[] 1. Title Page 2. Cover 3. Table of Contents சிற்றோடையின் கூழாங்கல் சிற்றோடையின் கூழாங்கல்   கவிஞர் கு.மகாதேவன்   mahadevanvicky@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/sitrodaiyin_koolangal மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/sitrodaiyin_koolangal This Book was produced using LaTeX + Pandoc அணிந்துரை அன்புத்‌ தம்பி கவிஞர்‌ மகாதேவனின்‌ சிற்றோடையின்‌ கூழாங்கல்‌ பல்வேறு பறிமாணங்களில்‌ பாதயாத்திரை மேற்கொண்டிருக்கிறது உயிரோட்டமாய்‌! அன்னை தந்தை பிரியத்தை மொழியும்‌ கவிதையில்‌ பாசம்‌ மிளிர்கிறதெனில்‌ மரணப்‌ புகையில்‌ உள்ளம்‌ சுடுகிறது! உச்சி வெயில்‌ பசியில்‌ சாப்பாடு விற்பவன்‌, எழுதப்‌ படிக்கத்‌ தெரியாத பத்திரிகை விற்பவன்‌ என கண்முன்னே நடமாடும்‌ நிஜங்களை தோலுறிக்கிறார்‌ கவிஞர்‌! மின்தகனக்‌ கவிதை சமுதாயத்தின்‌ அவலத்தை அனாயாசமாக சொல்லிச்‌ செல்கிறது! அகவும்‌ மயில்‌, ஏலத்தின்‌ விலை, கோமாளி, முரண்‌, ஆசிபா என அடுக்கடுக்காக மெய்யுரை கவிஞராக பரிமளிக்கிறார்‌. வெட்கம்‌ சிவக்கும்‌ வெள்ளைக்காரப்‌ பெண்‌ கொள்ளை கொள்கிறாள்‌. கவிஞரின்‌ பயணம்‌ தொடருமென நிறைவு செய்திருக்கும்‌ பாங்கு நேர்த்தி! சதம்‌ கடக்கும்‌ நூல்களை வெளியிட வாழ்த்துகள்‌! என்றென்றும்‌ நட்புடன்‌ பாடலாசிரியர்‌ ராஜபாரதி வாழ்த்துரை கவிதை புத்தகத்திற்கு வாழ்த்துரை எழுதச்‌ சொல்லி கவிதை தொகுப்பை கவிஞர்‌ தேவா எனக்கு அனுப்பி வைத்தார்‌. முதல்‌ கவிதையே முத்தாக இருந்தது. நூறு கவிதைகளையும்‌ படித்து முடித்து நெகிழ்ந்தேன்‌. நந்தவனத்தில்‌ சிறகடித்துப்‌ பறந்து பல வண்ண மலர்களின்‌ தேனை எடுத்து நமக்குச்‌ சுவைக்கத்‌ தந்துள்ளார்‌. மறந்துதான்‌ போன நேசங்கள்‌, இதம்‌ தரும்‌ காதல்‌, கை கோர்க்கும்‌ நட்பு என்று அருமையாக கட்டுமானம்‌ கட்டி கோட்டை எழுப்பியுள்ளார்‌ வலுவாக. கருத்தாழம்‌ பூமிபோல்‌ ஆழமாகவும்‌ ஆகாயம்‌ போல்‌ விரிந்தும்‌ பயணிக்கிறது. விரித்து விட்டார்‌ கவிதைச்‌ சிறகுகளை… இனி வானமும்‌ வசப்படும்‌. தொடர்ந்து நிறைய புத்தகங்கள்‌ வெளியிட மனம்‌ நிறைந்த நல்வாழ்த்துகள்‌. அன்புடன்‌ கவிதாயினி காந்திமதி செல்வரத்தினம்‌ சந்திரோதயம்‌ நிறுவனத்‌ தலைவர்‌ என்னுரை பள்ளியின்‌ மேஜையில்‌ கிறுக்கலாய்‌ தொடங்கிய கவிதைகள்‌ கல்லூரிக்குள்‌ தூக்கம்‌ கலைக்கும்‌ மருந்தானது. அத்தனை நோட்டிலும்‌ நடுப்பகுதி கிறுக்கல்களுக்கென்றே ஓதுக்கப்பட்டிருந்தது. ஆசிரியரின்‌ அறுவை முதல்‌ துவைக்காத ஷாகீஸ்‌ வரை அனைத்திற்கும்‌ நடுப்பகீகதீதில்‌ இடமுண்டு. பிரிந்து செல்லும்‌ போதும்‌ பேனாவை திற நினைவலைகளில்‌ உன்னுடன்‌ இருப்பேன்‌ என்று தூங்கிய விதையை அவளோ தட்டி எழுப்பிச்‌ செல்ல, காத்திரு, உனக்கானவளென்றால்‌ நிச்சயம்‌ திரும்பி வருவாள்‌ என்று மனதை வார்த்தைகளில்‌ தந்தை உழுதிட அம்மாவோ கண்ணீரில்‌ நீர்‌ பாய்கீக, தனிமை எனும்‌ சூரியனின்‌ கீழ்‌ நண்பர்கள்‌ களை எடுக்க, உரமிட்டுச்‌ சென்றதோ சந்திரோதயம்‌ குழுமம்‌, வேலியாய்‌ காந்திமதி அவர்கள்‌ காவலிருக்க, பாரதி பதிப்பகத்தில்‌ ராஜபாரதி அவர்களின்‌ மேற்பார்வையில்‌ அறுவடைக்கு தயாராகிறது “சிற்றோடையின்‌ கூழாங்கல்‌” தேவா அலைபேசி :9003052533 இறைவன் இருப்பதாய் எண்ணுபவர்களின் நம்பிக்கையை உடைக்காமல் நானும் நன்றி கூறி எழுதத் தொடங்குகிறேன் இறைவனுக்கு பாசம் பேருந்து 2 மணிக்கு வருமென தெரிந்தும் 11 மணிக்கே பேருந்து நிலையத்தில் தவமிருந்த காத்திருப்பில் அப்பாவின் பாசமறிந்தேன் பாசம் விடுமுறைக்கு வருவானென நான்கு நாளைக்கு முன்னமே வாங்கி வைத்த அழுகிய கொய்யாவில் அம்மாவின் பாசம் கண்டேன் நா.முத்துக்குமார் இலக்கியத்தின் முத்தை அத்தனை எளிதாய் களவாடி விட்டானே… இயற்கை அத்தனை கொடுமைக்காரனா..? முதல் கவிதை குழந்தை முதன்முதலாய் கிறுக்கிய (அ) ஆனா ஆவன்னாவாகத் தான் பார்க்கப்படுகிறது என் முதல் கவிதை பிழைகள் ஆங்காங்கே பிழைகள் கூட்டிப்பார்த்தால் பெரியதொரு பிழை இருந்தும் எண்ணங்களை வடிக்கிறேன் என் புத்தகத்தில் பிழைகளோடு நா.