[] கவிப்பொதிவு 1. சாலை வளைவில் 2. உங்களுடன் சில நிமிடங்கள்… 3. 1. பிறந்த நாள் பரிசு 4. 2. காதலா 5. 3. அழகியத் திருடன் 6. 4. வெட்கமின்றி சொல்கிறேன் 7. 5. எனக்குள்ளே தவிக்கிறேன் 8. 6. தீபங்கள் 9. 7. உன் கை சேர 10. 8. கவிதை எழுதினேன் 11. 9. திருடி அணைப்பாயா 12. 10. சொல்லாமலே வந்துவிட்டேன் 13. 11. விரும்பிக் கேட்கிறேன் 14. 12. துயில் கலையுமா 15. 13. தனிமையில் தள்ளாதே 16. 14. கனவுகளால் கொல்கிறாள் 17. 15. கவிதைகள் கேட்கிறாய் 18. 16. புரியவில்லை 19. 17. கொஞ்சம் கொஞ்சவிடு 20. 18. தொல்லை செய்கிறேன் 21. 19. ஏமாற்றாதே 22. 20. வெறுமை நுழைந்ததடி 23. 21. உறைந்துபோய் நிற்கிறேன் 24. 22. வாடைக் காற்று 25. 23. இரக்கமின்றி நொறுக்குதடி 26. 24. ஓய்வின்றி ஒலிக்கின்றது 27. 25. கனவோடு கலையாதே 28. 26. புது மலரே 29. 27. முத்த யுத்தம் 30. 28. பொய் கண்ணால் 31. 29. கவிதையான கண்ணீர் 32. 30. கால்தடம் தேடி 33. 31. என்னைப் புதைக்கிறேன் 34. 32. யாரோ ஒருத்தி 35. 33. குடு குடு நண்டாக 36. 34. காதலை ஊட்டினாள் 37. 35. உயிரும் உயிரும் 38. 36. வந்துபோன வடுக்கள் 39. 37. விழி வழியே 40. 38. பொல்லாத வேலைகள் 41. 39. அடம் பிடிக்கிறது 42. 40. மூச்சை விடு 43. 41. என் வெட்கத்தை விரும்புகிறான் 44. 42. தங்கிவிட்டாய் 45. 43. மன்னவனே 46. 44. மறக்க முடியவில்லை 47. 45. சொல்லாமல் வந்துவிடு 48. 46. உன் வீட்டுப் பெண்ணாக 49. 47. கடைசி முத்தம் 50. 48. முத்தமின்றி மோட்சம் 51. 49. விரும்பி வரைந்த கவிதை 52. 50. அம்பை எய்ததடி 53. ஆசிரியர் குறிப்பு 54. எங்களைப் பற்றி - Free Tamil Ebooks சாலை வளைவில் கா.பாலபாரதி   மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com   பதிப்புரிமை © இவரால் / இதனால் கா.பாலபாரதி   உரிமை - Creative  Commons Attribution-NonCommercial-NoDerivatives  4.0 உரிமை - கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - மேலட்டை உருவாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com This book was produced using pandoc [மென்பொருட்கள்] மென்பொருட்கள் உங்களுடன் சில நிமிடங்கள்… மின்னூல் வாசக நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வணக்கங்கள். எனது நான்காவது கவிதை மின்னூலின் மூலம், உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி!இதற்கு முந்தய நூல்களில், பல்வேறு தலைப்புகளில் கவிதைகளை எழுதி வந்த நான், அதிலிருந்து சிறு மாறுதலாக “சாலை வளைவில்” என்னும் இந்த கவிதை நூல் முழுவதும் இனிக்க இனிக்க, காதல் கவிதைகளால் அலங்கரித்துள்ளேன். ’என்னடா காதல். அதலாம் எனக்கு பிடிக்கவே பிடிக்காது’ என்று சொல்பவர்களானாலும் சரி, ‘காதலா, அது இல்லாம என் வாழ்க்கையே இல்ல’ என்று சொல்பவர்களானாலும் சரி, இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் நம் வாழ்வில் ஏதோ ஒரு காலகட்டத்தில் சுவாரசியமான இடத்தைப் பிடித்திருக்கும் என்பதில், எந்த ஒரு ஐயமும் இல்லை. உருகி உருகி உங்கள் உள் நெஞ்சில் காதல் ஊற்றாய்ப் பெருகக் காத்திருக்கும் இந்த கவிதைகள், காதலின் உண்மைத் தோற்றத்தையும், பரிசத்தையும், சாந்தத்தையும், அழகையும் அள்ளி ஊட்டப் போகிறது. கவிதைகளோடு நீங்கள் கரைந்து போக வேண்டிய நேரத்தில், நான் பேசி தங்கள் நேரத்தை வீணடிப்பதைவிட, என் கவிதைகளைத் தங்கள் கையடக்கக் கருவிகளுக்குள் அனுப்பி வைக்கிறேன். உள்ளம் திறந்து ஏற்று, காதல் கவிதைகளால் நெஞ்சம் நிறைத்துக்கொள்ளுங்கள். கவிதைகள் மீதான தங்கள் மேலான கருத்துக்களை, கீழ் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் வாட்சாப் எண்ணில் தெரிவிக்கவும். நன்றி!   இப்படிக்கு கா.பாலபாரதி மின்னஞ்சல்: gandhiyameenal@gmail.com வாட்சாப் எண்: 9003644672 1. பிறந்த நாள் பரிசு நீ அனுப்பிய பிறந்தநாள் பரிசு கிடைத்தது! சென்ற வருடம் நீ கொடுத்த அதே பரிசு! சற்றும் மாற்றமில்லை!   உன்னிடமிருந்து வாழ்த்து வரும் வரும் என்று எதிர்பார்த்த பிறகு கடைசியாய் வந்தது! நீ அனுப்பிய பிறந்தநாள் பரிசு!   இந்த முறையும் வாழ்த்துக் கிடைக்காது என்று அந்நாளின் கடைசி நொடி அந்தப் பரிசைத் தந்தது “ஏமாற்றமாக”!   அதே பரிசு தான்! ஆனால் இந்த முறை ஏனோ அதனுள் காயங்களை அதிகமாக நிறைத்து அனுப்பியிருக்கிறாய்!   2. காதலா நான் படித்தவன் தான் பல மொழிகளைப் படித்தவன் தான்! ஆனால் உன் விழி பேசும் மொழி மட்டும் ஏனோ புரியவில்லை!   பக்கத்தில் இருக்கும் உன் தோழிக்கு நீ பேசுவது புரியும் எனத் தெரிந்தும் கைகளை எல்லாம் அசைத்து அசைத்துப் பேசுகின்றாய்!   தூரத்தில் நிற்கும் என்னோடு தொலைப்பேசி இல்லாமலே கொஞ்சுகின்றாய்!   ஆண் தான் நான்! ஆயினும் எனக்குள்ளும் வெட்கமுண்டு!   என் கண்களுக்கு மட்டும் வெட்கமில்லை என்று வெளிச்சம் போட்டுக் காட்டி உன்னைத் தின்னாமல் தின்னுகிறது!   ஒரு திசையில் நில்லாத உன் முகம் தலையைத் திருப்பித் திருப்பி விழியோடு விழி மோதத் துடிக்கிறது!   பேருந்து வருகிறது! நான் ஒரு திசையிலும் நீ ஒரு திசையிலும் பயணிக்கப் போவது தெரிந்திருந்தும்   இருவேறு திசை காந்தத் துண்டுகளாய் ஏதோ ஒன்று நம்மை இடை நின்று ஈர்க்கிறது!   3. அழகியத் திருடன் அழகியத் திருடனே! இரு விழிகொண்டு தாக்கி என் இதயத்தை நோக்கி கவிதையினால் என்னைக் கவர்ந்துவிட்டாய்!   என் பொழுதெல்லாம் உனதாக உன் இரவெல்லாம் எனதாக இரு உயிர்களும் ஒன்றாக காத்திருக்கிறேன் உனக்காக!   உன் மனமும் என் மனமும் இரு மனம் ஊர் பார்க்க இணைக்கின்ற நொடியே திருமணம்!   திருமணம் என்பது மறுமணம் காதல் என்பதே முதல் மணம்! ஓர் குணமானது இருமனம் உயிர்க் காதல் தந்த முதல் மணம்!   