[] சாதாம்மிணியின் அலப்பறைகள் ரஞ்சனி நாராயணன் சென்னை சாதாம்மிணியின் அலப்பறைகள் Copyright © 2014 by Creative Commons Attribution 4.0 International License.​. This book was produced using PressBooks.com. Contents - சாதாம்மிணியின் அலப்பறைகள் - நூலாசிரியர் - மின்னூல் ஆக்கம் - உரிமை - 1. நானும் என் ஸ்நுஷாவும்! - 2. “க” நா பாஷை தெரியுமா? - 3. உங்கள் வீட்டில் அட்லஸ் இருக்கிறதா? - 4. மே 13 ஆம் நாள் - 5. ஹை! டீ! - 6. சொந்தக் கதை - 7. ‘அச்சு பிச்சு…..’ அவார்ட்! - 8. குடும்ப டாக்டர்! - 9. திரு ரா. கி. ரங்கராஜன் - 10. கனவெல்லாம் குப்பை! - 11. வம்பு வேணுமா உமா? - 12. ரமாவும் ரஞ்ஜனியும்! - 13. தீபாவளி வந்தாச்சு! - 14. ஹிந்தி மாலும்…? - 15. நானும் என் மொழிப் புலமையும்! - 16. கன்னட கொத்து! - 17. லாம்….. எழுதலாம்……ப்ளாக் எழுதலாம்…….! - 18. கணபுரத்தென் கருமணியே….! - 19. தப்புத்தப்பாக ஒரு தினம்! - 20. குதிக்கும் ‘அவரை’ தெரியுமா? - 21. எங்கள் மாமா - 22. கணிதமும் நானும்! - 23. முப்பதும் தப்பாமே…..! - 24. அந்த நாள் முதல் இந்த நாள் வரை….. - 25. கம்பளின்னு ஒண்ணு இருக்கா? - 26. நலம் நலம் தானே நீயிருந்தால்…! - 27. எங்கள் பாட்டி! - 28. (தி)சின்ன (தி)சின்ன ஆசை! 1 சாதாம்மிணியின் அலப்பறைகள்  2014 ஆம் ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக தொடங்கியிருக்கிறது. எனது முதல் புத்தகம் ‘விவேகானந்தர்’ கிழக்குப்பதிப்பகம் மூலம் இந்த ஆண்டு வெளிவந்திருக்கிறது. அடுத்தாற்போல் எனது கட்டுரைத் தொகுப்பு மின்னூல் ஆக வெளிவந்திருப்பது கூடுதல் சந்தோஷம். தொழில் நுட்ப வளர்ச்சியில் நானும் போட்டிபோட்டுக்கொண்டு முன்னேறுவது சந்தோஷமோ சந்தோஷம்.  இந்தத் தொகுப்பிற்கு ‘சாதாம்மிணியின் அலப்பறைகள்’ என்று பெயரிட்டுள்ளேன். சாதாரணப் பெண்மணி (அம்மணி என்றும் சொல்லலாம்!) என்பதைத்தான் சாதாம்மிணி என்று சுருக்கியுள்ளேன். என்னுடைய அனுபவத்தில் நான் கண்டவை, கேட்டவை தவிர என் வாழ்க்கையில் நிறைய தாக்கங்களை ஏற்படுத்திய என் அம்மா, அக்கா, என் பாட்டி, என் மாமா, எனது ஆசிரியர், எனது தோழி என்று பலரையும் பற்றி சொல்லியிருக்கிறேன். எனது மொழிப்புலமை(!) பற்றியும் சொல்லியிருக்கிறேன். படிக்க சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன்.  மின்னூல்கள் வேண்டுமா? என்னதான் இருந்தாலும் கையில் புத்தகம் வைத்துக்கொண்டு வாசிப்பது போல வருமா? எனக்குப் பிடித்த பகுதிகளை கையில் பென்சில் வைத்துக்கொண்டு மின்னூலில் குறிக்க முடியுமா? என்று ஒரு நண்பர் முகநூலில் கேட்டிருந்தார். ரொம்பவும் சரி. எல்லா புத்தகங்களையும் வாங்குவது என்பது எல்லோராலும் முடியாத ஒன்று. வாங்கிய புத்தகங்களுக்கு வீட்டில் இடம் வேண்டும். இன்னொன்று நாம் ஆசை ஆசையாகச் சேர்த்துவைக்கும் புத்தகங்கள் நாளை என்ன ஆகுமோ? புத்தகங்களின் மேலும் பற்று வைத்துவிடுகிறோமே! ஆனால் மின்னூல் என்பது ஆண்டாண்டு காலமாக இருக்கும். விரைவில் பலரையும் சென்று அடையும். அந்தவகையில் மின்னூல்கள் என்ற தொழில்நுட்ப வளர்ச்சியை நிச்சயம் ஆதரிக்கிறேன்.  என்னை இந்த மின்னூல் உலகிற்கு அறிமுகப்படுத்திய திரு ஜோதிஜி அவர்களுக்கு, மின்னூலாக உருவாக்கத் துணை புரிந்த திரு இரவிசங்கர் அய்யாக்கண்ணு, திரு சீனிவாசன் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன். -ரஞ்சனி நாராயணன் 2 நூலாசிரியர் எனது அறிமுகம்  ஸ்ரீரங்கத்தில் பிறந்து, சென்னையில் வளர்ந்து திருமணம் ஆகி, இப்போது இருப்பது பெங்களூரில். முதலில் இல்லத்தரசி என்று சொல்லிக் கொள்வதை விரும்பினாலும் எழுத்தாளர் என்ற அடையாளம் என்னை ரொம்பவும் மகிழ்ச்சி அடைய வைக்கிறது. பல வருடங்களாக பத்திரிகைகளில் அவ்வப்போது எழுதி வந்தாலும் இணையத்தில் இரண்டு ஆண்டுகளாகத்தான் தீவிரமாக இயங்க ஆரம்பித்திருக்கிறேன். இணையத்தில் எனக்கென ஒரு இடம் பிடித்திருப்பது சந்தோஷமான விஷயம். இணையத்தில் என் எழுத்துக்களைப் படித்துவிட்டு தங்கள் தளத்தில் எழுதும்படி சில இணைய இதழ்கள் கேட்டுக்கொண்டதும் நான் எழுத்தினை தீவிரமாகத் தொடரக் காரணம். நான்குபெண்கள் என்ற தளத்தில் நான் எழுதிவரும் ‘செல்வ களஞ்சியமே’ என்ற குழந்தைகள் வளர்ப்புத் தொடர் ஒரு வருடத்தை தாண்டி தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அதே தளத்தில் மருத்துவம் குறித்த விழிப்புணர்வு கட்டுரை ‘நோய்நாடி நோய்முதல் நாடி’ தொடர் 34 வாரங்களாக வந்துகொண்டிருக்கிறது. புத்தகங்கள் வாசிப்பது எனது அம்மாவிடமிருந்து நான் (நாங்கள்) கற்றது. 86 வயதிலும் அம்மா இன்னமும் புத்தகமும் கையுமாகத்தான் இருக்கிறாள். நாங்கள்  பள்ளிப்புத்தகமும் கையுமாக இருந்த காலத்தில் அம்மாவும் எங்களுடன் புத்தகமும் கையுமாக அமர்ந்திருப்பாள். படிப்பதுடன் கோர்வையாக எழுதுவதும் அம்மாவிற்கு கைவந்த கலை. எனது எழுத்து, வாசிப்பு இரண்டிற்கும் நான் என் அம்மாவிற்குத்தான் நன்றி சொல்லவேண்டும். இந்தக் காரணங்களாலேயே எனது முதல் புத்தகத்தை (விவேகானந்தர்) என் அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்துள்ளேன். என் எழுத்தைப் படித்துப் பாராட்டும் எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றி. -ரஞ்சனி நாராயணன் [ranjani] http://ranjaninarayanan.wordpress.com ranjanidoraiswamy@gmail.com   3 மின்னூல் ஆக்கம் மின்னூல் ஆக்கம்  : கி. சிவ‍கார்த்திகேயன் seesiva@gmail.com மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com வெளியீட்டாளர்: த. ஸ்ரீனிவாசன், தரை தளம் 4, சுபிக்ஷா அடுக்ககம், 42, வியாசர் தெரு, கிழக்கு தாம்பரம் சென்னை  – 600 059 தொ. பே: +91 98417 95468 – tshrinivasan@gmail.com நன்றி : http://pressbooks.com அட்டைப் பட மூலம் – http://www.flickr.com/photos/horiavarlan/4329173343 அட்டைப்பட வடிவமைப்பு – ப்ரியமுடன் வசந்த்  vasanth1717@gmail.com 4 உரிமை இந்த கையேடு Creative Commons License வழங்கப்பட்டதாகும். அதனடிப்படையில் எவரும் இதனை திருத்தம் செய்து மேம்படுத்திக் கொள்ளலாம். [Creative Commons License] சாதாம்மிணியின் அலப்பறைகள், ரஞ்சனி நாராயணன்  by ranjanidoraiswamy at gmail.com is licensed under a Creative Commons Attribution 4.0 International License. You are free to: - Share — copy and redistribute the material in any medium or format - Adapt — remix, transform, and build upon the material - for any purpose, even commercially. - The licensor cannot revoke these freedoms as long as you follow the license terms. Under the following terms: - Attribution — You must give appropriate credit, provide a link to the license, and indicate if changes were made. You may do so in any reasonable manner, but not in any way that suggests the licensor endorses you or your use. - No additional restrictions — You may not apply legal terms ortechnological measures that legally restrict others from doing anything the license permits. [pressbooks.com] 1 நானும் என் ஸ்நுஷாவும்! []“கண்ணிலே இருப்பதென்ன கன்னியிளமானே…..” பாடிக் கொண்டே தோசை வார்த்துக் கொண்டிருந்தேன். மாட்டுப் பெண் உள்ளே நுழையவும் பாட்டைச் சட்டென்று நிறுத்தினேன். என் மகனுக்குத் திருமணம் ஆகி மூன்று மாதங்கள் தான் ஆகியிருந்தது. என்னைச் சற்று அதிசயமாகப் பார்த்தவளைக் கேட்டேன்: “என்ன, நானும் பாடுவேன் என்று நினைக்கவில்லையா?” என்று. ஒன்றும் சொல்லாமல் சிரித்தாள். எங்கள் வீட்டில் எல்லோருமே எந்த பாட்டாக இருந்தாலும் நன்றாக இருந்தால் கேட்போம். அவ்வப்போது பாடவும் பாடுவோம். அன்றைய ‘சொப்பன வாழ்வில் இருந்து இன்றைய ‘கொலைவெறி’ வரை எங்கள் வீட்டில் ரசிகர்கள் உண்டு. “நான் ஏன் தெரியுமா இவ்வளவு நாள் பாடவில்லை? ஏற்கனவே மாதவன்(என் பிள்ளை) பாடிக் கொண்டே இருக்கிறான். அவன் பாடவில்லையானால் அவனது ம்யுசிக் சிஸ்டம் பாடிக் கொண்டிருக்கும். இந்த அழகில் நான் வேறு பாடினால்…….? ‘நீங்கள் பாடினால் ஒகே. உங்கள் அம்மாவும் பாடி படுத்தறாளே அப்பிடின்னு நீ  திருவல்லிக்கேணி (அவளது பிறந்தகம்) க்கே திரும்பிப் போய்விட்டால் என்ன பண்றது? அதனால் தான்….” நான் சொல்லி முடித்தவுடன் என் மாட்டுப் பெண்ணுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. என் மகனுக்கு 2011 வது வருடம் ஜனவரி மாதம் திருமணம் ஆயிற்று. மகனுக்குத் திருமணத்திற்கு பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றவுடன் ஆளாளுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டனர். ” சொல்றேனேன்னு தப்பா எடுத்துக்காதேங்கோ மன்னி, இந்தக் காலத்துப் பொண்கள் நம்மள மாதிரி இல்லை. என்னோட மன்னியோட ஒண்ணு விட்ட சித்தியோட பொண்ணு ……” “ஜாக்கிரதைடி! என் பிள்ளைக்கு வந்த பொண்ணு ஜாதகத்துல……” “நிறைய படிச்சுடறாளா? தலை கால் புரியாம ஆடறதுகள்….” என்று உற்றார் உறவினர், தெரிந்தவர் தெரியாதவர் என்று என் வயிற்றில் புளி, உப்பு என்று எதெதையோ கரைத்தனர். நல்ல காலம், பெரியவர்கள் புண்ணியத்தில் வெகு விரைவில் கிடைத்துவிட்டாள் மாட்டுப் பெண். திருமணம் நிச்சயம் ஆனவுடன் மேற் சொன்ன உற்றார் உறவினர்கள் வேறு விதமாகப் பேச ஆரம்பித்துவிட்டனர். “வேலைக்குப் போற மாட்டுப் பெண்ணா? நீ இனிமேல் அக்கடான்னு உட்கார முடியாது….” “கை நிறைய சம்பாதிக்கிறா….. உஷார்….!” எனக்கு ‘வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்’ என்கிற பாட்டுத்தான் நினைவுக்கு வந்தது. “நீ சுறு சுறுன்னு இருந்தால் தான் மாட்டுப் பெண்ணும் சுறு சுறுன்னு இருப்பாள்….. நீ சோம்பி உட்கார்ந்தே அவ்வளவுதான். அவளும் உன் பக்கத்தில் வந்து உட்கார்ந் விடுவாள்..!!” இது என்ன அறிவுரையா அல்லது பயமுறுத்தலா? மாட்டுப் பெண்ணிடம் எப்படி நல்ல பேர் வாங்குவது? மருமகள் மெச்சிய மாமியாராக எப்படி இருப்பது? என்று யாராவது வகுப்பு எடுத்தால் தேவலை என்று தோன்றியது. தொலைகாட்சி நெடு………………………ம் தொடர்களைப் பார்த்துப் பார்த்து மாமியார் மருமகள் உறவு என்பதே எனக்கு குலை நடுக்கத்தைக் கொடுத்தது. சரி அதை விடுங்கள் . என் கதைக்கு வரலாம். நானாகவே சில முடிவுகள் எடுத்தேன்; ‘பாவம் சின்னப் பெண்; வேறு வீட்டில் பிறந்து நம்மாத்திற்கு வருகிறாள்; நாம் தான் அவளுக்கு எல்லாம் சொல்லித் தரணும்’ என்று. கல்யாணம் நல்லபடியாக நடந்தது. மாட்டுப் பெண் பெங்களூருக்கு வந்து விட்டாள். ஆரம்பத்தில் சின்ன சின்ன உதவிகள் செய்து கொடுத்தாள். நான் தளிகை பண்ணும் போது கூடவே நின்று பார்த்துக் கொண்டாள். சகஜமாகப் பேசினாள். அப்பாடி நான் பயந்தபடி இல்லை என்று எனக்குள் ஆசுவாசம். அவளுடைய பிளஸ் பாயின்ட் என்னவென்றால் ‘பளிச்’ என்ற சிரிப்பு. எங்கள் எல்லோருக்குமே பிடித்திருந்தது அவளது ‘பளிச்’ சிரிப்பு. என் மாட்டுப் பெண்ணிற்கு நல்ல பெரிய கண்கள்.உள்ளத்தில் நினைப்பதை அப்படியே கொட்டிவிடும் கண்கள். “சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாள்… என்று பாடலாம்டா நீ” என்றேன் மகனிடம். மாட்டுப் பெண் ‘பளிச்’. தினமும் என்னைக் கேட்டுக் கொண்டுதான் அன்றைய சமையலுக்கு வேண்டிய காய்களைத் திருத்தித் தருவாள். ஒருநாள் அவளிடம் “இனிமேல் நீயே தீர்மானம் செய்து திருத்தி வைத்து விடு” என்றேன். அன்றிலிருந்து ‘அம்மா, குழம்பிற்கு இந்தக் காய், கரியமுதிற்கு இந்தக் காய் திருத்தியிருக்கிறேன்’ என்று சொல்லிவிடுவாள். சமைக்கும்போது சின்னச் சின்ன டிப்ஸ் கொடுத்தேன். அவள் செய்யும் எல்லா வேலைக்கும் டிப்ஸ் கொடுத்தேன்; எப்படி செய்வது என்று வகுப்பே (!) நடத்தினேன். மொத்தத்தில் என் தலையில் நானே அக்ஷதை போட்டுக் கொண்டு அவளை படுத்திக் கொண்டிருந்தேன். இது எனக்குப் புரிந்ததே ஒரு வேடிக்கைதான். ஒரு நாள் என் மாட்டுப் பெண் சாத்துக்குடி உரிக்க ஆரம்பித்தாள்; உடனே நான் சாத்துக்குடி எப்படி உரிக்கணும் தெரியுமா? என்று அவள் கையில் இருந்ததை வாங்கிக்கொண்டேன். அப்போது அவள் என்னை ஒரு பார்வை பார்த்தாள். சட்டென்று என் மூளையில் ஒரு மின்னல்! அவள் நினைப்பது புரிந்துவிட்டது.’சாத்துக்குடி உரிக்கக் கூட டுடோரியல் எடுப்பீர்களா?’ என்று அவள் கேட்கவில்லை; நான் கேட்டேன்: ‘என்ன சாத்துக்குடி உரிக்கக் கூட டிப்ஸ் கொடுப்பீர்களா என்று தானே நினைக்கிறாய்?” இரண்டு பேருமே சிரித்துவிட்டோம். அவளது இன்னொரு ப்ளஸ் பாய்ண்ட்: மிக நன்றாக வரைவாள். கோலம் நன்றாகப் போடுவாள். க்ரியேடிவிடி அதிகம். தினமும் நான் என் நடைப் பயிற்சிக்கு போகும் முன் வாசலைப் பெருக்கித் தண்ணீர் தெளித்து விடுவேன். அவள் எழுந்து வந்து கோலம் போடுவாள். என் மாட்டுப் பெண்ணிற்கு சில சமயங்களில் காலை வெகு சீக்கிரமே அலுவலகத்திற்கு கிளம்ப வேண்டியிருக்கும். கார்ன் பிளேக்ஸ், அல்லது பிரெட் எடுத்துக் கொண்டு போவாள். ஒரு நாள் இரவு என் மாட்டுப் பெண் என்னிடம் “நாளைக்கு என்ன எடுத்துக் கொண்டு போவது என்றே தெரியவில்லை. பிரெட், கார்ன் பிளேக்ஸ் இரண்டுமே போரடித்து விட்டது.” என்றாள். உடனே நான், “நீ கவலைப் படாதே. நான் சீக்கிரம் எழுந்து சாதம் பண்ணி புளியோதரை கலந்து கொடுக்கிறேன்” என்று பிரமாதமாகச் சொல்லிவிட்டேன். அடுத்தநாள் நாலரை மணிக்கு அலாரம் அடித்தது. இன்னும் ஒரு பத்து நிமிடம் கழித்து எழுந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு அலாரத்தை அணைத்தவள் நன்றாகத் தூங்கிவிட்டேன். திடீரென்று விழிப்பு வந்து மணியைப் பார்த்தாள் மணி ஆறு. ச்சே! என்ன இப்படிச் செய்துவிட்டோம் சரி அவளிடம் ‘சாரி’ சொல்லிவிட வேண்டியதுதான் என்று முதலில் நினைத்தவள், உடனே மனதை மாற்றிக் கொண்டேன்: சட்டென்று சப்பாத்தி மாவு கலந்தேன். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, இஞ்சி நறுக்கி சிறிது வதக்கி விட்டு சிறிதளவு பயத்தம் பருப்பைப் போட்டு தால் பண்ணி சப்பாத்தி பண்ணிக் கொடுத்தேன். “நீங்க ஏன்மா இவ்வளவு கஷ்ட படணும்? ஆபீஸ் காண்டீனில் ஏதாவது வாங்கிப்பேனே” என்றாள். நான் “ஒண்ணும் கஷ்டமே படலம்மா. என் பெண்ணாக இருந்தால் பண்ண மாட்டேனா? நீதான் இப்போ என்னோட பெண். டோன்ட் பீல் கில்டி” என்றேன். அன்றிலிருந்து எங்கள் இருவருக்கும் இடையே இருந்த ஒரு கண்ணுக்குத் தெரியாத திரை விலகினாபோல ஒரு உணர்வு. இனிமேல் எங்களுக்கிடையே பரஸ்பரப் புரிதல் இருக்கும். இந்தப் புரிதலால் பயன் யாருக்குத் தெரியுமோ? நிச்சயம் என் பிள்ளைக்குத்தான். அம்மாவுக்கும், மனைவிக்கும் இடையே மாட்டிக் கொண்டு விழிக்க வேண்டிய தேவை இல்லையே! பி.கு: அது சரி, கட்டுரையின் தலைப்பில் ‘ஸ்நுஷா’ என்று எதோ எழுதியிருக்கீங்களே, அது யார் என்கிறீர்களா? சம்ஸ்கிருதத்தில் ஸ்நுஷா என்றால் மாட்டுப் பெண்! 2 “க” நா பாஷை தெரியுமா? “க” நா பாஷை தெரியுமா? இன்று காலை டெக்கான் ஹெரால்ட் தினசரியில் ஒரு கட்டுரை படித்தேன். அந்தக் கட்டுரையின் பெயர் ‘W’ixed ‘M’ords”. முதல் இரண்டு எழுத்துக்களை மாற்றிப் போட்டு வாசியுங்கள்.  இப்படி பேசுவதற்கு பெயர் “Spoonerism” என்று இந்தக் கட்டுரையை எழுதிய ஷார்பெல் ஃபொ்னாண்டஸ் குறிப்பிட்டு இருந்தார். மதிப்பிற்குரிய டாக்டர் வில்லியம் ஆர்ச்பால்ட் ஸ்பூனர் (Reverand Dr. William Archebald Spooner) என்பவரது பெயரால் இந்த ஸ்பூனரிஸம் வழங்கப்படுகிறது. உலகெங்கிலும் பல மனிதர்கள் இந்த ஸ்பூனரிஸத்தை பலவாறு பயன்படுத்தினாலும் திரு. ஸ்பூனர் சொன்ன ஒரு வாக்கியம் மிகவும் பிரபலமானது. I received a crushing blow என்று சொல்லுவதற்கு பதிலாக I received a blushing crow என்றாராம். இந்தக் கட்டுரையில் எழுத்தாளர் குறிப்பிடும் ஸ்பூனரிஸம் சில உங்களுக்காக: when I was young I loved tairy fales. my favorites are “Beeping sleauty” and “Back and the Jean stalk.” I often wumble with my fords. இந்தக் கட்டுரையைப் படித்த பின் நீங்களும் இப்படிப் பேச முயற்சிக்கலாம். இதைப் படித்தவுடன் எனக்கு சின்ன வயதில் என் அம்மா பேசிய (இப்போதும் பேசுகிறார்!) ‘க’ னா பாஷை நினைவுக்கு வந்தது. பேசும் வாக்கியத்தின் ஒவ்வொரு எழுத்துக்கு முன்பும் “க” சேர்த்துக் கொள்ளவேண்டும். இதோ உதாரணம்: “கர கஜ கனி கஇ கன் கனி கக் ககு கவ கர கலை” (ரஜனி இன்னிக்கு வரலை) இதைப் போல சாதாரண விஷயத்திற்கு அம்மா இந்த கானா பாஷையைப் பயன்படுத்த மாட்டார். எங்களுக்குத் தெரியாமல் எங்கள் அப்பாவிடமோ, பாட்டியிடமோ ஏதாவது சொல்ல வேண்டுமானால் மட்டும் இப்படி பேசுவார். இதை நாங்கள் வெகு விரைவில் கற்றுக் கொண்டு விட்டோம். அதனால் அடுத்த படியாக ‘அயின’ பாஷையை பேச ஆரம்பித்தார் எங்கள் அம்மா. இதில் வாக்கியத்தின் ஒவ்வொரு வார்த்தையின் ஒவ்வொரு முதல் எழுத்துக்கும் பிறகு ‘அயின’  சேர்க்கவேண்டும். மாயினாதவன் போயினன  வாயினரம் கயினல்யாணத்துக்கு வயினந்திருந்தான். ஹைலைட் செய்திருக்கும் பகுதிகளை விட்டுவிட்டு படியுங்கள். என் அம்மாவின் பேரன் பேத்தி அனைவருக்கும் இந்த ‘க’ ன பாஷையும் ‘அயின’ பாஷையும் அத்துப்படி. ‘சந்திரலேகா’ என்று அந்தக் காலத்தியப் படம் (பார்த்திருக்கவில்லை என்றாலும் இந்தத் தலைமுறையினர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன்) அதில் என்.எஸ். கலைவாணர் அரச மாளிகையில் அடைபட்டு இருக்கும் சந்திரலேகாவைப் பார்க்க மாளிகை வாசலுக்கு வருவார். இங்கிருக்கும் காவலாளிகளிடம் தான் வெளியூர் என்று சொல்லி உள்ளே நுழைய முயலுவார். உள்ளே போக முடியாது. கூட இருக்கும் டி.ஏ. மதுரத்திடம் இங்கேயே உட்காரலாம் என்பதை ‘உரையிலே தக்காரு’ (தரையிலே உக்காரு) என்பார். அந்தக் காலத்திலேயே ஸ்பூனரிஸம் பயன்படுத்திய மேதை அவர். அம்மாவின் குழந்தைகள் நாங்கள் எல்லோரும் வெளியூர் வந்து பல பாஷைகள் கற்றுக் கொண்டு விட்டோம். ஆனாலும் அம்மாவின் இந்த ‘க’ ன பாஷையும் ‘அயின’ பாஷையும் ஒரு ஸ்பெஷல் தான்!. 