[] நூல் பெயர்: சிக்கல் சிங்காரவேலவா ஜீவனை சிவனாக்கிடுவாய்   ஆசிரியர்: ப.மதியழகன் மின்னஞ்சல்: mathi2134@gmail.com கைபேசி: 9597332952, 9095584535 பதிப்பு: ஜூலை 2019 வெளியீடு: freetamilebooks.com மின்னூலாக்கம்: ப.மதியழகன் அட்டைப்படம்: ப.மதியழகன்   Creative Commons Attribution-ShareAlike 4.0 International License You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work   சிக்கல் சிங்காரவேலவா ஜீவனை சிவனாக்கிடுவாய் முதல் பதிப்பு : ஜூலை, 2019 உரிமை : ஆசிரியருக்கு பக்கங்கள் : 77 ஆசிரியர் முகவரி : ப.மதியழகன் 115, வள்ளலார் சாலை, ஆர். பி.சிவம் நகர், மன்னார்குடி - 614001. திருவாரூர் மாவட்டம். செல் : 9597332952   என்னுரை அறிவியலாளர்கள் ஹக்லி, டார்வின் என்று மேற்கொள் காட்டிப் பேசினால் முழுமையாக அதை நம்புவான். காது கொடுத்து சிறிது நேரம் அவ்விஷத்தை கேட்பான். விஞ்ஞானிகள் இயற்கையை ஆராய்ந்து உணர தலைப்படுகிறார்கள். மெய் ஞானிகள் உள்ளுக்குள் ஆத்ம விசாரம் செய்கிறார்கள். அறிவியலால் அறியப்படாத ஒன்று இந்த வினாடி வரை இருப்பதால் தான் அறிவியல் இவ்வுலகில் ஜீவித்து இருக்கிறது. 60 வருடம் வாழ்வோம் எனக் கொண்டால் படிப்பு, உத்தியோகம், மனைவி இதனையெல்யாம் நாம் கூடுமானவரை நாம் நம் விருப்பத்திற்கு ஏற்படி தேர்வு செய்துகொள்கிறோம். ஆனால் பிறப்பும் இறப்பும் அதாவது இன்னாருக்கு இன்ன ஊரில் பிறக்கப்போகின்றோம் என்பதையும் இன்ன வயதில் இறக்கப்போகின்றோம் என்பதையும் யாரும் முடிவுசெய்துகொண்டு பிறக்கவில்லை அதன்படி நடப்பதில்லை. இவ்வுலக மக்களெல்லாம் யோகவேள்வியை செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். யோகம் என்பது ஏதோ தியானமோ, தவமோ அல்ல உலக மனிதர்களின் வாழ்க்கைப் பாதை. கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம், ராஜயோகம் இந்த நான்கில் இதில் ஒன்றை அதனை நாம் பின்பற்றுகின்றோம் என்ற உணர்வில்லாமல் அன்றாட வாழ்வில் அதன்வழி நடக்கின்றோம் நாம். கர்மயோகம் செயல் புசிவதை வழியுறுத்துகிது. ஊழ்வினை சூழும் என்பதற்கு அஞ்சி கர்மம் புரிவதை நிறுத்தாதே ஏனெனில கர்மம் புசியாமல இவ்வுலகினில் உயிர் ஜீவித்து இருக்க முடியாது சுவாசிப்பதும், எண்ணுவதும் கூட கர்மமே. விளையாட மைதானத்தில் வீரராய் இறங்கிவிட்ட பிறகு பயந்து பின்வாங்குதல் இழுக்கல்லவா என்பது கீதையில் கண்ணணின் உபதேசம். ஞானயோகம் இதுவல்ல, இதுவல்ல என்று அறிவினால் பகுத்தறிந்து நான் உடலல்ல, மனமல்ல, புத்தியல்ல என்று மறுத்துக்கொண்டே வந்து இறுதியில் அகம் பிரம்மாஸ்மி எனஉணர்வது. ராஜயோகம் செயல்புரிவதற்கான சக்தியும் எதையும் எதிர்க்கத் துணியும் வல்லமையும், அகண்ட சாம்ராஜ்யத்தை நிறுவிடும் ஆற்றலும், சகலரையும் அதிகாரம் செய்து வாங்கிடும் குணமும் ராஜயோகத்தால் அமைந்திடும். பக்தியோகம் என்பது எப்போது நாம் உடலாயிருகின்றோமோ அப்போதுவரை நானே எல்லாம் என்ற கூற்றை சொல்லமுடியாது. ஏனெனில் மூலக்கூறுகளால் இணைந்து ஏற்பட்ட எந்தவொன்றும் அழியவே செய்யும் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை . மனிதனாய் இருக்கின்றவரை நான் - அவன் என்ற பாவமே சிறந்தது நான் சேவகன் அவன் - எஜமான் என்ற நிலையில் இறைவனுடைய நாமங்களைஓம் சரவணபவ), அனுதினமும் உச்சரித்து. பூனைக்குட்டியை தாய் எந்த இடத்தில் வைக்கின்றதோ அது சகதியானாலும், வெப்பம் மிகுந்த இடமானாலும், முள்வேலியானாலும் துயருரும்போது பூனைக்குட்டி கத்தி தாயை அழைக்கும் வேறென்ன செய்யமுடியும் அந்தக் குட்டியால். அப்பூனைக்குட்டியைப் போலவே நாம் பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும்போது இறைவனைக் கூவி அழைக்கின்றோம். வேறன்ன செய்ய முடியும் எங்களால் என்று இறைவனின் மீதுள்ள நம்பிக்கையால் துன்பங்களையும், துயரங்களையும் சுமந்து கொண்டு வாழ்கின்றோம். ஒரு கதை உண்டு ராமர் கங்கையில் குளிக்கச் செல்லும் போது இருளாக இருந்ததால் அம்பை கீழே படுக்கை நிலையில் வைத்துச் சொன்னார் குளித்துவிட்டு வந்து தேட வேண்டி வரும் என நினைத்து அம்பின் கூர்மையான முனையை மணலில் ஊன்றி வைத்துவிட்டுச் சென்றார். கரையேறிய பின் அம்பை பிடுங்கும் போது கூர்முனை தவளையின் உடலை கிழித்துகொண்டிருந்தது அது உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இராமனின் இதயம் கருணை கொண்டு அ த் த வ ளை யி ட ம் நீ உடனே கத்தி கூப்பிட்டிருந்தால் நான் விடுவித்து இருப்பேனே உனக்கு இந்நிலை ஏற்பட்டு இருக்காதே என்றார். அதற்கு அத்தவளை யாராவது எனக்கு தீங்கிழைத்தால் ராமா ராமா என்று கத்துவேன் அந்த ராமரே அம்பினால் குத்தும்போது யாரை கூப்பிடுவேன் என்று கூறி உயிரை விட்டது. இராமனின் கண்ணீர்த் துளி மணலில் பட்டுத்தெரித்தது . பரமாத்மாவை தன் பக்தியினால் கண்ணீர்விடச் செய்த தவளை நம்மை விட மிக உயர்ந்த இடத்தில் நிற்கிறது. அனுமன் கடல்தாண்டிட இராமரின் மீதுள்ள அளவுகடந்த பக்தியே காரணம். வானரனான அனுமன் இந்த கலியுகம் வரை தெய்வமாய் வழிபடபடுவதற்கு அனுமன் ராமர்மீதுகொண்ட பக்தியே காரணம். கந்தனுடைள அனுபூதி பெற்ற அருணகிரிநாதர் திருப்புகழ் பாடினார், நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடினார், குமரகுருபரர் சண்முக கவசம் இயற்றினார் . அந்த இறையனுபூதி வாய்க்க முருகனை வேண்டி பக்தியினால் உண்டான முயற்சியை சிறகாய் விரித்து சிறிது துாரம் வானத்தில் பறந்துள்ளேன். நான் சிறுகுருவியெனினும் கழுகின் தலைக்கு மேலே அது கண்டறியாத அப்பாலுக்கு அப்பால் எங்கோ இருக்கின்ற பரப்பிரம்பத்தை நோக்கி சிறகை விரித்துள்ளேன். பக்திப்பித்தினால் எனது எழுத்தில் பிழைகள் மலிந் திருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.     