆணையாக சொல்கிறேன். அக்ரிகல்சர். ஹார்ட்டிகல்சர்.. இது மாதிரி சில கல்சர்கள் இருக்கிறதே தவிர நீ சொன்ன கல்சர் ஒருக்காலும் இங்கு இருக்க முடியாது என்பதே என் கருத்து." "மிஸ்டர் என்.கீரன். நன்றாக என்னை பாரும். நான் யார் தெரிகிறதா?" சொக்கன் மெதுவாக எம்.ஜி.ஆர். ஸ்டைலில் மீசையை பிய்க்கிறார். என்.கீரன் திடுக்கிடுகிறார். "ஆ! நீங்களே ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஆகுக. உங்கள் அதிகாரத்தினால் எனது வேலை போனாலும், பென்ஷன் கொடுக்காமல் போனாலும் குற்றம் குற்றமே. குற்றம் குற்றமே." "கீரா. தும் ஹோ கயா." கீரன் கைகளை உயரே தூக்கி, கண்கள் மூடி.... "நான் வாங்கும் சம்பளம் நாலு நாளைக்குத்தான் போதும்  நாய்ப் பாடு படுவேனே தவிர உம்மைப் போல்  கான்டினில் நோட் டிராஃட் எழுத மாட்டேன்." சொக்கன் என். கீரனை எரித்துவிடுகிறான். சேர்மன் கூவம் நதிக்கரையோரம் ஓடிவருகிறார். "கவர்னர் அவர்களே! என்ன செய்துவிட்டீர்கள்?  நீங்கள் போட்ட நோட் என்பது என் புத்திக்கு எட்டாமல் போனது தவறுதான். அவரை மன்னித்துவிடுங்கள்." அப்போது சொக்கன் குரல் கேட்கிறது. "சேர்மன் அவர்களே! கவலை வேண்டாம். உங்கள் வங்கியில் ஒரு உயர்மட்ட சர்ப்ரைஸ் டெஸ்ட் செய்யவே யாம் நடத்திய நாடகம் இது. மிஸ்டர் என். கீரரை கூவத்தில் போட்டால், என்னால் கூட காப்பாற்ற முடியாத அளவுக்கு நாறிப் போய்விடுவார் என்பதால் அவரை கரையிலேயே விட்டிருக்கிறேன். இன்றைக்கு சனிக்கிழமை. ஆபீஸ் டைம் முடிந்துவிட்டது. நாளை ஹாலிடே. என்னால் ஒன்றும் செய்ய முடியாது. திங்கட்கிழமை வழக்கம் போல் என். கீரன் ஆபீஸ் வருவார். அவருக்கு ஒன்னரை நாள் டூர் பேட்டா கொடுத்துவிடு. நான் வரட்டா." (நிலாச்சாரல்.காம் - 26 பிப்ரவரி 2007)   21. தேடிச் சோறு நிதந்தின்று....   "எனக்கு இந்த வாழ்க்கையே பிடிக்கல்லை ஸார். செத்துடலாமான்னு பார்க்கறேன். ஏதாவது நோய் நொடில போயிடலாம்னு பார்த்தா எனக்கு ஒரு ஜலதோஷம் கூட வந்ததில்லை. உடம்பு என்னவோ பெருமாள் கோயில் துவாரபாலகர் மாதிரி வளர்ந்திண்டேயிருக்கு. ஷேவிங் செஞ்சுக்கும் போது என் உடம்ப பார்த்து எனக்கே பயமாயிருக்கு. போன வருஷம் காலரா வந்து ஊர்ஊரா ஜனங்கள் செத்து மடிஞ்சா. ஊரு முழுக்க இப்படி வியாதி வந்து கொல்லறதே எனக்கு ஒன்னும் வரமாட்டேங்கறதே ஏன்னு தெரியாத்தனமா கோயிலாத்து அம்பிகிட்டே கேட்டது என் தப்பு. அவன் சொல்றான். அது ஓடியாடி வேலை செஞ்சு நல்ல வேலையில இருக்கறவாளுக்கு. ஒன்ன மாதிரி திண்ணை தூங்கிகளுக்கில்லேங்கறான். கம்மனாட்டி. இதுக்காகவே நாக்கைப் பிடிங்கிண்டு சாகலாம்ன்னு பார்க்கறேன். ஆனா நாக்கைப் பிடிங்கிண்டா ரத்தம் கொட்டுமாமே? வலிக்குமாமே? உடனே உயிர் போகாதாமே. அது சரிப்படாது. சாகணும் சாகணும்ங்கறேனே, ஏன்னு கேக்கறேளா? வேற ஒண்ணுமில்ல. என்னால யாருக்கும் தம்பிடி ப்ரயோஜனமில்லே. தோன்றினா புகழோடு இல்லேன்னா வேஸ்ட்டுன்னு திருவள்ளுவரே சொல்லியிருக்கா இல்லையா? நான் ஒரு ஆளு ஒழிஞ்சேன்னா இந்த பஞ்ச பாட்டு பாடற சர்க்காருக்கு ப்ரயோஜனமா போகும். அடுத்த ஜன்மத்துலையாவது காதுல கடுக்கன், அப்பளாக் குடுமின்னு இல்லாம நன்னா கிராப், கிருதாவோட பொறந்து தொலைக்கணும். குளத்துல விழுந்து ப்ராணனை விடலாம்னு பார்த்தா எனக்கு நீச்சல் தெரியுமே? தவிர மூக்கு வழியா லங்ஸ் முழுக்க ஜலம் போய் உயிர் போக ரொம்ப நேரம் ஆகுமாமே? ம்ஹூம்.. அதுவும் சரிபடாது. சரி... தூக்கு மாட்டிண்டு சாகலாம்ன்னா, நெஞ்சு குரல்வளை பொடலங்கா ஒடியற மாதிரி பொடக்குனு ஒடியுமாமே? என்ன கஷ்டம்டா இது? நன்னா வயறு நிறையா சாப்டோமா, சின்ன திண்ணைல வந்து படுத்துண்டு அப்படியே மேல போனோமான்னு இருக்க வேண்டாமோ? இப்படித்தான் மூணாந்தெரு கொழந்த கிட்டா போனான். பேருதான் கொழந்தை கிட்டா. கோட்டான் வயசு. நேத்திக்கு எல்லாம் ஆச்சு. சட்டுன்னு வ்ராட்டி படுக்கைக்குள்ளே பூந்துண்டு என் மேல கொள்ளிய வைய்யுங்கோங்கற மாதிரி படுத்துண்டுடலாம்ன்னு தோணித்து. என்னடாப்பா நாப்பது வயசிலேயே இப்படி பொலம்பறானேன்னு பார்கறேளா? உன் பையன் 16-ம் வருஷத்திலே பொறந்து 16 சம்பத்துகளுக்கும் அதிபதியாகி இருப்பான்னு பெருமாள் கோயில் பட்டாசாரியார் சொன்னதாக என் தோப்பனார் அடிக்கடி சொல்லுவார். சம்பத்தாவது? சர்பத்தாவது? ஒண்ணுத்துக்கும் வழியில்லே. ஜென்மம் எடுத்த நாள்லேர்ந்து எதுவும் என் இஷ்டப்படி இல்லே. முதல் பதினாறு வருஷம் என் தோப்பனார் நரசிம்மர் கன்ட்ரோல்ல இருந்தேன். இந்த ஸ்லோகத்தை சொல்லு அந்த ஸ்லோகத்தைச் சொல்லுன்னு என் தொடையை கிள்ளிண்டே இருந்தது இப்பவும் வலிக்கறது. பெரியவாள்ளாம் கோவிச்சுக்கக் கூடாது. இப்ப யாராவது ருத்ரம், சமகம்ன்னா நான் ஜோட்தலைய எடுத்து மொத்திப்பிடுவேன். எல்லாமே வெறுத்துப் போயிடுத்து.  அவரை நடுக் கூடத்திலே போட்டு விளக்கேத்தி வைச்சபோது கூட என் தொடையத்தான் தடவிண்டேன். அழுகை துளிக்கூட வர்லே. ஆளாளுக்கு கோவிச்சுண்டா. சரி.. ஒரு சனி விட்டுது. இனி கொஞ்சம் செளகர்யமா வெங்காய கொத்சும், பூண்டு ரசமுமா இருக்கலாமேன்னு பார்த்தா இன்னோரு சனி என் ஆத்துக்காரி ரூபத்திலே வந்தது. கல்யாண ஜோர்ல, பார்க்கறதுக்கு சின்னக் கொழந்தே மாதிரி இருக்காளேன்னு நெனைச்சிண்டு, அடியே பங்கஜம்! நீ ரொம்ப அழகா இருக்கே!! ஆனா உன்னோட மூக்கு சித்த கோணல்னேன். உள்ளது உள்ளபடியேச் சொன்னது தப்பாபோயிடுத்து. ரெண்டு பசங்க பொறந்து, வளர்ந்து, பட்ணத்துக்கு படிக்க போனாளோல்லியோ, ஆரம்பிச்சுட்டா. நீங்க அன்னிக்கு அப்படிச் சொன்னேளே இப்படிச் சொன்னேளேன்னு ஒரே ஹிம்சை. விட்டுடுத்து எல்லாம்னா உங்களுக்கு நல்லா புரிஞ்சுக்க முடியும்னு நெனைக்கிறேன். கோபக்கார தோப்பனார் ருத்ர தாண்டவம் ஆடினார்னா, இவ பக்தி திலகம். கைல சப்பளாக் கட்டைய எடுத்துண்டு வீடு வீடா பஜனை. ஒரு சாயங்காலம் எதிர்வீட்டு சேது என்ன கேட்டான் தெரியுமா? கோபாலா எங்காத்துல இன்னிக்கு ராத்திரி திவ்ய நாம பஜனை. வர செளகர்யப்படுமா?  உங்காத்து மாமிதான் சீஃப் கெஸ்ட்ன்னு சொல்லிப்பிட்டு கண்ணடிக்கறான். படவா ராஸ்கோல். நீங்களே சொல்லுங்கோ. நன்னாவா இருக்கு? ஏண்ணா? ஈரோட்டுக்கு பக்கத்திலே ஏதோ ஒரு மலை ஜாதிக்காரா அப்படியே மூச்சை தம்பிடிச்சிண்டு உசிரை விட்டுடுவாளாமே? நெசமாவா? ம்... அப்படியே இருந்தாலும் எனக்கு சரி வராது. பிராணாயாமத்துக்கே மூச்சை பிடிச்சுக்க கஷ்டமா இருக்கு, இதுல போயி மூச்சை பிடிச்சு உசிரை விடறதாவது? ஆத்துக்காரி அப்படீன்னா, இந்த குலக் கொழுந்துகள் இருக்கே,  பீடைகள். கன்னம் முழுக்க புஸ்புஸ்ன்னு கிருதா. தலைல குருவிக் கூடு மாதிரி முன்னுச்சி மயிர். கருகருன்னு தொங்கு மீசை. எனக்கு மரியாதையே கொடுக்காதுகள். எல்லாம் அம்மா ராஜ்யம். ஏன்னா எங்கிட்ட காசு இல்லையே. அப்படியே ஓடிப் போய் ரயில் தண்டவாளத்துலப் படுத்துண்டுடலாமான்னு தோண்றது. சே... வேண்டாம். சாகறதுதான் சாகறோம். பீஸ் பீஸ் போகாம முழுசா செத்துத் தொலைப்போமே. இது வரைக்கும் நான் சொல்லறதைக் கேட்டே உங்களுக்கு த்சோ.. த்சோன்னு தோணறதோல்லியோ. இன்னும் கேளுங்கோ. இது போன மாசத்தில ஆரம்பிச்சது. திவ்யநாமம்ன்னு பக்கத்தாத்துக்கும் எதிர்தாத்துக்கும் போயிண்டு இருந்ததுக்கு வந்தது கேடு. ஒரு சேட்டுக் குடும்பம் ஸ்னேகிதம் ஆச்சு. வீடு நாடகக் கொட்டா ஆயிடுத்து. பக்தி சிரத்தையா இருக்கறவா கோவிச்சுக்கக் கூடாது. ஸ்வாமிக்கு தீபாராதனைன்னா ஒரு ஐஞ்சு செகண்டு காட்டுவோம். அப்பறம். கீழே வைச்சுட்டு, எல்லாரும் எடுத்துக்கோங்கோன்னு சொல்லிடுவோமில்லையா? இங்க என்ன தெரியுமா? அந்த கடோத்கஜன் அவன் ஆம்பிடையா பூதகியோட ஈஷிண்டு தீபாராதனைத் தட்டை எடுத்துண்டு காட்டறா காட்டறா அரை மணி நேரமா! டோலக்கு என்ன? தபலா என்ன? அட்டகாசம். இரு, இரு, இதே மாதிரி நார்மடி கட்டிண்டு செய்வேடி. நான் ஒருத்தன் குத்துக் கல்லாட்டம் இருக்கேன், என்னை விட்டுட்டு பூஜை புனஸ்காரம் என்ன வேண்டிக் கெடக்கு? ஏங்க? சவரக் கத்தியால நாடி நரம்பை வெட்டிண்டா வலிக்காம உயிரு போயிடுமாமே? அப்படியா? இதைத்தான் நான் மளிகைக் கடை பாலுகிட்டே கேட்டுத் தொலைச்சுட்டேன். தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லிட்டு போகவேண்டியதுதானே? அதை விட்டுட்டு, என்கிட்டே நெல்லுக்குத் தெளிக்கற பூச்சி மருந்து இருக்கு. அதுல ஒரு டம்பளர் மோர் சாப்பிடற மாதிரி கடகடன்னு சாப்ட்டுடு. வண்டிமாடு மாதிரி நுரை கக்கிச் சாவேங்கரான். ஏன்டா கேட்டேன்னு ஆயிடுத்து. நான்னா எல்லாருக்கும் கேலியும் கிண்டலுமா இருக்கு. சரி. எல்லாத்தையும் விட்டுடுவோம். சயனைடுன்னு ஏதோ ஒண்ணு இருக்காமே? அதைப் பென்சில் நுனியளவுக்கு நாக்கில வச்சிண்டா போதுமாமே? அதை பத்தின விவரம் ஏதாவது தெரியுமா? கொஞ்சம் சொல்லுங்களேன். ப்ளீஸ்.... " மன்னிக்கவும். மேலே உள்ளவை யாவும் திரு கோபாலன் அவர்கள் 1956 ல் சொன்னது. அவர் மனைவி பங்கஜமும், மூத்த மகனும் தற்போது உயிரோடு இல்லை. மிக முக்கியமான, சுவாரஸ்யமான ஒரு விஷயம் உண்டு என்றால் அது கோபாலன் இன்னமும் உயிரோடு இருக்கிறார் என்பதுதான். (கலைமகள் - செப்டம்பர் 2006) 22. சந்தோஷத் தீவு   முன் குறிப்பு :-  கடவுள் மனிதனை படைத்தான். மனிதன் தன் பங்குக்கு பிரச்சனைகளை படைத்தான். இன்று நாம் சிக்கித் தவிக்கும் பல பிரச்சனைகள், மனிதன் தன் சுய லாபங்களுக்காக எப்போதோ உருவாக்கப்பட்டவை. வரம் கொடுத்தவனையே பதம் பார்க்க வந்த பஸ்மாசுரன் மாதிரி, இந்த மாதிரியான பிரச்சனைகள் பல சிக்கல்களுக்கு உள்ளாகி, வெவ்வேறு வடிவம் எடுத்து, கடைசியில் பூதாகரமாக உருவெடுத்துவிடும் போது, 'தீர்வு என்ன?' என்று தலையை பிய்த்துக் கொள்கிறோம். காஷ்மீராகட்டும், காவிரியாகட்டும், கட்சத் தீவாகட்டும், அதன் வேர்கள் ஒன்றே.  தமிழகக் கடற்கரையிலிருந்து சற்று தொலைவில், வங்கக் கடலில் ஒரு தீவு உருவானால்? கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறதல்லவா? அந்த கற்பனையில் கொஞ்சம் காரம் சேர்க்க, சில பிரச்சனைகளை அதில் நாம் சேர்ப்போமா? இதோ கதை தொடங்குகிறது.....   2016, அக்டோபர் மாதம் 14ம் தேதி, வெள்ளிக்கிழமை.  மதியம் இரண்டு மணிக்கு பிடித்த மழை இன்னும் விடவில்லை. சென்னை நகரமே மழை நீரில் பெருங்காயம் மாதிரி கரைந்து போய்விடுமோ என்ற அளவுக்கு மழையின் தீவிரம் இருந்தது. இது போதாதென்று, பின் இரவில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் அதிபயங்கர புயல் தாக்கக்கூடும் என்று வானிநிலை அறிவித்திருந்தது. அதற்கு க்ளாரா என்று பெயரிட்டிருந்தார்கள். ஒரு பக்கம் தமிழக மக்கள் ஈரமும் குளிருமாக தவித்துக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் மாநில போலீசும் அரசுத் துறை அதிகாரிகளும் ஏக டென்ஷனில் இருந்தார்கள். அவர்கள் அடிக்கடி இரண்டு வார்த்தைகளை அடிக்கடி பிரயோகித்து கொண்டிருந்தார்கள் அதுதான், சந்தோஷத் தீவு! மழையும், புயலும் சற்றே அதன் முக்கியத்துவத்தை குறைத்திருந்தாலும், நேற்றும், இன்றும், நாளையும் அதுதான் செய்திகளின் கதாநாயகன். அன்றைய காலை தினசரிகளில் தடித்த எழுத்துக்களில் சந்தோஷத் தீவில் நடக்கப் போகிற கரசேவை பற்றிய செய்திகளே இடம் பிடித்திருந்தன. 'சந்தோஷத் தீவில் இனி யாருக்கும் அனுமதி இல்லை! மத்திய அமைச்சரவை ரகசிய முடிவு ?', என்று கொட்டை எழுத்துக்களுக்கு சிவப்பு அடிக்கோடிட்டு புதிய செய்தியை முந்தித் தந்திருந்தது ஒரு தினசரி. அதுதான் உண்மையோ என்ற மாதிரி அதை உறுதிப் படுத்தும் விதமாக அடுத்தடுத்து செய்திகள் வந்து கொண்டிருந்தன. இன்னொரு தினசரி தன் பங்குக்கு சந்தோஷத் தீவில் நிர்மானிக்கப் படப்போகிற நாற்பது அடி உயர அனுமன் சிலையின் ஏ4 சைஸ் வண்ண ஃபோட்டோவை இலவச இணைப்பாக வழங்கியிருந்தது. அரசியல் சார்பு தினசரிகள் ஒருவர் மேல் ஒருவர் புழுதிவாரி தூற்றிக் கொண்டும் தங்களுக்கு சாதமான விஷயங்களை முன்னிலை படுத்தியும் செய்திகளை திரித்தும் எழுதியிருந்தன. அரசியல், மதம், நீதி மன்றம் என்று ஏகப்பட்ட சிக்கல்களில் தற்போது திண்டாடிக் கொண்டிருக்கும் சந்தோஷ தீவிற்கு பெயரில்தான் சந்தோஷம். கடந்த மூன்று வருடங்களாக அதன் பிரச்சனைகள் தீவிரமடையும் போதெல்லாம் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொது சொத்துக்கள் நாசமாயின. விலைவாசியின் அம்புக்குறி அடிக்கடி மேல் நோக்கி மிரட்டியது. பங்கு வர்த்தகத்தில் கரடிக்கு அதிகம் வேலையிருந்தது. ராமேஸ்வரத்திலிருந்து வடக்கு பக்கமாக 36 நாட்டிகல் மைல் தொலைவில் இரண்டு கி.மீ. நீளம், மூன்று கி.மீ. அகலத்திற்கு 2010 ஜனவரி மாதத்தில் உருவான அந்த குட்டித் தீவுக்கு அடுத்த பத்தாவது நாளே சிக்கல் ஆரம்பித்தது. இந்தியா, இலங்கையும் அதற்கு உரிமை கோரின. ரோந்துப் பணி கப்பலுக்களூக்கு இடையே அடிக்கடி சிறு சிறு மோதல்கள் ஆரம்பித்தன. வெளிவிவகாரத் துறை மந்திரிகள், தூதுவர்கள், செயலாளர்கள் ஏசி அறைகளில் அடிக்கடி கூடிக் கூடி விவாதித்தார்கள். மூக்கை இடிக்கும் செய்தியாளர்களின் மைக்குகளில் 'மீண்டும் சந்திப்போம், பேசுவோம்' என்றார்கள். வரைபடங்கள் சரிபார்க்கப் பட்டன. பாரளுமன்றம் அடிக்கடி ஸ்தம்பித்தது. மாநில கட்சிகளும் தங்கள் பங்குக்கு குட்டையை குழப்பினார்கள். சந்தோஷத் தீவுக்கு அருகில் மீன்பிடிக்கப் போன நூற்றுக் கணக்கான மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட, மீனவர் நலன் என்ற போர்வையில் ஒரு வட்டார கட்சி களத்தில் இறங்கியது. அதன் வளர்ச்சியை கண்டு சகிக்க முடியாத எதிர் கட்சி, 'கட்ச தீவைப் போல இந்த தீவுக்கும் இலங்கை உரிமை கோரினால், தமிழ் நாட்டில் ரத்த ஆறு ஓடும்', என்ற மிரட்டலோடு சிறை நிரப்பும் போராட்டத்தை துவக்க, ஆளும் கட்சி எதைப் பிடித்தால் தங்களுக்கு அரசியல் இலாபம் கிடைக்கும் என்று தேடி திண்டாடியது. ஒரு வழியாக எல்லைப் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு அது இந்தியாவுக்குதான் என்று முடிவானது. ஆனால் அதில் தமிழர் நலனை நிலை நாட்டியது யார் என்பதில் குடுமிபிடி சண்டைகள் தொடங்கின. அவர்களுக்கு அவர்களே வாழ்த்திக் கொண்டு போஸ்டர் அடித்து விழா கொண்டாடினார்கள். கவிஞர்கள் தங்கள் அரசியல் தலைவர்களை வாழ்த்துப் பாமாலை பாடி பரிசில் பெற்றார்கள். சிங்கப்பூருக்கு அருகில் இருக்கும் சென்டோஸா தீவைப் போல் சந்தோஷத்தீவை மேம்படுத்துவோம் என்று மெரீனா கடற்கரை கூட்டத்தில் முழங்கிய மாநில முதல்வரின் பேச்சை கேட்டு வயிறெரிந்தார்கள் எதிர் கட்சியினர். அரசியல் குழப்பங்கள் கொஞ்சம் தணிந்ததும் வியாபார போட்டா போட்டிகள் தொடங்கின. சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் ஸ்டீமெர்கள் கான்ட்ராக்ட் கொடுத்ததில்/எடுத்ததில் பெரும் அரசியல் புள்ளிகள் பணம் பார்த்தார்கள். காசு பார்க்க முடியாத கோஷ்டியும், காசு ஏராளாமாக கண்டுவிட்ட கோஷ்டியும் சந்தோஷத் தீவிலேயே துரத்தி துரத்தி அடித்து கொண்டார்கள். அதை வெளியிட்ட ஒரு புலனாய்வு பத்திரிக்கையின் ரேட்டிங் கூடியது.  சந்தோஷத் தீவுக்கு அடியில் இருக்கும் பவழப் பாறைகளை சுற்றுலா பயணிகளுக்கு காட்டுவதாக அரசியல் பின்னணியில் ஒரு பெரிய நிறுவனம் களத்தில் குதிக்க, சுற்றுசூழல் ஆர்வலர்கள் கோர்ட்டுக்கு போக, நீதிமன்றம் அதற்கு தடைவிதித்தது. சந்தோஷத் தீவை ஒரு வசூல் ராஜாவாக ஒரு கூட்டம் போற்றி புகழ்ந்தாலும், இன்னொரு பிரிவினர் அதை மர்ம நாயகனாகவே பாவித்து செய்திகளில் அவ்வப்போது பயமுறுத்தி கொண்டிருந்தனர். சந்தோஷத் தீவில் அதிக அளவில் யுரேனிய படிமங்கள் கண்டுபிடிப்பு! அமெரிக்கா அங்கே ஒரு ராணுவ தளம் அமைக்கும்! சந்தோஷத் தீவு ஒரு தனித் தீவு அல்ல. இது போல இன்னும் 50க்கும் மேற்பட்ட தீவுகள் சென்னை வரை உருவாகலாம்! அப்போது துறைமுகங்களுக்கு ஆபத்து வரலாம்! சுனாமி வருவது சர்வ சாதாரணமாகி விடும்! தென் தமிழ்நாடு கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கக் கூடும்! என்று கிளி ஜோஸ்யம் மாதிரி அரை வேக்காட்டு அறிவியல் அறிஞர்கள் துணை கொண்டு மர்மங்கள் எல்லா ஊடகங்களிலும் தொடர்ந்தன. தினம் தினம் ஒரு மர்ம முடிச்சை அவிழ்த்துக் கொண்டிருந்த சந்தோஷத் தீவு, ஒரு புத்தம் புதிய திருப்பம் கண்டது. யாரோ ஒருவர் ராமாயண நிகழ்வுகள்படி அனுமன் பெரிய உரு கொண்டு இலங்கையை நோக்கி பறக்க உந்தி எழுந்த இடம் அந்த தீவுதான் என்றும், சந்தோஷத் தீவின் ஒரு பாறையின் மீது அந்த கால் தடங்கள் இருப்பதாக ஆதார விளக்கங்கள் அளிக்க, பிரச்சனை அனுமன் மாதிரியே விஸ்வரூபம் எடுத்தது. மூலை முடுக்கு கோயில்களுக்கெல்லாம் குடும்பம் குடும்பமாக வேன் எடுத்துக் கொண்டு விசிட் அடித்து சலித்து போய்விட்ட பக்தர்கள் கூட்டத்திற்கு அது ஒரு பெரிய வரப்பிரசாதமாக போய்விட்டது. அது வரை இயற்கை ஆர்வலர்கள் விரும்பும் சுற்றுலாத்தலமாக இருந்த சந்தோஷத்தீவின் மீது பக்தர்கள் படையெடுக்கவும், புதிய ஆதாய கோஷ்டிகள் அங்கே தங்களது சுய இலாபங்களை அங்கே அரங்கேற்றினர். இரவோடு இரவாக ஒரு பக்த கோஷ்டி அனுமன் சிலையை அந்த இடத்தில் பிரதிஸ்டை செய்து ஒரு தற்காலிக கோயில் செய்துவிட, பிரச்சனை இன்னும் தீவிரம் அடைந்தது. கூடவே நாலு கால பூஜையும் தொடங்கிவிட்டது. எதிர்ப்பாளார்கள் கொதித்தெழ விஷயம் நீதி மன்றம் வரை போனது. இதற்கிடையில் தீவின் இன்னொரு மூலையில் மீனவ கிருஸ்தவர்கள் ஒரு தேவாலயத்திற்கான ஏற்பாடுகளை தொடங்கிவிட, சட்ட ஒழுங்கு கெட்டுவிடும் அபாயம் ஏற்பட்டது. துரதிர்ஷடவசமாக, ஒரு சிறு நாட்டு வெடி குண்டு ஒண்று வெடிக்காத நிலையில் அங்கேகண்டுபிடிக்கப்படவும், நாட்டில் பல இடங்களில் மதக் கலவரங்கள் நிகழ்ந்தன. பெருவாரியான மக்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம் என்பதால் தற்போது உள்ள கோயிலும், கோயில் பூஜையும் தொடரலாம் என்றும் ஆனால் நீதி மன்ற இறுதி தீர்ப்பு வரும் வரை எந்த வித நிரந்தர கட்டுமானப் பணிகள் கூடாது என்ற ஒரு குழப்பமான தீர்ப்பை உச்ச நீதி மன்றம் அளித்தது. அரசியல் கட்சிகள் இந்த பக்கமும் அந்த பக்கமும் மாறி மாறி ஊதி தங்கள் கணக்குகளை சரி செய்து கொண்டார்கள். அகில உலக இந்து மக்கள் சேவா தளம் என்ற அமைப்பு அசுர வளர்ச்சி பெற்றது. அனுமன் எழுந்த இடத்தில் மிகப் பெரிய உருவச் சிலை வைப்பதுதான் சரி என்று அவர்களே தீர்மானித்து 40 அடி சிலை செய்தார்கள். கன்யாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை இருக்கலாம், ஹைதராபாதில் புத்தருக்கு சிலை இருக்கலாம், சந்தோஷத் தீவில் அனுமன் சிலை இருக்கக் கூடாதா என சேவா தள தலைவர் அறைகூவல் விட அவர் மிகவும் பிரபலமானார். மிகப் பெரிய கோயில் கட்ட மக்களிடம் வசூல் வேட்டை நடந்தது. மக்களின் நம்பிக்கையில் நீதி மன்றம் தலையிடுவதை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று அறிவித்தது சேவா தளம். ஆனால் இந்த விஷயத்தில் ஆன்மிகத்துக்கு துளிகூட சம்பந்தமில்லை என்றும் மத ரீதியாக மக்களை திசைதிருப்பி அரசியல் ஆதாயம் பார்க்கிறது ஒரு கூட்டம், சத்தியம் நிச்சயம் வெல்லும் என்று உண்மையான ஆன்மிகவாதிகள் மறுத்து அறிக்கை விட்டார்கள். இதற்கிடையில் இங்கிலாந்தை சேர்ந்த செய்தி நிறுவனம் அனுமன் சிலை செய்தியை ஒளிபரப்பி அதை குரங்குக் கடவுள் என்று சொல்லிவிட நாடு முழுவதும் கண்டன ஆர்பாட்டங்கள் நடந்தன. சென்னை கமிஷனரின் பத்திரிகையாளர் சந்திப்பு தொடங்கவும் சொல்லி வைத்தமாதிரி மழை தீவிரம் சற்று குறைந்தது. "கமிஷனர் அவர்களே! நாளைய ஊர்வலம் சட்டம் ஒழுங்கு காரணமாக தடை செய்யப்படுமா?" "நிச்சயமாக இல்லை. சிலையின் நெடும் பயணத்திற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். ஆனால் சட்ட ஒழுங்கு மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுப்போம்." "சந்தோஷத் தீவில் இருந்த அனைத்து கோயில் நிர்வாகிகளையும் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்டார்களா? எல்லோரையும் போகச் சொல்லிவிட்டு அந்த கோயில் தரைமட்டமாக்கப்படும் என்று பேச்சு உள்ளதே?" "இதற்கு முதலமைச்சர் காலையிலேயே பதிலளித்துவிட்டார். கடும் மழை காரணமாகத்தான் அவர்கள் சம்மதத்தோடு நாங்கள் அழைத்து வந்தோம். உச்ச நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை கோயிலுக்கு எங்களின் பாதுகாப்பு தொடரும். அதில் தயவு செய்து சந்தேகப் பட வேண்டாம்." "கமிஷனர் சார். ஒரு தனியார் சேனலில் அவர்கள் போலீசின் தொந்தரவினால்தான்..." "பொய் சொல்லுகிறார்கள். எங்களுக்கு அவப் பெயரை உண்டாக்கினால் சிலருக்கு ஆதாயம் என்பதால் பொய் சொல்ல வைக்கப்படுகிறார்கள்." "ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக..." "அது புயல், மழை, வெள்ளத்தை சமாளிக்க. தயவு செய்து இந்த விஷயத்தோடு முடிச்சு போடாதீர்கள்." ஒரு தனியார் தொலைக்காட்சி சேவா தளத்தின் தலைவர் அனல் கக்கும் பேட்டியை நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தது. நீதி மன்ற தீர்ப்பை மீறி செங்கல் பூஜை சந்தோஷத் தீவில்தான் நடைபெறும் என்றும் வீராவேசமாக பேசிக் கொண்டிருந்தார். 'காவிரி பிரச்சனையில் நீதி மன்ற தீர்ப்புக்கு கர்நாடக அரசாங்கம் எங்கே கட்டுப்பட்டது? முல்லை பெரியார் தீர்ப்பை இன்னமும் கேரள அரசு மதிக்கவில்லையே? அவர்களுக்கு ஒரு நியாயம்? எங்களுக்கு ஒரு நியாயமா?' என்று பேட்டி சூடு பறக்க போய் கொண்டிருந்தது. புது டில்லியில் பிரதம மந்திரியின் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்த உள்துறை மந்திரியை நிருபர்கள் சூழ்ந்து சந்தோஷத் தீவு பற்றி சரமாரியாக கேள்விகள் கேட்கவும் அவர் பதிலளிக்க தொடங்கிய அடுத்த ஐந்தாவது நொடியில் அனைத்து சானல்களும் நேரடி ஒளிபரப்பை தொடங்கின. “திட்டமிட்டபடி சேவா தளத்தின் ஊர்வலம் தொடங்குமா?" "இதை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். சேவாதளத்திடம் கேளுங்கள்." 'சேவா தளத்திற்கு உங்கள் கட்சி மறைமுகமாக உதவி வருவதாக பேச்சு அடிபடுகிறதே?" "கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் கெட்ட எண்ணங்களோடு எங்களை வீண் வம்புக்கு இழுக்க வேண்டும் என்பதற்காக எழுப்பப்படும் கேள்வி இது. எங்கள் கட்சி நீதி மன்ற தீர்ப்பை முழுமையாக ஏற்கும்." "நீதி மன்றத் தீர்ப்பு உங்கள் கட்சிக்கு சாதகமாக வர வேண்டும் என்பதற்காகத்தான் தலைமை நீதிபதி சமீபத்தில் ராஜினாமா செய்யும்படி நிர்பந்திக்கப் பட்டாரா?" “இங்கே பாருங்கள். உங்களுக்கு பரபரப்பான செய்திகள் வேண்டும் என்பதற்காக ஒரு நீதிபதி தனது உடல் நிலை காரணமாக பதவி விலகியதை திரித்து விஷயத்தை பெரிது படுத்தாதீர்கள்." "பிரதமரின் நாளைய அமெரிக்கப் பயணம் சந்தோஷத் தீவு காரணமாக ரத்து செய்யப் பட்டு விட்டதா?" "எனக்கு தெரியாது" தமிழக கடலோரப்பகுதியில் மீண்டும் மழைபிடித்துக் கொண்டுவிட செய்தி சானல்கள் புயல், மழை, வெள்ளம் என்ற தலைப்புக்கு மாறின. பிள்ளையார் பிடிக்க குரங்காய் போன இந்த சிக்கலில் போலீசும் அரசுத்துறை அதிகாரிகளும் முழிபிதுங்கி தவித்தார்கள். அரசியல் கட்சிகளும் வெறுத்து போனார்கள். சந்தோஷத் தீவுக்கு என்னதான் தீர்வு? இதுவும் அயோத்தி மாதிரி இழுத்துக் கொண்டே போகுமா? யாரையும் பாதிக்காத ஒரு முடிவுதான் என்ன ?   அந்த முடிவு அன்று இரவே வந்தது. அதிகாலை மூன்று மணியளவில் மாநில முதலமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர், பிரதம மந்திரி, போலீஸ் உயர் அதிகாரிகளின் படுக்கையறை கதவுகள் தட்டப்பட்டன. செல்போன்கள் சினுங்கின. மகிழ்சியான செய்திகளை ஒருவருக்கு ஒருவர் பரிமாரிக் கொண்டார்கள். அது-    கடும் கடல் கொந்தளிப்பில் சந்தோஷத் தீவு காணாமல் போனது. (கலைமகள் - அக்டோபர் 2009)   23. சிக்கியது பறவை   அவள் அநியாயத்துக்கு அழகாக இருந்தாள். பார் இணைக்கப்பட்ட அந்த ரெஸ்டொரண்ட்டின் அரையிருட்டில் கூட பளீரென்று தெரிந்தாள். கன்னம் குழிவதில் ப்ரீதி ஜிந்தா, நீல கண்களில் ஐஸ்வர்யா ராய், ஸ்லிம் பாடியில் சிம்ரன், மூக்கில் அந்த காலத்து ஸ்ரீதேவி என்று 'எல்லாம் சேர்ந்த கலவையாக' இருந்தாள். இப்படிக் கூட ஒருத்தி அழகாய் இருக்க முடியுமா? ராஜீவ் வியந்து வியந்து போனான். 'இவள்தான். இவளேதான். நான் வெகுநாட்களாக தேடிக்கொண்டிருந்தவள். என் இன்றைய டார்கெட்', ராஜீவ் மனசில் டிக் செய்து கொண்டான். முதலில் தான் மட்டும் அவளை 'பார்த்துக் கொண்டிருப்பதாக' நினைத்திருந்தான். அங்கும் இங்கும் நோட்டம் விட்டதில் இருபது கண்களுக்கு மேல் அவள் மீது மேய்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவளோடு வந்திருந்த அந்த தாடித் தடியன் மது மயக்கத்தில் சரிந்திருந்தான். முடி குவியலுக்குள் மூக்கும் வாயும் சொருகப்பட்டது மாதிரி இருந்தது. பிர்... பிர்... என்று ஏப்பம் விட்டுக் கொண்டிருந்தான். டேபிளில் ஏகத்துக்கு தந்தூரி ஐயிட்டங்கள் சிதறி இருந்தன. ஏதோ ஒரு காரணத்துக்காக எழுந்தவள் விறுவிறுவென ராஜீவை தாண்டிப் போனாள். பின் பக்கத்தில் ஏஞ்சலினா ஜூலியை ஞாபகப்படுத்தினாள். சராசரிக்கும் அதிகமான உயரம். மெல்லிய சென்ட் வாசனை அவனை கிறங்க அடித்தது. அவள் திரும்பி வரும் வரை காத்திருந்தான். வெயிட்டரிடம் ஏதோ சொல்லிவிட்டு வந்தவளை இடைமறித்தான். "மேடம். நீங்க..... ஷெரீன் தாமஸ், சில்வர் மீடியா சொலூஷன்ஸ்" "நோ. யூ ஆர் ராங்க்." சரசரவென அவனை தாண்டிப் போய்விட்டாள். ராஜீவ் அவளை விடவில்லை. அவள் டேபிள் அருகே போனான். "மேடம். ஐயாம் சாரி. தப்பா சொல்லிட்டேன். நீங்க மிஸ் வித்யா ஸ்ரீராம்தானே?" "மிஸ்டர். உங்களுக்கு என்ன வேனும்?" "யு ஆர் ஸ்மார்ட். நீங்கதான் வேனும். உங்களோடு பேசலாமா? நீங்க என்னை என்னவோ பண்ணுறீங்க" ராஜீவ் கைகளை நீட்டினான். அதற்குள் தாடித்தடியன் அரைகுறையாக புரிந்து கொண்டு உளர ஆரம்பித்தான். அவனை மெல்லிய குரலில் அதட்டி அமைதி படுத்தினாள். சிவப்பு நிற திரவம் ஊற்றப்பட்ட கோப்பையை அவன் கைகளில் திணித்தாள். "மிஸ்டர். போங்க. உங்க எடத்துக்கு போய் அளவாக குடிங்க. அழகான பெண்கள்கிட்டே தத்துபித்து என்று உளறாதீங்க. இன்னும் ஏதாவது பேச்சைச் தொடர்ந்தீங்கன்னா கூச்சல் போடுவேன். போலீஸ் வரும்" "போலீஸ்! ஓ நோ." ராஜீவ் இரண்டு கைகளையும் அகலமாக விரித்து ஒரு ஒரு அடியாக பின்னால் போனான். கண்களை சிமிட்டினான். அவள் நிமிர்ந்து அவனை எரிப்பது போல பார்த்தாள். மை காட்! கோபப்படுவதில் கூட எவ்வளவு அழகாக இருக்கிறாள்! ராஜீவ் அவளை விட்டுப் பிடிப்பது என்று தீர்மானித்து தன் டேபிளில் வந்து அமர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு யோசிக்க ஆரம்பித்தான். உடனடியாக அதிர்ஷ்டக் காற்று அவனை நோக்கி வீசியது, ரம் ரூபத்தில். "ஓ நோ!" என்ற அவளின் அலறலும் தொடர்ந்து வந்தது. தாடித்தடியனுக்கும் அவளுக்கும் ஏதோ வாக்குவாதம் வந்திருக்க வேண்டும். அவன் மிச்சமிருந்த ரம் கோப்பையை அவள் மீது குறிதவறி வீச அது ராஜீவை இடது பக்கமாக குளிப்பாட்டியது. அவள் ஓரேயடியாக மாறிப்போனாள். ஒரு நிமிடத்தில் நூறு சாரி சொன்னாள். அவளே வலுக்கட்டயமாக ராஜீவின் கோட்டை கழற்றினாள். நடுங்கும் கைகளோடு டிஷ்யூ பேப்பரால் ரம் கொட்டிய பகுதிகளை துடைத்து விட்டாள். அவளின் குஷன் விரல் ஸ்பரிசத்தில் ராஜீவுக்கு உச்சி குளிர்ந்தது. நடுநடுவே தாடிக்கார தடியனை திட்டித் தீர்த்தாள். ராஜீவ் எவ்வளவோ கெஞ்சியும் அவள் கோட்டை திருப்பித்தரவில்லை. 'உலர் சலவை செய்துதான் திருப்பித் தருவேன்' என்று அடம்பிடித்தாள். பறவை சிக்கிவிட்டது! "சார். உங்க பேர சொல்லவே இல்லையே." சினேக பார்வையுடன் மென்மையாக இழுத்தாள். "ராஜீவ். சார், மோர் எல்லாம் வேண்டாம். ராஜீவ்னு கூப்டா போறும்." "நான் ரமா வெங்கடேஷ்" ராஜீவ் கேள்வியாக அந்த தாடித்தடியனை பார்த்தான். அவள் மப்பில் டேபிளில் சரிந்திருந்தான். "வெங்கடேஷ் என் அப்பா. இவனை விட்டுத்தள்ளுங்க. இவனால்தான் என் வாழ்க்கையே நாசமா போச்சு. ராஜீவ், ஒரு சின்ன உதவி செய்யேன். இவனை கீழ கார்ல விட்டுவிட்டுலாம். டிரைவர் இருக்கான். அவன் பார்த்துப்பான். நான் இன்னும் சரியாவே சாப்பிடலை" ராஜீவும் ரமாவும் அந்த தாடித்தடியனை கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு போய் காரில் திணித்தார்கள். அந்த சமயத்தில் ராஜீவுக்கு செல் அழைப்பு வந்தது. "ஓகே ரமா. நான் போய் ஆர்டர் கொடுத்துட்டு காத்திருக்கேன். இவனை சரி செஞ்சிட்டு மேலே வா" ராஜீவ் தலை மறையும் வரை ரமா காத்திருந்தாள். லிப்ட் கதவு மூடியதும் தாடிக்காரனை ஓங்கி ஒரு தட்டு தட்டினாள். அவன் விருட்டென எழுந்து உட்கார்ந்து கொண்டான். "என்ன பறவை சிக்கிடுச்சா? செம துட்டு பார்ட்டியா?" ரமா தன் சிவந்த இதழ்களில் விரல் வைத்து 'ஷ்ஷ்' என்றாள். "அவன் கோட்டு பாக்கெட்டுல பார்த்தேன். ஏழெட்டு கிரெடிட் கார்டுகள் வைச்சிருக்கான். ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக அவன் பர்ஸ் புடைப்பாக இருந்துச்சு. அரை மணி பொறு. நான் அவனை கொத்திக்கிட்டு வந்துடறேன்." வெகு இயல்பாக லிப்ட் ஏறியவள் ராஜீவை பார்த்ததும் பொய்யான பதட்டத்தை வரவழைத்துக் கொண்டாள். "சொல்லுங்க ராஜேஷ். நீங்கள் என்ன செஞ்சுக்கிட்டு இருக்கீங்க?" "ரமா. நான் ராஜேஷ் இல்லை. ராஜீவ். தி.நகர் ஜே,கே.ஆர். கோல்ட் ஹவுஸ் தெரியுமா?" ரமாவின் இரண்டு கண்களும் திடீரென ஒளிர்ந்தன. "யெஸ் ரமா. அதோட நாலு பார்ட்னர்கள்ல நானும் ஒருத்தன். தெனம் ஒரு லட்சம்னு செலவழிச்சா கூட இன்னும் அறுபது வருஷத்துக்கு கவலையில்லே." "ராஜீவ். நான் ரொம்பவும் வாழ்க்கையில கஷ்டப்பட்டிருக்கேன். எங்க வீட்டில சாதாரண மாருதி 800தான் இருந்துச்சு. ஏ.சி. கூட விண்டோ ஏசிதான். என் அப்பா பாக்கெட் மணியா கேவலம் ஐநூறு ரூபாதான் கொடுப்பாரு. எனக்கு நிறைய பணம் தேவைப்பட்டுச்சு. மாடலிங்கல நுழைஞ்சேன். இந்த தாடிக்காரன் பேச்சை கேட்டு கொஞ்சம் திசை மாறிப் போய்ட்டேன்" மெல்லிதாக அழுதாள். ராஜீவ் பதறிப்போய் அவள் கண்களைத் துடைத்தான். வேண்டுமென்றே சில பகுதிகளில் கைகளை ஓடவிட்டான். அவள் அதை அனுமதித்தாள். "ரமா. நீ என்கிட்டே வந்துட்டேல்ல. இனி உன் பிரச்சனையெல்லாம் தீர்ந்த மாதிரிதான். இன்னும் ஆறே மாசத்தில் நீதான் நம்பர் ஒன் மாடல். குறிச்சு வைச்சுக்கோ" "தாங்க்ஸ் ராஜீவ். உங்ககிட்ட ஆரம்பத்துல கோவிச்சுக்கிட்டேடன். மன்னிக்கனும்." "அதை அப்போதே மறந்துட்டேன்." ரமாவும் ராஜீவும் கீழே வந்த போது அந்த தாடிக்காரன் குடிபோதையில் மயங்கிக் கிடப்பது மாதிரி கார் பின்சீட்டில் சரிந்திருந்தான். "ராஜீவ். நான் உன் கார்ல வர்றேனே." அவன் தோள்களில் சரிந்தாள். ராஜீவின் பி எம் டபுள்யூ இருந்த இடம் கொஞ்சம் இருளடைந்த பகுதியாக இருந்தது. முதலில் காரை பார்த்து வியந்தவள், டிரைவர் ஸீட்டில் அமர்ந்த ராஜீவ் மீது ஒரே பாய்ச்சலாக பாய்ந்து, அவனை அணைத்து, இதழ்களை ஈரப்படுத்தினாள். ராஜீவ் தடுமாறிப்போனான். கார் வேகமெடுத்து பிரதான சாலைக்கு வந்தபோது, சென்னை வேக வேகமாக கவியும் இரவுக்குள் தன்னை ஒடுங்கிக் கொள்ள ஆரம்பித்திருந்தது. ரமா ராஜீவை தொடர்ந்து தொந்திரவு செய்து கொண்டிருந்தாள். ராஜீவ் மெதுவாக ஆரம்பித்தான். "ரமா. நான் ஒரு உல்லாச ப்ரியன். நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்கமாட்டியே?" "சொல்லு." நிமிண்டும் விரல்களூக்கு சற்று ஓய்வு கொடுத்தாள். "என் இரவுக்கு ஒரு பெண் பத்தாது. நீ லீட் கிடார்னா, எனக்கு கொறைஞ்ச பட்சமா அஞ்சு அல்லது ஆறு செகன்டரி கிடார்கள் வேணும். உனக்கு தெரிஞ்சவங்க இருக்காங்களா?" "ராஜீவ்! யூ ஆர் வெரி நாட்டி!" இடுப்பில் குத்தினாள். "பெரிசா செலவாகும். பரவாயில்லையா?" என்றாள். "பணத்தைப் பத்தி கவலைப் படாதே. எனக்கு வேண்டியது பெண்கள்." ரமாவின் செல்போன் தொடர்ந்து இயங்கியது. "டன் ராஜீவ். இன்னும் அரை மணியில் உன்னை மகிழ்விக்க அரை டஜன் அழகுப் பெண்கள் காத்திருப்பாங்க." சென்னை புறநகர் பகுதியில் ஒரு சொகுசு பங்களாவின் முன்னால் காரை நிறுத்தச் சொன்னாள். ராஜீவ் ஆச்சர்யப்பட்டான். “அட! எங்கிட்ட கூட இப்படி ஒரு பங்களா இல்லையே?'. "இது வாடகை வீடு ராஜீவ். வா! உண்னோடு நெறையா வேலை இருக்கு." ராஜீவை தரதரவென இழுத்துக் கொண்டு போனாள். பத்து நிமிட இடைவெளியில் தாடிக்காரனின் கார் சத்தமின்றி நின்றது. அப்போது பின் சீட்டில் சரிந்திருந்த தடியன் இப்போது முன் சீட்டில் ஒய்யாரமாக அமர்ந்திருந்தான். பின் சீட்டில் மூன்று தடியர்கள் இருந்தார்கள். அவர்களிடம் ஸ்டில் காமிரா, மூவி காமிரா என்று சகல எலக்ட்ரானிக் வஸ்துகளும் இருந்தன. "மாம்ஸ். எல்லாரும் கொடுத்த வேலையை சரியா செய்யணும் புரிஞ்சுதா? வேலை பர்ஃபெக்டா முடிஞ்சா பேமெண்ட் டபுள். ஓகே?" தலையாட்டினார்கள். பங்களாவுக்குள் ரமாவின் அனுமதி வாங்கிக் கொண்டு ஒரு தனிமையான பாத்ரூமுக்குள் போனான் ராஜீவ். செல்லை இயக்கினான். எதிர் முனையில் "சார். பறவைகள் கூட்டமா சிக்குது. ஆர் யூ இன் கண்ட்ரோல்?" "யெஸ். நாங்க எல்லாரும் நீ இருக்கிற பங்களாவிலேர்ந்து இருநூறு மீட்டர் தூரத்திலே இருக்கோம். கம்பிளீட் கண்ட்ரோல். கவலைப்படாதே." "ஓகே சார். இன்னும் அரை மணியில என்னோட அடுத்த சிக்னல் வரும். ரவுண்டப் செஞ்சுடுங்க. பார்டி பெரிய பார்ட்டி. எந்த பறவையையும் விட்டுடாதீங்க." "கோ அஹேட் மேன்." மெல்லிய புன்சிரிப்புடன் செல்லை ஆஃப் செய்தான் ராஜீவ் என்ற புனைப் பெயர் கொண்ட இன்ஸ்பெக்டர் செந்தில் குமரன். அஸிஸ்டென்ட் கமிஷ்னர் ரவி யாதவ் தலைமையில் ஒரு போலீஸ் கூட்டம் வெளியே இருளில் காத்திருந்தது. (தினமலர் - வாரமலர் - 21 பிப்ரவரி 2010)     24. ஆபரேஷன் மோகினி   இந்த கதைக்கு அதி முக்கியமானவர்கள் இருவர். ஒருவன் கோட்டை மனோ. இன்னொருவன் பல்ஸ் முத்து (பல்ஸர் என்பதன் சுருக்). இருவருமே லோக்கல் தாதாக்கள். சினிமாவில் மட்டுமே இவர்களைப் போன்றவர்களை அநியாயத்துக்கு உயர்த்தி காட்டுவார்கள். கண்கள் சிவக்க, கை நரம்புகள் புடைக்க அவர்கள் செய்யும் ரத்தக்களறிக்கு நியாயம் சொல்வார்கள். மும்பை இறக்குமதி பால் பப்பாளி ஹீரோயின்கள் அவர்களை துரத்தி துரத்தி காதலிப்பார்கள். யதார்தத்தில், இந்த கதையில், கோட்டையும் பல்ஸும் கெட்டவன்கள். மணலியில் ஆரம்பித்து மூலக்கடை வரை கோட்டையும் பல்ஸும் வைத்ததுதான் சட்டம். மூலக்கடை நாற்சந்தியில் ஒரு குட்டி நகைக்கடை வைத்திருக்கும் மோதிலால் சேட் ஒரு முறை கரீம் பாயிடம் வாங்கிய ஐந்து லட்ச ரூபாய் கடனை தராமல் இழுத்தடித்தான். கோட்டையும் பல்ஸும் உடனே களத்தில் இறங்கினார்கள். அவர்கள் ஸ்டைலே தனி. முதலில் அதிரடி அடி. அப்புறம்தான் பேச்சு. மூக்கிலும் வாயிலும் ரத்தம் கொப்பளிக்க மிதிபட்ட கரப்பான் பூச்சி மாதிரி மோதிலால் சேட் தன் ஏராளமான தொப்பையுடன் பிளிறிக்கொண்டே ஓடியதை முன்னூறு பேருக்கு குறையாமல் வேடிக்கை பார்த்தார்கள். அதில் டிராஃபிக் போலீசும் சேர்த்தி. இது போன்ற சாகச பட்டியல்கள் அருகில் இருக்கும் போலீஸ் ரிகார்டுகளில் ஏகமாக குவிந்து, பழுப்பேறிக் கொண்டிருக்கின்றன. எல்லா அட்டகாசங்களையும் காவல் துறை சகித்துக் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் மாண்புமிகு மதிவாணன். அதாவது லோக்கல் பேச்சுவழக்கில் 'அமைச்சர்'. அந்த பேச்சு வழக்கை மீறி மணலி ஏரியாவில் அவரை யாராவது 'மதிவாணன்' என்று பெயர் சொல்லி அழைத்து விட்டால், அவனும் மோதிலால் சேட் மாதிரி ரத்தம் கக்க வேண்டியிருக்கும்.  இத்தனைக்கும் மதிவாணன் தற்போது அமைச்சர் இல்லை. இருந்தாலும் அந்த கூட்டத்திற்கு அவர் எப்போதும் அமைச்சர்தான். ஒரு காலத்தில், ஒரு அரசியல் கட்சியால் அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டு 'அழகு' பார்க்கப்பட்டவர். ஆனாலும் தன் நிழல் சமாசாரங்களை எந்தவிதத்திலும் இம்மியளவும் குறைக்காமல் இருந்துவிட, அந்த அரசியல் கட்சிக்கு அவரை கழட்டி விடும் நிர்பந்தம் வந்தது. மதிவாணனின் சுட்டுவிரல் அசைவுக்கு  வட சென்னை கட்டுப்பட்டு இருப்பதால் பதவிக்கு வந்த எந்த அரசியல் கட்சியும் அவரை எதிர்க்க பயந்தன. எவனுக்கும் பயப்படாமல் தெனாவட்டாக இருந்த மதிவாணன் ஒரு சில மாதங்களாக தூக்கமில்லாமல் அலைகிறார். அவருக்கு செக் வைக்க வந்திருப்பவர், அந்த பகுதிக்கு புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட உதவி போலீஸ் கமிஷ்னர், திரு ரவி யாதவ். ஏ.சி. ரவி யாதவை யாரும் முதலில் கண்டு கொள்ளவில்லை. ஆனால் எந்த அரசியல் குறுக்கீடுகளுக்கும் பயப்படாமல் ஒவ்வொரு ரௌடியாக அவர் உள்ளே தள்ள ஆரம்பிக்க, மற்ற கேடிகள் அரை மப்பில் 'மெர்சலான' குடியர்கள் மாதிரி ஆனார்கள். அதுவும் சில நாட்களுக்கு முன்னால், மாத்தூர் மில்க் காலனியில் ஆஸ்டின் செல்வா என்ற ரௌடியை பட்ட பகலில் ஓட ஓட விரட்டி அவர் சுட்டுக்கொன்றதை பக்கம் பக்கமாக எழுதிய பத்திரிக்கைகள், அடுத்த குறி 'கோட்டை?' என்று பரபரப்பை உண்டாக்கியிருந்தன. ரவி யாதவின் வேகத்துக்கு, இன்னும் வலு சேர்க்கும் விதமாக அங்கே உதயமானவள்தான், சிட்டு. சிட்டுவுக்கு சொந்த ஊர் சித்தூர். ஆனால் நகரியில்தான் தொழில். நெடுஞ்சாலை லாரி டிரைவர்களூம், க்ளீனர்களூம்தான் அவள் வாடிக்கையாளர்கள். இரவு நேர மாமாக்களின் கமிஷன் கட்டிங்குகள், ஆந்திரா போலீசின் மாமுல்கள், மற்ற இதர தொந்தரவுகள் அவளுக்கு பாரமாக இருந்தன. அந்த சமயத்தில்தான் கோட்டை மனோவுக்கு ஓரிரவு விருந்தாகும் வாய்ப்பு வந்தது. சாதாரணமாக இரவு பெண்களை, வந்த வேலை முடிந்ததும், அந்த நிமிடமே மறந்துவிடும் மனோவுக்கு, சிட்டு வித்தியாசமாக தெரிந்தாள். "மணலிக்கு வர்றயா?" என்று கேட்டு விட்டான். சிட்டுவும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தாள். ஆனால் மணலிக்கு வந்ததும் சிட்டு கட்சி மாறினாள். அதற்கு காரணம், பல்ஸ். கோட்டை மனோவை பொறுத்தவரை பெண் என்பது இரவு நேரத்தில் வயிறு முட்ட குடித்தபின், தூங்குவதற்கு முன்பு கையாளப்படும் ஒரு பாலியல் வஸ்து. அதற்கு ஆசா பாசங்கள் உண்டு என்பதை அறியாத முரடன். இந்த அனுகுமுறை சிட்டுக்கு எரிச்சலை தந்தது. ஆனால் அவன் மூலமாக அறிமுகமான பல்ஸ் அப்படியல்ல. ஒரு பூவை கையாள்வது மாதிரி சிட்டுவை கையாண்டான். மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் படம் காட்டினான். பெரிய பெரிய ஏ.