[]     சான்றோர் தமிழ் -சமூகவியல் முனைவர் சி. பாலசுப்பிரமணியன்  எம்.ஏ., எம்.லிட்., பிஎச்.டி.  தமிழ்மொழித் துறைத் தலைவர் சென்னைப் பல்கலைக் கழகம்    அட்டைப்படம் : லெனின் குருசாமி - guruleninn@gmail.com    மின்னூலாக்கம் :சீ.ராஜேஸ்வரி - sraji.me@gmail.com    வெளியீடு : FreeTamilEbooks.com    உரிமை : CC0    உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.          ஆசிரியரின் பிற நூல்கள்   தமிழ் இலக்கிய வரலாறு உருவும் திருவும் கட்டுரை வளம் வாழையடி வாழை மனோன்மணீயம் (பதிப்பு)  காரும் தேரும் முருகன் காட்சி இலக்கிய அணிகள் பெருந்தகை மு. வ.  மலர் காட்டும் வாழ்க்கை இலக்கியக் காட்சிகள் நல்லோர் நல்லுரை ஆண்டாள் சேர நாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள் கவிச் சக்கரவர்த்தி ஒட்டக் கூத்தர் திருவெம்பாவை விளக்கம் The Status of Women in Tamilnadu during the Sangam Age. A Study of the Literature of the Cera Country. Papers in Tamil Literature.                               மூன்றாம் பதிப்பின் முன்னுரை   கோதாவரி ஆற்றினைக் கண்ட கவிச்சக்கரவர்த்தி கம்ப நாடர்க்குச் சான்றோர் கவி நினைவிற்கு வந்தது. இன்று வளமாக வளர்ந்து வாழ்ந்து நிலைத்து நிற்கும் நந்தமிழ் மொழியின் சீர்மையினைக் காணும்பொழுது, இவ்வளமார் மொழியினைச் சென்ற நூற்றாண்டின் இறுதியிலும், இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ்கூறு நல்லுலகத்தில் தோன்றித் தங்களையும் புகழால் வளர்த்துக்கொண்டு, தமிழ் மொழியையும் நிறைவாக வளர்த்த தமிழ்ச் சான்றோர்களை நினைக்காமலிருக்க முடியாது. ஆங்கில மொழி, அரசியல் தொடங்கிக் கல்வி, சமயம், பொருளாதாரம், சமூகம் முதலிய அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கமும் செல்வாக்கும் செலுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில், இந் நூலினைத் தம் திருத்தொண்டால் அணிபெறச் செய்திருக்கும் சான்றோர் பெருமக்கள் அயராது தளராது உற்றதோர் ஊக்கத்தோடு பாடுபட்டதன் விளைவால் தமிழ் தமிழாக நின்றது; நிலைத்தது.  தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சா. தொடங்கிச் சான்றான்மைக்கு ஆழி என விளங்கிய என்னுடைய பேராசிரியப் பெருந்தகை டாக்டர் மு.வரதராசனார் உள்ளிட்ட தமிழ்ச்சான்றோர் பெருமக்கள் பதின்மரை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு, இந் நூற்கண் அவர்தம் வாழ்வினையும், வளமார் தமிழ்த் தொண்டினையும் ஒருவாறு புலப்படுத்தியுள்ளேன்.  சைவர்க்குப் பன்னிரு திருமுறை போலவும், வைணவர்க்குப் பன்னிரு ஆழ்வார்கள் போலவும், இந்நூற்கண் இடம் பெற்றுள்ள சான்றோர்களையும், அவர்கள் வளப்படுத்திய தமிழினையும் தமிழுலகு இனங்கண்டு தெரிந்து, அச் சான்றோர்க்கு வாழ்த்தும் வணக்கமும் தெரிவிக்குமேயானால், அது நன்றியுடைய தமிழினத்தின் நெஞ்சப் பண்பாட்டிற்கு விளக்கமாக அமையும். தமிழ் இளைஞர்கள் இச் சீரிய சான்றோர்களின் தமிழ் நெஞ்சத்தைக் காண்பார்களே யானால் முச்சங்கம் வைத்து மொழி வளர்த்த பாண்டியர் பரம்பரையின் மாட்சியினையும் ஒருவாறு விளங்கிக் கொள்வார்கள்.  தமிழகம் சென்னை-29  19-8-1988                                             பொருளடக்கம் 1. தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா 4  2. செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் 11  3. தனித்தமிழ் இயக்கங் கண்ட அடிகளார் 17  4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 22  5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் 34  6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் 40  7. தமிழ்நடை வளர்த்த தமிழ்த் தென்றல் 47  8. புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 54  9. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 63  10. சான்றோர் பெருந்தகை மு.வ. 73                              1. தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா   தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று போற்றப் பெறுவது தஞ்சை மாவட்டம் ஆகும். ‘கலை மலிந்த தஞ்சை’ என்றும் தஞ்சை மாவட்டம் போற்றப் பெறும். ஆடல், பாடல்களும், அழகுக் கலைகளும் நிறைந்த மாவட்டமும் தமிழ் நாட்டில் அதுவேயாகும். ‘பெரிய கோயில்’ என்று சிறப்பாகப் பேசப்பெறும் முதலாம் இராசராசன் கட்டிய பெருவுடையார் கோயில் அமைந்திருப்பதும் தஞ்சை மாவட்டத்திலேயேயாகும். வற்றாத வளம் கொழித்துக் காவிரிப் பேராறு பாய்ந்து வளம் சிறக்கும் நாடு தஞ்சை மண்ணேயாகும். இத்தகு பெருமை வாய்ந்த தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் தாலுக்காவில் உத்தமதானபுரம் என்னும் சிற்றுாரில் சாமிநாத ஐயர் பிறந்தார். உத்தமதான புரத்தைப் பற்றிச் சாமிநாத ஐயர் கூறும் சொற்கள் வருமாறு:  ‘என் இளமைக் காலத்தில் இருந்த எங்கள் ஊர்தான் என் மனத்தில் இடங்கொண்டிருக்கிறது. இந்தக் காலத்தில் உள்ள பல செளகரியமான அமைப்புக்கள் அந்தக் காலத்தில் இல்லை; ரோடுகள் இல்லை; கடைகள் இல்லை; உத்தியோகஸ்தர்கள் இல்லை; ரெயிலின் சப்தம் இல்லை. ஆனாலும் அழகு இருந்தது; அமைதி இருந்தது. ஜனங்களிடததில் திருப்தி இருந்தது; பக்தி இருந்தது. அவர்கள் முகத்  தில் மகிழ்ச்சி நிலவியது; வீடுகளில் லக்ஷ்மி கரம் விளங்கியது.’  (என் சரித்திரம். பக்கம் : 4)  என்று கூறியுள்ளார்.  இளமையும் கல்வியும் உத்தமதானபுரம் இரண்டே தெருக்களைக் கொண்ட சிற்றூராகும். அவ்வூரில் 19-2-1855ஆம் ஆண்டு சாமிநாத ஐயர் அவர்கள் சங்கீத வித்துவானான வேங்கடசுப்ப ஐயருக்கும் சரசுவதி அம்மையாருக்கும் முதல் மகனாகத் தோன்றினார். இளமையில் அவர் பெற்றோர் வறுமையில் பெரிதும் துன்புற்றிருந்தனர். ஏறத்தாழ ஆண்டுக்கு 50 ரூபாய் தான் அவர்களுக்கு வருமானமாக வந்தது. உடையார் பாளையம் அரண்மனையின் ஜமீன்தார் ஆதரவு ஓரளவு இக்குடும்ப வாழ்க்கையை நடத்திவரத் துணை செய்தது. சாமிநாதன் என்று குழந்தைக்குப் பெயரிட்டுச் செல்லமாக ‘சாமா’ என்று அழைத்து வந்தனர். வேங்கடராமன் என்ற பெயர் சாமிநாத ஐயருக்கு வழங்கி வந்தது. காரணம் திருப்பதி வேங்கடாசலபதி அவர்களுடைய குலதெய்வம். தந்தையார் வேங்கடசுப்ப ஐயர் சங்கீத வித்துவானான காரணத்தினால் ஆங்காங்கு சங்கீதத்தோடு கூடிய கதா காலட்சேபம் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இதன் காரணமாக ஊர்விட்டு ஊர் சென்று பிழைக்கும் வாழ்வே அவருக்கு அமைந்தது. வருங்காலத்தில் தம்முடைய மகனும் ஒரு சங்கீத வித்துவானாக வரவேண்டுமென்றே எண்ணினார். ஆனால் சாமிநாத ஐயருக்குச் சங்கீதமும் சமஸ்கிருதமும் அவ்வளவாக வரவில்லை. தமிழே அவர் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்து அவர் உள்ளத்தில் நிலையாகக் குடிகொண்டிருந்தது. சாமிநாத ஐயர் முதன் முதலாக அரியலூர் சடகோப ஐயங்கார் என்பவரிடத்தில் தமிழ் பயின்றார். சாமிநாத ஐயரே,  ‘தமிழில் அதிகப் பழக்கமும் அதற்கு உபகாரப்படும் வகையில் சங்கீதமும் இருப்பதையே நான் விரும்பி னேன். சடகோபையங்காரிடம் என்று நான் மாணாக்கனாகப் புகுந்தேனோ அன்றே தமிழ்த் தாயின் அருட்பரப்பிற் புகுந்தவனானேன். எனக்குத் தமிழில் சுவை உண்டாகும்வண்ணம் கற்பித்த முதற் குரு சடகோபையங்காரே.’  (என் சரித்திரம்; பக்கம் : 103)  என்று குறிப்பிட்டுள்ளார்.  பின்னர் செங்கணம் விருத்தாசல ரெட்டியார் என்பவரிடத்தில் தமிழ்க் கல்வி கற்றார். சாமிநாதருக்குத் தமிழில் இருந்த பேரார்வத்தை அறிந்து தமிழ்ப் புல்வர்கள் உள்ள இடங்களுக்குச் சென்று தங்கி இவர் கல்வி கற்கும் வசதிகளை இவர் தந்தையார் விரும்பிச் செய்தார். இவ்வாறு கல்வி கற்றுவருங்கால், ஆசிரியருக்குச் சன்மானமாகத் தருவதற்குச் சாமிநாத ஐயரிடம் பணம் இல்லை என்பதோடு, ஆசிரியரோடு தங்கிப் படிக்கும்போது சாப்பிடுவதற்கு வசதியும் இல்லை. ஆதலால் தாம் எந்த ஆசிரியரிடத்தில் தங்கிக் கற்றாரோ அங்கேயே இலவசமாக உணவுக்கும் ஏற்பாடு செய்து கொண்டார். இவர் தமிழில் காட்டிய ஆர்வத்தையும் அறிவையும் பாராட்டி ஆசிரியர்கள் இவருக்குத் தாமாகவே விரும்பிக் கல்வி கற்பித்ததோடு, உணவுக்கு வேண்டிய வசதிக்கும் ஏற்பாடு தந்து செய்தார்கள். காலை 5 மணிக்கே ஆசிரியர் வீட்டுக்குச் சென்று கற்கின்ற மரபு இவரிடம் வளர்ந்திருந்தது. திண்ணைப் பள்ளிக் கூடத்தில் மட்டும் ஆசிரியருக்கு மாதம் நான்கு அணா சம்பளம் கொடுத்துப் படிக்கத் தொடங்கிய சாமிநாத ஐயர் தம் வாழ்நாளின் இறுதிவரையில் அந்தப் படிப்பையே தொழிலாக நெஞ்சில் நிலையாக நிறுத்தியிருந்தார் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. ஒரு சிறு நூலையும் எளிய விலைகொடுத்தும் வாங்க முடியாத நிலையில் சாமிநாத ஐயர் இருந்தார். புலவர்களை அண்டி அவர்களிடமிருந்து ஒரு சிறிய நூலையும் அன்பளிப்பாகப் பெற்றாலும் அதற்காக அருநிதி-புதையல் கிடைத்தவர்போல் பெரிதும் மனம் மகிழ்ந்தார். இவரே பிற்காலத்தில் எண்ணற்ற நூல்களைச் சுவடியிலிருந்து எடுத்து அருமையாகப் பதிப்பித்துத் தமிழ் உலகுக்குத் தந்து உதவியவர் என்பதையும் நாம் நினைவு கூர வேண்டும்  திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் பயின்றது  1880ஆம் ஆண்டு சாமிநாத ஐயர் மாயூரம் சென்றார். அங்கே அப்போது திருவாவடுதுறை ஆதீன மகாவித்துவானாக இருந்த தமிழ்நாட்டின் பல திசைகளிலிருந்தும் பாடம் சொல்லிக் கொள்ளவந்த மாணாக்கர் பலருக்கும், சில பல ஆதினங்களைச் சார்ந்த குட்டித் தம்பிரான்களுக்கும் பாடம் சொல்லித் தந்த-மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் இருந்தார்கள். அவர்களை அண்டிச் சாமிநாத ஐயர் பல நூல்களைக் கற்றார். இதற்கு இடையே 1869ஆம் ஆண்டு சாமிநாத ஐயர் அவர்களுக்குத் திருமணம் நிகழ்ந்ததனையும் குறிப்பிடவேண்டும். திருமணம் ஆனாலும் உடனடியாக இல்லறவாழ்க்கையில் சாமிநாத ஐயர் பற்றுக் கொள்ளாமல் தமிழ் படிக்க வேண்டுமென்ற ஒரே ஆவலால் உந்தப்பட்டு மாயூரம் வந்து சேர்ந்தார்.  ‘நான் தமிழ் படிக்க வேண்டுமென்று தொடங்கிய முயற்சி வறுமையாலும் வேறு காரணங்களாலும் தடைப்பட்டுத் தடைப்பட்டுச் சோர்வடைந்தது. ஆனால் அப்படியே நின்றுவிடவில்லை; எல்லோருடைய வற்புறுத்தலுக்கும் மாறாக என் உள்ளம் இளமையிலிருந்தே தமிழ்த் தெய்வத்தின் அழகிலே பதிந்து விட்டது. மேலும் மேலும் தமிழ்த்தாயின் திருவருளைப் பெற வேண்டுமென்று அவாவி நின்றது.’  (என் சரித்திரம் ; பக்கம் : 221-222)  என்று சாமிநாத ஐயரே இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.  மாயூரம் சென்றதும் தம் அனுபவத்தை ஐயரவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்.  ‘தமிழ்தான் எனக்குச் செல்வம்; அதுதான் என் அறிவுப் பசிக்கு உணவு, எவ்வளவுக்கெவ்வளவு நான் அதன் தொடர்பை அதிகப்படுத்திக் கொள்கிறேனோ அவ்வளவுக்கவ்வளவு எனக்கு உத்ஸாகம், நல்லது செய்தோமென்ற திருப்தி, லாபமடைந்தோமென்ற உணர்ச்சி உண்டாகின்றன. அன்றும் சரி, இன்றும் சரி, இந்த நிலைமை மாறவே இல்லை.’  (என் சரித்திரம்; பக்கம்; 187)  என்று குறிப்பிட்டுள்ளார்,  மாயூரம் சென்ற சாமிநாத ஐயர் ஆசிரியரால் சாமிநாத ஐயர் என்று அழைக்கப்பெற்றார். வீட்டில் வேங்கடராமனாகவும், சாமாவாகவும் அழைக்கப் பெற்றவர்  சா—2 ஆசிரியர் அழைத்த காரணத்தால் அன்றிலிருந்து சாமிநாத ஐயர் என்றே அழைக்கப் பெற்று வந்தார். பெற்றோர் வழங்கிய பெயர் நிலைக்காமல் ஆசிரியர் இட்ட பெயரே பின்னர் நிலைத்து விட்டது. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றி வந்த நூல்களை எழுதுவதும், அவரிடம் நூல்களைப் பாடங்கேற்பதும், திருவாவடுதுறை ஆதீன கர்த்தராக அந்நாளில் விளங்கிவந்த சுப்பிரமணிய தேசிகரோடும், அந்த மடத்துக்கு அடிக்கடி வந்து செல்லும் தமிழ்ப் புலவர்களுடனும், வடமொழி வாணரோடும். சங்கீத வித்துவானோடும் நெருங்கிப் பழகி உரையாடுவதும் சாமிநாத ஐயர் அவர்களுடைய அந்நாளைய செயல்களாக விளங்கின.  ஆசிரியர் மறைவும் மாணவர் பரிவும் 1876ஆம் ஆண்டு பிரப்வரித் திங்களில் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் காலமானார்கள். ‘19ஆம் நூற்றாண்டின் கம்பன்’ என்று பாராட்டப் பெற்ற பிள்ளை அவர்கள், நாள் ஒன்றுக்கு 300 பாடல்கள் பாடினார் என்பர். இவர் 19 தலபுராணங்களும், 10 பிள்ளைத் தமிழ் நூல்களும், 4 மாலைகளும், 16 அந்தாதிகளும் பாடினார். இவருடைய சேக்கிழார் பிள்ளைத் தமிழ் பலராலும் பாராட்டப் பெறுவது. இத்தகு கல்விப் புலமை நிறைந்த ஆசிரியர் காலமானதால் சாமிநாத ஐயர் பெரிதும் வருந்தினார். ஆசிரியருடைய கல்விப் பரப்பு. பாடம் சொல்லும் திறம், பண்பு நலம், செய்யுள் இயற்றும் புலமை முதலியவற்றையெல்லாம் மற்றவர்களிடம் சொல்லிப் சொல்லி மகிழ்ந்தார். எனவே, ஆசிரியர் மறைவுக்குச் பின்னர்த் திருவாவடுதுறை ஆதீனத் தலைவராகிய சுப்பிரமணியதேசிகரிடம் இவர் பாடம் கேட்டுக் கொண்டே ஆதீனத்துக்கு வந்த மாணாக்கர்களுக்குத் தாம் பாடம் சொல்லிக் கொடுத்தும் வந்தார்.  திரு. தியாகராசச் செட்டியார் தொடர்பு  அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் பெரும் புகழ் பெற்ற தமிழ் ஆசிரியர் ஒருவர் கும்பகோணத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக இருந்த திரு. தியாகராசச் செட்டியார் ஆவார். தியாகராசச் செட்டியார் அவர்கள் தம் மனத்தில் பட்டதை வெளிப்படையாகப் பேசுபவர். பரந்த தமிழ்ப் புலமை வாய்ந்தவர். ஆங்கிலப் பேராசிரியர்கள் போலவே இவர் அந்தக் காலத்தில் பெருமதிப்புப் பெற்றிருந்தார். அவர் ஒரு நாள் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு வந்து சுப்பிரமணிய தேசிகர் அவர்களின் அனுமதி பெற்றுச் சாமிநாத ஐயர் அவர்களைக் கும்பகோணத்திற்கு அழைத்துக்கொண்டு போய்த் தாம் பார்த்துவந்த பதவியை அவருக்கு வாங்கிக் கொடுத்தார். 1880ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சாமிநாத ஐயர் குடந்தை அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் கற்ற தமிழ்க் கல்வியும், அறிவாற்றலும், பாடம் சொல்லும் திறமையும், சாமிநாத ஐயர் அவர்களைக் குறுகிய காலத்திலேயே மாணவரிடத்திலும் பேராசிரியப் பெருமக்களிடத்திலும் ஒருங்கே நற்புகழ் பெறத் துணை செய்தன.  பதிப்புப் பணி இக்காலத்தில் கும்பகோணத்தில் மாவட்ட முனிசீபாக இருந்த சேலம் இராமசாமி முதலியார் தொடர்பு சாமிநாத ஐயருக்கு வாய்த்தது. முதலியார் அவர்கள் நிறைந்த தமிழ்ப் பற்றாளர்; புலமை நெஞ்சம் வாய்ந்தவர். எனவே சீவகசிந்தாமணியைச் சாமிநாதஐயரிடம் பாடம் கேட்கத் தொடங்கினார். பின் அந்நூலைப் பதிப்பிக்க வேண்டுமென்று வேண்டினார். அதுவரை சிந்தாமணி ஒரு சிலருக்கு மட்டுமே ஓலைச்சுவடி வடிவில் காட்சி வழங்கிக் கொண்டிருந்தது. பழம் பெருமை வாய்ந்த-தொன்மை வாய்ந்த-தமிழ் இலக்கியங்கள் பல கடல்கோளாலும், தமிழர் கவனக் குறைவாலும் அழிந்து ஒழிந்தன. இறையனார் களவியல் உரை குறிப்பிடும் பல இயற்றமிழ் நூல்களும், இசைத்தமிழ் நூல்களும், நாடகத் தமிழ் நூல்களும் பெயர் அளவில் தெரிய வருகின்றனவே அன்றி, அவைகள் இன்று நமக்குக் கிடைக்கவில்லை. இளங்கோவடிகளும், சிலப்பதிகாரத்தில்,  ‘வடிவேல் எறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள’  என்று தமிழகத்தின் தென்பகுதி வெள்ளத்தால் அழிந்த செய்தியினைப் புலப்படுத்தியுள்ளார். சாமிநாத ஐயரும் அவர் வாழ்ந்த காலத்தில் மூடபக்தி நிறைந்த பொதுமக்கள் சிவ ஓலைச்சுவடிகளை ஆடிப்பெருக்கில் விட்ட அவல நிலையினைப் பின்வருமாறு சுட்டியுள்ளார்.  ‘ஆடி மாதம் 18ஆம் தேதியில் பழஞ் சுவடிகளை எல்லாம் சேர்த்து ஒரு சப்பரத்தில் வைத்து மேள தாளத்துடன் இழுத்துச் சென்று ஆற்றிலோ குளத்திலோ விடுவார்கள்.’  (என் சரித்திரம்; பக்கம்: 85)  என்று குறிப்பிட்டுள்ளார். எனவே ஓலைச்சுவடி விடுவோரிடமிருந்து பெற்றுப் பழம்பெரும் நூல்களை அச்சு வாகனம் ஏற்றிய பெருமைக்கு உரியவராகச் சாமிநாத ஐயர் விளங்குகிறார். சேலம் இராமசாமி முதலியார் தூண்டுதலினால் சமண நூலாகிய சிந்தாமணி நூலை ஆராய்ந்தார். ஜைன சமய உண்மைகளைச் சமணப் புலவர்களிடம் உரையாடித் தெரிந்து கொண்டார். 1887ஆம் ஆண்டு சீவகசிந்தாமணியை நச்சினார்க்கினியர் உரையோடு வெளியிட்டார். அந்தப் பதிப்பு இவருக்குத் தமிழ்கூறு நல்லுலகத்தில் பெருமதிப்பைத் தேடித் தந்தது. சிந்தாமணிக்குப் பின் பத்துப்பாட்டும், சிலப்பதிகாரமும், புறநானூறு, மணிமேகலை முதலிய நூல்களும் வெளிவந்தன. புறநானுாறு பழந்தமிழகத்தின் வரலாற்றுக் கருவூலமாக விளங்குவது. எனவே பழந்தமிழரின் கொடை வளத்தையும் வாழ்க்கை வளத்தையும் அறிந்து கொள்ளத் தலைப்பட்டார். இவர் தொண்டால் முதற் பெருங்காப்பியமான சிலப்பதிகாரம் மக்களிடையே பரவத் தொடங்கியது. பெளத்த சமய நூலான மணிமேகலை தமிழரிடையே அறக்கருத்தைப் போதித்தது. பத்துப்பாட்டின் இலக்கியப் பெருந்தமிழ் மக்களின் நெஞ்சைக் கவர்ந்தது. ஐயர் அவர்களின் பெருமையும், அறிவும், பண்பாடும்: பதிப்புத் திறமையும், தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த பாராட்டைப் பெற்றன. பின் ஐயர் அவர்கள் ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல் என்னும் தொகை நூல்களை வெளியிட்டார். கொங்குவேள் என்னும் புலவர் இயற்றிய ‘பெருங்கதை’ என்னும் இடைக்கால இலக்கியம் அச்சுக்கு வந்தது.  இலக்கிய நூல்களைப் பதிப்பித்ததோடு அன்றி இலக்கண நூல்களையும் சாமிநாத ஐயர் நன்கு பதிப்பித்தார். புறப்பொருள் வெண்பா மாலை. நன்னூல் மயிலைநாதர் உரை, நன்னூல் சங்கரநமச்சிவாயர் உரை முதலான இலக்கண நூல்களைப் பதிப்பித்தார்.  அடுத்து, சமய இலக்கியங்களையும் இவர் திறமையாகப் பதிப்பித்தார். நம்பி திருவிளையாடல், திருக்காளத்திப் புராணம் முதலியன இவரால் வெளியிடப் பெற்றன. கோவை, உலா, அந்தாதி, கலம்பகம், பரணி, பிள்ளைத் தமிழ். குறவஞ்சி முதலிய சிறுபிரபந்த நூல்கள் இவரால் உரையுடன் பதிப்பிக்கப் பெற்றன.  பதிப்பின் திறம்  ஏட்டிலிருந்த பாடத்தை இவர் அப்படியே பதிப்பிக்கவில்லை. ‘ஏடு எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்’ என்பது தமிழ்நாட்டுப் பழமொழி. ஆதலால் ஒரு முறைக்குப் பலமுறை நன்கு ஆராய்ந்து செல்லரித்துப் போன இடத்தையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, தக்க பாடங்களை ஊகித்துத் தம்பாலுள்ள பயிற்சியாலும், இயற்கையான அறிவுத் திறமையாலும் பழஞ்சுவடிகளை ஆராய்ந்து செப்பம் செய்தார். திக்குத் தெரியாத காட்டில் நுழைந்து தாமே வழி அமைத்துக் கொண்டு புஞ்சைக் காட்டை நஞ்சைக் காடாக்கிய நல்ல அறிவு உழவர் இவர். இவருடைய பதிப்பின் திறம் இன்று பேராசிரியப் பெருமக்களால் ஒருமுகமாகப் பாராட்டப் பெறுகின்றது. இவர், தாம் பதிப்பித்த ஒவ்வொரு நூலுக்கும் எழுதியுள்ள முகவுரையும், ஆசிரியர் வரலாறும் நூலைப் பற்றிய குறிப்புகளும், பிற செய்திகளும், அறிவு உலகத்தால் என்றென்றும் பாராட்டப்படும் தகுதி வாய்ந்தன. இவர் எடுத்துக் கொண்ட உயர்வு மிக்க சிறப்பு, ஊக்கம் நிறைந்த உயர் உழைப்பாகும். எனவே மறைந்த இராஜாஜி அவர்கள் இவரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது;  ‘சாமிநாத ஐயர் முயற்சியுடன் எறும்பும் தேனீயும் போட்டி போடலாம்’ என்றும், ‘தமிழ்மொழியின் லாவகமும்’ எளிய நடையில் ஆழ்ந்த பொருள்களை அளிக்கும் அதன் ஆற்றலும் இவரால் நமக்குத் தெரிய வந்தன.’  என்றும், ‘தமிழ் வியாசர்’ என்றும் இவரைப் போற்றியுள்ளார். இவருடைய பதிப்பு நூல்களில் ஒவ்வொரு பக்கங்களின் அடியிலும் அடிக்குறிப்பில் பலவகையான நூல்களிலிருந்து எடுத்துக்காட்டப் பெற்ற ஒப்புமைப் பகுதிகளும் சொல்லாற்றல் வளமும் காணப்பெறும். நூலின் இறுதியில் நூல் களில் வந்துள்ள பொருள்களின் பெயர் அகராதி (Word–index) இருக்கும். ஆகையால் ஆசிரியரின் உதவியின்றியே பயிலும் வகையில் இவருடைய பதிப்புகள் சிறப்பாக அமைந்துள்ளன.  உரைநடைப் பணி தாம் பதிப்பித்த நூல்களின் முன்னுரையில் அந்நூலைப் பற்றிய சிறந்த செய்திகளை-ஆராய்ச்சி நலன்களை அழகுச் செவ்விகளைப் புலப்படுத்த எளிய இனிய உரைநடையினைக் கையாண்ட சாமிநாத ஐயர், விரிந்த அளவில் மணிமேகலைக் கதைச் சுருக்கம், புத்த தர்மம், உதயணன் கதைச் சுருக்கம் முதலிய உரைநடை நூல்களை எழுதினார். மேலும் இவர் கோபாலகிருஷ்ண பாரதியார், வைத்தியனாதையர், கனம் கிருஷ்ணய்யர் முதலிய பெரியோர் வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். ‘நல்லுரைக் கோவை’ இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தாங்கி நான்கு பகுதிகளாக வெளிவந்துள்ளது. ‘நினைவு மஞ்சரி’ இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரை கொண்ட இரு தொகுதிகளாகும். ‘புதியதும் பழையதும்’, ‘கண்டதும் கேட்டதும்’ முதலியன நல்ல தமிழ் நூல்களாகும்.  சென்னை மாற்றம் 1903ஆம் ஆண்டு வரை குடந்தை அரசினர் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக விளங்கிய இவர் 1903ஆம் ஆண்டிலிருந்து 1919ஆம் ஆண்டு வரை சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகக் கொலு வீற்றிருந்தார். கல்லூரியில் மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லித் தருவதோடு அமையாமல் வீட்டிலும் தம்மிடம் பயில வந்த மாணவர்களுக்கு இவர் பாடம் சொல்லிக் கொடுத்து வந்தார். இவரிடம் பாடம் கேட்டவர்களில் வியாசபாரதத் தமிழ்மொழி பெயர்ப்பு ஆசிரியர் ஆகிய மகோ மகோபாத்தியாய இராமானுஜாச்சாரியர், திருப்பனந்தாள் காசிமடத்துத் தலைவராக விளங்கிய சொக்கலிங்கத் தம்பிரான், துள்ளும் நடையில் நெஞ்சையள்ளும் காவடிச் சிந்து பாடிய சென்னி குளம் அண்ணாமலை ரெட்டியார் முதலியோர் முக்கியமானவர்கள் ஆவர். இவரிடம் பயின்று ஆராய்ச்சி முறையைக் கற்றுக்கொண்ட பின்னர் நற்றிணையைப் பதிப்பித்தவர் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் ஆவர். மற்றொருவர் இ. வை. அனந்தராம ஐயர் ஆவர். இவர் கலித்தொகையைப் பதிப்பித்தார்.  அண்ணாமலைப் பணி 1924 முதல் 1927 வரையில் செட்டி நாட்டு அரசர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி, அவர்கள் சிதம்பரத்தில் நிறுவிய மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் தலைவராகப் பணியாற்றினார்.  ஓய்வுக் காலப் பணி பணியிலிருந்து ஓய்வுபெற்றபின் ஏறத்தாழ 25 ஆண்டுகள் தமிழ் நூற்பதிப்பிலேயே தம் காலத்தை ஐயரவர்கள் கழித்து வந்தார். தம் வாழ்நாள் அனுபவங்களை விரிவான உரை நடையில் எழுதத் தொடங்கினார். பல பத்திரிகைகளின் மலருக்குக் கட்டுரைகள் வழங்கினார். கலைமகளில் மாதந் தோறும் ஒரு கட்டுரை எழுதி வந்தார். அவர் கட்டுரைகளில் தமிழ் மக்களின் பழம் பெருமையையும் புலவர் பெருமக்களின் வரலாறுகளையும் பண்புகளையும் விளக்கி எழுதினார். தம் ஆசிரியராகிய மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரத்தை இரண்டு பாகங்களில் விரிவாக எழுதி 1933, 1934 ஆம் ஆண்டுகளில் வெளியிட்டார்.   சென்னைப் பல்கலைக் கழகத்தில் சொற்பொழிவுப் பணி  1927 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆதரவில், சங்ககாலம் பற்றிப் பத்துச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அச்சொற்பொழிவு சங்க காலத் தமிழும் பிற்காலத் தமிழும் என்ற பெயரோடு புத்தக வடிவில் வந்திருக்கிறது. இவர் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்ச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வேண்டு கோளுக்கிணங்க இவர் குறுந்தொகைப் பதிப்பினை வெளியிட்டார். பதிப்பு நூல்களில் குறுந்தொகை நூலை முடிமணியாகக் கொள்ளலாம். அந்த அளவிற்கு அந்நூலில் உழைப்பின் உண்மையும், ஆராய்ச்சியின் உயர்வும் ஒருங்கே விளங்கக் காணலாம்.  பட்டமும் பாராட்டும் அரசாங்கத்தார் இவருடைய தமிழ்த் தொண்டைப் பாராட்டி 1906ஆம் ஆண்டில் ‘மகாமகோபத்தியாய’ என்ற பட்டத்தை வழங்கினர். 1917ஆம் ஆண்டு ‘பாரத தர்ம மண்டலத்தார்’ ‘திராவிட வித்யா பூஷ்ணம்’ என்ற பட்டத்தையும், 1925ஆம் ஆண்டில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஆகிய ஸ்ரீசங்கராச்சாரியார், தகதினாத்ய கலாநிதி என்ற பட்டத்தையும் வழங்கினர். சென்னைப் பல்கலைக் கழகம் ‘டாக்டர்’(டி.லிட்.) என்ற கெளரவப்பட்டத்தை 1932ஆம் ஆண்டில் வழங்கியது. பல்வேறு பல்கலைக் கழகங்களின் பாடநூற் குழுவிலும் தேர்வுக் குழுவிலும் இவர் பணியாற்றினார்.  இறுதிக் காலம் 1936 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி இவருக்கு 80 ஆண்டுகள் நிறைவு அடைந்ததும், தமிழுலகம் இவருடைய ‘சதாபிடேக’ விழாவைக் கொண்டாடியது. அவருடைய 80ஆம் வயதில் குறுந்தொகைப் பதிப்பும் சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள், குமரகுருபரர் திரட்டு ஆகிய நூல்களும் வெளிவந்தன. ஐயரவர்கள் தம் வரலாற்றை ரசிகமணி டி.கே சி., கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஆனந்தவிகடன் வாசன் முதலியோர் வேண்டுகோளின்படி ‘என் சரித்திரம்’ என்ற தலைப்பில் 1940 ஜனவரி முதல் எழுதத் தொடங்கித் தொடர்ந்து 122 அத்தியாயங்கள் எழுதி முடித்தார். 1942ஆம் ஆண்டு உலகப் பெரும்போர் நிகழ்ந்தபோது ஐயரவர்கள் தம் குடும்பத்துடன் திருக்கழுக்குன்றம் சென்று தங்கினார். அங்கே ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி (1942) உலக வாழ்வை நீத்தார். இவர் இறக்கும்போது இவருக்கு வயது 86. 1948ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவர் பணியாற்றிய சென்னை மாநிலக் கல்லூரியில் இவர் முழு உருவச் சிலை ஒன்று நிறுவப்பட்டது.  பண்பு நலன் ஐயரவர்கள் சிறந்த பண்புள்ளவர். தம்மிடம் பேசுபவர்களுடைய இயல்பு அறிந்து பேசும் இயல்பும், தம்மிடம் தமிழ் படிக்க வரும் மாணாக்கரிடம் நிறைந்த பேரார்வமும் கொண்டவர், மாணவர்களின் தகுதியறிந்து பாடம் சொல்லும் திறமை பெற்றவர். பல அவைகளுக்கு இவர் தலைமை தாங்கியிருக்கிறார்; சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார். இவரோடு உரையாடும்போது பழஞ்செய்திகளையும் இலக்கியச் சுவை மலிந்த நூற்பகுதிகளையும் கேட்டு மகிழலாம். இவர் பேச்சில் நகைச்சுவை மிகுதியாக இருக்கும். தெளிவான நடை இவருக்குக் கைவந்த கலை. இவர் கவிதைகள் சிலவற்றையும் இயற்றியுள்ளார். தேசியகவி சுப்பிர மணிய பாரதியார் இவரிடம் பெருமதிப்புக் கொண்டு மூன்று பாடல்களை இவர் குறித்துப் பாடியுள்ளார். அவற்றில் நம் நெஞ்சை மகிழ வைக்கும் பாடற்பகுதி வருமாறு :  ‘நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி இன்பவகை நித்தங் துய்க்கும் கதியறியோம் என்று மனம் வருந்தற்க; குடந்தைநகர்க் கலைஞர் கோவே! பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில் துதியறிவாய், அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய், இறப்பின்றித் துலங்கு வாயே.’  இவருக்கு ஒரே ஒரு மகன் பிறந்தார். அவர் பெயர் கலியாணசுந்தர ஐயர். ஐயர் அவர்கள் சேமித்து வைத்திருந்த சுவடிகளையெல்லாம் அவர் அடையாறு கலாக்ஷேத்திராவிற்கு வழங்கினார். அடையாறு கலாக்ஷேத்திராவில் டாக்டர் சாமிநாத ஐயர் நூல் நிலையம் ஒன்று இப்பொழுது நடை பெற்று வருகிறது.  1955 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவருடைய நூற்றாண்டு விழா தமிழ்நாடு எங்கும் கொண்டாடப் பெற்றது.  இவர்தம் சிறப்பாகக் குறிக்கத்தக்க - நாம் விரும்பிப் போற்றத்தக்க பண்பு - இவருடைய நன்றிமறவா நல்லுள்ளம் ஆகும். தமக்கு வேலை வாங்கித் தந்த தியாகராசச் செட்டியார் நினைவாக இவருடைய வீட்டின் பெயர் இன்றும் ‘தியாகராச விலாசம்’ என்றே வழங்கப் பெறுகின்றது. திருவல்லிக்கேணி திருவேட்டீசுவரன் பேட்டை, பிள்ளையார் கோயில் தெரு, 53ஆம் எண் வீடாக உள்ளது.  முடிவுரை தமிழ்த் தாத்தா என்று சாமிநாத ஐயரவர்களைத் தமிழ் உலகம் கொண்டாடுகிறது. இவருடைய முயற்சியும், உழைப்பும் தமிழுக்கு அழியாத செல்வங்களைத் தந்தன. செல்லரித்துச் சிதைந்துபோன - கரையான் அரித்துத் திருத்தம் இழந்த நம் பழம்பெரும் இலக்கியங்களையெல்லாம் பேருழைப்பு மேற்கொண்டு திருத்தமாகப் பதிப்பித்து. தமிழர் கைகளில் தவழவைத்த தனிப்பெருமை இவர்களையே சாரும். இவர் தொண்டு என்றும் நிலைத்திருக்கும். இவர்தம் ஊக்கமும், முயற்சியும், தொண்டும் வாழ்வும், நன்றிமறவா நல்லுள்ளமும் என்றும் போற்றற் பாலனவாகும்.                                          2. செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார்   இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் நாட்டின் பங்கு குறிப்பிடத் தகுந்ததாகும். அதிலும் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் பங்கு அளவிடற்கரியதாகும். அன்னிய ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்ததோடல்லாமல் அமைதியாகத் தமிழ் இலக்கியப் பணியினையும் ஆற்றிய பெருமை அவரைச் சாரும். தமிழார்வத்தில் தலைப்பட்டு நின்ற அவர் கடலில் கலம் செலுத்த நினைத்ததோடு நிலையான தமிழ்த் தொண்டினையும் ஆற்ற முனைந்தார். அந்நல்லுள்ளத்தின் பயனாகச் சில நற்பேறுகள் தமிழிற்கு வாய்த்தன எனலாம்.  வாழ்வு பாண்டிநாட்டுச் சீமையில் ‘திக்கெலாம் புகழும் திருநெல்வேலி’ மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் என்றோர் அமைதியான சிற்றூரில் வாழ்ந்தவர் கவிஞர் சிதம்பரம் பிள்ளை ஆவர். அவர் தம் பேரனாரே நம் பாராட்டிற் குரிய சிதம்பரனார் ஆவர். சிதம்பரனாரின் பெற்றோர் உலகநாத பிள்ளையும் பரமாயி அம்மையாரும் ஆவர். இவர் பிறந்தது 5-8-1872ல் ஆகும். இவருக்குத் திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியராக வீரப்பெருமாள் அண்ணாவியாரும், பள்ளியாசிரியராக அறம் வளர்த்த நாத பிள்ளையும் அமைந்தனர். தூத்துக்குடி புனிதசவேரியார் உயர் பள்ளியிலும் கால்டுவெல் கல்லூரியிலும் கல்வி கற்று 1891ஆம் ஆண்டு ‘மெட்ரிகுலேசன்’ தேர்வில் வெற்றி பெற்று. ஒட்டப்பிடாரம் தாலுக்கா அலுவலக எழுத்தர் பணியினைச் சில திங்கட் காலம் வரை பார்த்தார்.  1894ஆம் ஆண்டில் இவருக்குத் திருமணம் நடை பெற்றது. மனைவியார் பெயர் வள்ளியம்மை என்பதாகும். அதற்கு அடுத்த ஆண்டில் திருச்சியில் கணபதி ஐயர், அரிகர ஐயர் ஆகிய இருவரிடமும் சட்டக்கல்வி பயின்று, அத்துறையில் தேர்ச்சி பெற்று, தம் சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்தில் வழக்குரைஞர் தொழில் செய்தார். பின்னர் 1900ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அப்பணியைத் தொடர்ந்து ஆற்றினார்.  சிதம்பரம் பிள்ளை அரசியல் துறைக்குத் தம் வாழ்வை நேரடியாகத் தீவிரமாகப் பயன்படுத்திய ஆண்டுகள் ஏறத்தாழ இரண்டே ஆண்டுகள் எனலாம். 1906ஆம் ஆண்டு சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்றைத் தொடங்கினார். வ.உ.சி. 