[] []                                                                       சிக்கிமுக்கிக் கற்கள்                                                                        சு . சமுத்திரம்  நூல் : சிக்கிமுக்கிக் கற்கள்  ஆசிரியர் : சு . சமுத்திரம்   மின்னூலாக்கம் : த . தனசேகர் மின்னஞ்சல் : tkdhanasekar@gmail.com வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை: உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)  இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcodeஎன்ற முகவரியில் காணலாம்.  பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.  நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.  *** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.    Universal (CC0 1.0) Public Domain Dedication  This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode  No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. *** This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.+    நூல் மூலம் - https://ta.wikisource.org/s/74ld நன்றி - விக்கி மூலம் குழு -   https://ta.wikisource.org  பொருளடக்கம் 1. வைராக்கிய வைரி 6  2. பாம்புக் கயிறு 17  3. பால் பயணம் 25  4. உப்பைச் தின்னாதவன் 34  5. இந்நாட்டு மன்னர்கள் 46  6. காவலாளி 54  7. ஒருவழிப் பாதை 61  8. சாமந்தி சம்பங்கி ஓணான் இலை 70  9. அரைமணி நேர அறுவை 77  10. வாழ்க்கைப் பாக்கி 83  11. வெள்ளித் திரையும் விதித் திரையும் 90  12. நான்காவது குற்றச்சாட்டு 101  13. அவள்... அவளாக.... 108  14. திருப்பம் 116  15. கொடி(ய)ப் பருவம் 125  16. சிக்கமுக்கிக் கற்கள் 133    1.  வைராக்கிய வைரி           நெல் பிரிந்து அரிசியாகவும் உமியாகவும் மாறியதுபோல் தாயும், மகளும் தத்தம் போக்கில் ஊருக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். செல்லாத்தாவின் வலது கையில் அகத்திக்கீரைக் கட்டு இருந்தது. மகள் ராஜகுமாரியின் தலையில் ஒன்றிற்கு மேல் ஒன்றாக இரண்டு புல்கட்டுக்கள். சற்றத் தொலைவில் அம்மாவால் புல்லுக்கட்டுடன் மல்லுக் கட்ட முடியாமல் போனபோது அதையும் தானே சுமந்து கொண்டு கையில் இருந்த அகத்திக் கீரைக்கட்டை அம்மாவிடம் கொடுத்தாள். தலைச்சுமை பெரிதில்லை என்று சொல்லாமல் காட்டுவதுபோல் அனாயசமான லாகவத்துடன் ராசகுமாரி நடந்து கொண்டிருந்தாள். பெயருக்கேற்ற கம்பீரம், நனைத்து வைத்த மக்காச்சோளம் போன்ற நிறம். வயல்கிணற்றில் குளித்து விட்டு முடித்துவிடப்பட்ட கூந்தலின் பின்புறம் செருகப்பட்ட ஒற்றை ரோஜா. கருப்புக் கூந்தலுக்கும், பச்சைப் புல்லுக்கும் இடையே தோன்றிய பின்னணியில் மழைமேகத்திற்கும் மலைக்கும் இடையிடையே தோன்றிய சூரியத் தோற்றம் காட்டியது.  அல்லாடி வந்த செல்லாத்தாவும், அடிபிசகாது நடந்த ராசகுமாரியும் மந்தைப் பக்கம் வந்து சுற்றுமுற்றும் பார்த்தார்கள். மலையில் இருந்து விறகுக் கட்டுக்களைக் கொண்டு வந்திருந்தவர்கள் கவுண் கம்புகளில் அவற்றை வைத்துக் கொண்டு கண்விரிய நின்றார்கள். அருகே ஒருசில காய்கறி வியாபாரிகள். இன்னொரு பக்கம், 'எள்' அடிக்கப் பட்டது. மற்றொரு பக்கம் சீட்டு விளையாட்டுக் கும்பல். ஆங்காங்கே சிறுவர் - சிறுமியரின் தெல்லாங்குச்சி விளையாட்டும், கிளித்தட்டு விளையாட்டும் நடந்தபடி இருந்தன.  வாடிக்கையான இடத்தில் புல் கட்டுக்களைப் போட்டு விட்டுத் தாயும், மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இரண்டு கட்டுக்களும் நான்கு ரூபாய்க்குப் போகும். அன்றைய அடுப்பு எரியும். ராசகுமாரி வழியில் ஒரு பையன் சைக்கிளால் மோதிய கால்பாதத்தைத் தூக்கிப் பிடித்து அழுத்தினாள். செல்லாத்தா மகளருகே சென்று அவள் காலைத் தூக்கி தன் இடுப்பில் வைத்துக் கொண்டே, “அடி பலமாப் பட்டுட்டா..? கண்ணு மண்ணு தெரியாத காவாலிப் பய... சைக்கிளை அவன் ஓட்டுனா இல்ல... அவனை சைக்கிள் ஓட்டுச்சுதா...?” என்றாள்.  ராசகுமாரி பூவிரிந்ததுபோல் சிரித்தாள். மகள் கண் சிவப்பாக இருப்பதைப் பார்த்ததும் தன் முகம் சிவக்க. “கண்ணுல தூசி கீசி விழுந்துட்டா? நான் வேணுமுன்னா ஊதட்டுமா...” என்று சொல்லிக் கொண்டே செல்லாத்தா மகளின் இமைகளை விலக்கப் போனாள்.  உடனே ராசகுமாரி, “போம்மா. நாலுபேரு நிக்கிற இடத்துல ரகள பண்ணப்படாது.” என்று சிணுங்கிய படியே சொல்லிவிட்டுச் சிறிது நகரப் போனாள். இதற்குள் விறகுக்காரர் ஒருவர் சிரித்தபடியே கேட்டார்.  “செல்லாத்தா, அத்த! பேருக்கு ஏத்தபடி பொண்ணப் பெத்தே. எட்டாவது வகுப்புல நல்லாப் படிச்ச பொண்ணயும் நிறுத்திட்டுப் புல்லு வெட்டப் போட்டுட்டே... கண்ணுலகூட முள் குத்தும்... காலுட பட்டுட்டுன்னு கலங்கினா என்ன அர்த்தம்....”  செல்லாத்தா, சொன்னவரைப் பார்த்தாள். அந்த பார்வையில், முன்பு இதேமாதிரி கேள்வி கேட்டவர்களுக்கு, “வயித்துல மூதேவி இருக்கும்போது வாயில எப்படி சரஸ்வதி நிப்பாள்..? அந்த மனுஷன் செத்த பிறவு இந்த மவள் எப்படிப் படிக்க முடியும்?” என்ற பதில் மண்டிக் கிடந்தது.  இதற்குள் மனம் பொறுக்காத இன்னொரு மனிதர், “போக்கா... நம்ம ஊருக்கு ஒருதடவ கலெக்டரம்மா வரும்போது, நான் நம்ம ராசகுமாரியத்தான் நினைச்சேன். இவளும் படிச்சிருந்தால் கலெக்டரா வந்திருப்பாள்” என்றார்.  எல்லோரும் ராசகுமாரியையே பார்த்தார்கள். அவளுக்கு வெட்கமாகப் போய் விட்டது. காடு, மலைகளில் புல்வெட்ட விறகு வெட்டப் போனாலும், உடம்பில் எந்தவிதச் சுவடும் பதியாமல் தோன்றும் அந்த சேதாரம் இல்லாத சிறுசையே பார்த்தார்கள். இதர பெண்களைப்போல், ‘என்ன சின்னய்யா.. கத்தரிக்காய் வித்ததுல எவ்வளவு கிடச்சது’ என்று கேட்கவும் மாட்டாள். அப்படிக் கேட்ட  பெண்கள் தகராறு என்று வந்துவிட்டால் "சொத்தக் கத்தரிக்காயையா கொடுத்தே... ஒன் கையில கரையான் அரிக்க..." என்பதுபோல் திட்டவும் மாட்டாள். பார்வையிலேயே மரியாதை கொட்டுபவள் குறுஞ்சிரிப்பிலேயே பண்பாட்டைக் காட்டுபவள்.  அந்தப் பக்கமாக 'களை' வெட்டிவிட்டு வந்த முத்துமாரி, "செல்லாத்தா சித்தி! ஒன் மவளுக்குக் கல்யாணமாம். மெட்ராஸ் மாப்பிள்ளையாம்... சொன்னால் சாப்பாடு போடணுமுன்னு நினைச்சு சொல்லலியா..." என்றாள். செல்லாத்தா ஆதங்கத்தோடு சொன்னாள்.  "கண்காணாத சீமைக்கு இவள அனுப்பப் போறத நெனச்சா எனக்கு காலும் ஒட மாட்டக்கு கையும் ஒடமாட்டக்கு... இவள விட்டுட்டு எப்படித்தான் பிரிஞ்சிருக்கப் போறேனோ..."  தாயும், மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பிரிவுத்துயர் பிழிந்தெடுத்தது. ராசகுமாரி கண்களை மறைக்க வேறு பக்கமாகத் திரும்பியபோது செல்லாத்தா, "புல்லுக்கட்டுல உட்காரண்டி ஏன் நிக்கே? இல்லன்னா வீட்டுக்குப் போயேன். உட்காருடி...?" என்று சொல்லிக்கொண்டே மகளருகே போனபோது, அவள், "ஒனக்கு வேற வேல இல்ல இப்போ? நின்னா கால் ஒடுஞ்சுடுமா..." என்று மெல்ல முணுத்தபோது, செல்லாத்தா, "பாரு இவள..." என்பது மாதிரி முத்துமாரியைப் பார்த்தாள்.  உடனே முத்துமாரி "இவள் வயித்துலயும் ஒரு பூச்சி புழு பிறந்த பிறவுதான், ஒன்னோட துடிப்பு இவளுக்குத் தெரியும். ஒனக்குத் தெரியாதா? ஒருத்தி தாயாவும் போதுதான் அவள் தன்னோட அம்மாவுக்கு மகளாகிறாள். ஏடீ... ராசகுமாரி... உடனே ஒன் அம்மாவுக்குப் பேரனக் குடுடி அவளே வளர்த்துக்கட்டும்."  ராசகுமாரி எல்லோரையும் கூச்சமாகப் பார்த்துக் கொண்டாள். பிறகு கல்யாண விளைவுகளைக் கற்பனை செய்ய நினைத்தவள்போல் புல்கட்டில் உட்கார்ந்தாள். செல்லாத்தா வயிறாற பெற்ற மகளை வாயாரப் பருகிக் கொண்டிருந்தாள்.  திடீரென்று பன்றி உறுமுவதுபோல் சத்தம் கேட்டது. எல்லோரும் நிமிர்ந்து பார்த்தபோது, மிராசுதார் மனைவி பூவம்மா, என்னடிநெனச்சிக்கிட்டிய இரப்பாளிபய பெண்டாட்டிவளா.." என்று கத்திக்கொண்டே ஓடிவந்தபோது அங்கிருப்பவர்களில் யாரையும் அவளால் திட்ட முடியும் என்பதால் எல்லோரும் குழப்பத்துடன் நின்றார்கள்.  பூவம்மா, நேராக செல்லாத்தாவின் கையையும் அதோடு இருந்த அகத்திக்கீரைக் கட்டையும் கைப்பற்றியபடியே, "யாரைக்கேட்டுடி என் வயலுல கீரை பறிச்சே? ஒன் கள்ளப் புருஷன் வயலாடி?" என்றாள்.  செல்லாத்தாக் கிழவிக்கு எதுவும் ஓடவில்லை. இந்த அனுபவத்திற்கு அவள் புதியவள். ஒரு தடவை பூவம்மா தன் வயல்வேலை செய்யக் கூப்பிட்டபோது தான் வரமறுத்ததால்தான், இப்போது அவள் வாயால் கேட்டதை கையால் காட்டுகிறாள் என்பது தெரியாதவள் - அதிர்ச்சியால் வாயடைத்துப் போனவள், பிறகு, "சுப்பையா வயலுல அவன்கிட்டச் சொல்லிக்கிடலாமுன்னு பறிச்சேன். வேணுமுன்னா... மருதமுத்துக்கிட்ட கேட்டுப் பாரு..." என்று முனங்கினாள். பூவம்மாவுக்கு சுருக்கென்றது. அதேசமயம் பற்றிய கையை எடுக்க கெளரவம் விடவில்லை. "எங்க சித்தி மவன் வயலு மட்டும் திறந்தாடி கிடக்கு? கிழட்டு முண்ட... வா... வந்து அவன் கிட்டப்பேசு" என்று சொல்லிக் கொண்டே செல்லாத்தாவைப் பரபரவென்று இழுத்தாள். இழுத்த வேகத்தில் இழுக்கப்பட்டவளின் கால்கள் தரையில் உராய்ந்து கால்கள் தரையில் உராய்ந்து கால்கள் நிலத்திற்கும் நிலம் - கால்களுக்கும் கோடுகள் போட்டன.  ராசகுமாரிக்கு அவமானமாக இருந்தது. அம்மாவை, இந்த மாதிரி எவரும் அவமானப்படுத்தியது இல்லை. ஏதோ ஒரு வேகத்துடன் இழுபறி நடந்த இடத்திற்குத் தாவினாள். அப்போதுகூட அச்சத்தாலோ என்னவோ இழுத்த லட்சுமியைப் பிடிக்காமல் இழுபட்ட அம்மாவின் முதுகைப் பிடித்தாள். செல்லாத்தா முன்னாலும் பின்னாலும் மேனி இழுபட்ட வேதனையில் அலறியபோது ஆவேசமடைந்த ராசகுமாரி அம்மாவை விட்டுவிட்டு பூவம்மாவின் கைகளைப் பிடித்து விலக்கப் போனாள். உடனே அவள், "எச்சிக்கலநாய்களா... தாயும் மகளும் சேர்ந்தாடி சண்டைக்கு வாரீய... என்னைத் தொடுற அளவுக்கு திமுரு வந்துட்டாடி..." என்று யானை பிளிறுவதுபோல் கத்தியபோது சீட்டு விளையாடிக்கொண்டிருந்த அவளின் இருபத்தைந்து வயது மகன் முத்துப்பாண்டி, ஒடோடி வந்தான். வந்த வேகத்தில், ராசகுமாரியைக் காலால் இடறிக் கீழே தள்ளினான். மல்லாந்து விழுந்தவளின் தலைமுடியைப் பிடித்துத் தூக்கி நிறுத்தி கன்னத்தில் தன் கை சிவக்கும் வரை அடித்தான். அவள் காலை காலால் முட்டினான். அவனைத் தடுக்க வந்த செல்லாத்தாவை இடதுகை முட்டியால் தட்டிவிட்டான்.  ராசகுமாரியை இன்னும் அடித்திருப்பான். அதற்குள் நிலைகுலைந்து நின்ற சில்லறை வியாபாரிகளும் விறகு வெட்டிகளும் அவனைப் பிடித்துக் கொண்டார்கள். ஒரு சில ஏழைபாளைகள் எதிர்ப்புக் காட்டப் போனார்கள். அதற்குள் அவன், "என்கிட்ட எவன் வாராமுன்னு பாக்கலாம்" என்று கர்ஜித்தபோது அந்த அன்றாடம் காய்ச்சிகள் அடங்கிப் போனார்கள். மனதிற்குள் திட்டிக் கொண்டார்கள்.  பத்து நிமிடத்திற்குள் நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சியைப் பார்க்கக்கூடிய கூட்டம் எந்தவிதமான கருத்தையும் சொல்லாமல் கலைந்து கொண்டிருந்தது. ராசகுமாரியும் அந்தக் கூட்டத்தைப்போல் கலைந்துபோனாள். கிழிந்த ஜாக்கெட்டை மறைக்காமல் - நொறுங்கிய வளையல்களைக் கழற்றாமல், நிலையிழந்த கோலத்தோடு - களையிழந்த முகத்தோடு - கண்நிறைந்த நீரோடு புல்லுக்கட்டில் சாய்ந்து கிடந்த மகளை நோக்கி முத்துப்பாண்டியின் கனத்த உதையில் கீழே விழுந்து கிடந்த செல்லாத்தா மெள்ள எழுந்து மகளருகே நொண்டியடித்துச் சென்றாள். பிறகு அவளைக் கட்டிப் பிடித்துக் கதறினாள். எல்லோரும் இருவரையும் பரிதாபமாகப் பார்த்தபோது ராசகுமாரி மலங்க, மலங்க விழித்தாள். செல்லாத்தா மகளை விட்டு விட்டு நிமிர்ந்து நின்று சபதமிட்டாள்.  "கவலப்படாதடி... ஒன்னைக் கைநீட்டி அடிச்சவனைப் பழிக்குப் பழி வாங்குறேனா இல்லியான்னு பாரு. ஒன்னைத் தலைகுனிய வச்சவனைத் தலைநிமிர முடியாமச் செய்யுறேன் பாரு எழுந்திருடி..."  அம்மாவின் போர்க்குரலுக்குக் கட்டுப்படாமல் ராசகுமாரி வெறித்துப் பார்த்தபோது, யாரோ இருவர் அந்த இளங் கன்றைப் பிடித்துத் தாயிடம் விட்டார்கள். இதற்குள் எதுவுமே நடக்காததுபோல் மீண்டும் சீட்டு விளையாட்டில் ஈடுபட்ட முத்துப்பாண்டி செல்லாத்தாவின் குரல் உயர்ந்ததால் அங்கிருந்து திமிறினான். சீட்டுச் சகாகள் அவனைப் பிடித்துக் கொண்டார்கள். 'துருப்பு' தெரிஞ்ச பிறவு அவன் போவலாமா...?  தாயும், மகளும் வாய் செத்த ஊர்த் தெருவழியாகத் தலை குனிந்த படி நடந்து குடிசைக்கு வந்தார்கள். ராசகுமாரி வீட்டுக்குள் போனவுடனேயே வேகமாக ஒடி நார்க்கட்டிலில் குப்புறப் படுத்துக் கொண்டாள். "எய்யா... என்னப் பெத்த அய்யா ஒரு தடவ வந்து எங்களப் பாத்துட்டுப் போங்க... ஒரே ஒரு தடவ" என்று கூறியபடியே கூப்பாடு போட்டாள்.  செல்லாத்தாவுக்கு ஏதோ ஒரு வைராக்கியம், புடவையை இறுக்கிக்கட்டியபடியே வெளியே புறப்பட்டாள். அப்போது பக்கத்துக் குடிசைக்காரர் வந்தார்.  "எங்க அக்கா போறே..."  "போலீஸ் ஸ்டேஷனுக்கு. என் மகள கை தொட்டு அடிச்ச பய கையில விலங்கு மாட்டுறத நான் பாக்கணும். அவனப் போலீஸ்காரங்க நாய் மாதிரி நடுரோட்ல இழுத்துட்டுப் போறத என் மவள் கண்ணால பாக்கணும். நீயும் துணைக்கி வாரீயா..."  "சொல்றேன்னு தப்பா நினைக்காத... இங்க நடக்கிற அநியாயத்துக்காவ அங்க போறே, அங்க நடக்கிற அநியாயத்துக்கு எங்க போவே..? உன் மகள அடிச்சதுக்கு யார் சாட்சி சொல்லுவாவ? கோர்ட்டுக்குப் போவியா? புல்லு வெட்டப் போவிய? உன் மகளக் கூண்டுல நிறுத்தி வக்கீல் பச்ச பச்சயா கேப்பான். அந்தச் சின்னஞ் சிறிசால தாங்க முடியுமா...?"  செல்லாத்தா, மருவினாள். மருவி மருவி கருவிக்கொண்டே கேட்டாள்.  "அப்படீன்னா அடிச்சவன் கையில விலங்கு போட முடியாதா?”  "உன் கைக்கு விலங்கு போடாம இருந்தால் சரி...! முத்துப் பாண்டி அடிச்சதுனால கை வலிக்குன்னு உன்கிட்ட நஷ்ட ஈடு கேக்காம இருந்தா சரி! பேசாம நாலு பெரிய மனுஷங்கன்னு இருக்கவங்ககிட்ட நியாயம் கேளு..." செல்லாத்தா நிதர்சனத்தின் புலப்படாத - அதேசமயம் புரியக் கூடிய கரம் ஒன்று தலையில் அழுத்தியதுபோல் தரையில் உட்கார்ந்தாள். உள்ளே ராசகுமாரி, "ஏம்மா.. எனக்கு ஒரு அண்ணனோ தம்பியோ இருந்தால் இப்படி ஆவுமா... ஆவுமா..?" என்று குமுறிக் குமறி அழுதாள்.  செல்லாத்தா எழுந்தாள். ஊருக்குள் ஓடினாள். மகளும், தானும் அடிபட்ட அதே இடத்தில் கூடிக்கூடிப் பேசிக் கொண்டிருந்த பெரிய மனிதர்களைப் பார்த்து பொதுப்படையாகப் பேசினாள்.  "அய்யாமாரே... நான் கூட என் பொண்ண அணைக்கதுக்காவ தொட்டிருக்கேனே தவிர அடிக்கத் தொட்டதுல்ல. அப்படிப்பட்ட என் அருமை மவள முத்துப்பாண்டி கைநீட்டி அடிச்சிட்டான்யா... இந்த அநியாயத்தக் கேட்டுத்தாங்கய்யா..."  ஒருவரும் கேட்டுத் தரவில்லையானாலும் ஒருவர் கேட்டார்.  'பேசாம போம்மா... அதோ முத்துப்பாண்டி வாரான். அனாவசியமாய் பழையபடியும் சண்டை வரும். நாங்க கூப்பிட்டுக் கண்டிக்கோம். நீ போ..."  "என்னய்யா இது? அடிச்சவனை அடிக்காம அடிபட்டவளைப் போகச் சொல்றீய... உங்க பொண்ண இப்படி யாராவது அடிச்சா..."  "இதோ பாரு. அனாவசியமாய் வீட்ல இருக்கிற பொண்ணுங்கள இழுக்காத..."  "தெருவுல நின்ன பொண்ண அடிச்சிட்டானே... அடிச்சிட்டானே..."  "இப்போ அவனைக் கொலை பண்ணச் சொல்றியா. நடந்தது நடந்துட்டு. அவனச் சத்தந்தான் போட முடியும். நீயும், அகத்திக்கீரைய, கேட்டுட்டுப் பறிச்சிருக்கணும். வயல் வயக்காட்ல ஒரே திருட்டாப் போச்சு... அருணாசலம் மச்சான்! நாம ஏதாவது பண்ணணும். நேத்துக்கூடி... என் தென்ன மரத்துல... சரி... நீ போம்மா..."  செல்லாத்தா போவதற்கு முன்பே முத்துப்பாண்டி வேட்டியை முட்டிக்குமேல் தூக்கிப் பிடித்துக்கொண்டு கம்பீரமாக வந்து நின்றான். செல்லாத்தா கூனிக்குறுகி வீட்டுக்கு வந்தாள். இரவில் தாயும், மகளும் சாப்பிடவில்லை. அடுப்போடு சேர்ந்து விளக்கும் எரியவில்லை. இருவரும் புரண்டு படுத்தார்கள். ஒருவரை ஒருவர் இறுகத் தழுவிக் கொண்டார்கள். ஏங்கி ஏங்கி அழுதுகொண்டார்கள். அடிபட்ட இடங்களை அழுத்திக் கொண்டார்கள்.  இருவருக்கும் விடிவு இல்லாமலே பொழுது விடிந்தது.  ராசகுமாரி இன்னும் சுயத்திற்கு வரவில்லை. பழக்க தோசத்தில் எழுந்தவள் பழக்கமில்லாத நிகழ்ச்சியை நினைத்தாள். நினைவு அவளை நெருப்பாக்கிக் கட்டிலில் போட்டது. என்ன செய்வது என்று புரியாமல் செல்லாத்தா மகளையும், ஆகாயத்தையும் மாறி மாறிப் பார்த்தபோது முத்துமாறி வந்தாள்.  "பேசாமக் காளியாத்த கிட்ட முறையிடு, இன்னைக்கு வெள்ளிக்கிழம. நல்ல நாளு காளியாத்தா பழி வாங்கிக் காட்டுவாள்."  செல்லாத்தா, முத்துமாரியைப் பார்க்காமலும் - பதிலளிக்காமலும் காளி கோவிலுக்குப் போனாள். சிங்க வாகனத்தில் திரிசூலத்துடன் காட்சியளித்த காளியின் களிமண் சிலையின் முன்னால் நின்று கூப்பாடு போடுவதுபோல் கூக்குரலிட்டாள்.  "காளியாத்தா... என்னோட மகள இல்லல்ல... ஒன்னோட மகள முத்துப்பாண்டி அடிச்சு அவமானப்படுத்திட்டான். அவன் கையில கரையான் அரிக்கணும். என் மகளோட குனிஞ்ச தலை நிமுறணும். ஒரு அறிகுறி காட்டு தாயே... அடுத்த வெள்ளிக் கிழமைக்குள்ள அவன் நாசமாப் போவனும்"  சொல்லி வைத்தாற்போல் கவுளி அடித்தது. ஏழெட்டுத் தடவை, காளியம்மன் சிலையின் பின்புறம் 'டக்டக்'கென்ற சத்தம். செல்லாத்தா குலுங்கக் குலுங்க அழுதாள். "நீ இருக்கே தாயே இருக்கே" என்று சொல்லியபடியே உடைந்த சட்டி ஒன்றில் இருந்த குங்குமத்தை எடுத்துத் தன் நெற்றியில் பூச மறந்தவளாய் நேராக வீட்டுக்கு வந்தாள். கட்டிலில் அலைமோதிக் கொண்டிருந்த ராசகுமாரி நெற்றியில் குங்குமத் திலகமிட்டபடியே, "காளியாத்தா வரம் கொடுத்துட்டாடி... அடுத்த வெள்ளிக்கிழமைக்குள்ள என்ன நடக்குதுன்னு பாரு" என்றாள் கம்பீரமாக. ராசகுமாரியும், ஆறுதலடைந்தவள் போல் எழுந்து உட்கார்ந்தாள். செல்லாத்தா நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் வினாடி வினாடியாக எண்ணினாள். பலதடவை காளியம்மன் கோவிலுக்குப்போய் 'நீ பதிலளிச்சது பலிக்குமா தாயே?' என்று கேட்டுக் கொண்டாள். ஒரு வராத்தில் எதுவும் நடக்கவில்லை என்று சொல்ல முடியாது. சைக்கிளில் டவுனுக்குப் போகும் முத்துப்பாண்டி பைக்கில் போனான். செல்லாத்தாவே கண்ணழுகக் கண்டாள்.  சனிக்கிழமை செல்லாத்தாவும் மகளோடு சேர்ந்து முடங்கிப் போனாள். திடீரென்று குடுகுடுப்பைச் சத்தம்.  "நல்லகாலம் பொறக்குது... இந்த வீட்ட அவமானப் படுத்துணவன் ஒடுறான்... ஒடுறான்... தலைதெறிக்க ஒடுறான் செக்கம்மாவால... நாலு நாள்ல நாசமாப் போவுறான்." செல்லாத்தா எழுந்தாள். "நாலு நாள்னா... அடுத்த செவ்வாய். அதுக்குள்ள ஏதாவது நடக்கும். காளியாத்தா... சீ... அவள இனிமேல் கும்பிடப்படாது. செக்கம்மா... நீ சொல்றத நம்புறேன்."  செக்கம்மா சொன்ன பிறகும் அவளை நம்பாததுபோல் - வயல் வெளிக்குப் போகாமல் முடங்கிக் கிடந்து தெய்வ நிந்தனைக்கு ஆளாக விரும்பாதவள்போல் களை கொத்தியையும், ஓலைப் பெட்டியையும் தூக்கிக் கொண்டு செல்லாத்தா புல்வெட்டப் புறப்பட்டாள்.  சனிக்கிழமையில் தோன்றிய நம்பிக்கை, ஞாயிறில் கம்பீரமாகி, திங்களில் சந்தேகமாகி, செவ்வாயில் படபடப்பாகியது. அவளால் அன்று புல்வெட்டப் போக முடியவில்லை. செல்வாய் இரவில் ஊரில் பரபரப்பு. செல்லாத்தா விரைந்து போனாள். முத்துப்பாண்டிக்கு நிச்சயத் தாம்பூலமாம்.  ராசகுமாரி எலும்பும் தோலுமாகிவிட்டாள். உடலுக்காக உண்டவள். உயிருக்காக கஞ்சி குடித்தாள். குடித்தது குடலில் தங்கவில்லை. வாந்தியானது. கண்களில் வெளுப்பு ஏற்பட்டது. ஒருநாள் யதேச்சையாக வெளியே சற்று உலவிய ராசகுமாரி திடீரென்று, "எம்மா... எய்யா... இந்த ஊர்ல தெய்வம் இல்லியா... மனுஷங்க மாதிரி அதுவும் செத்துட்டா...?" என்று புலம்பிக் கொண்டே முற்றத்திற்கு வந்து தன் தலையை வைத்துச் சுவரில் இடித்தாள். மகளின் அழுகைக்கான காரணத்தை அறிய வெளியே ஒடிய செல்லாத்தா முத்துப்பாண்டி தன்னுடன் போகும் தோழர்களுடன் தன் வீட்டைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே சிரித்தபடி பேசிக்கொண்டு போவதைக் கண்டாள். உடனே அவளும் ஓடிவந்து அழுதாள். சுவரில் மோதிய மகளைப் பிடிக்கப் போனாள். முடியவில்லை. தானும் தன் பங்கு சுவரில் மோதியபோது ராசகுமாரி நிதானப்பட்டாள்.  செல்லாத்தா, நம்பிக்கை இழந்தவளாக புல்வெட்டப் புறப்பட்டாள். எதிரே சுடலைமாடச்சாமியாடி வந்தார். அவளால் தாளமுடியவில்லை. ஏதோ சொல்லப் போனாள். அதற்குள் சாமியாடி, "எனக்கு எல்லாம் தெரியும். இன்னும் பத்து நாள்ல பாரு, ஒன் மகள அடிச்சவன் அக்குவேறு... ஆணிவேறா ஆகப்போறான் பாரு... சொள்ளமாடன் சொல்லிட்டான்" என்றார்.  செல்லாத்தாவுக்குப் பாதி நம்பிக்கை வந்தது. கம்மாக்கரையில் நடந்தபோது, "சொள்ளமாடா... சாமியாடி... சொன்னது சரிதான்னா இப்பவே அசரீரியா ஏதாவது கேக்கணும்" என்றாள். அந்தச் சமயத்தில் அவளுக்கு முன்னால் போன இரண்டுபேர், "உப்பத் தின்னவன் தண்ணியக் குடிச்சுத்தான் ஆகணும். வேணுமுன்னால் பாரு" என்று பேசிக்கொண்டு போனார்கள். செல்லாத்தா தைரியப்பட்டாள்.  பத்து நாட்களில் ஐந்து கழிந்தன. செல்லாத்தாவுக்கு நம்பிக்கை சந்தேகமாகியது. வீட்டுக்குத் திரும்பும் வழியில் எதிரே ஒரு நாய் வந்தது. "இந்த நாய் திரும்பி நடந்தால் நான் நினைச்சது நடக்கும்" என்று நினைத்துக் கொண்டாள். நாய் திரும்பி நடந்தது. அவள் திருப்தியோடு நடந்தாள். எட்டாவது நாள், ஒரு சின்னப்பையன் எதிரே வந்தான். அவளால் தாள முடியவில்லை. "ராசா... பாட்டி நினைச்சது நடக்குமா? தெய்வ வாக்காய் சொல்லுடா ராசா..." என்றாள். பையன் பயந்துபோயோ என்னவோ, "நதக்கும்... நதக்கும்..." என்றான்.  செல்லாத்தாவுக்குப் பூரிப்பு. நாட்கள் நகர்ந்தன. "காளியாத்தா... செக்கம்மா... சொள்ளமாடா... என் மகளோட குனிஞ்சதல நிமுறணும்... நிமுறணும்" என்று சொல்லிக் கொண்டாள். நாட்கள் கூடியதுபோல் அவள் விண்ணப்பித்துக் கொண்ட தெய்வங்களின் பட்டியல்தான் கூடியது. பத்து நாட்களும் கழிந்து பதினோராவது நாள் வந்தது. முத்துப்பாண்டி வீட்டில், பங்காளிகளின் 'ஆக்கிப் போடும்' கூட்டம்.  செல்லாத்தா ஆவேசத்துடன் வீட்டுக்கு வந்தாள். ராசகுமாரி மூலையில் சாய்ந்தபடியே ஒரு கடிதத்தைப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கிக் கொண்டே யாருக்கோ சொல்வதுபோல், தாயிடம் சொன்னாள்.  "என்னைக் கட்டிக்கப்போறவருக்குக் கடுதாசி போட்டேன். நடந்ததை எழுதினேன். என் அவமானத்தத் துடச்சிட்டுத்தான் தாலி கட்டணுமுன்னு எழுதினேன். அதுக்கு அவரு, 'இவ்வளவு நடந்த பிறகு கல்யாணம் பண்ண முடியாது'ன்னு எழுதியிருக்கார்.  செல்லாத்தா மகளின் கையில் இருக்கும் கடிதம்போல் கசங்கிப் போனாள். பத்து நாட்களுக்கு முன்பு ராசகுமாரி பக்கத்து வீட்டுப் பையன் மூலம் கவர் வாங்கிக் கடிதம் எழுதியதைப் பார்த்தாள். இளமையில் தன்னோடு படித்து இப்போது பல இடங்களில் நல்ல வேளையில் இருக்கும் சிநேகிதிகளுக்கு மகள் கடிதம் எழுதுவதுண்டு. அந்தக் கடிதத்தையும் அப்படித்தான் எடுத்துக்கொண்டாள். ஆனால்..?  ராசகுமாரிக்குக் கல்யாணம் நடந்து சென்னைக்குப் போய்விட்டால் அவளுக்குப் பட்ட அவமானம் மறந்து போகலாம் என்றம், தானும் ஒருவேளை அங்கே போய் ஒதுங்கிக் கொள்ளலாம் என்றும் நினைக்கத் துவங்கிய செல்லாத்தா, உடல்போய் உயிர் மட்டும் பிடிதாரம் இல்லாமல் நிற்பதுபோல் நின்றாள். மகளைப் பார்த்தாள். அவளோ முடங்கிக் கொண்டாள்.  செல்லாத்தாவின் தலைக்குள் ஏதோ ஒன்று குடைந்தது. யாராவது ஒருவர் அவளிடம் 'கவலைப்படாதே' என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. வெளியே ஓடினாள். வெறி பிடித்தவள்போல் ஓடினாள்.  கண் பார்க்காப் பாதையில் மண்புழுபோல் நகர்ந்தாள். மரணக் கிணறைத் தாண்டும் யந்திர வண்டிபோல் தாவினாள். எதிரே சுடலைமாடச் சாமியாடி வந்தார். ஆறுதலை விரும்பினாள். அடைக்கலம் நாடினாள். நல்லது நடக்கும் என்ற நப்பாசை.  "என்னய்யா... ஒருவாரத்துல நீரு நன்மையாய் ஆரம்பிக்குமுன்னு சொன்னது தீமையாய் முடிஞ்சிருக்கு... சொள்ளமாடன் இப்போ என்ன சொல்லதார்?"  சாமியாடிக்கு அப்போ ஏதோ கஷ்டகாலம். கத்தினார். 'சொள்ளமாடன்னு கிடையாது. அப்படி இருந்தால் அவனை நான் கொல பண்ணிப்பிடுவேன். நீ வேற! இனிமேல் மாடனப் பத்திக் கேட்காத... அது வெறும் கல்லு...!"  சாமியாடி, தன் பாட்டுக்குப்போன போது செல்லாத்தா ஏதோ ஒரு குறுக்குத் தெருவில் இலக்கு இல்லாமல் நடந்தாள். அந்த வழியாக வந்த முத்துப்பாண்டியின் தாய்மாமன் அவளை எச்சரித்தார்.  செல்லாத்தா, தன்பாட்டுக்கு நடந்தாள். உயிரே எந்திரமாகி, உடலே ஒரு ஜடமானதுபோல் யாரோ தன்னை இழுத்துக்கொண்டு போவது போல நடந்து நடந்து ஊர்க் கச்சேரியின் முகப்பிற்கு வந்தாள். அங்கே திரண்டு நின்ற கூட்டமோ, கசாமுசா சத்தங்களோ, அவள் காதில் பதிவாகவில்லை.  கோயில் விழாக்களிலும், கல்யாணம் கருமாந்திரங்களிலும் அவசர அவசரமாக வந்துவிட்டு பிழைப்புக்கு ஒடும் அன்றாடம் காய்ச்சிகள், நாட்டாண்மைக்காரரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, அன்று கத்தி கம்புகளோடு திரண்டு நின்றார்கள். எல்லோருக்கும் ஏனோதானோவாய் தெரிந்த ஒரு சேதியை, தலை நரைத்தாலும் உடல் நரைக்காத நாட்டாண்மை எடுத்துரைத்தார்.  "இவ்வளவு நாளா... நான் உங்களுக்கு தீர்ப்பளிச்சேன். இப்போ நீங்க எனக்குத் தீர்ப்பளிக்கணும். வெட்டாம்பட்டிக்கு என் மகன் போயிருக்கும்போது, நம்ம ஊரை கேவலமா பேசியிருக்காங்க. அத தட்டிக்கேட்ட என் மகன் ராசதுரைய. அந்த ஊரு பயலுவ அடி அடின்னு அடிச்சிருக்காங்க. இந்த பதினெட்டு பட்டிகளும் பாத்து பயப்படுற பட்டி நம்மபட்டி இத என் விவகாரமா நினைக்காம, நம்ம ஊர் மானமா நெனச்சு, அந்த ஊருக்குபோயி அடிச்ச பயலுகள பிடிச்சிக்கிட்டு வரணும். உங்களோட இன்னய பொழப்புக்கு நான் பொறுப்பு. ஏதாவது ஏடாகுடமா நடந்தாலும் சகலத்தையும் நான் பார்த்துக்கிடுவேன். பொறப்படுங்க."  சில வேல் கம்புகள் ஆவேசமாய் உயர்ந்தன. அரிவாள்கள் முதுகிலிருந்து முன்பக்கம் வந்தன. வேல் கம்பில்லாத ஏழை பாழைகளின் கைகளில் சாட்டைக்கம்புகள் ஓங்கி நின்றன. ஆங்காங்கே பெண்களின் ஒப்பாரிகள். இந்தப் பின்னணியில், அம்மாவை தேடிவந்தசெல்லாத்தாவின் மகள் ராசகுமாரி, கூட்டத்தின் முகப்பிற்கு வந்தாள். பேய் அறைந்தவளாய் நின்ற தாயை இழுத்துக்கொண்டு போய் நாட்டாண்மைக்கு முன்னே நிறுத்தினாள். அப்போதுதான், சுய உணர்வு பெற்றதுபோல் செல்லாத்தா "இவ்வளவு பெரிய சபையில் என் மவளுக்கு நடந்த அநியாயத்த கேப்பாரில்லையா. கேப்பாரில்லையா..." என்று தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.  ஆளிருக்கு என்பதுபோல் இரண்டு மூன்று பெண்களும், ஒரு ஆணும். அவள் கைகளை தலையிலிருந்து விடுவித்தார்கள். அவளோடு கூலி வேலைக்கு ஒன்றாக போகிறவர்கள். ஒருத்தி ஆவேசமாக கத்தினாள்.  "ஒரு வயசுப் பொண்ண கை நீட்டி அடிக்கிறது கற்பழிக்கிறது மாதிரி. ராசகுமாரிக்கு நடந்தது நாளைக்கு என் மகளுக்கு நடக்கலாம். மறுநாளைக்கு இதோ இந்த பறட்டைச்சிக்கு நடக்கலாம். முதல்ல முத்துப்பாண்டிய தட்டிக் கேப்போம். என்ன சொல்றீய? நீங்கள்லாம் வேட்டி சேலை கட்டின செனங்கன்னா நம்ம ஊரு அநியாயத்துக்கு மொதல்ல நியாயம் கேட்போம். அப்புறம் வேணுமுன்னா வெட்டாம்பட்டிக்கு போகலாம்."  'அதானே... அதானே'  ஆவேசப்பட்ட கூட்டத்தை நாட்டாண்மை கையமர்த்தப் போனார். அதற்குள் கூட்டத்தில் பெரும்பாலோர் கும்பலாகி சாட்டைக் கம்புகளோடும். அரிவாள்களோடும், முத்துப்பாண்டி வீட்டைப் பார்த்து ஓடினார்கள்.    2.  பாம்புக் கயிறு     "இவருல்லாம் கிளாஸ் ஒன் ஆபீசராம்... பொல்லாத கிளாஸ் ஒன்."  "அதிலென்னடி சந்தேகம்? ஒண்ணாவது கிளாஸ் பையன் மாதிரி நடந்துக்கிறாரோ இல்லியோ..."  அலுவலக வாசல் படியில், திரைத்துணி மூடிய இரட்டைக் கதவுகள்போல நின்றபடி வாயாடிக் கொண்டிருந்த 'கேஷியர்' வசந்தாவும், வம்பாடிக் கொண்டிருந்த அஸிஸ்டெண்ட் மங்கையும், மூன்றடிக்கு அப்பால், காட்டுப் பன்றி மாதிரி, முகத்தை நீட்டியபடி, மூக்கால் சத்தம் எழுப்பிக் கொண்டிருந்த அதிகாரி அர்ச்சுனனைக் கவனிக்கவில்லை. வசந்திக்குப் பதிலளிக்கும் வகையிலும், தனக்கு சிலேடை வரும் என்று காட்டிக் கொள்ளும் கங்கணத்தோடும் மங்கை, ஒரு போடு போட்டாள்.  "இந்த அர்ச்சுனனைப் பாரு, சொல்லுக்குச் சொல் 'நான் குரூப் ஏ அதிகாரியாக்கும்' என்கிறார். அதுவும் சரிதான். லேடீஸ் இருக்கிறதைப் பற்றித் துளிக்கூடக் கவலைப்படாமல் அவர் வாயில் 'ஏ' வார்தைகள்தானே வருது."  கனைப்புச் சத்தம் கேட்டுத் திரும்பிய இரண்டு இளம் பெண்களும், புலியை நேருக்கு நேராய் சந்தித்ததால் ஸ்தம்பித்துப் போன மான்கள்போல், அவரையே மருண்டு மருண்டு பார்த்தார்கள். ஐம்பது வயதிலும், எண்பது கிலோ எடை கொண்ட உடம்பில், முன் தள்ளிய அவரின் வயிறும், பின் தள்ளிய கழுத்தும் சிவப்பேறிய கண்களும், அவர்களைப் பயமுறுத்தின. 'இந்தக் கிராதகனுக்கு. பேசுனது கேட்டிருக்குமோ... இல்லாட்டா ஏன் அப்படிப் பார்க்கிறார்? அய்யய்யோ.... அம்மம்மோ....'  உரத்த சத்தத்தில் மூச்சு விட்டபடி ஒன்றும் பேசாமல், அவர்களையே முறைத்துக்கொண்டிருந்த அர்ச்சுனனைப் பார்த்து, வசந்தா, தட்டுத் தடுமாறி, "குட்மார்னிங் ஸார்" என்றாள். மங்கை "கும் மோர்னிங் ஸார்" என்றாள். அர்ச்சுனன், அட்டகாசமாகக் கேட்டார்.  "என்னம்மா நீங்க.. காலங்காத்தால வழிமறிச்சுக்கிட்டு? நிற்கறதே நிற்கிறீங்க ஆபீஸுக்கு உள்ளே நின்னு தொலையுங்களேன். வேலை வெட்டி செய்யாட்டியும் பொம்பிளைங்க ஆப்ஸூக்கு உள்ளே இருக்கணும். படிதாண்டி தெருவுக்கு வரப்படாது."  வசந்தா வலது கையால் இடது மணிக்கட்டைத் தடவி விட்டபடி மெளனமாகி நின்றாள். மங்கை, அர்ச்சுனனை மலங்க மலங்கப் பார்த்தாள்.  அர்ச்சுனன், தனது எண்பது கிலோ எடையை குரலில் காட்டினார்.  "என்னம்மா காட்டெருமை மாதிரி நின்னுக்கிட்டு? உள்ளே போங்க இல்லன்னா எனக்காவது வழி விடுங்க, ஐ ஸே... ஒங்களைத்தான். ஒரு கிளாஸ் ஒன் ஆபீசர்கிட்டே நடந்துக்கிற முறையா இது? அட வழி விடுங்கம்மா."  இந்த இரண்டு பெண்கள், பக்கமாய்ப் பிரிந்தபோது, அதிகாரி அர்ச்சுனன். அவர்களுக்கு இடையே புகுந்தார். பத்தடி நடந்துகூட முடித்தார். அந்தப் பெண்கள் நிம்மதி மூச்சு விட்டபோது, அர்ச்சுனன், திரும்பி நடந்து வந்து அதட்டினார்.  'எதுக்கும்மா... இங்கே நிற்கிங்க... பதில் சொல்லுங்க. சொல்றிங்களா.. இல்ல, சொல்ல வைக்கணுமா?"  வசந்தா, வாய் தவறி 'கேன்டீனுக்கு ஸார்' என்று சொல்லி விட்டாள். பிறகு, சொன்ன வார்த்தையை திரும்பப் பெறப் போவதுபோல், உதடுகளைக் குவித்தாள். மங்கை, அவளை எரித்துப் பார்த்தாள்.  அர்ச்சுனன், தலையை முள்ளம் பன்றி மாதிரி உசுப்பிக் கொண்டே, ஒரு சிரிப்புச் சிரித்தார். அது கோபச் சிரிப்பா, சாதாச் சிரிப்பா அல்லது சோதாச் சிரிப்பா என்று அந்தப் பெண்கள் அனுமானிக்க முடியாமல் அல்லாடியபோது, அர்ச்சுனன் ஆணையிட்டார். "போங்கம்மா. போய்த் தொலையுங்க. அப்படியே எனக்கும் ஒரு மசால்தோசை வாங்கிட்டு வாங்க, அட போங்கம்மா. ஆபீஸ்ல, சாப்பிடுறதுக்காகத்தானே வேலை பார்க்கிறோம். அதனால சாப்பிடுறதையே ஒரு வேலையா வச்சால் என்ன தப்பு?"  அந்தப் பெண்களுக்கு மரித்தெழுந்தது போன்ற உற்சாகம். அப்புறம் லேசாய் பயம். அதிகாரி அர்ச்சுனன், இளக்காரமாய் கிண்டல் செய்துவிட்டுப் போகிறாரா? கேன்டீனுக்கு போகலாமா? போனால் 'அது' திட்டுமா... இல்லே போகாட்டி திட்டுமா. அர்ச்சுனனிடம் கேட்கலாம் என்பதுபோல் குதிகாலைத் தூக்கிய மங்கையின் கரத்தை வசந்தா பற்றிக் கொண்டாள். அவளுக்கு அகோரப் பசி, இந்தச் சமயத்தில், அதிகாரி அர்ச்சுனன், உள்ளே இருந்த ஊழியர்களை சட்டை செய்யாமல், தனது அறையின் புஷ் டோரை வேகவேகமாகத் திறந்து நுழைந்தபோது"  ‘பி.ஏ.' சண்முகம் உள்ளே வந்தான்.  அர்ச்சுனன் ஆணையிட்டார்.  "டில்லிக்கு எஸ்.டி.டி. போட்டு டெப்டி டைரக்டருக்குக் கனெக்ஷன் கொடு. தேர்ட் புளோர்ல அஸிஸ்டெண்ட் சால்ட் கமிஷனர் டூர் போயிட்டு எப்போ வருவார்னு கேட்டுட்டு வா... குயிக்"  "பர்ச்சேஸ் அஸிஸ்டெண்ட்' தண்டாயுதபாணி, பேசிக் கொண்டே உள்ளே வந்தான்.  "ஸார். நீங்க நேற்று சொன்னபடியே ராம் அண்ட் சீதாவுக்கு போன் செய்து இன்னைக்கே சரக்கை லாரியிலேயோ டெம்போவுலயோ கொண்டு வந்து டெலிவரி செய்யணுமுன்னு சொல்லிட்டேன் ஸார். இப்பவும் டெலிபோன் செய்தேன் ஸார்... லாரியில ஏத்திக்கிட்டு இருக்காங்களாம்."  "நீதான் சொல்லப் பொறுக்க மாட்டியே! ஒனக்கு ஏதும் கமிஷன் கிடைக்குறதா?"  "ஸார்"  "ஏய்யா, குரலை உயர்த்துறே? நேத்து பேச்சுவாக்குல, அதுவும் ஈவினிங்ல சொன்னேன். இன்னைக்கு ஒரு வாட்டி என்கிட்டே செக்கப் செய்துட்டு, போன் செய்திருக்கலாமே. ராம் அண்ட் சீதாவைவிட கோவிந்தா அண்ட் கோ, சீப் ரேட்டுக்குத் தரேன்னு எனக்கு நேத்து நைட்லே போன் செய்தாங்க. அதனால சரக்கை அனுப்ப வேண்டாமுன்னு ராம் அண்ட் சீதாவுக்கு போன் போட்டுச் சொல்லிடு."  "ஸார். சரக்கை இந்நேரம் லாரியில் ஏற்றி..."  "எத்தன பெர்சண்டுய்யா?"  "என்னது ஸார்?"  "ஒனக்குக் கமிஷன் எத்தனை பெர்சண்டுன்னேன்.  "இயல்பிலேயே முன்கோபமும் முரட்டுத்தனமும், போதாக் குறைக்கு நேர்மையும் கொண்ட தண்டாயுதபாணி, அர்ச்சுனனிடம், அதே கேள்வியைத் திருப்பிக் கேட்கப் போனான். அப்போது, அவன் வாய்க்கும், வயிறுக்கும் இடையே கடுமையான போர். இறுதியில் வெற்றிபெற்ற வயிற்றைக் கையால் குத்தியபடியே, அவன் பேசாமல் இருந்தபோது அர்ச்சுனன் அதட்டினார்.  "போய்யா. மொதல்ல சொல்றதைச் செய்... ஒங்களுக்கெல்லாம் மெமோ கொடுத்தால்தான் புத்தி வரும்."  இவரைப்போல், பல்வேறு காரணங்களுக்காக, பலப்பலவான அதிகாரிகளை எதிர்த்துப்பேசி, பல்லுக்கு ஒன்று வீதம் சுமார் முப்பத்திரண்டு மெமோக்களை வாங்கியிருக்கும் தண்டாயுதபாணி, தண்டமான முண்டம்போல் வெளியேறினான். அறை வாசலில் அந்தப் பெண்கள் நீதான் கொடுக்கணும் என்று மசால் தோசையை ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றித் திணித்துக் கொண்டிருந்த போது, இன்னும் இருக்கையில் உட்காராத அர்ச்சுனன், அவர்களை இடித்துக்கொண்டே வெளியே வந்து பி.ஏ. சண்முகத்திடம் கர்ஜித்தார்.  "யோவ்... இன்னுமாய்யா... டில்லிக்கு லைன் கிடைக்கல?"  "இப்போதான் தேர்ட் புளோர். அஸிஸ்டெண்ட் சால்ட் ஆபீசுக்குப் போயிட்டு வர்றேன் ஸார். இன்னும் அரை மணி நேரத்துல ஏ.ஸி. வந்துடுவாராம்."  அர்ச்சுனன் ஏசினார். "ஒனக்கு அறிவிருக்காய்யா? டில்லி முக்கியமா? தேர்ட் புளோர் முக்கியமா? நீ சரியான தேர்ட் ரேட் பெல்லோ மொதல்ல டெல்லிக்கு எஸ்.டி.டி போடுய்யா"  பல்லோர் முன்னிலையில் தன்னைப் படாத பாடுபடுத்திய அர்ச்சுனனின் வாயில் மானசீகமாய் இரண்டு குத்துக்களை விட்டபடியே, சண்முகம் டெலிபோனைச் சுழற்றியபோது, அர்ச்சுனன், தலையை ஒரு சுழற்றுச் சுழற்றியபடி தனது அறைக்குப் போனார். வாசலில், அந்த மசால் தோசைப் பெண்கள் இருப்பதைப் பார்க்காமல், அதே சமயம் அவர்களை இடித்தபடியே இருக்கையில் வந்து தொப்பென்று உட்கார்ந்தார்.  அந்த அர்ச்சுனப் பூனையிடம், யார் மசால் தோசையைக் கட்டுவது என்று வாதம் செய்த வசந்தாவும் மங்கையும் இறுதியில் சமரசப்பட்டு அந்தச் சின்ன தோசையை, ஆளுக்கொரு பக்கமாகப் பிடித்தபடி, ஏதோ எலியைத் தூக்கிக் கொண்டு வருவதுபோல் அவர் மேஜை முன்னால் போட்டார்கள். அர்ச்சுனன், கொடுத்தவர்களைப் பார்க்காமல், கொடுத்ததையே பார்த்தார். பிறகு, ஐந்து நிமிடத்தில், இலையைத்தான் விட்டு வைத்தார். அவர் சாப்பிடுவது வரைக்கும் அந்தப் பெண்கள் அங்கேயே நின்றார்கள். அர்ச்சுனன் வாஷ் பேசினுக்குச் சென்று வாயைக் கழுவாமல், கைக்குட்டையில் அதை துடைத்தபோது, வசந்தா உதடுகளை ஈரமாக்கியபடி கேட்டாள்.  "ஸார்... மசால் தோசை ஒன் பிப்டி. காசு கொடுக்கிறீங்களா?"  அர்ச்சுனன், மீண்டும் கோபமாக இருக்கையை விட்டு எழுந்தார். மசால் தோசையை திண்பது போல் வாயை வைத்துக்கொண்டு பயங்கரமாய்க் கத்தினார்.  "ஏம்மா வசந்தா ஏம்மா மங்கை நான் ஒரு கிளாஸ்-ஒன், குரூப் ஏ ஆபீசர். ஒரு மசால் தோசைக்குப் பெறமாட்டேனா? ஆப்டர் ஆல், ஒன் பிப்டி சீ... இந்தாங்கம்மா. ரெண்டு ரூபாய், ஒன் பிப்டி தோசைக்கு. பிப்டி பைசா அதை நீங்க கொண்டு வந்ததுக்குக் கூலி. ஏம்மா பொம்மை மாதிரி நிற்கிறீங்க? பிசையற கையை எடுத்து அந்த ரெண்டு ரூபாயைத் தூக்குங்கம்மா. ஐ ஸே டேக் தி டு அண்ட் கெட் அவுட் ஒன் திங்... யூ அண்டர்ஸ்டாண்ட். நீங்க இவ்வளவு சில்லியா நடந்தாலும், நான் சில்லியாய் நடந்துக்க மாட்டேன். ஏதோ ஈவினிங்ல எங்கேயோ போய்த் தொலையுறதுக்கு ஒன் அவர் பெர்மிஷன் வேணுமுன்னு நேத்து கேட்டிங்களே... தாராளமாய் போகலாம்... அதுக்கு முன்னால. ரெண்டு ரூபாயைப் பொறுக்கிறீங்களா? இல்ல டிஸிபிளினரி ஆக்ஷன் எடுக்கணுமா... என்னமோ சொன்னான் கதையில... எவளோ ஒருத்தி சேலையை அவிழ்த்து..."  வசந்தாவும். மங்கையும் ஒரு மூலையில், மின்விசிறி காற்றில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்த இரண்டு ரூபாய் நோட்டைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் அர்த்தத்தோடு பார்த்தார்கள். போனவாரம், இதே மாதிரி பூரி கிழங்கு வாங்கி கொடுத்துவிட்டு, காசு கேட்காமல் போனபோது, இதே இது "ஏம்மா நான் இன்ன பிச்சைக்காரனா? காசு கேட்காம போறீங்களே என்று கத்தியது. அந்தப் பெண்கள் ஒன்றும் புரியாமல் நகர்ந்த போது, அர்ச்சுணன் அவர்களைப் பார்த்து 'சண்முகத்த வரச்சொல்லுங்க.... உங்கள மாதிரி அவனும் ஒரு தண்டம் என்றார்.'  சண்முகம் வந்தான். அர்ச்சுனன், அதட்டிக் கேட்டார்.  "தேர்ட் புளோர் போனியா?"  "இல்ல ஸார். டில்லி கால் டிரை பண்றேன்."  "ஒனக்கு அறிவிருக்காய்யா... டில்லி அபிஷியல்... தேர்ட் புளோர் பெர்சனல். இந்தக் காலத்துல. மொதல்ல பெர்சனல் சமாசாரத்தைக் கவனிக்ணும். கவர்மென்ட்ல கழுதையும் குதிரையும் ஒன்றுதான். அதனால தேர்ட் புளோருக்குப் போய்யா... போய்த் தொலய்யா."  சாதுவான சண்முகத்திற்குக் காடு தாங்காத சினம் வரப்போனது. சொந்த வேலைக்கு என்ன விரட்டு விரட்டுகிறார்? விடுவிடுன்னு விடணும்... சண்முகம் குத்தலாய்க் கேட்கப் போனபோது, அர்ச்சுனன் முந்திக் கொண்டார்.  "யோவ்... சால்ட் டிபார்ட்மெண்ட்ல... நீ ஒரு டெபுடேஷன் போஸ்ட்டுக்கு அப்ளை செய்திருக்கே பாரு! ஒனக்கே அதைக் கொடுக்கும்படி... அலிஸ்டெண்ட் சால்ட் கமிஷனர்கிட்டே சொல்லணும். அவன் போன் அவுட் ஆப் ஆர்டர். அதனால வந்துட்டானான்னு பார்த்துட்டு வா. நான் போய்... காதும் காதும் வச்சு முடிச்சுடுறேன். போய்யா... ஏய்யா... ஆந்தை மாதிரி பார்க்கறே? போற வழியில... தண்டாயுதபாணியை வரச் சொல்... அவனும் ஒன்னை மாதிரி ஒரு உதவாக்கரை."  சண்முகம், பரம சாதுவாகி, அவருக்கு ஒரு கும்பிடு போட்டபடியே போனான். சிறிது நேரத்தில், தண்டாயுதபாணி வந்தான். அர்ச்சுனன் கேட்கும்முன்பே பதிலளித்தான்.  “ராம்... அண்ட் சீதாவுக்கு போன் போட்டேன். சரக்கு வேண்டான்னேன். 'லாரில லோட் பண்ணிட்டோம். லோடிங் அண்ட் அன்லோடிங்கிற்கு ஒங்கப்பனா பணம் கொடுப்பான்'னு கத்தறான் ஸார். கடைசியில. எப்படியோ சம்மதிச்சுட்டான் ஸார்."  சண்முகம் பேச்சை, கண் துடிக்கக் கேட்ட அர்ச்சுனன், அவன் காது துடிக்க ஆணையிட்டார்.  "கோவிந்தா அண்ட் கோவைப் பற்றி சரியாய்த் தெரியாது... அதனால தெரியாத அந்த தேவதையைவிட... தெரிந்த இந்த திருட்டுக் கம்பெனியான ராம் அண்ட் சீதா தேவல... இப்பவே சரக்கை அனுப்பச் சொல்லி போன் போடு."  "இந்நேரம்... அன்லோட் செய்திருப்பாங்க ஸார்... வாயில் வந்தபடி திட்டுவாங்களே ஸார்."  அர்ச்சுனன், வாயில் வந்தபடி பேசினார்.  "நான் சொல்றதைக் கேட்கத்தான் நீ இருக்கே. நீ சொல்றதைக் கேட்க நான் இல்ல... வரவர ஒனக்கு கொழுப்பு ஜாஸ்தியாகுது. நூற்று நாலு டிகிரி வெயிலடிக்கிற இடத்துக்கு மாத்தினால்... கொழுப்பு கரைஞ்சிடும். போய்யா... போய் போன் போடுய்யா. ஒரு கிளாஸ் ஒன் ஆபீசர் சொல்றேன். நீ பாட்டுக்கு நிற்கிறியே போய்த் தொலய்யா."  ஆஜானுபாகுவான தண்டாயுதபாணி, கூனிக்குறுகி வெளியே வந்து இருக்கையில் உட்கார்ந்தான். எல்லாவித அவமானங்களையும் வாங்கிக் கட்டிக்கொண்டு எதுவுமே நடக்காததுபோல் பேசிக்கொண்டிருந்த அலுவலக ஊழியர்களைக் கோபங் கோபமாய் ஏசினான். "இந்த ஆசாமி எல்லாரையும் ஆடு மாட்டைப் விரட்டுறதுமாதிரி விரட்டுறான். பெண்டாட்டியைத் திட்டுறது மாதிரி திட்டுறான். யாராவது எதிர்த்துப் பேசுறிங்களா? வரவர நமக்கு மானங்கெட்ட பிழைப்புல ரசனை வந்துட்டுது. என்ன பேச்செல்லாம் பேசறான். யாராவது ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசுறிங்களா..."  வசந்தா, எதிர்க் கேள்வி போட்டாள்.  "உங்களை யார் கேட்க வேண்டான்னது? சொல்லப் போனால் ஒங்களைத்தான் அதிகமாய் ஏசுறார்."  "ஏற்கனவே, பல மானேஜர்களுக்கும் எனக்கும் தகராறு. இது கூடயுமா..."  "அப்படியும் நீங்கதானே ஜெயிச்சிங்க? ஒங்க நேர்மை முன்னால நிற்க முடியாமல் ஒரு மானேஜரை... அந்தமானுக்கு மாத்துனாங்க. இன்னொருத்தி திருச்சிக்குப் போனாள். ஒருத்தன் டில்லிக்கு. ஓங்க தைரியம் யாருக்கு ஸார் வரும்? ஆனால் ஒன்று. இந்த மானேஜரை ஒங்களால ஜெயிக்க முடியாது. முடியவே முடியாது. பந்தயத்துக்கு வர்நீங்களா.."  "எவ்வளவு பந்தயம்."  "இருநூறு ரூபாய்."  "மாறப்படாது. அப்புறம் கெட்ட கோபம் வரும்."  "எனக்கு மட்டும் என்னவாம்?"  இதற்குள், உள்ளே இருந்து, "தண்டாயுதம்... தண்டாயுதம்" என்று அர்ச்சுனக்குரல் இடி முழக்கமிட்டது. தண்டாயுதபாணி, தன் சகாக்களை வீறாப்பாய்ப் பார்த்தபடி, "இன்னைக்கு 'அதை' எப்படிக் கேட்கப்போறேன். பாருங்க. உங்களுக்குக் கேட்கும்படியாய் கேட்கப்போறேன் பாருங்க.." என்று சவாலிட்டபடியே உள்ளே போனபோது, சகாக்கள் கலக்கத்தோடு நின்றார்கள். ஏனென்றால், இந்த தண்டாயுதபாணி கோபம் வந்தால் கை வைக்கவும் தயங்காதவன். மங்கை பந்தயம் போட்ட வசந்தாவை முறைத்தாள். மீனா, பியூன் ஏகாம்பரத்தை. அர்ச்சுனன் அறைக்குள் போய். அசம்பாவிதத்தைத் தடுக்கும்படி சைகை செய்தாள். தண்டாயுதபாணி, அதிகாரி அர்ச்சுனனை முறைத்த படியே, அடிமேல் அடி வைத்து முன்னேறினான். அவர் முன்னால், கண்ணில் விரலைவிட்டு ஆட்டக்கூடிய தூரத்தில் நின்று கொண்டு, கர்ஜித்தான்.  "ஸார்... மொதல்ல ஒரு விஷயத்தை நிர்வாகத்துல தெரிஞ்சுக்கணும். முதல்ல, ராம் அண்ட் சீதா என்கிறது. அப்புறம் கோவிந்தா அண்ட் கோ என்கிறது. அப்புறம் பழையபடியும் ராம் அண்ட் சீதாதான் டெலிவரி செய்யனும் என்கிறது. இதுல்லாம் துக்ளக் மாதிரி..."  மேற்கொண்டு ஆணித்தரமாகப் பேசப்போன தண்டாயுதபாணியை, அதிகாரி அர்ச்சுனன், அப்பாவித்தனமாய்ப் பார்த்தபடி, இடைமறித்துப் பேசினார்.  "யோவ்... சீதாதான், டெலிவரி செய்யனுமுன்னு நீ சொன்னதும், பல நாளாய் ஒன்கிட்டே சொல்ல நினைத்தது. இப்போ ஞாபகத்துக்கு வருதுய்யா... ஒன் ஒய்ப் டெலிவரிக்குப் போனதால, நீ சாப்பாடு கிடைக்காமல் தெருவுல நிற்கல்ல? நாளைக்கு மட்டும் அப்படி நிற்க வேண்டாம். என் வீட்ல ஒனக்கு டின்னர், ஒன் மூஞ்சிக்காகப் போடல, ஒன் வீட்டு கிரகப்பிரவேசத்துல, ஒன் ஒய்ப் சீதா என் தட்டுல என்னவெல்லாமோ கொட்டியபடியே 'அங்கிள்... அங்கிள்’னு என் சொந்த டாட்டர் மாதிரி அன்பைக் காட்டினாள்பாரு, தின்னதை சத்தியமாய் மறந்துட்டேன். ஆனால் அவளோட அன்பை மறக்கலய்யா. மட்டனா, சிக்கனா, எது ஒனக்குப் பிடிக்கும்? ஏய்யா... ரெண்டும் வேணும் என்கிற மாதிரி பார்க்கிறே? நான் கிளாஸ் ஒன் ஆபீசர்தான். ஆனாலும் என்னால ஒண்ணுதான் தர முடியும். சொல்லுய்யா. சொல்லி தொலய்யா..."  ஆயுதபாணியாய் வந்த தண்டாயுதபாணி நிராயுதபாணியாகி கண்ணிர் மல்கக் குரல் கம்மக் கேட்டான்.  “ஸார் எனக்கு சாப்பாடு போடுறிங்களோ, இல்லையோ இருநூறு ரூபாய் கடனாய் தாங்க ஸார். அடுத்த மாதம் தந்துடறேன். ஸார்!”  3. பால் பயணம்    அந்த நகரத்தின் பிரதான வீதியில் கலக்கும் குறுக்குச் சந்து மூலையில், காய்கறிகளைப் பேரம் பேசியபடியே தராசில் அள்ளிப் போட்டவளை, சம்பந்தம் சற்றுத் தொலைவில் நின்றபடி நோட்டம் போட்டார். அவர் போட்ட கணக்கில் ‘தேறுகிறவள்’ போல் தெரிந்தாள்; ஆகையால் - சம்பந்தமும் அந்தக் கடைக்குப் போனார்.  “உருளைக் கிழங்கு கிலோ என்னப்பா...? அவங்களுக்குக் கொடுக்கிற மாதிரியே எனக்கும் கிழங்கு இருக்கணும். அவங்க கொடுக்கிற காசுதான் நானும் கொடுப்பேன்...”  காய்கறிக்காரர் மட்டும் அவளைப் பார்க்கவில்லை. அவளும் பார்த்தாள். சிறிது அழுத்தமாகவே பார்த்தாள். பிறகு லேசாய்ச் சிரித்துக் கொண்டாள். சம்பந்தத்திற்கு கிளுகிளுப்பாகியது. சிவப்பு, வெள்ளைக் கோடுகள் போடப்பட்ட டி-சட்டையை இழுத்து விட்டுக்கொண்டார். கைக்குட்டையை எடுத்து முகத்தை முழுமையாகத் துடைத்துக் கொண்டார். இதற்குள், கடைக்காரர் அரைக்கிலோ உருளைக்கிழங்கை காகிதப் பையில் போட்டு அவரிடம் நீட்டினார். ஹோட்டலில் சாப்பிடும் அவர், அதை வாங்கிக்கொண்டு, ஸ்டைலாக சைட் பாக்கெட்டிற்குள் கையை விட்டுப் பத்து ரூபாயை நீட்டினார். காய்கறிக் கடைக்காரர். அங்கே இருப்பவர்களிடம் சில்லறை கேட்டார். எல்லோரும் கை விரித்ததும், பக்கத்தில் இருந்த வாடகைச் சைக்கிள் பையனிடம் பத்து ரூபாயை நீட்டி, சில்லறை கேட்டார். அவன் மெயின் பஜாருக்குள், டவுசரைக் கைகளால் தட்டியபடி, நிதானமாகப் புறப்பட்டான். வலக்கையில் தூக்குப் பையைப் பிடித்தபடி, சம்பந்தத்தைச் சம்மதமாய்ப் பார்த்தபடியே நடந்தாள். பிரதான வழியில் நின்றாள். எவருக்கோ காத்து நிற்பதுபோன்ற தோரணை.  சம்பந்தத்துக்கு எரிச்சலுக்கு மேல் எரிச்சல், சைக்கிள் பயலைக் காணவில்லை. கடைக்காரரிடம் கோபமாகப் பேசப் போனார். அது. அவர் இயல்புக்கு இயலாதது. கோபத்தைக் குளுமையாக்கியபடியே, "நாளைக்குச் சில்லறை வாங்கிக்கிறேன்" என்றார். கடைக்காரர் காதில் அந்த வார்த்தைகள் விழுந்தனவா இல்லையா என்பதைப் பற்றிக் கூடக் கவலைப்படாமலே அவர் நடந்தார். நடை மாதிரியான ஓட்டம். ஒட்டம் மாதிரியான நடை.  சம்பந்தம், பிரதான வீதிக்கு வந்து, சுற்றுமுற்றும் பார்த்தார். கூட்ட நெரிசலில் அவளைக் காணாததால், கார்ப்பரேஷன்காரர்கள் காய்கறிகளையும் வாரிக் கொண்டு போகவேண்டும் என்று விருப்பப்பட்டார். பிறகு சீச்சி. இப்படியெல்லாம் நினைக்கப் படாது என்று தமக்குத்தாமே சொல்லிக்கொண்டார். காரணம் அதே வீதியில் அந்தப் பெண் இப்போது தென்பட்டாள். எவளிடமோ பேசிக் கொண்டிருந்தாள்.  சம்பந்தம் பொறுமையாக நின்றபோது -  அவள் நடந்தாள். கையில் பிடித்த தூக்குப் பையைத் தோளில் தொங்கப்போட்டுக் கொண்டு, சராசரி நடையாய் நடந்தாள். காலில் கொலுசுச் சத்தம், அவரையும் சுண்டி இழுத்து நடக்க வைத்தது. அவளுக்குச் சுமார் நூறடி தள்ளி மனித நடமாட்டத்திற்காகக் கட்டப்பட்ட பிளாட்டார விளிம்பில் அவரும் அவள் நடைக்கு ஏற்ப நடந்தார். அவளுக்கு பின்னால், தான் செல்லவில்லை என்று எல்லாரும் அனுமானிக்க வேண்டும் என்பதுபோல், ஆங்காங்கே நின்றுயாரையோ தேடுவதுபோல் நின்றார். கைக்கடிகாரத்தை பார்த்துக் கொண்டார். பிறகு தேடியவர் கிடைக்கவில்லை என்பதுபோல் பாசாங்காய் நடந்தார். அதேசமயம் எதிரே தென்பட்ட ஒரே ஒரு நண்பரைப் பார்க்காததுபோல் முகத்தைத் திரும்பியபடியே நடந்து -  அவளை நெருங்கி விட்டார். பத்தடி வித்தியாசத்தில் நடந்தபோது, லேசாக இருமினார். அவள் திரும்பிப் பார்த்தாள். லேசாய் நின்று பார்த்தது மாதிரிகூட அவருக்குத் தோன்றியது. அவருக்குள் திருப்தி.... 'தேறாதவளாக' இருந்தால், இந்நேரம், மடமடவென்று நடந்திருப்பாள். இல்லையானால் சாலையைக் குறுக்காய் கடந்து எதிர்ப்புக்கம் சென்று. நடந்திருப்பாள் கொஞ்சம் திமிர் பிடித்தவளாய் இருந்தால், காறித் துப்பியிருப்பாள். ஆனால் இவளோ காறவும் இல்லை. துப்பவும் இல்லை. நடையை மாற்றவும் இல்லை.  சம்பந்தம், அவளோடு சமபந்தப்பட்டவர்போல், இப்போது அவளுக்கு இணையாக நடந்தார். "நான் நடக்கிறேனாக்கும்" என்பதுபோல், கால் செருப்பைத் தரையில் தேய்த்தார். அவள், அவரைத் தோளுக்கு நேராய்ப் பார்த்தாள். பிறகு, சர்வசாதாரணமாய் நடந்தாள். சம்பந்தத்திற்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. நாட்டுக் கட்டைதான். ஆனால் கீரைத்தண்டு மாதிரி நிறமும், உடல்வாகும் உள்ளவள். அவர் காதளவு உயரம். அவருக்குப் பிடித்தமான சுருட்டை முடி சரியாமல், செழுத்த மார்பகம். ஏதோ ஒருவிதமான கிறக்கப் பார்வை.  சம்பந்தம், அவளிடம் பேச்சுக் கொடுக்கப் போனார். அவர் வாயெடுக்கும்போதுதான், எதிரே சைக்கிளோ. மக்கள் கூட்டமோ வரும். ஆனாலும் அவர் தளரவில்லை. மோதுவது மாதிரி ஒரு சைக்கிள் அவர்களைக் கடந்தபோது "சீ. ரோட்டைக் குத்தகைக்கு எடுத்தவன் மாதிரி போறான் பாரு" என்று பொதுப்படையாகப் பேசினார். அவள், அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, தொலைவில்போன சைக்கிள் காரனையும் பார்த்துவிட்டு நிதானமாக நடந்தாள். பிறகு பின்னால் திரும்பிப் பார்த்தாள். அவருக்கு மகிழ்ச்சி. ஆள் இல்லாத இடமா என்று திரும்பிப் பார்க்கிறாள். சபாஷ்...!  சம்பந்தம், அவளை இடிப்பதுபோல் நடந்தபடியே, "எதுவரைக்கும் போறாப்போல?" என்றார். அவள் பதில் சொல்லாமலே நடந்தாள். அதை மெளனச் சம்மதமாக எடுத்துக்கொண்டு, "ஒன்னைத்தாம்மா... பதில் சொல்லப்படாதா?" என்றார்.  அவள், நடைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு நின்றாள். அவரை ஏற இறங்கப் பார்த்தாள். சம்பந்தம், சந்தோஷம் தாங்க, முடியாமல் மேலும் ஏதோ பேசப்போனபோது, அவள் வெடித்தாள். அவரைப் பொறுத்த அளவில், அது அணுகுண்டு, ரசாயன ஆயுதம், கண்ணி வெடி.  "ஏண்டா கிழட்டுப் பயலே... இந்த வயசிலே... ஒனக்கு என்னடா கேடு...? நானும் நீ என்னதான் செய்வேன்னு பார்த்துடலாமுன்னுதான் நடக்கேன்... ஏதோ எங்க நாய்னா போல இருக்கியேன்னு பார்த்தால்.... ஜோடி போட்டா நடக்கே...? பொறுக்கிப் பயலே.... ஒண் வியசுக்கு இது தகுமாடா? ஒன்ன விடப் போறதாய் இல்ல. தோ.. எங்கண்ணா சைக்கிள்ல வந்துட்டே இருக்கான், நீ ஆம்புளைன்னா இங்கேயே இருடா... டேய்... ஏண்டா ஒடுறே...? நீ எங்கேதான் போயிடப் போறே. ஒன்னை விடப் போற்தில்லடா..."  சம்பந்தம், அக்கம்பக்கத்தைப் பார்த்தபடியே லேசாய் நடந்தார். வேறு யாரையோ அவள் திட்டுவதுபோல், காதில் வாங்காதவர்போல் மெள்ள நடந்தார். அதே நடை... ஆகாய விமானம் புறப்படுவதற்கு முன்பு ஒடுவது போன்ற நடை... அந்த நடையும் ஒட்டமாயிற்று. ஆனால் சாலையோ அங்குமிங்கும் பிரியாமல் நேராய்ப் போயிற்று. அந்தப் பக்கம், இந்தப் பக்கம் ஓடிப் போக எந்தத் தெருவும் இல்லை. சாலையின் இரண்டு பக்கமும் பெரிய பெரிய கட்டிடங்கள். மூன்று கிலோ மீட்டர் வித்தியாசத்தில் ஓடினால்கூட, அவரை, சைக்கிள் மடக்கி விடலாம். அவள். இப்போது கண்ட கண்ட வார்த்தைகளை ஏவுகணைகளாக்கி ஏவிக் கொண்டிருந்தாள். 'ஒனக்கு ஒன் பொண்டாட்டிக்கும், மகளுக்கும் வித்தியாசம் தெரியுமாடா?' என்பதுதான் அவளின் குறைந்த சக்தி ஏவுகணை.  சம்பந்தம் தலைவிரி கோலமாக ஓடினார். குதிகால் தரையில் படுகிறதா, அதற்குமேல் தாவுகிறதா என்று கண்டுபிடிக்க முடியாதபடி புயல் வேகமாய் ஓடினார். திரும்பிப் பார்த்தபடியே ஓடினார். ஒரு சைக்கிள்... சிங்கிள்... சிறிது நிம்மதி. இன்னொரு சைக்கிள், டபுள்ஸ். கலக்கத்தோடு பார்த்தால். பின்னால் ஒரு பையன். லேசாய்த் தெளிவு. அய்ய்யோ... அது என்ன, சைக்கிள் பின்னால் ஒரு பெண். யாரது... அவளேதான்... கையை நீட்டி நீட்டிக் காட்டுகிறாள்... அவன் அசல் ரெளடி மாதிரியே இருக்கான். அய்யோ... அய்யய்யோ... சீட்டில் இருந்து எழுந்து... சைக்கிள்பாருக்கு மேல வந்து... பிடலை என்னமாய் மிதிக்கிறான். நானும், பிடல் மாதிரி ஆயிடுவேனா. தனியாய் அடித்தால்கூட... கையெடுத்துக் கும்பிட்டுத் தப்பிக்கலாம்... நட்ட நடு வீதியில், பல பேர் முன்னால் அடிபட்டு, பத்திரிகைகளிலே பெரிய பெயராய் வாங்கி... சீசி... இவளெல்லாம் குடும்பப் பெண்ணா... இஷ்டமில்லேன்னா எதிர்பக்கமாய்ப் போக வேண்டியதுதானே... அய்யோ... சைக்கிள்... அவள் இருக்கிற சைக்கிள்...  சம்பந்தத்திற்கு, அந்த மூடுபனி உச்சி வெயிலாகியது. அந்த ஒட்டம் உயிரோட்டமாகி விட்டது. அந்தச் சாலையில் என்னதான் ஓடினாலும் தப்பிக்க முடியாது. என்ன செய்யுறது... ஒரு சின்னச் சந்துகூட இல்லாமல் போயிட்டதே. சந்து சந்தாய்க் கிழிச்சுடுவானே...  ஒடிய சம்பந்தத்தின் கால் இடறியது. அந்த வேகத்தில் கீழே விழுந்தவர் கையை ஊன்றி எழுந்து நிமிர்ந்தார். என்னது... கிளினிக்...  சம்பந்தம் அந்த சாலையோரக் கிளினிக்கின் படிகளில் ஏறி உள்ளே போனார். பரபரப்பாய்-படபடப்பாய் அதற்குள் ஓடினார். எவரும் அவரைப் பார்த்து ஆச்சரியப்படவில்லை. கம்பவுண்டரிடம் குட்டுப்படும் ஒரு சின்னப் பையன்தான் அவரை ஒரு நாற்காலியில் உட்கார வைத்தான். சைக்கிளில் போகிறவர்களுக்குத் தெரியக்கூடிய நாற்காலி. சம்பந்தம் அந்த நாற்காலியைத் தூக்கிக் கொண்டே ஓடினார்... ஓடினார்... அந்த அறையின் ஓரத்திற்கே ஓடினார்...  அரைமணி நேரம் ஆடியடங்கி விட்டது. சம்பந்தம், ஓரளவு நிதானத்திற்கு வந்தார். எப்படியாவது சாக்குப் போக்குச் சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்காக எழுந்தார்... எழுந்த வேகத்திலேயே அமர்ந்தார்... ஒருவேளை அந்தச் சைக்கிள்காரன் வெளியே காத்து நின்றால்... உள்ளே வந்தால் தன்னை அடிப்பது தடைபடலாம் என்று நினைத்து வெளியே காத்திருந்தால்...  சம்பந்தம் கூனிக்குறுகி உட்கார்ந்தார்... நடந்ததற்கு வருத்தப்படுவதுபோல் தலை குனிந்தார். அது "ஜானகி நகுவாள்" என்று ராவணன் வருத்தப்பட்டானாமே. அதுபோல் அந்தஸ்தைப் பற்றியோ, சமூகத்தைப் பற்றியோ கவலைப்படாத வருத்தம். அவள் கேட்ட கேள்வியைச் சுற்றி வந்த வருத்தம். அவரது பால்பயணத்தில் இப்படிப்பட்ட பல கசப்பான அநுபவங்களும் கிடைத்ததால், அவரது பலவீனமும் தொடர்ந்தது. ஆனால் இன்று ஏற்பட்டதோ கொடிய அநுபவம்.... கொடுரமாகப் போகவிருந்த அனுபவம். இப்படி இதுவரை நாய் மாதிரி நடுரோட்டில் ஓடியதில்லை. அப்படி ஓடியதுகூடப் பாதகம் இல்லை. ஆனால் என்னமாய்க் கேட்டு விட்டாள். 'கிழட்டுப் பயலாமே... இந்த ஐம்பத்தைந்து வயது ஒரு கிழடா... இல்லை. ஒருவேளை நான் கிழவன்தானோ... இதனால்தான் நான் எந்தப் பெண்ணோடவாவது சரசமாக நடக்கும்போது, சிலர் சிரிப்பார்களே... அந்தச் சிரிப்புக்களுக்கு எனக்கு வயதாகி விட்டது என்று அர்த்தமோ?  சம்பந்தத்தின் தலை, தரையைத் தொடப்போதுவது போல் தொங்கியது. நாற்காலியில் இருந்து கீழே விழப் போகிறவர்போல் இருந்தவரைக் கிளினிக் பையன் உசுப்பினான். அவர் கையிலேயே ஒரு டோக்கனைத் திணித்தபடியே கூறினான்.  'உள்ளே டாக்டர்கிட்டே போங்க ஸார்...  'இல்லப்பா, எனக்குச் சரியாயிட்டு... வெளியே போறேன்...  'இப்படித்தான், மொதல்ல வரும் முளையிலேயே கிள்ளிவிட்டால் நல்லது... எங்க டாக்டர் கைராசி டாக்டர். போங்க ஸார்."  சம்பந்தம், காலத்தை வீணாக்குகிறார் என்பதுபோல், அவருக்குப் பிறகு உள்ளவர்கள் எரிச்சல்பட்டுப் பார்த்தார்கள். அவரும் யோசித்தார். இவ்வளவு நேரமும் இங்கே உட்கார்ந்ததுக்கு, வாடகைப் பணம் கொடுப்பதுபோல் கொடுத்துவிட்டுப் போகலாம்... அதோடு பத்து நாளாய் லேசாய் வயிற்று வலி வந்து போகுது...  டாக்டரின் அறைக்குள் நுழைந்த சம்பந்தத்திற்கு, அந்த அறை வித்தியாசமாகப்பட்டது. வழக்கம்போல் தலையைத் தொங்கவிட்டபடிதான் டாக்டர்கள் எதையோ கிறுக்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், இந்த டாக்டர் நிமிர்ந்து இருக்கிறார். சற்றுத் தள்ளிச் சின்ன மடிப்புக்கூட இல்லாத ஒரு பட்டு மெத்தைக் கட்டில். அதன் விளிம்பு படும் சுவரில் ஐந்தடிக்குமேல் பல்வேறு வட்டக் கோடுகள்... ஒரு வட்டத்தைச் சுற்றி இன்னொரு வட்டம். மையத்தில் ஒளிப்பந்தம் போன்ற செஞ்சுடர்... டாக்டர் நாற்காலிக்கு எதிரே ஏழெட்டு பேர் உட்காரும்படியான சோபா செட் என்ன இதெல்லாம்...?  சம்பந்தம் திகைத்தபோது, டாக்டர் நிதானமாகப் பேசினார்.  "அந்தச் சேபாவுல உட்காருங்க. இதோ வர்றேன்..."  "எனக்கு வயிற்று வலி டாக்டர்."  "எந்த வலியோ... பார்த்துடலாம்... மொதல்ல உட்காருங்க..."  சம்பந்தம், தயங்கியபடியே டாக்டரைப் பார்த்தார். அந்த முகத்தில் தோன்றிய அன்புப் பிரவாகத்திற்குக் கட்டுப்பட்டோ என்னவோ, மெள்ள நடந்து, சிறிது நின்று, டாக்டர் மீது வைத்த கண்களை விலக்காமலேயே சோபா ஸெட்டில் உட்கார்ந்தார். சிறிது நேரத்தில் டாக்டரும் வந்தார். சம்பந்தம் உட்கார்ந்த சோபாவிற்கு எதிர் சோபாவில் உட்கார்ந்தார். கரத்தை நீட்டி, சம்பந்தத்தின் கையைப் பிடித்துக் குலுக்கியபடியே தம்மை அறிமுகம் செய்து கொண்டார்.  "நான் சைக்காட்ரிஸ்ட் டாக்டர் ரகுராமன்... நீங்க..."  "எனக்கு எதுவும் இல்லை. டாக்டர் ஏதோ தெரியாத்தனமாய்..."  "பல காரியங்களைத் தெரியாத்தனமாய்த்தான் செய்கிறோம். காரணம். ஏராளம்... ஏன்... செய்கிறோமுன்னு நம்மை நாமே கேட்டால், தெரியாத காரியங்களுக்கான காரணங்கள் தெரிந்து விடும். போகட்டும்... ஏன் ஒரே டென்ஷனாய் இருக்கீங்க... எந்தப் பிரச்னைக்கும் ஒரு தீர்வு உண்டு. சும்மாச் சொல்லுங்க... மனசுக்குள்ளே என்ன செய்யுது?"  சம்பந்தம், டாக்டரையே வெறித்துப் பார்த்தார். வேதனையோடு பார்த்தார். அவரைப் பார்ப்பதுபோல் தன்னைத்தானே, தனக்குத்தானே... பார்த்துக் கொண்டார். திரைப்படச் சுருள்போல், மூளையில் உணர்வுகளாகச் சேகரிக்கப்பட்டிருந்த நிகழ்ச்சிகளின் நினைவுகள் மனத்திரையில் பிம்பங்களாயின. வேக வேகமாகவும், மெல்ல மெல்லவும், முன்னாலும் பின்னாலுமாகவும் வந்தன. ஓடின, நிழலாடின. ஏழு வயதில் அம்மாவைப் பறி கொடுத்தது. எட்டு வயதில் சின்னம்மா வந்து சேர்ந்தது. வந்து சேர்ந்த மூன்று மாத காலத்திற்குள்ளேயே தலையில் குட்டத் துவங்கியது. தந்தையையும் குட்ட வைத்தது. வயிற்றைக் காயப் போட்டது. ஊராரிடம் தான் ஒரு ஊதாரிப் பிள்ளை என்று விளம்பரம் செய்தது. பள்ளிக் சென்ற தன் படிப்பை நிறுத்தும்படி வாதிட்டது. அதையும் மீறி, படித்தது. அப்புறம் வேலையில் சேர்ந்தது. அப்பா ஒரு பெரிய இடத்துக்குத் தன்னைக் கொடுத்துவிட்டுப் பத்தாயிரம் ரூபாய் பணத்திை வாங்கிக் கொண்டது, எல்லா அரசு ஊழியர்களையும்போல் தன் கணவனும் சம்பளமும், கிம்பளமுமாய்த் தன்னை வாழ வைப்பார் என்று நம்பிய பெரிய இடத்து மனைவி, நாளடைவில் தன்னை நாலுபேர் முன்னால் அடிக்கடி நாறடித்தது. அலுவலகப் பணி மாற்றத்திற்கு உள்ளாகி, மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் சென்னையில் வைத்துவிட்டு, தான் மட்டும் டில்லி, கல்கத்தா, பம்பாய் என்று சுற்றிவிட்டு, இப்போது இந்தத் திருச்சியில் பணியாற்றுவது, அம்மாவின் போதனையாலோ என்னவோ பெற்ற மகளும், மகனும் பாராமுகமாய் இருப்பது-ஆகிய கடந்தகால வெறுப்பு நிகழ்ச்சிகளும், அதற்காக அவர் மேற்கொண்ட விருப்பு நிகழ்ச்சிகளும் அவர் மனதிலே காட்சிகளாகவும், கண்ணிலே நீராகவும் உருவெடுத்தன. எல்லாவற்றுக்கும் மேலாக, அந்தச் பாலியல் சிந்தனை - அதனை மட்டுமே பற்றி நிற்கும் மனம், அதில் மட்டுமே ஈடுபடும் குணம்... இழி குணம்...  சம்பந்தம், திடீரென்று குலுங்கிக் குலுங்கி அழுதார். முகத்தைக் கரங்களால் மூடியபடியே காலாட, கையாட குழந்தைபோலக் கத்தினார். வாலிபன்போல் தேம்பினார். தோளில் ஆதரவாய் விழுந்த டாக்டரின் கைகளை எடுத்துத் தன் முகத்தில் வைத்தபடியே விம்மினார். டாக்டரும், அவரை அழும்வரை அழவிட்டார். பிறகு, அவர் முகத்தை நிமிர்த்தி, தலையைக் கோதிவிட்டபடியே அறிவுறுத்தினார்.  "டாக்டர்கிட்டே உடம்பை நிர்வாணப்படுத்திக் காட்டுறது எப்படித் தப்பில்லையோ, அப்படி மனோதத்துவ டாக்டரிடம் உள்ளத்தை நிர்வாணப்படுத்திக் காட்டுறதுல தப்பில்ல ஸார் ஒங்க மனசுல உலகமே ஒங்களுக்கு எதிராய் இருக்குது மாதிரி எண்ணம் வருதா? முதலமைச்சராயும் பேட்டை ரெளடியாகவும் உங்களை நீங்களே கற்பனை செய்து பார்க்கிறீர்களா..? அல்லது எப்போ பார்த்தாலும் பெண் சிந்தனையே பெரிதாய் வருதா. சொல்லுங்க ஸார்..."  சம்பந்தம், வீறிட்டார்.  "கடைசில சொன்னதுதான் டாக்டர்.... கரெக்ட்... கடைசில சொன்னதுதான்... விவரம் தெரிந்த நாளில் இருந்தே, என் மனசில் ஒரே ஒரு எண்ணந்தான். ஏப்போதும் ஏதோ ஒரு பெண்ணோடு இருக்க வேண்டும்... முத்தமிட்டபடியே முழு நாளையும் கழிக்க வேண்டும். கனவுகள்கூடக் காதல் - காதல் கதைகளாய், கூடல் கதைகளாய்த்தான் வரும். காலையில் எழுந்தவுடனே முதல் சிந்தனையே ஏதாவது ஒரு பெண்ணைப் பற்றித்தான் இருக்கும். எந்த அலுவலகத்திற்குப் போனாலும், முதலில் ஆபீஸ்ரைப் பார்க்க வேண்டிய நான் அங்கே இருக்கிற பெண்களைத்தான் பார்ப்பேன் டாக்டர் அப்படிப் போன ஒரு நிமிஷத்திற்குள்ளே, எந்தப் பெண்ணாவது, இன்னொரு ஆடவனிடம் பேசி விட்டால், நான் இருக்கும்போது அவள் எப்படிப் பேசலாம் என்பது மாதிரியான பேயெண்ணம் வரும்.  "பன்னிரண்டு வயசுல இருந்து இந்த ஐம்பத்தைந்து வயசு வரைக்கும். மூச்சு எப்படி நிரந்தரமாய் இருக்குதோ அப்படிப் பெண் பித்தே எனக்கு மனம் முழுதும் வியாபித்து விட்டது டாக்டர்... காலையில டி சாப்பிடப் போகும்போது... ஒரு பெண்ணைப் பார்த்தால், அவள் பின்னால் டி சாப்பிடாமலே போவேன். ஆபீஸுக்கு முக்கியமான விஷயத்தைக் கவனிக்கிறதுக்காக, அவசரமாய்ப் போகும்போதுகூட வழியில் ஒருத்தி, ஓரிடத்தில் தெரிந்தால், அவளை நினைச்சு ஆபீஸை விட்டுடுறேன் டாக்டர். வெளியூருக்கு ஆபீஸ்ல இருந்து அனுப்பும்போதுகூட, அங்கே பெண்கள் கிடைப்பார்கள் என்கிற எதிர்பார்ப்போடு தான் போவேன் டாக்டர். பஸ் நிலையத்திலேயே ஒருத்தி கிடைத்துவிட்டால் பயணத்தை விட்டுடுவேன் ஸார். இப்போகூட ஒருத்தியை ஃபாலோ செய்தேன். அவள் ரெளடி துரத்தினாள். அவளுக்குப் பயந்து ஒடி ஒளியத்தான் இங்கே வந்தேன் டாக்டர். பெண் பித்தனாய்ப் போயிட்டேன் டாக்டர். நண்பர்கள் மனைவிகளைக்கூட தப்பாய் நினைத்து நினைத்து பெண் லோலனாய் ஆயிட்டேன் டாக்டர். ஒரேயடியாய் உதவாக்கரையாய்.... மனித மிருகமாய்ப் போயிட்டேன் டாக்டர் என்னை விஷ ஊசி போட்டு கொன்னுடுங்க டாக்டர்."  சம்பந்தத்தின் உடலெல்லாம் குலுங்கியது. தலை முடி குத்திட்டு நிற்பதுபோல் தோன்றியது. அவர் அந்த அறைக்குள் அங்குமிங்குமாய் அலங்கோலமாய்ச் சுற்றினார். டாக்டர் அவரைச் சிறிது நேரம் அப்படியே விட்டுவிட்டு, பின்பு சோபாவில் உட்கார வைத்தார்.  "உங்க பெயர்?"  "மானங்கெட்டவனுக்குப் பெயர் எதற்கு டாக்டர்? பெண் பித்தன்னு வேணுமுன்னால் கூப்பிடுங்கள்."  "நீங்க வேற... நீங்க வெளிப்படையாய்ச் சொல்லிட்டிங்க மத்தவங்க சொல்ல மாட்டாங்க அவவ்ளவுதான் வித்தியாசம் பெயர் என்ன ஸார்?"  "சம்பந்தம், அப்பா பெயர் தங்கையா. அதனால த. சம்பந்தம். அதுவே தறுதலை சம்பந்தமாய் ஆயிட்டேன்."  டாக்டர். அவர் தோளில் ஆதரவாகக் கை போட்டபடியே பேசினார்.  "இதோ பாருங்க சம்பந்தம் ஸார். சிகரெட் பழக்கம், குடிப் பழக்கம், சூதாட்டப் பழக்கம். மாதிரி, பெண் பித்து என்பதும் ஒரு அடிக்ஷன் - அதாவது ஒரு கண்மூடித்தனமானப் பிடிப்பு... உடம்பில் ஏதாவது காயம் ஏற்பட்டால், தொடையில் எப்படி நெரி கட்டுதோ - அப்படி மனசுலே வரும் காயங்கள்... சில சமயம் பாலியல் உணர்வு ரூபங்களாக வரும். இது சமூகத்துக்கு ஒருத்தரைக் காமுகனாய்க் காட்டினாலும், எங்களை மாதிரி மனோதத்துவ நிபுணர்களுக்குத்தான், இது வயிற்று வலி, தலைவலி மாதிரி, நீங்களே கேட்டு வாங்காமல், உங்களிடம் வந்த மனோவியாதின்னு தெரியும். வாழ்க்கையில் - குறிப்பாய் இளமையில் அதிகச் சுமைகளைச் சுமந்தால். தண்ணீர் இறைக்கிறவன், கல் சுமக்கிறவன் 'ஏலேலோ' பாடுவது மாதிரி... கஷ்டம் சுமக்கிறவன் பெண் சுகத்தைக் கற்பனை செய்து பார்ப்பான். கோபம் வரும்போது எப்படி ஒருத்தன் சிகரெட் பிடிக்கிறானோ, அப்படித்தான் இந்தப் பெண் பித்தும். இதனாலே, இதில் சுய இரக்கம் தேவையில்லை. ஒங்களுக்கு வந்திருப்பது நாளைக்கு எனக்குக்கூட வரலாம். உடல் எப்படி பெளதிக - ரசாயன விதிகளின்படி இயங்குதோ, அப்படி மனமும் சில விதிகளின்படி இயங்கும். மனம் தன் வசத்தில் நிற்காது. ஓர் உணர்வை இன்னொரு உணர்வால்தான் மாற்ற முடியும். ஒரு பெண்ணைப் பார்க்கும்போது, அவளை உங்கள் மகளாக நினைத்துப் பாருங்கள். 'என் அம்மா இந்த வயதில் இப்படித்தான் இருந்திருப்பள்' என்று கற்பித்துப் பாருங்கள். ஒரு பெண்ணை காமுக சிறையில் இருந்து விடுவித்து. அவளைத் தாயாக்கிப் பாருங்கள். அவளை, அரூபமான ஆதிபராசக்தியின் உருவமாக ஆக்கிப் பாருங்கள். மகளாக்கிப் பாருங்கள். கண்ணில் படும் பெண்களையெல்லாம். உங்கள் பெண்களாகப் பாவித்துப் பாருங்கள். அந்த இனிமையான எண்ணத்தில் அந்தத் தூய தரிசனத்தில் நீங்கள் தந்தையாக இருந்துகொண்டே பிள்ளையாகலாம், பிள்ளையாக இருந்துகொண்டே தந்தையாகலாம்.  சம்பந்தம் கண்களை மூடி மனசைத் திறந்தார். சில்லிட்ட சிந்தனையைக் கற்பனையால் உலுக்கினார். அவருக்கு ஆயிரமாயிரம் மகள்கள். கறுப்பிகள், சிவப்பிகள், இரண்டுக்கும் இடைப்பட்டவர்கள். அத்தனை பேரும் பெறாமல் பெற்ற மகள்கள். அவரைத் துரத்திய அவளும் ஒரு மகள் தான்.  4.  உப்பைச் தின்னாதவன்   அந்த அலுவலகம், 'கோரப்பட்ட' நேரம் - அதாவது காலை பதினோரு மணி ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கினர், வேலையைத் துவக்கவில்லையானாலும், வேலைக்காக கூடிவிட்ட வேளை...  இவர்களுக்காக, 'காபி' வாங்கிக் கொண்டு திரும்பிய வேதமுத்து, அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தவுடனேயே, என்னமோ - ஏதோவென்று எக்கி எக்கி ஓடினான். யூனிபார பழுப்பு சட்டைக்கு மேல், பூணுல் போட்டது மாதிரியான வெள்ளை பிளாஸ்டிக் பட்டையின் அடிவாரத்தில் தொங்கிய 'இரண்டு லிட்டர்' பிளாஸ்க். கிட்டத்தட்ட அறுந்து விழப்போனபோது, அவன் வாசற்படிக்கு வந்துவிட்டான். அங்கே கண்ட காட்சியைப் பார்த்ததும், ஒரு காலை வாசல் படியில் வைத்து, தூக்கிய மறுகாலை, தலையில் பதிய வைக்காமல், நிலைப்படியினை ஆதாரமாய் பிடித்தபடி அவன், ஒற்றைக் காலில் நின்றபோது -  அந்த அலுவலகத்திற்குள் ஏறிக் கொண்டிருந்த ஒற்றைக் குரல், இப்போது எகிறியது.  'என்னம்மா... காது குத்தறே. ஒருத்தன் போயிட்டா... ஆபீலே போயிடுமா என்ன... முதலமைச்சர், கவர்னரை வீட்டுக்கு அனுப்பினாலும் கவர்னர், முதலமைச்சரை வீட்டுக்கு அனுப்பினாலும் சர்க்கார்னு ஒண்ணு இருக்கத்தானமா செய்யும்? இந்திராகாந்தி செத்துட்டதால கவர்ன்மெண்ட் செத்துட்டா என்ன? அப்படி இருக்கையிலே... இவன் சுண்டக்காய் ஆபீஸரு... பிள்ளைக்காப் பயல்... இவன் போயிட்டால்... எங்க பணமும் போகணும்னு அர்த்தமா... தெரியாமத்தான் கேக்கேன். விளையாடுறதுக்கு ஒனக்கு வேற ஆளு கிடைக்கலையா...'  செம்மண் நிறத்திலான திரைத் துணியால் 'கோஷா' போடப்பட்ட கிழக்குப் பக்கத்து ஆபீஸர் அறைக்கும், காலிழந்த நாற்காலிகளையும், ஒட்டை ஒடிசல் மேஜைகளையும் கொண்ட மேற்கு பக்கத்து மூளி அறைக்கும் இடைப்பட்ட செவ்வக அறைக் கூடத்தில், கடற்கரைப் பாண்டி, நர்த்தனமே ஆடினார். காலில் சலங்கையில்லாக் குறையைப் போக்குவது போல், இருபக்கமும் போடப்பட்ட மேஜை நாற்காலியை தட்டியபடியே அங்கும் இங்குமாய் ஆடியும் 'பாடியும்' அவர் சுழன்றபோது -  அதிகாரி அறைக்கு வெளியே, நான்கு அடி இடைவெளியில், அதன் வாசலுக்கு முன்பக்கமாய் போடப்பட்ட 'எஸ்' நாற்காலியில் நுனிக்கு நகர்ந்துவிட்ட அக்கவுண்டண்ட் பாத்திமா, மேஜையில் கையூன்றி, அதன்மேல் முகம் போட்டுக் கிடந்தாள். கடற்கரைப் பாண்டியின் குரல் ஏற ஏற, அவருக்கு பயப்படவில்லை என்பதுமாதிரி முகத்தை நிமிர்த்தினாள். அதேசமயம், உடல் எதிர் விகிதாச்சாரத்தில் கூனிக் குறுகியது. கூடவே, ஜன்னலுக்கு வெளியே, பிற அலுவலக வாசிகளும், 'பப்ளிக்கும்' ஜன்னல்களை மொய்த்தார்கள்.  போதாக்குறைக்கு. அவள் ஏதோ செய்யத்தகாத தப்பைச் செய்து விட்டதுபோன்ற பார்வை...  இதனால் பாத்திமா, தனது பச்சைச் சேலையால் தலைக்கு முக்காடு போட்டு, தென்னை ஓலைகளுக்குள் மின்னிய செவ்விளணி போல் முகங்காட்டி தன்னை வேடிக்கைப் பார்த்த கூட்டத்திற்கு ஒரு தன்னிலை விளக்கம்போல் கடற்கரைப் பாண்டியைப் பார்க்காமல், அந்தக் கூட்டத்தை ஓரங்கட்டிப் பார்த்தபடியே பேசினாள்.  'அவர் டிரான்ஸ்பரில் போனாலும்... இன்னும் வீட்டைக் காலி பண்ணல... எப்படியும் வருவாரு... வந்துதான் ஆகணும்... அநேகமாய் ஒரு வாரத்துல...'  'ஒரு வாரம்... ஒரு வாரமுன்னு மூணுமாசமா... இப்படித்தான் சப்பக்கட்டு கட்டுறேம்மா... மூணு மாசமா சம்பளம் வாங்காமல் இருந்திருப்பானா... மூணுமாசமா வீட்டுக்கு செலவழிக்காமல் இருந்திருப்பானா... மூணுமாசமா... பெண்டாட்டிகிட்டே...' 'பெரியவரே...  பாத்திமா, காதுகளைப் பொத்திக்கொண்டு, தலையைக் குனிந்து கொண்டாள். அழுதாளோ இல்லையோ, அழுவதுபோல் முகத்தை அப்படி பண்ணினாள். இவளுக்கு வேண்டியதுதான், என்பதுமாதிரி இதுவரை வேடிக்கைப் பார்த்த சகாக்களில் அருதிப் பெரும்பான்மையினருக்கு அந்த ஆசாமியின் பேச்சு அதிகப்படியாய் தோன்றியது. 'கிரேட் ஒன்' கிளார்க் ஜோதியம்மா, பாத்திமாவின் பக்கத்தில் போய் நின்று கொண்டாள். அவள் போனதாலயே, 'கிரேட் டு' ஆறுமுகமும், அவளை பின் தொடர்ந்தான். எந்த பாத்திமாவுக்கு பாதுகாவலாய் நிற்க போவதுபோல் போனானோ, அந்த பாத்திமாவை விட்டு விட்டு, பழகுதற்கு 'இனிய' ஜோதிக்கு மெய்க்காவலன்போல் மெய்யோடு மெய்பட நின்றான். அந்த ஆசாமியின் ஆட்டத்திற்கு ஜால்ரா போடுவதுபோல் அரசாங்க கவர்களில் சாப்பா போட்டுக் கொண்டிருந்த 'டெப்திரி' சாமிநாதன், அங்கிருந்தபடியே, கடற்கரைப் பாண்டியன் முதுகைப் பார்த்து முறைத்தான். 'பராஸ்' (மேஜை நாற்காலி களை துடைப்பவர்) சண்முகம், கையில் பிடித்த ஈரத் துணியை பிழிந்தபடியே, தகராறுக்கு உரிய இடத்தை நோக்கி பாய்ந்தான். வெளியே கூடிய கூட்டத்தை துரத்திவிட்டு உள்ளே வந்த பியூன் வேதமுத்து. அந்த ஆசாமியை கையைப் பிடித்து வெளியே கொண்டு விடலாமா என்பதுபோல் யோசித்தான். இதற்குள், அந்த ஆசாமியான கடற்கரைப் பாண்டி சவாலிட்டார்.  'நீ அழுதாலும் சரி... இந்த பயலுக அடிச்சாலும் சரி... போவதாய் இருந்தால், மூவாயிரத்து முந்நூறு ரூபாயோடத்தான் போவேன். இல்லாட்டா, இங்கிருந்து இம்மியும் நகரமாட்டேன்... ஒங்களால ஆனதை நீங்க பாருங்க... என்னால ஆனதை நான் பாக்கேன்...'  அந்த அலுவலகவாசிகள், ஆடிப்போனார்கள். ஏற்கனவே அடிபட்டதுபோலவே அரற்றும் கடற்கரைப் பாண்டியை விட்டு, சிறிது விலகி நின்றார்கள். கிரேட் டு ஆறுமுகம், கிரேட் டு ஜோதியை தோளைப் பிடித்து இருக்கையை நோக்கி, மெல்லத் தள்ளிவிட்டு, அந்த சாக்கில் அவனும் நடந்தான். ஆக மொத்தத்தில், எல்லோரும் மூச்சைக்கூட மெல்ல விட்டார்கள். ஆனால், வேதமுத்துதான், பாத்திமாவிற்கு கேடயம்போல், நின்றுகொண்டு 'யோவ்' என்று ஊளையிட்டான். இது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிவிட்டது. இதனாலேயே, கடற்கரைப் பாண்டி ஒரு காரியம் செய்தார்.  கடற்கரைப் பாண்டி, திடீரென்று. ஆபீஸர் அறை முக்காட்டுத் துணியை சுருட்டி நிலைப்படிக்கு மேலே உள்ள பக்கவாட்டு கம்பியில் சொருகிவிட்டு, அந்த அறைக்குள் ஓடினார். அங்கே உள்ள சன்மைகா போட்ட வளைவு மேஜையை ஒரு பக்கமாய் இழுத்துப்போட்டுவிட்டு, அதற்குப் பின்னால், புத்தம் புதிதாய் கிடந்த மெத்தை நாற்காலியை இழுத்தபோது, சக்கரச் செருப்புகள் போட்ட அதன் கால்கள், அவர் பக்கமாய் நகர்ந்தன. நீலக் கலர் நாற்காலி. பின் வளைவாய் வளைந்து, இரு பக்கமும் யானைத்தந்தம் போல் வழுவழுப்பான கைப்பிரேம்கள் கொண்ட கலைவடிவு. ஒருவர் படுக்க இருவர் உட்காரும் அளவிற்கான சுகமான இருக்கை. உட்கார்ந்திருப்பவர் பின்னால் சாயச் சாய, அதற்கு ஏற்ப அது வளைந்து கொடுக்கும். முன்னால் நகர நகர, தன்னைத் தானே முன்பக்கமாய் மாற்றிக்கொள்ளும். அப்படிப்பட்ட முதுகு மெத்தை.  இப்படிப்பட்ட இந்த நாற்காலியை, வாசல் முனைக்கு கொண்டு வந்துவிட்ட கடற்கரைப்பாண்டி, அதன் உச்சியை, ஆபீஸரின் தலையாய் அனுமானித்து, வலது கையால் அதை திருகியபடியே, இடது கையை ஆட்டி ஆட்டிப் பேசினார்.  'இது எவன் அப்பன் வீட்டுச் சொத்து? பணம் கொடுக்க வக்கில்ல... வகையில்ல. இந்த லட்சணத்துல. நீ வேற, இதுல கால்மேல் கால் போட்டு உட்கார்ந்தே. இதோ இந்த ரூமுக்குள்ள, மல்லலாக்கப்படுத்து உட்கார நல்லா இருக்கே பெரியவரேன்'னு சொன்ன வாயி. இப்ப ஏமா பேச மாட்டேங்குது.'  பாத்திமாவுக்கு வெட்கமாகி விட்டது. கண்களைக் குறும்புத்தனமாய் படரவிட்ட வெட்கமல்ல. நிர்வாணப் பட்டது மாதிரியான அவமானகரமான வெட்கம். அலுவலக சகாக்களைப் பார்க்காததுபோல் பார்த்தாள். அவர்கள் தன்னையே தரம் தாழ்த்திப் பார்ப்பதுபோல் இருந்தது.  பொதுவாக, ஒரு அதிகாரியின் நாற்காலியில், அலுவலர்கள் உட்காருவது இல்லை. கூடாது. அப்படி உட்கார்ந்தால் அது இன்டிஸ்ஸிப்ளின். ஆனால், இந்த பாத்திமாவோ அலுவலகத்தில் எவரும் இல்லாத சமயங்களில், மூட்டைப்பூச்சிகள் வாழும் தனது நாற்காலிக்கு காலால் ஒரு உதை கொடுத்துவிட்டு, அதோ அந்த அறைக்குள் போய் இந்த அரியாசன நாற்காலியில் உட்காருவாள். முதுகைப் பின்னால் வளைத்து, கால்களை முன்னால் நீட்டி அந்த நாற்காலியையே கட்டிலாக்கி, மெய்மறந்து கிடப்பாள். பிறகு நிமிர்ந்து உட்கார்ந்து, தானே ஆபீஸரானதுபோல் கற்பனை செய்துகொண்டு. எதிர்ச் சுவரில் பொருத்திய கண்ணாடியை எழுந்து நின்று பார்ப்பாள். பிறகு மீண்டும் கம்பீரமாய் உட்கார்ந்து, மேஜையில் உள்ள பென் செட்டில் பச்சைப் பேனாவை எடுத்து, பேடில் கையெழுத்துப் போடுவாள். பச்சையாய் இனிஷியலிட்டு ரசிப்பாள். (பச்சை இங்க் பேனாவை ஒரு ஆபீஸர் மட்டுமே பயன்படுத்தலாம். இப்படி பல நாள் நடக்கும் சங்கதியை இந்தக் கிழம், வழக்கமாய் பாக்கி கேட்க வந்த ஒரு நாள் பார்த்துவிட்டது...  என்ன செய்வது என்று புரியாமல் அவள் தடுமாறிபோது கடற்கரைப் பாண்டிக்கு அதுவே வெல்லக்கட்டியாகியது. வீறிட்டுக் கத்தினார்.  'ஏம்மா நீயும்... அவன் கூட ஜீப்பில ஏறி வந்தியே... அவனுக்கு இந்த நாற்காலிய செலக்ட் செய்து கொடுத்தது நீதானே. அப்போ ஒனக்கும் காசு கொடுக்கிறதுல ஒரு பொறுப்பு இருக்குதுல்ல? ஏன் பேசாமல் அப்படி பாக்கிற தெரியாமத்தான் கேட்கேன்... எதுக்காக நாம் வேட்டி... சேலை உடுத்துறோம்."  அலுவலக சகாக்களுக்கு பாத்திமா, ஜீப்பில் ஆபீஸ்ரோடு போன விபரம் மட்டும்தான் கேட்டது. அந்த விவரத்திலேயே அவர்கள் நின்று நிதானித்து சுவைஞர்களாகி விட்டதால், அவர் சொன்ன 'வேட்டி சேலை' விவகாரம் கேட்கவில்லை. 'ஜீப்பில இவள் ஆபீஸரோட முன்னால உட்கார்ந்திருப்பாளா, இல்ல பின்னால இருந்திருப்பாளா..' என்ற ஆராய்ச்சியில் அவர்கள் மூழ்கியபோது, வேதமுத்து ஒருவன் மட்டுமே சுயமாய் நின்றான். நிலைமை 'கட்டுக்கு' மீறிப் போவதை புரிந்து கொண்டு, கடற்கரைப் பாண்டியை அதட்டினான்.  'யோவ்... இதுக்கு மேல... ஒனக்கு மரியாதி இல்ல... மொதல்ல எதைக் கேட்டாலும், முறையாய்க் கேட்க தெரிஞ்சிக்கணும்?  வேதமுத்து, கடற்கரைப் பாண்டியை கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக, நெருங்கிப் போனான். ஆனால், அவரோ, அவனைப் பார்ப்பதற்கு முகத்தைகூட நிமிர்த்தவில்லை. எவனோ ஒருத்தன் எதிரில் நிற்கிறான் என்ற அனுமானத்துடன் கத்தினார்.  'என்னய்யா... மொறையக் கண்ட.. பொல்லாத மொறைய மொதல்ல என்ன விஷயம்னு கேளு... அதுதான் முறை... மூணு மாசத்துக்கு முன்னால. இங்கே ஒருத்தன் இருந்தானே... சூட்டும் கோட்டுமாய்... சொட்டத் தலையன்... ஆபீஸராம் ஆபீஸ்ரு... இவனுவல்லாம் ஆபீஸரானதால்தான் இப்போ இந்தியாவே நாறுது, அவனும், இந்த பொண்ணும். எங்க பர்னிச்சர் கடைக்கு ஜீப்புல வந்தாங்க... இந்த நாற்காலி வேணுமுன்னாங்க. இதை மூவாயிரத்தி முன்னுறு ரூபாய்க்கு பேசி முடித்து அங்கேயே அசோக முத்திரத் தாளுல ஆர்டர் கொடுத்தாங்க 'கிரிடிட் பில்' தந்திங்கன்னா... அதை ஹெட் ஆபீசுக்கு அனுப்பி அங்கே இருந்து செக் வந்து... அதை மாத்துறத்துக்கு நாளாகும்... அதனால கேஷ் பில்லா கொடுங்க... ஒரு வாரத்துல பணம் வந்துடுமுன்னு சொன்னாங்க... நானும். அந்த ஜீப்பையும்... அதுல வந்த மூஞ்சிகளையும் பார்த்து நம்பிட்டேன். மூணு மாசமாயிட்டது... இன்னும் பணம் வந்தபாடில்ல. வரும் என்கிறதுக்கு அத்தாட்சியும் இல்ல... சீவி சிங்காரிக்க தெரியுது... சொன்ன வாக்கை காப்பாற்ற தெரியல்ல... தூ...."  எல்லோரும் சும்மா நின்றபோது, கடற்கரைப் பாண்டியிடமும் ஒரு நியாயம் இரப்பதை புரிந்துகொண்ட வேதமுத்து, இப்போது இதமாகப் பேசினான்.  'பெரியவரே உங்களுக்கு மனசு சரியில்ல. இன்னிக்கு போயிட்டு நாளைக்கு வாங்க... பேசிக்கலாம்...'  ஒனக்கு ராமபிரான்னு நெனப்போ... என் நிலம ஒனக்கு தெரியுமாய்யா? ஒங்கள மாதிரி. நான் சர்க்கார் மாப்பிள்ளை இல்லய்யா...காலையில எட்டு மணிக்கு கடைக்குப் போய்... கூட்டிப் பெருக்கி, தண்ணி தெளிச்சு, ஒவ்வொரு மேஜையாய் நகர்த்தி... திங்கள் கிழமையிலிருந்து ஞாயிற்றுகிழமை மத்தியானம் வரைக்கும் உழச்சும் இருபது வருஷத்துல தொளாயிர ரூபாய் சம்பளத்துல கஷ்டப்படுற தொழிலாளிய்யா... முதலாளி இல்லாத சமயத்துல கேஷ் பில் போட்டு இந்த நாற்காலிய கொடுத்தேன். இப்போ, எங்க முதலாளி நானும் கூட்டுக் களவாணி என்கிறான். பணத்தை வட்டியோட கட்டாட்டால் போலீஸ்ல ஒப்படைப்பாராம். சர்க்கார் முத்திரையோட ஒரு ஏழைய ஏமாத்துறது நியாயமாய்யா..? பேச வந்துட்டான் பேச. நான் லாக்கப்புக்கு போனா, எவன்யா ஜாமீன் எடுப்பான்? என் குடும்பம் நடுத்தெருவுல நிக்கப் போவுது. வேணுமுன்னா வந்து வேடிக்க பாருய்யா...'  இப்போது கடற்கரைப் பாண்டியின் ஓங்காரக் குரல், உடைந்து ஒலமிட்டது. எல்லோரும், அவரை ஒருமித்தும், ஒரே முனைப்பாகவும் பார்த்தார்கள். உயரத்துக்கு ஏற்ற உடம்பில்லாதவர்... பைசா நகரம்போல் ஒடிந்து விழப் போவது மாதிரியான முன்வளைவு. வெடு வெடுப்பான பார்வை... முண்டா பனியனைக்காட்டும் காட்டா மோட்டா கிழிசல் சட்டை. நார் நாராய் போன நாலுமுழ வேட்டி...  தலையில் கைவைத்தபடியே. தரையில் உட்கார்ந்த கடற்கரைப் பாண்டியை பார்க்க சகிக்காத வேதமுத்து, பாத்திமாவிடம் கிசுகிசுத்தான்.  மேடம்... ஓங்க பணத்துல இருந்து கொடுத்துடுங்க. அப்புறமாய் ஆபீஸர்கிட்ட வாங்கிக்கலாம்.'  'ஒன்கிட்ட சொல்லக் கூடாது... ஆனாலும் சொல்ல வேண்டிய கட்டாயத்துல சொல்றேன் முத்து... ஆபீஸ் சம்பளத்தை 'அவர்'கிட்ட அப்படியே கொடுத்திடணும். அப்புறம் தினமும் பஸ் சார்ஜ்க்கும், ஒரு கப் காபி குடிக்கிறதுக்கும் அவர்கிட்ட கையேந்தி பிச்சை வாங்கணும்... இதுதான் என்னோட பிழப்பு...  