[] 1. Cover 2. Table of contents சலாம் இஸ்லாம் சலாம் இஸ்லாம்   களந்தை பீர்முகம்மது   kalanthaipeermohamed@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-ND-NC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - Sathya - experimentsofme@gmail.com   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/salam_islam மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com மூலங்கள் பெற்றது: அன்வர் - gnuanwar@gmail.com புத்தகம் மெயப்பு : தாரா - thara.nakshatraa@gmail.com அட்டைப்படம்: சத்யா - experimentsofme@gmail.com மின்னூலாக்கம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Author correspondence & acquisition of Creations: Anwar - gnuanwar@gmail.com Proof Reading : Thara - thara.nakshatraa@gmail.com Cover Image: Sathya - experimentsofme@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/kalai_sol_sentharamaakkal This Book was produced using LaTeX + Pandoc சலாம் இசுலாம் சமீபத்திய இசுலாமியச் சிறுகதைகள் திரட்டு : களந்தை பீர்முகம்மது சமர்ப்பணம் மதநல்லிணக்கப் போராளிகள் அனைவருக்கும் இப்படிக்கு களந்தை பீர்முகம்மது இஸ்லாமிய இலக்கியவுலகம் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டது; அதனாலேயே குறுகிய வீச்சுடையதாகவும் இருந்து வந்தது. சில சில நீட்சிகளை அவ்வப்போது கண்டிருந்தாலும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே அது சுழன்று வந்தது. மார்க்க நடைமுறைகளிலும் ஷரீ அத்தின் நெறிமுறைகளிலும் அது இசைவான போக்கினைக் கொண்டிருந்தது. இஸ்லாமிய இலக்கியங்கள் முஸ்லிம்களின் வாழ்க்கையைப் படம் பிடிக்கும் பொழுது அவை பாதிக்கிணறு மட்டுமே தாண்டி வந்தன. இஸ்லாத்திற்கு விரோதமான முஸ்லிம்களின் வாழ்க்கையை அவை விமர்சித்துவிட்டு, இறுதிப் பகுதியில் அந்தத் தன்மையில் இருந்தும் விலகிக் கொள்வதாகவும் இருந்தன. இது எந்த அளவுக்குச் சரி என்கிற கேள்வியை முன்வைத்துப் பார்க்கையில்தான் இஸ்லாமிய இலக்கியங்களைப் பற்றிய ஒரு மீள்பார்வையை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இங்கே எவருடைய வாழ்க்கையும் மெச்சத்தகுந்ததாய் இல்லை . ஒரு தனி மனிதனின் கனவுகளுக்கும் ஆசை அபிலாஷைகளுக்கும் எதிரான நகர்வைச் சமூகம் கொண்டுள்ளது. அதையும் மீறி வாழத்துடிக்கிற மனங்களுக்கு இலக்கியம் கைகொடுக்கிறது; அவர்களின் வாழ்க்கையைப் படைக்கவும் செய்கிறது. எல்லோருமே நன்னெறி மாந்தர்களாக வாழ்வது எவ்வளவு அற்புதமானது? ஆனால் அதற்கான பாதை நீளம்; பயணமும் பெரிது. ஒரு சொடக்குப் போட்ட மாத்திரத்தில் எந்த அற்புதமும் நிகழ்ந்து விடுவதில்லை. அதற்காக நாம் செய்ய வேண்டிய பிரயத்தனங்கள் அளவுக்கதிகமாக இருக்கின்றன. சொல்லி வைத்ததைப்போல எல்லோருமே நல்லதொரு வாழ்க்கையைப் பெறுவதற்கு முதன்மையான நிர்ப்பந்தம் ஒன்று உண்டு. நாம் வாழ நினைக்கிற வாழ்க்கைக்கு ஓர் இம்மியளவும் தீங்கு பயிற்றாத அல்லது அதைத்தானே கைவிட்டு விடும்படியான நெருக்கடிகளைத் தராத ஒரு தேர்ந்த சமூக அமைப்பு வேண்டும். சாக்கடைப் பெருக்கின் முன்னே ஒரு ரோஜாவின் மணத்தை மட்டுமே தனியே பிரித்து நுகர்ந்துவிட முடியாது. இந்த அடிப்படைகளைச் சற்றும் கவனத்தில் கொள்ளாத இலக்கியப் படைப்புகளுக்கு நாம் எத்தனையெத்தனை அலங்காரங்கள் செய்தாலும் அவையெல்லாம் சிறுகாற்றிலேயே உதிர்ந்து விழுந்துவிடும். இலக்கியம் என்பது ஒருவகையான சமூக விமர்சனம் தான். சமூகப் பிரக்ஞையை அடிப்படையாகக் கொண்ட சமூக விமர்சனம் அது தான் வாழும் சமூகத்தை விரும்பாத மனங்களில் இருந்து, அதற்கு நேர்மாறான இலக்கியத்தைப் படைப்பது என்பது விரும்பாத சமூக அமைப்பையே விரும்பி ஏற்றுக் கொள்வதாக ஆகிவிடும். சுற்றிச் சூழவும் நச்சரவங்கள் ஊர்கையில், நிம்மதியான தூக்கத்திற்கு ஏது இங்கே இடம்? ஏழ்மையும் துயரமும் அன்றாடம் நம் வாழ்க்கையை உடும்புப் பிடியாய்ப் பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில் எவரும் தத்தம் மதக் கோட்பாடுகளுக்குள் மாமனிதர்களாய்ப் புகுந்து விடுவதில்லை. அந்த உன்னத நிலையை எட்டிப் பிடிப்பதற்கு எதிர்ப்படுகின்ற ஆயிரமாயிரம் தடைகள் என்னென்னவென்று எல்லா இஸ்லாமியப் படைப்பாளிகளும் இன்னமும் உணர்ந்து கொள்ளவில்லை. இஸ்லாத்தில் ஓர் அணு அளவுக்கும் அனுமதிக்கப்படாத வட்டி, வரதட்சணை கொடுமையான வணிக இலாபம், பாரபட்சமான பலதாரமணம் போன்றவை இன்று பகிரங்கமாய் வலம் வருகின்றன. எந்த நிக்காஹும் நபிவழியில் கூறப்பட்ட எளிமையைக் கைக்கொள்ளவில்லை. மாற்று மதச் சூழல்கள் எப்படி ஒழுங்கின்மைகளுடன் சமரசம் செய்து கொண்டனவோ, அதேபடிக்குத்தான் முஸ்லிம்களின் வாழ்க்கைச் சூழலும் சமரசப்பட்டுக் கொண்டுள்ளது. வணிகம் இன்று உயிர்த்துடிப்பாக விளங்கி வருவதற்கு, வட்டியும் அதனோடு பின்னிப் பிணைந்து நிற்பது ஒரு காரணம். “வட்டியும் வணிகமும் போல் பிணைந்து வாழுங்கள்”என்று மணமக்களையே வாழ்த்தும் அளவுக்கு அதன் பங்களிப்பு உக்கிரப்பட்ட நிலையில் உள்ளது. ஆனால் இஸ்லாமிய இலக்கியங்களின் பெரும்பகுதி இதைக் கண்டு கொள்வதில்லை. இதற்கெதிரான அறச்சீற்றமும் அவ்வகைப்பட்ட இலக்கியங்களில் காணப்படுவதில்லை. வட்டி, வரதட்சணை , பிரமாண்டமான திருமண விழாக்கள் மற்றும் நிச்சயதார்த்தங்கள் முஸ்லிம்களிடையே பெரும் அனாச்சாரங்களாக உருவெடுத்துவிட்ட நிலையில் நம் இலக்கியக் கதாபாத்திரங்கள் அவற்றின் வாடை கூட வீசாத தனியுலகத்தில் அறிவுரைப் பிரம்புகளோடு நடக்கின்றன; அதுவே போதும் என்கிற நினைப்பு. தன் சமூகம், தன் மார்க்க நெறிமுறைகளில் இருந்து பிறழாமல் இருக்க வேண்டும் என எண்ணும் படைப்பாளிக்குத் தன் சமூகத்தை ஊடுருவிப் பார்க்கிற உரமும் விமர்சிக்கும் ஆற்றலும் வேண்டும். நிணநாற்றம் வீசும் சமூகத்தில் இருந்தபடியே, விமர்சனப் பண்புகளற்ற இலக்கியத்தைப் படைப்பது சமூக விரோதத் தன்மையாகும். ஒரு சமூகம் நேர்வழி செல்ல விரும்புபவன் அதன் பண்புகளை ஆராயாமல், தீமைகளை இடித்துரைக்காமல், ஒழுக்கமின்மையைப் பங்கப்படுத்தாமல் தனக்கானதும் தன் சமூகத்துக்குமானதுமான சுபிட்சத்தை மட்டும் பெற்றுவிட முடியும் என்று கருதுவது பகல்கனவுக்கும் கீழானது. முஸ்லிம் சமூகம் இன்று எப்படி உள்ளது? அது தனக்குள்ளேயே பிணங்கிப் பிணங்கிப் பெருவெள்ளமாய்ப் புரண்டெழுந்த நிலையில் இருந்து சிறுசிறு வாய்க்கால்களாய்ப் பல்கி, அந்தப் பன்மையினாலேயே சிறுத்தும் விட்டது. அந்தச் சிறுதுளியும் பாலைவனத்தை அண்மித்துக் கொண்டு இருக்கிறது. இனி ஒரு பொழுதும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மீண்டும் திரும்ப இயலாத தூரத்தையும் திருப்பங்களையும் கொண்டு விட்டது. எனவே, சமூக மேம்பாட்டை வலியுறுத்த விமர்சன யதார்த்தப் பண்புகளைக் கொண்ட படைப்புகள் இஸ்லாமிய இலக்கியவுலகில் தோன்ற வேண்டியது அவசியம். இந்த இடத்தில், தலித் இலக்கியங்களை ஓர் எழுச்சி மிக்க இயக்கமாக ஆக்கிக் கொண்டதைப்போல இஸ்லாமிய இலக்கியங்களையும் ஓர் இயக்கமாக உருவாக்க முடியுமா என்கிற கேள்வியை எழுப்பிப் பதிலைப் பெற முயற்சிக்கலாம்தான். இரண்டு வகை இலக்கியங்களையும் ஒரே களத்தில் இருந்து உருவாக்க இயலும், அதன் அடிப்படையும் அப்படித்தான் உள்ளது. தலித் சமூகம் போலவே இஸ்லாமியச் சமூகமும் அரசியல் - பொருளாதார - சமூகப் பண்பாட்டு ரீதியாக ஒரே விதமான தன்மைகளுக்கே முகம் கொடுக்கின்றது. அதிலும் வடக்கத்திய உயர் ஜாதித்துவ மேலாண்மையை உள்ளடக்கிய ஹிந்துத்வா எழுச்சி தலித் - இஸ்லாமியச் சமூகங்களின் இருத்தலுக்குக் கூடக் கடும் அபாயத்தைத் தோற்றுவித்துள்ளது. தலித்துகள் இதனால் ஆவேசமுறும் போது தங்களின் இலக்கியத்தை வர்ணாஸ்ரம ரீதியிலான ஜாதீயத்துக்கு எதிர் முழக்கமாகப் படைக்க முடிகிறது. அவர்கள் உள்ளுக்குள்ளே இருந்து தங்களுக்கு எதிரான அநீதிகளை எதிர்க்க முன்வருவது போன்ற நிலையில் இருந்தே இஸ்லாமிய இலக்கியங்களையும் படைக்கலாம் என்பது நவீனச்சூழலில் கொஞ்சம் கூடச் சரிப்பட்டு வராது என்றே தோன்றுகிறது. தலித் சமூகத்தின் எதிரி வெளியே மட்டுமே இருக்கையில் அவர்கள் தங்களின் படைப்புலகைத் திறம்படி உருவாக்க முடிகிறது. ஆனால் இஸ்லாமியச் சமூகம் தன் உள்ளுக்குள்ளேயே இருந்தும் போராட வேண்டியுள்ளது. குர்-ஆன், ஷரீஅத் வரைமுறைகளில் இருந்து அது தன் சமூகத்தைத் தீவிரமாகப் பரிசீலனை செய்கையில் தனக்கான பொய்மைத் திரைகளை ஏராளம் ஏராளமாகத் தன் கைவசம் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆகவே, தன் சுய பரிசீலனையைத் தானே நிகழ்த்த முடியாமல் அவதிப்படுகிறது. இஸ்லாமிய இலக்கிய விமர்சனத் துறையோ, இன்னும் முளைக்கவேயில்லை. தன் சமூகத்தைத் தானே சுயமாய்ப் பரிசீலனை செய்ய மறுக்கின்ற ஒரு சமூகம் அரசியல் - பொருளாதார - கலாச்சார ரீதியான சமூகத் தளங்களில் பெரும்பாய்ச்சலை நிகழ்த்த முடியாது. ஓர் அரசியல் சக்தியாகத் தன்னை வலிமையாக நிறுவிக் கொள்ளவும் அதனால் முடியவில்லை . எனவே இளைய சமுதாயமும் சமூக ரீதியாக ஏற்படுகிற பின்னடைவுகளுக்கு, மதவெறி எதிர்ப்புக்கான இன்னொரு மதவெறி நிலைக்குள் தன்னை ஆழப் புதைத்துக் கொள்கிறது. இங்கே கூறப்பட்டவை அனைத்தும் உண்மையாக இருப்பினும், நூறு சதவிகித இஸ்லாமியப் படைப்புலகமும் அப்படியில்லை என்பதில் நமக்கான ஆறுதல் மறைந்திருக்கிறது. எண்பதுகளின் பின் உருவாகியுள்ள படைப்பாளிகளில் பலர் தமிழிலக்கியவுலகின் சகல தளங்களிலும் கால் பரவி நிற்கிறார்கள். இங்கே தொகுக்கப்பட்டுள்ள படைப்புகளின் படைப்பாளிகளில் இன்குலாப், தோப்பில் முகம்மது மீரான் ஆகிய இருவரையும் தவிர்த்து மற்ற அனைவருமே எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலுமே எழுத வந்தவர்கள். செக்கு மாட்டுத்தனமாய்ச் சுற்றிச் சுழன்ற பாதையில் இருந்து புதிய வழியில், புதிய திசைகளில் செல்கின்ற சில படைப்பாளிகளை அடையாளம் காட்டுகின்ற சிறிய முயற்சியே இது. இதனையே தலைவாசலாகக் கொண்டு மேலும் புதிய இலக்கிய முயற்சிகள் தோன்றுமென்கின்ற நம்பிக்கை உண்டாகிறது. இஸ்லாமியச் சமூகத்தின் பல்வேறு முனைகளிலும் சஞ்சாரம் செய்கின்றன இந்தக் கதைகள். பல்வேறு வகைத்தான கதாமாந்தர்களையும் சற்றும் தயக்கமின்றி வளைத்துப் பிடித்து வந்திருக்கின்றன இவை. பொதுத் துயர்களும் தனித்த துயர்களுமாய் இக்கதைகளின் படைப்புத் தளங்கள் விரிந்து கிடக்கின்றன. ஒரே கருவின் இரண்டு பக்கங்கள் வெவ்வேறு வாசிப்பு முறைகளில் படைக்கப்பட்டுள்ளன. நமக்குள்ளே மூடி மறைத்தல் அவசியமில்லை ; எல்லாம் சரியாக இருக்கிறது என்கிற பூச்சுகள் சமூகத்தைப் பின்னடைவு படுத்தும். இங்குள்ள படைப்புகள் எல்லாம் தீவிரமான அக்கறையின் பேரில் உருவானவை. குறுகியக் கண்ணாடிகளின் வழியே பார்க்க முனைபவர்கள் இக்கதைகளின் ஏதோவொரு துரும்பை மாத்திரமே பிடித்துக் கொள்வார்கள். இந்த நுண்ணளவே ஒவ்வொரு கதையின் பன்முகத் தோற்றமும் என்று அளந்து மொத்தக் கொள்முதலையும் செய்ய முடியாத கைச்சேதக்காரர்களாகி விடுவார்கள். அவிழ்க்கப்படாத முடிச்சுக்கள் பல இப்படைப்புகளில் உள்ளன. அவற்றை அவிழ்த்துப் பார்ப்பதே இக்கதைகளை முழுதுமாய் உள்வாங்குவதற்கான முயற்சியாகும். அதன் பொருட்டாகத்தான் இந்தக் கதைகள் பற்றி இங்கே எதுவும் கூறப்படவில்லை. எத்தகைய வாசிப்புகளுக்குமான வாசல்களைத் திறந்து வைத்துள்ளன இக்கதைகள். இஸ்லாமியச் சமூகத்தின் உண்மையான துடிப்புகள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை நம் விருப்பிற்கும் உகந்தவை; வெறுப்பிற்கும் ஆளானவை. இப்படைப்புகளில் எண்ணற்ற வலிகள் திக்குதிசை தெரியாமல் படர்ந்து கிடக்கின்றன. அதனைச் செரித்துக் கொள்ளவும் வேண்டும் இப்போதைக்கு விரட்டியடிக்கவும் வேண்டும் என்றென்றைக்குமாக! இன்னமும் மேலதிகாரிகளின் ஆக்ஞைகளை ஏற்பது உசிதமல்ல. ஏற்பது அதிகார மையங்களின் வளர்ச்சிக்கு உகப்பானதாகி விடும். அவர்களின் நாவசைப்புக்கேற்பதான் சமூகமும் அசையவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகிறது. இந்த அதிகார மையங்களுக்கான எதிர்ப்புக் குரல்களே இஸ்லாமியத்தின் எதிர்ப்புக் குரல்களாக அடையாளம் காணப்படுவது துரதிர்ஷ்ட வசமானது. ஆனால் ஒவ்வொரு முறையும் அப்படித்தான் நிகழ்ந்து விடுகிறது. அத்தகைய மனப்போக்கினை இக்கதைகள் ஏதாவது ஒரு காரணம் கொண்டு விமர்சிக்கின்றன; அல்லது விலக்குகின்றன. இக்கதைகளின் மூலம் நம் சமூக அமைப்பினுடைய உள்முரண்களை அறிய முடிகிறதா? அறிய முடியுமெனில் நம்முடைய சமூக ப்ரக்ஞையை எவ்விதம் கட்டமைப்பது? அதே சமயத்தில் உலாவரும் போலி முகங்களை என்ன செய்வது? இவ்வாறான கேள்விகள் பல வாசகர்களின் முன் எழுந்தால் அதனையே இத்தொகுப்பின் வெற்றியாகக் கொள்ளலாம். கவனத்திற்கு வராத மேலும் பல படைப்புகள் இருக்கக்கூடும். இது ஒரு சிறிய முயற்சி என்பதாலும், புதிய திசைக்கான ஒரு பார்வை என்பதாலும் சில கதைகளே தொகுக்கப்பட்டுள்ளன. வருங்காலத்தில் வாய்ப்பிருந்தால் இதனையே ஒரு பெருந்தொகுப்பாக மாற்றிக் கொள்ள முடியும். இத் தொகுப்பினைக் கொண்டு வர பேருதவி புரிந்த அருமை நண்பர் எஸ். ஷங்கர நாராயணன் அவர்களுக்கும் நூலாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அன்னை ராஜேஸ்வரி பதிப்பகத்தின் நண்பர் உதய கண்ணன் அவர்களுக்கும் என் நன்றிகள். களந்தை பீர்முகம்மது 31 - பி, தைக்கா தெரு, ஆழ்வார் திருநகரி - 628 612. தூத்துக்குடி மாவட்டம். மனசு நனைந்த மழைக் காலங்களில். -அப்ழல் தொலைபேசி மணி எழுப்பியது. ’’அப்பு. சித்தப்பா பேசறேம்ப்பா . சபியை ஒரு வாரமா காணோம்ப்பா. அங்கே வந்தானா?" மறுபடி காணாமல் போயிட்டாரா! ’வரலையே சித்தப்பா. ஸபர் பண்ணுங்க.." “இன்னைக்கு நைட் ஃபோன் செய்யறேன். வந்தா அவனை நைஸா பேசி அங்கேயே தங்க வை. தகவல் கொடு. நாங்க வந்து கூட்டிட்டுப் போறோம்..”என்றார். இப்படி சபிபாய் காணாமல் போவது எத்தனையாவது முறையாக இருக்கும்? எண்ணிக்கை நினைவில்லை. ஆனால் சின்ன வயசிலிருந்து நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நிறைய முறை சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டுப் போயிருக்கிறார். சில நாட்களோ, பல நாட்களோ கழித்து வருவார், வரும்போது புது கெட்டப்பில் வருவார்; சில சமயங்களில் தாடி வைச்சிருப்பார்; சில சமயங்களில் மொட்டை அடிச்சிருப்பார்; எங்கேயும் போவார்; எதையும் செய்வார்; எந்த எளிய வீட்டிலும் தங்கிவிடுவார். தான் பணக்கார வீட்டுப்பிள்ளை என்கிற எண்ணம் கிடையாது. அப்படித்தான் ஒரு முறை எங்க வீட்டுக்கும் வந்திருந்தார். எங்களுக்கு எல்லாம் ரொம்ப குஷி. “சபி பாய்… சபி பாய்…”என்று ஓடிச் சென்று கட்டிக் கொண்டோம். பிஸ்கெட், சாக்லெட் கொடுத்தார். அப்பத்தான் கவனித்தேன். அவர் கையில் இரட்டைஇலை பச்சை குத்தி இருந்தது. அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் என்பது தெரிந்ததுதான். இவ்வளவு தூரமா? மாலை சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போனார் மலைக் கள்ளன் அநேகமாக நான் பார்த்த முதல் படம் என்று நினைக்கிறேன். டெண்ட் கொட்டகை . கறுப்பு - வெள்ளையின் அழகில் மனசைப் பறிகொடுத்தேன். ஒரே புரொஜக்டர் என்பதால் மூன்று இடைவேளையிடுவது அப்போது சிறப்பு அம்சமாக இருந்தது. அந்தச் சமயங்களில் சபி பாய் முறுக்கு வாங்கித் தருவார். எம் ஜி ஆர் வரும்போதெல்லாம் அவர் கை தட்டுவது வினோதமாக இருந்தது என்றாலும் கூட அது ரசிக்கும்படியாக இருந்தது. மறுநாள் வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டார். என்னைப் பின்னாடி உட்கார வைத்து ஓட்டிச் சென்றார். எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. மத்தவங்க ஓட்டினாலும் அதில் உட்காரக்கூடத் தெரியாது. எதிரே சைக்கிள் வந்துவிட்டாலும் பயம். அப்படிப்பட்ட என்னை வெள்ளாமைக்கு அழைத்து சென்றார். அழகான இடம். ஊரில் இருந்து சற்றே தள்ளி இருந்தாலும் நானே இதுவரை இங்கு வந்ததில்லை. கொஞ்ச இரு என்று சென்றவர் மாங்காய் பறித்து வந்தார். ஒரு கல்லில் அதைப் போட்டு உடைத்தார். சட்டைப் பையில் இருந்து ஒரு பொட்டலம் எடுத்தார். உப்பு, மிளகாய் தூள். அதிசயமாக இருந்தது. அவர் முகத்திலோ வெற்றிப் புன்னகை. ருசித்து சாப்பிட்டோம். ’கொஞ்ச இரு’என்று மறுபடியும் போனவர், இந்த முறை குருவிக் கூட்டை எடுத்து வந்து காட்டினார். வியப்பாக இருந்தது. எவ்ளோ அழகு! உள்ளே ஒரு முட்டை கூட இருந்தது, சின்னதாக! கையில் ஒரு பூவைப் பிடித்திருப்பதைப் போல, மென்மையாகப் பிடித்து, அதையே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். ’’பாத்தியா அப்பு! எவ்ளோ அழகா கட்டியிருக்கு! டைலரோட பிட் துணி கூட இதில் இருக்கு பாரேன்"என்றார். நான் அவரையே பார்த்துக் கொண்டிந்தேன். வீட்டுக்குத் திரும்பிய போது சென்னையில் இருந்து சித்தப்பாவின் கடிதம் வந்திருந்தது. அவர் காங்கிரஸ்காரர். சபி பாயின் தீவிர எம் ஜி ஆர். ஆதரவு செய்கைகளுக்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்க இவர் ஓடி வந்திருந்தார். அப்பாதான் சமாதானம் பண்ணி பஸ்ஸுக்கு காசு தந்து அனுப்பி வெச்சார், “நான் போகலே. இங்கேயே இருக்கேன் பெரியப்பா” என்றார். “அப்புறம் லீவு கெடச்சா வா கண்ணா, இப்போ போம்மா. போய் நல்லா படி” இருந்த காசில் எனக்கு ஒரு ரூபாய் கொடுத்துட்டுப் போனார். அப்ப அவர் ஒன்பதாவது படித்தார். நான் ஐந்தாவது படிச்சிட்டிருந்தேன். அவரை பஸ்ஸில் ஏற்றி விட்டுத் திரும்பினேன். சிரித்தபடி கையாட்டறார். என் கண்கள் கலங்கிவிட்டன. அதற்குப் பிறகு பல முறை இப்படி ’ஓடிப் போவது’நடந்திருக்கிறது. வளர்ந்த பிறகு நம் வீட்டிற்கு வருவதை நிறுத்திவிட்டார். மற்ற இடங்களுக்குப் போக ஆரம்பித்தார். படிப்பையும் பத்தாவதுடன் நிறுத்தியாகிவிட்டது. வேலையில், வியாபாரத்தில் ஈடுபடுத்தினாலும் அந்த ’ஓடிப் போற’பழக்கத்தை மட்டும் அவரால் நிறுத்த முடியவில்லை . ஏன் இப்படி ஓடுகிறார்? அவருடைய தேடுதல்தான் என்ன? புரியலே! திருமணம் செய்து வெச்சா சரியாகும் என்றார்கள்; செய்து வைத்தார்கள். ஆனா சரியாகலே. குழந்தைகள் பிறந்தா சரியாகிவிடும் என்றார்கள். குழந்தைகளும் பிறந்தன. அப்பவும் அவருடைய பழக்கத்தை அவரால் விட முடியவில்லை. அப்பத்தான் ஒரு ’ஆலிம்ஸா’விடம் அழைத்துச் சென்றார்கள். அவருக்கு யாரோ செய்வினை செய்திருப்பதாக, ’ஆமில்ஸா’சொன்னார். அவருக்குப் போய் யார் இப்படி செய்திருக்கப் போகிறார்கள்? அதற்கு ஏதேதோ பரிகாரம் செய்தார்கள். சில நாட்கள் நல்லபடி இருந்தார். மறுபடி மிஸ்ஸிங். ஷெஹன்ஷா பாபா தர்காவில் தங்கி இருப்பதாகக் கேள்விப்பட்டோம். எல்லோரும் சேர்ந்து டூரிஸ்ட் காரில் போனோம். அப்ப , கூட அழைத்துப் போகலேன்னு சொல்லி சாதிக் மாமு, பின்னாடி சண்டை போட்டார். ஏதோ பிக்னிக் போனதா எண்ணம். சபி பாய் கிடைத்தார். தர்கா பெருக்குற வேலை செய்து வருவதாகவும் இதில் தனக்கு நிம்மதி இருப்பதாகவும் கூறினார். ’வர மாட்டேன்’என்று அடம் பிடித்தார். அப்புறம் ஒரு வழியாக அவரைச் சமாதானப்படுத்தி அழைத்து வந்தோம். எம். ஜி. ஆர். இறந்த பிறகு சபிபாயுடைய சதாய்ப்பு அதிகமாகிவிட்டது. அடிக்கடி வெள்ளை குல்லா, கறுப்பு கூலிங் கிளாஸ், வெள்ளை சட்டை, வேட்டியுடன் பெரிய மூட்டைகளைத் தூக்கும் கூலிக்காரர்களுக்கு உதவுவார். எல்லோரும் இரட்டை விரலைக் காட்ட, பதிலுக்கு இவரும் புன்னகைத்தபடியே காட்டுவார். சென்னையில் இருந்தால் சினிமா, அரசியல் கூட்டங்கள் ; இரண்டும் இல்லையன்றால் மொட்டை மாடியில் காத்தாடி விட்டுக் கொண்டிருப்பார்; விதம் விதமாக, கலர் கலராக. கூடி ஒரு கும்பலே இருக்கும். காத்தாடி விடறதுக்கு பந்தோபஸ்து எல்லாம் ஒரு நாள் முன்னாடியே ஜரூராகத் தொடங்கிவிடும். கலர் கலராய் காகிதங்கள் என்ன, சீசா தூள் கலந்த மாஞ்சா என்ன.. கலக்கல்தான்! அப்படியே விட்டு, பக்கத்து தெரு கலீமுடைய காத்தாடிய டீல் விட்டு அறுக்கற ஸ்டைல் இருக்கே… யப்பா காத்தாடியை சபி பாய் விடுவது ஒரு கலை. நினைவுகளின் நதியிலிருந்து கரையேறினேன். தயாராகிப் புறப்பட்டேன். வண்டியைப் பூட்டிக் கொண்டு, பக்கத்து வீட்டில் சாவி கொடுத்துட்டுப் போனேன். என் பார்ட்னர் வருவான் படு தய்யூப். நாங்கள் தங்கி இருந்த இடம் மஹாராஷ்டிராவில் ஒரு சிறு கிராமம். பச்சைத் தோல் வியாபாரம். காலை, ஃபஜ்ஜர் தொழுகைக்குப் பிறகு அங்கே சந்தை கூடும். ஆட்டுத் தோல். மாட்டுத் தோல் அதைப் பார்த்து, விலை பேசி, தேவையானதை வாங்கி வைப்போம். அந்த இடத்திற்கு ’மண்டி’என்று பெயர் அங்கேயே ஓரமாக நாங்கள் தங்கலாம். பச்சைத் தோல்களின் வாடையில் அங்கு தங்குவது கொடுமை. சாப்பாடு வேறு ஓட்டலில் கஷ்டமாகத்தான் இருந்தது. கொஞ்ச நாள் அனுபவத்திற்குப் பிறகு சொந்தமாகத் தோல் வியாபாரம் செய்யலாம் என்று ஸ்பர் செய்தேன். முதலாளி ஊரில் இருந்தார். பச்சைத் தோல் ஒரு லோடு சேர்ந்தவுடன், லாரியில் ஏற்றி ஆம்பூர் டேனரிக்கு அனுப்பிடணும். நமக்கு வருஷத்திற்கு ஒரு முறை ரம்ஜானில் ஒரு மாசம் லீவு கிடைக்கும். அப்ப ஊருக்குப் போவதோடு சரி.. சந்தையில் ஒரு ரவுண்ட் சுத்திவிட்டு, மண்டிக்குத் திரும்பினேன். கதவு திறந்திருந்தது. பார்ட்னர் படு தய்யூப் வந்துட்டாரா? அட, சபிபாய்! இன்ப அதிர்ச்சி… உற்சாகமாகிவிட்டது. அவரே ஓடி வந்து கை குலுக்கினார். இந்த முறை மீசையைக் காணோம். “எப்படி இருக்கீங்க?” “எனக்கென்ன, நல்லா இருக்கேன். நீ என்ன இந்த மாதிரி இடத்தில் தங்கி இருக்கே. சே, வேலை வேண்டுமென்று எனக்கு ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா. உன்னை யார் இங்கே எல்லாம் வந்து வேலை செய்யச் சொன்னது?” உண்மைதான். சொல்லியிருந்தால் சபிபாய் வேறு வேலைகூட வாங்கித் தருவார். இருந்தாலும், அப்பா ஆசையுடன் வாங்கித் தந்த வேலை இது. வருங்காலம் நல்லா இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு. சபி பாயே ’டீ’போட்டார். நல்ல ஸ்ட்ராங் டீ, பேரணாம்பட்டு நினைவைக் கொண்டு வந்தது. பேண்ட் பாக்கெட்டில் இருந்து துழாவி ஒரு பொட்டலம் எடுத்தார். பட்டர் பிஸ்கெட், உடைந்திருந்தது. அதை ’டீ’யில் தொட்டுச் சாப்பிட்டார் “சித்தப்பா காலையில் ஃபோன் செய்தார். ரொம்ப கவலைப்பட்டார்”என்றேன். “அவரு கெடக்கிறாரு.” “உங்க மாமியார் இறந்துட்டதைக் கேள்விப்பட்டு வருத்தமாச்சு”சிரித்தார். “நானே வருத்தப்படலே. நீ ஏன் வருத்தப்பட்டே” என்றார். “அது இல்லை . யாராவது இறந்தா வருத்தப்படணும்.” “அதான் ஏன்… ஏன் வருத்தப்படணும்? அது என்னமோ தெரியலே அப்பு. யாராவது இறந்துட்டா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. சத்தம் போட்டு சிரிக்கணும் போலிருக்கு. எனக்கு மனசு சரியில்லை என்றால் நான் போய் ரிலாக்ஸ் பண்ணிக்கிற இடம் கப்ரஸ்தான் - (உடல் அடக்கம் நடைபெறும் இடம்)” என்றார். எனக்குப் பயமாகிவிட்டது. பகல் சாப்பாட்டை அவரே செய்தார். சாதம், தால் காஸால்னா, கபாய், வெண்டைக்காய் பொரியல் கூட அவர் கொண்டு வந்த நாற்றங்காய் ஊறுகாய், ஆஹா சூப்பர். அம்மா செஞ்சதைப் போலவே இருந்தது. படு தய்யூப் லயித்து சாப்பிட்டார். “சபி பாய். இங்கேயே தங்கிடுங்க. பேசாம ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சுடலாம்” என்றார் படு தய்யூப். “அட போப்பா. இங்கேயே தங்கிட்டா, எனக்கு வேற வேலை இல்லையா?”என்றார் சபி பாய். வேற வேலையா! இங்கிருந்தும் ஓடப் போகிறாரோ.. இரவெல்லாம் மூவரும் தூங்கலே. பழைய விஷயங்களைப் பேசிட்டு இருந்தோம். மெல்லிய ஒலியில் கிஷோர் குமாரின் பாடல்கள். ’டீ’ஃபிளாஸ்கில் இருந்தது. வெளியே மழைச் சாரல். ’’அப்பு , உனக்கு நினைவிருக்கா, மழைக்காலங்களில் வாணியம்பாடி ரயில்வே ஸ்டேஷனில் போய் நனையாதபடி அந்த மழை வாசனையை அனுபவித்த அழகு இருக்கே. வேர்க் கடலை சாப்பிட்டபடி! ஆஹா, சுபம். இப்பவும் வருதே, இதெல்லாம் மழையா. உடம்புகூட நனையமாட்டேங்குதே"என்றார். அப்ப நான் இஸ்லாமியக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். யாரோ தேடிட்டு வந்திருப்பதாக பியூன் சொல்ல, இவர்தான்! ஒரு வாரம் ஹாஸ்டலில் நம்முடன் தங்கி இருந்தார். அப்புறம் கேள்விப்பட்டு சித்தப்பா வந்து அழைத்துச் சென்றார். அவரையே பார்த்தேன், எனக்குக் கொஞ்சம் புரிவதைப் போல் இருந்தது. தொலைபேசி அழைப்பு. பேசினேன். “அஸ்ஸலாமு அலைக்கும்.” “வாலைக்கும் ஸலாம்” ‘அப்பு. ஆமில்ஸாகிட்டேயும் விசாரிச்சுட்டேன். சபி உன்னிடம் தான் வந்திருக்கணுமென்று சொல்றாரேப்பா’’என்றார் சித்தப்பா, நான் சபி பாயைப் பார்த்தேன். அவர் ஆர்வமாக டிவியில் கார்ட்டூன் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். “இல்லே சித்தப்பா வரலையே. வந்தா நானே உங்களுக்கு ஃபோன் செய்யறேன்”என்று வைத்துவிட்டேன் மனசு அமைதியாக இருந்தது. மழை வேகமாகப் பெய்யும் சப்தம் கேட்டது. கதவைத் திறந்து வெளியே சென்றேன். “குடை எடுத்துக்க”என்றான் ‘படு தய்யூப்’. "வேண்டாம்…’’என்றேன். கடைசி இடம் -எஸ். அர்ஷியா ஊர்ந்து, வழிந்து, வழியில் தென்படும் குழிகளில் இறங்கி, மேடுகளைத் தயக்கத்துடன் கடந்து, சட்டென்று வேகமெடுத்துப் பாயும் புதுவெள்ளத்தின் வீச்சு அவனிடம் இருந்தது. வலைப்பின்னல் தொப்பியும் குஞ்சுதாடியும் அவனுக்கு எடுப்பையும் ஆலிம் தோற்றத்தையும் தந்தன. நொடிக்கொரு தரம், “அல்லா லேசாக்கிடுவான்” என்பான். விஷயத்துக்கேற்ப குர்-ஆனிலிருந்தும் ஹதீஸ்களிலிருந்தும் மேற்கோள் காட்டிப் பேசும் விஷயஞானமும் அவனிடமிருந்தது! கழுத்தை மேலே எழுப்பி, இதமாய்க்காலை உதைத்தும் கைகளை வீசியும் நீந்தும் பரவசம் அவன் பேச்சிலிருந்து இடம் பெயர்ந்து என்னையும் பரவசப்படுத்தியது. இத்தனை நாட்கள் ஏன் அவனைச் சந்திக்கவில்லை எனும் ஆதங்கம் அடிவயிற்றிலிருந்து தோன்றிக் கவலை கொள்ள வைத்தது. என்னைவிடப் பத்து வயசு சின்னவன்; சராசரிக்கும் கொஞ்சம் குறைந்த உயரம்; சிவந்த நிறம்; கூரிய மூக்கு, இடுங்கிய கண்கள் சிரிக்கும்போது ஒரு வசீகரம். இப்போதாவது அவனைச் சந்திக்கும் வாய்ப்பு பூர்வஜென்மப் புண்ணியமாக வாய்த்ததே என்று நினைத்துக் கொண்டேன். அவனைப் பிறரிடம் அறிமுகப்படுத்தும்போது, ‘என் நண்பன்’ என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு சந்தோஷம்! பல இடங்களில் அப்படி இப்படி என்று பல வேலைகள் செய்து, ஒருவழியாக என் அனுபவ எழுத்தறிவு, இந்தப் பத்திரிக்கையில் என்னை உதவியாளனாகக் கொண்டு போய்ச் சேர்த்தது. அங்கே தான் அவன் எனக்கு அறிமுகம் ஆனான். அதே பத்திரிக்கையில் அவனும் பணியில் இருந்தான். "ஓ.. ஒங்கக் கதைகள் எல்லாமே படிச்சுருக்கேன். நல்ல நேர்த்தி. மரபுகளை மாத்தியமைச்சு அதே வேளையில் நேர்மையும் தவறாம எழுதுறது இஸ்லாத்துல ரொம்பக் கஷ்டம், அத நீங்க நல்லாவே செய்றீங்க. இங்கன நீங்க வந்து சேர்ந்தது எனக்கு சந்தோஷம். ஒங்கக் கூட வேல செய்றத நான் பெருமையாக கருதுறேன்!’’என்று பிரமித்தான். பிரமிப்பில் மரியாதை இருந்தது. அங்கீகாரத்துக்கு ஏங்கிய மனம் இது. வெயிலில் சுற்றித்திரிந்து நா வறளும்போது குளிர்ந்த நீரை மொண்டு எடுத்து, தொண்டைக்குள் இறக்கிக் கொள்ளும் சுகம் அந்த வார்த்தைகளில் இருந்தது. உணவுப் பாதையில் நழுவும், மனசுக்குப் பிடித்த பதார்த்தமாய் வார்த்தைகள் நெஞ்சில் தங்கின. சந்தோஷத் துளிகள் கண்களில் அரும்பின. அலுவலகச் சூழல் அங்கே இருப்பதாகத் தோன்றவில்லை. மனசுக்குப் பிடித்தமான இடத்தில் உட்கார்ந்து, மனசைக் கவர்ந்த புத்தகம் ஒன்றை வாசிப்பதாகவே பட்டது. முதலாளி என்னையும் அவனையும் மாறிமாறிப் பார்த்தார். இரண்டு இலக்கிய ஆர்வலர்களின் சந்திப்பை அவரும் உணர்ந்திருப்பாரானதால் புன்சிரிப்புடன் தலை கவிழ்ந்து கொண்டார். அதே அலுவலகத்தின் ஓர் அறையில் தங்கிக் கொள்ள அனுமதி கிடைத்தபோது, நான் அவனுடன் தங்குவதைச் சுமையாகவோ நெருக்கடியாகவோ கருதவில்லை. மாறாக சந்தோஷம் கொண்டான். "ஒருத்தருக்கு ஒருத்தர் துணை!‘’என்றான். நான் வைத்திருந்த நைந்த போர்வையைப் பார்த்தவன், தன் பெட்டியைத் திறந்து, "இது என்கிட்ட எக்ஸ்ட்ராவாருக்கு வெச்சுக்குங்க. தலயாணியிருக்கா? என்ட்ட காத்து ஊதற் தலயாணிகூட ஒண்ணு இருக்கு. அத நீங்க யூஸ் பண்ணுங்க!’’என்றான். என் மனத்தறியின் இழைகள் நெருக்கியடித்துக் கொண்டன. கால் தடுக்கி, கைப்பிடியில்லாத கிணற்றில் விழுந்துவிட்ட நீச்சல் தெரியாதவன் போல நான் தத்தளிக்க வேண்டியிருந்தது. இரவில் நெடுநேரம் வரை கண்விழித்துப் புதிய கருத்துக்களுடன் கட்டுரைகள் எழுதுவான். அதை மறுநாள் கொடுத்து அபிப்ராயம் கேட்பான். சொன்னது அவனுக்குப் பிடித்திருந்தால், “ரொம்ப நல்லாருக்கே!’’என்பான்.”இத நான் சேத்துக்குறேன்!" என்று அனுமதி கேட்பான். அந்நியோன்யம் காட்டி அவன் நெருங்கியது எனக்கும் பிடித்திருந்தது. ஒரு பொன் மாலைப் பொழுதின் போது நானும் அவனும் வண்டியூர் கண்மாயின் அலைகளையும் அதில் நீந்தும் நீர்க்காக்கைகளையும் பார்த்து ரசித்துக் கொண்டே நடந்தோம். “இனிமே நீ என்னயப் பேர் சொல்லியே கூப்புடு!”என்றேன். அவன் ஆச்சரியமாய் என்னைப் பார்த்தான். "என்ன சொன்னீங்க?’’என்று சந்தேகமாய்க் கேட்டான். சந்தேகம் அடிவயிற்றிலிருந்து கிளம்பி வந்திருக்க வேண்டும்; கேட்டதொனியில் ஆழம் தெரிந்தது. “ஆமா சதக். நீ என்னயப் பேர் சொல்லியே கூப்புடு!”