மெல்லிய புன்னகையை மெதுவாக நீ தந்தாய் துள்ளிடும் என் மனதில் துடிப்பாக நீ இருந்தாய்!   வஞ்சி எந்தன் வானமெல்லாம் உன் நிறம்! கொஞ்ச வரும் என் வாய்மொழியும் உன்னிடம்!   நான் சொல்ல வந்தக் காதலை நீ சொல்லக் கேட்கிறேன்! நீ சொன்ன காதலில் என்னை நானே பார்க்கிறேன்! உயிர்க் காதல் உள்ளோட என்னுள் உன்னைக் காண்கிறேன்! 4. வெட்கமின்றி சொல்கிறேன் எனக்கும் சில ஆசைகள் உண்டு வெட்கமின்றி சொல்கிறேன் வெறுத்து ஒதுக்கிவிடாதே!   சில நேரம் நீ எவையேனும் எழுத யோசித்தால் உன் செவ்விதழ் மீது பேனா அடிக்கடி உரச உன்னை அறியாமலே முத்தங்கள் பொழிவாய்!   உன் முத்தம் பருகிய பேனா மீது பித்தம் கொண்டு திருடி மறைத்திருக்கிறேன்!   சில நேரம் தேநீரும் போதை தரும்! உன் தேனிதழைத் தழுவுகின்ற மயக்கத்தில் மெல்ல மெல்ல நாவில் தள்ளாடும்!   உன் இதழில் பட்டு தேநீர் கோப்பைக்கே திரும்பிய கடைசித் துளிகளை உனக்குத் தெரியாமலே என் இதழ்பட சுவைத்து ருசித்திருக்கிறேன்!   சில நேரம் உன் கண்ணக்குழி நடுவே முத்தமிட கருங்கூந்தல் சரிந்து விழும்! அதை மெல்ல உன் விரல் கோதி ஒதுக்கித் தள்ளும்போது ஒரு பின்னல் முடி பிரியும்.   அதை மெல்லக் காற்றில் பற்றிக்கொண்டு உன்னை வரைந்து அதில் என்னைப் பார்த்திருக்கிறேன்!   சில நேரம் நண்பர்கள் கூடி காதல் கதைகள் பல பேசும்போது நான் பார்க்காத நேரத்தில் என்னைப் பார்ப்பாய்!   அப்போது உன் கண்கள் சொல்லும் பல கதைகளிலே நான் உன் காதலை உணர்ந்திருக்கிறேன்!   எனக்கும் சில ஆசைகள் உண்டு! இப்படி நித்தம் நித்தம் உன்னை நினைத்து காதல் சித்தனாக அலைகின்றேன்! வெட்கமின்றி சொல்கிறேன் என் காதலை வெறுத்து ஒதுக்கிவிடாதே! 5. எனக்குள்ளே தவிக்கிறேன் வான் மழை தொட்ட செடிபோல உன் பார்வை பட்டதடா! புது மலர் தந்த செடிபோல என் பருவம் பூக்குதடா!   மனதில் ஏதுமின்றி நானிருந்தும் என்னை நானே தொலைக்கிறேன்! உன்னைப் பார்த்த நாள் முதலாய் எனக்கே தெரியாமல் எங்கோ நான் பறக்கிறேன்!   குனிந்த தலை நிமிராத என்னை உன் விரிந்த மார்பிற்குள்ளே நித்திரைகள் தொலைக்கச் செய்தாய்! என் வளையல்கள் போடும் சப்தங்களில் உந்தன் பெயரையே ஒலிக்க வைத்தாய்!   பசியின்றி நானிருந்தேன் பட்டினி கிடக்கவில்லை! ருசிகொண்ட உன் நினைப்பை புசித்துண்டே நான் கிடந்தேன்! என் முகத்தைக் காணும்போது உன் பிம்பம் தோன்றுவதால் என்ன இந்த மாற்றமென்று எனக்குள்ளே கேட்கின்றேன்!   உன் வாய் வழி உதிரும் வார்த்தைகளில் ஒன்றேனும் என் பெயரைச் சுமக்குமா! உன் தாய்மொழி முழுதும் தடுமாறி என்றேனும் என் காதலில் திளைக்குமா! 6. தீபங்கள் திருக்கார்த்திகை நாளில் திருக்கோயில் சென்றிருந்தேன்!   மின்சார விளக்குகள் இல்லாத மாலை மை இருட்டாய் மாறத் தொடங்கிய வேளை!   ஆங்காங்கே நெய் தீபங்கள் அதனருகே அழகாய் பெண்களின் முகங்கள்!   தூரத்தில் நான்கு நெய்விளக்கு யாரோ கதை சொல்வதைப் போல பிரகாசமாய் சிரித்துக்கொண்டிருந்தது!   மனதிற்குள் மூண்ட ஆவல் அவள் மதி முகத்தைக் காண போட்டது பல தாவல்!   வேகமாய் நடந்தேன்! எப்படியாவது அவள் எழுவதற்குள் பார்த்துவிடலாம் என்று!   ஐந்தாவது நெய் விளக்கை அவள் ஏற்றிய போது விளக்கின் ஒளியில் நான் விருட்சமானேன்!   விளக்கை ஏந்திய நிலா ஒன்று தன் விழிகளால் என்னை விலகி நில் என்றது!   மலைத்துப் போன என் மனது அவள் விழிகள் என்னும் விளக்கின் சூட்டில் உருகும் நெய்யாய்ப் போனது! 7. உன் கை சேர விடு விடு என்ற நடையினால் என் விரல்கள் கோர்க்க மறந்துவிட்டான்! கடு கடு என்ற பார்வையால் என் காதலை கவனிக்கத் தவறிவிட்டான்!   சிடு சிடு என்ற அவன் பேச்சில் என் சிறு இதயத்தை சிதறடித்துவிட்டான்! மல மல என்ற வேகத்தில் மழை முன் இடிபோல மறைந்துவிட்டான்!   நெறு நெறு என்னும் என் மூச்சு என்னுள் நெருப்பைச் சுமந்து செல்லுதடா! தட தடவென என் இதயம் உன் பெயரைத் துடித்துக் கொல்லுதடா!   பட படவென நீ வந்தாய் என்னைக் காதல் பைத்தியமாக்கி சென்றாய்! வள வளவென என் காதல் எங்கும் வளர்ந்து நெளிந்து கிடக்குதடா!   நெடு நெடுவென்ற உன் வாழ்வில் கால் தைக்கும் நெறிஞ்சி முள்ளும் நான் அல்ல! குறு குருவெனக் காத்திருப்பேன் என் காதல் ஓர் நாள் குறிஞ்சிப் பூவாய் உன் கை சேர! 8. கவிதை எழுதினேன் அழகன் என்ற ஆணவம் எனக்குள் அதிகம் உண்டு!   ஆனால் அழகி என்ற தன்மையால் அதை அடித்து துவம்சம் செய்துவிட்டாய்!   கிறுக்கன் என்ற பெயரோடு பல கவிதைகளை கிறுக்கித் தள்ளியவன் நான்!   நீ சுருக்கமாய் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றுமே கவிதை என்று சுருங்கச் சொன்னவள் நீ!   இரக்கம் என்பதே இல்லாமல் என் மனம் இறுகிக் கிடந்ததுண்டு!   இறங்கி நீ செய்யும் உதவிகள் கண்டு இதயம் இளகி வடியிதின்று!   என்னைப் பலரும் காதலிக்காமல் காதலிக்கிறார்களென்று கர்வத்தை வளர்த்திருந்தேன்!   உன்னைக் கண்டபின் காதலில் குதித்துவிட்டு கவிதை எழுதி இரசிக்கிறேன்! 9. திருடி அணைப்பாயா கொஞ்சி கொஞ்சிப் பேசும் தமிழெல்லாம் கிளிகளோ! அவன் கோவை இதழ் கொத்த வரும் மாயமென்ன!   வித்தையின்றி விம்மியடிக்கும் கண்களன்றி அவன் விழிதேடும் விருப்பமென்ன!   அவன் நடக்கும் நடைகள் சொல்லும் கதைகள் பல அவன் கடக்கும் நொடி அனைத்தும் என் காதல் கலந்ததடா!   நீ உடனிருக்கும் நொடிவரையில் என் புற உலகை நான் மறந்தேன்! நீ பிரிந்து சென்ற மறுகனமே உடல் பிரிந்த உயிராக உனை அடைந்தேன்!   வெட்கத்திற்குச் சொந்தக்காரி உன்னை வெட்கமின்றி பார்க்கிறேன்! உன் கத்தி மீசை என் கண்ணம் தின்னும் காலம் ஒன்றை கேட்கிறேன்!   என் திருடும் விழி உன்னைத் தீண்ட என் திருட்டைக் கண்டுபிடிப்பாயா! திருட்டுக்குத் தண்டனை திருட்டே என்று என்னை முழுதும் திருடி அணைப்பாயா! 