[] []     கோவை 2அமெரிக்கா   பாசு  baskarswaminath@yahoo.co.in    வெளியிடு – FreeTamilEbooks.com   உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - த.சீனிவாசன் tshrinivasan@gmail.com                                                                                             இவ்வனுபத்தை பகிர வாய்பளித்த                                      ரமேசு, சத்யா, சுருதி, கார்த்தி                                    ஆகியோரது அன்புள்ளங்களுக்கு                                    எனது உளமார்ந்த நன்றிகள் பல.   பொருளடக்கம் என்னுரை 5  1. லூப்தான்ஸா 6  2. பிராங்போர்ட் 8  3. பாஸ்டன் 9  4. நேஷுவா 10  5. மால்பரோ (Marlborough) 11  6. நியூயார்க் 13  7. சுதந்திரதேவி சிலை 15  8. நியூஜெர்சி 17  9. Atlanda 19  10. வாஷிங்டன் 21  11. பென்சில்வேனியா 23  12. நயாகரா 24  13. பாகுபலி 26  14. மது(wines) 27  15. வால்மார்ட் (Walmart) 28  16. Barnes& Noble(நூலகம்) 29  17. வங்கி (Bank) 30  18. ஆலிவர் ட்ரீ 31  19. MIT & Harward 32  20. அமெரிக்கவாழ் தமிழர்கள் 33  21. எனது இறுதிநாள் 34  22. மீனம்பாக்கம் 35    என்னுரை இதெனது  முதலெழுத்துக்கள், கட்டுரையென கூறவியலாது. நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை உந்த இவ்வனுபத்தை எழுத தூண்டியது. நிறைய நாட்கள் எழுதி அடித்து திருத்தி மீண்டும் மீண்டும் எழுதி கோர்த்துள்ளேன் என்னாலானவரை. இக்கணம் உணர்ந்தேன் புத்தகம் எழுதுவோர் கடினத்தை. இத்தொகுப்பு மேலோட்டமாய் இருப்பினும் எனது சிற்றறிவிற்கு எட்டியதை கிறுக்கியுள்ளேன். கிட்டத்தட்ட 4 மாதங்களாய் கிடைக்கும் நேரங்களில் எழுதியதை  ஒன்றுசேர்த்து ஒரு சிறிய மின்னூலாய் கொண்டுவர முயற்சித்தேன். அவர்களுடன் பகிரும் நேரங்களையும் இவ்வேளைக்காக வீணடித்ததை பொறுத்தும் மற்றவர்களிடம் எம்மை புகழ்ந்து விளிக்கும்   மனைவி பிரியா, மகன் கபிலனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். என்னை மறுத்தும், மீறியும் என்னை முன்னகர்த்தும் தங்கள் வார்த்தைகளுக்காக காத்திருக்கின்றேன். நன்றி.                    தோழமையுடன்     பாசுகரன்.சு baskarswaminath@yahoo.co.in    1.லூப்தான்ஸா   (1955 இல் ஆரம்பிக்கப்பட்ட மிகப்பெரிய ஜெர்மானிய விமான கம்பெனி)   நாள் 1 – ஏப் 19 2017    18ம் தேதி நள்ளிரவு வழக்கமான விமான நிலைய சோதனைகளை முடித்துக் கொண்டு 1.15 மணி அளவில் லூப்தான்ஸா (Lufthansa)  விமானத்தில் அமர்ந்தோம். சற்று வியப்புடனும் எனது மகனின் அதீத ஆர்வங்களுடனும் (Excitement). 350 பயணிகள், செஞ்சிவப்பு நிறம்  கொண்டஜெர்மானிய பணிப்பெண்களுடனும் அதிகாலை 1.50 மணி அளவில் புறப்பட்டது ஜெர்மானிய விமானம் பிராங்போர்டை  நோக்கி. விமானம் மேலே எழும்ப சற்று முக்கியதால் கனத்தவர்கள் அதிகம் ஏறிவிட்டோர்களோ என்று அச்சம் கொண்டேன். பணிப்பெண்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க ஏற்கனவே இடுப்பில் கட்டியிருந்த பெல்ட் இருப்பினும் மேலும் ஒரு பெல்டை கட்டினேன் சற்று சிரமப்பட்டு வயிற்றை சுற்றி. விமானம் 35000 அடி உயரத்தை அடைந்ததும் பெல்டை விடுவிக்க சொன்னார்கள் பணிப்பெண்கள். மேலிருந்து கீழே ஐன்னிலின் வழியே கடலைப் பார்க்கும் போது சமீபத்தில் பார்த்த Sully(விமானம் கடலில் இறங்கிவிடுமே) படம்தான் மனதில் வந்து போனது.   சிறிது அச்சத்துடனேயே சூடான உணவு வந்ததால் உட்கொண்டு உறங்கிபோனோம். சிறிது உறக்கத்திற்கு பிறகு ஏதேனும்  படம் பார்க்கலாம் என அங்கிருந்த படங்களின் தொகுப்பை ஆராய்ந்தேன். ஒவ்வொரு இருக்கைக்கு பின்னும் நாம் படம் பார்க்க வசதியாய் ஒரு திரை (Monitor) உண்டு. வெவ்வேறு நாட்டு மொழி படங்கள் மற்றும்  புவியிடங்காட்டி(GPS) வசதியும் உண்டு. இந்திய மொழிகளில்  தமிழ் படம் இருந்த இரண்டில் ஒன்று கபாலி. Rackon2, Rustomஎன இரு இந்தி படங்களை பார்த்தேன். சூடான உணவு மற்றும் குளிர்பானங்கள் அவரவர் விருப்பத்திற்கேற்ப கோக், ஆரஞ்ச், மது என. விமானத்தில் மக்கள் மிகவும் நிசப்தமாய் இருக்கின்றனர். அடிக்கடி சிறிது தூரம் நடந்தேன் விமானத்திற்குள் கழிப்பறையை நோக்கி. கழிப்பறைக்குள் தண்ணீர் கிடையாது காற்றுதான் கழுவ. மிகவும் சங்கோஜமாய் இருந்தது.   []                                                                2.பிராங்போர்ட்   (5000 ஏக்கரில் அமைந்துள்ள ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிலையம்)   நாள் 2 – ஏப் 20   8500 கி.