[] 1. Cover 2. Table of contents கோவை ஞானி - நேர்காணல்கள் தொகுப்பு கோவை ஞானி - நேர்காணல்கள் தொகுப்பு   இராமசாமி துரைப்பாண்டி     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/kovai_gnani_interview மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/kovai_gnani_interview This Book was produced using LaTeX + Pandoc தொகுப்புரை கோவை ஞானி அவர்கள் மறைந்த செய்தி கேள்விப்பட்ட மறுநாள் அவரின் நேர்காணல்களைத் தொகுக்க வேண்டும் எனத் தோன்றியது. தமிழ்ச்சூழலில் தமிழ் மெய்யியல் குறித்துத் தொடர்ந்து உரையாடியவர் ஞானி அவர்கள். இந்த நேர்காணல்களைத் தொகுத்திடும் போது தோன்றியது, தமிழர் பண்பாடு, மெய்யியல், தமிழ் இலக்கியம், தமிழர் தொன்மை, இன்றைக்கான தமிழர் எதிர்கொள்ளும் அரசியல் சிக்கல்கள், அவற்றிற்கு இணையாக எடுத்திட வேண்டிய அரசியல் நிலைபாடுகள் குறித்த கருத்தியல் முன்வைப்புகள் எனத் தமிழருக்கு மட்டுமின்றி பல்வேறு தேசியஇனங்களுக்கும் தேவைப்படும் கருதுகோள்களை மார்க்சிய அடிப்படையில் எந்தத் தலைப்பிலும் வெளியீடுகளாக மறுதொகுப்பு செய்து வெளியிட இயலும் என்று. மேலும் பல்வேறு குறிப்பிட்ட தலைப்புகளில் தொகுப்புகள் வரும் என எதிர்பார்த்திட இயலும். இதழாளர்கள் எப்படி நேர்காணல் செய்திட வேண்டும், கேள்விகளில் எவை பதிப்பில் இருக்க வேண்டியவை எவை மாற்றிட வேண்டியவை என்பது குறித்த மேலதிகத் தரவு நூலாகக் கூடப் பயன்படுத்திட இயலும் இந்தத் தொகுப்பினை. என் கவனத்தை மீறிய எழுத்துப்பிழைகளுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இன்னமும் கிடைக்கப் பெறாத புதியபார்வை போன்ற இதழ்களிலும் வெளியான நேர்காணல்கள் உள்ளன. அதை அடுத்து யாரும் தொகுத்திட்டால் நலம் எனக் கருதுகிறேன். எவரெவரிடம் தொடர்ந்து தொடர்பு கொண்டேன், எவரெவரின் வினைகளும் எதிர்வினைகளும் எப்படி இருந்தன என்றெல்லாம் பேசி ஏதொன்றும் ஆகப்போவதில்லை. எனவே நன்றிகளுடன் நிறைவு செய்து கொள்கிறேன். இந்தத் தொகுப்பு இவர்களின்றி சாத்தியமில்லை திருமிகு. கண.குறிஞ்சி, திருமிகு. தளவாய் சுந்தரம், திருமிகு. மணா இலட்சுமணன் மற்றும் பெயர் சொல்ல விரும்பாத அன்பு நெஞ்சங்கள் (பதிப்புரிமை குறிப்பு : மக்கள் பதிப்பாக அனைவருக்குமான பதிப்புரிமையுடன் இருப்பதால் எவரும் எப்போதும் யாரின் முன் அனுமதி இன்றி ஆனால் குறிப்பிடப்பட்டவர்களின் பெயர்களை நீக்காமல் பயன்படுத்திக் கொள்ளலாம். Attribution-ShareAlike 4.0 International (CC BY-SA 4.0)) முகங்கள் - 1980 மே - கலாஜெயம் ஞானியுடன் ஒரு பேட்டி…. ‘ஞானி’ தன்னை என்றும் ஒரு இலக்கிய மாணவன் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறார். கோவையைச் சேர்ந்த இவருக்கு இலக்கியம், தத்துவம், அரசியல் ஆகியவற்றின் அடிப்படைகளை ஆராய்வதில் ஆர்வம் அதிகம். கோவையிலிருந்து முன்பு வெளி வந்த ‘புதிய தலைமுறை’ யோடும், தற்போது வெளி வரும் ‘பரிமாணம்’ என்ற இதழோடும் தொடர்புடையவர் இவர். தன்னுடைய விமர்சனங்கள் சில சமயங்களில் பிறரைப் புண்படுத்துவதாக இருந்த போதிலும் அதைத் தேவை என்று கருதுபவர், பிறர், இவரைப் பற்றிச செய்யும் விமர்சனங்களிலுள்ள உண்மையைப் புரிந்து கொள்ள இவர் விரும்புகிறார். கடந்த, பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக, “இலக்கிய மாணாக்கராக” இருக்கும் இவர், பத்திரிக்கைகென்று பேட்டி கொடுக்கச் சம்மதித்தது இதுவே முதல் முறையாகும். கோவை வட்டத்தில் நெடுங்காலமாக இலக்கியத் துறையில் பல மன்றங்கள் செயல்பட்டிருக்கின்றன. சில பத்திரிகைகளும் வெளி வந்திருக்கின்றன. இவற்றில் உங்கள் பங்கு என்ன ? கடந்த 25 ஆண்டுகளுக்குள் கோவையில் பலவகையான இலக்கியக் கழகங்கள் தோன்றி வளர்ந்து, மீண்டும் தோன்றி வளர்ந்து வந்திருக்கின்றன. சமய இலக்கியம் சம்பந்தமான முயற்சிகளை ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தினர் தொடர்ந்து செய்து வருகின்றனர். இலக்கியத்தைப் பொருத்தவரை கோவை இலக்கியப் பேரவை, இலக்கிய நண்பர்கள் சங்கம், தேன் கூடு, சிந்தனைமன்றம், சிந்தனையாளர் மன்றம், வானம்பாடி இயக்கம், இலக்கிய ஆய்வரங்கம், கொங்கு இலக்கியப் பேரவை முதலியவை இங்கு தோன்றி வளர்ந்த மன்றங்கள். தமிழை பயிற்று மொழி ஆக்குவதன் தேவை பற்றி கோவையில் நடந்த விவாதங்களும் முயற்சிகளும் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவை . தமிழ்க் கவிதையில் சமூக கண்ணோட்டத்தைப் புதுக்கவிதை வடிவத்துக்குள் கொண்டு வர முயன்றது வானம்பாடி இயக்கம். இந்த இயக்கத்தில் குறிப்படத் தக்கவர். புவியரசு, இளமுருகு , சிற்பி, தேனரசன், சக்திக்கனல், சிதம்பரநாதன் முதலியவர்கள். இவர்கள் கவிதைச் சாதனை ஆராய்ச்சிக்குரியது. இந்த இயக்கத்தின் விமர்சகர்களாக நானும், ஜன. சுந்தரமும், ஜன ஒளியும் இருந்தோம். பின்னர், இவ்வியக்கம், சிலரது தன்னிச்சையான போக்கினாலும் இயக்கமாக்கும்போது சிலர் தனது தலைமையைப் பறி கொடுக்க வேண்டும் என்பதனாலும், கவிதைகளை மேலும் தத்துவச் செறிவோடு கொண்டு செல்வதில் பயிற்சி பெறாததினாலும், கவிதை தங்களுக்குத் தந்த பெருமை, ஆணவமாகச் சிலரிடம் மாறியதனாலும் இயக்கம் சீர்குலைந்தது. இன்று, ’’வானம்பாடி" ஒரு கவிதை இதழ் என்ற அளவில் மட்டும் வெளி வருகிறது. கோவையில் இலக்கிய வளத்தைப் பரப்பியவர்கள் என்ற வகையில் பேராசிரியர் மா. ரா, பேரா.குருசாமி, கு.வெ, கிருஷ்ணசாமி ஆசான், புவியரசு, சிற்பி முதலியவர்களைக் குறிப்பிடலாம். கோவையிலிருந்து வெளி வந்த இலக்கிய இதழ்களில் குறிப்பிடத் தகுந்தவை ‘புதிய தலைமுறை’, ‘தேனீ’ ஆகியவை. இலக்கியத்தில் முற்போக்கு இலக்கியம், பிற்போக்கு இலக்கியம் இது பற்றி உங்கள் கருத்து என்ன? அழுத்தமான தன்மையுடையது முற்போக்கு இலக்கியம். சமூகத்தில் பல்வேறு வகையான, பல்வேறு தரப் பட்ட வாழ்க்கை நிலைகள் உள்ளன. இவை எல்லாக் காலத்தும் பல்வகைப் பிரச்சினைகளோடு இருக்கின்றன. இப்போது இப்பிரச்சினைகள் சிக்கல்கள் கடுமையாயிருக்கின்றன, இவற்றிற்கான காரணங்களும் ஆழப்பட்டுள்ளன, அகலப்பட்டுள்ளன. இப்பிரச்சினைகளை இலக்கியம் வெளியிடுகிறது. இதைச் சரியாக வெளியிட்டால் அதுவே பிரச்சினையினுடைய தீர்வுக்கான எண்ணங்களையும். விருப்பங்களையும் முயற்சிகளையும் தூண்டும், இத்தன்மையுடைய இலக்கியம் முற்போக்கு இலக்கியம், உண்மைகளைப் பற்றி அக்கரை கொள்ளாமல், வெறும் வணிக நோக்கோடு, வெற்றுக் கற்பனை அழகுகளோடு, தானும் ஒரு எழுத்தாளனாக இருக்க வேண்டுமென்ற பெருமையோர் செய்யக்கூடியவை பிற்போக்கு இலக்கியம். இதுவரை தாங்கள் படைத்துள்ள இலக்கியப் படைப்புக்கள் எவை? முன்பு, சில கவிதைகள் எழுதியிருக்கிறேன். எப்பொழுதுமே தத்துவ நோக்கிலான விமர்சனத்தில்தான் எனக்கு அதிகமான ஆர்வம். இம்முறையில் சில கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியிருக்கிறேன். எனது கவிதைகளில் சிறந்தது என்று, ’கல்லிகை’யை நான் குறிப்பிட்டுக் கொள்ளலாம். “இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும்”, “மேட்டில் ஒரு அழகிய வீடு”- இவற்றில் முதல் நூல் இந்தியாவுக்கேற்ற மார்க்சியத்தைப் பற்றிய ஒரு முன்னுரை. அடுத்த நூல், ஜெ கிருஷ்ணமூர்த்தி யைப் பற்றிய ஒரு விமர்சன நூல். தமிழ் எழுத்தாளர்களில் நீங்கள் விரும்பக் கூடியவர் யாவர்? நாவலாசிரியர்களில் கன.சுப்பிரமணியம், தி.ஜானகிராமன், லா.சா.ராமாமிர்தம், சுந்தரராமசாமி, எம்.வி.வெங்கட்ராம், கிருத்திகா, இந்திராபார்த்தசாரதி, ஜெயகாந்தன், சிறுகதை ஆசிரியர்களில் இன்றுள்ளவர்களில் வண்ணநிலவன், வண்ணதாசன், பூமணி, பா.ஜெயபிரகாசம் கவிஞர்களில் தர்முசிவராம், பசுவய்யா, ஞானக்கூத்தன், அப்துல்ரகுமான், புவியரசு. வட்டார இலக்கியம் பற்றி உங்கள் கருத்து என்ன? வட்டார இலக்கியத்தில், குறிப்பிட்ட வட்டாரத்தின் மொழியை சிறப்பாகக் கையாள்வதும் குறிப்பிட்ட வட்டாரத்தின் சமூக பழக்க வழக்கங்களை எடுத்துச் சொல்வதும் இன்று முதன்மையாகி இருக்கின்றன. ‘கரிசல்’ இலக்கியம் என்பதை கி. ராஜநாராயணன், முதலியவர்கள் சிறப்பாக தமிழில் நிலை நிறுத்தியுள்ளனர். மொழி நடையிலுள்ள சில தனிக் கூறுகள், பிற வட்டாரத்தைச் சார்ந்தவர்களுக்குப் புரியாமலிருந்த போதிலும் ஒரு இலக்கியத்தைப் பற்றிய சரியான அறிவைப் பெறுவதற்கு இந்தச் சிரமத்தை வாசகர் மேற்கொள்வது தேவையாக இருக்க முடியும். வட்டார இலக்கியத்தில் சாதனை புரிந்தவர்களாக புதுமைப்பித்தன், சண்முகசுந்தரம், நீல. பத்மநாபன், பொன்னீலன், கி. ராஜநாராயணன், பா. ஜெயப்பிரகாசம், பூமணி, தி. ஜானகிராமன் முதலியவர்களைக் குறிப்பிடலாம். மொழி நடையையும் சமூகப் பழக்க வழக்கங்களையும் பற்றிய அறிவைத் தொகுப்பதும் அவற்றைத் தம் படைப்புக்களில் பயன் படுத்துவதுமே, கவர்ச்சியான அம்சங்களாக இருப்பதனால் எழுத்தாளர்கள், இதற்குள்ளேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் தான் வட்டார இலக்கியம் குறுகிய எல்லைக்குள் செயல்படுவதாக விமர்சனம் எழுகின்றது. ஆனால் இவற்றோடு அந்தக் குறிப்பிட்ட வட்டாரத்தின் வரலாற்று ரீதியான பொருளியல் பிரச்சினைகளை மையப்படுத்தி எழுதுவது வட்டார இலக்கியத்தின் கனத்தை அதிகப்படுத்தும். சமூக மாற்றத்திற்கு இலக்கியத்தின் பங்கு என்ன? இலக்கியம் சமுதாயத்தில் மனிதர்களுக்கிடையில் மேன்மையான உறவுகளை வற்புறுத்துகிறது. இந்த உறவுகள் நெடுங்காலமாக சில குறுகிய சூழல்களில், சில மனிதர்கள் தமக்கிடையில் மட்டும் கொண்டிருக்கிற உறவுகள், - இந்த மேன்மையான உறவுகள் சமூகம் முழுவதும் பரவலாக வேண்டும் இந்த உறவுகளுக்குத் தடையாக இருப்பது இன்றைய சமூக முறை, இன்றைய சமூகத்திலுள்ள வர்க்க வேறுபாடுகள், சுரண்டல் முறை, அரசு முறை, உடைமை முறை, இவை சார்ந்த ஆதிக்க முறை ஆகியவை. இவை ஒழிந்தாக வேண்டும். இவற்றை ஒழிக்க வேண்டிய முக்கியமான பொறுப்பில் உள்ளவை உழைக்கும் வர்க்கம் சார்ந்த அமைப்புக்கள், இந்த அமைப்புக்களில் ஒரு பகுதியாக இருப்பது இலக்கியம். இலக்கியம், மனிதர்களுக்கிடையிலான மேன்மையான உறவுகளை என்றும் நினைவுறுத்திக் கொண்டே மனிதர்களின் போராட்டத்திற்கு ஊக்கம் தருகிறது. இம்முறையில் இலக்கியம் என்றைக்குமே மனித உறவுகளில் ஏற்படும் இறுக்கத்திற்கும் சீர்குலைவுகளுக்கும் எதிராக இருக்கும். சோஷலிச காலத்திலும் இலக்கியம் இந்தப் பணியைத் தொடர்ந்து செய்யும். இலக்கியம் என்றைக்கும் கட்சிக்கோ அரசியல்வாதிகளுக்கோ காவடி எடுக்கக் கூடாது என்பது முக்கியம். நான் முன்பு குறிப்பிட்ட எழுத்தாளர்கள் மேன்மையான மனித உறவுகளில் அக்கறையோடு எழுதுபவர்கள். தமிழ்நாட்டில் சிறு பத்திரிகைகள் நிறைய வெளிவருகின்றன. அவை பற்றி உங்கள் கருத்து என்ன ? தமிழகத்தில் இன்று கலை இலக்கியம் கலாச்சாரம் ஆகிய துறைகளில் செயல்படும் ஒரு புதிய சக்தி தோன்றியிருக்கிறது. சிறு பத்திரிகைகள் பல இதற்கு வெளியீடாகின்றன. படிகள், இலக்கிய வெளி வட்டம், பரிமாணம், மானுடம், கொள்ளிப்பாவை, யாத்ரா, பனிமலர் ஆகிய பத்திரிகைகள் இவ் வகையைச் சார்ந்தவை. இவை வணிக சக்தியை ஆளும் வர்க்கத்தைச் சாராதவை ஒரு புதிய கலாச்சார மறுமலர்ச்சிக்காக நிற்பவை. எழுத்தாளர்களுக்குச் சங்கம் தேவையா? தேவைதான். இதற்கு முதன்மையான காரணம், இந்தச் சமூகத்தினுடைய பிரச்சினைகளைப் பற்றி உண்மையான அக்கரையோடு விரிவாக விவாதித்துக் கொள்ளவும் பழைய இலக்கியங்களையும் தற்கால இலக்கியப் போக்குகளையும் விரிவான முறையில் விமர்சனம் செய்து உண்மைகளைத் தொகுத்துக் கொள்வதற்காகவும் எழுத்தாளர்களுக்கு அரசு தரப்பிலிருந்தும் பதிப்பகத்தார், வெளியீட்டாளர் தரப்பிலிருந்தும் வரும் பிரச்சினைகளை சந்திப்பதற்காகவும் தேவைப்படும் போது இச்சமூகப் பிரச்சினைகளைப் பற்றிய தீர்வுக்கு உதவியாக இருப்பதற்காகவும் சங்கம் தேவைதான். இதுபோன்ற ஏதாவது ஒரு சங்கத்தில் நீங்கள் உறுப்பினரா? இல்லை. மேற்சொன்ன முறையில் சங்கங்கள் அமையவில்லை. அதனால் இப்பொழுதிருக்கும் சில சங்கங்களில் நான் உறுப்பினராக இல்லை. இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்? எழுத்துத்துறைக்கு வரக்கூடிய புதிய எழுத்தாளர்கள், புதுமைப்பித்தனைக்கூட சரிவரப் படிப்பதில்லை. இவர்களுக்கு வாழ்க்கை அனுபவங்கள் கனமாக இல்லை. வாழ்க்கையை சமூக அளவில் வரலாற்று அளவில் வைத்து இவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இவற்றைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் நிறையப் படிக்க வேண்டும். அதை இவர்கள் செய்வதில்லை. தமது கற்பனையையும் தாங்கள் பார்க்கும் சில மனிதர்களின் வாழ்க்கையையும் கைமுதலாக வைத்துக்கொண்டு இலக்கியம் படைக்கக் தொடங்கி விடுகிறார்கள். வணிக சக்திகளுக்கும் சந்தர்ப்பவாத சக்திகளுக்கும் இவர்கள் எளிதாக இறையாகிவிடக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமிருக்கின்றன. சிறந்த இலக்கியம் இத்தகையவர்களிமிருந்து தோன்ற முடியாது. வாழ்க்கையையே தனக்குப் பிரச்சினையாக்கிக் கொண்டவர்கள் தான் சிறந்த இலக்கியம் படைக்க முடியும், கடைசியாக ஒரு கேள்வி. தற்கால அரசியல் பற்றிய தங்கள் கருத்து என்ன? இந்தியாவில் பொருளாதாரப் பிரச்சினைகள் மேலும் கடுமையாகி வருகின்றன. இவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறையைப் பெருங்கட்சிகளெதுவும் கொண்டிருக்க வில்லை. மாறாக இக் கட்சிகள் சமூகத்திற்கு தொடர்ந்து பாரமாகி வருகின்றன. ஆதிக்க சக்திகளோடு இவை நெருங்கியிருப்பது இன்று வெளிப்படையாகி வருகிறது. இந்த ஆதிக்க சக்திகளை அடியோடு தகர்ப்பது இன்று சமூகத்தின் கடமை. இதற்கு ஈடு கொடுக்கும் அரசியல் சக்திகளே இன்று தேவை. (பேட்டி : கலாஜெயம் (1/05/1980 கோவையில் இருந்து வெளிவந்த முகங்கள் இதழ்)) சுபமங்களா - 1995 ஆகத்து - சூத்திரதாரி, சிபிச்செல்வன், கோவிந்தராஜ் கோவை ஞானி 1935-ல் சோமனூரில் பிறந்தவர் ‘கோவை ஞானி’ என்று அறியப்படுகிற கி. பழனிச்சாமி. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் B.O.L., படித்து விட்டு முப்பது ஆண்டு காலம் தமிழாசிரியராக பணிபுரிந்தவர் என்பதை விட, மார்க்சியத்தில் வாழ்ந்தவர் என்று சொல்லுவதே சரியாக இருக்கும். இப்போதும் இவர் ‘’மார்க்சியம்தான் எனது வாழ்வு. மார்க்சியத்தோடுதான் எனது சாவும்’’ என்கிறார். 1967-ல் ‘புதிய தலைமுறைகள்’ பத்திரிகையிலிருந்து இவரது சிறு பத்திரிகைப் பணி தொடங்கியது. 1979-80-களில் மார்க்சியப் புரிதலுக்கான ‘பரிமாணம்’ என்கிற இரு மாத இதழ். பிறகு 1988-லிருந்து ‘நிகழ்’ காலாண்டிதழ். மாத இதழாகத் தொடங்கிய இவ்விதழ் இப்போது தமிழ் இலக்கியம், விஞ்ஞானம், வேளாண்மை, சுற்றுச்சூழல் போன்ற தீவிரமான விஷயங்களைத் தாங்கி வந்து கொண்டிருக்கிறது. இது தவிர, கோவை வானம்பாடிகள் இயக்கத்திலும் முக்கியப் பங்கு வகித்தவர். கண் பார்வையற்ற நிலையிலும் இன்றளவிலும் தமிழ் இலக்கியச் சூழலில் தனது இடைவிடாத பங்களிப்பின் மூலம், தவிர்க்க முடியாத ஒருவராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது இல்லத்தில், புத்தகங்கள் சூழ்ந்த அறையில் சந்தித்த பொழுது… நீங்கள் மார்க்சியத்துக்கு எவ்வாறு வந்தீர்கள்? இடைக்காலத்தில் பெரியாருடைய பல கூட்டங்களை நான் கேட்டிருக்கிறேன். பெரியாருடைய பாதிப்பு என்னளவில் பொருள்தான் உலகம்… நாத்திக வாதமென்பது ஒரு வகை பொருள் முதல்வாதப் போக்கிற்கு என்னைத் தள்ளியது. ஆனால் என்னுடைய எல்லா அனுபவங்களுக்கும் அது போதுமானதாகயிருக்கவில்லை. அப்பொழுது தீர்வாக மார்க்சியம்தான் வருகிறது. அத்வைதத்தில் தீவிரமான அனுபவங்களைப் பெறக் கூடிய சமயத்தில் அதிலிருந்து நீங்கள் வெளியேறியாக வேண்டும். உள்ளே தங்க முடியாது. உள்ளேயே தங்கினால் நீங்கள் தீர்ந்தீர்கள். என்னுடைய அனுபவங்களே அதற்கு ஆதாரமாகியிருக்கிறது. அத்வைதத்திலிருந்து வெளியே வரும்போது பெரியார் வழியாக நான் மார்க்சியத்திற்கு வந்து சேர்கிறேன். வரலாறு முதலிய புரிதலின் காரணமாக நான் பெரியாருக்குள்ளேயும் தங்க முடியாமல் மார்க்சியத்திற்கு வருகிறேன். 1960-க்கு பிறகு கலை இலக்கியப் பெருமன்றம். பிறகு 1965-ல் தான் எனக்கு எஸ்.என்.நாகராசன் அறிமுகமாகிறார். அவருடைய மார்க்சியம் மிக வித்தியாசமான மார்க்சியம். அதற்கு முன்பே ஜீவா வழியாக குருசேவுடைய மார்க்சியத்தில் எனக்கு உடன்பாடு இருந்தாலும், நாகராசன் வந்த பிறகே பெரும் தெளிவு ஏற்பட்டது. மாவோ வரிசைக்கு வந்து சேர்ந்தேன். 1967, 1968-ல் தமிழ்நாட்டில் எம்.எல். கட்சி தோன்றிய போது நண்பர்களுடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக ‘புதிய தலைமுறைகள்’ பத்திரிகை தொடங்கப்பட்டது. அதில் எஸ்.வி. ராஜதுரை, எஸ்.என். நாகராஜன், ஆதி பிறகு நான், வெங்கட்ராமன், நஞ்சப்பன் ஆகியோர் இந்தப் பத்திரிகையை நடத்தினோம். சமய உணர்வுகளோட சாரமான சமதர்மம் என்பதைச் சரியாக அர்த்தப்படுத்தினால். அத்வைத உணர்வு என்பது பொருளியல் சமூகச் சூழலில் சோஷலிஸம்தான். அத்வைதத்திற்குள் நுழைந்த யாரும் வெளியேறி சோஷலிஸத்துக்கு வந்தேயாக வேண்டும். விவேகானந்தர், பாரதி எல்லோரும் அப்படித்தான் வந்தார்கள். இலக்கியத்துறைக்கு, குறிப்பாகத் திறனாய்வுத்துறைக்கு வந்தது பற்றி சொல்லுங்கள்…? ‘புதிய தலைமுறைகள்’ பத்திரிகையில் நான் எழுதின கட்டுரைகள் பெரும்பகுதி விமரிசனக் கட்டுரைகள்தான். திறனாய்வுத் துறையில்தான் ஈடுபாடும் இருந்தது. இதற்குக் காரணம் எனது வாழ்க்கைச் சூழல். வாழ்க்கை எனக்கு எப்போதும் சிக்கலாகவே இருந்தது. இந்தச் சிக்கலுக்கான காரணத்தைத் தெரிந்து அதைத் தீர்ப்பது குறித்தே என் கவனமிருந்தது. ஒவ்வொரு நாளும் வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடுகிறது. திரும்பத்திரும்ப அதனை நாம் அர்த்தப்படுத்த வேண்டியதாகிறது. இதனால் இயல்பாகவே என்னுடைய கவனம் வரலாறு, தத்துவம், இலக்கிய விமரிசனம் போன்றவற்றில் குவிந்தது. 1955-லேயே சி.சு. செல்லப்பாவின் தொடர்பு எனக்கிருந்தது. புதுக் கவிதைப் போக்கை நான் வானம்பாடிகளில் யாரைக் காட்டிலும் முன்கூட்டியே ஏற்றுக் கொண்டேன். அதன் பிறகு வானம்பாடி சூழலில் விரிவான முறையில் கவிதை பற்றிய விமரிசனங்களில் நான் ஈடுபட்டேன். மார்க்சிய ஆய்வைப் பொறுத்தவரையில், ரஷ்ய அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட மார்க்சியம் போதாது, மேற்கத்திய நாடுகளில் நடைபெற்ற மார்க்சிய ஆய்வுகளையும் மாவோவின் மார்க்சியத்தையும் இயன்ற அளவிலாவது தமிழில் கொண்டு வரவேண்டுமென்கிற முயற்சியில் எஸ்.என். நாகராசன், எஸ்.வி. ராஜதுரை ஆகியோரின் ஒத்துழைப்போடு ‘பரிமாணம்’ என்கிற பத்திரிகையை நான் பொறுப்பேற்று நடத்தினேன். அல்தூஸர் தொடங்கிப் பல கட்டுரைகள் அதில் வெளிவந்தன. ‘பரிமாணம்’ அனுபவங்கள் எனக்குத் திருப்தி தருபவை. அதன் பிறகு பெங்களூர் நண்பர்களோடு இணைந்து ‘இலக்கு’ பத்திரிகையின் மூலமாக சில கடமைகளைச் செய்தேன். பிறகு ‘நிகழ்’ பத்திரிகையைத் தொடங்கினேன். தமிழ்நாட்டின் சிற்றிதழ் சூழல் என்பதை ’கசடதபற’வில் தொடங்கி நாம் கவனித்து வருகிறோம். அந்தச் சூழலில் இயங்கக் கூடிய பல பேர்களில் நானும் ஒருவனாக மாறி இயங்கிக் கொண்டிருக்கிறேன். தமிழக இலக்கியச் சூழலில் ஒரு பெரும் சக்தியாய் வெடித்த வானம்பாடிகள், அவசர நிலைக்குப் பின் சரிவையும் பின்வாங்கலையும் சந்தித்தனர். இதன் பின்னணியையும், காரணங்களையும் பற்றிச் சொல்லுங்கள். வானம்பாடிகளின் சரிவு என்பது 1972-73-ல் தொடங்கியது. முதலில் வானம்பாடிகளின் சாதனை என்று பார்த்தால் முக்கியமானது - சமூக விமரிசனங்களை மார்க்சியம் பற்றிய புரிதலோடு ஒரு புதுக்கவிதை வடிவத்துக்குள்ளே கொண்டு வந்தது எனலாம். வானம்பாடிகளின் தோற்றம், தமிழ் இலக்கியச் சூழலின் தவிர்க்க முடியாத ஒரு கட்டத்தில் நிகழ்ந்ததொரு குறிப்பிடத்தக்க தோற்றம் என்பதில் சந்தேகமில்லை. வானம்பாடிகள் காலத்தில் நக்ஸலைட் இயக்கம் மிகத் தீவிரமாக இந்தியாவைக் குலுக்கிக் கொண்டிருந்தது. வானம்பாடி நண்பர்களில் பலர் இந்த உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டவர்களாகவே இருந் தார்கள். எம்.எல். இயக்கம் தமிழகத்தில் பல்வேறு அலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது. நாளுக்கு நாள் இந்த மார்க்சியத்துக்குள் மாவோ நெறியில் உள்ளே செல்வதென்பது குடும்பச் சூழல்களிலும், வெளிச்சூழல்களிலும் நண்பர்களுக்குச் சில பிரச்சினைகளை ஏற்படுத்தியது. போலீஸ் விசாரணைகள் போன்றவை. அப்பொழுதுதான் தொடர்ந்து முன்னுக்குச் செல்ல முடியாது பின்வாங்கத் தொடங்கினார்கள். எம்.எல். கோட்பாடு தேவையில்லை - நாம் மிகத் தீவிரமாகப் போகக் கூடாது என்ற நிலைப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் கலை - இலக்கியப் பெருமன்றத்தில் நண்பர்கள் பலரும் இணைந்தார்கள். அதற்குப் பெரிய அளவு மேடையும் இருந்தது. வானொலியின் ஆதரவு இருந்தது. பின்பு அவசரநிலை பிரகடனமான போது, ‘இந்திராதான் இந்தியா - இந்தியாதான் இந்திரா’ கோஷங்களை நண்பர்கள் எழுப்பினார்கள். அதேபோல், மார்க்சிய கட்சித் தலைவர்கள் எம் மாதிரியிருக்கிறார்கள், எவ்வளவு தூரம் மார்க்சியத்தை உள்வாங்கிக் கொண்டவர்களாக இருக்கிறார்கள், போராட்டங்களில் எவ்வளவு தூரம் உண்மையாய் இருக்கிறார்கள் போன்ற விஷயத்தைப் பார்க்க இவர்கள் மறுத்தார்கள். காமம், தனியுடைமைப் பற்று, குடும்பப் பற்று போன்ற உணர்வுகள் தங்களுக்குள்ளும் இருப்பதை உணர மறுக்கிறார்கள். கவிதை வழியாய் அறிவுரை சொல்வது, மேடைகளைப் பயன்படுத்துவது, தோரணைகளை அனுபவிப்பது என்கிற பாணியில் தீவிரமாகப் போகிறார்கள். தொடக்கத்தில் காதல் பற்றி கவிதை எழுத வேண்டாமென்றவர்கள், பின்பு காதல் பற்றி கவிதையெழுதுகிறார்கள். பட்டிமன்றப் பாணியில் கவியரங்குகள் நடத்துகிறார்கள். மேத்தா இதில் குறிப்பிடத்தக்கவர். இந்தத் தற்பெருமை, தங்களைப் பற்றிய தேடலை ஒதுக்கிய நிலை, தங்களின் பீடங்களை விட்டு இறங்க முடியாமை இவையெல்லாம் தான் முதன்மையான காரணங்களென்றாலும், அடிப்படையில் அவை தனிநபர் காரணங்களல்ல. தத்துவரீதியாய் ஆய்வுக்குரிய காரணங்கள்தான். வானம்பாடியின் சரிவிற்குப் பின்பலர் அந்தப் பாணியில் கவிதையெழுதத் தொடங்கினார்கள். தொடர்ந்து வானம்பாடி உணர்வுகளைத் தக்கவைத்துக் கொண்டு, இன்றும் சில வானம்பாடிகள் இயங்கி வருகிறார்கள் - கவிதைத் துறையில் புவியரசு, சிற்பி போன்றவர்களும், இலக்கியத் திறனாய்வில் நானும், தத்துவம், அறிவியல் சார்ந்ததில் ஜீவஒளியும் அதே உணர்வுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். மார்க்சிய நோக்கில் தத்துவம் குறித்த உங்களின் பார்வை எந்த விதத்தில் மாறுபட்டதாயிருக்கிறது? எஸ்.என். நாகராசனின் தொடர்பு காரணமாக மார்க்சியத்தைப் பற்றிய விரிவான ஆழமான புரிதல் எனக்குள் ஏற்பட்டது. தொடக்கத்திலேயே மாவோவின் மார்க்சியத்தில் எனக்கு ஈடுபாடு இருந்தது. ஸ்டாலினியம் பற்றி ‘புதிய தலைமுறைகள்’ காலத்திலேயே தீவிரமான விமரிசனம் இருந்தது. ஸ்டாலினியம் என்கிற மாபெரும் சிக்கலைக் குறித்து ‘பரிமாணம்’ தனி இதழ் முழுக்க விரிவாய் விவாதித்திருக்கிறோம். மார்க்சியத்திலிருந்து அந்நியமாதல்’ என்கிற கோட்பாட்டை எடுத்தால்தான் அந்தத் தத்துவம் என்கிற விஷயத்துக்குள் நம்மால் போக முடியும். 1844-ல் மார்க்ஸ் எழுதின ‘பொருளாதார தத்துவக் கையெழுத்துப் படிகள்’-ல அந்நியமாதல் குறித்து விரிவாக சொல்லியிருக்கிறார். மார்க்ஸை இளைய மார்க்ஸ், முதிய மார்க்ஸ் என்று பிரிப்பதில் ஏதும் பிரயோஜனமில்லை. அந்த அடிப்படையில் தொடங்கினால்தான் வாழ்வின் அர்த்தம் குறித்து தேடலுக்குள் நாம் போக முடியும். வாழ்வின் அர்த்தம் குறித்த தேடலை இருத்தலியல் என்று சொல்கிறார்கள். அது அப்படி இல்லை . நானும், எஸ்.வி. ராஜதுரையும் இருத்தலியல் குறித்துப் பல நூல்களைப் படித்து விவாதித்த பின்னரே எஸ்.வி. ராஜதுரை ‘எக்ஸிஸ்டென்ஷியலிஸம்’ புத்தகத்தை எழுதினார். இருத்தலுக்கான தேடல் மார்க்சியத்தோடு சம்பந்தப்பட்டது என்பதை அந்நூலில் மார்க்ஸின் பல மேற்கோள்களோடு பல ஆதாரங்களோடு எழுதியிருக்கிறார். அந்நியமாதல் தவிர பிற பிரதேசங்களுக்கு நான் போகவில்லை என்று குற்றம்சாட்டுகிறார்கள். அது தவறு. வரலாறு, அதன் அடிப்படையில் தத்துவப் பார்வை, வாழ்வைப் பற்றின விரிவான பார்வை இவையெல்லாம் மார்க்சியத்திற்கு மிக அவசியமான பகுதி. அந்நியச் சூழலில் வரலாறு பற்றி மார்க்சியவாதிகள் போதிய அளவில் ஆய்வு செய்யவில்லை. தமிழ்த் தேசியம் பற்றி மார்க்சியர்களுக்கு உடன்பாடில்லை. மார்க்சியத்தை நாம் ரஷ்ய-சீன எல்லைகளுக்குள் நிறுத்தி விடாமல், மேற்கில் நடைபெற்ற மார்க்சிய ஆய்வுகளையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். மார்க்சிய கட்சிகள், தமது ஊழியர்களுக்குக் குறுக்கப்பட்ட மார்க்சியத்தைத்தான் கற்றுக் கொடுக்கின்றன. சூழலுக்கேற்ப மார்க்சியத்தை வளர்ப்பதற்குப் பதிலாக கட்சி, தேவைக்கேற்ப மார்க்சியத்தை ஊழியர்களுக்குள் திணிக்கிறது. இதிலெல்லாம் எங்களுக்கு உடன்பாடில்லை . எம்.எல். இயக்க அரசியல் அனுபவங்கள் மனதிற்கு உவப்பானதாயில்லை. எஸ்.என். நாகராசன் சொல்கிற மாதிரி சோவியத் யூனியன் தகர்வுக்குப்பின் எனது மார்க்சியப் பார்வை ஆழம் பெற்றுள்ளது. இன்றைய உலகச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மார்க்சியத்தை விரிந்த அளவில் உருவாக்கிக் கொள்ள வேண்டும். பாசிச எதிர்ப்புணர்வின் மூலம் தமிழகத்தில் பரவலாய் அறியப்பட்ட மார்க்ஸ் லெனினிய குழுக்கள், கடந்த சில வருடங்களாகப் பார்ப்பனிய எதிர்ப்பை யும் தனித்தமிழ் ஆதரவையும் போற்றி வருகின்றன. பாசிசத்திற்கான முரண்பாடுகளையே பார்ப்பனியத்திற்கான முரண்பாடாகவும் சுட்டப் படுகிறது. இரண்டும் ஒன்றாகிவிட முடியுமா? தமிழகத்தில் பார்ப்பனிய எதிர்ப்பென்பது பெரியார், அம்பேத்கார் சார்ந்தவர்களாலும் மட்டுமன்றி மா.லெ. குழுவினராலும் இப்போது தீவிரப்பட்டுக் கொண்டிருக்கிறது. பாசிச உணர்வோடுதான் பார்ப்பன எதிர்ப்பையும் கிளப்புகிறார்கள். பார்ப்பனியம் என்பதைப் பொறுத்து எனக்கு நிச்சயமாக வேறுபட்ட பார்வை உண்டு. அண்மைக் காலத்திய சமூகச் சூழலில் பார்ப்பனியத்தின் பங்கு முக்கியமாகப்படுகிறது. ஆங்கிலேயர்கள் வந்த போது சம்ஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்ற சமூகம் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்று அரசு அதிகார நிறுவனங்களில் விரிவான அளவில் இடம்பெற்றது என்பது உண்மை. இன்றைய புதிய காலனியச் சூழல் மறுபடியும் அவர்களுக்கு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. தொழிற்சாலை நிர்வாக முறைகளில் பார்ப்பனியரின் ஆதிக்கம் இருந்தே தீரும். மேலும் பார்ப்பனரல்லாத மாணவர்கள் ஐ,ஏ.எஸ். / ஐ,பி.எஸ் - ல் தேர்ச்சி பெற்று அதிகாரத்திற்கு வந்தாலும், இன்றைய கல்வி முறை, நிர்வாக முறை காரணமாக திரும்பவும் முதலாளியத்துக்குச் சேவை செய்யக் கூடியவர்களாகவே இருப்பார்கள். இட ஒதுக்கீட்டின் மூலமாக அரசு பீடங்களுக்குப் போகிறவர்கள் பார்ப்பனர்கள் செய்வதையே இவர்களும் செய்வார்கள். சுரண்டலும் ஒடுக்குமுறைகளும் அதிகரிக்குமேயொழிய குறையாது. உயர் பீடங்களில் பார்ப்பனியர்கள் இருந்தாலென்ன? வேறு ஜாதிகள் இருந்தாலென்ன? இத்தகைய சூழலில் பார்ப்பனர் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று பேசிப் பயனில்லை. பார்ப்பனியத்தினுடைய மூலசக்திகள் முதலாளியமும் அரசு அதிகாரமுமே. பார்ப்பனியம் இவற்றிற்குத் துணையிருக்கிற கருத்தியல் மட்டுமே. வெறும் பார்ப்பனியம் என்கிற ‘வாழாவெட்டி தத்துவம்’ பயன் தராது. பாசிசம் என்ற ஒரு போக்கிரியுடன் போராடத் தொடங்கி நாமும் போக்கிரியாக மாறிவிடக் கூடாது. முதலாளியத்தோடு போராடும் போது நாமும் பார்ப்பனியர்களாக மாறிவிடக் கூடாது. எனவே பார்ப்பனீயத்தை ஒற்றை முனையில் சுருக்குவது நமக்குப் பயன் தராது. தனித்தமிழில் பேசுவது எழுதுவது என்பது மட்டுமே தமிழைத் தமிழனை உயர்த்தி விடுமா? தனித்தமிழ் என்பது ஒரு இயக்கம். பொதுத்தமிழ், மக்கள் தமிழ் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், ஆங்கிலத்தின் பாதிப்பிலிருந்து தமிழை விடுவிக்க வேண்டுமென்றால் தனித்தமிழ் என்பது இருக்க வேண்டும். தனித்தமிழ் என்பது தீவிரமாக இருக்கும் போதுதான் பொதுத்தமிழில் நல்ல சொற்கள் வந்து சேரும். ‘பல்கலைக்கழகம், பேருந்து, சொற்பொழிவு’ போன்ற சொற்கள் தனித் தமிழ் மூலம் பெற்றதுதான். இதிலிருந்துதான் நிர்வாகத்தில் ஆட்சி மொழி, பயிற்றுமொழி போன்ற வடிவங்களுக்குப் போக முடியும். சுயநிதிக் கல்லூரி, சுயநிதி பல்கலைக்கழகங்கள் என்ற முறையில் முதலாளிகளிடம் கல்வி ஒப்படைக்கப்படும் போது ஆங்கிலத்திற்கே அவர்கள் முன்னுரிமை தருவார்கள். இரண்டாமிடம் இந்தி மொழிக்கு! மூன்றாமிடம்கூட தமிழுக்கு இல்லை . இன்றைய நவீன காலனியாதிக்க சூழலில், அந்நிய சக்திகளுக்கு இடமளிக்கிற நம்முடைய முட்டாள்களாகவும் அயோக்கியர்களாகவுமிருக்கிற முதலாளிகளுக்கு சமீர்அமீன் சொன்னது போல இந்தப் பொறுக்கி முதலாளிகளுக்கு (லும்பன் பூர்ஷ்வா ) எதிராக மக்களைத் திரட்டி நாம் ஏதாவது செய்ய வேண்டும். தனித்தமிழ் அத்தகையதொரு இயக்கமாகிடும்போது தமிழ் வளர்ச்சியென்பது தமிழ்நிலத்தைக் காப்பது, தமிழ் இயற்கையைக் காப்பாற்றுவதென்பதாகும், இந்தச் சூழலில் தமிழ் உணர்வு என்பது என்ன? தமிழ்ப் பேராசிரியர்கள் மொழிப்பற்று இல்லாதவர்கள். பாரதிதாசன் மொழிப்பற்றை அழகாக அர்த்தப்படுத்தினார். தமிழ் என்று சொன்னால் அகம், புறம், நாடு, அன்பு, வீரம், பெண்கள், கலை இயற்கை என்றார். இத்தகைய தமிழ் உணர்வின் மூலமே தமிழ் விடுதலை சாத்தியம். இதைவிட்டுக் குறுகிய தளத்தில் சனிக்கிழமையை காரிக் கிழமையென மாற்றுவதென்பது போலித் தமிழ் என்பதாகிவிடும். தமிழ் இலக்கியம் பார்ப்பனிய கறைபட்ட இலக்கியமென்று சொல்கிறார்கள். தமிழ் உணர்வென்பது சமூகத்தில் மிகப் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு மிக நெருக்கமானது, தமிழ் உணர்வு என்று வரும்போது தமிழன் யார் என்ற கேள்வியும் குறுக்கே வரும். உழைப்பாளிகள், தொழிலாளிகள், உழவர்கள், கைவினைஞர்கள், பெண்கள், தலித் மக்கள் இவர்கள்தான் அசலான தமிழர்கள். இவர்களுக்குத் தமிழ் தவிர வேறு கதி கிடையாது. தெலுங்கு பேசுவதால் அருந்ததியர்கள் தமிழர்கள் அல்ல என்று சொல்வதில் அர்த்தமில்லை. தமிழ்ச் சூழலில் பெரியாரியத்தின் தேவை இருக்கிறதா? பெரியாரியத்தில் சாதி எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, பெண் விடுதலை, எதிர் கலாச்சாரப் போக்கு ஆகியவை இருப்பது உண்மை . பெரியாரியத்தைப் பெரியாருக்குப் பின் வந்த தலைவர்கள் மிகவும் சுருக்கிவிட்டார்கள். பார்ப்பனிய எதிர்ப்புக்கு அதிகஅளவும், பெயரளவுக்கு மத, சாதி எதிர்ப்பையும் வைத்துக்கொண்டார்கள். மிக ஆழமாகப் பார்க்கும்போது இத்தகைய போக்கிற்குக் காரணம் இவர்களுக்குள் பதுங்கியுள்ள முதலாளிய உணர்வுதான். தாங்களே அதிகாரத்தைக் கையாள்வது, தலைமையைப் பாதுகாப்பது, சொத்து சேர்ப்பது என்று மாறிப்போன போக்கினால் தமிழ் மக்களின் விடுதலை மீதான அக்கறை குறைந்துவிட்டது. பெரியாரியத்தைத் திரும்பப் புதுப்பிக்க அதிலுள்ள சமதர்ம உணர்வு, சோஷலிஸ உணர்வு, சாதி - மத பார்ப்பனிய எதிர்ப்பு எல்லாவற்றையும் இணைத்துக்கொள்ள வேண்டும். அத்தகைய பெரியாரியத்துக்கு இன்று பெரிதும் தேவையிருக்கிறது. மேலும் பெரியாரியமும் மார்க்சியமும் கைகோர்த்துக் கொள்வது முக்கியம். திறனாய்வுப் போக்குகள் குறித்து வகைப்படுத்தும் போது - சி.சு. செல்லப்பா, க.நா.சு. வெங்கட்சாமிநாதன், பிரமிள், சுந்தர ராமசாமி, கைலாசபதி, சிவத்தம்பி, கேசவன், மற்றும் தமிழவன் போன்ற அமைப்பியல்வாதிகள் இவர்களின் போக்குகளிலிருந்து நீங்கள் எவ்வாறு மாறுபடுகிறீர்கள்? இவர்களின் திறனாய்வு போக்குகளில் எனக்கு உடன்பாடும் உண்டு, மாறுபாடும் உண்டு. சி.சு. செல்லப்பா, க.நா.சு., வெங்கட்சாமிநாதன், பிரமிள், சு.ரா. ஆகியோரின் போக்கை பார்ப்பனிய சார்பென்று சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் வெ.சா. போன்றவர்கள் ‘மார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல்’ போன்ற கட்டுரைகளை எழுதியிருந்தால்கூட, ஒட்டுமொத்தமாக இவர்கள் அன்றும் சரி, இன்றும் சரி மார்க்சியத்திற்கு எதிரானவர்கள் அல்ல. இவர்களின் ஒட்டுமொத்தமான திறனாய்வுகளைப் பார்த்தால் சமூக நலத்திற்கோ இலக்கிய நலத்திற்கோ இவர்கள் எதிரானவர்களல்ல. இவர்களுக்குள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்ப்பனிய இழைகள் தென்பட்டாலும் கூட, இவர்கள் தமிழ் இலக்கியத்தின் ஆக்கத்தோடு தங்களை மிகவும் ஈடுபடுத்திக் கொண்டவர்கள். தமிழ்த் திறனாய்வுப் பரப்புகளை பெருமளவு விரித்தவர்கள். நிறைய இழப்புகளைச் சந்தித்தவர்கள். நமது உணர்வுகளைச் சமூகத்திற்கு நெருக்கமாகக் கொண்டு வருவதில் இவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. இவர்கள் பிறப்பால் பார்ப்பனர்களென்கிற காரணத்தால் இவர்களை விமரிசிப்பது இலக்கிய விமரிசனங்களுக்குக் கேவலம். கைலாசபதி, சிவத்தம்பி, கேசவன் ஆகியோரிடமிருந்து மார்க்சிய திறனாய்வு முறைகளை நான் கற்றிருக்கிறேன். என்றாலும் தொடக்கத்திலிருந்தே இவர்களின் விமரிசனப் போக்கிலிருந்து நான் வித்தியாசப்பட்டிருந்தேன். இவர்களின் போக்குகளில் ஸ்டாலினியம் ஊடுருவியிருந்தது. கட்சி ஆட்களை மட்டுமே மதித்தார்கள். மாயாகோவ்ஸ்கி, பாப்லோ நெருடா ஆகியோரின் புதுக் கவிதைகளை ஏற்றுக்கொண்ட இவர்கள், தமிழகச் சூழலில் புதுக் கவிதையைப் புறக்கணித்தார்கள். மார்க்சியத்தில் மாவோயிஸம் முக்கியப்படுத்தப்பட வேண்டிய சமயங்களில் கைலாசபதி தடுமாறினார். மாஸ்கோ சார்பு இவர்களிடம் அதிகம். திராவிடப் பார்வைகளுக்கு எதிரான பார்வைகளே இன்றுவரை இவர்களிடம் இருக்கிறது. தனித்தமிழ் கண்ணோட்டத்திலும் மாறுபட்டார்கள். திருவள்ளுவரை வணிக வர்க்கம் என்று எழுதி இலக்கிய சார்பை வர்க்க சார்பாகப் பார்த்தார்கள். பக்தி இலக்கியங்களுக்கெதிரான பார்வைகளை முன்வைத்தார்கள். அந்நியமாதலுக்கு நான் அதிகம் அழுத்தம் கொடுத்தபோது இவர்கள் யாரும் அதை ஏற்றுக்கொள்ள வில்லை. அதை பூர்ஷ்வா கோட்பாடு என்று சொன்னார்கள். படைப்பியக்கத்தைப் பொறுத்தவரை creative process க்கு நான் மிக அழுத்தம் தருகிறேன். creativity என்பது எனக்குப் பெரிய பிரச்சினையாகத் தோன்றுகிறது. இதை உற்பத்தின்னு அமைப்பியலாளர்கள் சுருக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. அமைப்பியல் பற்றி தமிழவன் போன்றவர்கள் சொல்கிறார்கள். இவைகளின் மூல நூல்களை நான் படித்ததில்லை . இதில் தமிழவன், எம்.டி.எம்., நாகார்ஜுனன், அ. மார்க்ஸ் ஒரு மாதிரி சொல்கிறார்கள். நோயல் இருதயராஜ் வேறு மாதிரி சொல்கிறார். என்னைப் பொறுத்தவரை 1965லிருந்து இன்று வரைக்கும் மார்க்சியத்தை விட்டு விலகிச் சிந்திப்பது எனக்குச் சாத்தியமில்லை. மார்க்சியத்தோடு முரண்படுவதோ வேறுபடுவதோ முடியாது. மார்க்சியத்தோடுதான் வாழ்வு, மார்க்சியத்தோடுதான் சாவு என்கிற அளவுக்கு அதில் ஊறிப் போய்விட்டேன். ஆரோக்கியமான விவாதங்கள் நமக்குள் அவசியம். தமிழவனைப் பொறுத்தவரையில் பார்ப்பனியம் பற்றி சரியான வரையறை வைத்துக் கொள்ளலாம். எல்லாருக்குள்ளேயும் பார்ப்பனியத்தைக் கண்டுபிடிப்பது சரியல்ல. பிறரை பார்ப்பனியர் ஆக்குவதன் மூலம் நாம் இவர்களை எதிரிகளாக ஆக்கி விடுகிறோம். இவர்கள் எந்த ஏகாதிபத்தியத்திற்கும் அடிமைப் பட்டவர்களல்ல. தமிழ் இலக்கிய சூழலில் நம்மோடு தான் இவர்களின் வாழ்வு. இந்த மையத்தில் அவர்களோடு நாம் கைகோர்த்துக் கொள்ள வேண்டும். தலித்தியம் குறித்து தங்களின் கருத்து….? தலித் இலக்கியத்தை வரவேற்கிறேன். இதில் எனக்கு எந்த முரண்பாடுமில்லை. தலித் இலக்கியத்தைக் காட்டிலும் தலித் வாழ்க்கை யின் பல்வேறு தளங்களும், கிராமங்களில் மக்கள் படும் கஷ்டம், அவமானங்கள் எல்லாம் உள்ளடக்கி நிறைய கதைகளும் கட்டுரைகளும் தமிழில் வெளிவர வேண்டும். அடுத்து தலித் இலக்கியம்னு பேசும்பொழுது தலித் இலக்கியமென்பது தலித்துகள்தான் எழுத வேண்டுமென்கிற ஒரு குரலை சிலர் உரத்து எழுப்புகிறார்கள். எழுத வேண்டும் என்று சொன்னாலே எழுத்துப்பயிற்சி முக்கியம். பலருக்கு அனுபவம் இருந்தாலும் எழுத முடிவதில்லை. தலித்துகளில் எழுத வருபவர்களுக்கு இலக்கியப் பயிற்சி இருக்க வேண்டும். அவர்கள் படித்து வேலைக்கு வரும்போது கூடவே - மத்திய தரவர்க்கத்தினர் குணங்களும் வந்துவிடும். ஆக இந்தப் படிப்பாளிகள் எழுதக் கூடியது அசலான தலித் இலக்கியமாக இருக்குமா என்கிற கேள்விக்கு இடம் உண்டு. இருந்தாலும் தலித் ஒருவரால் தன்னுடைய மக்கள் குறித்து சரியாக எழுத முடியும் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளலாம். இலக்கிய உத்திகள் சரியா வரவில்லை என்றெல்லாம் நாம் சொல்ல வேண்டாம். முதலில் அவர்கள் எழுதட்டும். தலித் படிப்பாளிகள் மூலமாக தலித்துகள் பற்றி விரிவாக எழுதட்டும். தொடர்ந்து எழுதி எழுதி இலக்கியப் பக்குவம் வரட்டும். இவர்களும் தலித் கலை இலக்கியம் படைக்க முடியும். இன்னொன்று, தலித் இலக்கியத்தை இலக்கிய ஈடுபாடுள்ள யாரும் எழுத முடியும். தலித்துகள்தான் எழுத வேண்டும் - மற்றவர்கள் எழுத வேண்டாம் என்று சொல்வது ஒரு கொலையாளியுடைய வாழ்க்கையை ஒரு கொலையாளிதான் எழுத முடியும் - ஒரு பெண்ணின் வாழ்க்கையை ஒரு பெண்தான் எழுத முடியும் என்பது போன்ற பிரச்சினையாகப் போய்விடும். கோட்பாட்டுக் குழப்பம் ஏற்படும். தமிழகத்தின் பண்பாட்டு நெருக்கடிகளென நீங்கள் எவற்றை மதிப்பிடுகிறீர்கள்? தமிழ்நாட்டில் பல்வேறு வகையான இயக்கங்கள் இருக்கின்றன. இந்த இயக்கங்களுக்கிடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. எதிரியை எதிர்கொள்கிற அளவுக்கு நம்முடைய இயக்கங்கள் தமக்குள் இருக்கிற வேறுபாடுகளைக் குறைத்து, பலப்படுத்தக் கூடிய அம்சங்களைப் பலப்படுத்தி ஒருங்கிணைந்த போராட்டம் என்பது நமக்குத் தேவையாயிருக்கிறது. ஆனால் நிலைமை இப்போது அப்படியில்லை. மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம், தமிழியம் எல்லாமே தனித்தனியாக ஆளுக்கொரு பக்கம் துண்டுபட்டு வேறுபட்டு முரண்பட்டிருப்பதில் அர்த்தமில்லை. இவ்வியக்கங்கள் எல்லாவற்றிலும் மக்கள் விடுதலைக்கான அம்சங்களின் இழைகள் உள்ளன. இந்த எல்லாப் போக்குகளையும் ஒருங்கிணைக்கிற ஒரு மையத்தை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அப்படிக் கண்டுபிடிக்கும் போது சோஷலிஸ சமதர்மம்தான் இவைகளுக்குள் ஓடுகிற பொதுவான இழை என புரிந்து கொள்ள முடியும். (சந்திப்பு: சூத்ரதாரி, சிபிச்செல்வன், கோவிந்தராஜ்) கல்கி - 1998 - கா.