10. சொல்லாமலே வந்துவிட்டேன் சொல்லாமலே வந்துவிட்டேன்! நீண்ட நாட்களாய் சொல்லவேண்டும் என்று நினைத்ததை சொல்லாமலே வந்துவிட்டேன்!   காலத்தின் ஓட்டப் பந்தயத்தால் காதலைச் சொல்லும் அளவிற்கு எனக்குத் தகுதி வந்துவிட்டது! ஆனால் சொல்லாமலே வந்துவிட்டேன்!   காதல் என்று சொல்லாமலே என்னைக் காதலித்தவள்! காதல் சொல்லத் தகுதி வேண்டுமென்று காலம் தாழ்த்தியவள்! ஆனாலும் காதலித்தோம்!   சொல்லாமலே சொல்லிய காதல் சொல்ல வேண்டிய காதல் சொல்வதற்காகத் தான் சென்றேன்! ஆனால் சொல்லாமலே வந்துவிட்டேன்!   காலத் துரத்தலில் நான் காதலைச் சொல்லும் தகுதியைப் பெற்றிருந்தேன்!   அவளோ இன்னொருவனின் மனைவி என்னும் தகுதியைப் பெற்றிருந்தாள்! நீண்ட நாட்களாய்ச் சொல்லவேண்டும் என்று நினைத்ததை சொல்லாமலே வந்துவிட்டேன்! 11. விரும்பிக் கேட்கிறேன் நீயும் நானும் பேசாத மொழியை நம் விரல்கள் பேசட்டுமே! விரல்கள் பேச மறந்த வார்த்தைகளை நம் இதழ்கள் பகிரட்டுமே!   இடைவெளி இடமின்றி தவிக்க புது நெருக்கம் பிறக்கட்டுமே! இரு இதயங்கள் இதமாய் உருக இரண்டும் ஒன்றாய் மலரட்டுமே!   வெட்கத்தை எங்கோ தொலைத்துவிட்டு வெண்ணிலா தவிக்கிறேன்! உன் முத்தத்தைக் கண்ணத்தில் பற்றிக்கொண்டு பிறக்கிறேன்! 12. துயில் கலையுமா அவள் இதழ்கள் ஊமையாகி விழிகள் பேசும்போது என் இதயத்தின் மொழிபெயர்ப்பு கவிதையாகிறது!   அவள் சிரிப்பு மௌனமாகி புன்னகையாகும் போது என்னுள் புதுமையான உணர்வொன்று துளிர்விடுகின்றது!   அவள் மின்னல் நடை மிதமாகி நாணமழை பொழியும்போது என்னுள் மின்சாரம் மிகையாகி மிரட்டிச் செல்கிறது!   அவள் கொஞ்சும் சடை குழந்தையாகி குலைந்து சரிகையிலே என் மனம் குழம்பித் தவிக்கின்றது!   அவள் என்னவளாய் வடிவாகிக் கனவு பிறக்கையிலே என் தூக்கம் தொடர்கதையாகி துயில் கலைய மறுக்கிறது! 13. தனிமையில் தள்ளாதே சத்தமில்லாமல் கிடக்கும் தனிமைகள் வேண்டாம்! கத்தியில்லாமல் யுத்தம் செய்கிறது உன் நினைவுகள்!   கத்தி வீசும் உன் காதல் பார்வை போதும்! காதல் அளவிற்கு மீறி அமிர்தமாகிவிடும்!   இதுவரை காணாத புதியவனே பல கவிதைகள் சொல்லும் கலைமகனே! என் தனிமையில் நிறைந்திருக்கும் தலைவனே! உடனிருந்தும் கொல்லுகின்றான் ஒதுங்கிச் சென்றும் வதைக்கின்றான்!   என் வாய்மொழியெல்லாம் வாங்கிக்கொண்டு மௌனத்தை விலையாய்க் கொடுக்கின்றாய்! நான் தாய்மொழி இல்லாது தவிக்கின்றேன்! நீயோ என்னை மீண்டும் தனிமையில் தள்ளி ரசிக்கின்றாய்! 14. கனவுகளால் கொல்கிறாள் என் இதயக் குடுவைக்குள் ஏதோ செய்கிறாள்! ஒவ்வொரு துடிப்பிலும் அவள் பெயரையே சொல்கிறாள்!   கண்களுக்குள் புகுந்து கலவரம் செய்கிறாள்! கண்களை மூடித் திறந்தால் எங்கும் பிம்பமாய்த் தெரிகிறாள்!   மூச்சுக்குள் காற்றாய் முகவரி தருகிறாள்! உயர்ந்து தணிகிறாள்! உடல் முழுவதும் சூடாய்   இம்சைகள் பல செய்யாமல் செய்கிறாள்! இன்னும் முளைக்காத மீசையை முறுக்கிப் பார்க்கச் சொல்கிறாள்!   இரக்கம் இல்லாதவளாய் இருட்டில் வருகிறாள்! என் இரவுகளையெல்லாம் கனவுகளால் கொல்கிறாள்!   தீயெனத் தீண்டிச் சிவந்து கனிகிறாள்! உடல் சிலிர்க்க வைத்து உயிரைக் கேட்கிறாள்! 15. கவிதைகள் கேட்கிறாய் காதல் வரும் முன்னே நான் கவிஞன் அல்ல பெண்ணே! உன் பார்வை பட்ட பின்னே கவிதையில் காதல் கொண்டேன் தண்ணே!   உன் பஞ்சு கண்ணத்தில் என் பச்சை முத்தம் விழாமல் தீக்குச்சி விரல் கொண்டு தீண்டித் துரத்துகிறாய்!   நீ கொஞ்சி கொஞ்சிப் பேசிடும் தமிழால் என்னைக் கொள்ளையடித்துவிட்டு கொஞ்சமும் தயக்கமின்றி இன்னும் கவிதை கேட்கிறாய்!   குலுங்கிச் சிரிக்கும் உன் குழந்தைச் சிரிப்பினிலே என் மனதைத் தொலைத்துவிட்டு மயங்கிக் கிடக்கின்றேன்!   முயல்குட்டி முழிகளால் என்னை விழுங்கிச் செரித்துவிட்டு முத்தங்கள் இல்லாமல் வெறும் சப்தங்கள் தருகின்றாய்!   காதல் தேவி உன்னைச் சித்தத்தில் கொண்டு சிந்திக்க மறந்து காதல் யுத்தத்தில் சிக்கித் தவிக்கிறேன்!   காதல் பித்தத்தை தனிக்க நம் இதழ்களில் சப்தங்கள் ஒலிக்க கொஞ்(ச)(சு)ம் முத்தங்கள் தந்து காதல் மோட்சத்தில் தள்ளிவிடு! 16. புரியவில்லை புரியவில்லை ஒன்றும் புரியவில்லை!   கண்களுக்கு மையிட்டவள் என் கவிதைகளுக்கும் மைவிட்டாள் போலும்!   ஒவ்வொரு வரிகளும் உருகி உருகி அவள் விழிகளின் கர்வம் காட்டுகிறது!   அவள் இடையைச் செதுக்கிட ஏக கலைஞர்கள் போட்டி கொண்டனர் போலும்!   அவள் இடை நெளியும் அழகினிலே என் இதயம் கொள்ளை இன்பத்தில் கொத்தளம் அடிக்கிறது.   அவள் கால்களைப் பற்றிய கொலுசின் மணிகள் எல்லாம் பாவம். அவள் பாதத்தை கொஞ்சிட ஒன்றுடன் ஒன்று இடித்துக் கூச்சலிடுகிறது!   புரியவில்லை ஒன்றும் புரியவில்லை!   அவள் காது மடல்களைக் கவ்விப் பிடித்துக்கொண்ட காதணிகள் இரண்டும் கண்ணத்தில் எட்டி எட்டி முத்தமிடத் துடிக்கிறது. 17. கொஞ்சம் கொஞ்சவிடு மாலைப் பொழுது என் மனதை வருடும்படி என்ன செய்தாய்!   காதலைச் சொல்ல மொழியில்லாதவளாய் கண்களால் பேசிக் கொல்லுகின்றாய்!   என் உறக்கத்தை திருடி உறங்கும் உனக்கு என் உள்ளத்தையும் திருடும் எண்ணம் எதற்கு!   மெல்ல மெல்ல நிகழும் உன் திருட்டால் என்னை வேகமாய் திருடத் தூண்டுகிறாய்!   விலகி விலகிச் செல்லும் பெண்ணே என்னுள் விருப்பத்தை அள்ளிக் கொட்டாதே!   தயங்கித் தயங்கித் தடுமாறும் என்னைத் தள்ளி வைத்து மாய்க்காதே! உன் கண்கள் சொல்லும் காதலை என் கையில் தந்து சேர்த்துவிடு!   பொன்மாலை தரும் மயக்கத்தை ஒரு முத்தத்தால் மூழ்கிக் குடித்துவிடு!   வருடலாய் வரும் வாடைக்காற்றை நெஞ்சில் நெருடலாய்க் கொஞ்சம் கொஞ்சவிடு! 18. தொல்லை செய்கிறேன் ஓயாமல் தொல்லை செய்கிறேன்! என் பேனாவிடம் உன்னை எழுதச் சொல்லி உளறிக் கொட்டுகிறேன்!   காணாமல் போன உன் முகத்தை என் கவிதை வரிகளில் காண்கிறேன்!   