பாத்திமா ஏதோ பணம் கொடுப்பாள் என்பத மாதிரி வேதமுத்துவின் கிசுகிசுப்பின் மூலம் நம்பிக்கைப் பெற்ற கடற்கரைப் பாண்டி, அவள் கையை விரித்து பதிலுக்கு கிசுகிசுப்பதில், ஏமாற்றமடைந்து ஒப்பாரி போடுவதுபோல் பேசினார். ஏமா... உனக்கும் புள்ளக்குட்டி இருக்கு... என் வயிற எரியவிடாதே  பாத்திமாவுக்கு திடீரென்று, இன்னும் மஞ்சள் காமாலை சுகமாகாத தனது மூன்று வயது மகளின் நினைவு மனதை உடனடியாய் அரித்தது. இந்த ஆசாமியின் சாபத்தால், மரணம் மகளை பறித்துவிடக் கூடாது என்கிற பயம். அப்படி பயப்பட பயப்பட அதுவே கோபமாய் குணமாறியது. ஆபீஸ்ரைக் காட்டிக் கொடுத்தால், அவன் தனது அந்தரங்க குறிப்பேட்டில் வில்லங்கம் செய்து, அதனால் நெருங்கி வரும் பதவி உயர்வு ஓடிவிடக் கூடாதே என்று இதுவரை பல்லைக் கடித்து பொறுத்தவள். இப்போது வட்டியும் முதலுமாய் முழங்கினாள் ஆபீஸ் ரகசியத்தை எல்லோருக்கும் கேட்கும்படி கத்தலாகச் சொன்னாள்.  'நாள்காலி பணம் மூணு மாசத்துக்கு முன்னாடியே வந்துட்டுது. இங்க இருந்த ஆபீஸ்ருதான் முழுங்கிட்டான். கவலப்படாதிங்க பெரியவரே... இப்பவே மெட்ராசுல இருக்கிற எங்க டெப்டி டைரக்டருக்கிட்ட டெலிபோன்ல பேசி, நடந்ததைச் சொல்றேன்... உங்க மொதலாளிக்கும் டெலிபோன்ல விஷயத்தை சொல்றேன்...'  'சாகப் போறவனுக்கு பாலு கேட்டால், பசுமாடு குட்டி போடட்டும்னு சொல்ற கதை மாதிரி இருக்கு...'  பாத்திமாவின் முகம் இறுகியது. கடற்கரைப் பாண்டி சொன்னதை காதுகள் உள்வாங்கவில்லை. மஞ்சள் காமாலை மகள் டெலிபோன் குமிழை எடுத்துக்கொடுப்பது போன்ற பிரமை, சுழற்றினாள். ஏழு அதிசயங்கள் எட்டானதுபோல் சென்னைக்கு லைனும் கிடைத்து விட்டது. அதுவே ஒன்பது ஆனதுபோல் 'ஊர் சுற்றி' டெப்டி டைரக்டரும் உடனே கிடைத்து விட்டார். அவர், தன் கண் முன்னால் நிற்பது போல் அனுமானித்து எல்லா விவரத்தையும் விளக்கமாய்ச் சொன்னாள். இடையிடையே பேசாமல் கேட்டாள். பிறகு டெலிபோனை வைத்துவிட்டு பொதுப்படையாக ஒரு விவரம் சொன்னாள்.  'நம்ம டெப்டி டைரக்டருக்கு மூளையே இல்லை. நான் ஆப்ட்ரால் ஒரு அக்கவுண்டன்ட். ஒரு கிளாஸ் ஒன் அதிகாரியைப் பற்றி எப்படி கம்ப்ளைன்ட் செய்திருக்க முடியும்... எனக்கும் 'மெமோ' கொடுக்கப் போறாராம்... கேட்டால், 'தலைக்கு வந்தது பூவோட போச்சுதுன்னு நினைச்சுக்கோனு சிரிக்கிறார்...'  பாத்திமா அழுகையும், சிரிப்புமாக சொல்லி முடிக்குமுன்பே, இப்போது சென்னையிலிருந்தே டெலிபோன் வந்தது. அதை எடுத்து வார்த்தைக்கு வார்த்தை, எஸ் சார் போட்ட பாத்திமா, டெலிபோனை வைத்ததும் கடற்கரைப் பாண்டியை ஆற்றுப்படுத்தினாள்.  'கவலைப்படாதிங்க பெரியவரே... நடந்த விஷயத்தை விளக்கி... நீங்களும் ஒரு புகார் கொடுங்க... ஒரு வாரத்துல செட்டிலாகிவிடும்.  'எம்மா... ஒன்னைக் கையெடுத்துக் கும்பிடுறேன்... அஞ்சு நாள் இல்ல பத்து நாளுன்னு சொல்லு ஒரு வாரமுன்னு புளிச்சிப்போன வார்த்தையை மட்டும் சொல்லாதே.'  'கடைசியில புலி வந்துட்டுப் பெரியவரே... ஒங்கப் பணத்தை வாயில போட்டவரு சஸ்பெண்ட் ஆகப்போறாரு. வேணுமுன்னா பாருங்க."  'கடைப் பணம் வந்தால் போதும்மா. அவன் கெட்டுப் எனக்கு ஒண்னும் ஆக வேண்டியதில்ல...'  'சரி சரி இந்தப் பக்கமா வாங்க... இந்தாங்க பேப்பர்... இந்தாங்க பேனா... எழுதுங்க... ஏன் தயங்கறீங்க... எழுதிக் கொடுக்காட்டால் பணம் வராது. நான் சொல்ற மாதிரி எழுதுங்க...'  பாத்திமாவுக்கு சந்தோஷம்தான். இந்த பழைய ஆபீஸர் சஸ்பெண்ட் ஆகி, விசாரணை முடிய ஒரு வருஷம் ஆகலாம். அதுவரைக்கும். இவளே இன்சார்ஜ் ஆகி, அவள் ஆசைப்பட்ட அந்த நாற்காலியில் பகிரங்கமாகவே உட்காரலாம். அதற்குள் புரமோஷன் வந்துவிடும். இங்கேயே வரலாம். வருதோ வரலையோ மகளுக்கு இருக்குற மஞ்சக்காமாலை போயிடும்...  வேதமுத்துக்கு என்னவோ போலிருந்தது. இன்னும் பிளாஸ்கை திறக்கவில்லை. அதைத் திறக்கும் எண்ணமும் அவனுக்கு இல்லை. உள்ளே இருந்த காபியைப்போல், அவன் மனமும் மண்டிவிட்டது. பழைய அதிகாரியான பால் வண்ணன், அடுத்த திங்கட்கிழமை அலுவலகம் வந்து எல்லோருமாய் எனக்கு சஸ்பென்ஷன் வாங்கிக் கொடுத்துட்டிங்களே. ஒங்களுக்கு சந்தோஷம்தானே! ன்னு அழத்தான் போறான். அதை எப்படி தாங்கிக்க முடியும்.... பாவம் புள்ளக்குட்டிக்காரன்....'  வேதமுத்து, எழுதிக் கொண்டிருக்கும் கடற்கரைப் பாண்டிக்கும், சொல்லிக் கொண்டிருக்கும் பாத்திமாவுக்கும் இடையே போகப் போனான். பிறகு, முன் வைத்த காலை பின் வைத்தான். அங்கே எழுதப்படுவதை கேட்கவோ அல்லது படிக்கவோ மனங்கேட்காமல் வெளியே வந்தான். உப்புத் தின்றவன் தண்ணீரைக் குடித்துத்தான் ஆகவேண்டும் என்ற பழமொழியை நினைத்துப் பார்த்தான். ஆனாலும் மனம், கடல் உப்பாய் அரித்தது. அலுவலகத்தில் இந்த பாத்திமா உட்பட எல்லா ஊழியர்களும் இந்த வேதமுத்துவை 'வா போ' என்று பேசும்போது, அதிகாரி பால்வண்ணன்தான் 'நீங்க' என்று அழைப்பான். ஆசாமி ஷோக் பேர்வழிதான். ஆபீஸிலேயே 'குவார்ட்டர்' போடுகிற வன்தான். ஒருதடவை இவனைக்கூட வாங்கிவரச் சொன்னவன்தான். ஆனால், இவன் முறைத்த முறைப்பில், அவன், அன்று போடவில்லை. இவனையும் அதற்கு பிறகு அப்படிக் கேட்டதில்லை. மரியாதை கொடுப்பதில் பின்வாங்கவும் இல்லை. அதோடு, அதிகாரியின் மனைவி அசல் லட்சுமி. லட்சுமி பக்தர்களை எப்படி நடத்துவாளோ ஆனால், இந்த மானுட லட்சுமி, ஓரிரு தடவை, இந்த பியூன் வேதமுத்துவை டைனிங் டேபிளில், தன் குழந்தைகளோடு சரி நிகர் சமானமாய் வைத்து சாப்பாடு போட்டவள். இவன், தட்டைக் கழுவ எழுந்தபோது அதை தடுத்தாட் கொண்டவள். அப்படிப்பட்ட அந்த உத்தமியை கணவன் செய்த காரியத்திற்காக வேதனைபட வைப்பதா... கூனிக் குறுகி வீட்டுக்குள்ளேயே முடங்க வைப்பதா... ஒருவேளை அந்த அம்மாவிடமே விஷயத்தை சொல்லலாமா... வேண்டாம். ஒரு பெண்ணுக்கு நிம்மதியே-அவள் புருஷனைப் பற்றி தெரியாத வரைக்கும் தான்.  வேதமுத்து. ஒரு முடிவோடு அலுவலகத்திற்கு வெளியே வந்தான். பால்வண்ணனிடம் விஷயத்தை சொல்லிவிட்டால் போதும் சமாளித்து விடுவான். அசல் இந்திரஜித்.  வேதமுத்து, வேகவேகமாய் நடந்து, கண்ணாடிக் குடில் மாதிரி இருந்த ஒரு எஸ்.டி.டி. பூத்துக்கு போனான். நல்ல வேளையாக பக்ரீத்கொண்டாடப் போவதாக அவன் போட்ட (வேதமுத்து இந்துவாக்கும்) பெஸ்டிவல் அட்வான்ஸ் ஏற்றுக்கொள்ளப்பட்டு முன்னுறு ரூபாய் இன்றைக்குத்தான் கிடைத்தது. டெலிபோன் கட்டணம் நூறு ரூபாய்க்கு மேல் போகாது. ஆனாலும், இந்தப் பணத்தை வைத்து பசங்களுக்கு ஸ்கூல் யூனிபார்ம் வாங்கலாம் என்று நினைத்திருந்தான். பரவாயில்லை. தலைமை ஆசிரியரிடம் கெஞ்சி கூத்தாடி ஒரு வாரத்தை தள்ளிவிடலாம். பால்வண்ணனிடமே டெலிபோன் கட்டணத்தை வாங்கலாம். சீ... சீ... அது தப்பு உதவி செய்தால், அதை உருப்படியாய் செய்யனும், அவுரு பிழச்சிக்கிறதுக்கு ஒரு நூறு ரூபாய் செலவழிக்கிறதுல தப்பில்ல...  நல்லவேளையோ - கெட்ட வேளையோ, லைன் கிடைத்துவிட்டது. பால்வண்ணனே போனை எடுத்தான். எடுத்த எடுப்பிலேயே மறுமுனைக்காரன் 'உஷாவா' என்றபோது, இவன் 'வீட்டிலிருக்கும் லட்சுமிக்கு துரோகம் செய்யலாமா சார்' என்று கூட உபதேசிக்கப் போனான். பிறகு டெலிபோன் கட்டணத்தைக் கருதியும், அப்போதையை சூழலை நினைத்தும் அதே சமயம் அந்த உஷா யாராக இருப்பாள் என்ற அடி மன உந்தலோடும், அவன் வெளிமனம், நடந்த விஷயங்களை, அவன் வாயில் மீன் துள்ளலைப் போல், வார்த்தைகளாகப் போட்டது. இவன் விஷயத்தை திருக்குறளாய் சொன்னாலும், எதிர்முனை பால்வண்ணன் பெரிய புராணமாய் விளக்கம் கேட்டான். இவனோ, பில் போட்டு காட்டப்போகிற அந்த சின்ன பிசாசையே பயந்து பார்த்து, விவரம் சொன்னான். பிறகு உஷாவும். கட்டண நினைப்பும் அற்றுப்போக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டான். 'அழாதிங்க... அழாதிங்க... சார்' என்று அழுதழுது சொன்னான். நீண்ட நேர தயக்கத்திற்குப் பின், 'சரி சார்... நானாச்சு... நானாச்சு...' என்று மறுமுறைக்காரனுக்கு கேட்கும்படி மார்த்ட்டிக்கூட உறுதியளித்தான்.  எப்படியோ, அவன் வைத்திருந்த பணத்தில் பஸ் சார்ஜுக்கு காசு இருந்தது. அவ்வளவு பணம் செலவானது கூட பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் பால்வண்ணன் சொன்னதை எப்படி நிறைவேற்ற முடியும். ஜி.பி.எப். பணம், ஆயிரத்து ஐநூறு இருக்கத்தான் செய்யுது. ஆனால், அது இன்றோ... நாளைக்கோ என்று இருக்கும் கர்ப்பிணி மனைவிக்காக உள்ள பணம். ஏற்கனவே, அவளுக்கு சிசேரியன் ஆப்பரேஷன். டாக்டர்கள், ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும் என்கிறார்கள். மீதிப்பணம், வேறு திரட்ட வேண்டும். ஆனாலும் பால்வண்ணன் அடுத்த திங்கட்கிழமை வந்து அவ்வளவு பணத்தையும் கொடுக்கிறதா உறுதியளித்திருக்கார். மார்த்தட்டி சொல்லி விட்டு, முதுகை காட்டுவது தப்பிலும் தப்பு... பெரிய தப்பு.  வேதமுத்து, வீட்டுக்கு போனதும், மனைவியை குசலம் விசாரித்தான். இனிமேல் மத்தியானத்திற்கும் அவள் கைப்பட சமைக்கும் சாப்பாட்டுப் பொட்டலத்தை எடுத்துப் போவதாக வாக்களித்தான். அடுத்தாண்டு 'எல்.டி.சி.' எனப்படும் அரசாங்க பணத்துடன், அவளையும் பிறந்த பேய்களையும், பிறக்கப்போகும் தேவதையையும் கூட்டிக்கொண்டு, பத்ரிநாத், கேதார்நாத், தாஜ்மஹால் போன்ற இடங்களை காட்டப்போவதாக வாக்களித்தான்.  வேதமுத்துவின் மனைவிக்கு ஒரே கொண்டாட்டம். மகிழ்ச்சியை மனதிற்குள் வைக்காமல் அதை அவன் கழுத்தில் கைபோட்டுக் காட்டினாள். அவன் அந்த கைகளை நீவிவிட்டான். அவற்றில் கிடந்த இரண்டு தங்க வளையல்களையும் உருட்டி விட்டான். பிறகு தர்மம் தலைகாக்கும் என்பதற்கு ஒரு கதையைச் சொன்னான். அப்புறம் விவரம் சொன்னான். அவன் எதிர்பார்த்தது போல், அவள் குமுறவில்லை. கொந்தளிக்கவில்லை. சிறிது யோசிக்கத்தான் செய்தாள். பிறகு வளையல்களை அவனிடம் கழற்றி கொடுத்தாள். இவன், வெள்ளிக்கிழமை ஆயிற்றே என்று இழுத்தபோது, அவளோ நாளும் கிழமையும் பால்வண்ணணுக்கு கிடையாது என்றாள். அப்போதே, அடகு வைத்து, அந்த வேகத்திலேயே பணத்தைக் கட்டச் சொன்னாள். அதோடு அவனுக்குத் தோன்றாத ஒன்றையும் சொன்னாள். பழைய ஆபீஸர் டெலிபோனில் (பக்கத்து வீட்டு டெலிபோன்) வருவது வரைக்கும் காத்திருக்க வேண்டாமாம். இன்றைக்கே பணம் கட்டிய விவரத்தைச் சொல்லி, அதற்காக ரசீதையும் கூரியரோ, கேரியரோ அதுல வச்சு அனுப்பிடனுமாம். இவனாவது பழைய ஆபீஸருக்கு விசுவாசமாய் இருக்கனுமாம். வேதமுத்து, மனைவியை கையெடுத்து கும்பிட்டபடியே எழுந்தான்...  மறுநாள், இரண்டாம் சனி... அப்புறம் ஞாயிறு... திங்கட் கிழமை அரசாங்கமே 'பந்தாடிய' விடுமுறை.  செல்வாய் கிழமை, மனைவி நீட்டிய சாப்பாட்டுப் பொட்டலத்தை (பராஸ் சண்முகத்திடம் கொடுத்திடணும்... ருசி தெரியாமலேயே சாப்பிடுறவன்) பயபக்தியாய் வாங்கி, தூக்குப் பையில் போட்டுக்கொண்டு, பஸ் நிலையம் நோக்கி நடந்தான். வெயில் சுட்ட சூட்டில் அடுத்த மாதமாவது தவணை முறையில் ஒரு சைக்கிள் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். கால் சுட்டாலும், மனம் குளிர்ந்தது. ஒரு குடும்பத்தைக் காப்பாற்றிவிட்ட தலை நிமிர்வு. மனம் பூரணப்பட்ட பெருமிதம்.  வேதமுத்து, அலுவலகத்திற்குள் நுழைந்ததும் நுழையாததுமாக பழைய ஆபீஸருக்கு தான் செய்த பரோபகாரத்தை எல்லோரிடமும் சொல்லப்போனான். பிறகு காலையிலேயே சண்முகத்திடம் சொன்னதை மீண்டும் சொல்வது தற்பெருமையாகி விடும் என்றும் எண்ணினான். இந்த சண்முகம் நல்ல செய்திகளைச் சொல்ல தவறியதே இல்லை. இவனே சொல்லியிருப்பான் என்று நினைத்து, குவிந்த உதடுகளை உள்பாய்ச்சிய படியே அவனைப் பார்த்து அர்த்தம் அர்த்தமாய் சிரித்தான். இந்த சண்முகம் இவனுக்கு பெஸ்டிவல் அட்வான்ஸ் வந்திருப்பது தெரிந்து, காலையிலேயே இவன் வீட்டுக்கு கடன்படை எடுத்தான். அடுத்த வாரம், ஏதோ ஒரு கிறிஸ்த்துவ பண்டிகையை கொண்டாடுவதற்கு தான் கேட்டு இருக்கும் அரசாங்க அட்வான்ஸ் வந்துவிடும் என்றும், அதுவரைக்கும் நூறே நூறு ரூபாய் தரும்படியும் கேட்டான். வேதமுத்து பதில் சொல்வதற்கு முன்பே அவன் மனைவி தேநீர் டம்ளரை நீட்டியபடியே விளக்கினாள். பணம் போன காரணத்தையும், கணவனின் தயாள குணத்தையும் விளக்கும் வகையில் பெருமை பிடிபடாமல் பேசினாள். இறுதியில் சண்முகத்திற்கு கைவிரிக்க வேண்டியிருக்கிறதே என்று குரலை வருத்தத்தோடு முடித்தாள். அப்போது இந்த சண்முகம் வருத்தப்படாமல் 'வாழ்க' போட்டான். ஊரான் கடனை அடைத்தாள், தன் கடன் தானாக அடைபடும் என்று தமர்ஷ்கூட செய்தான். ஆனால் அதே டெப்திரி சண்முகம், இப்போது ஏன் இப்படி கத்துறான்?.  'பாவிப் பயலே!... நடுத்தெருவுக்கு வந்துட்டியடா உனக்கு மூளை எங்கடா போச்சு.'  வேதமுத்து திக்கித் திணறியபோது, பாத்திமாவும் கத்தினாள்.  'ஒன்னை யாருய்யா... அவனுக்குப் போய் பணம் கட்டச் சொன்னது...'  வேதமுத்து திருப்பிக் கத்தினான்.  'ஒங்கள... மாதிரி என் மனசு கல் இல்ல...'  'அய்யா புண்ணியவானே... அதுக்கு ஒரு பரிசும் வந்திருக்குது தெரியுமா.. மூன்று மாதத்துக்கு முன்னால, டிரான்ஸ்பர் வந்த அவசரத்துல, உன்கிட்டயே மூவாயிரத்து முன்னூறு ரூபாயைக் கொடுத்து நாற்காலி கடனை அடைக்கும்படி பால்வண்ணன் சொன்னானாம். நீதான் பணத்தைக் கட்டாமல் கையாடல் செய்துட்டியாம். இதுக்கு நீ அனுப்புன ரசீதையும் ஆதாரமாக் காட்டி உன் மேலேயே ஒரு புகார் கொடுத்திருக்கான், நம்ம பழைய ஆபீஸர்.'  'துரோகிப் பயல்... நான்தான் அவனுக்கு டெலிபோன்ல விஷயத்தை சொன்னேன்...'  'நீ ஆயிரம் சொல்லுவே... அதை மேலிடம் நம்பணும்' என்கிறது கட்டாயமா... அப்படியே நம்பினாலும்... நீ ஆபீஸ் ரகசியத்தை வெளியிட்டதுக்காக மேற்கொண்டும்... ஒன்மேல் ஆக்ஷன் எடுக்கலாம் இல்லையா... பணத்தை கடன் கொடுக்கலாம்... ஆனால் மூளய கடன் கொடுக்கலாமா...'  'எதுக்காகம்மா இப்படி சுத்தி வளைச்சு பேசுறீங்க..' என்னால எப்படி சொல்னும்னே தெரியல... துஷ்டனுக்கு உதவுற ஒரு நல்லவனையும் உலகம் துஷ்டனாத்தான் நினைக்கும். சண்முகம் எனக்கு சொல்றதுக்கு வாய் வரமாட்டேங்குது. நீயாவது சொல்லு...  பாத்திமாவின், கண் கலங்கலுக்குக் கட்டுப்பட்டதுபோல், 'டெப்திரி' சண்முகம், பியூன் வேதமுத்துவைக் கட்டிப் பிடித்தபடியே கண்ணிர் மல்க சொன்னான்.  'ஒன்னை சஸ்பென்ட் செய்திருக்காங்கடா... மேலதிகாரியிடம் நம்பிக்கை மோசம் செய்து... அரசாங்க பணத்தை தவறாப் பயன்படுத்தி, டிபார்ட்மென்டுக்கும்... கெட்ட பேர் வாங்கிக் கொடுத்ததுக்காக, ஒன்ன சஸ்பென்ட் செய்திருக்காங்கடா...'  டெப்திரி சண்முகம், கேவிக் கேவி அழுதான். வேதமுத்துதான், அப்படியே அழாமல் நின்றான்.      5.  இந்நாட்டு மன்னர்கள்     திரிசூலம்போல், மூன்று சாலைகள் சந்திக்கும் கூட்டுரோடு. கிழக்கு-மேற்காகச் சென்ற தேசிய சாலையில் இருந்து கிளைவிட்டு, தெற்கு நோக்கிச் செல்லும் சாலை பிரிவதால் ஏற்பட்ட அரைக்கோணம் போன்ற பகுதியில் நான்கைந்து டீக்கடைகள்,  ஒவ்வொரு கடையிலும், உரிமையாளருக்கு இஷ்டப்பட்ட அரசியல் கட்சியின் தேர்தல் சின்னம், சின்னா பின்னமாக காட்சியளித்தன. வாசல்களுக்கு இருபுறமும் தேர்தல் தட்டிகள். சுவர்களில் போஸ்டர்கள். கடைகளுக்குள்ளே, கூரைப்பகுதியில் கட்சிக் கொடிகளின் தோரணங்கள்.  அந்த கூட்டு ரோட்டின் கிழக்குப் பகுதியிலும், வடக்குப் பகுதியிலும் இரண்டு சின்னஞ்சிறு கிராமங்கள். அவற்றை மறைப்பதுபோல், புளியமரங்களும், ஆல மரங்களும் நெருங்கி நின்றன.  இங்கே, சாலைகள், கூட்டணி வைத்து பிரிவதுபோல், அரசியல் கூட்டணிகளின் தேர்தல் கால அலுவலகங்களாகச் செயல்பட்ட இரண்டு ஒலைக் கொட்டகைகள். ஒன்று வடமேற்கிலும், இன்னொன்று தென்கிழக்கிலும் இருந்தன. சாலைகள்தான் கூடுமே அன்றி. மனிதர்கள் அல்ல என்பதுபோல், இந்த ஒலைக் கொட்டகைகளில் இருந்து. மைக்குகள் அலறின. பக்கத்து டவுனில் இருந்து வரவழைக்கப்பட்ட வாடகைத் தலைவர்கள், மைக்குகள் மூலம் வாயில் வந்ததையெல்லாம் தத்துவங்களாகவும், வாக்குறுதிகளாகவும், உளறல்களின் உருவங்களாகி, ஒலிவடிவங்களாக முழங்கினர்.  ஆரம்பத்தில், 'லாவணி' மாதிரி போட்டி கோஷங்கள் முழங்கினர். ஒருவர் நிறுத்தியதும். இன்னொருவர் பேசுவார் கொட்டகையையே. மனித உருப்பெற்று பேசுவதுபோலவும், அதன் வாசலே, வாயாகப் போனது போலவும் தோன்றும். 'அகப்பட்டதைச் சுருட்டும் கட்சிக்கா உங்கள் ஒட்டு?  'அகப்படாததையும் சுருட்டும் கட்சிக்கா உங்கள் ஒட்டு?  'எங்கள் தலைவர் சிங்கம்'  'இல்லை... இல்லை... அசிங்கம்'  'கருப்பட்டி விற்ற வேட்பாளருக்கா உங்கள் ஒட்டு?'  'காண்டிராக்ட்ல கொள்ளை போட்டவனுக்கா உங்கள் ஒட்டு?'  'பஞ்சாயத்து யூனியனில் பாதியைச் சாப்பிட்ட பாராங்குசத்திற்கா வோட்டு?'  'முனிசிபாலிட்டியில் முக்கால்வாசியை ஏப்பம் போட்ட முத்தையனுக்கா வோட்டு?'  'பாராங்குசத்திற்கு வாக்களிக்குமுன்னால், அபலைப்பெண் அஞ்சலையைக் கேளுங்கள்'  'வேலை கிடைப்பதாக நம்பி, குழந்தையைப் பெற்றுக் கொண்ட ஆசிரிய பயிற்சி பெற்ற பார்வதியைப் பாருங்கள். பாராங்குசத்தின் சுயரூபம் தெரியும்'  'ஒழிக ஒழிக.'  'முத்தையன் ஒழிக... வாழ்க... வாழ்க...'  பாராங்குசம் வாழ்க...'  விட்டு, விட்டு, பேசிக் கொண்டிருந்த மைக்குகள். இப்போது விடாமல் ஒரே சமயத்தில் முழங்கின. இரண்டு கொட்டகைகளில் இருந்து வெளிப்பட்ட ஒலங்கள், தேர்தல் ஒப்பாரியாகி, திரண்டு நின்ற இருபக்கத்துத் தொண்டர் களையும். புறநானூற்று வீரர்களாக சிலி ர்ப்படையச் செய்தது. இருப்பினும், யானைக்கு புலியிடம் பயம். புலி க்கு. யானையிடம் பயம் என்பார்கள். பரஸ்பரப் பயத்தில், இரண்டு கோஷ்டிகளும், நின்ற இடத்திலேயே நின்றன. சிறுவர்கள் மட்டும், அந்த கொட்டகைக்கும். இந்த கொட்டகைக்குமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.  டீக்கடைகளுக்கு எதிர்த்தாற்போல், பெட்ரோல் பங்கிற்கு அருகே உள்ள தன் பெட்டிக் கடையில் இருந்து, காதுகளைப் பொத்திக்கொண்டு, கண்களை வெறித்து வைத்துக் கொண்டிருந்த ராமையா, கடைக்கு முன்னால், திராட்சைப் பழங்களில் அழுகியதை அப்புறப் படுத்திக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்து அன்னாசிப் பழத்தை. எடு என்றான்.  டவுனில் போய், பழங்களை, அப்போதுதான் அவள் வாங்கிக் கொண்டு வந்திருந்தாள். கடையில் 'மிக்ஸி' இருந்தது. வேர்க்க வைத்து விழுங்குவதுபோல் பயமுறுத்தும் வெயில் காலத்தில், லாரிக்காரர்கள், இந்த கடையில் வந்து 'ஜூஸ்' சாப்பிடுவது உண்டு. பாதிக்குப் பாதி லாபம் கிடைக்கும். கடையில் விற்பனையான மிட்டாய், சிகரெட் வகையறாக்களில் கிடைத்த சொற்ப லாபத்தையும், மனைவியின் மூத்குத்தியை அடகு வைத்து கிடைத்த பணத்தையும் கொண்டு ஒரு வாரத்திற்கு முன்புதான் ஆயிரம் ரூபாயில், இந்த மிக்ஸியை வாங்கினான். 'கல்லா'வில் கணக்குப் பார்க்கும்போது, ஐந்தாறுரூபாய் அதிகமாக விழுகிறது. கடனுக்கு வட்டி கட்டி விடலாம்.  தேர்தல் கொட்டகைகளில், கோஷங்கள் கேவலமாக போய்க் கொண்டிருந்தன. கடையில் சிகரெட் வாங்க வந்த நான்கைந்து கட்சிக்காரர்களிடம் 'ஏம்பா... இப்படி கெட்டுப் போறீங்க... தோற்றவனும், ஜெயித்தவனும் ஒண்ணாய் சேருவாங்க... கல்யாண வீட்ல கைகுலுக்கிக்குவாங்க... கடைசில... மண்டைய உடைச்சிக்கிடுறது நீங்கதான்... ஆயிரந்தான் இருந்தாலும் நாம் அண்ணன் தம்பிங்க... தலைவருங்க மேல பாசம் வையுங்க... அதுக்கா, நமக்குள்ள இருக்கிற பாசத்தை குறைக்க வேண்டாம்... பாசத்தை குறைத்தாலும் பராவியில்ல... பகையை வளர்க்க வேண்டாம்..." என்று சொல்லப்போனான். வாய்க்கு வந்தததை, தொண்டைக்குள் போட்டுக் கொண்டான். மனைவியின் முகம் கூட எதிரியின் முகம்போல் தோன்றும் காலம். நல்லதாகச் சொன்னாலும், கெட்டதாக எடுத்துக் கொள்வார்கள். எதிர்கட்சியை ஒழிக என்றும். தன் கட்சியை வாழ்க என்றும் சொல்லாத எந்த வார்த்தையும், அவர்களுக்கு நன்றாகத் தெரியாது.  ராமையா, தொண்டர்கள் கேட்ட சிகரெட்டுகளை, மவுனமாக எடுத்து நீட்டினான். அவர்கள் சிகரெட்டுக்களை வாங்கி கொண்டிருந்தபோது, இரண்டு கொட்டகை முன்னாலும் நின்றவர்கள், ஒருவரை ஒருவர் நோக்கி ஓடினார்கள். கைகளில் கம்புகள், கத்திகள், சைக்கிள் செயின்கள். கடைமுன்னால் நின்ற தொண்டர்களும், அங்கே இருந்த கலர் பாட்டில்களையும், சோடா பாட்டில்களையும் எடுத்துக் கொண்டு ஓடினார்கள்.  ஒரே அமளி... யார், யாரை அடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அந்தரத்தில் தாவிய கற்கள், எங்கே இருந்து எங்கே போகின்றன என்று தெரியவில்லை. 'வெண்டை' வார்த்தைகள், அரைவேக்காடுகளின் லட்சிய முழக்கங்கள். ஐந்து நிமிடத்தில், தலையில் ரத்தம் கொட்டும் இருவரை ஒரு தரப்பும், மயங்கி விழுந்த ஒரு தொண்டரை, இன்னொருவரும் தூக்கிக் கொண்டு போனார்கள். மயங்கி விழுந்தவருக்கு உயிர் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. ஒலங்கள் கேட்டன. உறவினர் ஒலங்கள்.  கடைக்குள் வந்த ராமய்யா, ஒரு அன்னாசிப்பழத்தின் காம்புகளை வெட்டிவிட்டு, அவற்றின் முட் பகுதியைச் சீவிக் கொண்டிருந்த மனைவியையே பார்த்தான். இந்த பழத்தைச் சீவினால் சாறு கிடைக்கும். மனிதனை சீவினால் என்ன கிடைக்கும்... ஒருவனின் உடம்புக்குள் ஒட்டுக்கள் இருப்பதுபோல், அவனைச் சீவும், இந்த பயித்தியக்காரக் கூட்டத்தை என்ன சொல்வது... ஒருவருக்குப் பதவி கிடைப்பதற்காக, கூட்டங் கூட்டமாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும், இந்த அப்பாவித் தொண்டர்கள், கட்சி சார்பற்ற முறையில் அக்கிரமங்களுக்கு எதிரான நியாயக் கூட்டணி வைத்தால், அக்கம்பக்கம் எப்படிச் சீர்படும்...  கோவில் நிலம் முப்பது ஏக்கரை வளைத்துப்போட்டு, அதில் உழைக்காமலே, குத்தகைக்கு விடும் வீரராகவனைக் கேட்க ஆளில்லை... வரிப்பணம் பிரித்தாலும், வசூலிப்புக்கு ரசீது கொடுக்காத முன்சீப்பைக் கேட்க ஆளில்லை... போனவாரம், பனையேறும்போது தவறி விழுந்து தங்கப்பன் செத்ததால் அதுக்கு பத்தாயிரம் ரூபாய் அரசாங்கம் கொடுக்காம்... இதை வாங்கி செத்துப் போனவனின் பிள்ளை குட்டிகளுக்குக் கொடுக்க ஆளில்லை. சைக்கிளில் போகும்போது, லாரியால் அடிபட்டு பாதியிலே போன முனுசாமி குடும்பத்திற்கு, லாரி முதலாளியைப் பிடித்து நஷ்ட ஈடு கேட்க நாதியில்லை...  சொந்தச் சகோதரர்கள், துன்பத்தில் சிக்கும்போது, போர் தொடுக்க மனமில்லாத இந்தத் தொண்டர்கள், இப்போது எப்படி போர் தொடுக்கிறார்கள். எப்படி அடித்துக் கொள்கிறார்கள்!... சம்பந்தப்பட்ட கர்ணமும், கோவில் சொத்தை மடக்கிப்போட்ட வீரராகவனும், எதிர் எதிர் கட்சிகளில் இருந்துகொண்டு, தங்களின் பாவங்களை, புண்ணியங்களாக்க முடிகிறது... ஏழை பாழைகளை, 'சக்கராயுதத்தால் கொல்லும் லாரி முதலாளி, இருதரப்பும் நன்கொடை கொடுத்து. நல்ல பேர் வாங்க முடிகிறது. அநியாயக்காரர்கள் முகாம் கொண்ட அமைப்புக்களிலேயே, நியாயங்களை, விற்கவும், வாங்கவும். விசுவாசமாக முயற்சி செய்யும் இந்தத் தடிராமன்களை, எப்போது திருத்துவது? யார் திருத்துவது?...  'ஏன் பித்துப் பிடிச்சு பார்க்கறே?' என்று மனைவி சொன்ன பிறகுதான், ராமையா சிந்தனையை உதறுவதுபோல், தலையை, அங்குமிங்குமாக ஆட்டி கொண்டு. கடைக்கு வந்த இரண்டு வாடிக்கையாளர்களை, கவனிக்கத் தலைப்பட்டான்.  'மாம்பழ ஜூஸ் கொடு...'  ராமய்யா, இரண்டு 'கிளிமூக்கு' மாம்பழங்களை தோலுரித்துவிட்டு, பாளம் பாளமாகச் சீவி, மிக்ஸியில் போட்டான். ஸ்விட்சை, தட்டிவிடப்போனபோது, ஒரு அணியின் தொண்டர்க்ள் தேர்தல் சுவரொட்டி ஒன்றைக் கொண்டு வந்தார்கள். ராமையாவின் கடையின் நடுப்பக்கம் சாய்த்து வைத்தார்கள். இன்னொரு தொண்டன், வேறொரு சுவரொட்டியைக் கொண்டுவந்தான். முத்தையன் கட்சியினரின் வெறித் தாக்குதலால் ஒரு தொண்டனின் உயிர், ஆஸ்பத்திரியில அல்லாடுகிறது என்று அதில் எழுதப் பட்டிருந்தது. அந்த தட்டியை ஒரு தொண்டன், தேர்தல் சுவரொட்டியோடு சேர்த்து வைத்தான். ராமையா, பக்குவமாகப் பேசினான். 'ராஜு... ஒனக்கே தெரியும்... நான் எந்தக் கட்சியிலயும் இருக்க விரும்பல... ஒங்க கட்சிகளை... விமர்சிக்கிற அளவுக்கு அறிவு கிடையாது... ஆனால் இங்கே தேர்தலுல நிற்கி இரண்டுபேருமே ஒருமாதிரி... அதனால தயவு செய்து. என் கடை முன்னால இதெல்லாம் வேண்டாம். கடையில... அவங்களும் தட்டி கொண்டு வந்தாங்க. நான் இப்போ சொன்னதைத்தான் சொன்னேன்... ஒங்க வம்புல என்னை மாட்ட வைக்காதீங்க... நான் ரெண்டு பேருக்குமே பொதுப்பிள்ளையாய் இருக்க விரும்புறேன்..!  ராமய்யா, கடைக்கு வெளியே வந்து, இரண்டு தட்டிகளையும் எடுத்து, அவர்களிடம் கொடுப்பதற்காக குனியப் போனான். ராஜூ முன்பெல்லாம், இதே இந்த ராமய்யாவிடம் 'அண்ணே அண்ணே' என்று குழைகிறவன்; அதே அந்த ராஜூ இப்போது, முகம் விகாரப்பட அவனைத் தட்டினான்.  'என்ன ராமய்யா... ஒனக்குத் தெனாவட்டு... எங்க தலைவர் படம் போட்ட தட்டியையும்... எங்க கட்சிக்காரன் உயிரைப் பற்றி எழுதியிருக்கிற தட்டியையும் எடுக்கிற அளவுக்கு வந்துட்டியா? ஒன்னை இதுவரைக்கும் சும்மா விட்டது தப்பாப் போச்சு... தட்டிங்கள தொட்டியானா... தரையில் ஒன் தலை விழும்...'  'என்னப்பா. பெரிய பெரிய வார்த்தைகளை எல்லாம்...'  'பின்ன என்ன? நான் தட்டிங்கள வச்சிருக்கேன்... நீ... மரியாதை இல்லாமல் எடுக்க வர்ரே... சரி, ஒன்கிட்ட பேச எனக்கு நேரமில்ல... இன்னும் ஒரு மணி நேரத்துல இங்க வந்து பார்ப்பேன்... தட்டிங்க மட்டும் இல்லன்னா... ஒன் உடம்புல தலையும் இருக்காது...'  ராமய்யா, ராஜூவை ஏறிட்டுப் பார்த்தான். அதில் கோரமான கொலைவெறிச் சுருக்கங்கள் தெரிந்தன. 'உள்ளுர்க்காரன்... தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்புவரை அண்ணன், தம்பியாக இருந்தவன்' என்ற நினைவுக்குரிய அடையாளத் தடயங்கள் ஏதும், அந்த முகத்தில் தெரியவில்லை. அந்தக் காலத்தில், அஸ்வமேத யாகம் செய்து, இதர நாடுகளுக்கு, சக்கரவர்த்தி குதிரையை அனுப்புவார். பிற நாட்டு மன்னர்கள், அந்தக் குதிரைக்கு மரியாதை செலுத்தி தங்கள் அடக்கத்தைக் காண்பிக்க வேண்டும். சக்கரவர்த்தியின் சவால் குதிரையை, எந்த மன்னரும் கட்டிப் போட்டால், அது போர்ப் பிரகடனமாக எடுத்துக் கொள்ளப்படும். அதே அந்த குதிரை, இப்போது தேர்தல் யாகத்தில், தட்டியாக வந்து ராமையாவின் கடையில் நிற்கிறது. இவனால் தட்டிகளைத் தட்டிப் பார்க்க முடியுமா...  ராஜு போய்விட்டான். ராமய்யா, எதுவும் புரியாமல், மிக்ஸியில் சிதறும் கனிச்சதைகள் போல் குழம்பிப் போனான். 'சரி கடைக்கு வா... தட்டி இருந்தால் இருந்துட்டுப் போட்டும்...' என்றாள்.  ராமய்யா வெளியே இருந்தே குரல் கொடுத்தான்.  'காலையில் அவங்களை... தட்டியை - வைக்கக் கூடாதுன்னு சொன்னேன். அவங்களுக்கு என்ன ஜவாப்பு சொல்றது?'  'என்னத்தைச் சொல்ல... அவங்களும் வைச்சால் வச்சுட்டுப் போகட்டும்... காலத்த அனுசரித்து நடக்கணுமுன்னு ஒனக்கு ஏன் தெரியமாட்டாக்கு? இந்தக் காலத்துல... நல்லதுல கலந்துக்காட்டா விட்டுடுவாங்க... கெட்டதுல கலந்துக்காட்டா விடமாட்டாங்க. சரி சரி... உள்ள வா...'  ராமய்யா, உள்ளே போனான். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று இருதரப்புமே கோஷங்கள் போட்டாலும், தன்னுடைய சொந்த இடத்தில், அரசியல் கோஷங்கள் நுழைய முடியாமல் தடுக்கும் உரிமை தனக்கு இல்லை என்பதை விசித்திரமாக உணர்ந்து, விரக்தியாகச் சிரித்துக் கொண்டான்.  மறுநாள் பிறந்தது.  ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த பாராங்குசம் கட்சியின் தொண்டனின் உயிர் அபாயக் கட்டத்திலேயே இருந்ததாகச் செய்தி வந்தது. உடனே அந்தக் கட்சியின் தொண்டர்கள், ஆஸ்பத்திரிக்கு முன்னால் கூடி, பிறகு தலைவராக விரும்பிய ஒரு தலைவரின் தூண்டுதலில், வன்முறையை கண்டிக்கும் வகையில், அதற்கு அமைதியாக எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ’கறுப்புப் பேட்ஜ்களை' அல்லது கறுப்பு சட்டைகளை அணிந்துகொண்டு, டவுனுக்குள் ஊர்வலமாகப் போனார்கள். கண்ணில் தென்பட்ட எதிர்க்கட்சித் தொண்டர்களை உதைத்தும், கட்சிக்கொடிகளைக் கிழித்தும். வன்முறை எதிர்ப்பை வாஞ்சையோடு காட்டினார்கள். எதிர்க்கட்சித் தொண்டர்கள் ஒடி ஒளிந்தார்கள்.  எப்படியோ, இவர்கள், அடித்ததில் களைப்பும், உதைத்ததில் இளைப்பும் ஏற்பட்டு, ஒரு மணிநேர கோர தாண்டவத்திற்குப் பிறகு, ஆளுக்கொருவராகச் சிதறிப் போனார்கள். இவர்கள் போனதும், அவர்கள் திரண்டார்கள். ஒடி ஒளிந்தவர்கள், ஒன்றுதிரண்டு, 'கறுப்பு பேட்ஜ்' அணிந்தவர்களை தேடிப் பார்த்தார்கள். யாரும் கிடைக்கவில்லை. அவர்களால் அடையாளப்படுத்த முடியாதபடி, ஆங்காங்கே போய்க் கொண்டிருந்த எதிர்க்கட்சித் தொண்டர்கள், கறுப்பு பேட்ஜ்களை கழற்றி வைத்துக் கொண்டார்கள்.  ஆள் கிடைக்காததற்கு தேர்தல் அலுவலகங்கள் கிடைத்தன. அவற்றிற்கு தீவைத்த தொண்டர்கள், ஒரு ஆள்கூட கிடைக்காத ஆத்திரத்திலும், ஒரு தொண்டனையாவது உதைக்க வேண்டும் என்ற லட்சியப் பிடிப்போடும். டவுனுக்குள் இருந்த பழக்கடை பக்கமாக வந்தார்கள். அங்கே, ராமையா. ஒரு கறுப்புச் சட்டையுடன், பழக்காரர் ஒருவரிடம் 'பேரம்' பேசிக்கொண்டிருந்தான். 'இப்போதுததான் ஜூஸ் விற்கிற நேரம்... பஸ் போற நேரம்... சீக்கிரமாக கடைக்குப் போகணும்... கட்டுபடியாகிற விலையாச் சொல்லுங்க' என்று அவன் சொல்லிக் கொண்டிருந்தபோது, அணிவகுத்து வந்த தொண்டர் கூட்டம், அவனை எதிர்க் கட்சிக்காரனாய் நினைத்து, தெருவுக்கு இழுத்து வந்தார்கள். பின்னால் தள்ளி, முன்னால் உதைத்தார்கள்.  'நான் என்ன தப்பு பண்ணினேன்... என்னை ஏன் அடிக்கீங்க' என்று ஒன்றும் புரியாமல் கத்திய ராமையாவின் வாய், கடைசியில் ரத்தத்தைக் கக்கியது. அவனை, அங்கேயே குற்றுயிரும், கொலையுயிருமாய் போட்டுவிட்டு, தொண்டர்கள், ஒரு லாரியில் ஏறிக் கொண்டார்கள். கூட்டு ரோட்டில் வந்தார்கள்.  லாரி வாகனாதிபதிகளைப் பார்த்த பாராங்குசத்தின் ஆட்கள் தேர்தல் அலுவலகத்தை அப்படியே போட்டுவிட்டு, ஒடி விட்டார்கள். தேர்தல் தட்டிகளை வைத்திருந்த டீக்கடைக்காரர்கள். அவற்றை உள்ளே எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டார்கள்.  பழம் வாங்கப்போனவரை இன்னும் காணுமே என்று கடையில் இருந்தபடியே, பஸ் வரும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தவள். லாரியில் வந்திறங்கியவர்களில் யாராவது ஜூஸ் சாப்பிடுவார்கள் என்று. ஆனந்தமான எதிர்பார்ப்புடனும், அப்பாவித்தனமாகவும் சிரித்தபோது  லாரியில் இறங்கியவர்கள், அந்தக் கடையைப் பார்த்தார்கள். என்ன திமிர்... பாராங்குசத்தின் தேர்தல் சுவரொட்டியை வச்சிருக்காள்... நம்மை குண்டர்கள் என்று சொல்லி அழைக்கும் இன்னொரு தட்டியையும் வச்சிருக்காள்... இதுவும் பத்தாது என்று, நம்மைப் பார்த்துச் சிரிக்கிறாள்... ஆம்புளைகள் எல்லாம் ஒடி ஒளிந்து கொண்டபோது, ஒரு பொம்பிளை சிரிக்கிறாள்... என்னதான் நினைச்சிக்கிட்டாள்... இவ்வளவு திமிரா...  லாரித் தொண்டர்கள் அந்தக் கடையை நோக்கிப் பாய்ந்தார்கள். கலர் பாட்டல்களை எடுத்து, மிக்ஸி யந்திரத்தை அடித்தார்கள். பெட்டிக்கடையை, கீழே இழுத்துப் போட்டார்கள். கண்ணாடிப் பீங்கான்களை தூக்கிப்போட்டு உடைத்தார்கள். மிக்ஸி யந்திரத்தை தனியாக எடுத்து, ஒரு கல்லை வைத்து அடித்து அடித்து கடைசியில் உருத்தெரியாமல் ஆக்கினார்கள். ஒன்றும் புரியாமல் வெளியே ஓடிவந்த ராமையாவின் மனைவியின் தலைமுடியைப் பிடித்திழுத்து மல்லாக்கத் தள்ளினார்க்ள். 'அவ்வளவு திமுறாடி' என்று சொல்லிக்கொண்டே இடுப்பை மிதித்தார்கள். அந்த வேகத்தில் குப்புறப் புரண்டவளின், தலையில் மிதித்தார்கள். முதுகில் ஏறி நின்று, கழுத்தை உதைத்தார்கள்.  எத்தனையோ பேருக்கு தாய்மையின் கனிவோடு, 'ஐஸ்' போட்டு, 'ஜூஸ்' போட்டுக் கொடுத்த ராமையா மனைவியின் மேனி முழுவதும் சாறுதிரண்ட சக்கையாகியது. வாயில் நுரை தள்ளியது. உடம்பு, அவள் போடும் 'ஐஸ்' மாதிரி குளிர்ந்து கொண்டே போனது.  6.  காவலாளி    கொள்ளை இருட்டு கொள்ளையர்களே வேட்டைக்கு வரத்தயங்கும் இருள் மயம்... அந்த கட்டிடத்திற்கு பின்னணியாக உள்ள பாறைப் பொந்துகளும், அவைகளின் பின்புலமான மலைக் குவியல்களும், மரம், செடி, கொடிகளும், மங்கிப் போகாமலே மறைந்து போய் விட்டன. சாலையில் ஒளி உருளைகளாய் செல்லும் வாகனங்களைக்கூட காண முடியவில்லை. ஒப்புக்குக்கூட ஒரு மின்மினிப் பூச்சி இல்லை...  கதிர்வேலுக்கு லேசாய் பயம் பிடித்தது. உடலை சல்லடை செய்வதுபோல் அரித்தத கொசுக்களைக்கூட 'ஆள் துணையாக,' அவன் விட்டு வைத்தான். அவை அவன் காதுகளில் ஏறி நின்று போட்ட சத்தம் கூட அவனுக்கு ஒரு துணையாகத் தோன்றியது. இப்படிப்பட்ட இருளை அவன் எப்போதுமே பார்த்ததில்லை... உடலில் சோர்வு தட்டியது. இன்று காலை ஐந்து மணிக்கே எழுந்து அந்த சுற்றுலா மாளிகையின் நான்கு அறைகளையும் பெருக்கி முடித்துவிட்டு, செடி கொடிகளின் நீர்தாகத்தை தணித்துவிட்டு, கரடு முரடான மேட்டுப் பகுதியை, கொத்திப் போட்டு, மேற்பார்வையாளரின் கூப்பிட்ட குரலுக்கெல்லாம் ஒடி ஒடி, டவுனுக்கும் இந்த மாளிகைக்கும் அலைந்து, அலைந்து, இறுதியில், 'இது நான்தானா'... என் பெயர் கதிர் வேலா... என்ற பிரமை வந்தபோது, வழக்கமாக வரும் மின்சாரம் கட்டறுந்து, இருள் கட்டவிழ்க்கப்பட்டது. கதிர்வேலு தன் உடல் சோர்வை, நியாயப்படுத்திக் கொண்டான். இரண்டு வாட்ச்மேன் வேலைகளை மட்டுமில்லாமல், தோட்டி கார்டனர் ஆகிய அத்தனை வேலைகளையும் அவன் ஒருவனே செய்கிறான். அதுவும் தினக் கூலி நாற்பது ரூபாய்க்காக... இதுக்காக மட்டுமா... இல்லை... இந்த தற்காலிக பணி நிரந்தரமாகனும்... அதுக்கு பாடுபட்டால்தான் முடியும்... கூடவே ஒரு பெரிய அரசு மாளிகையின் ராத்திரி ராசாவாக, தன்னைப் பாவித்துக் கொண்டதில் ஒரு பெருமிதம்... அத்தனை அதிகாரிகளும் அவனை நம்பி இந்த மாளிகையின் இரவு நேரப் பொறுப்பை கொடுத்திருப்பதில் ஒருவித பொறுப்புணர்வு...  பங்களா படிக்கட்டுகளில், கால் பரப்பிக் கிடந்த கதிர்வேலு எழுந்தான். வேகமா ஒரு நடை நடந்து, வீட்டுக்கு போயிட்டு வரலாமா. இவன் போகாமல் தங்கை சாப்பிடமாட்டாள். ஒருவேளை அலறியடித்து இந்தப்பக்கம் வந்திடக்கூடாது. இரவு நேர போக்கிரிகளுக்கு பேர்போன இடம் இது...  வேக, வேகமாய் நடக்கப்போன கதிர்வேலு, அந்த மாளிகையின் வெளிவாசல் முண்னக்கு வந்ததும், பின்வாங்கினான். திருடர்கள் கொள்ளையடித்துப் போகிற அளவிற்கு எதுவும் இல்லைதான். தொட்டால் பிய்யும் கதவுகள். தட்டினால் உடையும் சுவர்கள்.  எந்த திருடனும் பகலில் நோட்டம் பார்க்காமல் இரவில் திருடமாட்டான். நோட்டம் பார்த்தவனோ வரவே மாட்டான். ஆனாலும் மூணு கிலோமீட்டர் டவுனில் சினிமா பார்த்துவிட்டு வருகிறவர்கள், குறுக்கு வழியாக இந்த பங்களாப் பாதையை பயன்படுத்தியதுண்டு. இந்த இருட்டில் வழக்கம்போல் வந்து கண் மண் தெரியாமல் அவன் ஆசையோடு சீவி சிங்காரித்த செடி கொடிகளை மிதித்து விடக்கூடாதே...  கதிர்வேலுக்கு தூக்கம் வந்தது. ஆனாலும் தூக்கம் கலைக்க அவன் சுற்றிச் சுற்றி நடந்தான்.  உலாத்திக் கொண்டிருந்த கதிர்வேலு, அப்படியே நின்றான். அந்த தேசியச் சாலையிலிருந்து உருவம் தெரியா ஒன்றை இரண்டு உருளை விளக்குகள் இபத்துக் கொண்டு வருகின்றன. இவன் எட்டிப் பார்ப்பதற்கு முன்பே அது அவன் முன்னால் வந்து நிற்கிறது. அந்தக் காரின் முன்கதவு வழியாக ஒரு ஒட்டடைக் கம்பன் இறங்குகிறான். பின் கதவை திறக்கிறான். கதிர்வேலுக்கு பரிச்சயமான அவர், காரிலிருந்து இறங்ககிறார். நாற்பது வயதுக்காரர் கழுத்து இருக்க வேண்டிய இடத்தில் தலை இருக்கிறது. முட்டிக் கால்களை வயிறு மறைக்கிறது. டாவடிக்கும் செயின் தரையில் காலூன்னும் முன்பே கதிர்வேலிடம் குசலம் விசாரிக்கிறார்.  "என்ன கதிரு... சுகமா இருக்கியா?  "கதிர் வேலுக்கு அந்த இருளே ஒளியானது போன்ற உணர்வு..." அவரைத் தெரியாதவர் யாருமில்லை. அப்பேர்ப்பட்ட அவர் இவனைத் தெரிந்து வைத்திருக்கிறார். அது மட்டுமல்ல... பதினைந்து நாளைக்கு முன்பு ஒரு நிகழ்ச்சிக்காக கலெக்டர் இங்கே வந்தபோது, சூப்பர்வைசர் அய்யா. இவனைக் கூட்டிக் கொண்டு இவரிடம்தான் போனார். உடனே, இவர் கலெக்டருக்கு முன்னால் இவனை இழுக்காத குறையாய் கூட்டிக்கொண்டு போனார். 'இவன் தங்கமான பையன் சார். இப்போ இங்கே என்.எம்.ஆர்.ஆக இருக்கான். இவனை உடனடியாய் நீங்க பெர்மனன்ட்டாக்கணும்... இவனுக்கு நீங்க செய்யுற உதவி எனக்கு செய்யுறமாதிரி' என்று அடித்துச் சொன்னவர். கலெக்டரை தலையாட்ட வைத்தவர். இவனோட மேற்பார்வையாளருக்கு ஜூனியர் இன்ஜினியர், பங்களா தெய்வம். அந்த டி.இக்கே காவல்தெய்வம் கலெக்டரய்யா... அந்த தெய்வத்துக்கே தெய்வமான தெய்வம் இந்த அய்யா... கூட்டங்களில் நீட்டி முழக்கி பேசுகிறவர் அதிகாரிகளை நடுங்க வைப்பவர். எம்மாடி... எப்பேர்பட்ட மனுசன் நம்மகிட்ட பேசுறார்... கதிர்வேலு அவரிடம் பேசப் போனான். குரல் வயிற்றுக்குள் போனதும், நாக்கு வெளியே வந்ததும்தான் மிச்சம். ஆனாலும் அவர் மனங்கோணாமலே மீண்டும் பேசினார்.  அப்புறம், 'உன்ன நிரந்தரமாக்கி அவரு, டிவிஷனல் என்ஜினியர்கிட்ட பேசினாரு. இப்பக்கூட சிரிப்பு வருது... கலெக்டர் வடநாட்டுக்காரறா... ஒன் பேரை அவர் கடிச்சகடி இருக்குதே இப்ப கூட சிரிப்பு வருது... கண்டிப்பா சொன்னார்... டி.இ.யும் சம்மதிச்சதா சொன்னார். இருக்கட்டும். இருக்கட்டும்... கவனிக்கிற விதமா கவனிக்கணும்... ஒனக்கு ஒரு வாரத்தில் ஆர்டர் வராட்டால் ஒன்று நான் இருக்கணும். இல்ல கலெக்டர் இருக்கணும்..."  கதிர்வேலு வாயகல நின்றான்... அந்தக் கார் வெளிச்சத்தில் அவரைப் பயபக்தியோடு பார்த்தான். எம்மாடி... ஈஸ்வரன் கல்லுக்குள் இருக்கிற தேரைக்கும் உதவுறாறே... அப்படிப்பட்ட உதவி... அய்யா வேலை நிரந்தரம் ஆனாலும். இல்லாவிட்டாலும் ஒங்க அன்பே போதும்ப்யா..."என்று சொல்லப்போனால் அழுகை வரும்போல் இருந்தது. அப்படியும் பேசப் போனான். அதற்குள் ஒட்டடைக்கம்பன் ஒண்டிக் கொண்டான்.  "கலெக்டரும் நல்லவரு... டிவிசனரும் நல்லவரு..." இங்கே இருக்கிற சூப்பர்வைசர்தான் விளங்காதவன்... இவனுக்கு ஆர்டர் வந்திருந்தாலும் கிழிச்சுப் போட்டிருப்பான். அவன தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்தணும்... 'கொஞ்ச இரு... இப்ப எல்லா இடத்திலும் மழை பெய்யுது..."  'அவர்', சிரித்தபோது, கதிர்வேலுக்கு வாய் வந்தது... ஒட்டடைக் கம்பனை முறைத்தபடியே ஒப்பித்தான்.  'எங்க சூப்பர்வைசரு ரொம்ப, ரொம்ப நல்லவருங்கய்யா' அவன் நல்லவேனா... கெட்டவனோ... எல்லாருக்கும் சேர்த்து நீ நல்லவனா இருக்கே... அதனாலதான் ஒன்ன பெர்மனண்ட் ஆக்க குதிக்கேன்...  கதிர்வேலுக்கு மீண்டும் பேச்சு தட்டுப்பாடானபோது ஒட்டடைக் கம்பன் கரடு முரடாக ஆணையிட்டான்.  "சரி.. சரி... அய்யாவுக்கு ரூமை திறந்து விடு..."  கதிர்வேலு யோசித்தான். சூப்பர்வைசர் சொன்னதை நினைத்துப் பார்த்தான். ரிசர்வேசன் ஆர்டர் இல்லாம கடவுளே வந்தாலும் ரூமைத் திறக்கப்படாதுப்பா.  'கதிர்வேலா, கடவுளுக்கு கதவடைக்க முடியும். ஆனால் கண்கண்ட கடவுளுக்கு எப்படி முடியும்... சட்டம் முக்கியமா... அதன் சாரமா...  