[] கோவை2தில்லி [அனுபவக் கட்டுரைகள்]                       ஆதி வெங்கட் kovai2delhi@gmail.com                   மின்னூல் வெளியீடு www.freetamilebooks.com                   மின்னூலாக்கம் மற்றும் அட்டைப்படம்:   வெங்கட் நாகராஜ் venkatnagaraj@gmail.com                     உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0  கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். கோவை2தில்லி!   ஒவ்வொரு பெண்ணிற்கும் திருமணம் என்பது அவளுடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி அமைக்கக்கூடியதாக அமைகிறது! மிதமான தட்பவெப்பத்தில், அழகான கோவையின் ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்த என்னை, அதிக வெயில், அதிக குளிர், பாஷை புரியாத, அழுக்கான தில்லிக்கு ஏற்றி அனுப்பியது திருமணம்! மனதிற்குள் ஒரு வித பயத்துடனும், எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற எண்ணத்துடனும் தான் தலைநகர் தில்லிக்கு முதல் முறையாக பயணம் செய்தேன்.   கோவையில் இருந்தவரை வீடு, அப்பா, அம்மா, தம்பி, நெருங்கிய உறவினர்கள், மிகக் குறைவான நட்பு வட்டம், தெரியாத வெளியுலகம் என இருந்த எனக்கு தலைநகரத்துக்குச் சென்ற பிறகு தான் தெரிந்தது என்னவரின் நட்பு வட்டம் எவ்வளவு பெரியது என! தங்கியிருந்த பகுதியில் இருந்த அனைத்து தென்னிந்த மனிதர்களுக்கும் [அது இருக்கும் நூற்றுக்கணக்கில்!] தெரிந்தவராக இருந்தார் என்னவர். வீட்டிற்கு வரும் நண்பர்கள், நேரே சமையலறைக்கு வந்து “என்ன சமையல் இன்னிக்கு?” என்று கேட்கும்போது வரும் உதறல் கொஞ்சம் நஞ்சமல்ல! சாப்பிட்ட பிறகு தான் செல்வார்கள்! சென்ற புதிதில் நிறையவே பயந்திருக்கிறேன்.   வெளியே போனால் எப்போது திரும்புவார் என்று சொல்ல முடியாத அளவுக்கு பொதுச் சேவை அவருக்கு! இரவு திடீரென தொலைபேசி/அலைபேசியில் அழைப்பு வந்தால், “இதோ வரேன்!” என்று புறப்பட்டு விடுவார் - தனியே இருந்தே பழக்கம் இல்லாத எனக்கு இரவு முழுவதும் உறக்கம் வராது – பயத்தில்! ஒரு முறை இரவு முழுவதும் வீட்டுக்கு வரவில்லை! நான் வீட்டில் தனியாக உறங்காமல் இருக்க, அவரும், அவருடைய ஒரு நண்பரும் இன்னுமொருவர் வீட்டில் இரவு முழுவதும் விழித்துக் கொண்டு – அவர்களுக்குத் துணையாக இறந்து போன அந்த வீட்டு மனிதரின் உடல்! அதிகாலை வீட்டுக்கு, சர்வ சாதாரணமாக இதைச் சொல்லி, ஒரு குளியல் போட்டு கிளம்பினவர், எல்லா வேலைகளும் முடிந்து வீட்டுக்கு வரும்போது மாலை ஐந்து மணி!   என்னதான் விஷாரத் வரை ஹிந்தி படித்திருந்தாலும், ஒரு மொழியைப் பேசுவதற்கும் படிப்பதற்கும் நிறையவே வித்தியாசம்! ஹிந்தி தெரிந்திருந்தாலும், தில்லி மக்கள் பேசும் ஹிந்தி புரியாமல் விழிபிதுங்கி வெளியே வரும் அளவுக்கு முழித்திருக்கிறேன். ஒரு முறை மார்க்கெட் சென்றபோது “நாஸ்பதி நாஸ்பதி” எனக் கூவிக் கூவி விற்க, என்னவரிடம் “என்னங்க ராஷ்ட்ரபதியை கூவிக் கூவி விற்கறானே” என்று கேட்டுவிட, அவர் இன்றளவும் என்னைக் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்! அவர் விற்றது பேரிக்காய் வகைகளில் ஒன்று – அதன் பெயர் ஹிந்தியில் நாஸ்பதி! இப்படி பல முறை பல்பு வாங்கி இருக்கிறேன். ஹிந்தியே தகராறு எனும்போது, ஹர்யான்வி, பஞ்சாபி என பல மொழி பேசும் தில்லி மக்களிடம், “என்னதான் சொல்ல வராங்க?” என்று தெரியாமல் மாட்டிக்கொண்டு முழித்திருக்கிறேன்!   மாற்றம் முதலில் பயமுறுத்தினாலும், நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன் – வட இந்திய சமையல் முதல் ஃபுல்கா எனப்படும் சப்பாத்தி செய்வது வரை, வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை, சக மனிதர்களை, பாஷையை, என நிறையவே விஷயங்கள் தெரிந்து கொண்டது, புதிய நட்புகளைப் பெற்றது ஆகிய எல்லாமே இந்த மாற்றத்தினால் தான். கோவை2தில்லி தந்த மாற்றங்கள், சில சுவையான நிகழ்வுகள், நினைவுகள் ஆகியவற்றை இந்தக் கட்டுரைத் தொகுப்பில் பார்க்கலாம்! வலைப்பூவில் எழுதிய கட்டுரைகளை ஒரு தொகுப்பாக, சேமிப்பாக, மின்புத்தகமாக வெளிக் கொண்டு வருவதில் மகிழ்ச்சி.   கோவை, தில்லி என மாற்றி மாற்றி எனது அனுபவங்களைச் சொல்லி இருக்கிறேன். சொல்லி இருக்கும் நிகழ்வுகள், அவை மீட்டெடுத்த உங்கள் நினைவுகள், பற்றிய உங்கள் கருத்துகளைத் தெரியப் படுத்தலாமே!   நட்புடன்   ஆதி வெங்கட் kovai2delhi@gmail.com 15-09-2017     பொருளடக்கம்   கோவை - சொர்க்கமே என்றாலும்…. தில்லி - “தசாவதாரமும் தசாவதாரும்” கோவை - கோடை விடுமுறை தில்லி - தோய்ப்பு நடனம் கோவை - கோடை விடுமுறையில் ருசித்தவை தில்லி - வெயிலைத் தேடி கோவை - நவராத்திரி நினைவலைகள் தில்லி - முதல் பனி கோவை - மல்லிகாம்மா தில்லி – சுப்ரபாதம் – பிங்கி பாட்டி கரோ! கோவை - காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு தில்லி - நாங்களும் கிராஜுவேட் ஆகிட்டோம்ல! கோவை - ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா தில்லி – ‘வண்ட்டூ’ மாமா கோவை - யாரடி என்னை உதைத்தது? தில்லி - முஜே (B)பச்சாவ்! கோவை - ஆடிப் பார்க்கலாம் ஆடு... தில்லியிலிருந்து கோவைக்கு! கோவை - என் இனிய தோழி! தில்லி - இடப்பெயர்ச்சி கோவை - மூக்கணாங்கயிறு! தில்லி - முடியுமா? முடியாதா? கோவை - ஹாப்பி பர்த்டே! சில ஞாபகங்கள் தில்லி - பக்கத்து ஃப்ளாட் காலியாயிருந்தால்!!! தில்லி - எம் ஃபார் மோங்க்கி! தில்லி - எல்.கே.ஜி அட்மிஷன் என்றால் சும்மாவா!!! தில்லி - நாங்கள்லாம் இதை எல்.கே.ஜியிலேயே ஆரம்பிச்சுட்டோம்ல!!!! தில்லி - உப்மாவும்! முஸ்கானும்!   கோவை - சொர்க்கமே என்றாலும்….   ”சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா?” என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் எல்லோருக்கும் அவரவர் ஊருடைய நினைவுகள் வரும். நம்முடைய பிறந்த ஊர் எவ்வளவு சிறிய கிராமமாக இருந்தாலும் - சிறு வயதில் ’நாம் பார்த்த, பழகிய இடங்கள், விளையாடிய இடங்கள், நம்முடைய பெற்றோருடன் கழித்த அந்த இன்பமான நாட்கள் மீண்டும் திரும்பக் கிடைக்காதா?’ என்று எண்ணத்தோன்றும்.   கோவை என்று அழைக்கப்படுகிற கோயமுத்தூர் என்னுடைய சொந்த ஊர் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு எப்போதுமே பெருமை. “TEXTILE CITY” என்று அழைக்கப்படுகிற கோயமுத்தூருக்கு இன்னொரு பெயரும் உண்டு “MANCHESTER OF INDIA” என்ற பெயர் தான் அது. இங்குள்ள தட்பவெப்பநிலையும் மிகவும் சிறப்பாக இருக்கும். ஒருபுறம் உதகமண்டலம் மறுபுறம் கேரளா என்று இருப்பதால் எவ்வளவு வெயில் காலமாக இருந்தாலும் வியர்க்காது. மார்கழி மாதங்களில் சீதோஷ்ணம் மிகவும் நன்றாக இருக்கும். சுவையில் உலகிலேயே இரண்டாம் இடத்தை பெற்ற சிறுவாணி தண்ணீர்தான் எங்களுக்கு குடிநீர்.   நாங்கள் இருந்த ரேஸ்கோர்ஸ் என்ற பகுதி கோயமுத்தூரின் மையப்பகுதி. இந்த பகுதிக்கு காந்திபார்க் - காந்திபார்க் என்ற வழிப்பாதையில் செல்லும் 7C பேருந்து மட்டுமே வரும். இப்பேருந்தில் சென்றால் அநேகமாக எல்லா முக்கிய இடங்களுக்கும் சென்றுவிடலாம். இங்குள்ள வாக்கிங் ரோடில் காலை 4 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் வாக்கிங் செல்பவர்கள் அதிகம்.   இந்த ரோடின் இருபுறங்களிலும் பூத்துக் குலுங்கும் மரங்களும் பூங்காக்களும் இருக்கும். ரேஸ்கோர்ஸில் ஆரம்பித்து K.G தியேட்டர், K.G ஆஸ்பத்திரி, அரசு கலைக் கல்லூரி, கலெக்டர் பங்களா, சாரதாம்பாள் கோவில் இப்படி 4 - 5 இடங்களை கடந்து திரும்பவும் ரேஸ் கோர்ஸிலேயே முடியும் வட்டப் பாதையே வாக்கிங் ரோடு. இந்த வாக்கிங் ரோடில் காலையில் வாக்கிங் செல்பவர்களுக்காக அருகம்புல் ஜூஸ், காய்கறி சூப்பு போன்ற உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பொருட்களை விற்கிறார்கள். இங்கு இப்பொழுது குழந்தைகளுக்காக உலக அதிசயங்களின் மாடல்கள் மற்றும் கேளிக்கைகளும் வைத்திருப்பதாக கேள்விப்பட்டேன்.   ரேஸ்கோர்ஸ்க்கு அருகில் உள்ள இடம் புலியகுளம். இங்கு உலகிலேயே மிகப்பெரிய விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இவரது உயரம் 19 அடி. மேலும் ரேஸ் கோர்ஸிலேயே 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவை 5 அடுக்குகளாக வைக்கப்பட்டுள்ளதால் நீங்கள் பிரதட்சணம் செய்வதற்கு வசதியாக இருக்கும். இப்படி பல பேறுகளைப் பெற்ற பகுதியில் பல வருடங்கள் இருந்ததற்காகப் பெருமைப்படுகிறேன்.   இவ்வளவு எழிலான நகரில் இருந்துவிட்டு இப்போது தில்லியில் இருப்பது மனதுக்கு என்னமோ பிடிக்கவில்லை. தில்லியில் பல வருடங்கள் இருந்தாலும் இந்த ஊர் எனக்குப் பிடிக்கும் என்று தோன்றவும் இல்லை:-) தில்லி - “தசாவதாரமும் தசாவதாரும்”   சிறு வயதில் சினிமாவுக்கெல்லாம் எங்களை அழைத்துக் கொண்டு போவது அரிதான விஷயம். விடுமுறை நாட்களில் அம்மா ஏதோ ஒரு படத்தைத் தேர்வு செய்து அழைத்துப் போவார். திருமணமாகி தில்லி வந்த பின்பும் தமிழ் படங்கள் இங்கே அவ்வளவாக வெளியிடாததால் பார்க்க வாய்ப்பு இல்லாமலே இருந்தது.   கமல்ஹாசன் நடித்த “தசாவதாரம்” தில்லியில் வெளியாகவே, வார இறுதியில் அதற்க்குச் செல்லலாம் என்று நாங்கள் முடிவெடுத்திருந்தோம். வாரக் கடைசியில் ஒரு வேலையாக வெளியே சென்ற என் கணவர் யதேச்சையாக அவருடைய நண்பரை சந்திக்கவும் அவர் தசாவதாரம் பார்க்கப் போவதாகச் சொல்லி, அவரே எங்கள் எல்லோருக்கும் சேர்த்து டெலிபுக்கிங் செய்து விட்டார்.   எல்லோரும் சேர்ந்து நண்பருடைய வண்டியில் புறப்பட்டோம். போகும் வழியில் நண்பர் “WAVES”ல் தசாவதாரம் போட்டிருப்பதாக சொல்லி அங்குதான் டெலிபுக்கிங் செய்து உள்ளதாகச் சொன்னார். என்னவரோ, தான் பேப்பரில் ’FUN CINEMAS V3S MALL’ல் போட்டிருப்பதாக பார்த்த ஞாபகம் என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே “WAVES” வந்துவிட்டது.   இரண்டாம் தளத்திற்குச் சென்று சினிமா ஆரம்பிப்பதற்காக காத்திருந்தோம். அங்கு பார்த்தால் கும்பலும் இல்லை, வந்திருந்த ஒரு சிலரும் ஹிந்திக்காரர்கள். தமிழ் போஸ்டரும் இல்லை என்னடா இது என்று நினைத்தபடியே உள்ளே சென்று உட்கார்ந்தோம்.   படம் ஆரம்பமானது. ஆஹா! கமல்ஹாசன் இதோ வரப்போகிறார் என்று பார்த்தால் காலச்சக்கரம் சுழலும் படம் வந்த பிறகு “தசாவதார்” என்ற கார்ட்டூன் படத்தின் டைட்டில் ஓடியது. ஒன்றரை மணி நேர படம். விஷ்ணுவின் பத்து அவதாரங்களை பற்றி குழந்தைகளுக்குச் சொல்லும் அழகான படம்.   கமல்ஹாசன் படம் பார்க்கச் [!] சென்ற எங்களுக்கோ ஒரே அதிர்ச்சி. என் பெண்ணுக்கும், நண்பரின் பெண்களுக்கும் அவர்களுக்கு ஏற்ற படம் என்பதால் ஒரே குஷி.   ஒரு டிக்கெட் 130 ரூபாய் கொடுத்து வாங்கியதால் பேசாமல் அமர்ந்து பார்த்து விட்டு வந்தோம். அத்தோடு விட்டோமா, இரண்டு நாட்கள் கழித்து கமல்ஹாசன் நடித்த ’தசாவதாரம்’ படத்திற்கும் சென்றோம்.   ஒரே பெயரில், ஒரே நேரத்தில் இரண்டு படங்களும் வெளிவந்ததால் வந்த குழப்பம். டெலிபுக்கிங் செய்த நண்பரை இப்போது பார்த்தாலும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறோம்.   சொந்த செலவில் சூனியம் – "தசாவதார்" மற்றும் "தசாவதாரம்" படம் பார்க்க எங்களுக்கு ஆன செலவு – 1000 ரூபாய்.   ’அட தேவுடா’ என்று நினைக்கத் தோன்றியிருக்கணுமே உங்களுக்கு இந்நேரம்!   கோவை - கோடை விடுமுறை   கோடை விடுமுறை என்றாலே கோடை வாசஸ்தலங்களுக்கும், சுற்றுலா மையங்களுக்கும் சென்று வருவது என்பது இப்போதைய கலாச்சாரமாகி விட்டது. ஆனால் என் சிறு வயதில் ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் நான் பிறந்த ஊரான சிவகங்கைக்குத் தான் அழைத்துச் செல்வார்கள். கடைசி பரீட்சை முடிந்த அன்றே கிளம்பி விடுவோம். கோயமுத்தூரிலிருந்து பேருந்து பிடித்து மதுரை சென்று அங்கிருந்து இன்னொரு பேருந்தில் ஒரு மணிநேர பிரயாணத்தில் சிவகங்கையை சென்றடைவோம். பெரும்பாலும் அப்பாவும் வருவார். இல்லையென்றால் அம்மா, நான் தம்பி மூன்று பேரும் செல்வோம். கோவையிலிருந்து மதுரைக்கு 4½ மணிநேரம். சிவகங்கைக்கு 1 மணிநேரம். ஆக மொத்தம் 5½ மணிநேர பிரயாணத்தில் சிவகங்கையை அடையலாம். இதுவே அன்றைய நாளில் எனக்கு பெரிய பயணமாகத் தோன்றும். இப்போதோ தில்லிக்கு 40 மணிக்கும் மேற்பட்ட ரயில் பிரயாணத்தை நான் மேற்கொள்வதை நினைத்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.   அத்தை / மாமா வீடு   சிவகங்கையில் என் அத்தையும் (அப்பாவின் அக்கா) மாமாவும் (அம்மாவின் தம்பி) இருக்கிறார்கள். பெரிய சிவன் கோவில் இருக்கும். அதற்கு எதிர் புறமாக அத்தையின் அந்தக் கால வீடு. நெடுக போய்க்கொண்டே இருக்கும். முதலில் வராந்தா. அங்கிருந்தே மாடிக்கு செல்லும் வழி இருக்கும். வராந்தாவைத் தாண்டிச் சென்றால் ஏழு, எட்டு தூண்களுடன் கூடிய ’ரேழி’ என்று சொல்லப்படும் பெரிய அறை இருக்கும். அடுத்து இடதுபுறம் ஒரு சிறிய அறை. அதற்கடுத்து கூடம். கூடத்தின் ஒரு புறம் பூஜையறைக்கு வழி, அடுத்து ஸ்டோர் ரூம். அதைக் கடந்தால் பெரிய சமைலறை. சமையலறைக்கு நடுவில் பெரிய முற்றம். அதை தாண்டி கிணற்றடி. இதன் இரு புறங்களிலும் இரண்டு அறைகள். விறகுகள் அடுக்கி வைக்க. அப்புறம் தோட்டம். தோட்டத்தில் 6, 7 தென்னை மரங்களும், செம்பருத்தி, நந்தியா வட்டை போன்ற பூச்செடிகளும் இன்ன பிறவும் இருந்தது.   கிணற்றடியில் தண்ணீர் இறைத்து, துவைத்து, குளித்து அமர்க்களம் செய்வோம். இரவில் அங்கேயே இருக்கும் தாழ்வாரத்தில் எல்லோரும் வட்டமாக அமர்ந்து கொள்ள, அத்தை சாதத்தை உருட்டி கையில் பிசைந்து போடப் போட, நாங்கள் அதன் நடுவே குழி செய்ய, அது கொள்ளும் அளவு குழம்பு விடுவார். அதோடு சாப்பிட்டால் அளவே இல்லாமல் உள்ளே போகும். செம்பருத்தி இலைகளை பறித்து தோய்க்கும் கல்லிலேயே வைத்து கசக்கினால் நுரை வரும் இதை தலையில் தேய்த்து குளிப்போம். காலையில் பூஜைக்கு மலர்கள் பறிப்பது எங்கள் வேலை.   அப்பா, அம்மாவை விட்டு நானும் தம்பியும் முதல் முறையாக அத்தை வீட்டிற்கு சென்ற போது நான் தோட்டத்துக்குச் சென்று மலர் பறிக்கும் போது என் அத்தை பையன் தோட்டத்து கதவை வெளியிலிருந்து பூட்டி சாவியை ஓட்டுக்கு மேலே வீசிவிட நான் அழுது கதறி, பின்பு எல்லோரும் ஓடி வந்து அவனை திட்டி சாவியை எடுத்து கதவைத் திறந்தார்கள். இந்த அமர்களத்தில் எனக்கு ஜுரம் வந்து படுத்தது, அதற்காக திரும்பவும் அத்தை பையனுக்கு கிடைத்த திட்டு இன்றும் நினைவிருக்கிறது.   மாலை வேளைகளில் சிவன் கோவிலுக்கு சென்று வருவோம். இரவு நேரத்தில் அத்திம்பேர் சொல்லும் குட்டிக் குட்டிக் கதைகளைக் கேட்க ஆர்வமாயிருக்கும். அதைக் கேட்பதில் அலாதியான சந்தோஷம் எங்களுக்கு. அவர் சொல்லிய கதைகளில் சுண்டு விரல் உயரமுள்ள பையனின் கதை, ராஜா ராணி கதைகள் என நிறைய கதைகள் நாங்கள் விரும்பிக் கேட்டவை.   மாமாவின் வீடு அடுத்த தெருவிலேயே இருந்தது. இங்கும் அங்குமாய் இருப்போம். காலையில் அத்தை வீட்டில் சாப்பிட்டால் மதியம் மாமா வீட்டில். மாமா எங்களை நிறைய சினிமாக்களுக்கு அழைத்துச் செல்வார். ஒரு முறை மாமா, மாமி, அம்மா மூவரும் இரவுக் காட்சிக்கு பேய் படத்துக்கு செல்லும் போது என்னையும் தம்பியையும் பாட்டியுடன் சம்பூர்ண ராமாயணத்துக்கு அனுப்பினார். மறக்க முடியாதது. மாமா சாப்பிட நிறைய வாங்கித் தருவார். அப்படி நான் ரசித்து, ருசித்து சாப்பிட்டவற்றில் சிலவற்றை, வரும் பக்கங்களில் சொல்கிறேன்.   அதுவரை காத்திருங்களேன். காத்திருந்து கிடைக்கும் எந்த ஒரு பொருளிலும் சுவை அதிகம் அல்லவா! தில்லி - தோய்ப்பு நடனம்   இதென்ன புது மாதிரி நடனமாக இருக்கே! இதை ஆடுவது எப்படின்னு தெரிஞ்சிக்க விருப்பமுள்ளவர்கள், விருப்பமில்லாதவர்கள் இரண்டு பேருமே தொடர்ந்து படிங்க.   