[] []     ஆசிரியர் -  நிர்மலா ராகவன்  nirurag@gmail.com   மின்னூலாக்கம் - த . தனசேகர் tkdhanasekar@gmail.com   அட்டைப்படம் - த . சீனிவாசன்  tshrinivasan@gmail.com   மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com    உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.                                                                                   சண்டையே வரலியே                                                                                                                                                     சிறுகதைத் தொகுப்பு)                                                                                                                                                                நிர்மலா ராகவன்                  பொருளடக்கம்    முன்னுரை 5  1. சண்டையே வரலியே! 6  2. சிறுகதைகள் புனைய சில உத்திகள் 11  3. யார் பிள்ளை? 18  4. குற்ற உணர்ச்சியே கருணையாக 22  5. சேராத இடம் சேர்ந்தால் 28  6. வாரிசு 35  7. விட்ட குறை 40  8. பிளவு 44  9. நிம்மதியை நாடி 48  10. ஏனிந்த முடிவு? 53  முன்னுரை       திருமணம் என்றாலே பல்வேறு கனவுகள் எழும், இருபாலருக்கும். நம் கதாநாயகனுக்கு உப்பு சப்பு இல்லாதிருக்கும் மணவாழ்க்கை அலுத்துவிடுகிறது. அதற்காக என்ன முட்டாள்தனமெல்லாம் செய்கிறான் என்று பாருங்கள் முதல் கதையில். யாருக்காவது உபயோகப்படுமோ என்று, `சிறுகதைகள் புனைய சில உத்திகள்’ என்பதைக் கட்டுரையாக எழுதி, சிறுகதை ஆக்கியது. தத்தெடுக்கப்பட்ட ஒருவனின் மனப்போராட்டம் `யார் பிள்ளை?’யில். நாய், பூனை என்றாலே வெறுத்து விரட்டுபவர்கள் `குற்ற உணர்ச்சியே கருணையாக’ கதையைப் படிக்க வேண்டாம். இணக்கமான உறவற்ற ஒரு தம்பதியரின் மனப்போராட்டம் `வாரிசு’ கதையில். வயதானவர்கள் இறந்தால், ஒரு பழுத்த இலை உதிர்வதுபோல் அந்த நிகழ்வை ஏற்கும் அவர்களின் ஆன்மா. ஆனால், காலன் கெடு வைத்த  நாளுக்கு முன்னரே ஒருவருக்குத் துர்மரணம் சம்பவித்தால், தனது முடிவைச் சற்றும் எதிர்பாராத நிலையில், தனது நிலை புரியாது, அவரது ஆவி அந்த இடத்திலேயே சுற்றிக்கொண்டு இருக்குமாம்.  (`விட்ட குறை’). பாலியல் வதைக்கு ஆளான சிறுமியின் மனப்போராட்டம், அவளைப் புரிந்துகொள்ள முயன்ற தாயின் வேதனை இரண்டையும் சித்தரிக்கிறது `பிளவு’. சிரிப்பில் ஆரம்பித்த இத்தொகுப்பு அயல்நாட்டுத் தொழிலாளி ஒருவனின் வாழ்க்கைப் போராட்டத்தால் ஏற்படும் வேதனையில் முடிகிறது. 1. சண்டையே வரலியே!      “ஏண்டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு இருக்கு!” சோகபிம்பமாகக் காட்சி அளித்த வைத்தாவை ஆச்சரியத்துடன் பார்த்தான் குப்புசாமி மகன் ரங்கு என்னும் ரங்கசாமி -- சுருக்கமாக, கு.ரங்கு.   “ஒனக்குக் கல்யாணமாகி இன்னும் அம்பது நாள்கூட ஆகலியே! ஆசை அறுபது நாளுன்னு இல்ல சொல்லி வெச்சிருக்காங்க! அப்படிப் பாத்தா, இன்னும் பத்து நாள் இருக்கே!” என்று ஏதேதோ யோசித்துவிட்டு, “ஒன் மிஸஸ் இது வேணும், அது வேணும்னு கேட்டு நச்சரிக்கிறாங்களா? ரொம்ப சண்டை போடறாங்களோ? அப்புறம்..,” என்று அடுக்கடுக்காக கேள்விக்கணைகளை தொடுத்தான். நண்பனை எரிச்சலுடன் பார்த்தான் வைத்தா. “நீ வேற! அவ சண்டையே போட மாட்டேங்கறா. அதுதான் பிரச்னையே! நான் `நில்’லுனா நிக்கறா. `ஒக்கார்’னா ஒக்காந்துக்கறா. வாழ்க்கையே போரடிச்சுடுத்து, போ!” “ரொம்ப பணிவானவங்கதான்!” பாராட்டினான். “இப்படி ஒரு மனைவி கிடைக்க குடுத்தில்ல வெச்சிருக்கணும்! இதுக்கு ஏன் இப்படி அலுத்துக்கறே?” “ஒங்கிட்ட சொல்றதுக்கு என்னடா!” என்றாலும், வைத்தா சிறிது வெட்கப்பட்டான். “எங்களுக்குள்ளே சண்டையே வர்றதில்லை!” “அதான் சொன்னியே! மேலே சொல்லு!” என்று ஊக்கினான் நண்பன். “எங்க கல்யாணம் ஜாதகம் பாத்து,  பொண்பாத்து நடந்தது! மோதல் இல்லாம காதல் எப்படிடா வரும்?” கு.ரங்கு ஒரு சிறு சிரிப்புடன், “எனக்கு அந்தப் பிரச்னையே கிடையாது,” என்று வைத்தாவின் பொறாமையைத் தூண்டிவிட்டு, தன் சொந்தக் கதைக்குப் போனான்: “என் சமாசாரம் நேர் எதிரிடை. தானே சண்டைக்கு இழுப்பாங்க. அப்புறம் எங்கூட பேசமாட்டாங்க. எப்பவும் நான்தான் எறங்கி வந்து,  ஸாரின்னு சொல்லணும். எதுக்குச் சொல்றோம்னே புரியாது”. வைத்தாவின் கண்கள் பிதுங்கின. இல்லற வாழ்க்கையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா! ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டோமே! “அப்புறம்..,  சமாதான உடன்படிக்கைமாதிரி புதுப்புடவை வாங்கிக் குடுக்கணும், இல்லே, சினிமாவுக்குக் கூட்டிப் போகணும்”. கு.ரங்குவின் குரலில் அலுப்போ, கோபமோ இருக்கவில்லை. கண்கள் கிறங்கின, எதையோ நினைவுக்குக் கொண்டுவந்து. வைத்தாவுக்குப் புரிவதுபோலிருந்தது. “ஓகோ! சண்டை போட்டப்புறம் சமாதானப்படுத்தற சாக்கிலே..! மோதல் காதலா மாறிடறதாக்கும்!” “அதேதான்! எங்கப்பாவோட மாமா..,” என்று ஆரம்பித்தவனை எரிச்சலுடன் அடக்கினான் வைத்தா. “இப்போ எதுக்கு பழங்கதை?” “கேளேன்! அந்தக் காலத்தில சின்ன வயசிலேயே கட்டி வெச்சுடுவாங்கல்லே? மாமாவுக்கு ஒண்ணும் புரியலியாம். அத்தை வர்ற சமயம் பார்த்து, கதவுக்குப் பின்னால ஒளிஞ்சுக்கிட்டு அப்படியே தாவி..!” “சீ, போடா! இதையெல்லாமா வெளியிலே சொல்றது?” “அவசரப்படாதே. அவங்க முடியைக் கொத்தாப் பிடிச்சு இன்னொரு கையால அடிப்பாராம்”. “கிராதகன்!” “அங்கதான் விஷயமே இருக்கு. அத்தையோ சின்னப்பொண்ணு, பாவம்! பயந்து அழுவாங்களா! உடனே அவங்களைச் சமாதானப்படுத்தி, உள்ளே அழைச்சுக்கிட்டுப் போய்..,” என்று விரசமாகக் கண்ணைச் சுழற்றினான் கு.ரங்கு. “என்னடா?” “என்னால அடிக்கல்லாம் முடியாதுப்பா!” கண்டிப்பான குரலில் சொன்னான். “எங்கப்பா ஓயாம அம்மாவை ஏதாவது திட்டிண்டே இருப்பார். அதனால், `நீ அப்பாமாதிரி ஆகிடாதேடா. ஒன் பொண்டாட்டியை எதுவும் சொல்லக்கூடாதுடா, வைத்தா!’ன்னு சொல்லிச் சொல்லி என்னை வளர்த்திருக்கா எங்கம்மா”. பிறகு, முணுமுணுப்பான குரலில், `என்னால திட்டக்கூட முடியாதுங்கறேன். அடிக்கச் சொல்லிக்குடுக்கிறான் அசத்து!’ என்றான். இப்போது ஒரு புதிய சந்தேகம் முளைத்தது: அப்பாவுக்குக் கதவிடுக்கில் ஒளிந்து அடிக்கத் தெரியாததால்தான் கண்டபடி இரைச்சல் போட்டாரோ? அவர்கள் சண்டையை மட்டும்தான் அம்மா சொல்லியிருக்கிறாள். அதற்கப்புறம் என்ன நடந்திருக்கும்? “என்னடா?” தன் எண்ண ஓட்டத்திற்காகச் சிறிது வெட்கி, “ஒண்ணுமில்லே. நீ சொல்லு!” என்றான் வைத்தா. “இப்படி சாந்தமா, ஒன் குரல் ஒனக்கே கேக்காதமாதிரி நீ பேசினா, எப்படி சண்டை வரும்? சும்மா சிவாஜி கணேசன் கணக்கா கர்ஜனை செய்யக் கத்துக்க. கட்டபொம்மன் படம் எத்தனை தடவை பாத்திருப்பே!” என்றபடி வைத்தாவை ஓரிடத்திற்கு அழைத்துப்போனான் நண்பன்.   `குரல் வளம் பெருக!’ என்ற பலகை மாட்டியிருந்தது அவ்விடத்தில். “குரல் மிருதுவா, நல்லாத்தானே இருக்கு?” கேட்டவரும் மென்மையான குரலில் பேச, வைத்தாவுக்குச் சந்தேகம் எழுந்தது: `இவரா நமக்கு உரக்கப் பேசும் பயிற்சி அளிக்கப்போகிறார்?’ “நீங்க பாடறவரா?” என்ற கேட்டவரிடம், `மனைவியுடன் சண்டைபோட!’ என்று எப்படிச் சொல்வது! ஆபத்பாந்தவனாக, “பாடறதுக்கில்லே, ஸார். இவர் மேடைப் பேச்சாளர்!” என்று குறுக்கே புகுந்து, ஒரு பொய்யை அள்ளிவிட்டான் கு.ரங்கு. “பெரிய குரல் எதுக்கு? இப்பல்லாம்தான் மைக் வைக்கறாங்களே!” சொன்ன உடனேயே, `வலிய வந்த வியாபாரத்தை முட்டாள்தனமாகக்  கெடுத்துக்கொள்ளப்போனேனே! என்று தன்னைத்தானே நொந்துகொண்டார் பயிற்சியாளர். அதற்குமேல் எதுவும் கேட்காது, “காலையில பாலிலே ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், மிளகுபொடி, பனங்கல்கண்டு, அப்புறம்.. குங்குமப்பூ, ஏலக்காய் எல்லாத்தையும் போட்டு காய்ச்சிக் குடிங்க. ஐஸ் தண்ணி வேண்டாம்,” என்று பாடத்தை ஆரம்பித்தார். அத்துடன் ஏதேதோ யோகப்பயிற்சி செய்ததன் பலனாக, ஒரே மாதத்தில் வைத்தாவின் குரல் பலமாக ஒலித்தது. “சீ..,” என்று அவன் கத்த ஆரம்பிப்பதற்குள் ஓடி வரலானாள் சீதா.   நண்பனிடம் புகார் செய்யப்போனான். “என் குரல் கேக்கறதுக்குள்ளே ஓடி வந்துடறாடா!” என்றான் பரிதாபமாக. கு.ரங்கு யோசித்தான். “இப்படிச் செய்யேன். ராத்திரி பன்னண்டு மணிக்கு அவங்க அசந்து தூங்கறப்போ எழுப்பி, `இந்த நிமிஷம் எனக்கு சப்பாத்தி பண்ணிக்குடு’ன்னு அதிகாரம் பண்ணு. நிச்சயமா கோபம் வரும். எப்படி என் யோசனை?” “சகிக்கல. இதுக்காக நான் அலாரம் வெச்சுக்கணும். அதோட, அவ பண்ணிப்போட்டா, அர்த்த ராத்திரியில யார் நாலு சப்பாத்தி திங்கறது?” வெளியில் அலுத்தாற்போல் பேசினான். ஆனாலும், இப்படிச் செய்துதான் பார்ப்போமே என்ற ஆசை எழாமலில்லை. “நாலுதானா! அவங்க கை ஓயறவரைக்கும் பண்ணச்சொல்லி தின்னு!” நள்ளிரவில் அலாரம் அடித்தது. “இப்போ சப்பாத்தி சாப்பிடணும்போல இருக்கு. பண்றியா, சீதா?” என்றான் அருமையாக. அவளும், “அதுக்குள்ளே பொழுது விடிஞ்சுடுத்தா?” என்றபடி அவசரமாக எழுந்தாள். “இல்ல, மணி பன்னண்டுதான்! ஒனக்கு கஷ்டமா இருந்தா வேண்டாம்!” “ராத்திரி வேளையில கேட்டுட்டேள்! ஒரு சமயம்போல இருக்குமா?” என்றபடி சமையலறைக்குள் போனாள். இரவு வேளையில் நாம் கேட்டு, இவள் சப்பாத்தி செய்து தராவிட்டால், இறந்துவிடுவோமா, என்ன! வைத்தாவின் இதழ்களில் வெற்றிப்புன்னகை. சண்டை வரும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்ற நினைவில் மனம் லேசாகியது. மறுநாள் காலை மனத்துடன் வயிறும் கனத்தது. அரை நாள் விடுப்புக் கேட்டுக்கொண்டு வீடு திரும்பினான். இன்று கண்டிப்பாக, `உனக்காவது கோபம் வருமா, வராதா?’ என்று மனைவியிடம் கேட்டு இந்த விஷயத்திற்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும் என்று முடிவெடுத்தான். வீட்டுக்குள்ளிருந்து பேச்சு சப்தம் கேட்டது.   “இதுக்குத்தாம்மா நான் கல்யாணமே வேண்டாம்னு சொன்னேன்! நீயும், ஒன் புத்திமதியும்!” இந்தப் பெரிய குரல் யாருடையது? சீதாவா இப்படிப் பேசுகிறாள்?! “அப்படி நான் என்னத்தடி சொல்லிட்டேன்? `கல்யாணமாகி ஒரு வருஷத்துக்காவது ஒன்னோட காளி சொரூபத்தை வெளியில காட்டாதே. அப்புறம் கோவிச்சுண்டு, அவர் சொல்றபடியெல்லாம் ஆடற பொண்ணைத் தேடிண்டு போவார் -- ஒங்கப்பாமாதிரி’ன்னு சொன்னேன்”. மாமியாரின் குரல் தழுதழுத்தது. “இவர் `நில்’லுன்னா நிக்கணும், `ஒக்கார்’னா ஒக்காரணும். அப்பப்பா! டிரில் மாஸ்டர் தோத்தார்!” “நீயும் என்னைமாதிரி ஆகிடக்கூடாதேன்னுதான்..!” அம்மாக்காரி தன்னைக் காத்துக்கொள்வதிலேயே குறியாக இருந்தாள். “எல்லாரும் கார்த்தால காப்பி குடிப்பா. இவருக்கோ, பால்லே ஏலக்காய், அது, இதுன்னு என்னென்னமோ கண்ராவியெல்லாம் போட்டு காய்ச்சிக் குடுக்கணும். கைக்குழந்தை தோத்தது, போ!” சீதா பொருமினாள். “ரொம்ப இருமறாரா? அதான் அப்படி! T.B-யோ, என்ன எழவோ!” “அதெல்லாம் ஒண்ணுமில்லே. இவாளுக்கெல்லாம் பொண்டாட்டின்னா அடிமைன்னு எண்ணம். இருக்கட்டும், இருக்கட்டும். ஒரு வருஷம் முடியப்போறது. அப்போ நான் யாருன்னு காட்டறேன்,” என்று வீரமாகப் பேசியவளுக்குக் குரல் கம்மியது. “அர்த்தராத்திரியில என்னை எழுப்பி, சப்பாத்தி பண்ணிப்போடு!’ன்னு அதிகாரம் பண்றார்மா. ஒண்ணு, ரெண்டோட முடிஞ்சுதா! என் கை ஓயறவரைக்கும்.. நானும் அசடுமாதிரி...,” என்று தாங்கமுடியாத சுயபரிதாபத்துடன் சொல்லிக்கொண்டே போனவள், “ஆட்டா மாவு இல்லேன்னு சொல்லத் தோணல பாரு! நீ அவ்வளவு தூரம் வேப்பிலை அடிச்சிருக்கே எனக்கு!” என்று நொந்துகொண்டாள். “எழுந்ததும், தோளெல்லாம் கடுக்கறது. வேலைக்குப் போகமுடியல. அதான் அவசரமா ஒன்னை வரச்சொல்லி ஃபோன் பண்ணினேன். இப்படியே இருந்தா, அவர் என்னை விட்டுட்டுப் போறாரோ, இல்லியோ, நான்தான் இந்த வீட்டைவிட்டு  எங்கேயாவது தொலையப்போறேன்!” பொரிந்தாள் சீதா. அப்படியும் மனம் ஆறாது, “அந்தப் பைத்தியத்தோட சேர்ந்து இருந்தா, நானும் புடவையைக் கிழிச்சுண்டு தெருத்தெருவா ஓட வேண்டியதுதான்!” என்று முடித்தாள். பைத்தியமா! நானா? எவ்வளவு பாடுபட்டு ஒவ்வொரு திட்டமாகத் தீட்டினோம்! அதற்குமேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை வைத்தாவால். ஆக்ரோஷமாக உள்ளே நுழைந்தான். அந்த வேளையில் அவனை எதிர்பாராத பெண்கள் இருவரும் அயர்ந்துபோனார்கள். மாமியார் மரியாதை நிமித்தம் எழுந்து நின்றுகொண்டாள். என்ன இருந்தாலும் புது மாப்பிள்ளை ஆயிற்றே! மகளிடமும் கண்ணால் சமிக்ஞை செய்ய, அவள் அதைக் கண்டுகொள்ளாமல் உட்கார்ந்தே இருந்தாள். “ஏன் சீதா? நான்தான் கேட்டா, ஒனக்கு புத்தி எங்கே போச்சு? அப்படியா அடுக்கடுக்கா பண்ணிப் போடுவே? கண்ட வேளையில ஹெவியா சாப்பிட்டு, இப்போ ஒரே பேதி!” என்றான் பெரிய குரலில். குரலை வளமாகச் செய்த ஆசிரியர்மீது  பக்தி எழுந்தது. பதிலுக்கு, “ஏதோ, ஒரு சப்பாத்தி, ரெண்டு சப்பாத்தின்னு சாப்பிடுவா. நீங்க எட்டு, பத்துன்னு மொசுக்கினா?” என்று விட்டுக்கொடுக்காமல் கத்தினாள் சீதா. இனிமேல் தனக்கு அங்கு வேலையில்லை, அவர்களே முட்டி மோதிக்கொண்டு ஏதோ செய்துவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் மாமியார் சந்தோஷமாகத் தன் வீட்டுக்குக் கிளம்பினாள்.                                         2. சிறுகதைகள் புனைய சில உத்திகள்     உங்களுக்கு எழுத்தாளராக ஆசையா?    ஸோமாஸ்கந்தன் நிமிர்ந்து உட்கார்ந்தான். இதுவரை உருப்படியாக எதுவும் செய்யவில்லை. பேசாமல் எழுத்தாளனாக ஆகிவிட்டால் என்ன? அந்தக் கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தான். தினந்தோறும் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் ஏதாவது எழுதிவரவும். ஒரே பத்திகூட போதும். இன்ன தலைப்புதான் என்பதும் முக்கியமல்ல. எழுத வேண்டும். அவ்வளவுதான். அவ்வளவுதானே! எந்தப் பெண்ணையாவது நினைத்துக்கொண்டு தினம் ஒரு காதல் கடிதம் எழுதினால் போயிற்று! உதாரணம்: `வெள்ளை’ என்ற தலைப்பில் நான் எழுதியது: ஐஸ்க்ரீம் வெள்ளையாக இருக்கிறது. பனியும், முகத்துக்குப் பூசும் ஸ்நோவும்கூட வெள்ளைதான். அதற்காக ஸ்நோவைச் சாப்பிடவா முடியும்! சுத்த பேத்தலாக இருக்கிறதே! கற்பனை என்பது இதுதான். தடை போடக்கூடாது. வருவதையெல்லாம் யோசிக்காது எழுதிவாருங்கள். பிறகு அடித்துக்கொள்ளலாம். அப்போதுதான் தங்குதடையின்றி எழுதவரும். ஒரு வரி எழுதிவிட்டு, `இதை இப்படி எழுதியிருக்கலாமோ?’ என்று மாற்றி மாற்றி அமைத்தால், கதை எப்படி முன்னேறும்? அதுதான் எனக்கு ஒரு காதல் கதைகூட உருப்படியாக எழுத முடியவில்லையோ! கரு நீங்கள் எம்மாதிரி கதைகளைப் படிக்க விரும்புகிறீர்கள்? அம்மாதிரியான கதைகளை எழுத முயலுங்கள். கேக்கணுமா! காதல் கதைதான்! ஒருவனுக்குத் தன்னால் -- அதாவது, அவனது செயல் அல்லது எண்ணத்தால்; பிறரால்; இல்லையேல் இயற்கை மற்றும் சந்தர்ப்பவசத்தால் தொல்லைகள் நிகழ்கின்றன. எனக்குத் தொல்லையெல்லாம் இந்த அப்பாவால்தான்.  இயற்கையாலும்தான். இல்லாவிட்டால், பதினெட்டு வயதுவரை நன்றாக இருந்தவன் இப்போது ஏன் பித்துப்பிடித்தவன்போல் ஆகிவிட்டேன்? இத்தொல்லைகளை அவன் எவ்வாறு எதிர்கொள்கிறான், இறுதியில் அவைகளைச் சமாளித்து வெற்றி காண்கிறானா, இல்லை, அவைகளால் வீழ்த்தப்படுகிறானா என்று விளக்குவதுதான் கரு. கரு என்றால், அம்மா வயிற்றில் இருப்பது இல்லையோ? ஏதாவது ஒரு பிரச்னையை எடுத்துக்கொண்டு, `இது எதனால் ஏற்படுகிறது?’ `ஏன் இப்படி இருக்கக்கூடாது?’ என்று பலவிதமாக அலசுங்கள். கதைக்கு எடுத்துக்கொண்ட விஷயம் ஆழமானதாக இருந்தால்தான் கதையில் வலுவிருக்கும். இல்லாவிட்டால், படிப்பவர்கள் மனதில் படியாது போய்விடும். நான் ஏன் ஒரு பணக்கார அப்பாவுக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கக்கூடாது? இந்தக் கரு ஓகேவா? கதாசிரியருக்கே எல்லாவித பிரச்னைகளும் ஏற்படும் என்பதில்லை. பிறர் அனுபவிப்பதை தாங்களே அனுபவித்ததுபோல் கற்பனை செய்யும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். வீண்வம்பை விலைக்கு வாங்கிக்கொள்ளச் சொல்கிறீர்கள்! பார்க்கலாம்! எனக்கு இருக்கிற பிரச்னைகள் போதாதா? இதற்காகப் புதிய அனுபவங்களைத் தேடிப் போகவேண்டும். நான் சில பிரபலங்களைப் பேட்டி கண்டதுடன், பல்வேறு இல்லங்களுக்குப் போய் தகவல் சேகரித்திருக்கிறேன். நோய் முற்றிவிட்ட நிலையில், பூட்டியிருந்த அறைக்குள் அடைபட்டிருந்த தொழுநோயாளிகளுடன் பேட்டி, வீட்டைவிட்டு ஓடிப்போன பதினெட்டுவயதுப் பெண்கள் தங்கவைக்கப்பட்டிருந்த இடம், கணவன்மாரால் வதைபட்ட பெண்களுக்கான  ஆதரவு இல்லம் இப்படி பல்வேறு இடங்களுக்குள் பலத்த சிபாரிசுடன் நுழைந்திருக்கிறேன். (சாதாரணமாக, வெளிமனிதர்கள் இங்கெல்லாம் அனுமதிக்கப்படுவதில்லை). அடடே! எல்லாம் உங்கள் சொந்தக்கதை என்று  எண்ணியல்லவா, `பாவம்! வாழ்க்கையில் எவ்வளவு அடிபட்டிருக்கிறாள் இவள்! என்று பரிதாபப்பட்டுக்கொண்டிருந்தேன்! பிறருடன் பேசும்போது அவர்களுடைய முகபாவம், குரல் தொனி இதெல்லாம் எனக்கு முக்கியம். எனக்கும்தான். கற்பனைத்திறன் வளர மூளைக்குப் பயிற்சி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். தினமும் ஒரே மாதிரியான அலுவல்களைக் கவனித்தால், மூளைக்கு அலுப்பு ஏற்பட்டுவிடுமே! சத்தியமான வார்த்தை! `செல்’லுடன், இல்லாவிட்டால் டி.வி முன் மணிக்கணக்காக உட்கார்ந்து எனக்கும் போரடித்துவிட்டது. உடற்பயிற்சி, யோகா, அதிகாலையிலோ, மாலையிலோ அமைதியான இடங்களில் உலவுதல் இதெல்லாம் கற்பனையை வளர்க்கும். உலவுவதில்கூட ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பாதையில் சென்றால், மூளை அச்செயலை ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்துவிடும். அதற்காகத்தானே டவுனில் நிறைய பார்க்குகள் இருக்கின்றன!  எல்லா வயதுப் பெண்களும் வருவார்கள், இல்லையா? எழுத்தாளரின் தன்மை பல்வேறு பொருள்களைப்பற்றியும், கதாபாத்திரங்களையும் பற்றியும் எழுதவேண்டிய நிலையில், மொழிப்புலமை மட்டும் போதாது. நீங்க வேற! அதுவே ஒதக்கிதே! அறிவும் விசாலமாக இருக்கவேண்டும். அனுபவத்தைப் பெருக்கிக்கொள்ள, படிப்பது ஒரு வழி. பிரபலமானவர்களின் கதைகள் மட்டுமின்றி, சமூக இயல், உளவியல் இரண்டையும் பொழுதுபோக்காகப் படிக்கலாம். பிறரைப் புரிந்துகொள்ள வழிவகுக்கும். கல்லூரியிலேயே படிக்க வேண்டியதைப்  படிக்காதவன் நான். என்னைப்போய்..!  பெண்களை எப்படிப் புரிந்துகொள்வது? இதற்காக தனியாக ஏதாவது புத்தகங்கள் இருக்கா? உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் எப்போதும் கவனமாக இருங்கள். நாம் அதிகம் பேசாதபோதுதான் நமது கண்ணும், காதும் இன்னும் கூர்மையாக வேலை செய்யும். எனக்கு அந்தப் பிரச்னையே கிடையாதுப்பா. பஸ்ஸில் போகும்போது பெண்கள் பேசுவதையெல்லாம் கூர்ந்து கவனிப்பேன். பிறருடன் பேசும்போது, அவருடைய கருத்து உங்களுடையதிலிருந்து மாறுபட்டிருந்தாலும், அவருடைய நிலையில் உங்களை வைத்துப்பார்த்தால் பிறரது மனப்போக்கு புரியும். நாளடைவில், எவரையும், எந்தச் சூழ்நிலையையும் பகுத்து அறியும் ஆற்றல் பெருகும். நான் ஒரு சாப்பாட்டுக் கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, பக்கத்து மேசையிலிருந்த ஓர் இளைஞர், `நான் அழகான பொண்ணைக் கட்டமாட்டேம்பா. அவ எனக்கு உண்மையா இருக்காளான்னு யோசிச்சே மூளை குழம்பிடும்!’ என்று தன் நண்பர்களிடம் கூறியது எனக்கும் கேட்டது. நான் சிரிக்காமலிருக்கப் பெருமுயற்சி செய்ய வேண்டியிருந்தது. சே! ஒட்டுக்கேட்பது எவ்வளவு கேவலம்! அப்படியே கேட்டாலும், இதையெல்லாம் போய் யாராவது வெளியே சொல்வார்களோ! பல வருடங்களுக்குப் பின்னர், அந்த வரிகளே என் மூளையில் சுற்றிச் சுற்றி வர, தி.தி பிறந்தது. sirukathaigal.com-ல் வெளியாகிய இக்கதையை ஒன்றரை வருடத்தில் 17,901 வாசகர்கள் படித்துச் சிரித்திருக்கிறார்கள். அடேயப்பா! சந்தடி சாக்கில், எப்படி எல்லாரையும் தன் கதையைப் படிக்க வைக்கிறா!   எதற்கும், எல்லாருக்கும் பயந்தவரா நீங்கள்? சேச்சே!   `இதைப் படித்துவிட்டு, பிறர் என்னைப்பற்றிக் கன்னாபின்னாவென்று நினைத்தால்?’ என்று அஞ்சுபவர்கள் எழுதுவதில் என்ன புதுமை இருக்க முடியும்? இத்துறையில் நீடித்திருக்க வேண்டுமானால், ஒரு பெண்ணுக்கு அச்சம், நாணம் இதையெல்லாம் சற்றுத் தள்ளிவைக்க வேண்டியிருக்கும்.   இப்போது எந்தப் பெண்ணுக்கு இதற்கெல்லாம் அர்த்தம் புரிகிறதென்கிறீர்கள்? எழுத்தில் எதற்கு ஆண், பெண் பேதம்? நமக்கு நாமே தடை விதித்துக்கொள்வது கற்பனையைக் கொலை செய்வதுபோல்தான். புனைப்பெயரில் ஒளிந்துகொண்டால் ஆயிற்று! அப்பாவின் பெயரில் பாதியை என்னுடையதோடு இணைத்துக்கொண்டு! அப்போதாவது இந்த அப்பா என்னைப் பாராட்டுகிறாரா என்று பார்க்கவேண்டும். `நான் எழுதினால், என் கணவர் மகிழ்ந்துபோவார்!’ என்றாள் ஒரு தோழி. `நீ எழுதவே போவதில்லை!’ என்றேன், தீர்மானமாக. `பிறர் பாராட்டவேண்டும்!’ என்ற ஒரே குறிக்கோளோடு எழுதிவந்தால், இத்துறையில் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது. இவ்வுலகில் எதுதான் நிரந்தரம்! அடேயப்பா! எனக்குத் தத்துவம்கூட வருகிறதே! மேலே படிப்போம். கதை மாந்தர் உண்மைச் சம்பவம் ஒன்றை அப்படியே நடந்ததுபோலவோ, அல்லது ஒரு குறிப்பிட்ட நபரை வைத்தோ எழுதினால் சுவை குன்றிவிடும். இங்கேதான் கற்பனை புக வேண்டும். உங்களுக்குத் தெரிந்த நாலைந்து பேர்களின் குணாதிசயங்களைக் கலந்து ஒரு புதிய பாத்திரத்தைச் சிருஷ்டி செய்யுங்கள். அப்பா, அப்பா, அப்பா, அப்பா! அவருக்குத்தான் ஒரேமாதிரியான குணம் கிடையாதே! எழுத ஆரம்பிக்குமுன் உங்கள் கதை மாந்தர்களைப்பற்றி நிறையச் சிந்தியுங்கள். ஐயோ! அவர்களுடைய தோற்றம், முகபாவம், உடலசைவு, பழக்கவழக்கங்கள், எதனால் ஆத்திரம் அல்லது மகிழ்ச்சி அடைகிறார்கள், எந்தப் பின்னணியால் ஒருவர் அப்படி நடக்க நேர்கிறது -- இப்படி, பலவற்றையும் யோசியுங்கள். எல்லாவற்றையும் உபயோகிக்க முடியாது. ஆனாலும், உங்கள் கதைகளில் உலவுவோர் உயிர்பெறுவர். இப்பவும் உயிரோடதான் இருக்கார். அப்பாவுக்குத் தான் அதிகம் படிக்கவில்லை என்று குறை. யோசிக்காமலே எனக்குத் தெரியும். கதாபாத்திரங்கள் சுவாரசியமானவர்களாக, மனோதிடம் கொண்டவர்களாக இருந்தால் கதை படிப்பவருடைய மனதைத் தாக்கும். அப்பா என்னைத் தாக்குவது போலவா? நடை நடக்கக்கூடவா சொல்லிக்கொடுப்பார்கள்  இந்த வயசிலே? வாக்கியங்கள் ஒரே மாதிரி இல்லாது, நீளமும் குட்டையுமாக மாறி மாறி அமையவேண்டும். ஓ! அந்த நடையா! அதிகம் உபயோகிக்கப்பட்ட வர்ணனைகளைத் தவிர்க்கவும். நடைமுறைக்கு ஏத்ததா சொல்லுங்க, மேடம்! பெண்களை வர்ணிக்காம எப்படிக் கவரமுடியுமாம்? எல்லா நடப்பையும் வெளிப்படையாகச் சொல்லாது, கதாபாத்திரங்களின் உணர்ச்சி, செய்கைவழி காட்டுங்கள். எனக்குக் கோபம் வந்தா, சாப்பிடாம வெளிநடப்பு செய்வது போலவா? உதாரணம்: அங்கே ஒரே குளிர்! (இதில் கதாசிரியரின் குரல் கேட்கிறதே! மிகவும் அவசியமானாலே ஒழிய, தவிர்க்கப்பட வேண்டியது) நான் கஷ்டப்பட்டு எழுதறேன். என் குரல் கேட்கக்கூடாது என்பது என்ன நியாயம்? சூடான தேனீரை உறிஞ்சிவிட்டு, கைகளைப் பரபரவென தேய்த்துக்கொண்டாள் (செய்கை). ஸ்வெட்டர் எடுத்துவராமல் போய்விட்டோமே என்று தன்னைத்தானே நொந்துகொண்டாள் (எண்ணம்). உரையாடல் அப்பாவைப்போல மகன் பேசுவாளா? பேசுபவரின் தனித்தன்மை, அதாவது அவரது வயது, சூழ்நிலை, ஆணா, பெண்ணா என்பதெல்லாம் வெளிப்படுமாறு உரையாடலை அமைக்க வேண்டும். இது மனிதருக்கு மனிதர் மாறுபடும். அப்பா என்னை, `தண்டச்சோறு’ என்பார். நான் அப்படியெல்லாம் சொல்லமாட்டேம்பா. உதாரணம்: “பெங்களூர் தக்காளிமாதிரி தளதளன்னு இருந்தா!’ என்று ஒரு பெண்ணை வர்ணிப்பவர் சாப்பாட்டுப் பிரியராகவோ, தோட்டக்கலையில் ஈடுபாடு உள்ளவராகவோ இருப்பார். PUNCTUATION கதைகளுக்கு நிறுத்தற்குறிகள் மிக முக்கியம். தலைகீழான காற்புள்ளிகள் (INVERTED COMMAS) ஒருவர் பேச்சுக்கு முதலிலும், இறுதியிலும் இருப்பது அவசியம். இல்லாவிட்டால், கட்டுரைபோல் ஆகிவிடும். உரையாடல் நீளமாக இருந்தாலும், சுவை குன்றிவிடும். அம்மா தொலைபேசியில் பேசுவதை இவ எப்போ கேட்டா? ஒருவர் நீளமாகப் பேசுவதைக் கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம். உதாரணம்: `நல்ல பிள்ளை’ என்ற எனது கதையிலிருந்து: “பொம்பளையாப் பிறந்துட்டேயில்லே? நீ படவேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கு!” என்று சமாதானப்படுத்தினாள் பாட்டி. “நேத்து டவுனிலேருந்து ஒரு பெரிய மனுசன் வந்து, வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு கேட்டுட்டு இருந்தாரு. காடி போட்டுட்டு வந்தாரு!” அழுத்திச் சொன்னாள். தன் தலையிலேயே அட்சதை போட்டுக்கிறது என்கிறது இதுதான்! `கூறினாள்’, `சொன்னாள்’ என்றே எழுதாமல், ` சமாதானப்படுத்தினாள்,’ `விரட்டினாள்’ என்று சந்தர்ப்பத்துக்கு ஏற்ப எழுதுவது நன்று. அதாவது, பார்த்தான் என்பதற்கு லுக்கு விட்டான், சைட் அடிச்சான் என்பதைப்போல! `அவன் ஆச்சரியப்பட்டான்’ என்பதை, `புருவம் மேலே எழுந்தது’ என்றால் இன்னும் தெளிவாகப் புரியும். கேள்வி, ஆச்சரியம் இரண்டிற்கும் புருவம் மேலே போகுமே! இப்பல்லாம் பொண்ணுங்க புருவத்தை திருத்திக்கிறதால எப்பவும் ஆச்சரியப்படறமாதிரிதான் இருக்குங்கோ! திருத்தி எழுதுதல் எப்படியோ ஒரு கதையை எழுதி முடித்துவிட்டீர்கள். அதை அப்படியே வைத்துவிடுங்கள். அதைப்பற்றிக்கூட நினைக்காதீர்கள். மத்தவங்ககிட்ட சொல்லிட்டுப்போறேன். பெருமையா இருக்குமே! அதைப்பற்றிப் பேசுவது கூடவே கூடாது. அவர்கள் உங்களுக்கு ஆதரவாகத்தான் ஏதாவது சொல்வார்கள் என்பது என்ன நிச்சயம்? ஃப்ரெண்ட்ஸ்கிட்டதான் காட்டுவேன். `நல்லா இருக்குடா!’ன்னு புகழாதவன் என் ஃப்ரெண்டே இல்லே. ஒரு வாரத்துக்குப்பின், அதே கதையைப் படிக்கும்போது, யாருடைய கதையையோ படிப்பதுபோல் அதிலுள்ள குறைகள் புலப்படும். கருவுக்குச் சம்பந்தமில்லாத சமாசாரங்கள் மற்றும் வர்ணனைகளைக் கூசாமல் வெட்ட வேண்டும். பாடுபட்டு எழுதினதை வெட்டச் சொல்றது என்னங்க நியாயம்? பொதுவாக, முதல் மூன்று பக்கங்கள் விறுவிறுப்பாக அமையாது. ஏனெனில், நாம் `மூடு’க்கு வர அவ்வளவு தாமதமாகும். ஆகவே, மூன்றாம் பக்கத்தை ஆரம்பமாகக்கொண்டு, முதல் பக்கத்தை எங்காவது செருகுங்கள். முதலில் ஒரு பக்கமாவது எழுதிவிட்டு, அப்புறம் இதையெல்லாம் யோசிக்கலாமே! நீங்கள் தேர்ந்தெடுத்த பிரச்னை உண்மையிலேயே வாசகருடைய மனதைப் பாதித்திருந்தால், அவரும் அதற்குத் தீர்வு என்னவென்று யோசிப்பார். அதுவே உங்கள் வெற்றி. எல்லாப் பையன்களுக்கும் என் கதை பிடிக்கும். பரிசும், பணமும் கொட்டப்போகிறது! அப்போ இருக்கு, அப்பாவுக்கு! `எழுத்தினால் பணம் பண்ண முடியுமா? என்ற கேள்விக்குப் பதில்: சீக்கிரம் சொல்லுங்க. எப்படியாவது அப்பாகிட்டேயிருந்து தப்பிச்சா போதும். விரைவாகப் பணம் பண்ண வேண்டுமானால், பிசினஸ்தான் சிறந்த வழி. இதை முதலிலேயே சொல்லித் தொலைத்திருக்க வேண்டியதுதானே! பரீட்சைக்குப் படிப்பதுபோல, நீங்க அறிவுரைன்னு நினைச்சுக் கொடுத்ததை எல்லாம்  கஷ்டப்பட்டுப் படிச்சேனே! இல்லை, அரசியல்வாதியாகவோ, நடிகனாகவோ ஆகலாம். நடிகன் ஆவதற்கு அழகில்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் சற்றுத் திறமை வேண்டியிருக்கும். கெடுத்தாளே கதையை! எனக்குத் திறமையோ, அழகோ கிடையாது என்று இவளுக்கு எப்படித் தெரிந்தது? இந்த சிறுகதைச்செம்மல் நிர்மலா ராகவன் எழுதும் கதைகளை  இனிமேல் நான் படிக்கவே போவதில்லை என்று உறுதி எடுத்துக்கொண்டான் தண்ட ஸோமாஸ். (அப்பா பெயர் தண்டபாணி). கதை எழுதுகிறானோ, இல்லையோ, புனைப்பெயர் தயார்! 3. யார் பிள்ளை?   “நாளைக்கு அப்பாவோட திவசம், பாபு. லீவு எடுத்துடு!’ அவனுக்கு எரிச்சலாக இருந்தது. பாபுவாம், பாபு! பாலசுப்ரமணியம் என்று பெற்றோர் வைத்திருந்த பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் என்னவாம்? பெயரை மாற்றிவிட்டால் மட்டும் தான் அவர்களுக்குப் பிறந்த பிள்ளை இல்லை என்றாகிவிடுமா? மீனாட்சி இன்னும் இரண்டு முறை நினைவுபடுத்தினாள். இறுதியாக அவன் பதிலளித்தான். “ம்!” `இந்த கர்வத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை! ஒடனே பதில் சொன்னா கொறைஞ்சு போயிடுவியோ?’ என்று முணுமுணுத்தவள், “நீ யாருக்கும் வேண்டாத பிள்ளை! நினைவு வெச்சுக்க. இந்த அப்பாதான் பாவம்னு ஒன்னை எடுத்து வளர்த்தாரு!” அவனுக்கு உடலெல்லாம் கூசிப்போயிற்று. எத்தனை தடவைதான் இதையே சொல்லிச் சொல்லி அவனது சுயகௌரவத்தை அழிக்கப் பார்த்திருப்பாள் இவள்! விவரம் தெரியாத வயதில், `அம்மா’ என்று அழைத்ததோடு சரி. அப்போதெல்லாம், `எனக்கே பசிக்குதே! பிள்ளைக்கும் பசிக்குமில்லே!’ என்று அவன் சாப்பிட்டுக் கை கழுவிவிட்டு வருவதற்குள், ஒரு பெரிய தட்டில் மிக்ஸ்சர், நிலக்கடலை என்று ஏதாவது வைத்திருப்பாள். அதன் பலனாக, அவளைப்போலவே அவள் வளர்த்த மகனும் பருத்துப்போனான். நண்பர்களுடன் பழகத் தெரியவில்லை. அம்மாவை அதிகமாக நாடினான். அவள் விரும்பியதும் அதுதானே! இடைநிலைப் பள்ளியில் காலெடுத்து வைத்தபோதுதான், தான் ஒன்றுவிட்ட அண்ணன், அக்காள் என்று நினைத்தவர்களெல்லாம் உண்மையிலேயே தன் கூடப்பிறந்தவர்கள் என்ற உண்மை தெரிய வந்தது. “நம்ப அப்பா இப்பல்லாம் என்னை அடிக்கிறதில்லே!” பூரிப்புடன் சொன்னான், வேலு -- சித்தி மகன். “என்னண்ணே, என்னையும் ஒன்னோட சேத்துக்கறே?” என்று சிரித்தான் பாபு. “சரியாச் சொல்லு. என்னோட அப்பாதான் நான் சின்னப்பிள்ளையா இருக்கிறப்போவே செத்துப்போயிட்டாரே!” “போடா! அது ஒண்ணும் ஒன்னோட நிஜ அப்பா இல்லே”. “ஒனக்கு ரொம்பத் தெரியுமோ?” என்று வீம்பாகக் கேட்டாலும், பாபுவின் தொனி இறங்கிப்போயிற்று. அவனுடைய குழந்தைப் பருவத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றுகூட வீட்டில் இல்லையே என்று கேட்டபோதெல்லாம் ஏதேதோ சாக்கு சொல்லி, பேச்சை மாற்றினாளே -- `அம்மா’ என்று இப்போது அவளைப்பற்றி நினைக்க முடியவில்லை. ஏன் இந்தப் பொய்? “நீதான் மறந்துட்டே. நான்தானே ஒனை கையைப் பிடிச்சு, ஒனக்கு நடக்கச் சொல்லிக் குடுத்தேன்!” தலையை நிமிர்த்திச் சொன்னான். “நம்ப வீட்டிலே அந்த ஃபோட்டோகூட இருக்கு. அடுத்தவாட்டி வரப்போ எடுத்துட்டு வரேன், என்ன?” தன்னிடம் பராமுகமாக இருந்த சித்திதான் தன்னைப் பெற்ற அம்மாவா? தன்னை மட்டும் ஏன் அவளுக்குப் பிடிக்காமல் போயிற்று? எதற்காக இன்னொருத்தரிடம் தன்னைத் தூக்கிக் கொடுத்தாள்? அவனுடைய குழப்பங்களை உணராது, வேலு மேலும் கூறினான்: “எனக்கு அஞ்சு வயசா இருக்கிறப்போ ஒனக்கு ரெண்டு வயசு. ஒன்னைப் பெரியம்மாவுக்குத் தத்து குடுத்துட்டாங்க. நீயும் இப்போ இந்த பெரிய பங்களாவுக்குச் சொந்தக்காரன் ஆயிட்டே!” அவன் குரலில் பொறாமை வெளிப்பட்டது. அவன் சொல்லிப்போனது பாபுவின் மனதில் சூறாவளியைக் கிளப்பியது. `அம்மா’ என்று சொல்லிக்கொண்டு, என்ன அநியாயமெல்லாம் செய்திருக்கிறாள்! `நெஞ்சில சளியா இருக்கு. குளிக்காதேன்னு நான் சொல்லச் சொல்ல, தலைக்குக் குளிச்சுட்டு வந்து நிக்கறியா?’ என்று அவனை பிரம்பால் விளாசினாளே! அது தன்மேல் உள்ள பரிவாலோ, பாசத்தாலோ இல்லை. அதிகாரம். அவ்வளவுதான். அவள் அவனை எப்படி நடத்தினாலும் கேட்பாரில்லை என்ற தைரியம். எவ்வளவோ எதிர்க்க நினைத்தாலும், வேறு என்ன செய்வது என்று புரியவில்லை, அந்த வயதில். அறையை உள்ளே தாளிட்டுக்கொண்டு, படிப்பில் மூழ்கினான். பிற பையன்களைப்போல பெண்களைப்பற்றிப் பேசுவது அவனைப் பொறுத்தவரை வீண்! அவன் வாழ்க்கையில் இன்னொரு பெண்ணே வேண்டாம்! தான் வளர்த்த பிள்ளையில் இன்னொருத்தி பங்குக்கு வருவதா என்று நினைத்தவள்போல அவளும் அவனது கல்யாணப் பேச்சை எடுக்காதது அவனுக்கு சௌகரியமாகப் போயிற்று. `இன்னிக்கு சாயந்திரம் கோயிலுக்குப் போகணும்,’ என்பாள், அடிக்கடி. அவன் ஒன்றும் பேசாது, அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வந்து அவளைத் தன் காரில் அழைத்துப்போவான். அங்கு அவன் பெயரையும் நட்சத்திரத்தையும் அர்ச்சகரிடம் தெரிவிக்கும்போது, அவன் பற்களைக் கடித்துக்கொள்வான். ரொம்பத்தான் அன்பு! அவன் இரவு நேரங்கழித்து வீடு திரும்பினால், `எவளோட இருந்துட்டு வந்திருக்கே?’ என்று வார்த்தைகளாலேயே குதறுகிறாள்! அவளை மணந்தவர் -- அதுதான் வருடம் தவறாது, தான் பார்த்தே அறியாத ஒருவருக்குத் திவசம் பண்ணுகிறோமே, அவர்தான் -- ஒரு வேளை, அப்படி இருந்தாரோ, என்னவோ! அந்த எரிச்சலைத் தன்மீது காட்டுகிறாள்! தனக்குப் பெண்கள் என்றாலே வெறுப்பு என்று அவளுக்கு இன்னுமா புரியவில்லை? இப்போதெல்லாம் அவள் கோயிலுக்குப் போவதில்லை. படுக்கையில்தான் வாசம். இரவு பகலாக கவனித்துக்கொள்ள ஒரு பணிப்பெண். நல்ல வேளை, தான் நன்கு படித்து பெரிய வேலைக்குப் போனதால், பணத்தட்டுப்பாடு இல்லை என்ற ஆறுதல் ஏற்பட்டது அவனுக்கு. அவளது அறை வாயிலிலேயே நின்றுகொண்டு, “ஏதாவது வேணுமா?” என்று அவ்வப்போது கேட்பான். அவள் முனகியபடி மறுத்துவிடுவாள். வளரும் பருவத்தில் உணவளித்து வளர்த்தவளுக்கு ஏதோ, அவன் செய்யும் கைம்மாறு. அன்று சித்தி, அவனைப் பெற்றவள், வந்திருந்தாள். அவள் பொதுவாக அவனிடம் அதிகம் பேசியதில்லை. அதிசயமாக, தனியே அழைத்துப் பேசினாள். “பாபு! ஒன்னை எதுக்கு அக்காகிட்டே குடுத்தேன், தெரியுமா?” அவன் வெறித்தான். “ஒங்க சித்தப்பா சூதாடி. ஆபீஸ் பணத்திலே கைவெச்சுட்டாரு. வேலை போயிடுச்சு”. `சே! இது என்ன, இந்த ரெண்டு குடும்பமும் தாறுமாறா இருக்கே!’ என்று நொந்துகொண்டான். “எடுத்த அம்பதாயிரத்தைத் திருப்பிக் குடுக்காட்டா ஜெயில்! அக்காகிட்ட வந்து அழுதேன். யோசிக்காம பணத்தைக் குடுத்தாங்க”. எதையோ யோசித்தாள். ”நானும் கடன் படணுமான்னு யோசிச்சேன்”. அதற்குமேல் கேட்கப் பிடிக்காமல் எழுந்து நடந்தான்.  கணவரைக் காப்பாற்ற பெற்றவளே தன்னை விற்கத் துணிந்திருக்கிறாள்! தன் விலை ஐம்பதாயிரம் வெள்ளி! சே, இவளெல்லாம் ஒரு தாயா! சிறு வயதில் தான் `அம்மா’ என்று அழைத்துவந்தவளை, இவளுடைய அக்காளை,  நினைத்துப் பார்த்தான். எத்தனையோ வருடங்களாக, `நீ ஒன்றும் என் அம்மா இல்லை!’ என்பதுபோல் விட்டேற்றியாக நடந்துகொண்டிருக்கிறான். அதைப் பெரிதாக நினைக்காது,  பிள்ளைக்குப் பசிக்குமே என்று உணவையே அன்பாக ஊட்டியிருக்கிறாள்! முன்பு ஒரு முறை, தலைக்குத் தண்ணீர் விட்டுக்கொண்ட அன்று அறைந்தாளே! அது பிள்ளைக்கு ஜன்னி கண்டுவிடுமே என்ற கலக்கத்தால்! நேரம் காலமில்லாது ஊர்சுற்றினால் மகன் கெட்டுவிடுவான் என்று எந்த பொறுப்பான தாய்தான் கவலைப்பட மாட்டாள்? வளர்த்தவளுக்கு அந்த உரிமைகூட கிடையாதா, என்ன! ஒவ்வொரு நினைவாக மேலெழுந்து, இவன் வளர்த்தவளிடம் மனதால் நெருங்க, சித்தி மனத்துக்குள் அழுதபடி, என்றோ மறைந்துவிட்ட கணவரிடம் மன்றாடிக்கொண்டிருந்தாள்: `அக்காவுக்குப் பிள்ளை பிறக்கலேன்னு இன்னொரு கல்யாணம் கட்டிக்கிறதா இருந்தாரு மாமா. அதைத் தடுக்க நம்ப பிள்ளையைக் குடுக்கலாம்னு மனசாரச் சொன்னதே நீங்கதான்! ஐயோ! ஒங்களைப்போய் சூதாடி, திருடன்னு வாயில வந்ததைச் சொல்லிட்டேனே!’  4. குற்ற உணர்ச்சியே கருணையாக        “சாப்பிட்டு முடிடா, செல்லம்! சமர்த்தில்லே!” ஞாயிறு தினசரியில் காளைமாட்டின் படத்தைப் பார்த்து, `நந்தி பகவானே! உனக்கு வந்த கதியைப் பாத்தியா?’ என்று, மானசீகம்மாக கைலாயத்திற்கே போய்விட்டிருந்த கமலநாதன் மனைவியின் குரலைக் கேட்டு நனவுலகிற்கு வந்தார். வீரம், பண்பாடு என்றெல்லாம் பேசுகிறவர்கள் `கருணை’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் இவளிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சிந்தனை போக, சிரிப்பு  வந்தது. இப்படியா பரிந்து, பரிந்து ஒரு பூனைக்குட்டிக்கு ஆகாரம் அளிப்பார்கள்? ஒரு வேளை, அவளுடைய குற்ற உணர்ச்சிதான் இப்படி இன்னொரு வழியில் வடிகால் காண்கிறதோ?   அன்று அழுதபடி வீட்டுக்குள் வந்தாள் விமலி. அவர் தன்னுடன் போட்டி போட்டு சதுரங்கம் விளையாடிக்கொண்டிருந்த மடிக்கணினி மீதிருந்து கண்களை உயர்த்தி அவளைப் பார்த்தார். எதுவும் கேட்குமுன், “ஒரு பூனைக்குட்டிமேல காரை ஏத்திட்டேன். அது அப்படியே நசுங்கி..,” மேலே தொடரமுடியாது, விசும்பினாள். `இதற்கா இப்படி ஒரு ஆர்ப்பாட்டம்!’ என்பதுபோல் புருவத்தைத் தூக்கினார் க.நா. அவர்கள் இருந்த பகுதியில் எப்போதும் ஏதாவது ஒரு பெரிய மாடி வீட்டை இடித்து, புதிதாக ஏதாவது கட்டிக் கொண்டிருப்பார்கள் சீனர்கள். `இவர்களுக்கெல்லாம் எங்கிருந்துதான் பணம் கொட்டுகிறதோ!’ என்று அதிசயித்திருக்கிறார் க.நா. ஒரு நண்பரை விசாரித்தபோது, `Feng Shui (ஃபெங் ஷ்வி -- சீனர்களின் வாஸ்து) சரியாக இல்லை!’ என்றார்.   கட்டுமானத் தொழிலாளிகள் வேலை செய்ய வரும்போது தமது உபகரணங்களுடன், எங்கிருந்தாவது ஒரு பூனைக்குட்டியையும் தூக்கி வருவது வழக்கமாக இருந்தது. சில மாதங்கள் அல்லது ஓரிரு ஆண்டுகள் கழித்து, அங்கு வேலை முடிந்ததும், அவர்கள் போய்விடுவார்கள் -- பூனையை விட்டுவிட்டு. இதனால், அந்தக் குடியிருப்புப் பகுதியில் இருந்த நான்கு தெருக்களிலும் கறுப்பு, வெள்ளை, பழுப்பு, சாம்பல் வண்ணங்களில் பூனைகள் உலவிக்கொண்டு, தங்கள் இனப்பெருக்கத்திற்கு தம்மால் ஆன கடமையைச் செய்துகொண்டிருந்தன. `நீ நிதானமா காரை ஓட்டியிருக்கணும், விமலி. நம்ப தெருவிலே எப்போ ஒரு பூனையோ, நாயோ குறுக்கே வரும்னு சொல்லவே முடியாது!’ என்றார், நிதானமாக. தன் துயரத்தில் பங்கு கொள்ளாது, புத்தி வேறு சொல்கிறாரே! விமலியின் துக்கம் ஆத்திரமாக மாற, “ஒங்ககிட்ட போய் சொல்றேனே!” என்று இரைந்துவிட்டு, `இதயமே இல்லாத ஜன்மம்!’ என்று முணுமுணுத்தபடி அப்பால் போனாள்.   சில மாதங்கள் கழித்து, “இங்கே வந்து பாருங்களேன்!” என்று வாசலிலிருந்தே உற்சாகமாகக் கூவிக்கொண்டு வந்தாள் விமலி. முகத்தைச் சுளிக்காமல் இருக்கப் பாடுபட்டார் க.நா. நிம்மதியாக ஆடுவோம் என்றால் விடுகிறாளா? கணினியை அடியிலிருந்த மேசைமேல் வைத்துவிட்டு நிமிர்ந்தார். மனைவி கையில் மூன்று நிறங்கள் கலந்த ஒரு பூனைக்குட்டி! “ஏது?” “பார்க்கிலே இருந்திச்சு. நடந்து போறப்போ பாத்தேனா! தூக்கிட்டு வந்துட்டேன்”. “திருடிக்கிட்டு வந்தேன்னு சொல்லு!” என்றார் கண்டிப்பான குரலில். “அதோட அம்மா தேடாதா?” அவள் முகம் இறுகியது. “ஒண்ணு காணாமப் போனா அம்மா பூனைக்குத் தெரியவா போகுது! மூணு, நாலு குட்டி போட்டிருக்கும்!” என்று தன் குற்ற உணர்ச்சியை மறைத்துக்கொள்ளப் பார்த்தாள். பத்து குழந்தைகள் பெற்ற தாய்கூட ஒரு குழந்தை இறந்துவிட்டால், வாழ்நாளெல்லாம் துக்கத்தில் உழலுகிறாளே! பூனையும் தான் ஈன்றதைப் பால் கொடுத்து வளர்க்கும் ஜீவன்தானே? அதற்கு மட்டும் உணர்ச்சிகள் கிடையாதா? அல்லது, எத்தனை குட்டிகளை ஈன்றோம் என்பதுதான் தெரியாதா? இவளுக்கு ஏன் இந்த சின்ன விஷயம் புரியவில்லை? பெண்ணாக இருந்தால் மட்டும் போதாதோ? தாய்மை அடைந்தால்தான் இன்னொரு தாயின் வேதனை புரியுமோ? ஒரு பெண் தாய்மை அடையாவிட்டால், என்றுமே குழந்தைத்தனம் மாறாமல் இருந்துவிடுகிறாள் என்றெல்லாம் மனைவியைச்சுற்றி அவரது எண்ணங்கள் ஓடின. தான் ஏதாவது சொல்லப்போனால், அழுது ஆகாத்தியம் செய்வாள். அன்று சமையல் வாயில் வைக்க வழங்காது என்று வாயை மூடிக்கொண்டார் க.நா. எல்லாம் இருபது ஆண்டுகால இல்லற வாழ்க்கை கற்றுக்கொடுத்த விவேகம்தான். பிள்ளை இல்லாவீட்டில் அந்த பூனைக்குட்டி துள்ளி விளையாடியது. தினசரியைக் குதறியது. சர்வசுதந்திரமாக சோபாவில் படுத்து, பகலெல்லாம் தூங்கியது. சாப்பாட்டு மேசையில் ஏறி, அதன்மேலிருந்தவற்றை முகர்ந்து பார்க்கவும் தவறவில்லை. `அடீ! அடீ!’ என்று அதன் பின்னாலேயே ஓடும் மனைவியைப் பார்த்தால் வேடிக்கையாகவும், பரிதாபமாகவும் இருந்தது கமலநாதனுக்கு. “ஒன் பூனைக்குப் பேர் கிடையாதா?” என்று ஒரு நாள் மனைவியைச் சீண்ட, “குட்டின்னு பேர் வெச்சிருக்கேன். நல்லா இருக்கில்லே?” என்றாள் அப்பாவித்தனமாக. அவர் தன் செல்லப்பிராணியின்மேல் அக்கறை வைதிருக்கிறாரே என்ற மகிழ்ச்சி பிறந்தது அவளுக்கு. “ஒரிஜினலா இருக்கு!” என்று அவர் கேலியாகப் பாராட்டியதைப் புரிந்துகொள்ள முடியவில்லை அவளால். இன்னும் பூரித்தாள். வேளை தவறாது தனக்கு ஆகாரமும், குடிநீரும் கொடுத்துவந்த விமலிக்கு ஏதோ தன்னால் ஆன உதவியாக, தான் மிதித்துக் கொன்ற பல்லியையும், கரப்பான் பூச்சியையும் அவள் செருப்பின்மேல் கொண்டுவந்து போட்டது குட்டி. அவளுக்குப் பெருமை தாங்கவில்லை. “நான் இதெல்லாம் சாப்பிட மாட்டேண்டா, குஞ்சு!” என்று கொஞ்சினாள். தன் ஆசாரத்தைக் கொஞ்சம் விட்டுக்கொடுத்து, பேரங்காடிகளில் பூனைகளுக்கென பிரத்தியேகமாக விற்கும் உணவை வாங்கிவந்தாள். “நாத்தம்!” என்று முகத்தைச் சுளித்த கணவரைப் பார்த்துச் சீறினாள். “பின்னே என்ன, பூனை தயிர் சாதமா சாப்பிடும்? மீன் வாசனை அப்படித்தான் இருக்கும். நீங்க ஒண்ணும் அதுக்குப் போட வேண்டாம்! நான் பாத்துக்கறேன்!” குட்டியின்மேல் தனக்கிருந்த பிடிப்பை கணவன் புரிந்துகொள்ள மறுக்கிறாரே என்ற ஆதங்கம் சிறிது நேரத்தில் மறைந்தது -- “இந்தக் குட்டி ரொம்ப அழகா இருக்கு, ஆன்ட்டி!” பக்கத்து வீட்டுக்கு வேலை நிமித்தம் வந்திருந்த தொழிலாளி கூறியபோது. வீட்டுக்கு வெளியே இருந்த செம்பருத்திச் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டிருந்த விமலிக்குப் பெருமை தாங்கவில்லை. “எந்த ஊரிலேருந்து வந்திருக்கீங்க?” என்று விசாரித்தாள், மலாயில். “வியட்நாம்!” என்று பதில் வந்தது. பிறகு, அவளுடைய அடுத்த கேள்வியை எதிர்பார்த்தவன்போல், “என் பேரு டாவ்!” என்று தெரிவித்தான். சோனியாக இருந்தான். ஆனால், கடினமான உழைப்பால் பெற்ற வலு கைகளில் தெரிந்தது. ரப்பர் குழாயிலிருந்து வெளிவந்த தண்ணீர் தன்மேல் தெறித்துவிடாமல் ஜாக்கிரதையாக, சற்றுத் தொலைவில் நின்று, வைத்த விழி வாங்காமல் எஜமானியம்மாளைப் பார்த்துகொண்டிருந்தது குட்டி. அதைப் பார்த்ததும் சிகரெட்டால் கறுத்திருந்த அவன் உதடுகள் சிரிப்பில் விரிந்தன. அதைத் தூக்கி அணைத்து, அதன் மென்மையான உடலை அருமையாகத் தடவிக்கொடுத்தான். “அழகா இருக்கு!” சில வாரங்கள் கடந்தன. டாவும் குட்டியும் நண்பர்களாகிப்போனார்கள். “குட்டியைப் பாத்தீங்களா? நேத்து சாயந்திரத்திலேருந்து காணோமே! சாப்பிடக்கூட வரலே!” மனைவியின் கவலை தோய்ந்த குரலைக் கேட்டு நிமிர்ந்தார் க.