உன்னை நினைத்து நினைத்துப் பார்த்துவிட்டு என்னை நானே மறக்கிறேன்!   உன் நினைவை மட்டும் ருசித்துக்கொண்டு உணவைத் தொட மறுக்கிறேன்!   காதல் தந்த மயக்கத்தில் கவிஞன் என்ற கற்பனையில் கண்டதையும் கிறுக்கித் தள்ளுகிறேன்!   கண்களில் நீர் வழிந்து வழிந்து என் கவிதைகள் கலைந்தபோது காதலின் வலியை உணர்கிறேன்!   ஓயாமல் தொல்லை செய்கிறேன்! என்னை மறந்த உன்னை எண்ணி உள்ளம் உருகித் துடிக்கிறேன்!   அவளை மறந்துவிடு மனமே என்று மறப்பதற்காகவே நினைக்கிறேன்!   உன்னை நினைத்து நினைத்து மனதை கிழித்து ரணத்தில் கிடந்து தவிக்கிறேன்! 19. ஏமாற்றாதே வேண்டாம் பெண்ணே இந்த பொல்லாத தண்டனை! என்னைக் கடைந்தெடுத்து கடைவிழிப் பார்வையால் ஊற்றாதே!   கொடி மின்னல் இடை கொண்ட நடையினால் என் இதயத்தில் இடியாய் இடிக்காதே!   பொய்யாய் என்னை முறைத்துக்கொண்டு மெய்யான காதலை மறைக்காதே!   இல்லாத ஒன்றை உருவாக்க ஏதேதோ பேசிக் கொல்லாதே!   நான் வேறு நீ வேறேன்று நான்குபேர் சொல்லும்படி நடிக்காதே!   நான் பார்க்காத போது எனைப் பார்த்து பக்குவமாய் என்னைப் படிக்காதே!   வேண்டாம் பெண்ணே இந்த பொல்லாத தண்டனை!   தள்ளாத காதலை உள்ளம் கொண்டு சொல்லாமல் வாயில் மெல்லாதே!   என்னை ஏமாற்றுவதாய் நினைத்துக்கொண்டு உன்னை நீயே ஏமாற்றாதே! 20. வெறுமை நுழைந்ததடி காலம் போனதடி என் காதல் வாழுதடி உன் காலடிச் சுவடை வைத்து என் உள்ளம் காய்ந்ததடி!   வாழ்வும் போனதடி வலியும் கூடுதடி உன் பார்வை பட்டு நெருப்பாய் என் நெஞ்சு வேகுதடி!   கண்ணீர் வடியுதடி கவிதை மலருதடி உன் காதல் பொய்யாகிப் போனதனால் வாசமற்று வாடுதடி!   நேசம் தொலைந்ததடி நெஞ்சம் வலித்ததடி உன்மேல் பாசம் அள்ளி விதைத்ததினால் பாவி மனம் வீழ்ந்ததடி!   வேசம் கலைந்ததடி வெறுமை நுழைந்ததடி நீ வருவாயெனக் காத்திருக்க காலமோ கேலியாய்ச் சிரிக்குத்தடி! 21. உறைந்துபோய் நிற்கிறேன் பெண்ணே! பௌர்ணமி இரவில் வெளியில் வராதே! பாவம் நிலவு தன்னை உன் நகல் என்று வருந்துகிறது!   உன் வீட்டு ஜன்னல் கதவுகளையெல்லாம் மூடியே வை! காலையில் வரும் கதிரவன் உன் துயில் கலையும் சோம்பல் கண்டு சூடாய்க் கொதிக்கிறது!   உன்னிடம் ஒன்று வேண்டுகிறேன்!   உன் கூந்தலிடம் சொல்லி வை அதன் வாசத்தை உன் வீட்டிற்குள்ளேயே வைத்துக்கொள் என்று! தோட்டத்துப் பூக்கள் எல்லாம் தோல்வியுற்றதாய் துடிக்கின்றது!   உன்னை மன்றாடி கேட்கின்றேன்!   உன் காலணிகளை மறந்துவிடு! உன் பாதம் வருட வாழும் புற்களெல்லாம் வருத்தத்தில் வாடுகிறது!   பெண்ணே! சத்தமிட்டு சிரித்துவிடாதே! இடியென்று காரணம் கூறி மேகம் மழையாக பொழிகிறது!   பாவம் உன்மீது தவழ ஆசைப்பட்ட மழைத்துளிகள் ஒன்றோடொன்று இடித்துக்கொள்கின்றன!   கடலின் கண்ணில் பட தூரத்தில் நிற்காதே! கடற்கரைக்கு வந்துவிடு! உன் பாதத்தை முத்தமிடும் ஆசையில் கடலலைகள் கொதித்தெழப் பார்க்கிறது!   போதும் பெண்ணே போதும்! நீ தொட்டுச் சென்ற தூண்கள் கூட உயிராகித் துடிக்கிறது!   உயிர்கொண்ட நான் மட்டும் உன் அழகைப் பார்த்து உறைந்துபோய் நிற்கின்றேன்! 22. வாடைக் காற்று வருட வரும் வாடைக் காற்றில் உன் வாசம் உணர்கிறேன்! என்னைத் திருடித் தின்னும் உந்தன் பார்வை என்னைக் கொல்லாமல் கொல்லுவதைப் பார்க்கிறேன்!   தேனும் தமிழும் ஒன்றென அறிந்தேன் தேவதை உந்தன் இதழ் பட்ட வார்த்தைகளில் பாற்கடல் அமிர்தத்தை பகிர்ந்தேன்!   வெள்ளைமலர் கோடி கூடிக் கூச்சலிடும் வெள்ளி மலர் உந்தன் மேனியடி! ஆணுக்குள்ளும் வெட்கத்தைத் தூண்டுதடி!   வலம்புரிச் சங்காய் வளையங்கள் கொண்ட உன் கழுத்து என்னை வளைத்து நெளித்து வாட்டி வதைக்குதடி!   சிறு இதயம் கொண்ட எந்தன் நெஞ்சை உன் செல்லச் சிரிப்பால் சிதறடிக்காதே!   நீ பேசிய வார்த்தைகள் ஆயிரம் இருந்தும் பேசாத உன் மௌனத்தை எனக்குள்ளே பேசுகிறேன்!   சொல்லாத காதல் சுகமா வலியா எனத் தெரியாமல் சுடர்தரும் மெழுகாய்ச் சுகவலி காண்கிறேன்!   இடைவெளி இல்லாமல் உன் நினைப்பை இதயத்தில் இடமும் வலமும் இறைக்கின்றேன்! உன் கடைவிழிப் பார்வையில் உள்ள காதலை உன் இதழ்வழி கேட்கும் நாள் வர ஏங்கிச் சாய்கிறேன்! 23. இரக்கமின்றி நொறுக்குதடி என் தாய் மொழியெல்லாம் தத்தி தாவுதடி! உன் தாவணி கண்ட நாள் முதலாய்!   என் வாய்மொழியெல்லாம் தடுமாறுதடி! உன் நிழற்படம் நெஞ்சில் தோன்றுவதால்!   உன் பனிக்குழைவு கண்ணங்களில் பாவி நான் மூழ்கிப்போனேன்! உன் இழுது இதழ் ருசித்தபின்னே மீண்டும் பிறந்து ஆளானேன்!   கிச்சிலிப் பழ நிறம் போல சிவந்ததடி உன் தேகம்! நீர் பட்ட வழலை போல வழுக்குதடி என் காலும்!   இண்ணட்டுகள் உன் விரல்களடி என்னைத் தீண்டப் பார்க்குதடி! மாச்சில்லாய் என் மனதை இரக்கமின்றி நொறுக்குதடி!   அணிச்சல் உந்தன் மாற்படி என் குமிழிக் கண்ணங்களைச் சாய்த்ததடி! பிணிக்கைப் பார்வை நம்மை இணைத்து வைக்க ஈர்க்குதடி!   அச்சு இயந்திரமோ நம் காதல்! வெள்ளைத் தாளான உன்னில் மின்னெழுத்தான என்னை அச்செழுத்தாகச் சேர்த்ததடி! 24. ஓய்வின்றி ஒலிக்கின்றது மலரே! உன் கண்களை அகட்டி அகட்டி விழிக்காதே! வெண்ணிலவின் ஊடே தேன்பருகும் கருவண்டுபோல் என்னைக் குடைந்தெடுக்கிறது!   பெண்நிலவே! கடும் காதல் ஒளி கொண்டு வீசாதே! கடும் குளிரைக் கண்டது போலே தேகம் கடுமையாய் நடுங்குகிறது!   பனிமலையே! வெயிலில் என்னைத் தேடாதே! உன் உடல் உருகும் அழகில் என்னை மூச்சுத் திணறச் செய்கிறது!   மூச்சுக்காற்றே! என் உள் நுழைந்து செல்லாதே! இதயக் குடுவைக்குள் உந்தன் சத்தம் ஓய்வின்றி ஒலிக்கின்றது! 25. கனவோடு கலையாதே உன் கால்தடம் வரைந்தேன் ஓவியன் ஆனேன்! உன் கைவிரல் பிடித்தேன் சிற்பி ஆனேன்!   உன் கார்விழி பார்த்தேன் கவிஞன் ஆனேன்! உன் வாய்மொழி கேட்டேன் அறிஞன் ஆனேன்!   உன் பின்னே நடந்தேன் கால் வலி மறந்தேன்! உன் இடை கண்ட பின்னே யாவையும் அறிந்தேன்!   