முத்துக்குமார் மண்ணுலகில் வார்த்தைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டதோ..? புதுப்புது வார்த்தைகளைத் தேடி விண்ணுலகம் பயணப்பட்டாயோ..? எங்களைத் தவிக்கவிட்டு நீ மட்டும் தனியே மகன் பாசம் உன்னிப்பாய் எனது ஆர்டர்களை கவனித்த அப்பா எனக்கு ஒரு டீ என்றார் சட்டைப்பையை தடவிக் கொண்டே தற்கொலை மரணத்தை எதிர்க்கும் துணிவு கொண்ட நீ எப்படி இந்த தோல்விகளுக்கு பயந்து சென்றாய் ஒட்டல் தட்டின் ஓரமாய் வைத்து விடுகிறேன் பரிமாறியதில் பிடிக்காதவற்றை என் அப்பாவின் ஞாபகம் வருவதால் மேஜை துடைப்பவரை பார்க்கும்போது ஆசானும் ஆங்கிலமும் உன் கவிதை பாமரனைச் சென்றடையும் எனில் ஆங்கிலத்தை பயன்படுத்துவதில் தவறில்லை என்கிறான் ஜவுளிக்கடை விரித்துப் போடுகிறாள் வண்ணப் பட்டுப் புடவையை தன் ஆடையின் கிழிசலை மறைத்துக் கொண்டு பணிப்பெண் விவசாயி பயிருக்கு பூச்சிக்கொல்லி மருந்து வாங்க சென்ற விவசாயி தனக்கு மட்டுமே வாங்கி வந்தான் விலை மலிவென மதுவை ஜனவரி-26 விடுதலை நாள் என்பதை தாண்டி விடுமுறை நாளாகவே பார்க்கிறோம் இப்படிக்கு கார்ப்பரேட் காதலர்கள் புகை மரணத்திற்கு யாகம் நடத்துகிறான் சிகரெட் பிடிப்பவன் மரணம் யாருக்கு? சோற்று பொட்டலம் கொள்ளை பசி உச்சி வெயிலில் சோற்று பொட்டலத்தை தூக்கி கொண்டு ஓடுகிறான் தயிர்சாதம், புளி சாதம் 30 ரூபாய் என தொடர்வண்டியின் பின்னால் பேரம் அம்மி தானே கல் நானில்லையே அக்கா கொஞ்சம் பார்த்து பேரம் பேசு கெஞ்சிக்கொண்டிருந்தான் வியாபாரி மான்கள் அரசு ஆய்வறிக்கை வெளியீடு புலிகளின் எண்ணிக்கை குறைந்தது கொண்டாட்டத்தில் மான்கள் நாளிதழ் எழுதப் படிக்கத்தான் தெரியாது மற்றபடி தமிழ்,ஆங்கிலம், ஹிந்தி என அத்தனை மொழிப் பத்திரிக்கையும் அவன் கையிலடக்ககம் சந்திப்பு நிலையத்தில் நாளிதழ் விற்பதால் குழந்தையே வீட்டில் மழலைச் சத்தம் கேட்டிட நமக்குள்ளும் ஓராயிரம் ஏக்கங்கள் உறவுகளின் ஏளனங்களுக்கு மத்தியில் நித்தமும் நீ எனக்கு தேவதையே சில்லறைத் தட்டுப்பாடு கூட்டம் நிறைந்த ரயில் நிலையம் தான் இருந்தும் காலியாகவே இருந்தது அவன் வயிற்றைப் போலவே கையிலிருந்த தட்டும் விவசாயி நிஜவாழ்க்கையின் கதாநாயகர்களை விட தொலைக்காட்சியின் நாயகர்களே கொண்டாடப்படுகிறார்கள் எப்பொழுதும் வெள்ளைக்காரன் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டே விசா அலுவலகம் செல்கிறேன் எதிரில் இருப்பவன் வெள்ளைக்காரன் என்பதால் மின்தகனம் இருக்கத்தான் இடமில்லை என்றிருந்தவனுக்கு புதைக்கவும் இடமில்லை கொஞ்சல் கொஞ்சி பேசுகிறது கடலலை காதலை காமம் பேசுபவர்களுக்கு முன்னாலும் அறியாமை அசோகர் மரம் நட்டதை அறியாமலே போயிருப்பேன் இரண்டு மதிப்பெண் வினாவில் கேட்கமலிருந்தால் திருநெல்வேலி பீடி சுற்றுகிறாள் அம்மா மகனை சிகரெட் குடிக்காதே என திட்டிக்கொண்டே ஸ்டெர்லைட் முன்னெச்சரிக்கை செய்கிறது முன்னறிவிப்பின்றி கடந்து சென்ற கீரிப்பிள்ளையும் மயில் குஞ்சுகளும் கரிசல் காட்டில் காணாமல் போய் பங்குனி அடிக்கடி அகவுகிறது மழைதான் வந்தபாடில்லை மயிலும் பாதிக்கப்பட்டிருக்கும் போல காலநிலை மாற்றத்தில் நிபந்தனை பொறுப்பு வர கால்கட்டு போட்டது போய் பொருள் சேர்த்தால் தான் கால்கட்டு என்றாகிப் போனது கற்பித்தல் கற்றுக் கொடுக்கிறான் கையேந்தும் பழக்கத்தை விலங்குகளிடம் மனிதன் மிருககாட்சி சாலையில் நாளை வெறித்து பார்க்கிறாள் மகள் அவ்வப்போது சென்று வருகிறான் குளியலறை பக்கம் எதிர் வீட்டுக்காரி துணி துவைக்கிறாள் ஏலம் ஏலத்தின் விலை ஏறிக்கொண்டே போகிறது பெண்ணின் குறைசார்ந்து நிச்சயதார்த்த வீட்டில் கனாக்காலம் திரை தெரியாத அரங்கில் உயரத்திற்காய் மண்கூட்டிய போது கண்டெடுத்த ஒற்றை ரூபாய் இடைவேளை மு றுக்கிற்கு செலவானது இன்றும் இன்றும் அப்படியே இருக்கிறது புளியமரத்தடியில் பேருந்து நிலையமும் டீக்கடையும் தேங்கிய கழிவு நீரும் என் ஊரில் மட்டும் கோடு கோடு போட்டால் ரோடு போடும் இப்பூவுலகில் வறுமைக்கோட்டையும் விட்டு வைக்கவில்லை அரசியல்வாதிகள் மாற்றம் என்று மாற்றம் வருமோ? காந்திக்கு பதிலாய் கலாம் ரூபாய் நோட்டிலாவது…! நீர் நீருக்கான போரை அரசியலாக்கி வென்றவன் புன்னகைக்கிறான் வாழ்க்கையின் அடுத்த நொடிக்கு நீரில்லை என்பறிதயாமல் உரிமை எறும்பும் உரிமை கொண்டாடியது சாலையோரம் தேங்கிய மழைநீரில் இலையின் மீது தீவிற்கு வினை குண்டும் குழியுமான நெடுஞ்சாலையில் செல்கிறது அரசியல்வாதியின் ஆடிகாரும் எளிது காதலும் ரேஷனில் நல்ல அரிசியும் அவ்வளவு எளிதாய் யாருக்கும் கிடைத்து விடுவதில்லை முரண் எப்பொழுதும் ஞாபகம் வருகிறது மிகப்பெரிய கடனாளி அமெரிக்கா உலகின் பணக்கார நாடுகள் என்றதும் கோமாளி மனதின் ஆழத்திற்குள் புதைத்துவிட்டான் தன் கவலைகளை