அவர் கிழக்கு அறையை நெருங்கியபோது கதிர்வேலு, அஸ்வத்தமா புகழ், தர்மர்போல தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டு மேற்கில் உள்ள அறையைத் திறக்கப்போனான்... கிழக்கு அறை அமைச்சர்களும், ஆட்சித் தலைவர்களும் வராத வருடத்தில் முன்னுற்றி இருபது நாட்களில் மூடிக்கிடக்கும். சோபா செட்டு. தொலைக்காட்சி பெட்டி, கம்பள விரிப்பு. கண்கவர் படங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய வரவேற்பு அறை. பத்துபேர் புரளக்கூடிய இரட்டைப் படுக்கை அறை, ஒப்பனை அறை, குளியலறை, கழிவறை என்று பஞ்சபாண்டவ அறைகளைக் கொண்டது.  ஒவ்வொரு நாளும், அமைச்சரோ அல்லது ஆட்சித் தலைவரோ வருவார்கள் என்ற அனுமானத்தில் சுத்திகரிக்கப்படும் அறை. மேற்கு அறை, ஒற்றை அறையிலியோ ஒப்புக்கு ஒரு கழிவறை, படுத்தால் கத்தும் மெத்தைக் கட்டிலையும், மூளியான நாற்காலி மேஜைகளையும் கொண்ட அறை...  கதிர்வேலு, திறந்துவிட்ட அந்த அறைக்குள் அவனை ஏற இறங்க பார்த்தபடியே உள்ளே போனார்.  அந்தச் சமயம் பார்த்து மின்சார விளக்குகள் வெளிச்சம் போட்டன... அவருடன் உள்ளே போன ஒட்டடைக் கம்பன் ஒரு போடு போட்டான்.  "அய்யா, எலக்ட்ரிசிட்டிகாரனை விரட்டுன விரட்டுல லைட்டு வந்துட்டு பாருங்க... அவனுகளுக்கு தெரியாதா என்ன... அய்யா, சொல்கிறபடி செய்யணுமே தவிர, செய்யுற படி சொல்லக் கூடாதுன்னு, எவனுக்கு தர்மபுரிக்கோ, ராமநாதபுரத்துக்கோ போக மனசு வரும்..."  "ஆக்கத் தெரிஞ்சவனுக்கு அழிக்கவும் தெரியுண்டா மடையா..."  அவருக்கு ஏற்பட்டிருக்கும் கோபம், புரியாமலே, கதிர்வேலு வெள்ளைத் துணிகளை சுருக்கிக் கொண்டு, சமையல் கூடத்திற்கு போய் புதிய துணிகளை மெத்தையில் பரப்பினான். தலையணை உறைகளை கழற்றிவிட்டு, கையோடு கொண்டுவந்த புதிய உறைகளுக்குள் அவற்றை திணித்துக் கொண்டிருந்தான். அப்போது-  வெளியே போன ஒட்டடைக் கம்பன், காருக்குள் இருந்த ஒருத்தியுடன் உள்ளே வந்து அவளை விட்டுவிட்டு, வெளியேறி விட்டான். அவளோ கதிர்வேலை ஒரு புழுவைப் பார்ப்பதுபோல பார்த்தபடி கட்டிலில் மல்லாக்க சாய்ந்து, தலையனையை செங்குத்தாக வைத்து அதில் தலையைச் சாய்த்தாள். சந்தேகமில்லை... 'அவளே'தான். பல மேடைகளில் அவரோடு, 'வெண்டையாகப்' பேசுகிறவள். அவருக்கு வரும் விண்ணப்பங்களை வாங்கி வகைப்படுத்துகிறவள். ஒரு டப்பா புருஷனும் இருக்கிறான். உதடுகளின் தடிப்புக்களைவிட சாயத்தின் தடிப்பே அதிகம். பேசுவதைவிட கண்ணடித்துச் சிரிப்பதே அதிகம். அவரைப் பகல் நேரத்தில், 'அண்ணே... அண்ணே' என்கிறவள்.  அவள்,பச்சைமை புருவங்கள் உயர, இரண்டு கரங்களையும் தூக்கி நெட்டி முறித்து, கொட்டாவியான வாய்க்குள் கொடுக்கு விட்டு விட்டு, வானொலி சுவிட்சை தட்டிவிட்டாள். அந்த பாட்டிற்கு ஏற்ப உடம்பை அங்கு மிங்கும் ஆட்டினாள். பிறகு, 'அந்த ரூமு என்னாச்சு', அங்கேதான் மூடு வரும்'... என்று சொல்லிவிட்டு 'களுக்கு' சிரிப்பாய் சிரித்தாள். அவர், அந்த அறைக்குள் அவள் எவனோடு போயிருப்பாள் என்று அவளையும் இன்னொருத்தனையும் கடந்த நிகழ்ச்சிகளுக்குள் தேடிக் கொண்டிருந்தார். அப்படி தேடத்தேட அவரை கோபம் தேடிக் கொண்டிருந்தது. கதிர்வேலோ அவள் போக்கையும், நோக்கையும் தன்மானத்திற்கு விடப்பட்ட சவாலாக நினைத்தான். விடுதிகளில் உள்ள மாமா பையன்களுக்குக் கூட கொஞ்ச மரியாதை கிடைக்கும். அதற்குள் அவர் சர்வசாதாரணமாக ஆணையிட்டார்.  "சரி கதிர், சாப்புடனுமுன்னா சாப்பிடு... துங்கணுமுன்னா தூங்கு... உன்ன பெர்மனன்ட்டு ஆக்குறது என்னோட பொறுப்பு... கவலைப்படாதே..."  கதிர்வேலு கவலைப்பட்டபடியே கால், கை நகர்த்தினான். ஒரு காலை மட்டும் வாசலுக்கு வெளியே வைத்தபோது, அவர் கதவைச் சாத்தினார். இவன்தான் கதவிடுக்கில் அடுத்தகால் சிக்காமலிருக்க அதை அவசரமாக வெளியே எடுத்தான். பித்துப் பிடித்ததுபோல் நடந்து புல்வெளித் தரையில் முட்டுக்காலிட்டு, முகத்தை அதில் சாத்தினான். அவனுக்குள் மனம் எரிந்த கட்சிக்கும், மூளை எரியாத கட்சிக்கும் வாதாடி பட்டி மண்டபம் நடந்தது. அவனது சூப்பர்வைசர் மானசீக மனசாட்சி நடுவரானார்.  கண்டுக்காமல் விட்டால் அரசாங்கத்தில் நிரந்தர ஊழியனாகலாம். அந்த அந்தஸ்த்தில் கடன்பட்டும், உடன்பட்டும் தங்கையைக் கரையேற்றலாம். ஏழெட்டு மாதங்களாய், அல்லும் பகலும் பாடுபட்ட உழைப்பு வீணாகக் கூடாது. எல்லா இடத்துலயும் நடக்கிறதுதான் இங்கேயும் நடக்குதுன்னு இருக்கலாம். ஆனால் இந்த இடத்தில் இவனிருக்கும் இடத்தில் நடக்கலாமா... எப்படி இந்த வேலைக்கு வந்தான்? இந்த மாதிரி சங்கதிகளுக்கு உடன்பட்டதற்காக நிரந்தர வாட்ச்மேன் மாற்றப்பட்ட சமயம்... இவன் கிராமத்தில் மனுநீதி நாள்... சப்கலெக்டர் வந்தார். பலர் அவரிடம் மனுக்கள் கொடுத்தபோது, இவன் மனுநீதிச் சோழனாகவே பேசினான். எப்படி..  'நீங்க இங்க வருவதுல ஒரு பிரயோசனமும் கிடையாது சார். வயதான அனாதைகளுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவங்களப் போய் 'முதியோர் தொகை' கேட்டு அப்ளிகேசன் போடச் சொல்றீங்க... அது முடியுற காரியமா... மெனக்கட்டு நீங்க ஒவ்வொரு கிராமத்துக்கும் போக முடியுமா.'  'அப்ப என்னதான் செய்யணுங்கிற...'  'சொல்றேன் சார்...' மலையைத் தேடி மகம்மது போகணும்... மகம்மதுகிட்ட மலையை எதிர்பார்க்கப்படாது. நீங்க செய்யுறது இரண்டாவது காரியம். எந்த கிராமத்திலேயாவது, ஒரு கிழவிக்கோ, ஒரு விதவைக்கோ உதவிப்பணம் கிடைக்கலன்னா, சம்பந்தப்பட்ட அதிகாரிமேல் நடவடிக்கை எடுக்கிறமாதிரி, ஒரு முறை இருக்கணும்...'  'நீ ஊராட்சி தேர்தல்ல நின்னுருக்கலாமே...'  'யார் சார் ஒட்டுப் போடுவாங்க? யதார்த்தவாதி வெகு ஜன விரோதி.”  "இந்தாப்பாரு தம்பி... ஒன் பேரென்ன... கதிர்வேலா... அருமையான பெயர்... ஒன்றை மட்டும் விடாப்பிடியா நினைச்சுக்கோ... தர்மத்துக்கு துணையா யாருக்கும், அல்லது எதுக்கும் விரோதி ஆகிறது பெருமைப் படுற விசயம். அதோட ஒன் பழமொழியில வர்ற வெகுஜனம் என்கிறது. மிட்டா மிராசுகள், உள்ளுர்த் தலைவர்கள்... இவர்கள் ஜனங்களாகி விடமாட்டார்கள். அதனால மனிதன் என்கிறவன் அநியாயத்துக்கு எதிரா போராடணும். காரணம் எந்த பதவியும், 'மனிதப் பதவிக்கு' மேல் பெரிய பதவி இல்ல.”  கதிர்வேலு. இப்போது அந்த சப்-கலெக்டரை முகத்திற்கு முன்னால் நிறுத்தினான். யோகப் பயிற்சியோ அல்லது களங்கமற்ற இதயமோ நாற்பது வயதிலும் முப்பது வயது தோற்றக்காரர்... எடுபிடி ஆட்களைக்கூட, என்னங்க போட்டு பேசுகிறவர்... அதே சமயம் குவாரிகளுக்கு, திருட்டுத்தனமாய் போகும் லாரிகளை மடக்கிப் பிடிப்பவர்... அரிசி கடத்தலுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவர். உழைப்புக் ஒரு உருவம் காட்ட வேண்டுமென்றால் அவர்தான்.  கதிர்வேலு தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்... எந்தப் பதவியும் மனிதப் பதவிக்கு மேலான பதவி இல்லை.  கதிர்வேலு, அவசர அவசரமாய் எழுந்து, சமையல் கூடத்திலுள்ள அலமாரியில் உள்ள ரிஜிஸ்தரை எடுத்துக் கொண்டு, அவர் தங்கிய அறையைத் தட்டினான். உள்ளே கேட்ட அதட்டல் குரல் ஏற ஏற இவனது தட்டலும் ஏறியது. இறுதியில் அவர் லுங்கியோடு, வெளிப்பட்டார். அவள் குப்புறக் கிடந்தாள்.  'என்ன கதிர்வேலு... என்ன விசயம்... எதுக்காக இப்படி லுட்டி அடிக்க...'  அப்படியெல்லாம் ஒண்னும் இல்லைங்கய்யா. இந்த ரிஜிஸ்தர்ல அய்யாவோட பேரு அம்மாவோட பேரு வந்ததுக்கான காரணம் எழுதி ஒரு கையெழுத்து போடுங்க...'  "போடாட்டா..?"  'இடத்தக்காலி பண்ணுங்க...'  'பண்ணாட்டா...'  'என் உடம்புல பலம் இருக்குது.'  அவள் உடல் சுருட்டி எழுந்தாள். ஒட்டடைக் கம்பன் உதறல் எடுத்து நின்றான். கதிர்வேலு அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்.  'இது அரசாங்கத்தோட கெளரவமான மாளிகை. பிராத்தல் ஹவுஸ் இல்ல... ஒண்னு கையெழுத்து போடுங்க... இல்லாட்டா நடையைக் கட்டுங்க..'  கதிர்வேல், ரிஜிஸ்தரை நீட்டியபடியே அவரை நெருங்கிக் கொண்டிருந்தான்...  7.  ஒருவழிப் பாதை     அலுவலகமே அல்லோல கல்லோலப் பட்டது. கொடியவன் என்று கொடிகட்டிப் பறந்த பழைய சேல்ஸ் மானேஜர் கழிவதாலும், புதிய சேல்ஸ் மேனேஜர் புகுவதாலும் அலுவலகத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். பழையவரைவிட எவரும், மோசமானவராக இருக்க முடியாது என்ற அனுமானமே, புதியவருக்கு, ஒரு தகுதியாக வாய்ந்தது. மானேஜிங் டைரக்டர், “திஸ் இஸ் யுவர் பிராஞ்ச். ஹி ஈஸ். ஹெட் கிளார்க் சோணாசலம்..." என்று சொல்லி விட்டு, புதியவரை அங்கே புகுத்திவிட்ட திருப்தியில் போய்விட்டார்.  செக்‌ஷன் ஆட்கள் அனைவருமே எழுந்து நின்றார்கள்: டைப்பிஸ்ட்காரி கொண்டையை சரிசெய்து கொண்டாள். சேல்ஸ் - அசிஸ்டண்ட் முத்துசாமி, சட்டைப் பித்தானைப் போட்டுக் கொண்டான். 'மாடர்னாக' இருப்பதாய் காட்டிக்கொள்ள விரும்பிய பெண்கள், 'பெளவியமாய்' இருப்பதாய் நினைத்துக் கொண்ட பெண்கள், 'கிளாட் டு மீட் யூ ஸார்' என்ற வார்த்தைகளை அறிமுகப்படுத்தப் பட்டவுடனேயே சொல்லியாக வேண்டும் என்பதற்காக, அவற்றை மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த ஆண்கள் - இப்படி அலுவலகம், சரஸ்வதி பூஜையை கொண்டாடுவதுபோல் புதுமையாகத் தோன்றியது.  சேல்ஸ் மானேஜர் சதாசிவத்திற்கு இருபத்தெட்டு வயதிருக்கலாம். டூவிட்பேண்டும். சிலாக்கும். உடம்பில் ஒட்டியும் ஒட்டாமலும் மின்விசிறியில் லேசாக ஆடியது. கூர்மையான பார்வையும், அறிமுகப்படுத்தப்படுவோரின் கண்களை, அவன், நேராகப் பார்த்ததில், அப்படிப் பார்க்கப்பட்டவர்கள் பாவம் செய்தவர்கள்போல், தலைகளை குனிந்து கொண்டார்கள். தலைமை குமாஸ்தா சோணாசலம், ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்யும்போது, அலுவலகத்திற்கு அப்போதுதான் வந்த அக்கெளண்டன்ட் சிங்காரம் தான் லேட்டாக வந்ததற்கு மற்றவர்கள் தான், வருத்தப்பட வேண்டும் என்று நினைத்தவன்போல், மதர்ப்புடன், அடிமேல் அடி வைத்து நிதானமாக நடந்து வந்தான்.  தலைமை குமாஸ்தா, தான் அறிமுகப்படுத்திக் கொண்டிந்த டைப்பிஸ்ட் பெண்ணை, அம்போ என்று விட்டுவிட்டு, சிங்காரத்தைப் பார்த்தார். அவனை முதலில் அறிமுகப்படுத்தியாக வேண்டும். இல்லையென்றால் திட்டுவான்.  "ஹி ஈஸ். சிங்காரம். லார்" என்றார் சோனாச்சலம், "கிளாட் டு மீட் யூ மிஸ்டர்... சதாசிவம்" என்று சொல்லிக் கொண்டு, மானேஜர் சதாசிவத்தின் கரங்களைக் குலுக்கினான் சிங்காரம். எல்லோரும் 'ஸார்' போடுகையில், இவன் மட்டும் மிஸ்டர் என்று போட்டதை சதாசிவம் கவனிக்கத் தவறவில்லை. அதோடு, அவன் பேசிய் தோரணை, அவன் என்னமோ மானேஜர் மாதிரியும், தான்தான் அக்கெளண்டண்டாக வந்திருப்பது போலவும் நினைப்பதாகத் தோன்றியது. முதியவர்கள்கூட பதவிக்குரிய மரியாதையைக் கொடுக்கும்போது, சம வயதுள்ள ஒருவன், 'ஆப்டர்ஆல்' ஒரு அக்கெளண்டண்ட் நடந்து கொண்ட விதம், மானேஜர் இளைஞனுக்கு பிடிக்கவில்லை. அவன், இந்த இடத்தில், ஏதாவது பேசி, தனது சுப்பீரியாரிட்டியை காட்டியாக வேண்டும். காட்டினான்.  "கிளாட் டு மீட் யூ... ஒர்க் ஈஸ் காட்.. உங்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும்... என்கிட்ட வரலாம்... பட்... டிஸ்லிபிளின் இஸ் ரொம்ப முக்கியம்... நான்... லண்டன்ல பிஸினஸ் அட்மினிஸ்டிரேஷன் கோர்ஸ்... படிக்கும் போது... அங்கே ஒரு சம்பவத்தை சொன்னாங்க. அங்கே ஒருவர்...  அலுவலக ஊழியர்கள் அனைவரும், மானேஜர் விளக்கப்போகும் சம்பவத்தை அறியத் துடிப்பவர்கள்போல், கண்கொட்டாமல், அவர் வாயையே பார்த்தார்கள். அதிலே சில பாவலாப் பேர்வழிகளும் இருக்கலாம்.  ஆனால் அக்கெளண்டண்ட் சிங்காரம், அலட்சியமாக மேலே ஓடும் மின்சார விசிறியைப் பார்த்தான். பிறகு கையில் வைத்திருந்த ஒரு பத்திரிகையை அலட்சியமாக புரட்டினான். இந்த அலட்சியத்தை மானேஜர் இளைஞன் லட்சியம் செய்தவன்போல், கோபமாகக் குறிப்பிட்டான்.  'லேட்கம்மிங் ஒரு சமூக விரோத செயல்..." நான் சும்மா இருக்கமாட்டேன்.  ஊழியர்கள், மானேஜருக்குப் பயப்படுவதுபோல், தத்தம் கைகால்களை ஆட்டிக் கொண்டார்கள். சிங்காரம் மட்டும் 'ஒனக்கு ஒரு திறமை இருந்தால்... எனக்கும் ஒரு திறமை இருக்கு... நீ என்ன சொல்றது... நான் என்ன கேட்கிறது' என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டே, அலட்சியமாக பத்திரிகை ஒன்றைப் புரட்டினான்.  மானேஜரின் பார்வை, அவன்மேல் அடிக்கடி விழுவதை ஊழியர்களும் பார்த்துவிட்டார்கள். மானேஜர் வாலிபன் 'அட்வைஸ்' முடித்துவிட்டு, தனது ஏர்கண்டிஷன் அறைக்குள் போனான். அவனை எப்படி மடக்கலாம் என்று மானேஜரும், ஆசாமி மீது எப்படி மொட்டைப் பெட்டிஷன் போடலாம் என்று அக்கெளண்டண்டும் நினைத்துக் கொண்டதால் அன்று இருவருமே எந்த ஃபைலையும் பார்க்கவில்லை.  இரண்டு மூன்று நாட்கள் ஓடின.  அக்கெளண்டண்ட் சிங்காரம், தான் நடந்து கொண்டதற்கு வருத்தப்பட்டான். என்ன இருந்தாலும் எவ்வளவு திறமை அவனிடத்தில் இருந்தாலும், அவன் மேனேஜருக்கு கிழே வேலை பார்ப்பவன். ஆகையால், அடுத்த தடவை அவரைப் பார்க்கும்போது, மிகமிகப் பணிவாக நடந்து கொள்வதென்று தீர்மானித்தான்.  'அடுத்த' தடவை வந்தது. கம்பெனியின் நுழைவாயிலில் காரில் இருந்து இறங்கிய மேனேஜரைப் பார்த்து, ஸ்கூட்டரில் இறங்கிய சிங்காரம், 'குட்மார்னிங் ஸார். ஆபீஸிற்கு வாரீங்களா' என்று கேட்டு வைத்தான். மானேஜர் இளைஞன், அவனை ஏற இறங்கப் பார்த்தான். ஆபீஸிற்குள், தான் நுழைவதைப் பார்த்த பிறகும் 'ஆபீஸிற்கு வாரீங்களான்னு' கேட்டால் என்ன அர்த்தம்? இவன், திமிரை அடக்காமல் விட்டால், பிஸினஸ் அட்மினிஷ்ட்ரேஷன் கோர்ஸ் படித்ததில் அர்த்தமே இல்லை.  சிங்கர்ரத்திற்கு பதில் வணக்கம் செலுத்தாமல் 'யூ மீட் மி இன் மை ரூம்' என்று கோபமாகச் சொல்லிவிட்டு, வேகமாக லிப்டிற்குள் நுழைந்தான்.  அக்கெளண்டண்ட் சிங்காரத்தின், ரத்தம் கொதித்தது. மரியாதை கொடுத்தால், இந்த மேனேஜருக்கு மரியாதை தெரியவில்லையே! இருக்கட்டும்... இருக்கட்டும்... இரண்டில் ஒன்றை பார்த்துவிடலாம்.  மானேஜர் சொன்னபடி அவன் பார்க்கவில்லை. பியூன் வந்து சொன்னபிறகு, கால்மணி நேரம் கழித்து, மானேஜர் அறைக்குப் போனான். அப்போது, மானேஜர், அவனைக் கூப்பிட்டதை மறந்தவன்போல், ஒரு இளம் பெண்ணுடன் மெய்மறந்து பேசிக் கொண்டிருந்தான்.  "சரண் சிங், நேருவின் பொருளாதாரக் கொள்கையை தாக்கியிருந்தார் பார்த்திங்களா? உங்க அபிப்ராயம் என்ன மேடம்?"  அந்தப் பெண் அழகானவள் மானேஜரிடம் ஏதோ பேசப் போனாள். அதற்குள் அங்கே நின்று கொண்டிருந்த, அக்கெளண்டண்ட் சிங்காரம் ஒரு நாற்காலியில் இழுத்துப் போட்டு உட்கார்ந்துகொண்டே “நம் நாட்டுக்கு ஹெவி இண்டஸ்ரிஸும் முக்கியம்தான். அதேமாதிரி காட்டேஜ் இண்டஸ்ரிஸும்..." என்று பேசிக் கொண்டே போனான்.  அந்த இளம்பெண், மானேஜரை விட்டு விட்டு சிங்காரத்தைப் பார்த்தாள். எதிரே உள்ள நாற்காலியில், கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து கொண்டு, அக்கெளண்டண்ட் சிங்காரம் பேசியதை மானேஜர் சதாசிவத்தால் சகிக்க முடியவில்லை. போதாக்குறைக்கு அந்தப் பெண் அவனையே பார்க்கிறாள். இப்போது அவர், அவளை 'இம்ப்ரஸ்' செய்தாக வேண்டும். 'இம்ப்ரஸ்' செய்தார்.  'மிஸ்டர் சிங்காரம் நான் உங்களை கவனிச்சுக்கிட்டே வரேன். பத்து மணிக்கு ஆபீஸ். வழக்கமாய் பத்தரை மணிக்கு வந்தால் வாட் டஸ் இட் மீன்?'  "நீங்க வர்ற சமயத்துல நானும் வந்துடுறேனே.'  'அந்த இளம் பெண், அக்கெளண்டண்டின் பதிலில் ஒளிந்திருக்கும் கிண்டலை ரசித்தவள்போல், லேசாக சிரித்துத் தொலைத்தாள்.  மானேஜருக்கு, ரத்தம் கொதித்தது. ஒரு பெண்ணின் முன்னால், பெரிய பதவியில் இருக்கும் அவரை, ஒரு சின்னப் பதவிக்காரன், அவமானப் படுத்துவதா? முடியாது விட முடியாது.  'மிஸ்டர் சிங்காரம்! டோன்ட் யூ நோ மேனர்ஸ்? பிளீஸ் கெட் அப். எழுந்து நின்னு பதில் சொல்லுங்க. ஏன் லேட்டாய் வந்திங்க? ஐ ஸே ஒய் ஆர் யூ லேட்?"  அக்கெளண்டண்ட் சிங்காரம், எழுந்தான். ஒரு பெண்ணின் முன்னால் அவனை அவமானப்படுத்துவதா? மானேர்ஸ் இல்லாமல் பேசுவதா? அவன் பதில் சொல்லாமல் இருந்தால், அவனைப்பற்றி இந்தப் பெண் என்ன நினைப்பாள்?  ஆகையால் அவன் பதிலடி கொடுத்தான்.  "மிஸ்டர் சதாசிவம் ஏன் அனாவசியமாய் 'பஸ்' பண்றிங்க? இப்போ லேட்டாய் வந்ததுனால என்ன குடி முழுவிப் போச்சு? நீங்களுந்தான் லேட்டாய் வந்திங்க"  "எதிர்த்தா பேசுற... யூ ஆர் சேலஞ்சிங் மை பவர்"  "நோ... நோ... யூ ஆர் பாஸிங் ஓவர் டு மச் பெரிய பதவிக்கு சின்ன புத்தி கூடாது."  "ஓட்... அட்ரோஷியஸா பேசுறே... கெட் அவுட் ஐ லே பூ கெட் அவுட்"  "போகிறேன். கொஞ்சம் மானேர்ஸ் கத்துக்கங்க" "இங்க எதுக்கு மேன் வந்திங்க?"  "நீங்க எதுக்கு கூப்பிட்டு அனுப்பினிங்க?"  "எதிர்த்தா பேசுற"  "நீ நான்னு பேசினா... நானும், நீன்னு பேச வேண்டியது வரும்..."  "ஐ ஸே யூ கெட் அவுட்"  "ஐ ஸே யூ ஷட் அப்"  மானேஜர் சதாசிவம், நாற்காலியில் இருந்து கொண்டே குதித்தான். அப்படி குதித்துக் கொண்டே கத்தினார். ஒரு இளம் பெண் முன்னால், தன் அதிகாரம் 'சேலஞ்ச்' செய்யப்பட்டதை, அவர் விடத் தயாராகயில்லை.  அக்கெளண்டண்ட் சாம்பசிவம், வெளியே வந்து, கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். ஒரு பெண்ணின் முன்னால், அவனை அவமானப் படுத்துவதா. அவள் கடைக்கண்பார்வையில், மண்ணில், அக்கெளண்டண்டான அந்த மாமலை மானேஜரும், ஒரு கடுகாம்.  மானேஜரின் பயங்கரமான இரைச்சலைக்கேட்டு ஊழியர்கள் அங்கே ஓடி வந்தார்கள். ஏர்கண்டிஷன் அறைக்குள் வியர்வை கொப்பளிக்க பல்லைக் கடித்துக் கொண்டிருந்த மானேஜரை ஆசுவாசப்படுத்திய அவர்கள், சிங்காரத்தின் கையைக் குலுக்கவும் தவறவில்லை.  மானேஜிங் டைரக்டரும் குலுக்கினார். சதாசிவம், சிங்காரத்தைப் பற்றியும், சிங்காரம் சதாசிவத்தைப் பற்றியும் எழுதிய புகார்களின் சிக்கல்களை தீர்க்க, சிக்கல் சிங்கார வேலனை வேண்டினார். மானேஜர், ஆபீஸர்கேடர் அவர் புகாருக்கு வெயிட் கொடுத்தாக வேண்டும். சாம்பசிவம் யூனியனில் செல்வாக்குள்ளவன். அவனையும் அலட்சியம் செய்ய முடியாது.  'ஆக்‌ஷன்' எடுக்கவில்லையானால் ராஜினாமா செய்யப் போவதாக மானேஜரும், ஆக்‌ஷன் எடுத்தால் வேலை நிறுத்தம் செய்யப்படும் என்று அக்கெளண்டண்டும் ஃபீலர்ஸ்' விட்டார்கள். விவகாரத்தை மழுப்பிவிடலாம் என்று நினைத்த மானேஜிங் டைரக்டர். இறுதியில் இருவருக்குமே 'மெமோ' கொடுத்தார். அக்கெளண்டண்டுக்கு 'சிவியர் மெமோ'.  சேல்ஸ் - மானேஜராக இருந்தும், தனக்கு கீழே வேலை பார்க்கும் ஒருவனுக்கு சஸ்பென்ஷன் வாங்கிக் கொடுக்க முடியவில்லை என்று சதாசிவமும், எத்தனையோ சேல்ஸ் மேனேஜரை மிரட்டிய தன்னால் இவனை மிரட்ட முடியவில்லையே என்று சிங்காரமும் அதிருப்தி அடைந்தார்கள். எப்படியோ இருவருக்குமிடையே ஒருவித 'டிடெண்ட்' நிலவி வந்தது.  அதைக் கலைக்கும், ஒரு நிகழ்ச்சியும் விரைவில் வந்தது.  ஊழியர் பிரதிநிதிக்குழு ஒன்று சேல்ஸ் மானேஜர் சதாசிவத்தின் முன்னால் வந்து நின்றது. அவனும், தான் ஒன்றும் சர்வாதிகாரி இல்லை என்பதை காட்டும் 'ஹம்பிள் பிரைட்' (எளிமையில் கர்வம் கொள்வது) உந்தப்பட்டவனாய் அவர்களை உட்காரச் சொன்னார். பியூன் கொண்டு வந்த காபி டம்ளர்களை, அவனே எடுத்து ஒவ்வொருவருக்கும் கொடுத்துவிட்டு பேச்சைத் துவக்கினான்.  "என்ன விஷயம்?"  "வந்து ஸார். நம் கம்பெனி ஊழியர்கள் எல்லாம் சேர்ந்து வழக்கமா இந்த வருஷமும் நாடகம் நடத்த போறோம்".  மானேஜர் உச்சி குளிர்ந்தான். கம்பெனி சாவணிர்களிலும், அவன் கொடுக்கும் விளம்பரத்தை வாங்கிக் கொண்டு, அவன் எழுதியதை அப்படியே பிரசுரிக்கும் இதர கம்பெனி மலர்களிலும், அவன் கதைகள் எழுதியிருந்தான். அந்த கதைகளைப் படித்துவிட்டு, இவர்கள். தன்னிடம் 'ஸ்கிரிப்ட்' கேட்க வந்திருக்கிறார்கள். வெரிகுட்...  வந்தவர்கள் 'ஸ்கிரிப்டை விட்டுவிட்டு, நன்கொடை சமாச்சாரங்களை பேசினார்கள். மானேஜருக்கு எரிச்சலுக்கு மேல் எரிச்சல், வாய்விட்டே கேட்டான்.  "டிராமாவுக்கு கதை வசனம் யார் எழுதறது".  "நம்ம அக்கெளண்டண்ட் சிங்காரம் ஸார். நீங்க தலைமை தாங்கணும்".  "நான் தலைமை தாங்கணுமுன்னா முதல்ல ஸ்கிரிப்டை பார்க்கணும். கம்பெனிய தாக்குறது மாதிரி இருக்கா? தனிப்பட்ட மனிதரை தாக்குறது மாதிரி இருக்கான்னு பார்க்கணும்."  ஊழியர்கள், சிங்காரத்திடம் விவரத்தைச் சொன்னார்கள். அவன் முதலில் குதித்தான். பிறகு, தன் திறமையை, சேல்ஸ் மானேஜருக்கு தெரியப்படுத்த விரும்பியவன்போல், ஸ்கிரிப்டை கொடுத்தான்.  சிங்காரத்தின் 'ஸ்கிரிப்டை' சதாசிவம் படித்தான். அவருக்கு உடம்பெல்லாம் பற்றி எரிந்தது. இதுவரை, தன்னால் மட்டுமே நன்றாக எழுத முடியும் என்று நினைத்த அவனுக்கு, அந்த ஸ்கிரிப்ட் நன்றாக இருப்பதுபோல் தோன்றியது. ஆகையால், அந்த கதை வசனத்தை அடியோடு வெறுத்தான். அதை எழுதிய சிங்காரத்தை இன்னும் அதிகமாக வெறுத்தான். ஸ்கிரிப்டில் இருந்த நுணுக்கங்களும், ஜனரஞ்சக நடையும், அவன் உள்ளத்தைக் குடைந்தன.  'ஸ்கிரிப்ட் எப்படி லார் இருக்கு" என்று கேட்டுக் கொண்டே ஊழியர்கள் வந்தார்கள்.  "இதுக்கு பேரு ஸ்கிரிப்டாயா? கதை இல்ல... வசனம், மட்டத்திலும் மகா மட்டம். சம்பவக்கோர்வை என்கிற பேர்ல சம்போக கோர்வை... சீச்சி... இதைவிட நீங்க நாடகம் போடாமலே இருக்கலாம். வேற ஸ்கிரிப்ட்டை வேற ஆள்கிட்ட வாங்குங்க"  "டு லேட் ஸார். ஆள் கிடைக்கிறது கஷ்டம். இவன் பணம் வாங்காம எழுதிக் கொடுத்தான். மத்தவங்க பணம் கேட்பாங்க."  "நான் பணமும் தாரேன், ஸ்கிரிப்டும் எழுதித்தாரேன். ஏன் யோசிக்கிறீங்க? என் கதைகள நீங்க படிச்சதில்லையா?" ஊழியர்கள் மெளனமாக நடந்தார்கள். நடந்ததை சிங்காரத்திடம் சொன்னார்கள்-அவன் கத்துவான் என்று எதிர்பார்த்து. அவன் கத்தாததால் இவர்கள் கத்தினார்கள்.  "சிங்க்! எப்படிடா உன்னால கோபப்படாம இருக்க முடியுது?"  "சேல்ஸ் மானேஜர் ஆசையை எதுக்குப்பா கெடுக்கனும்?"  அக்கெளண்டண்ட் தான் யபெருந்தன்மையானவன்' என்பதைக் காட்டிக் கொண்டதில் பெருமிதப் பட்டான். இதுபோல், சேல்ஸ் மானேஜரும், நாடகத்தை, சிங்காரம் 'டைரக்ட்' செய்ய 'பெருந்தன்மையோடு' சம்மதித்தான்.  ஒத்திகைகள் நடந்தன. இறுதி ஒத்திகையைப் பார்க்க சேல்ஸ் மானேஜர் சதாசிவம் வந்திருந்தான். இரண்டு மூன்று காட்சிகளைப் பார்த்தான். முதல் காட்சியில் அவன் எழுதியதே இல்லை. இரண்டாவதில், பல மாறங்கள். மூன்றாவது, முழுசாய் இன்னொன்று. சதாசிவத்தால், கத்தாமல் இருக்க முடியவில்லை.  "நிறுத்துங்க. இந்த நாடகத்தை நான் அனுமதிக்க முடியாது. என் ஸ்கிரிப்டை திருத்த எவனுக்கும் உரிமை கிடையாது."  அக்கெளண்டண்டும், நாடக டைரக்டருமான சிங்காரமும் விடுவானா? விடவில்லை.  "சொல்லுங்களேண்டா... ஸ்கிரிப்டை திருத்த டைரக்டருக்கு உரிமை உண்டு."  "அதுக்காக எல்லா காட்சியிலேயும் கை வைக்கிறதா?"  "எல்லாக்காட்சியும் மட்டமாக இருந்தால் என்ன பண்றது?"  "என் ஸ்கிரிப்டா மட்டம். நான்சென்ஸ், டைரக்‌ஷன்தான் மகாமட்டம்"  "என் டைரக்‌ஷனா? இடியாட்டிக். மட்டமான ஸ்கிரிப்டையும் வைத்து சிறந்த நாடகம் தயாரிக்க முடியும் என்கிறதுக்கு என் டைரக்‌ஷன் ஒரு உதாரணம்".  "மிஸ்டர் சிங்காரம்! நீ ரொம்பத்தான் பேசுற"  "மிஸ்டர் சதாசிவம்! இங்க நீங்க மானேஜர் இல்ல. ரைட்டர். நான் அக்கெளண்டண்ட் இல்லே. டைரக்டர். டோண்ட் பீ ஸில்லி"  "வார்த்தையை அடக்கிப் பேசு. இந்த மாதிரி டைரக்‌ஷன் பண்ணியிருக்கியே. இதைவிட நீ எருமை மாடு மேய்க்கலாம்."  "எருமைமாடு எழுதின ஸ்கிரிப்டைவிட, டைரக்‌ஷன் எவ்வளவோ மேல்."  "டேய் என்னடா நினைச்சிக்கிட்டே?”  "டாய். என்ன நினைக்கணுங்றடா?"  "இப்படி பேசினா பல்லை உடைப்பேன்"  "இதோ நானே உடைக்கிறேன் பாரு."  ஊழியர்கள், இருவரையும் விலக்கிவிட்டார்கள். பிறகு இரண்டு கோஷ்டிகளாகி தங்களுக்குள்ளே அடித்துக் கொண்டார்கள். நாடகம் போடாமலே அங்கே சண்டைக் காட்சிகள் நிறைந்த நாடகம் ஒன்று தத்ரூபமாக அரங்கேறியது.  விவகாரம், மானேஜிங் டைரக்டருக்கு மட்டுமல்ல பத்திரிகைகளுக்கும் போனது. சமயம் பார்த்து கொண்டிருந்த எம்.டி. சதாசிவத்தையும், சிங்காரத்தையும் 'சஸ்பென்ஷனில்' வைத்திருக்கிறார். அனேகமாக இருவருக்கும் டிஸ்மிஸல் ஆகும் என்கிறார்கள்.  கடற்கரையில் கண்ணகி சிலைக்கருகே உள்ள பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு மனோதத்துவ புத்தகம் ஒன்றில் ஒரு பக்கத்தை விழுங்கி விடுபவன்போல், அக்கெளண்டண்ட் சிங்காரம் படித்துக் கொண்டிருந்தான்.  "உலகத்தில் எல்லோருமே ஒரே மாதிரி குண இயல்பு உள்ளவராய் இருந்தால், கலகந்தான் மிஞ்சும். ஒருவர் தன்னிடம் இருக்கும் குறைகளை, பிறரிடம் காணும்போது, அவரை வெறுக்கிறார். உண்மையில், இது ஆழ்மனத்தில் உள்ள சுய வெறுப்பின் சாமர்த்தியமான வெளிப்பாடு. சுய குறைகளைக் கண்டு, தன்னை வெறுக்கவிடாமல் ஒருவரது அடிமனம் அந்த குறைகளை கொண்ட இன்னொருவரை வெறுக்கிறது. 'ஈத்' தடுக்கிறது. 'ஈகோ' அவற்றை சாமர்த்தியங்களாகக் கூட நினைக்க வைக்கிறது. இதே குறைகள் இன்னொரு மனிதனிடம் பிரதிபலிக்கும்போது, ஒருவன், அவனை ஜென்மப்பகைவனாய் கருதுகிறான். வெறுப்பத மூலம் இவன், தன் ஜென்மத்தில் உள்ள குறைகளை மறைமுகமாக வெறுக்கிறான். இதனால் தான் சான்றோர்கள் தன்னை உணரச் சொன்னார்கள். திருமூலர், 'மரத்தை மறைத்தது மாமத யானை' என்றதுக்கும், சாக்ரடீஸ் 'உன்னையே நீ அறிவாய்' என்று சொன்னதுக்கும். பைபிளில் 'உன்னைப்போல் மற்றவனை நேசி' என்று சொன்னதுக்கும் இதுதான் காரணம். பிறரை வெறுக்கும் ஒருவன் தன்னே தானே சோதித்துக் கொள்ள வேண்டும்."  படித்ததை நிறுத்தி விட்டு, திடுக்கிட்டவன்போல், புத்தகத்திற்கு வெளியே விழித்துப் பார்த்த சாம்பசிவத்தின் உடல், ஒருமுறை குலுங்கியது. மானேஜர் சதாசிவத்தை தன்னை கண்ணாடியில் பார்ப்பதுபோல் பார்த்தான்.  8.  சாமந்தி சம்பங்கி ஓணான் இலை     அந்தப் பிள்ளையார் கோவிலுக்கும் - அதற்கு எதிரே இருந்த பூக்கடைகளுக்கும், காய்கறிக் கடைகளுக்கம் இடையே ஏதோ ஒரு பொருத்தம் இருக்க வேண்டும். மாலை பிறந்த நேரம், அந்த கோவிலில் அர்ச்சகர் பூக்களை வைத்துக் கொண்டு 'ஓம் வக்ர துண்டாயா' பன்றபோது, கீரைக்காரி மாரியம்மாள். தண்டங்கீரை தண்டு ஒன்றை ஒடித்துக் கொண்டிருந்தாள். அவர் 'ஓம் விகடாயநம' என்று சொல்லி, ஒரு பூவைப் போட்டபோது, பூக்காரர் ஒருவர், சும்மா 'கும்'முன்னு ஆடினார். இன்னும் சொல்லப்போனால், அவர் ஆடவில்லை. அவர் ரத்த ஓட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக நாடி நரம்பு எங்கும் ஒடிக் கொண்டிருந்த 'தண்ணி' அப்படி ஆட்டி விட்டது! கடைகளும், மனிதர்களும் ஒன்றான வேளை.  மத்தியான வெயிலுக்காக சற்று தொலைவிலுள்ள துங்குமூஞ்சி மரத்தருகே நிறுத்தி வைத்திருந்த பழ வண்டியை தள்ளிக் கொண்டு சின்னானும், அவன் மனைவி பார்வதியும், பஸ் நிலையத்திற்கு அருகே வந்தபோது, "தோ.. அந்த சோமாறி நெஞ்சை பார்த்து நீட்டா உருட்டுப்பா... தத்தேரி கயிதே... இந்தண்ட வான்னா காதுல ஏறல..." என்றாள் பூக்காரி தாயம்மாள். வாய் பேசினாலும், கைகள் அவை பாட்டுக்கு சாமந்திப்பூவைக் கட்டிக் கொண்டிருந்தன. உடனே சின்னான் மனைவி, "நானுந்தான் உன்கு எத்தனைவாட்டி சொல்றது? ஆறுவயசு பையனை அம்மணமா விட்டா எப்பிடி... டேய் சோமாறி நெஜார் பூடாண்டா.." என்று சொல்லியபடியே வாழைப் பழங்களை வண்டியில் பரப்பினாள். நிஜார் போடாத அந்தச் சிறுவனின் உடம்பைப் பார்த்ததும் பார்வதி எதேச்சையாக தன் கிழிந்த ஜாக்கெட்டை நைந்த புடவையால் மூடிக் கொண்டாள்.  நிஜார் போடாத அல்லது போட விரும்பாத அந்தச் சின்னப்பையன், "நம்ம கிட்ட ராங் காட்னே கத்தியாலே கீச்சிப்புடுவேன்." என்று சொல்லிவிட்டு, பிறகு எல்லா மெட்ராஸ் ரவுடிகளையும்போல ஓடினான். சாலையின் பிளாட்பாரத்துக்குக் கீழே பள்ளமான ஓர் இடத்தில் செருப்புக்களை தைத்துக் கொண்டிருந்த சீனன் (அதாவது சீனிவாசன் என்ற பெயரின் சுருக்கம்) போதையில் ஆடிக் கொண்டிருந்த தாயம்மாவின் ஆம்புடையானைப் பார்த்தான். தாயம்மா கணவனை கடிந்து கொண்டிருந்தாள்...  "இனிமே காட்டி. இந்தப் பிள்ளையாரப்பன்தான் ஒன்னைக் கேட்கணும். நான் பூவிலே சம்பாதிக்கிறத, நீ தண்ணியிலே விடற."  தண்ணிக்காரர் பதிலடி கொடுத்தார்.  "இன்னாமே... படாப் பேஜார் பண்றே... ஒன்காக காலங்காத்தாலே மொந்தை மொந்தையா பூ வாங்கிக்கினு வரணும். நீ ஆருகிட்டேயாவது 'பைட்டு'க்குப் போனால் நான் உதைக்கப் போணும்... சும்மா ஒரு கிளாஸ்பூட்டா இன்னாமே... ஏய், வுன்னை..."  மனைவியைப் பார்த்து நோக்கி நடந்த பூக்காரரை, சின்னான், தரதரவென்று இழுத்துக் கொண்டுபோய், துங்குமூஞ்சி மரத்துக்குக் கீழே கொண்டுபோய் புரள வைத்தான். தாயம்மாவிற்கு அருகே, பிளாட்பார சுவருக்கம் - ஒரு மரத்திற்கும் இடையே வைக்கப்பட்டிருந்த சதுரப்பெட்டியில் ஓணான் இலைகளை தவளை மாதிரி மடித்துக்கட்டி அதற்கு மேல் துலுக்கச் சாமந்தி, சம்பங்கி, செவ்வரளி முதலிய பூக்களை அடுக்கடுக்காக - அழகாக கட்டிக்கொண்டிருந்த ராமன் கீழே குனிந்து அதட்டினான்.  "உங்க பொழப்ப பாருங்களேமே... இது என்ன புச்சாவா குடிக்கறாரு..."  கீழே சம்மணம் போட்டபடி பூக்கட்டிக் கொண்டிருந்த சாந்தியும், ஒரு காலை தூக்கிவைத்து, அதிலே முகம் பதித்து. ஆள் உயர மாலை ஒன்றிற்கு ரோஜாப் பூக்களால் அச்சாரம் போட்டுக் கொண்டிருந்த துலுக்காணமும், தங்கள் புருஷனை அண்ணாந்து பார்த்தார்கள். ஒருத்திக்கு இப்போதுதான் அபார்ஷன் ஆனது. இன்னொருத்திக்கு ஏழு மாதம். அவர்களின் பார்வையைப் புரிந்து கொண்ட அந்த இரண்டு பொண்டாட்டிக்காரன், "மன்ஷன்னா குடிக்கத்தான் செய்வான்" என்று தன்பாட்டுக்குச் சொல்லிக்கொண்டு, எதிரே நின்ற வாடிக்கையாளரைப் பார்த்தான்.  "எத்தனை முயம் சாமி?"  "முழம் எவ்வளவு?"  "சாமந்தி அம்பது பைசா. சம்பங்கி அறுபது பைசா."  "நேத்து முப்பது பைசாதானே."  "இன்னிக்கு சிவராத்திரி சாமி!"  "அதுக்காக இப்படி அநியாய விலையா?"  புரண்டு கொண்டிருந்த புறநானூற்று வீரனான புருஷனை பார்த்தபடியே தாயம்மா இடைமறித்தாள்.  "எங்க பொயப்பு அப்படி சாமி மழை வந்திட்டா அம்புட்டும் அழுகிடும்... அப்போ எங்க போய் முட்டிக்கிறது...?"  வாடிக்கையாளர் தயங்கிக் கொண்டிருந்தபோது, "இங்கே வா சாமி எங்கிட்டே ரோஜாப்பூக் கீது. தாமரை கீது. உன்னோட சட்டைக்கு இந்த ரோஜா மாட்ச்சாகும்" என்ற குரல் கேட்டது.  எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள்.  தாயம்மாவின் பலகைக் கடைக்கு பத்தடி தள்ளி, ஒட்டை மேஜை ஒன்றில் வண்ண வண்ண பூக்களை வைத்தபடி கண்களை வெட்டிக் கொண்டிருந்த காந்தா, ஒய்யாரமாகச் சிரித்தாள். இருபத்திரெண்டு வயதுக்காரி, வெளுத்த செவ்வரளி நிறம். சம்பங்கிப் பூவின் சாயல், சாமந்திப்பூ குவியல் போன்ற அடர்த்தியான தலைமுடி. அவள் பார்வை தாளமாட்டாது வாடிக்கைக்காரர். ராமனை விட்டுவிட்டு, அவள் அருகே போய் நின்று, ஆண்டவனுக்காக பூ வாங்காமல், தன் சட்டைக்கு மேட்சாக ரோஜாப் பூவையும், உதட்டுக்கு மேட்சாக... அவள் கன்னத்தையும் மாறி மாறிப் பார்த்தார்; பார்த்துக்கொண்டே நின்றார்!  தாயம்மா, சின்னானை அர்த்தத்தோடு பார்த்தபோது, சின்னான் ராமனைப் பார்த்தான். காந்தா, அந்த வாடிக்கையாளர் சட்டையில் ஒரு ரோஜா இதழை தன் கைபட மாட்டினாள். எல்லோரும் கண்களை சிமிட்டியபடி ஆகாயத்தைப் பார்த்தார்கள். பொதுவாக, ராமனிடம் பூ இல்லாவிட்டால், வேண்டிய பூக்களை அவள் ராமனிடமே கொடுத்து வாடிக்கையாளரிடம் கொடுக்கக் சொல்வாளேதவிர, அவள் ராமன் 'கிராக்கியை' கூப்பிடமாட்டாள். ராமனும் இப்படித்தான் ஒரு தடவை பூவோடு பூவாக விற்கட்டும் என்று வாழைப் பழங்களை வாங்கி வைத்திருந்தான். 'வண்டிக்கார' சின்னான். 'என்னோட சேல்ஸ் பூடும்பா' என்று சொன்னபோது, ராமன்தான் வாங்கிவந்த பழங்களைச் சின்னானிடமே கொடுத்து விட்டான்.  இப்படி எழுதப்படாத ஒரு தொழில் தர்மம் அங்கே நடந்து வரும்போது, இந்த காந்தா நடந்துகொள்ளும் விதம், அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இவ்வளவுக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு வந்தவள். அங்கே கடை போட்டிருந்த செருப்புக்கடை சீனன், அவளுக்காக இடம் விட்டு, பள்ளத்தைப் பார்த்துப் போனான். ஆனால், இந்த காந்தாவோ இப்போது எல்லோருக்கும் பள்ளம் வெட்டிக் கொண்டிருக்கிறாள். அவளைக் கண்டிக்கவும் முடியவில்லை. அவள் சேர்ந்திருக்கும் இடம் அப்படி..  ஒரு மணிநேரம் ஓடிவிட்டது.  லைட் இல்லாத சைக்கிளில் காக்கி யூனிபாரம் போட்ட ஒருவர் லாவகமாக வந்தார். பிளாட்பாரச் சுவரில் ஒரு கையை , வைத்துக்கொண்டு, சைக்கிளை அங்குமிங்குமாக ஆட்டியபடியே கடைகண்களை நோட்டமிட்டார். ஆஜானுபாகுவான தோற்றம். சைக்கிளின் ஹாண்ட் பாரில் தொங்கிய லத்திக் கம்பு மாதிரி அமைந்த, அழுத்தம் திருத்தமான உடற்கட்டு. குதறுவதுபோல் இருந்த கண்கள். காய்ப்பு ஏறிய கைகள். ஆசாமிக்கு நாற்பது வயது இருக்கலாம். எல்லோரையும் ஒட்டுமொத்தமாக அதட்டினார்:  "ஏண்டா... சோமாறிங்களா... டிராஃபிக் இடைஞ்சலாகல? டேய் சின்னான்... இங்கே ஏண்டா வண்டியை நிறுத்தற... ஒரம் கட்டுடா கயிதே!"  சின்னானும், அவன் மனைவியும் எதுவும் பேசாமல், வாழைப்பழ வண்டியை முன்னால் நான்கு அடி நகர்த்தி, பிறகு பின்னாலும் நான்கு அடி நகர்த்தி, அதை இருந்த இடத்திலே நிறுத்திக் கொண்டிருந்தபோது  போலீஸ்காரர் சீனனை அதட்டினார்.  "என்னடா சீனா, குரோம்பேட்டை பாக்டரியிலிருந்து திருட்டுத்தனமா தோல் வாங்கிறியாம்... மாமியார் வீடு கேட்குதா..."  "அப்படில்லாம் ஒண்ணம் கிடையாது சாமி... வாணும்னா வந்து பாரு" என்று சொல்லியபடியே, சீனன் அத்தனை செருப்புக்களையும் எடுத்து, அவர் முகத்துக்கு எதிரே ஆட்டினான். போலீஸ்காரர் திருப்தி அடைந்தவராய் பிளாட்பார சுவரில் கை வைத்தபடியே, சைக்கிளை தள்ளியபடியே, காந்தா பக்கம் போனார். பிறகு அவள் மேஜை மேலே ஒரு கையை ஊன்றிக் கொண்டு அவளைப் பார்த்தார்.  காந்தா பேசவில்லை. சிரிக்கக்கூட இல்லை. ஒரு வெள்ளை ரோஜாவை எடுத்து அவர் காக்கிச் சட்டையில் வைத்தாள். அதற்குப் பிறகுதான் இருவரும் சிரித்தார்கள். என்னவெல்லாமோ 'கிசுகிசு' பேச்சுக்கள். அவள் யாரைப் பற்றியோ பேசியிருக்க வேண்டும். இல்லையென்றால், போலீஸ்காரர், அவள் பேசப்பேச அப்படி திரும்பிப் பார்த்திருக்க மாட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு, காந்தா அவசர அவசரமாக கடையை எடுத்து வைத்தாள். "கடையை கொஞ்சநேரம் பார்த்துக்கணும்" என்று எல்லோருக்கும் ஒட்டுமொத்தமாக உத்தரவு போடுவதுபோல் பேசிவிட்டு, போலீஸ்காரரின் சைக்கிளில் பின்னால் ஏறிக் கொண்டாள்.  அந்த சில்லறைக் கடைக்காரர்களின் தலைகள்போல், சைக்கிள் சக்கரங்களும் சுழன்றன. கீரைக்காரி மாரியம்மாள் கொதித்தாள்:"இப்டியே விட்டுக்குனு போனால், அவன் எல்லாரையும் படுக்கச் சொல்வான். அவள மட்டும் கவனிக்கப்படாது. அவனையும் சேர்த்துக் கவனிக்கணும்... தட்டுக்கெட்ட மூதேவியாலே நம்ம எல்லாருக்குமே ஆபத்து வந்திருக்கு... நேத்து பார்வதியைக் கூப்பிட்டான். நாளிக்கு துலுக்கானத்தைக் கூப்பிடுவான்... அப்பாலே சாந்தியைக் கேட்டான்... இந்த காந்தா மூதேவி பண்றதனாலே, அவன் எல்லா ஏழைப் பொம்மனாட்டியும் கூப்பிட்டா வந்திருமுன்னு நினைக்கான். இந்த நெனப்பை நாம மாத்திக் காட்டணும். அவன் நெஞ்சிலே கீற மஞ்சாசோத்தை எடுத்து, அவன்கிட்டயே தின்னக் கொடுக்கணும். அப்போதான், என் மனசு ஆறும்..."  பேசிய வாய்கள் மூடிக் கொண்டன - வெடித்த எரிமலை சிறிது விட்டுக் கொடுப்பதுபோல்.  சைக்கிளில் காந்தாவும் போலீஸ்காரரும் வந்து கொண்டிருந்தார்கள். அவன் பின் இருக்கையில் இருந்து இறங்கி, காம்பவுண்ட் சுவரை லாகவமாகத் தாண்டி, மேஜைமீது பூக்களைப் பரப்பியபோது போலீஸ்காரர் அவள் கைகளை செல்லமாக வருடினார். அவள் கன்னத்தின் அருகே அவர் கை போனபோது, காந்தா தன் மோவாயால் அவர் கையைத் தட்டி விட்டாள். "சீ! அக்கம்பக்கத்துலே..." என்று செல்லமாக சிணுங்கினாள். அப்போதுதான் அவருக்கும் மற்றவர்கள் மனிதர்களாகத் தெரிந்தது.  சைக்கிளைவிட்டு இறங்கியபடியே சின்னான் அருகே போனார்.  "ஏண்டா சின்னா... சீக்கிரமா வண்டியை கொண்டு போயேண்டா. டிராஃபிக்கு ஏண்டா இடைஞ்சலா நிறுத்தறே? கயிதே... போக்குவரத்துக்கு இடைஞ்சலா இருக்குது..."  "எந்தப் போக்குவரத்துக்கு சாமி...?"  "என்னடா, எதிர்க்கேள்வி போடற? பஸ் ஸ்டாண்ட் பக்கமா வண்டி நிக்கப்படாது. வேணுமுன்னா அந்தப் பக்கமா போ... டேய் செருப்பு கண்ணு தெரியாத நேரத்திலே என்னத்தடா தைக்கிற? ஏய் கீரை வழியை அடைக்கிறாபோல ஏன் நெப்புற...?" சின்னான், வண்டியோட வண்டியாய் நின்றான். சீனன் செருப்போடவே இருந்தான். கீரையம்மா ஒரு சுண்டு விரலைகூட நீட்டவில்லை.  போலீஸ்காரருக்கு பிரச்சினை தன்மானமாகியது.  "சொல்றது காதுலே விழலே. டேய், வண்டி கயிதே... வண்டியைத் தள்றியா, இல்லியா?"  சின்னான். இப்போது சவால் விட்டான்.  "அட சும்மா நிறுத்து சாரே... நீ யூனிபாரத்துக்கு தோதுவா நடந்துக்கினால், நாங்களும் அதுக்குத் தோதுவா நடந்துக்குவோம். நீ இன்னாடான்னா..."  போலீஸ்காரருக்கு ரத்தம் கொதித்தது. மிரட்டலோடு பேசினார்.  "இன்னாடா, திட்டம்போட்டு பண்றீங்களா? நாளைக்குப் பார்த்துக்கலாம். இந்த இடத்துலே உங்க கடை இருந்தா நான் தொப்பியை கழட்டி வச்சுறேன்!"  போலீஸ்காரர், எல்லா விவரங்களிலுமே அனுபவஸ்தர். புரிந்து கொண்டார். இது தனியாக கவனிக்கிற சமாச்சாரமில்லே. காந்தாவைப் பார்த்தபடியே சைக்கிளை உருட்டி, பிறகு அதில் ஏறிக் கொண்டு பெடல்களை அழுத்தினார்.  மறுநாள்.  பூக்கடைக்குப் போய்விட்டுத் திரும்பிய தாயம்மாவும், சின்னானும் ஆச்சரியப்பட்டார்கள். காந்தா பிள்ளையார் கோவில் முகப்பில், கடை போட்டிருந்தாள். தாயம்மா கண்ணைச் சிமிட்டியபடியே, "கோவில் பக்கம் கடை போடக் கூடாதுன்னு சொன்னாங்களே... இவ எப்படிப் போட்டா? ஒருவேளை, கோவில்காரன் எவனையாவது வளைச்சுப் பூட்டிருக்காளா...? எக்கேடும் கெடட்டும் தத்தேரி கயிதே..." என்றாள்.  ஒவ்வொருவரும் தத்தம் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினார்கள். தாயம்மா உதிரிப் பூக்களை பிளாஸ்டிக் பேப்பரில் இருந்து விடுவித்துக் கொண்டு இருந்தாள். சின்னான் வாழைப்பழ வண்டியை முன்னால் இழுக்க, பார்வதி அதை பின்னால் இருந்து தள்ளிக் கொண்டிருந்தாள். துலுக்காணமும், சாந்தியும் ராமனோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். மாரியம்மாள் தனது கீரைகளைக் கிள்ளிக் கொண்டு இருந்தாள்...  திடீரென்று போலீஸ் வேன் வந்து நின்றது.  பல போலீஸ்காரர்கள் கீழே குதித்தார்கள். அப்படி குதித்தவர்களில் 'காந்தா புகழ்' ஆசாமியும் ஒருவர்! அப்போது அவர் காந்தாவைப் பார்க்கவில்லை. அவள் யாரோ, தான் யாரோ என்பது போல் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நின்றார். அவரோடு வந்த இதர போலீஸ்காரர்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக ஓடி, கீரைகளைக் கூடையோடும், பூக்களை அதன் மேஜையோடும் வேனுக்குள் திணித்தார்கள். சின்னானின் பழ வகைகளை உள்ளே தூக்கி எறிந்தார்கள். சீனனை செருப்புப் பெட்டியோடு ஏற்றினார்கள்.  தலைமை போலீஸ்காரர் அதட்டினார்.  "இங்கே கடை போடப்புடாதுன்னு எத்தனை தடவை சொல்லியும் கேட்கல. உம்... ஏறுங்க..."  தாயம்மா பொறுக்க முடியாமல் கேட்டாள். காந்தாவின் கடைப்பக்கம் கையை நீட்டியபடியே கேட்டாள்.  "அதோ, அந்தக் கடை இருக்கே சாமி?"  "எந்தக் கடை இருந்தா உனக்கென்ன? அது கோவில் பக்கத்துலே இருக்குது; இருக்கலாம். மொதல்ல நீ வண்டிலே ஏறு சட்டமா பேசறே..."  சின்னான் காந்தாவைப் பார்த்தபடியே முனங்கினான்.  "மட்டமான ஒரு விவகாரத்துக்காக சட்டம் வந்ததை நினைச்சு தாயம்மா புலம்புது சாரே... புலம்பினாலும் தப்பாப் புலம்பல!"  "ஏண்டா சோமாறி... கயிதே... எதிர்த்தா பேசறே? உனக்கு ஆறு மாசம் வாங்கிக் கொடுக்கறேன். பார்..."  சின்னானின் பிடறியில் பட்டு பட்டென்று பிரம்படி விழுந்தது. வேனிற்குள் இருந்த இன்னொரு போலீஸ்காரர் அவன் தலைமுடியைப் பிடித்து உள்ளே இழுத்துப் போட்டார். வேறொருவர், சீனனின் கையை முறுக்கியபடி அவனை வண்டிக்குள் குப்புறத் தள்ளினார்.  தாயம்மா, மாரியம்மாள். துலுக்காணம், சாந்தி ஆகிய அத்தனைபேரும் அழுகிப்போன பூக்கள்போல வேனிற்குள் எறியப்பட்டார்கள். வண்டிக்குள் இருந்த தாயம்மா, கீழே ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்த தன் மகனைப் பார்த்து "நயினா வந்துடம். விசயத்தைச் சொல்லிட்டு, இங்கேயே இரு" என்று விழியாட்டிப் பேச - சின்னான், 'பயப்படாதே' என்பதுபோல் மனைவியின் முதுகைத் தட்டிக் கொடுக்க, சீனன், தன் முகத்தில் பதிந்த போலிஸ் கீறலைப் பெருவிரலால் அழுத்த துலுக்காணமும், சாந்தியும், ராமனை ஆளுக்கொரு பக்கமாக பார்க்க, கீரைக்காரி மாரியம்மாள் சிதறிக் கிடந்த பொருட்களையும், கோவில் முகப்பில் பட்டும் படாததும்போல் பார்த்துக் கொண்டிருந்த காந்தாவையும் வெறுமையுடன் நோக்க...  போலீஸ்வேன் புறப்பட்டது. வேக வேகமாக ஓடியது. சுதந்திரமும் சுய மரியாதையும் வேறு வேறு என்று உணராத அந்த நிஜார் போடாத சின்னப்பயல் சிறிதுநேரம் திகைத்து நின்று விட்டு, பிறகு அந்த வேனுக்குப்பின்னால் ஒடினான். அந்த போலீஸ்வேன் கிளப்பிய புழுதியோ பிள்ளையார் கோவிலை மறைத்தது.  9.  அரைமணி நேர அறுவை    கல்வி, விவசாயம், கோழி விஸ்தரிப்பு அதிகாரிகள் உட்பட எண்ணக்கூடிய அதிகாரிகளும், எண்ணில்லா இதர ஊழியர்களும், ஃபீல்ட் ஒர்க்கர்களும், அந்தப் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மார்ச் பண்ணிக் கொண்டிருந்தார்கள். காரணம், நடப்பு நிதியாண்டு முடியும் 'மார்ச்' மாதத்திற்குள், வேலை நடக்கிறதோ இல்லையோ, ஒதுக்கீடு என்ற பணத்தை எப்படியாவது செலவு செய்தாக வேண்டும். எப்படிச் செலவு செய்தாலும், 'இப்படித்தான் செலவு செய்தோம்' என்று காட்டியாக வேண்டும். இல்லையென்றால், கலெக்டர். அவர்களை இந்த வசதியான இடத்திலிருந்து துரத்தி, வசதியற்ற இடங்களைக் காட்டிவிடுவார். ஆகையால், எல்லோரும் ஆணையாளரைப் பார்த்து ஆலோசனை கேட்க, அலைமோதிக் கொண்டிருந்தனர்.  ஆணையாளர் ஐயப்பன், தன் அறைக்குள் சில பஞ்சாயத்துத் தலைவர்களிடம் காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்தபோது, 'வெத்துமாஞ்சாவடி' ஊராட்சித் தலைவர் ஒப்பிலியப்பன் "வணக்கம்!" என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தார்.  அவரைக் கிள்ளுக்கீரை போல் கடைக்கண் பார்வையால் அலட்சியப்படுத்திவிட்டு, வாடாதபட்டித் தலைவர் வைரவனிடம் ஆணையாளர் ஆவேசமாகப் பேசினார் :  "தலைவரே....! நீங்களே சொல்லுங்க... இவரோட வெத்துமாஞ்சாவடில, மேல்நிலைக் குடிநீர் திட்டத்தைக் கொண்டு வந்ததே நான் பில்டிங் கட்டியாச்சு. யந்திரங்களும் வந்தாச்சு. ஆனா அந்தக் கட்டடத்துல மேல் பாகம் பைசா நகரத்துக் கோபுரம் மாதிரி இரண்டு அங்குலம் வளைந்து நிக்குது. கட்டிடம் விழுந்துடக் கூடாதுங்கறதுக்காக ஒரு அணைப்புச் சுவர் கட்டலாமான்னு யோசிக்கிறோம். அதுக்கு எப்படியும் எட்டாயிரம் ரூபாய் வேணும். இந்த மார்ச்சுக்குள்ள நடக்காது. ஏப்ரல் மே வரட்டும். முடிச்சிடலாமுன்னு முந்தாநாள்தான் ஒப்பிலியப்பன்கிட்ட சொன்னேன். இவரு நேத்து என்ன செய்திருக்கார் தெரியுமா? அமைச்சரைப் பார்த்து, குடிநீர் திட்டத்தை இந்தமாதம் இருபத்தெட்டாம் தேதி செயல்படுத்த 'டேட்' வாங்கிட்டு வந்திருக்கார், பாத்திங்களா இவரு செய்த காரியத்தை, குறுக்குச் சுவர் இல்லாட்டா கட்டடம் குறுக்கே விழுந்தாலும் விழலாம். அதோட என் தலையும் விழுந்துடும். நான் இப்போ என்ன பண்ணட்டும்..?"  "நான் என்ன அண்ணா பண்றது? சும்மா செகரெட்டேரியட் பக்கமா போனப்போ, அமைச்சர் தற்செயலாய் என்னைப் பார்த்துட்டு, 'ஏய்யா நான் ஒங்க ஊருக்கு வர வேண்டாமா'ன்னு கேட்டார். உடனே அமைச்சர்கிட்ட பேசுற படபடப்புல 'குடிநீர் குழாய திறந்து வைங்க'ன்னு தெரியாத்தனமா சொல்லிட்டேன். அவரு என்னடான்னா பி.ஏ.-யைக் கூப்பிட்டு குறிச்சிக்கிட்டார். நான் என்ன பண்ணட்டும்? நீங்க அமைச்சர் வாரத விரும்ப மாட்டிங்கன்னு எனக்குத் தெரியாமப் போச்சு. குடிநீர் வராததனால குடி முழுகிடப் போயிடாது... வேணுமுன்னா இப்பவே அண்ணங்கிட்ட போயி கேன்ஸல் பண்ணிடுறேன்..."  ஆணையாளருக்கு ஒப்பிலியப்பன் தன்னை, பிடிக்க வேண்டிய இடத்தில் பிடிப்பது புரிந்துவிட்டது. விவகாரத்திற்கு வேறு கலர் கொடுக்கப்படுவதால் அவரது முகத்தின் கலர்கூட மாறிவிட்டது.  "நான் அதுக்காகச் சொல்லல... தலைவரே! நம்ம அமைச்சரை நான் வராண்டாமுன்னு சொல்லுவேனா..? ஆல்ரைட்... பி. டபிள்யூ. டி. என்ஜினியருக்கு எழுதிடுறேன். வாட்டர் போர்டு ஆசாமிகளுக்கும் எழுதிடுறேன். இருப்பத்தஞ்சாம் தேதிக்குள் குறுக்குச் சுவர் எழுப்பிடலாம். தலைவரே! டோண்ட் ஒர்ரி... ஜமர்ச்சிடலாம்... அப்புறம் பேச்சாளர் லிஸ்டை போட்டுக்குவோமா, இல்ல. நீங்களே..."  "அது எப்படி ஸார்... உங்களைக் கேட்காம..."  "ஆல்ரைட்... கலெக்டர் தலைமை தாங்குவார்..." "இல்லே ஸார்... எம்.எல்.ஏ-தான் தலைமை தாங்கணும்."  "ஆசை யாரை விட்டுது? உமக்கு பழையபடியும் பிரஸிடென்டா ஆகணும் என்கிற ஆசை. எனக்கு இந்த ஜில்லாவிலேயே இருக்கணுங்கற ஆசை... கலெக்டரே இருந்துட்டுப் போகட்டும்."  "இல்ல... எம்.எல்.ஏ-தான் இருக்கணும்."  வாடாதபட்டித்தலைவர் சமரசம் செய்தார்.  "முன்னிலைன்னு ஒண்ணு இருக்கு... அதை மறந்துட்டிங்களே! எம்.எல்.ஏ-யை முன்னிலைன்னு போட்டுடலாம்."  "அப்புறம் அண்ணன் எம்.பி-க்கு?"  "ஒ...! அவர மறந்துட்டேன். அவரு சிறப்புச் சொற்பொழிவு..."  "பழைய சேர்மனுக்கு என்ன கொடுக்க?"  "அவரு. அமைச்சர் குழாயத் திறக்கும்போது மாலை போடுவாரு"  "குழாய்க்கா..?"  "இல்ல... அமைச்சருக்கு."  "எங்க டிவிஷனல் ஆபீசருக்கு ஏதாவது கொடுங்கய்யா?"  "அவருக்கா... அவரு நன்றியுரை சொல்லிடட்டும்."  "அப்போ நான் ஆணையாளர்னு பதவியிலிருந்து அம்போன்னு இருந்துடனுமா..?"  "வேண்டாம். நீங்க... டி.டி.ஓ. நன்றி சொல்வார்னு அறிவிச்சிடுங்க"  ஆணையாளருக்கு ஒன்று புரிந்தது. ஏப்ரல் முதல் தேதி வருமுன்னாலேயே ஒப்பிலியப்பன் தன்னை முட்டாளாக்கி விட்டார் என்பது. இதை விடக்கூடாது. எப்படியாவது குறுக்குச் சுவரைக் கட்டி, அழைப்பிதழ் அடித்து அமைச்சரிடம் தானே கொடுத்துவிட வேண்டும்.  ஆணையாளர் ஐயப்பன், வாட்டர் போர்டு அதிகாரிகளையும், பி. டபிள்யூ. டி என்ஜினியர்களையும் நாட்கணக்காகச் சந்தித்து காலில் விழாக் குறையாக விழுந்து, மோவாய்களைத் தொடாக் குறையாகத் தொட்டு குறுக்குச் சுவரை எழுப்பி விட்டார். இதற்குள், அமைச்சர் வருவதே வருகிறார், வேறு சில பள்ளிக் கட்டிடங்களையும் திறந்து வைக்கவேண்டும் என்று இதர ஊராட்சித் தலைவர்கள் சொன்னதை ஆணையாளர் உடனடியாக ஒப்புக் கொண்டார். ஒப்பிலியப்பனுக்கு மட்டும் பேர் போகலாமா?  விழா நாள் பிறந்தது.  ஒப்பிலியப்பனின் வெத்துமாஞ்சாவடியில் குடிநீர் குழாய்க்கருகே, எவர்சில்வர் குடங்களுடன் ஏகப்பட்ட மேக்கப்புடன் உள்ளுர் தலைவர்களின் மனைவிகளும் மகள்களும் காத்திருந்தார்கள். மேடையில், அந்தப் பகல் நேரத்திலும், இரவில் எரியாத மின்சார விளக்குகளும் எரிந்தன.  அமைச்சர் இன்னொரு ஊரில் ஒரு பள்ளிக்கூடத்தைத் திறந்து வைப்பதற்காக வாணவேடிக்கைகள் சூழ மேடைக்குப் போனார். ஆட்சித் தலைவர், அவர் இவர் என்று கூட்டத்தில் பாதிப்பேர் மேடையில் இருந்தார்கள். மேடைக்கு முண்டியடித்துப் போன பப்ளிசிட்டி ஆபீசரை ஆணையாளர் வழி மடக்கினார். அவரது காதை வாயருகே கொண்டு வரச்செய்து, ஏதோ கிசுகிசுத்தார். பப்ளிசிட்டியார் குதித்துத் துள்ளினார் :  "அய்யய்யோ...! நம்மால முடியாது ஸார்..."  "பப்ளிசிட்டி லார்! நான் ஒங்களத்தான் மலை போல நம்பியிருக்கேன்... பிளிஸ் எனக்காக... எனக்காக...!"  "நான். எப்படி லார் அப்படி? கெளரவமுன்னு ஒண்னு இருக்கே"  "அப்படிச் சொல்லப்படாது... ஒங்கள மாதிரி ஆட்களுக்கு கெளரவம் தேவையில்ல. நான் ஒங்களுக்கு எவ்வளவோ செய்திருக்கிறேன். நீங்க அனுப்புற நாடக கோஷ்டிகளுக்கு இடம் ஃபிக்ஸ் பண்ணிக் கொடுத்திருக்கேன். திரைப்படம் காட்டுறதுக்கு... கிராம சேவக்கை அனுப்பியிருக்கேன். இப்படி உதவி செய்த எனக்கு உதவி செய்ய ஒங்க வாழ்நாள்லயே முதல் சந்தர்ப்பம் வந்திருக்கு பிளீஸ்... பிளீஸ்...!"  "சரி, பார்க்கலாம்."  'நீராருங் கடலுடுத்து' - விழா துவங்கியது. நாலைந்து பேர் பேசினார்கள். இதற்குள் நிகழ்ச்சி நிரலைப் பார்வையிட்ட அமைச்சர், நேர்முக உதவியாளரிடம் ஏதோ சொல்ல, அவர் அலுவலரின் கண்ணில் படும்படியாக முதல் வரிசை நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த பப்ளிசிட்டியிடம் வந்தார்:  "பப்ளிசிட்டி ஸார்! அமைச்சருக்கு ஒங்க பேச்சுன்னா ரொம்ப பிடிக்கும்."  "ஹி... ஹி... வசிஷ்டர் வாயால பிரம்மரிஷின்னு சொல்ற மாதிரி இருக்கு."  “என்னை நீங்க வசிஷ்டர்னு சொன்னதுல சந்தோஷம். இருந்தாலும் இன்னைக்கு ஒங்க சொற்பொழிவைக் கேட்கிற அதிர்ஷ்டம் அமைச்சருக்கு இல்லை. ஏன்னா. அவரு அவசர அவசரமா டில்லில ஒரு கான்பரன்ஸுக்கு பிளேன்ல என்கூட வரார். அதனால ஓங்க பேச்சை மூணு நிமிஷத்துல முடிக்கச் சொன்னார். இன்னொரு விழா இருக்கு பாருங்க..."  நேர்முக உதவியாளர் போய் விட்டார். விழாத் தலைவரான கலெக்டர் "பப்ளிசிட்டி அதிகாரி திரிசங்கு ஐந்து நிமிடம் பேசுவார்" என்று கறாராக அறிவித்துவிட்டு அமர்ந்தார்.  பப்ளிசிட்டி அதிகாரி திரிசங்கு மேடைக்கு வந்தார். அமைச்சருக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு "மாண்பு என்ற வார்த்தைக்கு மாண்பு கொடுத்த மாண்புமிகு அமைச்சர் அவர்களே! திருக்குறளில் ஆட்சியதிகாரத்தில் சொன்னபடி ஆட்சி செலுத்தும் ஆட்சித் தலைவர் அவர்களே! அன்றும்... இன்றும்... என்றும்... மக்களின் இதயபீடத்தில் அமர்ந்திருக்கும் முன்னாள் சேர்மன் முனிரத்தினம் அவர்களே...! என்று இழுத்தபோது, "சட்டுபுட்டுனு ஒட்டு மொத்தமா சொல்லி முடிங்க!" என்றார் கலெக்டர்.  பப்ளிசிட்டி ஒட்டுமொத்தமாகப் பேசவில்லை. மேடையில் இருந்த அத்தனைபேரையும் அடைமொழி கொடுத்து விழித்தார். பொதுமக்கள்பகுதியில் தனக்கு அடையாளம் தெரிந்த ஒரு சிலரையும் பெயரிட்டு (அடைமொழியுடன்!) விழித்தார். பொதுமக்கள் பகுதியில் மெஜாரிட்டியினராய் இருந்த பையன்களை நேரிடையாக அழைத்தார்.  "டேய்! பசங்களா. இவரு யாரு தெரியுமாடா..? தெரியாதா. இவருதான் கலெக்டர். ஆனால் இவரைப் பார்த்தா கலெக்டர் மாதிரி தெரியுதா? இவர யாராவது கலெக்டர்னு சொன்னா நம்புவாங்களா? நம் ஆட்சித் தலைவர் அவர்கள் அவ்வளவு எளிமையானவர்... அவ்வளவு அடக்கமானவர், இவரு மாதிரியே நீங்களும் படித்து முன்னுக்கு வரணும். இவரைப்போல புன்னகை தவழ... கம்பீரமாக அதேசமயம் எளிமையாக, நேர்மையாக. இனிமையாக இருக்கணும்."  எப்படியோ பதினைந்து நிமிடம் ஆகியது. கலெக்டர், இப்போது 'கண்டுக்க'வில்லை. ஆனால் அமைச்சரால் அப்படி இருக்க முடியவில்லை. அவர் புருவத்தை உயர்த்தியபோது பேச்சாளர் திரிசங்கு சுருதியை மாற்றினார்.  "அடக்கத்தில் சிறந்தவர் அமைச்சரா அல்லது ஆட்சித் தலைவரா என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். அந்த அளவுக்கு எளிமையையே ஒரு இயல்பாகக் கொண்டவர் நம் அமைச்சர். தமிழ்கூறும் நல்லுலகின் தளநாயகர். எடுத்ததை முடிப்பவர் முடித்ததை எடுப்பவர். எதிரிக்கு அஞ்சாதவர்... ஏனெனில் எதிரியே இல்லாதவர். இவர் நமக்கு அமைச்சராகக் கிடைத்ததற்கு நாம் அருந்தவம்..."  ஆட்சித் தலைவர் கோபத்தோடு அவரைப் பார்த்தார். ஆனால் பப்ளிசிடி திரிசங்கு விடவில்லை. ஆட்சித் தலைவரையும். அமைச்சரையும் மாறி மாறிப் புகழ்ந்தார். இடையிடையே, ஐந்தாண்டு திட்டங்களுக்குள்ளும் போனார், போனார், போய்க் கொண்டே இருந்தார்.  எப்படியோ அரை மணி நேரம் ஆகிவிட்டது. அப்போது லேசாக இருமிய திரிசங்குவை, அமைச்சர் கனிவுடன் பார்த்துக் கொண்டே "முதலில் உடல் நலத்தைப் பாருங்க. பேசிப் பேசியே உடம்பையும் கெடுத்துக்கிட்டிங்க. வெத்துமாஞ்சாவடில நீங்க பேசக் கூடாது. இது என்னோட அன்புக் கட்டளை. அங்கேயும் பேசி உடல் நலத்தைக் கெடுத்துக்கக் கூடாது. ஒங்களுக்கு ஒண்ணுன்னா என் மனசு கேக்காது" என்றார்.  "மிஸ்டர் திரிசங்கு நீங்க இங்கேயே இருந்து இப்போ நடந்த விழாவுக்கு நியூஸ் எழுதுங்க. நான் உங்களை வந்து பிக்கப் பண்ணிக்கிறேன். வண்டிய எடுய்யா..." என்றார் கலெக்டர்.  தனித்து விடப்பட்ட பப்ளிசிட்டி ஆபீசருக்கு, ஆணையாளர் நெகிழ்ந்த குரலில் நன்றி சொன்னார்.  "நீங்க மட்டும் நான் சொன்னது மாதிரி அரை மணி நேரம் இழுத்துப் பிடிச்சுப் பேசலான்னா நான் அரோகரா தான்... கடைசி நிமிஷத்துல வெத்துமாஞ்சாவடில மெஷின்ல கோளாறு ஏற்பட்டிருக்கு. இன்னொரு இடத்துல மார்ச்சுக்குள்ள வேலையை முடிக்கணுங்கற அவசரத்துல இந்த வேலையை அரைகுறையா போட்டுட்டு என்ஜினியருங்க ஓடிப் போயிட்டாங்க. அரை மணி நேரத்துக்கு முன்னால அமைச்சர் போயிருந்தால் அங்கே தண்ணீர் வந்திருக்காது. நல்லவேளை, நீங்க பேசிக்கிட்டிருக்கிற சமயத்துல எப்படியோ ஒரு மெக்கானிக்கைப் பிடிச்சு ரிப்பேர் பண்ணிட்டாங்க அமைச்சர் அந்த ஊர்ல இருக்கற வரைக்கும் மெஷின் வேலை செய்யும். ரொம்ப நன்றி! உங்க உதவியை நிச்சயம் மறக்க மாட்டேன். அடேயப்பா அர்த்தம் இல்லாமலே அரை மணி நேரம் பேசிட்டிங்களே... அது எப்படி ஸார் முடியுது? நீங்க உண்மையிலேயே நல்ல பேச்சாளர்தான்."  ஆணையாளர் திருப்தியுடன் சிரித்து விட்டு, தயாராக இருந்த ஜீப்பில் ஏறி, கலெக்டர் காருக்குக் கட்டியங்கூறுவது போல் பறந்தார்.  பப்ளிசிட்டி திரிசங்கு 'இருப்பதா, போவதா என்று தெரியாமல், ஒரடி முன்னாலும், இரண்டடி பின்னாலுமாக நடமாடிக் கொண்டிருந்தார்.  10.  வாழ்க்கைப் பாக்கி      'என் மக்கா!... நான் இன்னும் முழுசா சாகல... டாக்டர் காந்தராசு சொல்லுறதக் நல்லா கேளுங்க'...  கனகம்மா பாட்டி, இப்படிச் சொல்லத்தான் நினைத்தாள். ஆனாலும், அந்தக் கருத்து சொல்லாக வில்லை. சொல்லின் ஏவுகணையான நாக்கு எங்கே உள்ளது என்று கூட கண்டறிய முடியவில்லை. அபிநயமாய் சொல்வதற்கோ, காலோ கையோ தன்னோடு இருப்பது போன்ற உணர்வும் இல்லை. அதோடு அந்த டாக்டர் எங்கேயிருந்து சொல்லு கிறார் என்பதும் துல்லியமாகத் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால், அவளுக்கு தான் எங்கே இருக்கிறோம். எப்படி இருக்கிறோம் என்ற குழப்பம். கனவா. நனவா. உயிருலகமா... மரணலோகமா... வீடா... அல்லது காடா... என்று அடையாளப்படுத்த முடியாத மரண மயக்கம்... தற்காலிக தூக்கத்திற்கும் நிரந்தர துக்கத்திற்கும் இடைவேளையான இடைக்கால மரணம் அல்லது உயிர்ப்பு... தலையும் கழுத்துமே தானாகிப் போன பிரம்மை...  இந்தச் சமயத்தில், எங்கேயோ போய்விட்டு, அப்போதுதான் வந்த பாட்டியின் மகன் ராமய்யா விற்கு, டாக்டர் காந்தராஜ் மற்றவர்களிடம் சொன்னதையே மீண்டும் சொன்னார். டாக்டராக இருந்தாலும், மனித உடம்பை சதை இயந்திரமாய் பார்க்காத மனிதாபிமானி.  ”பாட்டிக்கு இருதயம் நின்னுபோய் இருக்கு. ஆனாலும் மூளை வேல செய்யுது. பொதுவா ஒருத்தருக்கு முதலாவது மூளை நின்னுடும். அதுக்கு பிறகுதான் இருதயம் அடங்கும். இதைத்தான் கிளினிக்கல் சாவு என்கிறோம். ஆனால், நூற்றில் ஒரு கேஸாக பாட்டிக்கு, இன்னும் மூளை வேல செய்யுது. அதற்கு முன்னாலேயே இருதயம்தான் நின்னுட்டு. அதனால உங்கம்மாவை... பக்கத்து டவுன் ஆஸ்பத்திரிக்கு இப்பவே எடுத்துட்டுப் போய், அங்கே டிரிப் ஏற்றி.... மூளைக்கு போசாக்குக் கொடுத்தபடியே, இருதயத்த இயக்கிப் பார்க்கலாம்... ஒரு வேளை, பாட்டி பிழைச்சுக்கலாம்... அப்படி பிழைக்க வைக்கிறது சிரமம்தான். ஆனா முடியாதுன்னு இல்ல... வீட்ல ஒரு பெரியவங்க இருக்கிறது நல்லது தானே... என்ன சொல்றீங்க? ணி  எம்மா.. என்னப் பெத்த அம்மாணி...  ராமய்யாவை, டாக்டர் புரிந்து கொண்டார். அம்மாவை வழியனுப்பி வைக்கத் தயாராகி விட்டார். இதுக்கு மேலயும் பேசினால், காசு கரக்கப் பார்ப்பதாக நினைப்பார். நல்லவருக்கு அடையாளம் சொல்லாமல் போகணும். போய்விட்டார்.  கனகம்மா பாட்டிக்கு மகனின் அழுகைச் சத்தம், பாசச் சத்தமாகக் கேட்டது. ஆறுதல் சொல்லுவது போல், அவள் மூளை துடித்தது. அழாதடா. என் ராசா.. ஆஸ்பத்திரிலே. அம்மா பிழைச்சுக்குவேண்டாணி...  பிழைக்க நினைத்த பாட்டிக்கு அவள் பிழையை உணர்த்துவது போல், கண்ணில் சிறு வலி. வாயில் ஒரு வாதை, எவரோ... வேறு யாரும் இல்லை. அவள் பெற்ற ராமய்யாவின் கைதான்... அதன் வாசனை அவளுக்குப் புரிகிறது. பஞ்சிலிருந்து இரும்பாவது வரைக்கும், அவள் கழுத்தைச் சுற்றி முத்தமிட்ட கைதான்... அதே கை, தனது விழிகளை இமைகளை இழுத்து நடைசாத்துவது போல் தோன்றியது. அந்த மகனுக்கு ஒத்தாசையாக இன்னோரு கரம். வளையல் குலுங்கும் கிண்கிணி சத்தத்தோடு 'எத்தே... எத்தே' என்று புலம்பியபடியே, வெள்ளையும், சொள்ளையுமாய் தெரிந்த பாட்டியின் வாயை மூடுகிறாள். மரணக் கோரத்தை அழகாக்கிப் பார்க்க நினைத்தார்களோ... அல்லது சின்னஞ்சிறு பிள்ளைகள், பாட்டியை பெண் பூச்சாண்டியாய், பார்த்தும் பயந்தும் படுக்கையில் விழக்கூடாது என்கிற முன்னெச் சரிக்கையோ...  கனகம்மாவிற்கு புரிந்து விட்டது... அவளுக்கு மயக்கலோகம் கலைந்து மரணலோகம் எதிரில் தோன்றியது. 'போக வைக்கும் முன்பே போயாக வேண்டும்'. ஆனாலும் இந்தப் பாழாப் போற மூளை கேட்கமாட்டேங்குதே. என்னையும் புலம்ப வைக்குதே. நான் பெத்த மக்கா! அம்பது வருசமா, ஒங்கள முதல்ல இடுப்புலயும் அப்புறம் மனசுலேயும் தூக்கிச் சுமக்கிற என்னை ஆஸ்பத்திரிக்குக் கூட கொண்டு போக வேண்டாம். இந்த பாவி மூளை, நான் பாத்தறியாத வெள்ளக் கட்டி வேல வெட்டிய நிறுத்தற வரைக்கும், ஒரு அரை நாழிகை பொறுக்கப்படாதா... ஒப்பாரியோட ஒப்பாரியா பிணத்த தூக்கிக் குளிப்பாட்டுங்கன்னு கூசாம சொல்லுறியளே. பயமா இருக்கே. சாவுக்கு பயப்படல மக்கா... என்னை உயிரோட எரிச்சிடுவி களோ என்கிற பயந்தான். கொஞ்ச பொறுங்க மக்கா... நான் போயிடுவேன்... உலகத்துலே இருக்கிறவங்க போனாத்தான் இல்லாதவங்க இருக்க முடியுமுன்னு எனக்கும் தெரியும் மக்கா'.  கனகம்மா பாட்டி, தனக்குள்ளே அப்படிப் பேசிப் பாரத்தளே தவிர அவளை, ஏதோ ஒன்று கவ்வியது. பயத்தின் பயங்கர உணர்வான பீதியா... திகிலா... வெறுமையா... பிரம்மையா... அல்லது இவை அனைத்தும் ஒன்றான பெரும்பேர் உணர்வா... ஒரு பிசாசின் புலம்பலா... அவளுக்கே இப்போது புரியவில்லை. ஆனாலும் நெற்றிக் கூட்டின் பின் பக்கம் வெண்பனி போல் அப்பிக் கிடந்த அவள் முன் மூளையில் பழைய பதிவுகள் இப்போது துடித்தன. அம்பது அம்பதைந்து ஆண்டுகளுக்கு முன்னால், முகமறியாத மனிதனுக்கு கழுத்தை நீட்டி, இடமறியாத ஊருக்குப் பெற்றோரைப் பிரிந்து, வில் வண்டியில் ஏறும் போது, எப்படி பேதலித்தாளோ, அப்படிப் பட்ட பேதலிப்பு. கூடவே, ஏற்பட்டதே ஒரு இனிய எதிர்பார்ப்பு... அதேபோன்ற எதிர்ப்பார்ப்பு இப்போதும் அவளது உணர்வுகளில் ஊடாடியது. அது வாழ்க்கை துவக்கிய வாழ்வு வண்டி. இதுவோ அதை முடித்துவிட்டு அழைத்து செல்லும் மரண வண்டி. இது எப்படி இருக்குமோ... யாரெல்லாம் இருப்பார்களோ... தனியா போகணுமோ... தவியா தவிக்கணுமோ... பூலோகத்த பிரிஞ்ச வெறுமையில் குதியா குதிக்கணுமோ... அம்மாவ பார்க்கலாமா... செத்து மடிஞ்சி சிவலோகம் போன மகள பாக்கலாமா... அவளோட மவராசன் கிடைப்பாரா... இல்லேன்னா கடவுள்கிட்டத் தான் போவோமா... அவர் எப்படி இருப்பார்... முருகனா... அம்மனா... அல்லாவா... ஏசுவா... இல்ல சூன்யமா... சொர்க்கமா... அய்யயோ நரகமா... பாக்கலாம்... கொஞ்ச நேரத்துல முடிச்சு அவிழும்.  மூளைக்குள்ளே முடிச்சை அவிழ்க்கப் போன பாட்டிக்கு அவள் மகன் ராமய்யா போட்ட கூப்பாடு, கிணத்துச் சத்தமாய் கேட்டாலும், அவளும் அதில் குடியிருக்கும் தவளையானாள்.  'என்னை பெத்த அம்மா.. என்னை அநாதையா விட்டுட்டு போயிட்டியே... எம்மோ'....  ராமய்யாவை, நான்கு பேர் செல்லமாக அதட்டுவது கேட்டது. மகனின் தலை, தனது தலையில் மோதுவதை பாட்டி, வாதையாக உணர்ந்தாள். அப்போதுதான் தனக்கு தலை இருப்பது தெரிந்தது. அப்படித் தெரியத் தெரிய மூளையில் ஏதோ ஒன்று புதிதாய் பதிவு செய்தது. மானசீகமாகப் பேசியது.  'அழாதேடா... என் ராசா... நீ அநாதை இல்லடா... என்ஜினியர் மகனும், டாக்டர் மருமகனும்... சின்னச்சிறு பேரக் குட்டிகளுமாய்... சொத்தோடும் பத்தோடும் இருக்கிற நீ அநாதை இல்லைடா... அப்படிப் பார்த்தா, இந்த அம்மாதாண்ட் நாதியத்த மூளி... ஆனா ஒண்ணுடா... டாக்டர் காந்தராசு சொன்னது மாதிரி... ஆஸ்பத்திரிக்கு என்னை எடுத்துட்டுப் போயிருக்கலாம்... சாவுக்குப் பயந்து இப்படி பேசலப்பா... நான் பெத்த மவன், காசு பணத்த பத்தி கவலப்படாம, இந்த அம்மாவ.... கடைசி வரைக்கும் பிழைக்க வைக்கப் பார்த்தான்னு திருப்தியோட செத்துருப்பேன். சிரிச்சிக்கிட்டே நிறைவா போயிருப்பேன். அழாதேடா. வாய் வலிக்கும்'....  ராமய்யாவின் அழுகை முடிந்தபோது, இன்னொரு அழுகை தனித்து ஒலித்தது. பாட்டிக்கும் பட்டும் படாமலும் கேட்டது. மருமகள் உமாவின் அழுகை உரைநடையோடு கூடிய ஒப்பாரி அழுகை....  வந்துட்டிங்களா அப்பா! இதோ பாருங்க அப்பா! நான் மாமியாருன்னு மருந்துக்கும் நினைக்காமல்... தாய்க்கும் தாயா நினைச்ச என் தெய்வம். செத்துக்கிடக்கத பாருங்கப்பா .  வாய் மட்டும் செயல்பட்டு இருந்தால், பாட்டி வெளிப்படையாகவே சிரித்திருப்பாள் அப்பன்கரான் வந்துருக்கணும்... அவனோட சாதி சனமும் வந்துருக்கும்... அவங்க மெச்சறதுக்காக இப்படி அழுகிறாள்.... அடிக்கிறாள்... 'எம்மா எம்மருமவளே... இப்படி மாரடைச்சி அழதம்மா. அப்புறம் அந்தக் கிழட்டு முண்டைக்கு அடிச்சழுது தொண்டக் கட்டிட்டு... தலை வலிக்குன்னு' திட்டப்போற... நீ மருந்துக்கும் என்ன மாமியாரா நினைக்கலேங்கறது நிசந்தாம்மா... இல்லாட்டா... மருந்து கொடுக்க வந்த எம்பேத்தி ஆடலரசிய மாட்டுத் தொழுவத்துக்குத் தொரத்தி இருக்கமாட்டே... ஆமா.. எம்பேத்தி ஆடலரசியோட சத்தத்தைத் காணுமே... ஒரு வேளை நாவிதற்குப் பதிலா அவளையே துட்டி சொல்ல அனுப்பி இருப்பாகளோ.. மருமகக்காரி அப்படிப் பட்டவதானே... எம்மா!... எம்மருமகளே! உனக்கும் ஒரு மருமகள் வரத்தான் செய்வாள்... அய்யோ... கடவுளே... என்னை சாபம் போட வைக்காதே... அவளும் நல்லா இருக்கட்டும்... ஆனாலும் எம்மகன் என்ன மாதிரி முந்திக்கிட்டா... அவள் 'என்னை பாடாபடுத்தின மாதிரி அவனையும் படுத்தப்படாது... கடவுளே... கடவுளே... இந்த வரத்தை கொடு தெய்வமே... நான் உங்கிட்ட சீக்கிரமா வரணும்...'  திடீரென்று ஒருமித்த ஒப்பாரி: அந்த அறையை பூகம்பமாகியது. பாட்டி சரியாகத் தான் யூகித்தாள். துட்டிஷ கேக்க ஊர் சனம் வந்துருக்கு... தாழ்வாரம் வரைக்கும், கிண்டலும் கேலியுமாய் சிரிச்சிப் பேசிக்கிட்டு வந்த ஊர்க்காளிக, உள்ளே வந்ததும் மாரடிச்சி அழுகிறாளுக... அதுவும் ஒருத்திய ஒருத்தி கண்ணடிச்சிக்கிட்டும். நகை நட்ட பார்த்துக்கிட்டும் அழுவாளுங்க... எத்தனை எழவு வீட்ட பாத்துருக்கேன்.. ஆனாலும் இங்க எழவு விழாமலே எழவு நடக்குது.. ஒருவேளை நான் செத்துப் போயிருப்பேனோ...  கனகம்மா பாட்டி குழம்பிப் போன போது, ஒரு பெரிய அதட்டல் அந்த ஒப்பாளிக் கூத்தும், உடனடியாக அடங்கியது. அப்படி அடங்கியதும் ஒரு உரையாடல்.  ராமய்யா... ஒன் பெரிய தங்கச்சிய காணுமே ...  'அவள் கதை உமக்குத் தெரியாதா? சின்னத் தங்கச்சி கல்யாணத்துக்கு இவளுக்கு போட்டத விட பத்து பவுன் அதிகமா போட்டேன். இவள் குதியா குதிச்சாள். தங்கச்சிக்கு போட்ட அதிக நகை தனக்கும் போடணுமுன்னு கத்தினாள்... நான், இந்தக் காலத்து விலைவாசிய கணக்குல எடுக்கச் சொன்னேன். உடனே கணக்கு தீர்த்துட்டாள்... இனிமே இந்த வீட்ல கால் வைக்க போறதில்லைன்னு சபதம் போட்டாள். அம்மா, அவள் நினைவா கிடக்கிறதை ஒரு ஆள் மூலம் சொல்லி அனுப்பினேன்... அப்படியும் வரல...  உரையாடலில் ஒரு இடைவேளை... ஒப்பாரியை விட்டுவிட்டு உற்றுக் கேட்டவர்களின் கசாமுசா சத்தங்கள்... சத்திரஞ்சாவடி முணுமுணுப்பு... கனகம்மா பாட்டியும், மகளை மானசீகமாக மூளைத்திரையில் ஏற்றி, நியாயம் கேட்டாள். -  'நான் பெத்தமகளே... என்னை விட்டுநீபிரியப்படாதுன்னுஉள்ளுர்லேயே உன்னைப் பெத்த இந்த அம்மாவோட எடை பத்து பவுன் எடைய விட கொறைஞ்சு போயிடுச்சேட... இதுக்கு மேலயும் நான் அரைகுறையாய் இருக்கணுமா?.. இன்னும் இந்தப்பேய்ப்பயமூளை என்னைவிடமாட்பேங்குதே'..  ஒப்பாரி பாடல்கள், கிண்டலும் கேலியுமான வசனங்களுடன் உச்சத்திற்கு போன போது மீண்டும் ஒரு அதட்டல், ஒப்பாரிக்காரிகள் மீண்டும் கதை கேட்க, வாய்களை மூடி, கண்களைச் சிமிட்டி, காதுகளில் கவனத்தை ஒன்றித்தபோது -  'ராமய்யா.. ஒன் தம்பிமாருக்கு சேதி சொல்லிட்டியா?'...  'மெட்ராஸ்காரன், நாளைக்குத்தான் வர முடியுமாம்.. பிரேதத்த பாதுகாக்க முடியாட்டால், அடக்கம் செய்யச் சொல்லிட்டான். காரியத்துல கலந்துக்குவனாம். இந்தச் சந்தர்ப்பத்தில, பாகப் பிரிவினையும் வச்சுக்கணுமாம். பதினைஞ்சு நாளைக்கு முன்னேயே சேதி சொல்லியும், பெத்த தாயை எட்டிப் பாராத பயலுக்கு சொத்து வேணுமாம் சொத்து கொடுத்துடுவனா?'  'அப்புறம் அமெரிக்காக்காரன்?'  'பெரிய தம்பியா. பாவம் இப்பதான், அமெரிக்காவுல புதுக் கம்பெனி ஆரம்பிச்சுருக்கானாம். அப்படி இருக்கயில எப்படி வரமுடியும்? ஆனாலும், போன வாரமே சொல்லிட்டான். எவ்வளவு டாலர் வேணுமுன்னாலும் அனுப்புவனாம். அம்மாவோட சமாதிய கோயில் மாதிரி கட்டணுமாம். அடுத்த வருசம் மகளுக்கு மாப்பிள்ளைப் பார்க்க வரும்போது, அம்மா சமாதியில பூசை நடத்துவனாம்.. அடேய் கார்த்தி. அமெரிக்க சித்தாப்பாவுக்கு, பாட்டி இறந்த செய்தியச் சொல்லி கல்லறை கோயில் கட்ட குறைஞ்சது மூவாயிரம் டாலர் ஆகுமுன்னு டெலிபோன் போடு'...  கனகம்மா. தனது மூளையை, ஆட்டு மூளையைப் போல் அரிவாள் மணையில் மானசீகமாக அறுத்தாள். பாட்டி புலம்பினாளோ.. இல்லை மூளை புலம்பியதோ...  'நான் பெத்த மக்கா. குடிசையாய் இருந்த இந்த வீட்டை கோபுரமா ஆக்கின எனக்கு கல்லறை தேவை தாண்டா... உங்கள பெத்த வயித்த. அது எங்கே இருக்கோ. தேடிப் பிடிச்சி ரெண்டாக் கீறி அதுல கல்லறை கட்டுங்கடா... அவசர ஆபத்துக்கு சொந்தப் பந்தத்தை வரவழைக்கத்தான், டெலிபோன் இருக்கிறதா நெனச்சேன்... இப்பத்தான் புரியது மக்கா. தாய் பிள்ள உறவும் டெலிபோன் சிநேகிதமுன்னு'.  திடீரென்று ஒரு கூக்குரல். அது முடியும் முன்பே, ராமய்யாவின் அதட்டல். அவர் மனைவியின் பிளிறல்.  'பாட்டிம்மா... நீ இல்லாம நான் எப்படி இருப்பேன் பாட்டிம்மா?  'மாட்டுக்கு வைக்கோல் போடாம. இங்க வந்து பிலாக்கணமா பாடுற? மூதேவி... வேணுமுன்னா உன் பாட்டிகூட போறியா?'  'தாயில்லாப் பொண்ணுப்பா... இப்படியா தலையில குட்டுறது?'  'ஓங்களுக்கு என்ன தெரியும் மாமா? இந்தக் கேணச்சி எப்போ இந்த வீட்டுக்குள்ள காலடி வச்சாளோ அப்பவே இவுக நாய் படாத பாடுதான்.'  சலனத்தைக குறைத்துக் குறைத்து, சன்னஞ் சன்னமாய், அடக்கமாகிக் கொண்டிருந்த கனகம்மாவின் மூளையில் பழைய நிகழ்வுகளின் பதிவுகள் முட்டின; மோதின... மனிதக் காட்சிகளாய் படமெடுத்தன.  பாட்டியின் தலைமகள் - முதலிரவு போல் மறக்க முடியாத முதல்மகள் சொர்ணத்தை, வெளியூரில் ஒரு ரெவின்யூ இன்ஸ்பெக்டருக்கு, சீரோடும் சிறப்போடும் கட்டிக் கொடுத்தாள். அந்த மகளுக்கு, நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மலடிப் பட்டத்தை மறுக்கப் பிறந்தவள் இந்த ஆடலரசி. அய்ந்து வயதிலேயே, பச்சை அரைப்பவாடை, வெள்ளைச் சட்டையுமாய் இங்கிலீஸ் பள்ளிக் கூடத்துக்குப் போனவள். ஏறும் போதும் வேனு.. இறங்கும் போதும் வேனு.. குவியாமலும், கவியாமலும், நீளாமலும், சுருங்காமலும் உள்ள அவள் முகத்தில், கண்னை மட்டும் பார்த்து முடிக்க கால்யுகமாகும்; மூக்கைப் பார்த்து முடிக்க முழு யுகமாகும். அப்பேர்ப்பட்ட நளினம். ஆனாலும், இவளுக்கு பன்னிரெண்டு வயசு வந்த போது, அப்பன்காரன், லஞ்சத்துல மாட்டி, ஜெயிலுக்கு போயிட்டான். அவமானம் தாங்காமல் சொர்ணமும், துக்குப் போட்டு தன்னைத் தானே கொன்னுக்கிட்டாள். தாய் மாமனே அடைக்கலமுன்னு, இந்தச் சின்னச் சிட்டு, இங்க வந்தது. ஆனாலும் இவளை மாட்டுத் தொழுவத்துலேயே மாடாய் போட்டுட்டாக, தினம் ஒரு குட்டு... மாதம் ஒரு சூடு... இவளும் பாட்டியும், ஒருத்தருக்கு ஒருத்தர் முட்டுக் கொடுத்தார்கள். இரவில் படுக்கையில் பாட்டியை சிக்கனெப் பிடித்துக் கொள்வாள். பாட்டிம்மா! என்று ஒசையிட்டபடியே, தூக்கம் கலைப்பவள். இன்றைக்கோ நாளைக்கோ பெரிய வளாய் ஆகப்போகிற மதர்ப்பு... அதற்காகவே மகனும் மருகளும் காத்திருக்கிறார்கள். மருமகளின் புத்தி பிசகிய மாமா மகனுக்கு, இவளை கொடுக்க போவதாக ஒருநாள் பேச்சு அடிபட்டது. பாட்டியின் காதுபடவே பேசிக் கொண்டார்கள். உடனே காமாட்சியான பாட்டி, காளியானாள். 'உனக்கும் பெண் இருக்குடா என்று அதட்டினாள். என் உயிர் இருக்கிறவரைக்கும். இப்படிப்பட்ட பொருந்தாக் கல்யாணம் நடக்காதுடா...' என்று சபதம் போட்டாள். 'இப்போ இந்தச் சின்னச்சிறுக்கி, என்ன ஆவாளோ? எப்படி போவாளா? கடவுளே. கடவுளே. கண்ணில்லாத கடவுளே...'  கனகம்மா பாட்டியின் மூளை, பழைய பதிவுகளை புதுப்பித்துக் கொண்டிருந்தபோது -  'பாட்டிம்மா என்னத் தனியா விட்டுட்டு போகாதே. பாட்டிம்மா. என்னையும் கூட்டிட்டுப் போ. நான் உயிரோடு இருக்க மாட்டேன்'.  முதல் தடவையாக, தாய் மாமனின் கட்டளையை மீறி, மாட்டுத் தொழுவத்திற்குப் போகாமல், நின்ற இடத்திலேயே நின்றபடி பீறிட்ட ஆடலரசியின் புலம்பல், பாட்டியின் மூளையில் ஒரு புதிய பதிவை ஏற்படுத்தியது. கூடவே வெளியே இழவுச் சங்கின் ஓங்காரம். உள்ளே ஒப்பாரியின் உச்சம். இந்த இரண்டும் ஒன்றை ஒன்று கூட்டிக் கொண்டும், குறைத்துக் கொண்டும், இருந்த போது, 'சீக்கிரமா குளிப்பாட்டுங்க' என்ற ஆணைகள்... மீண்டும் ஆடலரசியின் ஒலம். 'பாட்டிம்மா என்னை கூட்டிப் போ பாட்டிம்மா.. இல்லாட்டா திரும்ப வந்துடு பாட்டிம்மா’...  கனகம்மா பாட்டியின் மூளை உக்கிரமானது, உஷ்ணமானது. பின்னர் ஒளியானது. வாழ்ந்தாக வேண்டும் என்ற வைராக்கியம், அவள் உடல் முழுக்க எண்ண அலைகளை எழுப்பின. வாழ்வனுக்கள் ஒன்றாய் திரண்டு, உயிர்த்திரளானது. ஈஸ்வரன், எமனை உதைப்பது போன்ற ஒரு காட்சி, அவள் உச்சிமுனை கபாலத்தில் தோன்றியது. உடனே தலைசிம்மாசினத்தில் உள்ள முன், பின், பக்கவாட்டு மூளைப்பகுதிகள் அத்தனையும் ஒன்று சேர்ந்து, தங்கள் அதிகாரத்தை, உடல்தேசத்தின் மீது நிலைநாட்டிக் கொண்டிருந்தபோது -  கனகம்மா பாட்டியின் கண்கள். இமைச்சிறையில் இருந்து விடுதலை பெற்று சுழன்றன. வலது கால் சிறிது மேல் நோக்கி எம்பியது. இடது கால் பாட்டியை எழுப்பும் முயற்சியாக கட்டில் சத்தத்தில் அழுந்தப் பதிந்தது. இரண்டு கைகளும் பக்கவாட்டுச் சட்டங்களை கல்விக்கொண்டன.    11.   வெள்ளித் திரையும் விதித் திரையும்        அந்த ரயில் வண்டியின் குளிர்சாதனப் பெட்டியின் வாசலில், அக்னிநாத், உடலைக் காட்டாமல், தலையை மட்டுந்தான் காட்டியிருப்பான். அதற்குள், கூட்டம் அலை அலையாய் மோதியது. ரயில் இரைச்சலை தவிடுபொடியாக்கும் மனித இரைச்சல், கோஷக் கூச்சல்கள். துங்கி எழுந்ததும் வெளிப்படுமே மிருகச் சத்தங்கள் - அப்படிப்பட்ட பெருஞ் சத்தம். அந்த மாவட்டத் தலைநகரில் சந்து பொந்துகளையும் சாக்கடை மூடிகளையும்கூட விட்டுவைக்காமல், ஒட்டப்பட்ட கட்டப்பட்ட போஸ்டர்களில் காணப்பட்ட  நாடு போற்றும் நாயகனே! நாளைய முதலமைச்சரே! இன்றைய இளவரசே! கனவின் நனவே! நினவின் கனவே! முத்தமிழின் முக்காலமே! முக்காலத்தின் முத்தமிழே! என்பன போன்ற தெருவாசகங்கள், இப்போது சொல்லிழந்து, பொருளிழந்து, அத்தனைபேர் வாயிலும் கூச்சல்களாய் வெளிப்பட்டன.  நடிப்புச் சக்கரவர்த்தி அக்னிநாத்தை வரவேற்பதற்காக கூட்ட முகப்பில் நின்ற மாநில அக்னிநாத் நற்பணி மன்ற தலைவர் அக்னிதாசன் எம்.ஏ. பில், துணைத் தலைவர்களான அக்னி அடியான் எம்.காம், டாக்டர் அக்னிராஜன், அக்னிதுரை, மாவட்டத் தலைவரான பாண்டியன் அக்னி பி.ஏ. பி.இடி., பொதுச் செயலாளர் மாரிமுத்து அக்னி பி.எஸ்.சி., ஆகியோர், அக்னியைப் பார்த்து ஓடியபோது அவர்கள் கூட்டிவந்த கூட்டமே, அவர்களை ஒரங்கட்டிவிட்டு, பாய்ந்தது. அதற்குள் முழு உடம்பையும் காட்டிய அக்னிநாத்தை, அலாக்காகத் துர்க்கி தலையில்போட்டு கூத்தாடியது. அவன் நடித்துப் பாடிய 'அடே பைக்கா... படே சுக்கா' என்ற பாடலை ஆடி ஆடி இசைத்தது.  அக்னிநாத், கூட்டத்தில் மிதந்தான். கைவேறு கால்வேறாகவும், தலை தனியாய்க் கிடப்பது போலவும் காணப்பட்டான். அந்தக் கும்பலில் அடிக்கடி மூழ்கியும் போனான். யார் யாரோ கிள்ளுகிறார்கள். முடியைப் பிடித்து இழுக்கிறார்கள். கன்னங்களை வருடுகிறார்கள். அவை அத்தனையும் உபாதையின் உச்சம். ஆனாலும் வழக்கமான புன்னகையைப் படரவிட்டபடியே சிக்கிக் கொண்டிருந்த கைகளை மேலே தூக்கி, அங்குமிங்குமாய் ஆட்டினான். இதற்குள் 'இயக்குநர் பிரமிப்பு' ஏகன், போலீசாரை கூட்டிவந்தான். அமைச்சருக்காக பாராவாய் வந்தவர்கள் ஆரம்பத்தில் யோசித்தார்கள். இவன், நீலகிரி மாவட்டத்தில் கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு, பாதுகாப்பு கொடுக்கவில்லை என்ற காரணத்தில் ஒரு போலீஸ் டி.எஸ்.பி.யை, புரட்சித் தலைவர் சஸ்பெண்ட் செய்ததை, ஏகன் அவர்களுக்கு நினைவுப்படுத்தினான். உடனே அவர்கள் அவனுக்கு முன்னாலேயே ஓடினார்கள். ரசிகப் பெருமக்களை லத்திக் கம்புகளால் நெம்பிநெம்பி, அக்னிநாத்தை வெளிப்படுத்தி, அவனைச் சுற்றி பாதுகாப்பு வளையமாய் நின்றுகொண்டார்கள். அப்படியும் பாய்ந்து வந்த ரசிகர்களை நோக்கி, லத்திக் கம்புகளை ஆட்டினார்கள். ரசிகப் பெருமக்கள் ஓரளவு அமைதிப்பட்டு, அக்னிநாத்தை அண்ணாந்து பார்த்தார்கள். அவனது திரைப்படப் பிம்பங்களில் முக்கால்வாசியே அவன் காணப்பட்டதில், திரைப்பட வித்தை தெரியாத அவர்களுக்கு சிறிது ஏமாற்றந்தான். ஆனாலும் அவன்மீது பதியம் போட்ட கண்களை எடுக்கவில்லை. சராசரிக்கும் அதிகமான உயரம் களையான தோற்றமோ இல்லையோ கலையான தோற்றம். தொப்புள் வரை பட்டன்போடாத சட்டை.. நிர்வாண மார்பு... அதற்கு கோவணம்போலான டாலர் செயின்.... காதுகளில் இருந்து தொங்கிய தங்கச் செயினின் இரு முனைகளையும் இணைத்து மார்பில் கவிழ்ந்த மூக்குக் கண்ணாடி போர்வீரர்கள் அணியும் இழைதழை பேண்ட். அவன் உருவங்களையே பல்வேறு கோணங்களில் டிசைன் செய்த பொம்மைச் சொக்கா...  அக்னிநாத், போலீஸ் பாதுகாப்போடு ரசிகக் கூச்சலோடு நடந்தான். 'பொல்லாதப் பயலுக... இவனுகள நெருங்க விடாதிங்க...' என்று இன்ஸ்பெக்டரிடம் கீழே குனிந்து, அவர் காதுகளில் கிசுகிசுத்துவிட்டு, மீண்டும் தலையை நிமிர்த்தி, ரசிகர்களைப் பார்த்து, தன்பக்கம் வரும்படி கையை ஆட்டினான். இதனால் சில ரசிகர்களை லத்தி, குத்தியது. அவர்களது அம்மாக்களும் அக்காக்களும் வம்புக்கு இழுக்கப்பட்டார்கள். அக்னிநாத், அந்த லத்தித்தன்மான வார்த்தைகள், தன் காதில் விழாததுபோல் பராக்குப் பார்த்தபடியே நடந்தான். அந்த ரயில் நிலையத்தின் சிரங்கு பிடித்த சுவர்களில் ஒட்டப்பட்ட தனது பல்வேறு உருவப்படங்களை ரசித்துப் பார்த்தான். கராத்தே அக்னிநாத்... சிலம்பன் அக்னிநாத்... படுக்கையறைக் கில்லாடி அக்னிநாத்... துப்பாக்கி இன்ஸ்பெக்டர் அக்னிநாத்... முரட்டுக் கொள்ளைக்காரன் அக்னிநாத்...  இந்த நிலையத்திற்கு அப்பால், இருபதடி உயரத்திற்குமேல், ஒரு கழுதையின் உயரத்திற்கும் ஒரு பன்றியின் அகலத்திற்குமான 'கட்-அவுட்டை' ரசித்துப் பார்த்தபடியே நடந்தான். ஆனாலும், ஒரு வித்தியாசமான போஸ்டர், அவன் கண்ணை உறுத்தியது. 'எதிர்கால ஆளுநரே... எங்கள் அக்னிநாத்தே' என்ற வாசகத்தோடு, தலையில் கிரீடமும், கையில் செங்கோலுமாய் தோன்றிய தனது உருவத்தைப் பார்த்து, அவன் மூட்-அவுட்ஆகி அப்படியே நின்றான். அந்தச் சமயம் பார்த்து ஒரு துடுக்கான இளைஞர், சில மினுக்கமான மனிதர்களோடு வந்து, லத்திக் கம்பு வளையத்தின் ஒரு பக்கத்தை அலட்சியமாகத் தள்ளியபடியே, உள்ளே போனார். அக்னிநாத்தின் நீட்டப்படாத கைகளை இழுத்துப்பிடித்து ஒரு குலுக்கு குலுக்கியபடியே இப்படிப் பேசினார்.  "நான்... மேக நாதன் ஐ.ஏ.எஸ்.... இந்த மாவட்ட ஆட்சித் தலைவர். மாண்புமிகு அமைச்சர் அற்புதன் அவர்கள், உங்களைப் பார்க்க விரும்புகிறார். அதோ முதலாம் வகுப்புப் பயணிகள் விடுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கிறார். இந்த மாவட்டத்தில் நடக்கிற ஜாதிக் கலவரங்களைக் கண்டறிந்து, இப்போது விளக்கிக் கொண்டிருக்கிறார். இத்தனை நெருக்கடியிலும் உங்களைக் காண விரும்புகிறார். கையோடு கூட்டி வரச்சொன்னார்... போகலாமா?..."  அக்னிநாத் வழக்கம்போல், இயக்குநர் பிரமிப்பு ஏகனை. வளைத்துப் பார்த்தான். அவன் பார்வைகளை அர்த்தப் படுத்துவதற்காகவே பிறவி எடுத்ததுபோல், அவன் முகத்தையேப் பார்த்த இயக்குநர் பிரமிப்பு, ஆட்சித் தலைவருக்கு விட்டான் ஒரு விடு.....  "எங்க அண்ணன்தான், உங்க அமைச்சருக்குத் தேவை. உங்க அமைச்சர் எங்க அண்ணனுக்குத் தேவையில்லை... இன்னும் ஐந்து நிமிடம் டைம் கொடுக்கேன்... வேணுமின்னா ஓங்க அமைச்சர இங்க வந்து, அண்ணனப் பார்க்கச் சொல்லுங்க... என்னய்யா இது... நாட்டுல தராதரமே இல்லாமப் போயிட்டு..."  அக்னிநாத், ஆமோதிப்பாய், தலையாட்டியபோது, புலியாய் வந்த மாவட்ட ஆட்சித் தலைவர் இப்போது சூடுபட்ட பூனையாய், திரும்பிப் பாராமலே நடந்தார். அவரது பரிவார மனிதர்களும் ஆட்சித் தலைவர் திரும்பிப் பார்க்காததால், நேராகப் பார்த்தபடியே நடந்தார்கள்.  அக்னிநாத், அமைச்சரின் வருகைக்காகக் காத்திருப்பதுபோல், அங்குமிங்குமாய் பராக்குப் பார்த்தான். அந்தச் சமயம் பார்த்து ரயில் நிலையத்தில் ஒரு பூவரசு மரத்துக்கு அடியில், அக்னிநாத்தை எதிர்பார்த்து கும்பலாய் கூடி நின்ற கல்லூரி மாணவிகள், அவன் நின்றதைப் பார்த்ததும், தலைவிரி கோலமாக ஓடிவந்து கூட்டத்துள் கலந்தார்கள். மொட்டை மரமாய்த் தோன்றிய ஆடவர் கூட்டத்தில், பெண் பூக்களாய்ப் மலர்ந்தார்கள். தேர்வு நேரந்தான். அது வரும்... போகும். ஆனால், காதல் சிங்காரன் அக்னிநாத் அப்படி அல்லவே... எப்போதோ வருகிறவன். விட முடியுமா....? "சார் சார்... அக்னிசார்.... ஆட்டோகிராப் போடுங்கசார்... ப்ளீஸ் அக்னி.... போட்டுத்தான் போகணும் அக்னி... இல்லாட்டா நடிகை கம்பா, உங்கள 'காதலோ காதல்' படத்தில வழிமறிப்பு செய்ததுபோல வழிமறிப்புமாக்கும்..."  