முருகனை நினை மனமே!   உனை தினம் பாடியே  பரம்பொருள் நாடியே  உன் திருத்தலம் தேடியே  என் பாதம் தேய்ந்து போனதே  உன் ஆறுமுகம் பார்க்கவே  கண்கள் உறங்காமல் துடிக்குதே  உன் திருமண கோலத்தை  கனவினில் பார்க்கினும்  நான் பிறந்ததன் பயனை  அடைந்ததாய் தோணுதே  நீ கொடுத்த தமிழில் உனை பாடியே  வாழ்க்கைக்கடலில்  உன் காலடியை சேரத் துடிக்கும்  சிறுமரக்கலமாய் அலைகளில் ஆடியே  என்று உயிர் போகுமோ  யார் என்னைச் சுமப்பரோ அறிந்திலேன்  இனி ஒரு பிறவி தா  உன் மார்பில் சூடும் மாலைகளை  தொடுக்கும் பணியைத் தா     யாதுமாகி நின்றாய்   உலகுக்கு மூலாதாரம் சிவமமாம்  அச்சிவத்திலிருந்து தோன்றிய  பரஞ்சோதிப் பிழம்பாகி  உலக அன்னை  பார்வதிதேவி மெச்சிகின்ற பிள்ளையாகி  எதிலும் ஜெயம் உனக்கு என்றவள்  தன் சக்தியை வேலாக்கி முருகனிடம் தந்துவிட்டமையால் சிக்கல் கிங்காரவேலனாகி  முற்றும் உணர்ந்துகொள்ள இயலாத  ஞானப்பொருளாகி விரல் ரேகைகள் ஒன்றாய் அமைந்த  மனிதர்கள் உலகில் உண்டோ அறுசுவைகளில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும் அன்றோ  ஆனாலும் அவரவர் பக்தி பாவத்துக்கு  ஏற்றபடி ஓடோடி வரும் ஆறுமுகம் கொண்ட பன்னிருகரத்தனாகி மண்ணில் பிறந்து விட்டால்  ஆறு பருவங்களை அனுசரித்தே வாழவேண்டும் ஆறுகோலங்களைத் துறந்து  திருவோடு ஏந்தி யாசகம் கேட்கும்  பழநி ஆண்டவராகி சிவனுக்கு ப்ரணவப் பொருள் உரைத்த  குருவாகி  அசுரர்களால் அழிவு ஏற்படும்  என அஞ்சி  தேவர்கள் தேவேந்திரனின் தலைமையயில்  உன்னிடம் அடைக்கலம் கேட்க  சூரனை சம்ஹாரம் செய்து தர்மத்தை காத்திட்ட தேவசேனாதிபதியாகி ஏட்டுப் படிப்பால் புத்திக்கு எட்டாத ஒன்றை  காட்டிலும், மேட்டிலும், காவியும், கமண்டலமும் கொண்டு அலைந்து திரிந்து உடலே கரையான் புற்றால் மூடுமளவுக்கு தவம் செய்து கோடான கோடி முனிவர்கள் தேடியலையும் தத்துவப்பொருளாகி ஐம்பூதங்களின் அடிமையாய்  உழலும் அனைவரையும்  நாற்புறமும் ராட்சச் சுவர் கொண்ட  இச்சிறைச்சாலையில் வலியவர்களால் கொத்தடிமையாக நடத்தப்படும் அப்பாவிகளை கருணை கொண்டு விடுவித்தருளும் நீதிநெறி தவறாத நல் அரசனாகி வயிற்றிலும், தோளிலும் சுமந்து அன்பை வாரி வாரி பொழிந்து தான் பசியாறாவிட்டாலும் இருக்கும் உணவை புசிக்கக் கொடுத்து வறுமையால் வாடச்செய்யாமல் சீராட்டி பாராட்டி தன் குழந்தைகளை வளர்க்கும் தாய், தந்தையுமாகி ஏறாத கோவிலில்லை செய்யாத பரிகாரமில்லை  மழலை ஒலி கேட்கின்ற மகத்தானதொரு வாழ்வைத் தா  என்று வேண்டி நிற்போர்க்கு அருள்புரிந்து  தொட்டிலில் வீறிட்டழும் தெய்வக் குழந்தையாகி உறவுகளால் கைவிடப்பட்டு  அனாதையாய் வீதியில் திரிந்து இறந்துபோகும் முதியவர்களுக்கு தன்னோடு வீரபாகு  முதலிய வீரர்களை அழைத்து வந்து ஈமச்சடங்கு செய்து மனச்சாந்தியுடன் அவர்களை மேலுலகுக்கு அனுப்பும் பெற்றெடுக்காத தவப்புதல்வனாகி பலவருடங்களாய் வெறும் படிக்கல்லாய் இருப்போருக்கு அவர்களின் உள்ளே ஒளிந்திருக்கும் அற்புத சிற்பத்தைக் கண்டு அக்னியை வலம் வந்து நம்பிக்கையால் கைப்பிடித்து வலித்தாலும் பரவாயில்லையென்று உளியால் அடித்தடித்து பிறர் வணங்கும் தெய்வச் சிலையாக மாற்றும் மனைவியாகி சிறுகுடிசையில் பெண்ணாய் பிறந்ததினால் கன்னியாகவே காலம் கழித்திட வேண்டுமா குமரா? என கையேந்தி தாலி பாக்கியம் கேட்போருக்கு செல்வம் ஆற்றுநீரன காலத்தில் வந்து போகும் வாழ்வதற்கு நல்மனம் போதும் குணத்தால் பிறர் குறைசொல்ல முடியாத வாழ்வு வாழ்ந்தால் ஊற்றுநீரன பதினாறு பேறுகள் பொங்கி வந்து பாதங்களில் தவங்கிடக்கும் – என்று நல் வார்த்தை கூறி கைப்பிடிக்கும் உத்தம புருஷனாகி காசு பணம் கையில் இல்லாமல் கரைந்தவுடன் தாயாய் பிள்ளையாய் பழகி கூடிக்களித்த சொந்தபந்தம் அந்நியமாய் அற்பப்புழுவினைப் போல் நம்மைப் பார்க்கும் பல நண்பர்கள் என் பெயரைக் கேட்டு அப்படியொருவனிடம் எனக்கு பழக்கமில்லை என ஒதுங்கிவிட என்னுடைய நஷ்டத்தில் பாதியை நீ தோளில் சுமந்து புதைகுழியிலிருந்து என்னை மீட்டெடுத்து மானம் காத்த உயிர் நண்பனாகி கண்களில் பார்வையாகி செவிகளில் ஓசையாகி நாசியில் மணமுமாகி நாவினில் செந்தமிழ் பாடலாகி உடலில் உறையும் உயிராகி பயணிக்கும் பாதையாகி உடலுக்கு வாழ்வழிக்கும் வளிமண்டல காற்றாகி உடலுக்கு சக்தியளிக்கும் உணவான காய், கனியாகி அனைத்தையும் தன்னுள்ளே அடக்கியிருக்கும் ஆன்மாவாகி எங்கெங்கு காண்கையிலும் முடிவில்லா வெளியென நீண்டிருக்கும் விண்ணாகி பாலைவனமாய் மண் மாறவிடாமல் தன் நீரை ஆவியாகக் கொடுத்து பூஞ்சோலையாய் பூமியை வைத்திருக்கும் கடலாகி பேய்களுக்கும், பிணிகளுக்கும் அடுத்தவரை துன்பப்படுத்தி சுகங்காணும் எவருக்கும் சத்ருவாகி புறக் கவர்ச்சியினால் கவரப்பட்டு மனம் எங்கெங்கோ செல்கிறதே ஊனை நினைக்கும் அதே மனம் ஈக்களைப் போல் மலத்திலும் போய் உட்கார்ந்து கொள்கிறதே உனை தரிசிக்கும் அதே கண்கள் தீயச்செயலைக் காண ஆர்வம் கொண்டு அலைகிறதே உனது திருப்புகழை கேட்கும் அதே செவிகள் மற்றவர்களின் அந்தரங்க செய்திகளை குதூகலத்துடன் கேட்க விழைகிறதே உனை பக்தியினால் கைகூப்பித் தொழும் அதே கைகள் பெண் உடலை ஆரத்தழுவ மோகம் கொண்டு துடிக்கிறதே உனது திருக்கோவிலை நோக்கி வரும் அதே பாதங்கள் பாவத்தை கூவி விற்கும் பரத்தையர் வீடுகளுக்கும் செல்கிறதே உனது பெருமையினைப் பாடிடும் அதே வாய் அகராதியில் இல்லாத அத்தனை கெட்ட வார்த்தைகளையும் கோபத்தினால் பிறர் மீது உமிழ்கிறதே இத்தனை கேடுடைய மனிதப்பிறப்பெனக்கு இந்திரப்பதவி கொடுத்தாலும் வேண்டாம் வேண்டாமப்பா இனிவொரு கருவறையில் என் உயிர் புகாமல் பிறாவாமை வரம் கொடுத்து முருகா உன் திருவடியில் ஏற்றுக்கொள்வாய் சரண் புகுந்தேன் சண்முகா உன் சரணமப்பா!     