அரைமணி நேரம் நீ புன்னகைக்க கோமாளி வேடமிடுபவன் ஆசிபா கடவுளும் மதம் பார்த்து மௌனமாய் இருந்து விட்டானோ..? பாழாய் போன மனிதனைப் போல முதல்வர் உரை இலங்கை தோட்டாவில் வீழ்ந்து கிடக்க குமரி முனையில் மிதந்து கிடக்க முத்து நகரில் மூச்சுத் திணறி கிடக்க விவசாயம் அடியோடு படுத்துக் கிடக்க தமிழகத்தில் நல்லாட்சி தொடர்கிறது ஆசை அவ்வப்போது தோன்றி மறைகிறது பொறியியலுக்கான கல்லூரி போல அரசியலுக்கும் தொடங்கிட அவனும் கிறுக்கன் மலையிடுக்கில் ஒரு பயணம் ஆங்காங்கே கிறுக்கல்கள் பாறையில் புரியாத மொழியில் புரிந்தது அவன் விட்ட அம்பில் அவனும் என்போல் கிறுக்கனென்று சொர்க்கம் அவ்வப்போது சுற்றிப் போகும் மின்விசிறியில் சொர்க்கத்தைக் கண்டேன் பதிவு செய்யப்படாத ரயில்பெட்டியில் சட்டென்று நீண்டதொரு பயணம் சட்டென்று முடிந்துவிட்டது எதிரில் இருந்தவள் அழகான பெண் என்பதால் தொடர்வண்டி நட்புக்கள் நம் இடத்தை விட்டுக்கொடுத்தே பெற வேண்டியதிருக்கு தொடர்வண்டி நட்புக்களை வறுமை ஐன்னலுக்கு வெளியே மலையையும் ஆற்றையும் கைகாட்டி சிலாகிக்கிறாள் குழந்தையோடு உள்ளே வந்துபோகும் பொருள்களை வாங்க முடியாத வறுமையில் தொடர்வண்டியில் எதிர்பார்ப்பு பேருந்தில் காதல் வளர்த்த நான் தொடர்வண்டியில் கவிதை வளர்த்தேன் விமானத்திலும் கப்பலிலும் என்ன? எதிர்பார்ப்புகளோடு நான் காதலும் நெடுஞ்சாலையும் காதலியோடு செல்லும் போதும் காதலி பிரிந்து கண்ணீரோடு செல்லும் போதும் என்போல் கோமாளிகளுக்கு நெடுஞ்சாலைப் பயணம் சுகமானது ஓட்டம் தேநீர் விற்பவனின் கால்களும் தொடர்வண்டியின் சக்கரமும் ஓய்வே இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது பயணம் முழுவதும். ரசனை ஆயிரங்களில் பணம் செலவழித்து சுற்றுலா செல்கிறேன் காடுகளுக்கு இடையில் தொலைக்காட்சி பெட்டியை ரசித்தவாறு வழிகாட்டு கவனிப்பாரற்று நிற்கின்றன கூகுள்மேப் வந்து விட்டதால் வழிகாட்டும் பலகைகளை தாங்கிய சாலையோர மரங்கள் உருகல் தார்ச்சாலை உருகிக் கொண்டிருக்கிறது ஆலமரத்து அடியில் தள்ளுவண்டிக்காரனோடு அயல்தேசம் பொங்கலுக்கும் தீபாவளிக்கும் அலுவலகம் செல்கிறேன் பெயர் தெரியாத பண்டிகைக்கு வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கிறேன் அயல்தேசத்தில் வேலை புரிவதால் பயணங்கள் சந்தோஷமுமில்லை துக்கமுமில்லை கண்ணீர் வடிகிறது காது வரை நெடுஞ்சாலை இருசக்கரவாகன பயணத்தில் சிக்கல் என் வாழ்க்கை இடியாப்பம் போல் அத்தனை சிக்கல்கள் பிரிக்க முயன்று தோற்றுக்கொண்டே நான் தவம் சூரியன் இல்லாத இரவினிலும் வெண்மதி இல்லாத பகலிலும் தவமிருக்கிறான் அவள் வயிற்றினருகே தன் குழந்தையின் முதல் குரலுக்காக.. வேண்டும் யாருமில்லா சாலையில் ஒரு பயணம் இதழ்கள் மௌனித்திருக்க விரல்கள் பேசிக்கொண்டிருக்க முதல் இழப்பு தந்தைக்கென அடித்த மொட்டையில் தொடங்கிய முதல் இழப்பு நிறுத்த முடியாமல் காலமெல்லாம் நத்தை உனக்கும் இடமில்லையோ சொந்தமாய் எங்கே செல்கிறாய் கட்டிய வீட்டை முதுகில் வைத்துக்கொண்டு மேகங்கள் புரிந்துகொள்ள முடியவில்லை குழந்தைகளைப் போல அவ்வப்போது ஏதோ கிறுக்கிவிட்டுப் போகிறது மேகங்களும்… பொட்டு கண்ணாடி எங்கும் பொட்டு முகம் பார்க்கிறாள் விதவை அணிலைக் காணவில்லை பழம் வேண்டுமென அழுத மகனை காத்திருக்கச் சொன்னேன் அணில் கொய்யும் வரை காத்திருக்கிறான் இன்றும் அவன் மகனோடு பட்டாம்பூச்சி நேற்று வாங்கி வந்த நா.முத்துக்குமாரின் புத்தகத்தை திறந்ததும் கவிதைகள் பறந்தது பட்டாம்பூச்சியாய் வீட்டுக் கணக்கு வங்கியின் அத்தனை கணக்குகள் அவனிடமிருந்தும் வீட்டில் என்னவோ அவள்தான் பார்க்கிறாள் வெற்றி பெரிதாய் ஒன்றும் எதிர்பார்க்கவில்லை அச்சடிக்கப்பட்டதில் பாதியாவது விற்று அதில் பத்தாவது படிக்கப்பட்டு என் எண்ணங்களோடு பயணித்தால் மிகப்பெரிய வெற்றி தான் நட்பு உயிர் கொடுக்கும் நட்புக்கள் வளர்கிறது பெரும்பாலும் முச்சந்தியில் தேநீர் குடித்து ருசி குறையாய் தெரிந்த அம்மாவின் சமையல் ருசிக்கத் தொடங்கியது விடுதி வாழ்க்கையில் பாட்டில்காரன் தாளமில்லா இரவில் முச்சந்தியில் ஒரு நடனம் வேடிக்கை பார்க்கிறது குழந்தை பாட்டில்காரனின் கொண்டாட்டத்தை இசை மழை எட்டு மணிநேரம் சங்கீத மழையில் நனைகிறேன் மின்சாரமில்லா இரவுகளில் கொசுவுடன் வியர்வையும் குழந்தைப் பருவம் மினுமினுக்கும் இறகு வண்ணத்திற்கேற்ப