முன்னாட்களில் துணியெல்லாத்தையும் ஆத்தங்கரைக்கு எடுத்துட்டு போய் ஓடற தண்ணியில காலை வைச்சு, கரையோரமா கிடக்கும் கல்லில் பொறுமையா தோய்ச்சுட்டு அப்படியே குளிச்சுட்டும் வருவாங்க. துணியில் இருக்கும் அழுக்கை நாம் வெளுக்க, ஓடும் தண்ணீரில் இருக்கும் சிறு மீன்கள் நம் காலில் இருக்கும் அழுக்கைத் தின்னும்போது நாம் உணரும் குறுகுறுப்பு இருக்கே! ஆஹா அது ஒரு அலாதியான ஆனந்தம். அகண்ட காவிரியில் இந்த அனுபவம் ஒவ்வொரு முறையும் நான் திருப்பராய்த்துறை செல்லும்போதெல்லாம் கிடைக்கிறது.   அப்புறமா துவைக்கறதுக்குன்னு ஒரு மிஷின் வந்த பிறகு துணியையும் சோப்புத் தூளையும் போட்டு தண்ணீரை திறந்து விட்டு, பட்டனை அமுக்கிட்டு வந்துட்டா, மத்த வேலையெல்லாம் பாத்துட்டு இருக்கலாம். தோய்ச்சு முடிச்சு மிஷின் “நான் தோய்ச்சு முடிச்சுட்டேனே” அப்படின்னு ஒரு லாலி பாடின பிறகு எடுத்து காய வைச்சா போதும். எனக்கு மெஷின்ல தோய்க்கறதை விட கையால தோய்க்கிறதுதான் பிடிக்கும். குளிர்காலத்தில தான் வேற வழியில்லாம மெஷின்ல தோய்க்கிறேன்.   கல்லுல துணியை அடிச்சு தோய்க்கும்போது வேற ஒரு வசதியும் இருந்துச்சு. வீட்டுக்காரர் மேல இருக்கிற கோபத்தை எல்லாம் துணிமேல காமிச்சு அடி அடின்னு அடிக்கலாம், அட நான் துணியைத் தாங்க சொல்றேன்! இங்க வட இந்தியாவில் துணி தோய்க்கிற கல் கிடையாது. அதுக்கு பதிலா ஒரு மரக்கட்டை வச்சிருப்பாங்க, கிரிக்கெட் பேட் மாதிரி அதுக்குப் பேரும் ’பேட்’ தான். அந்த பேட்டால துணியை அடி அடின்னு அடிச்சி விளாசுவாங்க பாருங்க - அது அந்த துணியை போட்டிருந்த ஆளையே அடிக்கற மாதிரி இருக்கும்.   எங்க பின்னாடி வீட்டுல ஒரு அம்மணி இருக்காங்க. அவங்க வாஷிங்மெஷின்-ல தோய்க்கிறத வேடிக்கை பார்க்கறது எனக்கு ஒரு வாடிக்கை. மெஷின்-ல துணியைப் போட்டு ஒரு முறை தோய்த்த உடனே அந்த துணியை எடுத்து டிரையர்ல போட்டு குழாயடில வீசுவாங்க. அங்க ஒரு தடவை வாளில போட்டு அலசுவாங்க. அதுக்கப்பறம், வாஷிங் மெஷினையே தலைகீழாக்கி தண்ணியை வெளியேத்துவாங்க. இத்தனைக்கும் அழுக்குத் தண்ணிய வெளியேத்தற குழாயும் நல்லாத்தான் இருக்கு. பிறகு வாளியில் அலசுன துணியை எடுத்து மெஷின்ல போட்டு 10 நிமிடம் தோய்க்க விடுவாங்க.   திரும்பவும் டிரையர்ல போட்டுட்டு அது வேகமா சுத்தும்போது மெஷினை கையில பிடிச்சுப்பாங்க, அது என்னமோ, இவங்க படுத்தற பாட்டைத் தாங்காம ஓடிப்போயிடற மாதிரி. ஏற்கனவே, அந்த மெஷின் பலகணில ஒரு சின்ன சந்துல தான் இருக்கு, அது எங்க ஓடறது? அது வேகமா சுத்தும்போது அதைப் பிடிச்சுட்டு இருக்கிறதுன்னால இவங்க, அந்த சின்ன இடத்திலேயே, அதுவும் நின்ன இடத்துலேயே நின்னு ஒரு ஆட்டம் ஆடுவாங்க பாருங்க, அதைக் காண கண் இரண்டு பத்தாது. பரதநாட்டியம், குச்சிப்புடி, ப்ரேக், ஒடிசின்னு பலவிதமான ஆட்டங்களையும் கலந்து ஆடுனா எப்படி இருக்கும், அது மாதிரி அவங்க நடனம் இருக்கும்.   ஒரு நாள் அவங்க ஆடுற ஆட்டத்தை வீடியோ எடுக்கலாம்னு ஆசைதான், அதுக்கு உலகளாவிய பதிப்புரிமை எல்லாம் வித்து காசாக்கலாம்தான், ஆனா அப்படியே ஆடிக்கிட்டே அவங்க வீட்டு பலகணியிலேர்ந்து பாய்ஞ்சு வந்துடுவாங்க ளோங்கற பயத்துல இன்னும் வீடியோ எடுக்கல! இதை எப்படி தைரியமா சொல்றீங்கன்னு கேட்கறீங்களா, அந்த அம்மணி ஹிந்திக்காரங்க! அதனால தமிழில் நான் எழுதறதை படிக்க முடியாதுன்னுன்ற தைரியம்தான்.   கோவை - கோடை விடுமுறையில் ருசித்தவை   கோடை விடுமுறை பற்றி எழுதும்போது, நான் சிறு வயதில் ருசித்த சில உணவு பற்றி சொல்கிறேன் என எழுதி இருந்தேன். அவற்றை இப்போது பார்போமா! எத்தனை நேரம் தான் பசியோடு காத்திருக்க வைப்பது?   ஆறுமுகம் கடை வறுபயிறு, சுண்டல்:   மாலை 5 மணி ஆகி விட்டால் ஆறுமுகம் கடை வாசலில் கும்பல் அலை மோதும். காரணம் அவர் கடையின் ஸ்பெஷலான வறுபயறும், சுண்டலும் தான். ஒரு மணி நேரத்தில் கொண்டு வந்த அனைத்துமே காலி ஆகி விடும். அவ்வளவு சுவையானதாக இருக்கும். சிறு வயதில் சாப்பிட்ட சுவை, இதை எழுதும் போது என் நாக்கில் தெரிகிறது.   மனோகரன் கடை ரோஸ் மில்க்:   இந்த கடை ஸ்பெஷல் ரோஸ் மில்க் மற்றும் ப்ரூட் மிக்ஸ் ஆகும். ஒரு பாத்திரத்தையோ, தண்ணீர் ஜக்கையோ எடுத்துக் கொண்டு மாமா வீட்டின் கொல்லைபுறக் கதவைத் திறந்து கொண்டு போனால் நடக்கும் தொலைவில் கடைத்தெருவில் இருக்கும் மனோகரன் கடை வந்து விடும். அங்கு சென்று ரோஸ் மில்க்கோ, ப்ரூட் மிக்ஸ்ஸோ வாங்கிக் கொண்டு ஓடி வருவோம் [அப்போது தானே ஜில்லென்று சாப்பிட முடியும்]. அப்போதெல்லாம் எல்லோர் வீட்டிலும் ஃப்ரிட்ஜ் கிடையாதே. இப்போது வீட்டிலேயே சுகாதாரமாக செய்தாலும், ஹோட்டல்களில் சாப்பிட்டாலும் அந்த சுவைக்கு ஈடு இணை ஏதுமில்லை.   நுங்கு, இனிப்புகள் நெல்லிக்காயை தேனில் ஊறப் போட்டு கொடுப்பது என்று நிறைய ஐட்டங்கள் உண்டு. எங்கள் பாட்டி, சாதாரணமா கீரை வாங்கி சுத்தம் செய்து வேக வைத்து மசித்து தாளித்துக் கொட்டினாலே அவ்வளவு சுவையானதாக இருக்கும்.   இத்தனை சாப்பிட்டால் வயிறு சும்மா இருக்குமா? இதற்கும் ஒரு வைத்தியம் உண்டு. நல்ல கொழுந்து வேப்பிலையை பறித்து அரைத்து எல்லா குழந்தைகளுக்கும் ஒவ்வொரு உருண்டை வாயில் போட்டு சிறிய டம்ளரில் மோர் விட்டு எங்கள் வாயில் ஊற்றி அழுத்தி மூடிவிடுவார்கள். எத்தனை ஆட்டமும் ஓட்டமும் காட்டினாலும் இந்த வேப்பிலை உருண்டை வைத்தியத்தில் இருந்து தப்ப முடிந்ததில்லை என்பதில் எனக்கு இன்னமும் வருத்தம் உண்டு.   சின்ன அத்தை வீடு இராமநாதபுரத்தில் மாவட்டத்தில். அவர்கள் வீடு நாற்பது, ஐம்பது பேரை கொண்ட கூட்டு குடும்ப வீடு. பந்தி பந்தியாக சாப்பாடு நடக்கும். அவர்களுக்கு சொந்தமாக ஹோட்டல் உள்ளதால் காலை டிபன் அங்கிருந்து வந்து விடும். நிறைய வாண்டுகள் இருந்ததால் பொழுது போவதே தெரியாது. அங்கிருந்ததும் எனக்கு ஜாலியான அனுபவம் தான்.   பெரிய வகுப்புகள் வந்ததும் ஊருக்கு போகும் வாய்ப்பே இல்லாமல் போனது. இன்றைய இயந்திரமயமான வாழ்க்கையில் இப்படிப்பட்ட அனுபவங்கள் கிடைப்பது கடினம் தான். இன்று வரையிலும் இனிமையான கோடை விடுமுறை நாட்கள் அவை. தில்லி - வெயிலைத் தேடி தில்லியில் நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை குளிர்காலம்தான். இப்பொழுது என்னுடைய ஒன்பதாம் குளிர் காலம், ஆனாலும் குளிர் விட்டு போயிடுச்சு என்று சொல்ல முடியாது! இங்கே ஒரு வழக்கு மொழி சொல்வார்கள், ’தீபாவளிக்கு அடுத்த நாள் ஸ்வெட்டர் போடத் தொடங்கினால் ஹோலிக்கு மறுநாள் கழட்டலாம்’ என்று.   குளிர் காலத்தில் வியர்வை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதால் சோர்வே ஏற்படாது. எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடக்கலாம். அதே போல நன்றாக பசிக்கும். அதற்கு ஏற்றாற்ப் போல விதவிதமாகப் பழங்களும், சிற்றுண்டிகளும், இனிப்புகளும், காய்கறிகளும் கிடைக்கும். இந்த பனிக்காலத்தில் எல்லோர் வீட்டிலும் செய்யும் ஒரு இனிப்பு ’காஜர் அல்வா’ என்கிற ’காரட் அல்வா’. என் வீட்டில் நான்செய்த காஜர் ஹல்வா கீழே உங்களுக்காய்.   [http://2.bp.blogspot.com/_9Z5-zVQenUU/TRhnt-TDm8I/AAAAAAAAAFk/JQ8v0Dsfuok/s320/100_3212.JPG]   அதே போல் அநேக பெண்கள் இந்த நேரத்தில் செய்யும் ஒரு வேலை ஸ்வெட்டர் பின்னுவது. நானும் திருமணமாகி இங்கு வந்த பின் ஒரு வட இந்தியப் பெண்மணியிடம் இதைக் கற்றுக் கொண்டு எனக்காக ஒரு ஸ்வெட்டர் பின்னிக் கொண்டேன். என்னிடமிருந்து அவர் இட்டிலி, ரசம் போன்றவற்றின் செய்முறையை கற்றுக் கொண்டார். அய்யய்யோ ஆன்ட்டி வயிறு என்னானதோ என்று நீங்க நினைக்க வேண்டாம், இன்னும் நல்லாத்தான் இருக்காங்க! இங்கு வீட்டில் வளர்க்கும் நாய், ஆடு, எருமை போன்ற விலங்குகளுக்குக் கூட ஸ்வெட்டர் அணிவிப்பார்கள். இதை முதலில் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.   இட்லிக்கு மாவு அரைத்து வெளியில் வைத்தால் அப்படியே தான் இருக்கும். பொங்கவே பொங்காது. பின்னர் தான் இங்கு இருக்கும் நம்மூர் தோழிகள், மாவு அரைத்து உப்புப் போட்டு கரைத்த பின் அதை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி கம்பளியால் சுற்றி வைத்தால் மாவு பொங்கும் எனச் சொன்னார்கள். எங்கள் வீட்டில் பழைய ஸ்வெட்டரை இந்த டப்பாவுக்கு போட்டு மஃப்ளர் சுற்றி வைப்பேன். இந்த செய்முறை ஓரளவு குளிரில் எடுபடும். கடுங்குளிரில் இதுவும் நடக்காது. இட்லி, தோசை சாப்பிடும் ஆசையை சிறிது நாள் தள்ளிப் போட வேண்டியதுதான்.   தயிர் உறைவதற்கு பாலை அப்படியே காய்ச்சி CASSEROLE ல் விட்டு இரண்டு மூன்று கரண்டி தயிர் விட்டு வைத்தால் தான் அது தயிராக மாறும். இல்லையேல் அது பாலாகவே தான் இருக்கும். இந்த கடும் பனிக் காலத்தில் வெளியில் நின்றிருக்கும் போது பேசும் எல்லோர் வாயிலிருந்தும் சிகரெட் குடிக்காமலே புகை வரும். சாலையோரங்களில் நெருப்பு பற்ற வைத்து குளிர் காய்வார்கள்.   பொதுவாகவே தில்லியில் ஒவ்வொரு சீசனுக்கும் அதற்கேற்ற பழங்கள் விதவிதமாய் கிடைக்கும். இந்த பனிக் காலத்தில் கிடைக்கும் பழங்கள். ஆப்பிள், கின்னு (ஆரஞ்சு மாதிரியே இருக்கும்), பைனாப்பிள், சப்போட்டா, திராட்சை, பப்பாளி, பேரீச்சை போன்றவை.   அதே போல அங்கங்கே வேர்க்கடலை, பாப்கார்ன், போன்றவைகளை வறுத்துக் கொடுப்பார்கள். இதற்குக் கடைகளும் உண்டு. பெயர் “Gகஜக் Bபண்டார்” இங்கு கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், பொரி உருண்டை போன்றவை விற்பார்கள்.   இந்தப் பனியில் எல்லோரும் பகல் வேளைகளில் வெயிலைத் தேடி பூங்கா, மொட்டை மாடி போன்ற இடங்களில் அமர்வார்கள். இங்கு இருக்கும் எங்கள் நண்பர்கள் குடும்பத்துடன் எல்லோர் வீட்டிலிருந்தும் ஒவ்வொரு உணவு செய்து ஞாயிறுகளில் அருகில் இருக்கும் பூங்காக்களுக்கு சென்று வெயிலில் குழந்தைகளை விளையாட விட்டு பெரியவர்களான நாங்கள் அரட்டையடித்து உணவு உண்டு வருவோம். இது ஒரு வித்தியாசமான அனுபவம்.   மேலே உள்ளவைகள் சில விவரங்களே. இதில் விடுபட்டவைகளையும், என்னுடைய முதல் பனிக் காலத்தைப் பற்றியும், சப்பாத்தி என் வாழ்க்கையில் விளையாடிய விளையாட்டைப் பற்றியும் சொல்வேன்! அந்த கதை அடுத்த பக்கங்களில்!   கோவை - நவராத்திரி நினைவலைகள்   சிறுவயதிலிருந்தே எங்கள் வீட்டில் கொலு வைக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. ஆனால் வீட்டில் வழக்கம் இல்லை. அம்மாவின் பிறந்த வீட்டில் கொலு வழக்கம் உண்டு. ஆனால் அப்பா வீட்டில் இல்லை. அதனால் எனது கொலு வைக்கும் ஆசை நிராசையாகிவிட்டது.   வருடா வருடம் நாங்கள் இருந்த பகுதியில் சிலர் கொலுவுக்கு அழைப்பார்கள். உள்ளூரிலேயே மாமா வீடு இருந்ததால் மாமா வீட்டு கொலு பார்க்கவும் செல்வோம். எங்கள் பகுதியில் இருந்த எங்கள் தூரத்து உறவினரின் வீட்டில் கொலு பார்க்க போகலாம் என்று அம்மா அழைத்தாலே எனக்கு வெலவெலத்துப் போகும். வேண்டாம் என்று தவிர்ப்பேன். அடிக்கடி செல்லாவிட்டாலும் இந்த மாதிரி வரலஷ்மி நோன்புக்கு, நவராத்திரிக்கு, பொங்கலுக்கு, என்று என்னை இழுத்துக் கொண்டு செல்வார்.   தெனாலி படத்தில் வரும் கமல் மாதிரி எனக்கு எல்லாவற்றிற்குமே பயம்! அப்படியிருக்க அவங்க வீடே ஒரு சின்ன மிருகக்காட்சிசாலை மாதிரி நாய், பூனை, முயல், பறவைகள், என்று விதவிதமாக அதுக இஷ்டத்துக்கு உலாவிக் கொண்டு இருக்கும். இவற்றை எல்லாம் கூண்டில் அடைத்து வைக்க அவர்களுக்கு பிடிக்காது. படி ஏறும்போதே நாயின் ’கிர்...’ என ஆரம்பித்து குரைப்பதைக் கேட்டதும் வயிற்றுக்குள் Dடி.Tடி.எஸ்.-சில் ட்ரம்ஸ் அடிக்க ஆரம்பித்து விடும்.   என் மேல் அந்த நாய் பாய்ந்து விடாமல் இருக்க, அதை அவர்கள் பிடித்துக் கொள்வார்கள். பத்து நிமிடம் நடுங்கிக் கொண்டே கொலுவை பார்ப்பது போல பாவனை செய்து விட்டு (உதறும் உதறலில் கொலுவை எங்கே பார்ப்பது? நேரடியாக நாயைப் பார்த்து, ஓரக்கண்ணால் கொலுவை பார்த்து) வெற்றிலை பாக்கை வாங்கிக் கொண்டு ‘கிளம்பலாம்’ என்று அம்மாவை இழுத்துக் கொண்டு ஓடி வந்து விடுவேன். இது ஒவ்வொரு வருடமும் நடக்கும் கூத்து. வருடம் தான் கூடியதே தவிர என் பயம் போகவேயில்லை.   திருமணமாகி வந்த பின்னாலாவது கொலு வைக்கலாமென்றால் புகுந்த வீட்டிலும் கொலு வைக்கும் வழக்கமில்லை. தில்லியில் நாங்கள் இருந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் இருந்தன. எப்படியும் இந்த ஒன்பது நாளிலும் குறைந்த பட்சம் 35 வீடுகளிலிருந்தாவது கொலுவுக்கு அழைப்பார்கள். தினமும் நாலைந்து வீடுகளுக்காவது செல்வோம். தினம் தினம் விதவிதமான சுண்டல் சேகரிப்பு தான் போங்க! அத்தனையும் என்ன செய்யறது என்று குழம்பிப் போனபோது என் தில்லி தோழி சொன்ன யோசனைப்படி, நவராத்திரி சுண்டல் சப்ஜி செய்திருக்கிறேன்!   வீடு மாத்தி வந்த பிறகு இருந்த ஏரியாவில் முதல் நவராத்திரி. யாரையும் தெரியாது என்று நினைத்து ‘நவராத்திரி கலெக்‌ஷன்’ போச்சே என சோகமாய் இருந்தபோது, தெரிந்த நண்பரின் மனைவி ஒரு பட்டியல் கொடுத்து ’தினமும் இந்தந்த வீடுகளில் கொலு வைத்து, லலிதா சஹஸ்ரநாம பாராயணம் நடக்கிறது, பாராயணத்துக்கு ஆள் இல்லை, அதனால கண்டிப்பா வந்துடுங்க’ எனச் சொன்னார்கள்.   ஒன்பது நாளும் ஒவ்வொரு வீட்டில் நடந்த லலிதா சஹஸ்ரநாம பாராயணம் சென்றதில், இந்த ஏரியாவில் யாரும் தெரியலையே என்று இருந்ததற்கு புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். நிறைய பேர் வீட்டில் விதவிதமான பொருட்களும் தாம்பூலத்துடன் வைத்துக் கொடுத்தார்கள்.   இன்னும் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது இந்த நவராத்திரியில். மகளும் என் கூட தினமும் வந்ததால் அவளுக்கும் இந்த ஸ்லோகங்கள் சொல்வதில் நாட்டம் வந்து இருக்கிறது. இப்போது ஐந்து-ஆறு ஸ்லோகங்களை மனப்பாடமாகச் சொல்கிறாள். ’நாமும் கொலு வைக்கலாமே, அம்மா’ன்னு சொல்ல ஆரம்பித்து விட்டாள். அடுத்த வருடமாவது எங்களது வீட்டிலும் கொலு வைக்க வேண்டும். பார்க்கலாம்… தில்லி - முதல் பனி   ”வெயிலைத் தேடி” என்று தில்லியின் குளிர்காலம் பற்றி எழுதும்போது சில விவரங்களைக் குறிப்பிட்டிருந்தேன். இப்போ தில்லியில் என் முதல் குளிர்காலம் பற்றியும், வேறு சில விவரங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!   இந்த குளிர்காலத்தில் சருமம் மிகவும் வறண்டு விடும். இதற்காக பல நிறுவனங்கள் குளிர்காலத்திற்காய் விற்பனை செய்யும் க்ரீம் மற்றும் லோஷன்களை தடவிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் ’இளமையிலேயே முதுமை’ என்று சொல்லும் அளவுக்கு சருமம் சுருக்கத்துடன் காணப்படும். வட இந்தியர்கள் கடுகு எண்ணெயை தடவிக் கொண்டு வெயிலில் உட்கார்ந்து கொள்வார்கள். பாதி வட இந்தியர்கள் நம்மைத் தாண்டிச் செல்லும்போது காற்றினூடே தவழ்ந்து வரும் ஒரு வித வாடைக்கும் இதுவே காரணம். இவர்கள் சமையலுக்கே கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் அவர்களுக்கு அவ்வளவாய் வித்தியாசம் தெரிவதில்லை. நமக்குத்தான் கடுகு எண்ணை கொண்டு அவர்கள் சமையல் செய்யும்போது குமட்டிக்கொண்டு வருகிறது!   குளிக்கும் போது வெந்நீரில் சில சொட்டுகள் தேங்காய் எண்ணெய் விட்டு குளித்தால் சரும வறட்சி, ’போயே போச், இட்ஸ் கான்’ என்று சொல்லி ஓடிவிடும். உடம்பில் எண்ணைய் தடவிக் கொண்டு உடனே சோப்பு போட்டுக் குளிப்பதை விட இந்த முறையில் கடைசி சொட்டு நீர் வரை எண்ணெய் இருக்கும்.   இந்த குளிர்காலத்தில் தில்லியில் கிடைக்கும் காரட், காலிஃப்ளவர், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, குடை மிளகாய் போன்ற.காய்கறிகள் பச்சைப் பசேலன, பார்க்கும் போதே வாங்கத் தூண்டும்படியாய் இருக்கும். விலையும் இந்த சீசனில் மலிவாகத் தான் இருக்கும். ஆனால் சில வருடங்கள் விலை எல்லாம் தாறுமாறாக ஏறி, கதிகலக்கும்.   