நா. “பெரிசாப் போச்சில்ல? பாம்பு, தவளை எதையாவது பிடிச்சுத் தின்னிருக்கும்!” என்று அசுவாரசியமாகப் பதிலளித்தார். “தானே நாளைக்கு அதிகாலையில வந்து..,” சட்டென்று தன்னை அடக்கிக்கொண்டார். `மியாவ் மியாவ்னு கத்தி பிராணனை எடுக்கும், பாரு!’ என்று சொல்ல நினைத்ததைச் சொல்ல அவருக்கென்ன புத்தி மாறாட்டமா! ஆனால் மறுநாள் குட்டி வரவில்லை. இரண்டு நாட்களாகின. விமலியின் துயரம் ஆத்திரமாக மாறியது. “அந்த வியட்நாம் தடியன் குட்டிகிட்ட பாசமா இருக்கிறமாதிரி நடிக்கிறபோதே எனக்குச் சந்தேகம்தான்!” என்று பொரிந்தாள். “அவன் எதுக்காக நடிக்கணும்?” “தெரியாதமாதிரி கேக்கறீங்களே! இவங்களோ பஞ்சம் பிழைக்க மலேசியாவுக்கு வந்திருக்காங்க. சிக்கனும் மட்டனும் வாங்கக் கட்டுப்படியாகுமா? குட்டியோ கொழுகொழுன்னு இருக்கு!” “சீச்சீ!” பரிவுடன் அவன் குட்டியை அணைப்பதைப் பார்த்திருந்தவருக்கு அவள் சொல்வது அபத்தம் என்று பட்டது. `ஒரு வேளை, இவள் சொல்வதில் உண்மை இருக்குமோ?’ என்ற சந்தேகமும் உடன் எழாமலில்லை. `இந்தப் பூனையைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு இனாம் தரப்படும்!’ என்று கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு, தெருக்கம்பங்களில் ஒட்டப்பட்டிருக்கும் துண்டுக் காகிதங்களின் ஒரே மாதிரியான வாசகம் நினைவில் எழுந்தது. சில சமயம், பூனை மட்டுமின்றி, அழகழகான நாய்களின் படங்களும் இருக்குமே! “விடு, போ! நாளைக்கு சனிக்கிழமை! லீவு! கடைக்குப் போய் அழகான பாரசீகப் பூனை வாங்கிக்கலாம்,” என்றார், சமாதானமாக.    காலை ஒன்பது மணிக்குச் சாவகாசமாகத் தூங்கி எழுந்த க.நா, பக்கத்து வீட்டிலிருந்து பெரிய இரைச்சல் கேட்க, வாசலுக்கு விரைந்தார். சிறிது பொறுத்து, வீடு திரும்பியவர் முகத்தில் ஏதேதோ உணர்ச்சிகள். அவைகளை வெளியில் கொட்ட மனைவியைத் தேடி சமையலறைக்கு வந்தார். “ஒன்னோட குட்டியைத் தூக்கிவெச்சுட்டுக் கொஞ்சுவானே! அந்த வியட்நாம்காரன் அரைகுறையாக் கட்டியிருந்த மாடி பால்கனியிலேருந்து விழுந்துட்டான்!” நறுக்கிக்கொண்டிருந்த கீரையை அப்படியே வைத்தாள் விமலி. அவர் சொல்ல வந்தது இன்னும் சுவாரசியமாக இருக்கும்போலிருந்தது. “உசிரு போயிடுச்சா?” “சரியான அடி! வலி தாங்காம துடிக்கிறான், பாவம்! `ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போடா’ன்னு நான் மேஸ்திரிகிட்ட சொல்றேன், அவன், `அதெல்லாம் வேணாம், ஸார். சும்மா மசாஜ் செஞ்சா சரியாப்போயிடும்!’ அப்படிங்கிறான்”. கணவர் எவனோ ஒருவனுக்காக அவ்வளவு உணர்ச்சிவசப்படுவது அவளுக்கு அலுப்பாக இருந்தது. க.நா தன்பாட்டில் பேசிக்கொண்டே போனார்: “அந்த ஆள் சட்டபூர்வமா இங்க வரலியாம். அதனால அவனை வேலைக்கு வெச்சிருந்த குத்தத்துக்காக இந்த மேஸ்திரியைத் தண்டிப்பாங்க. கொஞ்சமா கூலி குடுத்து, நிறைய வேலை வாங்கலாமேங்கிற பேராசை இவனுக்கு. சீனவங்க புத்தியைக் காட்டிட்டான்!” யார்மேலாவது குற்றம் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், அவர்களுடைய இனத்தையே மொத்தமாகப் பழித்தால்தான் சிலருக்குத் திருப்தி. விமலிக்கும் திருப்தியாக இருந்தது. “என் குட்டியை வெட்டித் தின்னானே, படுபாவி! நான் எவ்வளவு துடிச்சிருப்பேன்! இப்போ அவனும் படட்டும்!” க.நாவிற்கு எரிச்சலாக இருந்தது. “அவன் தின்னதைப் பார்த்தாப்போல பேசாதே. சாப்பிட வழியில்லேன்னுதானே இப்படி சொந்தபந்தம் எல்லாரையும் விட்டுட்டு இங்கே வந்திருக்கான்? இருபது முப்பது பேர்கூட ஒரே அறையிலே தங்கிக்கிட்டுத் திண்டாடறான், பாவம்!” மீண்டும் பரிதாபப்பட்டார். தன்னைப்போல ஓர் ஆணைப்பற்றி இவள் -- கேவலம், பெண் -- தரக்குறைவாகப் பேசுவதா! அவருடைய ஆண்மை விழித்துக்கொண்டது. “பூனைகிட்ட காட்டற பரிவில கொஞ்சமாவது இவங்கமேல இருக்கா ஒனக்கு?” என்று, அபூர்வமாக மனைவியை எதிர்த்தார், எதிர் விளைவுகளைப்பற்றி யோசிக்காது. ஒரு வாரம் இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தை இல்லை. அவரோ, அதைச் சற்றும் பொருட்படுத்தாது, மேஸ்திரியிடம் பேசிக்கொண்டிருந்தது அவள் காதிலும் விழாமல் போகவில்லை. அவனுடைய காலை வெட்டி எடுத்துவிட்டார்களாமே! `நன்றாக வேண்டும்!’ என்று கறுவினாள். நள்ளிரவு. “மியாவ்!” விமலிக்கு உடனே விழிப்புக் கொடுத்தது. இந்த வேளையில் தனியாக வாசல் கதவைத் திறந்துகொண்டு வெளியே போவதா! தனது கோபத்தை மறந்தவளாக, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கணவரை எழுப்பினாள். “வாசல்லே பூனை கத்துது. நம்ப குட்டியாத்தான் இருக்கும். வாங்க, பாக்கலாம்!” என்று பெரிய எதிர்ப்புடன் மாடிப்படியின் கீழ் இறங்கி ஓடினாள். இரவு வேளைகளில் வாசலில் போட்டிருக்கும் விலையுயர்ந்த காலணிகளைக் களவாடுபவர்களைத் தவிர்க்க போடப்பட்டிருந்த விளக்கு வெளியில் பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தது. அங்கே குட்டி மட்டுமில்லை, அதனுடன் இன்னொரு குட்டி, சிறிய பந்துமாதிரி! “இங்கே பாருங்களேன்! குட்டி அம்மாவா ஆகிடுச்சு!” பூரிப்புடன் விமலி கத்தியது அந்த நிசப்தமான இரவில் நாலைந்து வீடுகளுக்குக் கேட்டிருக்கும். `இனிமேல் நம்மை எங்கே கவனிக்கப்போகிறாள்!’ என்ற சிறுபிள்ளைத்தனமான பொறாமையும் எழ, “அந்த வியட்நாம்காரனைச் சபிச்சியே!” என்று குத்திக் காட்டாமல் இருக்க முடியவில்லை க.நாவால்.   அவள் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. பெரிய குட்டி, சின்ன குட்டி என்று பெயர் வைக்கலாமா என்ற யோசனையில் ஆழ்ந்துபோனாள். 5. சேராத இடம் சேர்ந்தால்     `தினேசு! நீயும் ஒங்கப்பாமாதிரி ஆகிடாதேடா!’  அவன் பிறந்தபோது, கோயில் அர்ச்சகரிடம் போய், `ஷ்டைலா ஏதாவது சாமி பேரு வைங்க, சாமி!’ என்று பாட்டி கேட்டதற்கு, `இந்தக் காலத்திலே யாரு பகவான் பேரை வைக்கறா? நீங்க தினேஷ்னு வைங்கோம்மா. சூரியன்மாதிரி குழந்தை அமோகமா பிரகாசிப்பான்! நாகரீகமாவும் இருக்கும்!’ என்றாராம்.  அம்மா சொல்லிச் சொல்லி ஆனந்தப்படுவாள். ஆனால், அவள் கூப்பிடும்போது என்னவோ ஸ்டைலாக இல்லை. வாயில் நுழையாத பெயரை ஏன் வைக்க வேண்டுமாம்! அம்மாவிடம் அவனுக்குப் பிடிக்காத பலவற்றில் இதுவும் ஒன்று. என்னதான் தாலி கட்டின கணவன் ஆனாலும், இப்படியா தினமும் அவரளிக்கும் அடி உதைகளைப் பொறுத்துப்போவாள் ஒருத்தி?  ஒரு முறை அவன் கேட்டேவிட்டான்: `எதுக்கும்மா இப்படி அடிவாங்கிச் சாகறீங்க?’ `அப்பா முன்பெல்லாம் இப்படியா இருந்தாரு!’ என்று சொல்லிச் சமாளித்தாள் அப்போது.   அதன்பின் அவன் அப்பாவைப்பற்றிய பேச்சை எடுப்பது கிடையாது. அவரைப் பார்த்தால் சற்று பரிதாபமாக இருந்ததும் ஒரு காரணம்.  இரண்டாண்டுகளுக்குமுன் நடந்த தெரு விபத்தில் அப்பாவுக்கு இரு விதத்தில் நஷ்டம். விபத்தாகி அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, எவனோ அவர் ஓட்டிப்போன பைக்கை எடுத்துப் போய்விட்டான். ஒரு வருடம் படுக்கையில் இருந்ததில், வேலையும் போய்விட்டது. இப்போது நடமாட்டம் வீட்டுக்குள் மட்டும்தான்.  `ஆண்பிள்ளை தானிருக்க, எனக்கு அடங்கியிருக்க வேண்டியவள் வெளியில் போய் சம்பாதிப்பதாவது!’ என்று அவரது சுயகௌரவம் உசுப்பியிருக்க வேண்டும். தான் இப்போதும் மனைவியைவிட உயர்த்திதான் என்று அவருக்கே உணர்த்திக்கொள்ள வேண்டியிருந்தது. இடுப்பில் கட்டியிருந்த பெல்டை அவிழ்த்து அவளை அடித்தார். நாள் தவறாது. அதன்பின், அழுகையும் கொஞ்சலும்! அப்போதுதானே காசு கைமாறும்! அதற்குமுன் காலை, மாலை இரு வேளைகளிலும் அருகிலிருந்த கோயிலைக் கூட்டிப்பெருக்கி சுத்தமாக்குவதைத் தன் வழக்கமாகக் கொண்டிருந்த அம்மா அந்த விபத்துக்குப்பின் பிற வீடுகளில் அதே வேலையைச் செய்து பொருளீட்ட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானாள். `ஏம்மா தினமும் கோயிலைச் சுத்தம் செய்யறீங்க? காசா கிடைக்குது?’ என்று முன்பு ஒரு முறை அவன் கேட்டபோது, அம்மா அதிர்ந்தாள்.  `பாட்டி சின்ன வயசிலேயே கோயில்லே இருக்கற சாமியைக் கட்ட இருந்தவங்கடா,’ என்று ஆரம்பித்தாள். `பண்டாரத்தையா?’ `சேச்சே! கர்ப்பக்கிரகத்திலே வெச்சிருக்கிற சாமியை!’ முகபாவத்திலிருந்தே அவனுடைய குழப்பத்தை உணர்ந்துகொண்ட அம்மா சிறு சிரிப்புடன் தொடர்ந்தாள்: `நம்ப குடும்பத்துக்கு இனிமே பாட்டு, டான்ஸே வேணாம்னு அவங்க அண்ணா -- அவர் ஒரு பெரிய நட்டுவனாராம் -- பாட்டியை மலாயாவுக்கு கப்பலேத்தி விட்டுட்டாரு’. `ஏன் பாட்டு வேணாம்?’ அவனுக்கு மேளம், மிருதங்கம் எல்லாம் பிடிக்கும். சில காலம் கற்றிருக்கிறான்.  `அங்க ராஜாக்களோட காலம் முடிஞ்சதோட நம்பளைமாதிரிப்பட்டவங்களுக்கும் மவுசு கொறைஞ்சிடுச்சு,’ என்று என்னமோ சொன்னாள்.   பள்ளிக்கூடத்தில் அவனுக்குப் புரியாத மலாய் மொழியில் ஆசிரியை சரித்திர வகுப்பு நடத்துவது போல் போரடித்தது. புரியவில்லை என்று ஒத்துக்கொண்டால், என்றோ நடந்து முடிந்ததை இன்னும் கிளறுவாள்.  `ஏன் இந்தப் பேச்சை எடுத்தோம், அம்மா எங்கே வேண்டுமானாலும் போய் கூட்டட்டும், மெழுகட்டும், நமக்கென்ன என்று இருந்திருக்கலாம்,’ என்று தன்னைத்தானே நொந்துகொண்டான். அம்மா விடுவதாகயில்லை. `பாட்டி இங்க வந்தாங்களா? வந்து கொஞ்ச நாள் கூலி வேலை செஞ்சாங்க. பாட்டியோட அழகைப் பாத்து மயங்கி, ஒங்க தாத்தா கல்யாணம் கட்டிக்கிட்டாரு!’ பெருமையால் விகசித்த முகத்துடன் தொடர்ந்தாள். `ஒன்னோட தங்கச்சியும் அப்படியே பாட்டிமாதிரி இருக்கு. கலை ரத்தத்திலேயே ஊறிடுச்சில்ல! அதான் காசு வாங்காம, சும்மாவே அவளுக்கு டான்ஸ் சொல்லிக் குடுக்கறாங்க பள்ளிக்கூடத்திலே!’ வருத்தத்துடன் தலையைக் குனிந்துகொண்டான் தினேஷ். அப்பா வம்சத்தில் இப்படிப் பெருமைப்பட்டுக் கொள்ளும்படி யாருமில்லையோ?  தானும் பெண்ணாகப் பிறந்திருக்கலாம்! அழகாகவாவது இருந்திருப்போமே! வீட்டில்தான் தங்கை அழகிலும் திறமையிலும் அவனைவிடச் சிறப்பாக இருந்தாள் என்று அம்மா கொண்டாடினால், பள்ளிக்கூடத்திலும் நிம்மதி இல்லை.  `நான் இனிமே பள்ளிக்கூடத்துக்குப் போகமாட்டேம்மா,’ என்று சொல்லிப்பார்த்தான்.  `ஏண்டா? வாத்தியாரு அடிச்சாரா?’ அடித்தால்தான் தேவலியே! அவன் நடந்ததைச் சொன்னான். வகுப்பில் ஏதாவது தொலைந்துபோனால், அவனுடைய புத்தகப் பையைத்தான் முதலில் சோதனை போடுவார்கள். இதுவரை எதுவும் கிடைத்ததில்லை. ஆனாலும், `இந்தியப் பையன்!’ என்ற அலட்சியம். முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விஷயம்போல்.  அவனுக்குச் சில விஷயங்கள் புரிவதேயில்லை. அம்மா, அவன், தங்கை இவர்களில் யாருமே இந்தியாவில் காலெடுத்து வைத்ததுகூடக் கிடையாது. எப்போதாவது பக்கத்து வீட்டில் ஓசியாக தமிழ்ப்படங்கள் பார்ப்பதோடு சரி. பிறந்தது, வளர்ந்தது எல்லாம் இங்கேதான். பின் ஏன் தொட்டதற்கெல்லாம், `ஓராங் இந்தியா’ (இந்திய மனிதர்) என்கிறார்கள்? பரீட்சைத்தாளில்கூட அப்படித்தான் குறிக்க வேண்டுமாம்.  `தமிழ் பள்ளிக்கூடத்தில படிச்சப்போ ஒரு தொல்லையுமில்லே. இப்போ..!’ என்று பெருமூச்செறிந்தவள், `நாடு விட்டு நாடு வந்தா இப்படித்தான். சும்மாவா சொல்லி வெச்சாங்க, மொதலைக்குத் தண்ணியிலதான் பலம்னு!’ என்று பழமொழியில் ஆறுதல் தேடினாள்.  `இன்னும் ரெண்டு மாசம்தானே! போயிட்டு வா, தினேசு!’  குரலில் கெஞ்சலும் விரக்தியும் ஒலித்தன.  படிப்பு கசந்தது. யாருக்குமே நம்மைப் பிடிக்கவில்லை, எதுவுமே புரிவதுமில்லை என்ற நினைப்பில் அழுகை வந்தது. தான் ஆண்பிள்ளை. அழக்கூடாது என்று உதடுகளை இறுக்கிக்கொண்டான்.  அந்த எண்ணம் தோன்றியபோதே தன்னை அழவைப்பவர்கள் மதிக்க ஏதாவது வழி செய்ய வேண்டும் என்ற ஆத்திரமும் உள்ளூர கிளர்ந்தது. ஆனால், தன்னைப் பார்த்தால் யாருக்குத்தான் நட்புடன் பழகத் தோன்றும் என்ற எண்ணமும் உடன் எழாமலில்லை. கன்னத்தில் முளைத்த பருக்களை ஓயாது கிள்ளியதால் அவை பெருகி விகாரமான முகம், ஒல்லியான உருவம் -- இதையெல்லாம் பார்க்க அவன் கண்ணாடியைத் தேட வேண்டியிருக்கவில்லை.    “என்னடா, இவ்வளவு சோனியா இருக்கே! காலையிலே என்ன சாப்பிடறே?” கதிரின் கையில் எப்போதும் பணம் புரளும். பேச்சிலும் வல்லவன். அப்படியொன்றும் பெரிய உருவம் இல்லாத ஒருவனிடம் பிற மாணவர்கள் நடுங்குவது கண்டு தினேஷ் ஆச்சரியப்பட்டிருக்கிறான்.  “வரகோப்பிதான்!” சற்று அவமானத்துடன் பதிலளித்தான் தினேஷ். “அப்புறம் இங்கேயும் ஒண்ணும் சாப்பிடறதில்லே. படிக்கிறது எப்படிடா மண்டையிலே ஏறும்?” இஸ்திரி போட்டு, மடிப்பு கலையாத சீருடை அவர்களது பின்தங்கிய வகுப்பில் கதிரின் தனிச்சிறப்பு. இத்தனைச் சிறப்புகளுடைய ஒருவன் தன்னுடன் வலிய வந்து உறவாடுகிறான்! பலம் கூடியது போலிருந்தது தினேஷுக்கு. “காசில்லடா. எங்கப்பாவுக்கு வேலை போயிடுச்சு”. சொல்லும்போதே, `வேலை என்ன, பெரிய வேலை!’ என்று முகம் சுளிக்காமல் இருக்க முடியவில்லை. ஒரு வங்கியில் ஆபீஸ் பையன்! அப்படித்தான் சொன்னார்கள். தலைக்குமேல் வளர்ந்த மகன் இருந்தாலும், அவர் `பையன்’தான். “அம்மா வீட்டு வேலை செஞ்சு கொண்டாற காசில ஸேவா (வீட்டு வாடகை)..,” என்று இன்னும் ஏதோ சொல்லப்போனவனைத் தடுத்தான் பள்ளி நண்பன். “எத்தனை காலம்தான் அப்பா, அம்மான்னு சொல்லிக்கிட்டு இருக்கப்போறே! இன்னும் ஒண்ணு, ரெண்டு வருஷத்திலே கல்யாணமாயிட்டா, ஒன்னோட பெண்டாட்டி பிள்ளைங்களுக்கு நீதானே சோறு போடணும்? இல்லே, அப்பவும் ஒங்கம்மாகிட்டே போய் நிப்பியா?” கல்யாணமா!  அந்த நல்ல விஷயத்தைப்பற்றி யோசித்தே இராத தினேஷ் சிலிர்ப்படைந்தான். வெட்கத்துடன் சிரித்தான்.  தன்மேல் இவ்வளவு அக்கறை காட்டுபவன் சுட்டும் வழியில் நடப்பது என்ன தவறு! அப்பா செய்யாததையா அவன் செய்யப்போகிறான்! என்ன, அவர் கட்டிய மனைவியை அடித்துப் பிடுங்குகிறார். இவன் அதே பணத்துக்காக அதிகம் பழக்கமில்லாதவர்களை அடிக்கப்போகிறான். தான் சம்பாதித்தால், பெண்டாட்டியையாவது அடிக்காமல் இருக்கலாம்.     ஐந்து வெள்ளி, பத்து வெள்ளியெல்லாம் பள்ளி மாணவர்களுக்கு ஒரு பொருட்டில்லை என்பது ஆச்சரியத்தை விளைவித்தது. சிலர் நூறு வெள்ளிகூட கொண்டு வருகிறார்களாமே!  `அவர்களுடைய அப்பா எங்கே திருடுகிறாரோ!’ அந்த எண்ணம் எழும்போதே அவனுக்குச் சிரிப்பு வந்தது. அன்று ஆரம்பித்த பழக்கம் பள்ளிக்கு வெளியிலும் தொடர்ந்தது. யாரோ கதிர்மூலம் ஏவிய வேலையைச் செய்தான்.  