சி. கடைகளில் அழைத்து போய் அவளுக்கு விதவிதமான மார்டன் உடைகளை வாங்கிக் கொடுத்தான். நட்சத்திர ஓட்டல்களுக்கு அழைத்துப்போய், அரை இருட்டில் அவள் காதுகளில் கிசுகிசுத்தான். ஆண்வர்க்கத்தின் உஷ்ண மூச்சுக்காற்றை மட்டுமே அறிந்து வந்தவள், பல்ஸின் மென்மையில் கிறங்கிப்போனாள். பல்ஸ் கொடுத்த தைரியத்தில் கோட்டைக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தாள். தான் அழைத்து வந்தவளை, பல்ஸ் கொத்திக் கொண்டு போனது, கோட்டையை உசுப்பி விட்டது. வந்தது பிரச்சனை. பல்ஸ் முத்து, கோட்டையின் முதல் எதிரியானான். முதலில் அடிபொடிகளில் ஆரம்பித்த அடிதடி, கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமடைந்து நேரடி மோதலுக்கு வழி வகுத்தது. கண்ணாமூச்சி விளையாடுபவர்கள் மாதிரி, நாளுக்கு நாள், மூலைக்கு மூலை, கோட்டையின் ஆட்களும், பல்ஸின் ஆட்களும் அடித்துக் கொண்டார்கள். ரவி யாதவ் சுறுசுறுப்பானார். மதிவாணன் கவலையுற்றார். சமரசம் செய்விக்க, இருவரையும் உடனடியாக அழைத்தார்.    மதிவாணனின் நிழல் சமாசாரங்களை உள்ளடக்கிய ஒரு தொழிலகத்துக்குள் அனைவரும் கூடியிருந்தார்கள். வெள்ளை நிற ஸ்கார்ப்பியோ ஒன்று டயர்கள் தேய குலுங்கி நிற்கவும், அனைவரும் சுறுசுறுப்பானர்கள். வெள்ளை வேட்டி, மல் ஜிப்பா, வெள்ளை செருப்பு, அரை கிலோ தங்க ஆபரணங்கள் சகிதமாக மதிவாணன் வெளிப்பட்டார். கையில் அசாதாரண நீள அகலத்தில் உறையிடப்படாத செல் ஒன்று இருந்தது. "என்னப்பா கோட்டை வந்துட்டானா?" "எல்லோரும் உங்களுக்காக காத்திருக்காங்கண்ணா. ஆனா...." "ஆனா என்னய்யா?" "பல்ஸ், அப்பறம் அந்தப் பொண்ணு?" "என்னவாம்" "அண்ணே.... அவங்க வரமாட்டாங்களாம்.... பாதுகாப்பு இல்லியாம்...... நீங்க வந்த சேதி தெரிஞ்சதும்தான் வருவாங்களாம்" "வந்துட்டேன்ல. வரச்சொல்லு". அடுத்த பத்து நிமிட பரபரப்புக்கு பின் பல்ஸ் அவன் சகாக்களுடன் வந்தான். ஆளாளுக்கு விரைத்துக் கொண்டார்கள். முறைத்துக் கொண்டார்கள். மதிவாணனின் அதட்டலுக்கு அடங்கினார்கள். "கோட்டை, பல்ஸ், உங்க ரெண்டு பேருக்கும் பொதுவா சொல்லறேன். நீங்க ரெண்டுபட்டு நின்னீங்கன்னா, அது நமக்குதான் வீக்கு. நேத்து வரைக்கும் ப்யூசாகிப் போன பார்ட்டிங்க, நாளைக்கு நம்மளை சப்பையா பார்ப்பாங்க. தேவையா? சரி, மனோ, உன் பிரச்சனை என்னன்னு சொல்லு." "நான்தான் அந்த பொம்பளையை இட்டாந்தேன். ஒண்ணு அவ எனக்கு.... எனக்கு மட்டும் இருக்கணும். இல்லேன்னா இந்த இடத்தை விட்டே போயிடணும்." மதிவாணன் பல்ஸ் பக்கம் திரும்பினார். "அண்ணே. நான் அவளை கட்டிக்கறதா முடிவு செஞ்சுட்டேன்." பல்ஸ் ஆதரவு கோஷ்டி கைதட்டி ஆரவாரம் செய்ய எதிர் கோஷ்டி சூடானது. "நீ என்னமா சொல்லற" "ஐயா. இவரு ரொம்ப நல்லவருதாங்க. ஆனா அந்த ஆளு இருக்கிறவரைக்கும் நாங்க நிம்மதியா இருக்க முடியாது. இவரும் தொழில் செய்ய முடியாது. அதுனால நான் போயிடறேங்க." "சிட்டு நீ ஏன் போகணும். கண்ட சொறி நாயிக்கெல்லாம் பயந்துக்கிட்டு....." "டேய்! என்னியா சொறி நாயின்னே?" அதுவரை உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்த மனோ திடீரென பல்ஸ் மேல் பாய்ந்தான். முதல் கத்திக் குத்து பல்ஸின் விலாவில். அடுத்து அவன் கழுத்துப் பகுதியில். எவ்வளவோ பேர் அவனை விலக்க முயசித்தும், அவன் கை இயங்கிக் கொண்டே இருந்தது. முழுவதுமாக விலக்கி, பல்ஸை விலக்கிப் பார்த்த போது அவன் முழுவதுமாக பஞ்சர் ஆகியிருந்தான். "அண்ணே! உன்னை கொன்னுட்டானா அந்த நாயீ..." பல்ஸ் ஆதரவாளன் கதறிக் கொண்டே, தன் இடுப்பிலிருந்து ஒரு ரிவால்வரை எடுத்து கோட்டையை குறி வைத்தான். முதல் குண்டு அவன் கண்களை பதம் பார்த்தது. இரண்டாக மடங்கி விழுந்தவனின் முதுகில் மற்ற குண்டுகள் பொத்தல் போட்டன. அதன் பிறகு அந்த இடம் போர்க்களமானது. அது முக்கியமில்லை. இந்த தகராறில் இம்மியளவும் பாதிக்காது சிட்டு ஓட்டமெடுத்தாள். இரண்டு மூன்று பஸ்கள் மாறி, கோயம்பேட்டை அடைந்தாள். காலியாக இருந்த திருநெல்வேலி பஸ்ஸில் ஏறிக் கொண்டாள். உடம்பில் எங்கோ ஒளித்து வைத்திருந்த செல்லை எடுத்து இயக்கினாள். "ஐயா. நான் வடக்கன்குளம் போயிக்கிட்டு இருக்கேங்க. அங்க அல்லாரும் அடிச்சிக்கிட்டு சாவறானுவ. கோட்டை, பல்ஸு ரெண்டு பேருமே அவுட்டு." "சரி. சரி. நீ ஊருக்கு போய் நான் சொன்ன ஆள பாரு. சின்னதா பொட்டிக் கடை வைக்க உனக்கு உதவி செய்வாரு. உடம்ப விக்கற வேலைய விட்டுட்டு இனிமேலாவது கௌரவமா வாழப் பாரு." "சரிங்கய்யா." எதிர் முனையில் செல்லை ஆஃப் செய்த ஏ.சி. ரவி யாதவ், உடனடியாக தன் உயரதிகாரிக்கு தகவல் அனுப்பினார். "ஸார்! ஆப்பரேஷன் மோகினி சக்ஸஸ்" (தினமலர் - வாரமலர் - 07 மார்ச் 2010)     25. விடமாட்டேன்   கண்ணாடியில் தெரிந்த என் பிம்பத்தை பார்க்க பார்க்க எனக்கு வெறுப்பு தட்டியது. இயலாமை இறுக்கத்தை கூட்டியது. உள்ளுக்குள் அப்பியிருந்த சோகம், மெல்லிய வார்த்தைகளாய் கேவலுடன் வெளிப்பட்டது. "டேய்! என்னை ஏன்டா ஒருத்தி கூட லவ் பண்ண மாட்டேங்கிறா?" நான் சொன்னதை அவன் அப்படியே வழிமொழிந்தான். சத்தமில்லாமல் அழுதேன். அவனும் என்னுடன் சேர்ந்து அழுதான். 'நல்லா படிச்சும் பாட்டு பாடினால் மட்டும் போதாது, மாமு. லவ்வுக்கான மேட்டர் உங்கிட்டே எதுவும் இல்லையே, என்ன பண்ணறது?' மனசு சொன்னது. அது உண்மைதான். பட்டத்தின் குறுக்கு குச்சி மாதிரி வளைந்து, குறுகி, வலுவிழந்து தொங்கும் தோள்கள். முகம் முழுக்கவே வியாபித்திருக்கும் அகண்டு, விரிந்த போண்டா மூக்கு. அப்பா எனக்கு கொடுத்தது. தேங்காய் உறுமட்டை மாதிரி படிய வாரிய தலை மயிர். கருப்பிலும் சிவப்பிலும் சேர்க்கமுடியாத ஒரு நிறம். போனசாக ஒரு கண்ணாடி வேறு. சரி, உயரமாவது உண்டா என்றால் அதுவும் இல்லை. சராசரிக்கும் குறைவாக ஐந்தடி இரண்டு அங்குலம். கண்ணாடியை ஓங்கி ஒரு உதை விட்டேன். "சேகர் கண்ணா! உள்ள என்னடா சத்தம்" பாசமுள்ள டிபிகல் அம்மா. கட்டை, குட்டை, அம்மா. எங்கே வெளியே கிளம்பினாலும் என் விருப்பத்தை துளி கூட கண்டு கொள்ளாமல் நெற்றியில் வீபூதியை கோணலாக இட்டுவிடும் மண்டு அம்மா. "சேகரு, உன்னோட ரூட்டு எங்கயோ போறாப்பல கேள்விப்பட்டேன். என்ன உண்மையா?" கார்த்திக் அப்படித்தான் அன்று கண் சிமிட்டி ஆரம்பித்தான். கார்த்திக் முரடன். அவனை ஒண்ணும் சொல்ல முடியாது. "ஆமாம் கார்த்திக். நான் ஸ்வேதாவை லவ் பண்றேன். நீங்கெல்லாம்..." "மாம்ஸ். என்ன கொடுமைடா? நம்ம ஸ்வேதா, சேகர் ஆளான்டா. ஏன்டா டேய்! உனக்கே அடுக்குமாடா. அவ என்னா கலரு!" கார்த்திக் கொடுத்த தைரியத்தில் என் மீது கிண்டலை தொடர்ந்த ஒல்லிப்பிச்சான் ஸ்ரீநிவாஸ் அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. அடுத்து வந்தவைதான் என்னை உசுப்பி விட்டது. "சப்பை சேகரு, நீ பேசாம அந்த பக் டீத் ஈஸ்வரியையே லவ்விக்கடா. நீயும் மழைல நனைஞ்ச காக்கா மாதிரிதான் இருக்கே. ஒர்க்கவுட் ஆகும்னுதான் நெனைக்கிறேன்." சோடா புட்டியை திறந்த மாதிரி ஸ்ரீநிவாஸ் கெக்கலித்தான். மற்றவர்களும் சேர்ந்து கொண்டார்கள். மாறி மாறி கலாய்த்தார்கள். என் பொறுமை எல்லை மீறியது. அது வரை என்னுள் சுருண்டு படுத்திருந்த கருநாகம் சீறியெழுந்தது. ஆத்திரம் முழுவதையும் வலது கை நுனிக்கு கொண்டுவந்து, ஸ்ரீநிவாஸ் மூக்கில் ஓங்கி ஒரு குத்து விட்டேன். யாரும் எதிர்பார்க்கவில்லை. சில்லி மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. பதிலுக்கு அவன் என் தொடையில் ஷூ காலால் உதைக்க நான் நிலை குலைந்து விழுந்ததில் முன் மண்டையில் கல் குத்தி ரத்தம் வந்தது. கட்டிப் புரண்டு சண்டை போட்டோம். கஷ்டப்பட்டு பிரித்துவிட்டார்கள். அப்போதே எனக்குள் ஒரு வன்மம் குடி கொண்டது. 'பாருங்கடா. இன்னும் ஆறே மாசத்துல இந்த ஸ்வேதா என்னை லவ் பண்ணல, நான் சேகர் இல்லைடா'. முன் பின் யோசிக்காமல் தன்நிலையறியாமல் உணர்ச்சி பூர்வமாக எடுத்த முடிவு அது என்று இப்போது புரிகிறது. செமஸ்டர், கம்ப்யூட்டர் கிளாஸ் எல்லாவற்றையும் ஏறகட்டினேன். ஸ்வேதாவை இம்ப்ரஸ் செய்ய நாயாய் பேயாய் சுற்றினேன். ஒரு மாசத்தில் இலேசாக பிடி கிடைத்தது. ஸ்வேதா சென்னை வருவதற்கு முன்பு புது டில்லியில் இருந்திருக்கிறாள். அதனால் அவளுக்கு ஹிந்தி பாடல்கள் அதிகம் பிடிக்கும், அதுவும் குலாம் அலியின் கஜல் என்றால் அவளுக்கு உயிர் என்ற தகவல் கிடைத்தது. மிக ரகசியமாக வைத்திருந்து, எங்கள் காலேஜ் இன்ஃவெஸ்ட்டில் 'சுப்கே சுப்கே ராத் தின்' என்ற குலாம் அலியின் பழைய கஜலை திடீரென பாடினேன். பாடுவதற்கு முன்னால் அந்த கஜல் வரிகளை தமிழ் கவிதையாக படித்தேன். 'செம பிளேடு மச்சி. ஃபாஸ்ட் பீட்ல ஒண்ணை எடுத்து விடாம இப்படி கவுத்திட்டியே. ஆனா ஒண்ணு நீ ஸ்வேதாவுக்கு ப்ராக்கெட் போடறதுக்காக பாடினது மாதிரி இருந்துச்சி." என்றான் கார்த்திக். எதிர்பார்த்த மாதிரியே நடந்தது. அறுபது நாட்களின் அயறாத உழைப்புக்கு அன்று கை மேல் பலன். ஸ்வேதா என்னிடம் கை குலுக்கியதோடு மட்டுமில்லாமல் என் முன்னால் ஒளிர்ந்ததை கண் கொள்ளாமல் ரசித்தேன். அங்கேயே, புபேந்தரின் ஒரு கஜலின் தமிழாக்க கவிதையை சொல்லி என் அதிமேதாவித்தனத்தை காட்டிக் கொண்டேன். பிறகு நிறைய பேசினோம். முகமது ரஃபியின் ஒரே ஒரு பாடலுக்காக ம்யூசிக் வேர்ல்டு, ரிச்சி ஸ்ட்ரீட் என்று அலையாய் அலைந்தேன். ஏதோ பேச்சு வாக்கில் 'ஷோபா முட்கல்' என்று அவள் ஒரு முறை சொல்லி வைக்க, அந்த பாடகியை பற்றி தகவல்களை விரல் நுனிக்கு கொண்டு வந்தேன். அவளுக்கு எந்தெந்த பாடங்களில் சந்தேகம் வந்ததோ அதை மட்டும் படித்தேன். "சேகர், நீ க்வாண்டம் தியரிக்கு கொடுத்த எக்ஸ்ப்ளனேஷன் மாதிரி நம்ம ப்ரொஃபஸர் கூட கொடுக்கலை தெரியுமா? ஸ்கூல்ல கூட ஏனோதானோன்னு க்யூ தியரியை படிச்சிருக்கேன். எப்படி சேகர் இவ்வளவு டெப்தோட படிச்சு வைச்சிருக்கே? எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு. யு ஆர் கிரேட்" என்றாள். இந்த மாதிரி நிறைய சொல்லியிருக்கிறாள். இதையெல்லாம் வைத்து அவள் என்னை காதலிப்பாள் என்று நினைத்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்! வேகமாக ஒரு இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் போது மூஞ்சியிலடித்து தள்ளிவிட்ட மாதிரி எங்களிடையே ஒரு புயல் மாதிரி ஸ்வேதாவை கொத்திக் கொண்டு போனான் பிரபாகர் என்னும் ஒரு அயோக்கியன். அவனும் எங்க காலேஜ்தான். எங்களைவிட இரண்டு வருடம் சீனியர். இந்த வருடம் கேம்பஸ் இண்டர்வியூவில் அவனுக்கு விப்ரோவில் வேலை கிடைத்திருக்கிறது. என்னிடம் எதெல்லாம் மைனஸ்ஸோ அதெல்லாம் அவனிடம் ப்ள்ஸ்ஸோ ப்ளஸ். படிப்பாவது? பாட்டாவது? நான் மிக எளிதாக தோற்றுப்போனேன். அதன்பின் எல்லாமே என் விருப்பத்துக்கு நேர் மாறாக நடந்தது. பிரபாகருக்கு தமிழே வராது. இந்த அழகில் அவனுக்கு கவிதை எழுத வேண்டுமாம். என்னிடமே வந்து கேட்டான். நெஞ்செல்லாம் எரிந்தது. அவனை அந்த நொடியிலெயே குத்தி கொன்றுவிடலாமா என்ற எண்ணம், என் இயலாமையில் புதைந்து போயிற்று. 'பத்து வரி கவிதைக்கு ஐநூறு ரூபா! ஓகேயா?' என்றேன். எனக்கும் சில பணத்தேவைகள் இருந்தன. சரியென்றான். நிறைய சம்பாதித்து அதில் திருப்திபட்டுக் கொண்டேன். 'நீ காதலிக்கும் ஆளில்லை, ஆனால் காதல் வியாபாரி' என்று மனசு சொன்னது. எனக்கே எனது நடவடிக்கைகள் விசித்திரமாக பட்டது. ஒரு முறை ஸ்வேதாவும் கண்ணீர் மல்க தன் காதல் கதையைச் சொன்னாள். மறுபடியும் நெஞ்சுக்குள் நெருப்பு. உள்ளுக்குள்ளே வெந்து போனேன். ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அப்படியே அவளை கீழே தள்ளி.... வேண்டாம். உடலுக்குள் சரசரவென ஊர்ந்த கருநாகம் மீண்டும் சுருண்டு கொண்டது. போலியான ஒரு புன்னகையுடன் அவளுக்கும் சில ஐடியாக்கள் சொன்னேன், பீஸ் வாங்காமல். நேற்று ரெண்டு பேரும் சேர்ந்து வந்து ஒரு குண்டை தூக்கி போட்டார்கள். இருவரும் கல்யாணம் செய்து கொள்ள தீர்மானித்து விட்டார்களாம். ஸ்வேதா என் கையை பிடித்து கெஞ்சி என்னிடம் உதவி கேட்டாள். "நீங்க ரெண்டு பேரும் மேஜர்தானே? மொதல்ல ஒரு கோயில்ல கல்யாணம் செஞ்சுக்குங்க. அப்பறம் கல்யாணத்தை ரிஜிஸ்டர் செஞ்சுக்குங்க." "அதில்லை சேகர். எங்க அப்பாவ நெனைச்சாதான் பயமாயிருக்கு. அவரை எதிர்த்துகிட்டா சல்லி காசு இல்லாம நடு ரோட்டுல நிக்க வேண்டி வரும். எனக்கு வேலை கிடைச்சு கைல காசு பார்க்கறதுக்கு குறைஞ்சது ஆறு மாசமாவது ஆகும். ஸ்வேதாவோ இப்பவே கல்யாணம்கிறா." "சரியான பயந்தாங்கொள்ளிடா நீ. உனக்கெல்லாம் எதுக்குடா லவ்வு? ஸ்வேதா பார்த்தியா உன் லைஃப் பார்ட்னரை?" எனக்குள் உற்சாகம் பொங்கியது. "டேய். டேய். என்னடா நம்மளேயே போட்டுக் கொடுக்கற....ஐடியா சொல்லுடான்னா? "அப்ப ஒண்ணு செய்யுங்க. கல்யாணம் பண்ணிக்கிட்டு ரிஜிஸ்ட்ரேஷனும் செஞ்சுடுங்க. அலைபாயுதே சினிமா ஸ்டைல்ல வீட்டுல சொல்லாதீங்க. வேலை கெடைச்சி செட்டில் ஆனதும், வீட்டில சொல்லுங்க. சம்மதம் கிடைச்சதும், ரெண்டாவது தடவையா கல்யாணம் செஞ்சுக்குங்களேன்." "இதுக்குதான்... இதுக்குதான் சேகர் கிட்டே ஐடியா கேக்கணும்கிறது." இரண்டு பேரும் என்னை பல்லாண்டு பல்லாண்டு வாழ்த்தி கை குலுக்கி மகிழ்ந்தார்கள். இன்னும் இரண்டு மணி நேரத்தில் இருவருக்கும் திருமணம். சட்டை, பேண்ட் போட்டுக் கொண்டு ரூமை விட்டு வெளியே வந்தேன். ஷூ லேஸை கட்டிக் கொண்டிருக்கும் போது அம்மா வழக்கம் போல வீபூதி பூசி விட்டாள்.       வெளியே வந்து பஸ் பிடித்து கோடம்பாக்கத்தில் இறங்கிக் கொண்டேன். பஸ் ஸ்டாப்புக்கு பக்கத்திலேயே ஒரு டெலிபோன் பூத். முதலில் ஸ்வேதா அப்பாவுக்கு ஒரு போன். "ஸார். உங்க பொண்ணுக்கு வட பழனி கோயில்ல இன்னும் கொஞ்ச நேரத்துல திருட்டு கல்யாணமாமே. தெரியாதா?". கட். அடுத்த போன் பிரபாகர் வீட்டுக்கு. "ஸார். உடனே கார் எடுத்துக்கிட்டு வடபழனிக்கு வெரசா போனா உங்க மகன் கல்யாணத்தை கண் குளிர பார்க்கலாம். சௌகர்யப்படுமா?". என்னை காயப்படுத்தியவர்களை என்றுமே நான் மன்னித்ததில்லை. அதுவரை என் மனசுப் பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருந்த கருநாகம் சிலிர்த்தெழுந்து படமெடுத்து ஆடத் துவங்கியது. விடமாட்டேன்! (தினமலர் - வாரமலர் - 30 மே 2010)       26. பொதுக்கூட்டம்   காளி என்னை சரியாக காலை ஆறு மணிக்கு வட்டச் செயலாளர் வெற்றிச் செல்வன் (ஒரிஜினல் பெயர் இசக்கி முத்து!!!) வீட்டுக்கு அருகில் நிற்கச் சொன்னான். அங்கிருந்து சொகுசு பேருந்து ஒன்றில் நாலு மணி நேர ஓசி பிரயாணம். சென்னை வந்ததும், எங்கே வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளலாம். ஆனால் மாலை ஐந்து மணிக்கு மயிலாப்பூர் மாங்கொல்லைக்கு வந்து விட வேண்டும். அங்கே ஆறு மணிக்கு மீட்டிங் ஆரம்பித்தால், தலைவர் பேச்சு முடிவதற்கு பதினோரு மணி ஆகிவிடும். கூட்டத்தில் அவ்வப்போது கைதட்டி, விசில் அடிக்க வேண்டும். மிக்சர் பொட்டலுமும், தண்ணீர் பாக்கெட்டும் தருவார்கள். மீட்டிங் முடிந்ததும் நூறு ரூபாய் பணமும், பிரியாணி பொட்டலமும் உண்டாம். எனக்கு குவாட்டர் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அதற்கு பதிலாக ஐம்பது ரூபாய் எக்ஸ்ட்ரா. மறுநாள் மதியம் ஊர் திரும்பி விடலாம். எல்லாமே ப்ரீ! ஆனால் எந்த ஒரு இலவசத்திற்கும் ஒரு விலை இருக்கிறது என்பது பயணம் தொடங்கியதிலிருந்துதான் தெரிந்தது. ஆறு மணிக்கு பஸ் இருக்குமிடத்திற்கு போனதில் யாருமே இல்லை. எட்டு மணிக்குதான் ஒவ்வொருத்தராக வந்தார்கள். வரும்போதே தகராறு செய்ய வேண்டும் ஒரு முடிவோடுதான் வந்திருப்பதாகத்தான் எனக்குப் பட்டது. ஆரம்பமே வாய் கூசும் கெட்ட வார்த்தைகள். ஒரே கூச்சல், குழப்பம். மகளிர் அணியினரில் கூட ஒரு சிலர் நல்ல மப்பில் இருந்தார்கள். மெதுவாக ஆரம்பித்த வாய் சண்டை, அடிதடிக்கு போனது. குடிசைகள் அடுத்தடுத்து தீ பிடித்து கொள்வது மாதிரி அடித்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருந்தது. ஒருத்தரின் மண்டை உடைந்தும், தன் முண்டாசை அவிழ்காமல் அங்கும் இங்கும் ரத்த களறியாக ஓடிக் கொண்டிருந்தார். அவர் பேசிய பேச்சுக்களும், கை அசைவுகளும் மிக அசிங்கமாக இருந்தன. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கொஞ்சம் விலகி வேடிக்கை பார்க்கும் கூட்டத்தோடு நின்று கொண்டேன். பேசாமல் திரும்பி போய்விடலாமா என்று கூட யோசித்தேன். காளியின் வரவுக்காக காத்திருந்தேன். எனக்கும் அரசியலுக்கும் துளி கூட சம்பந்தம் கிடையாது. காளிதான் அந்த கட்சியில் ஏதோ ஒரு பொறுப்பில் இருக்கிறான். ஒரு பேச்சுத் துணைக்காக கூப்பிட்டான். எனக்கும் சென்னைக்கு போய் பல வருடங்கள் ஆகிவிட்டது. சரி, ஓசி பஸ் பயணத்தோடு, கைச்செலவுக்கும் பணம் கிடைக்குமே என்ற ஆசையில் கிளம்பிவிட்டேன். அது தப்போ என்று இப்போது தோன்றியது. முதுகின் மீது ஒரு கை விழ, திரும்பிப் பார்த்தேன். காளி.! "காளி! என்னடா இது? எப்ப அறிவாள் வெட்டு விழும்னு ஒரே கல்வரமா இருக்குடா. நான் வர்லே. நீ போய்கோ. சொந்த காசு போட்டு நான் அப்பறம் சென்னைக்கு போயிக்கறேன்" "என்னடா. இந்த ஜுஜுபிக்கெல்லாம் பயந்தா எப்படி? தகராறு இல்லாத அரசியல் கட்சி ஏதாவது இருக்கா சொல்லு. பைட் சீனோட ஆரம்பிச்ச சினிமா மாதிரி இருக்குல்ல. எல்லாம் போகப் போக பழகிடும். நீ கண்டுகாத வா. இது லோக்கல் கட்சி தேர்தல் தகறாரு. வ.செ. வந்ததும் சுத்தமா அடங்கிடும். சும்மா. பேசாம வேடிக்கை பாரு." சொன்ன மாதிரியே வட்டச் செயலாளர் வெற்றிச் செல்வன் வந்ததும் ஒரு கோஷ்டி உரக்க கூச்சலிட, ரத்தம் சிந்திய ஒரு சில கட்சி கண்மனிகள் குறுகிய சந்துகளில் பம்மினார்கள். எந்த முன்னறிவிப்புமின்றி திடீரென பஸ் கிளம்பியது. காளியும் நானும் கடைசி நிமிடத்தில் தொற்றிக் கொண்டோம். பஸ்ஸில் கட்சிக் காரர்கள் பத்து  பேருக்கு மேல் இல்லை. மற்றவர் யாவரும் என்னை மாதிரி கூலிக்கு வந்தவர்களாகவே இருந்தார்கள். எந்த கட்சி கூட்டதிற்கும் இவர்கள் வருவார்கள், இந்தத் தொழிலில் நல்ல முன் அனுபவம் உள்ளவர்கள் என்று காளி சொல்ல எனக்கு சிரிப்புதான் வந்தது. எனக்கு பக்கத்தில் இருந்தவன் எந்த நிமிடமும் வாந்தி எடுத்து விடுவான் போலிருந்தது. அடிக்கடி தன் தலைவனை புகழ்ந்தும், எதிரிகளை மிக கேவலமாக இகழ்ந்தும் அவன் கூப்பாடு போட்டதில் நாற்றம் குடலை பிடுங்கியது. அடிக்கடி 'என்னா நான் சொல்லறது?' என்று கேட்டுக் கொண்டிருந்தான். பயத்துடன் மென்று முழுங்கி மாரியம்மன் கோயில் பலியாடு மாதிரி எதுவும் சொல்லாமல் நான் தலையாட்டிக் கொண்டிருந்தேன். காளி அடிக்கடி சைகையில் பொறுமை காக்கச் சொன்னான். எப்படா சென்னை வரும் என்று இருந்தது. நான் நந்தனத்தில் இறங்கிக் கொண்டேன். தி.நகரில் என் நண்பர்கள் ஒரு சிலரை பார்த்து பேசிவிட்டு, மெரீனா பீச்சில் கொஞ்ச நேரம், மதிய வெயிலில்(!) அலைந்து திரிந்துவிட்டு, மைலாபூர் மாங்கொல்லையை விசாரித்துக் கொண்டு ஐந்து மணிக்கெல்லாம் வந்து விட்டேன் பெயர்தான் மாங்கொல்லை. மருந்துக்குக் கூட ஒரு செடியைக் கூட பார்க்க முடிவில்லை. மக்கள் எக்கசக்கமாக புழங்கும் அந்த இடத்தில் போலீஸ் கெடுபிடியுடன் நீண்ட வெற்றிடத்தை உண்டாக்கியிருந்தார்கள். கலர் கலராக பிளாஸ்டிக் சேர்கள் நிறைய போடப்பட்டிருந்தன. மூலைக்கு மூலை ட்யூப் லைட்டுகள். சீரியல் செட்டுகள். மேடைக்கு அருகில் பெட்டி பெட்டியாக ஸ்பீக்கர்கள். எல்லா பக்கங்களிலும் தலைவர், நின்ற மாதிரி, நடந்த மாதிரி, செல் போனில் பேசுவது மாதிரி என்று பல போஸ்களில் ப்ளெக்ஸ் பேனர்கள். அதன் கீழ் பாஸ்போர்ட் சைசில் வட்டார தலைகளின் எக்கச்சக்கமாக புகைப்படங்கள் கரப்பான் பூச்சிகளாக ஊர்ந்து கொண்டிருந்தன.   கலவரத்தை அடக்க உதவும் சிறப்பு வாகனம் ஒரு மூலையில் நிறுத்தப்பட்டிருந்ததை பார்த்ததும் என் நெஞ்சுக்குள் திகில் சிகரெட் புகை மாதிரி பரவியது. டிராபிக் போலீஸ்காரர்கள் ரொம்பவும் சிரமப்பட்டார்கள். சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் இரைச்சலுடன் மெதுவாக நெளிந்து கொண்டிருந்தது. மக்கள் மிகவும் எரிச்சலடைந்தனர். "இவாள பொதுகூட்டம் போடணும்னு யாரு அழுதா? ரெண்டு பக்கமும் அனுமார் வால் மாதிரி டிராஃபிக் நிக்கறது. ஜனங்க நடக்கமுடியாம தவிக்கிறது. மக்களோட கஷ்ட நஷ்டத்தப்பத்தி இவாளுக்கு கவலையில்லே. சட்டசபையிலே அடிச்சிண்டது பத்தாதுன்னு, இப்ப நடுவீதீலே அடிச்சுக்கணுமாக்கும். இவாள யாரு கேழ்கறது?" "யோவ் பெரிசு. இன்னிக்கு சிங்கிள் பீஸா வீட்டுக்கு போகணும்னு எண்ணம் இல்லையா?" "உங்களுக்கு ஏண்ணா அரசியல்? நீங்க பேசாம வாங்கோ. அவா என்னவோ பண்ணிட்டு போகட்டும். அவாள்ளாம் துஷ்டா. நாமதான் தூர வெலகி போகணும்." "மாமி. மாமாவோட வாயை பொத்திண்டு போகச் சொல்றேளா? அடிச்சா இங்கேயே அப்பீட்டாகுற ஆளுக்கு என்னா பேச்சு? ........... எலேய் போடான்னா...." கருனை கிழங்குக்கு கைகால் முளைத்தது மாதிரி இருந்த அந்த கட்சிகாரனின் செய்கையை பார்த்து ஒரு சிலர் சிரித்தார்கள். ஒரு சிலர் மிரண்டார்கள். என்னால் அதற்கு மேல் வேடிக்கை பார்க்க பிடிக்கவில்லை. அதிக சத்தமில்லாத ஒரு இடம் பார்த்து உட்கார்ந்து கொண்டேன். அப்போதுதான் கலை நிகழ்ச்சி ஆரம்பித்திருந்தது. பிரபல சினிமா பாடல்களின் மெட்டுகளில், கட்சியையும் அதன் தலைவரையும் வாழ்த்தி பாடல் பாடினார்கள். இடை இடையே நகைச்சுவை என்ற பெயரில், எதிர்கட்சியினரை மிகவும் தரம் தாழ்ந்த வகையில் வெட்கப்படாமல் விமர்சித்தார்கள். அதற்குதான் அங்கே இருந்த மக்களிடையே மிகுந்த வரவேற்ப்பு இருந்தது. விசில் அடித்தார்கள். பொது இடம் என்பதை மறந்து ஆபாச நடனடங்கள் ஆடினார்கள். மற்றவர்கள் ரசித்து மகிழ்ந்தார்கள். எட்டு மணிக்குதான் காளி வந்தான். அவன் அடியோடு மாறிப்போயிருந்தான். கட்சி கறை வேட்டி. வெள்ளை சட்டை. இடது மார்ப்பு முழுவதும் மறைக்கும் அளவு ஒரு பேட்ச் குத்தியிருந்தான். ஒரு மிடுக்குடன், குட்டித் தலைவர்களுடன்  காதருகில் அடிக்கடி பேசினான். மணி எட்டரை ஆனதும், கலை நிகழ்ச்சிகள் ஓரம் கட்டப்பட்டு, மீட்டிங் தொடங்கியது. மேடை முழுவதும் முப்பது நாற்காலிகளுக்கு குறையாமல் போடப்பட்டிருந்தன. நடுநாயகமாக ஒரு சிம்மாசனம் மாதிரியான சேர் ஒன்று தலைவருக்காக போடப்பட்டிருந்தது. அதன் நேர் பின்னால் ஒரு தற்காலிக ஏ.சி. பொருத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு பேச்சாளருக்கும் தலா பத்து நிமிடம் வழங்கப்பட்டது. அதில் கிட்டதட்ட ஐந்து நிமிடம் ......அவர்களே ...... அவர்களே என்று ஒவ்வொருவரும் கையில் ஒரு பட்டியல் வைத்துக் கொண்டு எல்லார் பெயர்களையும் மூச்சுவிடாமல் சொல்லி போரடித்தார்கள். தரம் தாழ்ந்து பேசும் போதுதான் அதிக கைத்தட்டல்களும், கூக்குரல்களும் வந்தன. நான் வெறுத்துப் போனேன். தலைவர் என்று சொல்லப்பட்டவர் கூட அந்த சாக்கடை பேச்சுக்களை ரசிக்க, மேடையே கூவமாக மணத்தது. பொதுக் கூட்டம் என்று பெயரே தவிர, பொதுமக்கள் யாரும் இருப்பதாக தெரியவில்லை. கட்சிக்காரர்களும் கூலிக்கு அழைத்து வந்தவர்களும் போலீசுமே அதிகம் தென்பட்டார்கள். ஒரு குட்டித்தலைவர், "இங்கே மக்களின் எழுச்சியை பார்க்கிறேன். நீங்கள் செய்தது மாதிரி காசு கொடுத்து கூட்டி வந்த கூட்டமல்ல. உங்களுக்கு சாவு மணி அடிக்க வந்த கூட்டம்" என்றார். எனக்கு தூக்கிவாரி போட்டது. பக்கத்திலிருந்த என் ஊர்க்காரரை மெல்லிய குரலில் விசாரித்தேன். "என்ணண்ணே! இவரு இப்படிச் சொல்லறாரு. காசு கொடுக்காம விட்டுடுவாங்களா?" "அடச் சும்மா இரு தம்பி. தலீவருக்கு இன்னா தெரியும்? அவங்க பாலிடிக்ஸ்சுக்கு ஏதோ சொல்லுவாங்க. நீ கண்டுகாத. காசு கொடுக்காட்டி கட்சிக்காரனே அடுத்த மீட்டிங்குக்கு வரமாட்டான். நீ என்ன புதுசா?" அந்த பேச்சாளர் திடீரேன ஒரு வரம்பு மீறி எதிர்கட்சித் தலைவரை ஏளனம் செய்துவிட, எங்கிருந்தோ ஒரு கல் மேடையின் மீது விழுந்தது. இரண்டு மூன்று ட்யூப் லைட்டுகள் உடைந்தன. மேடையின் இடது பக்க மூலையில் அடிதடிகள் தொடங்கின. அதையடுத்து கூச்சல் குழப்பங்களும், கல்லெறிகளும் தொடர்ந்தன. வன்முறை கட்டவிழ்த்துவிட, போலீஸ் உள்ளே புகுந்தது. நல்ல வேளையாக காளி என் கண்களில் உடனே தென்பட்டான். "சேகர்! இங்க நிக்காதே! ஓடிடு. போலீஸ் நமக்கு சப்போர்ட்டு பண்ணாது. ஓடு" அடுத்த ஒரு மணி நேரம் என் வாழ்க்கையில் மிக துயரமான காலம். பையில் பத்து ரூபாய்க்கும் குறைவாகவே இருந்தது. வயிறோ பசித்தது. கால்கள் சிக்கிக் கொண்டன. திசை தெரியாது அங்கும் இங்கும் ஓடினேன். ஒரு திருப்பத்தில் என்னை போலீஸ் எதிர் கொண்டது. அவர்களின் லத்தி என் கால்களில் இறங்கியதில் நெருப்பாய் சுட்டது. ரோட்டோர கல், மண் குவியலில் கால் தடுக்கி, தலை குப்புற விழுந்தேன். எழுந்த என்னை ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் கா¨ரை பிடித்து தூக்கி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். மண்டைக்குள் தீப்பொறிகள் பறந்தன. வாய்க்குள் உப்பு கரித்தது. அடுத்த அடிக்கு பயந்து குனிந்தேன். நடு முதுகு தண்டில் கான்ஸ்டபிளின் முழு பலமும் இறக்கியது. அவ்வளவுதான் 'செத்தோம்' என்று ஒரு பக்கமாக சரிந்த எனக்கு, எங்கிருந்து தைரியம் வந்ததோ தெரியவில்லை. ஒரு திமிரு திமிரியதில் சட்டையின் ஒரு பகுதி கிழிந்தது. கிடைத்த அந்த சில நொடிகளில், எடுத்தேன் ஓட்டம். நெஞ்செல்லாம் வறண்டு, காது மடல்கள் சூடாக அரை மணிக்கு குறையாமல் சந்து சந்தாக ஓடினேன். மிகுந்த அலைச்சலுக்கு பிறகு நள்ளிரவில்தான் காளியை சந்திக்கமுடிந்தது. காலையில் பஸ்ஸில் பார்த்த ஒரு சிலரை அங்கும் இங்குமாக பார்க்க முடிந்தது. அவர்கள் தங்களின் வீர தீர செயல்களை பெருமையுடன் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் போலீஸின் கைப்பிடியில் இருப்பதாக சொன்னார்கள். இனிமேலும் சென்னையில் இருப்பது நல்லதல்ல என்று காளி சொன்னான். ஊருக்குப் போய், அன்றே கடையடைப்பும் மறியலும் செய்ய வேண்டுமாம். நீண்ட கூச்சல் குழப்பங்களுக்கு பிறகு அனைவரையும் பஸ்ஸில் ஏறச் சொன்னார்கள். வெறுப்புடன் பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன். பாதிக்கும் குறைவாகவே மக்கள் இருந்தார்கள். தாம்பரம் தாண்டியதும், என் கையில் ஒரு பிரியாணி பொட்டலுமும், ரூபாய் நோட்டுகளும் திணிக்கப்பட்டன. திரும்பி பார்த்ததில் அனைவரும் 'டாஸ்மாக்' சரக்கில் சங்கமித்திருந்தார்கள். நான் வெறுப்போடு அந்த ரூபாய் நோட்டுகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். வீங்கிய கால் மணிக்கட்டிலிருந்து ஸ்பார்க் லைட் மாதிரி வலி தெறித்துக் கொண்டிருந்தது. பின் பக்கம் கிழிந்த சட்டையோடும், செருப்பிலா கால்களுமாக பயணிக்க மிக கேவலமாக இருந்தது. முகத்தின் இடது பகுதியில் எங்கு தொட்டாலும் வலித்தது. உள்ளுக்குள் கோபம் அடுக்கு அடுக்குகளாய் பொங்கிக் கொண்டு வந்தது. தண்ணீர் பாக்கெட்டை குரோத்தத்துடன் பல்லால் கடித்து முகம் கழுவிக் கொண்டேன். யாரும் பார்க்காத சமயத்தில் பிரியாணி பொட்டலத்தையும் ரூபாய் நோட்டுகளையும் ஜன்னல் வழியாக வீசியெறிந்தேன். என்னால் அவ்வளவுதான் செய்ய முடிந்தது. ஆனாலும், அதில் ஒரு வித திருப்தி எனக்குள் ஏற்ப்பட்டது. (தினமணி கதிர் - 06 ஜூன் 2010)     27. ரசிகன்   ஆட்டோவை தள்ளிக் கொண்டு என் முன்னால் வந்த குழந்தை ஏசு என் பார்வையை தவிர்க்க பக்கவாட்டில் திரும்பி நின்றிருந்தான். "என்னப்பா? நேத்து ஏன் நடைக்கு வரலை?" அவனிடமிருந்து பதில் வராது என்று எனக்கு தெரியும். அவன் ஆதர்ச ஹீரோ ஆதித்யாவின் படம் நேற்று ரிலீஸ்! எப்படி ஆட்டோ ஓடும்? ஆட்டோ ஸ்டாண்டை ஒட்டிய காம்பவுண்ட் சுவரில் எட்டு கால போஸ்டரில் ஆதித்யா ரத்தம் தோய்ந்த அறிவாளை குரோதத்துடன் ஓங்கியிருந்தான். பக்கத்தில் தொப்புள் தெரிய ஒரு கேரளத்து பைங்கிளி, 'இன்னும் எதை கழற்றி எறியட்டும்' என்பது மாதிரி இருந்தாள். கீழே பாஸ்போர்ட் சைசில் ஏகமாய் மனிதத் தலைகள். "சார் நேத்து ரொம்ப பிசின்னு கேள்விப்பட்டேன். கட்டவுட்டுக்கு பால் ஊத்தி அபிஷேகம் செஞ்சீயளோ? தீபாராதனை, சுண்டலெல்லாம் கொடுத்தீகளோ? அப்படியே ஒரு கோயிலையும் கட்டி, கும்பாபிஷேகம் செஞ்சிட்டு அங்கனயே பூசாரியா உட்கார்ந்திடறது." "சார் கிண்டல் பண்ணாதீங்க. வாங்க. உட்காருங்க. போகலாம்." ஏசு விருட்டென ஆட்டோவை கிளப்பினான். நான் தினமும் என் அலுவலகத்துக்கு ஆட்டோவில், அதுவும் என் தெரு முனை ஆட்டோ ஸ்டாண்டிலிருந்து, குழந்தை ஏசுவின் ஆட்டோவில்தான் போவேன். கிட்டத்தட்ட இரண்டு வருஷ பழக்கம்.  குழந்தை ஏசு தீவிர சினிமா ரசிகன் என்று சொல்லுவதை விட இன்றைய முன்னனி ஹீரோ ஆதித்தியா மீது பக்தி வெறி பிடித்து அலைபவன் என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும். அவன் ஆட்டோவின் முன்னும், பின்னும், பக்கவாட்டிலும் ஆதித்யாவின் விதவிதமான வண்ணப்படங்கள் எப்போதும் இருக்கும். புது படங்கள் வர வர, ஸ்டிக்கர்கள் மாறுமே தவிர அதில் எப்போதும் ஆத்தியாதான். ஒரு முறை, "எங்கள் பகுதியின் ஆதித்யா நற்பணி மன்றத்தின் செயலாளர் ஆயிட்டேன்" என்று அவன் பெருமை பொங்கச் சொல்ல, அதற்கு நக்கலாக புன்னகைத்துவிட, என்னிடம் இரண்டு நாள் அவன் பேசவில்லை. ஏசுவோடு எனக்கு ஏற்பட்ட பழக்கமே வித்தியாசமானது. அந்தப் பகுதிக்கு குடி வந்த புதுசில் அவன் ஆட்டோவில்தான் பிரயாணித்தேன். அவன் பெயரே வித்தியாசமாக இருந்தது. "ஏம்பா! உனக்கு எந்த ஊரு?" "நாசரேத், தூத்துக்குடி மாவட்டம்" "நாசரேத்தா? நல்லது. உங்க ஊரோட முக்கியத்துவம் தெரியுமோ? "தெரியாதுங்களே." "என்னப்பா, ஆதித்யாவை பத்தி முழு பயோடேட்டா வைச்சுருக்கே. ஒரு கிருஸ்துவனா இருந்துக்கிட்டு நாசரேத் பத்தி தெரியாம இருக்கேயே. ஏசு பெத்தலஹேமில் பிறந்தாலும், நாசரேத்தில்தான் வாழ்ந்தாரு. அந்த ஞாபகமாத்தான் உங்க ஊருக்கு அந்த பேர் வந்திச்சு." "அப்டீங்களா?", என்னை திரும்பிப் பார்த்து சிரித்தான். "எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சிருக்காது இல்லீங்களா? அது சரி, தூத்துக்குடிக்கு ஏன் அப்படி ஒரு பேரு வந்திச்சுன்னு உங்களுக்கு தெரியுமுங்களா?" நான் அவன் ஹீரோவை சம்பந்தப்படுத்தி காயப்படுத்திவிடேன் என்ற அர்த்தத்தில் எதிர் கேள்வி போட்டு என்னை மடக்கப் பார்த்தான். "தெரியுமே? துவர்ப்புக் குடி என்பது மறுகி தூத்துக்குடியாயிடுச்சுன்னு எங்கோ படிச்சிருக்கிறேன். உப்பு காய்ச்சற மக்கள் இருப்பதால அந்த பேரு வந்ததா சொல்றாங்க" "அது மட்டும் இல்லீங்க. இன்னொரு வழக்கும் இருக்குது. ராமாயண காலத்துல இலங்கைக்கு தூதுவனாப் போன அனுமன் அங்க வந்து தங்கிப் போனதால தூதுவன் குடின்னு பேரு வந்திச்சாம். அதுதான் மறுகி தூத்துக்குடியாயிடுச்சு" இந்துவாக இருந்துக்கிட்டு இது கூட உங்களுக்கு தெரியலியே என்று சொல்லாமல் சொன்ன மாதிரிப் பட்டது. என் சிறுபிள்ளைதனத்துக்கு சரியான பதிலடியாக இருந்தது. ஆட்டோ ஒட்டுனர்களில் இவன் வித்தியாசமானவன் என்று அப்போதே புரிந்து விட்டது. "சபாஷ். ரொம்ப துடிப்பாதான் இருக்கே. என்ன படிச்சிருக்கே?" "சாயர்புரம் போப் கல்லூரில பி.ஏ படிச்சேன், சார். ஏதோ பேருக்கு படிச்சேன். சரியான வேலை கிடைக்கலே. ஒரு தாட்டி நம்ம ஊரு பக்கத்துல தொடுத்தாப்பல நாலூ நாள் தலைவர் சூட்டிங் நடந்திச்சு. ரொம்ப தயக்கத்தோட போய் கை கொடுத்தேன். கொஞ்சமும் அலட்டிக்காம என் கூட பேசினாரு. என் படிப்பை விசாரிச்சாரு. குடும்பத்துக்கு விஸ்வாசமா இருக்கச் சொன்னாரு. அப்ப தொட்டு அவரு என் தலைவர் ஆயிட்டாரு." ஏசு சிகரெட் பிடித்து நான் பார்த்ததில்லை. அதே மாதிரி அவனுக்கு டாஸ்மாக் பார்களில் ஒதுங்கும் வழக்கமும் இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நாசரேத்தில் இருக்கும் தன் தாய் தந்தையருக்கு, மாசம் தவராமல் பணம் அனுப்புவான். அவன் தம்பி பொறியியல் கல்லூரியில் படிக்கிறான். ஆனால் சினிமா வெறித்தனம்தான் முரணாக இருந்தது. பொதுவாகவே சினிமா, அரசியல், இதைத் தாண்டி சராசரி தமிழன் சிந்திப்பதாக தெரியவில்லை. நாட்டின் பொருளாதரம் பற்றியோ, சமூக சிக்கல்கள் பற்றியோ பெரும்பாலருக்கு தெரிந்து கொள்ளும் ஆர்வமில்லை. எல்லா ஊடகங்களிலும் எதிர்மறை பரபரப்பு செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒன்று போனால் இன்னொன்று. பழசு மறந்து போகிறது. புதுசு பற்றி எரிகிறது. எனக்கும் ஏசுவுக்கும் அடிக்கடி ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கும். கடைசியில் அது சினிமாவில், அதுவும் ரசிகர் மன்றத்தில்தான் நிலைத்து நிற்கும். அது ரசிகர் மன்றம் இல்லை, நற்பணி மன்றம் என்று எதிர் பேச்சு பேசுவான். சென்னைக்கு அடிக்கடி வரும் அவன் அப்பா சகாயராஜ் என் வீட்டில்தான் ராத்தங்குவார். நிறைய தடவை கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். லேசான மன நெருடல்களுடன் ஆட்டோவில் அமர்ந்தேன். ஏதோ சென்னை நகரமே ஆதித்யாவின் பட ரிலீசுக்கு விழா எடுத்த விட்ட மாதிரி இருந்தது. தெருக்களில் நூறு அடி இடைவெளியில் பெரிதும் சிறிதுமாக கட்டவுட்டுகள். "அதென்னப்பா ஆதித்யா பின்னால ஏதோ கொடி மாதிரி வரைஞ்சிருக்குது" "என்ன சார், நாட்டுநடப்பு எதுவும் தெரியாம இருக்கீங்க!. தலைவரு அரசியல் கட்சி தொடங்கப் போறாரு. வரப்போற சட்டசபை தேர்தல்ல பாருங்க. கலக்கலா இருக்கும்." எனக்கு மனசு வலித்தது. எவனோ காசு மேல காசு சேர்த்து மாடி மேல மாடி கட்ட இவர்கள் பலக்கு தூக்குகிறார்கள். பகுத்தறிவு பாசறைகள் புறப்பட்ட அதே நிலத்தில்தான் இது போன்ற சமான்யர்களிடையே மூடத்தன வேர்கள் ஆழமாக ஊடுருவியிருக்கின்றன. போன வாரம் ஏசுவோடு விவாதித்தது ஞாபகத்துக்கு வந்தது. "ஏசு. மும்பையில எந்த ஹிந்தி சினிமா ஹிரோவுக்கும் ரசிகர் மன்றம் இல்லையாம். தெரியுமா? இங்க மட்டும்தான் இப்படி. தவிர, நாம எல்லாமே கொஞ்சம் ஒவர்தான். கத்தி பேசறோம். தனி நபர் துதி ரொம்ப அதிகமா இருக்கு. சினிமாவுல கெடைச்ச பலத்தை வைச்சுகிட்டு, இன்னும் என்ன செய்யலாம்னு ஒரு கூட்டம் அலையுது. அதுக்கு உன்ன மாதிரி ஒரு கூட்டம் பலி கடா ஆகுது." "சார். நீங்க சினிமாவை ஒரு பொழுது போக்குன்னு சொல்லி, எட்ட நின்னு வேடிக்கை பார்த்துட்டு போயிடறீங்க. ஆனா நாங்க உடம்பு வலிக்க வேலை செய்யறோம் சார். எங்களுக்கு ஒரு வடிகால் வேணுமில்லையா?. கிட்ட போய், முங்கி குளிச்சு, ஆண்டு அனுபவிக்கறோம் சார்." "இதுவும் ஒரு போதை மாதிரிதான் ஏசு. மயக்கம் இருக்கற வரைக்கும் மகிழ்ச்சியா இருக்கும். தெளிஞ்சதும் ச்சீன்னு ஆயிடும்." "சார். நான் சொல்றேன்னு தப்பா நெனைச்சுக்காதீங்க. பல பேரு திருபதி சாமிக்கோ அல்லது ஐயப்பனுக்கோ விரதமிருந்து, விழா எடுத்து, காசு செலவழிக்கிறாங்க இல்லையா? அதுல அவங்களுக்கு திருப்தி கெடைக்குது. அப்ப அதுவும் ஒரு போதைதானே?" "ஏசு. எல்லை மீறின எல்லாமே தப்புதான். உப்போட சிறப்பு அதோட அளவுல இருக்குதுன்னு சொல்லுவாங்க. சினிமா ஒரு பொழுது போக்கு அம்சம்பா. அதுக்கு மேல முக்கியத்துவம் கொடுக்காதீங்கன்னு சொல்ல வர்றேன். இந்த மாதிரி வெறி பிடிச்ச ரசிகர்கள் இருப்பதாலத்தான், சில ஹீரோக்களுக்கு என்னென்னமோ ஆசைகள் வருது. செருப்பு காலை பாதுகாக்குது. அது நமக்கு தேவைதான். ஆனா, அதை வாசல்லேயே விட்டுடறதுதான் நல்லது." "சார். விடுங்க. நான் இன்னிக்கு பொறுப்பா இருக்கேன்னா, அது என் தலைவராலத்தான். ஏதோ என்னால முடிஞ்ச நல்ல காரியங்களை தலைவர் பேரச் சொல்லி செய்யறேன். இன்னும் கூடுதலா, ஒரு அமைப்பா செய்யனும்ணும்னு என் தலைவர் விருப்பப்பட்டார்னா, அதுக்கும் அவர் வழிகாட்டுவார். நான் ஸ்டியாத்தான் இருக்கேன் சார். நீங்கதான் ஏதேதோ கற்பனை செஞ்சுக்கிட்டு, கவலைப்படுறீங்க." என் அலுவலகம் வந்து விட்டது. ஏசு ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நான் இறங்குவதற்கு எதிர் பக்கம் நின்று கொண்டு மீண்டும் என் பார்வையை தவிர்த்தான். "ஏசு. என்ன ஆச்சு? தலைவர் படம் ஹிட்டு ஆகனுமேன்னு கவலையா?" "இல்லை சார். நான் நல்லாத்தான் இருக்கேன். ஒன்னுமில்லே" "இல்லை ஏசு. உன்னக்குள்ளே ஏதோ பிர்ச்சனை இருக்கு. எங்கிட்ட சொல்ல மாட்டேங்கிற." "சாயங்காலம் ஆபீஸ் விட்டு வாங்க சார். விவரமா பேசுவோம்." ஏசு வழக்கம் போல விருட்டென ஆட்டோவை ஸ்டார்ட் செய்து, போய் விட்டான். எனக்கு ஆபீஸில் வேலையே ஓடவில்லை. ஏசு என்ன சொல்லப் போகிறான் என்பதிலேயே மனசு, சுழல் காற்றில் மிதக்கும் காகிதம் மாதிரி எழும்பியும், அடங்கியதுமாக இருந்தது. சரியாக ஐந்தரை மணிக்கெல்லாம் ஏசு வந்து விட்டான். முன்னைவிட இறுக்கமாக இருந்தான். வீடு திரும்பும் வரை ஒன்றும் பேசவில்லை. சூடாக ஒரு காப்பி போட்டு அவன் முன்னால் நீட்டினேன். நிமிர்ந்தவன் கண்களில் கண்ணீர். "ஏசு. என்னாச்சு?" "சார். நீங்க அடிக்கடி பல்லக்கு தூக்கறேன்னு சொல்வீங்களே. அது உண்மையாடுச்சு சார். நாங்கெல்லாம் பல்லக்கு தூக்கவும், கொடி கட்டவும், கோஷம் போடவும், எதிர் ஆசாமிங்களோட மல்லுக்கு நிக்கவும்தான் இருக்கோம். பல்லக்குல உட்கார்ந்து போக இன்னொரு கூட்டம் இருக்குது. அதுக்கு முள்ளங்கி பத்தையா நோட்டு வேணும்." "புரியலை ஏசு. விவரமாச் சொல்லு." "சார். தலைவரோட ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போது என்னமா உழைச்சிருக்கேன், தெரியுமா? ஆனா கட்சின்னு வரும்போது, கட்சி மாறி வந்த ஒரு துட்டு பார்ட்டிக்குதான் பதவியாம். எனக்கு இல்லே. இது எப்படீங்க நியாயம்?" "ஏசு. உனக்கு தெரியும்தான். இருந்தாலும் சொல்லறேன். சினிமா ஒரு தொழில்ங்கிற மாதிரி, அரசியலும் ஒரு தொழிலாயிடுச்சுப்பா. இதுலேயும் முதல் போட வேண்டியிருக்கு. லாபம் பார்த்து அடுத்த தேர்தலுக்கு செலவழிக்க வேண்டியிருக்கு. நாட்டு நல்லது செய்யணும்னு அரசியலுக்கு வர்றவங்களே இல்லேன்னு ஆயிடுச்சு." ஏசு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தான். ஆதரவாக அவனை என் தோள்களில் சாய்த்துக் கொண்டேன். "ஏசு. அவங்க எப்படி அவங்க தொழில்ல கண்ணும் கருத்துமா இருக்காங்களோ, அதே மாதிரி நீ உன் ஆட்டோ தொழில்ல இருந்துடேன். யாரு வேணும்னாலும் வரட்டும். அதை மக்கள் பார்த்துப்பாங்க. உங்கள மாதிரி ஆசாமிங்க ஒதுங்கி நின்னீங்கன்னா சினிமாவும் உருப்படும். அரசியலும் உருப்படும்." ஏசு என்னிடமிருந்து விலகி கொஞ்சம் நேரம் குனிந்த படி உட்கார்ந்திருந்தான். திடீரேன எழுந்து ஒரே மடக்கில் அத்தனை காப்பியையும் குடித்து விட்டு, இடக்கை புறங்கையால் வாயை துடைத்துக் கொண்டே எதுவும் சொல்லாமல் போனான். நான் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு அதில் வருத்தமில்லை. மனசுக்குள்ளே எங்கோ ஒரு மூலையில் வெளிச்சம் பரவுவது மாதிரி இருந்தது. மறுநாள் நான் ஆட்டோ ஸ்டாண்டை அடைந்த போது ஏசுவின் ஆடோவை எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் ஆட்டோதானா என்று சந்தேகமாக இருந்தது. ஒரே ஒரு ஸ்டிக்கர் மட்டும் இருந்தது. மரியண்ணை குழந்தை ஏசுவை அணைத்தபடி இருந்தாள். ஆதித்யா அஸ்தமனமாகியிருந்தான். "சார். வாங்க. உட்காருங்க. இன்னும் போக வேண்டியது ரொம்ப தூரமிருக்கு." ஏசு அகலமாக புன்னகைத்தான். "ஏசு. எனக்கு தூரத்தை பத்தி கவலையில்லேப்பா. சரியான பாதையா? அதுதான் முக்கியம்" என் கண் சிமிட்டலுக்கு ஏசுவிடம் மீண்டும் புன்னகை. ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த அனைவரும் குபீரென சிரித்தார்கள். (AIR தூத்துக்குடி - படிப்பரங்கம் - 06 ஆகஸ்ட் 2010)       28. கொல்வதற்கு வருகிறேன்   முப்பது டிகிரி கோணத்தில் திறந்திருந்த அந்தக் கதவு எனக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் ஒரு சின்ன தப்பு நடந்து விட்டது. 'க்ளக்' என்ற ஓசையுடன் கதவு சாத்திக் கொண்டது!! குளிரூட்டப் பட்ட மிகப் பெரிய அறை. சிறிய ஓசை கூட மிகத் துல்லியமாக உள்ளே கேட்டது.  முக்கியமாக அஜய் சிங்குக்கு! நான் யாரைக் கொல்ல வேண்டும் என்று வந்திருக்கிறேனோ, அவனுக்குக் கேட்டு விட்டது! மிக அருகிலேயே, அரை இருட்டில், நெளியும் பாம்பு மாதிரியான இரானியத் தட்டிகள் இருந்தன. அதன் பின்னால் போய், அதன் இடுக்குகள் வழியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். லார்ஜில் சரி பாதியை உள்ளே தள்ளியிருந்த அஜய் சிங் எழுந்ததில் தள்ளாடினான். திரண்டிருந்த தன் தொந்திக்குக் கீழே கவ்வியிருந்த பைஜாமாவை மேலே தூக்கி விட்டுக் கொண்டான். 'முட்டாளே! காற்றடித்து கூட கதவு சாத்திக் கொள்ளலாம். அப்படி யோசியேன்?'. இல்லை! இல்லை! அவனுடைய பார்வை 'யாரோ உள்ளே நுழைந்திருக்கிறார்கள்' என்பதாகச் சொன்னது. அவன் நேராக நான் இருக்கும் இடத்திற்கு வந்தான். அடடா! எல்லாம் தப்பாகவே போகிறதே!!   வந்தவன், ஐந்தடி தூரத்திலேயே நின்று கொண்டான்.  நல்ல வேளை!! முகம் சுருக்கி அவன் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான். "கோன் ஹை தும்? சாம்னே ஆஜாவ். நஹி தோ....." (டேய்! யார் நீ? நீயா வரயா... இல்லே...). கையில் ஒரு பிஸ்டல் துருத்திக் கொண்டிருந்தது. காக்காய் மாதிரி தலையை அங்கும் இங்கும் திருப்பிக் கொண்டு ஏதாவது அசைவுகள் தென்படுகிறதா என்று ஆராய்ந்து கொண்டிருந்தான். திரைச்சீலைகள் கொஞ்சமாக அலையடிப்பது மாதிரி அசைந்தன. அதற்கு நான் காரணமில்லை. மீண்டும் ஒரு காட்டுக் கத்தல் கத்தினான். அவன் புர்புர்ரென்று மூச்சுவிடுவது எனக்கு நன்றாகக் கேட்டது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 'உன்னை சட்டென கொல்ல இஷ்டமில்லையடா. சாவு பயத்தை உன்னுடைய ஒவ்வொரு செல்லும் உணர வேண்டும். அனுபவி. நன்றாக அனுபவி.' சுட்டு விட்டான்!! திரைச்சீலைகளை கிழித்துக் கொண்டு, பைபர் கிளாஸ் ஷட்டரை துளைத்துக் கொண்டு சென்றது புல்லட். பிறகு எல்லாமே கோமாளித்தனம்!  சுட்டுக் கொண்டே இருந்தான். ஈரானிய தட்டியை உரசிக் கொண்டு போனது ஒரு புல்லட். சரமாரியான புல்லட்டுகளின் சத்தம் கேட்டு, தடதடவென நாலைந்து தடியர்கள் ஓடிவந்தார்கள். "க்யா சாப்?" (என்ன ஆயிற்று ஐயா?) இனி அவர்கள் ஹிந்தியில் பேசுவதை தமிழ் படுத்திச் சொல்கிறேன். "அவன்... அவன் வந்திருக்கான்னு நெனைக்கறேன்." "அவன்னா?" "அதான்.. கோவிந்த் தவே. என்னைக் கொல்ல வந்திருக்கான். அந்த கர்ட்டனுக்கு பின்னாடி மறைஞ்சிருக்கான். க்விக். அவனை பிடியுங்க." "கவலையே படாதீங்க. நீங்க கீழே பாதுகாப்பா போங்க. நாங்க அவனை உயிரோடோ அல்லது பொணமாவோ கொண்டுவரோம்." நானாவது உங்களிடம் மாட்டிக் கொள்வதாவது. கிடைத்த ஒரு சில வினாடிகளில், சிறிதளவே திறந்திருந்த ஷட்டர் வழியாக வெளியேறினேன். வெளிச்சம் இல்லாத ஸ்ப்ளிட் ஏசியின் அவுட்டர் பின்னால் மறைந்து கொண்டேன். எலி பிடிப்பவர்கள் மாதிரி முன்னால் துப்பாக்கியை நீட்டிக் கொண்டு நான் இல்லாத இடத்தில் அந்த தடியர்கள் தேடிக் கொண்டிருக்க, நான் அஜய் சிங்கின் அடுத்தடுத்த இயங்கங்களை கவனிக்கலானேன். 'போடா! போ! எங்கு வேண்டுமானாலும் போ! யாரை வேண்டுமானாலும் கூட்டிக் கொண்டு வா! இன்று நான் உன்னைக் கொல்வது நிச்சயம்.' அவனை நான் ஏன் கொல்ல வேண்டும்? அதற்கு, இந்த மூன்று பத்திரிக்கை செய்திகளை நீங்கள் படிக்க வேண்டியது மிக அவசியம். இந்தக் கதையின் பின் புலத்தை புரிந்து கொள்ள முடியும்.   ஊழலை எதிர்த்து குரல் கொடுத்த இளம் அரசு அதிகாரி கொலை!!! ராஞ்சி. ஜனவரி 4.  நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் முகுந்த் தவே என்ற 27 வயது இளம் அரசு அதிகாரி உருட்டு கட்டைகளால் அடித்துக் கொல்லப்பட்டார். ஐ.ஐ.டி. கான்பூர், பி.டெக் பட்டதாரியான இவர், தங்க நாற்கர தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் நடக்கும் ஊழலை அம்பலப்படுத்த முயற்சித்ததால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்திருக்கிறது. விசில் ஊதினால் கொலை! முகுந்த் தவே கொலையின் அதிர்ச்சிகர பின்னனி!! ராஞ்சி. பிப்ரவரி 28. ஊழல்வாதிகளின் கைக்கூலிகளால் கொல்லப்பட்ட முகுந்த் தவே, தன் மீது உள்ள அச்சுறுத்தலை தகுந்த ஆதாரங்களுடன் தனது உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்திருக்கிறார். கடைசி முயற்சியாக, டெல்லியின் உட்ச பட்ச அரசியல் மையத்துக்கு ரகசிய கடிதம் எழுதியிருக்கிறார். இதற்கு 'விசில் ஊதுதல்' என்று பெயர். யாரிடம் பாதுகாப்பை எதிரிபார்த்தாரோ, அவர்களே ஊழல்வாதிகளுக்கு துணை போயிருக்கிறார்கள். முகுந்த் தவே கொடுத்த ரகசிய ஆவணங்கள் சிதைக்கப்பட்டு, அவரும் கொலையாகியிருக்கிறார். அண்ணனை கொன்றவர்களை கொல்லுவேன்! கோவிந்த் தவே பரபரப்பு பேட்டி!! ராஞ்சி. மார்ச் 15. முகுந்த் தவே கொலை வழக்கில் நாளுக்கு நாள் பரபரப்பு கூடி வருகிறது. ஐ.ஐ.டி. மாணவர்கள் ஒன்று சேர்ந்து அதிகார, பண பலத்துக்கு எதிராக தொடங்கிய போராட்டம் வலுவடைந்து வருகிறது. இதற்கு நடுவில், நக்ஸல் தீவிரவாதியான கோவிந்த் தவே (முகுந்த் தவேயின் தம்பி), இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கொல்வேன் என்று சூளுரைத்திருப்பதாக தெரிகிறது. அஜய் சிங் புல் வெளியில் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருப்பது தெரிந்தது. அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தான். எனக்கு புரிந்துவிட்டது. அஜய் சிங் இங்கிருந்து தப்பிக்கப் போகிறான். ஒரு ஜீப் நிறைய போலீஸ் காண்ஸ்டபிள்கள் வந்திறங்கினார்கள். முழங்கையைத் தாண்டி நீளும் டார்ச்சை அடித்து ஒவ்வொரு இஞ்ச் இஞ்சாக தேடினார்கள். ஓளிக் கம்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக என்னை நோக்கி வந்து கொண்டிருந்தன. மீண்டும் இடம் மாற வேண்டியதுதானா? "மேவலால்! அந்த ஸ்பிளிட் ஏ.சி. அவுட்டர் பின்னால செக் பண்ணு" ஒரு இன்ஸ்பெக்டர் கத்தினார். "ஜீ சாப்." அந்த கான்ஸ்டபிள் ஒளிக்கம்பத்தை என்னை நோக்கி திருப்புவதற்குள் ஒரு அதிசயம் நடந்தது. எங்கோ ஒரு மூலையில் சலசலப்பு கேட்க அனைவரும் ஓடினர். எனக்கு மிக சௌகர்யமாகப் போனது. யாருமே இல்லை! நிதானமாக கீழே வந்து அஜய் சிங்குக்காக நிறுத்தியிருந்த காரின் டிக்கியில் ஒளிந்து கொண்டேன். நெற்றியில் கட்டைவிரலால் தீற்றிய செந்தூரத்துடன் அஜய் சிங் வந்தான். கடவுள் படங்கள் பலவற்றை பிரார்த்தித்துக் கொண்டு காரை கிளப்பினான். 'மவனே. உனக்கு யாரும் உதவப் போவதில்லை. நீ தொலைந்தாய். வா! நீயே வந்து வலிய மாட்டிக் கொள்கிறாய்!' "காரை தரோவா செக் செஞ்சுட்டீங்களா?" அஜய் சிங் காரை உருட்டிக் கொண்டே கேட்டான். "ஜீ சாப்." ஒரு கான்ஸ்டபிள் மரியாதைக்கு பின் சீட்டில் எட்டிப் பார்த்தான். 'முட்டாள்களே! நான் டிக்கியில் அல்லவா இருக்கிறேன்.' கார் சீறிக் கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாகப் பாய்ந்து, ஒரு நீண்ட நெடுஞ்சாலையில் பயணிக்கத் தொடங்கியது. 'நீ எங்கு வேண்டுமானாலும் போ! உன்னை அங்கு கொல்வேன்'. எனக்கு உடனே லக் அடித்தது. ஆள் அரவமற்ற சாலையில் போய் கொண்டிருக்கும் போது திடீரென கார் நின்றது. கிளம்ப சண்டித்தனம் செய்தது. அஜய் பானட்டை திறந்து குடாய்ந்து கொண்டிருந்தபோது, நான் மெதுவாக டிக்கியிலிருந்து வந்து பின் சீட்டில் ஒளிந்து கொண்டேன். அரை மணி நேர போராட்டங்களுக்கு பிறகு கார் உறுமியது. மீண்டும் கார் பயணம். அஜய் சிங் சுத்தமாக நொறுங்கிப் போயிருந்தான். உச்சபட்ச ஏ.சியிலும் அவனுக்கு வியர்த்தது. நான் பின் சீட்டில் கவலையின்றி பயணித்துக் கொண்டிருந்தேன். ஏதேச்சையாக பின் சீட்டில் திரும்பிப் பார்த்தவன், மிரண்டு போனான். "நீ! நீ! நீயா?" அவன் கைகள் ஸ்டியரிங்கிலிருந்து தடுமாறின. கால்களை கன்னாபின்னாவென உதைத்தான். அவன் கண்கள் கலவரத்தில் பிதுங்கி வெளியே வந்துவிடுவது மாதிரி இருந்தன. அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த கார் நிலை தடுமாறியது. இரண்டு கைகளையும் விட்டுவிட்டு நெஞ்சைப் பிடித்துக் கொண்டான். 'ப்ளக்'கென அவன் வாயில் நுரை எட்டிப்பார்த்தது. கைகள் ஒரு பக்கமாக 'விலுக், விலுக்'கென இழுத்துக் கொண்டன. கார் ரோட்டை விட்டு விலகி, ஒரு மைல் கல் மீது மோதி, கரப்பான் பூச்சி மாதிரி தலை கீழாய் கவிழ்ந்து ஐம்பது அடிக்கு குறையாமல் தரையை சிராய்த்துக் கொண்டு போனது. தீப்பொறிகள் சிதறின. கழுத்து திரும்பிய நிலையில் அவன் தன் கடைசி மூச்சை விட காத்திருந்தான். நான் உரக்க சப்தமிட்டேன். அவன் அதை கேட்டானா தெரியவில்லை. "நான்தான்டா. என்னை துடிக்க துடிக்க ஆள் வைத்து கொன்னியே. இப்போ நீ துடிக்க துடிக்க சாவாதை நான் பார்க்க போறேன். செத்துப்போடா சதிகாரா!" எனக்கு காற்று புகும் சிறு இடைவெளி போதும். கிடைத்த சிறு இடைவெளியில் வழிந்து நான் வெளியே வந்தேன். இன்னும் மூன்று பேர் இருக்கிறார்கள். எனக்கு அவசர வேலைகள் மீதி இருக்கின்றன. (தினமலர் - வாரமலர் - 14 நவம்பர் 2010) 29. இது, அது அல்ல   "ச்சீ!.... என்ன ராஜேஷ்?..... யூ ஆர் வெரி நாட்டி" ஷர்மிளா முகம் சிவந்தாள். அவளின் ரோஜா நிற மெல்லிய உதடுகளின் மேல் சின்னச் சின்னதாய் நீர் மொட்டுக்கள். "கமான் ஷர்ம்ஸ். இதவிட பவர்ஃபுல்லா இன்னொண்ணு இருக்கு.. வேணுமா?" ராஜேஷ் விஷமத்தனமாக சிரித்தான். அவனுள்ளே இளமையின் வேகம் ஓவர்டைம் செய்து கொண்டிருந்தது. "நோ தாங்க்ஸ். ராஜேஷ், வரவர நீ ரொம்பவே கெட்டுப் போய்ட்டே. புதுப் பெண்டாட்டியிடம் பேசும் பேச்சா இது?" முகத்துக்கு முன்னால் வந்துவிட்ட மயிற்கற்றைகளை காதுக்குப் பின்னால் தள்ளினாள். காதலிக்கும் போது எப்படி மென்மையாக இருந்த ராஜேஷ், இப்படி வல்கராக மாறியிருக்கிறான்! எல்லாம் காமம் படுத்தும் பாடு!! "ஷர்ம்ஸ். நீயும்தான் ரொம்ப மாறிட்டே. சும்மா ஒரு எரொட்டிக் மூடுக்கு கொண்டுவரலாம்னு பார்த்தா, அதப் போய் சீரியஸ்ஸா எடுத்துக்கறயே?" ராஜேஷ் கிடைத்த ஒரு சில மென இடைவெளியில் ஷாம்பெயினை ஒரு சிறிதளவு சிப்பிக் கொண்டான். ஹு... ஹூ என்று சம்பந்தமில்லாமல் கத்தினான். "ராஜேஷ். நோ ஜோக்ஸ் ப்ளீஸ். ஐயாம் வெரி சீரியஸ். உன் பேச்சில் காதல் இல்லை. காமம்தான் இருக்கு. நான் வேண்டாம். என் உடம்புதான் வேணும், இல்லையா?" ஷர்மிளா அழத் தொடங்கினாள். "ஹேய்! என்ன இது?.... ஓகே... ஸாரி.... ஐம் ஸோ ஸாரி. என்னை மன்னிச்சுடும்மா. என்ன இவ்வளவு சென்சிடிவ்வா இருக்கே?" சில்லென்ற ஏ.சி.யில் அவனுக்கும் வியர்த்தது. காது மடல்களில் வெப்பத்தை உணர்ந்தான். "............." "என்னடா? கோவமா?" "நீ ரொம்மான்டிக்கா இருக்கிறதவிட அதிகமாவே டிராமாட்டிக்கா இருக்கே. எனக்கு பொய் வாழ்க்கை போரடிச்சு போச்சு, ராஜேஷ். திகட்டுது. எனக்கு நீ வேணும்.. நீ மட்டும் முழுசா வேணும். காலேஜில் பார்த்த, பழகிய அந்த ராஜேஷ் வேணும்." ஷர்மிளாவின் மார்புகள் விம்மி அடங்கின. கண்ணீர் கன்னங்கள் வழியாக இறங்கி, உதடுகளை ஈரப்படுத்தி உப்பு கரித்தது. "ஷர்ம்ஸ். சின்னச் சின்ன பொய்கள்தான் வாழ்க்கையோட அஸ்திவாரமே. நீ கோபப்படும்போது கூட அழகாயிருக்கேன்னு நான் அடிக்கடி சொல்வேன் இல்லையா?" "இது ரொம்பவே ஓவர். இதை ஜோக்கா எடுத்துக்க மாட்டேன். இதை ஒரு ஸ்டேட்மென்டா.....' "மறுபடியும் மன்னிப்பு ப்ளீஸ். என் இன்பத் தலைவியே" "ராஜேஷ். ஐ லவ் யூ". ஷர்மிளா அபாயகரமாக நெளிந்தாள். "ஐ டூ லவ் யூடா" ராஜேஷ் கரைந்துவிடுவான் போலிருந்தது. ஒரு மென இடைவெளிக்கு பிறகு, "ஓகே ராஜேஷ். எனக்கு கண்ணைச் சொக்குது. நான் தூங்கப் போறேன். மிச்சம் மீதியை நாளைக்கு பார்த்துக்கலாம்" ஷர்மிளாவின் பட்டாம்பூச்சி இமைகள் துடித்தன. "நோ நோ ஷர்ம்ஸ். இன்னும் பத்தே நிமிஷம். ஜஸ்ட்.... லெட்ஸ் ஹாவ் ஒன் மோர் ஃபன்" "உனக்கு ராத்திரி, பகல்ன்னு வித்தியாசமே கிடையாது. எப்பவும் இதே நினைப்புதான். நீ திருந்தவே மாட்டே. நாளைக்கு ஒரு ப்ராஜெக்ட்டை கம்ப்ளீட் செஞ்சாகணும், ராஜேஷ். ஐ நீட் ரெஸ்ட்." "ஷர்ம்ஸ்... ப்ளீஸ்.... லிசன் டு மீ...." ஷர்மிளா இன்டர்னெட் சாட்டிங்கை மூடிவிட்டு தூங்கப் போனாள். உலகத்தின் இன்னொரு கோடியில், சியாட்டிலில், தனிமையில் வாடிக் கொண்டிருந்த ராஜேஷ் சுறுசுறுப்பாக ஆபீசுக்கு கிளம்பினான்.                     (ஆனந்த விகடன் தீபாவளி மலர் - 2008) 30. தங்கக்கூரை கிருஷ்ணய்யாப் பிள்ளையின் வரவுக்காக காத்திருந்த ஊர் மக்கள், அவர் வந்ததும் மரியாதைக்கு எழுந்து, அமர்ந்தனர். "என்னப்பா, எல்லாரும் வந்தாச்சா? கூட்டத்தை ஆரம்பிக்கலாமா?" கணீர் குரலில், தனது வெள்ளை மீசையை உள்ளங்கையால் நீவிவிட்டபடியே மிடுக்கோடு கூட்டத்தினரை இடமிருந்து வலமாக பார்த்தார் கிருஷ்ணய்யாப் பிள்ளை. கூட்டத்தினரின் தலையசைப்பில் சம்மதம் கிடைக்க, தொண்டையை செருமிக் கொண்டு பேசத் தொடங்கினார். "எல்லோரும் கவனமா கேட்டுக்குங்க. பட்டணம் போய் தேவ பிரசனம் பார்த்து, நம்ம ஊரு பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தேதி குறிச்சிருக்கு. வர்ற தை மாசம் 12ம் தேதி. இன்னும் மூணு மாசம்தான் இருக்கு. செஞ்சுடலாம் இல்லையா?" "ஐயா, நீங்க நல்லது கெட்டதுல்லாம் பார்த்துதான் தேதி குறிச்சிருப்பீங்க. உங்க சம்மதம்தான் எங்க சம்மதம். நாங்க என்ன செய்யணும். அதைச் சொல்லுங்க. செய்ய காத்துக்கிட்டு இருக்கோம்" என்றார் ரிடயர்ட் ஹெட்மாஸ்டர் சிவசங்கரன் எழுந்து. "அப்ப சரி. திருப்பணி பற்றி பேச ஆரம்பிக்கலாமா?" "ஐயா, தேர் மராமத்து செலவு முழுசையும் நான் ஏத்துக்கறேங்க" "கோயில் முழுவதும் கிரானைட் தளம் போடும் செலவு என்னுது" "பெங்களூருல என் பையன் நல்ல பொசிஷன்ல இருக்கான். அஞ்சு லட்சம் வரையில வசூல் செஞ்சு கொடுக்க நானாச்சு." இதே போல் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை உற்சாகமாக எடுத்து வைக்க, கிருஷ்ணய்யாப் பிள்ளை மகிழ்ச்சியடைந்தார். "பலே. நீங்க இப்படி செய்யும் போது நானும் என் பங்குக்கு ஏதாவது பெருசா செய்ய வேண்டாமா? அதுனால நம்ம கோயில் மூலஸ்தான வெளிக் கோபுரத்துக்கு தங்கக் கூரை போடும் செலவை நான் ஏத்துக்கறேன்." கூட்டத்தினர் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த பஞ்சாட்சர முதலியார் எழுந்தார். "ஐயா! நீங்க நம்ம கோயிலுக்காக ஒத்துமையா உற்சாகமா திருப்பணி செய்யறது சந்தோஷமாதான் இருக்கு. ஆனா, கோயில் புனரமைப்பை மட்டுமே பார்க்கிற நீங்க, நாம கோயில் பட்டாசாரியார் குடியிருக்கிற வீட்டையும் கொஞ்சம் பார்த்தா நல்லது. வீட்டை மராமத்து செஞ்சுக்கிற நிலைமைல அவர் இல்லே. சமையல் அறை இடிஞ்சு போனதால, இப்ப கூடத்திலேதான் குடும்பம் நடத்திக்கிட்டு இருக்காரு. ஐயாவோட பெரிய மனசுல பெருமாளுக்கு தங்க கூரை வருது. அதுனால, என் பங்குக்கு பட்டாசாரியார் வீட்டு சமையல் அறை மாராமத்தை நான் ஏத்துக்கறேன். என்னை பொறுத்த வரைக்கும் இது கூட சாமி காரியம்தான்." கோபால பட்டாசாரியார் கண்ணீர் மல்க எழுந்து, நன்றியுணர்வோடு பஞ்சாட்சர முதலியாரைக் கையெடுத்து கும்பிட்டார்.  2007 விகடன் தீபாவளி மலர் 31. சின்ன விஷயம்   லூவர் மியூசியத்தை நெருங்கி விட்டோம். திடீரென எங்கள் காமிரா மேன் தினேஷ் பரபரப்பானான். ஏர் பேக்கின் ·ஸிப்புகளை இழுத்தும் பிரித்தும் தேட ஆரம்பித்தான். "விஜய். என் மெடிகல் கிட்டை ஹோட்டல்லையே விட்டுட்டு வந்திட்டேன். இப்ப பிரஷர் மாத்திரை சாப்பிடணும். மதியம் லஞ்சுக்கு முன்னால சுகருக்கு இன்ஜெக்ஷன் போட்டுக்கணும்." எனக்கு சொரேல் என்றது. ஹோட்டல் இங்கிருந்து குறைந்த பட்சமாக பத்து கிலோ மீட்டர் தூரமாவது இருக்கும். இரை தின்ற மலைப் பாம்பு மாதிரி, டிராபிக் அரை கிலோ மீட்டருக்கு அசையாமல் நீண்டு கிடக்கிறது. மீண்டும் ஹோட்டலுக்கு போவதென்று முடிவு செய்தால் இன்றைய ஷெட்யூல் ·பனால். ஆனால், தினேஷ் இல்லாமல் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. முன் சீட்டில் இருந்த திலீபனிடம் நாங்கள் தயக்கத்தோடு சொல்ல, அவரோ கொஞ்சமும் பதட்டப்படாமல் "இவ்வளவுதானே? இது சின்ன விஷயங்க. அந்த மாத்திரை பேரை எழுதிக் கொடுங்க" என்றவர், உடனே ஹோட்டலுக்கு போனில் பேசினார். பிறகு, சரேலென முன் கதவை திறந்து கொண்டு இறங்கி, டிராபிக்கில் கலந்து, காணாமல் போனார். நாங்கள் லூவரை நெருங்குவதற்குள்ளேயே மாத்திரையோடு வந்தார். லஞ்சுக்கு முன்னாலேயே மருந்து பெட்டியும் வந்து சேர்ந்தது. நாங்கள் பாரிஸில் காலை வைத்ததிலிருந்து திலீபன் எங்களுக்கு செய்யும் சேவைகள் கண்டு பிரமித்து போனோம். இத்தனைக்கும் நாங்கள் அனைவருமே அவருக்கு அறிமுகம் இல்லாதவர்கள். எங்கள் தயாரிப்பாளருக்கு தெரிந்தவர். அவ்வளவுதான்! நேற்று அது போலத்தான், பாரிஸ் ஏர்போர்ட்டில் ஏக அமர்க்களம் ஆனது. எங்கள் டைரக்டரின் லக்கேஜ்களில் ஒன்று லண்டன் ஏர்போர்ட்டிலேயே தங்கி விட்டதாகச் சொல்ல, அவர் ஏகத்துக்கும் டென்ஷனாகி விட்டார். ஆனால் தீலீபனோ 'இது சின்ன விஷயங்க' என்று சொல்லி விட்டு எங்களை ஹோட்டலுக்கு பேக்கப் செய்து விட்டு ஏர்போர்ட் அதிகாரிகளுடன் போராடி, இரண்டே மணி நேரங்களில் அந்த சூட்கேசுடன் எங்கள் ஹோட்டல் ரூம் கதவை தட்டினார். இது மாதிரி எத்தனையோ கஷ்டங்கள்... குழப்பங்கள். எல்லாவற்றுக்கும் தீலீபனிடமிருந்து ஒரே பதில்தான்..... 'இது சின்ன விஷயங்க!'. ஒரு முறை, தாங்க முடியாமல் அவரிடம், "அதெப்படி எதையும் நீங்க சின்ன விஷயமாகவே எடுத்துக்கிறீங்க?" என்று கேட்டு விட்டேன். தீலீபன் கொஞ்சம் தயக்கத்தோடு ஆரம்பித்தார். "இலங்கையிலே போர் தொடங்கியதும் நாங்க குடும்பத்தோட தமிழ் நாட்டுக்கு புலம் பெயர்ந்தோம். சின்ன படகுல அஞ்சு நாள் கரை தெரியாம நடு கடல்ல சோறு தண்ணியில்லாம தத்தளிச்சோம். இனி பொணமாதான் கரை ஒதுங்கப் போகிறோம்னு நெனைச்சுக்கிட்டு இருந்த போது, கடவுள் ரூபத்தில ஒரு ஏழை தமிழ்நாட்டு மீனவர் எங்கள் அத்தனை பேரையும் காப்பாத்தி, உயிரோட கரை சேர்த்தார். ஒரு தனி ஆளா அவர் எப்படி சங்கடங்களை சமாளிச்சார் என்பதை நேர்ல பார்த்து பிரமிச்சவன் நான். எல்லா கஷ்டங்களையும் தன் உள்ளுக்குள்ளேயே வைச்சிக்கிட்டு, எங்களுக்கு நம்பிக்கையா சிரிச்ச முகத்தோட உதவினாரு பாருங்க... அதுதாங்க பெருசு! மத்ததெல்லாம் சின்ன விஷயங்க!" நான் ஆடிப் போனேன்.  2007 விகடன் தீபாவளி மலர்  32. ஓடாதே.. யோசி   முதலில் பயங்கர வெடிச் சத்தம் மாதிரி கேட்டது. அதை தொடர்ந்து கட்டிடமே குலுங்கியது. பிறகு தொடர்ச்சியாக எதோ முறிந்து உடைந்து படபடவென சரிவதும் கண்ணாடிகள் நொறுங்கும் சத்தம் கேட்டது. "சில்வியா! நம்ம ஆபீஸ் பில்டிங் கொஞ்சம் கொஞ்சமாக இடிஞ்சு விழுந்திட்டிருக்குன்னு நினைக்கிறேன். தப்பிச்சு ஓடு" என்று சொல்லிக் கொண்டே அரை இருட்டில் தட்டு தடுமாறி வந்த லதாவின் மேலேயே சில்வியா மோதினாள். ஊனமுற்ற கால்களுக்காக லதா உபயோகிக்கும் கிரெச்சஸ் இரண்டும் மூலைக்கு ஒன்றாக போயின. இருவரும் தலை குப்புற விழுந்தனர். யார் யாரோ அவர்களை மிதித்தும் தடுக்கி விழுந்து கொண்டும் ஓடினார்கள். கொஞ்சம் சுதாரித்து எழுந்த சில்வியா வாசலை நோக்கி ஓடினாள். லதா எங்கே போனாள் தெரியவில்லை. பொடி மணலாக தூசு மழை பொழிந்து கொண்டிருக்க மூச்சு திணறியது. நிற்காமல் ஓடிக் கொண்டே இருந்தாள். திடீரென காலுக்கடியில் தரை சரிய நிலைதடுமாறி விழுந்து சுவரோம் உருண்டாள். ஒட்டு மொத்த மின்சாரமும் துண்டித்துப் போக இருள் சூழ்ந்தது. ஏதேதோ அவள் மேல் வந்து விழுந்தன. சரிவதும் விழுவதுமாக சில்வியா அடித்து செல்லப்பட்டாள். "யாராவது காப்பாற்றுங்களேன்?" என்று தொண்டை கிழிய கத்தினாள். கட்டிடம் ஆடுவது கொஞ்சம் நின்றது. எங்கும் கும்மிருட்டு. திசை தெரியவில்லை. உயிர் பிழைப்போமா என்ற நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தபோது, வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் ஆறு மாத குழந்தை கண் முன்னால் வந்து போனது. சில்வியா தன் முழு பலத்தையும் திரட்டி, கைகளை தரையில் அழுத்தி எழ முயன்றாள். மீண்டும் காலுக்கடியில் கான்க்ரீட் தரைதளம் சரியத் தொடங்க 'செத்தேன் நான்' என்றிருக்கும் போது யாரோ கையை பிடித்து மேலே இழுத்தார்கள். சில்வியாவை நாலைந்து பேர் கைத்தாங்கலாக வெளியே கொண்டு வந்தார்கள். அரை மயக்கத்திலிருந்த சில்வியா திடீரென கத்தினாள். " போங்கள். லதாவை தேடுங்கள். நாலாவது மாடியில் இருக்கிறாள்" "லதாவா! சரியா போச்சு. ஹேய் லதா... இந்தா உன் பிரெண்டை பார்த்துக்கொள்" என்று துளி கூட காயம் இல்லாத லதாவிடம் சில்வியாவை ஒப்படைத்துவிட்டு இன்னும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருப்பவர்களை காப்பாற்ற ஓடினார்கள். "லதா, என்னால் நம்பவே முடியவில்லை! நீ எப்படி தப்பித்தாய்? உன்னிடம் ஸ்டிக்ஸ் வேறு இல்லையே?" "அதனாலென்ன? நான் லேசில் நம்பிக்கை இழக்க மாட்டேன். இருப்பது போனால் கூட அது கூட ஒரு விதத்தில் நன்மைக்கே என்று நினைப்பேன். உன் மீது மோதி விழுந்த எனக்கு வசதியாக ஒரு பெரிய மேஜை கிடைத்தது. அதன் அடியில் தவழ்ந்து, நுழைந்து, அதன் கால்களை கெட்டியாக பிடித்துக் கொண்டுவிட்டேன். உயர் கட்டிடங்கள் இடிந்து விழும்போது தரைதளங்கள் பிளந்து உள்ளுக்குள் நொறுங்கி விழும். அந்த சமயத்தில் டிராப், ஹைடு, ஹோல்டு (படு, பதுங்கு, பற்று) என்பவை உயிர் காக்கும் மந்திர வார்த்தைகள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். நான் மேல்தளத்தில் இருந்தது கூட நல்லதாகப் போயிற்று. ஆட்டம் நின்றதும் நானே தவழ்ந்து மேலே வந்து விட்டேன். ஓடுவதற்கு உனக்கு வலுவை கொடுத்த அதே ஆண்டவன் எனக்கு யோசிக்க புத்தியையும் கொஞ்சம் அதிர்ஷ்டத்தையும் கொடுத்திருக்கிறான். அவ்வளவே !"  2007 விகடன் தீபாவளி மலர்  33. என்னைப் போல் ஒருத்தி   நத்தை மாதிரி ஊர்ந்து கொண்டிருக்கும் இந்த ரெயில் எத்தனை மணிக்கு சென்ட்ரலை அடையும் என்ற யோசனையிலேயே இருந்ததால் தனக்கு எதிரில் இருந்த அந்த பெண்ணை கவனிக்கவில்லை பத்மா. அவளிடமிருந்து விசும்பல் சங்கிலியாக வர ஆரம்பித்ததும்தான் திடுக்கிட்டு பார்த்தாள். பெட்டியில் இருந்த முக்கால்வாசி பேரின் பார்வையும் அந்த பெண்ணின் மீது பதிந்திருப்பது தெரிந்தது. என்ன தோன்றியதோ சட்டென்று எதிர்பக்கம் இடம் மாறி, அவளை தன் தோள்களில் சாய்த்துக் கொண்டாள். அழுகை பீறிட்டு வந்தது. நிமிர்ந்தவளை 'ஒன்றும் பேச வேண்டாம்' என்று வாயடக்கினாள். இந்த பெண்ணை அடிக்கடி இதே ரெயிலில் பார்த்திருக்கிறாள். தினமும் ஆவடியில் ஏறுவாள். சென்ட்ரலில் இறங்கி கூட்டத்தில் கரைந்து போவாள். அதிர்ஷ்டவசமாக ரெயில் வேகம் பிடித்து சென்ட்ரலுக்குள் நுழைந்தது. கைத்தாங்கலாக அவளை இறக்கி ஒரு சிமெண்ட் பெஞ்சில் உட்கார வைத்து தண்ணீர் கொடுத்தாள். பெயர் விசாரித்ததில் வித்யா என்றாள். "சொல்லு வித்யா. என்ன பிரச்சனை?" "அக்கா. என் ஹஸ்பண்டால ரொம்ப கஷ்டப்படறேங்கா. நான் ரெயில்வேல வேலை பார்க்கறேன். அவருக்கு வேலையில்லை. எக்கசக்கமா குடிக்கிறாரு. எவன் இவருக்கு கிரெடிட் கார்டு கொடுத்தான்னு தெரியலை. ஏகப்பட்ட கடன் வைச்சிருக்காரு. தெனம் அடி உதைதான். தெரு சிரிக்க அசிங்கம் செய்யறாரு. அக்கம் பக்கத்தில யாராவது உதவிக்கு வந்தா அவங்களோட என்னை சேர்த்து வெச்சு பேசறாரு. போலீசை கூட வரவழைச்சு பார்த்தாச்சு. ஒண்ணும் பலன் இல்லே. எனக்கு வேலையை தவிர வேற எந்த சொத்தும் இல்லைக்கா. ஊரு முழுக்க கடன் இருக்கறதால ஒரு உறவுக்காரங்க கூட உதவிக்கு வரமாட்டேங்கறாங்க. பேசாம இவரு செத்து தொலைஞ்சா என்னன்னு ஒரு யோசனை மனசுல ஓடிச்சு. அதான், தாங்க முடியாம அழுதிட்டேன்." அடாடா! இவளும் நம்ம கேசா? "வித்யா. கிட்டதட்ட நானும் உன்னை மாதிரிதான். என் கனவரும் சரியில்லை. உன்னை மாதிரியே என் ஹஸ்பண்டு செத்தா என்னன்னு நினைச்சேன். அந்த மாதிரியே ஸ்கூட்டர் ஆக்ஸிடெண்ட்ல செத்து ஒழிஞ்சான். நான் அழவே இல்லை. 'அப்பாடி தொந்திரவு விட்டுச்சு. இனி நிம்மதின்னு' நெனைச்சேன். ஆனா பிரச்சனை வேற ரூபத்தில வந்திச்சு. குடிகாரனோ கடன்காரனோ, புருஷன்னு ஒருத்தன் இருந்ததால மத்த ஓநாய்கள் என் வீட்டு பக்கம் நெருங்காம இருந்திச்சு. இப்ப அவன் போயிட்ட தைரியத்தில எனக்கு தெனம் தெனம் பிரச்சனை. நம்ம சமூகம் முழுக்க முழுக்க ஆண் சார்ந்தது வித்யா. என் அனுபவத்தில சொல்லறேன்... தயவு செய்து புருஷன் சாகணும்னு மட்டும் நினைக்காதே." "அதுக்காக தெனம் தெனம் அடி உதை வாங்க சொல்றீங்களா?" போய்க் கொண்டே இருந்தவள் சட்டென திரும்பி பத்மாவை கோபமாக பார்த்தாள். "அப்படிச் சொல்ல வர்ல வித்யா. எனக்கு தெரிஞ்ச ஒரு தொண்டு நிறுவனம் இருக்கு. உன் அட்ரஸைக் கொடு. இன்னிக்கி சாயந்திரம் போகலாம். அவங்ககிட்ட உன்னை அறிமுகப் படுத்தி வைக்கிறேன். இப்படி எகிறி குதிக்கிற ஆம்பிள்ளைகளையெல்லாம் அடக்க, வழிக்கு கொண்டுவர அவங்ககிட்ட பல டெக்னிக்குகள் இருக்கு. தேவை கொஞ்சம் பொறுமையும் புத்திசாலித்தமும்தான். நீ கவலையே படாதே. தைரியமா இரு. பாரேன்! ஒரே மாசத்தில உன் புருஷன் லைனுக்கு வர்லைன்னா என் பேரு பத்மா இல்லை." வித்யா நம்பிக்கையோடு பத்மாவின் கைகளை பிடித்து அழுத்தவும் வித்யாவின் ஆபீஸ் வந்து விட்டிருந்தது.  2007 விகடன் தீபாவளி மலர்  34. கிரீடம்   "ஏங்க. வெயிட்டர் காத்துக்கிட்டு இருக்கான். பில்லை பார்த்து பணத்தை வைச்சோமா, போனோமான்னு இல்லாம... உங்க இன்ஸ்பெக்ஷன், வெரி·பிகேஷனையெல்லாம் ஆபீஸ்ல வைச்சுகுங்க". என் மனைவி வார்த்தைகளை அம்புகளாய் பொழிந்தாள். சட்டென்று ஒரு ஐநூறு ரூபாய் தாளை உருவி அந்த அட்டைக்குள் சொருகினேன். வைத்த இரண்டாவது நொடியிலேயே அதை கொத்திக் கொண்டு போனான் வெயிட்டர். பொதுவாக பில்லுக்கு பணம் கொடுக்கும்போது என் முகம் விளக்கெண்ணை குடித்த மாதிரிதான் இருக்கும். ஆனால் அதற்கு மாறக என் முகத்தில் புன்சிரிப்பு தோன்றியதை என் மனைவி கவனித்துவிட்டாள். எங்களுக்குள் பல அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் என் மனதில் ஓடும் எண்ண அலைகளை எ·ப் எம் ரேடியோ மாதிரி கேட்க கூடியவள் என் மனைவி. கேட்டுவிட்டாள்! "அது வந்து... பில்லுல ஸ்பெஷல் ரவா மசாலாவுக்கான அமௌண்ட் விட்டிருக்கு. முப்பது ரூபா லாபம். அடிக்கிற கொள்ளையில கொஞ்சம் கொறைஞ்சாதான் என்ன?" "ஏங்க, சாப்ட பொருளுக்கு பணம் கொடுக்கலைன்னா தப்புங்க. பேதி வரும்". என் மனைவி எப்போதும் இப்படிதான்! ஒரு தத்துவம் சொல்லி கூடவே ஒரு சாபமும் கொடுத்து பயமுறுத்துவாள். "சரி.. சரி. இஷ்யூ பண்ணாத. போகும் போது கல்லாவுல எக்ஸ்ட்ரா பணம் கொடுத்துட்டு போகலாம்." "சுத்தம். நீங்க மிஸ்டர் க்ளீன்னு பேரு வாங்கிக்கிட்டு போயிடுவீங்க. அந்த வெயிட்டருக்கு வேலை போயிடும். இருங்க, நான் டீல் பண்ணறேன்". அந்த வெயிட்டரை தேடிப்பிடித்து மெல்லிய குரலில் சொன்னாள். அவன் அதிர்ந்து போய் ஓட்டமாய் ஓடி கூடுதல் பில் வாங்கி வந்தான். என் முகத்தில் விளக்கெண்ணெய் வழிந்தது. நெஞ்செல்லாம் பூரிக்க எனக்கு கை கொடுத்துவிட்டு போனான் அந்த வெயிட்டர். என்னை பொறுத்த வரை நேர்மையாய் இருப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை. நல்லவனுக்கு இது காலமில்லை. வல்லவனுக்குதான் காலம். ஏமாற்றுகிறவனுக்குதான் காலம்! வெறுப்புடன் ஸ்கூட்டரை உதைத்தேன். "ஆஹா! சபாஷ் ! பலே ! நான்தான் இன்னிக்கு நேர்மைக்கு வாரிசு. என் தலையில கிரீடம் இருக்கா பாரு?" என்றேன் கேலியாக. வித்யா ஏதோ சொல்ல வாயெடுக்கவும் அந்த வெயிட்டர் ஓடி வந்தான். "ஐயா! வாஷ் பேசின் கிட்டே இந்த செல்போன் இருந்துச்சு. உங்களுதா பாருங்க." தூக்கிவாரி போட்டது! ஆமாம்! எட்டாயிரம் ரூபாயில் போன மாசம்தான் வாங்கினேன். "ரொம்ப தாங்க்ஸ்பா" என்றேன். "தலையில கிரீடம் இருக்குங்க!" என்றாள் வித்யா புன்சிரிப்பாக.  (விகடன் தீபாவளி மலர் 2007) 35. இல்லையா? இருக்கா?   "இல்லே. இல்லே. எனக்கும் தன்யாவுக்கும் லவ் இல்லே. போதுமா? அம்மா, தன்யா என்னோட ப்ராஜெக்ட் அஸிஸ்டென்ட். ஜஸ்ட் ஒரு கலீக், அவ்வளவுதான்." ஆனந்த் வெடித்தான். அம்மாவும் பையனும் வாக்குவாதம் செய்வதை ராகவன் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டு மூன்று மாதங்களாகவே இந்த பிரச்சனை வருவதும் போவதுமாக இருக்கிறது. "அதுக்கில்லைடா. நீ ஆபீஸ் வேலையோட நிறுத்திக்கிட்டா பரவாயில்லையே. நேத்து ஸ்பென்ஸர் பிளாசாவில அவளுக்கு டி-சர்ட் வாங்கிக் கொடுத்தையாமே. ஒரு பாட்டில் கோலா வாங்கி மாத்தி மாத்தி குடிச்சீங்களாமே. பைக்ல போகும் போது அவ உன் தோள பிடிச்சுக்கிட்டு போறாளாமே." அம்மாவின் சரமாரியான குக்ளியில் ஆனந்த் கொஞ்சம் தடுமாறினான். "மஞ்ச கண்ணாடி போட்டுப் பார்த்தா எல்லாமே மஞ்சளாதான் தெரியும். யாரோ எதையோ பார்த்துட்டு, உன்கிட்டே பெருசா கதை கட்டி விட்டிருக்காங்க. தன்யா என் லை·ப் பார்ட்னரா வர சான்ஸே இல்லை. எனக்கும் அவளுக்கும் அடிக்கடி முட்டிக்கும். என் டேஸ்ட் வேற. அவ டேஸ்ட் வேற. சொன்னா புரிஞ்சுக்கோம்மா." "ஆனா உங்க மூவ்மெண்ட்ஸை பார்த்தா அப்படி தெரியலையே ஆனந்த். நான் சொல்லறதை கொஞ்சம் கேக்கறையா. தன்யாவோட மாமா எனக்கு போன் செஞ்சு காச் மூச்னு கத்தறாரு. எனக்கு இதெல்லாம் தேவையா? அவளைத்தான் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன்னு தீர்மானிச்சுட்டா தைரியமா சொல்லு. மத்ததை நான் பார்த்துக்கறேன்." ராகவன் இடையில் புகுந்தார். "அம்மா. அந்த தன்யா கீழ கார்லதான் இருக்கா. நீயே அவளை கூப்பிட்டு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா கேட்டுடேன்." தங்கை அர்ச்சனா திடீரென கொளுத்தி போடவும் சூடானான் ஆனந்த். "வேண்டாம். அசிங்கம் பண்ணாதீங்க. ரொம்ப அப்செட் ஆயிடுவா." ஆனால் ஆனந்த் சொன்னதை யாரும் கேட்கவில்லை. அர்ச்சனா ஓடிப்போய் தன்யாவை அழைத்து வந்தாள். "அங்கிள். ஆனந்த் என் பிரெண்ட். அவ்வளவுதான்! உங்க ரெண்டு பேருக்கும் லவ்வாமேன்னு கிட்டதட்ட எல்லாரும் கேட்டாச்சு. எனக்கும் சொல்லி சொல்லி அலுத்து போச்சு. நீங்க தாராளமா ஆனந்துக்கு பொண்ணு பாருங்க. நான் கல்யாணத்துக்கு வந்து மொய் எழுதிட்டு மூக்கு பிடிக்க சாப்பிட்டு போறேன். ஓகே. இந்த சேப்ட்டரை இதோட முடிச்சிக்குவோம்." என்று முடித்து வைத்தாள். வித்யா உடனடியாக நாலைந்து பெண் போட்டோக்களை தன்யாவிடம் காட்டினாள். அதிலிருந்து ஒன்றை தன்யாவையே செலக்ட் செய்யச் சொன்னாள். அடுத்த வாரம் பெண் பார்க்க போவதாக தீர்மானித்தார்கள். அன்று இரவே ஆனந்துக்கு தன்யாவிடமிருந்து போன் வந்தது. "ஆனந்த் நானும் ரொம்ப யோசிச்சு பார்த்தேன்டா. நாம எவ்வளவோ மறுத்தும் அவங்க விடாம அதையே சொல்றாங்கன்னா அதுல ஏதோ இருக்குன்னுதான் தோனுது. நமக்குள் அந்த கெமிஸ்ட்ரி இருக்குன்னுதான் நினைக்கிறேன். பேசாம அவங்க சொன்ன மாதிரியே லவ்விட்டா என்ன?" "தன்யா! நம்ம ரெண்டு பேருக்கும் எவ்வளவு ஒத்துமை பார்த்தியா! நானும் உங்கிட்ட இதயேதான் சொல்லணும்னு இருந்தேன். இல்லே இல்லேன்னு சொன்னாலும் இருக்கு இருக்குன்னு சொன்னீங்களே. ஆமா, இருக்கு. இப்ப என்ன பண்ணுவீங்கன்னு அவங்க முகத்தில கரியை பூசணும். ஐ லவ் யூடா."  (விகடன் தீபாவளி மலர் 2007)  36. தனியே.. தன்னந்தனியே   "ஒன். டு. த்ரீ. ·போர்..... ஹாப்பி பர்த் டே டு யூ. ஹாப்பி பர்த் டே டு அனிதா. ஹாப்பி பர்த் டே டு யூ." கண் விழித்த அனிதா, மிரண்டு போய் விலுக்கென எழுந்து உட்கார்ந்தாள். மாமனாரில் ஆரம்பித்து நாத்தனார் வரை அவள் படுக்கையை சுற்றி நின்று கொண்டு டாப் ஆ·ப் த வாய்ஸில் பாடினால், யார்தான் அரண்டு போகாமல் இருப்பார்கள்? ஆனால் சீக்கிரமே, 'இன்று உனக்கு பிறந்த நாள்டீ !' என்று புத்தி எடுத்துரைக்க, அனிதா மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனாள். "அனிதா! இந்தா... என் பிறந்த நாள் கி·ப்ட்!" நாத்தனார் ரம்யா மெகா சைஸ் டெடி பியரை நீட்டினாள். அதை தொடர்ந்து மச்சினன் பிரசன்னாவிடமிருந்து ஒரு ஆப்பிள் ஐபாடும் மாமியாரிடமிருந்து ஒரு சுடிதார் செட்டும் பிறந்த நாள் பரிசாக கிடைத்தன. "என்னடா விக்னேஷ்! எங்கடா உன் கி·ப்ட்?" மாமனார் சந்தானம் அதட்டி கேட்டார். "அவர் ராத்திரி பன்னிரெண்டு மணிக்கே கொடுத்துட்டார், மாமா!" என்று வெட்கத்தோடு, தன் விரலில் இருந்த வைர மோதிரத்தை காண்பித்தாள் அனிதா. "திருட்டுப் பயலே" என்று செல்லமாக சந்தானம் விக்னேஷ் முதுகில் செல்லமாக குத்த, வீடே கலகலப்பானது. அனிதா கல்யாணம் ஆகி இந்த வீட்டுக்கு வந்ததும் வரும் முதல் பிறந்த நாள் என்பதால் அதை வித்தியாசமாக அவள் அசந்து போகும் படி செய்ய வேண்டும் என்று மாஸ்டர் பிளான் போட்டிருந்தார் சந்தானம். அது சரியாக ஒர்க் அவுட் ஆனதில் அவருக்கு ரொம்ப திருப்தி. "சரி, எல்லாரும் பரிசு கொடுத்தாச்சு, மாமா, உங்க பரிசு எங்கே?" என்று உரிமையாக கேட்டாள் அனிதா. "என் பரிசுதானே... வெயிட்! எல்லாரும் ப்ரேக் ·பாஸ்ட் சாப்டுட்டு ரெடியாகுங்க." என்று சொல்லி, சஸ்பென்ஸ் வைத்தார். டிபன் முடிந்ததும், ஆவலாய் 'எங்கே மாமா அந்த கி·ப்ட்' என்று மீண்டும் கேட்க, சந்தானம் சிரித்துக் கொண்டே அனைவரையும் வாசலுக்கு அழைத்து வந்து காரில் ஏற்றினார். கார் பெசண்ட் நகரை நோக்கி விரைந்தது. ஒரு புதிய அபார்ட்மெண்ட் முன்னால் நின்றது. லி·ப்டில் ஏறி, இரண்டாவது மாடியில் ஒரு ப்ளாட் கதவை திறந்து காட்ட அனைவரும் அசந்து போயினர்! அனைத்து வசதிகளும் கொண்ட அற்புதமான ·ப்ளாட்! "அனிதா! இதுதான் உன் பிறந்த நாளுக்கு நான் தர்ற கி·ப்ட்! இனிமே இதுதான் உன் வீடு. நம்ப தி.நகர் ப்ளாட் ரொம்ப சின்னதும்மா. நீங்க இங்க கொஞ்சம் ·ப்ரீயா இருக்கலாம். வீக் எண்டுக்கு தி.நகர் வாங்க. நாங்களும் அப்பப்ப இங்க வர்றோம். என்ன, சந்தோஷமா? எப்படி என் கி·ப்ட்? பிடிச்சிருக்கா?" அனிதா திடீரென மௌனமானாள். கொஞ்ச யோசனைகளுக்கு பிறகு மெதுவாக, "மாமா நான் ஒண்ணு சொல்லட்டுமா. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளா நான் தனியாதான் வளர்ந்திருக்கேன். அக்கா, தங்கை, அண்ணா, தம்பி உறவு பற்றியெல்லாம் கேள்விதான் பட்டிருக்கேனே தவிர அந்த சுகத்தை அனுபவிச்சதில்லை. விக்னேஷ்தான் என் ஹஸ்பண்டுன்னு நிச்சயமான உடனே நான் ரொம்ப மகிழ்ந்த ஒரு விஷயம், இனிமே தனிமையில போரடிச்சுக்கிட்டு இருக்காம, வீட்டோட இருக்கற அம்மா, நாத்தனார், தம்பின்னு ஜாலியா இருக்கலாம்கிறதுதான். நீங்க என்னடான்னா, இப்படி தனியா இருக்க வைச்சிட்டீங்களே! வேண்டாம் மாமா. இவர் ஒன்பது மணிக்கு ஆபீஸ் போனா ராத்திரி எட்டு மணிக்குதான் திரும்பி வராரு. அது வரைக்கும் டி.வியும் பால்கனி காத்துமாக இருக்கறதுக்கு எனக்கு போரடிக்கும். ஒரு மியூசியம் மாதிரி அமைதியா இருக்கற வீடு எனக்கு அலுத்துப் போச்சு. சென்டரல் ஸ்டேஷன் மாதிரி கலகலப்பா இருக்கிற உண்மையான வீடுதான் மாமா எனக்கு வேணும். அது தி.நகர் வீடுதான். வாங்க போகலாம். சனி, ஞாயிறுகள்ல வேனா எல்லாருமா இங்க வரலாம்!" என்றாள்.  2007 விகடன் தீபாவளி மலர்  37. புதுசா ஒரு கடை   "வாங்க சார். என்ன ரொம்ப நாளா காணம்?" முகம் மலர்ந்த சிரிப்புடன் ராமநாதனை வரவேற்றார் பொன்னம்பல நாடார். ராமநாதன் அனிச்சையாக அவருக்கு பக்கத்தில், ஆனால் கடைக்கு வெளியே உப்பு மூட்டைக்கு பக்கத்திலிருந்த சிறிய ஸ்டூலில் உட்கார்ந்தார். மளிகைக் கடையிலிருந்து எல்லாம் கலந்து கட்டி வரும் கார வாசனை ராமநாதனுக்கு ரொம்பவும் பிடிக்கும். ஊரில் இருந்தால் தினமும் மாலை வேளையில் அரை மணியாவது பொன்னம்பல நாடார் கடையில் உட்கார்ந்து ஊர் உலக கதைகளை பேசா விட்டால் ராமநாதனுக்கு தலை வெடித்துவிடும். "ஒரு வாரத்துக்கு ஊருக்கு போயிருந்தேன் பொன்னம்பலம்" என்று பதில் சொல்லிவிட்டு கடையை நோட்டம் விட்டார். என்னவோ கஸ்டமர்கள் குறைந்து விட்டதாக அவருக்கு தோன்றியது. அதற்கு காரணம் இருந்தது. நாலு கடை தள்ளி திடீரென புதிதாக ஒரு டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் முளைத்திருந்தது. மூவாயிரம் சதுர அடியில் முழுவதும் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டு அனைத்து மளிகை சாமான்களும் கையெட்டும் தூரத்தில் இருந்தன. "பொன்னம்பலம். இன்னிக்கு வந்ததும் முதல் வேலையா அந்த டிபார்மென்ட்டல் ஸ்டோர்ஸ் போயிருந்தேன்." "எப்படி இருந்திச்சு. ஏ.சி. சுகம் கண்டீங்களாக்கும்." பொன்னம்பலம் வெள்ளந்தியாக சிரித்தார். "ஏசியெல்லாம் இருக்குது. ஆனா கண்ணை கட்டி காட்ல விட்டாப்ல இருக்குது. எது எங்க இருக்குதுன்னு சொல்ல ஆளு இல்லை. தேடித் தேடியே கால் வலிகண்டு போவுது. கைல பிளாஸ்டிக் தொட்டியை வைச்சிக்கிட்டு அலைய வேண்டியிருக்குது. இந்த சின்ன புள்ளைங்க வேற... ஜகடை வச்ச தள்ளு வண்டிய அங்கியும் இங்கியும் உருட்டிக்கிட்டு தொந்திரவு செய்யுதுங்க. இந்த மாதிரி கடையெல்லாம் வர விடக் கூடாதுங்க. நீங்களெல்லாம் ஒண்ணு சேர்ந்து எதிர்த்திருக்கணும். முதல்ல விலை குறைச்சு காட்டுவாங்க. இருநூறு சதுர அடில இருக்க வேண்டிய கடையை ஏகத்துக்கும் பரப்பி அதுக்கு ஏ.சி.யும் போட்டு பிளாஸ்டிக் தொட்டி, ஜகடை வண்டிக்கெல்லாம் செலவு செஞ்சு கடைசில அந்த செலவை நம்ம தலைலதான் கட்டுவாங்க." "அது வந்துங்க...." "இருங்க....