பெயர்கள் கலையும்முன் பிடித்துக் கொள்கிறேன் வேலியோர தட்டான்களை மழைக்காலங்களில் கவிதைகள் பயணங்களில் எழுதுகிறேன் ஜனனலைத் திற கவிதைகள் வருடட்டும் என விடுதி இரவு பிறந்தநாள் கொண்டாட்டம் முதல் காதல் தோல்வியின் திண்டாட்டம் வரை அத்தனையும் சொந்தமானது விடுதியின் நள்ளிரவிற்கே ரணங்கள் மொட்டையடித்த பின் வெளிப்படும் தழும்புகளைப் போல அவ்வப்போது வெளிப்படுகிறது ரணங்கள் சிலரின் சந்திப்பிலே பயணப்படு கால்நடையோ, வானிடையோ பயணப்படு உலகம் அழகானது, மனிதர்கள் பாசமானவர்கள் அறியப்படுவாய் பாக்கி வைத்திருக்கும் பாக்கி எல்லாம் ஞாபகம் வருகிறது சவரக்கத்தி தொண்டைமேல் இருக்கும் போதெல்லாம் மந்திரக்காரன் மேடையில் கட்டுக்கட்டாய் பணம் வரவழைத்த மந்திரக்காரன் கையேந்தி நிற்கிறான் அடுத்த வேளை உணவிற்காக பற்றாக்குறை தெருமுனையில் ஒப்பாரி வைக்கிறது பந்தல்காரனின் குழாய் மரண வீட்டிற்காக நடிப்பு பல சமயங்களில் நடித்திருக்கிறேன் உடன் வந்தவர்களுக்கு பிடிக்காமல் போனதால் எனக்கும் பிடிக்காத மாதிரி உணவுகளை வியப்பு லட்ச ரூபாய் பணத்திற்கு காவல் ஒருகட்டு பீடியுடன் தாத்தா நள்ளிரவு ஏ.டி.எம் நிலையத்தில் வெட்கம் வெள்ளைக்கார பெண்ணும் வெட்கப்படுகிறாள் தமிழகத்தில் மட்டும் புடவை அணியும் போது எழுதுகிறது என் பேனா எழுதுகிறது யாரோ ஒருவருக்காய் அன்றி யாரோ ஒருவரால் தொழில் கூவி கூவி மீன் விற்கிறான் சபரிமலைக்கு மாலை போட்ட ஐயப்ப பக்தன் நானும் மதவாதி விண்ணப்ப படிவங்களில் மதங்களின் வரிசையில் கிரிக்கெட்டை சேர்க்கத் துடிக்கும் மிகப்பெரிய மதவாதி நான் மாரியப்பன் ஓடும் போதுதான் தெரிந்தது ஊனம் நான் இல்லை என்னைச் சுற்றி ஏளனம் செய்தவர்களென டென்னிஸ் ரசிகன் குழந்தையின் முதல் நடையாய் ரசிக்கிறான் ஃபெடரரின் பின்னங்கை ஆட்டத்தை நடால் காதலியின் முதல் முத்தமாய் எண்ணுகிறான் நடால் கோப்பையில் பதிக்கும் முத்தங்களை தோனி இந்தியாவே ஆர்ப்பரிக்க நீ மட்டும் எப்படி புன்னகைக்குள் ஒளித்துவைத்தாய் உலகக்கோப்பை வெற்றியை சூரியன் மிகச்சிறந்த ஓவியன் தூரிகையின்றி வரைந்து முடித்தான் உன்னை உச்சி வெயிலில் நிழலாய் மறதி கலைஞர்கள் பெயர் சூட்ட மறந்தனரோ? உன் நடை எனும் நடன கலைக்கு.. குளத்துமீன் அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது இன்றாவது நீ கால் நனைக்க வருவாயென… கால் தடம் திருஷ்டி பொட்டு வைக்கிறாள் என்னவள் கடலுக்கும் அவள் காலடி தடத்தால்… அழகுப்போட்டி மாதம் ஒருமுறை அழகுப்போட்டி முடிவு என்னமோ ஒன்றுதான் கரையத் தொடங்குகிறது வெண்ணிலவு உன்னோடு தோற்றுவிட்ட கவலையில் வராமை உன் குரலின் மீது கொண்ட பொறாமையால் குயிலும் அடம்பிடிக்கிறது உன் வீட்டுப்பக்கம் வராமலிருக்க.. அழகி உன் துப்பட்டாவிற்கு இடையில் உருளும் இரண்டு கண்கள் போதுமடி நீ உலக அழகி பட்டம் வெல்ல அழகு ஆலமரமும் அழகாய் பூத்திருக்கிறது நீ நிழலுக்கு ஒதுங்கையிலே ஈரக்கூந்தல் சொட்டு சொட்டாய் வடியும் ஈரக்கூந்தலின் கடைசி சொட்டில் என் உலகம் ஊஞ்சலாடுகிறது 8 மணி என்னவளே நீ இன்னும் எழுந்திருக்கவில்லையோ? 8 மணி ஆகியும் நிலா வீடு செல்ல மறுக்கிறது தேடல் வெளிச்சம் போட்டு மின்னல் தேடுகிறது வீட்டுக்குள் ஒளிந்து கொண்டாயோ அழகியே…..! தொப்பி மூக்கி மலை உச்சியின் முகட்டில் நிற்கிறது அருவி அவள் மூக்கு நுனியில் வியர்வை சண்டை அடிக்கடி சண்டையிடுகிறேன் அவள் முத்தங்களால் சமாதானம் பேசுவதால் புகைப்படம் ஒருமுறையாவது அகப்பட்டுவிடு ஆகாயத்தின் படப்பிடிப்பில் திருப்திபட்டு விடும் மின்னலும் உயிர் அவள் தந்த வலிகளுக்கு உயிர் கொடுக்கிறேன் தவழ்ந்தன கவிதைகள் கேட்டுப்பார் உனக்கென காத்திருந்த பேருந்து நிலையத்திடமும் உன்னோடு சேர்ந்திருந்த பேருந்து இருக்கையிடமும் கேட்டுப்பார் நம் காதலைப்பற்றி வருடங்கள் கழித்து தவிர்க்கமுடியாமல் அப்பேருந்து நிலையத்தில் நான் அதே பேருந்து அதே இருக்கைகள் இன்றும் காலியாக நமக்கென… மீண்டும் வருவாயா ஒரு பயணம்…? மயக்கம் மதியும் கரைந்து போகிறாள் உன் அழகில் மயங்கி மாதத்தில் பாதி நாள் முதல் காதலி மனைவியிடம் கண்ட ஒரு குறை இன்னும் உயர்ந்தவளாய் காட்டுகிறது என் முதல் காதலியை கண்ணாடி என்னவனுக்கு அழகாய் தெரிய அலங்காரமேதும் தேவையில்லை மூக்குக்கண்ணாடியே போதும் ஆசை அந்தி சாய்ந்தும் கூடு திரும்ப மனமின்றி பறந்திட வேண்டும் பறவையாய் உன்னுடன் வழக்கம்போல் இன்றைக்கும் தாமதமாய் எழுந்து அரக்கபறக்க கிளம்பி