1907ஆம் ஆண்டில் சூரத் நகரில் கூடிய காங்கிரஸில் இவர் கலந்து கொண்டார். லோகமானிய திலகர் வ.உ.சி யின் அரசியல் குரு ஆவர். இவர் ஒரு தீவிரவாதி. எனவே, 1908ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் ‘தேசாபிமான சங்கம்’ வ.உ.சி.யின் முயற்சியால் நிறுவப்பெற்றது. சுப்பிரமணிய சிவா என்னும் பிறிதொரு தேசபக்தரோடு சேர்ந்து கொண்டு தம் சீரிய வீரப்பேச்சால் நாட்டுப் பற்றினை மக்கள் மனத்தில் கிளர்ந்தெழச் செய்த வ.உ.சி. 1908ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 12ஆம் நாள் திருநெல்வேலி கலெக்டர் விஞ்ச் துரையால் சிறைப்படுத்தப்பட்டார். அந்த ஆண்டு ஜூலைத் திங்கள் 7ஆம் நாள் நீதிபதி பின்ஹே வ. உ. சி.யின் பேரில் அரசநிந்தனைக் குற்றத்திற்காக இருபது ஆண்டு ஆயுள் தண்டனையும், சுப்பிரமணிய சிவாவிற்கு உடந்தையாக இருந்ததற்காக இருபது ஆண்டு ஆயுள் தண்டனையும் விதித்து, இரண்டு தண்டனைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக நாற்பது ஆண்டுகள் அனுபவிக்க வேண்டுமெனக் கூறினார். சென்னை உயர்நீதி மன்றத்தில் இத்தண்டனை ஆறாண்டுக் காலமாகக் குறைக்கப்பட்டது. பிரிவி கவுன்சிலுக்கு அவர் நண்பர்கள் விண்ணப்பித்தபோது அந்தமான் சிறைவாசத் தண்டனை ஆறு ஆண்டுக் கடுங்காவல் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.  பின்ஹே அளித்த தீர்ப்பில், “பிள்ளை பெரிய ராஜத் துரோகி; அவரது எலும்புக்கூடு கூட ராஜ விசுவாசத்திற்கு விரோதமானது” என்ற குறிப்புக் காணப்படுகின்றது. மேலும் அவர், “பிள்ளையின் பேச்சையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால், செத்த பிணம் உயிர்த்தெழும்; அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்; புரட்சி ஓங்கியெழும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.  வெள்ளையர் என்றால் விதிர் விதிர்த்துப் பயந்து நடுங்கிய காலத்தில் வ.உ. சி. நாட்டுப் பற்றில் தலை சிறந்த தலைமகனாய்த் தம் வாழ்வையே பணயம் வைத்துச் செக்கிழுத்துச் சிந்தை நொந்து வாடிய ஆண்டுகள்-கோயமுத்தூர்ச் சிறையிலும் கண்ணனுார்ச் சிறையிலுமாகச் சேர்ந்து துன்பப் பட்ட ஆண்டுகள்-நான்கரை ஆண்டுகள்தாம். எனினும் கூட, அவர் ‘கப்பலோட்டிய தமிழர்’ என்றும், ‘செக்கிழுத்த செம்மல்’ என்றும் தமிழ் மக்களால் போற்றப்படுகின்றார். சிறையிலே தொடங்கிய அவர் தாய்மொழிப் பணி அவர் இறக்குந்தருவாயிலும் அதாவது 1936ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ இருபத்தெட்டு ஆண்டுகள் தொடர்ந்து நடை பெற்றது.  வ. உ. சி. யின் அரசியல் தொண்டுகள் நாட்டு மக்களால் நினைவு கூரப்படுகின்ற அளவிற்கு அவர்தம் செந்தமிழ்ப் பணிகள் மக்களால் அறியப்பட முடியாமல் உள்ளது. காரணம். அவர்தம் செந்தமிழ்ப் பணியினையும் மீறி அவர்தம் நாட்டுப் பணி ஒளிமிகுந்ததாய் உளது எனலாம். மேலும் பாரதியார்,  “மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் கோவதுவுங் காண்கிலையோ”  என்றும் பாடியுள்ளமை கொண்டு, வ. உ. சி.யைப் பற்றி எண்ணும்பொழுது பாரதியாருக்கு முதலில் நினைவிற்கு வருவது அவர்தம் அரசியல் தொண்டே எனலாம். இதனையே அவர் பிறிதோர் இடத்தில்,  ‘வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார் மன்னைெ ன மீண்டான்’ என்றே கேளாத கதைவிரைவிற் கேட்பாய்நீ வருந்தலைஎன் கேண்மைக் கோவே! தாளாண்மை சிறிதுகொலோ யாம்புரிவேம் நீ இறைக்குத் தவங்கள் ஆற்றி வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே வாழ்த்துதிநீ வாழ்தி! வாழ்தி!’  (பாரதியார் கவிதைகள் வ.உ. சிக்கு வாழ்த்து: பக். 82)  என்றும் பாடியுள்ளார்.  ஆயினுங்கூட அவராற்றிய செந்தமிழ்ப் பணிகள் நம் சிந்தை குடிகொள்ளத்தக்க சீரிய பணிகளேயாம் என்பது பின்வரும் சான்றுகளால் விளங்கும். வ.உ.சி. பிறந்த திருநெல்வேலிச் சீமை, இயல்பாகவே நாட்டுப் பற்றிற்கும் மொழிப்பற்றிற்கும் பிறப்பிடமாக என்றென்றும் விளங்கி வருவதோரிடமாகும். எனவே, தமிழ் மொழியினை விருப்போடும் ஆழமாகவும் இளமை தொட்டே பயின்ற செம்மல் சிதம்பரனார், ஆரவார அரசியல் வாழ்க்கையில் அவர் பெற்ற சிறைவாசத்தின்போது, செந்தமிழ்ப் பணியில் தலைப்படலானார்.  அவர்தம் செந்தமிழ்ப் பணிகளை நான்கு வகைப்படுத்திக் காணலாம். 1. மொழிபெயர்ப்புப் பணி; 2, படைப்பிலக்கியப்பணி; 3. உரையாசிரியப் பணி; 4. பதிப்பாசிரியப் பணி.  முதலாவது மொழி பெயர்ப்புப் பணியினைக் காண்போம்:  1. மொழிபெயர்ப்புப் பணி  ஜேம்ஸ் ஆலன் என்னும் மேனாட்டுப் பெரியாரின் கருத்துகள் சிதம்பரனாரின் நெஞ்சைப் பிணித்தன.‘அகத்திலிருந்து புறம்’ (Out from the heart) என்னும் நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். கோயமுத்துார்ச் சிறைவாசத்தின் போது இந்நூல் மொழிபெயர்க்கப்பெற்று, அவர் விடுதலை அடைந்த இரண்டு ஆண்டுகளில், அதாவது 1-4-14 அன்று ‘அகமே புறம்’ என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது. நூலின் முன்னுரையில் வ.உ.சி. குறிப்பிடுவன  வருமாறு :  “இந்நூலைத் தமிழறிந்த ஒவ்வொரு ஆடவரும் பெண்டிரும், சிறுவரும் சிறுமியரும் கற்க வேண்டு மென்பதும். இந்நூல் நமது நாட்டில் நிலவும் பலமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டுமென்பதும், இந்நூல் எஞ்ஞான்றும் நின்று நமது நாட்டில் நிலவவேண்டுமென்பதும் எனது விருப்பம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.  சா-3 இந்நூலிற்குச் சுவாமி சகஜானந்தர் என்பவர் அணிந்துரை வழங்கியுள்ளார். நூலின் முகப்பில் வ.உ.சி. குறித்துள்ள செய்யுளொன்று நம் சிந்தனையைக் கிளறுவதாயுளது.  “அறத்தைக் காணா அறிவே மரமாம்; அறத்தைப் பிழைத்த அறிவே மிருகம்; அறத்தைப் புரியும் அறிவே மனிதன்; அறத்தைக் காக்கும் அறிவே கடவுள்.”  அடுத்து, மனத்தின் தன்மையும் வன்மையும் பற்றி அவர் மொழிபெயர்ப்பில் குறிப்பிட்டிருப்பதாவது  “மனம் தளர்ச்சியின்றி வாழ்க்கை நிலைமை யாகிய வஸ்திரத்தை நெய்துகொண்டிருக்கிறது; நினைப்பு நூல்; நல்ல செயல்களும் தீய செயல் களும் பாவும் ஊடும்; ஒழுக்கம் வாழ்வாகிய தறியில் நெய்யப்படும் வஸ்திரம். மனம் தான் நெய்த வஸ்திரத்தால் தன்னை உடுத்துக் கொள்கிறது.”  76 பக்கமே கொண்ட இந்நூலில் ஆலன் கருத்தை அரண் செய்யத் திருக்குறட்பாக்களை மேற்கோள் காட்டியுள்ளார், எட்டனா விலையில் இந் நூலின் இரண்டாம் பதிப்பு 1916ஆம் ஆண்டு சென்னை புரோகிரஸிவ் பிரஸ்ஸில் அச்சியற்றப்பட்டு வெளி வந்துள்ளது. இலக்கிய நூல்கள் ஆயிரம் படிகள் அச்சிட்டால் விற்பனையாக நான்கைந்து ஆண்டுகள் பிடிக்கும் என்று பதிப்பாளர்கள் பயப்படும் நிலைமை இந்நாளில் இன்றும் நிலவ, வ.உ.சி. அவர்கள் இரண்டாம் பதிப்பின் பாயிரத்தில்-முன்னுரையில்-குறிப்பிட்டுள்ளன  வருமாறு :  “1914-ஆம் வருஷத்தில் வெளிவந்த இந்நூலின் முதற் பதிப்பில் ஆயிரம் பிரதிகள் அச்சிடப் பெற்றன. இந் நூலைத் தமிழ் மக்கள் பலரும் விரும்பியதால் அவ்வாயிரம் பிரதிகளும் விரைவில் செலவாய் விட்டன. அதனால் இந் நூலை இரண்டாம் முறை அச்சிட்டு முடித்தேன்.”  மேலும் அவர்,  “இப்பதிப்பின் தமிழ் நடையைச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரி சுதேசபாஷா அத்தி யகூடிகர் ஸ்ரீமான் தி. செல்வக்கேசவராய முதலியார் (எம்.ஏ.) அவர்கள் அழகுபடுத்தித் தந்தார்கள்.”  என்றும் குறிப்பிட்டுள்ளது கொண்டு, திருமணம் செல்வக் கேசவராய முதலியார் அவர்களிடம் வ.உ.சி. கொண்ட மதிப்பும் நூல்களைத் திருத்தமுறப் பதிப்பிக்க வேண்டும் என்று அவர் கொண்ட ஆர்வமும் புலனாகக் காணலாம்.  அடுத்து இவர் ஜேம்ஸ் ஆலனின் மற்ற நூல்களைச் ‘சாந்திக்கு மார்க்கம்’, ‘மனம்போல வாழ்வு’, ‘வலிமைக்கு மார்க்கம்’ என்ற தலைப்புகளில் வெளியிட்டுள்ளார்.  பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழ் மொழியில் தகவுடன் தர வ.உ.சி. கொண்டிருந்த வற்றாத ஆர்வத்தினை இந்நூல்கள் வழிக் காணலாம்.  2. படைப்பிலக்கியப் பணி  அறத்தின் வழிப்பிறழாத நெஞ்சினர் வ.உ.சி. திருக்குறளில் நெஞ்சம் தோய்ந்தவர்; குறள் வழியே தம் வாழ்வை நடத்தி நின்றவர். அறத்தான் வருவதே இன்பம் என்று நம்பியவர். எனவே. அறத்தின் ஆற்றலை அவனிக்கு உணர்த்த விரும்பி, ‘மெய் யுணர்வு’ என்னும் நூலினைக் கண்ணனூர்ச் சிறைவாசத்தின் போது எழுதினார். அறத்தின்பால் நெஞ்சம் நெகிழும் ஓர் ஆண்மகனை ஓர் ஆசிரியன் உருவாக்கும் வகையில் இந் நூல் அமைந்துள்ளது. நூறு வெண்பாக்கள் கொண்ட இந்நூலில் வ.உ.சி.யின் கவிதை நலமும் கருத்து வளமும் பின்னிப் பிணைந்திருக்கக் காணலாம். வைகறைப் போதில் ஒருவன் செய்யத்தக்க பணிகளாக இந்நூலில் வ.உ.சி. குறிப்பிடுவன வருமாறு :  “வைகறையிற் கண்விழித்து மாசொழித்து மெய்யறங்கள் கைவருதற் கீசனருள் கண்ணிமைப்பின் மையல் அறுத்தற்கா நூனன்காய்ந்து யானை உர மெய்யிற் செறுத்தற்கா நற்சிலம்பம் செய்.”  வைகறையில் துயிலெழுந்து, காலைக் கடன்களை முடித்து, ஈசனருள் பேணி, நன்னூல்களை ஆராய்ந்து கற்று, உடல் வலிமை பெறச் சிலம்பம் பயிலவேண்டும் என்று குறிப்பிடும் இவ் அரிய நூலிற்கு, அட்டாவதானம் கலியாண சுந்தர யதீந்திரர் என்னும் பெரியார் சிறப்புப் பாயிரமாம் அணிந்துரையினை வழங்கியுள்ளார்.  இவர் இயற்றியுள்ள சுய சரிதை நூல் இவர் நுண்மாண் நுழைபுலத்தினை விளக்கும். மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்வில் தேர்ச்சிபெற்ற வ.உ.சி. தம் முதல் மனைவி வள்ளியம்மை குறித்து எழுதுவன காண்க :  “என்னுடைய நேயர்களும் ஏழைபர தேசிகளும் என்னுடைய வீடுவந்தால் ஏந்திழைதான்-தன்னுடைய பெற்றோர்வந் தார்களெனப் பேணி உபசரிப்பாள் கற்றோரும் உள்ளுவக்கக் கண்டு.”  சிறையிலிருந்துகொண்டு தம் அன்னை, ஆருயிர்த் துணைவி, நண்பர்கள் முதலியோருக்கு இவர் எழுதிய கவிதை மடல்கள் நெஞ்சையுருக்கும் நீர்மையன; செந்தமிழ் நலம் தோய்ந்த சீர்மையன.  ‘மெய்யறம்’ என்னும் பெயரிய நூல் மாணவவியல், இல்வாழ்வியல், அரசியல், அந்தணவியல், மெல்லியல் என்னும் ஐந்தியலும் நூற்றிருபத்தைந்து அதிகாரமுமாக முடிந்த நூலாகும். இந் நூலினைத் திருக்குறளின் வழிநூல் எனலாம். எண்வகை வனப்பில் ‘தோல்’ எனும் வனப்புக் கொண்டு, முதுமொழிக் காஞ்சி போன்று திட்ப நுட்பஞ் செறிந்திலங்குவதாகும்.  இந்நூலினைப் பற்றித் திரு. தி. செல்வக்கேசவராய முதலியார்,  “தமிழ்ப் புலவரேயன்றி இங்கிலீஷ் படித்த புலவரிற் பலரும் இந்நூலின் திறத்தை மெச்சுவர் என்பது துணிபு. ஒரு முறை கண்ணுறுவோர்க்கு இந்நூலின் அருமை தானே புலப்படுமாதலால், அதனை இங்கு விரிப்பது மிகையாம். இந்நூல் நின்று நிலவுக என்பது என் வேண்டுகோள்.”  என்று குறிப்பிட்டுள்ளார்.  ‘பாடற்றிரட்டு’ என்னும் நூல் இரு பாகங்கள் கொண்டது; சிறை வாசத்திற்கு முன் பாடிய பாக்கள் முதற்பாகமாகவும். கோயமுத்துார் கண்ணனூர்ச் சிறைவாச காலத்தில் பாடிய பல தனிப்பாக்கள் இரண்டாம் பாகமாகவும் சேர்க்கப்பட்டுள்ளன. பாடல்கள் எல்லாம் நவின்றோர்க்கினிய நன்மொழிகளால் விழுமிய பொருள் பயக்குமாறு இனிய ஓசை கொள்ள யாக்கப்பட்டுள்ளன. நீதி போதனைச் செய்யுள்கள் பண்டைக்கால நீதி நூற்களோடொப்பத் திட்ப நுட்பங் கொண்டுள்ளன. தம் மனைவியார் வள்ளியம்மை குறித்து இவர்  குறிப்பிடும் பகுதி வருமாறு :  “மகராசி என்னும் வள்ளி யம்மையை நன்மனை அறங்களை நன்கு வளர்த்திட முன்மனை யாக மொய்ம்பொடு கொண்டேன் ......................................................................... எனதொரு வடிவும் எனக்குறு தொண்டுமே கனவிலும் நனவிலும் கண்டவள் நின்றவள் என்னைப் பெற்றோர், என்னொடு பிறந்தோர் என்னை நட்டோர் யாவரும் தன்னுடை உயிரெனக் கருதி ஊழியம் புரிந்த செயிரிலா மனத்தள்; தெய்வமே அனையள்.”  இப்பாடல் வழி வ.உ.சி.யின் தெள்ளுதமிழ் அகவல் நடையின் அழகினையும் மாண்பினையும் உணரலாம்.  3. உரையாசிரியப் பணி  நாளும் தமிழ்ப் பணியில் கருத்தூன்றிய சிதம்பரனார் தம் வாழ்வின் இறுதிக்காலத்தில் சிவஞான போதத்திலும், கைவல்ய நவநீதத்திலும் பெரிதும் ஈடுபட்டார். சிவஞான போதத்திற்கு ஓர் உரை கண்டு வெளியிட்டார். சித்தாந்தப் புலமையும் வேதாந்த வித்தகமும் விளங்க அவர் கண்ட உரை, நயம் பயப்பதாகும். உரைப்பாயிரத்தின் இறுதியில்,  “இறைவனையும் உயிரையும் பற்றிப் பேசும் இவ்வருமையான நூலைத் தமிழ் மக்களெல்லாம் படித்தல் வேண்டும். படிக்க முன்வர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நான் இவ்வுரையை இயற்றியுள்ளேன். எனது நோக்கம் இனிது நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் துணை.”  என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இவர் ‘விவேகபாநு,’ எனும் தமிழ் இதழின் ஆசிரியராக இருந்து பணியாற்றிப் பல்வேறு பயனுறு கட்டுரைகளை அதில் எழுதியுள்ளார் என்பது ஈண்டு நெஞ்சில் நிறுத்தத் தக்கதாகும்.  4. படிப்புப் பணி  பழந்தமிழ் நூற் பதிப்புப் பணியில் தமிழில் முதலில் ஈடுபட்டவர் இச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதன் முதலில் இளங்கலை (பி.ஏ.) பட்டம் பெற்ற யாழ்பாணத்தைச் சேர்ந்த சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் ஆவர். சங்க நூல் முதற்பதிப்பாசிரியர் என்று போற்றப் பெறுபவர் அவராவர். வ.உ.சி. தமிழ் இலக்கிய இலக்கணத்தை அடிநாள் தொட்டே நன்கு கற்றவர். சங்க நூற்றேர்ச்சி மிக்கவர். தொல்காப்பியத்தை நல்லாசிரியரிடம் தம் வாழ்நாள் எல்லாம் பாடங்கேட்டவர். பேராசிரியர் திருமணம் செல்வக்கேசவராய முதலியார், ச. சோமசுந்தர பாரதியார், எஸ். வையாபுரிப்பிள்ளை, சி. சுப்பிரமணிய பாரதியார், திரு.வி.க., மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர் முதலியவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர்.  வ.உ.சி. அவர்களுக்குத் தொல்காப்பியம், திருக்குறள், சிவஞான போதம், ஆலன் நூல்கள் முதலியவற்றில் நிரம்ப ஈடுபாடு உண்டு. தொல்காப்பியத்தை 1910ஆம் ஆண்டு சிறையில் படிக்கத் தொடங்கினார். வ.உ.சி. கூறுவன வருமாறு :  “அதன் பொருளதிகாரத்தை யான் படித்தபோது அதில் வேறு எம்மொழி இலக்கணத்திலும் காணப்படாத நிலப்பாகுபாடு, நிலங்களின் மக்கள் ஏனைய உயிர்கள், மரங்கள், செடிகள், மாக்கள்.  மக்களின் ஒழுக்கங்கள், பழக்கவழக்கங்கள் முதலியன கூறப்பட்டிருக்கக் கண்டேன். இவ்வொப்புயர்வற்ற நூலைத் தமிழ் மக்கள் படியாததற்கு ஒரு காரணம், இந் நூலிற்கு ஆன்றோர் இயற்றியுள்ள உரைகளின் கடின நடையென்று உணர்ந்தேன், இந்நூலைத் தமிழ் மக்கள் யாவரும் கற்கும்படி எளிய நடையில் ஓர் உரை எழுதவேண்டுமென்று நினைத்தேன். உடனே எழுத்ததிகாரத்தின் முதற் சில இயல்களுக்கு உரையும் எழுதினேன்......... (பின்னர்) இளம் பூரணத்தை யான் படித்தபோது, அதன் உயர்வும் சிறப்பும், எளிய நடையும் தொல்காப்பியத்திற்கு உரை எழுதுவது மிகையென்று நினைக்கச் செய்தன.”*  இப்பகுதி கொண்டு வ.உ.சி. தமிழுக்கு-தமிழருக்குச் செய்ய நினைத்த தொண்டும், உரையாசிரியர் எனப் பண்டையோரால் சிறப்பித்துக் குறிப்பிடப்பெறும். இளம்பூரணரிடத்து அவர் கொண்டிருந்த மதிப்பும் புலனாகும். 1935ஆம் ஆண்டில் அதாவது தாம் இறப்பதற்கு ஓர் ஆண்டிற்கு முன்னர்த் தொல்காப்பியம் இளம்பூரணத்தினை இவர் வெளியிட்டார். ஆயினும், 1920இல் இவர் தொடங்கிய தொல்காப்பிய அகத்திணையியல், புறத்திணையியல், இளம்பூரணர் உரைப்பதிப்பு 1928ஆம் ஆண்டு கோவில் பட்டியில் இவர் இருந்தபொழுது வெளியிட்டுள்ளார். அடுத்து 1933ஆம் ஆண்டில் இளம்பூரணம் களவியல், கற்பியல் பொருளியல் பதிப்பு வெளிவந்தது, இதனையடுத்து 15-1-1936 தேதியிட்டு இளம்பூரணம் மெய்ப் பாட்டியல், உவம இயல், செய்யுளியல், மரபியல்கள் பதிப்பு வெளியாகியுள்ளது. இப்பதிப்புப் பணிக்குப் பேருதவி புரிந்தவர் சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை என்பது.    “இவ்வேழு இயல்களுக்குப் பெயரளவில் பதிப்பாசிரியன் நான். உண்மையில் பதிப்பாசிரியர் திரு. வையாபுரிப்பிள்ளை அவர்களே. அவர்கள் செய்த நன்றி என்னால் என்றும் உள்ளற்பாலது”  என்று குறிப்பிட்டுள்ளமை கொண்டு அறியலாம்.  இதனால் வ.உ.சி.யின் செய்நன்றியறிதலின் திறமும், அடக்கப் பண்பும் புலனாதல் காணலாம். இளம்பூரணத்தின் பெரும் பகுதியினைப் பதவுரையுடன் வெளியிட்ட சிறப்பு வ.உ. சி.யைச் சாரும்.  “The book represent the fruitful results of his (V.O.C.) ardous labours in the field carried on for more than three decades.”  என்று தொல்காப்பியம் மெய்ப்பாட்டியலின் பதிப்புரையின் நூல் வெளியீட்டு நிறுவனத்தார் திரு. வெங்கடேச சாஸ்துருலு குறிப்பிட்டுள்ளார்.  அடுத்து, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான “இன்னிலை”க்கு எளிய இனிய உரையெழுதிப் பதிப்பித்துள்ளார்.  திருக்குறளில் நெஞ்சம் தோய்ந்தவர் வ.உ.சி. என்பதனை முன்னரே கண்டோம். ‘அகமே புறம்’ எனும் ஜேம்ஸ் ஆலன் நூலின் மொழிபெயர்ப்பில் திருக்குறளை மேற்கொள் காட்டியுள்ளார் என்பது எண்ணற்பாலது. திருக்குறள் மணக்குடவர் உரையை அறத்துப் பாலிற்கு மட்டுமான உரையை-முதன் முதலில் பதிப்பித்த பெருமை வ.உ.சி.யைச் சேரும். அறப்பால், பொருட்பால், இன்பப் பால் என்றே இவர் வழங்குவர். பரிமேலழகர் உரையோடு இவர் பலவிடங்களில் மாறுபட்டு நிற்கின்றார். மேலும், வ.உ.சி. அறத்துப்பாவின் சில பகுதிகளுக்குத் திண்மையாக உரை விளக்கம் கண்டுள்ளார். இவ்வுரை நயம் போற்றத் தக்கதாம். பாயிரம் திருவள்ளுவரால் எழுதப்பட்டிருக்க முடியாது என்று இவர் முதல் முதலில் காரணங்காட்டித் தெரிவித்துள்ளார்.  இவ்வாறு வ.உ.சி. அவர்கள் அரசியல் வானில் ஒளிவீசும் சுடர்த் தாரகையாகத் திகழும் அதே நேரத்தில் தமிழ் மொழிக்குத் தம் வாழ்நாள் முடியும் எல்லை வரையில் பல்வேறு துறைகளில் பாங்குற ஈடுபட்டு அயராது உழைத்த அறிஞர்-செந்தமிழ்ச் செம்மலார்-நூலோர் என்பது இது காறும் கூறியவாற்றான் தாமே போதரும்.            3. தனித்தமிழ் இயக்கங் கண்ட அடிகளார்   தமிழ் மலையென விளங்கியவர் மறைமலையடிகள். தனித்தமிழ் இயக்கத்தின் தந்தையாய் விளங்கி, மொழிக்கு வளம் சேர்த்தவர். தமது எழுத்தாலும் பேச்சாலும் சைவ சமயத்தின் பெருமைகளை நாடெங்கும் பரப்பியவர். ஆழ்ந்த புலமையும், ஆராய்ச்சித் திண்மையும் ஒருங்கே அமையப் பெற்றவர். உரம் பாய்ந்த உடலும் உறுதி கொண்ட உள்ளமும் உடையவர். தமிழில் மட்டுமின்றி வடமொழி ஆங்கிலம் ஆகிய பிற மொழிகளிலும் புலமை நலம் சான்ற பெரியார் இவர். இவர்தம் எழுத்தும், பேச்சும், ஆய்வு நோக்கும் தமிழ் மொழிக்கும் தமிழ் நாட்டிற்கும் கிடைத்த அரிய செல்வங்களாகும்.  தோற்றம் தஞ்சாவூர் மாவட்டம், நாகபட்டினத்திற்கு அருகில் இரண்டு கல் தொலைவில் உள்ள காடம்பாடி என்ற ஊரில் 18-7-1879ஆம் ஆண்டு, சொக்கநாதப்பிள்ளை சின்னம்மை ஆகியவர்களுக்கு மகனாகத் தோன்றினார். இவருக்குப் பெற்றோரிட்ட பெயர் வேதாசலம் என்பதாகும். தனித் தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்ததன் காரணமாக இவர் தம் பெயரை மறைமலையடிகள் என மாற்றிக் கொண்டார். சூரிய நாராயண சாஸ்திரியார் ‘பரிதிமாற் கலைஞன்’ ஆனது போல, சுவாமி வேதாசலம் ‘மறைமலையடிகள்’ ஆனார்.  இளமைப் பருவம்  அடிகள் இளமையிலேயே கல்வி கற்பதில் பேரார்வம் உடையவராக விளங்கினார். தம்முடைய முதல் பள்ளி வாழ்க்கையை வெஸ்லியன் மிஷன் பள்ளியில் தொடங்கினார். ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்பது போல அடிகள் பேச்சிலும், படிப்பிலும், ஒழுக்கத்திலும் இளமையிலேயே சிறந்து விளங்கினார். அடிகளுக்குப் பத்து வயது நிறைவதற்குள், அடிகளின் தந்தையார் சொக்கநாதப் பிள்ளை இயற்கையெய்தினார். ‘சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ எனப் புறநானூறு உணர்த்தும் கடமையை இவர் தந்தையார் செய்ய இயலாமற் போயினும், மகன் தந்தைக்கு ஆற்றும் நன்றியினைச் சிறப்பாகச் செய்தவர் நம் அடிகளார் ஆவர்.  அடிகளாரது இளமைக் காலத்தில், நாகை-நீலலோசனி, பாஸ்கர ஞானோதயம், திராவிட மந்திரி போன்ற பல கிழமையிதழ்கள் வெளிவந்து கொண்டிருந்தன. ‘முருகவேள்’ என்னும் புனைபெயரில் அடிகள் பல கட்டுரைகளை இவ்விதழ்களில் எழுதி வந்தார். அந்நாளில் நாகப் பட்டினத்தில் அமைந்திருந்த ‘இந்து மதாபிமான சங்க’த்திலும் சைவசமயம் பற்றிச் சொற்பொழிவுகள் ஆற்றினார். தம்முடைய பதினைந்தாவது வயதிலே பலரும் பாராட்டும் வகையில் கட்டுரை வரையும் வன்மையும், கேட்டார்ப் பிணிக்கும் தகையவான சொல்வன்மையும் ஒருங்கே அமையப் பெற்றிருந்தவர் மறைமலையடிகளார்.  வெ. நாராயணசாமிப் பிள்ளை, சோமசுந்தர நாயகர் முதலிய சான்றோர்களிடம் இலக்கிய, சமய நூல்களைக் கற்றுத் துறைபோய புலமை பெற்றார். மதுரை நாயகம் பிள்ளை அடிகளாரின் உயிரினிய நண்பர். பட்டத்திற்காகப் படிக்காமல், புலமை வேட்கைக்காகத் தமிழார்வத்தின் காரணமாகப் படித்து இளமையிலேயே பெரும் புலமை பெற்றார் நம் அடிகளார்.  மண வாழ்க்கை அடிகளுக்கு பதினெட்டு அகவை ஆகும்போதே திருமணம் நடைபெற்றது. 1893-ஆம் ஆண்டு சவுந்தரவல்லி என்னும் பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டார். 1894-ஆம் ஆண்டில் சிந்தாமணி என்னும் பெண் மகவு பிறந்தது. இல்லற வாழ்வில் பொறுப்புகள் மிகுந்த காரணத்தால், 1894-ஆம் ஆண்டில் தம் பள்ளிப் படிப்பை நிறுத்தினார் அடிகளார்.  பள்ளிப்படிப்பை விட்டாலும், தமிழ் இலக்கியங்களைப் படிப்பதை விடாது மேற்கொண்டு வந்தார். மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையவர்களைத் தமது ஆசிரியர் நாராயணசாமிப்பிள்ளை அவர்களின் மூலம் கண்டு உரையாடி மகிழ்ந்தார் நம் அடிகளார். 2-12-1895 ஆம் ஆண்டு பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்களிடமிருந்து ஒரு நற் சான்றிதழினையும் பெற்றார்.  ஆசிரியப் பணி அடிகளின் ஆசிரியப்பணி முதன் முதலில் திருவனந்தபுரத்தில் இருக்கும் ஆங்கிலப் பள்ளியொன்றில் தொடங்கியது. ஆனால் இப்பணி இரண்டரைத் திங்கள் வரைதான் நீடித்தது. அடிகளின் உடல் நிலைக்குத் திருவனந்தபுரத்தின் தட்ப வெப்பநிலை ஒத்து வராததால் 1896 ஆம் ஆண்டு நாகைக்கே திரும்பிவிட்டார். நாகையில் இருக்கும்போது ‘துகளறு போதம்’ என்னும் நூலுக்கு உரையெழுதினார். ‘முதற் குறள் வாத நிராகரணம்’ என ஒரு மறுப்பு நூலெழுதினார். அக்காலத்தில் சித்தூரிலிருந்து ‘சித்தாந்த தீபிகை’ என்னும் திங்களிதழ், தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவரத் தொடங்கியது. சித்தாந்த தீபிகை என்பதற்கு ‘உண்மை விளக்கம்’ என்று பெயர். இவ்விதழின் தமிழ்ப் பகுதிக்கு அடிகளார் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 21-6-1897இல் முதல் இதழ் வெளியாயிற்று. திருமந்திரம், சிவஞான சித்தியார், தாயுமானவர் பாடல், குறிஞ்சிப் பாட்டு ஆகியவற்றின் சில பகுதிகளுக்கு உரையும், அன்பு, அருள் என்னும் கட்டுரைகளும், ‘மூன்று கனவு’ என்னும் நான்கு (ஆங்கில) செய்யுட்களின் மொழிபெயர்ப்பும் வெளியாயின. ஐந்திதழ்கள் வரை ஆசிரியராகப் பணியாற்றினார். 9-3-1898இல் சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டதால் சித்தாந்த தீபிகையின் ஆசிரியர் பொறுப்பினை விட நேர்ந்தது.  தமிழ்ப் பேராசிரியர் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராக அடிகள் பணியாற்றிய காலமே அடிகளின் வாழ்க்கையில் பொன்னான காலமாகும். இக்கால கட்டத்தில் பல அரிய ஆராய்ச்சி நூல்கள் வெளிவந்தன. 1898 ஆம் ஆண்டு சென்னைக்குக் குடியேறிய அடிகளின் வாழ்க்கை 1911 வரை ஏறத்தாழப் பதின்மூன்று ஆண்டுகள் வரை நீடித்து நிலைத்தது.  சமுதாயத்திற்கும் மக்களுக்கும் தொண்டாற்ற வேண்டும் என்ற நிலைமாறி, பலனை எதிர்பார்த்துப் பணிபுரிகின்ற அளவிற்கு ஆசிரியப்பணி மாறிவிட்ட இக்காலம் போல் அல்லாமல், உண்மையான தொண்டுள்ளத்தோடு தமிழுக்கும் மாணவர்களுக்கும் தொண்டு புரிந்தவர் நம் அடிகளார் ஆவர்  பத்துப்பாட்டு நூல்களான முல்லைப்பாட்டு பட்டினப் பாலை முதலியனவற்றுக்கு அரிய ஆராய்ச்சியுரைகளை எழுதினார். அடிகளாரின் ஆய்வுரையைக் கண்ட மாணவர்கள் பெரிதும் மகிழ்ந்து தம் செலவிலே அச்சிட்டுத்தர வேண்டி அதற்குரிய பொருளையும் திரட்டித் தந்தனர். இவ்வாறு மாணவர்களின் மனங் கொள்ளத்தக்க பேராசிரியராக அடிகள் விளங்கினார்.  27-6-1898இல் அடிகளாருக்குக் கொடிய நோய் ஒன்று, கண்டது. அதனைத் தீர்க்குமாறு திருவொற்றியூர் முருகனை அடிகள் வேண்டிக் கொண்டார். நோய் நீங்கியபின் முருகனை நினைத்து “திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை” என்னும் அருள்நூலைப் பாடினார். சங்கப் பனுவல்களின் கருத்தும், நடையும் பொலிந்து விளங்கும் சிறந்த நூல் இது. தமக்குச் சைவ சித்தாந்த நூல்களை விளக்கிப் பாடம் சொன்ன சோமசுந்தர நாயகர் (22-2-1901) இயற்கை யெய்திய பொழுது. அவர் பிரிவு பொறாது “சோம சுந்தரக் காஞ்சியாக்கம்” என்னும் நூலை எழுதினார். அந் நூலில் தாமும் சைவவுலகும் அடைந்த துன்பத்தினைக் ‘கையறுநிலை’ ‘மன்னைக் காஞ்சி’யென்னும் பிரிவுகளாகவும், நாயகரின் வாழ்க்கைத் துணைவியார் பேதுற்ற நிலையினைத் ‘தாபத நிலையாகவும்’ அமைத்துள்ளார்.  சொற்பொழிவாளர்  கவின்மிகு கட்டுரையாற்றல் கைவரப்பெற்ற அடிகள், சுந்தரத் தமிழில் சொற்பெருக்காற்றும் வல்லமையும் பெற்றிருந்தார். அடிகளாரின் பேச்சு அனைவரையும் காந்தம் போல் ஈர்க்கும் சக்தி உடையது. பெரும் பொருள் செலவுசெய்தும் அடிகளாரின் பேச்சைக் கேட்பதற்கு மக்கள் கூடினர். பேசுவதில் சில நெறிகளைப் பின்பற்றியவர் அடிகள். தாம் பேச எடுத்துக் கொண்ட பொருளைத் தெளிவாகவும், ஆழமாகவும். அழுத்தமாகவும் எடுத்துச் சொல்லும் வல்லமை அடிகளுக்கு உண்டு. அடிகள் பேசுவதற்குச் சென்ற இடங்களிலெல்லாம், உணவு, இருக்கை முதலியவை பற்றி ஓர் ஒழுங்கைக் கடைபிடித்து வந்தார். இவர் பேச்சில் சைவப் பற்றும், தமிழ்ப்பற்றும் மிகுந்து இருக்கும். சைவத்தையும்,தமிழையும் தம் இரு கண்ணெனப் போற்றி வளர்த்தவர் அடிகள்.  இதழாசிரியர் சொற்பொழிவிலும், கட்டுரை எழுதுவதிலும் ஈடுபட்டிருந்த அடிகள் திங்கள் இதழ் ஒன்றைத் தொடங்க எண்ணினார். 1902இல் ‘அறிவுக் கடல்’ என்னும் திங்கள் இதழ் தொடங்கப் பெற்றது. அறிவுக் கடல் தொடக்க நாளில் கொண்ட பெயர் ‘ஞானசாகரம்’ என்பதாகும். அந் நாளில் அடிகளாருக்குத் தனித் தமிழுக்கம் உண்டாகவில்லை. பின்னர் அனைத்தும் தனித்தமிழாயின; அவர் பெயர் முதற் கொண்டு அனைத்தும் தமிழாயின. அவர் எழுதிய கட்டுரைகளிலும், பேசிய பேச்சுக்களிலும் தனித்தமிழ்ச் சொற்களே இடம் பெறலாயின. அறிவுக்கடலின் உறுப்பினர்களில் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரும் ஒருவர் என்ற செய்தி ஈண்டுக் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.  அடிகளாரை ஆசிரியராகக் கொண்டு ‘அறிவுக் கடல்’ ஆற்றிய தமிழ்ப்பணி அளப்பரியது. அறிவுக் கடல் ஆற்றிய அளப்பரிய தமிழ்ப்பணிக்கு அதன் முதல் இதழின் பொருளடக்கமே சான்று. அப்பொருளடக்கம் வருமாறு -  “சகளோபாசனை - தமிழ் வடமொழியினின்றும் பிறந்ததா? தமிழ்ச் சொல்லுற்பத்தி - சைவம் - சைவ நிலை - காப்பியம் - தொல்காப்பியப் பரிசீலனம் - உள்ளது போகாது இல்லது வாராது - தொல்காப்பிய  முழு முதன்மை-கேநோபநிடத மொழிபெயர்ப்பு—சமயப்பெருமை-இலக்கண ஆராய்ச்சி-நெஞ்சறிவுறுத்தல்-தமிழ் மிகப் பழைய மொழி-இறைய னாரகப் பொருளுரை வரலாறு - ஆநந்தக் குற்றம்—மாணிக்கவாசகர் கால நிருணயம்-மெய்ந்நல விளக்கம்-தமிழ் வேத பாராயணத்தடை மறுப்பு-நாலடியார் நூல் வரலாறு-முனிமொழிப் பிரகாசிகை-பரிமேலழகர் ஆராய்ச்சி முதலியன.”    சைவ சித்தாந்த மகா சமாசம் சைவ சமய உண்மைகளை நாட்டிலே பரப்பச் ‘சைவ சித்தாந்த மகா சமாசம்’ என்னும் கழகத்தை 7-7-1905இல் தொடங்கினார் அடிகள். அறிஞர் பலர் இம் மகா சமா சத்தில் உறுப்பினர்களாக இருந்தனர். அடிகள் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றுச் சிறக்கப் பணிபுரிந்தனர். முதலாண்டு நிறைவு விழா 1906ஆம் ஆண்டு சிதம்பரத்தில் கொழும்பு ஆனரபிள் இராமநாதன் துரை அவர்கள் தலைமையிலும், இரண்டாம் ஆண்டு விழா சிதம்பரத்திலே, மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர் பாண்டித்துரைத் தேவர் தலைமையிலும், மூன்றாம் ஆண்டு விழா நாகையில் ஜே. எம். நல்லசாமிப் பிள்ளை அவர்களின் தலைமையிலும், நான்காம் ஆண்டு விழா திரிசிரபுரத்தில் யாழ்ப்பாணம் ஆணரபிள் கனக சபையவர்கள் தலைமையிலும் அடிகளின் பெருமுயற்சியால் சிறப்புற நடை பெற்றன.  ‘அறிவுக் கடல்’ இதழைத் தமிழில் நடத்திய அடிகள் ஆங்கிலத்திலும் ஓர் இதழைத் தொடங்க எண்ணினார். அடிகளின் எண்ணப்படி கீழ் நாட்டு மக்கள் வசியம் எனப்  சா—4 பொருள்படும் ‘ஓரியண்டல் மிஸ்டிக் மைனா’ (The Oriental Mystic Myna) என்னும் ஆங்கில இதழை 1898இல் தொடங்கினார். ஆனால் இவ் ஆங்கில வெளியீடு பன்னிரண்டு இதழ்களுடன் நின்றுவிட்டது.  சாதி, மத, பேதமகற்றி அன்பின் அடிப்படையில் வள்ளலார் வழியில் இறைவனைக் காணுதல் வேண்டும்—கண்டு வாழுதல் வேண்டும் என்னும் நோக்கத்துடன் 22-4-1911 ஆம் நாள் சமரச சன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்தார் அடிகள். இச்சங்கமே பின்னாளில் ‘பொது நிலைக்கழகம்’ எனப் பெயர் பெறுவதாயிற்று.  துறவு சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரி ஆசிரியர் பணியிலிருந்து 30-4-1911இல் விலகிய அடிகள் 1-5-1911 முதல் பல்லா வரத்தில் தமது வாழ்க்கையைத் தொடங்கினார். சுய சிந்தனையும் நாட்டுக்கு உழைக்கும் நல்லுள்ளமும் சைவ சமயப் பணிக்குத் தம்மை ஆட்படுத்திக் கொண்ட தகவுங் கொண்ட அடிகள், அரசியலில் ஈடுபடாமல் தமிழராக இருந்து நாட்டுக்கும் சமயத்திற்கும் தொண்டு புரிய வேண்டும் என்னும் தன்னலமற்ற தொண்டுள்ளம் கொண்டார். 27-8-1911, முதல் துறவு வாழ்வை மேற்கொண்டார் அடிகள். அன்று முதல் “மறைமலையடிகள்” எனவும் “சுவாமி வேதாசலம்” எனவும், ‘சமரச சன்மார்க்க நிலைய குரு’ எனவும் அழைக்கப் பெற்றார்.  தமிழ்க் குடும்பம் அடிகளாரின் குடும்பம் பெரியது. அடிகள் துறவு நிலையைடைந்தாலும் மனைவி மக்களை விட்டுப் பிரியவில்லை. அடிகள் மேற்கொண்டது. சமுதாயத்தில் கடமைகளைச் செய்து கொண்டே அதன் பலனில் பற்று வைக்காத உயர்ந்த இல்லறத் துறவு நிலையாகும். அடிகளாரின் இல்லத் துணைவியார் சவுந்தரவல்லி அம்மையார் மனைத் தக்க மாண்புடையவர். இவ் இருவருக்கும் முறையே 1894இல் சிந்தாமணி என்ற பெண் மகவும், 1903இல் நீலாம்பிகை என்ற பெண் மகவும், 1904இல் திருஞான சம்பந்தன், 1906இல் மாணிக்கவாசகன், 1907இல் திருநாவுக்கரசு. 1909இல் சுந்தரமூர்த்தி என்னும் ஆண் மக்களும், 1911இல் திரிபுரசுந்தரி என்ற பெண்மகவும் பிறந்தனர்.  இலங்கைப் பயணம் அடிகளாரின் சொற்பொழிவுத் திறன் இலங்கையிலும் ஒலிக்கத் தொடங்கியது. 