இதுல இன்னொரு விஷயம் பாருங்க. எல்லா பொருட்களையும் கவர்ச்சியா அடுக்கி வைச்சிருக்காங்களா? தேவையா இல்லையா என்பதை யோசிக்காம நாம பாட்டுக்கு கூடையில அள்ளிப் போட்டுகிட்டு வந்திடறோம். பில்லு போடும் போதுதான் கொஞ்சம் உறைக்குது. திரும்பி கொடுக்க வறட்டு கௌரவம் இடம் கொடுக்குமா? சரி, பரவாயில்லை போன்னு மனசை சமாதானம் செஞ்சு, வாங்கிக்கிட்டு வந்திடறோம். இது தேவையா, சொல்லுங்க. எனக்கு தெரிஞ்ச வக்கீல் இருக்காரு. நீங்க உம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க. கேசு போட்டு, நாலே நாள்ல கடையை இழுத்து மூட நானாச்சு!" "அப்படீங்களா? உங்கள மாதிரி ஆசாமிங்க இங்க வாங்க. அந்த மாதிரி ஸ்டைலு விரும்பறவங்க அங்க போகட்டும்." "அதுக்கில்லை பொன்னம்பலம். நீங்க இப்ப சும்மா இருந்தீங்க, நாளைக்கு உங்க கடையையே ஸ்வாகா பண்ணிடுவாங்க, ஆமா!." "அப்படியெல்லாம் ஆகாதுங்க! உங்களுக்கு ஒரு விஷயம் சொல்ல மறந்திட்டேன். அது தெரியாம பேசிக்கிட்டு இருக்கீங்க. அந்தக் கடை போட்டிருக்கிறது வேற யாருமில்ல... நம்ம மருமக பையன்தான். ஆங்.. கஸ்டமர்களை கவனிக்க ஆளு இல்லேன்னு சொன்னீங்களே, அதை சரி செய்யச் சொல்லறேன். சரீங்களா?" ராமநாதன் அசடு வழிந்தார்.  2007 விகடன் தீபாவளி மலர்  38. நடு இரவில்   "சொல்லும்மா, என்ன ஆச்சு?" நூற்று பத்து என்று காட்டிய தெர்மா மீட்டரை உதறிக் கொண்டே கேட்டார் டாக்டர். "இவரு என் புருஷங்க. ஊரை விட்டு பத்து மைல் தள்ளியிருக்கிற கரும்பாலையில வேலை பார்க்கிறாரு. தெனமும் வீட்டுக்கு லேட்டாதான் வருவாரு. நேத்து ராவு ரெண்டு மணி ஆயிட்டு. இவர காணும். நான் பதறிப் போய் நாலு ஆளுகள கூட்டிக்கிட்டு ரோட்ல தேடிக் கிட்டே போனா நல்லூர் கேட்டாண்ட இவரு ரோட்டு மேல கெடக்காரு, சைக்கிளு வாய்கால்ல கவுந்து கெடக்குது. இவர பேயடிச்சிடுச்சுங்க" "என்னது, பேயா ?" அதிர்ந்தார் டாக்டர். "ஆமாங்க மெய்யாலுமா! ஏங்க, நீங்களே சொல்லுங்களேன்." மனைவி கொடுத்த தைரியத்தில் தலையை சுற்றி கட்டியிருந்த துண்டை சற்று தளர்த்திக் கொண்டு மெதுவாக பேச தொடங்கினான் முருகேசன். "நேத்து பாக்டரியை விட்டு கெளம்ப பத்து ஆயிருச்சுங்க. நாளைக்கு அம்மாசி வருதில்ல, வழியெல்லாம் கும்மிருட்டு! கக்கன் பாலத்துக்கிட்ட ஒரு தொண்டு கெளவி குந்திக்கினு உட்கார்ந்த வாக்கில ரெண்டு கையாலும் தள்ளிக்கிட்டே ரோட்டை கிராஸ் பண்ணிச்சு. காதுல பெருசு பெருசா பாம்படம். நெத்தில பட்டையா துண்ணூறு. வெத்தில போட்ட ஒண்ணு ரெண்டு காவிப் பல்லுன்னு பயங்கரமா இருந்திச்சு. சரி, ராத்திரில கிளவி போகுதுன்னு மனசை தேத்திக் கிட்டு சைக்கிளை வேகமா விட்டேன். மனசுல அந்த கிளவி வந்துகிட்டும் போய்கிட்டும் இருந்தா. நம்ம நல்லூர் ரெயில் கேட் தாண்டி கொஞ்ச தூரம் போயிருப்பேங்க... சொன்னா நம்ப மாட்டீங்க, அந்த கெளவி மறுபடியும் ரோட்டை க்ராஸ் பண்ணுது. ஆனா இந்த முறை இடது வலமா! அப்படி கிராஸ் பண்றப்ப, ஒரு தடவ என்னய பார்த்து சிரிச்சுது பாருங்க... யம்மாடி! என் ஈரக்கொலையே வெளியில வந்த மாதிரி ஆயிட்டு. அப்ப அலறிக்கிட்டு சைக்கிளோட விளுந்தவன்தான்...!" டாக்டருக்கு புரிந்து விட்டது. இது மென்டல் ஹலூசினேஷன். அந்த கிழவியை பற்றியே ஓயாது நினைத்துக் கொண்டே வந்திருக்கிறான். பயத்தின் உச்சத்தில், அந்த கற்பனையே ஒரு முப்பரிமாண பிம்பமாக அவனுக்கு தோன்றியிருக்கிறது. "முருகேசன்! பேய், பிசாசெல்லாம் ஒண்ணுமில்லே! நீங்க ரொம்ப பயந்ததினால, பிரமை ஏற்பட்டிருக்கு. பேயெல்லாம் சுத்த ரீல். நம்பாதீங்க. இந்த மாத்திரைகளை சாப்பிடுங்க. நல்லா ரெஸ்ட் எடுத்துக்குங்க. ரெண்டு நாள்ல சரியாயிடுவீங்க." மறுநாளும் காய்ச்சல் தொடர்ந்தது. உடனடியாக பேயோட்டுவதற்கு பூசாரி வரவழைக்கப்பட்டார். முருகேசனுக்கு வேப்பிலையடிக்கப்பட்டு நாலா புறமும் எலுமிச்சைபழங்கள் நசுக்கி எறியப்பட்டன. ஒரு வார லீவுக்கு பிறகு ட்யூட்டியில் சேர்ந்த முருகேசனின் நண்பன் சரவணனுக்கு விஷயம் தெரிந்து ஓடோடி வந்தான். "மடையா! அந்த கெளவி பேயுமில்லே. பிசாசுமில்லே! நல்லா ஜம்னு உசுரோடதான் இருக்குது. நீ ரெண்டு இடத்துல பார்த்ததும் ஒரே கெளவிதான். மொதல்ல பார்த்தது அது பஸ்ல ஏறத்துக்கு முன்னால. அடுத்தது, அது பஸ்ஸை விட்டு இறங்கிப் போகும் போது." முருகேசனுக்கு உடனே காய்ச்சல் விட்டுவிட்டது.  2007 விகடன் தீபாவளி மலர்  39. போராட்டம்   "ஐயா. என் பாட்டிக்காக உங்க குழு பிரார்த்தனை செய்யணும். முடியுங்களா?" "நிச்சயமா முடியும். விவரங்களைச் சொல்லுங்க" வெள்ளை தாடியும் வெற்றிலை சிரிப்புமாக என்னை வரவேற்று தனக்கு முன் இருந்த நாற்காலியை காட்டினார் அந்த பிரார்த்தனை கிளப்பின் தலைவர். நான் யோசனையோடு மெதுவாக ஆரம்பித்தேன். "என் அம்மா வழி பாட்டி பேரு சித்ர பானுங்க. பேருக்கு ஏத்த மாதிரி எழுதி வெச்ச சித்திரம் மாதிரி இருப்பாங்க. யார் கொள்ளிக் கண் பட்டுச்சோ இருவது வயசுல அவங்க விதவையானது மகா கொடுமைங்க. நண்டும் சிண்டுமா ரெண்டு குழந்தைங்க. உறவுக்காரங்க ஒருத்தர் கூட உதவிக்கு வர்ல. ஆனா பாட்டி மொட்டையடிச்சுக்கிட்டு வெள்ளைப் புடவை கட்டிக்கணும்கிறதுல எல்லோரும் ஒத்துமையா இருந்தாங்க. பாட்டிக்கு நெஞ்சுரம் ஜாஸ்திங்க. எல்லா சடங்குகளும் முடிஞ்சதும் ரெண்டு குழந்தைகளோட தனியாக சென்னைக்கு வந்துட்டாங்க. திருவல்லிக்கேணி ஒரு ஒண்டு குடித்தனத்தில ரூம் புடிச்சாங்க. வீடுவீடா சமைக்கப் போனாங்க. தான் செஞ்ச பட்சணங்களையும் அப்பளங்களையும் எடுத்துக் கிட்டு கால் வலிக்க வலிக்க வீடு விடா போய் வித்தாங்க. எல்லா அவமானங்களையும் தனக்குள்ள மென்னு முழுங்கினாங்க." சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, மீண்டும் தொடர்ந்தேன்... "கொஞ்சம் தலை நிமிர்ந்தவங்களுக்கு என் அம்மாவால கஷ்டம் வந்திச்சு. வரதட்சனை கொடுமையை எதிர்த்து போராடாம கோழைத்தனமா எங்க அம்மா தற்கொலை செஞ்சுக்கிட்டாங்க. அந்த கொடுமைகாரங்களை சும்மா விடக்கூடாதுன்னு பாட்டி வக்கீல் வீட்டுக்கும் கோர்டுக்கும் நாயா பேயா அலைஞ்சாங்க. இதுக்கு மத்தில என் மாமா, தானே ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு 'இனிமே உனக்கும் எனக்கும் ஒட்டோ உறவோ இல்லை'ன்னு ஒதுங்கிக்கிட்டாரு. ஆனா பாட்டி அதுக்கும் அசரல. 'டேய் சங்கர். நீ ஜெயிக்கனும்டா! அதை நான் பார்க்கணும்டா!' ன்னு அடிக்கடி சொல்லுவாங்க. என்னை நல்லா படிக்க வைச்சாங்க. 'உன் தரித்திரம் உன் பேரனையும் பாதிக்கும்டி சனியனே' என்ற அக்கம் பக்க ஏச்சு பேச்சையெல்லாம் தூக்கி எறிஞ்சு என்னை ஆசை ஆசையா வளர்த்தாங்க. ஆனா விதிவசத்தால நானும் என் பாட்டிக்கு ஒரு அதிர்ச்சியை கொடுத்தேங்க. நானும் தற்கொலைக்கு முயற்சி பண்ணேங்க" என் குரல் கம்மவும் அந்த பெரியவர் ரெடியாக இருந்த ஒரு க்ளாஸ் தண்ணீரை நீட்டினார். முழு கிளாஸையும் ஒரே மூச்சில் மடக் மடக்கென குடித்தேன். நெஞ்சை நீவிவிட்டுக் கொண்டு விட்டதில் தொடர்ந்தேன். "பருவ வயசு காதல் என்னை பாடாய் படுத்திச்சு. அது திடீர்னு தோத்துப் போனதுல எனக்கு உலகமே முடிஞ்ச மாதிரி தோணிச்சு. என் தற்கொலை முயற்சிய பாட்டி பார்த்துட்டாங்க. அவ்வளவுதான்! காளி அவதாரமே எடுத்தாங்க. என்னை நார்நாரா கிழிச்செறிஞ்சாங்க. அப்போதான் தன் முழு கதையையும் சொன்னாங்க. என் வெற்றிலதான் அவங்க வாழ்வோட அர்த்தம் இருக்குதுன்னு புரிய வைச்சாங்க. நான் அப்போ எழுந்தவன்தாங்க. படிச்சேன். பட்டம் வாங்கினேன். இன்னிக்கு ரொம்ப வசதியா இருக்கேன். அதுவும் தெய்வத்துக்கு பொறுக்கலங்க. பாட்டிக்கு கேன்சர் நோய் வந்திச்சு. முதலில் கர்பப் பையை எடுத்தாங்க. அப்பறம் மார்ல கத்தி வச்சாங்க. இப்ப எலும்புல இருக்குதாம். வலி வேதனையில அவங்க கத்தறத என்னால தாங்க முடியலங்க. நேத்து என் பாட்டி சொன்னதை கேட்டு துடிச்சு போயிட்டேங்க." "டேய் சங்கர். போறும்டா. நான் பார்க்கவேண்டியதெல்லாம் பார்த்தாச்சு. இனிமே இந்த வலிய என்னால தாங்கமுடியாதுடா. ஒரு பாட்டில் விஷம் இருந்தா கொடு. பேயிடறேன்னாங்க. சாகறது கோழைத்தனம்னு சொன்னவங்களே செத்துப் போகணும்னு சொல்லறாங்கன்னா எவ்வளவு வேதனை அவங்களுகுள்ள இருக்கும்? அதுனால நான் உங்களை கெஞ்சி கேட்டுக்கறேன் அவங்க சீக்கிரம் செத்துப் போகணும்னு பிரார்த்தனை பண்ணுவீங்களா?"   2007 விகடன் தீபாவளி மலர்  40. தேவை ஒரு குடும்பம்   "மேடம். கொஞ்சம் வித்தியாசமா முதல்ல உங்களை பத்தி எனக்கு தெரிஞ்சதை சொல்லிட்டு அப்பறம் என்னை பத்தி சொல்லறேனே?" என்ன தைரியம் இந்த பெண்ணுக்கு! 'நீ யாரம்மா? உனக்கு என்ன வேணும்?' என்று கேட்டதற்கு இப்படியா பதில் சொல்வாள் ஒருத்தி ! "சரிம்மா. உன் வழிக்கே வரேன். சொல்லு" என்றேன். ஏதோ பீடிகை போடுகிறாள். என்னவென்று பார்ப்போமே! "உங்க பேரு விஜயலஷ்மி. நீங்க ரொம்ப துணிச்சலானவங்க. ஆசையான கணவன். அமைதியான வாழ்க்கை. ஆனா கல்யாணம் ஆன ஆறாவது வருஷத்திலேயே திடீர்னு கணவர் காலமாயிட்டாரு. மகன் போன சோகத்தை சொல்லியே எல்லா சொத்தையும் பிடுங்கிக்கிட்டு உங்க மாமனார் உங்களை வீட்டைவிட்டு தொரத்திட்டாரு. இப்ப நீங்க டீச்சர் வேலை பார்த்துக்கிட்டு, இந்த லேடீஸ் ஹாஸ்டல்ல தனியா இருக்கீங்க. என்ன சரியா?" "சரிம்மா. எனக்கு தெரிஞ்ச விஷயத்தை எனக்கு ஏம்மா சொல்லற ? என்ன ஏதாவது ஜோஸ்யமா? எனக்கு அதில சுத்தமா நம்பிக்கையில்லை." "இருங்க. உங்களுக்கு சோமசேகரை தெரியுமா? இந்த தெரு முனை பாங்கில காஷியரா இருக்காரே?" "ம்.. தெரியும். அதுக்கென்ன இப்போ?" "அவரோட கதையும் இதே மாதிரிதான். தன் மனைவியை உயிருக்கு உயிரா நேசிச்சாரு. அவரு கீழ் சாதி. அவங்க மேல் சாதி. விடுவாங்களா? ரெண்டு பக்க உறவுக்காரங்களும் சாதிப் பிரச்சனையை ஊதி ஊதி பெரிசாக்கினாங்க. அதிலேயே மனசு ஒடிஞ்சு நோவு வந்து அந்தம்மா செத்து போனாங்க. தன் மிச்ச வாழ்கையை குடும்பத்துக்காகவே அர்ப்பணிச்சுக்கிட்டு, மறு கல்யாணமே பண்ணிக்காம தனியா வாழ்ந்துக்கிட்டு இருக்காரு." "நீ என்னம்மா சொல்லவர?" "இருங்க. என் பேரு இந்திரா. போன வருஷம்தான் கல்யாணம் ஆச்சு. அதுக்கு அப்பறம்தான் கணவன் மனைவி உறவோட முக்கியத்துவம் புரிஞ்சுது. ஒரு வயதான தம்பதியரை எதேச்சையா சந்திச்சேன். அப்ப அந்த தாத்தா சொன்ன வார்த்தைகள் என்னை புரட்டி போட்டிடுச்சு. 'கணவன், மனைவி, குழந்தைகள்ங்கிறது ஒரு முக்கோணம் மாதிரி. உன் பாதுகாப்புக்கு எப்படி வாழ்க்கைத் துனை தேவையோ அந்த மாதிரி குழந்தைகளுக்கும் அப்பா அம்மா அவசியம் வேணும். அதை யாரு ஈடு செஞ்சாலும் மனசுல அது ஒரு ஏக்கமாதான் இருக்கும்'ன்னாரு. எனக்கு இப்ப நாலு மாசம். இதுவரை எனக்கு வராத அம்மா ஏக்கம், கன்சீவ் ஆகியிருக்கிற இந்த நேரத்துல அதிகமா மனசை அழுத்துது. டெலிவரி சமயத்துல தோள் சாஞ்சுக்க எனக்கு ஒரு அம்மா வேணும். அதுனால...." "அதுனால.... நான் என்னம்மா பண்ணனும்." "நீங்க, நான், சோமசேகர் மூணு பேரும் ஒண்ணா இணையணும். இனி இருக்கும் காலத்தை நீங்க மகிழ்ச்சியோடும் தன்னம்பிக்கையோடும் வாழனும். தெனம் தெனம் தனிமையில புழுங்கிக்கிட்டு இருக்கிற சோமசேகர் ஒரு புது வாழ்வு வாழணும். எனக்கு அம்மா இல்லாத குறையை நீங்கதான் தீர்த்து வைக்கணும். அந்த சோமசேகர்தான் இந்த இந்திராவோட அப்பா. நீங்க வார்த்தைக்கு வார்த்தை அம்மான்னு சேர்த்து என்னை கூப்பிட்டீங்க. இப்ப நான் அப்படி கூப்பிடலாமா? அம்மா! எங்க அப்பாவை நீங்க கல்யாணம் செஞ்சுப்பீங்களா?" 2007 விகடன் தீபாவளி மலர்  41. நதியின் குற்றமா?   காஸ்ட்லியான சில ஆம்ப்யூல்களை உடைத்து விட்டேன். எதையோ நினைத்துக் கொண்டு ·பிரிட்ஜிலிருந்த ஒரு ட்ரேயை நகர்த்தினேன். முந்திரிக் கொட்டை மாதிரி முன்னால் இருந்த அந்த கண்ணாடி குப்பிகள் பிதுங்கி தொப்பென விழுந்தன. கிழம் வந்தவுடன் அந்த ஸ்மெல்லை வைத்தே கண்டுபிடித்துவிடும். 'காள் காள்' என்று ஹை டெசிபலில் விடாமல் டாபமர்மன் மாதிரி கத்தும். 'தீர்ந்தது உன் கணக்கு' என்று சீட்டை கிழிக்கும். இதோடு ஆறே மாசத்தில் நான்கு இடங்களில் வேலை பார்த்தாகிவிட்டது. எல்லாம் இந்த மாதிரி சேல்ஸ்மேன் வேலைகள்தான். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. நானும் இஞ்சினீயரிங் காலேஜில் படித்தவன்தான். படிக்கும் போது வருங்காலத்தில் பெரிய உச்சாணி கொம்பில் இருப்பது மாதிரி கனவுகளோடு இருந்தேன். த்ரிஷாவும் அசினும் என் கனவுகளில் அடிக்கடி வந்து 'என்னை கல்யாணம் செய்து கொள்ளேன்' என்று அடம் பிடித்திருக்கிறார்கள். படிப்பு முடியும் சமயத்தில்தான் நான் எதிர்பார்க்காத டிராஜிடி க்ளைமாக்ஸ் என் வாழ்வில் வந்தது. என்னோடு படித்தவர்களுக்கெல்லாம் காம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைத்து சென்னை, பெங்களூர், கொச்சின் என்று போய்விட்டார்கள். நான் இன்னும் தஞ்சாவூரின் சந்து பொந்துகளிலேயே குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஏன் நல்ல வேலை கிடைக்க மாட்டேன் என்கிறது? புரியவே இல்லை. நான் படிப்பில் ஆவரேஜ்தான். ஆனால் என்னைவிட ஆவரேஜ்கள் நல்ல வேலையில் சேர்ந்திருக்கிறார்களே? அது எப்படி? அவர்களின் அப்பாக்கள் அங்கே இங்கே ஆள் பிடித்து, பணத்தால் அடித்து, இன்·புளுயன்ஸ் செய்து வேலை கிடைக்க மெனக்கெட்டிருக்கிறார்கள். ஆனால் என் அப்பா அப்படியெல்லாம் செய்யமாட்டாராம். அப்பா நிழலில் மகன் சுகம் காணக் கூடாதாம். தானும் ஒரு இன்·போசிஸ் நாராயண மூர்த்தி என்ற நினைப்பு அவருக்கு. போன வாரம் வீட்டில் ஏக ரகளை ஆனது. அம்மா ஓவென அழுதாள். என்னை இந்த உலகம் வஞ்சித்து விட்டது. கடவுள் கூட வேண்டியர், வேண்டாதவர் பார்க்க ஆரம்பித்துவிட்டார். நான் இனி எதற்கு வாழ வேண்டும் ? செத்துப் போய்விடலாம் என்று தீர்மானித்துவிட்டேன். கிழம் வந்து அதே மாதிரி கத்தியது. நானும் பதிலுக்கு கத்தினேன். கஸ்டமர்கள் வேடிக்கை பார்த்தார்கள். நிறைய அட்வைஸ் செய்தார்கள். 'நீயுமாச்சு உன் வேலையுமாச்சு' என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். சரி, எப்படி சாவது? நீண்ட யோசனைகளுக்கு பிறகு ரயில் முன் பாய்ந்து உயிரை விடுவது என்று தீர்மானித்தேன். ரெயில்வே டிராக்கை நோக்கி நடையை செலுத்தினேன். திடீரென எனக்கு முன்னே ஒரு சிறுவன் பொம்மை துப்பாக்கியை நீட்டினான். "அங்கிள் நீங்கள் ஜெயிச்சுட்டீங்களா? இல்லை, தோத்துடீங்களா?" "நான் தோத்துட்டேன்ப்பா." தோள்களை குறுக்கி கைகளை விரித்தேன், வேலு நாயக்கர் மாதிரி. "அப்டீன்னா, நீங்க ஜெயிக்கப் போறீங்கன்னு அர்த்தம்." சிறுவன் கலகலவென சிரித்தான். "சரி. ஜெயிச்சுட்டேன்னா?" "இன்னும் ஜெயிக்கப் போறிங்கன்னு அர்த்தம்" என்று சொல்லிக் கொண்டே ஓடிப் போய் விட்டான். என் பொட்டில் அறைந்த மாதிரி இருந்தது. 'தோல்வியைக் கூட பாசிடிவ்வாக யோசி' என்று சொல்லிவிட்டு போய்விட்டானே? 'டேய்! அந்த பையன் சொல்வது என்ன? நான் சொல்வதைக் கேள். முதலில் உன்னை சரி செய்து கொள். பிறகு மற்றவர்களில் குறை காணலாம்' என்று உள்மனது சொன்னது. ஆமாம்! என் படகில் ஆயிரத்தெட்டு ஓட்டைகள்! அதைவிட்டு விட்டு நதியை குறை சொன்னால் எப்படி? இனி நான் புது மனிதன். ஜெயிக்கப் போகிறேன். இன்னும் ஜெயிக்கப் போகிறேன். என் நடையை கூட்டினேன், நம்பிக்கையோடு.  (விகடன் தீபாவளி மலர் 2007) 42. அந்த ஒரு கேள்வி   அந்த வயதானவர் எங்களையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். "சேகர். அங்க நிக்கிறாரே அவர் யார்றா?" "என்னடா. இவரை தெரியாது? எங்க ஷூட்டிங் நடந்தாலும் அங்க வந்திடுவாரு. என்ன, சான்ஸ் கேட்கத்தான். விட்றா. நம்ம வேலைய பார்போம். ஆர்டிஸ்ட் சீக்கெளன்ஸ் ரெடி செஞ்சுட்டியா," ஆனால் என்னால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியவில்லை. அவர் பார்த்த பார்வை ஏதோ சொல்லியது. என் பார்வையின் கூர்மையை உணர்ந்ததும் என்னை நோக்கி வந்தார். "ஸார். வணக்கம். இன்னிக்கு எனக்கு எதாவது ரோல் கிடைக்குமா?" ஒல்லியான தேகம். முள்ளுமுள்ளான தாடி ஒரு வாரத்தை சொல்லியது. போட்டிருப்பது நிச்சயம் அவர் சட்டையாக இருக்காது. அன்றைய ஷூட்டிங் ஷெட்யூலை புரட்டினேன். அவருக்கு ஏற்ற ரோலை தேடியதில்.... இருந்தது. ஆனால் டைரக்டர் அல்லது ப்ரொடக்ஷன் மேனேஜரை கேட்காமல் சொல்ல முடியாது. "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. டைரக்டர் வரட்டும். " போய் தன் பழைய இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு, வருவோரையும் போவோரையும் பார்த்துக் கொண்டிருந்தார். டைரக்டர் வர மணி பத்தாகி விட்டது. வந்ததும் வராததுமாய் அந்த கேரக்டரை சொல்லி அவரைக் காட்டி கேட்டேன். அவரும் கொஞ்சம் யோசித்துவிட்டு சரியென சொல்லிவிட்டு ஃபீல்டுக்குள் போய்விட்டார். மிகுந்த உற்சாகத்தோடு அவரை அழைத்துச் சொன்னேன். "நிச்சயமா உண்டா?" அவர் கேள்வி புதிராக இருந்தது. "ஏன் கேட்கிறீங்க. டைரக்டரே ஓக்கே சொல்லியாச்சு. நிச்சயம் உண்டு." "அப்ப, நான் டிபன் சாப்பிட்டுக்கலாம் இல்லையா." அந்த பதிலில் பொதிந்திருந்த அவலம் என்னை என்னவோ செய்தது.  2006 நவம்பர் 19 கல்கி    43. க்ருஹபிரவேசம்   ராஜாராமன் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஒரு வாரம்தான் இருக்கிறது, க்ருஹபிரவேசத்திற்கு. இன்னும் பாதிக்கு மேல் வேலை பாக்கி இருப்பது மாதிரி தோன்றியது. ஆனால் எதிர் ஃப்ளாட்டோ 'இந்தா சாவியை பிடி' என்கிற மாதிரி பக்காவாக இருந்தது. கதவுகள் வைக்கப்படாத ஜன்னல் வழியே எட்டிப் பார்த்ததில் கான்ட்ராக்டர் செல்வம் மேலே வந்து கொண்டிருப்பது தெரிந்தது. "என்னப்பா இருந்து இருந்து சக்திக்கும் மீறி ஒரு ஃப்ளாட்டை வாங்கறேன். ஐநூறு பத்திரிக்கைக்கும் மேல வச்சிருக்கேன். எனக்கு பிபி எகிறுது" "ஸார் எல்லாம் ரெடியா இருக்கு. மூணே நாள்ல பக்காவா ரெடியாயிடும். உங்க கிட்ட ஒரு விசயம் பேசணும்." "என்ன சீக்கிரம் சொல்லு. அது ஏறிடுச்சி இது ஏறிடுச்சுன்னு எக்ஸ்ட்ரா பணம் கேட்டே, தெரியும் சேதி. என்னால முடியாது. ஆமா, இப்பவே சொல்லிட்டேன்." "கொஞ்சம் பொறுங்க. நான் சொல்ல வந்ததை மொதல்ல கேளுங்க. அம்மா நீங்களும் கேட்டுக்குங்க. அக்ரிமெண்டுபடி மொசைக் தரையும், ரெண்டு பாத்ரூம்களுக்கும் சிமெண்ட் டைல்ஸ¤தான் போட்டிருக்கு. மத்த ஃப்ளாட்காரங்கள்லாம் வழவழா பளபளான்னு ஸ்பார்டெக் டைல்ஸ் போட்டுகிட்டாங்க. ரொம்ப அதிகமில்லே, வித்தியாச பணத்தை மட்டும் நீங்க கொடுத்தா போதும். என்ன சொல்றீங்க?" ராஜாராமன் கேள்வியாக இந்திராவை பார்த்தார். அதில் வேண்டாம் என்று சொல்லிவிடு என்ற மாதிரியே இருந்தது. "நீங்க இப்ப ஒடனே சொல்லணும்னு அவசியமில்லே. நாளைக்கு காலைல பத்து மணிக்கு சொன்னா போதும். நான் வியாழக்கிழமை சாவி கொடுத்திடுவேன்." "வேணாம்பா. நீ அக்ரிமெண்ட் படியே முடிச்சுக் கொடு. எந்த மாற்றமும் வேணாம். இப்பவே வேலைய ஆரம்பி. எனக்கு புதன் கிழமை ரெடியாகிடணும். என்ன சரியா?" "சரி. உங்க இஷ்டம். மொசைக் போட்ட பிறகு கிரானைட்டுக்கும் மார்பிளுக்கும் ஆசை பட்டீங்கன்னா டபுள் செலவு. ஆமா, சொல்லிட்டேன். கொஞ்சம் யோசனை செஞ்சு சொல்லுங்க." ராஜாராமனோ மறு யோசனைக்கே இடம் கொடுக்காமல் தீர்மானமாக சொல்லிவிட்டு கீழே இறங்கலானார். திரும்பிப் பார்த்ததில் இந்திரா பதிலேதும் பேசாமல் வந்து கொண்டிருந்தாள். அவளுக்கு இந்த முடிவில் இஷ்டமில்லை என்று வெளிப்படையாக தெரிந்தது. மோட்டார் பைக்கை ஸ்டார்ட் செய்யும் போது மெதுவாக ஆரம்பித்தாள். "ஏங்க. இவ்வளவு செலவு செஞ்சு வீடு வாங்கறோம். தளம் போடறதுல எதுக்குங்க கொறை வைக்கணும். சரி, வேண்டாம்ன்னே வச்சிக்கிட்டாலும் எவ்வளவு வித்தியாசம்ன்னு கேட்டிருக்கலாம் இல்லையா?" ராஜாராமன் சிரித்துக் கொண்டார்." இந்திரா. நான் ஏதோ காசை மிச்சம் செய்யணும்னு சொன்னேன்னு நெனைக்கிறையா? இல்லம்மா. என்னோட அப்பா அம்மாவும் உன்னோட அப்பா அம்மாவும் நம்ம வீட்டுக்கு அடிக்கடி வருவாங்க. தங்குவாங்க. அவங்களுக்கு வழவழா தரையெல்லாம் ஒத்து வராதும்மா. நான் வேலை பார்க்கற நர்சிங் ஹோம்ல வர்ற வயசானவங்கள்ல நெறைய பேரு பாத்ரூம்ல வழுக்கி விழுந்து காலை ஒடைச்சிக்கிட்டவங்கதாம்மா. அதனாலதான் சொல்றேன்." இந்திரா பைக்கில் உட்கார்ந்து கொண்டு வயதையும் மீறி ஒரு கையால் கணவனை இறுக அணைத்துக் கொண்டாள்.   மங்கையர் மலர் - மார்ச் 2007   44. பூதரேக்கலூ   "ஸார். ஒரு சின்ன ரிக்வெஸ்ட். எனக்கு அரை கிலோ பூதரேக்கலூ வாங்கி வரமுடியுமா? ப்ளீஸ்..." என் காபினுக்குள் வந்தவன் எங்கள் வங்கியின் சம்பள செக்ஷனில் இருப்பவன் என்பது மட்டும் தெரியும். எங்கள் வங்கியின் டிரைனிங் காலேஜ் ஹைதராபாதில் இருக்கிறது. யாராவது டிரைனிங் போய் கொண்டே இருப்பார்கள். அந்த சமயத்தில் அங்கிருந்து ஏதாவது வாங்கிக்கொண்டு வர சக நண்பர்கள் சொல்லுவது வழக்கம். பணமும் அந்த ஸ்வீட் கடை முகவரியும் கொடுத்தான். பூதரேக்கலூ என்பது ஹைதராபாத்தின் ஸ்பெஷல் ஸ்வீட். பார்ப்பதற்கு சுற்றி வைத்த பேப்பர் மாதிரி இருக்கும். அப்படியே சாப்பிட வேண்டும். அருமையாக இருக்கும். என்னோடு நன்கு பழக்கம் இல்லாத போதிலும் என்னுடைய உயர் பதவியையும் பொருட்படுத்தாது என்னை ஸ்வீட் வாங்கி வரச் சொன்ன அவன் தைரியத்தை என்னவென்று சொல்வது? 'சரி, ஒழியறான் போ. சம்பள செக்ஷனில் இருக்கிறான். நாளைக்கு ஏதாவது ஒரு வழியில் உபயோகமாக இருக்கும்' என்று யோசித்து விட்டு விட்டேன். ஆனால் அவனின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் எரிச்சலை உண்டாக்கின. நான் கிளம்பும் அவசரத்தில் இருந்தபோது அசடு வழிய நின்று ஞாபகம் மூட்டினான். அதுக்கூட பரவாயில்லை. ஹைதாராபாத்தில் டிரைனிங் முக்கியமான கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கும் போது எனக்கு எஸ்.எம்.எஸ். அவனிடமிருந்து வந்தது. ரிமைன்டர். எனது பொறுமை எல்லை தாண்டிவிட்டது. சென்னை வந்ததும் மற்ற எல்லாருக்கும் அவரவர்கள் பொருட்களை ப்யூன் மூலம் கொடுத்தனுப்பினேன். வேண்டுமென்றே பூதரேக்கலூவை என் டிராயரில் வைத்து பூட்டிவிட்டு உயர் அதிகாரிகள் மீட்டிங்குக்கு போய்விட்டேன். ஐந்து மணிக்கு என் காபினுக்கு திரும்பி வந்த போது பழியாக காத்திருந்தான். பொரிந்து தள்ளிவிட்டேன். "ஸாரி சார். என் மீதுதான் தவறு. மன்னிக்கவும். ஆனால் ஒன்று. நீங்கள் நினைப்பது மாதிரி நானோ என் வீட்டு மக்களோ சாப்பிட்டு மகிழ இல்லை." அவன் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது. கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு.... "ஸார். எனக்கு 90 வயது அப்பா இருக்கிறார். பெரிய குடும்பம். நாங்கள் பிறந்தது வளர்ந்தது எல்லாமே செகந்திராபாதில்தான். அடுத்த வேளை சோற்றுக்குக்கூட என்ன வழி என்ற நிலமையில்தான் நாங்கள் வளர்ந்தோம். இப்போது வசதியாக இருக்கிறோம். என் அப்பாவுக்கு ஸ்வீட் சாதாரணமாகவே பிடிக்கும். அதுவும் பூதரேக்கலூ என்றால் கொள்ளை ப்ரியம். அவருக்கு அப்போது ஆசை மட்டும் இருந்தது. வசதி இல்லை. இப்போது கண் கூட தெரியவில்லை. ஆனாலும் அதை தடவி தடவி அவர் சாப்பிடுவதை பார்க்கும் போது...... " "ஸாரிப்பா. நீ என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் இல்லையா?" "சொல்லியிருக்கலாம். அது என் தவறுதான். என் அப்பாவுக்கு நான் செய்கிறேன் பார் என்று பலரிடம் நான் பெருமை பட்டுக் கொள்ள விரும்பவில்லை. அவர் எங்களுக்கு செய்ததை ஒப்பிடும் போது நான் அவருக்கு செய்வது ஒன்றுமேயில்லை. ஸாரி சார்." போய்விட்டான். ஆனால் அவன் நினைவுகள் இன்னும் பூதரேக்கலூவாகவே இருந்தது.  2006 ஏப்ரல் 09 குங்குமம்  45. எது சிக்கனம்?   சரளாவும் ரம்யாவும் பள்ளிப் பருவத்திலிருந்தே இணை பிரியா தோழிகள். இன்றைக்கு சரளா சென்னையில் மிகப் பிரபலமான குழந்தை நல மருத்துவர். ரம்யா ஒரு பொதுத் துறை வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக இருக்கிறாள். இருவருக்கும் ஒரே வித்தியாசம், சரளா பரம்பரை பணக்காரி. ரம்யா அடுத்த வேளை சோற்றுக்கே என்ன வழி என்ற மிகவும் ஏழ்மை பட்ட குடும்பத்தில் பிறந்து, கஷ்டப்பட்டு, படிப்படியாக முன்னேறியவள். சரளாவுக்கும் ரம்யாவுக்கும் ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்று இருந்து வருகிறது. அதாவது, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நான்கு மணியானால் சரளா ரம்யா வீட்டில் இருப்பாள். தோழிகள் இருவரும் அடுப்பங்கரை அடை, அதிரசத்திலிருந்து அமெரிக்கா அரசியல் வரை அலசி ஆராய்வார்கள். ரம்யா அடிக்கடி பேசும் ஒரு டாபிக் இதுதான். இந்த காலத்து குழந்தைகளுக்கு பணத்தின் அருமை தெரியாமல் வளர்கிறார்கள். தாம் தூம் என்று செலவு செய்கிறார்கள் என்பதுதான். இந்த புலம்பலுக்கு சரளா பல விளக்கங்கள் கொடுத்தாலும் 'நீ பரம்பரை பணக்காரி. அப்படித்தான் சொல்லுவ. என்னை மாதிரி பத்து காசு கிடைப்பதற்கு ஆலாய் பறந்திருந்தால் தெரிந்திருக்கும்' என்று மடக்கி விடுவாள். இன்றைக்கும் எங்கோ ஆரம்பித்த பேச்சு கடைசியில் இதில் வந்து இறங்கியது. போன வாரம் ரம்யாவின் பெண் ஸ்வேதாவின் இருபதாவது பிறந்த நாளுக்காக அப்பாவும் மகளும் சேர்ந்து ஒன்றல்ல இரண்டல்ல, இருபது டிரெஸ் எடுத்தார்கள். இருபது வித விதமான டெடி பியர்கள். இருபது செருப்புகள். இருபது வாட்சுகள். ரம்யா இதெல்லாம் ரொம்பவும் ஓவர் என்றாள். "ரம்யா, உன் ஆதங்கத்தை நான் புரிஞ்சுக்கறேன். நீ உன்னோட உலகத்தில இருந்துக் கிட்டு மத்தவங்களை எடை போடற. அதுதான் சரின்னு நம்பற. ...." "ஏய். நிறுத்து. என்னோட ஸ்டேட்மெண்டை ஒத்துகிற மாதிரி சொல்லிட்டு, மெதுவா அந்த பக்கம் சைடு அடிக்கறயா? உன்னைச் சொல்லி குத்தமில்லம்மா..." என்று பழைய பல்லவியை ஆரம்பிக்கவும் ஸ்வேதா ஓடி வந்து சரளாவை பின்னாலிருந்து கட்டிக் கொள்ளவும் சரியாக இருந்தது. "எங்கம்மா போயிட்டு வர்ற?" "எனக்கு காம்பஸ் இன்டர்வியூவில வேலை கிடைச்சிருக்கில்லையா ஆன்ட்டி? அதுக்கு, என் ·ப்ரெண்ட்ஸ் பார்ட்டி கேட்டாங்க. மொதல்ல ·பைவ் ஸ்டார் ஓட்டல்லதான் பார்ட்டின்னு அடம் புடிச்சாங்க. உங்களுக்கு நல்ல ஆம்பியன்ஸ், சுமார் சாப்பாடு வேணுமா? இல்லே டீசென்ட்டான ஆம்பியன்ஸ், ஏ ஒன் சாப்பாடு வேணுமான்னு அவங்களை டைவர்ட் செஞ்சு தி.நகர்ல ஒரு ஏ.சி ரெஸ்டாரெண்டுக்கு கூட்டிக்கிட்டு போய் சமாளிச்சுட்டேன். ஜஸ்ட் டூ தவுசண்ட்ல முடிச்சிட்டேன். பை." என்று சொல்லிவிட்டு உடை மாற்றிக் கொள்ள உள்ளே ஓடிவிட்டாள். "ரம்யா. பார்த்தியா? அவங்களும் மிச்சம் புடிக்கிறாங்க. ஆனா, லெவல் வேற. நீ ஜீரோவுல இருந்துக்கிட்டு பத்தை பார்த்தா, அது பெரிசாத்தான் தெரியும். அவங்க பத்துக்கும் மேல இருக்காங்க. அவ்வளவுதான். புரிஞ்சுதா?" "சரளா, நீ சொன்னதை ஏத்துகிற மாதிரி இருந்தாலும், இதை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கிறேன்" என்று சொல்லிவிட்டு பெரிதாக சிரித்தாள் ரம்யா.  2007 மே 13 குங்குமம்  46. ராணி வர்றா!!!   "எலேய் சின்ராசு. ராணி இன்னுமா வர்லே?" பரமசிவத்தின் வரவிலேயே பெரும் பதட்டம் இருந்தது. "இன்னும் வர்லப்பா. நானும் நொடிக்கு ஒரு தடவை ரோட்டை பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்." சின்னராசுவின் பேச்சிலேயே தவிப்பு. "என்னடா இது. மணி பதினொண்ணு ஆச்சே. கிழக்கிலே போற பஸ்சு கூட போயிடுச்சு." பரமசிவத்தின் முகத்தில் வியர்வை வெள்ளம். கை. கால்கள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன. "போன புதன்கிழமையில கூட இப்படித்தாம்பா ஆச்சு. வர்ற வழியிலே சாதிச் சண்டையாம். ஊரெல்லாம் சுத்தி ராணி பத்தரைக்குத்தான் வந்திச்சு. இப்பக்கூட வானம் மின்னிக்கிட்டு இருக்கு. ஒரு வேளை வழியிலே மழையாய் இருக்கலாம்." சின்னராசு சொல்லியும் அதை காதில் வாங்கியதும் வாங்காததுமாக குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டருந்தார். மனசு 'ராணி! ராணி!' என்று ஓலமிட்டுக் கொண்டிருந்தது. "சின்ராசு. ஒரு நடை பஸ்ஸ்டாண்டு வரை போயிட்டு வாயேன். ரொம்ப பயமா இருக்குடா. ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடுச்சுன்னா?" பரமசிவத்தின் கண்களில் நீர் தளும்பியது. "இப்பத்தான் கோவிந்தன் வந்தான். பஸ் ஸ்டாண்டிலே விசாரிச்சானாம். ராணி இன்னும் வர்லையாம். நீங்க கவலைப்படாதீங்க. நம்ப சிவகுருவும் சுப்புணியும்தான் கூடப் போயிருக்காங்க." சின்னராசு சொல்லி முடிக்கவும் பரமசிவம் இன்னும் கலவரமானார். "லேய்... போட்டேன்னா ஒண்ணு. சிவகுரு சரியான தண்ணிப் பேர்வழியாச்சேடா... மாரியாத்தா நீதான் காப்பாத்தணும். என் ராணிய பத்திரமா கொண்டு சேர்க்கணும்." "சின்ராசு. உள்ளாரப் போயி மாரியாத்தாள நேர்ந்துக்கிட்டு ஒரு மஞ்சத்துணில ஒரு ரூபா காச முடிஞ்சி வைச்சிட்டு ஓடியா. நாம பஸ்ஸ்டாண்டுக்கே போயிடலாம். ஏலேய்... எனக்கு இருப்பு கொள்ளலைடா... போ... போ... ஓடு." பரமசிவத்தின் தவிப்பு உச்சத்துக்கு போனது. எதேச்சையாய் ரோட்டை பார்த்தவருக்கு ஆச்சர்யம்! தூரத்தில் இரண்டு வெளிச்சப் புள்ளிகள்!! மனசில் ஒரு துள்ளல்!! ராணியாக இருக்குமோ? "சின்ராசு. ஓடியாடா. ராணிவர்றாப்பல!" சின்னராசு தடுக்கி விழாத குறையாக ஓடி வந்தான். "ராணிதாம்பா." சின்னராசு குதியாய் குதித்தான். "ராணியாடா... ஆத்தா... என் வயத்துல பால வார்த்தே." பரமசிவம் பஸ்ஸை நோக்கி ஓடினார். பளபளவென ஒய்யாரமான அந்த சொகுசு ரூட் வண்டி அரை வட்டம் அடித்து குலுங்கி நின்றது. 'பரமசிவம் பஸ் சர்வீஸ்' என்று மேலே எழுதி முன் கண்ணாடியில்''ராணி' என்று அலங்காரமாக எழுதியிருந்த அந்த புத்தம் புதிய பஸ்ஸை வாஞ்சையுடன் தடவிக் கொண்டிருந்தார் பரமசிவம்.  1997 நவம்பர் 14 குங்குமம்  47. பார்க்காமலே   சென்னையில் இருக்கும் என் நண்பன் சரவணனின் மகன் திவாகர் இங்கே ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான். என்னை ஒரு முறை போய் பார்த்துவிட்டு கடிதம் எழுது என்று சொல்லியிருந்தான். எங்கே நான் வேவு பார்க்க வந்திருக்கிறேனோ என்று அவன் நினைத்துவிடக் கூடாதே என்று எனக்குள் உதறல் இருந்தது. "சார் ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க. நான் இப்பதான் வந்தேன். திவாகர் எங்க போயிருக்கான்னு விசாரிச்சுக்கிட்டு வரேன்." அவன் ரூம்மேட் என் கையில் அன்றைய ஹிண்டுவை திணித்து விட்டு போனான். நான் என் பார்வையை ஓட்டினேன். ரூம் சுத்தமோ சுத்தம். டேபிளில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களின் முதுகுகளை ஆராய்ந்தேன். பெரும்பாலும் பாட புத்தகங்கள். விவேகானந்தரின் 'கர்மயோகா'! தி.ஜானகிராமனின் 'உயிர்த்தேன்'! சபாஷ். அதனையொட்டி உள்ளங்கை அளவுக்கு செந்திலாண்டவர். அதன் முன் சிறிய வீபூதி டப்பா. டேபிள் லாம்ப்பின் ஸ்விட்சுக்கு அருகில் வட்ட வடிவ ஸ்டிக்கரில் சச்சின் சிரித்துக் கொண்டிருந்தார். அதனை உறுதிப் படுத்துவது மாதிரி சுவரோரத்தில் ஒரு கிரிக்கெட் மட்டையும் ஒரு ஜோடி பேடும் இருந்தன. ஆர்வ மிகுதியில் உயிர்த்தேனை உருவினேன். 46ம் பக்கம் திறந்து கொண்டது. முக்கியமான பகுதிகளை அடிக் கோடிட்டு அசிங்கப்படுத்தாமல் பென்சிலால் மார்ஜின் பகுதியில் ஒரு சிறிய டிக் செய்திருந்த பாங்கு ரசிக்க வைத்தது. புக் மார்க்குக்கு அவன் பயன்படுத்தியிருந்தது அவன் தங்கையின் போட்டோ! வாசலில் அரவம் கேட்க புத்தகத்தை அதன் இடத்தில் சரியாக வைத்தேன். "திவாகர் வர லேட்டாகும் சார். இங்க பக்கத்துல ஒரு பிளைன்ட் ஸ்கூல் ஒண்ணு இருக்கு. அங்க ரீடிங்குக்காக போயிருக்கான். அதான்." "ஓஹோ. சரிப்பா. நான் வரேன். அவன் வந்தா இந்த கார்டை கொடுத்துடு". என் விசிட்டிங் கார்டை நீட்டினேன். அப்போது அந்த உண்டியல் கண்ணில் பட்டது. "அது என்னப்பா?" "இதுவா சார். இதுவும் திவாகரின் ஏற்பாடு சார். எங்களோட டெய்லி செலவுல ஒரு ரூபா மிச்சம் பிடிச்சு இதுல போடணும். இது மாதிரி எல்லா ரூம்லேயும் வைச்சுருக்கோம். மாசாமாசம் ஒரு பிளாக்ல சேரும் பணத்தை கலெக்ட் செஞ்சு ஏதாவது சோஷியல் வொர்க் செய்வோம் சார்." எனக்கு திவாகரைப் பார்த்துத்தான் என் நண்பனுக்கு கடிதம் எழுத வேண்டும் என்ற அவசியமே இல்லாமல் போயிற்று. குங்குமம் - 26 ஜூலை 2007   48. நான் நானாக   "என்னங்க. கார்த்திக்கை பற்றி ரொம்ப கவலையா இருக்குங்க. இஞ்சினீயரிங் காலேஜுக்கு அப்ளிகேஷன் வாங்கி வச்சிருக்குன்னு சொன்னா, நான் கேட்டேனாங்கறாங்க. நீங்களாவது கேக்க மாட்டீங்களா?" ஆமாம். கார்த்திக்கை புரிந்து கொள்வதே கஷ்டமாக இருக்கிறது.   ஒரே மகன். தாத்தா பாட்டி செல்லம் வேறு. சித்ரா அவனை பாட்டு கற்றுக் கொள் என்றாள். மாட்டானாம். ஆனால் பெயிண்டிங்காக வரைந்து தள்ளிக் கொண்டிருக்கிறான். சித்ராவுக்கு பெயிண்ட் ஸ்மெல் என்றாலே அலர்ஜி. எனக்கும் தரையில் சிதறிக் கிடக்கும் பேப்பர் துண்டுகளையும் காலி பெயிண்ட் ட்யூபுகளையும் கண்டால் எரிச்சலாய் வரும். சரி, சின்ன வயசு. நாம்தான் திசை திருப்பி விட வேண்டும் என்று ரெண்டு பேரும் ஒரு நாள் முழுக்க யோசித்து ஒரு கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுத்தோம். ஆனால் அவனோ, சாப்ட்வேர் பக்கம் தலைவைத்து படுக்காமல், கம்ப்யூட்டரை அக்கு வேறு ஆணிவேறாக பிரித்து போட்டு ஏதாவது சேர்த்துக் கொண்டிருக்கிறான். ஆரகிள், ஜாவா மாதிரி டிரைனிங் கோர்ஸ் போயேன் என்றதற்கு, அதெல்லாம் வேஸ்ட் என்று சொல்லிவிட்டான். எப்படி வேஸ்ட் எங்களுக்கு புரியவில்லை. என் ஆற்றாமையை ஒரு சேர திரட்டி என் நண்பர் அறந்தை மணியனிடம் கொட்டினேன். அவரும் அவனோடு பேசிப் பார்த்தார். என்னிடமும் சித்ராவிடமும் அளந்து பேசுகிறவன், அவரிடம் மணி கணக்கில் பேசினான். காரணம், அவர் உலக சினிமா பற்றிய அனைத்து விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர். கடைசியில் அவரும் என் அப்பா, அம்மா கட்சியில் சேர்ந்து விட்டார்.   'டேய்! உன் மகன் உன்னை மாதிரி இல்லைடா. படு புத்திசாலி.. அவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு' என்று கேபிள் டிவி ஜோசியர் மாதிரி சொல்லி என் வாயை அடைத்துவிட்டார். ஒரு வாரம் கழித்து அவனாகவே வந்து. "லயோலாவில் விஸ்காம் சீட் கிடைசசிடுச்சுப்பா. ·பீஸ் கட்டிடுங்க" என்று சொன்னான்.   எனக்குள் ரொம்ப நாளாக அரித்துக் கொண்டிருந்ததை போட்டு உடைத்து விடுவது என்று தீர்மானித்தேன். "கார்த்திக்! நீ விஸ்காம் சேர்ந்ததுல எங்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனா அதையே நாங்க சொல்லியிருந்தா உனக்கு பிடிச்சிருக்காது. அப்படித்தானே?" "அப்படியில்லையப்பா. எனக்கு சில விவரங்கள் தேவைப் பட்டுச்சு. அதை அறந்தை மணியன் சார் கிட்டேயிருந்து தெரிஞ்சுக்கிட்டேன். அவ்வளவுதான். உங்க நிறைவேறாத ஆசைகளுக்காகவோ, மத்தவங்க என்ன பண்ணறாங்களோ அதையே நானும் செய்யணும்கிறதுக்காகவோ நான் நிச்சயமா இல்லை. அதை புரிஞ்சுக்குங்க. நான் உங்க மகன்தான். ஆனா நான் நீங்க இல்லை. நான் நானாகவே இருக்க ஆசைப்படறேம்ப்பா. இது தப்பா, சொல்லுங்க?" கார்த்திக்கின் நெத்தியடி தாக்குதலில் நான் நிலைகுலைந்து போனாலும் 'என் மகன் சிங்கம்டா' என்று மனசின் எங்கோ ஒரு மூலையில் சந்தோஷம் கொப்பளித்தது.  குங்குமம் - 22 நவம்பர் 2007  49. பூமராங்   மாதம் – 1 எம்.டி. பிரகாஷ் அதிரிச்சியுடன் கேட்டார். "என்ன ரமேஷ் இது! 150 பேரை வேலையை விட்டு தூக்கணும்னு எழுதியிருக்கீங்க" ஜி.எம். ரமேஷ் நிதானமாகச் சொன்னார்...   "ஆமாம் சார். நம்ம பொருட்கள் மார்கெட்ல நிக்கணும்னா, அதிரடியா விலைகளை கொறைச்சே ஆகணும். இல்லேன்னா, போட்டி கம்பனிகள் நம்மள சாப்பிட்டுட்டுடும். நம்ப தொழில்சாலையிலும், ஆபீஸ்லயும் ஒரு ரகசிய சர்வே செஞ்சேன். அதன்படி 150 பேர் அதிகப்படியா இருக்காங்க. இவங்களை தூக்கிட்டா உற்பத்தி செலவுகள் கணிசமா குறையும்." "திடீர்னு வேலையை விட்டு எப்படி அனுப்ப முடியும்? எல்லாரும் பல வருஷம் சர்வீஸ் போட்டவங்க. பிரச்சனையாகிடாதா?" "சார். பிசினெஸ்னு வந்துட்டா நோ சென்ட்டிமென்ட்ஸ். தீ பிடிச்சு குடிசைங்க எரியும்போது, அந்த தீயிலேர்ந்து காப்பாத்த, நல்ல குடிசை கூரைகளை பிரிச்சு எறியறோம் இல்லையா? அந்த மாதிரி மொத்த கம்பனியும் நஷ்டமாகி எல்லோர் வயத்திலேயும் ஈரத்துணி போடறதுக்கு பதிலா ஒரு சிலரை வீட்டு அனுப்பறதுதான் புத்திசாலித்தனம்." மாதம் - 2 பல தொழிலாளர்கள் டிஸ்மிஸ் செய்யபட்டனர். முரண்டு பிடித்த சிலர் மீது பொய் குற்றச்சாட்டுகள் தொடுக்கப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டு, கடைசியில் மனம் வெறுத்து அவர்களாகவே விலகினர். ரமேஷ் ஒரே தீர்மானமாக இருந்தான். அதன் பலனும் உடனே கிடைத்தது. அதிரடி விலை குறைப்பில், கம்பனியின் லாபம் கிடுகிடுவென உயர்ந்தது. மாதம் - 3 பிரகாஷ் அவசரம் அவசரமாக ரமேஷை வரவழைத்தார். "ரமேஷ்! நம்ம அக்ரிமெண்ட்படி ஒரு மாச நோட்டீஸ் கொடுக்கணும் இல்லையா? அதன்படி இந்த மாசம்தான் உங்களுக்கு கடைசி மாசம்." "சார்ர்....." அதிர்ந்தான் ரமேஷ். "ஆமாம்பா. என் மகன் எம்.பி.ஏ படிப்பை முடிச்சிட்டு அடுத்த மாசம் வர்றான். யோசிச்சு பார்த்தேன். அவன் இருக்கிற பட்சத்திலே உன் வேலை உபரியா பட்டுது. அதனால நீ விலகிடு. எனக்கும் உற்பத்தி செலவுகளை கொறைச்ச மாதிரி ஆகும். சரிதானே?" (குங்குமம் - 14 ஆகஸ்ட் 2008) 50. விலகிப் போ காதலா   சிவாவை கழற்றிவிடுவது என்று தீர்மானித்துவிட்டாள் மாயா. ஆனால் அதை எப்படி சொல்வது? நேற்று காலை வரை மனதுக்கு பிடித்தவன்தான். தற்போது எல்லாம் தலைகீழாகிவிட்டதே? என்ன செய்ய? சுயநலம்தான். நம் வளமான வாழ்வுதான் முக்கியம். இரவு முழுக்க யோசனை செய்ததில் ஒரு கேம் பிளான் தயாரானது. என்ன, ஒரு முறையாவது சிவாவிடம் நேரிடையாக ஐ லவ் யூ சொல்லியிருந்தால்தானே பிரச்சனை? இதுதான் சரி. விஷயத்தை ஒளிக்காமல் கண் முன்னால் சொல்லிவிட்டால் போயிற்று. மாயா இப்போது தயார் நிலையில். மாயாவை பொறுத்தவரை தனக்கு லைஃப் பாட்னராக வரப்போகிறவன் ஜம்மென்று வாட்டசாட்டமான அழகனாகவும் இருக்க வேண்டும். கை நிறைய சம்பாதிப்பவனாகவும் இருக்க வேண்டும். தவிர, அப்பா மாதிரி நல்லவனாகவும் இருக்க வேண்டும். இதையெல்லாம் கேட்டு பெறக்கூடிய அளவுக்கு மாயாவிடம் ஒரு அஸ்திரம் இருக்கிறது என்றால் அது அசத்தும் அழகு. அப்படியொரு அழகு. சிவா எதிர் வீட்டில் இருக்கிறான். மாயா கணக்கில் வீக் என்பதால் தினமும் வந்து கணக்கு சொல்லிக் கொடுக்கிறான். பார்ப்பதற்கு அரவிந் சாமி மாதிரி இருப்பான். ரொம்ப நல்லவன்தான். ஆனால் எம்.எஸ்.