[] சிரிக்க வைக்கும் சொதப்பல்கள் ராஜலட்சுமி பரமசிவம் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை சிரிக்க வைக்கும் சொதப்பல்கள் Copyright © 2014 by Creative commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International (CC BY-NC-SA 4.0). This book was produced using PressBooks.com. Contents - சிரிக்க வைக்கும் சொதப்பல்கள் - ஆசிரியர் - 1. தயிர் புராணம் - 2. நூல் விடத் தெரியுமா? - 3. சிக்கிக் கொண்டேன் - 4. ' லடாய் ' - 5. தீபாவளி 'ஆச்சா' - 6. தாமதத்திற்கு மன்னிக்கவும் - 7. வீட்டில் விசில் - 8. நானும் Raj Kates தான்!!! - 9. மஞ்சு ஊரா.........மலேயாவா ? - 10. நானும் டென்னிஸும் - 11. குடைக்குள்.................. - 12. கோடீஸ்வரராக வேண்டுமா? - 13. ' லொக்... லொக்.... லொக்.... ' - 14. களி நடனம் கண்டதுண்டா? - 15. புலியும் நானும் - Free Tamil Ebooks - எங்களைப் பற்றி 1 சிரிக்க வைக்கும் சொதப்பல்கள் [Cover Image] நீங்கள் படித்து மகிழ  இந்த ‘சொதப்பல்களை’ மின்னூல் வடிவத்தில் தந்துள்ளேன்.  இதைப் படிக்கும் போது கண்டிப்பாக உங்கள் வாழ்வில் நீங்கள் சொதப்பிய அனுபவங்கள் உங்கள் நினைவில் வந்து மோதுவதை  உணர்வீர்கள்.  ஏறத்தாழ உங்களின் சொந்த சொதப்பல் அனுபவங்கள் போலவே இருக்கும். நீங்கள் சொதப்பியிருக்கிறீர்கள் என்று சொல்ல வரவைல்லை . உதாரணத்திற்கு  சொல்கிறேனே….., தயிர் சில நாட்களில் நம் வீட்டில் உறையாமல் இருந்திருக்கும். தயிர் உறையாததால் நீங்கள் சந்தித்த  சில சங்கடங்கள் இப்பொழுது நினைத்தால் உங்களுக்கு சிரிக்கத் தோன்றுகிறது அல்லவா?  அந்த மாதிரி சம்பவங்களின் தொகுப்பே  ”சிரிக்க வைக்கும் சொதப்பல்கள் “. படித்துப் பாருங்கள்.  ஒவ்வொரு அனுபவத்தையும் படித்து முடித்தபின்  உங்க முகத்தில் தவழும்  சிரிப்பையோ, புன்னகையையோ  என்னால் பார்க்கத் தான் முடியாதே தவிர  உணர முடியும். உங்களின் ஒவ்வொரு புன்னகையும் எனக்கு  மிகப்பெரிய விருது. என் எழுத்துக்குக் கிடைக்கும் மிகப் பெரிய கவுரவம். இந்த நூல் வெளியாக உதவிய திரு. சீனிவாசன் அவர்களுக்கும் ,Free Tamil Ebooks teamஇல்  இருக்கும் அத்துணை பேருக்கும் இத்தருணத்தில் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். மின்னூலைத் தரவிறக்கம் செய்து படிக்கும்  உங்களைப் போன்ற வாசகர்களுக்கும்  என் மனமார்ந்த நன்றி.. படித்து, சிரித்த அனுபவங்களை பின்னூட்டங்கள்  வாயிலாக  என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன். நானும் மகிழ்வேன். என்னுடைய  இன்னொரு மின்னூல் “ அப்பாவி விஷ்ணு “  படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள். நன்றி, RajalakshmiParamasivam. http://rajalakshmiparamasivam.blogspot.com மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com அட்டைப்பட மூலம் – https://www.flickr.com/photos/dominicspics/5857058766/ அட்டைப் படம் – ப்ரியமுடன் வசந்த் – vasanth1717@gmail.com மின்னூலாக்கம் – ப்ரியா – priyacst@gmail.com   உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். 2 ஆசிரியர் ராஜலட்சுமி பரமசிவம் என்னைப் பற்றி………. நான் ஒய்வு பெற்ற ஆசிரியை மற்றும் குடும்பத் தலைவி என்பதைத் தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை. . சமீப காலமாக  இணையத்தில்  எழுதி வருகிறேன். அதன்  மூலம்  பல வாசக நண்பர்கள் கிடைத்துள்ளார்கள் அவர்கள் கொடுக்கும் ஊக்கம்  என்னைத் தொடர்ந்து எழுத வைக்கிறது. அவர்களுக்கு என் நன்றி . என் தந்தையின்  எழுதும் ஆர்வம் என்னையும் விடவில்லை . என் அம்மாவோ என் எழுத்துக்களின்  தீவிர  விசிறி.  .அம்மாவினுடைய கருத்தையும் சில சமயங்களில்  நான் கட்டுரையாக்கியிருக்கிறேன். ஆகவே நான் எழுதுவதற்கு காரணமான என் பெற்றோருக்கு  முதல்  நன்றி. சிறு வயதில் எனக்கு நிறைய கதைகள் சொல்லி என் கற்பனைத் திறத்தை வளர்த்த என் சித்தப்பாவிற்கும் இத்தருணத்தில் நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். என் எழுத்துக்களின் முதல் விமரிசகரும், அங்கங்கே திருத்தங்கள் செய்து என் பதிவுகளை செம்மைப்படுத்திக்  கொடுப்பவருமான என் கணவருக்கும் நன்றி. இந்த மின்னூலை தரவிறக்கம் செய்து படிக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. [IMG_5657] நன்றி ராஜலட்சுமி பரமசிவம். மின்னஞ்சல்: rajisivam51@gmail.com [pressbooks.com] 1 தயிர் புராணம் [] ” உங்கள்  சாம்பார் மட்டும் எப்படி இவ்வளவு  சுவையாக வாசனையாக இருக்கிறது. உங்கள் சாம்பார் பொடி ரகசியத்தை சொல்வீர்களா? “ “உங்கள் ரசத்திற்காகவே இன்னும் கொஞ்சம் சாதம் சாப்பிடப் போகிறேன் “ இவையெல்லாம் என் தோழிகளும்,  உறவினர்களும்  என் சமையலைப் பற்றிப் புகழ்ந்து  கூறும் வார்த்தைகள். Note: வீட்டிலுள்ளவர்கள்  என் சமையலை  இப்படிப் புகழ்வதில்லை. வெளியில் இருப்பவர்கள் கண்களுக்கு  சமையலில் புலியாகத தெரியும் நான்  வீட்டில் இருப்பவர்களுக்கு எலியாகக் கூட தெரியவில்லை என்பது தான் உண்மை. அதிலும் என் கணவரிடம் கேட்டால் ,”ராஜி மிகவும் நன்றாக வெந்நீரும், தயிரும்  செய்வாள் ” என்று  நக்கலடிப்பார். ஆனால் நான் நிஜமாகவே தயிர் உறைய வைப்பதற்கு  திண்டாடின கதை இருக்கிறதே  …….அது பெரிய ராமாயணம்.அவருக்கு  நிஜமாகவே தயிரை கண்ணில் காட்டாமல்  திண்டாட விட்டிருக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு. ஸ்டாப்….. ஸ்டாப் …. பல வருடங்கள் என்று தான் சொன்னேன். உடனே A.D. யா  B.C யா என்று கேட்காதீர்கள். இளம் தம்பதிகள் நாங்கள். இப்பொழுது தான் சமீபத்தில்  மணமானவர்கள். எங்களுக்குத் திருமணமாகி ஒரு முப்பத்தாறு வருடம் தான் ஆகிறது. இளமையின் வாயிற்படியில் பேத்தி பேரன்களுடன்  நிற்கிறோம். சரி. தயிர் விஷயத்திற்கு வருகிறேன். எங்களுக்குத் திருமணமான புதிது. டில்லி வாசம். புதுக் குடித்தனம்.சமையல், வீட்டிற்கு சாமான்கள் வாங்குவது என்று எல்லாவற்றிலும் trial and error தான். ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். ஒரு முறை மாதாந்திர சாமான் லிஸ்ட் எழுதும்போது , பாயசத்திற்கு சேமியா கால் கிலோ, ஏலக்காய் கால் கிலோ(தவறுதலாக எல்லாம் இல்லை) என்று லிஸ்ட் எழுதி கடையில் கொடுத்து விட்டேன். மளிகைக் கடைக்காரரே  அதை ” எடிட் ”  செய்து இரண்டு ருபாய்க்கு ஏலக்காய் போதும் என்று  கொடுத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் . இப்படித் தப்பும் தவறுமாகத தான் போய் கொண்டிருந்தது எல்லாம்… ஆனாலும், அது ஒரு கனாக்காலம் தான் இந்த ரேஞ்சில் போய்கொண்டிருந்த குடித்தனத்திற்கு, குளிர்  காலம் வந்து  இன்னும் கொஞ்சம்  குழப்பியது. முதல் மழை போல் ,முதல் குளிர் எங்களுக்கு டெல்லியில். எல்லோரும்  ஸ்வெட்டர் ,ஷால் எல்லாம் போட்டுக் கொண்டு  ” ரோஜா ” படத்தில் வரும் தீவிரவாதி போல்  நடமாடிக் கொண்டிருந்ததை பார்த்து அதிசயத்தேன். ம்ம்ம்……நானும்  அப்படி த்தான் . அந்தக் குளிரில் எதை சமைத்தாலும்  சட்டெனக் குளிர்ந்து போய் விடும். ஒரு நாள் எப்பொழுதும் போல் சாதத்திற்கு தயிர் போட்டுக் கொள்ளலாம் என்று எடுத்தால் ,….பாலாகவே இருந்தது.  முதல் நாளிரவு உறை ஊற்றின ஞாபகம்  இருந்தது.உறை  ஊற்றினேனா  இல்லையா ….. என்கிற சந்தேகம்…… அடுத்த நாளும் இப்படியே ஆயிற்று. அதற்கு அடுத்த நாளும் அப்படியே…. ஊரே பிரிட்ஜ் மாதிரி இருக்கிறதே, அது தான் காரணமோ என்று குழம்பினேன். என்னவரோ ,” தயிராவாது சரியாக செய்வாய் என்று எதிர் பார்த்தேன். அதுவம் இல்லையா…” என்று உதட்டை பிதுக்க.. எனக்கு மானப் பிரச்சினையானது. எப்படியாவது தயிர்  செய்யக் கற்றுக் கொள்ளத் தீர்மானித்தேன். அதுவும் போர்க்கால அடிப்படையில். தயிர் செய்யக்…. கற்றுக் கொள்ள வேண்டுமா .. என்ன? நினைப்பீர்கள் எல்லோரும். தொடர்ந்து படியுங்கள் .தயிர் செய்வது எவ்வளவு கஷ்டம் என்று உங்களுக்கே புரியும். என் தயிர்  பாடம்  இதோ ….. எதிர் வீட்டில் இருந்த பஞ்சாபி  அம்மாவிடம் ஆரம்பித்தேன். உடைந்த ஹிந்தியில் என் சந்தேகத்தைக் கேட்டேன். அவரும் ,” ஆமாம் குளிரில் தயிர் உறைவது கொஞ்சம் கஷ்டம் தான் .” (” Note this point என்னவரே  ” என்று சொல்லியாயிற்று. ஆனால் அவர் காதில் வாங்கினால்  தானே…..’எனக்குத் தெரியாது ‘என்று நினைக்கும் என் வாழ்க்கை துணைவரிடம் ….என்னத்தை சொல்ல …) அந்த அம்மா சொன்ன மாதிரி மறு நாள் உறை ஊற்றி , ஸ்டவ் மேலேயே  வைத்து விட்டேன். மறு நாள் ஆசையாக எடுத்தால் ,” நீ ஸ்டவ் மேல் வைத்து விட்டால்….நான் தயிராகி விடுவேனா  என்ன? ” என்று என்னைப் பார்த்து  சிரித்தது  பால். வேறு என்ன வழி? யோசனை பலமானது. இப்பொழுது போல் போன்  வசதியில்லையே,சென்னையிலிருக்கும் அம்மாவைத் தொடர்பு கொள்ள. கடிதப்போக்குவரத்தோ  ஒரு வாரத்திற்கு மேல் ஓடி விடும். என்று யோசித்துக் கொண்டே , அஜ்மல்கான் ரோடில் நடக்கும் போது கண்ணில் தென்பட்டது  ஸ்வீட் கடை. நாவில் நீர் ஊறியது .  ஸ்வீட்டைப் பார்த்து அல்ல .கல்லாவிற்கருகில் பெரிய மண் சட்டியில்  இருந்த ,கட்டித் தயிரைப் பார்த்து தான். அட…..தயிர் ….என்று  காணாததைக் கண்டது மாதிரி (உண்மையில் காணாது தானே) கத்தினேன். கத்தியால் வெட்டும் போல் இருந்த தயிரை  வாங்கும் போது    வேறு ஒரு யோசனை  தோன்றியது. ஒரு வேளை  ,மண் சட்டியில் உறை ஊற்றினால் தயிர் கட்டியாக உறையுமோ  என்று சின்ன ஆசை வந்தது. அதை நடைமுறைப் படுத்த  மண் சட்டியைத் தேடிப் பிடித்து வாங்கிக் கொடுத்தார் என் கணவர். வாங்கிய அன்றே ,பாலைக் காய்ச்சி உறை ஊற்றின பின்,  ஆடாமல் அசையாமல்  (இது என் கணவருக்கு , அவர்  ஆபிசில் கிடைத்த டிப்ஸ்) சர்வ ஜாக்கிரதியாக , மெதுவாக ,கீழே வைத்தேன். தயிர் உறைந்தால், பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொண்டு படுத்தேன். மறு நாள் காலை முதல் வேலையாக ,மண் சட்டி மூடியைத் திறந்து, மெதுவாக…. ஒரு ஸ்புனால்  தொட்டேன். தயிரை  டிஸ்டர்ப் செய்யக் கூடாதல்லவா? ” லொடக் ” என்று ஸ்பூன்  உள்ளே போனது. ” நான் இன்னும் பாலாகத் தான் இருக்கிறேன் ” என்று சொல்லாமல் சொல்லியது பால். சரி. இதற்கு மேல் என்ன செய்வது? வெறுத்து தான் போனேன். அப்படி,இப்படி, கடையில் தயிர் வாங்கி ஓட்டிக் கொண்டிருந்தோம். இப்போழுது போல், sealed packet இல்  தயிர் கிடைக்காது. அதனால் தான் வீட்டில் தயிருக்காக பிரம்மப் பிரயத்தனம்  எடுத்துக் கொண்டேன். அப்பொழுது ஒரு நாள் இவர் நண்பர் வீட்டிற்கு  சாப்பிடக் கூப்பிட, அங்கு சென்றோம். ஆசையாய் காத்திருந்தேன்…. தயிருக்காக. வந்தது அந்த நொடியும். என் தட்டில் கட்டித் தயிர்.ஆசையாய் சாப்பிட்டுக் கொண்டே….. என் கேள்விகள் ஸ்டார்ட்…. என்ன பால் வாங்குகிறீர்கள்? இது வாங்கிய தயிரா? இல்லை வீட்டிலேயே உறை ஊற்றியதா? கண்டிப்பாக அந்தம்மா குழம்பிபோயிருக்க வேண்டும். ஆனாலும் ஒரு தயிர் டிப்ஸ் கிடைத்தது. அந்தம்மா சொன்னபடி  பாலை உறை ஊற்றி கோதுமைமாவு டின்னிற்குள் டைட்டாக  மூடி வைத்தேன். ம்க்கும்…..அதுவும் எனக்கு வேலை செய்யவில்லை. என்னை சுற்றி எல்லோருமே வேண்டுமென்றே  நான் தயிர் சாப்பிடக் கூடாதென்று  சதி வலை பின்னுகிறார்களோ? அதுதான் தயிர் ரகசியத்தை யாருமே சரியாக சொல்ல மாட்டேன் என்கிறார்கள் என்ற சந்தேகம் வந்தது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார் போல் என் கணவரோ “கவலையே பாடாதே  . இனிமேல் தயிர் என்று பேப்பரில் எழுதிக் கொடு பார்த்துக் கொண்டே சாப்பிட்டு விடுகிறேன் ”  என்று சொன்ன போது அழுகை வராதது தான் குறை.. யார் என்ன சொன்னாலும் அந்த  யோசனையை நடைமுறைப் படுத்த தவறியதேயில்லை. ஆனால் எதுவும் சரியாக வரவில்லை. கடைகாரர் அருளினால் தான் தயிர்  சாப்பிட்டோம். இந்த தயிர் கூத்தும ஒரு நாள் முடிவிற்கு வந்தது. ஆமாம் .ஒரு நாள் தயிர் உறைந்தே விட்டது.(ஒருபக்கம் ஆச்சர்யம்.ஒரு பக்கம் அளவிட முடியாத சந்தோஷம்  எனக்கு) காரணம் குளிர் கொஞ்சம் குறைய ஆரம்பித்திருந்தது. அன்று நான் தயிருக்கு விழா எடுக்காதது தான்  பாக்கி. இப்பொழுது உங்களுக்குப் புரிந்ததா? தயிர் செய்வது எவ்வளவு கஷ்டம்  என்று …..ஒத்துக் கொள்கிறீர்கள் தானே! இப்பொழுது  மூன்று வருடத்திற்கு முன்பாக மீண்டும் டில்லி வாசம் . மீண்டும் “தயிர் புராணமா”? என்று சலித்துக் கொள்ள வேண்டாம். Nestle,Amul,Mother Dairy என்று பலரின் உதவியுடன்  தயிர் சாப்பிட்டோம். வாழ்க்கைமுறை எவ்வளவு  சுலபமானது பார்த்தீர்களா? image courtesy–google. 2 நூல் விடத் தெரியுமா? [] ” இனி மேல்  உன்னிடம் நான் கெஞ்சப் போவதில்லை . நீ  தைத்துக்கொடுத்தால்இந்த”கர்டனை”ப்  போடுவோம்.இல்லையென்றால்  விடு”  என்று  சற்றுக்  கோபமாகவே  குரல்  வர  ,  கொஞ்சம்   அசந்து  தான் போனேன். சரி  வேறு வழியில்லை  என்று   டேபிளடியில்  இருந்த   உஷாவை (தையல்  மெஷின்) இழுத்து   வைத்து    நூலெல்லாம்   கோர்த்து   தைக்க உட்கார்ந்தேன். பல   நாட்களாக   நான் கண்டு கொள்ளாததன்  கோபமோ, என்னவோ    உஷா   சரியாக  வேலை செய்யவில்லை.  என்ன செய்வது?  திரு திரு என முழித்தேன். பார்த்தார்   என் கணவர். ‘ என் இப்படி  முழிக்கிறாய்?  மெஷின்  வேலை செய்யவில்லியா?’   என்று கேட்டதற்கு  பரிதாபமாக         ” ஆமாம்  ”.  என்றேன். “உன்னைப் பற்றித்  தெரியாதா? ப்ளாக்  எழுத  சொன்னால்    நீ பாட்டிற்கு   லாப்டாப்பே   கதி என்று இருப்பாய்.  நான் ஒரு வேலை சொன்னால் செய்ய மாட்டாய் ”  என்று அவருடைய  கோபத்தின்   டிகிரி  எகிற  செய்வதறியாது   திணறினேன். சரி பக்கத்திலிருக்கும்    டெய்லர்   ஒருவரைக்   கெஞ்சோ கெஞ்சென்று  கெஞ்சி  கூப்பிட்டு   வந்து   மெஷினில் என்ன  ரிப்பேர்  என்று கேட்டதற்கு ஏதோ    ICU வில்  இருக்கும்  பேஷண்டைப்  பற்றிக்   கேட்டது போல் உதட்டைப் பிதுக்கி, ” ஊஹூம்….  இனிமேல் ஒன்றும்  செய்வதற்கில்லை ”  என்று கூறி   என்னை இன்னும்  திகலடையச்  செய்தார். வேறு வழியில்லாமல்   அதே தையற்காரரிடம்  என்  ”கர்டனை”  தைத்து  முடித்தேன். ஆனாலும்  தையல் மெஷின் ?  