3 உங்கள் வீட்டில் அட்லஸ் இருக்கிறதா? []  உங்கள் வீட்டில் அட்லஸ் இருக்கிறதா? இல்லையென்றால் உடனே உடனே ஒன்று வாங்கி எல்லோருக்கும் கண்ணில்படும் படியாக மாட்டுங்கள். காரணம் சொல்லுகிறேன். உலக வரைபடத்தைப் பார்ப்பது மிக அருமையான பொழுது போக்கு. உங்கள் குழந்தைக்கு உலக வரைபடத்தைக் காட்டி நிறைய சொல்லிக் கொடுக்கலாம். Map reading என்பது எல்லா வயதினருக்கும் ஒரு சுவாரஸ்யமான ஒரு விஷயமாக இருக்கும்.. பல சமயம் எனக்கு இந்த மேப் ரீடிங் பல விஷயங்களை அறிய உதவி இருக்கிறது. என் அக்கா பிள்ளைக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. குழந்தைக்கு 5 வயதில் ஸ்ரேயா என்று ஒரு அக்கா. [] “தங்கச்சிப் பாப்பா பெயர் என்ன?” என்றேன் அவளிடம். அவள் “மேக்னா” என்றாள். எனக்கு எப்போதுமே ஒரு பழக்கம். எந்தப் பெயரைக் கேட்டாலும் என்ன அர்த்தம் என்று கேட்பேன். இப்போதும் அதேபோலக் கேட்டேன். “ஒரு நதியின் பெயர்” என்றாள் ஸ்ரேயா. நான் சிரித்துக் கொண்டே “எந்த நாட்டில்…..?” என்றேன். ஸ்ரேயா உடனே என்னை அழைத்துப் போய் அவர்கள் வீட்டில் மாட்டியிருந்த உலக வரைபடத்தைக் காண்பித்து “இதோ பாரு சித்தி, வங்க தேசத்தில் ஓடும் ஒரு நதியின் பெயர் மேக்னா” என்றாள். நான் அசந்து போனேன். வங்க தேசத்தில் ஓடும் ஒரு முக்கியமான நதி மேக்னா. பிரம்மபுத்ரா நதியிலிருந்து பிரியும் இந்த நதி கங்கையுடன் சேர்ந்து கங்கை படுகையை ஏற்படுத்திவிட்டு வங்காள விரிகுடாவில் கலக்கிறது. மேக்னா நதியைப் பற்றி இத்தனை செய்திகளையும் (இன்னும் நிறைய செய்திகளையும்) அந்தக் குழந்தை சொன்ன ஒரு செய்தியிலிருந்து தெரிந்து கொண்டேன். இதைப் போல இன்னொரு அனுபவம். ஒரு முறை குடும்பத்துடன் கர்நாடகாவிலுள்ள கெம்மணங்குடி என்ற மலைபிரதேசத்துக்குப் போயிருந்தோம். 4 நாட்கள் தங்கலாம் என்று போனவர்கள் ஒரே நாளில் கீழே இறங்கிவிட்டோம். வேறு எங்கு போவது? மெதுவாக காரை ஓட்டிக் கொண்டு வந்தார் என் கணவர். வழியில் ஒரு பேருந்து நிலையம். வண்டியை நிறுத்தி உள்ளே விசாரிக்கப் போனோம். அங்கு ஒரு வரைபடம். அதைப் பார்த்தவுடன் எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. பெங்களூர் வந்ததிலிருந்து எனக்கு உடுப்பி போய் கிருஷ்ணனைசேவிக்க வேண்டும் என்று தீராத ஆசை. நாங்கள் அப்போது நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து உடுப்பி 100 கி.மி. தூரத்தில் இருப்பது அந்த வரைபடத்திலிருந்து தெரிய வந்தது. எந்த மாநிலத்துக்குப் போனாலும் அதன் வரைபடத்தை வாங்கிவிடுவேன். என் கணவர் கார்  ஓட்டும்போது முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டு வழி காட்டுவது எனக்கு மிகப் பிடித்தமான ஒன்று. சின்ன வயதில் உலக வரைபடத்தை பார்க்கும் போது உலகம் உருண்டை என்கிறார்களே, ஆனால் எல்லா நாடுகளும் ஒரே நேர்கோட்டில் இருக்கின்றனவே என்று தீராத சந்தேகம். தையரியத்தை வரவழைத்துக் கொண்டு லீலாவதி டீச்சரை கேட்டே விட்டேன். அவர் உடனே “மக்கு! மக்கு! உலக உருண்டையை பார்த்ததில்லையா? ஆபீஸ் ரூமிலிருந்து கொண்டு வா!” என்று சொல்லி ஒவ்வொரு நாடும் எங்கெங்கு இருக்கிறது என்று விளக்கினார். பிறகு உலக வரைபடத்தை க்ளோப் வடிவில் மடித்து “இப்போது பார், உலகம் உருண்டையாக இருக்கிறதா?” என்றார். எனது மேப் ரீடிங் ஆசைக்கு லீலாவதி டீச்சரும் ஒரு காரணம். வேர்ட்பிரஸ் வலைப்பதிவு செய்ய ஆரம்பித்ததிலிருந்து உலக வரை படத்தின் மேல் எனக்கு ஒரு தனி மதிப்பு! []ஏன் தெரியுமா? தினமும் எனது எழுத்துக்களை எத்தனை பேர் எந்தெந்த நாட்டிலிருந்து படிக்கிறார்கள் என்ற புள்ளி விவரம் வருகிறதே! கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டது. குழந்தைகளுக்கு பொழுது போவது மிகவும் கஷ்டம். அவர்களுக்கு இந்த மேப் ரீடிங் பற்றி சொல்லிக் கொடுங்கள். அவர்களை அருகில் உட்கார்த்திக் கொண்டு நீங்கள் பிறந்த ஊர்,வளர்ந்த ஊர், நீங்கள் இதுவரை பார்த்த இடங்கள் என்று காண்பியுங்கள். ஒவ்வொரு இடத்தின் விசேஷங்கள், சுற்றுலா இடங்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். நாடுகளின் தலை நகரம், பேசும் மொழி, அங்கு ஓடும் நதிகள், சுற்றி இருக்கும் கடல்கள் என்று எத்தனை எத்தனையோ விஷயங்களை சொல்லிக் கொடுக்கலாம். வீட்டில் ஒரு உலக வரைபடம் இருந்தால் போதும் நாம் இப்போது இருக்கும் இடத்திலிருந்து ஆரம்பித்து உலகையே ஒரு சுற்று சுற்றி வரலாம் – உட்கார்ந்த இடத்திலிருந்தே பைசா செலவில்லாமல்! Joke courtesy: Cartoonstock 4 மே 13 ஆம் நாள் []எல்லோருக்கும் தெரிந்தது தான் அம்மாக்களின் தினம். அன்று ஒருநாள் மட்டும் தான் அம்மாவை நினைக்க வேண்டுமா? மற்ற தினங்களில் மறந்துவிடலாமா? அம்மாக்களின் தினம் என்று வைத்ததற்கு அதுவல்ல அர்த்தம். நம் அம்மாவிடமிருந்து நாம் கற்றது என்ன? நம் குழந்தைகளுக்கு நம் அம்மாவைப் போல நாம் சிறந்த அம்மாவாக இருக்கிறோமா? இவற்றைப் பற்றிச் சிந்திக்கத்தான் இந்த நாள்.  என்ன செய்யலாம் அன்று? அம்மா அருகில் இருந்தால் வாழ்த்து அட்டை கொடுக்கலாம் நாமே தயாரித்து; பூக்கொத்து கொடுக்கலாம்; அவளுக்குப் பிடித்ததை சமைத்து அவளுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடலாம். அவள் மடியில் தலை வைத்துப் படுத்து அவளது பழைய கதைகளைக் கேட்கலாம். எல்லா அம்மாவுமே பழங்கதைகள் தான் பேசுவார்கள். அடுத்தடுத்த தலைமுறைகள் வந்தவுடன் வீட்டின் முதியவர்கள் தனித்துப் போய்விடுகிறார்கள். அவர்களது தனிமைக்கு பழைய நினைவுகள் தான் துணை. இவற்றையெல்லாம்விட மிக முக்கியமானது அம்மாவிடம் இருந்து நாம் என்ன கற்றோம், எதை நம் குழந்தைகளுக்குக் கற்றுத் தரப் போகிறோம் என்று சிந்திக்கலாம். அம்மாவிடம் நாம் ரொம்பவும் விரும்பும் குணம் நமக்கு வந்திருக்கிறதா என்று யோசனை செய்யலாம். மற்றவர்களுக்குச் சொல்லும் முன் நான் சற்று யோசிக்கிறேன்: நான் என்ன கற்றுக் கொண்டேன் என் அம்மாவிடமிருந்து? என் அம்மா மிக நன்றாகப் பாடுவாள். பரவாயில்லை, நாங்கள் நாலு பேருமே சுமாராகப் பாடுவோம். அம்மாவின் சங்கீத ஞானம் எங்கள் குழந்தைகளுக்கும் வந்திருக்கிறது. குழந்தைகளாக இருந்தபோது அம்மா தான் எங்கள் உடை வடிவமைப்பாளர்; அம்மா கையால் தைத்த உடைகள் ஏராளம். தையல் கலையை மிக ஆர்வமாகச் செய்வாள். ஊஹும்….! நாங்கள் யாரும் இதை மட்டும் கற்கவே இல்லை. வீடு பளிச்சென்று இருக்கும். இந்த விஷயத்தில் என் அக்கா அப்படியே என் அம்மா! அம்மா நன்றாக சமைப்பாள். நான் என் அம்மாவிடம் சமையல் கற்றதே இல்லை. திருமணம் ஆனபின் முழுக்க முழுக்க என் மாமியாரிடம் தான் கற்றுக் கொண்டேன். அவரும் அம்மா தான் இல்லையா? என் அம்மாவின் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். மிகக் கோர்வையாக எழுதுவாள். அந்தக் காலத்து இன்லேண்ட் கவரில் ஒரு துளி இடம் பாக்கி விடாமல் எழுதுவாள். அம்மாவின் முத்து முத்துக் கையெழுத்து யாருக்கும் வரவில்லை. ஆனால் எனக்கு என் அம்மாவிடமிருந்து வந்த சொத்து எழுதும் திறமை தான். எத்தனை அரிய திறமை இது! நான் எழுதுவது எல்லாவற்றையும் பிரின்ட் அவுட் எடுத்து அம்மாவுக்குக் கொடுப்பேன். என் கதைகள், கட்டுரைகள் எல்லாவற்றையும் அம்மா பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாள். அம்மா நிறையப் படிப்பாள். எங்கள் நால்வருக்கும் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் அம்மாவிடமிருந்து வந்ததுதான். இப்போதும் புத்தகமும் கையுமாகத்தான் இருப்பாள். நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் ஈடுபாடு வந்தது அம்மாவால்தான். இப்பவும் பார்க்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு பாசுரத்தைச் சொல்லி ‘என்ன தமிழ் பாரு! அருவி மாதிரி என்ன ஒரு நடை பாரு!’ என்று தானும் வியந்து எங்களையும் வியப்பில் ஆழ்த்துவாள். ஒவ்வொரு முறை அம்மாவைப் பார்க்கும்போதும் அம்மா தன் டைரியை கொடுத்துப் படிக்கச் சொல்லுவாள். தான் படித்ததில் மிகவும் கவர்ந்ததை அதில் முத்து முத்துக் கையெழுத்தில் எழுதி வைத்து இருப்பாள். அம்ம்மாவின் டைரி அவளைப் பற்றிப் பேசாது; அவளது ரசனையைப் பேசும். இவை எல்லாவற்றையும் விட மிக மிக அரிய சொத்து ஆரோக்கியம். என் அம்மாவுக்கு இப்போது 84 வயது. முதுமை என்பதைத் தவிர வேறு எந்தவித தொந்திரவும் அம்மாவுக்குக் கிடையாது. ( டச் வுட்!) இந்த விஷயத்தில் நாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். தன் வேலையைத் தான் பார்த்துக் கொண்டு ஒருவருக்கு ஒரு கஷ்டம் கொடுக்காமல் இருந்து வருகிறாள். உணவு விஷயத்தில் இது கூடும் கூடாது என்பதே இல்லை அம்மாவுக்கு. மிக மிக குறைந்த அளவு தான் சாப்பிடுவாள். இரண்டு வேளை சாப்பாடு; மதியம் ரொம்ப கொஞ்சமாக சிற்றுண்டி. அம்மாவிடமிருந்து ஆரோக்கியம் தான் எங்கள் எல்லோருக்கும் வந்திருக்கிறது. அம்மா எங்களுக்குத் தந்த பெறற்கரிய சொத்து இது தான். வேறென்ன வேண்டும்? இதே ஆரோக்கியத்தை நாங்களும் எங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். நாங்கள் இப்போது இறைவனிடம் பிரார்த்திப்பது இரண்டு விஷயங்கள் தான்: இப்படியே அம்மா எந்தவித நோயும் இல்லாமல் கடைசி வரை இருக்க வேண்டும்; அம்மாவின் ஆரோக்கியம் எங்களுக்கும் வேண்டும். 5 ஹை! டீ! [] இந்தத் தலைப்பை நீங்கள் இரண்டு விதமாகப் படிக்கலாம்: High Tea, “ஹை……! டீ………..!” என்று. முதலில் “ஹை…….! டீ……!” என் அம்மாதான் நாங்கள் தேநீரை விரும்பிக் குடிக்கக் காரணம். என் அம்மா மிக அருமையாகத் தேநீர் தயாரிப்பார். அம்மாவுக்கு காலை 8¾ மணிக்கும் மாலை 5¾ மணிக்கும் தேநீர் தேவை. இன்றைக்கும் அப்படித்தான். ஒவ்வொருமுறை அம்மா தேநீர் தயாரிக்கும்போதும் நாங்கள் “ஹை……! டீ…..!” என்று வியந்துகொண்டே தான் குடிப்போம். என் குழந்தைகளுக்கு தேநீரை அறிமுகப் படுத்தியதும் என் அம்மாதான். ஒருமுறை என் அம்மா தயாரித்த தேநீரை குடித்துவிட்டு என் பெண், பிள்ளை இருவரும் அதன் ருசியில் மயங்கிப் போனார்கள். அன்றிலிருந்து இன்றுவரை அவர்கள் இருவரும் தேநீர்தான். என் கணவர் பக்கா சென்னைவாசி. அவருக்கு காப்பிதான் எப்பவுமே. நான் குழந்தைகளுடன் தேநீர், கணவருடன் காப்பி என்று அவ்வப்போது கட்சி மாறிக் கொள்ளுவேன். என் மாட்டுப்பெண்ணும் சென்னைவாசி. எங்கள் வீட்டிற்கு வந்து நன்றாக தேநீர் தயாரிக்கக் கற்றுக்கொண்டு விட்டாள். ஆனால் அவள் எங்களுடன் இன்னும் தேநீர் குடிக்க ஆரம்பிக்கவில்லை! [] காப்பி நல்லதா தேநீர் நல்லதா என்று அவ்வப்போது எங்களுக்குள் சர்ச்சை எழும். காப்பியை விட தேநீர் நல்லது என்று சொல்லுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். காரணங்கள் இதோ: சைனாவில் கிடைக்கும் ஊலாங் என்ற கருப்பு தேநீர் வயதாவதை தாமதப் படுத்துகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. புற்று நோய் மற்றும் இருதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆண்டிஆக்சிடென்ட் நிரம்பியது தேநீர். க்ரீன் தேநீர் மூட்டு வீக்கத்தை குறைத்து குருத்தெலும்பு உடையாமல் பாதுகாக்கிறது. வயதானவர்களுக்கு எலும்புகள் தேய்மானம் இல்லாமல் தடுக்க எல்லா வகையான தேநீரும் நல்லது. சாப்பிட்டபின் குளிர் பானங்களை அருந்துவது நம் உணவில் உள்ள கொழுப்புப் பொருட்களை உறைய வைத்து, இருதய நோய் ஏற்படக் காரணமாகிறது. உணவுக்குப் பின் சூடான தேநீர் குடிப்பது இந்த கொழுப்பை கரைத்து வெளியேற்றி விடுகிறது. தினமும் தேநீர் குடிப்பவர்களுக்கு கெட்ட (LDL) கொலஸ்ட்ரால் 10% குறைகிறது. எடை குறைக்க விரும்புபவர்கள் க்ரீன் தேநீர் குடிப்பதால் நாம் செலவழிக்கும் சக்தி 4% அதிகரிக்கிறது. வெகு காலமாக உங்கள் எடை ஒரே அளவில் குறையாமல் இருந்தால் க்ரீன் தேநீர் குடிப்பது நல்லது. இது எடையை நிதானமாகக் குறைக்க உதவும். தேநீர் பைகளை (Tea bags) விட தேயிலைத் தூள் நல்லது. ஒரு கோப்பை க்ரீன், ப்ளாக் தேநீரில் ஒரு கரண்டி சமைத்த கேரட், ப்ரோகோலி, கீரை இவற்றில் இருப்பதைவிட அதிக ஆண்டிஆக்சிடேன்ட் இருக்கிறது. குளிர்ந்த தேநீரை விட சூடான தேநீர் நல்லது. சர்க்கரை சேர்க்காமல் தேநீர் எப்படிக் குடிப்பது என்று தோன்றினால் தேன் சேர்த்துக்கொள்ளலாம். இல்லை என்றால் பழத் துண்டுகள் போட்டுக் குடிக்கலாம். லெமன் தேநீர் என்று தேநீர் டிகாக்ஷனில் ஒரு சில துளி எலுமிச்சைச் சாறு சேர்த்து சாப்பிடலாம். [] தேநீர் தயாரிப்பு பற்றி: பொதுவாக 2 கோப்பை தேநீர் வேண்டுமென்றால் ஒரு கோப்பை நீர் ஒரு கோப்பைப் பால் எடுத்துக் கொண்டு 2, 2½ தேக்கரண்டி தேயிலைத் தூள், 4 தேக்கரண்டி சர்க்கரை போட்டு அடுப்பில் வைத்து கொதிக்கும்போது இறக்கி வடிகட்டிக் குடிக்கலாம். தேநீருக்கு எப்போதும் சர்க்கரை அதிகம் வேண்டும். இந்தத் தேநீரில் இஞ்சி தட்டிப் போடலாம். எங்கள் அம்மா சுக்கு + மிளகு சரிபங்கு போட்டு இரண்டையும் பொடி செய்து வைத்துக் கொண்டு  தேயிலைத் தூள் போட்டவுடன் இந்தப் பொடியையும் ஒரு கால் தேக்கரண்டி போடுவார். ஜலதோஷம் வரும்போல் இருந்தால் கொதிக்கும் தேநீரில் துளசி, புதினா இலைகளைப் போடலாம். கற்பூரவள்ளி இலை கூடச் சேர்க்கலாம். ஒரு விஷயம்: இந்த இலைகளைப் போட்டு கொதிக்க வைக்கக் கூடாது. இலைகளின் சத்து போய்விடும். இப்போது எல்லா மூலிகைகளும் கலந்த தேயிலைத் தூள் கிடைக்கிறது. பால் இல்லாத தேநீர் குடிப்பது சற்று கஷ்டம்தான். எங்கள் வீட்டில் எப்போதும் பால் கலந்த தேநீர்தான். இதை எழுதி முடித்தவுடன் எப்போது அம்மா கையால் தேநீர் செய்து சாப்பிடப் போகிறேன் என்று சின்னதாக ஒரு ஏக்கம்! 6 சொந்தக் கதை நாளை எனது 60 வது பிறந்தநாள். 59 வயது முடிந்து 60 தொடங்குகிறது. இத்தனை வருடங்களில் என்ன சாதித்தேன் என்று தெரியவில்லை. பிறந்தது ஸ்ரீரங்கம் என்றாலும் படித்தது, திருமணம் ஆனது எல்லாம் சிங்காரச் சென்னையில்தான். பெங்களூர் வந்து 25 வருடம் ஆகிறது. வாழ்க்கைப் பாடங்கள் பல இங்கு வந்துதான் கற்றேன். அதைத் தவிர சங்கீதம்,  வீணை கற்றேன். கன்னடம் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டேன். கல்லூரிக்குச் செல்லவில்லை; பட்டதாரி ஆகவில்லை என்ற என் குறையை இங்கு வந்து M.A., படித்துப் போக்கிக் கொண்டேன். தும்கூரில் என் கணவரின் வேலைக்காக (GM, TVS Electronics) இரண்டு வருடங்கள் இருந்தபோது அங்கு TVS பள்ளியில் பாட்டு டீச்சர் ஆக வேலைக்குச் சேர்ந்த சமயம், இரண்டாம் வகுப்புக் குழந்தைகளுக்கு கன்னடம் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதனால் கன்னட மொழியை நன்கு கற்கும் பேறு பெற்றேன். எனக்கு எல்லாமே late take-off தான். திருமணத்திற்கு முன் ஸ்டெனோ டைப்பிஸ்ட் ஆக வேலை பார்த்தேன். திருமணத்திற்குப் பின் விட்டுவிட்டேன். 25 வருடங்கள் கழித்து தீடீரென ஒரு வேலை வாய்ப்பு! Spoken English Trainer ஆனேன். மூன்று மல்டி-நேஷனல் நிறுவனங்களின் கார்ப்பரேட் ட்ரெயினர் ஆகவும் இருந்தேன். கிட்டத்தட்ட 12 வருடங்கள் மிகவும் பிஸியாக வேலை பார்த்தேன். இப்போதும் ஒன்றிரண்டு மாணவர்கள் வருகிறார்கள். வீட்டிலேயே சொல்லிக் கொடுக்கிறேன். எனது மாணவர்களில் பல வெளிநாட்டு மாணவர்களும் அடக்கம். அதேசமயம் பத்திரிகைகளில் கதை, கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன். என் பிள்ளை இரண்டு வருடங்கள் அமெரிக்காவில் இருந்தபோது கணணி முன் உட்கார ஆரம்பித்து (அவனுடன் தினம் பேசவேண்டுமே!) கணனியில் நிறையக் கற்றுக் கொண்டேன். எனக்காக அங்கிருந்து ஒரு லேப்டாப் கணணி வாங்கி வந்தான். இப்போது அதுதான் என் ஒரே பொழுதுபோக்கு! வெளியில் சென்று வேலை பார்ப்பதைக் குறைத்துக் கொண்டு விட்டேன். அதனால் ஆன்லைனில் எழுதும் வேலை ஏதாவது கிடைக்குமா என்று தேடியதில் ஒரு இணையதளம் என் எழுத்துக்களை கைநீட்டி வரவேற்றது. அதில் எழுதி வெளியானதை எல்லாம் வோர்ட்பிரஸ்.காமில் பதிய ஆரம்பித்தேன். அதைப் படித்து விட்டு ஒருவர் அவர் நடத்தும் ஆன்லைன் தமிழ் பத்திரிகைக்கு கட்டுரைகள் எழுதி கொடுக்குமாறு சொன்னார். என் எழுத்துக்களுக்கு நல்வரவு சொன்ன திரு பிரகாஷ், திரு பிரதீப், திருமதி ஸ்ரீ வித்யா, (a2ztamilnadu) மற்றும் திரு சுகந்தன் (ஊர்.காம் ) இவர்கள் அனைவருக்கும் என் இதயம் நனைந்த நன்றிகள்! ஆரம்பத்தில் நான் எழுதி அந்தப் பத்திரிகைக்கு அனுப்பி விடுவேன். அவர்கள் அதை வெளியிடுவார்கள். இந்த மாத ஆரம்பத்தில் இருந்து எனக்கே ஒரு பயனர் பெயர், பாஸ்வோர்ட் கொடுத்து என்னையே வெளியிடவும் சொல்லி விட்டார்கள். நானே என் எழுத்துக்களை வெளியிடவும் முடியும். இதில் எனக்கு சொல்லமுடியாத ஆனந்தம்! இந்த வயதில் யாருக்கு இப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கும்? எனக்குக் கொடுத்த இந்த பொறுப்பை மிகவும் கவனமாகக் கையாளுகிறேன். பல முன்பின் தெரியாதவர்கள் என் எழுத்தைப் பாராட்டும் போது மகிழ்ச்சியுடன் பொறுப்பும் அதிகமாவதை உணருகிறேன். நான் எழுதுவதை எல்லாம் வோர்ட்பிரஸ்ஸிலும் போடுகிறேன். இதன் மூலம் பல பேரின் நட்பு கிடைத்திருக்கிறது. பல ஆங்கிலக் கட்டுரைகளை தமிழ் மொழியாக்கமும் செய்கிறேன். சில மாதங்கள்தான் ஆனாலும் என் ப்ளாகிற்கு கணிசமான வாசகர்கள் வருகை தந்து எனது எழுத்தை தினமும் படிப்பது மிகவும் மகிழ்ச்சி உரிய விஷயம். வோர்ட்பிரஸ் நண்பர்கள் திருமதி காமாட்சி, திருமதி சித்ரா சுந்தர், திரு சந்தோஷ், திருமதி கேரி ஆண்ட்ரூஸ், திருமதி மேகி ஆகியவர்களுக்கு []என் நன்றி, நன்றி, நன்றி! என் எழுத்துக்களை உடனே படித்து தனது கருத்தையும் உடனே பதிவு செய்யும் என் பத்திரிக்கை தோழி திருமதி ராதா பாலுவுக்கு என் நன்றிகள். இவரது எழுத்துக்களுக்கும் நிறைய விசிறிகள்; இருந்தும் சக எழுத்தாளரை வாயார வாழ்த்தும் இவரது குணம் மிக அரிது. பாராட்டுக்கு உரியது. பலர் படித்தாலும் சிலர்தான் கருத்துக்களைச் சொல்லுகிறார்கள். படிக்கும் அத்தனை பேரும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் எனது எழுத்தின் தரத்தை உயர்த்திக் கொள்ள உதவியாயிருக்கும். படிக்கும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி! 7 ‘அச்சு பிச்சு…..’ அவார்ட்! [image] எந்த ஒரு விருதானாலும் அதை நிறுவியவர் யார், பெறப்போகும் நபர் யார், பெறுவதற்கு என்ன தகுதி வேண்டும் என்று முதலில் தெரிய வேண்டும் இல்லையா? இந்த அச்சு பிச்சு விருதை நிறுவியது: சாட்சாத் அடியேன் தான்! பெறப் போகும் நபர் யார்? : இதுதான் இந்த விருதின் மிகப் பெரிய ஆச்சரியம்! பெறப் போகும் நபர் யார் என்று பெறுபவர்களுக்கும் தெரியாது; கொடுப்பவர்களுக்கும் தெரியாது! கடைசி நிமிடம் வரை சஸ்பென்ஸ் தான்! சரி, இதைப் பெற என்ன தகுதி? : வேறென்ன தகுதி? விருதின் பெயரிலேயே இருக்கிறதே! அச்சுப்பிச்சு என்று சமய சந்தர்ப்பம் தெரியாமல் பேச வேண்டும். அவ்வளவு தான்! நம் நாட்டின் மிக உயர்ந்த விருதுகள் போலத்தான் இந்த விருதும். என்ன, சில பல வித்தியாசங்கள்! [] பத்மா விருதுகள் வாங்கினால் பத்திரிக்கைகளில் போட்டோவுடன் செய்தி வரும். குடியரசு தினத்தை ஒட்டி வழங்கப் படும் இவ்விருதுகள் முதலிலேயே அறிவிக்கப்பட்டுவிடும். ஜனாதிபதி அவர்கள் எல்லோர் முன்னிலையிலும் விருதுகளை வழங்குவார்.. நாடு முழுவதும் அவர்களைப் பாராட்டும். ஆனால் நான் கொடுக்கும் இந்த விருதுகள் யாருக்கு எப்போது கிடைக்கும் என்றே தெரியாது(!). யாருக்குக் கொடுக்கப் போகிறேன் என்று கடைசி நிமிடம் வரை எனக்கும் தெரியாது (!!) அதைவிட அதிசயம் என்ன தெரியுமோ? அதைப் பெற்றுக் கொண்டவர்களுக்குத் தெரியவே தெரியாது(!!!) ‘நீ சரியான அச்சுப்பிச்சு’ என்று யாரிடமாவது நேரடியாக சொல்ல முடியுமா? இன்னொரு சிறப்பு ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் பெறலாம். இப்போது ஓரளவுக்கு  இந்த விருது பற்றிப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்த விருதை நான் நிறுவியிருந்தாலும், யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கொடுக்கலாம். உலகளாவிய விருது இது. இந்தக் கட்டுரையைப் படிக்கும் அத்தனை பேருக்கும் இந்த உரிமை உண்டு! இதுவே இந்த விருதின் மற்றொரு சிறப்பு! முதன்முதலாக இந்த விருது யாருக்குக் கிடைத்தது? முதன்முதலாக இந்த விருதைப் பெற்ற பாக்கியசாலியும் அடியேன் தான். (அதனால்தானோ என்னவோ, ‘யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்று இப்போது எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்). இதைப் பெற்ற பின் தான் இதன் மகத்துவம் புரிந்து இதனை அதிகார பூர்வமான விருதாக அறிவித்து இப்போது மற்றவர்களுக்கும் இதை ஆசை ஆசையாய் வழங்கிக் கொண்டிருக்கிறேன். இதனைப் பலமுறை பெறும் பாக்கியம் எங்கள் பக்கத்தாத்து மாமிக்குத் தான்! ‘அச்சுபிச்சு மாமி’ (சுருக்கமாக AP மாமி) என்றே அவருக்குப் பெயர் வைத்து விட்டோம். (அந்த மாமிக்கு இது தெரியாது!) சரி நான் எப்போது பெற்றேன் என்று சொல்லுகிறேன். நான் ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்த சமயம் அது. (மிகச் சின்ன வயதிலேயே விருது வாங்கியிருக்கேனாக்கும்!) எங்கள் சொந்தக்காரர் வீட்டுக் கல்யாணம். பாட்டுப் பாடச் சொன்னார்கள். உடனே ‘எடுத்து வுட்டேன் பாருங்கள் ஒரு பாட்டு!’. பாடி முடித்தவுடன் ‘பின்-டிராப்’ சைலன்ஸ்! ஓ, எல்லோரும் என் பாட்டு என்கிற  நாத வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். சிறிது நேரம் கழித்து என் மாமா என்னிடம் வந்து “குய்யோ முறையோன்னு ரொம்ப நன்னா பாடிட்டேயே! சரியான அச்சுபிச்சு” என்றார். என்ன சொல்கிறார் என்று யோசித்தேன். சட்டென்று எனக்குள் ஒரு பல்ப்! (ட்யூப் லைட்!) நிஜமாகவே ரொம்ப அருமையான பாட்டுதான்; பைரவி ராகத்தில் முருகனைப் பற்றிய பாடல். ‘துதி செய்திடு மனமே – உந்தன் தொந்த வினைகள் சிந்திட நீ’ என்று தொடங்கும் பாடல். சரணத்தில் ‘காமமாதி குணங்கள் மாய, கருத்தை உருக்கும் பிணிகள் ஓய, கருதிக் கருதி ஐயோ வென்று கண்விழி நீர் பாய……..’ என்று வரும். ‘ச்சே! புதிதாக வாழ்க்கைத் தொடங்கும் இளம் தம்பதிகளுக்கு எப்படி இருந்திருக்கும்’ என்று மாமா வைததிலிருந்து என் தவறை உணர்ந்து கொண்டேன். மானசீகமாக மன்னிப்பும் கேட்டுக் கொண்டேன். சமயா சந்தர்ப்பம் தெரியாமல் பேச மட்டுமல்ல; பாடவும் கூடாது என்று ஒரு பாடம் கற்றேன் அன்று. ஆகவே இந்தக் கட்டுரையை வாசிக்கும் வாசகர்களே! இந்த ஈடு இணையில்லாத விருதை ‘கொடுங்க, கொடுங்க, கொடுத்துக் கிட்டே இருங்க’, ‘கொடுங்க, வாங்குங்க கொடுத்து வாங்கி மகிழுங்க!’ 8 குடும்ப டாக்டர்! []உலகத்தில் இருக்கும் டாக்டர்கள் அனைவருக்கும் டாக்டர் தின வாழ்த்துக்கள் டாக்டர் என்றவுடன் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது டாக்டர் ரிஷி தான். அந்த காலத்து டாக்டர். அவரது முழுப் பெயர் டாக்டர் சப்த ரிஷி. எங்கள் இளமைக்கால நோய் நொடிகளை நொடிப்பொழுதில் விரட்டி அடித்த டாக்டர் இவர். வெகு உற்சாகமாகப் பேசுவார். பேசியே நோய்களைப் போக்கிவிடுவார் என்று அம்மா சொல்லுவார். ஜுரம் என்று போனால் இரண்டு மாத்திரைகளை எடுத்து – குட்டியாக ஒரு குழிந்த உரல்,  குட்டியான உலக்கை வைத்திருப்பார் – (pestle & mortar.)அதில் போட்டு ‘டக்..டக்..’ என்று பொடி செய்து அதை 6 ஆகப் பிரித்து ஆறு பொட்டலம் பண்ணிக் கொடுப்பார். பிறகு மிக்ஸர் என்று ஒரு திரவம் தயார் செய்வார். எங்களது நோயைப் பொறுத்து இந்த மிக்ஸரின் கலர் – சிகப்பு, மஞ்சள் கலந்த சிகப்பு, மரூன் என்று மாறும். வயிறு சரியில்லை என்றால் வெள்ளைக் கலரில் சற்று கெட்டியான திரவம். []அவரிடம் போகும்போது நாமே ஒரு பாட்டில் எடுத்துப் போகவேண்டும். அதில் மிக்ஸரை ஊற்றி, ஒரு சிறிய காகிதத்தை நான்காக மடித்து அதன் நான்கு மூலையிலும் கொஞ்சமே கொஞ்சம் கத்தரித்து அதை பிரித்து பாட்டிலில் ஒட்டி விடுவார். அதுதான் அளவுகோல். ‘இரண்டு நாளைக்குக் குடுங்கோ, சரியாயிடும்’ என்பார். சரியாகிவிடும்! ஜுரம் வந்தால்தான் அவரிடம் போவோம் என்பதில்லை; எங்கள் வீட்டு நவராத்திரி கொலுவுக்கு கூப்பிடவும் போவோம். ‘டாக்டர் மாமி’ வந்து தாம்பூலம் வாங்கிக்கொண்டு போவார். எங்கள் ‘குடும்ப டாக்டர்!’ நாங்கள் திருவல்லிக்கேணியிலிருந்து புரசைவாக்கம் வந்தவுடன், டாக்டர் ஆச்சார்யா எங்கள் குடும்ப டாக்டர் ஆனார். டாக்டர் ரிஷி போல நவராத்திரிக்கு வந்து போகும் அளவுக்கு நெருக்கம் இல்லையென்றாலும், எந்த நோயானாலும் அவர்தான். அவரது 4 பிள்ளைகளும் டாக்டர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லுனர்கள். 4 பேருமே காலையில் அப்பாவுடன் சேர்ந்து நோயாளிகளைப் பார்ப்பார்கள். இங்கே மருந்து கொடுக்க தனியாக கம்பௌண்டர் உண்டு. (நெற்றியில் ‘பளிச்’ என்று ஸ்ரீசூர்ணத்துடன் கம்பீரமாக உட்கார்ந்திருப்பார்) மாத்திரையை பொடி செய்யாமல் மாத்திரையாகவே கொடுத்துவிடுவார் கம்பௌண்டர் மாமா. மாற்றமில்லாத அதே மிக்ஸர் தான். ஆச்சார்யா டாக்டரிடம் கூட்டம் அலை மோதும். ‘first come first served’ எத்தனை பேர் இருந்தாலும் கடைசி நோயாளி வரை அதே பொறுமை, அதே நிதானம் தான். மருந்துக்கு மட்டும்தான் காசு. []சமீபத்தில் என் பிள்ளைக்கு ஒரு சின்ன தொந்திரவு. பக்கத்தில் இருக்கும் பெரிய மருத்துவமனைக்குப் போனோம். ஒரு வாரம் மருந்துகள் சாப்பிட்டும் சரியாகவில்லை. ‘சர்ஜனைப் போய் பாருங்கள்’ என்றார் அங்கிருந்த டாக்டர். கொஞ்சம் பயந்துபோய் விட்டோம். ‘குடும்ப டாக்டர்’ யாருமில்லையே என்று மிகவும் வருத்தப்பட்டேன். சட்டென்று நினைவுக்கு வந்தார் டாக்டர் சிவராமையா. என் கணவருக்கு 2 அறுவை சிகிச்சைகள் செய்தவர் இவர். உடனே தொலைபேசினேன். “ஒரு அறுவை சிகிச்சை இருக்கிறது. நான் வருவதற்கு தாமதம் ஆகும். பரவாயில்லையா?” என்றார். பரவாயில்லை என்று சொல்லிவிட்டு மருத்துவ மனைக்குப் போய் காத்துக்கொண்டு இருந்தோம். எங்களுக்கு முன்னால் 8 பேர்கள் இருந்தனர். எங்கள் முறை வந்தபோது இரவு 11 மணி. டாக்டர் சிவராமையாவைப் பார்த்து சுமார் 5, 6 வருடங்கள் இருக்கும். நினைவு இருக்குமோ இல்லையோ என்று மனதிற்குள் ஒரு சின்ன சந்தேகம். என்னைப் பார்த்தவுடன் “ரஜனி, தஞ்சாவூர், என்று நீ ஏன் சொல்லவில்லை. நான் யாரோ என்று நினைத்து விட்டேன்” என்று வெகு உற்சாகத்துடன் என்னை வரவேற்றார். என் கணவரின் உடல் நலம் பற்றி மிகுந்த அக்கறையுடன் விசாரித்தார்.அந்த பேச்சிலேயே எங்கள் கவலை பாதி குறைந்துவிட்டது. என் பிள்ளையை பார்த்தார். “ஒன்றுமே இல்லம்மா, வெறும் ஸ்கின் இன்ஃபெக்ஷன் தான். என் நண்பர் டாக்டர் சுதீந்திரா வைப் போய் பார்.” என்று அவருக்கு ஒரு கடிதமும் அவரது தொலைபேசி எண்ணும் கொடுத்தார். பீஸ் வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார். “நான் ஒன்றுமே பண்ண வில்லையே; என் நண்பரிடம் அனுப்புகிறேன். அவ்வளவு தான்!” மறுபடியும் எனக்கு ஒரு ‘குடும்ப டாக்டர்’ கிடைத்து விட்டார்! 9 திரு ரா. கி. ரங்கராஜன் [] எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். இவரது கதைகள் நிறையப் படித்திருக்கிறேன். இவர் 18 ஆம் தேதி ஆசார்யன் திருவடி அடைந்தார் என்ற செய்தி கிடைத்து துக்கத்தில் ஆழ்ந்து இருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ் வாசகர்களில் நானும் ஒருவள். பல ஆங்கில நாவல்களை தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார். ‘பாப்பிலான்’ புத்தகத்தை ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன். அதன் பிறகு நீண்ட நாட்கள் கழித்து ரா. கி. அவர்கள் அதை தமிழில் எழுதினர். பொதுவாக மூலம் நன்றாக இருந்தால் மொழிபெயர்ப்பு நம்மை ஈர்க்காது.  ‘பட்டாம்பூச்சி’ என்ற இவரது புத்தகம் மூலக் கதையில் இருந்த  அதே விறுவிறுப்புடன் அமைந்திருந்தது. திரு கல்கி போலவே பல்திறமை உள்ளவர். பலபல புனைப்பெயரில் பலவிதமான கதைகளை எழுதுவதில் வல்லவர். சூர்யா என்ற பெயரில் நல்ல நல்ல சிறுகதைகளையும், கிருஷ்ணகுமார் என்ற பெயரில் திகில் கதைகளும் எழுதி இருக்கிறார். அவிட்டம் என்ற பெயரில் நையாண்டிக் கவிதைகள் எழுதுவார். டி. துரைசுவாமி என்ற பெயரில் துப்பறியும் கதை, மாலதி என்ற பெயரிலும் கதைகள் எழுதுவார். மழலைகளுக்காக ‘முள்ரி’ யாக மாறியவர். ‘லைட்ஸ் ஆன்’ என்ற தலைப்பில் சினிமா பற்றிய செய்திகளை வினோத் என்ற புனைப்பெயரில் எழுதி வந்தார். எங்கள் வீட்டில் எல்லோருக்குமே ‘லைட்ஸ் ஆன்’ பகுதி பிடிக்கும். ஒவ்வொரு செய்தி முடிந்த பின்னும் ஆங்கிலத்தில் வெகு அருமையாக அந்த செய்திக்கு ஒரு முத்தாய்ப்பு வைப்பது போல ஒரு வாக்கியம் போடுவார். எனக்கு நினைவு இருக்கும் ஒரு வாக்கியம்:– “தளபதி படத்தின் பிரிவியு அன்று வந்த கூட்டத்தில் மணிரத்தினத்தை எங்கேயும் காணோம். அவருக்கு  Two is company, three is crowd”. என்று எழுதியிருந்தார். அவர் அதைபோல எழுதும் வாக்கியங்களை ரசிப்பதுடன் நிற்காமல் எனது நாட்குறிப்புப் புத்தகத்திலும் எழுதி வைத்துக் கொள்ளுவேன். ஒருமுறை ‘வினோத்’ என்ற பெயரில் நீங்கள் எழுதுவது எனக்கும் என் பெண்ணிற்கும்  மிகவும் பிடித்திருக்கிறது என்று அவரைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதினேன். அவரிடமிருந்து பதிலை நான் எதிர்பார்க்கவேயில்லை. ‘கண்ணில் காடராக்ட் ஆபரேஷன் செய்து கொண்டிருந்ததால் உடனே பதில் எழுத முடியவில்லை, தவறாக என்ன வேண்டாம்’  என்று எழுதியிருந்தார். அவர் வெற்றி பெற்ற மாபெரும் எழுத்தாளர் ஆக இருப்பதன் ரகசியம் இந்த வரிகளில் எனக்குப் புரிந்தது. இதோ அவரது வார்த்தைகளை அவரது கடிதத்தில் இருந்து அப்படியே கொடுக்கிறேன். ‘முப்பது, நாற்பது வருடங்களுக்கு முன்பு காஸா சுப்ப ராவ் என்ற பிரபலமான பத்திரிக்கையாளர் இருந்தார். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் அரசியல் கட்டுரைகள் எழுதுவார். (ஆசிரியராகவும் இருந்ததாக நினைவு) ராஜாஜி நடத்திய ‘ஸ்வராஜ்யா’ பத்திரிகையில் ஆசிரியராக இருந்தார். அதில் SOTTO VOCE என்கிற பகுதியில், சின்னச்சின்ன அரசியல் விமரிசனங்கள் எழுதி வந்தார். அதை எழுதியவரின் பெயரை ‘சாகா’ என்று போட்டுக் கொண்டார்.  SOTTO VOCE  கட்டுரைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வந்தது. அதன் அட்டையில் ராஜாஜியின் வாசகத்தை வெளியிட்டிருந்தார்கள். அதாவது, ‘Kasa  is at his best when he writes as saka’ என்று ராஜாஜி குறிப்பிட்டு இருந்தார். காஸா சுப்ப ராவுக்கு அந்தப் பாராட்டு எப்படி இருந்திருக்குமோ தெரியாது. ஆனால் ரா.கி. ரங்கராஜன் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான கதைகள் எழுதி இருந்தாலும், ‘வினோத்’ என்கிற கட்டுரையாளன் தான் அதிகப் பெயரை  தட்டிக் கொண்டு போகிறான் என்பதை நினைக்க வேடிக்கையாக இருக்கிறது’. ‘நீங்களும் உங்கள் பெண்ணும் என்னை மனதார – அளவுக்கு மீறிக் கூடப் -பாராட்டி இருக்கிறீர்கள். மகிழ்ச்சி. நன்றி’. ஆசிகளுடன் ரா .கி. ரங்கராஜன்’ என்று கடிதத்தை முடித்திருந்தார். குமுதத்தில் வரும் ‘அரசு’ பதிலில் நடுவில் இருக்கும் ‘ர’ இவர் தான் என்று சொல்லுவார்கள்.  குமுதத்தில் எ.க.எ. (எப்படிக் கதை எழுதுவது) என்று பல வாரங்களுக்கு எழுதி வந்தார். அவரது ஆசியும், அவரது எ.க.எ. வும் தான்  என்எழுத்தின் பின்புலத்தில் இருக்கிறது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் நினைத்துக் கொள்ளுகிறேன். இந்தப் பதிவின் மூலம் ரா.கி. ரங்கராஜன் என்ற எழுத்தாளருக்கு, எழுதுவதில் சகலகலாவல்லவருக்கு, ஒரு மிகச்சிறந்த மனிதருக்கு என் அஞ்சலியை செலுத்துகிறேன். 10 கனவெல்லாம் குப்பை! [] அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி! வழக்கம்போல் உலகம் முழுக்க பொழுது புலர்ந்தாலும்….எங்களுக்கு – பெங்களூரு வாசிகளுக்கு வேறு விதமாக விடியல் தொடங்கியது. “இந்தக் குப்பையை எந்த குப்பைக் கூடைல போடறது?” “வெட்டா? (wet) ட்ரையா? (dry)” “ட்ரைல ரெண்டு மூணு வகை இருக்கு…பாத்துப் போடு…..!” எதில் போடுவது என்று தெரியாமல் நானும் என் மாட்டுப் பெண்ணும் கையில் ஆளுக்கொரு ‘குப்பை’ யை வைத்துக் கொண்டு ‘திரு திரு’ வென்று நின்று கொண்டிருதோம். என் கணவர் கையில் ‘டெக்கான் ஹெரால்ட்’ உடன். ஒவ்வொன்றாகப் படித்துப் படித்துச் சொல்லிக் கொண்டிருந்தார். “காய்கறி, பழத்தோல், இதெல்லாம் ‘வெட்’. …..” “புளிச்சக்கை……?” நான் கையில் புளிச்சக்கையுடன் கேட்டேன். பாதி சமையல் நடந்து கொண்டிருந்தது. பிள்ளையும், மாட்டுப் பெண்ணும் அலுவலகம் கிளம்ப வேண்டுமே! பொதுவாக சமையல் அறையில் ஒரு குப்பைத் தொட்டி. (ஆங்கிலத்தில் அழகாக டீசண்டாக ‘Waste basket’!) ஒவ்வொரு குளியலறையிலும் ஒவ்வொன்று. எப்போது எங்கு எது சௌகரியமோ நாங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து ஒவ்வொரு குப்பைத்தொட்டியையும் பயன்படுத்துவோம். என்னுடைய ஆரோக்கியத்திற்காக கணவரும், பிள்ளையும் நின்ற, உட்கார்ந்த  இடத்திலிருந்தே குப்பைத் தொட்டியை நோக்கி வாழைப் பழத்தோலை அவ்வப்போது எறிவதும் உண்டு. கொஞ்சம் குனிந்து, நிமிர்ந்தால் உடம்புக்கு நல்லது – எனக்கு மட்டும்! கீழே குறி தப்பி விழும் குப்பையை நான்தான் குனிந்து எடுத்துப் போட வேண்டும்! இரண்டு மூன்று நாட்களாக பெங்களூரே அல்லலோல கல்லோலம்! அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து குப்பைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு வைக்கப்பட வேண்டும். எல்லாவற்றையும் குண்டு கட்டாகக் கட்டி குப்பை வண்டியில் – பாதி –  கீழே மீதி! –  போடக் கூடாது என்று பெங்களூரு மஹா நகர பாலிகே ( நம்மூரு நகரசபை தாங்க!) கண்டிப்பாக உத்தரவு போட்டிருக்கிறது. பெங்களூரு வாசிகளான நாங்கள் ‘என்னடா இது? நம்மூருக்கு வந்த சோதனை?’ என்று செய்வதறியாமல் உட்கார்ந்திருந்தோம். காலையில் வேலைக்காரி வந்தாள். வழக்கம் போலக் குப்பை கூடையை எடுக்கப் போனவளைப் பார்த்துப் பதறினேன். “தொடாதே!, தொடாதே….!” பயந்து பின் வாங்கினாள். “ஏம்மா….! குப்பை கொட்ட வேண்டாமா….?” “வேணாம், வேணாம், அது…..வெட் குப்பை, ட்ரை குப்பைன்னு தனித் தனியா பிரிச்சு போடணுமாம், இன்னியிலேருந்து…!” “அப்டீன்னா?” கணவர் திரும்ப டெக்கன் ஹெரால்ட் தினசரியைப் பிரிக்க, நான் அவசரமாக அவளிடம், “நீ குப்பை கொட்ட வேண்டாம்…..” “நீயே குப்பைக் கொட்டிக்கீறீயா….. அப்பால….?” என்று கேட்டவாறே கையை வீசிக் கொண்டு  வெளியேறினாள் ‘நைட்டி லச்சுமி’. இந்தக் காலத்து இல்லத்தரசிகளின் ‘தேசீய உடை’ யான நைட்டியை இவளும் அணிந்து வருவதால் அவளுக்கு நாங்கள் வைத்த செல்லப் பெயர் ‘நைட்டி லச்சுமி’. அக்டோபர் 2 ஆம் தேதி. வீடு முழுக்க குப்பை இறைந்து கிடப்பதைபோல இரவெல்லாம் கனவு. ‘கனவெல்லாம் குப்பை’ – ன்னு ஒரு பதிவு எழுது’ என்று என் மனம் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் கொக்கரித்தது! வீட்டில் தலைக்கு மேல் குப்பை. என்ன செய்வது? சே! சே! என்னையும் அறியாமல் தலையை தட்டி விட்டுக் கொண்டேன். தொலைகாட்சியில் மூழ்கி இருந்த என்னவர் என்னைத் திரும்பிப் பார்ப்பதை ‘கண்டும் காணாமல்’ இருந்தேன். வாசலில் காலிங் பெல். எங்கள் அபார்ட்மெண்ட் பராமரிப்பு செய்யும் கௌடா. “ஸார்! இன்னிக்கு ‘குப்பை மீட்டிங்’ 11 மணிக்கு. கட்டாயமா வந்துடுங்க”. “ஒருத்தருக்கும் ஒண்ணும் புரியாது பாரு…நான்தான் போயி……” என்றவாறே ஒரு புது உற்சாகத்துடன் ‘குப்பை மீட்டிங்’ கிற்கு தயாரானார் என் கணவர். ‘ஏதாவது ஒரு வழி பிறந்தால் தேவலை….’ என்ற என்னை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டே என் மாட்டுப் பெண் “நீங்க ஏம்மா இதுக்குப் போயி இத்தனை டென்ஷன் ஆறேள்?” என்றாள். என் கவலை யாருக்குத் தெரியும் (புரியும்?) அடுத்த வாரம் வலைச்சரம் ஆசிரியர். அதற்காக பதிவுகளை பொறுக்கிக்… சே! குப்பைதான் மனம் முழுக்க…..(இந்தத் தலைப்புக் கூட நன்றாக இருக்கிறது – மனம்!) சாரி, சாரி, தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறேன். என் கணவர் மறக்காமல்(!) டெக்கான் ஹெரால்ட் தினசரியை எடுத்துக் கொண்டு மீட்டிங்குக்குச் சென்றார். அவர் வந்தவுடன் பாய்ந்தேன்: ‘என்னாச்சு…?’ “வெட் குப்பை, ட்ரை குப்பை ன்னு தனித்தனியா……” “அதான் தெரியுமே…!” “ரெண்டு மூணு குப்பைத்தொட்டி வச்சிக்கணும்…” “அதான் தெரியுமே…!” “வீட்டுக் வீடு …..” “குப்பைதான்….” கணவர் கோபமாக முறைக்க மௌனித்தேன். “….ரொம்ப தமாஷு…….. மாடி வீட்டு ஏ.கே. குமார் சொல்றான், ஒவ்வொரு வீட்டுக்கும் போய்  யாராவது தினமும் குப்பையை கலெக்ட் பண்ணனும். ஒரு வீட்டுக்கு தினம் நூறு ரூபா கொடுத்துடலாம்-ன்னு! நான் சொன்னேன்: நானே கலெக்ட் பண்றேன். 40 வீடு இருக்கு. தினம் 4000 ரூபா! வருடத்துக்கு…… 1,20,000!…..சாப்ட்வேர் என்ஜினீயர் விட அதிகம் கிடைக்கும்…நான் இப்படி சொன்னவுடனேதான் அவனுக்கு புரிஞ்சுது. நீ சரியாதான் பெயர் வச்சிருக்கே அறிவு கெட்ட குமார்-ன்னு!” அபூர்வமாக என் கணவர் என்னைப் பாராட்டுவது கூட ரசிக்கவில்லை எனக்கு. சே! என்னோட பிரச்சினை தீரவே இல்லை. சேர்ந்திருக்கும் குப்பையை என்ன செய்வது? இன்றும் கனவெல்லாம் குப்பைதானா? யோசித்து யோசித்து எனக்கே இந்தத் தலைப்புல பதிவு போடலாம்னு தோன்ற ஆரம்பித்து விட்டது. “குப்பை விஷயம் சொல்லுங்கோ….” பொறுமை போயே விட்டது எனக்கு. “சானிடரி நாப்கின்ஸ், பாப்பாவோட டயபர்ஸ் எல்லாம் பேப்பர்ல சுத்தி சிவப்பு கலர் பேனாவுல பெருக்கல் குறி போட்டு தனியா வைக்கணுமாம். இப்போ மார்க்கர் பேனா வேற வாங்கணும்….!” “காலைல லாரி வரும்…..