ஸி. மாத்ஸ் படித்துவிட்டு சும்மாயிருக்கிறான். வேலையில்லாதவனைப் போய்.... இந்த சமயத்தில்தான் அப்பா திடீரென நேற்று மாலை ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அப்பாவின் தூரத்து உறவில் ஒரு பையன் டில்லியில் சிட்டி பாங்கில் உயர் அதிகாரியாக இருக்கிறானாம். அவன் மாயாவை ஏதோ ஒரு கல்யாண வீடியோ காசட்டில் பார்த்துவிட்டு விசாரித்தானாம். அதிலிருந்து கல்யாணம் என்றால் மாயாவோடுதான் என்று சொல்லிவிட்டானாம். அப்பாவின் வசதியின்மை தெரிந்து கொண்டு வரதட்சணை... நகை... மூச்... என்று சொல்லிவிட்டானாம். அப்பா மாயாவை கல்யாணம் பண்ணியே கொடுத்துவிட்ட மாதிரி பேசிக்கொண்டிருக்கிறார். மாயாவுக்குத்தான் குழப்பம். சிவாவா இல்லை சிட்டி பாங்கா? புதிதாய் திடீரென முளைத்தவன் மிக வசதியாக இருக்கிறான். ஆனால் அவன் யார்? எப்படி? சாதுவா? கோபக்காரனா? கெட்ட சகவாசம் ஏதாவது உண்டா? இல்லையா? ஒன்றும் தெரியாது. என்ன செய்ய? ஆனாலும் பலத்த யோசனையில் சிவாவை கழற்றிவிடுவது என்று தீர்மானித்து விட்டாள். சிவா இப்படியேதான் இருப்பான். காதலாவது கத்திரிக்காயாவது. மூட்டை கட்டி வை. கணக்குப் போடு. மணி எட்டு ஆயிற்று. சிவா வந்துவிட்டதாக தங்கை ராஜி சொல்லிவிட்டு ஓடிப் போனாள். மாயா மனதுக்குள் ஒருமுறை ரிஹர்ஸல் செய்து கொண்டாள். கணக்கு புத்தகம் மற்றும் நோட்டுகளை எடுத்து மேஜை மீது வைத்தாள். சிவா வந்துவிட்டான். எப்படி ஆரம்பிப்பது? சிவாவே மெளனத்தை உடைத்தான். இவள் சொன்னாள். சிவா நிமிர்ந்து சற்று நோக்கினான். "அப்ப என் மீது உனக்கு காதல் இல்லை. அதான் அப்பா பேச்சுக்கு தலையாட்டியிருக்கிறாய். ஓகே. பாடத்தை ஆரம்பிக்கலாமா?" மாயா வியந்து போனாள். ஹா! இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே. "சிவா. நீ உண்மையிலேயே ஜென்டில்மேன்." மாயா உளறிக் கொட்டினாள். "அது இருக்கட்டும் மாயா. நீ ஒன்று சொன்னாயே நான் வேலையில்லாதவன் என்று. அதை மாற்றிக் கொள்ள வேண்டும். எனக்கு உலகமே மாத்ஸ்தான். நீ கூட அடிக்கடி உப்புக்கு கூட உதவாத மாத்ஸ் என்று கிண்டலடிப்பாய். நான் சட்டை செய்ததில்லை. ஒரு இன்டர் நேஷனல் மாத்ஸ் ஜர்னலில் எனது ஆராய்ச்சிக் கட்டுரை வெளியானது. அதற்கு ஏகோபித்த பாராட்டுகள் கிடைத்தன. நேற்றுதான் ஒரு அமெரிக்க பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு செமினாருக்கு அழைப்பு வந்துள்ளது. கூடவே அங்கு ஃபேகல்டி மெம்பராக சேர எனது விருப்பத்தைக் கேட்டிருக்கிறார்கள். சகல வசதிகளும் தரவிருக்கிறார்கள். திருமணம் ஆகியிருந்தால் மனைவிக்கும் கிரீன் கார்டு கிடைக்க வழி செய்து தருவதாக எழுதியிருக்கிறார்கள். அப்பா அதைப் படித்ததிலிருந்து பிடிவாதமாக உடனே கல்யாணம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். உன் விருப்பத்தைக் கேட்டுச் செய்யலாம் என்று வந்தால் உன் முடிவு வேறு விதமாக இருக்கிறது. நான் உன்னை மனதார விரும்பினேன். எப்போது அடிமனதில் காதல் இல்லையோ இனிமேலும் பேசுவதில் அர்த்தமில்லை. பெஸ்ட் ஆஃப் லக் மாயா. சரி. நிறைய போர்ஷன் பாக்கியிருக்கிறது. படிப்பை ஆரம்பிக்கலாமா?" சிவா பாதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாயாவுக்கு தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது.    1997 அக்டோபர் 17 குங்குமம்    51. விசுவாசத்தின் விலை   பெருத்த அவமானமாய் போய்விட்டது செல்லதுரைக்கு. முதலாளியின் நம்பிக்கையை இழப்பதென்பது மானம் மரியாதையை இழப்பதற்கும் மேலானது அல்லவா? பிரச்சனை இதுதான். செல்லதுரை தற்போதைய முதலாளியான அருண்குமாரின் அப்பா முதன் முதலாய் சின்னதாய் இந்த கம்பனியை தொடங்கிய அந்த நாட்களிலிருந்தே வேலையிலிருப்பவர். பெரிய முதலாளி பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு கோர விபத்தில் இரண்டு கால்களையும் இழக்கவும் கம்பெனி செல்லதுரையின் நேரடி நிர்வாகத்துக்கு வந்தது. அப்போது அருண் சின்னப் பையன். தற்காலிக ஏற்பாடாய் வெற்று செக்கு புத்தகத்தில் கையெழுத்திட்டு செல்லதுரையிடம் கொடுக்கும் வழக்கம் பிறகு நிரந்தரமாகிப் போனது. செல்லதுரையின் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் அருணின் அப்பா. அந்த நம்பிக்கைக்குக் கேடு வந்து விட்டது. அருண்குமார் வீட்டு வேலைக்காரனை அனுப்பி செக் புத்தகத்தை கேட்டிருந்தான். பிள்ளை வளர்ந்துவிட்டான். நிர்வாகத்தை தன் கையில் எடுத்துக் கொள்ளப் போகிறான். நேரடியாகச் சொல்லாமல் இந்த குறுக்கு வழியில் வந்து அவமானப் படுத்தி வெளியேற்ற நினைக்கிறான். கொஞ்ச நாட்களாகவே அருண் கணக்கு புத்தகங்களை பார்ப்பதும் பாஸாகிய வவுச்சர்களை மேய்வதுமாக இருக்கிறான். அதன் உள் அர்த்தம் தற்போது தெள்ளத் தெளிவாகி விட்டது. செல்லதுரைக்கு வேலை பார்க்கவேண்டிய கட்டாயமும் இல்லை. அவர் ஒரே பையன் மும்பையில் வசதியாக இருக்கிறான். ஏதோ பெரிய முதலாளியின் விசுவாசத்திற்காக இத்தனை காலம் இருந்தார். இனிமேல் ஒரு நிமிஷம் இருப்பதுகூட மகா கேவலம். உடனடியாக டிராவல் ஏஜென்சிக்கு போன் போட்டு ஒரு வாரத்தில் மும்பைக்கு ரயில் டிக்கெட் வாங்கினார். ஒரு வெள்ளைத் தாளை உருவினார். "உயர்திரு அருண்குமார் அவர்களுக்கு, வணக்கம். கம்பனி செக் புக் மட்டும் உங்களுடையது அல்ல. இந்த கம்பனியே உங்களுடையதுதான். இன்றிலிருந்து விடை பெற்றுக் கொள்கிறேன். பொறுப்பேற்றுக் கொள்க." இப்படிக்கு. உங்கள் அப்பாவின் பரமவிசுவாசியான செல்லதுரை. நாலாய் மடித்து ஒரு கவரில் போட்டு பியூன் மூலமாக கொடுத்தனுப்பி விட்டார். சுமார் நாலு மணிக்கெல்லாம் செல்லதுரைக்கு இன்னோரு ஆச்சர்யம் காத்திருந்தது. தான் கொடுத்தனுப்பிய செக் புக், ராஜினாமா கடிதம் ஆகியவற்றோடு ஒரு கடிதமும் உள்ளடங்கிய கவர் ஒன்று வந்தது. செக் புக்கை பிரித்தார். தன் பெயரில் அறுபதினாயிரம் ரூபாய்க்கு செக் எழுதப்பட்டிருந்தது. செல்லதுரைக்கு ஒன்றும் புரியவில்லை. உடனடியாக அருண்குமாரின் கடிதத்தை பிரித்தார். "உயர்திரு செல்லதுரை அவர்களுக்கு. வணக்கம். உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் கொஞ்சம் வரம்பு மீறி விட்டேன். மன்னிக்கவும். கம்பனியின் லாபக் கணக்குகளையே பார்த்துக் கொண்டிருந்த எனக்கு தங்கள் சம்பளம் கடந்த பதினைந்து வருடங்களாக மாறாமலேயே இருப்பது நேற்றுதான் தெரிய வந்தது. இந்த கம்பனி மீது உள்ள உங்கள் விசுவாசத்திற்கு ஈடேயில்லை. எனக்குத் தோன்றிய ஒரு தொகையை செய்துவிட்ட தவறுக்குப் பரிகாரமாகச் செய்திருக்கிறேன். நீங்களாக தனக்குத்தானே போட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதால் ஒரு சுற்று வழியைக் கையாண்டு உங்களை புண்படுத்திவிட்டதற்கு மீண்டும் மன்னிக்கவும். இப்படிக்கு உங்கள் மகனுக்கு சமமான அருண்குமார். செல்லதுரைக்கு முதன் முறையாக அருண் மீது நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டது. அப்பாவைப் போலவே பிள்ளை! ராஜினாமாக் கடிதத்தை மிகுந்த மனநிறைவுடன் சுக்கல் சுக்கலாக்கினார்.  1997 டிசம்பர் 05 குங்குமம்    52. சின்னு   "குட்டிம்மா... இங்க பாரு... அம்மா என்ன வாங்கிண்டு வந்திருக்கா பாரு." டைனிங் டேபிளுக்கு அடியில் சப்பையாய்ப் போன பந்துடன் விளையாடிக் கொண்டிருந்த எங்கள் ஒரே வாரிசான சின்னு என்கிற குட்டிப் பெண், சரோவின் குரல் கேட்டு தத்தக்கா பித்தக்கா என்று ஓடிவந்து அவள் கால்களைக் கட்டிக் கொண்டது. சரோவுக்கு சாதாரணமாகவே ஆர்ப்பாட்டம் அதிகம். குழந்தைக்காக டிரெஸ் வாங்கிக் கொண்டு வந்திருந்தால் கேட்கவா வேண்டும்! அட்டைப் பெட்டியை பிரித்தாள். உள்ளே... நீல நிறத்தில் ஜீன்ஸ் சட்டை! பாண்ட்!. இத்துனூண்டு குழந்தைக்கு இந்த சைஸில் எங்குதான் இவளுக்குக் கிடைக்கிறதோ? "ஏங்க. சின்னுவுக்கு ஒரு டிரெஸ் போட்டு வைக்கக் கூடாது? ஜட்டியோட அலைசிண்டு இருக்கே". சரோ என் எண்ணத்தைக் கலைத்தாள். சரோவுக்கு குழந்தைக்கு விதவிதமாக டிரஸ் போட்டு வைக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால் நான் அதற்கு நேர் எதிர். எங்களை மாதிரியே எங்கள் சின்னுவும் ஸ்தூல சரீரம். மெல்லிசாக சட்டை மாதிரி போட்டால்கூட தொப்பலாய் வியர்த்துவிடும். எனவே ஃப்ரீயாக விட்டுவிடுவேன். ஆனால் சரோ பாம்பாய் சீறுவாள். பரபரவென நீல ஜீன்ஸ் போட்டுவிட்டாள். கஷ்டப்பட்டு இடுப்பு பித்தானை உள்ளே நுழைத்து ஜிப்பை ஏற்றினாள். குழந்தை பேலன்ஸ் இல்லாமல் கீழே விழுந்தது. "சரோ. இதுக்கு அடுத்த சைஸ் கிடைக்கலையா. ரொம்ப டைட்டா இருக்கே." சரோ சுள்ளென நிமிர்ந்தாள். சரிந்த மூக்குக் கண்ணாடிக்குப் பின்னால் கோபம் கொப்பளிக்க, "ஜீன்ஸ் பாண்ட்னா டைட்டாதான் போட்டுக்கணும். எதிர்த்தாத்து ஆராவமுது ஐயங்கார் போட்டுக்கற மாதிரி இழுத்துக் கட்டிண்டா போட்டுக்கிறது. உங்களுக்கு ரசனையே கிடையாது. சொன்னாலும் புரியாது". சரோவின் தீர்ப்புக்கு அப்பீலே இல்லை. குழந்தையை வாரியள்ளிக் கொண்டு கீழ்வீட்டு மாமியிடம் காட்டப் போய் விட்டாள். சின்னுவை நினைத்தால் பாவமாய் இருந்தது. அரைமணியில் சரோ வந்தாள். "என்னங்க கிளம்பலையா? ஏழு மணிக்கெல்லாம் நாம அங்கிருக்கணுங்க." ஆமாம்! மறந்தேவிட்டது. சரோவின் மாமா பெண் ராதாவுக்கு இன்று ரிசப்ஷன். நாளை கல்யாணம். ஓஹோ! இப்போது புரிந்துவிட்டது. ஜீன்ஸ் பாண்ட், சட்டை இதற்காகத்தானா ? பத்து நிமிடத்தில் வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே வந்தோம். "சரோ. ஆட்டோல போயிடலாமா? நம்ம மூனு பேருக்கும் இந்த மொபெட் வசதியா இருக்காது. சின்னு ரொம்ப சிரமப்படும்." மெதுவாய் சொல்லி வைத்தேன். அவ்வளவுதான்! "என்னது... ஆட்டோவா... போறதுக்கே நிச்சயம் முப்பது ரூபா கேப்பானுங்க. திரும்பி வர ஒம்பது மணியாயிடும். நிச்சயம் அம்பதுக்கு குறையமாட்டானுங்க. என்ன, பணம் வீட்ல விளையறதா? சும்மா வாங்க. சின்னுவ எப்படி செளகர்யமா வச்சுக்கணும்னு எனக்குத் தெரியும்". மறு பேச்சில்லை. மொபெட்டில் உட்கார்ந்த மாத்திரத்திலேயே சின்னு அழத் தொடங்கிவிட்டது. உடனே எனக்கும் சேர்த்து அர்ச்சனை. கல்யாண சத்திரத்திலும் சின்னுவின் அழுகை தொடர்ந்தது. டிரஸ் ரொம்ப டைட்டாக இருக்கிறது என்று என்னையறியாமல் ஒரு முறை சொல்லிவிட ஒரு முறைப்பில் அடக்கினாள். குழந்தையின் டிரஸ் ரொம்ப பிரமாதம் என்ற சர்டிபிகேட்டை அடிக்கடி வாங்கிக் கொண்டதில் பெருமையோ பெருமை. நிலை கொள்ளாமல் அழுததில் குழந்தை தூங்கிவிட்டது. ரிசப்ஷன் முடிந்து எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு வெளியே வர ஒன்பதரை கிவிட்டது. மறுபடியும் நெரிசலான மொபெட் பயணம். வழியில் முழித்துக்கொண்டு சிணுங்கியது சின்னு. "சனியனே! அங்கதான் மானத்தை வாங்கினேன்னா வழியிலுமா மானத்தை வாங்கணும்." சிக்னலில் நிற்கும்போது பஸ்ஸில் இருந்த யாரோ ஒருவர் குழந்தையின் தலை சரிந்திருப்பதைச் சுட்டிக் காட்டவும் சரோ முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. "சரிதான் போடா!" பஸ் நகர்ந்ததும் சரோ முனகினாள். வீட்டில் நுழைந்ததும் சரோவின் ஒவ்வொரு இயக்கத்திலும் கோபம் கொப்பளித்தது. பால் சாப்பிட மறுத்த சின்னுவுக்கு ஒரு மொத்தல். மறுநாள் கல்யாணத்துக்கு வர முடியாது என்பதால் அட்வான்ஸாக அவள் மாமா கொடுத்த முகூர்த்தப் பையை அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டதற்காக எனக்கு ஒரு அர்ச்சனை. ஒரு ரவிக்கையை எடுத்துத் தலையில் இறுக்கக் கட்டிக் கொண்டு தூங்கப் போய்விட்டாள். எனக்கு அரைமணி நேர ஆபீஸ் வேலை பாக்கியிருந்தது. எல்லாவற்றையும் முடித்ததும் தூக்கம் கண்களைச் சுழற்றியது. படுக்கைக்கு வந்தபோது சின்னு கால் பரப்பி தூங்கிக் கொண்டிருந்தது. ஜீன்ஸ் பாண்ட்! சின்னு ராத்தியில் ஒன்றுக்குப் போகும். ஐய்யையோ! காலையில் புதுத்துணி கெட்டுப் போனதற்குத் திட்டு விழும். நிதானமாகக் கழற்றினேன். விடுதலை கிடைத்ததும் சுகமாகப் புரண்டு படுத்துக் கொண்டது. முகத்தில் நிம்மதி துல்லியமாய்த் தெரிந்தது. சரோ தூங்கிக் கொண்டிருந்தாள். நல்ல வேளை!  1997 டிசம்பர் 12 குங்குமம்    53. இருள் வழிப் பயணம்   எனக்கு அவனையும் அவன் கூட வந்திருந்த பெரியவரையும் ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை. அவர்களின் பார்வையிலேயே ஒரு கெட்ட நோக்கம் இருந்தது.  ஆனால் என் வீட்டு மக்களுக்கு அவர்களை பிடித்திருந்தது என்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று. நான் இனியும் இங்கே இருப்பது பாரம். இரண்டாவது, அவர்கள் வசதியானவர்கள். ஒருவழியாக பேசி முடித்தார்கள். நாளைக்கே நல்ல நாளாம். நான் அங்கே நிற்க பிடிக்காமல் உள்ளே வந்துவிட்டேன். போவதற்கு முன் அவன் என்னை மிகவும் அருகில் நெருங்கி கோணலாக சிரித்தான். அந்த பெரியவர்... அவரும் அவர் முழியும்.. சே.... மறுநாள் மாலை நான் போகும் வேளை வந்துவிட்டது. என்னை பிரிவதில் வீட்டு குழந்தைகளுக்குத்தான் வருத்தம். அழுது அமர்க்களம் செய்துவிட்டன. வந்து நின்ற அந்த பிரும்மாண்ட வண்டியில் நான் உடனடியாக ஏறி கொண்டு விட்டேன். அவர்கள் பேசிக் கொண்டே இருந்தார்கள். எங்கே போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால் போகிறேன். ஒரு விபரீதத்தை நோக்கி. என் கண்கள் கலங்கின. மெளனமாக அழுதேன். அவர்கள் சரியில்லை என்று நான் நினைத்தது கொஞ்ச நேரத்திலேயே நிரூபனம் ஆனது. சிறிது தூரம்கூட போயிருக்கமாட்டோம். என்னை மாதிரியே சில பாவப்பட்ட ஜன்மங்கள் வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றப்பட்டார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் ஓடிவிடலாமா என்று யோசித்தேன். ஆனால் அதற்கு வழியே இல்லை. அதற்குள் நாங்கள் ஏழு பேர் ஆகிவிட்டோம். ஒரு ரோட்டு ஓர ஹோட்டலில் அவனும் அந்த கிழவனும் தண்ணியடித்தார்கள். கஞ்சா புகைத்தார்கள். முடிவில் அவர்களுக்குள்ளே வாய் தகராறு வர, அவன் அந்த கிழவனின் தலையில் கட்டையால் அடித்தான். நாங்கள் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. கிழவனை அப்படியே விட்டுவிட்டு வண்டியேறிவிட்டான் அந்த கிராதகன். கொடுமையிலும் கொடுமை. நாங்கள் வந்து சேர்ந்த இடத்தில் எங்களை மாதிரியே நூற்றுக்கணக்கில் இருந்தார்கள். அனைவரின் முகத்திலும் சொல்லமுடியாத சோகம். பலரும் களைத்து போயிருந்தார்கள். என்னை அழைத்து வந்த கொடூரன் மாதிரியே பல பேர் அங்கு இருந்தார்கள். எங்களை விற்று அவர்கள் காசு பண்ணுவதை நாங்கள் கண்கூடாக பார்த்தோம். என்ன செய்ய? நாங்கள் ஏமாளிகள். அவர்கள் பலசாலிகள். சும்மா இருப்பதை தவிர வேறு வழியில்லை. எங்களை வாங்கியவர்கள் அங்கே இருந்த இருட்டான அறைகளில் வைத்து பூட்டினார்கள். கொஞ்ச நேரத்திலேயே எங்களை ஒரு டாக்டர் சோதனை செய்தார். வியாதிகள் எதுவும் இருக்கக்கூடாதாம். அடுத்து அடுத்து நடந்த நிகழ்சிகள் யாவும் கொஞ்சம் குழப்பமாகவே இருந்தன. எங்களை போட்டோ எடுத்தார்கள். எடை பார்த்தார்கள். நடக்கச் சொன்னார்கள். பல பேர் அப்படியும் இப்படியுமாக எங்களை பார்த்தார்கள். உடம்பு சுத்தம் ரொம்ப முக்கியமாம். நாலு குளியல் ஆகிவிட்டது.   சம்பந்தமே இல்லாமல் திடீரென குட்டி பூஜை நடந்தது. பொட்டு மட்டும்தான் இட்டார்கள். கவனியுங்கள். பொட்டை தவிர வேறு எதுவும் இல்லை. இவ்வளவு செய்தார்களே தவிர, சாப்பாட்டை கண்ணில் காட்டவே இல்லை. வெறும் தண்ணீர்தான். இளைத்தது பத்தாதா? இன்னும் வேறு இளைக்க வேண்டுமா? அவர்கள் நோக்கமே புரியவில்லை. கூட வந்தவர்களிடம் ஏதாவது கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று பார்த்தால் அவாகளும் என்னைப் போலவே மண்டுகளாகவே இருந்தார்கள். நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு நேர் எதிரே இருந்த சொகுசான கட்டிடத்தில் நிறைய மக்கள் வருவதும் போவதுமாக இருந்தது. என்ன செய்யப்போகிறார்களோ? பொழுது எப்படா சாயும் என்று காத்துக்கொண்டிருந்த மாதிரி அவர்கள் அனைவரும் மறுபடி வந்தார்கள். தூரத்தில் நாங்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டோம். அவர்களுக்குள் காரசாரமாக பேசிக் கொண்டார்கள். ஒருவன் சத்தமாக அட்டையில் எழுதியிருந்ததை படிக்க, நாங்கள் அணி அணியாக பிரிக்கப்பட்டோம். என் போதாத வேளை நான் முதல் அணியிலேயே இருந்தேன்.  ஒருவன் என்னை தொட்டு தடவி அழைத்து போக வந்தான். என் எதிர்ப்பை காட்டியதும் பயந்து போய் விட்டான். எனக்கு பின்னால் பத்து பதினைந்து பேர் வந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் குறுகலான சந்து வழியாக அழைத்து போகப்பட்டோம். ஒரு கேட்டை தாண்டியதும், சில்லென ஏ.சி. காற்று எங்களை வரவேற்றது. மிகப் பெரிய ஹால். நாலா பக்கமும் விளக்குகள் எரிய பிரகாசமாக இருந்தது. குறைந்த பட்சமாக இருபது பேர் எங்களின் வரவுக்காக காத்திருந்தார்கள். உயரமான இடத்திலிருந்து ஒருவன் என்னை வா! வா! என்று சைகை காட்டினான். அவன் கையில் நீளமாக காமிரா மாதிரி ஒன்று இருந்தது. ஏதோ தப்பு நடக்கப் போகிறது. நான் உறைந்து போய் மிரட்சியுடன் நின்றுவிட, ஒருவன் ஏதோ ஒன்றை என் மீது வைக்க சுரீரென மின்சாரம் எனக்குள் பாய்ந்தது. ஒரு துள்ளலில் நான் இரண்டு அடி முன்னே போய் விழுந்து, சுதாரித்து நிமிர, அந்த காமிராக்காரன் மிக அருகில் தெரிந்தான். இப்போது எனக்கு பின்னால் வந்தவர்களை பார்க்க முடியவில்லை.   திடீரென ஒருவன் என் கால்களை கட்டிவிட்டான். இன்னொருவன் என் இடுப்பில் பெல்ட் போட்டு இறுக்கியதில் என் பிருஷ்டம் சற்று உயர்ந்தது. கால்கள் அகட்டப்பட்டன. தொலைந்தேன். நான் சீரழியப்போகிறேன். காமிராக்காரன் என் தலையை பிடித்து ஒரு பக்கமாக வளைத்து பின் மண்டையில் அந்த கருவியை வைத்து ஒரு அழுத்து அழுத்தினான். பொட்டில் சம்மட்டியால் அடித்த மாதிரி வலி. அடுத்த வினாடி... எனக்குள் ஆயிரம் வோல்டில் மின்னலாய் தீப்பொறிகள் என் உடம்பு முழுவதும் கொப்பளித்து பரவ.... யாரோ கத்தியது லேசாக ஏங்கோ கேட்டது. "என்னாங்கடா. க்விக்கா வேலையை பாருங்க. ம்.. அடுத்த எருமை மாட்ட கொண்டாங்க. எட்டு மணிக்குள்ள எரநூறு மாடுங்களை வெட்டி முடிக்கனும். சீக்கரம்."   அந்த நவீன மாட்டிறைச்சி கூடத்தின் ப்ளோர் மேனேஜர் கத்தினார்.  2007 ஜனவரி 21 குங்குமம்  54. கல்யாணத்தில் கலாட்டா   பசுபதி! இத்தனை கல்யாண கும்பலிலும் சிவஞானம் அவனை கவனித்து விட்டார். திக்கென்றது அவருக்கு! இந்த அழையா விருந்தாளி எதற்கு வந்திருக்கிறான்? இவனை உள்ளே விடக்கூடாதே!   யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவன் மாடியேறி விட்டான். சிவஞானத்துக்கு மூச்சிரைத்தது. இதோடு மாடியேறி.... வேண்டாம்.  கொஞ்சம் யோசித்துச் செய்ய வேண்டும். ரொம்பவும் குழம்பிப் போனார். அது சரி. இவனால் என்ன செய்ய முடியும்? அப்படியென்ன குழப்பம் செய்ய... 'அந்த' நினைவு வந்ததும் பகீரென்றது! ஐயையோ! 'அந்த' விஷயத்தை எல்லோர் மத்தியிலும் போட்டு உடைத்தால்... நினைக்க நினைக்க வியர்த்துக் கொட்டியது. "என்ன மாமா. இங்கு நின்னுகிட்டு இருக்கீங்க? அம்மா கூப்பிட்டுச்சு." அத்தை பையன் சிவசு எண்ணத்தைக் கலைத்தான். "சிவசு நீ ஒரு வேலை செய்யேன். மேல வெத்தல பொட்டிய கக்கத்தில வச்சுக்கிட்டு வழுக்கைத் தலையா ஜிப்பா போட்ட ஒருத்தன் இருப்பான். அவன் என்ன பண்றான்னு பார்த்துட்டு வாயேன்." சிவஞானத்தின் கைகள் நடுங்கின. "என்ன மாமா? ஏதாவது பிரச்னையா?" சிவசு குழப்பமாகப் பார்த்தான். சிவஞானம் மிடறு விழுங்கினார். "நீ போயிட்டு வாயேன். பொறவு சொல்லுதேன்." சிவசு சென்ற ஒவ்வொரு விநாடியும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றியது. ஈஸ்வரா! நல்லதையே செஞ்சுக்கிட்டு இருக்கிற எனக்கா இப்படி ஒரு சத்ரு? பிள்ளை வீட்டுக்காரங்க ரொம்ப நல்லவங்கதானே? 'அந்த விஷயத்தை' அப்போதே சொல்லியிருந்தால் பசுபதிக்கு வேலையிருக்காதே! இப்போ தெரிஞ்சா ஏதோ வேண்டுமென்றே மறைச்சது மாதிரியல்லவா பேசுவார்கள்? கடவுளே! சியாமளா கல்யாணம் இப்படி சந்தியிலே நிற்கப் போகிறதே. ஸ்டாப். இந்த கல்யாண சத்திரத்தில் குழப்பங்கள் ஏற்பட இன்னும் சில நிமிடங்கள் பிடிக்கலாம். அதற்குள் பசுபதியைப் பற்றி சில வரிகள். பசுபதிக்கு சிவஞானத்தின் வியாபார வளர்ச்சியில் பொறாமை. ஒரு காலத்தில் அவரோடு பார்ட்னராய் இருந்தவன். நிழலான வியாபார தகிடுதத்தங்கள் செய்வதில் அவருக்கு உடன்பாடு இல்லாததால் கழற்றி விடப்பட்டவன். நிறைய முரட்டு குணம். ஆனால் மூடன். பலவிதங்களில் அவருக்குத் தொந்திரவுகள் கொடுத்து கடைசியில் அவமானப்பட்டுப் போயிருக்கிறான். சில வருடங்களாக ஆள் அட்ரஸ் இல்லாமல் இருந்தான். கடைசி பெண் சியாமளாவின் திருமண சேதி கேள்விப்பட்டு அதற்கு அவனால் செய்யக்கூடிய 'உதவிகளை'ச் செய்ய தற்போது வந்திருக்கிறான். போதும்! கல்யாணம் நின்று போகும் அளவுக்கு குழப்பங்கள் வந்துவிட்டன. ஓ.கே. ஸ்டார்ட்! "கொஞ்சம் எல்லோரும் அமைதியா இருங்க. பெண்ணைப் பெத்த அப்பனையே கேட்டுட்டா போச்சு. அவரை வரச் சொல்லுய்யா." ஒரு தாட்டியான அம்மாள் உரக்க சத்தம் போடவும் கல்யாண சத்திரமே ஸ்தம்பித்துப் போனது. "என்ன பெரியவரே! நான் கேள்விப்பட்டது உண்மையா?" நீங்க என்ன சொல்ல வர்றீங்க? புரியலையே." சிவஞானத்தின் முகம் வெளிறிப் போயிருந்தது. "என்னவா? சியாமளா நீங்க பெத்த பொண்ணா? இல்லையா?" அடப்பாவி! பசுபதி! நானே மறந்து போன விஷயத்தை, இதுவரை சியாமளாகூட அறிந்திராத விஷயத்தை இப்படிப் போட்டு உடைத்து விட்டானே! தலை கிர்ரென சுற்றியது. கொஞ்சம் சமாளித்தவாறே. "அது வந்துங்க... சியாமளா என் பெண்தாங்க. பானு, சரஸ்வதி மாதிரி இதுவும் என் பெண்தாங்க." தாட்டியான அம்மாள் விடுவதாய் இல்லை. "யோவ். ஏன்யா பொய் சொல்ற. எவளோ கேடு கெட்டவ, அப்பன் பேர் தெரியாத புள்ளைய பெத்து ஒரு அனாதை ஆஸ்ரமத்திலே போடுவா. அதை நீங்க எடுத்து வளர்ப்பீங்க. பொறவு ஜாதி குலம் பார்க்கிற, அதை உயர்வாய் மதிக்கிற, கட்டுக்கோப்பான இந்த ரத்தினசாமி குடும்பத்திலே பெண் கொடுப்பீங்க! என்ன தகிரியமய்யா?" "அதான் சரி... பெண் சம்பந்தம் பேசும்போது இந்த மாரிய்யா. சம்மதமான்னு ஒரு வார்த்தை... ஒரு வார்த்தை சொல்லி இருக்கிலாமில்லையா? இப்ப மட்டும் தெரியாட்டா என்னவாயிருக்கும். எங்க உறவுல காறித் துப்புவாங்க." சிவஞானத்தால் ஒன்றும் பேச முடியவில்லை. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டாற்போல் ஆகிவிட்டது. செய்வதறியாமல் கண்ணீர் உகுத்தவாறு மரம் மாதிரி நின்று கொண்டிருந்தார். "என்ன கும்பல் இங்கே. வழி விடுங்க." பிள்ளையின் அப்பா ரத்தினசாமி கூட்டத்தை விலக்கி முன்னால் வந்தார். "என்னக்கா இங்க பிரச்சனை?" "கேளுடா. நல்லா கேளு. நம்ம சமூகம் எப்படிப்பட்ட சமூகம். இதில் யாரோ பெத்த பொண்ணை உன் மருமகளா ஏத்துப்பியா? நீ சம்பந்தம் பண்ணப் போற இந்த சியாமளா இவரோட சொந்த மகளில்லே தெரியுமா? மூட்டைய கட்டுடா. குமாருக்கு வேற சம்பந்தம் பார்க்கலாம். பெண் குடுக்க ஆலாப் பறக்கிறாங்க." ரத்தினசாமி பதிலேதும் சொல்லாமல் நிதானமாய் சிவஞானம் பக்கம் திரும்பினார். அவரது பார்வையில் ஒரு கேள்வி இருந்தது. "ஐயா. நீங்க பெரிய மனசுக்காரங்கன்னு இந்த உலகத்துக்கே தெரியும். ரிஷிக்கும் நதிக்கும் மூலம் பார்க்காதவங்க இந்த பத்தரை மாத்து தங்கத்துக்கு மூலகாரணம் பார்க்கலாமா? அவங்க செஞ்ச தப்புகளுக்கு இவங்க எப்படி பொறுப்பு? சியாமளா பொறந்த குழந்தையா இருந்தப்ப, எப்ப நான் என் தோள்ல எடுத்துப் போட்டுக்கிட்டேனோ அப்பலேர்ந்து அவ என் பெண்தான். அப்பாவோட சொந்த பெண் இல்லேன்னு இன்னி வரைக்கும் சியாமளாவுக்கும் தெரியாது. பானு, சரஸ்வதிக்கும் தெரியாது. அது ஏன்? எனக்கே மறந்துடுச்சுங்க. நான் செஞ்சது தப்புங்களா? அப்படி தப்புன்னா இந்த மாதிரி குழந்தைகளுக்கெல்லாம் விடிவு காலமே இல்லையா?" சிவஞானம் ரத்தினசாமியின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு கதறிவிட்டார். சில நிமிடங்கள் மெளனம் நீடித்தது. ரத்தினசாமி மெளனத்தைக் கலைத்தார். "சிவஞானம். உங்க பெண்தான் என் மருமக. போங்க. நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை. குறை பெண்கிட்ட இல்லாதபோது நாங்க எதுக்கு பின்வாங்கணும்." "அக்கா..... கண்டவன் சொன்னதையெல்லாம் கேட்டு மனசைக் குழப்பிக்காதே. குறை எங்கேன்னு பாரு. போ... நேரம் ஆகிக்கிட்டு இருக்குது." அக்காள் அசைவதாய் இல்லை. "ஏண்டா. நம்ப குல பாரம்பர்யம் என்னாச்சு?  நம்ம சாதியிலே ஒரு பயகூட நம்மை மதிக்க மாட்டான்டா. கட்டுக்கோப்பான பரம்பரைடா நம்ப குலம்." மிக அமைதியான ரத்தினசாமிக்கு சுள்ளென கோபம் வந்தது. "என்ன சொன்ன அக்கா? குலமா... ஆமாம்.... நம்ப குலத்திலே பார்த்து சல்லடையா சலிச்சு எனக்கு கட்டி வச்சியே ஞாபகம் இருக்கா?" "எல்லோரும் நல்லா கேட்டுக்குங்க. அதைச் சொல்ல நான் வெக்கப்படலே. குமாருக்கு அம்மா இல்லேன்னு உங்களுக்கெல்லாம் தெரியும். இல்லேங்கிறது உயிரோட இல்லேன்னு அர்த்தமில்லே. அவ இல்லே... அவ்வளவுதான்...அதான்...அவ ஓடிப்போயிட்டா." ரத்தினசாமி சொல்ல ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ரத்தினசாமி தொடர்ந்தார். "அப்போ எனக்கு வசதியில்லே. வந்தவளுக்கு என் வசதி ரொம்ப அசெளகர்யமா பட்டது.  குத்திக் குத்திக் காமிச்சா. ஒருநாள் சொல்லிக்காம வீட்டைவிட்டுப் போயிட்டா. யாருகூட போனா? இப்ப அவ இருக்காளா? செத்தாளா? எனக்குத் தெரியாது. ஆனா அவ செஞ்ச ஒரே நல்ல காரியம், குமாரை குழந்தையா எங்கிட்ட விட்டுட்டுப் போனதுதான்?" அக்காள் எதுவும் பேசவில்லை. "அவளும் எங்க குலத்துப் பெண்தான். ஆனா அவளுக்குத் தங்கமான பையன். பெத்தவங்க செய்யற தப்புகளுக்கு புள்ளைங்க எப்படி பொறுப்பாக முடியும்?" "அக்கா. அதுக்கு இது சரியாப் போச்சுன்னு சொல்ல வரலே. புள்ளைங்களைப் பாரு. இவரோட விசாலமான தியாக உள்ளத்தைப் பாரு. குலத்தைத் தூக்கிக் குப்பையிலே போடு. வா அக்கா..." ரத்தினசாமி சிவஞானம் பக்கம் திரும்பி, "என்ன பார்த்துக்கிட்டு இருக்கீங்க? தாலி தட்டும் நேரம் நெருங்கிட்டு இருக்கில்லே? வாங்க...வாங்க..." சிவஞானம் அப்படியே ரத்தினசாமியைக் கட்டிப்பிடித்துக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதார். தேற்றிக் கொண்டிருந்த ரத்தினசாமி திடீரென சிவஞானத்தை விலக்கினார். "என்ன சம்பந்தி. என்ன ஆச்சு?" "எங்கேய்யா அந்த ஆளு?" எல்லோரும் பசுபதியைத் தேடினர். எதிர்பாத்தபடியே பசுபதியைக் காணவில்லை. சிவஞானம் புன்னகையுடன் ரத்தினசாமியை ஏறிட்டார். (குங்குமம் - 10 ஜனவரி 1997) 55. அஞ்சு பலி   எங்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை பூஜை என்பது வாடிக்கையாகிவிட்டது. அந்த பூசாரியை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் சரளா இருக்கும் நிலையில் எதுவும் சொல்ல முடியவில்லை. என் அம்மாவும் அவள் கட்சியில் சேர்ந்துவிட்டாள். எனக்கும் சரளாவுக்கும் கல்யாணம் ஆகி முதல் இரண்டு வருடம் குழந்தைகளே இல்லை. அதன் பிறகு தொடர்ச்சியாக மூன்று குறை பிரசவங்கள். அதில் போன வருடம் கொஞ்சம் கொடுமையானது. எட்டரை மாசம். முழு குழந்தையாகவே இறந்து பிறந்தது. சரளாவை சமாளிக்க நான் பெரும்பாடு பட்டேன். இந்த சந்தர்ப்பத்தில் யாரோ சொல்லி வந்த இந்த பூசாரி நான்கே மாதத்தில் எங்கள் வீட்டில் நங்கூரம் போட்டு விட்டான். நான் சொல்ல வந்த போது அதை தெய்வ குத்தம் என்று சொல்லி அம்மா தடுத்து விட்டாள். நானும் விட்டுவிட்டேன். அம்மாதான் இன்று காலையில் மெதுவாக ஆரம்பித்தாள். "சேகர். நம்ம பூசாரி சோழி போட்டு பார்த்ததில நமக்கு செய்வினை இருக்குதாம். ஒரு காளி கோயில்ல பூஜை போட்டு அஞ்சு பலி கொடுத்துட்டா, நம்ம பாவமெல்லாம் விலகிடுமாம்." "அஞ்சு பலின்னா?" "அதான்டா. காளிக்கு கோழி, மைனா, கெடா, வெள்ளாடு, எருமை மாதிரி அஞ்சு பலி கொடுக்கணுமாம். ஆனா. அதுக்கு பதிலா அஞ்சு கெடா வெட்டிட்டா போதுமாம்." எனக்கு கண் முன்னால் ஐந்து ஆடுகளும் ஒன்றன்பின் ஒன்றாக 'சொத்' 'சொத்' என பலியாவது வந்து போனது. கூடவே சென்ற வருடம் நான் கையில் சுமந்து சென்ற அந்த குறை பிரசவ குழந்தை.... "வேண்டாம்மா. அஞ்சு பலிய கொடுத்துட்டு எனக்கு ஒரு கொழந்தை குடுன்ணு கேட்பது வேண்டாம்மா ப்ளீஸ். இதுக்கு மட்டும் என் பேச்சை கேளுங்க." கைகளால் முகத்தை மூடிக்கொண்டு கொஞ்சம் அதிகமாகவே நான் கத்திவிட இருவரும் கலவரப்பட்டு போனார்கள். கொஞ்ச நேர மெளன நிமிடங்களுக்கு பிறகு, "நீங்க சொல்லறது சரிங்க. பலி கொடுத்துதான் நம்ம பாவங்கள் போய் குழந்தை பெத்துக்கணும்னா எனக்கு அந்த பாக்கியமே வேண்டாங்க." சரளா சொன்னாள். அம்மா கண்களால் ஆமோதித்தாள். நான் எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கு நன்றி கூறினேன்.  2007 ஜனவரி 17 தேவி    56. காதலைச் சொல்லிவிடு   ஸ்ரீலேகா போட்டிக்கு தயாரானாள். பாஸ்கெட் பந்தை தரையில் இரு முறை தட்டி கூடையை நோக்கி வீச அது வளையத்தில் மோதி வலைக்குள் விழாமல் பக்கவாட்டில் விழுந்தது. கோர்ட்டுக்கு வெளியிலிருந்து அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான் கோச் செல்வா. ரிலாக்ஸாக இருப்பது மாதிரி காட்டிக் கொண்டாலும் அவனுக்குள் ஒரு பூகம்பமே நிகழ்ந்து கொண்டிருந்தது. ஸ்ரீலேகாவும் அவள் தோழி ஸ்வாதியும் அவனிடம் பாஸ்கெட் பால் கோச்சிங் எடுத்துக் கொள்பவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். அழகிய கல்லூரி மாணவிகள். ஸ்வாதியை செல்வாவுக்கு ரொம்ப பிடிக்கும். அமைதியானவள். தான் உண்டு தன் விளையாட்டு பயிற்சி உண்டு என்று இருப்பவள். பாஸ்கெட் பால் கோர்ட்டில் எந்த அளவுக்கு அவள் எதிரணியை அலற வைப்பாளோ அந்த அளவுக்கு படிப்பிலும் சூரப்புலி என்று கேள்விப்பட்டிருக்கிறான். அவளை ஏன் காதலிக்க கூடாது என்று சில வாரங்களாக அவனுக்குள் அலையடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதை அவளிடம் சொல்லத் தயக்கம். ஒரு வார்த்தை ஏதாவது எக்ஸ்ட்ராவாக பேசினால்தானே காதலைச் சொல்ல நம்பிக்கையும் தைரியமும் வரும். அப்படியே வலுக்கட்டாயமாக சொல்லி வைத்து, அவள் 'சாரி சார். எனக்கு அந்த மாதிரி எண்ணமெல்லாம் இல்லை என்று சொல்லிவிட்டால் ?' ஸ்ரீலேகா அதற்கு நேர் எதிர். லொடலொடவென்று ஏதாவது பேசிக் கொண்டே இருப்பாள். எஸ்.எம்.எஸ். ஜோக்ஸ் அனுப்புவாள். பூனை குட்டி மாதிரி செல்வாவை சுற்றி சுற்றி வந்து கொண்டே இருப்பாள். உரிமையோடு முதுகில் குத்துவாள். மூக்கை கிள்ளுவாள். அவள் தன்னை காதலிக்கிறாளோ என்ற பயம் செல்வாவுக்கு இருக்கிறது. உன் மேல் எனக்கு காதல் இல்லை ஸ்வாதியிடம்தான் என்று மூஞ்சியில் அடித்த மாதிரி எப்படி அவளிடம் சொல்வது? அதுவும் தப்பாகப் போய், 'சார். நீங்கள் உங்கள் கோச் வேலையை மட்டும் பாருங்கள். வீணாக எங்கள் வாழ்க்கையில் குறுக்கிடாதீர்கள்' என்று ஆரம்பித்து வேலைக்கே உலை வைத்துவிட்டால் ? சே! ஒருத்தியிடம் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். இன்னொருத்தியிடம் இல்லை என்று சொல்ல வேண்டும். காதலை சொல்வதில் எவ்வளவு சிக்கல் ? யோசித்து யோசித்து கடைசியில் செல்வாவுக்கு ஒரு ஐடியா உதித்தது. பாஸ்கெட் பாலில் ஸ்ரீலேகாவை ஒரு போட்டிக்கு இழுக்க வேண்டும். அது கடினமாக இருக்க வேண்டும். தோற்கடித்து தன் மனதில் இருப்பதை சொல்லிவிட வேண்டும். "செல்வா சார்! நான் ரெடி. போட்டியை ஆரம்பிக்கலாமா?" "ஸ்ரீ. கவனமா கேளு. இந்த போஸ்டிலிருந்து எதிர் போஸ்ட் வரைக்கும் நடந்துகிட்டே பந்தை மேல் நோக்கி தட்டிக்கிட்டே வரனும். நிற்கவோ, பந்தை கையால பிடிச்சுக்கிட்டோ நடக்கவோ கூடாது. பத்து தப்படில மொத்த தூரத்தையும் கடக்கனும். தவிர, நான் ஏதாவது பேச்சு கொடுப்பேன். அதுக்கும் பதிலும் சொல்லனும். ஓகே?" "ஓகே. நான் ஜெயிச்சா நான் என்ன சொல்வேனோ அதை நீங்கள் கேட்கனும்." "ஓகே. அதே மாதிரி நான் ஜெயிச்சா...." "அதற்கு சான்ஸே இல்லை. நான்தான் ஜெயிப்பேன்." ஆனால் செல்வாவுக்கு நம்பிக்கை இருந்தது. நிச்சயம் தோற்றுவிடுவாள். ரெகுலர் ஸ்போர்ட்ஸ் டிரெஸில் வராமல் சுடிதாரில் வந்திருக்கிறாள். துப்பட்டா நிச்சயம் தொந்திரவு செய்யும். ஸ்ரீலேகா முதல் அடி எடுத்து வைத்தாள். "ஸ்ரீ. இன்று நீ ரொம்பவும் அழகாய் இருக்கிறாய்." "என்ன கிண்டலா?" ஹீரோ ஸ்டைலில் பாண்ட் பாக்கெட்டில் கைவிட்டு கொண்டு குறுக்கிட்ட செல்வாவை சாமர்த்தியமாக கடந்து போனாள் ஸ்ரீலேகா. செல்வா அடுத்த ஆயுதத்தை எடுத்தான். "ஆனால் உன் மூக்கு. அதுதான் கொஞ்சம் இடிக்கிறது." "போட்டி முடியட்டும் சார். அதற்குள் உங்கள் மூக்கை இன்ஷூர் செஞ்சுடுங்க" செல்வா சரமாரியாக கேள்விகளை அம்புகளாக வீசி வந்தாலும் ஸ்ரீ£லேகா அசரவில்லை. எட்டு தப்படி முடித்துவிட்டாள். இன்னும் இரண்டே தப்படிதான். செல்வாவுக்கு உலகமே காலுக்கடியில் சரிவது போல இருந்தது. தப்பு கணக்கு போட்டுவிட்டோமோ? வேறு வழியே இல்லை. எடு பிரமாஸ்திரத்தை. அதிரடியாக கேள்விகள் கேட்க வேண்டியதுதான். அதை கேட்டு அவள் கவனம் சிதற வேண்டும். அவள் தோற்க வேண்டும். "லுக். ஸ்ரீ. இது பர்சனல். உன்னை எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் அதில் நட்பு மட்டுமே இருக்கு. அதற்கு மேல் இல்லை...." "அப்படியா? போட்டி முடியட்டுமே. அதை நான் தீர்மானித்துவிடுவேனே?" சரியாக பத்து தப்படியில் முடித்துவிட்டாள். பந்து கீழே விழவேயில்லை. சே! என்ன முட்டாள்தனம் ! "ஸ்ரீ. நீ ஜெயிசுட்ட. ஓகே. ஆனால் நான் சொல்லறத கொஞ்சம் கேளு. வாழ்கையென்பது ஒரு போட்டியில் முடிவு செய்யக் கூடிய அற்பமான விஷயமில்லை. இரண்டு மனசு சம்பந்தப்பட்டது." தோல்வி பயத்தில் செல்வா உளறினான். "அதெப்படி? போட்டி வைச்சது நீங்கள். ஜெயிச்சது நான். என்ன சொல்லணும்கிறத நான்தான் தீர்மானிப்பேன்." "சரி. சொல்லு." செல்வா அவஸ்தையாக நெளிந்தான். ஸ்ரீ£லேகா வெற்றிக் களிப்பில் செல்வா அருகில் வந்தாள். கண்ணோடு கண் நோக்கினாள். சட்டென்று விலகி பெரிசாக ஓடி ஓடி சிரித்தாள். "ஸார். தப்பா நினைச்சுக்காதீங்க. இப்ப உங்க மூஞ்சி ப்யூஸ் ஆன பல்பு மாதிரி இருக்கு." "ஸ்ரீ... ப்ளீஸ்" "ஓகே. ஐயாம் சீரியஸ். செல்வா சார். நீங்க ஸ்வாதியை கல்யாணம் செஞ்சுப்பீங்களா? அவ உங்ககிட்ட சொல்லத் தெரியாம தவிச்சுக்கிட்டு இருக்கா. நீங்க அப்படியெல்லாம் இல்லைன்னு சொல்லிட்டா அவ மனசு உடைஞ்சு போயிடுவா. நீங்க போட்டின்ணு சொன்னதும் எனக்கு அது ஒரு நல்ல வாய்ப்பாக பட்டது. அவளுக்காகத்தான் இந்த போட்டிக்கே நான் ஒத்துக்கிட்டேன்." "தாங்க்ஸ் ஸ்ரீ. ஐ ஆம் சாரி. உன்னை எப்படியாவது ஜெயிக்கனுங்கற வேகத்துல உன் மனசு நோகற மாதிரி பேசிட்டேன்." "பரவாயில்லை சார். நீங்க உண்மைத்தானே சொன்னீங்க. சார் நட்பை தவிர நம்மிடையே இன்னொன்றும் இருக்கு. அது இந்த பாஸ்கெட் பால் விளையாட்டு. அதைதான் நான் மிகவும் விரும்புகிறேன். இந்தாருங்கள்." பந்தை செல்வா நோக்கி வீசிவிட்டு சிட்டாக பறந்தாள் ஸ்ரீலேகா. செல்வாவின் இதயத்தில் பட்டாம் பூச்சிகள் பறந்தன.  (தேவி - 27 பிப்ரவரி 2008) 57. அப்பா   "ஏங்க அப்பாகிட்டே சொல்லச் சொன்னேனே சொன்னீங்களா? நீங்களா சொல்றீங்களா? இல்லை, நானே நேரடியா கேட்டுவிடட்டுமா? இன்னிக்கு தேதி என்ன தெரியுமா? ஜூலை 19. ஞாபகம் வச்சுக்குங்க." "ஏய் கொஞ்சம் மெதுவா பேசேன்." "என்ன... என்ன... சொன்னாத்தான் என்ன? நீங்களாகவும் சொல்லமாட்டீங்க. என்னையும் சொல்லவிடமாட்டீங்க" விஜயா இப்படி திடீரென போட்டு உடைப்பாள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பக்கத்து ஹாலில்தான் அப்பா ஈசி சேரில் சாய்ந்து கொண்டு புத்தகம் படித்துக் கொண்டு இருந்தார். "என்னடா விஷயம்?" எதிர்பார்த்தபடியே அப்பா கூப்பிட்டார். "அப்பா... அது வந்து... நாளைக்கு ஜூலை 20-ம் தேதி. அம்மா இறந்து போன நாள். திடீரென விஜயாவோட காலேஜ் பிரண்ட் அவங்க ஃபேமிலியோட இங்கே வர்றா. இந்த வீடு சின்னது.. அதனால... அன்னிக்கு... இல்லை நாளைக்கு..." கோர்வையாய் வரவில்லை. உளறிக் கொட்டினேன். ஆனாலும் அப்பாவுக்கு சொல்ல வந்த விஷயம் புரிந்துவிட்டது. கண்களை மூடி 'ஈஸ்வரா' என்று சொல்லிக் கொண்டே சாய்வு நாற்காலியில் சாய்ந்து விட்டார். "அப்பா" அப்பாவுக்கு அம்மா மீது அளவில்லாத ப்ரியம். அந்த காலத்திலேயே ஊரையே எதிர்த்துக் கொண்டு காதல் கல்யாணம் செய்து கொண்டவர். அப்பாவுக்கு எல்லாமே அம்மாதான். அப்போதெல்லாம் அம்மா இல்லாத அப்பாவை யோசித்தே பார்க்க முடியாது. ஆனால் ஒரு கான்ஸரில் சோதனையாக அம்மா போய்விட்டாள். நான் அப்போதுதான் எஸ்.எஸ்.எல்.சி. முடித்திருந்தேன். அப்பாவுக்கு பெரிய ஷாக்தான். அப்பா அழவில்லை. ஆர்பாட்டம் பண்ணவில்லை. ஆனால் எல்லாவற்றையும் சேர்த்து ஜூலை 20-ம் தேதி செய்து விடுவார். அதிகாலையிலேயே எழுந்து குளித்து, பட்டு வேஷ்டி பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு ஒரு கருப்பு சால்வையை போர்த்திக் கொள்வார். அம்மா அந்த சால்வையைத்தான் தனது கடைசி காலங்களில் உபயோகப்படுத்தினாள். சுமார் மூன்று மணி நேரம் பூஜை செய்வார். கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் கொட்டும். அன்று முழுவதும் எதுவும் சாப்பிடமாட்டார். பேசமாட்டார். பார்ப்பவர் மனதைப் பிழியும். கலங்கிய கண்களுடன் நிமிர்ந்து பார்ப்பார். பூஜை முடிந்ததும் பாராயணம் செய்வார். சாயந்திரமாய் ஸ்நேகாலயா என்கிற அனாதை ஸ்ரமத்துக்குப் போய் குழந்தைகளுக்கு புதுத் துணிகள் கொடுத்துவிட்டு வருவார். இரவு எட்டு மணிக்கெல்லாம் தூங்கிவிடுவார். மறுநாள் சர்வ சாதாரணம். மறுபடி அடுத்த ஜூலை 20-ம் தேதிதான். விஜயாவுக்கு இதில் சுத்தமாக உடன்பாடில்லை. வெறும் கூத்து, ஷோ, சுய பச்சாதாபம் தேடுதல் என்று என்னவோ சொல்லுவாள். நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கேட்டாளில்லை. "அவ பிரண்ட் ஏழு, ஏழரைக்கெல்லாம் வந்து விடுவாளாம். வேணுமின்னா நான் பக்கத்து வீட்டு சாவி வாங்கித்தரேன். அது காலியாத்தான் இருக்கு. உங்களுக்கு சகல வசதிகளையும் அங்கே பண்ணிடறேன். இந்த வீடு ரொம்ப சின்னது... அதான்... அதைத் தவிர அவர்களெல்லாம்..." அப்பாவின் மெளனத்தை என்னால் தாங்கமுடியவில்லை. எல்லாம் இந்த விஜயாவால்தான். என்ன செய்ய? பிடிவாதக்காரி. அப்பா சட்டென்று எழுந்தார். உள்ளே சென்றவர் பெரிய பை ஒன்றைக் கொண்டு வந்தார். "சிவா நீ நாளைக்கு ஒரு காரியம் செய்யணும். காலைலே ஆபீஸ் போகும் போது இந்த பையை ஸ்நேகாலயாவிலே நான் சொன்னேன்னு கொடுத்துடு. எனக்கு ரொம்ப தள்ளாமை வந்துடுத்து. முன்ன மாதிரி இப்ப முடியலை. என்னவோ ஜூலை 20-ம் தேதி அவ நினைவு வந்து என்னை ஆட்டறது. ஆகட்டும். மத்தவாளுக்கு அது ஷோவாப் படலாம். போனவ போயாச்சு. புலம்பி என்ன பிரயோஜனம்? நான் என்னவோ முட்டாப் பய மாதிரி ஷோ பண்ணிண்டு..." "உங்களை ஸ்நேகாலயா போக வேண்டாம்ன்னு யார் தடுத்தா? சால்வைய போர்த்திண்டு, கண்ணீர் விட்டுண்டு, எல்லோரையும் கஷ்டப்படுத்த வேண்டாம்ன்னுதானே சொல்ல வந்தது. நாம் என்ன செய்யறோம்கிறதவிட அடுத்தவா அதை எப்படி பார்க்கிறாங்கிறதுதான் முக்கியம்." விஜயா உள்ளே இருந்து கொண்டே பேசினாள். "தோ பாரும்மா. நீ குஷாலா உன் பிரெண்டை கூட்டிண்டு வா. தோ பாருடா... நீ பக்கத்து வீட்டுச் சாவியெல்லாம் வாங்க வேண்டியதில்லை. நான் எல்லாத்தையும் விட்டுடப் போறேன். ஆச்சு... அறுபத்தியெட்டு வயசு ஆயிடுத்து. அவ போயே ஒரு மாமாங்கம் ஆயாச்சு. இன்னும் சொச்ச காலத்தை இப்படியே ஓட்டிடுவேன்." அப்பாவுக்கு மூச்சிரைத்தது. திடீரென தள்ளாடியவாறே வேகமாக எழுந்து டக்கென்று இரு கைககளையும் கூப்பியவாறே, "நாளைக்கு என் கண்ணுலேர்ந்து ஒரு சொட்டு கண்ணீர் வராது. போதுமா? போய்த் தூங்கு. நாளைக்கும் ஜூலை 19 தான். ஜூலை 20தாவது மண்ணாங்கட்டியாவது?" கடகடவென்று பாயை விரித்தார். போர்த்திக் கொண்டு படுத்துவிட்டார். எனக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. விஜயாவின் மீது கோபம் கோபமாக வந்தது. பதில் பேசினால், இன்னும் ஓங்காரமாய் நாலு வார்த்தைகள் பேசுவாள். கனத்த மனத்தோடு வந்து படுத்துக் கொண்டேன். தூக்கம் சரியாய் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தும் நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. தாகம் எடுக்கவே, தண்ணீர் குடிக்க கிச்சனுக்குப் போனேன். ஹாலில் எட்டிப் பார்த்தேன். அப்பா தூங்கிக் கொண்டிருந்தார். அப்பாவால் எப்படி தீர்மானிக்க முடிந்தது? ஆங்காரமா? எனக்குள் குற்ற உணர்ச்சி மேலிட்டது. அப்பா மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்? வந்து படுத்தேன். கண்ணைச் சொருகியது. விஜயா என்னை எழுப்பினாள். காலை ஆகிவிட்டிருந்தது. "என்னங்க... கொஞ்சம் எழுந்து வாங்களேன். " "என்ன ஆச்சு விஜயா? அப்பா குளிச்சுட்டு உட்கார்ந்திருக்கறாரா?" "இல்லீங்க... அப்பா போயிட்டாருங்க" மை காட்! ஓடிப் போய் பார்த்தேன். நெடுசாண் கட்டையாய் கிடந்தார். உடம்பு சில்லிட்டிருந்தது. ராத்திரியே உயிர் பிரிந்திருக்க வேண்டும். என் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீர் வராது என்று அப்பா சொன்னது காதில் ஒலித்தது. அவர் கண்களில் கண்ணீர் இல்லை. எங்கள் கண்களில்தான் கண்ணீர் நிரம்பியிருந்தது, விஜயா உள்பட.  1997 மே 18 வசந்தம் (தினகரன்) ஞாயிறு மலர்   58. எது வாழ்க்கை?   அழுகையும் பயமுமாக ஓடிவந்து அம்மாவின் கால்களை கட்டிக் கொண்டாள் நீரஜா.   கை கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. பேச்சு உடனடியாக வராததால் வார்த்தைகள் சிக்கின. "அம்மா. சின்னசாமி தாத்தா செத்துப் போயிட்டாங்களாம். அவங்க வீட்ல எல்லாரும் அழறாங்க. ஏம்மா. செத்துப் போறதுன்னா என்னம்மா ?" சின்னப் பெண் திக்கித் திணறி கேட்டாள். மரணம் என்றால் என்ன என்பதை அறியாத வயதில் அதை பார்த்திருக்கிறாள்!   தாங்கமுடியாத பேரதிர்ச்சிதான். எப்படி இந்த சின்னஞ்சிறு தளிருக்கு இதை புரியவைப்பது? அம்மா கொஞ்சம் குழம்பிப் போனாள். சட்டென ஒரு ஐடியா வந்தது "நீரஜ். உன்னோட பொம்மைக்கு சாவி கொடுத்தா ஓடறது இல்லையா? ஆனா, கொஞ்ச நேரம் ஓடின பிறகு நின்னுடுதுதானே. அதே மாதிரிதாம்மா செத்துப் போறதும். சாவி கொடுத்த மாதிரி நமக்குள்ள உயிர் ஓடிக்கிட்டு இருக்கு. முறுக்கி விட்டது தீர்ந்து போனது மாதிரி நாம ஒரு நாளைக்கு செத்து போயிடுவோம். ஆனா அது எப்பன்ணு நமக்கு தெரியாதும்மா?" ஏதோ ஒரளவுக்கு புரிந்த மாதிரி தலையை ஆட்டியது. இன்னும் சில கேள்விகள் கேட்டது. அம்மா அகல் விளக்கை காட்டி ஏதோ சொன்னாள். பிறகு மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று பேச்சை மாற்றியதில் குழந்தை சகஜ நிலைக்கு வந்தது. அம்மா நிம்மதியானாள். ஆனால் மறுநாளே நீரஜா மீண்டும் அம்மாவை நோக்கி ஓடி வந்தாள். "அம்மா. நேத்திக்கு அந்த தாத்தா வீட்டில அவ்வளவு அழுதாங்களே. அதெல்லாம் சும்மா. அவங்க வீட்டு டி.வி.ல வடிவேலு காமெடி பார்த்துக்கிட்டு இருக்காங்க. ஹோட்டல்லேர்ந்து டி·பன் வாங்கி சாப்பிட்டுகிட்டிருக்காங்க. அய்ய..." இரு வேறு நிலைகளை கண்டு குழந்தை குழம்பி போயிருக்கிறது. என்ன சொல்லி விளக்கினால் புரிந்து கொள்வாள்? அம்மா யோசித்ததில் பளீரென மனதில் மின்னலடித்தது. நீரஜாவை வாரியள்ளி கைகளில் ஏந்திக் கொண்டாள். "நீரஜ். நீ ஒரு பாதையில முக்கியமான வேலைக்காக போயிகிட்டு இருக்கே. திடீர்னு உன் காலுல ஒரு முள்ளு குத்திடுது. 'ஆ'ன்னு கத்துவ. முள்ள எடுத்து எறிவ. ஆனா அதுக்காக நீ போக வேண்டிய பயணத்தை நிறுத்திடுவியா என்ன? கொஞ்ச நேரம் விந்தி விந்தி நடந்திட்டு வலிய மறந்து நடக்க ஆரம்பிச்சிடுவே இல்லையா? அந்த மாதிரிதான் நாம வாழறதும். ஒரு மரணத்துக்காக நாம எல்லாத்தையும் நிறுத்திட்டு அதையே நினைச்சுக்கிட்டு இருக்க முடியாது. புரிஞ்சுதா?" சிறுமி இந்த முறை விழிகள் விரித்து இரட்டை பின்னல்கள் அசைய தலையை ஆட்டினாள்.  (ராணி - 26 ஆகஸ்ட் 2007) 59. எல்லாம் ஒரு பேச்சுக்கு   அழகிப் போட்டி தொடங்கியது. மெல்லிய இருட்டில் படு உயரத்திலிருந்து ஒளிக் கம்பாய் விழும் ஸ்பாட் லைட்டுகள் கூடவே வர ஒவ்வொரு அழகியும் அட்டகாசமாக வந்து அறிமுகமாகி வரிசையாய் புன்சிரிப்புடன் நின்றனர். அதில் நான்காவதாக வந்து மிகுந்த பரப்பரப்பை உண்டாக்கியவள் மிஸ் திவ்யா பார்த்தசாரதி. சென்னையைச் சேர்ந்தவள். மூன்று மாதங்களுக்கு முன்புதான் சென்னை அழகியாக தேர்வு பெற்றவள். அடுத்தடுத்த ரவுண்டுகளிலும் திவ்யா பாயிண்டுகளில் முன்னேறிக் கொண்டிருந்தாள். குறிப்பாக அந்த ஹெரிடேஜ் ரவுண்டில் வெவ்வேறு மாநில உடையலங்காரத்தில் மற்ற அழகிகள் வந்து அசத்தும் போது திவ்யா மட்டும் ஒரு வித்தியாசமான காஸ்ட்யூமில் தேசியக் கொடி மூவர்ணத்தில் எல்லா கலாசாரங்களையும் ஒருங்கிணைத்து வரவும் அரங்கமே அதிர்ந்தது. பாயிண்டுகளில் திவ்யா எங்கோ போய்விட்டாள். கடைசி ரவுண்டு. ஜூரிகள் கேள்விகளைக் கணைகளாகத் தொடுக்க உடனடியாக பதில் சொல்லும் ரவண்டு. திவ்யாவின் முறை வந்தது. "மிஸ் திவ்யா. நீங்கள் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். உங்களுக்கு இந்தியாவின் வறுமையை பற்றித் தெரியுமா? வறுமையை ஒழிக்க உங்களிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா?" ஒரு ரிடையர்டு ஐ.பி.எஸ். கேட்டது. திவ்யா ஒரு நொடி ஆடிப்போய்விட்டாள். ஆனாலும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு "நான் பசித்த வயிறுகளை பாக்காதவள் இல்லை. உணராதவள் இல்லை. எனது பள்ளி மற்றும் கல்லூரி தோழிகளின் பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் பகிர்ந்து கொண்டு எனது பாக்கெட் மணியை மிச்சம் பிடித்து அவர்களின் ஸ்கூல் பீஸ் கட்ட உதவியிருக்கிறேன். இதை நான் பெருமைக்காக இங்கே சொல்ல வரவில்லை. இந்த பிளவுபட்ட சமுதாயத்திலே எனது பொறுப்பான பங்கை நிறைவேற்றியிருக்கிறேன் என்பதையே தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வறுமையை ஒழிக்க ஒரே வழி, வசதி படைத்தவர்கள் தங்களுடைய அனாவசிய மற்றும் ஆடம்பரச் செலவுகளை கொஞ்சம் குறைத்துக் கொண்டு அதை ஏழை எளிய மக்களுக்கு வழங்கினாலே போதும் இந்தியாவில் ஏழ்மை என்பது இனிமேல் இராது. மிகச் சாதாரணமான இந்தக் கொள்கையைப் பிரபலப்படுத்த என் உயிர் மூச்சு உள்ள வரை பாடுபடுவேன்." சந்தேகமே இல்லாமல் திவ்யா இந்திய அழகி ஆனாள். "திவ்யா. சிம்ப்ளி சூப்பர்ப். உனக்கு கேட்கப்பட்ட கேள்விதான் மிக கஷ்டமானது. அதற்கு என்னமாய் பதிலளித்தாய். வெல் டன் திவ்யா. ஓ! அந்த காஸ்ட்யூம். கிரேட். ஒன்டர்புல். எங்களையெல்லாம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டாய். கங்கிராட்ஸ்". திவ்யாவின் உயிர்த் தோழி ரம்யா வாழ்த்தினாள். "அதை ஏன் கேட்கிறாய், போ. என் காஸ்ட்யூம் டிசைனர் ரவி மேனன்தான் செய்தான். இந்த காஸ்ட்யூமுக்கு மட்டுமே பத்தாயிரம் ஆகிவிட்டது. எல்லாம் முடிந்த பிறகு பார்த்தால் சாஃப்ரன் கலருக்கு பதில் ரெட் வைத்திருந்தான் மடையன். நான் ரொம்ப டென்ஷனாகி விட்டேன். அதை அப்படியே கடாசிவிட்டு புதிதாக ஒன்று செய்யச் சொன்னேன். இரண்டே மணி நேரத்தில் தயாரானது. என்ன, பில் டபுளானது". "ஏய் ஏதோ செலவு மிச்சம் செய்து வறுமை ஒழிப்பு அது இதுன்னு பேசின மாதிரி இருந்துச்சு". "ஓ! அதுவா? ஏதோ ஒரு பேச்சுக்காக சொன்னால் அதைப் போய் சீரியஸாக எடுத்துக்கிட்டு. அதைவிடு. சென்னை வந்ததும் தாஜ்ல கிராண்ட் பார்ட்டி வைச்சிருக்கேன். அவசியம் வந்திடு. என்ன?" 1998 ஆகஸ்ட் 06 சாவி   60. எதிரும் புதிரும்   "ம்.....பேஷண்ட் பேரு சொல்லுங்க" ரிசப்ஷனில் பீமனுக்கு தங்கை மாதிரி இருந்த நர்ஸ், கம்ப்யூட்டர் மானிடரை பார்த்துக் கொண்டே ஹிந்தியில் கேட்டாள். ராஜாராமன் சொன்னவளையே பார்த்துக் கொண்டிருந்தார். பதில் வராமல் போகவே, திடீரென நிமிர்ந்தாள். நெற்றிக் கண் பார்வை. "ம்.... அது வந்து.... பிரியம்வதா..... ராஜாராமன்......" குனிந்தாள். நான்கு நொடிகள் கழித்து, மீண்டும் நிமிர்ந்தாள். இந்த முறை ஆங்கிலம். "ரூம் நம்பர் 302. மூனாவது மாடி. ..... ஒன் மினிட்... அவங்க பேரு பிரியம்வதா ராஜகோபால்.... நீங்க கேட்டது....." ராஜாராமனுக்கு திடீரென உறைத்தது..... "ஆமாம்....அவங்களேதான்....." அவளேதான் என்று நாக்கு வரை வந்ததை, கடைசி நொடியில் மாற்றிக் கொண்டார். "அவங்க பிரியம்வதா.... நான் ராஜாராமன் .... ரெண்டையும் சேர்த்து சொல்லிட்டேன். ஸாரி" சே! என்ன அசட்டுத்தனம். அவள் ராஜாராமனை கேள்வியாக பார்த்தாள். "நீங்க அவங்களுக்கு என்ன வேணும்?" ராஜாராமனுக்கு என்ன சொல்வது? எப்படிச் சொல்வது என்று புரியவில்லை? திடீரென, இங்கு வந்திருக்க கூடாதோ என்று தோன்றியது. எல்லை தெய்வமே ஆயிரம் எதிர் கேள்வி கேட்கிறதே? "... ம்.... அது வந்து..." தடுமாறினார். அவளுக்கு பின்னால் கைகளை உயர்த்தி ஆசிர்வதிக்துக் கொண்டிருந்த ஏசுவின் மீது பார்வையை ஓட்டி 'ஏதாவது ஐடியா கொடேன்' என்பது மாதிரி மனதுக்குள் இறைஞ்சினார். "சொல்லுங்க சார்.... ப்ரெண்டா.? இல்லே, ரிலேட்டிவ்வா?" "...மொதல்ல ப்ரெண்ட்... அப்பறமா.... ரிலேட்டிவ்.... இப்ப பிரெண்ட்..." அவளுக்கு சுத்தமாக புரியவில்லை என்பதற்கு நெற்றியை சுருக்கினாள். அதற்குள் பின்னாலிருந்து 'வாங்கோ' என்ற சத்தம் கேட்டது. ராஜாரமன் சட்டென திரும்பவும்... கல்யாணி மாமி! அப்பாடி! "என்ன மாமி. எப்படி இருக்கேள்? சௌக்கியமா? ஹாஸ்பிடல்ல என்ன சௌக்கியமான்னு கேக்கறது தப்புதான். நீங்கதான் பேஷண்ட் இல்லையே. அதுனால பரவாயில்ல" கல்யாணி மாமி சிரித்தாள். "இவாள்ட என்ன கேட்டுண்டு இருந்தேள்?" "இவ நான் யாருன்னு கேக்கிறா? அப்படி சொன்னாத்தான் உள்ள விடுவா போலிருக்கு." மாமி இரண்டடி முன்னே வந்தாள். "இங்க பாரும்மா. இவர் என்னோட மாப்ளே. போலாமில்லையா?" "ஆண்டி. விசிட்டர் டைம் முடிஞ்சிருச்சு. பெரிய டாக்டர் வர்ற நேரம். சீக்கிரமா பார்த்துட்டு போகச் சொல்லுங்க. கூட்டமா இருந்தீங்கன்னா எனக்கு வேலை போயிடும்" படபடவென எண்ணெயில் விழுந்த ஆப்பம் மாதிரி புரியாத ஹிந்தியில் பொறிந்தாள். மாமி அவளை நோக்கி ஒரு வெற்று பார்வையை உதிர்த்து மௌனமாக தலையாட்டிவிட்டு, லிஃடை நோக்கி நடந்தாள். "இந்த காலத்து பொண்னுகளெல்லாம் ராட்சசிகள்" மாமி கீழ் பார்வை பார்த்துக் கொண்டே சொன்னாள். ராஜாரமனுக்கு சிரிப்பு வந்தது. "மாமி. இதை உங்க பொண்ணுக்கு முன்னால சொல்லாதீங்கோ. உங்களை கீசகனை வதம் செஞ்ச மாதிரி ரெண்டா கிழிச்சு போட்டுவா. பொம்மனாடி ராட்சசிகள்னா, இந்த ஆம்பிள்ளைகளெல்லாம் அரக்கர்கள்னு சொல்லுவா" "இப்ப அவதான் கிழிஞ்சு கெடக்கா. கர்பப்பையை எடுத்தாச்சு. பையாப்ஸிக்கு போயிருக்கு. கான்சரா, என்னேன்னு தெரியலை........எனக்கென்ன பயம்? தாராளமா அவகிட்டேயே சொல்லுவேன். சொல்லியிருக்கேன். இப்பல்லாம் முன்னமாதிரி நான் சும்மா இருக்கறதுல்லே. நான்னா ஒரு வாரத்துக்கு வலிக்கிறமாதிரி திருப்பி கேட்டுடறேன். தைரியம் வந்துடுத்து." திடீரென ராஜாரமனுக்கு ஞாபகம் வந்தது. அட சட். ஒண்ணுமே வாங்கிக் கொண்டு வரவில்லையே! வழக்கமாக எல்லோரும் வாங்கிக் கொண்டு வரும் ஆரஞ்சு பழம், ஆப்பிள், ஹார்லிக்ஸ் பாட்டில்... குறைந்த பட்சம் அவளுக்கு பிடித்த பெர்க் சாக்லெட்....  நல்லவேளை இப்போதாவது ஞாபகம் வந்ததே. ஒரு வேளை நேரே போயிருந்தால்..... "அம்மா. உன்னோட அருமை மாப்பிள்ளை மாறவே இல்லை. கைய வீசிண்டு வந்துட்டு, நீ குடுத்த காப்பியை குடிச்சுட்டு போயிட்டேர். ரொம்ப பெருமையா இருக்கு. மெச்சிக்கோ" லிஃட் தரைக்கு வந்து தன்னை இரண்டாக பிளந்து கொண்டது. ஒவ்வொருவராக வெளியேர தொடங்கினர். ராஜாராமனுக்கு பின்னால் இருந்தவர்கள் வெப்ப மூச்சுக் காற்றுடன் உள்ளே பாய்வதற்கு தயாராக இருந்தனர். ராஜாராமன் ஒரு அரை வட்டம் அடித்து, உடனடியாக க்யூவை விட்டு வெளியே வரவும், மாமி கலவரமானார். "மாமி. ஒரு நிமிஷம். நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்ரேன்......காரை சரியா லாக் பண்ணலேன்னு நெனைக்கறேன். சரியா தெரியலை. பார்த்துட்டு தோ வந்துடறேன்...... ஆமா நீங்க எதுக்கு கீழே வந்தேள்....." "அதுவா. ஒண்ணுமில்லே. ப்ரியாவுக்கு மருந்து வாங்கனும். இங்கேயேதான் எதிர் பில்டிங்கல இருக்கு. நான் வாங்கிக்கறேன். நீங்க போயிட்டு நேர 302க்கு வந்துடுங்கோ" மாமி கையில் ஒரு நீள சீட்டு இருப்பதை அப்போதுதான் கவனித்தார். "இல்லே. அந்த சீட்டை இப்படி கொடுங்கோ. நான் பேஸ்மெண்ட் போயிட்டு, மாத்திரை மருந்த வாங்கிண்டு வந்துடறேன். நீங்க ரூமுக்கு போங்கோ." கடைசி ஆளாக மாமியை லிஃட்டுக்குள் திணித்தார். மாமி என்ன ஏது என்று முடிவு எடுப்பதற்குள் லிஃட் கதவுகள் மூடிக் கொண்டன. ராஜாராமன் தரை தளத்தின் மைய பகுதி வரை வந்து அங்கேயே நின்று சிறிது நேரம் யோசிக்கலானார். நேற்று காலையில்தான் டெல்லி வந்தார். ஆபீஸ் விஷயமாக குர்கானில் நான்கு நாள் மீட்டிங். கனாட்பிளேசில் ரூம் போட்டிருந்தார்கள். ராத்திரி எட்டு மணிக்கு அப்பா போன் செய்தார். "ராமா, ப்ரியா ஹாஸ்பிடலைஸ்டு தெரியுமா?" "தெரியாது. தெரிஞ்சுக்கணும்னு அவசியமும் இல்லே." அப்பா சில நொடிகள் பதில் கொடுக்கவில்லை. "ஏன்டா. எவ்வளவு நாள் தனியா இருக்கப் போற? நான் போய்டேன்னா, சீர் பட்டு போகப்போறே." "கமான்ப்பா. எத்தனையோ பேச்சலர்ஸ் தனியாதான் இருக்காங்க. அவங்க சீர் கெட்டா போயிட்டாங்க? அம்மா போனதுக்கு அப்பறம் நீங்க தனியாதானே இருக்கேள். கெட்டா போயிட்டேள். உங்களுக்கு ஏதோ ஒன்னு நடக்கனும். அத சுத்தி வளைச்சு பேசறேள். அதான் டைவர்ஸ் வரைக்கும் போயாச்சே. இனிமே என்ன இருக்கு?" "ஏய். கோர்ட்டுல தீர்ப்பாகற வரைக்கும் அவ ஒன்னோட பொண்டாட்டிதான். அது கெடக்கட்டும். கல்யாணத்துக்கு முன்னால நாலு வருஷம் பிரண்ட்ஸா இருந்திருக்கே. என்னமா வழிஞ்சுருக்கே. அதுக்காவாவது.... அது சரி... அவ என்னடா பெரிய தப்பு பண்ணிட்டா? அவளுக்கு ஒரு தனி ஐடெண்ட்டிடி வேணும்னு எதிர்பார்த்தா. அது தப்பா?" "அப்பா, நான்தான் லீட் கிடார். நான் என்ன வாசிக்கறேனோ அதுக்கு ஒத்த மாதிரி அவ வாசிக்கனும். அவ தனியா இன்னொரு ஆர்கெஸ்ட்ரா நடத்தக்கூடாது. உனக்கு இதெல்லாம் புரியாது. வீட்ல ரெண்டு ஹஸ்பெண்டா இருந்தோம். தேர் வாஸ் நோ வைஃப். வேற ஏதாவது பேசு." "சரி. பேசறேன்..... ம்....  மன்மோகன் சிங் சௌக்கியமா?" அப்பா ரொம்பவும் விட்டி காரெக்ட்டர். "இந்த கிண்டல்தானே, வேண்டாங்கிறது." "நீ வைஃபா இருந்திருக்க வேண்டியதுதானே. அதை விடு......நான் சொல்லறது கொஞ்சம் கேளு. யு கோ வித் ஓப்பன் மைன்ட். ஒரு பொக்கே வாங்கிக்கோ. கெட் வெல். வித் ரிகார்ட்ஸ். சந்திரமௌலின்னு கார்டு போட்டு அவ கிட்டே கொடு. அவ நல்ல பொண்ணுடா. என்ன மக நட்சத்திரம்? அப்படிதான் கொஞ்சம் அப்பர் ஹாண்டா இருப்பா..." அப்பா சீரியஸ்ஸாக பேசினால் இங்கிலீஷ் புகுந்து விளையாடும். "அப்பா. யூ ஆர் சைல்டிஷ்." "இப்பவும் ஒண்ணும் குடிமுழுகிப் போகலை. வேண்டாம் வேண்டாம் சொல்ல சொல்ல ஈஷோ ஈஷிண்டு நீங்கதான் காதல் செஞ்சிங்க. வேண்டாம் வேண்டாம் சொல்ல சொல்ல சண்டை போட்டீங்க. டைவர்ஸ் நோட்டீஸ் கொடுக்கறதுக்கு முன்னால என்னை ஒரு வார்த்தை கேட்டியா? நீங்கதான் ஃபூல்ஸ். முட்டாள்கள் ரெகன்ஸைல் பண்ணிகறதுல தப்பே இல்லே." "அப்பாவா இருக்கறதுனால யு கெ நாட் டிக்டேட் டர்ம்ஸ் ஆன் மி." "டூ வாட் ஐ சே மை சன்." அப்பாவின் குரல் உயர்ந்தது. கொஞ்சம் மௌனம் நீடித்தது. "ஓகே. ஓகே. நானா எதுவும் ஆரம்பிக்க மாட்டேன். அவளா ஏதாவது சொன்னா, ஐ மே..... ஐ மே..." "ஐ ஜூன்.... ஐ ஜூலை... போடா. போய் பாரு. கிழிச்ச நாரா கெடக்காளாம். கோ வித் பொக்கே அன்ட் ஃப்ரீ மைண்ட், மை டியர் டர்டி கூஸ்." அப்பாவுக்கும் மகம் நட்சத்திரமாக இருந்திருக்குமோ என்று ராஜாராமனுக்கு அப்போது சந்தேகம் வந்தது. ராஜாராமன் ஹாஸ்பிடலை விட்டு வெளியே வந்து ஒரு பெரிய கூடை பொக்கே ஒன்றை வாங்கி, கார்டில் அப்பா பெயரை போட்டார். ஏ4 சைசில் ஒரு காட்பெரி கிஃட் பேக் ஒன்றை வாங்கிக் கொண்டார். அதில் பெர்க் இருக்கிறதா என்று உறுதி செய்து கொண்டார். அதே நேரத்தில் கல்யாணி மாமி 302ஐ அடைந்திருந்தாள். "ப்ரியா. மாப்பிள்ளை வந்திருக்கார். ரிஷப்ஷன்லே பார்த்தேன். இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்துடுவார்." ப்ரியா முகம் சுருக்கினாள். "மாப்பிளையாவது மண்ணாங்கட்டியாவது? வொய் த ஹெல் ஹி இஸ் கமிங். எல்லாம் முடிஞ்சு போச்சே." "இங்க பாரு. தஸ் புஸ்னு எங்கிட்ட இங்லீஷ்ல பேசாத. நான் மடச்சியாகவே இருந்துட்டு போறேன். வரவர்கிட்டே இந்த மாதிரி எரிஞ்சு விழாத." "எனக்கு யாரையும் பார்க்க இஷ்டமில்லே. நீ வேனா கீழே போய் பார்த்து அப்படியே அனுப்பிடு." அதற்குள் கதவு திறக்க, ஒரு நர்ஸ் கைகளில் ஒரு ட்ரேயுடன் உள்ளே வந்தாள். வந்தவள் அங்கிருந்த அசாதாரண சூழ்நிலையை குறிப்பறிந்து கொண்டாள். "மேடம். மார்னிங்தான் ஆபரேஷன் ஆயிருக்கு. ஸ்டிச்சஸ் டிஸ்டர்ப் ஆகக் கூடாது. இரைஞ்சு சத்தம் போட்டு பேசக் கூடாது. அவாய்ட் பண்ணுங்க. டாக்டர் சொல்லிருக்காருல்ல." "சிஸ்டர். நீங்க சிஸ்டர் லேலையை மட்டும் பாருங்க. நான் ஒன்னும் அடி முட்டாள் இல்லே. புரிஞ்சுதா. கீப் யுவர் லிமிட்ஸ் ப்ளீஸ்." ப்ரியா சுளீரென திருப்பி கொடுத்தாள். நர்ஸ் அந்த சாட்டையடியை எதிர்பார்க்க வில்லை. எக்கேடு கெட்டுப் போ என்கிறது மாதிரி ரியாக்ஷன் செய்த்து விட்டு மாத்திரைகளை சரமாரியாக டப்பாக்களில் அடைத்து விட்டு போனாள். அவள் போன இரண்டாவது நொடியில் கதவு மீண்டும் தட்டப்பட்டது. இந்த முறை ராஜாராமன். கல்யாணி மாமி மீண்டும் 'வாங்கோ' என்றாள். ப்ரியா கொஞ்சம் கூட சலனமில்லாமல் தன் கண்ணாடியை எடுத்து போட்டுக் கொண்டாள். ராஜாராமன் அப்பா கொடுக்கச் சொன்ன பொக்கேயை அவளை நோக்கி நீட்டினார். ப்ரியா அம்மாவை நோக்கி கைகாட்டினாள். கல்யாணி மாமி ப்வயமாக வாங்கி, ப்ரியாவிடம் காட்டிவிட்டு அருகிலிருந்த டேபிள் மீது வைத்தாள். ராஜாராமன் கேள்வியே கேட்காமல் கிஃட் பாக்கெட்டையும் மாமியிடமே கொடுத்தார். அதுவும் இயந்திர கதியாக டேபிளுக்கு போனது. "ஹவ் ஆர் யூ?" "ம். இருக்கேன்." 'கொஞ்சம் ஒடம்புக்கு ஏத்த வேலை செய்யறது." "நீங்க அட்வைஸ் செய்யுற காலமெல்லாம் போயிடுத்து." கல்யாணி மாமி கலவரமாக ரெண்டு பேரையும் மாறி மாறி பார்த்தாள். என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்தாள். "அப்பா அவசியம் போய் பார்த்துட்டு வான்னு சொன்னார். அதான்....." "அப்ப நீங்களா வர்லே.. இல்லியா." ப்ரியா கொஞ்சம் வாலி டைப். எதிராளியின் பலத்தை சரி பாதி வாங்கிவிடுவாள். அந்த நிமிடமே ராஜாராமன் பிடி அற்று போனது. "ஓகே. ஓகே. கெட் வெல். கீப் குட் ஹெல்த்." ஒரு மாதிரி சமாளித்து, மாமி பக்கம் திரும்பி, "என்ன மாமி? எப்படி இருக்கேள்?" மாமி ஒரு பெரு மூச்சு விட்டுவிட்டு, "ம்.. ஏதோ இருக்கேன்பா. இந்த ஊர் ஹிந்தி ஒரு எழவும் புரியலை. ஏதோ பாம்பே ஹிந்தியை வைச்சுண்டு சமாளிக்கறேன். இவ என்னடான்னா விக்கிரமாதித்தன் மாதிரி காடாறு மாசம், நாடாறு மாசம்னு தேசாந்திரம் போயிடறா. பெரிய வீட்டுல, தன்னந்தனியா....." "அம்மா போறும். ஐ ஆம் சிக் ஆஃப் யுவர் கம்ப்ளெயிண்ட்ஸ்." 'இந்த மாதிரிதான் இங்கிலீஷ்ல பேசி வாயை அடைச்சுடுவா. அவர் கூடவே நானும் மேல போய்டா நல்லது. நாளை எண்ணிண்டு இருக்கேன்." அதற்கு மேல் ராஜாராமன் அங்கிருக்க ப்ரியப்படவில்லை. போய்விட்டார். கல்யாணி மாமியும் கூடவே போனாள். கால் மணி கழித்து திரும்பி வந்தாள். முகமெல்லாம் சிவந்திருந்தது. "இருந்தாலும், ஒனக்கு இவ்வளவு துராங்காரம் கூடாது." "இப்ப என்னதான் சொல்லவர்ற. பழங்காலத்து தமிழ் சினிமாவுல கெடுத்த வில்லனை திருத்தனும். அப்பறம் அவனுக்கே அவளை கட்டி வைக்கனும்கிற மாதிரி நான் அவரோட எகெயின் குடும்பம் நடத்தனுமா?. அம்மா, ஒனக்கு என்ன மூளை மழுங்கிடுத்தா?" "சரிடி. நீ இப்படியே இரு. இன்னிக்கு வயத்தை கிழிச்சாச்சு. நாளைக்கு என்ன நடக்கப் போறதோ. ஈஸ்வரா!" "இங்க பாரு. உன்னால முடியலைன்னா சொல்லு. நாளைக்கே டிரெயின் ஏத்திவிடறேன். உங்க அண்ணாவாத்துக்கு போ." "ஏன் மாமான்னு சொல்ல முடியாதோ?" "எனக்கு யாரும் வேண்டாம். எல்லாரும் போய் தொலைங்கோ." கல்யாணி மாமி பதில் பேசாமல் அழுதாள். "அம்மா. உனக்கு உன் மாப்ளை அப்படியே சத்யசீலர்ன்னு நினைப்பு. ஆனா அந்த ஆள் மாதிரி மேல் சாவனிஸ்ட் வேற எங்கையும் பார்க்க முடியாது. உள்ளுக்குள்ள உளுத்து போன பிலாசபி. வெளியிலே பெரிய இன்ட்டெலிக்சுவல்னு பந்தா. எல்லாம் வேஷம். ரெண்டு மூனு தடவை என்னை அடிச்சிருக்கான். கடைசியா அடிக்க வந்த போது கையை புடிச்சு ஒரு முறுக்கு முறுக்கினேன். கை ப்ராக்சர் ஆகி, இரண்டும் வாரம் ஆபீஸ் போகல ஒரு மாசம் இடது கையால லாப் டாப்ல டைப் அடிச்சான். உன் மாப்ளே சரியான க்ராக்." "ஆமா. நீ அப்படியே புடம் போட்ட தங்கம் பாரு. எல்லாம் என் தப்பு." "என்ன தப்பு?" "ஒன்னை பெத்ததே தப்பு." "அதை ஒன் புருஷன்கிட்டே செல்லியிருக்கனும்." கல்யாணி மாமி ஒன்றும் பேசவில்ல. ஒரு வெற்று பார்வை பார்த்தாள். "நல்ல வேளைடி. உங்களுக்கு கொழந்தைகள் பொறக்கலை. இல்லேன்னா அதுக படற பாட்டை கண்ணு கொண்டு பார்க்க முடியாது." "அம்மா. இனிமே இந்த டாப்பிக்கை எடுக்காதே" "ஏண்டி, நீ கொஞ்சம் இறங்கி வரப்படாதா?" "வரலாம். என்னை மாதிரி அட்ஜெஸ்ட் செஞ்சுண்டு போற ஆள் வேறு யாரும் கிடையாதுன்னு எனக்கு ஆபீஸ்ல பேரு. ஆனா, உன் மாப்ளை கொஞ்சாமாவது லீட் கொடுத்தாரோ? வந்தவுடனேயே அட்வைஸ் செய்ய ஆரம்பிச்சாச்சு. அப்பறம் எப்ப மெட்றாஸ் வரப்போறன்னு அடுத்த கேள்வி வரும். எனக்கு டெல்லிய விட்டு போக முடியாது." "ஆபீஸ்ல... அதென்ன... ஆங்... அட்ஜெஸ்ட் பண்ணிப்ப. வீட்ல அதை பண்ண மாட்டே. நான்னாருக்கு உன் நியாயம். என்னையும்தான் உங்க அப்பா அடிச்சிருக்கார். ஒரு தடவை காலால மிதிச்சே இருக்கார். அப்பறந்தான் நான் அவர் கோபத்தை கிளர்ற மாதிரி பேசிருக்கேன் தெரிஞ்சது. அப்பறம் எப்படி கேட்டா, பதில் பாந்தமா வரும்னு புரிஞ்சுண்டேன். சாகற சமயத்திலே, நான் போய்டா, நீ என்னடீ பண்ணுவே? என்னடீ பண்ணுவேன்னு கண்ணீர் விட்டு கதறினார்....." "அம்மா. போதும்மா. உன் அடிமை புராணம். இப்பெல்லாம் ஆணும் பெண்னும் ஒண்னு." "ஒண்ணு, ஒண்ணு இல்லேடி. ஒண்ணுக்காக இன்னொண்ணு." "சரி, என்ன எழவோ விடு. இந்த ராஜாராமருக்கு நீயே இன்னொரு சீதையை, ஒரு அடிமை சீதையை கல்யாணம் பண்ணி வை. என்னை இழுக்காதே. எனக்கு தூக்கம் வர்றது." அதன் பிறகு கல்யாணி மாமி எதுவும் பேசவில்லை. ராஜாராமன் சென்னை வந்த ஒரு மாதம் கழித்து, ஈ.சி.ஆர்.ரோட்டில் அவர் காரை ஒரு கன்ட்டெயினர் லாரி பதம் பார்த்தது. உடனடியாக அப்போலோ ஐ.சி.யூ.வில் அட்மிட் செய்யப்பட்டார். அந்த சமயத்தில் ப்ரியம்வதா தன் கம்பனி விஷயமாக சென்னை வந்திருந்தாள். கூடவே அவள் அம்மாவும் வந்திருந்தாள். தகவல் கிடைத்ததும், அம்மாவின் பிடுங்கலின்படி ப்ரியம்வதா சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஹாஸ்பிடல் வர ஒத்துக் கொண்டாள். இருவரும் கால் டாக்ஸி பிடித்து ஹாஸ்பிடலை அடைந்தனர். ரிஷப்ஷனில் இருந்த ஒல்லியான சின்ன உடம்புக்காரி ப்ரியம்வதாவை பார்த்து கேட்டாள். "ம்.... பேஷண்ட் பேரு சொல்லுங்கம்மா?" கல்யாணி மாமி கவலை அப்பிய முகத்தோடு ப்ரியம்வதாவை பார்த்தாள். (தினமலர் - வாரமலர் 5 பிப்ரவரி 2012)   61. விடியும்?   தனம் வேகவேகமாக தன் நடையை கூட்டினாள். மணி பத்தாகிவிட்டது. லேட். ரொம்பவும் லேட். இனிமேல் எப்போது போய், எப்போது சமைத்து, எப்போது சாப்பிட? இப்போதே அவளுக்கு பசித்தது. பேசாமல், பேங்க் மேனேஜர் வீட்டம்மா கொடுத்த மீந்து போன அந்த வறட்டு ரொட்டிகளை சாப்பிட்டு விட்டு வந்திருக்காலம். எருமையின் நாக்குகள் மாதிரி இருந்த அந்த ரொட்டிகளை அலட்சிய படுத்தியது தற்போது தப்பென்று தோன்றியது. வீட்டுக்கு போகவே தெம்பில்லை. இதில் போய் எப்படி சமைக்க? தனத்துக்கு உடம்பு வலியோ பசியின் உக்கிரமோ ஒரு பொருட்டு அல்லை. நிம்மதியற்ற மனசுதான் அவளை பாடாய் படுத்திக் கொண்டிருந்தது. தான் வேலைக்கு வந்துவிட்ட இந்த காலை நேரத்தில் ஒருவேளை மதி வீட்டுக்கு வந்து அட்டசாசம் செய்து கொண்டிருப்பானோ என்று பயந்தாள். அது அவள் மனசுக்குள் நெருப்பு பொறிகளாக சுட்டெறித்தது. 'அவனாவது இப்போதைக்கு வருவதாவது? ஐயா வெள்ளையும் சொள்ளையுமாக எங்காவது கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக்கிடிருப்பாரு. குறைந்த பட்சமா இன்னும் ரெண்டு நாளைக்கு வீட்டுப்பக்கம் தலை காட்ட மாட்டாரு. தனம் நீ கவலையே படாத. தைரியமாக இரு' என்று உள் மனசு ஆறுதல் சொல்லியது. அதை உடனடியாக ஏற்றுக் கொள்ளாமல், தனம் தலையை குறுக்கும் நெடுக்குமாக ஆட்டி 'உச்' கொட்டினாள். அவளை அருகில் கடந்து சென்ற ஒரு சிலர் வினோதமாக திரும்பி பார்த்தனர். குடிசையை அடைய இன்னும் பத்து நிமிடத்திற்கு குறைவில்லாமல் நடக்க வேண்டும். எட்டு மணிக்கே சுட்டு பொசுக்கும் வெயில். உழைத்த உழைப்பின் ஆதாரமாக அவளைச் சுற்றி ஒரு இரண்டு அடி வட்ட எல்லைக்கு தூக்கலான வியர்வை நெடி. கொஞ்சம் அவள் அருகில் வந்தவர்கள், திடீரென கலவரப்பட்டு மூக்கின் மீது விரல்களை ஈ ஓட்டுவது மாதிரி வீசிக்கொண்டு விலகி நடந்தார்கள். தனம் அதற்கெல்லாம் கவலை பட்டவளாக இல்லை. அவளுக்கு இந்த மாதிரி முகசுளிப்புகளை பார்த்து, கடுஞ்சொற்களை கேட்டு பழகிவிட்டது. பனகல் பார்க் வந்து  விட்டது. துரைசாமி பாலம் தாண்டி, பிருந்தாவன் தெருவின் கடைசி திருப்பத்தில், அவள் குடிசை இருக்கிறது. கிட்டதட்ட நாற்பது குடிசைகள். ஒரு காம்பவுன்ட் சுவரை ஒட்டி ஒரு வயதான பாம்பு மாதிரி நீண்டு இருக்கும். இந்த பக்கத்தில் ஒரு வேளை சோற்றுக்கு ஆளாய் பறக்கும் குடிசை வாழ் கூட்டம்.  காம்பவுன்ட் சுவற்றுக்கு அந்த பக்கம் சீமை பசுக்களாய் வரிசை கட்டி நிற்க்கும் உயர்தர கார்களின் சொந்தக்காரர்களான மேட்டுக்குடி மக்கள். தனம் பல நாள் யோசித்திருக்கிறாள். இந்த ஏழ்மை சாபமா? ஏன் இப்படி நமக்கு? கார் பங்களா என்ற வசதி கூட வேண்டாம். நாளை அரை வயிறு சோற்றுக்கு கூட உத்திரவாதம் இல்லையே? குடியும் கூத்துமாக இருக்கும் தன் சக விளிம்பு நிலை மனிதர்களை கண்டு எரிச்சல் அடைந்திருக்கிறாள். பல சமயம் வருத்தமும் பட்டிருக்கிறாள். எப்போது நம் வாழ்வில் வெளிச்சம் வரும்? மீண்டும் மீண்டும் சேற்றில் விழுந்து புரளும் பன்றிகளோ நாங்கள்? என்று கவலைப்பட்டிருக்கிறாள். எதிர் படும் வாகனங்களையும், மனிதர்களையும், மிரண்டு போய் பிளாட்பாரங்களில் ஒதுங்கியிருக்கும் சவலை மாடுகளையும் ஒதுக்கி, வளைந்து, வேகம் குறைந்து, பிறகு கூட்டி நடக்க தனம் ரொம்பவே சிரமபட்டாள். மனசில் துயரங்கள் நெல்லு மூட்டைகளாக பாரம் கொடுக்க அவள் கால்கள் ஒத்துழைக்க மறுத்தன. காலையில் ஐந்து மணிக்கு வீட்டை விட்டு வழக்கம் போல கிளம்பியாயிற்று. வரிசையாக நாலு வீடுகளில் வேலை. ஒவ்வொரு வீட்டிலும் ஏகமாய் அழுக்கு துணிகள், பிசுக்கடைந்த சமையல் பாத்திரங்கள், தூசும் குப்பையுமாக வழுவழு தரைகள். அதுவும் அந்த வருமான அதிகாரி வீட்டில் உள்ளே போனால் வெளியே வர குறைந்த பட்சம் இரண்டு மணியாவது ஆகும். மதியம் வருகிறேன் என்றால் கேட்க மாட்டார்கள். வேலை. வேலை. எபோதும் வேலை. பல சமயங்களில் தான் ஒரு இயந்திரமா இல்லை மனுச ஜென்மமா என்று சந்தேகம் கொண்டிருக்கிறாள். அழுக்கு துணிகளை தோய்த்து தோய்த்து, அந்த நெடியே அவளுக்கு வாசனையாகி விட்டது. ஆனாலும் வேலை செய்வதில் தனம் என்றுமே அலுத்துக் கொண்டதில்லை.  தானே தேடிக் கொண்ட புருசனும் சரியில்லை. தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட பிள்ளையும் சரியில்லை. என்ன செய்வது? பிள்ளை சதீஷ் நினைப்பு வந்ததும் இன்னும் கவலை கூடியது. கனவன் அரசியல் என்றால், பிள்ளை சினிமா. இந்த இரண்டுக்கும் நடுவில் தனம் படும் பாட்டை சொல்லி மாளாது. மதியை பொறுத்தவரை தனமும், சதீஷும் அவன் சார்ந்த அரசியல் கட்சிக்கு முன்னால் இரண்டாம் பட்சம்தான். தலைவர் ஆனையிட்டால் போதும் கையில் உருட்டுக் கட்டையை எடுத்துக் கொண்டு அங்கும் இங்கும் ஒடுவான். சில நாட்கள் ரத்தம் சொட்ட சொட்ட மூக்கும் வாயும் வீங்க கிடக்க மூலையில் சரிவான். ஒரு சில சமயங்களில் போலீஸ் வந்து தேடிவிட்டு போகும். 'கட்சிக்காக உயிரையும் கொடுக்கிறேன் என்று சொல்லி ஏதாவது வில்லங்கம் செய்து வைக்காதே. உன்னை நம்பி நாங்கள் இரண்டு பேர் இருக்கிறோம்' என்று அவனிடம் சொல்லி வைத்திருக்கிறாள். மதி, 'என் அருமை நண்பர்கள்' என்று சொல்லி கொள்பவர்களில் பல பேர், அவன் இல்லாத நேரத்தில் பல் இளித்திருக்கிறார்கள். அதை பற்றி பேசினாலே அவர்களுக்கு இடையே சண்டை வந்திருக்கிறது. இந்த குழப்பங்களை எப்படி தீர்ப்பது என்று தனத்துக்கு விளங்கவில்லை. ஒரு முறை அம்மாவிடம் சொல்லியதற்கு, 'நீயே தேடிக் கொண்டதற்கு நீதான் பொறுப்பு. நீயே சாமாளிச்சுக்க' என்று வெறுப்பை உமிழ்ந்தாள். தன்னை யாரும் கவனிக்கவில்லையே என்ற குறை அவள் அம்மவுக்கு. அவள் பாடே தின்டாட்டம். இதில் எங்கே புத்திமதி சொல்வது?. ஒரே மகன் சதீசுக்கும் கொஞ்சம் கூட பொறுப்பில்லை. ஏதோ ஒரு சினிமா கதாநாயகனுக்கு சம்பளம் வாங்காத ஊழியம் செய்கிறான். கிடைக்கும் சொற்ப வருமானத்தை தன் அபிமான நடிகனின் வெற்றிக்காக செலவழிக்கிறான். அம்மா அஞ்சுக்கும் பத்துக்கும் இப்படி அலைகிறாளே நாமாவது ஏதாவது சம்பாதித்து கொடும்போம் என்று எப்போதும் உணர்ந்ததில்லை. ஒரு வழியாக தன் வீட்டை நெருங்கிவிட்டாள். குடிசையின் கதவு அகலமாக திறந்திருந்தது. கண்கள் சுருக்கி பார்த்ததில் அரை இருட்டில் யாரோ படுத்திருந்த மாதிரி இருந்தது. கொஞ்சம் நெருங்கி, குனிந்து பார்த்ததில் அது மதி என்று தெரிந்தது. மதி அவளை விட கேவலமாக இருந்தான். உருட்டி விட்ட கரி மூட்டை மாதிரி இருந்தான். தண்ணியடித்திருக்கானோ என்ற கவலையில் அவளை புரட்டினாள். வாய் ஓரத்தில் எச்சில் ஒழுக முனகிக் கொண்டே புரண்டான். தனம் கொஞ்ச நேரம் வெற்று பார்வையாக அவனை பார்த்தாள். மீண்டும் அவளுக்குள் சோகம் அப்பிக் கொண்டது. நமக்கு விடிவு காலமே கிடையாதா? இவன் இப்படியேதான் இருப்பானா? நாமும் இப்படி ஓடி ஓடி உழைத்துக் கொண்டேதான் இருக்க வேண்டுமா? ஒரு அலட்சிய பார்வையை வீசி விட்டு சமையல் வேலையை தொடங்கினாள். இரண்டு வாரங்களுக்கு முன்னால்தான் சட்டசபை தேர்தல் தேதி அறிவித்தார்கள். அந்நாளிலிருந்து மதியை பிடிக்க முடியவில்லை. ஆட்டோ ஓட்டி சம்பாதிப்பதில் ஏதோ அவ்வப்போது கொடுக்கும் ஐம்பது ரூபாயும் தற்போது நின்று விட்டது. அவன் ஆட்டோவில் கட்சிக்கொடி ஒய்யாரமாக பறக்கிறது.  ஆனால் ஆட்டோ அவன் ஓட்டுவதாக தெரியவில்லை. ஐயா ஜம்மென்று ஏ.சி வைத்த பெரிய வண்டியில் பறப்பதை அடிக்கடி பார்க்க முடிகிறது. நேற்று அயனாவரம் பஸ்டாண்டு அருகில் ஆட்டோவை அடையாளம் கண்டு உள்ளே எட்டிப் பார்த்ததில் அதில் மூன்று தடியர்கள் சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். அண்ணன் கட்சிப் பணியில் தீவிரமாக இருக்கிறாராம். அரிசியை களைந்து கொண்டிருந்தவள் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தாள். லேசாக முனகல் கேட்டது. அருகில் வந்து மதியின் நெற்றியை தொட்டு பாத்தாள். ஜுரம் இல்லை. ஆனால்... "இன்னா. ஓடம்பு நோவுதா? போய் மெடிக்கல் ஷாப்பல மாத்திர வாங்கியாரட்டா?" மதி எழுந்து உட்காந்தான். "ஒடம்புக்கு ஒண்ணுமில்லே தனம். நான் ஏமாந்துட்டேன். கட்சி ஏமாத்திடுச்சு." "ஆமா. தலைவர்ன்னா ஏமாத்துவாங்க. தொண்டர்னா ஏமாறுவீங்க. இது புதுசு ஒண்ணும் இல்லையே. நீயும் உன் கட்சியும்." தனம் அலுத்துக் கொண்டாள். "நீ வேற குத்தாத. நானே நொந்து போயிருக்கேன்." இரண்டு நிமிட மெளனத்துக்கு பிறகு மதியே ஆரம்பித்தான். "செல்வம் பேச்சை நம்பினது என் தப்பு. எலேய். நம்ம தலைவர் மத்த தலைவர் மாதிரி இல்லைடா. ஏழைப் பங்காளர். அவரு தெறமைய மட்டும்தான் பார்ப்பாரு. உன்னோட மேடை பேச்சு டேப்பெல்லாம் அவருக்கு போயிருக்காப்பல. அன்னிக்கு தலைவராண்ட சைக்கிள் கேப்ல ரெண்டு நிமிசம் பேச முடிஞ்சிச்சு. அதுல ஒரு நிமிசம் ஒன்னைய பத்தியே விசார்ச்சார்னா பார்த்துக்க. நான் சொல்லறேன். இப்ப எளுதிக்க. நீதான் இந்த தடவ இந்த தொகுதிக்கு சட்டமன்ற வேட்பாளர்ன்னு இனிக்க இனிக்க பேசி என்கிட்ட எல்லா வேலையும் வாங்கிப்புட்டு, கடைசில அவன் வேட்பாளர் ஆயிட்டான். நான் கவுந்திட்டேன்." "ஆமா. நீ என்னாத்த ஏமாந்தே? கைக்காச ஏதாவது கொடுத்தியா," "ஆமா, தனம். புதுசா ஆட்டோ வாங்க பணம் வச்சிருந்தேன்ல. அந்த டுபாகூர் பேச்ச நம்பி அதுல பத்தாயிரத்தை எடுத்து லைன்ல வுட்டேன். எல்லாம் போயிடுச்சு. அது போக,  இன்னும் அங்க இங்கன்னு கடன் நிக்கிது. பணத்தை வுடு. கட்சிக்காக என்னா ஔப்பு ஔச்சிருக்கேன். என்ன பேச்சு பேசியிருக்கேன். யாரும் அதை கண்டுக்கல. செல்வம் வந்தா அவன சுத்தி நின்னுகிறானுவ. அவன்கிட்டதான காசு இருக்கு. பங்களா இருக்கு. முள்ளங்கி பத்தையா நோட்டு இருக்குது." தனத்துக்கு ஆத்திரம் உடைப்பெடுத்த கார்பரேஷன் குழாய் மாதிரி பொங்கி பொங்கி வந்தது. அடப் பாவி. இருக்கும் கொஞ்ச நஞ்ச பணமும் அரசியலில் போயிட்டா? "ஏய்யா, அவன் காச  எறியிறான்னா, அளந்து எறியிறான். எவ்வளவு போட்டானோ அதுக்கு பத்து மடங்கு எப்படி எடுக்கனூம்னு தெரிஞ்சு வீசறான். நீ இப்படி முட்டாள்தனமா தொலைச்சிட்டு வந்திருக்கியே, வெட்கமா இல்லே?" "தனம், வெறுப்பேத்தாத. வேனாம். வேற ஏதாவது பேசு." "என்னாத்த பேச. ஐயோ, அம்மான்னு அளுதா, போன காசு வந்திடுமா?" "போன காசு போவட்டும். இனிமே இப்படி போவாம பார்த்துக்கலாம் இல்லையா?" "என்னைய்யா சொல்லற?" தனத்திற்கு மனசின் எங்கோ ஒரு மூலையில் மகிழ்ச்சி துளிர்த்தது. கண்கள் அகலமாக விரிய, மதியின் அருகில் வந்து, குத்துக்கால் இட்டு உட்கார்ந்தாள். "யோவ். இன்னொருதாட்டி சொல்லு. எனக்கு சரியா விளங்கல" "ஆமா தனம். இனிமே இந்த அரசியல், கட்சி, பொது கூட்டம்னு அலையுறத விட்டுட்டு என் தொழிலை பார்க்கலாம்னு இருக்கேன்" தனத்திற்கு திடீரென வானத்தில் பறப்பது போல இருந்தது. உடனடியாக அம்மாவிடம் போய், 'உன் உதவி இனிமே தேவையில்லே, என்னோட பிரச்சனையை நானே கவனிச்சுக்கிறேன். நீ கொஞ்சம் சுருட்டு பிடிக்காம உன் உடம்ப பார்த்துக்க' என்று சொல்லிவிட்டு வரலாம் என்று தோன்றியது. "ஆமாய்யா. பத்து பதினைஞ்சு வருசமா கட்சி கட்சின்னு அலையற. சம்பாரிக்கற நூறு ரூபா துட்டுல பாதிக்கும் மேல கட்சிக்காக செலவளிக்கற. தேர்தல், மாநாடு, போராட்டம்னு வந்தா ராத்தூக்கமில்லாம ஓடா ஒளைக்கிற. என்ன மிஞ்சிச்சு சொல்லு. நீ அப்பிடியேத்தான் கீற. செல்வத்தை பாரு. எங்கயோ போயிட்டான். ஒரு வார்டு மெம்பருக்கு ஒன்னை சேர்த்துக்க மாட்டாங்க. எம்.எல்.ஏவாம். எம்.எல்.ஏ. எந்த ஒலகத்திலே இருக்கே?" "ஆமா தனம். நெறைய துட்டு இருக்கிறவனுக்குத்தான் கட்சியில பதவியும் சொகுசும். நாங்கள்லாம் அவங்க தூக்கி போடற பிரியாணி பொட்டலத்துக்கும் க்வாட்டருக்கும்தான் லாயக்கு. வக்கத்தவனுக்கு வாய்க்கரிசிதான் மிஞ்சும். இதுவரைக்கும் நான் செலவளிச்ச பணத்தையும் ஔப்பையும் ஒரு வீட்ல போட்டிருந்தா, இந்நேரம் நமக்கு மேல ஒரு கூரை நின்னிருக்கும். வேணாம், போதும், இனிமே எல்லாத்தையும் விட்டுட போறேன்." "எனக்கு இப்ப நீ சொல்லறதுல்லாம் கனவா, நனவான்னு தெரியலை." "இனிமே கட்சி ஆபீஸ் பக்கம் தலை வைச்சுட படுக்கப் போறதில்லே. ஓட்டு போடறாதோட என் அரசியல் பணி முடிஞ்சிடும். இனிமே நானுண்டு என் ஆட்டோ சவாரி உண்டுன்னு இருக்கப்போறேன்." தனம் மகிழ்ச்சியில் உச்சத்தில் துள்ளி குதித்தாள். அரை மணி நேரத்துக்கு முன்னால்தான் கரை தெரியாமல் தான் புலம்பி கொண்டு வந்ததை நினைத்து சிறுமை பட்டாள். 'நெசமாவா சொல்லற. நெசமாவா சொல்லறே' என்று சொல்லி மகிழ்ச்சியில் இங்கும் அங்கும் ஓடினாள். பசி மறந்து போனது. உடம்பு வலி மறந்து போனது. கொஞ்ச நேரம் தன்னையே மறந்து போனாள். கிட்டத்தட்ட ரேஷன் கடையில் வீச்சம் அடிக்காத நல்ல அரிசி கிடைத்த மாதிரி பெருமிதம் அடைந்தாள். "யோவ். இந்த நாளுக்காக நான் எத்தனை நாள் காத்துக்கிடந்தேன் தெரியுமா? நெஞ்செல்லாம் பரபரங்குதுய்யா. வாய்யா. முப்பாத்தம்மன் கோயிலுக்கு போயிட்டு வரலாம். அவதான் ஒனக்கு நல்ல புத்தி கொடுத்திருக்கா. போன காசு போவட்டும். நான் வேலை பார்கிற இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்டே கேட்டா சொந்ததுக்கு ஆட்டோ வாங்க கடன் தருவாரு. நான் வாங்கி தாரேன். பொழச்சுக்கோ..... இல்லே... இல்லே... நாம பொழச்சுப்போம்." "தனம். கொஞ்சம் சுடு தண்ணி வை. குளிச்சிட்டு வர்ரேன்" "ஆமா. மொத்தமா, தலை முழிகிடு, அப்படித்தானே." தனம் முதல் முறையாக தன் வாழ்நாளில் வாய் அகல சிரிந்தாள். மதியும் தனமும் குடிசை கதவை பூட்டிக் கொண்டு வெளியே வரவும், இரண்டு பேர் கைத்தாங்கலாக அவள் மகன் சதீசை அழைத்து வந்தார்கள். மண்டையில் பெரிய கட்டு. சட்டை, முதுகு பக்கம் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்க, திட்டு திட்டாய் காயங்கள். "அக்கா. கவலைப்படாதீங்க. எங்களுக்கு லேசாத்தான் அடி. நாளைக்கு சரியாயிடும். ஆனா, அவங்க சைடுல நாளைக்கு நிச்சயம் ரெண்டு பேருக்கு பாலு. சும்மா எங்க பக்கம் வந்து, அந்த கொரங்கு தலை ரசிகர் மன்றத்துக்காரங்க இன்னா படம் ஊத்திக்கிச்சுசான்னு சொல்லி கிண்டலடிச்சானுவ. வம்பு வேண்டாம்ன்னு பார்த்தா, அவங்க நிப்பாட்ற மாதிரி தெர்ல. சதீஷ் எளுந்து போய் எங்க தலைவர் ஸ்டைல்ல வுட்டாம்பாரு.  