கத்தியைக் காட்டி மிரட்டியபோது, பிறர் தன்னைக்கண்டு பயப்பட்டது அவனுக்குப் பெருமையாக இருந்தது. தன்னையும் பிறர் மதிக்காமலில்லை என்று ஆனந்தப்பட்டான்.     “நீ கறி வாங்கிட்டு வந்தியா! காசு ஏதுடா, தினேசு?” என்று அம்மா கேட்டபோது ஆத்திரமாக இருந்தது. ஊரெல்லாம் அவனைப் பார்த்து நடுங்குகிறார்கள். இந்த அம்மாவுக்கோ அவனைப் பார்த்தால் எப்போதுமே இளக்காரம்தான்! “ஆக்கிப் போடுங்கம்மா. சும்மா ஏதாவது கேட்டுக்கிட்டு!” என்று முறைத்தபடி நகரப்பார்த்தான். அம்மாவின் குரல் அவனை நிற்கச் செய்தது. “தினேசு! நீயும் ஒங்கப்பாமாதிரி ஆகிடாதேடா!” அவன் கேட்க அம்மா அப்பாவைப் பழித்ததில்லை. வியப்புடன் திரும்பிப் பார்த்தான். சட்டென தன்னைச் சுதாரித்துக்கொண்டவள் பேச்சை மாற்றினாள். முகத்தில் சிரிப்பை வரவழைத்துக்கொண்டாள். “சொல்ல மறந்துட்டேன், பாரு! அடுத்த வாரம் நவராத்திரி வருதில்ல? அதுக்கு ஒன்னை உறுமி வாசிக்கக் கூப்பிட்டிருக்காங்க, தினேசு! கோயில்ல எங்கிட்ட சொல்லிவிட்டாங்க!’.  எப்போதோ கற்றுக்கொண்டது! தான் கலைக்குடும்பத்தில் பிறந்தவன் என்ற பெருமிதம் இருந்தது அப்போது.  இன்று அவன் குண்டர் கும்பலில் ஒரு அங்கத்தினன். அதுதான் மாதாமாதம் சந்தா கட்டுகிறானே! யாருமே அவனை ஏற்காதபோது, அரவணைத்தவர்கள் அவர்கள்.  `கோயிலில் எல்லாரும் பக்தியோடு இருப்பார்களே! நான் மட்டும் முரடாய், வித்தியாசமா இருக்க மாட்டேன்?’ என்ற சந்தேகம் எழ, உடல் இன்னும் குறுகிப் போய்விட்டது போலிருந்தது. எப்படித் தப்பிக்கலாம் என்று சிறிது யோசித்துவிட்டு, “பரீட்சை வருதும்மா,” என்று முனகினான். தாய் ஏமாறவில்லை. “நீ என்ன, பாஸ் பண்ணவா போறே? எப்படியும் வேலைக்குத்தான் போவணும் -- ஏதாவது சாப்பாட்டுக்கடையிலே!” “ஐயே! எச்சில் தட்டு கழுவற வேலை எனக்கு வேணாம்!” யாரோ வலிய அழைத்து வேலையே கொடுத்துவிட்டதைப்போல முகத்தைச் சுளித்தான். “சரி. அது வேணாம். மெகானிக்கா போலாமில்லே? ஒனக்குத்தான் காடி பிடிக்குமே!” என்றவள், மீண்டும் பழைய பல்லவியை ஆரம்பித்தாள். “கோயில் காரியம், தினேசு. அப்படியே புண்ணியம்! இப்படி ஒன்னைக் கூப்பிட்டிருக்காங்கன்னு பாட்டிகிட்ட சொன்னேன். அவங்களுக்கு ரொம்ப சந்தோசம்! கலை நம்ப ரத்தத்திலேயே ஊறிக்கிடக்குன்னு என்னென்னவோ சொன்னாங்கடா!” என்று கெஞ்சலில் முடித்தாள்.  `பாட்டி!’ அவன் முகத்தில் சிறு நகை அரும்பியது. `தினேஷ் கண்ணா!’ என்று வாய் நிறைய அழைக்கும் பாட்டி! சிறு வயதில் கடவுள் கதைகளெல்லாம் சொல்லிச் சாப்பாடு ஊட்டுவாளே! அவனைத் தூங்க வைக்கப் பாட்டுப் பாடுவாள். குரல் இனிமையாக இருக்கும்.  ஒரு முறை அவன் அவர்கள் வீட்டிலிருந்த ஒரே நாற்காலிமேல் ஏறிக் குதித்ததில் அது உடைந்துபோயிற்று. ஆத்திரத்துடன் அம்மா ரோத்தான் (பிரம்பு) எடுத்துவர, அவனைத் தன் முதுகுப்புறத்தில் மறைத்துக்கொண்டு, `இவ்வளவு சின்னப்பிள்ளை குதிச்சு ஒடைஞ்சு போயிட்டா, அது என்ன நாற்காலி! தூக்கிப் போடுவியா!’ என்று ஒரேயடியாய் அம்மாவை அடக்கிவிட்டவள் பாட்டி. அதனால் அன்று அவன் முதுகு தப்பித்தது. அந்த நல்ல பாட்டிக்குத் தன்னால் ஏதாவது செய்ய முடியுமென்றால், செய்து வைப்போமே! “சரிம்மா,” என்று தலையாட்டினான்.  “மொத்தம் நீங்க ஆறுபேரு. போய் வாசிச்சுப் பளகு. அன்னிக்கு வேஸ்டி எல்லாம் குடுக்கறாங்களாம்!”    நெடுநாளைக்குப் பிறகு வாத்தியத்தைத் தொட்டபோது, இனம்புரியாத ஆனந்தம் உண்டாயிற்று. இதழ்கள் சிரிப்பில் மலர்ந்தன. கத்தி எடுத்தபோது ஏன் இப்படிச் சிலிர்ப்பாக இல்லை என்று யோசித்தான். புரியவில்லை. `எழவு மண்டைக்கு எதுவும் வெளங்கறதில்லே!’ என்று தலையில் போட்டுக்கொண்டான். இரவில் பயிற்சி முடிந்ததும் அருகிலிருந்த வீடு நோக்கி நடந்தான், கையை வீசியபடி. இவ்வளவு நிம்மதியாக இருந்து எவ்வளவு காலமாகிவிட்டது! உதடுகள் குவிந்து பாட்டு ஒன்றை விசிலடித்தன. இருட்டாக இருந்த சந்தில் அவனுக்காகக் காத்திருந்தான் கதிர்.  `எங்கடா தினேஷ், ஒன்னை ஆளையே காணும்? பெரிய மண்டை (குண்டர் கும்பல் தலைவன்) ரொம்ப விசாரிச்சாரு!” கரிசனத்துடன் வந்தது கேள்வி. அவனுக்கல்லவா தெரியும் அவர்கள் கும்பலுக்கு ஆள் தேடுவதில் உள்ள சிரமம்! `இவர்களுக்குத் தெரியாத ஒன்று எனக்குத் தெரியுமே!’ என்ற பெருமை உண்டாயிற்று தினேஷுக்கு. “என்னைக் கோயில்ல மோளம் வாசிக்கக் கூப்பிட்டிருக்காங்கடா! தினமும் பிராக்டிஸ் பண்ணப் போயிட்டு இருக்கேன்!” “கோயில்லியா? அப்போ ஓசிதான்!” நண்பன் இளக்காரமாகச் சிரித்தான். “நீ கேங்கில இருக்கிறவன். மறந்துடாதே! நம்பளைமாதிரி இருக்கிறவங்க கோயிலுக்குப் போனா, அது பொம்பளைங்க போட்டுட்டு வர்ற சங்கிலியை அறுக்கறதுக்காகத்தான் இருக்கணும்”.   சங்கிலியைத் திருடுவதா!   ஒரு வெள்ளிக்கிழமையன்று பாட்டியின் தாலிக்கொடி சூறையாடப்பட்டபோது, அதைத் தனக்கு அணிவித்தவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று எவ்வளவு பயந்தாள்! எப்படியெல்லாம் புலம்பி அழுதாள்! தான் பிற பெண்களையும் அப்படிக் கலங்க வைக்கவேண்டுமா! “சீ!” என்றான் தினேஷ்.  அவன் சற்றும் எதிர்பாராவண்ணம், இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவன் வலதுகை மணிக்கட்டிலிருந்து முழங்கைவரை ஆழமாகக் கீறிவிட்டு ஓடினான் கதிர். போகிற போக்கில், “நீயெல்லாம் ஆம்பளையா, இல்லே ஒம்போதா? எல்லாத்துக்கும் பயம்! யாரைப் பாத்துடா `சீ’ங்கிறே?” என்று கத்திவிட்டுப் போனான். ரத்தம் பெருக்கெடுத்துக்கொண்டிருந்த கரத்தையே பார்த்தான் தினேஷ்.  எதிர்பாராத அதிர்ச்சியில் மூளை உறைந்தது போலிருந்தது.  முதலாவதாக எழுந்த எண்ணம்: `பரீட்சை அவ்வளவுதான்! கோவிந்தா! சிறிது பொறுத்துத்தான் நிதரிசனம் புலப்பட்டது. உடல் வலியைவிட மனத்தின் வேதனைதான் அதிகமாக இருந்தது. `கோயில்ல வாத்தியம் வாசிக்க முடியாம போயிடுமே!’ பாட்டியிடம் எல்லா உண்மைகளையும் சொல்லிவிட வேண்டும். `கூடாத சகவாசம்! கர்ணன்மாதிரி!’ என்று சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்வாள். அவன் சொல்வதை ரகசியமாக வைத்திருப்பாள். திட்டாமல் புத்தி சொல்வாள்.   அதையெல்லாம் மனதில் அசை போடும்போதே அவனுக்குச் சமாதானமாக இருந்தது. ஒவ்வொரு வருஷமும் நவராத்திரி வந்துகொண்டேதான் இருக்கப்போகிறது. அடுத்த வருஷம் புதிய வேஷ்டி கட்டி, தலையை ஆட்டி ஆட்டி வாசிக்கலாம். நிறைய பேர் கைதட்டுவார்கள், இல்லை?   6. வாரிசு      “இந்தப் பைத்தியத்துக்கு காசோ, பணமோ குடுத்து விலக்கி வெச்சுடுடா. வேற பொண்ணுங்களா இல்ல இந்த ஒலகத்திலே?”  வெளிநாட்டிலிருந்து திரும்பியிருந்த மகனிடம் முறையிட்டாள் தாய். ராசுவின் உடலும் மனமும் ஒருங்கே சுருங்கின. முப்பது வயதுவரை கல்யாணத்தைப் பற்றிய பிரக்ஞையே இல்லாதிருந்தவன் அப்படியே இருந்து தொலைத்திருக்கக் கூடாதா? நண்பர்களின் கேலியோ, அல்லது அகல்யாவின் அழகோ அவனை வெல்ல, பிரம்மச்சரியத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான். அப்படித்தான் நினைத்தான் முதலில். ஆனால், ஓரிரு மாதங்களிலேயே, பருவ வயதில்கூட தனக்குப் பெண்களைக் கண்டு எந்தக் கிளர்ச்சியும் ஏற்படாத விநோதம், தனது பெண்குரல் இவற்றுக்கான காரணம் புரிய, மனைவியைவிட்டு உடலளவில் விலகிப்போனான். பதினெட்டே வயதாகியிருந்த அகல்யாவுக்கு எதுவும் புரியவில்லை. தான் அவரைப்போல் அதிகம் படிக்காதவள் என்று அலட்சியம் காட்டுகிறாரோ? ஏழை என்று தெரிந்துதானே, தானே கல்யாணச் செலவைக்கூட ஏற்றுக்கொண்டார்? தன்னைப் பார்த்தாலே விலகும் கணவனை என்ன கேட்பது, எப்படிக் கேட்பது என்று புரியாது அகல்யா தடுமாறிக்கொண்டிருந்தபோதுதான் இந்திரன் அவர்கள் வீட்டுக்கு வந்தான். “பெரியக்கா மகன்,” என்று அறிமுகம் செய்தான் ராசு. “இவன் என்னோட மாமான்னு பேருதான். என்னைவிட ஒரே வயசுதான் பெரியவன். நாங்க ரெண்டுபேரும் ஒண்ணா வளர்ந்தோம்,” என்று அகல்யாவைப் பார்த்து சிநேகிதமான புன்னகையுடன் தெரிவித்தவன், ராசுவின்புறம் திரும்பி, “ஒங்க கல்யாணத்துக்கு நான் வரமுடியல. அதுக்காக, எனக்கு இவ்வளவு அழகான அத்தை இருக்காங்கன்னு ஏண்டா முந்தியே சொல்லல?” என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டான். ஒரே ஒருவன் வருகையால்தான் வீடு எவ்வளவு கலகலப்பாகிறது! “இப்போ எங்கடா வந்தே?” என்று கேட்டான் ராசு. கோலாலம்பூரிலிருக்குத் தெற்கே, 123 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது சரித்திரபூர்வமான  மலாக்கா. “என்னை இங்க மாத்திட்டாங்க. அதுவும் நல்லதாப்போச்சு. கடைச் சாப்பாடு சாப்பிட்டு அலுத்துப்போச்சு!” புன்னகைத்தான் ராசு. “சுத்தி வளைக்காதேடா, தடியா. `இங்கதான் தங்கப்போறேன்’னு பட்டுனு சொல்லிட்டுப்போயேன்!” “அம்மாதான் சொன்னாங்க, ஒங்களுக்கு ஒத்தாசையா நான் இருக்கலாம், நீ ரொம்ப சந்தோஷப்படுவேன்னு!” “சும்மா அளக்காதே. `வெளியில சாப்பிட்டா, வயிறு கெட்டுப் போகுது! கல்யாணம் பண்ணி வைங்கம்மான்னு இதைவிட வெளிப்படையா ஒருத்தன் எப்படிச் சொல்வான்?’னு கேட்டிருப்பியே?” சிரித்தான் ராசு. அதிசயத்துடன் கணவனைப் பார்த்தாள் அகல்யா. அவன் இவ்வளவு பேசுவானா? தன்கூட மட்டும் ஏன்..? “கல்யாணமா! சுதந்திரமா இருக்கிறவன்லாம் மாட்டிக்கணும்னு பார்ப்பான். மாட்டிக்கிட்டவன் எப்படிடா வெளியே வர்றதுன்னு முழிப்பான். என்ன சொல்றீங்க, அத்தை?” என்று அகல்யாவைப் பார்த்து கண்ணைச் சிமிட்டினான் இந்திரன். தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து ஒருவன் பேசியது அகல்யாவுக்கு நிறைவை அளித்தது. ஆனால், பதில் கூற அஞ்சி, சற்றே பயந்தவளாக கணவனை ஏறிட்டாள். அவன் கவனித்ததாகவே தெரியவில்லை.     தம்பதிகள் இருவருக்கும் இடையே இருந்த பிளவைப் புரிந்துகொள்ள இந்திரனுக்கு நாளாகவில்லை. ஒரு நாள் பகல் பத்து மணி இருக்கும். ஆண்கள் இருவரும் வேலைக்குப் போய்விட்டிருந்தனர். சமையலை முடித்துவிட்டு, இந்திரன் அவளுக்கென்று வாங்கி வந்திருந்த காதல் புதினத்தை சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருந்தாள் அகல்யா. வாயிற்கதவு தட்டப்பட்ட சப்தம் கேட்டது. எழுந்துபோய் திறந்தாள். கதவைத் தாழிட்டபடி உள்ளே நுழைந்த இந்திரனைப் பார்த்து, “எதையாவது மறந்து வெச்சுட்டுப் போயிட்டீங்களா?” என்று அப்பாவித்தனமாகக் கேட்டவளுக்குப் பதில் கூறாது, அவளுடைய கண்களை ஊடுருவுவதுபோல பார்த்தான் இந்திரன். நெருக்கமாக வந்தவனின் தலைமுடியில் பூசப்பட்டிருந்த கிரீமின் வாசனையும், முகச் சவரத்துக்குப்பின் தடவியிருந்த குடிகுரா பவுடரின் மணமும் ஒன்றுசேர்ந்து அவளுடைய உணர்வுகளைத் தாக்கின. அவளுடைய உடலும் மனமும் படபடத்தன. மூச்சு வேகமாக வந்தது. “பைத்தியக்காரன்!” முணுமுணுப்பாக வந்தது அவன் குரல். “கோவில் சிலைமாதிரி இருக்கிற ஒங்க அருமை அந்த மடையனுக்குப் புரியுதா!” என்றபடி அவனது கை...! பயந்து பின்வாங்கினாள் அகல்யா. அவளுடைய செயலை எதிர்பார்த்திருந்தவனாக, அவளுடைய தோள்களை அழுத்தி, தன்னருகே கொண்டுவந்தான். அகல்யா உறைந்தே போனாள். இந்திரன் வெளியேறி வெகுநேரம் கழிந்தபின்தான் அகல்யாவுக்கு நடந்து முடிந்ததன் விபரீதம் மெள்ள உறைக்க ஆரம்பித்தது. தான் ஏன் அவனைப் பிடித்துத் தள்ளவில்லை? அவனுடைய உணர்வுகளின் எதிரொலி ஏதோ ஒரு சிறிய அளவில் தன்னுள்ளும் எழுந்ததோ? இரு கண்களையும் இறுக மூடி, மூச்சைப் பிடித்துக்கொண்டு, அவனுடைய உடலின் ஒவ்வொரு அசைவையும் மனக்கண்ணால் உணர்ந்து, சவம்போல உறைந்து கிடந்ததற்கு என்ன அர்த்தம்? கத்திக் கூச்சலிட்டிருக்கலாமே? அப்போது என்ன ஆயிற்று எனக்கு? அடுத்து வரும் தினங்களில் நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று அகல்யா திகிலடைந்தாள். கூடியவரை தன்னுடைய அறைக் கதவைத் தாழிட்டுக்கொண்டு, உள்ளேயே இருக்கத் தலைப்பட்டாள். தன் கழுத்தில் தாலி கட்டியவர் எல்லாக் கணவர்களையும்போல இயங்கியிருந்தால், தான் இந்தப் பாடு படவேண்டியிருக்குமா என்று எண்ணம் போக, கணவன்மேலும், அவனை மணந்த பாவத்திற்காகத் தன்மீதும் ஆத்திரம் பொங்கியது. ஆத்திரம் ஒரு வடிகாலைத் தேடியது. தனிமையில் அழுகை பீறிட்டது. மனைவியிடம் ஏதோ மாற்றம் தெரிகிறதே என்று ராசு, அவளை பரிசோதனைக்கு அழைத்துப் போனான். “வாழ்த்துகள்! நீங்கள் அப்பாவாகப் போகிறீர்கள்!” என்று போலியான மகிழ்ச்சியுடன் டாக்டர் தெரிவித்தபோது, அகல்யாவின் பார்வை வெறித்தது. ஒரு தடவை! ஒரே ஒரு தடவை!    அதிகபட்சம் பத்து நிமிடங்கள் இருக்குமா? அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? கோபத்தாலும், அவமானத்தாலும் சிவந்த முகத்தோடும், நெறிந்த புருவங்களுடனும் தெருவிலேயே கவனத்தைச் செலுத்த முயன்றபடி, அவள் பக்கமே திரும்பாது காரை ஓட்டினான் ராசு. பதினெட்டு வயதுக்குள் இந்திரன் வெம்பிப்போயிருந்தது யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்றும் இல்லை. ஏன், அவனே அதைப்பற்றிப் பெருமையாகப் பேசிக்கொள்வான். ஆனால், உண்ட  வீட்டுக்கு இரண்டகம் செய்யவும் துணிவான் என்பதை ராசு நினைத்தும் பார்த்திருக்கவில்லை. வாரம் ஒன்று நகர்ந்தது. கணவனாக ஏதாவது கேட்பான் என்று எதிர்பார்த்த அகல்யா, அவனது நீடித்த மௌனத்தால் மேலும் கலங்கிப்போனாள். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, வயிற்றின்மேல் ஒரு கை பதித்து, முகசாடையாகவே கேட்டாள். “வேணாம்!” அவளை நிமிர்ந்து பார்க்காமலே பதிலளித்தான். நினைத்துப் பார்க்கும்போதே அகல்யாவுக்குக் கலக்கமாக இருந்தது. குழந்தையைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்குச் செய்த துரோகத்தால் தான் துடிக்க வேண்டும் என்றே அந்த முடிவுக்கு வந்திருப்பான் என்றுதான் அவளுக்குத் தோன்றியது. அழ ஆரம்பித்தாள். அதைப் பொருட்படுத்தாது, “ஆபீசிலே என்னை லண்டனுக்குப் போகச் சொல்லி உத்தரவு வந்திருக்கு,” என்று முகத்தை எங்கோ திருப்பியபடி தெரிவித்தவன் சற்றே யோசித்தான்.  “ஒன்னை அலோர் ஸ்டாரில, அம்மாகிட்ட கொண்டு விடறேன்,” என்றான். மலேசிய நாட்டின் வடகோடியில், கடாரம் என்று முன்பு அழைக்கப்பட்ட இன்றைய கெடாவின் தலைநகரம். கோலாலம்பூரிலிருந்து  நானூறு கிலோமீட்டர்களுக்குமேல் தொலைவு. இந்திரனும் அவளும் நெருக்கமாக இருக்க முடியாது என்று கணக்குப் போட்டிருந்தான். இப்படியும் ஒரு பொறுமையா! தன்னிடம் ஆத்திரப்படாது, பொறுப்பைத் தட்டிக் கழிக்காது..! அதே வீட்டில் பழையபடி சேர்ந்திருந்தால், இந்திரனை கட்டுப்படுத்த முயல்வதோ, வீட்டைவிட்டு வெளியேறச் சொல்வதோ ரசாபாசத்தில் முடிந்துவிடும் என்றே, பிரச்னையை எதிர்கொள்ளும் சக்தியின்றி, கணவன் ஓடி ஒளிகிறான் என்பது அகல்யாவிற்குப் புரியவில்லை. இன்னொருவராக இருந்தால், தெரிந்தோ, தெரியாமலோ சோரம் போன மனைவியை அடித்தே கொன்றிருப்பார்கள். இல்லை, விலக்கியாவது வைத்திருப்பார்கள். சட்டென பொறி தட்டியது. இவரும் விலக்கித்தான் வைக்கிறார். யாருக்கும் சந்தேகம் ஏற்படாதவண்ணம். ஓயாது சுழன்ற தனது குற்ற உணர்விலேயே மூழ்கிப்போனாள் அகல்யா. அதன் உறுத்தல் தாங்காது அழுதாள். மீண்டும்... மீண்டும்... . மீண்டும்...     `அழுதுக்கிட்டே இருக்காளே!’ என்று மாமியார் அதிசயப்பட்டாள். `புருஷன்மேல அவ்வளவு பிரியமா!’ கர்ப்பமாக இருக்கும் பெண்களின் உடலில் சாதாரணமாக ஏற்படும் ரசாயன மாற்றங்களின் விளைவு போலும் என்று சமாதானம் அடைந்தாள்.   ஆனால், பிரசவத்திற்குப் பின்னரும் அகல்யாவின் நிலை மாறவில்லை. குழந்தை தன்பாட்டில் கதறிக்கொண்டு இருக்கும். அவள் எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பாள்; இல்லை, விம்மி விம்மி அழுதுகொண்டிருப்பாள். `ஹிஸ்டீரியா வந்திருக்கு! தாம்பத்திய உறவில் ஏதோ கோளாறு!’ என்று உளவியல் நிபுணர்கள் அபிப்ராயப்பட, “கல்யாணமாகி, அடுத்த வருஷமே பிள்ளை! என்னமோ சொல்றாங்க!” என்று நொடித்தார்கள் மாமியாரும், நாத்திகளும். பிள்ளையிடம் காட்டிய அதே பராமுகத்தைத் தன் உடலைப் பராமரிப்பதிலும் கைப்பிடித்தாள் அகல்யா. "பிள்ளை பிறந்ததும் வயிற்றைக் கட்டி இருக்கக்கூடாது? இப்படி தொந்தி போட்டிடுச்சே!” என்று நாத்தனார் ஒருத்தி கரிசனத்துடன் கேட்க, `அப்பாடா! இனிமே, அழகு, அழகுன்னு எந்தப் பயலும் என்கிட்ட வாலாட்ட மாட்டான்,’ என்ற ஏற்பட்டிருந்த நிம்மதி குலைவது போலிருந்தது அகல்யாவுக்கு. “வயத்தைக் கட்டறதா! என்ன அசிங்கம் அதெல்லாம்?” என்று கத்த ஆரம்பித்தவள், அழுகையில் நிறுத்தினாள். “அதுகிட்ட எதுக்குடி வாய்குடுக்கறே? எல்லாத்துக்கும் ஒரு கத்தல், ஒரு அழுகை! பிசாசு!” என்று வெறுத்துப்போய் கூறிய மாமியார்க்காரி, “ராசு, பாவம்! அதிர்ந்துகூடப் பேசமாட்டான். உடம்பு அழகுன்னு மயங்கிப்போயிட்டான். இவளோட தொல்லை தாங்கமுடியாமதானே வெளிநாட்டுக்கு ஓடிட்டான்! இங்கே, நான் கிடந்து அல்லாடறேன்!” என்று நீட்டி முழக்கினாள்.      தான் மணந்த அழகுப் பதுமையா இது! மூன்று ஆண்டுகள் கடந்ததும் திரும்பிய ராசுவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. கூடவே, `நல்லவேளை, பிள்ளை அம்மா சாயலிலே இருக்கு!’ என்ற சந்தோஷமும் எழாமலில்லை. “ஒன் பிள்ளை என்னடா இடது கையில சாப்பிடுது! ஒங்க ரெண்டுபேருக்குமே வலதுகைப் பழக்கம்தானே?” என்று அவனுடைய தாய் அதிசயப்பட்டுக் கேட்டபோதே உண்மை புரிந்துபோக, அவளுடைய கை தன்னிச்சையாக வாயை மூடியது. அருகே அமர்ந்திருந்த அகல்யாவுக்கும் அவ்வார்த்தைகள் கேட்டன. அவளுடைய குழம்பிய மனத்தினடியிலிருந்து ஒரு தெளிவான எண்ணம் மேலெழுந்தது: இந்திரனின் இடது கை அவளுடைய திரண்ட மார்பைப் பிடித்து அழுத்துகிறது! அந்த நினைவின் தாக்கத்தைப் பொறுக்கமுடியாது, `வீல்’ என்ற அலறலுடன் தரையில் விழுந்தவள், வெறித்த கண்ணும் விறைத்த கைகால்களுடனும் அப்படியே கிடந்தாள். அப்போதுதான் உபதேசித்தாள் தாயார், “இந்தப் பைத்தியத்துக்கு காசோ, பணமோ குடுத்து விலக்கி வெச்சுடுடா,” என்று. உடனே பதிலளிக்க முடியவில்லை ராசுவால். `நீ ஒழுங்காக நடந்துகொண்டிருந்தால், இவள் இன்னொருத்தனை அனுமதித்து இருப்பாளா?’ என்று குத்தியது மனசாட்சி. பெரிய மனது பண்ணுவதுபோல், “அது சரியில்லேம்மா. எனக்கு ஒரு வியாதி வந்தா, என்னைப் பாத்துக்காம, இவ விட்டுட்டுப் போயிருப்பாளா?” என்றான். உள்மனமோ, `நான் பொட்டைன்னு கேலி செய்தவங்க என் வாரிசைப் பாத்து அசரப்போறாங்க!’ என்று குதூகலித்தது. 7. விட்ட குறை      “யோவ், பெரிசு! ஊட்ல சொல்லினு வண்ட்டியா?” லாரி டிரைவரின் கட்டைக்குரலோ, விடாமல் ஒலித்த ஹார்ன் ஒலியோ கணேசனின் காதில் விழவில்லை.   பத்து வயதிலிருந்தே எந்த வசவோ, சத்தமோ கேட்காதது அவரது அதிர்ஷ்டம்தான். `போனதுதான் போனாளே! போறச்சே இந்த செவிட்டு முண்டத்தையும் அழைச்சுண்டு போயிருக்கப்படாதோ? இதை என் தலையில கட்டிட்டு..!’ அப்போதெல்லாம் மாமா திட்டுகிறார் என்று மட்டும் புரியும். பயந்தவராக, இன்னும் அதிகமாக உழைப்பார் அந்தக் குடும்பத்துக்காக. அந்த ரயில் விபத்தில் தானும் போயிருக்கலாம், தன்னை மட்டும் இப்படி அனாதையாக விட்டுப் போய்விட்டார்களே பெற்றோர் என்ற வருத்தம் அவர் மனதில் மேலெழும். `அதனால் என்ன, அடுத்த ஜன்மாவிலே அன்பா இருக்கற குடும்பத்திலே பிறந்தாப் போச்சு!’ என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொள்வார், அடிக்கடி. `காது கேக்காம என்னடா படிச்சு கிழிக்கப்போறே? பேசாம, சமையல்லே கூடமாட எனக்கு ஒத்தாசையா  இரு,’ என்று மாமா அவனது படிப்பை அரைகுறையாக நிறுத்தியபோது, அழுகைதான் வந்தது. பெற்றோர்மீது ஆத்திரம் வந்தது. அதனால் குற்ற உணர்வும் மிகுந்தது. `அவா என்ன செய்வா, பாவம்! அல்பாயுசில போகணும்னு விதி!’ என்று வயதுக்கு மீறிய அறிவுடன் யோசனை போகும். இருபது வயதில் சுயமாகச் சம்பாதிக்க ஆரம்பித்தார். முதல் சம்பளம் வந்ததும், மாமாவின்  காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியபோது, `பேஷ்! இனிமே கல்யாணம்தான்!’ என்றார் மாமா, வெற்றிலைக்காவி ஏறிய பற்களையெல்லாம் காட்டியபடி. அவனால் ஏற்பட்ட சுமை குறையப்போகும் மகிழ்ச்சி அவருக்கு.   `எனக்கென ஒரு குடும்பம்!’ கணேசனுக்கு வெகு காலத்திற்குப் பிறகு மகிழ்ச்சி துளிர்விட்டது. `என் குழந்தைகளையாவது நிறையப் படிக்க வைக்கணும்!’ ஆனால், முதல் பிரசவத்திலேயே மனைவி இறந்துபோனாள். மகனை உயர் படிப்பு படிக்க வைக்க கணேசன் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியிருந்தது. பெரிய உத்தியோகம் கிடைத்து, அவன் டவுனுக்குப் புறப்பட்டபோது, கணேசன் கெஞ்சினார்: “ஆச்சு! நானும் நாப்பது, அம்பது வருஷமா கரண்டி பிடிச்சு, அடுப்படியிலே வேகறேன். ஒன்கூடவே வந்துடறேனே, பாச்சு!” பாஸ்கர் முகத்தைச் சுளித்தான். எப்போதும் முருகக்கடவுளைப்போல வெற்றுடம்பு, அரசியல்வாதியைப்போல் தோளில் ஒரு வெள்ளைத் துண்டு. இதுதான் அப்பா. அவரைப் பெருமையாக நாலு பேரிடம் காட்டிக்கொள்ள முடியுமா? “டவுனிலே தண்ணிப் பஞ்சம்! ஒங்க ஆசாரத்துக்கு அதெல்லாம் சரிப்படாதுப்பா. ஒங்களால வேலை செய்ய முடியலே. அவ்வளவுதானே? நான் மாசாமாசம் பணம் அனுப்பறேன்,” என்று அந்த விஷயத்துக்கு ஒரு முடிவு கட்டினான். அது ஆயிற்று நான்கு வருடங்கள். `உன்னைப் பார்க்க வருகிறேன்,’ என்று முன்கூட்டியே அறிவித்தால் அவன் எங்கே தடுத்துவிடுவானோ என்று திடீரென்று புறப்பட்டு வந்தவர் பயமும் மகிழ்ச்சியுமாக தெருவைக் கடக்கும்போதுதான் லாரி டிரைவரின் கட்டைக்குரலும், ஹார்ன் ஒலியும் கேட்டன -- பலருக்கும். ஆனால், கணேசனுக்கு மட்டும்  கேட்காதது அவர் செய்த புண்ணியமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், தலத்திலேயே உயிர் பிரிந்திருக்குமா?   காலன் கெடு வைத்த  நாளுக்கு முன்னரே ஒருவருக்குத் துர்மரணம் சம்பவித்தால், தனது முடிவைச் சற்றும் எதிர்பாராத நிலையில், தனது நிலை புரியாது, அவரது ஆவி அந்த இடத்திலேயே சுற்றிக்கொண்டு இருக்குமாம். கணேசனுக்கோ அந்த உடலைவிட்டு நீங்கியது நிம்மதியாகத்தான் இருந்தது. பழுத்த இலை மரத்திலிருந்து வீழ்வதுபோல சர்வசாதாரணமாக உணர்ந்தார். அவருடைய ஆவி சுதந்திரமாக இயங்கத் தொடங்கியது. அன்பே இல்லாத எல்லாரையும் பிரிந்துபோவதும் நல்லதற்குத்தான், இனி அடுத்த பிறவியிலாவது தன்னைக் கொண்டாடும் குடும்பத்தில் பிறக்கலாம் என்று பூரிப்படைந்தது. அந்தரத்தில், `வாங்கோ!’ என்று இரு கரங்களையும் விரித்து அழைத்த உருவம் அவர் தாலிகட்டிய மனைவியா! அவளை அடையாளம் புரிந்துகொள்ளவே சிறிது நேரம் பிடித்தது. அதுதான் முழுதாக ஒரு வருடம்கூட அவளுடன் வாழவில்லையே, பின் எப்படி நினைவிருக்கும்! அவளுடன் போகவேண்டாம், மீண்டும் நிர்க்கதியாக விட்டுப் போய்விடுவாள் என்று தோன்ற, விரைந்தது. உடனே திரும்பப் பிறந்துவிட வேண்டும் என்ற நப்பாசை பிறந்தது அதற்கு. பூவுலகத்தில் யாராவது சிலராவது நல்லவர்களாக இருக்கமாட்டார்களா! சூல்கொண்ட பெண்களைத் தேட ஆரம்பித்தது. நிறைமாதக் கர்ப்பிணி ஒருத்தி தென்பட்டாள். `சனியன்! சும்மா இரு! சும்மா நொய் நொய்னுக்கிட்டு!’ என்று இடுப்பிலிருந்த குழந்தையை வைதபடி இருந்தாள். ஐயோ, இவள் வேண்டாம். எதிலிருந்தோ தப்பித்து எதற்குள்ளேயோ விழுவதுபோல்! அத்துடன், ஐந்து மாதக் கருவிற்குள்தான் ஆன்மா புகுமாமே! இவள் வயிற்றில், பாவம், எந்தப் பாவ ஆத்மா அடைந்து கிடக்கிறதோ என்று பரிதாபப்பட்டதாக, அங்கிருந்து விரைந்தது ஆவி. அடுத்தவள், `ஊரில, ஒலகத்தில, எவன் எவனுக்கோ சாவு வருதே! இந்தப் பாவி  மனுசனுக்கு வரக்கூடாதா!’ என்று பிரலாபித்துக்கொண்டிருந்தாள். அவள் உடலெல்லாம் ரத்தக்காயம். குடித்துவிட்டு, வாசலில் தாறுமாறாகப் படுத்துக்கிடந்த அவளது கணவனைத்தான் குறிப்பிடுகிறாள் என்று புரிந்தது. `ஊகும். இதுவும் சரிப்படாது!’   அந்த வீட்டைப் பார்த்ததுமே, தானிருக்கப் போகும் இடம் இதுதான் என்ற மகிழ்வான உணர்வு எழுந்தது. சிறிய வீடுதான். ஒரேமாதிரி மூன்று வீடுகள் ஒட்டியபடி இருந்தன. வாசலில் இருந்த புல்தரையில் ஒரு காலை நீட்டியபடி உட்கார்ந்து, கீரையை ஆய்ந்தபடி மெல்லிய குரலில் பாடிக்கொண்டிருந்தாள் அழகான பெண்மணி ஒருத்தி. அம்மா! அவள் பக்கத்தில், வீட்டுக் காம்பவுண்டுக்குள்ளேயே  இரு சிறுமிகள் பூப்பந்து விளையாடிக்கொண்டு இருந்தார்கள், சிரித்தபடி. தன் தேடல் வீண் போகவில்லை என்ற உணர்வில் ஆவிக்குச் சிலிர்த்தது. அன்பான, மகிழ்ச்சியான குடும்பம்! இதைவிட வேறென்ன வேண்டும்! அதிகம் யோசியாமல், அவள் வயிற்றில் நுழைந்தது கணேசனது ஆவியில் ஏழில் ஒரு பங்கு. (மிச்சமிருக்கும் பகுதிகளில் ஒன்று, அதிர்ஷ்டம் இருந்தால், என்றாவது அவரது வாழ்க்கையில் எதிர்ப்படக்கூடும் -- `SOUL MATE!’ என்ற  குதூகலத்தை ஏற்படுத்த).   `அம்மா!’ என்று வயிற்றைப் பிடித்தபடி, நெளிந்தாள் கௌரி. “என்னம்மா? என்னம்மா?” என்று பதறியபடி இரு பெண்களும் ஓடி வந்தார்கள். “தம்பிப் பாப்பா உதைக்கறான்!” “ஹை!” என்றபடி அவளருகே ஓடிவந்தார்கள் பெண்கள். “நான் தொட்டுப் பாக்கறேம்மா!”   “போடி! நான்தான் பெரியவ! நான்தான் மொதல்லே தொட்டுப் பாப்பேன்!” “அம்மா! தம்பிப் பாப்பாவுக்கு என்ன பேரு?” “நீங்கதான் வைங்களேன்!” அம்மா லேசாகச் சிரித்தாள். “பாப்பா?” நான்கு வயதுப் பெண் கேட்டாள். “சீ! அது பொண்ணு பேரு. எனக்கு தங்கை வேண்டாம். ஒன்னைமாதிரி சண்டை போடும்,” என்று மூக்கைச் சுளித்தாள் பெரியவள். “பாபுதான் சரியான பேரு. இல்லேம்மா?” அம்மா முறுவலித்தபடி, தன் பெண்களின் கன்னத்தைத் தடவினாள். அந்தக் கணமே கணேசன் தன் முந்தின ஜன்ம வாசனையை மறந்தார். பாபுவாகிப்போனார்.   “உருளைக்கிழங்கு பிடிக்காத குழந்தைகூட இருக்குமா!” அதிசயப்பட்டாள் பாபுவின் பாட்டி. “நான் சொல்றதைக் கேட்டுட்டு, ரெண்டு வயசிலேயே இவ்வளவு ஸ்பஷ்டமா மந்திரமெல்லாம் சொல்றதே! போன ஜென்மத்திலே கோயில் சாஸ்திரிகளாத்தான் இருந்திருக்கணும்!” கௌரிக்குப் பெருமை தாங்கவில்லை. அருமை மகனைத் தூக்கி முத்தமிட்டாள். அவனை ஒரு கையால் அணைத்தபடி, ஒரு சாக்லேட்டை அலமாரியிலிருந்து எடுத்துக் கொடுத்தாள். “அன்னிக்குப் பாருங்கோம்மா,” என்று மாமியாருக்குக் கதை சொல்ல ஆரம்பித்தாள்: “யாரோ இதுகளைக் கேட்டா, `தம்பி எப்படி இருக்கான்?’ அப்படின்னு. `அவன்தான் BEST! என்கிறதுகள். கொஞ்சமானும் பொறாமை இருக்கணுமே!” பாபு அம்மாவின் பிடியிலிருந்து திமிறினான், அருமை அக்காக்களுடன் விளையாட. “நான் போறேன்!” “அசத்து! போறேன்னு சொல்றது பாரு!” சற்றுமுன் பாராட்டிய பாட்டி வைதாள். “போயிட்டு வரேன்னு சொல்லுடா!” அதை அவன் கேட்டதாகத் தெரியவில்லை. வாசலுக்கு ஓடினான். “பாபு! அந்தப் பந்தை எடுத்துப் போடு! குட் பாய்!” தன்னையும் மதித்து ஒரு வேலை சொல்கிறார்களே என்று குதித்தபடி, திறந்திருந்த வாயில் கதவின் வழியாக ஓடிய சிறுவனை வேகமாக வந்த கார் கவனிக்கவில்லை. இரண்டே ஆண்டுகள்! அன்பும், கவனிப்பும் அபரிமிதமாகக் கிடைத்த மகிழ்ச்சியுடன் அந்த ஆவி உடலைவிட்டுப் பிரிந்தது.   “நீ எதுக்கு இப்போ அழறே? அவனோட கர்மா பூர்த்தி ஆயிடுத்துன்னு நெனச்சுக்கோ!” மாமியார் தேற்றினாள், கௌரியை. “போன ஜன்மத்திலே அவனோட காலம் முடியறதுக்குள்ளே உசிரு போயிருக்கும். குறையா விட்ட ரெண்டு வருஷத்தை நம்பாத்திலே கழிக்கணும்னு அவன் தலையிலே எழுதியிருக்கு”. யார் கூறிய ஆறுதலும் கௌரியின் காதுகளில் விழவில்லை. “போறேன்னு சொல்லிட்டுப் போனியே, பாபு! ஒனக்கு மொதல்லேயே தெரிஞ்சுடுத்தாடா, கண்ணு?” என்று கதறியபடி இருந்தாள். அவளருகே சுற்றிக்கொண்டிருந்த ஆவி, `ஒன்கிட்டேதானேம்மா இருக்கேன்!’ என்றது அவளுக்குக் கேட்கவில்லை. 8. பிளவு       “வர வர, சுதாவை ரொம்ப அடிக்கிறே நீ!”   `ஒன்னோட மூளையும், சுறுசுறுப்பும் அப்படியே சுதாகிட்ட வந்திருக்கு!’ என்று தனிமையில் ஓயாது தன்னைப் புகழும் கணவரிடமிருந்து இப்படி ஒரு குற்றச்சாட்டா! பெண்ணை முதுகில் அடித்ததன் காரணத்தை இவரிடம் சொன்னால், “குழந்தைகள் என்றால், முன்னே பின்னேதான் இருக்கும்!” என்று த்த்துவம் பேசி, எரிச்சலை இன்னும் அதிகமாக்குவார். அன்று காலை ஞானம் குளிக்கப் போயிருந்தபோது, குளியறையில் ஒரே துர்வாசம்! சுவரெல்லாம் தீற்றியிருந்தது...! வெளியில் வந்து, “ஒன் வேலைதானே இது?” என்று வெறி பிடித்தவள்போல் சுதாவை அடித்திருந்தாள். அவள் அழாமல் அப்படியே நின்றிருந்தது தாயின் ஆத்திரத்தை மிகையாகத்தான் ஆக்கியது. “முந்தி மாதிரி இல்ல சுதா. என்னமோ, ரொம்பக் கெட்டுப் போயிட்டா!” என்று கணவரிடம் படபடத்தாள். மறுநாள் காலை ஏழு மணிக்கு, வழக்கம்போல் பள்ளிச்சீருடை அணிந்து, சாப்பாட்டு மேசையில் அமர்ந்தாள் சுதா. வெள்ளைச் சட்டைமேல் மைலோவைக் கொட்டிக்கொள்ள, அவசரத்தில் உடையை மாற்ற நேரமில்லாது போயிற்று. ஆத்திரம் பீறிட்டது பெற்றவளுக்கு. எவ்வளவு கஷ்டப்பட்டு, குனிய முடியாமல் குனிந்து, அதைத் துவைத்து, இஸ்திரி பண்ணியிருந்தாள்! “ஒரு காரியம் ஒழுங்கா செய்யத் தெரியுதா, சனியன்!” என்று கன்னத்தில் ஓர் அறை வைக்காமல் இருக்கமுடியவில்லை அவளால்.   சிறுமி எதிர்ப்புக் காட்டாமல் நின்றது ஞானத்துக்குப் புதிய பலம் வந்ததுபோல்  இருந்தது, கூடவே குற்ற உணர்ச்சியும் ஓங்கியது. மத்தியானம் இரண்டு மணிக்கு, பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி, காலையில் நடந்ததை மறந்தவளாக, “அம்மா! என்னை பேச்சுப் போட்டியில சேர்த்துக்கிட்டிருக்காங்க!’ என்று தெரிவித்தாள். ஞானம் புன்சிரிப்புடன் தன் கட்டை விரலை உயர்த்தினாள், மகளைப் பாராட்டும் விதமாக. ‘தம்பி என்ன செய்யறான்?” என்று அம்மாவின் வயிற்றை அருமையாக, ஒரு விரலால், தொட்டுப்பார்த்தாள் சுதா. அதுதான் காரணமோ? எட்டு வருடங்களாக, ஒரே குழந்தையாக இருந்த தனக்குப்  போட்டியாக ஒரு தம்பி வந்துவிடப் போகிறானே என்ற இனம்புரியாத கலக்கமோ? சுதாவுக்கு வயது ஏறியது. பள்ளியில் என்னதான் சிறந்து விளங்கினாலும், வீட்டில் தாய்க்கும், மகளுக்கும் சண்டைகள் பலத்தன. பதினாறு வயதான பெண்ணை அடிக்க முடியவில்லை. வாய்வார்த்தையாகக் கண்டனம் செய்யத்தான் முடிந்த்து. “ஏண்டி! என்ன அலங்காரம் இது? குட்டைப் பாவாடை, வயிறு தெரிய சட்டை! எல்லாத்துக்கும் மேல, லிப்ஸ்டிக், உதட்டுக்கு வெளியே எல்லாம்! சே! ஒன்னைப் பாத்தா, `யாரோ’ன்னு நினைச்சுக்கப் போறாங்க!” “நினைச்சுக்கட்டும்!” திமிராகப் பதில் வந்தது. பள்ளியில் ஆசிரியைகள் எல்லாரும் அவளுடைய திறமைகளை, புத்திசாலித்தனத்தைக் கொண்டாடியதால் வந்த வினை என்று ஞானம் குமையத்தான் முடிந்தது. வலிய ஏதாவது சொல்லப்போகத்தான் வாக்குவாதம் ஆரம்பிக்கிறது என்று புரிய, சுதா என்ன செய்தாலும் ஞானம் வாயே திறக்காமல் இருக்கத் தலைப்பட்டாள். தாய்க்கும் மகளுக்குமிடையே சண்டை இல்லாவிட்டாலும், கண்ணுக்குத் தெரியாத ஏதோ பிளவு. `எனக்கு ஒரு தோசை போதும்னா விடுங்களேன்!’ என்று இரைபவளிடம் என்ன பேச முடியும்? `பசிக்கல. சாப்பாடு வேண்டாம்!’ என்று அனேக இரவுகள் சொல்வதைவிட இது தேவலாம் என்று திருப்தி பட்டுக்கொள்ள வேண்டியதுதான். பன்னிரண்டு வயதுப் பெண்ணைப்போல் வளர்ச்சி குன்றியிருந்த மகளைப் பார்த்து அந்தத் தாயின் மனம் குமுறியது. பார்ப்பவர்களுக்கு அதெல்லாம் பெரிதாகப்படவில்லை.  “ஒங்க மகளுக்கான படிப்புச் செலவையெல்லாம் அமெரிக்காவில இருக்கிற காலேஜே ஏத்துக்கிட்டிருக்காமே! பெத்தா, இப்படி ஒரு பொண்ணைப் பெத்துக்கணும்!” வெளிப்படையாகப் புகழ்ந்தாலும், முகத்தில் தோன்றிய பொறாமையை அவர்களால் மறைக்க முடியவில்லை. “ஒரே மகள்! எப்படித்தான் பிரிஞ்சு இருக்கப்போறீங்களோ!” பத்து வருடங்களுக்கு மேலேயே மனத்தளவில் அவள் தன்னைவிட்டு விலகிவிட்டிருந்ததைப் பிறரிடம் சொல்லவா முடியும்? தன்னை வெறுக்கும் அளவுக்கு, பெற்ற தாயையே ஒரு போட்டியாகக் கருதி, எப்போதும், எதிலும் வென்று ஜெயிக்க வேண்டும் என்று அவள் இப்படி வெறியாக அலைய தான் என்ன தப்பு செய்தோம்? இன்னும் அதிக நாட்கள் இந்தப் பாரத்தைச் சுமந்துகொண்டு வாழ முடியாது என்று பட்டது ஞானத்துக்கு. “அம்மா! நீங்களும் என்கூட அமெரிக்கா வாங்களேன்!” அதிசயமாகத் தன்னைத் தேடி வந்திருக்கும் மகளை நம்ப முடியாமல் பார்த்தாள் ஞானம். எதற்கெடுத்தாலும் எதிர்த்துப் பேசிய பெண்ணா இது! பயந்த குழந்தை பேசுவதுபோல் இருந்தது. `இதுதான் சமயம், கேட்டுவிடு’, என்ற உந்துதல் எழ, “ஒங்கிட்ட ஒண்ணு கேக்கணுமே, சுதா!” என்று நீட்டினாள். அவளுடைய பதிலுக்குக் காத்திராது, “ஏழு வயசுவரைக்கும் என்னையே சுத்திச் சுத்தி வருவே! எனக்கு அவ்வளவு அருமை நீ! ஆனா, நீயோ, ஓயாம அடியும், உதையும் வாங்கி, அடுத்த வேளைச் சோத்துக்கே திண்டாடற ஏழைக் குழந்தைமாதிரி ஆத்திரமும், படபடப்புமா ஆகிட்டே. நான்.. எங்கே தப்பு பண்ணினேன்?” என்று கேட்டு முடிப்பதற்குள், குரல் தழதழத்துப் போயிற்று. மூச்சு வேகமாக வந்தது. உடனே பதில் வந்தது சுதாவிடமிருந்து. “அது.. நீங்க செஞ்ச எதனாலேயும் இல்லம்மா!” ஞானம் ஒன்றும் விளங்காது, அவளையே பார்த்தாள். சிறிது நேரம் எதுவும் பேசவில்லை சுதா. அவளுடைய உதடுகள் இறுகி இறுகிப் பிரிந்தன. புருவங்கள் நெரிய, கண்கள் பயத்தையோ, வேறு எந்த உணர்வையோ காட்டின. எதையோ சொல்ல முயன்று, சொல்லவும் முடியாது, மெல்லவும் இயலாதவளாக அவள் அவதிப்படுவதைக் காண தாய்மனம் துடித்தது. “எனக்கு அப்போ எட்டு வயசு. நீங்க மாசமா இருந்தீங்க. தினமும் சாயந்திரம் வாசல்லே ஸ்கூட்டர்ல வர்றவன்கிட்டே ரொட்டி வாங்க அனுப்புவீங்க. அப்போ.. அவன்.. என்னை..!” அதிர்ச்சியுடன் மூச்சை உள்ளுக்கிழுத்துக் கொண்டாள் ஞானம். இரவு ஏழு மணிக்கு தெரு விளக்குகள் எரிய ஆரம்பித்ததும்தான் ரொட்டிக்காரன் தொடர்ந்து அமுக்கும் ஹார்ன் ஒலி கேட்கும். இருளில் தான் தவறு செய்தால் யாருக்குத் தெரியப்போகிறது என்ற அலட்சியமா? திமிரா? வீட்டெதிரில் பெரிய மரமும், புதரும், அதை ஒட்டினாற்போல் பெரிய பள்ளமும் இருந்ததை சாதகமாக்கிக் கொண்டானா, பாவி! எல்லா உணவும் துவேஷமாகப் போனது இதனால்தானா? செய்யாத தப்புக்குச் சுய தண்டனை! ஒரேயடியாக அதிர்ந்து, “என்னோட தொப்புள் கொடி கருவில இருந்த குழந்தையோட கழுத்தைச் சுத்தியிருக்கு, ஓய்வா இருக்கணும்னு டாக்டர் சொல்லியிருந்தாரில்ல? அதான் தினமும், ரொட்டி..,” என்று வேகமாகப் பேசிக்கொண்டு போனவளை ஒரே கைவீச்சில் தடுத்து நிறுத்தினாள் மகள். “இத்தனை வருஷம் கழிச்சு, நீங்க எதுக்கும்மா குத்தம் செஞ்சுட்ட மாதிரி பதைபதைச்சுப் போறீங்க? எனக்கு அந்த ரொட்டிக்காரன்மேல கோபமில்ல. பாவம்! அவன் சின்னப் பையனா இருந்தப்போ யார் வதைச்சாங்களோ!” ஆண்டுக்கணக்காய் உறுத்திக்கொண்டிருந்த முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்கின. ஞானம் மெல்லக் கேட்டாள்: “நாம்ப அம்மாவுக்குத் தெரியாம ஏதோ தப்பு பண்றோம். அதுக்காக எப்படியாவது அம்மாகிட்ட அடியோ, திட்டோ வாங்கியே தீரணும்னுதான் அப்படியெல்லாம் செஞ்சியா? மேலே மைலோவை வேணுமின்னே கொட்டிக்கிட்டு..!” சுதா தலையசைத்த விதத்தைப் பார்த்தால், அவள் தலை திடீரென்று கனத்துவிட்டதுபோல இருந்தது. “திட்டு வாங்கணும்னு எதிர்பாத்து, வேணும்னு செய்யல. ஆனா..,” அவள் குரல் விம்மியது. “நீங்க அடிச்சாலோ, திட்டினாலோதான் எனக்கு நிம்மதியா இருக்கும்!” என்ன நடக்கிறதென்றே புரியாத வயதில், வயதுக்கு மீறிய செயலில் பங்கெடுக்க வைக்கப்பட்டு, அது `தப்பு’ என்றவரை புரிந்து, பயம், குற்ற உணர்வு, வருத்தம் ஆகிய பலவும் அழுத்த, விடுபட வழி தெரியாது, பெரியவளாகப் போனபின், ஆத்திரத்தைத் தன் ஆயுதமாக உபயோகித்திருக்கிறாள்! கல்லூரியில் மனோதத்துவம் படித்திருந்தும், தன்னால் வாழ்க்கைக்கு அதைப் பிரயோகிக்கத் தெரியாது போய்விட்டதே என்ற பெருவருத்தம் ஞானத்துக்குள் எழுந்தது. பாலியல் வதைக்குள்ளான குழந்தைகள் நரகலை சுவற்றின்மேல் தீற்றுவது, `அம்மா காப்பாற்ற மாட்டேன் என்கிறார்களே!’ என்ற கோபத்தில் தாயையே எதிரியாக, போட்டியாகப் பாவிப்பது, பிற விஷயங்களிலாவது தன் வயதொத்தவரை மிஞ்சவேண்டும் என்ற வெறியோடு இயங்குவது -- தான் எப்படி இதையெல்லாம் ஒன்றுசேர்த்துப் பார்க்கவில்லை? கேட்க இன்னும் ஒன்றுதான் பாக்கி இருந்தது. “கன்னாபின்னான்னு டிரெஸ் பண்ணிப்பியே! ஆம்பளைங்க ஒன்னைப் பாத்து பயந்து ஓடணும்னுதானே?” சுதா கலகலவென்று சிரித்தாள் -- ஒரு வழியாக அம்மா தன்னைப் புரிந்துகொண்டார்களே என்று. ஞானம் அவள் கையை ஆதரவுடன் வருடினாள், தாய்ப்பூனை குட்டியை நாக்கால் நக்கிக்கொடுப்பதுபோல. எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறாள், இந்தச் சின்ன வயதுக்குள்! பேச எதுவும் இருக்கவில்லை. பல்லாண்டு பாரத்தை இறக்கிவைத்த நிம்மதியுடன், சுதா தாயின் தோளில் தலைசாய்த்து, விம்மத் தொடங்கினாள். தாயும் அவளுடன் சேர்ந்துகொண்டாள். 9. நிம்மதியை நாடி      ஃபெர்ரி படகு தன் சக்திக்கு மீறிய கனத்தைச் சுமந்து, மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது. உள்ளே ஒரே துர்வாடை. அதெல்லாம் ரம்லிக்குத் தெரியவில்லை. அவன் மனம் கனவுகளால் நிறைந்திருந்தது.  பெயருக்கு வீடு என்றிருந்த ஒன்றை எரிமலைக்கு -- மீண்டும் -- பறிகொடுத்துவிட்டு, இனி என்ன செய்வது என்று புரியாது நின்றிருந்தபோதுதான் ஆதான் கூறினான்: “என்னோட மலேசியா வந்துடேன். போன தடவைதான் ஒங்கப்பா, அம்மா ரெண்டு பேரையும் பலிகுடுத்தாச்சு. நீயும் இங்கேயே கிடந்து சாகப்போறியா?” சுமத்ராவில் இருந்த ஸினபோங் மலை நானுறு ஆண்டுகளாக, `இதுவும் எரிமலைதானா!’ என்று வியக்கத்தக்கதாக இருந்தது. அதற்கே அந்த அமைதி அலுத்துவிட்டது போலும்! கடந்த நான்கு வருடங்களாக, 2013-யிலிருந்து, இடைவிடாது நெருப்புக்குழம்பைக் கக்கிக்கொண்டிருந்தது. எப்போதும் வானத்திலிருந்து சாம்பல் கொட்ட, `இதெல்லாம் சாதாரணமாக நடப்பதுதானே!’ என்பதுபோல, முகத்தைத் துணியால் மறைத்துக்கொண்டு, விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர் ரம்லியைப்போன்ற ஒரு சிலர். பிறந்ததிலிருந்து பழக்கமாகிவிட்ட இடத்தைவிட்டுப் போவதா! ரம்லி தயங்கினான். “பாத்திமாவையும் கூட்டிட்டு வா,” என்று ஆசைகாட்டினான் நண்பன். பாத்திமாவா?! டச்சுக்காரர்களின் வழிவந்திருந்த சிவந்த நிறத்துடன், உயரமும் பருமனாகவும் இருந்த அவள் எங்கே, கடும் வெயிலில் ஓடாய் உழைத்து சோனியாகப்போன தான் எங்கே! “அதோட அய்த்தையும் செத்துட்டாங்க. ஒண்ணும் புரியாம நிக்குது! கூப்பிட்டா வரும்”. எப்போது எரிமலைக் குழம்பு தன் தலையில் விழும் என்று பயந்துகொண்டு இருக்க வேண்டியதில்லை. அந்த நினைப்பே சற்று நிம்மதியாக இருந்தது. பாத்திமாவை உடன் அழைத்துக்கொண்டு ஃபெர்ரியில் ஏறியிருந்தான் ரம்லி. “உங்களுக்கெல்லாம் அங்கே வேலை செய்ய அனுமதி இல்லே. சும்மா டூரிஸ்டு விசாவில வர்றீங்க. ஆனா, அங்கே வேலை கிடைக்க நான் ஏற்பாடு பண்ணறேன்! நல்லா சாப்பிடலாம். தங்க எடமும் குடுப்பாங்க,” அவர்களுடன் பயணித்த ஏஜண்டு கூறினார். “ஆனா ஒண்ணு. இமிகிரேஷனிலிருந்து யாராவது வந்தா மட்டும் ஓடி ஒளிஞ்சுக்கணும்!” “ஏன் ஒளிஞ்சுக்கணும்?” யாரோ கேட்டார்கள். “சட்ட பூர்வமா வேலை செய்யற ஆளுங்களுக்கு  முதலாளிங்க மலேசிய கவர்மெண்டுக்கு ஆயிரக்கணக்கில பணம் கட்டணுமில்ல? அதோட, ஒங்களை வேலைக்கு வெச்சா, குறைச்சலா சம்பளம் குடுக்கலாம்,” என்ற ஏஜண்டு, “இந்த ஒலகத்திலே எல்லாரும் போக்கிரிப் பசங்க!” என்றான், பெரிய சிரிப்புடன்.   சில மாதங்கள் இன்பமாக கழிந்தன. கட்டட வேலை இடுப்பை ஒடித்தது என்றாலும், பாத்திமாவின் அணைப்பில், அவள் ஒவ்வொன்றையும் அவனைக் கேட்டுச் செய்த மரியாதையில் சொர்க்கத்தையே உணர்ந்தான் ரம்லி. அன்று காலையிலிருந்தே வாந்தி எடுத்துக்கொண்டிருந்தாள் பாத்திமா. பெருமையுடன் அவளைப் பார்த்தான் ரம்லி. இனியும் ஒற்றை மரமில்லை. தன் குடும்பம் தழைக்கப்போகிறது! “வாந்தி நிக்கவே இல்லியே! எத்தனை நாள்தான் விடுப்பு எடுக்கிறது!” என்று பாத்திமாவே முனகியபோதுதான், `இது கர்ப்பமாக இருக்காதோ?’ என்ற சந்தேகம் முதன்முறையாக உறைத்தது ரம்லிக்கு. “அஞ்சு நாளா இப்படியே வாந்தியும் பேதியுமா இருக்குன்னு சொல்றீங்களே! காய்ச்சல் வேற அதிகமாக இருக்கு. இது டெங்கிதான்!” என்றார் டாக்டர். பக்கத்தில் நின்றிருந்த நர்ஸ், “ஒங்க வீட்டுக்கிட்டே கொசுத்தொல்லை அதிகமோ?” என்று மெள்ள விசாரித்தாள். ரம்லி உதடுகளை இறுக்கிக்கொண்டான். மெல்லிய மரப்பலகைகளால் ஆன சுவர். தரைக்கு கனமான அட்டை, கோணல்மாணலான உலோகத்தகடுகளே கூரை. உள்ளே தடுப்புக்கு கிழிந்த ஸாரோங். அதற்கு வீடு என்று பெயர். குளிப்பதிலிருந்து குடிப்பதுவரை அருகிலிருந்த குளத்து நீர்தான். இந்த லட்சணத்தில், கொசு இருக்கிறதா என்று கேட்கிறாள்! கொசுக்களின் இருப்பிடத்தில் அவர்கள் வாழ்கிறார்கள். அவ்வளவுதான். “மொதல்லேயே வந்திருக்கணும்!” என்று அதிருப்தி தெரிவித்தார் டாக்டர். மருத்துவச் செலவுக்குக்கூட காசில்லை, அதனால்தான் அவள் உடல்நிலையைப் பெரிதாக எண்ணவில்லை என்று ரம்லியால் சொல்ல முடியவில்லை. அவனைப் போன்றவர்களின் துன்பம்  வெள்ளையும் சொள்ளையுமாக இருக்கும் இந்த டாக்டரைப்போன்ற பெரிய மனிதர்களுக்குப் புரியுமா? அசட்டுச் சிரிப்புடன் பரிதாபமாக விழித்தான். பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பாத்திமாவின் உடல் பூராவும் பல குழாய்கள். அவளுடைய கைகால்கள் எல்லாம் பருத்திருந்தமாதிரி தோன்றியது ரம்லிக்கு. கைகளோ தன்னிச்சையாக ஆடி, பக்கவாட்டிலிருந்த கட்டிலின் உலோகச் சட்டத்தில் தாளம் போட்டன. `காலில் வலி,’ என்று உதைக்க ஆரம்பித்தாள். ரம்லி அவள் காலை நீவிக்கொடுக்க ஆரம்பித்தான். எத்தனை இரவுகள் அவள் தன் காலைப் பிடித்துவிட்டிருப்பாள், `பாவிங்க, என்னமா வேலை வாங்கறாங்க!’ என்று திட்டியபடி! `நாம்ப ஏழைங்க, பாத்தி! எல்லாத்தையும் பொறுத்துப்போனாதான் பணம் கிடைக்கும்! வயிறுன்னு ஒண்ணு இருக்கே!’ என்று அவளைச் சமாதானம் செய்தது நினைவில் கசப்பாக எழுந்தது. “ம்மே..” அடிவயிற்றிலிருந்து பாத்திமாவின் வேதனைக்குரல் எழும்பியது. இருமுறை. வலி பொறுக்காத மாடு ஒன்று கத்துவது போலிருந்தது. எப்போதும் இனிமையாகப் பேசுபவளா இவள்! ரம்லிக்கு அலுப்பாக இருந்தது. இவளுக்கு சிசுருஷை செய்துகொண்டிருந்தால், இருக்கும் வேலையும் போய்விடும். பசியையும் பட்டினியையும் தாங்க முடியாதுதானே அந்த பணக்கார, அண்டை நாட்டுக்கு வந்திருந்தான்! “வேலைக்குப் போகணும், பாத்தி!” என்று பொதுவாகச் சொல்லிவிட்டு, தளர்ந்த நடையுடன் வெளியே நடந்தான்.  “ரம்லி! ராத்திரியிலேருந்து யாரோ ஒன்னை கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க! ரொம்ப அவசரமாம்!” மேஸ்திரியின் தொலைபேசி எண்ணைக் கொடுத்திருந்தான் மருத்துவமனையில்.  