சிறிது தூரம் வரை எதுவும் பேசாமல் நடந்தான். நடந்தோம். முன்பெல்லாம் இந்தக் கரையில் யாரும் நடப்பதில்லை. வழிப்பறி பயமிருக்கும். இன்று நகரின் விஸ்தரிப்பு; மக்கள் நடமாட்டம்; பரபரப்பு இப்போது சாயங்காலக் காத்துவாங்க. உடம்பைக் குறைக்க… என்று வேக வேகமாக நடக்கும் ஆண்களும் பெண்களும், இளம் பெண்ணொருத்தி ’விக்…விக்’கென்று நடந்து போனாள்; அடையாளமாய் ஷாக்களின் அச்சு! சதக் ஏதோ சொல்ல வாயெடுத்து,ப்பீ… ப்பீ..! என்று தடுமாறினான். “எதுக்கு தடுமாறுறே… பீருனு தைரியமாகக் கூப்புடு!” சொல்ல வந்த விஷயத்தை விட்டுவிட்டு என் இடது கையைப் பிடித்துக் கொண்டான். அவன் உள்ளங்கை சொதசொதத்தது. எங்களைக்கடந்து போன அந்தப் பெண் சட்டென்று தலை திருப்பிப் பார்த்துவிட்டு, அதே வேகத்தில் நடந்து போனாள். அறைக்குத் திரும்பினோம். மறுநாள் அவன் வாசிச்சுப் பார்க்கச் சொல்லிக் கொடுத்த கட்டுரையில், நட்புக்கிடையில் வயசு வித்தியாசம் இருப்பதில்லை எனும் தூக்கல் இருந்தது! தன் வாழ்க்கையின் சுகதுக்க விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அதனை முதலில் என்னிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனும் ஆதர்சம் அவனுக்குள் இருந்திருக்க வேண்டும்; அல்லது அவனைப்பற்றி நான் அறிவது அவசியம் என்று கருதியிருக்க வேண்டும்; அப்படி அவன் சொன்ன விஷயங்களில் ஒன்று காதல்! ஆமாம். அவனுக்கும் காதல் இருந்தது! தினமும் அவனைக் கேட்டு நாலைந்து முறையாவது போன் வரும். நான்தான் அட்டெண்ட் செய்வேன். முதலாளி இல்லாதவேளைகளில் நெடுநேரம் வரை பிறருக்குக் கேட்காதபடி ஏதோ பேசுவான். சாதாரணமாக அவனுக்குக் குரலில் டெசிபல்ஸ் அதிகம். பயான், தப்லீக், மெளலூது என்று போய், குரல் கனமாய் இருக்கும். ஆனால் காதல் போனுக்குக் கிசுகிசுப்பான். குரல் மென்மையாகி விடும். குழைந்து பேசுவான். சத்தமில்லாமல் பேசும் அவனைப் பார்க்க, பிரத்யேகப்படுத்தப்பட்ட அறையில் பாடும் பின்னணிப் பாடகன் போல இருப்பான். லாவகமாய்த் தலையை அசைத்து, கையை ஆட்டிப் பேசுவான் நேரில் பேசுவது போல! காதலைப் பற்றி, என்னிடம் அவன் சொல்லியிருந்தாலும், மற்ற விஷயங்களைப்போல் இதில் அகல ஆழம் வைத்துப் பேசவில்லை. குறிப்பாகப் பெண் யார் என்பதைச் சொல்லவில்லை. அதை மர்மம்போல் வைத்துக் காப்பாற்றினான். பெண் யார் என்று சொல்லாதது எனக்குள் ஓர் ஆர்வத்தை உற்பத்தித்தது. என்றாலும் நான் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை என்பதுபோல் காட்டிக் கொண்டேன், என்னதான் நெருங்கிய நட்பு என்றாலும் சில விஷயங்களைப் பகிர முடிவதில்லை என்பதைப் பல்வேறு இடங்களில் பல்வேறு தருணங்களில் தரிசித்திருக்கிறேன். கத்தரிக்காய் முற்றும் என்பது எனக்கும் தெரியும்! இதழ் தயாரிப்புப் பணி, இடையிடையே வரும் மதரஸாமலர் தயாரிப்புப் பணிகளுக்குக் காட்டும் அதே உத்வேகமும் முக்கியத்துவமும் அவன் தன் காதலுக்குக் காட்டினான். எப்படி அதற்கென்று அவனால் இத்தனை நேரம் ஒதுக்க முடிகிறது என யோசித்துப் பார்ப்பேன். ஆச்சரியமாக இருக்கும். கடலில் கலக்கும் அவசரத்தில் ஓடி, வற்றிப் போகும் காட்டாறாய் என் நேரம் ஓடிவிடுகிறது. அதற்கு இதற்கு என்று நேரமே இருப்பதில்லை. சில வேலைகளுக்காக ஒதுக்கி வைக்கப்படும் நேரத்தை வேறு வேலைகள் அபகரித்து விடுகின்றன. ஒரு வெள்ளிக்கிழமை ஜும் -ஆ தொழுகைக்குக் கிளம்பியவன், போன் வந்ததும் நின்று விட்டான். “என்ன சதக் தொழுகைக்கு வரலியா?”என்றபோது, புன்சிரிப்புடன், “ஒரு முக்கிய வேலயிருக்கு போய்ட்டேரு. வந்துர்றேன்!”என்றான். அவனுடைய வசீகரச் சிரிப்பில் மர்மம் ஒளிந்திருப்பது போலப்பட்டது. நான் கிளம்பிவிட்டேன். பயான், தொழுகை, மிலாப் எல்லாம் நடந்து முடிந்த பின்புதான் நான் திரும்பினேன். அப்போதும் அவன் போனில் பேசிக்கொண்டுதான் இருந்தான். ஜூம்-ஆ தொழுகையை ஓரம் கட்டியது அவனுக்குள் இருக்கும் காதல் மோகத்தைக் காட்டியது. என் அயர்ச்சியில், வெள்ளை லுங்கியும், டெட்ரக்ஸ் வெள்ளை சட்டையும் அணிந்திருந்த அவன் கருப்பாகத் தெரிய, முதன்முதலாய் அவன் மீது நெருடல்! ஓர் ஆலிம் ஜும் ஆ தொழுகையைப் புறக்கணிப்பானா எனும் சந்தேகம் எனக்குள் அரும்பியது. அன்று முதலாளி ஊரில் இல்லை. வேலைநேரம் முடிந்ததும் நண்பர்களைச் சந்திக்க வெளியில் கிளம்பத் தயாரானேன். அவன் ஏதோ ஒரு புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தான், அல்லது வாசிப்பது போல தவித்துக் கொண்டிருந்தான். அவனுடைய கவனம் சிதறுவதை என்னால் உணர முடிந்தது. அப்போது ஒரு போன் வந்தது. அதை அவன் எதிர்பார்த்திருப்பான் போல! பாய்ந்துபோய் எடுத்தான். அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே நான் புறப்பட்டுப் போவதைப் பார்த்துக் கையாட்டினான். பிறகு என்ன நினைத்தானோ… போனில் ஒலிவாங்கும் பகுதியை ஒரு கையால் மூடிக்கொண்டு, “நம்ம ஆளு!” என்று சொல்லிச் சிரித்தான். வழக்கமாய் என் நண்பர்களைப் பார்க்கக் கிளம்பினால் இரவில் நான் அறைக்குத் திரும்புவதில்லை. நண்பர்களுடன் தங்கிவிடுவேன். இன்று அவர்கள் தங்கச் சொல்லி வற்புறுத்தியும் கூட நான் தங்கவில்லை. இனம் புரியாத ஏதோ ஒன்று என்னை ஊடுருவுவது போலப்பட்டது. இது போன்ற ஊடுருவல் எண்ணத்தைத் தொடர்ந்து, யாரேனும் ’மெளத்’தாகிப் போன தகவல் வரும்; அல்லது தொலைந்து போன சேதி வரும்; அல்லது எனக்கே ஏதாவது நேர்ந்துவிடும். வயதான உறவினர்களும், வயசுப்பெண்களும் பையன்களும் எனக்குள் வந்து போனார்கள். யாருக்கு என்னவாகியிருக்கும்? எனக்குழப்பமாய் நடந்தேன். தெருமுனையைத் திரும்பும்போது, அலுவலகத்தில் விளக்கு வெளிச்சம் இருந்தது. அவன் ஏதாவது எழுதிக் கொண்டிருப்பான் என்றுதான் நினைத்தேன். கதவைத் தட்டியபோது நெடுநேரம் வரை பதில்லை. ஒருவேளை தூங்கிவிட்டானோ என்று உரக்கக் குரல் எழுப்பித் தட்ட அவன் வேர்த்து விறுவிறுத்துப் போய்க் கதவைத் திறந்தான். “என்ன பீரு . இந்த நேரத்தில?”என்று அதிர்ச்சியாய் வார்த்தைகள் வந்து விழுந்தன. ‘ஏன் இவன் பதற்றப்பட வேண்டும்?’ அவனை விலக்கிக் கொண்டு உள்ளே போனேன். அலுவலகத்தில் சென்ட் வாசமும் பூ வாசமும் தூக்கியது. நாங்கள் தங்கும் அறைக்குள் கீழ்விட்டு பர்ஸானா இருந்தாள். கட்டிலில் பாதியும் நெஞ்சுப்பகுதியில் மறைந்திருந்த கையில் பாதியுமாய் அவளின் அவிழ்ந்த சேலை! எதிர்பாராத இரவில், தூங்கிக் கொண்டிருக்கும் போது வந்து மூழ்கடித்துவிடும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவன் போலானேன். ஒரு வழிசலுடன் அவன் விலகி நிற்க, அவள் ஓடிப்போய்க் கீழிறங்கிவிட்டாள். அறைக்குள் கபர்குழியின் இருட்டும், கப்ரஸ்தான் அமைதியும் குடி புகுந்து கொண்டன. என்னைப் பார்க்க அவனுக்குச் சங்கடமா…அல்லது, தெரிந்துவிட்டதே இனி என்ன எனும் தைரியமா என்று யூகிக்க முடியவில்லை. அவன் எதுவும் பேசவில்லை. நான் பேச விரும்பவில்லை! மீதி இரவுப் பொழுதைக் கழிக்க அலுவலக அறையின் மேஜை மீது துண்டு விரித்துப் படுத்துக்கொண்டேன். அவன் தன் கட்டிலில் சுருண்டு கொண்டான். கீழ் வீட்டுப் பெண்ணைப் பற்றிய கவலை என்னை ஆக்கிரமித்து, தூக்கத்தைத் துரத்திவிட்டது. அவள் திருமணம் ஆனவள். ஒரு பெண் குழந்தை உண்டு. கணவன் நல்லபடியாகச் சம்பாதிக்கின்றான். இருந்தும் ஏன் இப்படி? என் கோபம் இப்போது அவன் மேல் திரும்பியது. நொடிக்கொருமுறை இறைவன் மேல் பாரம் போடும் ஓர் ஆலிம் இப்படி நடந்து கொள்ளலாமா? அதுவும், அடுத்தவன் மனைவியிடம்! கண்விழித்தபோது அவன் தன் இருக்கையில் உட்கார்ந்திருந்தான். என் துயில் கலைந்ததும் அவன் முகத்தில் முழித்ததை அருவருப்பாய் உணர்ந்தேன். அவன், “பீரு!”என்றான். இப்போது அவன் என் பெயரை உச்சரிப்பதை அவமானமாய்க் கருதினேன். துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டேன். அள்ளி அள்ளித் தண்ணீரைத் தலைவழியே ஊற்றிக்கொண்ட பின்பும் வெக்கை துளியும் குறையவில்லை. நான் வெளியே வரும்வரை காத்திருந்து, “நேத்து ராத்திரி”என்று மறுபடியும் ஆரம்பித்தான். நான் பேசவில்லை. கையை உயர்த்தி ‘நிறுத்து’என்பதுபோல் சைகை செய்தேன். ’புறங்கையை நக்கவில்லை’ என்று சொல்லப் போகிறான் என்பது எனக்குத் தெரியும். அதைத்தான் அவன் வேறு வேறு வார்த்தைகளில் சொல்லிக் கொண்டிருந்தான். விடியற்காலையிலேயே சைத்தான் வேதம் ஓதியது. வெளியில் எங்கும் போக முடியாத சூழலில் என் காதுகள் தானாகவே மூடிக் கொள்ளாதா எனத் தவிக்க ஆரம்பித்தேன். என்னிடமிருந்து எந்த ஒரு சாதகமும் அவனுக்குக் கிடைக்காததால், நெடுநேர மனசு கலவரப் போராட்டத்துக்குப்பின் எழுந்து கொண்டான். உடம்பு முறித்தான். "என்னய நீ புரிஞ்சுக்கல!’’என்று ஒரு குற்றச்சாட்டை சுமத்திவிட்டு உள்ளே போனான். முதலாளி இல்லாத நேரங்களில், எங்கள் இருவரைத் தவிர வேறு எவரும் இல்லாததால் அவனிடம் முகங்கொடுக்க வேண்டியதாகிறது. ஆனால் சுட்டக் களிமண்ணாய் மனம் ஒப்பவில்லை. ஒரே இடத்தில் இருவேறு துருவங்களாய் உட்காரவேண்டிய அவலம்! இரண்டு நாட்கள் அவனுக்கு போன் எதுவும் வந்ததுபோல் தெரியவில்லை. நான் இந்த மாத இதழுக்கான ராப்பருக்காக கிளாசிக் போய் விட்டுத் திரும்பியபோது, அவன் போனில் பேசிக் கொண்டிருந்தான். என்னைக் கண்டதும் பேச்சைத் துண்டித்து விட்டான். நான், என் வாக்கிலே, "அடுத்தக் குடும்பத்தக் கெடுக்கிறது நல்லதில்ல!’’என்றுவிட்டு, என் வேலையைத் தொடர்ந்தேன். நாலைந்து நாட்களில் அறையின் இறுக்கத்தையும், அலுவலக இறுக்கத்தையும் துறக்க வேண்டி வந்துவிட்டது. முகம் தூக்கிக் கொண்டு எவ்வளவு நேரம் உட்காரமுடியும்? ஆனாலும் நான் வேலை விஷயம் தவிர வேறு எதையும் அவனிடம் பேசுவதுமில்லை; கேட்பதுமில்லை! இதற்கிடையில் ஒருநாள் கீழ்வீட்டு பர்ஸானாவைப் படியிறங்கும்போது பார்த்தேன். என்னைப் பார்த்ததும் சிரித்தாள். என் ஈரக்குலை கருகிவிட்டது. இந்த இரண்டு வருடத்தில் அன்றுதான் அவள் என்னைப் பார்த்துச் சிரித்தது. காரியச் சிரிப்பு! ஒருநாள் பிற்பகல் வேளையில் கருப்பாய் ஓங்கு தாங்கான ஒரு மனிதர் என்னைத் தேடி வந்தார். “பீருங்க்றது?” “நான்தான். நீங்க?” - “உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்!” அவரை இதற்கு முன் பார்த்ததில்லையாயினும் பேசணும்’என்றதும் உட்காரச் சொன்னேன். அலுவலகத்தில் வேறுயாருமில்லை . . உட்கார்ந்தவர், ‘’என் பேரு தயூப் இண்டஸ்ட்ரீஸ் இண்டியால் மேனேஜராருக்கேன். எனக்கு ஒரே பொண்ணு. அந்தப் பொண்ண இந்த ஆபிஸ்ல வேலை செய்யற சதக்குக்கு பேசியிருக்கோம். அதான் அவரப் பத்தி உங்கக்கிட்ட கேக்கலாம்னு!’’என்றார். என் மனத்திரையில் ஒவ்வொரு காட்சியாய் ஓடியது. அதையெல்லாம் ஓரம் கட்டிவிட்டேன். வாலிபச் சேட்டை எல்லாருக்கும் உரியதுதானே! தனக்கென்று ஒரு பெண்டு வந்துவிட்டால்… இதையெல்லாம் விட்டுவிடுவது இயல்புதான். அதனால், ’நல்லபையன்’என்று சொன்னேன். வந்தவர், என் கையைப்பிடித்து நன்றி சொல்லிவிட்டுப் போனார். அதை அவனிடம் சொன்னபோது, குர்-ஆன்’மீது சத்தியம் செய்து சொன்னான். ’இனிமே இப்டியெல்லாம் செய்யமாட்டேன்!“, அன்றிரவு கீழ் வீட்டுப் பெண்ணிடமிருந்து போன் வந்தபோது,”என்னய மறந்துடு!"என்று என் காதுபடவே சொன்னான். ஆனால் நிக்காஹ் முடிந்து நாலாம் நாள் இரவு அவன் அலுவலக அறைக்கு வந்துவிட்டான். இங்கே தான் தூங்கினான். “ஏன் சதக் இப்படி?”எனக் கேட்ட போது, "அவ நல்லவ இல்ல!’’என்றான். அது எந்த அளவில் உண்மை என்று தெரியாத போதிலும், “இப்டி புது மாப்பிள்ள நடந்துக்கிறது நல்லதில்ல”என்றேன். “மைண்ட் யுவர் ஒன் பிஸ்னஸ்!”என்று விட்டான். இதை முதலாளியின் காதுக்குக் கொண்டு போகலாமா என்று நான் மண்டையைப் போட்டு உடைத்த நேரத்தில், முதலாளியே எதிர்பாராத விதமாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். “பீர்பாய்… இங்கே என்னவெல்லாமோ நடக்குதாமே!” அவர் ஏதேனும் நடவடிக்கை எடுப்பார் என்று நம்பி, நான் நடந்ததையெல்லாம் சொன்னேன். முழுவதையும் கவனத்துடன் கேட்டுக் கொண்டவர் உதட்டைப் பிதுக்கி, தலையை ஆட்டிவிட்டுக் கிளம்பினார். அவனைக் காட்டிக் கொடுத்து விட்டோமோ எனும் உறுத்தல் எனக்குள் எழுந்தது. இல்லாததைச் சொல்லவில்லையே எனும் சமாதானமும் உண்டானது. ஆனாலும் அன்றிரவு எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை; புரண்டு புரண்டு படுத்தேன். நள்ளிரவுக்குப்பின் தூக்கம் என்னை ஆட்கொள்வது எனக்குத் தெரிகிறது. நானும் சதக்கும் அலுவலக அறைக்குள் இருக்கிறோம். அவன் கோபமாக என்னிடம் பேசுகிறான். “பீரு நீ என்னயப் பத்தி இல்லாததும் பொல்லாததுமாச் சொல்லிட்டுத் திரியுற!” நானும் பதிலுக்குப் பேசுகிறேன். விஷயம் நீள்கிறது. ஒரு கட்டத்துக்கு பின், என் எதிரே சதக் உட்கார்ந்திருந்த இடம் காலியாக இருக்கிறது. என்ன ஆனான், எங்கே போனான் என்று நான் தேடும் பொழுது, அவனிருந்த இருக்கையிலிருந்து ஒரு பன்றி வாலைச் சுழித்துக்கொண்டு இறங்குகிறது. சாக்கடையை அங்கும் இங்கும் தெளித்தபடி அது வெறியேறிப் போகிறது. என் தூக்கம் ’சட்’டெனக் கலைய.. அறையில் நிசப்தம், இருள்! இப்போதெல்லாம் அவனைக் கீழ்வீட்டுப் பெண் போனில் கூப்பிட்டால் அதை நான் எடுத்தால் அவனிடம் சொல்வதுமில்லை, கொடுப்பதுமில்லை, வைத்து விடுகிறேன். இந்த விஷயத்தை அவள், அவனிடம் சொல்லியிருக்கவேண்டும். “பீரு, எனக்கு போன் வந்தா குடுக்குறதில்லையா?”என்று ஆத்திரத்துடன் கேட்டான். “இன்னும் நீ திருந்தலியா?”என்றேன் நான் அமைதியாக "நான் எப்படி போனா ஒனக்கென்ன?’’ “ஒரு ஆலிம் தப்பு செய்றத நான் விரும்பல!” அவன் தன் இருக்கையிலிருந்து எழுந்தான். என்னை நெருங்கி வந்தான். "கீ வீட்டுப் பொண்ணுகிட்ட நீ வர்றியானு கேட்டியாமே!’என்று என் மீது பாய்ந்தான். அபாண்டம். அடுக்காத சொல். நான் நிலைகுலைந்து போனேன். அவனிடமிருந்து ஏதாவது தாக்குதல் வரும் என்று என் உள்மனம் உறுத்திக் கொண்டேயிருந்தது. ஆனால் இதுபோல நான் எதிர்பார்த்திருக்கவில்லை. சுதாரித்துக்கொண்டு எழுந்தேன். அதற்குள் என் நெஞ்சில் அவன் இரண்டு குத்துக்கள் விட்டிருந்தான். இதற்கு முன் அடிபடாத, தேகம். குத்து வாங்கியதும் வலித்தது. இதயம் எகிறுவது போல உணர்ந்தேன்! எங்கிருந்தோ ஒரு மிருகம் என்னை உசுப்பியது. அவனை நெட்டித் தள்ளினேன். தூரப்போய் விழுந்தான். அவனை நெருங்கிக் கொத்தாய் அள்ளி முகத்தில் ஒரு குத்து, மறுபடியும் விழுந்தான். சப்தம் கேட்டு கீழ் வீட்டிலிருந்து அவள் மேலேறி ஓடிவந்தாள். நாங்கள் அடித்துக்கொண்டு உருளுவதைப் பார்த்தாள், "அவர் விட்டுருங்க!’’என்று என்னைத் தடுத்தாள். என் கோபம் அவள் பக்கம் திரும்பியது "தேவடியா முண்ட. எல்லாம் ஒன்னாலத்தான்டி!" என் வார்த்தைகளில் உச்சரிப்பில் அதிர்ந்தவள், பயந்து கீழே ஓட முயற்சித்தாள். நான் துரத்தினேன். சதக் திகைத்துப்போய் நின்றிருந்தான். நானும் அவளும் துரத்தலில் இருந்தோம். அவளுடைய நல்ல நேரம் என் துரத்தலில் சில நொடிகள் தாமதிக்க, அவள் தன் வீட்டுக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டாள். மறுபடியும் நான் மேலே வந்து அவனைத்தேட.. அவன் திகைப்பிலிருந்து மீளாது இருந்தான். அச்சேற்ற முடியாத கொச்சைச் சொற்களால் வசை பாடினேன். என்னை அவன் நெருங்கி வந்தான். அவனை அடிக்க நான் கை ஓங்கியபோது, “பீரு!”என்று திடீரென என்னைக் கட்டிக் கொண்டான். நான் அவனை உதறினேன். “எதுக்கு பீரு என்னய அடிச்சே?”பிளேட்டை மாற்றினான். “நான் அடிச்சேனா?”என் சித்தம் தடுமாறியது. “ஆமா பீரு! நீ முதல்ல அடிச்சதாலத்தான் நான் அடிச்சேன். எதுக்கு இதெல்லாம்? இது வெளியிலத் தெரிஞ்சா கேவலம் தானே? இதோட விட்டுறலாம்!”என்று என் கைகளைப் பிடித்தான் என் நெஞ்சில் அவன் குத்திய வலியைக் காட்டிலும், இப்போது சொன்ன வார்த்தைகள் ஏற்படுத்திய வெக்கை, நெஞ்சுக்குழியைக் கருக்கியது. நேற்றிரவு கனவில் வந்த பன்றிபோல், அவன் என் முன்னால் வாலைச் சுழித்துக் கொண்டு நின்றிருந்தான். அடையாளம் -ஃபிர்தெளஸ் ராஜகுமாரன் போவதையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அவன் சாலையின் மறுபுறம் சென்று மறைந்த பிறகு சுய நினைவு அடைந்தவராகப் பெருமூச்சு விட்டுக் கொண்டார் ஹாலீத் ராவுத்தர். ‘ம்! காலம்….., எப்படியெல்லாம் கெட்டுப்போயிருக்கிறது. எங்கள் காலத்தில் முகம் தெரியாத பெரியவங்ககிட்டே பேசவே தயங்குவோம். இரண்டு மூணு வயசு கூடுனவங்க முன்னாடியெல்லாம் புகைக்கவே மாட்டோம். பதினஞ்சு வயசிருக்குமா இவனுக்கு…! தன்னோட தாத்தாவுக்கு தெரிஞ்சும், எவ்வளவு தைரியமா எங்கிட்டேயே ஒரு பகுதி ரூபாய்க்கு பீடி வாங்கிட்டுப் போறான்? காசு அதிகமாக இல்லை போலும். இருந்திருந்தால் சிகரெட்தான் வாங்குவான்.’ பெட்டிக்கடையில் மறைவில் நின்று, நீளமாய் இழுத்து அவன் புகைவிடுவதைப் பலமுறை பார்த்திருக்கிறார் ஹாலித் ராவுத்தர். முதல் தடைவையாகப் பார்த்தபோது, பயந்து போய் ஓடினான். பிறகு கண்டு கொள்ளாதவனாக நின்று கொள்ள ஆரம்பித்து, இவரிடமே நேரிடையாக வாங்கும் அளவுக்குத் தைரியம் பெற்று விட்டான். ‘உன்னால் என்னய்யா பண்ண முடியும். தாத்தாகிட்ட சொல்லுவியா..? சொல்லிக்க. அவர் என்னய என்ன செய் திருவார்? அப்பா கிட்டே கண்டதையும் சொல்லிக் கொடுத்து, தாத்தாவுக்குத் திட்டுவாங்கிக் குடுத்திருவேனாக்கும்.’ இன்றைய தலைமுறை இப்படித்தான் வளர்கிறது. யாருக்கும் பயமில்லாமல் மதிப்பும் கொடுக்காமல்! மெல்ல தன் கிளைகளை அசைத்துக் கொண்டது அரச மரம். இலைகள் சலசலக்கும் மெல்லிய ஓசை. சூரியக் கதிர்கள் இலைகளினூடே செலுத்திய வெளிச்சம், சிதறல்களாய்த் தரை யெங்கும் மரத்தைச் சுற்றிலும் காசுகளாய் மரத்தின் அடியில் இருப்பதால் எவ்வளவு வெய்யில் அடித்தாலும் உக்கிரம் தெரியாது. கடைக்குக் கொஞ்சம் தள்ளி, நிழலில் சிறுவர்களின் விளையாட்டு. இப்போது பம்பரம். அது எப்படிப் பருவங்கள் போல விளையாட்டுக்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன? கோலி, கில்லிதாண்டு, பட்டம் விடுதல், பம்பரம், திடீரென்று சடுகுடுக்கு மாறிவிடுகிறார்கள். ஹாலீத் ராவுத்தரின் சிறுவயது ஞாபகங்களும் அவருக்குள் எட்டிப் பார்த்தது. அவருடைய குழந்தைகள் சலீமும், அப்துல் கலாமும், மும்தாஜும் இதே மரத்தடியில் விளையாடியிருக்கிறார்கள். இன்று அவரின் பேரக் குழந்தைகள் விளையாடுகிறார்கள். எல்லாவற்றையும் இந்த அரச மரம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது, தன் நிழலில் நடப்பவர்களை, நிழலில் நடப்பவைகளை உள்வாங்கிக் கொண்டு. ஹாலித் தாவுத்தரின் மளிகைக்கடை இருந்த இடத்தில் இப்போது சின்னதாய் ஒரு ஹோட்டலை நடத்தி வருகிறார் பாலுத்தேவர். மும்தாஜ் கல்யாணத்துக்கு வேண்டிக் கடையை விற்க வேண்டியதானது. வேறு எங்காவது சின்னதாய் ஒரு கடை போட பெரிதும் முயற்சித்தார். உடனடியாகப் பணம் புரட்டிப் பெண்ணுக்கு வளைகாப்பு, பிரசவச் செலவு, குழந்தைக்குச் செய்ய வேண்டியது என தொடர்ந்து செலவுகள். வேறு வழியில்லாத நிலையில் வீட்டுக்குப் பக்கத்தில் இந்த அரச மரத்தடியிலேயே சல்லிசாய்க் கிடைத்த பெட்டி ஒன்றை வாங்கிப் போட்டு உட்கார்ந்து விட்டார். பெரியவன் சலீமுக்கும் கல்யாணத்தை நடத்தி விட்டார். அப்துல்கலாம் ரேடியேட்டர் கடைக்கு வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கிறான். மும்தாஜின் மகன் - ராவுத்தரின் முதல் பேத்தி - சித்தாரா பர்வீனுக்குப் பதின்மூன்று வயது பூர்த்தியாகிவிட்டது. அது ஒரு பெரிய செலவிருக்கிறது! இன்றோ நாளையோ உட்கார்ந்து விடுவாள். ராவுத்தரின் மனைவி கதீஜா இதை அடிக்கடி சொல்லி ராவுத்தரைப் பெருமூச்சு விட வைப்பாள். “பசங்க கையவே நம்புனா நாம் எதுவும் செய்ய முடியாதுங்க. நீங்கதா நாலு காசு சேக்கணும். மருமகன் வீட்ல எதும் கோவிச்சுக்காம், நல்ல படிக்கு சீர் செய்யணும். ஆமா! அந்த நேரத்துக்கு காசில்ல அது இதுனு பொலம்பக்கூடாது…” பேத்தியப் பார்க்கும் போதெல்லாம் ராவுத்தருக்குக் கவலை கூடும். சலீம் தனிக் குடித்தனம் போகாமலிருந்தால் இப்படிப் பயப்பட வேண்டியிருக்காது. தாய் மாமன் சீரை அவனே செய்து விடுவான். வாய்த்த மருமகள் சரியில்லை. கல்யாணமான ஒரு வருஷத்துக்குள்ளேயே சட்டியைத் தூக்கி விட்டாள். கலாமின் படிப்பு தடைபட்டு இப்போதுதான் வேலைக்குப் போகிறான். பெட்டிக்கடையில் விற்கும் பீடி, தீப்பெட்டி, பழ வியாபாரத்தில் பெரிதாய் என்ன கிடைத்து விடப்போகிறது? நாலு காசு பார்க்க வேண்டுமானால் கடையைப் பெரிசு பண்ணனும். முதல் போட்டால்தான், முதல் எடுக்க முடியும். இன்னொரு பெட்டி வாங்கி அரிசி, பருப்பு என்று கடையைப் பெரிசு படுத்த வேண்டி இரண்டொரு பைனான்சியர்களிடம் பணத்துக்குச் சொல்லி வைத்திருக்கிறார் ராவுத்தர். பிள்ளையார் கோயிலின் முன்பு கூட்டம் கூடுவதைப் பார்த்தார் ராவுத்தர் இரண்டு, மூன்று நாட்களாகவே ஊருக்குள் பேசிக் கொண்டுதானிருந்தார்கள் - இந்த வாரமே கோயில் விசேஷம் ஆரம்பமாகும் என்று. நல்ல வியாபாரம் ஆகும். தின்பண்டங்கள் கொஞ்சம் வாங்கிப் போட வேண்டும். கூல்ட்ரிங்ஸ் கூட வாங்கிவைக்கலாம். ஒரு வாரத்திற்கு இந்தப்பகுதி ஜே. ஜே. என்று தானிருக்கும். இப்படியே கடையைப் பெரிது படுத்திவிடலாம். நாளை ராமசாமியிடம் சொல்லி உடனே பணம் கேட்கவேண்டும். கூட்டம் முடிந்து வந்த கோபாலனிடம் கேட்டபோது, “புதன்கிழமை காப்புக் கட்டு பாய் அடுத்த வாரம் சாமி சாட்டு.”என்றார். “இதென்ன, இந்தத் தடவை பூரா இளவட்டங்களாகவே தெரியுது ! பசங்க திருந்திட்டாங்கபோலத் தெரியுது..?” ராவுத்தர் சிரித்துக் கொண்டே கேட்டார். “ஆமா பாய்! கோவில் விழாக் கமிட்டி கூட, இந்தத் தடவ பசங்கதா, பெரியவங்க ஒதுங்கியிருக்க முடிவு செய்திருக்கோம்.” “என்னாச்சு! எதும் பிரச்சனையா கோபால்..?” “ஆமாங்க பாய்! நாங்க செய்யறது எதும் சரியில்லயாம். அது இதுன்னு என்னன்னவோ புகார் சொன்னானுங்க. தலைவருக்கு கோபம் வந்துருச்சு. போன வாரம் நைட்ல நடந்த கமிட்டிக் கூட்டத்துல கை வைக்கிற அளவுக்கு ஆயிப்போச்சுனாப் பாருங்களேன். பசங்க போக்கே ஒண்ணும் சரியில்ல பாய்! கோவிந்தசாமி பய்யன், மூர்த்தியோட ரெண்டாவது மகன் அப்பறம் பொன்னுசாமி. இவுனுங்கதா. யாருக்கும் அடங்கமாட்டேங்கறாங்க! பெரியவங்கனு ஒரு மரியாதையே இல்ல. என்னமோ பண்ணிக்குங்கனு நாங்க ஒதுங்கிட்டோம். இனி அவுனுங்களாச்சு. விழாவாச்சு..”சலிப்புடன் சொன்னார் கோபாலன். “இந்தத் தலைமுறையே சரியில்ல கோபாலன்! தான் தோன்றித் தனம் ஜாஸ்தியாப் போச்சு. பிரச்னையேதும் வராமப் பாத்துக்குங்க. ஒண்ணு கிடக்க, ஒண்ணாயிடப் போவுது.” “பொறுப்புல உள்ளவங்க பாத்துக்குவாங்க பாய்!”சொல்லி விட்டு, ஆழமாய்ப் புகையை இழுத்துவிட்டுக் கொண்டு போனார் கோபாலன். இன்னும் கோபம் தீரவில்லை போல…. என்று நினைத்துக் கொண்டார் ராவுத்தர். புதன்கிழமை காலையிலிருந்தே கோவில் வளாகம் அமளிதுமளிப்பட்டது. ராவுத்தர் அந்த நிற தோரணங்களை ஊரில் இதுவரை பார்த்ததே இல்லை. கட்சிக் கூட்டங்களுக்குத்தான் கொடித் தோரணம் கட்டுவதைப் பார்த்திருக்கிறார். கோவில் விசேஷத்தில் இதென்ன புதுசா..? பிறகுதான் பார்த்தார் - அதே நிறத்தில் கொடிகளும் பறந்து கொண்டிருப்பதை! அரச மரத்தின் மீது பெரிய கொடி ஒன்று முக்கோண வடிவில் பறந்து கொண்டிருந்தது. காலையிலிருந்தே பீடி, சிகரெட், மிட்டாய்கள், பழம், வெத்திலை, பாக்கு என்று வழக்கத்தை விட வியாபாரம் அதிகமாயிருந்தது. இன்னிக்கோ, நாளைக்கோ ராமசாமி பத்தாயிரம் தருவதாகச் சொல்லியிருக்கிறார். முதலில் பெட்டி செய்ய ஆர்டர் கொடுக்க வேண்டும். கறிக்கடை வகாப் பெட்டி வாங்கித் தருவதாகச் சொல்லியிருந்தார். போத்தனூரில் ஒரு பெட்டி விலைக்கு இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். போய் பார்த்து வரவேண்டும். கோவில் விசேஷம் ஆரம்பித்துவிட்டால், டவுனிலிருந்து மும்தாஜ் வந்துவிடுவாள் குழந்தைகளுடன் ஒருவாரம் வாப்பா வீட்டில் இருந்து விட்டுதான் போவாள். சின்ன வயதிலிருந்தே கோவில் திருவிழா நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்த்துப் பழகிவிட்டதில், இப்போதும் சாமி சாட்டுதல், ஊர்வலம், மாவிளக்கு, பாட்டுக்கச்சேரி, நாடகம், மஞ்சத்தண்ணி விளையாட்டு. இவைகளைப் பார்க்க வேண்டி வந்து விடுவாள். ஒரு வாரம் போவதே தெரியாது. ஆரம்பத்தில் ஜமால் கிண்டல் செய்தபோது, "கம்மா வேடிக்கை பாக்கத்தாங்க. எங்க ஊர் கோயில் திருவிழாவ நா பாக்க வேண்டாமாக்கும்..? சின்ன வயசிலிருந்தே பாத்துட்டு வர்றது…’என்பாள் மும்தாஜ் ஜமாலும் மனைவியுடன் பிறகு வந்து விடுவான். காப்புக்கட்டு முடித்த கையோடு கணேசன், பொன்னுசாமி மற்றும் நிறைய இளைஞர்கள் ராவுத்தர் கடையை நோக்கிக் கும்பலாக வர, டொனேசன் கேட்க வருகிறார்கள் என்று நினைத்துக் கொண்டு “வாங்க, தம்பிகளா”என்றார் ராவுத்தர் மகிழ்ச்சி பொங்க. “பாய்! இந்தத் தடவ இந்த அரச மரத்தடியிலிருந்துதா சாமி ஊர்வலம் புறப்படுது. சாமி அலங்காரமும் இங்க வச்சுத்தா.. அதனால கடைய காலி பண்ணணும் நீங்க…’’கணேசன் சொல்வதைக் கேட்டு அதிர்ந்து போனார் ஹாலீத் ராவுத்தர். அவர்களை மலங்க மலங்கப் பார்த்துவிட்டு,”என்னப்பா சொல்றீங்க…? ஒவ்வொரு வருஷமும் ஆத்தோட மண்டபத்துலருந்துதானே சாமி ஊர்வலம் புறப்படும். இதென்ன இந்த வருஷம் புதுசா.. இங்கிருந்து…?"தயங்கியபடி சந்தேகமாகவே கேட்டார். "ஏன்.. இங்கிருந்து புறப்பட்டா… என்னா ..?’கணேசனின் தொனி மாறியது. “சரி. கடயப் பூட்டிடுறேன்.”ஏன் இவர்களிடம் வம்பு. ஒத்துக் கொண்டார் ராவுத்தர். "கடயப் பூட்டுறதா..! நாளைக்கு இங்கிருந்து பெட்டியத் தூக்கியாகணும்… நீங்க நிறைய வேலையிருக்கு இங்க…. இன்னையிலிருந்து இது கோயில் மரம்…!’’ அவரால் நம்ப முடியவில்லை. அவர் தண்ணீர் ஊற்றி வளர்த்த மரம். சலீமும், சலாமும் பாதுகாத்த மரம். இது எப்படி கோவில் மரமாகும்…? இவர்களிடம் பேசினால் சரிப்படாது. இரவே ஊர்ப் பெரியவர்களைப் போய்ப் பார்த்தார். இது கோவில் மரம்! இதற்கு யாரோட அனுமதியும் எங்களுக்குத் தேவையில்லை. இங்கிருந்து சாமி ஊர்வலம் புறப்பட்டால் என்ன.. என்று முரண்டு பிடித்தது இளைஞர் கூட்டம். அன்று கடை திறக்கவில்லை ராவுத்தர். ஜமாத்திலும் அவர் முறையிட்டார். ஊர் முழுதும் அரச மடித்தடியில் கூடியிருக்க, ஊர் இரண்டுபடும் நிலை உருவாகிக் கொண்டிருந்தது. விவரம் எதுவும் தெரியாத வகாப், ஹாலீத் ராவுத்தரிடம் வந்து, "பாய்! போத்தனூர்ல ஒரு பெட்டி இருக்குனு சொன்னனே வெலை பேசிட்டு வந்திருக்கேன். வாங்க போய் பாத்துட்டு வந்துரலா…’’என்றார். "இருக்கும் ஒரு பெட்டிக்கே இப்ப மோசம் வந்துருச்சு வகாப்பு!"ராவுத்தர் விவரம் சொல்லிக் கதறினார். “கொடி பறக்கும் போதே நெனச்சேன். இப்படி எதாச்சும் ஆகும்னு நாங்களும் இத்தன வருஷமா திருவிழாவ நடத்தினோம். ஒரு பிரச்சனையும் இல்லாம மொதத் தடவயா இவனுங்க தலையிட்டானுங்க. ஊருக்குள்ள பிரச்சனையும், பிரிவினையும் ஆரம்பிச்சாச்சு..” ஆதங்கத்துடன் கவலைப்பட்டுச் சொன்னார் முன்னாள் கமிட்டித் தலைவர் வெள்ளிங்கிரி . யாரும் எதிர்பார்க்கவில்லை - இப்படி நடக்கும் என்று! விடியற்காலம். திருதிகுவென எரியும் ஜ்வாலை கண்டு தூக்கம் கலைத்துக் கூட்டம். மக்களிடையே பதற்றமும் பரவிக் கொண்டிருந்தது. எங்கும் கூக்குரல்கள்! ராவுத்தரின் பெட்டிக் கடையைத் தீ நாக்குகள் கபளீகரம் செய்து கொண்டிருந்தன. அரச மரத்தின் பச்சை இலைகளும், காய்ந்த சருகுகளும் வெடித்துச் சிதறும் ஓசை! மரமும் பற்றிக் கொண்டது. "கோயில் மரம் என்றார்களே பாவிகள்!’’ பதறியடித்துக் கொண்டு வந்தனர் ராவுத்தரும், அவர் குடும்பமும். வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறினாள் கதிஜா பீபி கண் முன்னாடி பெட்டிக்கடை சாம்பலாகிக் கொண்டிருக்க, அதிர்ச்சியில் சிலையாகிப் போயிருந்தார் ஹாலீத் ராவுத்தர். கலகம் சூழ்ந்த காலை விடிந்து கொண்டிருந்தது. கைசேதம் -இளசை மதீனா ’’மரியம் மகப்பேறு மருத்துவமனை" என்ற போர்டை தாங்கியுள்ள காம்பவுண்டுக்குள் தன் மனைவி சகிதமாக நுழைந்த காதர், அங்குள்ள இருக்கையில் அமர்ந்த படி கண்களைச் சுழலவிட்டான். அந்த வட்டாரச் சூழலையே அவன் தன் முப்பத்தைந்தாவது வயதில்தான் பார்க்கிறான். மிரட்சியால் - மருளும் கண்களுடனும், தாய்மைப் பேறுற்ற பரவசத்தால் ஆன முகங்களுடனும், குறுக்கும் நெடுக்குமாக ஓடும் மழலையரைப் பிடிக்கப் போகும் பெண்களும் ஆண்களுமாகக் பட்டம் கலகலத்துக் கொண்டிருக்கும் அம் மருத்துவமனைக்கு அன்று அவன் வந்ததே பெரும் நிர்ப்பந்தத்தினால்தான். மூன்று வயது மதிக்கத்தக்க செலுலாய்டு பொம்மை ஒன்று கோதுமை நிறத்தில், நீலக் கண்களோடு, “கைவீசம்மா கைவீசு. கதிஜா பீவி கை வீசு, ஹஜ்ஜுக்குப் போகலாம் கைவீசு, ஹரம் சுற்றலாம் கைவீசு.”என்று தன் கையை இடமும் வலமுமாக ஆட்டி ஆட்டிப் பாடும் அழகைத் தன் கண்களால் அள்ளிப் பருகும் ஜனூபாவை ஓரக் கண்களால் பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சுவிட்டான் காதர். குதூகலத்தின் விளைநிலமே ஒரு குழந்தைதானே என்று அவன் எண்ணிய போது ஒரு பெரும் தவறுக்குத்தான் ஆளாகிவிட்ட பாவத்தோடு, “அநியாயமாகக் காலம் கடத்தி விட்டோமே?”என்று வேதனையின் விளிம்பில் தவித்தவனாகக் காத்திருந்தான். அப்போது… டாக்டரம்மா இருக்கும் அறையின் கதவைத் தள்ளிக்கொண்டு கர்ப்பிணியான ஒரு பெண் வெளிவர, கைவீசம்மா பாடிக் கொண்டிருந்த குழந்தையோடு காத்திருந்த அவள் கணவர், அவளைப் புன்முறுவலோடு எதிர்கொண்டு நெருங்கி; “ஹாஜத்! டாக்டரம்மா என்ன சொன்னாங்க?” என்று கேட்டபோது, காதரின் உச்சியில் யாரோ சம்மட்டியால் அடித்ததுபோல் இருக்க ஏறிட்டுப் பார்க்கிறான். ஓ!… ஹாஜத் உன்னைச் சந்திப்பேன், அதுவும் இப்படி ஒரு கட்டத்தில் என்பதை நான் எண்ணியே பார்க்கவில்லையே!.. உன்னை எப்படி எல்லாம் ரணப்படுத்தி விட்டேன்? ஆனால் நீ குணமாகிவிட்டாய். நான்? ரணமாகிக் கொண்டல்லவா இருக்கிறேன்! தான் தொலைத்துவிட்ட வாழ்க்கையைத் தேடுகிறான். பத்து வருடங்களுக்கு முன்பு… காதர் ஒரு சிறு பெட்டிக்கடை வைத்து நடத்திய போது வாலிப வயதாகி விட்ட மகனுக்கு, மூக்கும் முழியுமாக இருப்பதோடு, தான் கேட்ட நகையும் தொகையும் தரும் மோதினார் மகளை மண முடித்து வைத்தாள் காதரின் அம்மா. மாமியாருக்குக் கட்டுப்பட்ட மருமகளாக, கணவனுக்கேற்ற மனைவியாக ஹாஜத் காலம் கழித்தாலும் அவளுக்குள் ஒரு குறை இருந்து கொண்டுதானிருந்தது. வருடம் ஐந்தைத் தாண்டியும் தான் இன்னும் தாய்மைப்பேறு அடை யாததே அது. ஜாடைமாடையாக மாமியாரும் அரசல் புரசலாக உற்றார் உறவினரும் ’’விசாரிக்க" ஆரம்பித்தபோதுதான் அவள் விழிப்புற்றாள். திருமணத்தின் அடுத்தக் கட்டம் தாய்மைதான் எனப்புரிந்து கணவனிடம் ஒரு நாள் பேச்சோடு பேச்சாக “ஏங்க! நம்ம ரெண்டு பேரும் ஒருநாள் டாக்டரம்மாவைப் போய்ப்பார்ப்போமா?”