[] [OEBPS/images/image0001.jpg]                        சந்திப்போமா அன்பரசு சண்முகம் - சபாபதி ஆரா பிரஸ் . கோமாளிமேடை     பதிப்பு நிறுவனம்: ஆரா பிரஸ், சென்னை வெளியீட்டு அனுசரணை: Komalimedai.blogspot.com பதிப்பாசிரியர்: அன்பரசு சண்முகம் தொகுப்பு: கா.சி.வின்சென்ட், பிரபு மாரிமுத்து அட்டை வடிவமைப்பு: டெக்கன் பிரிட்ஜ் அட்டை வடிவமைப்பில் உதவி: Canva.com அட்டைப்படம்: Canva.com இந்த நூல் கிரியேட்டிவ் காமன் உரிமையின்(BY-NC-ND) கீழே வெளியிடப்படுகிறது. [OEBPS/images/image0002.png]                  இனிய நண்பர்களுக்கு, வணக்கம். சந்திப்போமா என்ற நூல் எனது கல்லூரிகால நண்பர் சபாபதி அவர்களுக்கு எழுதப்பட்டது. கடிதத்தில் குறிப்பிட்டபடியே அவர் பெரிதாக இதனை நினைக்கவில்லை. ஏனெனில் வாரத்திற்கு இருமுறை நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அப்படியும் அவருக்கு நான் எழுத விஷயம் கிடைத்துக்கொண்டிருந்தது. சபாபதி கோவையில் பணியாற்றிக்கொண்டிருந்தார். இருக்கிறார். அவருக்கு எழுதிய அஞ்சலட்டைக் கடிதங்கள் இவை. எனவே அவரது நண்பர்கள் இதனை ஆச்சரியமாக பார்த்துள்ளனர். போனில் பேசிக்கலாமே, எதற்கு லெட்டர் என்றெல்லாம் கேள்விகள். இதெல்லாம் தனியான சந்தோஷம் என்று பதில் சொல்லியிருக்கிறார் சபாபதி. இக்கடிதங்கள் வாயிலாக குறிப்பிட்ட காலத்தில் இருவருக்கு ஏற்படும் பல்வேறு சூழல் அழுத்தங்கள், அதனை எதிர்கொண்டவிதம் ஆகியவற்றை அறியலாம். வேலை சார்ந்த அழுத்தம் அனைத்து துறைகளுக்கும் உண்டு. அதனால்தான் தற்கொலை சதவீதம் ஆண்டுதோறும் அதிகரித்தபடியே இருக்கிறது. நாம் சொல்லுவதை காதுகொடுத்து கேட்கவேனும் யாரேனும் ஒரு ஆத்மா இருக்கிறதே என்ற நம்பிக்கையே ஒருவரை வாழ வைக்கும என நம்புகிறேன். நன்றி. அன்பரசு சண்முகம்         அறத்தின் வழியே பயணம்! 1 அன்பு நண்பர் சபாபதிக்கு, வணக்கம். சில ஆண்டுகளுக்குப் பிறகு நான் உங்களிடம் பேசினேன். நம் இருவரின் எண்ணங்களும், அடிப்படையும் வேறுவேறு என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. உங்களுடைய பேச்சுகளின் வேகம், கருத்துகளைப் பார்த்தபோது மேற்சொன்னபடி நினைத்தேன். விரைவில் உங்களுக்கு திருமணமாகும் வாய்ப்பு இருக்கும் என மனதில் தோன்றுகிறது. இப்படி பொறுப்பாக பேசினால் சுமையை தோளில் இறக்குவதுதானே நியாயம்? நவம்பர் 8.2016 அன்று எனக்கு மறக்க முடியாத அதிர்ச்சியைக் கொடுத்தீர்கள். நினைவிருக்கிறதா? வளைந்து கொடுத்து போகவேண்டுமென சட்டென்று சொல்லிவிட்டீர்கள். அச்சொல் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதற்கு சான்றாக பணமதிப்புநீக்கத்தின்போது நீங்கள் செயல்பட்ட விதத்தை விவரித்தீர்கள். செல்வாக்கைப் பயன்படுத்தி உங்களை இழப்பிலிருந்து காப்பாற்றிக்கொண்டது நல்லவிஷயமாக உங்களுக்குப் படலாம், ஆனால் எனக்கு அந்த செயல் சரியாகப் படவில்லை. நீங்கள் வாழும் காவல்துறை உலகத்தில் தினம் தினம் குற்றங்களை சந்திக்கிறீர்கள். உங்கள் உள்ளமும் மாறியிருப்பதில் ஆச்சரியம் என்ன? நாம் வாழ்கின்ற உலகைப் பொறுத்து கருத்துகளும் எண்ணங்களும் மாறும் என்பதை நான் ஏற்கிறேன். செய்கின்ற வேலையை காசுக்கானதாக மட்டுமே பார்த்து அதன் உச்சியில் சென்று அமர்வது சமூக அழுத்தங்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளும் ஒரே வழி. நன்றி! ச.அன்பரசு     தடையால் என்ன நடக்கும்? 2 அன்புள்ள நண்பர் சபாபதிக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? தினகரன் பத்திரிகையில் இரண்டு ஆண்டுகள் பதினொரு மாதங்கள் பணியாற்றிவிட்டேன். வரும் 20ஆம் தேதியோடு இந்த நிறுவனத்தில் எனது பணி முடிவுக்கு வருகிறது. என்னுடைய நண்பர் பத்திரிகையின் தலைமை பற்றி தீவிரமாக பேசினார். அவர் பேசலாம், அரசு தேர்வெழுதி அதில் வென்று 50 ஆயிரத்திற்கும் மேல் சம்பளம் வாங்குகிறார். நான் அதில் கால்வாசிக்கும் குறைவாக வாங்கியபடி காசு கொடுக்கும் முதலாளியை விமர்சிக்க முடியுமா? அடித்து விரட்டி விடுவார்கள். கருத்தியல் பேசுவதற்கும் தற்சார்பான பொருளாதார பலம் தேவைப்படுகிறது. அப்போதுதான் நிலைமையைச் சமாளிக்க முடியும். சுதந்திரமாக இருக்க முடியும். தினசரி பொரி, கடலை வாங்கும் காசித்தேவர் கடையில் இனி பாலித்தீன் தரமாட்டோம் என்று கூறிவிட்டார்கள். சரி, காகித பையில் கொடுங்கள் என்றால், அதற்கும் அரசை விமர்சித்தார். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கான தடை முழுமையாக அமலுக்கு வர இன்னும் 13 நாட்கள் உள்ளன. அதனால் இப்போதே கடைகளில் ரெய்டு நடத்தி பாலித்தீன் பைகளாக கைப்பற்றி, கூடுதலாக லஞ்சப்பணத்தையும் அதிகாரிகள் வாங்கி வருகின்றனர். இத்தடையை முழுமையாக அரங்கேற்றும் துணிச்சல் தமிழக முதல்வருக்கு கிடையாது. கடைக்காரர் தான் பேசியதற்கு மறுவினை என்ன என்று இருபத்தொரு நொடி என் முகத்தைப் பார்த்தார். அதில் சூனியத்தைக் கண்டவர், அதோடு எதுவும் பேசவில்லை. அவருக்கு வியாபாரத்தின் மீதான கவலை. வெறும் பயமுறுத்தலாக இச்சட்டம் நடைமுறைக்கு வந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஆவின் நிறுவனம் பிளாஸ்டிக் பேக்கில் பாலை விநியோகிக்கிறது. இனி கண்ணாடி பாட்டில்களுக்கு மாறப்போகிறது என்கிறார்கள். அப்போது செலவுக்கான பணத்தை நம்முடைய பாக்கெட்டிலிருந்து தானே எடுப்பார்கள். இதில் என்ன பெருமை. அரசு சுயமாக யோசித்து  தடைபோட்டதா என்று கூட எனக்கு சந்தேகமாக உள்ளது. எப்போதும்போல மக்கள் புலம்பிவிட்டு சொந்தப் பிரச்னையை கவனிக்க போய்விடுவார்கள். நன்றி ச.