செக்யூரிட்டி விசில் அடிச்ச ஒடனே குப்பையைப் போய் போட வேண்டும்…..” இன்று காலையில் எழுந்ததிலிருந்து விசில் சத்தம் வருகிறதா என்றே பார்த்துக் கொண்டிருந்தேன். ஊஹூம்! ஒரு சமயம் நானே விசில் அடிக்கலாமானு கூட யோசித்தேன். லாரி வரணுமே! பாதி சமையல் ஆகிக்கொண்டு இருந்தது. வாசலில் என்னவோ பேச்சு சத்தம். எட்டிப் பார்த்தேன். தினமும் குப்பை அள்ளும் வண்டி! “கௌடா! கசா தகோண்ட் பர்லா?” (குப்பையை எடுத்துக்கொண்டு வரட்டுமா?) “பன்னி…பன்னி…(banni, banni) – வாங்க வாங்க…” அத்தனை குப்பை தொட்டிகளையும் தூக்கிக் கொண்டு ஓடினேன். “இது வெட், இது ட்ரை….” ஆரம்பித்த என்னை “இன்னிக்கு எல்லாவற்றையும் ஒண்ணா போடுங்க…..” என்ற குரல் அடக்கியது. மாற்றங்களை ஏற்பது எத்தனை கஷ்டம்! பி.கு. குப்பை கொட்டிய சந்தோஷத்தில் என் மனம் சொன்ன தலைப்பிலேயே பதிவும் எழுதிவிட்டேன்! 11 வம்பு வேணுமா உமா? எனது 250 வது பதிவு இது! என்பதை அடக்கத்துடன் சொல்லிகொள்ளுகிறேன். [] இப்போதெல்லாம் மாலை வேளை ஒரு புதிய பரிமாணம் அடைந்திருக்கிறது. தோழிகளுடன் அரட்டை அடித்துக் கொண்டே நடந்து யோகா வகுப்புக்குப் போவது ஒரு மணி நேர யோகா பயிற்சிக்குப் பிறகு மறுபடி அரட்டை அடித்துக் கொண்டே திரும்பி வருவது. நடை  பயிற்சியும் ஆயிற்று; யோகாவும் ஆயிற்று. நான் எனது மொழிப்புலமை பற்றி எழுதி இருந்தேன். நமக்கு நம் தாய் மொழி மிகவும் சுலபம். எனது யோகா வகுப்பில் எனக்கு இரண்டு தோழிகள். சுகன்யா, ஜோதி. சுகன்யாவின் தோழி உமா சிவஸ்வாமி. எனக்குத் தோழி சுகன்யா; சுகன்யாவின் தோழி உமா; அதனால் நானும் உமாவும் தோழிகள். (அட, அட, என்ன ஒரு லாஜிக்!) மூவரும் கர்நாடகாவில் பிறந்து திருமணம் ஆன பின் தமிழ் நாட்டில் குடியேறி, தற்சமயம் தாய் மாநிலத்துக்கே திரும்பி வந்தவர்கள். நான் ஒருநாள் என் ‘பாப்பா’ அனுபவத்தை சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது உமா தன் அனுபவத்தை சொன்னார்: ‘திருமணம் ஆகிப் போன இடம் அம்பா சமுத்திரம். திருநெல்வேலி! அங்கு பேசும் தமிழ் சென்னை வாசிகளுக்கே புரியாது. போன புதிதில் பக்கத்து வீட்டு மாமியுடன் பேசிக்கொண்டு இருந்தேன் எனக்குத் தெரிந்த அரைகுறை தமிழில். மாமி பேசுவதும் அரைகுறையாகத்தான் புரியும். யாரையோ பற்றி பேசிக்கொண்டு இருந்த மாமி கேட்டார்: ‘நமக்கெதுக்கு வம்பு? உனக்கு வம்பு வேணுமா உமா?’ எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘என் வீட்டுக்காரரைக் கேட்டுச் சொல்லுகிறேன்’, என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தேன். வேலையிலிருந்து வீடு திரும்பியவரிடம், ‘ பக்கத்து வீட்டு மாமி கேட்கிறார் வம்பு வேண்டுமா என்று என்ன சொல்ல?’ எனது கணவர் பல வருடங்களாக தமிழ் நாட்டில் இருந்தவர். நன்றாக தமிழ் வரும். என்னை பார்த்தவர், ‘ ‘சீப்’ ஆக இருந்தால் இரண்டு வாங்கிக் கொள்’ என்றார். நானும் அடுத்த நாள் மாமியிடம் போய் ‘சீப்’ ஆக இருந்தால் இரண்டு வாங்கிக் கொள்ளச் சொன்னார் என் வீட்டுக்காரர்’ என்று சொல்ல மாமி என் கன்னத்தை இரண்டு கைகளாலும் அழுத்தி திருஷ்டி கழித்து, ‘எத்தனை சமத்துடி நீ பொண்ணே!’ என்று சொல்லியபடியே சிரிக்க ஆரம்பித்துவிட்டார். உமா சொல்லி முடிக்கவும், உமாவுடன் சேர்ந்து அந்த தெருவே அதிருகிறாப்போல நாங்கள் சிரித்தோம். ‘இன்னிக்கு சிரிக்கிறேன். அன்னிக்கி என்னடாது மொழி தெரியாத ஊர்ல எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று ஒரு சின்ன பயம் இருந்தது’. என்றார் உமா. இங்கு வந்த புதிதில் ஒரு பெண்மணி என்னிடம், ‘எஷ்டு மக்களு?’ என்றபோது கொஞ்சம் கோவமாக ‘மக்களு?!’ என்றேன். என்ன நம்மைப் பார்த்து எவ்வளவு மக்கள் என்கிறாளே, ஆசைக்கு ஒன்று, ஆஸ்திக்கு ஒன்று என்று இரண்டுதானே என்று கோவம். பிறகுதான் தெரிந்தது மக்கள் என்றால் குழந்தைகள் என்று! எனது வகுப்பில் ஒரு இளைஞர் முதல் நாள் வந்திருந்தார். நான் அவரிடம் ‘பெயர் என்ன?’ என்றேன். ‘கணேசன்’ ‘எங்கிருந்து வருகிறீர்கள்?’ ‘பனசங்கரி’ அடுத்த நிமிடம் மற்ற மாணவர்கள் ‘மேடம் தமிளு!’ என்றார்கள். உண்மையில் எனக்கு இங்கு வந்தபின் தான் உச்சரிப்பில் நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மகாபாரதம் (magabaradham!) महाभारथम  ஆகி இருக்கிறது. எனக்கு வீட்டு வேலை செய்யும் சுதா தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மராட்டி என்று பல மொழிகள் பேசுவாள். ஒரு நாள் என்னிடம் வந்து ‘அம்மா பாங்கு – ல அக்கவுண்ட் ஆரம்பிக்கணும். சுதா – ன்னு  எழுத சொல்லிக் கொடுங்க என்றாள். ஆங்கிலத்தில் எழுத விரும்பிகிறாள் போலிருக்கிறது என்று நினைத்து நீ கன்னடாவிலேயே கையெழுத்துப் போடலாம் சுதா’, என்றேன். ‘எனக்கு ஒரு மொழியும் எழுத வராதும்மா’ என்ற அவள் சொன்ன போது  அசந்து விட்டேன். ‘இத்தனை மொழிகள் பேசுகிறாயே?’ என்றபோது ‘நான் வீட்டு வேலை செய்யும் வீடுகளில் பேசும் மொழிகள் எல்லாம் எனக்கு பேச வரும்மா. ஆனா எழுத படிக்க ஒரு மொழியும் தெரியாது’ என்றாள். ‘நீங்க மட்டும் என்னோட கூட இங்கிலீஷ்ல தினம் பேசினீங்கன்னா அதையும் பேசுவேன்….!’ சுதாவுக்கு இருக்கும் தன்னம்பிக்கை படித்த நம் இளைஞர்களுக்கு ஏன் இல்லை? 12 ரமாவும் ரஞ்ஜனியும்! ரஞ்ஜனியை எல்லோருக்கும் தெரியும். அதாங்க, அ. உ. பு. பதிவாளர். ரமா யார்? அ. உ. பு. பதிவாளர் ரஞ்ஜனியின் அக்கா. என்னைவிட 3 வயது மூத்தவள். என்னைவிட புத்திசாலி. எல்லாவிதத்திலும் என்னைவிட சிறந்தவள். மிக நன்றாகப் பாடுவாள். சின்ன வயதில் அவளுடன் நான் எப்பவுமே எல்லாவற்றிற்கும் போட்டி போடுவேன். அவள் திருமணம் ஆகிப் போகும் வரையிலும் இது தொடர்ந்தது. கோலம் போடுவதில் வல்லவள். புள்ளிக் கோலங்கள் அனாயாசமாகப் போடுவாள். எனக்கு வராத பல கலைகளில் இதுவும் ஒன்று. நான் போடும் கோலங்கள் மாடர்ன் ஆர்ட் வகையை சார்ந்தவை. மிகுந்த பொறுமையுடன் புள்ளிகள் வைத்து அவள் கோலத்தை போடுவதைப் காணக் கண் கோடி வேண்டும். ‘நீ புள்ளி வைத்துப் போடும் கோலத்தை நான் புள்ளி இல்லாமலேயே போடுவேன்’ என்று பல தடவை சவால் விட்டு தோற்றவள் நான். வெள்ளிக்கிழமைகளில் வீட்டை நன்கு பெருக்கி, துடைத்து  கூடத்தை அடைத்துக் கோலம் போடுவாள், பாருங்கள்! கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல இருக்கும். கோலத்திற்கு அடுத்தபடியாக இப்போது அவள் விரும்பிச் செய்வது ஸ்ரீரங்கம் போய் நம்பெருமாளை சேவிப்பது. திருமணம் ஆவதற்கு முன் சுருக்கெழுத்து. வானொலியில் வரும் ஆங்கில செய்திகளை கேட்டு சுருக்கெழுத்தில்  எழுதிக் கொண்டே இருப்பாள். சுருக்கெழுத்தில், சுருக்கெழுத்தாளர் எழுதும் ஸ்ட்ரோக்ஸ் (strokes) ரொம்ப முக்கியம். அதை வைத்துதான் எழுதிய விஷயத்தை ஆங்கிலத்தில் transcribe செய்ய வேண்டும். அக்காவின் ஸ்ட்ரோக்ஸ் perfect ஆக இருக்கும். நான் எப்போதும் போல ‘சமாளி’ தான்! அவளுக்குத் திருமணம் ஆகி குழந்தை பிறந்தது எனக்கு இன்னும் நன்றாக நினைவு இருக்கிறது. ஆபீஸிற்கு அப்பா போன் செய்திருந்தார். ‘அக்காவை மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறோம். முடிந்தால் லீவு சொல்லி விட்டு வா’ என்று. எனக்கு ஆபீஸ் போவதை விட லீவு போடுவது பிடித்தமான விஷயம் ஆயிற்றே! உடனே லீவு சொல்லிவிட்டுப் பறந்தேன். இன்னும் குழந்தை பிறந்திருக்கவில்லை. அம்மா அப்போதுதான் அக்காவிற்கு காபி கலந்து எடுத்துப் போகலாம் என்று வீட்டிற்கு வந்திருந்தாள். ‘கொஞ்சம் போய் அவள் பக்கத்தில் இரு’ என்றாள். நான் உள்ளே நுழையவும் குழந்தையின் அழுகை ஒலி கேட்கவும் சரியாக இருந்தது. சிறிது நேரத்தில் ஒரு ஆயா வெளியே வந்து ‘இத பாரு, உங்க அக்கா குழந்தை’ என்று சொல்லிய படியே நல்ல ரோஸ் கலரில் ஒரு பஞ்சு உருண்டையை என் கையில் கொண்டு வந்து கொடுத்தாள். ஒரு சிலிர்ப்புடன் வாங்கிக் கொண்டேன். ‘முதன்முதலில் நான் தான் உன்னைப் பார்த்தேன்; நான்தான் எடுத்துக் கொண்டேன்’ என்று (அதிலும் போட்டி!) இன்றும் என் அக்காவின் பிள்ளை சம்பத்குமாரனிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். அன்று தொடங்கி இன்றுவரை அவன் தான் என் முதல் பிள்ளை. அந்த வாத்சல்யம் இன்னும் குறைய வில்லை. அவனுக்கு மட்டுமில்லை – அவனுடைய இரு குழந்தைகளுக்கும் – (ஷ்ரேயா, மேக்னா)   நான் சித்தி தான்! இருவரையும் என் பதிவு ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறேன். எனக்குத் திருமணம் ஆகி 3 மாதங்களில் என் அப்பா பரமபதித்து விட்டார். அந்த வருடம் தலை தீபாவளி இல்லை. அடுத்த வருடம் என் அக்காவும் அத்திம்பேரும் எங்களை அழைத்துக் கொண்டு போய் அவர்கள் வீட்டில் விருந்து கொடுத்தனர். எனக்கு பூச்சூட்டல் செய்து, சீமந்தத்திற்கு சீர்கள் கொண்டு வந்து வைத்து, தலைப் பிரசவத்திற்கும் தன் வீட்டிற்கு அழைத்துப் போனாள் அம்மாவாக இருந்து. எங்கள் அத்திம்பேர் சின்ன வயதில் பரமபதித்தது எங்கள் எல்லோருக்கும் இன்னும் ஒரு அதிர்ச்சியாகவே இருக்கிறது. தைரியமாக தனக்கு நேர்ந்ததை எதிர் கொண்டு தனி ஒருவளாக பிள்ளையை வளர்த்து ஆளாக்கினாள். அம்மாவும் அவளும் அத்தனை திவ்ய தேசங்களையும் சேவித்து இருக்கிறார்கள். நாலாயிர திவ்யப்பிரபந்தம் அத்தனையும் அத்துப்படி. கண்களில் நீர் தளும்பப் பெருமாளை அலுக்காமல் சலிக்காமல் சேவிப்பாள். எனக்கு அக்காவாக, அம்மாவாக இருக்கும் ரமா ஆரோக்கியமாக, சந்தோஷமாக பேத்திகளுக்கு திருமணம் ஆகி கொள்ளுப் பேரன்களையும், கொள்ளுப் பேத்திகளையும் பார்த்து பல ஆண்டுகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நம்பெருமாளையும், ரங்கநாயகித் தாயாரையும் பிரார்த்தித்து நிற்கிறேன். அவளுடன் கொண்டாடிய தலை தீபாவளி நினைவுகளுடன்……… 13 தீபாவளி வந்தாச்சு! [] இன்று காலை சம்மந்தி அம்மா வந்திருந்தார். மாட்டுப் பெண்ணின் அம்மா. பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கூடவே மாப்பிள்ளைக்கு புது டிரஸ் வாங்கிக் கொள்ள பணம். எல்லாவற்றையும் வைத்து என்னிடம் நீட்டினார். நான் அதை அப்படியே மாட்டுப் பெண்ணிடம் கொடுத்து விட்டேன். சம்மந்தி அம்மா கிளம்பியவுடன், மாட்டுப் பெண் ‘நாம போய் உங்களுக்கும், அப்பாவுக்கும் புது துணிமணிகள் வாங்கலாம் வாருங்கள்’ என்றாள். படு குஷியுடன் கிளம்பி விட்டேன். புடவை வாங்கப் போய் ரொம்ப நாளாகிவிட்டது. இப்போதெல்லாம் புது புடவை வாங்குவதே இல்லை. பிறந்த நாளுக்குக் கூட ஒன்றும் வாங்கிக் கொள்ளவில்லை. தியாகம் எல்லாம் இல்லை. வெளியே போவது ரொம்பவும் குறைந்து விட்டது. புடவை வாங்கி அடுக்குவானேன் என்று. முன்பெல்லாம் அதாவது நான் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்தபோது பிறந்தநாளுக்கு மூன்று, தீபாவளிக்கு மூன்று என்று புடவைகள் வாங்கிக் கொண்டே இருப்பேன். அதுவும் காட்டன் புடவைகள் தான். என் அம்மா சொல்வாள்: ‘புடவை விலையை விட maintenance –க்கு அதிகம் செலவழிக்கிறாய்’ என்று! காட்டன் புடவையில் வரும் கம்பீரம் வேறு எதிலும் வருவதில்லை. சரி இன்றைய கதைக்கு வருவோம்: எப்போதும் போகும் பொப்பத்தி கடைக்குப் போனோம். சில்க் காட்டன் புடவைகள் பார்த்தோம். எல்லா கலருமே என்னிடம் இருப்பது போல இருந்தது. பச்சை வேண்டாம், நீலம் வேண்டாம், மரூன் வேண்டாம் – வேறு என்ன கலர் வாங்குவது? வெள்ளையில் மரூன் பார்டர் – என்னவருக்குப் பிடிக்கவில்லை. பச்சையில் மரூன் பார்டர் எனக்கு அவ்வளவாக சரி படவில்லை. ‘மாட்டுப் பெண்ணே என்னடி வாங்குவது?’ என்றேன். ‘உங்களுக்குப் பிடித்ததை வாங்குங்கோ’ என்றாள் சமத்து! ஆஹா! கண்டேன் சீதையை இல்லையில்லை! மயில் கழுத்துக் கலர் பச்சையும் நீலமும் கலந்து இரண்டு பக்கமும் பார்டர் போட்ட புடவை. அகல பார்டர் புடவை, இரண்டு பக்க பார்டர் புடவை  - உயரமானவர்களுக்குத் தான் நன்றாக இருக்கும். நிஜம் தான் ஆனால் எனக்குப் பிடித்திருக்கிறதே! நான் உயரம் இல்லை என்று நன்றாக இருக்கும் புடவையை வாங்காமல் இருக்க முடியுமா? விலையைப் பார்த்தேன். கிறுகிறுத்தது. நான் பார்த்து கிறுகிறுத்ததை மாட்டுப் பெண் பார்த்தாள். ‘விலையைப் பார்க்காதீங்கோ. பிடித்திருந்தால் வாங்கிக்கோங்கோ’ என்றாள். வாங்கியாச்சு! எல்லாவற்றையும் விட எது அதிசயம்? 10 நிமிடத்தில் புடவை வாங்கினது தான்! புடவை வாங்கி முடித்து பில் போட வந்தோம். பட்டுப் புடவை செக்ஷனில் ஒரு இளம் தம்பதி. அந்தப் பெண் தனது  தோளின் ஒரு பக்கம் வெள்ளையில் பல கலர் பார்டர் போட்ட புடவை; இன்னொரு பக்கம் நல்ல மஞ்சளில் அதே போல பல கலர் பார்டர் போட்ட புடவையைப் போட்டுக் கொண்டு எதை எடுப்பது என்று தெரியாமல் கணவனை கேட்டுக் கொண்டிருந்தாள். கடை சிப்பந்தியில் கையில் நல்ல நீல நிறத்தில் அதேபோல ஒரு புடவை! நான் சும்மா வந்திருக்கலாம்.  சும்மா வருவது unlike Ranjani! இல்லையா? ‘உங்கள் கலருக்கு மஞ்சள் நன்றாக இருக்கும்….’என்றேன். அந்த இளம்  கணவன் என்னைப் பார்த்து, ‘என் விருப்பம் வெள்ளை ஆனால் அவள் மஞ்சள்…..!’ என்றான். ‘இரண்டு பேருக்கும் பொதுவாக நீலத்தை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றேன். இரண்டு பேரும் வாய்விட்டு சிரித்தனர். இதற்கு மேல் பேசினால் எல்லை மீறல்! ‘ஹேப்பி தீபாவளி’ என்று வாழ்த்தி விட்டு நகர்ந்தேன். தீபாவளி வந்தாச்சு! 14 ஹிந்தி மாலும்…? []  ஏப்ரல் 16, 2000 மாவது வருடம். எனது வாழ்வில் முக்கியமான நாள். 25 வருட இல்லத்தரசி வேடத்தைக் கலைத்து விட்டு வெளியில் வேலைக்கு வந்திருக்கிறேன். அலுவலத்தில் நாற்காலியில் உட்காந்து செய்யும் வேலை இல்லை. மாணவர்கள் முன்னிலையில் நின்று கொண்டு சொல்லிக் கொடுக்க வேண்டும்…எப்படி இருக்குமோ? முதல்முறையாக பள்ளிக்கு போகும் குழந்தையைப் போல ஒரு கலக்கம். ஆங்கிலம் பேச வரும். சொல்லிக் கொடுப்பது வேறு இல்லையா? முதல் வகுப்பு. முதல் நாள். உள்ளூர பட பட வென்று பல பல பட்டாம்பூச்சிகள் பறந்தாலும் முகத்தில் ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எங்கள் கவுன்சிலரிடம் கேட்டேன் ‘எத்தனை மாணவர்கள்?’ ‘இது அடிப்படை நிலை வகுப்பு. ஒன்லி டென்..’ என்று இனிமையாக சிரித்துக் கொண்டே சொன்னாள். ‘ஓ! ஒன்லி டென்…?’ எனது முதல் வகுப்பு flop-show- வாக முடியப் போகிறது என்பதை அறியாமலேயே முகத்தில் இருந்த தைரியம் உடலிலும் பரவ வகுப்பினுள் நுழைந்தேன். ‘குட் மார்னிங்’ 9 குட் மார்னிங்-கு களுக்கு நடுவே ‘ஹிந்தி மாலும்..?’ என்று பத்தாவதாக ஒரு குரல்! குரல் வந்த பக்கம் திரும்பினேன். ஒரு இஸ்லாமியப் பெண்மணி தலையில் பர்த்தாவுடன்! எனக்குள் எழுந்த முதல் வியப்பு. எனக்கு ஹிந்தி தெரியாது என்று  இந்தப் பெண்ணுக்கு எப்படித் தெரியும்? அடுத்து என்ன மொழியில் பதில் சொல்வது? நோ என்று ஆங்கிலத்திலா? நஹி என்று ஹிந்தியிலா? சவாலே சமாளி…. கொஞ்சம் நிதானத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னேன். ‘நீங்கள் இங்கே வந்திருப்பது ஆங்கிலம் கற்க. அதை நான் உங்களுக்கு சொல்லித் தருகிறேன். கவலைப் படாதீர்கள்….!’ தன் தலை மேல் போட்டிருந்த பர்தாவை இழுத்து முகத்தை மூடியபடி அந்த பெண் எழுந்தே விட்டாள். நான் பதறிப் போனேன். ‘நோ, நோ, டோன்ட் கோ. ப்ளீஸ் சிட் டௌன்…! நான் பேசியதை அவள் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. ஒரு முறை திரும்பிப் பார்த்து மறுபடி ஹிந்தியில் மூச்சு விடாமல் ஏதோ சொன்னாள். சுத்தமாக எதுவும் புரியவில்லை. மற்ற மாணவர்களிடம் தஞ்சம் அடைந்தேன். ‘அவளிடம் சொல்லுங்கள். அவளை வகுப்பிற்குள் வரச் சொல்லுங்கள்…’ என்றேன். என்னைப் பார்த்துப் பரிதாபப்பட்ட சிலர் அவளை உட்காரச் சொன்னார்கள். எதற்கும் மசியவில்லை அந்தப் பெண். போயிந்தே! Gone! என்னைப் பரிதாபமாகப் பார்த்த 9 பேருக்கு, பேருக்குப் பாடம் எடுத்து விட்டு வெளியே வந்தேன். மையத்தின் கவுன்சிலர், ‘ஹிந்தி வராதா….?’ என்றாள். ஏற்கனவே நொந்திருந்த நான் மேலும் நொந்து நூடுல்ஸ் ஆனேன். ‘நாளைக்கு வரட்டுமா வேண்டாமா?’ ‘டோன்ட் ஒரி. அந்தப் பெண்ணை ஹிந்தி பேசத் தெரிந்த ஒரு டீச்சரிடம் அனுப்பி விட்டேன். ரோனிலா உங்களிடம் பேசுவாள்’ என்று என் வயிற்றில் புளியை கரைத்தாள். வீட்டிற்கு வந்து ‘இங்கிலீஷ் வகுப்புக்கு வந்து விட்டு இந்தி தெரியுமான்னு கேக்கறா?’ என்று புலம்பித் தீர்த்தேன். கொஞ்ச நேரத்தில் எனது பாஸ் என்கிற பாஸ்கரன் இல்லை – ரோனிலா விடமிருந்து தொலைபேசி. கொஞ்சம் பயமாக இருந்தது. என்ன சொல்லுவாளோ? என் மாமா Single Speech Hamilton என்று ஒருவரைப் பற்றிக் கூறுவார். ஒரே ஒரு முறை மேடையில் பிரமாதமாகப் பேசிவிட்டு நிறுத்திவிட்டாராம். அதன் பிறகு அவர் பேசவே இல்லையாம். அதைப்போலவே நானும் Single English Class – அதுவும் Flop Show பண்ணிவிட்டு நிறுத்தி விடப் போகிறேன். தினம் ஒரு புது கதை கேட்கும் என் பேரனுக்கு என் கதையை சொல்லலாம். என்னென்னவோ நினைத்தபடியே தொலைபேசியில் ‘ஹலோ..ரோனிலா…!’ என்றேன். ‘வாட் ஹப்பென்ட்..?’ என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே என்று சொல்ல ஆரம்பித்தேன். ‘ஸாரி ரோனிலா…எனக்கு ஹிந்தி வராது…..’ ‘எனக்குப் புரிகிறது. நீ ஒண்ணு பண்ணு. உன்னிடம் வரும் மாணவர்களிடம் நீ லண்டனில் பிறந்து, தேம்ஸ் தண்ணி குடித்து வளர்ந்தவள் என்று சொல்லு….’ ‘ரோனிலா…?’ நான் நம்ப முடியாமல் கேட்டேன். நான் ஸ்ரீரங்கத்தில் பிறந்து சென்னையில் வளர்ந்து, பெங்களூர் வந்து காவேரி நீர் குடித்து வருபவளாயிற்றே! ‘ஆமாம் , உனக்கு இந்திய மொழி எதுவும் வராது இன்னிலேருந்து சரியா?’ ‘…………….’? ‘ஹிந்தியும் பேசாதே, கன்னடமும் பேசாதே…தமிழும் பேசாதே….’ ‘ஆனா…. ரோனிலா வீட்டில…..’ ‘ரஞ்ஜனி…! நான் வகுப்பு பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன்…..புரிகிறதா?’ அவளுக்கு கோபம் அதிகமாவதற்குள் ‘நன்றி…என்னைப் புரிந்து கொண்டதற்கு…’ என்று சொல்லிவிட்டு தொலை பேசியை கீழே வைத்தேன். அதற்குப்பின் ஒவ்வொரு வகுப்பிலும் சில பல ஹிந்தி பேசும் மாணவர்கள். ஹிந்தி கற்காமலேயே அன்றிலிருந்து இன்றுவரை வகுப்புகளை மட்டுமல்ல; வாழ்க்கையையும் தான் சமாளிக்கிறேன்! முதல் கோணல்…முற்றிலும் வெற்றி! 