என்று தயங்கித் தயங்கி அவள் கேட்ட போது, தன் ஆண்மைக்கு விழுந்த அடியாக அதை நினைத்து வெகுண்டான். “நான் யாரையும் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நீ வேண்டுமானால் போயிட்டு வா”என்று மூர்க்கத்தனமாகக் கத்தியபோது அப்படியே சுருண்டுவிட்டாள். பலநாள் மன உளைச்சலுக்குப் பிறகு தன் மனசைத் தேற்றியவளாகப் பக்கத்து வீட்டு பரீதாவைக் கூட்டிக்கொண்டு அதே தெருவிலுள்ள டாக்ரம்மாவைப் போய்ப் பார்க்கப் போனாள். துடிதுடிக்கும் இதயத்தோடு நிமிடங்கள் ஓட பலவித செக் அப்பிற்குப் பிறகு நிம்மதிப் பெருமூச்சு விட்டவளாக வருகிறாள். அன்றிரவு அவனிடம் தனக்கு எந்தக் குறையும் இல்லை என்றும், அவனைக் கூட்டிக் கொண்டு வரும்படி டாக்டரம்மா சொன்னாள் என்றும் அவள் சொன்னபோது, அவன் அடிபட்ட வேங்கையாய்ப் பாய்ந்து அவளை அடித்துத் துவைத்தான். தன் ஆண்மையை, ஆளுமையை நிரூபித்துக் கொண்டான். அவளுக்கு மலடி என்ற பட்டம் கட்டினான். துள்ளலும் துடிப்பும் நிறைந்தவளின் மனசை நொறுக்கினான். வேண்டாம் அப்படிச் செய்துவிடாதீர்கள் என்று காலைப்பிடித்துக் கதறக் கதற அவன் தலாக் சொன்னான். அன்று அவள் தன் வீட்டை விட்டுப் போகும் போது கண்கள் பணிக்கக் கரங்கள் நடுங்கக் கால்கள் தள்ளாட, “மாமி போயிட்டு வாரேன்”என்று மாமிக்குச் சொல்வது போல் அவனுக்குச் சொல்லி விட்டுத் தலைகுனிந்து போன கொடுமையை இதோ இப்போது எண்ணிப் பார்க்கிறான்! அவள் அடிக்காமலேயே அவனுக்கு வலித்தது. அவள் போன பிறகு இவன் சாதித்தது என்ன? திரும்பவும் ஒருத்திக்குக் கணவனானான். இந்த ஒன்றைத் தவிர இவன் வாழ்க்கையின் அர்த்தம் என்ன? இதோ.. அவள் தன்னை விட்டுப் போய் இரண்டாவது குழந்தைக்கும் தாயாகப் போகிறாள். தன்னால் ’மலடி’என்று பட்டம் கட்டப்பட்டவள், ஜெயித்துக் காட்டிவிட்டாள். தன் கடந்த கால வாழ்க்கையை ஓர் அடுத்த மனிதனைப் போல் எண்ணிப் பார்த்தபோது, தன் அறியாமையும் ஆணவமும் ஏற்படுத்திய காயம் ஆற முடியாதது என்று உணர்ந்தான். எப்பேர்ப்பட்டக் கை சேதத்துக்குக் காரணமானோம் என்று கலங்கினான். ஹாஜத் ஐந்து வருடம் கழித்துக் கேட்ட கேள்வியை ஜனூபா கல்யாணமான மறுவருடமே கேட்க ஆரம்பித்த போதுதான் அவனின் உள் உணர்வு தட்டி எழுப்பப்பட்டது. கணவன் மட்டுமல்ல வாழ்க்கை, குழந்தையும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்று அவள் உணர்த்தினாள். அவன் மூர்க்கத்தனம் அவளிடம் எடுபடவில்லை. ஹாஜத்திடம் அவன் காட்டிய பூச்சாண்டியை இப்போது ஜனூபா அவனிடம் காட்டினாள். இந்த வாழ்க்கையாவது நிலைக்க வேண்டுமானால் தான் அவளோடு இந்த மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதே அவசியம் என உடன்பட்டான். குற்ற உணர்வு அவனுள் எழ, “இறைவா! என்னைத் தண்டித்து விடாதே” என்று மானசீகமாகப் பிரார்த்தித்த போது குழந்தையும் கணவனும் கூடி வர, ஹாஜத் படி இறங்கிக் கொண்டிருந்த போது அவன் மனைவியின் முறை வந்து அவள் உள்ளே போனாள். விபத்து -இன்குலாப் அப்படி ஒரு விபத்து நடந்தபோது அந்த ஊர் மக்கள் நடந்து கொண்ட விதம் பற்றி என் நண்பர் வியப்பும் வேதனையும் அடைந்தார். எனக்கு அவர்கள் அப்படி நடந்து கொண்டதில் ஆச்சரியம் எதுவும் ஏற்படா விட்டாலும் கேட்பதற்கு வருத்தமாகத்தான் இருந்தது. அந்தச் சின்னஞ்சிறு கிராமத்தை எனக்கு ஓரளவு தெரியும். அங்குள்ளவர்கள் கட் முன்பு இருந்தது போல் இப்போது இல்லை. ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ஒரு திருமணத்துக்குப் போயிருந்தேன். என் உறவினர் வீட்டுத் திருமணந்தான் அது. சாலையை ஒட்டிப் பேருந்து நிறுத்தும் இடத்துக்கு எதிராகத்தான் திருமண வீடு இருந்தது. பேருந்து அந்த ஊரில் நின்றவுடன் என் கண்ணில் பட்டவர் எனக்கு மிகவும் நெருக்கமான உறவினர். நெடுநாளைக்குப் பிறகு அவரைச் சந்திக்கும் மகிழ்ச்சியில் கைகளை நீட்டியபடி ஆவலோடு சென்றேன். அவர் என்னைப் பார்த்தபோது அவருடைய முகத்தில் எந்த விதமான சுரத்தும் இல்லை . ஒரு புன்முறுவலையும் வாங்க"என்ற சொல்லையும் உதட்டை விட்டு வெளியேற்றக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். தலையை மட்டும் மேலும் கீழும் அசைத்தார். நான் அதிர்ந்து போய் நின்றேன். நான்தான் இன்னாரென்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளலாமா என்று நினைத்தேன். அது என்னை இன்னும் இழிவுபடுத்திக் கொள்வதாகும் என்ற கணநேரத் தன்மான உணர்வின் உறுத்தலினால் அப்படி ஒன்றும் சொல்லாமல் நின்றேன். நல்ல வேளை! அந்த நேரத்தில் என்னைத் திருமணத்துக்கு அழைத்தவர் எதிர்ப்பட்டு விட்டார். அவருடைய அன்பான பார்வையும் வாங்க என்ற உண்மையான வரவேற்பும் தொங்கிப்போன என் முகத்தை நிமிர்த்தியது. அவர் வராது போயிருந்தால் நான் மறு வண்டியிலேயே ஊருக்குத் திரும்பி இருப்பேன். ஆயினும் அங்குச் சந்தித்த பலர் புன்சிரிப்பிலும் பேச்சிலும் ரொம்பச் சிக்கனம் காட்டினார்கள். பார்த்தால் பலர் தலையை மேலும் கீழும் அசைத்தார்கள். இதற்கு என்ன பொருள் என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடன் அந்த ஊருக்கு ஒன்றாகப் பயணம் செய்த என் உறவினர் ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டேன். “வாங்க என்று வாய்திறந்து கூப்பிடக்கூட முடியாம தலையை இப்படி அசைக்கிறாங்களே, இவங்களுக்கு என்ன வந்தது?”என்று கேட்டேன். "நீ ஒண்ணு. அவர்களிடம் இப்போ காசு வந்திடுச்சு… அதனாலே பாசம் எல்லாம் போயிடுச்சு"என்றார். பிறகு அந்தக் கிராமத்து மக்கள் மனம் மாறிப்போன கதையைச் சொன்னார். “ஊருலே இந்த மண்ணைக் கிண்டிக்கொண்டிருந்தால் ஒரு புண்ணாக்கும் விளையாதென்று அவங்களுக்கு நல்லாத் தெரிஞ்சு போச்சு. அந்தச் சமயத்துலே அவங்களுக்கு கடலுக்கு அப்பால் இருந்து பொழைப்பு கை காட்டிச்சு. சவுதியும் துபாயும் வா வான்னு கூப்பிட்டிச்சு. இங்கே புதுசா கடையிலே வாங்குன விளக்குமாத்தை வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு வரக் கூச்சப்பட்டவன் அங்கே போய்த் தெருப்பெருக்கினான். கக்கூஸ் கழுவினான். எல்லாத்துக்கும் டாலர்லே கூலி வாங்கினான். ஓட்டு வீடெல்லாம் காங்கிரீட் கட்டடமா எழுந்திருச்சு. சீயக்காய் தேய்ச்சுக் குளித்த பொண்டுகள் துபாய்ச் சோப்புக்குப் பதிலா வேற சோப்புப் போட்டுக் குளிச்சா அழுக்குப் போகாதுன்னு நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க…” ’’எல்லா வீட்டிலே இருந்துமா துபாய்க்குப் போயிருக்காங்க"என்றேன். “இல்லே…. இல்லே ஓரளவு வசதி உள்ளவங்க வீடுகள்லே இருந்துதான் ரொம்பப் பேர் போனாங்க. ஆனால் இல்லாதவங்க பாடு ரொம்ப மோசமாயிடுச்சு. அவங்க இங்கே மண்ணைக் கிண்டிக்கொண்டிருக்கும் போது அவங்க கண்ணு முன்னாலேயே துபாய்க் காசுலே கட்டிடம் கட்டிடமா எழும்புறதைப் பார்த்தாங்க. அவங்களுக்கு மாத்திக் கட்டிக்கிற ஒரு சீலை இல்லாம வீட்டுக்குள்ளே மொடங்கும்போது துபாய்க்காரங்க வீடுகள்லே வண்ணத்திலே ஒண்ணு வகைக்கு ஒண்ணாக் கட்டிக்கிட்டு மினுக்குறதைப் பார்த்தாங்க.” “எத்தனை காலம் வானத்தையே பார்த்துக்கொண்டிருக்க முடியும்? அந்தச் சமயத்துலேதான் எப்படியும் பணம் சம்பாதிச்சாப் போதுங்குற முடிவுக்கு வந்துட்டாங்க.” “இப்போ எப்படிச் சம்பாதிக்கிறாங்க?” “எல்லா வழிகள்லேயும். பக்கத்து ஊர்ப் பணக்காரங்களுக்குத் தங்கம் கடத்துறதுலே இருந்து கஞ்சா கடத்துறது வரை. பெண்கள் என்ன செய்யுறாங்க தெரியுமா… ’’உண்டியல்”பணத்தை மடியிலே கட்டிக்கிட்டுப் போயி ஊருஊராக் கொடுத்திட்டு வாராங்க. முன்னே இருந்த கஷ்டம் இன்னும் பலரிடம் இருக்கத்தான் செய்யுது. ஆனால் முன்னே இருந்த மனுசத்தனம் இப்போ பெரும்பாலானவங்க கிட்ட இல்லை ’என்றார். அந்த ஊரில் முன்பு இருந்த மனுசத்தனத்தால் நானும் உருகிப் போயிருக்கிறேன். சிறுவயதில் அந்த ஊருக்குப் போக வேண்டும் என்று என் பெற்றோர் சொல்லும்போதே எனக்குத் தலைகால் புரியாது. அங்குப் போய் இறங்கிய உடன் ’தம்பி’என்றும் அண்ணன்’என்றும் ’மச்சான்’என்றும் ’மாமா’என்றும் வாய் நிறைந்த சொல்லுடன் எதிர் கொண்டுஅழைத்தவர்கள் தாம் எல்லாரும். இப்பொழுது தலையசைப்போடு நின்று கொண்ட இந்த உறவினர், அந்த நாட்களில் என் முதன்மையான கூட்டாளி. ஒன்றாகச் சேர்ந்து கண்மாயைக் கலக்குவோம். ஊர்ச்சாலையில் ஒண்டியாய்நின்ற ’எவரெஸ்ட்’டீ ஸ்டாலில் ஒன்றாகச் சாயாக் குடிப்போம். ஒரே சைக்கிளில் பக்கத்து ஊரில் இருந்த டூரிங் டாக்கீஸில் ’அந்து அந்து’போகும் பழைய படங்களைப் பார்த்து விட்டு வருவோம். உறவுக்காரர்கள் மட்டுமல்ல - ஊர்க்காரர்களும் வஞ்சனை இல்லாமல் அன்பு காட்டுவார்கள், ஓட்டு வீடாக இருந்தாலும் ஓலை வீடாக இருந்தாலும் வீட்டுக்கு முன்பு திண்ணை இருக்கும். அந்தத் திண்ணைகள் பெரும்பாலானவற்றில் நான் உட்கார்ந்து இருக்கிறேன். உட்காரும் போதெல்லாம் கொறிப்பதற்கு வேர்க்கடலையோ கொண்டைக் கடலையோ தட்டுகளில் நீளும். கடிப்பதற்கு முறுக்கோ சேவோ இருக்கும். குடிப்பதற்குச் சாயாவோ சர்பத்தோ தயாராகும். எல்லாவற்றுக்கும் மேலாக ’வா’என்ற சொல்லிருக்கும். இப்பொழுதும் எல்லா வீடுகளிலும் மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் முன்பிருந்த முகங்களும் இல்லை; சொற்களும் இல்லை. புதிதாய் வருபவர்களுடன் பேச யோசிக்கிறார்கள்; அளந்து பேசுகிறார்கள். பேசும் பொழுது பூமியைப் பார்க்கிறார்கள். ஏறிட்டுப் பார்க்கும்பொழுதே “அப்போ நான் வர்ரேன்”என்றபடிப் பிரிவதற்கு அவசரப்படுகிறார்கள். அந்தத் திருமணத்திற்குப் போய் வந்த பிறகு அந்த ஊரின் பேரில் ஏற்பட்டிருந்த பிரியம் போய்விட்டது. இப்பொழுது அந்த ஊர்ச் சாலையில் ஏற்பட்ட விபத்தைப்பற்றி நண்பர் சொல்லிக் கொண்டிருந்தார். ’’நடுராத்திரிலே அந்த எண்ணெய் லாரி பொரண்ட சத்தத்துலே ஊரே முழுச்சிக்கிடுச்சி. டின் டின்னா எண்ணயச் சுமந்துக்கிட்டு வந்த லாரி அது. பொரண்டா சத்தத்துக்குக் கேக்கவா வேணும்? ஊருலே உள்ளவங்க எல்லாம் ஓடி வந்து பாக்குறாங்க. லாரி பொரண்டு கிடக்குது. டிரைவரும் கிளீனரும் முன்பக்கத்துச் சக்கரத்துலே மாட்டி துடிச்சிக்கிட்டிருக்காங்க. வந்த சனங்கள் வண்டியை நிமித்தி ரெண்டு பேரையும் காப்பாத்தணும்னு நெனைக்காமலே நிக்குறாங்க." “நீங்க என்ன பண்ணுனீங்க?”என்று குறுக்கிட்டேன். "நான் அங்கே போகவே இல்லே, கேள்விப் பட்டதைத்தான் சொல்றேன்"என்றவர் தொடர்ந்தார். “அந்த ரெண்டுபேரு காலும் துடிச்சு நின்னுடுச்சு, அப்பொறந்தான் லாரி கிட்டே போனாங்க. கயித்துலே கட்டிவைச்சுக் கொண்டு வந்த எண்ணெய் டின்னெல்லாம் அவுந்து போயிச் சிதறிக் கிடக்குது. சில டின்னு நஞ்சி போயி எண்ண வேற கசியுது. சனங்க இப்படிப் பார்த்துக்கிட்டிருந்த போது அந்த ஊர்க்காரன் துணிஞ்சு போயி அந்த டின்னுகள்லே ஒண்ணை எடுத்துகிட்டு நடக்க ஆரம்பிச்சிட்டான். சனங்களும் என்ன செஞ்சாங்க தெரியுமா? இதுக்குத்தான் காத்துக்கிட்டிருந்த மாதிரி ஆளுக்கொரு டின்னை எடுத்துக்கிட்டு நடக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்”, ஆம்புளைகள் மட்டுமில்லே…. பொம்புளைகளும் ஆளுக்கொரு டின்னைத் தூக்கி இருக்காங்க. அங்கே நின்னுக்கிட்டிருந்த கிழவியும் ஒரு டின்னை எடுத்துக்கிட்டு யாரு பெத்த மக்களோன்னு புலம்பிக்கிட்டே நடக்க ஆரம்பிச்சுட்டாளாம்’… இப்படிச் சொல்லிவந்தவர் என்னைப் பார்த்துக் கேட்டார் ’’ஆம்புளைகளுக்குத்தான் ஈவு இரக்கமில்லாமப் போயிருச்சு. பொம்புளைகளுக்கும் அப்படியா?"என்றார். "இல்லை இது ஒரு சமூக நோய். வாழ்க்கைக்காகப் போராட்ட வழியத் தேர்ந்தெடுக்காம, குறுக்கு வழியிலே போக நினைக்கிற எல்லாச் சமூகத்துக்கும் இந்த நோய் வரும். ஆண் பெண் என்கிற பேதமெல்லாம் இந்த நோய்க்கு இல்லே. அந்த லாரி புரண்டது இப்போ ஏற்பட்ட விபத்து, அவங்க மனுசத்தனத்துக்கு எப்பவோ விபத்து ஏற்பட்டிருச்சு. அந்த விபத்து இந்த மனுசருங்களை அடையாளம் காட்டி இருந்தது. மற்ற ஊர்லேயும் இப்படி ஒரு விபத்து ஏற்பட்டுச்சுனா. எனக்குச் சொல்ல வருத்தமாகத்தான் இருக்குது. ஆனாலும் அந்த ஊர்ச்சனங்களும் இவங்க மாதிரித்தான் நடந்துக்கிருவாங்கன்னு தோணுது…’என்றேன். மழை -களந்தை பீர்முகம்மது மழையின் வருகையை அறிவிக்கவே இல்லை இந்த வெயில். பல ஊர்களைச் சுற்றியவன்; பல வெயில்களைப் பார்த்தவன். ஆனால் தாகம் புரட்டியது. ஒருநாளும் இல்லாத விசேசமாய் அவன் செவ்விளநீர் சீவச்சொல்லி அருந்தினான். தொண்டையின் கீழே உடம்பு முழுவதும் நனைந்து குளிர்ச்சி கொண்டது போல் இருந்தது. பத்து ரூபாய் விலை அதிகமெனத் தோன்றவில்லை அவனுக்கு. தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு வெயிலில் இருந்து தப்பித்துக் கொண்டிருந்தான் நஜீம். அவனுக்குரிய உரிமை இன்னும் நீடிப்பதான நினைப்பிற்குள் இருந்தபடியே தஸ்லீமாவின் வீட்டிற்குள் தடதடவென நுழைந்து விட்டான். அஸ்ஸலாமு அலைக்கும் என்றான். அந்தக் குரல் அவளை உடனே திண்ணைக்கு விரைந்தோடி வரச் செய்தது. ஆனால் அவன் அதற்குள் வீட்டின் வாசல்படியைத் தாண்டி வந்திருந்தான். தஸ்லீமாவுக்கு அவனைப் பார்த்ததும் உண்டான சந்தோஷத்தில் எல்லாக் கவலைகளையும் மறந்து விட்டாள். சோர்வு பறந்தோடியது. அவள் அவனின் வருகையைச் சிறிதளவும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவன் வரவேண்டும், வந்து எதிரே உட்கார்ந்து ஆற அமரப் பேசிச் செல்லவேண்டும் என்று நேற்றும் இன்றுமாக மனசுக்குள் எழுந்திருந்த பேராவலால், அவள் நடமாடும்போதே கனவினுள் மூழ்கிப் போயிருந்தாள். தணிக்க ஒரு பானமில்லாத தாகமாய் அது தன்னை வருத்தி அலைக்கழிக்குமோ என்று தவித்துப் போயிருந்தாள். காற்றோடு ஊடாடி உட்கலந்து அவளின் ஆசையை அவனிடம் சுமந்து சென்று சேர்த்தது எதுவென்று அவளுக்குப் புரிந்து விட்டது. திகைத்துப் போய் நின்றவள், “உட்காருங்க”என்றாள். அவன் எதில் போய் உட்காருவான் என்று அவள் யோசிக்கவில்லை. நான்கு கால்களும் சரிந்து, பலகையும் கிறீச்சிடுகிற ஒரு சிறிய சாய்மானமற்ற நாற்காலி (?) யினை அவன் இழுத்தான். அது உண்மையிலேயே வாயைக் கொண்டிருந்த ஒரு பிராணியைப் போன்று ங்ங்’என்று சவ்வாய் இழுவியபடி இழுபட்டுப் போனது. அவன் அதில் உட்கார்ந்தான். “வேண்டாம். இதுல வந்து உட்காருங்க” என்று பாயை விரித்தாள். அந்தப் பாய்தான் இருந்ததிலேயே நல்ல பாயாக இருந்தது. அவளும் அவள் கணவனும் பள்ளி கொள்ளும் பாயாக இருக்கலாம் என எண்ணி, "வேண்டாம். இதுலயே இருக்க முடியுதுதான!’’என்றான். விரித்துப் போட்ட பாய் சும்மா கிடந்தது. வெளியே இருள் ஆரம்பித்தது. மழை மேகங்கள் திரண்டன. அவன் தஸ்லீமாவின் முகத்தை நோக்கினான். அவளும் அப்படியே நோக்கினாள். ஒருவரையொருவர் அத்து விடுவதற்கு முன்பு கூட அவர்கள் இப்படிப் பார்த்துக் கொண்டதில்லை. வேகமாய்ப் புரளும் வெள்ளம் ஓரிடத்தில் நின்று திரும்பத் திரும்பச் சுழல்வதைப் போல் இருவரின் மனசும் இடம் விட்டு இடம் நகராது சுழன்றன. நஜீம் அப்படியேதான் இருக்கிறான். அவன் இன்றுதான் லாரியை விட்டு இறங்கியிருக்க வேண்டும். நீண்ட நேரத்தை யாசிக்கிற ஒரு தூக்கக் கலக்கம் அவன் முகத்தில் உறைந்து போயிருந்தது. அந்தக் கண்கள் தூக்கச் சடவை மீறி விழித்திருந்ததை தஸ்லீமா பார்த்தாள். முன்பு போலப் பாயையும் தலையணையையும் போட்டு, “தூங்குங்க ஒழுங்கா ஒரு கண்ணுக்கு”என்று அதட்டும் உரிமை இல்லாது போயிற்று. ஆனால் சவரம் செய்யாத முகத்தின் மீது ஒரு சாந்தம் தவழ்ந்தது. தஸ்லீமா நன்றாகத்தான் இருக்கிறாளாம்; சொல்கிறார்கள். முகம் வாடி உலர்ந்து போயிருந்தது. தொட்டிலில் கிடந்த குழந்தை அழுதது. அவள் எடுத்து இடுப்பில் சுமந்தாள். அவன் கைநீட்டினான். சில அடிகள் நகர்ந்து வந்து குழந்தையை இறக்கி விட்டாள். இடுப்பை விட்டுக் கீழே இறங்கியதிலும், எதிரே புதிய முகம் கண்டதிலும் உதட்டைக் கோணிக் கொண்டு குழந்தை படபடத்தது. அவன் தூக்கினான். கைநிறைய சொர்க்கத்து மலர்களை அள்ளிக்கொண்டது போல ஓர் இனிமையான பரவசத்துக்குள் திளைத்தான். குழந்தையை இரு கைகளுக்குள்ளும் புதைத்து முகர்ந்தான். அன்னிய ஸ்பரிசத்தின் தீவிரம் குழந்தையை அழச் செய்தது. குழந்தைகளின் அனுபவம் இல்லாதவன். அதனைச் சாந்தப்படுத்த நாக்கை வளைத்துப் பார். கர்ர் என்ற ஒலி எழுப்பிப் பார்த்தான். அந்தச் சப்தம் கேட்கையில் திருதிருவென்று விழித்த குழந்தை சப்தம் நின்றதும் மீண்டும் அழலானது. அவள், "அழாதேம்மா. அது யாரு? அது யாரும்மா சொல்லு பார்ப்போம்!’’என்றபடி வேடிக்கை காட்ட முனைந்தாள். அவன் செவிகளைத் தீட்டினான். தன்னை என்ன உறவுமுறையால் குழந்தைக்கு அறிமுகம் செய்யப்போகிறாள் என்று இதயம் பட படக்கக் காத்திருந்தான். அவளோ முடிச்சை அவிழ்க்காமல் திரும்பவும் அதே கேள்வியைத்தான் கேட்டுக் கொண்டிருந்தாள். அது அழுகையை நிறுத்தி ம்மாவைத் தீவிரமாகப் பார்க்கவும் அந்தக் கேள்வியும் காற்றோடு காற்றானது. அவனுக்குத் தன் பிறப்பே சுவாரஸ்யமற்றுப் போனது தான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகிவிட்டது போல் ஆனது. அவன் குழந்தைக்கென்று திட்டமிட்டே எதையும் வாங்கி வரவில்லை. எதிரே வருகிறவர்களுக்குப் பலவிதமான எண்ணங்களை எழுப்பும்; அல்லது அதைப்பற்றி விசாரிக்கிறவர்களுக்குத் தக்கபடிப் பதிலளிக்கத் திணறும். குழந்தையின் கையில் பணத்தையே சுருட்டிக் கொடுத்து விட வேண்டும் என்று நினைத்திருந்தான். ஆனால் அவன் யார் என்று குழந்தையின் முன்னால் எழும்பிய கேள்விக்குக் கடைசி வரை பதில் இல்லாமல் போன சோர்வில், ஒரு விரக்தியின் விளிம்பில் அதை மறந்து போய்விட்டான். “என்ன பேரு?” “மும்தாஜ்.” அவன் தன் பேச்சை நிறுத்திக் கொண்டான். தஸ்லீமாதான் கேட்டாள். ம்மா..ம்.. முன்னால் மாமியாதான இருந்தாங்க… இப்ப அவங்க எப்படி இருக்காங்க?" “எதோ இருக்கா !”"ம் “அவங்க உடம்புக்குச் சரியில்லேன்னு கேள்விப்பட்டேன்.” “வயசாயிடுச்சிதான… அதோட மனசுல பல கவலைங்க..” அந்தக் கவலைகள் என்னென்னவென்று தஸ்லீமாவுக்குத் தெரியும். எல்லோருக்கும் உள்ளபடி அவனுக்கு இல்லாமல் போனதால்தான் அவள் தன் மூட்டை முடிச்சுகளைச் சுருட்டிக் கொண்டு வந்தாள். தஸ்லீமா அந்தத் திருமண பந்தத்தை ரத்து செய்வதை நஜீம் தாங்கிக் கொள்ள முடியாதவனாய் இருந்தான். ஆனாலும் அவள் பிரிந்துபோகத் தயாரான நிலையிலும் தன் கோபத்தை தஸ்லீமாவின் மீது காட்ட முடியவில்லை. “எனக்கு உன்னை ரொம்பப் புடிச்சிருக்கு… என் மனசெல்லாம் நிரம்பியிருக்கே நீ!” என்று சொன்னான். “அதுக்கு? என் வயிறு நிரம்ப வழியில்லேயே!” | அவள் சொல்லியிருக்கக் கூடாது. நாக்கைப் பலமுறை கடித்துக் கொண்டாள். இன்று வரையிலும் அவள் சொன்ன வார்த்தையின் ஓசை அவள் செவிகளில் அலைவுறும்போதும் நாக்குக் கடிப்பை அவளால் நிறுத்திவிட முடியவில்லை. அவனுடன் வாழ நேர்ந்த அந்தச் சில வருசங்களிலும் இதுதான் தான் பயன்படுத்திய கடுமையான வார்த்தை என அவளுக்குத் தெரிந்தது. அப்போது அவன் நிலைகுலைந்து பரிதவித்து நின்ற காட்சியை எத்தனை யுகமானாலும் அழிக்க முடியாது. அதற்குமேல் எவ்விதக் காலதாமதமும் இன்றி, அவளுக்கு சிறிதளவு சிரமமும் இன்றி ’தலாக்’வழங்கினான். அவள் புறப்படும்போது சொன்னான். "உன்னை மாதிரி ஒருத்தியோட சேர்ந்து வாழ முடியாத அளவுக்குப் போயிடுச்சேன்னு துக்கமா இருக்கு. அவள் திரும்பிப் பார்க்க விரும்பியும், திரும்பிப் பாராமலே நடந்தாள். அவள் திரும்பிப் பார்ப்பாள் என அவன் எதிர்பார்த்தான். தன்னை விட்டுப் போகிறவள் ஒரு முறையாவது திரும்பிப் பார்ப்பாள் என்று வாசலிலேயே சிறுபிள்ளை போல் கலங்கி நின்ற நஜீம், இன்றுதான் மீண்டும் அவளைப் பார்க்கிறான். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, குழந்தை பிறந்தும் கூட சில மாதங்கள் கடந்த பிறகு இப்போது ஏன் நஜீம் வந்திருக்கிறான் என்பதை உணர்ந்து அவள் சொன்னாள், “அவங்க ஊரு உலகத்துல இதுவரைக்கும் எந்தக் கெட்ட பேரும் வாங்கல்ல உங்களப் போல. என்னவோ இப்பதான் இப்படி ஆயிப்போச்சு. நல்ல மனுசன்னு நெனச்சுதான் வீட்லயும் கட்டி வச்சாங்க. நானும் அதுக்குத்தான் ஒத்துக்கிட்டேன்”என்றாள். கண்கள் கலங்கி விட்டன. குரல் பிசிறியது. தஸ்லீமாவின் கணவன் முக்தார், கடையில் பணம் திருடிவிட்டான். பொய் சொன்னான். போலீஸ் கட்டி வைத்து உரித்து விட்டது. “புள்ள பொறந்த நேரம் அப்பன் ஜெயிலுக்கு அனுப்பிட்டு”என்று ஊரில் ஜாதகம் பரப்பினார்கள். கடையில் இருந்து இரவில் வீடு திரும்பும்போது சுத்தபத்தமா வந்தவன், அப்புறம் சாராய மணத்தைத் தெருவில் படரவிட்டு வந்ததற்கான காரணமும் இதுதான் என்று கண்டுபிடித்து விட்டது. செய்தி காதில் விழுந்ததும் இது அபாண்டமான பொய்யான செய்தியாகத்தான் இருக்கவேண்டும் என்று நஜீம் நினைத்திருந்தான். "நான் அறிஞ்ச வரைக்கும் முக்தாரு நல்ல மனுசன்தான். உன்னைத் தைரியமாக இருக்கச் சொல்லணும்னுதான் நான் வந்தேன். கூறுகெட்டத்தனமா நீ அவன் தப்பா நெனச்சிக்கிட்டு இனிமேயுள்ள காலத்த சண்டையும் சச்சரவுமா ஆக்கிறாதேன்னு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்"என்றான் நஜீம். வெளியில் மழை பெய்ய ஆரம்பித்தது. அவன் எழுந்தான். “நான் போறேன்”என்றான். “இருங்க. மழை பெஞ்சு முடியட்டும்”என்று கேட்டுக்கொண்டாள். “மழையில் நனைஞ்சுக்கிட்டே போவணும்னு ஆசையாயிருக்கு. நான் போறேன்”என்று டாடா காட்டினான். “போயிட்டு வாரேன்னு சொல்லிட்டுப் போங்க மச்சான்”என்றாள். திடீரென்று திரும்பினான். இடியின் ஓசை இனிமையாக இருந்தது. திருமண வாழ்வில், ஒருநாளின் சுகபோகத்தில் கண்கள் சொருகிய நிலையில் சொல்லியிருந்தாள், மச்சான் என்று. அவன் தஸ்லீமாவைப் பார்க்க, பரிதவிப்பில் ஆழ்ந்த னர் இருவரும். அவன் கை நீட்டிக் குழந்தையை வாங்கினான். சட்டைப்பையில் இருந்த இரண்டு ஐநூறு ரூபாய்த் தாளையும் கையில் திணித்தான். அது சிக்கென்று பற்றிக்கொண்டது. குழந்தையை ஒப்படைத்தான். ’அடிக்கடி வாங்க பெரியப்பான்னு சொல்லும்மா’என்று சொன்னாள். பேசப் பழகாத குழந்தை சிரித்தது. அவன் இறங்கி நடந்தான். தொப்பலாக நனைந்துவிட்டான். மழைத்திரை அவனை முழுமையாக மறைத்தது. அவளின் கண்களுக்கு அவன் தெரிந்து கொண்டே இருந்தான் - தன் வீட்டை அவன் அடைந்த பின்னரும்! அவனைச் சுற்றியே! -களந்தை சாகுல் ஹமீது அல்லாஹ் அக்பர்… அல்லாஹு அக்பர்… அல்லாஹஹ அக்பர் - ஹஜ்ரத்தின் குரல் இனிமையாக அதிகாலை நேரத்தில் சங்கீதம் போல காதுகளில் நுழைந்தது. அந்த வீட்டின் திண்ணையில் பாய் நெசவு செய்து கொண்டிருந்த பீவீ பாத்துமாள் சேலைத் தலைப்பைத் தலையிலே போட்டுக் கொண்டார். பாயை மீண்டும் பின்ன ஆரம்பித்து, ’சேக்கு பாங்கு சொல்லியாச்சு…. எழுந்திரு’பக்கத்து அறையில் படுத்திருந்த மகனுக்குக் குரல் கொடுத்தார். தூக்கத்திலிருந்தாலும் பாங்கு ஒலிக்கின்றதை அவன் செவிகள் பின் உணர்ந்து கொண்டுதான் இருந்தன எழுப்பிய குரலும், பாய் நெசவு ஓசையும் அவனை விழிப்புறச் செய்தன. படுத்திருந்த பாயிலேயே அமர்ந்தான். கண்களைக் கசக்கி, இரு கைகளையும் முறித்துக் கொண்டான். மேல்நோக்கித் தூக்கி, உடம்பை நெளித்துச் சோம்பலை ’அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ்- ’அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ்…. ஹஜ்ரத்தின் ஓசை முன்னை விடச் சற்று அதிகமாக உரத்தது. அந்த நிசப்தமான நேரத்தில் பாங்கின் ஓசை உற்சாகத்தைக் கொடுத்தது. தலையிலிருந்து நழுவப்பார்த்த துண்டைச் சரி செய்து கொண்டான். அவள் கைகள் கோரையை எடுத்து ‘குச்சு ஆளி’யில் கொருத்து பாயைச் சற்று வேகமாகப் பின்னியது. பாங்கு நிறுத்தி நிதானமாக ஒலித்தது. மனதிற்குள் அவளும் ’ஜவாபு’ சொல்லிக் கொண்டாள். அடுத்த வார்த்தையைக் கூறுமுன் இரு தடவை பாய் நெசவு ’தடக்… தடக்’என ஓசையை எழுப்பியது. மிகக் கூர்மையாக சேக் பாங்கை கிரகித்துக் கொண்டிருந்தான். ‘அஸ்ஸலாத்து கைரும்மினன் நவ்ம்’ - என இருமுறை சற்று லேசான குரலில் நீட்டி ஒலித்தது. திண்ணையை அடுத்த அறையில் பாய் நெசவு செய்து கொண்டிருந்த சேக்கின் தங்கை சுபைதா, ‘ஸதக்(த்)தவ பார்த்து வபில் இக்கி நகர்த்த’என்று கொண்டாள். தன்னுடைய இனிமையான குரலால் அழகாக ’ஜவாபு’ கூறிக்கொண்டிருக்கிறது. ஹஜ்ரத் சற்று உரத்த குரலில் ஓங்கி, ‘அல்லாஹு அக்பர்! அல்லாஹு’ அக்பர்! எனக் கூறி, சற்று நிறுத்தி சன்னமான குரலில், ’லா, இலாஹ இல்லல்லாஹ்’என்று முடித்தார். மூவரும் மிக அமைதியான குரலில், அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹி’என்று ஆரம்பித்து ’கியாமத்தி இன்னக்கவா துக்லிபுல் மீ ஆத்’என்று முடியும் ’துவா’வை ஓதிக் கண்களில் ஒற்றிக்கொண்டார்கள். பள்ளிவாசல் மைக்கில் ஹஜரத்தும் ’துவா’வை முணுமுணுத்து முடித்துக் கொண்டார். இப்போது வேறு எந்தச் சப்தமும் இல்லை, ’குச்சாளி’நூலின் இடையினிலே ஓடுகின்ற சப்தமும், பாய் அச்சு கோரையினைக் கோரையோடு சேர்க்கின்றபோது ஏற்படுகின்ற எத்தனை வேகம்! ’தடக்’என்ற சப்தமும்தான் இருந்தது. அந்தக் கைகளுக்குத்தான் எத்தனை வேகம்!! இருள் சூழ்ந்திருந்த வீட்டினில், சிறு சிம்னி விளக்கினை, குச்சாளியில் கோதை செருகப்படும் இடத்தில் வைத்து, அந்த வெளிச்சத்தில் வயதான தாயாரும்… வயது வந்த தங்கையும் அதிகாலையிலேயே உழைக்கின்ற உழைப்பு … நினைத்துப் பார்த்தான். பாய் அச்சினை அவர்கள் ’தடக் தடக்…’என்று அடிப்பது நெஞ்சினில் அடிப்பது போன்று இருந்தது. பாய் நெய்தே சற்று கூனாகிவிட்ட தாய்….. அழகுப் பதுமை போலிருக்கும் தங்கையும் இப்படி ஆவதா? இவையெல்லாம் மனக்கண் முன் எழும் அன்றாடப் பிரச்சினைகள்தான்! ஏனோ இன்று அதிகமான பளு போன்று தோன்றியது. வீட்டை ஒட்டியிருந்த யூசுப் வாத்தியார் தொழுவில் மாடோடு மாடு மோதிக் கொண்டது. லேசான காற்று வீசி பூவரசு மரத்தின் இலைகள் சலசலத்தன. பாயின் ’தடக்… தடக்..’என்ற சப்தம் ஆக்ரமித்திருந்தது. இந்தச் சப்தம் அதிகாலை எழும்புவதிலிருந்து இரவு படுத்து நன்றாகத் தூங்கும் வரை அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும். ஆனாலும் இன்று ஏனோ அது அகோரமாகப்பட்டது. மழலை மொழி பேசும் நாளிலிருந்தே ’அத்தா’என்ற சொல் அவசியமில்லாமலே போய் விட்டது. ஒரு தந்தையின் பாசம் எப்படி இருக்கும் என்ற அனுபவம் கிடையாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் தாயும், சகோதரியும்தான்! தாயும் அவள் சக்திக்கு ஏற்ப செல்லமாகத்தான் வளர்த்தாள். ஏதோ, கணவர் சிறுகச் சிறுகச் சேர்த்த வீட்டையும், பத்து மரக்கா வயலையும் பேணி இந்தக் கைத் தொழிலையும் செய்து இரு குழந்தைகளோடு அருதலி வாழ்க்கையைத் தொடங்கியவளுக்கு ஆரம்பத்தில் உதவிகரமாக இருந்த சகோதரர்களும் ’குழந்தை குடும்பம்’என்று வந்தவுடன் ஒதுங்கிக் கொண்டனர். சுபைதா எட்டாவது வகுப்பு படிக்கும்போது ‘பெரிய மனுசி’ ஆகி வீட்டோடு இருந்தாள். சேக்கை மட்டும் கல்லூரிவரைக்கும் படிக்க வைத்தாள். கல்லூரியும் இந்த வயலை விழுங்கி, ஒரு பட்டத்தைக் கொடுத்து வெளியே அனுப்பியது. வீட்டை அடுத்து தென்புறத்திலிருந்த வைக்கோல் படப்பின் மேலிருந்து ஒரு சேவல் ’கொக்கரக்கோ’எனக் கூவியது. தொடைப் பகுதிவரை இழுத்து வைத்திருந்த சேலையைச் சரிசெய்து கொண்டாள் சுபைதா! அடிப்பலகையை முன்னுக்கு இழுத்துக் கொண்டே, ’அண்ணே தொழுகைக்கு நேரமாச்சு எழுந்திரிங்க’என்றாள். காதில் விழுந்தாலும் விழாதது போலப் பேசாமல் இருந்தான். சுபைதா பெரிய மனுசி ஆகி ஐந்து வருடங்களுக்கு மேலாகியது. நிறைய பேர் பெண்ணை பிடிக்கிறது என்றாலும், ’எல்லாம் என் மவன் வேலைக்கு போன பிறகுதான்’என்பாள் பீவி. சுபைதாவுக்கு அண்ணன் பெரிய ஆபீசர் வேலைக்கு போகும், நமக்கு நிறைய நகைநட்டு போட்டு சீர் வரிசையெல்லாம் கொடுத்து பெரிய வசதியுள்ள இடத்துல கட்டி கொடுக்கும் என்ற நம்பிக்கை நிறைந்திருந்தது. அடிக்கடி இப்படிக் கனவு கண்டு கொண்டிருப்பாள். பாயில் உள்ள நூல் ஒன்று அறுந்தது. ’சே.. இந்த எழவு பாயி எப்பந்தான் ஓயப் போவுதோ சபித்தவாறு நூலை முடிச்சுப்போட்டு முறுக்கி விட்டாள். அடுத்த அறையில் இருந்தவனை எட்டிப் பார்த்து, ’என்னண்ணே இப்படியே இருக்கப் போறியளா.. எந்திருச்சி முகத்தை கழுவிட்டு பள்ளிக்கு போங்க’என்று கூவியவாறு தறியில் அமர்ந்து பின்ன ஆரம்பித்தாள். தெருவில் குளிப்பதற்காகக் கூட்டத்தோடு சென்ற டிரைவர் அப்துல் காதர் பொண்டாட்டி வருசை பாத்து, ஏ, பீவி அக்கா குளிக்க வரலியா?’என்று கேட்டாள். ‘இந்த பாய முடிச்சுட்டு வாரேன்’- பீவி. ’சரி.- சுபைதாவ வரச் சொல்லுங்க - அடுத்து கேட்டாள். ’அவ நேத்து தான் குளிச்சா, உடம்புக்கு சரியில்ல.. பனி வேற அடிக்கு… நாளைக்கு பாப்போம்’பதில் சொன்னாள் பீவி. பின், ’ஏல சேக்கு பொம்பள பிள்ளையல்லாம் குளிக்கப் போயிட்டுவோ! நேரமாயிடுச்சி பள்ளிக்கு போப்பா!’அந்தக் குரலில் எவ்வளவு மெளனம்! மென்மையான குரல் உள்ளத்தைத் தொட்டாலும் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். அந்த அதிகாலை வேலையில் உழவுக்குச் செல்பவர்களின் பேச்சுக் குரல்களும், அவர்களைத் தொடர்ந்த உழவு மாடுகளின் சலங்கை ஒலியும் ரோட்டில் கேட்டது. சலங்கை சப்தத்தைக் கேட்டுத் தொழுவத்தில் கட்டியிருந்த பசுமாடு ’அம்மே’எனக்குரல் கொடுத்தது. இருள் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பலத்தை இழந்து வந்தது. அவன் மனதில் பலவாறு சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன. தன்னை நம்பித் தாயும் தங்கையும்! நமக்கு எப்போதுதான் வேலை கிடைக்கப் போகிறதோ? கஷ்டங்கள் என்றுதான் தீரப்போகிறதோ? சுபைதா முழு மவுனத்தையும் பாய் நெசவில் செலுத்திக் கொண்டிருந்தாள். பீவிபாத்துமாள் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். சில நேரங்களில் குரானின் வாசகங்களை முணுமுணுப்பதுண்டு! சில நேரங்களில் தன் தரித்திரங்களை முணுமுணுப்பதுண்டு! இது என்னவென்று புரியவில்லை! இருள் மறைந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் படர ஆரம்பித்தது. ’சேக் உனக்கு என்னப்பா வந்தது… இப்படி படுத்த பாயிலேயே இருக்கியே.. பள்ளிக்கும் போவல’எட்டிப் பார்த்துக் கொண்டே கேட்டார் பீவி. தெருவில் ஜனங்கள் நடமாட்டம் ஏற்பட்டது. அவன் தாயார் கேட்டதற்கும் பதிலேதும் சொல்லவில்லை. சுபைதா எழுந்து, முன் வாசலைப் பெருக்கி, தண்ணீர் தெளித்து விட்டுப் பாய் நெசவில் வந்து அமர்ந்தாள். தடக்…தடக்! ஓசை மீண்டும் அந்த வீட்டில் பரவியது. ’ஏம்மா! பாயில போயி திரும்பவும் இருக்க… அந்த பாத்திரங்களை அள்ளிப் போட்டு கழுவு., குழாயில் தண்ணீ வருதான்னு பாத்து இரண்டு குடம் புடிச்சு வையி… நீயும் அவன மாதிரி உம்முனு இருக்காத… பொட்டப்புள்ள ஓடி சாடி வேலை பார்த்தாதான் ஒருத்தரு ஊட்டுல போயி காலந்தள்ள முடியும்!" கொஞ்சம் உரத்தே கூறினாள் பீவி. பதிலுக்கு ஒன்றுமே சொல்லவில்லை சுபைதா பாய் நெய்வதிலேயே கவனமாக இருந்தாள். மீண்டும் பீவியே, ’இந்த எழவு பாயி எவ்வளவு நேரம் நெய்தாலும் தொலையவே மாட்டுக்கு, இப்ப வந்து நிப்பான் பாய் வியாபாரி தங்கமீறான்… இன்னும் அவனுக்கு நாப்பது ரூபா கொடுக்கணும்… தினம் தின்னு தொலைக்க வேண்டியது இருக்கே… திரும்ப திரும்ப அவன் கிட்டதான் கேட்கணும்! கோரை விலை கூடியிருச்சு, நூலு - சாயம் எல்லாம் கூடியிருக்கு! கூலி மட்டும் கூடல.. அதுக்கு என்ன பேதி எடுக்கோ … தெரியலை! குறுக்கு மொடிய நெஞ்சாதான் முக்கா ரூபா கொடுக்கான். அவன் மாடிக்கு மேல் மாடி கட்டிட்டான். நாம் இருக்குறதையும் வித்து தின்னுட்டு அலையுதோம். எல்லாம் நான் செஞ்ச பாவம்… என் வீட்டையே சுத்தி சுத்தி வருது!’ - புலம்பியவாறு அச்சினை ஓங்கி தடக்… தடக்…. என்று அறைந்து கோபத்தைத் தணித்துக் கொண்டாள். அம்மாவுக்குப் புலம்பல் ஆரம்பித்து விட்டால் அவனும் சரி அவளும் சரி ஒன்றுமே பதில் பேச மாட்டார்கள் அதற்குக் காரணம் தாய் மேல் வைத்து இருக்கும் மரியாதைதான்! பெரிய மாமா ஒரு தடவை சொன்னார்! இவர்களுடைய தந்தை இறந்தபோது, அம்மாவுக்கு வயது இருபத்தி மூன்றுதானாம்! இந்தச் சின்ன வயதிலேயே தாலி அறுத்திருந்த சகோதரிக்கு, வேறு கல்யாணம் முடிக்க ஏற்பாடு செய்தாராம். அம்மா எனக்கு எதுக்கு கல்யாணம்! என் கழுத்து புருஷன் போயிட்டாரு… ஆனால்? என் வயித்து புருஷன் இருக்காரு! இதுகள வளத்து ஆளாக்குனா போதும்! அப்படின்னு உறுதியாக சொல்லிட்டாங்களாம். தாய் மனதை நோக வைப்பதே ’பாவமான செயல்’என்று இருவரும் எண்ணினார்கள். சுபைதா குடத்தை எடுத்துக்கொண்டு தெருவிலுள்ள குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்றாள். ‘சேக்கு அந்த நடையில் ஐம்பது பைசா இருக்கு எடுத்துட்டு போயி கருப்பட்டியும் தூளும் வாங்கிட்டு வா, சாயா போட்டு தாரேன்’ - மகனின் காதில் விழும்படியாகக் கூறினாள். சுபைதா கொண்டு வந்த தண்ணீரைப் பானையில் ஊற்றி மீண்டும் தண்ணீர் பிடிக்கச் சென்றாள். மகன் பேசாமலிருப்பதைப் பார்த்து, ‘ஏப்பா என்ன செய்யுது! உடம்புக்கு சரியில்லியா?’ என்று கேட்டாள். அதற்கும் அவன் செவி சாய்க்கவில்லை, பாயை விட்டு எழுந்து, மகன் அருகில் வந்து நெற்றியிலும், மார்பிலும் கை வைத்துப் பார்த்தாள். ’அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா! மனசுக்குத்தான் சரியில்லை ’என்றான் சேக். ‘ஏன்? நான் ஒண்ணும் பேசலிய சுபைதா என்னமும் பேசுனாளா!’- ஆதங்கத்தோடு கேட்டாள். ‘இல்லம்மா, உங்கள எல்லாம் வேலை செய்ய வச்சு நான் மட்டும் சும்மா இருந்து சாப்பிடுதேன். அதான் ஒரு யோசனையா இருக்கு’ ‘நீ, என்ன செய்வே… நம்ம நேரம் சரியில்லை. ஆண்டவன் எப்பதான் கண் திறந்து பாக்கப் போறானோ? இவ்வளவு சங்கடத்தையும் கொடுத்து சோதிச்சு பாக்கான்! இதுக்கு ஒரு விடிவு காலம் வராமலா போயிரும்?’ ‘விடிவு காலம் வந்துதான் தீரும்! அதுக்காக சும்மா இருந்தால் முடியுமா? என்னை முஸ்தபா அவன் கூட பம்பாயிக்கு கூப்பிடுதான்… நான் போகட்டுமா.’ சற்று நேரம் பேசாமலிருந்த பீவி, "வேண்டாப்பா! தூரா தொலைக்கெல்லாம் போக வேண்டாம். இங்கேயே முயற்சி செய்து பாரு. நானும் நம்ம ஆடிட்டர் தம்பி கான்சா துரைகிட்ட சொல்லியிருக்கேன்… பார்த்து செய்றேன்னு சொன்னாரு! அவரைப் போயி பாரேன்!’’ விரக்தியாகச் சிரித்துவிட்டுப் பேசாமலிருந்தான். ’சரி எழுந்திரு, போயி கருப்பட்டி வாங்கிட்டு வா! வெறும் வயித்துல எனக்கும் வேலை செய்ய முடியல’அமைதியாகச் சொல்லிவிட்டுப் பாய் தறியில் போய் அமர்ந்தாள். சுபைதா இதுவரை நடந்த பேச்சுக்களைக் கவனித்தவாறே பாத்திரங்களை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தாள். வேலை இல்லை. வெளியூர்களுக்கும் போக வேண்டாம்! என்ன செய்யலாம். மனம் குழம்பிக் கொண்டிருந்தான். பாயை முடித்து, முக்காலியை ஓரமாக வைத்துப் பின் நூல்களை அறுத்துப் பாயைத் தறியை விட்டுத் தனியாக எடுக்கலானாள் பீவி. கழுவிய பாத்திரங்களை வீட்டினுள் அடுக்கிவிட்டு முக்கால் நெசவிலிருந்த பாயில் போய் இருந்து பின்ன ஆரம்பித்தாள். நடையிலிருந்து ஐம்பது பைசாவை எடுத்துக் கொண்டு தெருவில் இறங்கி நடக்கலானாள் பீவி. ‘ஏண்ண வெளியூருக்கெல்லாம் போறீங்களா! வேண்டாம்! இங்கேயே ஏதாவது ஒரு சோலி பாருங்க. வேலையா கிடைக்காட்டாலும் நமக்கு ஏத்தமாதிரி சின்னதா பாருங்க! ஏதோ கூழோ. மோரோ குடிச்சாலும் சேர்ந்தே குடிப்போம்’ - சோக இழை ஓடிய அந்தக் குரலில் பாச உணர்வைக் குழைத்து வைத்தாள் சுபைதா. அவன் எதுவும் சொல்லவில்லை! வீதியில் பள்ளிக்கூடம் செல்ல மறுக்கும் ஒரு குழந்தையின் அழுகுரலும், அதோடு சேர்ந்து ஒரு தாயின் பேச்சுக் குரலும் கேட்டது. ‘பள்ளிக்கூடம் போகணும்னா இவனுக்கு கொல்லையில் எடுக்கு! அப்பன மாதிரி ஊரை சுத்திக்கிட்டு இருக்கலாம்னு பார்க்கான்! இவனாவது நாலு எழுத்து படிப்பான்… கவர்மெண்டு வேலைக்கு போவான்னு பாத்தா, இப்பமே இந்த வயசுலேயே இவ்வளவு கள்ளத்தனம்! காலையிலேயே இந்த கயாத்தருவானை சேவிச்சு பள்ளிக்கூடம் அனுப்புறதுக்குள்ளே போதும். போதும்னு ஆயிருது’- அழுகின்ற குழந்தையின் முதுகில் அடிவிழும் சப்தம் கேட்டது. குழந்தை வீறிட்டு அழுதான். இவன் லேசாகச் சிரித்துக் கொண்டான். தனக்குத் தானே ஏதோ முணுமுணுத்துக் கொண்டான். கடைக்குப் போயிருந்த பீவி கருப்பட்டியோடு திரும்பி வந்தாள். இன்னும் சேக் எழுந்திருக்காமல் இருப்பதைப் பார்த்து, ‘எழுந்திருச்சி மூஞ்சை கழுவப்பா. சாயா போட்டு தாரேன்! குடிச்சுட்டு போயி குளிச்சுட்டு வா!’ பானையில் தண்ணீர் ஊற்றி அதில் கொண்டு வந்த கருப்பட்டியைப் போட்டு அடுப்பில் வைத்தாள். மண்எண்ணெய் பாட்டில் காலியாக இருப்பதைப் பார்த்து அங்கு கிடந்த பழைய துணியை நார் போலக் கிழித்து அடுப்பில் போட்டுப் பற்ற வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் பீவி. பஞ்சாயத்து போர்டு சங்கு ஒலித்தது. ‘மணி ஆறாயிடுச்சு! எந்திரிங்கண்ணா! எவ்வளவு நேரம்தான் இப்படியே இருக்கப் போறீங்க! இருந்தா மட்டும் வேலை கிடைச்சுரும்மா?’ - சுபைதா - ‘ஆமாப்பா! இப்படியே விரக்தி புடிச்ச மாதிரி இருந்தா. உங்க அத்தா மெளத்து வூட்டுல நானுந்தான் என்ன செய்யப் போறோம்னு தெரியாம. கண்ணை கட்டி காட்டுல உட்ட மாதிரி முழிச்சுகிட்டு இருந்தேன். வாழ்க்கையை சமாளிக்க பழகணும்! நிர்க்கதியா நிக்கிற நாமெல்லாம் எதிர்த்து போராடணும்’ - பீவியின் அனுபவம் பேசியது. இந்த யதார்த்தமான வார்த்தைகளில் அவன் சிந்தனையை உரைப்பதுபோல் சில வார்த்தைகள் இருந்தாலும், எதிர்த்துப் போராடணுமானா அது யாரை என்று புரியவில்லை. பக்கத்து வீட்டு மாடு ஒன்று திண்ணையில் ஏறிய ஓசை கேட்டது. எட்டிப் பார்த்த பீவி, ’சுபைதா மாடு வருது… கோரையை தின்னுறும் பத்து பாயை விட்டு எழுந்து மாட்டை விரட்டி விட்டுத் தறியில் வந்தமர்ந்தாள். ’ஏன் இன்னும் பாய முடிக்கலியா ! சீக்கிரம் முடிச்சுட்டு உலைய வையி! நான் பாய கொண்டு கொடுத்துட்டு ரூபா வாங்கி வாரேன்! அரிசிக்காரிக்கும் ரூபா கொடுக்கணும்… அவ நேத்தே அரிசி தரமாட்டேன்னு சொன்னா… இன்னைக்கு என்ன சொல்லுதாளோ!’சந்தேகத்தோடு பேசினாள் பீவி. சாயாவை ஊற்றி மகனுக்கு ஒரு டம்ளரிலும், மக்களிடம் ஒரு சின்ன சொக்கிலும் கொண்டு வைத்தாள். மீதி இருந்த சாயாவைப் போணியில் ஊற்றிக் குடிக்க ஆரம்பித்தாள். தொட்டுப்பார்த்து நல்லா சூடா இருக்கு’என்றவாறு, தாவணியின் முகப்பை வைத்துப் பிடித்தவாறு ஊதி ஊதிக் குடிக்க ஆரம்பித்தாள் சுபைதா. சேக் அருகில் வைத்த சாயா அப்படியே இருந்தது. மனதில் இப்படியே இருந்தால் மட்டும் வேலை கிடைத்திடுமா! அதுவுமில்லாமல் இன்றைக்கு ஒரு நாளிலேயே தீர்ந்து விடுகின்ற பிரச்சினையா இது எனக்குழம்பிக் கொண்டிருந்தான். அம்மா சொன்ன மாதிரி வாழ்க்கையைச் சமாளிக்கணும்… எதிர்த்து போராடணும்னு சொன்னாங்க.. யாரை எதிர்க்கிறது? சுபைதா பாயை முடித்துத் தனியாகத் தறியை விட்டுப் பிரித்தெடுத்தாள். சாயா குடித்த போணியையும், மகள் குடித்துவிட்டு வைத்த சொக்கையும் எடுத்துக் கழுவி வைத்தாள். சேக் இன்னும் குடிக்காமல் இருப்பதைப் பார்த்து, ’சாயா குடிச்சுட்டு வா… ஆறிப்போயிடும் சற்று எரிச்சலுடன் சொன்னாள் பீவி. பின் பாய்களை எடுத்துக் கொண்டு வியாபாரி வீட்டுக்குச் செல்ல முற்பட்டாள் பீவி. சாயா போட்ட அடுப்பில் பானையில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு வாரியலை எடுத்து அந்த அறையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள் சுபைதா. அவன் தாயைப் பார்த்தான் ‘யாரையம்மா எதிர்த்து போராடணும்னு சொன்னீங்க கேட்கலாம்’ என்று நினைத்தான். கேட்டாலும் அவர்களுக்கு என்ன தெரிந்து விடவா போகிறது? தெரிந்ததெல்லாம் புலம்புவதும் ஆண்டவனிடம் ’துவா’கேட்பதும்தான்! எண்ண அலைகள் அவனைச் சுற்றியே வட்டமிட்டன. அறையிலிருந்த ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்தான்! வானம் சூரியன் வருவதற்கான அறிகுறிகளோடு நன்கு சிவந்து காணப்பட்டது. கழிவு -கழனியூரன் சுங்காம்பட்டி போக்குவரத்து வசதியோ, மருத்துவ வசதியோ இல்லாத சின்னஞ்சிறு கிராமம். ஊரைவிட்டு வெளிக்கிளம்பணும்னா, முதல்ல வண்டித் தடத்துல நாலு பர்லாங் தூரம் நடக்கணும். அதுக்குப் பிறகுதான் ஓந்தாம்பட்டிக்குப் போற கல்ரோட்டை கண்ணால் பார்க்க முடியும். கல் ரோட்லயும், ஒரு மைல் தூரத்துக்கு மேல போனாத்தான் திருநெல்வேலிக்குப் போற தார் ரோடு வரும், அதுக்குப் பிறகுதான் பஸ்ஸை கண்ணால் பார்க்க முடியும். ஒரு ஆத்தர அவசரத்துக்கு சுங்காம் பட்டியிலிருந்து உடனே கிளம்பிற முடியாது. அதுலயும் பொண்ணு பிள்ளைங்க பாடு பெரும்பாடு. சுல்த்தாள் ரெண்டாம் வகுப்பு பாஸானதும், தன் உம்மாவிவிடம் “நான் மூணாப்பு படிக்கப் போறேன்”னுதான் சொன்னாள். ஆனா, அவ தாய்காரிதான், “பொட்டப்புள்ள இம்புட்டுப் படிச்சது போதும், நான் காடு கரைக்கி, கொத்து வேலை பார்க்கப் போயிருவேன், இல்லன்னா வேலி வேலியா அலஞ்சி கத்தாழை ஒடிக்கப் போயிருவேன். கைப்பிள்ளையான தம்பிப் பையனை யார் பார்த்துக்குவா? அதனால இனிமே பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டாம்”னு சொல்லிவிட்டாள். சுல்த்தாள் சின்னப்பிள்ளையாக இருக்கும் போதே எதையும் ஒரு ரசனையோடு செய்வாள். தம்பி கமீதுக்கு, அவள் விளையாட்டுக் காட்டுவதே பார்க்க வேடிக்கையாக இருக்கும். எந்தவிதக் காரணத்தைக்கொண்டும், சுல்த்தாள் கமீதை அழவிட மாட்டாள். அவன் முன் நின்று ஆட்டமாடி, பாட்டுப்பாடி, தலைமுடியை விரித்துப் போட்டுக் கண்களை உருட்டித் தலையை ஆட்டிப் பிள்ளைக்கு சிக்கிக்கிச்சு மூட்டி - என்று எதையாவது செய்து, தம்பியைச் சிரிக்க வைத்துவிடுவாள். சுல்த்தாள் அவள் அம்மாவோ, பிற பெண்களோ பாடும் தாலாட்டுக்களை மிகக் கவனமாகக் கேட்டு, அவற்றை மனதில் நிறுத்தி இருந்தாள். சுல்த்தாள் பெரிய மனுஷி மாதிரி கதை தொட்டிலில் போட்டு, அவள் தாய் காட்டுக்குப் போன பின்பு தாலாட்டுவாள் உடையாத கீச்சுக் குரலும், தாளக்கட்டும், நீலாம்பரியும் காற்றில் மிதந்து பக்கத்து வீட்டுப் பெண்களை மூக்கின் மேல் விரலை வைக்கச் செய்யும். சுல்த்தாள் வளர வளர, அவள் தாய் மசூது பீவிக்கு, வீட்டு வேலையின் சுமை கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்தது. சுல்தாள் பொறுப்புடன் வீடு, வாசல் தூக்குறது, தண்ணீர் எடுக்கிறது. அரிக்கேன் விளக்கைத் துடைத்து மண்ணெண்ணை ஊற்றி வைக்கிறது. அடுப்பில் கிடக்கும் சாம்பலை அள்ளிக் குப்பைக் குழியில் போடுவது, முட்டைக் கோழியை உரிய நேரத்தில் பிடித்து அடைக்கிறது, கோழி முட்டை இட்டபின் அதைத் திறந்து விட்டு இரைபோடுவது, தம்பிப் பையனுக்கு வேளா வேளைக்கு பாலைக் கலந்து கொடுக்கிறது என்று எல்லாவிதமான சின்னஞ்சிறு வேலைகளையும் பார்த்துவிடுவாள். அக்கம்பக்கத்து வீட்டுக்காரப் பெண்கள் ஏவுன வேலை செய்யாமல், விளையாட ஓடிவிடும் தன் பிள்ளைகளைப் பார்த்து, “உனக்கு எட்டுக்குத்துக்கு இளைய சுல்த்தாளைப் பாரு, என்னமா விட்டு வேலைகளைச் செய்யுதா, நீயும், பிறந்திருக்கியே.. உப்பு கல்லுக்கு துப்பில்லாம..”என்று அவர்கள் சுல்த்தாளை இணை வைத்தே திட்டுவார்கள். சுல்த்தாள் எந்த வீட்டுக்கும் போய், வாய் பரிக்கவும் மாட்டாள். “பாடு பேசவும்” மாட்டாள். ஆனால் அவளைச் சுற்றி எப்பவும் நாலைந்து பிள்ளைகள் இருப்பார்கள். சுல்த்தாள் சொல்லுகிற கதைகளும், பாடுகிற பாட்டுகளும், அவ சோட்டுப்பிள்ளைகள் விளையாடும் கிளியாந்தட்டு விளையாட்டிலும் சுல்த்தாள் தனக்கென்று ஓர் இடத்தைத் தக்கவைத்துக் கொள்வாள். சுல்த்தாள் வளர வளர, தன் தகுதிக்குத்தக்கதான வேலைகளையும் மாற்றிக்கொண்டு, நாலு காசு சம்பாதிக்க ஆரம்பித்தாள். கத்தாழை மரல் இழைக்கிறது , பாய்விளிம்பு கட்டுகிறது, நூல் நூக்கிறது என்று ஒவ்வொரு வேலையாகச் செய்தாள். தனக்கு மூத்த பெண்பிள்ளைகள் செய்கிற வேலையைப் பார்த்து, கருக்கடையுடன், தானே கைவேலைகளை கற்றுக் கொண்டு, பிசிறில்லாமல் அவ்வேலைகளைச் செய்தாள். தகப்பன் இல்லாமல் வளரும் பிள்ளை இம்புட்டாவது கருக்கடையாகத் தலை எடுக்கிறதே என்று மனசுக்குள் சந்தோசப்பட்டுக் கொள்வாள். மலர் மொட்டாய்க் கூம்பி நிற்கும் ஒரு அழகு கட்டவிழ்ந்த மலர் மீது இயற்கையெனவனத்தை அள்ளிப் பூசிவிட்டுச் சென்றது. பதின்மூன்று வயதிலேயே, சுல்த்தாள் ஆளாகிவிட்டாள். சேலை உடுத்தி முந்தானையால், தலையில் சீலையும் போட்டுக் கொண்டு சுல்த்தாள் பீவி, நிறைய செம்புத் தண்ணீருடன் ஒலுச்செய்கிறபோது, பார்த்த தாயின் மனம் நிறைந்தது. சுல்த்தாள் சுடர் விளக்கின் ஜூவாலையைப் போன்று அமைதியும், சாந்தமும் கலந்து ஜொலித்தாள். தலைக்குத் தண்ணீர் ஊற்றிய கையோடு, தன் மகளுக்கென்று ஒரு பாய்த்தறியை ஏற்பாடு செய்து கொடுத்தாள், அவள் தாய் சுல்த்தாளும் தினசரி ரெண்டோ மூணோ பாய்களை நெய்து முடித்தாள் : வீட்டில் சோறு பொங்குவது, பண்டபாத்திரம் தேய்த்துக் கழுவுவது என்று மற்ற வேலைகளையும் செய்தாள். சுல்த்தாளுக்குக் கடிகாரத்தில் மணி பார்க்கத் தெரியாது. அவள் வீட்டுல கடிகாரமும் கிடையாது. பாங்கோசையும், சுவர் கூரையின் நிழலும்தான் அவளுக்குக் காலநேரத்தை அறிவிக்கும் கருவிகள். சுல்த்தாள் பாய்த்தறியில் இருந்துகொண்டு, பாய் நெய்யும்போது, எப்படியும் சேலையை முட்டுவரை திரைத்து வைத்துக்கொள்ளத்தான் வேண்டியதிருந்தது. இந்தத் தொழிலில் இது ஒரு சங்கடம். பாங்கோசை கேட்க ஆரம்பித்ததும் அவசர அவசரமாக, மேல்முந்தானை சேலையைத் தலைக்கு இழுத்து முக்காடு போட்டுக்கொண்டு, காலில் முட்டுவரை உயர்ந்து கிடக்கும் சேலையையும் கீழே தழையவிட்டுச் சரி செய்து கொள்வாள். ஒருநாள், நடுச்சாமம்போல எந்திரிச்சி சுல்த்தாள் தன் தாயை எழுப்பினாள். பகலெல்லாம் அந்தக் கொத்து வேலைக்குப் போய், வெயிலில் நின்று கடுமையாக உழைத்துவிட்டு அலுத்துப் போய் உறங்கி, மசூது பீவி கண் விழிக்க மனமில்லாமல், “என்னளா, இந்த அகால வேலையில் எழுப்புத, ஒண்ணுக்குப் போவணும்னா, போய்விட்டு வந்து படு. நிரசல்ல பானையில் தண்ணி இருக்கு…”என்று உரக்கச் சொல்லிவிட்டு, புரண்டு படுத்தாள். தாயின் குரலில் எரிச்சலும் அலுப்பும் கலந்திருப்பதை சுல்த்தாள் புரிந்து கொண்டாள். எனவே, அதன்பின் அவள் உம்மாவை எழுப்பவில்லை, சுபுஹூ தொழுகைக்கான பாங்கோசை கேட்டதும், வழக்கம்போல எந்திரிச்ச மசூதுபீவி மகள் ஒரு மூலையில் நனைந்த சீலைத்துணிபோல சுருண்டு கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து போனாள். மாதம்தோறும் சுல்த்தாளுக்கு “அந்த நேரத்தில்”கடுமையான வயிற்றுவலி இருந்தது. ஆரம்பகாலத்தில் ஒருதரம், சுல்த்தாள் தன் தாயிடம் தயங்கித் தயங்கித் தன் வேதனையைச் சொல்லி அழுதாள். மகள் சொன்னதைக் கேட்ட தாய்க்காரி, மகளின் உச்சந்தலையைத் தன் நெஞ்சோடு நெஞ்சாகச் சேர்த்து அணைத்துக் கொண்டு, தலைமுடியை வருடிக்கொடுத்தபடி, “பெண்ணாப் பிறந்தவ இதைக்கூட தாங்கலைன்னா எப்படிம்மா….? இன்னும் என்னென்னவெல்லாமோ இருக்கே எல்லாத்தையும் அந்த ரப்பில் ஆலமின்தான் லேசாக்கணும்”என்றாள். தன்னையும் அறியாமல் தன் கண்களில் கண்ணீர் மணிகள் கோர்த்திருப்பதை உணர்ந்த மசூதுபீவி, மகளுக்குத் தெரியாமல் இருக்கவேண்டி, அவசர அவசரமாகத் தன் முந்தானையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். தாயின் சில கண்ணீர்த் துளிகள் சுல்த்தாளின் தங்கப்பாளம் போன்ற கன்னக் கதுப்பில் வெதுவெதுப்பாக விழுந்து தடம் பதித்து, நடந்து மறைந்தது. இந்த மாதம் நேற்றே விலக்கு வந்துவிட்ட விவரத்தை ஏற்கனவே, உம்மாவிடம் மகள் சொல்லி இருந்தாள். நிரசலின் ஓலை இடுக்கில், பழைய துணியைக் காயவைத்து, மடித்துச் சொருகி வைத்திருந்தாள். அதைத்தான் எடுத்து இன்று பயன்படுத்தியிருந்தாள். கிழக்கில் செம்பாளமாக முகம் காட்டிய காலைக்கதிரவன், மேலே கிளம்பக் கிளம்ப சுல்த்தாளின் வயிற்றுவலி உக்கிரமாகிக் கொண்டே வந்தது. வலி தாங்க முடியாமல் துடியாய்த் துடித்தாள். சத்தம் போட்டு “ஓ..”என்று ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்துவிட்டாள் சுல்த்தாளின் அழுகைச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் கூடிவிட்டார்கள். ஆளாளுக்கு ஒரு கைப்பக்குவம் சொன்னார்கள், ரெசவுப்பெத்தாள் மட்டும், சரசரவென்று காரியத்தில் இறங்கினாள். சுக்கு, மிளகோடு இன்னும் என்னென்னமோ சில பச்சிலைகளையும் சேர்த்து அரைத்துச் சாறெடுத்துக் கொடுத்தாள். வலி குறைந்தபாடில்லை. நேரமாக ஆக சுல்த்தாளின் அடிவயிறு லேசாக உப்ப ஆரம்பித்தது, அவள் மாமன் மகன் மைதீன் அவசரமாக சைக்கிளில் போய்ப் பக்கத்தூர் வைத்தியரைக் கூட்டிக்கிட்டு வந்தான். வைத்தியர் வந்து கைபிடித்து நாடி பார்த்துவிட்டு, கொஞ்சம் சூரணத்தைக் கொடுத்து, "இதை தேனில் குழைத்து மூணு வேளை கொடுங்கள். வலி குறைஞ்சிடும்’’என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். உள்ளுர் அஸ்ரத் மசூத் லெப்பை வந்து ஓதிப்பார்த்துவிட்டு, முகத்தில் தண்ணீர் தெளித்துவிட்டுச் சென்றார். உச்சியில் இருந்து சூரியன் மேற்கில் சரியத் தொடங்கி இருந்தது. சுல்த்தாள் நேரமாக ஆக, பலவீனமாகிக்கொண்டே வந்தாள். வயிறு மேலும் உப்பிக்கொண்டே இருந்தது. முகமூடி அணிந்த நிழல் முகங்களும் ரெட்டை நாக்குகளும், திரை மறைவில் சுல்த்தாளின் கன்னிமையைச் சந்தேகித்து, சில யூகங்களை முன்வைத்துக் கிசுகிசுத்தன. சுல்த்தாளை அவள் மாமன் மகன் மைதீனுடன் சில மனசுகள் முடிச்சுப் போட்டுப் பார்த்தன. மேற்கு வெயிலின் சூடு தணியும் முன்னே, சுல்த்தாளின் "ரூகு’அடங்கிவிட்டது. சுல்த்தாளின் தாயார் மசூதுபீவி, தன் பொறுப்புள்ள பிள்ளையின் பிரிவைத் தாங்கமுடியாமல் சுவரில் முட்டி முட்டி அழுதாள். "வெளியூர் ஆட்கள் சொந்த பந்தங்கள் வந்து எடுக்கும்வரை மையம் தாங்காது. வயிறு ஊதிவிட்டது. உடனே மையத்தை அடக்க வேண்டியதுதான். அதனால ஆகவேண்டிய காரியத்தைப் பாருங்கள்’’என்று ஒரு பெரியவர் அவசரப்படுத்தினார். எப்போதும் ஜமாத்தில் தயாராக வைக்கப்பட்டிருந்த கபன் துணி சுல்த்தாளின் மையத்திற்கு உதவியது. அவசர , அவசரமாக நாலைந்து இளைஞர்கள் சேர்ந்து குழிவெட்டி முடித்தார்கள். அஸர் தொழுகைக்கு முன்பே மையத்தை அடக்கம் செய்ய ஜமாத்தார்கள் தீர்மானித்தார்கள். ரெசவு பெத்தாள் தான் மையத்தைக் குளிப்பாட்டினாள். அடிக்கழுவும்போது சுல்த்தாள் ஒதுக்கியிருந்த துணியை அப்புறப்படுத்திய பெத்தாள், “அதைக்” கவனித்துவிட்டு ’யா அல்லாஹ்’என்று அலறினாள். ரெசவுப் பெத்தாள் போட்ட சப்தத்தைக் கேட்டு, சுற்றியிருந்த பெண்கள் பதற்றத்துடன் விலகினார்கள், என்றாலும் குளிப்பாட்டும் மையத்தை மறைத்துப் பிடித்திருந்த சேலைத் துணியை யாரும் விட்டுவிடவில்லை. வெளியே நின்ற ஆண்களில் சிலர் “என்ன விசயம்? ஏன் சத்தம் போடுறீங்க”என்று கலவரத்துடன் கேட்டனர். ரெசவுப் பெத்தாள்தான் தைரியமாக, ஒரு குச்சை எடுத்து அதை வெளியே தள்ளினாள். விழுந்த இடத்தில் உதிரம் குடித்துக் கொளுத்த அட்டை புரண்டு படுத்தது. "அட பாவமே, அட்டை எப்படி அங்கே போச்சி?’’என்று ஒரு பெண் ஆச்சரியத்துடன் மூக்கின் மேல் விரலை வைத்தாள். நிரசலில் ஓலைகளுக்கு இடையில் மடித்து வைத்திருந்த பழைய சீலையை எடுத்து, நன்றாக உதறாமல் பிள்ளை ஒதுக்கி இருக்கா, அதுக்குள்ள சுருண்டு மடங்கி ஒட்டிக்கொண்டு இருந்த அட்டை ரெத்தத்தை உறிஞ்சிருக்கு, அதனாலதான் புள்ளைக்கு வயிறு இந்த மாதிரி உப்பியிருக்கு, அந்தப் பிள்ளைக்கும் அட்டை ரெத்தம் குடிக்கிற விவரம் தெரியலை! ‘அதைப் பற்றி யோசிக்கவும் செய்யல, கடைசியில் பிள்ளை உயிர் போயிட்டு…’’என்று ஒரு பெண் நடந்த விசயத்தை ஒருமாதிரி யூகித்துச் சொன்னாள். அந்தப் பெண்ணின் அனுமானம் சரிதான் என்று மற்றவர்களும் ஒத்துக்கொண்டார்கள். அறியாமை என்னும் இருட்டு ஒரு பிஞ்சு மலரை விழுங்கி விட்டது! மேற்கில் ஆதவன் மறைந்துவிட்டான். பூமியின் மேல் இருள் மெல்லக் கவிழத் துவங்கியது. ரத்தம் குடித்த அந்த அட்டையைச் சிறுவர்கள் அடித்துக் கொன்று, ஒரு மரத்தடியில் தூக்கிப் போட்டார்கள். அதன் மேல் நூற்றுக்கணக்கான எறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன. சம்மந்தக்குடி -மீரான் மைதீன் சம்மந்தக் குடிய நினைத்த போது அஸ்மாவின் ஈரக்குலையிலிருந்து குமட்டிக் கொண்டு புறப்பட்ட எச்சிலைக் காறித் தெருவில் துப்பினார். "ஒரு லோகத்துலயும் இப்படிப் பாக்கலாம்மா … தூ…’’மறுபடியும் துப்பினாள். “என்ன மைனி… ஒரு மாதிரியா வாறியோ… யாருட்ட உள்ள கோவமாக்கும்….”எதிர் வீட்டு ஆத்துனாச்சி பெத்தா விசயம் சேகரிக்கும் ஆவலில் வாசலின் விளிம்புக்கு வந்தாள். "எனக்கு மூத்த மவள கெட்டிக் கொடுத்த சம்மந்தகுடி சீர நெனைச்சித்தான் ஏழு வருசமாச்சி ’ துக்கயளுக்கு ஒரு நெறவு வேண்டாமா?…தூ…‘’துப்பிக் கொண்டேதான் அஸ்மா தொடர்ந்து சொன்னாள் "இங்க யாராவது மோளணும்னாலும்… அவாளுட்ட சொல்லணுமாம். அவாளுக்கு அனுமதி கெடச்சதுக்குப் பொறவுதான் இங்க உள்ள ஆளுவ மோளணுமாம்… புள்ளைய கெட்டி கொடுத்தாச்சின்னு சொல்லிட்டு அவாளுக்கென்ன அடிமை சாசனமா எழுதிக் கொடுக்க முடியும். ஏழு வருசமா இந்த நாயளுட்ட நாய்படாத பாடு படுதோம்…’’ ஆத்துனாச்சி பெத்தாவுக்கு ஒரு எழவும் புரிவில்லை. அஸ்மாவின் பேச்சிலிருந்து பிரச்சினை தொடங்கியதன் சாராம்சத்தைச் சரியாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. துளைத்துக் கேள்வி கேட்டால் தெரிந்து கொள்ள முடியும்தான். ஆனால் அஸ்மாவே இப்படி இப்படி விசயம் என்பதைச் சொல்லிவிட்டால் ஆத்துனாச்சி பெத்தாவுக்குக் கேட்டுக் கொண்டிருக்க கொஞ்சம் கெளரவமாக இருக்கும். மூன்றாவது பிரசவத்திற்கு மக்களைச் சாயங்காலம்தான் ஆஸ்பத்திரிக்குக் கார் பிடித்துக் கூட்டிக் கொண்டு போனாள். ஒரு மணிநேரத்தில் திரும்பி வந்து நடையில் கால் வைக்கும் முன்னால் காறித்துப்பிக் கொண்டே புழு புழுக்கிறாள். "எரணம் கெட்டதுவோ… அதுகளுக்கு வந்திருக்க வரிசை படச்சவன் ஒருத்தன் இருக்கான்.." ஆத்துனாச்சி பெத்தா அஸ்மாவைக் கையாளத் தெரியாமல் திணறினாள். இவளின் கேள்விகளுக்கு அஸ்மாவின் பதில் வேண்டும். சரியான பதில்கள் கிடைத்துவிட்டால் அஞ்சாறு வீடுகளுக்குப் போகலாம். கசினா பணியாரமோ, அச்சப்பமோ, கூடவே சாயாவும் வரும். குடித்துக் கொண்டே பேசப்பேச வாய்பொழந்து கோழைவடிய கேட்பவர்களை ஐந்தாறு வீடுகளில் பார்த்துவிடலாம் ஆவலோடு ஆஸ்மாவின் முதல் கேள்வியை வைத்தாள். “ஒனக்கு மொவ எப்படி இருக்கா…” ’’சும்மாதான் இருக்கா… நாளைக்கு காலையில பெறுவான்னு லேடி டாக்டர் சொன்னா. நான் சீலை துணியெல்லாம் எடுத்துட்டு போலாம்னு வந்தேன்…" - “சாயங்காலமே வலி ஆரம்பிச்சிதானே கூட்டிட்டு போனியோ..” "அதான் மைனி - வலி ஆரம்பிச்ச ஒடனே வந்துடுங்கன்னு தான் சொல்லியிருந்தா. அதனாலதான் நானும் சடார்னு கூட்டிட்டுப் போனேன். அந்த எரப்பாளி மூளியோ ஆசுத்திரியில் வந்து.- நெலயளிஞ்சு நிக்காளுவோ… "எனக்க சம்மந்தக்காரி சொல்லா. வலியெடுத்த உடனே மொதல்ல எனக்கு ஆள் சொல்லி விட்டிருக்கணும்னு… சம்மந்தக்குடியின்னு ஒரு மதிப்பு மரியாதை கெடையாது…. எல்லாம் ஓங்க ஓங்க இஷ்டம் தானா.. இவ என்ன டாக்டரா மைனி இவளுட்ட மொதச் சொல்ல… ஒரு ஞாயத்த சொல்லுங்க பாப்போம்…’’ ‘’ஆமா…’’ஆத்துனாச்சி பெத்தா ஆமாம் போடத் தொடங்கினாள். “ஒனக்கு மருமவ மேல பாசம்ணா.. மொதல்லயே வந்து நிக்கணும்.. புள்ளய கூட்டிட்டு வந்து மூணு மாசமாச்சு… ஒரு நாள் இந்த நடையிலே வந்து பாத்திருப்பாளா. அவளுக்கு கோழி அறுத்து ஓரட்டிச்சுட்டு கொடுக்கலயாம்… வெக்கமில்லாம சொல்லுதா பாத்துக்குங்கோ… நோஸ்மாரெல்லாம் அவளப் பாத்து சிரிக்காவோ… ஆம்புள புள்ளைக்கு ம்மாண்ணா அவளுக்கு படச்சவன் ரெண்டு கொம்பையா கொடுத்திட்டான்? பண்ணிக்கு பொறந்தவளுவோ… வெளங்க மாட்டாளுவோ மைனி .” “ஒனக்கு மருமவன் லெட்டர் என்னமும் போட்டாரா?”ஆத்துனாச்சி பெத்தா கேள்வி கேட்டாள். ’’அந்த எழவ ஏன் கேக்கியோ… எல்லாம் தலையெழுத்து… ம்மாக்கு பணத்த அனுப்பி பொண்டாட்டிக்கு கொடுக்கச் சொல்லுவாரு.. அவ எல்லாத்தையும் பொக்கையிலே போட்டு ஏப்பம் உட்டுட்டு கெடக்கா. யாருட்ட போய் அழதுக்கு. நேரத்த போணும் மைனி.. எனக்க இரண்டாமத்த மவளாக்கும் காவலுக்கு இருக்கா. அவ மாமியாரு அதுக்கு மேல…" அஸ்மா கதவைத்திறந்து உடுதுணி எடுத்துக்கொண்டு கதவைப் பூட்டி மீண்டும் வாசலுக்கு வந்தபோது, ஆத்துனாச்சி பெத்தா தெருவில் நாலாவது வீடு தாண்டிப்போய்க் கொண்டிருந்தாள். அஸ்மா ஏழு மணி பஸ்சைப் பிடித்து ஆஸ்பத்திரிக்கு வந்தபோது சம்மந்தக்காரி குடும்பம் யாரும் இல்லை . “ஒனக்க மாமியாரு போயிட்டாளா…” “இப்பதான் …. ஆபரேஷன் தியேட்டர்ல கூட்டிட்டு போனதும் நீ கார் அனுப்பிடணுமாம்…”ஜெரினா கிண்டலாக சொன்னாள். “ஆமா.. அவ வாப்பாக்க மொதலு இங்க கெடக்கு.. காரு அனுப்பதுக்கு.” “காரு அனுப்பலனா பிளேன் அனுப்பு” இரண்டாவது மகள் பானு சிரித்துக்கொண்டே சொன்னாள். பேரன் பேத்திகளெல்லாம் வரண்டாவில் விளையாடிக் கொண்டிருந்தனர். மொய்து சாகிபு சாப்பாடு வாங்கிக் கொண்டு ஒவ்வொரு படியிலும் நின்று நின்று மெல்ல நடந்து வந்தார். தளர்ந்து போன சரீரம் ஏழு ஆண்டுகளுக்கு முன் ஜெரினாவின் கல்யாணம் நடப்பது வரை கம்பீரமாக இருந்த ஒடம்பு. ஒரு குஸ்தி பயில்வானுக்கு நிகரான சரீரம். இன்று கூன் விழுந்து கிடந்தது. எல்லாம் மூன்று பொட்டப் புள்ளைகளை பெத்து போட்டதால் வந்த வினை. மொய்து சாகிபு மிகக் கடுமையான உழைப்பாளி. சைக்கிளில் ஜவுளி கட்டிக் கொண்டு போய் விற்பவர் நாலுநாள் ஐந்து நாள் அப்படியே போய்விடுவார். ஏதோ ஒரு ஊரில் தூங்கி சாப்பிட்டு … கிட்டத்தட்ட ஒரு நாடோடி வாழ்க்கைத்தான். அவரின் கடுமையான உழைப்பில் சொந்த வீடு ஒன்று உருவானது. சில ஆண்டுகள் ஓடிப்போனது. இரண்டு கடைகள் கட்டி வாடகைக்கு விட்டார். இன்னும் சில நிலபுலன்களின் சேர்க்கை, மூத்தமவள் ஜெரினாவிற்கு மாப்பிள்ளை பார்த்தார்கள். அரேபியா மாப்பிள்ளை. அஸ்மாவுக்கு பிடித்துப் போய்விட்டது. அந்த அரேபியா மாப்பிள்ளைக்கே மகளைக் கட்டிக்கொடுக்க வேண்டும் என்பது அஸ்மாவின் தவமாக இருந்தது. பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டபோது மொய்து சாகிபு துணிந்து விட்டார். என்ன விலை ஆனாலும் அரேபியா மாப்பிள்ளையை அமுக்கி விட வேண்டும். ஜெரினாவின் கழுத்தில் கரிசமணிமாலை விழுந்தபோது மொய்து சாகிபின் கடுமையான உழைப்பில் உருவான அந்த இரண்டு கடைகளுக்கும் கால் முளைத்துவிட்டது. அன்றுதான் அவரின் உடம்பில் சீணம் விழுந்தது. “அப்பா வந்தாச்சு…”வராண்டாவில் ஓடி விளையாடிக் கொண்டிருந்த பேரன் பேத்திகளெல்லாம் மொத்தமாகக் கூடினார்கள். மொய்து சாகிபு சாப்பாட்டுப் பொட்டலத்தோடு ஆஸ்பத்திரி அறையில் வந்து “படைச்சவனே..”என அமர்ந்தார். ஜெரினா ஒருக்களித்துப் படுத்துக் கிடந்தாள். வாப்பாவைப் பார்க்க அவளுக்குப் பாவமாக இருந்தது. அஸ்மா பொட்டலங்களை வாங்கிக் கொண்டு பானுவிடம் கொடுத்தபடி “புள்ளைகளுக்கு கொடுரம் கேட்டியளா… காரு ரெடி பண்ணி வைங்கோ… ஓங்க சம்மந்தக்காரிக்கு அனுப்பணும்.. எலிசபெத்து ராணி கரெக்டா வருவாளாம்..” ஒரு நர்ஸ் உள்ளே வேகமாக வந்தாள். டாக்டர் கொடுத்த மருந்துச் சீட்டை நீட்டினாள். மொய்து சாகிபு மறுபடியும் மெல்ல மெல்லப் படியிறங்கினார். பானு வெளியே வந்து படியிறங்கிப் போகும் வாப்பாவைப் பாவமாய்ப் பார்த்துக் கொண்டே உள்ளே வந்து அக்காவிடம் சொன்னாள். "ஏம்புளா… ஒனக்க கொழுந்தன்மாரே எவனையாவது வரச்சொல்லி உடப்புடாதா.. வாப்பாவுக்கு ஏறயும் எறங்கயும் கழியாதுல்லா…. ஜெரினா பதில் ஒன்றும் சொல்லவில்லை. வராண்டாவில் ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் மெல்ல மெல்ல நடந்தாள். அருகில் ஆதரவாய் அவள் புருஷன். ஜெரினாவின் அறையை இரண்டு மூன்று தடவை அங்கேயும் இங்கேயுமாகக் கடந்து போனார்கள். மறுபடியும் கடந்து போகும் போது ஜன்னல் வழியாகப் பார்ப்பதற்காகப் பார்வையைத் தீட்டி வைத்துக் கொண்டிருந்தாள். நான்காவது முறையாக நடந்து போகும்போது அந்தப் பெண்ணின் தோளில் அவள் புருஷனின் கரம் இருந்தது. ஜெரினாவுக்குள் அந்த நினைவு பளிச்சென்று மின்னியது. அவளின் தோளில் கைவைத்தபடி சலீம் மெல்ல அவளை நடத்திக் கூட்டிப் போகிறான். கண்களில் சிறுதுளியாய்க் கண்ணீர் திரண்டது. ஜெரினா மொத்தமாக முகத்தைத் துடைப்பதைப் போல் கண்களைத் துடைத்துக் கொண்டாள். கல்யாணம் முடிந்த நாற்பதாவது நாள் கதவுக்குப் பின்னால் நின்ற ஜெரினாவின் கண்ணீரைக் கூட துடைக்க முடியாதவனாய் சலீம் அரேபியாவுக்குப் புறப்பட்டுப் போனான். இருபது நாட்களுக்குப் பிறகு கடிதம் வந்தது. சுகசெய்திகளுக்குப் பிறகு ம்மாவின் சொல் கேட்டு நடக்க வேண்டும் என சலீமின் ஆணை . அவள் உண்டானதை உணர்ந்தபோது அவளின் அகம் சலீமின் முகத்தைத் தேடியது. கடிதம் கொண்டு போனது ஜெரினா கருவுற்று இருக்கும் செய்தியை ஜெரினாவுக்கு சலீமின் முகம் காணும் ஆவல் அதிகரித்துக்கொண்டே போனது. அவன் அணைப்புக்கிடையே சிக்கிக் கிடந்ததும், அந்த அணைப்பின் கதகதப்பும் அவள் நினைவில் வந்து முள்ளாய்க் குத்தியது. தொழுகைப் பாயில் நீண்டதுவாக்களும் சூராக்களும் என நீண்டு கொண்டே போயின; இரவுகளும் அப்படித்தான். " வெவ்வேறு வடிவமாக மாறிவந்த ஜெரினாவின் உப்பிய வயிற்றைச் சலீம் பார்த்ததில்லை. அவளின் அடிவயிற்றில் எழுந்த சிசுவின் துடிப்பை அவனின் கரம் தொடுதல் மூலம் உணர்ந்ததில்லை. தன் உப்பிய வயிற்றையும், தாய்மை நிரம்பிய முகத்தையும் அவன் காணவேண்டும் என்பதெல்லாம் அவளின் உள் விருப்பங்களாக இருந்தன. இரண்டு வருடங்களுக்குப் பிறகு சலீம் ஊருக்கு வந்தபோது அவனைக்கண்டு மிரள மிரள விழிக்கும் ஒரு வயது தாண்டிய ஓர் ஆண்மகன். எல்லோரும் சொல்லிக் கொடுத்தார்கள். “இதுதான் வாப்பா.” குழந்தை அழுது கொண்டு ஜெரினாவிடம் ஓடியது. பத்து தினங்களுக்குப் பிறகுதான் சலீமை அவன் மகன் வாப்பா என்று முழுமையாக ஒத்துக்கொண்டு ஒட்டிக் கொண்டான். வெந்து வெந்து நீறிச் சாம்பலாய்க் கிடந்த உணர்வுகள் ஜெரினாவுக்கு உயிரூட்டப்பட்டது போலத்தான் இருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் பூச்சூடிய கூந்தல். அவன் வருகைக்குப் பிறகு பூ மீண்டும் கூந்தல் ஏறியிருக்கிறது. பூவின் வாசம் அவள் நாசிக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்குத்தான். அவளின் இந்த வாழ்க்கை விசித்திரமாகத் தெரிந்தது. இந்த இரண்டு மாதங்களுக்குள் கிடைத்தவரை வாழ்ந்துவிட வேண்டும் என்ற தீவிரம் சலீமுக்கு நிறையவே இருந்தது . ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் அவனுக்கு முக்கியமானதாக இருந்தன. ஒவ்வோர் உடையாக மகனுக்குப் போட்டுப் பார்த்தான். மடியில் தூக்கி வைத்துக்கொண்டான். மார்பில் கிடத்திக் கொண்டான்… “மகன டாக்டராக்கணும்”ஜெரினாவிடம் சொல்லிச் சிரித்துக் கொண்டான். “லே… நீ அவனுட்ட ரொம்ப கொஞ்சாதே”ம்மாவை ஆச்சரியமாகப் பார்த்தான். “ஆமலே…. நீ பாட்டுக்கு இன்னும் முப்பது நாப்பது நாளுலே போவே… அப்புறம் நாங்கல்லா பாக்கணும்”சலீம் கொஞ்சநேரம் மெளனமாக இருந்தான். பட்டென்று சொன்னான். “நான் போவலே… எனக்கு இந்த பொழப்பு வேண்டாம்… நான் இங்கே ஏதாவது பண்ணப் போறேன்…”உம்மாவின் தலையில் இடி விழுந்து விட்டது. ஜெரினாவை மொறைத்தாள். அவள் சொல்லித்தான் இவன் பேசுவதாக நினைத்துக் கொண்டாள். அடிவயிறு பற்றி எரிந்து ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. அடக்கிக் கொண்டு ஆலோசித்தாள். சலீம் புறப்படும்போது மகன் சத்தம் போட்டு அழுதான். சலீம் கண்கள் கலங்கின. கதவுக்குப் பின்னால் வழக்கம்போல் ஜெரினா. அவள் கண்களில் வழிந்த நீர் அவள் சரீரத்தின் கனலைச் சாம்பலாக்கிக் கொண்டிருந்தது. ஜெரினா இரண்டாவது குழந்தை உண்டாகியிருந்தாள். முதல் குழந்தைக்கு நிறைய சம்பிரதாயங்களைச் செய்து மொய்து சாகிபு ஒடிந்தே போய்விட்டார். சம்மந்தக்காரி அடுக்கிக் கொண்டே போனாள். குழந்தைக்குப் போடும் தங்க ஆபரணங்களைப் பற்றி, அதற்கு முன்னால் ஜெரினா உண்டான நேரத்தில் மூன்று மாசப் பலகாரம், ஐந்து மாசப்பலகாரம், ஏழு மாசப்பலகாரம், ஒன்பது மாசப் பலகாரம் என குத்துப்போணியிலும், வாளியிலுமாக, சுமந்து சுமந்து மொய் துசாகிபு சுத்தமாகிப் போனார். அதன்பிறகுதான் நகைகளின் பட்டியலைச் சம்மந்தக்காரி சொன்னது. பழைய கதைகளை ஆலோசித்துக்கொண்டே அஸ்மாவிடம் சொன்னார். “பிள்ளே கொஞ்சம் மாவிடிச்சு வை… வெளவுகாரிட்ட சொல்லி முறுக்கு சுத்தணும்” “ஆமா முறுக்க கொடுத்தா… ஒம்ம மவளர் திங்கா? அங்க உள்ள ஹபுஸ் தான இடிச்சி இடிச்சி சீனிபோட்டு நல்லா முழுங்கா..” ஆனாலும் அஸ்மா மாவிடித்து எல்லா வேலைகளையும் மளமளவென முடித்துவிட்டாள். கார் பிடித்து பலகாரங்களைக் கொண்டு கொடுத்து விட்டு இரண்டாவது பிரசவத்திற்காக மகளை அழைத்து வந்தார். முதல் பிரசவத்தைப்போல ஜெரினாவுக்கு அவ்வளவாகப் பயம் இல்லை. பெண் குழந்தை பிறந்தது. சலீமுக்கு மூணு நாட்களுக்குப் பிறகுதான் தகவல் போனது. ரெண்டாவது குழந்தை பிறந்த அன்றும் சம்மந்தக்காரி நிறைய சல்லியம் காட்டினாள். “என்ன நீங்கோ… இரிக்கதுக்கு நல்ல சேர்கொண்டு போடப் புடாதா?.. எனக்க தங்கச்சி மொவ வந்தாளோ… ஒரு கப்பு ஆர்லிக்ஸ் கலக்கி கொடுத்தியாளா..?” வள்ளவிளை மாமிக்குக் கோபமாய் வந்தது. சம்மந்தக்காரி போனதும் கொட்டித் தீர்த்தாள். வலிச்சம் காட்டி அபிநயமாய்ப் பேசினாள். ’’பிள்ளா ஜெரினா… இந்த எளவுட்டே எப்படிளா காலந்தள்ளே… அவளுக்கு கெப்பர் மயிரு. ஆர்லிக்ஸ் இல்லன்னா கெடக்கமாட்டா… சேரு கொண்டு போட்டியா. பெரிய அவுலியா.. ம்மாக்க மாப்பிள்ளைக்கு சக்கரம்னு நெனச்சிருக்காளோ… காக்கா உன்னய அரைச்சி குடிப்பாளுவோ…" ’’நீங்கள் ஊருக்கு வரவேண்டும். எனக்கு ஒங்க ஞாபகமாகவே இருக்குது. மகள் உங்களைப் போலவே இருக்கிறாள். மகனும் அடிக்கடி வாப்பா எப்போ வரும் என நச்சரிக்கிறான்"இப்படியான செய்திகளோடு ஜெரினா கடிதம் அனுப்பினாள். "எனக்கும் ஒன்னையும் குழந்தையவும் பார்க்கவேண்டும் என்ற ஆவல் இல்லையா.. நான் எவ்வளவு வேதனைகளோடு இங்கு நாட்களை நகர்த்துகிறேன் என்பது உனக்குத் தெரியாது. இன்னும் கொஞ்சநாள் இருந்துவிட்டு முடித்துக்கொண்டு ஊர்வருவேன்.’’இப்படியாக செய்திகளோடு கடிதம் சலீமிடமிருந்து வந்தது. சலீமின் இரண்டாவது வருகை மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் நிகழ்ந்தது. விமான தாவாளத்தில் மகனும் மகளும். சலீமின் கண்களில் நீர் பொட்டித் தெறித்தது. சலீமுக்கு இரண்டு குழந்தைகள் வானத்திலிருந்து கிடைத்தது போலத்தான். குழந்தைகளின் அன்றாட வளர்ச்சியை அவன் அறிந்திருக்கவில்லை. குடும்பத்தில் எல்லோரும் கூடியிருந்தார்கள். எல்லோரையும் தாண்டி கண்கள் கதவுக்குப் பின்னாள் நிலைத்தன. “சொகமாக இருக்கியளா..?”இமைகள் உயர்ந்து தாழ்ந்து பேசின. கடகடவென உருண்ட ஐந்தாறு துளி கண்ணீர் கதவுக்குப் பின்னால் மறைந்து கொண்டு சேலைத் தலைப்பில் துடைத்துக் கொண்டாள். எல்லோரும் போன பிறகு சலீமின் உம்மா கேட்டாள். “எத்தனை மாசம் லீவு மோனே..?” சலீம் பதில் சொல்லவில்லை. உள்ளே ஜெரினாவைத் தேடினான். அவள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பெட்டியில் மடக்கி வைத்திருந்த சலீமுக்குப் பிடித்தமான அந்தக் கலர் சேலையைக் கட்டியிருந்தாள். கூந்தலில் மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு குண்டு மல்லிப்பூவின் குடியேற்றம். மறுநாள் ஒன்றிரண்டு உறவினர்கள் வந்துபோனார்கள். போகும்போது எல்லோர் கைகளிலும் ஒரு வெளிநாட்டுப் பொருள். எல்லோரும் மறக்காமல் கேட்ட ஒரு கேள்வி. “இனி எப்போ போணும்..?” மகளின் பள்ளிக்கூட புத்தகங்களைப் பார்த்தான். ஒட்டிக் கொண்டிருந்த மகள் விலகவேயில்லை . மகன் நிறையப் பேசினான். சலீமின் காதுகள் குளுமையாகிக் கொண்டிருந்தன. அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இவர்கள் எப்படி வளர்ந்தார்கள்? நவுழப் படித்து, எழும்பி நிற்கப் படித்து நடக்கப் படித்து? அது அவனுக்குத் தெரியவே இல்லை . ஐந்து வருடமாகிறது. இந்த ஐந்து வருடத்தில் ஜெரினாவோடு சேர்ந்திருந்த நாட்கள் நூற்றுக்கும் குறைவே. மூன்று மாதங்களுக்குப் பிறகு சலீம் மீண்டும் பயணம் புறப்பட்டான். இங்கே என்ன செய்வது என்ற கேள்வி அவன் இதயத்திற்குள் எழுந்திருக்க வேண்டும். ஏதாவது செய்தாலும் மாதம் பத்தாயிரம் ரூபாய் கிடைக்குமா? யாட்லி பவுடரும் அத்தரும் ரெடோ வாச்சியும் வருமா? அரேபியாக்காரன் என்ற கவுரவம் கிடைக்குமா?… அரேபியாகாரன் தூ… பொண்டாட்டிப் புள்ளையளுக்கு மொகத்தப் பார்க்கமுடியாத வாழ்க்கை. வெலவெலத்துப் போனான். ஆழமான ஆலோசனை அவனைப் பயப்படுத்தியது. சோர்ந்து போனான். ஜெரினாவின் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாத கோழையானான். ஆனாலும் கதவுக்குப் பின்னாலே ஜெரினாவின் கண்ணீரைப் பார்த்தும் பாராதவனாய் இரண்டு குழந்தைகளும் வாசலில் நின்று “வாப்பா, வாப்பா..?” என்று அழுத குரலைக் கேட்டும் கேட்காதவனாய்ப் போன சலீமைச் சுமந்த விமானம் மண்ணை விட்டு விண்ணில் பறந்தது, ஜெரினாவிற்கு மூன்றாவது முறையாகக் கர்ப்பம். மிச்சமிருந்த மொய்து சாகிபின் முதுகெலும்பும் முறிந்து விடும்போல இருந்தது. ஏழாவது மாதத்திலேயே மகளை அழைத்து வந்து விட்டார் சம்பிரதாயங்களில் சம்மந்தக்காரி ஒரு சுற்றுப் பெருத்து விட்டாள். மொய்து சாகிபுவின் நிலைதான் பரிதாபம். ஜெரினாவுக்கு முன்னால்தான் பானுவின் இரண்டாவது பிரசவம். எல்லாம் அரேபியா மாப்பிள்கைள். அவர் என்ன செய்வார். அவருக்குக் கள்ள நோட்டு அடிக்கும் இயந்திரம் இருப்பதாக சம்மந்தக்குடிகளில் நினைப்பு அஸ்மா கோபத்தில் மண் அள்ளிப் போட்டுத் திட்டுவாள். ஆனாலும் அவர்களைக் கண்டால் காட்டிக் கொள்ள மாட்டாள். மகளின் வாழ்க்கை .. கொடுத்த இடம்… குனிஞ்சித்தான் போகணும்… வயிற்றெரிச்சலோடு சொல்லுவாள். “படைச்சவனே… நீ பார்த்துக்கோ …” ‘’அப்பா வந்தாச்சி… அப்பா வந்தாச்சி….’’என்ற குழந்தைகளின் கூக்குரலில்தான் ஜெரினா நினைவுகளை விலக்கிக் கொண்டாள். டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டையும், மருந்தையும் அஸ்மாவிடம் கொடுத்தார். பிள்ளைகள் சூழ்ந்து கொண்டு சத்தம் போட்டனர். ’பிள்ளே பானு. அந்த நேள்ஸை கூப்பிடுளா .. எல்லாத்துக்கும் ஊசிப்போட்டாத்தான் -" அஸ்மா முடிக்கு முன்னால் குழந்தைகள் மெளனமாகின. நர்ஸ் வந்து மருந்தை வாங்கிப் போனாள். அஸ்மாதான் ஒரு தட்டில் மூன்று இட்லிகளை வைத்து மொய்து சாகிபுவிடம் கொடுத்தாள். வாப்பா… இங்கே இரிங்கோ.."பானு எழுந்து கொள்ள மொய்து சாகிபு பெஞ்சிலிருந்து இட்லியைப் பிய்த்து வாயில் போட்டார். கட்டிலில் படுத்திருந்த ஜெரினாவிற்கு வலி ஆரம்பித்தது. அஸ்மா ஓடிப்போய் நர்ஸிடம் சொன்னாள். நர்ஸ் வந்து பார்த்துவிட்டுப் பிரசவ அறைக்குப் புறப்படச் சொன்னாள். வலி கூடியது. ஜெரினா மெல்லச் சத்தமிட்டாள். “கொஞ்சம் பொறுத்துக்கோ”அஸ்மா சொல்லிக்கொண்டே ஜெரினாவைக் கைத்தாங்கலாய்ப் பிடித்துக்கொள்ள, இட்லியை வைத்துவிட்டு மொய்து சாகிபு எழுந்தார். ஜெரினாவைப் பிரசவ அறைக்கு அழைத்துப் போனார்கள். மொய்து சாகிபு மெல்லப் படியிறங்கினார். சப்போட்டாக கைப்பிடிச் சுவரைப் பிடித்துக்கொண்டேதான் இறங்கினார். மூச்சு வாங்கியது. சாவு முதல் -முகம்மது முஸ்தபா அக்பர் ஆஃபீசிலிருந்து வீட்டுக்கு வரும்போதே லேசான பயத்துடன்தான் வந்தான். இன்று வீட்டின் வெப்ப நிலை எப்படி இருக்குமோ? வாசல் படிக்கட்டில் உட்கார்ந்திருந்த அம்மாவின் இயல்பான முகம் ஆறுதலைத் தந்தது. நல்ல வேளை. "சமீரா வீட்டில் இல்லை. அம்மாவிடம் கேட்டால் அலுப்பாகப் பதில் சொல்வாள். லுங்கிக்கு மாறி ஹாலில் உட்கார்ந்தான். சிச்சன், சிட்டவுட், ரீடிங் ரூம் என்று மல்டி பர்பஸ் ஹால். மற்றும் படுக்கை அறையாகவும், ஸ்டோர் ரூமாகவும் இருக்கும் அறை , ஒண்டுக் குடித்தனம். காஃபி சாப்பிட்டால் கொஞ்சம் புத்துணர்ச்சி வரும். சமீரா எங்கே போனாள் என்று தெரியவில்லை. அம்மாவிடம் சொல்லிவிட்டுதான் போயிருப்பாள் என்று எதிர்பார்க்க முடியாது. மனசு எப்படியோ அப்படி . சமீரா, அம்மாவை மதிப்பதில்லை என்று தெளிவாகத் தெரிகின்றது. மனசுக்குள் புழுங்குவதைத் தவிர வேறு வழியில்லை. சமீராவிடம் இதைப்பற்றிக் கேட்க முடியாது. அம்மாவைப் பற்றிப் பேச்சை எடுத்தாலே அவளுக்குப் பொங்க ஆரம்பித்து விடுகிறது. எப்படியும் அம்மாவுக்காகப் பரிந்து பேசுவதில்தான் இது முடியும் என்று அவளுக்குத் தெரியும். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை… என்று வெகு அலட்சியமாக அவள் சொல்லி விடுவாள். சொல்லும் தோரணையிலேயே அது அப்படித்தான், அதனால் என்ன என்று கேட்பது போல இருக்கும். ஊரில் மாமியாரை மருமகள்கள் படுத்தும் பாட்டைப் பட்டியலிட்டு, தான் அவர்களைவிட மேல் என்று வாதாட ஆரம்பித்துவிடுவாள்; இது முடிய நீண்ட நேரம் ஆகும். சமீராவை மடக்கிப் பேச எனக்கு வாய் போதாது. எத்தனை நேரம் வாய்ச்சண்டை போட முடியும்? பின் வாங்குவதைத் தவிர்க்க முடியவில்லை. அம்மா, வீட்டு சாகுலின் அம்மாவை இழுத்து உட்காரவைத்துப் பேச ஆரம்பித்துவிட்டாள். எவ்வளவு நேரம்தான் அவள் தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாள்? அவர்கள் பேசுவதை அக்பர் போன்ற இளைஞர்கள் கேட்க முடியாது. பேச்சு எங்கே சுற்றி வந்தாலும் கடைசியில் மருமகள்கள் அனைவரும் மனிதாபிமானமே இல்லாத ஜென்மங்கள் என்ற முடிவை, இந்த முன்னால் மருமகள்கள் நிலை நிறுத்திவிடுவார்கள். இவளுக்கு வாய்த்த மருமகள் சரியில்லைதான். ஆனால் எத்தனையோ நல்ல மருமகள்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் புரிந்துகொள்ள விரும்பாத மாமியார்களுக்கு உதாரணம் சாகுலின் அம்மாதான். அவன் மனைவியும் இயல்பாகவே நல்ல சுபாவம் உள்ளவள்தான். அவளைக் கோபப்பட்ட வைப்பது அத்தனை சுலபமல்ல. அவளையே குற்றம் சொல்லும் சாகுலின் அம்மாவின் பேச்சு, குற்றம் சாட்டவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இருக்கும்; அக்பருக்கு அவளைப் பிடிக்காது. டேப்ரிகார்டரை இயக்கினான். என்ன பாட்டு என்று கூடக் கவனிக்காமல், வாரப் பத்திரிக்கையைப் படிக்க ஆரம்பித்தான். காதில் பஞ்சுக்குப் பதிலாகப் பாட்டு… நாலு பக்கங்களைப் புரட்டுவதற்குள் மின்சாரம் நின்றுவிட்டது. டிரான்சிஸ்டர் முதல் கிரைண்டர் வரை நின்று, நிசப்தம் நிலவியது. வினாடிகளில் சாகுலின் அம்மா பேச ஆரம்பித்துவிட்டாள். "இப்ப எனக்கு பிரச்சனை இல்லை. என் மருமக திருந்தி நல்லவிதமாக நடக்க ஆரம்பிச்சிட்டா. ஏதோ நேரம் கொணம் கெட்ட மாதிரி நடந்துகிறதுதான்’’என்று தன் பேச்சை முடித்துவிட்டுக் கிளம்பிவிட்டாள். அவளிடம் தெரிந்த உற்சாகம், அக்பருக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது என்ன அநியாயமாக இருக்கிறதே - மருமகளை மாமியார் புகழ்வதாவது? அதுவும், மருகளைப்பற்றித் தாறுமாறாகப் புகார் சொல்லி மூக்கைச் சிந்திக் கொண்டிருந்தவள், அப்படியே மாற்றிப் பேசிக் கொண்டிருக்கிறாள் என்றால்? ஆவல் உந்த எட்டிப்பார்த்தான். இப்படியே இருந்தால் எத்தனை இதமாக இருக்கும்? மலர்ச்சிதானே முகத்துக்கு அழகு - மலர்ந்த மலரின் அழகு. அவர்களோடு இவ்வளவு நேரம் இருந்த அம்மாவுக்கு அந்த உற்சாகம் தொற்றியிருக்கும் என்று ஆவல் பொங்க அவர்களைப் பார்த்தான். தொங்கிப் போயிருந்தது; ஏன்? ஏன். ஐ தள்ளி வைத்துவிட்டு, “சாகுலின் அம்மா சந்தோஷ மூட்லே இருக்குற மாதிரி தெரியுது… ஆச்சர்யமாக இருக்கே?” - என்றான். "அவங்க பொறந்த வீட்டுலே நடந்த பாகப்பிரிவினையிலே பத்து பவுன் கெடைச்சது. எல்லாம் அந்தக் காலத்து கெட்டி நகைங்க. அதுவும் வயசான காலத்துலே கிடைச்சா, சந்தோஷம் பொங்காதா? - என்றாள். என்ன இருந்தாலும் அவளும் பெண்தானே! வயது போனாலும் ஆபரண ஆசை விடுகின்றதா? அவளிடமும் நகைகள் இருந்தன. வியாபாரம் நொடித்துப்போன அதிர்ச்சியில் படுக்கையில் விழுந்த அப்பாவைக் காப்பாற்றும் முயற்சியில் நகைகளை ஒவ்வொன்றாக இழந்தாள்; அப்பா இறந்து போனார். பாவம் அம்மா! தனக்கென்று எதுவுமே இல்லாத வெறுமையில் இருப்பதாக நினைத்துக்கொண்டு தாழ்வு மனப்பான்மையில் நொந்து போயிருக்கிறாள். என்ன செய்ய, சமீராவின் நெக்லஸ் மூன்றாவது வருடமாக பாங்கில் சிறைப்பட்டுக் கிடக்கும்போது அம்மாவுக்காக எதை வாங்கித்தர முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்தான். அக்பர், தன் அப்பாவின் மரணத்தின்போது கடன் வாங்க வழியில்லாமல் தவித்துப்போனான் (எல்லாம் முன்னேயே வாங்கியாகி விட்டது). அம்மாவின் கடைசி நகையான கை வளையலை அந்தச் சந்தர்ப்பத்தில் கேட்க மனமில்லாமல் அக்பர் தவித்தபோது, சமீராவே முன் வந்து மாமியாரின் கடைசி நகையைக் காப்பாற்றியதன் அடையாளம்தான் அவளின் நெக்லஸ். தாய் வீட்டு வரவு அது “இந்த வயசுக்கப்புறம் நகைங்க போட்டுக்கறதுல எவ்வளவு சந்தோசப் படராங்கம்மா சின்ன பொண்ணாட்டாம்.” - என்றான். அம்மாவின் நகை ஆசையை மட்டுப்படுத்தவேண்டியது அவசியமாகிவிட்டது. "அது நகை மேலே இருக்கிற ஆசை இல்லேப்பா. சாவு நல்ல விதமா அமையணுமேங்கிற பயம்!’’ - என்றாள். ’’சாவுக்கும் நகைக்கும் என்ன சம்பந்தம் ன்னு புரியல்லையே?"என்றான். “மரணப் படுக்கையிலே கெடக்கும்போது, மரணத்துக்கு பிறகும் தன்னால் மத்தவங்களுக்கு திடீர்சுமை ஏற்படக்கூடாது. அப்படி பொறுப்பெடுத்து செய்யுறவங்களுக்காக ஒடம்புல நகை இருக்கணும்னு பொம்பளைங்க ஆசைப்படுவாங்க. கடைசி காலத்துலே பராமரிச்சு எடுத்து போடுறவங்க, அந்த நகையை எடுத்துக்கலாம்; அதுதான் சாவு மொதல்”என்றாள் அம்மா. பெற்ற தாயின் மரணம் கூட சுமையாகிவிடுமா என்ற கேள்வி அருவருப்பைத் தந்தது. தன் ஜனனத்துக்குக் காரணமான அப்பாவின் இறுதிச் செலவுக்கு எத்தனை அலைய வேண்டியதாகிவிட்டது. யார் யாரிடமோ கெஞ்சி வாங்கிய கடனை அடைப்பதற்குள் எத்தனை படவேண்டியிருந்தது? சுமை பாசத்தைப் பொருத்தது மட்டுமல்ல, கனத்தைப் பொருத்ததும் கூட. செத்ததே செத்தார், படுக்கையில் கிடக்காமல் திடீரென்று செத்திருந்தால் நன்றாக இருத்திருக்குமே என்ற எண்ணம் வராமலா இருந்தது? சாவு வயது பார்த்தா வருகின்றது? ஒரு வேளை அம்மாவுக்கு முன்னால் நாம் போய்விட்டால்? சமீராவிடம் அம்மா இருக்க முடியுமா? பலமான சிந்தனையில் மூழ்கிப்போனான் அக்பர். அம்மாவுக்குச் சாவு முதல் வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்துவிட்டான். ஆனால் எப்படி ? சமீராவின் ஒரே நெக்லசை மீட்டும் முயற்சி தொடர்ந்து தோல்வியைத் தழுவும்போது புதிதாக நகை செய்ய முடியுமா? அதுவும் சமீராவின் மாமியாருக்கு!’ - என்று யோசித்தபடி ஒரு மாதத்தைக் கடத்திவிட்டான். எப்படியும் அம்மாவுக்குப்பிறகு அந்த நகை சமீராவுக்குத்தானே! அவளைச் சமாதானப்படுத்திவிடலாம். ஆனால் எப்படி? ஒரு கல்ஃப் ரிடர்ன் நண்பனின் கேமராவை விற்றுத் தரும்படி நேர்ந்தது. அவன் இருநூறு ரூபாயைப் பையில் திணித்தான். அட இதுதான் வியாபாரமா என்று ஆச்சர்யப்பட்டான் அக்பர். மெல்லிய ஆர்வம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை . அதிக சிரமம் இன்றி இந்த வியாபாரம் விரிவடையும் என்று அக்பர் எதிர்பார்க்கவில்லை. இந்த வியாபார வாய்ப்பு எத்தனையோ முறை அமைந்திருக்கிறது. தவிர்க்க முடியாமல் அவனும் செய்திருக்கிறான். பணம் பண்ணிக்கொள்ள நினைத்ததில்லை. நட்புரீதியான உதவி மூலம் ஆதாயம் தேடிக்கொள்வதில் உறுத்தல் இருந்தது. இப்போது பணத்தின் தேவை உதவியை, வியாபாரமாக மாற்றிவிட்டது. முதல் இல்லாமலேயே சிறு சம்பாத்தியம் பண்ண முடிந்தது. ஆறு மாதத்தில் ரூபாய் 5000/ -உபரி வருமானமாகக் கிடைத்திருப்பது சமீராவுக்குத் தெரியாது. அக்பர் தயாரித்து வைத்திருந்த செயல் திட்டத்தின்படி தாத்தாவைப் பார்க்கப் போனான். மகளின் நலனுக்காக அவர் உதவுவார் என்ற நம்பிக்கை. சிறு பொய் குற்றமாகிவிடாது என்று தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டான். இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் தாத்தாவிற்கு வயது எண்பது போன் வாங்கி வந்த ஆப்பிளையும், ஆரஞ்சையும் அனுபவித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். வீட்டில் குழந்தைகள் இருப்பதை அவர் கவனத்திற்குக் கொண்டுவரலாமா என்று இருந்தான். ஆனால் அக்பர் சொல்வதைக் கேட்டுக்கொண்டே அவர் சாப்பிடும் வேகத்தைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது வயது ஆகிவிட்டால் மனசு இப்படி அலையுமா?! அம்மாவுக்காக நகை செய்ய விரும்புவதில் அவருக்கு சந்தோஷம் பொங்கியது. “நல்லது அக்பர்! நகை வாங்கிப் போட்டா அவ மனசுக்கு தெம்பா இருக்கும்” என்றபடி அவன் தோளில் தட்டினார். “நான் வாங்கித் தந்தா, சமீராவால பிரச்சனை வரும். அதனால் நீங்க வாங்கித் தந்ததா இருக்கட்டும், இந்த ஐயாயிரத்துலே வளையல் வாங்கிட்டு, அடுத்த மாதம் வீட்டுக்கு வாங்க,”அவன் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டார். ஆனால் அத்தனை வேகமாக அந்தப் பணத்தை இவனிடம் திணிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. அவர் முகம் வெளிறிப் போயிருந்தது. இருவரும் கொஞ்ச நேரம் பேச்சற்று இருந்தனர். “ஏற்கனவே பொறந்த பொண்ணுங்களுக்கு நெறைய செஞ்சி புள்ளையை ஓட்டாண்டி ஆக்கிட்டேனுன்னு என் மருமகள் கரிச்சுக் கொட்டிக்கிட்டு இருக்குறா.- அந்த இடியையே வாங்கி கட்டிட்டு ஆகலை. அவ எதைச் சொன்னாலும் நம்ப மாட்டா. போற காலத்துலே எனக்கு ஏன் பிரச்சனை? அவளோட ஒத்துழைப்பு கண்டிப்பா தேவைப்படற இந்த நேரத்துல இது வேணாம்ப்பா!” - என்று தாத்தா சொன்னார். தோய்வுடன் வீட்டுக்கு வந்தான். வாசலில் சாகுலின் அம்மா மூக்கைச் சிந்தியபடி அம்மாவிடம் கொட்டிக் கொண்டிருக்கும் பழைய காட்சியை மீண்டும் பார்த்து ஒன்றும் புரியாமல் நின்றுவிட்டான். அவள் எழுந்து போய்விட்டாள். மெருகு மீண்டும் மைனஸ் ஆகியிருந்தது. “என்ன ஆச்சு அவங்களுக்கு?”என்றான். "எல்லாம் தலையெழுத்துதான். அவங்களோட ரெண்டு பொண்ணுங்களும் இப்பவே அந்த நகைகளை பிரிச்சி கொடுக்கச் சொல்லுறாங்க. மருமகளுக்கு கொடுத்துடுவாங்களோன்ற பயம். நகையை தந்துட்டா மருமக என்ன பண்ணுவாளோன்னு இவங்களுக்கு பயம்“என்ற அக்பரின் அம்மா.”பொம்பளை ஜென்மத்துக்கு வயசாயிட்டாலே கஷ்டம்தான்"என்றாள். "தாத்தா ஆண் பிள்ளைதான், அவருக்கு மட்டும் என்ன வாழுதாம்?’’என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். “மருமகளுக்குப் புரியணும், இல்லே பெத்த புள்ளைகளுக்காவது புரியணும்… புரிஞ்சாதானே!’’ - என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவள் சொன்ன தொனியே”நீயும்தானேடா!’ - என்று சொல்வது போல இருந்தது. மகனுக்குக் கல்யாணம் செய்து பார்த்து சந்தோஷப்படும் அம்மாக்கள், அவனுக்கு இருக்கும் நிர்ப்பந்தங்கள், கடமைகளைப் பற்றிய ப்ரக்ஞை இல்லாமல் இருப்பது சாபக்கேடுதானே! இவர்கள் கயநல அம்மாக்கள்! அல்லது சுயநல மாமியார்கள்? நெக்லஸை மீட்டுத் தந்து சமீராவுக்கு ஒரு சந்தோஷ அதிர்ச்சியைத் தந்துவிட்டு, அம்மாவைப் பற்றிப் பேசிப் பார்ப்போம், பலன் இல்லாமலா போய்விடும் என்று நினைத்தபடி பெருமூச்சு ஒன்றைச் செலவு செய்தான் அக்பர். செப்புத் தூக்கி -ஹ.மு, நத்தர்ஷா பகல் பதினொன்று இருக்கும். வீதியில் நடந்து செல்பவர்களை சிறியவர் பெரியவர் என்று வித்தியாசம் பார்க்காமல் தன் சுடுகதிர் வீச்சால் வறுத்தெடுக்கும் சூரியன், தன் வேலையில் சற்று முனைப்பைக் காட்டத் தொடங்கியிருந்த நேரம். வீட்டுப் பெரியவர்கள் மார்க்கெட் சென்று வந்த களைப்பில் அன்றைய நாளேட்டில் முகம் புதைந்து கிடைந்தார்கள். ‘சல்லிசாக’ ஆண்கள் வாங்கி வந்திருந்த மீனின் நாற்றத்தைத் தாங்க முடியாமல், மனதுக்குள் திட்டியபடி - வேறுவழியின்றிச் சலிப்புடன் அவன் பெண்கள் மீன்களை ஆய்ந்து கொண்டிருந்தார்கள், வக்திற்கு வக்த் மட்டுமே வாய் மலரும் பெரிய பள்ளி வாசல் ஒலிபெருக்கி, வழக்கத்திற்கு மாற்றமாய் ஒலிக்கத் தொடங்கியபோது ஊரில் அனைவரின் காதுகளும் சட்’டெனக் கூர்மையாகி ஒலிபெருக்கியின் அன்றைய சிறப்பு ஒலிபரப்பைக் கேட்கத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டன. “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், பெரிய பள்ளி முஹல்லாவைச் சேர்ந்த செப்புத் தூக்கி’அப்துல் ஜப்பார் மௌத்து. இன்று மாலை நாலு மணிக்கு கிதர் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.” ஒலி பெருக்கி மூன்று முறை ஒலித்து ஓய்ந்தது. எல்லாருடைய நாவுகளும் சொல்லிவைத்தாற்போல் அனுதாப வார்த்தைகளால் அதிர்ந்தன. பாவம், அப்துல் ஜப்பார்! இந்த ஊருக்கு உழைப்பதற்காகவே பிறப்பெடுத்த விசித்திரமான ஒரு ஜீவன், அவன்! அவனைப் பயன்படுத்திக் காரியம் சாதித்துக் கொள்ளாதவர்கள் அந்த முஹல்லாவில் ஒருவர் கூட இல்லையென்று அடித்துக் கூறலாம். கல்யாண வேலையா? வீட்டு வாசலில் நாற்காலிகளைக் கொண்டு வந்து போட்ட ஆட்கள் தேவையா? கல்யாண வீட்டில் மிஞ்சிப் போன சோற்றை - உனக்கு எனக்கு என்று அடித்துக் கொண்டு நெருக்கும் முஸாபிர்களுக்குப் பகிர்ந்தளித்துச் சமாளிக்க வேண்டுமா? - எல்லாவற்றுக்கும் ‘செப்புத் தூக்கி’ அப்துல் ஜப்பார் தேவைப்பட்டான் கல்யாண வீட்டு வேலைகள் என்றில்லை, மையித்து வீட்டுக் காரியங்களுக்கும் அவன் உதவி தேவைப்பட்டது. மஞ்சுப் பெட்டிக்குச் சொல்லியனுப்ப, குழி வெட்டியைக் கூப்பிட்டு வர, கபன் துணி மாற்ற ஆட்களை அழைத்து வர, சமயம் பார்த்து தலைமறைவாகும் மோதினாரை எப்படியாவது கண்டுபிடித்து மையித்து வீட்டின் முன் கொண்டு வந்து நிறுத்த, எல்லா முஹல்லாவைச் சேர்ந்த பள்ளிவாசல்களுக்கும் தகவல் கொடுத்து மௌத்துச் செய்தியை ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புச் செய்ய ’செப்புத் தூக்கி’அப்துல் ஜப்பார் தேவைப்பட்டான். ’செப்புத் தூக்கி’என்ற பட்டப் பெயரை அவன் பெற்றதற்கு ஒரு சுவையான காரணம் உண்டு. மையித்து வீட்டில் மையித்து ஊர்வலம் புறப்படுவதற்கு முன்பு, அதை அடக்கும் இடத்தில் காத்திருக்கும் முஸாபிர்களுக்குக் கொடுப்பதற்காக, கப்ருஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்படும் பொறிச்ச பரோட்டா - வாழைப்பழம் அடங்கிய செப்பை எடுத்துச் செல்லும் பொறுப்பை அவன் ஒருவன்தான் அந்த ஊரில் பொறுப்புணர்வுடன் செய்து வந்தான். எனவே ’செப்புத் தூக்கி’என்று ஊர்மக்கள் அவனைச் செல்லமாக அழைத்தார்கள். ஊரில் நடக்கும் “நல்லது கெட்டது” போன்ற வைபவங்கள் போக மற்ற நேரங்களில் அவனுடைய நிரந்தர இருப்பிடம் - பெரிய பள்ளிவாசல் திண்ணைதான். ஊரின் மையப்பகுதியில் அமைந்த கலையழகு மிகுந்த, அந்தப் பள்ளிவாசலில் எல்லா வக்த்திலும் மக்கள் போட்டிப் போட்டுக்கொண்டு வரிசையில் நிற்பார்கள். ஆனால், இவன் மட்டும் தொழ மாட்டான். எப்படித் தொழ முடியும்? தொழுபவர்கள் அத்தனைபேரின் புதுச் செருப்புகளும் இவனுடைய கண்காணிப்பில் இருக்கும்போது, அந்தப் பொறுப்பை உதறித் தள்ளிவிட்டு ஓடிவர இவனால் முடியுமா? செருப்புகளைக் கண்காணிக்கும் பொறுப்பை இவன் ஏற்றுக் கொண்ட பிறகுதான் - அனேகமாக - புதுச் செருப்பு வாங்கிய அனைவரும் தைரியமாகப் பள்ளிவாசலுக்கு வரத் தொடங்கினார்கள். இல்லையென்றால் தொழுகை முடிந்து வருவதற்குள் செருப்புகளுக்குக் கால் முளைத்துத் தைரியமாக ஓடிவிடும். மேற்கில் குனிந்து தலை தரையைத் தொட்டு முத்தமிட்டாலும், மனம் மட்டும் கிழக்கில் வளைந்து கழற்றி வைத்த செருப்பு பத்திரமாக இருக்கிறதா என்று உஷாராகக் கண்காணித்துக் கொண்டிருக்கும். அந்தக் கண்காணிப்பு வளையத்தையும் கடந்து செருப்புகள் காணாமல் போய்க்கொண்டிருந்த தொல்லை - இவன் அதற்குப் பொறுப்பேற்ற பிறகுதான் மாறத் தொடங்கியிருந்தது. வெள்ளிக்கிழமைகளில் ஜும் ஆ முடித்து திரளாகக் கலையும் கூட்டத்தில் விளம்பர நோட்டீஸ்கள் கொடுக்க, சங்கங்கள் விடுக்கும் பொருளாதார வேண்டுகோள்களைப் பொதுமக்கள் பார்வையில் எட்டச் செய்ய, ஊர்ப் பெரியவர்கள் பெருமையைப் பறைசாற்றும் அல்லது போலித்தன்மையைத் தோலுரித்துக் காட்டும் துண்டறிக்கைகளை விநியோகிக்க - இப்படி சகலத் தரப்புகளுக்கும் அவன் தேவையாக இருந்தான். சில நேரங்களில் முத்தவல்லிகளைத் தாக்கிக் கூட காரசாரமாகத் துண்டறிக்கைகள் வெளிவரும். அச்சாபீஸ் வரை செல்லத் துணியும் ‘முற்போக்குவாதிகள்’, விநியோகம் என்று வரும்போது செப்புத் தூக்கி அப்துல் ஜப்பாரிடம் ஒப்படைத்து விட்டு நைசாக நழுவி விடுவார்கள். என்ன செய்கிறோம் என்று தெரியாமலே எல்லாவிதமான பொதுக்காரியங்களையும் துணிந்து செய்யும் அப்பாவியாதலால் ஊர்ப்பெரியவர்களும் இவன் மீது கோபம் கொள்ளமாட்டார்கள். இப்படி ஊருக்குச் செல்லப்பிள்ளையாக இருந்த அப்துல் ஜப்பார் - ஊர்மக்களின் மௌத்துச் செய்திகளை எடுத்துச் செல்லும் தாதுவனாக விளங்கிய அப்துல் ஜப்பார் - இதோ, ஒலிபெருக்கியின் சோக முழக்கத்தில் - தன் பெயரையும் இடம் பெற்றச் செய்துவிட்டு - மீளாத் துயிலில் ஆழ்ந்து கிடக்கின்றான். அஸர் தொழுகை முடிந்தது. பள்ளிவாசலின் இடது கோடியில் இருந்த மிகப் பெரிய ஹாலின் மத்தியில் ஒரு பெஞ்சில், தலைமாட்டில் ஊதுபத்தி நறுமணத்தைக் கக்கிக்கொண்டு நிற்க, பக்கத்தில் யாரும் வந்து பார்க்கவில்லையே என்று கவலைப்படாமல், போர்த்தப்பட்ட கபன் துணிக்குள், அமைதியாகக் கண்மூடிக் கிடந்தான் அவன். “அப்பாடா! தொல்லை ஒழிந்தது” என்ற சந்தோஷம் அவன் முகத்தில் வியாபித்திருந்தது. ஊர்மக்கள் சுரத்தெதுவும் இல்லாமல் மரத்துப் போனவர்களாய் ஆங்காங்கே குழுமியிருந்தார்கள். அனாதை மையித்து. எப்போது எடுத்தால் என்ன, எங்கே அடக்கினால் என்ன என்ற அலட்சியம் அனைவர் முகங்களிலும் தெரிந்தது. அஸர் தொழ வந்தவர்களில் பாதிபேர் ‘தலைக்குமேல் ஒரு வேலையைத் தூக்கிப் போட்டுக் கொண்டு’ தலைதெறிக்க ஓடினார்கள், தொழுகை முடிந்து மக்ரிபு தொழுகைக்கு பாங்கு சொல்லும் வரை வழக்கம்போல் பள்ளித் திண்ணையில் உட்கார்ந்து அரட்டையடிக்கும் இளைஞர் அணி என்றுமில்லாத அதிசயமாய் மாயமாக மறைந்து போனது. மோதினார் முக்கிக்கொண்டே இறுதிச் சடங்குகளுக்குரிய கடமைகளைச் செய்தார். மையித்து எடுக்கும் நேரத்தில் இருந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒரு இருபது பேர் தவறினால், அதுவே ரொம்ப அதிகம்! ஏழை மையித்தாக இருந்தாலும் பள்ளிவாசல் நிர்வாகம் ஒரு கண்ணியமான அடக்கத்திற்கு உரிய எல்லா ஏற்பாடுகளையும் பொறுப்பாகச் செய்திருந்தது. எல்லா முத்தவல்லிகளும் - வராவிட்டாலும் இரண்டொரு முத்தவல்லிகள் - வேறு வழியில்லாமல் - வந்து நின்று மையித்துக் காரியங்களைக் கவனித்துக் கொண்டார்கள். ஏழை மையித்துக்களை அடக்கம் செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் சங்கம் ஒன்று தன்னுடைய தொண்டர் படையை வழக்கம்போல் அனுப்பி வைத்திருந்தது. தொண்டர்கள் எல்லோரும் விடலைகள். என்ன செய்வார்கள், பாவம்? இன்றைய மேட்னி ஷோ சினிமாவைக் கெடுத்து விட்டானே என்ற கோபத்தில் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு இறுதிச் சடங்குகளுக்கு உரிய வேலைகளைப் பரபரப்பாகச் செய்து கொண்டிருந்தார்கள். இதோ - மையித்துப் பெட்டி வந்துவிட்டது. பெட்டியின் மேல் போர்த்த போர்வையும் பூப்படுதாவும் கூடத் தயார். தூக்கிச் செல்வதற்கும் ஆட்கள் தயாராகக் காத்திருந்தார்கள். ஒரே ஒரு விஷயம் மட்டும் அவர்களைத் தயங்க வைத்துக் கொண்டிருந்தது. அதோ, அந்தச் செப்பு! அடக்கத்தலத்தில் பசியுடன் காத்திருக்கும் முஸாபிர்களுக்கு விநியோகிக்கத் தயார் நிலையில் வைத்திருக்கும் செப்பு வழக்கம் போல் பொறிச்ச புரோட்டாவும் வாழைப்பழமுமாக நிரம்பி வழிந்து எல்லோரையும் பார்த்து இளித்துக் கொண்டிருந்தது - அந்தச் செப்பு ! வழக்கமாக. அதை எடுத்துச் செல்பவன், இதோ இறைவனின் பாதையில் தன் பயணத்தைத் தொடங்கி விட்டான். அவன் இறக்கிவைத்த செப்பை அவனுக்காகத் தோளில் சுமந்து தூக்கிச் செல்லத் துணிபவர் யார்? வந்திருந்தவர்கள் எல்லாரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு திகைத்துப்போய் நின்றார்கள். கொண்டு வந்து தந்தால் பங்கு போட்டுத் தின்னத் தயாராக இருக்கும் முஸாபிர் கூட்டம் சொல்லிவைத்தாற்போல் தலைமறைவாகியிருந்தது! எல்லாரும் கோபமாக மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத அந்த அதிசயம் நடந்தது! தற்செயலாக, பெரிய பள்ளிவாசலில் அஸர் தொழ வந்திருந்த சுஹைல், வழக்கத்திற்கு மாறாகப் பள்ளிவாசலில் சிறு கும்பல் கூடியிருப்பதைப் பார்த்து என்ன ஏது என்று விசாரித்தான். அனாதை மையித்தாகக் கிடந்த செப்புத் தூக்கி அப்துல் ஜப்பாரின் மீது அவன் பார்வை படிந்தது; இதயத்தின் ஓரத்தில் இரக்கம் சுரந்தது. சுஹைல் - இன்றைக்குச் சிங்கப்பூரில் மிகப் பெரிய தொழிலதிபர். சென்னையில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், பம்பாயில் டைமண்ட் பிசினஸ், கொடைக்கானலில் பங்களா என்று கொடிகட்டிப் பறந்தாலும் அவன் உள்ளம் தறிகெட்டுப் போகாமல் இருந்தது ஓர் அதிசயமான விசயம்தான். மையித்து எடுப்பதற்கு உரிய நேரம் நெருங்கியும் இன்னமும் மையித்து எடுக்கப்படாமல் இருப்பதைக் கண்டு குழப்பமடைந்தவன் பக்கத்திலிருந்த மோதினாரைப் பார்த்துக் கேட்டான்; ’’என்னங்க மோதினாரே! ஏன் இன்னமும் தாமதப் படுத்துறீங்க? யாரையாவது எதிர்பார்க்கிறீங்களா?" மோதினாரை முந்திக்கொண்டு முத்தவல்லி முதுகைச் சொறிந்து கொண்டு பதில் சொன்னார். "அதெல்லாம் ஒன்னுமில்லை தம்பி, இந்தச் செப்பைத் தூக்கிப் போக ஒரு முஸாபர் பயலையும் காணோம்! எப்போதும் நம்ம ஜப்பார்தான் இதுமாதிரி வேலயக் கூச்சப்படாம செய்வான், இப்ப அவனே மௌத்தா போயிட்டான். அதுதான் என்ன செய்யறதுன்னு யோசிச்சிட்டு இருக்கோம். நீங்க கவலைப்படாதீங்க. ஒங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும்! நீங்க அதப்போய் கவனிங்க!’’ தனக்காகப் பரிந்து பேசிய முத்தவல்லியை வழக்கத்திற்கு மாற்றமாகக் கோபத்துடன் பார்த்தான், சுஹைல். “என்ன மாமா , இப்படிச் சொல்லுறீங்க? ஊர்ல விழுந்தா எல்லா மெளத்துக்கும் செப்புத் தூக்கியவன் மெளத்தா போயிட்டான். ஆனா, அவனுக்கு செப்புத் தூக்க ஊர்ல ஒரு நாதியும் இல்ல. எவ்வளவு வேதனையான விஷயம்? மெளத்துக்குப் பிறகுதான் ஒருத்தனோட உண்மையான வாழ்க்கை ஆரம்பிக்குதுங்கிற உண்மை ஏன் நம்ம ஜனங்களுக்குப் புரிய மாட்டேங்குது? நம்பள கண்ணியப்படுத்திய ஒருத்தன பதிலுக்கு கண்ணியப்படுத்தறது நம்ம கடமை இல்லையா?” கோபத்துடன் வார்த்தைகளை இறைத்த சுஹைல் வேகமாக நடந்தான். கவனிப்பார் இன்றி அனாதையாகக் கிடந்த செப்பினைத் தூக்கித் தன் தோளில் சுமந்தான். கூடி நின்ற கூட்டம் அப்படியே விக்கிப்போய் நின்றது! மோதினார் ’ஸஹாதா’சொன்னார். செப்புத்தூக்கி அப்துல் ஜப்பாரின் மையித்து ஊர்வலம் புறப்பட்டது. அதோ ஊர்வலத்தின் முன்னால் - செப்பைச் சுமந்தவனாய் - சுஹைல் கொஞ்சமும் வெட்கப்படாமல் கலிமா சொல்லிக் கொண்டு சென்று கொண்டிருக்கிறான். மஞ்சுப் பெட்டிக்குள் மெளத்தின் சகல அடையாளங்களுடனும் மெளனித்து ஜப்பார் தன் பயணத்தைத் தொடங்க, உயிர் மையித்தாக ’ஸஹாதா’சொல்லிக் கொண்டு நகர்ந்தது, அந்த ஊர்வலம்.! விசாரணை -நாகூர் ரூமி திடீரென உறக்கம் கலைந்தது. விழிகளை மெல்ல மேலெடுத்துப் பார்த்தேன். முதலில் ஒன்றும் புரியவில்லை . ஒரே இருள். என்னைவிட்டு விலகிச் சென்ற காலடி ஓசைகள் காதில் விழுந்த ஞாபகம் வந்தது. சற்று நேரம் இருளுக்கு என்னைப் பழக்கப்படுத்திக் கொண்டேன். சுற்றியிருப்பவை மெல்ல மெல்லப் புலப்பட ஆரம்பித்தன. அப்படி ஒன்றும் ஏராளமான பொருட்கள் சுற்றியிருக்கவில்லை. ஒரே மண் கட்டி கட்டியாக… மிருதுவாக… மேலெல்லாம்… முகமெல்லாம்… உடம்பும் மண்ணில்தான் வெகுநேரம் கிடந்திருக்க வேண்டும். இடுப்புப் பக்கம் செவ்வகமாய் மரக்கட்டைகள்; அடிப்பகுதியில் நாடா நாடாவாகப் பின்னி யாரோ அறுத்திருந்தார்கள். மக்காவில் இருந்த வந்த அத்தர் மணமும்! கூடவே கொஞ்சம் தனிமை; பிறகு நிறைந்திருந்த இருள். இவைதான். இடம்கூட கொஞ்சம் நெருக்கடியானதாகத்தான் இருந்தது. ஒரே புழுக்கம். துளிகூடக் காற்றில்லை . எப்படி இதில் சமாளிக்கிறேன்…? நீண்டதொரு நெடுமூச்சு விடுவதற்காக முயற்சித்தேன். நாசித்துவாரங்களை ஏதோ அடைத்துக் கொண்டிருப்பதுபோல் இருந்தது. எடுத்துப் பார்த்தேன். அத்தர் தடவிய பஞ்சு யாரோ வைத்திருக்கிறார்கள். சே..! இப்போது நன்றாக மூச்சுவிட முடிகிறதே! இந்த இடத்தில் கூட காற்றா..? எங்கிருந்து வருகிறது..? நான் இருக்கும் இடத்தையும், சூழ்நிலையையும் நினைக்க நினைக்க வியப்பாக இருந்தது. கிட்டத்தட்ட தாயின் வயிற்றினுள்ளே இருப்பது போல… ஆனால் புரண்டு கிரண்டு கைகால்களையெல்லாம் நீட்டி இஷ்டப்படி குறுக்கேயெல்லாம் படுக்க முடியாது போல் உள்ளது. அத்தர் மணம் எங்கேயிருந்து வருகிறது என்று ஆராய்ந்தேன். பிறகு அது என்மேல் இருந்தே - என்றும், குறிப்பாக என் மேல் போர்த்தியிருந்த வெள்ளைத்துணியில் இருந்தே என்றும் தெரிந்து கொண்டேன். துணி கடினமான காட்டன். சே.! என் ரான்சன் ஜிப்பா இருந்தால் எப்படியிருக்கும்? யார் இதைப் போட்டது? துணியை … லேசாகத் தூக்கிக் கழுத்துக்குக் கீழே பார்த்தேன். முழு நிர்வாணம் சேச்சே..!’ எழுந்து உட்கார்ந்தேன். விழிப்பதற்கு முன், அந்தக் காலடி ஓசைகள் கேட்பதற்கு முன் என்னென்ன சப்தங்கள் கேட்டன என்று ஞாபகப்படுத்திப் பார்த்தேன். காட்சிகள் ஏதும் நினைவில்லை. ஒரே சப்த மயம்… ஓலங்கள்… அழுகையும் கூக்குரலும் ஒரேயொரு முகம் மட்டும் நினைவில் இருந்தது. அதற்குக் காரணம் இல்லாமலில்லை. என் மார்பின்மீது முகத்தையும் கைகளையும் பதித்து வெகுநேரம் யாரோகிடந்தார்கள். அதை நினைக்கும்போது மனதுக்கு சுகமாகவும் இதமாகவும் இருக்கிறது. இப்போது நன்றாக ஞாபகத்துக்கு வருகிறது. கருநீலத்தில் தாவணி போட்ட வெள்ளையும் சிவப்புமான புறா போன்ற முகம். கைகளும் அப்படியே. தஞ்சம் புகுந்ததைப்போல வெகுநேரம் படுத்திருந்தாள். வாஞ்சையாகத் தலையைக் கோதிவிட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் உடம்பையே அசைக்க முடியவில்லை, ‘’சஹாதா…ம்… தூக்குங்க…’’என்ற குரலைத் தொடர்ந்து நிமிர்ந்த அந்த முகம்… அது என் மனைவியல்லவா..? தன் குழந்தையைக் கூடப் பலர் முன்னிலையில் முத்தமிடுவதற்கு வெட்கப்படும் தாயல்லவா அவள்..? அவளா இப்படி அலங்கோலமாக… அவளுக்கு என்ன ஆயிற்று? விழியும் முகமும் சிவந்திருந்தன. வார்த்தைகளற்ற அவள் வேதனையையும் பதைபதைப்பையும் நினைத்தால் இந்த மண்சுவர்களை உடைத்துக் கொண்டு ஓட வேண்டும் என்று தோன்றியது. தொலைவில் நாய் குரைக்கும் சப்தம் கேட்டாலும் இறுக்கமாக என்னை அணைத்துக் கொள்வாளே ! இனிமேல் எப்படித் தனியாகத் தூங்கப்போகிறாள்? கோபம் கோபமாக வந்தது. மணி இப்போது என்ன இருக்கும்? கையைப் பார்த்தேன். வாட்ச் இல்லை. இந்த இருளுக்கு அந்த வாட்சின் ரேடியம் அழகாக ஒளிரும். அந்த அழகைக் காண முடியவில்லையே.! மணி இப்போது பதினொன்னு இருக்குமா…? வீடாக இருந்தால் படித்துக் கொண்டிருப்பேன். அவள் டீ போட்டுக் கொண்டு வருவாள். துளிக்கூட நீர் விடாமல் அப்படியே பாலைக் காய்ச்சி வற்றவைத்துத் தேயிலை கலந்து ஒரு ஸ்பூன் சாப்பாட்டு நெய்யும் விட்டு.. அடடா. இப்போது அவள் என்ன செய்கிறாளோ? அதுசரி, நானில்லாமல் எப்படிச் சாப்பிடுவாள்? நாங்களிருவரும் ஒன்றாகத்தானே சாப்பிட்டுப் பழக்கம்? மரணம் எல்லாப் புதிருக்கும் விடை என்று என் நண்பன் சொல்லுவான். மரணத்தைவிடக் கவர்ச்சியானது ஒன்றுமில்லையாம். உண்மைதான்..! அதுசரி..! ஏதோ ஒரு பாலம் இருக்கும். அது முடியைவிட மெல்லிசாய் இருக்கும், அதில் நடக்கச் சொல்வார்கள், நல்லடியார்கள் நடந்துவிடுவார்கள், தீயவர்கள் நரக நெருப்பில் விழுந்துவிடுவார்கள் என்றெல்லாம் மேடை கிடைத்தபோதெல்லாம் தாடிவைத்த தடியானவர்கள் அழுதுகொண்டே ஒரு மிஃராஜ்தனமான அத்தாரிட்டியுடன் பேசுவார்களே…! அதெல்லாம் எங்கே..? இப்போது நேராக அவர்களின் தாடியைப் பிடித்து தரதரவென்று இழுத்துவந்து காட்டி புருடாவா விட்டீங்க… பாருங்க ….!’என்று காட்ட வேண்டும் என்று தோன்றியது. திடீரென்று இரண்டு தோள்களையும் கோடாரியால் பிளப்பது போன்ற வலி. மின்னல் நேரந்தான். ‘யா அல்லாஹ்’ என்று முணங்கினேன். டப்பென்று வலி நின்றது. பிறகுதான் கவனித்தேன். இரண்டு தோள்களிலும் இரண்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள். ’கெளபாய்’படத்தில் வரும் குள்ளர்களைப் போன்ற ’டைனி’உருவங்கள். ஒருவர் படுவெண்மை. அந்த இடத்திற்கே ’ட்யூப்லைட்’போட்ட மாதிரி எல்லாம் தெரிந்தன. என் காலுக்குப் பக்கத்தில் நெளிந்துகொண்டிருந்த புழு கூடத் தெரிந்தது. இன்னொருவர் பயங்கரக் கருப்பு. அவர் என் இடது தோளில்! இருவருமே அழகாக இருந்தார்கள், சின்ன முயல்குட்டிகளைப் போல. வெள்ளையாக இருந்தவர் என்னைப் பார்த்து புன்னகைத்தார். அப்பாடா…! தனிமை நீங்கியது… நானும் புன்னகைத்தேன். என் கன்னத்தை அன்பாகத் தட்டி “கைஃப ஹாலுக” என்றார். “தய்யிபுன்”என்று பதில் சொல்லி இருப்பேன். பி.யு.ஸியில் அரபிதான் என் இரண்டாம் மொழி. தவிர பஸ்ட் கிளாசில் வேறு பாஸ் செய்திருந்தேன். ஆனாலும் அராபிக் தெரியும் என்கிற தகுதி எனக்கில்லை. எனக்கு அராபிக் தெரியும் என்று நினைத்துப் பேச்சை அவர் தொடர்ந்தால் நிலைமை சங்கடத்திலும் மவுனத்திலும் முடிந்து விடும். “எனக்கு அராபிக் தெரியாது. தமிழும் ஆங்கிலமும்தான் தெரியும்” என்றேன். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின் ’ஓ.கே.’என்றார் வெள்ளையர். “நீங்கள் வந்தது எனக்குப் பெரும் உதவி. என் தனிமை நீங்கியது. ஆனால் நீங்கள் என் தோளிலேயே நின்று கொண்டிருந்தால் என்னால் பேச முடியாது. எதிரே வந்து நின்றால்தான் முகம் பார்த்து வசதியாகப் பேசலாம்” அவர்கள் ஒருவரையொருவர் மறுபடியும் பார்த்துக் கொண்டு ஏதோ முடிவுக்கு வந்தவர்கள் போல எதிரே வந்து அந்தரத்திலேயே நின்றார்கள். மனிதரல்லாத ஜீவன்களை என் சொல்லுக்குக் கீழ்ப்படிய வைத்துவிட்டேன் என்று பெருமையாக நினைத்தேன், “உன் சொல்லுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து விட்டோம் என்று நினைப்பது தவறு மட்டுமல்ல, நான் என்னும் அகந்தை என்றுமே குற்றம்”என்றார் கருப்பர். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. திறந்த புத்தகத்தைப் படிப்பது போலல்லவா எண்ணங்களைப் படிக்கிறார்கள்…! “உன்னோடு கலந்து பேச நாங்கள் வரவில்லை. எங்களுக்குப் பின்னால் இருவர் வருவார்கள். உன் விவாதத்தை அவர்களிடம் வைத்துக்கொள். உன் வாழ்க்கையில் நீ செய்த நன்மை தீமைகளை உனக்கு உதாரணம் காட்டவே நாங்கள் அனுப்பப்பட்டோம்” வெள்ளையர் இப்போது பேசினார். இருவரும் பேசும்போது புன்னகையைத் தவிர வேறு எந்த உணர்ச்சி வெளிப்பாடும் தெரியவில்லை. “என் பெயர் கிராமுன். உன் நன்மைகளை நான் எழுதி வைத்துள்ளேன். இவர் காத்திபீன். உன் தீமைப்பட்டியல் அவரிடம். உன்னிடம் சில சாம்பிள்கள் காட்டச் சொல்லி உத்தரவு. எப்படி… காலவாரியாகப் பார்க்க விரும்புகிறாயா, அல்லது மிக மட்டமான நன்மை முதல் மிகப்பெரிய நன்மை வரை என்று வரிசைப்படுத்தியிருப்பதைக் காட்டவா..?” நான் செய்த நன்மை தீமைகளில் மிக மட்டமானவை என்றும் மிகப்பெரியவை என்றும் அவர்கள் எந்த அடிப்படையில் பட்டியல் போட்டுள்ளார்கள் என்று அறியவே ஆவலாக இருந்தது. தெரிவித்தேன். முதலில் நன்மை என்று சொல்லிக் கைவிரலை அசைத்தார் கிராமுன். வீடியோ படம் போல என் கண்முன்னே காட்சிகள் விரிந்தன. “முதலில் ஒரு நன்மை செய்தால் ஆண்டவன் உங்களுக்குப் பத்து நன்மைகளை எழுதுகிறான்” என்ற ஜூம்ஆவில் கேட்ட சொற்பொழிவை அடிப்படையாக வைத்து நான் ஒரு பிச்சைக்காரனுக்குக் காசு போட்டக் காட்சி “இதை ஏன் மிக மட்டமான நன்மையாகச் சொல்கிறீர்கள்? தர்மம் மிக மட்டமானதா…?” “பலனை எதிர்பார்த்து நீ செய்த தர்மம் இது. தரவேண்டும் என்று மட்டும் எண்ணாமல் ஒன்றுக்குப் பத்தைப் பெற வேண்டும் என்று செய்தது இது…” “இன்னொரு உதாரணம் காட்டுங்களேன்”என்றேன் என் ஏழை நண்பனுக்கு நானொரு சட்டை கொடுத்த காட்சி வந்தது. எனக்குக் குழம்பியது. மறுபடியும் தர்மம் மட்டமான நன்மைதானா? ’உம்’என்றார், அவர். “இந்த ’உம்’பொருத்தமானதாயில்லை. நான் எதையும் பெற வேண்டும் என்று சட்டையை அவனுக்குக் கொடுக்க வில்லையே..?” "உண்மைதான். ஆனாலும் நீ செய்தது தர்மமே அல்ல. அந்தச் சட்டை உனக்கு வெகு நாட்களாகப் பிடிக்காத சட்டை அதை நீ வெறுப்பின் காரணமாக அணியாமலேயே இருந்தாய். எனவே அதைக் கொடுத்ததின் மூலம் நீ எந்தத் தியாகமும் செய்யவில்லை. எந்த இழப்பிற்கும் ஆளாகவில்லை. கொடுத்ததாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் இழப்பாகவும் இருக்கக்கூடாது என்ற ரீதியில்தான் நீ அந்த சட்டையைக் கொடுத்தாய். அதாவது தரவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல்" “பின் எப்படி அது நன்மையாயிற்று?” “உன்னை மீறி அந்த ஏழையை அது சந்தோஷப்படுத்தி விட்டது. அந்த மகிழ்ச்சியை உன் நன்மை கணக்கில் சேர்க்க வேண்டியதாகிவிட்டது.” நான் தோற்றுப் போனதை நினைத்து மெளனமானேன். அடுத்தக்கட்ட நன்மைகள் என நான் புத்தகம் படித்தது, ஏதோ ஒரு பள்ளிவாயிலில் தொழுது முதலியன காட்டப்பட்டது. மறுபடியும் குழப்பம்தான். “நான் எனக்காகப் புத்தகம் படித்தது எப்படி என் பக்கம் நன்மையாகும்? சொல்லப்போனால் சுயநலமல்லவா..?” “இல்லை. நீ எல்லாப் புத்தகங்களையும் படித்ததை அது குறிக்காது. காட்சியில் வரும் புத்தகத்தை உன்னை மறந்து படித்தாய். குறிப்புகள் எடுத்தாய். ஆண்டவன் தந்த அறிவின் ஆழங்களைக் கண்டுபிடிக்கும் வேலையில் உன்னையறியாமல் நீ ஈடுபட்டிருந்ததனால் எதையும் பெறவேண்டுமென்ற எண்ணமற்று காலத்தை விரயமாக்காமல் பயன்படுத்திய நன்மை உனக்கு” “தொழுகை…?”என்றேன். “குறிப்பிட்ட காட்சியில் நீ நரகம் தவிர்க்கவோ சொர்க்கம் சேரவோ தொழவில்லை. கடமை என்று கூடத் தொழவில்லை. உன்னை மறந்து இறைவனைப் பணிய வேண்டும் என்ற நன்றி செலுத்தும் பொருட்டு மட்டும் தொழுத கணங்கள் அவை. பிரதிபலனை எதிர்பாராமல் நீ செய்கின்ற அனைத்துக் காரியங்களும் உன் பேரில் நன்மைகளாக எழுதப்படும்.” “குழப்பம் பாதிதான் தீர்ந்துள்ளது. புத்தகம் படிப்பதையும் தொழுவதையும் எந்த அடிப்படையில் இணைக்கிறீர்கள்…?” "ஸின்ஸியாரிட்டி - மன ஒருமைப்பாடு, பிரதிபலன் கருதாமை என்ற அடிப்படையில்." பின்பு நான் செய்த மிகப்பெரும் நன்மைகளாக நான்கு காட்சிகள் காட்டப்பட்டன. முதல் காட்சி என் பாட்டியார் மெளத்தானதற்குப் பிறகு நான் அவர்கள் நினைவாக எழுதிய டயரிக்குறிப்பு. “பாட்டியார் உயிரோடு இருந்தபோது ஒரு தடவைகூட ஆசையாக, அன்பாக, இறுகக் கட்டியணைத்துக் கொள்ளவே இல்லையே என்று ஆதங்கமாக இருந்தது”என்ற வரிகள் மட்டும் என் குரலிலேயே எனக்குப் படித்துக் காட்டப்பட்டது. “இது எப்படி நான் செய்த மிகப்பெரிய நன்மையாகும்?” “சக மனிதனின் நன்மைக்கான சந்தோஷத்திற்கான உன் எண்ணம் செயல்பாடு இவைகளைத்தான் மிகப்பெரிய நன்மைகளாகக் கணக்கில் எடுப்போம். உனது டயரிக்குறிப்பு நீ பாட்டியார் மீது வைத்த அன்பின் அடையாளம். அது மட்டுமல்ல. நீ அந்தக் குறிப்பை எழுதியதற்காக குர்ஆன் ஓதி பாட்டியார் பேரில் ஹதியா செய்த நன்மை உன் பாட்டியாருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.” அடுத்தது - நான் படித்த கல்லூரி வாசலில் இருந்த நொண்டிப் பிச்சைக்காரப் பையனை ஒருநாள் நான் ஹோட்டலுக்குள் அழைத்துச் சென்று சாப்பாடு வாங்கிக் கொடுத்த காட்சி..! நான் புன்னகைத்துக் கொண்டேன். "இந்தப் பையனுக்கு நான் வாங்கித் தந்தபோது ஒன்றுக்குப் பத்து என்று தெரிந்து தானே செய்தேன்"என்றேன். “ஆமாம்… ஆனாலும் நீ உனக்குள்ளே விவாதித்துக் கொண்டாய். பத்து நன்மைகளை வேண்டிச் செய்வதாகும் என்று செய்யாமல் விடுவது தெரிந்தே அவனைப் பட்டினி போடுவதாகும். எனவே பத்து நன்மையோ தீமையோ எதுவானாலும் சரி, இன்று எப்படியும் ஒரு வேளையாவது இவன் பசியைத் தீர்த்துவிடுவோம் என்று முடிவுசெய்தே அவனுக்கு உணவு வாங்கிக் கொடுத்தாய். எனவே பிரதிபலன் என்ற உணர்வை அறிந்து அதைத் தாண்டி ஒரு சகமனிதனின் சோகம் நீக்கும் செயல்பாடு என்ற அடிப்படையில் அது உண்மையான தர்மமாக - மிகப்பெரிய நன்மையாக எழுதப்பட்டது.” மூன்றாவது காட்சியாக நான் ஒரு புத்தகம் எழுதியதும் பிள்ளைகளுக்கு ஆங்கில இலக்கணம் சொல்லிக் கொடுத்ததும். “தன்னலம் கருதாது அறிவைப் பரப்பிய சமுதாயத் தொண்டு மிகப் பெரிய நன்மையாகும்”என்றார் கிராமுன். நாலாவதாக நான் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை தூக்கம் கலையாமல் முத்தமிட்ட காட்சியும் குழந்தையை வாரியணைத்து முத்தமழை பொழிந்த காட்சியும். இந்தக் கடைசி உதாரணம் என்னை மிகவும் வியப்பிலாழ்த்தியது. விளக்கம் கேட்டேன். “விழித்துக் கொண்டிருக்கும் மனைவியை முத்தமிட்டால் அது உனது அல்லது அவளது திருப்திக்காக சாதாரண நன்மைதான். உறக்கத்தில் அது கலையாத வண்ணம் நீ முத்தம் இட்ட விதத்தை வைத்துப்பார்க்கும்போது - குழந்தையிடம் நீ காட்டிய நிறைவான அன்பை ஒத்த, எதிர்பார்ப்புகளற்ற தன்னில் தானாகப் பொங்கும் பிரவகிக்கும் அன்பு… ஐ… மீன்.. அப்ஸல்யூட் லவ் நாட் ரெஸிப்ரொகேஷன்.”என்றார். அவர் தந்த விளக்கத்திலும் அவரின் அழகான ஆங்கிலத்திலும் வியந்தேன் நான். அடுத்து காதிபீன் - என் பாவங்களை அறிந்து கொள்ளப் போவதில் பயமும் வெட்கமும் அடைந்தேன். மிகப்பெரிய பாவங்களாகக் காட்டப்பட்டவற்றிற்கு எனக்கு விளக்கங்கள் தேவைப் படவில்லை. மிக மட்டமான - அதாவது மிகக் குறைந்தபட்ச தண்டனை மட்டுமே பெறத் தகுதியுள்ள பாவமாகக் காட்டப்பட்டதற்கு மட்டும் விளக்கம் கேட்டேன். ’’உங்கள் கற்புள்ள ஆங்கிலம் என்னை மிகவும் கவர்ந்தது"என்று எனக்கு ஒருவர் எழுதிய கடிதம் காட்டப்பட்டது. ’’உன்னை ஒருவன் புகழ்ந்திருக்கிறான். அதை ’பைல்’பண்ணிப் பாதுகாத்து - பார்த்துப் பார்த்து - நினைத்து - நினைத்து சந்தோஷப்பட்டிருக்கிறாய். அதாவது உன் அறிவில் உனக்குப் பெருமை தட்டியிருக்கிறது. நான் என்ற எண்ணத்திற்கு நீ இடம் கொடுத்துப் பாதுகாக்கிறாய். இறைவன் உனக்குக் கொடுத்த அறிவை - அதன் ஆழத்தை மேலும் அறிய முடியாமல் உனக்கு நீயே போட்டுக்கொண்ட முட்டுக்கட்டை அது என்பதை நீ அறியவில்லை. அமானத்தாகப் பெற்றதை உனதென்று எண்ணுதல் பாவம். அறிவு அமானத் என்பதை நீ அறியவில்லை அப்போது என்ற ஒரே காரணத்துக்காக மிகச் சிறியப் பாவப்பட்டியலில் அது சேர்கிறது." அடேயப்பா… ஒரு கடிதத்தை ’பைல்’பண்ணியதின் பின்னணியில் இவ்வளவு உள்ளதா? கிராமுன் - காத்திபீனை என்னிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கமுடியவில்லை. என் மனச்சாட்சியின் குரலாக சுய சமாதனங்கள், சுய உறுத்தல் இவற்றின் வடிவங்களாகவே அவர்களை உணர்ந்தேன். நான் செய்த மிகப் பெரிய பாவங்களில் நான் செய்த துரோகங்கள், எனக்கு மட்டுமே தெரிந்தவை என்று நான் எண்ணிச் செய்த தவறுகள் - என் கண்களே பார்க்கக் கூசின. கடைசியாக நான் செய்த மிகப் பெரிய பாவப்பட்டியலில் நான் ஒரு நாள் ஜும் ஆ தொழுதது காண்பிக்கப்பட்டபோது மிக ஆச்சரியமடைந்தேன். தொழுதது பாவமா…? அதுவும் மிகப்பெரிய பாவமா..? ஒன்றுமே புரியவில்லையே…! காதிபீன் கூறினார். ’’நீ உண்மையில் தொழவில்லை . இறைவனை அவமானப்படுத்தி இருக்கிறாய். அவனை யாரும் அவமானப்படுத்த முடியாது என்றாலும், நீ தொழுகையில் இறைவனை நினைப்பதை விடுத்து வாசலில் கழட்டிப் போட்ட புது பாட்டா செருப்பையே எண்ணிக் கவலை கொண்டிருந்தாய். இது ஷிர்க்கைவிட மிக மோசமானது. இறைவனை விடச் செருப்பு மிக முக்கியமாகிவிட்டது. தொழுகையைக் கேவலப்படுத்தியது மிகப் பெரிய பாவம்." எனக்குக் கைகால்களெல்லாம் உதறின . அவர் வார்த்தைககளின் உண்மை என்னை ஸ்தம்பிக்கச் செய்தது. கிராமுன் சொன்னார். "சரி… எங்கள் வேலை முடிந்துவிட்டது. உனக்கு ஏதாவது சந்தேகமுண்டா..? ’’என் பாவ புண்ணியங்களுக்கு உதாரணமாகத்தான் காட்சிகளைக் காட்டினீர்கள். இதுவரையில் எனக்குப் பாவம் அதிகமா? புண்ணியம் அதிகமா…?" ’’அதைச் சொல்வதோ - நிர்ணயிப்பதோ எங்களின் வேலையல்ல" “கடைசியாக ஒரு கேள்வி. இப்போது மணி என்ன?” புன்னகைத்தார். பின்பு சொன்னார். “இங்கு வருவதற்கு முன்புதான் காலம், நேரம், இடமெல்லாம் உண்டு. இங்கு வந்தபிறகு நீ எல்லாவற்றையும் கடந்தவனாகிறாய். அஸ்ஸலாமு அலைக்கும்!”மறுபடியும் மின்னல் நேரம். தோள் பட்டைகளில் கோடரியால் பிளக்கும் வேதனை. ’யா அல்லாஹ்’என்ற என் முணங்கலுக்குப் பின் மீண்டும் என்னைத் தனிமை சூழ்ந்தது. சிந்தனையில் ஆழ்ந்தேன். என் பாவங்களின் கனம் அழுத்துவது போல இருந்தது. நரகவேதனை எப்படியிருக்குமோ? ஆனால் இவ்வளவு பாவங்களை செய்திருக்கிறோம் என்ற நினைவே பெரும் வேதனையை அளித்தது. இரண்டு தோள்களையும் திரும்பத் திரும்ப வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். “அஸ்ஸலாமு அலைக்கும்”என்ற ஒருமித்த குரல்கள் ஒ… ‘முன்கர் - நகீரா…?’ இருவரும் மின்மினிப் பூச்சிகள் போல ஒளிர்ந்தார்கள். இருவருக்கும் சிறகுகள் இருந்தன. காலண்டர் தேவதைகளைப் போல; அல்லது மனிதனின் தீர்க்கதரிசனக் கற்பனையைப் போல். ஒருவர் என்னை நோக்கி “மன்ரப்புக்க”என்றார். “‘தல்கீன்’ எல்லாம் நான் பள்ளியிலேயே ஓதிவிட்டேன். நீங்கள் கேட்கப் போகும் கேள்விகளுக்கு ’ஸ்டாக்’கான பதில்களையும் வைத்துள்ளேன். தல்கீனில் உள்ளதுதான் ஆனால் உண்மையில் எனக்கு அரபி தெரியாது. என் பதிலை வைத்து நீங்கள் திருப்தி கொண்டால் உங்களை நீங்களே மாற்றிக் கொள்வீர்கள். எனவே தமிழிலேயே கேளுங்க. அப்போதுதான் உண்மை வரும்”என்றேன். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். நான் அடுத்து என்ன கேட்கப் போகிறார்கள் என்று ஆவலாக எதிர்பார்த்தேன். அதற்குள் என்னை யாரோ பிடித்து உலுக்கினார்கள். என் முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவினார்கள். கண்களைத் திறந்து பார்த்தேன். கையில் கிளாசுடன் எதிரே என் மனைவி. “எவ்வளவு நேரமா எழுப்பறது .. என்ன மையித்து மாதிரித் தூங்குறீங்க…?”என்றாள். இயல்பு -எஸ்.சர்வீன் பானு சாயம் தொலைத்த வானம். இருள் பூசத் தொடங்கி இருந்த, பின் அந்தி நேரம் படபடப்பாய்ச் சிறகாட்டிக் கொண்டு கோடி கதைகளைத் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டு, கூட்டுப் பறவைகள் எல்லாம் வீடு திரும்பிக் கொண்டிருந்தன. அப்துல்லாவுக்கு மனசுக்குள் மத்தாப்பு கொளுத்திய சந்தோஷம். இன்றிலிருந்து நோன்பு தொடங்குகிறது. ருசி ருசியான சாப்பாடு கிடைக்கும். கேட்கும் போது காசு கிடைக்கும்…! தொழ வருபவர்களிடமிருந்து நிறைய ஜகாத் கிடைக்கும். போன வருஷம் போல் யாராவது சொக்காய், கால்சராய் எடுத்துத் தந்தாலும் தருவார்கள். உம்மாவுக்கு வாய்க்கு ருசியாய்ச் சாப்பாடு கிடைக்கும் என்ற நினைப்பே அவனுள் தேனாய் இனித்தது. பல சமயம் அவனுக்குத் தோன்றும், மிகுந்த கருணையாளனான அல்லா ஏன் வருசம் முழுவதும் நோன்பாக வைக்கவில்லை என்று? அப்துல்லாவிற்குப் பத்து வயசிருக்கலாம் இல்லை அதுக்குக் கூடவோ, குறையவோ இருக்கலாம். அதைப் பற்றி அவனுக்கோ, அவன் அம்மா நூருல் பஷ்ரியாவுக்கோ அக்கறையில்லை. அவர்களுக்கு வேலை பெரிய பள்ளிவாசல் தெருவில் ஹைராத் வாங்குவது. அப்துல்லா தொழுகை முடிந்து வருபவர்களுக்குச் சலாம் சொல்லிக் கையேந்துவான். இப்படியாக அவர்களின் வாழ்க்கையே போராட்டமாய்த்தான் ஓடிக் கொண்டு இருந்தது. தங்குவதற்கு ஓலை குடிசையைத் தவிர இவர்களுக்கென்று எதுவும் இல்லை . மற்ற நாட்கள் என்றால், அப்துல்லாவுக்கு ஐந்து ரூபாய் கூடக் கிடைக்காது. வெள்ளிக்கிழமை என்றால் பத்து ரூபாய் வரை கிடைக்கும். படிக்கவேண்டுமென்று அப்துல்லாவுக்குக் கொள்ளை ஆசை அதை அம்மாவிடம் சொன்னால் கம்பெடுத்து விளாசி விடுகிறார். பின்னே, இவன் பள்ளிக்கூடம் போய்விட்டால் தங்கச்சி நிஸ்மத்தை யார் பார்த்துக் கொள்வார்கள்? எல்லோரையும்போல அவனுக்கு ஏன் அத்தா இல்லை என்ற ஏக்கம் அடிக்கடி வரும், எப்போதாவது அதை அம்மாவிடம் கேட்டால் ’ஓ’வென்று அழுது விட்டு, அத்தாவைக் கண்டபடித் திட்டுவாள். அதை எல்லாம் புரிந்து கொள்ளும் வயசு இவனுக்கு இல்லை . இதோ இஷாவுக்கு பாங்கு சொல்கிறார்கள். மனராவில் லைட் போட்டிருக்கிறார்கள். எல்லோர் முகத்திலும் சந்தோஷம் நிறைந்திருக்கிறது. நோன்பு துவங்கி விட்டது. "ஏய், அப்துல்லா இங்க வா…’’தோல்கடை சேக் பாய் இவனை அழைத்தார். தன்னுடைய அழுக்கு ஜிப்பாவை ஆட்காட்டி விரலில் சுற்றிக்கொண்டு அவர் பக்கத்தில் போய் நின்றான். சென்ட் வாசம் மூக்கைத் துளைத்தது. புது மஞ்சள் ஜிப்பா… எத்தனை அழகாய் இருக்கிறது? இவன் தோளில் கை போட்டுக் கொண்டார். பெருமிதம் பிடிபடவில்லை அப்துல்லாவிற்கு தன்னுடைய சேத்தாளிமார்கள் யாராவது பார்க்கிறார்களா என்று அவசரமாய்ச் சுற்றிப்பார்த்தான். யாருமில்லை என்றதும் ஏமாற்றமாய்ப் போனது. “இந்தா அப்துல்லா, இந்த டோக்கனை வைச்சுக்க. ரஹ்மத் பாய் ஸஹர் ஹோட்டல்ல இதை தந்தியானா ரெண்டு செட் சாப்பாடு தருவாங்க. உனக்கும் உன்னோட அம்மாவுக்கும். நல்லா வயிறார சாப்பிட்டு நோன்பு பிடிங்க..” அன்பொழுக அவர் சொன்னபோது இறக்கை கட்டிப் பறப்பது போல் உணர்ந்தான் அப்துல்லா. எப்போது இரவாகும் என்று காத்திருந்தான். ஸஹர் நேர நஹார் சப்தம் கேட்டதும் ரஹ்மத் பாய் ஹோட்டலுக்கு ஓடோடிப் போனான். வழக்கத்தை விட அழகாய் ஜோடிக்கப்பட்டிருந்தது ரஹ்மத்பாய் ஹோட்டல். அந்த இரவு நேரத்திலும் கூட்டம் நிறைய நின்றது. மைக் கட்டி நாகூர் ஹனிபா பாட்டு போட்டிருந்தார்கள். “எல்லாப் புகழும் இறைவனுக்கே.”கூடவே ஆட்டம் போட்டுப் பாடினான் அப்துல்லா. டோக்கனைத் தந்ததும் சாப்பாட்டைக் கட்டித் தந்தார் ரஹ்மத்பாய். ஒரே பாய்ச்சலில் இருட்டைக் கிழித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடி வந்து விட்டான். சாப்பாட்டைப் பிரித்துப் பார்த்தவனுக்குக் கண்கள் நிலை குத்திப் போய்விட்டன. பிரியாணி, கறி வறுவல், சாப்ஸ். அடேயப்பா! இதெல்லாம் அவனுக்கு யாராவது பெரிய மனிதர் வீட்டு நிக்காவில் தான் கிடைக்கும். இத்தனை சாப்பாட்டை ரஹ்மத்பாய் சும்மாவா தந்தார். அம்மாவிடம் கேட்டான். “இல்ல அப்துல்லா, இதுக்கான காசை கட்டித்தான் டோக்கன் வாங்கி தந்தாரு சேக்பாய் ஆனாலும், இந்த சாப்பாட்டுக்கு ரொம்ப குறைஞ்ச காசைத்தான் வாங்கி இருப்பாரு ரஹ்மத் பாய்”அம்மா விளக்கம் சொன்ன பிறகுதான் எல்லாம் புரிந்தது. மனதார வயிறாரச் சாப்பிட்டான். அம்மாவும் இவனும் சாப்பிட்டது போக, நிஸ்மத்துக்கும் காலையில் கொடுக்க எடுத்து வைத்தார்கள். இருவரும் நிய்யத்து சொல்லிவிட்டுப் படுத்துக் கொண்டார்கள். நோன்பு பிடித்தது போலவே தோன்றவில்லை அப்துல்லாவிற்கு. பசி அவனுக்கு நிறைய பழக்கம்தான், அதனால் சந்தோஷமாய் இருந்தான். அவுல் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தவனை மோதினார் - கூப்பிட்டார். வழக்கமாய் இதுபோல் அவன் விளையாடினால் புடணியில் சாத்துவார். அதுக்காகத்தானிருக்கும் என்று பயந்து கொண்டே போனான். மாறாக அன்பாய்ப் பேசினார். “அப்துல்லா இதுலே பேரிச்சை பழமெல்லாம் இருக்கு..! நோன்பு முடிக்க வச்சுக்க. இத வச்சுட்டு கஞ்சி வாங்க பாத்திரம் எடுத்துட்டு வா…” ஆச்சரியமாய் இருந்தது…! இவனையும் இவனுடைய சேத்தாளிகளையும் கண்டாலே புளியங்கொம்பால் விரட்டுவார். எத்தனை அன்பாகப் பேசுகிறார்..? கஞ்சிக்குச் சட்னி தந்தார்கள். ருசியான தேங்காய் துவையல். இவன் பள்ளியிலேயே நோன்பு முடித்தான். ஆஹா, எத்தனை வகையான தின்பண்டங்கள்…! ருசி ருசியான பலகாரங்கள்…! இதெல்லாம் இன்னைவரைக்கும் அவன் நாக்கில் கூட பட்டதில்லை. நிறையச் சாப்பிட்டான், அம்மாவுக்கும் எடுத்துப் போனான். லேசான ஏக்கம் அவனுக்குள் பரவியது. இதுபோல நிதம் நிதம் சாப்பிட்டால் எப்படி இருக்கும்…! எல்லோரிடமும் ஹைராத் கேட்டுக் கெஞ்ச வேண்டாமே…! ஒழுங்காய் யூனிபார்ம் சட்டை போட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் போகலாமில்லையா.. அம்மாவும் மிஸ்கீனாய் அலைய வேண்டாமே… என்று நினைத்துக் கொண்டான். நாட்கள் வேகமாய் நகரத் தொடங்கின. அதற்குள் பாய்கடை பஷர் பாய் இவனுக்குச் சட்டை, சொக்கா, பனியன், கால் சராவும் எடுத்துத்தந்தார். நெய்கார பெரியம்மா இவன் அம்மாவுக்கு அழகான வாயில் சேலையும், பாப்பாவுக்குச் சொக்காயும் எடுத்துத்தந்தார். நிறைய நோன்பு பலகாரம் தந்தார்கள். பள்ளியே விளக்குகளால் ஜோடிக்கப்பட்டு அத்தனை அற்புதமாய் இருந்தது. அப்துல்லாவும் அவன் நண்பர்களும் பள்ளி முழுசும் சுத்தி விளையாடினார்கள். அத்தனை சந்தோஷம் பெருநாளும் வந்தது. புது சொக்காய் போட்டுக் கொண்டு சந்தோஷமாய்ப் பள்ளிக்குப் போனான். எல்லோரும் நோன்பு காசு தந்தார்கள் பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று எண்ணிப் பார்த்தான். இருநூறு ரூபாய் தேறியது. அப்பாடி..! இத்தனை காசை அவன் பார்த்ததே இல்லை. பள்ளியில் பாயாசம் ஊற்றினார்கள். சந்தோஷமாய் வாங்கிக் குடித்தான். அன்றைய நாளெல்லாம் ஆனந்தமாய்க் கழிந்தது. இரவு வழக்கம் போல் தன்னாலே விழிப்பு வந்து எழுந்து கொண்டான் அப்துல்லா. தூக்கக் கலக்கத்தோடு ரஹ்மத் பாய் கடைக்குப் போனான். வழக்கத்திற்கு மாறாய் ஜீரோ வாட்ஸ் வெளிச்சத்தில் கடை தூங்கி வழிந்தது. கதவில் குண்டு பூட்டு…! ஓ! நோன்பு முடிந்து விட்டதா..! இனி சாப்பாடு தர மாட்டார்களா..? ஏக்கத்தோடு அம்மா பக்கத்தில் வந்து படுத்துக் கொண்டான். அடுத்து வந்த வாரமெல்லாம் இருவரும் ஹைராத் வாங்கப் போகவில்லை. கையில் கொஞ்சம் காசிருந்ததும், நிஸ்மத் பாப்பாவுக்கு உடம்பு சரியில்லாததும்தான் காரணம். | ஒருவாரம்போல் ஆகியிருக்கும். ஜூம்மாவிற்குப் பள்ளிக்குப் போகும்படி அம்மா அனுப்பி வைத்தாள். முன்னமே வந்துவிட்டதால், நண்பன் பாரூக்குடன் அவுலைச் சுற்றி நொண்டி விளையாட ஆரம்பித்தான்.. பொளேர் என்ற அறை முதுகில் விழ, தடுமாறி பொத் என விழுந்தவனைக் கையைப் பிடித்து இழுத்துத் தள்ளினார், மோதினார். "ஷைத்தானுங்க…. இங்க வராதீங்கன்னு சொல்லி இருக்கேன்ல..? போங்கடா…’’விரட்டினார். அவருக்குப் பக்கத்துணையாய் பஷர்பாய் சேர்ந்து கொண்டார். “இவனுகளை நீங்க உள்ளே விடறதாலதான், பள்ளில செருப்பு காணாம் ஆயிடுது. அடிச்சு விரட்டுங்க.” என்று அவரும் சேர்ந்து கொள்ளவும், மோதினார் இவர்கள் இருவரையும் விரட்டி வந்து கேட்டிற்கு வெளியே விட்டார். அப்துல்லாவின் முகம் சுண்டிப்போனது. எத்தனை அன்பாய் இருந்தார் மோதினார்…! பஷர்பாய் கூடத் துணியெல்லாம் வாங்கித் தந்தார். இப்போது ஏன் இவர்கள் மாறிப்போனார்கள்..? அதற்கு பாரூக் விளக்கம் சொன்னான். “டேய் அப்துல்லா நோன்பு வந்தாத்தான்டா இவங்க அன்பா இருப்பாங்க. நோன்பு போனா அன்பும் போயிடும்..” வாஸ்தவமான பேச்சாய்த்தான் பட்டது அப்துல்லாவிற்கு. அதற்குள் தொழுகை முடிந்து எல்லோரும் வெளியே வரத் தொடங்கி இருக்க, கேட்டிற்கு வெளியே இருந்தே கைகளை நீட்டினான். ம்ஹூம், யாரும் கண்டுகொள்ளவில்லை. முண்டித் தள்ளிக்கொண்டு உள்ளே போனான். மோதினார் பார்க்காதபடிக்கு அதோ சேக் பாய் வருகிறார். சந்தோஷமாய்ச் சிரித்துக்கொண்டு பக்கத்தில் போனவனை, ’போடா’என்று விரட்டி அடித்தார். பக்கத்தில் நின்ற ஹோட்டல் கடை ரஹ்மத் பாய் மோதினாரைக் கூப்பிட்டார். “என்ன பாய் இது. பள்ளியில இவனுக தொந்தரவு பெரும் தொந்தரவா இருக்கே…!”