மீட்டர்களை கடந்து நண்பகல் 12 (அந்நாட்டின்  நேரப்படி8.30 AM)மணி அளவில் ஜெர்மனியை அடைந்தோம். 5000 ஏக்கரில் அமைந்துள்ள மிகப்பெரிய விமான நிலையமது. மிதமான பனிப்பொழிவு (Snowfall) வேறு. முதன்முதலாய் அந்நிய நாட்டில் இருப்பது சற்று வியப்பானதாயும், நமக்கு அதிகமானதாயும் தோன்றியது.  சென்னையைக்காட்டிலும் சற்று அதிக சோதனைகளுக்கு பிறகு வெளியே வந்து காத்திருந்தோம் அடுத்த விமானத்திற்கு 4மணி நேர இடைவெளி இருந்ததால் விமான நிலையத்தில் நம்முடன் பயணித்த மங்கையர்கள் (ஆன்டிகள்) ஒருசிலரின் கடந்த கால பயண அனுபவங்களை பிரமிப்பாய் விமான நிலையத்தில் அவர்கள் செய்த சாகசங்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் அமெரிக்க விமான நிலையத்தில் விமான பணிபெண்ணிடம் உனக்கு நான் உதவுகிறேன் நீ எனக்கு உதவு என சொல்லி 20 டாலர் கொடுத்துவிட்டு தான் கொண்டு வந்த ஊறுகாய் மற்ற இத்தியாதிகளையும் லாவகமாக எடுத்துச் சென்றதையும் பெருமையாய்  கூறிக்கொண்டிருந்தார்.   பிறகு பசி கொண்டதால் காபி அருந்தினோம்.(1காபி 3டாலர்). நீண்ட விமான நிலையத்தில் சிறிது நேரம் நடந்து நேரத்தை கடத்தினோம்.  பனிப்பொழிவு காரணமாய் சற்று குளிராக இருந்தது. அறிவிப்பு வந்தவுடன் விமானத்தை அடைந்தோம்.  இரண்டு அடுக்கு கொண்ட பெரிய விமானம் அது.தோரயமாய் 200 அடி இருக்கும்.  மாலை 4 மணி அளவில் (அந்நாட்டின் நேரப்படி 12.30) அதிக வெள்ளை அமெரிக்கர்களுடனும் குறைவான இந்தியர்களுடனும் புறப்பட்டோம் பாஸ்டனை நோக்கி. சூடான உணவு மற்றும் குளிர்பானங்களைக் கடந்து இரவு 12.30 மணி அளவில் (அந்நாட்டின் நேரப்படி மாலை 3.0மணி) 2500 ஏக்கரில் கிழக்கு  கரையோரமாயுள்ள பாஸ்டன்லோகன் விமான நிலையத்தை வந்தடைந்தோம். இது Massachusetts மாநிலத்தில் உள்ளது. சீதோஷ்ண நிலை மிகவும் குறைவாக (16'செல்சியஸ்) இருந்தது.  வழக்கமான சோதனைகளுக்கு பிறகு  பெட்டிகளுடன் வெளியே வந்தோம். பெரியபெரிய கட்டிடங்கள், அகலமான சாலைகளும், ஒழுங்கான போக்குவரத்தும், திட்டமிட்ட நகர அமைப்பும்  கண்டு வியப்பாய் சென்றோம் Newhampshire மாநிலத்தில் உள்ள நேஷுவா நகருக்கு.   3.பாஸ்டன்     (அமெரிக்காவின் கிழக்கு கரையோரமாய் அமைந்துள்ள பழமையான நகரம்)   நாள் 3 – ஏப் 21   இன்று மிதமான குளிருடனே(100c) நாள் தொடங்கியது. இரவு குளிர் அதிகமாக இருந்ததாலோ என்னவோ அதிகாலை 2 மணிக்கே எழுந்துவிட்டேன். நிறைய வீடுகள் இருப்பினும் ஊரே நிசப்தமாய் இருந்தது. பகலில் ஒருவரைக்கூட வெளியில் பார்க்க முடியவில்லை. காலை 8 மணிக்கே வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் வரிசையில் நின்று  பேருந்தில் ஏறுவதைக் கண்டு ஆச்சிரியமாக இருந்தது. வெளியில் சென்று சுற்றிப்பார்க்க  பக்கத்தில் உள்ள ஒரு மாலுக்கு சென்றோம் நம்மூர் போலத்தான் உள்ளது. சின்ன பொருள்கூட டாலரில் கணக்கு போட்டு பார்க்கும் போது சற்று மாரடைப்பே வரும் போல் உள்ளது. கடைகள் அனைத்தும் குளிரூட்டப்பட்ட பெரிய வடிவிலேயே உள்ளது. ராத்திரி 8 மணிக்குமேல்தான் இருள துவங்குகிறது. இரவில் சாலைகளில் சின்னஞ்சிறு மஞ்சள் நிற நியான்  மின்விளக்குகளும் (street lights) அதிகமான கார்களும் (பைக்கையே  பார்க்கவில்லை) நேர்த்தியான சாலைகளும் பிரமிப்பாய்தான் உள்ளது. ஒரே ஒரு அருவருப்பு பின்னாடி பேப்பரில் துடைப்பதுதான்.   []   4.நேஷுவா   (நியூஹாம்ஸ்பியர் மாநிலத்தின் ஒரு சிறு நகரம்)   நாள் 4 – ஏப் 22   இன்று காலை முதலே மழை பெய்த்து கொண்டடேதானிருந்தது. மதியம் வெளியே சென்றோம் மழையிலேயே. பெட்ரோல் போட  பங்குக்கு(Gas Station) சென்றால் நாமேதான் போடவேண்டும். இங்கு எல்லாம் கேலன் கணக்குதான். (1 Gallen=3.785 lits - 2.25 டாலர்). இங்கு shell, Mobil,Gulf போன்றவைதான் அதிகம் உள்ளது நான் கண்டவரை. பால்கூட கேலனில்தான் கிடைக்கிறது. சமையல் வாயு(Gas) குழாய் வழியே வருகின்றது தண்ணீரைப் போல ஒவ்வொரு வீட்டிற்கும். தண்ணீருக்கென தொட்டி(Tank) கிடையாது.  பெரிய பெரிய கடைகள் Walmart, Burlington coke factory, JC penny (50000 சதுரடி இருக்கும்) என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கின்றது. ஒவ்வொரு ஊரையும் கடக்கும்போது வித்தியாசமான மரவீடுகள், வண்ணங்கள் என பார்ப்பதற்கே ரம்மியமாய் உள்ளது.   []     5.மால்பரோ (Marlborough)  மாசசூசெட்ஸ் (Massachusetts) மாநிலத்தில் உள்ள ஒரு சிறுநகரம்    நாள் 5 – ஏப் 23   இன்று மால்பரோ என்ற நகரின் வழியே லட்சுமி கோயிலுக்கு சென்றோம். சிறிய கோயிலாயிருப்பினும் அருமையாக நிர்வகிக்கின்றனர். பிரசாதம் நம்மூர் மாதிரியே புளியோதரையும், ச.