அவரிடமே  வந்த விலைக்கு  விற்று விட்டேன்.  சரி,  ஒரு வழியாக  எதாவது தைக்க வேண்டுமென்றால்  இனிமேல்  யாரும்   என் பிராணனை  வாங்க மாட்டார்கள்  என்று திருப்தியடைந்தேன். “அப்படியெல்லாம்   உன்னை  விட்டு விடுவேனா ” என்று  விதி  மறு   நாள்   பேப்பரில்   வந்த விளம்பரம்   மூலமாக  விளையாட ஆரம்பித்தது. on line shopping இல் silai  mini sewing machine  என்று விளம்பரம்  இருந்தது. உடனே பார்வையை  அதன் மேலே ஓட்டினேன். விலை  shipping charges  எல்லாம் சேர்த்து  ரூ.2000  என்றிருந்தது. நம் உஷாவிற்கு  தான் பிரியா விடை  கொடுத்து விட்டோமே என்று  இதையாவது      வாங்கலாம்  என்று  நினைத்தேன்.(சொந்த செலவில் சூன்யம்  வைத்து கொள்வது  என்பது இது தானோ?) மெதுவாக  என்னவரிடம்  விளம்பரத்தைக்  காட்டினேன்.அவரோ  கண்ணாடியை  சரி செய்து கொண்டே” அதுக்கென்ன இப்போ?” என்றார். எப்படி இவரை   சம்மதிக்க வைப்பது  என்று  மண்டையைப் போட்டு உடைத்தேன். இரண்டு நாட்கள்  முழுதாக ஆனது. அவரோ   அசைய மறுத்தார். ஒரு” ட்ரம்ப்   கார்ட்” ஒன்றை  வீசினேன்.  ”உங்கள் லுங்கியெல்லாம்   தைக்க   இருக்கிறது  இல்லியா? இது கையடக்க சைசில்  இருக்கிறது. தைக்க எளிதாக இருக்கும் என்று தோன்றுகிறது. ”  என்று  ஐஸ் வைத்த பிறகு    இந்த மினி மெஷினை வாங்க சம்மதித்தார். உடனே   onlineஇல் ஆர்டர் செய்து விட்டேன். புக் செய்து விட்டேனே தவிர கொஞ்சம்  உள்ளுக்குள் உதறல் தான் . இது ஒழுங்காக வர வேண்டுமே ! நான்  உடம்பு   வளைந்து  தைக்க வேண்டுமே! மூன்று  நாட்கள் கழித்து   சிலை(mini silai sewing machine)  வீட்டிற்கு வந்தாள். உஷாவின்    குழந்தை போலிருந்தாள்   சிலை. பக்காவாக பேக்  செய்திருந்த சிலை மெஷினை   மெதுவாக  பாக்கெட்டிலிருந்து   பிரித்து எடுத்தேன். சுடச்சுட  தைக்க ஆரம்பித்தேன். நன்றாகவே வேலை செய்தது. ” கட கட” வென்று    போனது வந்தது  எல்லாம்   தைத்து முடித்தாயிற்று. பட்டனை  தட்டினால்  (இட்லியோ  காபியோ இல்லை ) நாம் தைக்க வேண்டிய  இடத்தில்  லைட்  வருகிறது. சாளேஸ்வரம்  இருப்பவர்கள்   எளிதாக  தைக்கலாம். தூக்குவது எளிது. வெறும் 1 கிலோ  தான் வெய்ட் . எந்த இடத்திற்கு வேண்டுமானாலும்   எடுத்து  வைத்துக் கொண்டு தைக்கலாம்.  காலால் மிதிப்பதற்கு   பெடல் ஒன்று கொடுத்திருக்கிறார்கள்.  பேட்டரி/கரண்ட் என்று   எதிலும் வேலை செய்கிறது. ஒரே சந்தோஷம் தான்   எனக்கு, அவருடைய    லுங்கியை   எடுத்து வைத்து தைக்க ஆரம்பித்தேன். நன்றாகவே தைத்துக் கொண்டிருந்த மெஷின்  சத்தம் ஒரு மாதிரியாக  வந்தது மெஷினை நிறுத்தி விட்டுப்  பார்த்தேன். ஓ……. ” பாபினி”ல்  நூலில்லை. பாபினை வெளியே எடுத்தேன்.  நூல் சுற்றலாம்  என்று   மெஷினைப் பார்த்தேன்.  அதற்கு  எங்கே  வசதி? மெஷினை திருப்பி  திருப்பி  பார்த்தேன். ஊஹூம்  …… ……..தெரிய வில்லை. சரி  அதனுடன் வந்த புத்தகத்தை  அட்டை   to   அட்டை   படித்து  முடித்து விட்டேன்.  ஒரு தடவை இல்லை , இரண்டு தடவை இல்லை…..பலமுறைப்  படித்து  மணப்பாடமாகவே  ஆகிவிட்டது. அந்தப் புத்தகத்தில்   ” இடம் சுட்டிப் பொருள் விளக்கு ” எழுதும் அளவிற்கு படித்தாகி விட்டது.  ஒன்றும் பலன் இல்லை. மெஷினில் லைட், நூல்  கட் செய்ய ,கரண்டில்  வேலை செய்ய, பெடல்  என்று எல்லாம் இருக்க  பாபின்  நூல்  சுற்ற  வசதியில்லாமலா  இருக்கும்.? என்  சிற்றறிவிற்கு  ” டேக்கா ”  கொடுத்துக்  கொண்டிருக்கிறாள்  சிலை. என்னவரிடம்  உதவி கேட்டால்  அவர் சொல்கிறார்,” ஒரு வேலை செய். உனக்குப் பழக்கமான   உஷாவை   வாங்கி   அதில்   பாபினில்  நூல் சுற்றிக் கொள்  ,அப்புறம்  இதில் தைத்துக் கொள்” என்று நக்கலடித்து விட்டு  ” பேப்பரில்  அரசியல் நிலவரம் படிக்கிறேன்….தொந்தரவு  செய்யாதே………..”  என்று மிரட்டல் வேறு. எனக்கு உதவி செய்யாமல்  என்ன  அரசியல்  வேண்டியிருக்கிறது  சொல்லுங்கள். ஏதோ   அரசியல் வாதிகள் எல்லாம்  இவருடைய  ஆலோசனையை  எதிர்பார்த்து  காத்திருப்பது போல்……………ம்க்கும். சரி, என் பிரச்சினை  என்னவாயிற்று என்கிறீர்களா? இன்னும்  அப்படியே தான் இருக்கிறது ……. “சிலை” சோபாவில்  சிலையாகி  இருக்கிறாள். நீங்களே பார்த்துக் கொள்ளலாம் .போட்டோ போட்டிருக்கிறேன். என் பிரச்சினையின்   தீவிரம் புரிகிறதா? யாரிடமாவது   தீர்வு  இருக்கிறதா?……….. என்  அருமை ” சிலை”யின்   பலவித போஸ்கள்   கீழே  ……… [] [] [] என் சிலையை அப்படியே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் யாருக்காவது  , என் பிரச்சினைக்குத்  தீர்வு  தெரியுமா? கொஞ்சம் சொல்லுங்களேன்.  ………………ப்ளீஸ் … smiley image courtesy—-google. 3 சிக்கிக் கொண்டேன் [] தினம்      இட்லி , தோசை ,உப்புமா   என்றே  செய்கிறாயே  ? வேறு  எதாவது செய்யேன்   என்று  என்  வாழ்க்கைத்  துணைவர்  கேட்க  நானும்  அவரைப்  பார்த்து  வேறென்ன  செய்ய ?  என்று  திருப்பிக் கேட்டேன். “ஏன்  இடியாப்பம்  செய்யேன்  நாளைக்  காலை  டிபனிற்கு”   என்று  கூறினார். ” ஒ.கே .”    சொன்னேன். இப்பொழுது   தான் ,  போன  வாரம்    இடியாப்ப  மாவு   தயார் செய்து  சேர்த்து  வைத்திருந்தேன். இடியாப்ப  மாவு  செய்வது  கொஞ்சம்  சிக்கலான வேலை. (ஒரு  நாள்  வேலை  இழுத்து  விடும்.)அரிசியை  ஊற  வைத்து  , அரை  ஈரமாக  இருக்கும்போதே அரிசியை  மெஷினில்  அரைத்து  பின்  வேக வைத்து, காய வைத்து   என்று   முதுகை  பெண்டு  கழட்டும்  வேலை. அதற்குப்   பிறகு  இடியாப்பம்  செய்வது   மிகவும்    சுலபம். இதான்…….. இதான்……….(செய்வது  சுலபம்  என்பது  நினைப்பு) ” நினைப்பு  தான்  பிழைப்பை  கெடுக்கும் ” என்று    சும்மாவா   சொன்னார்கள். மறு  நாள்  காலை  எழுந்து   காபி  சாப்பிட்ட  பிறகு  ,காலை  நியுஸ்  பேப்பரை  ஒரு  ரஷ்  முடித்து ,   நேராக  லேப்டாப்  பக்கம்  வந்தேன். அப்பவே  என்  அம்மா, ” இது  என்ன ?  இன்றைக்கு  காலையிலேயே   லேப்டாப்பை  திறக்கிறாய்?  டிபன்  எல்லாம்  உண்டா இல்லையா?  என்று கேட்க  , அதற்கு   நான், ” இடியாப்பம்  தானே !  இதோ  ஒரு  அரை  மணியில்   செய்கிறேன்  .”  (இடியாப்ப சிக்கலில்  நான்  மாட்டிக்  கொள்ளப்   போவதை   அறியாமல் )  என்றேன். பிறகு   மெயில்  செக்  செய்தேன்  . பின்  என்    டேஷ்போர்டிற்கு   வந்து   பின்னூட்டங்கள்   எதுவும்   வந்திருக்கிறதா என்று   பார்த்தேன்.பிறகு   சில  சமையல்   குறிப்பு   பதிவுகளைப்  படித்து  விட்டு   டிபன்   செய்யக்  கிளம்பினேன். இண்டக்ஷன்   ஸ்டவில்    தண்ணீர்  வைத்து  விட்டு   ஒன்றரை  டம்ளர்   மாவை   அளந்து   போட்டு  விட்டு    நன்கு  கொதித்த   தண்ணீரை    மாவின்   தலையில்  கொட்டி    கலந்தேன். காலை  fm  இல்  “அன்பே ……… சுகமா…….’  என்று  பாடகி திருமதி . சாதனா  சர்கம்  உருகி  உருகி   பாட   ,அதைக்   கேட்டுக் கொண்டே………….. முறுக்கு    பிழியும்  நாழியில்   ஓமப்பொடி    அச்சைப்   போட்டு  , நன்கு  திருகி  மூடி  விட்டு,   மாவை  நாழியின்     வாயில்  போட்டு  அடைத்தேன். பிறகு  இட்லித்  தட்டில்  எண்ணெய்  தடவி    பிழிய   ஆரம்பித்தேன்..  எப்பொழுதும்,    சரம் ,சரமாய்  ,    ஓமப்பொடியாய்     இறங்கும்   இடியாப்பம்    இன்று    “  இர(ற)ங்கி  வர  மாட்டேன்  ” என்று   அடம்  பிடிக்க  ஆரம்பித்தது. நாழியில்   இருக்கும்  அச்சு  சரியாக   இருக்கிறதா   என்று  திருப்பிப்  பார்த்தால்  அது  சமர்த்தாகத்  தான்  உட்கார்ந்திருந்தது. நேற்று  கொஞ்சம் கைவலி இருந்தது. அது தான் பிழிய முடியவில்லையோ ?   என்று  நினைத்துக்  கொண்டிருக்கும்போதே    என்  அம்மா   அங்கு   ஆஜரானார். ” பிழிய     கஷ்டமாக     இருக்கிறதா? .  இங்கே கொடு,  நான் பிழிகிறேன் ” என்று   நாழியை   வாங்கி   பிழிய  முயற்சி  செய்தார். அது  அசைந்து  கொடுத்தால்  தானே. ! உடனே    என்  அம்மா   மப்டியில்    இருக்கும்  போலீஸ்   மாதிரி  விசாரிக்க  ஆரம்பித்தார். “தண்ணீரை  கொதிக்க  வைத்தாயா?  எந்த  டப்பா  மாவை  எடுத்தாய்  ?……….” இப்படி  சரமாறியாய்   கேள்விகள்  . நானும்  விசாரணை  கைதி  மாதிரி , பதிலளித்து  வந்தேன். பிறகு , இருவரும்  ஆளுக்கு  ஒரு  பக்கம்   பிடித்துக்   கொண்டு,   அமுக்கப்  பார்த்தோம்.  ஊஹூம்…………….    நீயெல்லாம்  எனக்கு  ஜுஜுபி   மாதிரி என்பதைப் போல்  அழுத்தமாக   அசையாமல்  இருந்தது. இந்த  சந்தடிகளைக்  கேட்டுவிட்டு  என்னவரும்    சம்மன்  இல்லாமலே  சமயலறையில்    ஆஜர். சரி  அவரிடம்  உதவி  கேட்போம்  என்று  கேட்டு வைத்தேன்.  “சரி  கொடு ” என்று  நாழியை   வாங்கிக்  கொண்டார். அவரும் முயற்சி  செய்தாயிற்று.  பலன்  பூஜ்யம்  தான்   . உடனே    நாழியைத்   தூக்கி   bofors   பீரங்கி  மாதிரி  பிடித்துக்   கொண்டு என்னைப்  பார்த்து,”ராஜி,  உண்மையைச்  சொல்.  உள்ளே    மாவு  வைத்திருக்கிறாயா,  இல்லை  “குண்டு “  வைத்திருக்கிறாயா?”என்று  சீரியசாக    ஜோக்  அடித்து  என்  எரிச்சலை  அதிகமாக்கினார். இந்த  மாவில்…………  இடியாப்பம்  இல்லை ……. என்றாயிற்று. சரி,    இத்தனை  மாவையும்    என்ன  செய்வது.  உடனே   பிடி கொழுக் கட்டைகளாக்கி    வேக வைத்தேன்.  மாலை  ஸ்நாக்ஸ் வேலை  ஆச்சு   என்று திருப்தியானேன். அது  சரி.  இப்ப  டிபனுக்கு  என்ன?  மில்லியன்  டாலர்  கேள்வி  என்  முன்னே? பிரிட்ஜைத்   திறந்தேன்.  ஆபத்பாந்தவனாய்   கைகொடுக்கும்   தோசைமாவிற்காகத்தான்.  தோசை  மாவு  அடுக்கை  காணோமே. அழகாய்    அமரிக்கையாய்   அலமாரியில்  உட்கார்ந்திருந்தது. தோசை  மாவு    காலி  !  உரைத்தது  எனக்கு. சரி   என்ன  செய்வது? ஒழுங்காக    உப்புமாவைக்   கிண்டியிருக்கலாம். விதி  யாரை  விட்டது.? அன்று  காலை  பதிவில்  படித்த  ஓட்ஸ்  கிச்சடி  செய்ய  உட்கார்ந்தேன். செய்து  முடிததாயிற்று. தட்டில்  எடுத்துப்  போடும்  போது  தான்  உரைத்தது. ஓட்சை  வறுத்திருக்க வேண்டும்.  விட்டு  விட்டேனே! ஒரே  கொழ  கொழ   கிச்சடி.  ஆனாலும்  சுமாராக இருந்தது. ‘இதயத்திற்கு   இதமானது’   என்று  சாப்பிட்டு  முடித்தோம். உஸ்…….அப்பாடி………….டிபன்   கடை   ஒரு  வழியாய்  முடித்தாயிற்று. இடியாப்ப   சிக்கலலிருந்து     மீண்டோம்   என்று  பெருமூச்செறிந்தேன் இல்லை.இன்னும்  இந்த  இடியாப்ப  சிக்கலிலிருந்து   மீள வில்லை, என்பது    எனக்கு   வீட்டு  வேலையில்   உதவி   செய்யும்     ” கல்பு “(  கல்பனாவின்  சுருக்கம்)  வந்த  பிறகு   நடந்தது , உணர்த்தியது. கல்பு  வரும்  போதே  யாரையோ  வசை  பாடிக்  கொண்டே  வந்தார். அதைக்   காதில்   வாங்காமல்   எப்பவும்  போல்   ” கல்பு   ,  இந்த  கிச்சடியை   சாப்பிட்டு  விட்டு   வேலையை  ஆரம்பி  ‘என்று     கிச்சடியைக்   கொடுத்தேன். ஏதோ   விசித்திர  ஜந்துவைப்    பார்ப்பது   போல்   அதை  பார்த்துக்  கொண்டே   ஒரு    வாய்   எடுத்துப்    போட்டு விட்டு,  “ஐயே   !   இன்னா இது?  கிச்சடியா? எனக்கு   இன்னைக்கு   காபி   போதும்   “என்று வேலை     செய்ய  ஆரம்பித்து விட்டார். “குபீர்”  சிரிப்பலை  கிளம்பி வந்தது   ஹாலிலிருந்து.     என் கணவர்   தான் . எல்லாம்  என்  நிலையை  பார்த்து    தான்!  வேறென்ன……. ஹால் பக்கம்   நான்  ஏன்  போகிறேன்? மத்தியான  சமையலை  வில்லங்கம்     இல்லாமல்   செய்து   முடித்து  விட்டுத்  தான்  ஹால்  பக்கம்   தலை  காட்டினேன். பி.கு :  பதிவைப்  படித்து விட்டு  நான்  சமையலில்  கத்துக்  குட்டி  என்றோ,  இடியாப்பமே  செய்ய வராதோ    என்று   குறைத்து   மதிப்பிட்டு  விடாதீர்கள். ‘ ஆனைக்கும்   அடி  சறுக்குமாமே  “  அது  மாதிரி  தான்  இந்த   சம்பவமும். ஓஹோ……….அப்படியா………..என்று  நீங்கள்  சொல்வது  கேட்கிறது. image  courtesy  —  google 4 ' லடாய் ' [] எனக்குத்       திருமணமான   புதிது. சென்னையில்  வங்கி  அதிகாரியான   என் கணவருக்கு  டில்லி  மாற்றல் . அதுவரை   நான்   சென்னை   எல்லையை   அதிகம்    தாண்டியதில்லை.  தில்லி என்றதும்  மனம்    துள்ளலாட்டம்    போட்டது.  புது ஊர்,  புது  மக்கள் ,  புது  விடு,  புது மொழியும் கூட….மனம்  இறக்கை கட்டிப்  பறந்தது.பெற்றோர்கள் ,சித்தப்பா,சித்தி,  தம்பி, தங்கை   எல்லோரையும்   விட்டு  விட்டு இவ்வளவு      தூரமா…………?   பயம்   கலந்த   மகிழ்ச்சியை  அனுபவித்தேன் . டில்லி  மாற்றல்   என்றதும்   நான் முதலில்   செய்தது   “முப்பது  நாளில் ஹிந்தி  ” என்ற    புத்தகத்தை   வாங்கியது   தான் .படித்தும்   வைத்தேன். அதனால்   ஹிந்தியில்  M.A.,, பட்டம்    வாங்கியது   போல்    நினைத்துக் கொண்டு  G.T.  Express  ஏறினேன் . ஜன்னலோர  சீட்  கிடைத்திருந்தது.  எல்லோரும்    தூங்கிய  பிறகும் ,   பிடிவாதமாய்  இருட்டில்  வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். கூடவே  என்கணவரும்   அமர்ந்திருந்தார். வேறு   வழி ?. (ரயில்   பயணம்   எனக்கு   மிகவும்   பிடித்தமான   ஒன்று,    இன்றும்   கூட) ரயில்    எல்லாவற்றையும்   பின்னோக்கி  தள்ளியபடி     போய்க்    கொண்டே ……………….இருந்தது. 36  மணிநேரத்திற்குப்  பிறகு  தள்ளாடியபடி ,  ஒரு பெரிய பெருமூச்சை   விட்டபடி,   களைத்துப்போய்     நியு டெல்லி   வந்தடைந்தது . இப்பொழுது  போல்  ,செக்யுரிட்டி  ,போலீஸ்  என்று  எந்த தேவையுமில்லாத   நகரமாயிருந்தது    டெல்லி   அப்பொழுது.  மெதுவாக   சாமான்களை   எடுத்துக் கொண்டு ” கரோல்  பாக்” கிற்கு  எங்கள் புது  வீட்டிற்கு(வாடகை   தான்   )  வந்தோம்  . வந்தவுடன்   குளித்து   அஜ்மல்கான்   ரோடில்  உள்ள   மதராசி   ஹோட்டலில்  தோசையும்    காபியும்    சாப்பிட்டு    விட்டு ,    வீ ட்டிற்குத்    தேவையானதை வாங்க  சென்றோம். அங்கே  தான்   ஏட்டு  சுரைக்காய் கறிக்கு   உதவாது   என்பதை   புரிந்து  கொண்டேன். மளிகை  சாமான்    வாங்க , மேடையே   இல்லாமல்  ,  நட்டுவாங்கம்   இல்லாமல்   பரத நாட்டியம்,  குச்சுப்பிடி   என்று    பல வகை  நடனங்கள்   ஆட   வேண்டியதாயிற்று. என்னுடைய    முப்பது   நாட்களில்  ஹிந்தி  படிப்பு , சுத்தமாய்   பலனளிக்கவில்லை. அப்பொழுது    மட்டுமில்லை  பின்னரும்   பல  மாதங்கள் வரை   என்னிடம்    ஹிந்தி   மாட்டிக்   கொண்டு   படாத   பாடு   பட்டது. எல்லா  உரையாடல்களுக்கும்    முடிவில்  ‘  ஹை   ஹை ‘  என்று   குதிரை   ஒட்டிக்  கொண்டிருந்தேன்.  