1914 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முதன் முறையாகக் கொழும்பிற்குச் சென்றார் அடிகள். அவர்தம் சொற்பொழிவு இலங்கை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அடிகளுக்குப் பெரும் பொருளும் கிடைத்தது. இலங்கைப் பயணத்தினால் அடிகளுக்குக் கிடைத்த மிகப் பெருஞ் செல்வம் திருவரங்கனாரின் நட்பாகும். பின்னாளில் அடிகளாரின் மகளார் நீலாம்பிகையாரை மனந்தவரும். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தை நிறுவிய பெருமைக்குரியவரும் இத் திருவரங்கனாரே யாவர். இரண்டாம் முறையாக 1917 ஆம் ஆண்டு மேத்திங்கள் கொழும்புக்குச் சென்றார். மூன்றாம் முறையாக 16-12-1921 இல் கொழும்பு சென்று பல்வேறு இடங்களில் சொற்பொழிவாற்றிவிட்டு 20-1-1922இல் பல்லாவரம் திரும்பினார்.  இலங்கை சென்று, சொற்பொழிவின் மூலம் திரட்டி வந்த பெரும் பொருளும், தமிழ் நாட்டில் சொற்பொழிவின் மூலம் கிடைத்த பொருளும் சேர்ந்து பொது நிலைக் கழக மாளிகையாக உருவாயிற்று. பொதுநிலைக் கழகத்தின் இருபதாண்டு நிறைவு விழா 1931 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் இரண்டாம் நாள் கொண்டாடப்பெற்றது. பொது நிலைக் கழக விழா மூன்று நாட்கள் நடைபெற்றது. அவ் விழாப் பேரவையில் முடிவு செய்த பல சீர்த்திருத்தங்கள், அடிகளாரின் சீர்திருத்த மனப்பான்மையைக் காட்டும். அடிகளாரின் சமய மறுமலர்ச்சிச் சிந்தனைகள் பின் வருமாறு :  1. மடத்தலைவர்கள் எல்லாக் குலததவர்க்கும வேற்றுமையின்றிச் சமயக் கிரியைகள் கற்பிக்க முயற்சி செய்தல் வேண்டும்.  2. கோயில்களில் வேற்றுமையின்றித் திருநீறு முதலியன பெறவும் நிற்கவும் கோயில் தலைவர்கள் இடஞ்செய்தல் வேண்டும்.  3. பழந்தமிழ்க் குடிமக்கள் (தீண்டாதார்) எல்லோரையும் தூய்மையாகத் திருகோயில்களிற் சென்று வழி பாடாற்றப் பொதுமக்களும், கோயில் தலைவர்களும் இடந்தரல் வேண்டும்.  4. கோயில்களிற் பொதுமாதர் திருப்பணி செய்தல் கூடாது.  5. வேண்டப்படாதனவும், பொருட்செலவு மிக்கனவும் சமய உண்மைக்கு முரண்பட்டனவும், அறிவுக்குப் பொருத்த மற்றனவும் ஆகிய திருவிழாக்களையும். சடங்குகளையும் திருக்கோயில்களிலே செய்தல் முற்றும் கூடாது; தூயதும் வேண்டப்படுவதுமான சடங்குத் திருவிழாவும் குறைந்த செலவிலே செய்தல் வேண்டும்.  6. சாரதா சட்டத்தை உடனே செயல் முறைக்குக் கொணர்தல் வேண்டும்.  7. கைம்பெண்களைத் தாலியறுத்தல், மொட்டை யடித்தல், வெண்புடவை யுடுத்தல், பட்டினி போடல் முதலியவை நூல்களிற் கூறியிருப்பினும் வெறுக்கத்தக்க இச்செயல்களை நீக்குதல் வேண்டும். கைம்பெண் மணம் முற்காலத்திலும் இருந்திருப்பதாலும், நூல்களில் ஒப்புக் கொண்டிருப்பதாலும் அதனைச் செயல் முறைக்குக் கொணர்தல் வேண்டும்.  8. சாதிக் கலப்புமணம் வரவேற்கத்தக்கது.  9. தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழுக்குத் தலைமை தருதல் வேண்டும்.  10. தமிழைத் தனிப்பாடமாக பி.ஏ. ஹானர்ஸ் வகுப்புக்கு ஏற்படுத்தல் வேண்டும்.  நூல்கள் அடிகளாரின் எழுத்துப்பணி, தமிழ் இலக்கியத்தில் மறு மலர்ச்சியை ஏற்படுத்தியது. சமயம், தமிழாராய்ச்சி,நாடகம், நாவல் போன்ற பல்வேறு துறைகளிலும் தம் ஆளுமையைச் செலுத்தியவர் அடிகள். “திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை.” “சைவசித்தாந்த ஞான போதம்.” அம்பலவாணர் திருக்கூத்தின் உண்மை,” “சைவ சமயத்தின் நெருக்கடியான நிலை” என்பன சமய நூல்களாகும். “மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்,” “பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்,” “கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா,” “சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்,” “தமிழர் மதம்,” “சோம சுந்தரக் காஞ்சியாக்கம்,” “சாகுந்தல நாடக ஆராய்ச்சி,” “முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை,” “பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை,” “வேளாளர் நாகரிகம்,” “இந்தி பொது மொழியா,” “சிந்தனைக் கட்டுரைகள்” முதலியன அவர்தம் ஆராய்ச்சி நூல்களாகும்.  “கோகிலாம்பாள் கடிதங்கள்,” “குமுதவல்லி அல்லது நாக நாட்டரசி,” “சாகுந்தலம்” ஆகிய படைப்பிலக்கியங் களும், “தொலைவில் உணர்தல்,” “பொருந்தும் உணவும் பொருந்தா உணவும்” ஆகிய அறிவியல் நூல்களும் தமிழுக்கு வளம் சேர்த்தவையாகும்.  இறுதி வாழ்க்கை அடிகள் இறுதிக் காலத்தில் பொதுநிலைக் கழக ஆசிரியராகவும். மற்றும் பல்வேறு நூல்களின் ஆசிரியராகவும்,கவிஞராகவும், சொற்பொழிவாளராகவும் சிறப்புற வாழ்ந்தனர். இவற்றிலிருந்து கிடைத்த வருவாயே அடிகளின் குடும்பச் செலவிற்குப் பயன்பட்டது.  எழுத்தாலும், பேச்சாலும் சைவத்தையும் தமிழையும் வளர்த்த அடிகளின் வாழ்வு 15-9-1950 ஆம் நாள் மாலை 3-30 மணிக்கு முடிவுற்றது. அடிகளின் தனித் தமிழ்ச் சிந்தனையும், அகன்ற ஆராய்ச்சிப் புலமையும், அழகு நடையும் இன்றும் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாய் நின்று ஒளிவீசி வருதலைக் காண்கிறோம்.                            4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி   மனிதன் வாழ்க்கையில் பெறும். பேறுகள் பல நல்ல மனைவி வாய்ப்பதும், பண்பு சான்ற குழந்தைகள் வாய்ப்பதும் ஒருவனுக்கு வாய்க்கும் பேறுகளுள் சிறப்பானவைகளாகும். பெறும் பேறுகளுள் சிறந்த பேறு நல்ல மக்கள் வாய்ப்பதேயாகும் என்பதனைத் திருவள்ளுவர்,  “பெறுமவற்றுள் யாமவறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற”  (குறள். 70)  என்று குறிப்பிட்டுள்ளார். பொருட்செல்வம், செவிச் செல்வம், கல்விச்செல்வம் முதலான செல்வங்களிலும் குழந்தைச் செல்வமே சிறப்பு வாய்ந்ததாகும். இதனையே திருவள்ளுவர்,  “தம் பொருள் என்ப தம்மக்கள்”  (குறள். 63)  என்று குறிப்பிட்டுள்ளார், ‘செல்வமற்ற ஏழைகளின் செல்வம் குழந்தைகளே’ (Children are poor Men's riches)என்றும் ‘துறக்க உலகத்தின் திறவுகோல் குழந்தைகளே, (Children are the keya of pa radise) என்றும் குழந்தைச் செல்வத்தின் மேன்மை குறிக்கப் பெறுகின்றன. நல்ல குழந்தைகளைப் பெற்றவர்கள் இவ்வுலகில் அன்றியும் மறு உலகிலும் புகழினைப் பெறுவர் என்று அகநானூறும், தவழ்ந்து விளை யாடும் குழந்தைச் செல்வத்தினைக் குறைவறப் பெறாதவர்கள் படைப்பு பல படைத்திருப்பினும், பலரோடு உண்ணும் செல்வ வளம் சிறக்கப் பெற்றிருப்பினும் பயன் இல்லை என்று புறநானூறும் [1] குறிப்பிடுகின்றன.  குழந்தை இலக்கியத்தின் தொன்மை தொல்காப்பியம் ‘பிசி’ என்ற இலக்கிய வகையினைக் குறிப்பிடுகின்றது.  “ஒப்போடு புணர்ந்த வுவமத் தானும் தோன்றுவது கிளந்த துணிவி னாலும் என்றிரு வகைத்தே பிசிவகை நிலையே”  (தொல். பொருள்: 488)  தன்கண் உள்ள ஒப்புமைக் குணத்தோடு பொருந்தி வருவதும், உவமப்பொருள் ஒன்று சொல்ல ஒன்று தோன்றும் துணிவினதாகவும் பிசி இருவகைப்படும் என்று சொல்கிறது தொல்காப்பியம். இக் குறிப்புக்கொண்டு பிசி என்பது விடுகதையினைக் குறித்து நிற்கின்றது என அறியலாம். பிசி, செவிலியர்க்கு உரியது என்று பேராசிரியர் தம் உரையில் குறித்துள்ளார். குழந்தைகளை வளர்க்கும் தாய் சங்க காலத்தில் செவிலி என வழங்கப் பெற்றாள். செவிலியர் குழந்தைகளை நன்கு வளர்த்து, அவர்களை மகிழ்விக்க விடுகதைகளையும், வேடிக்கைக் கதைகளையும் கூறினர். பேராசிரியர் ‘பிசி’ என்பதற்குத் தந்துள்ள உதாரணங்களில் ஒன்று கீழ்வரும் பாட்டாகும்.  “நீராடான் பார்ப்பான் கிறஞ்செய்யான் ரோடில் ஊராடு சிேல்காக் கை” [2]  குளிக்காத பார்ப்பனன்; அவன் நிறமோ சிவப்பு, அவன் நீரில் குளித்தெழுந்தால் காக்கையின் கரிய நிறம் கொண்டு விடு வானாம் என்ற குறிப்பு இப் பாட்டில் அமைந்துள்ளது. இப்பாட்டு பிசி; நெருப்பைக் குறிக்கின்றது. மேலும் அகநானுாற்றில் மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் பாடிய பாடல் ஒன்றில் வானத்தில் பவனிவரும் கோல நிலவைக் காட்டித் தன் கைக்குழந்தைக்கு உணவு ஊட்டும் தாய் ஒருத்தியைக் காட்டுகின்றார். “நிலவு எரிக்கும் முதிராத இளந் திங்களே! பொன்னாலான ஐம்படைத் தாலியை அணிந்திருக்கும் என் மகனோடு நீ இங்கு விளையாட வந்தால் உனக்கும் பால் தருவேன்” என்று  குழந்தைக்கு நிலவை வேடிக்கை காட்டிச் சோறு ஊட்டு கின்றாள்.  “முகிழ்கிலாத் திகழ் தரும் மூவாத் திங்கள் பொன்னுடைத் தாலி யென்மகன் ஒற்றி வருகுவை யாயின் தருகுவென் பால் என விலங் கமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றி”3  என்பது அப் பாடற்பகுதி. இது பிற்காலத்திலே பல நிலாப் பாடல்களுக்கு வழிவகுத்துக் கொடுத்தது என்று நம்பலாம்.  குழந்தைக் கவிஞர் கவிமணி ‘தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ்செல்வம்; அரிய செல்வம்; தெவிட்டாத அமிர்தம்; ஆயுள் நாள் முழுவதுமே தமிழ் மகன் தன்னுடன் வைத்துக்கொண்டு அனுபவிக்க வேண்டிய வாடாத கற்பகப் பூஞ்செண்டு’ என்று கவிமணியின் பாடலைப் புகழ்ந்து பேசுகிறார் ரசிகமணி டி.கே சி. இக்காலக் கவிஞர் ஒருவர்,   “பகைவரென ஒருவருமே இல்லாப் பண்பு பாலித்த கவிமணியார், நமது பிள்ளை முகைகளெல்லாம் நலம்பெருகி மலரப் பாட்டு மொழிந்திருந்தது இக்காலம் நமது, காலம்!”  என்று குறிப்பிட்டுள்ளார்.  “தமிழகத்தில் அரும்பெரும் நூல்கள் பல உண்டு; கன்னித் தமிழ் ஆட்சிமொழியாய் மாட்சியுற்றிருந்த காலத்தே எழுந்த இலக்கியங்களில் பல இற்றைச் சிறுவர்க்கு எளிதில் விளங்குவதேயில்லை. ஆத்திசூடியும். கொன்றைவேந்தனும் அன்றையக் குழந்தைகட்கு எளிய இனிய நூல்கள். வேற்று மொழியின் ஆதிக்கத்தால் அத்தகைய தமிழறிவைப் பலர் இழந்துவிட்டனர். இந்நிலையில் குழந்தை இலக்கியம் இன்றியமையாததாயிற்று. அக்குறையை நீக்கிக் குழந்தைகள் உளங் குளிர்ந்து பாடுவதற்கு ஏற்ற எளிய கவிதைகள் பலவற்றைத் தந்தவர் கவிமணி [3] என்று சொல்லின் செல்வர் ரா.பி. சேதுபிள்ளை குறிப்பிட்டுள்ளார்.  சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவரும் கவிமணியின் நெருங்கிய நண்பருமான பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் ‘கவிமணியின் பாடல்களிற் சில சிறு குழந்தைகளின் சிவப்பூறிய மலர் வாயினின்றும் தேனினும் இனியவாய் மறித்துச் சுரக்கின்றன’ என்று கூறியுள்ளார். [4]  குழந்தை உள்ளம் கவிமணி அவர்கள் குழந்தைகளிடம் எல்லையற்ற அன்பு கொண்டிருந்தார். தம் வீட்டுச் சுவர்களில் குழந்தைகள் பலவற்றின் படங்களைத் தொங்கவிட்டிருப்பார். அவர் வாழ்வில் அவருக்குக் குழந்தைச் செல்வம் வாய்க்கவில்லை. ஊரில் உள்ள குழந்தைகளையெல்லாம் தம் குழந்தையாக எண்ணினார். குழந்தைகள் நெஞ்சம் உருகி நைந்தால் இவரும் உள்ளம் உருகிக் கரைவார். குழந்தைகள் அழுவதைக் காண மனம் பொறுக்க மாட்டார். எனவே குழந்தைகளின் இன்ப துன்பங்களில் பெரும்பங்கு கொண்டார். ‘மலரும் மாலையும்’ என்னும் தம் கவிதைத் தொகுதியை,  “செந்தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியர்க் கிந்தநூ லுரியதாய் என்றும் வாழ்கவே”  என்று தம்முடைய கவிதை நூலையே தமிழ்நாட்டுச் சிறுவர் சிறுமியர்களுக்கு உரிமையாக்கினர். தம்முடைய இருபத்தைந்தாம் வயது தொடங்கிய-அதாவது 1901ஆம் ஆண்டு முதல்-தம்முடைய திருமண ஆண்டு முதல் குழந்தைப் பாடல்கள் எழுதத் தொடங்கிவிட்டார். 1917-18ஆம் ஆண்டில் “மருமக்கள் வழி மான்மியம்” என்னும் கவிதை ‘தமிழன்’ என்ற பத்திரிகையில் தொடர்ச்சியாக வெளிவந்தது. இவர்தம் குழந்தைப் பாடல்கள் 1941ஆம் ஆண்டில் ‘இளந்தென்றல்’ என்ற பெயரில் வெளிவந்தது. ‘மலரும் மாலையும்’ என்னும் கவிதைத் தொகுதியை, மழலை மொழி, இயற்கை இன்பம், காட்சி இன்பம், கதைப் பாட்டு, உள்ளமும் உணர்வும் என்னும் ஐந்து தலைப்புகளில் 46 குழந்தைப் பாடல்களைக் கொண்டுள்ளது. இது அன்பர் திரு. மு. அருணாசலம் அவர்கள் முயற்சியால் 1938ஆம் ஆண்டு வெளிவந்தது. இக்குழந்தைப் பாடல்கள் 1954ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்களில் ‘குழந்தைச் செல்வம்’ என்னும் பெயரோடு 58 பாடல்களைக் கொண்டு தனியே வெளியிடப்பட்டது. இக் ‘குழந்தைச் செல்வம்’ என்னும் நூலுக்கு 1957ஆம் ஆண்டு குழந்தை நூல்வரிசையில் சென்னை அரசாங்கக் கல்வித் துறையினர் பரிசு அளித்துப் பாராட்டினர். ‘குழந்தை இலக்கிய வரலாறு’ என்னும் நூலினை எழுதிய நண்பர் குழந்தை எழுத்தாளர் பூவண்ணன் அவர்கள் குழந்தைச் செல்வம் நூலில் உள்ள பாடல்களில் பாதி, பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் படிப்பதற்கே ஏற்றவையாகும் என்று திறனாய்ந்து தெளிந்துள்ளார். [5] ‘குழந்தைகள் பயன் பெறுமாறு பாடிய கவி தேவி’ (தேசிக விநாயகம் பிள்ளை) என்றும், ‘தேவிக்குக் குழந்தை இல்லை, இருந்தால் குழந்தைப் பாசம் அவர்கள் அளவில் நின்றிருத்தலும் கூடும். உள்ளத்தே ஊறிச் சுரக்கும் அன்பை அழுதும் அரற்றியும் முரண்டுபிடித்தும் அக்குழந்தைகள் தடைப்படுத்தி இருக்கவும் செய்யலாம். இப்பொழுதோ தமிழகக் குழந்தைகள் அனைத்தும் அவர்கள் குழந்தைகளாகி விட்டன. அவைகளின்மீது அன்பையும் அருளையும் அள்ளிச் சொரிகின்றார்கள்.’[6] என்றும் திரு. செ. சதாசிவம் அவர்கள் கவிமணியின் குழந்தை உள்ளத்தை எடுத்து மொழிகின்றார்.  இனி, கவிமணியின் குழந்தைப் பாடல்களை வகைப் படுத்திக் காண்போமாக.  தாலாட்டு தாலாட்டு என்ற இலக்கியவகை மிகப் பழமையானது. ‘நாக்குத்தான் குழந்தைக்கு மிகவும் பிடித்த விளையாட்டுக் கருவி’ என்று மொழி நூல் வல்லுநர் ஆட்டோ யெஸ்பர்சன் கூறுகிறார்.8 இந்த நாக்கு நல்ல சொற்களைச் சொல்ல முயலும் நாள்களைச் ‘செங்கீரைப் பருவம்’ என்று செப்பினர். கிலுகிலுப்பை ஒலியினைக் கேட்டு மகிழ்ந்த குழந்தையைப் பற்றிய குறிப்பு சிறு பாணாற்றுப்படையில் இடம் பெற்றிருக்கக் காணலாம். [7] தொட்டிலில் படுத்துக் கிடக்கும் குழந்தை, தன்னைப் பார்த்துத் தொட்டிலை ஆட்டிக் கொண்டு தாலாட்டுப் பாடும் தாயின் வாய் அசைவினை நோக்கித் தானும் வாய் அசைத்துப் பொருளற்ற மழலைச் சொற்களை உதிர்க்கத் தொடங்குகின்றது. பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகள் அகண்ட செவிகளும் நீண்ட நாக்குகளும் கொண்டனவாய்த் துலங்குகின்றன. எனவே தாலப் பருவம் என்பது பிள்ளைப் பருவங்களில் வரும் பத்துப் பருவங்களுள் ஒன்றாகும். ‘தாலோ தாலேலோ’, ‘ஆராரோ ஆராரோ, ஆரிவரோ, ஆராரோ’ என்னும் சொற்கள் குழந்தையின் நெஞ்சில் கிளர்ச்சியை ஊட்டுவனவாகும். கவிமணி பாடிய குழந்தைத் தாலாட்டுப் பாடல்களில் சில பொறுக்கு மணிகளை இங்கே காண்போம்.  முல்லை நறுமலரோ? முருகவிழ்க்குங் தாமரையோ? மல்லிகைப் பூவோ? மருக்கொழுந்தோ சண்பகமோ?  ★★★ நெஞ்சிற் கவலையெலாம் நீங்கத் திருமுகத்தில் புஞ்சிரிப்பைக் காட்டி, எம்மைப் போற்றும் இளமதியோ?  ★★★  கண்ணுறங்கு, கண்ணுறங்கு, கண்மணியே! கண்ணுறங்கு : ஆராரோ? ஆராரோ? ஆரிவரோ? ஆராரோ?  இந்தப் பாடல்களில் அமைந்துள்ள கற்பனையும் பாட்டோட்டமும் பாராட்டத் தகுவனவாகும்.  குழந்தையாக இருக்கும்பொழுதே நல்ல பழக்க வழக்கங்களைப் புகட்டிவிடுதல் நல்லது என்ற நிலையைத் தான் ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்ற ஒரு முதுமொழி குறிப்பிடுகின்றது. இந்த முறையில் ஒருவருக்கு அறிவுரை கூறவேண்டுமானால் அவர் மனம் மகிழ முன்னிலைப்படுத்தி அதன் பின்னரே கூற வந்த அறவுரையை அவர் மனம் கொள்ளும்படி குறிப்பின் வெளிப்படக் குறிப்பிட வேண்டும். இவ்வாறான போக்கினைப் புறநானூற்றுப் பாடல்களில் காணலாம், அரசர்களுக்கு அமரின் இடையே அஞ்சாது அறவுரை கூறத் துணிந்த புலவர் பெருமக்கள் முதற்கண் அரசனையும் அவன் பிறந்த மரபினையும் வாழ்த்தி தாம் கூறவந்த கருத்தை எடுத்து மொழிவது வழக்கம். அம். முறையில் குழந்தையினை வைகறையில் துயில்விட்டு எழுப்ப நினைக்கும் கவிமணி அவர்கள், குழந்தையின் மனப் பாங்கினைப் உணர்ந்து தம் பாடலைப் புனைந்துள்ளார்.  அப்பா!! எழுந்திரையா! அரசே! எழுந்திரையா! கொக் கொக்கோ என்று கோழி அதோ கூவுது பார்! கா கா கா என்று காகம் பறக்குது பார்! கிழங்கு வெளுக்குது பார்! கிரணம் பரவுது பார்!  இந்தப் பாடல்களில் குழந்தைக்கு வேடிக்கை காட்டிக் காலையில் கண் மலரச் செய்யும் பக்குவத்தைக் காண்கின்றோம். மேலும் அவர் குழந்தை மகிழ்வோடும் வியப்போடும் கானும் கறவைப் பசுவினையும் கன்றுக் குட்டி யினையும் காட்டி. பின்னர், பால்குடிக்க, பழம் தின்ன வேண்டும் என்று மகிழ்ச்சியூட்டி ஊடேயே பாடங்கள் படிக்க வேண்டிய அவசியத்தினையும் உரிய நேரத்தில் பள்ளிக்குச் செல்லவேண்டிய பக்குவத்தினையும் நயம்பட உரைக்கின்றார்.  கறவைப் பசுவை அதன் கன்று சுற்றித் துள்ளுது பார்! பால் குடிக்க வேண்டாமோ? பழம் தின்ன வேண்டாமோ? பாடங்கள் எல்லாம் படித்திட வேண்டாமோ? சீக்கிரம் பள்ளிக்குச் சென்றிட வேண்டாமோ? காலையும் ஆச்சுதையா! கண்விழித்துப் பாரையா! அப்பா!! எழுந்திரையா! அரசே எழுக்திரையா!  அடுத்து, கானலப்பாட்டு என்ற தலைப்பில் அமைந்த பாடலிலும் இதே விரகினைக் கையாளுவதைக் காணலாம்.  பொழுது விடிந்தது; பொற்கோழி கூவிற்று; பூஞ்செடி பொலிவதைப் பாராய்! பொன்னே! நீ எழுங் தோடி வாராய்! காகம் கரைந்தது; காலையும் ஆயிற்று; கனியுதிர் காவினைப் பாராய்! கண்ணே! நீ எழுங் தோடி வாராய்  குழந்தைத் தோழர்கள்  குழந்தைகளுக்குக் காக்கையும், கோழியும், நாயும். கிளியும், பகவும், கன்றும் இனிய தோழர்கள் ஆவர். எனவே கவிமணியின் பாட்டு இத்துறைகளில் அமைந்திருப்பதில் வியப்பில்லை. எளிய பாடல்களில் கற்பனை நயத்தினைக் குழைத்துக் குழந்தையின் உள்ளத்தில் அறிவு வேட்கையினைக் கவிமணி அவர்கள் உண்டாக்குகின்றார். சேவற் கோழியைப் பற்றிப் பாடும்போது,  குத்திச் சண்டை செய்யவோ? குப்பை கிண்டி மேயவோ? கத்திபோல் உன் கால் விரல் கடவுள் தந்து விட்டனர்!    காலை கூவி எங்களைக் கட்டில் விட்டெ ழுப்புவாய், வேலை செய்ய ஏவுவாய்; வெற்றி கொண்ட கோழியே!  என்று பாடியுள்ள திறம் மகிழ்தற்குரியது. பெட்டைக் கோழியைப் பற்றிப் பாடும் பாடலில் கவிஞரின் கழிவிரக்கப் பண்பு புலனாகக் காணலாம். ‘பெண் என்றால் பேயும் இரங்கும்’ என்பது தமிழ்ப் பழமொழி. இம்முறையில் பெட்டைக்கோழியை அடைக்கும்பொழுது கூரையை விட்டு இறங்கிவரச் சொல்லி; பிள்ளைகளையும் கூட்டிவரச் சொல்லிக் கொத்திக் கொத்தித் தின்னக் குட்டை நெல்லைக் காட்டும் இரக்கம் மனம் கொளத் தக்கதாகும். சின்னக் குழந்தைகள் நெஞ்சத்தில் எளிய உயிர்களுக்கும் இரங்கும் அரிய கருணை உள்ளத்தினை இப்பாடல்களில் புகட்டி நிற்கக் காண்கின்றோம்.  கோழீ! கோழீ! வா வா; கூரை விட்டு இறங்கி வா! ....................................... பெட்டைக்கோழீ! வா வா! பிள்ளைகளைக் கூட்டி வா! குட்டை நெல்லைக் கொட்டினேன்; கொத்திக் கொத்தித் தின்ன வா!  மேலும், இப்பாடலின் இறுதி அடிகள் வானத்தில் வட்ட மிடும் பருந்துக்குப் பெட்டைக்கோழியின் இளைய குஞ்சுகள் எங்கே வஞ்சனையால் இரையாகிப் போய் விடுமோ என்று தவிக்கும் இரக்க உள்ளத்தைக் காணலாம்.  வஞ்சமாய்ப் பருந்ததோ வானில் வட்டம் போடுது, குஞ்சணைத்துக் காப்பாயோ? கூட்டில் கொண்டு சேர்ப்பாயோ?  கவிமணிக்குக் கிளியிடம் மிகுந்த பற்று. அது பற்றி எவ்வளவோ பாடியிருக்கின்றார். அவ்வளவும் உணர்ந்து பாடியவை, உண்மை நிறைந்தவை. இவ்வாறு கூறுகிறார் புலவர் செ. சதாசிவம் அவர்கள் . [8] ‘கிளியை அழைத்தல்’ என்று தலைப்புடைய பாடல்,  பச்சைக்கிளியே! வா! வா! பாலும் சோறும் உண்ண வா! கொச்சி மஞ்சள் பூச வா, கொஞ்சிவிளை யாட வா!  என்று தொடங்குகிறது. இந்தப் பாடலில் அமைந்துள்ள சில பகுதிகள் தடைபடாப் பாட்டோட்டம் கொண்டு உரிய பொருளை உள்ளடக்கி நிற்கின்றன.  வட்டமாய் உன் கழுத்திலே வான வில்லை ஆரமாய், இட்ட மன்னர் யாரம்மா? யான் அறியக் கூறம்மா! பவழக் காரத் தெருவிலே பவழங் காண வில்லையாம் எவர் எடுத்துச் சென்றனர்? எனக் கறிந்து சொல்வையோ!  இந்த இரண்டு பாடல்களிலும் கவிமணியின் சந்தநய இன்பத்தினை அறிந்து மகிழலாம். கூண்டுக் கிளியைப் பார்த்துச் சிறுவன் ஒருவன் தான் பாலைக் கொண்டு தந்தும், பழம் தின்னத் தந்தும் சோலைக்கு ஓடிப்போக ஏன் வழி பார்க்கிறாய் என்றும், கூட்டில் வாழும் வாழ்வினில் குறைகள் உண்டோ என்றும் கேட்கிறான். அதற்குக் கிளி மறுமொழியாகக் கூறும் பகுதி குழந்தையின் சிந்தனைச் செல்வத்தினையும், உயரிய கொள்கைப் பிடிப்பினையும் வளர்ப்பதாகும். அப்பகுதி வருமாறு :  சிறையில் வாழும் வாழ்வுக்குச் சிறகும் படைத்து விடுவானோ? இறைவன் அறியாப் பாலகனோ? எண்ணி வினைகள் செய்யானோ? பாலும் எனக்குத் தேவையில்லை; பழமும் எனக்குத் தேவையில்லை சோலை எங்கும் கூவி நிதம் சுற்றித் திரிதல் போதுமப்பா!  இது போன்றே பசுவைப் பார்த்துப் பாடும் பாலகன்,  பச்சைப்புல்லைத் தின்று, வெள்ளைப் பால்தர, நீ என்ன பக்குவஞ் செய்வாய்? அதனைப் பகருவையோ பசுவே!  என்று கேள்வி தொடுக்கின்றான். அடுத்துப் ‘பசுவும் கன்றும்’ என்ற பாடல் குழந்தை இலக்கியத்தில் சாகா வரம் பெற்ற பாடலாகும். சொற்களின் எளிமையும் இனிமையும் இப்பாட்டில் ஒன்றையொன்று போட்டியிட்டு நிற்கின்றன.  தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு-அங்கே துள்ளிக் குதிக்குது. கன்றுக் குட்டி அம்மா என் குது, வெள்ளைப்பசு-உடன் அண்டையில் ஓடுது கன்றுக் குட்டி நாவால் நக்குது வெள்ளைப்பசு-பாலை நன்றாய்க் குடி க்குது, கன்றுக் குட்டி. முத்தம் கொடுக்குது, வெள்ளைப்பசு-மடி முட்டிக் குடிக்குது கன்றுக்குட்டி,  விளையாட்டிலும் ஓர் எல்லை வேண்டும் என்பதனை,  கட்டும் பாண்டி யாடலாம், களைத்து விட்டால் நிறுத்தலாம்; எய்யாப் பாண்டி யாடலாம்; எய்த்து விட்டால் நிறுத்தலாம்;  என்ற பாடலில் புலப்படுத்தியுள்ளார். வில்லியம் பிளேக் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய பாடலைக் குழந்தைகளுக்காகத் தமிழில் மொழி பெயர்த்த பொழுது,  கூட்டில் அடைத்திடினும்-இரையினைக் கொண்டு கொடுத்திடினும், காட்டில் வளர்ந்த குணம்-புலிகளும் காட்டா திருக்கு மோடி? மானைப் படைத்த தெய்வம்-புலியையும் வளர்த்து விடலா மோடி..? தேனைப் பழித்த சொல்லாய்!-எனக்குநீ தெரிந்துரை செய்யா யோடி?  என்ற பாடல்களில் எண்ணத்தை வளர்க்கும் இனிய வினாக்களை எழுப்பியுள்ளார்.  வெண்ணிலாப் பாட்டு ‘நிலா நிலா வா வா’ என்று குழந்தைகள் பாடி மகிழ்வது இயற்கை. இம்முறையில் சந்திரன் என்ற தலைப்பில் கவிமணி பாடியுள்ள பாடலில் பல சிறப்புகளைக் காணலாம். இந்தப் பாடலில் காட்சி இன்பமும் கருத்து இன்பமும் காந்தியக் கருத்தும் அழகுறப் பொருந்தி உள்ளதனைக் காணலாம்.  காட்சி வருணனை மீனினம் ஓடிப் பரக்குதம்மா!-ஊடே வெள்ளி ஒடமொன்று செல்லுதம்மா! வானும் கடலாக மாறு தம்மா?-இந்த மாட்சியி லுள்ளம் முழுகு தம்மா!  முல்லை மலர்ப்பந்தல் இட்டனரோ-தேவர் முத்து விதானம் அமைத்தன ரோ? வெல்லு மதியின் திருமணமோ?-அவன் விண்ணில் விழாவரும் வேளையிதோ?  என்ற பாடல்களில் காட்சியின்பமும்,  அம்புயம் வாடித் தளர்ந்ததம்மா!-அயல் ஆம்பலும் கண்டு களிக்குதம்மா! இம்பருலகின் இயல்பிதம்மா!-மதிக்கு இன்னார் இனியாரும் உண்டோ அம்மா? மாற்றம் உலகின் இயற்கையென-இங்கு மாந்தரும் கண்டு தெளிந்திடவோ, போற்றும் இறைவன் இம் மாமதியம்-விண்ணில் பூத்து கிலவ விதித்தனனே!  என்ற பாடல்களில் சிறந்த கருத்தும்,  கூனக் கிழவி நிலவினிலே-ராட்டில் கொட்டை நூற்கும்பணி செய்வதை இம் மாநிலம் கண்டு மகிழ்ந்திடவே-காந்தி மாமதி யோங்கி வளருதம்மா!  என்ற பாடலில் காந்தியமும் அமைந்து துலங்குவதைக் காணலாம்.  காட்சி இன்பம் ஒர் ஏழைப்பெண் தன் தாயிடம் கடிகாரம் வாங்கித் தரும்படி கேட்கிறாள். அதற்கு அந்த ஏழைத் தாய், “மகளே! நேரத்தை அறிவதற்கு இயற்கையிலேயே பல வழிகள் இருக்க நமக்குக் கடிகாரமும் வேறுவேண்டுமா?” என விடையிறுக்கிறாள். சேவற் கோழியும் காகமும், செங்கதிரும் செந்தாமாரையும், தன் நிழலும் நேரத்தைச் சரியாக உணர்த்துமே என்று அந்தத் தாய் இயற்கையின் இனிய பெற்றியை எடுத்து இயம்புகின்றாள்.  சுற்றுப் பொருளெல்லாம் உற்றுநோக்கி-அவை சுட்டும் மணிநேரம் கண்டறிவாய்! பெற்ற முத்தே! இந்த உண்மை அறிவோருக்குப் பின்னும் கடிகாரம் வேண்டுமோடி?  என்று இறுதியாகக் கூறி, மனித வாழ்விற்கு இயற்கை பின்னணியாகப் பொலிவதனை எடுத்து மொழிகின்றார்.  அடுத்து, அவருடைய ‘ஸைக்கிள்’ பாட்டு குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமான பாட்டு.  தங்கையே பார்! தங்கையே! பார் ஸைக்கிள் வண்டி இதுவே பார்!  என்று தொடங்கி,  ஒன்றன் பின் ஒன்றாக உருளும்பை தாக்களைப் பார்! அக்காளும் தங்கையும் போல் அவைபோகும் அழகைப் பார்!  என்று குழந்தைகளுக்குப் பாட்டிலேயே ஒற்றுமை உணர்ச்சியினை ஊட்டுகின்றார்.  கதைப்பாட்டில் கருத்து ‘ஊகம் உள்ள காகம்’ ‘நெற்பானையும் எலியும்’ ‘அப்பம் திருடின எலி’ முதலிய கதைப் பாடல்கள் குழந்தைகளுக்குக் கதையின் வாயிலாக அரிய கருத்துகளை உணர்த்தி நிற்கின்றன. தண்ணிர்த் தாகத்தால்,அலைந்து திரிந்த காக்கை மண்ணாற் செய்த ஒரு சாடியின்:அடியில் சிறிது தண்ணிரைக் கண்டு, அந்தச் சாடியினுள் சிறு சிறு கற்களைப் பொறுக்கி வந்து இட்டு, தண்ணிர் மேலே வர, நீரைக் குடித்துத் தன் தாகத்தைத் தீர்த்துக் கொண்டது என்று கதை சொல்லி, கதையின் இறுதியில்,  ஊக்க முடையவர்க்குத்-துன்பம் உலகில் இல்லை, அம்மா! ஆக்கம் பெருகும், அம்மா!-இதை நீ அறிய வேண்டும், அம்மா!  என்று கூறி, ‘ஊக்கம் உண்மை வாழ்வுக்கு ஆக்கம்’ என்பதனை உணர்த்தியுள்ளார்.  ‘நெற்பானையும் எலியும்’ என்ற கதைப் பாட்டில் ஓசை நயத்தோடு மலைவீழ் அருவி போன்று சொற்கள் குதித்து வருவதையும் காணலாம்.  பாட்டியின் வீட்டுப் பழம்பானை-அங்தப் பானை ஒருபுறம் ஓட்டையடா! ஓட்டை வழியொரு சுண்டெலியும்-அதன் உள்ளே புகுந்துகெல் தின்றதடா!  பாட்டி வீட்டில் ஒரு பழைய பானையில் நெல் இருந்தது. பானையின் ஒருபுறம் ஒட்டை, அந்த ஒட்டையின் வழியே உள்ளே சென்ற சுண்டெலி ஒன்று நெல் தின்றது. அளவுக்கு மீறித் தின்றதால் வயிறு புடைத்தது. எனவே உள்ளே சென்ற எலி ஒட்டை வழியே வெளியே திரும்பி வர முடியாமற் போயிற்று. மறுநாள் பாட்டி பானையின் மூடியைத் திறந்தாள். எலி வெளியே வந்தது. ஆனால் பாவம், அந்த வேளை பார்த்துப் பூனை ஒன்று அங்கே வந்து விட்டது. பூனை எலியைத் தின்று விட்டது. இந்தக் கதையைக் கூறி, இறுதியில்,  கள்ள வழியினிற் செல்பவரை-எமன் காலடி பற்றித் தொடர்வானடா! உள்ள படியே நடப்பவர்க்குத்-தெய்வம் உற்ற துணையாக நிற்குமடா!  என்று கள்ள வழியில் சென்றால் காலன் விடமாட்டான்; கள்ள வழியில் சென்றால் பூனைக்கு இரையான சுண்டெலியின் கதியே நம் கதியும் என்று குழந்தைகள் கூறிக் கொள்ளும். இவ்வாறு கதையும் கருத்தும் இணைந்துள்ள இத்தகைய கதைப் பாடல்கள் குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் துணை நின்று, பண்பு நிலைக்குப் படிப் படியாகக் கொண்டு செல்லும்.  அப்பம் திருடின எலி, திருட்டில் பெற்ற அப்பத்தைத் தான் மட்டுமே தின்று இறப்பது உறுதியாயிற்று என்று கூறி, அளவு கடந்தால் ஆரமுதும் நஞ்சு என்ற கருத்தையும், கிட்டிய பொருளை எட்டிய மட்டும் எல்லார்க்கும் கொடுத்து உண்ணவேண்டும் என்ற கருத்தினையும் கவிமணி புலப் படுத்தியுள்ளார்.  ‘ஒளவையும் இடைச்சிறுவனும்’ என்ற பாடல், ஆழக் கற்றாலும் அடக்கம் மிகத்தேவை என்பதனையும் ‘புத்தரும் ஏழைச் சிறுவனும்’ என்ற பாடல் பிறருக்கு நன்மை செய்பவர் மேற்குவத்தார் என்றும், தீமை செய்பவர் தீண்ட ஒண்ணாதார் என்றும் குறிப்பிடுகின்றன.  பெரியோரைப் போற்றுதல் குழந்தைகளுக்குப் பெரியோர்பால் பேரன்பும் மதிப்பும் பெருக வேண்டும் என்பதனைச் சில பாடங்களில் கவிமணி வற்புறுத்துகின்றார். ஒளவைக் கிழவியின் அருமையினை,  கூழுக் காகக் கவிபாடும் கூனக் கிழவி அவளுரையை வாழும் வாழ்வில் ஒருநாளும் மறவோம் மறவோம் மறவோமே!  என்றும், திருவள்ளுவரை,  சாதி ஒன்றேயாம்-தமிழர் சமயம் ஒன்றேயாம் நீதி ஒன்றேயாம்-என்று நிலைநிறுத்தி நின்றோன்  என்றும், கம்பனை,  ஆரியம் நன்குணர்ந்தோன்-தமிழின் ஆழம் அளந்துகண்டோன்; மாரி மழைபோலக்-கவியின் மழைபொழிந் திடுவோன்  என்றும், அமரகவி பாரதியினை,  ஊரறிய நாடறிய உண்மை யெல்லாம் ஒருவரையும் அஞ்சாமல் எடுத்து ரைத்தோன் ஆரமுதம் அனையகவி பாடித் தந்தோன் அமரகவி யென்றெவரும் புகழ்ப் பெற்றோன்  என்றும் பாடியுள்ளார்.  வாழ்க்கை நீதிகள் வளரும் இளம்செடிக்கு உரம் ஊட்டிக் களை களைந்து நீர்பாய்ச்சி காவல் செய்தால் கதிரவன் ஒளியின் துணையுடன் அப் பயிர் நன்கு செழித்து வளரும். இம்முறையில் இளம் நெஞ்சில் உயரிய கருத்துகளை எளிய சொற்களால் புகுத்தி, அரிய வாழ்க்கைத் தத்துவங்கள் வெளிப்படுத்தியுள்ளார். வாழ்க்கைத் தத்துவங்கள் என்ற தலைப்பமைந்த கவிதையில், ‘நாமே நமக்குத் துணையானால், நாடும் பொருளும் நற்புகழும், தாமே நம்மைத்தேடிவரும்’ என்றும் ‘நெஞ்சிற் கருணையும் நேயமும் விஞ்சும் பொறுமையும் கொண்டவர்க்கு வெல்லும் படைகள் வேறு வேண்டா’என்றும், உள்ளம் பொருந்தி ஊக்கம் பெருக உழைத்தால் தடைகள் பொடியாகிப் பள்ளம் உயர்மேடாகும் என்றும் கூறி, இறுதியில்,  கால நதியின் கதியதினில் கடவுள் ஆணை காண்பீரேல் ஞால மீது சுகமெல்லாம் நாளும் அடைந்து வாழ்வீரே!  என்றும் தெய்வ நம்பிக்கையை, கடவுள் ஆணையை வற்புறுத்துகின்றார்.  ‘தைப்பொங்கல்’ என்ற கவிதையில், பொங்கல் பொங்கி முடிந்த பிறகு கடவுளுக்கு, முதலிலும் காகத்துக்கு அடுத்தும், பின்னர் உடன் இருந்தோர்க்கும் வழங்கி ஒக்க உண்டு மகிழும் பாங்கினையும் எடுத்து மொழிகின்றார்.  கவிமணி காட்டும் உவமை நலமும் நகைச்சுவைத் திறனும்  கவிமணி கையாளும் உவமைகள் எளியன; இனியன. ‘பூமகளின் புன்னகைடோல் பூத்திடுவோம்’ என்றும், ‘கம்பன் பாமணக்கும் தமிழினைப்போல் பரிமளிப்போம்’ என்றும் பாடும் பாடல்களில் உவமையின் எளிமையைக் காணலாம்.  ‘தீபாவளிப் பண்டிகை’ என்ற பாட்டில்,  இட்டிலி வீரர்தென் னிந்தியராம்-என்பது இன்று காம் காட்டி விடுவோம், அடா! சட்டினி நண்பன் துணை யிருக்க-அதில் சந்தேகம் உண்டோ? நீ சொல்வாய், அடா!  என்ற பாடலில், நகைச்சுவை கொப்பளித்து வருவதனைக் காணலாம்.  உழைப்பும் உடல் கலமும் ‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?’ என்பர் பெரியர். கவிமணியும், ‘ஆக்கம் வேண்டுமெனில், நன்மை அடைய வேண்டுமெனில், ஊக்கம் வேண்டுமப்பா, ஓயாது உழைக்க வேண்டுமப்பா எள்று கூறுகிறார்.  கூழைக் குடித்தாலும் குளித்தபிறகு குடிக்க வேண்டு மென்றும், ஏழையே ஆனாலும் இரவில் நன்றாய் உறங்க வேண்டுமென்றும் அறிவுறுத்துகின்றார். நூறு ஆண்டுகள் வாழ்வதன் ரகசியத்தைப் பின் வருமாறு கூறுகின்றார்:  தூய காற்றும் கன்னிரும் சுண்டப் பசித்த பின் உணவும் நோயை ஒட்டி விடும், அப்பா! நூறு வயதும் தரும், அப்பா!  அடுத்து,  காலை மாலை உலாவிகிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே!  என்று கூறுகிறார். இங்குக் கவிமணியின் சொல்லு முறை (the technique of expression)நயம்பட அமைந்துள்ளது.  