பொங்களையும் கொடுக்கின்றனர். மிகவும் அருமை. (மால்பரோ அலுமினிய பவுண்டிரியைப் பார்த்தேன்) இங்கு 50 மாநிலங்களிலும்  வரிவிகிதம் வேறுபடுகின்னறன. 2 விதமான வரிகள் உள்ளூர் வரி, பொது வரி என (Local Tax & Federal Tax). நான் இருந்த மாநிலத்தில் உள்ளூர் வரி ரத்து. அமெரிக்க மக்கள் அதிகம்  சிற்றுண்டிகளில்தான் நேரத்தை செலவிடுகிறனர். நிறைய Coffee shopகள்.  Dunkin Donut's, Starbucks...என நிறைய. ஸ்டார்பக்ஸ் இந்தியா உட்பட உலகமெங்கும் 27000 கடைகள் உள்ளனவாம். மால்பரோ சிகரெட் இங்கு பிரபலமாய் உள்ளது. இதைத்தான் அநேகம்பேர் புகைக்கின்றனர். மதுவிற்கு பஞ்சமில்லை அனைவரது வீட்டிலும் அது ஒரு அங்கமாய். []   6.நியூயார்க்   (Brooklyn, Queens, Manhattan, Thebronx,Staten islandஎன 5 தீவுகள் அடங்கிய கேளிக்கை நகரம்)   நாள் 6 – ஏப் 24   இன்று நியூயார்க் 6 மணி நேர பயணம். New Ham sphere, Massachusetts, Connecticut மாநிலங்களில்  வழிநெடுக்க இருபுறமும் ஓங்கி வளர்ந்த மரங்கள்(oak trees), கார்களின் டயர்வேக இரைச்சல், ஆங்காங்கே இளைப்பாற கடைகளுடன்கூடிய கழிப்பறைகள்(Restroom) என  அகலமான சாலைகள் வழியே நியூயார்க்கை அடைந்தோம்.  நகருக்குள் மக்கள் நெருக்கம் அதிகம் மற்ற நகரைக் காட்டிலும். 46 அடுக்கு கொண்ட double Tree என்ற விடுதியில் 23 வது மாடியில் தங்கினோம். அமெரிக்காவில் மிகுந்த பரபரப்பாய் உள்ள Timesqureல் எங்கு பார்த்தாலும்  அமெரிக்க வெள்ளைநிற  மங்கைகளும், கருப்புநிற பெண்களும் பலர் புகைபிடித்தபடியும் இருக்கின்றனர். உலகின் மிகப்பெரிய நியூயார்க்  Nosdoq Stock Exchange, 2/11 Memorial Mesuemமற்றும் Empire State Building அனைத்தும் மிகமிக உயரமான கட்டிடங்கள். மாலை நகர பேருந்தில் பயணம் செய்து 1930 ஆம் வருடம் கட்டப்பட்ட அமெரிக்காவின் முக உயரமான 1454 அடி உயரம் கொண்ட (110 மாடி) Empire buildingல் 86 மாடி வரை சென்றோம்.1 நிமிடம் மட்டுமே ஆகின்றது மின்தூக்கியில் (Lift).   நியூயார்க்கின் உலகின் மிக பெரிய  பாதாள ரயில் 1880 ல் 31 மைல் தூரத்திற்கு (Subway Train by MTA Metropolitan Transport Authority) 4 Lane போடப்படுள்ளது. ரயிலில் சிறிது தூரம் பயணம் செய்து பிறகு சொகுசு பேருந்து (Topless bus) ஒன்றில் மிகுந்த குளிருடன் 2 மணி நேர பயணமாய் ஹட்சன் ஆற்றின் மேல் 200 அடி உயரமுள்ள 3 அடுக்கு கொண்ட மன்ஹாட்டன் பாலம் வழியாக (கீழே ரயில், அதன் கீழே கப்பல்கள் செல்கிறது), புரூக்லின், குயின்ஸ், சைனா பஜார் வழியாக நியூயார்க் நகரத்தையே சுற்றி வந்தோம். இரவு 2 மணிவரை மக்கள் வீதிகளில் கொண்டாட்டமாய்  உள்ளனர்...உயரயரமான கட்டிடங்கள் மின்னொளியில் மிளிர்கின்றன. []       7.சுதந்திரதேவி சிலை   (Statue of Liberty 300 அடி உயரமுடன்  தாமிரத்தால்  (Copper)ஆன இச்சிலை 1886ல் பிரான்சு அமெரிக்காவிற்கு கொடுத்த நினைவுச் சின்னம்)   நாள் 7 – ஏப் 25   முந்தைய இரவின் பிரமிப்பிலிருந்து மீண்டு விடுதியில் இருந்து புறப்பட்டு   இரயில் மூலமாக wall street சென்று world Trade centre, Trump building, Big church என  பார்த்த பிறகு சாலையோர பங்ளாதேஷ் கடை ஒன்றில் பிரியாணி கிடைத்தது. சற்று திருப்தியுடன் பிறகு அங்கிருந்து Libertyதீவிலுள்ள சுதந்திரதேவி  சிலையைக்காண கிட்டதட்ட 200 நபர்கள் பயணம் செல்லுமளவிற்கு உள்ள  கப்பலில்(Cruise) சென்றோம் மிகுந்த குளிருடன். உள்ளே சிறு உணவகம்(Canteen), கழிப்பறை (Toilet) கூட  இருக்குகிறது. ஒரு எகிப்திய விவசாய பெண்மணி கையில் விளக்கு பிடித்திருக்கின்ற ஓவியத்தை சிலையாக வடித்துள்ளனர்.  பலத்த சோதனைகளுக்கு பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர். மின்தூக்கியில்(Lift) போக வசதியுள்ளது. மிகவும் பிரமாண்டமாக உள்ளது மேலேயிருந்து பார்க்கும்போது. பிறகு அங்கிருந்து படகில் அருகிலுள்ள  எல்லிஸ் (Ellis) தீவிற்கு சென்று இமிக்கிரேசன் மியூசியம் (immigration museum) பார்த்தோம். இதுவரையில் 10 லட்சம் மில்லியன் மக்கள் எல்லீஸ் தீவின் வழியே இமிக்கிரேசன் பெற்று அமெரிக்கவிற்க்குள் வந்துள்ளனர் என 1/2 மணி நேர வீடியோ காட்டுகின்றனர். பின்னர்  மீண்டும் கரைக்கு திரும்பி பாதாள இரயில் மூலம் மாலை விடுதியை அடைந்தோம். பின்னர் நியூயார்கிலிருந்து புறப்பட்டு மாலை  நியூஜெர்சியை நோக்கி பயணமானோம்.   