திருமணமாகி தில்லி வந்த பின் முதல் குளிர் காலம் வந்தது. என்னவர் என்னை பயமுறுத்த, நான் தில்லி குளிரை பற்றித் தெரியாமல் ’என்ன நாங்க பார்க்காத குளிரா? எங்க கோயமுத்தூரில் மார்கழி மாசத்தில் இருக்கும் குளிர் எல்லாம் பார்த்து இருக்கேன்’ என பீற்றிக்கொண்டேன். ஊரில் இருந்த என்னை அழைத்துச் செல்வதற்காக வந்த கணவர், வரும் போதே எனக்காக தில்லியில் இருந்து ஒரு ஸ்வெட்டரும், ஷாலும் வாங்கிக் கொண்டு ரயில் பயணத்திற்காக ரஜாயும் எடுத்து வந்திருந்தார். ஜான்சி தாண்டியதுமே குளிர் தாக்குப் பிடிக்க முடியவில்லை.   நவம்பர் மாதத்திலேயே குளிர் தாங்க முடியவில்லை. அதன் பின் நினைத்துப் பாருங்கள். அநேக நேரம் படுக்கையில் ரஜாயுடன் தான் இருந்தேன். ஹாலில் உக்காந்து டி.வி பார்க்க முடியவில்லை. அதனால் டிவியை படுக்கையறைக்கே கொண்டு வந்து ரஜாயை கண் மட்டும் தெரியும் அளவிற்கு விட்டு வைத்து, டிவி பார்ப்பேன். என்னவரிடம் ஒரு குமுட்டி வாங்கி கொடுத்து விடுங்கள் இப்படியே சப்பாத்தி போட்டு சாப்பிடலாம். ரஜாயை விட்டு வெளியே வந்தால் குளிர்கிறது என்பேன்.   எனக்கோ சப்பாத்தி சாப்பிட்டால் சாப்பிட்ட உணர்வே இருக்காது. ஆனால் அவரோ மூன்று வேளையும் ரொட்டி தான்!! இரவில் அரிசி உணவு சாப்பிட்டால் குளிர் அதிகம் தெரியும் என்று சொல்லி, என்னையும் சப்பாத்தியே சாப்பிடச் சொல்வார். வேறு வழியின்றி சப்பாத்தி செய்து, அதை உருட்டி கடமையே என்று சாப்பிடுவேன். ஒரு ஃப்ளாஸ்கில் டீயும் மற்றொன்றில் வெந்நீரும் வைத்துக் கொண்டு மாற்றி மாற்றிப் பருகிய படி குளிரை சமாளித்தேன்.   நான் ஸ்வெட்டர், ஷால், ஸ்கார்ஃப், கைக்கு கிளவுஸ் இப்படியிருக்க என்னவர் ஸ்வெட்டர் கூட அணியாமல் சாதாரண உடைகளில் இருப்பார். அவருக்கு தில்லி வந்த உடனேயே குளிர் விட்டுப் போய் விட்டது போல! ஒன்பது குளிர்காலங்கள் பார்த்த பிறகு இப்போது கொஞ்சம் சமாளித்து விடுகிறேன். முதல் குளிர்காலம் என்னதான் பிடிக்காது போனாலும், பிறகு குளிர்காலம் தான் பிடித்தது.   கோவை - மல்லிகாம்மா   இவரைப் பற்றி நிச்சயம் எழுத வேண்டும். எல்லோராலும் அவரின் மகளின் பெயரால் மல்லிகாம்மா என்றும் எங்களைப் போன்ற அக்கம் பக்கத்து வீட்டு பசங்களால் அத்தை என்று அழைக்கப்படும் இவர் நாங்கள் கோவையில் இருந்த அரசு குடியிருப்பில் எங்கள் வீட்டிற்கு எதிரில் ஏறக்குறைய 18 ஆண்டுகள் இருந்தார். அவர்கள் வீட்டில் எங்களை விட பத்து வயது பெரியவர்களான அண்ணாவும், அக்காவும்.   எதிர் வீடு என்பதால் பெரும்பாலான நேரம் அத்தை வீட்டில் தான் நானும் என் தம்பியும் இருப்போம். அவரிடம் தான் சுத்தம் என்றால் என்ன, வேலையை எப்படி நேர்த்தியாக செய்வது என்று எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன். சிறிய வீட்டையும் அவ்வளவு அழகாக வைத்திருப்பார். அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகள் என்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது. நான் தப்பு செய்தாலும் அடிப்பார். அதே போல் தான் எங்கள் வீட்டிலும். அப்போதெல்லாம் அவ்வளவு உரிமை உண்டு.   வயர் கூடைகள் நிறைய பின்னுவார். நான் அவரிடம் தான் கூடை பின்ன கற்றுக் கொண்டேன். வாசல் நிலையில் மாட்டும் கிளி, மீன் போன்ற உருவங்கள் கொண்ட ’நிலவுலேஸ்’ செய்யவும் அவரிடம் கற்றுக் கொண்டேன். சோப்பு வைத்து அதை சுற்றி வயரால் பின்னி மலர் ஜாடிகள் தயாரிப்பார்.   எனக்கும், அவரின் மகளுக்கும் தலை பின்னி விடுவார். ஒரு பிசிறில்லாமல் அதே சமயம் இறுக்கமாகவும். எங்காவது வெளியில் போன போதோ அல்லது தொலைக்காட்சியில் பார்த்ததை அழகாக தோன்றினால் உடனே என் தலைமுடியில் செய்து பார்த்து விடுவார். அதை இப்போது நினைத்தாலும் வேடிக்கையாக இருக்கிறது. என் அம்மா பின்னியது பிடிக்காததால் அவங்க பின்னி விட்டா தான் பள்ளிக்கு செல்வேன் என்று அடம் பிடித்து, கடைசியில் அவர்கள் பின்னி விட்ட பின் பள்ளிக்குச் சென்றது நிறைய முறை.   பள்ளி விடுமுறை நாட்களில் அம்மாவும் அத்தையும் சின்ன வயர் கூடையில் நொறுக்கு தீனியும், தண்ணீரும் எடுத்துக் கொண்டு சினிமாவுக்கு அழைத்துச் செல்வார்கள். ராஜா ராணி விளையாட்டு அதில் தான் எத்தனை விறுவிறுப்பு இருந்தது அப்போது. தாயக்கட்டை, ஏழு கல் இவைகளிலும் அம்மாவும் அவர்களும் கலந்து கொள்வார்கள். இந்த ஏழு கல் விளையாடும் போது ஒரு கிராமத்து பாட்டு வேறு பாடிக் கொண்டே விளையாடுவாங்க. அது இத்தனை வருடங்கள் ஆனாலும் இன்னமும் எனக்கு நினைவில் இருக்கு. இரவில் வெளியில் எல்லாப் பசங்களும் வட்டமாக உட்கார்ந்து கொண்டு குண்டு கத்திரிக்காய், கண்ணாமூச்சி போன்ற விளையாட்டுகளை விளையாடுவோம்.   ஏழாங்கல் பாட்டு   கம கம லேடி, கமலா லேடி ஊஞ்சல் ஆடி ஒரு பணம் ஆடி மஞ்ச மஞ்ச தோப்பில மணியக்காரன் தோப்பில நாலு மஞ்ச கன்னெடுத்த நாயக்காரன் தோப்பில மாவு கல்லுக்கு சாமி வந்து மாவாடுது திண்டுகல்லுக்கு சாமி வந்து திண்டாடுது ரெண்டு மாடு தண்ணிக்குள்ள தத்தளிக்குது உங்க பொண்ணுக்கு எப்ப கல்யாணம் நேத்து மத்யானம் சந்தனப்பொட்டும் குங்குமப்பொட்டும் நெத்திக்கு நல்லாயில்ல காக்கா கொத்தின கொய்யாப்பழம் வாய்க்கு நல்லாயில்ல   இப்படியாக எனது இளமைக்காலங்கள் இனிமையாக கழிந்தது. என் திருமணத்தின் போது அத்தை நான் தினமும் உபயோகப்படுத்தும் பொருளையே பரிசாக கொடுக்க வேண்டும் என நினைத்து பெரியதாக எவர்சில்வர் அஞ்சறைப்பெட்டி வாங்கிக் கொடுத்தார். இன்றும் அதைத் தான் பயன்படுத்துகிறேன். என்றாவது தலைவாரி பின்னிக் கொள்ளும் போது ஒழுங்காக இல்லாமல் போனால் அவர்கள் பிசிறில்லாமல் அழகாக பின்னியதை நினைத்துக் கொள்வேன்.   18 வருடங்கள் மல்லிகாம்மாவோடு இருந்தேன் என்றால் திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீட்டுக்கு வந்தால் என் மாமியாரும் மல்லிகாம்மா தான்! வேறு மல்லிகாம்மா! தில்லி – சுப்ரபாதம் – பிங்கி பாட்டி கரோ!   அடுக்கு மாடி குடியிருப்புகள் நிறைய இருக்கும் இந்த காலத்தில் ஒரு வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் இருக்கும் தடுப்பே ஒரு ஒற்றைக்கல் சுவர் தான். இது கூட பரவாயில்லை. ஒரு தெருவில் இருக்கும் வீடுகளுக்கும், அடுத்த தெருவில் இருக்கும் வீடுகளுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி கூட மிகவும் குறைவே. Service Street என்று சொல்லக்கூடிய சிறிய தெருவைத் தாண்டினால் அடுத்த தெருவில் உள்ள வீட்டின் பின் பக்கம் வந்து விடும். இந்த தெருவில் உள்ள வீட்டின் பின் பக்கத்திற்கும் அடுத்த தெருவில் உள்ள வீட்டின் பின் பக்கத்திற்கும் அதிக பட்சமாய் 30 அடி இடைவெளிதான்.   ஒற்றைக் கல் சுவராக இருப்பதால், இந்த வீட்டில் ஒரு பாத்திரம் விழுந்தால் கூட அடுத்த வீட்டில் சத்தம் கேட்கும் அளவுக்குத் தான் இருக்கிறது. இதை விட மோசமான விஷயம் அடுத்த தெருவில் உள்ள வீட்டில் பேசுவது எல்லாம் கூட துல்லியமாய்க் கேட்கும்.   என் வீட்டின் பின்புற வீட்டில் உள்ளவர்கள் பேசும் எல்லாமே, நமக்குத் தேவையோ இல்லையோ நம் காதில் வந்து பாயும். இந்த வீட்டின் பெண்மணி ஆடும் தோய்ப்பு நடனம் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன். பெரும்பாலான நாட்களில் நாங்கள் காலையில் துயிலெழக் கேட்கும் சுப்ரபாதமே, ’பிங்கி பாட்டி கரோ!’ என்பது தான். ஹிந்தி புரிந்தால் உங்களுக்கு இதன் அர்த்தம் புரிந்து இருக்கும். இல்லையெனில் பதிவின் முடிவில் புரிய வைக்கிறேன்.   நாங்கள் காலையில் பெண்ணரசியை பள்ளிக்கு அனுப்ப சீக்கிரம் சீக்கிரமாக தயார் செய்து கொண்டு இருக்க, அங்கே அவர்கள் ’பிங்கி’யைத் தயார் செய்து கொண்டு இருப்பார்கள், என்ன, மேலே சொன்னபடியான வாக்கியங்கள் அவ்வப்போது சத்தமாய் வந்து கொண்டிருக்கும். அதுவும் ஒரு முறை சொன்னால் கேட்க மாட்டார் அந்த பிங்கி. திரும்பத் திரும்ப அவர் அம்மா ஐந்தாறு முறையாவது ’பிங்கி பாட்டி கரோ’என்று சொல்லவேண்டும், பிறகுதான் வேலை நடக்கும். சரி என்னடா அது ’பாட்டியை’ எதுக்குடா அடிக்கடி கூப்பிடறான்னு சந்தேகம் வருதா? ஹிந்தியில் ’பாட்டி கரோ’ என்றால் ’டாய்லெட் போ’ என்று அர்த்தம். இந்த பாட்டியை கேட்டு நாளை ஆரம்பித்தால் ’இந்த நாள் இனிய நாள்’ என்று சொல்ல முடியுமா என்ன?   இந்த பாட்டியோட அர்த்தமே வேறு ஆகிவிடுவதால், தில்லியில் உள்ள தமிழ் குழந்தைகள் தனது பாட்டியை ’பாட்டி’ என அழைக்காமல் ஹிந்தியிலேயே அப்பா வழி எனில் ’தாதி’ [Dhadhi] எனவும் அம்மா வழி பாட்டி எனில் ’நானி’ [Naani] என்றுமே அழைக்கின்றனர்.   கோவை - காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு   தலைப்பைப் பார்த்ததுமே யாரைக் காணோம், எதைக் காணோம் என்று எல்லோரும் பயந்துட்டீங்களா? பதட்டப்பட வேண்டாம். பல வருடங்களுக்கு முன்னால் நிஜமாகவே என் பெயர் இப்படி காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பில் வந்திருக்க வேண்டியது. அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் மனதில் பயத்தை உண்டு பண்ணுகிறது.   என்னுடைய கோடை விடுமுறை என்ற பதிவில் என் சிறு வயதில் அத்தை வீட்டிற்கு சென்றிருந்ததைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன். சின்ன அத்தை வீடு இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. இவர்கள் கூட்டுக் குடும்ப வாழ்கையை பல வருடங்களாக அனுபவித்து வருகின்றனர். தினமும் சாப்பாடே மூன்று நான்கு பந்திகளுக்கு நடக்கும். இப்போது அவர்களின் குழந்தைகள் வளர்ந்து படிப்புக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் வெளியூர்/வெளிமாநிலங்களுக்கு என்று சென்றுவிட்டாலும் பெரியவர்கள் ஒன்றாகத் தான் இருக்கிறார்கள்.   விடுமுறையில் இந்த அத்தை வீட்டில் 15 நாட்கள் இருப்பதற்காக அப்பா என்னையும், தம்பியையும் கொண்டு வந்து விட்டு விட்டுச் சென்றார். அப்பா-அம்மாவை பிரிந்திருப்பது எனக்கு ஏக்கமாக இருந்தாலும், அங்கிருந்த குழந்தைகளுடன் எப்போதும் விளையாட்டு, தினமும் ஒரு சினிமா, விதவிதமான ஐஸ்கிரீம், அவர்கள் நடத்தும் ஹோட்டலிலிருந்து தினமும் ஒரு டிபன் என்று சந்தோஷமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஒருநாள் அருகில் உள்ள ஊரில் கோவில் திருவிழா என்றும் அங்கு மயில்கள் நிறைய இருப்பதாகவும் அதற்குப் போகலாம் என்றும் என்னை அத்தையின் புகுந்த வீட்டு மனிதர்கள் சிலர் அழைத்துச் சென்றனர்.   அந்த ஊரின் பெயரை இப்போது நினைத்தாலும் ஞாபகம் வரவில்லை. கோவில் தரிசனம் முடிந்ததும் அங்கேயே கையில் கொண்டு சென்றிருந்த உணவையும் சாப்பிட்டு விட்டு பேருந்து நிலையத்தை சென்றடைந்தோம். பல ஊர்களுக்கும் செல்ல அங்கு மாறி மாறி பேருந்துகள் வந்து கொண்டிருந்தன. மக்கள் கூட்டமோ அலை மோதியது. கைக்குட்டை, பை, இவற்றையெல்லாம் போட்டு இடம் பிடித்துக் கொண்டிருந்தனர். நாங்கள் ஒரு பத்து பேராவது இருந்திருப்போம். எல்லோருக்கும் இடம் வேண்டுமே என்று காத்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்திற்குப் பிறகு எல்லோரும் நின்று கொண்டிருந்த ஒரு பேருந்துக்கு அருகில் சென்றோம். சரி இந்த பேருந்தில் தான் ஏற வேண்டும் போல என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.   திடீரென்று கூட்டத்திலிருந்த மக்கள் திபுதிபுவென்று பேருந்தில் ஏறினர். எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான் சடாரென திரும்பிப் பார்க்க என்னருகில் இருந்த உறவினர்களைக் காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தாலும் தெரியவில்லை. சரி பேருந்தில் ஏறி விட்டார்கள் என்று நினைத்து நானும் பேருந்தில் ஏறிவிட்டேன். கும்பல் அதிகமாக இருந்ததால் ஓட்டுநரின் அருகில் நின்று கொண்டு பின்னால் திரும்பி பேருந்தின் உள்ளே அவர்களை தேடிக் கொண்டே இருக்கிறேன் ஆனால் யாருமே தென்படவில்லை. பயம் வந்து விட்டது. என்ன செய்வது என்றும் தெரியவில்லை. கீழே இறங்கலாம் என்றால் நகரவே முடியவில்லை. வண்டியை வேறு எடுக்கப் போகிறார்கள். கடவுளே.   பேருந்து நகர ஆரம்பிக்க, ஓட்டுநர் இருக்கும் பக்கத்தின் வெளியே என் உறவினர் கத்திக் கூப்பிடுகிறார். ஏய், வண்டியை விட்டு சீக்கிரம் இறங்குடி என்று! நான் அப்போது தான் கவனித்தேன். பின்பு அவர் ஓட்டுநரிடம் சொல்லி நிறுத்தச் சொல்ல நான் இறங்கினேன். அப்பாடா! எனக்கு உயிர் வந்தது. கூடவே அழுகையும்.   அப்போது தான் அந்த அண்ணா சொன்னார் "இப்படியே விட்டிருந்தா, நீ இராமேஸ்வரம் போயிருப்ப!" என்று. ஆமாங்க அந்த பேருந்து இராமேஸ்வரம் செல்வதாம். பின்பு எல்லோருடனும் சேர்ந்து வீட்டிற்குப் போய் சேர்ந்ததும், அத்தையிடம் சொல்லி அழுதேன். எல்லோரும் மிகவும் ஆறுதலாக பேசினார்கள். இருந்தும் அன்றே எனக்கு ஜுரம் வந்து விட்டது. அப்பா, அம்மாவிடம் செல்ல வேண்டும் என்று ஒரே அழுகை. ஒரு வாரம் ஜுரத்துடனேயே இருந்தேன். எங்க ஊருக்கு வந்து அப்பாவையும், அம்மாவையும் பார்த்ததும்தான் நிம்மதி வந்தது என்றும் சொல்லலாம்.   இந்த சம்பவத்திற்குப் பிறகு என் பயம் மிகவும் அதிகமாகி விட்டது. அப்பா-அம்மாவுடன் எங்கு போனாலும் என்னை விட்டுட்டு எங்கேயும் போயிடாதம்மா என்று சொல்லிக் கொண்டேயிருப்பேன். கையையும் இறுக்கிப் பிடித்துக் கொள்வேன்.   திருமணமான பிறகும் என்ன, இப்பவும் இப்படித்தான். யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. அதை பற்றி எனக்குக் கவலையுமில்லை. என் பயம் எனக்கு. கூட்டம் என்றால் கணவரின் கையை இறுக்கிப் பிடித்துக் கொள்வேன். திருமணமான புதிதில் கோவையிலிருந்து திருச்சிக்கு பேருந்தில் செல்லும் போது வாந்தியின் காரணத்தால் நான் மாத்திரை போட்டு தூங்கி விட காங்கேயத்தில் வண்டி நின்றிருக்கிறது. கணவர் இறங்கி போன் பேசப் போய்விட தீடீரென முழித்தவள் அருகில் கணவர் இல்லாததையும், அக்கம் பக்கம் தேடியும் காணாததால் எனக்கு அழுகையே வந்து விட்டது. சிறிது நேரத்திற்கு பின் அவர் சிரித்துக் கொண்டே வருகிறார்.   இப்படி பலநேரம் என்னை பயமுறுத்துவதுண்டு. ஏதாவது ஒரு ஸ்டேஷனில் இறங்கி விட்டு வண்டி கிளம்பி நான் பயந்து அழ ஆரம்பிக்கும் முன்னர் வந்து விடுவார்.   உண்மையிலேயே என் சிறுவயதில் அன்று காணாமல் போயிருந்தால்? நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்ன நடந்திருக்குமென்று?   தில்லி - நாங்களும் கிராஜுவேட் ஆகிட்டோம்ல!   தலைப்பை பார்த்ததும் நான்தான் கிராஜுவேட் ஆகிட்டேன்னு நினைச்சீங்கன்னா அது தப்பு. கிராஜுவேட் ஆனது என் மகள். ’அப்போ உனக்கு அவ்வளவு பெரிய மகள் இருக்கிறாளா? அப்படின்னா வயசு எவ்வளவு இருக்கும்’ ந்னு கணக்கு பண்ணீங்கன்னா நீங்க ஏமாந்திருவீங்க! ’ஸ்..... அப்பா இப்பவே கண்ண கட்டுதே!’ என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுவதற்குள் விஷயத்துக்கு வருகிறேன். [அப்பாடா! விஷயத்துக்கு வந்தாச்சா?]   என் மகள் படிக்கும் பள்ளியில் KINDER GARDEN முடித்து முதல் வகுப்புக்கு செல்லப் போகும் குழந்தைகளுக்காக வருடா வருடம் GRADUATION DAY பள்ளியில் ஏற்பாடு செய்வார்கள். என் மகள் இந்த வருடம் UKG முடித்து முதல் வகுப்புக்கு செல்லப் போகிறாள். ஆதலால் இதன் பொருட்டு பள்ளியில் ஒவ்வொரு குழந்தையிடமும் ரூபாய் 300 வீதம் ஒரு மாதத்திற்கு முன்பே வசூல் செய்ய ஆரம்பித்து விட்டனர். ’அதானே, காசு இல்லாம தோசையா?’   LKG, UKG படிக்கும் எல்லா குழந்தைகளும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கண்டிப்பாகப் பங்கேற்க வேண்டும் என்று அவர்களாகவே முடிவு செய்ததால், ஒரு நடன நிகழ்ச்சியில் என் மகள் பங்கேற்றாள். இதற்கான பயிற்சியும், தினமும் பள்ளியில் எடுத்துக் கொண்டிருந்தாள். சென்ற வருடம் FASHION SHOW வில் பங்கேற்று LUCKNOW பெண்ணாக அலங்கரித்து சென்றாள். சென்ற வருடம் வசூலித்த தொகை ரூபாய் 150. இப்ப எதுக்கு 300 ரூபாய்னு கேட்டா, ’ஒரு வருடத்துல விலைவாசி எகிறிடுச்சுல்ல!’ என்ற பதில் உடனே வருகிறது.   வசூல் தொகை போக நிகழ்ச்சிக்கேற்ப ஆடைகள் வாடகைக்கு எடுத்து அனுப்ப வேண்டும். என் பெண்ணிற்கு பள்ளி சீருடையிலேயே நடனம் என்று சொல்லி விட்டனர். அதனால் அந்த செலவில்லை.   பட்டமளிப்பு விழா நாளும் வந்தது. சிறப்பு விருந்தினரின் உரை முடிந்ததும் குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகளும், பொம்மலாட்டமும், இன்ன பிற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஒவ்வொரு பருவநிலைக்கேற்ற உணவுகளாக குழந்தைகள் வேடமிட்டும், அந்த பருவத்துக்கு ஏற்ற உடைகளை அணிந்து கொண்டும் மழலை மொழிகளில் அவர்கள் பேசுவதை கேட்க ஆனந்தமாக இருந்தது. மருத்துவராகவும், செவிலியராகவும், போலீஸ் அதிகாரிகளாகவும், ஆசிரியராகவும் வந்து இரண்டு வரிகளில் தன்னை பற்றி மழலைக் கொஞ்சும் மொழியில் பேசியது அழகாய் இருந்தது.     இதன் பின்னர் ஒவ்வொரு வகுப்பின் குழந்தைகளையும் மேடையில் நிற்க வைத்து பட்டமளிப்பு விழா உடையில் சிறப்பு விருந்தினரின் கையால் பதக்கம் அணிவித்தனர். இதைப் பார்த்த எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. காரணம் நான் பத்தாவது முடித்து பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படித்தவள். அதன் பிறகு PART TIME B.E பண்ண வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனால் என்னைப் படிக்க விட வில்லை. திருமணமாகி இங்கு வந்த பின் கணவரிடம் என் ஆசையைக் கூறினேன். அவர் ஒத்துக்கொண்டாலும், புதிய இடம், மொழிப் பிரச்சனை போன்ற காரணங்களால் என்னால் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. அதன் பின் மகளும் பிறந்துவிடவே அந்த ஆசையை மறந்தே விட்டேன். (அடடா! இவ சுய புராணம் தாங்கலையே!)   என் மகள் வளர்ந்து கல்லூரிக்கு சென்று பட்டம் பெற எப்படியும் பதினைந்து வருடமாவது ஆகும். ஆனால் இப்போதே அந்த பட்டம் பெறும் நிகழ்ச்சியைக் காண முடிந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.   கோவை - ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா   தலைப்பை பார்த்ததுமே புரிந்திருக்குமே உங்களுக்கு. ஆமாங்க நான் ஹிந்தி கற்றுக் கொண்ட அனுபவங்களை, அந்த சோகக் கதையை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். என் மீண்டும் பள்ளிக்கு போகலாம் தொடர்பதிவில் சொன்னது போலவே ஆறாம் வகுப்பு ஆரம்பத்திலேயே எங்க வீட்டுக்கு மேல் வீட்டில் உள்ள ஒரு ஹிந்தி கற்பிப்பவரிடம் என்னை முதல் தேர்வான ’பிராத்மிக்’ (PRATHMIC) சேர்த்து விட்டார் என் அம்மா.   அதிலிருந்து ஆரம்பித்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு தேர்வாக எழுதித் தேறிக் கொண்டிருந்தேன். காலையில் ஆறு மணிக்கு எழுந்து மேல் வீட்டு டீச்சரிடம் கற்றுக் கொள்ள செல்ல வேண்டும். இதுவே எரிச்சல் என்றால், தப்பாக எழுதினாலோ இல்லை தெரியவில்லை என்றாலோ முட்டி போடச் சொல்வார் அந்த ஆசிரியர். இது பெரிய எரிச்சல். பள்ளிப்படிப்பு தவிர கூடுதலாக படிக்கும் இதிலும் முட்டி போடச் சொல்வது பெரிய கொடுமை (நீங்க என்ன சொல்றீங்க?)   அந்த ஆசிரியர் அருகிலேயே மர ஸ்கேல் அல்லது குச்சி (எதுக்கா? அடிக்கத் தான்...) வைத்திருப்பார். இதனுடன் ஹிந்தி தமிழ் டிக்‌ஷனரி. ஆமாங்க முக்கால் வாசி நேரம் இதைப் பார்த்து தான் அர்த்தம் சொல்வார். ஏனோ இந்த முட்டி போடுதல், அடி வாங்குவது, எதற்கெடுத்தாலும் டிக்‌ஷனரியை பார்த்து சொல்லுதல் இந்த காரணத்தினாலேயே ஹிந்தியே பிடிக்கவில்லை. அம்மாவிடம் சொன்னாலும் மேல் வீடு தான் அருகில் இருக்கிறது என்பதால் வேறு எங்கும் அனுப்பவில்லை.   பரீட்சைக்கு முன்னர் இருமுறை ஏதாவது பள்ளிகளில் செமினார் வைப்பாங்க. அப்பா அழைத்துச் சென்று விட்டு விட்டு இருந்து மாலையில் அழைத்து வருவார். முதல் பரீட்சையன்று தேர்வு எழுதும் செண்டருக்கு சென்றதும் பயமாகி விட்டது. காரணம் அங்கு சிறியவர்கள் முதல் 60 வயது பெரியவர்கள் வரை தேர்வு எழுதுவதைக் கண்டதும் எனக்குள் என்னவோ செய்தது. கிடுகிடுவென்று தேர்வினை எழுதி விட்டு வந்து விட்டேன். வரும் வழியில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பயத்தில் வாந்தியே எடுத்து விட்டேன். அன்று செளசெள (என்ர ஊர்ல மேரக்காய்) கூட்டு சாப்பிட்டிருந்தேன். அன்று முதல் பல வருடங்களுக்கு செளசெளவே சாப்பிடாமல் இருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மதிப்பெண் எவ்வளவு என்றெல்லாம் கேட்கக் கூடாது ஜஸ்ட் பாஸ். போதாதா?   அடுத்து மத்யமா, ராஷ்ட்ரபாஷா என்ற இரு தேர்வுகளையும் எப்படியோ படித்து தேறி விட்டேன். அதற்கடுத்த நான்காம் தேர்வான பிரவேசிகாவில் ஒருமுறை தோற்று விடாப்பிடியாக (வீட்டில் விடவில்லை) படித்து மீண்டும் எழுதி தேறினேன். அதோடு எங்க மேல் வீட்டு டீச்சரும் வீட்டை காலி செய்துவிட்டு வேறு ஏரியாவுக்கு போயிட்டாங்க. ’அப்பாடா! தப்பித்தேனா’ என்றால் இல்லையே.   அடுத்த தேர்வான விஷாரத்தில் இரண்டு பிரிவுத் தேர்வு (பூர்வாத், உத்தராத்) இது டிகிரிக்கு ஈடானது. இதை கற்றுக் கொள்ள டவுன் ஹாலில் ’அஞ்சு முக்கு’ என்றொரு பிரபலமான இடம் உண்டு. விஜயா பதிப்பகம், நேந்திரம் சிப்ஸ்களின் மணம் என்று பல விஷயங்கள் உண்டு இந்த இடத்தில். என் அப்பாவின் அலுவலகத்தின் அருகில் தான் உள்ளது இந்த இடம். இங்கு சக்தி ஹிந்தி செண்டர் என்ற இடத்தில் என்னை சேர்த்து விட்டார் அப்பா. இங்கு நிறைய பேர் அவரவர்களின் நேரத்திற்கு தகுந்த படி கற்றுக் கொள்ள வருவார்கள்.   பள்ளியிலிருந்து மாலை வந்ததும் கொஞ்சம் ஃப்ரெஷ்ஷாகி பேருந்தை பிடித்து 20 நிமிட பயணத்தில் அப்பாவின் அலுவலகம் சென்று விட்டு (எதற்கா? அப்போ தானே எதிர்த்தாற் போல் உள்ள அரோமா பேக்கரியில் ஏதாவது சாப்பிட வாங்கித் தருவார்) அங்கிருந்து இந்த செண்டருக்கு செல்வேன். இங்கு வருபவர்களில் நான் தான் பள்ளி மாணவி. மற்றவர்கள் டிகிரி முடித்து விட்டு வீட்டிலிருப்பவர்கள். அல்லது வேலைக்கு செல்ல முயற்சி செய்பவர்கள். இந்த டீச்சர் நல்லபடியாக சொல்லித் தந்தார். தேர்வும் எழுதி முதல் பிரிவான பூர்வாத்தை தேறினேன்.   அடுத்த பிரிவான உத்தராத்துக்கு தான் திண்டாட்டமாகி விட்டது. நானும் ஒன்பதாம் வகுப்புக்கு சென்றிருந்தேன். பள்ளி நேரத்தையும் ஷிப்ட் முறையில் மாற்றியதால் மாலை 5.30க்கு தான் வீட்டுக்கு வருவேன். அதற்கப்புறம் ஹிந்தி வகுப்புக்கு செல்வது கஷ்டமாகி விட்டது. (இருட்டிய பிறகு வெளியே அனுப்ப மாட்டார்கள் அல்லவா) சில நாட்கள் காலையில் சென்டருக்கு சென்று வருவேன். அதற்கு பிறகு ஆர்.எஸ் புரத்தில் சில நாள், இப்படி எப்படியோ நானே படித்து இரண்டாம் பிரிவையும் தேறி விட்டேன். இந்த விஷாரத் இரு பிரிவுகளையும் முடித்தவுடன் திருச்சியில் பட்டமளிப்பு விழா வைத்திருந்தார்கள். மூப்பனார் அவர்களின் கையால் வாங்க வேண்டிய சான்றிதழை திருச்சிக்கு செல்ல முடியாத காரணத்தால் தபாலில் பெற்றுக் கொண்டேன்.   இதன் கூடவே DIRECTORATE OF HINDI EDUCATION, DELHI (அப்பவே தில்லியோடு தொடர்பு வந்திடுச்சு பாருங்க.) யிலிருந்து ஆறு மாத டிப்ளமோ கரஸ்ஸில் பண்ணலாம் என்று சேரச் சொன்னாங்க. அதையும் சேர்ந்து தான் வைப்போமே என்று சேர்ந்தாச்சு. அப்பப்போ பாடங்கள் வரும். பேப்பர்ஸும் பூர்த்தி செய்து அனுப்பிக் கொண்டிருந்தேன். செமினார்கள் இருக்கும். கேந்திரிய வித்யாலயாவில் தேர்வு எழுதினேன். எல்லோரும் பெரியவர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு இந்த தேர்வு எழுதி தேறினால் INCREMENT கிடைக்குமாம்.   என் பின்னால் இருந்த ஒருவர் நான் எழுதிய விடைத்தாளை காண்பிக்கும்படிச் சொல்ல, பயந்து போய் என் விடைத் தாளையே எடுத்து கொடுத்து விட்டேன். (கொடுக்காம போனா வெளில வந்து அடிச்சுடுவாங்களோ என்ற பயம் தான்) அவரும் எழுதி விட்டு மரியாதையாக கொடுத்து விட்டார். அந்த டிப்ளமோவையும் முதல் வகுப்பில் தேறி விட்டேன்.   இப்போ நான் பத்தாவது வந்திருந்ததால் அதை காரணம் காட்டி அடுத்த தேர்வான ப்ரவீன் பண்ண முடியாது என்று சொல்லி வீட்டில் தப்பி விட்டேன். நான் D.M.E பண்ணிய பிறகு கூட அப்பா எவ்வளவோ தடவை சொல்லியும் நான் கேட்கவில்லை முடியாது என்று சொல்லி விட்டேன். ஒவ்வொரு தேர்வின் போதும் அங்கிருப்பவர்களை பார்த்தால் எல்லோரும் விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருப்பார்கள். அதைப் பார்த்தாலே வயிற்றை கலக்க ஆரம்பித்து விடும். ஹிந்தி இலக்கணம் இருக்கே - அப்பப்பா...   சரி இவ்வளவு படித்து என்ன பயனடைந்தேன் என்கிறீர்களா?   திருமணம் முடிந்து தில்லி வந்து இறங்கியதிலிருந்து இப்போ வரை ஹிந்தியில் எழுதிய எந்த பெயர்ப் பலகையையும் உடனே படித்து விடுவேன். வேறு எதற்கும் உபயோகமாக வில்லை. பேச்சு வழக்கு என்பது நாளாக ஆகத் தான் வந்தது. பல மாநிலத்தவர்கள் இங்கிருப்பதால் ஒவ்வொருவரின் ஸ்டைலில் அவர்கள் பேசும் ஹிந்தியை புரிந்து கொள்வதற்கே நாளானது.   தில்லி – ‘வண்ட்டூ’ மாமா   ’வண்ட்டூ’ என்றால் வேறொன்றுமில்லை. ’வந்து’ அல்லது ‘வந்துட்டு’ என்று பேச்சுக்கிடையில் எப்போதாவது சொல்வோமே. மாமா அதை எப்போதுமே சொல்லிக் கொண்டிருப்பார். வந்துட்டு தான் மருவி வண்ட்டூ ஆகி விட்டது. மாமா ஒரு அலாதியான மனுஷர். எங்கள் வீட்டுக்கு அருகில் தான் அவர் வீடு இருந்தது. கைக்கெட்டும் உயரத்தில் உள்ள பல்ப் மாற்றுவது முதல் தொலைக்காட்சிப் பெட்டியில் சேனல் செட் செய்வது வரை எல்லாவற்றிற்குமே அடுத்தவரின் உதவி அவருக்கு தேவை.   அவருக்கு இன்னுமொரு பிரச்சனையும் உண்டு. கண்ணில் ஏதோ கோளாறு. அதனால் அடிக்கடி கண்ணடித்துக் கொண்டே இருப்பார். புதிதாய் அவரைப் பார்ப்பவர்களுக்கு ஏதோ தம்மைப் பார்த்து தான் கண்ணடிப்பது போல இருக்கும்! கீழ் வீட்டில் புதிதாய் வந்த ஒரு ஹிந்திக்கார பெண்மணி சண்டைக்கே வந்து விட்டாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! இதில் இன்னுமொரு பிரச்சனை என்னவென்றால் நம்ம வண்ட்டூ மாமா ஹிந்தியில ரொம்பவே வீக்! இவர் ஏதோ சொல்ல, அந்த பெண்மணி ஏதோ சொல்ல, அப்புறம் என்னவர் சென்று மத்யஸ்தம் செய்து பிரச்சனையைத் தீர்த்து வைத்தார். அதன் பிறகு வண்ட்டூ மாமா அந்த பெண்மணி வீடு தாண்டும் வரை எதுக்கு வம்பு என கண்ணை மூடிக்கொண்டே படிக்கட்டு இறங்கினார்!   அவர்கள் வீட்டுக்கு அருகில் இருந்தது பெரும் அவஸ்தையாக போய் விட்டது. எப்போதும் ஏதாவது உதவிக்கு அழைத்துக் கொண்டே இருப்பார். காலையில் எழுந்திருப்பதே அவரின் ஸ்லோகங்கள் சொல்லும் சத்தத்தில் தான். பின்பு மாமாவுக்கும், மாமிக்கும் இடையே பெரும் வாய்ச் சண்டை ஆரம்பமாகும். ஒருவழியாக மாமா அலுவலகம் கிளம்பிச் செல்வார். மாலையும் இதே போல் ஸ்லோகங்களும், சண்டையும் என தொடரும்.   இன்னுமொரு சம்பவம்:   சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் நான், என் தோழி, அந்த மாமி ஆக மூவரும் சேர்ந்து கோவிலுக்கு சென்றோம். ஸ்வாமியை தரிசித்து விட்டு வீடு வந்தடைந்தோம். மாமி தன் பர்ஸில் கையை விட்டு நெடுநேரம் துழாவிக் கொண்டிருந்தார். என்ன என்று கேட்டால் சாவியைக் காணோம் என்றார். சரி பரவாயில்லை எங்கள் வீட்டில் வந்து அமருங்கள் என்றேன். மாலை மாமா வந்து விடுவார். அவரிடம் ஒரு செட் சாவி இருக்கின்றதே அதனால் அவர் வரும் வரை இங்கேயே இருந்து சாப்பிடலாம் என்றேன். மாமி டென்ஷன் ஆகி இல்லை அவர் வந்து கதவைத் திறக்கட்டும். நான் அவருக்கு போன் செய்கிறேன் என்று கால் செய்ய ஆரம்பித்து விட்டார். மாமாவின் அலுவலகம் வீட்டிலிருந்து ஒன்றரை மணிநேர பிரயாணத்தில்.   ’ஒரு பொறுப்பு வேண்டாம், அது எப்படி என் கிட்ட சாவி இருக்கா இல்லையான்னு கூட தெரியாம, வீட்டை பூட்டிட்டு போவீங்க. நீங்க உடனே கிளம்பி வாங்க - அதுவரை உட்காரக் கூட மாட்டேன்’ என்று ‘உட்காரா விரதம்’ பூண்டார்.   என்ன நடந்து இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? வேறென்ன ஒரு ஆட்டோவில் மாமா வீட்டிற்கு வந்து விட்டார். வரும்போதே கையில் ஒரு லிட்டர் மிரிண்டாவுடன் வந்து இறங்குகிறார். கதவைத் திறந்து உள்ளே சென்ற பின் மாமி தன் பர்ஸை மீண்டும் ஒரு முறை துழாவிப்பார்த்தால் சில்லறைகளுடன் வீட்டுச்சாவி பல்லை இளித்தது! மாமா பாவம் ஒன்றுமே சொல்லாமல் அலுவலகம் கிளம்பிச் சென்று விட்டார். இந்த சம்பவம் வெறும் சாம்பிள் தான், இது போல் இன்னும் நிறைய கூத்துகள் நடந்தது உண்டு.   இதே மாதிரி நிலை இன்னுமொருத்தருக்கும் நடந்தது. ஏழு எட்டு வருடங்களுக்கு முன்பு செல்போன் எல்லோரிடமும் இல்லாத வேளையில் காலையில் கீழ் வீட்டிலிருக்கும் தன் நண்பனுடன் அலுவலகம் செல்வதற்காக சென்ற கணவனுடன் தானும் வழியனுப்ப கீழே இறங்கி சென்றாள் ஒருத்தி. பேச்சு வாக்கில் வீட்டைப் பூட்டி சாவியை தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு போய்விட்டார் கணவன் (திருமணத்துக்கு முன் இருந்த ஞாபகம்). கணவன் சென்ற பின் வீட்டுக்கு வந்து பார்த்தால் வீடு பூட்டியிருக்கிறது. சாவி கணவனிடம். பாவம் அவள் என்ன செய்வாள்? கீழ் வீட்டுக்கு சென்று அமர்ந்திருந்தாள். கணவனின் அலுவலகம் வீட்டிலிருந்து இரண்டு மணிநேரப் பிரயாணத்தில். தகவல் சொல்லி பாதி வழியிலிருந்து வரச் சொல்லவும் வழியில்லை.   இரண்டு மணி நேரம் கழித்து அலுவலக எண்ணிற்கு அழைத்தாள். நடந்தைச் சொன்னாள். கணவன் ’பூட்டுக் காரனை அழைத்து வந்து பூட்டை உடைத்துக் கொள் அல்லது தோழி வீட்டிலேயே இரு’ என்று சொல்லி விடவே, அந்த அப்பாவி ஜீவன் மாலை கணவன் வரும்வரை அந்த தோழி வீட்டிலேயே இருந்து நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தாள்.   சரி இந்த சம்பவம் இப்ப எனக்கு ஏன் ஞாபகத்துக்கு வருது? ஏன்னா அந்த ஜீவன் வேறு யாருமில்லை - நாந்தேன்!   கோவை - யாரடி என்னை உதைத்தது?   சிறு வயதில் சிவகங்கையில் என் அத்தை வீட்டில் கோடை விடுமுறைக்கு சென்றிருந்த போது, சின்ன பசங்க எல்லோரும் சேர்ந்து ஓடி பிடித்து விளையாடுவது, கண்ணாமூச்சி, செஸ் இப்படி நிறைய இருக்குமே! அப்படி ஒன்றான ஒளிந்து விளையாடும் விளையாட்டினை விளையாடிக் கொண்டிருந்தோம். இந்த இடத்தில் என் அத்தை வீட்டை பற்றி ஒரு அறிமுகம்.   அது அந்த கால வீடு. திண்ணை, ரேழி, நடைபாதையின் ஒரு புறம் ஒரு சிறிய அறை, பின்பு கூடம், கூடத்தின் ஒரு புறத்தில் பூஜையறை, ஸ்டோர் ரூம், அடுத்து சமையலறை நடுவில் பெரிய முற்றம், கிணற்றடி, விறகுகள் அடுக்கி வைப்பதற்காக இரு அறைகள். அடுத்து பெரிய தோட்டம். அதன் இறுதியில் கொல்லைப்புறக் கதவு. அதைத் திறந்தால் அடுத்த தெருவின் முன் பக்கம். இப்படி நெடுக போய்க் கொண்டேயிருக்கும் பெரிய வீடு.   எல்லோரும் விளையாடிக் கொண்டிருந்த போது ஒருவர் சென்று ஒளிந்து கொள்ள நான் கண்டுபிடிக்க அந்த பெரிய வீட்டில் தேடிக் கொண்டிருந்தேன். கொஞ்சம் கஷ்டம் தான். ஏனென்றால் அறைகள் எல்லாம் கும்மிருட்டாக இருக்கும். பெரிய பெரிய பீப்பாய்கள் இருக்கும். அதில் இறங்கி ஒளிந்து கூட இருக்கலாம். அப்படி நடைபாதையின் ஒரு புறத்தில் ஒரு அறை சொன்னேன் அல்லவா! அங்கு சென்று மெதுவாக எட்டிப் பார்த்தால்…   என் வயது இருக்கும் உறவுப் பெண்கள் இருவர், எதையோ சத்தமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்னவென்று நான் கேட்டவுடன், சீக்கிரம் வா! கதவை மூடு என்றார்கள். நானும் அப்படியே செய்து விட்டு, என்னவென்று பார்த்தால் அது ஒரு பளிங்கினால் ஆன சிறிய தாஜ்மஹால். அதனுடன் இணைத்துள்ள இரண்டு சிறிய வயர்கள்.   அப்போது தான் புதிதாக திருமணமாயிருந்த என் அத்தை பெண் அவளுடைய கணவனுடன் டெல்லி, ஆக்ரா சென்று வந்திருந்தாள். அவர்கள் வாங்கிக் கொண்டு வந்தது தான் இந்த தாஜ்மஹால். அவள் கணவன் ஆசையாக வாங்கிக் கொடுத்ததாம். எங்களை கையால் தொடக் கூட விடவில்லை. அது தான் நாங்கள் திருட்டுத் தனமாக இப்படி பார்க்க வேண்டியிருந்தது.   