அப்பொழுது    தானே   அது    ஹிந்தி ? ” பனீர்  “  என்பதை    பன்னீர்  ஆக்கி   எல்லோரையும்    ஒரு முறை   திரும்பி   பார்க்க     வைத்தேன் . டில்லியில்    இருக்கும்   காய்கறிகாரருக்கும்      ஆங்கிலம்   தெரியும்   என்பது என்னுடைய   நினைப்பு.  ஏன்   அப்படி    நினைத்தேன் ?  தெரியவில்லை. அதனால்    என்னுடைய   ஹிந்தி   எடுபடாத   இடங்களில்   எல்லாம்   உடனே    ஆங்கிலத்திற்கு    சடாரென்று    தாவி    விடுவேன். எல்லோரிடமும்    இதே   அடாவடி       தான். (கல்லூரி    மாணவர்கள்    பாஷையில்    சொல்வாதானால்  ‘ பீட்டர்’  ‘விட்டிருக்கிறேன் ) அதுவும்   சரிவரவில்லை   பல சமயங்களில்   சைகை  பாஷையை   உபயோகிக்க    வேண்டியதாயிற்று சந்த்ரா (ஆரஞ்சு), விற்பவரும்    மாட்டிக்கொண்டார்.  .அங்கே   பேரம்   கூட பேசினேன்.  மகாகவி   காளிதாஸ்  படத்தில்   சிவாஜி கணேசனும்    சௌகார் ஜானகியும்    சைகை பாஷையில்    பேசிக்கொள்வது போல்   சைகையிலேயே   பேரம்  பேசினேன்.  அங்கங்கே    தோ  ,தீன்   என்று ஹிந்தியில்    அலட்டல்   வேறு. அன்று  ரசத்திற்கு  நெய்  விட்டு   சீரகம்   போட்டேன்   தாளிக்க .வெளியே  ‘சிக்கு  சிக்கு’ என்று  யாரோ   அலறுவது    கேட்டது.  அவ்வளவு தான்   ஸ்டவை  குறைத்து விட்டு   பால்கனிக்கு   ஓடினேன். (அப்பொழுது கேஸ்  கிடையாது.நிறைய  விடுகளில்    Nutan ஸ்டவ்  தான் இருக்கும். அப்பொழுதெல்லாம்   , சென்னை   சென்ட்ரலில்    G.T.  Express லிருந்து   இறங்குபவர்கள்  கையில்  இந்த ஸ்டவ்,  மோடா,  கண்டிப்பாய்   இருக்கும்     ) என் கணவர் எங்கே ஓடுகிறாய்   என்றதற்கு   பதிலே சொல்லவில்லை.  தெருவில்   பார்த்தால்  ,  வண்டியில் சப்போட்டா . உனக்கு வேண்டுமா என்றார். இல்லை ‘சீக்கு  சீக்கு ‘  என்று கேட்டது  என்றேன்  நான். அதற்குள்    பக்கத்து வீட்டுப்   பெண்மணிக்கு நான் மொழி புரியாமல்  விழிப்பது   புரிந்து விட்டது.  சிரித்துக் கொண்டார். பின்     என்னிடம்   விட்டிற்கு வாருங்களேன்      என்று   ஹிந்தியில்    சொல்ல    அது   புரிந்தது   எனக்கு. ” மே   ஆரஹா   ஹும் ” என்று  நானும்  ஹிந்தியிலேயே  பெருமையாக     பதிலுரைத்தேன்.   இன்னும்  சத்தமாக  சிரித்தார். சில  நாட்களுக்கு   பின்னர்   தான்   தெரிய வந்தது     நான்  ” ஜெண்டர் “  மாற்றிப்   பேசியிருக்கிறேன்.  என்று.  வெட்கமாக  இருந்தது.  ஆனால் நடந்து முடிந்து விட்ட  நிகழ்ச்சிக்காக    வருத்தப்பட்டு என்ன புண்ணியம்.  அதற்காகவெல்லாம்     ஹிந்தி பேசுவதை   நிறுத்த முடியுமா  என்ன? நிறுத்திவிட்டால்  டெல்லியில் எப்படி  குப்பைக் கொட்டுவது? பிரிதொரு    நாள்  பக்கத்து  வீட்டுப் பெண்மணியிடம்   என்ன சமையல்   என்று   நான்   அரைகுறை   ஹிந்தியில்   கேட்க   அந்தப்   பெண்ணோ  ‘  ரொட்டியும், மட்டர்  பனீர் ,’ ம்  என்றார். ரொம்ப  நாள்   அவர்கள்   சொன்னதை  மட்டன்   என்றும்  ,ரொட்டி   என்பதை   பிரெட்    என்றும்       நினைத்துக்  கொண்டிருந்தேன். அப்புறம் தான் தெரிந்தது   பச்சை  பட்டாணி  ,  சப்பாத்தி   என்று. தீவிரமாக  ஹிந்தியை   கொன்றிருக்கிறேன். மக்கன் (வெண்ணெய்)   மக்கான்(வீடு)   இரண்டுக்கும்   வித்தியாசம் தெரியாமல்   ‘மகன்’    என்று சொல்வதைக்  கேட்டு    நிறைய பேர்  குழம்பியிருக்கிரார்கள் . மளிகைக்  கடைக் காரர்   ‘  நமக்’  என்று சொன்னதை  புரிந்து  கொள்ள முடியாமல்   திண்டாடி   உப்பு   பாக்கெட்டை  காட்டிய  பின்  புரிந்து கொண்டேன். ஹிந்தியுடன்   நான்   போட்டுக் கொண்ட  ‘லடாய் ‘  கொஞ்சமில்லை   நஞ்சமில்லை. நான்கு    வருடம்  டெல்லியில்  இருந்திருப்போம்  என்று நினைக்கிறேன். ஓரளவு   ஹிந்தி  பேச  ஆரம்பித்தேன்  .கணவரின்   வங்கியில்   பொறுக்குமா? உடனே   பெங்களூர்    மாற்றல். மூட்டை  கட்ட   ஆரம்பித்தேன் .அப்பொழுது  முப்பது   நாட்களில்   கன்னடா  பேசலாம் புஸ்தகம்   என் கையில் இருக்க,  என்னவரோ   என்னைப்  பார்த்து  நமட்டு  சிரிப்பு  சிரித்தார்.  அதற்காக     முயற்சியை   கைவிடவில்லை. இதெல்லாம்  நடந்தது   முப்பத்தைந்து   வருடங்களுக்கு  முன்பாகத்தான். image courtesy   -  google 5 தீபாவளி 'ஆச்சா' சென்ற வாரம் வெளுத்து வாங்கிய மழையில் குடும்பத்துடன் தீபாவளீ ஜவுளிஎடுக்க மாம்பலம் சென்றிருதோம்.ஆட்டோவில் நான், என் மருமகள்,என் அம்மா மற்றும் என் ஒன்றரை வயது பேரன் (இந்த ப்ளாக்கின் கதாநாயகன்), என் மகன் மட்டும் பைக்கில்.என் கணவர் வரவில்லை என்று கூறி விட்டுNDTVல் ஐக்கியமாயிருந்தார்.மழை அப்பொழுதுதான் சற்றே விட்டிருந்தது. முதலில் ஒரு பிரபலமான கடைக்கு  சென்றோம்.எங்கு பார்த்தாலும் கூட்டம்,ஒரே தலை மயம்.இதில் எப்படி ஜவுளி எடுக்கப் போகிறோமோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே என் பேரன் ‘ஓ’ என்று அழஆரம்பித்து விட்டான்.அதனால் அங்கிருந்து கிளம்பி RMKV சென்றோம். நாங்கள் ஆட்டோவில் சர்ரென்று போய் இறங்கி விட்டோம்.என் மகன் பைக்கை பார்க் செய்ய முடியாமல் தின்டாடிவிட்டு இதை ஒரு காரணமாக வைத்து மீண்டும் வீட்டிற்குதிரும்புகிறேன் என்று போனில் சொல்லி விட்டு அவனும் NDTV பார்க்க சென்று விட்டான்.என் மருமகளின் முகத்தில் சிறிய வருத்தம் எட்டிப்பார்த்தது.ஆனாலும் எனக்காகவும் என் 72 வயது அம்மாவிற்காகவும் முகத்தில் புன்னகை மிளிற எங்களுடன் கடைக்குள் நுழைந்தாள். முதலில் அம்மாவிற்கு புடவை எடுக்கச் சென்றோம்.வாங்கியும் விட்டோம்.அழகான சில்க் காட்டனில்  கட்டம் போட்ட புடவை.அது முடிந்த பின் தான் கூத்து ஆரம்பமானது. என் மருமகளிற்காக சூடிதார் பிரிவிற்குள் நுழைந்தோம்.என் பேரன் மெதுவாக ‘ஆச்சா ஆச்சா’ என்று ஆரம்பித்தான்.(இந்த ‘ஆச்சா ‘ வார்த்தை அடிக்கடி அவன் கூறுவது ).நாங்கள்மும்மரமாக சூடிதார் செலக்‌ஷனில் ஈடுபட்டோம்.ஐந்து நிமிடம் பார்த்தான்,பெரிதாக அழ ஆரம்பிதான்.அழுகைக்கு நடுவே ‘ஆச்சா? ஆச்சா?’என்ற கேள்வி வேறு.அவன் அழுகையை நாங்கள் அடக்க முடியாமல் திணறிக்கொன்டிருந்த போது, பக்கத்திலிருந்தவரின் செல்போனில்’ஒய் திஸ்  கொலை வெறி’ ரிங் டோன் ஒலிக்க ஆரம்பித்தது.தாரை தாரை யாகவந்த கண்ணீர்,கொழு கொழு கன்னத்தில் வழிய  வழிய அழுகையை பாதியில் நிறுத்தி விட்டு, அவர் சட்டைப் பாக்கெட்டையே பார்த்துக்கொன்டிருந்தான்.அவனுக்கு பிடித்த பாட்டு.அப்பாடி என்று பெருமூச்சு விட்டோம். அப்பொழுது பார்த்து அவர் செல் போனை எடுத்துப் பார்த்துபட்டனை அமுத்தி மீண்டும் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.அவ்வளவு தான் என் பேரன் மீண்டும் முகாரி ராகத்தை விட்ட இடத்திலிருந்து பிடித்தான்.இப்பொழுது இன்னும் சற்றே உரத்த குரலில்.அந்த செல்போன் காரர் என்னவோ ஏதோ என்று திரும்பிப் பார்க்க அவரைப் பார்த்துக் கை நீட்டி ‘கொல் வென்’ ‘கொல் வென்’ என்று அதேப்  பாட்டைக்  மழலையில் கேட்க அவருக்கு புரியவில்லை. ஆனால் மிரண்டு போய் ‘இது என்னடா? துணிவாங்க வந்த இடத்தில் கொலைப் பழி விழும் போல் தெரிகிறதே என்று நினைத்திருப்பாரோ என்னவோ, குடும்பத்துடன் மெதுவாக அந்த இடத்தை விட்டு ஜனசமுத்திரத்தில் கரைந்தார். அதற்குள் இவன் கையில் டைரி மில்க்கைக் கொடுத்தோம்.சற்றே தணிந்தான்.ஒரு நிமிடம் தான்.மீண்டும்’ஆச்சா ஆச்சா’ என்று அழுகை.என் மருமகளும்,நீங்களே எதை  எடுத்தாலும் எனக்கு ஓகே தான் .நீங்கள் தனியாக வந்து எடுத்துவிடுங்கள்.என்று கூறஒரு ஆட்டோ பிடித்து ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தோம்.வீட்டிற்கு வந்தவுடன் இயல்பாகி விளையாட ஆர்ம்பித்து விட்டான். என் கணவரும்,மகனும் ,’உங்களுக்கு அவன் தான் சரி.நாங்கள் சீக்கிரம் செலக்ட் செய்யச் சொன்னால் செய்வீர்களா?  இது தான் சமயம் என்றுபழி தீர்த்து கொண்டனர். என் கணவர் நக்கல் பார்ட்டி வேறு.இப்பொழுதெல்லாம் காபி கேட்கும்போது கூட என்ன  காபி ‘ஆச்சா’ இல்லை அபினவ்  வை (என் பேரனின் பெயர்) கூப்பிடவா? என்கிறார். ஒரு விஷயம்.இன்னும் நாங்கள் ஜவுளி எடுக்கவில்லை.இந்த வாரம் செல்கிறோம்.என் பேரனையும் தான் அழைத்துச் செல்கிறோம்.அவன் இல்லாமலா! 6 தாமதத்திற்கு மன்னிக்கவும் சென்ற வாரம் பெங்களூரிலிருந்து சென்னை திரும்ப   ட்ரெயின்  டிக்கெட்  எல்லாம்   ஃபுல். தட்கலில்  புக்  செய்யலாம்  என்றால்  கிடைத்தால்  தானே! பெண்ணிற்கு  ‘ மாப்பிள்ளை ‘   கூட  கிடைத்து   விடுவார். ஆனால்  ரயிலில்  டிக்கெட்  கிடைப்பதில்லை. என்னவரோ  பஸ் பயணத்திற்கு  மறுக்க,  விமானத்திற்கு  புக் செய்தோம். பெங்களூரை விட்டு  மிக…………வும்  தள்ளி   இருக்கிறது  ஏர்போர்ட். ‘ கோரமங்களா ‘ விலிருந்து   டாக்சியில்  ஏர்போர்ட்டிற்கு   வந்த நேரம்       சென்னைக்கு   பயணித்திருந்தால் ,  சென்னைக்கு  செல்லும் தூரத்தில் கால் பாகம் கடந்திருக்கலாமே என்பது  என் அம்மாவின் அங்கலாய்ப்பு. டாக்சியை  விட்டு  இறங்கும்  போது  தான்  மீட்டரைப்  பார்த்தோம். தலை  சுற்றி  மயக்கம்  வரும்  போலிருந்தது.  விமான  பயண  டிக்கெட்டின்  விலையில்   பாதியை   டாக்சி  கட்டணமாகக்   கொடுத்தோம். ஒரு  வழியாக  ஏர்போர்ட்  வந்தோம். போர்டிங்   பாஸ்  வாங்க கவுண்டருக்கு  சென்றோம். தூக்கிப்  போட்ட கொண்டை,  லிப்ஸ்டிக்  சகிதம்   இளம்  பெண்  ஒருவர்    எங்கள்   டிக்கெட்டை  வாங்கிக்  கொண்டார். பட்டாம்பூச்சியாய்  படபடக்கும்   கண்களால்   எங்களையும்,   கணினியையும் மாறி,  மாறிப்  பார்த்தார்.  அழகிய  புன் சிரிப்புடன்   “ஃப்ளைட்  டிலேட்   பை  ஒன் ஹவர் .  ஸாரி  ஃபார் த டிலே “  என்றார். (எங்கேயிருந்து  இவ்வளவு  அழகழகான  பெண்களை   வேலைக்கு  அமர்த்துகிறார்களோ   தெரியவில்லை.) ஒரு   மணி  தானே என்றெண்ணி   அங்கேயுள்ள   ‘கேப்டேரியா’ வில்     மூவரும் ஆளுக்கு   ஒரு சமோசாவும்   காபியும்   குடித்தோம். பில் பணத்தை(கொஞ்சம்  அதிகம்  தான்)   கொடுத்து  விட்டு ,  லவுஞ்சில்  அமர்ந்தோம்.  இப்படி,  அப்படி    பார்வையை    ஓட்டினேன். குதிகால்  உயர்ந்த   செருப்பணிந்த  ஃபுல்  மேக்கப்புடன்   அலையும்   மேல்தட்டு  குடும்பத்தை   சேர்ந்த   பெண்கள்,   ஃபுல்   சூட்டில்     அலையும்   சில   பணக்கார   ஆண்கள்,    கேப்டேரியாவில்  உண்ணும்   கொழுகொழு  பணக்காரக்   குழந்தைகள் , வாக்கி  டாக்கியுடன்   அலையும்   விமான   நிலைய ஊழியர்கள் ,    மோப்ப  நாய்களுடன்   அலையும்   போலீஸ்  காரர்கள்   எல்லோரையும்   பார்த்துக்   கொண்டிருந்தேன். ‘டிஜிடல்  டிஸ்ப்ளே ‘யை   பார்த்துக்  கொண்டிருந்த  என் கணவர்   என்னிடம்  ” இன்னும்   கொஞ்ச நேரம்   கூட ‘ பராக்கு ‘  பார்த்துக்   கொண்டிரு.  நம்முடைய   ஃப்ளைட்   இரவு    பத்து  மணிக்கு   தானாம்”  என்றார். சென்னைக்கு   நடந்தே  சென்று  விடலாமா  என்று  அலுப்பு  தட்டியது.. நாங்கள்  உட்கார்ந்திருந்த   இடத்திலிருந்து  பார்த்தால்  “பார்”  தெரிந்தது. கவுண்டரில்  சில   பேர்.   வெளிநாட்டினர்   மட்டுமல்ல ,  நம்நாட்டினரும்  ஏன்  நம்மூர்   பெண்களும்  கூட  “சிப்” பிக்  கொண்டிருந்தார்கள்.  எங்கே  போய்   கொண்டிருக்கிறோம்  நாம்   என்று   நினைக்காமல்  இருக்க  முடியவில்லை. மீண்டும்  எங்கள்  ‘ ஃப்ளைட்  டிலேட்.  ஸாரி .’  என்று விசாரனை  பிரிவில்  கூற, ஒருவழியாக  பதினோரு மணிக்கு  விமானத்திற்கு   ஆயத்தங்கள்  ஆரம்பமாயின. வரிசையாக  விமானத்தின்  உள்ளே  அனுப்பிக்  கொண்டிருந்தார்கள். எங்கள் முறை  வந்தது. எங்கள்   மூவரையும்  ஒரு ஓரமாக  விமான  வாயிலிலேயே நிற்க வைத்து விட்டார்.  கேட்டால் ” சீட்  டூப்ளிகேஷன் .  ஸாரி “என்றார். எல்லாவற்றையும்   கம்ப்யூட்டிரிலேயே   செய்தால்   இப்படித்தான்   ஆகும்  என்று  என்  அம்மாவின்   புலம்பல். வரிசையாக  எல்லோரும்  உள்ளே   சென்று  கொண்டிருந்தனர் , எங்களை  ஒரு மாதிரி  பார்த்துக்   கொண்டே. ஒரு பெண்  எட்டு வயதிருக்கும்.  எங்களை  திரும்பி  திரும்பி   பார்த்துக்   கொண்டே   சென்றாள். ஹோம் வொர்க்  செய்யவில்லையோ  என நினைத்தாள்  போலும். ஒரு வயதானவர்   ஒரு படி  மேலே  போய்   அருகே நிற்கும்   விமான  ஊழியரிடம்   “எனி  ப்ராப்ளம்”?   என்று  எங்களைப்   பார்த்து  கொண்டே  கேட்டார். தீவிரவாதிகள்  என்று  நினைத்திருப்பாரோ?(அவரவர்  பயம்  அவரவர்க்கு) கொஞ்ச நேரம்  பாவமாக   நின்று  கொண்டிருந்தோம்.   ஒரு  வழியாக   சீட்  நம்பரைச்  சொல்லிவிட்டு ‘ ஸாரி  ஃபார் த  டிலே‘ என்று  சொல்லி   உள்ளே அனுமதித்தார். உள்ளே  சென்று   பார்த்தால்   பாதி  சீட்  காலி. இதற்கா  எங்களை   தண்டனை   பெற்ற   மாணவனை  போல்  நிற்க   வைத்தார்கள். அரை  மணியில்  சென்னை   வந்து சேர்ந்தோம். கிளம்பியதிலிருந்து   நிறைய  பேர்   தாமதத்திற்கு  வருந்தினார்கள். ஆனால்  எல்லோருக்கும் ‘ ஸாரி’ சொல்லும்  அந்த  அரை  நொடி  தான்  வருத்தம். எங்களுக்கோ   ஐந்து  மணி  நேர  வருத்தம்!!!!! 7 வீட்டில் விசில் [] ஒரு ஏழெட்டு வருடம் முன்பாக முதல் முறையாக பெண் வீட்டிற்கு நியு ஜெர்சிக்கு  போயி ருந்தேன்.  சென்னையிலிருந்து  இரண்டு ஃ ளைட். இந்தியாவிலிருந்து வத்தல், வடாம், புளி , பலகாரம் எல்லாவற்றையும்     இமிக்ரேஷன்  ஆபிசர் கண்ணில்படாமல் , எப்படியோ கடத்திக் கொண்டு ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தாயிற்று. வெளியே வந்தவுடன் மாப்பிள்ளை , காரில்   வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார் . வந்து சேர்ந்து விட்டேன் என்று டெல்லியில் இருக்கும்  என்னவருக்கு போனில் சொல்லியாகி விட்டது. பெண், மாப்பிள்ளை, பேரன் எல்லோருடனும் கதை  பேசி, கண்ணா பின்னா வென்று தூங்கி  ” ஜெட் லேகிங் ” கிலிருந்து  விடு படுவதற்குள்  கிட்டத்தட்ட பத்து நாள் ஆகிவிட்டது. பெண் மாப்பிளை இருவரும் வேலைக்கு போய் விடுவார்கள். ஒன்றாம் கிளாஸ் படிக்கும்  பேரன் ஸ்கூல். நான் மட்டும் தனியாக  ……..