லிங்கன் பாதாள பாலம் வழியே 2 கி.மீ தூரம் ஹட்சன் ஆற்றின் அடியில் செல்கிறது. இவையெல்லாம் 100 வருடங்கள் பழமையானவை. 1609 ல் ஹென்றி ஹட்சனால் கண்டுபிடிக்கப்பட்ட துறைமுகம் என்பதால் ஹட்சன் ஆறு ஆனது. வழியில் நவ்வார்க்(Newark) ல் மிகப்பெரிய விமான நிலையம் உள்ளது. பல விமானங்கள் தரைஇறங்க சமிஞ்சை கிடைக்காமல் மேலேயே சுற்றிக்கொண்டிருக்கின்றன. இரவு(மாலை) நியூஜெர்சியை அடைந்தோம். இந்தியர்கள் அதிகம் உள்ள பகுதியால் கடைகள் நம்மூரைப் போன்று இருந்தது. தனித்தனி வீடுகள் நேர்த்தியாகவும் அழகாகவும் இருக்கின்றன. ஒவ்வொரு நகரும் ஒன்றைவிட ஒன்று மிஞ்சிக்கொண்டே இருக்கிறது. குளிர் மட்டும் குறையவேயில்லை. []   8.நியூஜெர்சி   (நியூயார்க்கின் வடகிழக்கு மாநிலத்தில் ஒன்று)   நாள் 8 – ஏப் 26   இன்று மழையுடனே நாள் தொடங்கியது. மக்கள் மழையை   பொருட்டாய் கொள்வதில்லை. பழகியனவை என்பதாலோ என்னவோ! அனைவரும் தவறாமல் jerkin அணிகின்றனர். நியூஜெர்சியில் இருந்து wood bridge என்ற இடத்தில் உள்ள பாலாஜி கோயிலுக்கு சென்றோம். கோயில் மிக அருமையாக நிர்வகிக்கின்றனர். பிறகு அங்கிருந்து புறப்பட்டு பல ஏக்கரில் அமைந்துள்ள அக்‌ஷர்தாம் கோயிலுக்கு சென்றோம். மிகவும் தூய்மையாக வைத்துள்ளனர். பிறகு அங்குள்ள அஞ்சப்பரில் உண்டோம். மழையுடனே அட்லாண்டிக் நகரை நோக்கி புறப்பட்டோம். நகர் அட்லாண்டிக் கடலை ஒட்டி உள்ளதால் அப்பெயர். ஒவ்வொரு சாலையும்100 அடி அகலம் கொண்டதாய் வழவழப்பாக பார்க்கவே பிரமிப்பாய் உள்ளது. சூதாட்டம்(Casino)தான் முழுநேர தொழிலே. நாங்கள் Resort சா என்ற விடுதியில் தங்கினோம். ஆண் பெண் வேறுபாடின்றி அனைவருமே சூதாடுகின்றனர். இளைமையானவர்கள் முதல் பணிஒய்வு பெற்றவர்கள் வரை.. மது, புகையுடன் பெண்கள் இரவு 2 மணி வரை விளையாட்டுதான்.   மது விநியோகிப்பது குறைந்த ஆடையுடைய பெண்கள்தான்.நானும் சூதாட முயன்றேன் சிறு ஆசையுடன் 5 டாலர் விட்டவுடன் எழுந்துவிட்டேன். நகர் முழுதுமே Casino க்கள் தான். ஒவ்வொரு casinoவும் 2 ஏக்கர் பரப்பளவு இருக்கும். கடற்கரையோரம் மரச்சாலை (Wood Road), நீண்ட கடைவீதி, நடக்க இயலாதவர்கள் சுற்றிவர Battery Car வசதி என அனைத்தும் சிறப்பாய் உள்ளது []     9.Atlanda   (சூதாடிகளின் சொர்கம்)   நாள் 9 – ஏப் 27   இங்கு Atlantaவில் Bailly, Wildwest, Ceased, Tajmahal (Trump உடையது) என பல பெரிய Casino க்கள். காலையில்  மெதுவாக எழுந்து காபி வரவழைத்து குடித்தவுடன் குளிக்கச் சென்றோம் மாடியில் உள்ள நீச்சல் குளத்திற்கு(Swimmingpool).வெந்நீர் குளியலுமுண்டு. பிறகு  சிற்றுண்டி முடித்து இரண்டு மணி நேரம் உலாவினோம் கடலையொட்டி உள்ள கடைவீதியில். பிறகு மதிய உணவு உண்டு வெர்ஜினியா(Verginia)நோக்கி புறப்பட்டோம் நண்பரது வீட்டிற்கு.  டெலவர்(Delaware), மேரிலேண்ட் (Meryland)  மாநிலங்களை கடந்து பால்டிமோர் வழியாக வெர்ஜினியாவை அடைந்தோம். டெலவர் மெமோரியல் பாலம், நீண்ட Baltimore harbour tunnel என பிரமிப்பூட்டும் பாலங்கள்.  பால்டிமோரில் மிகப்பெரிய துறைமுகம் உள்ளது. உப்பை கரைகளில் தேக்கி வைத்துள்ளனர்   பனிக்காலங்களில் சாலைகளில் உள்ள ஐஸ்கட்டிகளை கரைக்க. சாலை நடுவே இரயிலும் செல்கிறது விமான நிலையத்திற்கு விரைவாக  செல்வதற்காக வழக்கமான சாலைநடுவே. சாலைகள் 200, 300  அடி அகலம் கொண்டதாக உள்ளது. ஒவ்வொரு 100 மீட்டருக்கும் அறிவிப்பு பலகை புற வழி சாலைகளின் வழிப்பாதை, கி.மீ என தெளிவாக வைத்துள்ளனர். இருப்பினும் அனைவருமே புவியிடங்காட்டி மூலமே (GPS) செல்கின்றனர். ஒவ்வொரு நகரைக் கடக்கும் போதெல்லாம் அந்நகர் சிறப்பாய் உள்ளது கடந்து வந்த நகரைக் காட்டிலும். []             10.வாஷிங்டன்    (அமெரிக்காவின் தலைநகரம்)   நாள் 10 – ஏப் 28   இன்று காலை வெர்ஜினியாவில் (Virginia)இருந்து புறப்பட்டு 1 மணி நேர பயணத்திற்க்கு பிறகு  வாஷிங்டன்(Washington District of Culambia) வை அடைந்தோம். பெரிய பெரிய அலுவலக கட்டிடங்கள் அகலமான,நீளமான வடிவில். பொட்டமாக்(Potomac) ஆற்றின் மேலே கெனான் கட்டிடம் (Cannon) பாராளுமன்ற உறுப்பினர்கள் அலுவலகம் (Senate க்கள் அமருமிடம்), Capital Hill பாராளுமன்றம் என பல அரசு அலுவலகங்கள். மேலும்  Washington monuments, world war11 memorial, ஆபிரகாம் லிங்கன் நினைவகம்(memorial) என பிரமாண்டமாக அமைத்திருக்கிறனர் ஒரே நேர்கோட்டில்.   