15 நானும் என் மொழிப் புலமையும்! தலைப்பை படித்தவுடன் நானும் நமது முன்னாள் பிரதமர் (17  மொழிகளில் மௌனம் சாதிப்பவர் என்று திரு மதன் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்!) திரு நரசிம்மராவ் மாதிரி பன்மொழி புலமை உடையவள் என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பாளி அல்ல! திரு அப்பாதுரை சொன்னது போல ஆங்கிலத்தையும் தமிழில் கற்றவள் நான். அந்த காலத்து வழக்கப்படி என் அக்காவின் வழியில் SSLC முடித்தவுடன் தட்டச்சு, சுருக்கெழுத்து கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ஒரு அலுவலகத்தில் வேலையும் கிடைத்து, 1971 ஜூன் 2 ஆம் தேதி வேலையில் சேர்ந்தேன். நேர்முக தேர்வில் எனது ஆங்கில அறிவு தடையாக இல்லை. ஆனால் போகப் போக,  வெறும் ஸ்டெனோ-டைப்பிஸ்ட் மட்டுமில்லாமல் தொலைபேசிக்கும் பதில் சொல்லவேண்டும் என்று வந்தபோது ரொம்பவும் தவித்தேன். ஆங்கிலத்தில் பேசுவது சிம்ம சொப்பனமாக இருந்தது. என் அப்போதைய பாஸ் கொஞ்சம் முரடர். அவரைப் பார்த்தாலே பயமாக இருக்கும். ‘sslc – வரைக்கும் ஆங்கிலம் படித்திருக்கிறாய் இல்லையா? பேசு!’ என்பார். கடிதங்கள் எழுதுவதிலேயோ, வரும் கடிதங்களுக்கு பதில் எழுதுவதிலேயோ எனக்கு எந்தவித பிரச்சினையும் இருக்கவில்லை. பேசுவதற்குத் தயங்கினேன். இன்னொரு பிரச்சினை என் பாஸ்- களின் பெயர்கள்! நான் பொதுமேலாளருக்கு உதவியாளியாக இருந்துபோதும் சேர்மன், மானேஜிங் டைரக்டர் என்று எல்லோருக்கும் வரும் தொலைபேசி அழைப்புகளை பெற்று அவர்களுக்கு தொடர்பு கொடுக்கும் வேலையையும் செய்ய வேண்டி வந்தது. எனது நேர் பாஸ் பெயர் நடராஜ். சேர்மன் எதிராஜ். மானேஜிங் டைரக்டர் (சேர்மனின் தம்பி) நாகராஜ். சேர்மனின் பிள்ளை ஹரிராஜ்! முதலே ஆங்கிலம் என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஒரேமாதிரியான பெயர்களும் சேர்ந்து என்னைபோட்டுக் குழப்பியதில் (நான் என் ஆங்கிலத்தில் கவனம் செலுத்துவேனா, பெயர்களை கவனிப்பேனா?) இந்த ராஜ்-க்கு வரும் அழைப்பை அந்த ராஜ்-க்கும், இளைய  ராஜ்-ஜின் பெண் தோழியின் அழைப்பை அவரது அப்பாவிற்கும் மாற்றி மாற்றிக் கொடுத்து…… இதெல்லாம் நடந்து சிறிது காலம் ஆயிற்று. ஒரு நாள் காலை எனது நேர் பாஸ் அலுவலகத்திற்கு வந்தவர் ஏதோ அவசர அழைப்பு வர தலைமை அலுவலகத்திற்குக் கிளம்பி விட்டார். தலைமை அலுவலகம் பாரி முனையில். நான் வேலை பார்த்தது தொழிற்சாலை – திருவேற்காடு பக்கத்தில். இனி இவர் எங்கே திரும்பி வரப் போகிறார் என்ற தைரியத்தில் தட்டச்சு இயந்திரத்திற்கு உறையைப் போட்டு மூடி, ஆனந்தமாக கையோடு எடுத்துப் போன ஆனந்த விகடனில் மூழ்கினேன். நிஜமாகவே மூழ்கிப் போனவள் பாஸ் வந்ததையே பார்க்கவில்லை. ஏதோ ஃபைலை எடுத்துப் போக திரும்பி வந்திருக்கிறார். எனது அறையில் தான் ஃபைல் ராக் இருக்கிறது. ‘ரஞ்ஜனி…!’ அவரது இடி முழக்கம் கேட்டு ஆ. வி. யில் மூழ்கி போனவள் திடுக்கிட்டு எழுந்தேன். கையில் ஆ.வி! என் கையிலிருந்த ஆ.வி.யை ஒரே பிடுங்காகக் பிடுங்கி இரண்டாகக் கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டார்! (அப்போதெல்லாம் ஆ.வி. குண்டு புத்தகமாகவே வரும். இவர் எப்படி ஒரே தடவையில் இரண்டாகக் கிழித்தார் என்று எனக்கு இன்னும் ஆச்சரியம் தான்!) ‘காச் மூச் என்று கத்த ஆரம்பித்தார். சாரம் இதுதான்: உன்னை ஆங்கிலம் கற்க சொன்னால் தமிழ் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறாய்….. இன்னொரு தடவை நீ தமிழ் புத்தகம் படிப்பதைப் பார்த்தால்….என்ன நடக்கும் தெரியுமா?’ (என்ன நடக்கும் இதேபோல கிழித்துப் போடுவாய்!) பதிலே பேசவில்லை நான். ‘உனக்கு வேலையில்லை, ‘போர்’ அடிகிறது என்றால்…..’ என்று சொல்லியபடியே அவரது அறைக்குள் போய் அவரது மேஜை டிராயரில் இருந்து கேம்ப்ரிட்ஜ் அட்வான்ஸ்ட் டிக்ஷனரியை கொண்டு வந்து என் மேஜை மேல் போட்டார். ‘இதைப் படி…வாழ்வில் உருப்படுவாய்….என்று சொல்லியபடியே திரும்ப காரில் ஏறிக் கொண்டு போய்விட்டார். வீட்டிற்குப் போய் என் அப்பாவிடம் இனி ஆபீசுக்குப் போகவே மாட்டேன் என்று நடந்ததை சொல்லி என் பாஸ்-ஐ கன்னாபின்னாவென்று (இடியட், ஸ்டுபிட்….என்று எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில்!) திட்டித் தீர்த்தேன். ‘சரி தூங்கு, காலையில் பார்த்துக் கொள்ளலாம்’ என்றார் அப்பா. அடுத்த நாள் கலையில் வழக்கம்போல அப்பா என்ன சீக்கிரமே எழுப்பினார். எங்கள் வீட்டிலிருந்து பூந்தமல்லி ஹை ரோட் வரை நடராஜ சர்வீஸ். அங்கிருந்து அலுவலகத்திற்கு பேருந்து. அதனால் 8.30 மணி ஆபிசுக்கு சீக்கிரமே எழுந்து 7 மணிக்கு கிளம்ப வேண்டும். ‘நான்தான் போகப் போவதில்லையே!’ என்றேன். ‘யார் மேல தப்பு? நிதானமா யோசி. உன் மேல தப்பு என்றால் உடனே கிளம்பு. பாஸ் மேலே என்றால் போக வேண்டாம்’ என்றார் அப்பா. அடுத்த அரை மணியில் கிளம்பி அலுவலகம் போய் சேர்ந்தேன். என் பாஸ்-க்கும் என்னைத் திட்டியது ஒரு மாதிரி இருந்திருக்க வேண்டும். மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை. என்னைக் கொஞ்சம் கருணையுடன் நடத்தத் தொடங்கினார். நானும் அன்றிலிருந்து அவர் சொன்னதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு டிக்ஷனரி படிக்க ஆரம்பித்தேன். பெரிய ஆங்கில அகராதியில் ஒரு வார்த்தைக்கு வெறும் அர்த்தம் மட்டும் கொடுத்திருக்க மாட்டார்கள். அதை வைத்து எப்படி வாக்கியம் பண்ணுவது என்றும் உதாரணங்கள் கொடுத்திருப்பார்கள். அது எனக்கு பெரும் உதவியாக இருந்தது. இன்றும் எனக்கு டிக்ஷனரி படிப்பது மிகவும் விருப்பமான பொழுது போக்கு. இன்றைக்கு என் மாணவர்கள் என் ஆங்கிலத்தை மதிக்கிறார்கள் என்றால் எனக்குப் பிடிக்காத அந்த பாஸ் தான் காரணம். நாளை நானும் கன்னடமும்……! 16 கன்னட கொத்து!  முதல் முறையாக சிங்காரச் சென்னையை விட்டு நான் வெளியே வந்தது 1987 ஆம் ஆண்டுதான். அதுவே பெரிய சாதனையாக எனக்குத் தோன்றியது. இரண்டு நாட்கள் எங்காவது வெளியூர் போனாலே ‘ஆனந்தம் ஆனந்தம்’ பாடும் நான், சில வருடங்கள் பெங்களூரில் இருப்போம் என்றவுடன் ஆனந்தத்தின் எல்லைக்கே போய்விட்டேன். ஏப்ரல் மாதத்தில் குழந்தைகளுக்கு விடுமுறை ஆரம்பித்தவுடன் இங்கு வந்து விட்டோம். பசவங்குடியில் ஒரு பிரபல பள்ளியில் (TVS கம்பெனி என்று சொல்லுங்கள். உடனே இடம் கிடைக்கும் என்று நண்பர்கள் சொன்னார்கள்!) இருவரையும் சேர்த்தோம். என் அம்மா மல்லேஸ்வரத்தில் வீடு பார்க்கச் சொன்னாள்: ’தமிழ்காரா நிறைய இருப்பா. நீ கன்னடம் கத்துக்க வேண்டிய சிரமம் இருக்காது….’ ஆனால் என் எண்ணமே வேறு. ‘ரோமில் இருக்கும்போது ரோமாநியனாக இருக்க வேண்டும் இல்லையா? வாழ்வில் முதல் முறையாக வெளி ஊருக்கு வந்திருக்கிறோம். புது ஊர், புது பாஷை, புது மனிதர்கள் ஒவ்வொன்றையும் அனுபவிக்க வேண்டும், இல்லையா? ஆங்கிலம் பேச வராமல் நான் தவித்த போது என் அப்பா சொன்ன ஒரு அறிவுரை: காதுகளை திறந்து வைத்துக் கொள். கவனமாகக் கேள். ஓரளவுக்குப் புரியும்.’ அப்பா சொன்ன அறிவுரையை பெங்களூர் வந்தவுடன் செயலாற்றத் தொடங்கினேன். நாங்கள் அப்போது இருந்து இடம் நரசிம்ம ராஜா காலனி. நிறைய கன்னடக்காரர்கள் இருக்குமிடம். கன்னடம் காதில் விழுந்து கொண்டே இருந்ததால் மூன்று மாதத்தில் கன்னட மொழியை தமிழில்– நான் பேச ஆரம்பிக்கும்போதே ‘தமிளா?’ என்று கேட்கும் அளவுக்கு பேச ஆரம்பித்தேன்! என் குழந்தைகள் இருவரும் ‘அம்மா, ப்ளீஸ் கன்னடத்துல பேசாதம்மா! நீ தமிழ் உச்சரிப்புல பேசறது எங்களுக்கு வெக்கமா இருக்கு…. என்று கெஞ்சினர். ‘ ச்சே…ச்சே….இதுக்கெல்லாம் வெக்கப்படக் கூடாது….  தப்புத்தப்பா பேசித்தான் புது பாஷையைக் கத்துக்கணும்’, என்று  அவர்களை அடக்கினேன். என் கணவர் இந்த விளையாட்டுக்கு வரவே இல்லை. ‘இந்த வயதுக்கு (40+) மேல்(!) இன்னொரு மொழி கற்பது கஷ்டம் என்று அன்று சொல்லி இன்று வரை கற்காமலேயே காலம் தள்ளுகிறார்! ஒரு முறை என்னவருக்கு உடல்நிலை சரியில்லை. ஆபீஸ் போகவில்லை. வீட்டிலேயே படுத்திருந்தார். இதை அறிந்து எங்கள் வீட்டு சொந்தக்காரரின் மனைவி எங்கள் வீட்டுக்கு வந்தாள். என்னவர் எப்படி இருக்கிறார் என்று கேட்டு விட்டு ‘………….பாப்பா…………!’ என்றாள். ‘………….பாப்பா……!’ ஒவ்வொரு வாக்கியத்தின் முன்னும் பின்னும் பாப்பா, பாப்பா என்று….. என் கணவரைப் பார்த்து இவள் ஏன் பாப்பா பாப்பா என்கிறாள்? குழந்தைகளும் வீட்டில் இல்லையே? ஸ்கூல் போய் விட்டார்களே! கணவரை கன்னடத்தில் ‘பாப்பா’ என்பார்களோ? தலையே வெடித்துவிடும் போலிருந்தது. நாங்கள் இருந்த வீட்டில் கார் வைக்க இடமில்லாததால் பக்கத்து தெருவில் ஒரு வீட்டில் என் கணவர் காரை நிறுத்துவார். அவர்களுக்கு தமிழும் தெரியும். அவர்களுக்கு தொலைபேசினேன். நான் சொன்னதைக்கேட்டு அந்த மாமி ரொம்பவும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். பாபம் (பாவம்) என்பதை தான் அந்த பெண்மணி பாப….பாப… என்றிருக்கிறாள்! இதற்கு அடுத்தபடி என்னை அதிர வைத்த வார்த்தை டாக்டர் ஷாப்! மகனுக்கு உடல்நிலை சரியில்லை. வீட்டு சொந்தக்காரரிடம் போய் ‘டாக்டர் வீடு எங்கே?’ என்றேன். அவர் பதறிப்போய் ‘வீட்டுக்கெல்லாம் போகதீங்கம்மா. ஷாப்புக்கு போங்க!’ என்றார்.அவர் காட்டிய திசையில் போனேன். அங்கு ஒரு மெடிக்கல் ஷாப். இதைதான் சொன்னாரோ? கடைக்காரரிடம் ‘டாக்டர் வீடு எங்கே?’ என்று கேட்டேன். அவரும் ஷாப்புக்குப் போங்க என்றார். என்ன இது? அவரிடமே கேட்டேன். ‘தமிளா?’ என்று கேட்டு விட்டு அரைகுறை தமிழில் (என் அரைகுறை கன்னடத்திற்கு சமமாக!) இங்க டாக்டர் வீடுன்னு சொல்ல மாட்டோம். டாக்டர் ஷாப்பு (கிளினிக்) என்றுதான் சொல்லுவோம்’ என்றார். இப்படி பேச ஆரம்பித்த நான் என் பிள்ளையுடன் சேர்ந்து கன்னட மொழியை எழுத படிக்கக் கற்று, இரண்டாம் வகுப்பிற்கு கன்னட ஆசிரியையாகவும் ஆனேன் பிற்காலத்தில்! முயற்சி திருவினையாக்கும் இல்லையா? 17 லாம்….. எழுதலாம்……ப்ளாக் எழுதலாம்…….! ‘டொக்…. டொக்….’ ‘யாரது?’ ‘நாங்கள் Worldpress.com இலிருந்து வந்திருக்கிறோம். இங்கு ரஞ்ஜனி நாராயணன் என்பது….?’[] ‘நான்தான், நான்தான்…உள்ளே வாருங்கள்…!’ ‘நீங்களா…?’ ‘நானேதான்! ஆதார் கார்ட் காட்டட்டுமா?’ (எனக்கு ஆதார் கார்ட் வந்துவிட்டதே!) ‘வேண்டாம்…உங்கள் பெயரைப் பார்த்துவிட்டு ரொம்பவும் சின்ன வயதுப் பெண் என்று நினைத்துவிட்டோம்….’ 60, 70, 80 களில் நானும் சின்னவளாகத்தான் இருந்தேன்… மனதில் நினைத்துக் கொண்டு ‘இப்பவும் மனசளவில் சின்னவள்தான்….ஹி….ஹி….’ என்றேன். (நாளைக்குப் போய் ‘டை’ அடித்துக் கொண்டு வரவேண்டும்…) ‘நீங்க என்ன விஷயமாக என்னைப் பார்க்க வந்திருக்கீங்க?’ ‘திரு வை.கோ. சொன்னார்…நீங்கள் ப்ளாக் எழுதுகிறீர்களாம்….’ ‘ஓ! ஓ! வைகோ ஸாரா? என்னோட பரம விசிறி ஸார் அவர். எனக்கு கூடிய சீக்கிரம் ‘விசிறிகள் மன்றம்’ கூட ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறார்!’ (இது கொஞ்சம் ‘ஓவர்’ – இடித்தது என் செல்லம்) ஷ்…..சும்மா இரு என்று அதை அடக்கினேன். ‘கிட்டத்தட்ட 237 பதிவுகள் எழுதி இருக்கிறேன் ஸார்! எல்லாமே நானே எழுதியது….என் சொந்த முயற்சியில்…’ ‘…அப்படியா…..?’ ‘ஆமா ஸார்…அவள் விகடனில் கூட ‘வலைப்பூவரசி’ என்று பட்டம் கொடுத்திருக்கிறார்கள்.’ ‘ஓ!……’ ‘அப்பறம்….ஒருதடவ வலைச்சரம் ஆசிரியராகவும் இருந்தேன்……..’ ‘இத்தனை எழுதின அப்பறம்  திருப்தி ஏற்பட்டிருக்க வேணுமே?’ ‘திருப்திதான். ஆனாலும் தினம் தினம் ஒரு பதிவு போட வேண்டும் என்று ஒரு அரிப்பு…’ ‘அரிப்பா? மருத்துவரைப் போய் பாருங்கள்….!’ ‘ஸார், ஸார் நீங்க தப்பாகப் புரிஞ்சுண்டு இருக்ககீங்க! எழுத வேண்டும் என்று மனசுல சதா ஒரு குடைச்சல்…. ‘உங்க அரிப்பு, குடைச்சல்  எல்லாத்துக்கும் ஒரு  நல்ல மருத்துவரைப் பாருங்க. அத்த விட்டுட்டு எங்களைப் படுத்தினால்….’ ‘…..ஸார், என்ன சொல்றீங்க?’ ‘நிறுத்துங்க!’ என்ன சொல்றீங்க? ‘நிறுத்துங்க…’ ‘புரியலையே!’ ‘மணிரத்னம் படமெல்லாம் பாக்க மாட்டீங்களா?’ ‘………………………….!?’ ’எழுதறத நிறுத்துங்க….’ ‘என்ன சொல்றீங்க?’ ‘ஆமாம்மா, நீங்க இனிமே எழுதக் கூடாது…’ ‘ஸார், ஸார், இன்னும் ஒரு ஆசை நிறைவேறணும். வோர்ட்பிரஸ் freshly pressed – ல ஒரு முறையாவது என் இடுகை வரணும்…’ ‘இது வேறயா?’ ‘ஆமா ஸார்….நாற்சந்தி, தமிழ், ரூபன் இவங்க இடுகைகளெல்லாம் வரது….’ ‘நீங்களும் முச்சந்தி, கன்னடம், அதிரூப சுந்தரி என்று எழுதினால் வருமோ என்னவோ…?’ ‘ஸார், ஸார்….’ ‘இதோ பாருங்கம்மா… இப்படியே ஒரொரு ஆசையா சொல்லிகிட்டே இருந்தீங்கன்னா எங்களை யார் காப்பத்துவாங்க? அதனால உடனே நிறுத்துங்க…..’ ‘ஸார்! வைகோ ஸார்! என்னக் காப்பாத்துங்க….!’ ‘இங்க பாருங்க, நாங்க எல்லோரும் உங்களால பாதிக்கப் பட்டவங்க….யாரும் உதவிக்கு வரமாட்டாங்க…’ ‘சிவஹரி…சிவஹரி….நீங்களாவது உதவி செய்யுங்க….’ ‘அருமை சகோ…கவலைப் படாதீங்க! நான் இருக்கிறேன்…இன்னிக்கு வலைச்சரத்திலே ஒரு கல்வெட்டுப் பதிவு உங்களைப் பற்றி போட்டிருக்கேன்….அதைப் படிச்சுட்டாவது உங்களோட மனச மாத்திக்கக் கூடாதா? எழுதறத நிறுத்தக் கூடாதா?’ ‘யூ டூ சிவஹரி……? ’றேன்…. த்திடறேன்……..நிறுத்திடறேன்……. எழுதறத நிறுத்திடறேன்….. ப்ளாக் எழுதறத நிறுத்திடறேன்……’ ******************************************** “ரஞ்ஜனி! ரஞ்ஜனி! எழுந்திரு…..! ‘மாதவா! அம்மாவை எழுப்பு… ப்ளாக் எழுத ஆரம்பிச்சு தூக்கத்தலேயும் ப்ளாக் உளறல்!?” ஹப்பா! கனவா? நல்லவேளை…நாளையிலிருந்து திரும்ப…. லாம்….. எழுதலாம்……ப்ளாக் எழுதலாம்……. பின்குறிப்பு: நான் குறிப்பிட்டிருக்கும் பதிவர்கள் என்னை மன்னிப்பார்களாக! 18 கணபுரத்தென் கருமணியே….! [] சுமார் 30 வருடங்களுக்கு முன் ஒரு நல்லிரவில் முதல் முறையாக திருக்கண்ணபுரம் சென்றோம். அங்கு யாரையும் எங்களுக்குத் தெரியாது – தலைப்பில் சொன்னவரைத் தவிர! மாயவரம் என்னும் மயிலாடுதுறைக்குப் போய் அங்கிருந்து நாகபட்டினம் போகும் பேருந்தில் போகலாம். இன்னொரு வழி. திருவாரூரிலிருந்தும் வரலாம். உங்கள் பக்கம் அதிருஷ்டம் இருந்தால் திருக்கண்ணபுரம் உள்ளேயே வரும் பேருந்தும் கிடைக்கலாம் திருவாரூரிலிருந்து! திருப்புகலூர் என்ற இடத்தில் இறங்க வேண்டும். இடது பக்கம் போனால் திருப்புகலூர். வலது பக்கம் திருக்கண்ணபுரம். [] எழுதிய அளவு அத்தனை சுலபமல்ல திருக்கண்ணபுரம் சென்று அடைவது. பேருந்து செல்லும் முக்கிய பாதையிலிருந்து 3 அல்லது 4 கிலோமீட்டர் உள்ளே நடக்க வேண்டும். பேருந்திலிருந்து இறங்கியவுடன் உங்களை வரவேற்பது காவிரி ஆறு. நீரில்லாத ஆறு வருத்தத்தைக் கொடுக்கிறது. ஒரு காலத்தில் நிறைய நீர் ஓடியிருக்க வேண்டும். ஆற்றின் மேல் இருக்கும் பாலம் இதற்கு அத்தாட்சி! ‘எனக்கு கல்யாணம் ஆகி – அம்பது வருடம் முன்னால – திருக்கண்ணபுரம் வந்தேன். அப்போ ஆத்துல நிறைய தண்ணி. அப்போ பாலம் இருக்கல. மாட்டு வண்டில வந்து அந்தப் பக்கக் கரைல இறங்கினோம். மாடுங்க தண்ணிய பார்த்து மிரண்டுதுங்க. அப்பறம் எல்லோரும் இறங்கி சாமான் செட்டல்லாம் எடுத்துண்டு ஆத்த கடந்து வந்தோம்.’ என்று ஊருக்குள் நான் பார்த்த ஒரு பெண்மணி கூறினார். அவர் அப்போது பார்த்த திருக்கண்ணபுரம் ரொம்பவும் மாறவே இல்லை என்றே கூறலாம். பலர் ஊரை கிட்டத்தட்ட காலி பண்ணிக் கொண்டு பட்டணம் பார்க்கப் போய் விட்டார்கள். பல வீடுகள் விற்பனைக்குத் தயார். ‘டீவி (கேபிள் தொடர்புடன்), ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி, கெய்சர் எல்லாம் இருக்கு. கரண்ட்டு தான் இல்லை….’ சிரித்துக் கொண்டே நாங்கள் எப்போதும் தங்கும் வீட்டின் சொந்தக்காரர் திரு ரவியின் மனைவி திருமதி கீதா கூறினார். எப்படி இங்கு இருக்கிறார்கள் என்று தோன்றும். ‘பெருமாள் இருக்கும்போது வேறென்ன வேண்டும்?’ கோவில் முன்னே மிகப் பெரிய குளம். குளத்தின் நீள அகலத்தைவிட என்னைக் கவர்ந்தது குளம் நிறைய, காற்றினால் சிறுசிறு அலைகளுடன் அலைபாய்ந்து கொண்டிருந்த நீர்! ‘வா, வா….. எத்தனை வருடமாகச் சொல்லிக்கொண்டே இருந்தாய் – திருக்கண்ணபுரம் போகவேண்டுமென்று?’ என்று அழைப்பதுபோல இருந்தது. சிலுசிலுவெனக் காற்று தண்ணீரின் வாசனையையும் சுமந்து வந்தது. எப்படி இத்தனை தண்ணீர்? ‘கோவிலுக்குள் போலாமா? அப்புறம் மூடி விடுவார்கள்…..’ கணவரின் குரல். கோவிலுக்குள் இன்னொரு ஆச்சரியம்: கருத்த திருமேனியுடன் நீலமேகப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில். அறையில் சார்த்திய சிவந்த ஆடை….’அரைச் சிவந்த ஆடையின் மேல் சென்ற தாம் என் சிந்தனையே….’ என்ன ஒரு காம்பீர்யம்! முதல் பார்வையிலேயே மனம் கொள்ளை போயிற்று. மிகப்பெரிய கோவில். உள்ளே யாரும் இல்லை. நாங்களும் பெருமாளும்தான்! உற்சவர் செளரிராஜன். தன் அடியவரைக் காப்பாற்ற கூந்தல் வளர்த்ததாக கதை. சௌரிகொண்டையுடன் பின்னழகும் நம்மைக் கவரும். ரொம்பவும் புராதனத் திருமேனி. வலது திருக்கையில் ப்ரயோகச் சக்கரம். கோவில், கோவில் முன்பு பெரிய நித்ய புஷ்கரிணி. நான்கு புறமும் மட விளாகம் என்னும் அக்ரஹாரம். அவ்வளவு தான் ஊர்! முதல் தடவை சென்று வந்தபின் நிறைய தடவைகள் போய் வந்தோம். இந்த வருடம் இரண்டு முறை போய் வந்தாயிற்று. உற்சவத்தின் போது கொஞ்சம் வெளி ஆட்களைப் பார்க்கலாம். பெருமாள் வருடத்திற்கு ஒரு முறை திருமலை ராயன் பட்டினம் போய் தீர்த்தவாரி கண்டருளுகிறார். ஒவ்வொரு முறை சென்று திரும்பும்போதும் மறுபடி வர வேண்டும் என்றே தோன்றும். போனதடவை சென்றபோது எங்கள் நண்பர் சொன்னார்: ‘இங்க வந்துடுங்கோ, தினமும் கோவிலில் உட்கார்ந்து நாலாயிரம் சேவிக்கலாம் அவன் காது குளிர… ஆனந்தமாகக் கேட்பான்.’ ‘நம்மால இங்க வந்து இருக்க முடியாது. ஆஸ்பத்திரி வசதியே கிடையாது.. ஏதாவது ஆச்சுன்னா…’ என் கணவர் ரொம்ப ப்ராக்டிகல். எங்கள் ஆடிட்டர் நண்பர் சொன்னார்: ‘ஏதாவது ஆச்சுன்னா போய்ச்சேர வேண்டியதுதான். எதுக்கு ஆஸ்பத்திரி?’ போனதடவை திருக்கண்ணபுரம் போயிருந்தபோது ஒரு மாமா மாமி வந்திருந்தார்கள். ‘ஒரு வருஷம் ஸ்ரீரங்கத்துல இருக்கப் போறோம். அத்தனை உத்ஸவமும் சேவிக்க’ என்றார் மாமி. எனக்குக் கூட ஆசைதான். இந்த முறை போயிருந்த போது மறுபடி அதே மாமா, மாமி. ‘ஸ்ரீரங்கத்தில இருந்துட்டு, கும்மோணத்துலேயும் ஒரு வருஷம் இருந்தாச்சு,’ என்ற மாமியைப் பார்த்து ரொம்பப் பொறாமையாக இருந்தது. என்றைக்கு நான் இதைபோல கிளம்பப் போகிறேன்? [] திருக்கண்ணபுரத்தில் கேட்ட திண்ணைப் பேச்சு: ஸ்ரீரங்கத்தில் பிறக்கணும். திருக்கண்ணபுரத்தில் பரமபதிக்கணும். ரொம்ப விசேஷம். யார் செய்த புண்ணியமோ, ஸ்ரீரங்கத்தில் பிறந்து விட்டேன். ‘சரணமாகும் தன தாளடைந்தார்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்’ [Sourirajan (pinnazhagu)] சவரிக் கொண்டையுடன் சௌரிராஜப் பெருமாள் [kaittala sEvai]சௌரிராஜப் பெருமாள் முன்னழகு – அமாவாசை தோறும கைத்தல சேவை – பின்னால் கருத்த திருமேனியுடன் நீலமேகப் பெருமாள் திருக்கண்ணபுரம் என் மாமியாரின் ஊர். அவரது தகப்பனார் வாழ்ந்த வீடு தற்போது வேறு  ஒருவருக்கு சொந்தம். என் கணவர் அந்த வீட்டை ‘எங்க தாத்தாவின் வீடு’ என்று ஒவ்வொரு முறையும் காட்டுவார். [] ‘எங்க தாத்தாவின் வீடு’ (மஞ்சள் நிற காம்பவுண்ட்) நித்ய புஷ்கரிணியில் எப்படி இவ்வளவு நீர் என்ற என் கேள்விக்கு திரு ரவியின் தாயாரிடம் பதில் கிடைத்தது. காவிரியில் நீர் வரத்து மிகும் போது அந்த உபரி நீர் இங்கு வரும்படியாக செய்திருந்தனர். அதைத்தவிர மழை பெய்யும்போது கோவிலில் விழும் நீர் நேரடியாக திருக்குளத்தில் வந்து சேருமாறு அமைத்திருக்கிறார்கள். அந்தக் காலத்திலேயே மழை நீர் அறுவடை!  இந்தத் திருப்பணியில், திரு ரவியின் திருத்தகப்பனாரின் பங்கு அபரிமிதம். சமீபத்தில் நாங்கள் போனது புரட்டாசி முதல் சனிக்கிழமை அன்று. முதல் நாள் காலை பெங்களூரிலிருந்து காரில் கிளம்பினோம். திருவண்ணாமலை, காரைக்கால் வழி சரியாக இல்லை என்று சிலர் சொல்லவே, சேலம், ஆத்தூர், துறையூர் என்று வழி கேட்டுக் கேட்டு வந்ததில் சில இடங்களில் வழி தவறி…. எதிர்பட்ட ஆட்டோ டிரைவரிடம் கேட்டோம்: ‘திருக்கண்ணபுரம் எப்படிப் போவது?’ ‘காரைக்கால் வழியாக வந்திருக்கலாமே ஸார்! இங்கு என் வந்தீர்கள்? சரி விடுங்கள்…இங்கிருந்து கும்பகோணம், நாச்சியார் கோவில்…என்று கேட்டுக் கொண்டே போங்கள்…இப்போது மணி 6…, ஒரு 8 8.30 க்குப் போய்ச்சேரலாம்…அப்புறம் ஸார், மறக்காமல் திருக்கண்ணங்குடி, திருகண்ணமங்கை போய்விட்டு வாருங்கள்…. எல்லாம் க்ருஷ்ண க்ஷேத்திரங்கள்’. என்று எங்களை வழி அனுப்பி வைத்தார். அவர் சொன்னதுபோல 8.30 க்கு திருக்கண்ணபுரம் வந்து சேர்ந்தோம். ரவி எங்களுக்காக ‘முநியதரையன் பொங்கல்’ வாங்கிவர கோவிலுக்குப் போயிருந்தார். கோவில் நடையும் சார்த்தி விட்டார்கள் எட்டரை மணிக்கு. அதனால் அன்று பெருமாள் சேவை கிடைக்கவில்லை. அடுத்தநாள் காலை எழுந்திருந்து தீர்த்தாமாடி (நித்ய புஷ்கரிணியில் நீர் மிகவும் குறைந்திருந்தது. அதனால் அங்கு தீர்த்தாமாடும் எண்ணத்தை மாற்றிக் கொண்டோம்.) போன தடவை நானும் என் கணவரும் புஷ்கரிணியில் தீர்த்தாமாடியதை நினைத்துக் கொண்டே வீட்டிலேயே குளித்தோம். பிள்ளை, மாட்டுப் பெண்ணை அழைத்துக் கொண்டு ‘வா, புஷ்கரிணியை சுற்றி நடந்து விட்டு வரலாம்’ என்று சொல்லி கிளம்பினேன். நித்ய புஷ்கரிணியை ஒரு பிரதட்சிணம் செய்து குளத்தங்கரை அனுமனை சேவித்தோம். மிகவும் வரப்ரஸாதி இவர். நிறைய பேர் வேண்டுதலுக்காக வடைமாலை சாத்துகிறார்கள். வருடந்தோறும் வைகாசி உத்ஸவத்தின் போது வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமி மூன்று நாட்கள் உபன்யாசம் நிகழ்த்துகிறார். நல்ல கூட்டம்!  அவரது உபன்யாசத்தைக் கேட்கவென்றே பலர் வருகிறார்கள். உபன்யாசத்தை முடித்துவிட்டு குளக்கரையில் வந்து அமர்கிறார் ஸ்வாமி. அவரைப் பார்க்கவும், கேட்கவும் பலர் அவரை சுற்றி. எனக்கும் அவரிடம் பேச வேண்டுமென்று ஆசை. என்ன பேசுவது? மற்றவர்களுடன் ஸ்வாமி பேசுவதை பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன். ‘சவரி பெருமாள்’ என்று அவர் சொல்லும் அழகே தனி. உத்ஸவ சமயத்தில் மாலை 3.30 மணிக்கு கோவில் திருக்காப்பு நீக்குகிறார்கள். உடனே கைத்தல சேவை. ஸ்வாமியும் பெருமாளை எழுந்தருளப் பண்ணுகிறார். வேண்டுதலுக்காக சவரிக் கொண்டையும் வாங்கி வந்து சமர்ப்பிக்கலாம். காதி கிராமோத்யோக் பவனத்தில் பெருமாளுக்கேன்றே சவரி கிடைக்கிறது. விலை சுமார் 3,000 ரூபாய்கள் ஆகும். திரு ரவியின் தொலைபேசி எண்: +919626350326 / +918973898295 திரு ரவி சவரிப் பெருமாளுக்காகவே திருக்கண்ணபுரத்தில் இருப்பவர். இவரை தொடர்பு கொண்டால் திருக்கண்ணபுரம் வருவதற்கு வழியும் சொல்லுவார். வயிற்றுப் பசியையும் போக்குவார். ‘ரஞ்ஜனி மாமி சொன்னாள்’ என்று சொல்லுங்கள். (ஹி…..ஹி…..!) ரவிக்கு மட்டும்தான் இந்த அடையாளம் வேண்டும்.  கணபுரத்தென் கருமணிக்கு அல்ல! கௌசலை தன் குல மதலையை , தயரதன் தன் மாமதலையை, மைதிலி தன் மணாளனை, கணபுரத்தென் கருமணியை சேவித்து விட்டு வாருங்கள். குலசேகர ஆழ்வார் சௌரிராஜ பெருமாளை ஸ்ரீராமனாகவே எண்ணி தாலாட்டுப் பாடியிருக்கிறார், என் ஆசையை நிறைவேற்றுவானா? 19 தப்புத்தப்பாக ஒரு தினம்! [] நேற்றைக்கு விஜயதசமி. எதை செய்ய ஆரம்பித்தாலும் வெற்றிதான் என்று உலகம் முழுக்க ஒரு நம்பிக்கை. தப்பு செய்ய ஆரம்பித்தால்….? அதையும் வெற்றிகரமாக செய்ய முடியுமா? அதென்னவோ நேற்று முழுக்க தப்புத்தப்பாகச் செய்துகொண்டிருந்தேன். (மற்ற நாளெல்லாம் ரொம்ப சரி சரியாகச் செய்கிறாப் போல….!) சமையல் எல்லாம் சரியாகவே செய்தேன். குழம்பிற்கு உப்பு; பாயசத்திற்கு வெல்லம் என்று காலை வேளை நன்றாகவே இருந்தது. விஜயதசமி பூஜை செய்து, சரஸ்வதி பூஜை அன்று பூஜையில் வைத்த புத்தகங்களைப் படித்து, எல்லோரையும் படிக்கச் செய்து….. சாயங்காலம் நாலு மணிக்கு என் தோழி சுகன்யாவிடமிருந்து தொலைபேசி. ‘ரஞ்ஜனி!  நீயே என் வீட்டுக்கு வா. மஞ்சள் குங்குமம் கொடுக்கிறேன். பிறகு உன்னுடனேயே உங்கள் வீட்டிற்கு வருகிறேன். சரியா?’ என்று. ‘நல்லதாச்சு. நானே வருகிறேன்.’ ‘ஒரு தடவை வந்திருக்கிறாய் இல்லையா, வீடு தெரியும் தானே?’ ‘ஓ! நல்லா தெரியும். எங்க வீட்டிலேர்ந்து உங்கவீடு ரொம்ப பக்கம்தானே…… கவலையே படாத! நானே வந்துடுவேன்….’ ‘எதுக்கும் என் போன் நம்பர் வைச்சுக்கோ….நீ ஒரு தடவை தான் வந்திருக்கே…..’ ‘அதெல்லாம் இருக்கு. டோன்ட் வொரி!’ (தமிழ்ல சொன்ன புரியாதா? ஆங்கிலத்தில் வேறயா?) இப்படியாக 6 மணிக்கு வெற்றிகரமாக கிளம்பினேன். அது தப்புகரமாக முடியப் போகிறது என்று அப்போது தெரியவில்லை. நிஜமாகவே சுகன்யா வீடு பக்கம்தான். என் வீட்டிலிருந்து நேராகப் போய் முதல் வலது. சிறிது தூரம் போய் முதல் இடது…….அப்புறம்…….அப்புறம்…….!!??!! நேராக நடந்து கொண்டே இருந்தேன். சுகன்யா வீடு வரவே இல்லை. அது எப்படி வரும்? நீதான் போகணும்…! சமய சந்தர்ப்பம் தெரியாமல் என் செல்லக்குட்டி (அதாங்க என் மன சாட்சி)  என்னை இடித்தது. ‘தப்புத்தப்பா எங்கெங்கேயோ போகிறாய்…ஒழுங்காக சுகன்யாவிற்கு போன் செய்…’ மனதிற்குள் எச்சரிக்கை மணி! வேண்டாம் வேண்டாம் நான்தான்  வந்திருக்கிறேனே….எச்சரிக்கை மணியை அலட்சியப்படுத்தி விட்டு மறுபடி நடக்க ஆரம்பித்தேன். இங்கேதான் எங்கேயோ…… நடுவில் ரோடு வேறு ரிப்பேர். தோண்டிப் போட்டிருந்தார்கள். தாண்டித் தாண்டி… மெதுவாக வயிற்றில் ஒரு பட்டாம் பூச்சி…..ஒன்று இரண்டானது….இரண்டு……பலவானது…. போன் செய்தேன் சுகன்யாவிற்கு. அவளது மாட்டுப்பெண் பேசினாள். ‘சொல்லுங்கோ ஆண்ட்டி!’ என் பரிதாப நிலையை சொன்னேன். ‘ஆண்ட்டி, நீங்க லக்ஷ்மி கோவில் கிட்ட வந்துடுங்கோ. நான் அங்க வரேன்’. நான் இருக்கும் இடம் எங்கே? கொஞ்சம் நிதானப்படுத்திக் கொண்டு பார்த்தேன். வலது பக்கம் மைசூர் ரோடு. சரி இடது பக்கம் டௌன்ல போகணும் (வீதிகள் ஏற்ற இறக்கமாக இருப்பதால் ‘அப்’புல போகணும், ‘டௌன்’ல போகணும் இதெல்லாம் சகஜம் இங்கே.) இடம் புரிந்துவிட்ட தைரியத்தில் வேகமாக (!!) நடந்து இடது பக்கம் திரும்பியவுடன் கோவில்…அப்பாடா! அங்கிருந்து எனக்கு சுகன்யாவின் வீட்டுக்குப் போக வழி தெரிந்து விட்டது. ஆனாலும் பாவம் அந்தப் பெண் வரேன் என்று சொல்லி இருக்கிறாளே என்று அங்கேயே நின்றேன்(!!). அவள் வந்தவுடன் அவளுடன் (அசடு வழிந்தபடியே) எப்படி வழி தவறினேன் என்று சொல்லிக் கொண்டே சுகன்யா வீட்டிற்குப் போனேன். கிளம்பும்போது சொன்னேன்: ‘இனிமேல் நான் போன் செய்தாலே உன் மாட்டுப் பெண், ‘எங்க மாட்டிக் கொண்டு இருக்கீங்க’ என்று கேட்கப் போகிறாள்…’ சரி அந்தத் தப்பை சரி செய்து வீட்டிற்கு வந்து கணணி முன் உட்கார்ந்து என்ன செய்வது என்று யோசிக்கும் போது, தெரியாத்தனமாக ‘reblog’ க்ளிக் பண்ணி……அசடு வழிந்து……. ஒருவழியாக reblog செய்ததை குப்பைத்தொட்டியில் தள்ளி…. திரும்பி வந்து இன்-பாக்ஸில்  ‘நாற்சந்தி’ யின் புது பதிவு வெற்றி விஜயம். சரி தப்பு பண்ணி மனசு நொந்துபோய் இருக்கே, வெற்றி விஜயத்தை படிப்போம் என்று படிக்க ஆரம்பித்து…. ’சிவகாமியின் சபதத்தில்…’ என்று தெளிவாக அவர் எழுதியதைப் படித்துவிட்டு…. பின்னூட்டத்தில் ‘பார்த்திபன் கனவு…’ என்று எழுதி….. காலையில் எழுந்து பார்த்தால் சிவகாமியின் சபதத்தை  ’பார்த்திபன் கனவு’ ஆக்கிவிட்டீர்களே’ என்று ஓஜஸ் நொந்து போய் இருந்தார்! இப்படி ஒரே நாளில் அடுக்கடுக்காக உலகம் முழுக்க தெரிகிறார்போல தப்பு செய்ய யாராலாவது முடியுமா இந்த அபராத சக்ரவர்த்தியை தவிர? இதை படித்து விட்டு தலைப்பை ‘தினம் தப்புத்தப்பாக’ என்று நீங்கள் படித்தாலும் எனக்குக் கோபம் தப்பித் தவறிக் கூட வராது! 20 குதிக்கும் ‘அவரை’ தெரியுமா? [avarekaai] உங்கள் அவரா? ரொம்பவும் குதிப்பாரோ? எப்பவுமா? இல்லைக் கோபம் வந்தால் மட்டும் தலைகால் புரியாமல் குதிப்பாரா? அவர் குதித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஸ்வரஜதி போடுவீர்களா? இல்லை, அவருடன் சேர்ந்து நீங்களும் குதிப்பீர்களா? என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறதா? ஸ்டாப்! ஸ்டாப்! எங்கள் ஊரில் இந்த சீசனில் கிடைக்கும் அவரைக் காய்க்குத்தான் இந்தப் பெயர். ஆங்கிலத்தில் இதனை ‘Jumping Bean’ என்பார்கள். கன்னட மொழியில் ‘இதுக்கு’ (பிதுக்கு) அவரை என்பார்கள். எதுக்கு அவரை என்று கேட்காதீர்கள்! அவரேகாய் என்றாலும் பயன்படுத்துவது இதன் பருப்புகளை மட்டுமே. கிட்டத்தட்ட மொச்சக் கொட்டை போல கொஞ்சம் சின்ன சைஸில் இருக்கும். தினசரி செய்யும் சாம்பார் வகைகளிலிருந்து, ஸ்பெஷல் ஆகச் செய்யும், கோடுபளே, அக்கி (அரிசி) உப்பிட்டு, மிக்ஸர்  என்று விதம்விதமாக  இந்த அவரை பருப்புகளை பயன்படுத்துவார்கள். இந்தப் பருப்புகளை வைத்து செய்யும்போது கட்டாயம் இஞ்சி சேர்க்க வேண்டும் – ஜீரணம் ஆவதற்காக – இன்னொரு காரணம் கடைசியில் சமையல் குறிப்பில் காண்க. மிகவும் ‘ஹெவி’ யாக இருக்கும் என்பதால் பலர் – குறிப்பாக வயதானவர்கள் – இதனை சாப்பிடுவதில்லை. [உரித்த அவரேகாய்] முன்பெல்லாம் முழுதாகக் கிடைக்கும். அதை வாங்கி வந்து மேல்தோல் பிரித்து (பட்டாணி போல) உள்ளிருக்கும் பருப்புகளை எடுக்கலாம். இந்த ஊருக்கு வந்த புதிதில் இந்தப் பருப்புகளின் மேல் இருக்கும் தோலியையும் எடுத்துவிட்டு சமைக்க வேண்டும் என்று எனக்குத் தெரியாது. எங்கள்  வீட்டு சொந்தக்காரரின் மனைவி ‘இதுக்(கு) பேக்கு’ (மேல்தோலை பிதுக்க வேண்டும்) என்று சொன்னவுடன் நான் மனதில் நினைத்துக் கொண்டேன்: ‘இதுக்கு பேக்கு, அதுக்கு பேக்கு, எதுக்கு பேக்கு, எல்லாத்துக்கும் பேக்கு?’ என்று! பிறகு என் தோழி விளக்கம் கொடுத்தார். மேல்தோல் எடுத்தவுடன் கிடைக்கும் இந்த அவரை விதைகளை தண்ணீரில் எட்டு மணி நேரம் ஊறப் போட வேண்டும். பிறகு ஒவ்வொன்றாக எடுத்து ‘இதுக்க’ (பிதுக்க) வேண்டும். வேறு வேலை இல்லை என்று இதை வாங்குவதையே விட்டு விட்டேன். இப்போதெல்லாம் இதுக்கிய அவரேகாயே கிடைக்கிறது. உரிச்ச வாழைப்பழம் போல. இந்த மாதங்களில் – அதாவது அவரேகாய் சீசனில் இங்குள்ளவர்கள் துவரம்பருப்பு வாங்கவே மாட்டார்களாம். அதற்கு பதில் இந்த பருப்பை பயன்படுத்துவார்களாம். இன்னொரு வேடிக்கையான விஷயமும் இந்தக் காயை பற்றி இருக்கிறது. இந்த சீசனில் தெருக்களின் நடுவில் இந்த பருப்புகளின் ‘இதுக்கிய’ தோலிகளை எறிந்து இருப்பார்கள். ‘ஏன் இப்படி நடுத்தெருவில் இந்தத் தோலிகளைப் போடுகிறார்களோ’ என்று நான் அலுத்துக் கொண்டதற்கு என் தோழி கூறினார்: எத்தனை பேர்கள் இதன் மேல் நடந்து போகிறார்களோ அதனைக்கத்தனை இதன் ருசி கூடும்’ என்று! இது எப்படி இருக்கு? குதிக்கும் அவரை மாதிரியே குதிக்கத் தோன்றுகிறதா? சரி. இதனை வைத்துக் கொண்டு ஒரு சின்ன சமையல் குறிப்பு: அவரேகாய் அக்கி உப்பிட்டு புழுங்கலரிசி ரவை – 1 கப் நீர் இரண்டு கப். அவரேகாய் கால் கப். பச்சை மிளகாய் 2 அல்லது 3 – குறுக்கு வாட்டில் அரிந்து கொள்ளவும். கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு தாளிக்க கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தலா 1 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் 2 அல்லது 3 பெருங்காயம் – சிறிதளவு கட்டாயம் சேர்க்க வேண்டியது இஞ்சி (இல்லாவிட்டால் ஆட்டோகிராப் படத்தில் வரும் வாத்தியார் படும்பாடுதான்!) தேங்காய்  துருவியது  கால் கப் எண்ணெய் – 4 அல்லது 5 மேசைக் கரண்டி உப்பு – ருசிக்கேற்ப [aval uppumaa] செய்முறை: வாணலி அல்லது வெண்கல உருளியில் எண்ணெயை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் க.பருப்பு, உ.பருப்பு, மிளகாய் போடவும். இஞ்சியை துருவிப் போடவும். பெருங்காயம் போடவும். கறிவேப்பிலை சேர்க்கவும். நீரை விடவும். தேவையான உப்பு சேர்க்கவும். நீர் கொதிக்கும் போது அவரேகாய் போடவும். 1௦ நிமிடம் கொதிக்க விடவும். ஒரு தட்டால் மூடி விட்டால் அவரேகாய் பாதி வெந்து விடும். பிறகு அரிசி ரவையைக் கொட்டிக் கிளறவும். உருளியின் மேல் ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு வைக்கவும். உப்புமாவிற்கு நீர் தேவைபட்டால் இந்தக் கொதி நீரை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறவும். அவரேகாய் நன்றாக வெந்து, அரிசியும் வெந்தவுடன் தேங்காய் பூவைப் போட்டு ஒரு கிளறு கிளறி அடுப்பை நிறுத்தி விடவும். சுடச்சுட சாப்பிட்டால் நன்றாக இருக்கும். பரிமாறும் முன்பு சிறிதளவு நெய்யை விடவும். பூப்பூவான அவரேகாய், அக்கி உப்பிட்டு தயார்! [avarekaai saaru]இந்த சீசனில் எல்லா உணவகங்களிலும் இந்தப் பருப்புகளை வைத்தே ரவை  உப்புமா, அவல் உப்புமா, கலந்த சாதங்கள் (சித்திரான்னம்) தோசை, அக்கி ரொட்டி, சாறு எனப்படும்  குழம்பு  முதலானவை தயாரிக்கப் படும். ருசியும், விலையும் வானத்தை தொடும்! அவரேகாயில் செய்த மிக்சரை சாப்பிட்டுக் கொண்டே இந்தப் பதிவை எழுதுகிறேன். 21 எங்கள் மாமா ஸ்ரீரங்கம் என்றால் உடனே நினைவுக்கு வருவது எங்கள் பாட்டியின் வீடு மட்டுமல்ல; எங்கள் மாமாக்களின் நினைவும் தான். எங்கள் பெரிய மாமா சென்னை திருவல்லிக்கேணியில் இருந்தார். அவர் ரொம்பவும் கண்டிப்பானவர். அவரிடம் எங்களுக்கு சற்று பயம் அதிகம். எதிரில் நின்று பேச பயப்படுவோம். அடுத்த மூன்று மாமாக்களிடம் அதீத செல்லம். மாமா வா, போ என்று பேசும் அளவுக்கு சுதந்திரம். இந்த மூவரில் பெரிய மாமா திருமஞ்சனம் கண்ணன் என்கிற கண்ணப்பா மாமா. அவர்தான் இந்தப் பதிவின் நாயகன். நாங்கள் சிறுவயதினராக இருந்த போது  மாமா எங்களுடன் சில காலம் சென்னையில் தங்கி இருந்தார். அதனால் இந்த மாமா ரொம்பவும் நெருக்கமானவர் எங்களுக்கு. மாமாவின் பொழுதுபோக்கு புகைப்படங்கள் எடுப்பது. அவரது  புகைப்படங்களுக்கு பாத்திரங்கள் நாங்கள் – மாமாவின் மருமான்களும், மருமாக்களும் தான். அதுவும் நான் ரொம்பவும் ஸ்பெஷல். என் தோழி ஜெயந்தி எனக்கு photographic memory இருப்பதாக எழுதியிருந்தாள். என் மாமா நான் photogenic என்று அடிக்கடி சொல்லுவார். அதனால் மாமா எடுத்த படங்களின் முக்கிய கதாநாயகி நானாக இருந்தேன் – எனக்குத் திருமணம் ஆகி புக்ககம் போகும் வரை! எங்களை சிறுவயதில் புகைப்படங்கள் எடுத்ததுடன் நிற்காமல் எங்களது திருமணங்களுக்கும் மாமாதான் புகைப்படக்காரர். தன்னிடமிருந்த கருப்பு வெள்ளை காமிராவில் மாமா காவியங்கள் படைத்திருக்கிறார். மாமாவின் புகைப்படங்களில் நாங்கள் எல்லோரும் உயிருடன் உலா வந்தோம். மாமா தன் புகைப்பட பரிசோதனைகளை எங்கள் மேல் நடத்துவார். மாமாவின் மனதில் தோன்றும் கற்பனைகளுக்கு ஏற்ப நாங்கள் ‘போஸ்’ கொடுக்க வேண்டும். மாமா நினைத்தது புகைப்படத்தில் வரும் வரை எங்களை விட மாட்டார். இப்போது இருப்பது போல டிஜிட்டல் காமிராக்கள் இல்லாத நேரம் அது. ஒரு பிலிம் சுருள் முடியும் வரை புகைப்படங்கள் எடுத்துவிட்டு, திருச்சி போய் அவற்றை பிரதி எடுத்துக் கொண்டு வருவார். கூடவே புதிய பிலிம் சுருளும் வரும், அடுத்த பரிசோதனைக்கு. காவிரியில் ஆடிப்பெருக்கன்று சுழித்தோடும் வெள்ளத்திலிருந்து, மகாபலிபுரம் அர்ஜுனன் தபஸ் வரை மாமாவின் கருப்பு வெள்ளைக் காமிராவில் புகைப் படங்களாக சிறைப் பிடிக்கப்பட்டிருக்கும். எனக்கு நினைவு இருக்கும் மாமாவின்  புகைப்படப் பரிசோதனை ஒன்று. எனக்கு நானே புத்தகம் கொடுப்பது போல. நான் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பேன். காமிராவின் லென்ஸ் –ஐ பாதி மூடிவிட்டு உட்கார்ந்திருக்கும் படத்தை எடுப்பார். அடுத்தாற்போல அந்த நாற்காலி பக்கத்தில் நின்று கொண்டு காலி நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு புத்தகத்தைக் கொடுக்க வேண்டும். லென்ஸ்- இன் மறுபாதியை மூடிவிட்டு இந்தப் படத்தை எடுப்பார். திரும்பத் திரும்பத் திரும்பத் ………. எத்தனை முறை இதனை எடுத்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்? எனக்கு இன்றுவரை நினைவு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அப்போதெல்லாம் செய்தி பரிமாற்றம் கடிதங்கள் மூலம்தான். நாங்களும் எங்கள் மாமாக்களுக்கு கடிதம் எழுதுவோம். கடிதத்தின் ஆரம்பத்தில் ‘ஸ்ரீமதே ராமானுஜாய நம:’ போட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது எங்கள் கண்ணப்பா மாமா தான். மாமாவுக்கு கணீரென்ற குரல். அகத்தில் இருக்கும் பெருமாளுக்கு அந்த கணீர் குரலில் பாசுரங்கள் சேவித்தபடியே மாமா திருமஞ்சனம் செய்வதைக் காணக் கண் கோடி வேண்டும். ‘நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்’ என்று மாமா நாத்தழுதழுக்க பெரிய திருமொழி சேவிக்கும்போது திருமங்கையாழ்வாரும், ‘எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்* எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே’ என்று திருமாலை சேவிக்கும்போது தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் நம் கண் முன்னே தோன்றுவார்கள். கண்ணப்பா மாமாவுக்குத் திருமணம் ஆகி மாமி வந்தார். மாமா எங்களுக்கு எத்தனை நெருக்கமோ அத்தனை நெருக்கம் ராஜம் மாமியும். திவ்யப்பிரபந்தம் மட்டுமே தெரிந்திருந்த எங்களுக்கு முமுக்ஷுப்படி, ஸ்ரீவசன பூஷணம், ஆச்சார்ய ஹ்ருதயம் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியவர் இந்த மாமிதான். ‘பகவத்கீதையில் கிருஷ்ணனுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் ராஜத்தைத் தான் கேட்பார்’ என்று என் மாமா வேடிக்கையாகக் கூறுவார். அந்த அளவுக்குக் கீதையை கரைத்துக் குடித்தவர் மாமி. பல திவ்ய தேசங்களுக்கும் சென்று அங்கிருக்கும் பெருமாள்களையும் தன் காமிராவில் சிறை எடுத்து வருவார் எங்கள் மாமா. மாமாவிற்கு தான் எடுத்த படங்களுள் மிகவும் பிடித்தமான படம் திருவாலி திருநகரி திருமங்கையாழ்வார் தான். கூப்பிய கைகளுடன் நிற்கும் அவரது திரு முகத்தை மட்டும் க்ளோஸ்-அப் – பில் எடுத்து வீட்டுக் கூடத்தில் மாட்டியிருப்பார். ஆழ்வாரின்  கண்களின் வழியே அவரது கருணை நம்மை ஆட்கொள்ளும். இத்தனை திறமை இருந்தும் மாமா தனது திறமையை பணமாக்க விரும்பவில்லை. எத்தனையோ பேர்கள் சொல்லியும் தனது மனதுக்குப் பிடித்த பொழுதுபோக்காக மட்டுமே வைத்துக்கொண்டு இருந்தார். எங்களது பாட்டியின் முதுமை காலத்தில் மாமாவும் மாமியும் மிகுந்த ஆதுரத்துடன் பாட்டியைப் பார்த்துக் கொண்டனர். மாமாவின் குழந்தைகளும் பாட்டியினிடத்தில் வாஞ்சையுடனும், மிகுந்த பாசத்துடனும் இருந்தனர். பாட்டியின்  கடைசிக் காலம் இவர்களது அரவணைப்பில் நல்லவிதமாக கழிந்தது. இதற்காக மாமாவுக்கும், மாமிக்கும் நாங்கள் எல்லோருமே நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறோம். கண்ணப்பா மாமா என்று நாங்கள் ஆசையுடன் இன்றும் அழைக்கும் எங்கள் மாமாவுக்கு இன்று 80 வயது நிறைகிறது. மார்கழித் திருவாதிரையில் பிறந்தவர் மாமா. எங்கள் அம்மா ஒவ்வொரு வருடமும் தனது தம்பியை நினைத்துக் கொண்டு திருவாதிரை களியும், ஏழுகறிக் கூட்டும் செய்வாள். பழைய நினைவுகளுடன், மாமாவின் அன்பில் நனைந்த நாட்களை அசை போட்டபடியே இந்தப் பதிவை மாமாவுக்கு அர்ப்பணிக்கிறேன். மாமாவும் மாமியும் என்றென்றும் ஆரோக்கியத்துடன், சந்தோஷமாக இருக்க ஸ்ரீரங்கம் திவ்ய தம்பதிகளை வேண்டுகிறேன். 