எதிர்கால அமைச்சருக்குரிய அத்தனைத் தகுதிகளையும் கொண்ட ஒருத்தி, உரக்கச் சொன்னதும் ஒரே சிரிப்பு.... ஒரே முட்டல்மோதல்... ஒவ்வொருத்தியின் கையிலும் ஒரு நோட்டுப் புத்தகம், தலைக்கு மேல் போய் பறவையாய் சிறகடித்தது.... விசிறியாய் விரிந்தது... அக்னிநாத்தும் சிரித்தபடியே கையெழுத்துப் போடப் போனான்... அந்தச் சமயத்தில் - கெடுமுடிவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்பாகவே ஒரு தடித்த மனிதர், தனது கைத்தடி மனிதர்களோடு ஓடிவந்தார். கரைவேட்டி.... கரைத்துண்டு... ஆங்காங்கே கரைகளும் கொண்ட முகம்.... கூட வர மறுத்த மாவட்ட ஆட்சித் தலைவரை, சென்னையில் அரசுத் தலைமைச் செயலகத்தில் ஒரு துருப் பிடித்த நாற்காலியில் துணைச் செயலாளராக அமர்த்திவிடுவது என்ற ஆவேசத்தோடு நெருப்பாய் வந்தவர், நீராய்ச் கொட்டினார்... அக்னிநாத்தை ஆரத் தழுவியபடியே ஆனந்தக் கூச்சலிட்டார்.  'என் பெயர் அற்புதன்.... அமைச்சராய் இருக்கேன்... ஒங்க எல்லாப் படங்களுமே எனக்கு அத்துபடி என் மனைவிக்கும் ஒங்கள ரொம்பப் பிடிக்கும்... இந்தாப்பா கேமரா... எங்க ரெண்டு பேரையும் சேர்த்து ஒரு படம் எடு... பி.ஆர்.ஓ! நானும் தானைத்தளபதி அக்னிநாத்தும் இருக்கிற படங்களை பத்திரிகைகளுக்கு அனுப்பிடு. ஒங்களப் பார்த்ததே என் கண்கள் செய்த பாக்கியம்!  அமைச்சரின் பேட்டிக்காக வந்திருந்த அத்தனை செய்தியாளர்களும், தொலைக்காட்சி நிபுணர்களும், நிபுணிக்ளும், அமைச்சரை விட்டுவிட்டு, அக்னிநாத்தை மொய்த்தார்கள். அவனோ, தன் காலடியில் கண்களைக் குவித்த அமைச்சர் அற்புதனை கட்டியணைத்து, பிற்கு நெஞ்சுக்கு நேராய் நிமிர்த்தி, ஒரு கையை மட்டும் தூக்கி ஆட்டிக்காட்டி அவரை ஆசீர்வதித்தான். அதுவரைக்கும் காத்திருந்த செய்தியாளர்கள் அடுக்கடுக்காகக் கேட்டார்கள்...  'அக்னிநாத்!... ஒங்க மாநில அக்னிநாத் நற்பணி மன்ற மகாநாட்டில், மன்றத்தை ஒரு அரசியல் கட்சியாய் அறிவிக்கப் போறீங்களாம்... இது உண்மையா?'  அக்னிநாத், அமைச்சரை ஒரு தள்ளு தள்ளிவிட்டு செய்தியாளர்களை நெருங்கி சிரித்தபடியே பதிலளித்தான்.  'மாநாடு மாலையில் துவங்குகிறது... பொறுத்திருந்து பாருங்கள்...  'அப்புறம் மிஸ்டர் அக்னி...! இந்தச் சாதிக்கலவரங்களப் பற்றி என்ன நினைக்கிறீங்க?...  'சாதி என்றவுடன், எனக்கு நினைவுக்கு வரும் வார்த்தை 'பெண்சாதி'தான். அந்த நினைப்போடதான் என் தாய்மாமா வீட்டுக்கு போய்கிட்டே இருக்கேன்.'  'மண் வாசனைய தூளாக்கிட்டிங்க அக்னி... இப்பவும் கிராமங்களுல மனைவிய 'பெண்சாதி'ன்னுதான் கூப்பிடுவாங்க. ஆமா அங்க என்ன விசேஷம்?'  'என் மாமா மகள் கயல்விழியை கட்டிக்கப் போறேன்...'  செய்தியாளர் கூட்டம் முண்டியடித்தது. பொக்காரான் அணுகுண்டு வெடிப்பு அறிவிப்பு பேட்டியில்கூட, அப்படி முண்டியடித்திருக்க மாட்டார்கள்... கேமராக்கள் பளிச்சிட்டன... தொலைக்காட்சி வீடியோக்கள் ஒளியிட்டன... மிக முக்கியமான நிகழ்ச்சி.... அதுவும் தலைப்புச் செய்தி... ஏனோதானோன்னு இருக்க முடியாது...  'வாழ்த்துக்கள் அக்னிசார்! இது காதல் திருமணமா?'  'நோ... நோ... எங்க மாமா பொண்ண, பத்து வயசுச் சிறுமியா பார்த்தது... அதுக்குப் பிறகு பத்து வருடமா பார்க்கவே இல்ல... என்னோட கிராமத்து வேர்கள் விட்டுடப்படாதுன்னும் என்னை சின்ன வயதில் ஆதரித்த தாய்மாமாவுக்கு நன்றிக்கடனாயும் கயல்விழியக் கட்டிக்கப்போறேன்.'  'தப்பா நினைக்கப்படாது. ஒங்களுக்கும் நடிகை கம்பாவுக்கும் நெருக்கமுன்னும், நீங்க அவங்கள கட்டிக்கப் போறதாயும் ஒரு கிசுகிசு அடிபட்டதே...'  'அந்தக் கிசுகிசுவக் கிளப்பிவிட்டதே பிரஸ்தான் நானும், கம்பாவும் நல்ல நண்பர்கள்... ஒரு ஆணும் பெண்ணும் படுக்கையைக்கூட அது இல்லாமலே பகிர முடியும்.'  'கொன்னுப்பிட்டிங்க அக்னி... பெண்ணியத்தை இந்த அளவுக்கு யாரும் பெருமைப்படுத்தி பேசல...'  'சார்... நாங்க அமாவாசை தொலைக்காட்சியோட டிம்... ஒங்க மேடத்த... அதான் கயல்விழிய நேர்காணல் செய்யணும்... நீங்கதான் ஏற்பாடு செய்யனும் சார்...'  'அதுக்கென்ன... வாங்கிக் கொடுக்கிறேன்... கரும்பு தின்ன கூலி கேட்பாளா என்ன...'  அக்னிநாத், சிரித்தபடியே நடந்தான். முண்டியடித்த செய்தியாளர்களிடமிருந்து தப்பிப்பதற்காக நடை மன்னன் ஆனான். அவன் வேகத்துக்கு ஈடு கொடுக்கமுடியாமல் 'இயக்குநர் பிரமிப்பு' ஏகனும், மன்ற நிர்வாகிகளும் நாலுகால் பாய்ச்சலில் ஓட வேண்டியதாயிற்று. விரட்டிவந்த கூட்டத்தை கையமர்த்தியபடியே, அக்னிநாத், தயாராக நிறுத்திவைக்கப்பட்ட ஒரு சொகுசுக் காரின் பின்னிருக்கையில் ஏறிக்கொள்ள, இயக்குநர் பிரமிப்பு முன்னிருக்கையில் ஏறிக்கொண்டான். மன்றத் தலைவர்கள் குறிப்பாக் அக்னிதாசன் எம்.ஏ. பி.எல், தனது தலையை மட்டும் சட்டென்று எடுக்காதிருந்தால், கார் கதவுக்குள் அது நசுங்கியிருக்கும்.  கருஞ் சிவப்பு வண்ணத்திலான அந்த சொகுசு கார், குட்டாம்பட்டிக்கு இட்டுச் செல்லும் கப்பிச் சாலையில் ஒடிக் கொண்டிருந்தது. இயக்குநர் பிரமிப்பு கேட்டான்.  'நீங்க மூட்அவுட் ஆனது மாதிரி தெரிஞ்சுதுண்ணே!'  பின்னே என்னடா... என்னை எதிர்கால முதலமைச்சரேன்னு போஸ்டர்ல போடாமல், ஆளுநரேன்னு போட்டா என்னடா அர்த்தம்? மன்றத் தலைவன மாற்றணுன்டா... வாங்குற காசுக்கு மோசம் பண்ணிட்டாண்டா... எச்சிக்கலப் பய....'  'யதார்த்தமா பேசுங்கண்ணே... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான் முதலமைச்சர்னு முடிவாயிட்டு... அதனாலதான், ஒங்கள ஆளுநரா நியமிச்சிருக்காங்க.. கவலப்படாதிங்கண்ணே... முதலமைச்சரையே பதவி நீக்கம் செய்யிற பதவிண்ணே... முதலமைச்சர் ரஜினிகாந்த்தான் ஒங்கள அனுசரிச்சுப் போகணும்...'  குட்டாம்பட்டியில், தாய்மாமா வீடு, ஊர் முனையிலேயே இருந்தது நல்லதாய்ப் போயிற்று. அந்த ஊர் தெருக்கள், இந்தக் காரைவிட குறுகலானவை. ஊர் முனையில் அதன் அத்தனை ஜனத்தொகையும், திரண்டு நிற்பதைப் பார்த்துவிட்டு, அக்னிநாத் குழப்பத்தோடு இறங்கினான்... தாய்மாமா முத்துலிங்கம், அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு விம்மினார்... வயிறு எக்கிய மனிதர். சதையை சட்டம் போட்டு வைத்திருப்பதுபோன்ற எலும்புக்கூடுகள்... அத்தைக்காரிதான் அவரது விம்மலுக்கு வர்ணனை கொடுத்தாள்.  'எப்பவும் சொல்லுக்குச் சொல்லு 'எங்க அக்கா மகன் முனுசாமி படியேறி வந்து நம்ம கயல்விழியப் பெண் கேப்பான்'னு ஒவ்வொரு நாளும் பேசுற மனுசன்.. நீ இப்படி ஆனதுல இந்த அத்தைக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா முனுசாமி!  அக்னிநாத்திற்குள் பதுங்கியிருந்த முனுசாமி திடுக்கிட்டான். ஆனாலும் இப்போது அசல் முனுசாமியாவே கேட்டான்.  'நான், கயல்விழியக் கட்டிக்கப்போறது ஒங்களுக்கு எப்படித் தெரியும்? ஒங்களுக்கு நேரில் இந்தச் செய்திய சந்தோஷ அதிர்ச்சியாத் தரணுமுன்னு நினைச்சேன்...'  அவன் கையில், ஒரு நோட்டைத் திணித்தபடியே ஒரு லோக்கல் விடலை விவரம் சொன்னான்.  'பெளர்ணமி தொலைக்காட்சி செய்தியில நீங்க கயல்விழிய கட்டிக்கப்போறதா ஒங்க படத்தோட செய்தி சொன்னாங்க...'  அக்னிநாத் திடுக்கிடவில்லையானாலும், அவனோடு வந்த அமாவாசைத் தொலைக்காட்சிக்காரன் திடுக்கிட்டான். அப்புறம் வருந்தினான்... பிறகு உறுதி பூண்டான். எஸ்.டி.டியில பேசி செய்தி சொல்லாதது தப்புதான். தாளிக்கப் போறாங்கதான். ஆனாலும் அக்னிநாத்தோட திருமண ஏற்பாடுகளையே ஒரு அரைமணி நேர புரோகிராமா ஆக்கிக்காட்டி அந்தப் பெளர்ணமி தொலைக்காட்சிப் பயல தேய்பிறை ஆக்கணும். சாதிக்கலவரத்த படம்பிடிக்க வந்தது நல்லதாப் போயிற்று...  அக்னிநாத், தாய்மாமா வீட்டிற்குள் பரிசக்காரனாய் நுழைவதால், வலது காலை தூக்கி படிதாண்டினான். இயக்குநர் பிரமிப்பும், உள்ளுர் பிரமுகர்களும் இரண்டு கால்களையும் துக்கிப் போட்டு உள்ளே போனார்கள். அவரைக்கொடியும், பாகற்காய் கொடியும் பந்தலிட்ட முற்றத்தில் ஏற்பாடாய்ப் போடப்பட்ட நாற்காலிகளில் எல்லோரும் உட்கார்ந்தார்கள். தயாராய் வைக்கப்பட்ட மோர் டம்ளர்களை தூக்கிக் கொண்டு சிறுவர் சிறுமியர் ஓடிவந்தனர். அக்னிநாத்தை பார்த்ததும் ஒரு சிறுமி 'ஹாய் அக்னி' என்று ஒரு குதி குதித்தாள். அவன் வாயில் மோர் டம்ளரை பொருத்தினாள். ஆங்கிலப் பள்ளியில் படிப்பவள். இப்போதோ நாளைக்கோ என்று இருப்பவள்.  அக்னிநாத். மீண்டும் இயக்குநர் பிரமிப்பைப் பொருள்பட பார்த்தான். மோவாயை நிமிட்டி காட்டினான். உடனே, அவன் இரண்டு பார்சல்களை, அவனது தாய்மாமாவிடம் நீட்டினான். அவன் நீட்ட நீட்ட அக்னிநாத் பின்னணிக் குரல் கொடுத்தான்.  'இந்தப் பெரிய பார்சலுல முப்பதாயிரம் ரூபாய்க்கு வாங்கின பரிசப் புடவை இருக்குது... சின்ன பார்சலுல பத்து லட்சத்துக்குரிய நகைகள் இருக்குது... எடுத்திட்டுப் போய் எல்லாத்தையும் போட்டுக்கிட்டு கயல்விழிய சீக்கிரமா வரச்சொல்லுங்க அத்தே... எனக்கு மாநாட்டுக்கு நேரமாகுது. அப்புறம் அடுத்த மாதம் இந்தப் பக்கம் படப்பிடிப்புக்கு வாரேன். அப்போ கல்யாணத்த வச்சுக்கலாம்.'  அந்தப் பார்சல்களை கைமடிப்பில் சுமந்தபடி உள்ளறைக்குள் அத்தைக்காரி போய்விட்டாள். ஊர்ப் பிரமுகர்களின் கேள்விகளைக்கேட்காமலே தலையாட்டிக் கொண்டிருந்த அக்னிநாத்தின் சட்டைக்காலரில், அமாவாசைக்காரன். ஒரு மைக்கைச் சொருகினான். இரண்டு கால்களை விரித்துப் போட்டு உச்சியில் சவாரி செய்த காமிராத் தலையை கோணப்படுத்தினான். அக்னிநாத்தும், தான் தாய்மாமா மகளை கட்டிக்கொள்ளப் போவதற்கான காரண காரியங்களை, ஏற்ற இறக்கமான குரலோடு ஒரே டேக்கில் பேசிவிட்டான். பதினைந்து நிமிடம் பறந்து விட்டது. இனி அக்னிநாத்தை கட் பண்ணி, இடையிடையே கயல்விழியையும் கட்பண்ணி, மிக்ஸ் பண்ண வேண்டியதுதான் பாக்கி.  உள்ளறையிலிருந்து தள்ளாடி வந்த அத்தைக்காரி, திண்ணையில் நின்றபடியே. கணவனை கண்ணடித்து கூப்பிட்டாள். அவர் பார்க்காததால், பிறகு கையடித்துக் கூப்பிட்டாள். ஓடிவந்து ஒட்டிக் கொண்ட கணவரின் காதில் கிசுகிசுத்தாள். அவர் வலி பொறுக்காதவர்போல் 'முனுசாமி! கொஞ்சம் வாரியாப்பா...' என்று ஊளையிட்டார். கூடவே எழுந்த இயக்குநர் பிரமிப்பை, ஒரு குட்டு குட்டி, உட்காரவைத்துவிட்டு, அக்னிநாத், தாய்மாமாவை நெருங்கி, அத்தையை நெருக்கினான்.  'கற்பூர வாசனை அந்தக் கழுதைக்குத் தெரியலியே!'  'என்ன மாமா சொல்றீங்க?'  'ஒன்னக் கட்டிக்க மாட்டாளாம். வலிய வந்த சீதேவிக்கு கதவச் சாத்துறாள் மூதேவி.'  அக்னிநாத் ஆடிப்போனான். ஐந்தேமுக்கால் அடி உடம்புக்கு மேல் ஊடுருவி ஆகாய முட்டியும் பாதங்களுக்குக் கீழே அகலபாதாளம் தட்டியும் விஸ்வரூபமாய் எழுந்துநின்ற அவன் பெருமிதம் அரையங்குலமாய் சுருங்கியது. அதுவும் அழுகிப்போவதுபோல் நசிந்தது. ஆத்திரம் தலைச் சுற்றலாய், ஆவேசம் காதிரைச்சலாய், அதிர்ச்சி இருள்மயமாய் அவனை ஆக்கிரமித்தன. சிறிது நேரம் எதுவும் பேசாமல் உடம்பைக் தரையை நோக்கி சுருக்கிக் கொண்டே போனான். அந்த சுருக்கத்தை சரி செய்யாமலே, யாரோ யாருக்கோ பேசுவதுபோல் பேசினான். 'நான் போய் பேசிப்பார்க்கட்டுமா?'  பேசிப் பாருப்பா... காளியம்மா! காளியம்மா! கைக்கு எட்டினத வாய்க்கு எட்டாமச் செய்திடாதடி பாவி'  அக்னிநாத், உள்ளறைக்குள் கிட்டத்தட்ட ஒடிப்போனான். திரைப்படங்களில், இப்படிப்பட்ட காட்சிகளில் கெக்கொலி கொட்டிச் சிரித்தவன். நிச வாழ்க்கையிலும் இப்படி காதல் சவாலிட்ட பல பெண்களை படுக்கையறையில் வீழ்த்தியவன். ஆனால் இப்போதோ படுத்துப் போனவனாய் நடந்தான்.  முக்காலியில் உட்கார்ந்தபடியே, வட்டக் கண்ணாடியில் முகம் பார்த்து, தலை வாரி முடித்த கயல்விழி, அவனைப் பார்த்து 'வாங்கத்தான்' என்று சொல்லியபடியே எழுந்து கொடியில் தொங்கிய கருநீல துப்பட்டாவை, நீலநிற சுடிதாருக்குமேல் போட்டுக் கொண்டாள். நிறமற்ற நிறம்... அதேசமயம் அழுத்தந் திருத்தமான முகம்... ஒளியச்சு லாவகம்... அவனை வரவேற்பதுபோல் சிரித்தாள். அந்தச் சிரிப்பு அவனை உற்சாகப் படுத்தியது. முதல் பார்வையிலேயே அவளை அசத்தியாச்சு. பேச்சிலயும் அசத்திட்டால் தோப்புக்கரணம் போடுவாள்.  'எப்பா... எப்படி வளந்துட்டே... எப்படி ஜொலிக்கிறே... உன்ன அப்படியேக் கடிச்சுத் தின்னுடலாம் போல இருக்கு...  'நீங்க என்ன மிருகமா?...  அக்னிநாத் திக்குமுக்காடினான்... அவளை நேருக்கு நேர் பார்க்கமுடியாமல் அல்லாடினான். பல திரைப்படங்களில் வசனகர்த்தாக்கள் இவனுக்கு எழுதிக்கொடுத்த சவுக்கடி உரையாடல்களை முதல் தடவையாக வாங்கிக் கட்டுவதுபோல் நெளிந்தான். கண்களை மூடினான். மீண்டும் அவள் சிரிப்புச் சத்தம் கேட்டு கண்திறந்தான். அவள் பார்வை உற்சாகப் படுத்தியது.  ஆமா! நான் மாறியிருக்கனா?... என்னைப் பத்து வருஷமாப் பார்க்காமலேயே அடையாளம் கண்டுபிடித்தியா... இல்ல நான்தான்னு யூகிச்சியா..?'  'ஒங்களத்தான் தினமும் பார்க்கேனே... தொலைக்காட்சியில நீங்க நடித்து நூறு நூறு விழாக்களைக் கண்ட 'அவனோட ராத்திரிகள்'.... 'பெண் பெண்தான்' - 'ஆண் ஆண்தான்'.... 'கொலையும் செய்வாள் பத்தினி'.... 'நேற்று ராத்திரி எம்மா'... இப்படி எத்தன படங்கள்... நானா பார்க்கிறது இல்ல... அப்பாம்மா... ஒங்கள ரசிச்சுப் பார்க்கும்போது, என்னால அத ஆபாசமுன்னு சொல்ல முடியல... என்வரைக்கும் ஒதுங்கிக்குவேன்... ஒங்களோட சமூகக் கருத்துக்களும், ஒங்களைப் பற்றிய கிசுகிசுக்களும் அடிக்கடி காதுலயும் கண்ணுலயும் அடிபட்டதுண்டு. முனுசாமி என்கிற கிராமத்துப் பெயர மாற்றிக்கிட்டது. நீங்க கிராமங்களுக்கே செய்த சேவை.'  அக்னிநாத், ஒன்றும்புரியாமல் விழித்தான். சாட்டையடி கொடுத்தபடியே சிரிக்கிறாள். அழுத்தமாகப் பார்க்கிறாள்... அதுவும் நேருக்கு நேராய், கண்ணில் கண்விட்டு பேசுகிறாள்... இவள் எந்த வகையில் சேர்த்தி... அக்னிநாத் விவகாரத்திற்கு வந்தான்.  'ஆமா... நீ என்னை கட்டிக்க மாட்டேன்னு சொன்னியாம்... என்னை இங்க வரவழைச்சு என் வாயால அந்த நல்ல வார்த்தைய கேக்கத்தானே இப்படி தந்திரமாப் பேசியிருக்கே...'  'இந்தமாதிரி சினிமாத்தனங்கள் எல்லாம் எனக்குச் சொல்லிக் கொடுத்தாலும் வராது அத்தான், ஒங்களக் கட்டிக்க விருப்பம் இல்ல... அவ்வளவுதான்.'  'இந்தாபாரு கயல்... எனக்குப் பேரும் புகழும் இருக்குது. எட்டுப் பங்களா இருக்குது. கறுப்புப் பணமே கோடி தேறும்... நல்லா யோசித்து பாரு... அப்புறமா வருத்தப்படாதே... என்ன இல்ல என்னிடத்தில்?... நிறைவாவே இருக்கேன்...'  'நீங்க சொல்ற நிறைவுகள், எனக்கு குறைவுகளாத் தெரியலாம் இல்லியா...'  'அப்போ எவனயாவது காதலிக்கிறியா?... அதையாவது சொல்லு... நானே அவனுக்குக் கட்டி வைக்கிறேன்...'  'இதுவரைக்கும் இல்ல...'  'அப்போ என்னக் கட்டிக்க விரும்பாததுக்கு காரணமாவது சொல்லு...'  'காரணம் இருக்கலாம்... இல்லாமலும் இருக்கலாம். விருப்பம் இல்ல... நீங்க ஆயிரம் தடவக் கேட்டாலும் இதே பதில்தான்.'  ஒன்னை நம்பி டி.வி.காரணக்கூட கூட்டிக்கிட்டு வந்திட்டேன். நாடு முழுக்க செய்தி போயிட்டுது. கடைசில ஒன்னால நான் தலைகுனிஞ்சு...'  'நிறுத்துங்கத்தான். ராமன் கெட்டதும் பெண்ணால. ராவணன் கெட்டதும் பெண்ணால என்கிறது மாதிரி பேசாதிங்க...'  'கோபப்படாதே கயல்விழி... இந்தக் கல்யாணம் நடக்காட்டால் நான் திரையுலகத்தில தலை நிமிர்ந்து நடக்க முடியாது... எப்படிச் சமாளிக்கிறதுன்னு எனக்கே தெரியல...'  'ஒங்களுக்குத் தெரியாத சினிமா வழியா?... 'என் மாமா மகள், சின்ன வயசிலிருந்தே என்னை சகோதரனா நெனச்சு பழகிட்டாளாமுன்'னு சொல்லிடுங்க... ஒங்களுக்கும் நல்லது... எனக்கும் நல்லது...'  'ஆனாலும் காரணத்த...'  அக்னிநாத்துக்கு புரிந்ததோ புரியவில்லையோ. கயல்விழி சொன்னதில் பல காரணங்கள் இருப்பதுபோல் பட்டது. தரையில் அழுத்தமாகக் கால் பதித்தப்டியே ஒவ்வொரு வார்த்தையும் ஒலி குறையாமல் முழுமையாய் வெளிப்பட இயல்பாகப் பேசினாள்.  'சரியத்தான்... எனக்கு நேரமாகுது... இந்தப் பகுதியில ஒரே சாதிக்கலவரம்... அண்ணன் தம்பியாப் பழகுனவங்க... கவுரவர்களாயும், பாண்டவர்களாயும் ஆயிட்டாங்க... அதனால மத நல்லி ணக்கத்தையும், வகுப்பு ஒற்றுமையையும் வலியுறுத்தி, இன்னைக்கு வெட்டாம்பட்டியில வீதி நாடகம் போடப்போறோம். நாயகர் நாயகி இல்லாத நாடகம்... ஒருத்தன வீரனாக்குறதுக்காக முப்பது பேரை பேடியாக்காத நாடகம் என்னோட வாழ்க்கைக்கு அர்த்தத்தை கொடுக்கிற கலை வாழ்வு. இப்போ போனால்தான் சரியான நேரத்திற்குப் போக முடியும்... வாரேன் அத்தான்... இந்தாங்கத்தான் உங்க நகைகளும், புடவையும்...  அக்னிநாத் கூனிக் குறுகி, அந்த அறைக்குள்ளேயே நாட்டப்பட்ட கம்பமாய் நின்றபோது, கயல்விழி அந்த அறையின் பின்வாசல் வழியாக வெளியேறி, வீட்டின் முன்பக்க வழியாய் வந்தாள். வீட்டு வாசலை இருட்டாக்கி மறைத்த, அக்னிநாத்தின் சொகுசு காருக்கருகே நிறுத்தி வைக்கப்பட்ட தனது சைக்கிளை உருட்டினாள்.  12.  நான்காவது குற்றச்சாட்டு   பர்வின், மாணிக்கத்திடம் சிறிது கடிந்துதான் பேசப்போனாள். 'இங்கே வரப்படாதுன்னு சொன்னேனே' என்று சொல்வதற்காக குவிந்த உதடுகள், செவ்வரளி பூ மொட்டாய் தோன்றின. ஆனாலும் அவரை, - முகம் தொலைத்த மனிதராய், கண்களை மட்டுமே கொண்டவராய் பார்த்ததில், அந்த மொட்டுப் பூ மலர்ந்தது. அவரிடம், வீட்டில் அல்லாவின் பேரில் சொன்ன ஆறுதலை, இப்போது, தான் வைத்திருக்கும் கோப்பின் ஆணையாக ஆறுதலாக்கினாள்.  'கவலப்படாதீங்க... எல்லாம் நல்லபடியாவே முடியும்... அதுவும் இன்றைக்கே முடிந்துவிடும்'.  மாணிக்கத்தின் பார்வை, அவள் வழியாய் தாவி அந்தக் கோப்புக்குள் பயபக்தியுடன் பாய்ந்தது. 'ரகசியம்' என்று தடித்த எழுத்துக்களால் பொறிக்கப் பட்ட வெள்ளைக் காகித அட்டை ஒட்டிய சிவப்புக் கோப்பு... அந்தச் சித்திரக் குப்தக் குழந்தையை, மார்போடு சாத்தி வலது கையால் அணை கொடுத்திருந்தாள். அந்தக் கோப்புக் குழந்தைக்கு விளையாட்டுப் பொம்மைகளான 'அரசு ஊழியர் நன்னடத்தை விதிகள்!' , 'நிறுவனம் - நிர்வாகம்' . 'இடைக்கால பதவி - நீக்கம்' , 'விசாரணை - தண்டணை மறுநியமனம்' ஆகிய தலைப்புகளிட்ட முப்பெரும் புத்தகங்களை இடதுகை பிடித்திருந்தது. அந்தப் புத்தகப் பக்கங்களுக்குள் அம்புவடிவக் காகிதங்கள் புத்தக வால்களாக நீண்டு இருந்தன.  மாணிக்கம், குரல் கணக்கப் பேசினார்.  'எம்மா! நீ... நீங்க என் மகளைவிட சின்ன வயசு, ஆனாலும் எனக்கு நீங்கதாம்மா தாய்.... பெறாமல் பெற்றத் தாய்'.  மாணிக்கம் கண்களில் உருண்டு திரண்ட, நீர் கன்னக்கதுப்புகளில் உருண்டோடி விழாமல் இருப்பதற்காக, முகத்தை பின்னோக்கிச் வளைத்தார். வளைந்துபோன வாழ்க்கையை சொல்லாமல் சொன்ன வளைவு. ஆனாலும் அது வாழ்விற்காக கும்பிடுபோடும் முன் வளைவாகாமல், அதன்மேல் அம்பெய்யும் பின்வளைவாய் தோன்றியது. மேல் நோக்கி எழுந்த வெள்ளைக் கலவையான கருந்தாடி, கடற்கரை காற்றில் நாற்றுகளாய் ஆடின. உள்ளடங்கிய கண்கள் கண்ணிரில் மிதந்தன.  மாணிக்கத்தைப் பற்றி அவருக்குத் தெரிந்ததைவிட, தனக்கே அதிகமாகத் தெரியும் என்பது போல், பர்வின் அவரை கனிவோடு பார்த்தாள். இ.ஆ.ப. - அதுதான் சகலகலாவல்ல ஐஏஎஸ் தேறி, தமிழக அரசிற்கு மாநில ஒதுக்கீடாகி, ஒரு மாவட்டத்திற்கு, களப்பணிப் பயிற்சிக்காக இந்த பர்வின் அனுப்பப்பட்டபோது, இந்த மாணிக்கத் தைத்தவிர, அத்தனை மாவட்ட அதிகாரிகளும், தங்களது எதிர்கால ஆட்சித் தலைவர், இப்போதே, தங்களை ஆட்டிப் படைக்கலாம் என்பதுபோல் தலைகளை கவிழ்த்து, பாதி வாயை உள்ளங்கையால் மறைத்து 'பயிற்சி' கொடுத்த போது, இந்த மாணிக்கம்தான், இவளிடம் கெஞ்சாமலும் மிஞ்சாமலும், பல்வேறு அரசு செயல்பாடுகளில் பயிற்றுவித்தவர். வீட்டிற்கு கூட்டிப் போய், கணிப்பொறி மகளை தோழியாக்கியவர். அளவெடுத்த வார்த்தைகள்... அதற்கேற்ப கம்பீரமும் குழைவும் சரியான விகிதாச்சாரத்தில் கலந்த குரல். குரலுக்கு ஏற்ற பார்வை. 'வாங்க' என்ற ஒற்றைச் சொல்லில், தாயின் பரிவும், தனயனின் துணையும் உள்ளடங்கி இருக்கும். நிற்கவேண்டிய ஊழியர்களையும் உட்கார வைப்பார். ஒரு செயல்பாடு சாதனையானால், மேலதிகாரிக்கு எழுதும் கடிதங்களில், உதவிய ஊழியர்களை 'மற்றும் பலர்' ஆக்காமல், அவர்களது பெயர்களையும் தெரிவிப்பவர். அந்த மனிதர் இப்போது கூனிக்குறுகி முகம் பழுத்து தோள்கள் தொங்கி, எலும்புக்கூடாய் நிற்கிறார். சிறியன சிந்தியாதவர்கள், சிறுமைப் படும்போது, அதைப் பார்ப்பதே ஒரு தண்டணை. அந்தத் தண்டனையை அனுபவித்துக் கொண்டே, பர்வின், அந்தக் கோப்புக்களைக் தட்டிக்கொடுத்து அவரை ஆற்றுப் படுத்தினாள்.  'கண் கலங்காதீங்க... விசாரணை அதிகாரி, உங்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லன்னு தெளிவாகவே எழுதி இருக்கார். அதனால உங்க சஸ்பென்சன ரத்து செய்வதற்கான குறிப்பையும் கொண்டு போறேன். செயலாளர் சும்மா ஒப்புக்கு ஒரு கையெழுத்துப் போடணும்... போட்டாகணும். மீதியை நான் பார்த்துக் கொள்வேன். அதோ அங்கே இருக்கிற பார்வையாளர் அறையில் உட்காருங்க கால் மணிநேரத்துல திரும்பி வந்து, அரைமணி நேரத்துல, என் கையாலேயே உங்களுக்கு மறுநியமன ஆர்டரை கொடுத்துடுறேன்.'  மாணிக்கம், உயிர்த்தெழுந்தார். அவளை கையெடுத்துக் கும்பிட்டார். கோவிலில் அம்பாளைக் கூட அப்படி கும்பிட்டி இருக்கமாட்டார். அந்த அடுக்கு மாடி அரசு கட்டிடத்தின் இந்த ஐந்தாவது நீண்ட நெடிய விதானம், அவருக்கு ஆலயப் பிரகாரமாகவும், அவள் கற்சிலையிலிருந்து பர்வினாய் வெளிப்பட்ட துர்க்காகவும் தோன்றியது. ஆறுமாத காலமாக, சஸ்பென்சன், முறையீடு, நடுவர் மன்றம், விசாரணை என்று அலையாய் அலைந்த வனவாசம், முடிகிறது. நிம்மதியாக இன்னும் ஆறு மாதத்தில் ஓய்வுப் பெற்று. அவரது சஸ்பென்சன் போல் இடைக்காலமாய் தடைபட்ட மகளின் திருமணத்தை நடத்திவிடலாம். அப்படியும் இந்த சஸ்பென்சன் விவகாரம் திருமணக் கூட்டத்தில் அடிபடத்தான் செய்யும். அவர் மீது அனுதாபப் பார்வைகள் பாயும். இந்த லட்சணத்தில் இடைக்கால பதவி நீக்கம், தண்டணை ஆகாது என்று சட்ட விதிகள் கூறுகின்றன.  சுகுமார் இ.ஆ.ப. - செயலாளர் என்ற பொன் முகாமில் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகையை பார்த்தபடியே தள்ளுகதவைத் தள்ளிய பர்வின், பின்னோக்கி நடந்து, மாணிக்கத்திடம் கிசுகிசுப்பாய் பேசினாள்.  'அப்புறம்..... நான் உங்களுக்கு வேண்டியவள் என்பது யாருக்கும் தெரிய வேண்டாம். தெரிந்தால், முதலமைச்சருக்கும், தலைமைச் செயலாளருக்கும் மொட்ட மனு போய்விடும். மொட்டைமனு எழுதுறதுல, பியூனுக்கும். ஐ.எ.எஸ் அதிகாரிக்கும் வித்தியாசம் கிடையாது. என்ன செய்யுறது?. கல்லூரிப் படிப்புக்கு எதிர் படிப்பை இந்த செக்கரட்டேரி யட்டில் சொல்லிக் கொடுக்காங்க. எனக்கும் சிக்கல் வரக்கூடாது பாருங்க.'  'ஒங்களுக்கு சிக்கல் வந்தால், அது எனக்கு இன்னொரு சஸ்பென்சன் மாதிரிம்மா. இது சத்தியமான வார்த்தம்மா... உங்க தலைமையிலதான் என் பொண்ணோட கல்யாணம் நடக்கும்.  பர்வின், கரிசமணி இல்லாத தன் கழுத்தைத் தடவியபடியே, செயலாளர் அறைக்குள் நுழைந்தாள். ஒரு முனையில் தலைதாங்கும். நாற்காலியும், பளபளக்கும் அரைவட்ட மேஜையும், மறுமுனையில் சோபா இருக்கைகளுமான, அந்த விசாலமான அறைக்குள், செயலாளருக்கு தலை தாழ்த்தி வணக்கம் தெரிவித்தபடியே, எதிர் நாற்காலியில் உட்கார்ந்தாள். தொலைபேசி கூச்சல்கள். இன்டர்காம் அலறல்கள், கணிப்பொறி மாய்மாலங்கள், பேக்ஸ் கருவிக்குள் இருந்து விடுபடத்துடிக்கும் காகிதம், தொலைக்காட்சிப் பெட்டியின் கிரிக்கெட் லுட்டிகள் என்று பல்வேறு அவதானங்களை ஒரேசமயத்தில் கவனித்த செயலாளரின் புருவச்சுழிப்பு இவள் புன்னகையால் போய்விட்டது. உடனே, செயலாளர் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் சத்தத்தை நீக்கிவிட்டு, காட்சிகளை ஊமையாக்கி, அவளையும் ஊமையாய்ப் பார்த்தார்.  'மாணிக்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரித்த விசாரணை அதிகாரி அறிக்கையில் நேரில் பேசவுமு'ன்னு எழுதியிருக்கிங்க சார். அதனால வந்தேன்.  'நாளைக்கு வச்சுக்கலாமே, டென்டுல்கர் என்னபோடு போடுறான் பாருங்க.'  'நன்றே செய்க - அதுவும் இன்றே செய்க'ன்னு நீங்க சொல்வீங்க சார். ஒரு ஐந்தே ஐந்து நிமிடம் சார்.  'சரி. முடியாதுன்னா விடுவிங்களா.'  அந்த அரசுச் செயலாளர். ஒரு 'புரோமோட்டி' துணைச் செயலாளர். இப்படிப் பேசியிருந்தால், இந்நேரம் உப்புவைத்து ஊற வைத்திருப்பார் வந்திருப்பவளோ சொந்த சாதி.... அதாவது நேரடி ஐ.ஏ.எஸ். சாதி. கோப்பை நீட்டிய பர்வினிடம் 'நீங்களே படித்துச் சொல்லுங்க' என்றார். - ஒரு பார்வையில் தொலைக்காட்சிப் பெட்டியையும் மறுபார்வையில் அவளையும் தாங்கிக் கொண்டு.  பர்வின், கோப்பைப் படிக்காமல், அதன் விவரங்களை, சுருக்கமாக எடுத்துரைத்தாள்.  'முதலாவது குற்றச்சாட்டு சார்... மாணிக்கம் என்கிற அரசு அதிகாரி அலுவலக ஜீப்பை நூறு கிலோமீட்டர் வரை தவறாக சொந்தக் காரியத்திற்குப் பயன்படுத்தினார் என்பது. நிசமாவே, அவர் காரியத்திற்குத்தான் பயன்படுத்தி இருக்கார். அதாவது, ஒரு குக்கிராமத்தில் அவர் மேற்பார்வைப் பணிக்குப் போனபோது, தந்தை இறந்துவிட்டதாக நள்ளிரவில் செய்திவந்தது. பேருந்து வசதி இல்லாத அந்த நேரத்தில், ஜீப்பை எடுத்துக் கொண்டு போயிருக்கார். இப்படி அவசரத்திற்கு அரசு வாகனத்தை எடுத்துக் கொள்ளலாமுன்னு. இதோ இந்த விதி கூறுகிறது. அந்த ஜீப்பை எடுத்த மறுநாளே, மாணிக்கம், நிலைமையை விளக்கி அதற்கான இப்சோ பேக்ட்டோ அனுமதி கேட்டு, விண்ணப்பித்து இருக்கார். கூடவே ஜீப்பை எடுத்ததற்கான பணத்தையும் அனுப்பி இருக்கார். இதற்கான கடித நகலும் மணியார்டர் ரசீதும் உள்ளன. அதோடு மறுநாள் விடுமுறை என்பதால் அரசுப்பணியும் பாதிக்கப்படவில்லை. விசாரணை அதிகாரி இந்தக் குற்றச்சாட்டில் இருந்து இவரை விடுவித்து இருக்கிறார்'.  'சரி, ஏற்றுக்கொள்கிறேன். அப்புறம்... அடுத்தது....'  பர்வின், மாணிக்கம் தன்னை எப்படிப் பார்த்தாரோ அப்படி சுகுமாரைப் பார்த்தாள். அந்த சுகுமாரோ, அரசாங்க குளிர்சாதனக் காரில் தன் மகள்களை கல்லூரிக்கு அனுப்புவதை நினைத்து லேசாய் நிலைகுலைந்தார். பர்வின் தொடர்ந்தாள்.  'இரண்டாவது குற்றச்சாட்டு சார், ஆதிதிராவிட ஊழியர் ஒருவரை, இந்த மாணிக்கம், சாதிப் பெயரைச் சொல்லி திட்டினார் என்பது ஒருநாள், அந்த ஊழியரைப் பார்த்து 'உன் புத்தியைக் காட்டுறியே... உட்கார்' என்று சிரித்தபடியே மாணிக்கம் கேட்டிருக்கிறார். அதாவது,அலுவலகத்துக்கு வழக்கம்போல் தாமதமாக வரும் புத்தியை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அந்த ஊழியர் புறக்கணிப்பதற்காக, அப்படிக் கடிந்திருக்கிறார். இதை, அந்த ஊழியர். தன் சாதிப் புத்தியை காட்டுவதாக மாணிக்கம் குறிப்பிட்டதாய், தர்க்கமாகவோ, குதர்க்கமாகவோ எடுத்துக்கொண்டு, புகார்செய்துவிட்டார். மாணிக்கம், தான் அப்படிப்பட்டவர் இல்லையென்றும், இடஒதுக்கீடுகளை ஒழுங்காக அமுல்படுத்துகிறவர் என்றும், பல்வேறு ஆதிதிராவிட ஊழியர் கூட்டங்களில் சேரிக்குடிசையும், சாதிக்குடிசையும் ஒன்றாக வேண்டுமென்று பேசியிருப்பதையும், சாட்சியங்களாக வைத்தார். அந்த அலுவலக ஆதிதிராவிட நல ஊழியர் சங்கமும், மாணிக்கம் ஆதிதிராவிட விரோதியல்ல, நண்பரே என்று எழுதிக் கொடுத்திருக்காங்க'.  'அவங்க பயந்துகூட எழுதி கொடுக்கலாம்.'  'அப்படியும் சொல்ல முடியாது சார்... இடைக் கால பதவி நீக்கத்தில் இருக்கிற ஒரு அதிகாரியை, அவர் கெட்டவராக இருந்தால் ஒழித்துக் கட்டுறதுக்கு இதுதானே சந்தர்ப்பம்? விசாரணை அறிக்கை மாணிக்கத்தை இந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கிறது.'  'நானும் விடுவிக்கிறேன். அப்புறம் அடுத்தது'.  'மூன்றாவது குற்றச்சாட்டு, ஒரு பாடகியிடம், மாணிக்கம், முறைதவறி நடக்கப் போனார் என்பது. எட்டு ஆண்டுகளுக்கு முன்னால், இந்த மாணிக்கம் மாவட்ட துணைஅதிகாரியாய் இருக்கும் போது, மாநில குடும்ப நலத்துறை. ஒரு இசைக் குழுவை இவர்களது துறைக்கு அனுப்பி வைத்திருக்கு இந்த மாணிக்கம், கலை நிகழ்ச்சியை பார்வையிட சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு போயிருக்கார். ஆனால், அவர் போய்ச் சேர்வதற்கு முன்பே, அந்த இசைக்குழு ஒரு கல்யாண வீட்டில் இசைத்துவிட்டு, அதற்காகப் பணத்தையும் வாங்கிக் கொண்டு போய்விட்டது. மறுநாள், இவர், அந்தக் கலைக்குழு தலைவரிடம் இதுபற்றிக் கேட்டிருக்கார். மேலதிகாரிகளுக்கு எழுதப்போவதாக தெரிவித்திருக்கிறார். உடனே கலைக்குழுத் தலைவர். பயந்து போய், இவரது மாவட்ட அதிகாரியை அணுகியிருக்கிறார். ஏற்கனவே இந்த மாணிக்கத்தை எப்படி ஒழித்துக் கட்டலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த அந்த மேலதிகாரி, கலைக்குழுவின பாடகி, மேற்பார்வை என்ற சாக்கில் இந்த மாணிக்கம் தன்னிடம் முறைதவறி நடந்ததாக புகார் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அந்தக் கலைக்குழு அரசுப் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றும் மிரட்டியிருக்கிறார். வேறுவழியில்லாமல் அந்தப் பாடகி கொடுத்த புகார் விசாரணைக்கு வந்தது. இந்தப் புகார் உள்நோக்கம் கொண்டது என்றும், மாணிக்கம் அப்படி நடந்து கொள்ளவில்லை என்றும் தள்ளுபடி செய்யப்பட்டது. எட்டாண்டுகளுக்கு முன்பு, குடும்ப நலத்துறை இயக்குநர் விசாரித்து, நிராகரித்த இந்தப் புகாரை இப்போது பிணத்தைத் தோண்டி எடுத்து ஒப்பாளி போடுவதுபோல் போடுகிறார்கள்'.  'நீங்க... இப்படிச் சொல்lங்களா..? இல்ல விசாரணை அறிக்கையா?  'விசாரணை அறிக்கைதான் சார்'.  'சரி. இந்த பரிந்துரையையும் அரசு ஏற்றுக் கொள்கிறது'.  'சார்... நிசமாவே ஒரு இருண்டுபோன விட்டுக்கு நீங்க விளக்கேற்றி வைக்கிங்க சார்'  'விளக்கேற்றினால் மட்டும் போதாது... எண் ணெய்யும் ஊற்றணும். அடுத்தக் குற்றச்சாட்டு...?  'அது குற்றச்சாட்டே இல்ல சார்'.  'நீங்களே சொன்னால் எப்படி? கோப்பைப் படிங்க'.  'நான்காவது குற்றச் சாட்டு என்னவெனில், சம்பந் தப்பட்ட மாணிக்கம். மேலே குறிப்பிட்ட மூன்று குற்றங்களைப் புரிந்து, அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளை மீறி, ஒழுக்கக்கேடு புரிந்திருக்கிறார்'.  'இந்தக் குற்றச்சாட்டுக்கு விசாரணை அறிக்கை என்ன சொல்லுது'  'இது குற்றச்சாட்டே இல்லை சார். ஆதனால அறிக்கையில் இதுபற்றி குறிப்பிடல'.  'என்ன பர்வின்! நீங்க ஒரு ஐ.ஏ.எஸ். ஸா? நாலாவது குற்றச்சாட்டுத்தான் முக்கியமானது. மற்ற மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் ஊதிய உயர்வு முடக்கம். இல்லாட்டால் பதவி இறக்கந்தான் தண்டணை, ஆனால் இந்த நாலாவது குற்றச்சாட்டு இருக்கே, அதுக்கு பதவி நீக்கம் தான் தண்டணை,  'சார்... மூன்று குற்றச்சாட்டுக்களால் எழுந்ததுதான் நாலாவது குற்றச்சாட்டு. அந்த மூன்றும் பொய்யாகும் போது. நாலாவதும் பொய்தானே'.  'இப்படி நீங்கதான் சொல்றீங்க. விசாரணை அதிகாரி சொல்லலியே'.  'குதிரைப்படம் வரைந்து, அதில் குதிரைன்னு வேற எழுதணுமா? பொய்யான மூன்று குற்றச்சாட்டு களால் எழுந்த நாலாவது குற்றச்சாட்டைப் பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்ல'.  'அவசியம் இருக்குது. சொல்லி இருக்கணும்'.  'உங்களுக்கு எப்படி விளக்குறதுன்னே எனக்குப் புரியல. சார். அந்த கம்யூனிகேஷன் திறமை எனக்கில்லை. ஆனாலும் நியாயம் நியாயம்தான். விபத்தே நடக்காதபோது, காயம் என்கிற கேள்வியே இல்லை. மூன்று குற்றச்சாட்டுகளும் பொய்யாகும்போது, அவற்றால்எழுந்த நாலாவதும் பொய்தான் என்கிறதை எழுதிக்காட்ட வேண்டியதில்லை'.  'அப்படின்னா... அதைக் குற்றச்சாட்டாய் சாட்டியிருக்க வேண்டாமே? நாலாவது குற்றச் சாட்டாய் நம்பர் போட்டு இருக்க வேண்டாமே?. நாலாவது குற்றச்சாட்டு நாலாவது குற்றச்சாட்டுதான்.'  'சார்... நாம் இப்படி செந்தில் - கவுண்டமணி மாதிரி விவகாரத்தை வாழப்பழமா ஆக்கணுமா?.'  அரசுச் செயலாளரான சுகுமாரின் முகம் சிவந்தது. நாற்காலியில் சாய்வாய் கிடந்தவர், முதுகை நிமிர்த்தி முகத்தையும் நிமிர்த்தினார். பர்வினை ஐ.ஏ.எஸ். சாதியில் இருந்து தள்ளிவைத்துவிட்டு, ஒரு துணைச்செயலாளரிடம், செயலாளர் எப்படி பேசவேண்டும் என்று நினைத்தாரோ, அந்த நினைப்பைப் பேச்சாக்கினார்.  'நீங்க வரம்பு மீறி பேசுறிங்க மிஸ் பர்வின்... ஒரு மூத்த அதிகாரிகிட்ட பேசும்போது பேச்சுல கண்ணியம் வேண்டும். குரல உயர்த்தக் கூடாது... கையை ஆட்டக் கூடாது.... நீங்க பேசுன முறையும், அரசு ஊழியர் நன்னடத்தை விதியை மீறிய செயல் தான். முதல்தடவை என்கிறதால வாய்மொழியாய் எச்சரிக்கிறேன்'.  'மன்னிக்கணும் சார் கொச்சையான உதாரணத் தைச்சொன்னது தப்புத்தான் சார், ஆனாலும் நான்காவது குற்றச்சாட்டு என்பது...'  'இதுக்கு மேலே பேசாதீங்க பிளீஸ்.'  'பேசல சார்..... ஆனாலும் நான் நான்காவது குற்றச்சாட்டைப்பற்றி, சட்டத்துறையோட கருத்தைக் கேட்கலாம் சார்.'  'நான்காாவது குற்றச் சாட்டு நான்காவது குற்றச் சாட்டுத்தான். கோப்பை வைத்துட்டுப் போங்க. கோப்புல என்ன உத்திரவு போடுறனோ, அதைமட்டும் செயல்படுத்துங்க. நீங்க போகலாம். என் நேரத்தை இதுக்கு மேல வீணாக்காதீங்க.'  அரசுச் செயலாளர், இருக்கையை விட்டு எழுந்து பர்வினையும் எழவைத்தார்.  பர்வின், தனக்குள்ளே முனங்கிக்கொண்டு ஒவ்வொரு முனங்கலுக்கும் கண்கள் ஒவ்வொரு விதமாய் சுழல. அந்த அறைக்கு வெளியே வந்தது தெரியாமலேயே வந்துவிட்டாள். அரைநாள் விடுமுறை போட்டுவிட்டு, மாணிக்கம் இருக்கும் பார்வையாளர் அறைப் பக்கம் தலைகாட்டாமல், வீட்டுக்கு, எப்படித் தலை மறைவாய்ப் போவதென்று யோசித்துக் கொண்டிருக்கிறாள்.  13.  அவள்... அவளாக....     அறைக்குள்ளே அகமும் புறமுமாய் இயங்கிய வர்த்தினி, அந்த அறையின் எல்லைக் கதவை இழுத்துச் சாத்திவிட்டு, ஒரு கையில் சின்ன சூட்கேஸோடு வராந்தாவிற்கு வந்தாள். சுவருக்கு மதில் போல, சுவரோவிய வண்ணக் காகித நிறத்தில் தோற்றம் காட்டிய சோபா செட்டில் உட்காராமல், ஒரு மூலையில் கிடந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து, விரித்துப் பிடித்த செய்திப் பத்திரிகை ஒன்றிற்குபடி "தலைமறைவான"வனைப் பார்த்து வர்த்தினி சிறிது பரபரப்போடு பேசினாள்.  "ராமசாமி. நேரமாயிட்டு"  அரசியல் சட்டம் 356 - சம்பந்தப்பட்ட செய்தி நிகழ்வுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, இ.பி.கோ சம்பந்தப்பட்டதும், சுவை படுத்தப்பட்டதுமான சம்பவங்களை படுசுவையாக படித்துக் கொண்டிருந்த டிரைவர் ராமசாமியின் காதுகளில், ஒரு நடிகைக்கும், அவளது காதலனுக்கும் இடையே நடக்கும் மகா யுத்தமே முரசொலி த்துக் கொண்டிருந்தது. ஆகையால் ராமசாமிக்கு, வர்த்தினி "ரிமைண்டர்" போட்டாள்.  'ராமசாமி... ஒன்னத்தான் ராமசாமி... இந்நேரம் நாம் ஆழ்வார்பேட்டை போயிருக்கணும்...'  இளம் டிரைவரான ராமசாமி, அலறியடித்து எழாமல், நிதானமாக எழுந்து, செய்தி பத்திரிகையை மிடித்து வைத்துவிட்டு, வர்த்தினியிடமிருந்து சூட்கேஸை வாங்கிக் கொண்டு, வெளியேறப் போனவன், ஏழு கோணங்களில் எட்டு கோணல்களாய் நெளிந்தான். அவசர அவசரமாக சட்டையின் முதலாவது பொத்தானை மாட்டினான். சட்டைக் காலர் தற்செயலாகக் கூட நிமிர்ந்திருக்கக் கூடாது என்பதுபோல் இடது கையை வளைத்து பிடரியைத் தடவி விட்டபடியே சூட்கேஸை கவ்விய வலது கையைத் துக்கி நெற்றி மட்டத்திற்கு கொண்டு வந்து, சல்யூட் அடித்தான். இப்ப்டி அவனைக் காரியப் படுத்திய காரணகர்த்தாவான நிர்வாக அதிகாரி தனசிங் 'ஏய்யா.. யூனிபாரம் போடுறதில்லியா... அரசாங்கம் பணம் கொடுத்து துணி வாங்கிக் கொடுக்குது. தைக்கிறதுக்கு காசும் தருது. அந்தத் துணியையாவது வைத்திருக்கியா, இல்ல வித்திட்டியா...' என்று கேட்டபடியே உள்ளே வந்தார். ராமசாமி ஏதோ தைத்தது போல் படியிறங்கி ஓடினான்.  வர்த்தினிக்கு, நிர்வாக அதிகாரி, ராமசாமியை அவமானப் படுத்துவதுபோல் பேசியது பிடிக்கவில்லை. கண்டித்தாக வேண்டும். ஆனாலும் மென்மையான கண்டன வார்த்தைகளை விடுவதற்கு முன்பாக வில்லாய் வளைந்து கேட்டாள்.  'என்ன மிஸ்டர் தனசிங் திடுதிப்புன்னு...  'ஊர்ல இருந்து மாமனார் வந்திருக்கார்... ஒரு நாள் லீவு வேணும் மேடம்'.  'மாமனாருக்காக லீவு போடுற ஒரே மாப்பிள்ளை நீங்கதான்னு நினைக்கேன்'.  "அவரோட மாமனார் வெறுங்கையோட வந்திருக்க மாட்டார்".  மேற்குப் பக்கமாக உள்ள அறையிலிருந்து சூட்டு கோட்டோடு வெளிப்பட்டு, அக்காவின் அருகே போய் நின்றபடியே, தனது "வெறுங்கை" தந்தையை விமர்சித்த கணவனுடன் சொல்லாட, சமையல் கட்டிலிருந்து கீதா வெளியே வந்தாள். கம்ப்யூட்டர் இன்ஜீனியர் மாதம் முப்பதாயிரம் சம்பளம். அப்படியும் மாமனார் கையை எதிர்பார்க்கிற பிச்சைக்காரத்தனம். மனைவியானவள். முகபாவனைகளால் கணவனுடன் போர் தெர்டுத்தபோது, வர்த்தினி, நிர்வாக அதிகாரியை புன்னகைக்காமலே கேட்டாள்.  'ராமசாமியை நீங்க இவ்வளவு கடுமையா பேசியிருக்கப்படாது...  நிர்வாக அதிகாரியான தனசிங், இன்கிரிமென்ட் கட்டானதுபோல் பதறியபோது, அவனுக்குப் பதிலாக வர்த்தினியின் தம்பி ரவிக்குமார், பதிலளித்தான்.  சொல்றேன்னு தப்பா நினைக்காதக்கா... தனசிங் சார்! நீங்களும் தப்பா நினைக்கப்படாது. இந்த தனசிங் உங்களுக்கு அடுத்த நிலையில் இருக்கிற அதிகாரி. ஆனாலும் நீங்க உட்காருவது வரைக்கும் உட்கார மாட்டார். அப்பேர்ப்பட்ட இவரப் பார்த்துட்டு குலை நடுங்கிப் போகிற டிரைவர் ராமசாமி, உங்களப் பற்றிக் கவலை படாமல், கால்மேல் கால்போட்டு அலட்சியமாய் உட்காருறான்... அவன் மட்டும் டிரைவர் சீட்ல இருக்காட்டால் இந்த தெருக்காரங்களுக்கு நீ ஆபீசரா. அவன் ஆபீசரான்னு சந்தேகம் வந்துடும்...'  'என்னடா ரவி... சின்ன வயசுல எங்கிட்ட வம்புக்கு வந்தது மாதிரியே இப்பவும் வாரியே... நாம எல்லாரும் அடிப்படையில் மனுசங்கடா... டில்லியில் இந்த மாதிரியெல்லாம் அந்தஸ்து பேதம் கிடையாது. மேலதிகாரிகிட்டே, பியூனே, சிகரெட் பற்றவைக்க லைட்டர் கேட்பான். அந்த அளவுக்கு ஒரு தோழமை...'  'இது டில்லி இல்ல அண்ணி... தமிழ்நாடு, கெஞ்சினால் மிஞ்சுவான் -- மிஞ்சினால் கெஞ்சுவான். தலையைப் பிடித்தா காலைப் பிடிப்பான் - காலைப் பிடித்தால் தலையைப் பிடிப்பான். நீங்க மாநில அதிகாரி. இருபது ஆபீசுகளை மேற்பார்வை செய்கிறவர். அவன் கேவலம் டிரைவர். ரொம்பத்தான் இடம் கொடுக்கிங்க. நீங்க பெரிய அதிகாரியா இருந்தாலும் அவனுக்கு பெண்ணுன்னு இளக்காரம்'.  இந்த மாதிரியான இனிய சந்தர்ப்பத்திற்காக ஏங்கி நின்ற தனசிங் புன்னகைப் பொங்கப் பேசினார். தன்னையும் இளக்காரப் பட்டியலில் சேர்த்து விடக் கூடாதே என்கிற எச்சரிக்கையும் கூட. கணவனை எள்ளும் கொள்ளுமாகப் பார்த்த கீதாவிடம் பேசுவது போல், வர்த்தினிக்கு சேதி சொன்னார்.  'நீங்க நினைக்கிறது மாதிரி பெரிய பெரிய அதிகாரிகள ஆண் பெண்ணுன்னு பிரிச்சு பார்க்கிறது கிடையாது. அதனால இளக்காரமும் இல்ல. அடுத்ததெரு அபிராமி இருக்காங்களே. அவங்க பெல்லடிச்சால் சாப்பிடறவங்ககூட வாயைத் தொடச்சிக்கிட்டே உள்ளே போகணும். இல்லன்னா தண்ணி இல்லாக் காடுதான். நம்ம மேடத்துக்குத்தான் வெளுத்ததெல்லாம் பால். பாலுல கள்ளிப் பால், எருக்கலைப் பால் இருக்கது தெரியல. இங்கே உள்ளவங்களுக்கு தராதரம் தெரியாது என்கிறதும் மேடத்துக்கு தெரியாது'.  வர்த்தினி இரண்டு கைகளையும் விரித்துக் காட்டி, தோள்களைக் குலுக்கியபடியே சலிப்போடு பதில் சொன்னாள்.  "என்னை விடுங்கப்பா... புரமோஷனாச்சேன்னு சென்னை வந்தேன். இப்பவே அவரு 'தம்பி வீடு வசதியா இருக்குதுன்னு அங்கயே இருக்க திட்டமிட்டிட்டியான்'னு டெலிபோன்ல கிண்டலடிக்கார்... இன்னும் மூணு மாதத்தில டெல்லிக்குப் போகப் போறேன்"  'ஒரு நாளே இருக்கட்டும் அக்கா. அதிகாரி அதிகாரியாத்தான் நடக்கணும். இந்த தமிழக அரசுல கலெக்டரப் பார்த்து கீழே இருக்கவர் நீங்கன்னு சொல்ல முடியாது. கலெக்டர் சொன்னார்னுதான் கலெக்டர்கிட்டயே சொல்லணும். இதனாலதான் தமிழ்நாட்டு அரசாங்க யந்திரத்துக்கு நாடு முழுக்க நல்ல பேரு. எவன எங்க வைக்கனுமோ, அவன அங்கதான் வைக்கணும். உன்னவிட நான் வயசுல ஜூனியர் - ஆனால் தமிழ் நாட்டு அனுபவத்தில சீனியர். யானையைக் கூட தவளைகள் கிண்டல் அடிக்கிற மாநிலம் இது. சொல்ல வேண்டியதச் சொல்லிட்டேன். ஏன்னா உன்ன அவங்க இளக்காரமாப் பார்க்கிறது என்னை என்னமோ செய்யுது'.  வர்த்தினியின் புருவங்கள் சுழித்தன. தலை தானாய் நிமிர்ந்தது. உடம்பில் ஒரு முறுக்கு தம்பி சொல்றதும் ஒரு வகையில சரிதான். இந்தத் தம்பி, அக்கா பெரிய அதிகாரியா இருக்கிறதுல பெருமிதப்படுறதா நினைத்தது தப்பாப் போச்சே, இந்த தனசிங்கிட்ட கைகட்டி நிற்கிற ஊழியருங்க என்னை சிரிப்பும் கும்மாளமுமாத்தானே பார்க்கிறாங்க? இவங்களுக்கு அதிகமா இடம் கொடுத்திட்டேனோ. ஆனாலும் அலுவலகத்தில கறாராத்தானே இருக்கேன். கள்ள பில்லுகள கண்டுபிடிச்சு திட்டியிருக்கேனே. இப்ப அவங்க திருந்தினது மாதிரி தெரியுதே... திருந்துனாங்களோ திருந்தலேயோ... நான் என்னோட அந்தஸ்த கட்டிக்காத்தாகணும்....  வர்த்தினி, மடமடவென்று படியிறங்கித் தரையிறங்கினாள். இரும்புக்கிராதிக் கதவை இருபிரிவாக்கி கிரீச்சிட வைத்து, காரருகே போனாள். அவளைப் பார்த்தும் இருக்கையில் இருந்து இறங்காத ராமசாமியை ஏற்ற இறக்கமாய் பார்த்தபடியே முன்னிருக்கையில் ஏறிக் கொண்டாள். வழக்கம் போல், பின்பக்கம் சாயாமல் தலையை நிமிர்த்தி, கண்களுக்கு மானசீகமாக லகான் போட்டு, குதிரை மாதிரி எதையும் பார்க்காமல் சூனியத்தை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டாள். அந்தக் காரை, முதலில் நகர்த்தி, பிறகு நடத்தி தெரு முனையில் நிறுத்தி, பின்னர் பிரதானச் சாலையில் திருப்பி, வண்டியை சீராக ஒட்டியபடியே, ராமசாமி சாவகாசமாகக் கேட்டான்.  'அய்யாவும் தம்பியும் டில்லியிலிருந்து வரப் போறதாய் சொன்னிங்களே. எப்போம்மா வாராங்க'.  'இதையெல்லாம் உன்கிட்ட சொல்லியாகணுமா?... அப்புறம் இன்னொரு விஷயம் - நாளையிலேருந்து யூனிபார்ம் இல்லாம ஆபீஸ் வரப்படாது'.  ராமசாமி, தன்னையறியாமலே இருக்கையில் இருந்து அரையடி மேலே போனான். இதனால் தாறுமாறாக ஓடி, அந்தக் கார் பாதசாரிகளை நெருங்கி விட்டது. எப்படியோ அதை சரியாக்கிவிட்டு, வர்த்தினியைப் பார்த்தான். இன்னும் இளமை போகாத வயதுதான். ஆனாலும் அந்த இளமையை, தாய்மையால் சுமப்பது போன்ற தோரணைக்கார அம்மா. வட்ட வடிவமான முகத்தின் பின்தளத்தில், அதற்கு முரண்பாட்டு எழிலைக் கொடுக்கும் நீள வாக்கிலான மோவாய். அது உயரும் போதும், தாழும்போதும் கருணையை உருவகப் படுத்திக் கொள்ளலாம். எதையும் தலையாட்டிக் கேட்கும் லாகவம். பேசும் போது சம்பந்தப்பட்டவரை நேருக்கு நேராய் பார்க்கும் புன்னகை முகம். ஆனால் இப்போதோ அபயம் அளிக்கும் அந்த முகம், அபாயகரமாய் தோன்றியது. கழுத்தில் ஏன் அத்தனை நரம்புகளும் புடைத்து நிற்கின்றன. உள் முகமாய் செல்லும் உதடுகள் இப்போது ஏன் துருத்தி நிற்கின்றன? ஒருவேளை குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பதால் அம்மா மென்டலாகி இருப்பாங்களோ -- அம்மாக்கிட்டேயே பேச்சுக் கொடுத்துப் பார்க்கலாம்  'காரை சர்வீஸுக்கு விடணும் அம்மா'.  'எது பேசணுமுன்னாலும் ஆபிஸுல வந்து பேசு.'  பெண் கான்ஸ்டபிள் மாதிரி பேசிய வர்த்தினியைப் பார்த்து ராமசாமி பயந்து விட்டான். அவள் மேடமானதால், இவனும் டிரைவர் ஆகி விட்டான். அந்த வண்டிகூட இந்த மாற்றத்தை அவ்வப்போது காட்டிக் கொண்டிருந்தது.  சாஸ்திரி பவனின் பின் தளத்தில் உள்ள அலுவலக வளாகத்திற்குள் வந்த வர்த்தினி, வழக்கம் போல் பராக்குப் பார்க்காமல், வணக்கம் போட்ட ஊழியர்களுக்கு ஒரு விரலைக் கூட அசைக்காமல், தனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் கம்பீரமாய் ஊடுறுவி, அழுத்தம் திருத்தமாய் நடந்து தலைக்கு மேல் பாம்பாய் சுருண்ட சுழல் மெத்தை நாற்காலி யில் சாய்வாய் உட்காராமல் அதை சாய்த்து உட்கார்ந்தாள். இந்த இடைக்கால மாற்றத்தில் இன்பம் இல்லையானாலும், ஒரு கம்பீரம். இவ்வளவு நாளும் இப்படி இல்லாமல் போனோமே என்கிற குற்றவுணர்வு. இதற்கு வட்டியும் முதலுமாய் கணக்குத் தீர்க்க வேண்டும் என்கிற வைராக்கியம். ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு, தான் எந்த விதத்திலும் சளைத்தவலில்லை என்பதை காட்டத் துடிக்கும் கங்கணம்.  அந்தச் சமயம் பார்த்து கடைநிலை ஊழியரான கேசவன் கைகளில் ஒரு சுமை காகிதக் குவியலோடு வந்தார். வந்ததும் வராததுமாய் அப்படி வந்ததுக்கு விளக்கமும் வழங்கினார். உடையும் சரி, உடம்பும் சரி யூனிபாரம் அற்றவர்...  'எல்லாம் தீபாவளி லோன் விண்ணப்பங்க -- சீக்கிரமா கையெழுத்துப் போடுங்கம்மா. இன்னிக்குப் போனாத்தான், பி.ஏ.ஓ ஆபீஸ்ல பில் போடுவாங்களாம்'.  'இந்தா பாருங்க கேசவன் ஒங்களோட தீபாவளி அட்வான்ஸ், ஸ்கூட்டர் அட்வான்ஸ், எல்.டி.சி அட்வான்ஸ், டி.ஏ. அட்வான்ஸ், டிரான்ஸ்போர்ட் அட்வான்ஸ், பேங்க் கடன், கூட்டுறவு சங்கக் கடன், வீடு கட்டும் கடன், இதுங்களுல கையெழுத்துப் போடுறதுக்கு மட்டும்தான் இருக்கேன்னு நினைக்கிங்களா? இனிமே அந்த நினைப்பே வேண்டாம். நிர்வாக அதிகாரி மேஜையில வையுங்க... அவரு குறிப்பெழுதி அனுப்புவார்'.  'அவரு கையெழுத்து போடும் முன்னால அடுத்த தீபாவளி வந்துடும்மா'.  'இப்படி ஏடாகூடமா பேசினால், உங்கள ராமனாதபுரத்துக்கு மாற்ற வேண்டியதிருக்கும். அப்புறம். இதுக்கு மேல ஆபீசுக்கு வாரவங்கள என்னைப் பார்க்கச் சொல்லுங்க. நீங்க போகலாம்'.  'அம்மாவுக்கு உடம்புக்கு ஏதாவது...  'நான் நல்லாத்தான் இருக்கேன். உங்களுக்குத்தான் குளிரு விட்டிட்டு. சரி நீங்கப் போகலாம்'.  கேசவன், வர்த்தினியை அதிர்ந்து பார்த்தார். பிற்கு அளந்து பார்த்தார். 'வாங்குற சம்பளத்தில குப்பை கொட்ட முடியாதுன்னு தெரியும். தீபாவளி விண்ண்ப்பங்கள நேரா எங்கிட்ட கொண்டுவாங்க என்று முந்தா நாள் சொன்ன அம்மாவுக்கு என்னாயிட்டு? கடவுளே... கடவுளே... இவங்களுக்கு ஏதும் ஆயிடப்படாது'.  'கேசவன். நீங்க போகலாமுன்னு தமிழிலதானேச் சொன்னேன்'.  கேசவன் தலையற்ற முண்டம்போல் நடந்து உள்ளே வந்த நந்தினியின் மேல் முட்டியபோது, அவள் ஒங்களுக்கு என்னாச்சு நாயினா செல்லமாக கேட்டபடியே, வர்த்தினியின் முன்னால் வந்து நின்றாள். மேடமோ எள்ளும் கொள்ளுமாய் கேட்டாள்.  'ஏன் லேட்டு'  'அப்பவே வந்துட்டேம்மா. வீட்ல அவரும் மாமியாரும் கூட்டணி வச்சு என்னப் படாதபாடு படுத்திட்டாங்க'.  'ஆபீஸ் விஷயத்த மட்டும் பேசுவோமா, ஏன் லேட்டு'  'கேன்டின் போனேம்மா'.  'சம்பளம் வாங்கிறது வேலை பார்க்கத்தான். சாப்பிடறதுக்கு இல்ல. அப்புறம் ஒரு விஷயம். இது தலைமை அதிகாரியோட அறை இங்கே நின்னுக்கிட்டு சகஊழியர்கிட்ட நயினா கியினான்னு குசலம் விசாரிக்கப்படாது. நாளைமுதல் சரியான நேரத்தில வரணும். நீங்க போகலாம். அப்புறம் யாரும், இண்டர்காம்ல என்கிட்ட அனுமதி வாங்காம உள்ளே வரப்பிடாது. எல்லார்கிட்டயும் சொல்லிடு, சாரி சொல்லிடுங்க...  சராசரி உயரத்துக்கும் அதிக உயரமான நந்தினி, குள்ளப் பெண்ணாய் குமைந்தபடியே கால்களை நகர்த்தினாள். மாமியார் படுத்தும் பாட்டை இவள் சொல்லாமலே இந்த அம்மாவே கேட்டு ஆறுதல் சொல்கிறவர். தனது மகனைப் பற்றி அடிக்கடி விசாரிப்பவர். இந்த அம்மாவுக்கு என்னாச்சு?  வர்த்தினி, கோப்புக்களை கடிகாரத்தின் பெரிய முள்ளாக பார்த்து. வினாடி முள்ளாக இயங்கிக் கொண்டிருந்தாள். பகல் உணவு வேளை வந்தது. கேன்டினில் கேட்ட ஒசையினால் மட்டுமே புரிந்தது.  வர்த்தினி, உணவு பறிமார வந்த கேசவனை கையாட்டிப் போகச் சொல்லிவிட்டு, கேரியரைத் தூக்கிக் கொண்டு அந்த அறைக்குள்ளே குட்டி போட்ட இளைப்பாரும் அறைக்குள் போனாள். அவளை அவன்ளயும் மீறி கடந்த கால நிகழ்ச்சிகள் நினைவு படுத்தின. இந்நேரம் நந்தினி ஒரு சப்பாத்தியை கொண்டு வந்து கொடுப்பாள். பட்டிலும் மென்மையானது. கேசவன் அவளுக்குப் பிடித்த நார்த்தங்காய் ஊறுகாயை கொண்டு வருவார். ராமசாமி ஒரு கைப்பிடித் தயிர்ச் சாதத்தை கொண்டு வந்து தட்டில் வைப்பான். அவன் மனைவிக்கு என்ன மாயம் தெரியுமோ, மந்திரம் தெரியுமோ பார்ப்பதற்கு பரம சாதுவாக தெரியும் தயிர்ச் சாதம், வாய்க்குள் போனவுடன் காரமாகும்... மணமாகும்... உண்டறியாச் சுவையாகும். 'சாப்பிடுங்கம்மா... சாப்பிடுங்கம்மா...' என்ற கெஞ்சல்கள் எழும்.  மேடம் வர்த்தினி சுதாரித்துக் கொண்டாள்... அவள் சாப்பாட்டு ராணியல்ல. அலுவலக அரசி. அதுகள சாப்பாடு போட்டே தன்னைச் சாப்பிட அனுமதிக்க முடியாது - சாப்பாட்டை விட முக்கியம் அந்தஸ்து. ஒப்புணர்வைவிட பெரியது பதவி - அதன் கவுரவத்த காப்பாத்தனும்,  வர்த்தினி, சுழல் நாற்காலியில் மீண்டும் உட்கார்ந்தாள். அந்தக் குளிர்சாதன அறையிலும் அவள் உடல் வேர்த்தது. நேரம் ஆகஆக, எதையோ ஒன்றை இழந்தது போன்ற பாதிப்பு. சுதந்திரமாய் சக இனத்துடன் உயரப் பறந்து திரிந்த பறவை ஒன்று, திடீரென்று புலியாக உருமாற்றம் பெற்று குகைக்குள் இருபபது போல் ஒரு பிரமை, அந்த அறையே அவளுக்கு ஒரு காடானது. ஆள் அரவமற்ற சூனியம். ஆனாலும் சூனியத்தில்தான் சூட்சுமம் இருப்பதை கண்டதுபோன்ற பிடிவாதம்...  இதற்குள் தொலைபேசி குரலிட்டது. அந்தக் குரலை கையால் அடக்கியபடியே வர்த்தினி பேசினாள்.  'இது அரசாங்க போன். சொந்த விஷயங்கள பேசக்கூடாது. சரி இதுதான்... கடைசித் தடவை. என்ன விஷயமுன்னு சொல்லுங்க. நான் நந்தினிகிட்ட பாஸான் செய்கிறேன். என்ன - ராமுவுக்கு வலிப்பா - என்ன மாமியார் நீங்க - ஆஸ்பத்திரியில சேர்க்காமல் மருமகளுக்காக காத்துக் கிடக்கிறீங்களே. பேரனுக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல -- மருமகள் சீரழிஞ்சா போதும் என்கிற நினைப்பா? சரி சரி போன வையுங்க'.  வர்த்தினி, சேதி சொல்வதற்காக இண்டர்காமை தொட்ட கரங்களை சுருக்கிக் கொண்டாள். நந்தினியோட ஐந்து வயதுப் பயல் ராமுவுக்கு வலிப்பாம் - சரியான சுட்டிப் பயல். விஜயதசமியோட, நந்தினி இந்தப் பயல இங்கே கூட்டி வந்தாள். நேத்திரம் பழ நேர்த்தி, கொடி முல்லை போன்ற லாவகம் - அழகான மனிதக் குட்டி. இதே மேஜையில் ஏறி உட்கார்ந்த படியே 'ஆன்டி... ஆன்டி.. - நீ நல்லவள்னு மம்மி சொல்றாள் -- நெசமாவா?' என்று கேட்டு அவளை குறுக்கு வெட்டாய் பார்த்த பயல். டில்லியில் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மகனின் ஐந்து வயது சாயல்.  வர்த்தினி, துண்டித்துக் கிடந்த தனியறையிலிருந்து வெளியேறி, பரந்து விரிந்த அலுவலகத்திற்குள் போனாள். பயத்தோடு எழுந்த அத்தனை பேரையும் கையமர்த்தி உட்கார வைத்துவிட்டு, நந்தினியின் முன்னால் போய் நின்று மேஜைமேல் கையூன்றி குவிந்தபடியே சேதி சொன்னாள். உடனடியாய் எழுந்து கீழே விழப்போன நந்தினியை தாங்கிக் கொண்டாள். அவள் மீது போட்ட பிடியை விடாமலே சுற்று முற்றும் பார்த்து ஆணையிட்டாள். அவளை அவளாக்கிய ஆணை.  'அழாதே நந்தினி. இப்ப வலிப்பு நின்னுட்டாம். ஆனாலும் ஆஸ்பத்திரியில சேர்த்துடுவோம் --- இந்தாப்பா ராமசாமி காரை ரெடி பண்ணு - இந்தமாதிரி சமயத்துல ஆபீஸ் காரை பயன் படுத்துறதுக்கு விதிகள் இருக்கு. கேசவன் நீங்களும் என்னோட வாங்க. சீதா நந்தினியை கூட்டி வா. இந்தாப்பா நாடிமுத்து - தீபாவளி விண்ணப்பங்கள என் டேபிள்ல வச்சுடு'.  14.  திருப்பம்   நீலா, தனது சபதத்தை இப்ப்டி நிறைவேற்றிக் காட்டுவாள் என்று ராமலிங்கம் நினைக்கவே இல்லை. அரசுப் பயணமாய், டில்லி சென்ற இருவாரக் காலத்திலும், அவள் சபதம் ஒரு பொருட்டாக தோன்றவில்லை. அப்படியே சிற்சில சமயம் வந்போது 'பைத்தியக்காரப் பொண்ணு' என்று மனதிற்குள்பேச, அந்தப்பேச்சே வாய் மத்தியில் கோடிட்டது. வீட்டுக்கு வந்ததும், அவளைச் சமாதானப் படுத்தவேண்டும் என்றுகூட நினைத்திருந்தார். அந்தப் புறா, தனது குஞ்சுகளோடு, பறந்துபோனதை, இன்னும் அவரால் நம்ப முடியவில்லை.  நம்பித்தான் ஆகவேண்டும் என்பது போல் அந்த பெரிய கதவில் ஒரு சின்னப் பூட்டு, ஒரு பெரும் உறவை, ஒரு சின்ன விவகாரம் சிதைத்து விட்டது என்பது போல் காட்டும் காய்ப்பு பிடித்த பூட்டு. மூன்றடுக்கு தேக்குத் தாமரைப்பூக்கள் பொறித்த அந்த கதவிற்கு வலது பக்கமாய் திறந்திருந்த ஒற்றைச் சன்னல் வழியாய் கண்களை ஊடுருவவிட்டார். முன்னறை முழுவதும் விதவிதமான காகிதச் சுருள்கள்.... துண்டுப்பட்ட சணல்கயிருகள். எல்லாவற்றிற்கும் மேலாய், முன்னால் - துருத்தி, பின்னால் வளைந்து கலைப்பாடாய்த் தோன்றும் சீனப் பொம்மையைப் போல் தேக்குச் சட்ட வேலியிட்ட கண்ணாடிப் பேழை வெறுமையாய் தோற்றம் காட்டியது.  ராமலிங்கம், அந்தச் சாளரத்தின் இரும்புப் புருவங்களை ஒரு குத்துக்குத்தியபடியே. காரில் சூட்கேஸ், பெட்டிப்படுக்கை வகையறாக்களை, முதலைபோல் வாய் திறந்த டிக்கியிலிருந்து எடுத்துக்கொண்டிருந்த டிரைவருக்கு. கைகொடுக்கும் வழக்கத்தை மறந்தவராய், மாடிப்படிகளில் குதித் தோடினார். வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக 'நீலா' என்று அவர் இழுத்தபோது, மங்கையர்க்கரசி 'இப்போ உங்களுக்கு திருப்திதானே' என்று சொல்லிவிட்டு, அவர் ஏறிட்டுப் பார்க்கக்கூட தகுதியற்றவர் என்பதுபோல் உள்ளே போய்விட்டாள்.  ராமலிங்கம், ஒற்றைச்சோபா இருக்கையில் தொப்பென்று விழுந்தார். பின்னர் அதிலிருந்து எழுந்து நீண்ட சோபாவில் கைவிரித்து கால்விரித்துக் கிடந்தார். அந்தம்மா தண்ணீரோ மோரோ கொண்டுவந்து, அந்தத் தம்ளரை அவரது கரங்களில் திணிக்காமல் டொக்கென்று டிபாயில் வைத்தாள். நீலா, சென்னையில் இருக்கிறாளா அல்லது கோவைக்குப் போய்விட்டாளா என்று அவர் கேட்கப் போனார். அவள் கோவைக்குப் போகவில்லை என்று பதில் கிடைக்கவேண்டும் என்பதற்காக, எதிர்ப் பதிலை, தாங்க முடியாதவர் போல், அந்தக் கேள்வியைத் தள்ளிப்போட்டார்.  இவ்வளவிற்கும், நீலா அவர்களுடைய மகளல்ல. ஒட்டுப்புல்லாய் ஒட்டிக் கொள்ளும் உறவுப் பெண்ணும் அல்ல. கீழ்த்தளத்து வீட்டின் வாடகைக் காக வந்தவள்தான். இரண்டாண்டுகளுக்கு முன்பு, பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்துவிட்டு ஏழுவயது மகனோடும், நாலு வயது மகளோடும். இந்த வீட்டிற்குள் வந்தாள். 'எவ்வளவு சார் வாடகை... எவ்வளவு சார் முன்பணம்’ என்று வாசலில் நின்றபடியே கறாராகச் கேட்டாள். கட்டுபடி ஆகவில்லையானால், அப்படியே போய்விடலாம் என்பதுபோல் நின்று கொண்டிருந்தாள். இவர், அவளை உட்காரச் சொன்னார். அவரே எழுந்து பிள்ளைகளை உட்கார்த்தினார். ஆனாலும் ஒரு வீட்டுக்காரர், குடித்தன வீட்டை, கேள்வி முறையில்லாமல் விட்டுவிட முடியுமா?. எதிர் வீட்டுக்குண்டன், மாடிவீட்டை வயதான கிழவி என்று ஒருத்திக்குவிட, அவள் ஏழெட்டு பேத்திகளைக் கூட்டிவர, அப்புறம் மாமூல் பாக்கியால், போலீஸ் சோதனை, ஏற்பட்டு அந்தப் பெண்களில் சிலர் அலறியடித்துக் கொண்டு, இந்த வீட்டிற்குள் ஓடிவந்த போது, இவரே அப்படியொரு தொழில் செய்வதுபோல, காவலர்கள் அதட்டினார்கள்.  ராமலிங்கத்தின் அத்தனைக் கேள்விகளுக்கும், நீலா யோசனை செய்யாமலேயே பதிலளித்தாள். நாசூக்கானக் கேள்விகளுக்கு வெளிப்படையான பதில்கள்.... பெரிய இடத்துப்பெண்... காதல் திருமணம்.... பெற்றோர் தண்ணீர் தெளித்தல்.... அதே சமயம் சென்னையில் உள்ள ஒரு சின்னத் தொழிற் சாலையை விட்டுக்கொடுத்தல்....  ராமலிங்கம், 'இதெல்லாம் சகஜம்மா', என்று சொன்னபடியே, அவளுடைய மஞ்சள் கயிரை நோட்டமிட்டார். அவள் முகத்தையும் அதனையும் மாறிமாறிப் பார்த்தார். அதைப்புரிந்து கொண்டது போல், அவள் தலை கவிழ்ந்தாள். வீடு கிடைக்காது என்ற அனுமானத்தில் எழுவதற்கு முயற்சியாய் இருக்கையில் கையூன்றினாள். ஆனால் ராமலி ங்கம், அவளை ஆசுவாசப்படுத்திய படியே அகமகிழ்ந்தார். 'ஆண் துணையற்ற - அனாதரவான - அதே சமயம் வாடகை பாக்கி வைக்காத ஒரு குடித்தனம் எந்த வீட்டுக்காரருக்கும் ஒரு வரப்பிரசாதம் அல்லவோ?' இப்படித்தான், தெற்கு வீட்டுக்காரன், தீரவிசாரிக்காமல், அதிக வாடகைக்கு ஆசைப்பட்டு, ஒருத்தனுக்கு வீட்டை விட அந்த ஒருத்தன். பின்பத்தியிலிருந்து, இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தபால் அலுவலகத்திற்கு நடந்து போய், முன்பத்தியிலுள்ள வீட்டுக்காரருக்கு, மணியார்டர் செய்கிறான். அந்த ரசீது நகல்களை கண்கொத்திப்பாம்பான மாநகராட்சிக்கும், கழுகுக் கார வருமானவரித்துறைக்கும் அனுப்பப் போவதாக மிரட்டுகிறானாம். இந்தப் பின்னணியில், நீலாவுக்கு வரவேற்பு வளையம் கூட வைக்கலாம்.  என்றாலும், கீழ் வீட்டிற்கு குடித்தனமாய் வந்த ஒருமாத காலத்திற்குள், நீலா இவர்களுடன் ஒன்றி விட்டாள். பள்ளிக்கூடம் அற்றுப்போன நாட்களில், அவள் பிள்ளைகள், இதே இந்த சோபா செட்டில் உருண்டு புரள்வதோடு, மங்கையர்கரசியை டிஸ்கோவுக்கு கூப்பிடுவார்கள். உடனே அந்தம்மா நாணிக்கோணி இவரைப் பார்ப்பது. அந்த டிஸ்கோவிற்கு இவரையும் கூப்பிடுவதுபோல் இருக்கும். அதோடு, யார் வீட்டில் யார், அதிகமாக சாப்பிட்டு இருப்பார்கள் என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். நீலாவுக்கு 'சார்' அப்பாவானார். 'மேடம்' , அம்மாவானாள். ஒரு தடவை 'எப்பா, எம்மா - நான் உங்களுக்கு வாரிசு இல்லாத மகள்' என்றாள். பிறகு ஒரு குமிழ்ச் சிரிப்போடு. 'கவலைப்படாதீங்க அப்பா... அம்மாவுக்கு இப்பகூட குழந்தைப் பிறக்கலாம்.... ஐம்பது வயதிலும் பெண்களுக்கு குழந்தை பிறந்திருக்கு’ என்ற போது, அந்த உச்ச வரம்பு வயதைத்தாண்டிப்போன மங்கையர்கரசிக்கு, அதிலும் ஒரிரு ஆண்டுகள் விலக்குக் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டாள். அதிலிருந்து இந்த ராமலிங்கத்தை தனியாக படுக்கவிடுவதே இல்லை.  ராமலிங்கம், அவசர அவசரமாய், பல் தேய்த்து விட்டு, மீண்டும் இருந்த இடத்திலேயே திரும்பி உட்கார்ந்து, அனிச்சையாய் குடைசாய்ந்த கைகளை வெறுமையாய் வீசிப் போட்டார். அந்தக் ககைகள் சாய்வதற்கு, நீலாவின் குழந்தைகள் இல்லை. செவ்வரளி மொட்டுக்களாய் அவரது தோளுக்கு ஒன்றாய் தலைபோட்டு கங்காரு மாதிரி தலையாட்டும் பிள்ளைகள். அவரை தாத்தாவகாமலேயே தாத்தாவாக்கியப் பிள்ளைகள்.  ராமலிங்கம், மலரும் நினைவுகளை கருக்கிக் கொண்டிருந்தபோது, திரைமறைவில் உள்ள சாப்பாட்டு மேஜையில் பல தடவை டொக்குச் சத்தங்கள்... இவர் சாய்ந்து பார்த்தால், மங்கையர்கரசி, அவரை கூப்பிடா மலேயே வாழையிலையில் பறிமாறியபடியே தன் பாட்டுக்குச் சொல்வதுபோல் சொன்னாள்.  'எதையுமே நினைத்துப் பார்க்கணும்... வீடு... 'ஆபிஸ் இல்ல.... குடித்தனக்கார்ங்க... சபார்டினேட்டும் இல்ல... அதோட, அந்தப் பாவிப்பொண்ணு, குடித்தனக்காரி மாதிரியா நடந்துக்கிட்டாள்?. கோயம்பத்துர்ல பெத்தவங்க, தங்களோட வந்து இருக்கும்படி கடந்த ஆறுமாசமா வற்புறுத்துனாங்களாம். இவள்தான் 'எங்க அப்பாம்மா, மெட்ராஸ்ல இருக்காங்கன்னு' சொன்னாளாம். அப்படிப்பட்ட பொண்ண, துரத்தியாச்சு.... இனி இந்த வீட்டுல என்னைத் துரத்த வேண்டியதுதான் பாக்கி....'  வாழையிலையில் குவியலாய்ப் போட்ட அரிசிச் சோற்றை சமப்படுத்தியபடியே, மங்கையர்கரசி, பேசிக்கொண்டே போனாள். போயும் போயும் ஒரு நாய்தானர் எதிரி என்று ஒரு கேள்வியைப் போட்டு, அதற்குப் பதிலையும் சொல்லிக்கொண்டிருந்தாள் ஒரு நாய்க்குரிய நல்ல குணங்களையும், மனிதனுக்கு குறிப்பாக இந்த ராமலிங்கத்திற்கு உள்ள கெட்ட குணங்களையும் ஒப்பிட்டுக் கொண்டே போனாள்.  அநியாயமான கோபத்திற்குப் பழக்கப்பட்ட ராமலிங்கத்திற்கு, இப்போது நியாயமான கோபம், வாய் புரண்டோடப் போனது. ஆனாலும் அடக்கிக் கொண்டார். புதுடில்லியில் இந்த டூரில், ஓர் இரவில், அவர் 'மப்பில்' இருந்தபோது, இவர் நீட்டிய கிளாசை வாயில் கவிழ்த்துக்கொண்டே, இவரது உதவியாளர் 'சார் நீங்க நல்லவர்தான்... ஆனாலும் டென்ஷன் பிடிச்ச ஆசாமி... சின்ன விஷயத்துக்கும் குதியாய் குதிப்பிங்க' என்று சொன்னதை நினைத்துக் கொண்டார். 'இதோ இவள் பேசுகிற பெரிய விஷயத்துக்குக்கூட டென்ஷன் ஆகல... பாருடா' என்று கிளாஸ்மேட்டிடம் மானசீகமாகப் பேசிக்கொண்டார். அந்தம்மாவின், ஏச்சுக் கலந்த பேச்சு, மேலே மேலே, போக இவரும், தான்_பெருந்தன்மையானவன், பொறுமைசாலி என்று தன்னைத்தானே மேலேமேலே நினைத்துக் கொண்டார். பொறுமையிழந்து, பலூன் மாதிரி அவர் வெடிக்கப் போனபோது, அந்த அம்மா ஆறிப்போன குழம்பை சுட வைப்பதற்காக சமையல் அறைக்குள் போய்விட்டாள். 'நாமளும் ஒரு காலத்துல தெருவுல கிடந்ததை நினைத்துப்பார்க்கணும். தெரு நாயின்னு இளக்காரம் கூடாது' என்று அவரை எதிரித்தனமாய் பார்த்துப் பேசியபடியேதான், உள்ளே போனாள்.  ராமலிங்கம், தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டார். நாய்களை வெறுப்பதில், அவருக்கு வர்க்கபேதம் கிடையாது. எல்லா நாய்களுமே இனத்துரோகிகள். இந்தப் பட்டியலில் 'மானமிகு பங்களா நாயும், மாண்பற்ற தெரு நாயும் இடம் பிடித்தவை.' இன்னும் சொல்லப்போனால், முதலாளித்துவ பங்களா நாய்களையே அதிகமாக வெறுத்தார். இப்படித்தான் அடுத்தத் தெருப்பயல் - முடியே இல்லாத உரித்தக் கோழி நிறத்திலான ஒரு மொக்கை நாயை இரும்புச் சங்கிலி யால் பிடித்துக் கொண்டு, இந்தத் தெருவுக்கு வருவான். சரியாக இவர் வீட்டு வாசலுக்கு முன்னாலேயே அந்த நாயை 'வெளிக்கிப்' பேர்க வைப்பான். இவர் ஒரு நாள் தட்டிக் கேட்டார். உடனே இவரை பகையாய் பார்த்தபடியே 'உன் வீட்டுக்குள்ளயா வந்து விடுறேன்.' இது 'பப்ளிக் ரோடு' என்றான். இளமையிலேயே, பஸ்கி, தண்டா எடுத்தவர் ராமலிங்கம், அப்போதெல்லாம், தெருவில் எவனாவது உருண்டு திரண்டவன் எதிரே வந்தால் அவனை தன்னால் அடித்து விடமுடியுமா என்று யோசிப்பார். எப்படி அடித்து அவனை வீழ்த்தலாம் என்றுகூட நினைப்பார். இப்போதும் அடுத்தத் தெருப் பயலை அப்படித்தான் நினைத்தார். அதேசமயம் வள்ளுவர் வாக்காக்கிய மாற்றானின் துணைவலியை - அதாவது இன்னும் வெளிக்கி போய்க்கொண்டே இருக்கும் அந்த நாய் வலியை நினைத்து, பின்வாங்கி விட்டார். ஒரு நாய் வளர்க்க வேண்டும் என்று மங்கையர்கரசி சொன்னபோது, நிராகரித்தவர்.  சூடான குழம்பை சுமந்த கிண்ணத்துடன், சாப்பாட்டு மேஜைக்கு மீண்டும் வந்த மங்கையர்கரசி, விட்ட இடத்தைத் தொடர்ந்தாள்.  'எத்தனை தடவ சொந்தக் கார்ல கோவில் குளத்திற்கு கூட்டிப்போயிருப்பாள்? எத்தனை தடவை, நான் முடியாம முடங்கும்போதெல்லாம், என்னை ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போறதும், இந்த வீட்டுல இருக்கிறவருக்கு ஆக்கிப் போடறதுமா இருந்திருப்பாள்? கோயம்புத்துருக்கு போகும்போது, என் கழுத்தை கட்டிக்கிட்டு... அவள் அழுத அழுகை இருக்குதே... அந்த பிள்ளைகள் துடித்த துடிப்பு இருக்குதே... அது பிள்ளக்குட்டி பெத்தவங்களுக்குத்தான் தெரியும்.'  பிள்ளைக்குட்டி பெறாத நிலைமைக்கு, அவர் மட்டுமே பொறுப்பு என்பதுபோல அந்தம்மா பேசப்பேச, ராமலிங்கம் தனக்குத்தானே சிரித்துக் கொண்டார். பின்னர், அந்தப் பொண்ணு, கோவைக்குப் போய்விட்டாள் என்ற தகவல் அறிந்து, குற்றவாளிபோல் குமுறினார். நீலாவுக்கும் அவருக்கும் ஏற்பட்ட நாய் விவகாரம், இப்போது, நாய்த்தனமாகத் தெரிந்தது. நடந்து போன நிகழ்வுகளை பாதி நினைத்து மீதியைத் தொடரமுடியாமலேயே அவர் கண்களை மூடினார்.  எந்த நாயும் இல்லாத அந்த தெருவிற்கு, எங்கிருந்தோ வந்தது ஒரு தெருநாய். கருப்புத் தோலும் வெள்ளைத் திட்டுக்களும் கொண்ட அனாதை நாய். ஆரம்பத்தில் எந்த வீட்டிற்குள்ளும் நுழையாமல், அந்த தெருவிற்குள்ளேயே ஒரு எல்லையை வகுத்துக்கொண்டு, உலா வந்தது. நீலாவிற்கு, இந்த நாய் பிடித்துப் போய்விட்டது. தெருவெங்கும் சுற்றி இந்த நாயைத் தேடிப்பிடித்து மூன்று வேளையும் உணவுக்குவியலைப் போடுவாள். இதுகெட்டக் கேட்டிற்கு ரோஸி என்று வேறு பெயரிட்டாள் அந்தச்சாக்கில், அந்த நாய் இந்த வீட்டு வளாகத்திற் குள்ளேயே வந்துவிட்டது. காருக்கு அடியில் கிடக்கும். கார் மக்கார்டில் படுத்தபடி வாலை கார்க்கண்ணாடியில் வைபர் மாதிரி ஆட்டும். வீட்டு ஒனரான இவரைப்பார்த்தே குலைக்கும். இவரால் கண்டுக்காமல் இருக்கமுடியவில்லை. ஒரு சின்னக் கல்லாய் எடுத்து எறிவார். குறி தவறும்போது, நாய்மாதிரியே பல்லைக் கடித்து உறுமுவார். போகப்போக, அந்த நாயும் அவரைப்பார்த்ததும் பயப்பக்தியோடு, ஒரு தடவை மட்டும் வாலாட்டிவிட்டு காம்பெளண்ட் சுவரில் குதித்து தெருவுக்குத் தாவிவிடும்.  இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், இவர், நீலாவிடம், இது கடித்தால், தொப்புளில் நாற்பது தடவை ஊசி போட வேண்டும் என்றும், இல்லையென்றால் நாய் மாதிரியே குரைக்க வேண்டியது இருக்கும் என்றும் விளக்கினார். நீலா சிரித்து மழுப்பினாள். ரோஸி நல்ல பெண் என்று சான்றிதழ் கொடுத்தாள். அது நல்ல பெண்ணோ... கெட்ட பெண்ணோ... பெண் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. இரவில் ஏழெட்டு ஆண் நாய்கள், இந்த வளாகத்திற்குள்ளே வந்து விடும். அவைகளுக்கும் இந்த நாய்க்கும் இந்த இடம் மன்மத பூமியானது. இவை வெளிப்படுத்துகிற காதல் சத்தங்களும், சமிக்ஞைகளும், இவரை படாத பாடுபடுத்தும். இவரது தூக்கம் கெட்டதோடு, ஐம்பதைத் தாண்டிய மங்யைர்கரசியின் தூக்கமும் கெட்டது. இனிப் பொறுப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்தார்.  இப்படித்தான் ஒரு நாள். லேசான மழைத்துரல்.... வானம் நீர்த்துளிகளை ஒளித்துளிகளாக இறக்கிக் கொண்டிருந்தத வேளை.... ராமலிங்கம், ஒரு குடையோடு கீழே இறங்கினார். கீழ்வீட்டுப் படிக்கட்டில், செமத்தையாக வைக்கப்பட்ட உணவு வகையறாக்களை, அந்தத் தெருநாய், கவளம் களவமாய் கவ்வி, தலையை மேலும் கீழுமாய் ஆட்டி உள்ளே அனுப்புகிறது. கோழித்துண்டுகள் வாய்க்குள் போகும்போ தெல்லாம், வாசல் படியில் சாய்ந்தபடியே ஒரு தாயின் பூரிப்போடு பார்க்கும் நீலாவைப் பார்த்து வாலாட்டியது. ராமலிங்கத்திற்கு, கோபம் வந்தது. இதன் வயிறு இருபக்கமாய் புடைத்து நெளிவதைப் பார்த்தால் அது சாப்பாட்டால் மட்டும் அப்படி உப்பிப்போகவில்லை என்பதும் புரிந்தது. இரவுநேரக் களியாட்டத்தின் பகல் நேரச் சாட்சிள். இது, ஐந்தாறு குட்டிகளையாவது போடும். அந்த ஐந்தாறுக்கும் இந்த நீலா ஸ்வீட்டி, ராமு, ராணி, ஜானி, மோனி போன்ற பெயர்களைச் சூட்டி மகிழ்வாள். பெயரிட்டவள் என்பதற்காக அந்த நாய்க் குட்டிகளுக்கும் உண்டி கொடுத்து உயிர்கொடுப்பாள். மாநகராட்சி நாய் வண்டியின் உபயத்தால். இந்தத் தெரு, இந்த நாய் வருவதற்கு முன்பு வரை துப்புரவாக இருந்தது. இது குட்டிகளைப் போட்டுவிட்டால், இந்த இரண்டாவது கிராஸை, நாய்தெரு என்றே கூப்பிடப் போகிறார்கள்.  ராமலிங்கத்திற்கு தெருப் பக்தி தீவிரமானது. அந்த நாய் அளவிற்கு சிறிது குனிந்து போப்போ என்றார். அது கண்டு கொள்ளவில்லை. அவரைக் கண்டவுடன் மரியாதையோடு விலகிக்கொள்ளும் அந்த நாய், 'நீ என்னடா சொல்வது' என்பது போல் ஒரு தடவை அவரை அலட்சியமாகப் பார்த்து விட்டு, மறுதடவை, நீலாவை பார்த்து வாலை ஆட்டியது. இது. ராமலிங்கத்திற்கு அவமானமாகப்பட்டது. அவரை சினக்க வைத்தது. உடனே, குடைக்கம்பால் அதன் தலையை ஒரு தட்டுத் தட்டினார். கழுத்தில் ஒரு இடி இடித்தார். அவ்வளவுதான்.... அந்த நாய் சரணடைந்ததது போல், வாலை பின்னங் கால்களுக்கு இடையே சொருகிக் கொண்டு, வலி தாங்க முடியாமல், சுற்றிசுற்றி வந்தது. ராமலிங்கம் வெற்றிப் பெருமிதத்தில், அதன் காலில் ஒரு தட்டுத்தட்டினார். அந்த நாய் நொண்டியடித்து நீலாவை அனுதாபம் தேடிப்பார்த்துவிட்டு, சுற்றுச் சுவரில் தாவப் போனது. இயலாது போகவே லேசாய்த் திறந்திருந்த இரும்புக் கிராதிக் கதவை தள்ளியபடியே ஓடியது.  நீலாவிடமிருந்து, வார்த்தைகள் சிவந்து விழுந்தன.  'என்னப்பா நீங்க..... இடுவார் பிச்சையை கெடுவார் கெடுப்பார் மாதிரி.... ஒரு வாயில்லாப் பிராணியை இப்படி அடிச்சிட்டிங்களே. அது கோபத்தில கடிச்சா என்ன செய்வீங்களாம்?'  'போகிற போக்கைப் பார்த்தால், நீயே நாயை ஏவி, என்னை கடிக்க செய்வ போலிருக்குகே'  'ஏன் கோபம் கோபமாக பேசுறீங்க',  'நான் கெடுவார் இல்ல. லேன்ட் லார்டு. இந்த வீட்டோட ஒனர். சில கட்டுப்பாடுகளை விதிக்க, எனக்கு உரிமை உண்டு'.  'அப்படிங்களா சார்.... ஒரு பதினைந்து நாள் டைம் கொடுங்க. நானே வீட்டைக் காலிசெய்து விடுவேன். எனக்கும் சுயமரியாதை இருக்குது.  'அவரவர் இஷ்டம்'  ஆக்குவதற்கு வருடங்கள், அழிப்பதற்கு நிமிடங்கள் என்பது கண் முன்னாலேயே நிகழ்ந்து விட்டது. அச்சாணி கழன்ற தேர்போல அப்பா - மகள் உறவு, ஒரு சின்ன விவகாரத்தில் சிதைந்து போனது. ஐந்து நிமிடங்களிலேயே, அன்னியோனியமாய் பழகிய இருவரும் அந்நியர் ஆனார்கள். அவள் கதவ்ைச் சாத்தினாள். இவர் குடைவிரிக்க மறந்து மழையில் நனைந்தபடியே தெருவில் நடந்தார்.  இப்போது நினைத்துப் பார்க்கும் ராமலிங்கத்திற்கு, மனம் தாளவில்லை. அந்த மனதை மழுப்புவதற்காக, 'சொந்த மகளாக இருந்தால் இப்படிப் போயிருப்பாளா' என்று மனம் கேட்டது . 'உன் மகளாக இருந்தால் இப்படிப் பேசியிருப்பாயா' என்று மூளை பதிலடி கொடுத்தது. மனம், மூளையையும், மூளை மனதையும் சீண்டிக் கொண்டன. கைகள் உதறிக் கொண்டன. கண்கள் சொருகிக் கொண்டன.  மங்கையர்கரசி. வாழையிலைச் சோற்றில், மீன்குழம்பை ஊற்றினாள். அது பருக்கைகளில் ஊடுறுவி, செஞ்சிவப்பாய் கசிந்தது. அவள் கையில் இருந்த மீன் துண்டுகள், பாளம்பாளமாய் இலையில் இறங்கின. பச்சைத் தளத்தில் அந்த செந்நிறத் துண்டுகள் இலையை மரகதப்பச்சையாக காட்டின. மங்கையர்கரசி அவரை அழைப்பதற்காக திருப்பினாள். அப்போது பல்வேறு குமுறல்கள். அவளிடமிருந்து வெளிப்பட்டன. ஒவ்வொரு குமுறலும், அவரை பல செக்ஷன்களில் குற்றஞ்சாட்டி கூண்டில் ஏற்றியது. பிராணிகளை வதை செய்த குற்றம். ஒரு பெண்ணின் மனதை புண்படுத்தி வெளியேற்றிய குற்றம். வீட்டுக்காரர் என்ற நிலப்பரப்பத்துவ மனோபாவம். அதிகாரி என்ற பூர்ஷ்வாத்தனம். இப்படி விதவிதமான குற்றச்சாட்டுகளை அந்தக் காலத்திலேயே பட்டதாரியான அந்தம்மா அடுக்கிக்கொண்டே போனாள். இறுதியில் ஒரு எச்சரிக்கையும் விடுத்தாள்.  "நீலா போனபிறகு, அந்த நாய் துடித்தத் துடிப்பு. மனுசங்களுக்குத்தான் புரியும். ரெண்டு நாள், இந்த வீட்டையே சுற்றிச்சுற்றி வந்தது. ஊளையிட்டு அழுதது. அப்புறம் பத்து நாளா இந்த வீட்டையே வெறிச்சப் பார்த்துக்கிட்டு அந்த குப்பமேட்டுல, வாடி வதங்கிக் கிடக்குது. அந்தப் பாவம், இந்த வீட்டை என்னெல்லாம் செய்யப்போகுதோ..."  ராமலிங்கம், துள்ளி எழுந்தார். இவ்வளவு அக்கறையாகப் பேசுகிறவள். நீலா காலிசெய்கிறதுக்கு ஒரு நாளைக்கு முன்னாலாவது, விவகாரத்தை தன்னிடம் டெலிபோனில் சொல்லாததில் ஒரு கோபம். அந்த சாப்பாட்டு மேஜையை நோக்கி, கைவீசி கால்வீசி நடந்தார். அந்தம்மாள் பயந்து போனாள். பேச்சை நிறுத்திவிட்டு, அவரை பீதியோடு பார்த்தாள். காட்டுத்தனமாய் கத்துவாரேயன்றி, இதுவரை கைநீட்டியதில்லை. அந்தக் குறையையும் நீக்கிவிடுவாரோ, என்ற அச்சம்.  ராமலிங்கம், மீன் மயமான வாழையிலையை வாரிச்சுருட்டி எடுத்து, பட்டை மாதிரி ஆக்கிக் கொண்டு, அந்தம்மாவை திரும்பிப் பாராமலேயே திரும்பி நடந்தார். அவள் பால்கனி வழியாக எட்டிப்பார்க்கும் போது இவர் குப்பை மேட்டுற்குப் போய்விட்டார்.  இருபக்கத்து நிலத்திலும் வீடுகட்டத் தோண்டப் பட்ட மண்குவியல்கள் அந்த நடுநிலத்தைப் புதைத்துவிட்டது. அதன் மேல் மண் சமாதி உருவாகி அதுவே குப்பை மேடானது. அந்த உரத்தில் தழைத்த எருக்கஞ் செடிகளின் வளைவுக்குள், அதே நாய் முன்னங்கால்களை நீட்டி அதில் முகம் புதைத்து கிடந்தது. அதன் வயிறு விம்மிப் புடைத்து அங்குமிங்குமாய் நெளிந்தது. ராமலிங்கம், அதன் முன்னால் போய், அந்த வாழையிலையை கீழே வைத்தார். அந்தச் சோற்றின் மீன்வாசனை அவரையே உட்கார வைக்கப்போனது. ஏகப்பட்டக் காகங்கள், நாய்க்கும் அவருக்கும் பயந்து, குய்யோ முறையோ என்ற பசி ஒலத்துடன் அரை வட்டமாய் பறந்தன. கால் முளைத்த மேகம்போல் ஒன்றாய் திரண்ட காகங்களை துரத்தியபடியே, அந்த நாய் அருகே போய் 'தோ... தோ.... சோ... சோ... சுச்சுச்சு... சாப்பிடுப்பா, சாப்பிடு, சோச்சோச்சோ.... சாச்சோ..' என்றார். அந்த நாய்க்கு முன்னால் கையைக் கொண்டு போய், சுவையான சோறிருக்கும் இலையை சுட்டிக்காட்டினார்.  அந்த நாயோ, வாயருகே உள்ள அந்த சாதத்தைப் பொருட்படுத்தாமல் அப்படியே கிடந்தது. மீன் வாசனைக்கு தடைவிதிப்பது போல் அதன் மூக்குத் துவாரங்கள் இடுக்கிக் கொண்டன. அவர் அங்கே இல்லாதது போல் கண்களை மூடிக்கொண்டன.  ராமலிங்கம் நின்று பார்த்தார். சொல்லிப் பார்த்தார். காகங்களை விரட்டிப் பார்த்தார். அந்த நாயின் கண்படும் தொலைவில் போய்ப்பார்த்தார். அக்கம் பக்கம் வேடிக்கைப் பார்த்தவர்களை பொருட் படுத்தாது அந்த நாயை மட்டுமே பொருட்படுத்தினார். ஆனாலும் அந்த நாய், அவர் வரவை அங்கீகரிக்காமல் அப்படியே கிடந்தது.  அதிர்ச்சியுற்ற ராமலிங்கத்திற்கு, ஒரு கிராமத்துச் சொல்வடை, அவரைமீறி, ஒரு சுய பரிசீலனையாக, மனதிற்குள் பெருக்கெடுத்தது.  அவனை நாய்கூட திரும்பிப் பார்க்காது என்பர்களே.... அந்த அவன் நான்தானோ...!  15.  கொடி(ய)ப் பருவம்      மார்த்தாண்டம், அந்தத் தெருவை குறுக்கும் நெடுக்குமாய், இடதுபக்கம் நடந்து வலதுபக்கம் திரும்பியுமாய், பலதடவை நடந்து விட்டாலும், இன்னும் நடையை நிறுத்தவில்லை. பனியன் போடாததால், அவரது வெள்ளைச் சட்டை வேர்வை பெருக்கில் முதுகில் சரிகைபோல் ஒட்டி, இடுப்பிற்கும் கழுத்திற்கும் இடைப்பட்ட பகுதியை கேரிபேக்கில் வைக்கப்பட்ட சதைப்பிண்டமாய் காட்டியது. பலதடவை அந்தத் தெருவை அளவெடுத்து விட்டதால், அவர் உடம்பில் துருப்பிடித்த முதுமை, கால்களை நடக்க வைக்காமல், நகர்த்திக் கொண்டிருந்தது. ஆனாலும், உடம்பை சுமக்கமுடியாமல் சுமந்தபடியே, தொடர் நடையாய் நடந்தார். அந்த குறிப்பிட்ட இடத்தருகே வரும்போது மட்டும், சிறிது நிற்பார். பல்லைக் கடித்து சாடை மாடையாய்ப் பார்ப்பார். பின்னர் அங்கே காணும் காட்சியை கண்வாங்கினாலும், மனம் வாங்க முடியாமல், முணுமுணுத்தபடியே நகருவார். கால்கள் நகர்ந்து கொண்டிருந்தாலும் சிந்தனை அலைகள், அந்த இடத்தைச் சுற்றிச் சுற்றியே வந்தன. யோசித்து யோசித்து யோசனையே ஒரு செயலாகிவிட்டது.  அந்த பச்சை மழலையை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும். அந்தப் பாம்புப் பயலும் ஒரு வழியாக வேண்டும். அந்தச் சிறுமியும் சேதாரம் இல்லாமல் வழிப்படுத்தப்படவேண்டும். எப்படி என்பதுதான் பிரச்சனை. அதைக் கண்டுபிடிக்கவே இந்த நடை.  மார்த்தாண்டம், குறிப்பிட்ட அந்த இடத்தருகே வழக்கம் போல் மூச்சிளைக்க நின்றார். உள்ளே ஓரங்கட்டிப் பார்த்தார். இப்போது பார்க்க முடியாத அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. இவர் கண்களை மூடிக்கொண்டே சிந்தித்தார். இப்போது செயல்படவில்லையானால், எப்போதும் செயல்பட முடியாது. ஆனாலும், அவர், மனோவேகத்திற்கும், உடல் தளர்ச்சிக்கும் இடையே அல்லாடிக் கொண்டிருந்தார். இருபக்கமும் விதவிதமான கட்டிடங்களை, அலங்கார வேலியாகக் கொண்ட அந்தத் தெருவில், ஒரே ஒரு மொக்கையான காலி மனை... அதன் முன்பக்க காம்பெளவுண்ட் சுவர் மத்தியில் கேட் இல்லை. அதன் வாசல் வெளியில் நின்று பார்த்தால், நன்றாகவே தெரிகிறது. அரைகுறை ஆடைபோன்ற செடிகொடிகளான குட்டைப் புதர் மத்தியில், ஒரு ஆட்டோ... அதன் முன்னிருக்கையில் அலுமினிய டிபன் டப்பா... பின்னிருக்கையில், ஒரு சிறுமி. பதிமூன்று வயது இருக்கலாம். பெரியவளாகி விட்டாளோ... ஆகப்போகிறாளோ... சிறிது நேரம் வரை, அருகே இருக்கும் காக்கிச் சட்டைக்காரன் மீது குழைவாய் சாய்ந்திருந்தவள். இப்போது இருக்கையின் ஒருபுறத்து விளிம்புப் பிடியில் புத்தகப் பையை தலையணையாய் சரித்து, அதில் மல்லாக்க சரிந்து கிடக்கிறாள். அவளது நீலநிற குட்டைப் பாவாடை, மேலும் குட்டையாகிப்போனது. அவளது நிர்வாணக் கால்கள் அந்தப் பயலின் மடியில் மேலோங்கி கிடக்கின்றன. அவளது வெள்ளைச்சட்டையை பெருக்கல் குறியாய் அழுத்திய பெல்ட் துணி, முறுக்கேறி கிடக்கிறது. கழுத்தில் கட்டப்பட்ட ஊதாநிற டை சிறிது அகன்று, துக்கு வளையம் போல் தோன்றுகிறது. இவ்வளவுக்கும், பட்டப்பகல் பதினோறு மணி.... ஆங்காங்கே ஆட்கள் நடமாட்டம்... சிலநடமாடிகள், அந்த இடத்திற்கு வந்ததும், மலைத்துப் பார்க்கிறார்கள்... சிலர் ரசித்து நெளிகிறார்கள்... பெண்களில் பெரும்பாலோர் கூனிக்குறுகி ஓடுகிறார்கள். சில மூதாட்டிகள் தலைகளில் வலிதெரியாத அளவிற்கு அடித்துக் கொள்கிறார்கள்.  மார்த்தாண்டத்திற்கு, அந்தக் காட்சி அநியாயமாகப்பட்டது. அதற்கு தடங்கல் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகவும் தோன்றியது. மலங்கலான பார்வை கொண்ட - அதேசமயம் கலக்கலான மேனிகொண்ட சிறுமி... உடல் தாகத்தை, காதல் தாகமாய் நினைக்கும் பாசாங்குப் பருவம்... கல்லிலும் முள்ளிலுங்கூட, படரும் கொடிய பருமான கொடிப்பருவம். முட்டாளின் சொர்க்கம் போன்ற மூடத்தனமான கற்பனையில் வாழும் பிஞ்சுப் பருவம், காயாகாமலேயே பழமாக நினைக்கும் பாழும் பருவம். ஆனால் அந்தப் பயல் அப்படியில்லை, முப்பது வயதை நெருங்கியவன்... அவனது வட்டமான முகத்தில் கண்களில் சூழ்ச்சிவலை.... உதட்டோர குறுநகை... மான்கூட்டத்தில், ஒன்றை மட்டும் தனிப்படுத்தி தாக்கும் கழுதைப்புலி போல, இந்த குட்டி மானுக்கு, ஒருவேளை ஏற்பட்டிருக்கக் கூடிய தனிமை- வெறுமையை, இவன் சாதகமாக்கி பாதகம் செய்கிறான்.  மார்த்தாண்டம், தனக்கு மட்டும் கேட்கும்படியாக பேசிக்கொண்டார். பெண்ணின் திருமண வயதை இருபத்தி ஒன்றாக வரையறை வைத்திருப்பதுபோல், ஒருபெண், காதலிப்பதற்கும் வயது வரம்பை நிச்சயிக்கணும்... பால்ய விவாகத்தை அந்தக் காலத்தில் தடை செய்தது போல், இந்தக் காலத்தில், பால்ய காதலையும் தடைசெய்ய வேண்டும்... போகட்டும். இந்தப் பெண்ணை அவள் பெற்றோரிடம் எப்படியாவது கொண்டுபோய் விடவேண்டும். தேவைப்பட்டால், அவர்களோடு சேர்ந்து, தானும் இவளுக்கு அறிவுரை சொல்லவேண்டும். ஆனால் எப்படி அவளை மீட்பது? அங்கே போய் அந்தப் பயலை ஒரு அதட்டுப் போடலாமா? போடணும்... போட்டே ஆகணும்....  மார்த்தாண்டம், அந்த 'காலி' மனையின் வாய்க்குள் பாதி நுழைந்து விட்டார். உடனே அந்தச் சிறுமி அலறியடித்து, படுத்தகோலத்தை, இருந்த கோலமாக்கினாள். இருக்கையில் உட்கார்ந்து அவரை எட்டிப் பார்த்தபடியே, கைகளை உதறினாள். பயத்தோடு பார்த்தாள். இவள் மேல் கைகளை இயக்கி, கண்களை எங்கோ வைத்திருந்த அந்தப் பயலை, உசுப்பிவிட்டாள். இவர் நின்ற தோரணையைக் கண்டு பயந்துபோய், அவனை முன்புறமாய்த் தள்ளி பின்புறமாய் அவன் முதுகுக்கும் இருக்கைக்கும் இடைப்பட்ட வெளியில் நெருப்புக்கோழியாய் மூழ்கிக்கொண்டாள். அவன், அவள் முதுகை தட்டிக் கொடுத்தபடியே வர்த்தையில் அடங்காத ஏச்சாய் ஒரு கத்துக் கத்தினான். ஆட்டோவில் இருந்து துள்ளிக் குதித்து தரைக்கு வந்து, மார்த்தாண்டத்தை ஒரு பார்வையும், இவளை மறுபார்வையுமாய் பார்த்தபடியே சவடாலாய் பேசினான்.  "நான். இருக்கும்போது... நீ ஏன் பயப்படுறே...? ஒன்ன காப்பாத்துறதுக்கு நான் கொலைகாரனாகூட மாறத்தயார்..."  அந்தப் பயல், மார்த்தாண்டத்தை பகைப்பார்வையாய், கராத்தே பாணியில் பார்த்தான். அவன் அளவிலேயே, அவர் செயலை அனுமானித்தான். கிழட்டுப் பயல் பங்கு கேட்க வந்திருப்பானோ...  இதற்குள், அந்தச்சிறுமியும் ஆட்டோவில் இருந்து வெளிப்பட்டு ஓடப்போனாள் பயல் அவள் கையை பிடித்து, தன் பக்கமாய் இழுத்துக் கொண்டான். அப்படியும் அவள், தனது கைகள் இரண்டையும் இறக்கைகளாய் மேலும்கீழுமாய் ஆட்டியபடியே வலையில் சிக்கிய குருவிபோல் துடித்தாள். விதவிதமான அவலக்குரல் எழுப்பினாள். இதைப்பொறுக்காத அந்தப் பயல், மார்த்தாண்டத்தை, சினிமாக் கதாநாயகன் போல் மிரட்டினான்.  'ஏய்.... பெருசு... உனக்கு அறிவு இருக்குதா. உன் ஆசைக்கும் ஒரு அளவு வேண்டாமா? என்கிட்ட மோதாதே... மரியாதையா போயிடு... எதாவது ஏடாகூடமா கிட்டநெருங்குன... மவனே ஒரே போடுதான்... அதோட வெளிலபோய் ஏதாவது ஏடாகூடமாச் செய்தே... நாள் குறிச்சு உதைப்பேன்... சர்த்தான் போடா...'  ஒருகாலத்தில் பயப்படாத மார்த்தாண்டம், பயந்துதான் போனார். 'இப்படிபட்ட வனோடா உன் சகவாசம்?' என்பதுபோல அந்தச் சிறுமியை ஓரங்கட்டியும் பார்த்தார். இரட்டைச் சடை போட்டிருக்கிறாள். அதற்கு மேல் ரிப்பன் கட்டியிருக்கிறாள். காதுகளில் சின்னச் சின்ன மினுக்கந்தான். ஆகவே ஏழைப் பெண்ணாகத்தான் இருப்பாள். ரெண்டுங்கெட்டான் வறுமைச் சூழலில், வாழும் பெற்றோர். இவளை, தமிழ் கெடுத்தான் பள்ளிக்கு அனுப்பிப் பார்த்து ஆனந்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனாலும், வறுமையின் வெளிப்பாடாய், அம்மாக்காரி, இவள் தலையில் குட்டியக் குட்டு, இவளை இவனிடம் முத்தம் பெறவும் தரவும் தூண்டியிருக்கும். அப்பா திட்டியத் திட்டும். இவனது ஆசைவார்த்தைகளில் மயங்க வைத்திருக்கும்.  அந்தப்பயல், இப்போது இவரை நோக்கி நகருவதுபோல் தோன்றியது. வேறு வழியில்லாமல், மார்த்தாண்டம் பின்வாங்கினார். மனோபலத்திற்கு ஏற்ப தனக்கு உடல் பலம் இல்லை என்பதை அறிந்து துடித்துப்போனார். அதேசமயம், அந்த ஆட்டோ எண்களை கண்கள் வழியாய் மூளையில் பதிவுசெய்து கொண்டே திரும்பி நடந்தார். காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும்.... அய்யய்யோ.. அதுகூடாத செயல்.... யானை வாய்க்குள் போன கரும்பும், காவல் நிலையம் போன பெண்ணும் சக்கையாகும். அப்போ என்ன செய்யலாம்?  மார்த்தாண்டம், புறமுதுகு காட்டி நடந்து கொண்டிருந்தார். சொல்லி வைத்தது போல், இரண்டுபேர் எதிர்பட்டார்கள். முதியவர் நண்பர். இளையவன் தெரிந்தவன். அவர்கள் காதுகளில் இவர் கிசுகிசுத்தார். மூவருமாய் போய், அவனை அதட்டி அந்தப் பெண்ணை மீட்க வேண்டும் என்று அபிநயமாய் கையாட முகமாட கேட்டுக் கொண்டார். அவர் கிசுகிசுப்பை ரசித்துக் கேட்ட அவர்களோ சிரித்தார்கள். பின்னர் இந்தக் காட்சியை, தாங்கள் இதேதெருவில் மார்னிங், மேட்னி, நைட்டாக பலதடவை பார்த்ததாய் பதிலுக்குக் கிசுகிசுத்தார்கள். முதியவர், தன் மோவாயைத் தாங்கிய மார்த்தாண்டத்தின் கைகளை விலக்கியபடியே, யதார்த்தத்தைச் சுட்டிக் காட்டினார்.  "நீங்க சொல்றதுபோலவே... அந்தப் பயல விரட்டிட்டு, அந்தப் பெண்ணை மீட்டி, அவள் வீட்டுல ஒப்படைக்கிறதா வச்சுக்குவோம். அப்புறமும், இந்தப் பொண்ணு இவனோட சரசமாட மாட்டாள் என்பது என்ன நிச்சயம்? ருசிகண்ட பூணை பாருங்க... சரி... அப்படியே இவளை, அவன்கிட்ட இருந்து நிரந்தரமாக பிரிச்சுட்டோமுன்னு வச்சுக்குவோம். இந்தப் பயல், அவள் கிடைக்காத வெறுப்புல, நம்மையும் நடுரோட்டுல வெட்ட மாட்டான் என்கிறதுக்கு என்ன உத்தரவாதம்? ஜாமின் கிடைக்கிற தைரியத்துல நம்ம வீட்டுப் பெண்களையும் மானபங்கப் படுத்தமாட்டான் என்பதற்கு என்ன கியாரண்டி? அதனால, பேசாம வீட்டுப் போங்க இது கலிமுத்துன டெலிவிஷன் காலம் பெத்தவங்க சரியா வளர்க்காட்டால், மத்தவங்க என்ன செய்ய முடியும்?"  மார்த்தாண்டம், சமவயது நண்பரை விட்டு விட்டு, அந்த இளைஞனைப் பார்த்தார். ஒரு கம்பெனியில் காரோடும் சீரோடும் வேலைபார்ப்பவன். அவனும் தன்பங்குக்கு விவகாரத்தில் சிறிது மண்ணள்ளிப் போட்டுப் பேசினான்.  "அந்தப் பொண்ணு சம்மதிச்சுத்தானே வந்திருக்காள். உங்களுக்கு என்ன அங்கிள்? அனுபவிக்க வேண்டிய வயது அனுபவிக்கட்டுமே. லெட் தெம் என்ஜாய். டோன்ட் பீ எ கில் ஜாய்."  மார்த்தாண்டம் அழாக்குறையாய் முறையிட்டார்.  "என்ன வேற, அடிப்பேன் பிடிப்பேன்னு அடாவடியாய் திட்டுனாப்பா",  "உங்களுக்கு அங்கே என்ன வேலை அங்கிள்? அடிக்காம விட்டானே. அதுவரைக்கும் சந்தோஷப்படுங்க"  மார்த்தாண்டம் துக்கப்பட்டார். அதிலும் ஒரு ஆறுதல். அவரைப் பார்த்த அந்தப் பெண், அந்த பயல் வற்புறுத்தினாலும் இடங்கொடுக்க மாட்டாள். அந்த ஆட்டோ விரைவில் வெளிப்படும்... நாளையில் இருந்து வேறு இடம் தேடிப்போவார்கள். ஒருவேளை அது மனித நடமாட்டம் இல்லாத காடாகவும் இருக்கலாம். அந்த ஆட்டோவே, ஒரு நடமாடும் படுக்கை அறையாச்சே ஆனால் ஏன் இன்னும் அந்த ஆட்டோ புறப்படல? ஒருவேளை, அவள் ஆடைகளை சரிசெய்வதற்கு அவகாசம் தேவைப்பட்டு இருக்கும்...  மார்த்தாண்டம், வெறுப்போடு நடந்தார். அந்த இடத்திற்கு திரும்பப்போவதில்லை என்பது போல் வேக வேகமாய் நடந்தார். அதேசமயம், அந்த ஆட்டோ தன்னை 'விபத்தாய்' மோதிவிடக்கூடாதே என்பதுபோல் திரும்பித்திரும்பி பார்த்தபடியும் நடந்தார். யாரும் எக்கேடும் கெடட்டும். ஆன்ாலும் மனசு கேட்கமாட்டுக்குதே கேட்டே ஆகனும், அந்தப்பயல அதட்டுனால் அவன், அடிச்சு ரோட்டுல வீசுவான். கூட்டம் கூடும்... தெரிஞ்சக் கூட்டமாவே இருக்கும். ஆனாலும், அந்த ஆட்டோவுக்கு பயபக்தியோட வழி விட்டுவிட்டு, இவரைத்தான் வேடிக்கைப் பார்க்கும். இவரை மக்காகவும் தன்னை புத்திசாலியாகவும் அனுமானிக்கும். போதாக்குறைக்கு இவருக்கு புத்திமதி சொல்லும். இன்னும் ஒரு படி மேலே போய் 'இவருக்கும் அந்த ஆட்டோக்காரனுக்கும் ஒரு பொம்பள விவகாரமா அடிதடியாம்' என்று முதுகுக்கு பின்னால் பேசினாலும் பேசும். ஊரெல்லாம் தூங்கும்போது நமக்கேன் விழிப்பு?  மார்த்தாண்டத்திற்கு, தனது வீடு இருக்கும் அந்தத் தெருவைவிட்டு. அப்போதைக்கு, எங்கேயாவது தொலைந்து போகவேண்டும் என்பது போல் தோன்றியது. பாதையில் கண்வைக்காமல் கால்களை மட்டும் மாற்றிமாற்றிப் போட்டார். ஒரு வேப்பமர தூரில் முட்டாக் குறையாக நின்றார். வேப்ப இலைகள் சரவிளக்குகளாய் மின்னிய மரம்... தரையில் வேப்பங்கொட்டைகள்... ரத்தம் சிந்திய மனிதர் போல் பால்சிந்திகிடந்தன. அதன் மேல் அதேமரத்துப் பூக்கள் ஆடைகள் போல் வியாபித்து இருந்தன. இதை ரசித்து பார்க்காமல், மேற்கொண்டு நடக்கப் போனவர், தலையில் ஒரு குட்டை உணர்ந்தார். வழுக்கைத்தலை என்பதால் வலி தாங்க முடியவில்லை. ஏறிட்டுப் பார்த்தால், ஒரு காகம், அவர் தலைக்கு மேல் வட்ட வட்டமாய் பறக்கிறது. உடனே இவர், அங்கே செல்லாத கோபத்தை, இங்கே செல்லுபடியாக்கப் போனார். கீழே குனிந்து, ஒரு குச்சியை எடுத்தார். மேலே பறந்த காக்கைக்கு குறிவைத்தும் தற்காப்பாகவும் அந்தக் குச்சியை தலைக்குமேல் சுழற்றினார். உடனே அந்தக் காகம் அங்குமிங்குமாய் பறந்து வீறிட்டுக் கத்தியது. அவ்வளவுதான்... அத்தனை காகங்களும், எங்கிருந்து வந்தனவோ, அவரைச்சுற்றி வியூகம் வகுத்து தாழப் பறந்தன. இறக்கைகளால் சிலம்பாடின. கால்களை ஆயுதங்களாய் நீட்டின. அவற்றின் வேகவேகமான கூக்குரல் அவை தங்கேைய காக்கா காக்கா என்று அழைத்துக் கொள்வதுபோல் தோன்றின.  மார்த்தாண்டம் புரிந்து கொண்டார். வேப்பமரத்தில் காக்கைக்கூடு இருக்கும். அதற்குள் கண்விழிக்காத குஞ்சுகளும் இருக்கும். இவற்றைப் பெற்ற காகங்கள், பெறாத காகங்கள் என்ற வேறுபாடு இல்லாமல், அத்தனை காகங்களும் அந்தக் குஞ்சுகளுக்காக துடிக்கின்றன. எந்தச் சந்தர்ப்பத்திலும் மனிதனுக்குப் பயந்து ஒதுங்கும் இந்த கரும்பறவைகள் இப்போதோ வீரப்பறவைகளாகின்றன. பயப்படுபவை, பயமுறுத்துகின்றன. பிரிந்து பறந்தவை ஒன்றுபடுகின்றன.  மார்த்தாண்டம், அந்த காக்காக் கூட்டத்திலிருந்து லாவகமாய் தப்பித்தபடியே தொடர்ந்து நடக்கிறார். அந்தத் தெருமுனையில் ஏழெட்டு ஆட்டோக்கள். ஒரு யூனியன் கொடியின் கீழ் நிற்கின்றன. ஒற்றைச் சக்கரப்பல்லை மறைக்கும் ஒற்றை உதட்டோடு, அதற்குமேல் மின்னும் பல்பை மூக்குத்திகளாய் கொண்ட வாகனங்கள்... ஒருவர் ஆட்டோவை குடைகிறார். சிலர் இரவு டுட்டி என்பதாலோ என்னமோ பயணிகள் இருக்கையில் துங்குகிறார்கள். எஞ்சியவர்கள் - ஆங்காங்கே பேசிக்கொண்டிருக்கிறார்கள். மார்த்தாண்டம், அங்கேயே நின்று அவர்களை அழுத்தம் திருத்தமாய் பார்ப்பதை கண்ட ஒரு ஆட்டோ இளைஞன் கேட்கிறான்.  'என்ன சார் சவாரியா?'  'ஒங்களமாதிரி ஆட்டோ ஒட்டுற ஒருத்தன. அதோ அந்த பதுக்கலான இடத்துல ஒரு அப்பாவிப் பொண்ண...  "பேசாம அந்த இடத்திற்கு காதலர் பூங்கான்னு பேரு வைச்சிடுங்க.."  "விளையாடுறதுக்கு நேரம் இல்லப்பா... அது பிஞ்சுப் பொண்ணுப்பா..."  "எங்கள என்ன செய்யச் சொல்லுறீங்க? உங்க தெருக்காரங்கக்கிட்ட சொல்லி ஒழுங்கு பண்ணுங்க"  "அவங்க பேடிங்கப்பா..."  "ஒரு ரூபாய் அதிகமாக கேட்டாலே சவடாலாப் பேசறாங்க"  "பேடிங்க அப்படித்தான் பேசுவாங்க. ரத்தம் கெட்ட மனுசங்கப்பா. ஆனால், நீங்க அப்படி இல்ல. உழைப்பாளிங்க. நல்ல உடம்புலதான் நல்ல புத்தி இருக்கும். அதனால அந்த ஆட்டோக்காரன மடக்கி... அந்தச் சின்னப் பொண்ண...."  ஆட்டோக்காரன் காதல் பண்ணக்கூடாதா?  "பண்ணலாம். ஆனால் ஆட்டோவுக்குள்ள பண்ணக்கூடாது. அதவிட முக்கியம் ஒரு அப்பாவி சிறுமியை சிதைக்கக்கூடாது. இது உங்க ஆட்டோ தர்மத்துக்கே அவமானம். எனக்கும் பொண்ணு இருக்கு. உங்களுக்கும் அக்கா, தங்கை இருக்கும்."  "எங்களுக்கே சூடு வைக்கிறியா. ஏண்டா ராமு! எவண்டா அந்தக் கம்மனாட்டி?"  "ஒனக்குத் தெரியாதா.... அதான்... நம்மக்கிட்ட உதை தின்னுட்டுப் போனானே.... அந்த சோமாறிப்பய குமார்... அந்தப்பயதான். அவனுக்கு என்ன ராசியோ பொம்மனாட்டிகளுக்கு அவன் முகம் மட்டுமில்ல... பேச்சே போதையா இருக்கும்... அப்படியும் வசியாட்டால், கஞ்சா அபினுன்னு கொடுத்து சின்னப்பொண்ணுங்கள சிக்கவைப்பான். பலே கில்லாடி..."  "அல்பம்... அல்பம்.... இது சிரிச்சுப் பேசுற விஷயம் இல்லடா. அடிச்சு நொறுக்குற விவகாரம். நம்ம ஆட்டோ தொழிலுக்கே கேவலமான சமாச்சாரம். பெரியவரே!, நாங்க பாத்துக்கிறோம். அவனுக்கு நாளும் கிழமையும் இன்னைக்குத்தான் வந்திருக்கு. புறப்படுங்கடா! பயமாய் இருந்தால் நீங்க வீட்டுக்கு போங்க சார்... இனிமேல் இது எங்க சமாச்சாரம்"  அதுவரை ஆட்டோவுக்குள் முடங்கிக் கிடந்து, அங்கிருந்து எம்பிக்குதித்து ஆவேசமாய்பேசும் அந்த நடுத்தர ஆட்டோக்காரரிடம் மார்த்தாண்டம் கைகூப்பிய படியே பேசினார்.  "உங்கள பார்த்ததும் என் பயம் பஞ்சா பறந்து போய்ட்டு. அப்புறம் ஒரு விஷயம்... அந்த அற்பப் பயல இவங்க எப்படி கனிச்சுக்கனுமோ அப்படி கவனிக்கட்டும். நீயும் நானும், அந்தப் பொண்ண, அவள் வீட்டுல ஒப்படைச்சிட்டு வரணும். அதோட அந்தப்பயல ரகளை இல்லாம பக்குவமா மடக்கணும். இல்லாட்டி, அந்தப் பொண்ணு அவமானம் தாங்காம தற்கொலை பண்ணிக்கக் கூடாது பாருப்பா"  அந்த ஆட்டோ தலைவர் மார்த்தாண்டம் சொல்வதை ஆமோதிப்பது போல் தலையை ஆட்டுகிறார். அவர் கேள்விக் குறிக்குப்பதிலாக அத்தனை பேரும் வீரப்பாய் நிற்கிறார்கள். அந்தச் சமயத்தில் -  காலி மனையில் இருந்து, அந்த ஆட்டோ தள்ளாடித்தள்ளாடி வெளிப்படுகிறது. அந்தப் பயலின் ஒரு கை, பின்புறமாய் வளைந்திருக்க, இன்னொருகை ஆட்டோவை இயக்குகிறது.  மனோபலத்திற்கு இணையாக உடல்பலம் பெற்றதைப்போல் உணர்ந்த மார்த்தாண்டம், அந்த ஆட்டோக்காரர்களுடன் இரண்டறக் கலக்கிறார். அத்தனைபேரும் அந்த ஆட்டோவை எதிர்நோக்கி, அமைதியாய் நிற்கிறார்கள். - புயலுக்கு முன் அமைதியாய்.  16.  சிக்கமுக்கிக் கற்கள்   காடுகொன்று நடாக்காமல், நாடுகொன்று, காடான மலைக்காடு........  பார்வதி, படுக்கையாய் பயன்பட்ட கோணிப்பையின் இருமுனைகளையும், வீட்டுக்கூரையின் அடிவாரமான மூங்கில் கழியில் சொருகினாள். புறத்தே கதவாகவும், அகத்தே படுக்கையாகவும் ஆகிப்போன அந்தக் கோணி, இந்த இரண்டிற்கும் தாராளமாகவே இருந்தது. மூங்கில் நிலைவாசலில் தொங்கி, இந்தக் கோணிக்கதவு, தரையில் மடிந்தும் படிந்தும் தவழும் வகையிலான பொந்து வாசல்: அதுவே படுக்கையாகும்போதும் அப்படித்தான். முன்தலையையும் முட்டிக்கால்களையும் முட்ட வைத்தால் மட்டுமே படுக்கக்கூடிய தலை. ஆகையால், கோணிக்குச் சிக்கல் இல்லை. அவனும் இவளும் சேர்ந்து படுக்கும்போதுதான் இடச்கிக்கல். ஒருவரையொருவர் கிட்டத்தட்ட படுக்கையாக்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பெரும்பாலும் அசல் படுக்கைகளாகத்தான் கிடப்பார்கள்.  "யாரும்மா உள்ளே இருக்கறது?"  பார்வதி, ஆவலோடு வெளியே வந்தாள். பொந்து வாசலில் இருந்து மனிதப் பெருச்சாளியாய் தவழ்ந்து வந்தாள். அது ஜாமீனில் வந்திருக்கும் என்ற அனுமானத்துடன் வெளிப்பட்டாள். அந்த அனுமான வேகத்தில் பெண்குரல் கூட ஆண்குரலாக - அதுவும் அவனுடைய குரலாகவே கேட்டது. உதட்டைக் கடித்தபடியே, எதிர் நின்றவளையும் அவளது இடுப்பையும் கையையும் பற்றி நின்ற சின்னஞ்சிறுசுகளையும் பார்த்தாள். இந்தச் சிறுசுகளை வரிசையாக நிறுத்தினால் இவர்களின் தலைகள் படிக்கட்டுகள்போல் தோன்றும். இப்படிப்போன்றவற்றை ரசித்துப் பார்க்கும் பார்வதிக்கு இப்போது அவளும் அந்தக் குழந்தைகளும் வெறும் பிம்பங்களாக மட்டுமே தெரிந்தன. குரல்கொடுத்தவளை ஏறிட்டுப் பார்த்தாள் புளியம்பழம் போல் தோல்வேறு. எலும்பு வேறாய் தோன்றிய முப்பது வயதுப்பெண். இவளுக்கு அவள், தன் வருகையின் நோக்கத்தைச் சொன்னாள்.  "எங்கள இந்த வீட்டுல குடியிருக்கச் சொன்னாங்கே... நீ நாட்டுப்புறத்துக்குப் போறீயாமே... வேணுமுன்னா நான் ஒரு நாள் கழிச்சு வரட்டுமா..... அதுவரைக்கும் அந்த மரத்தடியில இருந்துக்கிறோம்."  பார்வதி, வேண்டாம் என்பதுபோல் தலையை ஆட்டி, அவள் முன்னால் விசிறிபோல் கையையும் ஆட்டினாள். வந்தவளும், அவளது குட்டிக்குருமாக்களும் உள்ளே போகலாம் என்பது போல் கையை துடுப்பு போல் ஆக்கிக் காட்டினாள். வந்தவள். நின்றவளை தயங்கித் தயங்கி கேட்டாள்.  "ஒன் சாமான் செட்ட எடுக்கலியாம்மா? பரவாயில்ல. அப்புறமா வந்துகூட..."  பார்வதிக்கு இப்போது பேசியாக வேண்டிய கட்டாயம். முகம் திருப்பி, கண்துடைத்து மீண்டும் முகம் கொடுத்துப் பேசினாள்.  "ஒரு பிளாஸ்டிக் குடமும்..... வெண்கலச் செம்பும் இரண்டு, ஈயத்தட்டுந்தான் இருக்குது..... நீயே வச்சுக்க தலைச்சுமை மிச்சம்"  "எங்களுக்கும் வெளியூர்தான். திருவண்ணாமலை பக்கம். நேற்றுதான் வந்தோம். அவரு மலை மேஸ்திரியைப் பார்த்துட்டு, அப்படியே வவுத்த கழுவுறதுக்கு ஏதாவது வாங்கிட்டு வர போயிருக்காரு..... ஒனக்கு எந்த ஊரும்மா?"  "எந்த ஊருமே சொந்தமில்ல."  பார்வதி, கண்ணிர்த்திவலைகளுக்கு இடையே, நிழல் உருவமாய் தெரியும் புதியவளை ஏறிட்டுப் பார்க்காமலேயே நடந்தாள். வீடு பறிகோகும் நிலைமையிலும் அசத்தலாய் நின்றவள்தான். ஆனால், புதியவள். தன் வீட்டுக்காரரைப் பற்றிச் சொன்னதும், அவளுக்கு அவன் ஞாபகம், நெஞ்சில் முட்டி மோதியது. வீடு போகலாம்..... வீட்டுக்காரன் போகலாமோ... பத்தில் மூன்றாக கனத்த அடிவயிற்றைப் பிடித்தபடியே, பார்வதி நிற்பதும் நடப்பதுமாய் போனாள். அண்ணாந்தும் கவிழ்ந்தும் பார்த்தவள். பின்னர், சுற்றுமுற்றும் நோக்கி, சூன்யமாய் நின்றாள். அந்த சூன்ய்த்தை சுற்றுச்சூழல் வக்கரித்துப் பார்த்தது. சிறிது தொலைவில் உள்நோக்கிப் பாய்ந்த மலைப்படுகை. மலையின் அடிவாரத்துக்குக் கீழே போன பாறைப் பள்ளத்தாக்கு.... அந்தப் பகுதிமேல், அப்படியே கவிழ்ந்த ஆகாயம். மண்சட்டியில் வெள்ளைக்கிண்ணத்தை தலைகீழாய் கவிழ்த்த தோரணை. இவள் நிற்கும் பாதையும், நீள நடந்து, அதே பாதாள படுகையில் கீழ்நோக்கி விழுகிறது. அது விழுந்த இடத்தின் எதிர்ப்புறம், ஒரு காலத்தில் கம்பீரமாய் நின்று. இப்போது படுத்துக்கிடக்கும் குற்றுயிரும் குலையுயிருமாய் துடிக்கும் மலை. இதன்மீது, ஆண்டுக்கணக்கில் நடத்தப்பட்ட சித்திரவதைகள், அதன் செடிகொடி ரோமங்களைக் கொண்ட மண் தலையை கொய்துவிட்டன. ஆங்காங்கே அதன் கருநீல எலும்புகள் உடைபட்டு, நாடிநரம்புகள் வெள்ளை வெள்ளைய்ாய் நைய்ந்து கிடக்கின்றன. இப்போதும், அதன் அடிவயிற்றில் வெடிகள் வைக்கப்பட்டு பாறைச்சதைகள் பிய்ந்து விழுகின்றன. குய்யோ முறையோ என்கிற கூக்குரலோடு கற்கள் பறக்கின்றன. அந்த மலையே குலுங்கி அழுவதுபோன்ற ஒலம். அந்த அழுகைக்கு இடையே ஏங்குவது போன்ற இயந்திரச்சத்தங்கள்.... அழுதழுது களைத்துப்போய், ஆசுவாசப் படுவது போன்ற சம்மட்டிச் சத்தங்கள்.  பார்வதியின் உடம்பை, அவள் கால்கள் இழுத்துக்கொண்டு போகின்றன. நடக்க நடக்க, மனமும் நடக்கிறது. முன்னோக்கியும் பின்னோக்கியும் அலைபாய்கிறது. ஒவ்வொரு நினைவுக் கொடுரமும், தனித்தனியாய் வராமல், கூட்டாய், கலப்பாய், கும்பல் கும்பலாய் ஒன்றோடு ஒன்று பின்னியபடியே தலை கால் காட்டாமல் சாயாய்கிரகமாய் நிழலாடுகிறது.  முதலிரவுக்கு மறுநாள் அவளும் அவனும் விவசாயக்கூலிகளாய், ஆளுக்கொரு வரப்பில் வாய்க்கால் இடைவெளியோடு நடக்கிறார்கள். அவன் தோளில் மண் வெட்டி கவ்விக்கிடக்கிறது. இவள் கையில் பன்னருவாள் விளையாட்டுத்தனமாய் சுழல்கிறது. சிறிதுதான் நடந்திருப்பார்கள். சோளத்தட்டைகளுக்குள் பதுங்கிக் கிடந்த ஒரு கும்பலில், அடையாளம் தெரியாத ஒரு முகம், இவர்களைப் பார்த்து அந்தக் கும்பலுக்கு அடையாளப்படுத்துகிறது. உடனே, பத்து பதினைந்து பேர், கத்தியும் வேல்கம்புமாய் இவர்களை துரத்தியதும், இவர்கள் தலை தெறிக்க ஓடியதும், இப்போதும் கண்முன்னால் நடப்பதுபோல் தோன்றுகிறது. உடனடியாய் அந்தத் தோற்றம், மாய்ந்து இன்னொரு நினைவுக் கொடுரம் முன்னிலையாகிறது. நான்கு நாட்களுக்கு முன்பு, காக்கிச்சட்டைக்காரர்கள். அவள் வீட்டுக்காரனை, விலங்குபோட்டு இழுத்துப் போகிறார்கள். இவள், தன் தலையில் அடித்துக் கொள்கிறாள். கூரைக்கம்பில் மோதி மோதி ரத்தம் சிந்துகிறாள். அதோடு அந்த நினைவும் அறுபட்டு வயல்காட்டு நினைவு மீண்டும் வருகிறது. துரத்தும் கும்பலில் ஒருத்தன், இவர்களை நெருங்கி, இவள் கழுத்துக்கெதிரே, அரிவாளை ஒங்குகிறான். உடனே பார்வதியின் கணவன், அனிச்சையாகவோ அல்லது உத்தி தெரிந்தோ தோளில் தொங்கிய மாப்பிள்ளைத் துண்டை எடுத்து, வெட்டரிவாள்கார்ன் முகத்தை முக்காடு போடுகிறான். சாதிக்கலவர எதிரியின் முகம் பன்னாடைக்குள் சிக்கிய பனங்காயாய் ஆனபோது, இன்னொருத்தன் நெருங்கி வந்து, அவன் தலைக்கு, வேல் கம்பை குறிவைக்கிறான். உடனே இவன் இடது தோளை அப்பிப்பிடித்த மண்வெட்டியால், வேல்கம்பை வீழ்த்திவிட்டு, அவன் கழுத்தில் ஒரு போடு போடுகிறான். அரிவாள்காரன் அடியற்று சாய்கிறான்.  இதுபோதும் என்ற மனம், பார்வதிக்கு இன்னொரு நினைவை கொண்டுவருகிறது. இந்தப் பகுதிக்கு அரசாங்கச் ஜீப்பில் கோட்டும் சூட்டுமாய் வந்தவர்களிடம் இவள் வாயை விற்று விடுகிறாள். விற்றாள் என்பதைவிட இந்த மலைப்பகுதி மனித கொடுரங்களை இவளிடம் இருந்து அவர்கள் வாங்கி விடுகிறார்கள். விவகாரம் மலை மேஸ்திரிகளின் முக்கிய கொம்பன்களின் காதுகளை எட்டுகிறது. இவளுக்கும் அவனுக்கும், கெடு வைத்துவிட்டார்கள். இந்த பகுதியை விட்டு மூன்று நாட்களுக்குள் வேளியேற வேண்டும். இல்லையானால் நடப்பது வேறாம் என்ற மிரட்டல்.  அவள் மனத்தளத்தில் மலைக்கார கொம்பன்கள் போய், மீண்டும் கிராமத்து வம்பன்கள் வருகிறார்கள். இவர்களை துரத்திய அந்தக் கும்பல், கீழே விழுந்தவனை தூக்குகிறது. இவர்களோ, அடுத்த சாதிக்காரன் அதிகமாய் வாழும் ஊர்ப்பக்கம் போகாமல், அப்படியே கட்டிய துணியோடு காடுமலை தாண்டி, ஓடாக்குறையாய் நடந்து, தென்காசியில் ரயில் ஏறி, தாம்பாரத்தில் இறங்கி, இடமறியா இந்தப் பகுதிக்குள் இடறி விழுகிறார்கள்.  இந்த நினைவை மீறி மீண்டும் மலைக்கொம்பன்கள் மன பிம்பங்களாகிறார்கள். அவர்களிடம் நயந்தும் பயந்தும் பேசிய இவள் வீட்டுக்காரன், இறுதியில் வேளியேற முடியாது செய்யுறத செய்யுங்க என்கிறான். அவர்கள் மெல்லச் சிரிக்கிறார்கள். சரிப்பா இருக்க முடியுமுன்னா இருந்துட்டுப்போ என்று அவனை. ஆழக்கண் போட்டு அகலமாய்ப் பார்க்கிறார்கள்.  இப்போது அதே மனோதளத்தில், வீட்டுக்காரன் போய் மெகா போன்காரர்கள் வருகிறார்கள். போனவாரம் நடந்த கொடூரம்.... மொத்தம் பத்து பதினைந்து பேர். அத்தனைபேரும் முகமறியா இளைஞர்கள்.... ஒருவன் மெகாபோனை எடுத்துக்கொண்டு 'உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்!', என்று உரத்துக் கூறுகிறான். தொழிலாளர் வரவில்லை. அடியாட்கள் தான் வருகிறார்கள். மெகாபோன்காரர்கள் மண்டையை இரண்டாக்குகிறார்கள். கூடவந்த தோழர்கள், அவனை தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள். மீண்டும் அவர்கள் ஆள்பலத்தோடு வருவார்கள் என்று, போனவர்கள் போனவர்கள்தான். அரைக்கிணறு தாண்டிய கதை. ஆபத்தான கதை.  இந்த நினைவுத் துரயரம் போய், மீண்டும் அவள் மனதுள் இன்னொரு நினைவுக் கொடுரம் நுழைகிறது. கட்டிய கணவன் விலங்கும் கையுமாய் அவளைப் பார்க்கிறான். ஆறுதல் சொல்ல. முடியாமல் அழுகிறான். பிறகு, நம்முடைய இனத்தான்கள் என்ன கைவிடமாட்டாங்க. எப்படியும் சீக்கிரம் ஜாமீன்ல வந்துவிடுவேன் அதுவரைக்கும் இங்கேயே மூச்சைப்பிடிச்சுக்கிட்டு தாக்குப்பிடி என்கிறான். கைவிலங்கை வைத்து அவள் தலையை ஆசிர்வதிக்கிறான்.  பார்வதி, நினைவுகளை உதறிப்போட்டு, கசிந்து நிற்கும் பாறை மேட்டில் நடந்து, பூசணிக்கொடிகளில் ஊடுறுவி அவற்றின் மஞ்சள் பூக்களில் நடைபோட்டு, கருவேலமுட்களில் தடம்போட்டு, பூவின் மென்மைக்கும், முள்ளின் வன்மைக்கும் வித்தியாசம் காணாது நடந்து நடந்து இயந்திரமேட்டுக்கு வந்துவிட்டாள்.  அந்ந மேட்டை நோக்கி லாரிகள் தவளைபோல குதித்துக்குதித்து வருகின்றன. அவற்றைப் பார்த்ததும் இயந்திர மேஸ்திரி கூலி ஆட்களை அதட்டுகிறார். இயந்திரச்சக்கரங்களை இரும்பு பட்டைகள் ஆட்டுவிக்கின்றன. இதன் இரும்பு வாய்க்குள், சக்கைக்கற்களை, கூலிப் பெண்கள் தலையில் ஏற்றிக் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். பேர்தான் சக்கை ஒருத்தி, சிரமப்பட்டு தூக்க வேண்டிய ஒரே கல். அந்த இரும்பு வாய், இந்தச் சக்கைகளை, நொறுக்குத் தீனியாக்கி கீழே உள்ள செவ்வக வடிவ தகர வாயிற்றுக்குள் அனுப்புகிறது. தலைச்சுமை சக்கைகள் கைச்சுமை கற்களாகின்றன. மிஷின் முக்கா, ஓவர் முக்கா, அரை, கால், துகள் என்று தரம் பார்த்து, வகைக்பிரித்து அந்தச் செவ்வக வயிறு குறுக்கும் நெடுக்குமாய் போகும் இரும்பு குழாய்களுக்குள், தனித்தனியாய் வழியனுப்பி வைக்கிறது. அந்தக் குழாய்கள். அங்குமிங்குமாய் நீண்டு, சுமந்து சென்ற குவியல்களை தரையில் போடுகின்றன. ஒவ்வொரு யந்திர மேட்டிலும் பத்துப் பதினைந்து பெண்கள். ஆண்கள் அறவே இல்லை. ஒவ்வொருத்தி முகத்திலும், கல் துகள்கள் அப்பிக்கிடக்கின்றன. காது, மூக்கு ஒட்டைகள் அடைக்கின்றன. கல் புகை, மேகமாககி அவர்கள் கண்களை இருளச் செய்கிறது. நுரையீரல்களில் படிந்த துகள்களோடு, பறந்த துகள்கள் கூட்டணி வைத்துக்கொண்டு, ஒருத்தியை இரும வைக்கின்றன. இன்னொருத்தியை நெஞ்சைப் பிடிக்க வைக்கின்றன. உடனே, 'முதல்ல உடம்ப பார்த்துக்கிட்டு வேலைக்கு வாங்க' என்கிற ஒரு அதட்டல் யந்திரச் சத்தத்தையும் மீறி ஒலிக்கிறது.  பார்வதி, தடபுடலாய் அங்குமிங்கும் சுற்றிய யந்திர மேஸ்திரியின் முன்னால்போய் கையை பிசைந்து கண்களால் யாசிக்கிறாள். இங்கே வந்த புதிதில், இதே யந்திர மேட்டில், இவளை கல் சுமக்கம் வேலையில் சேரச் சொன்னவர்தான். இவள் ஊர்பக்கமாம்.... சுற்றி வளைத்துப்பார்த்தாள் உறவுதான். இவள்தான், இந்த வேலையை மென்மையாய் மறுத்தாள். கல்லுடைக்கும் வேலையே சத்திரியத்தனமானது. யந்திரத்துக்கு கல் சுமப்பது சூத்திரத்தனமானது என்கிற அர்த்தத்தில், இவளிடம் பழக்கப்பட்டவள்கள், சொல்லிவிட்டார்கள். இவளுக்கும் இங்கேயாவது, தான் சத்திரிகையாய் இருக்க வேண்டும் என்ற ஆசை இப்போதோ மீண்டும் சூத்திர புத்திரியாய் செயல்பட தயாரானாள். ஆனால் அவரோ, மேயுற மாட்ட கெடுக்குமாம் நக்குற மாடு... ஒங்க வேலைய பாருங்களேன்.... எவ்வளவு நேரமா லாரியை காக்கவைக்கிறது? என்று இவளை நின்று ஓரங்கட்டிப் பார்த்த கூலிப் பெண்களுக்கு ஆணையிட்டார். இவளிடம் பேசுவதை கவுரக்குறைவாக நினைத்தாரோ அல்லது மலைக்கொம்பன்களால் இருக்கும் கவுரமும் பறிக்கப்படும் என்று பயந்தாரோ...  பார்வதியின் நினைவுகளைப் போல், கால்களும் பின்னின; ஆனாலும், அந்த நினைவுகளை ஆழ்மனக்குழியில் புதைத்துவிட்டு, நடக்கக்கூடிய நிசங்களை, மனதிற்கு முன் வைத்தாள். கைது செய்யப்பட்ட கணவனை, இனத்தான்கள் கைவிட மாட்டார்கள்தான். 'அதுக்கு' ஜாமீன் கிடைச்சிடும். அய்யய்யோ. ஜாமீன்ல 'அது' வெளிவரும்போது. அடுத்த சாதிக்காரன் ஒரே வெட்டா வெட்டிடப்படாதே. எத்தனையோ இடத்துல இப்படி கோர்ட்டு வாசலி லேயே வெட்டிப் போடுற காலமாச்சே. 'அதுக்கு' ஒண்னு கிடக்க ஒண்ணு ஆயிடக்கூடாதே... இசக்கியம்மா... பகை மறக்குறது வரைக்கும் அது ஜெயிலிலேயே கிடக்கட்டும். அப்போ... என் கெதி... ஊருக்குப் போனாலும் அடுத்தச் சாதிக்காரன் உண்டு இல்லன்ன பண்ணிடுவானே. இங்கேயும் இருக்க விடமாட்டான்களே...  'திக்கற்றோர்க்கு தெய்வமே துணை என்பாங்க. இப்போ அந்த தெய்வமே திக்கற்றுப் போயிட்டோ... இல்லாட்டால் வெள்ளையும் சொள்ளையுமா ஜீப்ல வந்த ஆபிலர் பயலுக, இப்படி ஈரத்துணியைப் போட்டு கழுத்த அறுப்பாங்களா? உள்ளத உள்ளபடி சொன்னால், பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் வரும். சத்துணவு கிடைக்கும். ஆஸ்பத்திரி நிச்சயம். இப்படி லொக்கு லொக்குன்னு இருமுறதுக்கு காரணமான கல்புகையை நீருல கரைக்கிறதுக்கு ஏற்பாடு செய்யப்படும். ஒவ்வொரு தொழிலாளிக்கும் சம்பளம் ரெட்டிப்பாகும். ஞாயிற்றுக் கிழமையிலும், நல்லநாளு, கெட்ட நாளிலும், வேலை செய்யாமலிலேயே கூலி கிடைக்குமுன்ன எப்படி பசப்பிட்டாங்க! நான் சொன்னத எல்லாம் மலை மேஸ்திரிங்கக்கிட்ட அப்படியே சொல்லிட்டாங்களே... அடுத்துக் கெடுத்த அயோக்கியப் பயலுகளா! உங்க ஜீப்ல லாரி மோதுண்டா... என்னைமாதிரி நிக்கதியாய் திரிவிங்கடா... வாய்க்கரிசி வேணுமுன்னா, அவனுங்கக்கிட்ட வாங்கிட்டுப் போகவேண்டியதுதானடா. கூடுதலா பணம் பறிக்க நான்தானடா உங்களுக்குக் கிடைச்சேன்? நீங்க நாசமாப் போக. ஏழையோட சாபம் எப்போதும் பலிக்குண்டா...  பார்வதி, தன்பாட்டுக்குப் பேசியபடியே, கால்களைத் தேய்த்துக் தேய்த்து நடந்தாள். ஊரில் எல்லையற்ற ஆகாயப்பரப்பையும் கண் தாவிய பசுமையான நிலப்பரப்பையும் ஊருறுவிய அவள் கண்கள், இங்கே திசைமறைத்த மலைகளையும் கூனிக்குறுகிப் போன நிலத்தையும் கண்முட்டப் பார்த்து, கால் தட்ட நடந்தாள். சுற்று முற்றிலும், கூட்டம் கூட்டமான கூலிப்பெண்கள்... ஒப்புக்கு ஒன்றிரண்டு ஆண் கூலிகள்... கூடவே பாளம்பாளமான சக்கைக் கற்கள். அவற்றில் சம்மட்டிகள் விழுவது தெரியாமல் எழுந்து, எழுவது தெரியாமல் விழுகின்றன. தாளலமான சத்தங்கள்... குறிதவறாத குத்துக்கள்... சக்கைக் கற்கள் கைக்கு அடக்கமாய் சிதறுகின்றன. இந்த சக்கைகளில், மெத்தப் படித்த பொறியாளர்களைப் போல வடிவுக்கு ஏற்ப கோடுகளோ வரைபடங்களோ போடப்படவில்லை. ஆனாலும், ஆங்காங்கே இயங்கும் கூலிப்பட்டாளம் சாலைக்கான 'ஒன்றரையாய்', தளத்துக்கான 'முக்காலாய்', கான்கீரிட்டுக்கான 'காலாய்', ஒரு அனுமானத்தோடு, சக்கைக் கற்களை வெட்டி வீழ்த்தி சிதறடிக்கின்றனர். கையும் மனமும் ஒன்றுபட்டதால் அந்த அனுமானம் பொய்க்கவில்லை. அத்தனைப் பேருக்கும் வேர்வைக் குளியல். இவர்களது கையில் பெருக்கெடுத்த வேர்வை, சம்மட்டிக் கணையில் பெருக்கெடுத்து, கற்களுக்கு ஈரப்பதம் கொடுக்கிறது. அவ்வப்போது நிமிர்ந்து நெற்றியில் திரண்டும், மூக்கில் வழிந்தோடியும் கண்ணிமைகளில் தேக்கமாகவும் உள்ள வேர்வை நீரை ஒவ்வொருத்தரும், இடது கை ஆள்காட்டி விரலால் அங்குமிங்குமாய் வழித்து விடுகிறார்கள்.  பார்வதி, ஒரு பள்ளப்பகுதியில், தோளுக்குக் கீழே அரையடி நீளத்தில் தொங்கிய கைச்சதை அங்குமிங்குமாய் ஆட, வலதுகையால், ஊராட்சிப் பம்பின் இரும்புச் சடையை மேலும் கீழுமாய் ஆட்டுகிறவரை, தன் சுமை மறந்தும் - மறுத்தும் பரிதாபமாய் பார்க்கிறாள். ஒத்தைக்கையாலேயே கல் உடைக்கிறவர். அந்த பாவப்பட்ட மனிதரை பார்த்தபடியே பின்பக்ககமாய் நடக்கிறாள்; நடந்து நடந்து, ஒரு பூவரசு மரத்தின் பக்கமாய் வருகிறாள். ஒரு பெண் கூட்டம், கல்லும், கைப்பிடி சம்மட்டியுமாய் இயங்குகிறது. இவள் வேலை பார்த்த இடம்.... இவளோடு தாயாய் பிள்ளையாய் பழகிய பெண்கூட்டம். அவர்களை பார்த்தபடியே மெளனமாய் நிற்கிறாள். அவர்கள் கையிலும் காலிலும் ரத்தத்துளிகள்... ஒரு சம்மட்டித் திசைமாறி, ஒருத்தியின் பெருவிரலை ரத்த முலாமாக்குகிறது. கீழ்நோக்கிப் பாயும் சம்மட்டிகளை கற்கள் மேல்நோக்கியே திருப்புகின்றன. சரணடைய மறுக்கின்றன. இந்தப் போரில் சக்கைக்கற்களில் இருந்து தெறிக்கும் துக்கடா கற்களும் துகள்களும் மேலெழும்பி ஒருத்தியின் குனித்த முகத்தில் உதட்டை வீங்க வைக்கிறது. இன்னொருத்தியின் மூக்கிற்குள் நுழைந்து மூச்சைப் தடுக்கிறது. எல்லாப் பெண்களும் சேர்ந்தாற்போல் நிமிர்ந்து முதுகுகளை பின்பக்கமாக வளைத்துவிட்டு, பூவரசுத்துரில் சாய்ந்து கிடக்கும் கையுடைப்பு மேஸ்திரியைப் பார்க்கிறார்கள். ஒருத்தி. எல்லோரையும் கையமர்த்திவிட்டு பேசுகிறாள்.  "இது சொரிக்கல்லு மேஸ்திரி. சில்லி சில்லியாய் தெறிக்குது. இதை ஒடைச்சா ஒடம்பே ரத்தக்காடாயிடும். மாவுக்கல்ல கொண்டுவாங்க".  அந்த மரத்தின் வேர் போல் கிடந்த, கையுடப்பு மேஸ்திரி எக்காளமாய் சிரித்தபடியே சொரிக்கல் சூட்சமத்தைச் சொல்கிறார்.  "உண்ட இடத்துக்கு ரெண்டகம் செய்தவளோட உறவாடுற உங்களுங்கு. இந்த மாதிரி சொரிக்கல்லத்தான் கொடுக்கணுமுன்னு உத்தரவு வேணுமுன்னா வேலை செய்யுங்க... வேண்டாட்டிப் நடையக்கட்டுங்க... இந்த பார்வதியே உங்களுக்கு கூட்டுறவு சங்கத்துல வேலை வாங்கிக் கொடுப்பா... ஏம்மா! இன்னும்மா... நீ இடத்தைக் காலி பண்ணல? நாங்க சொன்னத லேசா எடுத்துக்காதம்மா.... இல்லன்னா போலீஸ் வைச்சு..."  பார்வதி, அவர் முடிக்காத வார்த்தையை அர்த்தப்படுத்துகிறாள். யாராலும் கண்டுபிடிக்க முடியாத இந்த இடத்திற்கு போலீஸ்காரர்கள் வந்து 'அதை' இழுத்துக் கொண்டு போனதில் ஒரு சூது இருப்பது, இப்போது அவளுக்கு புரிகிறது. இனத்தான்கள் என்று நம்பி ஊரில் நடந்த சங்கதியை ஒரு சிலரிடம் ரகசியமாய் சொன்னது எவ்வளவு தப்பாப் போயிற்று இல்லன்னா காகங்கூட நுழையமுடியாத இந்தக் காட்டுக்குள்ள திருநெல்வேலி போலீஸ் நுழையமுடியுமா...  பார்வதி, அவரை கணமாகப் பார்க்கிறாள். சொரிகல் பெண்களையும், மாவுக்கல், கருங்கல் பெண்களையும் நேருக்குநேராய் பார்க்கிறாள். கோபம்கோபமாய் முறைக்கிறாள். இவள்களின் துண்டுதலால்தான், அப்படி உளறிக் கொட்டியதாக சொல்லிவிடலாமா என்றும் யோசித்தாள். பிறகு இவர்களாவது நல்லா இருக்கட்டும் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே மறுபக்கமாய் மெல்ல நடக்கிறாள். கல்லுடைப்புப் பெண்களோ சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கிறார்கள். காக்காய்ப் பொன் நிறத்தில் வசிடெடுத்து வாரிச்சுருட்டிய கொண்டையோடு கவ்விப்பிடிக்கும் கண்களைக் கொண்ட அவள், இப்போது பறட்டைத் தலையாய், பாழ்குழி கண்களாய் நிர்க்கதி பார்வையாய் பார்ப்பதில், அந்தக் கூலிப் பெண்களுக்கு குற்ற உணர்வு பெருக்கெடுக்கிறது. ஆத்திரமும் அழுகையும் ஏற்படுகின்றன. அதை, கல்லில் கடினமாகவும் வேர்வை சிந்தலாகவும் வெளிப்படுத்துகிறார்கள்.  இதற்குள், எல்லா திசைகளில் இருந்தும் ஆளுக்காள் ஓடுகிறார்கள். நான்கைந்து பெண்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்தபடியே, ஒரு யந்திர மேட்டில் இருந்து குதிக்கிறார்கள். இங்கே நின்றவர்களும் கையுடைப்பு மேஸ்திரியிடம் சொல்லாமல் கொள்ளாமலேயே ஓடுகிறார்கள். எல்லா இடங்களில் இருந்தும், துளித்துளியாய் வந்தவர்கள். ஆறாய்ப் பெருக்கெடுத்து, அந்த முதலை வாய் பாதாளக்குகைக்குள் அருவியாய் பாய்கிறார்கள். அந்தப் பள்ளத்தாக்கே ஓலமிடுவதுபோல் தோன்றுகிறது. உரத்துக் கத்துவதுபோல் கேட்கிறது. பார்வதி மெல்லத்தான் நடந்தாள். ஆனாலும், கீழே எழுந்த கூக்குரல் மேலோங்க மேலோங்க, அவள், இதுவரை ஓடாத ஓட்டமாய் ஓடினாள். ஒடி ஒடி அந்தப் கல்படுகைக்குள் இறங்கி, கூட்டத்துள் முண்டியடித்து அதன் முகப்பிற்கு வந்துவிட்டாள். அங்கே கண் காட்சியை பார்த்துவிட்டு கண்களை மூடுவதும் திறப்பதுமாக இருந்தாள்.  நடுத்தரவயது பெண்ணொருத்தியின் காலில் விழுந்த பாறைக்கல்லை பத்து பதினைந்து பேர், எப்பூடியோ மேலே உருட்டி அதற்கு அணைபோட்டு நிற்கிறார்கள். அந்தப் பெண்ணின் வலது கால் சதைக்குழம்பாய் சிதைந்து கிடக்கிறது. செத்தாளோ... இருக்காளே... ஒரு முன்ங்கல் கூட இல்லை. அவள் கணவன், ஒரு கல்லை எடுத்து தனது தலையிலேயே குத்திக் கொள்கிறார். ஆரம்பத்தில் அவரை யாரும் பார்க்காததால் அவரும் தலைபிளந்து விழுகிறார். நான்கைந்து பெண்கள் ஒப்பாரி போடுகிறார்கள். அம்மாவுக்கு ஒன்றம் அப்பாவுக்கு ஒன்றுமாய் மாறி மாறி தலையில் அடித்துக் கொள்கிறார்கள். வாயில் குத்திக் கொள்கிறார்கள். கூட்டம், ஒட்டு மொத்தமாய் அய்யய்யோ என்று அரற்றுகிறயது. விசாரித்துப் பார்த்தால், வெடி மேஸ்திரி, ஒருவர் அந்தப் பெண்ணை சிதறிக் கிடக்கும் சின்னதும் பெரியதுமான கற்களை ஒன்று சேர்க்கும்படி சொல்லி இருக்கிறார். இவளும், வெடி வைப்பால், உருளும் நிலையில் இருந்த ஒரு பாறைக் கல்லுக்கு அணைகொடுத்த சின்னஞ்சிறு கற்களை பிடுங்கி இருக்கிறாள். இதனால் பாறைக்கல் உருண்டது. இவள் காலே அந்தக் கல்லுக்கு அணைப்பானது.  சேதிகேட்டு, ஏழெட்டு மலைமேஸ்திரிகள் நிதானமாய் ஆடியசைந்து வந்தார்கள். இப்படி நடப்பது சகஜம் என்பது போன்ற பார்வை, அதே சமயம், பார்வதியைப் பார்த்ததும் ஒரு முன்னெச்சரிக்கை; இந்த மாதிரி சந்தர்ப்பங்களில், முன்பு எதையுமே பேசாத அவர்கள், இப்போது உபதேசம் செய்ய நினைத்தார்கள். 'ஒருவருக்கொருவர் காதைக் கடித்துக் கொண்டார்கள். பின்னர் இவர்களில் ஒரு பெரிய கொம்பன் கூட்டத்தை இருகையாலும் ஆற்றுப்படுத்தியபடியே பேசினார். அவர் பேசப்பேச, அவரது கைக்கடிகாரம் சூரியக்கற்றைகளை ஒளிபரப்பியது. கழுத்துச் செயின் டாலடித்தது. பார்த்தாலே பயம் கொடுக்கும் முகத்தை பயமுறுத்துவதுபோல் வைத்துக்கொண்டு எதேச்சையாக பேசுவதுபோல் பேசினார்.  'நல்ல வேளை... தலையோட போகாமல் காலோட போச்சுது. இந்தாப்பா... லாரி வந்துட்டுது... இவங்க ரெண்டு பேரையும் துக்கிட்டுப் போங்க அப்புறம்... எல்லாரும் ஒரு விசயத்த தெரிஞ்சுக்கணும். இந்த பூமியில் நாம அண்ணன் தம்பியாய் பழகுறோம். ஏதோ போதாத காலம் இப்படி ஆயிட்டுது. ஆனாலும் நிச்சயம் ஒரு தொகையை போட்டுக் கொடுக்கச் சொல்லுறோம். இங்கே யாரவாது வெளியாளு வந்தால், ஒருத்தரும் மூச்சு விடக்கூடாது. அப்படிவிட்டால் மறு நிமிஷமே நாங்க மோப்பம் பிடிச்சுடுவோம். அப்புறம் எங்கமேல வருத்தப்படக்கூடாது. உங்களுக்கு தெரிஞ்சத நீங்க செய்தால், எங்களுக்கு தெரிஞ்சத நாங்க செய்வோம். செய்திருக்கோம். இதுல ஒளிவு மறைவு வேண்டியதில்ல. ஏண்டா பெருமாள் மாடு மாதிரி பார்க்குற? சட்டையில ரத்தக்கறை பட்டா படட்டுமே. நீயும் அந்த அம்மாவுக்கு ஒரு கைகுடு, பழையபடியும் சொல்றேன். இப்படி நடக்கிறது இங்க சகஜம். இது வெளில தெரிஞ்சால் மாமூல் ரேட்டு கூடுமே தவிர மத்தபடி எதுவும் நடக்காது’.  விம்மி வெடிப்பது போல் நின்ற ஒரு சொரி கல்காரி, கொம்பன் மேஸ்திரியை நிமிர்ந்து பார்க்கிறாள். ஆண்டாண்டு காலமாக தொலைந்து போன முகத்தை கண்டு பிடித்தவள் போல், இதுவரை கத்தாத கத்தாய் கத்தினாள். கொம்பன் மேஸ்திரியின் சத்தத்தால் மெளனப்பட்ட கூட்டம் சொரிகல் காரி கத்தி முடித்துவிட்டு பேசியதை உற்றுக் கேட்டது.  “எதுவும் நடக்காதா ஏன் நடக்காது? இந்த பார்வதி கூட்டுறவு பயலுகக்கிட்டயோ, தொழிலாளர் நல பயல்கள் கிட்டயோ சொன்னது மாதிரி, ஆயிரம் பேரை மெம்பரா கொண்ட நம்ம கூட்டுறவுச் சங்கத்துக்கு இந்த மலை சொந்தம். இந்த மலையை எல்லாரும் உழைச்சு அனுபவிக்கனும் என்கிறது தான் சட்டம்”.  ஆளுக்கு ஆள் பேசப் போனார்கள், சந்தை இரைச்சல், இதற்குள் ஒரு நடுத்தர உழைப்பாளி அனைவரையும் கை அமர்த்தி விட்டு சொரிகல் காரி விட்ட இடத்தை தொடர்ந்தார்"  “கிடைக்கிற லாபத்த சமமா பங்கு போடணும். ஆனால், ஆயிரம் பேர்ல. உங்கள மாதிரி இருபது பேரு, ஒண்ணாச் சேர்ந்து இந்த மலையை பங்கு போட்டு சம்பாதிக்கீங்க. ஒங்கள மாதிரி மெம்பரான எங்களுக்கு கூலிதான் கொடுக்கிங்க...”  அந்த கூட்டுறவு இல்லாத சங்கத்தில் பகுதி கிளார்க்காக இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஒரு இளைஞன். உள்ளதைச் சொன்னால் உயிரோடு கொளுத்தி விடுவார்கள் என்று பயந்து கிடந்தவன். இப்போது கொம்பன்களின் கணக்கை தீர்ப்பது போல் கணக்கைச் சொன்னான்.  “முந்நூறு ரூபாய் லோடுல, இவங்களுக்கு கிடைக்கிறது எழுபது ரூபாய்தான். நீங்க உழைக்காமலே திங்கிறது இருநூற்று முப்பது ரூபாய்... இலைமறைவு காய்மறைவாய், இதை தட்டிக் கேக்கிறவங்கள, போலீஸ்ல ஒப்படைக்கிறீங்க. இல்லன்னா... கைகால முறிக்கிறீக... இந்த அப்பாவிப் பொண்ணோட ஆம்படையான், வீட்டுக்காரிக்கு வக்கலாத்து வாங்குனதுக்காக, அவன் தஞ்சமுன்னு நினைச்சுச் சொன்ன சேதிய, போலீசுக்குச் சொல்லி விலங்குபோட வைச்சிங்க... ஏய்... ராமய்யா... இங்க வாய்யா...”  இதே மாதிரி சந்தர்ப்பத்தில் ஒரு கையை இழந்த ராமய்யா கூட்டத்திற்கு முன்னால் வந்தார். அவர் தோளில் கை போட்ட படியே ஒரு மூதாட்டி வேட்டைக்குபோகும் பெண் சிங்கமாய் கர்ஜித்தாள். வழக்கமாய் நடுங்கும் அவளது குரல், இப்போது நடுங்க வைப்பதுபோல் ஒலித்தது.  “இவன் வேலையும் பறிபோச்சு... கல்யாணமும் நின்னுபோச்சு... இப்படி எத்தனையோ பேரு... இவங்களுக்கும் ஏதோ செய்யப் போறதாத்தான் சொன்னிங்க.. என்ன செய்து கிழிச்சிங்க?  அந்த மூதாட்டியின் குரல் கட்டிப் போனதால் இன்னொருத்தி தொடர்ந்தாள். “பார்வதி அதிகாரி பயலுககிட்ட சொன்னவள்தான்... அவளை அப்படி சொல்ல வச்சது நாங்கதான். இந்த மலைக்கு நாங்க கூலி ஆட்கள் இல்ல. சொந்தக்காரிங்க... சங்கத்துக்கு சந்தா கட்டுற மெம்பருங்க. இப்பவே ரெண்டுல ஒண்னு தெரிஞ்சாகனும்”  ஆங்காங்கே சிதறி நின்ற கூட்டம், ஒருவரோடு ஒருவர் நெருங்கி கும்பலாகிறது. அத்தனைக் கண்களிலும் சின்னச்சின்ன பொறிகள். அவை ஒட்டுமொத்தமாய் மனிதத்தீயாகி, அந்த மலைக்காடு முழுவதும் வியாபிக்கிறது. கரிக்கட்டையாய் போன பார்வதியும், மீண்டும் ஒரு சிறு பொறியாகி, அந்த மனிதத்தீயில் சங்கமிக்கிறாள்