முக்கியமான அரசு அலுவலகங்களின்  ஊழியர்கள் அதிகமாய் இருப்பதாலோ என்னவோ மக்கள் பரபரப்பாய் இருப்பதைப் போன்று தோன்றியது. சைரன் வைத்த வாகனங்கள் நிறைய, நேரில் பிரமிப்பாய் உணர்ந்தேன். வெள்ளைமாளிகை ( White House) இராணுவதலைமையிடம் (Pentagon) சற்று தூரமாய் இருந்து பார்க்க வேண்டியுள்ளது பாதுகாப்பு கருதி அனுமதிக்கவில்லை. அதிக தூரம் நடக்க வேண்டியுள்ளது என்ற ஒரு சிறு குறைதான். சர்க்கரை வியாதிகாரர்களுக்கு பிரச்சனையில்லை நமக்கு! []     11.பென்சில்வேனியா (இது வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று)   நாள் 11 – ஏப் 29   இன்று மீண்டும் வெர்ஜினாவில் இருந்து புறப்பட்டு பென்சில்வேனியா சென்றோம். இங்குள்ள பிலடெல்பியாவில் இருந்துதான் முதன்முதலயாய் அமெரிக்கர்கள் சுதந்திரம் வேண்டி ஊர்வலமாய் சென்றனர். இம்மாநிலத்துள்ள(Pennsylvania) பழங்காலத்து  ஒரு குகைக்கு(Cave) சென்று பார்த்தோம். புராதானத்தை  பராமரிப்பதில் அவர்களின் ஆர்வம் அளப்பரியாது. பிறகு ஒரு சாக்லெட் கம்பெனிக்கு(Hershey's chocolate world) சென்றோம். அங்கு சிறிய கார்(Ride)ஒன்றில் சாக்லெட் தயாரிக்கும் முறையை சுற்றி காண்பிக்கிறனர். பிறகு 15 நிமிட 4D வீடியோ ஒன்று சாக்லெட் பற்றி. Hershey's என்பவரால் 1903 ல் ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி ஆதலால் அந்த ஊர் பெயரே Hershey's தான். பிறகு மதிய உணவு உண்டவுடன் நியூயார்க் மாநிலத்திலுள்ள நயாகராவை நோக்கி புறப்பட்டோம்.வழியில்நீண்ட ஆறு(Shamokin river) பல கி.மீட்டருக்கு தண்ணீர் நிரம்பிய படியே ஓடுகிறது. நான் பார்த்த அனைத்து ஆறுகளிலுமே நீர் நிரம்பியே உள்ளது. ஒவ்வொரு ஆற்றின் மேலும் அகலமான பாலங்கள், இரயில் பாதைகள் என ஆற்றின் போக்கை தடுக்காமல் போட்டுள்ளனர். Tunnel பாதை என்றாலும்கூட மிக அகலமாகத்தான் அமைத்துள்ளனர் 100 வருடங்களுக்கு முன்பே தொலைநோக்கு பார்வையுடன்.301 மைல்(500 கி.மீ) மலைகளின் நடுவே பயணித்து இரவு 2 மணி அளவில் நயாகரா அருகில் பப்பல்லோ (Buffalo)என்ற நகரில் ஒரு விடுதியில் தங்கினோம். நீண்ட பயணமென்பதால் சற்று அசதியாய் இருந்தது எங்களைக் காட்டிலும் ஓட்டியவருக்கு.   12.நயாகரா (தண்ணீர் நகரம்)   நாள் 12 – ஏப் 30   இன்று பப்பல்லோ விடுதியில் இருந்து புறப்பட்டு அரைமணி  நேரத்தில் நயாகராவை அடைந்தோம். இது erie lake ல் தொடங்கி 27கி.மீ(17மைல்) கடந்து நயாகரா என்ற இடத்தில் அமெரிக்க கனடா எல்லைகளுக்கு இடையே 165 அடி(50 மீட்டர்) ஆழத்திற்கு செங்குத்தாக கீழே விழுகின்றது.  அமெரிக்க நீர்வீழ்ச்சி(American falls) என்றும் கனடா பக்கம் விழுவது ஹர்ஷூ நீர்வீழ்ச்சி(Horseshoe falls) என்றும் அழைக்கின்றனர். அமெரிக்காவைவிட கனடாபக்கம் அதிக நீர் விழுகின்றது. நயாகராவை சுற்றி பல நீர்மின் நிலையங்களில்(Hydro Power Plants)மின்சாரம் எடுக்கப்பட்ட பிறகுதான் நீர் அருவியில் வந்து விழுகின்றது. அமெரிக்கா முழுவதும் மின்தடை என்பதே  இல்லை.பின்னர் நீர் 121 கி.மீ(75 மைல்) கடந்து அட்லாண்டிக் (Atlantic) பெருங்கடலில் கலக்கிறது. நாங்கள் மின்இறக்கியில்(lift) கீழே சென்று 200 நபர்கள் செல்லுமலவிற்கு கொண்ட உல்லாச படகு மூலம் நீர்வீழ்ச்சி அருகில்வரை சென்று பார்த்தோம். மிகவும் பிரமிப்பாய், சிலர்ப்பாய் இருந்தது. மீண்டும் மேலே வந்து பிறகு பேருந்து(Tramp) மூலம் சுற்றி வந்தோம் நீர்வீழ்ச்சியின் மேற்பரப்பில்.  இந்தியர்கள் வருகை அதிகம் நயாகராவிற்கு. ஒரு சில தமிழர்களை கண்டேன். அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே இருப்பது ரெயின்போ பாலம்(Rainbow bridge) மட்டுமே. அமெரிக்கா என்றாலே நயாகரா, சுதந்திரதேவி சிலை, நியூயார்க், வெள்ளை மாளிகை  என பார்க்க ஆசை கொள்வர். அவற்றையெல்லாம் பார்த்துவிட்ட சந்தோசத்துடன் மாலை நயாகராவிலிருந்து புறப்பட்டோம் வீட்டிற்கு. மலைகளுக்கிடையே நீண்ட பயணத்தின் இடையில் இரவு 11 மணி அளவில் விதிக்கப்பட்ட வேகத்தைவிட  அதிவேக பயணத்தால் (OverSpeed) காவலரின்(Corps) நேர்மையால் அபராதம் கட்ட வேண்டியதாகிவிட்டது. இரவில்கூட அவர்களின் பணி ஒழுக்கம் மெய்சிலிர்க்க வைத்தது. அதே கணத்தில் நம்நாட்டின் காவலர்களை எண்ணியும் மனம் புழுங்கியது.  []       13.பாகுபலி   நாள் 13 – மே 1   இன்று வழக்கமான குளிருடனே தொடங்கியது. லேசான மழை வேறு. இங்கு தொழிலாளர் தினம் செப்டம்பர் 4 என்பதால் விடுமுறை இல்லை. திடீரென சைரன் விளக்குடன் காவலர் வாகனம் வந்தது வீட்டிற்கு. நேற்று நடந்த விதிமீறலுக்கு விசாரிக்க வந்திருப்பார்களோ என எண்ணிய கணம் யார் காவலரை அழைத்தது என்று கேட்கும்போதுதான் நான் இந்தியாவிற்கு அழைப்பதற்கு 01191என்று போடுவதற்கு பதிலாக 91 என்று தொடங்கி  பிறகு துண்டித்துவிட்டேன். 91 என்பது நம்மூரில் அவசரபோலீஸ்100 மாதிரி. பிறகு அவர்களிடம் எங்களின்  தாழ்மையான வருத்தத்தை தெரிவித்து அனுப்பினோம். எந்தவொரு கடுஞ்சொல்லின்றி சென்றது மிகவும் வியப்பாய் இருந்தது. இங்கு எந்த பகுதியில் வசிக்கின்றோமோ அந்த பகுதியிலுள்ள அரசாங்க பள்ளியில்தான் படிக்கவேண்டும். கல்வி இலவசம். சீருடை இல்லை. இன்று பாகுபலி2 படம் பார்த்தோம் சினிமேஜிக் என்ற திரையரங்கில். 10திரைகள்(screen) உள்ளது. ஒரு டிக்கெட் 25 டாலர். நிறைய இந்தியர்களைக் கண்டேன். இடைவேளை இல்லாமல் படம் தொடர்கிறது. திரையரங்கம் காலியாகத்தான் இருந்தது. []     14.மது(wines)   நாள் 14 – மே 2   இன்று சற்று குளிராக இருந்தது. மாலை ஒரு மதுபுட்டிகள் விற்கும் (wine shop) பெரிய கடைக்கு சென்றோம்.மால்(Mall) மாதிரி உள்ளது கடை. நண்பர்களுக்கு ஒரு சில புட்டிகள் வாங்கினேன். டக்கீலா(Tequila), Red Brandi, மற்றும் 50 ml புட்டிகள் சில. அனைத்து வகைகளும்(brand) கிடைக்கின்றது. இங்கும் வயது முதிந்தவர்கள் மட்டுமே வாங்க அனுமதிகின்றனர். சிறுவர்கள் வாங்கமுடியாது. பெண்கள் நிறைய வாங்குகின்றனர். அங்கு குடி என்பது அன்றாட வழக்கங்களில் ஒன்று. நமக்கோ கொண்டாட்டம். அவர்கள் நம்மூர் மாதிரி குடித்துவிட்டு ஆடமாட்டேங்கிறாங்க ஏன் தெரியல. ஒருவேளை சரக்கு மட்டமோ! []       15.வால்மார்ட் (Walmart)   நாள் 15 – மே 3   இன்று அமெரிக்காவின் பெரிய நிறுவனமான Walmart கடைக்கு சென்றோம். கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் அளவில் உள்ளது. அனைத்தும் கிடைக்குகிறது. இதன் கிளைகள் அமெரிக்கா முழுவதும் உள்ளது. விலையும் சற்று குறைவே. மாலை சிறிது தூரம் நடந்தேன் குடியிருப்பில். ஒவ்வொரு வீட்டிற்கும் முன்பு 2 கார்கள் sedan model ஒன்றும் SUV model  என. அல்லது sedan model & Truck model என. குடியிருப்பில் நிழல்குடைகள் ஆங்காங்கே கடிதம் (post) வந்தால் அவரவர் வீட்டு எண்ணுக்குரிய பெட்டியில் போட்டுவிடுகின்றனர். குப்பையையும் ஒவ்வொருவரும் அதற்கென வைத்துள்ள குப்பைத்தொட்டியில்(Trash) தினமும் போட்டுவிடுகின்றனர். எப்பொழுதும் குடியிருப்பு மிகவும்  சுத்தமாக  உள்ளது. மழை பெய்து விட்டவுடன் மழைநீர் எங்குமே தேங்குவதில்லை உடனுக்குடன் வடிந்துவிடுகிறது சாலையின் வடிவமைப்பு காரணமாய். சாலைகளை லாரி மாதிரியான வாகனம் (sweeping service vehicle) வந்து சுத்தம் செய்கிறது. []   16.Barnes& Noble(நூலகம்)   நாள் 16 – மே 4   ஒரு பெரிய காய்கறி கடைக்கு(Market basket) சென்றோம். சுத்தம் செய்யப்பட்டு பாலிதீன் பையால் சுத்தப்பட்டு படுசுத்தமாக வைத்துள்ளனர். அனைத்தும் இனக்கலப்பு (Hybrid) காய்கறிகள். இனகலப்பு நல்லதா கெட்டதா என தெரியவில்லை ஆனால் பெரிய பெரிய வடிவில்  வாழைப்பழம்கூட 1அடி அளவு இருக்கின்றது. வெங்காயம் ஒவ்வொன்றும் 1கிலோ அளவில் உள்ளது. சிக்கனும் மீனும் பதபடுத்தப்பட்ட நிலையில் சுத்தமாக உள்ளது. அமெரிக்கர்கள் பிறப்பிலேயே தன்நாட்டின் விதிகளையும், சுத்தத்தையும் பேணி காக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் மரங்கள், குளிரான தூய்மையான காற்று வீசிக் கொண்டேயிருக்கின்றது. சாலைகளிலும் விதி மீறல்கள் இல்லை. ஒலிப்பான்(Horn) சத்தம் என்பதே இல்லை. எந்த கடைக்கு சென்றாலும் கழிவறை(Rest room) கண்டிப்பாக உள்ளது. அதுவும் சுத்தமான நறுமணத்துடன் நாம் உள்ளே போகும் வரை. எந்தவொரு கடைக்கு சென்றாலும் கழிவறையில் நமது பதிவில்லாமல் இல்லை. மாலை நேஷ்வாவில் Rivier university என்ற பல்கலைக் கழகத்தைப் பார்த்தேன். பிறகு பெரிய நூலகம்(Barnes & Noble library) ஒன்றிக்கு சென்றேன். 1 மணி நேரம் உலாவினேன். காபி ஷாப், Toys shop என உள்ளேயே உள்ளது. []                                                                                                                              17.வங்கி (Bank)   நாள் 17 – மே 5   இன்று ஒரு வங்கிக்கு சென்றோம். சாலையில் காரை நிறுத்துவதற்கு சாலை ஒரங்களில் ஒரு மெஷின் வைத்துள்ளனர். நாமே சென்று பணம் செலுத்தவேண்டும் ஒரு மணி நேரத்திற்கு 1டாலர் என. காரை நிறுத்தும் அனைவரும் தவறாமல் பணம் செலுத்துகின்றனர். வங்கியில் மட்டுமல்ல  இலவச காப்பி அநேக கடைகளிலும் இலவச காப்பி கிடைக்குகிறது நானும் விடுவதில்லை. பிறகு  அஞ்சல் அலுவலகம் (Post office)க்கு சென்றேன். உள்ளேயே தனிதனியே சிறு அறை(locker) வசதி உள்ளது. அதில் நமக்கு வரும் கடிதங்களை போட்டுவிடுகின்றனர். நாம் எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் மாலை 5 மணிக்குள். உள்ளேயே அனைத்து விதமான கவர்கள் Post covers, Greeting cards என விற்கின்றனர். பிறகு சாய்பாபா கோயிலுக்கு சென்றோம். குளிரூட்டப்பட்ட ஒரு மண்டபம் போன்று இருந்தது. அங்கும் சாய் அப்படியேதான் உட்கார்ந்து இருக்கிறார்.  பிரசாதம் சாப்பாடு மாதிரி சிறிது எலுமிச்சை சாதம், தயிர்சாதம், சுண்டல், சர்க்கரைப் பொங்கல் என. வாழைப்பழம் ஒன்று கொடுக்கின்றனர் ஒரு முழத்திற்கு. சற்று குளிராக இருந்ததால் அதிகமானோர் ஸ்வர்டர்(Jacket) போட்டிருந்தனர்.   அங்கும் பக்தர்கள் மாற்றமில்லாமல் வரிசையில் நின்று ஆடிக்கொண்டிருந்தனர் குணா கமலைப் போன்று. []                                                                                                                          18.ஆலிவர் ட்ரீ   நாள் 18 – மே 6   இன்று மழையுடனே நாள் சென்றது. ஒரு ஆலிவர் ட்ரீ என்ற (Oliver Tree) இத்தாலியன் உணவத்திற்கு சென்றோம் கூட்டம் சற்று அதிகமாய் இருந்தது. மெக்சிகன் மக்களை அதிகமாக காண முடிகிறது. சற்று உரக்கவே சிரிக்கின்றனர். உள்ளேயே மதுவும் கொடுக்கின்றனர் விரும்பினால். பன் வகைகளைத் தவிர வேறு எதுவும் அதிகம்  சாப்பிடமுடியவில்லை. ஆனால் எண்ணற்ற வகைகள். அமெரிக்கர்கள் உணவில் மிகுந்த ரசனையுணர்வு கொண்டவர்களாய் வித விதமாய் உண்ணுகின்றனர். சாதாரண பேக்கரிக்கு சென்றாலும் பலவிதமான வகைகள். மழையிலேயே கிளம்பினோம். ஆனால் மக்கள் மழையை ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை பழக்கப்பட்டு விட்டமையால். மண்வெளி பாம்பு நிறைய பருத்து நீளமான உருவத்தில் இருக்கிறது அமெரிக்கர்களைப் போலவே. நிறைய இடங்களில் ஓக் மரத்தால் ஆன மின்கம்பங்கள் (Electric Post). தோராயமாய் 35 அடி உயரம் இருக்கும். ஆச்சிரயமாய் இருந்தது. 19.MIT & Harward   நாள் 19 – மே 6   இன்று காலையிலிருந்தே மழை. பாஸ்டனுக்கு சென்றோம் Duck Tour (land&water) நிலத்திலும் நீரிலும் செல்லும் பயணத்தை பார்ப்பதற்காக. பாஸ்டனில் மேம்பாலங்கள் சார்ல்ஸ்(Charles) ஆற்றின்மீது பிரமாண்டமாய் உள்ளது. கீழே படகு செல்கிறது. கார்கள் செல்லும் சாலைகளிலேயே பக்கத்தில் இரயிலும் செல்கிறது.  வாத்துமாதிரி உருவம் கொண்ட உல்லாச சிற்றுந்தில் பழமையான நகரத்தை சுற்றி காண்பிக்கின்றனர். எங்கு சென்றாலும் பெருந்தலைவர்களின் சிலைகள், உயரமான கட்டிடங்கள் என சுற்றிக் கொண்டே கார் சால்ஸ் ஆற்றில் இறங்குகிறது. கிட்டத்தட்ட 45 நிமிடம் ஆற்றில் கரையோரமாய் அமைந்துள்ள சுற்றுலா தலங்களை காண்பிக்கின்றனர். பிறகு மீண்டும் கரைக்கு வந்து நகர் முழுவதும் சுற்றினோம் அதே சிற்றுந்தில்.  விருப்பமிருப்பின் சிற்றுந்தில்  ஓட்டுநர் இருக்கையில் சிறிது நேரம் அமரவும் அழைக்கின்றனர். பிறகு புகழ்பெற்ற உலகின் நெம்பர்1 பல்கலைக்கழகம் MIT(Massachusetts Institute of Technology) பார்த்தோம்.  Harward university, Boston Tea Party building என சிலவற்றை பார்த்தோம். இங்கு மின்சார பேருந்து (Electric bus) பார்க்க வியப்பாய் இருந்தது. நகரில் பொதுவெளியில் ஆங்காங்கே ஆளில்லா வாடகை சைக்கிள்கள், நாமே பணம் கட்டி எடுத்தச்செல்லலாம். இரவு ஒரு ஆங்கில சினிமாவிற்கு சென்றோம் (The fate of the furious)Vin diesel, Rock நடித்த படம். 50 பேர் அமரக்கூடிய 12 திரை கொண்ட திரையரங்கம் படுத்தமாதிரியே படம் பார்த்தது புதுஅனுபவம் . []     20.அமெரிக்கவாழ் தமிழர்கள்   நாள் 20 – மே 7   இன்று காலையிலேயே ஊருக்கு செல்ல பெட்டியில் உடைமைகளையும் வாங்கிய பொருட்களையும்  அடுக்கினோம். எடை சரியாக இருந்ததால் சற்று நிம்மதியாய் இருந்தது. மதிய உணவிற்காகவும், இரவு உணவிற்காகவும் அமெரிக்கவாழ் தமிழ் மக்களின் வீட்டிற்கு சென்றோம் சிறப்பாய் உபசரித்தனர். திரு.ராசேசு & அருணா, திரு.ராகவ் & பிரியா, திரு.தில்லை & புஷ்பா, திரு.பிரசன்னா & லட்சுமி ஆகியோர்களின் அன்பிற்கு நன்றி.  இரவு 8 மணி ஆகியும் பகலாகவே இருந்தது. லேசான மழையுடனே வீடு திரும்பினோம். 21. எனது இறுதிநாள்   நாள் 21 – மே 8   இன்று காலையிருந்தே ஊருக்கு செல்லும் மனநிலையில் சற்று உற்சாகம் கொண்டேன். நேரம் நெருங்க நெருங்க படபடப்பும், விமான நிலைய சோதனைகளை எண்ணி சற்று அயர்ச்சியுடனே கிளம்பினோம். 20 நாட்களுக்கு பிறகு மீண்டும் வீட்டிலிருந்து பாஸ்டன் லோகன் விமான நிலையத்தை நோக்கி கிளம்பினோம். பாஸ்டனில் ஒரு கி.மீ தூரம் ஆற்றின் கீழே(Tunnel bridge) வழியான பாதையை கடந்து விமான நிலையத்தை வந்தடைந்தோம். வழக்கமான immigration சோதனைகள் மிகவும் எளிதாக இருந்தது. ஓரிரு நிமிடங்களில் முடித்துவிட்டனர். கடைசியாய் காபி ஷாப்பில் (Dunkin donuts) காபி (cafi Lotte)அருந்தினோம். நுழையுமுன் பலத்த சோதனைக்களுக்கு பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர். நம் படபடப்பை காட்டிக்கொள்ளாமல் இருந்தாலும் ஒன்றுக்கு இரண்டுமுறை நம்மை சோதித்துவிடுகிறார்கள். எப்படியோ சோதனைக்கு பிறகு விமானத்தை அடைந்தேன். இந்திய நேரப்படி விடியற்காலை 3 மணிக்கு(அமெரிக்க நேரப்படி மாலை 5 மணி) புறப்பட்டது விமானம். ஓடுதளத்தில் சமிஞ்சை கிடைக்காததால் 45 நிமிடம் பறக்காமல் தரையிலேயே ஊர்ந்தது. நமக்குபின் 13 விமானம் தொடர்ந்து நம்மைப்போலவே வந்தது. ஒருவழியாய் பறந்தோம் இந்தியாவை நோக்கி []     22.மீனம்பாக்கம்   நாள் 22 – மே 9 2017    இன்று காலை 6.45 மணிக்கு (இந்தியநேரப்படிகாலை11மணி) 4000 மைல்களை கடந்து ஜெர்மன் பிராங்போர்ட் விமான நிலையத்தை வந்தடைந்தேன். பெரிய விமான நிலையம் என்பதால் ஒரு நுழைவிலிருந்து அடுத்த நுழைவிற்கு செல்ல சிறிது தூரம் நடந்து பிறகு இரயில் மூலம் சென்றேன் விமான நிலையத்திற்கு உள்ளாகவே. காலை நேரம் மேகம் சற்று மந்தாரமாய் இருந்தது. ஒரு காபி அருந்தினேன். 4.30மணி நேர காத்திருப்புக்குபின் வழக்கமான  விமானத்தை அடைந்தேன். காலை 11.15 மணிக்கு(இந்திய நேரப்படி மாலை 3 மணி) விமானம் புறப்பட்டது. 9 மணி நேர பயணத்திற்கு பிறகு நள்ளிரவு 12 மணிக்கு 4200 மைல்களை கடந்து  சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தேன். விமானத்தில் தமிழர்கள் அதிகம் என்பதால் பழக்கப்பட்ட பயணம் மாதிரியாய் இருந்தது.   சிறுவயது முதலே பொதுவாக வெளிநாடு என்றாலே அமெரிக்கா என்றுதான் அறிந்திருந்தோம்.  ஒருவேளை சினிமாவில் பார்த்திருந்த பிரமிப்பா அல்லது ஏகாதிபத்திய வல்லரசு என்பதாலேயே என சொல்ல தெரியவில்லை ஆனால் ஆழமாக படிந்திருந்தது மனதில்.  பொதுவாக அமெரிக்கர்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடுகளை நான் படித்திருந்த போதிலும் நிறைய விசயங்களை நேரில் கண்டு ஆச்சிரியப்பட்டேன். வியப்புற்றேன்,பொறாமை கொண்டேன். அவர்களின் ஒழுக்கம், கருணை, உழைப்பு, நாட்டுப்பற்று என  பிரமிப்பாய், மிரட்சியாய் இருந்தது. நமக்கிடையே 100 வருட ஏற்றதாழ்வு இருப்பதாய் நான் உணர்ந்தேன்.   அவர்களின் தொழில்நுட்பம், நியூயார்கின் உயர்ந்த கட்டிடங்கள், கடலின்மேல் உள்ள பாலங்கள், கடலுக்கு அடியில் உள்ள பாலங்கள், கடலுக்கு அடியில் இரயில் போக்குவரத்து என அனைத்துமே 100 வருடங்களுக்கு முன்னரே போடப்பட்டவையாம். சாலைகளில் சுத்தம்,100 மீட்டருக்கு ஒரு தகவல் பலகை, கமிஞ்சை விளக்குகள், எண்ணிலடங்கா ஓக் மரங்கள், அதிக நீர்வளம் கொண்ட ஆறுகள், சில்லென்ற காற்று, சீதோஷ்ண நிலை, புராதானங்களைப் பாதுகாத்தல் இவைகளைத்தாண்டி  ஒவ்வொரு வீட்டிற்கும் முன் பரந்த வெற்றிடம், நேர்த்தியாக வெட்டப்பட்ட புல்வெளிகள்  அழஅழகான வண்ணங்களுடன்கூடிய மரவீடுகள், ஆங்காங்கே குப்பைத்தொட்டிகள்(Trash), அகலமான சாலைகள் என நகரை நி்ர்மாணித்துள்ளனர். வார இறுதியில் (weekends)சனி,ஞாயிறுகளில் ஆண் பெண் வேறுபாடின்றி மது, கேளிக்கை என கொண்டாட்டமாய் உள்ளனர். இந்தியர்களும் அவரவர் நண்பர்கள் வீட்டிற்கு பிறந்தநாள் விழா, உணவருந்த (Get together) என்று சென்று கொண்டாடி மகிழ்கின்றனர்.                   1492 ல் கண்டுபிடிக்கப்பட்டு கடந்த 500 வருடங்களில் உலகின் மிகப்பெரிய பணக்கார நாடாக மாறியிருப்பதை கண்டு பொறாமைதான் ஏற்படுகின்றது நமது நாட்டை எண்ணி. மென்பொருள் உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பினும் கனரக உற்பத்தியினால்  மாசுபடுவதை தவிர்க்க ஏனைய நாடுகளிடமிருந்து தரவுகளைப்  பெற்றே இந்த அளவிற்கு வியத்தகு வளர்ச்சி பெற்றுள்ளதை எண்ணி ஒவ்வொரு அமெரிக்கனும் பெருமை கொள்ள தகுதியுடையவனாகிறான். இந்த 22 நாட்களில் நான் கற்ற, வியந்த விசயங்களைத்தான் எழுதியுள்ளேன் எனது முதல் வெளிநாட்டு அனுபவம் என்பதால். இவையெல்லாம் சாதாரணமாய் தோன்றக்கூடும்  உங்களது பல நாட்டு அனுபவங்களால். அப்படியிருப்பின் நகைப்பின்றி கடந்து போகவும்.                                                                   நன்றி....