கவிமணி உணர்த்தும் தேசியம் பாரதியாரின் கவிதை வெறியையோ தேசிய ஆவேசத்தையோ கவிமணியிடம் காண்பதற்கு இல்லை. எனினும், கவிமணியின் கவிதைத் திறன் போல் தேசிய உணர்ச்சியும் நம் பாராட்டுக்கு உரியதே.  கைத்திறன் பாட்டிலே ‘நாடிய சீர் நாடடைய’ என்று தொடங்கும் பாடலை அனுபவித்த குமரன் வாசகர்களில் சிலர், தேசிக விநாயகம் பிள்ளையைத் தேசிய விநாயகம் பிள்ளை என்றும் வாய் குளிரக் குறிப்பிடலாயினர்.  பாரதியையும் கவிமணியையும் ஒப்பு நோக்கிய ராஜாஜி பின்வருமாறு கூறியுள்ளார். ‘பாரதி காட்டுப் புளியமரம் போன்றவர்; காடு முரடு, உயிர் இருக்கும்; புளிப்பு உரம் இருக்கும். கவிமணியின் கவிதையில் நகாசு வேலை மிகுந்திருக்கும். பிறகு அன்பு மிளிரும். அத்தகைய கவி தேசிக விநாயகம் பிள்ளை;”[9] இது ஓரளவு உண்மைதான்.  மேற்காட்டிய பகுதிகள் கவிமணியின் தேசியப் பற்றை உணர்த்தும். ‘தாயிற் சிறந்ததப்பா பிறந்த தாய் நாடு’ என்று தாய்நாட்டுப் பற்றை ஊட்டி, “பேணி நம் சந்தத் தமிழ் வளர்ப்போம், தாய் நாட்டுக்கே உழைப்போம்” என்று. தமிழ்ப் பற்றையும் நாட்டுப் பற்றையும் விளக்கி, ‘காந்தி அடிகளை அன்போடு சிந்தனை செய்வோம்’ என்று சொல்லி, பாரில் உயர்ந்த இமயமலையையும், அதன் சிகரத்தில் பறக்கும் தேசக் கொடியையும் காட்டி,  மானம் உருவாக வந்தகொடி - இதை மாசுறச் செய்வது பாவம், பாவம்! ஊனில் உயிருள்ள கால மல்லாம்-மிக ஊக்கமாய் கின்று.நாம் காத்திடுவோம்  என்று நாட்டுப் பற்றுணர்வோடு நவில்கின்றார். ‘உத்தமனாம் அந்தணனைக் காந்தி அடிகளை அன்போடு சிந்தனை செய் நெஞ்சே தினம்’ என்று காந்தியடிகளைப் போற்றுகின்றார். இறுதியில், உலகமெல்லாம் ஒரு குடும்ப மாக வாழ வேண்டும் என்பதனை,  உலக மக்களெலாம்-அன்போடு ஒரு தாய் மக்களைப் போல் கலகமின்றி வாழும்-காலம் காண வேண்டுமப்பா!  என்ற பாடலில் கவிமணி சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். கவிமணியின் கதர்ப்பற்றும் காந்தியப்பற்றும் நாடு அறிந்தவை.  முடிவுரை கவிமணி குழந்தைகளின் மனத்தை நன்கு அறிந்தவர்,குழந்தைகளின் பேச்சில் மகிழ்பவர், அவர்களோடு உரையாட விரும்புவர்.  “அவர்(கவிமணி) குழந்தைகளின் மனத்தை நங்கு அறிந்தவர்; குழந்தைகளோடு இனிமையாகப் பேசுவதில் ஆசை உடையவர்; குழந்தைகளுடைய பேச்சையும் அவற்றின் இடையிடயே தோன்றும் பளிச்சென்று தோன்றும் உவமைகளையும் எண்ணி மகிழ்பவர்.”[10] இவ்வாறு திரு.பெ.நா. அப்புசாமி அவர்கள் குறிப்பிடுகின்றார்.  ‘கவிமணி’ என்னும் பட்டம் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்க அன்பர்களால் சென்னை பச்சையப்பன் கல்லுரியில் தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளை அவர்களால் 1940 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் நாள் தரப்பட்டது. கவிமணி என்ற தம் பெயருக்கு ஏற்ப நல்ல கவித்துவத்தோடு மணியான கவிதைகளைத் தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியர்க்காக வழங்கிய பெருமை தேசிக விநாயகம் பிள்ளையைச் சாரும். பாரதியார் முப்பெரும் பாடல்வழி எப்போதும் தமிழ் மக்களால் நினைவு கூரப்படுவது போல, கவிமணி அவர்களும் தாம் இயற்றிய குழந்தை பாடல்களால் தமிழ்கூறு நல்லுலகத்தால் என்றென்றும் நினைவுகூரப் பெறுவர் என்பது உறுதி.  1. ↑ புறநானூறு, 188  2. ↑ அகநானூறு, 54:17-20.  3. ↑ சுடர், கவிமணி மலர், பக்கம். 35.  4. ↑ தமிழ்ச்சுடர் மணிகள்-ப. 423  5. ↑ குழந்தை இலக்கிய வரலாறு, ப. 27.  6. ↑ செ. சதாசிவம், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை,ப-118  7. ↑ சிறுபாணாற்றுப் படை ; 55-61  8. ↑ கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ப. 120. சா-5  9. ↑ பி ஸ்ரீ. நானறிந்த தமிழ் மணிகள் ப. 52.  10. ↑ சுடர்: கவிமணி மலர். 1965, தில்லித் தமிழ்ச் சங்கம்-ப.49                5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர்   பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இவ் வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து அருந்தமிழ்த் தொண்டாற்றிய தமிழ்ச் சான்றோர் சிலருள் குறிப்பிடத் தக்கவர் மு. இராகவை யங்கார் அவர்கள். தமிழ் மொழிப் புலமையும் வடமொழிப் புலமையும், ஆங்கில அறிவும். மிக்கவர். சேதுபதிகளின் ஆதரவாலும், மதுரைத் தமிழ்ச் சங்கத் தொடர்பாலும், தம் விடா முயற்சியாலும் இவர் கற்றுத் துறைபோய தமிழ்த் துறைகள் பல. இவர் ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர். பதிப்பாசிரியர்; இதழாசிரியர்; சொற்பொழிவாளர்; கவிஞர். இத்தகு சீர்மையாளர் தம் வாழ்க்கை வரலாற்றையும், தமிழ்த் தாய்க்கு அவர் ஆற்றிய தொண்டுகளையும் குறித்து இவண் காண்போம்.  வாழ்க்கை வரலாறு பிறப்பும் வளர்ப்பும் 1878ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம் சமஸ்தான வித்துவானாக விளங்கிய சதாவ தானம் முத்துசுவாமி ஐயங்கார் அவர்களுக்கு ஒரு மகனாகப் பிறந்தவர். வைணவ குலத்தைச் சார்ந்தவர். இளவயதிலேயே முத்துசுவாமி ஐயங்கார் இறந்து விட்டதால், அவர்தம் மாணவர் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் இவரை வளர்த்து வந்தார்.  தொழில் மு. இராகவையங்கார் அவர்கள் தம் பதினெட்டாம் அகவையிலேயே தம் வளர்ப்புத் தந்தை பாண்டித்துரைத் தேவர் அவர்களின் அவைக்களப் புலவர் ஆனார். 1901ஆம் ஆண்டில் செந்தமிழ்க் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்து மூன்று ஆண்டுகள் தமிழாசிரியப் பணி புரிந்தார். 1904ஆம் ஆண்டில், பாண்டித்துரைத் தேவர் அவர்களால் 1901ஆம் ஆண்டில் செந்தமிழ்க் கல்லூரி, பாண்டியன் புத்தகசாலை இரண்டையும் உடன் அமைத்துத் தொடங்கப் பெற்ற செந்தமிழ் என்ற இதழின் ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். தொடர்ந்து எட்டாண்டுகள் செந்தமிழ் இதழ் ஆசிரியராகப் பணி புரிந்தார். இக்காலத்தே இவர் தமிழ் ஆராய்ச்சி உலகிற்கு அளித்த கொடை அளவிடற்கரியது. 1913 முதல் 1939 வரை ஏறத்தாழ இருபத்தாறு ஆண்டுகள் தமிழ்ப் பேரகராதிக் குழுவில் ஒருவராக, தலைமைத் தமிழ்ப் பண்டிதராக அமைந்து, தமிழ்ப் பேரகராதி ஒன்று உருப் பெறுவதற்குக் காரணமாகத் திகழ்ந்தார். இதன் காரண மாக அரசாங்கத்தார். இவருக்கு ‘இராவ் சாகிப்’ என்னும் விருதினை வழங்கிப் பெருமைப்படுத்தினர். 1944ஆம் இலயோலாக் கல்லூரியில் பி.ஓ.எல். வகுப்புகள் தொடங்கப் பெற்றபோது, இக்கல்லூரியில் பேராசிரியர் பொறுப்பு ஏற்றார். 1945ஆம் ஆண்டில் திருவிதாங்கூர்ப் பல்கலைக் கழகத்தில் அழகப்ப வள்ளல் அவர்கள் நன்கொடையால் தோற்றம் பெற்ற தமிழ் ஆராய்ச்சித் துறையின் பேராசிரியர் பதவியை முதன் முதலில் அணி செய்த பெருமை இவரையே சாரும். திருவனந்தபுரத்தில் கோட்டைக்குள் பத்பநாப சுவாமி கோவிலின் அருகில் உள்ள ஒரு வீட்டில் தம் மனையாளுடன் தங்கி இருந்தார். இறை வழிபாட்டில் ஈடுபாடுடைய இவர் திருவிதாங்கூர் மன்னரின் அன்பைப் பெற்றவர். திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரிய ராக இருந்தபோது இவருக்கு உதவியாளராக இருந்தவர் திரு. கிருஷ்ண ஐயங்கார் அவர்கள் ஆவர். 1951ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கம்பராமாயணப் பதிப்பாசிரியர் குழுவில் ஒருவராக இருந்து அக்காப்பியத்திற்கு உரை விளக்கமும், பாடபேத ஆராய்ச்சியும் எழுதித் தமிழ்த் தொண்டாற்றினார். பதினெட்டு அகவையில் தமிழ்த் தொண்டாற்றத் தொடங்கிய . இவர் தம் வாழ்நாள் முழுமையும் தமிழுக்காக உழைத்துத் தமிழுக்காக வாழ்ந்து தம் எண்பத்திரண்டாம் அகவையில் இறைவனடி சேர்ந்தார்.  தமிழ்த் தொண்டு மு. இராகவையங்கார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நோக்கும்போது, அவர் வாழ்நாள் முழுமையும் தமிழ்த்தாயை அணி செய்வதிலேயே கழிந்தமை வெள்ளிடை மலையாகிறது. ஏறத்தாழ அறுபத்து நான்கு ஆண்டுகள் தமிழ்த் தொண்டாற்றிய தமிழ்ப் பெரியார் மு. இராகவையங்கார் அவர்களின் அருஞ்செயல்களை இனிக் காண்போம்.  ஆராய்ச்சி வேந்தர் மு. இராகவையங்கார்  மு. இராகவையங்கார் அவர்களை ஆராய்ச்சி உலக முன்னோடி என்று அறிஞர்கள் ஏத்துவர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் இவருடைய கைவண்ணத்தால் உருப் பெற்றன. அவற்றுள் பதினான்கு நூல்கள் ஆராய்ச்சி நூல்கள். இவற்றுள் கால/வரலாற்று ஆராய்ச்சி பற்றியன சில; இலக்கிய ஆராய்ச்சி தொடர்பானவை பல; இலக்கண ஆராய்ச்சி பற்றியன சில.  கால வரலாற்று ஆராய்ச்சி பற்றியன மு. இராகவையங்கார் அவர்களின் முயற்சியில் வெளி வந்த முதல்நான்கு நூல்களுமே கால / வரலாற்று ஆராய்ச்சிக ளாகவே மலர்ந்துள்ளன. அவை 1. வேளிர் வரலாறு, 2. சேரன் செங்குட்டுவன், 3. ஆழ்வார்கள் காலநிலை, 4. சாசனத் தமிழ்க்கவி சரிதம் என்பன.  மு. இராகவையங்கார் அவர்களின் ஆராய்ச்சி நூல் நிரலில் முதல் இடம் பெறுவது ‘வேளிர் வரலாறு’ என்பது. இந்நூல் 1905ஆம் ஆண்டில் வெளியிடப் பெற்றது. மதுரைத் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் ஆற்றிய உரையின் வடிவம் இந்நூல். இந்நூல் ‘செந்தமிழ்’ இதழிலும் வெளி வந்துள்ளது, வேளிர் என்ற சொல் வேளாளர் என்ற தனிப்பட்ட ஓர் இனத்தவரைக் குறிக்கிறது என்று சுட்டி, அவ் வினத்தவரின் வரலாறாக நச்சினார்க்கினியர் கூறிய செய்திகளைப் பிற இலக்கிய சாசனச் சான்றுகளுடன் உறுதிப்படுத்தி, இவ்வினத்தவர் தமிழகத்தில் குடியேறிய காலம் கி. பி. பத்தாம் நூற்றாண்டு என்று வரையறை செய்கின்றது.  அடுத்து 1915ல் வெளிவந்த ‘சேரன் செங்குட்டுவன்’ என்ற நூல் செங்குட்டுவனின் வரலாற்றை ஆய்வது. செங்குட்டுவனைப் பற்றிய பல்வேறு செய்திகளும் பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், புறநானூறு இவற்றின் அடிப்படையில் விளக்கம் பெறுகின்றன. சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்தை இனிய உரைநடையில் விளக்கும் இந்நூல், இவர்தம் புலமைத் திறத்திற்கும் ஆராய்ச்சி வன்மைக்கும் தக்கதோர் காட்டாகும்.  1926ஆம் ஆண்டில் தமிழ் உலகத்தில் உலா வந்தது ‘ஆழ்வார்கள் கால நிலை’ என்ற நூல். ஈரோட்டு இலக்கியச் சங்கத்தில் எச்.ஏ. பாப்லி துரையின் அழைப்பின் பேரில் ஆற்றிய ஆராய்ச்சி உரையின் வடிவமே இந்நூல்.  சா–6 ஆழ்வார்கள் பாடல்களில் அருகிக் காணப்படும் சில செய்திகளைக் கொண்டு பிற சான்றுகளுடன் ஒப்பு நோக்கி ஆழ்வார்களின் காலநிலை வரையறுக்கப்படுகின்றது.  அடுத்ததாக 1929ஆம் ஆண்டில் வெளிவந்த சாசனத் தமிழ்க்கவி சரிதம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பற்றி ஆற்றிய உரையின் வடிவம். இதில் எண்பதுக்கும் மேற்பட்ட புலவர்களைப் பற்றிய செய்திகள் அனைத்தும் இலக்கியச் சான்றுகளுடனும், சாசனச் சான்றுகளுடனும் மொழியப்படுகின்றன. சேனாவரையரும் பரிமேலழகரும் சமகாலத்தவர் என்பதை இந்நூலில் இவர் தெளிவுபடுத்துகின்றார்.  சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய சொற் பொழிவின் எஞ்சிய பகுதி ‘இலக்கிய சாசன வழக்காறுகள்’ என்ற பெயரில் நூலாக வெளியிடப் பெற்றது. இஃது இவர் மறைவுக்குப்பின் வெளிவந்த நூலாகும்; அரசர், தலைவர் வழக்குகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பாகும். இது சென்னை அரசாங்கப் புத்தக வெளியீட்டுக் குழுவினரால் வெளியிடப் பெற்றது. கல்வெட்டுகளும், இலக்கியங்களும் தமிழிலக்கியக் காலப் பரப்பை ஆராய்வதற்கு உதவி புரிவதை இந்நூல் தெளிவாக்குகிறது. ஆழ்வார் நாயன்மார் பாடல் களில் இடம்பெறும் சொல் வழக்குகள் சாசனங்களில் பயிலு மாற்றை இந்நூல் விளக்கம் செய்கிறது.  இலக்கிய ஆராய்ச்சி இலக்கிய ஆராய்ச்சியாக மலர்ந்த நூல்கள் பல. 1938ஆம் ஆண்டில் பேராசிரியரின் மணிவிழா நினைவாக ‘ஆராய்ச்சித் தொகுதி’ என்ற நூல் வெளிவந்தது. முப்பத்தைந்து கட்டுரைகள் இந்நூலின்கண் இடம் பெற்றுள்ளன. ஆராய்ச்சிக் கட்டுரைகள் . பலவற்றின் தொகுப்பு நூல் இது. 1947ஆம் ஆண்டில் ‘சேர வேந்தர் செய்யுட் கோவை’ என்ற நூலின் முதற் பகுதி வெளிவந்தது. திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறையில் பேராசிரியராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளில் இந்நூல் வெளிவந்தது. இப்பல்கலைக்கழகம் வெளியிட்ட முதல் ஆராய்ச்சி நூல் இது. இதை உருவாக்கும் பெருமை மு. இராகவையங்கார் அவர் களையே சாரும். இது சங்க காலச் சேர வேந்தர்களைப் பற்றிய தொகுப்பு நூல். பாடல் பெற்ற சேர வேந்தர், பாடிய சேரவேந்தர், சேரவேந்தர் கிளையினர், சேரவேந்தர் நாடு நகர் முதலியன, சேர மண்டலப் பகுதிகளை ஆண்ட பிற தலைவர்கள் என்ற ஐந்து பிரிவுகளாக இந்நூல் அமைந் துள்ளது.  1951ஆம் ஆண்டில் இந்நூலின் இரண்டாம் தொகுதி வெளியிடப் பெற்றது. இஃது இடைக்கால பிற்காலச் சேர வேந்தர்களைப் பற்றிய பாடல்களின் தொகுப்பு நூல். இதில் பாடல் பெற்ற சேரவேந்தர், பாடிய சேரவேந்தர், சேரநாடு, நகர் முதலியன, சேரர் வரலாறு என்னும் பிரிவுகள் அடங்கி யுள்ளன.  ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் தொகுக்கப்பட்ட இந்நூல் சேரர் தொடர்பான இலக்கிய வரலாற்று ஆராய்ச்சிகளுக்குத் துணையாக அமைகின்றது.  1948ல் ‘செந்தமிழ் வளர்த்த தேவர்கள்’ என்ற பெயரிய நூல் தோற்றம் பெற்றது. இது கடந்த நூற்றாண்டில் தோன்றித் தமிழ் வளர்த்த சேது நாட்டுப் பெருமக்களின் வரலாற்றைக் கூறுகின்றது.  1950-ஆம் ஆண்டில் ‘Some Aspects of Kerala and Tamil Literature’ என்ற நூல் வெளிவந்தது. திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவுகளின் வடிவம் இந்நூல். தமிழில் ஆற்றிய உரையினை மொழி பெயர்த்து ஆங்கிலத்தில் இந்நூல் எழுதப்பெற்றது. இந்நூல் இரண்டு பகுதிகளாக திருவிதாங்கூர்ப் பல்கலைக் கழகத்தினரால் வெளியிடப்பெற்றது.  இந்த ஆண்டிலேயே வெளிவந்த ‘இலக்கியக் கட்டுரைகள்’ என்ற நூல் வானொலிப் பேச்சுகள், இதழில் வெளிவந்த கட்டுரைகள் சிலவற்றின் தொகுப்பு நூலாகும். இந்நூலில் இடம் பெற்ற அனைத்துக் கட்டுரைகளும் இலக்கிய விளக்கமாக அமைந்தனவாகும்.  அடுத்து 1959ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்ற கட்டுரை மணிகள் தெரிந்தெடுத்த பதினான்கு ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் எனலாம்.  மு. இராகவையங்கார் அவர்களின் மறைவுக்குப் பின் வெளிவந்த ‘தெய்வப் புலவர் கம்பர்’ என்ற பெயரிய நூல் 1969ஆம் ஆண்டில் தமிழ் உலகிற்கு அறிமுகமாகியது. கம்பராமாயண விமரிசனக் கட்டுரைகள் இந்நூலின்கண் இடம் பெறுகின்றன.  1939ஆம் ஆண்டில் வெளியிடப் பெற்ற ‘திருவிடவெந்தை எம்பெருமான்’ என்ற நூல் திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல்களின் விளக்கமாகும்.  இலக்கண ஆராய்ச்சி பேராசிரியரின் இலக்கண ஆராய்ச்சி நூல்களுள் தலைமை இடம் பெறுவது தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி என்ற நூலாகும். இந்நூல் 1912ஆம் ஆண்டு இலங்கைச் செல்வர் கு. பூரீகாந்தன் என்பவர் நடத்திய தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சிப் போட்டியில் முதன்மைப் பரிசு பெற்றது. தொல்காப்பியப் பொருளதிகாரத்தை எளிய முறையில் மாணவர்களுக்குப் பயன்படத்தக்க வகையில் இந் நூலை ஆசிரியர் இயற்றியுள்ளார். தொல்காப்பியத்துட் காணப்படும் அகப்புற ஒழுக்கங்களைத் தெள்ளிதின் விளக்குகிறது இந்நூல்.  1958ஆம் ஆண்டின் மு. இராகவையங்கார் அவர்களின் எண்பதாம் ஆண்டு நினைவாக வெளியிடப் பெற்றது வினைத்திரிபு விளக்கம். இஃது ஒரு செய்யுள் இலக்கண நூல். வினை விகற்பங்களைப் பன்னிரண்டு வாய்பாடுகளில் காட்டி, அவ்வாய்பாடுகள் செயல்படும் ஆற்றினை ஐம்பது நூற்பாக்களில் விளக்குகின்றது இந்நூல். 3020 வினைப் பகுதிகள் அனைத்தும் காண்போர்க்கு எளிதில் புலப்படும் வண்ணம் தனியாக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள திறம் போற்றுதற்குரியது.  சங்க, இடைக்காலத் தமிழ் ஒலிகள் பெயர் வினைகளை அடைந்த வடிவங்களைப்பற்றிய புதிய செய்திகளை மொழி வரலாற்று அடிப்படையில், 1. தொல்காப்பியத்துக் கண்ட பழைய வழக்குகள், 2. தொல்காப்பியனாரும் புள்ளி எழுத்துக் களும், 3. அருகி வழங்கிய சில வினை விகற்பங்கள், 4. ஆய்தவோசை-என்ற நான்கு கட்டுரைகளில் புலப்படுத்துகின்றார்.  அகராதி ஆராய்ச்சி ஏறத்தாழ இருபத்தாறு ஆண்டுகள் அகராதிப்பணியில் ஈடுபட்ட மு. இராகவையங்கார் அவர்கள், ‘தமிழ்ப் பேரகராதி’ உருவாவதற்குக் காரணமாக இருந்ததோடு அமையாமல், நிகண்டகராதி, நூற்பொருட் குறிப்பகராதி இவை வெளிவருவதற்கும் காரணமாக இருந்தார். நிகண் டகராதி அச்சேறவில்லை.  திவாகரம், பிங்கலம் உரிச்சொல் நிகண்டு, சூடாமணி என்னும் நான்கு நிகண்டுகளிலும் இடம் பெற்ற சொற்களுக் குரிய பொருளைத் தந்து, அசுர நிரலில் அமைக்கப்பெற்ற நூல் நிகண்டகராதி என்பது. இது பின்னாளில் திவாகரப் பதிப்பிற்குப் பெரிதும் பயன்பட்டது.  ‘நூற்பொருட் குறிப்பகராதி’ தேவாரம், திருக்கோவையார், நற்றிணை, குறுந்தொகை முதலிய இலக்கிய நூல்களிலும், இறையனார் களவியல் உரை, வீர சோழியம் முதலிய இலக்கண நூல்களிலும் கூறப்பட்டுள்ள பொருள்களை அகர நிரலில் அமைத்துக் கூறுவதாகும்.  பதிப்பாசிரியர் மு. இராகவையங்கார்  பதிப்பாசிரியர் மு. இராகவையங்கார் அவர்கள் பதிப்பித்த நூல்கள் பன்னிரண்டு. இந்நூல்களில் பாட பேதங்களும் ஆராய்ச்சிக் குறிப்புகளும் அமைந்து காணப்படுவதால், ஏடுகளை ஒப்புநோக்கி இந்நூல்களைப் பதிப்பித் துள்ளார் என்பது போதரும். இவர் முதன்முதலில் பதிப்பித்த நூல் ‘திருக்குறள் பரிமேலழகர் உரையுடன்’ என்பது. 1910ல் பதிப்பிக்கப்பெற்ற இந்நூல் கையடக்கப் பதிப்பாக வெளியிடப்பெற்றது.  ‘செந்தமிழ்ப் பத்திரிகை’யில் வெளிவந்து தனி நூல்களாகப் பதிப்பிக்கப் பெற்றவை; 1. நரிவிருத்தம் (அரும்பத உரையுடன்) 2. சிதம்பரப் பாட்டியல் உரையுடன், 3. திருக் கலம்பகம் உரையுடன், 4. விக்கிரம சோழனுலா, 5. சந்திராலோகம், 6. கேசவப் பெருமாள் இரட்டை மணிமாலை என்பன.  சங்க நூற்றொகைகள் போலத் தனிப்பாடல்கள் பல வற்றினைப் பெருந்தொகை' என்ற பெயரில் 1936ல் ஒரு நூலாகப் பதிப்பித்தார். 2200 பாடல்கள் கொண்ட இந் நூல், 1. கடவுள் வாழ்த்தியல், 2. அறிவியல், 3. பொரு ளியல் என மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது பின்னாளில் பல தமிழறிஞர்களும் எடுத்தாளத் தக்க வகையில் இந்த நூல் அமைந்துள்ளது.  1936ஆம் ஆண்டில் பெருந்தொகையைப் பதிப்பித்த அதே ஆண்டில் ‘திருவைகுந்தன் பிள்ளைத்தமிழ்’ என்ற நூல் பதிப்பிக்கப்பெற்றது.  1949ஆம் ஆண்டில் திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழக ஆராய்ச்சித்துறைப் பேராசிரியராக இருந்த ஞான்று ‘அரிச்சந்திர வெண்பா’ என்ற ஒரு நூலினைப் பதிப்பித். துள்ளார்.  1951ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கம்பராமாயணப் பதிப்பாசிரியர் குழுவில் ஒருவராக இருந்து கம்பராமாயணப் பகுதிகளைப் பதிப்பித்துள்ளார் என்பது முன்னரே கூறப்பட்டது.  1953ஆம் ஆண்டில் சிராமலைக் கல்வெட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆந்தாதி ஒன்று ‘திரிசிராமலை அந்தாதி’ என்ற பெயரில் பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ளது.  1958, 59ஆம் ஆண்டுகளில் கம்பராமாயண சுந்தர காண்டப் பகுதிகளை உரையுடன் பதிப்பித்துள்ளார். இது அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடாக வெளி வந்துள்ளது.  மேலும் இவர் பாட அமைதிபற்றி ஆராய்ச்சி செய்தும், அவற்றின் பொருள் நயத்தை விளக்கியும் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். காட்டாகக் ‘கலிங்கத்துப் பரணி’ ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் இவற்றைக் கூறலாம்.  உரையாசிரியர் மு. இராகவையங்கார்  நூல்கள் பலவற்றை ஆய்ந்தும் பதிப்பித்தும் ஆராய்ச்சி வேந்தராகவும், பதிப்பாசிரியராகவும் திகழ்ந்த மு. இராகவை யங்கார் அவர்கள் சில நூல்களுக்கு உரையும் கண்டுள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கன கம்பராமாயண சுந்தரகாண்டப் பகுதிகள்; திருமங்கையாழ்வார் பாடிய பாசுரத்தின் விளக்க மாக அமைந்த ‘திருவிடவெந்தை எம்பெருமான்’ என்ற  இதழாசிரியர் மு. இராகவையங்கார்  இவர் ‘தமிழர் நேசன்’, ‘கலைமகள்’, ‘செந்தமிழ்’ என்ற இதழ்களின் ஆசிரியராகத் திகழ்ந்தவர். ‘செந்தமிழ்’ இதழில் முதலில் இரா. இராகவையங்காருக்கு உதவியாசிரியராக அமர்ந்து. பின்னர் அவரது இடத்தை அணி செய்தவர். ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் இவர் இவ்விதழின் ஆசிரியப் பொறுப்பில் இருந்தார். கட்டுரைத் தொகுப்பு நூல்களாக அமைந்தற்ைறில் உள்ள சில கட்டுரைகள் செந்தமிழ் இதழில் வெளிவந்தவை. பெருந்தொகை நூலில் காணப்படும் பாடல் கள் பலவும் இவ்விதழில் வெளியானவையே. நூல் வடிவம் பெறாத சில கட்டுரைகளும் இவ்விதழில் வெளிவந்துள்ளன. ஆக இதழாசிரியராக அமர்ந்து தமிழ் இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய தொண்டு மிகப் பெரியது.  சொற்பொழிவாளர் மு. இராகவையங்கார்  எழுத்தாளராக இருந்த மு. இராகவையங்கார் அவர்கள் சொற்பொழிவாளராகவும் துலங்கியிருக்கின்றார்.  1929ஆம் ஆண்டு பதிப்பு வேந்தர் டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தலைமையில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இலக்கியம், சாசனம் பற்றிய உண்மைகளை எடுத்துரைத்தார், இப்பொழிவே பின்னர் ‘சாசனத் தமிழ்க் கவி சரிதம்’ என்ற நூலாகத் தோற்றம் பெற்றது.  1966-ல் காரைக்குடி கம்பன் விழாவில் தலைமை வகித்து தலைமை உரை ஆற்றினார், 1959ஆம் ஆண்டில் பல்கலைச் செல்வர் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்கள் அழைப்பின் காரணமாகத் தெய்வப் புலமை என்னும் பொருள் பற்றிச் சென்னை மாநிலக் கல்லூரியில் ஓர் உரை நிகழ்த்தினார்.  திருவிதாங்கூர் பல்கலைக் கழக ஆராய்ச்சித்துறைப் பேராசிரியராக இருந்தபோது சர்.சி.வி. இராமன் அவர்கள் தலைமையில் ‘காந்தளூர்ச்சாலை’ என்னும் பொருளில் முதல் நாள் சொற்பொழிவு நிகழ்த்தினார். இதில் பல சரித்திர ஆய்வாளர்களின் முரண்பட்ட கருத்துக்களை எடுத்துக் காட்டித் தம் கருத்துக்களைச் சான்றுகளுடன் நிறுவினார். தொடர்ந்து நிகழ்ந்த பொழிவுகளை அற்றை நாள் கல்வித் துறை வல்லுனரான கோபால மேனன் அவர்கள் தலைமை யில் நிகழ்த்தினார். இச்சொற்பொழிவே பின்னாளில் soap 336), 'Some Aspects of Kerala and Tamil Literature" என்ற பெயரில் இரண்டு பகுதிகளாக நூல் வடிவம் பெற்றது.  கவிஞர் மு. இராகவையங்கார்  இவர் கவிபாடும் ஆற்றல் மிக்கவராகவும் திகழ்ந் துள்ளார். இளமை முதல் முதுமை வரை இவர் பாடிய கவிதைகள் பலவும் செந்தமிழில் வெளியாகி உள்ளன.  பொதுச் செய்திகள் இவர் தாமே பல நூல்கள் இயற்றித் தமிழ்த் தொண்டாற்றியதுடன் நில்லாமல், பல தமிழ் நூல்கள் வெளிவருவ தற்கும் காரணமாக அமைந்தார். இதில் குறிப்பிடத்தக்கவை எஸ். வையாபுரிபிள்ளை அவர்களின் பணவிடு தூதும், வி. இரா. இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய மூன்றாம் குலோத்துங்க சோழனும் ஆகும். இராமச்சந்திர தீட்சிதரின் சிலப்பதிகார ஆங்கில மொழி பெயர்ப்பு முழுமையும் மு. இராகவையங்கார் அவர்களின் துணை கொண்டே உருவம் பெற்றது.  மு. இராகவையங்கார் அவர்களின் ஆராய்ச்சி முடிவு களைப் பற்றிக் கூறும்போது எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள்,  “பெரும்பாலும் ஆசிரியரது கருத்துக்கள் கொள்ளத் தக்கனவாகவே உள்ளன”  என்கிறார். (தமிழ்ச் சுடர் மணிகள்; ‘மு. இராகவையங்கார்.’ ப. 397). இவர் தம் நடையைப் பற்றிக் குறிப்பிடுகையில் ‘தெளிந்த நடை’ என்பர்.  “பாண்டித்திய படாடோபமென்பது இவர்கள் நடை யில் சிறிதும் இல்லை-இவர்கள் உரை நடையிலேயே ஓர் அபூர்வமான கனிவும் இனிமையும் வெளிப்படுகின்றன.”  (எஸ். வையாபுரிப் பிள்ளை: தமிழ்ச்சுடர் மணிகள் : ப. 397,)  பேராசிரியர் மு. இராகவையங்கார் அவர்கள் நடையில் மட்டும் எளிமை உடையவர் அல்லர். வாழ்க்கையிலும் எளிமையைக் கடைப் பிடித்தவர். தம்முடன் பணியாற்றுப வர்களுடன் இனிமையாகப் பழகும் ஆற்றலும் மிக்கவர், இதனை அவருடன் பணியாற்றிய ஆர். வீரபத்திரன் அவர்கள் கூற்றால் தெளியலாம்.  ‘சேரவேந்தர் செய்யுட் கோவையில் முதற்பகுதி அச்சாகி முடிந்த தறுவாயில் அந்நூல் பற்றிப் பேராசிரியரிடம் நான் கூறியிருந்த செய்தி ஒன்று நினைவிருக்கிறது. நூலில் ஆங்கில முன்னுரை, தமிழ் முன்னுரை, சேர வேந்தர் சரித்திரச் சுருக்கம் முதலிய பல செய்திகள் இடம் பெற்றிருக்க,  வேறோர் முக்கியச் செய்தி காணப் பெறாதிருப்பது ஒரு குறையாக எனக்குத் தோன்றியது. திருவிதாங்கூர் மன்னர் பெருமானாரால் நிறுவப்பட்ட பல்கலைக் கழகத்தில், வள்ளல் அழகப்ப செட்டியார் அளித்த நன்கொடையால் உருவான தமிழ் ஆராய்ச்சித் துறையிலிருந்து முதன் முதலாக வெளிவரும் சேர வேந்தர்களைப் பற்றிய நூலில், அக்குலத்தில் தோன்றி அப்பொழுது மாமன்னராகத் திகழ்கிற சித்திரைத் திருநாளைப் பற்றியும், அழகப்ப வள்ளலைப் பற்றியும் வாழ்த்துரைகள் தக்க இடத்தில் அமைய வேண்டியதன் இன்றியமையாமையைப் பேராசிரியர்க்குப் பணிவோடு எடுத்துக் கூறினேன். அதைக் கேட்ட பேராசிரியர் ‘நீங்கள் கருதியது தக்கதே; மறந்திருந்த எனக்கு அதனை நினைப்பூட்டியது நன்று’ என அன்புரை கூறிப் பின்னர் மன்னர்க்கு ஒன்றும் வள்ளற்கு ஒன்றுமாக இரண்டு பாக்களை வாழ்த்தாகப் பாடி நூலில் இணைத்துக் கொண்டார்கள்.”  இப்பகுதி மு. இரகவையங்கார் அவர்கள் தம்மைவிட வயதில் சிறியவர்களாயினும் அவர்கள் கூறும் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளத் தக்கனவாக இருந்தால் அவற்றை ஒதுக்கிவிடாமல் மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் உயர் பண்பாளர் என்பதை உணர்த்தி நிற்கின்றன.  முகவுரை இவ்வாறாக ஆராய்ச்சியாளராகவும், பதிப்பாசிரியராகவும், இதழாசிரியராகவும், உரையாசிரியராகவும், சொற் பொழிவாளராகவும், கவிஞராகவும் திகழ்ந்து மு. இராகவையங்கார் அவர்கள் ஆற்றிய தமிழ்த் தொண்டு அளவிடற் கரியது. அவர் சென்ற நெறி தமிழ்த்தாயின் தவப்புதல்வர்கள் ஒவ்வொருவரும் செல்ல வேண்டிய நெறியாகும்!                  6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர்   1. வாழ்வு  ‘இருபதாம் நூற்றாண்டின் நக்கீரர்’ என்று தமிழ் கூறு நல்லுலகு பெருமையுடன் பேசும் பேராசிரியர், டாக்டர் நாவலர் கணக்காயர் சோமசுந்தர பாரதியார் ஆவர். சான்றோருடைத்தான தொண்டை நாட்டில் சென்னை மாநகரின் மேற்பால் சூளை என்னும் ஊரில் வாணிக வாழ்க்கை நடத்தி வளமுடன் வாழ்ந்து வந்தவர்-‘சைவ சித்தாந்த சண்டமாருதம்’ எனப் பாராட்டப் பெற்ற சோம சுந்தர நாயகர் ஆவர். இவர்தம் அம்மான் அருணாசல நாயகரின் மைந்தர் சுப்பிரமணிய நாயகர், ‘தேனிருந்த சோலை சூழ் தென்விளசை நன்னகர்’ என்று செல்வ வளத்தாற் பாராட்டப் பெற்ற எட்டையபுரத்தினைக் கோநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த முத்துசாமி எட்டப்ப நாயகரின் நண்பராவர். எட்டையபுரத்துக் குறுநில மன்னர் சென்னைக்கு வரும்போதெல்லாம், சுப்பிரமணிய நாயகரைப் பார்த்து அளவளாவிப்போதல் உண்டு. அரசரின் அழைப்பிற் கிணங்கிச் சுப்பிரமணிய நாய்கர் சென்னை விடுத்து எட்டையபுரம் சென்று, ‘எட்டப்ப பிள்ளை’ என்ற புதுப் பெயருடன் அரசரின் உட்படுகருமத் தலைவராய் விளங்கினார். இவர் மணம் செய்திருந்தும் மகப்பேறு கிட்டாத காரணத்தால், அரசர் தூண்டுதலின் பேரில் அரண்மனையில் வளர்ந்து வந்த முத்தம்மாள் என்னும் மங்கை நல்லாளைத் திருமணம் செய்து கொண்டார்.  பிறப்பு இவ்விருவரின் மனமொத்த இல்வாழ்வின் பயனாய். கி.பி. 1879-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 27ஆம் நாள் ஒர் ஆண் மகவு பிறந்தது. இம்மகவுக்குத் தம் உறவினரும், சைவ சித்தாந்தக் கடலாகவும் விளங்கிய சோமசுந்தர நாயகரின் பெயருடன் ‘சத்தியானந்த’ என்ற அடை மொழியையும் சேர்த்துச் ‘சத்தியானந்த சோமசுந்தரம்’ என்று பெயரிட்டனர்.  இளமை வாழ்வு அரண்மனையில் அரசியாரின் ஆதரவில் இளமை தொட்டு இக்குழந்தை வளர்ந்தது. ஐந்தாம் அகவை நிகழும் பொழுது அரண்மனை ஆத்தான ஆசிரியர் சங்கர சாத்திரி யாரிடம் தமிழ். வடமொழி எனும் இரண்டு மொழிகளிலும் எழுத்தறிவிக்கப் பெற்றார். மேலும் அவ்வூர்ப் பெருமாள் கோவில் கூடத்தில் நடைபெற்று வந்த திண்ணைப் பள்ளிக் கூடத்தில் தெய்வசிகாமணி ஐயங்கார் எனும் ஆசிரியரிடம் ஒரு சில நாள் கல்வி பயின்றார் சோமசுந்தரர். பள்ளி ஆசிரியர் தன் பக்கலில் அமர்ந்திருந்த மாணவனிடம் கடுமை யாக நடந்து கொண்டதனால், இவர் பள்ளிப்படிப்பிற்கு முற்றுப் புள்ளி வைத்து, அரசியார் கொடுத்த செல்லத்தில் தம் பதின்மூன்றாவது வயது வரையிலும் விளையாடியே வீணே பொழுது போக்குவாராயினர். இவர்தம் வளர்ப்பு அன்னையார் மறைவிற்குப் பின்னர் இவர் பெற்றோர் வற்புறுத்தலின் பேரில் பள்ளிக்குச் சென்று எட்டையபுரத்தில் எட்டாம் வகுப்பு வரை படித்துப் பின்னர்த் திருநெல்வேலி சென்று ‘சர்ச் மிஷன்’ உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை வகுப்பு வரை-அக்காலத்தில் F. A, (Fellow of Arts) என வழங்கப் பெற்ற இண்டர்மீடியட் வகுப்பு வரை பயின்றார். ஆங்கிலமும் அருந்தமிழும் பாங்குறப் பயின்று இரண்டு பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெற்றார். இதன் பின்னர், சென்னை சென்று கிறித்தவக் கல்லூரியில் புகழ் பெற்ற வில்லியம் மில்லர் என்னும் பெருமகனாரிடம் பயின்று பட்டம் பெற்றார். அது காலை அங்கு இவருக்குத் தமிழாசிரியராக வாய்த்தவர் இருவர். ஒருவர் தனித்தமிழ் இயக்கங்கண்ட மறைமலையடிகளார்; மற்றொருவர் பரிதிமாற் கலைஞர் எனத் தம் பெயரையே தமிழ்ப் படுத்திக் கொண்ட வி. கோ. சூரியநாராயண சாத்திரியார்.  இவ்விருவரின் தொடர்பு இயல்பிலேயே தமிழார்வமும் தமிழறிவும் மிக்கிருந்த சோமசுந்தரரை மேலும் உயர்வுடையோராக்கியது.  வழக்கறிஞர் வழக்கு பி.ஏ. படிப்பு முடிவுற்றதும், சென்னைச் சட்டக் கல்லூரியில் சேர்ந்து பி.எல். படிப்பைப் பல இடையூறுகளுக்கிடையில் 1905ஆம் ஆண்டில் முடித்தார். தூத்துக்குடியில் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார். பொதுவாகச் சட்டக்கல்லூரியிற் படிப்பை முடித்தவர்கள் ஏற்கனவே சட்டம் முடித்துப் பெயர் பெற்ற வழக்கறிஞராக இருப்பவரிடம் சில காலம் பயிற்சி பெற்ற பின்னரே தனியாக வழக்காடுதல் வழக்கம். ஆயினும் நாவலர் எடுத்த எடுப்பில் தாமே தனியே வழக்குகளை நடத்தத் துணிந்தார். இவர் நாட்டுக்கோட்டை நகரத்தார் வழக்குகளை மேற்கொண்டு நடத்திய காரணத்தால், அதன் பொருட்டு அடிக்கடி தேவகோட்டைக்குச் சென்றுவர வேண்டி வந்தது. இதனாற் பெரும் பொருட் செலவும் காலக்கழிவும் ஏற்பட்டதனால் நகரத்தார் பெருமக்கள் செட்டிநாட்டுக்கு அண்மையிலுள்ள மதுரைக்கு வந்து தொழில் நடத்துமாறு இவரிடம் பலமுறை. வற்புறுத்தவும், இவர் 1920ஆம் ஆண்டு தூத்துக்குடி மேலூரை விட்டு மதுரைக்கு வந்து தொழில் நடத்தத் தொடங்கினார் தொடக்க நாள் தொட்டு இவர் நேர்மையுடனும் நியாயத்துடனும் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு வந்ததால், பேரும் புகழும் பணமும் இவரைத் தேடிவந்தன. தம்மிடம் வரும் வழக்கு எத்தன்மை வாய்ந்ததாயிருப்பினும் நாளொன்றுக்கு ஒரு நூறு ரூபாய்க்கும் குறைவாக ஊதியம் வாங்கமாட்டார். தம் வழக்கறிஞர் பணிக்கிடையேயும் தாமாகமே 1913ஆம் ஆண்டில் எம்.