[] [] சாவின் டைப்பிஸ்ட் நுண்பதிவுகள் & குறும்படைப்புகள் பேயோன் சாவின் டைப்பிஸ்ட் உரிமம்: பேயோன் [] Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0  சர்வதேச உரிமத்தின் கீழ் பகிரப்படுகிறது. முதல் மின்பதிப்பு டிசம்பர் 2014 அட்டை ஓவியம், வடிவமைப்பு: பேயோன் Saavin Typist This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. First electronic edition December 2014 Cover art and design: Payon முன்னுரை மனிதன் எழுத்தைக் கண்டுபிடித்த காலம் தொட்டே பல அமர எழுத்தாளர்கள் சில கூர்மையான கேள்விகளைத் தம்மிடம் கேட்டிருக்கிறார்கள்: எதற்காக எழுதுகிறோம்? யாருக்காக எழுதுகிறோம்? என்ன எழுதுகிறோம்? எப்படி எழுதுகிறோம்? எங்கே எழுதுகிறோம்? எப்போது எழுதுகிறோம்? எவ்வளவு எழுதுகிறோம்? நாம்தான் எழுதுகிறோமா? நிச்சயமாகத் தெரியுமா? என்ன ஆதாரம்? இந்த ரீதியில். இந்தக் கேள்விகளே அவர்களின் இலக்கியத்தை அமரத்துவத்தின் விளிம்பை நோக்கித் தள்ளின என்றால் அது மிகையாகாது. அப்படியே ஆனாலும் அது ஒன்றும் கொலைக் குற்றம் அல்ல. ஓர் எழுத்தாளனாக நான் உண்மையிலேயே வெற்றியடைந்திருந்தால் அதற்குக் காரணம், இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் நான் அளித்துக்கொண்ட ஒற்றைப் பதில்: "யோசிக்க நேரம் இல்லை ஐயா! மாலைக்குள் இந்த உருப்படியை அனுப்பியாக வேண்டும்." பேயோன் 23-12-2014 சென்னை ட்விட்டர் நுண்பதிவுகள் ஐயா, நோபல் பரிசெல்லாம் எனக்கு வேண்டாம். என் தகுதி எனக்குத் தெரியும். கொஞ்சம் கையில் கொடுங்கள், பார்த்துவிட்டுத் தந்துவிடுகிறேன். * நான் பப்ளிக் ஃபிகராக இருப்பதைவிட வெறும் ஃபிகராக இருக்கவே விரும்புகிறேன். * வரும் புத்தகக் காட்சிக்கு நூல்கள் எழுத எனக்கு நேரமே போதவில்லை. We are hiring. * விமர்சனங்களால் துவளக் கூடாது. தொடக்கத்தில் தாமஸ் ஆல்வா எடிசனை "லிமிட்டட் எடிசன்" என இகழ்ந்தவர்கள்தான் பின்னாளில் அவரைப் போற்றினார்கள். * "சார், உங்காத்ல கரன்ட் இருக்கா?" தோழமையே, எமது ஆற்றில் current இருப்பதால்தான் அதிலிருந்து புனல் மின்சக்தியை எடுக்க முடிகிறது. * பில்லியன் டாலரைக் கரியாக்கி வேற்றுக்கிரகங்களில் தண்ணீர் தேடுகிறார்கள். தண்ணீர் உள்ள இடத்தில் பூரான் இருக்கும். முதலில் பூரானைத் தேடு. * என் வாசகிகள் என்னை வெறும் எழுத்தாளனாகப் பார்க்கிறார்கள். * உலகெங்கும் மக்கள் யுத்தத்தாலும் வறுமையாலும் ஆயிரக்கணக்கில் அழிகிறார்கள். என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இந்தக் கடவுளுக்கு என்ன கேடு? * குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுக்கக் கடுமையான லட்சார்ச்சனைகள் மேற்கொள்ளப்படும்: மத்திய சட்ட அமைச்சகம் எச்சரிக்கை. * "வியக்காமலிருக்க முடியவில்லை" என ஓருவர் பெரும் ஆதங்கத்தோடு எழுதுகிறார். வியப்பதெல்லாம் குற்றமில்லை. சும்மா வியந்து தள்ளுங்கள் தோழர். * மென்மையாகச் சிரிக்கக் கற்றுத்தர கோர்ஸ் இருக்கிறதா? எழுத்தாளனுக்கு 50 வயதினுள் இதெல்லாம் செய்ய வர வேண்டும் என்கிறார் லபக்குதாஸ். * இந்தியாவின் இளையராஜா என்று அழைக்கப்படத் தகுதியுள்ள ஒரே நபர் இளையராஜாதான். சொல்லப்போனால் அவர் பெயரே இளையராஜாதான். * மேரா பாரத் மாக்கான். #தேர்தல் * "காபியா டீயா?" என கேட்டதை லபக்குதாஸ் சரியாகக் காதில் வாங்காமல் "இதத்தானேய்யா நாங்க 70கள்லேந்து சொல்லிட்டிருக்கோம்!" என்று பாய்கிறார். * பிறந்தநாள் வாழ்த்துப் பெற பாரதி உயிரோடு இல்லையே...! அஞ்சலிகள்... * என் லிங்க்கை ஷேர் பண்ண இவர்கள் யார்? * வாசகர்கள் செலவில் அமெரிக்காவை சுற்றிப் பார்த்துவிட்டு 'ஆஹா அமெரிக்கா!' என ஒரு புத்தகம் எழுத ஆசை. இதே வரிசையில் 'அடேங்கப்பா ஐரோப்பா!' * எழுத்தாளன் வளர்கையில் வாசகர்களும் சேர்ந்து வளர வேண்டும். பழையதையே எதிர்பார்த்து "ரைம்ஸ் சொல்லு" என்கிற ரீதியில் அவனிடம் பேசக் கூடாது. * மணி ஆறேமுக்கால்தான் ஆகிறது. அதற்குள் ஏழு மணி போல் ஒரு இருட்டு. * காதில் விழுந்த தகவல்: விண்வெளியிலிருந்து பார்த்தால் மாமலையும் ஓர் கடுகாம். * கடவுள்களுக்கு நாலு தலை, ஆறு கை இருப்பதாகச் சித்தரிக்கலாமாம். ஆனால் அதை யாரும் கிண்டல் செய்யக் கூடாதாம். * முனைவர் இரா. மாணிக்கம் எழுதி வெளிவந்திருக்கும் 'தமிழர் சடங்குகள்' நூலில் சென்னை புத்தகக் காட்சியும் சேர்க்கப்பட்டுள்ளது. * ஒரு புத்தகத்தைப் படித்த பின்பே அது பற்றிப் பேச வேண்டும் என ஆரம்பித்திருக்கிறார்கள். அடுத்து எழுதுவதற்கு முன்பும் படிக்கச் சொல்வார்களோ? * கொடார்டின் Contempt பார்த்தேன். ஆகா! உலக சினிமாவா கொக்கா என்று யாராவது சொன்னால் உலக சினிமாதான் என்று அடித்துச் சொல்லலாம். * Ne sweaté pas le smàlle stouffe. - ழீன் ழாக் ழூபேர் * "If you want to be happy, be." - லியோ டால்ஸ்டாய் #லூசாப்பாநீ * சபரிமலை சீசன். தெய்வக் குத்தங்களின் காலம். * மார்கழி சார்ந்து ஆண்டாள் கேட்கிறாள், "மார்கழித் திங்கள் அல்லவா? மதி கொஞ்சும் நாள் அல்லவா?" * அறிவுத் தளத்துக்காரன் கருத்துப் பதிவில் கெட்டிக்காரன். * "கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?" என்பதைக் கவித்துவமாகச் சொன்னால் "தென்றலுக்குத் தெரியுமா தெம்மாங்குப் பாட்டு?" * செய்தித்தாளைக் கையில் எடுத்தாலே ஏதாவது நீதிமன்றத் தீர்ப்பு கண்ணில் பட்டு நிம்மதியைக் குலைத்துவிடுகிறது. * கடவுள் என ஒருவர் இருந்து எனக்கு வரம் தர முன்வந்தால், உலகில் தொந்தரவு என்ற விசயமே இருக்கக் கூடாது என்று கேட்பேன். இதுதான் என் லட்சியம். * பார்க்கிற உலக சினிமாவில் யாராவது புகைக்கும்போது சப்டைட்டில் அருகே புற்றுநோய் எச்சரிக்கை வராவிட்டால் பதறி டி.வி.யை அணைத்துவிடுகிறேன். * இன்னும் படிக்காமல் கடலளவு இருக்கையில் சொந்தமாக எழுதுவது பெரும் குற்றச் செயலாகத் தோன்றுகிறது - சில பேருக்கு. * 2014 புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் நேரடி வர்ணனை! சில இளைஞர்கள் வீடு வீடாகப் போய் 'அட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர்' சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். தெருவெல்லாம் ஒரே களேபரம். எங்கள் தெருவில் மோட்டார்சைக்கிள்களில் சுமார் 15 குழந்தைகள் 'ஹாப்பி நியூ இயர்' எனக் கத்திக்கொண்டு போகிறார்கள். #புத்தாண்டுவிழா குழந்தைகள் சில இருசக்கர வாகனங்களின் பெட்ரோல் டாங்க்கில் தீவைக்கிறார்கள். #புத்தாண்டுவிழா நாய்கள் இரண்டு தலைதெறிக்க ஓடுகின்றன. கூடவே அவற்றின் வால்கள். #புத்தாண்டுவிழா நான்காம் வீட்டின் மூன்றாம் மாடியிலிருந்து ஒரு வாஷிங் மெஷினைத் தள்ளுகிறார்கள். அது விழுந்து சிதறி சாலையில் நீர்த் துணிகள். #புத்தாண்டுவிழா தெருமுனை வீட்டின் முன் சைக்கிள் எரிப்பு. தீ வீட்டுக்குள் பரவுகிறது. வீட்டினர் பதற்றமடைந்து வீட்டைக் காலி செய்கிறார்கள். #புத்தாண்டுவிழா அஷோக் லேலண்ட் ஊழியர் வீட்டிலிருந்து ஓர் ஆணும் பெண்ணும் வெற்றுடல்மீது போர்வையைச் சுற்றிக்கொண்டு வெளியே ஓடி வருகிறார்கள். #புத்தாண்டுவிழா அடடே, கோடி வீட்டு மொட்டை மாடியிலிருந்து நான்கைந்து பேர் முதுகு தீப்பற்றி எரிய குதிக்கிறார்களே, என்ன அவசியமோ... #புத்தாண்டுவிழா தெருக் கோடி மேடையில் கலை விழா, பாட்டு, நடனம். ஒலிபெருக்கி நாராசம். #புத்தாண்டுவிழா இந்த நேர்முக வர்ணனையை சாத்தியமாக்கிய நெருங்கிய உறவினருக்கு நன்றி. காபி மேலும் சூடாக இருந்திருக்கலாம். #புத்தாண்டுவிழா இப்போது ஆக்ரோஷமாக ஓர் இந்து-முஸ்லிம் கலவரம். அது பூதாகாரமாவதற்கு முன்பு போலீஸ் வந்து இருவரையும் இழுத்துச் செல்கிறது. #புத்தாண்டுவிழா கொண்டாட்டங்களை வேடிக்கை பார்க்க வந்த பக்கத்துத் தெருக்காரரை ஒரு செடியில் கட்டிவைக்கிறார்கள். #புத்தாண்டுவிழா எதிர்வீட்டில் கணவன்-மனைவி சண்டை. #புத்தாண்டுவிழா ஓடிப்போன அஷோக் லேலண்ட் ஜோடியினர் வேறு போர்வையில் திரும்பி வருகிறார்கள். #புத்தாண்டுவிழா வாழ்த்துக் குறுஞ்செய்திகள் எங்கள் தெருவிற்குள் நுழைந்துவிட்டன. #புத்தாண்டுவிழா ஒரு போலீஸ் ஜீப் வந்திருக்கிறது. அதிலிருந்து இருவர் இறங்கித் தெருவில் ஏதோ விசாரிக்கிறார்கள். கைபிசையச் செய்யும் கணங்கள். #புத்தாண்டுவிழா குடி போதையில் கோவில் பூசாரி. #புத்தாண்டுவிழா எதிரெதிராய் இந்து மக்கள் கட்சி, தமுமுக புத்தாண்டு கண்டன ஆர்ப்பாட்டம். இரு கும்பல்களும் சந்திக்கையில் 'ஹாப்பி நியூ இயர்'. #புத்தாண்டுவிழா நடுத்தெருவில் குண்டுவெடிப்புச் சத்தம். அதையடுத்து ஐம்பது பேர் சிரிக்கும் சத்தம், பாட்டில்கள் உடையும் ஒலி. #புத்தாண்டுவிழா தீபாவளி போல் சிலர் பட்டாசு வெடிக்கிறார்கள். நாள்காட்டியின் முற்றிலும் தவறான புரிதல். #புத்தாண்டுவிழா எங்கள் தெருவில் ஊரடங்கு உத்தரவு. நல்லிரவு. #புத்தாண்டுவிழா * இன்ஸ்பெக்டர் குமார் கதைகளைத் தொகுத்துக்கொண்டிருக்கிறேன். உ.வே.சா. போல் உணர்கிறேன். * தமிழ்ச் சூழலை முப்பதாண்டுகளாக அவதானித்துவருபவன் என்ற முறையில் ஒன்று தோன்றுகிறது: அடுத்த முப்பதுக்கு வேறு எதையாவது அவதானிக்க வேண்டும். * எனக்கொரு துன்பம் வந்தால் மற்றவர்களுக்குத்தான் துன்பம் வந்துவிட்டது போல் மனம் பதறுகிறது. * 2020ஆம் ஆண்டு வாக்கில் இணையத்தில் சும்மா உதவி கேட்பது அடியோடு ஒழிந்து "அறியத்தருதல்" அதிகமாகிவிடும். * "வரும் வழியில் அரை பாக்கெட் பால் வாங்கி" வருவதற்கு பதிலாக எங்கும் போகாமல் வீட்டிலேயே வருடக்கணக்கில் அடைந்துகிடக்கலாம். * டாக்டரிடமும் வக்கீலிடமும் "நான் உங்க வீட்ல தங்கறதால உங்களுக்கு சிரமம் இல்லையே?" என்று கேட்கும் விருந்தினரிடமும் உண்மையே பேச வேண்டும். * சிலருக்குக் காக்கைக் கறியும் சிலருக்கு சிக்கனும் பிடிக்கிறது. இரு ரசனைகளுக்கும் இடமளிப்பதே ஜனநாயகம். ஆனால் இரண்டையும் குழப்பக் கூடாது. * நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கை இல்லை. ஆனால் வாழ்க்கையே இல்லை என்றால் ரொம்ப வசதி. * நேற்று இந்திய சோஷலிச ஜனநாயகக் கட்சிக்கும் விஸ்வ இந்து பரிசதுக்கும் இடையே அடிதடி. விஇப எதிர்ப்பின்றித் தாக்கப்பட காவல்துறை உதவ வேண்டும். * நேற்று புத்தகக் காட்சி சென்றேன். ஒரே பிரியமாக இருந்தது. திரும்பி வந்துவிட்டேன். * சமூக வலைத்தளங்கள் வந்த பின்பு கணினிதான் புதிய 'இடியட் பாக்ஸ்'. * அந்தக் காலத்து ராமு-சோமு இப்போது "ராம் வைத்யநாதன்", "சோமஷேகர் வெங்கடசுப்புரத்தினம்" என்று ஃபேஸ்புக்கில் உலாவுகிறார்கள். * படிக்காமல் திட்டினால்தான் பிரச்சினை. படிக்காமல் புகழலாம். * கிடைக்காத பெண்களைப் போல் வானில் எத்தனை நட்சத்திரங்கள்! * நன்றாக வைத்தான் பெயரை வெள்ளைக்காரன் இட்லிக்கு "ரைஸ் கேக்" என்று. கேக் மாதிரியே மல்லிகைப்பூ போன்ற இலவம்பஞ்சு மென்மை. * கட்டாந்தரையில் / தூங்குகிறான் / பாய் வியாபாரி / மொக்கைக் கவிதையில். #கவிதை * மனம் போல மனிதாபிமானம். * எனது புதிய நூல்களுக்கு 'வெறுப்பேற்றி' எதுவும் தயாரிக்க நேரமில்லை. வாசகர்கள் நேரடியாகப் புத்தகங்களைப் படித்து வெறுப்பேற வேண்டுகிறேன். * பதறாதீர்கள். 'முக்கியமான நாவல்' என்றால் இலக்கியம் என்று அர்த்தமாகிவிடாது. அது வெறும் முக்கியமான நாவல், அவ்வளவே. * Be the exact change. - ஆடம் ஸ்மித் * புத்தாண்டுத் தீர்மானங்களின் கவனத்தை ஈர்ப்பது எப்படி? புத்தாண்டுத் தீர்மானங்களின் கவனத்தை ஈர்க்கும் வழி, நம் கவனத்தை அவை ஈர்ப்பதுதான். * நாம் வாழ்த்தி யாரும் வாழ்ந்துவிடப்போவதில்லை என்பது ஓர் ஆறுதல். * "...