என் உயிருக்குள் கலந்தாய் பூவாய் மலர்ந்தாய்! என் வாழ்வுக்குள் வந்தாய் பல அர்த்தங்கள் தந்தாய்!   உன் சடை ஆடும் போது பல கதை சொல்லக் கேட்டேன்! உன் இடையாடும் போது புது இன்பங்கள் பார்த்தேன்!   உயிரோடும் என்னுள் உறவாடும் பெண்ணே! கனவோடு கலையாமல் என் கைசேர வா! 26. புது மலரே மலருக்குள் தேனுண்டென்பார்கள்! தேனே மலரானதுபோல் ஒருத்தி திகட்டி எடுக்கிறாள்!   பாலில் ஊரும் கரும் திராட்சைபோல் பளிச்சென்ற அவள் கண்களால் விழிவழி குடைந்து என்னை வில்லங்கம் செய்கிறாள்!   மங்கை அவள் வாசனையோ மதுரை மல்லியும் கடன் கேட்கும்! அச்சு வெள்ளமும் உச்சுக்கொட்டி அவள் விரல்கள் தீண்ட உருகி நிற்கும்!   பச்சைக் கிளி பேச்சுக்காரி என் இச்சைகளைத் தூண்டுகிறாள்! கச்சைகட்டும் தேவர்களோ அவளை அமிர்தமென்று தரணி வந்து கூடுகின்றார்!   யாரும் உன்னைக் கவரும் முன்னே நான் உன்னைச் சேர வேண்டும் பெண்ணே! காலம் வந்து சேர்க்கும் முன்னே என் காதல் சொல்ல வந்தேன் கண்ணே! 27. முத்த யுத்தம் காலையும் மாலையும் உன்னருகே என் காதலைக் கேட்கும் உன் காதருகே என் மூக்கின் நுனியால் கோலமிட்டு உன் கண்ணங்கள் சிவக்கச் சாயமிடுவேன்!   உதறித்தள்ளும் உன் விரல்களைப் பிடித்து உயிர்க்காதலைக் கொஞ்சம் உருக்கி எடுத்து உன் விழிகள் கேட்கும் பரிசை நான் விலக்கப் போகிறேன்!   ஒட்ட வந்த என்னை உன் மூக்கு முட்டித் தள்ளும் முன்னே உன் கண்ணிமைகள் இரண்டும் முத்தமிட்டுக்கொள்ளும் பெண்ணே!   சத்தமற்ற இடைவெளிகள் முத்த யுத்தம் மூளப்போவதை காட்டிவிட விடுக்கென்று விலகிக்கொள்வேன்!   திகைத்துப்போன பெண் நீயோ சட்டென்று அணைத்துக்கெண்டு விழுங்கும் முத்தங்கள் தந்து விருந்தளிப்பாய்! 28. பொய் கண்ணால் பார்க்காத போது பார்க்கிறாள் பார்த்தாலும் பொய்யாய் முறைக்கிறாள்! வேர்க்காத உடலுக்குள் வெப்பமாகி வியர்வையாய் வெளிவந்து நிற்கிறாள்!   பூவால் ஆனது அவள் மேனி அதில் தேன் உண்ணப் பார்க்குது காதல் பணி சொல்லாத காதலின் சுகம் தனி இருந்தாலும் சுட்டெரிக்குமே வலி இனி!   நில்லாமல் போகின்றேன் அவள் பின்னால் என்னை நெருங்காமல் செல்கின்றாள் என் முன்னால் தயங்காமல் பேசினேன் என் கண்ணால் தவிடாகா எரித்தாளே அவள் பொய் கண்ணால்!   இல்லாத ஒன்றை இருப்பதாய்க் காட்டி இருக்கும் காதலை மறைக்கும் பெண்ணே! சொல்லாக உள்ள மெய்க் காதலை சொல்லாது ஏன் மெல்லுகின்றாய்! 29. கவிதையான கண்ணீர் கசியும் கண்ணீர்த் துளி கவிதை எழுதும் ரகசியம்! என் கவிதையின் அடித்தளம் காதலா இல்லை கண்ணீரா!   ஏதேதோ எழுதிய என் பேனா மை தீர்ந்துவிட கண் வடிக்கும் நீர்த் துளியில் பல கவிதைகள் காண்கிறேன்!   என் கனவைத் திருடியவள் சுதந்திரமாய்ப் பறக்கிறாள்! அவள் நினைப்பைச் சுமக்கும் நானோ சிறைக் கைதியாய் துடிக்கிறேன்!   காதல் தீயையும் மூட்டிவிட்டு என்னுள் கவிதை ஊற்றையும் ஏற்றிவிட்டாய்! இரண்டிற்கும் இடையில் பல யுத்தம் இடையில் வடிவதோ என் இரத்தம்!   நீ காட்டிய வெறுப்பென்னும் திறமைக்கு நான் ரசிப்பென்னும் பரிசைத் தந்தேன்! ரசிப்பென்ற பரிசைப் பெற என்னைத் தொடர்ச்சியாய் வெறுத்து வந்தாய்!   பெண்ணே உன் நிறத்தை நேசிக்கவில்லை! நிறத்தை நேசித்திருந்தால் மஞ்சள் நிற நெருப்பில் விழுந்திருப்பேன்! உன் குணத்தை நேசித்ததால் உன்னை நான் குருதியாய் ஏற்றுக்கொண்டேன்! 30. கால்தடம் தேடி தூக்கம் தொலைந்ததடா துயரம் பிறந்ததடா ஏக்கம் நிறைந்ததடா என்னுயிர் கரைந்ததடா!   நடக்காத ஒன்றில் நடை பழக்கிவிட்டாய்! விடியாத இரவில் விளக்கை அணைத்துவிட்டாய்! உள்ளம் கலங்குதடா உன்னைச் சேரத் துடிக்குதடா!   உன்னோடு இருப்பேன் என்றுரைத்தாய்! என் கண்ணோரம் சுடும் நீர் விதைத்தாய்! என் பொய்யான கனவுகள் மெய்யாகாமல் மெய்யான நீ பொய்யாய்ப் போனாய்!   காத்துக் கிடந்தே கால்கள் வலிக்குதடா! என் கண்களிலோ காதல் பொங்கித் துடிக்குதடா! எங்கெங்கோ கை கோர்த்து வந்தவனே ஏன் ஒன்றும் சொல்லாமல் சென்றாய்!   உன் கால்தடம் தேடி கடந்தேனடா! உன் காதலைச் சுமந்து அலைந்தேனடா! உன் காதல் மட்டும் இங்கிருக்க என் காதலன் நீ எங்கேயடா! 31. என்னைப் புதைக்கிறேன் அவன் இருவிழி தரும் தகவலுக்கு ஏங்கி இமைக்க மறந்து விழித்திருக்கிறேன்!   அவன் விரல்கள் தொடும் பரிசத்தைக் காண விடையில்லாமல் கிடக்கிறேன்!   அவன் நுகர்ந்த காற்றில் என் மூச்சை இழுத்துவிட்டு முழுதாய் என்னைக் கரைக்கிறேன்!   கனவிலும் என்னைக் காணத அவனை தனிமையில் நினைவோடு கலக்கிறேன்!   விடியாத என் இரவுகளில் கனவுகள் மட்டுமே கலந்திருக்க மெய்யாமல் போன காதலை எண்ணி எண்ணி அழுகிறேன்! 32. யாரோ ஒருத்தி என்னையே அறியாது என்னுள்ளே ஏதோ ஓர் சத்தம்!   நரம்பென்ற பாதையில் வேல்கொண்ட வீரர்கள் வெறிகொண்டு நுழைவதாய் உணருகிறேன்!   இறுகிய என் தேகத்தை யாரோ ஒருத்தி இரு விழிகொண்டு கிழிக்கிறாள்!   காதல் வலை விரித்து என்னைக் கைதியாக்கப் பார்க்கிறாள்!   திமிரான பேச்சை வீசி என்னை சிறையெடுக்கத் துடிக்கிறாள்!   என் உறக்கத்தை பிடுங்கித் தின்று காதல் உணர்வை ஊட்ட முயல்கிறாள்!   மயக்கத்தில் விழுந்த எந்தன் மனதை எடுத்துக்கொண்டு தயக்கம் ஏதுமின்றி என்னைக் காதலில் தள்ளிப் போகிறாள்! 33. குடு குடு நண்டாக என் விழிகள் இமைகளை இழுத்து இழுத்து போர்த்துகிறது! ஆனாலும் உறக்கம் வரவில்லை!   மனசு குரங்கென்றாலும் இழுத்துக் கட்டிவிடலாம்! குடு குடு நண்டாக என்னைக் குடைந்தல்லவோ ஓடுகிறது!   மெல்ல வரும் வார்த்தைகளை மென்று மென்று விழுங்கியதால் சொல்ல ஒரு வார்த்தையின்றி சோகம் வந்து சொக்குதடா!   அவன் பேச்சை ரசித்து மூச்சைக் குடித்து காதல் வளர்த்துக் கிடந்ததினால் காலம் மறந்து வாழ்கின்றேன்!   