ஏ. தேர்வு எழுதி வெற்றியும் பெற்றிருந்தார்.  அரசியல் வாழ்வு நாட்டு விடுதலையில் நாட்டமிக்கவராய் நம் நாவலர் வீறுடன் விளங்கினார். சுதேசிக் கப்பலோட்டிய வ.உ. சிதம்பரம் பிள்ளையவர்களுடன் நெருங்கிய நேயம் கொண்டி ருந்தார். திங்கள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கு மேல் வருவாய் வந்து கொண்டிருந்த வழக்கறிஞர் பணியை விடுத்து. நூறு ரூபாய் திங்கள் ஊதியம் பெற்றுக்கொண்டு கப்பல் கம்பெனியின் ஆட்சிப் பொறுப்பினைத் திறம்பட நடத்தினார். இஃது இவரது கரைகடந்த நாட்டுப் பற்றினைக் காட்டும். இரண்டு கப்பல்களை உடைத்தாயிருந்த வ. உ. இ. மூன்று கப்பல்கள் தம்மிடம் உள்ளது என்று கூறுவர். மூன்றாவது கப்பல் எங்கே என்றால், “எஸ். எஸ். (Steam ship) பாரதி என்ற தமிழ்க் கப்பலை ஏன் மறந்து விட்டீர்கள்?” என்பார். அதுகாலை வ. உ. சி. யோடு தொடர்பு கொண்டிருந்த அனைவரையும் அன்னிய ஆங்கில அரசினர் குற்றக்கண் கொண்டு நோக்கினர். எனவே ஐயப்பட்டியலில் நாவலர் பெயரையும் சேர்த்தனர். 1905 முதல் 1919 வரையில் இவர் பெயர் ஐயப்பட்டியலில் இருந்தது. நண்பர் கள் பலர் வற்புறுத்தியும், அருமை வாய்ந்த அரசாங்கப் பணி யினை வாங்கித் தருவதாக நயங்காட்டிப் பலர் அழைத்துங் கூட நாவலர் நாட்டு விடுதலை வேள்விக்கான தம் பணியி லிருந்து நீங்கினாரல்லர்.  காங்கிரஸ் மாநாடுகள் எவ்வகை விசாரணையுமின்றி எவரையும் தண்டித்தற்கு இடந்தரும் ரெளலட் சட்டத்தை ஆங்கில அரசு திணிக்க முயன்றது. இதனை எதிர்த்து அண்ணல் காந்தியடிகளார் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். நாடெங்கும் சுற்றுப் பயணம் செப்து, இச்சட்டத்தின் கடுமையை பொல்லாங்கைப் பொதுமக்களுக்கு விளக்கத்துணிந்தார். இதன் பொருட்டுச் சென்னை வந்தார். காந்தியடிகள் சென்னை வருவதையறிந்த நாவலர் பாரதியார் அவரைத் தூத்துக்குடிக்கு வரச் செய்தார். முதன் முதல் அண்ணல் காந்தியைத் தென் கோடித் தமிழகத்திற்கு வரவழைத்து சொற்பொழிவாற்ற வைத்த பெருமை நம் நாவலரையே சாரும். இரு நாள்கள் தூத்துக்குடியில் தங்கிய காந்தியார் நாவலர் வீட்டிற்கும் வந்து போனார். ரெளலட் சட்டத்தை எதிர்ப்பவர்களில் ஒருவராக நாவலர் அஞ்சாநெஞ்சத்துடன் கையெழுத்திட்டார்.  அடுத்து. நாவலர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், காந்தியடிகள் தம் காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்குப் பொருள் சேர்க்கத் தென்னகச் சுற்றுப் பயணத்தை மேற் கொண்டிருந்தார். காந்தியடிகளை அண்ணாமலை நகருக்கு வருமாறு நாவலர் கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் பலரும் காணிக்கை வழங்கிய கூட்டத்தில், மற்றவர்களுக்குத்தான் முன் மாதிரியாக இருக்க வேண்டுமென்று எண்ணித் தம் மகள்களான மீனாட்சி, லலிதா ஆகிய இருவரும் கழுத்திலிருந்த சங்கிலியைக் கழற்றிக் கொடுக்குமாறு ஏற்பாடு செய்திருந்தார். முதலில் லலிதா பாரதி எனும் இளைய மகள் மேடைக்குச் சென்று காந்தியடிகளிடம் தம் கழுத்திலிருந்த சங்கிலியைக் கழற்றிக் கொடுத்துவிட்டு வந்தார். அடுத்து மேடைக்குச் சென்ற மூத்த மகள் மீனாட்சி பாரதி தம் கழுத்திலிருந்த சங்கிலியைக் கழற்றிக் கொடுத்துவிட்டு மேடை யினின்று கீழே இறங்கிய பின்னர்த் தன் கையிலிருக்கும் வளையல்களையும் கழற்றித் தர வேண்டும் என்ற எண்ணம் மீதுாரவும், மீண்டும் மேடையேறிச் சென்று தம் கையிலிருந்த வளையல்களைக் கழற்றிக் காந்தியாரிடம் தந்தார், “யாருடைய மகள் இச் சிறுமி?” என்று தம் பக்கத்தில் இருந்தவர்களைப் பார்த்து வினவிக் கொண்டே, தம்மிடமிருந்த கதர் மாலை ஒன்றையெடுத்து மீனாட்சி பாரதி கழுத்தில் போட்டார் காந்தியார். அருகிருந்தோர் அடுத்திருந்த நாவலரைச் சுட்டிக்காட்ட, “பாரதியாரின் குழந்தையா! அப்படியானால் அதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை” என்று காந்தியார் கூறினாராம். கூட்டம் முடிந்து வீட்டிற்குச் சென்ற நாவலர், தாம் கழுத்திலிருக்கும் சங்கிலியைக் கழற்றித் தரவேண்டும் என்று மட்டும் கூறியிருந்த அளவில், கை வளையல்களையுங் கழற்றித் தந்த தம் மகள் மீனாட்சியைப் பெரிதும் மகிழ்ந்து பாராட்டினார்.  காங்கிரசுக் கட்சியிலிருந்து விலகிச் சிலர் சுயராச்சியக் கட்சி என்றதொரு புதிய கட்சியை உருவாக்கினர். பண்டித மோதிலால் நேருவும் சி.ஆர். தாசும் இந்தியர் ஒத்துழையாமை இயக்கத்தை விட்டு விட்டுச் சட்டமன்றங்களுக்குச் சென்று அங்கே போராடி உரிமைகளைப் பெறவேண்டும் என்றனர். 1926ஆம் ஆண்டில் சி. ஆர். தாசை மதுரைக்கு அழைத்துப்  சா—7 பொதுக்கூட்டத்தில் பேசச் செய்ததோடு, அவர்தம் பேச்சையும் நாவலர் தமிழில் மொழிபெயர்த்தார். சைமன் கமிஷனை எதிர்த்து 1930ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் நாள் நாடெங்கும் நடைபெற்ற ‘உரிமை நோக்க நாள்’ பின்னாளில் சட்ட எதிர்ப்பு இயக்கத்திற்கும், உப்புச் சத்தியாகிரகத்திற்கும் வழி வகுத்தது. இதன் விளைவாகத் தலைவர்கள் பலர் சிறையிலடைக்கப்பட்டனர். நாடெங்கும் நடந்த இக் கிளர்ச்சிக்குப் பணம் தேவைப்பட்டது. தென்னாட்டில் ஒரு திரளான நன்கொடை திரட்டித் தந்தவர்களில் நாவலர் குறிப்பிடத்தக்கவராவர். இம்மட்டோடன்றித் தாமும் தம் வருவாயிலிருந்து திங்கள்தோறும் நூறு ரூபாய் நன்கொடை அனுப்பி உதவினார். மேலும் நாவலர் குடும்பமே நாட்டுப் பணியில் தலைநின்றது எனலாம். காரணம் நாவலர் தம் இரண்டாவது மகன் இலட்சுமிரதன் பாரதி, மகள் இலக்குமி பாரதி, மருகர் கிருட்டிணசாமி பாரதி ஆகிய மூவரையும் காங்கிரஸ் தொண்டர்களாக்கி. அவர்கள் முயற்சிகளுக்கும் செயல்களுக்கும் பக்கபலமாக இருந்தார்.  தீண்டாமை ஒழிப்பு “தாழ்த்தப்பட்டோருக்குத் திருக்கோயிலில் நுழையும் உரிமை இல்லை” எனும் இழிநிலையை எதிர்த்துக் காந்தியடி கள் 1933 மேத் திங்கள் 3ஆம் நாள் உண்ணா நோன்பு தொடங்கினார். இருபத்தொரு நாள்கள் நீடித்த இவ் வுண் ணா நோன்பின் விளைவாக அண்ணல் காந்தியடிகளால் அரிசனங்கள் என்று அன்புடன் அழைக்கப்பெற்ற மக்கள் கோயில் உள் நுழையும் உரிமை கோரினர். இயல்பிலேயே தாழ்த்தப்பட்டோரிடம் தாயன்பும் தனியன்பும் காட்டி வந்த நாவலர் அவர்கள் மாடமதுரையில் கோயில் நுழைவு இயக்கத் தைத் தொடங்கி, மதுரை மாவட்டத்தின் திண்டாமை எதிர்ப்பு இயக்கத்தின் முதல் தலைவராக விளங்கினார்.  இந்தி எதிர்ப்புப் போர் 1937 ஆம் ஆண்டின் காங்கிரசுக் கட்சி சட்டமன்றத் தேர்தல்களுக்கு நின்று, ஏழு மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. சென்னை மாநிலத்தின் முதலமைச்ச ராகப் பதவியேற்ற இராசகோபாலாச்சாரியார் தனது பதவிக் காலத்தில் உயர்நிலைப்பள்ளியில் முதல் மூன்று படிவம் பயிலும் மாணவர் அனைவரும் கட்டாயம் இந்தி பயில வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். இதன் விளைவாகக் கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து மாநில மெங்கும் கிளர்ச்சி யெழுந்தது. காங்கிரஸ் கட்சியில் தமிழ் மொழிப் பற்றுத் தலைதூக்கி நின்ற சிலரும் இத்திட்டத்தை முழு மூச்சாக எதிர்த்தனர். அவ்வாறு எதிர்த்தவர்களுள் தலைமையேற்று நின்றவரும், தகவுடன் போரிட்டுப் பின்னாளில் வென்றவரும் நம் நாவலர் ஆவர். 5, 6-9-1937 இல் சென்னை மாநகரில் ஒரு மாபெரும் இந்தி எதிர்ப்பு மாநாடு நிகழ்ந்தது. முதல்நாள் மாநாட்டுக் கூட்டத்திற்கு நாவலர் தலைமை தாங்கிச் சாதி, சமய, கட்சி வேறுபாடு இன்றித் தமிழர் அனைவரும் கட்டாய இந்தியை எதிர்ப்பது கடமையாகும் என்றார். அடுத்து 4-10-1937இல் சென்னை கோகலே மண்டபத்தில் மறைமலையடிகளார் தலைமையில் தமிழ்ப் பாதுகாப்புக் கழகச் சார்பில் நடைபெற்ற கூட்டத்திலும் வீறுடன் பேசினார். 20-11-1937இல் கருவூரில் அறிவுதயக் கழகச் சார்பில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டத்திலும் பேசினார். 25-10-1937இல் முதலமைச்சர் இராஜகோபாலாச்சாரியாருக்கு இந்தித் திணிப்பைக் கண்டித்து ஒரு ‘வெளிப்படைக் கடிதம்’ (An open letter) எழுதினார். நாவலர் விடுத்த இக்கடிதத்தினாலும் நாடெங். கிலும் எழுந்த காட்டுத் தீ போன்ற இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியினாலும் அரசு கட்டாய இந்தித் திணிப்புத் திட்டத்தைக் கைவிட்டனர். ஆனால் மீண்டும் 1948 ஆம் ஆண்டில், சென்னை மாநிலக் கல்வி அமைச்சராக இருந்த அவினாசி விங்கம் செட்டியார் இந்தியைப் புகுத்த முற்பட்டார். அவருக்கும் 27-6-1948இல் ஒரு கடிதம் எழுதினார். மேலும் திருச்சி தமிழறிஞர் முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் கண்ட தமிழர் கழகத்தின் தலைவரா னார். 14-2-1948இல் சென்னையில் கூடிய அகிலத் தமிழர் மாநாட்டின் தலைமையை நாவலர் ஏற்றார். பின்னாளில் தொடங்கப்பெற்ற தமிழகப் புலவர் குழுவின் முதல் தலைவராகவும் திகழ்ந்தார்.  அண்ணாமலைப் பல்கலைக்கழக அரும்பணி அண்ணாமலைப் பல்கலைக்கழகங்கண்ட செட்டிநாட்டு வள்ளல் அண்ணாமலை அரசர் அழைப்பின் பேரில் திங்கள் ஒன்றுக்கு ஈராயிரம் ரூபாய்க்குக் குறையாமல் வருமானம் வந்து கொண்டிருந்த வழக்கறிஞர் பணியை விடுத்துக் குறைந்த வருவாயே கிட்டும் எனத் தெரிந்தும் 1933ஆம் ஆண்டில் இரண்டு நிபந்தனைகளின் பேரில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். அவர் விதித்த இரு நிபந்தனைகள் வருமாறு:  (1) தமது நிர்வாகத்தில் எவரும் குறுக்கீடு செய்தல் கூடாது.  (2) பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பிற பேராசிரியர்களைவிட உயர்ந்த ஊதியம் தருதல் வேண்டும்.  தமிழ்ப் பணி மாணவர்க்கு இலக்கணமாயினும், இலக்கியமாயினும், இலக்கியத் திறனாய்வாயினும் பாங்குற ஐயந்திரி பிற்கிட மின்றி மாணவர் மனத்திற் பசுமரத்தாணியெனப் பதியும் வண்ணம் பாடஞ்சொல்லுதலில் நாவலர் வல்லவராயிருந்தார். மாணவர்களைத் தம் நண்பர்கள் போற் கருதி, நடத்தினார். இயற்றமிழ்ப் பேராசிரியராக இருந்து கொண்டே இசைத் தமிழ்த் தொண்டும் ஆற்றினார். தேவார திருப்புகழ் வகுப்புகளை அங்கு இசைக்கல்லூரியில் தொடங்கு வித்தார். இவ்வாறு மாட்சியுடன் தமிழ்ப்பணி புரிந்த நாவலர் 1938ஆம் ஆண்டு அப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவரிடம் கல்வி பயின்றோரிற் குறிப்பிடத் தக்கவர்கள் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார், திருவாளர்கள் அ. ச. ஞானசம்பந்தன், க. வெள்ளைவாரணனார், பூ.ஆலாலசுந்தரஞ்செட்டியார், சி. ஆறுமுக முதலியார், இராசரத்தினம் அம்மையார், இராசமணி அம்மையார்,அ. மு. பரமசிவானந்தம், ப. சோதிமுத்து, ஆ, முத்துசிவன், எஸ், உருத்திரபதி, பி. ஆர் மீனாட்சிசுந்தரம் முதலியோர் ஆவர்.  சுப்பிரமணிய பாரதியார் தொடர்பு கவிஞர் பாரதியாரும் நாவலர் பாரதியாரும் பல வகைகளில் ஒற்றுமைப்பாடு உடையவர்கள், இருவரும் எட்டையபுரத்தினர்; இருவரும் கவிஞர்கள்; பாரதி பட்டம் பெற்றவர்கள்; ஒத்த வயதினர்; இளமையில் மணம் முடித்தவர்கள்: நாட்டுத் தொண்டில் திளைத்தவர்கள்; உணர்ச்சி மிக எழுதுவ திலும் பேசுவதிலும் வல்லவர்கள்; அஞ்சாமையும் வீறும் உடையவர்கள்; தமிழாசிரியர் பணி புரிந்தவர்கள்.  பாரதியார் கவிதையைப் பண்டிதர்கள் எள்ளி நகையாடிய காலத்தில் பாரதியார் கவிதையின் நயத்தை மேடை, கட்டுரை, செய்தித்தாள்கள் வாயிலாகப் பாமரரும் புரிந்து கொண்டு பாராட்டவைத்த தனிப்பெருமை நம் நாவலரையே சேரும்.  “பாரதியார் பாக்கள், கருத்துக்களை வருத்தமின்றி விளக்கும், பண்டைப் பாவலர் பளிங்கு நடை பயின்று, இளகி ஒளிரும் வெண்பொன் ஒழுக்கும், இனிய ஓசையும், திட்டமும் சுவையும் உடையன, இப்புலவரின் நூல்களைப் படிப்பவருக்கு நிகண்டு, அகராதிகள் வேண்டா. கள்ளமற்ற உள்ளமும், ஊன்றிய கவனமும், தமிழில் ஆர்வமும் உடையார்க்கு இப்புலவர் இதயம் வெள்ளிடை மலையாம். எளிய இனிய இவர் கவிநடை நீரொழுக்கு உடையதேனும், வயிரத்தின் திண்மையும் ஒளியும் பெற்று நிற்கும். பாப்பாப் பாட்டு. முரசு கவிகளால் முழன்று, பள்ளும் கிளிப்பாட்டும் பயின்று விடுதலை, தாய்நாடு பாடி, பாஞ்சாலி சபதம் கூறி, கண்ணன் பாட்டு சிவன் முக்திகளில் வீறிய இவர் கவிதை நலம் பண்ணேறி விண்ணுயர்ந்து உலவுவதாகும். எனைத்தானும் தற்காலத் தமிழுலகில் இவர் ஒத்தாரைக் காண்பதரிது. மிக்கார் இலராவர்,”  என்பதே நாவலர் மதிப்பீடாகும்.  தமிழ்த் தொண்டு 1942இல் மதுரையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாட்டு வரவேற்புக் குழுவின் துணைத் தலைவராயிருந்து அம்மா நாட்டைத் திறம்பட நடத்தினார். அடுத்து 1950இல் கோவையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். 1954இல் அண்ணாமலை நகரில் தமிழாசிரியர் மாநாடடிற்குத் தலைமை தாங்கினார். 1956ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன் விழாவில் ஐந்தாம் நாள் விழாவில் இயலரங்குத் தலைவராக இருந்து சீரிய கருத்துக்களைச் சிறக்க வெளியிட்டார். 1930, 1936, 1944 ஆகிய மூன்று ஆண்டுகளில் ஈழநாடு சென்று சொற்பொழிவுகள் ஆற்றி நாவலர்' என்ற பட்டம் பெற்றார். மதுரைத் திருவள்ளுவர் சமுகத்தார் 11-1-1954இல் ‘கனக் காயர்’ பட்டம் வழங்கி இவரைச் சிறப்பித்தனர். 1955இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெள்ளி விழா கொண் டாடியபொழுது, இவருக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்கிப் பாராட்டியது. 1957இல் சென்னையில் தமிழ் எழுத்தாளர் சங்கம் நாவலரின் நற்றமிழ்த் தொண்டைப் பாராட்டிக் கேடயம் வழங்கியது.  இவ்வாறு பெருவாழ்வு வாழ்ந்த நாவலர் தம் எண்பதாம் ஆண்டு முடிவுற்ற சில திங்களில் 1959ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் இரவு 7-40 மணிக்கு இயற்கை எய்தினார். தமிழ்நாடு தன் சீரிய தொண்டரை இழந்தது. தமிழன்னை தன் அரிய மைந்தனை இழந்தாள். தமிழினம் தன் தானைத் தலைவனை இழந்தது.  II. படைப்புத் திறன்  தயரதன் குறையும் கைகேயி நிறையும் நாவலர் பெரிதும் ஈடுபாடு கொண்ட காப்பியம் கம்பராமாயணமாகும். தாம் பன்முறை ஆழ்ந்து ஆழ்ந்து அக் காப்பியத்தைப் பயின்றபோது தோன்றிய கருத்துகளை நண்பர்களிடம் எடுத்துரைத்தார். பின்னர் மேடைகளில் அக்கருத்துக்களை குறிப்பிடத் தொடங்கினார். பின்னர் அக் கருத்துகளுக்கு நூல் வடிவு தந்தார். அந்த நூலே ‘தயரதன் குறையும் கைகேயி நிறையும்’ என்பதாகும்.  தயரதன் அறம் திறம்பா நெஞ்சினன் என்றும், கைகேயி மாகயத்தி என்றும் இராமாயணம் படிப்போர் இயல்பாகக் கருதி நிற்க, நாவலர், தயரதன் கன்யா சுல்கமாகப் பரதனுக்குத் தரவேண்டிய நாட்டை இராமனுக்களிக்க முன்வந்தது தவறென்றும், பரதனைக் கேகய நாட்டிற்கனுப்பி வைத்தது தவறென்றும், இராமன் முடிசூடுதலைக் கேகய நாட்டுறைந்த பரதனுக்குத் தெரிவிக்காமற் போனது தவறென்றும், எடுத்துக்காட்டி, கல்கச் சூளறம் பொய்த்துப் பழிவெள்ளத்து நீந்தாது தயரதனுக்கு அக் கல்கச் சூளறத்தை நினைவுறுத்தி அவனை அப் பெரும் பழியினின்றும் மீட்டது கைகேயியின் கற்பு மேம்பாட்டுடன் கூடிய நிறையென்றும் எடுத்துக் காட்டிய பெருமை நாவலரைச் சாரும்.  திருவள்ளுவர் தமிழ்நாடு செய்தவப் பயனாய்த் தோன்றிய திருவள்ளுவர் குறித்து வழங்கும் கதைகள் பலப்பல, அவை அனைத்தும் ஒருவகையில் திருவள்ளுவர் புகழை மாசு படுத்துவதாகவே உள்ளன. பல்வேறு இலக்கியங்களை ஆராய்ந்து திருவள்ளுவர் பற்றிய திட்டவட்டமான கருத்தினை முதற்கண் வெளியிட்ட பெருமை நாவலரைச் சாரும். அவருடைய ஆராய்ச்சி முடிவுகள் வருமாறு:  “வள்ளுவர் கடைச்சங்க காலத்திற்கு மிகவும் முற் பட்டவர். திருக்குறளே தமிழின்கண் தோன்றிய தனிமுதல் அற நூல் திருவள்ளுவர் புலைச்சியின் புதல்வரல்லர். ஏலேல சிங்கனின் கொடையால் உயிர்த்த பிறவியல்லர். தமிழ் முடி மன்னரிடத்து உட்படு கருமத் தலைவராய்த் தம் ஆற்றலும் அறிவும் வாய்ந்தவர்.”  முதன் முதலாக இவ்வாராய்ச்சிச் சொற்பொழிவினை 25-1-1929ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கம், கிறித்தவ இளைஞர் சங்கம் இவற்றின் ஆதரவில், மறைத்திரு. எச்.ஏ. பாப்லி துரை தலைமையில் நிகழ்த்தினார். பின்னர்ச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் அறிஞர் பெருமக்கள் பலர் குழுமியிருந்த அவையில் வெளியிட்டார். அங்குக் கூடியிருந்த பெரு மக்களில் குறிக்கத்தக்கவர் டாக்டர் உ. வே. சாமிநாதையர், மு. இராகவையங்கார், எஸ். வையாபுரிப்பிள்ளை முதலியோ ராவர். இந்நூலைப் படித்து டாக்டர் உ. வே. சா. அவர்கள் கருதிய கருத்து, நாவலர் ஆழமான ஆராய்ச்சி அறிவு நுட்பம் வாய்ந்தவர் என்பதாகும்.  சேரர் பேரூர் முடியுடை மூவேந்தரில் முதலாமவரான சேர மன்னரின் கோநகரமாம் வஞ்சி யாண்டுளது என்பது குறித்து:ஆராய்ச்சி கள் பல எழுந்தன. சிலப்பதிகார உரையாசிரியராம் அடியார்க்கு நல்லாரும், டாக்டர் உ. வே. சாமிநாதையரும் மேற்கடற்கரையிலுள்ள பேராற்றின் கரைக்கண்ணது வஞ்சி என்பர். அறிஞர் வி கனகசபைப் பிள்ளை மேற்கு மலைத் தொடரின் அடிவாரத்தில் பேரியாற்றங்கரையில் ஒரு பாழுருக் குத்திருக்கரூர் என்னும் பெயர் வழங்குவது கொண்டு அப்பா மூரையே வஞ்சி என்று கொண்டனர். ‘சேரன் செங்குட்டுவன்’ என்ற ஆராய்ச்சி நூலையளித்த பேராசிரியர் மு இராகவை யங்கார், வஞ்சியென்பது திருச்சிக்கு மேற்கே ஆம்பிராவதி ஆற்றின் மேலதாக அமைந்திருக்கும் கருவூரானிலை அல்லது கருரே வஞ்சியென்பர். ‘தமிழ் வரலாறு’ எனும் அரிய ஆராய்ச்சி நூலைத் தந்த தஞ்சை அறிஞர் கே. சீனிவாசப் பிள்ளை, இச்சிக்கலைத் தீர்க்குமாறு நாவலரை வேண்டிக் கொள்ள, நாவலர் இப்பொருள் குறித்து விரிவாக ஆராய்ந்து ‘சேரர் பேரூர்’ என்னும் நூலைத் தமிழுலகிற்குத் தந்தார். “வஞ்சியெனப்படும் சேரர் கோநகரம், மலைநாட்டில் மேற்குக் கடற்கரையில் டோரியாற்றின் கழிமுகத்தில் அமைந்த பழம் பட்டினமேயன்றிப் பிறிது உள்நாட்டு ஊரேதுமாகாது” என்று அவர் ஆராய்ந்து முடிந்த முடிபாகக் கருத்து வெளியிட்டார்.  இந்நூற் கருத்துகளுடன், தாம் ஆராய்ந்த வேறு சில கருத்துகளையும் சேர்த்து ‘பண்டைச் சேரரைப் பற்றிய சில ஆராய்ச்சிகள்’(Some Studies about the Cheras of yore) என்னும் தலைப்பிட்டு ஆங்கில நூல் ஒன்றும் எழுதி நாவலர் பாரதியார் வெளியிட்டார்.  சேரர் தாய முறை சேரர் தலைநகரான வஞ்சி குறித்துத் தமிழறிஞர் பெரு மக்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவன போன்றே, சேரர் தாய முறை குறித்தும் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன.  இன்றைய கேரள மாநிலமாம் அந்நாளைய சேர நாட்டில் ஆண் மக்கள் தம் தந்தையர்க்குப் புதல்வராக அமைந்தாலும், அவருக்கன்றி, அத் தந்தையாரின் உடன் பிறந்தாள் புதல்வர்க்கே அச்சொத்து உரிமையுடையதாகும் இதுவே ‘மருமக்கள் தாய முறை’ என இப்பொழுது வழங்கப்படுகிறது. இவ்வழக்கு இடைக்காலத்தது என்பர். ஆனால் நாவலர் பாரதியார் அவர்கள் இதனை நன்காராய்ந்து சேர நாட்டில் முற்காலத்தில் வழக்கிலிருந்தது மருமக்கள் தாய முறையே என்றும், பழந்தமிழக முழுவதும் அக்காலத்தே இததாய முறையே வழிவழி மரபிலிருந்தது என்றும் ஆராய்ந்து கண்டு ‘சேரர் தாய முறை’ என்னும் நூலை எழுதினார்.  ‘system of Succession in the Chera Kingdom’ என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் நூலை யாத்தார்.  மாரி வாயில் நாவலர் சோமசுந்தர பாரதியாரின் நற்றமிழ்க் கவிப் புலமைக்கு எடுத்துக்காட்டாய் இலங்குவது ‘மாரி வாயில்’ என்னும் கவிதை நூலாகும். வடமொழியில் காளிதாசர் இயற்றிய ‘மேக சந்தேசம்’ என்னும் நூலைப் போன்றது இந்நூல். பஞ்சபாண்டவருள் நடுப் பிறந்த பார்த்தனான அருச்சுனனுக்கு அவன் தமிழ் மனைவியான பாண்டியன் மகள் மாரியைத் தூது அனுப்பியதாகக் கற்பித்துக் கூறும் கவின் மிகு நூலாகும் இது. இந்நூல் கற்பனை வளம் மிக்கது: காதலறத்தை விளக்குவது; பழந்தமிழ் இலக்கணமாகிய நூலிற்கு இலக்கியமாகத் திகழ்வது; இருநூற்றிருபத்திரண்டு பாக்களைக் கொண்டு கழிபேரின்பம் பயப்பது; பெரும் புலவர் அருணாசலக் கவிராயரால் “சென்ற இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்குள் இயற்றப் பெற்ற தமிழ்ப் பிரபந்தங் களுள் இம் ‘மாரி வாயில்’ பொருள்வளம் சொல்லின்பங்களில் சிறந்து விளங்குவது” என்று பாராட்டப்பட்டுள்ளது.  மங்கலங் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி இந்நூல் காதல், வீரம் ஆகிய இரு பெற்றியினையும் ஒருங்கே கூறுவதாகும். மங்கலங்குறிச்சி என்னும் சிற்றுார் பொதியமலை அடிவாரத்தில் உளது. தைத்திங்கள் தலை நாளில் நீராட வைகுறு விடியலில் ஆற்றுக்குச் சென்று தலைவி கால் தடுக்கிச் சுருட்டும் சுழியில் விழுந்தாள். வெள்ளம் இழுத்த அவளை அவ்வழியே வந்த தலைவன் காப்பாற்றிக் கரை சேர்த்தான். அன்று மாலையில் அவ்வூரில் நடந்த விலையர் போட்டியில் வெற்றி கண்டான் தலைவன். வேங்கைப் புலியை வீழ்த்திய கையோடு தலைவி கூந்தலிற் செருகி அழகு பார்க்க முல்லைக் கொத்தொன்றையும் வில்லாற் கொய்தான். இந்நிலையில் வீடு சென்ற தலைவியை மாமி பழித்தாள், மகளுக்காகப் பரிந்து வந்தாள் சித்தி. அதற்கிடையில் வெற்றி ஊர்வலம் வந்த தலைவனை அக்காட்சி பொறாத கெடுமதியாளன் ஒருவன் குத்தி விட்டான். குத்தியவனை இளைஞர் படை சிறைக்கூடம் சேர்த்தது. புண்பட்ட தலைவன் மருத்துவம் செய்யப் பெறும்போது தலைவியின் பெயரைத் தன்னை மறந்த நிலையில் உச்சரித்தான். செய்தியறிந்த தலைவி ஓடிச்சென்று தன் இனிய உரைகளால் உயிர்ப்பித்தாள்; அவனும் புண் தெளிந்து எழுந்தான். இருவரும் மணம் செய்து கொண்டு மனையறம் காத்தனர்.  தொல்காப்பியப் பொருட்படலமும் புதிய உரையும்  தொல்காப்பியத்துக்கு உரை எழுதியோர் பலர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மாணாக்கர்க்குத் தொல்காப்பியப் பாடம் சொல்லி வருங்கால் சிற்சில இடங்களில் உரையாசிரியர்கள் தமிழ் மரபுக்கும் தொல்காப்பியர் கருத்துக்கும் மாறுபட்டு உரை எழுதியிருப்பதைக் கண்டார். இலக்கணக் கடல் சோழவந்தான் அரசஞ் சண்முகனாரோடும், இருமொழிப் புலமைப் பெருமழைப் புலவர் பண்டிதமணியுடனும் தம் கருத்துகளைக் கலந்து பேசி இறுதியாக தொல் காப்பியம் - பொருட்படலமும் புதிய உரையும்’ எனும் நூல் எழுதினார். இந்நூலில் அகத்திணையியல், புறத்தினையியல், மெய்ப்பாட்டியல் என்னும் மூன்றியல்களின் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இப் புதியவுரையின் சிறப்பினைப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள், “நாவலர் இப்புத்துரை செய்ததன் வாயிலாகத் தமிழுக்கும் தமிழர்க்கும் எத்தனையோ நன்மைகள் செய்துள்ளார். தக்க மேற்கோளுடன் எவரும் மறுக்க முடியாத வகையில் பொருள் கூறித் தமிழர் பெருமையைக் காத்துள்ளார். அப் புத்துரையைப் பாராட்டி மக்களனை வரும் அதையே படிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.  சில நூல்கள் மேற்கண்ட நூல்களைத் தவிர, இவர் அவ்வப்போது இதழ்களுக்கு எழுதிய கட்டுரைகளும், வானொலியில் ஆற்றிய சொற்பொழிவுகளும் நூல் வடிவம் பெற்றன. அவ்வாறு வெளிவத்த நூல்கள் ‘நற்றமிழ்’, ‘பழந்தமிழ் நாடு’ என்பனவாகும். இவர்தம் ஆங்கிலக் கட்டுரைகள் ‘தமிழ் இலக்கியங்களும் தமிழகமும்’ (Tamil Classic and Tamīlaham)பெயரில் நூலாக அமைந்தது.  மேலும் இவர் கரிகாலனும் திருமாவளவனும் ஒருவரே என்ற கருத்தை மறுத்தும், பட்டினப்பாலையின் தலைவன் கரிகாலனல்லன் திருமாவளவனே என்றும், இத்திருமாவளவன் கரிகாலனுக்கு மகன் என்றும் ஆராய்ந்து கூறியுள்ளார்.  சீத்தலைச் சாத்தனாரும், மதுரைக் கூலவாணிகன் சாத்தனாரும் வெவ்வேறு புலவர் என்றும், மணிமேகலை பாடிய புலவர் மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் ஆவர் என்றும், இவரின் வேறான-புரவலரைப் போற்றி அவரால் பேணப்பட்டு வாழ்ந்தவரே சங்ககாலச் சித்தலைச் சாத்தனா ரென்றும் முடிவு கட்டினார்.  மெய்கண்டார் இயற்றிய சிவஞான போதம் மொழி பெயர்ப்பு நூலன்று, அது செந்தமிழில் எழுந்த முதல் நூல் என்றும், உருத்திரனும், சிவனும் ஒருவரல்லர், வெவ்வே றானவர் என்றும், உருத்திரன் அழிக்கும் கடவுள், தமிழரின் சிவன் எல்லாம் வல்ல இறைவன் என்றும் தக்க ஏதுக்கள் காட்டி எடுத்துரைத்தார்.  இவ்வாறாக டாக்டர் நாவலர் கணக்காயர் சோமசுந்தர பாரதியார் இலக்கிய எழுஞாயிறாய் - இருபதாம் நூற்றாண்டு நக்கீரராய் இலங்கினார். நாட்டுப்பற்றில் வேர் ஊன்றி, தமிழ்ப்பற்றில் கிளைவிட்டுப் படர்ந்து, தமிழன மேம்பாட்டிற்குச் செழித்து விளங்கியது நாவலர் என்னும் நற்பயன் மரம் என்று கூறலாம்.    7. தமிழ்நடை வளர்த்த தமிழ்த் தென்றல்   வாழ்வும் பயனும் இன்றைய சமுதாயம் எண்ணற்ற தலைமுறையினரின் உழைப்பில் மலர்ந்ததாகும். காலந்தோறும் வளர்ச்சியை உருவாக்க முன்னோடிகளாகச் சிலர் தோன்றுகின்றனர். வருங்காலச் சமுதாயத்தினர் தம் வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்வதற்கும், எளிமைப்படுத்திக் கொள்வதற்கும், கருத்து வடிவத்திலும், செயல் வடிவத்திலும் அத்தகையோர் தொண்டாற்றி வருகின்றனர். தன்னலம் கருதாத தொண்டையே தங்கள் வாழ்க்கையின் பயன் என்று கருதுகின் றனர். ‘சமுதாயப் பணியே வாழ்வின் குறிக்கோள்’ எனக் கருதிப் பணியாற்றுவோர் மிகச் சிலர். இருபதாம் நூற்றாண்டுத் தமிழக வரலாற்றில் இலக்கியத்தையும், அரசியலையும், சமயத்தையும், பொருளாதாரத்தையும் நாட்டுணர்வுடன் இணைத்து இழைத்துப் பார்த்த வித்தகர் திரு. வி. க மொழிக் கண்ணோட்டத்திலிருந்து உரைக்கும் போது ஒரு திருப்பு மையத்தையும், அரசியல் பார்வையிலிருந்து அணுகும்போது சமய உணர்வுடன் கலந்த விடுதலை எழுச்சியையும், பொருளாதாரக் கோணத்திலிருந்து குறிப்பிடும்போது முதலாளித்துவ எதிர்ப்புப் போக்கையும் கொண்ட எளிமை, மறுமலர்ச்சி, காந்திய தெறி ஆகியவற்றின் வடிவமாகத் திகழ்ந்தவர் எனலாம்.  பிறப்பும் கல்வியும் திருவாரூரில் விருத்தாசல முதலியாருக்கும், சின்னம்மாளுக்கும் செங்கற்பட்டு துள்ளல் எனும் கிராமத்தில் 26.8-1883 இல் பிறந்த கலியாணசுந்தரனார் சென்னை, இராயப்பேட்டை ‘ஆரியன் பிரைமரி பாடசாலை’யிலும், வெஸ்லி கலாசாலை உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றார். யாழ்ப்பாணம் நா. கதிரைவேல் பிள்ளையிடம் தமிழ்ச் சுவையறிந்த இவர், மயிலை தணிகாசல முதலியாரிடம் சித்தாந்தம் பயின்றார். பின் மறை மலையடிகளிடம் இலக்கியத் தேர்ச்சி பெற்றார்.  சமயப் பணியும் ஆசிரியப் பண்பும் சைவ நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த திரு.வி.க. இராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்த ஜனசபையிலும். திருவல்லிக்கேணிச் சிவனடியார் திருக்கூட்டத்திலும் சொல் லாலே உழவாரப் பணிபுரிந்த நாவுக்கரசராய்த் திகழ்ந்தார். ஸ்பென்சர் கம்பெனியில் பணியாற்றியிருந்த காலத்தில், சுதந்தி ரப்போராட்டத்தில் தீவிரமாகச் செயலாற்றியிருந்த இவர் ‘திலகர்’ சிறைப்பட்ட செய்தியறிந்து பணியை விடுத்தார். நாட்டுணர்வில் நாட்டம் கொண்டு விடுதலை இயக்கத்தில் ஈடுபட விழைந்தார். சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் ஆதிதிராவிடர் பள்ளியில் ஆசிரியராகப் பணி ஏற்றார். தொடர்ந்து வெஸ்லி கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியர் பொறுப்பினைச் சிறப்பித்தார். இக்கால கட்டத்தில் சைவ சித்தாந்த மகா சமாசத்திலே இலக்கியவாணர்களும் பாமர மக்களும் போற்றும் வண்ணம் செஞ்சொல் நடையில் சொற் பொழிவுகள் நிகழ்த்தி மக்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றார்.  இல்லறமும் எழுத்துலகமும்  1912ஆம் ஆண்டு ‘கமலாம்பிகை’ என்ற அம்மையாரை மணந்து, ஆறாண்டு கால இல்லறவாழ்வை மட்டும் பெற்று. மனைவியையும், ஈன்ற ஆண்மகவு ஒன்றையும் பெண்மகவு ஒன்றையும் இழந்தார். பின் திரு.வி.க. துறவி நிலை அடைந்தார். ஆனால் சமுதாயத் தொண்டினை உயிர் மூச்சாகக் கொண்டார். 1917ஆம் ஆண்டு ‘தேசபக்தன்’ என்ற நாளிதழி னைத் தொடங்கி, நாட்டுப் பற்றினைத் தமிழ் மக்கள் நெஞ்சிலே கொழுந்திடச் செய்தார், தொழிற் சங்கம் முதலாளித்துவச் சுரண்டலிலிருந்து தொழிலாளர் தம் வாழ்வில் விடிவை உருவாக்க, ‘வாடியா’ என்பவரின் துணையுடன் 27-4-1918 அன்று ஆசியாவிலே முதன் முதலாகத் தொழிற்சங்கத்தை ஏற்படுத்தினார். பின், நாளிதழ் ஆசிரியராகவும், தொழிலாளரின் ஆதரவு பெற்ற தலைவராகவும், சிந்தனையைக் கிளறும் எழுச்சியுரைப் பேச்சாளராகவும் திகழ்ந்து இவருடைய பணி காங்கிரசு இயக்கத்தில் பொலி வுற்றது. பேச்சிலும், எழுத்திலும் பெருமிதம் காட்டி. எண்ணற்றோரைத் தேசீய நீரோட்டத்தில் கலக்கச் செய்தார். மொழி வேறு, இலக்கியம் வேறு. சமயம் வேறு, அரசியல் வேறு என்ற நிலையை மாற்றி, அனைத்தையும் ஒரே பார்வையில் கொண்டுவந்து ஆற்றிய பணி அவர்தம் தனித்தன்மையைக் காட்டி நிற்பதாகும். பக்கிங்காம் மில் தொழிலாளர் போராட்டத்தில் பங்கேற்று, தொழிலாளர்களின் வேதனைக்கு விடிவு கண்டார். தொழிலாளர் தலைவரானார்.  வாழ்வும் தொண்டும் அவருடைய வாழ்வும் தொண்டும் ஒரு துறையினைச் சார்ந்ததாக இல்லை. பல்வேறு துறைகளில் தனிப்புகழ் பெற்று விளங்கிய தமிழ் முனிவர் அவர். ஆம். அவர் தொடாத துறை ஒன்றுமில்லை: தொட்ட துறைகயை அழகு படுத்தாமல் விட்டதில்லை” எனம் பாராட்டப் பெறும் அளவிற்கு அவர் அரசியல், சமயம், இலக்கியம், பொருளா தாரம், மகளிர் முன்னேற்றம், தொழிலாளர் நலம், இளைஞர் திறம், சீர்திருத்தம், நாட்டுயர்வு முதலான கோணங்களில் ஆரவாரமின்றி அமைதியாகத் தொண்டாற்றினார். மொழிப் பற்றும், சமயப் பற்றும், நாட்டுப் பற்றும் நிறைந்த அவர் நாடு விடுதலை பெற, மொழி நலம் சிறக்க, சமயப்பற்று மிளிரத் தகைசால் தொண்டாற்றினார். அவர்தம் தனித் தொண்டால் மகளிர் முன்னேற்றமடைந்தனர். இளைஞர் ஏற்றம் பெற்றனர்.  பேச்சும் எழுத்தும் சிலருக்குப் பேச்சு கடல் மடைதிறந்தாற்போல் வரும். எழுத்து என்றால் ஒரு வரியும் ஓடாது. சிலர் எழுதி எழுதி நூல்களைக் குவிப்பார்கள். ஆனால் மேடையேறிச் சில மணித் துளிகளேனும் பேசுவதென்றால் மெய்ந்நடுக்கம் ஏற்பட்டு நாத்தழுதழுத்துச் சொற்களே வாயினின்றும் வெளிவராமல் நின்று விடுவார்கள். சிலருக்குப் பேச்சு வரும்; எழுத்து வரும்; ஆனால் பேசிய வண்ணம் எழுதியவாறு சொல்லும் எழுத்தும் செயலும் ஒத்த வாழ்க்கை-உள்ளும் புறமும் ஒன்றான வாழ்க்கையைக் காணல் அரிது. நாவும் நடப்பும் ஒன்றாக்கிச் செயல்வழிச் சான்றோராய்த் திகழ்ந்தவர் திரு.வி.க. ஆவார்.  திரு.வி.