22 கணிதமும் நானும்! என் மொழிப்புலமை  போலவேதான் என் கணிதப் புலமையும். [maths] எட்டாவது வகுப்பில் என் கணித ஆசிரியர் திருமதி லில்லி கான்ஸ்டன்டைன் அவர்கள் என்னை ஆச்சர்யத்துடன் கேட்ட கேள்வி இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது: ;ஏண்டி! உனக்கு கணக்குப் பாடம் வராதா?’ நான் ‘வராது டீச்சர்’ உண்மையை ஒப்புக் கொண்டேன். வராததை வராது என்ற ஒப்புக் கொள்ளும் குணம் நல்லது இல்லையா? அன்றிலிருந்து அவர் என் வழிக்கு வருவதே இல்லை. மற்ற பாடங்களில் இருந்த மேதமை(!!) கணக்குப் புத்தகத்தை எடுத்தாலே மறைந்து கொண்டு கண்ணாமூச்சி விளையாடியது. ஒரு நாள் என் ஆசிரியர் சொன்னார்: ’இத பாருடி! யாருகிட்டயாவது கணக்கு கத்துக்க. அண்ணா, அக்கா யாரும் இல்லையா, வீட்டிலே?’ அண்ணா தான் ஆங்கிலம், கணக்கு இரண்டும் சொல்லித் தருவான். அவனும் தன திறமைகளை எல்லாம் என்னிடத்தில் பயன்படுத்திப் பார்த்து வெறுத்துப் போய் விட்டான். ‘இந்த ஜென்மத்தில உனக்கும் கணக்குக்கும் ஸ்நானப் பிராப்தி இல்லை..!’ என்று சொல்லி என்னை மஞ்சள் தண்ணீர் தெளித்து விட்டு விட்டான். எப்படியோ சமாளித்து எஸ் எஸ் எல் சி வந்துவிட்டேன். ஆசிரியை ராஜி பாய்! ரொம்பவும் கண்டிப்பு. எனக்கு எப்படியாவது கணக்குப் பாடத்தை சொல்லிக் கொடுத்துவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார். தினமும் போராட்டம்தான் எனக்கும் (கணக்கு பாடத்திற்கும் இல்லை!) ராஜி பாய் டீச்சருக்கும் தான்! அந்த காலத்தில் ஒன்பதாம் வகுப்பில் காம்போசிட் மேத்ஸ் அல்லது அரித்மேடிக்ஸ் இரண்டு வகைகளில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். அண்ணா சொன்னான்:’காம்போசிட் மேத்ஸ் எடு. மதிப்பெண்கள் நிறைய வாங்கலாம். நான் சொல்லித் தருகிறேன்’. ‘ஐயையோ! வேண்டாம்’ என்று ஜகா வாங்கிவிட்டேன். ‘1௦ ஆட்கள் சேர்ந்து 8 மணிநேரம் வேலை செய்தால் 6 நாட்களில் ஒரு வேலை முடியும். அதே வேலையை இரண்டே நாட்களில் முடிக்க எத்தனை ஆட்கள் எத்தனை மணிநேரம் வேலை செய்யவேண்டும்?’ ‘ஒரு பெரிய நீர்த்தொட்டி. இரண்டு குழாய்கள் குறிப்பிட்ட வேகத்தில் நீரை நிரப்பும். ஒரு குழாய் குறிப்பிட்ட வேகத்தில் நீரை காலி செய்யும். எத்தனை மணி நேரத்தில் தொட்டி நிரம்பும்?’ தண்ணீர் நிரம்பவே நிரம்பாது என்பது என் வாதம். ஒரு குழாய் காலி செய்து கொண்டே இருக்கும் போது தொட்டி எப்படி நிரம்பும்? இந்த சாதாரணக் கணக்குகளைப் போடவே தடுமாறும் நான் ஜியோமெட்ரி, அல்ஜீப்ரா (காப்ரா தான்!) என்று வாயில் நுழையாத பெயர்களில் கணக்குப் பாடம் என்றால் எங்கே போவேன்? என் தலைமை ஆசிரியை திருமதி ஷாந்தா உட்பட எல்லா ஆசிரியர்களும் நான் எஸ் எஸ் எல் சி –யில் ‘கப்’ (அதாங்க, எங்க காலத்தில் பெயில் என்பதற்கு செல்லப் பெயர்) வாங்கிவிடுவேன் என்று உறுதியாக நம்பினார்கள். ஒரே ஒருத்தியைத் தவிர. நான் இல்லை அது! எனது தோழி டி.ஏ. இந்திராதான் அந்த ஒரே ஒருத்தி. அவள் ரொம்பவும் தீர்மானமாகச் சொன்னாள்: ‘இதோ பாருடி, இவர்கள் எல்லோரையும் தலை குனிய வைக்கிறாப் போல நீ எஸ் எஸ் எல் சி – பரீட்சையில கணக்குல அறுபது மார்க்ஸ் எடுத்து பாஸ் பண்ற, சரியா?’ ‘வேண்டாம் இந்திரா, நான் மங்கம்மா இல்லை இது போல சபதம் போட…’ ‘ஒண்ணும் பேசாதே…!’ என்று சொன்னவள் தினமும் பள்ளிக் கூடம் முடிந்ததும் எனக்கு கணக்கு சொல்லித் தர ஆரம்பித்தாள். என்னுடன் முட்டி மோதி என் தலையில் கணக்குப் பாடத்தை ஏற்றி…! அவளுடைய அயராத முயற்சியினால் கணக்குப் பாடத்தில் நான் 61 மதிப்பெண்கள் பெற்று தேறினேன்! அந்தக் காலகட்டத்தில் 6௦ மதிப் பெண்கள் என்பது மிகவும் உயர்ந்த ஒன்று அதுவும் நான் வாங்கியது! இப்போது நினைத்தாலும் எனக்கு மிகவும் ஆச்சரியம் தான்! அவளுக்கென்ன என் மேல் இப்படி ஒரு அக்கறை? இன்று வரை விடையைத் தேடிக் கொண்டே இருக்கிறேன். என் கணவர் எத்தனை பெரிய எண்கள் கொடுத்தாலும் வாயினாலேயே கூட்டிச் சொல்லிவிடுவார். எனது மகளும், மகனும் என்னுடைய நேர் வாரிசு கணக்குப் பாட விஷயத்தில். என் பிள்ளைக்கு கல்யாணத்திற்கு பெண் தேடியபோது நான் போட்ட இரண்டே இரண்டு கண்டிஷன்கள் என்னென்ன தெரியுமா? முதலாவது கணக்குப் பாடத்தில் வல்லவளாக இருக்க வேண்டும். இரண்டாவது அளக பாரம் (கூந்தல்) நிறைய இருக்க வேண்டும். நம் தலையெழுத்தை மாற்ற வேண்டுமே! ******************************************************************************************************************** இன்று கணித மேதை ஸ்ரீனிவாச இராமானுஜன் அவர்களின் 125 வது பிறந்த நாள். அந்த மாமேதையின் பெயரைச் சொல்லவோ     அவரைப் பற்றிய பதிவு எழுதும்  தகுதியோ இல்லை எனக்கு. என்னைபோல பலரும் கணக்குப் பாடம் என்றால் ஓடுகிறார்களே. கணக்குப் பாடத்தை எப்படி சுவாரஸ்யமாக சொல்லித் தரலாம் என்று யோசனைகள் சொல்லுங்களேன். என் தோழி திருமதி அனுஸ்ரீனியின் பதிவையும் படியுங்களேன்: கணிதத்தைப் பற்றிய அவரது எண்ணங்களும் என் எண்ணங்களும் எத்தனை ஒத்துப் போகின்றன பாருங்கள்! இதோ இன்னுமொரு தோழி திருமதி மஹாலக்ஷ்மி விஜயன் அவர்களின்அனுபவம் எனது இன்னொரு தோழி திருமதி விஜயா கணக்கு ஆசிரியை. அவரும் கணித மேதை ராமானுஜம் பற்றி எழுதி இருக்கிறார். அதையும் படியுங்கள், ப்ளீஸ்! 23 முப்பதும் தப்பாமே…..! [thiruppavai]இன்றைக்கு மார்கழி முதல் நாள். திருவாடிப் பூரத்து செகத்துதித்த, திருப்பாவை முப்பதும் செப்பிய, பெரியாழ்வார் பெற்றெடுத்த, பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னான, ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்த, உயரரங்கற்கு கண்ணி உகந்தளித்த, மருவாறும் திருமல்லி வளநாடி, வண்புதுவை நகர்கோதை அருளிச் செய்த திருப்பாவையால் சிறந்து விளங்கும் மாதம். தினமுமே திருப்பாவையை சேவித்த போதும் மார்கழியில் சேவிப்பது மன நிறைவைத் தரும். திருப்பாவையை நினைவு தெரிந்த நாளாக சேவித்து வருகிறேன். திருவல்லிக்கேணி திருவேட்டீச்வரன் பேட்டையில் இருந்த போது விடியற்காலையில் மார்கழி மாதம் தினமும் பஜனை கோஷ்டி ஒன்று எங்கள் வீதி (நாகப்பா ஐயர் தெரு) வழியே போகும். அதுதான் எங்களுக்குத் திருப்பள்ளியெழுச்சி! பள்ளியிலும் திருப்பாவை, திருவெம்பாவை சொல்லிக் கொடுப்பார்கள். என் அக்கா, திருமதி எம்.எல்.வி. பாடிய ராகத்திலேயே எல்லாப் பாடல்களையும் அழகாகப் பாடுவாள். வாசலில் பெரிய கோலம் போடுவாள். நான்? ரசிப்பேன் அவ்வளவுதான்! நம்மால் முடிந்ததைத்தானே நாம் செய்ய முடியும்? பிறகு புரசைவாக்கம் வந்தபோது நான் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். லேடி எம்.சி.டி. முத்தையா செட்டியார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். திருப்பாவை என்றால் எனக்கு நினைவுக்கு வரும் – ஆண்டாளைத் தவிர – ஒருவர் திரு கேதாரேஸ்வர ஸர்மா. எங்கள் தமிழ் வாத்தியார், ஸர்மா ஸார். மார்கழி மாதம் முப்பது நாளும் பள்ளி முடிந்த பின் திருப்பாவை அன்றைய நாள் பாட்டை சொல்லிக் கொடுத்து அதற்கு விளக்கமும் சொல்வார். ஒவ்வொரு நாளும் அவரது மாணவிகளுள் ஒருவர் வீட்டிலிருந்து பிரசாதம் வரும். வெள்ளைவெளேரென்ற பஞ்சகச்சம். வெள்ளை நிற அங்கி அதன் மேலே வண்ண ஷால். கட்டு குடுமி. நெற்றியில் பளீரென்ற திருநீறு. ஆண்டாளைப் பற்றி சொல்லுகையில் கண்களில் நீர் ததும்பும்! தமிழ் வாத்தியார் என்றால் மனதில் தோன்றும் பிம்பத்துக்கு ஏற்றார்போல் எங்கள் ஸர்மா ஸாருக்கும் நிறைய பெண்கள் + ஏழ்மை. திருப்பாவை உபன்யாசத்துக்கு நடுவே தன் ஏழ்மையையும், ஆண்டாளும் அவள் சாதித்த திருப்பாவையுமே தன் பெண்களை கரையேற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் கண்ணீருடன்  ஆண்டாளிடம் முன் வைப்பார். நாங்களும் கண்களில் கண்ணீருடன் அவருக்காக ஆண்டாளிடம் மானசீகமாக பிரார்த்தனை செய்து கொள்ளுவோம். அவரது மாணவிகளைத் தவிர, சில தாய்மார்களும் அவரது உபன்யாசத்தைக் கேட்க வருவார்கள். பல தாய்மார்கள் நேரில் வராவிட்டாலும் பிரசாதம் செய்து அனுப்பி விடுவார்கள். கடைசி நாளன்று – வங்கக் கடல் கடைந்த  பாசுரத்தன்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடத்துவார். ரொம்பவும் அமர்க்களமாகப் பண்ணுவார். பூக்களும் நகைகளுமாக ஆண்டாளும் ரங்கமன்னாரும் மின்னுவார்கள். ஆண்டாள் பெருமாளுடன் கலந்து விட்டதை அவரால் சொல்லவே முடியாது. நா தழுதழுக்கும். கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டும். உணர்ச்சிப் பெருக்கில் எல்லோரும் ஊமைகளாக உட்கார்ந்திருப்போம். அன்றைக்கு நிறைய மாணவிகள், பெற்றோர்களுடன் வருவார்கள். நடுவில் ஒரு நாள் திருப்பாவைப் போட்டி நடக்கும். வெற்றி பெற்றவர்களுக்கு ஆண்டாள் படம் பரிசு. வருடம் தவறாமல் கலந்து கொண்டு பரிசும் வாங்கி விடுவேன் நான். ஆண்டாள் சாதித்த திருப்பாவை முப்பதையும் தப்பாமல் சொன்னால் நல்ல வாழ்க்கை அமையும்  என்ற  விதையை ஒவ்வொரு மாணவியின் உள்ளத்திலும் விதைத்தவர் அவர்தான். அவரது பெண்களுக்கும் நல்ல வாழ்க்கை அமைந்தது. அவர் நம்பிய ஆண்டாள் அவரைக் கைவிடவில்லை. நானும் அவர் சொல்லியதை அப்படியே நம்பினேன். என் பெண்ணின் உள்ளத்திலும் திருப்பாவை என்கிற வித்தை விதைத்தேன். எனக்கு ஒரு நாராயணனும், அவளுக்கு ஒரு கேஷவ மூர்த்தியும்  கிடைத்து எங்கள் வாழ்க்கை நல்லபடியாக அமைந்து இருக்கிறது. ‘சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரை தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்…. என்பதற்கு இதைவிட சாட்சி வேண்டுமா? 24 அந்த நாள் முதல் இந்த நாள் வரை….. ஜெயந்தியை நான் எப்போது சந்தித்தேன்?  நினைவில்லை.  ‘உனக்கும் நினைவில்லையா?’ இருவரும் ஆச்சரியப் பட்டோம்.  ஒரே பள்ளியா? இல்லை.  ஒரே அலுவலகத்தில் வேலை செய்தோமா? இல்லை.  ஒரே வீதியில் வீடா? அதுவும் இல்லை.  பின் எப்படி தோழிகளானோம்? பலத்த யோசனைக்குப் பின் நினைவுக்கு வந்தது. ஒரே பேருந்தில் அலுவலகத்திற்குப் பயணம் செய்திருக்கிறோம். பேருந்து தோழிகள்! அதுவும் சில மாதங்களுக்குத் தான். ஜெயந்தி பிறகு வேறு வேலைக்கு மாறிவிட்டாள்.  ஆனால் எனக்கு திருமணம் ஆகும் வரை நானும் அவளும் கிட்டத்தட்ட எல்லா நாட்களுமே மாலை வேளைகளில் சந்தித்திருக்கிறோம். புரசைவாக்கம் டேங்க், எதிரில் இருக்கும் (இப்போது இருக்கிறதா?) அனுமார் சந்நிதி, கங்காதரேஸ்வரர் கோவில் என்று சுற்றிக் கொண்டே இருப்போம்.  எங்களுக்குள் பேச எத்தனையோ. ‘அதென்ன மணிக்கணக்கா பேச்சு?’ என்று இருவர் வீட்டிலும் கோபித்துக் கொள்ளுவதால் இருவரும் புரசைவாக்கம் தெருக்களில் சுற்றி சுற்றி வருவோம் – கோவிலுக்குப் போவதாகச் சொல்லிவிட்டு!  பிறகு எனக்குத் திருமணம் ஆகி அசோக் நகர் வந்து விட்டேன். ஜெயந்தியின் தொடர்பும் விட்டுப் போயிற்று. ’79 இல் ஜெயந்தியின் குடும்பம் அசோக் நகரில் இருந்த போஸ்டல் குவார்ட்டர்ஸ் –இல் இருந்தபோது ஒரு முறை சந்தித்தோம். என் பெண்ணுக்கு அப்போது மூன்று வயது.  பிறகு நாங்கள் அண்ணாநகர் வந்து, அங்கிருந்து பெங்களூரு வந்து….ஜெயந்தி நினைவிலிருந்து மறைந்தே போனாள்.  இப்போது எங்கிருந்து வந்தாள் என்று கேட்கிறீர்களா?  என் ப்ளாகின் மூலம்தான்! ஆச்சரியம் இல்லையா?  எனது ப்ளாகில் ஒரு முறை திரு ரா.கி. ரங்கராஜன் அவர்களின் மறைவின் பின்னணியில், அவர் எனக்கு எழுதிய கடிதத்தைப் பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன். ‘கடுகு’ என்கிற திரு ரங்கநாதன் அவர்களும் அவரது கடுகு தாளிப்பு என்ற வலைப்பூவில் திரு ராகிரா பற்றி எழுதி இருந்தார். அதை அவரது தளத்தில் படித்த நான் ‘நானும் திரு ராகிரா பற்றி எழுதி இருக்கிறேன். முடிந்தால் படித்துப் பாருங்கள்’ என்று என் வலைதளத்தின் இணைப்பையும் கொடுத்து பின்னூட்டம் இட்டிருந்தேன்.  ஜெயந்தி திரு ‘கடுகு’ அவர்களின் எழுத்துக்களை மிகவும் விரும்பிப் படிப்பாள். அவள் எனது பின்னூட்டத்தைப்  படித்து விட்டு என் பதிவைப் படித்திருக்கிறாள். எனது அழகான(!!!)  புகைப் படத்தையும் பார்த்துவிட்டு நீ புரசைவாக்கத்தில் இருந்த ரஞ்சனி தானே என்று கேட்டு எங்கள் ஊர் சுற்றலையும் குறிப்பிட்டிருந்தாள்.  பல வருடங்களுக்குப் பிறகு தோழிகள் ஒருவரையொருவர் மறுபடி கண்டுகொண்டோம் கண்டு கொண்டோம்…..!!!  போன மாதம் சென்னை சென்ற போது ஒரே ஒரு நிகழ்வு:  ஜெயந்தியை சந்திப்பது மட்டும்தான்!  காலை சதாப்தி வண்டியில் கிளம்பினோம். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கே வருவதாக ஜெயந்தி சொல்லியிருந்தாள். நான் தான் வழக்கம்போல CCC2 கோச் என்பதற்கு பதிலாக CC1 என்று சொதப்பி இருந்தேன். பாவம் ஜெயந்தி, C1 கோச் முழுவதும் தேடி என்னைக் காணாமல் என்னவோ ஏதோ, நான் ஏன் வரவில்லை என்று பதறி எனக்கு போன் மேல் போன் செய்து….தவித்துக் கொண்டிருக்க,  நான் நிதானமாக அடுத்த பெட்டியிலிருந்து இறங்கி, யார் இந்த நேரத்தில் போன் செய்கிறார்கள் என்று தொலைபேசியில் கண்ணையும் கருத்தையும் வைத்துக் கொண்டு நடக்க….  ‘ரஞ்சனி……’ என்று ஓடி வந்தவள் என்னை அப்படியே அணைத்துக் கொண்டாள்.  ‘உங்களைக் காணோமென்று ஆடிப் போய்விட்டாள்’ என்றார் ஜெயந்தியின் துணைவர் திரு ஸ்ரீதரன்.  ‘ஸாரி, ஸாரி’ என்று அசடு வழிந்தேன். ஜெயந்தி என் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.  ‘நீங்கள் வரப்போவது அமெரிக்கா முதல் ஆஸ்திரியா வரை தெரியும்…’  ஜெயந்தியின் பிள்ளைகள் இருவரும் இந்த இரண்டு ஊர்களில் இருந்தனர்.  ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் கூடுமோ?’ என்பார்கள். ஆனால் நாங்கள் இருவரும் விடாமல் – மூச்சு விடாமல் பேசினோம். வீடு போய் சேரும்வரை, சேர்ந்த பின், சாப்பிடும்போது, பேசிக் கொண்டே, பேசிக் கொண்டே……!  ஜெயந்தியின் அம்மா பக்கத்திலேயே இருந்தார். என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே ‘என்ன ரஞ்சனி, எத்தனை குழந்தைகள், எல்லோருக்கும், கல்யாணம் ஆயிற்றா, பேரன், பேத்திகள் இருக்கிறார்களா…..?’ என்றார்.  ‘ஐயோ! மாமி அதையெல்லாம் கேட்காதீங்கோ! நானும் ஜெயந்தியும் இப்போது புரசைவாக்கத்தில் கல்யாணம் ஆகாத பெண்களாக சுற்றிக் கொண்டிருக்கிறோம்’ என்றேன்.  எவ்வளவுதான் இந்த நாளின் நிஜம் இருவருக்கும் தெரிந்தபோதும், மறுபடி மறுபடி பழைய நினைவுகளிலேயே இருவரும் மூழ்க ஆசைப்பட்டோம்.  ‘குட்டி குட்டியா நகம் வளர்த்துப்பியே என்ன ஆச்சு?’ என்றாள் ஜெயந்தி.  ‘பேருந்தில் நம்முடன் கூட ‘குட்டி ப்ளஷ்டோர்’ அலுவலகத்தில் வேலை செய்யும் சௌபாக்யவதி என்ற ஒரு பெண் வருவாள் நினைவிருக்கிறதா?’- நான்.  ‘ஓ!…’  ‘நான் அவளிடம் உனக்கு சௌபாக்யவதி என்று பெயர் வைத்திருக்கிறார்களே…கல்யாணப் பத்திரிகையில் சௌபாக்யவதி சௌபாக்யவதிக்கு என்று போடுவார்களா என்று ஒரு நாள் கேட்டேன்….!’  இருவரும் பெரிதாகச் சிரித்தோம்….எங்கள் துணைவர்கள் இருவரும் எங்களைத் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு!  அந்தநாள் நடந்த சின்ன சின்ன விஷயங்கள் ஒவ்வொன்றும் நினைவலைகளில் மோதி மோதி வந்தன.  அரவிந்த அன்னையின் பக்தையாகி விட்டாள் ஜெயந்தி. ‘பிரார்த்தனை நேரத்தில் ஒருமுறை கூட உன் நினைவு வந்ததில்லை ரஞ்சனி. ஆனாலும் நீயும் நானும் மறுபடி சந்திக்க வேண்டும் என்று அன்னை நினைத்திருந்தாள் போலிருக்கிறது. அதனால் தான் என் உறவினர் ஒருவரின் வேண்டுகோளின் படி ‘கடுகு தாளிப்பு’ படிக்க ஆரம்பித்தவள் அதன் மூலமே உன்னையும் மறுபடியும் சந்தித்தேன். இல்லையானால் நான் எங்கே நீ எங்கே?’  அன்னை சேர்த்து வைத்தாளோ? இல்லை கடுகு சேர்த்து வைத்தாரோ? எப்படியானால் என்ன? அந்தநாள் முதல் இந்த நாள் வரை எங்கள் நட்பு மாறவில்லை என்பதை ஒருவர் கையை ஒருவர் விடாமல் பிடித்திருந்த விதம் சொல்லியது. 