ஆவி பறக்கும் இட்லியை மறுத்து அவளுக்காக காத்திருந்தேன் பேருந்து நிலையத்தில் எதிர்பார்ப்பு உன் வரவை எதிர்பார்த்து அத்தனை பறவைகளும் தவமிருக்கின்றன வருடந்தோறும் வேடந்தாங்கலில்.. வெறிச்சோடுகிறது முகவரியை கொடுத்துவிட்டு போ வீட்டிற்கே வருகிறேன் வெறிச்சோடுகிறது வேடந்தாங்கலும் நீ இன்றி.. பருவம் சிற்பமாய் அவள் சேலை அணிந்த போதும் கொடியிடையை தேடிய பார்வையில் உணர்ந்தேன் நானும் பருவ வயதை அடைந்தேன் என பாடல்கள் பிடித்த பாடல்களின் வரிசையில் அவ்வப்போது சேர்த்துக் கொள்கிறேன் பிடிக்காத பாடல்களையும் அவளுக்கு பிடிக்கும் என்பதால் கைப்பேசியிலே தேர்வுகள் அழகு அவள் மட்டுமல்ல அவளின் அத்தனை தேர்வுகளும் அழகென உணர்ந்தேன் அவள் கையிலிருந்த தண்ணீர் பாட்டிலை பார்த்த பின் போர் மூளைக்கும் மனதிற்குமான போருக்கு காரணம் யாரோ ஒருவரின் தீராத அன்பும் ஏற்றுக்கொள்ள முடியாத துரோகமுமே மூக்குத்தி மழைக்கால மஞ்சள் மாலையில் விட்டு விட்டு எரியும் தெருவிளக்காய் மின்னுகிறது அவள் மூக்குத்தி கட்டிடப் பொறியாளன் அடுக்குமாடி கட்டிடங்களை கட்டிக் கொண்டிருக்கும் நான் அவள் அடுக்கடுக்கான கூந்தலின் பின்னலில் சிக்கிக் கொண்டேன் நகப்பூச்சு வருடம் ஒருமுறை நான் ஹோலி கொண்டாட வாராவாரம் கொண்டாடுகிறது உன் நகங்கள் வண்ணமயமாய் கொலுசு கெண்டைக்கால் தீண்டலில் வெட்கப்பட்டு சிணுங்குகிறது அவள் கொலுசு தோல்வி முதல் காதலின் தோல்வியில் உணர்ந்தேன் சின்ன சின்ன ஆசைகளும் பெண்ணிற்கு எவ்வளவு முக்கியத்துவமென அழகு வான்முகிலும் தோற்றுப்போகுதடி தூக்கம் கலைந்து சோம்பல் முறிக்கும் உன் அழகில் பழக்கம் திங்களன்று அதிகாலையிலே எழுந்து விடுகிறேன் நான்கு வருடம் அவ்வேளையில் உன்னைப் பார்த்து பழக்கப்பட்டதால் முத்தம் பெரிதாய் ஒன்றும் தேவையில்லை இத்தனை பெரிய உலகத்தில் ஐந்தடி மூன்றங்குலத்தில் நீ உன்னிதழில் ஒரு முத்தம் கைக்குட்டை பத்திரமாய் இன்றும் என் அறையின் மூலையில் அவள் தவறவிட்ட கைக்குட்டை மணம் கடைசியாய் நீதான் சென்றிருக்கிறாய் நீ விட்டுச் சென்ற உன் மணம் பரவிக் கிடந்தது மின்தூக்கி முழுவதும் தகப்பன் இரட்டை பிள்ளைக்கு தகப்பனானேன் என்னவளும் என் மகளும் மயக்கம் தெளியாமல் பிரசவ அறைக்குள் நெளிகையிலே நீ புன்னகைக்க தெரியாத அத்தனை பூக்களின் மொத்த உருவமும் நீ கோளாறு கார்மேகம் திரண்டதென விவசாயி வரப்பு வெட்டினான் பம்புசெட்டில் நீ குளித்துச் செல்கையில் நினைவுகள் நீ தூங்கிய பின்னும் உன் விழிகள் பேசிக்கொண்டிருந்தது நம் கடந்த காலத்தைப் பற்றி என் கனவில் எதிர்காலம் ஒருநாள் வேண்டும் தொடுதிரையாக உன் கன்னங்களும் விரல்களாக என் இதழும் போதை நம் விரல்களின் முதல் தீண்டலின் போதையிலிருந்து இன்னும் மீளவில்லை நான் தெருமுனை பைத்தியமாய் திரிகிறேன் நீ புன்னகை உதிர்த்த தெருமுனையில் இன்று நான் மட்டும் பத்திரமாய் நீ தொட்டு தொட்டு பேசிய என் சட்டைப் பொத்தான்களை பத்திரமாய் வைத்திருக்கிறேன் கைரேகை அழியாமல் அலமாரிக்குள் அறியாமை அரச மரத்தடியில் பரிமாறிய கடிதங்களை காக்கைகளைத் தவிர யாரும் அறிந்திருக்கவில்லை ஏமாற்றம் கரிய மேகத்தில் துளிர்க்கும் மழையாய் உன் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தேன் கருப்பு அங்கிகளுக்கிடையில் பட்டமளிப்பு விழாவில் ஏமாற்றிச் சென்றாய் தமிழகத்து மழையாய் முரண் தனியே பயணம் செல்கிறேன் துணைக்கு வருகிறது உன் நினைவுகள் ஊஞ்சல் துவண்டு கிடந்த என் உலகம் துள்ளி எழுந்து ஊஞ்சலாடுகிறது உன் காதோர சுருள்முடியில் கோமாளி லட்சியம் கோமாளி என்றார்கள் வாழ்வின் லட்சியத்திற்கு கடைசிவரை உன் தோள்சாய்ந்து பயணிக்க வேண்டுமென்றதற்காக வலி வலக்கை உடைந்து இடதுகையால் உண்பதை போல் உணர்கிறேன் காதலில் தோற்று இன்னொருத்திக்கு தாலி கட்டுகையில் சுழற்சி நீ அணைத்து விட்டு சென்ற பின்பும் சுழலும் மின்விசிறியாய் என் உலகம் சுழல்கிறது நீ பிரிந்து சென்ற பின்பும் உன் நினைவுகளோடு ஏழாம் அறிவு கண்ணீரோடு முதல் காதலியை காணச் சென்ற நான் வாசலோடு திரும்புகிறேன் அறுந்து கிடந்த செருப்பில் அவள் வாழும் கோலம் கண்டதால் புகைப்படங்கள் கடிதங்கள் தொலைந்து போன நவீன யுகத்தில் நினைவுகளில் காதல் பேசுகிறது நாம் எடுத்த புகைப்படங்கள் காத்திருப்பு பலநாள் காத்திருந்தேன் நண்பன் வீட்டு வாசலில் அவள் கடந்து செல்லும் பொழுதுக்காக நண்பனுக்கே தெரியாமல் ரோஜா அத்தனை அழகிய இதழ்களும் வட்டமாய் அமர்ந்து சிலாகிக்கிறது உன் இதழின் அழகைப் பற்றி.. அம்மு பட்டாம்பூச்சியின் வண்ணத்தில் மலர்ந்த உன்னழகை நீயே காணமுடியாமல் துரதிர்ஷ்டசாலியாகி போனாயே.. சந்திப்பு தனித்தனி வாசல் கொண்ட பள்ளியில் ஐந்து நிமிடம் தாமதமாய் கிளம்புகிறேன் இரண்டு வழியும் சந்திக்கும் புள்ளியில் நாங்கள் சந்திப்பதற்காக பெருமை பேனாவும் பெருமை கொள்கிறது உன் பெயர் எழுதி என் புத்தகத்தை முடிப்பதில் ஏக்கம் பயணம் நீளாதா…? என ஏங்குகிறேன் நிறுத்தம் வந்தவுடன் நீ வெடுக்கென்று திரும்பிச்செல்லும்போதெல்லாம் சட்டை அத்தனை அலசல்களுக்கு பின்னும் மணக்கிறது நீ தோள்சாய்ந்த என் சட்டை பார்வை சற்று எட்டிப் பார்த்தது மணி கட்டிய நெல்லும் வரப்பில் நீ நடந்து செல்கையில் கதை நிலவோடு சேர்ந்து நட்சத்திரங்களும் கதை கேட்டு கொண்டிருக்கின்றன என் வீட்டு முற்றத்தில் அவள் பக்கத்துக்கு வீட்டு குழந்தைகளுடன் உதயம் உதய நேரத்தை கதிரவனும் மாற்றி கொண்டானடி நீ விழிக்கும் நேரம் 11 மணி என்பதால் பிரார்த்தனை என் போல கடவுளும் வேண்டிக் கொள்கிறான் நீ அடிக்கடி கோவிலுக்கு வந்து செல்ல ஓடை மீன் ஓடை மீனும் குதூகலித்து போனதடி உன் கால் விரல் நகம் கடிக்கையில் சொந்தக்காரி உரிமம் வாங்க பயமாய் இருக்கிறது இக்கவிதைகளுக்கு சொந்தக்காரி நீ என்பதால் கண்ணாடி கண்ணாடி தொட்டிக்குள் இருக்கும் மீனையே அதிகம் விரும்புகிறேன் கண்ணாடிக்கு பின்னிருக்கும் உன் கண்களை போல துப்பட்டா தன் வேலையை சரியாய் செய்கிறது தோழியோடு பயணிக்கும் போதெல்லாம் துப்பட்டா கடத்தல் பனம்பழத்திற்கும் நவாப்பழத்திற்கும் ஆசைப்பட்டு அதிகாலையில் தோட்டத்திற்குள் சுற்றுலா வந்ததை கடத்திக் கொண்டிருக்கிறேன் அடுத்த தலைமுறைக்கு வார்த்தைகளில் மட்டுமே தூண்டில் காத்திருக்கிறான் மீனவன் தூண்டில் போட்டு கடற்கரையில் நான் உன் நினைவுகளுடன் கண்ணாடிக்காரி எத்தனை பெண்களை கடந்து சென்றாலும் கண்ணாடியும் காற்றில் கலைந்த கூந்தலும் உன்னை மட்டுமே ஞாபகப்படுத்தி செல்கிறது விடாமுயற்சி கற்று தந்தாள் இருபது வருடமாய் வெள்ளரிக்காய் விற்கும் பாட்டி விடாமுயற்சியை மாற்றிவிடு திருமணத்திற்கு பின் உன் தலையணையை மாற்றிவிடு எனக்காய் அழுத இரவுகளை உன் கணவனிடம் சொல்லிவிட போகிறது புன்னகைப்பாடம் பலமுறை வெட்டிச்சென்றும் இன்றும் பூத்து புன்னகைக்க பாடம் நடத்துகிறது தோட்டத்து ரோஜாக்கூட்டம் பேரழகி நந்தவன தோட்டத்திற்கு வழி கேட்கிறேன் அவள் அங்கிருந்துதான் வந்திருப்பாள் என்பதால் வாசனை வாசனை திரவிய தொழிற்சாலைக்குள் நுழைகிறேன் உன் அக்குளின் வாசனை நுரையீரலை தீண்டும்போதெல்லாம் எங்கிட்டு போய் சொல்லுவேன் மாசத்துல மூணு நாள் வலின்னு சொன்னாக எம்மா நான் எங்கிட்டு போய் சொல்லுவேன் ஒதுங்க இடமில்லாம பள்ளிக்கூடத்துல அடக்கி வச்ச ஒவ்வொரு நாளும் எனக்கு வலிதான்னு விடியல் விடிய துடிக்கிறது நோயாளியின் மனம் முட்டைக்குள்ளிருக்கும் கோழிக்குஞ்சு போல ஆசை கவலைகளை உன் தோளில் இறக்கி வைத்து கண்ணீரை உன் கன்னத்தில் துடைத்து விட்டு இறுக கட்டியணைத்து உன்னில் மூழ்கிட ஆசையடி தறிகெட்ட மனம் பாதைகள் வகுக்கப்படவில்லை என் பைத்தியக்கார மனதிற்கு காற்றடைத்த பலூன் போல ஆறாம் வகுப்பு பேபி டீச்சர் அடிமனதில் ஆழமாய் பதிந்து கிடக்கிறார் கிழிந்த சட்டைக்கு கண்டித்த ஆசிரியர்களுக்கு மத்தியில் தையல் கலையை கற்று கொடுத்தவர் சந்திரோதய வெற்றிகள் நானும் அதிஷ்டசாலி தான் என் வெற்றியை என்னை விட அதிகமாய் கொண்டாடும் நட்புக்களை கொண்டதால் பகிரப்படாத மிட்டாய் அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது உன் பிறந்தநாளன்று தான் வெளியாவேனென என் புத்தகம் ரோகினி சில்வர் ஸ்க்ரீன் உடைந்து நொறுங்கிய போதெல்லாம் ஒட்ட வைத்துக் கொண்டிருந்தனர் மனதை நள்ளிரவு சினிமாவுடன் இரண்டு புரோட்டாவால் கல்லூரி நண்பர்கள் நான்காம் வகுப்பு செல்வி டீச்சர் தன் மகனுக்கான கஷ்டம் தான் தன் மாணவனுக்குமென பத்தாண்டுகளுக்கு பிறகு தேடி வந்து ஆயிரங்களை சட்டைப் பைக்குள் திணித்துச் சென்ற மனதிற்கு என்ன காணிக்கையாக்க கண்ணீரை தவிர? பேபி கிளாஸ் டீச்சர் உண்மை பெயரை தாண்டி வகுப்பே பெயராகிப் போகிறது சில ஆசிரியர்களுக்கு எங்கள் பேபி கிளாஸ் டீச்சர் போல தொலையும் வாழ்க்கை கரும்பலகையில் எவ்வளவு பெரிய கணக்கையும் சுலபமாய் தீர்த்து விடும் கணக்கு ஆசிரியரின் வாழ்க்கை புதிராகவோ இருப்பதேனோ? சத்துணவு ஆசிரியர் அறிவியல் வகுப்பின் புரதச்சத்து வகுப்பிற்கிடையில் உடலில் புரதங்களை திணித்துக் கொண்டிருந்தார் சத்துணவு ஆசிரியர் மீதமிருந்த முட்டைகளை வீட்டிற்கு எடுத்துச் செல்லாமல் தொலை………பேசி வரவு செலவு கணக்கு பார்க்கிறாள் இரண்டு நிமிடம் என்னுடன் பேச மணம் முடித்த காரணத்தால் அக்கா இரும்பு கற்காரை ஒரு மணி நேரத்தை கடத்த தெரியாமல் அறிவுரை வழங்கிக் கொண்டிருக்கிறார் என சிரித்த எனக்கோ துணை நிற்கிறது இன்று அந்த ஆசிரியரின் அறிவுரை தான் தெய்வம் நான்கு வருடமும் தோற்றே போனேன் அந்த ஆசிரியரின் பொறுமையின் எல்லையை அறிந்திட முயன்று இதுவும் பொய் எத்தனை சிரமப்பட போகிறேனோ? வருங்கால மனைவிக்கு புத்தகம் முழுவதும் பொய்யென புரிய வைக்க சோனாட்டா அவள் நினைவுகளை ஓட விடுகிறது அடிக்கடி நின்று போய் அவள் வாங்கி கொடுத்த கைக்கடிகாரம் விறகுக் கட்டை முதல் M.R.F வரை அரைநாள் மெனக்கெட்டு விறகுக்கட்டையில் செதுக்கிய மட்டையால் உணர்ந்தேன் நானும் சிற்பியென என்னையும் ஓவியன் ஆக்கியது அதில் கரிகொண்டு M.R.F என‌ வரைந்த தருணம் சேவாக்கை மனதில் கொண்டு அடித்த பந்து எதிர்வீட்டு ஓட்டை பதம் பார்த்தது வீட்டுக்காரனின் கேவலமான வார்த்தைகளைத் தாண்டி கண் என்னவோ பந்தையே தேடியது பலமணி நேர தேடலுக்கு பின் மீட்டெடுக்கப்பட்டது பந்து பிறகென்ன இடமாற்றம் தான் ஆளானபட்ட ஆண்டவனுக்கே பிரச்சினை உண்டெனில் நான் என்ன விதிவிலக்கா? சினிமா கொட்டகை, மணல் குவாரி, கிணற்றடி, குழாயடி என இடம் மாற்றிக் கொண்டு இன்று பிளாட் போட்ட தோட்டத்தில் நட்டு வைக்கிறேன் சிக்ஸர்களை தாமிரபரணி அத்தி மரத்தில் அகவும் மயிலும் கரை புரண்டு ஓடிய நீரும் துள்ளி குதித்து விளையாடிய மீனும் தலைமுறை தலைமுறையாய் காணக் கண்டோர் பன்னிரு மாதமும் பயிரிட்ட விவசாயி பயிருக்கேற்ற விலை வைத்த உழைப்பாளி விடிவதற்குள் வயலுக்குச் சென்ற தொழிலாளி அத்தனையும் பாடப்புத்தகத்தோடு நின்றுவிட்டதே இத்தலைமுறைக்கு மாதாமாதம் ஆடிப்பாடி திரிந்த வயதது காரணம் ஏதுமின்றி வீட்டுக்குள்ளே சிறைப்பட்டேன் உறவுகளெல்லாம் படையெடுப்பு என் வீட்டு பக்கம் கை நிறைய இனிப்புகள் பந்தல்காரனுக்கும் சமையல்காரனுக்கும் தொலைபேசி அழைப்பு எனக்கு மட்டும் விடுப்பு புதுத்துணி எடுக்க ஆட்டம் பாட்டம் கச்சேரியுடன் என் வீடு திருவிழா ஆனது தோழிகளெல்லாம் மாதாமாதம் இது நடக்குமென சொல்ல கொண்டாட்டத்தின் உச்சியில் நான் காத்திருந்தேன் அடுத்த மாதத்திற்கு அந்த நாளும் வந்தது உறவுகளுமில்லை இனிப்புகளுமில்லை பந்தலுமில்லை சமையலுமில்லை மீண்டும் சிறைபடுகிறேன் தீட்டு என்ற பட்டத்துடன் காதலி கற்பழிப்பு நண்பனுக்கு விருந்து வார்த்தைகளிலேயே முரண் காதலியாம் கற்பழிப்பாம் காதலில் திளைத்து காமத்தில் முளைக்கும் காதலில் கற்பழிப்பு-எப்படி? கடைக்கண் பார்வையில் உடைந்து போகிற காதலன் எப்படி விருந்தளிக்க முடியும் காதலியை நண்பனுக்கு தோலும் சதையுமே பெண்ணல்ல மென்மையான அவளுக்கும் ஆசைகளுண்டு கனவுகளுண்டு தொலைத்த உறவுகள் நட்பு என்ற வட்டத்துக்குள் சரியாக சுழல தெரியாதவன் நான் சில முறை கீழே இறங்கியிருக்கிறேன் பல முறை இறக்கி விடப்பட்டிருக்கிறேன் விளையாடித் திரிந்தது முதல் வேலைக்கு வந்த பிறகும் தொலைத்துக் கொண்டே இருக்கிறேன் பல உறவுகளை அன்றாடம் பல இழப்புகளை பெரிதாய் எடுத்துக் கொள்ளாத மனம் சில இழப்புகளுக்கு கண்ணீர் யுத்தமே நடத்துகிறது தலையணையில் அக்காக்கள் இரத்தத்தில் அக்கா உறவில்லாத என் வாழ்வில் முன்னிருள் நேரத்து மின்மினியாய் கடந்து சென்றனர் சில அக்காக்கள் நண்பன் அக்கா எனக்கும் நான் பார்த்து பொறாமைப்பட்ட அக்கா இவள் நான் கனவு கண்ட செல்ல சண்டைகள், சிணுங்கல்கள், கோபங்கள் அத்தனையும் கண்கூடாய் பார்த்து பொறாமை பட்டிருக்கிறேன் கடைசி வரை சொல்லிக்கொள்ளவே இல்லை அவள்மேல் இருந்த பாசத்தை கல்லூரி தந்த முதல் அக்கா ஆசிரியராய் ஆறு மாசம் மட்டுமே வருடங்கள் ஆறைத் தாண்டியும் இன்றும் அக்காவாக அவள் உதவியுடன் கிறுக்குகிறேன் இப்புத்தகத்தை என் கண்ணீரின் பாதியை துடைத்தவள் இவள் தொலைபேசி வழியாக அவளின் இருண்ட பக்கமும் என் இருண்ட பக்கமும் மோதிக்கொள்ள எங்கள் காட்டில் விடிய விடிய கண்ணீர் மழை கடைசியில் மாறி மாறி சமாதானப்படுத்தி கொள்வோம் நவீன யுகத்திலும் திருமணத்திற்கு பின் பேச முடியாமல் நாங்கள் நான் கண்ட குமார்கள் இன்றும் பரவிக் கிடக்கிறது எங்கள் தெரு முழுவதும் குமார் என்றால் உருப்படாதவனென தெருவின் கூற்றிற்கேற்ப எந்த ஒரு குமாரும் மெச்சும் படி இல்லை மருத்துவர் கனவு கண்ட குமார் மளிகை கடையில் பொட்டலம் போடுகிறான் முடி திருத்திக் கொண்டிருக்கிறான் முதல் மதிப்பெண் பெற்ற இன்னொரு குமார் பால்யத்தில் எனக்கு கதை சொன்ன குமாருக்கு நான் அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறேன் இந்த தாடியும் பீடியும் வேண்டாமென இப்படியே என் வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கிறது பல குமார்களுக்கு மத்தியில் நா.