க, அவர்கள் நெஞ்சம் தேசியத்தில் ஊறித் திளைத்தது. அவர் காந்தியடிசுளின் கோட்பாட்டிலே கொண் டிருந்த ஆழமனஈடுபாடே. ‘மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’ எனும் நூலாக விரிந்தது. பெண்களின் வாழ்வு துலக்கம் பெற்றுத் துரண்டா விளக்காய்ச் சுடர்விட வேண்டுமென்ற எழுச்சியே ‘பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை’ எனும் நூலாக மலர்ந்தது. இன்றைய இளைஞர்கள் வீறு கொண்டோராய் மட்டுமின்றி, விடுதலைப் பணிபுரியும்  சா-8 வித்ததராய் விளங்க வேண்டும் என்ற கருத்தே ‘சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து’ எனும் நூலாகக் கனிந்தது. இலக்கியத்தை ஆய்ந்து காணும் நோக்கிற்கும், இசைவான எழில் நடைக்கும் காட்டாக நிற்பது அவர்தம் ‘நாயன்மார் வரலாறு’ ஆகும். பெரிய புராணத்துக்கும். காரைக்கால் அம்மையார் திருமுறைக்கும் எழுதிய குறிப்புரைகள் அவர்தம் சமய அணுகு முறையைப் புலப்படுத்த வல்லனவாகும், ‘தமிழ்த் தென்றல் அல்லது தலைமைப் பொழிவு’ என்னும் நூல் மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்றில் மிதந்த காலத்தின் எதிரொலி யாகும். திரு.வி.க.வின் எழுத்துப் படைப்புகளிலும். சொற் படைப்புகளிலும் முருகன் அல்லது அழகு. ‘மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’, ‘பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை’, ‘பரம்பொருள் அல்லது வாழ்க்கைவழி’, ‘உள்ளொளி’ என்பவை இந்த நூற்றாண்டின் நூல்களில் சிறப்பிடம் பெற்றவை என்கிறார் டாக்டர் மு.வ.  செஞ்சொல் நடைவேந்தர் ‘நடை’ என்பது எழுத்தாளரின் இயல்பையும், சித்தனைப் போக்கையும் வெளிப்படுத்தவல்லது என்பர். எளிமை, அமைதி, அடக்கம் இவற்றின் வடிவானவர் திரு.வி.க. ஆனால், அவர்தம் நடை வீறுகொண்டதாய், சிந்தனையைக் கிளறுவதாய். மிடுக்கு நிறைந்ததாய் விளங்கும் தெளிந்த நடையாகும். வாழ்வையும் இலக்கியத்தையும் ஒன்றாகக் கண்டு வாழ்ந்த திரு வி. க. வுடன் நெருங்கிப் பழகிய டாக்டர் மு.வ. அவர்கள், அவர்தம் நடையில் காணப்படும் வியத்தகு கூறுகளைத் தம் கட்டுரை யொன்றில், “எழுதும்போது இருந்த பண்பாடும் பேசும்போது வந்தது. பேசும்போது அமைந்த மிடுக்கு எழுதும்போதும் அமைந்திருந்தது” என்று குறிப்பிட்டுள்ளமை கருதத் தக்கதாகும். பேசுவதைப் போன்று எழுதியும், எழுதுவதைப் போன்று பேசியும் வந்தவர் திரு.வி.க. இரண்டிலும் வேறுபாடுகள் காண முடியாத அளவுக்குச் செஞ்சொற்கள் விரவி விழிப்பூட்டும் வியப்பு நடையைக் கையாண்டார்.  “அருமைத் தமிழ் மாணவர்களே! உங்கள் நாட்டை நோக்குங்கள். அஃது எப்படி இருக்கிறது? அருமைத் தமிழ்நாடு சின்னாபின்னமாகச் சிதறுண்டு கிடக்கிறது. காரணம் என்ன? தலையாய காரணம் என்ன? தாய் மொழியைப் பேணிக் காப்பாற்றாமையாகும். அதன் பால் பற்றுளங் கொள்ளாமை, ஒருபோது முடியணிந்து கோலேந்திக் கலையணிந்து அரியாசனம் வீற்றிருந்த நம் பேரன்னை-இப்போது எந்நிலையில் இருக்கிறாள்? அவள் முடியிழந்து கோலிழந்து கலையிழந்து நலமெல்லாம் இழந்து கிடக்கிறாள். அவள் உடற்கூறுகள் எல்லாம் ஊறுபட்டுக் கிடக்கின்றன. அவள் முகமெல்லாம் குறு மறுக்கள் எழுப்பட அவள் எழிலைக் கெடுத்துவருகின்றன. அவளிருக்கத் துச்சிலும் இல்லை. அவளைத் தூறும் புற்றும்மூடிக் கொள்ளுமோ என அஞ்சுகிறேன்.”  (இளமை விருந்து)  எளிய சொல்லாட்சிகளில் தெளிவும், தெளிவில் ஓர் அளவையியல் அணுகுமுறையும் அணுகுமுறையில் ஓர் உறுதியும் கொண்ட தன்மை மேற்காணும் நடையிலே காண முடிகிறது. எனவேதான் “இருபதாம் நூற்றாண்டு முற்பகுதி உரை நடையின் தந்தை”யென இவர் தனிச் சிறப்புடன் கருதப்படுகின்றார். -  கவிதைப் பணி தொடக்கக் காலத்திலேயே உரைநடை எழுதியது போன்று செய்யுள் எழுதும் திறமும் அவர்க்கு வாய்த் இருந்தது. ஆனால் ஒய்வு ஒழிவற்ற அவர்தம் சொற்பொழிவு களும், நாள்தோறும் வாரந்தோறும் தம் ‘தேச பக்தன்’, ‘நவசக்தி’ இதழ்களுக்கு எழுதவேண்டும் என்ற கட்டாயமும், இவர்தம் செய்யுள் தொண்டிற்குத் தடை விதித்து வந்தன.  உரைநடை போலவே அவருடைய கவிதைகளும் மிகத் தெளிவாக இருக்கும். அவருடைய கவிதைகள் உள்ளத்து உணர்ச்சியை எழுப்புவன. ஆராய்ந்து எடுத்த எளிய சொற்களாலே ஆக்கப்பட்டன. கருத்தை வழுவாமலே கூறுவன.  தாம் எடுத்துக்கொண்ட கருத்துக்களைத் தெளிவுபடுத்தி உரைப்பது அவருடைய நடையின் சிறப்பு. அவருடைய கருத்துகள் இயற்கைக்கு மாறாகவோ, பகுத்தறிவுக்குப் பகையாகவோ இருக்கமாட்டா.  1931ஆம் ஆண்டில் ‘உரிமை வேட்கை அல்லது நாட்டுப் பாடல்’ என்றொரு சிறு செய்யுள் நூலினை இயற்றினார்.  “தமிழினைப்போல் உயர்ந்தமொழி தரணியில்வே றெங்குமிலை தமிழனைப்போல் மொழிக்கொலையில் தலைசிறந்தோர் எவருளரோ.”  -உரிமை வேட்கை அல்லது நாட்டுப் பாடல்.  என்ற பாடலில் அவர்தம் மொழியார்வம் விளங்கக் காண லாம். அடுத்த ஆண்டில் அவர் இயற்றிய செய்யுள் நூல் ‘முருகன் அருள் வேட்டல்’ எனும் நூலாகும். ‘முருகன் அல்லது அழகு’ எனும் உரைநடை நூலினை 1925ஆம் ஆண்டில் எழுதினார் அவர். தம் மனத்திற்குப் பிடித்த இயற்கையில் இறைவனைக் கண்ட பாங்கில் எழுந்த நூலாகும் அது. 1938ஆம் ஆண்டில் ‘திருமால் அருள் வேட்டல்’ வெளியாயிற்று. தென்திருப்பேரை முதலாகத் திருமலை ஈறாகப் பல வைணவத் திருப்பதிகளில் கோயில் கொண்டுறையும் கோல நெடுமாலை வந்தித்து வழிபடும் நிலையில் இந்நூல் இயன் றிருக்கக் காணலாம். இப்பாடல்களில் ஒரு பொதுமை நோக்கு இலங்கவதைக் காணலாம்.  “பலப்பல மொழியில் பலப்பல பெயர்கள் பகர்ந்த சான்றோர் நுகர்ந்த இன்பம் ஒன்றே அன்றோ கன்றே தெளியின் ஒருவ நிற்கே மருவிய பெயர்கள் பலவெனும் உண்மை நிலவுதல் உறுதி எப்பெயர் நின் பெயர் எப்பதி நின்பதி எவ்வுரு நின்னுரு எம்மொழி நின்மொழி பேரெலாம் நீயே பேரிலான் நீயே பதியெலாம் நீயே பதியிலான் நீயே உருவெலாம் நீயே உருவிலான் நீயே மொழியெலாம் நீயே மொழியிலான் நீயே எல்லாம் நீயே”  -திருமால் அருள்வேட்டல்.  என்று அவர் தென்திருப்பேரை யுறையும் திருமாலைப் பரவி நிற்கும் பகுதியில் பொதுமையும் இலக்கிய நுட்பமும் செறிந் திலங்கக் காணலாம்.  திருவரங்கத்தம்மானைத் துதிக்குமுகமாகத் திரு.வி.க. அவர்கள் பாடியுள்ள பின்வரும் பாடலில் செஞ்சொலின்பமும் நெஞ்சினிக்கும் நேயமும நிறைந்திருக்கக் காணலாம்.  “மணிகொழிக்குங் காவிரியாய் மலர்நிறைந்த பொழிலாய் மணங்கமழும் மதியுடையார் வாயொழுகும் யாழாய் அணிகொழிக்கும் வேனிலிடை ஆடிவருங் காற்றாய் அமைதியளி திங்கள் பொழி ஆனந்த நிலவாய் பணி கொழிக்கும் அடியவர்கள் பத்திவிளை பாட்டாய் பரந்துநிற்குங் காட்சியெலாம் பார்க்கின்ற வேளை பிணிகொழிக்கும் ஏழையுய்யப் பேசரிய துயிலின் பெற்றியருள் செய்பாயோ பேரரங்க வேந்தே”  -திருமால் அருள் வேட்டல்  1942ஆம் ஆண்டில் ‘பொதுமை வேட்டல்’ எனும் பெயரிய செய்யுள் நூலொன்றினை இயற்றித் தமிழுலகிற்கு அளித்துள்ளார். இந்நூலில் இயற்கை வாழ்வு, அருளின் பெருமை, நெஞ்சின் இயல்பு, சன்மார்க்க வாழ்வு முதலிய பொருள் குறித்து இவர் பாடியுள்ள பாடல்களைக் காணலாம். “திரு.வி.க. அவர்களின் உள்ளம் எத்தகையது என்று ஒரு நூலால் அறிய வேண்டின், அது “பொதுமை வேட்டல்” என்னும் இந்த நூல் எனலாம்” என்பர் பெருந்தகை மு.வ. அவர்கள்.  “காலையிலே எழுந்துலவிக் கடன்க ளாற்றிக் கதைபேசித் தொழில்புரிந்து காசு தேடி மாலையிலே களித்துறங்கல் வாழ்க்கை யாமோ மக்கள் நிலை அவ்வளவில் மாய்ந்தோ போகும் மேலையுமே தொடர்ந்துசெலும் மேன்மைத் தன்றோ விரியுலகில் விளம்பரமே விரும்பா தென்றுங் காலடியில் தலைசாய்த்துக் கருத்தை வைத்துக் கடன்கள்செய அருள்புரிவாய் கருணைத்தேவே!”  -பொதுமை வேட்டல்  என்று விண்ணப்பம் என்னும் பகுதியில் இடம் பெற்றுள்ள பாடல் வாழும் நெறியை வகையுறப் புலப்படுத்தி நிற்பதாகும்.  1945ஆம் ஆண்டில் ‘புதுமை வேட்டல்’, ‘கிறிஸ்துவின் அருள் வேட்டல்’ என்னும் இரு நூல்களும் வெளிவந்தன. இந்நூல்கள் அவர்தம் சமரசப் பற்றினை விளக்க வல்லன. வாகும். 1940ஆம் ஆண்டில் வெளிவந்த ‘சிவனருள் வேட்டலும்’ 1937ஆம் ஆண்டில் வெளிவந்த ‘கிறிஸ்து மொழிக் குறளும்’ உளப் பண்பாட்டினை உயர்த்தும் உயரிய நூல்களாகும். ‘இருளில் ஒலி’ என்பது இரண்டாண்டுகளுக்குப் பின் வெளிவந்த நூலாகும். இந்நூலில் ‘எண்ணத்தின் உயர்வே வாழ்வில் ஏற்றத்தைத் தரும்’ என்பதனை நயமுறப் புலப்படுத்தியுள்ளதனைக் காணலாம். தேவைக்கு மேல் ஈட்ட வேண்டும் என்ற சிந்தனையே எல்லாச் சீரழிவுகளுக்கும் காரணம் என்பதனை இந்நூல் உணர்த்துகின்றது.  “தேவைக்கு மேலெண்ணாச் சிந்தை உயர்வெண்ணம் மேவிட உந்திவிடும் மேல்” “தேவைக்கு மேல்கினையாச் சித்தம் செகமானால் யாவும் ஒழுங்குபடும் அன்று”  -புதுமை வேட்டல்  இந்த ஆண்டிலேயே ‘அருகன் அருகே அல்லது விடுதலை வழி’, ‘இருமையும் ஒருமையும்’ என்னும் இரு நூல்கள் வெளிவந்தன. அடுத்த ஆண்டில் அதாவது 1951ஆம் ஆண்டில் ‘சித்தந் திருந்தல் அல்லது செத்துப் பிறத்தல்’, ‘முதுமை உளறல்’, ‘பொருளும் அருளும் அல்லது மார்க்ஸியமும் காந்தியமும்’ எனும் மூன்று நூல்கள் வெளிவந்தன. இவ்வாறு அவர்தம் இறுதிக் காலத்தில் உரைநடை நூல்கள் குறைந்து செய்யுள் நூல்கள் மிகுந்ததற்குக் காரணத்தை அவரே பின் வரும் பாடலில் புலப்படுத்தியுள்ளார்.  “அந்த நாட்களில் சிந்தனைப் பொருள்களை விழிகள் நோக்க எழுதுவன் கையால்; அறுபத் தாறினில் சிறுபரல் ஆணிப் படலம் கண்ணைப் படர்ந்து மறைத்தது; பழைய வண்ணம் விழிகள் நோக்க எழுதும் பேற்றை இழந்தவன் பாவி! உளத்தெழும் கருத்தை உளறு கின்றனன், உளறலும் நூலாய் வெளிவரு கின்றது; ஒற்றைக் கண்ணிடர் உற்ற வேளையில் பழம்பொருள் நூலைப் பகர்ந்தனன் உரையாய் இரண்டு கண்ணொளி வறண்டஇந் நாளினில்  இருளில் ஒளியைக் குறள்வெண் பாவால் இருமையும் ஒருமையும் அருகன் அருகே பொருளும் அருளும் மார்க்கிஸ் காந்தி, சித்தத் திருத்தல் செத்துப் பிறத்தல் என்னும் நூல்களைப் பண்ணினன் அகவலால். பழைய உரைநடை விழுமிய அகவல் பின்னே யாப்பணி துன்ன வேய்ந்தது; உளறும் என் அகவலும் ஒருவித உரையே; பொழுது படுக்கையில் கழிக்க நேர்ந்தபின் கடிதில் உரைநடை முடிதல் கண்டேன்; பாவின் அமைப்போ ஓவியம் ஆகி உருண்டும் புரண்டும் திரண்டும் நிற்கும் மொழிநத பின்னும் அழிதல் அரிதாம்; ஆதலின் பாவால் ஓதலைக் கொண்டேன்”  -முதுமை உளறல்  ‘முதுமை உளறல்’ என்ற நூலிற் காணப்படும் மேற்காணும் பாடல்வழி, திரு.வி.க. கண்பார்வை மங்கி, உடல் மெலிந்து, படுக்கையில் வீழ்ந்து கிடந்த போது அவருடைய சிந்தனை வேகமாகச் சிறகடித்துப் பறந்தபோது, எதுகை மோனையும் சீர் வரையறையும் உடைய செய்யுளில் தாம் எண்ணிய கருத்துகளை எடுத்தியம்புவது அப்பெரியாருக்கு எளிதாக இருந்தது. பார்வை பழுதுபட்ட பிறகு தாமே பேனாப் பிடித்து எழுத முடியாத நிலையில், எண்ணங்களை நெடுநேரம் நெஞ்சில் வைத்துத் தேக்கவும், அதை நினைவோடு காக்கவும், பின் தன்னைக் காண வந்தோரிடம் சொல்லி எழுத்துருவம் பெற வைக்கவும் அவருக்கு வாய்ப்பாக அமைந்தது செய்யுள் நடையேயாகும். மேலும் திரு.வி.க. அவர்களது புறக்கண்களைப் படலம் மறைத்துப் பார்வை பழுதுற்ற நேரத்தில் இயற்றிய செய்யுள் நூலகள் அனைத்தும் ஒப்பரிய கருத்துகளை, விழுமிய எண்ணங்களை வெளியிடுவன வாகும். கண்ணொளி மங்கிய நேரத்தில் அவர் கருத்தொளி மிகுந்திருந்தது; புறவொளி பாழ்பட்ட நேரத்தில் அகவொளி அமைதியில் பிறங்கிற்று எனலாம். இதனை அவரே,  “கண்ணொளி பட்டதும் கருத்தொளி முன்னிலும் மேலும் விளங்கலைச் சாலத் தெளிந்தேன்; ஒருபுலன் ஒடுங்கின் மறுபுலம் விளக்கம் அதிகம் அடைதலின் அதிசயம் இல்லை”  -முதுமை உளறல்  என்று புலப்படுத்தியுள்ளார்.  அவர் உயிர் நீப்பதன் முன்னர் 1953ஆம் ஆண்டில் இயற்றிய நூல்-இறுதி நூல்-‘வளர்ச்சியும் வாழ்வும்’ என்பதாகும். இந்நூலில் அவர்தம் நைந்த உள்ளத்தினைக் காணலாம்.  “மக்கள் வளர்ச்சியில் சிக்கல் உறுதலென்? பகுத்தறி வுடைய வகுப்போ காரணம்? செயற்கை வாழ்க்கையில் பயிற்சி பெற்றான் வளர்ச்சி வாழ்வில் தளர்ச்சி யடைநதது; மனிதன் என்றோ சலித்து விட்டான்; காலங் கணித்துக் கோலல் அரிதே எத்தனை யுகமோ? எத்தனை ஊழியோ? இன்னும் அவன் வாழ் தொன்மை உலகம் தெய்வ மயமாய் உய்ய வில்லை சாந்தம் முற்றும் ஏந்த வில்லை என்ன காரணம்? உன்னிப் பார்க்க: மனிதன் முதன்முதல் இனிது வாழ்ந்தான் உழைத்தும் உழுதும் பிழைத்து வந்தான் ஒருவன் பொருளை ஒருவன் கவரும் கல்வி பயிலாச் செல்வம் பெற்றான் பொய்யும் அற்ற மெய்யில் நின்றான் சுரண்டல் வாழ்வில் புரண்டா னில்லை, பின்னே கெட்டான்; என்ன செய்வது,  ஒருவன் பொருளை ஒருவன் கவரும் இழிவு வளரும் வழியைக் கண்டான்; கொலையுங் களவுங் கள்ளுங் காமமும் பொய்யும் வாழ்வில் மொய்த்துக் கொண்டன சுரண்டல் வாழ்வு திரண்டு மதர்த்தது செயற்கை வாழ்க்கையில் பயிற்சி பெற்றான் வளர்ச்சி வாழ்வில் உணர்ச்சி யற்றது.”  -வாழ்வும் வளர்ச்சியும்  இந்தப் பகுதியில் உலக மக்கள் இயற்கையைத் துறந்து, செயற்கையைப் பற்றி நின்று, அறந்துறந்து மறம் மிகுந்து வாழும் நெறியல்லா நெறியைக் கண்டிக்கிறார்.  இவ்வாறு திரு.வி.க. அவர்கள் 1931ஆம் ஆண்டு வரையில் இயற்றிய செய்யுள் நூல்களின் எண்ணிக்கை பதினான்காகும். இந் நூல்களில் அவர்தம் பொதுமையுணர்வும், இலக்கிய நெஞ்சமும் இனிது விளங்கக் காணலாம். திரு.வி.க. ஒர் உயரிய கவிஞர் என்பதனை இந்நூல்கள் தெரிவித்து நிற்கின்றன.  1953ஆம் ஆண்டு அவர் இறந்தபோது பி. ஸ்ரீ. அவர்கள், ‘பேனா மன்னருக்கு மன்னன். அவர் சிறந்த பக்தன். அவர் சாகவில்லை. ஏனெனில் பக்தனைக் கண்டு சாவுதான் செத்துப் போகிறது. அவர் வாழ்ந்து வந்த புதுப்பேட்டை விலாசம்தான் மாறியிருக்கிறது. புது விலாசம் மக்கள் உள்ளம் என்ற கருத்துத் தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் அவர் ஆற்றிய பணியின் எல்லையை நன்குணர்த்துகிறது.  இலக்கியச் செல்வராய், சமய மறுமலர்ச்சியாளராய், செந்தமிழ்ப் பேச்சாளராய், தொழிலாளர் தலைவராய், நாளிதழ் நாயகராய், அரசியல் தூயவராய் விளங்கித் தமிழிலக்கிய வரலாற்றிலும் தமிழக அரசியல் வரலாற்றிலும் சீரிய இடத்தைப் பெற்றுச் செம்மாந்து நிற்பவர் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களே ஆவர்.                                                      8. புதுவை தந்த புரட்சிக் கவிஞர்   கவிஞன் தான் பிறந்த காலத்தின் கருவாகவும் பின்னர்க் கருத்தாவாகவும் துலங்கக் காணலாம். தன்னைக் சுற்றிலுமுள்ள சூழலை, சமுதாயத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுவது என்பது ஒருமுறை: அச்சமுதாயத்தை விவரிக்கவும் செய்து தன்னுடைய கருத்துகளைப் பரப்பி ஒரு புதிய மறுமலர்ச்சிக்குச் சமுதாயத்தினைப் படைக்க வ்ேண்டும் என்ற பேரார்வத்தில் பிறங்கிடுவது பிறிதொரு வகை. முன்னவர் உள்ளதை உள்ளவாறே கூறுபவராகவும். பின்னவர் உள்ளதை உணர்ந்தவாறு கூறுபவராகவும் அமைவர்.  உள்ளதை உள்ளவாறு உணர்த்துபவர், உருவத்தைப் பிரதிபலித்து நிற்கும் கண்ணாடி போல்பவராவர். கவிஞன் காலத்தின் கண்ணாடியாக மட்டும், இருந்தால் போதாது. காலத்தின் கருத்தாவாகவும் அவன் துலங்குதல் வேண்டும். அப்போதுதான் அவன் படைக்கும் இலக்கியம் பூந்தோட்டமாக மட்டும் அமையாமல் காய்கறித் தோட்டமாகவும் அமைந்து பலன்தர முடியும்.  “மக்கள் ஆக்கா மனுவேந்தர்கள் கவிஞர்கள்” (Poets are the unacknowledged legislators of the world) என்று கவிஞர் ஷெல்லி குறிப்பிட்டார். பொதுமக்களின் வாக்குரிமை பெற்றுச் சட்டமன்றத்தில் அமர்ந்து நாட்டு மக்களுக்கு நலம் பயக்கும் திட்டத்தினைக் தீட்டிச் செயலாற்றும் வாய்ப்பு அரசியல்வாதிகளுக்கு உண்டு. ஆனால் கவிஞர்களோவெனில் கற்பனையில் சில காட்சிகளைக் கண்டு, அக்கற்பனைக்காட்சிகள் நடைமுறை வாழ்வில் நனவுகளாகி மக்களுக்குப் பயன் நல்க வேண்டும் என்ற விழுமிய நோக்கம் உடையவர்களாகத் துலங்குவர். அமெரிக்கர்கள் நிலவுப் பயணத்தை மேற்கொள்வதற்குப் பல்லாண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டுக் கவிஞர் பாரதியார் “சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம்” என்று பாடிவிட்டார். சுதந்திரம் பெறுவதற்கு முன்பே “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று” சுதந்தரப் பள்ளுப் பாடினார். “சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்” என்றும் பாரதியார் பாடியுள்ளமை அவர்தம் எதிர்கால நோக்கினைப் புலப் படுத்தும். “கங்கையில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்” என்று என்றோ பாடிவிட்டுப் போனார். இன்று கங்கையையும் காவிரியையும் இணைக்க முடியுமா? என்று உலக நிபுணர் குழு ஆராய்வதனைக் காண்கின்றோம்.  நாட்டின் விடுதலைக்கு-நாட்டு மக்களின் நல் வாழ்விற்குச் சில பல கருத்துக்களைப் பாரதியார் எண்ணியுரைத்தமை போன்றே. அவர் பால் கொண்ட ஈடுபாட்டால் தம் இயற்பெயரான கனகசுப்புரத்தினத்தைப் பாரதிதாசன் என்று மாற்றியமைத்துக் கொண்ட புதுவைக் கவிஞர்புதுமைக் கவிஞர்தம்-புரட்சிக் கருத்துகளை இனிக் காண்போம்.  காலத்திற்கேற்பக் கவிஞர் தோன்றுவர் என்பது பொது நியதியாகும். பாண்டிச்சேரியில் பாரதியார் வாழ்ந்திருந்த பொழுது அவரோடு தொடர்பு கொண்டார் நம கவிஞர் பாரதிதாசன். ஒரு விருந்தில் சந்தித்தனர் இருவரும். பாரதியார் பாரதிதாசனைப் பாடுமாறு பணிக்க, “எங்கெங்குக் காணினும் சக்தியடா!—தம்பி ஏழு கடல் அவள் வண்ணமடா!” என்ற பாடலைப் பாரதிதாசன் பாடியதாக அறிகிறோம். இந்தப் பாடலை முழுதும் நாம் படித்துப் பார்த்தால் புரட்சிக் கவிஞர் எனக் கொண்டாடப்படுவதற் கேற்பப் புரட்சி வித்துகள் இம்முதற் பாடலிலேயே தென்படக் காணலாம்.  “இயற்கை அனைத்தும் அழகே, அந்த அழகு செந்தாமரை யென்றும், நிலவென்றும், கதிரென்றும் சிரித்தது. காணும் பொருளிலெல்லாம் அழகைக் காணவும், கண்டவாறு தாமேயாகச் செல்லோவியம் செய்யவும் திறம் பெறுதல் வேண்டும் தமிழர்கள் என்று அழகின் சிரிப்பு நூலின் முன்னுரையில் கவிஞர் குறிப்பிடுவர்.  இயற்கை வருணனையிலும் புரட்சி உள்ளம் இயற்கைப் பொருள்களைக் கூர்ந்து நோக்கும் கவிஞர்தம் மதி வியத்தற்குரியது. கடலைகளைப் பார்க்கும் கவிஞர்க்கு இளைஞர் தம் எழுச்சியும் ஒருங்கே நினைவுக்கு வருகின்றன.  “நேரிடும் அலையோ, கல்வி கிலையத்தின் இளைஞர் போலப் பூரிப்பால் ஏறும்; வீழும் புரண்டிடும், பாராய் தம்பி”  —அழகின் சிரிப்பு : கடல் : 1.  அடுத்து, புறாவின் வாழ்வினை வருணிக்க வருகின்ற கவிஞர் புரட்சிக் கருத்துக்களை நம் முன் படைக்கின்றார். ஓர் ஆண் புறாவிற்கு ஒரு பெண் புறா என வாழும் கற்பு நெறியின் திண்மையினை நமக்கு எடுத்துக் காட்டு கின்றார்.  “ஒருபெட்டை தன் ஆண் அன்றி வேறொன்றுக் குடன்ப டாதாம்: ஒரு பெட்டை மத்தாப் பைப்போல ஒளிபுரிங் திடநின் றாலும் திரும்பியும் பார்ப்ப தில்லை வேறொரு சேவல்! தம்மில் ஒருபுறா இறந்திட் டால்தான் ஒன்று மற் றொன்றை நாடும்,”  —அழகின் சிரிப்பு; புறாக்கள் : 5  ஆணோ பெண்ணோ ஒருவர் இறந்தபின் மற்றவர் திருமணம் செய்து கொண்டு வாழ்வதே நேரிய செயல் என்பதனையும் இறுதி அடியிற் புலப்படுத்தி விடுகின்றார்.  கிளியை வருணிக்கப் புகுகின்ற கவிஞர், நெஞ்சத்திலே ஓர் எண்ணமும், நடைமுறை வாழ்வு நலத்திற்காகப் பிறி தொரு செயலுங் கொண்டு இலங்கும் இரட்டை வேடத் தினரைச் சாடக் காணலாம்.  “காட்டினில் திரியும்போது கிரீச்சென்று கழறு கின்றாய் கூட்டினில் நாங்கள் பெற்ற குழந்தை போல் கொஞ்சு கின்றாய் வீட்டிலே துரத்தம் என்பார் வெளியிலே பிழைப்புக் காக ஏட்டிலே தண்ணிர் என்பார் உன்போல்தான் அவரும் கிள்ளாய்!”  —அழகின் சிரிப்பு: கிளி; 7.  நிலவைப் பாடிய கவிஞர் பலர் நிலவினைக் காதல் வாழ்வு ஏற்றம் பெற அமையும் பின்புலமாகக் கண்டுள்ளதனைப் பார்க்கலாம். நற்றிணைத் தலைவன் பொருள்வயிற் பிரிந்து, பொருள் முற்றித் தம் மனை நோக்கி மீளும்போது நிலவைக் காண்கிறான். பின் வருமாறு பாடுகிறான்.  “குன்றூர் மதியம் நோக்கி நின்று நினைந்து உள்ளினேன் அல்லனோ யானே...... ........................................................ எமது முண்டோர் மதிநாள் திங்கள்”  —நற்றிணை : 62.  இதுபோன்றே திருவள்ளுவம் காமத்துப்பாலில், தலை மகன்-ஒருவன் நிலவை நோக்கி, நின் முகமும் என் தலைவி யின் முகமும் அழகு-அமைப்பு-கவர்ச்சி முதலியவற்றில் ஒன்றேயெனலாம், ஆயினும் இருவரிடையிலும் ஒரு வேறு பாடு உளது என் தலைவி நான் காணமட்டுமே தோன்று வாள்; நீயோ பலரும் காண நாணமின்றி வான வீதியில் உலா வருகின்றாய்' என்று கூறுவதாகக் குறிப்பிடுகின்றார்.  “மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி”  —திருக்குறள் : 1119.  நந்திக் கலம்பக ஆசிரியர் காதலனைப் பிரிந்திருக்கும் மகளிர், நிலவைப் பார்த்து,  “பெண்ணிலா ஊரிற் பிறந்தாரைப் போலவரும் வெண்ணிலா வேயிந்த வேகமுன காகாதே!”  —நந்திக் கலம்பகம்; தலைவி நிலவைப் பழித்தல்.  என்று குறிப்பிடுவதாகக் கவிதை படைத்துள்ளார். இவ்வாறு கவிஞர் பலர் கண்ட நிலவினைப் பாரதிதாசனின் கற்பனையுள்ளமும் காணுகின்றது; முகிழ்க்கின்றது. தேனார் செந்தமிழ்க் கவிதை:   “முழுமை நிலா! அழகு நிலா முளைத் ததுவிண் மேலே-அது பழமையிலே புதுநினைவு பாய்ந்தெழுந்தாற் போலே .............................................. குருட்டுவிழியும் திறந்தது போல் இருட்டில் வான விளக்கு”  —இசையமுது ; நிலவு  இம்மட்டோடு நிற்கவில்லை கவிஞர். பிறிதோரிடத்தில் பசித்த மக்கள் பசியாற உண்ண உணவு தேடுங்கால் பானையாரக் கனத்திருந்த வெண் சோற்றினைக் காணும் இன்பமே வெண்ணிலவைக் காணும் இன்பம் என்று வாழ் வோடு ஒப்புமைப்படுத்திக் காண்கின்றார்,  “உனைக்காணும் போதினிலே என் உள்ளத்தில் ஊறிவரும் உணர்ச்சியினை எழுதுதற்கு நினைத்தாலும் வார்த்தை கிடைத் திடுவ தில்லை நித்திய தரித்திரராய் உழைத்து ழைத்துத் தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள் சிறிதுகூழ் தேடுங்கால், பானை ஆரக் கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம் கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!”  —பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி :  புரட்சிக்கவி.  புரட்சிக் கவி பாரதிதாசன் அவர்கள் ‘புரட்சிக் கவி’ என்றே ஒரு நெடுங்கவிதையினைப் படைத்துள்ளார். பெயருக்கேற்பவே . இந்நெடுங்கவிதையில் பல்வேறு புரட்சிக் கருத்துக்கள். நிறைந்திலங்கக் காணலாம்.   “காரிருளால் சூரியன்தான் மறைவ துண்டோ? கறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ? பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மை யாமோ? பிறர் சூழ்ச்சி செக்தமிழை அழிப்ப துண்டோ? நேர் இருத்தித் தீர்ப்புரைத்துச் சிறையிற் போட்டால் நிறைதொழிலா ளர்களுணர்வு மறைந்து போமோ?”  என்று ‘புரட்சிக் கவி’யில் முழங்குகின்றார் கவிஞர்,  முதலாவது நால்வருணம் என்று மக்களைப் பிரித்து வைத்த கயமைப் பண்பினைச் சாடுகின்றார் :  “சித்தம் துடிக்கின்ற சேயின் நிலைமைக்கு ரத்தவெறி கொண்டலையும் நால்வருணம்  ஏனிரங்கும்?”  என்று கேள்விக் குரல் எழுப்புகின்றார்.  ஏற்றக் குறைவற்ற இனியதொரு சமுதாயத்தினைப் படைப்பதே நோக்கமாக இருக்கவேண்டும் எனப் புரட்சிக் கவியிடம் அவன் காதலி அமுதவல்லி கூறக் காண்க :  “சாதி உயர்வென்றும் தனத்தால் உயர்வென்றும் போதாக் குறைக்குப பொதுத்தொழிலாளர் சமூகம்  சா–9  மெத்த இழிவென்றும் மிகுபெரும் பாலாரை யெல்லாம் கத்திமுனை காட்டிக் காலமெல்லாம் ஏய்த்துவரும் பாவிகளைத் திருத்தப் பாவலனே நம்மிருவர் ஆவிகளை யேனும் அர்ப்பணம் செய்வோம்”  “அரசென ஒருசாதி-அதற்கு அயலென வேறொரு சாதியுண்டோ?”  என்றும்,  “--------------------- அநீதிசெய்த நவையுடைய மன்னனுக்கு நாட்டுமக்கள் கற்பாடம் கற்பியா திருப்பதில்லை”  என்றும்,  “............ அவரெல்லாம் இந்தநேரம் எலியாக முயலாக இருக்கின்றார்கள்! ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோன் புலிவேடம் போடுகின்றான்! பொதுமக் கட்குப் புல்லளவு மதிப்பேனும் தருகின் றானா?”  என்றும்,  “ஒருமனிதன் தேவைக்கே இந்தத் தேசம் உண்டென்றால், இத்தேசம் ஒழிதல் நன்றாம்”  என்றும் வரூஉம் புரட்சிக் கருத்துகள் நெஞ்சிலே என்றும் நிலையாகக் கொள்ளத் தக்கவைகளாம்,  சமுதாயப் புரட்சிக் கருத்துகள்  பாரதிதாசன் அவர்களின் நோக்கு. பெரிதும் சமுதாயச் சீர்திருத்தத்தினை நோக்கியே சிந்தித்துச் செயல்பட்டது எனலாம். சமுதாயத்தினைப் புரட்டிக் கீழ் மேலாக்கிப் புதுமையினைப் புகுத்திப் புதியதொரு மறுமலர்ச்சிச் சமுதாயத்தினைக் காணவேண்டுமென்று தம் வாழ்நாள் இறுதிவரையில் அயராது பாடுபட்டவர் அவராவர்.  மகளிர் சமுதாயத்தின் சரிபாதிப் பகுதியாவர்; ஏன் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர் அவரேயாவர். இறைவனையே உமையொருபாகனாகக் கண்ட இத்திரு நாட்டில், ‘இல்லாள்’ என்றும், ‘வாழ்க்கைத்துணை’ என்றும் திருவள்ளுவர் மகளிரைப் போற்றியெழுதிய இத்திருவிடத்தில். மகளிர் நிலை மதிப்பிற்குரியதாக இல்லை என்று பாடுகிறார், பாவேந்தர் அவர்கள்.  “ஆடை அணிகலன், ஆசைக்கு வாசமலர் தேடுவதும் ஆடவர்க்குச் சேவித் திருப்பதும் அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப்போல் வாழுவதும் கெஞ்சுவது மாகக் கிடக்கும் மகளிர்குலம் மானிடர் கூட்டத்தில் வலிவற்ற ஒர்பகுதி”  —பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி :  —வீரத்தாய்  எனவே பெண் கல்வி இன்றியமையாதது என்பதனை,   “கல்வியில் லாதபெண்கள் களர்நிலம் அங்கிலத்தில் புல்விளைந் திடலாம்! நலல புதல்வர்கள் விளைதல் இல்லை கல்வியை யுடைய பெண்கள் திருந்திய கழனி, அங்கே நல்லறி வுடைய மக்கள் விளைவது நவில வோநான்”  —குடும்ப விளக்கு : இரண்டாம் பகுதி.  என்று திறமாகக் குறிப்பிட்டு, தந்தை பெண்ணுக்குக் கூறும் ‘இசையமுது’ பாடலில்,  “தலைவாரிப் பூச்சூடி உன்னைப்-பாட சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை”  என்று பெண் கல்வியின் இன்றியமையாமையினைக் குறிப்பிட்டுள்ளார்.  அடுத்துப் பெண்ணுரிமை வேண்டி முதன் முதலில் கவிதையில் புரட்சி செய்தவர் என்பது கீழ்க்காணும் பாடற் பகுதியால் விளங்கும்.  “பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம் என் கின்றீரோ? - மண்ணுக்குக் கேடாய் மதித்திரோ பெண்ணினத்தை? பெண்ணடிமை தீருமட்டும் பேசுங் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே!”  —சஞ்சீவி பர்வதத்தின் சாரல்.  ‘காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டது இன்பம்’ என்பர் ஆன்றோர். ஒட்டும் இரண்டுள்ளத்தைத் தம்மில் ஓங்கிய காதலினைக் குட்டை மனத்தாலே கோபப் பெருக் காலே வெட்டிப் பிரிக்க வரும் வீணரைச் சாடி,  “காதலிருவர்களும்—தம் கருத்தொருமித்த பின் வாதுகள் வம்புகள் ஏன்? இதில் மற்றவர்க் கென்ன உண்டு”  என்றும்,  “............ புவியே—இரண் டெண்ணம் ஒருமித்தபின் நின்று தடைபுரிந்தால்—நீ நிச்சயம் தோல்வி கொள்வாய்”  என்றும்,  “மண்படைப்பே காதலெனில் காதலுக்கு மறுப்பெதற்குக் கட்டுப்பா டெதற்குக் கண்டார்?”  என்றும் கூறிக் காதல் மணத்தை வாழ்த்தி வரவேற்கின்றார்.  வயது முதிர்ந்த ஆடவனுக்கு இளம் பெண்ணொருத்தியைத் திருமணத்தில் தந்து இளமை வாழ்வினைப் பலியாக்கும் அநீதியினைச் சாடுகிறார்.  ‘கலப்பு மணம் ஒன்றே நல்வழிக்குக் கைகாட்டி’ என்று கலப்பு மணத்தை ஆதரிக்கும் கவிஞர். விதவைத் திருமணத்தையும் முதன் முதலில் பெரிதும் வற்புறுத்திக் கவிதைப் புரட்சி செய்தவர் ஆகிறார்.  “வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள் மணவாளன் இறந்தால்பின் மணத்தல் தீதோ பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல் பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?”  —பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி,  என்ற வினாவினைச் சமுதாயத்தினை நோக்கி எழுப்புகின்றார். ‘ஒரு கட்டழகன் திருத்தோளினைச் சார்ந்திடச் சாத்திரம் பார்க்காதீர்’ என்று கைம்மைப் பழியினைக்களைய முனைகிறார் கவிஞர்.  ‘மனைவியை அவள் முதிய பருவத்திலும் அவள் கணவன் அன்பு செய்து வாழ வேண்டும் எனும் அறிவுரை சங்க இலக்கியங்களிலே காணப் பெற்றாலும் கூடப் பாரதிதாசன் அக்கருத்தைக் கூறும் நயம் போற்றற்குரியது. குடும்ப விளக்கில் முதியோர் காதற் பகுதியில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.  “புதுமலர் அல்ல; காய்ந்த புற்கட்டே அவள் உடம்பு! சதிராடும் நடையாள் அல்லள் தள்ளாடி விழும்மூ தாட்டி மதியல்ல முகம் அ வட்கு வறள்கிலம்! குழிகள் கண்கள் எதுஎனக் கின்பம் நல்கும்? “இருக்கிறாள்” என்ப தொன்றே”  —குடும்பவிளக்கு : முதியோர் காதல்.  இன்று விரிவாக, விளக்கமாக விளம்பரமாகப் பேசப்படும் குடும்பக்கட்டுப்பாட்டினையும் அன்றே கவிஞர் கூறியிருக் கின்றார் என்பதும் அறியத்தக்கது.  பகுத்தறிவுப் புரட்சி  “இருட்டறையில் உள்ளதடா! உலகம்! சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின் றானே! மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின் றாரே! வாயடியும் கையடியும் மறைவ தெந்நாள் சுருட்டுகின்றார் தம்கையில் கிடைத்த வற்றைச் சொத்தெல்லாம் தமக்கென்று சொல்வார் தம்மை வெருட்டுவது பகுத்தறிவே! இல்லை யாயின் விடுதலையும் கெடுதலையும் ஒன்றே யாகும்”  —பாண்டியன் பரிசு; இயல் 36—3  இதனால் பகுத்தறிவின் பான்மையும் சிறப்பும் புலப்படும். பெண் குழந்தைத் தாலாட்டில்,  “மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!”  என்றும், ஆண் குழந்தைத் தாலாட்டில்,  “‘எல்லாம் அவன் செயலே’ என்று பிறர்பொருளை வெல்லம்போல் அள்ளி விழுங்கும் மனிதருக்கும்  காப்பார் கடவுள் உமைக் கட்டையில் நீர் போகுமட்டும் வேர்ப்பீர் உழைப்பீர் என உரைக்கும் வீணருக்கும் மானிடரின் தோளின் மகத்துவத்தைக் காட்டவந்த தேனின் பெருக்கே என்செந்தமிழே கண்ணுறங்கு”  என்றும் மூடத்தனத்திற்குச் சாவுமணி அடிக்கிறார். மேலும் அவர்,  “மதம் எனல் தமிழ் வையத்தின் பகை! ஆள்வோர் என்றும் அடங்குவோர் என்றும் பிறந்தார் என்பது சரடு தனிஒரு மனிதன் தன்விருப்பப்படி இனிநாட்டை ஆள்வ தென்பதில்லை மக்கள் சரிநிகர்...................”  —கடல்மேற் குமிழிகள் 35  என்கிறார்.  “தக்கதோர் ஆட்சி மக்களின் மன்றம் சரிநிகர் எல்லோரும் என்றோம் பொய்க்கதை மறையெனல் புரட்டே புரட்சியில் மலர்க இன்ப வாழ்வே”  —இறுதி அடிகள்  மேலும்,  “உழையானை நோயாளி ஊர்திருடி என்போம்”  என்றும்,   “ஒருகடவுள் உண்டென்போம்! உருவணக்கம் ஒப்போம் உள்ளபல சண்டையெல்லாம் ஒழியும் மதம் ஒழிந்தால் திருக்கோயில் தொழிற்சாலை”  என்றும்,  “நமது கொள்கை மக்களெல்லாம் நிகர் நான்கு சாதிகள் ஆரியர் கொள்கையே”  என்றும்,  “இந்நிலத்துப் பெருமக்கள் ஓர் கடல் இடர்செய் மன்னவர் அக்கடற் குமிழிகள்”  என்றும்,  “நால்வகுப் பென்பது நூல்வகுப்பா தமிழ்நாட்டில்! நற்றமிழ் மக்கள் ஒரே வகுப்பே தமிழ் ஏட்டில்”  என்றும் கூறும் அடிகளில் புரட்சித் தீயின் நாக்குகளை நன்கு காணலாம்.  