சு. வேலாயுதன் கோவை ஞானியைத் தெரியாத இலக்கியவாதிகளும் சிந்தனையாளர்களும் இருக்கவே முடியாது. தமிழில் மெய்யியல், பொருளியல், மார்க்சீயக் கட்டுரைகள், விரிவான விமர்சனங்கள், இலக்கியத் திறனாய்வு. இயற்கை வேளாண்மை குறித்த ஆராய்ச்சி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் கொண்டிருக்கும் இலக்கியவாதி. இந்த அறுபத்தைந்தாவது வயதிலும் படிப்பு, எழுத்து, இலக்கியவாதிகளுடன் கலந்துரையாடல், பத்திரிகைகள், நூல் வெளியீடு என்று சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர். இவரது கட்டுரைகளைப் படித்துப் பிரமித்து நேரில் பார்த்துப் பாராட்ட வருபவர்கள் அதிர்ந்து போகும் ஒரு விஷயம், இவர் தமது இரு கண்களும் பழுதுபட்டதால் பார்வையிழந்தவர் என்பது! பார்வையற்றும் எழுத்து, படிப்பு. தேடல், கலை இலக்கியங்கள் குறித்த விரிவான விமர்சனங்கள் எல்லாம் எப்படி சாத்யமாகின்றன? எப்போது நேர்ந்தது பார்வையிழப்பு? நாம் விவரம் கேட்டபோது சட்டென்று மறுத்தார். தமது சொந்தப் பிரச்னையைப் பேசி சுயபச்சாதாபம் கொள்ளவோ மற்றவர் இரக்கப் பார்வையைத் தம் மீது படச்செய்யவோ விரும்பாத மனிதர். நீண்ட வற்புறுத்தலுக்குப் பிறகே சிறிது சிறிதாய்ப் பேசத் துவங்கினார் "பதினொரு வருடம் முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமை. வழக்கம்போல் காலையில் படித்துக் கொண்டிருந்தேன். திடீரென கரிய நிற எழுத்துக்கள் மறைந்து புத்தகப் பரப்பு மட்டும் வெளிச்சமாகக் கூசியது. மறுநாள் ஒரு டாக்டரிடம் சென்றேன். சோதித்து விட்டு கண்ணாடியை மாற்றுங்கள்’ என்றார். அப்படியே செய்தேன், ஒரு மாதம் கூட ஆகவில்லை. புத்தகத்தில் சிறிய எழுத்துக்களை எல்லாம் படிக்கவே முடியவில்லை, பிறகுதான் புகழ்பெற்ற கண் மருத்துவர் ராமமூர்த்தியிடம் சென்றேன். அவர் சோதித்துப் பார்த்துவிட்டு சர்க்கரை அளவின் கடுமையினால் கண்ணின் மிக முக்கிய பகுதியான ரெட்டினா பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, முன்பே கவனித்திருக்க வேண்டும் என்றார். என்றாலும் மறுநாளே லேசர் மருத்துவம் செய்தார். என் காலதாமத அணுகுமுறையினால் மருத்துவம் பயன்தரவில்லை!’’ பெரியவர் ஞானிக்கு சிறுவயதிலேயே இடது கண் பார்வை கிடையாது. விளையாட்டில் கம்பு பட்டு பழுதாகிப் போன நிலையிலேயே பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பு, ஆசிரியப் பணி, இலக்கியப் பணி எல்லாமே ஆற்றியிருக்கிறார். பணி ஓய்வு பெறுவதற்கு நான்கு வருடம் முன்பே இரண்டாவது கண் பார்வையும் இப்படி பரிபூரணமாய்ப் போய்விட, பள்ளியிலிருந்து கட்டாய ஓய்வு பெற்றாராம். பள்ளித் தலைமையாசிரியர் அன்பு மிகுதியில் ’இனியிருப்பது நான்கு ஆண்டுகள். அந்த நாட்களில் உதவிக்கு வேறு ஏதாவது வேலையற்ற இளைஞரை வைத்துப் பாடம் எடுக்க வைத்து, ஒரு பகுதி சம்பளத்தைக் கொடுத்து விடலாமே! என்றெல்லாம் கூட ஆலோசனை தந்தாராம். அதில் ஞானிக்கு கடுகளவும் உடன்பாடில்லை . “அதெப்படி இன்னோர் இளைஞர் உழைத்து அதில் நான் குளிர் காய்வது? அதுவும் சுரண்டிப் பிழைப்பதுதானே?” என்கிறார் சட்டென்று. பார்வை திரும்பக் கிடைக்க வாய்ப்பில்லை என மருத்துவ நிபுணர்கள் உறுதிபடக் கூறியபோது உலகமே இருண்டு போயிருக்குமே சூன்யம் கவிழ்ந்திருக்குமே. இனி பிழைத்து என்ன செய்ய என்கிற விரக்தி உள்ளூரத் தழுவியிருக்குமே? “இல்லவே இல்லை” என்கிறார். "இனி பார்வை வர வாய்ப்பே இல்லை என்பதற்கு ஆதாரமான விளக்கங்களை டாக்டர் என் முன் விவரித்தபோது எனக்குள் சிறு அதிர்ச்சி ஏற்பட்டது என்னவோ உண்மைதான். அது ஒரு நிமிடம் நீண்டி ருந்தாலே அதிகம். ‘எனக்கினி பார்வை இல்லை’ என்கிற உண்மையை மறுநிமிடமே ஏற்றுக் கொண்டு விட்டேன். அழவில்லை. கண்ணீர் விடவில்லை. தொடர்ந்து படிக்கவும் எழுதவும் நான் எதிர்பார்த்திருந்த ஓய்வுக்கான வாய்ப்பு நான்காண்டுகளுக்கு முன்பே இப்படிக் கிடைத்ததாக எண்ணித் திடகாத்திரம் கொண்டேன் படிக்க, நான் சொல்வதை எழுத ஓர் உதவியாாரை வைத்துக் கொண்டேன் உதவியாளர் சாந்தாராம் எனக்குள் ஒருவரானார். அப்போது என்னை வந்து பார்த்த பல நண்பர்கள் கண்ணீர் விட்டனர். ஒருவர் என்முன் “விவிலியத்தைத் தாங்கி உருக்கமாக பிரார்த்தனை செய்தார். மேல்மருவத்தூருக்கு வருமாறு இன்னொருவர் வற்புறுத்தினார். மேல் மருவத்தூருக்கு வருகிறேன், அதே சமயம் யார் காலிலும் விழமாட்டேன் எனக்குள் எந்த எதிர்பார்ப்பும் இல்லை, பழுதுபட்ட ‘ரெட்டினாவை’ உயிர்ப்பிக்க உங்கள் முயற்சி பலிக்காது; போய் வந்து பிறகும் எனக்குப் பார்வை வரவில்லையே என்பதற்காக நீங்கள் வருந்தக் கூடாது’ என்றும் சொன்னேன். அப்படி கோயில் குளத்துக்குப் போய் கண்பார்வை திரும்பக் கிடைத்தால் எனக்குத்தான் அது பெரும் பிரச்னை , ‘எப்படி இது சாத்தியம்? என்ற முறையிலும் எனக்குத்தான் பெரும்பிரச்னை கடவுள் நம்பிக்கையை நான் கைவிட்டு எத்தனையோ ஆண்டுகள் ஆகி விட்டன. இனி கடவுளைத் தேடுவதென்பது என்னால் முடியாது’ என்றும் நண்பரிடம் வலியுறுத்திச் சொன்னேன். அவர் பேசாது விட்டு விட்டார்.” "இதை நீங்கள் ஒரு பெரும் இழப்பாக உணரவில்லையா? என்று கேட்டால் அதையும் பலமாக மறுக்கிறார். "ஊனம் என்பது உடலில் ஒரு புலனின் குறைபாடு, எனக்குக் கண்பார்வை இல்லை என்றாலும் வாழ்க்கை பற்றிய சரியான பார்வையை எனக்குள் நான் கொண்டிருக்கிறேன். உலகம், வரலாறு, சமூக வாழ்க்கை என்றெல்லாம் என் பார்வை விரித்து கொன்டேயிருக்கிறது. இந்தப் பார்வையை மார்க்சியத்திற்குள் இருந்தும் என் படிப்பறிவு, அறிஞர் தொடர்பு, வாழ்வியல் அனுபவங்கள் வழியாகவும் நான் பெற்றுக் கொண்டேன் கண் முதலிய எல்லா புலன்களையும் சரியாகப் பெற்றிருக்கும் பலருக்கும் இத்தகைய பார்வை இல்லை, வெளிச்சம் இல்லை, பணம், அதிகாரம், ஆணவம் என்று எத்தனையோ வழிகளில் அவர்கள் ஊனத்தோடுதானே வாழ்கிறார்கள்! "கண் பார்வை சரியாக இருந்த காலத்தில் இயற்கையின் பேரழகையும், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் மாணவர்கள் பல ஆயிரக்கணக்கானோரின் முகப் பொலிவையும் நான் கண்டிருக்கிறேன். இவை அனைத்தையும் இன்றும் என் நினைவிலிருந்து விரித்துப் பார்த்துக் கொள்கிறேன் இரண்டொரு கணங்கள் எனக்குள் தடுமாறத்தான் செய்கிறேன். என் மகனின், என் பேரனின் முக அழகைப் பார்க்க முடியவில்லையே என்ற கவலை அது. எனினும் அதுவும் எனக்குள் ஊனமாக நின்று விடுவதில்லை, நண்பர்கள் உதவியோடு படிக்கிறேன் தெரிந்து கொள்கிறேன், கருத்தரங்குகளுக்குச் செல்கிறேன்,தொடர்ந்து நூல்கள், பத்திரிகைகள் வெளியிடுகிறேன். பல திசைகளிலிருந்தும் இன்று நம் முன் புதிய அறிவு கொட்டப்படுவதையும் அறிகிறேன் இவற்தில் பெரும்பகுதியை நான் அரிய முடிவதில்லை. எனினும் இன்னும் நான் எடுத்துச் சொல்வதற்கு எத்தனையோ உள்ளன எனவும் உணர்கிறேன்! நீங்கள் சொல்லுவது போல் இதனை மறுபிறவி என்றும் சொல்ல மாட்டேன். இப்பிறவியின் தொடர்ச்சியேதான் இதுவும். என்னைப் பொறுத்த வரை பிறந்தது முதலே கண்பார்வை அறவே இல்லாதவர்கள் பற்றிச் சிந்திக்கும் பொழுதுதான் எனக்குள் பெரும் கவலை மூள்கிறது. இந்த உலகை அவர்கள் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? பிழைப்பதற்கு ஏதாவது வழி கண்டறிவதோடு அவர்கள் வாழ்க்கை சுருங்கித்தான் போக வேண்டுமா பிரபஞ்சம் என்ற பேரியக்கத்தை அவர்கள் எப்படி உணர்ந்து கொள்கிறார்கள். இவர்களுக்கு தத்துவ சிந்தனை சாத்தியம்தானா? என்றெல்லாம் கவலையுறுகிறேன். வாழ்க்கை பற்றிய தத்துவப் பார்வைதான் எல்லாவகை ஊனங்களையும் களைந்து கொள்வதற்கான ஒரே வழி, பொருளுக்காக, அதிகாரத்திற்காக அலைபவர்கள்தான் தங்கள் ஊனத்தை மறைத்துக் கொள்வதோடு பிறரையும் ஊனப்படுத்துபவர்கள்!" சந்திப்பு : கா.சு. வேலாயுதன் உயிர்நிழல் - 2001 மே - யமுனா ராஜேந்திரன் “தமிழன் என்பவன் உலகளாவிய மனிதன்” ஞானியுடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல் தமிழகத்தில் ஞானியோடு பரிச்சயமில்லாத தமிழிலக்கியப் படைப்பாளிகள், தமிழ்ச் சிந்தனையாளர்கள் எவரும் இல்லையெனச் சொல்லிவிடலாம். சகல விஷயங்களிலும் தத்துவத் தளத்திலிருந்து இடையீடு செய்தபடி இருப்பவர் ஞானி. அடிப்படையில் இவர் நடைமுறை அரசியல்வாதியோ கட்சி சார்ந்த சித்தாந்தியோ அல்ல. தன்னைச் சுற்றிலும் நடக்கின்ற அறிவார்ந்த விஷயங்களை - இலக்கியமாயினும், அரசியலாயினும், தத்துவமாயினும் - அவை அனைத்தையும் இவர் செரித்துக் கொள்வது தத்துவரீதியில்தானே தவிர அரசியல்ரீதியில் அல்ல. இடையீடு செய்வதுதான் இவருடைய சிந்தனை அமைப்பின் தன்மையாக இருக்கிறது. கருத்தியல் சார்பானவர்களோடும், கட்சி/இயக்கம் சார்ந்தவர்களோடும் உடன்பட்ட தருணங்கள் என்பவை இவரைப் பொறுத்தளவில் மிகவும் அரிது. இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் சார்ந்த பிரச்சினையாயினும், தலித்தியமாயினும், தேசியமாயினும் இவ்வாறே இருந்திருக்கிறது. அனைத்து விதமான நெருக்கடிகளிலும் வாழ்க்கை, அன்பு, விடுதலை, சமத்துவம் போன்ற விஷயங்கள் இவருக்கு முக்கியமானவை. விடுதலை சார்ந்த அரசியல் இயக்கங்கள் அனைத்தும் நிறுவனமயமாகிற தமது செயல்போக்கில் தவறவிட்டு விடுகிற விஷயங்களும் இவைதான். இதுவே தமிழ் அறிவுச் சூழலில் ஞானியின் குரலுக்குரிய முக்கியத்துவத்தை நிலைநாட்ட வல்லது. ஞானி பேசுகிற தத்துவ தரிசனம் சார்ந்த விஷயங்கள் உடனடி அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு நிறையச் சிக்கல்களைத் தரக்கூடியவை. தத்துவம், கலை, அரசியல் செயல்பாடு ஆகியவற்றுக்கு இடையில் உள்ள முரண்களைப் புரிந்து கொள்கிறவர்கள் ஞானியின் அக்கறைகளைப் புரிந்து கொள்வார்கள். ஞானி அன்புமயமான மனிதர். அனைத்து அர்த்தங்களிலும் தன்னைக் கடந்து போய்க் கொண்டிருப்பவர். முதுமையும் குழந்தைமையும் கலந்து போகிற உன்னத மனிதம் நோக்கிய நிலையில் இருப்பவர். அவர் ஆவேசத்துடன் பகிர்ந்து கொள்கிற பல்வேறு விஷயங்கள் நடைமுறைவாதிகளுக்குக் கசப்பூட்டக் கூடியவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நாம் அனைவரும் தவற விடும் பல்வேறு விஷயங்களை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்த உரையாடலின் முதல் வடிவம் பிரான்சிலிருந்து வெளியாகும் ‘உயிர்நிழல்’ இலக்கிய இதழில் வெளியானது. தமிழ்ச் சூழலில் சில விஷயங்களை நீங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறீர்கள். எடுத்துக்காட்டாக, மதம் பற்றிய உங்களது பார்வை. உங்களுடைய புத்தகங்களில் மிகவும் முக்கியமானதாக நான் கருதுவது ‘இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும்’. அந்தப் புத்தகத்துக்கான பொருத்தப்பாடு என்பது இன்றைக்கும் நிறையவே இருக்கிறது. நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் விமர்சனம் புரிய நிறைய இருக்கிறது. உங்களுடைய மற்றொரு முக்கியமான எழுத்து ‘கலை இலக்கியம்: ஒரு தத்துவப் பார்வை’ என்ற குறுநூல். அந்தக் காலத்தில் மிக முக்கியமான ஒரு புத்தகமாக அது இருந்தது. மேல்கட்டுமானம் அடிக்கட்டுமானம் குறித்த விஷயங்கள், கலாச்சாரம் மற்றும் கருத்தியல் போன்றவற்றில் பொருளாதாரம் நேரடியாகப் பாதிப்புச் செலுத்துவதில்லை என்பது போன்ற உங்களது வலியுறுத்தல்கள் அன்று முக்கியத்துவம் பெற்றவையாக இருந்தன. உங்களது வளர்ச்சியில் இப்போது ஏற்பட்டிருக்கும் ஒரு முக்கியமான பரிமாணமாக நான் பார்ப்பது தமிழ்த் தேசியம் என்பது. இந்தப் பேட்டியில் நான் உங்களிடம் கேட்க விரும்பும் முதல் கேள்வி இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும் என்பது பற்றியதுதான். இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் விவாதங்களோடு தொடர்புபடுத்தி அக்கேள்வி அமைகிறது. நமது வாழ்க்கையின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மார்க்சியம் அவசியமில்லை என்றால், அந்த மார்க்சியத்தை நாம் கைக்கொள்ளத் தேவையில்லை. நமது நெருக்கடிகளுக்கு சில சிந்தனைகள் உதவும் என்றால் அவற்றை எடுத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் அவை நமக்குத் தேவையில்லை. நமது மரபிலிருந்தும் மாற்று வாழ்க்கை மரபினுடைய வேர்களிலிருந்தும் நமது வாழ்வை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் வலியுறுத்தி வருகிறீர்கள். இந்திய வாழ்க்கை முறையிலிருந்துதான் சோசலிசம் அல்லது கம்யூனிசத்துக்கான வேர்களை நாம் இனம் கண்டு நமக்கான வளர்ச்சியை நோக்கிச் செல்ல முடியும் என்பதையும் வலியுறுத்தி வருகிறீர்கள். அவ்வாறு பார்க்கும்போது, இன்று மிக முக்கியமான அரசியலாக இருப்பது இலக்கியம், கலாச்சாரம், அரசியல் என்று எல்லாவற்றிலும் ஏற்பட்டிருக்கும் தலித் பார்வைதான். இந்திய மரபு இரண்டாயிரம் ஆண்டு கால மரபு என்று வைத்துக் கொண்டால், தலித்துகளின் அறிவார்ந்த மரபு என்பது அம்பேத்கருக்குப் பிறகுதான் வளர்ந்து வந்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் அவர்களது இலக்கிய மரபு, காவிய மரபு என்பதெல்லாம் இனித்தான் உருவாக்கப்பட வேண்டும். கடந்த எழுபத்தைந்து ஆண்டு கால மரபிலிருந்துதான் உருவாக்கப்பட வேண்டும். ஒப்பீட்டளவில், ஆப்ஃரோ அமெரிக்கக் கறுப்பின மக்களுக்கு இருநூறு ஆண்டு கால மரபு இருக்கிறது. இந்திய மரபு என்பது சாதிய அமைப்பை அடிப்படையாகக் கொண்ட இந்துத்துவ மரபாகத்தான் இருந்திருக்கிறது. தலித்துகளின் முகத்தரவு என்பது இந்தியக் காவியங்களிலோ கலைகளிலோ சிந்தனை மரபுகளிலோ இல்லை. இத்தகைய இந்திய மரபிலிருந்து தேர்ந்து கொள்வதற்கு இந்திய வாழ்க்கைமுறையின் கடைக்கோடியில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்ன இருக்கிறதென்று நினைக்கிறீர்கள்? என்னுடைய முதல் நூலான ‘இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும்’ பற்றிச் சொன்னீர்கள். அந்நூலுக்குத் தொடக்கத்தில் மருதமுத்து, செந்தில்நாதன் போன்றவர்களால் எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அன்று மார்க்சியத்தை உள்வாங்கிக் கொண்டவர்களுக்கு மதம் பற்றிய சரியான பார்வை கிடையாது. மதம் பற்றிய விரிவான பார்வை ஒரு மார்க்சியனுக்கு மிக மிக அவசியம். இதயமற்ற உலகின் இதயம் என்று மதம் குறித்து மார்க்ஸ் சொன்னது மிக முக்கியமானது என்பது என் கருத்து. தொடக்க காலத்தில் நான் இந்திய வாழ்க்கை என்று பேசினேன். நாளடைவில் இந்திய வாழ்க்கை என்ற சொற்றொடரே ஏற்புடையதாக இல்லாமல் போனது. இந்தியா என்ற பெயரே பின்னால் தரப்பட்டதாக இருந்தாலும், பொதுவாக இந்திய நாகரிகம் என்ற சொற்றொடரை நாம் எடுத்துக் கொள்ளலாம். இந்தியாவுக்குரிய நிலப்பரப்பு இந்தியா எனப்படுவதற்கு முன்னால் என்னவாக இருந்தது என்பதெல்லாம் இப்போது அவசியம் என்று நான் நினைக்கவில்லை. இந்தியா என்ற நிலப்பரப்பு சிறிதோ பெரிதோ, எந்தளவு இருந்திருந்தாலும் கூட அதற்கு நீண்ட கால மாபெரும் மரபு ஒன்று இருந்து வந்திருக்கிறது. வரலாற்றுச் சூழல்கள் மாறியிருக்கிறபடி மரபுகளும் மாறியிருக்கின்றன. இருந்தாலும் மரபு என்று நாம் அடித்துச் சொல்ல வேண்டிய முக்கியமான கூறுகள் இருக்கின்றன. இரண்டாவது, இந்திய வாழ்க்கையில் இந்திய நாகரிகம் என்று பார்க்கிறபோது, டாக்டர் இராதாகிருஷ்ணன், சுனிதிகுமார் சட்டர்ஜி முதலியவர்கள் எல்லாம் சொன்ன ஒரு கருத்து இந்த விஷயத்தைத் மிகவும் தெளிவுபடுத்துவதாக இருக்கிறது. இந்திய நாகரிகத்தின் மேலடுக்கு ஆரிய நாகரிகம். அந்த மேலடுக்கை நீக்கிவிட்டுப் பார்த்தால், உள்ளிருப்பது முழுதும் திராவிட நாகரிகம் என்று அவர்கள் சொல்கிறார்கள். இங்குள்ள வேளாண்மை, நீர்ப்பாசனத் திட்டங்கள், மருத்துவம், நகர அமைப்பு போன்றவை எல்லாம் திராவிடக் கூறுகளாகத்தான் இருந்திருக்கின்றன என்பது பலருடைய கருத்து. இது போன்ற ஏராளமான விஷயங்களை ஸ்லேட்டர் கூறுகிறார். ஆகவே திராவிட நாகரிகம்தான் இந்திய வாழ்க்கையில் நெடுங்காலமாக மிக அழுத்தமான கூறாக இருந்திருக்கிறது. பொதுவாக ஆரிய நாகரிகம், திராவிட நாகரிகம் என்பதையெல்லாம் குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் நாம் வேறுபடுத்திப் பார்க்கிறோம். இப்படி வேறுபடுத்திப் பார்க்கும்போது, ஆரிய நாகரிகம் என்பதை மேலுலகச் சார்பு கொண்டது என்றும் திராவிட நாகரிகத்தை மனித வாழ்க்கை, நிலம், வேளாண்மை போன்றவற்றைச் சார்ந்தது என்றும் நாம் வேறுபடுத்தலாம். ஆரியருடைய தெய்வங்கள், வழிபாடுகள் போன்றவை வேள்விகளை அடிப்படையாகக் கொண்டவை. திராவிடர்களுடைய வழிபாடு கோயிலை அடிப்படையாகக் கொண்டது. திராவிட நாகரிகத்தின் மிக முக்கியமான ஒரு கூறு என்பதற்கு திருமுருகாற்றுப்படையில் இருந்து ஓர் அருமையான மேற்கோளை எடுத்துக் காட்டலாம். முருகன் என்பவன் எல்லா இடங்களிலும் இருக்கிறான். அறுபடை வீடுகள் என்று சொல்லிவிட்டு அவன் உயர்ந்த மலைகளில்தான் இருக்கிறான் என்று கூற முடியாது. ஒரு சாதாரண மரத்தடியில் இருந்து கொண்டு முருகனை நினைத்தால் அவன் ஓடி வருவான். அவன் அன்புமயமானவனாக இருக்கிறான் என்று திருமுருகாற்றுப்படையில் இருக்கிறது. இந்தக் கருத்தை நீங்கள் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், சித்தர் இலக்கியத்தில் மட்டுமல்ல, சித்தர் இலக்கியத்துக்கு மிக முற்பட்ட திருமூலரிடம் இருந்து திருக்குறளில் இருந்து இந்தக் கருத்தை நீங்கள் எடுக்கலாம். கடவுள் என்கிற கருத்தையும் மனிதச் சார்புள்ளதாகத்தான் கருதி வந்திருக்கிறோம். கடவுள் என்பது ஒரு கருத்தாக்கம், ஒரு கட்டமைப்பு. அந்தக் கட்டமைப்பைக் கலைத்துவிட்டுப் பார்த்தால் மறுபடியும் மனித வாழ்க்கை. இந்திய வாழ்க்கை என்பதை இந்த வகையில்தான் தொடர்ந்து பொருள்படுத்திக் கொண்டு வருகிறேன் நான். இப்படிப் பொருள்படுத்துகிற போதுதான் சங்க இலக்கியங்கள் போன்றவற்றையெல்லாம் இப்படிப் பார்க்க வேண்டியிருக்கிறது. உடுமலைக்குப் பக்கத்தில் இருக்கிற என்னுடைய நண்பர் பழனிவேலனார் என்பவர் ஒரு பெரிய ஆய்வை எழுதி அதை வெளியிடுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. புறநானூறு போன்ற இலக்கியங்களில் - குறவர் குறமகளிர் எல்லாம் சேர்த்து - சுமார் பத்துப் புலவர்களைக் குறிப்பிடுகிறார் அவர். அந்தப் புலவர்களுடைய வாழ்க்கையைப் பார்த்தீர்களானால், குறவர் குறமகளிர் போன்றவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியாகக் கருதப்படவே இல்லை. அவர்களும் ஒரு தொழிற்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு அப்பால், அவர்கள் கீழ்ப்பட்ட நிலையில் வாழ்ந்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் கிடையாது. குணாவுடைய ‘வள்ளுவத்தின் வீழ்ச்சி’ என்ற நூலைப் பார்த்தீர்களானால், வள்ளுவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் கணிதத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள்; வானியலில் தேர்ந்தவர்களாக இருந்தார்கள்; மருத்துவத்தில் தேர்ந்தவர்களாக இருந்தார்கள்; மெய்யியலில் மிக மிகத் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள். வைசேடிகம் என்று சொல்லப்படும் மெய்யியல் பள்ளிக்கு மூலவர்கள் அந்த வள்ளுவர்கள்தான் என்பதை ஏராளமான ஆதாரங்களோடு அவர் நிறுவியிருக்கிறார். பிற்காலத்தில் பார்த்தால் வள்ளுவர்கள் என்பது ஒரு பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியாய் இருக்கிறது. சங்ககாலத்தில் பார்த்தால் சாதி வேறுபாடு என்பது பெரிய அளவுக்கு ஏற்றத்தாழ்வோடு இல்லை. புறநானூற்றில் பார்த்தால் துடியன் என்பது போன்று சுமார் நான்கு சாதிகளைக் கூறி இவர்களன்றி வேறு குடியும் இல்லை என்னும் அற்புதமான மேற்கோள் இருக்கிறது. மேற்பிறந்தார், கீழ்ப்பிறந்தார் போன்ற விஷயங்கள் புறநானூற்றில் இருந்தாலும், கல்வியறிவுடையவன் கீழ்க்குடியில் பிறந்தாலும் மேற்குடியில் பிறந்தவர்கள் அவனைச் சமமாக மதிப்பார்கள் என்பதும் இருக்கிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவர் கூறுகிறார். நற்றிணையில் மிகவும் அருமையான ஒரு பாடல் இருக்கிறது. நெய்தல் தலைவியை நகரத்தைச் சேர்ந்த தலைவன் வந்து சந்தித்துவிட்டுச் செல்கிறான். அவனிடம் தலைவி, ‘நீ நகரத்தில் வாழக்கூடியவன். வணிகம் முதலியவற்றைச் சார்ந்தவன். (உன்னுடைய சாதி வேறு என்ற வார்த்தை இல்லாவிட்டாலும்) நீ வேறு. நாங்களோ மீன் பிடிக்கும் பரதவர் குலத்தைச் சேர்ந்தவர்கள். பக்கத்தில் வராதே. புலவு நாறும், புலவு நாறும்’ என்கிறாள். காதலிப்பதில் அது ஒரு கட்டம். ஒன்றிரண்டு முறை அவ்வாறு கூறி அவனைத் துரத்திவிட்டு, அதன் பிறகும் அவன் தன்னைக் காதலிக்கத் தயாராய் இருக்கிறானா என்று சோதித்துப் பார்க்கும் முயற்சி அது. அதே போல் கலித்தொகை முதலிய நூல்களில் இலக்கணப்படி பார்த்தால், கைக்கிளை, பெருந்திணை, ஐந்திணைக்கான இலக்கணம் என்பது ஒன்று. அது இலக்கணப் புலவர்கள் செய்த சில வரையறைகள். அந்த வரையறைகளில்தான் மேல், கீழ் என்ற பாகுபாடு கூடுதலாகப் புகுந்து விட்டதாக நான் நினைக்கிறேன். இந்த வரையறைகளுக்குப் பொருத்தமாக அந்தப் பாடல்களை வைத்துப் பார்க்கலாம் என்று எனக்குத் தோன்றவில்லை. அதே போல் காதலுக்குரிய இலக்கணமாக இன்னார்தான் காதல் புரியலாம் என்ற சொல்லி வைக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கணமானது நற்றிணைப் பாடல்களில் அடிபடுகிறது. இன்னும் தேடிப் பார்த்தால், கலித்தொகையில் அது சுத்தமாக அடிபட்டுப் போகிறது. இலக்கணப் புலவர்கள் எனப்பட்டவர்கள் சாதி வேற்றுமை, வருண வேற்றுமை போன்றவற்றுக்கு எப்படியோ அழுத்தம் கொடுத்து விட்டார்கள். ஆனால் இயல்பான வாழ்க்கையில் அப்படி இல்லை. மேற்குடி, கீழ்க்குடி போன்றவைகளைப் பிரித்துப் பார்க்க வேண்டிய தேவை இருந்தாலும்கூட, இதை மீறித்தான் காதல் இருந்து வந்திருக்கிறது. தொல்காப்பியர் கூறும் திணைமயக்கம் என்பது மிக அற்புதமானது. சொல்லப் போனால், சங்க இலக்கியம் முழுவதையும் திணைமயக்கம் என்று எடுத்துக் கொள்வது மிகவும் வளமான பொருளைத் தரும். தொல்காப்பியரோ, நாற்கவிராசன்நம்பியோ சங்க இலக்கியப் பாடல் முதலியவற்றுக்கெல்லாம் கொடுத்திருக்கிற அர்த்தம் உள்ளதே, இந்தப் பொருள்கோடல்களைப் பண்டிதர்கள் அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். அதை நாம் அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. மேலும் இதுபோன்ற பொருள்கோடல்களை வேரடிப்படையில் நாம் திரட்டுவது இன்னொரு வகையான ஆய்வைச் செய்வதற்கு நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது அகத்திணை, புறத்திணை முதலிய இலக்கணங்களை, அவற்றையும்கூட தொல்காப்பியருடைய இலக்கணம் என்று ஒதுக்கி விட்டு, மீண்டும் இந்தப் பாடல்களை எல்லாம் கூடுதலான ஆய்வுக்கு உட்படுத்தினால், வேறு பொருளுக்கு நாம் செல்ல முடியும். அதற்கான நியாயம் நிறைய இருக்கிறது. தெலுங்கு மொழியில் சங்ககாலத்திலேயே எழுதப்பட்ட சப்தசதி என்ற நூல் இருக்கிறது. அதை ஆந்திர நாட்டு அகநானாறு என்று மிகவும் அருமையான முறையில் முகுந்தராஜா மொழிபெயர்த்திருக்கிறார். அந்த நூலில் கைக்கிளை, பெருந்திணை, ஐந்திணை என்ற வேறுபாடு எல்லாம் இல்லை. அது மிகவும் அற்புதமான சில கூறுகளைச் சொல்கிறது. சங்க இலக்கியம் நிச்சயமாக அந்த வடிவில்தான் இருந்திருக்க முடியும். சங்க இலக்கியத் தொகுப்பாளர்கள், இலக்கணப் புலவர்கள் எல்லோரும் உள்ளே நுழைந்தபோதுதான் இது போன்ற சில வேறுபாடுகளை உட்புகுத்தி விட்டார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. அந்த வகையில் பார்த்தால், தொடக்ககால சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளோ சாதி வேறுபாடுகளோ இவ்வளவு அதிகமாக இல்லை என்பது மட்டுமல்ல, அது பெரிய அளவுக்குப் பொருட்படுத்தப்பட்டதும் இல்லை. திணை வேறுபாடுகள் எல்லாம் வந்து, ஆட்சி முறைகள் எல்லாம் வந்து, செல்வம் மக்கள் மத்தியில் வந்து, மக்கள் மத்தியில் சில ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் ஏற்பட்ட காலத்தில், தமிழ்ச் சான்றோர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் அந்த ஏற்றத்தாழ்வுகளை ஒப்புக் கொள்ளவில்லை. அவர்கள் மறுபடியும் அன்பினைந்திணை, அன்பினைந்திணை என்றே பேசுகிறார்கள். திணைகளுக்கிடையில் வேறுபாடுகள் இருந்தாலும்கூட, அன்பைப் பொறுத்த வரையில் ஆண், பெண் இடையில் உறவை ஏற்படுத்த வேண்டுமென்று அவர்கள் மிகவும் வற்புறுத்துகிறார்கள். இதற்காக கபிலர் முதலியவர்களை எல்லாம் நான் மேற்கோள் காட்ட வேண்டிய அவசியமில்லை. இந்த வடிவத்தில் எடுத்துக் கொண்டீர்களானால், இன்று தலித்தியம் என்று சொல்லப்படுவது ஒரு வகையில் அரசியலாக்கப்பட்டிருக்கிறது. இந்த அரசியல் பார்வையோடு அந்தச் சங்க இலக்கியத்தைப் பார்ப்பதில் சிலர் அதிகமான அரசியல் ஆவேசத்தோடு, கூடுதலான ஆவேசத்தோடு அந்த இலக்கியத்துக்குள் புகுந்து, அந்த இலக்கியத்தில் தலித்துக்கு எங்கே மரியாதை இருக்கிறது என்று கேட்கிறார்கள். உயர்சாதிகளின் இலக்கியம்தானே அது என்றெல்லாம் சொல்கிறார்கள். எனக்கென்னவோ அப்படித் தோன்றவில்லை. அப்படிச் சில கூறுகளை இன்றைய தேவை கருதிக் கண்டுபிடிப்பது என்பது உங்களுக்குத் தேவை என்று சொன்னால் கூட, அந்தக் கூறுகள் இருப்பதாக வைத்துக் கொண்டாலும் கூட, அவை மிகவும் அதிகமாக இல்லை. அவை மிகவும் இலேசான கூறுகள்தான். சாதி என்பது ஒரு சூழலில் இலேசாகத் தோன்றி நாளடைவில்தான் வெவ்வேறு சூழல்களில் பலப்பட்டிருக்க வேண்டும் என்பது ஒரு பொது உண்மை. அந்த வேறுபாடுகள், முரண்பாடுகள் சமூகத்துக்குள் வந்துவிட்ட சமயத்தில் கூட, அவற்றுக்கு அழுத்தம் தர வேண்டாம், அவற்றை மீறி நாம் இயங்குவது என்பது வேண்டும் என்பது வள்ளுவர் முதலியவர்களின் நெறியாக இருந்திருக்கிறது. மனிதர்கள் மத்தியில் ஒரு சமத்துவத்தை உருவாக்குவதை இலக்கியம் உள்ளுறையாகக் கொண்டிருக்கிறது எனப் பார்க்கும்போது நமக்கு இன்னும் கூடுதலான அர்த்தத்தை வழங்கக்கூடும் என்று நினைக்கிறேன். தமிழ் மரபு என்பதை நாம் அங்கிருந்து தொடங்க வேண்டும். தமிழ் மரபு என்பதை நீங்கள் பல வகைகளில் அர்த்தப்படுத்தலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, இந்த சமத்துவம் என்பது தமிழ் மரபுக்குள் இருக்கிறது. ஏனென்றால் ஆதிப் பொதுமைச் சமூகத்தில் மனிதர்களுக்கு இடையில் வர்க்க வேறுபாடுகள் இல்லை. மனிதர்கள் பொதுமைக் கூறுகளோடுதான் வாழ்ந்தார்கள். சங்ககாலத்தில்தான் அது மாறுகிறது, மாறத் தொடங்கியது. நாகரிகம், அரசு ஆதிக்கம் முதலியவை எல்லாம் வரும்போதுதான் மாறுகிறது. ஆனால் இந்த மாற்றத்துக்கு இடையில் ஏராளமான போராட்டங்கள் நடந்திருக்கின்றன. பாரி மற்றும் கடையெழு வள்ளல்கள், கோப்பெருஞ்சோழன் போன்றவர்களுடைய வாழ்க்கைக்குள் பார்க்கலாம். அந்தப் பொதுமைக் கூறுகளைப் புலவர்கள் மட்டுமல்ல, சில வேளிர்களும் மன்னர்களும் கூட இழக்க விரும்பவில்லை. ஆனால் வேந்தர்களைப் பொறுத்த மட்டில் அதை அடித்து நொறுக்க வேண்டும் என்று ஆத்திரத்தோடு இருந்தார்கள். பொதுமைக் கூறு என்பதைத் திருக்குறளில் ஒப்புரவு என்று காண்கிறோம். அது சமதர்மம், சமத்துவம் என்று அர்த்தம் தரக்கூடியது. இது போல நிறையக் குறள்கள் இருக்கின்றன. நீர் நிறைந்தற்றே என்பதற்கு என்ன அர்த்தம் என்று சொன்னால், மழை பெய்கிறது, ஊர் நடுவில் இருக்கிற குளம் நிறைகிறது, தேவையுள்ளவர்கள் நீர் எடுத்துச் செல்லலாம், யாரையும் கேட்கத் தேவையில்லை, அது ஊருக்குச் சொத்து, வளங்களை யார் வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்ற கருத்தெல்லாம் இருக்கிறது. இந்த மரபு தமிழ் இலக்கியத்தில் தொடர்ந்து வருகிறது. சித்தர் இலக்கியத்தில் இதை நீங்கள் மிகவும் அழுத்தமாகப் பார்க்கலாம். இப்போதுதான் சாதியென்ன, கோயிலென்ன, சடங்கென்ன என்கிற விஷயங்கள் எல்லாம் வருகின்றன. மனதுக்குள் இருப்பதைக் கடவுள் என்கிற மாதிரி அவர்கள் அர்த்தம் கொள்கிறார்கள். இந்தக் கடவுள் மனித எல்லையைக் கடந்த ஒரு கடவுள் அல்ல. மனிதனுக்கும் இது நெருக்கமான கடவுள். ஒரு தவறு நடந்து அதுவரை சும்மா இருந்துவிட்டு மதுரை நகரம் தீக்கிரையாகும் சமயத்தில் கண்ணகியிடம் வந்து கெஞ்சிக் கேட்டு அக்கினியில் இருந்து விடுதலை பெறுகிறது ஒரு தெய்வம். அப்படியென்றால் அந்தத் தெய்வம் ஒன்றும் மனிதனுக்கு மேம்பட்டது அல்ல என்று ஒரு கருத்து வருகிறது. வள்ளுவரும் அதைப் போலத்தான். வறுமையைத்தான் கடவுள் படைத்தார் என்றால், அவனும் அலைந்து திரிந்து பிச்சையெடுத்துச் சாகட்டும் என்கிறார். கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் இரண்டு கருத்தாக்கங்களை வைத்துக்கொண்டு இதை யோசித்துப் பாருங்கள். பிற்காலத்தில் சித்தர்கள் வடிவத்தில் நாம் பேசினாலும் கூட, இந்த இயக்கம் என்பது தமிழ் மரபுக்குள் ஆழமாக இருக்கிறது. வள்ளுவருக்குள் இருக்கிறது, நக்கீரனுக்குள் இருக்கிறது. இவற்றை எல்லாம் எடுத்துக் கொள்ளும்போது, தமிழ் மரபை நீங்கள் சமதர்மம் என்று அர்த்தப்படுத்தலாம். சமத்துவம் என்றால் மனிதர்களுக்கு மத்தியில் வேறுபாடுகள் அவசியமில்லை. சமதர்மம் என்பது எல்லாவற்றையும் பொதுவாக வைத்துக் கொள் என்பது. இந்த மரபு மீண்டும் நமக்கு வேண்டும் என்று சொன்னால், தலித் அரசியல் என்பதை இவ்வளவு தூரம் இன்றைக்கு குறிப்பிட்ட தேவைக்காகத் தூக்குகிறார்கள் பாருங்கள், அப்படித் தூக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்று வேறுபாடு மிகவும் கனமாகிப் போயிருக்கிறது, பெரிதாகிப் போயிருக்கிறது. மறுக்கத்தான் வேண்டும். அதில் இரண்டு மாறுபட்ட கருத்துகள் இல்லை. இதன் காரணமாக நீங்கள் பழைய இலக்கியங்களை தற்காலிகமாக மறுத்தோ இழிவுபடுத்தியோ பேசுவதுகூட என்னைப் பொறுத்து பெரிய தவறு என்று எடுத்துக்கொள்ள மாட்டேன். இலக்கியத்தைக் காப்பாற்றுகிறோமா, மக்களைக் காப்பாற்றுகிறோமா என்று பார்த்தால், மக்கள்தான் நமக்கு முதன்மையானவர்கள். இலக்கியத்தை எப்படிப் பார்ப்பது, எப்படிச் செழுமைப்படுத்துவது என்பதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அப்படிப் பார்க்கும்போது தமிழ் மரபு என்பது அப்படி ஒன்றும் ஆதிக்க மரபு அல்ல. தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில், அவர்கள் மூவேந்தர்களைப் பாராட்டுவது, இராஜராஜ சோழனுக்கு விழா எடுப்பது போன்றவற்றில் தமிழ் மரபின் ஆதிக்கக் கூறு இருக்கிறது. இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும் என்பது குறித்துத்தான் நான் கேட்டேன். ஆனால் நீங்கள் தமிழ் வாழ்க்கை, தமிழ்ப் பொதுமை, தமிழ் தலித்தியம் குறித்துத்தான் சொல்லியிருக்கிறீர்கள். இவ்வாறு இன்றைக்கு உங்கள் சிந்தனை அமைப்பில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆரம்பத்தில் இந்திய வாழ்க்கை என்பதற்கு அழுத்தம் கொடுத்து வந்த நீங்கள் இப்போது தமிழ் வாழ்க்கை என்பதற்கு அழுத்தம் கொடுத்து வருகிறீர்கள். நீங்கள் பேசும் தமிழ்த் தேசியம்தான் இப்போது தமிழ் வாழ்க்கை, தமிழ் மரபு என்று… ஒரு சிறு இடையீடு. இந்திய வாழ்க்கை என்று சொன்னால், இந்தியாவில் பல்வேறு வகையான தொழில் முதலியவற்றைச் செய்யக்கூடிய மக்கள் இருக்கிறார்கள். இந்த மக்களில் ஆரியர் என்று சொல்லக்கூடியவர்கள், அவர்களில் சத்திரியர், வைசியர் போன்றவர்களை உள்ளடக்கினால் கூட அவர்கள் மிகவும் சிறுபான்மைதான். மக்களில் பெரும்பான்மையினர் உழவர்களும் கைவினைஞர்களும் ஆதிப் பழங்குடியினரும் பெண்களும்தான். இவர்களுடைய வாழ்க்கை என்பது வேளாண்மை மற்றும் கைவினைத் தொழில்கள்தான். இவர்கள்தான் அசலான மனிதர்கள். இவர்களை ஆதிக்கம் செய்பவர்கள்தான் மற்றவர்கள். அவர்கள் ஆரியரோ, யாரோ - இந்த மக்களுடைய வாழ்க்கை என்பது எல்லாக் காலங்களிலும் உழைப்பும் பகிர்வும் என்றுதான் இருக்கும். இவர்களுக்குள் வேற்றுமை இருந்தாலும் கூட, சாதியென்ன மதமென்ன என்கிற கருத்துதான் பெரும்பாலும் இருக்கும். ஆனைமுத்துவின் அனுபவத்தைச் சொல்கிறேன். உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பயணம் செய்து அந்த மக்களோடு அவர் பேசியிருக்கிறார். அவர்கள் கேட்கிறார்கள், நாங்கள் என்ன இந்தி பேசுகிறோம், எப்படி அது ஆதிக்கம் செய்யும் என்று. ஆனால் அரசியல்வாதிகளுக்கு, வியாபாரிகளுக்கு ஆதிக்கத்துக்கென்று ஒரு மொழி தேவையாக இருக்கிறது. பீகார் மக்களைப் பொறுத்தளவில் இந்த மொழி ஏன் போய் பிற மக்களை ஆதிக்கம் செய்கிறது என்பது கேள்வியாய் இருக்கிறது. அதே போல், இந்திய வாழ்க்கை என்பதை வேதங்கள், வேதியர் என்று அர்த்தப்படுத்துகிற போக்கு இன்றும் இருக்கிறது. வேதத்துக்கு எதிரான போக்குத்தான் இந்தியாவில் நெடுங்காலமாக இருந்து வருகிறது. வேதக் கருத்து என்பதை இந்தியாவில் பெரும்பகுதி மக்கள் ஒப்புக்கொள்ளவில்லை. சமணம், பௌத்தம், சாங்கியம், சார்வாகம், நியாயம், வைசேடிகம் இவையெல்லாம் வேத ஆதிக்கத்துக்கு எதிரானவை. வைதீகர்களின் ஆதிக்கத்துக்கு எதிரானவை. உபநிடதங்கள் பற்றி டாக்டர் சுப்பிரமணியம் மிகவும் அற்புதமாக எடுத்துக் காட்டுகிறார். கொள்கை கோட்பாடுகளை எல்லாம் வேதங்களைக் காட்டிலும்  மிகவும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லக்கூடியவை உபநிடதங்கள். வேள்வி செய்யக்கூடிய பிராமணர்களை நாய்கள், பேய்கள் என்று கண்டிப்பதெல்லாம் அவற்றில் இருக்கிறது. இப்போது ‘குடிசையிலிருந்து’ என்று ஒரு நாவல் வெளிவந்திருக்கிறது. இந்தியாவுக்கு வந்த பிரெஞ்சுக்காரர் ஒருவர் தனது இந்திய வாழ்க்கை அனுபவங்களைச் சொல்லும் ஒரு சின்ன நாவல். மிகவும் அழகான நாவல் அது. அந்த நாவலில், இங்கிலாந்தின் ராயல் சொசைட்டியில் இருந்து இந்தியாவின் தத்துவங்களை எல்லாம் அறிந்து கொள்வதற்காக ஓர் ஆய்வாளர் வருகிறார். ஒரு பல்லக்கைக் கட்டிக் கொண்டு இந்தியா முழுதும் அலைகிறார். ஓலைச் சுவடிகளை எல்லாம் தொகுக்கிறார். அவர் சந்திக்கும் அனைவரும் ஒரிசாவின் புவனேஸ்வரில் உள்ள கோயிலில் இருக்கும் தலைமைப் பிராமணர்தான் இந்தியாவின் தத்துவத்துக்கு சரியான விளக்கம் சொல்லக் கூடியவர் என்று கூறுகிறார்கள். மிகவும் உயர்ந்த பீடத்தில் இருக்கும் அந்தப் பிராமணரைச் சந்திப்பது மிகவும் கடினமானது. ஆய்வாளர் மிகவும் சிரமப்பட்டு புவனேஸ்வர் அனுமன் கோயிலுக்குப் போய் அவரைப் பார்க்கிறார். கடவுள் என்றால் என்ன என்பது போன்ற கேள்விகளை அவரிடம் கேட்கிறார். அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலாக அந்தப் பிராமணர் ‘நான்’, ‘நான்’ என்றே கூறுகிறார். ஆய்வாளர் மிகவும் மனம் நொந்து போய் வெளியே வருகிறார். இரவு நேரம் காட்டு வழியில் தனது பல்லக்கில் அவர் போகும்போது பலத்த மழை பெய்கிறது. தூரத்தில் ஒரு குடிசையில் விளக்கெரிவதைப் பார்க்கிறார். அங்கே போய் உள்ளே வரலாமா என்று அனுமதி கேட்கிறார். அவர்கள் வரவேற்று உபசரிக்கிறார்கள். பிறகு அவர்களிடம் அவர் தனது சந்தேகங்களைக் கேட்கிறார். அந்த மனிதர் ஒரு பறையர். அவருக்கு ஒரு மனைவி. அவர் பிராமண விதவை. மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. காலை நேரம். நல்ல வெளிச்சம். அந்த மனிதர் தலையைத் தூக்கி வானத்தைப் பார்க்கிறார். தரையைப் பார்க்கிறார். இரண்டையும் கையெடுத்துக் கும்பிடுகிறார். இதுதான் கடவுள் என்கிறார். அந்த ஆய்வாளருக்குப் புரிந்து விடுகிறது. இதுதான் இந்தியத் தத்துவத்தின் மிச்சம் என்பது. இது இங்கேதான் இருக்கிறது, பிராமணனிடம் இல்லை என்பது அவருக்குப் புரிந்து விடுகிறது. அம்பேத்கர் வேதங்கள் பற்றி மிகவும் சிறப்பான முறையில் ஆய்வு செய்தவர். அவர் வேதங்கள் பற்றிச் சொல்கிறபோது இறுதியாக ஒன்றைச் சொல்கிறார். வேதங்களைத் தோண்டிக் கொண்டே போனால், எல்லாவற்றுக்கும் மூலம் கடவுள் என்று ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அதே வேதத்தில் இன்னும் தேடினால், எல்லாவற்றுக்கும் மூலம் மனிதன் என்ற கருத்து காணப்படுகிறது என்று அம்பேத்கர் கூறுகிறார். சாங்கியம், சார்வாகம், சமணம், பௌத்தம் இவற்றை எல்லாம் உள்ளடக்கிப் பாருங்கள். தர்ம சாஸ்திரம் என்பது மனு மட்டுமல்ல. மிகவும் கதையடிக்கிறார்கள். இந்த மனுதர்ம சாஸ்திரத்தை மறுக்கிற தர்ம சாஸ்திரங்கள் உண்டு. ஆகமம் என்றால் ஒன்றுதான் என்று இல்லை. பல இருக்கின்றன. இவற்றின் விளைநிலம் எது என்று பார்த்தால் இந்திய வாழ்க்கைதான். வாழ்க்கைக்குள் இருந்துதான் இவை எல்லாம் வருகின்றன. ஆதிவாசிகள், பெண்கள், வேளாண்மை செய்பவர்கள், கைவினைஞர்கள் இவர்கள்தான் அசலான வாழ்க்கை உடையவர்கள். மனிதன் எனப்படுபவன் இங்கிருந்துதான் வருகிறான். பிராமணனுக்கு மண் தெரியாது, உழைப்பு தெரியாது, காடு தெரியாது, வேறு எதுவும் அவனுக்குத் தெரியாது. அவனுடைய தத்துவத்தை நாம் மையப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால் சிலர் அதை மகிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். சங்கரர் கூட அதை மகிமைப்படுத்தினார் என்று நான் நினைக்கவில்லை. நமது பெரியார்தாசன் போன்றவர்கள் ஆதிசங்கரரின் உண்மையான படைப்புகள் எவை என்பதை ஆய்வு செய்து, இறுதியில் இரண்டோ மூன்றோதான் சங்கரரின் உண்மையான படைப்புகள் என்கிறார். அவற்றில் பிராமணனைப் பற்றிப் பெருமையாகச் சொல்லக்கூடிய வரிகள் ஏதும் இல்லை என்கிறார். வாழ்க்கை என்று தொடங்கினால், உழைப்பு இருக்க வேண்டும், பயிர் இருக்க வேண்டும். இவற்றுக்குள்தான் மற்ற பண்புகள், மேன்மைகள் எல்லாம் அடங்கி இருக்கின்றன. உழைக்கிறவன்தான் மனிதன். உழைக்கிறவன்தான் கடவுள். இப்படியான கருத்துக்கெல்லாம் போனால்தான் இந்திய வாழ்க்கையை சரியானபடி அர்த்தப்படுத்துவதாகும். இந்துத்துவவாதிகள் சொல்லித் தொலைத்து விட்டார்கள் என்பதற்காகவே நாம் அதைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை. திராவிடன் என்று சொல்லக்கூடியவன், தமிழன் என்று சொல்லக்கூடியவன் இந்த மாதிரி ஆழமான ஒரு பார்வையை எடுத்துவிட்டு - வரலாற்றில் இதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன - ஆரியன் நமக்கு எதிரி என்றால், அவன் சொல்லக் கூடிய விளக்கங்களை நாம் எதற்காக எடுத்துக் கொள்ள வேண்டும்? நமக்கான அர்த்தத்தைத் தேடுவோம். அது இந்திய வாழ்க்கைக்குள் இருக்கிறதா என்று பார்த்து அடைய வேண்டுமே ஒழிய, பிராமணன் சொல்லி விட்டான் ‘நான் புத்திசாலி, நீ மடையன்’ என்று, ஆமாம் நான் மடையன்தான் என்று ஒத்துக் கொள்வதற்கு என்ன பெரிய ஆய்வு வேண்டிக் கிடக்கிறது? நான் எந்தப் பிராமணனுக்கும் இளைத்தவன் அல்ல. என்னுடைய அறிவு மகத்தான அறிவு. எந்தப் பிராமணனுக்கும் நான் அடிமைப்பட வேண்டிய அவசியமில்லை. பிராமணன் சொல்வதை அப்படியே நம்பி, ஆதிக்கம் செய்பவன் சொல்வதை அப்படியே நம்பி, அதுதான் என்னுடைய மரபு என்று எடுத்துக்கொண்டு, இப்படியே நாம் அழிந்துபோக வேண்டிய அவசியமில்லை. நமக்கு நெடுங்கால மரபு உண்டு. பத்தாயிரம், இருபதாயிரம் ஆண்டுகால மரபு உண்டு. இந்த இருபதாயிரம் ஆண்டுகால மரபைத் திரும்ப நாம் நினைத்துப் பார்த்தால், நிச்சயம் அது நம்மை நிலைநிறுத்தும். புத்தனையும் மற்றவர்களையும் நாம் இழந்துவிட வேண்டிய அவசியமேயில்லை. எந்தப் பிராமணனுக்கும் ஈடாக மட்டுமல்ல, மேலாக நாம் நிமிர்ந்து நிற்க முடியும். கடவுள், மதம், மரபு தொடர்பான இடதுசாரி அணுகுமுறைகளின் போதாமைகள் குறித்துப் பேசி வந்திருக்கிறோம். தமிழ்ச் சூழலில் கட்டுடைப்பு என்னும் போக்கு, நமது கலாச்சாரத்தில் நாம் தேர்ந்து கொள்ளக் கூடிய நேர்மறையான விஷயங்களைக் கூட இழிவு செய்வதாக இருப்பது பற்றி நீங்கள் சொன்னீர்கள். இடையில் நான் ஒன்று சொல்ல வேண்டி இருக்கிறது. கட்டுடைப்பு என்பது உண்மையில் தமிழ்ச் சூழலில் மிகவும் விகாரமாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. கட்டுடைப்பைப் பற்றி தெரிதா சொல்லும்போது, தான் கட்டுடைக்கும் படைப்பாளிகள் மீது தனக்கு நிறைய மதிப்பு இருக்கிறது என்று தெளிவாகச் சொல்கிறார். ஆனால் தமிழ்ச் சூழலில் கட்டுடைப்பு என்பது படைப்பாளிகளை இழிவுபடுத்துவது என்பதான கண்ணோட்டம்தான் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. கட்டுடைப்பு என்பது அரசியல் செயல்பாட்டுக்கான ஒரு கருவி என்று என்று அவர் பார்ப்பதும் இல்லை. தெரிதாவின் மேல், அவரது கட்டுடைப்பு முறையின் மேல் பல்வேறு ஆட்கள் மேற்கொள்கிற விமர்சனங்களில் இதுவும் ஒன்று. கட்டுடைப்பது என்பதை ஓர் அறிவார்ந்த முறையாகவே அவர் மேற்கொள்கிறார். தெரிதாவின் மார்க்ஸ் தொடர்பான பார்வை பற்றி விமர்சிக்கும்போது, இந்தப் போக்கு மார்க்சியம் தவிர்த்த மார்க்சிய அணுகுமுறை என்று ஈகிள்டன் கூறுகிறார். கட்டுடைப்பு என்பதை அதிர்ச்சி மதிப்புக்காகவோ, இழிவுபடுத்துவதற்காகவோ தெரிதா செய்யவில்லை. கட்டுடைப்பு என்ற பகுப்பாய்வுக் கருவியை சரியாக விளங்கிக் கொள்ள முடியாத நிலைதான் தமிழ்ச் சூழலில் நிலவுகிறது. முதலில் பார்க்க வேண்டிய விஷயம், நாம் ஏன் கட்டுடைப்புச் செய்கிறோம் என்பது. எந்த விஷயத்தையும் நிகழ்கால அனுபவங்களில் இருந்துதான் பார்க்கிறோம். நிகழ்காலத்தில் நமக்கு இருக்கும் நெருக்கடிகளுக்கான காரணங்களைத் தேடிக்கொண்டு போகும்போது, இந்த முரண்களுக்கான வேர்களைத் தேடிக்கொண்டு போகும்போது, நாம் கடந்தகாலத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது. கடந்தகாலங்களை நாம் அவற்றுக்கான வரலாற்றுச் சூழல்களில் வைத்துத்தான் பார்க்க வேண்டும். துரதிருஷ்டம் என்னவென்றால், கடந்தகாலத்தை அப்படியே நிகழ்காலத் தேவைகளோடு பொருத்திப் பார்க்கிறார்கள். அன்றைய சமூகச் சூழலில் அப்படி இருந்தது. ஒரு படைப்பாளி அல்லது சிந்தனையாளன் அன்றைய சமூகச் சூழலில் எப்படி மீறிப் பார்த்தான் என்று பார்க்க வேண்டும். புதுமைப்பித்தனை அவனது வாழ்நிலையோடு ஒட்டிப் பார்க்க வேண்டும். அவரை இழிவுபடுத்துவது போன்ற பார்வை சரியான கட்டுடைப்புப் பார்வை அல்லவே. தெரிதாவின் மூல எழுத்துக்களை நான் படிக்கவில்லை. நாகார்ஜூனன், அ.