அங்கியே ஒரு ஆளு அப்பீட்டு. ஹாட்ரிக் அடிச்ச மாதிரி மூனு ஹிட் கொடுத்தவரு எங்க தலைவரு. ஏதோ ஒரு படம் சுகுறா போகலைன்னா, விட்றுவோமா? அடுத்த படம் வருது தீபாவளிக்கு. நிச்சயம் சில்வர் ஜூப்ளிதான். மவனுங்களா. இருங்க. நாளைக்கு வைக்கிறோம் பாரு, பொங்கலு." குடிசைக்கு வெளியே இருந்த திட்டில் சதீசை கிடத்தி விட்டு அவர்கள் போனார்கள். மதி குழப்பத்தோடு தனத்தை பார்த்து தலையை சொறிந்தான். தனத்திற்கு மீண்டும் கவலை அப்பிக் கொண்டது. ஒரு அடி ஏறினால், இரண்டு அடி சறுக்குகிறது. வெற்று அரசியல் என்ற மயக்கத்திலிருந்து கனவன் இப்போதைக்கு தப்பியிருக்கிறான். காலை பற்றிய சனி இன்னும் முழுமையாக விட வில்லை. பீடித்த நோய் இன்னும் ஒட்டுண்ணியாக ரத்தம் உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. "தனம். நீ கோயிலுக்கு போயிட்டுவா. நான் இவனுக்கு ஏதாவது மருந்து வாங்கியாறேன்" தனம் வயிற்று பசியோடு, மனசில் கவலைகளோடு முப்பாத்தம்மன் கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். ஆனாலும் இந்த முறை அவளுக்குள் லேசாக நம்பிக்கை துளிர்க்க தொடங்கியிருந்தது. (அகில இந்திய வானொலி, தூத்துக்குடி - பிப்ரவரி 2011)     62. பலி   தரையிலிருந்து நாலு அடி உயரத்தில் பத்துக்கு பத்து நீள அகலத்தில் மரப்பலகைகள் அடித்து, மூன்று பக்கம் நீலத் திரை மாட்டிய மேடையில் 'தொங்கு' 'தொங்கு' என்ற காலடி சத்தத்துடன் மஹாபரத தெருக் கூத்து நடந்து கொண்டிருந்தது. பீஷ்மனாக நடித்தவன், அர்ஜுணன் பொழிந்த அம்புகளை நெஞ்சில் தாங்கியாவேறே, சுழன்று சுழன்று மேடை முழுவதும் தட்டு தடுமாறி ஓடி, நிறைய ஓவர் ஆக்டிங் செய்து தொப்பென விழவும் கூட்டம் விசிலடித்தது. டோலக் வாசிப்பவர் 'டுங்டக்' டுங்டக்' என்று தொடர்ந்து ஒலியெழுப்பி கொண்டே இருந்தார். பின்பாட்டுக்காரர்களின் கூச்சல் உச்சத்தை அடைந்தது. 'ஜிஞ்சா' கொட்டுபவன் வெறிபிடித்தவன் மாதிரி எழுந்து நின்று தன் தாளத் திறமையை காட்டினான். சட்டென ஒரு சில நொடிகள் இருட்டடிப்புக்கு பிறகு மேடையில் வெளிச்சம் வர, பீஷ்மன் அம்பு படுக்கையில் படுத்திருந்தான். தெருக்கூத்தில் அமுதாவுக்கு எதுவுமே லயிக்கவில்லை. தூசி விழுந்த கண்களில் இருக்கும் எரிச்சல் மாதிரி அவள் மனசுக்குள் ஏதோ நிரடிக் கொண்டே இருந்தது. இருப்பதா அல்லது போய்விடுவதா என்ற எண்ணத்திலேயே இருந்தாள். அமுதா திடீரென தானே அம்புப் படுக்கையில் வீழ்ந்திருப்பது மாதிரி உணர்ந்தாள். தன் உடம்பின் ஒவ்வொரு அங்கத்திலும் அம்புகள் குத்தி ரத்தம் வழிவதாக உணர்ந்தாள். துரியோதனனை பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு அவள் கனவன் கதிரேசன் ஞாபகம் வந்தது. கண்கள் இங்கேயும், நினைவுகள் எங்கேயுமாக தடுமாறினாள். அடுத்த சீனுக்காக திரை விழுந்ததும், அமுதா தாமதிக்காது எழுந்தாள். அருகில் இருந்த செண்பகம் அவள் தோள்களை அழுத்தினாள். "கொஞ்சம் பொறுக்கா. மணி ஒம்போதுதானே ஆவுது. என் புருசன் இப்ப பெருசா டயலாக் அடிப்பாரு. கேட்டுட்டு போயேன்." சென்பகத்தின் கனவன் கிருஷ்ணன் வேஷம் கட்டியிருக்கிறான். "இல்லை சென்பகம். வயத்தை என்னவோ பண்ணுது. வூட்டுக்கு போயிட்டு பத்து நிமிசத்துல வர்றேன்." அரை இருட்டில் கூட்டத்தினரின் தலையை தொட்டு தொட்டு வெளியே வரவும், அவள் உள்ளங்கையில் அடங்கியிருந்த செல் போன் சினுங்கியது. அப்பா! "சொல்லுப்பா" "ஏம்மா. என்னென்னமோ விசயம் கேள்விப்படறேன். என்ன உண்மையா?" அமுதா எதுவும் சொல்லாமல் பிசுக் பிசுக்கென அழ ஆரம்பித்தாள். எதிர் முனையின் அவள் அப்பா டென்ஷனானார். "இங்கபாரு. அமுதா. இப்பத்தான் நீ தைரியமா இருக்கனும். அவன் என்ன சொன்னாலும் நிலத்தை மட்டும் ஒத்திக்கு கொடுத்துடாதே. உன்கிட்டே இருக்கிற கடேசி சொத்து அதுதான்." "சரிப்பா" "அவன் அடிச்சான்னா நீயும் திருப்பி அடிம்மா. ஒடுகாலி பயலுக்கு ஒரு மரியாதையும் தேவையில்லே. நீ திருப்பி அடிக்க மாட்டேங்கிற தைரியத்துலதான் அவன் துள்ளறான். சவுக்கு கட்டையால நாலு போடு. காலை ஒடிம்மா. அப்பறம் பொம்பள, தண்ணின்னு போறானா பார்பம். நான் நாளைக்கு கருக்கல்ல வர்றேன். நீ கவலைப்படாதே. தைரியமா இரு." மூக்கை உறிஞ்சிக் கொண்டே செல்லை அணைத்தாள். தெருக்கூத்தில் அபிமன்யூ பாத்திர பிரவேசம் நடந்து கொண்டிருந்தது. புது பையன். நன்றாக அடவு பிடித்து ஆடுவதால் அவன் நண்பர்கள் விசில் அடித்துக் கொண்டிருந்தார்கள். அதுவரை தன்னை பீஷ்மனாக நினைத்து கொண்டிருந்தது போய் தான் அபிமன்யூதானோ என்ற சந்தேகம் அவளுக்கு வந்தது. தானும் அபிமன்யூ மாதிரி சக்ரவியூகத்தில் சிக்கி.... தெருக் கூத்து கொட்டகையிலிருந்து கொஞ்சம் விலகி வீடு நோக்கி நடந்து வந்தவளை எதிர் வீட்டு சுசீலா இடை மறித்தாள். தோள்களை பற்றி நிறுத்தினாள். '"என்ன அமுதா. வந்திட்ட? இனிமேதான் கூத்து களை கட்டும்.......எனக்கு கொஞ்சம் துனையா வாயேன். இப்பதான் வீட்டு வேலை முடிஞ்சுது." "இல்லேக்கா.... அது வந்து....." "இங்க பாரு, எனக்கு உன் பிரச்சனை என்னேன்னு தெரியும். பிரச்சனை இருக்கறவங்கெல்லாம் கூத்து பார்க்க கூடாதுன்னா யாருமே அங்க இருக்கமுடியாது. அதையெல்லாம் மறக்கத்தானே கூத்து இருக்குது." அமுதா தீர்மானமாக அசைந்து கொடுக்காமல் இருக்க, சுசீலா அவளை கூர்ந்து கவனித்தாள். ஒரு சிறிய மௌன இடைவெளிக்கு பிறகு, சுசீலாவே ஆரம்பித்தாள். "நா ஒன்னு சொல்லட்டா, அமுதா?" "சொல்லு" "வெட்டுக்கு வெட்டு. குத்துக்கு குத்து. அதான் சரியான வழி. என் புருசனும் இப்படித்தான் அப்படி இப்படீன்னு ரெண்டு வருசத்துக்கு முன்னாலே அலைஞ்சுக்கிட்டு இருந்தாரு,. ஒரு நாளு மண்டையில அடிச்ச மாதிரி நான் ஒரு போடு போட்டேன். நீயு இப்படி இன்னமும் சொகுசா இருந்துகிட்டிருதே, நானும் ஊர் மேல போக வேண்டி வரும்னேன். அன்னிக்கு பஞ்சரானவருதான், இன்னிவரைக்கும் வூட்டோட கெடக்காரு. என்னா சொல்றே?" "அக்கா. நீ வேற. இருக்கிற பிரச்சனை பத்தாதா? நான் வர்றேன்" ஒரு அடி எடுத்து வைத்தவளை தடுத்து நிறுத்தினாள். "சரி. உன் இஷ்டம். போ. கதிரேசன் வீட்டிலேதான் இருக்கான். விறகு கட்டையால அடிப்பான். அடிய வாங்கிக்கிட்டு வலியோட ஒரமா படுத்துக்கிட. நான் கூத்து முடிஞ்சு வந்து தைலம் தடவுறன்." அந்த வார்த்தைகள் அவளை சுருக்கென்று தைத்திருக்க வேண்டும். மெல்லியதாக அழ ஆரம்பித்தாள். அமுதா அழுவதை யாராவது பார்த்துவிடுவார்களோ என்று சுசீலா அங்கும் இங்கும் நோட்டம் விட்டாள். நல்ல வேளையாக அங்கிருந்த மெல்லிய இருட்டு அவளுக்கு வசதியாக இருந்தது. அமுதாவை தோள்களில் சாய்த்துக் கொண்டு அவளை தேற்றினாள். "அளுவாத புள்ளே. ஆத்தாள நேந்துக்கிட்டு தகிரியமா இரு. என் மச்சான் போலீசுலதான் இருக்காரு. அவரை கூட்டியாந்து மெரட்டி பார்க்கரேன். கவலைப்படாதே. இன்னிக்கு என் வீட்டுல தங்கிக்க" விசும்பிக் கொண்டே இருந்த அமுதா, திடீரென ஆரம்பித்தாள் "அக்கா. நான் பார்க்க நல்லா இல்லையாம். பல்லு வரிசையா இல்லியாம். கிட்ட வந்தாலே வீச்சம் அடிக்குதாம். வூட்டு சாப்படு சரியில்லேன்னா அப்படிதான் கூத்தியாள வைச்சுப்பாராம். பரம்பரை வழக்கமாம்." "நாலு காசு சம்பாரிக்க வக்கத்த பயலுக்கு சினிமாகாரி மாதிரி பொண்ணு வேணுமாக்கும். உன் மாமானாருக்கு ஐம்பது ஏக்கர் சொத்து இருந்துச்சு. மூணு கூத்தியா இருந்தாளுக. இப்ப இவன்கிட்ட இடுப்பு லுங்கிய தவிர என்ன இருக்குது? அமுதா இப்படியே பய்ந்துக்கிட்டு இருந்தா, அவ்வளவுதான்....... இந்த நாயிங்க நாம ஓட ஓட தொரத்திகிட்டேதான் வரும். நின்னு கைய ஓங்கு, ஓடிடுவாங்க..... ஒடனே உன் புருசனை நாயின்னு சொல்லிட்டேன்னு கோவிச்சுகாத." அமுதா ஒன்றும் பேசாமல் வழிந்த கண்ணிரை புடவை தலைப்பால் துடைத்துக் கொண்டா:ள். கொஞ்சம் தன்னை நிலை படுத்திக்கொண்டு சுசீலாவை லேசாக விலக்கி நடக்க ஆரம்பித்தாள். "வரேங்க்கா" கொஞ்ச நேரம் அமுதா போவதையே பார்த்துக் கொண்டிருந்த சுசீலா, ஒரு பெரு மூச்சுடன் கூத்து கொட்டகையை நோக்கி நடந்தாள். கர்ணனும், அர்ஜுணனும் கடுமையாக வாய் போர் செய்துகொண்டிருந்ததை ஒலிபெருக்கி உழிந்து கொண்டிருந்தது.   வீட்டை நெருங்கவும் அமுதா துனுக்குற்றாள். நாலைந்து பேர் திண்ணையில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தனர். அவள் வரவுக்காக காந்திருந்த மாதிரி சட்டென எழுந்து ஒரு பக்கமாக நின்று அவளுக்கு வழி விட்டனர். அமுதா பயந்தவளாக, கிட்டத்தட்ட சுவரை உரசிக் கொண்டு உடம்பை குறுக்கி, கீழ்பார்வை பார்த்தவாறு வீட்டுக்குள் அடி எடுத்து வைத்ததாள். திடீரென இருட்டிலிருந்து கதிரேசன் வெளிப்பட்டன்.. "வாம்மா. மகாராணி. இங்க நான் அடுத்த சோத்துக்கு வழியில்லாம அல்லாடிகிட்டு இருக்கேன். ஒனக்கு கூத்து கேக்குதோ" அமுதாவை நோக்கி கையை ஓங்கிய கதிரேசனை, வாசலில் இருந்தவர்களில் வயதான ஒருவர் அவன் கைகளை பிடித்து தடுக்க எத்தனித்தார். முடியவில்லை. ஆனால் இந்த இடர்பாட்டில் அமுதா குனிந்துவிட கதிரேசன் அவள் முடியை பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினான். பிடித்த பிடியின் வலியை பொறுக்க முடியாமல் அமுதா அரை வட்டமாக சுழண்றாள். விலக்கி விட வந்தவர் கலவரப்பட்டு போய் கதிரேசனை பிடித்து தள்ள, அமுதா மாராப்பு சேலை விலக உள்பாவைடை தெரிய மல்லாக்க விழுந்தாள். வெளியில் இருந்த மற்றவர்கள் சடசடவென உள்ள வந்தனர். தள்ளிய வேகத்தில் கதிரேசன் பின் பக்கமாக தள்ளாடி சரிந்து சுவற்றில் மோதிக்கொண்டான்.  பிடிமானம் இல்லாது போக கால் மடங்கியவாறு 'தொப்பென' விழுந்தான். விழுந்த வேகத்தில் முன் பக்கமாக கவிழ்தான். முன்னந்தலை தரையில் மோதியது. அப்படியே பக்கவாட்டில் சரிந்தான். வயிறு முட்ட குடித்திருந்ததால், அது மூக்கு வரை எதுக்களிக்க, தொடர்ச்சியாக வாந்தியெடுத்தான். குவாட்டரும், கண்ட கண்ட சைட் டிஷும் அரை குறை செரிமாணத்தில் வெளியே வந்ததால் நாற்றம் குடலை பிடுங்கியது. அதற்குள் வந்திருந்தவர்களில் ஒரு பெண் அமுதாவை வெகு தூரம் விலக்கிக் கொண்டு போனாள் தான் எடுத்த வாந்தியிலே, கைகளை பதித்து, ஊண்றி கொஞ்சம் கூட அருவருப்பின்றி, சிறிது சறுக்கி, பெரிதாக தடுமாறி எழுந்த கதிரேசன் மீண்டும் வன்முறையை பிரயோகிக்க முயற்ச்சித்தான். கால்கல் பின்னிக் கொள்ள அதிலேயே சறுக்கினான். சகதியில் 'குளித்த' பண்றி மாதிரி கதிரேசன் ஆவதற்கு நேரம் கொடுக்காமல் யாரோ ஒருத்தர் கதிரேசனை பின் பக்கமாக அழுத்திப் பிடித்து லாவகமாக தூக்கினார். இன்னொருவர் அவன் மேல் இருந்த அசிங்கங்களை வேக வேகமாக அங்கிருந்த அழுக்கு துணியால்  'வரட்' 'வரட்டென' துடைத்தார். கதிரேசன் அந்த சமயத்திலும் ஊளையிட்டுக் கொண்டே திமிறிக் கொண்டிருந்தான். முதலில் வந்து கதிரேசனை பிடித்து தள்ளிய அந்த பெரியவர் அனைவரையும் விலக்கிக் கொண்டு அவன் முன்னால் வந்தார். அவன் குரலை விட உச்ச ஸ்தாயில் அவர் சப்தமிட கதிரேசன் அமைதியானான். "இங்கபாரு கதிரேசா. நல்லா கேட்டுக்க. உன் பொண்டாடியோட வாழ்க்கையை நாசமாக்கி உங்கிட்டே நெலத்தை ஒத்திக்கு வாங்க நாங்க யாரும் தயாரா இல்லை. இந்த மாதிரி பிர்ச்சனை இருக்குன்னு தெரிஞ்சா, நாங்க வந்திருக்கவே மாட்டோம். வர்ரோம்." கொஞ்ச நேரம் திடீரென அமைதி நிலவியது. "வாங்கடா. போவலாம். இங்க என்ன வேடிக்கை?". அந்த பெரியவர் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு முன்னால் போக ஆசாமிகள் ஒவ்வொருத்தராக வெளியேறினார்கள். எஞ்சிய ஒரு சிலர் கதிரேசனை வலுக்கட்டாயமாக வெளியே 'தரதரவென' இழுத்துக் கொண்டு போனார்கள். கதிரேசன் எதிர் பக்கம் திமிறிக் கொண்டே அமுதாவை நோக்கி கெட்ட வார்த்தைகளை அர்சித்துக் கொண்டே போனான். அமுதாவுக்கு ஆறுதலாய் இருந்த ஒரு சில பெண்களும் கொஞ்ச நேரம் அவளையே கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தனர். நடுநடுவே பெருமூச்செரிந்தனர். அமுதா பேய் பிடித்தவள் மாதிரி மிரள மிரள விழித்துக் கொண்டிருந்தாள். "அமுதா. நாங்க சொல்லறத கொஞ்சம் கேளு. இனிமே வூட்டுல நீயு தனியா இருக்கறது நல்லதில்லே. கூத்துல எங்கயாவது ஓரமா ஒக்காந்திக்க. நாங்க உனக்கு தொனையா இருக்கோம். நாங்க இங்கேயே ஒன்னோட இருக்கிறது சாத்தியமில்லே. எங்க வீட்டில வேசம் கட்டினவங்களுக்கு சீர் செனத்தி செய்ய கூப்பிடுவாங்க. நாங்க போவனும். அதான்..." அமுதா தீர்மானமாக யாருக்கும் பதில் சொல்லாமல் ஒரு வெற்று பார்வையுடன் அமர்ந்திருந்தான். எந்தவித சலனமும் இல்லாமல் அவள் இருந்ததால், 'கடவுள் விட்ட வழி' என்று சிறிது கால இடைவெளிகளில் ஒவ்வொருவராக கூத்து கொட்டைக்கு போக வேண்டி கழன்று கொண்டார்கள். அமுதா எப்போது தூங்கினாள் என்று தெரியவில்லை. வேட்டு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. துரியோதணனுக்கும் பீமனுக்கும் சண்டை வரும் வரை கூத்து மேடை மேல் நடக்கும். அதன் பிறகு தெருவில் நடக்கும். தெரு தெருவாய் துரியோதணனும் பீமனும் ஓடி ஓடி சண்டையிட்டுக் கொள்வார்கள். பீமனின் கதை மாதிரி தன் தலை இருப்பதாக அமுதாவுக்கு பட்டது. எழுந்து மின்சார விளக்கின் ஸ்விட்சை இருட்டில் தேடினாள். தெருக் கூத்து அடுத்த தெரு வரை வந்தவிட்டது போலிருக்கிறது. தோல் பறைகளின் முழக்கங்கள் கேட்டன. லைட்டை போட்டவள் துணுக்குற்றாள். கதிரேசன் நிலைகுலைந்த நிலையில் சுவரோரமாக சரிந்திருந்தான். விளக்கின் வெளிச்சத்தில் கண்கள் கூச அமுதாவை நோக்கினான். "ஏய், இங்க வா" அமுதா கலவரமானாள். "எதுக்கு?" 'இங்க பாரு. இப்ப ஒன் நெலமெல்லாம் வேனாம். வேணவே வேனாம். அந்த முண்டச்சி நான் கூப்பிடதுக்கு வர்லேன்னுட்டா. வுட்டேன் பாரு ஒரு அறை. வாயி வெத்தல போட்டுக்கிச்சு. அதான்.... நீ வா....." "அட சீ. ஒனக்கு வெக்கமா இல்லே?" 'எனக்கென்னடி வெக்கம். எம் பொண்டாட்டி. நான் என்ன வேனாலும் பண்ணுவேன். வாண்னா வர்னும். படுண்னா....." எழுந்தவன் தள்ளாடினான். "வாடி. வாடின்னா" அமுதாவின் கேடு காலம், அவன் வாசல் பகுதியில் இருந்தான். அமுதாவால் மிஞ்சி மிஞ்சி போனால் சமையல் அறையில் சென்றுவிட முடியும். அதிலும் ஒரு கேடு காலம் இருந்தது. சமையல் அறைக்கு கதவு கிடையாது. கொல்லை புற கதவும் கிடையாது. "வேனாம். கிட்டே வராத. போயிடு. இந்த கூத்தியா இல்லேன்னா. வேற கூத்தியாகிட்டே போ. நாசமா போ. ஆனா எங்கிட்ட வராத." "அது நாளைக்கு. நீ இன்னிக்கு." விரலை வில்லன் மாதிரி அவள் முன்னால் ஆட்டினான். அமுதா கொஞ்சம் கொஞ்சமாக பின் வாங்கி சமையல் அறைக்குள் தஞ்சம் புகுந்தாள். தற்காப்புக்கு ஏதாவது ஆயுதம் கிடைக்குமா என்று தேடினாள். பாத்திரங்கள் எதுவும் சரி வராது. கூரான கத்தி, வலுவான அகப்பை மாதிரி ஏதாவது கிடைத்தால் நல்லது. குறைவான வெளிச்சத்தில் எதுவும் சரியாக தெரியவில்லை. அவன் முன்னேறிக் கொண்டிருந்தான். கிட்டதட்ட பல்லி மாதிரி எதிர் பக்க சுவரில் ஒட்டிக் கொண்டாள். திடீரேன மஹாபாரத்தின் திரௌபதியாக தன்னை நினைத்துக் கொண்டாள். அங்காவது வேற்று மனிதன் அவளை மானபங்க செய்ய வந்தான். ஆனால் இங்கு அவள் புருசனே... என்ன கொடுமை இது? அங்கு திரௌபதிக்கு கிருஷ்ணன் வந்து காப்பாற்றினான். இங்கு எந்த கிருஷ்ணன்..... கூத்து அவள் வசிக்கும் தெருவில் நுழைந்துவிட்ட மாதிரி சத்தம் கேட்டது. வேட்டு சத்தம் அவள் மண்டைக்குள் வெடித்தது.   "ஏய்! என்னாடி பம்பரம் மாதிரி தொகுற்ர. ஒரு புருசன் சொல்றேன்...." போதையின் வீரியதை உணராமல் அவளை நெருங்கியவன் தனது லுங்கி நழுவியதை கவனிக்கவில்லை. முழங்கால் முட்டியில் லுங்கி இடற ஒரு பக்கமாக உருண்டான். விழுந்த வேகத்தில் லுங்கி 'டர்னென' கிழிந்தது. எக்குதப்பாக விழுந்ததில் முதுகு தண்டில்  நல்ல அடி. அவனால் எழுந்திருக்க முடியவில்லை. கிடைத்த குறைவான சந்தர்பத்தில் சமையல் அறையில் விளக்கை போட்டாள். இந்த முறை அவளுக்கு நல்ல காலம். ஸ்விட்சுக்கு அருகில் இருந்த சிறிய அலமாரியில் ஒரு அறிவாள் இருந்தது. அறிவாளை எடுத்த வேகத்தில் அதை ஓங்கினாள். அப்போதே அவளுக்குள் மின்சாரம் பாய்ந்தது மாதிரி இருந்தது. வீட்டுக்கு வெளியே கூப்பிடு தூரத்தில் பீமன் கத்தும் குரல் கேட்டது. அது அவளுக்குள்ளே ஒலித்த மாதிரி இருந்தது. சுசீலாவில் ஆரம்பித்து மற்றவர்கள் சொல்லிப் போன அறிவுரைகள் எல்லாம் அவளுக்கு மின்னல் வேகத்தில் வந்து போயின. கதிரேசன் பக்கம் பார்வையை ஓட்டியவள் மீண்டும் துனுக்குற்றாள். கதிரேசன் அரை அம்மணமாக அரை மயக்கத்தில் கிடந்தான். ஆனாலும் அவன் ஆண்மையின் அடையாளம் கிளர்ச்சியோடு.... ச்சீ..... மனைவியாக கனவனின் அந்தரங்கம் அவளுக்கு புதிதல்ல என்றாலும் அந்த சமயத்தில் அவளுக்கு மிகவும் அருவருப்பாக இருந்தது. அரைகுறையாக மயக்கம் தெளிந்த கதிரேசன் கண்களை இடுக்கியவாறே அமுதாவை பார்த்து கையசைத்தான். "ஏய். வாடி. வாடின்னா" இன்னமும் அவன் திமிர் அடங்கவில்லை. இப்போது அவள் வீட்டு வாசலிலேயே பீமன் குரல் அமுதாவுக்கு கேட்டது. அமுதா பீமனின் கதை மாதிரி தன் கையில் இருந்த அறிவாளை ஓங்கினாள். "ஏன்டா. இதுதானே உன்னை இப்படி திமிரு புடிச்சு அலைய வைக்குது. இனிமே இது ஒனக்கு வேண்டவே வேண்டாம்." எங்கிருந்து அமுதாவுக்கு அவ்வளவு பலமும் வீரியமும் வந்தது என்று தெரியவில்லை. ஒரே வீச்சில் அவன் ஆண்மையின் அடையாளம் துண்டாகி ஒரு மூலையில் போய் விழுந்தது. கதிரேசன் போட்ட கூச்சலில் வாசல் வரை வந்திருந்த கூத்து கூட்டம் 'திமுதிமுவென' உள்ளே வந்தது. அமுதா சமையல் அறையின் வாசளை மறித்துக் கொண்டாள். ரத்தம் சொட்டிய அறிவாளை அவர்கள் பக்கம் தூக்கி எறிந்தாள். கூட்டம் மிரண்டு பின் வாங்கியது. கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஒரு தடியான பெண்மணி முன்னே வந்தாள். அவள் சுசீலா. "என்னடீ செஞ்சுட்டே? கதிரேசனை வெட்டிட்டையா?" கைகள் நடுங்க குரல் க்ரீச்சிட அமுதாவை கேட்டாள். "ஆமா. வெட்டிட்டேன். அவனோட திமிர. ஆம்பளைங்கிற திமிர" கூட்டத்தினர் புரியாமல் குழம்பினர். அமுதா சுசிலாவை நெருங்கி, கைகளை முகத்தில் குவித்து 'ஓவென' அழத்தொடங்கினாள். பீமனாக வேசம் கட்டியவன் சமையல் அறைக்குள் வேகமாக நுழைய எத்தனித்தான். ஆனால், அந்த காட்சியை கண்டு உறைந்து போய் அப்படியே கல்லாக நின்றான். அவன் பின்னால் மற்றவர்கள் சேர ஆரம்பித்தார்கள். (வல்லமை.காம் - 29 ஆகஸ்ட் 2012)   63. தெய்வம் நின்று கொல்லும்   "மணி. ஆட்டோவை கொஞ்சம் நிறுத்து" அமைதியாக பின்னால் அமர்ந்து கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்த சாந்தா திடீரென கூச்சல் போடவும் ஆட்டோ டிரைவர் மணி அதிர்ந்து போனான். வேகத்தை குறைத்து, பிரேக்கை படிப்படியாக அழுத்தி, ஆட்டோவை சாலையின் இடது பக்கத்துக்கு ஒதுக்க, ஒரூ நூறு அடி தள்ளி அது அலுப்புடன் நின்றது. நிறுத்திய வேகத்தில் விருட்டெனெ வெளியே வந்தான் மணி. அதற்குள் சாந்தா ஆட்டோவிலிருந்து தலையை நீட்டி பின்னோக்கி பார்க்க தொடங்கியிருந்தாள். "என்னம்மா? என்ன ஆச்சு?" ஆட்டோ டிரைவர் பதறினான். தூரத்தில் எதிர் பக்கத்தில் நின்றிந்த சிவப்பு நிற காரை நோக்கி கைகாட்டினாள் சாந்தா. "தம்பி, வண்டிய திருப்பி அங்க போ. ஒரு பொண்ணு தனியா நிக்கிது. ஏதோ பிரச்சனைன்னு நெனைக்கிறேன். ம்... திருப்பு" சாந்தா அவனை அவசரப்படுத்தினாள். "இந்த பக்கம் யூ டர்ன் இல்லைம்மா. அரை கிலோ மீட்டராவது போகனும்". "அதெல்லாம் வேண்டாம். இப்படியே ஆட்டோவை திருப்பி ஓரமாவே போ. நான் எதிர் பக்கம் கிராஸ் பண்ணி போய்க்கிறேன். ம்... யோசிக்காதே... திருப்பு ... திருப்பு" சந்தா ஆட்டோவை விட்டு இறங்கியேவிட்டாள். "அம்மா நீங்க உட்காருங்க. பதட்டப்படாதீங்க. உட்காருங்கன்னா" சாந்தா அரை மனசோடு மீண்டும் பின் சீட்டில் அமரவும், மணி ஆட்டோவை கைகளால் முன்னும் பின்னும் தள்ளி ஆட்டோவை திருப்பி, வந்த பாதையிலேயே மெதுவாக ஆட்டோவை உருட்டலானான். ஆட்டோவை உரசினால் போல் எதிர் பக்கமாக ஒரு லாரி விரைந்து சென்றது. அதன் க்ளீனர் கைகளை ஆட்டி மணியை திட்டினான். அதற்குள் ஆட்டோ சிவப்பு கார் நின்ற இடத்திற்கு எதிர் பக்கம் வந்து விட்டது. ஒரு பெண் அதுவும் நிறை மாத கர்பிணி கவலை அப்பிய முகத்துடன் அந்த காரின் பின்னால் நின்றிருந்தாள். மதியத்தின் கடுமையான வெயிலை குறைக்க தனது துப்பட்டாவால் முகத்தை சுற்றியிருந்தாள். உயர் ரக வெயில் கண்ணாடி அணிந்திருந்தாள். அப்படியும் அவளால் வெயிலை தாங்க முடியவில்லை என்பது அவள் முக சுருக்கங்களில் தெரிந்தது. அவள் அணிந்திருந்த சுடிதாரில் ஆங்காங்கே வியர்வையின் வட்டங்கள் தெரிந்தன. சாந்தா அவள் வயதையும் மீறி ஆட்டோவிலிருந்து ஒரு குதி குதித்து, எதிர் படும் வாகனங்களை உறுதி செய்து கொண்டு, ரோட்டின் மறு பக்கத்துக்கு போய்விட்டாள். மணி அவசரம் அவரமாக சாந்தா மறந்துவிட்ட குடையை எடுத்துக் கொண்டு அவனும் சாலையின் எதிர்பக்கத்துக்கு விரைந்தான். "என்னம்மா ஆச்சு? ஏன் தனியா நிக்கிறே?" "மாமி. நாங்க திருக்கருக்காவூர் போறத்துக்காக சென்னைலேர்ந்து வர்றோம். திருச்சியிலேதான் தங்கியிருக்கோம். காலையில தஞ்சாவூர் போயிட்டு இங்க வரும்போது வண்டி திடீர்னு நின்னுடுத்து. என் ஹஸ்பண்டுக்கு கார் ரிப்பேர் தெரியாது. எதிர்பக்கம் லிஃப்ட் வாங்க்கிட்டு ஒரு மெக்கானிக்கை கூப்பிட போயிருக்கார். நான் வண்டிக்கு காவல். மெக்கானிக் கெடைச்சாச்சாச்சாம். இப்ப மெசேஜ் வந்துது. இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவார். ரொம்ப தாங்க்ஸ். ஸாரி... நீங்க போய்கோங்கோங்களேன்." "என்னம்மா இது. நெறைமாசமா இருக்கே. இப்படி தனியா உன்னை நிக்கவுட்டுட்டு... அதுவும் இந்த கொளுத்த வெயில்லே...." "என்ன மாமி பண்ணறது? பிரச்சனைகள் நம்மள கேட்டுண்டா வர்றது?" அந்த பெண் முதன் முறையாக புன்னகைத்தாள். "என்னவோம்மா. எனக்கு சரியாபடலை. நீ இப்படி தனியா...." "மாமி. இவருக்கு லிஃட் கெடைச்சதே பெரிசு. அதுவும் அந்த மெக்கானிக்கிட்டே திரும்பி வர கார் இருக்குமான்னு தெரியாது. நானும் அவர் கூட போயிட்டா, இங்க தனியா நிக்கற மாதிரி, நான் அங்க தனியா நிக்கனும். அதுக்கு, கார் காவல் மாதிரி இங்கேயே இருக்கேன்னு நான்தான் சொன்னேன்." மணி அதற்குள் இரண்டு பாட்டில் தண்ணீர் கொண்டு வந்து இருவரிடமும் நீட்டினான். கொஞ்சம் யோசனைகள் செய்தவளை சாந்தா மாமி தண்ணீர் குடிக்க வற்புறுத்தினாள். "மாசமா இருக்கே. தண்ணீ குடி. இல்லேன்னா மயக்கம் வந்துடும்... ஆமா... ஒன் பேர் என்ன? மெட்ராஸிலே எங்க இருக்கே?" "மாமி. என் பேரு மாலதி. கே.கே.நகர்ல இருக்கேன்." "அப்படியா! எங்க மணிக்கு கார் ரிப்பேர் தெரியும். அவனை பார்க்கச் சொல்லட்டா?" "அது வந்து மாமி.... அவர்கிட்டே ஒரு வார்த்தை....." "அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். ஆபத்துக்கு பாவமில்லே. மணி... கொஞ்கம் பானெட்டை ஓபன் பண்ணி என்னென்னு பாரு. மாலு..... ஒன்னை மாலுன்னு கூப்பிடலாமோ?" "ஓ தாராளமா! என் ஹஸ்பண்டே அப்படிதான் கூப்பிடுவார்" "வா. வா. இங்க வெயிலா இருக்கு. அதோ எதிர் பக்கத்துல, எங்க ஆட்டோகிட்டே நல்ல நிழல் இருக்கு. வண்டி சரியானதும்... உங்க ஹஸ்பண்ட் வந்ததும்... இங்க வந்துக்கலாம். சாந்தா மாமி மாலுவை கையைபிடித்து இழுக்காத குறையாக எதிர் பக்கம் அழைத்து போனாள். மணி கார் பானெட்டை ஓபன் செய்து எதையோ தேடிக் கொண்டிருந்தான். "திருக்ளாவூர் போறே. என்ன தலைச்சனோ?" அதுவரை அமைதியாக இருந்த மாலதி திடீரென கண்கலங்கினாள். சாந்தா மாமி பதறிப்போய்விட்டாள். "என்னம்மா? நான் ஏதாவது கேக்க கூடாததை கேட்டுட்டேனா?" மாலதி ஒரிரு நொடிகள் கண்களை துடைத்துக் கொண்டே, "இல்லே மாமி. இது நாலாவது. ஆனா, மொதல் மூணும் கைக்கு எட்டி வாய்க்கு எட்டல" சொல்லி முடிக்கவும் அவளின் கேவல் அதிகமானது. "பார்க்க நன்னா இருக்கே. வசதியா இருக்கே. உனக்கு இவ்வளவு கஷ்டமா?" "மாமி. கஷ்டங்கள் வசதிகளை வைச்சு வர்றதில்லே. இதெல்லாம் பூர்வ ஜன்ம சாபமோ என்னவோ தெரியலை. நான் யாருக்கும் ஒரு கெடுதல் செஞ்சதில்லே. ஆனா, எனக்கு ஏன் இப்படி வர்றதுன்னு தெரியலை. அதுவும் போன தடவை, குழந்தை பிறந்து, பேரெல்லாம் வைச்சாச்சு, முப்பது நாள்லேயே...." அதற்குமேல் மாலுவால் பேசமுடியவில்லை. சாந்தா மாமி, மாலுவுக்கு ஆதரவாய் அவளை நெருங்கி, அவள் தோள்களை இறுக பற்றிக் கொண்டு, அவள் முன்னந்தலையை வருடிவிட்டாள். "இங்க பாரு. நீ கவலையே படாத. திருக்ளாவூர் போறேல்ல. உன் கஷ்டமெல்லாம் தீர்ந்துடும். இந்த தடவை பொறக்கற குழந்தை நிலைச்சு இருக்கும்" சாந்தா அவள் வயிற்றின் மீது கைவைத்து ஆசிர்வதித்தாள். "ரொம்ப தாங்க்ஸ் மாமி. உங்க ஆசிர்வாதத்துல, எல்லாம் நல்லபடியா நடக்கனும்." "நடக்கும். நிச்சயம் நடக்கும்" சாந்தா மாமி உறுதியாக அவள் கண்களை பார்த்து பேசிவிட்டு, கார் பக்கம் திரும்பிய போது, ஒரு இளைஞனும், ஒரு மெக்கானிக்கும் ஒரு பைக்கில் வந்து இறங்கினர். ரிர்பேர் செய்து கொண்டிருந்த மணியை விசாரித்தனர். சாந்தாவும், மாலுவும் மீண்டும் எதிர் பக்கம் போயினர். "சின்ன ஃபால்ட்தாம்மா. பாட்டரியோட க்ளிப் லூசா இருந்திருக்கு. டைட் பண்ணிட்டேன். இப்ப கார் ஸ்டார்ட் ஆயிடும்." மணி பிரகாசமான முகத்துடன் சொன்னான். அந்த இளைஞன் காரில் அவசரம் அவரமாய் அமர்ந்து சாவியை சுழற்றவும், வண்டி உயிர் பெற்று உறும தொடங்கியது. எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது. "மாமி, இவர்தான் என் ஹஸ்பண்ட், ஆதித்யா..... ஆதி, இவங்கதான்... மாமி... ஆமா... என் பேரைச் சொன்னேன்... உங்க பேரே சொல்லலையே?" மாலு உற்சாகமாய் சாந்தாவை பார்த்தாள். "சாந்தா. இங்க தஞ்சாவூர்லதான் இருக்கேன். தெற்கு வீதியில ஒரு ஓட்டல் நடத்தறேன். ஹோட்டல் கைலாஷ்ன்னு பேரு. நேரம் கெடைச்சா அங்க வாங்கோ" சாந்தா மாமி மீண்டும் மாலுவின் கரங்களை பற்றிக் கொண்டாள். "ஆதி. நாம திருக்கருக்காவூர் போக வேண்டிய அவசியமே இருக்காதுன்னு தோன்றது. இந்த மாமியே ஆசிர்வாதம் கொடுத்துட்டா" ஆதித்யா குழப்பமாக இருவரையும் பார்த்தான். "இல்லைம்மா. தெய்வத்தை பார்க்காம போகக்கூடாது. அவசியம் போ. அவகிட்டே உன் குறையைச் சொல்லு. அவதான் உன் பிர்ச்சனைகளை தீர்த்து வைப்பா" "சும்மா சொன்னேன் மாமி. நீங்க வேற.... ஒரு ஐடியா... நீங்களும் வாங்களேன்." "இல்லைம்மா. எனக்கு நெறைய வேலையிருக்கு" சாந்தா மாமி ஆட்டோ டிரைவர் மணியை பார்க்கவும், அவன் ஆமோதிப்பது மாதிரி தலையை ஆட்டினான். "ஐயா. நான் வரட்டுங்களா?" வந்திருந்த மெக்கானிக் தனது வண்டியை திருப்பியிருந்தான். "ரொம்ப தாங்க்ஸ்ப்பா" ஆதித்யா அவன் சட்டைபையில் இரண்டு நூறு ரூபாய் தாள்களை சொருகினான். அவன் கொஞ்சம் தயங்க, "வைச்சுக்க. நீங்க, நான் கூப்பிட்டதுக்கு வந்ததே பெரிசு. பைக் பெட்ரோல் காசுக்கு கூட பணம் தராட்டா எப்படி?" "வர்றேன் சார்" அந்த மெக்கானிக் ஒரு பெரிய சல்யூட் அடித்தவாறு போனான். ஆதித்யா, மணிக்கும் பணம் கொடுக்க எத்தனிக்க, சாந்தா அன்பாக அவனை தடுத்தாள். "இங்க பாருங்க. இது என் சொந்த ஆட்டோ. மணி, வெறும் டிரைவர் இல்லே. என் பையன் மாதிரி. நீங்க எதுவும் அவனுக்கு கொடுக்க வேண்டாம். அவனும் என் உத்திரவு இல்லாம வாங்க மாட்டான்" சாந்தாவின் குறிப்பை அறிந்து மணி அகலமாக இரண்டும் கைகளையும் 'வேண்டாம்;' என்பது மாதிரி ஆட்டினான். "என்ன மாமி? அந்த மெக்கானிக் ஒன்னுமே செய்யலை. இவர்தான் வண்டிய சரி செஞ்சுருக்கார். இவருக்கு நான் எதுவும் கொடுக்கலைன்னா எப்படி?" "அதெல்லாம் இல்ல. நான் மாலுவுக்கு செஞ்ச ஒரு கைங்கர்யம் மாதிரி வைச்சுக்கோயேன்." மாலு உடனே மாமியை இறுக அனைத்துக் கொண்டாள். "எவ்வளவு நல்லவங்களா இருக்காங்க. மாமி... உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா? எங்களோட பூர்வீகம் இங்க எங்கயோதான்.... அது வந்து.. அப்பா அடிக்கடி சொல்லுவாரே... ஆதி.... அது என்ன ஊரு?" "உங்க அப்பா ஊரு... எனக்கு எப்படி தெரியும் மாலூ?" ஆதித்யா விழித்தான். நெற்றியை சுறுக்கி யோசித்தவள், திடீரென பிரகாசமானாள். "ஞாபகம் வந்துடுத்து. களஞ்சேரி." மாலு அசாதாரனமாக துள்ளினாள் "களஞ்சேரியா? உங்க அப்பா பேரு?" "தியாகராஜன், தியாகு, தியாகுன்னு ஊர்ல அவரை கூப்பிடுவாளாம். உங்களுக்கு அவரை தெரியுமா மாமி.?" மாலு ரொம்ப ஆசையுடன் கேட்டாள். "இந்த பக்கத்துல அக்ரஹார மனுஷால்ல எனக்கு எல்லாரையும் தெரியும்மா. நான் போகாத ஊருல்லே. பார்க்காத மனுஷாள் இல்லே. ப்ச்...என் கதை உனக்கு எதுக்கு? உங்க அப்பாவை நேர்ல பார்த்தா அடையாளம் தெரியலாம்னு நெனைக்கிறேன். சரி... நீ கெளம்பு.. வெயில் கடுமையா இருக்கு." மாலுவும் ஆதித்யாவும் என்னவோ பல நாட்கள் சாந்தா மாமியோடு உறவாடியது மாதிரி மிகுந்த மன கஷ்டங்களுடன் விடை பெற்றுக் கொண்டனர். அந்த கார் போவதையே உற்று பார்த்துக் கொண்டிருந்த சாந்தா மாமி எதிர் பக்கம் நடையை கட்டினாள். உயர்த்தி குடை பிடித்துக் கொண்டு மணி பின் தொடர்ந்தான். ஆட்டோவில் அமர்ந்ததும், சாந்தா மாமி மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள். "முக ஜாடையே காட்டிக் கொடுத்துடுத்து. நான் நெனைச்சது சரிதான்." "என்ன மாமி சொல்றீங்க" "இதோ, இப்ப போனாளே, இவ யார் தெரியுமா?" "யார் மாமி?" சாந்தா மாமி சொல்லவும், மணி அதிர்ந்து போனான். "என்ன மாமி. நீங்க யாருன்னு, அவங்களுக்கு சொல்லியிருக்கலாமே?" "போடா. நீ வண்டிய எடு. அவ போய் அவ அப்பாகிட்டே நிச்சயம் சொல்லுவா. அது போதும்" "என்னம்மா நீங்க?" மணி அரை மனசோடு ஆட்டோவை இயக்கினான். சாந்த சொன்னது மாதிரியே, சென்னை சென்றதும், மாலு அவள் அப்பாவிடம் ஒன்றுவிடாமல் சொன்னாள். திடீரென எலக்ட்ரிக் ஒயரை மிதித்தது மாதிரி தியாகராஜன் மிரண்டார். "அந்தம்மா பேரு என்னன்னு சொன்னே?" "சாந்தா. தஞ்சாவூர் தெற்கு வீதியிலே கைலாஷ்னு ஒரு ஹேட்டல் நடத்திக்கிட்டு இருக்காங்க. அவங்க யாருக்கு உங்களுக்கு தெரியுமா?" மாலு அவள் அப்பாவை கேள்வியாக பார்க்க, அவர் உள்ளுக்குள் உடைந்து கொண்டிருந்தார். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. "அவங்க.... அவங்க ... உன்னை என்ன சொன்னாங்க?" "நீ கவலையே படாத. இந்த தடவை உனக்கு எந்த பிரச்சனையும் வராது. முழு குழந்தை, நெறைஞ்ச ஆயுள்ளோட கெடைக்கும்னு என் வயித்து மேல கையை வைச்சு ஆசிர்வாதம் பண்ணினாங்கப்பா" தியாகராஜன் திடீரென எழுந்து கைகளை கூப்பிக் கொண்டார். "நான் செஞ்ச தப்புகளுக்கெல்லாம் மன்னிப்பு கெடைச்சிடுச்சு. மாலு... அது சரி... அவங்க ஒன்னை நீதான்னு தெரிஞ்சு ஆசி செஞ்சாங்களா அல்லது....." "புரியலைப்பா. மொதல்ல அவங்க யாருன்னு சொல்லுப்பா." தியாகராஜனின் முகம் இருண்டது. சொல்லுவதா வேண்டாமா என்று மென்று முழுங்கினார். மாலூ தெரிந்து கொள்ளாமல் விடுவதாக இல்லை என்பது மாதிரி இருந்தாள். "சரிம்மா. நானே சொல்லிடறேன். அந்த சாந்தா வேறு யாருமில்லைம்மா. உன்னோட பெரியம்மா. என் அண்ணா கனேசனோட சம்சாரம்." பேசிக் கொண்டே இருந்தவர், கண்ணங்களில் ஓங்கி ஒங்கி அறைந்து கொண்டார். "நான் செஞ்ச தப்பு ஒன்னா ரெண்டா. எந்த தெய்வமும் என்னை மன்னிக்காது. அதான் என் குடும்பதுக்கு வாரிசே இல்லாம போயிண்டு இருக்கு. மன்னி, இந்த பாவியை மன்னிச்சுடும்மா." பேய் பிடித்தவர் மாதிரி மடேரென கீழே விழுந்து கைகளை குவித்து நமஸ்கரிக்கவும், மாலு அரண்டு போனாள். "அப்பா. எனக்கு ரொம்ப பயமாயிருக்குப்பா." தியாகராஜனை கஷ்டப்பட்டு தூக்கி ஒரு வழியாக சுவற்றில் சரிந்து உட்கார வைத்தாள். "எல்லாம் உங்க அம்மா பேச்சை கேட்டு எல்லாம் தப்புகளும் செஞ்சேன்.... ம்... அவளை குத்தம் சொல்லி என்ன பிரயோசனம். என் மூளை எங்க போச்சு. அண்ணா பெண்டாட்டி, அம்மாவுக்கு சமானம்னு சொல்லுவா, அவங்களை போயி.... உதவி செய்யாட்டா கூட பரவாயில்லே... கெடுதல்னா செஞ்சுருக்கேன்.... அதுவும்... ஓட ஓட... ஊர் ஊரா தொரத்தி தொரத்தி....." "அப்பா நீங்க சொல்லறது எதுவும் தெளிவா புரியலை. புரிய மாதிரி சொல்லுங்க" "சொல்லறேன். எனக்கு எல்லாமா என் அண்ணா இருந்தான். களஞ்சேரியிலேயே பெரிய மளிகை கடை எங்களோடதுதான். அவன் 24 மணி நேரமும் கடையிலேயே உழைச்சு, உழைச்சு என்னை படிக்க வைச்சான். படிச்சதும், எனக்கு ரெயில்வேயில பெரிய வேலை கிடைச்சது. எங்க ஊரிலேயே அதிகமா மாச சம்பளம் வாங்கின முதல் ஆள் நான்தான். அதனாலோ என்னவோ எனக்கு என் அண்ணாவோட மளிகைக்கடை வேலை ரொம்ப துச்சமா பட்டுது. என் அண்ணா ஒரு மளிகை கடை வைச்சிருக்கான்னு சொல்லறதையே கேவலமா நெனைச்சேன். உங்க அம்மாவும் ரொம்ப வசதியான எடத்துலேர்ந்து வந்தவ. அவளுக்கு, கிராமம் பிடிக்கலை. எங்கே ரெண்டு சகோதர்களும் ஒன்னா இருந்துட்டா, அதிகப்படியான சொத்து நமக்கு கிடைக்காம போயிடுமோன்னு, தெனம் ஒரு சண்டைய போட்டு குடும்பத்தை பிரிச்சா. உங்க அம்மா போட்ட சூழ்ச்சியில நானும் மாட்டிக்கிட்டு, ஒரு தடவை என் அண்ணாவை தகாத வார்த்தையால சொல்லி திட்டிட்டேன். ஆசை ஆசையாய் வளர்த்த தம்பி இப்படி பேசிட்டானேன்னு, என் அண்ணா மனசுக்குள்ளே உருகி உருகி ஒரு நாள் செத்தே போயிட்டான்." நாக்கு வரண்டு போகவும், ஒரு தம்பளர் தண்ணீர் எடுத்து மடக் மடக்கென்று குடித்தார் தியாகராஜன். அதிகப்படியான தண்ணீர் வாயிலிருந்து வழிந்து அவர் சட்டையே மேலும் ஈரமாக்கியது. "என்னோட மன்னிக்கு படிப்பு கிடையாது. வெளியிலே போய் ஒரு சாமான் வாங்கத்தெரியாது. அண்ணா போன போது மூனு வயசுல ஒரு பையன். ஒரு வயசுல ஒரு பொண்ணு. கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாம, அவங்களை நிர்கதியா விட்டுட்டு, நான் மெட்ராஸ் டிரான்ஸ்வர் வாங்கின்டு வந்துட்டேன். அதோட விட்டேனா.... அண்ணா வைச்ச மளிகைக் கடை, எங்க மன்னியோட கண்ணு முன்னாலேயே அழிக்க நானே காரணமா இருந்தேன். அதுக்கு அவங்க சாப்பாட்டுக்கு வழியில்லாம அலைஞ்ச போது, எங்க ஊர்ல ஒரு பெரியவர்.. அவர் ஒரு பிரம்மச்சாரி... எங்க மன்னிக்கு உதவ வந்தார். சின்ன ஓட்டல் ஒன்னை அவர் வீட்டு வாசல்லேயே வச்சு கொடுத்தார். அவர் செஞ்ச நல்ல காரியத்தை யாரும் பாராட்டல. அவருக்கும் எங்க மன்னிக்கும் இருந்த புனிதமான தந்தை மகள் உறவை ஊர் மக்கள் கொஞ்சை படுத்தி பார்க்க ஆரம்பிச்சாங்க. ஒரு தடவை நானே ஊருக்கு போய், எல்லார் முன்னாலேயும், என் மன்னியை படு கேவலமா பேசிட்டு வந்தேன். ஊரே திரண்டு வேடிக்கை பார்த்தது. பாவம், அந்த பெரியவர். மறுநாளே அவர் அவமானத்தை தாங்க முடியாம யாருக்கிட்டேயும் சொல்லிக்காம ஊரை விட்டே போயிட்டார். மன்னிக்கு மறுபடியும் என்னால கஷ்டம். உங்க அம்மா ஒரு தம்படி காசு கூட அவாளுக்கு கொடுக்க கூடாதுன்னு பழியா நின்னா. தவிர அவ சாவி கொடுக்க கொடுக்க, நானும் முட்டாள் மாதிரி மன்னியை ஊர் ஊரா தெரு தெருவா விரட்டினேன். எங்க குடுப்பத்தை சேர்ந்த யாரும் தப்பி தவறி கூட இங்க வந்துட கூடாது, தன் குடும்பம் தன் மக்கள்னு உங்க அம்மா போட்ட பிளான் ரொம்ப நாளைக்கு அப்பறம்தான் எனக்கு புரிஞ்சுது. அதுக்குள்ள எல்லாம் எல்லை மீறி போயிடுத்து. எங்கிட்ட இருந்த பண திமிர் இப்படி எல்லாம் என்னை செய்ய வைச்சுதுன்னு நெனைக்கிறேன். அப்பன் செஞ்ச தப்புகளெல்லாம் பிள்ளைகள் மேல விடியும்கிற மாதிரி, உனக்கு வாரிசே இல்லாம போயிண்டுருக்கு." மாலுவுக்கும் மூச்சு வாங்கியது. "என்னப்பா நீங்க? அம்மாதான் சொன்னான்னா உங்களுக்கு எங்கப்பா போச்சு அறிவு? ஒரு குடும்பம், அதுவும் உங்க ரத்தம் சம்பந்தம் உள்ள ஒரு குடும்பம் அழிஞ்சு, நாம மட்டும் சுக இருக்கணும்னு..... சும்மா அம்மா மேல குத்தம் சொல்லாதீங்க. உங்களுக்கே உங்க அண்ணா மேல உங்களுக்கு உண்மையிலேயே துவேஷம் இருந்திருக்கனும். சே.... சே... கேட்கவே படு கேவலாம இருக்கு." தியாகராஜன் முழியாய் முழித்தார். பிறகு நிதானத்துக்கு வந்து, "நீ சொல்லறது உண்மைதாம்மா. நான் ஒன்னுன்னா, உங்கம்மா பின்பாட்டா ரெண்டுன்னா. அது எனக்கு அப்ப ரொம்ப பிடிச்சிருந்த்தது. நமக்குதான் வசதி வந்துடுத்தே யார் என்ன செய்ய முடியும்ன்னு, ஏத்தி விட்ட ஏணியை எட்டி உதைச்சேன். உங்க அம்மாவுக்கு கான்சர் வந்து, ரெண்டே வருஷத்துல அவ இறந்த போது கூட நான் உணரலை. ஆனா, எப்ப உனக்கு பொறக்கும் குழந்தை தங்காம போறது மூனு தடவைக்கும் மேல ஆச்சோ, அப்பதாம்மா எனக்கு தெய்வம் நின்று கொல்லும்கிறது புரிஞ்சுச்சு." மாலு அவள் அப்பாவையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குள் ஏதோ சிந்தனை ஓட்டம் ஓடிக்கொண்டிருப்பது என்பது மாதிரி தெரிந்தது. சிறிது நேர இடைவெளிக்கு பிறகு தனது அலைபேசியை எடுத்து நிதானமாக இயக்கினாள். "ஆதி. வர வெள்ளிக்கிழமை எனக்கு, உங்களுக்கு, எங்க அப்பாவுக்கு தஞ்சாவூர் போக டிரெயின்ல டிக்கெட் எடுத்துடுங்க. வீட்டுக்கு வந்ததும் விவரமா காரணம் சொல்லறேன். அவசியம் எடுத்துடுங்க." அலைபேசியை அனைத்துவிட்டு, அப்பாவை ஏறிட்டாள் மாலு. பிறகு நிதானமாக, "அப்பா. சாந்தா பெரியம்மா வீட்டு நாம போறோம். ஒட்டு மொத்த குடும்பமா நாம மன்னிப்பு கேக்கறோம்...." "போலாம்மா. ஆனா இப்பத்தானே அங்கேயிருந்து வந்தே, உடனே...." "இந்த குழந்தை நல்லபடியா பிறக்கும்னு கல்லா இருக்கிற தெய்வமும், உயிரோடு இருக்கிற தெய்வமும் ஆசி கொடுத்தாச்சு. அதை பத்தி நீங்களோ அல்லது நானோ கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. மனசுக்குள்ள பாரமா இருக்கிற பழைய குப்பை மூட்டைகளையேல்லாம் இறக்கி வைச்சுட்டு, இனிமே மனுஷங்களா நம்ம குடுப்பம் இருக்கும்ன்னு சொல்லத்தான் நாம போறோம்." தியாகராஜன் பதிலேதும் பேசாமல் ஒரு வெற்று திசையை நோக்கி மீண்டும் கரம் கூப்பினார்.   (அகில இந்திய வானொலி, தூத்துக்குடி - மே 2012) 64. தேவை ஒரு சர்ஜரி ஷைலஜா பேருந்தைவிட்டு இறங்கியதுமே அவனை கவனித்துவிட்டாள். புத்தம் புதிய மோட்டார் சைக்கிளின் மீது ஸ்டைலாக சரிந்து கொண்டு ஒரு ஹீரோ லுக் விட்டான். பொறுக்கி ராஸ்கல். தினமும் இவனுக்கு இந்த வேலை. நெருங்கிப் போய் நாலு அறை விடலாமா என்று தோன்றியது. அடிக்கப் போய், அது சினிமாத்தனமாக ஆகி..... வேண்டாம். அவனை தாண்டிச் செல்ல, முரட்டு பர்ஃயூம் நெடி அவனிடமிருந்து அலையடிப்பது மாதிரி வந்தது. அரைக் கண் பார்வையில் அவன் விரலசைத்து, 'ஹாய்' என்று இளிப்பது தெரிந்தது. பிறகு, அவன் தன் வழக்கமான வேலையை ஆரம்பித்தான். சற்று இடைவெளி விட்டு தன் பைக்கில் பின் தொடர்ந்தான். நடையை கூட்டினாள். பின்னால் திரும்பிப் பார்க்கவும் கஷ்டமாக இருந்தது. இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது? குழப்பமான எண்ணங்கள் அவள் மண்டைக்குள் முறுக்கிக் கொண்டிருந்தன.  ஒரு ஸ்கூடி அவள் அருகில் வந்து நின்றது. நீரஜா! அப்பாடி! பாய்ந்து அதன் பின்னால் ஏறிக் கொண்டாள்.  "தாங்க்ஸ்டி. சரியான சமயத்திலே வந்து காப்பாத்தினே"  "என்னாச்சு ஷைல்? ஏதாவது பிரச்சனையா?" "நீ கொஞ்ச தூரம் போயேன். நானே சொல்றேன்."  சிக்னலை தாண்டி நீரஜா ஸ்கூட்டியை ஓரம் கட்டினாள். ஸ்விட்ச் போட்ட மாதிரி ஷைலஜா அழத் தொடங்கினாள். "ஷைல்! இது பொது இடம். எமோஷனல் ஆகாதே. விஷயத்தைச் சொல்லு"  ஷைலஜா ஒரு சில கேவல்களோடு எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள். "இப்ப நான் என்ன செய்யணும், நீரஜ்? என் அப்பாகிட்டே சொல்லிடட்டுமா? ஆனா, அவர் இந்த பிரச்சனையை விட்டுட்டு என்னை ஆயிரம் கேள்வி கேக்க ஆரம்பிச்சுடுவாரு"  நீரஜா கொஞ்சம் யோசித்தாள். பிறகு சொன்னாள். "ஷைல், கவலைப்படாதே. நாளைக்கு உன்னோட பஸ்ல வரேன். நீ அவனைக் காட்டு. நான் அவனை டைரக்டா டீல் செய்யறேன்."  மறுநாள் அவன் வழக்கம்போல் பஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தான். நீரஜாவை அவன் கண்டு கொள்ளவேயில்லை. "ஹாய் ஷைல்! உன்னோட பத்தே செகன்டுகள் பேச அனுமதி கிடைக்குமா?" மிக அமைதியாக வந்து கொண்டிருந்த நீரஜா, திடீரென அவன் இடது கையை பிடித்து முதுகு பக்கம் முறுக்கினாள். கோழிக் குஞ்சு மாதிரி அவள் முன்னால் சரிந்தவனின் கழுத்தை ஒரு பதம் பார்த்தாள். அடுத்து அவள் கால் முட்டியை அவன் தொடையிடுக்கில் பிரயோகிக்க, கலைந்த சீட்டு கட்டு மாதிரி விழுந்தான். விழுந்த வேகத்தில், சுதாரித்து எழுந்து, அடிபட்ட தவளை மாதிரி தத்திக் கொண்டே ஓட்டமெடுத்தான். நீரஜா தூசு தட்டுவது மாதிரி தன் உள்ளங்கைகளை தட்டிக் கொண்டாள். "இனிமே அவன்கிட்டேயிருந்து பேச்சோ, பார்வையோ இருக்காது. இனிமே அமைதியோ அமைதி." "என்னடி, இப்படி செஞ்சுட்ட? நாம போய் அடிதடில இறங்கறது....?" "ஷைல், எல்லாத்தையும் பொறுத்துக்கணும்னு இருந்திட்டா அது ஏமாளித்தனத்துல முடிஞ்சிடும். ஒரு சில சமயத்தில அமைதி வரணும்னா, நாம ஆயுதங்களை பிரயோகிச்சே ஆகணும், டாக்டர்கள் சர்ஜரி செய்யற மாதிரி. இப்ப நான் இவனுக்கு ட்ரிட்மென்ட் கொடுத்திருக்கேன். மறுபடிம் தேவைப்பட்டா, இதைவிட இன்னும் பெருசா ஒரு சர்ஜரி செஞ்சுடலாம்."  "ரொம்ப தாங்க்ஸ்டி." வெகு நாட்கள் கழித்து ஷைலஜா புன்னகை பூத்தாள்.  (தினமலர் - பெண்கள் மலர் - 27 நவம்பர் 2010) 65. தெய்வம் தந்த வீடு   சிவாவுக்குள் பிசாசு மனம் கூச்சலிட்டது. "ஏமாந்தியா, முட்டாளே. ஹைகோர்ட்டே சொல்லியும் உன் சித்தப்பா கேட்கல. அப்பீல் செஞ்சிருக்காரு, பாரு. நான் சொல்லறத கேளு. ஒரே வாரத்தில சித்தப்பா உன் காலடில வீட்டு சாவியை மரியாதையோடு வைப்பாரு." கொஞ்சம் நின்று யோசித்தான். சித்தப்பாவாயிற்றே என்று இரக்கப்பட்டால் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி என் வீட்டை தான் சொந்தமாக்கிக் கொள்ள நினைப்பது எந்த விதத்தில் நியாயம்? ஆனால் அடுத்த நொடியே அப்பா சொன்னது ஞாபகம் வந்தது. "சிவா. அவனுக்கு இன்னும் ஆறே மாசம் டைம் கொடுடா. உன் சித்தியின் கேன்சர் டிரீட்மெண்டுக்காக அலைஞ்சுக்கிட்டிருக்கான்டா." "அப்பா பேச்சை கேட்கப் போறியா? போச்சு. நாலு வருசமா பெண் கல்யாணக் கடன்களைச் சொல்லி ஏமாத்தியாச்சு. இப்போ கேன்சர். அதற்கு பிறகு ஏதாவது இல்லாமலா போய்விடும்?" மனப்பிசாசு சொல்வதுதான் சரி. "சாரி அப்பா." தனக்குள் பேசிக் கொண்டே வந்த சிவா ரோட்டில் கிடந்த அமாவாசை பூசனிக்காயை கவனிக்கவில்லை. மடேரென்று வழுக்கி விழுந்தான். பின் மண்டையிலும் இடுப்புப் பகுதியிலும் சரியான அடி. பின்புறம் அனலாய் தகித்தது. எழ முயன்றான். முடியவில்லை. மணிக்கட்டு பகுதியில் ஆயிரம் ஊசிகளை சொருகிவிட்ட மாதிரி வலித்தது. ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ரோடு. ஆட்டோக்களும் பைக்குகளும் விர்விர்ரென்று போய் கொண்டிருந்தாலும் உதவிட யாருமில்லை.  வேகமாக போய் கொண்டிருந்த ஒரு ஆட்டோ திடீரென ஓரம் கட்டி நின்றது. அதிலிருத்து குதித்து இறங்கினான் ஒரு இனைஞன். மகேஷ்! சித்தப்பாவின் இரண்டாவது மகன். முதுகு பக்கம் அவன் பிடிக்க, அவன் நண்பன் கால் பக்கம் பிடிக்க சிவா ஆட்டோவில் திணிக்கப்பட்டான். உடனே பிசாசு உரக்க கத்தியது. "சிவா மறுபடியும் ஏமாறாதே. உதவி செய்யுற மாதிரி செஞ்சுட்டு வீட்டை அமுக்கிடுவாங்க. ஜாக்கிரதை"  "ரொம்ப நன்றி மகேஷ். நீ மட்டும் இல்லேன்னா நான் ரோட்டில அனாதையாக கிடந்து செத்தே போயிருப்பேன். உங்க குடும்பத்துக்கு பொறுக்கமுடியாத தொல்லைகள் எவ்வளவோ கொடுத்திருக்கேன். இருந்தாலும், எனக்கு உதவியிருக்கியே, யு ஆர் கிரேட்!"  "அண்ணா, உங்களுக்கும் அப்பாவுக்கும் இருக்கும் சண்டையில எனக்கு என்னன்னா சம்பந்தம்?" அந்த பதிலில் சிவா கூனிக் குறுகிப் போனான். "அது சரி, வேறு வீட்டுக்கு என்ன செய்யப் போகிறீங்க?" "கஷ்டம்தான்னா. இவ்வளவு காலம் படியளந்த கடவுள் இதுக்கும் வழி காட்டாமலா போவார்" கொஞ்சம் அவஸ்தையான யோசனைகளுக்கு பிறகு, "வேண்டாம், மகேஷ். அப்பாகிட்டே சொல்லிடு. நீங்க அங்கேயே இருந்துகுங்க.."  வீடு, வீடு என்று பேராசையில் அலைந்து, கடைசியில் தூக்க ஆளில்லாமல் வீதியில் சாக கிடந்தேனே! என்ன முட்டாள் நான்? மறுபடியும் பிசாசு குரல் எழுப்ப எத்தனிக்க, "ஓடிப்போ பிசாசே. உள்ளத்தினுள் அகல் விளக்கை இப்போதுதான் ஏற்றி வைத்திருக்கிறேன்."  "என்ன அண்ணா?" "ஒன்றுமில்லை." தம்பியை அணைத்த கைகள் வலித்தன. ஆனால் மனசில் வலி இல்லை.”  (கலைமகள் - மார்ச் 2009) 66. இன்னும் இருபத்துநான்கு மணி "ஆல் இந்தியா ரேடியோ... மாநிலச் செய்திகள்... வாசிப்பது........"   சரேலென எழுந்தேன். 60 வாட்ஸ் பல்ப் என்னைப் பார்த்து சிரிக்க. மேசை மேல் புத்தகம் விரிந்தபடி கிடக்க..... அதிகாலை நாலு மணிக்குப் படிக்க உட்காந்தவன் மீண்டும் தூங்கிவிட்டேன் போலும்.  "டேய் ரமணா. எவ்வளவு நேரமாகக் கூப்பிடறேன். படிச்சது போதும். இங்கே வாயேன். இன்னிக்கு லீவுதானே. நாளைக்குத்தானே பரீட்சை."  கீழே இறங்கிப்போனேன். பால் பாத்திரத்தைக் கையில் கொடுத்தாள் மன்னி. "பால்காரன் இரண்டு லிட்டர்தான் தந்தான். குழந்தைகள் கொஞ்ச நேரத்துல எழுந்துடும். நீ போய் கடையிலே இன்னும் அரை லிட்டர் பால் வாங்கி வந்துடு. வந்து படி. நாளைக்குத்தானே பரீட்சை? இன்னும் 24 மணி நேரம் இருக்கே!"  நல்ல வேளை நிமிஷத்திலோ அல்லது நொடியிலோ சொல்லாது விட்டாளே! பால் வாங்கிக்கொண்டு திரும்பினேன். 'இதுவரை கேட்டுக்கொண்டிருந்த' ஆகாஸ்வாணி செய்திகள் இத்துடன் முடிவடைந்தன. ஓ ! ஏழு இருபத்தைந்தா ? அண்ணா எழுந்துவிட்டிருந்தான். அண்ணாவிற்குப் 'பேஸ்ட்' முதல் 'டவல்' வரை எடுத்து வைத்து விட்டு, அப்பாவுக்கு வெந்நீர் போட்டு விட்டு, அத்தனை பேருடைய துணிகளுக்கும் சோப்பு போட்டுவிட்டுக் குளித்தேன். "ஏ ஆகாஸ்வாணி ஹை" என்றது வானொலி.  "ரமணா, அண்ணா மார்கெட் போகலை. நீதான் சித்த போய்ட்டு வந்துடேன்." நான் தலையைச் சொறிந்தேன். "மன்னி. நாளைக்குப் எக்ஸாம்." "நாளைக்குத்தானே? இன்னும் இருபத்து ......." அதற்குமேல் நான் காதில் வாங்கவில்லை. திரும்பி வந்தபோது அண்ணாவும் மன்னியும் ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.  "ரமணா, டேபிள் மேலே ரேஷன் கார்டும் பணமும் வைச்சிருக்கேன். போய் ஜீனியும் மண்ணெண்ணெயும் வாங்கி வந்துடு."  அண்ணாவின் கட்டளைக்கு தலையாட்டிவிட்டு மாடிக்குச் சென்றேன். 'மாடர்ன் பாங்க்கிங்' என்னைப் பார்த்து சிரித்தது.  கீழேயிருந்து வந்த கிரிகெட் காமென்டரி சத்தம் என் படிப்பைக் கலைத்தது. என் தம்பி காமென்டரி கேட்டுக் கொண்டிருந்தான். நேர்முக வர்ணனையாளர் எண்ணிக்கைகளைக் கூட சுத்தமான ஹிந்தியில் சொல்லிக்கொண்டிருந்தார். புரியாவிட்டால் என்ன? கையில் டிரான்ஸிஸ்டரை வைத்துக் கொண்டு கிரிகெட் காமென்டரி கேட்கும் இன்றைய 'பேஷனுக்கு' என் தம்பி மட்டும் விதிவிலக்கா? "டேய்! ரேடியோவை நிறுத்துடா. எனக்கு நாளைக்கு எக்ஸாம்." எனக்குப் பதிலளிப்பது போல டிரான்சிஸ்டர் இப்போது உச்ச ஸ்தாயியை எட்டியது. நான் ஜீனி வாங்க புறப்பட்டேன். ரேஷன் கடையில் ஒரே கூட்டம். சினிமாக் கொட்டகை தோற்றது. எப்படியோ முண்டியடித்து வெற்றிவாகை சூடித் திரும்பினேன். பக்கத்திலிருந்த பெண்கள் பள்ளி விட்டிருந்தது. பச்சை வெள்ளையாய், பெண்கள். பெண்கள். பெண்கள். பீலிபெய் சாகாடாய் புத்தகச் சுமையில் இடை ஒடிய ...  ஓ! மணி ஒன்றாகிவிட்டதா? இரண்டு மணி ஆனதும், சோப்பு போட்ட துணிகளைத் துவைத்து உலர்த்தினேன். கடிகாரம் நான்கடித்து, காப்பியை நினைவூட்டியது. அண்ணாவின் குழந்தைகளைக் கொண்டு வந்துவிட்ட ஆயா அவள் பங்குக்குச் சுமார் 360 நொடிகளுக்கு 'உதிரிப் பூக்கள்' பற்றி லெக்சர் அடித்தாள்.  படிக்கலாம் என மாடிக்கு போனேன். காலடிச் சத்தம் கேட்டது. நட்டு வருகிறான். நானும் அவனும் சேர்ந்து படிப்பதாகத் திட்டம். ஆனால் ஒரு விஷயம். 'சுஜாதா'வைப் பற்றி ஆரம்பித்தோமோ தொலைந்தோம். அறுத்துத் தள்ளி விடுவான். சரியான நாவல் பைத்தியம்.  "படிக்கலாமா? இன்னும் பதினெட்டு மணிகூட இல்லை" என்றேன் தற்காப்பாக.  "உம்... உம்..." என்று சுரத்தில்லாமல் பதிலளித்தான் நட்டு. 'கனவுத் தொழிற்சாலை'யில் இந்த வாரத்துப் புதிய திருப்பத்தைச் சொல்லும் வாய்ப்பு கிடைக்காத வருத்தம் அவனுக்கு.  கீழேயிருந்து அப்பாவின் குரல் கேட்டது. "தங்கம் விலை இறங்கி விட்டது பார்த்தேளா?" "வெங்காயம்கூட இப்ப கிலோ ஒரு ரூபாய்க்குத் தரான்."  'சாய்வு நாற்காலிகளின்' அரசியல் அலசல்கள். நட்டு எழுந்து போய்விட்டான்.  அரசியல் எட்டு மணிக்கெல்லாம் அடங்கியது. வயிறு பசித்தது. கீழே இறங்கினேன். "நாளைக்கு எக்ஸாமா?" அண்ணா வரவேற்றான்.  "உம்" "ஒழுங்காய்ப் படி. காலைல படிச்சையோ? நட்டுவோட ஊர் சுத்தியிருப்பே."  " .... .... .... " "சரி. சரி. ராத்திரி முழுக்க டயம் இருக்கே. சாப்பிட்ட பிறகாவது போய் படி."  "இதபாருங்கோன்னா. ராத்திரிக்கு சமைக்கலை. ரமணனைப் போய் டிபன் வாங்கிண்டு வரச் சொல்லுங்கோ" எனச் சொல்லிவிட்டு "அமுல் யிடுத்து" என்ற போனஸையும் அறிவித்தாள்.  "போய் வாங்கிண்டு வாடா ... ... ஒவ்வொருத்தன் எவ்வளவோ ஒழைச்சுப்பிட்டுப் படிக்கிறான். பர்ஸ்ட் கிளாஸ் வாங்கறான். நாளைக்குத்தானே எக்ஸாம்? இன்னும் இருபத்து..." எல்லாவற்றையும் முடித்துவிட்டேன். படிக்க உட்காருகிறேன். உடம்பில் உள்ள ஒவ்வொரு பாகமும் ரேஷன் கடைக் கூட்டத்தை நினைவு படுத்தி ஆளை அமுக்கியது. காலண்டரில் தாள் காற்றில் படபடத்தது.  1982 பூண்டி புஷ்பம் கல்லூரி ஆண்டு மலர்    67. எங்கே ஊனம்?   "இப்போது உங்கள் மனதை கொள்ளை கொள்ளும் நிகழ்ச்சியை அளிக்க திரு ப்ரகாஷ் ஆனந்த் அவர்களை அழைக்கிறேன்"  மைக்காளர் அறிவிக்கவும், ஒரு ஒளிவட்டம் சுழன்று அந்தச் சிறுவன் மேல் விழுந்தது. எழுந்த அவன் மேடையை நோக்கி முன்னேறினான். அடுத்த சில நிமிடங்களுக்கு எதிர்பார்ப்புகளுடன் கூடிய அமைதி நிலவியது. அனைவரின் உள்ளத்திலும் இவனா இவ்வளவு பெரிய எலக்ட்ரானிக் கீபோர்டில் பாட்டிசைக்கப் போகிறான் என்ற கேள்வி இருந்தது. காரணம், அவன் ஒரு சிறப்பு குழந்தை. உருவம் பத்து வயதுக்கு உரியதாக இருந்தாலும் அவன் நடையும் செய்கையும் ஐந்து வயது குறைந்தே இருந்தன.  அப்படியும் இப்படியுமாக சரி பார்த்துக் கொண்டிருந்த ப்ரகாஷ், திருப்தி பட்டு, தலை நிமிர்த்தி, மைக்காளரை கேள்வியாக பார்த்தான். அவர் உடனே கட்டைவிரல் உயர்த்தி தலையசைத்தார். அவ்வளவுதான்!!! மடை திறந்த வெள்ளமாக ஒரு இனிய இசை கீபோர்டிலிருந்து வெளிப்பட்டது! அது மிக பிரபலமான திரைப்படப் பாடலின் தொடக்க இசை! அப்போது தொடங்கிய மக்களின் ஆச்சரியம் இதழ் விரிக்கும் மலர்களைப் போலே பன்மடங்காகிக் கொண்டே போனது. ப்ரகாஷ் துளிக்கூட தடுமாறவில்லை. பிய்த்து உதறினான். அந்த பிரபல பாடலில் என்னென்ன நெளிவுகள் குழைவுகள் உண்டோ அத்தனையும் 24 காரட்டுகளாக டாண் டாண் என்று வந்து விழுந்தன. மகுடி பாம்பாய் தாளக் கட்டுக்கு ஏற்ப மக்கள் கைதட்டினார்கள். உற்சாகம் பீறிட்டெழுந்தது. பாடல் முடிந்ததே தெரியவில்லை. கைத்தட்டல் ஓய வெகு நேரம் பிடித்தது.  தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ப்ரகாஷின் அம்மா வித்யா கண்கலங்கினாள். அருகில் இருந்த கணவன் ஆனந்த் தோள்களில் சாய்ந்து விம்மினாள். பின்னந்தலை மயிர்க் கற்றையை வருடி சமாதனபடுத்திய ஆனந்த், ஆள்காட்டி விரலால் அவள் முகவாயை நிமிர்த்தினான்.  "வித்யா இப்ப நீ என்ன நெனைக்கற சொல்லட்டுமா?" "ம்....." "கடவுளே! எனக்கு இப்படி சாதனைகள் படைக்கிற குழந்தையை எதற்காகக் கொடுத்தாய்? சாதாரண குழந்தையை கொடுத்திருந்தாலே நான் திருப்தி பட்டிருப்பேனே! அப்பிடின்னுதானே?" "ஆமாங்க. என்னால இதையெல்லாம் மகிழ்ச்சியா ஏத்துக்க முடியலைங்க. நான் யாருக்கும் எந்த கெடுதலும்...."  "புரியாம பேசாத. நாமதான் ரணப்பட்டு ஊனமா போயிட்டோம். ப்ரகாஷை பாரேன். எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கான். அவனொட தனி உலகத்தில ராஜா மாதிரி இருக்கான். அங்கே அவனுக்கு எந்த ஊனமும் இல்லை. எதையோ நெனைச்சுக்கிட்டு, இல்லாததுக்கு ஏங்கி வாழ்க்கையை சிக்கலாக்கிக்கிறோம். இதுவரை நாம நமக்காக வாழ்ந்தாச்சு. இனி அவனுக்காக வாழ்வோமே. எரியற தீபத்துக்கு இருக்கும் ரெண்டு பக்க தடுப்பு மாதிரி நாம இருப்போம். வா."  வித்யா ஓடிச் சென்று ப்ரகாஷ் கன்னத்தில் தொடர் முத்தமிட மக்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்தார்கள். தேவி - 19 ஆகஸ்ட் 2008  68. கல்வெட்டு   'டும்,' 'டமால்', 'டுப்', 'டம்', 'டம்', 'டும்,' 'டமால்'.  பாறைகள் வெடித்து சிதறின. திடீரென ஒரு தொழிலாளி கத்தினான். குரல் வந்த திசையை நோக்கி சுந்தர் ஓடினான். முதலாளி செல்லமுத்துவும் பதட்டத்துடன் பின் தொடர்ந்தார். "ஐயா. இங்க பாருங்க. பாறையில என்னென்னவோ எளுதியிருக்குது."  சுந்தருக்கு பார்த்ததுமே புரிந்துவிட்டது! சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுக்கள்! சிதறியிருந்த மற்ற பாறைகளிலும் கல்வெட்டுக்கள் இருக்கிறதா என்று தேடத் தொடங்கினான்.  "அப்பாடி. நம்ம ஆள்படைகளுக்கு ஒண்ணும் ஆபத்தில்லையே? இவன் சவுண்டு வுட்டதும் பயந்திட்டேன். போடா, போய் மத்த வேலையப் பாரு. என்ன சுந்தரு? ஏதாவது புதையல் மாதிரியா? " "கிட்டத்தட்ட புதையல் மாதிரித்தான் சார். இவைகளெல்லாம் நம்ம ராஜா காலத்து கல்வெட்டுக்கள். தொல்பொருள் இலாக்காகிட்ட சொன்னோம்னா அவங்க நம்மள பாராட்டுவாங்க. டி.வி.காரங்க பத்திரிக்கைகாரங்க வந்து போட்டோ புடிப்பாங்க. ஒங்கள பேட்டி எடுப்பாங்க." சுந்தர் மகிழ்ச்சியில் அடுக்கிக் கொண்டே போனான். அவனுக்கு கால்கள் பரபரத்தன. நீண்ட யோசனைகளுக்கு பிறகு செல்லமுத்து கேட்டார். "சுந்தரு. பாராட்டு, பேட்டியல்லாம் இருக்கட்டும்யா. பணம் எவ்வளவு தருவாங்க?" அதிர்ந்து போனான் சுந்தர். "நஷ்ட ஈடு நிச்சயம் தருவாங்க சார். தவிர, இவைகள்..."  "யப்பா. இப்பத்தான் கஷ்டப்பட்டு அவனை இவனை புடிச்சி கான்ட்ராக்ட் எடுத்திருக்கேன். நஷ்ட ஈட வாங்கிக்கிட்டு நாக்கு வளிக்கறதா? இத மாதிரி நூத்துக் கணக்கில நாட்ல இருக்குதுப்பா. என் கொளுந்தியா கிராமத்து வீட்டாண்ட கொல்ல கக்கூசுக்கு பக்கத்தில ஒரு இருட்டு மண்டபம் இருக்குது. அங்க இத மாதிரி ஏகத்துக்கும் எளுதியிருக்குது. வௌவ்வா புளுக்க வீச்சம் அடிக்கும். அத வுடு. நீ சொன்ன மாரியே நான் போய் சொன்னா என்ன ஆகும் தெரியுமா? வேலை நின்னிடும். போட்டோ புடிப்பானுவ. ஆளாளுக்கு வருவானுவ. இன்னொரு கான்ட்ராக்ட் கெலிக்கற வரைக்கும் மிசினு வாடகை, ஆள் கூலி, உன் சம்பளம், என்னோட வருமானத்துக்கு என்ன வளி?" செல்லமுத்து கிடுகிடுவென அடுத்த பெரு வெடிக்கு கட்டளையிட்டார். "சுந்தரு. நல்லா கேட்டுக்க. நாலு மணிக்குள்ளார எளுத்து இருக்கிற எல்லா கல்லும் தூளாகி லாரில ஏறிடணும். புரிஞ்சிச்சா. துடிப்பான பையனா இருக்காங்காட்டி ஒன்னிய வேலைக்கு வைச்சிருக்கேன். அதிகமா ரோசனை செய்யாம வேலையப் பாரு." எந்த சிக்கலும் இல்லாமல் மாலைக்குள் வேலை முடிந்த திருப்தியில் வீட்டுக்கு போனார் செல்லமுத்து. அவர் பேரன் சந்தீப் எதிர் கொண்டு வரவேற்றான். "தாத்தா. இந்த ஹிஸ்ட்டரி ரொம்ப போரு தாத்தா. அக்பர் குளம் வெட்டினாராம். சாலைகள் ஓரத்தில மரம் நட்டாராம். இப்ப இருக்கிற கம்ப்யூட்டர் வேர்ல்டுல இதுக்கு என்ன தாத்தா அவசியம்?" தாத்தாவுக்கு ஏற்ற பேரன்! தேவி - 22 ஆகஸ்ட் 2007  69. காக்க. காக்க. ரகசியம் காக்க   பால் பாக்கெட்டாகத்தான் இருக்கும் என்று அலட்சியமாக கதவை திறந்த ஜெயாவுக்கு ஆச்சர்யம்.   ஆறு அடி உயரத்தில் ஜீன்சும் டி சர்ட்டுமாக ஆத்மா!!! அந்த வீடு அடுத்த சில நொடிகளில் கலகலப்பானது. வாட்ச்மேன் இரண்டு ராட்சத பெட்டிகளை மூச்சிரைக்க கொண்டு வந்து வைத்துவிட்டு போனார். "அண்ணா. எனக்கு வாட்ச் வாங்கிருக்கியா" தங்கை ரம்யா கேட்டாள்.  "டேய். பெரிய அத்தான் கேட்ட டிஜிடல் காமிரா. அப்பறம் சின்ன அத்தானுக்கு டி.வி.டி பிளேயர் வாங்கிட்டயா."   இது அப்பா. ஆத்மா சொல்வதற்கு வாயெடுப்பதற்குள் ஜெயா இடைமறித்தாள்.   "அட. அவன் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கட்டுமே.” ஜெயா எல்லாரையும் விரட்டாத குறையாக அனுப்பி வைத்தாள். ஆத்மா ஜெயாவின் ஒரே செல்ல மகன். கம்ப்யூட்டரில் சூரப்புலி. மாதம் ஐம்பதாயிரம் சம்பளம். வேலையில் சோந்த இரண்டு வருடங்களில் இரண்டு அக்காக்களுக்கு திருமணம் முடித்து விட்டான். இன்னும் தங்கை ரம்யா திருமணத்திற்கு காத்திருக்கிறாள். வாங்கிய கடன்களுக்கு இன்னும் இ.எம்.ஐ. கட்டிக் கொண்டிருக்கிறான். எல்லோரும் போய்விட்டார்கள்.   ஜெயா யாரும் கவனிக்காத போது பூனை மாதிரி ஆத்மா ரூமுக்கு போனாள். "அம்மா. ராகவ் கொடுத்த பேக். ரகசியமா இருக்கா."   ஆத்மா கீச்சு குரலில் கேட்டான். "பத்திரமா வச்சுருக்கேன். என்ன விசயம். எதுவும் தப்புதண்டா இல்லைதானே."  "அதெல்லாம் ஒண்ணும் இல்லை. எடு சொல்லறேன். "  எடுத்து பிரித்ததில்.... எல்லாம் ஃபாரின் சாமான்கள். ஜெயா குழம்பினாள். "அம்மா. எல்லாருக்கும் ஃபாரின் சாமான்கள் வாங்கிக்கொடுக்க எனக்கு ஆசைதான். ஆனா உண்மை என்னன்னா. எல்லாமே இந்தியாவுல சீப்பா நல்ல குவாலிடியில கெடைக்குதும்மா. கணக்கு போட்டு பார்த்தேன். ஐநூறு டாலர் மிச்சம் பிடிக்க முடியற மாதிரி ஐடியா வந்திச்சு. என் ப்ரெண்ட் ராகவ் டெல்லியில இருக்கான். அவன் பக்காவா எல்லாத்தையும் வாங்கி கொடுத்திட்டான். ரம்ஸ் கல்யாணம் நிச்சயம் கிற நேரத்தில எதுக்கு அனாவசிய ஆடம்பர செலவு. சொன்னா புரிஞ்சுக்க மாட்டாங்க. அவங்க விருப்பத்தை நிறைவேத்தறது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு நாம நம்ம நெலமையும் பார்த்துக்கணும் இல்லையா. அதான். தப்பு இல்லே. அவங்க பார்க்கறதுக்கு முன்னால என் பொட்டியில வச்சுடலாம். சீக்கிரம். உஷ்... காக்க. காக்க. ரகசியம் காக்க."  'இவனல்லவோ பிள்ளை?' ஜெயா மெய்சிலிர்த்துப் போனாள். தேவி மார்ச் 28, 2007  70. முற்பகல் செய்யின்   சின்னதுரை பஸ்சுக்காக காத்திருந்தார். பஸ் வரவில்லையே என்ற கவலையை விட பணப் பிரச்னைதான் பெரிய கவலை. அவருக்கு ஒரு தனியார் கம்பெனியில் பியூன் வேலை. சொற்ப சம்பளம். ஆனால் குடும்பம் பெரிசு. மூத்த மகள் பிரசவத்துக்கு வந்திருக்கிறாள். தீபாவளி, பொங்கல் கடன்களே கழுத்து வரை இருக்கின்றன. சின்னதுரைக்கு சம்பளத்தை தவிர கிடைக்கக்கூடிய ஒரே வருமானம் பயணப்படி. வாரத்தில் மூன்று நான்கு முறை தொலைவில் இருக்கும் பாக்டரிக்கு சில காகிதங்களை எடுத்துச் செல்ல பயணப்படி கிடைக்கும். இப்போது அந்த விஷயமாகத்தான் பஸ்சுக்கு காத்திருக்கிறார்.  அப்போதுதான் அதை கவனித்தார். எழுபது வயசான கிழவர் பிளாஸ்டிக் கூடையிலிருந்து ஒரு மஞ்சள் பையை எடுத்துப் பார்த்தார். நூறு ரூபாய் தாள்கள்! கிழவர் மறுபடியும் பையை சுருட்டி கூடைக்குள் வைத்து விட்டார். சரியான முட்டாள்! இவ்வளவு பணத்தை யாராவது கூடையில் வைப்பார்களா? பணம்! ஆமாம்! உடனடியாகத் தேவை. கடனுக்குக்கூட யாரும் இப்போது தர மாட்டார்கள். யாரும் கவனிக்காதபோது எடுத்து விட்டால் என்ன? சே...சே... திருடுவது தப்பு. கொஞ்சம் தள்ளிப்போய் நின்று கொண்டார். மீண்டும் அந்த ரூபாய் கண் முன்னால் விரிந்தது. இதை விட்டால் வேறு வழியே இல்லை என்று பிசாசு மனசு கூச்சலிட்டது.  பஸ் வந்து விட்டது. நல்ல கூட்டம். பாய்ச்சலாய் பாய்ந்து பஸ்சில் ஏறினார். படிக்கட்டின் பின் சீட்டில் உட்காந்தவரிடம் தனது தோல் பையைக் கொடுத்தார். ஃபுட்போர்டில் தொங்கும் காலேஜ் பையன்கள் உள்ளே அழுத்த பஸ்சுக்கு மத்தியில் தள்ளப்பட்டார். நிமிர்ந்து பார்த்ததும் ஆச்சர்யம்! அந்த கிழவர் அவருக்கு முன்னால்! அந்த பிளாஸ்டிக் கூடை வாய் பிளந்து மஞ்சள் பை எடுக்கும் வகையில்... பிசாசு மனசு எடு... எடு... என்றது. பஸ் நிற்காமல் போய்க் கொண்டிருந்தது. பஸ் பாக்டரியை அடைய அரை மணியாவது ஆகும். முன்னும் பின்னுமாக பயங்கரமாக குலுங்கியது. எடுக்கலாமா? இல்லை... இப்போது வேண்டாம். சிறிது நேரம் கழித்து... அப்படியே பலமுறை யோசித்து கடைசியில் ஒரு குலுக்கலில் பையை எடுத்து விட்டார்! வியர்வை வெள்ளம். கை, கால்கள் லேசாக நடுங்கின. நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. யாராவது பார்த்திருப்பார்களோ? பஸ் குலுக்கலுடன் நிற்கவும், நிறைய பேர் இறங்க ஆரம்பித்தனர். மாட்டிக் கொண்டு விட்டால்? சட்டென்று இறங்கி எதிர்பக்கம் திரும்பிப் பார்க்காமல் நடக்க ஆரம்பித்தார். பஸ் போய் விட்டது. அப்பாடி! சின்னதுரைக்கு உடம்பு முழுவதும் உஷ்ணம். ஒருவித திருப்தி.  திடீரென ஞாபகம் வந்தது. அந்த தோல் பை! ஆபீஸ் பேப்பர்கள் அடங்கிய தோல்பை! ஐயோ! பின் சீட்டில் கொடுத்ததை இறங்கும்போது இருந்த அவசரத்தில் வாங்க மறந்து விட்டேனே! ஷாக் அடிக்காத குறை. முகம் வெளிறிப் போயிற்று. செய்வதறியாமல் பேந்த பேந்த முழித்தார். திரும்பி பஸ் ஸ்டாப்புக்கு ஓடி வந்தார். வாய் விட்டு அலறினார். பஸ் ஸ்டாப்பில் இருந்தவர்கள் விசாரித்தார்கள். அழுகையூடே விவரங்கள் சொன்னார்.  "சார் அதில் பணம் வச்சிருந்தீர்களா?" "இல்லையே! ஆபீஸ் பேப்பருங்க. முக்கியமான பேப்பருங்க. இது கிடைக்கலைன்னா வேலை போயிடுங்க."  "யார்கிட்டே கொடுத்தீங்கன்னு ஞாபகம் இருக்கா?" "இல்லையே" கேட்டவர்கள் விவரங்கள் அறிவதில்தான் மும்முரமாக இருந்தார்கள். உதவுகிறவர்கள் யாருமில்லை.  "இதுக்குத்தான் முன்னே பின்னே தெரியாதவங்ககிட்டே பையை கொடுக்கக் கூடாது. இப்படித்தான் நான் ஒருமுறை நாகர்கோவில் பஸ்சுலே..."  "கூட்டம் ஜாஸ்தியா இருந்தா அடுத்த பஸ்சுலே போறதுதானே பெரியவரே?" "ஆபீஸ்லே ஆட்டோல போறதுக்கு பைசா தரப்படாதோ? இவ்வளோ வயசானவரை பஸ்சுலே அனுப்ப எப்படி மனசு வந்ததோ தெரியலே"  "தோல் பைன்னு சொன்னாரு. தோல் பையே இருநூறு ரூபா தேறும். கிடைச்சவன் விடுவானா? பேப்பர்களை கடாசிட்டு பையை சுட்டுடுவான்."  "ஆமாம். போனது போனதுதான்."  ஆளுக்கு ஆள் கமெண்ட் அடித்தார்கள். யாரோ ஒருவர் "சார் நீங்க உடனே பஸ் புடிச்சு டெப்போவுக்கு போங்க. பஸ் நம்பரைச் சொல்லி டிக்கெட்டை காட்டுங்க. அந்த ஆள் கண்டக்டரிடம் கொடுத்தாலும் கொடுத்திருப்பான்."  எதிர்பக்க பஸ் பிடித்து டிப்போ போய் அலையோ அலையென்று அலைந்தார். அங்கேயும் இங்கேயும் அலைக்கழித்தார்கள். விவரங்கள் கேட்டு வெறுப்பேத்தினார்கள். கடைசியில் யாரோ ஒருவர் இரக்கப்பட்டு விவரங்கள் குறித்துக் கொண்டு மறுநாள் காலையில் பத்து மணிக்கு வரச் சொன்னார்.  வெளியே வந்தார். மண்டை கனத்தது. வேலை நிச்சயம் போகப் போகிறது. அப்போதுதான் ஞாபகம் வந்தது. மஞ்சள் பை கையில் லேசாக இருந்தாலும் கனத்தது. முள்ளாய் குத்தியது. பிரித்து, எண்ணியதில்... இரண்டாயிரத்து ஐநூறு! உள்ளேயிருந்து ஒரு கடிதம் கீழே விழுந்தது. எடுத்துப் பிரித்தார். ஒரு அம்மா தன் பையனுக்குப் பாசத்துடன் லெட்டர் எழுதியிருந்தாள். பையன் அருகில் உள்ள காலேஜில் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான். வறுமைப்பட்ட குடும்பம். நிலத்தை ஒத்தி வைத்து காலேஜ் ஃபீஸ் கட்ட அனுப்பியிருக்கிறாள்.  சின்னதுரைக்கு தன்னை அடிக்காத குறை. என்ன காரியம் செய்து விட்டேன். இப்போது என் குடும்பமும் குட்டிசுவராகப் போகிறது. பணம் தொலைந்ததில் அந்த குடும்பமும் தள்ளாடப் போகிறது. என்ன ஆனாலும் பரவாயில்லை. பணத்தை அந்த பையனிடம் சேர்ப்பித்து விட வேண்டும்.  அங்கே இங்கே விசாரித்து காலேஜ் போய் ஹாஸ்டலில் அந்த பையன் ரூமை கண்டுபிடித்து விட்டார். பையை தவறவிட்ட அந்த பெரியவர் தலையில் கை வைத்தவாறு உட்காந்திருந்தார். பணத்தை கொடுத்ததும் கிழவர் வயதையும் மீறி சின்னதுரையின் கையை பிடித்துக்கொண்டு கதறி அழுதார். உடனிருந்த காலேஜ் நண்பர்கள் சின்னதுரையின் நேர்மையை வாயாரப் புகழ்ந்தனர். பஸ்சில் கீழே கிடந்ததாக சொல்லியிருந்தார். அவர்கள் சொல்லும் ஒவ்வொரு பாராட்டும் முள்ளாய் குத்தியது.  வீடு திரும்பினார். யாரிடமும் எதுவும் பேசவில்லை. நாளை காலையில் ஆபீஸ் போய் முதலாளி காலில் விழுந்து எப்படியாவது சமாளிக்க வேண்டும். காலையில் வழக்கம்போல் ஆபீஸ்னுள்ளே நுழைந்ததும் அவருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. ரிசப்ஷனில் ஒருவர் சோபாவில் உட்காந்திருந்தார். அவர் மடியில் அதே தோல் பை! சின்னதுரை 'முருகா' என்று உரக்கச் சொன்னார்.  1997 மார்ச் 02 வசந்தம் (தினகரன்) ஞாயிறு மலர்   71. யாரிவன்?   "ஏய் கிழவா... துட்டு வச்சுருக்கியா?".  கேட்டவனுக்கு ரெளடிக்கான சகல அம்சங்களும் இருந்தன. நிறைய குடித்திருந்தான். பஸ் ஸ்டாப்பை ஒட்டிய மரத்தடியில் சரிந்திருந்தான். சிவராம சாஸ்திரிகள் குரல் வந்த திசையை வெறுப்புடன் பார்த்தார். பார்த்ததும் துணுக்குற்று வேறு பக்கம் முகம் திருப்பிக் கொண்டார். அவர் போதாத காலம் 18-ம் நம்பர் பஸ் இன்னும் வரவில்லை. வேறு ஏதாவது பஸ் வந்தால்கூட பரவாயில்லை. இந்த இடத்தை விட்டு ஒழியலாம் என பதைபதைப்புடன் நோட்டம் விட்டார்.  பஸ் ஸ்டாப்பில் கூட்டம் ஓரளவிற்கு இருந்தாலும் வேடிக்கை பார்ப்பதாகத்தான் இருந்தது. மக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நின்று கொண்டு பஸ் வரவையும் அவனின் அடுத்த நடவடிக்கையையும் பார்த்தவாறு இருந்தனர். ஒரு சிலர் பயத்துடன் தள்ளி நின்றனர்.  அவன் சிரமப்பட்டு எழுந்து நின்றான். உடம்பு தள்ளாடியது. அருகில் படுத்திருந்த நாயை ஓங்கி ஒரு உதை விட்டான். அது ஈன ஸ்வரத்தில் முனகிக் கொண்டே ஓடி மறைந்தது. "...த்தா. கூப்டன்ல. இங்க வாடா..." பஸ் ஸ்டாப் பயணிகள் கொஞ்சம் கலவரம் அடைந்தார்கள். ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து முகம் சுளித்தார்கள். அவன் நெருங்கிவிட்டான். சாஸ்திரிகள் மிகக் கலவரமானார்.  "போடா... எங்கிட்ட வம்பு வச்சுக்காதே... போலீசைக் கூப்பிடுவேன்."  "போலீஸ்... பெரிய போலீஸ். எங்கிட்ட வருவானா ஒரு பய. காசு எங்க வச்சுருக்க. மரியாதையா கொடுத்துடு. இல்லே நடக்கறதே வேற."  சாஸ்திரிகள் சட்டை அணியவில்லை. பணத்தை வேட்டியில் முடிந்திருந்தார். மிக ஒல்லியான தேகம். திமிறினார். அவன் குடித்திருந்தாலும் வலுவான பிடியினால் சீக்கிரமே கீழே விழுந்தார். 'நச்' என்று பின் மண்டை தரையில் பட்டது. இறுக்கிக் கட்டிய வேட்டி லேசாக அவிழ்ந்து, காசுகள் சிதறின. "என்ன... நீங்கள்ளாம் பார்த்துண்டு இருக்கேளே. கேட்கப்படாதோ? இவனுக்கு சாவு வரமாட்டேங்கறதே..." வயசானவர் அலறியது எல்லோ மனசையும் பிழிந்தது. பின் மண்டையில் கல் குத்தியிருக்க வேண்டும். ரத்தம் லேசாக வந்தது.  "நாங்களும் பார்த்துக்கொண்டே இருக்கோம். ரெளடித்தனமா பண்ணறே ராஸ்கல்?" கூட்டத்திலிருந்து ஒரு சிலர் அவன் மீது பாய்ந்தனர். சிதறிய காசுகளை அள்ளிக் கொண்டிருந்த அவன் நிலை குலைந்து விழுந்தான்.  அவ்வளவுதான்! தர்ம அடி தொடங்கி விட்டது. சிறிது நேரத்தில் பெரும் கூட்டம் சேர்ந்து விட்டது. ஒரு சிலர் ஓடி வந்து சில்லரைக் காசுகளையும் பறந்த ரூபாய்களையும் பொறுக்கி அவரிடம் கொடுத்தனர். சிவராம சாஸ்திரிகள் குலுங்கி குலுங்கி அழுதார்.  "சார், ஏன் சார் அழுவுறீங்க? பலமா அடி பட்டுடுச்சா? ஆட்டோ எடுத்தாரட்டுமா?" "குழந்தைகளா. அடி உடம்புல இல்லப்பா. மனசுல... மனசுல..." பெரிசாய் வாய் விட்டு அழுதார். நெஞ்சில் ஓங்கி ஓங்கி அறைந்து கொண்டார்.  "என்ன சார்? சொல்லறது புரியல்லே."  "நீங்கள்ளாம் அடிச்சு மொத்தறேளே. அவன் வேற யாருமில்லேப்பா. என் பையன்பா... என் பையன்... எல்லாம் என் ஜன்மாந்திர பாவம்பா... பாவம். உருப்படாம போய் பேரு கெட்டு, என் மானத்தை வாங்கறான். இவன் செத்துத் தொலைஞ்சா என்ன ?" இவருக்கு இப்படிப்பட்ட பிள்ளையா ? கூட்டத்தினர் விக்கித்துப் போயினர். 1995 நவம்பர் 26 இதயம் பேசுகிறது   72. கீதா காதல் செய்கிறாள்   கொதித்துப் போனாள் சுஜாதா. நம்ம கீதுகுட்டியா இப்படிச் செய்திருக்கிறாள்?   காதல் கடிதம்! யார் இந்த மனோகர்? இன்னும் சின்னக் குழந்தை என்று இவளை நினைத்துக் கொண்டு இருந்தேனே! என்ன காரியம் செய்திருக்கிறாள்? அப்பாவுக்குக் தெரிந்தால் ஆகாயத்துக்கும் பூமிக்கும் அல்லவா குதிப்பார்? வரட்டும் கீதா, நேரடியாகவே கேட்டு விடுவது. என்ன சொல்லி எப்படி மழுப்புகிறாள் என்று பார்ப்போம்? கிராதகி! சுஜாதாவுக்கு இரவு வரை பொறுமையாக இருக்க முடியவில்லை. அம்மா கூட இரண்டு முறை கேட்டுவிட்டாள். தலைவலி என்று சொல்லி சமாளித்து விட்டாள். வெளியே கூட எங்கேயும் போகவில்லை.  மணி எட்டரை ஆயிற்று..... கீதா வந்துவிட்டாள். ஆர்ப்பாட்டமாய் அருகில் வந்து கிசுகிசுத்தாள். "அக்கா உனக்கு சர்ப்ரைஸ் ஒன்று சொல்லப் போகிறேன். நீ யாரிடமும் சொல்லக் கூடாது. அப்பாகிட்ட கூட சொல்லக் கூடாது. சொன்னால் திட்டுவார்."  நேரம் வந்து விட்டது சுஜாதாவுக்கு. "அப்பா திட்ட மாட்டார். கட்டி வைத்து உதைப்பார்" "ஏய்! நீ என்ன சொல்லற? உனக்குத் தெரியுமா?." "எனக்கு எல்லாம் தெரியும். இங்கே கேட்டால் சரிப்படாது. விலாவாரியா உங்கிட்டே கேட்கணும். அந்த ரூமுக்கு வா" என்று கீதாவின் பதிலுக்குக் காத்திராமல் சுஜாதா ஓடினாள். உள்ளே வந்ததும் கதவை லேசாக மூடினாள். "அக்கா வாட் ஹாப்பன்ட்? நீ என்னவோ உளறுகிறாய். நீ என்னை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை."  "இதற்கும் மேலே புரிவதற்கு என்ன இருக்கிறது?" சுஜாதா அந்த கடிதத்தை கீதாவிடம் க்ளோசப்பில் காட்டினாள்.  "ஓ! இதுவா? உன்னிடம் சொல்லலாம் என்று இருந்தேன். ஆனால் நீ அதற்குள் ஏக கற்பனைகள் செய்து கொண்டுவிட்டாய். நீ ரொம்ப அவசரம்"  செய்வதையும் செய்துவிட்டு சாதிக்கிறாளே! சுஜாதாவுக்கு மூச்சிரைத்தது. அழுகை கூட லேசாக வந்து விட்டது. "அப்போ இதெல்லாம் உண்மையா? பொய் சொல்லாதே"  "ஆமாம். நான்தான் எழுதினேன். மறுக்கலியே. என்ன? எழுதினால் தப்பா?" "என்ன தப்பா? கீதா யூ ஜஸ்ட் எய்ட்டீன்"  "ஸோ வாட்?" "வீ ஆர் ப்ரம் எ மிடில் கிளாஸ் ஆர்தோடாக்ஸ் பேமிலி. அப்பாவுக்கு தெரிஞ்சா உன்னை வெட்டிப் போட்டுடுவா. எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கிற இந்த நேரத்தில உன்னோட நடத்தை நிச்சயமா இடைஞ்சல் உண்டு பண்ணத்தான் போறது." "ஸ்டாப் அக்கா. ஸ்டாப். சும்மா உன்னை சீண்டிவிட்டு வேடிக்கை பார்த்தேன். என் அசட்டு அக்காவே! வெளுத்ததெல்லாம் பால் என நினைக்கும் அக்காவே! தயவு செய்து சற்று அருகில் வா. இந்த கடிதத்தின் மேலே என்ன எழுதியிருக்கிறது என்று பார்" என்ன குழப்புகிறாள் ? சுஜாதா வாங்கிப் பார்த்தாள். "ஆமாம். ஐந்து என்று எழுதியிருக்கிறது. அப்படியானால்?... கீதா பெரிசாய் சிரித்துவிட்டு " என் அசட்டு அக்காவே. நான் முதன் முதலாக ஒரு குறுநாவல் எழுதப் போகிறேன். அதுவும் காதல் கதை. அதனால்தான் சர்ப்பரைசாக அப்பாவிடம் கூட சொல்லாமல் செய்யப் போகிறேன். அதில் ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் ஒரு காதல் கடிதம் வரும். என் போதாத காலம் உன்னிடம் இந்த ஐந்தாவது பக்கம் கிடைத்துவிட்டது. இரண்டாவது அத்தியாயத்தின் ஆரம்பம் ஐந்தாவது பக்கம் வருகிறது. அதுவரை எழுதிவிட்டு நேத்து ராத்திரி தூங்கப் போய்விட்டேன். ஃபேன் காற்றில் பறந்து போயிருக்கிறது இந்த ஐந்தாவது பக்கம். காலையில் அவசரத்தில் நான் பார்த்து எடுத்து வைக்க மறந்துவிட்டேன். இந்தா. மற்ற நாலு பக்கங்கள். இப்போ படி. உன் சந்தேகங்கள் நிவர்த்தியாகும்."  சுஜாதாவின் முகத்தில் அசடு லிட்டர் கணக்கில் வழிந்தது! 1995 மே 21 இதயம் பேசுகிறது   73. புது வரவு   வீடே விழாக்கோலம் பூண்டது.   இருக்காதா பின்னே? வந்திருப்பது புத்தம் புதிய ஸ்கூட்டியல்லவா! செல்லப் பெண் ரம்யா முதன்முதலாய் கொழுத்த சம்பளத்தில் நாளைக்கு வேலையில் சேரப்போகிறாள். இன்றே ஆத்மா வண்டியை டெலிவரி எடுத்துவிட்டான். ஓட்டவந்த ரம்ஸை செல்லமாய் கடிந்து கொண்டான்.  "முதலில் பூஜை. அப்பறம்தான் எல்லாம்."  பாட்டி சந்தன குங்குமம் இட்டு பூமாலை போட, தாத்தா பூஜை செய்கிறேன் பேர்வழி என்று பூனைக்குட்டி மாதிரி வண்டியை சுற்றி வந்து அரை மணி நேரம் வெறுப்பேற்றினார். பூஜை முடிந்ததோ, ரம்யா ஸ்கூட்டியில் சிட்டாய் பறந்தாள். ஐந்தே நிமிடங்களில் புயலாய் வந்தாள். முகம் முழுவதும் பெருமிதம்.  "அம்மா. என்ன பிரமாதமான பிக்கப். நீ ஓட்டி பாரு. எப்படிப்பா இருக்கு?" "ஆமா. நான் வரும்போதே கோயிலுக்கு போய்ட்டு வந்தேன். சும்மா சல்லுன்னு வெண்ணெய் மாதிரி வழுக்கிண்டு போறது. முள்ள பார்த்ததும்தான் தெரிஞ்சுது நான் ரொம்ப வேகமா போறேன்னு."  ஆத்மா சந்தோஷ உச்சத்தில் சொல்லிக் கொண்டிருக்க, முகமெல்லாம் பல்லாக ஸ்கூட்டியை பிடித்தாள் மஞ்சுளா.  போனவள் வேதா கிளாஸ் முடித்துக் கொண்டு வந்து, ஸ்கூட்டி அருமை பெருமைகளை மூச்சுவிடாமல் அரைமணிக்கு சொன்னாள். தாத்தாவுக்கும் பாட்டிக்கும் என்னவோ தாங்களே போய்விட்டு வந்த மாதிரி ஃபீலிங் காட்டினார்கள். ஆனால் இவ்வளவு அமர்க்களங்களையும் அமைதியாக புன்சிரிப்போடு ஏ.வி.எம்.சரவணன் ஸ்டைலில் கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ராகவ். "ஏண்டா ராகவ். இன்னிக்கு உன் ஆபீசுக்கு ஸ்கூட்டிய எடுத்துண்டு போய்ட்டு வாயேன்." "வேண்டாம்மா. அப்பறமா பார்த்துக்கலாம். நான் டி.வி.எஸ்.50லேயே போய்க்கறேன்."  "ஏண்டா. உனக்கு அதே பழைய மொபெட்தாங்கறதால பொறாமையா?" "இல்லை தாத்தா. கிட்டதட்ட அஞ்சு வருஷமா நமக்கு மாடா உழைச்ச பழைய வண்டிய புதுசு வந்த உடனே சுத்தமா மறந்துட்டீங்க. எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. நாம வசதிகள் கொறைச்சலா இருந்த போது முழு குடும்பத்தையும் சுமந்துண்டு அது சுத்தாத இடமே இல்லை. இன்னமும் நல்லாத்தான் ஓடுது. என்ன, கொஞ்சம் பழசாயிடுத்து. அவ்வளவுதான். உயிரற்ற பொருள் ஆனாலும் அதுல நம் உணர்வுகள் கலந்திருக்கு தாத்தா. நான் வரேன்."  ராகவ் சொல்ல சொல்ல எல்லோரும் வாயடைத்து போனார்கள்.    2008 16 மார்ச் தினமலர்-வாரமலர்  74. பணம்   "சாந்தி, எப்படி சொல்லறதுன்னு இன்னும் தயக்கமா இருக்கு... இருந்தாலும்....."  ஞானதேசிகன் மென்று விழுங்கினார். தன அசடு வழிந்த முகத்துடன் சாந்தியை பார்த்து இளித்தார். "என்ன சார்?."  சாந்தியின் விழிகள் அலைபாய்ந்தன. "சொன்னா கோவிச்சுக்க மாட்டியே?" "இல்லே.... சஸ்பென்ஸ் வைக்காம சொல்ல வந்தத சொல்லுங்க"  திடீரென அவள் செல் சிணுங்கியது. எஸ்.எம். எஸ். ! இன்பாக்ஸில் அவள் அதை படிக்கும் முகத்தில் ஏற்பட்ட மாறுதல்களை உற்று கவனித்துகொண்டிருந்தார், ஐம்பது வயதை தாண்டிய ஞானதேசிகன். கோடி கணக்கில் சம்பாதிக்கும் ஆடிட்டர்.   தன் வீட்டு மாடியில் குடியிருக்கும் ஏழையான, திருமணம் ஆகாத, முப்பது வயது இளம் பெண் சாந்தியை எப்படியாவது அடைந்துவிடுவது என்று கடந்த இரண்டு மாதங்களாக காம வெறி பிடித்து அலைபவர். "இங்க பாருங்க சார். .. எவனோ ஒருத்தன், முகம் தெரியாதவன் எனக்கு எஸ். எம். எஸ். அனுப்பியிருக்கான்... மொதல்ல தத்துவங்களா அனுப்புவான். அப்பறம், கொஞ்சம் பழகினதும், ஜோக்ஸ் அனுப்புவான். அப்பறமா ஆபாச எஸ். எம். எஸ்... அப்பிடீன்னு போகும். இவனுகளை என்ன செஞ்சா தேவலை? போலிஸ்கிட்டே பிடிச்சு கொடுத்து முதுகு தோலை உறிச்சாதான் சரிபட்டு வரும் ராஸ்கல்." என்றவள். " ம்... சொல்லுங்க சார். ஏதோ சொல்லனும்னு வந்தீங்களே" ஞானதேசிகன்  முகம் ப்யூஸ் போன பல்ப் மாதிரி ஆனது. எப்படி சமாளிப்பது? என்று வார்த்தைகளை தேடினார்.   “அது வந்து சாந்தி… திடீரென்னு பணப்பிர்ச்சனை வந்திருக்கு…. எனக்கு ஒடனடியா ஐம்பதாயிரம் தேவைப்படுது. யாருக்கிட்டே கேக்கிறதுன்னு தெரியல… அதான்… எனக்கு உன் ஞாபகம்தான் வந்துது. உன்னால ஏதாவது ஹெல்ப் செய்யமுடியுமா?...”   ஒரு மாதிரியாக ஏதோ உளறிக் கொட்டி சாமாளித்தார். அதற்குள் உடம்பெல்லாம் வியர்த்துவிட்டது. “என்ன சார்…. எங்கிட்டே எப்படி சார் இவ்வளவு பணம்? ஏதோ ஆயிரம் ரெண்டாயிரம்னா பார்க்கலாம். அது கூட ஒடனே முடியாது. நாங்களெல்லாம் ரொம்ப ஏழை சார்.”   ஞானதேசிகன் அவளை கூர்ந்து கவனித்தார். சாந்தியிடம் எந்தவித ரியாக்‌ஷனும் இல்லாத்து அவருக்கு திருப்தியை அளித்தது. “நல்ல வேளை! தப்பித்தேன்” என நினைத்தார்.   “சரி… விடு சாந்தி… நான் வேற எடத்துல பார்த்துக்கிறேன். ரொம்ப தாங்க்ஸ்…”   “சாரி ஸார்” “சாந்தி… நீ எதுவும் தப்பா நெனைச்சுக்கலயே?”   “இதுல தப்பா நெனைச்சுக்க என்ன இருக்கு சார். நீங்க கேட்டீங்க. நான் என் நெலமையை சொன்னேன். அவ்வளவுதானே!”   மாடிக்கு அமைதியாக படியேறிய சாந்தி, கிச்சனுக்குள் என்று அம்மாவை ஏறிட்டாள். “என்னடி, என்னவோ மாதிரி இருகே?”   “அம்மா. அடுத்த வாரமே நாம வேற வீடு போறோம்” தினமலர் – பெண்கள் மலர் – 26 ஜூன் 2010