பொதுவுடைமைப் புரட்சி சாதி சமய பேதங்களைத் தகர்த்தெறிந்து, மூடப் பழக்கங்களை முறியடித்து, கண்மூடி வழக்கங்களை மண் முடிப் போகச் செய்து ஒரு புத்துலகம் காண அவாவுகின்றார் கவிஞர்.  “சாதிமத பேதங்கள் மூடவழக்கங்கள் தாங்கிகடை பெற்றுவரும் சண்டையுல கிதனை ஊதையினில் துரும்புபோல் அலைக்கழிப்போம் பின்னர் ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்.”  ஏழை பணக்காரர் அற்ற சமத்துவ சமுதாயங் காண அவர் அறிவுறுத்தும் வழி வருமாறு :  “ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர் உதையப்ப ராகிவிட்டால் ஓர்நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ!”  பேதம் வளர்க்கப் பெரும்பெரும் புராணங்கள் இருக்கும் தமிழ்நாட்டில், ‘மக்கள் உழைப்பில் மலையாத நம்பிக்கை எக்களிக்க வேண்டும் இதயத்தில்’ என்கிறார்.  “எல்லோர்க்கும் தேசம், எல்லோர்க்கும் உடைமைளலாம்! எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே! எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்ந்திடுக! வல்லார்க்கும் மற்று முள்ள செல்வர்க்கும் நாட்டுடைமை வாய்க்கரிசி என்னும் மனப்பான்மை போயொழிக!”  என்று பாரதிதாசன் அவர்கள் ‘பொதுவுடைமைச் சமுதாயம் ஒன்று பூக்க வேண்டும்’ என்று பூரிப்போடு பாடுகின்றார்.  “தன்பொருட்டு வாழ்வானோர் ஏழை! மக்கள் தம்பொருட்டு வாழ்வானோர் செல்வன்.”  —பாண்டியன் பரிசு : இயல்; 57: 18  என்று ஏழை பணக்காரன் பற்றிப் புதியதொரு புரட்சி விளக்கத்தினைத் தருகின்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.  இதுகாறும் எடுத்துக்காட்டப்பெற்ற செய்திகளால் பாரதிதாசன் ஒரு புரட்சிக் கவிஞர் என்பதும், அவர் பாடல் களாகிய தோட்டத்தில் புரட்சி மலர்கள் பல பூத்துக் குலுங்கு கின்றன என்பதும் பெற்றாம். புரட்சிக் கவிஞர் அவர்கள் மறைந்தபொழுது சான்றாண்மைக்கு ஆழியெனத் திகழும் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள், பாரதி தாசன் பற்றிக் கூறிய சொற்களை ஈண்டு நினைவிற் கொள்ளல் இக்கட்டுரைக்குப் பொருத்தமாகும்.  “புரட்சிக் கவிஞர் என்றாலே இந்த நூற்றாண்டிலும் இதற்கு முந்தைய நூற்றாண்டிலும் வேறு யாரையும் குறிக்காமல் பாரதிதாசன் ஒருவரையே குறிக்குமாறு தமிழிலக்கிய வரலாற்றிலே அவர் சிறப்பிடம் பெற்றுவிட்டார். சிறந்ததை மிகமிக விரும்பிப் போற்றுதலும், தீயதை மிகமிக வெறுத்துத் தூற்றுதலும் அவர் இயல்பு. இந்த நாட்டில் புகுந்து, சமுதாயத்தில் இடம் பெற்றுவிட்ட தீய பழக்க வழக்கங்களையும் முடக்கருத்துகளையும் கடிந்து பாடிப், படிப்பவர் உள்ளத்தில் புத்துணர்ச்சியை எழுப்பிய புரட்சியாளர் அவர். அவருடைய பாட்டுக்களில் விழுமிய கற்பனையும் உண்டு. வேகமான உணர்ச்சியும் உண்டு; பழந்தமிழ் மரபும் உண்டு. புத்துலகச் சிந்தனையும் உண்டு. தமிழர்தம் வாழ்வுக்கு அவர் தம் எழுத்தும் பேச்சும் அரண் செய்து வந்தன.”        9. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை   தோற்றுவாய் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றித் தமிழ் வளர்த்த பெரியார்களுள் ஒருவர்; திரு. வி. க. மறைமலையடிகள் போன்றோரின் சமகாலத்தவர்; ‘செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை’ என்று சுத்தானந்த பாரதியாரால் போற்றப்பட்டவர்; ‘சொல்லின் செல்வர்’ என்று சீராட்டப் பெற்றவர்; தமிழ் இலக்கிய அரங்கில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்; உரைநடை உலகில் எழுச்சியையும் மறுமலர்ச்சியையும் உண்டாக்கியவர்; பழமையான கவிதைக்கும், புதுமையான உரைநடைக்கும் இடையே சேதுவாகத் திகழ்ந்தவர்; தமிழ் ஆர்வத்துடன் தமிழ் ஆராய்ச்சித் திறனையும் பரப்பியவர்; ஆங்கில மோகம் கொண்ட அவர் காலத் தமிழரின் செவிகளில் சிந்தைக்கினிய செந்தமிழ் நடைகளை ஓதி அவர்தம் நெஞ்சக்களனில் தமிழ் உணர்வைப் பாய்ச்சியவர்; இத்தகு பீடுசால் பெருமைகளைத் தனக்கே உரியதாக்கிக் கொண்ட தமிழ்த் திருமகன்-தமிழிலக்கிய வானின் விடுவெள்ளி ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களின் வாழ்க்கை ஏற்றம் உடைத்து. அவர்தம் தமிழ்த்தொண்டு உரையிட்டுச் சொல்லொணா அருமை வாய்ந்தது.  தோற்றம்  திருநெல்வேலியில் நெல்லை மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இராசவல்லிபுரத்தில் தோன்றியவர். 1895ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் இரண்டாம் நாள் துன்முகி ஆண்டு பூச நன்னாளில் பிறந்தவர். இவரை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் கார்காத்த வேளாளர் மரபில் கொழுவடைக் கோத்திரத்தில் வந்த பிறவிப்பெருமாள் பிள்ளையும், அவர்தம் வாழ்க்கைத் துணையான சொர்ணத் தம்மாளும் ஆவர். தம் பெற்றோர்க்குப் பதினோராவது பிள்ளையாகத் தோன்றியவர். இவர்க்கு முன் தோன்றிய பதின்மரும் இவ்வுலகை நீத்து அவ்வுலகடைந்தனராதலின் பதினோராவது பிள்ளையானாலும் தவமிருந்து பெற்ற தவப்புதல்வர் இவர். பெற்றோர்க்கு ஒரு பிள்ளையாய் செல்லப்பிள்ளையாய்-செல்வப் பிள்ளையாய் வளர்ந்தவர்.  கல்வி ரா. பி. சேதுப்பிள்ளையின் ஆரம்பக்கல்வி இராசவல்லி புரத்துத் திண்ணைப் பள்ளிக்கூடத்திலே தொடங்கியது. அந்நாள் நண்பர் அழகிய கூத்தர் என்பவர். தொடக்கப் பள்ளியில் கல்வி பயிற்றுவித்தவர்கள் அருணாசல தேசிகரும் செப்பறை அடிகளாரும் ஆவர். அருணாசல தேசிகரிடம் மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், ஆறுமுக நாவலரின் பாலபாடப் பகுதிகள் போன்றவற்றைப் பயின்றார். செப்பறை அடிகளார் சிவஞான மாபாடியத்தைப் பயிற்றுவித்தார்.  ஐந்தாம் வகுப்புவரை இராசவல்லிபுரத்துத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்ற இவர் தம் உயர்நிலைக் கல்வியைத் திருநெல்வேலியைச் சார்ந்த பாளையங்கோட்டையில் கத்தோலிக்கப் பாதிரிமார்களால் நடத்தப்பெறும் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்தார். அப்பள்ளியில் இவர் தம் செல்லப் பெயர் இரும்பு மனிதர். இவர்தம் திண்மையைக் கண்டே மாணவர்கள் இவ்வாறு அழைத்தனர். உயர்நிலைப் பள்ளியில் தமிழ் பயிற்றுவித்தவர். சுப்பிரமணியப் பிள்ளை என்பவர். உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்புப் பயிலும்போது நல்லொழுக்கப் பரிசாகத் திருக்குறள் நூலினைப் பெற்றார். பெற்றவர் ஊர் வந்தபோது தொடக்கப்பள்ளி ஆசிரியரான செப்பறை அடிகளாரின் அறிவுரையால் நாள்தோறும் திருக்குறளை மனனம் செய்தார். இதுவே பின்னாளில் திருக்குறள் வல்லுநராக இவர் திகழ்தற்குக் காரணமாகியது. பள்ளி மாணவராக இருந்த காலத்தில் பாளையங்கோட்டைக்குச் சைவ சபைத் தொண்டர்படைத் தலைவராக இருந்தார். அக்காலத்தில் சோழவந்தான் அரசஞ்சண்முகனாரால் சிறுத்தொண்டன்’ என்று பாராட்டப் பெற்றார். பதினைந்தாம் ஆண்டில் தம் பள்ளி வாழ்க்கையை முற்றுவித்த இவர், அதே ஆண்டில் தம் அருமைத் தாயையும் இழந்தார்.  பள்ளிப் படிப்பை முடித்த இவர் திருநெல்லிவேலி இந்துக் கல்லூரியில் தம் இடைக்கலை (Indermediate) வகுப்பினைத் தொடர்ந்தார். இடைக்கலையில் இவருக்குத் தமிழ் பயிற்று வித்தவர் தொல்காப்பிய வல்லுநர் சிவராமபிள்ளை என்பவர். இந்துக் கல்லூரி தமிழ்ப் பேரவைத் தலைவராகத் திகழ்ந்த இவர், முதலாண்டில் ஆங்கிலக் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு முதன்மையாக வெற்றி பெற்றார். இதனால் அரசினரால் வழங்கப்பட்ட உதவிப்பணத்தையும், நூல்களுக்கெனத் தனியாக ஐம்பது வெண்பொற்காசுகளையும் பெற்றார். இடைக்கலையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இடைக்கலை வகுப்பில் தேர்ச்சி பெற்ற இவர் 1915 ஆம் ஆண்டில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தம் கல்லூரி வாழ்க்கையைத் தொடங்கினார். பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை வகுப்பில் வரலாறும் பொருளாதாரமுமே இவர் தம் விருப்பப் பாடங்களாக அமைந்தன. காரணம் அந்நாளில் தமிழுக்குத் தனியிடம் இல்லை. பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த அடுத்த ஆண்டில் 1916இல் கல்லூரி மன்றத்தில் நடை பெற்ற தமிழ்ப் பேச்சுப் போட்டியில் முதன்மையாக நின்றார். அப்பேச்சுப் போட்டியில் இவர்தம் உரையினைச் செவிமடுத்த கல்லூரி முதல்வர், ஆங்கிலப் பேராசிரியர். தமிழ்த்துறைத்தலைவர் திருமணம் செல்வக் கேசவராய முதலியார். நடுவர் சதாசிவ ஐயர் ஆகியோர் அனைவரும் போற்றினர். இதன் விளைவாக இளங்கலை முடித்த உடனேயே பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த் துறையில் சிற்றா சிரியராகப் பணிபுரியும் வாய்ப்புக் கிட்டியது. பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த்துறைச் சிற்றாசிரியர் (Tutor)சேதுப்பிள்ளை சட்டக் கல்லூரி மாணவராகச் சேர்ந்து சட்டக் கலையினையும் பயின்றார், இரண்டாண்டுகளில் சட்டக் கல்வியையும் வெற்றியுடன் முடித்துக் கொண்டு நெல்லை சென்றார்.  மகட் கொடை மன்றம் நெல்லை சென்ற இவர் நெல்லையில் பிள்ளையன் மரபில் தோன்றிய நெல்லையப்பபிள்ளை என்பவருக்கும் அவர்தம் இரண்டாவது மனைவி பருவதத்தம்மாள் என்பவருக்கும் மகளாகத் தோன்றிய ‘ஆழ்வார் சானகி’ என்பவரைத் தம் இருபத்து மூன்றாவது வயதில் வதுவை நன்மணம் புரிந்து கொண்டார்.  வழக்கறிஞர் பணி  திருமணம் முடிந்தபின் வழக்கறிஞர் தொழிற் பயிற்சிக் காகச் சென்னை சென்றார். அங்கு முன்னாள் மாநில அமைச்சரும், புகழ்பெற்ற வழக்கறிஞருமான எஸ். முத்தையா பிள்ளை அவர்களிடம் இரண்டாண்டுகன் வழக்கறிஞர் தொழிற்பயிற்சி பெற்றார். 1923ல் நெல்லை மீண்டு தனியாகவே வழக்கறிஞர் தொழிலை நடத்தினார். இத் தொழிலை நடத்தியபோது இவர்தம் தமிழார்வம் தணிய வில்லை. நெல்லை மாணவர் சங்கத்தில் குறள் பற்றி உரை நிகழ்த்தியவர். வள்ளுவரை மேலைநாட்டு அறிஞர்களுடன் ஒப்பிட்டு அவரின் தனித்தன்மையை வெளிப்படுத்தினார். குறள் பற்றிய விளக்கத்துடன் அமையாமல் சைவ சமய இலக்கியங்கள் குறித்தும் சொற்பொழிவாற்றினார். வள்ளுவ ரிடம் ஈடுபட்ட இவர்தம் உள்ளம் கம்பனிடம் செல்லுமாறு திசைமாற்றியவர் சுப்பையா முதலியார் அவர்கள் ஆவர். கம்பனில் திளைத்தபின் இவருடைய ஆர்வம் கம்பன் கவி நலத்தை வெளிப்படுத்துவதில் முனைந்தது. தமிழுக்குக், கதியான கம்பரையும், வள்ளுவரையும் தெளிந்தவரின் உள்ளம் பாரதியாரின் பாநலத்திலும் ஈடுபட்டது. பாரதியின் கவிதை யில் திளைத்ததன் பயனாகச் செந்தமிழ்நாடு, முப்பெருங்கவிஞர், கலையின் விளக்கம், பண்டாரப் பாட்டு, தமிழ்த் தாய் வாழ்த்து முதலிய கட்டுரைகள் முகிழ்த்தன. பாரதியார் கண்ட புலவர்களில் இளங்கோவடிகளும் ஒரு சிறந்த புலவர் ஆதலின், இளங்கோவடிகளும் இவரைக் கவர்ந்தார். இவ்வாறு நெவ்லையில் இவர் ஆற்றிய அரிய கலைப் பணியைக் கண்ட நெல்லை மாவட்ட ஆட்சியாளர், மாவட்டக் கல்விக்குழு உறுப்பினர்களுள் ஒருவராகத் தெரிந்தெடுத்தார். அக்குழு நடத்தும் கூட்டங்களில் கலந்துகொண்டு இளைஞர்கள் நன்மைக்கான நோக்கங்களை இவர் எடுத்துரைத்தார்.  நகர் மன்றத் தொடர்  1924ஆம் ஆண்டில் நெல்லையில் நடைபெற்ற நகர்மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தலின் பின் நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலும் (1926,28) வாகை சூடியவர் இவரே. மூன்றாவது முறை இவர் தேர்ந்தெடுக்கப் பட்டவுடன். இவர் திறமையைக் கண்டு நகரமன்றத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். துணைத்தலைவராக இருந்தபோது. நெல்லை நகரத் தெருப் பெயர்களின் வரலாற்றை அறிந்து, அவற்றின் உண்மைப் பெயரை நிலை நாட்டிய பெருமை சேதுவுக்கே உரியதாகும்!  பல்கலைக் கழகங்களில் தமிழ்ப்பணி நெல்லை நகர்மன்றப் பணிபுரிந்த ரா. பி. சே. அவர்கள் 1930ஆம் ஆண்டு கா.சு. பிள்ளை அவர்களின் உதவியால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் பொறுப்பை ஏற்றார். 1931 ஆம் ஆண்டில் தமிழ் ஆனர்ஸ் வகுப்பு மாணவர்களுக்குக் கம்பராமாயணம்; மொழிநூல் ஆகிய பாடங்களை எடுத்தார். அந்நாளில் மொழி நூல் ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கப்பட்டது. இவர்தம் மொழி நூல் புலமைக்கும் ஆங்கில அறிவிற்கும் உரை கல்லாகத் துலங்குவது 'Words and their significance’ என்ற ஆங்கில நூல். அதே ஆண்டில் தமிழ் வித்துவான் பயிலும் மாணாக்கர்க்குத் திருக்குறள், சிலம்பு முதலிய பகுதிகளைக் கற்பித்தார். பல்கலைக் கழகத்தாரால் ஏற்படுத்தப்பட்ட சொற்பொழிவு நிகழ்ச்சியில் சிலப்பதிகாரம் பற்றிச் சொற் பொழிவாற்றினார். சொற்பொழிவினைச் செவிமடுத்த ஆங்கிலப் பேராசிரியர் சுந்தரம் அவர்கள்,  சா—10  “அன்பர்.சேதுவே! தமிழ் என்றால் இனிமை இனிமை என்று இயம்புகின்றார்கள்; அது பற்றுக் காரணமாகக் கூறும் வெற்றுரை என்றே நான் இதுகாறும் எண்ணியிருந்தேன். இன்று தங்கள் தமிழ்ப் பேச்சைக் கேட்ட பிறகுதான் தமிழ் இனிமை என்பது முற்றிலும் உண்மையெனக் கண்டேன். இன்று முதல் நானும் நற்றமிழ் நூல்களைக் கற்று இன்புறுவேன்”  என்று பாராட்டினர். சொற்பொழிவின் தலைமை இடத்தை அணிசெய்த விபுலானந்த அடிகளார் :  “முன்பு சேரன் தம்பியாகிய இளங்கோ சிலப்பதிகார நூலைப் பாடினார். இன்று என் அருமைத் தம்பி யாகிய சேதுப்பிள்ளை சிலம்பின் ஒலி எல்லோருடைய சிந்தையிலும் செவியிலும் ஒலிக்குமாறு செய்தார்.”  என்று பாராட்டினர். ஆறாண்டுகள் அண்ணாமலையில் அரும்பணி ஆற்றிய சேதுப்பிள்ளை அவர்களுக்கு இறுதியாக அளிக்கப்பட்ட அண்ணாமலை நகர்த் தேநீர் விருந்தில் கலந்து கொண்ட சுநீதி குமார் சட்டர்ஜி அவர்கள், அவர் உரையைக் கேட்டு,  “தமிழின் இனிமையே உருவெடுத்து வந்தது போல் இருக்கிறது தங்கள். பேச்சு”  என்று பாராட்டினார்.  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறியவுடன், அந்நாளில் இராமகிருட்டிண மடத்தில் சமயப் பணிபுரிந்த விபுலானந்த அடிகளாரின் முயற்சியால் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் பணியினை ஏற்றார். அடுத்த ஆண்டில் தமிழ் ஆய்வுத்துறைத் தலைவர் எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்களின்கீழ் அத்துறைத் துணைத்தலைவர் ஆனார். அப்போது வையாபுரிப் பிள்ளை அவர்கள் ஈடுபட்டிருந்த தமிழ்ப் பேரகராதிப் பணியினை முடித்தலில் உற்ற துணையாயிருந்தார். வையாபுரிப்பிள்ளை அவர்களுக்குப்பின், அந்த இடத்தை சேதுப்பிள்ளை அணி செய்தார். இதன் பயனாகப் பல நூல்களை ஆழ்ந்து கானும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது,  நாளடைவில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘லாசரஸ்’என்பவரின் பெண் மக்கள் இருவர்.திம் கொடையால் உருவாக்கப்பட்ட ‘பேராசிரியர்’ இடத்தை முதன் முதலில் அணி செய்தார். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையின் முதல் பேராசிரியர் என்ற பெருமையைத் தேடிக் கொண்டவர் இவர். அப்போது பச்சையப்பன் கல்லூரி. மாநிலக் கல்லூரித் தமிழ் ஆனர்ஸ் பயிலும் மாணவர்களுக்கும். முதுகலை மாணவர்களுக்கும் வகுப்பு எடுத்தார். எம்.லிட்,. பிஎச்.டி. பட்டங்கள் பெறுவவற்காக ஆய்வு செய்த மாணவர் கள் பலருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.  மேலும் இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்த போது மொழி, இலக்கிய நலம் கருதி நிபுணர் குழுக்கள் ஏழில் உறுப்பினராக இருந்தார். அவையாவன :  1. சென்னை அரசினர் நியமித்த கவி பாரதியார் நூல்கள் வெளியீட்டுக் குழு.  2. இந்திய அரசினர் அரசியலமைப்பை முக்கிய இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கும் பொருட்டு அமைத்த அரசியலமைப்புச் சொற்கள் மொழியாக்க நிபுணர் குழு.  3. சாகித்திய அகாதெமியின் ஆலோசனைக் குழு, நிர்வாகக் குழு. 4. தென்னிந்திய மொழிகள் புத்தக டிரஸ்டின் ஆலோசனைக் குழு.  5. சென்னை அரசினர் சென்னை மாநிலத் தமிழ்ச்சங்கம் தயாரித்த நிருவாகச் சொற்களை முடிவு செய்ய அமைத்த நிபுணர் குழு.  6. அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கம்பராமாயண ஆராய்ச்சிப் பதிப்புக் குழு.  7. சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் தமிழ் அகராதியின் ஆலோசனைக் குழு.  இத்துடன் நில்லாமல், இந்திய மொழித்துறைகள் பலவற்றிற்கும் துணைவராகவும் வழிகாட்டியாகவும் விளங்கினார். 1937 முதல் 1955 வரை ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பெற்ற அனைத்திந்தியக் கீழைக்கலை மாநாடுகளில் கலந்துகொண்டு அரிய பொழிவுகள் பல ஆற்றிச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் பெருமையை உலகறியச் செய்தார். இவர் காலத்தில் வெளிவந்த சென்னைப் பல்கலைக்கழக வெளியீடுகள் 1. திராவிடப் பொதுச் சொற்கள் (Dravidian common Vocabulary) 2. திராவிடப் பொதுப் பழமொழிகள் (Common Dravidian Proverbs).  மேடைத் தமிழ் வளர்த்த மேன்மையாளர் தம் ஆராய்ச்சித் திறத்தாலும், எழுத்தாற்றலாலும் தமிழ் ஆற்றலை வளர்த்ததைப் போன்றே மேடைப் பேச்சால் தமிழ் உணர்ச்சியையும் தமிழ் அறிவையும் பெருக்கிய பெருமை உடையவர் ரா.பி.சே. இவர் ஆற்றிய பொழிவுகள் இவரைத் தலைசிறந்த மேடைப் பேச்சாளராகக் காட்டுகின்றன. டாக்டர் மு.வ. அவர்கள் ‘தமிழ் இலக்கிய அரங்கில் மாறுதல் செய்தவர் ரா.பி.சே.’ என்று போற்றுகின்றார்.  “தமிழ் இலக்கிய அரங்கிலே மாறுதல் செய்தார் சேதுப்பிள்ளை. சென்னையிலே இலக்கியக் கூட்டங்களானால் 50 பேர் வந்து கொண்டிருந்தனர். தம் முடைய சொற்பொழிவுகளின் மூலம் 50ஐ 50,000 ஆக்கித் தந்தவர் ஆவர்.”  —பி.எஸ்.ஜி. கலைக்கல்லூரி மலர் 1958, பக். 58  இப்போற்றியுரை ரா. பி. சே. அவர்களின் பொழிவாற்றும் திறனை-உரனை விளக்கி நிற்கின்றது. நெல்லையில் வழக் கறிஞர் சேதுப்பிள்ளையாக இருந்தபோதும், அண்ணாமலையில் தமிழ்ப் பணியாற்றியபோதும் இவர் ஆற்றிய பொழிவுகள் பல. என்றாலும் சென்னையில் இவர் ஆற்றிய பொழிவுகளே மிகுதி. ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் வாரத்திற்கு ஒரு முறை எனத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கம்பராமாயணச் சொற் பொழிவாற்றினார். இதன் விளைவாகச் சென்னையில் ‘கம்பன் கழகம்’ ஒன்று தோற்றம் பெற்றது, அதன் தலைவராகச் சேதுப்பிள்ளையே விளங்கினார், கோகலே மன்றத்தில் ஞாயிறுதோறும் என மூன்று ஆண்டுகள் சிலப்பதிகாரப் பிழிவினைப் பொழிவாக்கினார். தங்கசாலைத் தமிழ்மன்றத்தில் வாரத்திற்கு ஒருநாள் என ஐந்து ஆண்டுகள் திருக்குறள் விளக்கம் செய்தார். கந்தகோட்டத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கந்தபுராணச் சொற்பொழிவு நிகழ்த்தி னார், கம்பரையும் கச்சியப்பரையும் இணைத்துப் பொழி வாக்கிய இவர் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் இப்பொழி வினை நிகழ்த்தினார். இதன் பயனாகக் ‘கந்தபுராணத் திரட்டு’ என்னும் நூல் பதிப்பிக்கப்பெற்றது, வேலின் வெற்றி ‘வேலும் வில்லும்’ போன்ற நூல்கள் உருவாக்கப் பெற்றன. மேலும் புறநானூற்று மாநாடு, திருக்குறள் மாநாடு தமிழாசிரியர் மாநாடு போன்ற இலக்கிய மாநாடுகளில் தலைமை உரையும் ஆற்றியுள்ளார். தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் மதுரையில் நடைபெற்ற தமிழ்த் திருநாள் விழாவில் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் தலைமை யில் ‘குறளும் குறளாசிரியர்களும்’ என்ற தலைமையில் அரியதொரு சொற்பொழிவாற்றினார்.  நூலாசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் இயற்றிய நூல்கள் பல. இவை பதிப்பு நூல்கள், வரலாற்று நூல்கள். ஆராய்ச்சி நூல்கள் என்னும் முப்பெரும் பிரிவுக்குள் அடங்குகின்றன. ஆராய்ச்சி நூல்களுள் ஆய்வாக மலர்ந்தவை சில; கட்டுரை களின் தொகுப்புகளாக அமைந்தவை சில: பொழிவுகளின் தொகுப்புகளாக அமைந்தவை சில. இவையே அன்றி இதழ்களில் எழுதிய கட்டுரைகள் இன்னும் பல நூல்வடிவம் பெறாமலேயே இருக்கின்றன.  பதிப்பு நூல்கள் இவர் பதிப்பித்த முதல் நூல் ‘கந்தபுராணத் திரட்டு’ என்பது 1944ல் பதிப்பிக்கப்பெற்ற இந்நூல் சென்னையில் கந்தகோட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவின் விளைவால் உருப்பெற்றது. கந்தபுராணத்தினின்றும் ஆயிரத்தைந்நூறு பாடல்கள் திரட்டிப் பொழிப்புரையுடன் எழுதப்பட்ட இந் நூல் மூன்று பகுதிகளாக வெளிவந்தது.  1957ஆம் ஆண்டில் பாரதியார் பாடல்களில் சிறந்தன என்று இவரால் கருதப்பட்ட பாடல்கள் சிலவற்றின் தொகுப்பே ‘பாரதியார் இன் கவித்திரட்டு’ என்பது. இது சாகிததிய அகாதெமியின் வெளியீடு ஆகும்.  இதே ஆண்டில் வெளிவந்த ‘செஞ்சொற் கவிக்கோவை’ சங்ககாலம் முதல் பாரதியார் காலம் ஈறாக உள்ள இலக்கியங்களின் சுவைமிக்க பாக்களின் தொகுப்பு நூல். 1960இல் பதிப்பிக்கப் பெற்ற ‘தமிழ்க் கவிதைக் களஞ்சியம்’ என்ற நூலும், ‘செஞ்சொற் கவிக்கோவை’யைப் போன்றே சுவைமிகக தமிழ்ப் பாடல்களின் தொகுப்பு நூல் ஆகும். இவையே அன்றி, எல்லீசர் திருக்குறளுக்கு வரைந்த உரையையும் பதிப்பித்துள்ளார்.  வரலாற்று நூல்கள் வாழ்க்கை வரலாற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படா நிலையில், அத்துறையிலும் நூல்கள் பல உருவாவதற்கு வழிகோலியவர் ரா.பி. சே. ஆவர். ‘தமிழ்நாட்டு நவமணிகள்,’ ‘கால்டுவெல் ஐயர் சரிதம்,’ ‘கிறித்துவத் தமிழ்த் தொண்டர்’ என்ற மூன்றும் இவர் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் ஆகும். இவற்றுள் முதன் முதலில் வெளிவந்த நூல் ‘தமிழ்நாட்டு நவமணிகள்’ என்பது 1926ஆம் ஆண்டில் வெளியிடப் பெற்ற இந்நூல் லோகோபகாரி என்ற இதழில் வெளிவந்த ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பாகும் ஆதிரையார், விசாகையார், மருதியார், கோப்பெருந் தேவியார், மணிமேகலையார், கண்ணகியார், புனிதவதியார், மங்கையர்கரசியார், திலகவதியார் என்னும் தமிழ் நாட்டுப் பெண்மணிகள் ஒன்பதின்மரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் நூல். கதைப்போக்கில் அமைந்தது இந்நூல். இந்நூலின் சிறப்பினை,  “பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கைச் சிறப்பை இக்காலத்துத் தமிழ்ச் சிறார்க்கு எடுத்தோதும் புத்தகங்களும், பண்டுதொட்டுச் சரித்திரவாயிலாகவும், பனுவல்கள் வாயிலாகவும் அறியக் கிடக்கும் நம் நாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகளும் தற்காலம் வெளிப்போந்துள்ள நூல்களும் காண அரியவாயினவே என்று நெடுநாளாகக் கருதியிருந்த  ஒரு பெருங் குறையை இந்நூலாசிரியர் நிறைவு செய்துள்ளார்” என்று இந்நூலுக்கு முன்னுரை வழங்கிய முன்னாள் அமைச்சர் தி. நெ. சிவஞானம் பிள்ளை பாராட்டியுரைக்கின்றார்.  1936இல் வெளிவந்த ‘கால்டுவெல் ஐயர் சரிதம்’ கால்டுவெல் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்தியம்புவது.  1946இல் வெளியிடப்பெற்ற ‘கிறித்துவத் தமிழ்த் தொண்டர்’ என்னும் நூல் வீரமாமுனிவர், போப்பையர். கால்டுவெல், எல்லீசர். இக்னேசியஸ் ஐயர், வேதநாயகம் பிள்ளை, கிருஷ்ணபிள்ளை போன்ற கிறித்துவர்கள் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டுகளின் விளக்கமாக அமைந்துள்ளது.  ஆய்வு நூல்கள் நெல்லையில் வழக்கறிஞராக இருந்தபோதே இவரது ஆய்வுப்பணி முகிழ்ந்துவிட்டது. முதன்முதலில் 1926ஆம் ஆண்டில் திருக்குறளை ஆராய்ந்து ‘திருவள்ளுவர் நூல் நயம்’ என்ற நூலை வெளியிட்டார். இந்நூலின் மேன்மையினையும், ஆசிரியரின் ஆய்வுத் திறனின் மாண்பினையும் திரு. கா. சு. பிள்ளை அவர்கள்,  “உலகமெலாம் உய்வான் பொதுமறை வகுத்த ஆசிரியர் திருவள்ளுவனாரது அளப்பரிய மாண் பினைப் பாவலரும் நாவலரும் கற்றோரும் மற்றோரும் இந்நாள்வரை பொதுவகையாற் பலபடப் பாராட்டிச் சீராட்டிப் போந்தனர். ஆசிரியரது நூலின் பிண்டப் பொருளை நுணுகி ஆய்ந்து, அதன் சொற்பொருள் நயங்களை யாவருக்கும்  எளிதில் விளங்கும் வண்ணம் தெள்ளென வகுத்தோதி ஊக்கமூட்டும் செவ்விய உரைநடை நூல் ஒன்று இல்லாத குறையை நிறைவுசெய்த பெரும் புலவர் இத் ‘திருவள்ளுவர் நூல் நயம்’ எழுதிய திருவாளர் சேதுப்பிள்ளையேயாவர்.  திருக்குறட் பெருநூலை நன்கு கற்றாராய்ந்து உணர விரும்பும் மாணவர் யாவருக்கும் அந்நூற் சொற்பொருள் வளப் பண்டகசாலைக்கு நயமிக்க தோர் திறவுகோலாக இவ்வுரைநடைச் செந்தமிழ்ச் சீரிய நூலை இயற்றிய தமிழ்வாணர்க்குத் தமிழுலகு என்றும் கடப்பாடுடையது” என்று அந்நூலுக்குத் தாம் வழங்கிய முன்னுரையில் போற்றியுரைக்கின்றார்.  இதே ஆண்டில் வெளிவந்தது ‘சிலப்பதிகார நூல் நயம்’ என்ற மற்றொரு நூல். ஆசிரியர் பெருமை, அரச நீதியும் அரசியலும், ஆரிய அரசரும் தமிழரும், கண்ணகியின் கற்பின் திறம். வினைப்பயன், பண்டைத் தமிழ் மக்கள் நாகரிகம், சிலப்பதிகார நூல்நயம் என்னும் ஏழு தலைப்புகளில் இந்நூல் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.  இதனை அடுத்து 1932ஆம் ஆண்டில் வெளிவந்த ‘வீரமாநகர்’ என்னும் நூல் கம்பராமாயணம் பற்றிச் செய்த அரியதோர் அருமையான ஆய்வு நூல், இந்நூலின் இனிமையை நூலுக்கு முன்னுரை வரைந்த வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் அவர்கள்,  “பலர்க்கும் தெரிந்த பழங்கதைகளை, ஆசிரியர் தம் புலமைத் திறமையால் புதுமையானவையாக்கிப் படிப்பவர் மனத்தை மகிழ்விக்கிறார். கதைப் போக்கில் வரும் தக்க இடங்களில் தக்க அறிவுரைகள்  இலக்கியச் சுவையோடு இனிது கலந்தூட்டி இன்பமும் பயனும் எய்தச் செய்தல் இந்நூலிற் பல இடங்களில் காணலாம். இதில் ஒவ்வொரு பக்கமும் இனிமையா யிருப்பதை வாசிப்போர் சில பக்கங்கள் வாசித்த அளவில் தெரிந்துகொள்வர் என்பது திண்ணம். இந்நூலின் இனிமை நுனியிலிருந்து நுகரப்படும் கரும்பின் இனிமை போன்றிருக்கின்றது.”  என்று எடுத்துரைக்கின்றார்.  அடுத்து 1945இல் வெளிவந்த ‘தமிழ் விருந்து’ தமிழர்தம் கலைத்திறன், தமிழரின் வாழ்க்கை மேன்மை, தமிழ் மொழி யின் செம்மை, தமிழ் இலக்கியத்தின் சீர்மை ஆகியவற்றை எடுத்தியம்புகிறது.  அடுத்த ஆண்டில் 1946இல் வெளிவந்த ‘தமிழகம்ஊரும் பேரும்’ என்ற நூல், இவர்தம் ஆய்வின் மணி முடியாகத் திகழ்வது. ஆயிரத்து முந்நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்கள் இந்நூலில் ஆய்விற்குட்பட்டுள்ளன. தமிழ்ப் பண்பாட்டு நூலாகவும் வரலாற்று நூலாகவும் இந்நூல் துலங்குகின்றது. இந்நூல் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின பரிசு பெற்ற பெருமை உடையது. திரு. வி. க. அவர்களின் மதிப்புரை இந்நூலின் தரத்திற்கும் ஆசிரியர்தம் ஆய்வுத் திறனுக்கும் உரை கல்லாக ஒளிாகின்றது.  “ஆசிரியர், நிலம்- மலை-காடு-வயல்-ஆறு-கடல்-நாடு-நகரம்-குடி-படை-குலம்-கோ-தேவு-தலம் முதலியவற்றை அடியாகக் கொண்டு இந்நூற்கண் நிகழ்த்தியுள்ள ஊர்பேர் ஆராய்ச்சியும், ஆங்காங்கே பொறித்துள்ள குறிப்புகளும் பிறவும் தமிழ்ச் சரித்திர உலகுக்குப் பெருவிருந்தாகும் என்பதில் ஐயமில்லை. தமிழ்நாட்டில் சில ஊர்ப்  பேர்கள் சிதைந்தும், திரிந்தும், மருவியும், மாறியும் தத்தம் முதல் நிலையை இழந்துள்ளன. அவை மீண்டும் பழைய நிலை எய்திப் பண்புறுதற்கு இந்நூல் பெருந்துணை செய்தல் ஒருதலை. இந்நூலுள் பொலிதரும் சில ஊர்ப் பேர்களின் வரவாறு, சாம்பியும் சோம்பியும், நலிந்தும் மெலிந்தும் கிடக்கும் நம் மக்கட்கு அமிழ்தாகிப் புத்துயிர் வழங்கல் உறுதி. நூலின் நடைக்கண் நடம் புரியும் பீடும் மிடுக்கும் வீறும் நாட்டின் சவலையை நீக்கி, அதன் மாட்டு வேட்கையை எழுப்பி, அதை ஊக்குவனவாகும்.”  1947இல் வெளிவந்த ‘தமிழர் வீரம்’ என்னும் பெயரிய நூல் தமிழர்தம் போர்த் திறத்தையும், படைத் திறத்தையும் விளக்குகிறது.  அடுத்த 1948இல் வெளியிடப் பெற்ற ‘தமிழின்பம்’ பாரதப் பேரரசின் சார்பில் இயங்கும் சாகித்திய அகாதெமி பரிசினைப் பெற்றது. இந்நூலுக்கென வழங்கப்பட்ட ஐயாயிரம் வெண்பொற் காசுகளுடன் பத்தாயிரம் வெண்பொற் காசுகளைச் சேர்த்துப் பல்கலைக்கழக நிதி வளர்ச்சிக்காக இவர் கொடுத்தார். இதனால் பலரும் இவரைப் பாராட்டினர்.  ஐந்தாண்டுகள் இடைவெளிக்குப்பின் வந்த ‘வழி வழி வள்ளுவர்’ வள்ளுவரைப் பிற புலவர்கள் எடுத்தாளும் திறனை விளக்கி நிற்கிறது.  இறுதியாக 1958இல் வெளிவந்த ‘தமிழகம் அலையும் கலையும்’ தமிழ்நாட்டின் கலைச்சிறப்பையும். கலை வளர்த்த நகரங்களின் நல்லியல்புகளையும் ஆய்கின்றது.  ஆய்வு நூல்களாக அன்றிக் கட்டுரைத் தொகுப்புக்களாக வந்தவை ‘கடற்கரையிலே’, ‘ஆற்றங்கரையினிலே,’ வேலும் வில்லும்’ என்பன. ‘வேலும் வில்லும்’ என்ற நூல் கம்பரும் கச்சியப்பரும், மூவர் தமிழும் முருகனும், திருச்செந்துார் முருகன் என்ற மூன்று கட்டுரைகளின் தொகுப்பாகும். கவிஞரும் கலைஞரும் உரையாடுவது போன்று அமைந்தது ‘கடற்கரையிலே’ என்ற நூல். விருதைத் தமிழ்க் கழகத்தின் சார்பில் வெளிவந்த தமிழ்த் தென்றல் என்ற இதழில் வெளி வந்த தொடர்கட்டுரைகள் இருபதின் தொகுப்பு நூல் இது. தமிழக ஆறுகளின் சிறப்பு, அவற்றின் கரைகளில் அமைந்த நகரங்களின் வரலாற்றுச் சிறப்பு, இலக்கியச் சிறப்பு இவற்றை எடுத்துக் கூறும் ‘ஆற்றங்கரையினிலே’ கல்கியில் வெளிவந்த தொடர் கட்டுரைகள் நாற்பத்தெட்டின் தொகுப்பு நூல் ஆகும். இது 1961 இல் வெளிவந்தது.  ‘வேலின் வெற்றி’, ‘திருக்காவலூர்க் கலம்பகம்’ என்ற இரு நூல்களும் முறையே கந்த புராணத் திரட்டையும் திருக்காவலூர்க் கலம்பகத்தையும் தழுவி எழுதப்பட்ட உரை நூல்கள் ஆகும்.  Words and their Significance. Dravidian Comparative Vocabulary, Common Dravidian Proverbs என்பன இவர் ஆங்கிலததில் எழுதி வெளியிட்ட நூல்கள் ஆகும்,  நடை நலம் 1. சேதுப்பிள்ளை அவர்களின் நடை கலைபயில் தெளிவும். கட்டுரை வன்மையும் கொண்டது.  2. செய்யுளின் இனிமை கொண்ட செந்தமிழ் நடை. இதனை நாவலர் சோமசுந்தர பாரதியார் ‘செய்யுளோசை ஒழுகுகின்ற அவரது தெள்ளிய தமிழ் நடை’ என்று போற்றுகின்றார்.  3. இவர்தம் உரைநடையில் மேடைப் பேச்சின் எதிரொலியை ஆங்காங்கே காணலாம். 4. ரா. பி. சேதுப்பிள்ளையின் பேச்சு நடையும்.கட்டுரை நடையும் ஏறக்குறைய திரு. வி. க. அவர்களின் பேச்சு நடையையும் எழுத்து நடையையும் ஒத்ததாகவே இருக்கும்,  ‘உரைநடையில் தமிழைப்போல் நுகரவேண்டுமானால் திரு. வி. க., சேதுப்பிள்ளை ஆகிய இருபுலவர்களின் செந்தமிழைச் செவியில் மடுக்க வேண்டும்.’  என்ற யோகி சுத்தானந்த பாரதியின் கூற்றும் இதனை உண்மைப்படுத்துகிறது.  5. இவர்தம் நடை தனித்தமிழ் நடையாகும். எதுகை மோனை இன்பத்திற்காகக்கூட இவர் வடமொழிச் சொற் களைக் கையாள்வதில்லை. இவர்தம் தனித் தமிழ் ஆரவாரமற்றது. திட்ப நுட்பம் சான்றது.  அருமையான தமிழ்ச்சொல் ஒன்றிருக்க ஆங்கிலத்தை எடுத்தாளுதல் அறிவீனம் அல்லவா? கரும்பிருக்க இரும்பைக் கடிப்பாருண்டோ?  —அலையும் கலையும், ப. 32.  என்ற வினா, இவர்தம் தமிழ் ஆர்வத்தை அன்றோ புலப்படுத்துகின்றது.  6. இவர்தம் நடையில் எதுகையும் மோனையும் மிகுதியாக இடம் பெறும். சான்றாகப் பின்வரும் பகுதியைப் காட்டலாம்.  “காஞ்சி மாநகரம் தெய்வம் மணக்கும் திருநகரம். எம்மருங்கும் கோயில்களும், கோட்டங்களும் நிறைந்து, இறையொளி வீசும் இந்நகரில் “கச்சி ஏகம்பா!” என்று கைகூப்பித் தொழுவோரும், “கஞ்சி வரதப்பா!” என்று கசிந்துருகி நிற்பாரும்  எண்ணிறந்தவர். கண்ணுக்கினிய பூஞ்சோலையின் இடையே, ஒரு மாவின் கீழ்க் கோயில் கொண்ட மங்கை பங்கனை “ஏகம்பத்துறை எந்தாய் போற்றி” என்று அருந்தமிழ் மலரால் அருச்சனை செய்தார் மாணிக்கவாசகர்.”  —ஆற்றங்கரையினிலே. ப. 9.  7. பழந்தமிழ் இலக்கிய நூலின் கருப்பொருளை நுட்பமாக ஆய்ந்து அதன் சொற்பொருள் நயங்களை எளியோரும் எளிதில் உணரும்வண்ணம் திட்பமாகக் கூறும் பாங்கினை இவர் நடையில் காணலாம்.  8. முன்னோர் மொழி பொருளைப் பொன்னே போல் போற்றும் திறத்தினையும் இவர் நடையில் காணமுடிகிறது.  9. ஏற்ற இடங்களில் சிறந்த இலக்கியப் பகுதிகளை அளவறிந்து மேற்கோளாகக் காட்டும் நோக்கினையும் உடையதாக அமைகிறது.  10. அழகு தமிழினை மட்டுமின்றிப் பழகு தமிழின் இனிமையையும் காணலாம். இலக்கியச் சுவையும், ஆராய்ச்சிக் குறிப்புகளும், அனுபவ உண்மைகளும் ஆங்காங்கே இணைந்து படிப்போர் நெஞ்சத்தில் தமிழின் இனிமையைப் பதிக்கும் உயர் நடை இவர் நடை.  11. இவர்தம் உரைநடைத் தமிழுக்கு ஒளியும் உயிரும் ஊட்டும் உயர் பண்புகள் எளிமையும் இனிமையும் தெளிவும் திண்மையும் ஆகும்.  12. தமிழ் மொழியின் சொல் வளத்தினை—அதன் பெருமையை அருமையை அறிவிக்கும் உயர்ந்த நடை இவர் நடை. 13. சொல்லொடு சொல்லையும் கருத்தொடு கருத்தையும் ஒப்புநோக்கிச் சுவையையும் பயனையும் இணைக்கும் உன்னத நடை  14. பேராசிரியரின் உரைநடை பயிலுவோர் உள்ளத்தில் தமிழார்வத்தைப் பெருக்கெடுக்க வைப்பது. சேதுப்பிள்ளை அவர்கள் காலத்தில் தமிழார்வம் குறிப்பிடத் தக்க (அல்லது) பாராட்டும் அளவில் இல்லை. ஆயின் அதனைத் தட்டி எழுப்பி அந்த ஆர்வத்தை வளர்த்த பெருமை சேதுப்பிள்ளையின் நடைக்கு உண்டு.  15. தக்க இலக்கியச் சொற்களையும் வழக்குச் சொற் றொடர்களையும் மணிமிடை பவளம் போலக் கட்டுரைகளில் எடுத்தாண்டமையால் இவர்தம் நடை படிப்பவரின் தமிழ் உரைநடைத் திறத்தை உயர்த்தியது. தனித்தமிழின் இனிமை யையும் ஏற்றத்தையும் நிலைபெறச் செய்தது. தமிழ்ச் சொற்கள் சிலவற்றின் வரலாற்றையும் சிறப்பையும் உலகுக்கு அறிமுகப்படுத்தியது.  கொடை வள்ளல் தமிழ்ப் புலவர்கள் என்றால் வறுமையில் வாடுபவர்கள் என்ற ஒரு நிலை இருந்தது. இந்நிலையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொடை வள்ளலாகத் திகழ்ந்தார் சேதுப் பிள்ளை.  அண்ணாமலை, சென்னைப் பல்கலைக் கழகங்களுக்குத் தனித்தனியே இருபத்தையாயிரம் வெண்பொற்காசுகள் வழங்கினார். இதன்படி ஆண்டுதோறும் இப்பல்கலைக் கழகங் களில் தமிழ் இலக்கியம், சமயம் பற்றிய சொற்பொழிவுகள் நடைபெற வேண்டும். வட்டித் தொகையாக வரும் ஆயிரத்தில் ஒரு பாதி சொற்பொழிவாளருக்கும் மறுபாதி பொழிவை நூலாக்கவும் பயன்பட வேண்டும் என்றும் திட்டமிட்டார். இராசவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் திருக் கோவிலைப் புதுப்பிக்கும் பணிக்கு 2000 வெண்பொற்காசுகள் வழங்கினார். அக்கோயிலின் குடமுழக்கு விழா நாளில் எண்ணுாறு வெண்பொன் மதிப்புள்ள பெருமனி ஒன்றை வாங்கிக் கோவிலின் முன் மண்டபத்தில் தொங்கவிட்டார்.  திருநெல்வேலி நகர்மன்றத்தைச் சார்ந்த மகப்பேறு மருத்துவமனைக்கு. பின்னாளில் தம் நூல்களுக்கு வரும் வருவாய்த் தொகையை எழுதி வைத்தார்.  பெற்ற சிறப்புகள் 1. ‘தமிழகம்—ஊரும் பேரும்’ என்ற நூலுக்குத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசாக ஐந்நூறு வெண்பொற்காக களைப் பெற்றார்.  2. ‘தமிழின்பம்’ நூலுக்காக மத்திய அரசிடம் ஐயாயிரம் வெண்பொற்காசுகளைப் பரிசாகப் பெற்றார்.  3. 1950ஆம் ஆண்டின் தருமபுர ஆதீனத் தலைவர் சுப்பிரமணிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்களால் ‘சொல்லின் செல்வர்’ என்று பாராட்டப் பெற்றார்.  4. 1957இல் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் இலக்கியப் பேரறிஞர் (டி.லிட்) என்ற பட்டம் வழங்கப் பெற்றுப் பாராட்டப் பெற்றார்.  5. 1961இல் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் தலைமையில் வெள்ளி விழாக் கண்டார். வெள்ளிவிழாத் தலைவர் ரா.பி.சே. அவர்களின் திருவுருவப் படத்தை அன்று திறந்து வைத்தார். வெள்ளிவிழா நினைவு மலர் ஒன்று டாக்டர் தனிநாயக அடிகள் அவர்களால் வெளியிடப்பெற்றது.  6. தம் அறுபத்தைந்தாவது வயதுவரை பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு.  “சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ்ப் பேராசிரியராகப் பணியேற்ற சேதுப்பிள்ளை, இருபத்தைந்து ஆண்டுகளாக இணையிலாத் தமிழ்ப் பணியாற்றியுள்ளார். அவர் விளம்பரத்தை விரும்பாமல் கடமையுணர்ச்சியுடன் பலருடைய அன்பிற்கும் பாராட்டிற்கும் நன்மதிப்பிற்கும் உரியவராக அரிய பணி ஆற்றினார். அவர் தமிழ் மொழியிடத்து அளவிறந்த பற்றுப் பூண்டவர். எனினும் பிறமொழிகளைச் சிறிதும் வெறுப்பவரல்லர். இஃது இவரிடம் விளங்கும் மிகவும் போற்றத்தக்க அம்சம். அவர் தமக்காகவோ தம்மைச் சார்ந்தவருக்காகவோ என்பால் உதவி நாடி எந்த நாளும் வந்ததில்லை.”  என்னும் துணைவேந்தரின் உரை, இவர்தம் பெருமைக்குப் பெருமை சேர்க்கிறது.  பண்பு நலன்கள் 1. இறையுணர்வு மிக்கவர்-சைவரான இவர் தஞ்சை நாட்டு அன்னப்பன் பேட்டைத் திருமடத் தலைவராய் விளங்கிய சபாபதி தாயுமானவர் என்பவரிடம் சைவ சமய தீக்கை பெற்றுத் தாம் ஒர் உண்மைச் சைவர் என்பதை உ ண்மைப்படுத்தினார்.  2. செப்பறை அடிகளார் சிவஞான தேசிகர், திருமணம் செல்வகேசவ முதலியார் இவர்களைச் சிந்தை மறவாத தன்மையினால் குருபக்தி மிக்கவர் என்பது புலனாகிறது.  3. அன்னை சொர்ணம்மாள் பெயரில் பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியதால், தாயிடம் இவர் கொண்ட அன்பும் மதிப்பும் புலனாகின்றன.  சா—11 4. தாய்மொழிப் பற்று மிக்கவர். நாட்டுப்பற்றும் மிக்கவர்.  “தமிழுக்கு ஒரு நல்லது என்றால் அவர் உடலிலே தெம்பு, முகத்திலே உவகை; தமிழுக்கு ஓர் இடையூறு என்றால் அவர் உடலிலே தளர்ச்சி, முகத்திலே கவலை இப்படியாக அவர் தமிழைத் தம் வாழ்வோடு வாழ்வாக இணைத்து வாழ்கிறார்.  என்ற மு.வ. அவர்களின் போற்றுதல் மொழி இவர்தம் தமிழ்மொழிப் பற்றின் மேன்மையை அறிவுறுத்துகின்றது.  மறைவு தமிழுக்காக வாழ்ந்து தமிழ் உலகிற்குச் சீரும் சிறப்பும் தேடித்தந்த ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள், 1961ஆம் ஆண்டு வெள்ளிவிழாக்கண்ட பன்னிரண்டாம் நாள் மண்ணுலக வாழ்வை நீத்து விண்ணுலகம் எய்தினார்.  நிறைவுரை இவ்வாறாக ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களின் வாழ்க்கை ஏற்றமும் வீறும் உடையதாகத் துலங்கச் சொற் பொழிவுகள் நிகழ்த்தியும், நூல்கள் வழங்கியும், கட்டுரைகள் எழுதியும், ஆய்வுக்கு வழிகாட்டியும் அவர் ஆற்றிய தமிழ்த் தொண்டு சொற்களால் வடித்துக்கூற இயலாச் சீர்மை வாய்ந்ததாக விளங்குகின்றது.                                                      10. சான்றோர் பெருந்தகை மு.வ.   வடார்க்காடு மாவட்டத்திவ் வாலாஜா என்னும் ஊர் உளது. அவ்வூரின் அருகில் அழகுற வேலமலை நிமிர்ந்து நிற்கின்றது. வேலமலையின் அடிவாரத்தே வேலம் என்னும் எழிற் சிற்றுார் அமைந்துள்ளது. அச்சிற்றுாரே சிற்றுாரும் பேரூரும் தமிழ்கூறும் நல்லுலகும் ‘முவ’ என்ற இரண்டு எழுத்துக்களால் ஒருமுகமாக மாண்புடன் போற்றும் டாக்டர் மு. வரதராசனார் அவர்களின் சொந்த ஊராகும்.  பிறப்பு சொந்த ஊர் வேலம் என்றாலும், டாக்டர் அவர்கள் பிறந்தது வடார்க்காடு மாவட்டத் திருப்பத்துார் ஆகும். 1912ஆம் ஆண்டிலே பிறந்த டாக்டர் அவர்களின் தொடக்கக் கல்வி திருப்பத்துாரிலும், பின்னர் வாலாஜாவிலும் கழிந்தது. இவர்களின் பாட்டியாரே இவர்களைப் பாராட்டிச் சீராட்டிச் செல்லமாக வளர்த்தவர்கள். இவர்களின் இனிய நினைவினை நினைவுகூர எழுந்ததே டாக்டர் அவர்களின் ‘விடுதலையா?’ என்ற சிறுகதை. தம்மை அன்புடன் வளர்த்து ஆளாக்கிய பாட்டியாரை நினைத்துக் கொண்டால், டாக்டர் அவர்கள் பழைய நினைவுகளையெல்லாம் உணர்ச்சியோடு பேசுவார். டாக்டர் அவர்களின் குடும்பம் ஊரில் செல்வாக்காக விளங்கிய குடும்பம். மேலும் டாக்டர் அவர்கள் குடும்பத்திற்கு ஒரே ஆண்மகனாராவர். உடன் பிறந்தவர் இருவரும் தமக்கையும் தங்கையும் ஆவர். தந்தை யாரின் அறிவுத்திறமும் அன்னையாரின் உறுதி நெஞ்சமும் டாக்டர் அவர்கள் பெற்ற குடும்பச் சொத்து ஆகும். டாக்டர் அவர்கள் படிக்கும் நாளில் கணக்குப் பாடம் சிறப்பாக வந்தது. அப்பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்து முதன்மையாகத் தேர்வு பெறுவார்கள். திருப்பத்துர் நகராண்மை உயர்நிலைப் பள்ளியில் 1928ஆம் ஆண்டு பெரும் பள்ளி இறுதித் தேர்வு (s.s.l.c) எழுதி வெற்றி பெற்றார்கள்.  முதற் பணி அக்காலத்தில் இந்த நாள் போன்று ஆங்காங்கே கல்லூரிகள் அமைந்திருக்கவில்லை. கல்லூரிக் கல்வி யென்றால் சென்னைக்கே வந்து படித்தல் வேண்டும். வீட்டிற்கு ஒருமகன் என்ற நிலையில் டாக்டர் அவர்கள் தொடர்ந்து கல்லூரிக்கல்வி கற்க இயலவில்லை. குடும்பச் சூழல் காரணமாக வரி வருவாய்த்துறையில் (Revenue Department) எழுத்தராகச் (Clerk) சேர்ந்தார்கள். ஏறத்தாழ அப்பணியினைத் திறம்பட மூன்று ஆண்டுகள் ஆற்றினார்கள். உயர் அலுவலர்களின் ஒருமித்த பாராட்டுக்கு உரியவரானார்கள். மனச்சான்றை மதித்துக் கடமை உணர்வோடு பணியாற்றிய காரணத்தால் வேலைப் பளு இவர்களுக்கு மிகுதியாகத் தரப்பட்டது. இதனால் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. வேலைப்பளுவும் அதன் காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறையும் இவரை அந்தப் பணிக்கு ஒரு முழுக்குப் போடச் செய்தன. 1931ஆம் ஆண்டு முதல் 1934 வரை மூன்றாண்டுகள் ஊருக்கு வந்து ஓய்வு பெற்று உடல் நலத்தினைப் பாதுகாத்துக் கொண்டார்கள்.  தமிழ்க் கல்வி  உடலை ஓம்பிய நேரத்தில் பேரறிஞர் கூன் இயற்கை மருத்துவம் பற்றிய நூல் ஒன்றினை இவர்கள் படித்தார்கள். அந்நூல் இவர்கள் வாழ்வில் நல்ல திருப்பத்தினைத் தந்தது. அதன்வழித் தம் உடல் நலம் காத்துக் கொண்ட இவர்கள் உளநலத்திற்குரிய தமிழ்க் கல்வியினை மேற்கொண்டார்கள். இளமை தொட்டே இவர்கள்பால் குறைவற நிரம்பயிருந்த தமிழார்வம் தொடர்ந்து தமிழ் நூல்களைக் கற்றுவரச் செய்தது. யாழ்ப்பாணம் திரு. முருகேச பண்டிதர் அவர்களின் மாணவர் திரு. முருகைய முயலியார் அவர்களிடம் இவர்கள் தமிழ் நூல்களைக் கற்று வரலானார் கள். 1934ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக் கழக வித்துவான் முதல்னிலைத் தேர்வு (Vidwan preliminary) எழுதி வெற்றி பெற்ற இவர்கள், திருப்பத்துார் நகராண்மை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியரானார்கள். இருபத் திரண்டு வயதில் தமிழாசிரியர் பணி தொடங்கிய இவர்கள், மறு ஆண்டிலேயே (1935) வித்துவான் நிறைநிலைத் (vidwan Final) தேர்வு எழுதிச் சென்னைப் பல்கலைக் கழகத்திலேயே முதலாமவராகத் தேறித் திருப்பனந்தாள் காசிமடத்தின் ஆயிரம் ரூபாய்ப் பரிசினைப் பெற்றார்கள். ஆசிரியப் பணியோடு தேர்விற்கும் படித்துச் சிறப்பாகத் தேறியமை எடுத்த செயலைத் திறம்படச் செம்மையுற நிறைவேற்றும் இவர்கள் ஆற்றலை இனிமையுறப் புலப் படுத்தும். தொடர்ந்து கல்வி பயின்று பி.ஓ.எல். (B.O.L) தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்கள்.  பச்சையப்பன் பணி 1939ஆம் ஆண்டில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியப் பணி ஏற்றார்கள். அக்காலை பின்னாளில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் இலக்குமணசுவாமி முதலியார் அவர்கள் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக இருந்தார்கள். அவர்கள் இவர் தம் வளர்ச்சிக்கு வாய்ப்புத் தந்து ஊக்கமூட்டி வந்தார்கள். 1945ஆம் ஆண்டில் வினை சொற்களைப் (Verbs) பற்றி ஆங்கிலத்தில் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிப் (M.O.L.) பட்டம் பெற்றார்கள். அது பொழுது தமிழ்த் துறையினைத் தலைமை தாங்கி நடத்திய மோசூர் கந்தசாமி முதலியா ரவர்கள் இவர்கள்பால் பேரன்பு செலுத்தி இவர்களை வழிப்படுத்தி வந்தார்கள். அவர்கள் மறைவிற்குப் பிறகு 1946ஆம் ஆண்டில் இவர்கள் தமிழ்த்துறைத் தலைவராக நியமிக்கப் பெற்றார்கள். 1948ஆம் ஆண்டில் ‘சங்க இலக்கியத்தில் இயற்கை’ (The treatment of Nature in Sangam Literature) என்ற பொருள் குறித்து ஒர் ஆராய்ச்சிக் கட்டுரையினை எழுதிச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழில் ழுதன் முதலில் ‘டாக்டர்’ பட்டம் பெற்றார்கள்.  வகுப்பறையில் டாக்டர் அவர்கள் எந்தப் பாடத்தை எடுத்துக் கொண்டாலும் அதனை மானவர் மனங்கொளக் கற்பிப்பார்கள். சங்க இலக்கியத்தில் நல்ல புலமை அவர் களுக்குச் சிறப்பாக அமைந்திருந்தது. சங்க இலக்கிய மாந்தரின் நுண்மையான உள் ளத்தினை, அதிலும் குறிப்பாகத் தலைவியின் நெஞ்சப்பாங்கினை, அவர்கள் அமைதியோடும் உணர்ச்சியோடும் உணர்த்தும் பொழுது வகுப்பறையில் இருந்து கேட்கவேண்டும். இலக்கணப் பாடத்தைத் தெளிவாக நடத்துதல், மொழி நூலின் திறம் காட்டல், இலக்கிய ஆராய்ச்சியின் சிறப்பைப் புலப்படுத்துதல், ஆக இப்படிப் பல துறைகளிலும் அவர்தம் சொற்பொழிவு கருத்திற்கு விருந்தாக அமைந்தது. ஆரவாரமின்றி அமைதியாகக் கருத்துகளை எடுத்து மொழிவார். அவர்களுடைய சொற்பொழிவிற் கருத்தலைகள் வந்து போகும். நல்ல சிந்தனைச் சிற்பி. அவர்கள் வாழ்க்கையில் உணர்ச்சிக்கு அதிகம் இடம் கொடாமல் உண்மைக்கும் நடுவு நிலைமைக்கும், அறிவிற்கும் இடந்தந்து வாழ வேண்டும் என்பதனை அவர்கள் பெரிதும் வற்புறுத்துவார்கள். சுருங்கச் சொன்னால். அவர்கள் நிகழ்த்தும் சொற்பொழிவுகள் மன நலம் சேர்ப்பன வாகும். பொது மன்றங்களில் அமையும் இவர்தம் சொற் பொழிவுகளும் அவ்வாறே ஆரவாரத்திற்கிடமின்றி அமைதியுடன் கருத்தாழத்துடன் அறநெறியில் அமைந்து துலங்கக் காணலாம். 1953ஆம் ஆண்டு சென்னை-தேனாம்பேட்டை யில் நடைபெற்ற ஐந்தாம் தமிழ் விழாவின் போது இலக்கிய அரங்கிற்குத் தலைமை தாங்கிய இலங்கை அமைச்சர் திரு. நடேசப் பிள்ளை அவர்கள், இவர்களைத் ‘தமிழ்நாட்டின் இலக்கிய நோபெல் பரிசாளர்’ என்று அவையோருக்கு அறிமுகப்படுத்திய காட்சியும், அதுபொழுது இவர்கள் ‘செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி’ இன்றுவரல் உரைமோ சென்றிசினோர் திறத்தென, இல்லவர் அறிதல் அஞ்சி, மழலை மென்சொல் பயிற்றும் நாணுடை அரிவை என்ற அகநானுாற்றுத் தொடர்களை விளக்கிப் பேசிய இலக்கியப் பேச்சும், இன்றும் பலர் கண்களிலும் செவிகளிலும் நிறைந்துள்ளன. 1957ஆம் ஆண்டு கொண்டாடப் பெற்ற முதல் இந்தியச் சுதந்திரப்போர் நூற்றாண்டு விழாவில் சென்னை அரசு இயல்துறை வல்லுநரென இவர்களைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டும் பரிசும் வழங்கியது.  நூற்பணி: நாவல்கள்  எழுபது நூல்களுக்கு மேல் எழுதி இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றில் தமக்கெனத் தனியிடம் பெற்றுள்ள டாக்டர் அவர்கள் முதன் முதலில் ‘பாவை’, ‘செந்தாமரை’ முதலிய நூல்களை 1943-44ஆம் ஆண்டுகளில் எழுதினார். இவர்களுடைய ‘கள்ளோ? காவியமோ?’ என்னும் நாவல் பலர் வாழ நல்வழி காட்டியது. ‘அல்லி’ ஆணுலகிற்கு எச்சரிக்கை தருவது. ‘அகல் விளக்கு’ எனும் நாவலும் இத்தகையதேயாகும். இந்நூல் 1962ஆம் ஆண்டு சாகித்திய அக்காதெமி (Sahitya Akademi) யாரின் ஐயாயிரம் ரூபாய்ப் பரிசினைப் பெற்றது. ‘கரித்துண்டு’ ஓவியர் ஒருவரின் வாழ்வினை விளக்குவது. பெற்ற மனம் தமிழிலும் தெலுங்கிலும் திரைப்படமாக வெளிவந்த நாவலாகும். பாத்திரப் படைப்புச் சிறந்த நாவல் ‘மலர்விழி’, ‘கயமை’ சமுதாயத்தின் ஆணவங்களை அம்பலத்தில் கொண்டுவந்து நிறுத்துவதாகும். ‘வாடாமலர்’, ‘மண் குடிசை’, ‘நெஞ்சில் ஒரு முள்’ முதலிய நாவல்கள் வாழ்க்கைத் தெளிவினை வகையுற எடுத்து மொழிவனவாகும்.  சிறுகதை ‘விடுதலையா?’ என்ற தொகுப்பில் அமைந்துள்ள சிறு கதைகள், இவர்கள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சில நிகழ்ச்சி களுக்குக் கற்பனைச் சிறகு கட்டிப் பறக்க வைத்ததன் விளைவாகும், ‘குறட்டை ஒலி’ சிறுகதை வேறு சில மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.  இலக்கிய நூல்கள் ஏறத்தாழ முப்பது நூல்கள் இலக்கியங்களின் பிழிவாகவும், இவர்தம் எண்ணங்களின் வடிப்பாகவும் எழுந்துள்ளன. இலக்கியத்தின் நுண்மையினை-செவ்வியினை உயர்நிலையினை இவர்கள் நன்கு உணர்ந்து கட்டுரைகள் எழுதுவார்கள்.  மொழி இயல் தொடர்பாக ஏழு நூல்களும், ஐந்து நாடக நூல்களும். நான்கு வரலாற்று நூல்களும் இவர்கள் எழுதியுள்ளார்கள். கடிதமாக இவர்கள் எழுதியுள்ள ‘தங்கைக்கு’, ‘தம்பிக்கு’, ‘அன்னைக்கு’, ‘நண்பர்க்கு’ என்னும் நான்கு நூல்களும் மிகவும் புகழ் வாய்ந்தவை, தங்கைக்கு ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் நாடோறும் படிக்கவேண்டிய நூல்.  ‘திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்’ என்னும் நூலில் திருவள்ளுவரின் தெளிந்த கருத்தினை வடித்துத் தருகின்றார்கள். இந்நூலிற்கு அழகியதோர் அணிந்துரை அருளிய தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்கள் கூறுவன வருமாறு :  “இத்தகைய நூலை யாத்தவர் டாக்டர் மு.வரதராசனார், எம்.ஓ.எல். ஆசிரியர் வரதராசரை யான் நீண்ட காலமாக அறிவேன். அவரை யான் முதன் முதல் பார்த்தபோது அவர்தம் மலர்ந்த விழியும். கூரிய மூக்கும், பரந்த நெற்றியும், நீண்ட முகமும், நிமிர்ந்த பிடரியும் என்னுள்ளத்தைக் கவர்ந்தன. இவை, அறிவுக்கு உறையுளாயுள்ள மூளையின் திறத்தை அறிவிக்கும் புறக்கருவிகள். அவர்பால் யான் அன்று கண்ட இளமை இன்றும் பொலிகிறது, அவர் என்றும் இளைஞராயிருத்தல் வேண்டுமென்பது எனது வேட்கை. கவலைக் காட்சியை அவர் முகம் வழங்குவதில்லை. நல்ல மூளையும், நிலைத்த இளமையும், கவலை காணா முகமும் ஒருவரைச் சிறந்த கலைஞராக்கும் நீர்மையன. ஆசிரியர் வரதராசனார் பெருங்கலைஞராய் நாட்டை நல்வழியில் ஒம்புந் தொனடராவர் என்று யான் நினைத்ததுண்டு. அந் நினைவு பழுதுபடவில்லை. அவர் இயற்றியுள்ள நூல்கள் நாட்டை நல்வழியில் ஓம்பி வருதல் கண்கூடு...தோழர் வரதராசனார் ஒரு கலைக்கழகம்; பொறுமைக்கு உறையுள்;  அமைதிக்கு நிலைக்களன்; புரட்சி அவர் நெஞ்சில் பொங்குகிறது. தோழர் புரட்சியை இந்நூலில் பரக்கக் காணலாம்...... ஆசிரியர் வரதராசனார் திருவள்ளுவர் சுரங்கத்தில் பன்முறை மூழ்கி மூழ்கிப் பலதிற பணிகளைத் திரட்டிக் கொணர்ந்தனர். அவரது நெஞ்சம் திருவள்ளுவர் நெஞ்சுடன் உறவாடி உறவாடிப் பண்பட்டது. அந்நெஞ்சினின்றும் அரும்பும் கருத்துச் சிந்தனைக்குரியதே.”  தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்களோடு தாம் கொண்ட தொடர்பே தம்முடைய வாழ்வின் பெறற்கரிய பேறு என டாக்டர் அவர்கள் பெருமிதத்தோடு கூறிக் கொள்வார்கள். அரசியலில் காந்தியண்ணலும் திரு.வி.க. அவர்களுமே அவர்கள் மதித்த தலைவர்கள் ஆவர்.  டாக்டர் அவர்களுக்குப் பிடித்த நூல்கள் திருவாசகம், தாயுமானவர், வள்ளலார், விவேகானந்தர், இராம தீர்த்தரின் அறிவுரைகள் முதலியனவாகும். மேலை நாட்டுப் பெரும் புலவர்களான பெர்னார்டுஷா (Bernard shah) பெர்ட்ரண்ட் ரசல் (Bertrand Russel),சி.இ.எம் ஜோடு (C.E.M.Joad),எச்.ஜி.வெல்ஸ் (H.G. wells). ஆல்டஸ் ஹக்ஸ்லி (Aldous Huxley) சோமர் செட்மாம் (Somerset Maugham), பேர்ல்ஸ் பர்க் (Pearl S. Buck) முதலியோர் படைப்பினையும் விரும்பிப் படிப்பார்கள்.  இவர்கள் அன்றியும் சங்கப் புலவர்கள். திருவள்ளுவர், இளங்கோவடிகள், பாரதியார் முதலான தமிழ்ப் புலவர் பெருமக்கள் அனைவரும் டாக்டர் அவர்கள் மதித்துப் போற்றிய பெருந்தகைகள் ஆவர். தமிழ்ப் புலவர் பெருமக்கள் அனைவரும் ஒவ்வொரு துறையில் மிகச் சிறந்தவர்கள் என்பது டாக்டர் அவர்களின் கருத்தாகும். தாகூர் (Tagore). காண்டேகர் நூல்களை இவர்கள் மிகவும் விரும்பிப் படிப்பார்கள்.  தம் காலில் விழுவதை விரும்பாத சுவாமிகளிடத்தில் இவருக்கு நிரம்ப மதிப்புண்டு, மெளன. சுவாமிகளிடம் இவர்கள் கொண்டிருந்த ஈடுபாடு மிகுதியாகும். அற்புதங் களை நம்பாத - இறைவன் படைப்பின் நோக்கத்தை உணர்ந்த - தொண்டின் வடிவமான- அறத்திற்கு- இறைவனின் அறச்சட்டத்திற்குப் புறம்போகாமல் மதித்து வாழ்கின்ற துறவிகள்-தொண்டர்கள் இவர்கள் வணங்கி வழிபடும் தெய்வங்களாவர்.  இயற்கையே தெய்வம்; இயற்கையே மருத்துவம்; இயற்கையே எளிமை; இயற்கையே குரு; இயற்கையே உபதேசம், இயற்கையே சமயம்; சமய நூலினும் இயற்கையே பெரிது என்ற கோட்பாட்டினைக் குறைவறக் கொண்டவர்கள் இவர்கள்.  தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்களிடம் நெருங்கிய தொடர்பு கொண்டமைக்கு இவ் இயற்கைப் பற்றும் பெருங் காரணமாகும்.  இவர்கள் ஆத்திகர் நாத்திகர் என்று அவர்தம் போலி வேடம் கண்டு, இனங்காண்பதில்லை. அவரவர் தம் வாழ்வை வைத்தே ஆத்திகர் நாத்திகர் எனப்பிரிக்கலாம் என்பார்கள். இறைவனின் அறச்சட்டத்தை யார் உண்மையாக மதித்து நடக்கின்றார்களோ, அவர்களே உண்மையில் ஆத்திகர்கள் என்பது இவர்கள் கொண்டிருந்த கருத்தாகும்.  காந்தியடிகள் ‘கடவுள் உண்மை வடிவானவர்’ என்று கூறுவதைவிட ‘உண்மையே கடவுள்’ என்று கூறுவதைப் பெரிதும் விரும்பினாராம். அக்கருத்து - அக்காந்தியக் கருத்து - இவர்கட்குப் பெரிதும் உடன்பாடு.  சீரிய சிந்தனையாளர் டாக்டர் மு.வ. அவர்கள் நிறையப் படித்தவர்; ஆழ்ந்து சிந்தித்தவர்; எண்ணிய எண்ணங்களை எழிலுற மக்கள் மன்றத்திலே வைத்தவர். அரியவற்றையெல்லாம் எளிதாக விளக்கிய மு.வ. அவர்கள் தம் கதை, கட்டுரை. கடிதம், புதினம் முதலியவற்றின் வாயிலாகத் தமிழ்ச் சமுதாயம் சிந்தித்துத் தெளிவு பெற்றுச் செயலாற்றத் தக்க வகையில் பல சீரிய மணிமொழிகளைத் தந்துள்ளார். அவற்றுள் சிலவற்றை ஈண்டு நினைத்துப் பார்ப்பது நற்பயன் நல்குவதாகும்.  “தமிழர்களுக்கு இனப்பற்றும் இல்லை; மொழிப் பற்றும் இல்லை. அதனால்தான் அவர்கள் இருக்க இருக்கக் கீழே போகிறார்கள்; ஆனால் பேதம் இல்லாமல் வெளியாரோடு பழகுவதில் நல்லவர்கள்.”  “தேவைகளை எவ்வளவு குறைத்துக் கொள்கிறோமோ, அவ்வளவுக்கு வாழ்க்கையில் சிக்கல் குறையும்; துன்பம் குறையும்.”  “நல்லவர்கள் பிறருடைய செயலால் அழிவார்கள்; கெட்டவர்கள் தங்கள் செயலாலேயே அழிவார்கள்.!”  “பறவைகள் அன்பாக வாழ்கின்றன. அவைகளுக்கு வாய் இல்லை; பேச்சு இல்லை. பிணக்கும் இல்லை. மக்கள் வாழ்க்கையில் வாய்தான் வன்பும் துன்பும் செய்கின்றது. பேச்சு வள்ர்கின்றது. பிணக்கும் முற்று கின்றது; அன்பான வாழ்க்கையிலும் திடீரென்று அன்பு முறிகின்றது.”  “மக்களுக்குள் சாதி இரண்டு, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஜாதி. எப்படியாவது வாழ வேண்டும் என்ற சாதி, இந்தச் சாதிகளுக்குள் கலப்பு மணம் கூடாது.”  “வேப்பமரம் அத்தி ஆவதில்லை. மூங்கில் கரும்பு ஆவதில்லை. பனை தென்னை ஆவதில்லை; புலி பசு ஆவதில்லை. நாய் நரி ஆவதும் இல்லை. காரணம், அவற்றின் பண்பை மாற்றி அமைக்கும் மன வளர்ச்சி இல்லை; மனித மனம் வேம்பாக இருந்து கரும்பாக மாறலாம்; புலியாக இருந்து பசுவாக மாறலாம்; மனிதர்க்கு மன வளர்ச்சி உண்டு.”  “எண்ணம் திருந்தினால் எல்லாம் திருந்தும். அது தான் பெரிய அடிப்படை.”  “அறம் என்பது ஆற்றல் மிக்கது. அதை எதிர்த்து வாழ முடியாது.”  “உடல் நோயற்றிருப்பது முதல் இன்பம், மனம் கவலையற்றிருப்பது இரண்டாம் இன்பம். உயிர் பிறர்க்கு உதவியாக வாழ்வது மூன்றாம் இன்பம்.!”  “குறை இல்லாதவர்கள் உலகத்தில் இல்லை. குறைகளுக்கு இடையே குணத்தைக் கண்டு வாழ வேண்டும். முள்ளுக்கு இடையே முரட்டு இலைகளுக்கு இடையே மெல்லிய மலரைக் கண்டு தேனைத் தேடுகிறது தேனி. அதுதான் வாழத் தெரிந்தவர்களின் வழி.”  “விரும்பியது கிடைக்கவில்லையென்றால் கிடைத்ததை விரும்ப வேண்டும்.”  “இன்பத்திற்குத் துணையாக வல்லவரை நம்பாதே. துன்பத்திற்குத் துணையாக இருக்கவல்லவரைத் தேடு உறவானாலும், நட்பானாலும், காதலானாலும் இப்படித் தான் தேட வேண்டும்.”  (அல்லி)  “நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது; வல்லவனாகவும் இருக்கவேண்டும் அல்லவா? நன்மை வன்மை இரண்டும் இருந்தால்தான் இந்த உலகில் வாழ்க்கை உண்டு.”  (தம்பிக்கு)  “அன்புக்காக விட்டுக் கொடுத்து இணங்கி நட. உரிமைக்காகப் போராடிக் காலம் கழிக்காதே.”  (தங்கைக்கு)  “‘ஒருவர் பொறை இருவர் நட்பு’ என்னும் நாலடியாரின் பொன்மொழி இல்வாழ்க்கையின் மந்திரமாக விளங்க வேண்டும்.”  (தங்கைக்கு)  நாவல் சிலவற்றின் முடிவு வரிகள் அவர் எழுதிய நாவல்களின் முடிவு வரிகளில் சில படிப் போரைச் சிந்திக்க வைக்கும் திறத்தன என்பதனைக் கீழ்க் காணும் பகுதிகள் கொண்டு அறியலாம்.  “அந்தக் குடும்ப விளக்கு அணைவதற்கு முன்னே ஒரு முறை அழகாக ஒளிவீசியது.”  (கள்ளோ? காவியமோ?)  “அந்தக் காட்டு வாகை மரத்தின் நிழலில் ஒவ்வொரு கரித்துண்டமாகப் பொறுக்கி ஆர்வத்துடன் அடுக்கி வைத்துக் கொண்டிருந்த அவளுடைய அன்பான கையை என் மனம் நினைத்தது.”  (கரித்துண்டு)  “சாவித்திரியின் கண்கள் மலர்விழியின் கண்களை நோக்கியபடியே கண்ணிர் உதிர்த்துக் கொண்டிருந்தன.”  (மலர்விழி)  “பரமேசுவரி என் தோளை இறுகப் பற்றிக்கொண்டு தழுதழுத்த குரலில் அல்லி! என்றாள்.”  (அல்லி)  டாக்டர் அவர்கள் மாணவர் மனப்புண்களுக்கு மருந்திட்டுக் கட்டும் மருத்துவராக விளங்கினார், படிக்க வரும் மாணவர்களுக்குத் தந்தையாய், வழிகாட்டியாய். உடல்நல மருத்துவராய். உளநல வித்தகராய் விளங்கினார். உடனா சிரியப் பெருமக்களுக்கு உற்ற துணையாய் விளங்கினார். சமுதாயத்திற்குச் சிறந்த சீர்திருத்த வழிகாட்டியாகத் துலங்கினார். மொழிக்கு அரணாகவும், இலக்கியத்திற்கு விளக்கமாகவும், நாட்டிற்கு நல்ல தொண்டராகவும் இவர்கள் நாளும் விளங்கி வந்தார்கள்.  பல்கலைக்கழகப் பணி 1961ஆம் ஆண்டு பச்சையப்பனின் தமிழ்ப் பணியினின்றும் விலகிப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் தலைமையினை ஏற்றார். ஆயினும் பச்சையப்பனின் நினைவு என்றும் இவர்கள் மனத்தில் பசுமையாக இருந்தது. இவர்களுடைய வளர்ச்சிக்குப் பச்சையப்பனும், பச்சையப்பன் வளர்ச்சிக்கு இவர்களும் பெரிதும் உதவியுள்ளனர். டாக்டர் அவர்களின் சுருத்துகளை ஏற்றுப் பின்பற்றி நடக்கும் மாணவர் குடும்பம் ஒன்று உண்டு. அக்குடும்பத்திற்கு அறத்திலே பெருநம்பிக்கை; மனச்சான்றிலே மதிப்பு; கொள்கையிலே உறுதி; ஆரவாரத் திற்கு எதிரான அமைதியிலே பற்று,  தமிழ்ப் பெரியார் திரு. வி.க. அவர்கள் வழங்கிய தகுதிச் சான்று  “வரதராசனார் பேச்சிலும் எழுத்திலும் பர்னாட்ஷாவின் கருத்துக்கள் ஆங்காங்கே பொருந்தும். அவர் பர்னாட்ஷா நூல்களைப் படித்துப் படித்து ஒரு தமிழ் ‘பர்னாட்ஷா’ ஆனார் என்று கூறுதல் மிகையாகாது. பர்னாட்ஷாவைப் பார்க்கிலும் வரதராசனார் ஒரு துறையில் சிறந்து விளங்குகிறார் என்பது எனது ஊகம். பர்னாட்ஷா பல பல நூல்களை எழுதி எழுதி முதுமை எய்தியவர், இம் முதுமையில் அவருக்கு வழங்கும் இக்கால அரக்கப் போர்க் காட்சி “வாழ்க்கைக்கு கிறிஸ்து வேண்டும், பைபிள் வேண்டும்” என்னும் எண்ணத்தை அவரிடம் அரும்பச் செய்து வருகிறது. வரதராசனார்க்கோ அக்கருத்து இளமையிலேயே முகிழ்த்தது. “வாழ்க்கைக்குச் சமயம் தேவை, கடவுள் தேவை” என்று இளமை வரதராசனார் பேசினார், எழுதினார். கீழ்நாட்டு இளமை மேல்நாட்டு முதுமையை விஞ்சி நிற்கிறது.”  துணைவேந்தர் பணியும் இறுதியும் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பத்து ஆண்டுகள் பயனுறப் பணிகள் ஆற்றிய பெருந்தகை மு.வ. அவர்கள் 1974ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் முதல் நாளிலிருந்து மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணியினை ஏற்றுச் சிறக்கச் செய்தார், கட்டடங்கள் பல அவர்காலத்தில் கட்டப் பெற்றன. அஞ்சல்வழிக் கல்வித்துறை பிறர் வியக்கும் அளவிற்கு வளர்ந்தது. பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிய அனைவராலும் ஒருங்கே பெருமதிப்பைப் பெற்றார். ஓயாத நிர்வாகப் பணிகளும் சிந்தனைப் போக்குகளும் எழுத்துத் தொழிலும் சான்றோர் மு.வ. அவர்கள் உடல் நலனுக்கு ஊறு செய்து வந்தன. 25-1-1974 அன்று மதுரையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாநாளன்று மு.வ. அவர்களுக்கு இருதய நோய் கண்டது. மதுரையிலிருந்து சென்னை வந்த அவர்கள் 10-10-1974 அன்று 5-30 மணிக்கு அரசினர் பொது மருத்துவமனையில் காலமானார்கள். தமிழர் நெஞ்சிருக்கும் வரை தமிழ்கூறு நல்லுலகிற்குத் தமிழ் நெஞ்சம் தந்த சான்றோர் பெருந்தகை மு.வ. அவர்களை நினைவிற் கொள்வர்.  — — —                         சி. பா.  [] சான்றோர் தமிழ்.pdf தேசிங்கு ஆண்ட செஞ்சியில் பிறந்தவர் (3-5-1985) இந்தச் செந்தமிழ்ச் செல்வர். கண்டாச்சிபுரமும் திருவண்ணாமலையும் இந்த இலக்கியப் பொழில், கற்ற இடங்கள். பைந்தமிழ் வளர்க்கும் பச்சையப்பன் கல்லூரிப்பாசறை மறவருள் ஒருவர். அன்னைத் தமிழில் பி.ஏ. ஆனர்சு. அங்கு! முதல் வகுப்பில் தேறிய முதல்வர். ‘குறுந்தொகை’பற்றிய ஆய்வுரைக்கு 1968ல் எம்.லிட்., பட்டமும், ‘சேரநாட்டுத் தமிழ் இலக்கியங்கள்’ பற்றிய ஆய்வுரைக்கு 1970ல் டாக்டர் (பிஎச்.டி.) பட்டமும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இவர் பெற்ற சிறப்புகள். நல்ல நடை கொண்ட இந்த நாகரிகர் பேர் சொல்ல நாளும் மாணவர் படை உண்டு காட்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தவர் பேராசிரியராகத் துறைத்தலைவராகச் சிறந்திருக்கிறார்.முன்னாள் தமிழக ஆளுநருக்குத் தமிழை முறையாகப் பயிற்றுவித்த ஆசிரியர், இந்த முற்றிய புலமையாளர்!  பத்து நூல்கள் படைத்துள்ள இவர் ஒப்பருந் திறனுக்கும் உயர் தமிழ் அறிவுக்கும், ‘தமிழ் இலக்கிய வரலாறு’ ஒன்றே சான்று அண்மையில் வந்துள்ள அணிகலன், ‘பெருந்தகை மு.வ. ‘ஆங்கிலத்தில் ஒரு நூல்’ சங்ககால மகளிர் நிலை’ பற்றிய ஆராய்ச்சி. ‘இலக்கிய அணிகள்’ என்ற நூல் தமிழக அரசின் இரண்டாயிரம் உரூபா முதல் பரிசைப் பெற்றது. படித்துப் பல பட்டம் பெற்ற இந்த்ப் பைந்தமிழ் வேந்தர்க்குப் பலரும் கொடுத் துள்ள புகழ் மகுடங்கள்: புலவரேறு (குன்றக்குடி ஆதீனம்) செஞ்சொற் புலவர் (தமிழ் நாட்டு கல்வழி நிலையம்), சங்கநூற் செல்வர் (தொண்டை மண்டல ஆதீனம்).  பெருந்தகை மு. வ. வின் செல்லப்பிள்ளை சி. பா. அவர் புகழ்பாடும் அந்தமிழ்த் தும்பி அயராது உழைக்கும் அருஞ்செயல் நம்பி ! இலக்கியப் பேச்சில் இன்ப அருவி ! எழுத்தில் கல்ல இலக்கியப் பிறவி !  சி. பா. இந்த ஈரெழுத்து ஒரு மொழி, இளைஞர்க்குச் சொல்வது சிறக்கப் பாடு படு! —மா. செ.