என்று சொல்லவும், மோதினார் கோபமாய்க் குச்சியோடு வர, ஓட எத்தனித்தவன், கல் இடறி . கீழே விழ, புதுச்சட்டை கம்பியில் பட்டுக் கிழிந்தது. கை காலெல்லாம் சிராய்ப்பு. சிதிலமாய் ரத்தம்..! ஒரு நொடி எல்லோரும் பயந்து விட்டார்கள். கூட்டமாய் இவனைச் சுற்றி நின்று கொள்ள, எச்சிலும் இரத்தமும் சேர்ந்து ஒழுக, அழுகையோடு எழுந்தான். “போங்கய்யா, நீங்க எல்லாரும் மோசம். பொய்க்கார மனுஷங்க. நாங்க மிஸ்கீனெல்லாம் திருடங்க இல்ல..! நோன்புன்னா மட்டும் எங்க மேல அன்பு காட்டறது, அது முடிஞ்சதும் எங்களை விரட்டுறதுன்னு நீங்க எல்லாம் வேஷம் போடறீங்க. எங்கள் விரும்பவும் வேணா, வெறுக்கவும் வேணா நாங்க இப்படியே இருந்துட்டு போறோம். எங்களையும் ஏமாத்திட்டு அல்லாவையும் ஏமாத்த வேணாம்..”அழுதபடிச் சொல்லிக் கொண்டுபோன அவனைப் பார்த்து விக்கித்து நின்றார்கள். வீட்டுக்கு வந்த அப்துல்லா அம்மா மடியில் படுத்துக்கொண்டு அழுதான். “அம்மா, அடுத்த நோன்பு எப்ப வரும்மா..?”என்றபடி அழும் மகனைப் பரிதாபமாய்ப் பார்த்தாள் நூருல் பஷிரியா. வேறென்ன செய்ய முடியும் அவளால் விடிந்ததும் முதல் வேலையாய்த் தட்டை எடுத்துக்கொண்டு இருவரும் கிளம்பினார்கள், வழக்கமான வார்த்தைகளோடு, “அம்மா மிஸ்கீன் வந்திருக்கோம், ஹைராத் குடுங்கம்மா.” பச்சை நிறப் பூனை -ஹெச் ஜி. ரசூல் நசீறாவின் முகத்தில் படர்ந்திருந்த ஒளி மங்கத் தொடங்கி இருளடைந்திருந்தது. இருளின் நிறம் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. உள் ஒடுங்கி பின்னப்பட்ட வலையொன்று வீசப்பட்டது போல் பகலையும் இரவையும் பிரித்துக் காட்டும் நிழல் படிமங்கள் மர்மமான முறையில் இறைந்துகிடந்தன. இப்போதெல்லாம் வீட்டு வாசலை விட்டு வெளியே வருவதில்லை . வாசல்படிகளில் அறிமுகமான முகங்களும் உதடுகள் தெறித்துப் போடும் வார்த்தைகளும் நசுங்கிப் போயின. ரெண்டு மூன்று நாட்களாக நெருங்கிய உறவினர்கள் நிறைய துக்கங்களைச் சுமந்து இங்கு வந்து இறக்கிவைத்து விட்டுப் போய்க் கொண்டிருந்தனர். அக்கம் பக்கத்தினரின் அரவணைப்பு நிரம்பிய விசாரிப்புகளுக்கும் குறைவில்லை. வெறுமைக்குள் தன் அடையாளங்களை இழந்த மனசின் பிரியங்கள் தொலைந்த இடம் குறித்தும், அதனை மீண்டும் மீட்டெடுப்பது குறித்தும் அவ்வப்போது சில எத்தனங்கள் மட்டும் நிகழ்வதாய்த் தோன்றியது. அக்கா அந்தச் சம்பவங்களைப் பற்றிப் பதற்றத்தோடு பேசிக் கொண்டிருந்தாள். முன்னூறு கிலோமீட்டர் நெரிசலிலும், நெருக்கடிகளிலும் பயணித்துப் புருஷனோடு வந்திருந்தாள். குடும்ப உறவுகளின் இழைகள் அறுபடாதவாறு காப்பாற்றிக் கொண்டு நல்லதுக்கும் கெட்டதுக்கும் பங்கெடுத்துக்கொள்ளும் ஒருசிலரில் அவளின் பெயரும் தவறாமல் இடம்பெறும். குழந்தைகளுக்குப் பள்ளிக்கூட விடுமுறை இல்லாததால் மாமியாரிடம் விட்டுவிட்டு வந்திருந்தாள். தூரங்களில் சிதறிக்கிடந்த மகரந்தங்கள், சூடிக் கொள்வதற்குப் பூக்கள் இல்லை. “என்னதான் அப்படி பிரச்சினை உங்களுக்குள்ளேயோ கல்யாணங்கழிஞ்சு மூணு வருஷமாச்சு. கைக்குழந்தை வேற இருக்கு. பஷீரப்பா கல்யாணம் கழிஞ்சு நாலு மாசத்தில் மஸ்கட்டுக்கு போனவன் திரும்பிவந்து கொஞ்ச நாளுதான் ஆச்சு. அதுக்குள்ள எப்படியாக்கும் இது”… நடுவீட்டுச் சுவரில் ஏற்பட்ட வெடிப்பு நிறைய நாட்களாகவே அப்படியே இருந்தது. இடித்துச் சுவரைப் புதுசாய்க் கட்டுவதற்கான அவசியம் ஏற்படவில்லை. திரையொன்றை விரித்துப் போட்டால் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வெடிப்பு எதுவும் தெரியாது என்றாலும், யாரும் எதுவும் செய்யவில்லை. நீண்டு போன மெளனத்தைக் கலைத்தவாறு பெரியப்பா பேச ஆரம்பித்தார். “மாமியாரு வூட்லதான் நசீறா இருந்தா. கல்யாணம் கழிஞ்ச நாளில் எல்லாம் அப்படி ஒண்ணுமில்ல. இப்பதான் ஒவ்வொரு பூதமா கிளம்பியிருக்கு…” "மாப்பிள இவ படிச்ச ஸ்கூல்ல போயி டிசியும் சர்டிபிகேட்டும் வாங்க போயிருக்காரு. அங்க போன போதுதான் தெரிஞ்சுதாம், நசீறா எட்டாங்கிளாஸ் தோத்துப் போனவன்னு. கல்யாண சமயத்துல சம்பந்தம் பேசுனவங்க இவ பிளஸ்டூ முடிச்சிருக்கிறதா சொல்லி இருந்தாங்களாம்… மாப்பிள அத வச்சிகிட்டு ஏதாவது ஒரு முஸ்லிம் நர்சரி ஸ்கூல்ல வேலை வாங்கிடலாம்னு யோசிச்சிருப்பாரு போல இருக்கு… காத்தூன் அக்கா இடைமறித்தாள், “மாப்பிள்ளைகூட கல்யாணகார்டுல எம்.ஏன்னு போட்டிருந்தார். ஆனா அவரு பி.ஏ கூட பாசாகலியே.. இத யாருட்ட போயி சொல்ல” “அதப்பத்தி நாம பேசமுடியுமா… புள்ளய கொடுத்தவங்க”… வீசிய காற்று அனலாகச் சுட்டது. குளிர்மையையும், சுகத்தையும் அள்ளிவாரி வீசிப்பழகிய காற்று அடிக்கடி தன் குணத்தை மாற்றிக்காட்டியது. காற்றுக்கெனச் சொந்தமான இயல்பு எதுவும் இல்லை போலும். “நிச்சயம்பலத்துல அம்பதாயிரம் ரூவா வச்சு கொடுத்திருக்கு. கல்யாண சமயத்தில் பேசினபடி முப்பத்தஞ்சு பவுனுக்கு உருப்படி போட்டிருக்கு. மாப்பிளைக்கு நிக்காஹ் மோதிரம் அரை பவுனுல.. கல்யாணம் முடிஞ்சு பொண்ணும் மாப்பிளையும் வழி கேக்கத்துல முத்திரைப் பவுனு… அப்புறம் அடுக்களை பாக்கறதுக்கு பிரிட்ஜில் இருந்து கரண்டி தட்டுமுட்டு சாமான்வரை எல்லாம் கொடுத்திருக்கு”.. தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை அலறி அழத் தொடங்கியது. நசீறா தொட்டிலை ஆட்டத் தொடங்கினாள். வெள்ளைக் கவுணி தொட்டிலின் அடிப்பாகம் நனைந்திருந்தது. குழந்தை பெய்த மூத்திரத்தின்மீது சாக்கைத் தூக்கிப் போட்டாள். “அது ஒண்ணும் இல்ல… எப்படியோ மாப்பிள்ள… கோவத்தில் சொல்லிட்டாரு. இனி என்ன செய்யேதுண்ணு யோசிக்கணும்” “அதெப்படி கோவத்தில் சொல்வாரு…? ஜமாஅத்துக்கு பெட்டிஷன் கொடுத்து ஆலிம்சாமாரு, நிர்வாகிமாரு மத்தியிலதானே இது நடந்திருக்கு” மழைத்தூறல் வெளியே விட்டபாடில்லை. பெரு மழை வரும் போலிருந்தது. சாயங்கால இருளும் பரவத் தொடங்கியது. அப்போதுதான் வந்தார் தாசீன் எலப்பை. மழையில் நனைந்தவாறு தலைப்பாகைகட்டை அவிழ்த்து முகத்தைத் துடைத்தவாறு வீட்டுக்குள் நுழைந்தார். பள்ளியில் தொழுகைக்கு பாங்கு சொல்றதுக்கும் எடுபிடி வேலை செய்யறதுக்கும் ஊரில் உள்ள தாசீன் எலப்பைதான். வயசான காலத்தில் மாசம் இருநூறு ரூவா சம்பளமும் பூவுக்கு ஒருகோட்டை நெல்லும். பாத்திஹா ஓதப்போனா கெடைக்கும் ஏதாச்சும் கைமடக்கு. இபாதத்தோடும் தொழுகை வணக்கத்தோடும் வாழமுடியுதேன்னு உள்ள திருப்தியோடு திரியிற தாசீன் எலப்பை அந்த ஊரில் உள்ள நல்லது கெட்டதுகளை எல்லாம் எல்லாருட்டேயும் பகிர்ந்துக்கிடுவாரு. “கல்யாண ரெஜிஸ்டருல எழுதியிருக்காமே.. அஞ்சுபவுன்ல தாலிசங்கிலி போட்டானாமே மாப்பிள, அத நீங்க திருப்பிக் கொடுத்திடணுமாம். எப்ப கொடுக்கப்போறியோ? ஜமாஅத்துல கேக்க சொன்னானுவோ?” மெளனமும் சோகமும் எல்லோரின் முகத்திலேயும் அப்பியிருந்தது. நசீறாவுக்குத் தான் சாய்ந்திருந்த சுவர் சரிந்து விழுவது போலிருந்தது. “அதெப்படி… நாங்க புள்ளக்கு முப்பத்தஞ்சு பவுனு போட்டு நிக்காஹ் செஞ்சு கொடுத்தோம். இப்ப அவ கழுத்தில் காதுல கிடக்க நகைகளை கணக்குப் பாத்தா பனிரெண்டு பவுன்கூட தேறாது. மீதிபவுன மாப்புள வூட்டுல தரச்சொல்லுவியளா”… தாசீன் எலப்பைக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. சற்றுநேர மௌனத்திற்குப்பின் பேச ஆரம்பித்தார். “அதெப்படி நாமகேக்க முடியும்; வாழப்போனபுள்ள, மாப்பிள கேட்டான்னு இவகழத்தி கொடுத்திருக்கா. அதவச்சு அவன் வேற வெளிநாட்டுக்குப் போனான். இப்போ எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்து நிக்கானா அல்லது லீவுல வந்து நிக்கானான்னு கூட தெரியல. இதுல நாம ஒண்ணும் சொல்ல முடியாதுல்ல” “எப்படியோ இப்ப உள்ள சூழ்நிலையில பாத்தா அவங்க்கூட அப்படி ஒண்ணும் மோசமான புள்ள இல்லைன்னு தெரியுது”… மாப்பிள்ளைக்காகப் பரிஞ்சு பேசுவதைக் கேட்டதும் பெரியப்பா ஆவேசப்பட்டார். "அந்த பொலியாடி மொவன நீங்க வேறு நல்லவன்னு சொல்லுறீங்களா..?’’ “பின்ன இல்லியா - அப்படி இல்லைன்னா இப்பம் மாப்பிள ஊருக்கு புதுசா இன்னொரு பெட்டிஷன் கொடுத்திருப்பானா..” புதிர் போட்டார் தாசீன் எலப்பை "என்னவோய் சொல்றீரு? இன்னொரு பெட்டிஷனா? அதுதான் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டான்னு எல்லாத்தையும் சோலி தீத்தாச்சே.. இப்ப என்ன பெட்டிஷன் மயிரு…’’ “மாப்பிள்ளை கொடுத்த பெட்டிஷன்ல நான் குழப்பத்திலேயும் கோவத்திலேயும் எம்மனைவியை முத்தலாக் சொல்லிட்டேன். இப்படி நான் அவளோட சேர்ந்து வாழ விரும்புறேன். எங்கள் சேர்த்து வைக்கணும்னு சொல்லியிருக்கான்”, ’’அதுதான் இன்னக்கு ராத்திரி ஊருல கமிட்டி வச்சிருக்காங்களாம். உலமா சபையில் உள்ள ஆலீம்களையும் கூப்பிட்டிருக்காங்களாம். உலமா சபையில் உள்ள ஆலீம்களையும் கூப்பிட்டிருக்காங்களாம் இத பத்தி பேச".. எல்லாருக்கும் இந்தத் தகவல் அதிர்ச்சியாகவே இருந்தது. தாசீன் எலப்பை குரலைக் கனைத்தவாறு ஸ்டூலில் நிமிர்ந்து உட்கார்ந்தார். ஒரு டீ குடித்தால் தேவலாம் போலிருந்தது. யாரும் டீ கொடுக்கவில்லை. ’தலாக் சொல்லி பிரிஞ்ச புருஷன் பொண்டாட்டி திரும்பவும் சேர்ந்து வாழணும்னா லேசுபட்ட காரியம் இல்ல. விலக்கப்பட்ட அந்தப் பொண்ண இன்னொருத்தனுக்கு கட்டிக்கொடுக்கணும். பழையபடி அந்த புதிய மாப்பிள அவள் தலாக் சொல்லணும். அதுக்கு பொறவுதான் பழைய மாப்பிளய அவ கட்டிக்க முடியும். மார்க்கச் சட்டம் இதத்தான் சொல்லுது"… இறுக்கமும் மனசிற்குள் புரிய முடியாத வருத்தமும் ஒன்றெயொன்று கவ்வியது. பெரியப்பாவிற்கு இப்போது மனசுக்குள் வேறுவிதமான சந்தேகம் படரத் தொடங்கியது. ‘தலாக்’ சொன்னவன் திடீர்ன்னு பொண்டாட்டியோடு சேர்ந்து வாழப் போறேன்னு சொல்றதுக்கு காரணம் என்ன?… இது நடக்காதுன்னு தெரிஞ்சுகிட்டு நல்லவன் போல் நடிக்கிறானா.. இல்ல உண்மையிலேயே அவ உறவு வேணும்னு சொல்றானா - ஒருவேளை நசீறாவின் அடிமனதில் சமாதியாகிப்போன ரகசியங்களில் இதற்கான பதில் கிடைத்திருக்கக்கூடும் என்றாலும் நிசப்தம். எதுவும் யாருக்கும் புரியவில்லை. நிலவிய மெளனத்தைக் கலைத்தவாறு தாசீன் எலப்பை பேச்சைத் தொடர்ந்தார். “தலாக் சொல்லப்பட்ட பொண்ண இன்னொருத்தனுக்கு கட்டிக் கொடுத்தா மட்டும் போதாது. அவனோடு அவ ஒருநாளாவது உடல் உறவு வச்சுக்கிடணும். அப்பதான் அவன் சொல்லுற தலாக்கும் செல்லுபடியாகும்”…! “ஒய்.. என்ன கிண்டல் பண்ணுறீரா… வாய்க்கு வந்தபடி பேசுறீரே”.. படபடத்தார் பெரியப்பா. "யாரப்பே இதெல்லாம் என்ன எனவாக்கும்’? காத்தூன் அக்கா பதற்றப் பட்டாள். தாசீன் எலப்பையின் முகமோ கடுகடுப்பாக மாறியது. உரக்கச் சத்தம் போட்டார். “இதெல்லாம் நாம் வச்ச சட்டம் ஒண்ணும் இல்ல… அல்லாவோட சட்டமாக்கும்”. தாசீன் எலப்பை வீட்டைவிட்டு வேகமாக வெளியேறினார். தொட்டிலில் தூங்கிக்கிடந்த குழந்தை கீழிறங்கி கண்ணைக் கசக்கியவாறு எழுந்து நடக்கத் துவங்கியது. திடீரென்று குழந்தை வீறிட்டு அழுதது. எதிரே பச்சைநிறப் பூனை ஒன்று ஓலமிட்டுக் கரைந்தவாறு கண்களை உருட்டி, மீசைமுடிகளைச் சிலிர்த்துப் பயம் காட்டிக் கொண்டிருந்தது. விழியின் ஓசை -ரோஜா குமார் அது அரண்மனைதானென்று தீர்மானத்துக்கு வருமுன்னே ஆச்சரியப்பட்ட அவளுக்கு அசதி தந்தது. பேரிளம் வாழைத்தண்டுகள் போல் தூண்கள் அணிவகுத்து நின்றன. திசையெங்கும் இறங்குவதற்கும் ஏறுவதற்குமாக ஏராளமான படிகள். முழுவதும் பளிங்குக் கற்களினாலான கட்டிடம் மேற்கூரை யில்லாமல் அதிசயம் போலிருந்தது. மேகமற்றுத் தெளிந்த வானத்தில் முழுநிலவு அதை ஒட்டியிருந்த ஒற்றை வெள்ளி மினுமினுத்து ஒவ்வொரு நிறமாக உருமாற்றிக் கொண்டிருந்தது. சிறார்களெல்லாம் படிகளில் ஏறுவதும் இறங்குவதுமாகக் கும்மாளியிட்டுத் திரிந்தனர். கூட்டங் கூட்டமாக வரும் குமருகள் மெல்லிய சிரிப்பினைச் சந்தம்போல் ஒலித்துச் சிந்தியவாறு இங்கும் அங்குமாகப் பறந்தனர். ஒருத்தி மோதியதில் ஒரு தூண் ஆடிற்று. ஆடிய தூணின் தலையிலிருந்து சிப்பிகள் விழுந்து சிதறியதில் முத்துக்களின் வண்ணமயம். அரண்மனையின் நிறமும் அவ்வப்போது மாறியது. குழாம்குழாமாக நண்பர்களும், ஜோடி ஜோடியாய்த் தம்பதிகளும் மகிழ்வினைப் பகிர்ந்தபடிப் போய்க் கொண்டிருந்தனர். அங்கே வந்து நிற்பதின் மூலத்தை அறியாதவாறு பிரமித்துப் போய் நின்றாள். புறாக்களும் மயில்களும் வந்து போயின. பேச்சை மறந்த கிளிகளும் கூவாக் குயில்களும் கூடி நின்றன. கிளி பேசினாலும் பேசாவிட்டாலும் அழகுதான். குயில் கூவினால்தான் அழகு என்றாள் ஒருத்தி. ஓரங்களில் நின்ற குறுஞ்செடிகளில் பெரும் பூக்களின் மொட்டவிழ்ந்து தேன்சிட்டுகள் சீறிப்போயின. மருதாணிப் பூவும், மருக்கொழுந்தும் மஞ்சத்து உறவில் முதிர்ந்தது போலான மென்கந்தம். இதமாய் வருடிற்று. உடுத்திய உடை கொஞ்சமும் குறையாது ஆண்களும் பெண்களும் குளித்து விட்டுப் படியிறங்குவதைக் கண்டாள். படியிறங்குகிறார்களே, அரண்மனை இருப்பது அதலபாதாளத்திலா? அந்தரத்திலா? நீராடியது அருவியிலா, ஆற்றங்கரையிலா? ஒருத்தியை நிறுத்தி, இங்கே என்ன நடக்கப் போகிறதென்று கேட்டாள். மருதாணிக் கைகளால் முகத்தை மூடிய அவளோ நாணம் நெற்றியில் மின்னலிட இளவரசரின் வருகையை உறுதி செய்துவிட்டு, ஒருவிதத் துள்ளலில் ஓடிப் போனாள். அவளின் வெட்கம் சுயம்வரம் சொல்லியது. எங்கே இளவரசருக்கு தன்னைப் பிடித்துவிடுமோ என்கின்ற கிலி பற்றிற்று அவளுக்கு. பெரும்பாக்கியத்தை நிராகரிக்கலாமா? நிராகரிக்கணும். இளவரசியாவது பாக்கியமாவதெனில் இளவரசரின் அந்தப்புரவாசத்தைச் சகிப்பது எப்படிச் சாத்தியமாகும்? கூடாது. குளிக்கவோ சந்தனம் பூசிக் கொள்ளவோ இமைகளில் மை இருத்திக் கொள்ளவோ கூடாது. எவளின் அழகிலாவது மயங்கட்டும். வலுவாய்ச் சந்தேகம் வார்த்தது. குளித்துவிட்டுப் போனதில் இளைஞர்களும் இருந்தார்களே! இங்கே சுயம்வரமும் பொதுமைதானா… ஒருபக்கம் பெண்களின் களிக்கூச்சலும். அலறிய சிரிப்புடன் அழுகைபோல் பரவசம். அங்கே எந்தவொரு ஆணையும் காணவில்லை. சிறுவர்களின் கட்டளைகளுக்குப் பணிந்து பெருமடிப்பசுக்கள் போயின. பாலுக்குப் பஞ்சமில்லை என்றும், பால்ச்சோறு கிட்டும் என்றும் ஒருத்தி இன்னொருத்தியிடம் கூறிக்கொண்டு போனாள். குயிலிடம் பழகிய கிளிகள் கூவின பேசுவது வீண் என்று குயில்கள் பறந்தன. குதிப்பதில் குதூகலம் செப்பிய கன்றினைத் தேடிய பசுவின் பாசம் படிகளில் பாலாய் வழிந்தது. பெண்களைத் தொடர்ந்து ஆண்களும் அவர்களைத் தொடர்ந்து பெண்களும் - சிறுவர்களும் சிறுமிகளும் ஏறவும் இறங்கவுமாக இருந்த போதும் பால்வழியும் படிகள் வழுக்கவில்லை. ஓடிவந்த ஒருத்தி அவளிடம் கேட்டாள். நீயாரென்று? ஆமாம் நான் யாரென்று கேட்டவளிடமே திருப்பிக் கேட்டாள். வந்தவளோ பெருஞ்சிரிப்பாய்ச் சிரித்துவிட்டுப் பைத்தியம் என்றாள். பைத்தியம் யார்? எல்லோரும் சந்தோஷமாக இருப்பதைக் கண்டு பயந்தாள். சொம்பு நிறையக் கறந்த பால் நுரைத்துப் பொங்கிய படிக்கொண்டு வந்து நீட்டிய சிறுவனிடம் வாங்குவதற்குப் பயந்தாள். காய்ச்சவில்லை என்றாலும் பால் வெதுவெதுப்பாக இருக்கும் என்றவனிடம் வாங்குவதற்கு மறுத்தபோது - ஒரே மூச்சில் குடித்த சிறுவன் சொம்பை உருட்டிவிட்டு அலட்சியமாக நடந்து போனான். தனியே ஒரு கன்று துள்ளி வந்தது. அதன் நெற்றியில் முத்தி உனக்குப் பசிக்காதாவென்று கேட்டு வாஞ்சைப் படப்பாந்தம் வந்தது. கன்று கட்டுக்குள் அடங்க வேண்டுமே, நடக்கிற காரியமா? எதிரே வந்தவளை எங்கோ பார்த்தது போலிருக்க உற்றுக் கவனித்தாள். ஏராளமான ஆபரணங்களணிந்து அழகோடு இருக்கும் அவள்? ஓ! அத்தை. அத்தையேதான். தந்தையின் சகோதரி. அவளை விளித்த வேளையிலேயே என் பிறப்பின் கொழுந்தேவெனக் கொஞ்சித் தழுவிக் கொண்டாள். “நீ அலிமா தானே?”“ஆமாம்… மாமி!” இளவரசரின் வருகை உண்மைதானாவென்று அத்தையிடம் அலிமா கேட்டாள். அப்படியெல்லாம் உறுதியாகச் சொல்லமுடியாதென்றாள் அத்தை. புதிய இடங்களைச் சுற்றிக் காட்ட வேண்டும். என்று ஆவலைச் சொன்ன அலிமா, ஆண்களும், பெண்களும் ஏன் கணவனும் மனைவியுங்கூட ஒருவரையொருவர் ஏறிட்டுப் பார்த்திடாத நிலையில் போவது தனக்குள்ள பெரிய ஆச்சரியம் என்பதைச் சொன்னாள். எல்லோரும் மென்மையும் இனிமையும் கலந்த தன்மையில் உலவுவதையும் அதிர்ந்திடாத தொனியில் உரையாடுவதையும் சொன்னாள். எல்லாம் இறையச்சம் என்று சொன்ன அத்தையின் அசைவு அலிமாவின் தந்தையை நினைவுபடுத்தியது. மிகுந்த பிரயாசையுடன் கேட்டாள். “அத்தாவப் பாத்தியளா மாமி?” “அண்ண ன் வருவாஹ!” “எப்படி இருக்காஹ?” "ரொம்ப நல்லா!’’ அலிமாவின் விழிகளில் ஆனந்தப் பெருக்கும். தந்தையைக் காணும் தவிப்பை வெளிப்படுத்தினாள். சூழல் பரபரப்பாயிற்று. தூண்களில் பூங்கொடிகளைப் படரவிட்டார்கள். கம்பள விரிப்பின் மீது மகரந்தம் தூவப்பட்டது. கன்றுகளைப் போல் பசுக்கள் துள்ளின. இளவரசரின் வருகை உறுதிப் படும் தருணத்தில் அலிமாவின் அருகில் நின்ற அத்தையைக் காணோம். ’மாமி மாமி… ’யென்று கூவியபடி ஓடிய போது இளவரசர் எதிர்பட்டார். வாளோ கேடயமோ வைரக் கிரீடமோ ஏதுமின்றி வந்தவரை இளவரசர் என்றனர் அனைவரின் மதிப்பிலும், மரியாதையிலும் அவருடைய தகுதி பெருகிக்கொண்டு போனது. சிறார்களை மட்டுமே தொட்டுக் கொஞ்சிய இளவரசர் எந்தவொரு பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அலிமாவின் பார்வையில் அழகாகத் தெரிந்தார். மதிப்பளித்த குமருகள் கூட அவரைத் தன்னைப்போல் பார்க்கவில்லையே என்று அலிமா வெட்கப்பட்டாள். இப்படியான நேரத்தில் அத்தையின் வருகையைச் சொன்ன அத்தையைத் தேடினாள். சந்தோஷம் திரண்டு பூப்பூவாய் உருக்கொண்டு வகைக்கொன்றாய் வாசம் வந்தது. அத்தை ஏன் போக்குக் காட்ட வேண்டும்? தூண்களில் படர்ந்திருந்த கொடிகளில் கொத்துக் கொத்தாய்த் தொங்கிய மலர்களை வருடிக் கொண்டேபோன இளவரசர் ஒருகணம் நின்று திரும்பியபோது அலிமாவைப் பார்த்துவிட்டார். இல்லை அலிமாதான் அவரை எதிர்கொண்டுவிட்டாள். அவளுள் நிச்சயிக்கப்பட்ட தருணமது. காலமாகி விடாத காலம். அபூர்வமென்று அவரின் புன்னகையே மொழிந்து விட்டது. தூண்கள் கண்ணாடி போலாகி, பார்வை ஒளிபோல் ஊடுருவி, நீரிரைத்து விட்ட நிலைக்குள்ளானாள். இன்னொருதரம் அருகில் போய்ப் பார்த்துவிட ஆர்வமும், அவசரமும் வர அச்சமும் வந்தது. அப்படியே நின்றுவிட்ட அவளிடம் வந்த இளம்பெண் உன் அத்தை உன்னைப் படியேறி வரச் சொன்னார்களென்று கூறி இமைகள் படபடக்கத் தூணோரம் ஒதுங்கிக் கொண்டாள். இதென்ன கோலம், இளவரசர் எங்கே மாயமானார்? அலிமா அண்ணாந்தாள். வானவில்லின் பாதியை முகில் விழுங்கியிருந்தது. அத்தை அழைப்பது போல் குரல் வர அலிமா படியேறினாள் . ஏழெட்டுப் படிகளுக்குள்ளாகவே மேலே வந்துவிட்டது அதிசயமானது. அங்கு அலிமா பார்த்ததோ பேரதிசயமானது. தந்தையைக் காட்டுவதாகச் சொன்ன அத்தையையும், தன்னைப் பார்த்துவிட்டு போன இளவரசரையும் பால் தந்து பருகச்சொன்ன சிறுவனையும் அந்தப் பிரமிப்பு அகற்றிவிட்டது. பூமியில் பாவியிருந்த பாதங்கள் கூச, ’ஓ! இதென்ன பெரும் பரப்பு? என்று சொல்லி நின்றாள் தானாகவே. பழக் குலையொன்றைக் கையிலேந்தியபடி அவளைப் பார்த்துக் கொண்டே நின்ற பெரியவர் சொன்னார், ‘கடல்!’ ’கடல்? அப்பொ நீரெல்லாம் ‘திட்டுத் திட்டாய் ஜொலிப்பது?’ ‘நிலாத் துளிகள்!’ ‘இங்குதான் விவசாயம்!’ ‘ஓ! ஊற்று உப்பாயிருக்குமே?’ ‘ஊற்றே இல்லை. அவ்வப்போது மழை பெய்யும்!’ ‘ஓகோகோ..!’ அலிமாவிடம் ஒரு பழத்தைத் தந்து உண்ணச் சொன்ன பெரியவரைப் பார்த்து அவளின் தந்தையின் சாயலில் இருப்பதாகச் சொன்னாள் பார்ப்பவர்களை வயோதிகம் அப்படி எண்ண வைப்பது பெரும் பாக்கியம் என்றார் அவர். அவரின் கன்னக் குழிகளையும், ஆழவிழிகளையும் கூர்ந்து நோக்கிவிட்டு, ஒரு முறை ’அத்தா’என்று விளித்தாள். மட்டற்றுப் போன பெரியவருக்கு மகிழ்ச்சியும் பதற்றமளித்தது. கண்கள் கசிந்தன. மகளைத் தாயென்று கூறுவது தந்தைக்கு மகிழ்ச்சி தரும் என்றவர் மறுபடியும் பழத்தை உண்ணச் சொன்னார். தோலை உறிக்கும் போதே இளவரசரைப் பற்றி விசாரித்தாள். உடனே அந்நிகழ்வு குறித்த ஓரசைவும் பிசகாமல் ஒப்புவித்தாள். இளவரசர் இறையச்சம் உள்ளவரென்றும் அவளின் பார்வை அவரைப் பாதித்திருக்கக் கூடுமென்றும் பெரியவர் சொன்னார். அவரைப்பார்த்தது தவறா? ’பார்வையெல்லாம் தவறாவதில்லை!’என்று கூறியவாறு இன்னொரு பழத்தை நீட்டினார். அதை வாங்க மறுத்து சுவையானவற்றைத் திகட்டும் மட்டும் தின்று அதன் மதிப்பைக் குறைப்பதில் தனக்கு விருப்பமில்லை என்று சொன்னாள். ‘நிச்சயமாக உன்மீது இளவரசருக்கு மதிப்பிருக்கும்!’ ஆவலாகக் கேட்டாள், ‘காரணம்?’ ‘நீயும் இறையச்சம் உள்ளவள்!’ அச்சொற்களை அவர் உச்சரித்தவிதம் வாழ்நிலை குறித்துப் பெருமிதம் தந்தது. பெரியவரிடத்தில் அவளுக்குத் தைரியம் வந்தது. இளவரசரின் பெயர் என்னவென்று தெரிந்து கொள்வதில் தவறு இருக்குமா என்று கேட்டுவிட அதற்கு மறுத்துத் தலையசைத்த அவர், இப்படியான தயக்கம் மென்மையானது மட்டுமல்ல மேன்மையானதுங்கூட என்று கூறி, இளவரசரின் பெயரைச் சொன்னபோது, அலிமாவின் கைகள் பதற்றத்தில் கழுத்தைத் துழாவ கருகமணி நெருடிற்று. அபூர்வமான கனவு. எப்போதோ இறந்து போன அத்தை வந்ததும் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு மறித்துவிட்ட தந்தையைக் காணாதது ஏமாற்றமாக இருந்த போதும் கணவனின் பெயரைக் கேட்டதும் பதறி விழித்துவிட்டாள். அவளின் சங்கடமெல்லாம் இளவரசருக்கு ஏன் அந்தப் பெயர் இருக்க வேண்டும் என்பது பற்றித்தான்! அரையிருட்டில் உறைந்திருக்கும் அறை. கருகமணி தந்தவன் குறட்டை ஒலியைத் துப்பியவாறு, ஒருக்களித்துக் கிடந்தான். எப்போது வந்து வீழ்ந்தானென்று அவளுக்குத் தெரியாது. காலணையும் தலையணையுமாகக் கர்ம சிரத்தைப் பட்டிருந்தான். பேசினால் எதிர்த்தா என்றும், பேசாதிருந்தால் திமிரா என்றும் கேட்பான். அலிமா அவன் முகத்தைக் காணவிடாது மூடிவிடுகின்ற இருட்டை நேசித்தாள். விடிவதைக் கூட வெளிச்சம் வருமே என்று வெறுத்துக் கனவின் ஒவ்வொரு பகுதியாக நினைவுபடுத்திப் புரண்டாள். வெளிச்சம் வேண்டாதது போல் விடிந்து விட்டது. வாசலில் பால்கார ஆமீனாவின் குரல் கேட்டது. கூவல் தன்மையில் ’எம்மா பாலோய்’என்றிருந்தது. தினமும் காலை மூன்று மணிக்கு எழுந்து முப்பது வீடுகளுக்குப் பாலூற்றும் பணியைச் செய்பவள் ஆமீனா. பூரித்த தனமாய் சொம்பில் பாலூற்றும் போதே புன்னகை காட்டியவளிடம் அலிமா கேட்டாள், “இறையச்சம்னா என்னா?” கொஞ்ச நேரம் கூர்ந்து நோக்கிய ஆமீனா "இறையச்சம்னா ஒழுக்கம்தான்…!’’என்று அழுத்தமாகக் கூறினாள். பாலேய் என்பதைப் போல் இலகுவில்லாமல் கல்லின் முத்திரைபோல் கனப்பட்டிருந்தது. அலிமாவும் அதை ஆறேழு முறை சொல்லிக் கொண்டாள். ஆமீனாவின் விளக்கம் அவளுக்குப் பிடித்திருந்தது. பாலோடு போனவளுக்குச் சிரிப்பு வந்தது. கட்டிலில் கிடந்த கணவன் எப்போது எழுந்தானோ அவளையும் சிரிப்பையும் ஏளனம் செய்து பெண்ணுக்கு அழகில்லை என்று எத்தினான். அந்த அறிவுரையிலும் அலிமாவுக்குச் சிரிப்பு வந்தது. உள்ளே விரைந்து வந்து அவளை ஓங்கி அறைந்துவிட்டான். பால் சிதறி சொம்பு உருண்டு வட்டமடித்து எஞ்சிய பாலும் ஒழுகிற்று. அந்த நேரத்தில் அவனைத் தேடி நான்கைந்து பேர் வர அவர்களிடம் நாணமும் வெட்கமுமாகக் குழைந்தான். அவர்களை அமரச் சொல்லி அதிராத தொனியில் பண்புமிகுந்த வார்த்தைகளைக் கூறி ஆவலாகப் பார்த்தான். சாயா குடிக்க வேண்டுமென்று நளினப்பட்டான். இருபாலருக்கும் இடையிலான தனிமையில் எழுந்து வந்து அலிமாவிடம் ’கோபமா’என்று கேட்டான். விழிகளிலேயே உமிழ்ந்தாள், ‘அசூசை’! என்று. பொறி -சல்மா தூங்கி நீண்ட நேரத்திற்குப் பின் அறைக்கதவு தட்டப்படுகிறது, மிருதுவாக, திடுக்கிட்டு விழிக்கிறேன். யார் என்ற கேள்வியும் பதற்றமும் சட்டெனப் பற்றுகிறது. எழுந்திருக்கத் தயங்கி உட்கார்ந்தே இருக்கிறேன். யாராக இருந்தாலும் தட்டிவிட்டுப் போய்விட மாட்டார்களா என ஏக்கம் படர்கிறது. கதவு தட்டும் ஒலி படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வெகு தொலைவிலிருப்பது போன்று பாவனை செய்து கொள்கிறேன். நொடிக்கு நொடி. தட்டுதல்கள் என்னை நெருங்கி வருகின்றன. தடதடவென்று தாறுமாறாய் இருள் நிறைந்த அறையெங்கும் ஓசைபெருகி நிரம்பிக் கொண்டிருக்கிறது. திறக்க வேண்டுமென்கிற பிரக்ஞை துளியுமற்ற நிலையில் கதவையே வெறிக்கிறேன். இனியும் திறக்காமலிருக்க இயலாது என்ற நிலையில் பயம் அழுத்துகிறது. நள்ளிரவில் யாரும் அசட்டுத்தனமாகக் கதவைத் தட்டப்போவதில்லை. நாளைய சமையலைப் பற்றியோ, வேலைக்காரப் பெண் வராததைப் பற்றியோ சொல்லப் போவதில்லை. அது ஒரு கெட்ட செய்தியாக இருக்கக்கூடும். இதேபோன்று பல நடு இரவுகளில் சொல்லப்பட்ட செய்திகள் மோசமானவை, சூழலையே அழித்தவை. இப்பொழுதெல்லாம் கதவு தட்டும் ஒலியே பயம் கொள்ளச் செய்கிறது. கதவு தட்டப்படுதலை எதிர்நோக்கியே இரவுகளைத் தொடர்வது தாங்க இயலாத துன்பமாகவே மாறிவிட்டது. திடீரென அறையெங்கும் வெளிச்சம் பரவி என்னைக் கலைக்கிறது. “சனியனே, கண்ணத் தொறந்து பார்த்துக்கிட்டுத்தான் கதவத் தொறக்காம உட்கார்ந்திருக்கியா?” தூக்கம் கலைந்த கோபத்தில் கத்திக் கொண்டே கதவைத் திறக்கப் போகிறான். அவனுக்கு எல்லாவற்றையும் விட தூக்கம்தான் முக்கியம். அவன் கதவை நெருங்க எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் அதிர்கிறது எனக்குள். கதவுக்குப் பின்னிருந்து என்ன செய்தி வரப்போகிறதோ, யா அல்லாஹ்! இதயம் முணுமுணுத்துத் துடிக்கிறது வேகமாக ஓடிப்போய் அவனுடைய கைகளைப் பிடித்துத் தடுக்க வேண்டும் போலிருக்கிறது. கதவின் தாழ்ப்பாளை மிகுந்த சப்தத்தோடு இழுத்துத் திறக்கிறான், குழந்தை விழித்துக்கொள்ளப் போகிறதே என்கிற நினைவின்றி! வெளியில் யாரோ நின்று அவனிடம் மெலிதாகப் பேசுவது கேட்கிறது. கிசுகிசுப்பாய் ஒலிக்கும் குரல் புரியாமல் கவனித்துக் கேட்க முற்பட்டேன். பேசுவது யார் என்று பார்க்கலாமே என்ற எண்ணத்தில் படுக்கையிலிருந்தபடியே எட்டிப் பார்க்கிறேன் , முகத்தைப் பார்த்தாவது செய்தியை அனுமானிக்கலாம் என்கிற எண்ணத்துடன். அவனுடைய உருவம் வெளியில் நிற்பவரை முற்றிலுமாக மறைத்திருக்கிறது. கட்டிலை விட்டு எழுந்திருக்கிறேன் என்னவென்று கேட்கலாம் என்று எத்தனை முயற்சித்தும் வலுவற்றுச் சாய்கிறது உடல். படபடப்பு தாங்க இயலாமல் கண்களை மூடிக் கொள்கிறேன். மனதில் ஆண்டவனை நினைத்துக்கொள்கிறேன். சிறிது நேரத்தில் என்னை வந்தடையப் போகும் அச்செய்தி யாரைப் பற்றியதாக இருக்கும், என்னை என்ன செய்யக்கூடும்? பாதியில் நிறுத்திவைத்திருக்கும் புத்தகம் நினைவுக்கு வருகிறது. மனதில் அம்மாவின் ஞாபகம் வருகிறது. நான் எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறேன்? நிமிடத்தில் ஒவ்வொருவரின் முகமும் தோன்றி மறைகிறது. அவன் வெளியில் செல்கிறான்; ஹாலில் இருக்கும் போனில் பேசுகிறான்; யாருடன் என்று தெரியவில்லை, எனக்கு மூச்சுமுட்டிற்று. சுவாசிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. பீதியில் உடம்பெங்கும் கொதிப்பது போல் இருக்கிறது. முன்பு வந்த செய்திகள் துக்கத்தைக் காட்டிலும் பயத்தை உறுதி செய்து விட்டிருந்தன. நிரந்தரமான பயம், துக்கத்தைவிட பயம் வலுவானது. இதோ வரப்போகும் செய்தி எல்லாவற்றையும் முழுக்கப் புரட்டிப் போடலாம். இப்பொழுது அறைக்குள் வந்து ஹேங்கரில் தொங்கும் சட்டையை எடுத்து மாட்டியபடி வெளியில் போகிறான். “என்ன ?” வேகமாகக் கேட்கிறேன். என் குரல் மிகமிகச் சன்னமாக வெளிவருகிறது. என் பக்கம் திரும்பாமலே, “ஒண்ணுமில்லை”என்றான். அறைக்கதவை வெளியில் தாளிட்டு விட்டுச் செல்கிறான். அவனுடைய அலட்சியமிக்க பதில் வழக்கம் போல் வெளிப்பட்டிருக்கிறது. அவனின் அலட்சியங்கள் வெளிப்படும் சமயம் அழுகையையோ, கோபத்தையோ தூண்டிவிடும். இப்பொழுது அப்படியில்லாமல் நிம்மதியாக இருந்தது. தெம்பாகக் கூட இருந்தது. செய்தி மோசமென்னும் பட்சத்தில் அலட்சியம் காட்டத் தோன்றாது. சந்தோஷமாகக் கூட இருந்தது அவன் பதில். சில நொடிகள்தான் நீடிக்கிறது அம்மனநிலை. இன்னொரு சந்தேகம் வருகிறது. அவனுடைய ’ஒண்ணுமில்லைக்கு அர்த்தம் அக்கறையாகவும் இருக்கலாம். என்னிடம் மறைக்கவேண்டிய செய்தியாக இருந்து ஒண்ணுமில்லை என்றானோ? அப்படியென்றால்… திரும்பவும் பயம் வந்து பற்றிக் கொள்கிறது. அழுகை வரும் போல் இருக்கிறது. அவன் முகத்தையேனும் கூர்ந்து கவனித்திருந்தால் குழப்பத்திற்கு இடமின்றிப் போயிருக்கும். என்னை நானே கடிந்து கொள்கிறேன், ஆத்திரத்துடன். குரலைக் கவனித்திருந்தால் கூட ஓரளவு புரிந்திருக்கும். நினைப்பெல்லாம் அந்தச்செய்தியை அறிந்து கொள்வதில் இல்லை, தவிர்ப்பதில்தான் இருக்கிறது. தலை வலித்தது. இரு கைகளாலும் தலையை இறுக்கமாகப் பற்றுகிறேன். நேரம் என்னவாகயிருக்கும் என்று தெரியவில்லை. அதனைத் தெரிந்து கொண்டுதான் என்ன ஆகப்போகிறது? ஜன்னலுக்கு வெளியே தெருநாய் ஒன்று ஊளையிடும் குரலை நடுங்கச் செய்தது. நாய் ஊளையிடுவது துர்சகுனத்திற்கான அறிகுறி என்கிற நினைவு துன்புறுத்திற்று. நாயின் குரலைக் கேட்டு இன்னும் சில நாய்கள் அதனோடு சேர்ந்து ஓலமிடுகின்றன. ஒவ்வொன்றாய்ச் சேர்ந்து தொடர்ச்சியான ஓலம். எங்கிருந்து வந்தன இத்தனை நாய்கள் என்று தெரியவில்லை. அவன் வரும் வரைக்கும் கதவையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான் பார்வை நிலைகொள்ள மறுக்கிறது. என்ன என்ன என்கிற கேள்வி மண்டைக்குள் எதிரொலிப்பது போல் இருக்கிறது. இருட்டு எங்கும் மையம் கொண்டிருந்தது. திடீரென பாழடைந்த குகைக்குள் இருப்பது போன்ற பிரமை தட்டிற்று. சிலந்தியின் கால்களில் பூச்சியாய், பயம் கவ்வ உடல் துவள்கிறது. வாய் திரும்பத் திரும்ப முணுமுணுக்கிறது ‘யா அல்லா, என்னைக் காப்பாற்று.’ இருப்புக்கொள்ளாப் பதற்றத்துடன் அமர்ந்திருந்ததில் உடல் இறுகி வியர்க்கிறது. அறைக்கதவு திறக்கும் சப்தம் கேட்கிறது. என்னைச் சூழ்ந்த மர்மம் விலகப் போகும் தருணமிது. அவன் சட்டையின் பட்டன்களை எடுத்தபடி உள்ளே வருகிறான். கதவைத் தாழிடுகிறான். ஒன்றும் பேசாமல் தூங்கப் போகிறான். விளக்கைப் போடுகிறேன், விபரம் கேட்கலாம் என்று. சற்றைக்கு முன் அறைக்குள் நிரம்பியிருந்த இருள் நொடியில் காணாமல் போகிறது. கண்மூடித் தூங்க முயற்சித்தவன், “சனியனே தூக்கத்தைக் கெடுக்காதே, லைட்ட அமத்து” கோபமாய்க் கத்துகிறான். பதில் பேசாமல் லைட்டை அணைக்கிறேன். வெளியில் காத்துக் கொண்டிருந்த இருள் அரவமின்றி உள்ளே வந்துவிட்டது. தலைக்கு மேல், விட்டத்தில், உடம்பில், முக்கியமாக அவன் முகத்தில் என்று பரவியிருக்கிறது. இருள் மிக வசீகரமாய் இருந்தது. வெளிச்சம் நுழையாத கட்டிலுக்கடியில் சவுகரியமாக உட்கார்ந்து என்னைப் பார்க்கிறது. கேட்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் அமர்ந்திருக்கிறேன். பதற்றமும் பீதியும் பற்ற எத்தனை நேரம் இருப்பது? அறிந்து கொள்வதனாலான விளைவுகளை நிச்சயம் எதிர் கொள்ளத்தான் வேண்டும். இப்பொழுது இல்லையெனில் பிறகு! அறிந்து கொள்வதைத் தள்ளிப்போட்டு என்ன செய்யப் போகிறேன்? பதற்றமும் பயமும் கொன்றுவிடும் போலிருந்தது. “என்ன விஷயம், எங்க போனீங்க?” வெடுக்கென திரும்புகிறான். “ஒண்ணுமில்லைன்னா விடமாட்டியா, ஒனக்குத் தேவையில்லாததை கேட்டு உயிர வாங்காதேடி, இவளால் எப்பப்பாரு தொல்லை, சனியன்” கத்திவிட்டு சுவர்ப்பக்கம் திரும்பிப் படுத்துக் கொள்ளுகிறான். அலட்சியம் உச்சத்தில் இருந்தது அவனின் குரலில் எங்கிருந்தோ வந்த அமைதி ஆசுவாசப்படுத்திற்று என்னை; அல்லாவே என்று முணுமுணுக்கிறேன். பதற்றம் துளியுமின்றி நீங்கியதில் படபடப்பு குறைந்திருந்தது; போதும், இனி பயமின்றி இருக்கலாம். தூங்க முயற்சித்துத் தூங்கலாம். இருப்பினும் கதவு பூட்டியிருப்பது பயம் கொள்ளவே செய்கிறது. தெரு நாய் ஊளையிடுவதை இன்னும் நிறுத்தவில்லை கதவு திறந்து இருக்கட்டுமே என்று தோணுகிறது. பயமற்றிருக்கக் கதவு திறந்திருக்கத்தான் வேண்டுமென்று படுகிறது. பயம் தொடர்ந்தால் பைத்தியம் பிடித்துவிடுமோ என்றிருக்கிறது. "என்னங்க.’’ அவனை எழுப்புகிறேன். அதற்குள் தூங்கிவிட்டான். “என்ன ?” எரிச்சலாய்க் கேட்கிறான். கதவு திறந்தே இருக்கட்டுமே “தயக்கமாக இழுக்கிறேன். ஒன்றும் புரியாமல்”ஏன்?"என்கிறான். “சும்மாதான்” “நடு ராத்திரியில ஏண்டி உயிர வாங்கிற , யாராவது பார்த்தா காறித் துப்புவாக, கதவப்பூட்டிட்டு படுக்க மாட்டே” கத்திவிட்டுப் படுத்துக் கொள்கிறான். பதிலைப் பேசத் தோன்றாமல் அமர்ந்திருக்கிறேன். வானவர்கள் செல்லும் இடங்கள் -தோப்பில் முஹம்மது மீரான் இறந்துவிட்ட, வெளியூர்வாசியான ஷேக் அப்துல்லா மகன் அஹமது கபீர் என்பவருடைய மய்யம் அடக்கம் செய்வது தொடர்பான ஜமாஅத் (ஊர்) நிர்வாக சபை முதலில் இரண்டுமுறை கூடியது. முதல் இரு முறை நடந்த பேச்சு வார்த்தையிலும் எந்த முடியும் ஏற்படாமல் கூட்டம் கலைக்கப் பட்டதால் மூன்றாவது சுற்றுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. ஜமா அத் தலைவரும் செயலாளரும் முரண்பாடான கருத்துக்களுடையவர் களாகியிருந்ததின் நிமித்தம், உறுப்பினர்களில் பலர் இரு அணிகளாக நின்று காரசாரமாக விவாதித்தனர். காலையில் நடந்த முதல் கூட்டத்தில் கடுமையான விவாதங்கள் நடந்ததே தவிரப்பேச்சில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாமல் கூட்டம் கலைக்கப்பட்டது. இறந்துவிட்ட அஹமது கபீரின் பேரில் அனுதாபம் கொண்ட சிலருடைய வேண்டுகோளின்படி மதிய உணவுக்குப் பின் மீண்டும் நடந்த இரண்டாவது சுற்றுக் கூட்டத்தில் உறுப்பினர்களில் சிலர் திடீரென அணி மாறிவிட்டனர். மாலைவரை நடந்த இரண்டாவது சுற்றுக் கூட்டத்தில் அணிமாற்றம் ஏற்பட்டதினால் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் சபை மீண்டும் கலைக்கப்பட்டது. சில நடுநிலை உறுப்பினர்கள் விடுவித்த வேண்டுகோளையும், இறந்தவருடைய உறவினர்களின் தாழ்மையான விண்ணப்பத்தையும், இறந்தவர்களின் மகன் கொடுத்த மூன்றாவது மனுவையும் கருத்தில் கொண்டு காலையில் முதல் சுற்றுக் கூட்டம் நடந்த அலுவலக முதல் மாடியில் மூன்றாவது சுற்றுக் கூட்டமும் நடந்து கொண்டிருந்தது. பெருநகர ஜமா அத் ஆனதால் நிர்வாக அலுவலகம் இரண்டு மாடிகள் கொண்ட கட்டடமாக இருந்தது. சபை கூடியது முதல் மாடியில். அங்கு நடந்த விவாதக் குரல்கள் வெளியே திரண்டிருந்த ஊர் மக்களுக்கும் வெளியூரிலிருந்து வந்து, ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் அகப்பட்டுத் தவித்தவர்களுக்கும் கேட்கும்படியாக இருந்தன. திரண்டிருந்தவர்களில் பலரின் முகங்கள் சோர்ந்து காணப்பட்டன. இறப்பு முந்தைய இரவு 10 மணிக்கு நிகழ்ந்ததால் அதிகாலையில் அடக்கம் நடைபெறும் என நம்பி பறந்தடித்து வந்த உறவினர்கள் உண்ணாமலும் பருகாமலும் ஒரே நிலையாக நின்று அலுத்துப் போயினர். நடந்து கொண்டிருக்கும் மூன்றாவது சுற்றுப் பேச்சில் எப்படியாவது ஜமாஅத் நிர்வாகிகள் சாதகமான முடிவுக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு, இறந்தவரின் உறவினர்களிடையே நிலவியது. ஜமா அத் தலைவர் ஆளும்கட்சியின் வட்டச் செயலாளரும், வார்டு உறுப்பினரும் என்ற ஒரே காரணத்தினால், நகர சாலைவிளிம்புகளில் வியாபாரம் செய்யும் சில உறுப்பினர்கள் தலைவர் பக்கம் சேர்ந்து வாதாடினார்கள். அடக்கம் செய்ய முடியாது. எக்காரணம் கொண்டும் ஜமாஅத் கபர்ஸ்தானில் அடக்கம் செய்யக் கூடாது என்பதில் தலைவர் பிடிவாதமாக இருந்ததற்கு அவருக்கே உரிய சில காரணங்களை முன்வைத்தார். அக்காரணங்களைத் தவிர வேறு காரணங்கள் தலைவர் பக்கம் நின்று பேசியவர்களுக்கும் சொல்வதற்கில்லை. அரசியல் சார்பு இல்லாவிட்டாலும் ஆளும் கட்சி அரசின் சில கொள்கைகளோடு உடன்பாடு உடையவரல்ல புதியதாகத் தேர்வு செய்யப்பட்ட காரியதரிசி தினமும் காலையில் டீக் கடை பெஞ்சில் கால்மேல் கால் போட்டு, இரண்டு மூன்று தினசரிகளை வரிவிடாமல் வாசித்துவிட்டுப் பள்ளிவாசல் வேம்படியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் தொழுகையாளிகளிடம் ஆளும் கட்சியினரின் ஊழல்களையும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசைத் தாக்கிப் பேசுவதையும் விளக்குவது, தலைவரை மறைமுகமாகத் தாக்குவதாக இருக்கும். இருந்தாலும் காரியதரிசி மீது மதிப்புக்குறைவும் கோபமும் இல்லாதவரைப் போல் நடந்து கொள்வார் தலைவர். ஜமாஅத் நிர்வாக அரசியலில் குறிப்பாக, மய்யங்கள் அடக்கம் செய்ய இட ஒதுக்கீடு செய்யும் தலைவரின் தனி அதிகாரத்தில் காரியதரிசியின் குறுக்கீடு அதுவரை இல்லாததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால், இந்த மய்யம் அடக்கம் செய்யும் விஷயத்தில் மட்டும் காரியதரிசியின் திடீர் குறுக்கீடு தலைவரின் நோக்க நிறைவேற்றத்திற்கு ஒரு முட்டுக்கட்டையை ஏற்படுத்தியது. உயர்தர மக்களை அடக்கம் செய்யும் வடபக்கம் உள்ள கபர்ஸ்தானில் இடம் வாங்கி இந்த மய்யத்தை நல்லடக்கம் செய்ய வேண்டுமென்ற காரியதரிசியின் அடம்பிடிப்பு தலைவரை மனக்குழப்பத்திற்கு உள்ளாக்கியது. நடுநிலையாளர்களான உறுப்பினர்கள், வடபக்கம் இல்லாவிட்டாலும் நடுத்தர மக்களை அடக்கம் செய்யும் தென்புற கபர்ஸ்தானிலாவது இடங்கொடுக்க வேண்டுமென்ற கருத்தை முன்வைத்தனர். அதை மூன்றாவது சுற்றுக் கூட்டத்தில் பரிந்துரைக்கவும் செய்தனர். தலைவர் தரப்பினர் அதையும் ஒப்புக்கொள்வதாக இல்லை. பெரிய மருத்துவமனையில் இறந்த அனாதைகள், யாசகர்களாக வந்து பள்ளிவாசலில் தங்கி இருக்கையில் திடீரென இறந்துவிடுகிற முஸாபிர்கள், ஜமாஅத்தில் உள்ள அடிமட்ட ஏழைகள் முதலியோரை அடக்கம் செய்யும் கீழ்ப்புறமுள்ள அனாதை கபர்ஸ்தானிலாவது இடங்கொடுக்க வேண்டுமென ஒரு முதிய உறுப்பினர் சொன்ன யோசனையும் நிராகரிக்கப்பட்டது. வாத எதிர்வாதங்களின் வால் நீண்டு நீண்டு, இறந்துபோன முந்தைய இரவு நேரமான மணி பத்தைத் தொட்டது. வெளியூரிலிருந்து ‘துட்டிக்கு’ வந்தவர்களில் சிலர் ஒரு முடிவும் ஏற்படாததால் கடைசி பஸ்களைப் பிடித்து தத்தம் ஊர்களுக்குப் புறப்பட்டுப் போயினர். நெருங்கிய உறவினர்களில் சிலர் மட்டுமே சோகமுகங்களுடன் ஜமாஅத் அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் இடையே தேராபாராவென்று நடந்து கொண்டிருந்தனர். இறந்தவருடைய சொந்த ஊரில் கொண்டு போய் அடக்கம் செய்யட்டுமே, என்று காலையில் நடந்த முதல் சுற்று கூட்டத்தில் எதிர்பாகம் தெரிவித்த கருத்தின்படி இறந்தவருடைய மகன் 70 மைலுக்கு அப்பால் உள்ள பாட்டனார் பிறந்த ஊருக்கு வாடகைக் காரில் பறந்தார். பரிச்சயமில்லாத ஊரும் முகங்களும். ஊரை அடக்கி ஆளும் ஜமாஅத் காரியதரிசியிடம், விண்ணப்பம் கொடுத்துவிட்டுக் கைகட்டிப் பணிவாக நின்றார், சாதகமான பதிலை எதிர்நோக்கி. காரியதரிசி தண்டியான திருமணப் பதிவேடு, சுன்னத் பதிவேடு, பிறப்பு இறப்புப் பதிவேடு போன்ற ஆவணங்களைப் புரட்டிப் பார்த்தார். ஷேக் அப்துல்லா மகன் அஹமது கபீர் என்ற ஒரு பெயர் காலம் கருமையாக்கிய அந்த ஆவணக் காகித வரிகளில் எங்குமே தென்படவில்லை. ’’உன் வாப்பாவின் பெயர் எங்கள் ஊர் ரிக்கார்டில் இல்லப்பா"என்று சொல்லிக் கைவிரித்தார். “என் பாட்டனார் ஊர் இதுதான் ஆஜியாரே.” "இறந்தது உன் பாட்டனாரா?’’ “வாப்பா” "உன் வாப்பா எங்கள் ஜமாஅத்தை சேர்ந்தவரல்ல. அவர் பெயரில் ஊர் தலைக்கட்டு வரி இல்லை, மீலாது விழாவிற்கு நன்கொடை கொடுத்த ரசீது இல்லை. காதர் வலியுல்லா சந்தனக்கூடுக்கு நேர்ச்சை கொடுத்தவர்கள் பேரில் அவர் பெயர் இல்லை. இப்படி இருக்க எங்கள் ஜமாஅத் கபர்ஸ்தானில் அடக்கம் செய்ய எப்படி இடம் தருவோம்?’. காரியதரிசியின் பதிலைக் கேட்டுவிட்டுத் திரும்பி வந்து சில உறுப்பினர்களை மீண்டும் அணுகிய பிறகுதான் இரண்டாவது சுற்றுக் கூட்டம் நடந்தது. இரண்டாவது சுற்றுக் கூட்டத்தில்தான் இறந்த அஹமது கபீருடைய தகப்பனார் ஷேக் அப்துல்லா வெளியூர் ஜமாஅத்தைச் சார்ந்தவர் என்றும், வியாபாரத்திற்காக இங்கு வந்து தங்கினாரே தவிர ஜமாஅத்தில் சேரவில்லை என்றும் தலைவர் சொல்ல, ஊர் மக்களுக்குத் தெரியவந்துள்ளது. அஹமது கபீர் மலபார் போனபோது அங்கிருந்து நிக்காஹ் செய்தவரென்ற ரகசியத்தையும் அம்பலப்படுத்தி அதை ஒரு குற்றச்சாட்டாக முன்வைத்தார். ஆனதால் அவருடைய மனைவி ஊரான மலபாரில் கொண்டுபோய் அடக்கம் செய்யட்டும் என்று இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் தலைவர் எடுத்த முடிவோடு காரியதரிசியும் சில உறுப்பினர்களும் உடன்படவில்லை. 600 கி.மீ. தொலைவிற்குக் கொண்டு போவதா? மௌத்தாய்ப்போன அஹமது கபீர் கடந்த 50 ஆண்டு காலமாக இந்த ஜமாஅத்திலே தங்கி வருபவரென்றும், பள்ளிவாசல் விஸ்தரிப்புக்கு நன்கொடை வழங்கியது மட்டுமல்லாது, வடபக்கம் உள்ள கபர்ஸ்தானை விரிவுபடுத்த நிலம் வாங்கப் பணம் வசூல் செய்யும் கமிட்டியுடன் சேர்ந்து பல ஊர்களில் வசூலுக்குப் போனது ஊராருக்கும் தனக்கும் தெரியும் என்று மூன்றாவது சுற்றில் காரியதரிசி அடித்துப் பேசினார். அதனால் அவர் மய்யத்தை வடபக்கம் உள்ள கபர்ஸ்தானில் அடக்கம் செய்ய வேண்டுமென்றார். தலைவர் படம் தாழ்த்தியதைக் கண்டு இறந்தவர்களின் உறவினர்களுடைய முகங்களில் நம்பிக்கை துளிர்த்தது. உடன் அடக்கம் செய்ய அனுமதி கிடைக்குமென்ற எதிர்பார்ப்பில் அனைவரும் நின்று கொண்டிருந்தனர். தலைவர் அணியைச் சார்ந்த உறுப்பினர் ஒருவர் சடாரென எழும்பினார். பள்ளிவாசல் விஸ்தரிப்பிற்கு நன்கொடை வழங்கியதும், வடபுற கபர்ஸ்தானுக்கு நிலம் வாங்க வெளியூர் சென்று பணம் வசூல் செய்ய ஒத்துழைத்ததும் உண்மைதான். அதற்காக வெளியூர்வாசியான இவரை இங்கு அடக்குவதற்கும் இடம் கொடுக்க முடியுமா? ஆனால் இறந்தவருடைய மகன் செய்த குற்றத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த ஜமாத்தில் உள்ள ஒரு விதவைப் பெண்ணைக் கடத்திக் கொண்டுபோய்ப் பதிவுத் திருமணம் செய்தது இந்த ஜமா அத்தையும் ஷரீஅத்தையும் மீறின செயல் என்று உரக்கச் சொன்னபோது தலைவருக்குத் தெம்பு ஏற்பட்டது. இதுக்குப் பதிலென்ன? தலைவர் பார்வையால் எழுப்பிய கேள்விக்கு உடன் பதில் கிடைக்கவில்லை.சிறிது சிந்தனைக்குப்பின் காரியதரிசி எழும்பினார். ஜமா அத்தையும் ஷரீஅத்தையும் மீறியது இறந்தவரல்ல. மீறிய அவருடைய மகன் அப்துந் நாசர் இறந்திருந்தால், இந்தக் கேள்வியை எழுப்ப வேண்டியதுதான். மகன் செய்த தவறுக்காக ஒரு முஸ்லிம் மய்யத்தை இப்படிப் போட்டு வைப்பது ஷரீயத்படி ஆகுமா? கோபாவேசக் குரலாகயிருந்தது காரியதரிசியுடையது. காரியதரிசியின் சட்டக் கேள்விக்குப் பதில் தெரியாமல் தலைவர் அணி உறுப்பினர்களும் மற்றவர்களும் திணறி முழித்தபோது முதிய உறுப்பினர் ஒருவர் தனக்கு உடன் தோன்றிய ஒரு யோசனையைப் படக்கென்று சொன்னார். மெளலானா மெளலவி அப்துல் ஹை காதிரியை கூப்பிட்டு இந்த சிக்கலுக்கு ‘பத்வா’ (தீர்ப்பு வழங்கச் சொல்வோம். பள்ளிவாசல் இமாமும் மேடைப் பிரசங்கியுமான மெளலானா மெளலவி அப்துல் ஹை காதிரி அவர்களை உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பி அழைத்து வந்த நேரம் அலுவலகச் சுவரில் தொங்கி, நாக்கு ஆட்டிக் கொண்டிருந்த வட்ட மணி 12 என உணர்த்தி மூச்சு அடக்கியது. “பத்வா”, சொல்ல வந்தவரானதால் அரச தோரணையில் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு சபையோரைப் பார்வையால் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள் என்றார். முன்பு பல பத்வாக்கள் கொடுத்த பரீட்சயம் இருந்ததால் மௌலானா மெளலவி பத்வா கொடுக்கத் தயாரானார். "மெளலவி சாப், ஒரு சிக்கலான பிரச்சினை! தாங்கள் ஒரு பத்வா தரவேண்டும். மகன் செய்த தவறுக்கு, நேற்று இரவு பத்து மணிக்கு இறந்த முஸ்லிமான ஒரு தகப்பனாரின் மய்யத்தை வெளியூர்க்காரர் என்று சொல்லி இன்று இரவு பன்னிரண்டு மணிவரை அடக்கம் செய்ய இடம் கொடுக்காமல் போட்டு வைத்திருப்பது ஷரீயத் சட்டப்படி ஆகுமா? ஆகாதா? முதல் கேள்வி எழுப்பியது காரியதரிசி. மெளலானா மெளலவி தாடி தடவினார். தொப்பியை எடுத்துவிட்டு தலையைச் சொறிந்தார். ஆகும் என்று சொல்வதா? ஆகாதென்று சொல்வதா? ஒன்றும் பிடிபடவில்லை. தலைவரா? காரியதரிசியா? சிங்கத்திற்கும் கரடிக்கும் இடையில் மாட்டிக் கொண்ட அச்ச உணர்வு அவரை வரிந்து கட்டியது. சரி, உங்கள் தரப்புக் கேள்வி? பள்ளிவாசல் புத்தகத்தில் பதிவாகாமல் இரண்டு முஸ்லிம் சாட்சிகளின் முன்னிலையில் மெளலவி நிக்காஹ் செய்து கொடுக்காமல் இறந்தவரின் மகன் பதிவுத் திருமணம் செய்து கொண்டதை ஷரீயத் சட்டப்படி ஏற்றுக் கொள்ளலாமா, கூடாதா? தலைவர் கேள்வி எழுப்பியதும் காரியதரிசி அணியிலுள்ள ஓர் உறுப்பினர் குதித்து எழுந்து சொன்னார். “பதிவுத் திருமணம் செய்தாலும் தனியாக மெளலவியை வைத்து நிக்காஹ் செய்து கொண்டால் ஷரீயத்படி ஏற்றுக் கொள்ளத்தக்கதுதானே?” உறுப்பினர் கூறியபடி இறந்தவரின் மகனுடைய நிக்காஹ் இந்த ஜமாஅத்தில் பதிவாகவில்லை. எந்த ஜமாஅத்தில் வைத்து நிக்காஹ் நடந்ததோ அந்த ஜமாஅத்தாரின் கடிதம் கொண்டு வரட்டும். தலைவர் சொன்ன விளக்கம் காரியதரிசியை வாய் மூடவைத்தது. ’’மெளலவி சாப், இதற்கு உங்கள் பத்வா என்ன?" மெளலானா மெளலவி அப்துல் ஹை காதிரி எப்போதும் பத்வா கொடுப்பதற்கு முன் சற்று மெளனமாக இருப்பது போல் இருந்துவிட்டு சபையோரைப் பார்த்தார். நிர்வாகிகளும், நிர்வாகிகளின், மூன்றாவது சுற்றுக் கூட்டத்தில் எடுக்கும் முடிவு தெரிய ஆவலோடு நின்று கொண்டிருந்த மக்களும், இறந்தவரின் மகன் அப்துந் நாசரும் பத்வா கேட்க ஆவலாக மெளலானா மெளலவியின் முகத்திலிருந்து விழிகளை எடுக்கவில்லை. சடலத்தை, வெகு நேரம் போட்டு வைப்பதும், அடக்கம் செய்ய இடம் கொடுக்க மறுப்பதும் தவறெனத் தெரிந்தும், இது ஒரு சிக்கலான சட்டப் பிரச்சினை’என்று துவங்கி, கிதாப்பு (நூல்) பார்க்காமல் பத்வா சொல்ல முடியாது என்று கூறி மெளனமானார், மெளலானா மெளலவி. ’’அப்படியானால் உடன் கிதாபு எடுத்து வரவும், என்றார்கள் நிர்வாகிகள்." “மன்னிக்கவும், கிதாபு கையில் இல்லை . தலாக் சொல்லிவிட்ட என்னுடைய முதல் மனைவியின் வீட்டில் மாட்டிக்கொண்டது”என்று கூறி பொந்திலிருந்து தலையை உருவி எடுக்க முயன்றார். ’’மெளலவி சாப், என்னுடைய கேள்விக்கு பத்வா சொல்லுங்கள்"என்றார் தலைவர். “உங்கள் கேள்வி சம்பந்தப்பட்ட கிதாப்பை என்னுடைய இறந்துபோன இரண்டாவது மனைவி யாருக்கோ இரவல் கொடுத்துவிட்டாள்.” “அப்படியானால் இந்த மய்யத்தை என்ன செய்வது?”முதிய உறுப்பினர் கேட்ட கேள்விக்கு, ஜமாஅத் நிர்வாகம் முடிவு செய்யட்டும் என்று கூறி மெளலானா மெளலவி இருக்கையை விட்டு எழும்பினார். கூடி நின்ற மக்களிடைய ஒரு சலசலப்பு. நெரிசலுக்கு இடையிலிருந்து திமிறிக்கொண்டு இறந்தவருடைய மகன் ஜமாஅத் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கத்தினார். “மெளலவி சாப், கிதாபு பார்க்காமல் உங்களுக்கு ஒரு பத்வா சொல்ல முடியாது. இருக்கட்டும். என்னுடைய ஒரு கேள்விக்கு மட்டும் பத்வா சொல்லுங்கள். பள்ளிவாசலை ஒட்டிய கபர்ஸ்தானில் அல்லாமல் வெளியே அடக்கம் செய்யப்படுவோரின் புதைகுழிக்குள் கேள்வி கணக்கு கேட்க முன்கர், நக்கீர் (வானவர்கள்) வருவார்களா?” வழியில் ஒளிகாட்ட டார்ச் விளக்கு கொண்டு முன்னால் சென்றவருக்குப் பின்னால் செல்ல முற்படும் போது மௌலானா மெளலவி மெல்லச் சொன்னார், "எங்கும் வருவார்கள்.’’ மெளலானா மெளலவியின் எதிர்பாராத மெல்லிய பதில் சுளீரென்று இருந்தது தலைவருக்கு தலைவர் வெடுக்கென்று இருக்கையை விட்டு எழும்பினார். “முடிவு?” முதிய உறுப்பினர் கேட்டார். “நமது ஜமாஅத் கபர்ஸ்தானில் வெளியூர்வாசிகளின் மய்யங்களை அடக்கம் செய்ய முடியாது.” “தீவிலிருந்து நோய் சிகிச்சைக்கு இங்கு வருபவர்கள் இறந்து விட்டால் இந்த மய்யங்களை அடக்கம் செய்ய இடம் கொடுக்கிறீர்களே? 50 ஆண்டுகளாக இந்த ஜமாஅத்திலே வாழ்கின்ற ஒருவடைய மய்யம் அடக்கம் செய்ய ஏன் இடம் கொடுக்க மறுக்கிறீர்கள்?” எந்த அணியிலும் சாராத நடுநிலையாளரான ஓர் இளைஞர் கேட்டது, தலைவரின் முகத்தில் அறைந்தாற்போல் இருந்தது. “அதற்கெல்லாம் இங்கு விளக்கம் தர முடியாது. மணி ஒன்றாகி விட்டது. இப்போதாவது போய் படுத்தால்தான் சுபுஹ் தொழுகைக்கு எழும்ப முடியும். இத்துடன் கூட்டம் கலைக்கப்படுகிறது” தலைவர் வெடுக்கென்று எழும்பி நடந்தார். அப்துந் நாசர் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டை நோக்கி நடந்தார் என்றாலும் அவரால் நடக்க முடியவில்லை. தலைக்குள் பல நூறு கேள்விகள். பள்ளிவாசல் விஸ்தரிப்புக்கு இரவு பகலாகப் பணியாற்றியவரும், வடபுறமுள்ள கபர்ஸ்தானத்தில் இடப்பற்றாக்குறை வந்தபோது பக்கத்து தோப்புக் காரனிடமிருந்து இடம் வாங்கப் படாதபாடுபட்டவருமான வாப்பாவின் உடலை எங்கு, எப்படி அடக்கம் செய்வது? ஒரு கை தோளைத் தொட்டதை உணர்ந்த அப்துந் நாசர் திரும்பிப் பார்த்தார். பரிச்சயமானவர்தான். பிளாட்பாமில் செருப்பு கடை வைத்திருப்பவர். “விபரம் தெரியாத பிள்ளையாய் இருக்கிறீயே. ஜமாஅத் நிர்வாகம் தாமதப்படுத்தினால் வீச்சம் வெச்சிருப்பா. தலைவரை இரவே தனியாய் போய்ப்பாரு. நாளை காலை 8 மணிக்கெல்லாம் வடபுறமுள்ள கபர்ஸ்தானில் உன் வாப்பா மய்யத்தை சிறப்பாக அடக்கம் செய்யலாம். தீவுக்காரங்களல்லாம் தனியாய் போய் பாப்பாங்க” தனியாய்ப் போய் பார்க்கிறேன் என்று கூறி அப்துந் நாசர் அவரை மடக்கிவிட்டார். தனியாகச் சந்திக்க வரும் அப்துந் நாசரை எதிர்நோக்கி தலைவர் சுபுஹ் (காலை) பாங்கு சொல்லும் வரை வீட்டுத் தலைவாசலைத் திறந்திட்டுக் கொண்டு விழித்திருந்தார். முன்கர், நக்கீர் எங்கும் வருவார்கள்! வீட்டிற்கு நடக்கையில் மெளலானா மெளலவி சொன்னது அப்துந் நாசரின் மனதில் வியாபித்துக் கொண்டிருந்தது. எங்கும் வருவார்களானால் அங்கும் வருவார்கள். கடற்கரை புறம்போக்கில் ஒரு மண்திட்டையும் தலைப்பக்கமும் கால்பக்கமும் இரு மீசான் பலகைகள் நாட்டப்பட்டிருப்பதையும் விடிந்த பொழுதில் ஜமாஅத்தார் கண்டதைத் தலைவரிடம் சொன்னார்கள், சொன்ன அன்றைய லுகர் தொழுகைக்கு இமாமாக நின்று தொழ வைத்தவர் உடனடியாக தலைவரால் நியமனம் பெற்று வந்த மவுலவி அப்துல் ஜப்பார் உலவி அவர்கள்! படைப்பாளர்கள் பற்றி : அஃப்ழல் : உணர்ச்சி மிக்கப் படைப்புகளின் ஆசிரியர். பத்திரிகையாளர், இயக்குநர் ஞானராஜசேகரன் உடன் தொலைக்காட்சித் தொடர்களில் இணைந்து பணியாற்றுகிறார். பெரியார் திடலும் திரைப்படச் சங்கங்களும் இவர் பயிற்சி பெற்றக்களங்கள். அன்பு நம்வழி, அமைதி நம் வழி என்று முழக்கமிடும் இவர் மதவாதங்களுக்கு எதிரானவர். சிறந்த திரைப்பட இயக்குநராக வேண்டும் என்பது இவரின் ஆசை. இவருடைய முழுப்பெயர் மு.உ .அஃப்சாலுல் ஹக், சொந்த ஊர் பேரணாம்பட்டு அர்ஷியா எஸ்.: ஏராளமான சிறுகதைகளுக்கு உரியவர். மூன்றாவது கை என்னும் சின்னஞ்சிறு இலக்கிய இதழ் முதலாக குமுதம், ஆனந்த விகடன் எனப் பெரிய வரிசையில் தன் படைப்புகளை எழுதிக் குவித்தவர். அவருடைய இலக்கியப் பணியின் இரண்டாவது கட்டத்துக்கு வந்திருக்கிறார். முன்பு ’கழுகு’என்ற புலனாய்வுப் பத்திரிகையை நடத்திய அனுபவம் உண்டு. குமுதம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர். தற்போது தராசு இதழில் பணிபுரியும் எஸ். அர்ஷியாவின் இயற்பெயர் எஸ். சையத் ஹுசேன் பாட்சா. உருது இவரின் தாய்மொழி. ஃபிர்தெளஸ் ராஜகுமாரன் : இப்பெயரால் அறியப்படும் நஸீர் கோவையைச் சேர்ந்தவர். ’இலக்கியச் சிந்தனை’யின் மாதாந்திரப் பரிசைப் பெற்ற இவர் அப்படியே பல இதழ்களின் மூலம் ஒரு ரவுண்ட் வந்து பரிசுகளையும் பலபடப் பெற்றவர். ’கணையாழி’நடத்திய குறுநாவல் போட்டியில் இவரின் படைப்பு வென்றுள்ளது. நிஜங்களின் தாக்கத்தில் சூழலைத் தாண்டி மனக் கொந்தளிப்புடன் வாழ்க்கையின் சிக்கல்களை மனித மனங்களின் உள் வெளிப் போராட்டங்களை வெளிப்படுத்துவதும் அவற்றை இலக்கியத்தில் பதிவு செய்வதும் இவரின் குறிக்கோள்களாகும். இளசை மதீனா: எப்போதாவது கதைகள் எழுதக் கூடியவர். இளமையான எண்ணம் கொண்டவர். மூத்த தலைமுறையைச் சேர்ந்த மதீனா, தன் எழுத்தாற்றலை நிரூபித்த கதைகளில் ஒன்றே இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. பாரதி பிறந்த மண்ணில் பிறந்தவர் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர். இன்குலாப்; புரட்சிக்காரர். எவ்விதத்திலும் அரசதிகாரப் பீடங்களோடு சமரசம் செய்து கொள்ளாதவர். சென்னை புதுக்கல்லூரியில் பணியாற்றிய இன்குலாப், அரசியல் ரீதியாக வெளிப்படையான தீவிரத்துடன் மறைமுகமாகவும் இயங்கியவர். இவரே ஓர் இயக்கம். இவரின் நிழலில் இளைப்பாறி வீறுகொண்டு பறந்த பறவைகள் பல. அடிப்படை மதவாதங்களின் தீவிர எதிர்ப்பாளரான இன்குலாப், கவிஞர் என்ற தன்மையினால் இருளைச் சுட்டுப் பொசுக்கியவர். இவரின் கவிதைகள் நெடுங்காலமாகவே பல பீடங்களின் தூக்கத்தைக் கெடுத்து நடுநடுங்க வைத்தவை. இன்குலாபின் இயற்பெயர் சாஹல் ஹமீது, கீழக்கரைக்காரர். களந்தை பீர்முகம்மது : ’தாமரையின் மூலம் அறிமுகமானவர். முதல் சிறுகதை ’தயவு செய்து..’மூலம் 1983 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைக்கான இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றவர். சொந்த ஊர் நெல்லை மாவட்டம் களக்காடு - இந்நூலின் தொகுப்பாசிரியர். களந்தை சாஹுல் ஹமீது : ’அவனைச் சுற்றியே’என்கிற அவரின் சிறுகதையை ’தாமரை’வெளியிட்டு, தமிழிலக்கியவுலகிற்கு அழைத்து வந்தது. இந்தக்கதை ஒரு தேர்ந்த கலைஞனை அடையாளம் காட்டியது. ஆனால் இன்று அவர் நம்மிடையே இல்லை . இது தமிழ் இலக்கியவுலகுக்குப் பேரிழப்பாகும். இவரின் பெயரைச் சொல்லும் பத்துக் கதைகள் மட்டும் வெளியாகியிருந்த சூழலில், எவரும் எதிர்பாராத தருணத்தில் தன் பயணத்தை நிறைவு செய்தார். ஆயினும் ’அவனைச் சுற்றியே’என்ற கதை அவரின் புகழ்பாடி நிற்கும். கழனியூரன் : நாட்டுப் புறவியல் அறிஞர். தமிழகத்தின் விரல் விட்டு எண்ணத்தக்க நாட்டுப் புறக் கதைகளின் சேகரிப்பாளரும் ஆவார். பல கதைகளை கி. ராஜநாராயணன் உடன் இணைந்து பதிப்பித்துள்ளார். இப்போதும் சாஹித்ய அகாதெமிக்காக நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பு நூலின் பணியை மேற்கொண்டுள்ளார். சிறுகதைகள், நாட்டுப்புற வியல் கட்டுரைகள், கவிதைகள், ஹைகூக்கள் என பத்து புத்தகங்கள் இவரின் பெயரால் வெளிவந்துள்ளன. வீராணம் முஸ்லிம் தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியப் பணியாற்றும் கழனியூரான், M. சேகு அப்துல் காதர் என அழைக்கப்படுபவர். மீரான் மைதீன் : ’கவர்னர் பெத்தா’தொகுப்பின் மூலம் கவனங்களைத் தன் மீது பதிய வைத்துக் கொண்டவர். பலதுறை அனுபவங்களைப் பெற்றவர். திரையுலகின் அனுபவங்களும் உண்டு. பொன்னீலனின் தாயார் ’அழகிய நாயகி அம்மாள்’பற்றிய டாகுமெண்டரியைத் தயாரித்துள்ளார். சா. கந்தசாமி தொகுத்த சிறந்த தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பில் இவருடைய ’பெஞ்சு’கதை இடம்பெற்றுள்ளது. தமுஎச, ஜோதி விநாயகம் நினைவுப் பரிசு, கணையாழி குறுநாவல் போட்டிப் பரிசு என தன் முத்திரைகளைப் பதித்தவர். முஹம்மது முஸ்தபா : “தப்பான தாம்பத்யம்”எழுதி சரியான பரிசைப் பெற்றுக் கொண்டவர். இக்கதையின் மூலம் 1998 ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைக்கான ஜோதி விநாயகம் நினைவுப் பரிசு பெற்றவர். முஹம்மது முஸ்தபா சிறுகதைகள் என்கிற தொகுப்பு வெளிவந்துள்ளது. உளுந்தூர்ப்பேட்டைக்காரரான இவர் பணிபுரிவது நெய்வேலி இரண்டாம் அனல்மின் நிலையத்தில். ஆரம்பப்பள்ளியில் படிக்கும்போது அந்தப் பருவ விளையாட்டுக்களோடு கதை எழுதுவதையும் ஒரு விளையாட்டாகக் கொண்ட முஹம்மது முஹ்தபா, இப்போது நல்ல கதை சொல்லி என்றாகி விட்டார். ஹ. மு. நத்தர்ஷா : பல்வேறு பட்டங்களைப் பெற்ற கல்வியியலாளர். தற்போது சென்னை புதுக்கல்லூரியில் முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறையில் பணிபுரிகிறார். மூன்று சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ள இவர், மருதநாயகம் எனப்படும் மதுரை நாயகன் மாவீரன் கான்சாகிபு எனும் வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். 1996 ஆம் ஆண்டிற்கான புதுவையரசின் கம்பன் புகழ்ப்பரிசு, முஸ்லிம் முரசு பொன்விழா சிறுகதைப் போட்டிப் பரிசு, வ.சுப. மாணிக்கம் நினைவுச் சிறுகதைப் பரிசு ஆகியன பெற்றுள்ளார். சின்னச் சின்ன ஆசை என்ற இவருடைய நூல் கேரளப் பல்கலைக் கழகத்தில் பாடநூலாக இடம் பெற்றுள்ளது. காரைக்காலைச் சேர்ந்த இவர் பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்குகளிலும் பங்கேற்பவர். நாகூர் ரூமி: ஆம்பூர் மஹாருல் உலூம் கல்லூரியில் ஆங்கிலத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் டாக்டர் ஏ.எஸ். முஹம்மது ரபீக், நாகூர் ரூமி எனப் பெயர் சூடி இலக்கியம் படைப்பவர் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என நிறைய எழுதியுள்ளார். இவருடைய ’குட்டியாப்பா’கதையைத் தமிழின் சிறந்த முப்பது கதைகளில் ஒன்று என் சுஜாதா குறிப்பிடுகிறார். இவரின் குடும்பமே கலைக்குடும்பம் ஆகும். இப்போது மார்க்க ரீதியான பல ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார். ஹெச். ஜி. ரசூல் : ’மைலாஞ்சி’ரசூல் என அடையாளம் காணப்பட்ட ஹெச். ஜி. ரசூல் தன் கவிதைகளின் வாயிலாகப் பல விவாதங்களை உருவாக்கியவர். பல கவியரங்குகளில் பங்கேற்றவர். மார்க்ஸியச் சிந்தனையாளர். தன் கட்டுரைகளுக்காகவும் பரிசு பெற்றவர். அவ்வப்போது சிறுகதைகள் எழுதுபவர். திருப்பூர் தமிழ்ச் சங்கம், கலை இலக்கியப் பெருமன்றம் ஆகியவற்றின் பரிசுகளை வென்றவர். இலக்கிய இயக்கத்துடன் தன்னைப் பிணைத்துக் கொண்டவர். எந்த தக்கலை ஜமாஅத்தின் மூலம் ஊர் விலக்கம் செய்யப்பட இருந்தாரோ, அந்த ஜமாஅத்தின் துணைத்தலைவராக இப்போது பணியாற்றுகிறார். ரோஜா குமார் : முரட்டுச் சுபாவத் தோற்றம் கொண்டுள்ள ரோஜாகுமார் தன் இதயத்தில் பூக்களைப் பயிரிட்டவர். தீவிரமான படைப்பாளி. நவீன இலக்கியப் போக்குகளை உள்வாங்கிக் கொண்டு எழுதுபவர். தமுஎச வின் பரிசும் கலை இலக்கியப் பெருமன்றம் பரிசும் ஜோதி விநாயகம் நினைவுப் பரிசும் பெற்றுள்ள ரோஜா குமார் மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவர். இலக்கியமும் வாழ்க்கையும் வேறுவேறல்ல என்று தன் பார்வையின் வழியே வாழ்வை அமைத்துக் கொண்டவர். சல்மா : கவிஞர். அவர் எழுதிய ஒரே கதை இது. காலச் சுவடு இதழ்களில் வெளிவரும் கவிதைகளின் மூலம் தமிழ் இலக்கியவுலகின் பரவலான கவனத்தைப் பெற்றவர். ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ கவிதைத் தொகுப்பு காலச் சுவடு வெளியீடாக வந்துள்ளது. பெண் வாழ்வின் சிக்கல்களை அதற்குரிய மொழிகொண்டு எழுதுபவர். துவரங்குறிச்சி பேரூராட்சியின் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சல்மாவின் இயற்பெயர் ராஜாத்தி. கவிஞர் மனுஷ்யபுத்திரனின் உறவினர். தோப்பில் முஹம்மது மீரான்: ’ஒரு கடலோர கிராமத்தின் கதை’தமிழ் இலக்கியவுலகில் புயலாகவே நுழைந்தது. உடன் அனைவரின் பார்வையும் இவரை நோக்கித் திரும்பியது. அன்றிலிருந்து கவனத்திற்குரிய நாவல்களாகவே படைத்து வந்துள்ள தோப்பிலார்’தன்னுடைய நான்காவது நாவலான ’சாய்வு நாற்காலி’யின் மூலம் சாஹித்ய அகாதெமிப் பரிசையும் பெற்றார். பல மொழிகளிலும் இவருடைய நாவல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் அனைத்துப் பரிசுகளையும் பெற்றவர். முகவரிகள் (இஸ்லாமியச் சிறுகதைகள்) அஃப்ழல் 151, பராக்கா சாலை, தலைமைச் செயலகக் குடியிருப்பு, சென்னை - 600 0. எஸ். அர்ஷியா 9-1-23, முல்லை மலர் தெரு, விஸ்வநாதபுரம், மதுரை - 625 04. ஃபிர்தௌஸ் ராஜகுமாரன் 54/6, ஆஸாத் நகர் முதல் தெரு, கரும்புக் கடை, கோவை - 641 008. இளசை மதீனா கனி மெடிகல்ஸ், 79 - பி, கச்சேரி ரோடு, சங்கரன் கோவில் - 627 756. இன்குலாப் ஜானி ஜான்கான் சாலை, சென்னை - 600 014. களந்தை பீர்முகம்மது 37 - பி, தைக்கா தெரு, ஆழ்வார் திருநகரி - 628 612. தூத்துக்குடி மாவட்டம் திருமதி. செயினபா பேகம் W/o. Late களந்தை சாகுல் ஹமீது 40, கூழக்கடை பஜார், களக்காடு - 627 501. கழனியூரன் கழுநீர் குளம் - 627 867. நெல்லை மாவட்டம் குமரி மாவட்டம் மீரான் மைதீன் அன்பகம் பில்டிங் பெருவிளை - 629 003. முஹம்மது முஸ்தபா டி - 17, ஞானசம்பந்தர் சாலை, வட்டம் - 19. நெய்வேலி - 607 803. ஹ. மு. நத்தர்ஷா தமிழ்த் துறை புதுக்கல்லூரி இராயப்பேட்டை, சென்னை - 14. நாகூர் ரூமி ஜெமீமா மன்ஸில் 22-சி, மூன்றாவது தெரு, பெத்லஹம், ஆம்பூர் - 635 802. எஸ். பர்வின் பானு 53/28, வீரபத்ரன் தெரு, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034. ஹெச்.ஜி.ரசூல் 21/77, ஞானியார் வீதி, தக்கலை - 629 175 குமரி மாவட்டம் ரோஜா குமார் 61, ஆர்.சி. சர்ச் சாலை, மேலூர் - 625 106 மதுரை மாவட்டம். சல்மா 14-ஏ, முஸ்லீம் நடுத் தெரு, (பேரூராட்சி மன்றத் தலைவர்) துவரங்குறிச்சி - 627 314. திருச்சி மாவட்டம். தோப்பில் முஹம்மது மீரான் பி-26, வீரபாகு நகர், பேட்டை , நெல்லை - 627 004. FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.