25 கம்பளின்னு ஒண்ணு இருக்கா? [] கம்பளின்னு ஒண்ணு இருக்கா? ஒவ்வொரு முறை சென்னை போய் விட்டு திரும்பியதும்  உடல் நலம் சரியில்லாமல் போய் விடுகிறது. நிஜக் காரணம் அலைச்சல் தான். முதல் நாள் போய் விட்டு அடுத்த நாளே திரும்புதல்; அதற்குள் எத்தனை பேரை பார்க்க முடியுமோ பார்த்து விடுதல் என்று ஓய்வு இல்லாமல் போய்விடுகிறது. சென்னை எல்லா பக்கங்களிலும் வளர்ந்து கொண்டே வருகிறது. நம் உறவினர்களும் அங்கங்கே பரந்து விரிந்து இருக்கிறார்கள். அக்கா சோளிங்க நல்லூர்; அண்ணா மேடவாக்கம். துணைவரின் ஒரு தம்பி வளசரவாக்கம்; இன்னொருவர் மடிப்பாக்கம் – எங்கு போவது? ‘எப்போதோ வருகிறாய், காபியாவது குடி’ என்ற அன்புத் தொல்லைகளும் இன்னொரு காரணம்! வேண்டுமோ வேண்டாமோ காபி குடிக்க வேண்டிய கட்டாயம். எங்களூரில் பை-டூ லோட்டாவில் ஒரு வாய், அரை வாய் காபி சாப்பிட்டு விட்டு சென்னையில் ஒவ்வொரு வீட்டிலும் கொடுக்கும் ‘அண்டா’ நிறைய காபியை குடிக்க நாங்கள் படும் பாடு…! படைத்தவனுக்கே வெளிச்சம்! சென்னை வெய்யிலில், வேளை இல்லா வேளையில் சுடசுட காப்பி! போதுமடா சாமி சென்னை விஜயம் என்று நொந்து போய் திரும்பி வருவோம். அடுத்தநாளே வேறு ஒரு விசேஷம் என்று சென்னையிலிருந்து அழைப்பு வரும்! எங்கள் பெங்களூரு நண்பர்கள் சொல்லுவார்கள்: ‘நீங்கள் சென்னையில் இருந்து கொண்டு அவ்வப்போது பெங்களூரு வந்து போகலாமே!’ என்று. இத்தனை சொன்னாலும் சென்னை என்றால் மனம் பரபரப்பது நிஜமோ நிஜம். நமக்கும் சென்னைக்கும் இருக்கும் பந்தம் அந்த மாதிரி! IPL–இல் பிடித்த டீம் சென்னை சூப்பர் கிங் தான்! சென்ற ஞாயிறு சென்னை போய்விட்டு திங்கட்கிழமை இரவே திரும்பி ஆயிற்று. அடுத்தநாள் எழுந்திருக்கும்போதே உடம்பு கூடவே வந்தது. தலை நான் இருக்கிறேன் என்றது. பச்சை மிளகாய் இல்லாமலேயே கண்கள் எரிந்தன. பால் – இல்லையில்லை – காப்பி கசந்தது; படுக்கை நொந்த உடலுக்கு இதமாக இருந்தது. நேற்று ஷதாப்தியில் சாப்பிட்ட ஐஸ்க்ரீம் – இல்லையில்லை ஐஸ்கட்டி தொண்டை கட்டிய வில்லன் போல தொண்டைக்குள் ‘கீச் கீச்’ என்றது.  மூக்கிலிருந்து, தமிழ் நாட்டுக்குக் கொடுக்க மறுத்த காவேரி – சொட்டுச் சொட்டாக இல்லை குடம் குடமாக கொட்டியது. இருமல், தும்மல் என்று விடாமல் எதோ சத்தம் போட்டுக் கொண்டே இருந்தேன். பேச வாயைத் திறந்தால் குரல் உடைந்த சிறுவன் போல என்னுடன் கூடவே யார் யாரோ பேசினார்கள். அவசரமாக வெந்நீர் வைத்து, அதில் மிளகு போட்டு குடிக்க ஆரம்பித்தேன். இரண்டு நாட்கள் 100 கிராம் மிளகு தான் தீர்ந்தது. ‘டாக்டர் மதுகர் ஷெட்டிக்கு  நீ கொடுக்க வேண்டிய பணம் பாக்கி இருக்கிறது. இரண்டு பேருமாகப் போய் கொடுத்து விட்டு வரலாம் வா’ என்றார் என்னில் பாதியான என் பர்த்தா. ‘காந்தி பஜார் போய் ஷால் வாங்கி வர வேண்டும்’ சொன்ன என்னை அதிசயமாகப் பார்த்தார். ‘என்ன இப்படி ஒரு ஊதக் காற்று. ச்சே! என்ன ஊர் இது? கொஞ்சம் வெய்யிலில் நிற்கலாமா?’ மருந்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தவுடன் கணவர் சொன்னார் மகனிடம்: ‘இன்னிக்கு அம்மா என்னவோ புதுசு புதுசா பேசறா. 27 வருடங்களா ஷால், ஸ்வெட்டர் இல்லாமல் பெங்களூரு குளிரை சமாளிச்சவளாக்கும் அப்படின்னு பெருமை பேசுவாளே, இன்னிக்கு சொல்றா, ஷால் வேணுமாம்; ஊதக் காற்றாம்; வெயில்ல நிக்கலாமான்னு வேற கேக்கறா! அம்மாவுக்கு ப்ரெய்ன் ஸ்கேன் பண்ணனும் போல இருக்கு…!’ பழிக்குப் பழி வாங்கறார் என்று தெரிந்தும் ஒண்ணும் சொல்லாமல் ‘கொஞ்சம் வெந்நீர் குடுக்கறேளா, மருந்து சாப்பிடணும்’ என்று ஈன ஸ்வரத்தில் கேட்டு விட்டு கம்பளியை (அப்படின்னு ஒண்ணு இருக்கா?) இழுத்து மூடிக் கொண்டு படுத்துக் கொண்டேன்! 26 நலம் நலம் தானே நீயிருந்தால்…! சென்ற வாரம் வாழ்க்கை துணைக்கு உடல் நலம் சரியில்லை. தலை சுற்றல். மருத்துவர் மருந்து கொடுத்துவிட்டு, ‘அடுத்த வாரம் வாருங்கள், தேவைப் பட்டால் ப்ரைன் ஸ்கேன் செய்யலாம்,’ என்றார். ‘ஏதாவது நடவடிக்கையில் மாறுதல் இருந்தால் சொல்லுங்கள். மறதி அதிகம் இருக்கிறதா?’ எப்போதுமே யாருடைய பெயரும் நினைவிருக்காது வா.து. வுக்கு. ஒரு முறை வழக்கமான தொலைக்காட்சி தொடரை ஒரு நாள் பார்க்க முடியாமல் போயிற்று. வா.து. விடம் ‘என்ன ஆச்சு?’ என்றேன். ‘ஒண்ணும் ஆகலை. அவ இருக்கால்ல… இவளோட வீட்டுக்கு அவ வரா. இவளோட அம்மா அவளைப் பத்தி எதோ சொல்ல…இவளுக்கு கோவம் வந்து…இவளோட ஆம்படையான் அவளை திட்ட….’ அடுத்த வாரம் நானே பார்த்துக் கொள்ளுகிறேன் என்று சொல்லி விட்டேன்! மருத்துவரும் எங்களுடன் கூட சிரித்து விட்டு ‘உட்கார்ந்த இடத்திலேயே தூங்குகிறாரா?’ என்று அடுத்த கேள்வி கேட்டார். ‘பின்ன? உட்கார்ந்த இடத்தில் தான் தூங்குவார்.  தொலைக்காட்சி சத்தம் தான் தாலாட்டு. தொலைக்காட்சியை நிறுத்தினால் அடுத்த நொடி எழுந்து விடுவார். அத்தனை மின் விளக்குகளும் எரிய…தூங்கினால் தான் உண்டு. படுத்தால் தூக்கம் போய் விடுமே…!’ மருத்துவர் வாய் விட்டு சிரித்தார். ‘நீங்கள் இப்படி பேசினால்…..’ ‘உங்களுக்கு நோயாளிகள் குறைந்து விடுவார்கள்….’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தோம். அடுத்த வாரம். மருத்துவ மனை செல்ல லிப்ட் அருகே போனோம். வா.து. மூக்கை இழுத்து இழுத்துப் பார்த்து விட்டு, ‘ஏதோ பர்னிங் ஸ்மெல்….!’ என்றார். ‘ப்ரைன் ஸ்கேன் தேவை இல்லை….யு ஆர் பர்பெக்ட்லி ஆல்ரைட்’ என்றேன் நான். மருத்துவர் நான் சொன்னதை ரசித்துவிட்டு ‘எதற்கும் ஈ.என்.டி – யை பாருங்கள்’ என்றார். ஈ.என்.டி நிபுணர் பல்வேறு நிலைகளில் வா.து. வை படுக்க வைத்து, எழ வைத்து…..  ‘ஒன்றுமில்லை…. காதுக்குள் இருக்கும் திரவத்தில் ஏதேனும் குறை இருக்கலாம். காதுக்குள் சிறிது மெழுகு சேர்ந்திருக்கிறது. ஒரு வாரத்திற்கு இந்த மருந்தைப் போட்டுக் கொள்ளுங்கள். அடுத்த வாரம் காதுகளை சுத்தம் செய்யலாம்’ என்று கூறி அனுப்பினார். வீட்டிற்கு வந்தோம். வா.து. சொன்னார். ‘கண்ணிற்கு மருந்து காலை 8 மணிக்கு. கொஞ்ச நேரம் கழித்து காதிற்கு மருந்து போடு’ என்றார். நான் சிரித்தேன். ‘பழைய வண்டிகளுக்கு எண்ணெய் போட்டு ஓவர்ஹால் செய்வது போல  ஒரொரு உறுப்புக்கும் மருந்து போட்டு சரி செய்து கொள்ள வேண்டும் – வயதானால்….’ என்றேன். வாழ்க்கை துணையும் கூடவே சிரித்தார் வயதுடன் கூட நகைச்சுவையும் கூடினால் நல்லதுதானே? நலம் (நான்), நலம்(ஆகத்) தானே நீயிருந்தால்! 27 எங்கள் பாட்டி! [patti] எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து கோடை விடுமுறை என்றால் பாட்டி வீடுதான். மூன்று மாமாக்களும் பாட்டியும்  ஸ்ரீரங்கத்தில் இருந்தனர்  என் பெரியம்மாவின் மகன், மகள், என் அண்ணா,  என் அக்கா (சில வருடங்கள் ) ஸ்ரீரங்கத்தில் பாட்டியுடன் தங்கிப் படித்தவர்கள்.  கோடைவிடுமுறை முழுக்க அங்குதான். பாட்டியின் கை சாப்பாடு, கொள்ளிடக் குளியல், மாலையில் கோவில், வெள்ளைக் கோபுரம் தாண்டி இருக்கும் மணல்வெளியில் வீடு கட்டி விளையாட்டு, சேஷராயர் மண்டபத்தில் கண்ணாமூச்சி விளையாட்டு – இவைதான் தினசரி பொழுது போக்கு. தாத்தா மிகச் சிறிய வயதிலேயே (45 வயது) பரமபதித்துவிட்டார். கடைசி மாமாவுக்கு 1 1/2 வயதுதான் அப்போது. தாத்தாவிற்கு ஆசிரியர் வேலை – ஊர் ஊராக மாற்றல் ஆகும் வேலை. பாட்டிக்கு மொத்தம் 14 குழந்தைகள். எங்களுக்கு நினைவு தெரிந்து 6 பேர்தான் இருந்தனர். பெரிய பிள்ளைக்கும் பெரிய பெண்ணிற்கும் தாத்தா இருக்கும்போதே திருமணம். எந்த வசதியும் இல்லாத அந்தக் காலத்தில் பாட்டி எப்படி இத்தனை குழந்தைகளை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தினாள்  என்பது இன்றுவரை புரியாத புதிர்தான். கணவரின் மறைவுக்குப் பிறகு இன்னொரு மகளுக்கு (என் அம்மா) திருமணம் செய்தாள் பாட்டி. இரண்டாவது உலக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது 1944 இல் அன்றைய மதராசில் திருமணம். மகள்களுக்குத் திருமணம் செய்தபின் தொடர்ந்து அவர்களது பிரசவங்கள். பெரியம்மாவிற்கு நான்கு குழந்தைகள்; நாங்கள் நாலுபேர்கள். நாங்கள் கோடைவிடுமுறை க்குப் போகும்போது நல்ல வெயில் கொளுத்தும். ஆனாலும் பாட்டி வீடு தான் எங்களின் சொர்க்கம். வாசலிலேயே காய்கறி, பழங்கள் என்று வரும். மாம்பழங்கள் டஜன் கணக்கில் வாங்கி கூடத்தில் இருக்கும் உறியில் தொங்கவிடப்படும். இரவு எல்லோருக்கும் கட்டாயம் பால் உண்டு. இத்தனை செலவுகளை பாட்டி எப்படி சமாளித்தாள்? தெரியாது. மூன்று வேளை  சாப்பாடு, மதியம் ஏதாவது நொறுக்குத் தீனி. எதற்குமே குறைவில்லை. கோழியின் பின்னால் ஓடும் குஞ்சுகளைப் போல பாட்டி எங்கு போனாலும் – காவேரி வீட்டிற்கு பால் வாங்க (சரியாகத்தான் பெயர் வைத்தார்கள் உனக்கு – நீ கொடுக்கற பாலில்  காவேரிதான் இருக்கு,  என்று என் பாட்டி அவளைக் கடிந்து கொள்வாள்.) செக்கிற்குப் போய் எண்ணெய் வாங்க என்று பாட்டி எங்கு போனாலும் அவள் பின்னே  நாங்கள் – பாட்டி சொல்வாள் – ‘பட்டணத்துலேருந்து குழந்தைகள் வந்திருக்கா பால் இன்னும் கொஞ்சம் கொசுறு ஊற்று, மாம்பழம் குழந்தைகள் கையில் ஆளுக்கு ஒண்ணு கொடு’ என்று பாட்டியின் வியாபர தந்திரங்கள் எங்களுக்கு வேடிக்கையாய் இருக்கும். பாட்டி காலையில் தீர்த்தாமாடிவிட்டு வந்து வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு நெற்றிக்கு இட்டுக் கொள்வாள். மூக்கின் மேல் திருமண்; அதற்கு மேல்  சின்னதாக ஸ்ரீசூர்ணம். பாட்டியை நெற்றிக்கு இல்லாமல் பார்க்கவே முடியாது. அக்கம்பக்கத்தில் இருக்கும் அத்தனை பேருடனும் சுமுக உறவு. பாட்டிக்கு எல்லோருமே ஏதோ ஒரு வகையில் உறவுதான் அம்மாஞ்சி (மாமாவின் பிள்ளை) அவரது மனைவி  அம்மாஞ்சி மன்னி, அத்தான் (அத்தையின் பிள்ளை) அத்தான் மன்னி (அத்தானின் மனைவி) அத்தங்கா (அத்தையின் பெண்) அத்தங்கா அத்திம்பேர் (அத்தங்காவின் கணவர்) என்று பல பல உறவுகள். இவர்களுடன் பாட்டி பேசும் ‘என்னங்காணும், ஏதுங்காணம் வாருங்காணம், சொல்லுங்காணம், சௌக்கியமாங்காணம்’ என்கிற பாஷை எங்களுக்கு வேடிக்கையாக இருக்கும். நாங்களும் இப்படியே பேசிப் பார்ப்போம். பாட்டி கொஞ்சம் கனத்த சரீரம். லோ பிரஷர் வேறு. அவ்வப்போது தலை சுற்றுகிறது என்று உட்கார்ந்து கொள்வாள். ஓடிப் போய் சோடா வாங்கி வருவோம். ‘சோடா வேண்டுமென்றால் சொல்லேன். வாங்கித் தருகிறோம் அதற்கு ஏன் லோ பிரஷரைத்  துணைக்குக் கூப்பிடுகிறாய்’ என்று என் பெரிய அண்ணா கேலி செய்வான். அங்கிருக்கும் நாட்களில் கட்டாயம் குறைந்த பட்சம் இரண்டு சினிமா உண்டு. காலையிலிருந்தே நாங்கள் ஆரம்பித்து விடுவோம்: ‘பாட்டி சீக்கிரம் கிளம்பணும். லேட் பண்ணாத; எங்களுக்கு முதல் ஸீன் லேருந்து பார்க்கணும்’. ஸ்ரீரங்கத்தில் நான் பார்த்த எனக்கு நினைவில் இருக்கும் சினிமாக்கள்: வீரபாண்டிய கட்டபொம்மன், பார்த்தால் பசி தீரும். பாட்டி பட்சணம், தீர்த்தம் எல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்புவதற்குள் நாங்கள் பரபரத்துப் போய்விடுவோம். மாட்டு வண்டி வேறு எங்கள் அவசரம் புரியாமல் நிதானமாக நடக்கும். பேரன்கள் முதலிலேயே போய்  (சேர் (chair) 8 அணா, தரை 4 அணா ) டிக்கட் வாங்கிவிடுவார்கள். பாட்டியுடன் போனால் தரை டிக்கட்டுதான். பாட்டிக்கு காலை நீட்டிக் கொண்டு உட்கார வேண்டும்.  பாட்டிக்கு அங்குதான் ஓய்வு கிடைத்திருக்கும் என்று இப்போது தோன்றுகிறது. பாட்டி கையால் கட்டாயம் ஒரு முறை எல்லோருக்கும் விளக்கெண்ணெய்  கொடுக்கப்படும். பாட்டி அன்று பண்ணும் சீராமிளகு சாத்துமுதுவும், பருப்புத் தொகையலும் ஆஹா! ஓஹோ! தான். என்னுடன் ஒருமுறை வந்து இருந்தபோது எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு பண்ணுவது சொல்லிக் கொடுத்தாள் பாட்டி. மோர்க்களி செய்து தளதளவென்று அப்படியே தட்டில் போட்டு மைசூர் பாகு மாதிரி துண்டம் போட்டுக் கொடுப்பது பாட்டியின் ஸ்பெஷாலிடி! இத்தனை வேலை செய்து ஓய்வு ஒழிச்சல் இல்லாத போதும் பாட்டி கைவேலைகளிலும் ஆர்வம் மிகுந்தவள். வண்ண  வண்ண உல்லன்  நூலில் ரோஜாப்  பூ போடுவாள். 10, 15       ரோஜாப்பூக்கள் பின்னியதும் அவற்றிற்கு பொருத்தமான நூலில் அவற்றை வைத்துப் பின்னி ரோஜாப்பூ சவுக்கம் (டவல்) தயார் செய்வாள். பாட்டி பின்னிய கைப்பைகள் சதுரம் வட்டம்,அறுகோணம் என்று எல்லா வடிவங்களிலும் இருக்கும். அவற்றிக்கு உள்ளே தடிமனான அட்டை வைத்து ஜிப் வைத்துத் தைப்பது என் அம்மாவின் கைவேலை. பாசிமணி எனப்படும் சின்னச்சின்ன மணிகளில் பொம்மைகள் செய்து, அந்த மணிகளிலேயே செடி, கொடி, மரம் செய்து இந்தப் பொம்மைகளை அவற்றின்மேல் உட்கார வைத்து அவற்றை ஒரு பாட்டிலுக்குள் நுழைத்து செய்யும் கைவேலையும் பாட்டி செய்வாள். ‘பாட்டிலுக்குள் இதெல்லாம் எப்படி போச்சு?’ என்ற எங்கள் கேள்விகளுக்கு ‘நான் உள்ள போ அப்படின்னு சொன்னேன் போயிடுத்து’ என்பாள்  பாட்டி! பாட்டிக்குக் கோவமே வராது. சாப்பிடும் நேரம் யாராவது முதலில் சாப்பிட்டுவிட்டு  ‘எனக்கு, எனக்கு’ என்றால் பாட்டி சொல்வாள்: ‘முதல் பசி ஆறித்தா? கொஞ்சம் சும்மா இரு!’ இன்றும் நாங்கள் இந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறோம் எங்கள் குழந்தைகளிடத்தில் – தற்சமயம் பேரன் பேத்திகளிடத்தில். பாட்டி எங்கள் அம்மாவிற்குக் கொடுத்து எங்கள் அம்மா எங்களுக்கு கொடுத்தது என்று வெள்ளிப் பாத்திரங்கள் இன்றும் எங்களிடம் உள்ளன. ஒரு சின்ன துரும்பைக் கூட வீணாக்காமல் பாட்டி அன்று நடத்திய குடும்பம்தான் இன்று எங்களிடம் வெள்ளிச் சாமான்களாக இருக்கின்றன. பாட்டி நிறைய துக்கப் பட்டிருக்கிறாள். கணவனை இழந்த பாட்டியின் வாழ்க்கையில் எனது பெரிய மாமா அதே 45 வயதில் பரமபதித்தது பெரிய துக்கம். பாட்டி ரொம்பவும் ஒடுங்கிப் போனது இந்த  ஈடுகட்ட முடியாத இழப்பிற்குப் பிறகுதான். ஒரு கோடைவிடுமுறையில் சித்திரைத் தேர் எங்கள் வீட்டு வாசலைத் தாண்டியபின் மாமாவின் இழப்புச் செய்தி வந்தது. ‘ராமாஞ்ஜம் …!’ என்று கதறியபடியே பாட்டி நிலைகுலைந்து போனது இன்னும் எனக்கு நினைவில் நீங்காமல் இருக்கிறது. அதேபோல பாட்டியுடன் கூடவே இருந்து ஸ்ரீரங்கத்தில் படித்து IPS ஆபிசர் ஆன  எங்கள் பெரியம்மாவின் மகன் இளம்வயதில் இறைவனடி சேர்ந்தது, என் அக்காவின் கணவர் மறைந்தது என்று என் பாட்டி பல இழப்புகளைப் பார்த்து மனம் நொந்து போனாள். எனக்கும் வயதாவதாலோ என்னவோ இன்று பாட்டியின் நினவு அதிகமாக வந்து விட்டது. அன்னையர் தினத்தன்று எங்கள் அருமைப் பாட்டியைப் பற்றி எழுதுவதில் ரொம்பவும் சந்தோஷப் படுகிறேன். எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்! *************************************************************************** இந்தப் பதிவு படித்துவிட்டு ஸ்ரீரங்கத்தில் இருக்கும் என் மாமா (திருமஞ்சனம் சுந்தரராஜன்) எழுதிய கடிதம் இது. சில திருத்தங்கள் சொல்லியிருக்கிறார். அவற்றை அப்படியே மாமாவின் கடிதத்திலிருந்தே கொடுக்கிறேன். மாமாவின் பாராட்டையும் இணைத்துள்ளேன். சௌபாக்யவதி ரஜிக்கு  சுந்துமாமாவின் ஆசீர்வாதம்    பாட்டியைப் பற்றி உனது கட்டுரை படித்தேன், (தில்லியில் ஆண்டு 1985 கண்ணப்பா மாமா எடுத்த) போட்டோவும் பார்த்து சந்தோஷப் பட்டேன்.   இரண்டு வாஸ்தவமான திருத்தங்கள்  ~    என் தகப்பனார் (மாத்த்யூ ஆர்னல்ட் போன்று)  ஸ்கூல்ஸ்-இன்ஸ்பெக்டர் ஆக இருந்தார்,  அவர் ஆயுள் 54 வருஷம். மாமா” (ராமாநுஜம்) ஆயுள் 49 வருஷம் 7 மாசம்  கொண்டது.   தான் பிறந்தது ருஷ்ய போல்ஷ்விக் புரட்சி நிகழ்ந்த ஆண்டு 1917 என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வார்.   அவர் நீங்கியது மே-1967.  உன் கட்டுரை மிக அருமை.  ஏதோ இலக்கிய உத்தி / ரீதி என்று கற்பனை  பண்ணிக்கொண்டு முண்டும் முடிச்சுமாக  எழுதி அவஸ்தைப் படுகிறவர்களை நான்  பார்த்திருக்கிறேன்.   உன் எழுத்து கி. ராஜநாராயணன் என்கிறவர்  நடை போல ஸ்வதந்த்ரமாக, போலி இன்றி   அமைந்திருக்கிறது.   உன்னுடைய readers’ feedback புகழ்ச் சொற்கள்  அனைத்தும் தகும்.    பாராட்டுகள்.   மிக அருமை.   நான் எனது சுய-சரிதை எழுதி, அதற்கு  முன்னர்   உன் கட்டுரை கிடைத்திருந்தால், அதை அப்படியே  தூக்கி ஒரு முழு அத்தியாயமாகச் சேர்த்திருப்பேன் ! அன்புடன், சுந்து மாமா (ஸ்ரீரங்கம்) 28 (தி)சின்ன (தி)சின்ன ஆசை! [jilebi]  எங்கள் தெருவில் நாங்கள் தவறாமல் பார்க்கும் ஒரு ‘ஒன் மேன் ஷோ’ இது:  எண்ணெய் நிறைந்த பெரிய வாணலி; ஒருவர் நின்று கொண்டு விடாமல் ஜிலேபிகளை அதில் பிழிந்து பிழிந்து வெந்தவுடன் எடுத்து பக்கத்தில் பெரிய தட்டையான பாத்திரத்தில் இருக்கும் சர்க்கரை பாகில் முக்கி முக்கி எடுத்து வைத்துக் கொண்டிருப்பார். அவர் இப்படி எடுத்து வைப்பதற்குள் அப்படி காணாமல் போய்விடும் இந்த ஜிலேபிகள். பொன்னிறத்தில் – இல்லையில்லை – ஆரஞ்சு நிறத்தில் பளபளக்கும் இந்த ஜிலேபிகளை பார்க்கும்போதே ‘ஜொள்ளு’ – ஸாரி, வாயில் நீர் ஊறும். எனக்கு ரொம்ப நாட்களாக ஒரு முறையாவது வாங்கி சாப்பிட வேண்டும் என்று ஆசை. ஆனால் என்னவர் ரொம்ப கோபித்துக் கொள்வார். ‘தெருவில் போற வர வண்டியெல்லாம் அந்த ஜிலேபி மேல புழுதியை வாரி அடித்துவிட்டு போகிறது. அத வாங்கி சாப்பிடணுமா? உனக்கு வேணும்னா சொல்லு, அகர்வால் பவன், இல்ல பாம்பே மிட்டாய்வாலா லேருந்து வாங்கிண்டு வரேன்….’ வாங்கி வந்து சாப்பிட்டும் இருக்கிறேன். ஆனாலும் புழுதி அடித்த ஜிலேபி ருசி எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொள்வேன். [bajji] அதேபோல தெரு திரும்பியவுடன் ஒரு சின்ன உணவகம். கையேந்திபவன் தான். அதன் வாசலில் ஒருவர் ட்கார்ந்து கொண்டு பஜ்ஜி செய்வார். ஆஹா! அந்த வாசனை! ஊரையே தூக்கும். ஒரு நாள் என்னவரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு இங்கிருந்து பஜ்ஜி(கள்) வாங்கி வந்தேன். நன்றாகவே இருந்தது. சாப்பிட்ட பிறகும் ஒன்றும் ஆகவில்லை என்று நான் மகிழ்ந்திருந்த வேளை. மாடியில் இருக்கும் இவரது நண்பர் வந்தார். ‘நாராயணன், உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்’, எனக்கு வலது கண் துடித்தது. ஆ! ஏதோ கெட்டசெய்தி எங்கிருந்து வரப்போகிறதோ என்று நினைத்துக் கொண்டிருக்கையில் நண்பர் தொடர்ந்தார்: ‘ரெண்டு நாள் முன்னால உங்க வைஃப் தெருக்கோடில இருக்கற பஜ்ஜி கடையில பஜ்ஜி வாங்குறத பாத்தேன். அதெல்லாம் சாப்பிடாதீங்க. உடம்புக்கு நல்லதல்ல; என்ன மாவோ, எத்தனை நாள எண்ணையோ, யாருக்கு தெரியும்?…..சொல்லுங்க….’  வலது கண் துடித்ததன் அர்த்தம் புரிந்தது.