புளித்த மாங்காயின் சுவையை நாமே நாக்கில் உணருமளவு தத்ரூபமாக வர்ணித்து எழுதியிருப்பார். அது தேவையும் அல்ல..." * 'இரட்டை அர்த்தமுள்ள இந்துமதம்' என அற்புதமான புத்தகம் ஒன்று வந்திருக்கிறதாமே? நெஞ்சைக் கிள்ளும் மதமாற்றங்களைத் தடுக்க இப்படி ஒரு வழியா? * @borehay சார் போஸ்ட். bit.ly/1ijhAHN * எதற்கு ஒரு பெரிய பொதுக்கூட்ட மேடையில் மைக்கைப் பிடித்துக்கொண்டு நிற்கும் தோரணையில் நீங்கள், நீங்கள் என்று எழுதுகிறார்கள்? * முளைத்து மூன்று இலை விடாத மொழிகளுக்கெல்லாம் புத்தாண்டு கேட்கிறதா? #யுகாதி * தட் 'தமிழ் இணையம் ஒரு க்ளீஷே தொழிற்சாலை' மொமெண்ட். * ராஜாசாரை ஒரு பேட்டி எடுக்க ஆசை. இப்படி ஆரம்பிப்பேன்: "நீங்கள் நன்றாக இசையமைக்கிறீர்கள், நான் இல்லை என்று சொல்லவில்லை..." * நேற்று கி. ராஜநாராயணனைச் சந்தித்தேன். அவர் எழுதுவது போலவே பேசுகிறார். அதாவது தமிழில். * 47 வயதில்கூட இளநரை வரும் போல! * நன்றாகப் படித்தால் 18 வயதில் திருமணம் செய்துவைக்கிறேன் என வாரிசுக்கு உறுதி அளித்துள்ளேன். இருந்தாலும் இந்த அணுகுமுறை தவறோ என்று ஒரு தோணல். * நாம் சமூக விரோதப் பொறுக்கி என்று கருதும் ஆளை நம் நண்பர் வரலாற்று அறிஞர் என்று நினைப்பது இணையத்தில் சகஜம். * "உடுக்கை இழந்தவன் கை போல" - வள்ளுவருக்கும் wardrobe malfunction அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும் போலயே. * சிமோன் த பொவாரின் The Second Sex-க்கு இணையாகப் பேசப்படத் தக்கது லீலா சுப்பிரமணியனின் 'பெண்ணாகப் பிறந்துவிட்டோம்'. * ஒரு பக்கம் மலேசிய விமானத்தைக் காப்பாற்ற ஹோமம் செய்கிறார்கள். இன்னொரு பக்கம் திருப்பதி பற்றி எரிகிறது. * நம்முடைய யோக்கியதை ஊருக்கே தெரியும் என்பதற்காக நடிப்பதை விட்டுவிட முடியுமா? நம் ரத்தத்துக்கே விசுவாசம் காட்டவில்லை என்றால் எப்படி? * What has been learnt is a handful of sand; what has not been learnt is global. - Poetess Avvaiyar #மொழியாக்கம் * தீவிர வாசிப்பின் மீதான தீராத காதலால் கடும் வெயிலில் வெளியூரிலிருந்து என்னைப் பார்க்க வரும் வாசகர்கள் பாடிஸ்ப்ரே பயன்படுத்தவும். * சும்மாதானே இருக்கிறோம் என மகளிர் தினத்தில் உள்ளூர் மாதர் சங்கத்தில் உரையாற்றினேன். பெண்களுக்கு ஒரே சிரிப்பு, "standing ovulation"... * பத்திரிகைகளை "புக்கு" என்று அழைக்கும் வீட்டில் பெண் எடுக்காதே. * "உருகுவே." "எப்படி நிச்சயமாகச் சொல்கிறீர்கள்?" * ஊரை எரிக்க நெருப்பிருந்தாலும் காற்று ஒத்துழைக்க வேண்டுமே. #சுயமொழி * பாரதம் ஒழிக, இந்தியா வாழ்க. * அவுர் ஏக் பார் அம்பானி சர்க்கார். * நியூபுக்லேண்ட்ஸில் 'பாம்புத் தைலம்' ஒரு பிரதி மீதமுள்ளது. பின்புறம் விலைக்குக்கீழே "இதுக்கு நூர்ருவாயாடா?" என்று எவனோ கிறுக்கியுள்ளான். * ஆசை: ஏதாவது நல்ல சாண்டில்யன் கதை தமிழில் திரைப்படமாகி அதில் தீபிகா படுகோனே நடிக்க வேண்டும், ராஜாசார் இசையமைக்க வேண்டும். #ராஜதீபிகை * Preludeஐ வைத்து "ராஜா கைய வெச்சா"வுக்குக் காத்திருக்கிறேன். ஆனால் தொடக்க இசை முடிந்து "இதயம் போகுதே" தொடங்குகிறது. அதுதான் ராஜா! * 'தீய ஜனதா கட்சி' என்று எழுதினால் இரண்டு எழுத்து மிச்சம். * "உங்க பழைய பட்டுப் பாவாடை, பட்டு வேட்டி, பட்டுப் புடவை..." என ஒருவன் தெருவில் கூவுகிறான். தேர்தல் முடிந்தாலும் பிரச்சாரம் முடியவில்லை. * கணவர்களின் புண்ணியத்தில் இல்லத்தரசிகளுக்குப் பொருளாதார சுதந்திரம் கிடைக்கிறது. * எல்லா துணிகளையும் லாண்டரிக்குப் போட்டாயிற்று. சாயந்திரம் வரை மாற்று ஆடையே இல்லை. Living on the edge என்பார்களே... * உள்ளுமிழ்வு, வன்தொகுதி, விழுமித்தல், காட்சியங்கள், மரபேற்றம், புனைநிகழ்வு - இதையெல்லாம் பயன்படுத்திப் பார்க்க வேண்டும். * எல்லா சீனர்களும் ஒரே மாதிரி இருக்கிறார்கள். என்னவோ அத்தனைப் பேரும் இரட்டையர்கள் போல. * இந்தியில் குழந்தைகள்தான் தந்தையைப் 'பாப்பா' என்று அழைக்கிறார்கள். * தேசிய அளவிலும் தர்மபுரி, கன்னியாகுமரியிலும் ஜனாதிபதி ஆட்சி அமைய வழி இல்லையா? * உங்கள் துன்பங்களைப் பகிர்ந்துகொள்ளத்தான் முடியவில்லை; வேடிக்கையாவது பார்க்கிறேனே தோழர்? * ஒரு வாசகர் என் பழைய சிறுகதை ஒன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அதைத் தமிழில் மொழிபெயர்த்தால் எனக்கொரு புதிய சிறுகதை கிடைக்கும். * எப்போதும் ஏ.சி.யில் இருப்பதால் உடம்பெல்லாம் பிணம் மாதிரி ஒரு ஜிலுஜிலுப்பு. * நளமா? அல்லது வேறு யாராவது சமைக்கிறார்களா? * இராக்கிய பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸிடம் 2 பில்லியன் டாலர் இருக்கிறதாமே. அவ்வளவு பணத்தை யார் கொடுத்தார்கள்? என்.ஆர்.ஐ.கள்? * எல்லோரும் இன்புற்றிருக்க எனக்கு மட்டும் ஏனிப்படி என்றறியேன் பராபரமே. * இணையத்தில், நாம் நல்லவர் என்பதற்கான ஆதாரங்களை விரல்நுனியில் வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. அவற்றை நாமே சொல்லிக்கொள்வது அசிங்கம் வேறு. * வெளியூர் பயணத்திற்கு வாழ்த்துகிறார் நண்பர். வாழ்க்கையே born voyageதானே தோழர்? * "அதெப்படி சார் இவ்வளவு அற்புதமாக எழுதுகிறீர்கள்?" "I have my methods." * பெண்ணிய சிந்தனையின் தாக்கமோ என்னவோ, மனைவி தவிர எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் கருணையும் தோழமையுணர்வும் ஏற்படுகின்றன. * இந்தக் கடல் அலைகளைப் போல் பாரம்பரியமானது எதுவும் இல்லை. * நெருங்கிய உறவினர் தமது அம்மாவுடன் செல்போனில் பேசிக்கொண்டிருக்கிறார். அந்தக் காலத்தில் தூர்தர்ஷனில் 'மோனோ ஆக்டிங்' என ஒன்று போடுவான்... * "How's life?" என்று ஸ்டைலாகக் கேட்டால் "Ongoing" என்கிறார் நண்பர். * "தாய்மொழியாம் தமிழ்..." தமிழ் தாய்மொழியாக இருப்பதில் என்ன இளக்காரம்? * "சார், உங்கள் எழுத்து மிகவும் கவர்கிறது." சரி பண்ணிவிடலாம், கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். * எம்.பி.கள் தேசியக் கொடியைத் தங்கள் வாகனங்களில் தலைகீழாகப் பறக்க விடுவதைத் தவிர்க்க கொடியில் 'This side up' என்று சேர்த்துக்கொள்ளலாம். * அனுதாபம் ஏற்பட வேண்டிய இடத்தில் பரிதாபம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். #தமிழ் * 'புரோக்கன் இந்தியா'வைப் படித்தவர்கள் அதே வரிசையில் வந்துள்ள எரிக் வான் டானிக்கனின் Chariots of the Godsஐத் தவற விடாதீர்கள். * தமிழ் நன்றாகத் தெரிந்த பாரதியாரே "நோயுற்றேன்" என்றுதான் எழுதியிருக்கிறார். நம் ஆட்களுக்கு "நோய்மையுற்றேன்" கேட்கிறது. * "எப்படி இருக்கிறீர்கள்?" "அட, அதை ஏன் கேட்கிறீர்கள்..." "ஒரு சம்பிரதாயத்துக்குத்தான்." * "View 1 more comment" என்று கெஞ்சுகிறது ஃபேஸ்புக். * வாசக நண்பர் தெலுங்குப் பெண்ணைக் காதலிக்கிறார். பாபுவாக மாறினால்தான் திருமணம் என்று பெண்ணின் தந்தை கெடுபிடி. * நான் மதிக்கும் ஒரே தெலுங்கு அரசியல்வாதி, பாபு ஜகஜீவன் ராம். * தீர்த்த கரையினிலே குட்டி மூலையில் செண்பகத் தோட்டத்திலே, கமான் கிளாப்ஸ்... காதல் துரோகத்தைச் சொல்லி மனதைக் கரைக்க பாரதி போல் ஒருவன் இல்லை. * காத்திருந்தால் வருவேன் நள்ளிராவிலே பாங்கியோடென்று சொன்னாய் / வார்த்தை தவறிவிட்டாய், அட கண்ணம்மா பாங்கியும் வல்லையடி. * பிஸியாக இருப்பது என்றால் என்ன? அந்த மாதிரி இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? * திருப்பதி போய்ப் பார்த்தால் முக்கால்வாசிப் பேர் கீமோதெரபி நோயாளிகள் போல் இருப்பார்கள். * ஆகாயத் தோட்டக்காரனின் வாசமிலா பன்னீர் சொம்பு வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டது. #மழை * கும்பராசி அன்பர்களே, உங்களுக்காக ஒரு நாவல் எழுதத் தொடங்கியிருக்கிறேன். * இன்று எனக்குத் தினபலனில் "வேறு ஏதாவது பேசுவோமே" என்று போட்டிருக்கிறான். * யூட்யூபில் Autumn Sonataவின் தெலுங்கு டப்பிங் மட்டுமே கிடைப்பது சோகம். * உங்கள் தவறுகளிடம் விசுவாசமாக இருங்கள். * மக்கள் திரைக்கதைகளைப் படிக்க சோம்பேறித்தனப்பட்டுத்தான் சினிமா பார்க்கிறார்களோ என்று தோன்றுகிறது. * "பால் குடிக்கும் குழந்தை" - இங்கே குழந்தை பாலைக் குடிக்கிறதா அல்லது பால் குழந்தையைக் குடிக்கிறதா? மொழி மயக்கங்கள்! * 'ஃபெல்லினியின் கைக்குட்டை' என்று தலைப்பு வைத்து யாராவது ஒரு 'முக்கியமான கட்டுரை' எழுதுங்களேன். * ரஷ்யா: வேலி தாண்டிய வெளிநாடு. * "சொன்னது" என்று எழுதினால் உரைநடைத்துவம். "சொல்லியது" என்றால் கவித்துவம். * உண்மையில் ஒரு சாதியவாதியாக இருப்பதற்குத் தேவையான முதிர்ச்சி என்னிடம் இல்லை என்று நினைக்கிறேன். * "என்னைப் பார் யோகம் வரும்" என்ற வரிகள் வைரமுத்து எழுதியதா? * பெண் கவிஞர்களைப் பற்றி நண்பர்கள் சிலாகிக்கையில் நான் கேட்பது இதுதான்: "Is she kind as she is fair? / For beauty lives with kindness." * பொஹுமில் ஹ்ரபால்... சவாலான பெயர். * மனைவிகள் எவ்வளவு கோபத்தில் இருந்தாலும் உட்கார்ந்து வேகுவேகென்று சாப்பிட்டுவிடுகிறார்கள். அந்த சாமர்த்தியம் நமக்கு வர மாட்டேன் என்கிறது. * இன்றைய சண்டை இப்படித் தொடங்கியது: "இன்னிக்கி மழை எப்ப வரும்?" "எனக்கு எப்படிங்க தெரியும்?!" "ஏன், உனக்குத்தான் எல்லாமே தெரியுமே." * இன்று வெள்ளிக்கிழமை நல்ல நாள். சாலை விபத்துகள் குறைவாக இருக்கும். * மாமியாருக்கு நீரிழிவு நோய். இனிப்பு தின்னும்போதெல்லாம் தோன்றும்: "யார் இனிப்பு சாப்பிட வேண்டுமோ அவர் சாப்பிடாமல் நானே சாப்பிடுகிறேன்." * சந்தோச மயிலின் இறகால் வருடிக்கொள்கிறேன். * மரபுகளை மதிக்க வேண்டியதுதான். அதற்காக "மரபுசார்" என்று சார் எல்லாம் போடத் தேவையில்லை. * வாசகர்களே, மனிதம் உயிர்க்க இன்று என்ன செய்தீர்கள்? * விருந்தினர் புறப்பாடு. ஆனால் வழியில் கோர விபத்து ஏதும் நிகழ்ந்தாலொழிய அவர்கள் திரும்பிவர மாட்டார்கள் என்பதற்கு யாதொரு உத்தரவாதமும் இல்லை. * காஸா நிகழ்வுகளைப் பற்றி சைமன் வீசந்தால் மையம் என்ன சொல்கிறது? * நெருங்கிய உறவினர் பேசுவதைக் கேட்பது ரோஜா முத்தையா நூலகத்தில் அமர்ந்து பழைய ஓலைச்சுவடி படிப்பது போலுள்ளது. ஒரு கமா, முற்றுப்புள்ளி இல்லை. * உறவினர் தம் மகனின் அசட்டு மழலை பற்றி பீற்றிக்கொள்கையில் "அவன்தான் அப்படி பேசுறான்னா உனக்கெங்க போச்சு புத்தி?" எனக் கேட்கத் தோன்றுகிறது. * தற்போதைய மனநிலை: அல்ஜைமர்ஸுக்கு ஏங்குதல். * மூத்தோருக்கு எவர்சில்வர் வெற்றிலைச் செல்லம் போய் பிளாஸ்டிக் மாத்திரைச் செல்லம் வந்துவிட்டது. * எப்போதுமே நம்முடைய "இடுக்கண்" அடுத்தவருக்கு "நகுக"தான். தம் துன்பம் போல் ஏனையோர் துன்பம் காண்கிற்பின்.. * என் வாரிசு என் நிழலில் வாழ வேண்டியிருக்குமே என்ற கவலை இருந்தாலும் அவன் வளர்வதற்குள் என்னை மறந்துவிடுவார்களோ என்ற சந்தேகம் ஆறுதலளிக்கிறது. * வை(ர)மு(த்து)கோ(வேறுகழு)தை(கள்)நாயகி * ஒரு நகைச்சுவைத் திரைப்படத்திற்குத் திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறேன். இரானியப் படம் போல் இருப்பதாக ஸ்டுடியோக்காரர்கள் புகழ்கிறார்கள். * நான் எளிமையாக எழுதுவது இருக்கட்டும். நீங்கள் முதலில் எளிமையாகப் புரிந்துகொள்ளுங்கள். * துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம். ஆனால் காலையில் எழுந்து படிக்கும்போது எப்படி இருக்குமோ. * RT @borehay The lumen of the descending aorta / is subject to calibration / There is a presence / of minimal pericardial effusion. * அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்பதில் மென்னுணர்வுக்கு வேலை இல்லை. * சமவயது எழுத்தாளர்களே, Circulin 10 mg பேக் வடிவமைப்பை மாற்றிவிட்டார்கள் பார்த்தீர்களா? * ஆயிரம் ஆயிரமாகக் காசைக் கொட்டி ECG, MRI, அல்ட்ராசவுண்ட், எக்ஸ்ரே எல்லாம் செய்துகொண்ட பின்பு எல்லாமே 'நார்மல்' என்றால் ஏமாற்றமாக உள்ளது. * ஜி.என். செட்டி சாலையில் புதிதாக ஒரு டிவைடர் வைத்திருக்கிறார்களாம். பார்த்துவிடுவோம்! * இணைய யுகத்தில் எழுத்தாளனாக இருப்பது சிரமம். கொஞ்சம் அசந்து தூங்கினால் தலைமாட்டில் விளக்கு வைத்துவிடுவார்கள். * சமைப்பதைவிடச் சுலபம் காபி போட்டுத் தருவது. இருந்தாலும் அதிகம் சலித்துக்கொள்ளப்படுவது காபிக்கே. * உரைநடைக் கவிதை என்று ஏனய்யா பிரித்துப் பேசுகிறீர்கள்? சும்மா எழுதுங்கள், எல்லாம் உரைநடைதான். * கவிதை வாசிப்பு நிகழ்வில் கவிதை வாசித்தேன். கைதட்டல் இல்லை. அதற்கு பதிலாக "கொஞ்ச நேரம் முன்னாடி நல்லாத்தானே இருந்தீங்க?" என்றார்கள் கோரஸாக. * 'வின்சுலோ ஓமர்' என்றால் தெலுங்குத் திரைப்படப் பெயர் போல் உள்ளதே தவிர ஓவியர் பெயராகத் தெரியவில்லை. * ஒரு சுவையான விளையாட்டு விளையாடலாமா? நான் ஒரு நகைச்சுவைத் துணுக்கு சொல்வேனாம், அதை வெறும் தகவலாகப் பார்த்துத் திருத்தம் சொல்வீர்களாம். * நான் கிரெடிட் கார்டைப் பயன்படுத்திப் நிறைய புத்தகம் வாங்குகிறேன் என்று நெருங்கிய உறவினர் கார்டை எரித்துவிட்டார். #வெந்துதணிந்ததுகார்டு * தமிழ் சினிமா சேட்டுகளின் 'வர்றான் இல்லே', 'போறான் இல்லே' பாணியில் பாரதியார்கூட எழுதியிருக்கிறார்: 'நெஞ்சு பொறுக்குதில்லையே'. * 'அல் உம்மா'வின் சுருக்கம்தான் 'அம்மா' என்று வாரிசிடம் விளையாட்டாகச் சொல்லிக்கொண்டிருந்தபோது நெருங்கிய உறவினர் வந்துவிட்டார். * நீண்டகாலமாக மனதில் இருந்துவரும் ஒரு சிறுகதையை இப்போதுதான் எழுதுகிறேன்: புதுமைப்பித்தனின் 'காஞ்சனை'. * நீளமான கவிதைகளை எழுதி முடிக்கும்போதெல்லாம் "சாவுங்கடா!" என்று எழுதிவிட்டு நீக்கிவிடுவேன். * ஆங்கில செய்தித்தாளில் "MEA spokesman" என்று பந்தாவாகப் போட்டிருப்பான். யாரென்று பார்த்தால் எவனாவது பா.ஜ.க.காரனாக இருப்பான். * ஒருவரைக் குறைகளை மீறி நேசிக்க நமக்கென்ன தலையெழுத்தா? 