இந்த தாஜ்மஹாலை மின் இணைப்பு கொடுத்தால் உள்ளே உள்ள விளக்கெரிந்து தாஜ்மஹால் ஜொலிக்குமா எனச் சந்தேகம்! செய்து தான் பார்த்துடலாமே என அதனுடன் இணைந்திருந்த வயரை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே நான் தோழிகளின் பரிந்துரையின் பேரில் பாயிண்டில் சொருகி ஸ்விட்சை போட்டேன். அவ்வளவு தான்…   யாரோ என்னை ஒங்கி பின்னங்காலில் உதைத்தது போன்ற உணர்வு. அதிர்ந்து போனாலும், தாஜ்மஹாலை பத்திரமாக வைத்து விட்டு திரும்பி, ’ஏண்டி என்னை உதைத்தீங்க?’ என்று கேட்டால், அவர்கள் ’உதைக்கவில்லை’யெனச் சொன்னார்கள். ஓஹோ! இது தான் ஷாக் அடிப்பது என்பதா! அப்போது தான் அதை முதல் முறையாக உணர்ந்திருந்தேன். அப்பா! என்னா ஒரு உதை?   நல்லவேளையாக ஷாக் அடித்தவுடன் தாஜ்மஹாலை மரியாதையாக மேஜையின் மீது வைத்து விட்டேன். அவள் கணவன் ஆசையாக வாங்கி கொடுத்த பரிசான அதை கீழே போட்டு உடைத்திருந்தால், அவள் எனக்கு பரிசு கொடுத்திருப்பாள் வீட்டை சுற்றி துரத்தித் துரத்தி…   எதுவுமே முதல் முறை என்றால் மறக்காது இல்லையா! அப்படித் தான் இதுவும். உதை வாங்கினாலும் இன்னும் இது போல எதையாவது செய்து பார்க்கத்தான் தோன்றுகிறது! ஆனால் கரண்ட் ஷாக் கொடுக்குதோ இல்லையோ வேற ஒருத்தர் எதாவது சொல்வாரேன்னு கைகளைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறேன்! தில்லி - முஜே (B)பச்சாவ்!   தில்லி, உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் மின்சாரம் இல்லாமல் வெகு நேரம் இருப்பது என்பது மிகவும் சாதாரணமானது. ஒருநாளைக்கு குறைந்த பட்சம் எட்டு மணிநேரம் வரை கூட மின்சாரம் இல்லாமல் இருந்திருக்கிறோம். அதுவும் கடும் கோடையில் 46, 47 டிகிரி என்று வெப்பம் உயர்ந்து கொண்டே இருக்கும் சூழ்நிலையில் மின்சார தட்டுப்பாட்டால் இரவு முழுதும் காற்றே இல்லாமல் புழுங்கித் தவித்திருக்கிறோம். தரையெல்லாம் தண்ணீரை ஊற்றி வைத்தாலும் நிமிடத்தில் காய்ந்து விடும். அதே போல் தான் கடும் குளிரிலும். இப்போ நமக்கு காற்று தேவைப்படாது. ஆனால் மாலை சீக்கிரமே இருட்டத் துவங்கி விடும். அதனால் வெளிச்சம் தேவைப்படுமல்லவா!   எட்டு, ஒன்பது வருடங்களுக்கு முன்பு கடுங்குளிரில் இரண்டு நாட்கள் மின்சாரமே இல்லாமல் இருந்த சமயம் அது. மாலை சீக்கிரமே இருட்டி விட்டது. முகத்தை கழுவி விட்டு வேலைகளை ஆரம்பிக்கலாம் என்று பாத்ரூமில் முகத்திற்கு சோப்பு போட்டுக் கொண்டிருந்தேன். தீடீரென்று ’முஜே (B)பச்சாவ், முஜே (B)பச்சாவ்’(என்னை காப்பாத்துங்க) என்று ஈனக் குரலில் அலறல். ’கீழ் வீட்டிலிருக்கும் நண்பரின் வயதான அம்மாவின் குரல் போல் இருக்கிறதே!’ எனத் தோன்றவும்...   சட்டென்று முகத்தில் தண்ணீரை ஊற்றி கழுவிக் கொண்டு கீழே ஓடினால், முதல் தளத்திலிருந்த அம்மாவின் குரல் தான் அது. நெருப்பு அவர்களை நன்கு தழுவிக் கொண்டிருக்கிறது. அதற்குள் அந்த கட்டிடத்தில் உள்ளவர்களும் வந்திருந்தனர். நான் போவதற்குள் அம்மாவின் பக்கத்து வீட்டிலிருந்த தோழி ஓடி தண்ணீரை ஊற்றி நெருப்பை அணைத்திருந்தார். நானும், தோழியும் பாத்ரூம் அருகிலிருந்த அவரைத் தூக்கி கட்டிலில் படுக்க வைத்துவிட்டு முதலுதவிக்காக ஒரு மருத்துவரை தொலைபேசியில் அழைக்க அவரும் உடனே புறப்பட்டு வருவதாக சொன்னார்.   அம்மாவோ அலறுகிறார், துடிக்கிறார். அவரின் மகனுக்கும், மருமகளுக்கும் தகவல் தெரிவித்து விட்டோம். அவர்கள் வர எப்படியும் ஒரு மணிநேரமாவது ஆகும். அதற்குள் மருத்துவர் வந்து முதலுதவியை ஆரம்பித்தார். இடுப்புக்கு கீழே முழுவதும் வெந்து விட்டது. முதலில் அவரது உடம்பில் ஒட்டியிருந்த துணிகளை பிய்த்து எடுப்பதற்காக தோழி ட்ரிப்ஸை உடம்பில் பீய்ச்சி அடிக்க மருத்துவர் துணிகளையும், தோலையும் பிய்த்து எடுக்க நான் அவைகளை ஒரு கவரில் வாங்கிக் கொண்டேன்.   அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு போக வேண்டும் என்று மருத்துவர் சொல்லிச் சென்றார். மகனும், மருமகளும் வருவதற்குள் கொஞ்சம் பாலில் நனைத்த பிரெட்டை அவருக்கு ஊட்டி விட்டோம். அவர்கள் வந்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஒருநாள் வைத்திருந்தார்கள். பின்பு தில்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு பலநாட்கள் வைத்தியம் செய்து கொண்ட பின் வீடு வந்து சேர்ந்தார். அவர்களுக்கு ஏற்பட்டது 80 சதவிகித தீக்காயமாம்.   வீட்டுக்கு வந்த பின்னும் பல நாட்கள் இரவெல்லாம் அவரின் அழுகையும், அலறலும், கத்தலும் தொடர்ந்தன. கேட்கும் நமக்கே உலுக்கிப் போட்டு விடும்படியான குரல். சிலநாட்கள் கழித்து சென்னையில் உள்ள இன்னொரு மகனின் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டனர். இரண்டு வருடங்களுக்கு முன் அவர் இறந்து விட்டதாகவும் தகவல் வந்தது.   இந்த தீக்காயம் எப்படி ஏற்பட்டது? மின்சாரம் இல்லாத அந்த நேரத்தில் ஒருபுறம் மெழுகுவர்த்தியை ஏற்றி அந்த வெளிச்சத்தில் கடவுளுக்கு விளக்கேற்றியிருக்கிறார். திரும்பும் போது புடவையில் தீ பிடித்திருக்கிறது. குளிரினால் முதல் சில நொடிகளுக்கு அவருக்கு தெரியவில்லை. அதே போல் மடிசார் புடவையின் மீது நல்ல கனமான ஸ்வெட்டர் போட்டிருந்திருந்தனால் இடுப்புக்கு கீழே தான் தீக்காயம். சிறிது நேரத்திற்கு முன்பு தான் வேலையை முடித்து விட்டு மரக்கதவை திறந்து வைத்து விட்டு வெளியேயுள்ள இரும்பு கேட்டை மட்டும் வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு சென்றுள்ளார் வேலைக்காரி. இல்லையெனில் யாரும் உள்ளே போயிருக்கவே முடியாது. இங்கேயுள்ள கேட்களில் உள்பக்கமாக நெருக்கமான கம்பி வலைகள் அடிக்கப்பட்டிருப்பதால் கையை உள்ளே விட்டெல்லாம் திறக்க வாய்ப்பே இல்லை.   எப்பவுமே இவர் அலுவலகம் சென்றவுடன் ஒரு எட்டு போய் பார்த்து விட்டு வருவேன். உரிமையுடன் அவனுக்கு கைக்கு சப்பாத்தி பண்ணி குடுத்து விட்டாயா? இன்னிக்கு என்னடி சமையல் பண்ணின? என்றும் இதை இப்படித் தான் செய்யணும் என்று ஏதாவது சமையல் சந்தேகங்களை சொல்லிக் குடுப்பார். சமையல் செய்வதிலும், விதவிதமாக சாப்பிடுவதிலும் அவருக்கு ஒரு அலாதி ப்ரியம் என்றும் தெரிந்து கொண்டேன்.   அம்மாவுக்கு இப்படி ஆனதில் நான் பல நாட்கள் புலம்பி அழுதிருக்கிறேன். ஏன் அன்றே கூட எல்லா உதவிகளும் செய்து விட்டு வீட்டிற்கு வந்து ஒரே அழுகை தான். நல்ல மனுஷி. எல்லோரிடமும் பாசமாகவும், உரிமையுடனும் நடந்து கொள்வார். சில நாட்கள் தான் பழக்கம் என்றாலும் மனதை விட்டு அவர் முகம் அகலவே இல்லை.   அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.   கோவை - ஆடிப் பார்க்கலாம் ஆடு...   சமீபத்தில் வீட்டிற்கு வந்த என் தம்பி, என் மகளுக்கு ஒரு BRAINVITA வாங்கித் தந்திருந்தான். அதை அவளுக்கு விளையாடச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த போது அவள் என்னிடம் கேட்டாள், அம்மா "உன்னிடமும் இது இருந்ததா? நீ சின்னதா இருக்கும்போது என்னென்ன விளையாட்டெல்லாம் விளையாடுவே?"   அப்போது எனக்குள் கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சது. என் சிறுவயது விளையாட்டுக்கள் அத்தனையும் நினைவுக்கு வந்து என்னை சூழ்ந்து கொண்டு ’இதை உடனே பதிவா எழுதலைன்னா தலை வெடிச்சுடும்’னு மனபூதம் பயமுறுத்தவே உடனே எழுதிட்டேன்.   ஆமாம் அந்த காலத்தில் எங்களிடமும் ஒரு BRAINVITA இருந்தது. நாங்கள் மதுரையில் உள்ள மாமா வீட்டிற்கு சென்றிருந்த போது மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்றிருந்தோம். புதுமண்டபத்தில் BRAINVITAவும், மீன் வடிவில் பல்லாங்குழியும் வாங்கித் தந்தார் அப்பா. பல்லாங்குழியில் போட்டு விளையாட பாட்டி நிறைய சோழிகளும் கொடுத்தனுப்பினார். இது போக எங்கள் வீட்டுக்கருகில் ஒரு மரத்திலிருந்து சிவப்பு நிறத்தில் மாத்திரைகள் போல காய்கள் விழும். அதை பத்திரப்படுத்தி எடுத்து வைத்துக் கொள்வோம். பல்லாங்குழியில் பல விளையாட்டுகள் இருக்கு. அதையெல்லாம் திரும்ப நினைவு படுத்தியோ இல்லைன்னா யார்கிட்டயாவது கேட்டோ விளையாடணும்கிற ஆசை எனக்குள் இப்போ எழுந்திருக்கு.   அடுத்து பிசினஸ் ட்ரேட் கதையைப் பார்ப்போம். தம்பி பக்கத்து வீட்டில் இருந்த சிறுவனுடன் சேர்ந்து விளையாடுவான். அவங்க வீட்டில் இருந்த ட்ரேடில் இருவரும் சேர்ந்து விளையாடுவார்கள். சிலசமயம் எங்கள் வீட்டுக்கும் அதை எடுத்து வரும் போது நானும் சேர்ந்து கொள்வேன். இப்படியே ஓடுமா? கொஞ்ச நாளிலேயே அந்த சிறுவனின் அம்மா எங்கள் வீட்டுக்கு அதை எடுத்து வந்து விளையாட அனுமதிக்கவில்லை. தம்பியையும் அவங்க வீட்டில் விளையாட விடவில்லை. இதனால் அவன் புதுசா ஒரு ட்ரேட் வாங்கித் தரச் சொல்லி அடம்பிடிக்க, அப்பாவோ "விலை ஜாஸ்தி" என்று சொல்லி விட்டார்.   எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம் நானும் விளையாடி பழகியதால் பழைய லாங்சைஸ் நோட்டு அட்டையை எடுத்து வெள்ளைத் தாளை ஒட்டி கட்டங்களை வரைந்து ஸ்கெட்ச்சால் எழுதி பணத்திற்கு காகிதங்களை ஒன்று போல வெட்டி, ஒரு ட்ரேடை பக்காவாக தயார் செய்து தம்பிக்கு கொடுத்தேன். நாங்கள் இருவரும் நெடுநாட்களுக்கு வைத்திருந்து விளையாடியிருக்கிறோம். இந்த கதையை மகளுக்குச் சொன்னேன்.   100 வருட பழமையான விளையாட்டுப் பொருட்கள்:   [https://2.bp.blogspot.com/-m6pJb3H2CHk/UE9jrQvaDUI/AAAAAAAAAgM/i4WHJmBTi2U/s400/100_6017.JPG]   ரோஷ்ணிக்கு சமையல் செய்து விளையாட அவள் பாட்டி "மாக்கல் " என்று சொல்லப்படுகிற கல்லாலான பாத்திரங்கள் தந்தார்கள். இதில் குட்டி அடுப்பு, பாத்திரங்கள், திருகை, ஆட்டுக்கல், துளசிமாடம் என்று அவ்வளவு அழகான பொருட்கள் இருந்தன. இவையாவும் நான்கு தலைமுறை பழசு. பழசா இருந்தாலும் இன்னும் நல்லாவே இருக்கு. பார்க்கவே அழகா, விளையாட ஆசையா இருக்கும். நாலு தலைமுறையா விளையாடிய இப்பொருட்களை வைத்து இப்போ ரோஷ்ணி விளையாடறா. இத்தனை வருடம் பத்திரமா வைத்திருந்து என் பெண்ணுக்குக் கொடுத்த என் மாமியாருக்கு ஒரு பூங்கொத்து! "சரி, அதையெல்லாம் எங்க கண்ல காட்டக்கூடாதா?"ன்னா கேட்கறீங்க? சரி உங்களுக்காக ஒரு புகைப்படம் இணைச்சிருக்கேன்.   இப்பல்லாம் இந்த கல் சட்டிகள் வருவதே இல்லை. கல் சட்டில சமையல் செஞ்சு சாப்பிட்டா ரொம்ப நல்லா இருக்குமாம். நான் சாப்பிட்டதில்ல. இப்போதெல்லாம் நான்-ஸ்டிக், எவர்சில்வர், மைக்ரோ ஓவன் பாத்திரங்கள் தானே மார்க்கெட்டில் கோலோச்சுகின்றன. அதனால விளையாட்டு பொருட்கள் கூட நவீனமாத் தான் இருக்கு.   [https://1.bp.blogspot.com/-fq8OUs0-uqk/UE9kF_oNeiI/AAAAAAAAAgU/cgUlH8Sg8Lc/s400/100_6016.JPG]   நான் வாங்கிக் கொடுத்த நவீன சமையல் பாத்திரங்களையும் பாருங்களேன். குட்டியாக இருந்தாலும் நேர்த்தியாக உள்ளது. முதலில் நான் விளையாடி விட்டுத் தான் ரோஷ்ணிக்கே கொடுத்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனாலும் மாக்கல் கல் சட்டிக்கு முன்னாடி இவை நிற்க முடியாது. நீங்க என்ன சொல்றீங்க? தில்லியிலிருந்து கோவைக்கு!   சிறுவயதிலிருந்தே எங்கள் வீட்டில் தனியாக எங்கேயும் போக விடமாட்டார்கள். நானும் அப்படியே பழக்கப்பட்டு விட்டேன். பயமும் கூட! அப்படியிருக்க தில்லி இந்தியாவின் தலைநகரம் என்று புத்தகத்தில் படித்ததோடு சரி. மற்றபடி எதுவும் தெரியாது. கனவிலும் நினைத்து பார்த்ததில்லை நான் தில்லியில் குடித்தனம் நடத்துவேன் என்று. ஆயிற்று பத்து வருடங்கள் ஓடி விட்டது. திருமணமாகி இங்கு வந்த பின்பும் கூட எங்கு போவதென்றாலும் கணவரோடு தான்.   ஒரு முறை நான் ஊருக்கு போக வேண்டிய சூழல். கணவருக்கு விடுமுறை கிடைக்கவில்லை. ஆகவே நான் மட்டும் செல்வதென முடிவாயிற்று. பயணச்சீட்டும் இறுதி நேரத்தில் தான் உறுதி செய்யப்பட்டது. உள்ளூரிலேயே எங்கும் செல்ல மாட்டேன். அப்படியிருக்க தில்லியிலிருந்து கோவை வரை மூன்று நாட்கள் பயணம். எப்படி செல்லப் போகிறேனோ என்று மனது முழுவதும் பயம்.   முதலில் தில்லியிலிருந்து சென்னை செல்லும் தமிழ்நாடு விரைவு வண்டியை பிடித்தாயிற்று. இதில் என்னுடன் பயணித்தவர்கள் அனைவருமே மறுநாள் பாதி வழியில் உள்ள போபால், நாக்பூர் ஆகிய இடங்களில் இறங்கி விட்டனர். நாக்பூரில் வேறு ஒரு கும்பல் ஏறியது. அதில் எதிர் இருக்கையில் ராணுவத்தில் பணிபுரியும் ஒரு தமிழர் ஏறினார். பயணம் நல்ல படியாக சென்று கொண்டிருக்கையில் அதற்கடுத்த நாள் ரயில் சென்னை சென்று சேர வேண்டிய நேரத்தில் மூன்று மணிநேரம் தாமதம். எனக்கோ படபடப்பு. காரணம் 11.00 மணிக்கு கோவை செல்ல வேண்டிய வெஸ்ட் கோஸ்ட் வண்டியை பிடிக்க வேண்டும். தாமதமானதால் கவலையாய் இருந்தேன்.   கோவை வண்டியை பிடிக்க முடியாமல் போனால் என்ன செய்ய வேண்டும் என்று எதிர் இருக்கை நண்பரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்று நிலைமையைச் சொன்னால் அடுத்த ரயிலுக்கு பயணச்சீட்டை மாற்றிக் கொடுப்பார் என்று சொன்னார். எட்டு வருடங்களுக்கு முன்பு என்பதால் என்னிடம் அப்போது அலைபேசியும் இல்லை. கணவரிடம் என்னால் புலம்பவும் முடியவில்லை. கணவரின் நண்பர் சென்னையில் இருக்கிறார். அவரிடம் என்னை சென்ட்ரலில் பார்த்து வெஸ்ட் கோஸ்ட் பிடிப்பதற்கு உதவி செய்யும்படி இங்கேயே கணவர் தொலைபேசியில் சொல்லியிருந்தார். அந்த நண்பரும் பாவம் அலுவலகம் செல்லாமல் காத்துக் கொண்டிருப்பாரே! என்ன செய்யப் போகிறேன்! மனது திக்... திக்… என்று அடிக்க ஆரம்பித்துவிட்டது.   காலை 7.30 மணிக்கு சென்ட்ரல் சேர வேண்டிய வண்டி 10.30 மணிக்கு சென்றடைந்தது. ஸ்டேஷன் வருவதற்கு முன்பாகவே எதிர் இருக்கை நண்பர் என் பெட்டிகளை கதவோரம் கொண்டு வந்து வைத்து, வண்டி நின்றவுடன் முதலில் இறங்கி விடலாம் இல்லையெனில் எல்லோரும் இறங்குவதற்குள் நேரமாகி விடும் என்று உதவி செய்தார். இறங்கியதும் தன் அலைபேசியை என்னிடம் தந்து கணவரின் நண்பர் எங்கிருக்கிறார் என்று விசாரிக்கச் சொன்னார். அப்படி அவர் வரவில்லையென்றால் தனக்கு தூத்துக்குடிக்கு இரவு தான் ரயில் என்றும் அதனால் தான் வந்து ஏற்றி விடுவதாகவும் கூறினார். நண்பரின் அலைபேசிக்கு அழைத்ததும் அவர், தான் வந்து கொண்டிருப்பதாக கூறி என் கண் முன்னே தோன்றினார். எனவே இது வரை எனக்கு உதவி செய்த எதிர் இருக்கை நண்பருக்கு என் நன்றிகளை கூறி விடைபெற்றேன்.   அதன் பின் என் பெட்டிகளை எடுத்துக் கொண்டு கணவரின் நண்பருடன் சென்றேன். அவரோ ’பதட்டப்பட வேண்டாம், கோவை என்பதால் இங்கேயே தான் வண்டி அதனால் நேரமிருக்கிறது. வா சாப்பிட்டு விட்டு வரலாம்’ என்றார். நான் இல்லை இல்லை அதெல்லாம் ரயிலில் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்ல, என் பதட்டத்தை புரிந்து கொண்டு ’சரி, சரி உன்னை ரயிலில் அமர வைத்து விட்டு நான் உணவு வாங்கி வருகிறேன்’ என்று கூறி ரயில் பிளாட்ஃபார்முக்கு வந்து விட்டதால் இருக்கையில் என்னை அமர்த்திவிட்டு அவருடைய அலைபேசியை என்னிடம் கொடுத்து என் கணவரிடம் பேச சொல்லி விட்டு உணவு வாங்கச் சென்றார்.   காலையில் சாப்பிடுவதற்கு சிற்றுண்டியும், மதியத்திற்கான உணவு, தண்ணீர் பாட்டில், பத்திரிக்கைகள். வாங்கிக் கொடுத்தார். நேரமிருந்ததால் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். பின்பு விடைபெற்றுச் சென்றார். ரயில் இரவு கோவையை சென்றடைந்தது. பயணமும் நல்லபடியாக முடிந்தது   தனியாக முதலில் பயணம் செய்த அனுபவம் இது. இந்த பயணத்தில் நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் சில… பயமும் சற்று குறைந்தது. பிரயாணங்களில் சில பேர் நம்மிடம் தகவல்களை வாங்கிக் கொண்டு அதை தவறாக பயன்படுத்துபவர்களும் உண்டு. ஆகையால் ஜாக்கிரதையாக இருத்தல் நலம்.     கோவை - என் இனிய தோழி!   பத்து வயதிலிருந்தே என் இனிய தோழி அவள். பள்ளிப்பருவத்திலும், கல்லூரிப் பருவத்திலும், பின்பு வேலைக்கு சென்று கொண்டிருந்த காலத்திலும் கூட என்னோடு இருந்தாள். கல்யாணம் வரை இணைபிரியாது திரிந்தோம். கல்யாணம் முடிந்து தில்லி சென்ற பிறகு வேறு வழியின்றி பிரிந்து விட்டோம். அதன் பிறகு தோழியுடனான தொடர்பு முற்றிலும் விட்டுப் போயிற்று. இவளைப் போல அங்கும் சில தோழிகள் இருந்தாலும், அவர்கள் பேசும் மொழி ஹிந்தியானதால் அவ்வளவு ப்ரியம் இல்லை. பத்து வருடங்களுக்கு மேல் பிரிந்திருந்த தோழிகள் இப்போது மீண்டும் இணைந்து மகிழ்ச்சியில் திளைக்கிறோம்.   யார் அந்த தோழி? யூகிக்க முடிந்ததா? மனிதர்களோடு தான் நட்பாக இருக்க முடியும் என்ற அவசியமில்லையே! நான் சொல்வது என் வானொலித் தோழியைத் தான்.   காலையில் எங்களை எழுப்பும் போதே அப்பா வானொலியை ஆன் செய்து விடுவார். வந்தே மாதரம், சுப்ரபாதம், பக்திப் பாடல்கள், செய்திகள், திரைப்பாடல்கள் என்று எங்களுடனேயே குடும்பத்தில் ஒருத்தியாக பள்ளி செல்லும் வரை கூடவே இருப்பாள். மாலையிலும் துணையாயிருப்பாள். சனி, ஞாயிறுகளில் பகல் வேளைகளில் பொழுது போக ஒரே வழி இவள் தான்! பாடல்களை கேட்டுக் கொண்டே படிப்பேன். இதற்காக எவ்வளவோ முறை திட்டும் வாங்கியிருக்கிறேன். ஆனால் அதெல்லாம் காதினுள் போக முடியாதபடி பாட்டு வழிமறிக்கும்!   உள்ளூர் பேருந்தில் இனிமையான பாடல்களை கேட்டுக் கொண்டே பயணிப்பது எனக்கு மிகவும் பிடித்தது. இதற்காகவே வரும் அரசு பேருந்துகளையெல்லாம் விட்டு விட்டு தனியார் பேருந்துகளில், அதுவும்”பாட்டு பாடும் பேருந்தா?” என்று பார்த்து ஏறி பயணித்ததும் உண்டு. இப்போதும் அப்படித்தான். சென்ற முறை திருச்சி வந்த போது கூட உள்ளூர் பேருந்தில் பாடல்களை கேட்டுக் கொண்டே வந்து, இறங்க வேண்டிய இடத்தில் இறங்க மனமில்லாமல் இறங்கினேன். அது ஒரு சுகமான அனுபவம்.   திருமணமாகி தில்லி சென்ற புதிதில் கணவர் பதிவு செய்து வைத்திருந்த இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் தான் எனக்கு துணை. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் பத்திலிருந்து, பதினைந்து கேசட்டுகளாவது கேட்பேன். பிறகு ஒலித்தகடுகளில். அதுபாட்டுக்கு ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்க நான் ஒருபக்கம் வேலை செய்து கொண்டிருப்பேன். அவர் அலுவலகம் சென்றபிறகு பாடல்களும், சத்தங்களும் தான் எனக்குத் துணை.   இப்போது காலை எழுந்திருக்கும் போதே வானொலியை ஆன் செய்து விடுகிறேன். திருச்சி பண்பலையில் கந்த சஷ்டி கவசம், ஸ்கந்த குரு கவசம், வெள்ளிக்கிழமைகளில் மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் என பக்தி மணம் கமழ ஆரம்பிக்கும். வாசலை பெருக்கி கோலத்தைப் போட்டு விட்டு பாலை அடுப்பில் வைத்து ’ஆத்திச்சூடியில்’கேட்கும் புராணங்கள், இதிகாசங்கள் சம்பந்தப்பட்ட கேள்விக்கு ஓடி வந்து பதிலைச் சொல்லி விட்டு, பின்பு பக்திப் பாடல்கள், திரைப்பாடல்கள் என தொடர்ந்து அவளின் ஸ்னேகம். இரவில் ‘வெள்ளிரதம்’என்ற பெயரில் இடைக்கால திரைப்படப் பாடல்களை கேட்டு விட்டு அன்றைய நாளை நிறைவு செய்கிறேன்.   தோழி புதுகைத்தென்றல் அவர்கள் அவர்களது தோழியை சந்தித்தது குறித்து இந்த பதிவில் எழுதியிருந்தார்கள். அதை படித்தவுடன் என் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்த வரிகளை உடனே உங்களோடு பகிர்ந்து கொள்ள தூண்டியது. இதற்காக அவர்களுக்கு என் நன்றி.   உங்களுக்கு வானொலியுடன் இருக்கும் தோழமையை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம். கேட்காதவர்கள் இனிமேல் கேளுங்கள். ஆனந்தமாக, உற்சாகமாக ஒவ்வொரு நாளையும் இனிமையாக்குங்கள்.   இப்போது வானொலிப் பெட்டி (Radio) கடைகளில் கிடைப்பதே அரிதாகி விட்டதாம். நான் கூட தேடி ஒரு வானொலிப் பெட்டியை வாங்க வேண்டும். தற்போது அலைபேசியில் தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தில்லி - இடப்பெயர்ச்சி   சென்ற மாத இறுதியில் வீடு மாறினோம். இதனால் வேறு பள்ளியில் அட்மிஷன், வீடு மாற்றம் தொடர்பான வேலைகள் என பலவித டென்ஷன்கள். திருமணமாகி தில்லி வந்து ஒன்பது வருடங்களாக வசித்த பகுதியிலிருந்து வீடு மாற வேண்டி வந்ததில் பல அனுபவங்கள் கிடைத்தது. அதில் ஒரு சில இங்கே...   வீட்டில் உள்ள பொருட்களை பேக்கிங் செய்வது என்பது ஒரு பெரிய வேலை. வெளி ஊர்களுக்கு மாற்றிச் செல்லும்போது ‘பாக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்’ ஏற்பாடு செய்தால் அவர்களே வந்து எல்லா வேலைகளையும் செய்து விடுகின்றனர். ஆனால் உள்ளூரில் என்னும்போது இங்குள்ளவர்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் நாங்களாகவே செய்ய வேண்டிய கட்டாயம்.   பேக்கிங் செய்ய ஆரம்பித்த பின்பு தான் தெரிகிறது வீட்டில் எவ்வளவு தேவையில்லாத, உபயோகிக்காத பொருட்கள் இருக்கிறது என்று. நானும் கணவரும் எப்போதுமே தேவையில்லாத பொருட்களை சேர்ப்பவர்களும் இல்லை. வாங்குபவர்களும் இல்லை. அப்படியிருந்தும் எப்படியோ சேர்ந்திருக்கிறது. அதில் நல்ல நிலையில் உள்ள சிலவற்றை அருகில் இருக்கும் குஷ்ட ஆசிரமத்தில் கொடுத்தோம்.   புதிய வீடு தில்லியின் மையப்பகுதியில் உள்ளது. கணவரின் அலுவலகத்திற்கு பத்து நிமிட நடை தான் தொலைவு. மகளின் பள்ளியும் நடக்கும் தொலைவு தான். தில்லியில் சிறிது இடம் கிடைத்தாலே ப்ளாட் போட்டு விற்கும் நிலையில் இந்த குடியிருப்பைச் சுற்றி பல்வேறு வகை மரங்களும், கீழேயே பூங்காவும் உள்ளது. சிறுவர், சிறுமியருக்கு விளையாட ஏற்ற வகையில் ஊஞ்சல்களும், சறுக்கு மரங்களும், இன்னும் பலதும் உள்ளன. மகளும் அங்கு தினமும் விளையாட சென்று வருகிறாள். மரங்கள் இருப்பதால் மைனாவும், புறாக்களும், அணிலும் அடிக்கடி விசிட் செய்கின்றன.   வீட்டின் பின்பக்கம் அதாவது சமையலறைக்கு நேரே ஒரு வேப்ப மரம் உள்ளது. இது காற்றை சுத்தப்படுத்தும் என்று படித்திருக்கின்றேன். ஒவ்வொருவரின் ஜென்ம நட்சத்திரத்துக்கேற்ற மரங்கள் உண்டு என்றும் அந்த மரத்துக்கு கீழ் அமர்ந்தோ அல்லது அந்த மரத்தினிடத்தில் நம் பிரச்சனைகளை பகிர்ந்தோ கொண்டாலோ தீர்வு கிடைக்கும் என்றும் ஒரு புத்தகத்தில் படித்திருக்கின்றேன். அந்த வகையில் என் நட்சத்திரத்திற்கேற்ற வேப்பமரம் அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி.   தில்லியின் மையப்பகுதியான ‘[G]கோல் மார்கெட்’ என்ற இடத்திற்குத்தான் இடம் பெயர்ந்தோம். இங்கிருந்து ‘கரோல் பாக்’ ’புது தில்லி ரயில்வே ஸ்டேஷன்’ போன்ற இடங்கள் மிக அருகில் உள்ளன. எங்கள் வீட்டின் பின்புற சாலையில் தான் ’பிர்லா மந்திர்’ என்று அழைக்கப்படுகிற லஷ்மிநாரயண மந்திர் உள்ளது. சென்ற வாரம் ஞாயிற்றுகிழமை கரோல் பாக் சென்று வந்தோம்.   பல வருடங்களாக இயங்கி வரும் ஒரு மலையாளி கடையில் சூடான மசாலா வடை மற்றும் உளுந்து வடை கிடைக்கிறது. நீண்ட நாட்கள் கழித்து தமிழகம் போலவே வடை சாப்பிட்டதில் ஏதோ ஜென்மமே சாபல்யமடைந்தது போல் இருந்தது. இங்கு நிறைய தமிழர் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நம்மூர் அயிட்டங்களான அப்பளம், சின்ன வெங்காயம், வெற்றிலை, தமிழ்ப் பத்திரிக்கைகள் போன்றவற்றை தமிழிலேயே கேட்டு வாங்கியதில் ஏதோ தமிழ்நாட்டில் வாங்கியது போன்ற உணர்வு ஏற்பட்டது.   வீடு மாறுவதற்கு முன்பாக எனக்கு அதிக கவலை ஏற்படுத்திய விஷயம் பெண்ணிற்கு புதிய பள்ளியில் இடம் கிடைக்க வேண்டுமே என்பதுதான். இந்த வருடம் UKG யில் இருந்து முதல் வகுப்பு சென்றுள்ளாள் மகள். இப்போது மாற்றி வந்திருக்கும் பகுதியில் உள்ள சிறந்த பள்ளிகளில் சிலவற்றில் அவளை சேர்க்க இடம் கேட்டு விண்ணப்பித்திருந்தோம். அதில் ஒரு பள்ளியில் ஏற்பட்ட அனுபவம். விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.500. படிவத்தினை பூர்த்தி செய்து கொடுத்த பின்னர் எழுத்துத் தேர்வுக்கான நாள் குறிப்பிட்டனர். தேர்வுக்கு சுமார் 200 குழந்தைகள் வந்திருந்தனர். ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் தன்னுடைய குழந்தைக்கு இந்த பள்ளியில் இடம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் குழந்தைகளிடம் நன்றாக எழுத வேண்டும் என்றும் சக குழந்தையின் பெற்றோரிடம் உங்கள் குழந்தைக்கு அதை சொல்லிக் கொடுத்தீர்களா? இதை சொல்லிக் கொடுத்தீர்களா? என்றும் கேட்டுக் கொண்டிருந்தனர்.   ஒரு வழியாக வரிசையாக தேர்வறைக்குள் அழைத்துச் சென்று இரண்டு மணிநேர காத்திருப்புக்கு பின் குழந்தைகளை வெளியே அனுப்பி விட்டு முடிவுகளை பத்து நாட்களுக்கு பின் வெளியிடுவதாக தெரிவித்தனர். இந்த இரண்டு மணி நேர இடைவேளையில் நானும் என்னவரும் காதலர்கள் போல ஒரு வித ஐயத்தோடு அங்கு இருந்த புல்வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். எங்களைப் போலவே எல்லா பெற்றோரும். கேண்டீனில் ஐஸ்க்ரீம், சிப்ஸ் பாக்கெட்டுகள் விற்பனை அமோகமாக இருந்தது.   குறிப்பிட்ட நாளும் வந்தது. முடிவுகளை பார்த்தால்… தேர்வு எழுதியதோ 200 குழந்தைகள். நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருப்பதோ 18 குழந்தைகளை. அந்த 18-லும் எத்தனை பேருக்கு அட்மிஷன் கிடைக்கும் என்று தெரியவில்லை. எங்கள் மகளுக்கும் கிடைக்க வில்லை. அட்மிஷன் கிடைக்கவில்லை என்று தெரிந்ததும், ’நான் நன்றாகத்தானேம்மா எழுதினேன். எதையும் விட வில்லையே?’ என்று என் மகள் அழ ஆரம்பித்து விட்டாள். குழந்தைகளுக்கு இந்த பள்ளிகளின் வியாபார தந்திரங்கள் எங்கே தெரியப் போகிறது. இதை விட நல்ல பள்ளியில் உனக்கு இடம் கிடைக்கும் என்று சமாதானப்படுத்தினேன். அன்று தான் மகள் வளர்ந்து விட்டாள் என்பதை தெரிந்து கொண்டேன். இரண்டு மூன்று அனுபவங்களுக்கு பின் ஒரு வழியாக ஒரு பள்ளியில் இடம் கிடைத்தது. எல்லாம் பணம் பண்ணுகிற வேலை! கல்வி வியாபாரமாகி வருவது வேதனையான உண்மை.   முன்பு இருந்த பகுதியில் 300 தமிழ் குடும்பங்கள் இருந்தன. பிள்ளையார் கோயிலும், விழாக்களும் இருந்தது. இந்த பகுதியிலும் நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள் என என்னவர் சொன்னாலும், தெரிந்து கொள்ள நிறைய நாட்கள் ஆகும். முன்பு இருந்த வீட்டுக்கும் இப்போது இருக்கும் வீட்டுக்கும் ஒப்பிட்டுப் பார்க்கையில் நிறை குறைகள் இருந்தாலும் இப்போது ஓரளவுக்கு செட்டிலாகி விட்டோம். இந்த வீட்டில் மன நிம்மதியும், உடல் ஆரோக்கியத்தையும் கடவுள் வழங்குவார் என்று எண்ணுகிறேன்!   கோவை - மூக்கணாங்கயிறு!   மூக்கணாங்கயிறு பற்றி இப்போ எதுக்கு பதிவு என்று யோசிக்கிறீர்களா? திருமதி ரஞ்சனி நாராயணன் ’மூக்குத்திப் பூ’ என்ற தலைப்பில் அவர்களுடைய மலரும் நினைவுகளை, ஒரு பதிவாக பகிர்ந்திருந்தார்கள். இதுவரை படிக்காதவங்க படிச்சுட்டு வாங்க. அதை படித்ததும், ’நான் ரொம்ப நாளாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்த விஷயமாச்சே!’ என்று தோணவே உடனே எழுதலாம் என்று முடிவெடுத்து விட்டேன். நம்ம வரலாறு எப்பவுமே பெரிசுங்க!   எங்கப்பா மூக்கணாங்கயிறு போட்டாத் தான் மாடு அடங்கும். அது போல் மூக்கு குத்தினால் தான் நீயும் அடங்குவே என்று மிரட்டுவார். அப்போதெல்லாம் அப்பா மேல் கோபமாக வரும். அப்போது என்ன இப்போவும் தான். ஆனால் கோபத்தை காட்டத் தான் அப்பா இல்லை. சரி மேலுலகில் இருக்கும் அவரை எதுக்கு வம்புக்கு இழுக்க வேண்டும்.   மூக்கு நீளமாக இருப்பதால் அழகாக இருக்கும், அந்தந்த வயதில் குத்தினால் தான் எளிதாக இருக்குமென்றும் பல காரணங்களை சொல்லி என்னுடைய பத்தாம் வயதில், அதாவது நான் ஐந்தாம் வகுப்பு முடிந்து முழுபரீட்சை விடுமுறையில் சிவகங்கைக்கு சென்ற போது மூக்கு குத்தும் படலத்தை நடத்தினார்கள். பாட்டி (அப்பாவின் அம்மா) ஐந்து பேத்திகளுக்கும் மாங்காய் பிஞ்சு மூக்குத்தி வாங்கித் தந்தார். தங்கத்தில் மாங்காய் போன்ற மூக்குத்தியில் முத்து பதித்தது. மாமா வீட்டில் ஆசாரியை வர வைத்து நல்ல நேரத்தில் மூக்கு குத்தி விட்டனர்.   விடுமுறை முடிந்து கோவைக்கு வந்து பள்ளி சென்று கொண்டிருந்தேன். பள்ளியில் ஏதோ விளையாடும் போது கையை முகத்துக்கு குறுக்கே கொண்டு வரும் சமயம் வளையல் மூக்குத்தியில் மாட்டி இழுத்து விட்டேன் போலிருக்கிறது. வலியோ உயிர் போகிறது. எல்லோரும் இரத்தம் வருவதாக சொல்ல, மாலையில் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் காண்பித்தால் அம்மாவும் பயப்படுகிறார். எதிர் வீட்டு மல்லிகாம்மாவிடம் (இவரை பற்றி முன்பே எழுதியிருக்கிறேன்) காண்பித்தேன். அவர் தான் பொறுமையாக அமர்ந்து தண்டு பாதி உடைந்த நிலையில் இருந்த மூக்குத்தியை (கழட்டி எடுக்கவும் முடியாத நிலையில் இருந்தது) பார்த்து முழுதும் உடைத்து எடுத்து விட்டார். இரத்தத்தை துடைத்து தேங்காய் எண்ணெய் வைத்து ஓட்டை அடைந்து போகாமல் இருக்க வேப்பிலை குச்சியை சொருகி விட்டார்.   தூக்கத்தில் குச்சியும் எங்கோ விழுந்து விட மீண்டும் போட்டுக்க மாட்டேன் என்று அடம் பிடித்து வெற்றி கண்டேன். (இப்போ என் மகள் எதற்கு அடம் பிடித்தாலும் எனக்கு கோபம் வருகிறது. அம்மா பாவம்!) ஓட்டையும் அடைந்து விட்டது. புண் ஆறியதும் எத்தனையோ முறை அம்மா மூக்கு குத்திக் கொள்ள அழைத்த போதும் போக மறுத்து சண்டை போட்டு வெற்றியும் கண்டேன். விதி வலியது! விட்டதா என்னை?   பத்தாம் வகுப்பில் எதிர் வீட்டு சின்ன குழந்தை அக்‌ஷய்க்கு (இப்போ எங்கு இருக்கிறானோ!) முதல் பிறந்த நாள் வந்தது. ஆயுஷ்ஹோமம் செய்து வீட்டிலேயே ஆசாரியை வர வைத்து காது குத்தினார்கள். அழுகையோ அழுகை. அவனை சமாதானம் செய்து கொண்டிருந்தேன். அடுத்து நானும் அழப்போவது தெரியாமல்.   அடுத்து என்ன! எனக்கே தெரியாமல் எங்கம்மா வைத்திருந்த மூக்குத்தியை ஆசாரியிடம் கொடுத்து பிடித்து உட்கார வைத்து குத்தி விட்டார்கள். அதே மாங்கா பிஞ்சு தான் பத்த வைத்து விட்டார்கள். இருவரும் அழுகை. கூல் டிரிங்ஸ் கிடைத்தது. இருந்தாலும் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டு சத்தம் போட்டா அழ முடியும். இமேஜ் என்னாவது! மனதுக்குள்ளேயே அழுகை.   அதே மூக்குத்தியுடன் தான் பல வருடங்கள் இருந்தேன். திருமணத்தின் போதும். மூக்கு குத்தாதவர்களை பார்த்து பெருமூச்சு விடுவதுண்டு. நம்மளை மட்டும் பழி வாங்கி விட்டார்களென்று. கணவரிடம் கேட்டு திருமணத்திற்கு பிறகு தங்கத்தில் வெறும் சின்ன மொட்டு ஒன்று வாங்கிக் கொண்டேன். இப்போதும் அது தான். அம்மாவுடைய மூக்குத்தியின் ’தளுக்கு’ (மூன்று கற்கள் தனித்தனியாக ஒரு வளையத்தில் ஒன்றாக கோர்க்கப்பட்டது) என்னிடம் உள்ளது. அதை என்னவர் போட்டுக் கொள், நன்றாக இருக்கும் என்று சொல்வதுண்டு. நான் தான் அய்ய! நன்றாகவே இருக்காது என்று கண்ணாடி முன் வைத்து பார்த்து விட்டு கூறுவதுண்டு.   தில்லி - முடியுமா? முடியாதா?   என்னடா இது தலைப்பிலேயே இப்படி பயமுறுத்தறாங்களேன்னுதானே நினைக்கறீங்க? பயப்படாம படியுங்க.   இவள் எப்போது பேசுவாள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த மகள் இப்போது வாய் மேல் விரல் வைத்து ஒரு ஐந்து நிமிடம் பேசாம இரு என்று சொல்லும்படியாக பேசித் தள்ளுகிறாள். அத்துடன் இப்போது அவள் கேட்கும் கேள்விகள் முடிவில்லாதது!   அடம்பிடித்த கதை   தினமும் பள்ளியிலிருந்து வந்தவுடன் அன்று நடந்த விஷயங்களையும், விளையாட்டுகளையும் ஒப்பித்து விடுவாள். அவள் சொல்ல வில்லையென்றாலும் நான் விட்டு விடுவேனா என்ன?   அப்படித் தான் ஒரு நாள் பள்ளிக் கதைகளை சொல்லிக் கொண்டு வரும்போது ’என் நண்பர்கள் எல்லாம் டியூஷன் போகிறார்கள் நானும் போக வேண்டும்’ என்றாள். டியூஷன் என்றால் என்னவென்று தெரியுமா என்று கேட்டதற்கு "அங்கு போய் தான் HOME WORK பண்ணவேண்டும்" என்றாள். யாருடைய வீட்டில் அம்மாவும் ஆபிஸ் போகிறார்களோ அந்த குழந்தைகள் தான் டியூஷன் போகும் என்றேன் அவளிடம். அம்மா வீட்டில் தானே இருக்கின்றேன், உனக்கு பாடங்கள் சொல்லித் தருகிறேன் தானே அப்புறம் டியூஷன் எதற்கு என்று கேட்டதற்கு ’என்னை அதற்கு அனுப்ப முடியுமா, முடியாதா?’ என்று அடம் வேறு.   என் காலத்தில் கூட (நான் ஏதோ அந்த காலமும் அல்ல. நான் பத்தாம் வகுப்பு முடித்தது 1997-ல். என் பெண்ணும் பெரியவளும் அல்ல ஆறு வயதாகும் முதல் வகுப்பு படிப்பவள்) டியூஷனுக்கு போனால் அது மக்கு பிள்ளை என்று தான் சொல்வார்கள். நான் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு முன்னால் மூன்று மாதம் கணிதம் மற்றும் அறிவியலுக்காக டியூஷன் சென்றிருக்கிறேன். ஆனால் என் மகள் முதல் வகுப்பிலேயே டியூஷன் போக வேண்டுமென்றால் என்ன சொல்வதேன்று தெரிய வில்லை. இங்கு வட இந்தியாவில் அப்படித் தான் செய்கிறார்கள். டியூஷன் போவது கூட நாகரீகமோ?   பள்ளியில் நடந்த சம்பவம்   பள்ளியில் நடந்த விஷயங்களை சொல்லும் போது ’இன்று என் பள்ளியில் என் அருகில் அமர்ந்திருந்த பையன் என் கழுத்தில் குத்தி விட்டான்’ என்றாள். நான் நீ ஆசிரியரிடம் சொல்ல வில்லையா? என்று கேட்டதற்கு ’ஆசிரியரிடம் சொன்னேன், அவர் அந்த பையனின் கழுத்தில் திருப்பிக் குத்த சொன்னார்’ என்றாள். நீயும் குத்தினாயா என்றதற்கு, ’ஆமாம்!’ என்கிறாள். அவளிடம் இப்படி செய்வது தவறு அப்படியெல்லாம் பண்ணக் கூடாது என்று சொல்லி சமாதானம் செய்தேன்.   ஆசிரியரானவர் குழந்தைகளிடம் ஒருத்தொருக்கொருத்தர் "சாரி" சொல்லிக் கொள்ள செய்திருக்கலாம். அல்லது அந்த பையனைக் கூப்பிட்டு விசாரித்திருக்கலாம். அதை விட்டுவிட்டு ’Tit for Tat’ என்பது போல அப்படி செய்யச் சொல்லி பிஞ்சுக் குழந்தைகளின் மனதிலே நஞ்சினை விதைக்காமல் இருந்திருக்கலாம்! என்ன நான் சொல்றது சரிதானே?   கோவை - ஹாப்பி பர்த்டே! சில ஞாபகங்கள்   சிறுவயது முதல் என்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பற்றி சமீபத்தில் வந்த என் பிறந்தநாள் அன்று என் மகளுக்கு சொல்லிக் கொண்டிருந்தேன். அதை அப்படியே பதிந்தும் வைக்கலாம் என்று எண்ணியதன் விளைவு இப்பதிவு.   பிறந்தநாள் என்றாலே புதுத்துணியும், இனிப்புகளும், கேக்குகளும், பார்ட்டிகளும், பரிசுப் பொருட்களும், நண்பர் கூட்டமும் தான் நினைவுக்கு வரும் இல்லையா! ஆனால் என்னுடைய சிறுபிராயத்தில் பிறந்தநாள் என்றால், முதல் நாள் இரவே கைகளில் மருதாணி வைத்து விடுவார் அம்மா. காலையில் எழுந்து தலைக்கு குளித்து, இருக்கறதுலயே நல்லதாக உள்ள ஒரு உடையை அணிந்து கொண்டு அம்மா வைத்து விடும் பூவை தலையில் சூடிக் கொண்டு கோவிலுக்குச் செல்வேன்.   கையில் அர்ச்சனைக்காக இரண்டு ரூபாய் கொடுத்து விடுவார்கள். பெயர், நட்சத்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்து கொண்டு வீடு திரும்பியதும், முதல் நாள் இரவு நான் தூங்கிய பின் அம்மா செய்து வைத்த குலோப்ஜாமூனோ, அல்லது சுடச்சுட அப்போது செய்து வைத்திருக்கும் பாயசமோ தருவார் அம்மா. அப்பா அம்மாவுக்கு நமஸ்காரம் செய்து ஆசிகளை பெற்ற பின் அருகிலுள்ளோர் வீட்டுக்கு சென்று சாக்லேட்களை தந்து விட்டு வருவேன். இதுவே அன்றைய பிறந்தநாள் கொண்டாட்டமாகும்.   கொஞ்சம் பெரியவளான பின் அக்கம் பக்கம் இனிப்புகள் தருவதற்கு பதிலாக என்னுடைய வயது என்னவோ, அத்தனை உணவுப் பொட்டலங்களை தயார் செய்து தருவார் அம்மா. அதை அப்பாவுடன் சைக்கிளில் எடுத்துக் கொண்டு எங்கள் ஊர் கோவையின் பிரசித்தி பெற்ற கோவில்களான தண்டுமாரியம்மன் கோவிலுக்கும், கோணியம்மன் கோவிலுக்கும் செல்வோம். அங்கே வாசலில் அமர்ந்து கொண்டிருக்கும் பிச்சைக்காரர்களுக்கு என் கைகளால் உணவுப் பொட்டலங்களை தரச் சொல்வார் அப்பா. இதை சில வருடங்களுக்கு தொடர்ந்து கடைபிடித்தோம்.   எங்கள் உறவினர் தாத்தா ஒருவர் இப்படித் தான் தன்னுடைய பிறந்தநாளன்று செய்து வந்தார். நாங்களும் சென்று உதவி செய்வோம். அதை பார்த்த பின் தான் நாங்களும் இம்மாதிரி கடைபிடிக்கத் துவங்கினோம். காசு பணத்தால் ஒரு மனிதரை திருப்திப்படுத்த இயலாது. ஆனால் உணவு என்பது ஒரு கட்டத்துக்கு மேல் திருப்திப்பட்டுத்தானே ஆகணும் இல்லையா! மனசு வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் என்பார்களே பெரியோர்.   இப்படித்தான் என் அன்றைய பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இருந்தது. திருமணமான பின் என்னவருக்காகவும், மகளுக்காகவும் இனிப்புகள் செய்து தரும் நான், எனக்காக எதுவும் செய்து கொள்ள தோன்றுவதேயில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வாழ்த்தோடு சரி! இப்போ உலகம் முழுவதுமுள்ள பதிவுலக நட்புகளான உங்க எல்லோரின் வாழ்த்தும் கிடைப்பது மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.   இந்த வருட பிறந்தநாளுக்காக எங்கள் மகள் வரைந்து தந்த வாழ்த்து மடல் இதோ. இது தானே மிகப்பெரிய பரிசு!   [https://3.bp.blogspot.com/-e4-3kl0NofM/UzRUSSPfqeI/AAAAAAAAB8w/fePlvbbBFm8/s1600/100_7597.JPG] தில்லி - பக்கத்து ஃப்ளாட் காலியாயிருந்தால்!!!   ரிஷபன் சார் அவர்கள் முகப்புத்தகத்தில் பக்கத்து ஃப்ளாட் காலியாயிருந்தால் அங்கு என்னவெல்லாம் நடக்கிறது என்பதை பற்றி சுவைப்பட சொல்லியிருந்தார். அதை படித்ததிலிருந்து தில்லியில் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. வாங்க! அது என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.   நான் திருமணமாகி தில்லி சென்ற சமயம் எங்கள் பக்கத்து ப்ளாட் காலியாகத் தான் இருந்தது. எல்லோரும் குப்பைகளை அங்கு தான் கொட்டிக் கொண்டும், பைகளில் கட்டி வீசிக் கொண்டு இருந்தார்கள். என்னவர் அலுவலகம் கிளம்பும் போது வாசலில் பை சொன்ன பின்னர் அவர் கீழே இறங்குவதற்குள் வாசல் கேட்டை மூடிவிட்டு பால்கனிக்கு ஓடி அங்கிருந்து அவர் தெருமுக்கு திரும்பும் வரை பை சொல்ல காலி ஃப்ளாட் பெரும் உதவியாக இருந்தது :))) இதெல்லாம் டூ மச் இல்ல!!!….:)))   குளிர்காலத்தில் ஒருநாள் நான் மற்றும் எங்கள் ஃப்ளாட் தோழிகளான மகி மற்றும் கவிதாவுடன் எங்களுக்கு சொந்தமான மொட்டை மாடியில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். தில்லியில் எப்பவுமே POLLUTION கூடுதல் என்பதால் மாடி முழுவதும் மண்ணாக இருந்தது. சரி பெருக்கி விட்டு பாய் போட்டு வெயிலில் உட்காரலாம் என்று ஆளுக்கொரு வேலையாக பெருக்கி சுத்தம் செய்தோம். சேகரித்த குப்பைகளை என்ன செய்யலாம்? கீழே எடுத்துப் போகலாமா என்று யோசிப்பதற்குள் கவிதாவும், மகியும் அப்படியே கீழே தூக்கிப் போடு என்று சொல்ல முறத்தோடு மண்ணை கொட்டினேன். அவ்வளவு தான்!   கீழேயிருந்து ஹிந்தியிலும், மலையாளத்திலுமாக செமையாக வசவுகள். மூவரும் அலறிக் கொண்டு எட்டிப் பார்த்தால் நான் கொட்டிய மண் முழுவதும் கீழே சென்று கொண்டிருந்த ஒரு ஆளின் தலையில் அபிஷேகமாக ஆகியுள்ளது. மூவரும் சிரிப்புத் தாளாமல் கீழே அமர்ந்து கொண்டு சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தோம். ஒருபுறம் பயம் வேறு. அந்த ஆள் மேலே ஏறி வந்து சத்தம் போடுவாரோ??? இல்லை வேலைக்கு சென்றுள்ள இந்த மனுஷன் வேறு இந்த விஷயம் தெரிந்து என்ன சொல்வாரோ??? என்று ஆயிரம் கேள்விகள் :))) நல்லவேளை எந்த கெடுதலும் நிகழவில்லை :))) ஆனால் பல வருடம் என்னை இந்த விஷயத்தை வைத்து கிண்டல் செய்திருக்கிறார் :)))     தில்லி - எம் ஃபார் மோங்க்கி!   பதிவர் ஒருவர் தன் மகனின் பள்ளி அட்மிஷனுக்காக அலைவது குறித்து தெரிவித்திருந்தார். அதை படித்ததிலிருந்தே எங்கள் மகளின் பள்ளி செல்ல ஆரம்பித்திருந்த நாட்கள் நினைவுக்கு வந்தன சுகமான அந்த மழலைப் பருவ நாட்கள் மீண்டும் வாரா! எனவே அவளின் பள்ளிப் பருவ நாட்களை பற்றிய டைரி போல் இதைக் கொள்ளலாம் ரோஷ்ணியின் சேமிப்பிற்காக இங்கே பதிவு செய்கிறேன்   தில்லியில் குழந்தையின் 2 வயதிலிருந்தே ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பி விடுவார்கள். எங்கள் வீட்டில் 3 வயதில் ப்ளே ஸ்கூலில் சேர்ப்பதற்கே அவள் அப்பா சீக்கிரம் சேர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள் (அபியும் நானும் கதை தான்). வீட்டிலிருந்து ஐந்து நிமிடத் தொலைவில் ஒரு ப்ளே ஸ்கூல் இருக்கவே, ஒருநாள் முற்பகல் பதினோரு மணி போல் ரோஷ்ணியை அழைத்துக் கொண்டு, அங்கு விசாரிக்கச் சென்றேன். அவர்களும் தகவல்களைச் சொல்லி ஒரு விண்ணப்ப படிவம் தந்தார்கள். அன்று அமாவாசையும், புதன்கிழமையுமாக இருந்ததால், உடனேயே பூர்த்தி செய்து கொடுத்து முன்பணமாக என் கையில் வைத்திருந்த 500 ரூபாயையும் கட்டி விட்டேன். பள்ளி முடிய இன்னும் ஒரு மணிநேரம் இருக்கவே இப்போவே சேர்த்து விடுகிறேன் என்று சொல்லி மகளை அங்கே விட்டு விட்டு ஓடி வந்து விட்டேன்.   அவளுக்கு மறுநாள் முதல் கொடுக்க வேண்டிய லஞ்ச் பாக்ஸ், வாட்டர் பாட்டில், ஸ்கூல் பேக் முதலியவைகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்த பின் தான் அவளின் அப்பாவுக்கு மகளை பள்ளியில் சேர்த்த விஷயத்தை தொலைபேசி மூலம் சொன்னேன். பள்ளி முடியும் நேரத்திற்கு சென்று, விட்டு வந்தவுடன் சிறிது நேரம் அழுது விட்டு, மற்ற குழந்தைகளை பார்த்து அவர்களுடன் விளையாட ஆரம்பித்திருந்த குழந்தையை அழைத்து வந்தேன்.   மறுநாள் முதல் காலையில் கிளம்ப குஷியாகத் தான் இருப்பாள். ஸ்கூல் பேக், வாட்டர் பாட்டில், லஞ்ச் பாக்ஸ் எல்லாம் எடுத்துக் கொண்டு அவள் அப்பா அலுவலகம் கிளம்பும் போது நாங்களும் ரெடியாகி விடுவோம். அப்பாவுக்கு ’பை’சொல்லி விட்டு, அங்கு கொண்டு போய் விட்டதும் ஆரம்பமாகி விடும் அழுகை. அப்போதெல்லாம் என்னை பெயர் சொல்லித் தான் அழைப்பாள். அப்பா என்றுமே அப்பா தான். ‘புவனா என்ன விட்டுட்டு போகாத புவனா’ என்று ஒரே அழுகை தான். மனதை கல்லாக்கிக் கொண்டு ஓடி வந்து விடுவேன். அந்தத் தெரு திரும்பும் வரை கத்தல் கேட்கும் (நான் அப்போ ராட்சசியா தான் இருந்திருக்கிறேன் போல!).   வீட்டில் தமிழே பேசி பழகியதால் ரோஷ்ணிக்கு அப்போ இந்தி தெரியாது. அதனால் பானியை தண்ணீர் என்று கேட்பாள் என்று ஆசிரியருக்கு பாடம் எடுத்து, அவள் கேட்டால் புரிந்து கொள்ளும்படி சொல்லித் தருவேன். அது போல் இவளிடமும் இந்தி வார்த்தைகளையும் சொல்லித் தந்தேன். அப்போ இருந்த ஆசிரியர்கள் அனைவரும் பெங்காலிகள். அதனால் அவர்கள் மொழியின் கலப்பில் ஆங்கிலமும், இந்தியும் சொல்லித் தருவார்கள். அப்படித் தான் எம் ஃபார் மோங்க்கி வந்தது.   எல்லாம் ஏறக்குறைய ஒரு மாதம் வரை தான். அவளும் பழகிக் கொண்டு, அழாமல் செல்லவே அப்பா அலுவலகம் செல்லும் போது அவளை விட்டு விட்டு செல்ல ஆரம்பித்தார். (என்ன இருந்தாலும் பெண்குட்டி அழுதா தாங்காது கேட்டோ! கதை தான். மாண்டசோரி முறையில் கற்க ஆரம்பித்ததால் முதலிலேயே A, B, C என ஆரம்பிக்காமல் / LINE – LINE என கற்றாள். ஞாயிறு காலையில் எழுப்பும் போது இன்றைக்கு / LINE, - LINE, பென்சில், ரப்பர் எல்லாத்துக்கும் சுட்டி (லீவு) என்பாள்…..:))   பள்ளியில் சேர்த்த அன்றிலிருந்தே ஹோம்வொர்க் ஆரம்பமாகி விட்டது. பழக வேண்டுமென்பதற்காக நான்கு பக்கங்களுக்கு கொடுப்பார்கள். விளையாட்டுத் தனத்தால் பலமுறை கைப்பிடித்து எழுதவும் அமர மாட்டாள். நானே எழுதி தந்திருக்கிறேன். ப்ளே ஸ்கூலில் மாதம் ஒரு நிறம் என தேர்வு செய்து வைத்திருப்பார்கள். அன்று அந்த நிற உடை, உணவு என சகலமும் அந்த நிறம் இடம்பெற்றிருக்க வேண்டும். சில நேரம் நாம் தடுமாற வேண்டியிருக்கும். கோடையில் அணிந்த அந்த நிற உடை குளிர்காலத்துக்கு அணிய முடியாது. அதனால் புதிதாக வாங்க வேண்டும்.   ஒரு முறை சுதந்திர தினத்துக்கு ட்ரை கலர் லஞ்ச் கொடுத்தனுப்ப சொல்லியிருந்தார்கள். மண்டையை பிய்த்துக் கொண்டு யோசித்து தோழி ஒருவரின் பரிந்துரையில் ப்ரெட்டில் பச்சை சட்னி அரைத்து தடவி அதன் மேல் ஒரு ப்ரெட், அதன் மேல் தக்காளி சாஸ் தடவி நடுவில் ஒரு நீல நிற ஜெம்ஸ் வைத்துக் கொடுத்தேன். எங்கள் வீட்டுக் குழந்தை ஜெம்ஸை மட்டும் சாப்பிட்டு விட்டு, செய்த எனக்கு சின்சியராக அப்படியே கொண்டு வந்திருந்தது.இப்படிப் பலமுறை படுத்துவார்கள்.   பாரத மாதா வேடமிட்டு அனுப்பி வைத்திருந்தோம். இரண்டு வரிகளை அவள் அப்பா சொல்லிக் கொடுத்திருந்தார். வீட்டில் அழகாக சொல்லவே பதிவு செய்தோம். பள்ளியில் ’அம்மா அம்மா’ மட்டுமே.   இப்படி பல சுவையான நிகழ்ச்சிகளுக்கு பின்னர் அடுத்த ஆண்டு எல்.கே.ஜிக்கு அட்மிஷன் வாங்க வேண்டுமே என்ற எண்ணம் டிசம்பரிலேயே ஆரம்பித்து விட்டது. என்ன செய்தோம். பார்க்கலாம்….   தில்லி - எல்.கே.ஜி அட்மிஷன் என்றால் சும்மாவா!!!   நண்பர்களே! எங்கள் மகளின் மழலைப் பருவ நாட்களை பற்றி ஒரு டைரி போல் இங்கு பதிவு செய்கிறேன். தில்லியின் வாழ்க்கை முறையும், அங்குள்ள பள்ளியின் செயல்பாடுகளும், தட்பவெப்ப நிலையால் ஏற்படும் மாற்றங்களும் என இந்த பதிவின் மூலம் சில விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.   சென்ற பகுதியில் ப்ளே ஸ்கூல் கதையை பார்த்தோம் அல்லவா! அடுத்து என்ன! எல்.கே.ஜி அட்மிஷனுக்கான வேலைகள் டிசம்பரிலேயே எங்களுக்கு வந்துவிட்டது. நண்பர்கள் சிலரின் பரிந்துரையிலும், வீட்டிலிருந்து சென்று வர வசதியாகவும் என நான்கைந்து பள்ளிகளில் விண்ணப்ப படிவம் வாங்க தீர்மானித்தோம். அரைநாள் விடுப்பு, இரண்டு மணிநேர பர்மிஷன் போட்டு என ரோஷ்ணியின் அப்பா அவளுக்காக அலைந்து வரிசையில் நின்று விண்ணப்பப் படிவங்களை வாங்கி வந்தார். குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மட்டுமல்லாது பெற்றோரின் படிப்பு சான்றிதழ்களின் நகல்கள், பெற்றோரின் வருமானச் சான்றிதழ், புகைப்படங்கள் என அவர்கள் கேட்டிருந்த எல்லாவற்றையும் தந்து விண்ணப்பித்திருந்தோம்.   ஒரு வாரத்திற்குள் பள்ளிகளிலிருந்து வரிசையாக நேர்முகத் தேர்வுக்கான கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. நல்லவேளை ஒவ்வொன்றும் வெவ்வேறு நாட்களில் தான் :) மூவரும் சென்று அங்கு சிறிதுநேரம் அமர்ந்து பேசிக்கொண்டும், குழந்தைகளை கவர்வதற்காக வைக்கப்படிருந்த விளையாட்டு பொருட்களில் விளையாட வைத்துக் கொண்டும் அமர்ந்திருப்போம். ஆசிரியைகள் குழந்தையை அழைத்துச் சென்று A B C D எழுதிக் காட்ட சொன்னார்கள். ஓரிரு கேள்விகள் கேட்டு விட்டு, கடிதம் மூலமாக ரிசல்ட் அனுப்பி வைக்கப்படும் என்று சொன்னார்கள்.   விண்ணப்பத்திருந்த எல்லா பள்ளிகளிலுமே ரோஷ்ணிக்கு இடம் கிடைத்தது. ஒவ்வொரு பள்ளியிலும் அவர்கள் நிர்ணயத்திருந்த CAPITAL FEES தான் பயமுறுத்துவதாக இருந்தது. அதுவும் இரண்டு நாட்களுக்குள் செலுத்தினால் இடம். எல்லாம் பணம் பண்ணுகிற வேலை. நாங்கள் யோசித்து முடிவெடுத்து, ஒரு பள்ளியை தேர்வு செய்தோம். ஆனால் 5 கிமீ பயணம் செய்ய வேண்டும். கொஞ்சம் யோசனை தான், ஆனாலும் நண்பர்கள் சிலரின் குழந்தைகளும் அங்கு படித்து வந்ததால் தைரியமாக சேர்த்து விட்டோம்.     இங்கே குழந்தைகளை எல்.கே.ஜியில் அனுமதிக்க வயது வரம்புக்கென வருடாவருடம் CUTOFF தேதி சொல்வார்கள். ஒரு வருடம் 3+ என்றும் மறுவருடம் 4+ என்றும் மாற்றிக் கொண்டே இருந்தார்கள். பெரும்பாலும் 4+ தான். இங்கிருக்கும் பெரும்பாலான குழந்தைகள் 4வயது முடிந்த பிறகே எல்.கே.ஜியில் அனுமதிக்கப் படுகிறார்கள். தமிழகம் வந்த பிறகு பார்த்தால் ரோஷ்ணி மூன்றாம் வகுப்பில் படிக்க அவள் வயது உள்ள குழந்தைகள் நான்காம் வகுப்பில்.   அடுத்து சென்று வர வேன் ஏற்பாடு செய்ய வேண்டும். நண்பர்களின் குழந்தைகள் சென்ற அந்த வேனையே ஏற்பாடு செய்தோம். நல்லவேளை! இடம் கிடைத்தது. எல்.கே.ஜி, யூ.கே.ஜிக்கு மட்டும் குழந்தைகள் சுமை தூக்க வேண்டாமென பள்ளியிலேயே புத்தகங்களையும், நோட்டுகளையும் ஆசிரியரே வாங்கி வைத்துக் கொள்வார். அதனால் அப்பா கொண்டு போய் ஆசிரியரிடம் கொடுத்து விட, முதல் நாளே மற்ற குழந்தைகளுடன் வேனில் சென்று வர ஆரம்பித்தாள். அழுகை இல்லை. வேன் ஓட்டுநர் அமித் என்கிற பெங்காலி - ரோஸனி என்று அவர் கூப்பிடுவதே நாராசமாக இருக்கும்.   அங்கு பருவநிலைக்கு தகுந்தாற்போல் பள்ளிச் சீருடை அமையும். அதனால் கோடைக்காலத்திற்கு இரண்டு செட், குளிர்காலத்துக்கு இரண்டு செட். நடுவில் டெங்குஜுரங்கள் பரவும் காலங்களில் முழுக்கை சட்டையும், கறுப்பு பேண்ட்டும் அணிந்து வர சொல்வார்கள். கோடை சீருடை பரவாயில்லை. குளிர்காலத்தில் முதலில் தெர்மல் என்று சொல்லப்படுகிற சூடு கொடுக்கும் முழுக்கை பனியன், அதன்மேல் பள்ளிச் சீருடை முழுக்கை சட்டை, அதன் மேல் பினோஃபார்ம், அடுத்து அரைக்கை ஸ்வெட்டர், பினோஃபார்ம்க்கு கீழே தெர்மலில் பேண்ட், ஸாக்ஸ், ஷூ, தலைக்கு ஸ்கார்ஃப், கைக்கு கிளவுஸ். கடும்பனியில் அரைக்கை ஸ்வெட்டருக்கு மேல் ஜெர்கின் ஒன்று அணிந்து கொள்ள வேண்டும்.   பள்ளி நேரங்களும் அங்கு வேறுபடும் - காலை 8 மணியிலிருந்து 2 வரை தான். சின்ன வகுப்புகளுக்கு 12.30 வரை தான். கணவரையும், குழந்தைகளையும் அனுப்பி விட்டு, வீட்டு வேலைகளை முடிப்பதற்குள் அவர்கள் பள்ளியிலிருந்து வரும் நேரமாகி விடும். அம்மாக்கள் அல்லது கிரச்சில் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் ஆன்ட்டிகளும் நிறுத்தத்திற்கு சென்று காத்திருக்க வேண்டும். குளிர்காலத்தில் காலை 7 மணிக்கு வேனுக்காக வீட்டிலிருந்து இறங்கியாக வேண்டும். பாவமாக இருக்கும். வட இந்தியர்கள் போலல்லாது எங்க வீட்டு செல்லம் எவ்வளவு குளிரானாலும் அவ்வளவு சீக்கிரத்திலும் தினமும் குளித்து விட்டே கிளம்புவாள்.   உணவு இடைவேளையும் காலை 10 மணிக்கு இருக்கும். ஏனென்றால் காலையில் 7 மணிக்கெல்லாம் சாப்பிட்டு விட்டு எங்கே கிளம்புவது. குழந்தைகள் சீக்கிரம் எழுந்து பால் குடித்து விட்டு கிளம்புவதே பெரிய விஷயம் அல்லவா! சரி! எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய் விட்டது. இந்தப் பள்ளியில் விதவிதமான விழாக்கள், நாட்கள், குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட வேலைகள் என ஏராளம் உள்ளது!   அவை அடுத்தடுத்த பகுதிகளில்.   தில்லி - நாங்கள்லாம் இதை எல்.கே.ஜியிலேயே ஆரம்பிச்சுட்டோம்ல!!!!   இந்தப் பகுதியில் பள்ளியில் விழாக்கள், பள்ளிக் கட்டணங்கள், தில்லி மக்களின் மனப்பாங்கு, பணபலம் என்று சிலதைப் பற்றி பார்க்கலாம்.   பள்ளியில் RAINY DAY, GRANDPARENT’S DAY, TEACHER’S DAY, JANMASHTAMI, GRADUATION DAY, WINTER CARNIVAL என்று பலவிதமான விழாக்கள் கொண்டாடப்படும்.   தில்லியில் எல்லாவற்றிலுமே எல்லோருக்குமே அலட்சியம் தான். இப்படித் தான் ஒருநாள் மதியம் பள்ளியிலிருந்து வரும் மகளை அழைத்து வர நிறுத்தத்திற்கு சென்றிருந்தேன்.அப்போது ரோஷ்ணி எல்.கே.ஜியில் இருந்தாள். அங்கு சென்று நின்றவுடன் இறக்கத்திலிருந்து அம்மா என்று என் காலை பிடித்து இழுக்கிறாள். என்னடா! எப்போ வந்தே? என்று கேட்டால் வேன் (B)பையா என்ன விட்டுட்டு, மம்மி இப்போ வந்துடுவாங்கன்னு சொல்லிட்டு போயிட்டார் என்கிறாள். நான் அதிர்ந்து விட்டேன்.   காரணம் அது மெயின் ரோடு - கடைகள், வீடுகள், வங்கி என ஜன நடமாட்டம் மிகுந்த இடம். ஏகப்பட்ட வண்டிகளும், ரிக்‌ஷாக்களும் செல்லும் நெருக்கடியான இடம். குழந்தைக்கு அப்போது எங்கள் வீடும் அடையாளம் தெரியாது. ஒருவேளை தானாகவே ரோட்டை கிராஸ் செய்திருந்தாலோ, அல்லது யாராவது கூட்டிக் கொண்டு போயிருந்தாலோ என்ன ஆவது? நினைக்கும் போதே அழுகை பொத்துக் கொண்டு வந்தது. குழந்தையை தூக்கிக் கொண்டு வீடு வந்து நெடுநேரம் ஆகியும் அந்த சம்பவம் கண்ணை விட்டு அகலவில்லை. ஓட்டுனரிடம் விசாரித்தால் சாதாரணமாக ’சாரி’ஒன்றை சொல்லி விட்டார். அது முதல் ரோஷ்ணியிடம் அம்மா வராமல் வண்டியை விட்டு இறங்கக் கூடாது என்றும், ஐ.டி.கார்டில் உள்ள நம்பரை (B)பையாவிடம் காட்டி போன் செய்யச் சொல்லு, என்றும் சொல்லிக் கொடுத்தோம்.   வேன் ஓட்டுனர் அமித் பள்ளியின் கேட் வரை விட்டு விட்டு செல்வார். உள்ளே அவள் வகுப்புக்கு சிறிது தூரம் நடக்க வேண்டும். நண்பரின் மகள் சிறிது நாட்கள் இவளை வகுப்பில் விட்டு விட்டு செல்வாள். அவளுக்கு வகுப்புக்கு நேரமாகி விட்டால், வகுப்புக்கு செல் என்று சொல்லி விட்டு செல்வாள். அப்போதெல்லாம் அங்கேயே நின்று கொண்டு ரோஷ்ணி அழுது கொண்டு இருப்பாளாம். ஆசிரியர் யாராவது ஐ.டி கார்டை பார்த்து அந்த வகுப்பில் விட்டு விட்டு செல்வார்களாம். இதை கேள்விப்பட்டு ஏதேதோ சொல்லி அவளாக வகுப்புக்கு செல்லும்படி செய்தோம். இப்படியாக தினமும் ஒரு கூத்து தான்.   சென்ற பகுதியில் தில்லியில் பள்ளிக் கட்டணங்களை பற்றி குறிப்பிடும்படி ரமணி சார் கேட்டிருந்தார்கள். DELHI PUBLIC SCHOOL என்று சொல்லப்படுகிற பிரபலமான பள்ளியில் நான்கைந்து வருடங்களுக்கு முன்பே எல்.கே.ஜி அட்மிஷனுக்கு வருடத்துக்கு 4 முதல் 5 லட்சங்கள் எனக் கேள்விப்பட்டோம். நாங்கள் எங்கள் மகளுக்கு எல்.கே.ஜி, யூ.கே.ஜி, ஒன்றாம் வகுப்பு ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் செலவழித்த தொகை 1.5 லட்சங்களுக்கும் மேல். சில பள்ளிகளில் மதிய உணவும் அங்கேயே தருவதாக சொல்லி அதற்கும் மாதம் ரூ1000 வரை வாங்கிக் கொள்வார்கள்.   பள்ளி சேர்த்தது முதலே பெற்றோராகிய எங்களுக்கு பெரிய பாடாக ஒன்று இருந்தது. அது என்னவென்றால் PROJECT அல்லது ACTIVITY WORK என்பார்களே அது தான்! இன்று ஒரு ALPHABET சொல்லிக் கொடுத்தால். அந்த எழுத்தில் தொடங்கும் ஏதேனும் இரண்டை எதைக் கொண்டாவது அலங்கரித்து செய்து வர வேண்டும். பள்ளி விட்டு வீடு வந்ததும் முதலில் டைரியை எடுத்து பார்ப்பேன். அதில் என்ன செய்து கொண்டு வர வேண்டும் என்று எழுதி தந்திருப்பார்கள்.   அப்பாவின் வேலை அந்த எழுத்து சம்பந்தப்பட்ட பொருளை அலுவலகத்திலிருந்து வரும் போது பிரிண்ட் அவுட் எடுத்து வர வேண்டும்! அம்மாவின் வேலை பஞ்சு, கிரேயான்ஸ், பென்சில் துருவல்கள், தேங்காய் நார், பருப்புகள், கலர் பேப்பர்கள், தேவையில்லாத குறுந்தகடுகள் என்று எதையாவது வைத்து அதை இரவுக்குள் தயார் செய்து வைக்க வேண்டும். மகள் அதை பள்ளியில் காட்டி அந்த பாராட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். சிலது அழகாக இருக்கும்பட்சத்தில் பள்ளியிலேயே வாங்கி வைத்துக் கொள்வார்கள்.   என்னுடைய பள்ளிப்பருவத்தில் வாரத்தில் ஒருநாள் பள்ளியிலேயே CRAFT PERIOD என்று இருக்கும். அதில் ஆசிரியர் சொல்லித் தரும் கைவேலைகளை நாங்கள் அங்கேயே செய்து காட்ட வேண்டும். அப்படி செய்தால் தான் குழந்தைகளின் மனதிலும் பதியும். சோப்புகள் வரும் டப்பாக்கள், பேஸ்ட் டப்பாக்கள் என்று வைத்து சோஃபாக்கள் செய்வது, சிகரெட் டப்பாவில் ஹேண்ட் பேக், பட்டை ஒயரை வைத்து கிளி, மீன், மாலைகள், கூடைகள், துணியில் க்ரோஷா தையல் போன்றவை இன்றும் நினைவில் உள்ளன.   அதை விடுத்து பெற்றோர் செய்து தர குழந்தைகளுக்கு மதிப்பெண்கள் என்பது என்னவிதமான கற்றல் முறை? எங்கள் வீட்டிலாவது நாங்கள் செய்வதை எங்கள் மகள் பார்க்க முடிகிறது. தில்லியில் பெரும்பாலானவர்கள் இது போல் ஏதேனும் WORK கொடுத்தாலே ஸ்டேஷனரி கடைகளில் தந்து செய்து தரச் சொல்லி விடுவார்கள். அவர்களும் 500, 750, 1000 என வசூலிப்பார்கள்.   குழந்தைகளின் வித்தியாசமான பெயர்கள், ஆசிரியர்களின் மனப்பாங்கு, என்று பல விஷயங்களைப் பற்றி அடுத்த பகுதியில்.   தில்லி - உப்மாவும்! முஸ்கானும்!   பள்ளி செல்ல ஆரம்பித்ததிலிருந்தே உடன் படிக்கின்ற குழந்தைகளின் பெயர்களை அவள் மழலை மொழியில் கூறும் போது ஒன்றுமே புரியாது. நான் [B]பாயா! [G]கேர்ளா! என்று விசாரிப்பேன்! தில்லியில் உள்ள எல்லா பெண் குழந்தைகளுமே தலைவிரி கோலமாக அல்லது பாய் கட் பண்ணியோ, தோடும் இல்லாமல், பொட்டு வைக்கும் பழக்கமே இல்லாதவர்கள் :) ஆதலால் அவளும் [B]பாய் என்று சொல்லி விடுவாள்!   பெயர்கள் எல்லாம் வித்தியாசமாக இருக்கும் - MUSKAAN, KASHISH RATHORE, BANU SONI, THULIKA, PALAK, YUMNAA, RONAK, KASHISH SONI இப்படி. பெயர்களை வைத்து பையனா! பொண்ணா! என்று கண்டுபிடிப்பது கடினம். வட இந்தியர்கள் தந்தையின் பெயரை இனிஷியலாக போட்டுக் கொள்ள மாட்டார்கள். தங்களது குடும்ப பெயர்களை தான் தன் பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொள்வார்கள்.   வகுப்பில் குழந்தைகளை ஷேர் பண்ணிக் கொண்டு சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள் - ஆனால் நீங்களோ! நானோ நினைப்பது போல் குழந்தைகளுடன் அல்ல! ஆசிரியருடன்! நாம் கொடுக்கின்ற உணவில் ஆசிரியர் ஒரு சிறுபகுதி எடுத்துக் கொள்வார். அது தென்னிந்திய உணவாக இருக்கும் பட்சத்தில் பெரும்பகுதி காலியாகி விடும். இது போக மாதா மாதம் வரும் இரண்டாவது சனிக்கிழமையில் நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் என்னிடம் தோசையுடன் சாம்பாரும் சட்னியும் ஒருநாள் கொடுத்து விடும்படி வேறு சொல்வார்!   இந்த பழக்கத்தால் தமிழகம் வந்த பின்னாலும் ஒவ்வொரு முறை அவளது ஆசிரியரை சந்திக்கும் போது ரோஷ்ணியை பற்றி அவள் ஆசிரியர்கள் கூறுவது என்னவென்றால் – ’லஞ்ச் பாக்ஸிலிருந்து எடுத்துக் கொள்ளும்படி எங்களைத் தொந்தரவு செய்கிறாள்’என்று! நானும் இங்குள்ளோர் அப்படியெல்லாம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள், என்று சொல்லியும், அவள் இன்றும் அப்படித் தான் செய்து கொண்டிருக்கிறாள். ஆசிரியர்களும் வட இந்திய உணவாக இருக்குமானால் சிறிதளவு எடுத்துக் கொள்வார்களாம்!   தில்லி பள்ளிகளில் உபயோகத்தில் உள்ள ஒரு சில வார்த்தைகள் நமக்கு வேறுவிதமான அர்த்தங்களை தரும்! அவைகளில் ஒரு சில இங்கே.   COPY – NOTE BOOK PAPER – EXAM   சொல்ல மறந்துட்டேனே! உப்மா என்று தலைப்பில் கொடுத்து விட்டு அதைப் பற்றி ஒன்றுமே சொல்லா விட்டால் எப்படி? அவள் படித்த பள்ளி ஒன்றின் பிரின்சிபால் பெயர் தான் அது - UPMAA SAXSENA!   எங்களைப் பற்றி     மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்:   மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர்.   ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்:   ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம்.   தமிழிலுள்ள மின்புத்தகங்கள்:   தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை.   ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள்.   சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை.   எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது.   சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி?   சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன.   நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம்.   அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம்.   எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும்.   தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா?   கூடாது.   ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும்.   அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும்.   அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது.   வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும்.   பொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம்.   FreeTamilEbooks.com   இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும்.   PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT   இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம்.   அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம்.   இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?   நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும்.   அவ்வளவுதான்!   மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு:   1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல்   விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.   இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்?   யாருமில்லை.   இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும்.   மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும்.   இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்?   ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம்.   அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது.   தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.   நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா?   உள்ளது.   பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன.   1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net   எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது?   இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும்.   <துவக்கம்>   உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.   இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.   இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும்.   இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள்   உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும்.   எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம்.   இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம்.   http://creativecommons.org/licenses/   நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.   e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி.   மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள்.   முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள்.   கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.   ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது?   அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்?   ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.   தவிர்க்க வேண்டியவைகள் யாவை?   இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.   எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி?   நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்?   குழு – http://freetamilebooks.com/meet-the-team/ Supported by   - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/   உங்கள் படைப்புகளை வெளியிடலாமே   உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம்.   1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/   2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்   http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/   3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம்.   மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  –     இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook   A4 PDF, 6 inch PDF கோப்புகளை  Microsoft word இலேயே உருவாக்க – http://freetamilebooks.com/create-pdf-files-using-microsoft-word/ எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம்.   https://groups.google.com/forum/#!forum/freetamilebooksforum   நன்றி !