சிக்கல் சிங்காரவேலா ஜீவனைச் சிவனாக்கிடுவாய்   பரம்பொருள் குடியிருக்கும் குன்றம் அது நித்தமும் கோவிலைச் சுற்றிடும் தோகைமயில் மண்ணிலும், விண்ணிலும், மலையிலும், வனப்பாதையிலும் அனைத்திலும் அவன் நிறைந்திருப்பது திருப்பரங்குன்றத்தில்   மயிலால் உலகளந்த பெருமான் ஈசன் அருளிய பழம் தனக்கு கிடைக்கவில்லையென்பதால் குமரன் ஏக்கம் கொண்டு அமர்ந்த இடம் பழமுதிர்சோலை   சமுத்திரம் சூரசம்ஹாரத்தால் ஆனது செந்நிறம் அதனைச் செய்த செந்தில்வேலவன் வீற்றிருப்பது திருச்செந்தூர் என்னும் விண்ணிலம் அடியவர்களின் குறைதீர்க்க முருகா என்றழைத்து முடிக்கும் முன்பே வந்து நிற்கும் குமரன் கயிலைமலையை விட்டு தனியனாய் வந்து ஆண்டியாய் நின்று இப்புவியை ஆண்டுகொண்டிருக்கும் ஞானப்பழமான முருகன் வீற்றிருக்கும் பழனிமலை   திருப்பதி கைவிட்டுப் போனால் என்ன திருத்தணி எங்களுக்கு கிடைத்ததல்லவா எல்லோரும் பொன்னாக கொட்டட்டும் திருப்பதியில் மலைகளே பொன்னாக ஜொலிக்கும் கந்தன் சினம் தணிந்து வள்ளி தெய்வானையுடன் திருக்கோலம் கொண்ட திருத்தணியில் திருவண்ணாமலையில் அருணகிரியாருக்கு அடைக்கலம் அளித்து தமிழில் கவிபாட அடியெடுத்து கொடுத்து அருள் புரிந்த கந்தபிரான் அண்ணாமலை இருக்குமிடத்தில் அருணகிரிநாதரின் திருவடி பட்ட இடம் சுவாமிமலை                 குருவாய் வருவாய்   பகலவன் தோன்றி மறையும் திசையைவிடுத்து மற்ற ஆறு திசைகளையும் ஆளும் ஆறுமுகத்தோனே நீ வருவாய் ஆயிரம் சொர்க்கலோகம் அணிதிரண்டாலும் உருவாகுமோ தேவலோகம் அந்தலோகத்தை ஆளும் தேவேந்திரனின் மகளாகிய தெய்வானையை மனைவியாகப் பெற்ற முத்துக்குமரனே நீ வருவாய் சூரனை வதைத்த வெற்றிவேல், தேவி அவள் கொடுத்த சக்திவேல், சிக்கலைத் தீர்க்கும் சிங்காரவேல் பகைவர்களை பயந்தோடச் செய்யும் கந்தவேல், கொடியவர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்ட வந்தவேல், அவ்வேலை ஏந்தி சிக்கலில் வீற்றிருக்கும் சிங்காரவேலவனே நீ வருவாய் உலகுக்கு அரசனாய் உன் அப்பன் சிவனிருக்க, ஈரேழு லோகங்களுக்கும் ராஜகுமாரனாய் நீ இருக்க முனிவர்களின் அருளாசியால் பதினாறு பேறுகள் நீ பெற்றிருக்க அனைத்தும் இருந்தும் அனுபவிக்காமல் அனைத்தையும் துறந்து திருவோடு ஏந்தி பழனிமலையில் ஆண்டியாய் யாசகம் கேட்டும் பழனி ஆண்டவனே நீ வருவாய் கண்ணனின் அன்பிற்காக கோபிகைகள் தவமிருக்க கண்ணனின் தலையை மயிற்பீலி இறகு அலங்கரிக்க கண்ணனுக்கு மயிற்பீலி ஒன்றைசூடக் கொடுத்து மயிலையே உயிரோடு தன்னுடன் வைத்துக் கொண்ட பாலமுருகனே நீ வருவாய் வள்ளிக் குறத்தி அவள் தன் மேல் வைத்திருக்கும் பிரேமையைக் கண்டு நாடி தளர்ந்து கோல் ஊன்றும் முதியவர் வடிவில் அவள் முன் சென்று தன்னை நினைத்து தானுருகி பசிக்கு முருகனின் நினைவையே உணவாக்கிய வள்ளியை ஆட்கொண்ட வள்ளிமணாளனே நீ வருவாய் உயிர்களைப் படைத்திடும் பிரம்மனே உணர்ந்திராத ஓம் எனும் பிரவணத்தின் பொருள் அந்த ஓங்காரத்தின் தத்துவமாக விளங்கும் கந்தபுராணக் கடவுளே நீ வருவாய் யாருக்கு மாம்பழம் என்று சிவன் செய்த திருவிளையாடலிலே அண்ணன் பிள்ளையாருக்கு பழத்தை விட்டுக்கொடுத்து, ஞானப்பழத்தினை ஈசனிடமிருந்து பெற்றுக்கொண்டஞானசூரியனாய் ஒளிவீசும் செந்தில்வேலவனே நீ வருவாய் நீர்க்குமிழிபோன்ற இளமை கூத்தை வந்து பார்த்த பிறகு கலைந்து செல்லும் மக்கள் கூட்டம் போன்ற செல்வம் இந்த நிலையில்லா உலகில் நிலையான என் நாயகனே உமையொரு பாலகனே நீ வருவாய் எந்த மனிதனிடத்தில் எந்த சக்தி மறைந்திருக்கும் என்றுணராமல் அவனை இகழாதே என்பதை உணர்த்தும் சிவனுக்கு சின்னஞ்சிறுகுழந்தை வடிவில் குருவாய் உபதேசம் செய்த குருஞானதேசிகனே நீ வருவாய் மாதர்கள் மயக்கத்தில் விழுந்துகிடந்த அருணகிரி குடும்பச்சொத்தை எல்லாம் பரத்தை வீடுகளுக்கு வாரி இரைத்த அருணகிரி அதனால் ரோகம் வந்தது உடலை வாட்டி எடுத்தது அந்த அருணகிரியின் வாயிலிருந்து மழையென தமிழ்ப்பாடல் பொழிந்தது. அவரின் முதல் பாடலுக்கு வார்த்தை எடுத்துத்தந்த முத்தமிழ்க்காவலனே நீ வருவாய் எத்தனையோ பிறவிகள் எடுத்து, இன்பம் இதுவென அலைந்து, இறுதியில் மண்ணில் புதைந்து என்னடா வாழ்வென்றிருந்தேன், கார்த்திகேயனின் காலடியில் சரண்புகுந்தேன் மாயை எனும் திரையை தன் ஞானவேலால் கிழித்து பரமன் மகன் தன் அருள் காட்சிதனை காட்டிவிட்டான் வேறு பிறவி எதற்கு கடைசி வரை கந்தன் இருக்கின்றான்   உலகைத் துறந்ததினால் வந்திட்ட ஞானத்தால் உலகை உருவாக்கிய மூலதார சக்திக்கு உலகில் மனிதர்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளை உரைத்து திருவோடு ஏந்தி பழனிமலை நோக்கிச் சென்று உலகில் உள்ளம் உருக ஓம் எனும் பிரவண மந்த்ரம் சொன்னால் உரைத்தவர் உய்ய மயிலினில் வருவேன் உயிர் பிரியும் வரை உடனிருப்பேன் உடன் யாரும் இல்லையென வருந்த வேண்டாம் உடன் பிறப்பாய் கந்தனிருக்க வெதும்பவேண்டாம் உள்ளத்தால் கலக்கமுற்று வெதும்பவேண்டாம் உன் நிழலாய்த் முருகன் பின்தொடர்வான் மறக்க