100% நல்லவன் என்றால் நேசிக்கிறேன். இல்லை என்றால் நடையைக் கட்டு, வேலை இருக்கிறது. * நல்ல சிகிழ்ச்சைக்கு ஏற்படும் செலவு மகிச்சி அளிப்பதில்லை. * சுஜாதாவையும் தி. ஜானகிராமனையும் ஒரே தட்டில் வைத்துப் பேசுபவர்கள் வீட்டில் சமையலறை பெரிதாக இருக்கும். * கயிற்றின் மேல் நடந்தாலும் காசு பெயராது. * ஒரே துணியில் சுடிதாரும் நைட்டியும் தைத்துக்கொண்டால் துப்பட்டாவுக்கு ஆகும். * இன்றைக்கு என்னவோ ஒரே சிகரெட் தாகமாக இருக்கிறது. இத்தனைக்கும் எனக்கு சிகரெட் குடிக்கும் பழக்கம்கூட இல்லை. * ஒரு டினோசரை நெருங்குவது எப்படி? அதற்கு லைக் போடுவதில் தொடங்கலாம். * "சரிசமமாக நிழல் போலே உன் கூட வர சம்மதமா?" - எல்லாமே ஆபத்தான வார்த்தைகள். * லட்சியம்: எனது ஒவ்வொரு வாசகரும் 'இவரை இவ்வளவு காலம் படிக்காமல் இருந்துவிட்டோமே' என்று வருந்தும் அளவுக்கு சிறப்பாக எழுத வேண்டும். * குப்பை பொறுக்குபவர்களையும் பிச்சைக்காரர்களையும் மட்டும் பார்த்துக் குரைக்கும் நாய்களைப் போல் சில மனிதர்கள். * நாம் எந்த அளவுக்கு அறச்சீற்றம் கொள்கிறோமோ அந்த அளவுக்கு அது வேடிக்கையாக இருக்கும். * அந்தக் காலத்து தூர்தர்ஷன் நாடகங்களில் இல்லாத "meta"வா? கடைசியில் "உங்களைத் திருத்தத்தான் இப்படி ஒரு நாடகம் போட்டோம்" என்பார்கள். நான்கூட அதற்கு ஒரு ட்ரிப்யூட்டரி செலுத்தும் விதமாக "இப்படி ஒரு நாடகம்" என்று ஒரு நாடகம் எழுதியிருக்கிறேன். * ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்தாலும் போதாது. காரணம், அதில் ஐந்து தலைமுறையை விலைவாசி விழுங்கிவிடும். * எழுதும்போது முடிந்த வரை எழுத்துப்பிழைகளைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக, 'அவன்' என்பதற்கு பதிலாக 'இவன்' என எழுதிவிட்டால் பொருளே மாறிவிடும். * நாட்டில் கவித்துவம் இல்லாமல் துக்கப்படவே முடியாதா? * ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு (cont) tl.gd/z_1s7k6w2 * நேற்றைய கடும் மழையின் தாக்கத்திலிருந்து சென்னை மாநகரம் இன்னும் முற்றிலுமாக விடுபடவில்லை. அதாவது எங்கள் தெருவில் தண்ணீர் தேங்கியுள்ளது. * ஒருவரை சதா மேற்கோள் காட்டிக் காட்டியே அவரை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுகிறார்கள். * என் தலைமுறையில் சுஜாதாவின் '30 நாட்களில் தீவிர எழுத்தாளர்கள்' புத்தகத்தைப் படித்துப் பயனடையாதவர்களே இருக்க முடியாது, இருக்கவும் கூடாது. * கன்னட, தெலுங்கு மொழிகளின் வயது என்ன இருக்கும்? அவற்றில் உள்ள வடமொழிச் சொற்களின் வயதைக் கழித்துவிட்டால் ஒரு 100, 150 தேறுமா? * இன்றும்கூடப் பல கிராமங்களில் மால்கள் இல்லை. * ஆயிரம் எருமைகள் மொட்டை மாடியில் ஓடுவது போல் இடியின் சத்தம். * வருணதேவராயர் அடிக்கிற அடியைப் பார்த்தால் காலையில் கண்விழித்துப் பார்க்கும்போது நாம் வேறு ஊரில்தான் இருப்போம் போலிருக்கிறதே. * குழாயடியில் பக்கெட் நிரம்புவது போல் பெய்த மழை நீர் மீதே மேலும் மழை பெய்கிறது. * தலைவலி மாத்திரை கீழே விழுந்துவிட்டதே என்று வாஷ் பேசின் குழாயடியில் வைத்துக் கழுவினால் திடீரென்று கையெல்லாம் காலியாக இருக்கிறது. * சன்ஷிரோ சுகாதா - அட! * இலக்கணம் தெரிந்தவனுக்கு இலக்கியம் தெரியவில்லை. இலக்கியம் தெரிந்தவனுக்கு இலக்கணம் மாறுதோ, இலக்கியம் ஆனதோ, இது வரை நடித்தது... #Nowlistening * சில பெண்கள் கோபப்பட்டால் அழகாக இருக்கிறது. இதைச் சொன்னால் வேறு சில பெண்கள் கோபப்படலாம். அது அழகாக இருக்க சாத்தியம் இல்லை. * எனது சமீபத்திய நூல் ஒன்றைப் படித்த ஒரு வாசகர் எழுதிய முத்தான ரத்தினச் சுருக்கக் கடிதம்: "இத்தைப் படித்து எத்தைத் திங்க?" * "மானே, தேனே" என்று இனிமையாகத் தொடங்கும் கவிஞர், "கட்டிப்புடி" என்பதில் சரிந்துவிடுகிறார். #Nowlistening * ஒரு தெருச் சண்டையைக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றேன். "கண்ட எடத்துல கமா போடுறவன்தானடா நீயி!" என்ற வார்த்தைகள் மட்டும் காதில் விழுந்தன. * இப்போதுதான் மழை பெய்து முடித்தது போல் வேகிறது. * கடன் மறுப்பாளர்கள் இரு வகை: இல்லாததால் இல்லை என்று சொல்பவர்கள், இருப்பதால் இல்லை என்று சொல்பவர்கள். * தெருவில் ஒருவன் டிப்டாப் ஆடையணிந்து கருப்புக் கண்ணாடி போட்டுள்ளான். குறுக்கும் நெடுக்கும் நடந்து ஹெட்ஃபோனில் பேசுகிறான். ஆனால் தெலுங்கில். * சாலை நடைகளின்போது சோகமான முகத்துடன் எதிர்ப்படும் கிழவர்களிடம் "என்ன சார், காதல் தோல்வியா?" என்று கேட்டால் எப்படி இருக்கும்? :-) * எங்கே போய் முட்டிக்கொள்வது என்பதை வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன். * ஷெனாய் மேதை உஸ்தாத் பிஸ்மில்லாகாரனின் பெயர் அப்படியே தமிழ்ப் பெயர் மாதிரி இருக்கிறது. * பாரதியா(ள)ர். * ஒரு விமர்சகர் என்னை "சாவின் டைப்பிஸ்ட்" என்று குறிப்பிடுகிறார். * யாரையுமே முற்றிலுமாக நிராகரித்துவிட முடியாது. இதில்தான் ஒவ்வொருத்தன் பிழைப்பும் ஓடுகிறது. இதுதான் மனிதர்களை ஒட்டும் கோந்து. * நான் எப்போதுமே ஒரு பாடல் பெற்ற கோவில் உள்ள ஊருக்குச் செல்வதற்குமுன் முதலில் அந்த ஊரின் தல புராணத்தைப் படித்துத் தல ரசிகன் ஆகிவிடுவேன். * "கவலையை மறந்து சிரித்தல்" என ஒன்று சொல்கிறார்கள். ஆனால் நான் சிரிக்கும்போதுகூட கவலைப்பட மறப்பதில்லை. * நான் சொல்கிறேன், எழுதிவைத்துக்கொள்ளுங்கள்: தமிழ் சினிமாவில் 'சாதாரண சினிமா அலை' வீசப்போகும் காலம் வெகுதூரத்தில் இல்லை. * மெனக்கெட்டுப் பலமுறை திருத்தி, கைவிட்டு, தெளிவடைந்து ஒன்றை எழுதுகிறோம். கவனம் பெறுவதில்லை. சும்மா ஒரு துணுக்கு போட்டால் பற்றிக்கொள்கிறது. * "என்றார் சிரித்துக்கொண்டு" என்பது எந்தக் கதையில் வருகிறது? மறந்துவிட்டேன். * "கூடா நட்பு?" இல்லை, நட்பு ஒரு கூடு அல்ல, விருட்சம். * என் பால்கனியில் ஒரு பூச்செடி உள்ளது. ஏதாவது ராட்சத கார்ப்பரேட் அதை அழித்து ஒரு குட்டி ஆலை நிறுவும் காலம் வெகு தூரமில்லை ஜென்டில்மென். * நாட்டு நடப்புக்கு ஒய்வு ஒழிச்சலே இல்லை. * மேடைப் பேச்சாளர்கள் பேசும்போது கொஞ்சம் நடிக்கவும் செய்வார்கள் அல்லவா? ஃபேஸ்புக்கில் இம்மாதிரி ஆட்களைப் பார்க்க முடிகிறது. * சில குறள்களைப் படிக்கும்போது, "இவர் யாரை நல்லவர் என்கிறார்?" என்று தோன்றாமல் இருப்பதில்லை. * பிரெஞ்சு மொழியில் 'தேஜஸ்வி' என்றால் "நான்தான் தேநீர்". * உங்கள் மத உணர்வு புண்படுகிறதா? ஒரு நல்ல நாத்திகரைப் பாருங்கள். * புரியவைப்பதைவிட சொல்வதைச் செய்வது சுலபம். * (பாரதியார் குரலில்) ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று...!! * ஜன்னல் வழியே பார்த்த காட்சி: சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு களைப்புடன் வீடு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா. * இந்த "Hell is other people" என்பதில் "other people" நாம் கிடையாது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். * எனது கல்லறை வாசகம்: உங்களையெல்லாம் சந்தித்ததில் மிக்க சந்தோசம். ஆனால் இனிமேல்தான் நமக்கு நிறைய வேலை இருக்கிறது. * ரஷ்யாவில் தொண்ணூறுகளில் அந்தோன் "செக்காவ்" சேகவ் என்று ஒரு ரவுடி இருந்திருக்கிறான். * வேலு மிலிட்டரியில் மிளகு சிறுநீரகம் எல்லாம் போட்டு சூடாக சூப் குடித்தேன். அருமையாக இருந்தது. * உலகைப் பார்த்துக்கொள்ளக் கடவுளிடம் கான்ட்ராக்ட் எடுத்திருக்கும் ராட்சத கார்ப்பரேஷன் தன் வேலையை சரியாகச் செய்வதில்லை. * ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள், மிச்சம் நாற்பது ஆண்டுகள். * கானல் நீரைக் காணல் நீர் என ஏமாறும் கூத்துதான் தினமும். * RT @borehay I'd rather be hot than endearing. * ஃபேஸ்புக்கில் ஒவ்வொருவனுக்கும் சுஜாதா என்று நினைப்பு. அட பெண் பெயர் என்று க்ளிக்செய்து பார்த்தால் 'இதோ பார் மீசை' என வந்து நிற்கிறான். * பூனைக்கும் ஒரு காலம் வரும். அப்போது அது யானை ஆகியிருக்கும். * டூவீலர் ஓட்டும் இளைஞனைக் கட்டிப்பிடித்திருக்கிறாள் அழகுப் பில்லியனாள். காணக் கண் கோடி போதாது வயிறெரிய. * அமெரிக்காவிலும் ஸ்பைடர்மேன் சதுர்த்தி, சூப்பர்மேன் அஷ்டமி, வொல்வரைன் ஜெயந்தி, நிஞ்சா டர்ட்டில்ஸ் நவமி எல்லாம் உண்டா? * ஒரு கல் தடுக்கி விழுந்து வாரியதில் முகம் பெயர்ந்து ஒரே ரத்தம். துடைத்துக்கொண்டு பேசாமல் போய்விடுவதா கல்லுடன் சண்டை போடுவதா? * "என்னப்பா, ஓவர் தண்ணியா?" என்று வருணதேவனைக் கேட்கத் தோன்றுகிறது. * தின்பதற்கேதும் கேட்டால் வீட்டிலே இல்லை என்பாய். #மனைவி * கொடிய சிங்க கர்ச்சனை தும்மலாக/இடியது நீர்த்தது காண். * ஐயையோ நனைகிறேன் என ஓடுபவன்/பையக் கரைகிறான் மழையில் * கேளடா மானிடவா! எம்மில் கீழோர் மேலோர் இருப்பதாக நான் என்றைக்குமே கருதியது கிடையாது. - பாரதியார் * வாசகர்கள் எப்போதும் வேலையே இல்லாமல் நான் எழுதிப் போடுபவைகளைப் படிப்பதற்கே காத்திருந்து ரோட்டோரங்களில் குந்தியிருப்பது போல் ஓர் உணர்வு. * டால்ஸ்டாயின் 'புத்துயிர்ப்பு' படித்துக்கொண்டிருக்கிறேன். சரியாக எழுதியிருக்கிறாரா என்று பார்க்க. * எனது சென்ற பிறந்தநாளுக்கு வாழ்த்தியவர்களில் பெரும்பாலோர் இன்று உயிரோடு இல்லை என்பதை நினைத்துப்பார்க்கையில்... சக்திவாய்ந்த பிறந்தநாள்! * நெருங்கிய உறவினர் ஆடி சார்ந்த பூஜை செய்து மணியாட்டும்போது "குல்ஃபி! குல்ஃபி!" என்று கத்துகிறேன். * வாழ்க்கையில் வேறேதுவும் வேண்டாம், கம்பன் கவி போதும் கம்பனுக்கு! * ...அந்தக் காலகட்டத்தில் இந்த இசைக்கருவிகளை எந்த இசையமைப்பாளனும் பயன்படுத்தியதில்லை. மனிதன் அப்போதுதான் நெருப்பையே கண்டுபிடித்திருந்தான்... * வாழ்க்கையே ஒரு பாடமாக இருந்தால் எப்போதுதான் விளையாடுவது? * நண்பருக்கு 2 மைத்துனர்கள். ஒருவர் விபத்தில் இரு கைகளையும் இழந்தார். அதனால் கை இருக்கும் மைத்துநரை நண்பர் கர மைத்துனர் என குறிப்பிடுகிறார். * படித்ததில் பிடித்தது அதிகம். பிடித்ததில் படித்ததுதான் குறைவு. * நாமே பத்து புனைபெயர்களில் எழுதினால் ஏதாவது பத்திரிகை டாப் 10 நாவல் பட்டியல் கேட்கும்போது கொடுக்க வசதியாக இருக்கும். * சிறிய வேலையாக இருந்தால் 'பணித் துளி' என்று சொல்லலாம் போல. * வரவர நூலகங்களில் என் நூல்களைப் புரட்டவே பிடிக்கவில்லை. ஒரு நூலில் ஒரு விஷமி கடைசிப் பக்கத்தில் என் வீட்டு முகவரியை எழுதிவைத்திருக்கிறான். * "பெயர்ச்சொல் 1. (இனக் கவர்ச்சி அடிப்படையில் ஆண் பெண் இருவரிடையே ஏற்படும்) அன்பு; நேசம்" என்பதே மருவிக் "காதல்" என்று ஆனது. * காஃப்கா போல் எழுத வேறு யாராலும் முடியாது. ஒரே மாதிரி இருப்பவர்களுக்குக்கூட கையெழுத்து வேறு மாதிரி இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். * கேள்விகளால் வேள்விகளை மனைவிதான் செய்கிறார். * படர்க்கையில் ஒரு சிறுகதை எழுதிக்கொண்டிருக்கிறேன். எனவே "நினைத்துக்கொண்டான்" நிறைய வரும். * என் மகன் எப்போது வளர்ந்து திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்று அதற்குத் "தமிழ்" எனப் பெயரிட்டு நான் "தமிழ்த் தாத்தா" என்று பெயர் வாங்குவது? * ஒரு கனவைச் சொல்லும்போது ஏன் நிகழ்காலத்தைப் பயன்படுத்துகிறோம் தெரியுமா? பொதுவாக அப்படித்தான் செய்வார்கள். * கலைகளிலே அவள் விமர்சனம். * ஆத்தூர் பேருந்து நிலையம் மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டது. நண்பர் ஆத்தூர் ரவிவர்மாவுக்குத் தெரிந்தால் சந்தோசப்படுவார். * ராதைக்குக் கண்ணன், சீதைக்கு ராமன், கோதைக்கு மட்டும் கோவலனா? சினிமா பாடலாசிரியர்கள் அடிக்கும் லூட்டி... * காலையில் கொடுத்த மாதிரியே இப்போதும் கொடு என்றால் வேறுவித காபி வருகிறது. இதற்குதான் கம்ப்யூட்டரில் Save Settings என ஒன்று வைத்திருக்கிறான். * நிலத்துடன் கொஞ்சிப் பேசி சூட்டைக் கிளப்ப வந்துவிட்டது மழை. * "இன்னிக்கி என்ன கிழமை?" "சனிக்கிழமை." ஆமாம், நாங்கள் சாதாரணமாகவும் பேசிக்கொள்வோம். * பெயருக்காகவே தவிர்க்க வேண்டிய தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. * மக்களுக்காகத்தானே படம் எடுக்கிறாய்? மக்களுக்குப் புரியும்படி பெயர் வைத்துவிட்டுப் போயேன் ஓட்டலுக்கு மதிய நேரம் பசியாக இருந்தால். * பாலன்களில் அவர் வசந்தம்... #நல்லஇயக்குநர் * கடைக்காரர்கள் 'இல்லை' என்பதில்லை. புத்தகமும் விற்கும் மருந்துக் கடையில் மௌனி கதைகள் கேட்டால்: "மௌனி இல்ல சார், ஹார்லிக்ஸ் இருக்கு." * நான் மது அருந்துவதில்லை. ஆனால் அரை மூடி இருமல் மருந்து குடித்தால்தான் இரவு தூக்கம் வரும். இதற்காகவே ஒரு தேங்காய் மூடி வைத்திருக்கிறேன். * ஐம்பது வயது ஆகிவிட்ட பின்பு தினமும் மாத்திரை சாலட்தான். * "ஹலோ, எப்டி இருக்கீங்க?" "நல்லா இருக்கேன் சார்." "உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லையே?" * எதிர்வீட்டுக் கைக்குழந்தை எப்போதும் அழுதுகொண்டே இருக்கிறது. சுத்த போர். * என் சொர்க்கம் தூக்கத்தால் ஆனது. என் நரகம் வார்த்தை விளையாட்டுகளால் ஆனது. * எழுதிய நாவலில் பக்கம் போதாதா? சினிமா பாடல் வரி, வசனம் எல்லாம் சேர்த்துவிடுங்கள். 'பாப்புலர் கல்ச்சர் ரெபரன்ஸ்' என்று சொல்லிக்கொள்ளலாம். * நாரதமுனி என்று எழுதியது நாரதமுன்னி என அச்சாகியுள்ளது. வாசகர்கள் கோள்மூட்டும் வடநாட்டுச் சிறுமி ஒருத்தியைக் கற்பனை செய்து பார்க்கக்கூடும். * சில எழுத்தாளர்களிடம் சரக்கு இல்லை. அதற்கு பதிலாக எழுத்தில் மெலிதான நகைச்சுவை இழையோட ஓட விரட்டுகிறார்கள். * நல்ல தொரு வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவது உண்டோ சொல்லடி, சொல்லடி சக்தி எனைச் சுடர்மிகும் அறிவுடன்... #நந்தவனத்தில்ஓர்ஆண்டி * @borehay சார், தனிமை பற்றி ஏதாவது? * குழந்தைகள் வளர்ந்த பின்பு பெற்றோர் அவர்களை அடிப்பதை நிறுத்திவிடுகிறார்கள். அதாவது குழந்தைகள் வளர்ந்ததும் யோக்கியர்கள் ஆகிவிடுகிறார்களாம். * கடைசியில் ஸ்காட்லாந்து தனிநாடு ஆகவில்லை. இந்து சக குருதையர்களே, இனி அதன் மேல் படையெடுத்து குஜராத்துடன் இணைப்பது அவ்வளவு எளிதல்ல. * Vous dites நாராயண். :-)) #பிரெஞ்சு * பண்டிகைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு அமைதியான நாட்களைக் கொடுங்கள். * நேற்றிரவு தோண்டி முடித்து மூடிய பதுங்கு குழியை இன்று அதிகாலை மீண்டும் தோண்டுகிறார்கள் மின்சார வாரிய சிசிபஸ்கள். * இந்தியை சப்டைட்டிலோடு திணியுங்களடா மொண்ணைகளா! * மனிதன் ஒழுங்காக வாழ்க்கை நடத்த அற்ப மாயைகளே போதும். தோற்ற மயக்கங்கள் ஒரு luxury, அவ்வளவுதான். * ஒரு பத்து வருசம் கோமாவில் கிடக்கலாம் போல் இருக்கிறது. * சிலரிடம் நல்லவர்கள் என்பதைத் தவிர உருப்படியாக வேறு எந்த அம்சமும் இல்லை. தாவரங்களைப் போல் வாழ்கிறார்கள். * 'காதலிக்க நேரமில்லை' பார்க்கும்போது, இது தார்க்கோவ்ஸ்கி எடுத்திருக்க வேண்டிய படம் என்று தோன்றும். அவர் காமெடி படங்களே எடுக்கவில்லை. * மகன் என் தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டானே தவிர அவனுடைய தோளுக்கு மேல் இன்னும் வளரவில்லை. * ஷேக்ஸ்பியரின் 'ஒதெல்லோ' நாடகத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் 'ஐயகோ'. ;-)) * "ஓடி விளையாடு பாப்பா..." பாரதி குழந்தைகளுக்கான நல்ல அறிவுரைகளை அந்த காலத்திலேயே சொல்லிவிட்டுப் போய்விட்டார் நம்மையெல்லாம் விட்டுவிட்டு. :-( * என் தெருவில் சில விஷமிகள் உள்ளனர். நான் அவர்களைக் கடக்கும்போதெல்லாம் "இதுவும் கடந்து போகும்" என்று சொல்லிவிட்டு சிரிக்கின்றனர். * ஷேக்ஸ்பியர் மட்டும் இன்றைக்கு இங்கிருந்தால் அவருக்கு "Dramatis Personae!!" என்று சுவரொட்டி வைத்துக் கொண்டாடுவார்கள். * எனது கல்லறை வாசகம்: அவ்வளவுதான், வேறென்ன? * அதற்கு ஏனடா மூன்று ஆச்சரியக்குறி போடுகிறாய் வெண்ணெய்? * யாருக்காவது அஞ்சலி என்று கட்டுரை பார்த்தால் 'அஞ்சலி அஞ்சலி அஞ்சலி' முழுப் பாட்டும் மனதில் ஓடிய பிறகே கட்டுரையைப் படிக்க முடிகிறது. * "ஆயிரம் கண்கள் உடையவளே" என்ற வரியைப் பாடும்போது குரலில் ஒரு சின்ன பொறாமையைக் கொண்டுவருகிறார் பாருங்கள், அதுதான் பி. சுசீலா! * என் காலைத் தடுக்காதிருக்க நான் எடுத்து ஓரத்தில் போட்ட கல்லை யார் யாரோ அனுபவிக்கிறார்கள் தெருவில். * டோஸ்ட் என்றால் நாம் இங்கே ஜாம் தடவி சாப்பிடுகிறோம். மேலை நாடுகளில் கண்ணாடிக் குவளையில் திரவ வடிவில் ஊற்றிக் குடிக்கிறார்கள். * 'ஓர்ப்படி' போன்ற உறவுப் பெயரெல்லாம் அரசியல் சாசன ஒப்புதல் பெற்றவைதானா? * கிரைமும் பனிஷ்மென்ட்டும் படித்தால் இந்து இளைஞர்கள் கெட்டுப்போவார்கள். * கண்ணிலிருந்து தொடர்பு ஆடிகளைக் கழற்றியபடி மருத்துவர் சொன்னார்: "சாரி சார், சார்ஜ் போய்விட்டது. என் இரங்கல்கள்." #அறிபுனை #ட்விட்டர்கதை * பாரதியார்: காலா... என்றன் காலருகே வாடா, சற்றே உனை மிதிக்கிறேன். காலன்: அஸ்கு புஸ்கு. பாரதியார்: :-(((((((((((((( * காலை பத்து மணிக்கே தேவையில்லாத வெயில். விளைவு, ஹிந்து சமூகத்தினர் உள்பட எல்லோருக்கும் வியர்க்'குரு உத்ஸவ்'. * சூழ்நிலைக் கைதிகளுக்குக் கடன் கொடுப்பது முட்டாள்தனம். * பட்டிமன்ற நடுவரின் தீர்ப்பு போல் ஒரு பாடல் வரி: "மலர்களில் ஆடும் இளமை புதுமையே." #Nowlistening * "ராமன் எத்தனை ராமனடி?" என்ற கேள்விக்கான பதில் "அனந்தராமன்" என்ற பெயரில் இருக்கிறது. * நீங்கள் பெறும் ஃபேஸ்புக் லைக்குகள் செத்த பின்பு கூட வராது. * "நாங்களும் நாலெழுத்து படித்திருக்கிறோம். ஏதாவது புத்தகப் பட்டியல் என வரும்போது அதைக் காட்டிக்கொள்வோம். மற்ற சமயங்களில் ஃப்ரீயா வுடு மாமே." * மூன்று வார்த்தைத் தலைப்புச் செய்திக்கு ஏற்ற பெயர் "தோப்பில் முகமது மீரான்". * இன்று விநாயக சதுர்த்தி ஊர்வலம். பாரத் கலாச்சார் தலையெடுக்கலாம் என்பதால் பெரும்பாலான கடைகள் மூடியுள்ளன. 18,000 போலீஸ்கள் குவிப்பு. * வாழ்க்கையில் எப்போதும் சந்தோசமாக இருப்பது சாத்தியமில்லை என்று சிலர் நினைக்கிறார்கள். சாத்தியமில்லை என்பதைவிட கட்டுபடியாகாது. * 'தென்னந்தோப்பு' என்று எழுதினால் சாதா நடை. 'தேங்காவனம்' என்று எழுதினால் கவித்துவம். * நெருங்கிய உறவினரை 'ஹிட்லர்' என்று சொல்வதைவிட 'முசோலினி' எனலாம். அதுதான் பத்மினி, யாழினி மாதிரி பெண் பெயர் போல் இருக்கிறது. * சென்னை இன்று கொஞ்சம் குளிர்ச்சியாகியுள்ளது. கொஞ்சம் மேடாக இருந்தால் ஊட்டிதான். * ஃபேஸ்புக்கில் திருமணம் ஆகாத பெண்களே இல்லையா, அல்லது யாராவது என்னைப் பற்றி எச்சரித்து அவர்களைத் தூர ஓட்டுகிறார்களா? * இவ்வளவு காலமாக எழுதுகிறேன். யாருடைய புத்தகப் பட்டியலிலும் எனது 400 சொச்சம் புத்தகங்கள் வரவில்லை. சரி, 400 வேண்டாம், ஒரு முன்னூற்றைம்பதாவது? * காலையில் வானத்தைப் பார்த்ததும் மனதில் ஒரு பாடல் வரி உதித்தது: "வானம் கொஞ்சம் தூறல் போடும் நேரம் போலும்/" எல்லாமே ஈரசைச் சொற்கள். * #ScienceFactoftheDay: பெரிய பழுவேட்டரையர் உடலில் 64 தழும்புகள் இருக்கும். * "நான்தான், நான் மட்டும்தான். நீயெல்லாம் கிடையவே கிடையாது" என்ற கருப்பொருளைக் கொண்ட எனது புதிய கட்டுரையைப் படித்துவிட்டீர்களா? * ஆஸ்கார் ஒயில்டின் படைப்புகள் சிலதைப் படித்துவிட்டு இப்படி ஒரு கட்டுரை எழுத ஆசை: ஆஸ்கார் 'ஒயில்'டின் அழகியல். * மழையைப் பாடுபொருளாக்கி அழகுபார்த்த சங்கப் புலவர்கள், அது கொண்டு வரும் கொசுக்களைப் பற்றியும் ஏதாவது பாடியிருக்கிறார்களா? * ப்ரதான் மந்த்ரி உரைக்குப் பள்ளிகள்தானா கிடைத்தது? சிறைகளில் ஒளிபரப்பலாமே. ஜாமீன் கிடைக்காத மந்திரிகள் யாராவது உள்ளே இருந்தால் மகிழ்வார்கள். * சுவைமிகு பீட்ஸா நம் உடலுக்குக் கெட்டது. ஆனால் 'நல்லது கெட்டது' என்பார்களே, அந்த ரகம். * நம்மை ஏமாற்றிக்கொண்டால்தான் நமக்கு நிம்மதி கிடைக்கிறது என்றால் அப்படியோரு நிம்மதி இருந்தால்கூடப் போதும். * ஒரு இடுகையை வெளியிட்ட பின் ஒரு மணிநேரமாக ஆயிரம் முறை 'ரெஃப்ரெஷ்' செய்கிறேன். பின்னூட்டமே காணோம்... அடடே, கம்ப்யூட்டர் அணைந்திருக்கிறது. * லபக்குதாஸ் புதிய ஆங்கில வார்த்தை கற்றுக்கொண்டால் அதை என்னிடம் பிரயோகிக்கத் தவறுவதில்லை. "எஸ்ட்ரேஞ்சுடு ஹஸ்பண்ட் மாதிரி ஹாயா இருக்கீரே!" * பூனை: ஏழையின் புலி. * "அமுதாவுக்கு அன்று ஒரே பதற்றமாக இருந்தது" என ஒரு சிறுகதை தொடங்கினால், 'ஏதோ பிரச்சினை, பாவம்' என வேறு விசயத்துக்கு நகர்ந்துவிட வேண்டியதுதான். * கார்மேக் மெக்கார்த்தியின் 'த ரோட்' படித்துக்கொண்டிருக்கிறேன். நாவல் முழுக்க மெக்கார்த்தியிசத்துக்குப் பல நல்ல உதாரணங்கள் இருக்கின்றன. * "அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்". "சார், ரொம்ப நேரமா நிக்கிறீங்களே, கொஞ்சம் கொல்றது!" #அறச்சீற்றம் * அன்பின் சுஜாதா, தி.ஜா. இறந்தது உங்களுக்கு நிஜமாகவே தெரியாதா? அல்லது அவரது படைப்புகளுக்கு மரணமில்லை என மலிவான தொனியில் சொல்ல வருகிறீர்களா? * 'ஸ்டேட்டஸ் கோ' என்பது ஒரு ஆளுடைய பெயர் என்று நினைத்த நாட்கள் உண்டு. * நம்மை முதலில் நாம் நேசிக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் நம்மை நேசிக்காதபோதுகூட நமக்கு "back up" இருக்கும். * தெலுங்கில் "மனவாடு" என்றால் உளவியல் நிபுணர் போலிருக்கிறது. * "படியில் பயணம் நொடியில் மரணம்" - ஆகா! வாலிதானே? * "ஏன் பொலம்புறீங்க? இனிமே இங்கிலீஷ்ல எழுதுங்களேன்" என்றார் லபக்குதாஸ். "தட்," என்றேன், "இஸ் எ குட் ஐடியா." * "வாழ்க்கை வாழ்வதற்கே!" அதை வைத்துக்கொண்டு வேறென்ன செய்வார்களாம்? * வெயில் அடிக்கும்போதே மழை பெய்கிறது. சில இளம்பெண்கள் வெயிலிலும் குடை கொண்டுபோவதன் மர்மம் விலகியது. * சந்தோஷ மரத்தின் சிறு யாழை மீட்டுகிறேன். * "மழைச்சாலை" என்று எவனாவது எழுதினீர்கள் என்றால் வெட்டிப்போட்டுவிடுவேன். * நாயைக் குளிப்பாட்டி நடு விட்டில் வைத்தாலும் விளக்கைத்தான் தேடிப் போகும். * கனவில் சாகித்ய அகாடமி உரிமையாளர் வந்தார். "இம்முறை நீங்கள் வாங்கிக்கொள்கிறீர்களா?" என்றார். "எனக்கொன்றுமில்லை" என்றேன் தோளைக் குலுக்கி. * ட்விட்டர் பயனர் பெயர்களில் "itsmohan" என்பது போல் முன்னால் ஒரு "its" என்று இருந்தால் "ஓஹோ" என்று சொல்லிக்கொள்வேன். #நீதானாஅந்தக்குயில் * பிணம் போல் காதிலும் மூக்கிலும் பஞ்சு வைத்துக்கொண்டால்தான் தீபாவளிப் புகை, ஒலி இம்சைகளிலிருந்து தப்பிக்க முடியும். * தீபாவளிக்காக வீடுதோறும் குண்டுவெடிப்பு. * எல்லா பெண்களும் 'மெமரியின் குமரி'களே. * என் வீட்டில் எனக்கு வரம்பில்லா அதிகாரம் உள்ளது. ஆனால் அதைப் பயன்படுத்த அனுமதி இல்லை. * சும்மா இருப்பதைவிடப் பெரிய கொண்டாட்டம் என்ன இருந்துவிடப்போகிறது? * பணம் எனக்குக் காதலி போல: ரொம்பப் பிடிக்கும், ஆனால் நிர்வாகம் செய்யத் தெரியாது. எனவே காதலியை மனைவியின் பொறுப்பில் விட்டுவிடுவது. * இருபக்கமும் மழைநீரைப் பாய்ச்சிக்கொண்டு ஒரு டூவீலர் விரைகிறது. கடல் மோசஸுக்கு வழிவிட்ட சம்பவம் நினைவுக்கு வருகிறது. * ஏ.டி.எம். பயனாளிகளே, உஷார்! தீபாவளி வருகிறது! * தீபாவளித் திருநாள் அன்று ஆம்புலன்ஸ்கள் இயங்குமாம். மகிழ்ச்சிதானே? * இது தீபாவளி சமயம் என்றாலும் சீன மக்கள்தொகை இப்போது தி.நகரில் நடமாடுபவர்களைவிட அதிகம். * இந்த மழையில் பாதிப் பட்டாசு வெடிக்காது. எனவே, நீங்கள் வாங்க நினைத்த பட்டாசில் பாதி வாங்குங்கள் போதும். * ஏன் இவ்வளவு மோசமாக எழுதுகிறீர்கள் என சிலர் லூசு போல் கேட்கிறார்கள். எந்த மடையனாவது வேண்டுமென்றே அப்படி எழுதுவானா? அப்படித்தான் வருகிறது. * நான் கவனிக்க ஆரம்பித்த பிறகு இது மூன்றாவது விசில்... ஆனால் இது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காதே... * 'நெகுநெகு என வளர்ந்துவிட்டான்" என்று சொல்லக் கேட்டிருப்போம். இந்த "நெகு" என்பது 'நெட்டுக்குத்து' என்பதன் சுருக்கம். #அறிவோம்தமிழ் * ஹரியானா, மகாராஷ்டிர தேர்தல்களை கவனிக்கிறேன். இந்திய Reichschancellorஇன் புண்ணியத்தில் 1000 Year Reich அமைந்துவிடுமோ என வியக்கிறேன். * குழந்தைகளைப் "பிஞ்சுகள்" என்று குறிப்பிடும் கண்ணீர் நாடகத்தை தயவுசெய்து நிறுத்துங்கள். காய்கறிக் கடைக்காரர்கள்கூட அப்படிச் சொல்வதில்லை. * கேட்ட காபி ஐந்து நிமிடத்திற்குள் வராவிட்டால் ஆம்பிள்ளைக்கு எதற்குக் கல்யாணம்? * Rhymes of India நாளேட்டுக்கு இலங்கைப் பதிப்பு இருக்கிறதா? * உலகிலேயே விலைமதிப்பற்ற விஷயம் எது தெரியுமா? சுருக்கமான பதில்கள். * டிபன் இன்னும் தயாராகவில்லை. பசி காதை அடைக்கிறது. நல்ல சொட்டு மருந்து இருந்தால் சொல்லுங்கள். * வைரமுத்து இந்நேரம் பாட்டெழுதி முடித்திருப்பார். "தாலிபானால் தலையில் சுடப்பட்டு / அமைதிக்காக நோபல் பரிசு வென்ற மலாலாவோ, யாரோடி?" * சங்கபரிவாரப் பிரமுகர்களின் வாய்க்கு டயப்பர் தேவை. * சொகுசு கார்தான் சாலையில் வழுக்கிச் செல்லும். சாதாரண கார் அப்படிச் செல்வதற்கு பாரதிராஜா பாணியில் சாலை பூரா வாழைப்பழத் தோலை இறைக்க வேண்டும். * எனக்கு நோபல் பரிசு தரக் கூடாது என்ற நோபல் கமிட்டியின் வருடாந்தர சடங்கு இனிதே நிறைவேறியது. இம்முறை பயன்பட்டவர் பாட்ரிக் மோடியானோ என்ற நபர். * இந்தாண்டு நோபல் பரிசு பெற எனக்கிருந்த கொஞ்சநஞ்ச வாய்ப்பையும் ஜெயலலிதா ஆதரவு போராட்டங்கள் பறித்துவிட்டன. * டேய் பத்திரிகைகளா, சும்மா சும்மா சிறுகதையே கேட்டுக்கொண்டிருக்கிறீர்களே, ஒரு பேட்டி கீட்டி கேட்பது! * என் நண்பர் ஒருவர் சுவாரஸ்யமாக எழுதக்கூடியவர். ஆனால் அவர் சுவாரஸ்யமாக ஒன்றுமே எழுதியதில்லை. * நம்மை நாமே குறைத்துப் பேசிக்கொள்ளக் கூடாது என்பார் எனது நண்பர் ஒருவர். ஆனால் நாம் அதற்கு முன்பே குறைவாக இருந்தால்? * ஜெயலலிதாவுக்கு பெயில் கிடைக்காவிட்டால் என்ன ஆகுமோ என்று பயமாக உள்ளது. நாளைக்குத் தமிழ்நாடு உண்டா? * ஜெயலலிதா ஆதரவுப் போராட்டங்கள் பிற மாநிலங்களுக்குப் பரவும் வாய்ப்பு உள்ளதா? #அஇஅதிமுக * மழை பெய்யத் தொடங்கிவிட்டது ஓஜோன் ஓட்டைகளினூடே. * சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைத்து மோசமான கவிஞர்களை எல்லாம் அதிலிருந்து தள்ளிவிட்டுவிட வேண்டும். * உலகம் உருப்பட்ட பின்பும் "இந்த உலகம் எப்போது உருப்படும்?" என்று கேட்பவர்கள் இருப்பார்கள். ஏனென்றால் நம்முடைய ஸ்டாண்டர்டுகள் அப்படி. * மஜ்ஜிகே, பிஜ்ஜிகே என்று பேசுவதற்கு நேரடியாக சிங்களத்திலேயே பேசிவிடலாம் இந்தக் கன்னடக்காரர்கள். #லோகுஹெட்டிகே * காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிலரை அன்பிளாக் செய்ய நினைத்திருந்தேன். மறந்தே போயிற்று. இனி குடியரசு தினம்தான். * கொடிது கொடிது, கெட்ட விசயமெல்லாம் கொடிது. * அநீதியாகச் சிந்தப்படும் ஒவ்வொரு துளி இரத்தமும் கடவுளின் கண்ணீர்த் துளியாகும். மற்றபடி எல்லாம் வழக்கம் போலத்தான். * எக்ஸ்பிரஸ் அவென்யூ சங்கீதா ஓட்டலில் நான்-ஐ மைதா மாவில் செய்கிறான் ஜீன்ஸ் போட்டவளுக்குப் பிறந்தவன்! * இராம லீலாவில் 32 பேர் பலி. இந்தச் செய்தியைப் படித்துவிட்டுக் கடவுள் கடுப்பாகியிருப்பாரே? * நான் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்துப் புத்தமாக்கி "self-contained" அத்தியாயங்களைக் கொண்ட நாவல் என்று சொல்லிக்கொள்ள யோசனை. * எப்படிக் கொளுத்துகிறது பாருங்கள்! செப்டம்பரில் இவ்வளவு வெயில் என்றால் வெள்ளைக்காரன் சிரிப்பான். * காந்தி ஜெயந்தி நமக்கும் பிறருக்கும் வெவ்வேறு நாளாக இருந்தால்தான் விருந்தினர் வந்து நம்முடைய விடுமுறை சுகத்தைக் கெடுக்காதிருப்பார்கள். * குகை ஓவியங்களுக்குக்கூட சமஸ்கிருத மூலம் இருக்கும் ஐயா. நன்றாகத் தேடிப் பாருங்கள். விடாதீர்கள். * சூடான தேநீருடன் மழையை வேடிக்கை பார்த்தபடி மொட்டை மாடியில் கயிற்றுக்கட்டிலில் சுகமாகத் தூங்கும் வாழ்க்கை வாய்க்கவில்லையே நகரத்தில்! :-( * எல்லாக் கிரகங்களும் கர்ப்பக் கிரகங்கள்தாம். அவற்றின் வடிவம் அப்படி. * உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் நூறாண்டு ஆராய்ச்சி செய்தாலும் விடைகாண முடியாத கேள்வி, "மாணிக்கத் தேரில் மரகதக் கலசம் மின்னுவதென்ன, என்ன?" * ஒருவருக்கு உதவி செய்தேன். அதன்பிறகு அவரைப் பிடிக்கவே முடியவில்லை. "சார், தேங்க்ஸ் சொல்லலியே" என்று கேட்டு நாயாக அலைய வேண்டியிருக்கிறது. * ஆண்-பெண் இடையே நட்பு சாத்தியமே. ஆனால் எப்போதெல்லாம் உடலுறவு கொள்ள வேண்டாம் என்பதில் அவர்களுக்குள் கருத்தொற்றுமை தேவைப்படும். * தமிழின் மென்னியைத் திருகாமல் சினிமா பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் உருகிக்கொள். * என் வாசகர் ஒருவர் பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் "Ethnicity:" என்பதற்கு நேராக "ஒண்ணே ஒண்ணுதான். சென்னை" என பேச்சுத் தமிழில் எழுதியுள்ளார். * குப்பை சினிமா ரசனை கொண்ட நடிக அடிமையான மனம் முதிரா அட்டென்ஷன் சீக்கிங் பாமர இளம் க்ளீஷே வெறியன் followed you. * பெரிதினும் பெரிது கோள். குறிப்பாக ஜூபிடர். * ஏ.ஆர். ரகுமான் இசை என்றால் அலற விட்டுத்தான் கேட்க வேண்டுமா? "டேய், சவுண்டு வால்யத்தைக் கொறைடா!" என்று கத்தினாலும் மகன் காதில் விழவில்லை. * "தமிழ் வாக்கிய அமைப்பு விழிப்புணர்வு இயக்கம்" ஒன்று தொடங்க வேண்டும். பேமானியர் முதல் சாமானியர் வரை அதில் கட்டாயமாகச் சேர்க்கப்பட வேண்டும். * விருந்தாளியிடம் "அங்கிள், நீங்க எப்ப கிளம்புவீங்க?" என்று கேட்கவாவது நம் வீட்டில் ஒரு சிறு குழந்தை இருக்க வேண்டும். * ஆமை "புகுந்த வீடு". * "சர்வர் சுந்தரம்" மாதிரியான பெயர் "கலாபவன் மணி". * வீட்டில் சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்துவிட்டது. ஜன்னலை முட்டித் தள்ளிக்கொண்டு உள்ளே வரப் பார்க்கின்றன பிணந்தின்னிக் கழுகுகள். * எழுத்தாளனாக நான் முதன்முதலாகப் பேட்டி கண்டது அசோகமித்திரனை. அவரிடம் கேட்ட முதல் கேள்வி நன்றாக நினைவிலுள்ளது: "'டீட்டெய்ல்ஸ் சொல்லுங்க." * மருந்து தரும் டாக்டர்கள் பக்கவிளைவு பற்றி எச்சரிக்கக்கூடாதா? காலையில் மாத்திரை தின்றுவிட்டு வெண்டைக்காய் வாங்கிவந்தேன். அதில் பாதி முற்றல். * இளம் வாசகிகள் என்னைப் பார்க்க வரும்போது கையில் எப்போதும் ஓர் ஓலைச்சுவடி வைத்திருப்பேன். ஒப்பீட்டளவில் இளமையாகத் தெரிய ஓர் உத்தி. * ஆசிரியர் தினம் 'குரு உத்சவ்' ஆனதையடுத்து 'ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்' என்பதை 'தெஹ்ரிக்-எ-தாலிபான் ஹிந்துஸ்தான்' என மாற்றப்போகிறார்களாமே? * இப்படியே மந்தமாக உட்கார்ந்திருந்தால் வேலை நடக்காது. போய் ஒரு டீ சாப்பிட்டுவிட்டு வந்து படுப்போம். * இப்போது எனக்குப் பெண் வாசகர்கள் மலிந்துவிட்டார்கள். கல்லூரிக் காலத்தில் என்னிடம் "எக்ஸ்க்யூஸ் மீ" சொல்லக்கூட ஆளில்லை. * அமரர் கல்கி மட்டும் இப்போது உயிரோடு இருந்தால்... நிமிடத்திற்கு 12 முதல் 15 மூச்சு விட்டுக்கொண்டிருப்பார். * பார்க்கிற அழகுப் பெண்களோடெல்லாம் சேர்ந்து வாழ இயலாததில் வருத்தமே. * கூனி மீது ராமன் அடித்த மண்ணுருண்டையே துர்வாசரின் கோபத்தால் தீப்பிடித்து சூரியன் ஆனது. #சொச்சபாரத்சயன்ஸ்ஃபேக்ட்ஆஃப்தடே * வைணவர்களுக்கு சுதர்சனமே நிதர்சனமாய்... * தெருவில் கைக்குழந்தையுடன் பிச்சைக்குக் கைநீட்டிய இளம் தாயைப் பார்த்து மனம் கலங்கியது. கட்டைவிரலை உயர்த்திக் காட்டினேன். ஃபேஸ்புக் பழக்கம். * 'வானம் வசப்படும்' நாவலை எழுதியவர் யார்? சட்டென்று மறந்துவிட்டது. #பிரபஞ்சன் * @borehay உங்களுக்கு அம்மா பிடிக்குமா, அப்பா பிடிக்குமா? * "இந்தியா-யேர்மனி கீன் ஆன் ஸ்ட்ரெங்தனிங் டைஸ்." மோடியாப்பா, யேர்மனியில் அரசு மாறி 69 வருசம் ஆகிவிட்டதை யாரும் சொல்லவில்லையா? * போராளி பொன்னுத்தாயி போகிற போக்கில் மனசைத் தொட்டுத் தாய்வீடு சென்று நீண்டகாலம் ஆகிவிட்டது. * சமயத்தில் வாழ்க்கை பற்றி யோசிக்கும்போது 'இதற்காகவா பத்து மாதம் இருட்டிலே கிடந்தோம்?' என்று தோன்றாமலில்லை. * ஹார்வர்டு பல்கலை விஞ்ஞானிகள் இப்போதுதான் "தொண்டைத் தண்ணி"க்கு மருத்துவப் பதம் கண்டுபிடித்துள்ளனர்: pharyngeal fluid. #பாரம்பரியமருத்துவம் * ஹெட்போனில் கஜினி பாடல்களைக் கேட்டால் இடது காதுக்கு மட்டும் இசை வருகிறது. அடுத்த காது காலியாக உள்ளது. ஹாரிஸ் ஜெயராஜுக்கு இடதுகைப் பழக்கமா? * இளையராஜா இசையும் குங்ஃபூ பட வில்லன்களும் நம்மிடம் சொல்வது ஒன்றே: "Now you listen to me." * என் ஆசை: 60 வயதுக்குள் ஒரு திரைப்படத்தை இயக்கிவிட வேண்டும். அது ஏராளமான வாசகர்களைப் பெற வேண்டும். * விழித்திடு தமிழா! மணி எட்டரை ஆகிவிட்டது. * காற்றழுத்தத் தாழ்வு மனப்பான்மையால் கண்ணீர் உகுக்கிறான் வருணதேவன் சுயபச்சாதாபத்தில். * கும்மிருட்டில் முத்தமிட முயலும்போது தவறினால் கண்ணைக் குத்திவிடக்கூடிய கூரிய மூக்கு அவளுக்கு. #வர்ணனை * கையில் குடை இருந்தால்கூட கடலில் மூழ்கும்போது நனையாதிருக்க முடியாது. * மௌனப் படக் காலத்தில் film explainer என ஒருவர் திரை அருகே நின்று காட்சிகளை விளக்குவார். இப்போதும் அந்த முறை இருந்தால் பல சர்ச்சைகள் தவிரும். * ஓர் ஆணிடம் என்ன குணங்களை எதிர்பார்க்கிறாய் என ஒரு பெண்ணிடம் கேட்டுப்பாருங்கள். வேண்டுமென்றே நம்மிடம் இல்லாததாகப் பார்த்துச் சொல்வார்கள். * இந்திய நாடு என் வீடு, ஆனால் மேல் மாடி காலி. * நாய்களின் குரைப்பொலியில் பெரிதாக ஒன்றும் ஏற்ற இறக்கம் இல்லையே? பிறகு எப்படி அவற்றுக்கிடையே தகவல் பரிமாற்றம் நடக்கிறது? * ரேடியோவில் பாட்டுக்கு பதிலாக உரை வந்தால் எப்படி இருக்கும்? "சஷ்டியைப் பார்க்க சரவணபவன் (எ) முருகன் சகோதரிகளுக்கு உதவும் சிவப்புக் கதிர்..." * மனைவிக்கு வாழ்க்கை ஒரு தவம். பெரும்பாலான விஷயங்களுக்கு ஒற்றைக் காலில் நிற்கிறார். * யாமிருக்க பயம் கவர்ந்தற்று. * 100 பேருக்கு இலவசமாக அனுப்பப்பட்ட எனது நூல்கள் திரும்பி வந்துவிட்டன. இதிலிருந்து என்ன தெரிகிறது? சமீபத்தில் 100 பேர் வீடு மாற்றியுள்ளனர். * தலை போகிற பிரச்சினைகள் எல்லாம் தம்மைத் தாமே தீர்த்துக்கொள்ள வேண்டும். வேடிக்கை பார்க்கக்கூட நாம் அங்கே இருக்கக் கூடாது. * எரிமலை எப்படி பொறுக்கும்? யாராவது பார்த்திருக்கிறீர்களா? * தமிழ்மொழி நாளுக்கு நாள் மெருகேறிவருகிறது. முன்பெல்லாம் 'சும்மா அடித்து விடுவது' என்போம். இப்போது அதை சுருக்கமாக 'கட்டுரை' என்கிறார்கள். * நீங்கள் எழுதுவது "ஃபார்முலா எழுத்து" என விமர்சிக்கப்படும்போது வருந்தாதீர்கள். அறிவியல்பூர்வமாக எழுதுகிறோம் என்று பெருமைப்படுங்கள். * மோலியேரின் 'ல மெத்சான் மால்கிரே லுவி'யின் கதையை ஓர் இயக்குநருக்கு சொல்லியிருக்கிறேன். படம் வந்தால் காப்பி என ஒரு பயல் கண்டுபிடிக்க முடியாது. * கொட்டும் மழையில் மொட்டைமாடியில் துணி காயப் போட்டுவிட்டு வருகிறேன். இந்தாப்பா வருணதேவா, துணி காயப் போடும் 5 நிமிடமாவது கொஞ்சம் நிப்பாட்டேன். * Four Weddings and a Funeral. மளிகைக்கடையில் சாமான் கேட்பது போல் ஒரு தலைப்பு. கடைக்காரரிடம் சொன்னால் "ஆங், வேற?" என்பார். * போகும்போது என்னத்தைக் கொண்டு போகப்போகிறோம் என விரக்தி ஆகும்போதெல்லாம் மனைவி இட்லி மிளகாய்ப்பொடி கட்டித் தந்து கவலையைப் போக்குகிறார். * "குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா?" என்கிற தொனியில் "உங்களுக்கு காபி வேணுமா?" * பெரிய தொடுதிரை கொண்ட சமகால செல்பேசிகளைப் பயன்படுத்த ஒரு கை போதாது. அவை கோடிக்கணக்கில் இருப்பதால் கைகளும் கோடிக்கணக்கில் தேவைப்படும். * நேற்று லபக்குதாசுடன் பேசியபோது காமிக்சில் "character desing" பற்றி விளக்கினார். 'கேரக்டர் தேசிங்கு' என்பது இந்தியப் பெயர் போல் தோன்றியது. * பாரத குமுகாயம் வாழ்கவே... * பெண் பெயர் வைத்துக்கொண்டு லைக் போடாதீர்கள் ஐயா! தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்! * என்னிடம் ஒரு டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட் இருக்கிறது. ஆனால் வீட்டில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். * நட்சத்திரப்படி என் பிறந்தநாள் என்றைக்கு என தெரியவில்லை. எனக்கு நட்சத்திரங்கள் புள்ளிகளாகவாவது தெரிகின்றன. நட்சத்திரங்களுக்கு நான் யாரோதானே. * நான் இனவெறியன் அல்ல, ஆனால் மனித இனம் உருப்படும் என்று எனக்குத் தோன்றவில்லை. * தற்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் திரைப்படப் பாடலின் முதல் வரி: வைணவ ஜனதோ தேனே! சகியே!! * எழுத்து, உறவுகள், கடமைகள், பணம் என 'கம்பார்ட்மென்டலைஸ்' செய்ய முயன்றேன். எல்லா பெட்டிகளும் மோதி ரயில் விபத்து மாதிரி இருக்கிறது வாழ்க்கை. * எதிர்வீட்டில் ஒரே கூச்சல். கூர்ந்து கேட்டால் "கூப்பாடு", "நாராசம்", "அலறல்" போன்ற சொற்களைத்தான் மாற்றிமாற்றிக் கத்திக்கொண்டிருக்கிறார்கள். * இந்த ஹிட்லரை ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் இவர்களுக்கு! * நேற்று எழுதி இயக்குநரால் நிராகரிக்கப்பட்ட பாடல் வரி: எர்ன்ஸ்ட் லுட்விக் கிர்ஹ்னர் (1880-1938) வரைந்த பெர்லின் தெருக் காட்சியே, #யாரோடி! * கல்வி அமைச்சரைப் பழகிக்கொள்ளுங்கள். விருந்தாளிக் குழந்தைகள் வரும்போது போர்க்கால அடிப்படையில் அவற்றின் பள்ளிகளைத் திறக்கவைக்கலாம். * ஒருநாள் இப்படிச் செய்தி வரும்: கவிதைத்தொகுப்பு முனையில் துணிகர கொள்ளை! பட்டப்பகலில் பயங்கரம்! தி.நகரில் பீதி! * வாழ்க்கைதான் வலிகளுக்கு அர்த்தம் கொடுக்கிறது. வாழ்க்கை இல்லாமல் வலிகள் ஏது? * இந்தக் கூத்தைப் பாருங்கள்! லபக்குதாஸ் வான்கா பற்றிப் புத்தகம் எழுதுகிறார்! முதலில் இந்தாளுக்கு பெயிண்ட் வாசனையே ஆகாது. :-)))))) * கதை, திரைக்கதை, வசனம் வைத்திருக்கிறீர்களா? திரைப்படம் எடுக்க ஆசையா? பணம் இல்லையா? ஒரு நல்ல ஓவியரைப் பிடித்து காமிக்ஸ் எழுதுங்கள். * பகவத் கீதையை தேசிய நூலாக ஏற்றுக்கொள்பவர்கள் மட்டும் இந்தியாவில் இருங்கள். மற்றவர்கள் எல்லோரும் வாருங்கள், ஜாலியாக நெதர்லாந்து போய்விடலாம். * நேற்று ஒருவர் "ஒரு அட்டெம்ட் சார்" என சில கவிதைகளை லபக்குதாசிடம் தந்தார் . லபக்குதாஸ் படித்துவிட்டு "இது கூ அட்டெம்ட்" என்றார் பச்சையாக. * இன்னா செய்தாரை நிறுத்தல் அவர் காண நன்னயம் செய்துகொளல். * ராஜாபாதர், ரஹ்மேனியாக், யுவனியன், ஜிவிபியிஸ்ட், வாழ்க நீ இம்மான்... ரசிகன் எத்தனை ரசிகனடி! * @borehay பணி சிறக்க வாழ்த்துக்கள். * கண்ணாடியைப் பார்க்கும்போது ஒத்த கருத்து கொண்ட ஒருவரைப் பார்த்த மகிழ்ச்சியில் சொந்தப் பிரச்சினைகளைச் சொல்லிப் புலம்ப ஆரம்பிக்கிறேன். * ராமராஜன் படங்களில் பாட்டு நன்றாக இருக்கும். அதனால்தான் அவருக்கு ராகதேவன் ராமராஜன் என்று பெயர். அதே போல இசைஞானி இயக்குநர் இமயம் பாரதிராஜா. * ஐம்பது பைசாவுக்கு விற்பதாக இருந்த எனது மின்னூல் விரைவில் முன்வெளியீட்டுத் திட்டத்தில் இலவசமாகக் கிடைக்கும். * ஆங்கில செய்தித்தாளில் நம்ப முடியாத செய்தி: Eye camp held. ஒரு கண் முகாமைக் கைது செய்திருக்கிறார்கள்! * எழுதி சம்பாதிப்பதைப் பொறுத்த வரை revenue என்ற வார்த்தை rêve (கனவு) என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து வருகிறது. * உங்களுக்குத் தெரியுமா? புகழ்பெற்ற கிரேக்கக் காவியம் ஒன்றிற்கு இனிஷியல்கூட உண்டு: டி.எஸ். இலியாட். * உண்மை கசக்கத்தான் செய்யும் மூளையை. * ஆண்களை அறிவையும் குணத்தையும் வைத்துத் தேர்ந்தெடுக்கும் பெண்களே, அழகையும் கொஞ்சம் பாருங்களேன். நடுரோட்டில் வயிற்றெரிச்சலாக இருக்கிறது. * ஒரு மடத்து வாசலில் உடலில் சந்தனம் தீட்டிய அரைநிர்வாண தடியர் கூட்டம். பெரிய விவசாயிகள் என்று நினைப்பு. சட்டையைப் போடுங்களடா, ஆபாசங்களா! * உலகக் கோப்பை அணியில் இடமில்லை. ஐபிஎல் அணியும் கைவிட்டது. ஒரே இரவில் அன்றாடங்காய்ச்சி ஆகிவிட்டார் யுவராஜ் சிங். * அடேயப்பா, பெரிய தொகைகள் கடன் தர என்னமாய்த் தயங்குகிறார்கள்! இவர்கள் அப்பன் சொத்தையா கேட்கிறோம்? சம்பாதிக்கிறாய்தானே? உன் காசை எடுத்து வை! * இணையத்தில் சாதகமான விமர்சனம் என்றால் "சூப்பர் தல". எதிர்மறை விமர்சனம் என்றால் "மொக்க". * சகமனிதர்களை நிபந்தனையின்றி நேசிக்க வேண்டும். ஆனால் விதிமுறைகள் இருக்கலாம். * ரத்தக்கொழுப்பு 'சைலன்டாக'க் கொல்லும் நோய் என்று என் மருத்துவர் எச்சரிக்கிறார். நமக்கு வேறு சத்தமே ஆகாது... * பண்பட்ட மனதைப் பகை கொண்டு ஆற்றுவோம். * முகநூல் என்றால் மீசை, புருவம், தாடி, தலைமுடி. * 'நவாப் நாற்காலி'க்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஃபர்னிச்சர்கள் ஒரு ரவுண்டு வரும் என்று எதிர்பார்த்தேன். ஏனோ அது நடக்கவில்லை. * என் நூல்களின் ஒலி வடிவத்தை சாதாரணமாகக் கேட்டால் நன்றாக இருக்கும். ஆனால் ஹெட்ஃபோன் வைத்துக் கேட்டால் கூடுதல் வார்த்தைகள் காதில் விழும். * நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் மடத்துக்குப் போய் மந்திரம் சொல்லுமாம். * சில வாசகர்களே, உங்களுக்காகத் தோலே இல்லாத வாழைப்பழத்தை உருவாக்க மோன்சான்டோ ஆராய்ச்சி செய்துவருகிறது. * "கதையின் முதல் வரியே வாசகனைக் கதைக்குள் இழுத்துவிட வேண்டும்." அவ்வளவு அவசரம் என்றால் பாத்ரூம் பக்கத்தில்தான் இருக்கிறது போய்விட்டு வாயேன். * அண்ணாசாலையில் இருகைகளை நீட்டிப் போக்குவரத்தை நிறுத்தி ஒரு நாற்காலியைப் போட்டுக்கொண்டு மெல்ல வயலின் வாசிக்க வேண்டும் போல் மனதில் ஒரு சோகம். * நாளை கோட்சே முகமுள்ள ரூபாய் நோட்டுகளில் கள்ளநோட்டை கண்டுபிடிக்க வழி: 8ஆக மடித்துப் பிரியுங்கள். அந்தாள் கண்ணாடி உடைந்திருந்தால் கள்ளநோட்டு. * பேருந்தில் ஜன்னலோரம் அரை மணிநேரம் பயணம் செய்துவிட்டு வந்து முகம் துடைத்தால் டவல் கருப்பாகிவிடுறது. 'மரண மாசு' என்பார்களே... * ஜோக்: ஆசிரியர்: இந்திய ஆளுங்கட்சித் தலைவர் பெயர் என்ன? மாணவன்: நினைவில்லை சார், தொண்டை வரை வருகிறது. ஆசிரியர்: விழுங்கிவிடாதே, அது அமித் ஷா. * தாய் பின்னே வர அவரது இரு குழந்தைகள் கைகோர்த்து முன்னே செல்கின்றன. "இணைகோ(ண்)டுகள்" என்ற சொல்லாக்கம் மனதில் உதித்து மறைகிறது. #எழுத்தாளன் * என் பெயர் 'போயோன்', 'பேயான்' என்றெல்லாம் எழுதப்படுவதைப் பார்த்தால் படுத்துத் தூங்கி "அது பேயோன்" என அலறியபடி விழித்தெழ வேண்டும் போல் உள்ளது. * குழந்தைகளைவிட இளையவர்கள் யாரும் இல்லை. * "சும்மா வாய்க்கு வந்த மாரி பேசாதெங்கோ. 