வாங்கியவனின் முகத்தில் கலக்கம். “உங்கள் மனைவியின் உடல் ரொம்ப மோசமாக இருக்கிறது. உடனே வாருங்கள்!” நரம்பு அறுவைச் சிகிச்சை நிபுணர் அவனுக்காகவே காத்திருந்ததுபோல் இருந்தது. நேரிடையாக விஷயத்துக்கு வந்தார். “மூளையில ரத்தம் கசியறதால, இவங்க தலை பெரிசாகிக்கிட்டே வருது. உடனடியா ஆபரேஷன் பண்ணணும்”. ஆபரேஷனா! அஞ்சு, பத்துக்கே இங்கே வழியைக் காணோம்! ஆயிரக்கணக்கான ரிங்கிட்டுக்கு எங்கே போவது! டாக்டர் தாழ்ந்த குரலில், தன்பாட்டில் பேசிக்கொண்டு போனார்: “ஒரு வேளை, ஆபரேஷன் பண்றப்போ அவங்க உயிர் போயிட்டா, தலையைத் தனியா எடுத்து, ஆராய்ச்சிக்கு வெச்சுக்குவோம். ஆறுமாசம் கழிச்சு, திரும்பவும் உடலோடு சேர்த்துத் தைச்சு ஒங்ககிட்ட குடுத்துடுவோம்! ஆபரேஷன் பண்ணாட்டி, எப்படியும் உயிர் போயிடும்!” டாக்டர் ஏதேதோ கூறினார், `ஸப்ஸிடி’ (subsidy), உதவி என்று. இந்தப் படித்தவர்கள் பேச ஆரம்பித்தாலே அவனுக்குக் குழப்பம்தான் எழுகிறது. காது அடைத்துப் போகிறது. மலேசிய அரசாங்கம் மருத்துவச்செலவில் பெரும்பகுதியைக் கொடுத்துவிடும், சில நூறுகளே அவன் கொடுக்க வேண்டியிருக்கும் என்றவரின் விளக்கம் ரம்லிக்குப் புரியத்தானில்லை. ஒன்று மட்டும் புரிந்தது அவனுக்கு. தன்னை இறுக அணைத்த பாத்திமாவின் கைகள்! அவை இனி எழாது! `ஆபாங்! ஆபாங்!’ என்று நொடிக்கு நொடி அழைத்த இதழ்கள் இனி பேசாது! வெகு மோசமான நிலையில் இருப்பதாகச் சொல்கிறார்களே! பிழைத்தெழுந்து, பழையபடி வேலைக்குப் போய் காசு சம்பாதித்துக்கொண்டு வர முடியுமா அவளால்? அதுதான் டாக்டர் சொன்னாரே, `தலையில் ஓட்டை போடுவோம். பிழைத்தாலும், கைகால் விளங்காமல் போகலாம். பேச முடியாமல் போகலாம்,’ என்று! அவளைப் படுக்க வைத்து, இறுதிக் காலம்வரை ஒரு கைக்குழந்தைபோல் பார்த்துக்கொள்ளவேண்டி இருக்கும். நடக்கிற காரியமா! “என்ன முடிவு எடுத்திருக்கீங்க? படிச்சுப் பாத்துட்டு கையெழுத்துப் போடுங்க!” ஏதோ காகிதத்தை நீட்டினாள் தாதி. “வேணாம்,” என்றான் தயங்கியபடி. “ஆபரேஷன் வேண்டாமா?” “எனக்கு.. எனக்கு.. படிக்கத் தெரியாது!” அத்தனை துயரத்திலும் தன் இயலாமை அவனை அவமானத்தில் ஆழ்த்தியது. குரல் வெளியே வரவில்லை. இன்னும் சில நிமிடங்கள்தாம். சுயநினைவுடன், ஆனால் அசைவின்றி, படுத்திருந்த அன்பு மனைவியின் கன்னங்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி, அவள் நெற்றி முழுவதும் முத்தமிட்டுக்கொண்டே இருந்தான் ரம்லி. நடுநடுவில், தன் கண்ணீரையும் துடைக்க வேண்டியிருந்தது. “பாத்திமா! ஸாயாங்!” என்று வாய் முணுமுணுத்தபடி இருந்தது. அடுத்து நடந்ததெல்லாம் ஏதோ கனவுபோல் இருந்தது. ஆறு பேர் பாத்திமாவைத் தூக்கி சக்கரம் பொருத்தியிருந்த கட்டிலில் கிடத்தி, எங்கோ அழைத்துப் போனார்கள். இரண்டு மணி நேரம் கழிந்தன. டிராலியில் நோயாளிகளுக்கான ஆகாரம் வெங்காயத்தழையின் வாசனையுடன் வந்தது. தான் நேற்று இரவிலிருந்து எதுவுமே சாப்பிடவில்லை என்பது அப்போதுதான் நினைவுக்கு வந்தது ரம்லிக்கு. இங்கேயே இருந்தால், பணத்துக்காக நெரிப்பார்களே! பயம் பிடித்துக்கொண்டது. காம்பவுண்டை விட்டு வெளியே விரைந்தான். கால்சட்டைப் பையில் பாஸ்போர்ட் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டான். இனியும் அதே இடத்துக்கு வேலை பார்க்கச் செல்ல முடியாது. இந்த வேலை இல்லாவிட்டால், இன்னொன்று! `குடுக்கறதைக் குடுங்க!’ என்று பவ்யமாகக் கைகட்டி நின்றால், எந்த செம்பனைத் தோட்டத்திலும், கட்டுமானத் தொழிலிலும் வேலைக்கு வைத்துக்கொள்வார்கள். எங்காவது தொலைதூரத்தில் புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டியதுதான்! அதற்கென்ன! ஆஸ்பத்திரியில் அவனைக் கூப்பிட்டுப் பார்ப்பார்கள். அவன் கிடைக்கமாட்டான் என்பது உறுதியானதும் பாத்திமாவின் உடலை எப்படியோ உபயோகித்துக்கொள்வார்கள். இனி அவர்கள் பாடு! கடந்த நாட்களின் துன்பமும் துயரமும் மறைய, ரம்லி நடையை வீசிப்போட்டான். சற்றே நிம்மதியாக உணர்ந்தான். ஓரிரு நிமிடங்கள்தாம். நின்ற இடத்திலேயே நின்று, கழுத்தை வளைத்து, சற்று தூரத்தில் தெரிந்த பெரிய, வெள்ளைநிறக் கட்டடத்தைப் பார்த்தான். “பாத்தீ! அடுத்த பிறவியிலேயாவது பணக்கார வீட்டிலே பிறம்மா!” விம்மி விம்மி அழும் அந்த இருபது வயது இளைஞனை வேடிக்கை பார்த்தபடி நகர்ந்தார்கள் தெருவில் போனவர்கள். குறிப்பு: ஆபாங் (abang) என்று வார்த்தை அண்ணனைக் குறித்தாலும், கணவனையும்  விளிக்கும் வார்த்தை. சாயாங் = அன்பே . 10. ஏனிந்த முடிவு?      தொலைபேசியைக் கையில் எடுத்தவுடனேயே அம்மா கூறினாள், முகமன்கூட இல்லாமல்: “திவா போயிட்டான்”.   அக்குரலிலிருந்த தீர்மானம், இனி அவன் எங்கேயும் போகமுடியாது என்று ஒலிப்பதுபோலிருந்தது. “அண்ணன் குடும்பத்தோட சண்டையோ, பூசலோ, இந்தச் சமயத்தில விட்டுக்குடுக்கலாமா? நான் போய் பார்த்தேன். உடம்பெல்லாம் நீலம் பாரிச்சு..!” அதற்குமேல் கேட்க முடியவில்லை சுதாவால். இயற்கையான சாவு நேர்ந்தால் உடலில் உடனே நிறமாற்றம் உண்டாகுமா? `இது தற்கொலைதான்!’ என்று அவளது அந்தராத்மா கூவியது. ஏனெனில், இது திவாகரின் முதல் தற்கொலை முயற்சி அல்லவே! அம்மா தன்பாட்டில் பேசினாள்: “திவாவோட சாவுக்கு ஆளுக்கு ஒரு காரணம் சொல்றாங்க. விஷக்காய்ச்சல்னு சிலபேர். ரெண்டு தங்கைகளுக்கு கடன் வாங்கிக் கல்யாணம் செஞ்சு குடுக்கறதுக்காக வாங்கின கடனை அடைக்க முடியாம்போன அதிர்ச்சியில மாரடைப்புங்கிறாங்க மத்தவங்க”. ஏதாவது பேசியாக வேண்டுமே என்று சுதா வாயைத் திறந்தாள். “எப்படிப் போனா என்னம்மா? போயிட்டான். அவ்வளவுதான். கல்யாணமாகி ஒரு வருஷம்தானே ஆச்சு! பாவம், அவ!” தான் பார்த்தே இராத பெண்ணுக்காகப் பரிதாபப்பட்டாள். “நீ வேற! பிணம் இந்தப் பக்கம் போகுது, அவன் பெண்டாட்டி அந்தப் பக்கம் அவங்கப்பா வீட்டுக்குப் போயிட்டா. சம்பிரதாயத்துக்குக்கூட அழவே இல்ல! என்னத்த சொல்றது! நல்லாவே இல்லே, போ!” அப்படியானால், அந்த தம்பதியருக்குள் எத்தகைய உறவு இருந்திருக்கும்? இத்தனைக்கும், ஓராண்டு காலம் ஒரே வீட்டில் வாழ்ந்திருக்கிறார்கள்! யோசிக்க ஆரம்பித்தாள் சுதா.   அவளுடைய பெற்றோரின் வீடு மாடியும் கீழுமாக விசாலமாக இருந்தது. அங்கு அவனுக்கென்றே தனி அறையை விட்டிருந்தார்கள். சுவற்றை ஒட்டிய புத்தகங்களுடன் வாசகசாலையை ஒத்திருக்கும். அவனுடைய தாய் வீட்டில் ஒரே ஹாலில் சகோதரிகளுடன் படுப்பதைவிட இங்கு எவ்வளவோ சுகமாக இருந்தது. ராஜி அத்தைக்கு எந்த உதவி வேண்டுமானாலும் அவனைத்தான் அழைப்பாள். “எதுக்கு அத்தை என்னை அவ்வளவு அவசரமா வரச்சொன்னீங்க?” “நம்ப வீட்டுக்கு ஒங்க மாமாவோட சிநேகிதர் வந்திருக்காருடா, திவா. எனக்கு முக்கியமான வேலை இருக்கு. ஒனக்குப் பள்ளிக்கூடம் லீவுதானே! அதான்! சுதாவை எப்படித் தனியா விட்டுட்டுப் போறதுன்னு யோசிச்சேன்”. திவாகர் சிரித்தான். “சுதாவுக்கு நான் காவலா? நல்ல வேடிக்கைதான்! அவகிட்ட வாலாட்டறவங்களை சும்மா விட்டுடுவாளா? ஒதைக்க மாட்டா?” என்னதான் மகள் தற்காப்புக் கலையில் கறுப்புப்பட்டி ஜெயித்திருந்தாலும், பதினெட்டு வயதுப் பெண்ணை யாரோ ஒரு ஆணுடன் தனியாக விடலாமா? தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள். “அட, இதுக்குப் போய் கெஞ்சணுமா? என்ன அத்தை நீங்க!” “நீ ஏதாவது புஸ்தகத்தை எடுத்துப் படிச்சுக்கிட்டிரு, திவா. சுதா கீழே படிச்சுக்கிட்டிருக்கா. பாத்துக்க. சீக்கிரமே அந்த அங்கிள்  வெளியில் கிளம்பிடுவார்,” என்று ரகசியக்குரலில் கூறிவிட்டு ராஜி அத்தை பறந்தாள். மாடியில் தொலைகாட்சிமுன் அமர்ந்திருந்த மனிதர் அவனைக் கவனித்ததாகவே தெரியவில்லை. அடுத்து என்ன செய்வதென்று புரியாது, அவன் தன் அறைக்குப் போய் கட்டிலில் படுத்தான். “திவா! கதவைச் சாத்திக்கிட்டு என்ன பண்ணிக்கிட்டிருக்கே?” இரண்டு நிமிடங்களுக்குமேல், கதவை உடைக்காத குறையாகத் தட்டி ஆர்ப்பாட்டம் செய்தாள் அவள். “எனக்கு அங்க ஒரு புஸ்தகம் வேணும். திறக்கப்போறியா, இல்லையா?”    சிறிது தாமதமாக அவன் கதவைத் திறந்தபோது, கட்டிலில் படுத்திருந்த விருந்தாளி சற்று புரண்டு படுத்ததைக் கவனித்தாள். உள்ளை போக யத்தனித்தவளிடம், “நீ இரு,” என்றவன் கதவை வெளியில் சாத்தினான். “தாங்க்ஸ்!” என்றான் முணுமுணுப்பாக. அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள் சுதா. அவன் முகம் அழுவதுபோலிருந்தது. தலை மிகக் குனிந்திருந்தது. “அத்தைகிட்ட சொல்லிடாதே!” என்றான் கெஞ்சலாக. அவனுக்கிருந்த படபடப்பில், தவறு யார்மேல் என்று ஆராயத் தோன்றவில்லை. எவ்வளவு பெரிய இக்கட்டிலிருந்து தன்னைக் காப்பாற்றி இருக்கிறாள்! இவள் தனக்கு எந்த சந்தர்ப்பத்திலும் பக்கபலமாக இருப்பாள் என்ற நம்பிக்கை வந்தது. முதலில் படிப்பு, பின்பு சுதாவின் கல்யாணப்பேச்சு எடுக்கப்படும்போது தன் எண்ணத்தை அத்தையிடம் தெரிவித்தால் மறுக்கவா போகிறாள் என்று பொறுத்துப்போக எண்ணினான். ஆனால் திவாகரால் நீண்ட காலம் பொறுமையாக இருக்க முடியவில்லை. ஆத்திரத்துடன் உள்ளே நுழைந்தவளை ஆச்சரியத்துடன் பார்த்தாள் ராஜி. “இந்த திவா என்ன நினைச்சுக்கிட்டிருக்கான்? எனக்கு காதல் கடிதம் எழுதியிருக்கான்மா. அதுவும் காலேஜூக்கு!” “எங்கே, கொண்டா!” “அது.. எனக்கு வந்த கோபத்திலே ஒடனே கிழிச்சுப் போட்டுட்டேன். பிரின்சிபல் கைக்குப் போயிருந்தா..?” “ரொம்ப நல்லவன்மாதிரி நடிச்சானே, ராஸ்கல்! இவனையெல்லாம் வீட்டிலேயே சேர்த்திருக்கக் கூடாது!” அந்த சிறிய சமாசாரம் பூதாகாரமாக உருவெடுக்க, அண்ணன் தங்கை உறவு அறுபட்டது. ஆனால், திவாகர் மனம் தளரவில்லை. “சுதா! நீ எனக்குப் பதிலே தரலியே?” கட்டைக்குரல் கீச்சுக்குரலோடு கலந்து ஒலித்தது. தன்னையுமறியாமல், அவ்வப்போது கீச்சுக்குரலில் பேசுவான். `வேடிக்கை’ என்றெண்ணி பிறர் சிரிக்க, அப்போதெல்லாம் அவமானத்தால் அவன் முகம் சிவந்துவிடும். அவனை ஏறெடுத்துப் பார்த்த சுதா திகைத்தாள்.  முன்பு பார்த்துப் பழகிய திவாவா இவன்! உலகிலேயே அழகில் தன்னை மிஞ்சுபவர்கள் கிடையாது என்ற கர்வம் பதின்ம வயதினருக்கு எழுவது இயற்கை. திவாகர் தன் உருவத்தில் செலுத்திய கவனத்தால் பிற ஆண்பிள்ளைகளின் கேலிக்கு இலக்காகி இருந்தானே! ஈரத்தலை சொட்டச் சொட்ட அவன் அரைமணி நேரம் தலை சீவிக் கொண்டது மறக்கக்கூடியதா! இப்படி கலைந்த தலையும், குழிவிழுந்த கன்னங்களுமாக, ஏதோ பஞ்சத்தில் அடிபட்டவன்போல் காட்சி அளிக்கும்படி அப்படி என்ன நேர்ந்துவிட்டது? அவளுக்கு முன்பு எப்போதோ நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. `ஐயே! எங்க வீட்டில பொம்பளை ராஜ்ஜியம்! யாருக்கு அங்க இருக்கப் பிடிக்கும்!’ என்றான் திவா. அவனுக்கு மூன்று தங்கைகள், ஒரு அக்காள். அப்போது சிரித்தபடி வந்தான் அண்ணன் சிவா. `அதான் நீயும் பொம்பளைமாதிரி ஆகிட்டியா, திவாகரி?’ `அண்ணா! அசிங்கமாப் பேசாதே!” அவனுக்கு அன்று பரிந்ததைத் தவறாக எடுத்துக்கொண்டுவிட்டானோ! இப்படிச் சுற்றிச் சுற்றி வருகிறானே! தான் எப்போது, எங்கு போவோம் என்று கவனித்து, வாசகசாலைக்கும் வந்துவிட்டான்! “சுதா! நீ எனக்குப் பதிலே தரலியே?” மீண்டும் கேட்டான் திவாகர். அண்ணனுடனும் அவனுடனும் சிறு வயதிலிருந்தே விளையாடி இருக்கிறாள். படித்த புத்தகங்களைப்பற்றி விவாதித்து இருக்கிறாள். ஒரே வயது மூத்தவனான அவனிடம் பாடங்களில் சந்தேகம் கேட்டிருக்கிறாள். இப்போதோ அவனைப் பார்த்தாலே அருவருப்பாக இருந்தது. “ஃபார் ஹெவன்ஸ் ஸேக்! (For heaven’s sake)”  என்று அடிக்குரலில் கர்ஜித்தாள். “என்னைத் தொந்தரவு செய்யாதே!” திவாகர் எந்த நிமிடமும் அழுதுவிடுவான் போலிருந்தது. தளர்நடையுடன் அங்கிருந்து சென்றான். மறுநாள் வாசகசாலை நிர்வாகி, “ஒங்க சொந்தக்காரராமே! இதை ஒங்ககிட்ட கொடுக்கச் சொன்னார்!” என்று ஒரு சிறு கவரைக் கொடுத்தபோது, தன் முகபாவம் மாறாமலிருக்கப் பெரும்பாடு பட்டாள் சுதா. அதைப் பிடுங்காத குறையாக வாங்கிக்கொண்டு, வீட்டுக்கு விரைந்தாள். அதில் ஒரே வரி: என் தற்கொலை முயற்சி என் நண்பர்களால் தடுக்கப்பட்டது. அந்த எழுத்துக்களின்மேல் ஒரு மெல்லிய கோடு. எழுதிவிட்டு, பிறர் கண்ணில் படாமலிருக்க அடிக்கிறானாம்! ராஜியும் சுதாவும் சேர்ந்து சிரித்தார்கள். “பைத்தியம் பிடிச்சிருக்கு இவனுக்கு!” என்றாள் ராஜி. “இனிமே நீ தனியா எங்கேயும் போகவேண்டாம், சுதா! பாக்கறவங்க லைப்ரரிக்காரன்தான் ஒனக்கு லவ் வெட்டர் எழுதி, எழுதிக் குடுக்கிறான்னு நினைக்கப்போறாங்க!” என்றவள், `சீக்கிரமே இவளுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைச்சுடணும். இல்லாட்டி இது எங்கே போய் முடியுமோ!’  என்று முடிவெடுத்தாள். `பட்டப்படிப்பு முடிந்ததுமே கல்யாணமா!’ என்று சுதா அடம் பிடிக்கவில்லை. இனி திவாவின் தொல்லை இருக்காது என்ற நிம்மதி பிறந்தது. “திவாகருக்கு கல்யாண இன்விடேஷன் அனுப்ப வேண்டாம்னு பாக்கறேன்!” தாயின் யோசனையை ஏற்கும்விதமாக சுதா தலையசைத்தாள். அடுத்த ஆண்டே ஒரு பெரிய காகித உறை -- அழகிய பூ வேலைப்பாட்டுடன், சரிகை மின்ன, பூமாலையணிந்த ஆணும் பெண்ணும் கைகோர்த்த நிலையில் இருந்த படத்துடன் -- தபாலில் வந்தது. பிரிக்காமலேயே அது யாரிடமிருந்து வந்திருக்கிறது என்று புரிந்து போயிற்று சுதாவுக்கு. வேறு யார்! `உன்னைவிட்டால் எனக்கு வேறு பெண்ணே கிடைக்கமாட்டாளோ?’ என்று திவாதான் சவால் விட்டிருக்கிறான்! திவாகரை, `திவாகரி,’ `பொம்பளை’ என்று பிற பையன்கள் பலவாறாக கேலி செய்ததில் ஏதோ உண்மை இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், அன்று அந்த மனிதர் அவ்வளவு துணிச்சலுடன் அவனிடம் முறைகேடாக நடக்கத் துணிந்திருப்பாரா?   தானே ஒத்துக்கொள்ள விரும்பாத இயல்பை அவன் உணர்ந்து அதிர்ந்த தருணமோ அது? அதை ஏற்கத் துணிவில்லாது, `ஒரு பெண்ணை மணந்தால் எல்லாம் சரியாகிவிடும்!’ என்று கணக்குப் போட்டிருக்க வேண்டும். அந்த பயத்தில்தான் தன்னை அப்படித் துரத்தியிருக்கிறான்! அப்படியானால், கல்யாணமாகி ஒரு வருடத்துக்குள் ஏனிந்த முடிவை எடுத்தான்?   சுதாவின் கற்பனை கட்டுக்கடங்காமல் ஓடியது. திவாகரால் இன்னொரு பெண்ணுடன் இணைந்து, ஓர் ஆண்மகனாக வாழ முடியாமல் போயிருக்கும். எந்தப் பெண்ணுக்கும் உற்ற கணவனாக அவனால் இருக்க முடியாது என்ற உண்மை தந்த அதிர்ச்சியைத் தாங்காதுதான்..! “பாவம், திவா!” என்றாள் சுதா. உரக்கவே.