வேண்டாம் உன்னையே நினைத்து உனது நிலையை எடுத்துச் சொல்லி உண்ணாமல், உறங்காமல் தந்தையிடம் அழுவான், புலம்புவான் உடலின் பிணி மறந்து உறங்கும் வேளையிலே ஓடோடி வந்து உன் தலையை மடியினில் சுமந்து தாலாட்டு பாடுவான் சிலந்தி வலை போன்ற இவ்வுலகத்தில் சிக்கித் துவல்வதைக் கண்டு உன்னைக் கரையேற்ற தன்னைக் கொடுக்கும் ஒருவனே அம் முருகன் இப்புவியில் எப்பிறவி நான் எடுத்தாலும் சுப்ரமணியனை நினைத்தே உயிர் விட வேண்டும் சூரபத்மனை வதம் செய்து மயிலாக வைத்துக் கொண்ட முருகன் அவனுடைய திருவடியில் என்னை ஒரு தூசாக வைத்துக்கொள்ளமாட்டானா     எங்கெங்கும் கேட்கினும் உனது திருப்புகழே   கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் நீ கூப்பிட்ட குரலுக்கு விரைந்தோடி வருவாய் நீ ஆதரவற்ற எல்லோருக்கும் வழித்துணைவனாய் நீ அதர்மம் எங்கு தலைதுாக்கிடினும் வேல்கொண்டு அழிப்பாய் நீ வயிற்றுக்குச் சோறில்லாமல் வறுமை குடும்பங்களைத் தின்னும்போது அவர்களோடு உணவு கிடைக்கும் வரை பட்டினிகிடப்பாய் நீ வாழ்க்கைப் பாதையில் பக்தன் தடுக்கி விழும் போது யாமிருக்கப் பயமேன்? என்று நம்பிக்கை அளிப்பாய் நீ மூடனாய் பிறந்துவிட்டேனே என உன் கோவில் வாசலில் தலையை முட்டி அழுவோர்க்கு குருவாய் ஓடோடி வந்து ஞானம் தருவாய் நீ காசு பணம் கையில் இல்லையென்றாலும் பாழும் மனம் அதை உணராமல் அனைத்தையும் வாழ்வில் அனுபவிக்க தெருநாய் போல் வீதியில் வாய்பிளந்து அலைகிறதே அம்மனத்தை அங்குசம் கொண்டு அடக்கி அருள்புரிவாய் நீ பெண் பித்தனாய் என்றும் சிட்டுக்குருவிபோல அந்த நினைவாய் உள்ளம் எனும் பெருங்கோவிலில் காமஞாபக வெளவால்கள் புகுந்து எவரும் இனி நுழைய இயலாத வகையில் பாழடைந்த இருள் குகையாய் – பேய்கள் குடும்பம் நடத்தும் எனதுடலாய் பங்குனி உத்திரத் திருநாளில் நீ வீதிஉலா வரும்போது கண்திறந்து இந்தக் காமப்புலையனை நோக்கிடுவாய் அன்றழிந்து வேறொருவனாய் அடுத்த நாள் விழித்தெழுவேன் தாங்குவது நிலம் மயானத்தில் தூங்குவது நிலத்தின் மீது பாதம் பட்ட இடமெல்லாம் தனக்கே சொந்தமாக மூச்சை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு விடாமல் ஓடி ஓடிக் களைத்து மண் மீது சக்தி இழந்து மாண்டு விழுந்து – என இந்த ஓட்டமெல்லாம் நிலையற்ற ஒன்றிற்கே என்று நினைக்கையில் கால்களை நீ இருக்கும் இடம் நோக்கி திருப்புகையில் இறைவா என் மநஞ்சம் எனது மனைவி, மக்களை நினைத்து மருகுகிறது இல்லறக் கடமைகள் வெகுவிரையில் முடிந்திட கருணை மழை பொழிவாய் நீ   மற்றவர்களின் போற்றுதல்களை வாங்கிட எண்ணி செய்த நற்செயல்கள் பல நாலுபேர் தன் மீது பரணிபாடி அப்புலவர்களுக்கு பொற்குவியல்களை அள்ளிக்கொடுக்கும் வேந்தனென உயரவேண்டும் கனவு உண்டு புகழ்ச்சியென்பது மேடைக்காக சொல்லும் வார்த்தை ஜாலம் என்றறிந்தபின் வலையில் சிக்கிக்கொண்ட மீன் ஒன்று சேற்றில் தலை புதைத்து சுகமாயிருப்பது போல் தவிக்கின்றேன் வாழ்க்கையின் பொருள் தெரியாமல் அற்பச் செயல்களால் நேரத்தைக் கழிக்கின்றேன் ஊழ்வினையால் இன்னொரு பிறவியெடுப்பதைவிட சூரனை வதம் செய்து மயிலாக வைத்துக்கொண்ட முருகா உனது காலடித் தாமரையில் சிறுதுரும்பாக என்னை இருக்கச் செய்திடுவாய் எண்ணங்களில் குப்பைகளே அதிகம் எண்ணங்கள் நீ எட்டிப்பிடிக்கும் உயரத்தை உணர்ந்து உனக்குச் சொல்லிடும் என்றறிந்தபின்னால் முன்னேற்றம் அடையச்செய்யும் எண்ணங்கள் யாதொன்றும் தோன்றாமலேயே மூச்சு நின்றுவிடும் போலிருக்கே என்றெண்ணிகலங்கி நிற்கின்றேன் எண்ணக்குப்பைகளில் கோமேதகம் கிடைத்திட உபயோகமற்ற நினைவுக்குவியல்களை புயலாய் வந்து அகற்றிடுவாய் நீ ஒளிவேகத்தைவிட அதிகமாம் மனோவேகம் உடல் இங்கு மனம் எங்கோ ஓரிடத்தில் நிலையாக நில்லாமல் அலைபாய்ந்து அல்லல்படுத்தும் குரங்கு மனமே எதிரிகளைப் போரில் வீழ்த்தி நாட்டை வெல்லலாம் . தன்னையே தான் வெல்லமுடியாமல் போனால் எதனை வென்று மகுடம் சூடி என்ன பயன் கடலில் அலைகளற்ற அமைதியான பகுதியைப்போல மனத்தில் எண்ணமற்ற நிலையை தந்தருளுவாய் நீ மண்ணோடு மக்கிப்போகும் கரித்துண்டுதானே வைரம் ஒன்றை அற்பமென ஒதுக்கி மற்றொன்றை அந்தஸ்தை அடையாளப்படுத்தும் அணிகலன்களாக உடலெங்கும் அணிந்து பெருமிதம் கொள்வதனால் வேங்கையென காசு வேட்கை உள்ளத்தில் புகுந்தது பெண்ணோடு சேர்த்து பொன்னையும் பற்றுக்கொண்டு அவள் விசேஷங்களில் அணிய பொன் நகைகளை கேட்பதும் பொன்னை வேட்டையாடி பெண்ணோடு கூடி வாழ்ந்து வாழ்க்கை இது தானா, இதற்காகவா பிறந்தோம் நாம் என்ற சலிப்பு ஏற்படுகையில், பிணிவந்து கட்டிலிலேயே நாட்கணக்கில் முடங்கிப்போகாமல் ஜீவனை கஷ்டமின்றி உடலிலிருந்து பிரித்திடுவாய் பழநியிலிருந்து மயிலேறி என் அகத்துக்கு வந்திடுவாய் நீ பிறவிப்பெரும்பயன் தந்திடுவாய் நீ     கந்தரனுபூதி பெற்றவர்கள்   அருணகிரிநாதர்   புலன்களை அடக்கி ஆளாமல் காமப்பித்தனாய் பரத்தை வீடுகளே கதியென்றும் அச்சுகமே இவ்வுலகில் பரமானந்தம் என்றும் இன்பம் ஆறாக கண்ணெதிரே பெருக்கெடுத்து ஓடும்போது மனவடக்கம் என்ற பெயரில் கைகட்டி நிற்பதுவா வேறு எதற்கு ஆண்மகனாய் பிறந்தோம் அனைத்து சுகங்களையும் அள்ளிப்பருகி இளமை தீரும் வரை மது குடித்து மயங்கிய வண்டினைப் போல் போதையில் கண்கள் கிறங்க இன்புற்று அலைவோம் என்று கட்டிளங்காளையாய் புலன்களின் கைப்பாவையாய் வீதியில் அற்பச் சுகத்தை தேடித்தேடி அலைந்தான் அருணகிரி ஆகுதி போல் மோகத்தீயினால் கொழுந்துவிட்டெறிந்தான் உடல் சக்தியை முழுவதும் இழந்து