அன்பரசு 15..2.18                         கலாசாரம் பழகு! 3 அன்புத் தோழர் சபாபதி அவர்களுக்கு, வணக்கம். அடுத்தடுத்த பதவியுயர்வுகள், ஊதிய உயர்வு ஆகிய விஷயங்கள் 2019ஆம் ஆண்டு நிறைவேற வாழ்த்துகிறேன். இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் காமிக்ஸ்கள், மலையாளச் சிறுகதைகள் ஆகியவற்றை வாங்கினேன். சிறுகதைகளை இனிமேல்தான் படிக்கவேண்டும். அலுவலகங்களில் சிபாரிசு மூலம் வந்தவர்களின் அழும்புகளைத் தாங்க முடியவில்லை. வேலைகளையும் கற்றுக்கொள்ளாமல் அதைச் சமாளிக்க சில முக்கியப்புள்ளிகளை வளைத்து... பிரமிக்க வைக்கிறது பிழைப்புத் தந்திரங்கள். மற்றவர்களுக்கும் சேர்த்து நானே அதிகம் யோசிக்கிறேன். எனக்கு அமைப்புகள் வீழ்ந்து நொறுங்குவது பெரும் மனவலியைத் தருகிறது. நான் வேலை செய்யும் நிறுவனமே செங்கல் செங்கல்லாக பிரிக்கப்பட்டால்... கஷ்டம்தானே? புதிய அலுவலகத்திற்கு ஏற்றபடி உன்னை மாற்றிக்கொள் என நண்பர் ஏறக்குறைய மிரட்டினார். எனவே பேரகான் ஆபீஸ் வரிசையில் செருப்பு தேடிக்கொண்டி வாங்கினேன். இதற்கு முன்பு எளிமையாக ரப்பர் செருப்பு போட்டுக்கொண்டிருந்தேன். ஏசியில் வேலை. எனக்கு கால் படுபயங்கரமாக வேர்க்கும். எதற்கு லெதர் செருப்பு, வீண்செலவு என்று நினைத்தேன். ஆனால் அதுதாண்டா கவுரதை என்று சொல்லிவிட்டார் நண்பர் ரெட். சில உதாரணங்களை சொல்லி மிரட்டினார். எனவே, கொஞ்சம் அப்டேட்டுகள் தேவைப்படுகின்றன. உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை மெல்ல மாற்றிக்கொள்ள இதுவே சரியான நேரம் என்று நினைக்கிறேன். நன்றி! சந்திப்போம் ச.அன்பரசு 13.1.2019                                       வேலை முக்கியம் ப்ரோ! 4 அன்பு நிறை நண்பர் சபாபதிக்கு, வணக்கம். குடியரசு தினத்திற்கான மரியாதையை கொடிக்கம்பத்திற்கு செலுத்திவிட்டு வந்திருப்பீர்கள். அதை ஏற்றுபவருக்கான தகுதியை நாம் கவனிப்பதேயில்லை. ஜிப்ஸி பட பாட்டைக் கேட்டீர்களா?  அரசை நார் நாராக கிழித்துவிட்டார்கள். அரசு எதற்கும் அஞ்சப்போவதில்லை. அவர்களின் கருத்தியலில் உறுதியாக இருக்கிறார்கள். ஏறத்தாழ அவர்களுக்கு உதவும் மனசாட்சியை அடகு வைத்தவர்கள் மூலம் அவர்களின் லட்சியக்கனவு நிறைவேறலாம். என்ன நாமும் அதற்காக ரத்தம் சிந்தவேண்டியிருக்கும். அப்பாடல் பாடலாக பலருக்கும் பிடிக்காது. ஆனால் சொன்ன விஷயம் பலரும் சொல்ல நினைத்தது. எனவே, மானசீகமாக ரசிப்பார்கள். நம்மைப் பொறுத்தவரை யார் முதலில் வழித்தடம் போடுகிறார்களோ அவர்களுக்கு கற்பூரத்தைக் கொளுத்திப் போட்டுவிட்டு நம் பாட்டுக்கு போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதானே! அலுவலகம் அதற்கான அம்சங்களோடு என்னை அழுத்துகிறது. நான் எழுதலாம் என்று நினைத்து சென்றால், அங்கு பல்வேறு ஆணவ ஆட்களை சமாளித்தாலே போதும்ப்பா என்று ஆசிரியர்  சொல்லிவிட்டார். அரசு அலுவலகம் போல எங்கள் அலுவலகமும் ஆகிவிட்டது. பத்து மணிக்கு உள்ளே வந்ததும் லன்ச் என்ன தம்பீ? கடிச்சிக்க, தொட்டுக்க என்றே பேசுகிறார்களே தவிர வேலை செய்யும் பத்திரிகை பற்றி யாரும் பேசுவதில்லை. சாப்பாட்டை அந்த நேரத்திற்கு நினைத்து சாப்பிட்டால் போதாதா? செய்யும் வேலையைத் தவிர அனைத்தையும் பேசும் இந்த குழுவிற்கான நிர்வாக நல்மேய்ப்பன் நான்தான். குழுவின் மொழியில் சொன்னால் டபுள் ஏஜெண்ட். இப்பணிக்காக எனக்கு விண்ணரசு காத்திருக்கும் என்ற நம்பிக்கை இல்லை.   தெலுங்குப்படங்களில் கமர்ஷியல் குருமாவை ஊறப்போட்டு அடித்தாலும், பரிசோதனை முயற்சிகளுக்கும் பஞ்சமில்லை. அந்த வகையில் சம்மோகனம், ரங்குல ரத்னம் என்ற இருபடங்களைப் பார்த்தேன். குத்துப்பாட்டு, டைட்டில் பாட்டு, நியூட்டனை கோமாளியாக்கும் சண்டைக்காட்சிகள் என எவையும் கிடையாது. யூடியூபில் கிடைக்கிறது. டிஎன்பிஎஸ்சிக்கு படிப்பது போக நேரம் கிடைத்தால் பாருங்கள். நான் தங்கியுள்ள மேன்ஷனில் என் அறை நண்பர் காமிக்ஸ் பிரியர். எனது காமிக்ஸை படிக்கிறேன் என்று வாங்கியவர், ஊருக்கு கொண்டுபோனார். அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டார். அதை சிரித்தபடியே சொன்னார். வாயிலேயே குத்தலாம் என்று நினைத்தேன். ஆனால் அவரின் கடோத்கஜ உருவத்தைப் பார்த்தவுடன் அவரை மன்னித்து ரட்சித்து விடலாம் என மூளை சொன்னது. மஜா லேலோ என்று சொல்லி புன்னகைத்தேன். பெண், பொன், புத்தகம் இரவல் கொடுத்தால் வரவே வராது. இதை மறக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன். நன்றி! சந்திப்போம் ச.