சொல்ல வரும் காதல் தொண்டையில் சிக்கிக்கொல்ல தண்ணீரெல்லாம் தருகிறான்! என் காதல் தாகத்தைப் புரிந்தும் புரியாதவனாய்க் கொல்கின்றான்!   போதும் போதும் போடா நீ பொய்யாய் நடிப்பது ஏன்டா மெய்யான காதலை மறைத்துக்கொண்டு பொய்யாய் பேசி மயக்குவதேன்டா! 34. காதலை ஊட்டினாள் உன் பாதை வழி நானும் வந்தேன் என்மேல் பாசம் கொஞ்சம் காட்டுவாயா! இல்லை யாருமற்ற ஏழையென்று ஏய்த்துவிட்டுப் போவாயா!   உன்னை நம்பி என்னைத் தந்தேன் ஆசையாய் அள்ளிக்கொள்வாயா! இல்லை ஒன்றுமற்ற பேதையென்று ஓரம் போகச் சொல்வாயா!   கண்களைக் கட்டி காதலில் தள்ளி கையில் தேடச் சொல்கிறாய்! உன் கையில் என்னைச் சேர்ப்பாயா! இல்லை காணாமலே போவாயா!   உலகம் அறியாத ஊமைப் பெண்ணுள் காதல் அள்ளி ஊட்டினாய்! காதல் குறையாமல் காப்பாயா! இல்லை கண்ணில் நீரை விதைப்பாயா!   கேட்காமல் கேட்கும் என் கேள்விகளுக்கு சொல்லாமல் சொல்லும் உன் பதில் தான் என் வாழ்க்கையோ!   பாதியில் தொடங்கியது என் வாழ்க்கை அதை உன் மீதியால் முழுதாய் ஏற்பாயா! இல்லை மீளாத் துயரை தருவாயா! 35. உயிரும் உயிரும் உயிரும் உயிரும் உரசும் நேரம்! வீசும் காற்றும் எங்கள் காதலைப் பாடும்!   இளம் மனசும் மனசும் மெல்லப் பறந்து ஓடும்! பல இசைகள் கொஞ்சும் பாடல் பாடும்!   உலகம் சுற்றும் காற்றில் ஏறி காதலின் உயரம் கண்டு ஆடிப் பாடும்! அருவிபோல சிரிப்பைக் கொட்டி ஆழக்கடலில் முத்தெடுக்கும்!   மாறி மாறிக் கொஞ்சிக்கொண்டு காதல் மயக்கத்தில் தள்ளாடும்! போகும் இடமோ வெகுதூரம் காதல் அணுவும் குறையாமல் இரண்டும் உயிர்வாழும்! 36. வந்துபோன வடுக்கள் போய்விடு பெண்ணே! உன் விருப்பப்படியே போய்விடு!   அன்று நீயாக வந்தாய் தானாக நின்றாய் பாலான என் உள்ளத்தில் காதல் கல்லெடுத்து எரிந்தாய்!   போய்விடு பெண்ணே! நீ விரும்பிய வாழ்க்கைக்கே போய்விடு!   பாவம் நான் வெறும் பாவி தான்!   உன் கண்களில் காதலைக் கண்டபோது காதலை கழற்றமுடியாத கர்ணனின் கவசம் என்றிருந்தேன்! நீயோ அதைக் காகிதமாய்க் கசக்கி எரிந்தாய்!   போய்விடு பெண்ணே! உன் வீட்டில் எல்லோரும் பாவமென்பாய் போய்விடு!   பாவம் உனக்குள் காதல் மூண்ட போது நீ பச்சைக் குழந்தைபோலும் குடும்பம் தெரியாமல் வளர்ந்துவிட்டாய்!   போய்விடு பெண்ணே! உன் சூழ்நிலை எப்படியோ அப்படியே போய்விடு!   பாவம் ஆண்களை மட்டும் கடவுள் சூழல் இல்லாமல் படைத்துவிட்டான்! அதை பெண்களிடமிருந்து கற்றுக்கொள்ள வைத்துவிட்டான்!   போய்விடு பெண்ணே! நீ விரும்பும் ஒருவனிடமே போய்விடு!   ஒன்றுமே இல்லாத என்னிடம் நீ வந்துபோன வடுக்களைத் தவிர ஒன்றுமில்லை! போய்விடு பெண்ணே! போய்விடு! 37. விழி வழியே மலராத மொட்டுக்களின் மௌனம் தான் வாசம்! சொல்லாத காதலுக்குள் சோகத்தின் சுவாசம்!   மழை வரும் நேரம் பல இடி வந்து சேரும்! கண்ணில் நீர் வரும் நேரம் நெஞ்சில் அவள் நினைவுகள் தூறும்!   மெல்ல மறைந்திடும் நிலா அவள் காதலைச் சொல்லாமல் செல்லுதே உலா! அவளைத் தேடிடும் மனமோ வெம்பி வாடுது தினமே!   கனவுகள் காணுதே வானம் மேகமும் கவிதைகள் தூவும்! மனதிற்குள் ஆயிரம் மோகம் என் இமைகளின் கூடலில் வாழும்!   மெல்லத் திறந்திடு விழியை காதல் சொல்லித் தளர்த்திடு என் வலியை! இன்பம் பிறந்திடும் அந்நொடியே என்னை அள்ளித் தருவேன் விழி வழியே! 38. பொல்லாத வேலைகள் உடைந்தும் உடையாத உன் நடையால் நடந்தும் நடவாமல் நடை பழகுகிறாய்!   உன் சொக்கும் விழிகள் இரண்டும் சொல்லும் கதைகள் கோடி! கடைசி வரை அதன் அர்த்தம் புரியாமல் நான் வளர்த்தேன் தாடி!   பொய்யும் மெய்யுமாய் பொறுக்கி எடுத்து பொல்லாத வேலைகள் செய்கின்றாய்! கண்களைத் துணியால் கட்டிவிட்டு காதலைத் தேடச் சொல்கிறாய்!   முடியாது பெண்ணே போதும்! உன் தள்ளாத அழகை வில்லாக வளைத்து அம்பாகப் பாய்த்துக் கொல்லாதே!   உன் விழியில் காட்டும் வித்தைகளை என் விரல்கள் தொட்டுச் சொல்லிவிடு! உன் இமைகள் கடிக்கும் காதலை என் இதழில் கொஞ்சம் உரசவிடு! 39. அடம் பிடிக்கிறது என் பேனாக்கள் அனைத்திற்கும் பித்துபிடித்துவிட்டது போல உன் பெயரை மட்டுமே எழுதுகிறது!   நானும் உதறி உதறி பார்த்துவிட்டேன்! என் உதறலுக்கெல்லாம் கண்ணீர் வடிக்கும் பேனா உன்னையன்றி யாதையும் எழுத மறுக்கிறது!   வெள்ளைத் தாள்களெல்லாம் அடித்துக்கொள்கின்றன! உன் அழகைச் சுமந்து வரும் வார்த்தைகளை முதலில் யார் அடைவதென்று!   அழகின்மையைக் குறிக்கும் வார்த்தைகள் எல்லாம் அழுது புலம்புகின்றன! அழகுத் தமிழை விட அழகான உன்னை வருணிக்க வாய்ப்பில்லாமல் வருந்தித் தவிக்கின்றன!   என் பேனா முள்ளிற்கோ மூச்சுத் திணறுகிறது! உன்னைப் பாட ஒரு கோடி வார்த்தைகள் ஒரே நேரத்தில் முட்டி மோதிக்கொள்கின்றன!   வேண்டாம் இந்த யுத்தகளம்! போதுமென்று நிறுத்திவிட்டேன்! போடா நான் வரமாட்டேன் என்று பேனாவைப் பிடித்துக்கொண்டு அடம் பிடிக்கிறது என் விரல்கள்! 40. மூச்சை விடு அவனிடம் என் காதலைச் சொல்லிவிடலாமென அருகில் சென்றேன்! ஆனால் வார்த்தைகளெல்லாம் மறியல் செய்துகொண்டு வர மறுக்கிறது!   இன்றேனும் உணர்வானா என் உயிர்க் காதலை! விழிகளிரண்டும் ஏங்கிப்போய் ஏமாற்றமடைகிறது!   பொல்லாத விழிகள் என்னைப் போராடச் சொல்கிறது! ஆனால் அவன் முன்னால் போய் கண்ணால் பேசலாமென்றால் மௌன விரதம் என்கிறது!   இன்று சொல்லலாம் நாளைச் சொல்லலாம் என்று நாட்கள் கடக்கிறது! நொடி போய் வரும் நொடி யாவிலும் என் காதால் முதிர்கிறது!   இளம் காதலையே உணராத அவனிடம் என் முதிர் காதல் மட்டும் என்ன செய்யும்! காலம் காட்டும் வறட்சியிலே காதல் மூச்சும் காய்ந்து கொதிக்கிறது! 41. என் வெட்கத்தை விரும்புகிறான் ஆசைதான் எனக்கும் உன்னோடு பேசவேண்டுமென்று! ஊர் என்ன சொல்லுமோ என்னும் என் இதய பூகம்பத்தில் என் ஆசைகள் புதைந்துவிடுகிறது!   