யாவரும் தீண்டிட முகம் சுழித்து அருவெறுக்கும் தொழுநோய் தொற்றி ரோகியானான் அருணகிரி விரக்தியில் வாழ்வை வெறுத்தான் மரணம் ஒன்று மட்டுமே தன்னை ஆரத்தழுவிக்கொள்ளும் என்றெண்ணி அருணைக் கோவில் கோபுர உச்சியிலிருந்து கீழே குதித்தான் பெற்ற அன்னை கூட தீண்டிட கூசும் தொழு நோய் கண்ட அருணகிரியின் உடலை கந்தன் தன் கரங்களால் தாங்கினான் பொன்னார் மேனியின் திருக்கைகள் பட்டு அருணகிரியின் உடல் செம்பொன்னாக ஜொலித்தது நான் உனக்கு இது இரண்டாவது பிறப்பெனக்கு – என கைகூப்பி தொழுது நின்ற அருணகிரியை நோக்கி கைம்மாறு வேண்டாம் எனக்கு தமிழ்மொழியில் நீ பாடிட ஆயிரம் சந்தங்கள் இருக்கு ஆயிரம் கனவுகளுடன் உன்னை மகனாகப் பெற்றெடுத்த உன் அன்னையின் நினைவாக முத்து என்று ஆரம்பித்து முதல் பாடலை தொடங்கு – என்று கூறி முருகன் வானில் மறைந்தார் அருணகிரிநாதரின் நாவிலிருந்து தமிழ் அருவியாய்க் கொட்டத்தொடங்கியது அந்த அருவியில் யார் நனைந்தாலும் அன்றே முருகனருள் கிடைத்திடும் முக்தியை அடைந்திடும் வழியில் மனம் சென்றிடும்.           பாம்பன் சுவாமிகள்   கவியாடி கந்தனை துதிக்க அவள் தன் நாவில் புலமையை கொடுத்தருள வேண்டி சஷ்டியை நாள்தோறும் முப்பத்தியாறு தடவை பாராயணம் செய்து கந்தனின் தயவுக்காக அயற்சியுறாது காத்திருந்து சலங்கையும், தண்டையும், வேலும், கிரீடமுமாய் குமரனின் திருக்காட்சியைக் கண்டு பரவசமடைந்து பிணியென்னும் விஷ அம்பு நம் உடலைத் துளைத்து விடாது கவசமாக பக்தர்களை பாதுகாத்து வாழ்விக்கும் பாடலாய் கந்தரனுபூதி பெற்ற பாம்பன் சுவாமிகள் சண்முகக்கவசம் இயற்றினார் பாடுவோரை செந்தில்வேலவனின் வேல் போன்று நோயிலிருந்து பாதுகாக்கும் பாடல் இது வாழ்வின் சுக துக்கங்கள் எல்லாம் முருகனின் லீலை என்றுணர்ந்தபோது முருகன் மயூரவாகனத்தில் வந்தமர்ந்து சுவாமிகளைக் ஆட்கொண்டருளினான் அந்தநாள் 'மயூர வாகன சேவை' விழாவாக இன்றளவும் கொண்டாடப்பட்டுவருகிறது ஜீவன்களின் மிக்க கருணைகொண்ட அந்த முருக வேலை வணங்குவதைத் தவிர நமக்கு வேறென்ன வேலை     கிருபானந்தவாரியார்   அழகு தமிழில் கந்தனின் திருப்புகழ் மக்களுக்கு வாரி வாரி வழங்கியவர் கிருபானந்த வாரியார் கந்தனே அவரின் மகாபாராத உரை கேட்க ஆயிரத்தில் ஒருவனாய் முலையில் உட்கார்ந்து அந்த செந்தமிழமிர்த்தை பருகிட மாட்டோமா என ஏங்கும் பேச்சித்திறன் வாரியார் அவர்களுக்கு தீக்கட்டும் கந்தனின் புகழ்பரப்பு | தள்ளாத வயதிலும் கடல் கடந்து கையிலைமலை ஈசன் பெற்றடுத்த பிள்ளையை தமிழ் மக்கள் எல்லோரும் தங்கள் வீட்டு பிள்ளையாக பாவித்து காவடி எடுத்து கந்தனுக்கு அரோகரா கரா கடம்பனுக்கு அரோகரா – என முருகத் திருத்தலங்கள் அனைத்திலும் வெகுஜனத்திரளை திரட்டியதில் பெரும்பங்கு வகித்தார் திருமுருக கிருபானந்த வாரியார்     ஒளவையார்   நாவல் மரத்தில் சிறுபாலகனாய் அமர்ந்துகொண்டு ஒளவைக்கு பழம் வேண்டுமா என்றான் சுட்டபழமா சுடாத பழமா என்ற பொருந்தாத கேள்வியை ஒளவைப்பாடி முன் வைத்தான் களைத்திருந்த அவள் யோசிக்காது சுட்ட பழமே பறித்துப்போடு என்றுரைத்தாள் கீழே விழுந்த பழத்தினை பசியாற்றிட கையில் எடுத்தாள் மண் அதில் ஒட்டியிருக்கவே 'ப்பூ' 'ப்பூ' வென வாயால் காற்றைஊதி தூாசியை விரட்டினாள் மரக்கிளையில் அமர்ந்திருந்த பாலனான பாலமுருகன் குறும்போடு கேட்டான் 'என்ன பாட்டி பழம் ரம்ப சுடுதோ?' என்று உண்யென்னவென்று ஒளவை உணர்ந்துவிட்டாள் அப்பனுக்கு புத்தி சொன்ன தமிழ்ச்சுப்பனே உன் திருவாயால் அதனை உலகுக்கு சொல் என்றுவணங்கி நின்றாள் வேறொன்றும் இல்லை ஒளவையே சுட்ட பழம் என்றால் நன்கு கனிந்த பழம் சுடாத பழம் என்றால் செங்காய் கனிந்த பழம் கீழே விழுந்தால் பிளந்து மண் அதன் தோலில் ஒட்டிக்கொள்ளும் அதுபோன்று இவ்வுலக வாழ்க்கையில் பாதிதூரம் கடந்து வந்துவிட்டாலும் காம, குரோத, லோப, மோக, மத, மாச்சர்யம் எனும் தூாசிகள் மனத்தில் ஒட்டிக்கொள்ளாமல் தவிர்த்து சுடாத பழமாய் செங்காயாய் கீழே விழுந்தாலும் துாசிகள் அதன் தோலில் ஒட்டிக்கொள்வதில்லை அதுபோல் தாமரை இலை தண்ணீராய் இல்லறத்தில் ஈடுபட்டால் இப்பிறவிப் பெருங்கடலில் தோணியில் தண்ணீர் உட்புகுந்து கவிழாமல் இறைவனடி சேரலாம் என்று ஞானப்பழத்தின் சாற்றை பிழிந்து ஒளவையின் தீராத பசியைப் போக்கினான் கந்தன்.     முருகலோகத்துக்கு வழிகாட்டும் 108 போற்றி   1, முக்கண்ணனின் மைந்தனே போற்றி 2, வேடுவப் பெண் வள்ளியை கைப்பிடித்த வள்ளிமணாளனே போற்றி 3, ப்ரவணப் பொருள் தெரியாத பிரம்மனை சிறையிலடைத்த சுப்ரமணியனே போற்றி 4, மயிலால் உலகளந்த மன்னவனே போற்றி 5, தேவசேனையை மணம் முடித்த அழகனே போற்றி 6, அம்மையிடம் வேல் வாங்கிய சிவ சிங்காரவேலனே போற்றி 7, வேலுண்டு வினையில்லை என்றுணர்த்தும் கந்தபுராணக் கடவுளே போற்றி 8, அறுபடை வீட்டிலிருந்து தமிழ் மண்ணை அரசாட்சி செய்யும் ஆறுமுகத்தோனே போற்றி 9, செந்தூரில் சூரனை வதம் செய்த செந்தில்வேலவனே போற்றி 10, உற்றோர் பெற்றோர் உடனிருந்தும் ஆண்டிக்கோலம் கொண்ட பழநி ஆண்டவரே போற்றி 11, ஒளவைக்கு ஞானப்பழம் தந்து அருள்புரிந்த குமரக்கடவுளே போற்றி 12, அருணகிரியைத் தொட்டு தொழுநோயை விரட்டிய அண்ணாமலை ஜோதியே போற்றி 13, குன்றுதோறும் குடியிருக்கும் குருஞானதேசிகனே போற்றி 14, அகம் பார்த்து அருள்புரியும் அருட்பெருஞ்சுடரே போற்றி 15, வழிபடுவோர்களின் மனத்தில் கோயில் கொண்டுள்ள பாலமுருகனே போற்றி 16, முக்கண்ணனால் மேனி முழுவதும் தீயால் தீண்டப்பட்ட நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடித் தொழுதபோது அவரின் உடல்வெப்பத்தை தணிந்து குளிரச் செய்த பரம்பொருள் போற்றி 17, அகத்தியருக்கு தமிழமுதை வழங்கிய முத்தமிழ்க்காவலனே போற்றி 18, தனிப்பெருங்கருணையின் பிறப்பிடமாம் வள்ளலார் வணங்கிய கந்தகோட்ட கந்தவேளே போற்றி 19, கொடுப்பதற்கு ஒரு கை போதாதென்று பன்னிருகைகளைக் கொண்டு அடியவர்க்கு அருள்புரியும் ஆதியுமானவனே போற்றி 20, குமரகுருபரருக்கு உலக மாயையை எடுத்துரைத்த தாரகாரியே போற்றி 21, ஞானம், ஐஸ்வர்யம், செல்வம், வீர்யம்,வைராக்கியம், புகழ் எனும் ஆறுசெளந்தர்யங்களை பக்தர்களுக்கு வழங்கும் ஆறுமுகசாமியே போற்றி 22, சக்திவேல் கொண்டு கிரவுஞ்ச மலையை பிளந்த கார்த்திகேயனே போற்றி 23, தமிழ்பாடலுக்கு மயங்கி தன்னையே தரும் வள்ளல்பெருமானே போற்றி 24, இருளகன்று விடியும் வேளையில் கூவும் சேவலை கொடியாக கொண்ட சரவணனே போற்றி 25, தேவர்களை அபயமளித்து காத்திட்ட தேவசேனாதிபதியே போற்றி 26, ஆதிகுருவாம் சிவனுக்கு ப்ரவணப் பொருள் உபதேசித்த தகப்பன்சாமியே போற்றி 27, கோடி சூரியன் சேர்ந்த பிரகாசத்தை தன்திருமுகத்தில் கொண்ட பரப்பிரம்மமே போற்றி 28, ரிக்வேதம் மும்முறை துதிக்கும் ஓங்காரநாயகனே போற்றி 29, சரவணப்பொய்கையில் அவதரித்த சண்முகநாதனே போற்றி 30, பலயுகங்களுக்கு முன்பே சித்துக்களில் சிக்காத தெய்வநறி சித்தராய் உடல் மெலிந்து சுகம் மறந்து மெய்ஞ்ஞானம் தேடிய கந்தசாமியே போற்றி 31, தமிழில் வைதாரையும் வாழவைக்கும் கருணைபெருங்கடலே போற்றி 32, கிரகங்களின் தோஷத்தை களைந்திடும் வைத்தீஸ்வர முத்துக்குமாரசுவாமியே போற்றி 33, பிறவியெனும் ஆழிப்பேரலையில் சிக்கி உழல்வோரை விரைந்தோடி வந்து காத்திடும் ஞானஒளிச்சுடரே போற்றி 34, இந்து சமய சனாதனதர்மம் உயிர் கொடுத்த ஆதிசங்கரர் ஷண்முகஸ்தோத்திரம் பாடி துதித்த செந்தில்நாதனே போற்றி 35, அகர , உகர, மகரம் சேர்ந்து ஓம் என்ற ஓசையாக எங்கும் நிறைந்திருப்பவனே போற்றி 36, சமர் முடிந்து திருத்தணிகையில் அமர்ந்து சினம் தணித்த காந்தபெருமானே போற்றி 37, திருமாலின் சக்ராயுத்தால் ஏற்பட்ட தழும்பை மார்மேல் கொண்ட வீரத்தின் விளைநிலமே போற்றி 38, தெய்வமணம் கமழும் பழநித் திருநீரில் குடிகொண்டவனே போற்றி 39, கூற்றுவன் கூடத்திலே பாசக்கயிற்றோடு வந்து நிற்கும் போது எதற்கும் அஞ்சிடாத அவனும் ஆறெழுத்து மந்திரம் சொல்ல அலறி அடித்து ஓடிவானே அந்த சரவணபவ எனும் ஆறழுத்தில் குடியிருக்கும் ஆறுமுகநாயகனே போற்றி 40, வீடுபேறு எனும் அமுதத்தை வழங்குவதற்கு முன்னோடியாக தன்னுடைய திருத்தலத்திற்கு வரும் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தத்தை அருளும் பஞ்சபூத அதிபதியே போற்றி 41, ஐம்புலன்களுக்கு அகப்படாமல் அணுவிலும் ஓர் அனுவாய் மறைந்து விளையாடும் ஞானத்தின் சொரூபனே போற்றி ! 42, ஒரு அறிவிற்கு ஓர் முகமாய் ஆறுமுகம் கொண்ட ஆற்றிவின் நாயகனே அறத்தின் மூர்த்தியே போற்றி 43, காற்றாக இலை அசைத்து, மழையாக நீர்நிலைகளை நிரப்பி, நருப்பாக அரிசியை சோறாக்கி ஆகாயமாக விரிந்து, மண்ணாக அனைத்து உயிர்களையும் தாங்கி லீலைகள் புரிபவனே போற்றி 44, திருமாலின் மருமகனே வள்ளி-தெய்வானையுடன் திருக்கல்யாணக் கோலம் கொண்ட மால் மருகனே போற்றி 45, தணிகை மலைமீது உனைக் காண ஏற வேண்டிய படிகளின் எண்ணிக்கை 365 வருடத்தின் 365 நாட்களையும் குறிக்குமாம் இப்படிக்கட்டுகள் மலை ஏறி திருமுருகன் காட்சியைக் கண்டு விட்டால் இனிவருடந்தோறும் செல்வவளம் கொழிக்கும் வீடாக அடியவர்களின் ஏழ்மை இருளை விலக்குபவனே போற்றி 46, தந்தையின் திருவுள்ளம்படி உலகைச் சுற்றிய தங்கமயில் வாகனனே போற்றி 47, காவடியைச் சுமந்து செல்லும் பக்தர்களுக்கு மனப்பாரத்தை சுமந்திடும் வடிவேலனே போற்றி 48, அரோகரா எனக் சரண கோஷமிடும் பக்தர்களுக்கு அன்னபூரணியாய் அள்ள அள்ளக் குறையாத அன்னம் வழங்கும் கடம்பனே போற்றி 49, திருக்கோயில் தேடி வந்த முத்துஸ்வாமி தீட்சிதருக்கு சங்கீத ஞானம் தந்து கீர்த்தனைகள் பல பாடச்செய்த கலைகளின் வேந்தனே போற்றி 50, இராமலிங்க அடிகளாருக்கு நிலைகண்ணாடியில் காட்சி தந்த நித்யசொரூபனே போற்றி 51, மருதமலையில் குடியிருக்கும் கையிலை ஈசன் கண்டெடுத்த மாமணியே போற்றி 52, உன் அன்னையென்பதே என் பிறவிப் பெருமையன்றோ என உமையம்மை ஆசிவழங்கிய சுவாமிநாதனே போற்றி 53, மோகத்தால் விளைந்த இவ்வுடலை சுமப்பதை விட தோகைமயிலாய் உனது திருவுடலை தாங்கிச் செல்லும் வரம் எனக்கு தருவாய் போற்றி 54, உனது திருக்காட்சியைக் காண இயலாத எனது இரு கண்களையும் குருடாக்கிஞானக்கண்களை வழங்குவாய் போற்றி 55, முன்வினைகளால் இப்பிறவியில் தோளில் பாவமுட்டை சுமந்து செல்லும் எனது பாரத்தை நீக்கிடுவாய் போற்றி 56, உதிரத்தின் உணர்ச்சித்திமிறால் மனதாலும், உடலாலும் தீவினைகள் பல புரிந்தோன் அப்பாவத்திலிருந்து எனக்கு மன்னிப்பு அளிப்பாய் போற்றி 57, கேலிப்பொருளாக என்னைப் பார்த்து பலர் நாவினால் சுட்ட வடுவினால் ஆறாதாரமான மனதிற்கு ஆறுதல் அளிப்பாய் போற்றி 58, தோற்றத்திலும், தோலின்மேல் அணியும் ஆடையிலும் மதிமயங்கும் மானிடர்களின் ஏளனப் பார்வையிலிருந்து என்னை காப்பாய் போற்றி 59, சிறுபானத்தைப் பெரிதுபடுத்தி வெந்த புண்ணில் கோல் விட்டு ஆட்டும் அரக்ககுணம் கொண்ட மனிதர்களிடத்திலிருந்து என்னை காப்பாற்றி அரவணைப்பாய் போற்றி 60, பணம் இல்லாதவரை பிணமாக மதிக்கும் இச்சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு உனது திருப்புகழைத் தவிர வேறெதையும் பிறரிடம் பேச விரும்பாத என்னை உன் திருவடியில் ஏற்றுக்கொள்வாய் போற்றி 61, பிறர் தூற்றும் சொற்களைக் தாங்கிக் கொள்ளாமல் தொட்டாற் சிணுங்கியாக வாடிடும் மனத்தை உனது திருக்கரத்தில் ஏற்றி தேற்றுவாய் போற்றி 62, ஐம்பூதங்களான சேர்க்கையினால் உண்டான உடல் நிலையானது என்றெண்ணி எளியவர்களைப் சிற்றெறும்பைப் போல் காலால் நசுக்கி ஆடாத ஆட்டம் ஆடும் மனித மிருகங்களை விரைந்து வந்து வேட்டையாடிடுவாய் போற்றி 63, லட்சியக் குறிக்கோள் அடையமுடியத இலக்கு என்று நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் பேசிவிட்டு இருளடைந்த வாழ்க்கையில் தீபஒளி ஏற்றவில்லையெனினும் அவ்வாழ்வை மேலும் சூன்யமாக்கிவிட்டுச் செல்லும் குள்ளநரிகளிடமிருந்து என்னை தப்பிப்பிழைக்கச் செய்வாய் போற்றி 64, பணபலம் பார்த்து முகம் மலரும் பெண்களிடமிருந்து காப்பாற்றி நல்மனம் பார்த்து உபசரிக்கும் புனிதப்பெண்ணிடத்தில் என்னைப் சேர்ப்பாய் 65, பழகியவர்களுக்காக தண்ணீராய் பணத்தை செலவு செய்து காசு கைகளிவிருந்து கரைந்தவுடன் உதவிகேட்டுவிடுவானோ என்று அஞ்சி நவகிரகங்களை முகத்தை திருப்பிக் கொண்டு பேசும் நண்பர்களிடத்திலிருந்து என்னைக் காப்பாய் போற்றி 66, மரணமெனும் சர்ப்பம் தீண்டுவது ஒரு முறைதான் ஆனால் மரணத்தின் நிழலாய் ஒவ்வொரு நாளும் தாங்க இயலாத கொடிய வேதனையை சுமந்து கொண்டு விரைந்தோடாத கடிகார முட்களில் நத்தை போல் நகர்ந்து பயணிக்கும் எனக்கு நல்வழி காட்டிடுவாய் போற்றி 67, வறுமையெனும் வெள்ளப்பபெருக்கிலிருந்து தப்பிவிடலாம் என மரத்திலேறி நான் பிடித்த ஒவ்வொரு மரக்கிளையும் முறிந்து சாயவே தோணியில் நீ ஏறிவேலை துடுப்பன வளித்து வந்தென்னை கரைசேர்த்திடுவாய் போற்றி 68, ஊருக்குள் பொருள் சேர்க்க போராட்டம் உடலுக்குள் பிணியாலே போராட்டம் உள்ளுக்குள் தீய ஆசைகளோடு போராட்டம் மயானத்தில் மண்ணோடு கலக்கும் வரை நீ பொறுத்திருக்காமல் மருதமலையிலிருந்து ஓடோடி வந்து போராட்டத்தை முடித்து வைத்து நிம்மதியளிப்பாய் போற்றி 69, இப்பிறவி தப்பிடில் எப்பிறவி வாய்க்குமோ, இப்பிறப்பிலேயே உனது பெருமைகளை பாடிட தமிழ்மொழியின் சாரத்தை பிழிந்தெடுத்து அஞ்ஞானப்பாலினை எனது வாயினுள் ஊற்றிடுவாய் போற்றி 70 , பலனில் மனம் வைக்காமல் செய்யும் முயற்சிகளில் மனம் குவித்து உழைத்திட வல்லமை தருவாய் போற்றி 71, விழிகளை மூடி தூங்காமலும், விழிகளை மூடாமல் சிறிது திறந்து இவ்வுலகைக் காணாமலும் இருக்க ஆசனத்தில் என் முன்பு அமர்ந்து ஆழ்நிலை தியானயோகத்ததை பயிற்றிடுவாய் போற்றி 72, உயிர்க்குருவி உடலிலிருந்து பறந்துவிடும் என்ற போதினிலும் எனது ஸ்வதர்மத்தை கைவிடாத மனஉறுதியினை தந்தருளுவாய் போற்றி 73, தங்கப்புதையலை நீ எனக்கு அளித்து குபேரனாக்கிடுவாய் என்றண்ணி உனை புகழாமல் தூய அன்பிற்காக அன்பு செய்யும் தெய்வீக உறவினை எனக்கு வாய்க்கச் செய்தருளுவாய் போற்றி 74, மாமிசம் உண்டு மாமிசம் வளர்க்கும் கடைக்கோடி மனிதனாய், சாப்பாடே சொர்க்கமென்று வாழ்ந்து மடியும் அற்பனாய், நாவிற்கு அடிமைத் தொழில் செய்யாமல் புலாலை வெறுத்தொதுக்கும் ஜீவகாருண்யம் என்னுள்ளத்தில் பொங்கிடச் செய்வாய் போற்றி 75, பல எண்ணக்கருங்கற்கள் விழுந்து சர்வகாலமும் அலைபாய்ந்து கொண்டேயிருக்கும் மனமாகிய ஏரியை துன்பத்திலும், இன்பத்திலும் சமநிலை பாதிக்காமல் சலனமற்றுயிருக்கச் செய்திடுவாய் போற்றி 76, உலகே எதிர்த்து நின்றாலும் உண்மையென்று அறிந்ததை ஊருக்கு உரக்கச் சொல்லும் தைரியத்தை எனக்குத் தந்திடுவாய் போற்றி 77, பலாப்பழ பசையிலிருந்து தப்புவதற்கு கையில் எண்ணெய்யைத் தடவிக் கொள்வதைப் போல பற்றில்லாமல் இல்லறத்தில் வாழ்வதற்குரிய மனத்தெளிவை தந்தருளுவாய் போற்றி 78, இரண்டாகி, ஒன்றாகி, முடிவில் ஆதி அந்தமில்லா பெருஞ்சோதியாகி நின்று அகிலமும் 79, பிறர் தலையில் பொறுப்பினைச் சுமத்திவிட்டு கடமையிலிருந்து கண்ணியம் தவறி பயந்து ஓடாது எனதயும் தாங்கும் துணிவைத் எனக்குத் தந்தருளுவாய் போற்றி 80, ஆமை தன் அவயங்களை அடக்கிக்கொள்வது போல், இன்ப வேட்கை கொண்டு புறத்தே அலையும் ஐம்பொறிகளை முழுதும் உள்ளிழுத்து எப்பொழுது என் இதயக் கமலத்தில் உறைந்திருக்கும் உனை தரிசிக்கும் பூரணத்துவத்தை தந்தருளுவாய் போற்றி 81, நற்காரியம் தொடங்கி சுபமாய் முடியவேண்டுமென்ற பதற்றமே அக்காரியத்தைச் சிதறச் செய்கிறதே கடலைக் கடந்து செல்லும் பணியாயினும் மனப்பதற்றம் கொள்ளாத மனோநிலையை எனக்குத் தந்தருளுவாய் போற்றி 82 , ஒருஷண நேர இன்பத்திற்காக தன் நிலை மறந்து மோகத்தின் மடியில் விழுந்தெழுந்து ஒளிமயமான எதிர்காலப் பாதையில் நாமே விஷமுட்களைத் தூாவிச் செல்லும் பரிதாப நிலை என்னை அண்டாமல் மின்வேலியாய் இருந்து காப்பாய் போற்றி 83, கங்கை நதியில் மூழ்கி பாவங்களை தொலைத்து புண்ணியம் பெறுவோர் பலர் காசிவரை பயணப்பட செல்வம் இல்லாத எளியவர்களின் ஏக்கம் தீர்க்க கருணைகொண்டான் பரமன் மகன் முருகா என்ற திருநாமத்தை பக்தியினால் உருகி ஒருமுறை உச்சரித்தால் போதும் பாவவினைகள் அனைத்தும் நீங்கி வீடுபேற்றை அருளும் புண்ணியனே போற்றி 84, வானத்தில் உதிக்கும் கதிரவனின் கதிர்கள் பட்டு பூமியில் வெவ்வேறு கண்ணாடியில் பலவாய் அதன் உருவம் பிரதிபலிப்பதைப் போல, பரம்பொருளாயிருந்து பக்தர்களின் பாவனைகளுக்கேற்ப பல உருவெடுத்து வந்து ஆட்கொண்டு அருளும் பிரபஞ்சத்தலைவனே போற்றி 85, மாயையில் சிறைபட்டு