'ங்கோத்தா இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்புது?'-ன்றத ஸ்வாமிகள் ஆறு லாங்வேஜ்ல சொல்வார்." * இசையும் ஒரு வித மலர்தான். * குறிப்பாக எது பற்றியும் இல்லாத ஒரு தீவிர சினிமா கட்டுரை எழுதினால் இப்படித் தலைப்பு வைக்கலாம் - "அந்த அதுவில் இந்த இது ஆகும் ஏதோ ஒன்று". * எந்தத் திருவிழாவில் காணாமல் போன குழந்தைகள் நாம்? * எதிர்காலத்தில் என் சிறுகதைகள் புடவைகளில் அச்சிடப்பட்டுத் திருமணமாகாத அழகிய இளம்பெண்களால் விரும்பி அணியப்படும். * எழுத்துப்பிழைகளைத் தவிர்ப்பது முக்கியம். உதாரணமாக, 'வீடு' என்பதற்கு பதிலாக 'என் கணினி வேலை செய்யவில்லை' என எழுதினால் பொருளே மாறிவிடும். குறும்படைப்புகள் 2016க்குள் (கி.மு.) ஏ.சி. கார் வாங்க முடிவு செய்திருக்கிறேன். ஏ.சி.யை இப்போதே வாங்கிவைத்தாயிற்று. கார் வாங்கியதும் அதை லக்கேஜ் முறையில் காரின் கூரையில் ஏற்றி ஒரு தாம்புக் கயிற்றால் கட்டி அல்லது கூரையுடன் வெல்டிங் செய்து "இன்ஸ்டால்" செய்ய வேண்டியதுதான் பாக்கி. நாமே செய்துவிடலாம். எதற்கு நம் வயிற்றில் அடித்துக்கொண்டு எலக்ட்ரீஷியனுக்குப் பணம் அழ வேண்டும்? கண்டிப்பாக நூறு இருநூறு கூடுதலாகக் கேட்பான். * ஆண்களின் பிரச்சினைகள் பெண்களுக்குப் புரியாது. பெண்களின் இடத்தில் இருந்தால் ஆண்களுக்கும் புரியாது. அதாவது பெண்களுக்கு மொத்தம் 2 தடவை புரியாது. * ஒருநாள் வாக்கிங் போகும்போது வழியில் ஒருவர் வழி கேட்டார், இன்னொருவர் நேரம் கேட்டார். பிறகு ஒரு மூதாட்டியும் ("இந்தாப்பா…") ஒரு தொழிலாளரும் தலா ஒரு சுமையைத் தூக்கிவைக்க உதவி கேட்டார்கள். ஒருவன் பேனா கேட்டான். அன்றைக்கு எனது வாக்கிங்கே நாசமானது. அடுத்த இரு நாட்கள் இரு கைகளிலும் காலி சூட்கேஸ்களை ஏந்தி வாயில் டூத்பிரஷ் வைத்துக்கொண்டு வாக்கிங் சென்றேன். ஒருத்தனும் தொந்தரவு செய்யவில்லை. இப்போது பெரும்பாலான நாட்கள் இப்படித்தான் வாக்கிங் செய்கிறேன். * தேநீர் குடிக்கப் போகும் வழியில் ஆக்ரோஷமான தெருச் சண்டை ஒன்றைப் பார்த்தேன். குடித்துவிட்டுத் திரும்பி வரும்போது பார்த்தால் சண்டை முடிந்து கூட்டமும் கலைந்துவிட்டிருந்தது. பத்தே நிமிடம்தான். அவசர யுகம் என்பது சரியாகத்தான் இருக்கிறது. * "ஃப்ரிட்ஜ்ல எக்ஸ்ட்ராவா ரெண்டு பாக்கெட் பால் இருக்கே, உன் சொந்தக்காரங்க யாராவது வராங்களா?" "எங்க சிதம்பரம் சித்தப்பா இருக்காருல்ல - விஜயவாடால இருக்காரே - அமுதா கல்யாணத்துக்குக் கூப்புட வந்திருந்தாரே - அவரோட பெரிய பையன் திலீப் பொண்டாட்டிகூட முழுகாம இருக்கா. அவரு குடும்பத்தோட டி நகர்ல ஒரு கல்யாணத்துக்கு வந்திருக்காரு. பையன் எங்க ஊருதான். எனக்கு தூரத்து சொந்தம். இங்க ப்ரெசிடன்சி காலேஜ்லதான் படிச்சான். நீங்ககூட சாந்தி சீமந்தத்துல அவனைப் பாத்திருக்கீங்க, 2-port ADSL splitter கலர்ல ஷெர்வானி போட்டுட்டு வந்திருந்தான். அவன் சிதம்பரம் சித்தப்பாவோட சின்ன மச்சானோட அப்பா பையனாம். இங்க டி நகர் மாமா வீட்லதான் தங்கிருக்காங்க. அங்கேந்து கல்யாண மண்டபம் ரொம்பப் பக்கம். ஒண்ணு, இன்னிக்கு ஈவினிங் ரிசப்ஷன் போவாங்க, அப்படிப் போலன்னா நாளைக்குக் காலைல கல்யாணத்துக்குப் போவாங்க. பையன் வீட்ல ரெண்டு நாளும் வரச் சொல்லியிருக்காங்க. ஆனா சித்தப்பாவ அங்க சாப்பிடச் சொல்வாங்க. சித்தப்பாவுக்கு வெளி சாப்பாடு ஒத்துக்காது. ஒரு நாள்ன்னா பரவால்ல. அதுனால அவரு நாளைக்குக் கல்யாணத்துக்குப் போறாருன்னா இங்க வர்றதுக்கு சான்ஸ் இருக்கு. நீங்க வீட்ல இருப்பீங்கன்னு சொல்லி வெச்சிருக்கேன்…" "ஃப்ரிட்ஜ்ல எக்ஸ்ட்ராவா ரெண்டு பாக்கெட் பால் இருக்கே, உன் சொந்தக்காரங்க யாராவது வராங்களா?" * பெண்களில் யார் திருமணம் ஆனவர்கள், யார் திருமணம் ஆகாதவர்கள் என்று கண்டுபிடிப்பது எளிது. திருமணம் ஆகாத பெண்கள் என்னைக் கண்டதும் நாணத்தில் முகம் சிவந்து புன்னகைத்துத் தலை கவிழ்ந்து கட்டை விரலால் தரையில் "சிணுங்கல்" என்று எழுதுவார்கள். * மனைவியும் மகனும் காலவரையற்ற வெளியூர்ப் பயணம் சென்றிருக்கிறார்கள். நான் கூப்பிடும்போது திரும்பி வருவார்களாம். கூப்பிடவே தேவையில்லை, நான் டி.வி.யில் சுவாரசியமாக ஏதாவது பார்க்க ஆரம்பித்தால் அடுத்த நொடியே குறுக்கும் நெடுக்கும் நடந்து மறைக்க வந்துவிடுவார்கள். * பெரிய சாலைகளைக் கடப்பது எனக்கு எப்போதுமே குழப்பமான ஒன்று. சாலையைக் கடக்கக் காத்திருக்கும் கிழவியின் கரம் பிடித்து, "பாட்டி, என்னை அந்தப் பக்கம் க்ராஸ் பண்ணி விட்டுடுறீங்களா?" என்கிறேன். பாட்டியோ என் கையை உதறி "போடா அப்பால!" என்கிறார். பின்னர் நான்கு அடி தள்ளி நிற்கும் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியிடம், "என்னை அந்தப் பக்கம் விட்ரும்மா ராஜாத்தி" என்கிறார். அதை என்னிடமே கேட்டிருக்கலாமே, ‘ராஜாத்தி’ இல்லாமல்? * நெருங்கிய உறவினர் வெளியே கிளம்புகிறார். "நீ வர்ற வழியில…" எனத் தொடங்கும் நான், அவரது முகக் கடுப்பைப் பார்த்துவிட்டு "நீ வர்ற வழியில நான் ஏதாவது வாங்கிட்டு வரணுமா?" என்று திருத்திக்கொள்கிறேன் சாமர்த்தியமாக. * ஆட்டோக்காரரிடம் சில்லறை இல்லாததால், ஆட்டோவில் ஏறிய இடம் வரை நடந்து போய் சில்லறை மாற்றிக்கொண்டு அவ்வளவு தூரம் திரும்பி நடந்து வந்து ஓட்டுரிடம் காசைக் கொடுத்தேன். திருப்தியாக வாங்கிக்கொண்டார். நமக்குத்தான் ‘அலைந்தலைந்து அழிகிறதென் ஆவி’. * சமயத்தில் ஃபேஸ்புக்கில் இருப்பது ஏதோ உயிரியல் பூங்காவில் நுழைந்தது போல் உள்ளது. Eqqus Caballus, Tamiasciurus hudsonicus, Rodentia Rattus, Hippopotamus Amphibius, மாதவன் ஸ்ரீநிவாசகோபாலன் வேலூர், சரவணன் துளசிதளசுப்பிரமணியன், அற்புதராஜா அங்கயற்கண்ணன், அரவிந்த் குலோத்துங்க ராஜஸ்தான்… * "பெரிய லட்சியவாதி சார் நீங்கள்! நீங்கள் வாழும் காலத்தில் நான் எப்படி சார்? மன்னித்துக்கொள்ளுங்கள் சார்!" என்று தட்டச்சு செய்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு அதை நகலெடுத்து, ட்விட்டர்/ஃபேஸ்புக் முகப்புப் படத்தில் "தேடிச் சோறு நிதம் தின்று" கவிதையைப் போட்டு வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆளாகத் தனிச் செய்தியில் அனுப்புங்கள். நன்றி. * பேத்திக்குச் சோறு ஊட்டிக்கொண்டிருந்த எதிர்வீட்டு அம்மையாரிடம் பேச்சுக் கொடுத்தபோது, கலவர காலத்தில் அவரிடமிருந்து பேத்தியைப் பிடுங்கிக்கொண்டு ஓர் அரிவாளைக் கொடுத்தால் பேத்தி வயதான பத்து மாற்று ஜாதி / மதத்துக் குழந்தைகளை வெட்டிச் சாய்க்கும் திறன் கொண்டவர் என்று தெரிந்தது. "தட்ஸ் ஹ்யுமானிட்டி ஃபார் யூ" என்பார்களே… * தமிழில் "வீடு" என்ற ஆகுபெயர் மனைவியையும் மனைவி சார்ந்த விசயங்களையும் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. சில எடுத்துக்காட்டுகள்: வீட்டில் சண்டை. வீட்டில் பிரச்சினை. வீட்டில் வேண்டாம் என்கிறார்கள். வீட்டில் கேட்டுச் சொல்கிறேன். வீட்டில் இன்றைக்கு சமைக்கவில்லை. வீட்டில் நம்மைப் பற்றித் தெரிந்துவிட்டது. வீட்டில் நம் காதலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வீட்டில் நம் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. வீட்டில் ஒரு விவாகரத்து, அதனால் வர முடியவில்லை. வீடு நரகம் போல் இருக்கிறது. சீக்கிரம் வீடு மாற்ற வேண்டும். வீட்டை விட்டு எங்காவது ஓடிவிடலாம் போல் இருக்கிறது. என் வீடு வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போய்விட்டது. * எக்ஸ்பாக்ஸ் அல்லது சோனி பிஎஸ்பி வேண்டும் என்கிறான் மகன். அதெல்லாம் "காஸ்ட்லி" என்கிறேன். ஏதாவது "கேமிங் கான்சோல்" கண்டிப்பாக வேண்டும் என்கிறான் வாரிசு. எல்லாமே காஸ்ட்லிதான் என்கிறேன். பின்னே எதுதான் "சீப்" என்கிறான் அவன் வெறுத்து. "மனித உயிர். மனித உயிர்தான் சீப்" என்கிறேன் நான். திடீரென இப்படியொரு குண்டைத் தூக்கிப் போட்டதாலோ என்னவோ அவன் விக்கித்துத் தலை குனிந்து கால் கட்டைவிரலால் தரையில் குறுவட்டம் வரைகிறான். பிறகு நிமிர்ந்து பார்த்து, "ஸ்க்ரீன் பெருசா இருக்குமா?" என்கிறான். * நியூ புக்லேண்ட்சில் எனக்குப் பின்னே இருவர் யாரோ ஒரு எழுத்தாளரை சிலாகித்துப் பேசியது காதில் விழுந்தது. மாறி மாறி மெச்சிக்கொண்டிருந்தார்கள். "பியூட்டிஃபுல்லா எழுதுறாரு" என்றார் ஒருவர். அதற்கு மேல் எனக்குத் தாங்கவில்லை. அங்கேயே அவரைத் தொடர்பு கொண்டு விசாரித்தேன். அவர் சொன்னது என்னை இல்லையாம். வேறொரு எழுத்தாளர்தான் அதைச் செய்கிறாராம். * லபக்குதாஸ் என் வீட்டுக்கு வந்தார். உள்ளே வரும்போதே ஒரு புத்தகத்தைக் கலைமாமணி விருது போல் பந்தாவாக உயர்த்திக் காட்டியபடி வந்தார். ‘என் கையிலே பார்த்தாயா? கன்னத்தில் போட்டுக்கொள்’ என்கிற பெருமிதத்துடன். அது ஒரு சிறிய நாவல். தலைப்பு The Wooden Tree of Glaucoma என்று நினைவு. எழுதியவர் பெயர் ‘யான் சூக்’ என்று ஸ்காண்டிநேவிய/கிழக்கு ஐரோப்பிய/மத்திய கிழக்கு/வடக்கு ஆசியப் பெயராகத் தெரிந்தது. கொஞ்சம் படித்துப் பார்த்தேன். லகுவான, எளிதில் மொழிபெயர்க்கலாம் போன்ற நடை. வெகுவாகக் கவர்ந்தது. ஆனால் இந்த ஆளை எனக்கு முன்பு லபக்குதாஸ் கண்டுபிடித்தது எனக்குக் கசப்பான அனுபவம். "இந்த மாதிரி யார் வேணா எழுதலாம்" என்றேன் எரிச்சலாக. "அப்டியா? சரி, அப்டி உக்காந்து எழுதுங்க பாக்கலாம்" என்றார் லபக்குதாஸ். நான் ‘தி வுடன் ட்ரீ ஆஃப் கிளாக்கோமா’வைத் திறந்துவைத்துக்கொண்டு ஒரு வெள்ளைத் தாளில் ஃபேர் காப்பி செய்யச் செய்ய, பள்ளி நினைவுகளில் மூழ்கிப்போனேன். * நமது நெருங்கிய நண்பர்களுக்கிடையில் சண்டை ஏற்படுவது தவிப்பானதொரு விசித்திர வேதனை. எனது பள்ளிக் காலத் தோழர்கள் இருவர் இடையே எது சாதாரணக் கிண்டலாக ஆரம்பித்ததோ அது பெரிய மோதலாக உருவெடுத்துள்ளது. இப்போது நான் நியாயம் பார்க்காமல், சார்பு நிலை எடுக்காமல் இருவரையும் ஆதரிக்க வேண்டியிருக்கிறது. இருவரும் எனக்குப் பணம் தர வேண்டியிருக்கிறது. * படிக்க ‘போரடிக்கிறது’ என்று தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த மகனுக்குத் தந்த அறிவுரை: "அது நம்ம வேலை. போர்தான் அடிக்கும். எனக்குக்கூடத்தான் என் வேலை போரடிக்குது. ஆனா அதுதானே சோறு போடுது? அடிக்கிற கைதான் அணைக்கும். உபயோகமான எந்த விசயமும் போரடிக்கத்தான் செய்யும். அதுக்கு அந்த உரிமை இருக்கு. நமக்காக இவ்வளவு செஞ்சிட்டு போர்கூட அடிக்கலன்னா அப்புறம் அதுக்கு என்ன மரியாதை? நாம வாழறோம்னு நமக்குத் தெரிய வேண்டாமா? அதுக்குத்தான் ‘வேலை’ன்னு ஒண்ணு இருக்கு. டிவிய ஆஃப் பண்ணிட்டுப் போய் அதப் பாரு." * கிராமங்களில், சிற்றூர்களில், ஏன், தெருக்களில்கூட எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும். எல்லோரும் எல்லோரையும் கவனித்துக்கொண்டுதான் இருப்பார்கள். அதனால் ஆர்வெல்லிய உலகம் என்பது நமக்கொன்றும் புதிதல்ல. * தொடர்ந்து ஒரே கடையில் வாங்கும் வரைதான் சக மனிதனுக்கு மரியாதை. அங்கே வாங்குவதை நிறுத்திவிட்டால் ஐநூறு ரூபாய்க்குச் சில்லறை தர மாட்டான். * தெருமுனை டீக்கடை வாசல் பெஞ்ச்சில் எப்போதும் யாராவது சிகரெட் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். எப்போதும் ஒரே சிகரெட்டே புகைக்கப்படுவது போலவும் ஆள் மட்டும் அவ்வப்போது மாறிக்கொண்டிருப்பது போலவும் தெரிகிறது. இடையே சிலர் சிகரெட்டைக் கீழே போட்டு அணைப்பதெல்லாம் வெறும் மாயை. * நேற்று ஏதோ காரணத்தை முன்னிட்டு உச்சகட்ட வெறுப்பில் இருந்த லபக்குதாஸ் உதிர்த்த பொன்மொழி: "Creation-க்கும் cremation-க்கும் ஒரு எழுத்துதான்யா வித்தியாசம். அந்த m-தான் வாழ்க்கை. அண்ட் தி எம் ஸ்டாண்ட்ஸ் ஃபார் மயிரு." * எதிர்பாராத மகிழ்ச்சி. மூன்று நாட்களாகச் சவரம் செய்யாமல், முகத்தில் எண்ணெய் வடிய, டி-சர்ட்டைக் கழற்றியதால் தலைமுடி கலைந்து பிச்சைக்காரன் போல் இருக்கிறேன். இந்த சமயம் பார்த்து சில எதிர்த் தரப்பு உறவினர்கள் வருகிறார்கள். மகனிடம் ரகசியமாய் "டேய், ஒரு டம்ளர்ல கொஞ்சம் சில்லறையப் போட்டு கொண்டுட்டு வா!" என்கிறேன். * பெற்றோர்களே, எப்போதும் கையில் ஐபேட், செல்போன்களை வைத்திருக்காதீர்கள். குழந்தைகளுக்குத் தவறான முன்மாதிரிகளாக ஆவீர்கள். படியுங்கள். படிக்கும் பழக்கம் நீரிழிவு நோய் போல் குழந்தைகளுக்குப் பெற்றோரிடமிருந்துதான் வருகிறது. எனவே புத்தகத்தைக் கையில் எடுங்கள். ஐபேட்களையும் செல்போன்களையும் குழந்தைகளிடம் கொடுங்கள். * நான் கவனித்திருக்கிறேன் - நம் மனதில் இருப்பதை சமயத்தில் நம் உடல்மொழியே காட்டிக்கொடுத்துவிடும். அகத்தின் அழகு உடலிலும் தெரியும். உதாரணமாக, எனக்கு யார் வீட்டுக்கும் விருந்தாளியாகச் சென்று அபத்தமாகப் பல சின்னஞ்சிறு கதைகள் பேசி போன இடத்திலேயே நரைகூடிக் கிழப்பருவம் எய்திவிடும் அபாயத்தில் இருப்பது பிடிக்காது. விருந்தோம்புநரிடம் என் வாய் பாட்டுக்கு சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாலும் என் கால்கள் மட்டும் வாசலை நோக்கிப் பண்டைய எகிப்திய ஒவியங்களில் வரும் பெண்களின் கால்களைப் போல் திரும்பியே இருக்கும். * இந்து தத்துவ மரபில் நாத்திகத்திற்கென்று தனி இடம் உண்டு. இந்துக் கடவுள்களில்கூட சிலர் நாத்திகர்கள். ஏன், இன்று உலகெங்கும் உள்ள வைணவர்களால் போற்றிப் பாடப்படும் விஷ்ணு சகஸ்ரநாமத்தை இயற்றிய சி. ராஜ்குமார் ஒரு நாத்திகர்தான். * உயிரினங்களுக்குத் தாமாக இனப்பெருக்கம் செய்யத் துப்பில்லை. அவை தம்மை ஆண், பெண் என இரண்டு உப உயிரினங்களாகப் பிரித்துக்கொள்ள வேண்டியிருந்திருக்கிறது. உபங்கள் அற்ற ஒற்றை உயிரினமாகத் தோன்றி இயந்திரத் துப்பாக்கி தோட்டாக்களைத் துப்புவது போல் சுயம்புவாக இனம் பெருக்கும் யோசனையைத் தோற்றுவித்துக்கொள்வதற்கு உயிர்களின் பரிணாம வளர்ச்சி தொடங்கிய காலகட்டத்தில் சிந்திக்கும் உபகரணங்கள் அவற்றுக்கு இருக்கவில்லை. விளைவு, இப்போது இரண்டாகப் பிறந்து பின்னாளில் கலந்து இனம் பெருக்குவதே நடைமுறையாக நிலைபெற்றுவிட்டது. இந்த லட்சணத்தில் இரண்டிற்கும் இடையே ஓயாத மோதல் வேறு. * கல்லூரி நாட்களில் சுதந்திர தினம் என்றால் காலையில் சீக்கிரம் எழுந்து ஊர் சுற்றப் போய்விடுவேன். ராப்பிச்சைக்காரன் போன பிறகுதான் வீடு திரும்புவேன். திருமணம் ஆன பின்பு, யாரைத் தவிர்க்க ஊர் சுற்றுகிறோமோ அவர்களின் வருகையைத் தவமிருந்து பெற வேண்டியிருக்கிறது. சுதந்திர தினத்தை ஆபீசில் வேலை செய்து கொண்டாட முடியாதா? * 'பொன்னியின் செல்வ'னைத் தழுவி ஒரு நாவல் எழுத யோசனை. தழுவல் என்றால் எலும்பெல்லாம் நொறுங்குகிற மாதிரி மிக இறுக்கமான தழுவல். ஒரு வார்த்தையைக்கூட மாற்றப்போவதில்லை. இது ஒரு புதுவிதமான மீள்கூறல் முறை. 