மார்க்ஸ் போன்றவர்கள் எப்படிச் சொல்கிறார்களோ அவற்றை வைத்துத்தான் நான் பார்க்கிறேன். ஆனால் படிக்கும்போதே, சுயமாக இது பற்றிய சில கருத்துகள் எனக்கு உண்டு. எனக்குள்ளேயே நான் தேடிக் கொள்கிறேன். கட்டுடைத்தலை இப்படி அர்த்தப்படுத்துவதன் மூலமாக, சரியான தமிழ் மரபு போன்றவற்றைக் கண்டுபிடிக்க முடியும். கடவுள் என்ற கருத்தாக்கத்தை எப்படிக் கட்டமைத்தார்கள் என்பதை எல்லாம் கண்டுபிடிக்க முடியும். இரண்டாவதாக, வரலாறு என்பது பெரும்பகுதி ஒரு கட்டமைப்புதான். அதை அர்த்தப்படுத்தும்போது, நிகழ்காலத் தேவைகள் எவையோ அவைதான் முன்னின்று அவற்றுக்கு ஏற்றாற்போல் ஒரு பழைய வரலாற்றைக் கட்டமைக்கிற போக்குதான் வரும். வரலாற்று உருவாக்கம் என்பது நிகழ்கால, எதிர்காலத் தேவைகள் அடிப்படையில்தான் உருவாகிறது என்பதைப் புரிந்து கொண்டு பார்த்தால், பழங்காலத்திலும் இதே மாதிரிதான் நிகழ்ந்தது என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. எதற்காக அப்படிச் சொல்கிறோம் என்றால், இன்றைக்குச் சில சக்திகளோடு போராடுவதற்காக அப்படிச் சொல்கிறோம். வரலாறு முழுக்க அப்படி இருந்தது என்று சொல்கிறோம். அப்படி இல்லை என்பது அவனுக்குத் தெரிய வேண்டும். தெரிந்து சொல்ல வேண்டும். நிகழ்காலத் தேவைகளை வைத்துத்தான் நாம் பழைய வரலாற்றைப் பொருள்படுத்திக் கொள்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டால், வரலாறு வேறு ஒரு வகையில் இருந்திருக்க முடியும், நாம் படுத்துவது ஒரு வகையில் ஒரு பொருள்கோடல், ஒரு விளக்கம் என்பதைப் புரிந்து கொண்டால், பழைய வரலாற்றின் மேல் இவ்வளவு வன்மையான ஒரு கோபத்தை நாம் கக்க வேண்டிய தேவை இல்லை. இங்கே ஒரு சிக்கலான விஷயம் இருக்கிறது. அதிகாரம் என்பதை எடுத்துக் கொண்டால், அதை நாம் மேல் தளத்தில் மிகவும் மேம்போக்காகத்தான் பார்த்துப் பழக்கப்பட்டிருக்கிறோம். குடும்பம் என்று எடுத்துக் கொண்டால், ஆண்-பெண் உறவு, குழந்தைகள், அவர்களுடைய செல்லப் பிராணிகள், அந்தப் பிராணிகள் கொல்கிற சிற்றுயிர்கள் என்று வன்முறையும் அதிகாரமும் வேறு வேறு தளங்களில் வேறு வேறு வகைகளில் இருக்கிறது. தற்போது அதிகாரம் குறித்த ஆய்வு மேற்கில் பரவலாக வரக் காரணம் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள். ஜிப்சிகள், சிறைக் கைதிகள், பரத்தையர், ஓரினப் புணர்ச்சியாளர்கள் இவர்கள் எல்லோரும் சமூகத்தில் மிகவும் மோசமாக ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி இவர்கள் ஒதுக்கப்படுவதற்கான மதிப்பீடுகள் எதன் மீது கட்டப்பட்டவை என்று பார்க்கும்போதுதான் அதிகாரம் குறித்த ஆய்வுகள் வருகின்றன. பூக்கோவுக்கு அதிகாரம் தொடர்பான ஆய்வுகள் பாலுறவில் தொடங்குகிறது. ஏனென்றால் அவர் ஓரினப் புணர்ச்சியாளர். அதே போல், அவர் சிறைக் கைதிகள், மனநிலை மருத்துவமனைகளில் இருப்பவர்களைச் சந்திக்கும்போது இது போல ஒதுக்கப்பட்டவர்கள் பற்றிய ஆய்வுகளில் இருந்து அதிகாரம் தொடர்பான அக்கறை அவருடைய எழுத்துக்களை எல்லாவற்றிலும் விரவிக் கொண்டு போகிறது. அதிகாரம் பற்றிய ஆய்வு முக்கியத்துவம் அதிலிருந்துதான் அவருக்குத் தொடங்குகிறது. தமிழ்ச் சூழலில் பார்த்தால், தலித் தொடர்பான கேள்விகளைப் பெரும்பாலானவர்கள் எழுப்பிக் கொண்டாலும், தலித் தொடர்பான விஷயங்களை அதிகம் பேசாத தலித்தற்ற உரையாடலுக்குள் இருந்துதான் நாம் இதுவரை பேசிக் கொண்டிருந்திருக்கிறோம். இந்தச் சூழலில் இருந்துதான் அதிகாரம் தொடர்பான ஆய்வுகளின் தேவை இந்தியச் சமூகத்தில் இருக்கிறது என தலித் கோட்பாட்டாளர்கள் நினைக்கிறார்கள். இதுவரையில் நீங்கள் பார்த்துக் கொண்டு வந்த எல்லா விஷயங்களையுமே தத்துவரீதியாகத்தான் பார்த்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள். ஆனால் அன்றாட உறவுகள் இருப்பது அரசியல் பொருளாதார உறவுகளில்தான். இந்த உறவுகளில் அன்றாட அதிகாரத்தை எதிர்கொள்பவர்கள்தான் அதிகாரத்தின் வேர்களைத் தேடிச் செல்பவர்களாக இருக்கிறார்கள். இப்படித்தான், நமது பழந்தமிழ் இலக்கியங்களில் அதிகாரம் எவ்வாறு உறைந்திருக்கிறது என்ற விஷயத்தைப் பார்க்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. மராத்திய தலித் கோட்பாட்டாளரும் இலக்கியவாதியுமான அர்ஜுன் டாங்க்ளே கூறுகிறபடி, முதன்முதலில் மராட்டியத்தில் தலித் இலக்கியம் வந்தபோது மரபான விமர்சகர்கள் முன்வைத்த விமர்சனம் என்னவென்றால், இதில் அழகியல் இல்லை, இதற்கு அழகியல் மதிப்பு இல்லை, இவர்களுக்கு வடிவம் தெரியவில்லை, மொழியைச் சரியாகப் பாவிக்கத் தெரியவில்லை என்ற விமர்சனங்களை முன்வைத்தார்கள். இதில் பார்க்க வேண்டியது என்னவென்றால், அழகியல் மதிப்பீடுகள் என்றால் என்ன? அழகியல் அறம் என்றால் என்ன? மொழி தொடர்பான பயிற்சி அல்லது தேர்ச்சி என்பது என்ன? இது போன்ற கேள்விகள் வரும்போது, இதற்கான அடிப்படைகள் மரபில் இருந்துதான் வருகின்றன எனும்போது, இந்த மரபுகளில் நாங்கள் இல்லாதபோது, எங்களுக்கான அழகியலை நாங்கள் உருவாக்குவது எவ்வாறு என்ற கேள்வி முன்னெழுகிறது. இது போன்ற சூழல்களில்தான் அதிகாரம் தொடர்பான கேள்விகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. லெவி ஸ்ட்ராஸ் கூட, பிரேசில் மக்களுடைய கலாச்சாரத்தைப் பார்க்கும்போது மேற்கத்திய மதிப்பீடுகளில் இருந்து விலகி கலாச்சாரச் சார்புநிலையில் இருந்து பார்க்க வேண்டும் என்கிறார். அதிகாரத்தைக் குறித்த பார்வை என்று எனது நண்பர்கள் சொன்னபோது, எனக்கு அது அதிர்ச்சியைத் தரவில்லை. மிகவும் அற்புதமான ஆய்வுக் கருவியாக அதைத் தொடக்கத்திலேயே என்னால் எடுத்துக் கொள்ள முடிந்தது. அந்த வகையில் பார்த்தீர்கள் என்று சொன்னால், மன்னராட்சி என்பதையே நாம் மகிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. பொருள் குவிப்பை நாம் மகிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதிகாரம் யார் செய்தாலும் நிச்சயம் அதிகாரம் செய்கிறவனையும்  அது அழிக்கும். மார்க்சுடைய அற்புதமான ஒரு மேற்கோளை நாகராஜன் அடிக்கடி குறிப்பிடுவார். ஆண்டானுக்கு விடுதலை தேவை என்று சொன்னால் அடிமைக்கு விடுதலை தர வேண்டும் என்று ஒரு கருத்து. மிகவும் அருமையான கருத்து. இந்தக் கருத்து நமக்கு எவ்வளவோ விஷயங்களைத் துல்லியப்படுத்துது. இதை நாம் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம். இப்பொழுது மத்தியதர வர்க்கம், சாதி வர்க்கம் என்று ஏதோ ஒரு படிநிலையில் நான் இருக்கிறேன் என்று சொன்னால், எனக்குக் கீழே தலித் மக்கள் இருக்கிறார்கள். என்னுடைய படிப்பு, என்னுடைய வாழ்க்கை, என்னுடைய இலக்கியம் எல்லாம் எனக்கு எவ்வளவோ சக்தியைக் கொடுத்திருக்கிறது. எவ்வளவோ பார்வைகளைக் கொடுத்திருக்கிறது. இதற்கெல்லாம் ஆதாரமாக இருப்பது அவரவர் வாழ்க்கைதான். அவர்களுடைய வாழ்க்கைக்கு மேல்தான் என்னுடைய வாழ்க்கை கட்டப்பட்டிருக்கிறது. சரியாகச் சொல்லப் போனால், அவர்களுடைய வாழ்க்கையின் அழகை அழித்துவிட்டுத்தான் எனக்குள்ள அழகை நான் வளர்த்திருக்கிறேன். அவர்களுடைய அழிவை அழித்துவிட்டுத்தான் எனக்குள்ள அழிவை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். அவர்களை அதிகாரம் செய்துதான் எனக்குள்ள அதிகாரத்தை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். இப்படிப் புரிந்து கொள்வது ஒரு மார்க்சியவாதிக்கு மிக மிக எளிமையானது. மார்க்சியத்துக்குள்ளும் அதிகாரம் ஏராளமாகச் செறிந்து கிடக்கிறது. ஸ்டாலினியம் மட்டுமல்ல, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்ற அந்த மாபெரும் அதிகாரம் மட்டுமல்ல, அடித்தளத்துக்குத்தான் முதன்மை என்கிறபோதே அதற்குள் அதிகாரம் வந்துவிடுகிறது. இதை மாவோ கூடக் குறிப்பிட்டிருக்கிறார். அப்பொழுது இந்த அதிகாரம் என்பது அவசியமில்லை. இந்த அரசு உதிர்வது என்பது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் முடிந்து அப்புறம் அரசு உதிர்வது என்பது சாத்தியமே இல்லை. நீங்கள் எப்போது அதிகாரத்துக்கு வருகிறீர்களோ அப்போது அந்த நிமிடத்தில் இருந்தே அதிகாரத்தைக் களைவது, மக்களிடத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பது, மக்களை அதிகாரமயப்படுத்துவது என்பதான ஒரு போக்கு நிச்சயமாக நடந்திருக்க வேண்டும். ஆனால் ரஸ்யாவில் அப்படி நடக்கவில்லை. சீனாவில் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் அது பெரிய அளவுக்கு நடைபெறவில்லை. மார்க்சியத்துக்குள்ளிருந்து அதிகாரத்தைக் களைவது - இந்த அதிகாரத்தை நான் எப்படி அர்த்தப்படுத்துகிறேன் என்றால், மார்க்சியத்துக்குள்ளேயே முதலாளியம் போய் இறுக்கமாகப் பதிந்திருக்கிறது. முதலாளியமும் அதிகாரமும் பிரிக்க முடியாதது. மார்க்சியத்தில் முதலாளியம் பதிந்து விட்டதனால், உற்பத்தி சக்திகளுக்கு முதன்மை, அடித்தட்டுக்கு முதன்மை, கட்சிக்கு முதன்மை இந்த மாதிரி எல்லாம் கோட்பாடுகள் வரும்போது, இவை எல்லாவற்றுக்குள்ளும் அதிகாரம் புகுந்து கொள்கிறது. இதனால்தான் அறிவியல் தொழில்நுட்பத்தை விமர்சனம் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும்போது, அதற்குள் முதலாளியம், ஏகாதிபத்தியம் எல்லாம் பதுங்கி உள்ளே வந்து சேர்ந்து கொள்கிறது. தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் ஓர் அச்சு இயந்திரம் ஒரு நாளைக்கு இலட்சம் பக்கங்களைஅடிக்கும் என்று சொன்னார்கள். அந்த இயந்திரம் முழு அளவில் வேலை செய்வது என்றால் எத்தனை மரங்களை அழிக்க வேண்டி வரும் என்று பாருங்கள். எங்கெல்ஸின் அற்புதமான மேற்கோள் ஒன்று இருக்கிறது. புகாரினுடைய ‘கம்யூனிசம்’ என்ற புத்தகத்தில்தான் நான் அதைப் படித்தேன். நாகராஜன் சுட்டிக் காட்டினார். பெருந்தொழிலும் சோசலிசமும் ஒத்துப் போகாது என்று அந்த மேற்கோள் கூறுகிறது. மார்க்ஸ், எங்கெல்ஸ் படைப்புகளில் எந்த இடத்திலும் அந்த மேற்கோளை நான் பார்க்கவேயில்லை. புகாரின் எங்கெல்ஸிலிருந்து அந்த மேற்கோளை எடுத்து மிகவும் அற்புதமாகக் கூறுகிறார், பெருந்தொழிலும் சோசலிசமும் ஒத்துப் போகாது என்று. பெரிய நகரம், பெரிய அதிகார பீடம் மையத்தில் அதிகாரத்தைக் குவித்துக் கொண்டிருக்கிறது. மிகப் பெரிய இராணுவம், மிகப் பெரிய கட்சி, இப்படி இந்த பிரமாண்டமான கட்டுடைப்புகள் எந்த வகையில் செய்தாலும் அதிகாரக் குவியலை ஏற்படுத்துகிறது. அது மக்களை எந்த வகையிலாவது அழுத்தத்தான் செய்யும். ரஸ்யா உடைந்து போய்விட்டது என்று சொல்வதற்கு ஒரு முக்கியமான காரணம் இதுதான். அப்படியானால், அதிகாரத்தைக் களைவது என்பது மார்க்சியத்துக்குள் இல்லாதது என்று நான் நினைக்கவில்லை. அப்படிப் பார்க்கும்போது, தெரிதாவோ மற்றவர்களோ அதிகாரத்தைக் களைவது என்பதை விட்டுவிட்டு சூனியத்துக்குப் போய்ச் சேர வேண்டியதில்லை. இதை ஒப்புக் கொண்டார்கள் என்றால், எத்தனையோ விஷயங்கள் நமக்குத் தெளிவுபட்டுவிடும். திருடர்களை நம் சமூகத்தில் நிறையப் பேர் குற்றம் சாட்டுகிறோம். வியாபாரி என்பவனை விடப் பெரிய திருடன் வேறு எவனும் இல்லை. மார்க்ஸ் சொன்ன மாதிரி, முதலாளியை விட கற்பழிப்பு செய்யக்கூடிய வேறொருவன் கிடையாது. இவனெல்லாம் சமூகத்தில் முக்கியமானவன் என்று சொல்லிக் கொண்டு, சில பெண்களை உடலை விற்பனை செய்யக்கூடிய பெண்கள் என்று கேவலப்படுத்துகிறார்கள். குற்றம் செய்பவனை விட்டுவிட்டு குற்றத்துக்கு உள்ளாக்கப்பட்டவர்களை சிறைக்குள் தள்ளுகிறார்கள். எங்களுடைய சமூகம் மிகவும் ஆரோக்கியமானது, சட்ட வரையறைக்குள் இயங்குவது என்று சொல்கிறார்கள். தலித் மக்களை மட்டுமல்ல, சமூகத்தின் ஒவ்வொரு பகுதி மக்களாக விளிம்பு நிலைக்குத் தள்ளிக் கொண்டு வருகிறார்கள். சந்தைப் பொருளாதார உலகமயமாதல் சூழலில் இது மிகவும் வெளிப்படையாகவே தெரிகிறது. இன்று இருக்கும் அத்தனை உழவர்களையும் விளிம்பு நிலைக்குத் தள்ளிக் கொண்டு இருக்கிறார்கள். உழவர்களை மட்டுமல்ல, கைவினைஞர்கள், பிறர் எல்லாம் ஏற்கெனவே விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள். தமிழ்ச் சூழலில் அரசாங்கம் என்பது குறித்துப் பூங்குன்றன் மிகவும் அழகாகச் சொல்கிறார். சோழப் பேரரசு உருவாகிற போதுதான் அதை ஓரளவு அரசு என்று சொல்ல முடியும். அது வரையிலும் அதை அரசு என்று சொல்ல முடியாது. இது ஒரு முக்கியமான ஆய்வாக எனக்குத் தோன்றுகிறது. நமது முக்கியமான நண்பர்கள், மார்க்சியவாதிகள் சொல்லப்படுகிறவர்கள், கேசவனைப் போன்றவர்கள், மன்னன் என்று ஒருவன் இருந்தால் அது நிலவுடைமை என்று உடனே முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். மன்னன் என்றால், அவனுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது, என்ன கட்டமைப்பு இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்யும்போது அதை நில மானியம் என்று சொல்லித் தொலைக்கிறார்கள். நில மானியம் என்பது ஐரோப்பாவில் இருந்த முறை. இங்கே நில மானிய முறை இல்லை. இங்கே இருப்பது வேறு. மார்க்ஸ் ஆசிய உற்பத்தி முறை என்று சொன்னார். அதுதான் இங்கே சரியாகப் பொருந்தும். ஆசிய உற்பத்தி முறை என்பதுதான் இந்தியச் சூழலைப் புரிந்து கொள்வதற்கு ஒரு சரியான ஆய்வு முறையாக இருந்திருக்கும். ஆனால் மார்க்ஸ§க்குப் பிறகு எப்படியோ அந்த ஆய்வு முறை ஒதுக்கப்பட்டு விட்டது. சோவியத் யூனியனிலேயே அந்த ஆய்வு முறை தொடரப்படவில்லை. தொடராததற்கான காரணங்களெல்லாம் உண்டு. இந்த மாதிரியெல்லாம் பார்க்க முடியுமானால், இந்த அதிகாரம், கட்டமைப்பு போன்றவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு நாம் மார்க்சியத்தை அழகாக அர்த்தப்படுத்த முடியும்; மார்க்சியத்தை வளர்த்தெடுக்க முடியும். இந்த அதிகாரம், கட்டமைப்பு, கட்டவிழ்ப்பு இன்ன பிறவெல்லாம் வந்து விட்டதனாலேயே மார்க்சியம் எங்களுக்கான ஆய்வு முறை அல்ல, எங்களுக்கான தத்துவம் அல்ல என்று புறக்கணிப்பதை வேறெந்த வார்த்தையில் சொல்வது, முட்டாள்தனம் என்பதைத் தவிர? வேறெந்த அர்த்தத்தில் சொல்ல முடியும், புரிந்து கொள்ளவில்லை என்பதைத் தவிர? சோவியத் யூனியன் இப்போது வீழ்ந்து விட்டது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் அனுபவங்கள் இருக்கின்றன. ஸ்டாலினியம், அதிகார வர்க்க சோசலிசம் போன்ற விஷயங்களையும் இந்த வீழ்ச்சியோடு வைத்து விவாதிக்கலாம். காலனியாதிக்க எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, தேச விடுதலை ஆகிய போராட்டங்களுக்குப் பின்னான அனைத்துச் சமூகங்களின் அனுபவங்களும் இருக்கின்றன. புரட்சிக்குப் பின்னான சமூகங்களில் ஜனநாயகமின்மை என்பது ஒரு மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இது போன்ற விஷயங்களைக் கொஞ்சம் முன்கூட்டியே சொல்கிற மாதிரி, எர்னெஸ்டோ லக்லாவ் மற்றும் சந்தால் மொஃபே ஆகிய இருவரும் தமது ‘மேலாதிக்கமும் சோசலிசத் திட்டமும்: ஒரு புரட்சிகர ஜனநாயக அரசியலை நோக்கி’ என்ற நூலில் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இப்போது ஜனநாயகத்தை அதிகம் வலியுறுத்தும் தாராளவாதச் சமூகங்களில் கூட, அதிகாரம் என்பது தனிநபர் முதலாளிகளின் அதிகாரமாக, மக்களுக்கான சமூகப் பாதுகாப்புக்கூட இல்லாத அதிகாரமாகப் போய்க் கொண்டிருக்கிறது. பியர்ரே போர்தியோ போன்ற சமூகவியலாளர்கள் இந்த ஆபத்துக் குறித்துப் பேசுகிறார்கள். ஸ்டாலினியத்தின் மரபெச்சம் என்பது தேச விடுதலைப் போராட்ட இயக்கங்களிலும் புரட்சிகர இயக்கங்களிலும் இந்த நிமிடம் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போது தேசியம் என்பது ஒரு முக்கியமான பிரச்சினையாக உருவாகியிருக்கிறது. அது ஒரு கருத்தியலாக வரும்போது பாசிசத்துக்கான கூறுகள் அதற்குள் நிறைந்து விடுகின்றன. தியாகு, மணியரசன் போன்ற மார்க்சியர்கள் இப்போது தமிழ்த் தேசியத்தை வரையறுத்துக் கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கு இடையில் கருத்தடிப்படையில் வேறுபாடுகளும் இருக்கின்றன. இப்படியான ஒரு சூழலில் நீங்களும் சமீப காலமாக தமிழ்த் தேசியத்தில் அதிக ஆர்வம் காட்டி வருவது உங்களது சமீப கால எழுத்துக்களில் தெரிய வருகிறது. மாரக்சியத் திட்டம் உலகு தழுவிய சில மதிப்பீடுகளை முன்வைத்தது. இனம், மொழி, வர்க்கம், பால் போன்ற வேறுபாடுகளைக் கடந்து சர்வதேசிய மனிதனுக்கான மதிப்பீடுகளை முன்வைத்தது. இன்றைய சூழலை பின்நவீனத்துவ உலகம் என்று சிலர் சொல்கிறார்கள். உலக மதிப்பீடுகளுக்கு எதிரான பிராந்திய மதிப்பீடுகளை வைத்துத்தான் போராட்டம் என்பது முன்னெடுக்கப்படுகிறது. தேசியம் குறித்த பிரச்சினைகளையும் நாம் அப்படிப் பரிந்துகொள்ள முடியும். மனிதனை மனிதன் நேசிப்பது என்ற விஷயத்தை நீங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறீர்கள். குணா போன்றவர்கள், போஸ்னியாவில் முஸ்லிம் மக்களை இனச் சுத்திகரிப்புச் செய்தது போல, தமிழகத்தில் இருந்து தெலுங்கு மக்களை வெளியேற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். இப்படியான சூழலில் தமிழ்த் தேசியத்தின் மானுட உள்ளடக்கத்தை நீங்கள் எவ்வாறு விளக்குவீர்கள்? மார்க்சியவாதிகளைப் பொறுத்தவரை ஸ்டாலினுடைய நான்கு வரையறைகளைக் குறிப்பாகச் சொல்வார்கள். சொல்லப் போனால், தேசியவாதம் எனப்படுவது ஐரோப்பாவில் முதலாளியத்தின் வளர்ச்சி பெற்ற ஒரு கருத்தாக்கம். நிலக்கிழாரியத்துக்கு எதிராக, மன்னராட்சிக்கு எதிராக தொழிலாளர்களை அணி சேர்த்துக் கொண்டு, தொழிலதிபர்கள், வியாபாரிகளோடு தொடர்புடையவர்கள் வந்தார்கள். அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். அந்தச் சமயத்தில் மக்களைத் தங்களோடு இணைத்துக் கொள்வதற்காக என்னுடைய மொழி, என்னுடைய தேசம் என்பதை ஒன்றாகக் கொண்டு வந்தார்கள். இப்படிப் பார்த்தால், தேசத்துக்கு மதம் வேண்டியதில்லை, இது நம்முடைய தேசம் என்கிற மாதிரி ஒரு கருத்துக்கு வந்து சேருகிறது. ஸ்டாலின் தன்னுடைய வரையறையை அந்த அனுபவங்களில் இருந்துதான் தொடங்குகிறார். ஒரு தேசம் என்று சொன்னால் ஒன்று மொழி, அப்புறம் குறிப்பிட்ட நில எல்லைகள், ஒரு பொருளியல் அமைப்பு, அப்புறம் வரலாறு சார்ந்த பண்பாடு - இந்த மாதிரி நான்கு கூறுகள். ஸ்டாலின் வைப்பது ஒரு தேசம் என்பதற்கான வரையறைகள் மட்டுமல்ல, இந்த வரையறைகள் முதலாளிய வரையறைகள்தான் என்பதையும் நாம் கண்டறிய வேண்டும்; முதலாளியச் சூழலில் ஏற்பட்ட வரையறைகள்தான் என்பதையும் சேர்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். முதலாளியச் சூழலில் லெனினைப் பொறுத்த வரை நிச்சயமாக தேச விடுதலை என்பது தேசிய முதலாளிகளின் தலைமையில் நடப்பது. இதில் தொழிலாளிகள் தங்களை அணி சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்தப் போராட்டம் ஏகாதிபத்தியத்துக்கு எதிரானது. ஏகாதிபத்தியத்தைப் பலவீனப்படுத்துவதற்கு தேச விடுதலைப் போராட்டங்கள் பெரிய அளவுக்குப் பயன்படும் என்பதை மிகத் தெளிவாகச் சொன்னார். இதற்குக் கொஞ்சம் முன்னால் பார்த்தால் எம்.என்.ராய் போன்றவர்கள் கடுமையாக மாறுபட்டு மூன்றாம் உலக நாடுகளில் தேசிய முதலாளிகள் கிடையாது. இவர்கள் ஏற்கெனவே ஏகாதிபத்தியத்துக்குச் சேவை செய்யக்கூடிய தரகு முதலாளிகளாக மாறி விட்டிருக்கிறார்கள். ஆகவே தேச விடுதலைப் போராட்டம் என்பது ஒரு பூர்ஷ§வாவின் தலைமையில் மேற்கொள்ளக்கூடிய போராட்டம் அல்ல. தொழிலாளி வர்க்கம் தன்னுடைய தலைமையில் தேச விடுதலைக்காகப் போராட வேண்டும் என்று சொன்னார்கள். இதைச் சரியானபடி கடைப்பிடித்தவர் மாவோதான். ஸ்டாலின் சியாங் காய் ஷேக்கோடு சேர்ந்து நீ நில் என்றுதான் கடைசிவரை சொல்லிக் கொண்டு இருந்தார். ஆனால் சியாங் காய் ஷேக்கை உதறிவிட்டுத்தான் மாவோ அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்; வெற்றியும் கண்டார். அந்த முதலாளிய வரையறையை மறுபடியும் நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த முதலாளியம்தான் தேசத்தின் மொழியை வரையறை செய்கிறது. முதலாளியம்தான் தேசத்தின் எல்லைகளை வரையறை செய்கிறது. முதலாளியம்தான் தேசத்தினுடைய முன்னைய வரலாறு என்பதையும் வரையறை செய்கிறது. முதலாளியம்தான் நமக்கான பண்பாடு எது என்பதையும் வரையறை செய்கிறது. இதை நாம் கண்டறிய வேண்டும். இந்த தேசம் , இந்த வரையறை பாட்டாளி வர்க்கத்துக்கு, உழைக்கும் மக்களுக்கு உரிய வரையறை அல்ல என்பதைக் கண்டறிய வேண்டும். அப்படியானால், இந்த வரையறையை நாம் என்ன செய்யலாம்? முதலாளிய வரையறையாக இருக்கும்போதுதான் அதிலிருந்து ஹிட்லர் வந்து சேருகிறார்; மற்ற கொடுமைகள் எல்லாம் வந்து சேருகின்றன. இந்த முதலாளிய வரையறைக்குள் இருந்துதான் பாசிசம் வருகிறது. இது நம்முடைய தேசம், இது நம்முடைய பூர்வீகம், இவன் இடையில் வந்தவன், இவனை வெளியேற்று, வெளியேற மறுத்தான் என்றால் அவனைக் கொல்லு என்பதெல்லாம் வரும். ஆனால் முதலாளிய வரையறை என்பதைப் புரிந்து கொண்டால், இதை எப்படிப் பாட்டாளி வர்க்க வரையறையாக மாற்றுவது என்ற கேள்வி வருகிறது. தேசியம் என்ற அந்தக் கருத்தாக்கத்துக்குள், அந்த வரையறைக்குள் இருக்கும் அந்தக் கூறுகளைக் களைய முடியுமா என்று பார்க்க வேண்டும். களைய முடியும் என்பது நமக்குப் புரிகிறது. தமிழ்நாட்டில் கு.சா.ஆனந்தன் என்று ஒருவர் இருந்தார். அண்மையில் அவர் காலமானார். திராவிட இயக்கம், மார்க்சியம் இரண்டிலும் அழுத்தமாக இருந்த ஓர் அறிஞர் அவர். அவர் தன்னுடைய நூலில், ஸ்டாலினுடைய வரையறைகளில் சமத்துவம், சமதர்மம் என்று இரண்டு வரையறைகளை அடக்க வேண்டும் என்றார். சமத்துவம் என்றால், சாதிகளுக்கு இடையில் சமத்துவம், சாதியற்ற நிலை. சமதர்மம் என்பது உடைமைக்கு எதிரான ஒரு வரையறை. இந்த இரண்டு வரையறைகளை உள்நுழைத்தால் அந்த முதலாளிய வரையறைக்கு உள்ளே இருக்கிற முதலாளியக் கூறுகளைக் களைய முடியும்; களைந்து பாட்டாளி வர்க்கத்துக்கு உரிய வரையறையாக அதை மாற்ற முடியும் என்று அவர் சொன்னார். இதை ஆரம்பத்தில் கட்டுரையாக்கி எனக்கு அவர் அனுப்பியபோதே என்னால் புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. மிகவும் அற்புதமான ஒரு கோட்பாடாக அது இருந்தது. அதற்கு ஆதரவாகப் பல கட்டுரைகளை மேற்கோள் காட்டி எழுதினேன் நான். ஆனால் புத்திசாலிகளைத் திரும்பத் திரும்பப் பார்த்தீர்கள் என்றால், அவர்கள் இந்த வரையறையை எந்த வகையிலும் பொருட்படுத்தவில்லை. தேசம் என்பது உழைக்கும் மக்களுக்கு உரியது. தொன்னூறு, தொன்னூற்றொன்பது சதம் மக்களுக்கு உரியது. இந்த நிலம் எங்களுக்கு உரியது. இந்த இயற்கை எங்களுக்கு உரியது. இந்த அரசியல் நாங்கள் தீர்மானிக்கக் கூடியது. இதனுடைய பொருளியல் எங்களுக்கு உரியது. இதனுடைய கல்வி, மருத்துவம் அனைத்தும் எங்களுடைய தீர்மானத்துக்குள்தான் இருக்கும். திராவிட முன்னேற்றக் கழகப் பண்பாடு என்று சொல்வது முதலாளிய தேசியப் பண்பாடுதான். திராவிட முன்னேற்றக் கழகம் சொல்கிற வரலாற்றை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் நமக்குக் கிடையாது. தமிழ் வரலாறு என்ன என்பதை நாம்தான் கண்டறிய வேண்டும். இந்த முதலாளிய சக்திகள் வரலாறு என்று என்ன சொல்லியிருக்கிறார்களோ, பண்பாடு என்று என்ன சொல்லியிருக்கிறார்களோ, எல்லைகள், தேசம், மொழி என்று எதையெல்லாம் சொல்லியிருக்கிறார்களோ, அவற்றை உழைக்கும் மக்கள் தமது பகுப்பாய்வுக்கு உட்படுத்தியாக வேண்டும். இந்தக் காரியத்தை தமிழ்த் தேசியச் சக்திகள் என்று சொல்லப்படுபவர்கள் செய்யவே இல்லை, தொடங்கவே இல்லை. இதற்குள் போனீர்கள் என்று சொன்னால், நீங்கள் ஏற்கெனவே சொன்னது போல, தமிழ்த் தேசியத்தில் ஒரு பாசிசப் போக்கை அவர்கள் கொண்டு வருகிறார்கள். தெலுங்கனை வெளியேற்ற வேண்டும், அருந்ததியரை வெளியேற்ற வேண்டும், கொன்று நீக்க வேண்டும் என்று கொண்டு வருகிறார்கள். இந்தக் கூறுகளை வேறு சிலரும் கடைப்பிடிக்கிறார்கள். சிலர் வாய்மூடி மௌனிகளாக இருக்கிறார்கள். நாம் இதை வெளிப்படையாகப் பேச வேண்டும். நீங்கள் வீட்டில் தெலுங்கு பேசினாலும் வெளியில் சமூகத்தில் கல்வி கற்கும் இடத்தில் மற்றவர்களோடு சேர்ந்து உனக்குத் தாய்மொழியாக இருப்பது தமிழ்தான். அறிவையும் உணர்வையும் தரக்கூடிய மொழி எதுவோ அதுவே தாய்மொழி. இப்போது நீங்கள் வீட்டில் தெலுங்கு பேசினாலும் அடுத்த தலைமுறையில் உங்கள் குழந்தைகள் தெலுங்கு பேசப் போவதில்லை. உங்களுடைய ஆளுமை இந்தச் சூழலில்தான் வளர்கிறது. நீங்கள் தமிழர்கள் என்பதைத் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும். தெலுங்கர்கள் என்று சொல்லி மறுபடியும் ஆந்திராவுக்குப் போக முடியாது. இந்தத் தேசம்தான் உங்களுடைய தேசம். இந்த மரபுதான் உங்களுடைய மரபு என்று சொல்லி அவர்களோடு இணக்கமான முறையில் உரயாடல் நிகழ்த்தித்தான் நாம் நெறிப்படுத்த முடியுமே தவிர, நீ தெலுங்கன், தெலுங்கன் என்று சொல்லி அவனை நாம் எதிரியாக்குவது நம்மை பலவீனப்படுத்தும். அருந்ததியர்களாக இருப்பவர்கள் என்ன மொழி பேசினாலும் நம் சமூகத்தின் ஆக்கத்துக்கு அவர்கள் எவ்வளவு காலமாக உழைத்திருக்கிறார்கள்! அவர்களை எப்படி நாம் அந்நியராக்க முடியும்? அது போலத்தான் மற்றவர்களையும் நாம் கவனமாக ஆய்வுக்கு உட்படுத்தினால் இந்தத் தேசியம் என்ற கருத்துக்குள் சமதர்மம் என்ற கருத்தை உள்ளடக்க முடியும், சமத்துவத்தை உள்ளடக்க முடியும். நாம் நிச்சயமாக உலகளாவிய மனிதர்களாக இருக்க முடியும். தமிழன் என்று சொல்லக்கூடியவன் உலகளாவிய மனிதன் என்ற தகுதியைப் பெறுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. திருக்குறள், சிற்றிலக்கியங்களை எல்லாம் மனதில் வைத்துப் பார்த்தீர்களானால், இதுதான் தேசியம் என்ற அர்த்தத்தைத் தரக்கூடியது. தேசியத்தையும் பாசிசத்தையும் பிரிக்க முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது. தமிழ்த் தேசியத்துக்குள் பாசிசம் ஒரு கூறாக இருந்து தீர வேண்டும் என்ற கட்டாயம் கிடையவே கிடையாது. சமூகத்தில் மதத்தின் பங்கு பற்றி விளங்கிக் கொள்ள வேண்டியதை நீங்கள் அதிகம் வலியுறுத்துவதனால், தேசியத்தில் மதத்தின் பங்கு என்ன என்பதைப் பற்றிப் பேசலாம் என்று நினைக்கிறேன். ஆப்கானிஸ்தான் தேசியத்தை இஸ்லாமிய அடிப்படைவாதத்திலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. ஐரோப்பாவில் கூட தேசங்களுக்கு இடையிலான போரில் பிராட்டஸ்டண்ட் / கத்தோலிக்கப் பிரிவினை ஒரு முக்கியக் கூறாக இருந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, அயர்லாந்துப் பிரச்சினையை இவ்வாறு பார்க்கலாம். இப்படிப் பார்க்கும்போது நீங்கள் சொல்லும் தமிழ்த் தேசியத்துக்குள் மதத்தின் பங்களிப்பு மற்றும் பல்வேறு மதங்களுக்கு இடையிலான உறவுகள் எவ்வாறு அமையும் என்று நினைக்கிறீர்கள்? மனோன்மணீயம் சுந்தரனார் திராவிடம் என்று பேசிய காலத்தில் சைவ மதச் சார்பை அவருக்குள் வைத்திருந்தார். திராவிடம் என்ற கருத்தாக்கத்துக்குள் அது இருந்தது. மறைமலையடிகள் போன்றவர்களுக்கு அந்தக் கருத்தாக்கம் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அதே போல் மிகவும் ஆச்சரியப்படும் முறையில், திராவிடர்கள் என்று பெரியார் பேசும்போது சாதி இல்லை, மதம் இல்லை என்று இன்னொரு எல்லைக்கு அவர் போனார். பெரும்பாலான தமிழ்த் தேசியர்கள் பெரியார் சொன்னதைச் சொல்கிறார்கள். எங்களுக்குக் கடவுள் வேண்டாம், சாதி வேண்டாம், மதம் வேண்டாம் என்கிறார்கள். சாதி, மதம் என்றாலே பார்ப்பனியம்தான் என்பது போல் அவர்கள் சில திரிபுவாதங்களை மேற்கொள்கிறார்கள். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், மதம் என்பது ஏற்கெனவே முதலாளிய வரையறைகளில் பண்பாடு என்று சொன்னார்கள் பாருங்கள், அந்தப் பண்பாட்டில் ஒரு கூறு மதம். ஏற்கெனவே இருந்த ஆதிக்கவாதிகள் அந்த மதத்தைத் தேசியத்தோடு ஐக்கியப்படுத்தி இருக்கிறார்கள். இந்தியாவுக்கு உரிய மதம் ஒன்று என்று ஒருவர் சொல்வார். தமிழ்நாட்டுக்கு உரிய மதம் சைவம், வைணவம் என்று இன்னொருவர் சொல்வார். தமிழ்ச் சூழலில் சில ஆய்வாளர்கள் செய்த அக்கிரமங்களை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். சதாசிவ பண்டாரத்தார் போன்றவர்கள் சமணம், பௌத்தம் எல்லாம் அந்நிய மதங்கள் என்கிறார்கள். சைவம், வைணவம்தான் தமிழனுடைய மதம் என்று சொல்லி இந்த மாதிரிப் பொய்யுரைகளை எல்லாம் செய்திருக்கிறார்கள். சமணம், பௌத்தம் தமிழ்நாட்டுக்கு வந்தபோதுதான் தமிழ்ச் சூழலில் திருக்குறள், அறம் முதலிய விஷயங்கள் எல்லாம் மேலுக்கு வந்தன. ஏராளமான விஷயங்கள் தமிழ்ச் சூழலுக்குள் வந்து சேர்ந்தன. முன்பிருந்த விஷயங்களுக்குள் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்து இவனைத் தமிழனாக்கியது இந்த மதங்கள்தான்; சமணம், பௌத்தம் போன்ற கருத்துப் பொக்கிசங்கள்தான். மதம் சமம் பார்ப்பனியம் என்று பார்க்க வேண்டியதில்லை. மதம் நிறுவனமயமாகிற போது, சொத்து முதலியவற்றைச் சேர்க்கிற போது அது அதிகார பீடமாக மாறும். அது மக்களுக்கு எதிரானது. மக்களுக்கு எதிராக மதம் மாறுகிற போது, எல்லா மதங்களுக்குள்ளிருந்தும் கலகங்கள் தோன்றும். அவை மக்கள் சார்பான கலகங்கள். மதத்தில் எப்போதும் இரண்டு போக்குகள் இருக்கும். ஆதிக்கத்துக்கு எதிரான மதப்போக்கும் இருக்கிறது. கோயில், சடங்கு, பார்ப்பனியம், மந்திரம், தந்திரம் என்று பேசக்கூடியது புரோகிதம் - கிளரிக்கலிசம். இதற்கு எதிராக தீர்க்கதரிசிகள் எனப்படுபவர்கள் மக்கள் சார்பாகக் கலகம் செய்வார்கள். அவர்கள்தான் சித்தர்கள். சாதி ஏது, சடங்கு ஏது என்று பேசக்கூடியவர்கள். இயேசுநாதர் தனக்கு முன் இருந்த மதப்போக்குக்கு எதிரான ஒரு கலகக்காரர்தான். பின்னால் இதே கிறித்துவம் ஆதிக்கத் தன்மை பெறும்போது அதிலிருந்துதான் விடுதலை இறையாளர்கள் தோன்றுகிறார்கள். ஆதிக்கத்தைக் களையும் போக்கு அப்போது வருகிறது. மதம் என்பது வெறுக்கத்தக்கது, அருவருக்கத்தக்கது; பெரியார் சொல்கிற மாதிரி பரப்பியவன் அயோக்கின், கண்டுபிடித்தவன் காட்டுமிராண்டி - இப்படியெல்லாம் பேசுவது மார்க்சியவாதிக்கு நிச்சயமாக உடன்பாடாக இருக்கவே முடியாது. இது மதம் பற்றிய ஆய்வே கிடையாது. தமிழ்நாட்டில் இருக்கிற மார்க்சியர்கள் எல்லாம் பெரியாரியம்தான் ஒரே வழி என்று கொண்டிருக்கிறார்கள். இது மார்க்சியத்தை முடமாக்குகிற போக்கு. மதம் என்பதற்குள் மக்கள் சார்பு என்பு ஒன்றும் இருக்கிறது. விவேகானந்தரைப் பாருங்கள், பாரதியாரைப் பாருங்கள். அத்வைதம் என்பது எல்லாம் ஒன்றுதான் என்று சொல்லும்போது, நீயென்ன உயர்ந்த சாதி, நானென்ன தாழ்ந்த சாதி, எல்லாவற்றையும் பொதுவில் வை என்ற கருத்துக்கு இட்டுச் செல்கிறது. இந்த அத்வைதத்தை வைத்தே விவேகானந்தர் பேசுகிறார். பெரியார் மிகவும் அற்புதமாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதைப் பெரியாரியர்கள் யாரும் பொருட்படுத்துவது கிடையாது. வேதமும் கம்யூனிசமும் வேறு வேறு அல்ல என்று விளக்கம் சொல்கிறார். வேதம் என்ன சொல்கிறது? எல்லாமே ஒன்று என்று சொல்கிறது. எல்லாமே கடவுள் என்று சொன்னால் நீயென்ன பெரியவன், நானென்ன சிறியவன்? நீயென்ன ஆதிக்கம் புரிவது, நானென்ன அடிமையாவது? வேண்டாம். நாம் எல்லோரும் கடவுளின் குழந்தைகள் என்று மதம் சொல்கிறது. அப்புறமென்ன ஏற்றத்தாழ்வு வேண்டிக் கிடக்கிறது? வேதமும் கம்யூனிசமும் ஒன்றுதான் என்று பெரியார் கண்டுபிடித்து அற்புதமாகச் சொல்லியிருக்கிறார். கிறித்துவம், விடுதலை இறையியல் போன்றவை எல்லாம் இலத்தீன் அமெரிக்கப் புரட்சிகர இயக்கங்களில் வைத்துப் பார்க்கும்போது ஒப்புக்கொள்ளக் கூடியனவாக இருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால், சே குவேராவை இயேசுவின் இன்னொரு வடிவமாக பொலிவிய விவசாயிகள் பார்த்திருக்கிறார்கள். இப்போது அவருடைய எலும்புக்கூடு கிடைத்த இடம் கிறித்துவ நம்பிக்கையுள்ள இலத்தீன் அமெரிக்க மக்களுக்கு ஒரு புனிதத் தலமாக ஆகியிருக்கிறது. ஒரு தனிநபராக இயேசு கிறிஸ்து தனிமனித சுதந்திரம், பொறுப்புணர்வு போன்றவற்றை வலியுறுத்தியவராகத்தான் இருந்தார். ஒரு சமூகத்தில் ஒரு தனிநபரின் விடுதலை அவருக்கான பிரச்சினையாக இருந்தது. அப்படித்தான் தனிநபருக்கான வரலாற்றுப் பொறுப்புக் கருதி விடுதலை இறையியல் புரட்சிகரப் போராட்டத்தில் பங்கேற்பதை வலியுறுத்தினார்கள். பி.பி.சி.யின் இந்திய நிருபரான மார்க் டெல்லி இந்திய சுதந்திரத்தின் பொன்விழா குறித்து எடுத்த ஆவணப்படத்தில் கூட ஒரு தலித் பெண் கூறும்போது, கிறிஸ்து தங்களைப் போன்ற ஏதுமற்றவர்களுக்காக, நிராகரிக்கப்படவர்களுக்காகப் போராடியவர், அதனால் அவர் எங்கள் கடவுள் என்று கூறுகிறார். ஆனால் இந்து மதத்தைப் பொறுத்தளவில் அப்படியான விடுதலை இறையியல் போக்கைப் பார்க்க முடியாது. சாவர்க்கரில் இருந்து அரவிந்தர் வரை, இந்து மதத்தை தேச விடுதலை மற்றும் வன்முறையோடு இணைத்தவர்கள் எல்லாம் சமூக அளவில் வலதுசாரிகளாகத்தான் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஓர் இலட்சிய சமூகத்தை, பிராமணிய சமூகத்தை உருவாக்குகிற கும்பலைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்களே அல்லாமல், விடுதலை உணர்வுள்ள தனிமனிதர்களாக இல்லை. இப்படியான சூழலில் விடுதலை இறையியல் போக்கு என்பது இந்து மதத்துக்குள் சாத்தியமாகும் என்று தோன்றவில்லை… மதம் என்பதை அடிப்படையிலேயே பார்ப்பனியம் என்று சொல்லி, அதைப் பற்றி முட்டாள்தனமாகப் பேசிப்பேசி நம் திராவிட இயக்கத்தவர் என்ன செய்திருக்கிறார்கள் என்றால், மக்களிடமிருந்து ஒரு வகையில் அந்நியப்பட்டிருக்கிறார்கள். இந்த இடத்தில் இந்துத்துவவாதிகள் வந்து கெட்டியாக உட்கார்ந்து கொள்கிறார்கள். மக்களுக்கு என்றைக்கும் கோயில் தேவைப்படுகின்றன, கோயில் திருவிழாக்கள் தேவைப்படுகின்றன. திராவிட இயக்கத்தவர் எல்லாவற்றையும் மறுக்கிறார்கள். அப்போது இந்துத்துவவாதிகள் மிகவும் சாமர்த்தியமாக அந்த இடத்தைக் கைப்பற்ற முடிகிறது. மாறாக, மதம் என்பது என்ன, கடவுள் என்பது என்ன, சடங்குகள் இல்லாமல் இந்தச் சமூகம் எந்தக் காலத்திலாவது இருந்திருக்கிறதா என்பது போன்ற ஆய்வுகளோடு அணுகியிருந்தால் மக்களை நீங்கள் வயப்படுத்தியிருக்கலாம். கேரளாவில் நாராயணகுருவின் எடுத்துக்காட்டைப் பாருங்கள். அவர் ஒரு சிவன் கோயிலைக் கட்டினார். சிவன் கோயிலைக் கட்ட உனக்கு அதிகாரம் இல்லை என்று பார்ப்பணர்கள் கூறினார்கள். இது உங்களுடைய சிவன் இல்லை என்று அவர் சொல்லிவிட்டார். அவ்வாறு நீங்கள் மதத்துக்கு அர்த்தம் கொடுத்திருக்க முடியுமானால் சரியாய் இருந்திருக்கும். மனோன்மணியம் சுந்தரனார், மறைமலையடிகள் அந்தக் காலத்தில் வந்தார்கள் என்று சொன்னேன். மதம் என்ற வகையில் மறைமலையடிகள் என்னென்ன வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தார் தெரியுமா? மதத்தில் துறவு தேவையில்லை, புராணங்கள் பொய்க் கதைகள் என்பது போன்ற தீவிரமான சில கருத்துக்களை அவர் முன்வைக்க முடிந்தது. குன்றக்குடி அடிகளும் அந்த மரபில் வந்து அதைக் கடைப்பிடித்தவர்தான். மதம் பற்றி உங்களுக்குச் சரியான பார்வை இருந்திருக்குமானால், தமிழ் வரலாறு தமிழ் இலக்கியத்தில் நீங்கள் மதம் என்பதை ஒரு அம்சமாக அர்த்தப்படுத்தவே முடியாது. அப்படிப் பார்த்தால் தமிழ் இலக்கியம் முழுவதும் உங்களுக்கு மாபெரும் நிதியங்களாக மாறும். அந்த மாதிரிப் போக்கு உங்களிடம் இல்லை. உங்கள் போக்கில் எடுத்துக் கொண்டீர்களானால் திருக்குறளைக் காப்பாற்ற முடியாது. பெரியாரும் அதை மிக வெளிப்படையாச் சொன்னார். இறுக்கிப் பிடித்தால் திருக்குறளில் 300 குறள்கள்தான் தேறும் என்றார். அதையே வேறு மாதிரி சொல்லிப் பாருங்கள். 1000 குறள்களைத் தள்ளக்கூடிய தைரியம் இன்று யாருக்கு இருக்கிறது? உங்கள் பார்வையில் எடுத்துக் கொண்டால் சிலப்பதிகாரத்தை நீங்கள் ஏற்கவே முடியாது. அப்படிப் பார்க்கும்போது சைவம், வைணவம் அனைத்தும் உங்களுக்கு ஆகாத விஷயங்களாக ஆகிவிடும். நான் ஒரு முறை சொன்னேன் - சித்தர் மரபில் வந்தவர்தான் பெரியார் என்று. அ.மார்க்ஸ், வேலுசாமி போன்றவர்கள் கெக்கலி கொட்டினார்கள். சித்தர் மரபில் வந்தவர்தான் ஜெயகாந்தன், சித்தர் மரபில் வந்தவர்தான் புதுமைப்பித்தன், சித்தர் மரபில் வந்தவன்தான் நான் என்று உரத்துச் சொன்னேன். அது அவர்களுக்கு எட்டவில்லை, புரியவில்லை. மக்களுடைய கடவுள் போன்றவற்றை எல்லாம் மூடத்தனம், மூர்க்கத்தனம் என்று பேசுவதால்தான் இந்த மக்கள் அந்தப் பக்கம் நகர்கிறார்கள். நீங்கள் அதிகமாக எதிரிகளை உருவாக்கிக் கொண்டு இருக்கிறீர்கள். நம் மக்களை அவர்களிடம் தள்ளி விடுகிறீர்கள். அவர்களது வலிமையைக் கூட்டுகிறீர்கள். மார்க்சியவாதிகள் எனப்பட்டவர்கள் இதைத்தான் காலம் முழுதும் செய்து வந்தார்கள். இந்துத்துவத்தைத் தமிழ்நாட்டில் வலுப்படுத்திய சக்திகள் யார் என்று கேட்டால் முதலில் இவர்கள்தான். இப்போது இந்துத்துவம் மேலுக்கு வந்துவிட்டது. பதினைந்து வயதுப் பையனெல்லாம் காவி என்ன, திருநீறு என்ன! பயிற்சி நடத்துகிறார்கள். வீர விளையாட்டெல்லாம் சொல்லித் தருகிறார்கள். பாடம் சொல்லித் தருகிறார்கள். பாரதிய ஜனதா பையனிடம் நீங்கள் பேசினால் ஒன்றையே திரும்பத் திரும்பச் சொல்வான். மீறினால் கை வைப்பான். நமக்கெல்லாம் கை வைக்கிற துணிச்சலே இல்லை. நமக்கு யாரும் பயிற்சியே கொடுக்கவில்லை. பெரியாரியர்களும் அடி வாங்குவார்கள், மார்க்சியர்களும் அடி வாங்குவார்கள். சில மாதங்களுக்கு முன் சிங்காநல்லூர்ப் பக்கம் ஒரு தெருவில் திராவிட இயக்கத்துக்காரர் பிரசாரத்துக்குப் போனபோது உள்ளே வரக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். வரக்கூடாது என்றால் வரக்கூடாது. உங்கள் பிரசாரம் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். பெரியநாய்க்கன்பாளையம் பக்கம் புத்தகம் விற்கப் போனார்கள். கடையைக் கட்டு என்று கூறிவிட்டார்கள். அடிக்கத் தயாராக இருக்கிறார்கள். நீங்கள் திருப்பித் தாக்கத் தயாராக இல்லை. மிகவும் அறிவோடு பேசுவதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இது ஒன்றும் அறிவோடு பேசக்கூடிய பேச்சல்ல. பாரதியாரை எவ்வளவு கேவலப்படுத்துகிறீர்கள் நீங்கள்! இறுதியாக நீங்கள் எவ்வளவு ஒரு அழிவு சக்தியாக மாறித் தொலைத்திருக்கிறீர்கள்! பாரதியாரை அவ்வளவு கேவலமாக எதிரணிக்குத் தள்ளுகிறீர்கள். பாரதியார் மட்டுமல்ல, தைரியமிருந்தால் நீங்கள் எல்லாவற்றையும் செய்யுங்கள். பாரதியார் மட்டுமல்ல, பாரதிதாசன் ஒரு கடவுள் உண்டென்போம் என்று சொன்னார். தமிழ்த் தேசிய மாநாட்டில் பேசும்போது பெரியார் அவரைப் பிடித்துத் திட்டு திட்டு என்று திட்டினார். பாரதிதாசன் குமரகுருபரரைப் பாராட்டினார். பாரதிதாசனுக்கு இலக்கியங்கள் வேண்டும். கம்பர் வேண்டும். உங்களுக்கெல்லாம் அவசியம் கிடையாது. இப்படி இருந்தால் தமிழ்ச் சமூகத்துக்குரிய இயக்கமாக நீங்கள் எப்படி இருக்க முடியும்? கடவுள் இல்லை. வழிபாடு வேண்டாம். சடங்கு வேண்டாம். நீங்கள் நடத்துவது என்ன? பெரியாருக்குச் சிலை வைக்கிறீர்கள். பெரியாருக்குத் துதி பாடுகிறீர்கள். பெரியாரை மீறி ஒரு சிந்தனையாளன் இல்லை என்கிறீர்கள். பெரியாருக்கு மாலை போடுகிறீர்கள். விழாக் கொண்டாடுகிறீர்கள். நீங்களெல்லாம் பெரியாருக்கு நல்ல அசலான புரோகிதர்களாக இருக்கிறீர்கள். புரோகிதர்களில் யார் சிறந்த புரோகிதர், யார் மோசமான புரோகிதர் என்று வேறுபடுத்தலாமே ஒழிய, மற்றபடி பெரியாரியத்தை நீங்கள் வளர்த்தெடுக்க வேண்டாமா? மேலே கொண்டு போக வேண்டாமா? உலக அளவில் நாத்திகவாதம் என்பது எவ்வளவு பிரமாண்டமாக வளர்ந்திருக்கிறது! டிக்சனரி ஆஃப் பிலீவர்ஸ் அண்ட் நான்பிலீவர்ஸ் என்று ஒரு அற்புதமான ரஸ்யன் டிக்சனரி. பௌத்த மதத்தை விடவா உங்கள் நாத்திகவாதம்? ரஸ்ஸலை ஒரு காலத்தில் இலேசாக மேற்கோள் காட்டினீர்கள். டார்வினை நீங்கள் பெரிய அளவுக்குப் பேசவில்லை. பெரியாரியம் என்று உள்ளே போனீர்களானால், ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு நீங்கள் முதன்மையாக இருக்க வேண்டாமா? சிங்காரவேலர் தயாரித்த ஈரோடு தீர்மானத்தில் என்ன சொல்கிறார்? இந்தியாவில் இருக்கும் பிரிட்டிஷாரின் சொத்துக்கள் அனைத்தும் நஷ்ட ஈடில்லாமல் பறிமுதல் செய்யப்பட வேண்டும், ஜமீன்தார்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று எத்தனை விஷயங்களை அவர் சொல்லியிருக்கிறார். இன்று உலகமயமாதல் பற்றி எத்தனை உருக்கமாக நீங்கள் பேசியிருக்க வேண்டும்! உங்களுக்கு அது தோன்றவே இல்லையே! நான் சொன்னேன், பார்ப்பனியம் என்று இன்று நீங்கள் பேசுகிறீர்கள். நமக்கிடையில் ஆதிக்க சக்திகள் இருக்கின்றன என்றால், அவை ஏகாதிபத்தியம், முதலாளியம், அரசதிகாரம் என்று. உடனே ஒரு புத்திசாலி, படுபுத்திசாலி சொன்னார், நீங்கள் சொல்கிற ஏகாதிபத்தியமும் பார்ப்பனியம்தான், முதலாளியமும் பார்ப்பனியம்தான், அரசதிகாரமும் பார்ப்பனியம்தான் என்று. அப்படி முடித்து விட்டார் அவர். எனக்கும் அ.மார்க்சுக்கும் பெரிய சண்டை வந்துவிட்டது. இந்த வகையில் செயல்படும் அரசதிகாரத்தை பார்ப்பனியம் என்ற எளிய சொல்லால் சொல்லாதே, வேறு சொல் என்றேன். இல்லை, இந்தச் சொல்தான் சரியான சொல் என்றார் அவர். இதையெல்லாம் பார்ப்பான்தான் கொண்டு வருகிறானாம். மற்ற சாதிக்காரன் இருந்தால் கொண்டு வர மாட்டானாம். தத்துவம் என்று சொன்னாலே மதம் என்று எப்படி அய்யா உங்களால் புரிந்துகொள்ள முடிகிறது? அது பரந்த அளவில் வாழ்க்கை தொடர்பானது என்று விரிவான முறையில் உங்களால் அர்த்தம் கொள்ள முடியாதா? தத்துவம் என்றால் மதம். மதம் என்றால் அது இந்து மதம். இந்து மதம் என்றால் அது பார்ப்பனியம். இவ்வளவு தூரம் நீங்கள் அறிவில் கீழ்ப்பட்டுப் போய்விட்ட பிறகு ஒரு தேசத்தை நீங்கள் எப்படிக் காப்பாற்றப் போகிறீர்கள்? தீராநதி - 2002 சூன் - மணா இலட்சுமணன் கோவை ஞானி - நேர்காணல் கோவை ஞானியின் இயற்பெயர் கி. பழனிச்சாமி. 1935ஆம் ஆண்டு கோவை மாவட்டம், பல்லடம் வட்டம் சோமனூரில் பிறந்தவர். கோவையிலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் தமிழ் இலக்கியம் கற்றவர். பின்பு, கோவையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர். இடையில் ஏற்பட்ட பார்வை இழப்பின் காரணமாக ஆசிரியப்பணியை விட்டவர். பார்வை இழப்புக்குப் பிறகு இன்றுவரை புதிய புதிய நூல்களைக் கற்று, அவை பற்றிய திறனாய்வுகளையும், விவாதங்களையும் எழுதி வருகிறார் ஞானி. இதழியலில் தீராத ஆர்வம் கொண்டு, எப்போதும் ஏதாவது ஒரு இதழை நடத்தி வருகிறார். இப்போது ‘தமிழ் நேயம்’ இதழை நடத்தி வருகிறார். மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம், தமிழ் தேசியம் என ஞானியின் ஈடுபாடும் தனித்துவமானது. 1965 முதல் ஞானிக்கு மார்க்சிய ஈடுபாடு. எஸ்.என். நாகராஜனைத் தனது மார்க்சிய ஆசானாகக் கூறுகிறார் ஞானி. பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர், ‘நிகழ்’ இதழின் மூலமும் தமிழ் அறிவுச் சூழலில் பாதிப்பை உருவாக்கியவர். வறட்டுத்தனமான கட்சி மார்க்சியராக இல்லாது, ஆழ்ந்த படிப்புணர்வின் மூலம் ஏற்பட்ட நுட்பம், அவரது வார்த்தைகளில் தெறிக்கிறது. இவரது மனைவி இந்திராணி அவர்கள் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகன்கள் பாரிவள்ளல், மாதவன் ஆகியோர். ஞானி கோவையில் வசித்து வருகிறார். தீராநதி : நீங்கள் படித்த சமயத்தில் திராவிட இயக்கம் பெருமளவுக்கு வளர்ந்துகொண்டு இருந்திருக்கும். பெரியாரும், அண்ணாவும் மக்களை பெருமளவு பாதித்தனர். திராவிட இயக்கத்தோடு உங்களுக்கு ஏன் ஈடுபாடு ஏற்படவில்லை? கோவை ஞானி : நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1955_58 கால அளவில் படித்தபோது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்கப்படாத அறிஞர் அண்ணா அவர்களை, அப்பொழுது கல்லூரி விடுதி செயலராக இருந்த திரு. பழ.நெடுமாறன் அவர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் துணைவேந்தரோடு போராடி பல்கலைக்கழகத்திற்கு வரச் செய்தார்கள். அரசியல் கலவாத அண்ணா அவர்களின் பேச்சு எல்லோரையும் கவர்ந்ததில் வியப்பில்லை. தமிழ் இலக்கிய மாணவனாகியஎனக்கு அறிஞர் அண்ணாவின் மேல் இன்றளவுக்கும் ஈர்ப்புக் குறையவில்லை. சிதம்பரத்திற்கும், அண்ணாமலை நகருக்கும் பெரியார் பலமுறை வந்திருந்தார். புராணம் முதலியவை குறித்த அவரது திறனாய்வை யாரால் மறுக்கமுடியும். இளமை முதற்கொண்டே எனக்குள் கடவுளைத் தேடிக் கொண்டிருந்தேன். தாகூர், விவேகானந்தர், அரவிந்தர் முதலியவர்களை விரிவாகக் கற்றுக்கொண்டும் இருந்தேன். எல்லாமே பிரம்மம் என்பதனை தியானத்தின் மூலம் எனக்குள்ளும் உணர்ந்தேன். வெற்றுச் சடங்குகள், வழிபாடுகள் முதலியவற்றில் எனக்கு எப்பொழுதும் நாட்டமிருந்ததில்லை. இலக்கியம், திறனாய்வு, வரலாறு, மெய்யியல், உளவியல் என்று என் ஆர்வங்கள் மிக விரிவாக இருந்தன. பகுத்தறிவாதம் எனக்குப் போதுமானதாக இருக்கவில்லை. நானே பிரம்மம் என்ற என் அனுபவம், சில ஆண்டுகளுக்கிடையில் பிரபஞ்சம், வரலாறு, இயற்கை, சமுதாயம் ஆகிய அனைத்தையும் தழுவியதாக மாறியது. இத்தகைய ஆழமான புரிதல் என்னை மார்க்சியத்திற்குக் கொண்டு சேர்த்தது. கடவுளைக் கைவிட்டு மார்க்சை ஏற்றேன். தீராநதி : தமிழிலக்கிய மாணவராகிய உங்களுக்கு மார்க்சியத்தில் ஈடுபாடு ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்துச் சொல்லுங்கள். கோவை ஞானி : என் இளமைக்காலம் உழவர்களும், நெசவாளர்களும் வாழ்ந்த கிராமத்தில் கழிந்தது. இயற்கைச் சூழல் உழைப்புக்குத் தயங்காத உழவர்கள். கலையுணர்வுமிக்க நெசவாளிகள் இந்த கிராமத்து ஏழை உழவர்கள், புன்செய் நிலம். இயற்கைக்கு நெருக்கமான வாழ்வு. இவையனைத்தும் என் நெஞ்சில் பசுமையாக உள்ளன. இந்த உழைக்கும் மக்களுக்கான வாழ்க்கை என்றைக்கும் உறுதிபட வேண்டும். இதை யாரும் பறித்துக்கொள்ளக் கூடாது. 1947-க்கு முன்னர் விடுதலை உணர்வோடு கூடிய நெசவாளர்கள் மத்தியில் நாங்கள் இருந்தோம். என் தந்தையார் வழியிலும் தேச உணர்வு, விடுதலையுணர்வு என் நெஞ்சில் குடியேறிற்று. காந்தி, நேரு, நேதாஜி முதலியவர்கள் மீது அளவுகடந்த மரியாதை இருந்தது. விடுதலைக்குப் பிறகு எல்லோருக்கும் நல்வாழ்வு கிட்டும் என்று நம்பியிருந்தோம். எல்லாமே பொய்யாய் பழங்கனவாய்ப் போயின. 47, 48 காலத்தில் வறுமை நிலை எங்கள் அனைவரையும் கடுமையாகப் பாதித்து இருந்தது என்பதையும் கூடுதலாகச் சொல்லவேண்டும். இது ஒருகாரணம். கோவையில் கல்வி கற்றேன். கோவையில் பணிபுரிந்தேன். தொழிற்பெருக்கம் மிகுந்த நகரம் கோவை. தொடர்ச்சியான தொழிலாளர் போராட்டங்கள். இவர்களது மத்தியில் என் வாழ்வு. கோவைப் பகுதியில் வாழும் ஒருவர் மார்க்சியத்தால் ஈர்க்கப்படாமலும் இருக்கமுடியாது. தஞ்சை, திருச்சி பகுதி என்றால் பெரியாரியத்தால் ஈர்க்கப்படாமல் இருக்கமுடியாது என்பது போல. கோவையில் பணிபுரிந்த காலத்தில்தான் புலவர். ஆதி, எஸ்.வி.ஆர்., தோழர் எஸ்.என். நாகராசன் முதலியவர்கள் மூலம் மார்க்சியத்தை ஆழமாகக் கற்கும் வாய்ப்பு நேர்ந்தது. நான் மார்க்சியத்தை ஏற்பதற்கு இவை அடிப்படையான காரணங்கள். பூர்வீகச் சொத்து எங்களுக்கு இல்லை. ஏதாவது தொழில் செய்துதான் பிழைத்தாக வேண்டும். சாதியில் நான் பிராமணனும் இல்லை. உழவர்கள் தொழிலாளர்களோடு உறவு. இவர்களோடுதான் எங்களுக்கும் வாழ்வு. விடுதலைக்குப் பிறகு எல்லா நம்பிக்கைகளும் பொய்யான நிலைமை. 68இல் கீழ்வெண்மணி. மார்க்சியம் மட்டுமே எங்களுக்கு விடுதலை தரமுடியும். நேரு, காந்தி, குருஷேவ் முதலியவர்கள் மீது எனக்கிருந்த நம்பிக்கையை எனக்குள்ளிருந்து கலைத்தவர் நாகராசன். சோவியத் ஒன்றியத்தில் முதலாளியம்தான் நிலை நிறுத்தப்படுகிறது என்ற உண்மையை நிதானமாகவே அறிந்துகொண்டேன். 68இல் ‘வசந்தத்தின் இடி முழக்கம்’ என்று சொல்லப்படுகிற நக்சல்பாரி இயக்கம் எங்கள் எல்லோரையுமே ஈர்த்தது. மாவோ சிந்தனைக்கு நாங்கள் வசப்பட்டோம். தொடர்ச்சியான படிப்பு. இயக்கத்தோடு குறைந்த அளவுக்கேனும் தொடர்பு. இப்படித்தான் மார்க்சியம் என்னை வசப்படுத்திக்கொண்டது. சிறு வயது முதலே கடவுளைக் காணவேண்டுமென்ற என் விடாப்பிடியான ஆர்வம் ஒரு கட்டத்தில் தியானத்தின் மூலம் நானே பிரம்மம் என்று உணர்ந்து, பிறகு இத்தகைய உணர்வுக்கு என்ன ஆதாரம் என்று எனக்குள் நானே கேட்டுக்கொண்டு, மார்க்சியத்திற்கு எனக்குள் இடம் கொடுத்து விடக்கூடாது என்ற எனது முன்னைய இறுக்கம் எனக்குள் கலைந்து பிறகு மெல்ல மெல்ல மார்க்சியத்திற்கு நான் வசப்பட்டேன். மார்க்சியம்தான் எனக்குள்ளிருந்த சமய உணர்வுக்கான தெளிவையும் தந்தது. நான் முதல் தரமான தமிழிலக்கிய மாணவன். எனக்கு வாய்த்த பேராசிரியர்கள் தகுதிமிக்கவர்கள். என் தமிழிலக்கிய வரலாற்று ஆய்வு கைலாசபதி முதலியவர்கள் மூலம் என்னை மார்க்சியத்தோடு முழுமையாக இணைத்தது. மார்க்சியத்தின் மூலம் தமிழிலக்கிய ஆய்வில் புதிய வெளிச்சங்களைப் பெற்றேன். தமிழிலக்கிய ஆய்வுக்கு மார்க்சியம் இல்லாமல் முடியாது என்று உறுதியாக நான் நம்புகிறேன். தீராநதி : கண் பார்வையிழப்பு உங்களுக்கு ஏன் ஏற்பட்டது? இந்த இழப்பை எப்படித் தாங்கிக் கொண்டீர்கள்? இழப்பிற்குப் பிறகும் இடைவிடாது படிப்பதும், எழுதுவதுமாக இருக்கிறீர்கள். இது எப்படி உங்களுக்குச் சாத்தியமாகிறது? கோவை ஞானி : 1988-இல் நீரிழிவு நோய் காரணமாகப் பார்வையிழப்புத் தொடங்கியது. லேசர் மருத்துவம் செய்துகொண்டபிறகும் பார்வையிழப்புத் தொடர்ந்தது. கோவையில் மருத்துவர் இராமமூர்த்தி அவர்களிடம் உண்மையில் எனக்கு என்ன நேர்ந்தது என்று கேட்டபோது, மிகுந்த அக்கறையோடு எனக்கு விளக்கம் தந்தார். பார்வையை மீண்டும் பெற இயலாது என்ற நிலையில் ஒரு கணம் நான் திகைத்தேன். வேறு வழியில்லை. என் மரியாதைக்குரிய தலைமை ஆசிரியரும் எனக்குப் பதிலாக என் ஊதியத்தில் ஒரு பகுதியைத் தந்து இன்னொருவரைக் கொண்டு மாணவர்களுக்குக் கற்பிக்கலாம் என்று கூறினார். என் பணியை நானே செய்யவேண்டும். நான் ஓய்வு பெற்றுக்கொள்கிறேன். என் இடத்தில் இன்னொருவர் அமர்ந்து முழுமையான ஊதியம் பெறட்டும் என்ற நிலையில் பணியிலிருந்து விடுவிப்பை வேண்டினேன். கல்லூரியில் படித்த காலத்திலும் கோவையில் பணியாற்றிய காலத்திலும் தமிழிலக்கிய திறனாய்விலும், மார்க்சியத்திலும் பெருமளவு என்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தேன். நிறைய எழுதிக்கொண்டும் இருந்தேன். ஆசிரியப் பணியில் அரைத்த மாவையே அரைப்பது எனக்குப் பெரும் சலிப்பாக இருந்தது. கண் பார்வையிழப்பு எனக்கு ஒரு புதிய வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உதவியாளர் ஒருவரை வைத்துக்கொண்டு நிறையப் படிக்கவும், எழுதவும் முடிகிறது. இதைத்தான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓயாமல் செய்து வருகிறேன். என் சமூக ஈடுபாடும், தமிழிலக்கியக் கல்வியும் மார்க்சியமும் அற்புதமான நண்பர்களும் என் குடும்பச் சூழலும், என் எழுத்துக்கும் படிப்புக்கும், நூல் வெளியீட்டிற்கும் இதழ் பணிகளுக்கும் ஆதரவாக அமைந்தன. அமைகின்றன. கற்பதிலும், செரித்துக்கொள்வதிலும் இளமைத்தொட்டே எனக்கு இருந்த ஈடுபாடு இன்றளவும் குறையவில்லை. தீராநதி : ‘புதிய தலைமுறை’ தொடங்கி இன்றுவரை ஏதாவது ஒரு இதழ் பணியில் உங்களை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறீர்கள். அதுபற்றி நீங்கள் சுருக்கமாகச் சொல்லுங்கள். கோவை ஞானி : 1968-70 கால அளவில் எஸ்.என். நாகராசன், எஸ்.வி.ஆர்., புலவர் ஆதி முதலியவர்களோடு நானும் இணைந்து ‘புதிய தலைமுறை’ என்ற கலை இலக்கியத் தத்துவ இதழை நடத்தினோம். சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய கட்சிகளிலிருந்து மாறுபட்டு மாவோவின் சிந்தனையை தமிழகச் சூழலில் முதன்முதலில் உள்ளடக்கமாகக் கொண்டுவெளிவந்த இதழ் இது. எங்கும் எதிலும் தமிழ் என்று எழுதினோம். பாரதிதாசனைப் பாராட்டினோம். தொல்காப்பியம், சங்க இலக்கியம் குறித்த புதிய ஆய்வுகளை வெளியிட்டோம். அந்நியமாதலுக்கு அழுத்தம் தந்து படைப்புக்களை வெளியிட்டோம். மார்க்சியத்திற்குள் புதிய காற்றைக் கொண்டு வந்தது இந்த இதழ். சோவியத் இரஷ்யாவிலிருந்தும் மாவோவின் சீனத்திலிருந்தும் தமிழ்ச் சூழலுக்கு அறிமுகமான மார்க்சியத்தோடு மேலை உலகில் அல்தூசர் முதலியவர் மூலம் மார்க்சியத்திற்குள் வந்த புதிய பரிமாணங்களையும் கற்றுக்கொள்ளும் முறையிலும், தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப்படுத்தும் முறையிலும் 79-80களில் ‘பரிமாணம்’ என்ற இதழை நடத்தினோம். இந்திய வரலாற்றின் தனித்தன்மைகள் தமிழ்ச்சூழலில் இலக்கியம், மெய்யியல் முதலியவை குறித்தும் கட்டுரைகள் வெளியிட்டோம். ஸ்டாலின் பிரச்சனை என்ற முறையில் உலக அளவில் ஸ்டாலின் குறித்த விமர்சனங்களை ஒரு தனி இதழாக வெளியிட்டோம். மாவோவிற்குப் பிறகு சீனம் என்ற முறையில் இன்னொரு தனி இதழ். கோசாம்பி, கால்டுவெல், அல்தூசர், தாமோதரன் குறித்த கட்டுரைகளும் வெளியிட்டோம். இடையில் 70-72 வாக்கில் வானம்பாடி இயக்கத்தினுள் நான் இருந்தேன். தமிழில் புதுக்கவிதையை மார்க்சிய உள்ளடக்கத்தோடு வளர்த்தெடுப்பது வானம்பாடி இயக்கத்தின் நோக்கம். புலவர்களிடமிருந்து மக்களிடம் கவிதையைக் கொண்டு சேர்க்கும் ஒரு சனநாயக இயக்கம் இது. உலகம் முதல்முறையாக தமிழ்க் கவிதைக்குள் இவ்வியக்கத்தின் மூலம்தான் வந்தது என்று சொல்வதில் தவறில்லை. தி.மு.க.விற்கு எதிரான கவிதை இயக்கமும் இது. கவிதை என்றால் என்ன என்று நாங்களும் கற்றுக்கொண்டிருந்தோம். 1983-இல் ‘நிகழ்’ இதழைத் தோற்றுவித்தோம். 88-ல் கண்பார்வை இழந்த நிலையில் ‘நிகழ்’ இதழை நண்பர்கள் ஒத்துழைப்போடு நானே பொறுப்பேற்று நடத்தினேன். 1996 வரை 32 இதழ்கள். தமிழ்ச் சிற்றிதழ் வரலாற்றில் ‘நிகழ்கள்’ பங்களிப்பை யாரும் மறுக்க இயலாது. சோவியத் ஒன்றியத்தில் சோஸலிசம் தகர்ந்த நிலையில், இனி மார்க்சியத்திற்கு வாழ்வு இல்லை என்று பலரும் நம்பிய சூழலில் உண்மையில் மார்க்சியத்தின் உள்ளுறை ஆற்றல்களைக் கண்டறிந்து மேம்படுத்துவதற்குக் கிடைத்த ஒரு மாபெரும் வாய்ப்பு என்ற முறையில் தோழர் எஸ்.என். நாகராசன் அவர்களின் தூண்டுதலோடு ‘நிகழ்’ வகைவகையான கட்டுரைகளை வெளியிட்டது. ‘நிகழி’ன் சிறப்பான கட்டுரைகளை ’இந்தியாவில் தத்துவம் கலாச்சாரம்’, ‘அறிவியல், அதிகாரம், ஆன்மிகம்’, ‘மார்க்சியம் தேடலும் திறனாய்வும்’, சில சிகரங்களும் வழித்தடங்கலும்’, ‘நிகழ் மதிப்புரைகள் நூறு’ என்று 5 தொகுப்புகளில் நூல்களாக நாங்கள் வெளியிட்டோம். நவீனத்துவம், பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம், பெரியாரியம் என்ற முறையில் தமிழகச் சூழலில் நடைபெற்ற பெரும் விவாதங்களை உள்வாங்கி மார்க்சியத்தை விரிவுபடுத்திக் கொண்டிருந்தோம். ’நிறப்பிரிகை’யோடு கடுமையான மோதல் ஏற்பட்ட சூழலில் இப்பொறுப்பை சரியாக நிறைவேற்றினோம். சிறுகதைகள், கவிதைகள், திறனாய்வுகள், மதிப்புரைகள் என ஏராளமாக வெளியிட்டோம். எத்தனையோ புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினோம். 1998 முதல் இன்றுவரை தொடர்ந்து ‘தமிழ் நேயம்’ இதழை நடத்தி வருகிறேன். தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் நம் காலச்சூழலில் நேர்ந்திருக்கிற நெருக்கடிகளுக்கு எதிர்வினையாற்றும் முறையில் சிறப்பான ஆய்வுகளைத் தொடர்ந்து வெளியிடுகிறது தமிழ்நேயம். தமிழ்த் தேசியம் என்பது இதன் மையம். இயற்கை வேளாண்மை, சூழலியம் குறித்த கட்டுரைகள். தமிழியல் ஆய்வுகள் - இதுவரை - இன்று என்ற முறையில் கட்டுரைகள் தமிழனுக்கு உலகப் பார்வை தேவை என்ற முறையில் திறனாய்வுகள் இப்படிப் பலவகையான கட்டுரைகள், ‘தமிழ் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம்’, ‘தமிழனுக்கு மெய்யியல் உண்டா’, ‘தமிழனுக்கு மெய்யியல் உண்டு’, ‘தமிழின் ஆக்கம் -தடையும் விடையும்’, ‘எஸ்.பொ. படைப்பும் பார்வையும்’ ஜெயமோகனின் ‘கொற்றவை படைப்பும், பார்வையும்’, ‘அறிஞர் அண்ணா - பன்முகப் பார்வை’, ‘தோழர் எஸ்.என். நாகராசன் வினாவும் - விடையும்’ இம்முறை இவ்வகையிலான தலைப்புகளில் தனித்தனி சிறப்பிதழ்கள் இவற்றோடு 98 முதல் இன்றுவரை தேர்வு செய்த பெண் எழுத்தாளர் சிறுகதை தொகுப்புகள் 13 வெளியிட்டோம். இவை சுருக்கமாக என் இதழ் பணிகள். தீராநதி : க.நா.சு. முதல் சுந்தர ராமசாமிவரையிலான தமிழ் நவீன இலக்கியத்திற்கு முக்கியமான பங்காற்றியவர்களை மார்க்சியவாதிகள் ஏற்றுக்கொள்வதில்லையே. உங்களால் மட்டும் எப்படி ஏற்க முடிந்தது? கோவை ஞானி : கலை இலக்கியங்களின் உள்ளடக்கம் வர்க்கப் போராட்டமாகத்தான் இருக்கமுடியும். இத்தகைய அடிப்படையிலிருந்துதான் கலை இலக்கியப் படைப்புகள் உருவாக வேண்டும். வர்க்கப் போராட்டத்தில் மார்க்சியக் கட்சிக்கு, தொழிற்சங்கத்திற்கு கட்சித் தலைமைக்கு இடமில்லாமல் முடியாது. தலைவர்கள் புனிதமானவர்கள். நிலவுடைமையாளர்களும், உரிமையாளர்களும் கொடுமைக்காரர்கள், அயோக்கியர்கள். உழைப்பாளிகள் புனிதமானவர்கள். இத்தகைய படிமங்களோடுதான் இவர்களைப் படைக்கவேண்டும். நடுத்தர மக்கள் - படிப்பாளிகள் முதலாளியத்திற்கு சேவகம் செய்பவர்கள் கலை இலக்கியத்தில் உருவத்திற்கு, கலை உணர்வுக்கு, அழகியலுக்கு முதன்மை இல்லை. உள்ளடக்கமாகிய அரசியலுக்கே முதன்மை. இதுதான் கட்சி மார்க்சியரின் திறனாய்வுப் பார்வையாக இருந்தது. இவ்வகையான பார்வை ஸ்டாலின் காலத்தில் உருவான ஸ்தானோவியம் என்ற பார்வையின் தொடர்ச்சி. இதன் காரணமாகத்தான் க.நா.சு. முதலியவர்களைக் கட்சி மார்க்சியர் சாடினர். க.நா.சு. முதலியவர்களுக்கு மார்க்சியர் சொல்லுகிற வரலாறு மற்றும் பொருளியல் அடிப்படையிலான விஞ்ஞானக் கண்ணோட்டம் என்று சொல்லப்படுகிற பார்வை இல்லை என்பது உண்மைதான். இலக்கியம் என்பது அரசியல் ஆவணமாகத்தான் இருக்கவேண்டுமென்பது கட்டாயமில்லை. வர்க்கக் கண்ணோட்டத்தை ஏங்கெல்ஸ் கூறுகிற மாதிரி தட்டில் வைத்துத்தான் வழங்கவேண்டும் என்பதும் உண்மையில்லை. இத்தகைய பார்வைதான் மார்க்சுக்குள் அழுத்தமாக இருந்திருக்குமென்றால் ஷேக்ஸ்பியரையும் பால்சாக்கையும் அவர் கொண்டாடியிருக்க முடியாது. டால்ஸ்டாயை லெனின் கடிந்து ஒதுக்கியிருக்க வேண்டும். இத்தகைய பார்வையில் கார்க்கி, மாயகோவ்ஸ்கி முதலியவர்களும் ஒதுக்கப்பட வேண்டியவர்கள். இவையெல்லாம், கட்சி மார்க்சியர் வழியே மார்க்சியத்திற்குள் வந்த திரிபுகள் / விபத்துக்கள். க.நா.சு. முதலியவர்களுக்குள் சமூகம் பற்றிய அக்கறை இருந்தது என்பதை மார்க்சியர் மறுக்கமுடியாது. அரசியலின் தேவைக்காக வளமான கலை இலக்கியங்களைப் பலியிட முடியாது. கட்சி மார்க்சியரின் பார்வையில் வள்ளுவர், இளங்கோ முதலியவர்களும் திறனாய்வு என்ற முறையில் விமர்சனம் செய்யப்பட்டார்கள். மனித வாழ்வின் பலவிதமான பரிமாணங்களில் ஒன்று அரசியல். அரசியல் தேவைதான் என்றபோதிலும் மனிதனின் அழகியல், அறிவியல் முதலியவற்றை இழக்க வேண்டியதில்லை. ஆண்-பெண் உறவு பற்றி மார்க்சியருக்கு அக்கறை இல்லை. காமம் வெறுக்கத்தக்கது என்ற முறையில்தான், தி. ஜானகிராமன், ஜெயகாந்தன் முதலியவர்களும் சாடப்பட்டார்கள். க.நா.சு.வை சி.ஐ.ஏ. என்று கைலாசபதி சாடினார். வாழ்வுக்கு அர்த்தம் தேடும் இருத்தலியல் மார்க்சியத்திற்குத் தேவையில்லை. சமயம் எப்பொழுதுமே அபின். குழந்தைகள் பற்றி மார்க்சியருக்குப் பார்வையில்லை. இயந்திர நாகரிகம் வாழ்வை நாசமாக்குவது பற்றி மார்க்சியருக்குப் பார்வையில்லை. க.நா.சு.வின் ‘பொய்த்தேவு’ நாவலை மார்க்சியர் பாராட்டியிருக்க வேண்டும். ‘இதய நாதம்’ நாவலை கைலாசபதியும் பாராட்டினார். கட்சி மார்க்சியம், பொருளாதாரவாதமாக, தொழிற்சங்கவாதமாக, அதிகாரமாக மாறிய சூழலில் இவர்களோடு க.நா.சு. முதலிய கலைஞர்கள் ஒத்துப்போக முடியாது. மார்க்சிய அரசியலும் பெரியாரியத்தை, திராவிட இயக்கத்தைப் புரிந்துகொள்ளாமல், முற்றாக மறுத்தது. நடுத்தர வர்க்கப் படிப்பாளிகள், படைப்பாளிகள் கட்சிக்கு அடிமையாக முடியாது. கட்சிக்கு இத்தகைய அடிமைகள், கூலிகள் தேவை. தமிழகச் சூழலில் கட்சி மார்க்சியர் என்பவர் மார்க்சியத்தின் ஆழ, அகலங்கள் தெளிந்தவராகவும் இல்லை. ஜீவா, ஆர்.கே. கண்ணன், விஜயபாஸ்கரன் முதலியவர்களை கட்சி மார்க்சியர்கள் ஒதுக்கவும் செய்தார்கள். மார்க்சியருக்கு அக்காலத்தில் தமிழ் தேசியப் பார்வை இல்லை. தமிழிலக்கியத் திறனாய்வையும் இவர்கள் வர்க்கப்போராட்டம் என்பதையே முதன்மையாக வைத்துப் பார்த்தார்கள். தமிழ் அழகியல் தமிழறம் இவர்களுக்கு வெறுப்பாகத்தான் இருந்தது. சமயத்தை ஒதுக்கிவிட்டு தமிழிலக்கியம் கற்கவும் முடியாது. கம்பர் கொஞ்சம் தப்பிப் பிழைத்தார். பாரதியும் தப்பித்தார். வரலாற்றில் கட்சி மார்க்சியர் இப்பொழுது கற்றுக்கொண்டிருக்கிறார்கள். தம்மைத் திருத்திக்கொண்டிருக்கிறார்கள். தீராநதி : வானம்பாடி இயக்கத்திலும் இருந்துள்ளீர்கள் வானம்பாடிக் கவிஞர்களின் போலியான புரட்சி முழக்கங்களும் கற்பனை வாதங்களும் இன்று பார்க்கும்போது உவப்பாக இல்லை. வானம்பாடிக் கவிஞர்கள் மேத்தா, புவியரசு, சிற்பி ஆகியவர்கள் புரட்சிக்காரர்களாக மாறவில்லையே? இதற்கான அரசியல் தத்துவக் காரணங்கள் ஏதும் உண்டா? கோவை ஞானி : மரபுக் கவிதைகளுக்கு எதிராக சி.சு. செல்லப்பா, க.நா.சு.முதலியவர்கள் புதுக்கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தார்கள். மரபுக் கவிதைகள் சாரமற்று வெறும் எதுகை மோனையாக யாப்பாக மாறிய நிலையில், வானம்பாடிகளின் புதுக்கவிதை இயக்கம் செல்லப்பா முதலியவர்களுக்கு எதிர்வினை தருவதாக இருந்தது. செல்லப்பா முதலியவர்களின் புதுக்கவிதை இயக்கம் அதிக அளவு மனத்தின் குரலாக, படிமமாக, குறியீடாக, மார்க்சிய, திராவிட இயக்கங்களின் எதிர்வினையாக இயங்கியது, பாரதியின் தொடர்ச்சியாகத் தங்களை இனம் கண்டுகொண்ட வானம்பாடிகள் 1967-க்குப் பின் அரசியல் அதிகாரத்தில் நுழைந்து சீரழிந்த திராவிட அரசியலுக்கு எதிர்நிலையாகவும் மார்க்சிய நோக்கில் உலகப் பார்வை மற்றும் சமூகப் பார்வையை சாதி எதிர்ப்பு பெண்ணடிமைத்தன எதிர்ப்பு முதலியவற்றை உள்வாங்கிக் கொண்ட கவிதை இயக்கமாகத் தோன்றியது. வானம்பாடிகளில் பலர் தமிழாசிரியர்களாக இருந்தபோதிலும் யாப்பு மரபுகளைப் புறக்கணித்ததோடு படிம, குறியீடு முதலிய உத்திகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டார்கள். சொன்னதையே திரும்பச் சொல்லுகிற மரபு முறையைக் கைவிட்டார்கள். கட்சி மார்க்சியர் தொடக்கத்தில் வானம்பாடிகளை மறுத்தார்கள். காரணம், கட்சி அதிகாரத்தை இவர்கள் ஏற்கவில்லை. காலங்காலமாகக் கவிதையென்பது மனத்தின் குரலாக மட்டுமல்லாது சமுதாயத்தின் குரலாக, அறத்தின் குரலாக, சில சமயம் போர்க்குரலாகவும் வெளிப்பட்டு இருப்பதைக் கவிதை வரலாறு அறிந்தவர்கள் மறக்கமாட்டார்கள். வானம்பாடிகள் இயக்கம் வளர்ச்சி பெற்ற வேகம் வியக்கத்தக்கதாக இருந்தது. நூற்றுக்கணக்கானவர் கவிதை எழுதினார்கள். தமிழ் மரபின் தொடர்ச்சியால்தான் வானம்பாடிக் கவிஞர்களை வைத்துப் பார்க்கமுடியும். வானம்பாடியின் 23 இதழ்களில் வெளிவந்த அனைத்துக் கவிதைகளையும் தொகுத்து வைத்து உண்மையான தரத்தோடு கூடிய கவிதைகள் என ஒரு 100 கவிதைகளையாவது தெரிவு செய்யமுடியும். வானம்பாடி இயக்கத்தினுள் முரண்பாடுகள் இருந்தன. கவிதை இயக்கமாக இருப்பது மட்டுமே போதாது. இலக்கிய இயக்கமாக, திறனாய்வு இயக்கமாக மாறவேண்டும். மார்க்சியத்தில் மேலும் தெளிவு பெறவேண்டும். உறுதி பெறவேண்டும் என்ற எதிர்க்குரல்கள் நாளடைவில் ஒதுக்கப்பட்டன. நெருக்கடி நிலைக்காலத்தில் வானம்பாடி இயக்கம் ‘இந்திராவே இந்தியா’ என்று குரல் எழுப்பியதோடு, கலை இலக்கியப் பெருமன்றத்தினுள் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டது. மேத்தா முதலியவர்கள் பற்றி தொடக்கம் முதலே விமர்சனம் இருந்தன. உணர்ச்சிகரமான முழக்கங்கள் கவிதையின் உயிராக இருக்கமுடியாது. வானம்பாடிகள் நடுத்தர வர்க்கத்தினர். எதிர்காலத்தில் சமதர்ம சமுதாயம் உருவாகும் என்பதில் உறுதிகொண்ட இவர்கள் கற்பனாவாதத்திற்குள்ளிருந்து கவிதையாக்கம் செய்வதைத் தவிர்க்கமுடியாது. கவிதை இயக்கம் ஓய்ந்த பிறகும் புவியரசு, சிற்பி முதலியவர்கள் தொடர்ந்து எழுதினார்கள். சிற்பியின் கிராமத்து நதி, பாரதி கைதி எண். 2053, சூரிய நிழல் முதலிய அற்புதமான படைப்புக்களைப் படைத்திருக்கிறார். தொடக்கம் முதலே புவியரசுவின் அற்புதமான கவிதைகளை யாரும் மறுக்கமுடியாது. இருத்தலியல் நோக்கி பிரபஞ்ச சூழலில் மனித வாழ்வுக்கு என்ன அர்த்தம் என்ற முறையில் புவி எழுதிய ‘மீறல்’ கவிதைகளை யாரும் மறுப்பதற்கில்லை. இளமுருகு, கங்கைகொண்டான் ஆகியவர்களின் கவிதைகள் நேர்த்திமிக்கவை. ஞானி, ஜீவஒளி, சி.ஆர். இரவீந்திரன், தமிழ்நாடன், தமிழன்பன் முதலியவர்கள் தமிழ்ச்சூழலில் இன்றும் ஆற்றலோடு வகைவகையான படைப்புக்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். வானம்பாடி கவிஞர்களுக்குள் இருந்த புரட்சிகர உணர்வு, அவர்களை கட்சி சார்ந்த புரட்சிக்காரர்களாக மாற்றியிருக்க வேண்டுமென்று எப்படி எதிர்பார்க்கமுடியும். தமிழ்க்கவிதையில் இவர்களில் சிலர் நிலைபெற்றிருக்கிறார்கள். வானம்பாடி இயக்கம் வெறுக்கத்தக்கதாக நான் கருதவில்லை. தீராநதி : எஸ்.பொ.வின் சடங்கு, தீ முதலிய படைப்புகள் அவை எழுதப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை காமம் சார்ந்தவை என்றும், இதன் காரணமாகவே மார்க்சியராக அவர் இருக்கமுடியாது என்றும் மார்க்சியர் சாடும்பொழுது அவரை நீங்கள் இன்றும் கொண்டாடுகிறீர்களே? கோவை ஞானி : மனிதனின் வாழ்வியல் அனுபவத்திலிருந்து காமம் என்பதை விலக்கிப் பார்க்கவே முடியாது. காமம் குறித்த சரியான அணுகுமுறை இல்லையென்றால் என்னவெல்லாம் நேரும் என்பதற்கு ஜெயகாந்தனின் ரிஷிமூலம் முதலிய படைப்புகள் தக்க சான்று. காமத்தை அழித்தால் மட்டுமே மனித விமோசனம் சாத்தியம் என்று மதவாதிகள், துறவிகளின் போலித்தனமான போதனைகள் நெடுங்காலமாக நம் மக்களைக் கடுமையாகப் பாதித்து வந்துள்ளன. இயல்பான காம உணர்வைஅடக்குவதனால் மனித ஆளுமை சிதையத்தான் செய்யும். காமத்தைப் பல வகைகளிலும் தூண்டி வளர்ப்பதை ஒரு பெரும் வணிகமாக முதலாளியம் மாற்றியிருக்கிறது. தற்காலச் சூழலில் காமம் ஒரு வணிகப் பொருள். மார்க்சியருக்கு இது தெரியும். காமம் ஒரு பாவம் என்று சமயவாதி கருதுவது போலவே காமம் குறித்துப் பேசவே கூடாது என்று பேசும் மார்க்சியனும் காமத்திற்கு மறைமுகமாக இடங்கொடுத்து தன் இழிசெயல்களை மறைத்துக்கொள்வது பற்றி இங்கு ஆதாரங்கள் தரவேண்டியதில்லை. எஸ்.பொ.வின் படைப்புகளில் யாழ்ப்பாணத்து நடுத்தர வேளாளர் குடும்பத்து இளைஞர்களும், பெண்களும் திருமணத்திற்குப் பிறகும் வாய்ப்புக் கிடைக்காத சூழலில் தவிப்பது முதலிய அனுபவங்களை விரிவாக எழுதுகிறார். போலித்தனமாக மார்க்சியன் ஒதுக்குவதைப்போல எஸ்.பொ. ஒதுக்கவில்லை. அன்றியும் காமம் பற்றி மட்டுமே எஸ்.பொ. காலமெல்லாம் எழுதிக்கொண்டும் இருக்கவில்லை. கைலாசபதி முதலியவர்களுக்கு முன்பே மார்க்சிய இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் எஸ்.பொ. தொழிற்சங்கப் பணியிலும் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார். எஸ்.பொ.வின் ஆற்றல்மிக்க படைப்புத்திறனும் அவர் பெரிதும் கொண்டாடிய தமிழ்த்துவம், தமிழ் தேசியத்தோடு கைலாசபதி முதலியோர்க்கு உடன்பாடில்லை. முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்பது தொழிற்சங்கமாக இருக்கமுடியாது என்பதும் எஸ்.பொ.வின் கருத்து. வேண்டியவர்களுக்குப் பரிசு வழங்குவதும், பாராட்டுவதும் இவர்களின் தொழிற்சங்க நியதி. எஸ்.பொ.வின் கனத்தை இவர்களின் நொய்மையான படகால் தாங்கமுடியவில்லை. தமிழ்த்தேசியத்திற்கு எதிராக சிங்களத் தேசியத்தோடு ஒத்து உயர்பதவியில் தம்மை அமர்த்திக்கொண்டவர்கள் இவர்கள். இவர்களை அசலான மார்க்சியர் என்று சொல்வதற்குக் கொஞ்சம் முட்டாள் தனமும் தேவை. தீராநதி : புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளில் முக்கியமானவர்கள் கவிஞர் சேரன், அ. முத்துலிங்கம், ஷோபாசக்தி போன்றவர்கள். ஆனால் நீங்கள் ‘வரலாற்றில் வாழ்தல்’ நூலுக்காக எஸ்.பொ.வையே பெரிதும் பாராட்டுகிறீர்கள். இதற்கு என்ன காரணம்? கோவை ஞானி : சேரன், முத்துலிங்கம், ஷோபாசக்தி முதலியவர்களைக் குறைந்த அளவுக்கேனும் நானும் படிக்கிறேன். புரிந்துகொள்கிறேன். இவர்கள் படைப்புக்களின் தனித்தன்மை குறித்தும் எனக்கு மரியாதை உண்டு. சேரனின் கவித்துவச் செழுமையை யாரால் மறுக்கமுடியும். முத்துலிங்கத்தின் வாழ்வியல் அனுபவ வளத்தை யாரால் பாராட்டாமல் இருக்கமுடியும். ஷோபா சக்தியின் படைப்புத்திறன் வியக்கத்தக்கது. நம் மனத்திற்குள் பெரும் தீயாய் சுழன்று அடித்துக்கொண்டிருக்கும் ஈழத் தமிழர் அரசியல் குறித்து இவர்களின் நிலைப்பாடுகள் எத்தகையதாய் இருந்தபோதிலும் இதன் காரணமாக இவர்கள் படைப்புத்திறனையோ தமிழிலக்கியத்திற்கு இவர்கள் பங்களிப்பையோ நான் மறுக்கமாட்டேன். ஒரு வகையில் சரியாகச் சொன்னால் இவர்கள் இளைய தலைமுறையினர் என்றால் நான் இவர்களுக்கு முந்திய தலைமுறையைச் சேர்ந்தவன். எஸ்.பொ.வின் தலைமுறையும், என் தலைமுறையும் ஒத்த தலைமுறை. எனக்குள் நான் பழசாகிவிடவில்லை. இளைய தலைமுறையை இயன்றவரை புரிந்துகொள்கிறேன். கற்றுக்கொள்கிறேன். எஸ்.பொ. அவர்களின் ஆளுமை இவர்கள் எவரையும்விட ஆழமானது. விரிவானது. செரிவானது. எஸ்.பொ.வின் ‘வரலாற்றில் வாழ்தல்’ என்ற அவரது தன் வரலாறு, தமிழுக்கு நம் காலத்தில் கிடைத்த மாபெரும் சொத்து. வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களையும் தன் கால வரலாற்றுச் சூழலில் இருந்து தனக்குள் கண்டு அற்புதமாக எஸ்.பொ. எழுதுகிறார். இலங்கை, இந்தியா மற்றும் உலக அளவிலான வரலாற்று இயக்கத்திற்குள் தன்னைக் கண்டு, இதன் காரணமாகவே தனக்குள் மாபெரும் ஆளுமையைத் தாங்கி, தமிழுக்கு இன்னொரு இதிகாசத்தைத் தந்திருப்பவர் எஸ்.பொ. என்னதான் அவரை விட்டு விலகிச் சென்றாலும் சேரன் முதலியவர்கள் எஸ்.பொ.வின் பிள்ளைகள். தமிழில் நோபல் பரிசுக்குத் தகுதியான நூல் என்று ஒன்றைச் சட்டெனச் சொல்வதென்றால், ’வரலாற்றில் வாழ்த’லைத்தான் நான் சொல்வேன். இந்தப் பெருமைகள் ஒருபுறம் இருக்கட்டும். ஈழத்தமிழகம் சார்ந்த வரலாற்று நெருக்கடியை நம்மால் எப்படி செரித்துக்கொள்ள முடியும்? தீராநதி : சாகித்திய அகாதெமியின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகியே வந்திருக்கின்றன. இப்போது மேலாண்மை பொன்னுச்சாமிக்கு பரிசு வழங்கியிருப்பது பற்றி ஒரு திறனாய்வாளராய் என்ன நினைக்கிறீர்கள்? கோவை ஞானி : சாகித்திய அகாதெமியின் விருதுகள் தந்த வரலாற்றை இன்று திரும்பிப் பார்க்கும்பொழுது நமக்கு உவப்பாக இல்லை. இரண்டாந்தர, மூன்றாந்தரப் படைப்புகள் கூட, படைப்பாளிகள் கூட விருது பெற்றதை நாம் பார்த்திருக்கிறோம். தமிழில் தகுதி வாய்ந்த எத்தனையோ படைப்பாளிகளுக்கு விருது தரப்படவில்லை. இதில் தொடர்பு பெற்றவர்கள் தமிழுக்குக் கேடு செய்தவர்கள். படைப்பின் தரம் குறித்து தெரிவு செய்யும் தகுதியற்றவர்கள். நடுவர் குழு என்பதை நாம் காய்வதற்கான நியாயங்கள் பல உண்டு. மலையாளத்திலோ, கன்னடத்திலோ தகுதிக்குறைவான படைப்பாளிக்கு விருது வழங்கப்படவில்லை என்று சொல்கிறார்கள். தமிழனுக்கு நேர்மைத்திறம் இல்லை என்று சொல்வதில் தவறில்லை. இப்போது மேலாண்மை பொன்னுச்சாமிக்கு விருது கிடைத்த கதையை இதற்குள்ளே நண்பர்கள் சிலர் கூறியதைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். நடுவர் குழுவுக்கு வந்த படைப்புகளில் ஜெயமோகனின் ‘கொற்றவை’க்கு இணையான படைப்பு என்று எதையும் சொல்லமுடியாது. ’ஜெயமோகன் தமிழ்த் துரோகி. அவருக்கு விருது வழங்கக்கூடாது’ என்றாராம் ஒரு நடுவர். கொற்றவையைப் படிக்கவே முடியவில்லை’ என்றாராம் இன்னொருவர். கொற்றவையை ஒதுக்கிவிட்டால், சி.ஆர். இரவீந்திரனின் நாவலுக்கு விருது வழங்கப்பட்டிருக்கலாம். சிற்பிக்கு அவர் மிக நெருக்கமானவர். ‘வேண்டாம்’ என்றாராம் சிற்பி. சிற்பியின் கருத்தை நடுவர் குழு ஏற்க வேண்டியதில்லை. அப்புறம் மேலாண்மை பொன்னுச்சாமியின் சிறுகதை தொகுப்பிற்கு விருது கிடைத்திருக்கிறது. பொன்னுச்சாமியின் ‘மின்சாரப் பூக்கள்’ தொகுப்பிலுள்ள சிறுகதைகள் மிகச் சாதாரணமானவை. வேறு இந்திய மொழிகளில் இக்கதைகளின் மொழிபெயர்ப்பு வெளிவரும்போது, தமிழுக்கு என்ன மரியாதை கிடைக்கும். விருது பற்றிய விவாதத்தை வெளியில் சொல்வது நாகரிகம் இல்லை என்பார்கள் நாகரிகத்திற்கு மணி அடிப்பவர்கள். தீராநதி : மார்க்சிய அறிஞர் எஸ்.என். நாகராசனுக்கும், உங்களுக்குமான உறவு பற்றிச் சொல்லுங்கள். மார்க்சியத்திற்கு அவரது பங்களிப்பாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்? கோவை ஞானி : தோழர் எஸ்.என். நாகராசனுக்கு இப்பொழுது வயது 82. ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலத்தில் தென்கலை வைணவர் குடும்பத்தில் பிறந்தவர். கல்லூரியில் உயிரியியல் கற்றவர். ஆய்வு செய்தவர். ஜே.பி. ஹால்டேன் முதலியவர்களோடு நட்புக் கொண்டவர். உயிரியியல் கல்விதான் தன்னை மார்க்சியத்திற்குக் கொண்டு சேர்த்தது என்பதை அவர் தெளிவாகச் சொல்லுகிறார். பிற்காலத்தில் தான் தென்கலை வைணவராகப் பிறந்ததால்தான் மார்க்சியனாக தனக்குள் உரம் பெற வாய்த்தது என்பதை உணர்ந்துகொண்டார். 1844 மார்க்சின் கையேடுகளின் மூலம் அந்நியமாதல் என்பதை ஆழமாகக் கற்றுப் புரிந்துகொண்டவர் நாகராசன். 1960-க்குப் பிறகு அவர் மூலம்தான் அந்நியமாதல் தொடங்கி எவ்வளவோ, கற்றோம். இரஷியாவிலிருந்து வந்த மார்க்சிய நூல்களோடுதான் நாங்கள் உறவு கொண்டிருந்தோம். கட்சிக்காரர்கள் முதன்மைப்படுத்தும் சில நூல்களோடுதான் எங்களுக்கு உறவு இருந்தது. எங்கள் மார்க்சிய அறிவைப் புரட்டிப் போட்டவர் நாகராசன். மார்க்சிய நூலிலிருந்து எத்தனையோ புதிய வெளிச்சங்களை எங்களுக்கு அவர் அறிமுகப்படுத்தினார். பிரிட்டிஷ் மார்க்சிய அறிஞர் கார்டுவெல், ஜோசர்நீதாம் ஜே.டி. பெர்னால்டு என்று பலரை அவர் வழியே நாங்கள் கற்றோம். டி.டி. கோசாம்பி முதலிய பேரறிஞர்களையும் கற்றோம். இவர்களோடு அமெரிக்க மார்க்சியரும் சிலர். மார்க்சியக்கல்வி என்பது எங்களுக்கு அப்படி ஆழமாகப் பதிந்தது. நக்சல்பாரி இயக்கம் பற்றியும் மாவோவின் மார்க்சியம் பற்றியும் நாகராசன் மூலம் எங்களுக்குக் கூடுதலான தெளிவு ஏற்பட்டது. அறிவியல் சிக்கல்கள் வரலாறு, மெய்யியல், சமயம் என்றெல்லாம் தேடித்தேடி நாங்கள் கற்றோம். எனக்கு மட்டுமல்லாமல், சத்தி, ஈரோடு, கோவை, பெங்களூர் முதலிய பல்வேறு பகுதிகளில் பலருடைய மார்க்சிய ஈடுபாட்டிற்கு நாகராசன்தான் காரணம். நாகராசன் கட்சியிலிருந்தபோதிலும் கட்சியோடு அவர் பல சமயங்களில் முரண்பட்டவராகவே இருந்தார். இந்தியாவுக்கு ஒரு கட்சி கூடாது என்றார். தமிழ்த் தேசியம் தேவை என்றார். திராவிட இயக்கம் குறித்து எதிரான பார்வை கூடாது என்றார். டாங்கே கொள்கைகளைக் கடுமையாகச் சாடினார். மாவோ நெறியில் மார்க்சியத்தை மேலும் வளர்த்தெடுத்தார். மேற்கத்திய மார்க்சியம், கீழை மார்க்சியம் என வேறுபடுத்தி விளக்கினார். உற்பத்தி சக்திகளுக்கு அழுத்தம் தருவது மேலை மார்க்சியம். உற்பத்தி உறவுகளுக்கு அழுத்தம் தருவது கீழை மார்க்சியம். பகை முரண்பாட்டிற்கு அழுத்தம் தருவது மேலை மார்க்சியம். நட்பு முரண்பாட்டிற்கு அழுத்தம் தருவது கீழை மார்க்சியம். இப்படிப் பல விளக்கங்கள் தந்தார். பசுமைப் புரட்சியின் தீமை பற்றி தொடக்கத்திலிருந்தே பேசினார். நவீன அறிவியலும் தொழில் நுட்பமும் புதிய காலனியத்தின் உள்ளார்ந்த கூறுகள். இவை, இயற்கையை நாசமாக்கும். காலனியம், புதிய காலனியம் என்ற பெயரில் திரும்பி வந்திருக்கிறது. சோவியத் தகர்வு தனக்கு வியப்பளிக்கவில்லை என்றார். காரணங்களை விளக்கினார். இப்படி நூறு வகைகளில் மார்க்சியம் குறித்துப் புதிய விளக்கங்களை நாகராசன் தொடர்ச்சியாகத் தருகிறார். இனி ஆயுதப் புரட்சி சாத்தியமில்லை என்கிறார். காந்தியையும், மாவோவையும் இணைக்கவேண்டும் என்கிறார். உழவர்களும், பெண்களும், இசுலாமியர்களும் இணைவதன் மூலமே உலகப் புரட்சி சாத்தியம் என்கிறார். உலக அளவில் நாகராசன் முன்பே அறிமுகம் ஆகியிருக்கவேண்டும். அந்த அளவுக்கு அவரது மார்க்சியம் இன்றைய உலகுக்குத் தேவை. எனக்கு மட்டுமல்லாமல் எத்தனையோ பேருக்கு நாகராசன்தான் மார்க்சிய ஆசான். தீராநதி : மார்க்சிய அறிஞர் எஸ்.வி. ராஜதுரை தமிழகத்தின் அறிவுத்தளத்தில் ஒரு முக்கியமான ஆளுமை. மார்க்சியத்திற்கும் பிற துறைகளுக்கும் அவர் பங்களிப்பு என்ன என்பது குறித்து அவருக்கு நெருக்கமான நண்பர் என்ற முறையில் உங்கள் மதிப்பீடென்ன? கோவை ஞானி : கோவை வட்டாரத்தில் 1965-க்குப் பிறகு எஸ்.என். நாகராசன் அறிமுகமான அதே காலத்தில்தான் எஸ்.வி.ஆர். எங்களுக்கு அறிமுகமானார். ‘புதிய தலைமுறை’ இதழ்மூலம் நாங்கள் இணைந்திருந்தோம். மார்க்சியம் என்று மட்டுமல்லாமல் தமிழில் நவீன இலக்கியம் மேற்குலகின் ஆங்கிலம் வழியே சேர்ந்த இலக்கியம், வரலாறு. இதேபோல இரஷிய இலக்கியம். சீன இலக்கியம் என்று கல்லூரி மாணவர்களைப் போல ‘விழுந்து விழுந்து’ படித்தோம். இயக்கத்தோடும் இணைந்திருந்தோம். நாகராசன் மூலம் நாங்கள் கற்றுக்கொண்ட அந்நியமாதல் குறித்து எஸ்.வி.ஆர். விரிவான நூல் ஒன்றை எழுதினார். எழுத்து வன்மை எஸ்.வி.ஆருக்கு இயல்பானது. திராவிட இயக்கப் பின்னணியிலிருந்து வந்தவர் எனினும் மார்க்சியத்திற்கு அவர் முழுமையாக வசப்பட்டார். வியட்நாம், சேகுவேரா என்று ஆவேசமாக அவர் பேசுவார். கல்லூரிக் கல்வி அவருக்கு இல்லை எனினும் அரசுப் பணியில் அவர் ஈடுபட்டிருந்ததன் விளைவாக ஆங்கிலத்தில் எழுத்து வன்மையையும் பெற்றிருந்தார். சென்னையிலிருந்த க்ரியா, கசடதபற, பிரக்ஞை நண்பர்களோடு அவர் ஆழமான உறவு கொண்டிருந்தார். அவர்களோடு விவாதித்தார். இருத்தலியல் குறித்து ‘கசடதபற’ நண்பர்கள் பெரும் ஈடுபாட்டோடு பேசியபொழுது எஸ்.வி.ஆரும், நானும் இருத்தலியல் பற்றி 50-க்கும் மேற்பட்ட நூல்களைச் சேகரித்து ஆழ்ந்து கற்றோம். இருத்தலியல் குறித்து மார்க்சிய நோக்கில் தெளிவு பெற்ற நிலையில் அற்புதமான நூல் ஒன்றை (எக்ஸிஸ்டென்ஷியலிசம்) எழுதினார். சல்சனிட்சன் குறித்து பிரக்ஞையில் எழுதினார். எஸ்.வி.ஆரின் நட்பு வட்டாரம் தமிழகத்திற்கு வெளியிலும் உலக அளவில் விரிவுடையது. ஆங்கிலம், தமிழ் என்று பலதுறை நூல்களை நண்பர்கள் மூலம் சேகரித்து விரிவாக அவர் கற்பார். நாடகம் பற்றிய வெங்கட்சாமிநாதன் நூலுக்கு அவர் அக்காலத்திலேயே விரிவான முன்னுரை எழுதினார். இதன்பிறகு அவர் சென்னைக்குக் குடியேறினார். அவரது எழுத்துப்பணிகள், இயக்கப்பணிகள் விரிவு பெற்றன. புரட்சிகர மார்க்சிய இயக்கத்தினரோடு அவர் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். தருமபுரி, திருப்பத்தூர் போன்ற ஊர்களில் என்கவுன்ட்டர் என்ற பெயரில் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் உச்சநீதி மன்றத்தில் அவர் வழக்குத் தாக்கல் செய்தார். கட்சியினரோடு, இயக்கத்தவரோடு அவர் கொண்டிருந்த அனுபவங்கள் வெகு நுட்பமானவை மட்டுமல்ல; கசப்பானவையும்தான். நாகராசன் ஓரிடத்தில் நிற்கமாட்டார். அலைவார். எஸ்.வி.ஆர். எந்த இடத்திலும் நின்று எதனையும் எதிர்கொள்வார். செய்து முடிக்காமல் ஓயமாட்டார். ரஷ்யப்புரட்சி - முன்னும், பின்னும் ரஷ்ய இலக்கிய உலகில் என்னவெல்லாம் நடந்தன என்பது பற்றி ‘ரஷ்யப் புரட்சி - இலக்கிய சாட்சியம்’ என்ற ஒரு அற்புதமான நூலை எஸ்.வி.ஆர். எழுதினார். அவரது படிப்பறிவின் விரிவை அறிந்துகொள்ள இந்த ஒரு நூலே போதும். மார்க்சியம் குறித்து ஜார்ஜ் தாமஸ் எழுதிய 3 நூல்களை எஸ்.வி.ஆர். மிகச் சிறப்பாக மொழிபெயர்த்தார். மொழிபெயர்ப்பில் அவரது ஆழ்ந்த கவனத்திற்கு ஈடுசொல்லமுடியாது. மொழியாக்கம் செய்யும் நூலில் இடம்பெறும் கோட்பாடுகள் பிற நூலாசிரியர்கள் முதலியவை குறித்து விரிவான அடிக்குறிப்புகள் தராமல் இருக்கமாட்டார். கட்சி மார்க்சியர் புறக்கணித்த மார்க்சிய பேரறிஞர்களில் ஒருவர் கிராம்சி. கிராம்சியின் எழுத்துக்கள் சிக்கலானவை. ஒரு சவால் போலத்தான் கிராம்சியைப் படித்து எழுதமுடியும். கிராம்சி குறித்து முழு நூலொன்றை எஸ்.வி.ஆர். எழுதினார். இருத்தலியல் பற்றி நாங்கள் படித்த காலத்தில் எங்களுக்குப் பெரும் தலைவலியாய் இருந்தவர் சார்த்தர். சார்த்தருடைய நூல்களோடு போராடி, பின்னர் அவர் விரிவான நூலொன்றை எழுதினார். 80-களில் அமைப்பியல், பின் நவீனத்துவம் முதலியவை குறித்து பெரும் விவாதங்கள் நடந்தபோது அல்தூசர் பற்றியும், ஃப்ராங்பர்ட் மார்க்சியம் குறித்தும் நூல் எழுதினார். ஸ்டாலின் காலத்தில் கடுமையான பாதிப்புக்கு உள்ளானவர் மீது எஸ்.வி.ஆருக்கு எப்பொழுதுமே அக்கறை அதிகம். (கட்சி மார்க்சியரால் இவரும்தான் பாதிக்கப்பட்டவர்) அண்ணா அகம்தோவா கவிதைகள் நேர்த்தியானவை. அவரது கவிதைகளை மொழிபெயர்த்தார். இன்னொரு சமயம் மாவோவின் கவிதைகள் மொழிபெயர்ப்பையும் செய்தார். எப்பொழுதெல்லாம் புரட்சியாளர்களின் கவிதைகள் கைக்குக் கிடைக்குமோ அப்பொழுது எல்லாம் சேகரிப்பவர் எஸ்.வி.ஆர். தொடக்கம் முதலே எஸ்.வி.ஆருக்கு பெரியாரியத்தின் மேல் ஆழ்ந்த பற்று உண்டு. பெரியாரை ஒதுக்கிவிட்டு இன்றைய தமிழ்ச் சமுதாயத்தைப் பார்க்கமுடியாது. பெரியாரியம் குறித்தும் ஆய்வுகள் தொடர்ந்து வெளிவருகின்றன. வெளிநாட்டவரும் செய்கின்றனர். பெரியாரின் வாழ்வும், பணியும் குறித்து எஸ்.வி.ஆரும்., கீதாவும் இணைந்து வெளியிட்ட ஆய்வு நூல்கள் மிகச் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. இதற்காக அவர் ஏராளமான ஆதாரங்களைச் சேகரித்தார். ஆங்கிலத்திலும் அவர் எழுதினார். பெரியாரியம் குறித்த எஸ்.வி.ஆரின் ஆய்வுக்கு இணை சொல்லமுடியாது. எந்த ஒரு சமயத்திலும் மார்க்சியத்திலிருந்து விலகி பெரியாரைப் பற்றியோ, இன்னொருவரையோ இவர் எழுதவில்லை. பெரியாரியம் குறித்து எழுதிய அதே காலத்தில் தலித்தியம் குறித்தும் நிறைய எழுதினார். பெரியாரியத்தை தலித்தியம் பற்றி எழுதும் சிலர் குறைத்து எழுதியதை இவர் மறுத்தார். தலித்தியம் பற்றி எழுதும்போதே மார்க்சியத்தைக் குறித்து எழுதுவதும் இவருக்கு முரண்பாடில்லை. இது குறித்தும் அவர் எழுதினார். எஸ்.வி.ஆரை தமிழகத்தின் இன்னொரு சாமிநாத சர்மா என்று சொல்வது போதாது. அவரை மதிப்பீடு செய்வதும் எனக்கு சாத்தியமில்லை. அவரது படிப்பறிவும் உலக அளவிலான அரசியல் பற்றிய அறிவுத் தெளிவும், எனக்கில்லை. தொட்ட எது குறித்தும்நூல்கள், இதழ்கள், இணையதளம் என்று தேடித் தேடி விரிவாக அவர் இன்றைக்கும் எழுதி வருகிறார். அவரைத் தொடர்வதும் எனக்கு சாத்தியமில்லை. தன் வரலாறு குறித்து அவரே எழுதி வைக்கவேண்டும். இது என் பேராசை. தீராநதி : தமிழ் இனப் படுகொலைக்கு சீனா இலங்கைக்குச் செய்துவரும் உதவியைப் பற்றி இங்குள்ள மார்க்சியவாதிகள் வாயைத் திறப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன? கோவை ஞானி : ஈழத்தில் நடைபெறுவது இனப்படுகொலைதான் என்பதை இப்பொழுது அனைவரும் ஒப்புக்கொண்டுதான் பேசுகிறோம். இந்தப் படுகொலைக்கு சீனா மட்டும்தான் உதவி செய்கிறது என்பதுமில்லை. இந்தியாவும்தான் உதவி செய்கிறது. சிங்கள அரசு செய்யும் இந்தப் படுகொலையை இந்திய அரசுதான் ஊக்குவிக்கிறது. உதவி செய்கிறது. உலகமே வேண்டாம் என்றாலும் சீக்கிரம் செய்து முடித்துக்கொள்ளுங்கள் என்று சொல்வது இந்தியாதான் என்பதும் இப்பொழுது வெட்டவெளிச்சமாகி வருகிறது. சீனா ஏன் உதவி செய்கிறது என்பது உங்கள் கேள்வி. சீனா ஒரு சோசலிச நாடாயிற்றே. எப்படி இதைச் செய்யமுடியும் என்பது உங்கள் உணர்வு. திபெத் தன்னுரிமைக்காக நேரு காலம் முதலே போராடி வருகிறது. நேருவும் வேறு வழியில்லாமல் திபெத்தின் மீது சீனாவுக்கு இறையாண்மை உண்டு என்று ஒப்புக்கொண்டார். ஒப்புக்கொள்ளவில்லை என்றால் சிக்கல் இன்னும் கடுமையாக இருக்கும். திபெத் மக்களுக்கு ஒரு தேசிய இனம் என்ற முறையில் இறையாண்மை உண்டு என்பது பற்றி இப்பொழுது நம்மால் பேசமுடியும். சச்சனியா மீது ரஷ்யாவும்தான் கடுமையான போர் நடத்தியது என்பதையும் நாம் மறக்கவில்லை. சோசலிசம் என்பதன் எச்சம் ஏதேனும் இவர்களிடம் இருக்கிறதா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். அண்மையில் இலங்கையின் பொருளியலுக்குள் இந்திய முதலாளிகளின் ஊடுருவல் மிகக் கடுமையாகஅதிகரித்துக்கொண்டு வருகிறது. சீனாவும் இதைச் செய்கிறது. இலங்கைத் தீவில் சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து பொருளியல் அதிகாரம் தொடர்ந்து பறிபோய்க்கொண்டு இருக்கிறது. விடுதலைப்புலிகள் மீது போர் என்று தொடங்கி தமிழினத்தையே அழித்தாகவேண்டுமென்ற வெறி அவர்களைப் பிடித்தாட்டுகிறது. இதற்காக அவர்கள் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் தம் பொருளியல் அதிகாரத்தை விட்டுக்கொடுக்கிறார்கள். இலங்கைத் தீவின் பொருளியல் அதிகாரம் இப்படி அந்நியர் கைகளுக்குள் செல்லும் நிலையில் சிங்கள மக்களுக்கு என்ன மிஞ்சும். இராணுவம்தான்சிங்கள அரசியல்வாதிகளை இப்பொழுது ஆட்டி வைக்கிறது. இராணுவ வெறிக்கு எல்லைகள் கிடையாது. கொலைவெறி இறுதியில் அவர்களை மனிதத் தரத்திலிருந்து கீழே தள்ளும். தமிழனை ஒழித்துவிட்டு அப்புறம் அவர்கள் சிங்கள மக்கள் தங்களைத் தாங்களே கொன்று தீர்ப்பார்கள். மேலும் ஒன்று, தென்கிழக்கு ஆசியப்பகுதியில் அமெரிக்காவின் ஆசீர்வாதத்தோடு இந்தியா தானும் ஒரு வல்லரசு என்று தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் முறையில் சிங்கள அரசுக்கு அவன் கேட்டும், கேட்காமலும் உதவி செய்கிறது. இந்தியாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக சீனா இலங்கைக்கு வருகிறது. இலங்கைத் தீவின் துறைமுகங்கள் சிலவற்றை சீனா கட்டிக்கொண்டிருக்கிறது. எப்பொழுதாவது இந்தியாவுக்கும், சீனாவுக்குமான போர் மூளும்போது என்னவெல்லாம் நேரும் என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இந்தியாவின் மைய அரசு, இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த விதியை ஆதாரமாகக் கொண்டு இந்தப் போரை நடத்துகிறது. குறைந்த அளவு பாராளுமன்றத்திற்காவது அரசு தன் நோக்கத்தைத் தெளிவுபடுத்தியதா என்றெல்லாம் இங்குள்ள அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பவில்லை. கட்சி மார்க்சியரிடம் எந்தக் கேள்விக்குத்தான் விடை கிடைக்கும். தீராநதி : ஜே. கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ ஜக்கிவாசுதேவ், ரவிசங்கர் மற்றும்நித்யானந்தர் முதலியவர்கள் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன? கோவை ஞானி : ‘கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை’, ‘நானும், கடவுளும் நாற்பதாண்டுகளும்’ ஆகிய எனது நூல்களைப் படித்தவர்கள் ஓரளவுக்கேனும் என் சிந்தனைப் போக்கை புரிந்துகொள்ளமுடியும். கடவுள் என்பதை ஜே.கே. முதலிய அனைவரும் மறுத்துவிட்டு, கடவுள் தன்மை என்பது பற்றித்தான் பேசுகிறார்கள். இவர்களைப் படிக்கும்பொழுது இன்னும் இவர்களுக்குள் மதம் என்பதன் எச்சம் இருக்கிறதோ என்று நான் எண்ணிக் கொள்வேன். எனக்குள்ளும் இப்படி இருக்கக்கூடும். சமயம், கடவுள் ஆகியவற்றை ஆழமாகவும், சரியாகவும் புரிந்துகொள்ள நான் பலஆண்டுகள் செலவிட்டிருக்கிறேன். பிரபஞ்சம் என்பது ஒரு பேரியக்கம், இயற்கை, உலகம், உயிர்கள், தாவரங்கள், நீர், நிலம், காற்று முதலியவை மாபெரும் பிரபஞ்ச இயக்கத்தின் பிரிக்கமுடியாத கூறுகள். இந்தப் பேரியக்கத்தினுள்தான் நாமும் இருக்கிறோம். பிரபஞ்சம், இயற்கை முதலியவை தொடர்ந்து இயக்கத்தில் இருப்பவை. மாறிக்கொண்டும், மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டும் இருப்பவை. இந்தப் பேரியக்கம் நமக்குள்ளும் இருக்கிறது. நமக்குள்ளும் பேரியக்கம் என்ற படைப்பியக்கம் இயங்குகிறது. படைப்பில்லாமல், இயக்கமில்லாமல் நாம் இல்லை. பிரபஞ்சம், இயற்கை, வரலாறு முதலியவற்றை எந்த அளவுக்கு நாம் அனுமதிக்கிறோமோ, எந்த அளவுக்கு இவற்றின் விரிவுக்கும், ஆக்கத்திற்கும் இடம் தருகிறோமோ, எந்த இடத்தில் எந்தக் கணத்தில் தான் என்ற உணர்வு அற்றுப் போகிறதோ, அந்த அளவுக்கு பிரபஞ்சம் என்ற பேரியக்கத்துடன் நாம் கரைந்து விடுகிறோம். தன்னலமற்றவர்களாக, தற்செருக்கு அற்றவர்களாக மாறுகிறோம். நம் அறிவு, ஆற்றல் ஆகியவை இயற்கையிலிருந்து சமூகத்திலிருந்து நாம் பெற்றவை. இவற்றுக்கு தனி மனிதன் என்ற முறையில் நாம் உரிமை கொண்டாட முடியாது. பிரபஞ்சம் என்ற இதுவரை நான் விவரித்த இந்த பேரியக்கத்திற்கு முன்னோர்கள் வைத்த பெயர் கடவுள். இமயமலையிலிருந்து ஒரு சிறு கல்லைப் பெயர்த்து இது கடவுள் என்று சொல்வது மாதிரி, இது ஒரு வகையில் இதுதான் அத்வைதம் என்ற பேருணர்வு. இந்தப் பேருணர்வை தனக்குள் கண்டவர் பிராமணனாக, முதலாளியாக, அதிகாரியாக, நான் எல்லாம் அறிந்தவன் என்பவனாக இருக்கவே முடியாது. விவேகானந்தரும், பாரதியாரும் இத்தகைய பேருணர்வைப் பெற்றவர்கள். இந்தப் பேருணர்வுக்கு இன்னொரு பெயர் சமதர்மம். மார்க்சியனாக இருந்துதான் நான் இத்தகைய புரிதலைப் பெற்றேன். இத்தகைய புரிதலோடு வாழ்பவர் எல்லாவற்றையும் எல்லாரோடும் பகிர்ந்துகொள்ள முடியும். இவர்தான் அசலான மகான். இதுதான் கடவுள் தன்மை. ஓஷோ. ஜே.கே. இத்தகைய உணர்வு கொண்டவர்கள் மார்க்சியத்தை இவர்கள் ஒத்திருக்கலாம். மறுத்திருக்கலாம். பெரிய மடம், நிலச்சொத்து, அதிகார வெறி, தான் குரு என்ற மமதை, சாதி உணர்வு முதலியவற்றைத் தனக்கு ஆதாரமாகக் கொண்டவன், உண்மை ஞானம் பற்றிய அறிவைச் சிறிதளவும் பெறாதவன். வேதம், பகவத்கீதையென நாம் கதைக்கவேண்டாம். சித்தர்கள், சூஃபிகள் பற்றி நமக்குப் புரிதல் தேவை. இந்தப் பேருணர்வு என்ற பெருந்தளத்தில் எவ்வளவு காலம் எத்தனை பேர் வாழமுடியும் என்பது கேள்வி. மு. தளையசிங்கம் பற்றி இவர்கள் வரிசையில் நான் குறிப்பிட விரும்புகிறேன். இத்தகைய பேருணர்வு எல்லாருக்கும் எந்த ஒரு கணத்திலும் சாத்தியம். அந்த ஒரு கணத்தை நமக்குள் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். புத்தர் முதலியவர்கள் இப்படித்தான் ஞானம் பெற்றார்கள். ஒரு மார்க்சியனுக்கும் இந்த ஞானம் இல்லாமல் முடியாது. ஜக்கி வாசுதேவ் முதலியவர்கள் ஓர் அமைப்பை வைத்துக்கொண்டுஎன்னனென்னவோ செய்து கொண்டிருக்கிறார்கள். அதிகார பீடங்களை அமைத்துக்கொண்டு வாழ்கிற துறவிகள் போலித் துறவிகள். சமயத்திற்கும் சமுதாயத்திற்கும் எதிரானவர்கள். குறைந்த அளவுக்கு வள்ளலார் போல செயல்படலாம். இரவிசங்கர் போல செயல்படலாம். மார்க்சியத்திற்குள்ளிருந்தும் இத்தகைய துறவிகள் செயல்படலாம். என்னளவில் லெனின் ஒரு மகான்; ஜெயகாந்தன் சொல்வதுபோல. தீராநதி : செம்மொழித் தமிழ் என்பது குறித்து இப்போது நீங்கள் மிகுந்த ஆதங்கத்தோடு தொடர்ந்து எழுதுகிறீர்கள். இதற்கு என்ன காரணம்? கோவை ஞானி : தமிழனுக்கும், தமிழுக்கும் இன்று நேர்ந்துள்ள நெருக்கடிகள் மிகக் கடுமையானவை. தமிழன் இந்தியனுக்கு மட்டுமல்லாமல் அந்நியருக்கும் அடிமைப்பட்டுள்ளான். தன் அரசியல், பொருளியல், கல்வி, மருத்துவம், இசை முதலிய அனைத்தையுமே இழந்தவனாக, வறியவனாக இருக்கிறான். தமிழனின் அரசியல் பொருளியல் முதலியவற்றைத் தீர்மானிக்க இயலவில்லை; தமிழின் பெயர் சொல்லி அரசியல் தலைமைக்கு வந்தவர். தமிழனைக் கொள்ளையடித்து அந்நியருக்கும் அடிமைப்படுத்தியிருக்கிற தமிழன் தன் நெடுங்கால வரலாற்றைத் தொலைத்துக் கொண்டிருக்கிறான். தமிழன் தன் மொழியைக் கூடத் தக்க வைத்துக்கொள்ளாமல் தவிக்கிறான். தமிழை இழந்தபிறகு, தமிழ் நிலத்தையிழந்த பிறகு தமிழனுக்கு இங்கு என்ன சாத்தியப்படும். தமிழ் இன்று தமிழனுக்கு முதல் மொழியாக இல்லை.ஆங்கிலத்துக்கு இடம் கொடுத்து தமிழ் அழிந்து கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தை வைத்து சம்பாதிக்க முடியும். அதிகாரம் செய்யமுடியும். தமிழ்ப் பண்பாட்டை அழிக்கமுடியும். தமிழைக் கொலை செய்யமுடியும். ஆங்கிலத்தோடு இந்தி, சமஸ்கிருதத்தின் ஆதிக்கம் கடுமையாக இருக்கிறது. இந்துத்துவம் தன் பிடிப்பைக் குறைத்துக்கொள்ளாது. சமஸ்கிருதத்திற்கு எதிராக தமிழை இன்றும் நிலைநிறுத்த முடியாது. இந்திய வரலாற்றில் தமிழனின் தொன்மை பற்றி இன்றைக்கும் அழுத்தமாகப் பேசமுடியாது. உண்மையில், இந்திய நாகரிகத்தில் தமிழ் நாகரிகத்தின் பங்களிப்பென்பது 100-க்கு 80 அல்லது 90 விழுக்காடு என்று உறுதியோடு சொல்லமுடியும். தமிழன் ஒரு காலத்தில் கிரேக்கத்தோடும், சீனத்தோடும் உறவு கொண்டிருந்தான். தென்கிழக்கு ஆசியா முழுவதும் தமிழ் நாகரிகம் பதிந்து இருக்கிறது. இந்திய நாகரிகத்தின் அடித்தளம் முழுவதும் தமிழ் நாகரிகம். இந்தியாவில் காகிதம், கட்டிடம், தர்க்கம், மெய்யியல், இசை, வேளாண்மை என்று எவ்வளவோ துறைகளில் தமிழனின் சாதனைகள் முதன்மையானவை. தமிழைச் செம்மொழி என்று இந்திய அரசு, கலைஞரின் ஒத்துழைப்பில்லாமல் மத்தியில் ஆட்சி நிறுவமுடியாது என்ற சூழலில் ஏற்றுக்கொண்டது. இந்த வாய்ப்பை இப்பொழுது முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் அக்கறையோடும், ஆதங்கத்தோடும் பேச வேண்டியிருக்கிறது. செம்மொழி என்றால் சங்க இலக்கியம் பற்றிய இலக்கிய ஆய்வோடு நிறுத்திக்கொள்ள முடியாது. சங்க இலக்கியத்தின் வழியே தமிழ் நாகரிகத்தின் தொன்மை குறித்த ஆய்வுகளுக்குள் நாம் செல்லவேண்டும். ஹரப்பாவுக்கு முற்பட்டது ஆதிச்சநல்லூர். சமஸ்கிருதம் தமிழைப் பார்த்துத்தான் தன்னைத் திருத்தம் செய்தது. தமிழ் நாகரிகம் உலகில் எத்தனையோ மொழிகளில் தன்னைப் பதிவு செய்துள்ளது. சமஸ்கிருதத்தில் உள்ள வேதம் முதலியவை மேலுலகச் சார்பு கொண்டவை. தமிழிலக்கியமும், தமிழ் நாகரிகமும் மண்ணுலக, மனித உலகச் சார்பு கொண்டவை. சாதியில்லாமல், வருணம் இல்லாமல் மனிதன் வாழமுடியும். சங்க இலக்கியம் முதலியவற்றில் பதிந்துள்ள தமிழ் மெய்யியல், தமிழ் அறம் என்பவை தமிழர் மத்தியில் சமத்துவம், சமதர்மம் ஆகியவற்றைத் தாங்கி நிற்பவை. சித்தர் இலக்கியம்தான் தமிழிலக்கியத்தின் மையம். வள்ளுவர், இளங்கோ, சாத்தனார் முதலியவர்கள் அசலான தமிழ்ச் சான்றோர். சமணமும், பௌத்தமும் தமிழ்ப் பண்பாட்டை மேன்மைப்படுத்தியவை. சைவமும், வைணவமும் அடிப்படையில் மனிதச் சார்புடையவை. செம்மொழித் தமிழ் ஆய்வு என்றால் இத்தனை விரிவு நமக்குத் தேவை. ஆய்வு நிறுவனமும் பேராசிரியப் பெருமக்களும் இந்த நோக்கத்தோடுதான் இயங்கவேண்டும். இந்திய வரலாற்றில் இன்று இந்திய / பொருளியல் சூழலில் தமிழன் தன்னை நிறுவிக்கொள்ள வேண்டும். இதற்காகத்தான் செம்மொழித் தமிழ் ஆய்வு, வெற்று இலக்கிய ஆய்வுகள், தமிழனை மேன்மைப்படுத்த முடியாது. தீராநதி : நீங்கள் மார்க்சியவாதியாக இருந்து கொண்டே தமிழ்த் தேசியம் பற்றி எப்படிப் பேச முடியும்? கோவை ஞானி : மார்க்சியமும் தமிழ்த் தேசியமும் எந்த வகையிலேனும் முரண்படும் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்தியாவின் அரசியல் சட்டம் உருவாகிற தொடக்க காலத்தில் இந்தியாவிலுள்ள தேசிய இனங்கள் தனித்தனியே அரசு அமைத்துக் கொள்வதற்கான உரிமை உண்டு என்று கம்யூனிசக்காரர்கள் மட்டுமல்லாமல் காங்கிரசுக்காரர்களும் கொண்டிருந்தார்கள். இந்தியா, பாகிஸ்தான் என்ற பகைமை எழுந்து கொலை வெறித் தாண்டவமாடிய காலத்தில் வலுவான மத்திய அரசு இருந்ததாக வேண்டும். மைய அரசின் அங்கங்கள்தான் மாநில அரசு என்ற கருத்து வலுப்பெற்றது. இந்தியா ஒரு ஒன்றியமாகத்தான் இருக்க வேண்டும். சில குடியாட்சிக் கூறுகளோடு சில கருத்தை நேரு முன்வைத்தார். அம்பேத்காரும் ஏற்றார். தேசிய இனம் என்ற முறையில் எந்த இனத்திற்கும் இறையாண்மை உண்டு. தேசிய இனங்கள் தன் இறையாண்மையை இழக்காமல் ஒரு உண்மையான கூட்டாட்சிக்குள் இணைந்து வாழமுடியும். இந்திய அரசு இத்தகையதாக இல்லை. தேசிய இனங்களை மைய அரசு ஒடுக்குகிறது. பிரிவினை என்று பேசினால் பயங்கரவாதம் என்று இராணுவத்தை வைத்து ஒடுக்குகிறது. இது நமக்கு உடன்பாடில்லை. தன் உரிமை சுயநிர்ணய உரிமை என்பதை நாம் விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை. சோவியத் ஒன்றியத்தில் தேசிய இனங்களின் தன் உரிமையை ஒப்புக் கொள்கிற கொள்கை இருந்ததன் காரணமாகத்தான், கோர்ப்பசேவ் காலத்தில் தேசிய இனங்கள் விடுதலை பெற்று தனி அரசு ஆயின. லெனினுக்கோ, மார்க்சியத்திற்கோ இது எதிரானதில்லை. தமிழ்த் தேசியம் என்று நாம் பேசும்பொழுது இந்தியாவிலிருந்து நாம், வெட்டிக் கொள்ளும் நோக்கத்தோடு பேசவில்லை. மைய அரசோ, பெரும் முதலாளிகளோ அந்நிய நிறுவனங்களோ தமிழகத்திற்குள் நுழைந்து தமிழ் நிலத்தைத் தமிழ் மக்களின் வாழ்வுக்கு ஆதாரமான நிலங்களை, நீர் நிலைகளை, கனிமவகைகளை, மக்கள் உரிமைகளைப் பறிக்க வேண்டாம். ஒடுக்க வேண்டாம். இப்படி அவர்கள் செய்வதன்மூலம் தமிழ் மக்களிடமிருந்து தமிழ் தேசத்தை, தமிழ் மக்களின் வாழ்வு உரிமையை பறித்து தமிழ் மக்களை வறியவர்களாக, ஏழைகளாக, கோழைகளாக, தன்மானம் அற்றவர்களாக எதிரிகளாக ஆக்க வேண்டாம் என்பது நம் கோரிக்கை. தமிழ் என்ற பெயரால் தமிழ் மக்களை எல்லா வகையிலும் ஒடுக்கும் அரசியல்வாதிகள், முதலாளிகள் தமிழ் மக்களுக்கு எதிரிகள், தொழில் வளர்ச்சி என்ற பெயரில் இங்குள்ள இயற்கை வளங்களை மாசுபடுத்த வேண்டாம். தமிழ்த் தேசத்தின் எல்லைக்குள் வருகிற எவரானபோதிலும் அவர்களுக்குரிய குடியுரிமை முதலிய அனைத்தையும் தமிழ் மக்கள்தான் தீர்மானிக்க முடியும். தமிழ்தான் ஆட்சிமொழி, பயிற்றுமொழி, பிறதேசிய இனங்களோடு பகை இல்லை. கொண்டும் கொடுத்தும் உறவாட நமக்குத் தெரியும். தமிழனுக்கு நெடுங்கால வரலாறு உண்டு. மேன்மை உண்டு. இவற்றை நாம் இழந்து விடமுடியாது. தமிழறம் என்பது அடிப்படையில் சமதர்மம் / சமத்துவம். தமிழன் அசலான மனிதன். நாம் கேட்கும் உரிமைகள் அனைத்தும் எல்லா இன மக்களுக்கும் உண்டு. ஆகவே மார்ச்சியமும் தமிழ்த் தேசியமும் முரண்பட இயலாது. ’மணா’வின் ஆளுமைகள், சந்திப்புகள், நேர்காணல்கள் நூலிலிருந்து - 2002 - மணா இலட்சுமணன் "தமிழர்களின் பாரம்பரியச் சொத்து திரும்பவும் நம்மை வந்தடைந்தாக வேண்டும்’’ கோவை ஞானி இந்தச் சந்தர்ப்பத்தில் ‘தீராநதி’ இதழுக்கான கோவை ஞானியுடன் இரண்டு அமர்வுகள் உட்கார்ந்து எடுத்த விரிவான நேர்காணலில் இருந்து அவருடைய கருத்தியலை உணர்த்தும் சில பகுதிகள்: தமிழ் இலக்கிய, விமர்சன உலகில் தவிர்க்க முடியாத பெயர் – கோவை ஞானி. கி.பழனிச்சாமி – இதுதான் இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர். முப்பது ஆண்டுகளாக ஆசிரியப்பணி. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இலக்கியம், அரசியலில் தடம் பதித்திருக்கிற இவர், சர்க்கரை நோயினால் கண் பார்வையை இழந்தவர். நண்பர்களின் துணையுடன் கடைசிவரை வாசிப்பைக் கைவிடாமல் எழுதி வந்தவர். பார்வை இழப்பை மீறிய பார்வையுடன் ‘தமிழ் நேயம்’ என்ற இலக்கிய இதழைக் கோவையில் இருந்து கொண்டு வந்தவர். ஏற்கனவே ‘புதிய தலைமுறை’, ‘பரிமாணம்’, ‘நிகழ்’ போன்ற இதழ்களுக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். பல புத்தகங்களை எழுதி இருக்கிற இவரது ‘இந்திய வாழ்க்கையும், மார்க்சியமும்’ (1975) ‘கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை?’ (1996) என்கிற நூல்கள் வெளிவந்தபோது விவாதங்களை எழுப்பி இருக்கின்றன. மார்க்சியத்தைத் தமிழகச் சூழலோடு, அதற்கான அடையாளத்தைப் புரிந்துகொண்டு பொருத்த வேண்டும் என்று தொடர்ந்து சொல்லி வந்த இவர், கம்யூனிஸ்ட் இயக்கங்கள், திராவிட இயக்கங்களைப் பற்றிய விமர்சனத்தையும் வைத்து வந்தார். கடந்த 2002 ஆம் ஆண்டில் கோவை காளீஸ்வரர் நகரில் ஒரு மாடி வீட்டில் ஞானியைச் சந்தித்தோம். நேர்காணலின் போது, பேச்சுக்கு இடையில், “சரிங்களா?”, “அப்படிங்களா?” என்று கோயம்புத்தூருக்கான வட்டார வழக்கு ஊடுருவ பேசிய ஞானிக்கு அப்போது வயது 68. இனி நேர்காணலுக்கு நகரலாம், கேள்வி: ஞானி என்கிற பெயரே ஆன்மீக சாயல் படிந்ததாக இருக்கிறதே? கோவை ஞானி : அந்த விதமான ஆன்மீகக் குணம் எனக்கு அப்போது இருந்தது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான் படித்தபோது அத்வைதம் எனக்குப் பிடித்திருந்தது. விவேகானந்தர், அரவிந்தரின் நூல்களை எல்லாம் விரும்பிப் படிப்பேன், தாகூரை மிகவும் நேசத்துடன் படித்தேன். ஆன்மிக ஈடுபாடு சற்றே அதிகரித்து தியானத்திற்கான பயிற்சிகளை மேற்கொண்டேன். மூன்று மாதங்களில் எனக்கு நிறைய அனுபவங்கள். கால் மணி நேரத்தில் இருந்து, அரை மணி நேரம் வரை கண்மூடி தியானத்தில் உட்கார்ந்து இருந்தால் ஒருவித ஒளி தெரியும். எனக்கு அப்படித்தான் தெரிந்தது. அந்த ஒளியை மேகங்கள் மறைத்துக் கொண்டிருந்தன. விடாமல் அதையே கவனித்துக் கொண்டிருந்தால், மெதுவாக அந்த மேகம் விலகும். பின்னால் இருப்பது சூரியன் மாதிரியான பேரொளி. இப்படி அனுபவமாய் உச்சந்தலையிலிருந்து ஏதோ குளிர்ச்சியான திரவம் உடம்புக்குள் இறங்குகிற மாதிரியான உணர்வு உண்டாகி, ஒரு பரவச நிலை உண்டானது. ‘நானே பிரும்மம்’ என்கிற ஆனந்தத்தில் திளைக்க முடிந்தது. யாரைப் பார்த்தாலும் கடவுளாகத் தோன்றி ‘நான்’ என்ற உணர்வற்று இருந்தேன். சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சமயங்களில் போய் கடவுளை கும்பிட்டு இருக்கிறேன். ஒரு சமயம் நடராஜரைக் கும்பிடும்போது நானே சிவபெருமான் என்னை நானே எப்படி கும்பிடுவது? என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது. உணவு உண்கிறபோதும் எனக்கு ஒருவித தவிப்பு. சமயத்தில் அதுவே உடம்புக்கு ஆபத்தாகி விட்டது. எப்படியோ காசநோய் உடம்புக்குள் உற்பத்தியாகி விட்டது. ஒரு நாள் மாலையில் இருமியபோது ரத்தம் கொட்டியது. மறுநாள் தியானத்தில் ஈடுபட்டால், ரத்தம் உள்ளே பொங்கியது. பெருந்துறையில் 8 மாதங்கள் இருந்த பிறகு காசநோய் சரியானது. படுக்கையில் கிடந்தபோது, ஏன் எனக்கு இந்த அனுபவம் என்று யோசித்தேன். சின்ன வயதில் கடவுளைப் பற்றி எத்தனையோ விஷயங்கள் உள்ளே போய் அடிமனதில் தங்கியிருக்கின்றன. தியானத்தில் ஒருவன் ஈடுபடுகிறபோது அது மனதுக்கு வரும். இதைத்தான் நான் அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன். அதற்குப் பிறகு நம்மைச் சுற்றியிருக்கிற புற உலகம் தான் உண்மையான உலகம் என்கிற கருத்துக்கு வந்தேன். அதன்பிறகு பெரியார் எழுத்துக்களை, மார்க்சின் எழுத்துகளைப் படித்தேன். கடவுள் என்பது மாபெரும் கருத்தாக்கம். அது மனிதன் உருவாக்கிய கருத்தாக்கம். இயற்கை, பிரபஞ்சம், அதில் மனித வாழ்க்கை, பிறப்பு வளர்ப்பு, இறப்பு இதெல்லாம் அந்தக் கால மனிதர்களுக்குப் புரிந்து கொள்ள முடியாத விஷயங்கள். விஞ்ஞானத்திற்குள் போகப் போக நிறைய கேள்விகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பிரபஞ்சத்தைப் பற்றி ஆராய்ந்த ஐன்ஸ்டீன் கூட பிரபஞ்சத்தைத் தாண்டி ஏதோ ஒரு சக்தி இருந்தாக வேண்டும் என்கிறார். அறிவினால் புரிந்து கொள்ள முடியாத ஒருவிதப் பேருணர்வு என்று அதைச் சொல்லலாம். நாம் அதை ஒதுக்கி விட முடியாது. அந்த உணர்வைத்தான், ‘கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை’ என்கிற புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன். ‘நான் யார்?’ என்கிற கேள்விக்கு விடை சொல்லிக் கொண்டே போனால் பிரபஞ்சத்திற்குள் நாம் கரைந்து போக வேண்டும். இதையே ‘பிரும்மம்’ என்கிறார்கள் சிலர். ‘சூன்யம்’ என்கிறது புத்த மதம். கே: மாக்சியத்தைத் தமிழக மற்றும் தமிழ்ச் சூழலுக்கு ஏற்றபடி சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்கிற உணர்வு உங்களுக்கு இருந்ததா? துவக்கத்தில் ஜீவானந்தத்திற்குத் தமிழ்மொழி, இலக்கியம் மீது இருந்த ஈடுபாட்டிற்குப் பிறகு தொடர்ச்சி இல்லாதது மாதிரி உணர்கிறீர்களா? ஞானி : மார்க்சியம் படிக்கிறபோது புராதனப் பொதுவுடமைச் சமுதாயம் என்ற ஒன்றைப் படிப்போம். அந்தக் காலத்தில் மனிதர்கள் இனக் குழுக்களாக வாழ்ந்தார்கள். அங்கே உடைமை இல்லை, ஏற்றத்தாழ்வு இல்லை, அதிகாரம் இல்லை, இதற்குப் பெயர் ஆதிப் பொதுமை. பின்னாளில் தான் வர்க்க வேறுபாடுகள் எல்லாம் வருகின்றன. இருந்தும் இன்னும் நம்மிடையே ஆதிப் பொதுமை என்கிற மனநிலை முழுக்க இல்லாமல் போய்விடவில்லை. "நாம் அனைவரும் ஒன்று, ஏன் ஒருவன் அதிகாரம் பண்ண வேண்டும்? மற்றவர்களை ஒடுக்க வேண்டும்? என்கிற சிந்தனை வரலாற்றுக் காலம் முழுக்க, எல்லோருக்குள்ளும் இருக்கிற சிந்தனை, இந்த ஆதிப் பொதுவுடைமைச் சிந்தனைக்குத்தான் சிலர் ‘கடவுள்’ என்று பெயர் சூட்டுகிறார்கள். சிலா் ‘அறம்’ என்கிறார்கள். இந்த அம்சம் இன்னொரு விதத்தில் மார்க்சியத்திற்குள் இருக்கிற அம்சம். மதங்களில் இதே கருத்து, கோவில், புரோகிதம் சார்ந்து வேறு வேறு பெயர்களில் வழங்கப்படுகிறது. இந்தக் கருத்து வள்ளுவருக்குள்ளும் இருக்கிறது. மழை பெய்தால் எல்லோருக்கும் சொந்தம் என்கிற மாதிரி, இந்த உலகம் நம் எல்லோருக்கும்தான் சொந்தம் என்கிற உணர்வுதான் மார்க்சியத்தின் கரு. இதைத்தான் சமதர்மம் என்று சொல்கிறோம். மதத்திலேயே தீர்க்கதரிசிகள் என்றும் சித்தர்கள், சூஃபிகள் என்றும் ஏதாவது ஒரு விதத்தில் இந்தக் குரல் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. சாதாரண மனிதனுக்குள்ளும், தாய்க்குள்ளும் இப்படி ஒரு குரல் உண்டு. மோசமான கொள்ளைக்காரனின் உள்ளத்தில் கூட எப்போதாவது இந்தக் குரல் கேட்கும். இது அறத்தின் குரல். மக்களின் சார்பான தீர்க்கதரிசியின் குரல். இங்கு ஜெயகாந்தன், லா.ச.ரா., க.நா.சு போன்றவர்களை நான் கொண்டாடக் காரணம் அவர்களிடம் இருந்து வெளிப்படும் இந்தக் குரல்தான். மனிதர்களுக்குள் ஆழமாகப் போனால் நிலத்தடி நீர் மாதிரி, இந்தக் குரல் எங்கோ கசிவதை உணரமுடியும். விவேகானந்தரிடம் இந்தச் சமரதர்மக் குரல் இருந்ததால்தான் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிரான குரல் அவரிடம் இருந்து எழுந்தது. பாரதியிடம் இருந்து வந்தது. ஆனால் இங்குள்ள சங்கர மடத்திலிருந்து தான் இந்தக் குரல் வராமல் இருக்கிறது. புராதன சங்கரர் கூட இந்த இடத்திற்கு வந்திருப்பார். பெரியார் வந்த இடத்திற்கு இவர்களால் வர முடியவில்லை. ‘கடவுள்’ என்கிற கருத்தை உடைத்துப் பார்த்தால், உள்ளே பேரன்பு இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டுச் சாதிப் பாகுபாடு, ஆச்சாரங்கள், அதிகாரம், சொத்து என்றெல்லாம் இருக்கக்கூடாது. கே: மார்க்சீய இலக்கியத்தைத் தமிழகத்தில் எப்படிக் கொண்டு வர வேண்டும் என்கிற கனவு உங்களுக்குள் இருந்தது? ஞானி : நா.வானமாமலை, கைலாசபதி எல்லாம் சேர்ந்து சங்க இலக்கியத்தை முழுக்கப் புறம் ஒதுக்குகிற மாதிரி எழுதினார்களே அந்தப் பார்வை தவறு. நான் தமிழ் இலக்கிய மாணவன். பாரியையும், இளங்கோவையும் எப்படி ஒதுக்க முடியும்? ஆதி மனிதனின் குரல் அவற்றில் வலுவாக இருக்கிறது. ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்கிற குரல் சமத்துவக் குரல் இல்லையா? வள்ளுவரை ஏன் வணிகர்களின் சார்பாகப் பார்த்தார்கள்? இந்த அளவுக்கு மார்க்சிஸ்டுகள் ஒதுங்கியதற்குக் காரணம் திராவிட இயக்கத்தின் மீது இவர்களுக்கு இருந்த வெறுப்பு தான். கே: “மணல் மேட்டில் அழகிய வீடு” என்று ஜே.கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி நீங்கள் எழுதியுள்ள நூலில், அவர் சொல்கிற விஷயங்கள் அழகானதாக இருந்தாலும் அடிப்படை இல்லாமல், ஒரு கனவு நிலையில் இருப்பதாக நீங்கள் சொல்லி இருந்தீர்களே? ஞானி : ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தத்துவப்படி சிந்தனை என்பது இறந்த காலம். கடவுள் என்பது முன்னால் உருவாக்கப்பட்ட கோட்பாடு. நிகழ்கால நிகழ்வில் எப்போதும் இருக்க வேண்டும். நிதர்சனத்தில் இருக்க வேண்டும். பழைய வாழ்க்கை அல்ல. கணம் தோறும் உலகம் மாறிக் கொண்டிருக்கிறது.அதனால் முந்தைய உலகம், முந்தைய கோட்பாடு, முந்தைய சிந்தனை எல்லாவற்றையும் ஒதுக்கி விடு என்று அவர் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பழமையான தத்துவம் உங்களுக்குள் இறுக்கமான பிடிப்பை ஏற்படுத்தக் கூடாது. அது ஒரு நெகிழ்வை ஏற்படுத்த வேண்டும். அப்படி ஒரு நெகழ்வு இருந்தால், நீங்கள் உலகத்தைப் புரிந்து கொள்வீர்கள். வாழ்க்கையையும் பிரபஞ்சத்தையும் புரிந்து கொள்வீர்கள். நேற்றிலிருந்து முழுக்க வெட்டுப்பட்ட நிலையில், இன்றைய வாழ்க்கை இல்லை. எல்லாம் நீரோட்டமாக இருக்கிறது. இந்த நீரோட்டத்தில் கையில் அள்ளிய நீரை மட்டுமே தண்ணீர் என்று சொல்ல முடியாது. ஆரம்ப கால ஜே.கே.வுக்குள் நான் சொல்கிற விஷயங்கள் எல்லாம் இருக்கின்றன. பிற்காலத்திய ஜே.கே.வுக்குள் இந்த அம்சங்கள் குறைந்திருக்கின்றன. அதனால்தான் ‘மணல் மேட்டில் கட்டிய அழகான வீடு’ என்று எழுதியிருந்தேன். ஒரு போர்ச்சூழலில் ஜே.கே.வைக் கொண்டு போய் நிறுத்தினால் என்ன பண்ணுவார்? முதலாளிகளுக்காக ஆலமரத்தடியில் அமர்ந்து அவர் பேசியிருக்கலாம். ஏழைகளுக்காக அவர் என்ன பேசுவார்? அவர்களுடைய பிரச்சினைகள் தீர்ந்தால்தானே இவருடைய சிந்தனையின் பக்கம் அவர்களால் வர முடியும். கே: மக்களில் ஒரு சாரார் வாக்களிக்க வருவது குறைந்து கொண்டிருப்பது அவர்களுக்கு இப்போது இருக்கிற அரசியல் கட்சிகளின் மீது நம்பிக்கை இழந்து வருவதைக் காட்டுகிறது. இந்த நிலையில் உரிய மாற்று அமைப்பும் உருவாகாத நிலைமையும் நீடிக்கிறதே? ஞானி : இதற்கு முதலில் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் கம்யூனிஸ்ட்டுகள் என்பவர்கள் அசலான கம்யூனிஸ்டுகளாக இருந்திருக்க வேண்டும். “அதிகாரங்கள் எங்களுக்கும் வேண்டும். பகிர்ந்து கொடு. நாங்களும் அதிகாரம் பண்ணிக் கொள்கிறோம். பாரளுமன்றத்திற்கு போக வேண்டும்” என்று மக்களை விட்டு விலகிப் போய் விட்டார்கள். எப்படியாவது கெஞ்சிக் கேட்டுப் பதவி பெறக்கூடிய அளவிற்கா இவர்கள் இறங்க வேண்டும்? பந்த் நடத்துவதற்கு, ஊர்வலம் நடத்துவதற்குக் கூட உரிமை மறுக்கப்பட்டபோது இங்குள்ள கம்யூனிஸ்டுகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்களைத் தடுத்தது எது? அதிகார ஆசையா? ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற கட்சி, அது எதுவாக இருந்தாலும் சரி, தங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழப்பதைப் புரிந்து கொள்கிறபோதே, மற்ற எந்த இயக்கத்தின் மீதும் மக்களின் பார்வை திரும்பி விடக்கூடாது என்பதிலும் அதே கட்சி, மிகுந்த கவனத்துடன் இருக்கிறது. எதிர்ப்பவர்களை வெவ்வேறு விதமான ஒடுக்குமுறைச் சட்டங்களின் மூலம் ஒடுக்குகிறார்கள். பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாகின்றன. வேலை இழப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. வேலைக்கான பாதுகாப்பு இல்லை. லஞ்சம் பெருகிக் கிடக்கிறது. மதுக்கடைகள் திறந்து கிடக்கின்றன. பொருளாதார நெருக்கடிகள் அதிகமாகின்றன. மனநோய் அதிகரிக்கிறது. கிட்னியை விற்க கூடிய அளவிற்குப் போகிறார்கள் தமிழகத்து நெசவாளா்கள். நாட்டில் 70 சதவீதம் பேரிகளிடமிருந்து அவர்கள் வாழ்வதற்கான ஆதார வளம் பிடுங்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் புரிந்து கொள்வதற்கு ஏற்ற கல்வி இங்கு கொடுக்கப்படவில்லை. கே : மதவாதம் ஒருபுறமும், ஜாதிய வாதம் ஒருபுறமும் ஆதிக்கம் செலுத்துகையில், ஏதாவது ஒன்றை தூக்கிப் பிடிக்கக் கூடிய வகையில்தானே தமிழகத்திலுள்ள பெரும்பாலான கட்சிகள் இயங்குகின்றன? ஞானி : எப்படியாவது அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள முயல்கின்றன பல கட்சிகளும். தேர்தல் ஆணையத்தின் சில விதிமுறைகளுக்காக இதர கட்சிகளிடம் ஓட்டுக்காகக் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டிய தேவையும் இவற்றுக்கிருக்கிறது. கட்சித் தலைவர்கள் பெரிய முதலாளிகள் ஆகிவிட்டார்கள். தேர்தல் வேண்டாமென்று சொல்லக்கூடிய இயக்கங்களுக்கும் சுற்றுச் சூழலில் மக்களின் தீவிர பிரச்சினைகளிலோ அக்கறை இல்லை. வெளிநாட்டுகாரனுக்காக இங்குள்ள வேளாண்மை அழிகிறது, என்பதில் இவர்களுக்காவது அக்கறை வேண்டாமா? அவர்களும் மேடை அரசியல் மட்டுமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கே: பெரியார் கொள்கைகளை இன்றைய தேவைகளுக்கு ஏற்றபடி பயன்படுத்துவது பற்றிச் சில இயக்கங்கள் பேசுகிறார்களே? ஞானி : பெரியாரைப் புனிதப்படுத்தகிற சில காரியங்களைச் சிலர் நன்றாகச் செய்கிறார்கள். பெரியாரியம் என்பதைச் சமதர்மத்தில் மையப்படுத்த வேண்டும். வெறுமனே சாதி ஒழிப்பு, மத ஒழிப்பு, பார்ப்பனிய ஒழிப்பு என்று சொன்னால் முதலாளிய எல்லையை விட்டு வெளியே போக முடியாது. சமதர்மம் என்று ஆரம்பித்தால் அதற்குள் அனைத்தும் வந்துவிடும். அதுதான் அசலான பெரியாரியம். “திராவிட இயக்கம் என்பது வெறுமனே சீர்திருத்த இயக்கம் அல்ல எல்லாவற்றையும் புரட்டக்கூடிய புரட்சி இயக்கம்” என்று ஓரிடத்தில் சொல்கிறார் பெரியார். இப்போது சீர்திருத்த இயக்கமாக மட்டுமே வைத்து இருக்கிறார்கள். இந்தக் குரலோடு இந்துத்துவத்தை எதிர்கொள்ள முடியாது. பெரியாரும், சிங்காரவேலரும் பேசிய ஈரோட்டுத் திட்டத்தைப் பற்றியெல்லாம் எந்த திராவிட இயக்கங்களும் பேசுவது கிடையாது. காரணம் – இதன் தலைவர்கள் பலரும் முதலாளிகள் ஆனது தான். திராவிட இயக்கத்தில் உள்ளவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக் கொண்டாலும், இவர்களுக்குக் காசே கடவுள். அதிகாரம் கடவுளாகி விட்டது. இவர்கள் செய்வதெல்லாம் பெரியாரைக் குறுக்குவதைத்தான். கே : மாநில சுயாட்சி பேசப்பட்ட தமிழகத்தில் இப்போது தமிழ் தேசியக் குரல்கள் அங்கங்கே கேட்கின்றன. நீங்களும் அது குறித்து பேச ஆரம்பித்திருக்கிறீர்கள். மார்க்சியம் பேசிவந்த நீங்கள் இதை நோக்கி நகர்ந்து இருக்கிறீர்களே? ஞானி : இந்திய அரசியல் சட்டத்தின்படி இங்கு இருப்பது ஒரே ஒரு ஆட்சிதான். இது மைய அரசு. இதில் மாநில அரசுகள் வெறும் உறுப்புகள் மட்டுமே. கூட்டாட்சிக் கூறுகள் இருப்பதாகச் சொல்லிக் கொண்டாலும், அடிப்படையில் இது ஒன்றியம்தான். மாநில அரசுகளுக்கு அதிகாரம் குறைவு. மைய அரசுக்கு அதிகம். “நிதி கொடு, கொஞ்சம் அதிகாரம் கொடு” என்று கேட்பதைத் தவிர மாநில சுயாட்சிக் குரலுக்கு வேறு அர்த்தம் ஏதுமில்லை. ஆனால் தமிழ்த் தேசியம் பேசுகிறவர்கள் பேசுகிற விஷயம் வேறு. இந்தியா ஒரு துணைக்கண்டம். வெவ்வேறு கலாச்சாரம், வரலாறு கொண்ட தேசிய இனங்கள் அதில் இருக்கின்றன. ஒவ்வொரு தேசிய இனமும் இறையாண்மை உடையது. இந்த இறையாண்மையை முழு அளவில் ஒப்புக் கொள்ளக்கூடிய மைய அரசும், செயல்படக் கூடிய அளவில் மாநில அரசும் உருவானால் அதற்கு பெயர்தான் ‘கூட்டாட்சி’. அப்படி இருந்தால்தான் இங்கு எதிலும் தமிழ் என்பதைச் செயல்படுத்த முடியும். அமெரிக்காவில் மைய அரசு, மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடவே முடியாது. அது மாதிரியான அதிகாரத்தைத்தான் தமிழ்தேசியக் குரலை எழுப்பக் கூடியவர்கள் கேட்கிறோம். கே: அந்நிய மண்ணில் உருவான இருத்தலியல் வாதம், பின்நவீனத்துவம் போன்றவற்றையெல்லாம் புரிந்து கொண்டு செயல்படுகிற இங்குள்ள தமிழ்க் கலாச்சாரவாதிகள், தமிழ் மண் சார்ந்த இந்தக் குரலை எவ்வளவு தூரம் உள்வாங்கி இருக்கிறார்கள்? ஞானி : தமிழ் இலக்கியவாதிகளைப் பொறுத்தவரை ஆரம்பக் கட்டத்தில் இவர்கள் திராவிட இயக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனுடைய தொடர்ச்சியாக ‘அரசியல் எங்களுக்கு வேண்டாம். இலக்கியம் எங்களுக்குப் போதும்’ என்கிற பொதுக் குரல் கேட்கிறது. ‘அரசியல் வேண்டும்’ என்று சொல்கிற சிலரும் வெறும் பெரியாரியம் அல்லது தலித்தியம் அல்லது பெண்ணியம் – அதற்கு மேல் எங்களுக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்கிறார்கள். அந்நியர்களின் ஆதிக்கம் பற்றியோ, தமிழர்களின் உரிமைகள் பாதிக்கப்படுவது பற்றியோ இவர்களுக்கு அக்கறை இல்லை. பின்நவீனத்துவவாதிகளிடம் இருக்கிற ‘எல்லாவற்றையும் கலைத்துப் போடு’ என்கிற குரல் உரத்து வெளிப்படுகிறது. அதேசமயம் எதை ஒருங்கிணைப்பது, எதைக் காப்பாற்றுவது என்பதில் அவர்களுக்குப் பெரிய அளவில் அக்கறை இல்லை. தமிழைப் பாதுகாப்பது என்பதிலும் அக்கறை இல்லை. தமிழ்ப் பண்பாடு என்று சொன்னாலே அதைச் சாதியப் பாகுபாடு என்று நினைக்கிறார்கள். தமிழ்ப் பண்பாட்டிற்குள் இருக்கும் நமக்கான சமத்துவக் குரலை, சித்தர்களின் குரலை மேம்படுத்த வேண்டும். தமிழிசை, தமிழர்களின் சிற்பக் கலை, விவசாயத் தொழில் நுட்பங்கள் வேண்டும். தமிழ் மரபு வழிவந்த அறிவு வேண்டும். நமக்கான பாரம்பரியச் சொத்து திரும்பவும் நம்மை வந்தடைந்தாக வேண்டும். இதற்கு முதற்கட்டமாகத் தமிழகத்தில் உள்ள கலை இலக்கிய வாதிகள் தங்கள் பாகுபாடுகளை மறந்து கூடிப்பேசி, இது குறித்து விவாதிக்கட்டும். அப்புறமாவது இந்த மண்ணின் குரல் அவர்களுக்குப் போய்ச் சேருகிறதா பார்க்கலாம்.’’ காலம் - ஜூலை 2010 - கோவைவாணன் கோவை மாவட்டத்தில் பல்லடம் வட்டாரம் சோமனூரில் 1-7-1935இல் திரு.கிருஷ்ணசாமி திருமதி. மாரியம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்த இவர் கோவையில் உயர்பள்ளிக் கல்வி முடித்தபிறகு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் கற்றார். கோவையில் ஒரு புகழ்பெற்ற பள்ளியில் 28 இண்டுகள் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். மார்க்சிய நெறியில் தமிழ் இலக்கிய ஆய்வை மேற்கொண்டார். “வானம்பாடி” இயக்கத்திலும் பங்கு பெற்றார். 1988இல் கண்பார்வையை இழந்த நிலையில் விருப்ப ஓய்வுபெற்று வீட்டிலேயே தொடர்ந்து உதவியாளரை வைத்துக் கொண்டு படிப்பதும் எழுதுவதுமாக இன்றுவரை இடையறாது செயல்படுகிறார். புதியதலைமுறை (1968-70) இசிரியர் குழுவில் இருந்தார். பரிமாணம் (1979-83) நிகழ் (1983-96) ஆகிய சிற்றிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1998 முதல் இன்றுவரை “தமிழ்நேயம்” இதழைச் சிறப்பாக நடத்தி வருகிறார். தமிழ் இலக்கியம், மார்க்சியம் குறித்து 25க்கும் மேற்பட்ட திறனாய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். 11 பெண் எழுத்தாளர் சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். சிற்றிதழ் இயக்கத்தோடு மட்டுமல்லாமல் இயற்கை வேளாண்மை, விடுதலை இறையியல், மனித உரிமை முதலியவற்றிலும் ஈடுபாடு கொண்டவர். வரலாறு, மெய்யியல், இலக்கியம் ஆகியவற்றில் இவரது படிப்பறிவு விரிவானது. விளக்கு விருது, தமிழ்த் தேசியச்செம்மல், தமிழ்த் தேசியத் திறனாய்வாளர், செம்மொழி ஞாயிறு விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது திறனாய்வுக் கட்டுரைகள் அடங்கிய நான்கு பெருந்தொகுப்புகளைக் காவ்யா இதுவரை வெளியிட்டுள்ளது. அண்மையில் 1000 பக்க அளவிலான நிகழ் கட்டுரைக் களஞ்சியம் என்ற பெருந்தொகுப்பைக் காவ்யா வெளியிட்டு உள்ளது. துணைவியாரோடும் இரண்டு மக்களோடும் இவர் வாழ்ந்து வருகிறார். கனடா இலக்கியத் தோட்டம் அமைப்பினர் வாழ்நாள் சாதனையாளர் என்ற முறையில் தெரிவு செய்து இவருக்கு இயல் விருது வழங்கும் (சூலை 2010) இத்தருணத்தில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. நேர்கண்டவர் கோவை வாணன் நீங்கள் தமிழாசிரியராக இருந்து பணி செய்ததோடு மார்க்சியராகவும் இருந்திருக்கிறீர்கள். மார்க்சியத்திற்கு நீங்கள் எப்படி வந்து சேர்ந்தீர்கள். இதற்கான உங்கள் அனுபவம் என்ன? அறுபதுகளின் தொடக்கத்தில் கோவையில் கலை இலக்கியப்பெருமன்றம் தொடங்கியது. புலவர் ஆதி, தா.வே. வீராசாமி முதலிய நண்பர்களோடு நெருங்கிப் பழகினேன். இவர்கள் மார்க்சியத்தோடு நெருக்கமான உறவு கொண்டிருந்தார்கள். நான் பிறந்த கிராமத்தில் வாழ்ந்த காலத்திலேயே தொழிற்சங்கம் சார்ந்த மார்க்சிய உரைகளைக் கேட்டிருக்கிறேன். மார்க்சியத்தோடு எனக்கு முரண்பாடு இல்லையென்றாலும் அன்றைய நிலையில் நான் மார்க்சியனாக இல்லை. நான் பிறந்து வளர்ந்த கிராமச் சூழலில் உழவர்கள் நெசவாளர்கள் குடும்பங்களுக்கு இடையில் வாழ்ந்தேன். 1946,47 காலத்தில் கொடுமையான பஞ்சம் எல்லோரையும் பாதித்தது. எங்கள் வாழ்க்கையும் சொல்லும்படியாக இல்லை. விடுதலைக்குப் பிறகேனும் இந்த மக்கள் வாழ்க்கை மேம்படும் என்ற நம்பிக்கையும் மிக விரைவில் பொய்த்துப்போனது. சில ஆண்டுகளுக்குப் பிறகு நான் மார்க்சியத்தை எற்றுக்கொண்டதற்கு இதுவரை நான் சொன்ன வாழ்க்கைச் சூழல் ஒரு முக்கியக் காரணம். எல்லோருக்குமான நல்வாழ்க்கை வேண்டும். இதுதான் எனக்குள் இருந்த பெருவிருப்பம். பள்ளிக் கல்வி முடிந்தபிறகு கல்லூரியில் தமிழ் இலக்கியக்கல்வியை நான் தெரிவு செய்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்து படித்தேன். இளமையிலிருந்தே கடவுள் நம்பிக்கையோடுதான் நான் வளர்ந்தேன். கடவுள் நம்பிக்கையை என் ஆசிரியர் முதலியவர்களும் தீவிரமாகக் கற்பித்தார்கள். கடவுளைக் காண வேண்டுமென்பது என் பேராசை. கடவுளைக் கண்டுவிட்டால் என் துயரங்கள் முற்றாக நீங்கிவிடும் என நம்பினேன். சிறுவயதிலேயே தாகூர், விவேகானந்தர் என்னை ஈர்த்தனர். கடவுள் என்றால் ஒருவராகத்தான் இருக்கமுடியும். கடவுள்தான் இந்த உலகத்தைப் படைத்தார் என்றால் அவரும் உலகமும் வேறுவேறாக இருக்கமுடியாது. விவேகானந்தர், தாகூர் வழியே எனக்குள் அத்வைதம் என்ற நம்பிக்கைதான் அறிவுசார்ந்த நம்பிக்கையாக இருக்கமுடியும் என்று முடிவுக்கு வந்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தனி அறையில் தியானம் மேற்கொண்டேன். இந்த அனுபவங்கள் மிக விரிவானவை. மூன்று மாதத்திற்குள் தியானத்தின்போது என்னை நானே பிரம்மம் என்று உணர்ந்தேன். நானும் என்னைச் சூழ உள்ள எல்லாமும் பிரம்மம். எனக்குள் பலநாள் நீடித்த பரவசத்திற்கு அளவில்லை. ஒருநாள் சிதம்பரம் கோவிலில் சிவனுக்கு முன் நின்ற நிலையில் சிவனும் நானும் ஒன்று. என்னை நானே எப்படி வழிபட முடியும் என்ற உணர்வு ஏற்பட்டது. உண்ணும்போது நானும் உணவும் ஒன்று. எப்படி என்னை நானே உண்ண முடியும். இப்படி நிறைய அனுபவங்கள். ஒரு நாள் இரத்த வாந்தி. இனித்தியானம் செய்ய முடியாது. நோய்க்கு இளாகி மருத்துவமனையில் பல மாதங்கள் இருந்தேன். முன்பு வில்லியம் ஜேம்சின் ஒருநூலைப் படித்திருந்தேன். இளம்வயதில் நமக்குள் திணிக்கப்பட்ட உணர்வுகள்தான் பின்னர் தியானத்தின் போது கடவுளைக் காண்பதாக, கடவுளோடு பேசுவதாக வெளிப்படுகிறது என்ற அவரது விளக்கம் உண்மை என எனக்குத் தோன்றியது. வெளியில் இருப்பது உலகம். பொருள்வகை உலகம். வெளியில் இருப்பது கடவுள் இல்லை. உள்ளுணர்வில்தான் கடவுள். இது உண்மையில்லை. புற உலகமே உண்மை. இத்தகைய புரிதல், நாளடைவில் என்னை மார்க்சியம் நோக்கித் தள்ளியது. ஏங்கெல்சின் நூலைப் படித்தபோது எனக்குள் பெரும் வெளிச்சம். மேலும் சில நூல்களைக் கற்றேன். இப்படித்தான் அறுபதுகளின் இறுதியில் நண்பர்களோடு பேசி, தொடர்ந்து மார்க்சியம் எனப் பல நூல்களைக் கற்றேன். இதன் விளைவாக நான் மார்க்சியன் ஆனேன். கோவையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தேன். மாபெரும் தொழில்நகரம் கோவை. தொழிலாளர் இயக்கச் சூழலில் நான் மார்க்சியத்தோடு நெருக்கமானேன். அறுபதுகளின் இறுதியில் எஸ்.என்.நாகராசன், எஸ்.வி. இராசதுரை முதலியவர்களோடு கொண்டிருந்த நெருக்கமான உறவு மார்க்சியம் எனக்குள் செறிவு பெற்றதற்கு முக்கியமான காரணம். தொடக்கத்தில் நேருவின் குருச்சேவின் சோசலிசம் இவைதான் என்னைக் கவர்ந்தன. எஸ்.என். நாகராசன் மூலம்தான் இந்த மாயையிலிருந்து விடுபட்டேன். அப்பொழுதே சோவியத் இரஷ்யா பற்றி நிறைய விமர்சனங்கள் எழுந்தன. சோவியத்தில் செயல்படுவது முதலாளியம் சார்ந்த பெயரளவு சோசலிசமேயன்றி வேறல்ல என்பதைப் புரிந்து கொண்டேன். நக்சல்பாரி இயக்கத்தின் வரவு எனக்குள் மாவோவின் சிந்தனைகளை ஆழமாக அறிமுகப்படுத்திற்று. இரஷ்ய மார்க்சியத்தை முற்றாகக் கைவிட்டு மாவோவின் மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டேன். எஸ்.என். நாகராசன் மூலம்தான் இத்தகைய மாற்றம் எனக்குள் விரிவுபெற்றது. நான் தமிழ் இலக்கிய மாணவன். வள்ளுவரும் இளங்கோவும் எனக்குள் பதிந்திருந்தனர். மார்க்சியத்தின் வழியே இவர்கள் எனக்குள் புதிய வெளிச்சங்களைத் தந்தனர். தமிழ் இலக்கியத்தைத் தொடர்ந்து ஆழமாகப் பயில மார்க்சியத்தையும் தமிழ் இலக்கியத்தையும் ஒரு புள்ளியில் வைத்து எனக்குள் புரிந்து கொண்டேன். இனி மார்க்சியம் அன்றி எனக்கு வேறு பார்வையில்லை. “புதியதலைமுறை” ஆசிரியர் குழுவில் இருந்தபொழுது நண்பர்களோடு இணைந்து நிறையப் படித்து விவாதம் நடத்தி மார்க்சிய அறிவை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டோம். இன்னும் ஒன்று என் அனுபவத்தை நான் ஆழமாகப் புரிந்துகொண்ட அளவில் கடவுள் என்பது ஒரு மாபெரும் செறிவான கருத்தாக்கம். வரலாறு, அறிவியல், உளவியல் முதலியவற்றைத் தொடர்ந்து பயின்றபோது இந்த அடிப்படைகளில் கடவுள் என்ற கருத்தாக்கத்தைப் புரிந்து கொள்கிறேன். மார்க்சியம் கற்றதனால்தான் கடவுளைப் பற்றிய தெளிவு எனக்கு ஏற்பட்டது. “கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை”, “நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும்” என்ற எனது இரண்டு நூல்களில் எனது அனுபவத்தை விரிவாக விளக்கி எழுதியுள்ளேன். கடவுள், மதம், புராணம் முதலியவற்றைப் பற்றிய தங்களின் கருத்தியல்கள் பிற மார்க்சியர்களிடமிருந்து மாறுபட்டதாய் அமைந்துள்ளன. இந்தப் பார்வை வேறுபாடுகள் எதன் அடிப்படையில் தோன்றுகின்றன? மதம் நம் மக்களிடையே ஆழமாகப் பதிந்திருப்பதன் காரணம் என்ன என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். கடவுள், மதம், புராணங்கள் முதலியவற்றைப் புரோகிதர்கள், சமயவாதிகள் முதலியவர் விடாப்பிடியாக மக்களிடையே எடுத்துரைத்து அவற்றை மக்களை நம்பச் செய்கிறார்கள். சடங்குகள், திருவிழா, ஆராதனை, பாடல்கள், தெய்வங்களின் அழகிய உருவங்கள், இவை எல்லாமே மக்களின் மதநம்பிக்கையை வலுப்படுத்துகின்றன. புரோகிதர் சமயவாதிகள் முதலியவர்களுக்கு முதலாளிகள் முதலியவர்களும் பேராதரவு தருகின்றனர். இவ்வகை நம்பிக்கைகளில் மக்கள் இழந்து கிடக்கும்வரை உடைமை வர்க்கத்தினர் தம் ஆதிக்கத்தைக் காத்துக்கொள்ளமுடியும். அரசியல்வாதிகளுக்கும் இவர்கள் தேவைப்படுகின்றனர். கல்வியாளர்களும் மதநம்பிக்கைகளை வலுப்படுத்தத் தவறுவதில்லை. மதம் பற்றி மார்க்ஸ் சிலவற்றைத் தெளிவுபடுத்துகிறார். பொருளியல் ஆதிக்கத்தில் மக்கள் அடிபட்டு நொந்து வறுமை, நோய்கள் முதலியவற்றுக்கு ஆட்பட்டு மனம் திரிந்து கிடக்கிறபோது கடவுள் மற்றும் மத நம்பிக்கைகள் அவர்களைப் பற்றிக் கொள்கின்றன. கடவுள் என்றாவது தம்மைக் காப்பார் என்ற நம்பிக்கையோடு வாழ்கின்றனர். மார்க்ஸ் இதை அழகிய முறையில் விளக்குகிறார். மக்கள் கரங்களை இறுக்கமாகப் பிணித்திருக்கும் விலங்குகளை, அவர்கள் பார்வையிலிருந்து மறைக்கும் முறையில் அவர்கள் கரங்களைச் சுற்றி அணிந்து கொண்டிருக்கும் அழகிய மலர்வளையம், மதம் என்கிறார் மார்க்ஸ். மலர்கள் அழகியவை. மக்கள் நெஞ்சைப் பிணிப்பவை. மலர்க்கொத்து அவர்கள் பார்வையை மறைப்பதனால் அவர்கள் கரங்களைப் பிணைத்திருக்கும் விலங்குகள் அவர்களுக்குத் தெரிவதில்லை. மதம் பற்றிய விமர்சனம் எதுவாக இருக்க முடியும்? என்பதையும் மார்க்ஸ் விளக்குகிறார். மக்களின் கரங்களைச் சுற்றியுள்ள மலர் வளையத்தை முதலில் அகற்ற வேண்டும். மதம் பற்றிய விமர்சனம் என்பது இதுதான் என்கிறார் மார்க்ஸ். மலர் வளையத்தை அகற்றிய பிறகுதான், கரங்களை இறுகப் பிணைத்திருக்கும் விலங்குகள் அவர்கள் கண்களுக்குத் தெரியும். இந்த விலங்குகள் யார் தயாரித்தவை? யார் பூட்டினார்கள்? எதற்காகப் பூட்டினார்கள்? என்றெல்லாம் அவர்கள் கேட்டுக் கொள்ளும்போதுதான் உண்மை அவர்களுக்குப் புரியும். அப்புறம் விலங்குகளை அவர்களே உடைத்துக் கொள்ள வேண்டும். அதாவது ஆதிக்கவாதிகளிடமிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். ஆதிக்கங்களை நொறுக்க வேண்டும். மதம் பற்றிய மார்க்சின் பார்வை இத்தனை நுட்பமானது, விரிவானது. பெரியாரியரைப் பொறுத்தவரை மதம் பற்றிய விமர்சனத்தைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். இதுவும் ஒரளவு பயன்படுமேயன்றி மக்கள் விடுதலைக்கு இது போதாது. புராணங்களைப் பற்றியும் மார்க்ஸ் சுருக்கமாக விளக்கம் தருகிறார். மண்ணுலகில் மனிதர்களுக்கிடையில் நடைபெறும் வம்பு வழக்குகள், சண்டைகள் ஆகியவற்றின் பிரதிபலிப்புதான் மேலுலகில் கடவுளர்களுக்கிடையில் நடைபெறும் வம்பு வழக்குகள் சண்டைகள் என்கிறார் மார்க்ஸ். புராணக் கதைகளைப் பற்றிச் சுருக்கமான ஆய்வு இது என்பதில் ஐயமில்லை. அப்படியானால் புராணக் கதைகள் என்பவை அதே வடிவில் உண்மையில்லை. புராணக்கதைகள் முற்றிலும் பொய்யானவையுமல்ல. புராணக் கதைகள் அழகியவை. கவர்ச்சியானவை. மக்களை மயக்குபவை. இந்தக் கவர்ச்சியைக்கடந்து அவற்றினுள் நுழைந்து மனிதக்கதையை அவர்களுக்கிடையிலான சிக்கலை நாம் கண்டறிய வேண்டும். அப்புறம்தான் இத்தகைய கதைகள் ஏன் புனையப்பட்டன என்ற ஆய்வுக்கும் செல்ல வேண்டும். இத்தகைய ஆய்வுக்குப் பகுத்தறிவுப் பார்வை நமக்குப்போதாது. பகுத்தறிவோடு மார்க்சியப் பார்வையும் இணைந்து சென்றால்தான் வாழ்க்கையை வரலாற்றைப் புரிந்து கொள்ள முடியும். பகுத்தறிவாளர்களோடு மார்க்சியரும் இணைந்து கொண்டு புத்தரையும் மகாவீரரையும் போற்றுகிறோம். எனினும் அவர்கள் படைத்தவை, சமயங்கள் அன்றி வேறில்லை. ஆரியர்களின் வேதங்களை வருணமுறையை அவர்கள் கடுமையாகச் சாடினார்கள் என்பது உண்மைதான். அவர்கள் கடவுளை ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் ஆன்மா, மறுபிறப்பு, மேலுலகம், வினைக்கோட்பாடு என்றெல்லாம் பேசினார்கள். மக்களின் துயருக்கான காரணங்களை இவர்கள் ஆராய்வதில் தொடங்கி அப்புறம் சமய உணர்வில் போய் முடித்தார்கள், பகுத்தறிவு கொண்டும் இவர்களின் சமயங்களை விளக்க முடியாது. மார்க்சிய ஆய்விலிருந்துதான், பழங்கால வரலாற்றுச் சூழலில் அவர்கள் முன்வைத்த கருத்தினங்களை விளக்க முடியும். மனிதர்களின் துயரங்கள் முதலியவற்றுக்கு நம் காலத்தில் மார்க்சிய நெறியில் காரணங்கள் முதலியவற்றைக் கண்டறிந்துள்ளோம். கண்டறிந்தவற்றில் எவ்வளவு சரி அல்லது இல்லை என்பது பற்றிய ஆய்வும் தேவை. மார்க்சியமும் தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளவேண்டும். எனினும் மக்கள் நெஞ்சில் குடிகொண்டுள்ள சமய உணர்வை முற்றாக நீக்கவும் முடியாது. மனிதனுக்குள் இயங்கும் உள்ளுணர்வைப் பகுத்தறிவாளர் மட்டும் அல்ல மார்க்சியரும் ஏற்பதில்லை. படைப்பியக்கம், அழகியல், அறவியல் முதலியவற்றில் உள்ளுணர்வின் இயக்கமும் அடங்கியுள்ளது. தொ.மு.சியிடம் செயல்பட்ட உள்ளுணர்வின் வெளிச்சத்தைப் பொன்னீலன் எடுத்துரைக்கிறார். இ=எம்.சி² (E=MC²) என்ற அற்புதமான விதியை ஐன்ஸ்டீன் கண்டறிந்ததில் உள்ளுணர்வின் பங்கும் உண்டு. அரசு இருக்கும் வரை மதமும் இருக்கும் என்றார் மார்க்ஸ். தமிழ்ச்சூழலில் இவ்வாறெல்லாம் மார்க்சியரிடமிருந்தும் பகுத்தறிவாளரிடமிருந்தும் நான் வேறுபடுகிறேன். என் சமய அனுபவம் இதற்குக் காரணம். அனுபவமில்லாமல் சமயத்தைப் புரிந்து கொள்ளவும் முடியாது. பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம், பின்நவீனத்துவம் முதலிய பார்வைகளை மார்க்சிய நோக்கில் நீங்கள் எப்படி உள்வாங்கிக் கொள்கிறீர்கள்? பெரியாரியத்தையோ, தலித்தியம், பெண்ணியம் முதலியவற்றையோ நான் மறுக்கவில்லை. இவை சில வரையறைக்குள் முடங்கிவிடக் கூடாது என்பதுதான் என் கருத்து. பெரியாரியத்தின் மையம் சமதர்மம்தான். சாதி, மதம், பார்ப்பனியம் முதலியவற்றைச் சாடுவதிலேயே பெரியாரியர் தம்மை முடக்கிக் கொள்கின்றனர். இத்தகைய முடக்கம் காரணமாக இவர்கள் முதலாளிய எல்லையைக் கடக்க முடியாது. முற்றான மனித விடுதலை நோக்கி இயங்க முடியாது. முதலாளியத்தை உள்வாங்கிக் கொண்ட மார்க்சியம் எப்படி மனித விடுதலையை நோக்கி இயங்க முடியாதோ அதுபோலவே முதலாளியத்தை உள்வாங்கிக் கொண்ட பெரியாரியமும் சாதி என்றும் மதம் என்றும் ஒயாமல் பேசிக் கொண்டிருக்கலாமே அன்றி இவற்றில் வெற்றி பெறவும் முடியாது. பெரியாரே கூட ஓர் அற்புதமான கருத்தைத் தனக்குள் கொண்டிருந்தார். பெண்ணுக்கு விடுதலை என்பது ஆணாதிக்கத்தை ஒழிப்பது. தொழிலாளிக்கு விடுதலை என்பது முதலாளியத்தை ஒழிப்பது. எவ்வகை ஆதிக்கத்தோடும் பெரியாரியம் ஒத்துச்செல்வதாக இருக்கவும் முடியாது. அரசதிகாரத்தோடு ஒத்துழைப்பவர், அரசதிகாரத்தில் பங்குபெற முனைபவர் பெரியாரியராகவும் மார்க்சியராகவும் இருக்க முடியாது. பெரியாரியரும் தமக்குச் சொத்து சேர்த்துக் கொள்ள முடியாது. அதிகாரத்தைச் சேர்த்துக் கொள்ள முடியாது. சாதி, மதம் ஒழிய வேண்டும் என்று போராடுவது தேவைதான், நான் மறுக்கவில்லை. இதனால் சாதி ஆதிக்கம் ஒரளவுக்கேனும் குறைந்தால் நல்லதுதான். தேர்தல் அரசியல் சாதி மதங்களை வளர்க்கிறது. முதலாளியத்தோடு ஒத்துச்சென்றால் சாதியை, முதலாளியத்தை, பார்ப்பனியத்தை ஒழிக்க முடியாது. இவ்வகை ஆதிக்கத்தையும் மார்க்சியம் ஏற்பதில்லை. அரசு உதிர வேண்டும் என்பது மார்க்சியத்தின் ஓர் அடிப்படை.அதிகாரத்தை மக்கள் மயப்படுத்துவதன் மூலமே அரசதிகாரம் ஒழியும். இப்படித்தான் மக்கள் தம்மை நிர்வாகம் செய்துகொள்ள முடியும். தனியுடைமை, அரசதிகாரம், மதம் முதலியவை மக்களைப் பிளவுபடுத்தும். மக்களை அடிமைப்படுத்தும். ஆண் ஆதிக்கம் என்பதும் தனியே இயக்கமுடையது அன்று. தனியுடைமை, இராணுவம், மாபெரும் தொழில் நிறுவனங்கள் முதலியவற்றை நிர்வாகம் செய்யும் ஆண்களுக்குள் ஏற்படுகின்ற ஓர் வெறித்தனமான உணர்வுதான் ஆதிக்க உணர்வு. தனியுடைமை முதலியவைதான் தன்னை நெருங்கி இருப்பவருக்குள் ஆதிக்க உணர்வைத் தூண்டி வளர்க்கிறது. இறுதியில் தனியுடைமை அரசதிகாரம் ஒழிந்த நிலையில்தான் மனிதனுக்குள் சமத்துவம் ஏற்படும். சமதர்மம் நிலைக்கும். சுதந்திரம் பிரிவுபடாதது என்று மார்க்ஸ் கூறியதை எஸ்.என்.நாகராசன் அடிக்கடி கூறுவார். தொழிலாளிக்கு விடுதலை தேவை என்றால் முதலாளியை அவன் சார்ந்த பொருளியல் அதிகாரத்திலிருந்து விடுவிக்க வேண்டும். அடிமைக்கு விடுதலை தேவை என்றால் அவன் ஆண்டானையும் விடுவிக்க வேண்டும். இதேபோல பெண்ணுக்கு விடுதலை தேவை என்றால் ஆணையும் அதிகார வட்டத்திலிருந்து விடுவிக்க வேண்டும். எவ்வகை ஆதிக்கமும் மனிதனைச் சிறுமைப்படுத்தும் மனித மாண்பை அழிக்கும். பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம் என்பவை தனித்தனியே இயங்கவும் முடியாது. இவற்றின் உடனடி நோக்கம் சிலவகை ஆதிக்கத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதுதான் என்றாலும் இவற்றின் இறுதிநோக்கம் மனித விடுதலையாகத்தான் இருக்க முடியும். இன்றைய உலகமயமாதல், தனியார் மையப்படுத்தல் முதலிய சூழலில் எல்லாமே தலைதடுமாற்றத்திற்கு, குழப்பத்திற்கு, சீர்குலைவுக்கு உள்ளாகி வருகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் எந்த ஒரு தேசத்தின் இறையாண்மையையும் ஒப்புக் கொள்வதில்லை. மனிதர் உட்பட அனைத்தும் மூலதனத்தின் ஆதிக்கத்திற்கு உள்ளடங்கித் தீரவேண்டும் என்கிறது உலக முதலாளியம். பொருளியல் ஆதிக்கத்திற்கு எவ்விடத்தும் தடை இருக்க முடியாது. தம் தேசம், தம் தொன்மை வரலாறு, வளமான தம் மரபு என்றெல்லாம் இனிப் பேசுவதில் பொருளில்லை. எல்லாமே தகர்ந்து வருகின்றன. ஒற்றை வரலாறு என்று இனிப் பேசுவதற்கில்லை. ஒரு தத்துவம் என இனிப் பேச முடியாது. நிகழ்காலம் என்பதைத் தவிர இறந்த காலமும் எதிர்காலமும் இனி இல்லை. அன்றன்றைக்குமான வாழ்வு இன்பத்துய்ப்பு என்று மனிதர் அடங்கி இருக்க வேண்டும். எவ்வகை இயக்கமும் உலகை இனி உய்விக்க முடியாது. இயற்கை முதலிய அனைத்தும் மனித நுகர்வுக்கே உரியவை. எல்லாமே இயந்திரமயம், கணினிமயமான சூழலில் தனிநபர் உழைப்புத்திறன், தனித்திறன் என்று பேசுவதில் பொருளில்லை. எந்த உறவும் நிரந்தரமானதில்லை. எதுவும் தற்காலிகமானதாகத்தான் இருக்கமுடியும். வரலாற்றுக்கும் பொருளில்லை. வாழ்வுக்கும் பொருளில்லை. இப்படிப் பேசுகிறது பின் நவீனத்துவத்தின் ஒரு போக்கு. இதன் முன்னிலையில் மார்க்சியம் பெரியாரியம் போன்ற எதற்குமே பொருளில்லை. இப்படியெல்லாம் பேசுவது அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு முதலாளிகளின் ஆதிக்கத்திற்குத் தேவையாக இருக்கலாம். இவர்களிடம் நம் தேசத்தை, வரலாற்றை, இயற்கையை, வாழ்வை ஒப்படைக்க முடியாது. எல்லாவற்றையும் இவர்கள் நம்மிடமிருந்து அபகரிக்க முனைந்திருக்கிறார்கள். இவர்களிடமிருந்து நம்மை, நம் தேசத்தை, நமக்கான இயற்கையை, நம் வரலாற்றை நாம் விடுவித்துக் கொள்ள வேண்டும். இத்தகைய தூண்டுதலை நமக்குள் தருவது மார்க்சியம். உலகமயமாதல் முதலிய சூழலில் இத்தகைய விடுதலை உணர்வை, பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம் ஆகியனவும் தமக்குள் கொள்ளவேண்டும். இத்தகைய போக்கை இடதுசாரி பின்நவீனத்துவம் என்றும் சில அறிஞர் கூறுகின்றனர். தமிழிலக்கியம் குறித்து மார்க்சிய நோக்கிலான உங்கள் பார்வையைச் சில எடுத்துக்காட்டுகளுடன் விளக்குங்கள்? தொன்மை இலக்கியம், இடைக்கால இலக்கியம், தற்கால இலக்கியம் என்று தமிழிலக்கியப்பரப்பு முழுவதும் விரிந்து செல்லும் உங்கள் ஆய்விலிருந்து சிலவற்றைக் கூறுங்கள்? “இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு” என்பது வள்ளுவரின் ஓர் அற்புதமான குறள். ஒரு காலத்தில் உலகம் ஒன்றுபட்டு இருந்தது. இன்னொரு காலத்தில் உலகம் இரண்டாகப் பிளவுபட்டது. பிளவுபட்ட உலகில் ஒரு பக்கத்தில் குவிந்திருக்கும் செல்வம். இன்னொரு பக்கத்தில் அறிவும் பண்பும். இவை இணைவதில்லை. இந்த முரண்பாட்டோடுதான் வாழ்ந்தாக வேண்டும். குறளுக்கு இப்படிப் பொருள் சொல்ல முடியும். இனக்குழுச் சமூகக்காலத்தில் மனிதர்களுக்கிடையில் பிளவு இல்லை. ஏற்றத்தாழ்வில்லை. பொய்யும் வழுவும் இல்லை. தனியுடைமை, அரசதிகாரம் என்பனவற்றை உள்ளடக்கிய வர்க்கச் சமூக வரலாற்றுக் காலத்தில் திரு ஒரு பக்கம். தெள்ளியராதல் இன்னொரு பக்கம். “ஓர் இல் நெய்தல் கறங்க” என்ற புறநானூற்றுப்பாடல் இந்த உண்மையைத்தான் தனக்குள் தாங்கி உள்ளது. வள்ளுவரின் இன்னொரு குறள்: “எருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு” மழை இயற்கையாகப் பெய்கிறது. எர் நடுவில் உள்ள குளத்தில் நீர் நிறைகிறது. யாருக்கு எவ்வளவு தேவையோ அவர்கள் எடுத்துக் கொள்ளலாம். இதற்குத் தடை இல்லை. இதேபோலத்தான் ஒருவனிடத்தில் குவிந்திருக்கிற செல்வமும். 100 பேர், 1000ம் பேர் உழைத்ததன் விளைவாக ஒருவனிடத்தில் செல்வம் குவிந்துள்ளது. அவன் பேரறிவாளன் என்றால் இந்த உண்மை அவனுக்குத் தெரியும். யாருக்கு என்ன தேவையோ அதை இவன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். பேரறிவுடையவன் இவ்வாறு செய்வான். (அறிவில் குறைந்தவன் வம்பு செய்வான்) செல்வம் தனதே என்பான். இவன் பொய்யன். வள்ளுவர் இவனை ஒப்புக் கொள்ளமாட்டார். வள்ளுவரின் அறம் இத்தகையது. இதுவே தமிழறம். சங்க இலக்கியத்தினுள்ளும் இதற்குச் சான்றுகள் உண்டு. கோப்பெருஞ்சோழன் தன் செல்வத்தைப் பலரோடும் பகிர்ந்து கொள்வான். அவன் மக்களுக்கு இது உடன்பாடில்லை. தந்தைக்கு எதிராகப் போர் தொடுக்கிறார்கள். தங்களுக்கு உடைமை வேண்டும். அதிகாரம் வேண்டும். தந்தை போல மக்களில்லை. சமூகம் மாறிவிட்டது. தனியுடைமை மனிதனைப் பற்றிக் கொண்டது. சோழன் என்ன செய்வான். இடையில் வந்த புலவர் அறிவுரை கூறுகிறார். அரசதிகாரத்திலிருந்து விலகி அரசன் ஆற்றங்கரையில் வடக்கிருந்து உணவு, நீர் உண்ணாமல் உயிர் துறந்தான். புலவர் பலர் அவனோடு இருந்து உயிர் நீத்தனர். இவர்களுக்கும் புதிதாக வந்த உடைமைச் சமூகம் உடன்பாடில்லை. மனிதனைப் பிளவுபடுத்துகிறது இந்தச் சமூகம். உடைமை மனிதனுக்கு வெறி ஏற்றுகிறது. இந்த வெறி நமக்கு வேண்டாம். இந்தச் சமூகம் நமக்கு வேண்டாம். சங்க காலச் சமூகம் இப்படித்தான் இயங்கியது. இது விரிவான கதை. இதன் தொடர்ச்சியாகத்தான் வள்ளுவரும் இளங்கோவும் வருகின்றனர். அந்நிய தேசத்திலிருந்து வரும் கோவலன் கையில் விலையுயர்ந்த சிலம்பு இருக்கிறது. வாழ்வு தேடி வருபவனிடம் இப்படிச் சிலம்பு இருக்க முடியாது. ஆகவே அவன் கள்ளன். பொற்கொல்லன் கூறியதை அரசன் ஏற்றுக் கொண்டான். மனைவியின் ஊடல் தீர்க்கும் அவசரம் அவனுக்கு. காம உணர்வு அவனை ஆட்கொண்டிருக்கிறது. அவசரத்தில் ஆணையிட்டான். காவலன் கோவலனைக் கொன்றான். அப்புறம் கண்ணகி வழக்காடுகிறாள். அரசனோடு அரசியும் மாண்டாள். ஊரில் தீப்பற்றி எரிகிறது. தெய்வம் தடுமாறுகிறது. இப்படிச் செல்கிறது சிலம்பின் கதை. இதுதான் உடைமைச் சமூகம். இத்தகைய சமூகம் அழியத்தான் வேண்டும். தனக்குத்தானே அழிவைத் தேடிக்கொள்கிறது, இந்தச் சமூகம். இளங்கோவின் நெஞ்சில் இருப்பதும் தமிழறம். சமத்துவம், சமதர்மம் என்ற அறம். கம்பர் காவியத்திற்கு வருவோம். மார்க்சிய நோக்கில் கம்பர் காவியத்தை நான் பொருள்படுத்துகிறேன். அரசுப் பதவி துறந்து காட்டிற்கு மனைவியோடு வருகிறான் இராமன். வேடர்களோடு உறவு கொள்கிறான். அதன் பின்னர் சுக்ரீவன் முதலியவர்களோடு தோழமை உறவு கொள்கிறான். இராவணனுக்கு ஆட்சி, அதிகாரம் அனைத்தும் தேவை. அடுத்தவன் மனைவி அழகி என்றால் அவளும் தனக்குத் தேவை. அவன் அதிகாரம், படை வலிமை முதலியவற்றில் மிக்கவன். ஏழைகளோடு ஏழைகள், காட்டுவாசிகள் முதலியவர்களோடு தோழமை கொண்ட இராமன் அவர்களின் பேருதவியால் இராவணனை வென்றான். என்ன இருந்தாலும் அவனுக்குள் ஆணாதிக்கம் எஞ்சியிருக்கிறது. சீதை தீக்குளிக்கிறாள். அயோத்தியில் இராமன் அரசனாகிறான். அரசதிகாரம் மனைவியைக் காட்டுக்கு அனுப்புகிறது. அதிகாரம் கொடியது. மனிதர்களின் தரத்தைத் தாழ்த்துவது. இறுதியில் இராமன் யமுனையில் மாண்டான். மார்க்சிய நோக்கில் கம்பர் காவியத்திற்கு இப்படிப் பொருள் சொல்லலாம். தற்காலத்திற்கு வருகிறோம். பாரதியின் அத்வைதத்தை மார்க்சிய நோக்கில் பொருள்படுத்துகிறோம். எல்லாமே ஒன்று என்றால் யார்யாரையும் அதிகாரம் செய்ய வேண்டாம். ஆங்கிலேயன் ஆள வேண்டியதில்லை. பிராமணன் நமக்குத் தேவையில்லை. எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் இனம். இங்குள்ளவை யாவருக்கும் பொது. ஆணும் பெண்ணும் சமம். இது பாரதியின் சமதர்மம். சங்க காலத்தில் நமக்குள் வந்த ஒப்புரவு என்ற உணர்வு, நம் காலத்தில் சமதர்மம். தமிழிலக்கியத்தினுள் இடையறாது இயங்குகிறது இந்த நீரோட்டம். நெடுங்காலத் தமிழிலக்கியத்தை, மார்க்சியத்தை இப்படித்தான் நான் வாசிக்கிறேன். தமிழ்ச் சமூகத்தில் சங்ககாலம் முதற்கொண்டு இன்றுவரை நடைபெறுவது வர்க்கப் போராட்டம்தான் என்பதில் எனக்கு மறுப்பில்லை. சங்க காலத்திலும் நடைபெற்றது வர்க்கப் போராட்டம்தான். பாரி முதலிய வேளிர்கள் மக்கள் சார்பினர். நால்வகைப் படையோடு கூடிய வேந்தர் மக்களிடமிருந்து மெல்ல மெல்ல விலகியவர்கள் எனினும் கபிலர், அவ்வையார் முதலிய தமிழ்ச் சான்றோர் நெஞ்சில் தங்கி இருந்தது, முந்தைய இனக்குழுச் சமூகத்தின் பொதுமை அற உணர்வு. உடைமைச் சமூகம் உச்சம் பெற்ற காலத்தில் பாணர், விறலியர் முதலியவர்களுக்கு வாழ்வில்லை. பரத்தையரோடுதான் இவர்களுக்கு வாழ்வு. அதியனுக்குப் பிறகு அவ்வை புலம்பியது “இனிப் பாடுநரும் இல்லை பாடுநருக்கு ஒன்று ஈகுநரும் இல்லை” என்பது உண்மையாயிற்று. உடைமை ஆதிக்கம் பெற்று வரும் சூழலில்தான் களவுமணம் ஒதுக்கப்பட்டது. எனினும் புலவர்கள் இதையே போற்றினர். கபிலர் அறத்தொடு நிற்றலைப் போற்றிப்பாடினார். தொல்காப்பியருக்கு நிலமும் பொழுதுமே முதற்பொருள். பிற்காலத்தில் இறைவன்தான் முதற்பொருள். சமணர் வந்த காலத்தில் வினை முதற்பொருள். இப்படித்தான் வர்க்கச் சமூகம் பெருகியது. சங்க காலத்தில் போர்க் கொடுமைகள் அதிகம். அடுத்த காலத்தில் மக்கள் வறுமை கொடிது. மன்னர்கள் செல்வர்கள் கொடுத்த வறுமை தீராது. இனித் தெய்வம் வேண்டும். அமுதசுரபியும் வேண்டும். உடைமையும் அரசதிகாரமும் மேலும் மேலும் வலுப்பெற்ற காலத்தில் மக்கள் இயற்கையிலிருந்தும் சமூகத்திலிருந்தும் தனக்குள்ளிருந்தும் அந்நியமாயினர். நெல்லும் நீரும் இனி அவர்களே தேடிக்கொள்ள முடியாது. ஊரும் உறவும் இனி உறுதியில்லை. மனிதர்களுக்கு இடையிலும் எத்தனையோ பிளவுகள். மன்னர்களின் கொடுமையும் அதிகம். இனித் தெய்வம்தான் மக்களைக் காக்க வேண்டும். துறவு, தவம் இனி நல்லது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் தமிழ்நிலம் முழுவதும் சுற்றிவந்தனர். தமிழிசையோடு வாழ்ந்தனர். வர்க்கச் சமூகம் இப்படித்தான் பக்தி இயக்கத்தைத் தோற்றுவிக்கிறது. தெய்வங்களையும் வினைக் கோட்பாடுகளையும் உற்பத்தி செய்கிறது. கடவுள் என்ற பேருணர்வை அழகைப் படைக்கிறது. அந்நியமானவன் தனக்குள் சொர்க்கத்தைப் படைத்துக் கொள்கின்றான். இவ்வகை மயக்கம் அவனுக்குத் தேவை. தமிழிலக்கியத்தை இப்படித்தான் நேசத்தோடு பொருள்படுத்துகிறேன். மார்க்சியம் எனக்குக் கை கொடுக்கிறது. பார்வை கொடுக்கிறது. தமிழிலக்கியத்தில் என்னை வாழவைக்கிறது. தமிழிலக்கியம் இப்படித்தான் எனக்குள் வள்ளுவரும் இளங்கோவும் பாரதியாரும் பாரதிதாசனும் வாழ்கின்றனர். என்னைப் பொறுத்தவரை வள்ளுவரும் இளங்கோவும் வணிகச் சமூகத்திற்குச் சேவை செய்யவில்லை. சங்கத் தமிழ்ச் சான்றோர் அரசதிகாரத்தோடு ஒத்துச் செல்லவில்லை. சாதியையும் மதப்பற்றையும் தமிழ்ச் சான்றோர் போற்றவில்லை. தமிழிலக்கியத்தின் மையம் எனச் சித்தர்களைத்தான் மதிக்கிறேன். வள்ளுவர் முதற்கொண்டு வள்ளலார் வரை இயங்கியது சித்தர் இயக்கம். இந்த இயக்கத்தின் வீச்சில்தான் பெரியார் முதலியவரையும் மதிப்பிட முடியும். இம்முறையில்தான் மார்க்சியமும் தமிழிலக்கியமும் ஒரு புள்ளியில் இணைந்திருக்கின்றன. மார்க்சியம் தான் தமிழிலக்கியத்தைச் சரியான முறையில் பொருள்படுத்தமுடியும். புலமை நெறியை மார்க்சியம் சாட வேண்டியதில்லை. சடங்குகள் இல்லாமல் சமூகம் இல்லை. பக்தியும் மனிதனின் ஆதார உணர்வில் ஒன்று. மார்க்சியம் குறித்துத் தமிழக மார்க்சியர் பலரிடமிருந்து நீங்கள் வேறுபடுகிறீர்கள். எவ்வகையில் எந்தக் காரணத்தோடு வேறுபடுகிறீர்கள்? என் வாழ்வியல் அனுபவங்கள் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் எஸ்.என். நாகராசன் முதலியவர்களோடு உறவும் விரிவான படிப்பறிவும். இரண்டும் இணைந்த நிலையில் மார்க்சியம் குறித்த தெளிவு எனக்கு ஏற்பட்டது. இது குறித்து சுருக்கமாக முதலில் நான் சொல்ல வேண்டும். மார்க்சியத்தை நம் மரபிலிருந்து தான் செறித்துக் கொள்ளவும் முடியும். நம் மண்ணுக்கு மார்க்சியம் தேவை. மார்க்சியம் இல்லாமல் நம் வாழ்வில் மேம்பாடு சாத்தியம் இல்லை. நம் வரலாற்றில் இருந்து மார்க்சியத்தை நாம் புரிந்து கொள்ளவும் வேண்டும். நான் தமிழிலக்கிய மாணவன். மார்க்சியத்தின் வேர்கள் தமிழிலக்கியத்தினுள்ளும் தொடக்கக்காலம் முதலே உண்டு என்ற புரிதலும் எனக்கு ஏற்பட்டது. இவ்வாறெல்லாம்தான் மார்க்சியம் எனக்குள் செறிவு பெற்றது. மார்க்சியத்தோடு எனக்கு உறவு ஏற்படவில்லை என்றால் என் வாழ்வு அர்த்தமற்றதாகத்தான் போயிருக்கும். இந்தியாவிலேயே முதன்முறையாக மார்க்சின் அந்நியமாதல் பற்றி பேசியவர் எஸ்.என். நாகராஜன் அவர்கள்தான். மார்க்சின் கையெழுத்துப் படிகளில் அந்நியமாதல் என்ற போக்கை நுட்பமாக மார்க்ஸ் எழுதியிருக்கிறார். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மனிதன் இயற்கையோடும் சமூகத்தோடும் தன்னோடும் ஒன்றியிருந்தான். தனியுடமை, அரசதிகாரம் என்பனவற்றோடு கூடிய வரலாற்றுக் காலத்தில் மனிதன் இயற்கையிலிருந்தும் சமூகத்திலிருந்தும் இறுதியாகத் தன்னிலிருந்தும் அந்நியமானான். இந்தச் சூழலில்தான் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் போட்டி, பொறாமை, போர்கள் முதலியவை ஏற்பட்டன. இத்தகைய வர்க்க முரண்பாடுகள் இல்லாத இன்னொரு காலத்தில் மனிதன் அந்நியமாதலில் இருந்து விலகி இயற்கையோடும் சமூகத்தோடும் தன்னோடும் ஒன்றியிருப்பான். இத்தகைய சமுதாயம்தான் கம்யூனிச சமுதாயம் என்றார் மார்க்ஸ். மனிதன் தனக்குள்ளும் பிளவுபட்டு இயற்கையோடும் சமூகத்தோடும் தான் கொண்ட உறவு அறுபட்டு தன் வாழ்வின் பொருள் என்ன? நான் எங்கிருந்து வருகிறேன்? எங்கே போகிறேன்? என்பது தெரியாமல் தனக்குத்தானே அந்நியமான சூழலில்தான் மனிதனுக்குள் துயரங்கள், வேதனைகள், மயக்கங்கள், மாயைகள் ஏற்படுகின்றன. கடவுள், மதம், சடங்குகள், சொர்க்கம், நரகம் என்பனவற்றுக்கெல்லாம் மனிதன் வசப்படுகிறான். இந்த நிலையில் தனக்குள்ளும் புறத்திலும் மனிதன் தேடுகிறான். இத்தகையத் தேடலின்போதுதான் மனிதன் தன்னை உணர்கிறான். வரலாறு, சமூகம் என்பனவற்றை உணர்கிறான். தன்னை இவ்வாறு செய்தவர்களோடு போராடுகிறான். இறுதியில் தன்னை மீட்டுக் கொள்கிறான். மனிதனின் வரலாற்றை இப்படி மார்க்சியம் விளக்குகிறது. இத்தகைய விளக்கத்தை வேறு எந்தத் தத்துவமும் நமக்குத் தருவதில்லை. மார்க்சின் அந்நியமாதல் என்ற இந்த விளக்கத்தைப் புரிந்துகொண்ட நிலையில்தான் இலக்கியம், மதம் இவற்றின் பார்வைகள் நமக்குத் தெளிவுபடும். சாதி, மதங்கள் முதலியவை எப்படி ஏற்பட்டன என்பதும் புரியும். இந்திய வரலாற்றையும் இத்தகைய பார்வையில் இருந்துதான் புரிந்துகொள்ள முடியும். வாழ்வுக்கு என்ன அர்த்தம் என்ற தேடல் அந்நியமாதல் என்பது பற்றிய புரிதலோடுதான் ஏற்படுகிறது. மனித வாழ்வுக்கு அர்த்தம் என்ன என்பதை மார்க்சியம்தான் நமக்குத் தெளிவாகக் கற்பிக்கிறது. குறிப்பிட்ட வரலாறு, பொருளியல் சூழலில் நாம் அகப்பட்டிருக்கிறோம். இந்தச் சூழலில் உள்ள முரண்பாடுகளுக்குள் நாம் இருக்கிறோம். நம்மோடு நாமே போராடுகிறோம். புறத்திலும் அகத்திலும் போராடுகிறோம். வாழ்வைப் புரிந்துகொள்கிறோம். உடைமை, அதிகாரம் முதலியவை வாழ்வுக்கு உண்மையான பொருளாக முடியாது. சமத்துவம், சமதர்மம் இகியவற்றின் மூலமே மனிதன் தனக்கான வாழ்வைப் பெறமுடியும். மார்க்சியத்தின் மெய்யியல் என இதைத்தான் சொல்லமுடியும். ஆதிக்கம் எந்த வடிவில் இருந்தாலும் மனிதவாழ்வு அர்த்தம் இழக்கும். அரசதிகாரம், மத அதிகாரம், பொருளியல் அதிகாரம், ஆணாதிக்கம் என்பனவெல்லாம் மனித வாழ்வைச் சிதைக்கும் வரலாற்றிலிருந்து சமூகத்திலிருந்து எவ்வகை ஆதிக்கத்தையும் அறவே களைந்து ஆதிக்கமற்ற சமத்துவமான எல்லோருக்கும் எல்லாம் என்பதான வாழ்வை ஏற்படுத்துவதுதான் மார்க்சியத்தின் இறுதி இலக்கு. தற்பெருமை, தன் அகங்காரம், காமம், வெகுளி முதலியனவும் மனிதவாழ்வின் தரத்தை நாசமாக்கும் இத்தகைய மனிதன்தான் இயற்கையைக் காப்பான். உயிரினங்களைக் காப்பான். இயற்கையோடு ஒத்து வாழ்வான். இத்தகைய பேருணர்வு மார்க்சியனுக்கு இருக்க வேண்டிய உணர்வு. மனித வாழ்வுக்கு ஆதாரமான கலாச்சாரம், மெய்யியல் என்றெல்லாம் இதனைத்தான் கூறமுடியும். வர்க்கங்கள் இருக்கும்வரை அரசு இருக்கும் மதம் இருக்கும் என்று மார்க்ஸ் கூறியதையும் இவ்வகையில்தான் புரிந்துகொள்ள முடியும். வரலாறு, சமூகம் முதலியவை பற்றிய சரியான பார்வை தருவது மார்க்சியம் தவிர வேறில்லை. மார்க்சியத்தை இவ்வாறுதான் எனக்குள் செறித்துக் கொண்டேன். என்னுடைய தமிழ் இலக்கியப் பார்வையென்பது மார்க்சியம் பற்றிய புரிதலோடு கூடியதுதான். “இதயமற்ற உலகின் இதயம். ஆன்மாவற்ற உலகின் ஆன்மா” என்று மதம் பற்றி மார்க்ஸ் கூறினார். அந்நியமாதல் என்ற புரிதல் வழியேதான் மார்க்சின் மதம் பற்றிய பார்வையைப் புரிந்துகொள்ள முடியும். எந்தவொரு மதத்தினுள்ளும் இரண்டு அடுக்குகள் உள்ளன. புரோகிதம் முதலியவை சார்ந்தது மேலடுக்கு. ஆன்மீகம் சார்ந்தது அடுத்த அடுக்கு. எல்லோருக்குமானது இந்த உலகம். மனிதர் அனைவரும் சகோதரர்கள். அன்பைத்தவிர மனிதனுக்கு வேறொன்று தேவையில்லை. எல்லாவற்றையும் மனிதர் பகிர்ந்துகொள்ள வேண்டும். இத்தகைய ஆன்மீக உணர்வு மதங்களின் உள்ளடக்கம். இலக்கியமும் மனிதவாழ்வின் மேன்மை குறித்தது. மார்க்சியத்தின் மெய்யியல் என்றும் கலாச்சாரம் என்றும் இவற்றைத்தான் குறிப்பிட முடியும். இவை என் புரிதல். இவ்வாறெல்லாம் நானும் எஸ்.என். நாகராசனும் எனது நண்பர்கள் சிலரும் தமிழகத்தில் பிற மார்க்சியரிடமிருந்து இப்படித்தான் வேறுபடுகிறோம். மார்க்சியத்திற்கு இயங்கியல்தான் தத்துவம் என்றும் இயற்கை விஞ்ஞானத்தின் உச்ச அளவிலான வளர்ச்சி நிலையில் தத்துவத்திற்கு வேலையில்லை என்றும்கூட மார்க்சிய ஆசான்கள் சிலர் கருதினர். நாங்கள் இப்படிக் கருதவில்லை. மேற்குலகில் வளர்ச்சிபெற்ற இருத்தலியல்தான் வாழ்வுக்கு அர்த்தம் என்ன என்ற கேள்வியை எழுப்பியது. உலகில் தோன்றிய எல்லாச் சமயங்களும் இந்தக் கேள்வியோடுதான் தொடங்குகின்றன. இந்தக் கேள்வியும் மார்க்சியம் தனக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விதான். உண்மையில் இந்தக் கேள்விக்கு மார்க்சியம்தான் சரியான விடையைத்தருகிறது. இயந்திரவியல்தனமான, வறட்டுத்தனமான மார்க்சியம் இந்தக் கேள்வியை மறுக்கும். மார்க்ஸ் தன் இளமைக்காலத்தில் அந்நியமாதல் பற்றிப் பேசியது அவர், மதத்திலிருந்து விடுபடாத நிலையில்தான் என்று சில மார்க்சியர் கருதினர். உண்மை இப்படி இல்லை. அந்நியமாதல் என்ற கேள்வியில் இருந்துதான் மார்க்சியத்திற்கான மெய்யியல் பார்வைக்குள் செல்லமுடியும். இத்தகைய பார்வையுடையோர்க்குத் தன்முனைப்பு அதிகார வெறி முதலியவை இருக்க முடியாது. இத்தகைய முறையில் பிற மார்க்சியரிடமிருந்து நாங்கள் முற்றாக வேறுபட்டோம். நாங்கள் கட்சிக்குள் தொடர்ந்து இருக்க முடியவில்லை என்பதற்கும் இதுகாரணம். அரசியலுக்கு இலக்கியம் சேவை செய்யவேண்டும் என்ற பார்வையும் எங்களுக்கு உடன்பாடில்லை. இதன் காரணமாகவே தமிழிலக்கிய ஆய்வில் பிற மார்க்சியரிடமிருந்து நான் முற்றாகவே மாறுபட்டேன். அறுபதுகளின் தொடக்கம் முதலே மார்க்சியத்தில் எனக்கு ஈடுபாடு இருந்த போதிலும் எஸ்.என்.நாகராசன் அவர்களோடு ஏற்பட்ட நெருக்கமான உறவின் விளைவாகவே மார்க்சியம் குறித்து எனக்குத் தெளிவு ஏற்பட்டது. இரஷ்ய மார்க்சியத்திலிருந்து மாவோவின் மார்க்சியத்திற்கு நாங்கள் எப்படி வந்து சேர்ந்தோம் என்பதையும் இனி சொல்லலாம். சோசலிசமும் பெருந்தொழிலும் ஒத்துப்போக முடியாது என்று ஏங்கெல்ஸ் எழுதியிருக்கிறார். பெருந்தொழிலுக்கு பெரும் மூலதனம் தேவை. மூலதனத் திரட்சிக்காக சோவியத் அரசு தன் தேசத்து உழவர்களை, தொழிலாளிகளை சுரண்ட வேண்டியிருந்தது. இதற்காகவே உழைப்பாளர் முகாம்களும் ஏற்பட்டன. பெருந்தொழில் வளர்ச்சியோடு நகர வளர்ச்சி நடுத்தர வர்க்கத்தின் பெருக்கம் முதலியனவும் ஏற்பட்டன. அரசு, இராணுவம் என்பனவும் ஆதிக்கம் பெற்றன. அரசதிகாரத்தோடு கட்சியதிகாரமும் இணைந்துகொண்டது. மக்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகினர். இயற்கை நாசமாயிற்று. மேற்கத்திய முதலாளிய நாடுகளை எதிர்க்க வேண்டும். வெற்றிகொள்ள வேண்டும் என்ற உணர்வின் விளைவாகத் தன்னை அறியாமலேயே சோவியத் ஒன்றியம் ஆதிக்க அரசாக, முதலாளிய அரசாக, அதிகார வர்க்க அரசாக மாறியது. அரசதிகாரம் உதிரவில்லை. ஸ்டாலின் காலத்தில் பெருந்தொழில் வளர்ச்சியும் அரசு/கட்சி அதிகாரத்தின் வளர்ச்சியும் கூடுதலாயின. பெயரளவுக்கு இதை சோசலிசம் என்றார்கள். ஆனால் இதே சமயம் சோவியத் ஒன்றியத்தின் போக்கிலிருந்து மாவோ மாறுபட்டார். உற்பத்திச் சக்திகளுக்கு முதன்மை என்பது இறுதியில் முதலாளியத்திற்கே வழிவிடும் என்பதை மாவோ கண்டார். எங்களைப் பொறுத்தவரை சோவியத் மார்க்சியத்தைவிட மாவோவின் மார்க்சியத்தையே மார்க்சியம் என ஏற்றுக் கொண்டோம். இன்று வரையில் மார்க்சிய லெனினியம் என்பதிலிருந்து நாங்கள் மாறுபடவில்லை. நாளடைவில் மேலும் சிலவற்றைப் புரிந்துகொண்டோம். மேற்குலகிலும் மார்க்சியம் ஆற்றல் மிக்க சில பரிமாணங்களோடு வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. இலக்கியம், கலாச்சாரம், உளவியல் என்ற வகையில் மார்க்சியம் தனக்குள் விரிவு பெற முடியும். இப்படித் தொடங்கி மார்க்சியத்தை நாங்கள் விரிவாகக் கற்றோம். சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத்தின் தகர்வு என்பது உண்மையில் முதலாளியத்தை உள்வாங்கிக் கொண்ட மார்க்சியத்தின் தகர்வுதான் என்ற உண்மையும் எங்களுக்குப் புரிந்தது. தமிழ் இலக்கியத் திறனாய்வாளர்கள், சிற்றிதழாளர்கள், படைப்பாளிகள் முதலியவர்களோடு நீங்கள் கடந்த 50 இண்டுகளாகக் கொண்டிருக்கும் உறவு பற்றிக் கூறுங்கள்? என் நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்ளும் முறையில் தமிழின் மிகச் சிறந்த இலக்கியவாதிகள் முதலியவர்களை இங்கு முதலில் தொகுத்துக் கொள்ள விரும்புகின்றேன். சி.சு.செல்லப்பா, க.நா.சுப்பிரமணியம், சிட்டி, பிரமிள், வெங்கட்சாமிநாதன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன், இந்திராபார்த்தசாரதி, ஞானக்கூத்தன், ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன், தமிழவன், ராஜ்கௌதமன், கைலாசபதி, சிவத்தம்பி, எஸ்.பொன்னுத்துரை, நுஃமான், யேசுராஜா, டொமினிக் ஜீவா, பத்மனாப ஐயர், பிரபஞ்சன், கல்யாண்ஜி, கலாப்ரியா, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், பொன்னீலன், முத்துமோகன், நாகார்ச்சுனன், எம்.டி.முத்துக்குமாரசாமி, டாக்டர் தே.லூர்து, க.ப.அறவாணன், மா.இலெ.தங்கப்பா, க.பஞ்சாங்கம், புவியரசு, சிற்பி, கனல்மைந்தன், சு.சமுத்திரம், எம்.ஜி.சுரேஷ், பிரேம், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், க. பூரணச்சந்திரன், ஜீவஒளி, ரவி சீனிவாஸ் – இப்படி இன்னும் பலர் என் நினைவில் மட்டும் அல்ல, எனக்குள்ளும் நுழைந்து என் ஆளுமையை விரிவுபடுத்தியதோடு பக்குவப்படுத்தியவர்கள் என இன்னும் சிலரையேனும் நான் குறிப்பிட வேண்டும். இவர்களோடு எனக்குத் தமிழ் கற்பித்த பேராசிரியப் பெருமக்கள் எனவும் பலரையும் குறிப்பிட வேண்டும். ஒவ்வொருவரைப் பற்றியும் என் அனுபவம், புரிதல் என்று சிலவற்றையேனும் சொல்லி வைக்க நான் விரும்புகின்றேன். செல்லப்பா சில சமயம் வற்புறுத்திய போதும் நான் மௌனியைச் சந்திக்கவில்லை என்பது என் வருத்தம். தி. ஜானகிராமனோடு ஒரு கருத்தரங்கில் உரையாடியது என் நினைவில் என்றும் பசுமையாக இருக்கும். தி.க.சி. வல்லிக்கண்ணன், செந்தில்நாதன் முதலியவர்களும் எனக்குள் சில உணர்வுகளை விட்டு வைத்திருக்கின்றனர். பிரமிளும் வெங்கட் சாமிநாதனும் வானம்பாடி இயக்கத்தைச் சேர்ந்தவன் என்ற முறையிலும் மார்க்சியன் என்ற முறையிலும் என்னைக் கடுமையாகச் சாடினர் என்றாலும் நேரில் இவர்களைக் கண்டு உரையாடியபோது இவர்களோடு நான் கரைந்துவிட்டேன். செல்லப்பாவும் க.நா.சு.வும் கவிதை, இலக்கியம் திறனாய்வு என எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள். அசோகமித்திரனும் இந்திரா பார்த்தசாரதியும் எங்குக் கண்டாலும் என்னோடு அருகிருந்து நெருக்கமாக எது பற்றியும் தயக்கமில்லாமல் என்னோடு உரையாடுகின்றனர். நான் எந்தக் கேள்வியையும் இவர்களோடு எழுப்ப முடியும். சமுத்திரத்தோடு என்னுடைய உறவு மகிழ்ச்சியும் கொஞ்சம் கசப்பும் கொண்டது. அசோகமித்திரன் தொடங்கி மார்க்சியம் சாராத ஆனால் மனிதநேயச் சார்புடைய எழுத்தாளர் பலரோடு என் உறவை மார்க்சியர் விமர்சனம் செய்கின்றனர். இவர்கள் எவரும் சமூக அக்கறை அற்றவர்கள் இல்லை. இவர்களில் ஒரு சிலரைப் பார்ப்பனர் என்று வசைபாடி இவர்கள் தமிழுக்குச் செய்த அரும்பணியை என்னால் ஒதுக்க முடியாது. கல்யாண்ஜி, கலாப்ரியா, பிரபஞ்சன் முதலியவர்கள் நம் நெஞ்சை அன்பால் குளிர்விக்கின்றனர். இத்தனை அன்பை இவர்கள் எங்கிருந்து நமக்கு வழங்குகிறார்கள் என்பது எனக்குள் வியப்பு. ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன், தமிழவன், ராஜ்கௌதமன் ஆகியவர்கள் அமைப்பியல் முதலிய புதிய திசைகளில் எனக்குள் புதிய வெளிச்சங்களைத் தந்தவர்கள். ஜெயமோகன், பிரேம், எம்.ஜி.சுரேஷ் ஆகியவர்கள் தமிழுக்குப் புதிய புதிய ஆற்றல்களைத் தொடர்ந்து வாரி வழங்குகிறவர்கள். இவர்களோடு எஸ். இராமகிருஷ்ணனையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். ஞானக்கூத்தன் மட்டும் அல்லாமல் மனுஷ்யபுத்திரன் முதலிய எத்தனையோ கவிஞர்கள் தமிழ்க் கவிதையைப் புதிய திசைகளில் நகர்த்தியவர்கள். இவ்வகையில் பிரம்மராஜன் ஒரு பெரும் சாதனையாளர். அபியைப் பொருத்தவரைத் தனக்குள் தேடித்தேடிச் சென்று இறுதியாக வெட்ட வெளியில் தன்னை இழந்தவர். தமிழன்பன், சிற்பி, புவியரசு முதலியவர்கள் தமிழை நிகழ்காலத்தோடு தமிழ்ச் சமூகத்தோடு, பாரதி பாரதிதாசனோடு இணைத்தவர்கள். க.பூரணச்சந்திரன், ரவி சீனிவாஸ், ஜீவஒளி இகியவர்கள் உலக அளவில் இன்றும் தேடுதலை நிகழ்த்திக் கொண்டிருப்பவர்கள். ஜீவஒளி பிரபஞ்சம் பற்றிய ஆய்வில் தன்னை இழந்தவர். பிரமிள் அளவுக்கான வீச்சைத் தமிழில் எவரும் எட்டவில்லை. எஸ்.என். நாகராசன் கட்டுரைகள் இருபது ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலம் வழியே உலக அளவில் சென்றிருக்கும் என்றால் உலக அளவிலான மார்க்சியப் பேரறிஞர்களில் ஒருவராக அவரை உலகம் கொண்டாடியிருக்கும். எஸ்.வி. ராஜதுரையை சாமிநாதசர்மாவோடு இணைத்துப் பேசுவது கூட அவரைப் பற்றிய மிக எளிய மதிப்பீடு. அ.மார்க்ஸ் முன்பு என்னைச் சில முறை சாடினாலும் அவரது பன்முனை அறிவு வீச்சுக்கள் எனக்குப் பெரிதும் வியப்பு அளிக்கின்றன. தமிழில் ஞானபீடம் என்ற தகுதியை ஜெயகாந்தன் பெற்றதில் வியப்பு இல்லை. சுந்தரராமசாமி, ஜெயமோகன், எஸ்வி. ராஜதுரை, லா.சா. ராமாமிர்தம் முதலியோர்களும் இந்தத் தகுதியை எளிதாகப் பெறும் தகுதி உடையவர்கள். தமிழில் இத்தனை அறிய ஆளுமைகளை மார்க்சியர் கொண்டாடி இருக்க முடியும். மார்க்சியம் பற்றிய அறிவு இவர்களை எல்லாம் ஏன் புறந்தள்ள வேண்டும்? டால்ஸ்டாயை லெனின் கொண்டாடியதுபோல தாஸ்தாவ்ஸ்கியைப் பொருட்படுத்தவில்லை என்பது ஏன் என்று எனக்குப் புரிவதில்லை. லெனினுக்குள் அடைபட்டிருந்த பகுதி எதுவாக இருக்க முடியும்? தமிழகத்தில் மார்க்சியரும் இப்படித்தம்மை ஏன் அடைத்துக் கொள்ள வேண்டும்? பொன்னீலன் அளவுக்கு விரிந்த பார்வை இவர்கள் எவருக்கும் இல்லை. மார்க்சியரின் இலக்கியப் பார்வையைக் கைலாசபதி ஒரளவுக்கு முடமாக்கினார். எஸ்.பொன்னுத்துரையைக் கைலாசபதியால் முடக்கவே முடியவில்லை. இவ்வகையான சில குறைபாடுகளைச் சிவத்தம்பி ஒரளவுக்கேனும் நீக்கிவரத்தான் செய்கிறார். மார்க்சியருக்குத் தமிழின் ஆழம் ஏனோ தெரியவில்லை. சிவத்தம்பி தமிழின் ஆழத்தைத் தொடர்ந்து தேடுகின்றார். கேசவன், வானமாமலை ஆகியவர்கள் தமக்குள் இறுகி இருந்தார்கள். வானமாமலை, தமிழுக்குப் புதிய சில திறப்புக்களைச் செய்தார். நாட்டார் வழக்காற்றியலைத் தமிழ் அறிவுலகில் நிலை நிறுத்தியவர்களில் டாக்டர் தே. லூர்து அவர்களின் பங்களிப்பை நம்மால் என்றும் மறக்க இயலாது. சிலப்பதிகாரத்தையும் கம்பராமாயணத்தையும் கே.முத்தையா வித்தியாசமான கோணங்களில் ஆராய்ந்தார். ஆத்மாநாமின் தமிழ்க் கவிதை என்றும் மறக்க இயலாது. இத்தனை ஆளுமைகளோடு நான் நெருங்கியிருந்து எவ்வளவோ கற்றுக்கொண்டு என்னை அன்றும் இன்றும் புதியவனாக்கிக் கொண்டே இருக்கின்றேன். நவீன கவிதை தமிழுக்கு ஒரு பெரும் ஆற்றல். பரிசுகள், பாராட்டுக்கள் ஆகியவற்றில் எனக்கு உடன்பாடில்லை. தமிழை, தமிழ் வரலாற்றைத் தக்கவைப்பதுதான் நம்மவர் அனைவரும் செய்யவேண்டிய நற்செயல். இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் இன்றும் நம் மரியாதைக்குரியவர்கள் இவர்களுக்குள்தான் வள்ளுவரும் இளங்கோவும் கம்பரும் வள்ளலாரும் இன்றும் வாழ்கின்றனர். க.நா.சு., செல்லப்பா, வெங்கட்சாமிநாதன், பிரமிள் முதலியவர்களை நான் கொண்டாடிய அளவிற்கு மார்க்சிய எழுத்தாளர், திறனாய்வாளர்களை நான் பாராட்டவில்லை என்று என்னைப் பற்றி ஒருசிலர் குறைகூறுவது உண்டு. இதற்கு நான் சுருக்கமாக பதில் சொல்ல வேண்டும். மார்க்சியரிடமிருந்து நான் கற்றுக் கொள்ளாமலுமில்லை. ஆனால் இலக்கியத்தின் நோக்கம் அரசியலாக அதிலும் குறிப்பாக கட்சி அரசியலாக இருக்க வேண்டும் என்று மார்க்சியர் கூறுவதை நான் எப்போதும் ஒப்புக்கொண்டதில்லை. வர்க்கப்பார்வை என்று சொல்லி தமிழிலக்கியத்தை க.நா.சு. முதலிய எழுத்தாளர்களையும் காயப்படுத்தும் அளவுக்கு மார்க்சியர் குறை கூறுவதை என்னால் ஏற்க முடியவில்லை. இலக்கியத்தில் தீர்வை தட்டில்வைத்து வழங்க வேண்டும் என்பது எனக்கு உடன்பாடில்லை. க.நா.சு. முதலியவர்களிடமிருந்துதான் வளமான இலக்கியப் பார்வையை கலை உணர்வை நான் கற்றுக்கொண்டேன். மார்க்சியரின் படைப்புகளின் உள்ளும் இடம்பெறும் அவர்களின் அரசியல் கூட வளமானதாக இருக்கவில்லை. இவர்களைக் காட்டிலும் அரசியல் பார்வையில் எனக்குக் கூடுதலான தெளிவு உண்டு. படைப்பியக்கம் என்பது ஒரு பேராற்றல். அது மனிதனின் உள்ளுணர்வோடு உறவுடையது. மார்க்சியருக்கு இதுபற்றி பெரும்பாலும் தெரியாது. கட்சிக்குள் இருந்து என்னை நானே இழந்துவிட எனக்கு இயலாது. இதுபோலவே க.நா.சு. முதலியவர்களைப் பார்ப்பனர் என்று சாடுவதும் எனக்கு உடன்பாடில்லை. அசோகமித்ரன், லா.ச.ர முதலியவர்களிடம் பார்ப்பனியத்தைக் கண்டுபிடித்து, அதை முதன்மைபடுத்தி அவர்களின் படைப்பைச் சாடமுடியாது. “புதிய தலைமுறை”, “வானம்பாடி”, “வேள்வி”, “பரிமாணம்”, “நிகழ்” முதலிய சிற்றிதழ்களை நடத்திய அனுபவங்கள் உங்களுக்கு உண்டு. தற்போதும் “தமிழ் நேயம்” என்னும் சிற்றிதழை நடத்தி வருகின்றீர்கள்? தங்களுக்கு ஏற்பட்ட சிற்றிதழ் அனுபவங்களைக் கூறுங்கள்? 1968-70 வாக்கில் கோவையில் “புதிய தலைமுறை” என்ற மார்க்சிய இலக்கியத் திங்கள் இதழை நாங்கள் தொடங்கினோம். மாவோவின் சிந்தனைகள்தான் இந்த இதழின் மையம். எஸ்.என். நாகராசன் எங்களுக்குத் தந்த விளக்கத்தின் அடிப்படையில் அந்நியமாதல் என்ற கருத்தியலை விளக்கும் கட்டுரைகளையும் கதைகளையும் இந்த இதழில் வெளியிட்டோம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று அக்கறையோடு எழுதினோம். பாரதிதாசனை நாங்கள் கொண்டாடினோம். சங்க இலக்கியம், தொல்காப்பியம் பற்றிய ஆய்வுகளை வெளியிட்டோம். மொழிச் சிக்கல்கள் குறித்த விவாதங்கள் இந்த இதழில் வெளியாயின. கனலின் கவிதைகள் இவ்விதழில் முக்கியமானவை. “புதிய தலைமுறை” இதழ் என்பது பிற மார்க்சிய வட்டாரங்களிலிருந்து எங்களைத் தனித்துக்காட்டியது. அவர்களிடம் பேரளவு இல்லாத மொழி ஈடுபாடும் இலக்கிய ஈடுபாடும் மெய்யியல் ஆய்வும் எங்களுக்குள் இருந்தன. இரண்டு ஆண்டுகள் மட்டுமே இந்த இதழைச் செயல்படுத்த முடிந்தது. நக்சல்பாரி இயக்கம் சார்ந்தவர் என்ற முறையில் இந்த இதழ் காவல் துறையின் கவனிப்புக்கு உள்ளாகி நின்றது. 70-க்குப் பிறகு “வானம்பாடி” இயக்கத்தினுள்ளும் நான் இருந்தேன். வானம்பாடி இயக்கத்திற்குள் இருந்த முரண்பாடு காரணமாக நானும் சில நண்பர்களும் வெளியேறி “வேள்வி” என்ற இதழை வெளியிட்டோம். வானம்பாடி இதழில் கவிதைகள் மட்டுமே இடம்பெற்றன. “வேள்வி”யைப் பொறுத்தவரை ஒரு இலக்கிய இயக்கம் என்ற முறையில் கவிதைகள் சிறுகதைகள் திறனாய்வுகள் எனப் பலவற்றை வெளியிட்டோம். வானம்பாடி இயக்கத்தை இலக்கிய இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற எங்கள் கருத்து வேள்வி இதழில் செயல்பட்டது. ஆனால் இங்கும் நாங்கள் மாவோ சார்புடையவர்கள் என்பதன் காரணமாக எங்களுக்குள்ளும் பிளவு ஏற்பட்டு “வேள்வி” நின்றது. 79-க்குப் பிறகு “பரிமாணம்” என்னும் பெயரில் மார்க்சிய ஆய்விதழ் ஒன்றை நாங்கள் தொடங்கினோம். சோவியத் மார்க்சியத்தோடு எங்களுக்கு உடன்பாடு இல்லை. மாவோவின் மார்க்சியம் தவிர மேற்குலகிலும் மார்க்சிய நோக்கில் இலக்கியம், மெய்யியல், சமூகவியல் என்ற பலவகைப் பரிமாணங்கள், மார்க்சியம் பெற்று வந்த வளர்ச்சியைத் தமிழில் தர விரும்பினோம். அல்தூசர், கிராம்சி முதலியவர்கள் இத்தகையவர். இந்தியாவினுள்ளும் மார்க்சியம், கட்சி வட்டாரத்திலும் பிற ஆய்வுகளிலும் புதிய பொருள் விளக்கம் பெற்றது. தமிழகத்திலும் குணா முதலியவர்களின் புதிய விளக்கங்கள். ஸ்டாலின் பற்றிய விமர்சனங்களைத் தொகுத்தலும் தேவை. கேரளாவில் தாமோதரன் தந்த புதிய விளக்கம் இவ்வகையில் மார்க்சியத்தின் புதிய பரிமாணங்களைத் தொகுத்து வெளியிடும் முறையில் “பரிமாணம்” 16 இதழ்கள் வெளிவந்தது. மாவோ சிந்தனைகளும் பின்னடைவுக்கு உள்ளாகியிருந்தது. பிரெஞ்சு மார்க்சியர் மார்க்சியத்தில் புதிய வெளிச்சங்களை வெளிப்படுத்தினர். தமிழகச் சூழலில் கட்சி மார்க்சியரின் இறுக்கத்தைத் தளர்த்தும் நோக்கில் பரிமாணம் செயல்பட்டது. இந்த முயற்சி எங்களுக்கு மனநிறைவு தருவதாக அமைந்தது. எஸ்.என். நாகராசன், எஸ்.வி.ராஜதுரை, ராஜ்கௌதமன் முதலியவர்கள் தொடர்ந்து எழுதினர். கட்சி மார்க்சியரின் இறுக்கத்தை எங்களால் மாற்ற முடியவில்லை. 1983-க்குப் பிறகு நண்பர்களின் ஒத்துழைப்போடு “நிகழ்” இதழைத் தொடங்கினோம். தொடக்கத்தில் அது இலக்கிய இதழ். எட்டாவது இதழ் முதல் முழுப் பொறுப்பை நான் எடுத்துக்கொண்டேன். 80களின் இறுதியில் கிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத் ஒன்றியத்திலும் சோசலிசம் தகர்வுக்கு உள்ளாயிற்று. உலக அளவில் மார்க்சியம் கேள்விக்கு உள்ளாகியது. அமைப்பியல், பின் நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம், ஆகியவை முன்னுக்கு வந்தன. சோவியத் ஒன்றியத்தில் தகர்ந்தது முதலாளியத்தை உள்வாங்கிக்கொண்ட மார்க்சியம்தான் மார்க்சியத்திற்குள் நுழைந்து விட்ட முதலாளியத்தை வெளியேற்றத்தான் வேண்டும். சோசலிசமும் பெருந் தொழிலும் ஒத்துப்போக முடியாது என்று ஏங்கல்ஸ் கூறியதை சோவியத் கட்சி புறக்கணித்தது. பெருந்தொழில், பெரிய இராணுவம், பெரிய அரசு அமைப்பு, அனல் மின்நிலையங்கள் பெரிய அணைக்கட்டுகள் என்று தொடங்கினால் பெருத்த மூலதனம் தேவை. இதற்காக உள்நாட்டு உழவர்களோடு தொழிலாளிகளையும் கடுமையாகச் சுரண்டியாக வேண்டும் எதிர்ப்புகளை ஒடுக்கியாக வேண்டும். இதே சமயம் கட்சிக்குள்ளும் அரசு அதிகாரத்தினுள்ளும் உயர்பீடங்களில் இருந்தவர்கள் அதிகாரத்தோடு பெரும் உடைமைகளையும் சேகரித்துக் கொண்டனர். இத்தகைய மார்க்சியம் மக்களுக்கு அதிகாரத்தை வழங்காது. சோவியத் ஒன்றியத்தை இந்திய மார்க்சியர் திறனாய்வுக்கு உள்ளாக்கவே இல்லை. இத்தகைய சூழலில்தான் அமைப்பியல், பின்நவீனத்துவம் முதலிய புதிய போக்குகள் எழுந்தன. எஸ்.என்.நாகராசன் கருத்துப்படி மார்க்சியத்தின் உள்ளுறை ஆற்றலை மேம்படுத்தக்கூடிய வாய்ப்பு வந்திருக்கிறது. மார்க்சியத்திற்குள் புதிய அனுபவங்கள் வந்து சேரவேண்டும். மார்க்சியம், இலக்கியம் முதலிய எல்லாத் துறைகளிலும் தம்மைப் புதுப்பித்துக் கொள்ள முடியும். பெரியாரியம், பெண்ணியம், தலித்தியம் முதலியவற்றின் இக்கக் கூறுகளை மார்க்சியம் தனக்குள் செரித்துக் கொள்ள முடியும். இவ்வகையில் “நிகழ்” செயல்பட்டது. உலக அளவில் அறிவியல், உளவியல், பொருளியல் முதலியவற்றின் ஆக்கங்களை மார்க்சியத்தோடு இணைக்கும் முறையிலும் “நிகழ்” கட்டுரைகளை வெளியிட்டது. க.பூரணச்சந்திரன், பிரமிள், எஸ்.வி.ராஜதுரை, ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணன், சிங்கராயர், ரவி சீனிவாஸ், ஜீவஒளி முதலியவர்களின் மிக விரிவான ஆய்வுக் கட்டுரைகள் நிகழில் வெளிவந்தன. சிறுகதை, கவிதை, நூல் மதிப்புரை என்றும் நிறைய வெளியிட்டோம். தமிழ்ச் சிற்றிதழ் வரலாற்றில் “நிகழ்” பதித்த தடம் உறுதியானது என்பதில் ஐயமில்லை. மார்க்சியத்தைச் செழுமைப்படுத்துவதற்கு “நிகழ்” செய்த முயற்சியைத் தமிழில் வேறு எவரும் இதுவரை செய்யவில்லை. 83ல் தொடங்கி 96 வரை நிகழ் 32 இதழ்களை வெளியிட்டது. சில இதழ்கள் 100க்கும் மேற்பட்ட பக்கங்கள். விரிவான நேர்காணல்களையும் “நிகழ்” வெளியிட்டது. 1998க்குப் பிறகு “தமிழ்நேயம்” இதழைத் தொடங்கி இதுவரை நடத்தி வருகின்றேன். தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் இன்று நேர்ந்துள்ள நெருக்கடிகள் மிகக் கடுமையானவை. பன்னாட்டு நிறுவனங்களின் உள் நுழைவு தொடர்ந்து விரிவடைகிறது. பசுமைப் புரட்சியின் விளைவாகத் தமிழகத்தின் நிலம், நீர்நிலைகள் பெரும் அளவு மாசுபட்டு வருகின்றன. தொழிற்சாலைக் கழிவுகள் காரணமாக நதிகளும் நாசமாகின்றன. தமிழ், பயிற்று மொழியாக, ஆட்சி மொழியாக, கோயில் மொழியாக இல்லை. மெட்ரிக் பள்ளிகளும் சுயநிதிக் கல்லூரிகளும் ஆங்கில ஆதிக்கத்தை வளர்ப்பதோடு தமிழைத் திட்டமிட்டு அழித்து வருகின்றன. மேற்கத்திய மோகம், நுகர்வு வெறி முதலியவை தமிழ்ச் சமூகத்தைத் தொடர்ந்து அழித்து வருகின்றன. தமிழ்மீது இன்று நடுத்தர மக்களுக்கு மரியாதை இல்லை. அரசியல் ஊழல் உச்ச அளவில் அடைந்துள்ளது. இந்திய அரசுக்குத் தமிழகத்தை அரசியல்வாதிகள் அடிமைப்படுத்தி விட்டார்கள். இந்திய அரசும் மேற்கத்தியருக்குத் தன்னை அடிமைப்படுத்துகிறது. இவ்வகை நெருக்கடிகளை எடுத்துரைக்கும் வகையில் “தமிழ்நேயம்” வெளிவருகிறது. தமிழில் மிகச்சிறந்த இலக்கியவாதிகளை விரிவாக அறிமுகப்படுத்தும் வகையில் சிறப்பிதழ்களை வெளியிடுகிறது. ஈழம் பற்றியும் “தமிழ்நேயம்” ஒயாமல் வேதனைப்பட்டு எழுதுகிறது. தற்போது தமிழில் வெளிவரும் சிற்றிதழ்களில் “தமிழ்நேயம்” அளவுக்குப் பல்வேறு சிக்கல்கள் குறித்து ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடும் இதழ் வேறு எதுவும் இல்லை. பேராசிரியர் நெடுஞ்செழியன், சாத்தூர் சேகரன், ஜெயமோகன், எஸ். பொன்னுத்துரை, இரா. திருமுருகன் முதலியவர்களைக் குறித்து விரிவான கட்டுரைகளைத் “தமிழ்நேயம்” வெளியிடுகிறது. செம்மொழித் தமிழ் குறித்து தொடர்ந்து சிறப்பிதழ்களைத் தமிழ்நேயம் வெளியிடுகிறது. தமிழ்த்தேசியம் என்பது தமிழ்நேயத்தின் அடிப்படைக் கொள்கை. மார்க்சியத்திலிருந்து சிறிதளவும் பிறழாமல் தமிழ்த் தேசியம் குறித்துத் தமிழ்நேயம் பேசுகிறது. இதைத்தவிர பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் என இதுவரை 11 தொகுப்புகளைத் தமிழ்நேயம் வெளியிட்டுள்ளது. இன்னும் பல்வேறு தனி வெளியீடுகளும் வெளிவருகின்றன. எழுத்து, கசடதபற, பிரக்ஞை, படிகள், இலக்கிய வெளிவட்டம், நிறப்பிரிகை எனத் தமிழில் கடந்த 50 இண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் சிற்றிதழ் இயக்கத்தில் என் அளவில் இணைந்து நண்பர்களின் ஒத்துழைப்போடு இடைவிடாமல் இயங்குகின்றேன். இவ்வகை முயற்சி எனக்குப் பெரும் மனநிறைவு தருகிறது. இறுதியாக நிகழில் வெளிவந்த 95 கட்டுரைகளைக் கொண்ட ஒரு பெருந்தொகுப்பைக் காவ்யா வெளியிட்டதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. தமிழ்த் தேசியத்திற்குக் கட்சி மார்க்சியர்கள் ஆரம்ப காலம் தொட்டு இன்றுவரை முக்கியத்துவம் அளிக்கவில்லை. சில மார்க்சிய லெனினியக் குழுக்கள்தான் தற்பொழுது தமிழ்த்தேசிய அரசியலை அங்கீகரித்துள்ளன. ஆரம்பகாலம் முதற்கொண்டே நீங்கள் தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளீர்கள். தற்பொழுது தமிழ்த் தேசியத்திற்கு மிகுந்த முன்னுரிமை கொடுத்து இயங்குகிறீர்கள். ஏன்? ஒரு மார்க்சியன் என்ற முறையில் தமிழ்த் தேசியத்திற்கு இன்று நான் முன்னுரிமை கொடுப்பதில் உறுதியாக இருக்கிறேன். இன்று தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் நேர்ந்துள்ள நெருக்கடிகளை விரிந்த அளவில் புரிந்துகொள்ள வேண்டுமானால் மார்க்சியம் பற்றிய அறிவில்லாமல் புரிந்து கொள்ள முடியாது. உலகமயம், தாராளமயம், தனியார் மயம், சந்தைப் பொருளாதாரம் என்ற உலக அளவிலான போக்குகள் இந்தியாவை மட்டும் அல்லாமல் தமிழகத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களை அமைக்க அரசு வாய்ப்புத் தந்ததோடு அவர்களுக்கு ஏராளமான சலுகைகளையும் வழங்கி உள்ளது. மின்சாரத்தையும் நிலத்தடி நீரையும் வேண்டும் அளவுக்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள் பலவும் தனியார் முதலீட்டுக்குத் திறந்துவிடப்படுகின்றன. வெளிநாட்டுப் பல்கலைக் கழங்கள் இந்தியாவுக்குள் இனி விரிவாக இடம் பெறலாம். தொழிற்சாலைக் கழிவுகள் காரணமாக நீர், நிலம், காற்று முதலியவை மாசடைகின்றன. இதன் இன்னொரு விளைவு மக்களிடையே ஏற்றத்தாழ்வு என்ற இடைவெளி அதிகரிக்கின்றது. தொழில் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் கல்வி நிறுவனங்களிலும் தனியாரின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரிக்கிறது. கல்வி, சுகாதாரம் முதலிய துறைகளை அரசு தொடர்ந்து கை கழுவுகிறது. முதலாளிகளும் அரசும் தொடர்ந்து நெருங்கி இருப்பதன் விளைவாகத் தொழிற்சங்க உரிமைகள் மக்களின் வாழ்வுரிமைகள் பறி போகின்றன. 47-இல் இந்தியாவை விட்டு ஆங்கிலேயர் வெளியேறியதாகச் சொல்லுகிறார்கள். ஆனால் இன்று அமெரிக்கர் மற்றும் மேற்கத்தியரின் ஆதிக்கம் இன்று எல்லாத் துறைகளிலும் அதிகரித்து வருகிறது. கல்வித்துறையில் உயர்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆங்கிலத்தின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. மேற்குலகில் குறிப்பாக அமெரிக்காவில் கணினி முதலிய துறைகளில் வேலை வாய்ப்புகளுக்காகத் தமிழக மாணவர்கள் தயாரிக்கப்படுகிறார்கள். இவர்களிடம் தாய் மொழிப்பற்றோ, தமிழ் மக்கள் மீது பற்றோ, தமிழ் நிலத்தின் மீது பற்றோ இருப்பதற்கு இல்லை. தமிழன் தனக்கான அடையாளங்களைத் தொடர்ந்து இழந்து வருகின்றான். அரசியல் அதிகாரத்தில் எப்படியேனும் இடம்பெற வேண்டும் என்ற முறையில் இடதுசாரிகளும் மக்கள் சார்பைத் தொடர்ந்து கைவிட்டு வருகின்றனர். பணம், பதவி, நுகர்வுவெறி முதலியவற்றுக்குத் தொடர்ந்து மக்கள் பலியாகின்றனர். இத்தகைய போக்கை அரசும் முதலாளிகளும் ஊக்கப்படுத்துகின்றனர். தற்கொலைகள், விபத்துகள், கொடிய நோய்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பசுமைப்புரட்சி என்ற போக்கை அரசும் ஆய்வு நிறுவனங்களும் தொடர்ந்து விரிவுபடுத்துகின்றன. உழவர்கள் பெரும் கடன் சுமைக்கு ஆளாகி உள்ளனர். அமெரிக்க ஆதிக்கத்திற்கு இந்திய அரசு தொடர்ந்து இடம் தருவதன் விளைவை இன்று அதிக அளவில் காண்கிறோம். இந்தியாவின் கனிம வளங்களைப் பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டுவதற்கு இந்திய அரசு பெருமளவு ஆதரவு தருகிறது. ஆதிவாசிகள் தம் வாழ்விடங்களை விட்டு அகற்றப்படுகின்றனர். தீவிரவாதம் என்று பெயரிட்டு மக்களின் உரிமைப்போராட்டங்கள் கடுமையாக ஒடுக்கப்படுகின்றன. அந்நிய மதுவகைகளைத் தயாரித்து வழங்கும் பொறுப்பை அரசே மேற்கொள்கிறது. இவ்வாறு அரசும் முதலாளிகளும் அந்நிய நிறுவனங்களும் அமெரிக்க அரசு முதலியவைகளும் கைகோர்த்துக் கொண்டு மக்கள் வாழ்வைத் தொடர்ந்து நாசமாக்குவதையும் மக்கள் தம் வாழ்வுரிமைகளையும் தம் தேசத்தையும் இழந்து விடுவதையும் ஒரு மார்க்சியனால்தான் புரிந்துகொள்ள முடியும். இத்தகைய உணர்வோடுதான் தமிழ்த்தேசியம் என்று பேசவேண்டி இருக்கிறது. தேசிய இனங்களின் இறையாண்மையை ஒப்புக்கொள்கிற ஒரு கூட்டாட்சியில் தான் இந்தியாவில் எந்த ஒரு தேசிய இனமும் தன்மானத்தோடு வாழமுடியும். சோவியத் ஒன்றியம் தகர்ந்துபோனதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்த போதிலும் அங்கு தேசிய இனங்கள் மைய அரசால் ஒடுக்கப்பட்டதன் விளைவு என்பதை நாம் மறுக்க வேண்டியதில்லை. தேசிய இனங்களின் தன்னுரிமையை சோவியத் ஒன்றியத்தின் அரசியல் அமைப்புச் சட்டம் ஒப்புக் கொண்டிருந்ததன் விளைவாகவே கோர்பர்ச்சேவ் காலத்தில் தேசிய இனங்கள் பிரிந்து சென்றன. தேசிய இனங்களின் தன்னுரிமையை லெனின் வற்புறுத்தியதையும் நாம் அறிவோம். தேசிய இனம் பற்றிய ஸ்டாலினிய வரையறைக்குள் மறைந்திருக்கிற முதலாளியத்தை ஒதுக்கிவிடவும் முடியும். தேசியம் என்பது ஒரு கற்பிதம்/ கட்டமைப்பு என்று சிலர் கூறுவதையும் நம்மால் புரிந்து கொள்ளமுடியும். தேசிய இனங்களின் தன்னுரிமையை 47க்கு முன்னர் கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டும் அல்லாமல் காங்கிரஸ் இயக்கத்தினரும் ஒப்புக் கொண்டிருந்தனர். 47க்குப் பின்னரும் இந்தியாவில் சில தேசிய இனங்கள் தம் தன்னுரிமைக்காக இன்றுவரை போராடி வருவதையும் நாம் மறுப்பதற்கில்லை. தன்னுரிமை என்றவுடன் பிரிவினை என்று பொருள்படுத்தவும் வேண்டியதில்லை. தேசிய இனங்களின் தன்னுரிமை என்ற அடிப்படையில் இந்தியா ஒரு கூட்டாட்சியாக இணைந்திருக்க முடியும். இந்தியா ஒரு துணைக்கண்டம் என்பதை எல்லோரும் அறிவர். மாநிலங்களின் அதிகாரத்தைத் தொடர்ந்து மைய அரசு பறிப்பதன் விளைவாகத்தான் தன்னுரிமை என்ற கோரிக்கையும் எழுகிறது. மைய அரசு மேற்கத்தியரின் ஆதிக்கத்திற்குத் தொடர்ந்து தன்னை விட்டுக் கொடுப்பதையும் இதன் காரணமாக இந்திய மக்கள் தம் அரசியல் பொருளியல் முதலிய வாழ்வுரிமைகளை இழந்து வருவதையும் இந்தப் போக்கிற்குத் தமிழகத்து ஆட்சியாளரும் அரசியல்வாதிகளும் இடம் கொடுத்து வருவதையும் பார்க்கிற நிலையில் தான் தமிழ்த்தேசியம் பற்றிக் கூடுதலாகப் பேசவேண்டியிருக்கிறது. தமிழ் இல்லாமல் தமிழ் நிலம் இல்லாமல் தமிழ் இலக்கியம் தமிழ்வரலாறு ஆகியவற்றின் தொடர்பு இல்லாமல் நமக்கு இங்கு ஏது வாழ்வு? இன்றைய சூழலில் தமிழியல் இய்வுகள் என்ற நிலையில் நாம் செய்ய வேண்டியவை எவை? 1. தமிழைச் செம்மொழி என இந்திய அரசு ஏற்றுக் கொண்டதையடுத்து நமக்கு கிடைத்துள்ள வாய்ப்பை நாம் பெருமளவு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்திய நாகரிகம் என்று அறியப்படுவதன் மேலடுக்கு ஆரிய நாகரிகம் என்று சொல்லப் பட்டாலும், இந்திய நாகரிகத்தின் அடித்தளம் முழுவதும் திராவிடர் நாகரிகம்தான். அறிஞர் பலர் இந்த உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளனர். திராவிடர் நாகரிகம் என்பதும் தமிழர் நாகரிகம் என்பதும் வேறுபட்டவையும் அல்ல. இந்திய நாகரிகத்தில் வேளாண்மை, நீர்ப்பாசனம், கால்நடை வளர்ப்பு, கட்டிடக்கலை, சிற்பக்கலை, இசை, மருத்துவம், அறிவியல், கணிதம், தர்க்கம், மெய்யியல் ஆகியவற்றில் திராவிடர் பங்களிப்புதான் முதன்மையானது. இவற்றில் ஆரியரின் பங்களிப்பு என்று சொல்வதற்கு அதிகமில்லை. சமஸ்கிருத மொழியும் தமிழைப் பார்த்தே தன்னை திருத்தம் செய்து கொண்டது. வடஇந்திய மொழிகளின் தொடரமைப்பு என்பது தமிழின் தொடரமைப்பாகத்தான் இருக்கிறது. வேதம், இதிகாசங்கள் முதலியவற்றினுள்ளும் தமிழரின் பங்களிப்புக்கு இடமுண்டு. வைதீகம் தமிழ்ச் சூழலில் அழுத்தம் பெறவில்லை. இந்துத்துவம் தமிழர் நெறியாக பெரும்பாலும் இருந்ததில்லை. செம்மொழி என்ற ஆதாரத்தில் தமிழின் தொன்மையைச் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு அப்பாலும் கொண்டு செல்லமுடியும். சங்க இலக்கியத்தின் உலகியல் சார்பை நாம் எந்தக் காலத்திலும் கைவிட்டதில்லை. தமிழிலக்கியம், இலக்கணம் ஆகியவற்றின் ஆய்வோடு தமிழ்மெய்யியல் தர்க்கவியல், இசை, மருத்துவம் முதலியவற்றின் ஆய்வையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இவற்றோடு தொல்லியல் முதலிய ஆய்வையும் தொடரவேண்டும். இவ்வகை ஆய்வுகளை நம்மால் சிறப்புற செய்ய இயலும் என்றால் இந்திய அரசியலில், இதுவரை நமக்கு மறுக்கப்பட்ட இடத்தை, மரியாதையை நம்மால் மீட்டுக் கொள்ள இயலும். இந்துத்துவத்தை நம்மால் எதிர்கொள்ள முடியும். தமிழியல் ஆய்வறிஞர்களுக்கு இத்தகைய பெரும் கடமை இன்று உண்டு. இதை செய்வதன் மூலமே தமிழ் வரலாற்றை நம்மால் தக்கவைத்துக் கொள்ள முடியும். 2. தமிழர் என்ற முறையில் தமிழியல் ஆய்வாளர் என்ற முறையில் தமிழ்ப்பெருமை என்றெல்லாம் இனி பேசிப் பயனில்லை. தொன்மை இலக்கியத்தை மட்டுமல்லாமல் இன்றைய நம் வாழ்வியல் முதலிய அனைத்தையும் திறனாய்வுக்கு உட்படுத்துவதன் மூலமே இன்றைய உலகில் நம்மை தக்கவைத்துக் கொள்ள முடியும். மார்க்சியம், பெரியாரியம் உட்பட எல்லாவற்றையும் திறனாய்வுக்கு உட்படுத்தித்தான் நமக்கான தெளிவை பெறமுடியும். வள்ளுவரோ இளங்கோவோ தம் காலச்சமூகம், அரசியல், அறவியல், இலக்கிய மரபு முதலியவற்றை ஆய்வுக்கு உட்படுத்தாமல் தம் படைப்புகளைச் செய்திருக்க முடியாது. தமிழிலக்கியம் அனைத்தினுள்ளும் பதிந்திருக்கிற திறனாய்வுப் பார்வையை இன்றைய நோக்கில் நம்மால் கண்டறிந்து தொகுக்க முடியும். தொன்மை இலக்கியத்தை நாம் விரும்பிக் கற்கும் அளவுக்கு நவீன தமிழிலக்கியத்தையும் நாம் அக்கறையோடு கற்கவேண்டும். சிற்றிதழ் வட்டாரத்தில்தான் இலக்கியம், வாழ்வியல் குறித்த புதிய பார்வைகளும் திறனாய்வு நோக்கும் செழித்திருக்கிறது. பெண்ணியம் தலித்தியம் பின்நவீனத்துவம் என்றெல்லாம் விவரிக்கப்படும் நவீனகாலப் பார்வையின் வழியே தொன்மை இலக்கியங்களை, மெய்யியலை மறுவாசிப்புக்கு உட்படுத்துவதன் மூலம் அவ்வியக்கங்களை நமக்கான, நம் காலத்திற்கான இலக்கியங்கள் ஆக்க முடியும். இவ்வகை பார்வையின் மூலமே தமிழ் மாணவர்களுக்குள் தமிழிலக்கியத்தின் மீது அக்கறையைத் தூண்ட முடியும். இம் மாணவர்கள்தான் நம்காலத்தைக் கடந்தும் தமிழை வாழவைப்பார்கள். தம் இளமை காலத்தில் கற்ற இலக்கியமே போதும் என்று பேராசிரியர்கள் இருப்பார் என்றால் அவர்கள் தமிழுக்கு சுமையாகத்தான் இருக்கமுடியும். அன்றியும் புதுவகையான திறனாய்வுப் பார்வையைப் பெறுவதென்பது நம்கால அரசியல் பொருளியல் முதலிய அனைத்தையும் நுட்பமாகக் கற்பதன் மூலம்தான் சாத்தியப்படும். வள்ளுவரையும் இளங்கோவையும் பாரதியையும், பாரதிதாசனையும் நம்மால் என்றும் இழக்கமுடியாது. இழந்தால் நாம் தமிழராகவும் இருக்க முடியாது. 3. தமிழ்ச்சூழலில் மெய்யியல் என்றாலே சமயம்தான் என்ற புரிதல் எப்படியோ ஏற்பட்டுவிட்டது. ஒருவகையில் பெரியாரியம் இங்கு அழுத்தம் பெற்றது ஒரு காரணம். இதைப் போலவே இங்கு சமயப்பார்வையும் அழுத்தம் பெற்றிருக்கிறது. சமயம், மெய்யியல் ஆகமுடியாது. சமயம் என்பதன் மேலடுக்கு கோயில், கடவுள் வழிபாடு, புரோகிதம், சடங்குகள், சாத்திரங்கள் முதலியவற்றோடு தொடர்புடையது. இவை தமிழ் மக்கள் மீது சுமையாக பதிந்துவிட்டன. இவற்றைக் கடந்து சமயம் என்பதன் உள்ளடுக்கு எது என்பதை நாம் தேடிச்செல்ல வேண்டும். உள்ளடுக்கு என்பது ஆன்மீகம் அல்லது மெய்யியலோடு தொடர்புடையது. உதாரணத்திற்குச் சைவத்தின் முதன்மைக் கோட்பாடு என்று சொல்லப்படும் பதி, பசு, பாசம் என்பதை எடுத்துக்கொள்வோம். பாசத்திலிருந்து விலகினால் பசு, பதி ஆகும் என்பது சித்தாந்தம், ஆணவம் முதலியவற்றிலிருந்து விலகினால் மட்டுமே மனிதன் இறைவனைக் காணமுடியும். இறைவனோடு கலக்கமுடியும். இறைவன் என்பதை நாம் ஏற்கவில்லை. உணர்மையில் பிரபஞ்சம், இயற்கை, வரலாறு முதலியவற்றின் பேரியியக்கம் நம்மை வியப்பிற்குள்ளாக்கும். பிரபஞ்சத்தின் பேரியக்கம்தான் இயற்கை முதலியவற்றினுள்ளும் இயங்குகிறது. இறைவன் எல்லாவற்றையும் படைத்துக் காத்து மறைபவன் என்று கூறுவதை நாம் நம் வழியில் புரிந்து கொள்கிறோம். பிரபஞ்சமும் இயற்கையும் தொடர்ந்து படைப்பியக்கத்தில் உள்ளவை. எல்லாவற்றையும் காப்பவை. எல்லாவற்றையும் தனக்கு உரமாக்கிக் கொண்டு மீண்டும் படைப்பவை. பிரபஞ்சம் என்ற பேரியக்கத்தின் ஒரு கூறு மனிதன். மனிதனுக்குள்ளும் படைப்பியக்கம் உண்டு. மனிதன் தன்னை இயற்கையாக, பிரபஞ்சமாக உணரமுடியும். இந்தப் பேரியக்கத்தைத்தான் இறைவன் என்று சமயவாதிகள் கூறினர். இன்றும் இருப்பது பிரபஞ்சம். இதை யாரும் படைக்கவில்லை. இந்தப் பேரியக்கத்தைத் தனக்குள் மனிதனால் உணரமுடியும். தானும் பிரபஞ்சமாக முடியும். ஆணவம், செருக்கு, பதவி, பணம், முதலியவற்றையே பெரிதெனக் கொள்பவன் தனக்குள் இந்தப் பேருணர்வை, பரவசத்தை உணரமுடியாது. இத்தகைய பார்வைதான் மெய்யியல் பார்வை. கடவுள் என்பது பொய் என்று சொல்வதில் மட்டுமே பயனில்லை. பகுத்தறிவுவாதிகளுக்கு இதுபோதும். மனிதன் இப்படித் தனக்குள் வரலாற்றை, சமூகத்தை உணரமுடியும். இத்தகைய உணர்வைப் பெற்றவன் தன்னலம் அற்றவன். இயற்கையை உயிர்களை நேசிப்பவன் அடிப்படையில் இவனது உணர்வு சமதர்மமாக இருக்க முடியும். பக்தி இலக்கியம் தமிழின் மாபெரும் இலக்கியம். பகுத்தறிவுணர்வு உள்ளவன் பக்தி இயக்கத்தை இவன் நேசிக்க முடியாது. தமிழியக்கதின் பெரும் பகுதியை இவன் இழப்பான். மார்க்சியருக்கும் இத்தகைய மெய்யியல் உணர்வு தேவை. தமிழ் வாழ்வுக்கு மெய்யியல் உணர்வு இல்லாமல் முடியாது. 