அடிமைகளாய் அறுபதுவருடங்கள் வாழ்வதைக் காட்டிலும் மாயச்சிறையின் கதவை உடைத்து வெறியேறி சுதந்திரனாய் ஒரு நாள் சுவாசித்து மடிவது போதாதா அதற்குரிய மனத்துணிவைத் தந்தருளுவாய் போற்றி 86, உலகமெனும் தோட்டத்தில் ஆயிரமாயிரம் மலர்கள் மலர்ந்தாலும் உனது மார்பினை அலங்கரிக்கும் மாலையிலுள்ள ஓர் மலராய் என்னை ஏற்பாய் போற்றி 87, பந்தியானாலும் நான் தான் முந்தி , மோட்சத்திற்கும் நான் தான் முந்தியேன அகங்காரம் பிடித்தலையும் ஞானசூன்யமாய் வாழ்ந்து வாழ்வை அர்த்தமற்றதாக்கிக் கொள்ளாமல் மற்றவர்களுக்கு தொண்டு செய்யும் இரக்க குணத்தினை அளிப்பாய் போற்றி 88, வேதத்தின் மறைபொருளே, கதிரவனின் பேராளிப் பிழம்பே அண்ட சராசரங்களையும் அருவமாய் நின்று இயக்கும் ஆதிப்பரம்பொருளே போற்றி 89, பண்ணை , புகழை பணத்தை தேடியலையாமல் உள்ளுக்குள் நான் யார்' என ஆத்ம விசாரத் தேடலுக்கான முயற்சியைத் தந்தருளுவாய் போற்றி 90, நீர்க்குமிழியென கணப்பொழுதில் தோன்றி மறையும் மனித வாழ்க்கை அதன் பாதியை கேளிக்கைகளிலேயே கழித்து வீணாக்காமல் ஆன்மிகச் சிந்தனையை எனது உள்ளத்தில் உதிக்கச் செய்திடுவாய் போற்றி 91, தோல்வி உனது தவறுகளைத் திருத்தி முழுமையானதொரு வெற்றிக்கு படிக்கட்டுகளாய் உன்னை அழைத்துச் செல்லும் என்று சிகரம் தொட்டவர்களின் வாழ்க்கை வரலாற்றின் மூலம் எனக்கு புரியவைத்து நம்பிக்கையளித்த நல் ஆசிரியனே போற்றி 92, யாத்திரை மேற்கொண்டு திருத்தலம் பலசென்று உனது தரிசனத்தை பெற்றேன் இருந்தாலும் உள்ளுக்குள் கற்சிலைதானே என்ற அலட்சியம் மேலெழுகையில் தாளும், சதங்கையும், தண்டையும், சண்முகமாய் தோன்றி அஞ்ஞானத்தை வேரறுத்த ஞானச்சத்திமுர்த்தியே போற்றி 93, அகத்தில் ஓடும் எண்ணங்களை முகம் காட்டிவிடும், குளுமை தரும் நிலவுக்கு கூட களங்கம் உண்டு அன்பே சிவமாய் அன்பு பொங்கும் உனது திருமுகத்தின் காட்சியைக் கண்டவர்மனம் தன் நலத்தை மறந்து யாதும் ஊரே யாவரும் உடன் பிறப்புகளே என்று தொண்டாற்றிடும் தியாக உள்ளத்தை வழங்கிய கருணாமூர்த்தியே போற்றி 94, 'ஆன்மா' அதை ஆயுதங்கள் வெட்டாது, நருப்பு எரிக்காது, நீர் நனைக்காது, காற்று உலர்த்தாது இதுவல்ல, இதுவல்ல நான் என அனைத்தையும் ஒதுக்கி இறுதியில் ஆன்மாவை உணரச்செய்யும் பரப்பிரம்மமே போற்றி 95, வாழ்க்கையெனும் குருஷேத்திர யுத்த களத்தில் நம்பி அழைபோருக்கு சாரதியாய் இருந்து நல்வழியில் ரதத்தினைச் செலுத்தி வெற்றி மகுடம் சூடிட துணைபுரியும் பரமாத்மனே போற்றி 96, காம முதலையின் வாயில் அகப்பட்டுக்கொள்ளாமல் காப்பாய் போற்றி 97, குரோதம் கொண்டு பழிதீர்க்காமல் பக்குவம் தருவாய் போற்றி 98, லோபத்தின் கைகளில் சிக்குண்டு பணத்திமிறால் பந்தங்களை அலட்சியம் செய்யாமல் என்னை காத்தருள்வாய் போற்றி 99, மோகவலையில் வீழ்ந்து தூண்டிற்புழுவைப் போல் துடிக்காமல் என்னை மீட்டு உயிர் தருவாய் போற்றி 100, அக்கரைக்குச் செல்ல உதவும் தோணிபோல வாழ்க்கைப் பெருங்கடலை கடக்க உதவும் மதமெனும் படகை எத்தினமும் தலையில் சுமந்து கொண்டு மூடனாய் பிதற்றாமல் அஞ்ஞான உறக்கத்திலிருந்து என்னை எழுப்புவாய் போற்றி 101, மாச்சர்ய மாயையே உண்மையொன்று மண்புழுவினைப் போல் நாற்றமடிக்கும் சகதியை உண்ணும் நிலையெனக்கு வராமல் ஆட்கொள்வாய் போற்றி 102, உயிர்களின் படைப்புக்கு ஆதாரமாக விளங்கும் உடலின் மூலதார சக்கரமாக விளங்குபவனே போற்றி 103, ஆசைகளை உற்பத்தி செய்யும் கங்கோத்ரியென உடலின் சுவாதிஷ்டானமாய் சக்கரமாய் விளங்குபவனே போற்றி 104, உலகம் மேம்பட ஊளன், உறக்கம் மறந்து உழைப்பைக் கொடுக்கும் உடலின் மணிப்பூரக சக்கரமாய் விளங்குபவனே போற்றி 105, இதயத்தை கருணை பொங்கும் ஊற்றாக மாறச் செய்யும் உடலின் அநாகத சக்கரமாய் விளங்குபவனே போற்றி 106, தீய எண்ணங்களை ஏற்காது வடிகட்டும் ஆற்றல் கொண்டு உடலின் விசுக்தி சக்கரமாய் விளங்குபவனே போற்றி 107, அநித்யத்தை உணர்ந்து வாழ்வின் நித்யத்தை தேடியலையும் மனிதர்களுக்கு ஞானம் வழங்கும் உடலின் ஆக்ஞை சக்கரமாய் விளங்குபவனே போற்றி 108, அகம் பிரம்மாஸ்மி என உணரவைக்கும் ஜகத்குருவாய் உடலின் சஹஸ்ரஹாரமாய் சக்கரமாய் விளங்குபவனே போற்றி     [image.jpg]   ப.மதியழகன்(28.3.1980)   திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி எனும் நகரத்தைச் சேர்ந்தவர் ப.மதியழகன்.நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமா பெற்றவர்.கீற்று, வார்ப்பு, திண்ணை, உயிரோசை, பதிவுகள், மலைகள் ,உன்னதம், பதாகை ஆகிய இணைய இதழ்களிலும், படைப்பு, காற்றுவெளி ஆகிய மின்னிதழ்களிலும் நவீன விருட்சம், அம்ருதா, தாமரை,இனிய உதயம் ஆகிய இலக்கிய இதழ்களிலும், குங்குமம் போன்ற வெகுஜன இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளது. முதல் கவிதை தொகுப்பு தொலைந்து போன நிழலைத் தேடி 2008ல் வெளிவந்தது.இரண்டாவது கவிதை தொகுப்பு சதுரங்கம் 2011ல் வெளிவந்தது. மூன்றாவது கவிதை தொகுப்பு புள்ளிகள் நிறைந்த வானம் 2017ல் வெளிவந்தது. நான்காவதாக கட்டுரைகளும்,கவிதைகளுமாக துயர்மிகுவரிகள் 2017ல் வெளிவந்தது.இணைய இதழ்களில் இவரது சிறுகதைகளும் வெளிவந்துள்ளது. சிறுகதைகள்.காம்ல் இவரது சிறுகதைகள் படிக்கக் கிடைக்கும். தற்போது மன்னார்குடியில் தனியார் கணினி மையத்தில் வேலை செய்து வருகிறார்.   ப.மதியழகன் 115,வள்ளலார் சாலை, ஆர்.பி.சிவம் நகர், மன்னார்குடி - 614001. திருவாரூர் மாவட்டம். தமிழ்நாடு, இந்தியா.  cell:9597332952, 9095584535 mathi2134@gmail.com