'வரலாற்றின் மீது படிந்த கொள்ளிடக் கறை'. * மனவேதனையில் இருக்கும்போது குடிக்காதீர்கள். அந்த வேதனையைக் கவிதையாக எழுதுங்கள். குடித்தால் நீங்கள்தான் பாதிக்கப்படுவீர்கள். கவிதை எழுதினாலோ அதைப் படிக்கும் எல்லோரும் பாதிக்கப்படுவார்கள். போட்டி நிறைந்த இச்சூழலில் அது உங்களுக்கு ஆதாயமாகலாம். * தலைவலி என்பது நமக்கு பதிலாக வேறு யாருக்காவது வந்துவிடலாம். அவ்வளவு மோசமாக இருக்கிறது. கூடுமானால் அதை இன்னொருவருக்குக் கொடுத்து, சரியாகும் வரை உன் தலையில் வைத்துக்கொள் என்று வாடகை தரலாம். சிறு தலைவலிகளை மருந்துகள் கொன்றுவிடுகின்றன. பெரிய தலைவலிகள் மருந்துகளைச் சமாளிக்கக் கற்றுக்கொண்டாயிற்று. அம்மருந்துகளை அவையே உடலில் கரைத்துத் தரதரவென இழுத்துச்சென்று மலக்குடலுக்குக் கொண்டுபோய் விடுகின்றனவோ என்று எனக்கொரு சந்தேகம். எது எப்படியோ, தலை வலிக்கிறது. * மனைவியுடன் சண்டை போடுவதில் உள்ள வசதி, அந்த சமயத்தில் அன்னார் போன் செய்யும்போது எடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஏன் எடுக்கவில்லை என்று கேட்டால் "நமக்குத்தான் சண்டையாச்சே" என்று சொல்லிக்கொள்ளலாம். * சமீபத்திய மங்கையர் மலரில் படித்த வீட்டுக் குறிப்பு: வீட்டில் ஒளித்துவைத்திருக்கும் பிணத்தின் வாடை தாங்க முடியவில்லையா? வாசனை பற்றி அண்டைவீட்டார் விசாரிக்கிறார்களா? கவலையே வேண்டாம். ஒரு கிலோ கொய்யாப் பழத்தைப் பிணத்தின் மேல் வைத்துவிடவும். கொய்யாப் பழ வாடை பிண வாடை வெளியே தெரியாமல் மறைத்துவிடும். - வி. கௌரி, பழவந்தாங்கல் * குழந்தைகளை கராத்தே, செஸ், பர்சனாலிட்டி க்ளாஸ், ஓவியம், நீச்சல், இசை என்று எல்லா வகுப்புகளிலும் சேருங்கள். கூடிய விரைவில் அவர்கள் சட்டையைக் கிழித்துக்கொண்டு தெருவில் அலறியபடி ஓடும்போது வேடிக்கை பார்க்கும் கூட்டத்தோடு நின்றுகொண்டு "என் புள்ளதான். நல்லா ஓடுவான்" என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம். * இன்று மாலை நடிகர் நாசரை லேண்ட்மார்க்கில் பார்த்தேன். அறிமுகப்படுத்திக்கொண்டேன். என்னைப் பற்றி தாராளமாகக் கேள்விப்பட்டிருக்கிறார். "படிச்சிருக்கேன். தமாஷா எழுதுவீங்க, ஆம் ஐ ரைட்?" என்றார். எனக்கு உடனே மனம் கோணிவிட்டது. என் உடல் பொருள் ஆவியெல்லாம் ஒரு ஜோக்காகக் குன்றிவிட்டது போல் உணர்ந்தேன். "இல்ல சார், சீரியஸாதான் எழுதுவேன். நான் சீரியஸ் ரைட்டர்." பாவம், எனக்காக அவர் தர்மசங்கடப்பட்டார். "சாரி, நான் அது காமெடின்னு நினைச்சிட்டேன்" என்றார். "பரவாயில்ல சார், அதையெல்லாம் நான்தான் எழுதுறேன்னு நம்புறீங்களே, ஆயுசுக்கும் அது போதும் சார் எனக்கு" என்று அவரை சமாதானப்படுத்தினேன். * வாக்குவாத முத்தாய்ப்பு: "நான் வெளிய சாப்ட்டுக்குறேன்!" "என்ன வேணா பண்ணிக்கிங்க." "என்ன வேணா-ல்லாம் பண்ண முடியாது. நான் குறிப்பா வெளிய சாப்ட்டுக்குறேன்." * கூட்டமான தெருவில் நடக்கும்போது நான்கு பதின்ம வயதுப் பையன்கள் ஒரே பைக்கில் தாறுமாறாக ஓட்டிக்கொண்டு கைகாலை ஆட்டிக் கூச்சலிட்டுக்கொண்டு… இந்த பைக்கும் இல்லாமல் இந்த நான்கு பையன்களும் இல்லாமல் எங்கள் காலம் எவ்வளவோ நிம்மதியாக இருந்தது. * ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு ஒரு நாள் மட்டும் சென்றிருந்தேன். என் புத்தகங்கள் மலைப்பூட்டும் விதத்தில் பிரம்மாண்டக் குப்பைமேடாகக் குவித்துவைக்கப்பட்டிருந்த ஒரு ஸ்டாலில் ஓரமாக ஒரு ஸ்டூலில் அமர்ந்து என் புத்தகங்களை வாஞ்சையாகப் புரட்டிக்கொண்டிருந்தேன். சற்றுத் தள்ளி என் வாசகர் ஒருவர் என் புத்தகங்கள் அடுக்கப்பட்ட மேஜைக்குப் பின்னே பவ்யமாக உட்கார்ந்திருந்தார். அப்போது அமெரிக்கா போல் தெரிந்த ஓர் இளைஞர் நான் இருந்த ஸ்டாலுக்கு வந்தார். "சார், எப்படி இருக்கீங்க?" என்றார். "நல்லா இருக்கேன்." "இதுல உங்க ஆட்டோகிராஃப்…" "என் ஆட்டோகிராஃபா?" "பேயோன் சார் நீங்கதானே?" அமெரிக்கா என்னைக் கவனிக்காமல் யாரையோ பார்த்து நான் என்று நினைத்துவிட்டது புரிந்தது. "அலோ, கொண்டாங்க, கொண்டாங்க, இங்க கொண்டாங்க ஆட்டோகிராஃப். நான்தான் பேயோன். அவருக்கு என் கையெழுத்து போட வராது" என்றேன். "அப்ப இவரு, உங்க புக்ஸ் வெச்சிக்கிட்டு டேபிள் போட்டிருந்ததால…" "இல்லல்ல, இவரு சும்மா வாசகர்." * காலையில் ரேஷன் கடை பக்கம் சென்றபோது நீண்டதொரு வரிசையில் நின்றிருந்தவர்களைக் கண்டேன். ஒவ்வொரு முகமும் ஒரு சோகக் கதையைச் சொல்லிற்று. நிறைவேற முடியாத எளிய கனவுகளுடன் ஆயிரம் ஏக்கங்களுடன் ஓராயிரம் கவலைகளுடன் வாழ்பவர்கள் நாங்கள் என்றன அந்த முகங்கள். இப்படி ஆகிவிட்டதே மனித இருப்பு என்று மனம் பெரிதும் துக்கித்தது. நான் பயணம் செய்துகொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தச் சொன்னேன். “எல்லாரும் ஒரு நிமிசம் இங்க பாருங்க” என்று அவர்களைக் கூப்பிட்டேன். முஷ்டியை உயர்த்தி “வாழ்ந்து காட்டுவோம்!” என்று கோஷம் போட்டுவிட்டு ஆட்டோ டிரைவரிடம் “வண்டி எடுப்பா” என்றேன். * ராபர்ட் பிரெஸ்ஸனின் Pickpocket உலக சினிமாவின் உச்சங்களுள் ஒன்று எனவே நான் எப்போதும் கருதிவந்திருக்கிறேன். இந்தப் படத்தைப் பல முறை பார்ப்பதினால் திரைப்படம் என்ற கலையை ஒருவன் நன்கு புரிந்துகொள்ள முடியும். ஆனால் அவன் நானல்ல. * குறுங்கதை செல்வம் கணினியை அணைத்துவிட்டுத் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினான். “Do you really want to exit without saving?” என்ற கேள்வி மட்டும் அவனுக்குள் உறுத்திக்கொண்டே இருந்தது. * ஒரு கவிஞ-நண்பர் ‘எனக்கான’, ‘ப்ரியம்’, ‘துரோகம்’, ‘ஒரு’, ‘நான்’ எல்லாம் போட்டுக் கவிதைகள் எழுதுகிறார். ஆனால் அவர் அவற்றைப் ‘பிரதி’ என்று குறிப்பிடும்போதுதான் ஒருவேளை இந்தப் பகுத்தறிவுவாதிகள் நமக்குப் படித்துப்படித்துச் சொல்வது போல் கடவுள் இல்லையோ என்று தோன்றுகிறது. * "சார், பேயோன்-ங்கிறது…" "துரதிர்ஷ்டவசமா நான்தான்." "ஏன் சார் துரதிர்ஷ்டவசமா-ன்றீங்க?" "எல்லாம் ஒரு போலித் தன்னடக்கம் கலந்த ஒரு சுய எள்ளல்தான்." "சார் எழுதுற மாதிரியே பேசுறீங்க சார்!" "பேசுற மாதிரியே எழுதுறேன்னும் சொல்லலாம்." "ரொம்ப சந்தோசம் சார்." "நீங்க ஏதாவது விருது கமிட்டியா? எனக்கு ஏதாவது தர வேண்டியிருக்கா?" "இல்ல சார், கீழ வந்து உங்க வண்டிய கொஞ்சம் ஓரமா வெக்கிறீங்களா? கார் உள்ள வரணும்…" * திருக்குறளைப் பற்றிக் கட்டுரை எழுதினால், அதில் நான் மேற்கோள் காட்டும் குறள்களை மட்டும் படித்துவிட்டு “இந்த மாதிரியெல்லாம் முன்பே எழுதிவிட்டார்கள்” என்று கருத்து வீசுகிறார்கள். * That பகிரங்கப் பட்டியலிட்டு இணையத்தில் அமரத்துவம் பெறுவதற்காய் சமீபத்திய புத்தகக் காட்சிகளில் வாங்கிக் குவித்த நூல்கள் பரணில் சீமெந்துக் கோணிகளுக்குள் நித்திராதேவியின் மீளாத் தழுவலில் அடங்கியிருக்க, அவரவரின் சமீபத்திய நட்புகள், பகைமைகள், அரசியல்கள், சார்புகள், மேதகு ரசனை முதலியவற்றை நேர்மையாகப் பிரதிபலிக்கும் விதமாய்த் தயாரிக்கப்படும் புதிய புத்தகப் பட்டியல்கள் புதிய இணைய அமரத்துவங்களுக்கு வழிகோலித்தருகின்றன moment. * 'ஆசாரக் கோர்வை' என்ற நூலில் படித்த தகவல்: தமிழ் சாக்தர்களுக்கு ஆடி வெள்ளிக்கிழமை (ஆடி வெள்ளி) போல் தமிழ் வைணவர்களுக்கு மார்கழி திங்கட்கிழமை (மார்கழித் திங்கள்) விசேட முக்கியத்துவம் கொண்டது. வைணவர்கள், மார்கழித் திங்கட்கிழமையை மிகவும் ஆசாரமாகக் கொண்டாடுகிறார்கள். வைணவ பக்தி இலக்கியத்தில் ஆண்டாள் பாடுகிறார், “மார்கழித் திங்கள் மடி நிறைந்த நன்னாளாம்…” பெண்கள் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாய்க் குளித்துவிட வேண்டும் என்கிறார் ஆண்டாள்: “நீராடப் போயிடுவீர்!!!” அப்படிப் போனால்தான் பெண்கள் நேரான இழை போன்ற, ஒழுக்கம் தவறாத பெண்களாக இருப்பர் (“போகுமினோ நேரிழையீர்”). கடைச் சங்கப் புலவர் ஆசாரக் கோர்வையார் இன்னொன்றையும் கவனித்துச் சொல்கிறார். வைணவ பக்தி இலக்கியங்களில் விஷ்ணு “மாதவனாகிய எம்பெருமான்”, “பரந்தாமனாகிய பரமபிரான்” என்றெல்லாம் அழைக்கப்படுவதை கிறிஸ்தவ பக்தி மரபின் “ஆண்டவராகிய யேசு கிறிஸ்து” என்ற விளிப்புடன் ஒப்பிடுகிறார். எம்பெருமான், யேசு கிறிஸ்து போன்ற பெயர்கள் யாரைச் சொல்கிறார்கள் என்ற குழப்பத்தை ஏற்படுத்தியதால் மாதவன், ஆண்டவர் என்பதாய் விளக்க வேண்டியிருந்தது என்கிறார் கோர்வையார்… * கொலைகள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. நமது சட்டங்களில் கொலை செய்தால் தண்டனை தருவதற்கு மட்டுமே வழி இருக்கிறது. சிகரெட், பீடி போல் கொலையும் தடை செய்யப்பட வேண்டும். அதுதான் தீர்வு. இதைச் செய்யாதே, இதைத் தவிர் என்கிற தொனியில் பத்துக் கட்டளைகளில், ஆத்திச்சூடியில், பாரதியார் பாடல்களில் இருக்கும் திட்டவட்டமான தெளிவு நம் சட்டங்களில் இல்லை. 'நீ தப்பு செய்தால், அதுவும் மாட்டிக்கொண்டால் தண்டனை. நீ தப்பே செய்யவில்லையா, அதுவும் மாட்டிக்கொள்ளவே இல்லையா? போய்க்கொண்டே இரு' என்கிறது இ.பி.கோ. மெத்தனமாக. * பல சமயங்களில் வெளியே போய்விட்டு வீடு திரும்பி வந்து பார்த்தால் கூடத்தில் யாராவது அந்நியர்கள் உட்காரந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். நிமிர்ந்து என்னைப் பார்த்து "வாங்க, வாங்க!" என்கிறார்கள். தப்பான இடத்துக்கு வந்துவிட்டோமோ என்று தோன்றிவிடுகிறது. சமையலறையிலிருந்து என் மனைவி வெளிப்படுவதைப் பார்த்ததும் சந்தேகம் வலுப்படுகிறது. * நானும் லபக்குதாசும் அவர் வீட்டருகே டீ குடித்துக்கொண்டிருந்தபோது பின்னவர் அந்தச் செய்தியைப் போட்டுடைத்தார். "அன்னம்மாள் அறக்கட்டளை இலக்கிய விருது கேள்விப்பட்டிருக்கீங்களா?" என்றார் லபக்குதாஸ். "இல்லியே." "எனக்குக் கெடச்சிருக்கு." "வாழ்த்துக்கள்." "பரிசுத் தொகை அம்பதாயர்ருவா!" "ஹலோ, அம்பதாயிரமா? கொஞ்சம் குறைச்சி சொல்லுங்க!" என்றேன் பதறி. * எனக்கு விருந்தாளிகளை ஆகாதே தவிர அவர்கள் வந்துவிட்டால் விருந்தோம்பலில் குறை வைக்க மாட்டேன். "உங்களுக்கு என்ன புடிக்கும் சொல்லுங்க. இன்னிக்கு அதையே சமைச்சிரலாம்." "அது... ஸ்பெசிபிக்கா எதுவும் இல்லை. எனிதிங் கோஸ்." "தபாரு, தம்பி சொல்ட்டாப்ல. இன்னிக்கு கோஸ் அடிச்சுக் கொழம்பு வச்சிரு." * இந்த வயதில்கூடப் பெண்களிடம் பேசும்போது கூச்சம் ஏற்படுவது மட்டும் மாறவேயில்லை. ஒரு மகளிர் விடுதிக்கு வாட்ச்மேன் ஆனால் இந்த நிலை மாறும். அதற்கு என்ன படிப்பு படிக்க வேண்டும் என்றும் தெரியவில்லை... * 'இடைநிலை' செப்டம்பர் இதழில் ஃபேஸ்புக் பற்றி நான் எழுதிய கட்டுரையில் "ஃபேஸ்புக்" என்ற வார்த்தை 22 இடங்களில் விட்டுப்போயிருக்கிறது. இதனால் பல வாசகர்கள் அந்தக் கட்டுரை "சுற்றுச்சூழல் பற்றியதா?", "கூடைப் பந்தாட்டம் பற்றியதா?", "ஜப்பானிய சமையல் பற்றியதா?" என்றெல்லாம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். இல்லை. * ஏ.ஆர். ரஹ்மான், வித்யாசாகர், எஸ்.ஏ. ராஜ்குமார், தேவா, ஆதித்யன் எனப் பலர் இசையமைத்த காலத்தில் ராஜாசாரின் பாடல்களை அடையாளம் காண்பது எப்படி தெரியுமா? அவர் பாடல்களில் ஒரு இடத்திலாவது ராஜா/ராசா என்று வரும். * மகனின் வகுப்புத் தேர்வு கேள்வித்தாளில் ஒரு 2 மதிப்பெண் கேள்வி: "நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே" என பாரதியார் யாரைத் திட்டுகிறார்? அதற்குக் கீழே மகனின் கையெழுத்தில் "செல்லம்மாள்." * 'பெண்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்' என்கிற கருத்தாக்கம் ஆண்கள் மத்தியில் தொன்றுதொட்டு இருந்துவருகிறது. ஒரு சமயத்தில், குறிப்பாக எந்தப் பெண்களை, எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்ற கேள்வி எழவே, 'கிழவியைத் தூக்கி மணையில் வை' என்ற சொலவடை பிறந்தது. * கடைத்தெருவுக்குப் போய்விட்டு வந்த மனையாளரிடம் சொன்னேன்: "ரொம்ப நாள் கழிச்சி எங்க சித்தப்பாவுக்கு ஃபோன் பண்ணிப் பேசினேன். நல்லா பேசுனாப்ல." "அதெப்பிடி நான் இல்லாத நேரமா பாத்து உங்க சொந்தக்காரங்களோட பேசுறீங்க? அவ்ளோ ரகஸ்ஸ்ஸியமா என்ன பேசுறீங்க?" - மனைவிக் கேள்வி. எனக்கு சுறுசுறுவென்று கோபம் வந்தது. "ஒருத்தருக்கு ஃபோன் பண்றப்ப நீ இருக்கியா இல்லியான்னு பாத்துக்கிட்ருக்க முடியாது. பண்றோம், பேசுறோம், அவ்ளதான்" என்று உள்ளுக்குள் பொரிந்தவன், "அதேதான், அதேதான் எனக்கும் தோணிச்சு. 