உன் பார்வைக்கு பதில் கூட சொல்லமுடியாமல் வெட்கத்தில் விழிகள் இமைகளுக்குள் ஒளிந்துகொள்கிறது!   உன்னோடு எப்போதும் ஒரு பெருங்கூட்டம்! நானிருக்கும் இடத்தில் பிறர் இருக்க எனக்குள் பெருங்கஷ்டம்!   நிமிர்ந்தே பேசாதவள் நான் வெட்கத்தில் உன் பேச்சை குனிந்தபடி ரசிக்கின்றேன்! என் விழிகளிரண்டும் அழுகிறது! உன்னை விழுங்கவிடாமால் அடக்குவதால்!   என்னை விட என் வெட்கத்தையே நீ விரும்புகிறாய் எனத் தெரியும்! அதனால் தான் வெட்கத்தைத் தூக்கி எரியவும் முடியவில்லை காதலை எடுத்துச் சொல்லவும் இயலவில்லை!   வெட்கத்தை மட்டும் விரும்பும் நீ என் வெட்கத்தை விலக்கி வெதும்பி நிற்கும் என்னையும் கொஞ்சம் காதலிப்பாயா! 42. தங்கிவிட்டாய் இரும்பாய் கிடந்த என் இதயத்தைக் காந்தக் கண்களால் ஈர்த்தவளே! கல்லாய்க் கிடந்த என் உணர்வைக் கரைத்தெடுத்துக் குடித்துவிட்டாய்!   முள்ளாய்க் கிடந்த என் உலகில் பூவைக் கொஞ்சம் விரித்தவளே! மண்ணாய்க் கிடந்த என் மனசுக்குள்ளே மல்லிகைச் செடியாய் முளைத்துவிட்டய்!   தன்னால் நடந்த என் கால்களை காதல் கல்லால் தடுக்கி விட்டவளே! எங்கோ இருந்த என் நினைப்பை உன் சடையில் இறுக்கி முடிந்துவிட்டாய்!   பஞ்சாய்க் கிடந்த என் மனதை நெருப்பாய்ப் பற்ற வைத்தவளே! அம்பாய்ப் பேசும் உன் விழி அசைவால் என்னுள் ஆழம் பாய்ந்து தங்கிவிட்டாய்! 43. மன்னவனே என்னவனே! என்னை எனக்கே காட்டினாய் அதில் உன் பிம்பத்தை அள்ளி ஊற்றினாய்!   பருவம் வந்த கன்னி நான் என் பருவம் மறந்து கிடக்கின்றேன்! கைவிரல் பிடிக்கும் சிறு பிள்ளைபோல் உன் கால் தடம் பற்றி நடக்கின்றேன்!   குழந்தையாய் நான் செய்யவேண்டிய இம்சைகளை நீ செய்து காட்டுகிறாய்! கொஞ்சி கொஞ்சிப் பேசும்போது கொஞ்சும் கோபத்தால் கொஞ்சம் கொல்கிறாய்!   என் மன்னவனே நீ மாலையிடும் நேரம் வர மயக்கம் கொண்டு வீழ்கிறேன்! உன் தோழில் சாய்ந்தபடியே என் துன்பங்களைத் தொலைக்கிறேன்! 44. மறக்க முடியவில்லை மறக்கமுடியவில்லை மதிமுகம் கொண்ட மங்கை அவள் விழிகளால் என் கண்களில் உறக்கம் இல்லை!   கைவிரல்களைத் தொட்டுத் தொட்டுப் பேசியவள் என்னை விட்டுத் தூரம் போய்விட்டாள்! என்னவனே மன்னவனே என்றவள் என்னை விட்டு எங்கேயோ பறந்துவிட்டாள்!   எங்கும் அவளது வாசம்! என் உயிருக்குள் வேர்விடும் அவள் சுவாசம்!   கலைந்துபோகும் என் கனவுகளோடு நானும் மெல்லக் கரைகிறேன்! என்னை மறந்துவிட்டு இறந்துபோனவளை மறக்க மனமில்லாமல் துடிக்கிறேன்! 45. சொல்லாமல் வந்துவிடு அவள் கால் கொலுசொலி கேட்கிறது! இனி பூக்கள் மௌனம் கலைத்து மலர்ந்துவிடும்!   வாசல் கோலத்து அரிசி மாவை எறும்புகள் தின்னும் என்பார்கள்! ஆனால் கோலமிட்டவளை ஏனோ இந்த எறும்புகள் தேடிச் செல்கிறது!   கூட்டம் கூட்டமாய் வரும் எறும்புகளை எங்கே பயணம் என்றுக் கேட்டுப்பார்த்தேன்! அவள் வீட்டைக் காட்டி அங்கே தான் அமிர்தம் உள்ளது என்கிறார்கள்!   மருதாணியிட்ட பாதங்களில் மயங்கிக் கிடக்கும் கொலுசுமணிகள் பாதம் தரும் போதையில் அவள் பெயரைச் சொல்லிச் சொல்லிப் புலம்புகிறது!   தேன் பெண்ணே உன்னால் பெருங்குழப்பம்! விரைந்து வீட்டிற்குள் சென்றுவிடு! உன்னைப் பார்க்கவேண்டுமென்ற ஆசையில் கதிரவன் விடிவதற்குள் வந்துவிடுகின்றான்!   பாவம் இவர்களுக்குத் தெரியாது தாங்கள் ஏமாறப் போவது! ஒரு குவளைத் தேநீரை நான்கு இதழ்கொண்டு பருகிட உனக்காக விழிக்காமல் உறங்கிடும் நான் தான் உன் கணவன் என்று!   சொல்லாமல் வந்துவிடு ஒருவேளை அவர்கள் உனக்காகப் போருக்கு வந்தால் என்னால் முடியாது!   நான் கோழையென்று சொல்லவில்லை! ஏற்கனவே நான் உன்னோடு ஆரம்பித்த காதல்யுத்தம் இப்போதுதான் சூடுபிடித்துள்ளது!   இதை முடிப்பதற்கே என் ஜென்மம் முடிந்துவிடும்! 46. உன் வீட்டுப் பெண்ணாக கல்யாண மாலையிடும் காதலனே! இனி நான் உன்னைக் காதலனே என்று அழைப்பதா கணவனே என்று அழைப்பதா!   நேற்று வரை என்னை காதல் என்ற கயிற்றால் கட்டியிருந்தாய்! திடீரென மஞ்சள் கயிறாய் மாறிவிட்டாய்!   பறந்த உலகத்தில் நீயும் நானும் காதல் பறவைகளாய் பறந்து திரிந்தோம்! இனி நான்கு சுவர் நம்மோடு நான்கு பேர் என்னும் சின்ன கூட்டிற்குள் சிறை வைத்தாலும் பரவாயில்லை! உன் இதயச் சிறையிலிருந்து மட்டும் வெளியேற்றிவிடாதே!   இங்கு எனக்குத் தெரிந்தவர்கள் நீயும் உன் காதலும் தான்! எனக்கு மட்டும் கொடுத்தக் காதலை இங்கு எல்லோருக்கும் பிரித்துக் கொடுப்பாய்!   கலங்குவேனோ என்று கவலைப்படாதே! இனி உன் காதலை இவர்கள் மூலம் வாங்கிக்கொள்வேன் உன் வீட்டுப் பெண்ணாக! 47. கடைசி முத்தம் கைப்பேசிப் பெண்ணே! என் இரவெல்லாம் உன்னைக் கட்டி அணைத்தபடியே கடக்கின்றது! தொடுதிரை தொட வரும் உன் குறுஞ்செய்தி என் உடலுக்குள் ஆயிரம் லிட்டர் குருதி பாய்ந்ததைப் போல் உறுதி தருகிறது!   பேசவே தெரியாத என்னை மணிக் கணக்கில் பேச வைத்தவளே! தாகம் எப்போது தணிந்தது பசி எப்போது தீர்ந்தது என ஒரு குறிப்பும் இல்லாமல் உலவுகின்றேன்!   காதருகில் என் கைப்பேசி உரசுவது நீ என் தோழருகே சாய்வதைப் போல் இதமாய் உணர்கிறேன்!   பேச்சில் கழியும் இரவுகளை என்னைப் பேச வைத்து ரசிப்பவளே!   பேசியபடி தூங்கிவிடும் எனக்கு பேசாமல் நீ தரும் அந்நாளின் கடைசி முத்தம் தான் என்னை இப்படிப் பேச வைக்கிறது! 48. முத்தமின்றி மோட்சம் மையிருட்டு கண்மூட மயில்தோகை விழி இமைகூட சத்தமற்ற இரவில் உச்சம் பெற்ற உரக்கத்தை உரசி வரும் உன் மூச்சுக் காற்றில் உருகிப்போகின்றேன்!   உன் பட்டுக் கண்ணம் பற்றிக்கொண்டு பரிதவிக்கும் பஞ்சு மெத்தை முத்தமிட வாயில்லாமல் தலையணையை முட்டித் தள்ளுகிறது!   மின் விளக்கின் மெல்லொளியில் தெரியும் உன் மேனியின் பரிசம் என்னை மெல்ல மெல்ல மாய்க்கிறது!   தொட்டுத் தொட்டுப் பேசிய உன் விரல்கள் ஒன்றை ஒன்று உரசிக்கொண்டு உறங்கும் அழகைக் கண்டு மனசு கொஞ்சித் தள்ளத் துடிக்கிறது!   