வீட்டில். தினம் பேரனை ,ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றி விடும் வேலை மட்டுமிருந்தது . பக்கத்தில்  ஐந்து நிமிட நடையிலிருந்தது  பஸ் ஸ்டாப். அப்புறம் முழு நேரமும் எப்படி போக்குவது? அப்பொழுது இந்தப் பதிவுலகம் எனக்குப் பரிச்சியமாகவில்லை. கொஞ்ச நேரம் வாக்கிங். சுற்றியிருக்கும் வீடுகளில், எங்காவது  இந்திய முகம் தெரிகிறதா, அதுவும் தமிழ் பேசுபவர்களாக  இருக்குமா.?என்றெல்லாம் யோசனை செய்தபடி இருப்பது ,மற்றும் மீண்டும் இந்தியா திரும்பும் நாளை எண்ணிக் கொண்டே இருப்பது. இதைத்  தவிர வேறெதுவும் தோன்றாது. இங்கிருக்கும் வீடுகள் எல்லாமே மரத்தால் செய்யப் பட்டவை தான்.  பல மாடிகள்  இருக்கும் .எப்படித்தான்  ஸ்ட்ராங்காக இருக்குமோ ! என்று ஆச்சர்யப்பட வைக்கும் . பல வசதிகள் இருந்தாலும் இரண்டு இந்திய பெற்றோர்கள் பார்த்துக் கொண்டு பேசினால், அவர்கள் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ளும் கேள்வி அநேகமாக “நீங்கள் எப்பொழுது இந்தியா திரும்புகிறீர்கள் “என்பது தான். நான்   அடித்த  கூத்திற்கு வருகிறேன். வீடுகள் எல்லாம் மரத்தால் ஆனதால்  எல்லோர் வீட்டிலும்” ஸ்மோக் அலாரம் ” என்று ஒன்றிருக்கும். வீட்டில் அதிகமாக புகை வந்தால் இது ஒரு விசில் சத்தத்தைக் கொடுத்து நம்மை எச்சரிக்கும். ஒரு வாரத்தில் வீடடை தோண்டித் துருவி பார்க்கும் போதே ,” இதென்ன ஏதோ ஒன்று ,குங்குமச்சிமிழைத் தலைகீழாகத் தொங்க விட்டாற்போல் தெரிகிறதே  இது என்னடி?  ”பெண்ணிடம் கேட்டேன். ஒரே வார்த்தையில்,” அது தான்  ஸ்மோக் டிடெக்டர் ” என்று சொல்லி விட்டு அடுத்த வேலைக்குப் போய் விட்டாள் . நானும் அதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.(எவ்வளவு பெரிய அவஸ்தை இதனால்  வரப் போகிறது என்று எனக்கு அப்போது தெரியவில்லை) அன்று  காலை, பெண்ணும், மாப்பிளையும்  ஆபீஸ் போன  பின்  அரவிந்தை(first  grade ) ஸ்கூல் பஸ்ஸில்  ஏற்றி விட்டுத் திரும்பும் வழியில்  தமிழ் பேசும் ஒரு  பெண்மணியை  நட்பு பிடித்துக் கொண்டு வந்து சேர்ந்தேன். வந்து, கொஞ்சம்  வீட்டை  எனக்குத் தெரிந்த வகையில் சுத்தம் செய்த பின், சன்  டி .வி. பார்த்துக் கொண்டிருந்தேன் . அப்படியே தூங்கியும் விட்டேன். திடீரென்று  தூக்கம் கலைந்தது.   கடிகாரம் மணி  ஒன்றைக் காட்டியது. பசி வயிற்றைக் கிள்ளியது. சாப்பிட டேபிளிற்கு சென்று  தட்டை எடுத்து வைத்து விட்டு ,ஊரிலிருந்து எடுத்துக் கொண்டுவந்திருந்த ,அப்பளம் பொரிக்க ஆசை வந்தது. கேசை ஆன் செய்து வாணலியை எடுத்துப் போட்டு எண்ணெய் ஊற்றி வைத்தேன். சூடாகக் காத்திருந்தேன். திடீரென்று  யாரோ விசிலடிக்கிராற்போல் ஒரு  ஊய்…சத்தம். கதவு தாழ்ப்பாள் போட்டிருக்கிரதா   என்று உறுதி செய்து கொண்டேன். புது ஊராயிற்றே. யார் …..எப்படி ….. ஒன்றும் தெரியாதே! மீண்டும் ,  ஊய்………..விசில் சத்தம் தான். இன்னும்  அதிக  ஓசையுடன்  வந்தது சத்தம். ஒன்றும் தெரியவில்லை. இது என்ன  ? நம்மூர்  விட்டலாச்சார்யா படத்தில் வரும்   மர்ம மாளிகை போலிருக்கிறதே,   இந்த வீடு என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே  ……….ஊய்…..ஊய்…….இரண்டு விசில் சத்தம். அதற்குள் அப்பளம் பொரிப்பதற்காக வைத்த எண்ணெய் புகை வீடு முழுதும் நிறைக்க ,  அவசர அவசரமாக கேசை  ஆப்  செய்தேன். அதற்குள் இந்த விசில் சத்தம் ஊய்……………………………………………………………………………………………………..தொடர்ச்சியாக  இன்னும் பெரிதாக  ………….  {காதை  கிழித்தது சத்தம்}. எங்காவது மெயின் பாக்ஸ் இருந்தால் எதையாவதுஆப் செய்து பார்க்கலாம் என்றால்  ஒன்றும் புரிய வில்லை. என்னடா இது ……..அப்பளத்திற்கு ஆசைப்பட்டு இப்படி மாட்டிக் கொண்டேனே  நினைத்தேன்.(இப்பொழுது  புரிந்தது  இது ஸ்மோக் டிடெக்டர்  சத்தம் என்று} ஜன்னலைத் திறக்கவே பயமாயிருந்தது. {சத்தம் வெளியே கேட்குமே}சரி மெதுவாக கதவைத் திறந்து ,(மறக்காமல்  வீட்டு சாவியை எடுத்துக் கொண்டு தான் )வெளியே யாராவது வருவார்களா…உதவிக்கு கூப்பிட பார்த்தேன். ஒருவர்……..யாராவது……..ம்ஹூம்………காணவேயில்லையே. (இது என்ன அமானுஷ்யமாக இருக்கிறதே) ஒன்று புரிந்தது. தருமமிகு சென்னையில் ,என் வீட்டிற்கு  ராணியாய் கோலோச்சிக் கொண்டிருந்த எனக்கு இது தேவையா? சரி. மணியைப் பார்த்தால்  3 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. அரவிந்தை அழைத்துக் கொண்டு வரணுமே  ! ஓடினேன் பஸ்  ஸ்டாப்பிற்கு. பஸ் வர காத்திருந்த பெண்மணிகளில் ,காலையில் நான் நட்பாகிக் கொண்ட பெண் மணியைப் பார்த்தேன். எனக்கு தெய்வத்தையே பார்த்தது போலிருந்தது. சிநேகமாக சிரித்துக் கொண்டே பிரச்சினையை  சொன்னதற்கு  கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல்  , நீங்கள் 911 ஐ கூப்பிடுங்கள் . ” என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். (நமக்கெதற்கு வேண்டாத வம்பு என்று நினைத்திருப்பாரோ என்னவோ ) அதற்குள் பஸ்  வந்தது  . அரவிந்தும் இறங்கினான். அவன் என் கண்களுக்கு சாக்ஷாத்   விஷ்ணுவாகவே(மைனஸ் சங்கு சக்கரம் )  காட்சியளித்தான். இறங்கியதும், அவனுடைய  பையை வாங்கிக் கொண்டு ,”அர்விந்த் 911ற்கு  போன் செய்தால் யாரடா வருவார்கள்?  உனக்குத் தெரியுமா?என்றேன். ” அய்யய்யோ ……….எதற்கு அங்கெல்லாம்  போன் செய்கிறாய். நீ ஏதாவது கஷ்டத்தில் மாட்டிக் கொண்டால்   காப்பாற்ற போலீஸ் வருவார்கள். எங்கள் ஸ்கூலில் சொல்லிருக்கிறார்கள். இப்பொழுது உனக்கு என்ன கஷ்டம். நம்மை யாராவது கடத்தப் போகிறார்களா?” என்றான் பயந்து கொண்டே.. ஓ………இது நம்ம 100 (இப்பொழுது 108) போல் என்பது ஒரு வழியாகப் புரிந்தது. வீட்டிற்குள் வந்தோம். ஊய்………………………………………………………..கொஞ்சம் குறைந்தார் போலிருந்தது. என் பெண்ணிற்கு போன் செய்து விஷயத்தை சொன்னேன். அவளோ”ஒன்றும் பயப்படாதே. நம்முடைய ஸ்மோக் அலாரம்  fire  dept  உடன் கனெக்ட் ஆகவில்லை. அப்படி கனெக்ட் ஆகியிருந்தால் ஃபயர்  என்ஜின்  இவ்வளவு நேரத்திற்குள்  வந்திருக்கும்.” என்று பயமுறுத்தி விட்டு ஜன்னலைத் திறந்து வை. அடுப்பிற்கு மேலிருக்கும் vent ஐ  ஆன் செய் .என்று கட்டளைகள்  பிறப்பித்த வண்ணம் இருந்தாள் . கொஞ்ச நேரத்தில் பீப் சத்தம் குறையும் என்றாள் .ஜன்னலைத் திறக்க எனக்குப் பயமாக இருந்தது. இதில் என் பேரன் அரவிந்த் வேறு. ” சும்மா இரு பாட்டி ஜன்னலை திறக்காதே  .இந்த சத்தம் கேட்டு  யாராவது போலிசிற்கு போன் செய்து  விடப் போகிறார்கள் “என்று மழலையில் பயமுறுத்த  ஆனது ஆகிறது  என்று ஜன்னலைத் திறந்து வைத்தேன். ஜன்னலைத் திறந்தால், மெயின் ரோடு தெரியும். காரில் போகும் எல்லோரும் எங்கள் வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். இல்லை எனக்குத் தான் அப்படித் தோன்றியதா? யாரவது போலிசிற்கு சொல்லி விடுவார்களோ? அரண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேய்  தானே! கொஞ்சம் கொஞ்சமாக புகை குறைந்ததும்  ,சத்தமும் குறைந்து ஒரு வழியாக நின்றது. அப்பாடி………என் வாழ்  நாளில் ,விசில் சத்தத்திற்கு,  இந்த மாதிரி நான் பயந்ததேயில்லை. மத்தியான சாப்பாடு இல்லாமலே ,பசி காணாமல் போயிருந்தது. காபி போட்டு குடித்தேன்  பயந்து கொண்டே தான் கேசை ஆன் செய்து காபி போட்டேன்.அரவிந்திற்கும் பால் காய்ச்சி கொடுத்தேன். கொஞ்ச நேரத்தில்  என் பெண், மாப்பிள்ளை எல்லோரும் வீடு வந்து சேர அன்றைய பொழுதிற்கு  இது தான் டாபிக். என் மாப்பிள்ளை சொன்னது” ஒரு “துண்டை” எடுத்து ஸ்மோக் டிடெக்டர் முன்னால்   ஆட்டி, புகை அண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தப் பிரச்சினை வராது ” நான் அப்பளத்தை பொரிப்பேனா. இவர்கள் வீட்டு ஸ்மோக் டிடெக்டறிற்கு ” ஃபங்கா ” போட்டுக் கொண்டு நிற்பேனா சொல்லுங்கள். ஒரு அப்பளத்திற்கே ,இத்தனை  தாஜா செய்ய வேண்டுமென்றால் தீபாவளியை நினைத்தேன்  …….கலங்கிப் போனேன். அன்றிரவு கனவில்  நீல சட்டைப்    போலீஸ்காரர்கள்  (நம்மூர் போலீஸ்காரர்களைப் போல் ஒன்றரைமடங்கு உயரத்தில், அகலத்தில், இடுப்பில் ஒட்டியானமாக வாக்கி டாக்கி, போன், கன் …  இத்யாதி…. இத்யாதிகளுடன்……..} என்னைப் பார்த்து,”  you are creating nuisance. can we take you for interrogation” என்று மிரட்ட  திடுக்கிட்டு விழித்தேன். ஒரு அப்பளம் பொரித்து  நிம்மதியாக சாப்பிட முடியவில்லை. டாலரில் சம்பாதித்து என்ன வேண்டியிருக்கு? என்ன அமெரிக்காவோ? ஊரெல்லாம் சுத்தம் தான், எல்லாவற்றிலும், ஒழுங்கு தான்,ஒரு பட்டனைத் தட்டினால் தட்டில் இட்லியும் ,காபியும்  கூட  வரவழைக்கும்  சக்தி படைத்த வாழ்க்கை வசதிகள்  உண்டு ….. ஆயிரம் இருந்தும்…இருந்தும்……..அப்பளம் கூட ……..பொரிக்க முடியவில்லையே  ! இந்தியாவிற்குத் திரும்ப மனம் கிடந்து துடித்தது. வெளியே சொல்ல முடியவில்லை. என் பெண் வருத்தப்படுவாளே  !!!!!! image courtesy–google 8 நானும் Raj Kates தான்!!! [] என்னை, திரு தமிழ் இளங்கோ , என்  முதல் கணினி அனுபவம்  பற்றி எழுதச்  சொல்லி போஸ்டர்  அடித்து விட்டார். அவர் நம்பிக்கை வீண் போகாமல் எழுத  ஆரம்பிக்கிறேன். ( வீண் போச்சா இல்லையா என்பதை நாங்களல்லவா  சொல்ல வேண்டும் என்கிற   முனகல்  கேட்கிறது) இதோ நான்  Raj Kates  (Bill Gates  மாதிரி  Raj Kates ) ஆன கதை. என மகளும், மகனும்,   பொறியியல் கல்லூரியில்  படித்துக் கொண்டிருந்த போது  கணினி வாங்கத் தீர்மானித்தோம். விலையைக்  கேட்டோம்.  மயக்கம் வராத குறைதான்.இருந்தாலும் வாங்குவது என்பது முடிவானது. மறு நாளே என் சக ஆசிரியைகளுடன்  மதிய உணவு நேரத்தில்  இதைப் பற்றி விவாதம்  .ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு  யோசனை. அப்பொழுது தான் PC க்கள் வீடுகளுக்குள்  நுழைய  ஆரம்பித்த  நேரம்.  விவாதத்தில்  வீட்டில் AC ரூமில் தான் கணினி இருக்க வேண்டும்( இல்லையென்றால் கோபித்துக் கொண்டு  போய் விடும்) என்று பரவலாக சொல்லப்பட   நான் அதை …. அன்று மாலை  ஆபிசிலிருந்து திரும்பிய கணவரிடம்  எடுத்து  சொல்ல….. அவரோ………” ஏன் ……..  ஆர்கெஸ்ட்ரா  , ஆர்ச் ,என்று எதுவும் அரேஞ்  செய்ய வேண்டாமா? “என்று  கிண்டலாக கேட்க நானோ,” நீங்கள் என்னவோ செய்யுங்கள் “என்று  முகத்தை திருப்பிக் கொண்டேன். அந்த நாளும் வந்தது.  கம்ப்யுட்டரை அன்று தான் மிக நெருக்கத்தில்  பார்த்தேன் என்று சொல்ல வேண்டும்.  அதை இன்ஸ்டால்  செய்பவர் என் மகளிடமும், மகனிடமும்   விண்டோஸ்,  லினக்ஸ் , கேட்ஸ்  என்று என்னென்னமோ  சொல்ல எனக்குத் தெரிந்தது என்னவோ ,எங்கள் வீட்டு ஜன்னலும், கதவும் தான். மறு நாளிலிருந்து எனக்கும் கணினிக்கும் ஒரு பெரிய போராட்டமே ஆரம்பித்தது.ஸ்விட்சைப் போட்டால்  என்னென்னவோ திரையில் தெரிய ஒன்றும் புரியாமல்,  பயந்து போய் சட்டென்று ஸ்விட்ச்சை ஃஆப்  செய்து  விட்டு ,ஒன்றும் தெரியாதவளாய்  கமுக்கமாக உட்கார்ந்து கொண்டே ன். அடுத்து வீட்டிற்குள் நுழைந்தது என் மகள் . அவள் ஸ்விட்சை ஆன்  செய்ததும்   ” அம்மா, இங்கே வா? எதற்கு கம்ப்யுட்டரை ஆன்  செய்துவிட்டு ஆப் செய்திருக்கிறாய். ஷட் …டவுன்  அல்லவா  செய்ய வேண்டும் .”என்று  கோபப்பட அவளிடம் என் பால பாடத்தை ஆரம்பித்தேன். “உனக்கு மவுஸ்  கோ-ஆர்டினேஷனே வரவேயில்லை “என்று அவள்  எரிச்சலாக , “கண்ணா, கண்ணா  ” என  அபயக் குரல்  நான் கொடுக்க என் மகன்  ஆஜரானானான். அவன்  ” மவுஸ்  வசப்பட    ” solitaire” விளையாடு, பிறகு மற்றதெல்லாம் கற்றுக் கொள்ளலாம். ”  என்று தகப்பன் சாமியானான் மறு நாளிலிருந்து விளையாட ஆரம்பித்தேன். இரண்டொரு நாளில்  எலி என் வசமானது  (அதாங்க மவுஸ் ) . ஆனால் ,  அதற்குப் பிறகு solitaire   என்னை விடுவதாயில்லை. வீட்டிற்கு வந்தவுடன் கம்ப்யுட்டரை  ஆன் செய்ததும், நான்  செய்வது கார்ட்ஸ் விளையாட்டு விளையாடுவது தான்.  எல்லோரும்  வீட்டில் திட்ட,  திட்ட  விளையாடியிருக்கிறேன் . என் மாமியாரோ, ” இதென்ன கூத்தால்ல இருக்கு!  அம்மாவே சீட்டாடிக் கொண்டிருந்தால் குடும்பம் உருப்பட்டு விடும் “என்று முனக  , இது  சரிப்படாது என்று விட்டு தொலைத்தேன். இதற்குள் எங்கள் பள்ளியில் சில ஆசிரியைகளை  கம்ப்யுட்டர் பயிற்சிக்கு அனுப்பி வைத்தார்கள்.  அதில் அடியேனும் ஒருத்தி. அங்கு போய்   excel, power ponit presentation  எல்லாம் கற்றுக் கொண்டு வந்தேனா? வீட்டில்  இதை பற்றி  ஒரேயடியாக  ” பீட்டர் “விட்டுக் கொண்டிருக்க, என் அம்மா அப்பொழுது,  ” நீ என்ன தான் கற்றுக் கொள்கிறாய் சொல்லேன் ?” என்றார். உடனே நான் என் கம்ப்யுட்டர் அறிவை வெளிப்படுத்தினேன். என்னவோ ஒரு பாடத்திற்கே slides  தயாரித்தேன்  என்று நீங்கள்  நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல . நான் ” WELCOME ”  என்று ஒரேயொரு வார்த்தையில் என் திறமையெல்லாம் கொட்டினேன். வார்த்தையிலிருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் ஒவ்வொரு மூலையிலிருந்து குதித்தோடி,  பல்டியடித்து , சர்ரென்று சறுக்கி  வரவைத்து  மியுசிக்குடன்   கணினியில் சர்க்கஸ் காட்டினேன். ஒரு பதிலும் வரவில்லை என் அம்மாவிடமிருந்து. என்னவென்று பார்த்தால் என் அம்மாவினால்  பேசவே முடியவில்லை.  ஆனந்தக் கண்ணீர், அருவியாய் கொட்டி, ஆறாகப் பெருகி ஓடிக்கொண்டிருந்தது. ஈன்ற பொழிதுனும்   பெரிதாக  உவந்திருப்பார் போலிருக்கிறது. இந்த அருமையான சந்தர்ப்பத்தில் என் மகளுக்கு மூக்கின் மேல் வியர்க்குமே! வந்து விட்டாள் . “என்ன பாட்டி? ஒரே  ஃ பீலிங்க்ஸ் தான் போ ! எனக்கு கொஞ்சமே கொஞ்சம்  விஷயம் தெரியும் என்று யாராவது சொன்னால்  என் மகனிற்கு பொறுக்குமா . வந்து விட்டான் அவனும்.”  இது ஒரு பெரிய விஷயமில்லை பாட்டி. நீ கூட செய்யலாம் ” என்று என்  மானத்திற்கு பங்கம் விளைவிக்க இருவரும்  முயற்சி செய்தனர். ஆனால் என் அம்மாவோ .” பரவாயில்லைடி  ! இஞ்சினீயர்  படிக்காமலே நீ இஞ்சினியர் ஆகிவிட்டாய். ” என்று பெருமையோ பெருமை. (எனக்குத் தானே தெரியும் நான் இஞ்சி நீரா , வெந்நீரா  என்று ) கொஞ்ச நாளில் அதில் ,CD போட்டு படம் பார்ப்பது, ஆடியோ CD போட்டு சினிமா பாட்டு கேட்பது  என்று ஓரளவிற்குக்  கற்று கொண்டேன். (என்னவெல்லாம்  செய்கிறேன்………என்று என்மேலேயே எனக்கு  பொறாமை ஏற்பட்டது  என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்) பின் இணைய உலகம்  புரிய  ஆரம்பித்தது.  அப்பொழுதெல்லாம் dial up  connection தான். அந்தப் பெருமை பற்றியெல்லாம் சொல்லப்  போவதில்லை. மெயில்  வந்த புதிது.  நானே தட்டுத் தடுமாறி ஒரு மெயில் ஐடி  ஆரம்பித்துக் கொண்டேன். அதிலிருந்து என் தம்பியின்  மனைவி  லதாவிற்கு  மெயில் அனுப்பி வைத்தேன். அரை மணி நேரமானது…. பதில் வந்திருக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு  ஒரு 15 நிமிட இடைவெளியில் பதில் வந்திருக்கா,பதில் வந்திருக்கா …. என்று  பார்க்க ஆரம்பித்தேன். பதில் வரும் வரை விடவில்லை. அமெரிக்காவில் இருக்கும் அவளுக்கு  ஒரு ISD கால் செய்து ” மெயில் அனுப்பியிருக்கிறேன் ” என்று சொல்லிவிடலாமா என்று கூட யோசித்தேன். (இப்பொழுதும் , ஒரு பதிவு எழுதிவிட்டு  5 நிமிடத்திற்கு ஒரு முறை யாராவது கருத்து இட்டிருக்கிறீர்களா என்று பார்க்கிறேன்.) லதா பார்த்தால் தானே! இரண்டு நாட்களுக்குப் பிறகு பதில் வந்திருந்தது. ஒரே எதிர்பார்ப்புடன் திறந்தால் “உங்களுக்கு மெயில் ஐடி இருக்கிறது என்று புரிகிறது. ஆனால் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று புரியவில்லை. எல்லாம் HTML இல்  இருக்கிறது. என்று என் மெயில் செட்டிங்க்ஸ்  மாற்ற   சொல்லிக கொடுத்து எனக்கு மெயில் அனுப்பினாள். எனக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைத்து விட வேண்டாம். இப்பொழுதெல்லாம் ஆன்லைனில்  ஷாப்பிங்,  டிக்கெட் வாங்குவது, பில்லிற்கு பணம் கட்டுவது, முக்கியமாக சினிமா பார்ப்பது  என்று  எல்லாமே இணையத்தில்  நானே பார்த்துக் கொள்கிறேன். எவ்வளவு  வளர்ந்து விட்டேன்  பாருங்கள் . எப்படி என்றால், ” இனிமேல் உன் பெயரென்ன என்று கேட்டால் கூட  கூகுலைப்  பார்த்து தான் சொல்வாய் . அது மட்டுமா , வங்கியிலிருக்கும் பணத்திற்கு வீட்டிலிருந்தபடியே  அருமையாய் உலை வைக்கவும் தெரிந்து வைத்திருக்கிறாய்  ’ என்று   கணவர் சலிக்கும்  அளவிற்கு.. ” கம்ப்யுட்டரிலேயே கதையெல்லாம் எழுதுகிறேன் என்று எல்லோருக்கும்  என் வீட்டில் ஒரே பெருமை ” என்று சொல்லிக் கொள்ள ஆசை தான். ஆனால் ஒருவரும் சொல்வதில்லை. அதனால் நானே அவர்கள் சொன்னதாக  ஒரு சின்ன பொய்……..அவ்வளவே தான். நான்  கம்ப்யுட்டரில்   Raj Kates .. ……….Raj Kates  ………. ஆகிவிட்டேன்  தானே !! நீங்கள்……………….? விருப்பமுள்ளவர்கள்  உங்கள் அனுபவங்களையும்  பகிர்ந்து கொள்ளுமாறு  அழைப்பு விடுக்கிறேன். IMAGE COURTESY—–GOOGLE. 9 மஞ்சு ஊரா.........மலேயாவா ? [] மஞ்சு ஊர் எதுவாயிருந்தால் என்ன? மஞ்சு யார்? எதற்கு அவள்  ஊரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் ? கேள்விகள் உங்கள்  மனதில்  ரீங்காரமிடுகிறதா? மஞ்சுவேறு யாருமில்லை என் மருமகள் தான்.( அவள் ஊரைப் பற்றிப் பதிவெழுதி, அவளுக்கு  நீ சோப் போட்டுக் கொள் .நீ உன் மருமகளிடம் நல்ல பெயர் வாங்க,…..  நாங்கள் தான்   மாட்டினோமா?என்று உங்கள் மைண்ட்  வாய்ஸ் சொல்வது கேட்கிறது)! இதற்குள் சிலருக்கு என் பதிவின் மேல் ஆர்வம் வந்திருக்குமே! இவள் மருமகளுக்கு எப்படி சோப் போடுகிறாள் பார்க்கலாம் என்று தானே. சக பதிவர்கள் படிக்கிறார்களோ இல்லையோ என் உறவினர் நிறைய பேர் படிக்கப் போகிறார்கள். அது மட்டும் உறுதி. சரி விஷயத்திற்கு  வருகிறேன். காலையில் சோழன் எக்ஸ்பிரஸ் ஏறினால் பிற்பகல் 1 மணியளவில் நீங்கள் மாயவரத்தில் இறங்கி விடலாம்.அங்கிருந்து பஸ்ஸில் கோமல் சென்று  விடலாம். அங்கிருந்து வில் வண்டியில் (தலை அடிபடாமல் லாவகமாக உட்கார்ந்து கொண்டு) அரை மணி நேரப் பிராயணத்தில்  ஒரு அழகான பச்சை பசேல் என்று ஒரு கிராமம் இருக்கிறது. ஓ …… இந்தக் கிராமம்தான் மஞ்சு ஊரா ஸ்டாப் !…… ஸ்டாப்!…….. இது என் பாட்டி  ஊர். போகும் வழியெல்லாம்  எழில் கொஞ்சி  விளையாடும். ஊரும் மிகவும் பெரிது இல்லை. மிகவும் சின்ன ஊர். ஒரே தெரு தான். ஊருக்கு எல்லையாக இரு அழகான கோவில்கள். கரெக்ட்…………. நீங்கள் நினைப்பது போல் பாரதிராஜா படத்தில் வரும் கிராமம் போலவே இருக்கும் இந்த ஊர். உறவினர்கள் போல் பழகும் மனம் கொண்ட மக்கள் . ஒரு வீட்டில்  விசேஷமென்றாலும் ஊரில் யார் வீட்டிலும், அவர்கள்   சமையலறை கதவு திறக்காது. அப்படிப்பட்ட ஊரிலிருந்து ,எங்கள் பாட்டி  சென்னையில் ,எங்கள் வீட்டிற்கு  வந்திருந்தார். வந்து குளித்து சுடசுட இட்லியும், சட்னியும் சாப்பிட்டு விட்டு வெளியே பால்கனி பக்கம் வந்தார். ” இது என்ன? பணத் தோட்டமா? படிக்கும் நீங்கள் நான் பணத்தாலேயே தோட்டம் போட்டிருக்கிறேன் என்று நினைத்து விடப் போகிறீர்கள்……..இல்லையில்லை…..(நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நினைவிலாவது நான் பணத்தால் தோட்டம் போடுகிறேன்) ” பணத் தோட்டமா……..” நான்” ஆ ”  வென்று வாய் திறக்க பின்னே இந்த கொடிக்கு என்ன பெயர்? என்றார். ” money plant ” அதெல்லாம்  தெரியாது. இதற்கு அழகான தமிழ் பேர் ” பணத்தோட்டம் ” என்று சொல்லி விட்டுப் போய் விட்டார. ராஜி. ” நாளைக்கு  நல்லியிலோ ,குமரனிலோ எனக்கு  புடவை வாங்க வேண்டும் .அப்படியே சரவணபவனுக்கும் சென்று வரலாம் என்று  itineryஐ  வாயால் சொன்னார். சரி, நாளைக்கு என்னுடைய ராசியில் என்ன போட்டிருக்கோ தெரியலையே என்று நினைத்துக் கொண்டே படுக்கப் போனேன். பாட்டியின் தமிழுக்கு நாங்கள் அடிமை. ஷெல்ப் என்பதை அலமாரி. மேஜை, நாற்காலி, மூக்குக் கண்ணாடி, கூடம், காமிரா  அறை ,  வாளி,தாழ்வாரம்.. ,…….என்று அழகழகாய்  தமிழ் கொஞ்சும். கீழே உட்கார் என்பதை  தாழ  உட்கார்ந்து கொள்  என்று சொல்வது மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும். மறு நாள் குமரனில் புடைவை எடுத்து விட்டு அங்கு இருக்கும்,  விற்பனை ஆட்களை, தம்பி என்று அழைத்து  உறவு கொண்டாடி, பக்கத்தில், புடைவை எடுக்க வந்திருந்த ,யாரோ ஒருபெண்மணியிடம்  ”எனக்கு இந்த கலர் நல்லா இருக்குமா ” என்று  எந்தத் தயக்கமுமில்லாமல்  கேட்டு, ஒரு வழியாய்  MS blueவில்  அரக்கு பார்டர் போட்ட , அழகான பட்டுப் புடைவை எடுத்துக் கொண்டு விட்டார். எல்லோருமாக  சரவணபவனிற்கு  படையெடுத்தோம். நான், என் பையன்,பெண் ,  எல்லோருமாக. என் அன்பிற்குரியவருக்கு , இந்த மாதிரி ஷாப்பிங் எல்லாம் ஜுஜுபி  மாதிரி. அவர் பெரிய அளவில் யோசிப்பவர். ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருவதைப் பற்றிய கவலையுடன், எல்லா சானல்களிலும்  வரும் செய்திகளைப் பற்றித்  தெரிந்து கொண்டிருந்தார். சரவணா பவனில் உட்கார்ந்து  ஜில் தண்ணியை ஆளுக்கு ஒரு மடக்குக் குடித்தோம்.அதற்குள் ஆர்டர் எடுப்பவர் வந்தார். பாட்டிக்கு தோசையும் , எங்களுக்கு வட இந்திய உணவு வகைகள்  ஆர்டர் செய்தோம். சர்வர் எல்லாவற்ரையும் டேபிளில் வைத்தார். பாட்டி எங்கள் பக்கம் திரும்பவேயில்லையே! இதையெல்லாம் சாப்பிட்டால் உடம்பிற்கு வந்தால் என்ன செய்வது என்கிற பயமாம். சாப்பிட்டு  விட்டு காபி  ஆர்டர் செய்ய……… காபியும் வந்தது. ” காபி ரொம்ப நல்லாயிருக்கு ” என்று பாட்டி சொல்லிக் கொண்டே ,”தம்பி….” என்று கூப்பிட  என் பையன் கலவரமானான். ” கொஞ்சம் சும்மாயிருங்களேன் பாட்டி ! ” என்று நான் சொல்லி முடிப்பதற்குள் இவர் கூப்பிட்ட அந்த  சூப்பர்வைசர் கிட்டே வந்து,”ஏதாவது வேணுமா பாட்டி” என்று கேட்க, ” ஆமாம் நீ  மஞ்சு  ஊர் தானே  ”என்று கேட்க  என்மகன் குழம்ப, அதைப் பார்த்து என் பெண் ” களுக் “என்று சிரிக்க எனக்கோ ஒன்றுமே புரியவில்லை. எங்களை விட  சூப்பர்வைசர் இன்னும் அதிகமாய் குழம்ப , இந்தக் குழப்பம் தீருவதற்குள் ,” நீங்கள் மலேயாவா ……. ”  என்று இன்னும் ஒரு  கேள்வி. சூப்பர்வைசரோ  பாட்டியை ஒரு மாதிரி பார்க்க , நான்   ,”ஒன்றுமில்லை, உங்களை வேறு யாரோ என்று பாட்டி நினைத்து விட்டார்கள் ” என்று சமாளித்தேன். ஆனாலும் என் பையன் முகத்தில் எள்ளும் கொள்ளும். வீடு வந்து சேர்ந்தோம்.. என் பெண் ஆரம்பித்தாள் . “பாட்டி எதற்கு அவரைப் பார்த்து மஞ்சு ஊரா, மலேயாவா  என்றெல்லாம் கேட்டே  ?” என்னவரோ  டிவியை ஆப் செய்து விட்டார். ரூபாயாவது மதிப்பாவது. அதை நம் நிதியமைச்சர் பார்த்துக் கொள்வார்  என்று நினைத்து  எங்கள்  பஞ்சாயத்தை  ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்தார், ” நான் எங்கே சொன்னேன். அந்த ஆள் தான் சொன்னார். அதைத் தீர விசாரிப்பதற்குள்  தான் நீங்கள் என்னை இழுத்துக் கொண்டு வந்து விட்டீர்களே” என்று குறைபட்டார் பாட்டி. வாழைப்பழ ஜோக்கில்  வரும் கோவை சரளா மாதிரி    என் பெண் திரும்பவும் ஆரம்பித்தாள், “பாட்டி நான் கேட்ட வரைக்கும்  அப்படி ஒன்றும் சொல்லவில்லையே!பாருங்கள் கணேஷை டென்ஷன் ஆக்கி விட்டீர்கள் “- இது என் பெண். ” நான்  தப்பா ஒன்னும் கேட்கலையேடா ” என்று என் பையனைப் பார்த்துப் பாவமாக சொல்ல , தொடர்ந்து என்னைப் பார்த்து,” நீ ஆர்டர் குடுக்கும் போது தானே சொன்னார்” என்று சொல்ல ,” இது ஏதடா வம்பு “  என்று நினைத்துக் கொண்டேயிருக்கும் போது  என்னவர் ,”என்னை விட்டுவிட்டு சாபிட்டால் இப்படித்தான்” என்று பழி தீர்த்துக் கொண்டார்.(அதற்கு இதுவா நேரம்) நீ  எனக்குத் தோசை சொல்லி விட்டு  உங்கள் ஐட்டங்கள்  சொன்னாயே , அப்பொழுது தான் அவர்,” நான்,,மஞ்சு  ஊர் , மலேயா”  என்று சொல்லிக் கொண்டே தானே எழுதிக் கொண்டிருந்தார். அதை கேட்க விட்டீர்களா நீங்கள்” பாட்டி . ” ஓ ” என்றான்  என் பையன் ” பாட்டி அது மஞ்சு ஊருமில்லை.மலேயாவுமில்லை. ” நான்..”… ” மன்ச்சூரியன் ” மலாய்  கோப்தா ” எல்லாம் நாங்கள் சாப்பிட்ட ஐட்டங்கள்  என்று கணேஷ் சொல்ல, எனக்கும், என் பெண்ணிற்கும்  சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்தால் கோபம்  வரும் பாட்டிக்கு. ரொம்பக் கஷ்டப்பட்டு  சிரிக்காமல் இருந்தோம். அது என்னவோ போங்க! ஒன்னும் புரியல  என்று அலுத்துக் கொண்டார்.அவருக்கு அது என்னமோ  நிஜமாகவே ஒண்ணுமே தான் புரியல. ஆனால் அடுத்த  முறை போகும் போ து எனக்கும் மஞ்சூ ஊரை வாங்கித் தரனும்  என்று உறதி   செய்து கொண்டார். ” நீ கவலயே படாதே பாட்டி மஞ்சுவுடனேயே வந்து  சாபிடலாம் “என்று நான் வாக்குக் கொடுத்தேன். மஞ்சு வரட்டும்  அவளையும் அழைத்துக் கொண்டு  பாட்டியையும் அழைத்துக் கொண்டு போய் மன்சூரியன்  சாப்பிட்டு விட வேண்டியது தான்.தீர்மானித்துக் கொண்டேன். என்பெண்ணும், பையனும், ” எங்களை விட்டு விடுங்கள் . நீங்கள் ஹோட்டலுக்குப் போகும் அன்று உபவாசம் இருக்கப் போகிறோம் “என்று கோரஸ் பாடினார்கள். image courtesy–google. 10 நானும் டென்னிஸும் [] அன்று காலை எப்பொழுதும் போல் காலை டிபனிற்கு இட்லியும், கொத்தமல்லி சட்னியும் செய்து டேபிளில் வைக்கும் போது , ” அடடா சட்னி தாளிக்கவில்லையே! ” கவனித்தேன். கேஸில்,  இருப்புக் கரண்டி ,போட்டு விட்டு  ,கடுகு பாட்டிலை அலமாரியிலிருந்து எடுக்க கையை உயர்த்த  வலது முழங்கையில்  ’ பளிச் ‘ வலி. கண்ணை மூடி வலியைப் பொறுத்துக் கொண்டேன். ‘ எங்கேயாவது இடித்துக் கொண்டோமோ ‘ நினைத்துப் பார்த்ததில் ஒன்றும் புலப்படவில்லை. அன்றைய பொழுது கழிந்தது. ஆனால் வலி அதிகமாகிக் கொண்டே போனது மட்டும் புரிந்தது. இரவு படுக்கும் முன் ஒரு  வலி நிவாரணி மாத்திரை முழுங்கி விட்டுப் படுத்துக் கொண்டேன். காலை எழுந்ததும் ,பல் விளக்கும் போதே முழங்கை வலி,”நீ  வலி நிவாரணி சாப்பிட்டால்…….நான் போய் விடுவேனா  என்ன  ” என்பது போல்  , அதிகமாயிருந்தது. சரி, இனிமேல் சும்மா இருப்பது  சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வதற்கு சமம் ,என்பதை  உணர்ந்து எங்கள் குடும்ப நல மருத்துவரை அணுகினேன். இதில்  நான் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று ஒரு எலும்பு சிகிச்சை மருத்துவரிடம் என்னை அனுப்பினார். போனில் மாலை  ஏழு  மணிக்கு அப்பாயின்ட்மென்ட்  வாங்கிக் கொண்டு சென்றேன். டாணென்று ஆறேமுக்காலுக்கு  அவருடைய கிளினிக்கிற்குப் போனால்  மிகப் பெரிய கும்பல். இது என்னதிது?  கிளினிக் தானே. இதென்ன  இவ்வளவுக் கும்பல். சரி. நமக்கென்ன நாம் தான்  அப்பாயின்ட்மென்ட் எல்லாம் வாங்கியிருக்கோமே! இவர்களெல்லாம் வாங்காமல் வந்திருப்பார்கள் என்று சவுடாலாக நினைத்துக் கொண்டு  ரிசப்ஷனிஸ்ட்  அருகே போய் நான் வந்திருப்பதை சொல்லி  ஏழு மணிக்கு  அப்பாயிண்ட்மென்ட்  என்று சொன்னவுடன். ரிஷப்ஷனிஸ்ட்  கடுகடுவென்று  .” இவங்களைப் பாருங்கள்  இவங்களுக்கு மாலை 3  மணி  அப்பாயின்ட்மென்ட்  . இன்னும் டாக்டரைப் பார்க்கவில்லை என்றதும் கொஞ்சம் மலைத்துப் போனேன். அந்தக் கும்பலில் நானும் ஐக்கியமானேன். நான் டாக்டரைப் பார்க்கும் போது மணி ஒன்பது. நல்ல சிரித்த முகத்துடன், ‘என்ன பிராப்ளம் ” என்றார். நான் என் வலது முழங்கையில் வலியிருப்பதை  சொன்னதும். அருகில் வைத்திருந்த  ஸ்டீல் சுத்தி போல் இருந்த ஒன்றை  எடுத்து மெதுவாக  என் கை விரல்களைத் தட்ட ஆரம்பித்தார். ” டாக்டர், எனக்கு  முழங்கையில் தான் வலி ” என்று  சத்தமாக சொன்னதும் , தட்டுவதை நிறுத்தி விட்டு என்னைப் பார்த்தார். ” நான் டாக்டரா இல்லை நீ டாக்டரா ? ” என்பது போல் இருந்தது பார்வை. முழங்கை  வலி என்று வந்தால் இவர் விரலையும் உடைத்து விடுவார் போல் தெரிகிறதே என்று நினைத்தேன். எத்தனை மாணவிகளுக்கு  இம்போசிஷன் கொடுத்தேனோ ! தெரியவில்லையே. அந்தப் பாவம் தான் டாக்டர் ரூபத்தில் வந்து பழி தீர்த்துக் கொள்கிறதோ  என்று  தோன்றியது ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாது. பத்திரமாக நம் கையையும் விரல்களையும்  விடுவித்துக் கொண்டு சென்று விடுவோம்.என்று முடிவெடுத்தேன். எல்லா விரல்களையும் தட்டிப் பார்த்து சப்த ஸ்வரங்கள் கேட்கிறதா  என்று பார்க்கிறாரோ  என்று  நினைத்தேன். (இதைத் தான்”  இடுக்கண் வருங்கால் நகுக ” “என்று வள்ளுவர் சொன்னாரோ!) ஒருவழியாக சுத்தியலை கீழே வைத்து விட்டு  மருந்து எழுத  ஆரம்பித்தார். நான் டாக்டருக்குப் படிக்கவில்லை . ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அதுக்காக என் கைவலியைப் பற்றி  கொஞ்சமாவது என்னிடம் சொல்ல மாட்டேனேன்கிறாரே என்று யோசிக்கும் போது  டாக்டர்  திருவாய் மலர்ந்தார். “” உங்கள் வலி வந்து…………. ” ” ஆயர்பாடி மாளிகையில்……..” செல்போன் இடை மறித்தது. போனிற்கு  முதலுரிமை., காதருகில் கொண்டு போய்  . ஹலோ  என்று சொல்லிக் கொண்டே ..என்னைப் பார்த்து ” Denniss ……..” என்று சொல்ல Deniss என்பவர் பேசுகிறார் போலிருக்கிறது என்று நான் நினைக்கும் போதே. போனை கைகளால் மூடிக் கொண்டே  . என்னைப் பார்த்து  அழுத்தந்திருத்தமாக  இது ” டென்னிஸ்  எல்போ “என்று சொல்லி விட்டு போனில் பேசத்தொடங்க  நான் குழம்பினேன். அது என்ன” டென்னிஸ் எல்போ ?” டென்னிஸ்  விளையாட சொல்கிறாரோ  என்று தான் முதலில் நினைத்தேன். இந்த  வயதிற்கு மேல் டென்னிஸ்  ஆட முடியுமா? இது என்ன தொல்லை  என்று நினைக்கும் போதே  அவர் அவ்ருடைய லெட்டர்  பேடில்  எதையோ எழுதிக் கொடுத்து  போனை விட்டுக் கொடுக்காமலே  வேறு ஒரு அறையைக் காட்டி சைகையாலேயே போகச் சொன்னார். கொஞ்சம் என்னிடம்  விளக்கமாக சொன்னால் தான் என்ன என்று ஒரு சின்ன கோபம் வந்தது டாக்டர் மேல்.. சரி. உரலுக்குள் தலையை விட்டாகி விட்டது. ரொம்பவும் இடிபடாமல்  எடுத்துக் கொண்டு போய் விடுவோம் என்றெண்ணி  அடுத்த அறைக்கு சென்றேன். அங்கே ஒரு இளம்பெண்  வெள்ளைக் கோட் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார். என் பேப்பரை கையில் வாங்கிப் பார்த்து விட்டு , ஒரு கனத்தத் துப்பாக்கி  வடிவில் ஒன்றை எடுத்து அதில்  பேஸ்ட் போல் எதுவோ ஒன்றை  அப்பி  என் கையில் வைத்து சர் சர் என்று சுத்தி  மசாஜ் செய்ய வலி கொஞ்சம் குறைந்தது. மெதுவாக அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தேன். ” இந்த வலி  எனக்கு எதனால் வந்தது?” ” இதற்குப் பெயர் டென்னிஸ்  எல்போ” . “அப்படின்னா……. “இது நான். “டென்னிஸ்  வீரர்களுக்கு  வரும் வலி.” ” டென்னிஸ்  வீரரா…    நானா………..”( நினைக்கும் போதே சிரிப்பு வந்தது) “நான் ஒன்றும் டென்னிஸ் விளையாடுவதில்லையே  .” “டென்னிஸ் வீரர்களுக்கு மட்டுமல்ல,  இப்பொழுது நிறைய பேருக்கு வருகிறது “என்று சொல்லி விட்டு  தன வேலையைத் தொடர்ந்தார். நான் விடுவேனா? “இது எதனால் வருகிறது? ” மீண்டும் நான். நல்ல வேளை அந்தப் பெண்ணிற்கு கோபம் எதுவும் வரவில்லை. முழங்கைக்கு  அதிக  பளு கொடுத்தாலும் வரும். ” நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் ” என்று அவள் கேட்க. நான் என்ன செய்கிறேன்? ” எல்லோரும்செய்வது தான். வீட்டில் எல்லோருக்கும்  சமைப்பது , காபி போடுவது……..மிச்ச நேரத்தில்   நெட் வலம் வருவது .” “அதனால் கூட   வந்திருக்கும்.” ” எதனால்   ….”ஆர்வமானேன். “உங்கள்  கம்ப்யுட்டரை  சரியான உயரத்தில் , கைக்கும்  சௌகர்யமான இடத்தில்  இல்லையானால் கூட வரும்” என்று அவர் சொல்ல புரிந்தது. சமைக்கும் நேரம் தவிர,  மற்ற நேரம் பூராவும்  லேப்டாப்பும் கையுமாக அலைந்தால்  இப்படித் தான்  வலிக்கும் போலிருக்கிறது  என்று தோன்றியது. வீட்டிற்கு வந்து, இனிமேல்  நம் வலை  உலாவை  கொஞ்சம்  குறைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன். முடியுமா  ? சாப்பிடாமல்  கூட இருந்து விடலாம். இன்டர்நெட் வலையில்  மாட்டிக்  கொண்ட  நான் அதிலிருந்து விடுபடுவது மிகவும்   கஷ்டமாச்சே  ! ஆனந்த விகடனில் படித்தது  நினைவில்  மோதியது. சென்ற மாதத்தில்  ஒரு வாரம் ஜப்பானில் ” நெட்  ஃபாஸ்டிங்  ” என்று செய்திருக்கிறார்கள். அவர்கள் செய்தது இளம் தலைமுறையினர்  இணையத்தை விட்டு வெளியே வந்து  ,நண்பர்கள் உறவினர்கள் என்று பழக வேண்டும் என்பதற்காக. நம்மால் முடியுமா? முடியாது என்றே தோன்றுகிறது. நண்பர்களை சந்தித்து உரையாடுவதே  வலையில் தானே. அதெல்லாம்  சரி. கைவலிக்கு என்னதான் தீர்வு என்கிறீர்களா? தினம் சிறிது நேரம் கணினியைத் தனிமையில் இனிமை காண  விடுவது தான். என்னால் அப்படி விட  முடியுமா? முயன்று பார்க்க வேண்டும். image courtesy—-google. 11 குடைக்குள்.................. [] குடைக்குள்  குழல். இது என்ன குழல் ?……… கோவர்த்தனகிரி  பற்றியோ? இல்லை மாயக் கண்ணனின் புல்லாங்குழலா?  வேய்ங்குழலா?…..என்று யோசிக்க  வேண்டாம். நானே….நானே சொல்லி விடுகிறேன்……. தேங்குழல் . என்னவர் கொஞ்சம் ” நொறுக்ஸ் ” பிரியர்  . அவருக்காக  என்ன முறுக்கு செய்யலாம், என்று யோசித்ததில்  சட்டென்று  மின்னலடித்தது ,போன வாரம் தேங்குழல்  மாவு  மெஷினில் அரைத்து வைத்தது  பற்றிய  நினைவு . காலரைக்காபடி  மாவு எடுத்து , கச்சிதமாய் எள்ளு சேர்த்து , பெருங்காயம், உப்பு, சேர்த்து   பிசைந்து  முறுக்கு அச்சில்  போட்டு  எண்ணெயில் பிழிய  ஆரம்பித்தேன். ஒவ்வொரு தேங்குழலும்  என்னை எடுத்து விடேன் என்று கெஞ்சுவது போல்  குதித்து,குதித்து  மேலே வந்து   வந்து  தான் வெந்து விட்டதை பறை  சாற்றியது. அதை எடுத்துக் கொண்டிருக்கும் போதே  என்னவர் வந்து  ஒரு முறுக்கு  சுடச்சுட  எடுத்து வாயில் போட்டு “தேங்குழலென்றால்  அது நீ செய்தால் தான்  சுவை……. கர கரவென்று  என்று  வாயில் போட்டவுடன்  கரைகிறது “எனக்கு    பட்டம்  அளித்து விட்டு சென்றார். இது இன்றைய நிலைமை. சில பல  வருடங்களுக்கு முன்பாக ………..இருங்கள்……… உடனே பத்தொன்பதாம்  நூற்றாண்டில்  என்று நினைத்துக் கொண்டு என்னை வயதானவளாக்கி விடப் போகிறீர்கள். முன்பே  ஒரு பதிவில் சொன்னது போல் , இளமையின் வாயிற்படியில்  நிற்கும் பாட்டி நான். ஜஸ்ட் , முப்பத்தைந்து  வருடங்கள் முன்பு நடந்தது  நினைவிற்கு வந்து முகத்தில் புன்னகையை வரவழைத்தது. திருமணமாகி  இரண்டு வருடமிருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு நாள் இப்படித் தான்  தேங்குழல்  செய்கிறேன் பேர்வழி என்று ஆரம்பித்தேன் அப்பவே என்னவர் ” எதற்கு ரிஸ்க்  எடுக்கிறாய். நான் வேண்டுமானால் கடையிலிருந்து  வாங்கி வந்து விடுகிறேனே” என்று  சொல்ல , எனக்கும்  சரி  என்று சொல்ல ஆசையிருந்தாலும் , என் சுயமரியாதை  என்னாவது  ” எல்லாம் எனக்கு செய்யத் தெரியும்.நான் செய்து கொடுக்கிறேன் பாருங்கள் ” என்று வீறு கொண்டு எழுந்தேன் “எப்படியோ போய்த் தொலை “  என்று சொல்லி விட்டு  அவர் ஆபிசிற்கு சென்று விட  ,அன்று மாலையே  ………(விதி  சமையலறையில் புள்ளி வைத்து கோலம் போட்டு  விளையாடப் போவது   தெரியாமல்)  தேங்குழல்  பிழிய  ஆரம்பித்தேன். அதன்  விளைவு……அவர்  மட்டும் தான் மாட்டிக் கொண்டார் என்று இது நாள் வரை  நினைத்திருந்தேன்.இப்பொழுது  தான் புரிகிறது . நீங்களும்    கூட  என்னிடமிருந்து தப்பிக்க வில்லை என்று.(பதிவாக்கி விட்டேனே அதை சொல்கிறேன்.) அரிசியையும், உளுத்தம்பருப்பையும் சரியான  விகிதத்தில்  சேர்த்து ,அம்மா அரைத்து கொடுத்திருக்கிறார்களே.  இதில் என்ன பெரிய  டெக்னிக்  இருந்து விடப் போகிறது  என்ற அசால்ட்டுடன்   வேலையை ஆரம்பித்தேன். (இந்த  ” நினைப்பு தான்  பிழைப்பைக் கெடுக்கும்  ”என்று சும்மாவா  சொன்னார்கள்  ). சுடச்சுட  காபி ஒன்றைக் குடித்து விட்டு , அரைப்படி மாவு   எடுத்து  பாத்திரத்தில் போட்டு விட்டு,  இதில் எவ்வளவு உப்பு போடலாம்  என்று  யோசனையான யோசனை செய்து ( what’s app இல்லை, skype இல்லை, இ  மெயில் இல்லை,  செல்போன்  இல்லை, ஏன்  வீட்டில்  டெலிபோன் வசதி  கூட  இல்லாத  காரணத்தால் )  நானே  முக்கியமான முடிவை எடுத்தேன்.(அதாங்க  எவ்வவளவு உப்பு என்கிற முடிவு)  கண்ணளவு  உப்பு ,பெருங்காயம்,  எள்ளு சேர்த்து  தண்ணீர் விட்டுப் பிசைந்து  முறுக்கு அச்சில் போட்டு  துளியூண்டு  மாவு எடுத்து , எண்ணெயில் போட்டு  காய்ந்திருக்கிறதா  என்று பார்த்தேன்.(இதெல்லாம் சரியாக செய்து விடுவேன்) பின்  பிழிய  ஆரம்பித்தேன்……..ம் ம் ம் ம் ம் ……..அழுத்தினதில்   அச்சே உடைந்து விடும் போல் இருக்கிறது. ஆனால் தேங்குழல்  வரவில்லை. கொஞ்சமாய் சிறிது தண்ணீர் கலந்தேன்.   . ஆனால் மாவு  கொழ கொழ  என்றாகி விட்டது. சரி, கொஞ்சம்  மாவு போட்டால் கெட்டியாக்கி விடலாம்  என்று கொஞ்சம் மாவு சேர்த்தேன். இப்படி குரங்கு,அப்பம் கதையாய் ,  ஒரு வழியாய்  மாவை சரி செய்து பிழிய ஆரம்பித்தேன்.  நன்றாக அழகாய்  சிறு சிறு  முறுக்குகளாய் வந்தது. பார்க்க மிக மிக அழகாய்  மேலெழும்பப் பார்த்தது. திடீரென்று  ”பட் ”  என்று ஒரு சத்தம். என்னவென்று திரும்பிப் பார்ப்பதற்குள்  அடுத்த” பட்  .” கொஞ்ச நேரத்தில் மீண்டும்” பட் …… பட்……..  பட் “. தேன்குழல்  தான்  ஊசி பட்டாசாய்  வெடித்துக் கொண்டிருந்தது. பயத்தில்  என்ன செய்வதேன்றே  தெரியவில்லை. சரி சட்டென்று  ஸ்டவ்வை குறைத்தேன். வீட்டில் வேறு யாருமில்லை. திரு…..திரு… முழியுடன்  சமையலறையில்   நான்……. ஒரு வேளை மாவு ஊற   வேண்டுமோ?  . ஒரு பதினைந்து நிமிடம்  கழித்து  மீண்டும் இந்த  வேலைக்குத் திரும்பினேன். மீண்டும் “பட் ……பட் …….பட் …….”. இதற்குள் சமையலறை முழுவதும்  எண்ணெயில் புள்ளியாய் .(கோலம் தான் பாக்கி) எங்கே காலை வைத்தாலும்   ஒரே” பிசுக் பிசுக் “. எப்படியும் இத்தனை மாவையும்  முறுக்காக்கி தானே  ஆக வேண்டும். வீணாக்க  மனம் வரவில்லை/ என்ன தான் செய்வது? யோசித்தேன். எண்ணெய்  தெளிக்காமல் இருந்தால் போதும். என்  மாமனாரின் ‘ மான் மார்க் ‘ குடை  நினைவிற்கு வந்தது. சட்டென்று அதை எடுத்து பிரித்து  என்னருகே வைத்துக் கொண்டேன். பின்  முறுக்கு  பிழிந்தேன். என்னிடமா வேலை காட்டுகிறாய்………தேன்குழலே ……என்று  குடையை வாணலிக்கு மேல் உயரத்தில்  பிடித்துக் கொண்டேன். இப்பொழுது சுளீரென்று  என்கையில் ஒரு சொட்டு . ஆனால்  சமையலறை  சுவர், தரை  எல்லாம்  ஓரளவிற்கு தப்பியது.(மான் மார்க் குடை காரர்களுக்கு இது தெரிந்தால்  தேங்குழல்  செய்யப் போகிறீர்களா? வாங்குங்கள் எங்கள் மான் மார்க் குடையை என்று  விளம்பரப் படுத்தியிருப்பார்கள்).) அப்புறம் கையில் ஒரு துணியை சுற்றிக் கொண்டு ,குடையைப் பிடித்துக் கொண்டு  ஒரு பாதி மாவை  முறுக்காக்கி விட்டேன். எனக்கே என்னைப் பார்க்க  பாவமாய் இருந்தது. ” டிங்…டாங் ” என்னவர் வருகை. ” ஒரே வாசனை அடிக்கிறதே  தேங்குழல்  செய்து விட்டாயா?”என்று கேட்டுக் கொண்டே  சமையலறைப் பக்கம் எட்டிப் பார்த்து   ”இதென்ன குடை  சமையலறைக்குள் ” என்று கேட்க  நான் என் சாதனைப் பற்றி சொல்ல அவர் விழுந்து  ,விழுந்து ,சிரித்தது இன்றும் பசுமையாய்  நினைவில் வந்து மோதுகிறது. இன்னும் மாவு பாக்கியிருக்கிறதா  என்று எட்டிப் பார்த்து   விட்டு “நான் உனக்கு ஒரு ஐடியா  கொடுக்கிறேன். “என் ஸ்கூட்டர்  ஹெல்மெட்  போட்டுக் கொண்டு கையில் கிளவுஸ்  போட்டுக்கோ  குடையையும் பிடித்துக் கொள் .” நீ, சமையலறை, தேங்குழல் எல்லோருக்கும்  சேஃப்டி  , பார்க்கவும்  ராணி ஜான்ஸி மாதிரி வீராங்கனையாக இருப்பாய் . என்ன கேடயம் தான் இல்லை “என்று நக்கலடிக்க  எனக்கோ கண்ணீர்  முட்டிக் கொண்டு எட்டிப் பார்த்தது. ஒரு வழியாய்  தேங்குழல் ப்ராஜெக்ட்  முடித்தேன். இந்த கலாட்டாவில் ஒன்று சொல்ல மறந்து விட்டேன். கண்ணளவு உப்பு போட்டிருந்தேன்..அது  கண்ணளவு இல்லை ,இம்மியளவு  தான் என்று  பரிந்தது. ஆனால்  ரொம்ப லேட்டாகத் தான் தெரிந்தது.அவர் தானே சாப்பிடப் போகிறார். நான் ஏன் சாப்பிடுகிறேன்?எனக்கென்ன தலையெழுத்தா? அதற்குப் பிறகு தான் கிளைமாக்ஸ் வருகிறது.  . என்  கணவர்  சும்மாவா இருப்பார். அடுத்த வாரமே  ஒரு விசேஷத்திற்காக  ஊருக்குப் போகும் போது. குடைக்குள் தேங்குழல் பிழிந்த கதை  எல்லோருக்கும்  நோட்டீஸ் அடிக்காத  குறை தான். எல்லோரும் என்னைப் பார்த்ததாலே,  தேங்குழல் பற்றி விசாரிக்க  ஆரம்பித்தார்கள். ” இப்ப எப்படி ராஜி? தேங்குழல் வெடிக்குதாடி  இன்னும் ? ” இது  இந்து  சித்தி ”  தேங்குழல் பிழிவதாக  இருந்தால் என் தம்பி  ஆபிசிற்கு  சென்ற பிறகு செய் . ” இது…….தம்பி மேல் கரிசனம் காட்டும்  அக்காவின்  குரல்.( ம்க்கும்……) ” அக்கா …..எனக்கும் சொல்லிக் கொடேன் . என்ன குடையெல்லாம்  உபயோகிக்கலாம்” இது என் மாமா  பெண்,  குழலியின்   கிண்டல். பல வருடங்களுக்குத் தொடர்ந்தது.. நல விசாரிப்புடன்.  தேங்குழல்   விசாரணையையும்   முடுக்கி விடுவார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இப்பவும்  சுமார் ஐந்து  வருடங்கள் , முன்பாக அறுபது  வயதான உறவுப் பெண்மணி தன்  மருமகளிடம் என்னை அறிமுகப் படுத்தும் போது ,”நான் சொன்னேனில்லை சமயோசிதமாக  யோசித்து வேலை செய்வாள். தேங்குழல்  எண்ணெயில் பிழிந்தவுடன் வெடித்தது  என்று     குடை பிடித்தாள் .”என்று சொல்ல , அந்தப் பெண்ணோ  ,”தேங்குழலிற்குக்……………..குடையா ……………” என்று  கேட்க    நான் அந்த இடத்தில்  ஏன்  நிற்கிறேன் சொல்லுங்கள். யாருக்காவது  தேங்குழல் செய்வதில்  சந்தேகமா  ?என்ன குடை உபயோகிக்கலாம்  என்பதற்கு  ஆலோசனை  வேண்டுமா? rajalakshmiparamasivam.blogspot.com என்கிற லிங்கில்  தொடர்பு  கொள்ளவும். image courtesy—-google. 12 கோடீஸ்வரராக வேண்டுமா? [] இன்று  உலக டையாபிடீஸ்  தினம். எதைப் பற்றி எழுதலாம் என்று  யோசித்ததில் கிடைத்த ஐடியா  ,” சாக்லேட்” என்ன ……….. டையாபிடிஸ்  தினத்தன்று சாக்லேட் பற்றி  எழுதி எல்லோர்  எரிச்ச்சலையும் கொட்டிக் கொள்கிறாயா என்று கேட்கிறீர்கள் தானே! அதே டையாபிடீஸ் காரர்கள் தான்  அவசரத்திற்கு  கையில் சாக்லெட்டுடன் அலைபவர்கள். நினைவில்  வையுங்கள். அதோடு ,தலைப்பில் , கோடீஸ்வரர் ஆக வேண்டுமா என்று கேட்டு விட்டு  எதைப் பற்றியோ சொல்கிறாளே என்று உங்கள் மைன்ட் வாய்ஸ் எனக்குக் கேட்கிறது. தொடர்ந்து படியுங்கள்….. சாக்லேட், சொல்லும் போதே நாவில் இனிப்பு  கரைகிறது. இந்த சாக்லேட்  கண்டு பிடிக்கப் படவில்லைஎன்றால், அல்லது  இப்பூவுலகை  விட்டு திடீரென்று  மாயமாகிப் போனாலோ  என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். மிகவும் துன்பத்திற்கு உள்ளாகப் போவது  குழந்தைகளாகத் தானிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. நாமும்  தான்  மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ள  என்ன செய்வோம்?? மீண்டும், கல்கண்டு, சர்க்கரை, ஆரஞ்சு மிட்டாய் என்று தேட வேண்டியது தான். லட்டு போன்ற இனிப்புகளுக்கு உடனடி  வாழ்வு கிடைக்கலாம். சாக்லேட் ஹீரோ  என்கிற சொல்லே வழக்கத்தில் இருக்காது. (பாவம் திரு. மாதவன்.​) போர்ன்விடா, பூஸ்ட் , சாக்லேட் பால்   எதுவும் இல்லாத வீடுகளை நினைத்துப் பாருங்கள்.(எனர்ஜியின் சீக்ரெட் என்று எதை சொல்வது? ) இதில் மிகவும்  பாதிக்கப் படப் போவது  பிரபலமான சாக்லேட் கம்பெனிகள் தான் . கதவை இழுத்து மூடி விட்டு அடுத்த வேலையில் இறங்க வேண்டியது தான். அவர்களை விடவும்  அதிகம் பாதிப்புக்குள்ளாவது  யாரென்று  நினைக்கிறீர்கள். காதலன் தான் .அப்பப்போ  கோபித்துக் கொள்ளும் காதலிக்கு சட்டென்று  தன்னிடம் ஸ்டாக்கில் வைத்திருக்கும்  ஒரு சாக்லேட் பாரை எடுத்துக் கொடுத்து சமாதானப்படுத்த முடியாதே. கணவனும் ஊடலில்  இருக்கும் மனைவியை சாக்லெட்டைக் கொடுத்து ,”ஸ்வீட் எடு, கொண்டாடு ” என்று  சொல்ல முடியாதே.ஆக கணவன், காதலன் பாடு எல்லாம் திண்டாட்டம் தான்., இனி……. சாக்லேட்டை நம்பியே இருக்கும் விளம்பர நிறுவனங்கள் என்ன செய்யும் சொல்லுங்கள்.எத்தனை பேருக்கு  பிழைப்பு இதை நம்பியே இருக்கிறது  பாருங்கள். பொன் வைக்குமிடத்தில் பூ வைக்கலாம். சாக்லேட் இருந்த இடத்தில் பொன் வைத்தால் கூட நிரம்பாது என்றே நினைக்கிறேன்.. ரொம்பவே  கஷ்டம் தான். இதில் ” டார்க்  ” சாக்லேட்டைப் பற்றி வேறு பிரசாரம் செய்கிறார்கள். இதயத்திற்கு நல்லதாம்.  ஃ ப்ளாவினாயிட்ஸ்  இருக்கிறதாம் . அதனால் மன அழுத்தத்தைக் குறைக்க டார்க் சாக்லேட்  சாபிடுங்கள் என்கிறார்கள். சாக்லேட்டே  இல்லை என்கிறேன். டார்க் சாக்லெட்டிற்கு எங்கே போவது ? ஆமாம் உனக்கேன் இந்த விபரீத கற்பனை என்று கேட்கிறீர்கள் தானே! கற்பனையெல்லாம் இல்லை. விகடனில்  இன்பாக்ஸ் பகுதியில் வந்திருந்த ஒரு செய்தி தான் என்னை பதிவு எழுத வைத்தது. சாக்லெட்டிற்கு தேவையான மிகவும் முக்கியமான  பொருள்  கோகோ (cocoa). அந்த கோகோவிற்கு 2020 இல் தட்டுப்பாடு வரப் போகிறதாம்.அதனால்  சாக்லேட்  என்கிற வஸ்து  இல்லாமல் போகும்  நிலை வரலாம். என்பது தான் அந்த செய்தி. அதற்காக நிறைய கோகோ  செடிகள்  வளர்க்கத் திட்டமிடப் படுகிறதாம்.ஆனால் அது வளர்ந்து  சாகுபடி செய்ய  குறைந்த பட்சம்  நான்கு வருடங்கள் ஆகலாம். அதற்குப் பிறகு தான்  அறுவடையே.  உடனே மனம் கணக்குப் போடுகிறது தானே! 2020 ற்கு இன்னும் ஆறு வருடங்கள் தான் இருக்கிறதே என்று. கோகோ  விளைந்து  அறுவடை நடந்தால்  தான் சாக்லேட். இல்லையென்றால் 2020ற்குப் பிறகு  பிறக்கும்  குழந்தைகளுக்கு  சாக்லேட்  என்ன ?என்பது பற்றி   தெரியாமலே போகும்  நிலை கூட வரலாம். உடனே  நிறைய சாக்லேட் வாங்கி  பதுக்கலாம்  என்று தானே தோன்றுகிறது. நானும் அப்படித் தான் நினைத்தேன். ஆனால் பாருங்கள் அன்று “மக்கள் ” டிவி  சானலில் கோகோ  சாகுபடி செய்வது பற்றி விரிவான விளக்கம். நிறைய விவசாயிகள் ஊடு  பயிராக சாகுபடி  செய்கிறார்கள் என்கிற செய்தி மகிழ்ச்சி. ஆனால் நம் விவசாயிகள்  மட்டும் தானா, கோகோ பயிர் செய்வார்கள்? நானும் செய்யப் போகிறேன் என் வீட்டுத் தோட்டத்தில்.. இப்ப ஆரம்பித்தால் தான் ,இன்னும் ஆறுவருடத்தில்  எழப்போகும் சந்தர்ப்பத்தை  உபயோகித்துக் கொள்ள முடியும்  .இதோ போய் கொண்டேயிருக்கிறேன்  நர்சரிக்கு. நான் சொல்வது  உண்மையே. நீங்களும்  சாகுபடியை ஆரம்பியுங்கள். இன்னும் ஆறே வருடத்தில்  பெரும் கோடீஸ்வரர்கள் நாம். பெல்ஜியம்  நாட்டின் (உலகின் மிகச்  சிறந்த சாக்லேட்டுகளை  உருவாக்குபவர்கள்) சாக்லேட் கம்பெனி  எம்.டி, மற்றும் Cadbury, Hershey போன்ற கம்பெனிகளின் எம்.டிக்கள்   நம் வீட்டு வாசலில்  லைன் கட்டி நிற்பார்கள். . எதற்கா……..? கோகோ வாங்கத்தான். அப்புறம் என்ன ” ஸ்வீட் எடு,  கொண்டாடு ” தான். image courtesy—google. 13 ' லொக்... லொக்.... லொக்.... ' [] இரவு பன்னிரெண்டு மணியிருக்கும். அப்பொழுது தான், லேப்டாப்பை மூடி வைத்து விட்டு, படுத்துக் கண் அசந்திருப்பேன். ‘லொக் , லொக் ‘ இருமலில் முழித்தேன். கொஞ்சம், இளம் சூடாக வெந்நீர் குடித்து விட்டுப் படுத்தேன். ஒரு வாரமாக  இந்த உபத்திரவம் . தூக்கம் லேசில் வருவதாக இல்லை. எங்கெங்கோ ,உலா போன எண்ணங்களை இழுத்து வந்து , கந்த சஷ்டிக் கவசம் சொல்ல வைத்து……. ,’ காக்க காக்க ‘ என்று சொன்னது நினைவிலுள்ளது. அதற்கு மேல் கண்ணை இழுத்து சொருகி கொண்டு போனது. திரும்பவும் ‘லொக் ,லொக் ‘ வந்து தூக்கத்தைக் கெடுக்கச் சுத்தமாய்த் தூக்கம் தொலைந்தது, எனக்கு மட்டுமல்ல ,வீட்டில் எல்லோருக்கும் தான். உட்கார்ந்தால் இருமல் இல்லை , படுத்தால் வந்தது இருமல். சரி, நாளை காலை எட்டு மணிக்கே சென்று Dr.Sathya வைப் பார்ப்பது என்று வீட்டின் பொதுக்குழு, அந்த அகால நேரத்தில் கூடி தீர்மானம் நிறைவேற்றியது.. காலை  எட்டு மணிக்கு ,டானென்று டாக்டர் வீட்டில் நாங்கள் ஆஜர். டாகடர் வந்தவுடன் ,என் இருமல் பற்றிச் சொன்னேன். “நீங்கள் இங்கு என்னுடன் பேசும் போது ஒரு முறை கூட இருமவில்லையே !”என்று டாக்டர் கேட்க , “படுத்தால் தான் வருகிறது “– இது நான். ” போன வாரம் உங்களுக்கு வைரல் ஜுரம் வந்ததினால், இருமல்  இருக்கலாம். நான் கொடுத்த cough syrupஐக்  குடித்துப் பாருங்கள். ஒரு வேளைக் குறையலாம். இல்லையென்றால் ஒரு X-Ray எடுத்து விடுங்களேன் ”  என்று சொல்ல, டாக்டர் சொன்ன cough syrup விஷயத்தைக் காற்றோடு, பறக்கவிட்டுவிட்டு, எதற்கும் ஒரு எக்ஸ் ரே எடுத்து  விடுவோம் என்று Scan World ற்குத்  தம்பதி சமேதராய் ஆஜரானோம்..(பெயர் தான் ஸ்கேன் வேர்ல்ட், எல்லா டெஸ்டும் செய்வார்கள்) அரைமணி காத்திருந்தோம் .எக்ஸ்ரே எடுக்க ஒரு பெண்மணி வந்து அழைத்துப் போனார்.. எடுத்தும் முடித்தாயிற்று. ஒரு பத்து நிமிடத்தில் ரிப்போர்ட்  கொடுக்கிறோம். இருந்து வாங்கிக் கொண்டு ,செல்லுங்கள் என்று சொல்லக் காத்திருந்தோம். காத்திருந்த வேளையில் ,X-Ray அறையிலிருந்து ,வெள்ளைக் கோட்டை ,சரி செய்தபடியே ஒரு பெண் வந்து , பெயர் சொல்லிக் கூப்பிட்டு , ” என்ன பிராப்ளம் உங்களுக்கு? எதற்கு எக்ஸ்ரே எடுக்க வந்தீர்கள் ?” என்று கேட்க , “இருமலுக்காக “என்று நான்  சொல்ல, அடுத்து அந்தப் பெண் சரமாரியாய் “ஜுரம் இருக்கா? ” “சளி?” ” நடந்தால் நெஞ்சு வலிக்கிறதா?” ” மூச்சு வாங்குகிறதா ? ” இண்டர்வியு மாதிரி கேள்விகளால் துளைத்தார். எல்லாவற்றிற்கும் இல்லை என்று பதில் சொல்லும் போதே  ”எல்லாவற்றையும் என்னிடமே கேட்டுக் கொண்டு போய் டைப் அடித்து ரிப்போர்ட் என்று கொடுக்கப் போகிறார்களோ ”   நினைத்தேன். கொஞ்ச நேரத்தில் ரிப்போர்ட் வந்தது . ரிப்போர்ட்  என்ன தான் எழுதியிருக்கிறது என்று பார்த்தேன் . ஒன்றும் புரியவில்லை. வீட்டிற்கு வந்து மதியத்திற்காக வடைப் போட்டு மோர்குழம்பும், உசிலியையும் செய்து வைத்து விட்டு, லேப்டாப்பும், ரிபோர்ட்டுமாக உட்கார்ந்தேன். ரிப்போர்ட்டில் எழுதியிருந்ததை அப்படியே எழுத்துப் பிசகாமல் googleஇல் டைப் அடித்து search பட்டனை அமுக்கினேன். ஒரு பெரிய லிஸ்ட் என் முன்னே. அதில் ஏதோ ஒன்றைக் கிளிக் செய்ய ,” symptoms, treatment, life span ,” என்று என்னென்னமோ சொல்ல, கொஞ்சமாய்ப் பீதி கிளம்பியது. Life Span ஆ…………….பயத்தில் உறைந்தேன். சரி ,இந்த சைட், வேண்டாம் என்று வேறு பல சைட்டுகளையும் போய் பார்த்ததில், முதலில் கிடைத்த தகவல் தான், எல்லாவற்றிலும் இருக்க உடைந்து போனேன். அழுகை எட்டிப் பார்த்தது. சமாளித்தேன். மெதுவாக ,என்னைத் தேற்றிக் கொண்டு , மாலை டாக்டரிடமே கேட்டுக் கொள்ளலாம் ,என்று சமாதானமாக முயன்று ,தோற்றுப் போனேன். என் அழுகை ,கணவருக்குத் தெரியாமல் இருக்க , படாத பாடு பட்டேன். சாப்பிட உட்கார்ந்தோம். ” ஓ ,இன்றைக்கு உனக்குப் பிடித்த மெனுவா? ” “ம் ” ஒற்றை எழுத்தில் பதில் சொன்னேன். “மோர் குழம்பில் ஒரு உப்பு குறைச்சலாக இருக்கிறது ” ‘ ஆமாம் ‘ (இன்னும் எத்தனை நாளைக்கு உங்களுக்குச் சமைக்கப் போகிறேனோ நினைத்தேன்.) ஒன்றும் இருக்காது. சாப்பிட்ட பின் திரும்பவும் செக் செய்வோம் என்று நினைத்துக் கொண்டே,மோர்குழம்புக் கரண்டியை எடுக்க ,அது கைதவறிக் கீழே விழ அப்பொழுது தான் என்னை என் கணவர் கவனிக்க , “என்ன இது கண்ணில் நீர்? அழுகிறயா?” என்று கேட்டது தான்  தாமதம் ,ஒரு பாட்டம் அழுது தீர்த்தேன். அவருக்கும்  ஒன்றும்  புரியவில்லை. மெதுவாக என் அச்சத்தைச் சொல்ல. அவரும் ,முதலில் மிரண்டு தான் போனார். பிறகு மாலை டாக்டரிடம்  கேட்டுக் கொள்ளலாம் என்று சொன்னதோடு , முதல் வேலையாக ,  லேப்டாப்பை எடுத்து அவர் கஸ்டடியில் வைத்துக் கொண்டார். மாலை ஐந்து மணி . திரும்பவும் டாக்டர் வீட்டில் ஆஜர். டாகடர் எக்ஸ்ரே ரிப்போர்ட்டைப் படித்து விட்டு , “நல்ல வேளை . ஒன்றுமில்லை ” ஒரு மருந்தும் வேண்டாம் என்று சொல்ல நான் ஆச்சர்யப் பட்டு , Googleஇல் பார்த்ததைச் சொல்ல ,’ நீங்கள் சொல்வது போல் இந்த ரிப்போர்ட்டில் ஒன்றுமில்லை. இதிலுள்ள டெக்னிகல் வார்த்தையை Google செய்து பார்த்திருக்கிறீர்கள். நிறைய பேருக்கு இந்த மாதிரி இருப்பது  சகஜம். ஆனால் அதனால் பெரிய பாதிப்பெல்லாம்  இல்லை.அதைப்  பற்றி  நீங்கள் மறந்து விடலாம் “என்று அழுத்தமாக  சொல்லியும், நான் சமாதானமாகாமல் தயங்கி நின்றேன். “உங்களுக்குத் திருப்தியாகவில்லைஎன்றால்” ஒரு chest specialist பெயரைச் சொல்லி “அவரிடம் expert opinion வாங்கிவிடுங்களேன்” என்று சொல்ல அடுத்து ,அவர் கிளினிக் வாசலில் தேவுடு காத்தோம். வயதான அந்த டாக்டர் , பொறுமையாக என் கதையெல்லாம் கேட்டு விட்டு , “உங்களை யார்  இன்டர்நெட்டில் பார்க்கச் சொன்னது? கூகுளில் மெடிக்கல் விஷயங்களை , டாகடர்கள் படித்தாலே குழம்புகிறோம். உங்களைப் போன்றவர்கள் சும்மா இல்லாமல் முதலில் Dr. Googleஐ பார்த்து விட்டுத் தான் எங்களிடமே வருகிறீர்கள்” என்று ஆதங்கப் பட்டுக் கொண்டே  என்னை செக் செய்தார். ,”எனக்கும் உங்கள் எக்ஸ்ரே ரிபோர்டில் ஒன்றும் தவறாக இல்லை. நீங்கள் இவ்வளவு பயப்படுவதாக இருப்பதால் ஒரு ஸ்கேன் செய்து பார்த்தால் நீங்கள் திருப்தியாகி விடுவீர்கள்” என்று சொல்ல மறு நாள் மீண்டும் ஸ்கேன் செண்டர் , நீல கலர் டிரெஸ்ஸைப்  போட்டு விட்டு   ஒரு பெரிய வளைவுக்குள் அனுப்பி வெளியே இழுத்து விட்டார்கள். மீண்டும் ரிப்போர்ட் .அதைத்  திறந்து பார்ப்பதில்லை என்கிற உறுதியுடன் , நெருப்பின் மேல் நின்ற வண்ணமாய் ,மாலை வரை இருந்து ,பிறகு டாக்டரிடம் போனால், “என்ன google செய்தாகி விட்டதா? என்ன வியாதி என்று உங்கள் Dr.Google சொல்கிறார்?” என்று சிரித்துக் கொண்டே ரிப்போர்டை வாங்கிப் படித்து விட்டு ரிப்போர்ட்டில்  Impression  —- Normal  ,என்பதை ,என்னிடம் காட்ட , எனக்கு ‘அப்பாடா………’ என்றிருக்க ,என் கணவர்  முகத்தில் தெரிந்த நிம்மதியை  வார்த்தைகளால்  சொல்ல முடியாது. ” ஆமாம். முந்தாநாள் இருமல் இருந்தது. இப்ப இரண்டு நாட்களாய் ……? ” என்று டாக்டர்  கேட்க…… ” இரண்டு நாட்களாய் நான் எங்கே தூங்கினேன். மரண பயத்திலல்லவா இருந்தேன் ” என்று நான் சொல்ல . (ஆனாலும் ஜாஸ்தி இருமவில்லையே ……மனதில் ஓடியது.” ஷார்ட் விஸிட் “செய்திருந்த வைரல்  ஜுரம் தான் காரணமோ? ) ” எதற்கும் இந்த cough syrup எழுதுகிறேன். தேவைப்பட்டால் இரவு படுக்கும் முன் இரண்டு ஸ்பூன் குடியுங்கள் “என்று அட்வைஸ் செய்ய , ஐம்பது ரூபாய்க்கு அந்த மருந்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு நடையைக் கட்டினோம். நாளை  அருகிலிருக்கும் அம்மன் கோவிலில் அர்ச்சனை  செய்து விடுவது என்று தீர்மானித்தோம். “இன்டர்நெட் தான் நம் விரல் நுனியில் இருக்கிறதே !  ”என்கிற காரணத்தாலேயே கண்டதையும் ,படித்துக் குழம்பித் தவித்து , எட்டாயிரம் வரை செலவழித்த பின் தான்  .  ”இனிமேல் எந்த ரிப்போர்ட்டையும் , அது என் பேரன் பேத்தி “பிராக்ரஸ் ரிப்போர்ட்டாகவே  “இருந்தாலும் நான் படிக்கப் போவதில்லை.  அப்படியே  எதையாவது படித்துத்  தொலைத்தாலும் , அதைப் பற்றிய விசாரணையை  கூகுளிடம்  ஆரம்பிக்கப் போவதில்லை ” என்கிற ஞானம் உதித்தது. போதும் இந்த அவஸ்தை . பெரிய நிம்மதியுடன் விஜய் டிவி மகா பாரதத்தை  பார்க்க உட்கார்ந்தேன். “எல்லாம் சரி. உன் இருமல் என்னதான் ஆயிற்று என்று கேட்கிறீர்களா?” இருமல் ,அதற்குப் பிறகு ,படிப்படியாய் குறைந்து போய் ,இப்பொழுது ஒன்றுமேயில்லை . வாங்கின cough syrup சீல் கூட உடைபடாமல்,  அலமாரியிலிருந்து ,என்னைப் பார்த்து ,சிரித்துக் கொண்டிருக்கிறது. image courtesy—google… 14 களி நடனம் கண்டதுண்டா? [] அது என்ன களி நடனம்? எம்பெருமான் சிவன்  ஆடிய நாட்டியம் தெரியும். அதைத் தான் களி நடனம் ,என்று சொல்கிறேனா  என்று  பார்க்கிறீர்களா ? இல்லை…இல்லை….. தொடர்ந்து படியுங்கள்…… திருமணமான வருடம். டெல்லி வாசம் . திருவாதிரைத் திருநாள் வந்தது. ரொம்பவும் ஆர்வத்துடன் இருந்தேன். திருமணத்திற்குப்  பின் , தனியாக ,முதல் பண்டிகையைக் கொண்டாட இருக்கிறேன்.  திருவாதிரை  வந்ததோ ஞாயிற்றுக் கிழமை.அதனால்  என்னவருக்கும்  லீவு. தமிழ் நண்பர் ஒருவர் காலை  டிபனிற்கு வருவதாக சொல்ல   முதல் நாளே நான் “களி” செய்ய   ரெடியானேன். ” இங்கு தினசரி சமையலே ஆட்டம் தான். இதில் களி வேறு செய்யப் போகிறாயா ? “என்று கேட்ட  மனசாட்சியை  ” சும்மா இரு  .எல்லாம் எனக்குத் தெரியும் ” என்று அடக்கி விட்டு  அரிசி ,பருப்பு வறுத்து பொடித்து வைத்தேன். மறு  நாள் டிசெம்பர் மாத டெல்லி குளிரில் , அதிகாலை எழுந்து குளித்து , ‘வெடவெட’வென்று  ,நடுங்கிக் கொண்டே  ஸ்டவ்வில்  பாத்திரத்தை வைத்து, தண்ணீர் ஊற்றி ,  கொதிக்க வைத்து , அதன் பின்  பொடித்த மாவைக் கொட்டி  கிளறி விட்டு விட்டு ,ஸ்டவ்வைக் குறைத்து விட்டு , மூடி  வைத்தேன். இன்னொரு ஸ்டவ்வில்  தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, ஃபில்டரில்  காபித் தூள்  போட்டு  ,தண்ணீரை அதன் தலையில் கொட்டி விட்டு, என் கணவரை , எழுப்பினேன்.பால் வாங்கி வரத் தான். அருகிலேயே  தான்  ‘Mother Dairy’ பூத். அவரோ ,” இன்றைக்கு  ஞாயிற்றுக் கிழைமை. அதுவும் இந்தக் குளிரில்  என்னால் இத்தனை  சீக்கிரமாக எழுந்திருக்க முடியாது .” என்று சொல்லி விட்டு மீண்டம் ரஜாய்க்குள்  ஒளிந்து கொண்டார். முதல் நாள் பாலில்  காபிப் போட்டுக் குடித்தேன். பின், களியை ஒரு கிளறு கிளறலாம்  என்று  போனேன். கிளறப் போனால் லேசில் அதைக் கிளற முடியவில்லை. தொட்டுப் பார்த்தேன். வெந்திருந்த மாதிரி தான் இருந்தது. பின், வெல்லம் போட்டுக்  கிளறி  விட்டு, கொஞ்சம் இறுகியவுடன். , இறக்கி வைத்தேன். அதற்கு அலங்காரமெல்லாம் சரியாகத்  தான் செய்தேன். அதான் ஏலக்காய், முந்திரி….. எல்லாம் போட்டேன். அதற்குள் என்னவர் எழுந்து  பால் வாங்கக் கிளம்பினார். போகும் போதே,” அட, களி  வாசனைத்  தூக்குகிறதே !”  என்று சொல்ல , எனக்குப் பெருமை பிடிபடவில்லை. வந்து அவரும் குளித்தபின் , பூஜை செய்தோம் .பின்  களியை  எடுத்து  அவரிடம் ஒரு கின்னத்தில்  கொடுக்க அவரும் ஆசையாய்  ஸ்பூனால்  சாப்பிட ஆரம்பிக்க, அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். சாப்பிட்டு விட்டு, நன்றாகத் தானிருக்கிறது. ஆனால் இன்னும் கொஞ்சம் வேக வேண்டும்  என்று சொல்ல நானும் வாயில் போட  அத்தனையும்  பாதி தான் வெந்திருந்தது. என்ன செய்வது? அதற்குள்  ”டிங் டாங்” நண்பர் வந்து விட்டாரே!  அவருக்கு இதைக் கொடுக்க வேண்டாம் என்று முடிவெடுத்து ,களி  சாப்பிட்ட  ,செய்த , தடயத்தைஎல்லாம் அவசரமாக மறைத்தேன். நண்பருக்காக  தோசையும் சட்னியும்  செய்து , சாப்பிடச்  சொன்னோம். சாப்பிட்டுக் கொண்டே  , ” என்ன மேடம் ? நானும் வரும் வரும் என்று பார்க்கிறேன். களி வாசனை   அடிக்கிறது. ஆனால்  கண்ணில் காண்பிக்க மாட்டேனேன் கிறீர்களே!”என்று  சொல்ல  நான் திரு திரு ……..தான் . அதற்குள்  இவர் (நமக்கு விரோதி வெளியில் இல்லை . புரிந்தது),” களி  கல் மாதிரி இருக்கிறது. உனக்கெதற்கு   அந்தத் தண்டனை. எனக்கு மட்டும் போதும் .” என்று கிண்டலடித்தார்.  அத்தோடு நிறுத்தியிருந்தால்  பரவாயில்லை. ” களி   சாப்பிட வேண்டுமென்றால்  , என் அம்மா செய்து சாப்பிட வேண்டும். ஆருத்ரா தரிசனம் என்றால் எங்கள் ஊர்  லால்குடியில் காண வேண்டும்” என்று  இவர் புராணம் ஆரம்பிக்க . அந்த டெல்லிக் குளிரில் ,எழுந்து செய்த ,எனக்கு எப்படி இருந்திருக்கும்  பாருங்கள். அன்றே தீர்மானித்து விட்டேன். போர் கால அடிப்படையில்  களி  செய்யக்  கற்றுக் கொள்வதென்று. சென்னைப் பக்கம் வரும்போது    , ஒரு முறை  களியை  அம்மா வீட்டில் கிண்டிப் பார்த்து  தெரிந்து கொண்டு விட்டேன். அதற்குப் பிறகு,  நான் எத்தனை சிரத்தையுடன் செய்தாலும் ,ஒவ்வொரு வருடமும்  ” என் அம்மா  செய்யும் களி  போல்  இல்லை ” என்று அவர் சொல்வது வாடிக்கையானது. டெல்லியிலிருந்து கணவருக்கு மாற்றல்.  இப்பொழுது ஊடகங்களில்  ஆலோலகல்லோல பட்டுக் கொண்டிருக்கிறதே,  ‘Muzaffarnagar’  அதற்கு  அருகிலிருக்கும்  Modinagar என்கிற  சிறிய  ஊர். அந்த  வருடம் என் மாமியாரும் ,திருவாதிரை சமயம் அங்கு இருக்க ,அவர் எப்படித் தான் செய்கிறார்  பார்க்கலாம்  என்று காத்திருந்தேன். அப்பொழுது எனக்கு   இரு குழந்தைகள் . இரண்டும் ரெட்டை வால் . அப்பொழுது என் பெண்ணிற்கு ,நான்கு வயதிருக்கும் என்று நினைக்கிறேன். பக்கத்து வீட்டில்  ஒரு சர்தார்ஜி குடும்பத்தினர்  இருந்தார்கள்.  வயதான தம்பதியினர்.  என் இரு  குழந்தைகளையும் ‘ ஆஜா  ஆஜா ‘ என்று  கூப்பிட்டு அழைத்துக் கொண்டு போய் அவர்கள் வீட்டில்  விளையாட  விட்டு  சந்தோஷப்படுவார்கள். திருவாதிரையும் வந்தது. நானும்  ,என் மாமியாரும் ,காலையில்  களியைக்  கிண்ட  ஆரம்பிக்க  , என் பையன் அப்பொழுது மழலையில், ” தீதி  தீதி ” என்று எதையோ சொல்ல முயற்சிக்க நான் அவனை அடக்கி ,  ” தீதியுடன்  போய் விளையாடு ” என்று சொல்லி அவன் கையில் ஒரு பிஸ்கெட்டைக் கொடுத்து அனுப்பி வைத்தேன். ஐந்து நிமிடத்திற்கெல்லாம்  மீண்டும்  வந்தான் .மீண்டும்  ” தீதி  தீதி ” என்று உளர  ,என் மாமியாரும் ” என்ன என்று தான் பாரேன் ” என்று சொல்ல அவன்  என்னை அழைத்துக் கொண்டு போய்   பக்கத்து சர்தார்ஜி வீட்டைக் காட்டி ” தீதி தீதி “சொல்ல முயற்சிக்க  , சட்டென்று தோன்றியது. ‘பாப்பா எங்கே?’  , உள்ளே திரும்பி  ’ பாப்பா பாப்பா  ’ என்று கூப்பிட , உள்ளேயிருந்து ஒரு பதிலைக் காணோம். ரஜாயிக்குள்,  ஒளிந்து கொண்டிருக்கலாம் என்று நினைத்து படுக்கையறைக்கு சென்றால்  , அங்குமில்லை.என் கணவரிடம்   ‘பாப்பாவைக்  காணோம் “. என்று பதறினேன்.  அவரும், மாமியாரும் ,வீடு முழுக்க தேடி விட்டு , அவர் மாடியில் பார்க்கிறேன் என்று படியை நோக்கி ஓட , நானோ ஒன்றும் புரியாத பதட்டத்தில் , என் பையனோ கீறல் விழுந்த ரெக்கார்டாய்  ” தீதி தீதி ” என்று சொல்லிக் கொண்டிருக்க , “அம்மா  அம்மா” என்ற என் பெண்ணின் குரல் , காதுகளில் தேனாய் பாய்ந்தது.. பக்கத்து வீட்டிலிருந்து  , வாய் நிறைய கேக்குடன்  அவர்கள் வீட்டு சமையல் செய்யும் பெண்ணுடன் ,எங்கள் வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தாள்  எங்கள் சீமந்த புத்திரி . பஞ்சாபியில் அந்தப் பெண்  ஏதோ  சொல்ல,எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. வெளி கேட்  திறந்திருக்க  , இவள் பக்கத்து வீட்டிற்கு ஓடிப் போயிருக்க வேண்டும் என்று யூகித்தோம். ஆனாலும் ,அந்த ஒரு சில நிமிட பதட்டம் , இன்றும்  நினைத்தால்  பதறும். பதட்டம் தீர்ந்ததும் , “களி  அடுப்பிலிருக்கிறதே! மறந்து விட்டோமே “என்று சொல்லிக் கொண்டே உள்ளே ஓடினேன்.  போய் பார்த்தால்   களி கருப்பாகி, தீய்ந்து எங்களைப் பார்த்து சிரித்தது. என் களி  ராசி ,என் மாமியாரிடமும்  ஒட்டிக் கொண்டது போல் ஆனது அந்த வருடம். ஒவ்வொரு வருடமும், எப்படியாவது  களி என் கண்ணைக் கட்டி விளையாட்டுக் காட்டும். ஆனானப்பட்ட  லட்டும், மைசூர்பாகும்  நான் சொன்னபடி கேட்கும்.இந்தக் களி  தான்…… நாளைத் திருவாதிரை!  பஞ்சாங்கம் சொல்கிறது. சிவன் ஆடுகிறாரோ இல்லையோ, எங்கள் வீட்டில் களி  ஆட்டம்  நிச்சயம் . image courtesy—google. 15 புலியும் நானும் [] அன்று நல்ல தூக்கத்திலிருந்தேன்………,யாரோ  கதவைத் தட்டுவது போல் சத்தம்  கேட்க, உற்றுக் கவனிக்க ஆரம்பித்தேன். ம்ஹூம் ……….பிராண்டுவது போலிருந்தது . ரஜாய்க்குள்ளிருந்து தலையை மட்டும் வெளியே நீட்டி , கடிகாரத்தைப் பார்த்தேன்.  மணி  6 ஐத் தாண்டி விறுவிறுப்பாக  ஓடிக் கொண்டிருந்தது கடிகார முள்.   விடிந்து விட்டதே கட்டிலை விட்டு இறங்க, செருப்பைத் துழாவினேன்.போட்டுக் கொண்டேன். “பிப்ரவரியிலும் இப்படிக் குளிருகிறதே  .காலைக் கீழே வைக்க முடியவில்லையே.” நினைத்துக் கொண்டேன். அப்பொழுது நாங்கள் இருந்தது ‘மோதி நகரில்’. பிரதம் வேட்பாளர் திரு. நரேந்திர மோடி  அவர்களுக்கும் , நாங்கள் இருந்த மோதி நகருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது “மீரட்’ நகர்  அருகிலிருக்கும் ஊர். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் , திரு.ஆர்னப்  கோஸ்வாமி போன்ற டிவி மக்கள்  வாயில் விழுந்து புரளும் முசாபர் நகர் அருகிலிருக்கும் ஊர். விஷயத்திற்கு வருகிறேன். ஸ்வெட்டரை சரி செய்து கொண்டே   கதவருகில் போவதற்குள் திரும்பவும் யாரோ பிராண்டுவது போலிருக்க, இப்பொழுது இன்னும் பலமாக  , கோபமாக கதவை உடைப்பது போல் சத்தம் வர,தாழ்ப்பாள் உடைத்துப் பிய்த்துக் கொண்டு வர  ” கோன் ஹை ” கேட்டுக் கொண்டே வர,  கதவுத்   தானாகத்   திறக்கவும், என் மாமியாரும்” யாரு “என்று கேட்டுக் கொண்டே வரவும் சரியாயிருந்தது. கதவுத் திறந்தவுடன், முதலில் ஒரு நாற்றத்தை உணர்ந்தேன். பார்த்தால் வரி வரியாக கோடுகளுடன் புலி ஒன்று நின்றுகொண்டிருக்க . நான் ,    புலி ………புலி ….   ஆ………………என்று கத்த  ஆரம்பிக்க,  கத்தல் பாதியிலேயே  தொண்டையுள் மாட்டிக் கொள்ள , என் மாமியாரோ அதிர்ச்சியில் அருகிலிருக்கும்  சேரில் மயக்கமாய் விழ, என்ன செய்வது என்று நான் முழிக்க, புலி சுதாரித்துக் கொண்டு உள்ளே சர சரவென்று தன் வாலை ஸ்டைலாக ஆட்டியவாறு உள்ளே நுழைந்தது.  உறுமல் சத்தம் இல்லாமல் பூனை போல் நுழைந்தது. தூக்கம்  இன்னும் முழுதுமாக கலையாமல் , என் கணவர் ‘ அங்கே கிச்சனில் என்ன செய்கிறாய்? என்ன சத்தம்?  என்னமோ வாசனை  அடிக்குதே! ‘ என்று சொல்ல, நானோ புலியைப் பார்த்த அதிர்ச்சியில்  சிலையாய்………….. திரும்பவும் பதட்டத்துடன்  அவர் ” ராஜி ராஜி ”  என்று குரல் கொடுக்க , உடனே புலி  என்னமோ அவர் ,அதைத் தான் கூப்பிட்டது போல்,  குரல் வந்த திசையை நோக்கி  மெதுவாக நகர ஆரம்பித்தது. அதற்குள்  LKG  படித்துக் கொண்டிருந்த என் பையன்  குதித்தெழுந்து , ” தீதி தீதி  டைகர் பாரு ” என்று குரல் கொடுக்க UKG படிக்கும் என்   பெண்ணும்   ” ஹையா  , டைகர்  நம்மைப் பார்க்க வந்திருக்குடா”  என்று குதிக்க  எனக்கு  சகலமும் அடங்கிப் போனது.என் பெண்ணும், பையனும் பேசுவதைக் கேட்டு , அவரும் ரஜாயை  விட்டுத் தலையை நீட்டிப் பார்க்க , செய்வதறியாமல்  முழிக்க , எனக்கோ இந்தக் குழந்தைகள்  இருவரும்  கீழே இறங்கி விடப் போகிறதே என்று பதைபதைப்பு. புலி இரண்டு  குழந்தைகளையும்  பார்த்து விட்டு, டைனிங் டேபிளை  நோக்கி  அசைந்தது. என்னவர் அதற்குள் இந்த  இரண்டு குழந்தைகளையும், இழுத்து ரஜாய்க்குள் திணித்து விட்டார். நான் சுவரோடு சுவராக, என் மாமியாரோ மயக்கமாய் சேரில்.புலியோ  டைனிங் டேபிளில் குதித்து ஏறியது.  நேற்றிரவு சாப்பிட்டு விட்டு  மிச்சமிருந்த சப்பாத்தி , கொஞ்சமாய் ராஜ்மா  எல்லாவற்றையும்   கீழே தள்ளி விட்டு  மெதுவாக முகர்ந்து பார்த்து விட்டு  என்னை நோக்கி ஒரு பார்வைப் பார்த்தது.(இதெல்லாம் ஒரு சமையலா? என்பது போல் தான்.) பின் மெதுவாக  ஹாலில்  நின்றிருந்த என் பக்கம்  பார்வை ஓட்டிக் கொண்டே , என்னை  நோக்கி அடியெடுத்து வைத்ததது.ஒரு உறுமல் உறுமியது பாருங்கள்.இப்ப நினைத்தாலும் உடம்பல்லாம் நடுங்குகிறது. பின்வீட்டில்  இருப்பவர்கள் இப்பொழுது தான்  எட்டிப் பார்த்தார்கள்.”  பாக்….பாக்…” என்று அவர்கள் கத்த எனக்குக் கொஞ்சம்  ஆறுதலாயிருந்தது. அவர்கள் போலீசுக்கு சொல்லி விடுவார்கள் என்கிற ஆறுதல் தான்.செல்போன், இல்லாத நாட்கள் அவை. சாதரன லேண்ட்லைன் போன்  கூட கிடையாது அந்தக் காலத்தில். எங்களைக் காப்பாற்ற வேண்டுமானால்  வெளியாட்கள் யாராவது மனம் வைத்தால் தான் முடியும். உறுமலுடன் வந்தப் புலி வாயைத் திறந்து தன் பற்கள் எல்லாம் சிங்கப் பல்(?) உட்பட  ஒரு முறைக் காட்டி பயமுறுத்தி விட்டு வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தது. அப்பாடி…. வெளியே போய் விடும் என்று மெதுவாக மூச்சு விட ஆரம்பித்தேன்.  என் நினைப்பில் ஒரு வண்டி மண். நேராக போய் வாயிற்படியில், வாசற்படியின்  குறுக்காக, ஏதோ எங்கள் வளர்ப்பு நாய் போல் ,குறுக்கே படுத்துக் கொண்டு  தலையை சாய்த்து ஓய்வெடுத்துக் கொண்டது.இப்போதைக்கு இங்கிருந்து நான் நகரப் போவதில்லை என்று சொல்லாமல் சொல்லியது. எங்கள் வீட்டின் முன் கூட்டம் சேர ஆரம்பித்தது. எல்லோரும் நல்ல தூரத்தில் நின்று கொண்டு பார்ப்பதோடு  இல்லாமல், அதை பூர்… பூர்… என்று சீண்ட வேறு ஆரம்பித்து விட்டார்கள்.  எப்படி இதை விரட்டுவது என்று யோசிக்க ஆரம்பித்தேன். அதற்குள் என் கணவர், குழந்தைகள் மெதுவாக எட்டிப் பார்க்க , நானோ புலியின் கைக்கெட்டிய தூரத்தில்., சுவரோடு சுவராக.. என் கணவர் ,என்னை அசையாமலிருக்க சைகை செய்து  பூனை  மாதிரி நடந்து சென்று கிச்சனில் கீழே வைத்திருந்த பக்கெட் அடுப்பு. ( வட இந்தியாவில் மிகவும் பிரபலமான கரியடுப்பு)  பற்ற வைத்திருப்பது, புகை வாசனையில் புரிய ஆரம்பித்தது. கிச்சனில் இருக்கும் புகைபோக்கி க்கருகில்  அதை வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் இவ்வளவு நேரம்  வீடு முழுவதும்  புகையாயிருக்குமெ. ” ஏன் ஸ்டவ் என்னாயிற்று? ” என்று கேட்காதீர்கள். கெரொசின் தட்டுப் பாடு காலம் அது. கொய்லா அடுப்பு தான்  சமையலுக்கு.. கொஞ்ச நேரத்தில் அடுப்பு பிடிக்க ஆரம்பித்து கரியெல்லாம் ‘ கண கண ‘ வென்று நல்ல சிவப்பாக  ஜொலிக்க , அந்த பக்கெட்டை எடுத்து வந்து மெதுவாக(இருக்கும் தைரியத்தையெல்லாம் திரட்டிக் கொண்டு)  புலியின் முன் வைக்க , அது  எழுந்து ஒரே ஓட்டமாய் , வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு மூன்று பேரை ஒரு தள்ளு தள்ளி விட்டு  ஓடிப் போய்விட்டது. நாலு கால் பாய்ச்சல் என்பதைக் கன்கூடாகப் பார்த்தேன்.நெருப்பைக் கண்டால் மிருகங்களுக்கு பயம் என்கிற  உபாயத்தின் மூலம்  உயிர் பிழைத்தோம்.  இங்கே பிடித்த ஓடடத்தை “மீரட்”டில் தான் போய்  திரும்பிப் பார்த்திருக்கும் என்று நினைக்கிறேன்.(அரை மணி நேரப் பிரயாண தூரம் தான்). அட…… பாருங்கள் அந்தப் புலி மீரட்டில் தான்  மிரட்டிக் கொண்டிருக்கிறதாம். நேற்றைய செய்தித் தாளில்  செய்தி வந்திருக்கிறது பாருங்கள்….. [] செய்தியைப படித்தவுடன் ,” மீரட் “டிற்கு வெகு அருகாமையில்  ஒரு காலத்தில் வசித்திருக்கிறோமே என்று நினைத்துப் பார்த்தேன்.  கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு  புலியை  விருந்தினராக்கி மகிழ்ந்தேன். அவ்வளவே! 1 Free Tamil Ebooks - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org - Arun arun@fsftn.org -  இரவி Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/