அன்பரசு 26.1.2019         புரியாத ஆள்! ஹலோ அன்பு, நன்றாக இருக்கிறாயா? நான் உனக்கு லெட்டர் எழுதணும்னு நெனைக்காத. அதுக்கு நான் இருக்கும் பிஸி நிலையில் சாத்தியம் இல்லை. குறைந்த சம்பளத்தில் சிரமப்பட்டு பரவாயில்லை என்ற நிலையை அடைந்துவிட்டாய. வாழ்த்துகள். நான் உன்னுடன் போனில் பேசுகிறேன். உனக்கேற்றப்படி அதை எழுதிக்கொள். கல்லூரிக் காலத்திலிருந்தே நீ எனக்கு புரியாத ஆள்தான். முணுமுணுவென பேசுவதும், அதை நான் உடைத்து புரிந்துகொள்ள பட்ட பாடும் எனக்குத்தான் தெரியும். நீ பத்திரிகை வேலைக்கு தகுதியான ஆள் என்று நினைக்கவில்லை. ஏனென்றால் புதிய ஆட்களை நீ மனதார நம்புவதில்லை. அப்படி நம்பினாலும் பேசி விடுவாய் என்பதற்கு உத்தரவாதமில்லை. ஆபீசுக்கு ஏற்றபடி உன்னை மாற்றிக்கொள்வது முக்கியம். ஏனென்றால் ஒவ்வொரு நிறுவனத்திலும் குறிப்பிட்ட கலாசாரத்தைப் பேணுவார்கள். அதற்குள் நுழைய முடியாவிட்டால் அங்கு வேலை பார்ப்பது கடினமாகிவிடும். யாரோடும் இணைந்து பணியாற்ற உனக்கு மனதில் தடைகள் ஏதும் கிடையாது என நம்புகிறேன். வெச்சிடவா? ரைட்  28.1.2019             தனித்திருப்பதுதான் முடிவு! 5 அன்புத்தோழர் சபாபதிக்கு, வணக்கம். கடிதம் எழுத தாமதம் ஆகிவிட்டது. அலுவலகம், ஹாஸ்டல் என அலைந்து திரிகிறேன். இந்த அவதிதான் பிரச்னை. தனி அறைக்கு வந்து சில பொருட்களை வாங்கி தனி ஆவர்த்தனம் செய்ய ரெடி ஆகிவிட்டேன். வேறுவழி ஏதும் இல்லை. படிக்கின்ற மாணவர்களோடு சேர்ந்து இருப்பது உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் பெரும் அழுத்தமாக இருக்கிறது. இரவு முழுவதும் விளக்கு எரியவில்லையென்றால், என் அருகிலுள்ள படுக்கைக்காரர் பதற்றமடைந்து விடுகிறார். எப்படி இங்கே தங்கியிருப்பது என நினைத்தேன். எப்படியோ நான் முதலில் வேலை செய்த பத்திரிகையில் இருந்த நண்பர் எனக்கு அறையைப் பிடித்து தந்துவிட்டார். சிறிது நிம்மதியாக இருக்கிறது. கவச்சம் என்ற தெலுங்குப்படத்தைப் பார்த்தேன். வெகுளியான நாயகன்,  பேராசை பிடித்த நாயகி என்ற ஒன்லைனில் கதை பயணிக்கிறது. டான்சையை எட்டி உதைப்பது ஆடி பீதியைக் கிளப்பியவர்தான் இந்தப் படத்தின் நாயகன் சாய் சீனிவாஸ். அவரின் ரியாக்ஷன்களைப் பார்க்க சகிக்கவில்லை. சொத்துக்காக நடைபெறும் சதியும், துரோகமும்தான் படத்தின் கதை. சில ட்விஸ்டுகள் நன்றாக இருக்கின்றன. ஆனால் அவை இரண்டரை மணிநேரம் நம்மை சினிமா பார்க்க உதவாது. தெலுங்குப்படங்கள் யூடியூபில் எளிமையாக கிடைப்பதுதான் அவற்றைப் பார்ப்பதற்கான காரணம். நன்றி! சந்திப்போம்! ச.அன்பரசு 4.5.2019                               பொது விஷயம் ஏதுமில்லை! 6 அன்புத்தோழர் சபாபதிக்கு, வணக்கம். நலமா? கல்லூரி நண்பர்களின் மனப்போக்கு எனக்கு புரிபடாத ஒன்று. வி.பி.சுரேஷ் எதார்த்தமான போக்கு கொண்டவர். நான் கனவுலகில் வாழ்பவன். அவரிடம் நான் பேசியதே மிக குறைவு. ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டாலும் நான் உங்களுடன்தான் அதிகம் பேசியிருக்கிறேன். என்னுடைய உளறல்களை நீங்கள் மட்டும்தான் இடைமறிக்காமல் புன்னகையுடன் கேட்ட ஒரே ஆள். எனவே, இதை கவனத்தில் கொள்ளுங்கள். திடீரென நண்பர்களுக்கு கான்ஃபரன்ஸ் போட்டு பேசக்கொடுத்தால் நான் என்ன பேசுவேன்? அவர்களுக்கு மணமாகிவிட்டது, குழந்தைகள் இருக்கலாம். சிறந்த செரிலாக் உணவு, காசுக்கு மதிப்பான டயப்பர், ஆடைகளுக்கான கடை என பேசுவார்கள். நான் அவர்களிடம் பேச எந்த விஷயமும் பொதுவாக இல்லை. உங்கள் நண்பர்களான மணிகண்டன், கோபால் சுரேஷ் போன்றவர்கள் இத்தகைய ஆட்களே. எனவே தயவு செய்து உங்களுக்கு வரும் அழைப்புகளை நீங்களே எடுத்துப் பேசுங்கள். நான் பிறகு கூட உங்களுக்கு அழைத்துப் பேசுகிறேன். கான்ஃப்ரன்ஸ் வேண்டாம். நிறைய சிக்கல்களை ஏற்படுத்திவிடும். கொலைகாரன் படம் பார்த்தேன். லீலை என்ற பாடல்களுக்கான படம் எடுத்தவரா என வியக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ். தியேட்டரிலும் பார்க்கலாம். டிவியில் பார்க்கும்போது உங்களுக்கு நிரம்ப பிடித்துப்போகும். பாப்கார்ன் தின்பதையும் பெப்சி குடிப்பதையும் கூட தாமதப்படுத்தும் வேகமான திரைக்கதை. வீட்டில் பார்த்தால் காசும், நேரமும் மிச்சம். இசையமைப்பாளர் சைமன் கிங்கின் இசைதான் எங்கேயோ கேட்டோமோ என ஹாலிவுட் படங்களைத் தேடச்சொல்கிறது. டிஎன்பிஎஸ்சிக்காக படித்துக்கொண்டிருப்பீர்கள். கவனமாக படியுங்கள். சாப்பாட்டை கவனமாக சாப்பிடுங்கள். உடம்பில் கவனம் போய்விட்டால் அப்புறம் எதற்கும் பிரயோஜனமில்லை. நன்றி! சந்திப்போம்! ச.அன்பரசு 16.6.2019                         அனைவருமே நண்பர்கள்தான்! ஹலோ, அன்பு நன்றாக இருக்கிறாயா? கல்லூரியில் படித்த நிறையப் பேருடன் நான் இன்றும் பேசிக்கொண்டிருக்கிறேன். மிகவும் நெருக்கமாக என்று சொல்ல முடியாது. டச்சில் இருக்கிறேன். உன்போல தள்ளி இருக்கவில்லை என்று உறுதியாக சொல்லுவேன். நான் நண்பர்கள் என்று சொல்லுவதில் பெண்களையும் சேர்த்திதான் சொல்லுகிறேன். நீ நிறைய தெலுங்குப்படங்களை மசாலா கமகமக்க பார்த்து வருகிறாய் எனக்கு டூட்டி முடிந்ததும் சமைத்து சாப்பிட்டுவிட்டு தேர்வுக்கு படிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. இந்த வேலையிலிருந்து விரைவில் வேறு வேலைக்கு போகவேண்டும் என்ற எண்ணமே என் மனதில் இருக்கிறது. பிரதிலிபி தமிழ் தளத்தில் சில சிறுகதைகளைப் படித்தேன். நன்றாகவே எழுதுகிறார்கள் மோசமில்லை. நீ எழுதிய குறுநாவலை என்னால் மறக்கமுடியாது. அது யாருடைய வாழ்க்கையில் நடந்தது என்றால் நீ கூறமாட்டேன்கிறாய். ஆனால் அச்சம்பவங்கள் எனக்கும் பொருந்திப் போகிறது. கூட இருந்து பார்த்தது போல, அல்லது கேட்டு எழுதியது போல இருக்கிறது கதை. உன்னிடம் சொல்லலாம் என சில விஷயங்கள் தோன்றுகிறது. அப்புறம் பார்த்தால் அதையும் உன் நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து லவ் இன்ஃபினிட்டி 2 என எழுதிவிடுவாய் என பயமாக இருக்கிறது. நன்றாக சாப்பிடு. இல்லையென்றால் சென்னையில் தாக்குப்பிடிக்க முடியாது. இன்னொரு நாள் பேசுகிறேன். சபாபதி 20.6.2019     காமிக்ஸின் உதவி! 7 அன்புள்ள தோழர் சபாவுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? நான் குடியிருக்கும் அறையில் தண்ணீர் பிரச்னை தொடங்கிவிட்டது. சிலசமயங்களில் எனது அலுவலகத்தில்தான் சென்று குளிக்கிறேன். அங்கிருக்கும் காவலர் கூட என்னப்பா, குளிச்சிட்டு வந்துடு. நான் அடுத்து போய் குளிக்கணும் என்று நக்கலடிக்க தொடங்கிவிட்டார். ஆபீசில் இதற்காகவே சோப்பு, ரேசர், கண்ணாடி, ஷாம்பூ எல்லாம் வாங்கி வைத்திருக்கிறேன். என்ன செய்வது நிலைமை அப்படி? சென்னையிலுள்ள வைணவர்கள், வைணவ அனுதாபிகள் என பலரும் காஞ்சிபுரத்திற்கு சென்றுவிட்டார்கள். அத்திவரதரைப் பார்க்கத்தான். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் விழாவாம். தந்தி, தினகரன் எல்லாருமே அத்திவரதருக்கு சிறப்பிதழ், ப்ளோஅப் வெளியிட்டு கல்லா கட்டினார்கள். மாதமொரு நூலை வாசிக்க ஆபீசும் வற்புறுத்துகிறது. அதைத்தாண்டி நான் இயல்பாகவே படித்துக்கொண்டிருப்பவன்தான். ஆனால் வேலை நெருக்கடியால் படிப்பதில் சிறு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. காலையில் கிளம்பினால் மாலைதான் அறைக்கு வர முடிகிறது. மனச்சோர்வைப் போக்க காமிக்ஸ்தான் உதவியாக உள்ளது. ஷெல்பிலுள்ள நூல்களைப் பார்த்தாலே குற்றவுணர்வு ஏற்படுகிறது. நேற்று மரணதேசம் மெக்சிகோ, நீதியின் நிழலில் என்ற காமிக்ஸ்களைப் படித்தேன். ஒரே நூல்தான். இரண்டு கதைகள் இருந்தன. நவகோ தலைவர் டெக்ஸ் வில்லர் கடத்தப்பட்ட கொத்தடிமையாக்கப்பட்டுள்ள குழந்தைகளை மீட்பதும், செவ்விந்தியர்களைக் காப்பாற்றுவதும்தான் கதை. நீங்கள் இதையெல்லாம் சிறுவயதில் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி! சந்திப்போம்! ச..அன்பரசு 2.7.19                                     எகிறும் பிரஷர்! 8 அன்புத்தோழர் சபாவுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? உங்கள் வேலையிலும் சிலசமயங்களில் சாதி சார்ந்தும் வேலை சார்ந்தும் பிரஷர் இருக்கலாம். எனக்கு தினசரி பன்னிரண்டு பக்கம் செய்யவேண்டும். பிரஷர் குப்பென எகிறாதா? அதுவும் பத்திரிகை தொடங்கும்போதிலிருந்தே இருப்பவர்கள்தான் என்னைச்சுற்றிலும் இருப்பவர்கள். ஆனால் எதையும் புதிதாக கற்றுக்கொண்டுவிடக்கூடாது என்று கவனமாக இருக்கிறார்கள். தென்னைவோலையில் சிறுநீர் கழித்தால் வரும் சத்தம் போல, அவ்வளவு பேச்சு... அப்புறம் வேலையில் எங்கே மனம் செல்லும்? தின்பதையும் ஊர் சுற்றுவதையும் தாண்டி எதையும் யோசிக்காத ஆன்மாக்கள். இப்போதே ஊதிய உயர்வு பேச்சுக்களை தொடங்கிவிட்டார்கள். எடிட்டர் தண்ணீர் ஒட்டாத விம் பாராய் நழுவுகிறார். அவரிடமும் மீட்டிங்கை நடத்தினார்கள். விளைவு, அனைவருக்கும் சிறப்பான செய்தியை பத்திரிகை அதிபர் அனுப்பி அதிரவைத்தார். அப்புறம் மூச்சு வரணுமே? சினிமாதான் சிறிது ஆசுவாசம் தருகிறது. ப்ரௌச்செவரு என்ற தெலுங்கு படத்தைப் பார்த்தேன். ஸ்ரீவிஷ்ணுவுக்கு முக்கியமான படம். இயக்குநர் விவேக் ஆத்ரேயா திரைக்கதையில் பின்னி இருக்கிறார். விவேக் சாகரின் இசை படத்திற்கு ரத்தம் ஓட்டம் போல உள்ளது. எவ்ரிபடி லவ்ஸ் குட் டிராட் - சாய்நாத் எழுதிய நூலைப் படித்து வருகிறேன். புத்தகத்தைப் படித்து மதிப்பிட்டு அதனை இதழுக்கு பயன்படுத்துவதே நோக்கம். ஏழு மாநிலங்களில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைச் சந்தித்து பேசியிருக்கிறார் ஆசிரியர். எட்டு மாநிலங்களில் என்னென்ன மாற்றங்கள் நடந்தன. எவை சிறப்பான திட்டங்கள், எந்த இடத்தில் சொதப்பின. ஏன் என்ன சூழல் அங்கு நிலவுகிறது என விளக்கமாக கள ஆய்வு செய்து எழுதியுள்ளார் சாய்நாத். நன்றி! சந்திப்போம்! ச.அன்பரசு 6.7.2019                                 செக்சும் காமெடியும் அதிரடி! 9 அன்புள்ள தோழர் சபாபதிக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். இங்கு இரண்டு நாட்களாக மழை பெய்தது. ஏன் பெய்தது என்று நினைக்கும்படியாக கொசுக்கள் படையெடுத்து வந்துவிட்டன. ஒரே அரிப்பும் பிடுங்கலுமாக இரவுகள் போனது. கடந்த ஞாயிறுஇ 3 படங்களைப் பார்த்தேன். தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என எல்லாமே ஹைபிரிட் கலவையாகத்தான். கிரான்க் ஆங்கிலத்தில் எடுத்த தெலுங்குப்படம். காட்சிகள் அனைத்தும் அப்படித்தான் இருந்தன. வயது வந்தோருக்கான ஏராளமான காட்சிகள் உண்டு. நாயகனின் இதயத்தை ஒரு கும்பல் திருடுகிறது. அதற்குப் பதிலாக செயற்கை இதயத்தைப் பொருத்திவிடுகிறது. பேட்டரியில் இயங்கும் இதயம் அடிக்கடி சீன போன் போல சார்ஜ் இறங்கிவிடுகிறது. தனது இதயத்தை நாயகன் எப்படி மீட்கிறார் என்பதே கதை.  ஒரினச்சேர்க்கை நண்பன், விபச்சார மனைவி, செக்சுக்கு வற்புறுத்தும் தோழி, உடலுறவில் இருக்கும் மூளைக்கார டாக்டர் என அனைத்தும் செக்ஸ், காமெடிதான். சந்தீப் கிஷன் படம், பேய்ப்படம். ஆனால் நல்ல பேய் என்பதால் பாதிப்பில்லை. நேர்த்தியாக முயன்றிருக்கிறார் இயக்குநர். ஆனால் கதையில் எதிர்பார்க்கும் முரண் ஏதுமில்லை. மற்றொரு காதல் படமாக முடிந்துபோகிறது. வெண்ணிலா கிஷோர் இருந்தும் பிரயோஜனம் இல்லை. வன்முறை, அதீத கோபம் கொண்ட நாயகன் என ஓப்பனிங் சுவாரசியமாக இருந்தாலும் அவன் இயல்பு ஏற்படுத்தும் பிரச்னைகள் படத்தில் இல்லை. படம் தோற்றுப்போக இது முக்கியமான காரணம். நன்றி! சந்திப்போம்! ச. அன்பரசு 24. 7. 2019                                   மன அழுத்தம் எங்கும் உண்டு! அன்பு நன்றாக இருக்கிறாயா? நான் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டன், சிக்கன் என்று சாப்பிட்டு வருகிறேன். நீ என்னை சந்தித்து வயிறு வந்துவிட்டது என்று சொன்னாய் . இதனால் அதனைக் குறைக்கும் முயற்சியில் உள்ளேன். மாலையில் உடற்பயிற்சி, புரத பவுடர், சிக்கன், படிப்பு என வாழ்க்கை நகருகிறது. வீட்டில் பெண் பார்க்கும் விஷயங்கள் நடந்தன. தெரிந்த பெண்தான். அவள் எப்போதும் மாலைவேளையில் எங்கள் வீட்டில்தான் அமளிதுமளி செய்து கொண்டிருப்பாள். அவளை எனக்குத் தருவதாக அவள் வீட்டினர் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அந்த பெண்ணுக்கு விருப்பமா என்று யாரும் கேட்கவில்லை. பெண்களை திருமணம் செய்து கொடுப்பதில் பாதுகாப்பை மட்டுமே பலரும் பார்க்கிறார்கள். அந்த பெண்ணின் விருப்பத்தை நமது ஊரில் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இந்த வரன் நிலைக்குமா என்று தெரியவில்லை. உன்னுடைய விஷயம் என்ன? நீ அமுக்கனாகவே இருக்கிறாய். எதையும் என்னிடமும் கூட சொல்ல மாட்டேன்கிறாய். உனக்கும எனக்கும் ஒரே வயதுதான். குடும்பம் சார்ந்த விஷயங்களை நீ கண்டுகொள்வது போல தெரியவில்லை. கவனமாக திருமண உறவுகளைத் தேர்ந்தெடு. அது மட்டுமே நான் உனக்கும் கூறுகிறேன். மன அழுத்தம் என்னுடைய பணியிலும் உண்டு. வேலைக்கேற்றபடி அளவுகள் மாறலாம். அவ்வளவுதான். உனக்கென சரியானபடி நேரத்தை ஒதுக்கிக்கொண்டு வேலை செய். அலுவலகத்திலேயே கிடக்காதே. அது தவறான முன்னுதாரணமாக உன்னுடைய நண்பர்களால் கணக்கில் கொள்ளப்படும். சந்திப்போம். சபாபதி 30.7.2019   மதமும் அறிவியலும்! 10 அன்புள்ள நண்பர் சபாபதிக்கு, வணக்கம். உங்கள் உடல்நலமும், மனநலமும் சிறந்தோங்க வாழ்த்துக்கிறேன். நான் தனிப்பட்ட முறையில் இறைநம்பிக்கையோடு இருக்கிறேன். ஆனால்  மக்களின் பிரதிநிதியாக இருந்தால், அவர்கள் முன் தோன்றும்போது மத அடையாளங்களைத் தவிர்ப்பேன். மக்கள் நம்மை அணுக நாமே மத அடையாளங்களை சுவராக கட்டக்கூடாது. இது என்னுடைய கருத்து. இஸ்லாமியரோ, கிறிஸ்துவரோ வருகையில் காஞ்சி மகாபெரியவரின் புகைப்படத்துடன் அனைத்து மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த ஒருவர் இருந்தால் அது சங்கடமான சூழலை உருவாக்கும் என்றே நான் நினைக்கிறேன். குறிப்பிட்ட இன மக்களின் மீதான தாக்குதல் சூழல் நடந்து வரும் நிலையில் இதுபோன்ற அடையாளங்கள் மக்களை இன்னும் தனிமைப்படுத்தும். அறிவியல் துறையில் இதுபோன்ற விஷயங்கள் புகுந்துவிட்டன. நான் தங்களிடம் போனில் இதுபற்றி பேசினேன். அது பெரிய விஷயமில்லை என்றீர்கள். எனக்குப் அப்படிப்படவில்லை. இஸ்ரோ சிவன் மக்கள் வரிப்பணத்தில் ஆராய்ச்சியைச் செய்யும்போது மாதிரிகளை கடவுளின் பாதங்களில் வைத்து சரணடைவது சரியானதல்ல. சேட்டன் பகத்தின் இந்தியா பாசிட்டிவ் என்ற நூலைப் படித்து வருகிறேன். தாராளவாத வலதுசாரி எழுத்தாளர் இவர். இன்றைய சமகாலத்திற்கு ஏற்றபடி செக்சும் காதலும் கலந்து காக்டெய்லாக கலந்து எழுதி வெற்றி கண்டவர். கட்டுரைகளை சுமாரான விஷயங்களுடன்தான் எழுதுகிறார். டைம்ஸ் பத்திரிகையில் கூட கட்டுரைகளை எழுதி வருகிறார். பிளாக்கில் இவரது கட்டுரைகளை மொழிபெயர்த்து எழுத இந்த புக்கை வாங்கினேன். முன்னமே இவரது நூல்களை (யங் இந்தியா) மொழிபெயர்த்து வலைத்தளத்தில் எழுதியுள்ளோம். வெங்கடசாமி என்ற நண்பர் எப்போதும் சொல்கிறார். சார் நீங்க உங்க கைச்சரக்கையும் கலந்து எழுதறீங்க. நீங்க பேசற மாதிரியே இருக்குன்னு. ஆனால் உண்மையில் ஒரு மொழிபெயர்ப்பை செய்யும்போது நான் அதில் கூறப்பட்ட கருத்தின் திசையில் சென்று கொண்டிருப்பேன். அப்போது பேசும்போது, அந்தக் கருத்தோட்டமே வருகிறது. அதனால் அவர் அப்படி கூறினார். சேட்டன் பகத்தின் கருத்துகள் பொதுவாக அன்னாஹசாரேவின் ஊழல் ஒழிப்பு வகையறாக்களில் அடங்கும். நான் என்னுடைய கருத்துக்களை சேர்த்து எழுதுவது தனிக்கட்டுரைகளில்தான்.  சேட்டன் பகத்தைப் பொறுத்தவரை அவர் சொன்னதை தமிழுக்கு ஏற்றபடி மாற்றினேன். அவ்வளவேதான். புதிய நூலைப் பொறுத்தவரை இதில் நான் சில விஷயங்களை சேர்த்து நீக்கி மாற்றி எழுதியுள்ளேன். பிரதிபி லிபி வலைத்தளத்தில் இதனை வெளியிட நினைத்தேன். ஆனால் காப்புரிமை சங்கடங்கள் ஏற்படலாம் என விட்டுவிட்டேன். நீங்கள் பிரதிலிபியில் ஏதேனும் படித்தீர்களா? நன்றி! சந்திப்போம்! ச.அன்பரசு 3.8.2019               போலித்தனமான உறவுகள்! 11 அன்பு நண்பர் சபாபதிக்கு, வணக்கம். 15ஆம் தேதி எனக்கு விடுமுறை. இன்று நண்பரைச் சந்திக்கச் சென்றேன். மதிய உணவு அவருடன் சாப்பிடுவதாக ஏற்பாடு. வாக்கு தவறி, கரும்பு ஜூஸ் வாங்கிக்கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். மணமானவர்கள். எனவே, சொல்ல ஏதுமில்லை. செவன்த் சன் என்ற படத்தைப் பார்த்தேன். நன்மை தீமை மோதல்தான் கதை. பேய் ஒன்றைக் கொல்வதற்காக  காத்திருப்பவர் தனக்கு துணையாக இளைஞர் ஒருவரை காசு கொடுத்து வாங்கிக்கொள்கிறார். அவன் பேயை அழிக்கும் விதி கொண்டவன். ஏன் எப்படி என்பதுதான் கதை. சண்டைக்காட்சிகளும், சிஜியும் படம் பக்கா என்று சொல்ல வைக்கிறது. மற்றபடி சிலுவைதான் உலகைக் காக்கும் என்று சொல்லி, நம் மூளையில் சுண்ணாம்பு அடிக்கவில்லை. அதுவே பெரிய விடுதலை. ஆபீஸ் செல்வது சுந்தர் சியின் அரண்மனை படத்திற்கு செல்வது போல திக் திக்க்கென்றே இருக்கிறது. எப்போதே எந்த திக்கிலிருந்து பிரச்னை வரும் என்றே புரியவில்லை. வான்ஹெல்சிங் போல வில்லும் அம்புமாக சுற்ற வேண்டியிருக்கிறது. சுயநலம், போலித்தனம். தனக்கான ஆதரவு ஆட்கள் என இதழை சிதைப்பதற்கான அத்தனை அம்சங்களும் இவர்களிடம் இருக்கிறது. எப்படிப்பட்ட மனிதர்கள். யாருடனும் நம்பிக்கையாக பேச முடியவில்லை. காலபைரவரை வேண்டிக்கொண்டு வேலை செய்துவருகிறேன். சேட்டன் பகத்தின் நூலைப் படித்து விட்டேன். இனி கே.என்.சிவராமன் சார் கொடுத்த உலக மக்களின் வரலாறு நூலை படிக்கவேண்டியதுதான்.  பிறரின் கருத்துகளை எதிர்வினை காட்டாமல் கேட்கக்கூட பெரிய மனது தேவை. இதற்குத்தான் பயிற்சி செய்து வருகிறேன். நன்றி! சந்திப்போம்! ச.அன்பரசு 16.8.2019                                   தன்முனைப்பில்லாத மனிதன்! 12 அன்புத்தோழர் சபாபதிக்கு, வணக்கம். நலமறிய ஆவல். நட்பு கொள்வதைப் பற்றி போனில் பேசினீர்கள். நான் தங்கள் கருத்தை பகுதியளவில் ஏற்கிறேன். நாம் நம் முன் எதிர்ப்படும் அனைவரிடமும் பேசலாம். ஆனால் அவர்கள் அத்தனை பேரையும் நண்பர்களாக ஏற்பதில்லை. உறவு பலப்பட உருவாக நம்பிக்கை தேவை. அது இல்லாதபோது சிமெண்ட் கலக்காத கான்க்ரீட்டாக கட்டடம் இருக்கும்.  விளைவு என்னவாக இருக்கும்? நட்பை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற தன்முனைப்பு எப்போதும் இருந்ததில்லை. பெரிய திட்டம் போட்டு இதனை செய்யவில்லை. நானாக ஓர் உறவை அமைத்து பயன்பெற்றதில்லை. நீங்களும் நானும் பேசுவது கூட இயல்பாக ஏற்பட்டதுதான். இதற்கான சூழல் கல்லூரியில் அமைந்துவிட்டது. நம் மனதிடம் பேசுவது போல, மனசாட்சி போல சிலர் அமைகிறார்கள். நானாக போய் நட்பு ஏற்படுத்திக்கொள்ள முயன்று நிறைய மனக்காயம் பட்டிருக்கிறேன். பொருட்களை இழந்திருக்கிறேன். பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்பட்ட நிகழ்ச்சிகளும் உண்டு. போலியாக வற்புறுத்தப்பட்டு சிரிக்கும் நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்பதில்லை. முடிந்தளவு அவற்றை தவிர்த்து விடுவதால் கெட்ட பெயரும் ஏற்படுகிறது. அதற்கு என்ன செய்வது? வளர்ந்தாலும் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்பவர்களை பாராட்ட முடியுமா? நீங்கள் வேலை என்றால் மட்டும்தான் என்னிடம் பேசுகிறீர்கள். முதலாளி வாங்கியுள்ள ரோபோவாக நீங்கள் என்றார் சக ஊழியர் ஒருவர். நேரடியாக மனந்திறந்து பேசாத ஒருவரிடம் நட்பு பாராட்ட என்ன இருக்கிறது? கொடுக்கிற சம்பளத்திற்கு எனக்கிட்ட பணிகளை நான் செய்யவேண்டும். இல்லையென்றால் சீட்டை அடுத்தவரிடம் கொடுத்துவிட்டு ஈரோட்டுக்கு கிளம்பவேண்டியதுதான். ஒரு லட்சத்திற்கு பக்கமாக வாங்குகிறார் இந்த புகார்தாரர். நாற்பது வயதிற்குள்ளாக தன்னை உலகிற்கு நிரூபித்து விட்டவர், இப்போது அகில  உலகமும் தன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கவேண்டும் என நினைக்கிறார். வயதானால், தலை நரைத்துப்போனால் ஒருவர் வரம் தரும் நிலைக்கு வந்துவிடலாமா ஆச்சரியமாக இருக்கிறது. மனதளவில் நெகிழ்வுத்தன்மை இம்மியும் கிடையாது இவர்களுக்கு. தான் நினைப்பதுதான் சரி என அணி சேர்த்து சண்டை செய்யும் மனம் கொண்ட ஆட்கள். சோறு, தூக்கம், அடுத்தவரை நோகடிக்கும் நகைச்சுவை இதைக்கொண்டே வாழ்கிறார்கள். அவர் கூறியதற்கு நான் அதைத்தவிர என்னங்க சார்? என்றேன். பின்னே நாம் என்ன அவரிடம் பொண்ணைக் கேட்டு வாங்கி கல்யாணம் செய்திருக்கிறோமா என்ன? உடனே ஷாக்காகி கண்கள் சிவந்தவர், எழுந்து போய்விட்டார். நான் செய்திக்கட்டுரைகளை எழுத தொடங்கிவிட்டேன். நட்பில் காரியம் சாதிக்கும் எண்ணம் எனக்குக் கிடையாது. ஆபீஸ் நேரத்தில் வேலையை செய்யச்சொன்னால் கோபம் வந்துவிடுகிறது. மறக்காமல் கவலையை விட்டு உடற்பயிற்சியை செய்யுங்கள். போலீசாருக்குத்தான் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். நன்றி! சந்திப்போம்! ச.அன்பரசு 10.9.2019           நம்பிக்கையில் என்ன தவறு? அன்பு நன்றாக இருக்கிறாயா? நட்பை உருவாக்குவது பற்றி பேசியிருந்தாய். அதில் எனக்கு மாற்றுக்கருத்துகள் உண்டு. வலுக்கட்டாயம் என்றாலும் நமக்கு தேவைப்படும் ஒருவரிடம் உறவை வளர்ப்பதில் என்ன தவறு? இஸ்ரோவின் தலைவர் பற்றியும் எனக்கு மாற்றுக்கருத்து உள்ளது. அமெரிக்காவில் ஜீசஸ் சொல்கிறார்கள். ஓம் நமசிவாய என்கிறார்கள். அவ்வளவுதான். கடவுளை ஒருவர் நம்புகிறார். அதிலென்ன தவறு இருக்க முடியும்? பல கோடி போட்டு ராக்கெட் விடுகிறார்கள். அதில் வெல்வதற்கான வாய்ப்பு போலவே தோற்றுப்போவதற்கும் வாய்ப்புகள் உண்டு. எனவே கண்ட இடத்திலெல்லாம் கையெடுத்து வணங்குகிறார்கள். அறிவியலில் குங்குமம், சந்தனம், திருநீறுக்கு இடமில்லை என்கிறார். அது அவரது நம்பிக்கை. சிவனுக்கு தன் திறமையை விட அவரின் நம்பிக்கை உயர்வாக பட்டிருக்கலாம். அதனால் இறைவனிடம் சரண்டைந்து விட்டார். இஸ்ரோ தலைவராக சிவன் வரலாற்றில் இடம்பிடித்துவிட்டார். அத்தனைக்கும் காரணம் இறைவன்தான் என அவர் நம்பலாம். மற்றவர்களிடம் பழகுவதில் உனக்கு நான் மைனஸ் மார்க்தான் கொடுப்பேன். நீ எப்போதும் கனவுலகில் இருப்பதால் உன்னை எழுப்புவதே எனக்கு வேலையாக இருந்தது. பத்திரிகை சம்பந்தமாக உனக்கு ஆர்வம் இருந்தது. உன் குடும்பத்தின் அலட்சியத்தையும் மீறி சிறுபத்திரிகைகளில் வேலை பார்த்து இன்று உண்மையை உரைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாய். உழைத்தால் அனைத்தும் சாத்தியம்தான். இன்னொருநாள் பார்ப்போம். நன்றி சபாபதி! 15.9.2019   முயன்று தோற்கலாம்! 13 அன்பு நண்பர் சபாபதிக்கு, வணக்கம்.  மழை, வெயில், பனி என சூழல்கள் மனித மனத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் சாதாரணமானவை அல்ல. நான் அலுவலகத்தில் உட்கார்ந்துள்ள நாற்காலியை உதைத்துத் தள்ள பல்வேறு முயற்சிகளை அலுவலக நண்பர்கள் பேச்சு வழியாகவும், செயல் வழியாகவும் செய்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இதழ் எப்படி செயல்படவேண்டுமென்று கூறப்பட்டுள்ளதோ அதைநோக்கி நடத்திச்செல்லவே முயல்கிறேன். இந்த முயற்சியில் நான் தோற்றாலும், பகுதியளவிலேனும் அந்த முயற்சிக்கான விளைவு கிடைக்கும் அல்லவா?  அதுவே போதும். தினகரன் நாளிதழில் வேலை கிடைத்து உள்ளே போகும்போது, எனக்கு இதழை நடத்தும் திறன் இருந்ததா என்றால் கிடையாது. ஆனால் எனக்கென கொடுத்த வேலைகளை சரியாகச் செய்ய முயன்றேன். இதற்கு பலரின் ஆதரவை நான் பெறவேண்டியிருந்தது. வெறுப்பை, அரசியலை சந்திக்க வேண்டியிருந்தது. எட்டு மாதங்களில் முத்தாரம் என் கையில் முழுமையாக ஒப்படைக்கப்பட்டது. இதற்குப் பிறகு ஆசிரியரும் மாறினார். அதற்குப்பிறகுதான், நினைத்த மாற்றங்களை முத்தாரத்தில் கொண்டு வர முடிந்தது. அதேமாதிரியான மாற்றங்களை இங்கும் சாத்தியப்படுத்தலாம். ஆனால் எழுதுபவர்களுக்கு இருக்கும் மன்னிக்கவும்  எழுதியதை சரிபார்க்கும் ஆட்களுக்கு உள்ள ஆணவம் இருக்கிறதே அவர்களை விட உயரமாக உள்ளது. நாம் கூறும் அறிவுரைகளை விட காலம் அதிரடியாக புரியவைக்கும் விஷயங்களை நான் நம்புகிறேன். இந்தியானா ஜோன்ஸ் திரைப்படங்களின் தொகுப்பை பார்த்து வருகிறேன். எனக்கு போட்டியாக பாரதி சி.ஐ.டி தொடரைப் பார்த்து வருகிறார். ஒவ்வொருவரின் வயதுக்கு ஏற்ப படம் பார்க்கும் ரசனையும் மாறுகிறது. தொழில்துறை, பொருளாதாரம் சார்ந்த நூல்களைப் படித்து வருகிறேன். தங்களின் தேர்வு நெருங்கிவிட்டதா? ஓரளவு தயாராகி விட்டீர்களா?   நன்றி! சந்திப்போம்! ச.அன்பரசு 1.10.2019                               மழை மழை மழை! 14 அன்புள்ள சபாபதிக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா மயிலையில் அடிக்கடி மழை பெய்து சாலையில் நீர் தேங்கி நிற்கிறது. டெங்கு காய்ச்சல் வேறு சென்னையில் அதிகம் பரவி வருகிறது. நீர் வடிவதற்கே அதிக நாட்கள் தேவைப்படுகின்றன. ஆண்டுதோறும் சென்னையைப் பொறுத்தவரை நவம்பர் - டிசம்பர் மாதங்கள் இறுதி தீர்ப்பை வழங்குவது போலவே இருக்கும். பல உயிர்கள் மழை, வெள்ளத்தால் பறிபோகும் அவலம் நடைபெற்று வருகிறது. எதற்கும் முழுமையாக அரசு ரெடியாகவில்லை என்பதுதான் உயிர்ப்பலிக்கு முக்கியக்காரணம். ஹவுஸ்புல் படத்தின் பாடல்களைக் கேட்டேன். அக்ஷய் குமார் அசத்தி வருகிறார். வணிகப்படங்கள், கலைப்படங்கள் என மாற்றி மாற்றி நடிக்கிறார். கமர்சியல் ஹீரா என்ற எல்லையைக் கடந்து விட்டார். சாணக்கியா என்ற தெலுங்குப்படத்தைப் பார்த்தேன். நேரவிரயம். பாகிஸ்தானுக்கு எதிரான மேலோட்டமான படம். பாடல்களும், இசையும் மட்டுமே லாபம். தன் பெண் நாய்க்கு, ஆண் நாயைத் தேடுகிறார். ஆண் நாய் நாயகனிடம் இருந்தாக வேண்டுமே? நாய்கள் ஒருவரையொருவர் காதலித்து கலவி செய்ய, நாயகனும் நாயகியும் காதலிக்கத் தொடங்குகின்றனர். உள்ளூரில் நாடகம் போடும் இளங்கோ நாடக மன்றத்தில் கூட இதுமாதிரி காட்சிகளை எழுதி நடிக்க மாட்டார்கள். வாட் எ ஐடியா இயக்குநர்ஜி! கணினியில் உள்ள பீடிஎஃப் நூல்களை படிக்க கடினமாக உள்ளது. குறிப்பாக திரையில் படிப்பது கண்களுக்கு கடுமையான் சோர்வை அளிக்கிறது. தாராபுரத்தைச் சேர்ந்த முருகானந்தம் எழுதிய கடிதங்களை மின் நூலாக மாற்றிவிட்டேன். உளவியல் சார்ந்த அசுரகுலம் என்ற தொடரை எழுத வின்சென்ட் உதவி கேட்டார் செய்துகொடுத்தேன். உளவியல் பற்றிய நூல்களை கவனமாக படித்துவருகிறேன். நன்றி1 சந்திப்போம்! ச.அன்பரசு 17.10.2019                                 தீபாவளி கொண்டாட்டம்! 15 அன்புள்ள நண்பருக்கு, வணக்கம். தீபாவளிக்கு ஊருக்கு வருகிறீர்களா? நான் எந்த விழாக்களுக்கும் ஊருக்குச் செல்வதில்லை. தற்போது அறையில் உட்கார்ந்து நரசிம்மராவ் பற்றிய நூலைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.த சிறிது நேரம் எழுதினேன். படம் பார்த்தேன். தீபாவளி தினம் எனக்கு இப்படித்தான் சென்றது. லீவு என்றாலே எனக்கு நிறைய வேலைகள் கழிந்துவிடுகின்றன. பத்திரிகைக்காரர்களுக்கு ஏது விடுமுறை? அலுவலக சகாவுக்கு திருமணம் நடைபெறுகிறது. தூத்துக்குடி விளாத்திகுளத்தில் வைபவமாம். இதனால் அவரின் பக்கங்களைக் கவனித்து கூடுதலாக எழுதவேண்டியிருக்கிறது. ஆசிரியர் இதழ் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துவிட்டு வேலை என  விடுமுறை எடுத்துக்கொண்டார். கடமை உயிரினும் பெரிது என நினைத்துக்கொண்டேன்.  பட்டாசு வெடிப்பது இன்னும் இங்கு மாறவில்லை. நான் கே.கே. நகரில் இருந்தோது 12ஜியில் பயணிப்பது வழக்கம். அங்கிருந்து மயிலாப்பூருக்கு வரும் ஒரே பஸ் அதுதான். அப்போது இந்தியன் பேங்க் கடந்து வரும்போது அங்கிருந்த சேரி சிறுவர்கள் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தார்கள். ஒருவன் நேராக பட்டாசின் திரியைக் கொளுத்தி பஸ் மீது எறிந்தான். அது காற்றில் பயணித்து நான் உட்கார்ந்திருந்த ஜன்னல் அருகில் வந்து மோதி விழுந்தது. ஆம் சென்னையில் சந்தோஷம் என்பது இப்படித்தான் இருக்கிறது. எனக்குன்னே வருவீங்களாடா என கேட்டுக்கொண்டேன். டிசைன் அப்படித்தான். வெயிலுக்கு இடையே மழை பெய்துகொண்டிருக்கிறது. கள்ளமழை என்றார் பாலபாரதி. சிகரெட் மழையில் நனையக்கூடாது என்று அரும்பாடு பட்டார். அவரவர்க்கு அவரவர் பிரச்னை, சிக்கல். ச.அன்பரசு 29.10.2019                                     வைரஸை விட சாதி கொடுமையானது! ஹலோடா, எப்படியிருக்க? உனக்கு திருமணம் செய்வார்களா என்று தெரியவில்லை. எப்போது போனில் பேசினாலும் உடனே கேள்வியை எனக்குத் திருப்பி விட்டுவிடுகிறாய். நீ பதிலே பேசுவதில்லை. என்னவோ உனது மனத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. உன்னைப் போல ஏகாந்தமான ஆட்களை குடும்பத்திற்குள் இழுத்தால்தான் சரியாக இருக்கும். நான் கல்லூரியில் நம்மோடு படித்தவர்களில் கமலாவோடு பேசிக்கொண்டிருக்கிறேன். ஏய்… உடனே நக்கலாக சிரிக்காதே. அந்தப் பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டது. சில சமயங்களில் அந்தப் பெண் எனக்கு போன் செய்து பேசுவாள். பகலில் கண்ணியமாக போகும் பேச்சு, இரவில் ஏ சர்ட்டிபிகேட் லெவலுக்கு போகிறது. இப்படிப் பேசாதே என்றாலும் அவள் கேட்பதில்லை. கன்னிகள் சுற்றிவரும் ராசியாக அமைந்துவிட்டது. என்ன சாதி என்று பேசினால்தான் கோபமாக வருகிறது. வேலை விஷயங்களில் கூட இன்று பெரும் நிறுவனங்கள் சாதி சார்ந்துதான் ஆட்களை சேர்க்கிறார்கள். இது எவ்வளவு தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்பதை அவர்கள் நினைத்துக்கூட பார்ப்பதில்லை. அரசின் ஆதரவு மட்டும் இல்லாவிட்டால் எனக்கு வேலை, கல்வி, வாழ உரிமை கூட கிடைத்திருக்காது. என்னமோ இதை நினைத்தாலே வலியாக இருக்கிறது. சாரி வேதனையில் பேசிவிட்டேன். நீ ஊருக்கு வந்தால் சொல். சந்திக்கலாம். சபாபதி 2.11.2019       நன்றி! சபாபதி தோழர் பாலபாரதி வெங்கட் குருசாமி கே.என்.சிவராமன் கணியம் சீனிவாசன் பிரதிலிபி தமிழ் வலைத்தளம் ஃப்ரீதமிழ் இபுக்ஸ் வலைத்தளம்