களங்கமற்ற உன் அழகால் கலங்கிப்போன என் மனது உன் உறக்கத்தைக் கலைக்காமல் உறங்கத் தான் சொல்கிறது!   உறங்க மறுக்கும் என்னை ஒன்றை மட்டும் செய்யவிடு!   உன் பட்டுப் பாதங்களை என் விரல்கள் பற்ற உன் கால்களில் என் முகம் பதிக்க உரசி வரும் மூச்சுக் காற்றில் உன் பரிசத்தை உணர்ந்து முத்தமின்றி மோச்சமடைகிறேன்! 49. விரும்பி வரைந்த கவிதை என் உள்ளம் ஓர் வெள்ளைப் பூவடா! அதில் உறைந்திருக்கும் நீ முல்லைத் தேனடா!   என் மனம் ஓர் வெற்றுத் தாளடா! அதில் விரும்பி வரைந்த கவிதை உன் பெயரடா!   என் கண்கள் ஓர் செதுக்கும் உழியடா! அது இரசித்து வடித்த சிலை உந்தன் உருவமடா!   என் கனவுகள் ஓர் கருப்புச் சுவரடா! அதில் வண்ணங்கள் தந்த ஓவியம் உந்தன் முகமடா!   என் காதல் ஓர் கோவைப் பழமடா! அதைக் கொத்திக் கூச்சலிடும் நீ என் பச்சைக் கிளியடா! என்னுடைய நீ ஓர் செல்லக் குழந்தையடா! அங்கு உன்னுடைய நான் உன்னைக் கொஞ்சும் தாயடா! 50. அம்பை எய்ததடி செந்தமிழும் உன் செவ்விதழ் பட்டதனால் சிவந்து நிற்குதடி! உன் மஞ்சள் முகம் பேசிய வார்த்தைகள் தன்னை மறந்து மயங்கிக் கிடக்குதடி! உன் தேகம் உரசும் காற்றில் காதல் மோகம் தெரியுதடி! உன் பாதம் உரசும் பூக்களெல்லாம் உன்னைப் பேசத் துடிக்குதடி!   வானம் தன் நீலம் மாறி மேகம் கூடுதடி! வான் மழையும் இடியுடன் கூடி உன்னை வருணித்து இசைக்குதடி!   நேரம் தன் நிலை தடுமாறி உன் பின்னே ஓடுதடி! காலமோ கைக்குட்டையாகி உன் கைக்குள் சேருதடி!   விழியோ இல்லை வில்லோ என குழப்பம் மூழுதடி! விழிதான் என்று விளங்க முயன்ற கனமே காதல் அம்பை எய்ததடி! ஆசிரியர் குறிப்பு [பாலபாரதி] பாலபாரதி கவிஞர் கா.பாலபாரதி (G.Balabarathi), தமிழ் நாட்டின் தென் பகுதியில் உள்ள, ஒரு கடற்கரை மாவட்டமான இராமநாதபுரத்தில் பிறந்தவர். இவரின் தாய் கிராமமானது, அம்மாவட்டத்தில் உள்ள, இராஜ சிங்க மங்கலம் அருகில் உள்ள நோக்கனன்கோட்டை என்ற போதும், பாரனூர் என்ற கிராமத்தில், தன் குடும்பத்தோடு வசித்து வருகிறார். திரு.க.காந்தி திருமதி.கா.மீனாள் இவர்களின் புதல்வனான இவருக்கு, கோவில் கட்டுமானம் மற்றும் சிற்பக் கலையில் நிபுணரான பாலசுப்பிரமணி என்ற மூத்த சகோதரர் ஒருவரும் இருக்கிறார். கதை, கவிதை, கட்டுரைகளை எழுதும் திறன் வாய்க்கப் பெற்ற இவர், சிறந்த மேடைப் பேச்சாளராகவும், ஓவியராகவும், சமூக ஆர்வலராகவும் திகழ்கிறார். சமூக அக்கறை மிகுந்த இவர், தனது கவிதைகள், கட்டுரைகள் மூலம் சமூகத்தின் அவல நிலையைச் சீர் தூக்கிப் பார்ப்பதோடு அல்லாமல், பல்வேறு சமூக அமைப்புகளில் உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், தனது தொடக்கப் பள்ளி வகுப்புகளை, பாரனூர் அரசுப் பள்ளியிலும்; உயர்நிலைக் கல்வியை, உப்பூர், அரசு உயர்நிலைப் பள்ளியிலும்; மேல்நிலைப் படிப்பை, ஆர்.எஸ்.மங்கலம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றவர். மேலும், இளங்கலை(பி.எ) மற்றும் முதுகலை(எம்.ஏ) ஆங்கிலத்தை, காரைக்குடியில் உள்ள, அழகப்பா அரசுக் கலைக் கல்லூரியில் பயின்றவர். இளநிலை கல்வியியல்(பி.எட்) படிப்பை, காரைக்குடியில் உள்ள க்ஷ்ரி ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரியில் பயின்ற இவர், தற்போது ஆய்வியல் நிறைஞராக(எம்.பில்), அழகப்பா பல்கலைக்கழகத்தின், ஆங்கில மற்றும் அயல்நாட்டு மொழிகள் துறையில் பயின்று வருகிறார். பலதிறக் கலைஞராக விளங்கும் இவர், சுண்ணாம்புச் சிற்பம், எழுத்து, பேச்சு, ஓவியம், விவசாயம், தத்துவம், களிமண் உரு, நடிப்புத் திறன், உளவியல் போன்றவற்றில் அறிவும், இன்ன பிற செயல்களில் ஆர்வமும் கொண்டவராக விளங்குகிறார். தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை மற்றும் காரைக்குடி, குனு/லினக்ஸ் பயனர் குழு போன்றவற்றில் தன்னார்வராக இருப்பதோடு, தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் மென்பொருள் சுதந்திரம் பற்றிய பரப்புரையை தன் நண்பர்களோடு சேர்ந்து செய்து வருகிறார். எங்களைப் பற்றி - Free Tamil Ebooks மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும் எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. vinavu 2. badriseshadri.in 3. maattru 4. kaniyam 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948 நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். email : freetamilebooksteam@gmail.com Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? Shrinivasan tshrinivasan@gmail.com Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org Arun arun@fsftn.org இரவி Supported by Free Software Foundation TamilNadu, www.fsftn.org Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/ உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி - http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி - http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2. படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி - கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை - ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். நூலின் பெயர் நூல் அறிமுக உரை நூல் ஆசிரியர் அறிமுக உரை உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் நூல் - text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில். அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்? - தமிழில் காணொளி - https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் - http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !