[] [cover image] சச்சின் சுயசரிதையிலிருந்து சில பக்கங்கள் கொல்லால் எச்.ஜோஸ் FreeTamilEbooks.com Creative Commons Attribution-NonCommercial-ShareAlike சச்சின் சுயசரிதையிலிருந்து சில பக்கங்கள் 1. சச்சின் சுயசரிதையிலிருந்து சில பக்கங்கள் 1. என்னுரை… 2. என் வழி தனி வழி சச்சினின் சுயசரிதையிலிருந்து சில பக்கங்கள் 3. சச்சின் குடும்பமும் பின்னணியும்… 4. ஆசான் ஆச்ரேக்கர்… 5. சச்சின் வாழ்வின் இனிதான இரண்டாம் இன்னிங்ஸ் அஞ்சலியோடு ஆரம்பம்… 6. பிரகாசிக்க முடியா கேப்டன் பதவி… 7. சச்சின் சந்தித்த காயங்கள்… 8. சச்சினாய் இருப்பதிலுள்ள சங்கடங்கள்… 9. சிண்டு மூட்ட முயற்சித்த டாக்டர்… 10. சச்சினின் 21 வருடக் காத்திருப்பு நிறைவேறியது 11. சச்சினின் இறுதி இரண்டு ஆட்டங்கள் 12. இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட மனிதன் சச்சின்… 13. புத்தகத்தைக் குறித்து… சச்சின் சுயசரிதையிலிருந்து சில பக்கங்கள் சச்சின் சுயசரிதையிலிருந்து சில பக்கங்கள்   கொல்லால் எச்.ஜோஸ்   joseharichandran@gmail.comதமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : Creative Commons Attribution-NonCommercial-ShareAlike கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/sachin_suyasarithaiyilirunthu_sila_pakkangal} என்னுரை… புத்தகங்கள் வாசிப்பது பிடிக்குமெனக்கு இப்பழக்கம் எப்படி என்னிடம் ஒட்டிக்கொண்டது என அடிக்கடி யோசிப்பதுண்டு. தலைப்பு செய்தியை படிக்க விரும்பா காலத்தில் கூட சச்சின் பற்றி வரும் துணுக்கு செய்திகளைப் படித்துவிடுவேன். அப்போதெல்லாம் சச்சின் பற்றிய செய்திகளை படிக்கவே தினசரியை கையில் எடுத்திருக்கிறேன். பள்ளி பாடம் தாண்டி வாசிப்பு பழக்கம் என்பது சச்சினிலிருந்தே தொடங்கி இருப்பதாகவே உணர்கிறேன்… கிரிக்கெட் விளையாட்டு அறிமுகமாகி இருக்கும் நாடுகளில் சச்சினை அறிந்திராதவர் இருக்க வாய்ப்பில்லை. சச்சின் எனும் பெயரை உச்சரிக்காத இந்திய உதடுகளே இல்லை எனலாம். அந்த அளவுக்கு இந்தியாவில் சச்சின் பிரபலம். சச்சினை எனக்கு எந்தளவு பிடிக்குமென்றால் சச்சின் ஓய்வுக்குப் பிறகு கிரிக்கெட்டை வெறுக்கும் அளவுக்குப் பிடித்திருந்தது… எனக்குப் பிடித்த சச்சினை எனக்குப் பிடித்தது போல் சொல்ல போகிறேன்… சச்சினை பிடித்தவர்களும் சச்சின் தன் புத்தகத்தில் எழுதியுள்ளதை அறியும் ஆவலுள்ளவர்களும் அவருடைய புத்தகத்தில் அவர் சொல்லியுள்ளதன் சுருக்கத்தை படிக்கும் ஆர்வமுள்ளவர்களும் படிப்பீர்கள் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்வீர்கள் என்று நம்புகிறேன் அது எனக்கு ஊக்கமாயும் உற்சாகமாயும் அமையும்… அதிகம் பேசுவதைவிட அதிகம் கேட்பது நல்லது… அதிகம் எழுதுவதைவிட அதிகம் படிப்பது நல்லது… நாம் படித்ததை பிறருக்குச் சொல்வது இன்னும் நல்லது… அதையே இப்போது நானும் செய்ய போகிறேன்… என்னுடைய மொழியில் என்னுடைய நடையில். கோடி கோடி உள்ளங்களைக் கொள்ளை கொண்ட சச்சின் தனது உள்ளத்தைத் திறந்து வைத்திருக்கிறார் தன் புத்தகத்தில், அதிலிருந்து சில பக்கங்களை இதோ, உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். [] அன்புடன், கொல்லால் எச். ஜோஸ் 14 - 9 - 18 Joseharichandran@gmail.com Whatsup: +919486593651 “என் வழி தனி வழி” சச்சினின் சுயசரிதையிலிருந்து சில பக்கங்கள் 1989 நவம்பர் மாதம் 16 தேதி இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டெடுத்த விலைமதிப்பில்லா முத்தான சச்சின் எனும் சகாப்தம் தனது நீண்ட நெடிய பயணத்தை துவங்கிக்கொண்டிருந்தது. கரவொலிகள் இல்லை, சச்சின், சச்சின் என்ற கோஷங்கள் இல்லை, எந்தவொரு எதிர்பார்ப்புமில்லை, உலக அரங்கில் யாருக்கும் அறிமுகமில்லா சிறுவனான சச்சின் இருபத்திரண்டு ஜக நீள கீரிஸ்சை நோக்கி நடந்து கொண்டிருந்தான். ஒவ்வொரு கிரிக்கெட் வீரனின் உச்சக்கட்ட கனவான இந்திய அணிக்காக விளையாடுவது என்ற தனது லட்சிய கனவு பால்ய வயதிலே நிறைவேறிய மகிழ்ச்சியோடு கிரிக்கெட் மட்டையை கையிலேந்தியபடி செல்கிறான். அவனையொத்த வயதுடைய சிறுவர்கள் பள்ளிக்கும் பக்கத்து வீட்டு காம்பண்ட் சுவரில் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருக்க அவனோ நூறுகோடி இந்திய மக்களின் கனவை சுமந்து கொண்டு கீரிசினுள் நுழைந்தான். தான் கண்ட கனவு நிறைவேறியது ஆனால் அங்குக் கிடைத்த அனுபவமோ சுகமானதாகவோ சுவையானதாகவோ இல்லை. தன்னுடைய முதல் போட்டியை சுமையானதாக மாற்றியளிக்க கையில் பந்துடன் வேகப்பந்து வீச்சு வேதாளங்களான வாசீம் அக்ரமும், வக்கார் யுனிஸும் காத்துக்கொண்டிருந்தனர். ஆடுதளத்தில் தான் சந்தித்த முதல் பந்திலிருந்தே திணறுகிறான் அவன், தடுமாறுகிறான் அவன், பந்துகள் பலதும் மட்டையை தொடாமலே தப்பித்து ஓடுகிறது. பின்னாட்களில் அவர்களை ஓட ஓட விரட்டியடித்த சச்சின் அன்றைக்கு அவர்கள் பந்துவீச்சிற்கு ஈடுகொடுக்க முடியாமல் கீரிசில் தான் தத்தளித்தேன் என்பதை ஒத்துக்கொள்வதில் தனக்கு எவ்வித கூச்சமோ சங்கடமோ இல்லை எனத் தெளிவாகவே சொல்லி வைக்கிறார் தன் நூலில். சச்சின் அவ்வின்னிங்சில் சந்தித்த பந்துகள் இருபத்திநான்கு அதில் பாதிக்கு மேல் மட்டைக்குத் தூரமாகவே செல்கிறது. இரண்டு பவுண்டரிகள் அடித்திருந்தான் இருப்பினும் தன் ஆட்டத்தில் திருப்தியில்லாமல் வக்கார் யுனிஸ்ஸால் கீரிசிலிருந்து வெளியேற்றப்பட்டு பெவிலியனை நோக்கி நடந்து கொண்டிருந்த அச்சிறுவனின் மனம் தெளிவின்றி குழம்பிப் போயிருந்தது. ஏமாற்றம் விரக்தியோடு நடந்து கொண்டிருந்தவனின் சிந்தைப் பல கேள்விகளைக் கேட்டு கொண்டிருந்தது. நாம் என்ன தவறு செய்தோம்? ஏன் நம்மால் சரிவர விளையாடமுடியவில்லை? இறுதியாக விளையாடிய இரானி கோப்பையில் கூட சதம் அடித்திருந்தோமே! அப்படியானால், நாம் இன்னும் உலக நாடுகளுக்கிடையே விளையாடும் தகுதியை பெறவில்லையா? என மனது குழம்பிக்கொண்டிருந்தது. அப்போட்டி டிராவில் முடிந்தது. அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா? எனச் சந்தேகத்தோடு ஏங்கிக்கொண்டிருந்த சச்சினை நம்பியது கிரிக்கெட் வாரியம்; அடுத்துக் கிடைத்த வாய்ப்பையும், தன் மீது வைத்திருந்த நம்பிக்கையும் காப்பாற்றிய சச்சின் தனது முதல் சர்வதேச அரைசதத்தை எட்டினார். தன் மீது தனக்கே தன்னம்பிக்கையும் பெருகிற்று. அத்தொடரின் இறுதி போட்டியின் இறுதி இன்னிங்ஸ்ல் இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணி தத்தளிக்க களத்திற்கு வருகிறான் சச்சின். அப்போட்டியைக் காண தனது பிரியமான அண்ணன் அஜீத்தும் வந்திருந்தார். ஒற்றை ரன் எடுத்திருந்த போது வக்கார் யுனிஸ் வீசிய பந்து தன் ஹெல்மட்டில் பட்டு மூக்கைப் பதம் பார்க்க ரத்தம் சொட்டுகிறது, தலை சுழலுகிறது, வலி ஒரு புறம், ஜாவித் மியான்டட்டின் கேலி பேச்சு மறுபுறம் என்றிருக்க அதற்குப் பின் கண்ணில் கண்ட “சின்னப் பயலே வீட்டிற்குச் சென்று பால் குடித்து வா!” போன்ற வாசகங்களால் மனம் துவண்டு போகாமல் மீண்டும் துணிந்து நின்றான் களத்தில். அடுத்த இருபத்தி நான்கு வருடத்திற்கான அஸ்திவாரம் அப்போதே போடப்பட்டது. சச்சின் புத்தகத்தில் வேண்டுமானால் இப்படிச் சொல்லியிருக்கலாம் அடுத்தடுத்து வந்த பந்துகளை பழி வாங்கும் எண்ணத்தோடு அல்ல அதன் போக்கிற்கு தகுந்தே பவுண்டரிகளாக அடித்தேன் என்று. ஆனால் எத்தனை இந்தியர்கள் அடிபட்டதற்குப் பழிக்கு பழி தீர்த்ததாக எண்ணிக் கொண்டாடி தீர்த்திருப்பார்கள். அவை அத்தனையும் சச்சினுக்கு எங்கே தெரிந்திருக்க போகிறது. அந்தப் போட்டியில் சச்சின் அடித்தது 57 ரன்கள் அந்த ரன்களின் உதவியுடன் இந்தியா அப்போட்டியையும் போட்டி தொடரையும் சமன் செய்தது. அத்தொடரிலிருந்தே சச்சின் எனும் சகாப்தத்தின் சாதனைப் பயணம் தொடங்கியது… சச்சின் குடும்பமும் பின்னணியும்… வாழ்க்கை என்பது ஒரு புத்தகத்தை போன்றது என்ற அர்த்தம் பொதிந்த வாசகத்துடன் தனது நூலைத் துவங்குகிறார் சச்சின். அப்பா ரமேஷ் டென்டுல்கர், அம்மா ரஜனி உடன் பிறந்தவர்கள் நித்தின், அஜீத் மற்றும் அக்கா சவிதா இவர் தான் அனைவருக்கும் கடைக்குட்டி. பெரிய வசதியான குடும்பம் அல்ல நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான். நகர வாழ்க்கையில் குடும்பம் போற்ற அம்மாவும் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையில் தான் இருந்தது அவர்கள் குடும்பம். இவர்கள் வசதியைச் சொல்வதென்றால் அவர்கள் மகனாகிய சச்சின் சைக்கிள் ஒன்றை வாங்கிக் கேட்ட போது அதைக் கேட்டதும் வாங்கிக் கொடுக்க முடியாத அளவுக்கே இருந்திருக்கிறது அவர்கள் பொருளாதாரம். நண்பர்களிடம் அதைக் காட்டி பெருமையடித்துகொள்ள எண்ணியிருந்த சச்சினால் தாய் தந்தையரின் நிலை உணர்ந்து பொறுமை காக்க முடியவில்லை அவர்களுக்கெதிராய் போராட்டம் ஒன்றைத் தொடங்குகிறார். பின்னாளில் அதற்காக வருந்தினாலும் அப்போதைய நிலையில் சைக்கிள் வாங்கியே தீர வேண்டும் என்றே இருந்திருக்கிறார் சச்சின். சைக்கிள் வேண்டும் என்பதற்காக சச்சின் செய்த போராட்டம் சற்று வித்தியாசமானது அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டார் நீங்கள் சைக்கிள் வாங்கித் தரும்வரை இனி தங்கள் குடியிருப்பு பிள்ளைகளுடன் தான் விளையாடப்போவதில்லை என்று. சொன்னவர் வெறும் வாய்ப்பேச்சோடு நில்லாமல் அதில் நிலைத்தும் இருந்தார். வாரம் ஒன்று போனது இன்னும் சைக்கிள் கிடைத்தபாடில்லை. அக்காலதாமதத்தால் சைக்கிள் மேலிருந்த சச்சின் காதலை கடுகளவும் குறைக்க முடியவில்லை. அப்போது நடந்த விபரீதம் ஆகியிருக்க வேண்டிய நிகழ்வொன்றை சொல்கிறார் சச்சின். கீழே சக நண்பர்கள் விளையாடுவதை தன்னுடைய வீட்டு பால்கனியில் நின்று பார்த்துக்கொண்டிருந்தவர் உயரம் குறைவு காரணமாக பால்கனி தடுப்பாக இருந்த கம்பிகளுக்கிடையே தன் தலையை நுழைத்து விட்டிருக்கிறார். இது அடிக்கடி செய்வது தான். ஆனால் அன்றைய தினம் உள்நுழைத்த தலை வெளியே வர மறுக்க அம்மா வந்து தலை முழுவதும் எண்ணெய் பூசி பொறுமையாய் சில நிமிட போராட்டத்திற்கு பிறகு எடுத்துவிட்டிருக்கிறார். அத்துடன் தன் போராட்டம் வென்றது இவனை இனி மாற்ற முடியாது ஒரு சைக்கிளுக்காக இனி என்னென்ன பண்ண போகிறானோ என்ற எண்ணத்தில் சைக்கிளை வாங்கிக் கொடுத்தனர் பெற்றோர். ஆனால் தன் முதல் பயணத்தை விபத்துடனே முடித்தாராம் சச்சின். அவர் இக்காட்சிகளைச் சொல்லும் போது வேதனையோடு தான் சொல்கிறார் படிக்கும் நமக்கென்னமோ சிரிப்பு தான் வந்தது. சச்சினும் தனது குழந்தை பருவத்தில் நண்பர்களுடன் இணைந்து செய்த சேட்டைகள் ஏராளம் ஏராளம் கீழே போகிறவன் மீது மாடி மீது நின்று கொண்டு தண்ணீர் ஊற்றுவது, போகிற வழியில் குழிதோண்டி அதை மறைத்து வைத்துத் தெரிந்தவர்களையும் தெரியாதவர்களையும் அதில் விழவைத்து அதைப் பார்த்து சிரிப்பது, பக்கத்து வீட்டில் மாம்பழம் திருட்டு என அத்தனை சேட்டைகளையும் செய்தே வளர்ந்துள்ளார். பின்னாளில் அதற்காகப் பெரிதும் வருந்துவதாகத் தெரிவித்திருக்கிறார். அண்ணன் அக்காவுடன் ஒன்றாக ஒரே அறையில் படுத்துறங்குவது அவர்கள் வழக்கம். சச்சின் காலையில் மற்றவர்கள் எழும்பிப் பார்க்கும் போது படுத்திருந்ததற்கு நேர் எதிராகவோ அல்லது குறுக்கு மறுக்காகவோ தான் படுத்துக் கிடப்பாராம். காலையில் கிடைக்கும் வசவுகளுக்காகத் தான் வருந்தியதாகவோ, திருந்தியதாகவோ அவர் சொல்லவேயில்லை மாறாக அத்தகைய அனுபவங்கள் தங்கள் அன்பை இன்னும் அதிகபடுத்தியிருந்ததாகவே கூறியிருக்கிறார் அவர். விடுமுறை தினங்களில் விளையாடச் சென்றுவிட்டாலும் நேரம் காலம் இன்றி விளையாடுவாராம். விடுமுறை தினங்களில் பால் வழக்கமாக விளையாடும் இடத்தில் தான் கொண்டு கொடுப்பாராம் வீட்டிற்கு வேலைக்கு வரும் லட்சுமி எனும் பணிப்பெண். பல நாள் சாப்பாட்டையுமே கொண்டு வந்து கொடுத்திருக்கிறாராம் லட்சுமி. விளையாடச் சென்ற சச்சினை திரும்ப அழைத்து அழைத்து தன் தொண்டைத் தண்ணி வற்றிப் போக அவரைப் பணிய வைப்பதற்கு அவர் அம்மா பயன்படுத்தும் கடைசி ஆயுதம் அவர் மூத்த அண்ணா நித்தின் தானாம். அவர் அதிகம் தன்னிடம் பேசமாட்டாராம் அதனால் அவர் பேசும்போது அங்கே வாக்குவாதத்திற்கு இடமிருக்காது என்று தன் அண்ணனைப் பற்றி சொல்கிறார். குழந்தை பருவத்தில் தான் எத்தனைக் கடினமாக நடந்து கொண்ட போதும் தனது தந்தை தன்னிடம் கத்தி பேசுவதோ, அடித்து விளாசுவதோ என்று இல்லாமல் தான் ஏன் அதைச் செய்யக்கூடாது அல்லது அதை ஏன் செய்ய வேண்டும் என்பதைப் பொறுமையாக விளக்குவாராம். அதையே தானும் தனது பிள்ளைகள் விசயத்தில் பின்பற்றி வர முயலுவதாகச் சொல்கிறார் சச்சின். சச்சினை தன் பயிற்றுவிப்பாளரான ஆச்ரேக்கரிடம் அஜீத் கூட்டி செல்ல சச்சினின் கிரிக்கெட் மீதான காதலோ, அவர் திறமையோ காரணம் அல்லவாம் மாறாக அவர் செய்த சேட்டை ஒன்றே காரணமாம். அதை அவரே இப்படிச் சொல்கிறார், ஞாயிற்றுக்கிழமைகளில் போடும் திரைப்படத்தை தங்கள் குடியிருப்புவாசிகள் அத்தனை பேரும் குழுமியிருந்து ரசித்துக் கொண்டிருக்க, சச்சினும் அவர் நண்பரும் இணைந்து பக்கத்தில் நின்றிருந்த மாங்காய் மரத்திலேறி மாங்காய் பறிக்க சென்று விட்டார்களாம். இருவரும் ஒற்றைக் கொம்பில் ஏறியிருந்த காரணத்தால் அவர்கள் கனம் தாங்காமல் அக்கொம்பு பெருச்சத்தத்துடன் முறிந்துவிழ வசமாக மாட்டிக்கொண்டாராம் சச்சின். அதன் பிறகே இவனை இனி இப்படி விட்டால் சரியாகாது இவனை ஏதேனும் பயனுள்ள வழியில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இவருடைய அண்ணன் அஜீத் ஆச்ரேக்கரின் கிரிக்கெட் பயிற்சி முகாமிற்கு அழைத்துச் சென்றாராம். அதனால் மக்களே மாங்காய் திருடும் மகன்களை மடையர்களே என்றழைக்காதீர்கள்… இளநீர் பறிக்க செல்லும் உங்கள் இளையவரை ஏளனமாய் பார்க்காதீர்கள்… கொய்யா பறிக்க செல்பவர் மீது கொய்யால எனும் கொடுஞ்சொல்லை உயோகிக்காதீர்கள்… யாருக்குத் தெரியும்! ஒருவேளை அவர்களுக்குள்ளும் மறைந்திருக்கக் கூடும் ஓர் சச்சின்… ஆசான் ஆச்ரேக்கர்… தெளிவின்றி இருந்தவரைத் தெளிவாக்கி எடுத்தவர்… கரடு முரடாக இருந்தவரை சமப்படுத்தி சரிப்படுத்தி எடுத்தவர்… காட்டாறு போல் கட்டுப்பாடின்றி ஓடிக்கொண்டிருந்தவருக்கு சரியான பாதையமைத்து கொடுத்தவர்… இயற்கை வைரமான சச்சினை பட்டைதீட்டி உலக அரங்கில் ஜொலிக்க செய்தவர்… ஆம்! அவர் தான் ஆச்ரேக்கர்… ரமாகாந்த் ஆச்ரேக்கர் சச்சினின் பயிற்றுவிப்பாளர்… சேட்டைகள் அதிகம் புரிந்து கொண்டிருந்த சச்சினை இவரது விடுமுறை பயிற்சி முகாமிற்கு அழைத்துச் சென்றார் அண்ணா அஜீத். அப்போது சச்சினுக்கு வயது பதினொன்று. நெட்டில் வைத்து சில பந்துகள் வீசப்பட்டது அவரைச் சூழ்ந்து நின்ற வீரர்களாலும், முதல் முறையாக நெட்டிற்குள் விளையாடுவதாலும், ஆச்ரேக்கரின் நேரடி கண்காணிப்பாலும் பதட்டத்தில் அவரால் சரிவர விளையாட முடியவில்லை. அஜீத்தை தனியே அழைத்த ஆச்ரேக்கர் சச்சின் இன்னும் கொஞ்சம் பெரியவன் ஆகட்டும் அதற்குப் பின் அவரை அழைத்துவரச் சொன்னாராம். அதற்கு அஜீத் சொன்னாராம் அவன் இன்னும் நன்றாக விளையாடக்கூடியவன் நான் பலமுறை அவன் விளையாடியதைப் பார்த்திருக்கிறேன். நீங்கள் இங்கிருந்து நகர்ந்துவிடுவதைப் போல காட்டிக்கொண்டு தூரத்தில் நின்று அவனைக் கவனித்தால் அவன் இன்னும் சிறப்பாக தன் திறனை நிரூபிப்பான் என்று நம்பிக்கையுடன் சொன்னாராம். அதற்கு ஒப்புக்கொண்டார் ஆச்ரேக்கர். பதட்டமின்றி துவங்கியது சச்சினின் ஆட்டம் பறந்தது பந்து நாலாதிசைகளுக்கும். அவன் ஆடியதை ஆச்சர்யத்துடன் பார்த்தார் ஆச்ரேக்கர். அவர் மனதை முழுமையாய் கவர்ந்து கொண்டான் சச்சின் எனும் அச்சிறுவன். புத்தகத்தில் அச்சம்பவத்தைப் பற்றி சச்சின் இப்படிக் குறிப்பிடுகிறார் அன்றைய சம்பவம் என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது என்று. நாம் இப்படியும் சொல்லலாம் அன்றைய தினம் தரமான ஒரு மாணவரை இனம் கண்டதால் தான் ஆச்ரேக்கர் வாழ்க்கையில் அவருக்கு மரியாதையும் மதிப்பும் பெருகிற்று என்றும். எப்போதுமே சிறந்த மாணவனால் மட்டுமே ஒரு ஆசிரியர் சிறப்பும் மதிப்பும் பெறுகிறார். அதன் பிறகு கோடைக்கால பயிற்சியில் சச்சினின் விளையாட்டு பிடித்து போக ஒருசில மாதங்களுக்குப் பிறகு சச்சினிடமிருந்து பயிற்சிக் கட்டணம் எதையும் அவர் வசூலிக்கவில்லை எனக் குறிப்பிடுகிறார் சச்சின். பணமல்ல ஒரு திறமையான மாணவனை உருவாக்க வேண்டும் என்பது தானே ஒரு ஆசிரியரின் வெற்றி. அதை மிகச்சரியாகச் செய்திருக்கிறார் ஆச்ரேக்கர். ஆச்ரேக்கரின் ஆலோசனைப் படி சச்சினின் பள்ளியை மாற்றத் தீர்மானம் ஆனது. சச்சினின் விருப்பத்தைக் கேட்டறிந்த அவரது அப்பா இப்படிச் சொன்னாராம் “கிரிக்கெட் விளையாடுவதில் தீவிரமாக இருந்தால் மட்டும் நீ பள்ளியை மாற்றினால் போதும்”. பள்ளி மாறிய சச்சினின் விளையாட்டு மேம்படத் துவங்கியதில் மகிழ்ந்த அவரது தந்தை அப்போதும் அவரை அழைத்து இப்படிச் சொன்னாராம் “விளைவுகளைப் பற்றி கவலைப் படாமல் இயன்ற அளவு நீ விளையாடு.” சச்சின் தன் கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் நேர்மையான வீரனாகவே இருந்து வந்துள்ளதை நாம் அறிந்திருக்கிறோம். அதற்குரிய படிப்பினை அப்பள்ளி வாழ்க்கையிலேயே தான் அவருக்குக் கிடைத்திருக்கிறது. அவர் தனது பள்ளி சார்பாக விளையாடிய போட்டி ஒன்றில் 24 ரன்கள் எடுத்திருக்கிறார். ஒரு தனிப்பட்ட வீரர் முப்பது ரன்கள் எடுத்தால் மாத்திரமே செய்தாளில் பெயர் வர வேண்டும் என்பது அப்போதைய விதிமுறையாம். சச்சின் 24 ரன் எடுத்ததைக் கவனித்த ஸ்கோரை நிர்வகித்தவர் உதிரியாக வந்த ரன்னில் ஆறு ரன்னை சச்சின் பெயரில் சச்சின் அனுமதியுடன் சேர்த்துவிட மறுநாள் முதன் முதலில் சச்சினின் பெயர் பத்திரிக்கையில் வந்தது. இதை அறிந்த ஆச்ரேக்கர் கடும் கோபம் கொண்டாராம். அவரிடம் மன்னிப்பு கேட்ட சச்சின் தன் வாழ்நாளில் அத்தகைய தவறை இனி ஒருபோதும் செய்ய மாட்டேன் என்று உறுதி அளித்தாராம். அவர் அத்தகைய தவறை திரும்ப செய்திருக்கவில்லை என்பதற்கு அவர்களது ரசிகர்களாகிய நாமே சாட்சி. சச்சின் உச்சம் தொட அவரது நேர்மையும், சுயஒழுக்கமும் மிக முக்கிய காரணம். அது இப்படியொரு படிப்பினை மூலமாகவே தான் அவருக்குக் கிடைத்திருக்கிறது. சச்சினின் ஆட்டம் ஆச்ரேக்கரின் கண்காணிப்பின் கீழ் மெருகேறிக் கொண்டே வந்தது. முதல் வருடம் முழுமையாய் ஓடிவிட்டது. அவ்வருடம் முழுவதும் பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளில் விளையாடி தனது ஆட்டத்திறனை வளர்த்துக் கொண்டிருந்தார் சச்சின். அந்த ஆண்டு தேர்வு முடிந்து இறுதி விடுமுறை வந்தது. அவ்விடுமுறையில் காலை சச்சினுக்கு பயிற்சி ஏழரை மணிக்குத் துவங்குமாம் இரண்டு மணிநேர கடும் பயிற்சி அதன் பிறகு நேராகப் பயிற்சி போட்டிக்குச் செல்வாராம். அப்போட்டி மாலை நான்கரை மணிக்கு முடியும் அதன் பிறகு மீண்டும் ஐந்து மணிக்குப் பயிற்சி துவங்குமாம். அந்த இடைவெளியில் எதையாவது வாங்கிச் சாப்பிட ஆச்ரேக்கர் கொஞ்சம் காசு கொடுப்பாராம் சச்சினுக்கு. அதைத் தனது நூலில் சந்தோஷமாக பகிர்ந்து கொள்கிறார் சச்சின். ஆச்ரேக்கர் நல்ல பயிற்றுவிப்பாளர் தான் இல்ல… இந்த அறுபது நாட்களில் 55 பயிற்சி போட்டிகளில் விளையாடினாராம் சச்சின். மீண்டும் ஐந்து மணிக்குத் துவங்கும் பயிற்சி இரவு ஏழுமணி வரை நடக்குமாம். அதன் பிறகு வித்தியாசமான ஒரு போட்டியை ஆச்ரேக்கர் வைப்பாராம் ஆடுதளத்தில் மொத்த பேரும் பீல்டிங் நிறுத்தப்படுவார்கள் அறுபதிலிருந்து எழுபது பேருக்கு மேலிருப்பார்களாம் பீல்டர்கள். அதன் பின் ஸ்டம் மீது ஒற்றை ரூபாய் நாணயம் வைக்கப்படும் பதினைந்து நிமிடங்கள் ஆட்டமிழக்காமல் கீரிசில் இருந்தால் அந்த நாணயம் அந்த பேட்ஸ்மேனுக்கு சொந்தமாகும். சில தினங்களுக்கு பிறகு அந்த விளையாட்டை மிகவும் ரசித்து விளையாடியதாக சச்சின் சொல்கிறார். அதன் பின் இரண்டு றவுண்ட் கிரௌவுண்டை சுற்றி ஓடிவரவேண்டுமாம். மனுசன் பயிற்சிங்ற பேர்ல சச்சினை படுத்தித் தான் எடுத்திருக்கிறார் போல… இடையில் சச்சின் வீடு தூரம் அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு அவர் சித்தியின் வீட்டில் தங்க வைப்பதென்று முடிவாகிற்று. சச்சினை தாங்கள் புறக்கணித்தது போன்ற எண்ணம் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவரது அப்பாவும் அம்மாவும் கிட்டதட்ட தினசரி போலவே அவரை வந்து பார்த்து செல்வார்களாம். சித்தி தன் மகனைப் போலவே பார்த்துக் கொண்டார்களாம் சச்சினை. அவருடன் அவர்கள் வீட்டு வரவேற்பறையிலும் கிரிக்கெட் விளையாடியதை மகிழ்வுடன் நினைவுகூர்கிறார் சச்சின். 1986 - 87 ஆண்டுகளில் பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளில் சச்சின் ரன்களை குவிக்கத் துவங்கியிருந்தார். அக்கால கட்டத்தில் ஒருநாள் ஆச்ரேக்கரை தன் வீட்டிற்கு உணவருந்த வருமாறு அழைக்கிறார் சச்சின். “நீ என்றைக்கு உன் முதல் சதத்தை எட்டுகிறாயோ அன்றைக்குக் கூப்பிடு நான் உன் வீட்டிற்கு உணவருந்த வருகிறேன் என்றாராம் ஆச்ரேக்கர்.” ஆட்டமிழக்காமல் அடித்த 94 ரன்களுடன் தூக்கமின்றி தந்தையுடன் கழித்த அந்த இரவை நினைவுகூகிறார் சச்சின். அடுத்த நாள் முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளை விளாசி தன் முதல் சதத்தை எட்டினார். ஆர்ச்ரேக்கரும் அன்றைய தினமே தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றியிருக்கிறார் என்பதைப் பெருமையோடே பகிர்கிறார் சச்சின் நம்மிடமும். கிரிக்கெட்டை எவ்வளவு தான் சச்சின் நேசித்தாலும் பதிமூன்று பதினான்ங்கு வயது சிறுவன் தானே சச்சின். தன்னுடைய குடியிருப்பு தோழர்களுடன் எதேனும் விளையாட்டில் மூழ்கி நெட் பிராக்டீசை மறந்து விட்ட தருணங்களும் உண்டாம். சச்சின் பயிற்சிக்கு வரவில்லை என்பதை அறிந்தால் போதுமாம் உடனே தன் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு வருவாராம் ஆச்ரேக்கர். சச்சினை அக்கூட்டத்திலிருந்து தர தரவென்று இழுத்துச் சென்று காலணிகளை அணிய வைத்து தன் ஸ்கூட்டரில் அமர வைத்து அழைத்துச் செல்வாராம். அன்றைக்குப் பயிற்சிக்கு போகாமலிருக்க சச்சின் சொல்லும் சாக்குப் போக்குகள் எதற்கும் செவிமடுக்க மாட்டாராம். தன் ஸ்கூட்டரின் பின்னால் வெறுப்புடன் இருக்கும் சச்சினிடம் இப்படிச் சொல்வாராம் “நீ அந்தச் சிறுவர்களுடன் அர்த்தமற்ற விளையாட்டுகளை விளையாடுவதில் உன் நேரத்தை வீணடிக்காதே. நெட்ஸில் கிரிக்கெட் உனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. கடுமையாகப் பயிற்சி செய்; அதன் பிறகு நடக்கவிருக்கும் மாயாஜாலத்தைப் பார்; என்பாராம். ஒருமுறை தன்னுடைய பயிற்சி போட்டியை தவறவிட்டு விட்டு முக்கியமான விளையாட்டொன்றின் இறுதி போட்டியை காணச் சென்ற சச்சினிடம் இப்படிக் கோபப்பட்டாராம் ஆச்ரேக்கர், “சச்சின் எத்தனை முறை உனக்குச் சொல்வது அடுத்தவர்களின் விளையாட்டைப் பார்க்க நீ வராதே… வராதே… என்று. நீ போ… போய் கடுமையாக பயிற்சி செய்; நீ, கடுமையாகப் பயிற்சி செய்தால் என்றேனும் ஒரு நாள் உலகம் நெடுகிலுமிருந்து மக்கள் உன் விளையாட்டைக் காணவருவார்கள்” என்றாராம். தன் மாணவன் மீது எத்தகையதொரு அசைக்கமுடியா ஆணித்தனமான நம்பிக்கை; இதுவல்லவோ மாணவன் மீதான அன்பும் பாசமும் என்பது… அத்தகைய தனது ஆசானிடம் தனக்கு கிடைத்த பாரத ரத்னாவை காட்டி “நான் உங்களுக்கு ஒரு சிறந்த மாணவனாக இருந்து உங்களை பெருமைப்படுத்தி இருப்பதாக நம்புகிறேன்” என்று சச்சின் சொன்ன நேரம் அம்மனிதன் அன்றைக்குத் தான் சொன்னது நிறைவேறியதை எண்ணி உள்ளம் குளிர்ந்து சச்சினை உச்சிமுகர்ந்திருப்பார் தானே… சச்சின் பரவலாகப் பேசப்படவும் பிரபலங்களின் பார்வை அவர் மீது விழவும் காரணமாக அமைந்த போட்டி அவரும் காம்ப்பிளியும் இணைந்து சேர்த்த 664 ரன்கள். உலக அரங்கில் அப்போதைய ஒரு கூட்டணியின் அதிகபட்ச ஸ்கோராக, அதுவே உலக சாதனையானது. அப்போட்டியில் இருவரும் 200 ரன்களை தாண்டியதும் அவர்களை டிக்ளேர் செய்ய ஆச்ரேக்கர் அறிவுறுத்தலின் படி உதவி பயிற்றுவிப்பாளர் மைதானத்தின் எல்லையில் வந்து நின்று கத்தி சொல்லியும் கண்டு கொள்ளாத இருவரும் அன்றைய தினத்தின் பேட்டிங்ஙை அனுபவித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் டிக்ளோர் செய்யாமலிருந்ததற்காக ஆச்ரேக்கரிடமிருந்து திட்டு கிடைக்க போகிறதை எண்ணிப் பயந்ததையும், 349 ல் இருந்த காம்ப்ளி 350 ரன் அடிக்க ஒரு பந்தை எதிர்கொள்ளும் வாய்ப்பை சாரிடம் சொல்லி வாங்கித்தர தன்னிடம் கெஞ்சியதையும், அது தன் கையில் இல்லை என்பதைச் சொல்லி போனின் மறுமுனையில் ஆச்ரேக்கர் இருக்க காம்ப்ளி கையில் போனை கொடுத்துவிட்டு சச்சின் ஒதுங்க, அவரைக் கண்டு பயத்தினால் அவரிடம் காம்ப்ளி கேட்காமல் விட்டதையும் ஸ்வாரஸ்யமாக பகிர்கிறார் சச்சின். இவரும் காம்ப்ளியும் இணைந்து உருவாக்கியிருந்த உலக சாதனையை கேள்விப்பட்டிருந்த பிரபலங்களான திலீப் வெங்சர்கார், சுனில் கவாஸ்கர் அப்போதைய இந்திய கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ராஜ் சிங் துங்கர்பூர் ஆகியோர் அவர்கள் ஆட்டத்தைக் காண தீர்மானித்து இறுதி போட்டி ஒன்றிற்கு வந்திருந்தனர். வந்தவர்களை ஏமாற்ற விரும்பாத சச்சின் இரண்டு நாட்கள் ஆட்டமிழக்காது நின்று ஆடி 346 ரன்களை குவித்தார். அப்போட்டி அவர் தொழில்முறை விளையாட்டின் அடுத்த படிநிலைக்கு அவரை அழைத்துச் சென்றது. ஆம்! அதற்கு அடுத்த சில நாட்களுக்குப் பிறகு ரஞ்சி போட்டிக்கான மும்பை அணியில் அவரது பெயரும் இடம் பெற்றிருந்தது. 1987 ம் வருடம் நவம்பர் மாதம் ரஞ்சி போட்டிக்கு சச்சின் தேர்ந்தெடுக்க படுகிறார். அச்சீசனில் அவர் தேர்ந்தெடுக்கபட்டாலும் ஆடும் பதினொன்று பேரில் விளையாடும் வாய்ப்பு அதற்கு அடுத்த ஆண்டே கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை உடும்பு போல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் சச்சின். முதல் ரஞ்சி போட்டியே சதம். 1988- 89 ஆம் ஆண்டைய மும்பை அணியில் அதிக ரன்கள் குவித்தவர் அவ்வாண்டைய ரஞ்சி போட்டிகளில் சராசரி 64.77 எனக் கிடைத்த வாய்ப்பில் வெளுத்து வாங்க அவர் புகழ் குன்றில் இட்ட விளக்காய் பரவ துவங்கியது. 1988 ஆம் ஆண்டைய ரஞ்சி தேர்வும் சச்சினுக்கு அதிர்ஷ்டம் மூலமாக ஒன்றும் கிடைத்து விடவில்லை. தன்னுடைய அதீத திறனுக்காகவே தான் கிடைத்திருக்கிறது. ஆம்! அப்படிச் சொல்வது தான் பொருத்தமும் உண்மையும் கூட. 1988 ம் வருடம் நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு வருகிறது. அந்த அணி பயிற்சி போட்டி ஒன்றில் விளையாட வந்த இடத்தில் சச்சினின் வலைபயிற்சி திலீப் வெங்கர்சரை பெரிதாகக் கவர்ந்தது. அவ்வலை பயிற்சி வெங்கர்சரை கவர காரணம் இல்லாமலில்லை அப்போது பதினைந்து வயது சிறுவனான சச்சின் வலைபயிற்சியில் எதிர்கொண்ட பந்து வீச்சாளர் இந்தியாவின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் இந்திய அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுத் தந்து உலக அரங்கில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராய் ஜொலித்து கொண்டிருந்த கபில்தேவின் பந்து வீச்சை. பயிற்சியின் போது சச்சின் கபில்தேவின் பந்தை எதிர்கொண்ட விதத்தால் கவரப்பட்ட வெங்கர்சர் (சச்சின் கபில்தேவையும் பொளந்து கட்டியிருப்பார் போல தன்னடக்கம் காரணமாக அவர் அதை இவ்விடத்தில் குறிப்பிடவில்லை) சச்சின் எந்தவொரு வீரரின் பந்தையும் எதிர்கொள்ளும் திறன் படைத்தவர் தான் என்ற தனது கருத்தை மும்பை அணி தேர்வாளர்களிடம் கூறினார். அதுமட்டுமின்றி அவருக்கு அப்போது இருந்த வேலை நெருக்கடியில் அவர் அப்போட்டி தொடரிலிருந்து விலக சச்சின் உட்புகுந்தார். அத்துடன் சச்சின் ஆட்டம் தொடங்கியது. எதிரணியினரின் பந்துகள் நாலாபக்கமும் பறந்தது. அப்பந்துகளுடன் அவர் பெயரும் நாலா பக்கமும் சுகந்தமாய் பரவ துவங்கியது. சச்சின் இந்திய அளவில் கவனிக்கப்பட்டார். அவர் தேடி செல்லாமலே அவரைத் தேடி அவர் வாசலுக்கே வந்தது இந்திய அணிக்கான வாய்ப்பு. “என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை நான் அறியும் முன்பே என்னுடைய பதினாறாவது வயதில், இந்தியாவின் சார்பில் விளையாடுவதற்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தேன்.” இப்படி தான் அந்நிகழ்வை சச்சின் தன் புத்தகத்தில் குறித்து வைத்திருக்கிறார். தனக்குக் கிடைத்த பாகிஸ்தானுக்கு எதிரான முதல் வாய்ப்பில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட சச்சின் மகிழ்வோடு நாடு திரும்பினார். அத்தொடரில் இந்திய மக்களின் கவனத்தை பெற்றார். அடுத்து இந்திய அணி நியூசிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்டது. அதில் முதல் போட்டியில் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்து பள்ளி சிறுவன் எனும் பெயரை நியூசிலாந்து அணியிடமிருந்து பெற்றாலும், வழக்கமாகத் தான் பதில் சொல்லும் தனது மட்டை மூலம் அடுத்த ஆட்டத்தில் அவர்களுக்குப் பதில் சொன்னார். அப்போட்டியில் அவர் எடுத்த ரன்களின் எண்ணிக்கை 88. தனது முதல் சர்வதேச சதத்தை சிறுவயதில் சதமடித்தவன் என்ற சாதனையோடு தொட்டிருக்க வேண்டியவர் சச்சின் ஆனால் விதி அதுவல்ல. பின்னாட்களில் பல சாதனைகளைச் சூடிக்கொண்ட சச்சினுக்கு அச்சாதனைச் சதம் கிடைக்காமல் போனதில் மிகவும் வருந்தியதாகவும் அதற்காக அழுததாகவும் சொல்கிறார். தன் முதல் சதம் கிடைக்காமல் போனது மட்டும் தான் அவருக்கு வருத்தம் சிறுவயதில் சதம் எனும் சாதனை அவருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லையாம். அப்போட்டியில் கேட்சை பிடித்து அவரை பெவிலியனை நோக்கி நடையைக் கட்ட வைத்த ஜான் ரைட், பின்னாளில் நமது அணியின் பயிற்சியாளராக வந்த போது அன்றைக்கு நீங்கள் அக்கேட்சை பிடித்திருக்கக் கூடாது என வேடிக்கையாய் சொல்லியதாக குறிப்பிடுகிறார் சச்சின். அடுத்த பத்து ஆண்டுகளில் 1990 - 2000 இந்திய அணிக்கு வெற்றி தோல்வி மாறி மாறி வந்து கொண்டிருந்தது. ஆனால் சச்சின் வாழ்வில் வெற்றிகள் மட்டுமே வந்து குவிந்து கொண்டிருந்தது. சச்சின் தொட்டதெல்லாம் துலங்கிய காலம் அது. அக்காலகட்டங்களில் தான் எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாய் வளர்ந்து நின்றார் அவர். சச்சினின் கிரிக்கெட்டின் பொன்னான காலமது. கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் என இந்திய ரசிகர்கள் தங்கள் தலைகளில் தூக்கி வைத்துக் கொண்டாட காரணமான வருடங்கள் அவை. சச்சினுக்காக எதிரணியினரால் திட்டங்கள் தனியாக வகுக்கப்பட்டது. அத்தனையும் தகர்தெறிந்து தனியொருவனாக முன்னேறிக்கொண்டிருந்தார் சச்சின். இறைவன் தனக்களித்த வரமான கிரிக்கெட்டை தன் தோளிலே தூக்கிச் சுமந்தார். இந்திய மக்கள் அவரை தங்கள் தலையிலே தூக்கி சுமந்தனர். இந்திய அணிக்கு கவாஸ்கருக்கு பின் யார்? என்ற இந்திய மக்களின் கேள்விக்கு எனக்குப் பின் இந்தியாவில் அல்ல, உலக கிரிக்கெட் அரங்கில் யார்? என்ற கேள்வியோடு தனது மட்டையை உயர்த்திப் பிடித்தபடி வந்து நின்றார் சச்சின் டென்டுல்கர். அவரின் சாதனை பயணத்தின் பலமான அஸ்திவாரம் அமைக்கப்பட்ட ஆண்டுகள் அவை. ஷேன் வார்ன் எல்லாம் பின்னாளில் சச்சின் மட்டையுடன் கனவிலும் வந்தார் எனக் கதறவிட்ட கால கட்டங்கள் அவை உலக அரங்கில் உயர உயரப் பறக்க துவங்கினார் சச்சின். சச்சினை தேடி வந்து குவிந்து கொண்டது விளம்பரங்கள். பணத்திற்காக மதுபானம் போதைவஸ்த்துகளுக்கு நடிக்காமல் தனக்கென ஒரு கொள்கையை வளர்த்துக் கொண்டு அதில் பயணப்பட துவங்கினார் சச்சின். தனது தந்தையின் வளர்ப்பில் ஒழுக்கத்திலும் ஓங்கி உயரத் துவங்கினார் அவர். அக்கால கட்டத்தில் தான் தன் ஒழுக்கத்திற்கும் உயர்விற்கும் காரணமான தந்தையைப் பறிகொடுத்து துயர கடலில் தத்தளித்ததும். தனது முதல் சதத்தை எட்டியது… அதற்கு மக்கள் எழுந்து நின்று கைதட்டி தங்கள் பாராட்டை தெரிவிக்க அதை ஏற்றுக்கொள்வதில் ஏற்பட்ட கூச்சம்… அதன் பின் தனது முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒருவித பதட்டத்துடன் கலந்து கொண்டது… பழமையானதும் புகழ்பெற்றதுமான “யார்க்க்ஷயர்” கவுண்டி அணியில் விளையாடிய முதல் அந்நிய நாட்டு வீரன் என்ற சிறப்பை பெற்றது… என சில தனது முதல்களையும் ஸ்வாரஸ்யம் குறையாமல் சொல்கிறார் சச்சின். 1996 ஆம் ஆண்டைய உலகக் கோப்பையை இந்தியா தவறவிட்டது நாமெல்லாம் அறிந்ததே. அப்போட்டி தொடரின் காலிறுதியில் பாகிஸ்தானை வென்று ஹோட்டலுக்கு திரும்பிய இந்திய அணிக்கு மக்கள் அளித்த வரவேற்பையும் ஹோட்டல் ஊழியர்கள் தங்களை கவனித்துக்கொண்ட விதத்தையும் இப்படிச் சொல்கிறார் சச்சின்… “நாங்கள் அரச குடும்பத்தினரைப் போல நடத்தப்பட்டோம். நாடு இத்தனை மகிழ்ச்சியோடும் பெருமிதத்தோடும் இருந்ததைக் காண அற்புதமாக இருந்தது” அவரே அரையிறுதியில் இலங்கையிடம் தோற்றுப்போய் திரும்பி ஹோட்டல் வந்தபோது… “இம்முறை நாங்கள் மைதானத்திலிருந்து ஹோட்டலுக்கு சென்ற போது மனம் முழுக்க வேதனையுடன் பயணித்தோம். நாங்கள் ஹோட்டலை அடைந்தபோது எல்லாம் மாறியிருந்ததை உணர்ந்தோம். நாங்கள் எதோ தீவிர தவறு செய்திருந்தது போலொரு உணர்வை மக்கள் எங்களுக்கு ஏற்படுத்தினர். நாங்கள் எங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தோம் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால் எங்கள் தோல்வி மற்ற எவரொருவரையும் போலவே எங்களையும் வாட்டிக்கொண்டிருந்தது.” என்றும் தனது நூலில் பதிவு செய்து வைத்திருக்கிறார் சச்சின். அந்த உலகக்கோப்பை சீரியசில் சச்சின் அடித்ததே அதிக பட்ச ஸ்கோராக பதிவானது. அக்கால கட்டத்தில் தான் அவரைத்தேடி முதன்முறையாகத் தலைமை பதவியும் வந்தது… கூட குடும்பத்தலைவர் எனும் பதவியும் வந்து சேர்ந்தது அஞ்சலி எனும் அமுத குணத்தாள் மூலம்… சச்சின் வாழ்வின் இனிதான இரண்டாம் இன்னிங்ஸ் அஞ்சலியோடு ஆரம்பம்… ஒரு இங்கிலாந்து தொடரை முடித்துவிட்டு சச்சின் மும்பை விமான நிலையத்தில் தரை இறங்குகிறார். அவர் தனது பொருட்களை எடுக்க காத்துக்கொண்டு நிற்கிறார். அங்கே தோழியுடன் நிற்கும் ஒரு இளம் பெண்ணை காண்கிறார். இருவரது கண்களும் ஒரு நிமிடம் சந்தித்து கொண்டது. அக்கணமே பெரும் மின்னல் ஒன்று இருவர் மனதிலும் மின்னி மறைந்தது. பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்பும் சச்சின் கண்கள் அவரைத் தேடுகிறது. அவரை அங்குக் காணாமல் ஏமாற்றத்தோடு நகர்கிறார் சச்சின் தனது நண்பருடன். சச்சினுக்காய் அவரை அழைத்துச் செல்ல காருடன் வந்து காத்துக் கொண்டு நிற்கிறார்கள் தனது அண்ணன்களான நித்தினும், அஜீத்தும். இப்போது மாயமாய் மறைந்த பெண் சச்சினை நோக்கி ஓடிவருகிறார். சும்மா அல்ல ஓடிவருகிறார் “அவர் மிக அழகாக இருக்கிறார்” என கத்திக்கொண்டே ஓடிவருகிறார். வெட்கத்தில் சிவக்கிறது சச்சின் முகம். அண்ணன்கள் முன்னிலையில் தர்மசங்கடமாக தன்னை உணர்கிறார் சச்சின். அக்காரணத்தாலேயே அப்பெண்ணைத் தவிர்த்துவிட்டு அவர்களுடன் காரில் ஏறிப் புறப்பட்டு செல்கிறார். இப்படியாக மிகதேர்ந்த இயக்குனர் ஒருவரின் சினிமா படக்காட்சி போல தான் அமைந்தது அவர்கள் இருவரின் முதல் சந்திப்பு. இறைவன் இணைக்க வேண்டுமென்று முடிவு செய்த பின் அதை யாரால் மாற்ற முடியும்?! அச்சந்திப்புக்குப் பின் அஞ்சலியின் இதயம் சச்சின் பெயரை உச்சரித்தபடியே துடிக்க துவங்கியது. மனம் அவரைச் சுற்றி சுற்றியே வட்டமடிக்க, மூளை அவரை பற்றிய தகவலையும் அவரைத் தொடர்பு கொள்ளும் வழிகளையும், வாய்ப்பையும் ஆராய்ந்து கொண்டிருந்தது. முடிவில் வெற்றியும் பெற்றது அவர் முயற்சி. ஒருவழியாக சச்சின் நண்பர் மூலம் சச்சின் வீட்டு நம்பரை வாங்கி அவர் வீட்டுக்கு அழைத்தாயிற்று. அதிர்ஷ்டவசமாகவோ அல்லது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட முடிவின் காரணமாகவோ போணை எடுத்தது சச்சின் தான்… தன்னை யாரென்று அறிமுகப் படுத்துகிறார் அஞ்சலி… அவரை தனக்கு நியாபகம் இருப்பதாகச் சொல்கிறார் சச்சின்… பெண்களின் பிறவி குணமான சந்தேகம் உடனே அவருக்குள் புகுந்து விடுகிறது. உடனே திரும்ப கேட்கிறார் “என்னை நியாபகம் வைத்திருப்பது உண்மையென்றால் அன்றைக்கு நான் அணிந்திருந்த ஆடையை உங்களால் சரியாக கூற முடியுமா?” “ஏன் முடியாது?! ஆரஞ்சு நிற டீ சர்ட் நீல நிற ஜீன்ஸ் பேன்ட்” சரிதானே… அஞ்சலியின் முகம் ஆச்சர்யத்தால் விரிகிறது. வியப்பின் விதானங்களைக் கடந்து செல்கிறது அவர் உள்ளம். “உங்களைச் சந்திக்கலாமா?” என அடுத்த கேள்வி அஞ்சலியிடமிருந்து அருவியாய் புறப்பட்டு வருகிறது. தான் கேட்டிருக்க வேண்டிய கேள்வியை அவர் கேட்ட மகிழ்ச்சியில் அதற்குரிய வழியை அஞ்சலிக்குச் சொல்கிறார் சச்சின். இருவரும் சந்திக்கிறார்கள். அப்போது தங்கள் தொலைப்பேசி எண்களை மாற்றிக்கொள்கிறார்கள். அதன் மூலம், அதன் பிறகு தங்கள் இதயங்களை இடம் மாற்றிக்கொள்கிறார்கள். வீட்டிற்கும், ரசிகர்களுக்கும், நிழலாய் தொடரும் ஊடகங்களுக்கும் தெரியாமல் ஐந்து ஆண்டுக்கால காதல். அதன் பின் திருமணம், அம்சமானதொரு வாழ்க்கை இறைவன் அவர்கள் இல்வாழ்வை ஆசிர்வதித்ததன் பலனாக கிடைத்த வைரங்களான சாரா மற்றும் அர்ஜூன் என அவர்கள் வாழ்வு சுகமாய் நகர்கிறது. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் நிச்சயம் இருப்பார். சாதனையாளனின் மனைவியாய் இருப்பதொன்றும் சாதாரணமானதல்ல. நட்சத்திரங்களின் வாழ்வின் பின்னால் இருக்கும் பெண்களின் வாழ்வு என்பது பெரும் போராட்டங்களும், சோதனைகளும் நிறைந்தது. தாராள மனமும் பொறாமை அற்ற குணமும் இன்றி அவர்களால் சிறப்பானதொரு வாழ்வு நிச்சயம் சாத்தியம் இல்லை. முகநூலில் பெண்களிடமிருந்து நாலு லைக்கும் எட்டு கமெண்டும் வாங்கும் ஒரு ஆணையே உண்டு இல்லையெனப் படுத்தி எடுக்கும் மனைவிகள் வாழும் நம் சமூகத்தில் ஆண்டில் பாதிக்கு மேல் விளையாட்டுக்காகப் போய்விடும், மிச்ச நேரமும் விளம்பரம், பொது நிகழ்ச்சிகள் அது இதுவென அவர்கள் நேரங்களை விழுங்கிக் கொண்டே இருக்கும். இருப்பினும் அவர்களைச் சந்தேகிக்காமல் அதற்காகக் கோபப்படாமல், கோபப்படுத்தாமல் அவர்களுடன் அவர்களுக்கு பக்கபலமாய் இருப்பதென்பது பெரும் சவலான காரியம் தான் அதனை மிகச்சிறப்பாகவே செய்திருக்கிறார்கள் அஞ்சலி. அதனால் தான் சச்சினால் அவரைக் கொண்டாட முடிந்திருக்கிறது. தன்னுடைய அப்பாவைக் குறித்து சச்சின் சொல்கையில் “என்னுடைய இத்தனை உயர்வுக்கும் என்னுடைய ஒழுக்கத்திற்கும் முழுமுதற் காரணம் அவரே தான்” என்கிறார்… தன் அம்மாவைக் குறித்து சொல்கையில் “அமைதி, சகிப்புதன்மை, அன்பின் மறுஉருவம், என் முகத்தில் மகிழ்ச்சியை காண எதையும் செய்ய துணிபவர்” எனச் சொல்லி சிலாகிக்கிறார்… தனது ஆசான் ஆச்ரேக்கரை பற்றிச் சொல்கையில் “அவர் உதவி இல்லாமல் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரனாக நான் ஒரு போதும் உருவாகி இருக்க முடியாது” என்கிறார்… தன் அண்ணன் அஜீத்தை சொல்கையில் “எனது கனவை நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தோம்” என்கிறார்… தனது அக்காவைச் சொல்லும் நேரம் “முதல் பேட்டை பரிசளித்தவர் தான் விளையாடுகையில் தனக்காய் விரதம் இருப்பவர்” என அவரையும் நினைத்து உருகுகிறார்… இத்தனை பேரையும் இன்னும் பல பேரையும் தன் வாழ்வின் வெற்றிக்குக் காரணம் என அடையாளப்படுத்திய சச்சின் தன்னுடைய நூலின் துவக்கத்தில் தன்னுடைய வாழ்க்கை பாதையில் வழி நெடுகிலும் தனக்குதவியவர்களில் யாருக்குத் தான் முதலில் நன்றி சொல்வதென்பதில் குழப்பமேயின்றி தன் மனைவி அஞ்சலிக்கே தான் முதலில் தன் நன்றியைச் சொல்கிறார். தன் அப்பா, அம்மா, ஆசான், அண்ணன், தம்பி, நண்பர்கள் என அத்தனை பேரையும் ஒதுக்கி வைத்துவிட்டு மனைவிக்கு முதல் நன்றி சொல்வதென்பது சாதாரணமான ஒன்று அன்று. அது அக்கணவனைப் புரிந்து கொண்டு தான் கொஞ்சம் கொஞ்சமாக அன்பால் அவரை ஆட்கொண்டால் ஒழியச் சாத்தியம் இல்லை. அதை மிகச்சரியாகச் செய்திருக்கிறார் அஞ்சலி அதை உணர்ந்ததால் தான் அவரைச் சிலாகித்து கொண்டாடியிருக்கிறார் சச்சின். சச்சின் - அஞ்சலி தம்பதி நிச்சயம் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட தம்பதியே… சச்சின் மொழியில் சொல்வதென்றால் “என் வாழ்வின் மிகச்சிறந்த கூட்டாளி அஞ்சலி” பிரகாசிக்க முடியா கேப்டன் பதவி… 1996 வருடம் சச்சினை தேடி வந்தது இந்திய அணியின் தலைமை பொறுப்பு. ஒற்றை டெஸ்ட் போட்டி கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடரை விளையாட இந்தியா வந்த ஆஸ்திரேலியா அணியை வென்று வெற்றியுடன் துவங்கிய சச்சினின் கேப்டன் வாழ்க்கை பின்னாட்களில் வெற்றிகரமாக அமையவில்லை. ஒரு தனிவீரராக கிரிக்கெட் அரங்கில் முடிசூடா மன்னனாக ஜொலித்த சச்சினால் ஒரு கேப்டனாக ஜொலிக்க முடியாமல் போனது. அதற்கு அவர் மட்டுமே காரணம் அல்ல. அப்போதைய அணியும் ஒரு காரணம். அப்போதைய அணியில் சச்சினை அவுட் ஆக்கிவிட்டால் போதும் இந்திய அணி முடிந்தது என்றிருந்த காலகட்டம் அது. டிராவிட், கங்குலி எல்லாம் அப்போதே அறிமுகமாகியிருந்தனர். சச்சின் மாங்கு மாங்கென்று அடித்திருப்பார் ஒன்று பின்னால் வந்தவர்கள் சொதப்புவார்கள் இல்லையென்றால் பௌளர்கள் சொதப்புவார்கள். சில போட்டிகள் தவறான நடுவர்களின் முடிவுகளாலும் சிலது இயற்கையாலும் கூட வெற்றி கைநழுவி போனதுண்டு. தோல்விக்கான காரணம் எதுவாகவோ எப்படியாகவோ இருப்பினும் தோல்வி என்பது தோல்வி தான். தோல்விக்கான காரணங்களை தான் தப்பித்து கொள்வதற்காகவோ, தன் தரப்பு நியாயமாகவோ எடுத்து வைக்கவில்லை சச்சின். அவற்றையெல்லாம் தன் வாழ்வின் ஒவ்வோர் நிகழ்வுகளாகவே குறிப்பிடுகிறார். ஆலன் பார்டர் கோப்பையை வென்றது, பாகிஸ்தான் ஒருநாள் போட்டித் தொடரை வென்றது என சச்சின் கேப்டனாக வெற்றிகள் சில பெற்றிருந்தாலும் அதுமட்டுமே இந்திய ரசிகர்களுக்கும், தேர்வு குழுவினருக்கும் போதுமானதாக இருக்கவில்லை. இறுதியாக சச்சின் கேப்டன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப் பட்டார். அதைக் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளாத அவர் தன்னை கேப்டன் பொறுப்பிலிருந்து விடுவித்த போது அதை முறைப்படி தனக்கு அறிவிக்காததை தனக்கு நிகழ்ந்த அவமானமாகவும் வேதனைகரமான நிகழ்வுமாக குறிப்பிடுகிறார். மீண்டும் இரண்டாவது முறையாக 1999 ஆம் ஆண்டு அப்பொறுப்பு தன்னை தேடி வந்தபோது கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தான் சிறிது தங்கியதாகவும், பொதுமக்களுக்குத் தேர்வு குழுவினர் அறிவித்த பின்னரே தான் அறிந்து அதன் பிறகு அதை உதறித் தள்ளுவது தனக்குக் கடினமாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார் சச்சின். அத்தேர்வும் தனக்கு மிகக் கடினமாக இருக்கப் போகிறது என்பதை அறிந்தேதானிருந்தார். அதற்கு அடுத்த ஆண்டு இந்திய அணி அசுர பலம் பெற்றிருந்த அப்போதைய ஆஸ்திரேலியா அணியை அவர்கள் நாட்டிலே எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி முழுமையாக அவர்களால் கட்டுப்படுத்தப்பட்டது. அத்தோல்விகளும் வேறு சில காரணங்களும் தனக்கு மனவழுத்தத்தையும் விரக்தியையும் தர கங்குலி பெயரை தானே பரிந்துரைத்து அவருக்கு கேப்டன் பொறுப்பை வழங்குமாறு சொல்லிவிட்டு அப்பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார் சச்சின். தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் முழு அர்ப்பணிப்பையும் கேப்டனுக்கும் இந்திய அணிக்கும் அவர் தொடர்ந்து வழங்கிக் கொண்டே தான் இருந்தார். அடுத்து இறுதியாக 2007 ஆம் ஆண்டு தன்னிடம் மீண்டும் கேப்டன் பொறுப்பு வந்த போதும் அதை டோனிக்கு சிபாரிசு செய்ததும் அவரே தான். வேண்டாம் என்று உதறிய பின் திரும்பி கேப்டன் பொறுப்பு தன்னைத் தேடிவந்தும் அது தனக்கு சிறிதும் சபலத்தை கொடுக்கவில்லை என தன் நூலில் குறிப்பிடுகிறார் சச்சின். ஒரு கேப்டனாக அவர் ஜொலிக்காவிட்டாலும் அவர் பரிந்துரைத்தவர்களான கங்குலியும், டோனியும் கேப்டனாக ஜொலித்ததில் ரசிகராக நாம் மகிழலாம். 2001 ஆம் ஆண்டு தொடர் பதினைந்து டெஸ்ட் போட்டி வெற்றிகளுடன் வீறுநடைபோட்டு கொண்டு இந்தியா வந்திருந்தது ஆஸ்திரேலியா அணி. அச்சீசன் முழுவதும் ஹர்பஜன் தன் மந்திர சுழலால் ஆஸ்திரேலியா அணியினரைத் திணறடித்து கொண்டிருந்தார். அதன் முதல் போட்டியில் ஹர்பஜன் பந்திற்கு திணறிக்கொண்டிருந்த ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவ் வாஹை வெறுப்பேற்றும் விதமாக சச்சின் “இன்னும் இது போல சில பந்துகளை நீங்கள் சந்திக்க கூடும்” என்றதும், ராகுல் டிராவிட்டும் அவர் பங்கிற்கு அவரை வெறுப்பேற்றி ஆட்டமிழக்க செய்ததும் சச்சின் ரசிகனாக இருந்தும் கூட அதை ரசிக்க முடியவில்லை. விளையாட்டில் அது சாதாரணமான ஒன்றாக இருக்கலாம். அது போல பல இடங்களில் தன்னை வெறுப்பேற்றியதாக சச்சினும் குறிப்பிட்டிருக்கிறார். இருந்தாலும், சச்சின் அதைச் செய்ததை ஏற்றுகொள்ள முடியவில்லை. அது சச்சின் மீது வைத்திருந்த உயர்ந்த எண்ணத்தின் வெளிப்பாடாய் கூட இருந்திருக்கலாம். சச்சின் விளையாடியதிலேயே தன்னுடைய சிறந்த டெஸ்ட் மேட்ச் என்று அந்தத் தொடரில் பாலோ ஆன் பெற்று பின் லஷ்மன் செய்த மாயாஜாலத்தால் கொல்கத்தா ஈடன் கார்டன்ல் இந்தியா பெற்ற வெற்றியையேக் குறிப்பிடுகிறார். 2004 ஆம் ஆண்டில் சச்சின் சிட்னியில் தன்னுடைய டெஸ்ட் இன்னிங்ஸ்ன் இரண்டாவது பெரிய ஸ்கோரான 241 ரன்களை எடுத்த போட்டியில் தனது மூடநம்பிக்கையின் காரணமாக அப்போட்டி நடைபெற்ற நாட்களில் தொடர்ந்து ஒரே ஹோட்டலுக்கு சென்று ஒரே டேபிளில் அமர்ந்து ஒரே உணவை உண்டதாக நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். அதை இப்படிச் சொல்கிறார் அவர் “அக்ஹோட்டல் ஊழியர்கள் ஒன்று எங்களுக்குக் கிறுக்கு பிடித்திருப்பதாக எண்ணியிருக்கக் கூடும். இல்லையென்றால் அவர்கள் ஹோட்டல் உணவு பிடித்திருந்ததால் மீண்டும் மீண்டும் வந்ததாக எண்ணி மகிழ்ந்திருக்கக் கூடும். ஆனால் நாங்கள் ஏன் தொடர்ந்து அக்ஹோட்டலுக்கு சென்றோம் எனும் உண்மைக்காரணம் அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என்று சொல்லி சிரிக்கிறார். அத்தொடரே ஸ்டீவ் வாஹின் கடைசி போட்டி தொடர் அவர் தன்னுடைய கடைசி இன்னிங்ஸ்ல் சச்சினிடம் தான் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஒரு ஜாம்பவான் இன்னொரு ஜாம்பவானாலே இறுதி முறையாக ஆட்டமிழக்க வைக்கப்பட்டு வழியனுப்பி வைக்கப்படுகிறார் எனத் தொலைக்காட்சியில் நான் பார்த்து ரசித்த ஒரு தருணம் அது. தன்னுடைய அனுபவத்தில் அதைக் குறித்து வைத்ததன் மூலம் நான் மீண்டுமொருமுறை படித்து சிலாகித்துக்கொள்ள முடிந்ததில் மகிழ்வாய் உணர்ந்தேன். கலைந்த கனவு… 2003 உலகக்கோப்பையை இந்திய ரசிகர்கள் அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது. கிரிக்கெட் ஜுரம் கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையுமே பற்றி பிடித்திருந்த கணங்கள் அவை. முதல் போட்டி கத்துக் குட்டியான நெதர்லாந்துடன் சொல்லிக்கொள்ளும் படியான வெற்றியாக அமையவில்லை பொருமினார்கள் ரசிகர்கள். இரண்டாவது போட்டி ஆஸ்திரேலியாவுடன் மரண அடி வாங்கியது இந்தியா. கொதித்தெழுந்தார்கள் இந்திய ரசிகர்கள். சில வீரர்களுடைய வீடுகள் தாக்கப்பட்டது. கைஃப்பின் வீட்டில் கரி ஆயில் வீசப்பட்டது. சச்சின் அமைதி காக்கும்படி அறிக்கை எல்லாம் விட வேண்டியதாகிப் போனது. அடுத்த ஆட்டம் ஜிம்பாபேயுடன் அவர்களுடனான வெற்றியுடன் இந்தியாவின் ஏறுமுகம் துவங்கியது. அடுத்து வந்த நமீபியாவை பவுலிங் மற்றும் பேட்டிங்ஙில் போட்டுச் சாத்திவிட்டு வீறு கொண்ட வேங்கையாக வேகமாக முன்னேறியது இந்திய அணி. இடையில் சிக்கிய இங்கிலாந்தையும் அதே வேகத்தில் போட்டு சாத்தியது. அடுத்த போட்டியாளராக வந்தது இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தான். அப்போட்டி ரசிகர்களிடம் மட்டுமல்ல வீரர்களிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது என்பதை சச்சின் மூன்று நாட்களாக தன்னால் சரியாகத் தூங்க முடியவில்லை என்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அப்போட்டி துவங்கிய விதத்தைக் குறித்து சச்சின் இப்படிச் சொல்கிறார். “போட்டி துவங்குவதற்கு பல மணிநேரத்திற்கு முன்பே அரங்கம் களைகட்டியிருந்தது. விளையாட்டு என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என எனக்குத் தோன்றியது. உலகின் மாபெரும் அரங்கில், ரசிகர்களுக்கு மத்தியில், எங்கள் பரம எதிரிக்கு எதிராக என் அணிக்காக விளையாடுவதற்குத்தான் நான் கிரிக்கெட் விளையாடினேன். இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டதைச் செவிமடுத்து, அதனோடு சேர்ந்து நான் பாடியபோது, அந்த வார்த்தைகள் என் உடலைச் சிலிர்க்க வைத்தன.” நமது தேசிய கீதம் இசைத்த நொடி மட்டுமல்ல சச்சின், நம் அணி சேர்த்திருந்த ஒவ்வொரு ரன்னும், சந்தித்த ஒவ்வொரு பந்தும், எடுத்த ஒவ்வொரு விக்கெட்டும், தடுத்த ஒவ்வொரு பந்துகளுமே எங்களுக்குச் சிலிர்ப்பை கொடுத்துக் கொண்டே தான் இருந்தது சச்சின். அப்போட்டியில் நீங்கள் தவறவிட்ட சதத்தைத் தவிர ஒவ்வொரு கணத்தையும் நாங்கள் கொண்டாடித்தீர்த்தோம். என்று சச்சின் சொல்லிய அவ்வார்த்தைகளைப் படிக்கையில் ஒருமுறை நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். அப்போட்டியிலும் தொடர்ந்து வந்த போட்டிகளிலும் இந்திய அணி சக இந்தியர்களுக்கு வெற்றியைப் பரிசளித்து அளப்பரிய மகிழ்ச்சியை வாரி வழங்கிக் கொண்டு இறுதி போட்டிக்குள் வந்து சேர்ந்தது. கோப்பைக் கனவுடன் இருந்த இந்திய அணியின் கனவை ரிக்கி பாண்டிங்ன் பேய் ஆட்டம் தவுடுபொடியாக்கி தன் பக்கம் பறித்தெடுத்தது. இறுதியாகக் கோப்பை கைநழுவிப் போனது. இந்தியாவின் கோப்பை கனவு கனவாகவே போனது. அந்த உலகக் கோப்பை தொடரின் நாயகனாக அறிவிக்கப்பட்டார் சச்சின். அவர் அதில் அடித்த மொத்த ரன்கள் 673 தொடர் நாயகன் பரிசாக தங்கப் பேட்டை பெற்றார் அவர். தோல்வி கொடுத்த வலியின் காரணமாக தனக்குக் கிடைத்தது தங்க பேட் என்பதைக் கூட உணரவில்லையாம் அவர். தன்னுடைய விளையாட்டு உபகரணங்களுடன் லக்கேஜிலே போட்டுவிட்டாராம் அப்பரிசையும். மும்பையில் தரையிறங்கிய அவரிடம் ரசிகர்கள் அதைப் பார்வையிட கேட்டபோதே அது தங்கம் எனும் உண்மை புரிந்ததாம். 2003 உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்தியா கோப்பையை தவற விட்டாலும் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர் மனதிலும் நீங்காமல் இடம் பிடித்திருக்கும் போட்டித்தொடர் அது. இந்தியா தனது மிகச்சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்தி இருந்தது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. அது போலவே 2007 உலகக்கோப்பை போட்டித்தொடர் எந்தவொரு கிரிக்கெட் ரசிகர் மனதிலும், திரும்பக் கனவிலும் கூட வந்துவிடக் கூடாது என எண்ண வைத்த துரதிர்ஷ்டம் வாய்ந்த தொடராகவும் அமைந்து விட்டது… இத்தொடர் முடிந்ததும் “என்டுல்கர்” எனத் தலையங்கம் போட்டு சச்சின் ஆட்டம் முடிந்தது என்று முதன்முறையாக விமர்சனம் வந்தது. எங்கு, எங்கு நோக்கினும் இந்திய அணியையும் குறிப்பாக சச்சினையும் நோக்கி விமர்சன கணைகள் பாய்ந்த வண்ணம் இருந்தன. அத்தோல்வி காரணமாக தனது தந்தையான சச்சினை விமர்சித்த சக மாணவனை அர்ஜுன் அடித்து உதைத்த சம்பவமும் அரேங்கேறி இருக்கிறது. சச்சினும் விரக்தியில் ஓய்வை அறிவித்துவிடலாமா என்று எண்ணியதாகக் கூறுகிறார். தன்னுடைய கிரிக்கெட் வாழ்வின் அப்போராட்ட காலத்தில் தன்னுடைய கதாநாயகனான விவியன் ரிச்சர்ஸ்டன் தொலைப்பேசி மூலமாகத் தன்னை தொடர்பு கொண்டு தன்னுள் இன்னும் நிறைய கிரிக்கெட் மீதமிருப்பதாகவும் தான் ஓய்வைப் பற்றி சிந்திக்கவே கூடாது என நாப்பது நிமிடங்களுக்கு மேல் அவருடன் அவருக்கு ஆறுதலாகப் பேசியதையும் நன்றியுணர்வுடன் தன் நூலில் குறித்து வைத்திருக்கிறார் சச்சின்.அதற்கு அடுத்து வந்த ஆண்டுகளில் நல்ல பார்ம்க்கு வந்து விமர்சனங்களுக்குத் தனது மட்டை மூலம் பதிலடி கொடுத்த பின் ரிச்சர்ட்ஸை தொடர்பு கொண்டு அதற்கு நன்றி நவில்ந்ததையும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் சச்சின். ஆபத்தில் தோளோடு தோளாக உடன் இருப்பவர்களும் நல் ஆலோசனை வழங்குபவருமே சிறந்த நண்பராக இருக்க முடியும். அப்போராட்ட காலத்தில் விபரீதமான முடிவை சச்சின் எடுக்க விடாமல் காத்ததற்கு சச்சின் மட்டுமல்ல சச்சின் ரசிகராக நாமும் ரிச்சர்ட்ஸ்க்கும் நமது நன்றியைக் கூறிக்கொள்ளலாம். இக்கால கட்டத்தில் பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பலின் தவறுகளையும் அவருடைய சூழ்ச்சிகளையும் விளக்குகிறார் சச்சின் தொடர்ந்து அவரை விமர்சனங்களால் விளாசித் தள்ளுகிறார். தனது தனிப்பட்ட வாழ்விலும் கிரிக்கெட் வாழ்விலும் சச்சின் ஒரே ஒருவரை மட்டுமே விமர்சித்திருக்கிறார் அது கிரேக் சேப்பல் மட்டுமே. இந்திய அணியின் மிக மோசமான காலங்கள் என்று கிரேக் சேப்பல் பயிற்சியாளராக இருந்த தருணங்களை வெறுப்பாய் சொல்லியிருக்கிறார் சச்சின். சச்சின் சந்தித்த காயங்கள்… காயங்கள் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொவருக்கும் ஏற்படுவது இயல்பானதே. அதிலிருந்து மீண்டு வருவதும், திரும்ப தன்னுடைய பழைய நிலையை அடைவதும் சற்று சிரமமானதும் சவாலானதும் கூட. சச்சின் அதையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டார் அது தான் அவரைச் சாதனைகளின் நாயகனாக மாற்றியிருக்கிறது. பல முறை நாளிதழ்களில் படித்திருக்கிறேன் முடிந்தது சச்சின் ஆட்டம் இக்காயத்திலிருந்து இனி அவரால் எப்போதுமே மீண்டு வர முடியவே முடியாது என ஆனால் அத்தனை விமர்சனங்களையும் தகர்த்தெறிந்துவிட்டும், காயங்களைக் கடந்தும் தனியொருவனாய் வந்து நிற்பார் சச்சின். விமர்சகர்களின் வாயை தன் மட்டையாலே தைப்பார் அது தான் அவர் ஸ்டைல். 2005 நான்கரை மாதம் மட்டையைக் கையில் பிடிக்க முடியாத அளவு பெரிய அறுவை சிகிட்சையான முழங்கை அறுவை சிகிட்சை… சிறிதும் பெரிதுமாக இன்னும் பல அறுவை சிகிட்சைகள்… தன்னை மிகவும் பாதித்த தோள்அறுவை சிகிட்சை. அதை முடித்து அறை வந்தவர் தொடர்ந்து வரப்போகும் மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான தொடரைத் தவறவிடப்போவதாக எண்ணித் தேம்பி தேம்பி அழுததாகக் குறிப்பிடுகிறார். மனுசன் எத்தனை நேசித்திருக்கிறார் தன் கிரிக்கெட்டை… தன்னுடைய ஆரம்பக்கால முதல் பத்து ஆண்டுகள் தவிர்த்து ஆடுதளத்தில் பந்து வீச்சாளர்களையும், வெளியே பெருங்காயங்களோடும் போட்டி போட்டே ஜெயித்திருக்கிறார் சச்சின். அதை அவருடைய சுயசரிதை முழுவதும் சீரான இடைவெளியில் காணமுடிந்தது. தன்னுடைய சில தனித்துவமான ஷாட்களை எல்லாம் அவர் இக்காயங்களுக்காய் தாரைவார்க்க வேண்டி வந்தது. அப்படி இருந்தும் அவர் தன் ஆட்டத்தில் எவ்வித தோய்வும் சோர்வும் இன்றி பார்த்துக்கொண்டார் அது தான் சச்சின். இத்தனை காயங்களுக்கு பின்பும் சச்சினை போல் தாக்குப்பிடித்து சாதித்தவர்களை கிரிக்கெட் உலகில் அபூர்வமாகவே தான் காண முடியும். சச்சினாய் இருப்பதிலுள்ள சங்கடங்கள்… சச்சினாய் இருப்பதிலுள்ள சௌகரியங்கள் நாமெல்லாம் அறிந்ததே. சச்சினாய் இருப்பதில் பல சங்கடங்களும் இருக்கத் தான் செய்திருக்கின்றன. அஞ்சலியைக் காதலித்த காலங்களிலும் சாதாரணமானவர்களை போலக் கடற்கரையை சுற்றியோ, தியேட்டருக்குச் சென்று சினிமா பார்த்தோ அவர்களால் பொழுதுகளை கழிக்க முடிந்திருக்கவில்லை. வெளியே வைத்து எப்போதோ தான் சந்தித்துக் கொண்டார்கள் அதுவும் சில நிமிடங்கள் மாத்திரமே நீளும் அச்சந்திப்பு. அதுவும் யார் கண்ணிலும் பட்டுவிடக்கூடாது எனும் பயத்தோடே தான் இருக்கும். குழந்தைகளுடன் கடைத்தெருவோ, கடைவீதியோ போய்வர முடியாது. ஒரு ஹோட்டலுக்கு குடும்பத்தினருடன் உணவருந்தப் போகவேண்டும் என்றாலும் கூட மூன்று நாட்கள் முன்பே திட்டமிட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். இன்னும் வெளிநாட்டுத் தொடர்களின் போது குடும்பத்தை பிரிந்திருப்பதையும் வேதனையோடே சொல்கிறார். ஆண்டு முழுவதும் வெளிநாடுகளில் கிடக்கும் நமக்கு அது சாதாரணமாகவே தெரிகிறது. ஆனால் முதல் குழந்தை டெலிவரிக்காக அஞ்சலியை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு குழந்தையை காணத் தவிப்போடு இருந்த சச்சினிடம் “சச்சின் நீங்கள் இங்கு அதிக நேரம் இருந்தால் எங்களுக்குப் பாதுகாப்பு சிக்கல் ஏற்பட்டுவிடும் நீங்கள் போய்விடுங்கள் குழந்தை பிறந்ததும் தகவல் தருகிறோம் வாருங்கள்” என்றது ஒரு பெருங்கொடுமையாக தான் தோன்றியது எனக்கு. சிண்டு மூட்ட முயற்சித்த டாக்டர்… சாதாரண குடியானவன் வீடு முதல் சாதனையாளர்களின் வீடு வரைக்கும் சிண்டு மூட்டிவிட முயற்சிப்பவர்கள் இருந்துகொண்டே தான் இருக்கிறார்கள். அப்படியொரு சம்பவம் சச்சினின் வாழ்விலும் நிகழ்ந்திருக்கிறது. நமக்கெல்லாருக்கும் தெரியும் சச்சின் ஒரு IPL தொடரில் காயம் காரணமாக இறுதி சில போட்டிகளில் மட்டுமே விளையாடினார் என்று. அவருடைய காயங்களை பரிசோதித்த டாக்டர் ஒருவர் மும்பை அணியின் நிர்வாகி ஒருவரிடம் இப்படிச் சொன்னாராம் “சச்சினுக்கு காயம் உடலில் இல்லை அவர் மனதில் இருக்கிறது என்று”. அந்த நிர்வாகி அதை அஞ்சலியிடம் போட்டுவிட (அந்த நிர்வாகி ஒருவேளை அம்பானி மனைவி நிதா அம்பானியா இருந்திருக்குமோ?) அஞ்சலி மூலம் அது சச்சின் காதுக்கு வருகிறது. சச்சின் தன்னுடைய சுயசரிதையில் அஞ்சலி மீது கோபப்பட்டேன் என அந்த ஒரு சம்பவத்தையே குறிப்பிடுகிறார். கை விரல், கால் விரல் எலும்பு முறிவுகளுடன் விளையாடி இருக்கிறேன்… அப்பா இறந்து சில நாட்களுக்குள்ளாகவே விளையாடினேன்… காயத்தின் காரணமாக ஒவ்வொரு தொடரையும் தவற விடும் போதெல்லாம் நான் எவ்வளவு வருந்தியிருக்கிறேன் என அத்தனையும் அருகில் இருந்து அறிந்திருந்தும் அஞ்சலி எப்படி என்னிடம் இப்படி கேட்டிருக்கலாம்… என் மீது எப்படி அவருக்குச் சந்தேகம் வந்திருக்கலாம் என்று தன் வருத்தத்தையும் கோபத்தையும் கொட்டுகிறார் சச்சின்… சச்சின் கோபப்படுவதிலும் நியாயம் இருக்கு தானே… பிரபலங்கள் வாழ்வில் நடக்கும் இதுபோன்ற சின்ன சின்ன விசயங்கள் கூட படிக்கப் புதிதாகவும் ஸ்வாரஸ்யம் மிக்கதாகவும் தான் தெரிகிறது… சச்சினின் 21 வருடக் காத்திருப்பு நிறைவேறியது இந்த உலகில் எவரொருவருக்கும் படித்ததை படிப்பதிலும், அறிந்ததை அறிந்து கொள்வதிலும் எப்போதும் ஆர்வம் இருப்பதே இல்லை. 