'என்னடா இது, நீ இல்லாதப்ப ஃபோன் பண்றமே, தப்பில்லையா'ன்னு டயல் பண்ணப்புறம்தான் சொரேர்னு உறைச்சிது. ஆனா ஃபோனை கட் பண்றதுக்குள்ள அவரு எடுத்து பேசவே ஆரம்பிச்சிட்டாரு வீட்ல தனியா இருக்குற ஆம்பள கிட்ட வெவஸ்த கெட்ட மனுசன்!" என்றேன். * ஆட்டோக்காரர்களுக்கு ஏன் தெரியுமா இவ்வளவு கெட்ட பெயர் வருகிறது? சொல்கிறேன். என் தெருவில் நடந்து போகிற வழியில் ஓர் ஆட்டோவைப் பார்த்தேன். அதனுள் இருந்த ஆட்டோக்கார இளைஞனிடம் "என்னப்பா, வெயிட்டிங்கா?" என்றேன். நன்றாகச் சாய்ந்து இளைப்பாறிக்கொண்டிருந்தவன் திடுமென சுதாரித்து நிமிர்ந்து உட்கார்ந்து, "இல்ல சார், போலாம் சார்" என்றான். "இல்லப்பா, ஒரு அக்கறைல கேட்டேன்" என்கிறேன், பார்வையாலேயே என்னைக் கிள்ளிவிடுவது போல் முறைக்கிறான்! * உங்கள் 'இமேஜை'க் கட்டியெழுப்ப வேண்டும் என்றால் நான்கு தர்ம ஸ்தாபனங்களுக்கு நன்கொடை அளித்துவிட்டு ஆதாரத்தை ஃபேஸ்புக்கில் போட்டு நல்ல பெயர் சம்பாதித்துக்கொள்ளுங்கள், யார் வேண்டாம் என்கிறார்கள்.  அதை விட்டுவிட்டு கிரேக்க சினிமாவையும் பிரெஞ்சு சினிமாவையும் எதற்கு இழுக்கிறீர்கள்? அதற்காகவா அவர்கள் படம் எடுக்கிறார்கள்? பிரெஞ்சுப் படங்களைப் பற்றிய உங்கள் அரைகுறைப் புரிதலை அரைகுறைத் தமிழில் எழுதிவிட்டு அறிவுஜீவியாகக் காட்ட முயல்வது ஏன்? போலி ஆவணங்கள் தயாரிப்பதற்கு என்ன தண்டனை தெரியுமா? * குடும்பஸ்தனுக்கு ஞாயிற்றுக்கிழமையாவது மயிராவது. குளித்து டிபன் சாப்பிட்டு முடித்தாயிற்றா? ஒரு சின்னத் தூக்கம் போட்டுவிட்டு மெல்ல ஒரு வாக்கிங் போய்விட்டு வந்து ஏதாவது டிவிடியைப் போட்டுப் பார்த்தால் சுகமாக இருக்குமா? இருக்கும்தானே? அதை விட்டுவிட்டுக் காலில் சக்கரம் கட்டிக்கொள். சலவை ஆடையை அணிந்து திரவியம் பூசிக் கும்பலாக ஷாப்பிங் மாலுக்கு ஓடு, கொழுப்பையும் சர்க்கரையையும் கொட்டித் தயாரித்த விலையுயர்ந்த குப்பைகளை பிறவிப் பயனே அடைந்தது போல் ஒவ்வொன்றாக உள்ளே தள்ளு. கடைகளை மேய், கட்டுபடியாகாததைப் பார்த்துப் பெருமூச்சு விடு, இருப்பவனைப் பார்த்து ஏங்கு, இல்லாதவனைப் பார்த்து நிம்மதியடை, இப்படியே முக்கால் நாளைப் போக்கி வீட்டுக்கு வந்து களைத்து விழு. எஞ்சிய நாளை சோம்பலாகத் தொலைக்காட்சி முன்பு கழிக்க முடிவெடு. திடீர் விருந்தாளிகளை உபசரித்து இளி, இரவு சாப்பிட்டுவிட்டுக் கிளம்பலாமே என்ற வார்த்தைகள் பேசப்படுகையில் வாழ்க்கையில் நம்பிக்கை இழ. புதிய கழிந்து வீடு அமைதியானதும் கிடைத்த எச்சில் நேரத்தில் சாப்பிட்டுவிட்டுத் தூங்கு. சந்தோசமாக இரு, போ. * சிறுகதை யோசனை: நாயகர் இருமுறை மாரடைப்பு ஏற்பட்டு அதற்குப் பின்பு மருத்துவர்களின் எச்சரிக்கையின்பேரில் கட்டுப்பாடாக இருந்து ஆரோக்கியமாக வாழ்ந்துவருகிறார். ஒருநாள் மனைவி-குழந்தைகள் மட்டும் ஒரு வாரப் பயணமாக வெளியூர் செல்லத் திட்டமிடுகிறார்கள். நாயகர் உற்சாகமடைந்து விடுமுறை தினக் கொண்டாட்டங்களுக்குத் தடபுடலாக ஏற்பாடு செய்கிறார். தவிர்க்கவியலாத காரணங்களால் மனைவியின் பயணம் ரத்தாகிறது. அதிர்ச்சியில் நாயகருக்கு மூன்றாம் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் விளைகிறது. தான் மட்டும் பயணத்தை ரத்து செய்யாதிருந்தால் கணவர் தனிமையில் சாக வேண்டிவந்திருக்குமே என்று மனைவி ஆறுதலடைவதோடு கதை முடிகிறது. * எனக்குக் கிடைத்த பாராட்டுகளிலேயே குறிப்பிடத்தக்கது சொற்களால் அல்லாமல் பார்வையால் அளிக்கப்பட்டது. ஒரு கல்லூரி விழாவுக்கு விருந்தினராக உரையாற்றச் சென்றிருந்த நான், அங்கிருந்த பேராசிரியர் ஒருவரிடம் எனது 'பாம்புத் தைலம்' புத்தகத்தைக் கொடுத்தேன். பேசுவதற்குத் தன் முறை வரக் காத்திருந்த நேரத்தில் முழுப் புத்தகத்தையும் படித்துவிட்டார் பேரா. படித்த பின் புத்தகத்தைத் திரும்பத் தந்தபோது என்னை ஒரு பார்வை பார்த்தார். 'உன்னைப் பார்த்தால் இவ்வளவு அறிவு இருப்பவன் போல் தெரியவில்லையே?' என்றது அந்தப் பார்வை. * செல்பேசியில் எனக்குப் பிடித்த மொஸார்ட்டின் 25ஆம் சிம்பொனியை ஹெட்ஃபோனில் விட்டுக்கொண்டு இசையின் மாய உலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தேன். சிம்மக் குரலாளுக்கு அது பொறுக்கவில்லை போலும். காதுகளின் ஹெட்ஃபோனை விநோதமாகப் பார்த்துக்கொண்டே என்னிடம் பேசத் தொடங்கினார். ஒரு பக்க ஹெட்ஃபோனைக் கழற்றிவிட்டுக் கேட்க ஆரம்பித்தேன். அக்கா பையனுக்கு வேலை கிடைத்திருக்கிறதாம், அவ்வளவுதான் விஷயம். ஆனால் நெருங்கிய உறவினரின் பேச்சு தொடங்கியதோ அந்த இளைஞனின் கல்வித் தகுதி மற்றும் வேலைவாய்ப்புத் தேடலில். ஓர் அற்புத ஆன்மீக அனுபவம் அற்பமாகத் தடைபட்டதில் எனக்குள் ஒரு பெரும் பூகம்பமே கொந்தளித்தது. இருந்தாலும் ஆத்திரப்பட்டுப் பயனில்லை என்று சமாதானப்படுத்திக்கொண்டேன். செல்பேசியையும் இசைக் காதணிகளையும் அமைதியாக மேஜை மேல் ஏறக்கட்டினேன். "நான் பிஸியாக இருப்பதையும் மீறி நீ என்னுடன் இத்தனை செய்திகளைப் பகிர்ந்துகொள்வது எனக்கு சந்தோசமாக இருக்கிறது. இருந்தாலும் இந்த விவரமெல்லாம் என்னுடைய தகவல் பசிக்குப் போதவே போதாது" என்று நிதானமாகச் சொல்லிவிட்டு, இது போன்ற தருணத்திற்காகத் தயாராக எடுத்து வைத்திருந்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் 'A Brief History of Time-ஐ அவரிடம் நீட்டி, "பெருவெடிப்புக் கோட்பாட்டிலிருந்து ஆரம்பி" என்றேன். * ரத்தக் கொழுப்பு மருந்துகளின் முதன்மை நோக்கம், நம்மை சீக்கான வயதாளிகளாக உணரவைப்பது. அவற்றை நிறுத்துவதுதான் ஆரோக்கியமாக உணர்வதன் முதல் படி. பழக்கதோஷிணியிடம் இத்தகவலைப் பகிர்ந்து, "நிறுத்துனா பெருசா என்ன ஆயிடப்போவுது? உயிர் போனாலும் இன்சூரன்ஸ் இருக்கில்ல!" என்கிறேன் வேடிக்கையாக. "நாலு லட்சத்த வச்சிட்டு என்னத்தப் பண்றது?" என்கிறார் அவர். "நான் வேணா கொஞ்சம் வெயிட் பண்ணிப் பாக்கவா?" என்கிறேன். பதிலையே காணோம். * சமீபகாலம் வரை இளைஞர்களைப் பார்த்தால் வயிற்றெரிச்சலாக இருக்கும். நமக்குப் பதிலாக இவர்கள் வாழ்கிறார்களே என்று உறுத்தும். அதுவும் கைக்குழந்தைகள் என்று வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். மனசு கிடந்து அடித்துக்கொள்ளும். நாம் குழந்தையாகப் பிறக்காமல் போய்விட்டோமே என்று பதறும். இப்போது தெளிவு பிறந்துவிட்டது. வாழ்க்கையில் இவர்கள் இன்னும் நிறைய பார்க்க வேண்டியிருக்கிறது. நான் எல்லாம் பார்த்தாயிற்று. இன்னும் கொஞ்சம் பார்த்தால் போதும். இப்போதெல்லாம் இவர்களைப் பார்க்கும்போது வீட்டுப்பாடம் செய்யாமல் பிரம்படி வாங்கும் மாணவர்களை வீட்டுப்பாடம் செய்தவன் போல் பார்த்துப் பூரிக்கிறேன். "நடத்து, நடத்து" என்று மனசுக்குள் அவர்களை இளக்காரமாய்ச் சீண்டுவதோடு நிறுத்திக்கொள்கிறேன். * ஆண்கள் உருவாக்கும் வெகுஜன நகைச்சுவையில் மனைவிகள் எப்போதுமே சர்வாதிகாரிகளாக, நியாயமற்றவர்களாக, கோபக்காரர்களாக, நகை-புடவை ஆசைக்காரர்களாக, மோசமாகச் சமைப்பவர்களாக, இன்னும் பலவாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். கணவர்களோ, மனைவிகள் என்னும் பிசாசுகளிடம் சிக்கி அல்லலுறும் பலவீனர்களாகக் காட்டப்படுகிறார்கள். எல்லா சித்தரிப்புகளும் ஆற்றாமையில் விளைபவை என்றாலும் எனக்கு இந்த சர்வாதிகாரம் என்ற விசயம் மட்டும் ஓர் அவதானிப்பைத் தருகிறது. மனைவிகளின் அதிகாரப் போக்கு நகைச்சுவைக்குரிய விசயமாவதற்குக் காரணம், அவர்கள் கையில் உள்ள அதிகாரம் நியாயப்படி தங்கள் கையில் இருக்க வேண்டும் என்றும் சர்வாதிகாரிகளாக இருக்க வேண்டியது தாங்கள்தாம் என்றும் கணவர்கள் நினைப்பதுதான். அது நடக்காமல் போவது மட்டுமின்றி நேரெதிர் நிலையும் நிலவும்போது மீசையில் மண் ஒட்டவில்லை என்று காட்ட மனைவி எதிர்ப்பு நகைச்சுவை உதவுகிறது. ஊடகங்கள் கணவர்கள் கையில் இருப்பதால் அவர்களுக்கு ஒரு வடிகால் கிடைக்கிறது. அதே சமயத்தில், கணவர்களிடம் பல வகை வன்முறைகளுக்கு ஆளாகும் மனைவிகளின் கையில் ஊடகங்கள் இருந்தால் மனைவிகளின் நகைச்சுவை எப்படி இருக்கும் என்று பார்க்க ஆவல். * நேற்றிரவு குடும்பப் பிரச்சினைகளையும் சமூகப் பிரச்சினைகளையும் பற்றி சிந்தித்துச் சிந்தித்து நேரம் ஓடிவிட்டதால் சாப்பிட நள்ளிரவானது. எந்த ஜென்மத்திலும் சாத்தியமற்றவையாகத் தெரிந்த தீர்வுகளைப் பற்றி யோசித்துக்கொண்டே சாப்பிட உட்கார்ந்தேன். சோற்றைப் பிசைகையில், சாப்பிடுவதுகூட வியர்த்தமான காரியமாகப் பட்டது. அப்போது எனக்குத் தோன்றியது: இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை, குழம்பும் ரசமும் ஆறித்தான் போயிருக்கின்றன; குப்பையில் கொட்டத் தேவையில்லை. வேகமாக உருட்டி உருட்டி விழுங்கிவிடலாம்... * "மாஞ்சோலைக் கிளிதானோ? மான்தானோ? வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ? இவள் ஆவாரம்பூதானோ, நடை தேர்தானோ? சலங்கைகள் தரும் இசை தேன்தானோ?" மனசுக்குள் இவ்வளவு சந்தேகங்களை வைத்துக்கொண்டு எதற்கொருவன் காதலிக்க வேண்டும்? நாளைக்கே கல்யாணம் காட்சி ஒன்று ஆகிவிட்டுக் கருத்து வேறுபாடு வாக்குவாதம் வாய்ச்சண்டை என வந்துவிட்டால் அத்தனை சந்தேகங்களும் வசவுகளாக மாறிவிடும்.. "நீ மாஞ்சோலைக் கிளி என்று சொல்லாமலே உன்னை என் தலையில் கட்டிவிட்டார்கள்", "எங்கள் குடும்பமே ஆவாரம்பூதான், நடை தேர்தான். இது தெரியாமல் தாலியைக் கட்டியபோது எங்கே போச்சு உன் புத்தி?" என்றெல்லாம் வளரும். #Nowlistening * இல்லத்தரசி தமது குடும்பப் பெரியவர்களின் வரலாறு பற்றி ஒருதலையாக என்னிடம் பெருங்கதையாடிக்கொண்டிருந்தார். பேச்சுவாக்கில் "1947ல இந்தியாவுக்கு சுதந்தரம் கெடச்சிது" என்றார். நான் "ஓஹோ" என்றேன். தெரிந்தாற்போல் காட்டிக்கொண்டால் எப்படித் தெரியும், யார் சொன்னார்கள், தன்னிடம் ஏன் அப்போதே சொல்லவில்லை, தேசம் விடுதலை அடைந்த செய்தியை உங்கள் குடும்பத்திற்குள் கமுக்கமாக வைத்துக்கொண்டு ஆதாயம் அடையப் பார்க்கிறீர்களா என்று தொடங்கி இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கியதே நான்கு பேருக்கு முன்பு அவரை அவமானப்படுத்தத்தான் என்ற குற்றச்சாட்டிலும் ஆண்டவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற எச்சரிக்கையிலும் முடியும். இதில் என்ன வேதனை என்றால், ரயிலையும் மின்சாரத்தையும் கொண்டுவந்ததால் வெள்ளைக்காரன் தப்பித்துவிடுவான். நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த பாவத்திற்காக நான்தான் பேச்சு வாங்க வேண்டியிருக்கும். * நீண்டகாலமாகத் தேடிவந்த ஒரு பிரெஞ்சு படம் ஒருவழியாக இணையத்தில் கிடைத்தது. ஆனால் சுமாரான பிரின்ட். அதைச் சிறிய திரையில்தான் பார்க்க முடியும். திரைமொழி பிரின்ட் தரத்தைக் கடந்தது என்று நினைத்துக்கொண்டு தரவிறக்கினேன். எனது ஐந்து அங்குல செல்பேசித் திரையில் பார்க்கும்போது திரை என் முகத்தைப் பிரதிபலித்தது. அப்புறம் படத்தை எங்கே பார்ப்பது? ஆனால் இரண்டு மணிநேரம் பொழுது போனதே தெரியவில்லை. * சாதாரண நாட்களில் பலவீனமானதொரு கணத்தில் "உங்களுக்கு என் மேல் நிறைய அன்பு இருக்கிறதா?" என்று மனைவி கேட்பார். வெறும் 'அன்பு இருக்கிறதா' அல்ல; 'நிறைய' இருக்கிறதா. 17 வருசப் பழக்கம் இருக்கும்போது அன்பை வீணடிப்பானேன்? இதைச் சொன்னால் எடுபடாது. எனக்கோ நேரடியாகப் பொய் சொல்ல மனம்/தைரியம் வராது. எனவே 'உங்களுக்கு த்ரிஷா பிடிக்குமா?' என்று மனைவி கேட்டதாகக் கற்பனை செய்துகொள்வேன். "ஐயையோ, கண்டிப்பாக!" என்பேன் உணர்ச்சிவசப்பட்டு. அவருக்கும் த்ரிஷா பிடிக்கும். * கடைக்குப் போகும்போது தெருவில் ஒருவர் எதிரில் வந்தார். நான் கடையிலிருந்து திரும்பி வரும்போது அதே தெருவில் அதே ஆள் மீண்டும் எதிரில் வந்தார். திரும்பவும் வேறு வேலையாக வெளியே சென்றபோது அவரை மீண்டும் எதிர்ப்பட்டார். வரும் வழியில் இன்னொரு தரிசனம். வாக்கிங்கில் அவரை மீண்டும் பார்த்தேன். பிறகு ஆறாவது முறையாக அவர் எதிரில் வந்தபோது அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதுவிட்டேன். * (நகுலனுக்கு மன்னிப்புகளுடன்) ராமச்சந்திரன் என்றார். ராமச்சந்திரன் என்றேன். எந்த ராமச்சந்திரன் என்று நான் கேட்கவுமில்லை, அவர் கூறவுமில்லை. பிறகு "குகா ராமச்சந்திரன்" என்றார் அவராக. * மனித நாகரிகம் தோன்றியது முதல் இன்று வரை உலகெங்கும் நிகழ்ந்த படுகொலைகள், ஒடுக்குமுறைகள், இதர வன்முறைகள் மற்றும் பெரும் அநீதிகள், பெரும் பஞ்சங்கள், இயற்கைப் பேரழிவுகள் ஆகியவற்றின் பல்லாயிரமாண்டுக் கால வரலாற்றைச் சுருக்கமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். 20,000 பக்கம் வரும் போல் இருக்கிறது. புத்தகத்திற்கு 'எல்லாம் அவன் செயல்' என்று தலைப்பு வைத்தேன். ரொம்பக் குரூரமான தலைப்பாக இருப்பதாகப் பதிப்பாளர் அதை மாற்றச் சொன்னார். 'கந்தன் கருணை' என்று மாற்றினேன். அதுவும் நிராகரிக்கப்பட, கடைசியில் 'உலகம் இவ்வளவுதான்' என்பதில் வந்து நிற்கிறது.  சுட்டிகள் twitter.com/thepayon www.writerpayon.com writerpayon.tumblr.com []