முத்துக்குமார் புத்தகத்தோடு இன்று அங்கும் முத்தங்கள் வாழ்வில் அவளைத் தொலைத்து பயணங்களில் தேடிக் கொண்டு இருக்கிறேன் ஞாபகப்படுத்திச் செல்கின்றன அத்தனை முத்தங்களும் அவளை தொடர்வண்டி பயணத்திற்காய் காத்திருக்கிறேன் பிரிவின் வலியால் அங்கும் முத்தங்கள் பயணிக்கிறேன் பேருந்தில் விளக்கு அணைத்தபின் அறிந்தேன் சத்தங்களில் அங்கும் முத்தங்கள் நெடுஞ்சாலையில் பயணிக்கையில் இருசக்கர வாகனத்தில் கட்டிப் பிடித்து கொண்டு அங்கும் முத்தங்கள் மலையேற்றம் செய்கிறேன் மரத்தடி நிழலில் அங்கும் முத்தங்கள் சத்தமில்லாமல் புன்னகைக்கிறேன் காமம் நம் காதலில் கண்களோடு இருக்கட்டுமென சொல்லியவளை எண்ணி பள்ளியின் நினைவுகள் இன்றும் ஞாபகம் இருக்கிறது கணக்கு வாத்தியாரின் பிதாகரஸ் தேற்றத்திற்கு இடையில் சன்னல் வழியே கடந்து சென்ற அக்காக்கள் தமிழாசிரியரிடம் தப்பிக்க நான்காய் கிழிபட்ட கோனார் உரை எனக்கு நானே விடைத்தாள் திருத்தி கொண்ட இயற்பியல் தேர்வுகள் எனக்கு நானே வினை வைத்து கொண்ட வேதியியல் வகுப்புகள் விலங்கியல் வகுப்பில் திறக்கப்பட்ட வாழைப்பூ பொரியல் ஆங்கிலத்திற்கு முழுக்கு போட்டு பார்த்த தோனி 183* அத்தனைக்கும் மேலாய் அவள் கண்களுக்குள் நான் விழுந்து கிடந்த தாவரவியல் வகுப்புகள் விழிகள் ஓரம் இன்றும் இரவு முழுவதும் சமர்ப்பணம் வெற்றியோ தோல்வியோ முயற்சிக்கு துணை நின்ற பள்ளிக்கூட வெள்ளரிக்காய் பாட்டி காலையிலே வந்து செல்லும் பூக்காரி தோழன் வீட்டு திருமணம் காலை சுற்றும் நாய் குட்டி அவ்வப்போது கடித்து செல்லும் எறும்புகள் தூக்கத்தை கடத்தி சென்ற கொசுக்கள் பத்து ரூபாய் ஏமாத்தி சென்ற இளநீர் கடைக்காரன் மதுவில் போதை தேடாமல் மையில் தேட சொல்லி சென்றவள் புத்தகத்தை தாண்டி வெளியுலகிலும் பயணித்த ஆசிரியர்கள் ஏலே உனக்கும் கவிதை வருதுலே என்று விதை போட்ட வாத்தியார் வார்த்தைகளுக்குள் வலியை திணித்துச் சென்ற நா.முத்துக்குமார் வலியின் உலகத்திற்கு வழி காட்டிய உயிர் நட்புக்கள் புன்னகை உலகத்திற்கு இழுத்து சென்ற கல்லூரி நட்புக்கள் எழுத்து உலகத்திற்கு கூட்டிச்சென்ற இணைய நட்புக்கள் மொழி அறியா உலகத்திற்கு கடத்தி சென்ற அலுவலக நட்புக்கள் உலகை விட்டு சொர்க்கத்துக்கு தூக்கி சென்ற குழந்தை நட்புக்கள் பயணங்களுக்கு துணை நின்ற கூகுள் பாதுகாப்பாய் கூட்டிச்சென்ற வாகனங்கள் பெயர் தெரியாத சக பயணி வழித்துணைக்கு வந்த நிலா கண்ணீர் துடைத்துச் சென்ற மழை நிழல் தந்த மரம் கவிதைகளை வடித்து சென்ற பேனா நினைவுகளை கொடுத்து சென்ற கல்லூரி விழுந்தவனை எழுந்து நிற்க செய்த சகோதரி இவ்வுடலின் உயிருக்கு சொந்தமான சகோதரன் கனவுக்கு உயிர் கொடுத்த காதலி எனக்கு உயிர் கொடுத்த பெற்றோர் நான் எழுத மறந்த மறுத்த அத்தனை இயற்கை படைப்பிற்கும் இப்புத்தகத்தை சமர்ப்பிக்கிறேன் தொடரும் பயணம் சூரியனுக்கு முன் பயணத்தை தொடங்கும் பேருந்தில் நானும் அவளும் விதிவிலக்கு திங்கள் கிழமையை வெறுப்பவர்களிடமிருந்து எப்பொழுதும் அவளே சன்னலோரம் எங்களுக்கே உரித்தான இருக்கையில் தோள்கள் சத்தமில்லாமல் முத்தமிட்டுக் கொண்டது பாதையின் இரண்டு பக்க மரங்களும் தீண்டுவதைப் போல சூரியக் கதிர்கள் தீண்டும் அவளை நான் ரசித்துக் கொண்டிருக்க அவளோ சூரியனை ரசித்திருப்பாள் தென்றல் காற்றில் நாங்கள் கண்ணயர அவள் கூந்தல் என் கன்னங்களில் கவிதை வடித்திருக்கும் பனிக்காற்றில் சன்னலைத் திறந்து துப்பட்டாவிற்குள் மறைந்து கொள்ள நான் கதகதப்பாகிக் கொள்வேன் அவள் மூச்சுக்காற்றில் முகம் பார்த்ததுமே பயணச்சீட்டு கொடுக்கும் நடத்துனருக்கு எங்கள் திருமண அழைப்பிதழ் கொடுக்க மீண்டும் ஒருமுறை பயணிக்கிறோம் அதே பேருந்தில் அதே இருக்கையில் நானும் …..யும் FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.