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை விளையாட்டு போட்டிகளை குறித்து நான் சொன்னாலும் அப்படியே ஆகும். அத்தொடரின் ஒவ்வொரு ஆட்டமும் ஒவ்வொரு கணமும் இந்திய ரசிகர்களின் மனதில் எப்போதும் நீக்கமற பசுமையாய் நிறைந்தே நிற்கும். ஆகவே இந்தியரின் கனவை நனவாக்கிய டோனியின் அதி அற்புத அந்த சிக்ஸரிலிருந்து துவங்குகிறேன் நான். எந்த நாளின் விடியலுக்காக 21 ஆண்டுகள் பொறுத்திருந்தாரோ சச்சின்… தன் வாழ்நாளில் எந்த கணங்களுக்காக காத்திருந்தாரோ சச்சின்… எந்த நிமிடத்திற்காக ஏங்கி தவித்துகொண்டிருந்தாரோ சச்சின்… எந்த நொடிக்காக தவமென காத்திருந்தாரோ சச்சின்… அந்த நாள், அந்த நொடி, அந்த நிமிடம் அதுவே டோனியால் ஆடுதளத்திற்கு வெளியே பந்தை துரத்தி அடிக்கப்பட்ட அந்த கணம். அந்த சிக்ஸர் பறந்த நேரம் இந்தியர்களின் கனவு கைகூடிய நேரம் சச்சின் என்ன செய்து கொண்டிருந்தாராம் தெரியுமா?! இறுக்க கண்களை மூடிக்கொண்டு பிராத்தனையில் ஈடுபட்டிருந்தாராம். “அன்றைய இரவு நான் மூடநம்பிக்கையின் உச்சத்தில் இருந்தேன் என்று அவரே குறிப்பிடுகிறார்.” அவர் மட்டுமல்ல அவருடன் ஆடாமல் அசையாமல் சேவாக்கையும் ஒரே நிலையில் இருக்கும் படி கேட்டுக்கொண்டாராம் சச்சின். இறுதியாக இந்தியா வெற்றி பெறும் நேரம் வந்ததும் அந்த கணத்தை கண்டு ரசிக்க கிளம்பிய சேவாக்கை தடுத்து நிறுத்திய சச்சின் “இந்திய அணி வெற்றி பெறும் கணத்தை இனியும் நூற்றுக்கணக்கான முறை நீங்கள் டிவியில் கண்டு களிக்க முடியும் இப்போதைக்கு இருக்கும் இடத்தில் அமர்ந்து பிராத்தனை செய்யும் படி வேண்டிக்கொண்டதாக சொல்கிறார் சச்சின்.” அன்றைக்கு அவர் இப்படி தான் பிராத்தனை செய்தாராம் “இந்திய ரசிகர்களுக்கும், இந்திய கிரிக்கெட்டுக்கும், இந்திய கிரிக்கெட் அணிக்கும் எது சிறந்ததோ அதை நிகழ்த்திக்கொடுக்கும்படி இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தேன்.” இந்தியா வெற்றிபெற்று மும்பை வான்கடே அரங்கும் இந்திய தேசமும் மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளிக்க வெளியே வந்து பார்க்கிறார் சச்சின், எங்கும் இந்தியாவின் மூவர்ணகொடி பறக்கிறது. வானவேடிக்கையால் வானில் வர்ணஜாலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எதிரே உணர்ச்சி பிளம்பாய் நிற்கும் யுவ்ராஜை கட்டியணைத்து அழுகிறார் சச்சின். அவருடன் என் இந்திய தேசமும் ஆனந்த கண்ணீரை வடித்த நிமிடங்கள் அவை. தொடர்ந்து பரிசளிப்பு விழா நடக்கிறது. அதைத்தொடர்ந்து அவர்கள் டிரெஸ்ஸிங் ரூமில் முதல் ஷாம்பெயின் பாட்டில் திறக்கப்பட்டது அது சச்சினால் திறக்கப்பட்டது. அதில் அத்தனை வீரர்களிடமிருந்தும் கையெழுத்து வாங்கிய சச்சின் அதை தன் வீட்டின் நிலவறையில் பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்திருக்கிறார். சச்சினின் வெற்றிச்சவாரி வான்கடே அரங்கிற்குள் துவங்கியது இந்திய தேசிய கொடியை தன் கரங்களில் பிடித்து அசைக்க விராட் கோலி மற்றும் யூசுப் பதான் தங்கள் தோள்களில் அவரை சுமக்க தன் சொந்த மண்ணில் தன் கனவு நிறைவேறிய கணங்களை அனுபவித்து கொண்டே வருகிறார் சச்சின் அந்த நிமிடத்தை அவர் இப்படி சொல்கிறார். “என் சக அணியினர் என்னை சுமந்து செல்ல, என் சொந்த மண்ணில் அமைந்த மைதானத்தில் மூவர்ண கொடியை ஆட்டியபடியே சென்றதை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. இதற்கு மேல் என்னால் பெரிதாக எதைக் கேட்டுவிட முடியும்? உண்மையைக் கூறினால் வாழ்க்கை முழுமை பெற்றதைப்போல தோன்றியது. என்னுடைய கிரிக்கெட் பயணத்தின் மிகசிறந்த கணம் அதுதான். இத்தனை குதுகலத்திற்கு நடுவே, என்னை கீழே போட்டுவிடாமல் இருக்கும் படி யூசுப் பதானிடம் கூறியது நினைவிருக்கிறது. அதற்கு அவர் ‘நாங்கள் கீழே விழக்கூடும், ஆனால் நீங்கள் கீழே விழ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறினார்." அதன் பின்னும் ஏறக்குறைய இரண்டு மணிநேரமாய் அரங்கிற்குள் கூட்டம் குறையாமல் மக்கள் கொண்டாடிக்கொண்டிருந்தனர். நான் அக்கணங்களை உள்வாங்க எண்ணி வெளியே வந்தேன் அங்கே என் பெயரையும் என் நம்பரையும் தன் உடலில் வர்ணம் தீட்டியபடி நின்ற சுதீரை பார்த்தேன். அவரை எங்கள் டிரெஸ்ஸிங் ரூமிற்கு அழைத்தேன் என்னுடைய அழைப்பை கண்ட அவர் திடுக்கிட்டார் என்றால் அது மிகவும் குறைவு. அவரிடம் உலககோப்பையை கொடுத்து நானும் புகைப்படம் எடுத்துகொண்டேன். வான்கடே அரங்கில் நிறைந்திருந்த அத்தனை பேரிடமும் கோப்பையை கொடுத்து அவர்களுடன் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு எனக்கு இருந்திருந்தால் அதை நான் நிச்சயமாக உற்சாகமாக செய்திருப்பேன் என்கிறார் சச்சின். ஒருவழியாக கடல்போன்ற மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி நத்தை போல் நகர்ந்து அணியின் வாகனம் ஹோட்டல் அறையை நோக்கி செல்ல துவங்கியது. ஹோட்டல் நிர்வாகத்தினர் அணியினருக்காய் ஒரு ஷாம்பெயின் பாட்டிலையும் ஒரு சிறப்பு கேக்கும் கொடுத்தனர். அதை சச்சின் வெட்டி கொண்டாடிய பிறகு அவர்களது இரண்டாம் கட்ட கொண்டாட்டங்கள் துவங்கின. அவர்கள் அறை முழுவதும் பூக்களால் நிறைந்திருந்ததாம் அதில் சில பூக்களை சச்சினும் அஞ்சலியும் காதில் சூடிக்கொண்டு இசைக்கு தகுந்தது போல் நடனமாடினார்களாம். எல்லோருடைய அறையும் திறந்து தான் கிடந்ததாம். யாரும் யார் அறைக்கும் போக வசதியாக அது அப்படியே கிடந்ததாக குறிப்பிடுகிறார் சச்சின். ஹோட்டல் அறை கொண்டாட்டங்களில் ஒரு கட்டத்தில் விரட் கோலியும், ஹர்பஜனும், யுவ்ராஜும் சச்சின் முன் மண்டியிட்டு அமர்ந்துகொண்டு ‘துஜ்மே ரப் திக்ஹா ஹை யாரா மை கியா கரூன்’ (என் நண்பனே, உன்னில் நாங்கள் கடவுளையே பார்க்கிறோம்) என்ற பாடலை பாடி அவரை தர்மசங்கடத்துக்குட்படுத்தியதாக மகிழ்வுடன் குறிப்பிடுகிறார் சச்சின். அதற்கு அடுத்த நாளில் ஐசிசி யின் தேவைக்காக சில புகைப்படங்களை எடுத்துவிட்டு. அன்றைக்கே ராஜ்பவனில் குடியரசு தலைவரை சந்தித்து விட்டு வீட்டிற்கு சென்றதாகவும், அவரது அண்டை வீட்டாரும் நண்பர்களுமாக அவர் குடியிருப்புக்குள் நுழைந்த போது மேளதாளங்கள் முழங்க அவரை வரவேற்றதாகவும் சொல்கிறார் சச்சின். தான் எதும் சாதனை செய்துவிட்டு வரும்போது அவர்கள் அவ்வாறு செய்வது வழக்கம் என்றும் அப்போதெல்லாம் அது அவருக்கு தர்மசங்கடத்தை கொடுப்பதாகவும் ஆனால் இம்முறை அம்மா அவருக்கு ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்ட போது குறிப்பிட்ட எதையோ அவர் சாதித்து திரும்பி வந்தது போலொரு உணர்வு ஏற்பட்டது என்றும் குறிப்பிட்டிருக்கிறார் சச்சின். அந்த உலக கோப்பையை வீரர்கள் பலர் தனக்கு அர்பணிப்பதாக சொல்லியது அவரை நெகிழ செய்வதாக இருந்ததையும் குறிப்பிட்டிருக்கிறார் சச்சின். அந்த நிமிடங்களை என்னாலும் கூட மறந்துவிட முடியாது கிரிக்கெட் பார்த்து எனது ஹீரோ சச்சினின் கண்களில் கண்ணீரை பார்த்து நான் முதன் முறையாக அழுத தினம் அன்று. இந்த புத்தகம் படித்துகொண்டிருக்கையிலும் அன்றைய காட்சிகள் என் மனக்கண்ணளில் ஓடிக்கொண்டே இருந்தது. இம்முறையும் நான் அழுதுவிடுவேனோ என்றே தோன்றியது எனக்கு. என் வாழ்வில் நான் மிகவும் மகிழ்ந்திருந்த தருணத்தை சச்சின் சுயசரிதையுடன் மீண்டுமொருமுறை வாழ்ந்த திருப்தி கிடைத்ததெனக்கு. 1947 இந்திய விடுதலைக்கு பின் ஒட்டு மொத்த இந்தியா தேசமும் அந்த இரவில் தான் அதிக சந்தோஷமாக இருந்திருக்கும் என்று நான் கூறுவது சற்று மிகையாக தோன்றினாலும் அதுவே உண்மையாக இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமே இல்லை. சச்சினின் இறுதி இரண்டு ஆட்டங்கள் இந்தியாவிற்கு மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட் மேட்ச் விளையாட வருகிறது என்ற அறிவிப்பு வந்தபிறகு தான் தனது ஓய்வைப் பற்றி சிந்தித்தாராம் சச்சின். இரண்டு மேட்ச் போட்டித்தொடர் அது சரியாக தனது இருநூறாவது டெஸ்ட் மேட்ச். ஆட்டம் நடப்பது இந்தியாவில் ஓய்வு பெற இதைவிடச் சிறப்பான சந்தர்ப்பம் அமைவது அரிது என்பதை உணர்ந்த சச்சின், தனது ஓய்வைக் குறித்து அறிவிக்கப் போகிறேன் என்றாராம் அண்ணன் அஜீத் உட்படத் தனது குடும்பத்தினரிடம் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் அனைவரும் ஒத்துக்கொள்ள அஞ்சலி மட்டும் ஓய்வை அறிவிப்பதில் பிரச்சனை இல்லை சில மாதங்களுக்குப் பிறகு நீங்கள் அதைக் குறித்து வருந்தாமல் இருந்தால் போதும் என்றாராம். ஓய்வை அறிவித்த பின் சச்சினை சுற்றி நிகழ்வது அத்தனையும் உணர்ச்சிமயமாகவே காணப்டுகிறது. தனது 24 ஆண்டுக்கால நீண்ட நெடிய பயணம் முடியப் போகும் தருணம் தான் தினசரி பயிற்சிக்கு செல்லும் அரங்கு ஊழியர்களுக்குச் சிறப்பு பரிசுகள் வாங்கிச் சென்று கொடுத்தாராம் சச்சின். இனி நீங்கள் இங்குப் பயிற்சிக்கு வரப்போவதில்லை என்பதை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கிறது என்று கூறி சிலர் அவரைக் கட்டிக்கொண்டு அழுதார்களாம். அதைத் தொடர்ந்து தங்கள் வேலைகளைப் பார்க்க சென்றுவிடுவார்கள் என்று எதிர்பார்த்த சச்சினுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆம்! அவர்கள் யாருமே அன்றைக்கு சச்சினை விட்டு நகரவே இல்லையாம். இன்றைக்கு நீங்கள் பயிற்சி முடித்துச் செல்லும் வரை நாங்கள் உங்களுடனே தான் இருக்கப் போகிறோம் என்று கூறிக்கொண்டு அவரிடமே அவருடனே தான் நின்றார்களாம் என்பதை நெகிழ்ச்சியாகக் குறிப்பிடுகிறார். அவர்களது இத்தகைய அன்பைப் பெற்றதென்பது அவரது குணத்தையே காட்டுகிறது. ஒரு பிரபலமானவர் எங்கோ பல ரசிகர்களைப் பெற்றிருக்கிறார் என்பது இயல்பு. தான் அன்றாடம் பார்த்துப் பழகுபவர்களின் அன்பைப் பெற்றிருக்கிறார் என்பதே சிறப்பு. சச்சின் குணத்தாலும் உயர்ந்தவர் என்பதையே இது காட்டுகிறது. 199 ஆம் ஆட்டத்தை ஆட கொல்கட்டா சென்று இறங்கியதிலிருந்தே ஒரு பரபரப்பும் உணர்ச்சிமயமான நிகழ்வுகளாலுமே நகர்கிறது புத்தகம். செல்லும் இடமெல்லாம் அவருக்குப் பிரியாவிடையும் பரிசளிப்புமாக நகர்கிறது. அப்போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்களில் வெற்றிபெற்றது. ஆட்டமும் இருதினங்களுக்கு முன்பாக முடிந்தது. சச்சினின் இறுதி பயணம் 24 ஆண்டுக்கால ஓட்டம் ஒருவழியாக மும்பை வான்கடே அரங்கில் துவங்கியது கிரிக்கெட் அரங்கு நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அவரது இறுதி ஆட்டத்தைக் காண உலகெங்கிலும் இருந்து ரசிகர்கள் வந்திருந்தார்கள். முன்பு ஆச்ரேக்கர் சச்சினை பார்த்து சொன்னது நிறைவேறிக்கொண்டிருந்த கணங்கள் அவை. 24 ஆண்டுக் கால தனது விளையாட்டு அனுபவத்தில் தனது தாயார் முதல் முறையாகத் தனது ஆட்டத்தைப் பார்க்க வந்திருந்தது அவருக்குக் கூடுதல் சிறப்பாக இருந்தது. 200 வது போட்டிக்கு தாஜ்மகால் ஹோட்டலுக்கு சென்ற சச்சினுக்கு ஹோட்டல் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து அவரை மகிழ்வில் திக்குமுக்காட வைத்தது. இந்திய அணி தங்கியிருந்த 19 வது மாடி முழுவதும் எங்கும் அவர் புகைப்படத்தால் அலங்கரித்திருந்திருக்கிறார்கள். லிப்ட் முழுவதும் அவர் புகைப்படம். அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையின் ஒவ்வொரு பொருளிலும் அவர் பெயர் பொறித்து வைத்தது என மிகச் சிறப்பாக சிறப்பித்தனர் சச்சினை. ஒவ்வொரு சச்சின் ரசிகர் விரும்பியதையும் அவர்கள் விரும்பிச் செய்திருக்கிறார்கள். இறுதியாக அரங்கம் எங்கும் சச்சின்… சச்சின்… என்ற கோசத்துடன் 74 ரன்களுக்கு கிரிக்கெட்ன் கடவுள் என்று வர்ணிக்கப்பட்ட சச்சினின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதன் ஒவ்வொரு கணங்களையும் ஒவ்வொரு நொடியையும் அழகாக உணர்ச்சி பிழம்பாக எழுதி வைத்திருக்கிறார் சச்சின். இறுதியாக தன்னுடைய இருபது நிமிட உணர்ச்சிப் பூர்வமாக உரையை இனிவரும் இளம் வீரர்களுக்கும் பயன்படும் விதமாகவும் தன் வாழ்வில் தன் வெற்றியில் பங்களித்த அத்தனை பேருக்கும் நன்றி கூறியும் முடித்தது சச்சின் எனும் கிரிக்கெட்டின் சகாப்தம். அத்துடன் இரண்டாம் முறையாக கிரிக்கெட் பார்த்து நான் அழுத தினமான என்னுடைய நாயகனின் இரண்டாவது வெற்றி பயணம் சக வீரர்களின் தோள்மீது துவங்கியது. இந்திய கிரிக்கெட்க்கு நிரப்ப முடியா வெற்றிடத்தை விட்டுச் சென்றது சச்சின் எனும் சரித்திரம். இறுதியாக சச்சின் ஒருமுறை ஆடுதளம் சென்று தன்னை பேணிப் பாதுகாத்த 22 கெஜ நீள ஆடுதளத்திற்கு “என்னை அக்கறையோடு கவனித்துக்கொண்டதற்கு நன்றி” என்று கூறி வந்ததுடன் அத்தனையும் முடிந்தது. அத்துடன் நம்புதற்கரிய 24 ஆண்டுக்கால சச்சினின் சாதனை பயணம் முடிந்திருந்தது. இனி ஒருபோதும் சச்சினை கீரிசினுள் கிரிக்கெட் மட்டையுடன் பார்க்க முடியாதே என்ற எண்ணம் புத்தகம் வாசித்தபோது மீண்டும் எனை ஒருமுறை அழ வைத்தது. ஒருவழியாக ஆடுதளத்தினுள் நடந்துகொண்டிருந்த பிரிவு உபச்சாரவிழாவையும் கோலாகல கொண்டாட்டத்தையும் முடித்த சச்சின் ஹோட்டல் சென்று அஞ்சலியுடன் உணவருந்திக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவருக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது எதிர்முனையில் பேசியது அப்போதைய இந்திய நாட்டின் பிரம மந்திரி டாக்டர். மன்மோகன் சிங். இந்திய கிரிக்கெட் விளையாட்டுக்கு சச்சின் அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு “பாரத ரத்னா” விருது வழங்கபடுவதாக கூறி அவருக்கு இந்தியாவின் சார்பில் நன்றியையும் வாழ்த்துகளையும் கூறிக்கொண்டாராம் அவர். அதைக் கேட்டுவந்த சச்சின் சாப்பிட்டு கொண்டிருந்த அஞ்சலியை எழும்ப வைத்து அவரைத் தனியாக நாற்காலி ஒன்றில் அமரவைத்துவிட்டு அவருக்கு நேரெதிராக அமர்ந்து கொண்டு இப்படிச் சொன்னாராம் “அஞ்சலி, நீ இப்போது ஒரு பாரத ரத்னாவை பார்த்துக்கொண்டிருக்கிறாய்” என்று அக்கணம் உரக்கக் கத்தி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அஞ்சலி அப்படியே அவரைக் கட்டிக்கொண்டாராம். அஞ்சலி மட்டுமல்ல சச்சின், நாங்கள் பல கோடி பேரும் அக்கணம் கத்தித்தான் எங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினோம். அஞ்சலி கத்தியது உங்களுக்குக் கேட்டது நாங்கள் கத்தியது உங்களுக்குக் கேட்கவில்லை அவ்வளவே வித்தியாசம். கிரிக்கெட் வாழும் காலம் வரை சச்சினும் வாழுவார் சிரஞ்சீவியாய். நன்றி மறவாதவர் சச்சின்… சச்சின் எந்தக் காலத்திலும் பழசையெல்லாம் மறந்து போனவருமல்ல பெயரும், பணமும், புகழும் வந்ததும் நன்றி மறந்தவரும் அல்ல. தான் இந்திய அணியில் முதன் முதலாய் தேர்ந்தெடுக்கப்பட்ட தருணம் “இரானி கோப்பை” க்கான போட்டியொன்றில் ஆட்டம் இழக்காமல் 86 ரன்களுடன் ஆடிக்கொண்டிருக்கிறார் சச்சின். குர்ஷரண் சிங் எனும் வீரர் கைவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக றிட்டயர் பெற்றுக்கொண்டு வெளியே சென்றவர் சச்சின் சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக அந்தக் காயத்துடனே வந்து விளையாடியிருக்கிறார். அதை நினைவில் வைத்திருந்த சச்சின் தான் சாதனை நாயகன் ஆன பிறகும் கூட 2005 ஆம் ஆண்டு அவர் ஏற்பாடு செய்திருந்த போட்டி ஒன்றிற்குப் போய் அந்த நன்றியைக் காட்டியிருக்கிறார். அதுபோல கடவுள் பக்தி அதிகம் சச்சினுக்கு ஒவ்வொரு போட்டித்தொடருக்கு செல்வதற்கு முன்பும் மும்பையில் உள்ள இரு பிள்ளையார் கோயிலுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். கூட தன்னுடைய இத்தனை உயர்வுக்குக் காரணமான பள்ளிப் பருவ ஆசான் ஆச்ரேக்கரையும், தன்னுடைய பள்ளி காலத்தில் நான்கு ஆண்டுக்காலம் தங்கள் வீட்டில் தங்கவைத்து மகன் போல பார்த்துக்கொண்ட சித்தியின் வீட்டுக்கும், தனது பெற்றோரிடமும் சென்று ஆசி வாங்கிச் செல்வது தனது இறுதி போட்டித்தொடர் வரை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். உச்சம் தொட்டபிறகும் கூட உச்சம் தொட காரணமாக இருப்பவர்களை மறக்காமல் அவர்களிடம் நன்றி பாராட்டுபவர்கள் இன்னும் இன்னும் உயர்கிறார்கள் என்பதற்கு சச்சினே சாட்சி. சச்சினிடம் ரசிக்க மட்டுமல்ல படிக்கவும் நிறையவே இருக்கிறது. அவர்கள் அத்தனை பேரின் ஆசியும் பிரார்த்தனையும் நிச்சயம் சேர்ந்தே தான் அன்னை தெரேசாவிற்கு பின் இரண்டாம் நபராக ஒருவர் உயிரோடு இருக்கையில் இந்திய அரசால் அவருக்குத் தபால் தலை வெளியிடப்பட்டதும் சட்டங்களை திருத்தி ஒரு விளையாட்டு வீரராக முதன் முதலாக அவருக்குப் பாரத ரத்னா வழங்ப்பட்டதும் என்று கூறுவதும் பொருத்தமாக இருக்கும். இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட மனிதன் சச்சின்… தான் இறுதியாக விளையாடிய உலகக் கோப்பையை வென்றது… ரஞ்சி கோப்பையை வென்றது… IPL கோப்பையை வென்றது… சேம்பியன்ஸ் ட்றாபியை வென்றது… தான் இறுதியாக விளையாடி விடைபெற்ற போட்டியையும் அத்தொடரையும் வென்று வெற்றி நாயகனாக விடைபெற்றது என அத்தனை இறுதியும் வெற்றியாகவே அமைந்து நிறைவு பெற்றது அவரது வெற்றி சரித்திரம்… கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பிடித்தது போலக் கடவுளுக்கும் மிகப் பிடித்த மனிதர் தான் சச்சின் இல்லையென்றால் இத்தனை வெற்றிகளுடன் விடைகொடுத்து அனுப்பியிருக்க மாட்டார் அவரும். கிமு, கிபி போல சச்சினுக்கு முன் சச்சினுக்கு பின் என கிரிக்கெட்டை கூட பிரிக்கலாம் அத்தனை உண்டு அவர் சாதனைகள். இன்னும் நிறைய நிறைய கிரிக்கெட் வீரர்கள் வரலாம் பெயரும் புகழும் சம்பாதிக்கலாம். ஆனால் அவர்களுக்கு முன் எவரெஸ்ட் சிகரம் போல் எப்போதும் உயர்ந்து நிற்பார் சச்சின் சாதனைகளால் மாத்திரமல்ல, தனது ஒழுக்கத்தாலும், ஆடுதளத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உண்மையுள்ளவராயும், நன்றியுள்ளவராயும், அவசியமற்ற சர்ச்சைகளில் சிக்காதவராயும் அத்தனை பேருக்கும் முன்மாதிரியாய் நின்றுகொண்டே இருப்பார் கிரிக்கெட்டின் கடவுளாய் சச்சின்… புத்தகத்தைக் குறித்து… சச்சின் எப்போதும் ஒரு மிகச்சரியான மனிதராகவே இருந்து வதுள்ளார் அது இப்புத்தகத்திலும் தெரிகிறது. தான் ஒரு எழுத்தாளர் அல்ல தனியாக தன்னை பற்றி தானே எழுதினால் தான் விரும்பியதை எழுத்தில் முழுமையாய் கொண்டுவர முடியாது என்பதை உணர்ந்தவராய் தனது தோழியான எழுத்தாளர் போரிய மஜும்தாருடன் இணைந்தே இப்புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதை மொழிபெயர்ப்பு செய்திருந்த தமிழார்வலர் திருமதி. நாகலட்சுமி சண்முகமும் தன் பணியை மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். முற்றும் அதுவொரு அழகான வயல்வெளி சர சரவென லேசான காற்று எனை வந்து தீண்டிச்செல்கிறது. பச்சை பசேல் எனக் கண்ணுக்கு குளுமையாய் எனை சுற்றிலும் நாற்று பரந்து விரிந்து வளர்ந்து கிடக்கிறது. அதனிடையே வளைந்து நெளிந்து கிடக்கும் வரப்பு வழியே நானும் சச்சினும் நடந்து செல்கிறோம் அங்கு வேறு யாரும் இல்லை. வேறு யாரும் இருப்பதை நான் விரும்பவும் இல்லை. அவர் தன்னுடைய அனுபவங்கள் அத்தனையும் என் தோள்மீது கைபோட்டு என்னுடனே சொல்லிக்கொண்டே நடந்து வருகிறார். அவர் சிரித்த இடத்தில் அவருடன் சேர்ந்து நானும் சிரித்தேன். அவர் கோபப்பட்ட இடத்தில் அவருடன் சேர்ந்து நானும் கோபப்பட்டேன். அவர் நன்றி கூறிய இடத்தில் அவருடன் சேர்ந்து அவருக்காய் நானும் நன்றி கூறிக்கொண்டேன். அவர் அழுத இடத்தில் அவருடன் சேர்ந்து நானும் அழுதேன். முடிவாக இனி நான் கிரிக்கெட் விளையாடப் போகிறதில்லை என்ற சச்சினிடம் நீங்கள் இல்லா கிரிக்கெட்டில் எனக்கென்ன வேலை என கிரிக்கெட் பார்ப்பதிலிருந்து நானும் ஓய்வை எடுத்துக்கொண்டேன். அப்படி தனிமையில் என்னுடன் பேசிய சச்சினின் சில பக்கங்களை நான் உங்களிடமும் உங்களுக்குப் புரியும் வண்ணம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் என்று நம்புகிறேன். வாசித்த உங்களுக்கென் நெஞ்சார்ந்த நன்றிகள். அன்புடன், கொல்லால் எச். ஜோஸ்