2010 சூன் மாதம் கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளீர்கள். இம்மாநாட்டில் உங்களுக்கு உடுபாடு இல்லை என்பதற்கான காரணங்கள் எவை? செம்மொழி மாநாட்டில் நானும் இன்னும் சில நண்பர்களும் கலந்து கொள்வதில்லை என்று மாநாடு பற்றிய அறிவிப்பு வந்தவுடனேயே முடிவு செய்தோம். தமிழ் ஈழத்தின் விடுதலைப் போராட்டம் மிகக் கொடிய முறையில் ஒடுக்கப்பட்டது. மூன்று இலட்சம் மக்கள் முள்வேலி முகாம்களில் எவ்வித வசதியும் இன்றி அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் தம் சொந்த ஊர்களில் குடி இருத்தப்படுவார்கள் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. வெடிகுண்டுகள், நச்சுக் குண்டுகளால் அழிக்கப்பட்ட ஊர்களில் இவர்கள் வாழ்வதற்கான ஆதாரங்கள் முழுவதும் அழிக்கப்பட்ட நிலையில் எப்படிக் குடி இருக்க முடியும்? இத்தனை பெரிய அழிவை ராஜபக்சே தலைமையில் உள்ள சிங்கள அரசு செய்து முடித்தது. இந்திய அரசு முழு அளவில் ஒத்துழைத்தது. இந்தியாவின் போரைத்தான் நாங்கள் நடத்தினோம் என்று ராஜபட்சே வெளிப்படையாகப் பேசினார். ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை மீறல் பற்றிய விவாதத்தின் போது சிங்கள அரசை இந்திய அரசு முழு அளவில் ஆதரித்ததோடு ரஷ்யா முதலிய பிற அரசுகளும் சிங்கள அரசுக்கு ஆதரவாகவே செயல்படவும் தூண்டியது இந்திய அரசு. இந்திய அரசோடு நல்லுறவு அவர்களுக்கும் தேவை. இவ்வளவும் நடைபெற்றதைக் கலைஞர் தொடக்கம் முதலே நன்றாக அறிவார். தமிழ் மக்களை ஏமாற்றும் முறையில் இறுதிவரை நாடகம் ஆடினார். ஈழத்தமிழர் போராட்டம் நொறுக்கப்பட்டதற்குக் கலைஞரும் ஒரு காரணம். ஈழத்தமிழகத்திற்கு ஆதரவாகவும் இந்திய அரசுக்கு எதிராகவும் கலைஞரால் செயல்பட்டிருக்கவே முடியாது. காரணம் இந்திய அரசுக்கு எவ்வளவோ வகையில் கடமைப்பட்டவர் கலைஞர். தன் சொந்த நலன்களுக்காகக் கட்சி நலனுக்காக ஈழத் தமிழகத்திற்குத் தமிழ் மக்களாகிய நாமும் துரோகம் செய்ததற்குக் கலைஞரும் காரணம் ஆனார். இந்த அவமானத்திலிருந்து என்றைக்கும் நமக்கு மீட்சி இல்லை. உலக அளவில் தமிழன் என்றால் ஈழத்தமிழன் பெயர்தான் முன்னுக்கு வரும். தமிழ் ஈழம் ஒடுக்கப்பட்டதற்கு இந்திய அரசு காரணம் என்பதில் ஐயம் இல்லை. ஈழத்தில் மட்டும் அல்ல, தமிழகத்திலும் தமிழன் தன்னைப் பற்றிய வரலாறு மற்றும் மொழி பற்றிய உணர்வோடு தன்னுரிமை பற்றிப் பேசுவதையும் இந்திய அரசு என்றும் ஏற்காது. தமிழ் மக்களின் அரசியல், பொருளியல் முதலிய பல்வேறு நலன்களும் இன்றைய சூழலில் கடுமையாக ஒடுக்கப்பட்டுள்ளன. ஈழத்தமிழனுக்கு எப்படி விடுதலை இல்லையோ அப்படியே இந்தியத் தமிழனுக்கும் விடுதலைக்கான வாய்ப்பு இல்லை. இவ்வகையிலும் இந்திய அரசோடு கலைஞரும் தொடர்ந்து உறுதியாக ஒத்துழைக்கின்றார். இந்தச்சூழலில்தான் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டைக் கூட்டுவதன் தேவை பற்றிக் கேள்வி எழுகிறது. கலைஞர் தன் காலத்தில் ஒரு மாநாட்டை நடத்த விரும்புகின்றார். தன் அரசியலுக்கும் இந்த மாநாடு பெரிதாகப் பயன்படும். 600 கோடி செலவு என்பது அவருக்கு ஒரு பொருட்டல்ல. டாஸ்மார்க் ஒன்றுபோதும், தமிழனை, தமிழ்க்குடும்பங்களை நாசப்படுத்துவதற்கு. ஆங்கிலம் தேவை என்று ஒயாமல் பேசி மக்கள் நெஞ்சில் முன்பிருந்த தமிழ்ப்பற்றை ஒழித்ததிலும் கலைஞர் அரசுக்கு முதன்மையான பங்கு உண்டு. இந்தி எதிர்ப்பு என்று தொடங்கி தமிழகத்தில் ஆங்கிலத்தை வளர்த்தனர். நாளடைவில் ஆங்கில ஆதிக்கத்தை வளர்ப்பதற்காக தமிழை ஒதுக்கியதிலும் கலைஞர் அரசின் பங்கு அதிகம். இந்த உண்மையை மறைப்பதற்காகவும்தான் உலகத் தமிழ்மாநாடு. பேராசிரியர்கள் என்பவர்களில் பெரும்பாலோர் ஆய்வுத்திறனை மழுங்கச் செய்தவர்கள். தமிழ்க்கல்வி பயிலும் மாணவர்களின் நெஞ்சில் தமிழ் உணர்வைச் சிறிதளவும் தூண்டாதவர்கள். எங்கோ சில இடங்களில் தமிழியல் ஆய்வு உயிர்த்துடிப்போடு இன்னும் இருப்பதை நாம் மறுக்கவில்லை. தன்மானம் உடைய தமிழாய்வாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள விரும்ப மாட்டார்கள். மாபெரும் திருவிழா போல மாநாடு கோவையில் நடைபெறும். விழாவைக் காண மதுரைச் சித்திரைத் திருவிழாவில் பல இலட்சம் பேர் கூடுவது போலக் கோவையிலும் கூடுவார்கள். 100 ஆண்டுகளுக்கு மேல் வளர்ந்த ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி நான்கு வழிச் சாலைகளும் ஆறுவழிச் சாலைகளும் கோவையில் போடப்படுகின்றன. கோடீஸ்வரர்களுக்குச் சொர்க்க பூமியாகக் கோவையும் மாறிக் கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் மனநிறைவோடு நம்மால் பார்க்கமுடியாது. தமிழியல் ஆய்வுக்காகத்தான் மாநாடு என்றால் அதில் தரமான ஆய்வுகள் வெளிப்படுவதை வரவேற்காமல் இருக்க முடியாது. இத்தனை அழிவுகளுக்கும் அப்பால் சில ஆய்வுகளையேனும் வரவேற்கிறோம். தமிழை மேம்படுத்தத்தான் 600 கோடி என்பதை யாரால் ஏற்க முடியும்? உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் இன்னும் உள்ள பிற பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைகள் இவற்றில் விரிவான ஆய்வுகளுக்கு 100 கோடியாவது செலவு செய்யப்படுமானால் நல்லதுதான். இவ்வளவு நடைபெற்றிருந்தாலும் மாநாட்டின் இறுதியில் இந்த ஆண்டு முதற்கொண்டு 12 இம் வகுப்பு முடிய அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ்தான் பாடமொழியாக இருக்கும் என்ற அறிவிப்பைக் கலைஞரால் வெளியிட இயலுமானால், இவ்வளவு காலமும் செய்த தமிழ் அழிப்புக்கு ஒரு கழுவாய்போல அமையலாம். வெப்துனியா - நவம்பர் 2010 - கா.அய்யநாதன் கோவை ஞானி என்று அறியப்படும் கி.பழனிச்சாமி தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியத்தில் தீவிர சிந்தனையாளராகவும், கோட்பாட்டாளராகவும், திறனாய்வாளராகவும் இயங்கி வருபவர். தமிழின் புதிய இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்தவர்களில் முதன்மையானவர். தமிழ் நிலத்திற்கேற்ற தமிழ் மார்க்சியம் என்ற சிறப்பைச் செய்தவர் என ஆய்வாளர்களால் மொழியப்படுபவர். நுட்பமான இலக்கிய உணர்வும், பேரிலக்கியங்களைத் திறந்த மனதுடன் அணுகும் பண்பும் கொண்டவர். ‘நிகழ்’ என்ற சிற்றிதழை தமிழில் புதிய இலக்கியத்திற்கான களமாக பல ஆண்டுகளாக நடத்தி வந்தார். இதுவரை 24 திறனாய்வு நூல்களையும் 12 தொகுப்பு நூல்களையும் 4 கட்டுரைத் தொகுதிகளையும் 2 கவிதை நூல்களையும் எழுதியிருக்கிறார். இவருடைய நீண்ட கால தமிழ்ப் பணிக்காக விளக்கு விருது, தமிழ் தேசியச் செம்மல் விருது, தமிழ் தேசிய திறனாய்வு விருது, பாரதி விருது ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன. இவரின் வாழ்நாள் இலக்கியப் பணிக்காக கனடாவில் இருந்து செயல்படும் தமிழிலக்கியத் தோட்டம் இயல் விருதை வழங்கிச் சிறப்பித்தது. தமிழக அரசு நடத்திய செம்மொழி மாநாடு குறித்த சர்ச்சை பரவலாக இருந்த நேரத்தில், அதனை சாதமாகப் பார்த்து, செம்மொழி மாநாட்டில் எதிர்பார்பது என்ன? என்ற தலைப்பில் கோவையில் ஒரு கருத்தரங்கை நடத்தி, தமிழ் மொழிக்கு இன்றைய நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை பல ஆய்வாளர்களிடமிருந்து கட்டுரைகளைப் பெற்று அதனை தொகுத்து வெளியிட்டார். செம்மொழி மாநாடு நடந்து முடிந்துவிட்டது. அத்தோடு தமிழைப் பற்றிய பேச்சும் நின்றுபோய்விட்டது என்று கருதக்கூடிய சூழலில், செம்மொழி மாநாடு குறித்தும், அதனால் தமிழிற்கு ஏதாவது பயன் ஏற்பட்டதா என்பது குறித்தும் தமிழ்.வெப்துனியா.காம் தமிழறிஞர் கோவை ஞானியை நேர்கண்டது. தமிழ்.வெப்துனியா.காம் இணையத்தளத்தின் ஆசிரியர் கா.அய்யநாதன், கோவை ஞானியை அவரது இல்லத்தில் அக்டோபர் 24ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை சந்தித்துச் செய்த நேர்காணல் இது. கோயம்புத்தூரில் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டிற்கு முன்னால், இந்தச் செம்மொழி மாநாட்டில் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறி ஜூன் மாதம் 13ஆம் தேதி கோவை அண்ணாமலை மன்றத்தில் நீங்கள் ஒரு இலக்கியக் கருத்தரங்கை நடத்தினீர்கள். அந்தக் கருத்தரங்கில் தமிழ் மலர் 2010 வெளியிடப்பட்டது. அந்த மாநாட்டில், தாங்கள் நடத்திவரும் தமிழ் நேயம் இதழின் சார்பாக ‘செம்மொழி மாநாட்டில் நாம் எதிர்பார்ப்பது என்ன?’ என்கின்ற ஒரு அறிக்கையை புத்தமாக வெளியிட்டிருந்தீர்கள். இப்பொழுது மாநாடு முடிந்து அ‌தி‌ல் பல்வேறுபட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அந்த மாநாட்டைப் பொறுத்தவரை உங்களுடைய எதிர்பார்ப்பு எந்த அளவிற்கு நிறைவேறியுள்ளது? உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என்ற பெயரில் கோவையில் பிரமாண்டமான அளவிற்கு பெரும் செலவில், 600 கோடி என்று சொல்கிறார்கள், சிலர் 1,000 கோடி என்று சொல்கிறார்கள், 300 கோடி என்று சுருக்கமாகச் சொல்வதும் உண்டு. இந்த அளவிற்கு பெரிய செலவில் பிரமாண்டமான ஆர்ப்பாட்டங்களோடு பொதுமக்களுக்கு மிகச் சிறந்த மிகப் பெரிய அளவில் கண்காட்சி, ஊர்வலம் முதலியவற்றோடு அந்த மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. கலைஞர் நடத்தக்கூடிய மாநாடு என்பது இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டங்களோடு நடைபெறும் என்பதில் நமக்கும் ஒன்றும் வியப்பில்லை. ஆனால் அடிப்படையில் இங்கிருக்கக் கூடிய மிகப்பெரிய கோளாறு என்னவென்று சொன்னால், தமிழியல் ஆய்வு என்று சொல்லி ஒரு திட்டத்தை வகுப்பதற்கும், அதை நேர்மையான முறையில் உரிய முறையில் செயல்படுத்துவதற்கு தகுதியான அறிஞர் பெருமக்கள் தொகை இன்று மிக மிகக் குறைந்துவிட்டது. செம்மொழி நிறுவனத்தோடு செயல்படக்கூடிய இராமசாமி அவர்களோடு நான் பேசுகிறபோது, பலமுறை இதைச் சொல்லியிருக்கிறார். யாரும் இல்லை என்கிறார் அவர். நான் ஒரு 10 தமிழ் அறிஞர்கள் பெயரைச் சொல்லிக் கூட அவரைக் கேட்டேன். அதற்கு அவர் சொல்கிறார், நீங்கள் சொல்பவர்கள் எல்லாம் தமிழ் அறிஞர்கள் என்பதில் எனக்கு மறுப்பில்லை. ஆனால், ஒரு திட்டத்தை எடுத்துக்கொண்டு அதையே முழு மூச்சான முறையில் அதில் ஈடுபட்டு செய்யக்கூடியவர்கள் என்று இவர்களில் எவரும் இல்லை என்று சொல்கிறார். இரண்டொருவர் விதிவிலக்காக இருக்கலாம். அந்த இரண்டொருவரை வைத்துக்கொண்டு இவ்வளவு பெரிய தமிழியல் ஆய்வு கொண்டு செல்வது என்பது மிக மிகக் கடினம், முடியாது. அப்ப நீங்கள் அரசு தரப்பில் என்ன பெரிய குறைபாடுகளைச் சொன்னாலும் கூட, உலக அளவிலான செம்மொழி என்பதைப் பற்றி மெய்ப்பிப்பதற்கோ அல்லது ஆய்வு செய்வதற்கோ, தற்கால தமிழனுடைய நிலையை உயர்த்துவதற்கான ஆய்வுகளைச் செய்வதற்கோ தகுதியானவர்கள் என்று சொல்வதற்கு நமக்குள் பெரும்பாலும் இல்லை. கடந்த 30 ஆண்டுகளுக்கு இடையில் தமிழ் அறிஞர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் எல்லாம் தங்களுடைய ஆய்வுத் திறனை பெருமளவு குறைத்துக்கொண்டார்கள். இன்று பல்கலைக்கழகங்களில் தமிழ்த் துறைகளில் செயல்படக் கூடிய பேராசிரியர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் எல்லாம், பெரும்பாலானவர்கள் தமிழியல் ஆய்விற்கான தகுதியை தங்களுக்குள் வளர்த்துக்கொள்ளவே இல்லை. வா.சொ.மாணிக்கம் என்று சொல்கிறோம், தெ.பொ.மீ. என்று சொல்கிறோம். இன்னும் பல முன்னாள் தமிழ் அறிஞர்களைப் பற்றிப் பேசுகிறோம். அவ‌ர்கள்தான் தமிழியல் வளர்ச்சிக்கு ஆதாரமாக முன் மாதிரியாக இன்று நமக்கு இருக்கிறார்கள். அவர்களைப் போல அவர்களுடைய நெறியில் தமிழியல் ஆய்வை மேம்பட்டு செலுத்துவதற்கான தகுதியோடு இன்று தமிழ்ப் பேராசிரியர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் பலர் இல்லை. அதேபோல இவ்வளவு பெரும் தொகை செலவழிக்கப்பட்டதும் சற்ற அதிர்ச்சியாக இருந்தது. குறைந்த அளவிற்கு ரூ.300 கோடி ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் கூட, இந்த ரூ.300 கோடி ரூபாயை தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக செலவழித்திருக்க முடியும். பல்கலைக்கழகங்களில் தமிழ்த் துறை என்று சொல்லப்பட்டிருக்கிறது. தஞ்சைப் பல்கலைக்கழகம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இவைகளெல்லாம் மிகச் சிறப்பான முறையில் தமிழியல் ஆய்விற்காகவே தோற்றுவிக்கப்பட்ட அமைப்புகள். இவைகளுக்கு பொருளாதார நெருக்கடி இருப்பதாக ஓயாமல் சொல்லப்படுகிறது. இந்தத் தொகையில் ரூ.10 கோடி, 20 கோடி அல்லது 50 கோடி என்று ஒதுக்கியிருந்தாலும் கூட தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமோ, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமோ சிறப்பான முறையில் இன்னும் தங்களுடைய செயல்களை வரையறை செய்துகொண்டு திறம்பட செயல்பட முடியும். அரிதாக அங்கொருவர், இங்கொருவர் என்று இருக்கலாம். ஆனால், அவர்களையெல்லாம் இந்த செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்குள் கொண்டுவரவே இல்லை. அவரவர்கள் ஆங்காங்கே தனிப்பட்ட முறையில் இருக்கிறார்கள். சிலர் வயதான நிலையிலும் செய்துகொண்டு இருக்கிறார்கள். இப்படியிருக்க, இந்த தமிழியல் ஆய்விற்கு தகுதியுடையவர்கள் என்று சொல்லித் தெறிவு செய்து, அவர்களை பல்லாண்டுகள் அந்தத் துறையில் ஈடுபடுத்தி வளர்ப்பதற்கான முயற்சி என்பதற்கான திட்டம் என்பது நமக்கு வேண்டும். அப்படியொரு திட்டம் தற்பொழுது இல்லை. உலகத் தமிழ் ஆய்வு மாநாட்டில் இதுபற்றி பேசப்பட்டதாகவும் இல்லை. இது ஒன்று. இரண்டாவது, இந்தச் சொம்மொழி மாநாட்டில் உண்மையிலேயே கடை‌சியில் கலைஞர் அறிவித்தபடி, கணினி பற்றி பலவற்றை சொன்னார் அவர். பெரிய, மிகச் சிறந்த கண்காட்சியே நடத்தப்பட்டது. கணினி துறையில் எப்படியே 10, 20 ஆண்டுகளாக தமிழ் அறிஞர்களில் இளைஞர்கள் ஒரு சிலர் பெரிய அளவில் ஈடுபட்டு மிகப்பெரிய காரியங்களை செய்து வருகிறார்கள். அரசு ஆதரவு இல்லாத நிலையிலும், அரசு இந்த கணினி வளர்ச்சித் துறையில் ஈடுபட்ட நிலையிலும் அவர்களுடைய செயல்களெல்லாம் மிக வியப்பூட்டும் வகையில் இருக்கிறது. அந்த வகையில் பார்த்தீர்களென்றால், கணினி என்று சொல்லக்கூடியது, கணினித் தமிழ் என்று சொல்லக்கூடியது மிகச் சிறப்பான வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதை அரசு அறிந்திருக்கிறது. அதற்கான முறையில் சில உதவிகள், திட்டங்களையெல்லாம் அரசு வைத்திருப்பது, மாநாட்டில் இந்தச் செய்தி அறிவிக்கப்பட்டது பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. உண்மைதான். மூன்றாவது, உலகத் தமிழ்ச் செம்மொழி ஆய்விற்கு ஒரு தமிழ்ச் சங்கம் மதுரையில் அமைப்பதாக கலைஞர் பேசியிருக்கிறார். நிதி ஒதுக்கிடுவது முதலியற்றையெல்லாம் பற்றி பேசியிருக்கிறார். அதற்கான தொடக்க முயற்சிகள் இதுவரை செய்யப்படவில்லை. ஏற்கனவே எம்.ஜி.ஆர். காலத்தில் அறிவிக்கப்பட்ட இந்த உலகத் தமிழ்ச் சங்கம் எப்படி செயல்படாமல் இருந்ததோ, அதைப்போல இந்தச் தமிழ்ச் சங்கமும் செயல்படாமல் இருந்துவிட வேண்டாம். அதற்கான திட்டம் இல்லாத நிலையில் அதைப்பற்றி பெரிதாகப் பேசுவதற்கு இல்லை. இன்னொன்று, உண்மையில் பார்த்தீர்களென்றால் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் தமிழ் இப்பொழுது நுழைந்திருக்கிறது. பெரிய ஆச்சரியம் என்னவென்று சொன்னால், இந்த மாதிரி மருத்துவத் துறையிலும், பொறியியல் துறையிலும் தமிழை நுழைக்க முடியும், அதற்கான தமிழ்க் கலைச்சொற்கள் ஏராளமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. அண்ணா பல்கலைக்கழகத்திலும், தஞ்சைப் பல்கலைக்கழகத்திலும் பொறியியல் நூல்கள், மருத்துவத் துறை சம்பந்தப்பட்ட பல நூல்களையெல்லாம் திறம்பட எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு நாம் பொறியியல் துறையிலும், மருத்துவத் துறையிலும் தமிழைத் தொடங்கிவிட முடியும் என்று சொல்லி குறைந்த அளவிற்கு கடந்த 10 ஆண்டுகளாக அறிஞர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் அமைச்சர்களுக்கோ, முதல்வருக்கோ தெரியாத செய்திகள் அல்ல. ஆனால், 10 ஆண்டுகளுக்கு மேலாகவே, சொல்லப்போனால் 20 ஆண்டுகளுக்கிடையில் இதை புகுத்தியிருக்க முடியும். ஆனால், ஆங்கிலத்திற்கு பெருமளவு ஆதரவு, தமிழுக்கு மிகக் குறைந்த அளவிற்கு ஆதரவு ஏதோ அரசியல் களத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளக்கூடிய முறையில் தமிழைப் பற்றி அதிகம் பேசிக் கொண்டிருந்தார்களேயொழிய ஆங்கிலத்திற்குத்தான் இன்று வரையிலும் பள்ளி வட்டாரங்களில் முதன்மையான மரியாதை கொடுக்கிறார்கள். மெட்ரிக் பள்ளிகளை இவர்கள் கைவிட முடியவே முடியாது, கைவிட மாட்டார்கள். அதில் பெரிய முதலீடு செய்யப்பட்டிருக்கின்றது. அதில் பல அமைச்சர்கள் முதலியவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அந்த மெட்ரிக் பள்ளிகளெல்லாம் ஆங்கிலத்தை வளர்க்கிற நோக்கத்தோடு பெரிய அளவிற்கு மிகவும் அதிகாரத் தோரணையோடு செயல்பட்டு வருகின்றன. இந்த மெட்ரிக் பள்ளிகளை கட்டுப்படுத்தக்கூடிய திறனோ, தேவை என்ற உணர்வோ அரசிற்கு அறவே இல்லை. அதனால்தான் கடைசியாகக் கூட கோவிந்தராஜ் ஆணையம் அரசுடன் முரண்பட்டு நீதிபதி கோவிந்தராஜ் தன்னுடைய பதவியில் இருந்து விலகுகிறார். அரசுடன் ஏன் முரண்பட்டார் என்று சொன்னால், மெட்ரிக் பள்ளிகளை அரசு கட்டுப்படுத்த விரும்பவில்லை என்கிற உணர்வு அவருக்கு ஏற்பட்டிருந்தாக வேண்டும். அதனால்தான் அவர் விலகுகிறார். இதுபோன்று மெட்ரிக் பள்ளிகளை வைத்துக்கொண்டு நீங்கள் தமிழைக் காப்பாற்ற முடியுமா என்று சொன்னால் அது முடியாது. இதுவொரு பக்கம். சொல்லவந்த செய்தி என்னவென்று சொன்னால் பொறியியல் கல்லூரிகளில் மட்டுமல்ல, மருத்துவக் கல்லூரியிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழைப் புகுத்தியிருக்க முடியும். இடையில் என்ன காரணம் சொல்லிவிட்டார்கள் என்றால், டெல்லியில் இருக்கக் கூடிய இதற்கான அனுமதி வழங்கக்கூடிய துறை (இந்திய மருத்துவக் கவுன்சில்) அனுமதி வழங்கவில்லை என்று சொன்னார்கள். உண்மையில் அவர்கள் கேட்டது என்னவென்றால், பொறியியல் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும் தமிழைப் புகுத்துவதற்கு முன்பாக அதற்கான முறையில் தமிழை நீங்கள் தகுதிப்படுத்தியிருக்கின்றீர்களா? நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றவா? கலைச்சொற்கள் தயாராக இருக்கின்றனவா? ஆசிரியர்களுக்கு பயிற்சி தந்திருக்கின்றீர்களா? இதை செய்திருக்கின்றீர்கள் என்று சொன்னால், கண்டிப்பாக மருத்துவம், பொறியியல் துறைகளில் தமிழைப் புகுத்தலாம் என்றுதான் அவர்கள் கேட்டார்கள். ஆனால், இவர்கள் தந்த பதில் என்னவென்றால், இல்லை என்பது. இல்லை என்பது உண்மையே கிடையாது. 10 ஆண்டுகளாகவே இதற்கான பேராசிரியர்கள், கலைச்சொற்கள் தொகுப்பு, இதற்கான நூல்கள் முதலியவைகள் எல்லாம் தொடக்க நிலையில் தயாராகத்தான் இருந்தன. அந்த சமயத்தில் இல்லை என்று சொல்லி தமிழ் மக்களுக்கு இந்தச் செய்தியை இவர்கள் மறைத்துவிட்டு, நமக்குத் தகுதியில்லை என்கிறார்கள். ஆனால், சொல்லக்கூடிய ஒரே காரணம் என்னவென்று சொன்னால், ஆங்கில ஆதரவு ஒன்றுதான். இதில் அதிர்ச்சி தரக்கூடிய ஒரு செய்தி என்னவென்றால், கலைஞரே ஒரு சமயத்தில் ஒரு தத்துவம் போல ஒன்றைச் சொன்னார், ‘வசதிக்கு ஆங்கிலம், வாழ்வுக்குத் தமிழ்’ இந்த உரை எவ்தவிதமான உரை என்று நினைத்துப் பாருங்கள், வசதிக்கு ஆங்கிலம் வாழ்வுக்குத் தமிழ் என்று சொன்னால், இதற்கு என்ன அர்த்தங்கள் என்று நாம் மேலும் விளக்க வேண்டியதில்லை. சரி, இதெல்லாம் தவிர உலகத் தமிழ் மாநாடு என்பதை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று அறிவித்து கலைஞரை இந்த மாநாட்டைக் கூட்டினார். பல தமிழறிஞர்கள் சிவதம்பி முதலியவர்களுடைய ஆதரவோடு மாநாட்டை நடத்தினார்கள். நான் பெரிதாக எதிர்பார்த்தது என்னவென்று சொன்னால், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்கின்ற இந்த வடிவத்தில் செம்மொழி பற்றிய ஆய்வுதான் பெரிய அளவில் நடக்கும் என்று நினைத்தேன். இல்லவே இல்லை. ஏற்கனவே நடந்த உலகத் தமிழ் மாநாடுகள் சென்னையில் நடந்தது, மதுரையில் நடந்தது எப்படியோ - அரசியல் மாநாடு போல எப்படி நடந்தனவோ, அதேபோலதான் இந்த மாநாட்டை நடத்தினார்களேயொழிய, மற்றபடி தமிழைச் செம்மொழி என்று மைய அரசு ஏற்றுக்கொண்ட பிறகு, செம்மொழிதான் தமிழ் என்பதை மெய்ப்பிக்கக்கூடிய முறையில் மிகப்பெரிய ஆய்வுகளை இந்த மாநாடு தொடங்கிவைக்கும், அதற்கானத் தூண்டுதலை இந்த மாநாடு தரும் என்று நான் பெரிதாக எதிர்பார்த்தான். அநேகமாக ஒன்றுமே இல்லை. பர்கோடாவைப் பொறுத்தவரையில் அவருக்கு விருது வழங்கினார்கள். அவர் சிறப்புரை நிகழ்த்தினார். ஜார்ஜ் கார்ட் போன்றவர்களும் மாநாட்டிற்கு வந்திருந்தார்கள். சிந்து சமவெளி பற்றி ஒரு மிகச்சிறந்த ஆய்வை அவர் முன்வைத்தாராம். அந்த ஆய்வை உண்மையில் எத்தனை தமிழிஞர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதைப்பற்றி எனக்கு ஐயம் உண்டு. பர்கோடாவைப் பற்றி சென்னையில் நடந்த ஒரு கருத்தரங்கில் கூட, எங்களுக்கெல்லாம் தெரிவிக்காமல் எப்படி முருக வழிபாடு நடந்ததெல்லாம் என்று கூட கேள்விகள் எழுந்ததாக நான் கேள்விப்பட்டேன். அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்லக்கூடியது, நமக்கு ஏற்கனவே கடந்த 50, 60 ஆண்டுகளுக்கு இடையில் சொல்லப்பட்டது என்னவென்று சொன்னால், 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது. கடைசியாக வந்த ஒரு செய்தி, சிந்து சமவெளியில் பாகிஸ்தான் பகுதியில் சில பகுதிகள் உண்டு. அங்கு செய்யப்பட்ட ஆய்வில் பாகிஸ்தான் அறிஞர்கள் சொல்லக்கூடியது என்னவென்றால், கி.மு. 8,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்கிறார்கள். சாத்தூர் சேரன் போன்றவர்கள் 30,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது, அதற்கான ஆதாரங்களெல்லாம் கிடைத்துள்ளது என்று சொல்கிறார்கள். சிந்து சமவெளியில் ஆய்வு செய்யப்பட்ட இடங்கள் மிகச் சிலதான். இன்னும் மிகப்பெரும்பாலான இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்றெல்லாம் சொல்கிறார்கள். இந்த ஆய்விற்கான ஏதாவது ஒரு திட்டம் - இந்த ஆய்வை மைய அரசின் ஒத்துழைப்புடன்தான் செய்ய முடியும் - இதை தமிழக அரசு வற்புறுத்துகிறதா என்று சொன்னால், பெரிய அளவில் வற்புறுத்தவில்லை. இதுபோன்ற ஆய்வுகளில் தமிழியல் அறிஞர்களை அரசு ஈடுபடுத்துகிறதா என்று சொன்னால், அப்படியும் இல்லை. தனி நபர்கள் சில பேர் மதிவாணன் போன்றவர்கள் சிந்து சமவெளி பற்றி ஆய்வு செய்திருக்கிறார்கள். அந்தக் கருத்தை அரசு ஏற்றுக்கொண்டதாகவும் தெரியவில்லை. அரசைப் பொறுத்தவரை பர்கோடாவின் ஆய்வு மட்டுமல்ல, இன்னும் இரண்டொரு அறிஞர்களின் ஆய்வைத் தவிர வேறு யாருடைய ஆய்வையும் முன்வைக்கவில்லை. கடைசியாக பூம்புகாரில் கடலியல் ஆய்வு என்று சொல்லி ஒன்று நடந்தது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக. அந்த அறிஞர் சொன்ன ஆய்வு என்னவென்றால், இன்றையிலிருந்து 13,500 ஆண்டுகளுக்கு முன்பு என்று சொன்னார். கி.மு. 9,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது பூம்புகார் நகர சின்னங்களில் இருந்து அறியக்கூடியது என்று சொன்னார். வேறு சில ஆய்வுகளெல்லாம் ஆதிச்சநல்லூர் முதலியவை பற்றியெல்லாம் சொல்லும் போது, அந்த நாகரிகம் இன்னும் தொன்மையானது என்று அவர்கள் சொல்கிறார்கள். குமரிக் கண்டம் ஆய்வு என்பது இன்னும் மிக முக்கியமான ஒரு ஆய்வு. இதற்கெல்லாம் ஏதோ இரண்டொரு வார்த்தைகள் பூம்புகார், குமரி கண்டம் பற்றிய ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்று மாநாட்டில் அறிவிக்கப்பட்டனவே அன்றி, வேறு எந்த அறிவிப்புகளோ, முயற்சிகளோ செய்யப்படவில்லை. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற வடிவத்தில் நடந்த இந்த ஆய்வு மாநாடு இதற்கான திட்டங்களோ, வரையறைகளோ வகுக்கப்படாதது என்பது ஒரு மிகப்பெரிய ஏமாற்றம். இதுபோக, செம்மொழி மாநாடு என்று கலைஞர் அறிவித்த உடனே, சிவத்தம்பி அவர்கள் சில திட்டங்களை முன்வைத்தார்கள். உண்மையில் தமிழை செம்மொழி என்று மெய்ப்பிக்க வேண்டும் என்று சொன்னால், தமிழுக்கும் சமஸ்கிருத்தத்திற்கும் உள்ள தொடர்பு, தமிழுக்கும் வட இந்திய மொழிகளுக்கும் உள்ள தொடர்பு. முக்கியமாக தமிழுக்கும் சுமேரியன் மொழிக்கும் உள்ள தொடர்பு. தென் கிழக்கு ஆசியாவில் தமிழ்ச் சொற்கள், சின்னங்கள் ஏராளமாக இருக்கிறது. இதனோடு தமிழுக்கு இருக்கக்கூடிய தொடர்பு, தமிழகத்திற்கு இருக்கக் கூடிய தொடர்பு என்று சொல்லி, 4 வரையறைகளை சிவத்தம்பி முன்வைத்தார். இந்த 4 வரையறைகளை நடைமுறைப்படுத்தும் வகையில் செம்மொழி மாநாடு அமைந்திருந்தாலும் கூட வரவேற்கலாம். அதுவும் இல்லை. அப்பொழுது, இந்த வகையில் பார்த்தீர்களென்றால், ஏதோ செம்மொழி மாநாடு என்று பெரிதாக அறிவிக்கப்பட்டதேயொழிய அதற்கான திட்டங்கள் மாநாட்டில் விவாதிக்கப்படவில்லை. அதுவொரு வகையில் ஏமாற்றம். ஆனால், அதன்பிறகு இப்பொழுது சில காரியங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் சிலவற்றை வரவேற்கலாம். மோசமில்லை. அந்த அளவிற்கு நிறுத்திக்கொள்ளலாம். அடிப்படையில், என்னுடைய அந்த சிறிய நூலில் சொல்லப்பட்ட செய்தி - செம்மொழி மாநாட்டில் என்ன எதிர்பார்க்கலாம் - என்பது. உண்மையில், தமிழனுடைய விடுதலைக்கான திட்டங்கள் இந்த மாநாட்டில் வகுக்கப்பட வேண்டும். தமிழியல் ஆய்வு என்று சொல்லக்கூடியது தமிழ் மக்களுடைய விடுதலைக்கான ஆய்வாகத்தான் இருக்க வேண்டும். தமிழ் ஆய்வு என்று சொன்னாலும், தமிழ் மக்களைப் பற்றி ஆய்வு, தமிழ் வரலாறு, தமிழ் இலக்கிய ஆய்வு என்று எந்த வடிவத்தில் துவக்கினாலும் கூட அதன் முதல் நோக்கம் மட்டுமல்ல, இறுதி நோக்கம் மட்டுமல்ல, இரண்டு நோக்கங்களும் தமிழனுடைய விடுதலை, தமிழினுடைய விடுதலை என்றிருக்க வேண்டும். உண்மையில் தமிழை செம்மொழி என்று மைய அரசு ஏற்றுக்கொண்டது, அது 1000, 1500, 2000 எப்படியோ இருக்கட்டும். அந்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெறும். அதுவும் ஒருபக்கம் இருக்கட்டும். உண்மையில் தமிழைச் செம்மொழி என்று அறிவிக்கும் போது, எங்களைப் போன்றவர்கள் தமிழ் உணர்வாளர்கள் பெரிதாக எதிர்பார்த்தது என்று சொன்னால், இந்திய வரலாற்றில் பல்லாயிரணமான இந்திய வரலாற்றில் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் அதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இடையில் தமிழ் என்பது இந்தியா முழுவதும் வழங்கிய ஒரு மொழியாக இருந்தது என்பதாகப் பார்க்கிறோம். அதற்கான ஆதாரங்கள் என்று சொன்னால் மத்திய இந்தியாவில், வடமேற்கு இந்தியாவில், பிறகு இந்தியாவைக் கடந்து வெளிப்பகுதிகளில் தமிழ் மொழியினுடைய சொற்கள் ஏராளமாக இன்று வரை நமக்குக் கிடைக்கின்றன. அப்படியானால், இந்தியா முழுவதும் ஒரு காலத்தில் தமிழினுடைய செல்வாக்கு பெரிய அளவில் இருந்தது. சொல்லப்போனால், ஆரிய‌ர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னால் தமிழ்தான் இந்தியா முழுவதும் இருந்த மொழி என்று நம்முடைய அறிஞர்கள் சொல்கிறார்கள். இந்திய நாகரிகத்தின் அடிப்படையில் என்றால் வேளாண்மையைச் சொல்ல வேண்டும், நீர்ப் பாசனங்களைச் சொல்ல வேண்டும், கால்நடைகளைப் பற்றி சொல்ல வேண்டும், மருத்துவம் பற்றி சொல்ல வேண்டும். இசை பற்றி, தர்க்கம் பற்றி, மெய்யியல் பற்றி, அறிவியல் பற்றி சொல்ல வேண்டும். இந்தியாவில் இருக்கக் கூடிய வேளாண்மையில் தொடங்கி அறிவியல் வரை அனைத்துத் தளங்களிலும் விளங்கியது தமிழ் நாகரிகம் மட்டும்தான். இவற்றில் ஆரியத்தினுடைய பங்களிப்பு என்பது எள்ளளவும் கிடையாது. வேளாண்மையிலோ, கட்டடக் கலையிலோ, சிற்பத்திலோ, இசையிலோ, மருத்துவத்திலோ, கணிதத்திலோ, தர்க்கத்திலோ தமிழினுடைய பங்களிப்புதான் பெரும் பகுதி உண்டோயொழிய ஆரியத்தின் பங்களிப்பு என்பது பெயரளவிற்கு அங்கொன்றும், இங்கொன்றுமாக இருக்கலாம் அவ்வளவுதான். ஆனால் இந்திய வரலாறு பற்றி ஆய்வு என்று சொன்னவர்களெல்லாம் என்ன சொல்லித் தொலைத்தார்கள் என்றால், எல்லாவற்றையும் சமஸ்கிருதத்திற்கு கொண்டு போய் சேர்த்தார்கள். சமஸ்கிருதம்தான் இந்தியாவினுடைய நாகரிகத்தினுடைய ஆதாரம் என்று சொன்னார்கள். ஆனால், அது முற்றிலும் பொய் என்பதைத் தவிர வேறு வார்த்தைகள் சொல்வதற்கு இல்லை. அத்தனையும் தமிழ் நாகரித்தோடு தொடர்புடையனதான். வட இந்தியாவில் ஹிந்தி போன்று ஏராளமான மொழிகள் இருக்கின்றன. அந்த மொழிகளைப் பார்த்தீர்களென்றால் - பல அறிஞர்கள் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள் - சமஸ்கிருதச் சொற்கள் அங்கும் இங்கும் நிறைந்து கிடந்தாலும் கூட, அந்த வட இந்திய மொழிகள் அத்தனையிலும் இருக்கிற வாக்கிய அமைப்பு என்பது தமிழினுடைய வாக்கிய அமைப்புதான். தமிழ் வாக்கியத்தில் நம்முடைய மக்கள், ‘காலையில் எழுந்து டிஃபன் பண்ணி, ஃப்ரண்டை சந்தித்துத் திரும்பினேன்’ என்று சொன்னால் அந்த வாக்கியம் முழுவதும் தமிழ், இடையில் ஆங்கிலச் சொற்கள். அதேபோலத்தான் வட இந்திய மொழிகள் முழுவதிலும் வாக்கிய அமைப்புகள் உள்ளன. வாக்கிய அமைப்பு என்பது ஒரு மொழியில் எவ்வளவு வலுவான அம்சம் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. வாக்கியம் முழுவதும் தமிழாக இருக்கிறது. இடையில் ஆங்காங்கு சமஸ்கிருதம் ஏராளமாகச் சேர்ந்திருக்கிறது. இந்த வகையில் பார்த்தீர்களென்றால் இன்று இந்தியாவில் தமிழுக்கு மரியாதை இல்லை, தமிழனுக்கு மரியாதை இல்லை. ஆனால், செம்மொழி ஆய்வு என்கிற முறையில் நீங்கள் இந்த ஆதாரங்களைத் தேடித் தொகுத்து, இதில் தமிழஞர்கள் பெரிய அளவில் ஈடுபடுத்த முடியும் என்று சொன்னால், இந்திய நாகரிகத்தின் அடித்தளம் தமிழ் நாகரிகம் என்பதை மெய்ப்பிக்க முடியும். மா.பி.கந்தையா சொல்லிக் கொண்டிருந்தார், க.ப.வே. சொல்லிக் கொண்டிருந்தார். இன்னும் பல அறிஞர்கள் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதை மெய்ப்பிக்க முடியுமானால், இந்திய அரசியலில், இந்தியாவினுடைய பொருளியலில் தமிழனுக்கான இடம் கிடைக்கும். இன்று மைய அரசிற்கு அடி வருடியாக, அடிமையாகச் செயல்படக் கூடியவன்தான் மைய அரசினுடைய மரியாதைக்குரியவன். மைய அரசில் செல்வாக்கு பெறவேண்டும் என்று சொன்னால், மைய அரசு, சமஸ்கிருதம், வட இந்திய பெருமைகளையெல்லாம் ஒப்புக்கொண்டவன்தான் இருக்க முடியும். அடிப்படையில் நான் சொல்வது என்னவென்று சொன்னால் இன்று வரை மைய அரசோ இந்தியாவின் பல்கலைக்கழகங்களில் இருக்கக் கூடிய அறிஞர் பெருமக்களோ சமஸ்கிருதம்தான் இந்தியாவினுடைய மூல மொழி, முதல் மொழி, இந்திய மொழிகளுக்கெல்லாம் சமஸ்கிருதம்தான் தாய்மொழி என்ற நம்பிக்கைகளை இன்றும் அவர்கள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இது உண்மையல்ல, இந்திய நாகரிகத்தினுடைய அடித்தளம் தமிழ் நாகரிகம்தான். அறிஞர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் ஏற்கனவே சிலவற்றை சொல்லியிருக்கிறார்கள். இந்திய நாகரிகத்தினுடைய மேலடுக்கு ஆரிய நாகரிகம் என்றே வைத்துக்கொண்டாலும் கூட, அடித்தளம் முழுவதும் தமிழ் நாகரிகம் அல்லது திராவிடர் நாகரிகம் என்பதை அறிஞர்கள் பலர் சொல்லியிருக்கிறார்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம்? சொல்லப்போனால், தமிழ்நாட்டில் பெரியார் இருக்கிறார், திராவிட அரசியல் இருக்கிறது. சமஸ்கிருத மறுப்பு இருக்கிறது. இதனை வட இந்தியர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இதெல்லாம் எவ்வளவு பெரிய உண்மைகள் என்று சொன்னாலும் கூட வடக்கில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இந்திய அரசியலில் தமிழனுக்குரிய மரியாதையை, செல்வாக்கை, அழுத்தத்தைப் பெறுவது என்று சொன்னால், தமிழைச் செம்மொழி என்று ஏராளமான ஆதாரங்களோடு மெய்ப்பிப்பதில் அடங்கியிருக்கிறது என்கிற முறையில்தான் தமிழைச் செம்மொழி என்று அறிவித்த உடனேயே எங்களைப் போன்றவர்கள் பெரிதும் விரும்பினார்கள். ஆனால், அதற்கான திட்டங்கள் ஏதாவது இருக்கிறதா என்று சொன்னால் எதுவம் இல்லை. இந்தத் திட்டங்களை நீங்கள் முன்வைக்கும் போது, இன்றைக்கு நடக்கும் இந்திய அரசியலிற்கு, சமஸ்கிருத மொழிக்கு, ஆரிய ஆதிக்கத்திற்கு, வருணாச்சரமத்திற்கு எதிராக நீங்கள் செயல்படுகின்றீர்கள் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள் என்று அர்த்தம். இதை இந்தியா ஏற்றுக்கொள்ளுமா இல்லையா என்பது மிகப்பெரிய ஒரு கேள்வி. இன்னொன்று என்னவென்று சொன்னால், திராவிட மொழிகள் என்று சொல்லப்பட்டவை மலையாளம், கன்னடம், தெலுங்கு முதலியவைகளெல்லாம், தமிழைச் செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட உடனேயே கன்னட மொழிக்காரர்களும், தெலுங்கு மொழிக்காரர்களும் ஆத்திரப்பட்டார்கள், எங்களுக்கும் செம்மொழி தகுதி உண்டு, அறிவிக்க வேண்டும் என்று. ஆகவே செம்மொழியினுடைய காலவரையறை 1,000 ஆண்டு என்று நிர்ணயிக்க வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டது. உலக அளவில் செம்மொழி என்று சீன மொழியோ, கிரேக்க மொழியோ ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று சொன்னால், அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவது. அரசு அதிகாரம், அரசு அனுமதி என்பது தேவையே கிடையாது. நம்ம இந்தியாவில் மட்டும்தான் மத்திய அரசு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஒரு கோரிக்கையைக் கிளப்பி கடைசியில் அதனை ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறோம். இதுவொரு பிறழ்வு என்று வைத்துக்கொண்டாலும் கூட, அந்த வரையறையை நாம் மீறவேண்டியதில்லை. கன்னட மொழியோ, தெலுங்கு மொழியோ தங்களுக்கும் செம்மொழி தகுதி உண்டு என்று சொல்லும்போது, இல்லையென்பது உண்மையென்றாலும் கூட, உண்டு என்று ஏற்றுக்கொண்டாலும் கூட, அவர்கள் செய்யக்கூடிய ஆய்வு என்னவாக இருக்க வேண்டும்? பேராசிரியர் நாச்சிமுத்து, தற்பொழுது டெல்லியில் ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் பணியாற்றக் கூடியவர். அவர் மிகவும் தெளிவாகச் சொல்கிறார். தமிழுக்கு செம்மொழி தகுதி என்பது கன்னட மொழி பேசுகிறவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், ஆந்திர மொழி பேசுகிறவர்கள், மலையாள மொழிப் பேசுகிறவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்று சொன்னால், செம்மொழி என்பது தமிழனுக்கு மட்டும் உரியது இல்லை. உங்களுக்கும் சேர்த்துதான் இது செம்மொழி. ராமசாமி அவர்கள் கூட ஒருமுறை சொன்னார், கன்னட அறிஞர்களைப் பார்த்துச் சொல்கிறார், கன்னட மொழி ஆய்வு என்று செய்யத் தொடங்கினீர்களென்றால் கடைசியல் நீங்கள் தமிழுக்குப் போய்ச் சேருவீர்கள். உண்மையிலேயே மலையாள மொழியோ, கன்னட மொழியோ, தெலுங்கு மொழியோ தம்மைச் செம்மொழி என்று சரியான முறையில் ஆய்வு செய்வார்களேயானால் அவர்கள் தமிழுக்கு வந்துச் சேருவார்கள். அதனா‌ல், இந்த வகையான ஆய்விற்கு நாம் ஊக்கமளிக்க வேண்டும். இன்னொன்றைச் சொல்லி எனது கருத்தை முடித்துக்கொள்ள விரும்புகிறேன். அது, தமிழ் மொழி ஆய்வு என்பது தமிழனுக்கு விடுதலை தரவேண்டும் என்று நான் சொன்னேன். தமிழியல் ஆய்வு என்பது மக்களோடு சம்பந்தப்பட்டது. காவிரி, வைகை, தாமிரபரணியோடு, இங்கிருக்கக்கூடிய நீரோடு, நிலத்தோடு, காடுகளோடு, இங்கிருக்கக் கூடிய வாழ்க்கையோடு, இங்கிருக்கக் கூடிய மக்கள் வாழ்க்கை மேம்பாட்டோடு சம்பந்தப்பட்டது. அப்படியிருக்கும்போது, இங்கு காவிரி இல்லை, வைகை இல்லை, தாமிரபரணி இல்லை என்று சொன்னால், இங்கு தமிழனுக்கு என்ன வாழ்வு? தமிழ் மொழிக்குதான் என்ன வாழ்வு? அதேபோல, இங்கிருக்கக் கூடிய நீர்நிலைகளில் பன்னாட்டு நிறுவனங்கள் வந்து உட்கார்ந்துகொண்டு, அவர்கள் நிலத்தடி நீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்தால் தமிழனுடைய வாழ்வு, தமிழ் மக்களுடைய வாழ்வு என்ன ஆகும்? செம்மொழி ஆய்வு என்பது சொல்லக்கூடிய இந்தத் திசையில் போய் கடைசியில், தமிழ்நாடு தமிழனுக்குரிய நாடாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டு அரசியலில் தமிழனுக்குத்தான் செல்வாக்கு, தமிழக பொருளியலை நிர்ணயிக்கக் கூடியவன் தமிழனாகத்தான் இருக்க வேண்டும், தமிழ் மக்களாகத்தான் இருக்க வேண்டும். தமிழனுடைய நீர்நிலைகள் மற்றும் இயற்கைச் செல்வங்களையெல்லாம் அந்நியருக்கு நாம் விட்டுக்கொடுக்க முடியாது. இதெல்லாம் கூட ஆய்வினுடைய நோக்காக இருக்க வேண்டும். தமிழறிஞர்கள் என்று சொல்லக்கூடியவர்களுக்கு இந்த அக்கறையும் வேண்டும். ஏதோ மொழி ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி என்பது மக்களிடத்தில் இருந்து விடுபட்டு, நீரோடு நிலத்தோடு விடுபட்டு, உழவர்களோடு, நெசவாளிகளோடு, கலைஞர்களோடு, சிற்பத்தோடு, சமயத்தோடு விடுபட்டுச் செய்யக் கூடிய ஆய்வாக இருக்கவே முடியாது. இவற்றையெல்லாம் உள்ளடக்கிய ஆய்வுதான் தமிழனுக்கான விடுதலையைப் பற்றிய ஆய்வாகவும் இருக்க முடியும். இதுதான் என்னுடைய பொதுவான ஒரு கருத்து. சமஸ்கிருத மொழியில் இருந்து தமிழ் பிறந்ததென்று சொல்லிக் கொண்டிருக்கின்ற ஒரு நிலை இன்று இந்தியாவில் நிலவுவதை தாங்கள் குறிப்பிட்டீர்கள். சமீபத்தில் நடந்த நிகழ்வை உங்களுக்குச் சொல்கிறேன். செம்மொழி மாநாட்டிற்குப் பிறகு பத்மா சுப்பிரமணியம் என்கிற பரத நாட்டிய கலைஞர் ஒரு பள்ளியைத் துவக்குகிறார். அந்த பள்ளிக்கு பரத்வாஜ முனிவருடைய பெயரை வைத்து துவக்குகிறார். இதற்கு, அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர் கருணாநிதி, அது தமிழருடைய வாழ்க்கையோடு இணைக்கப்பட வேண்டும் என்பதற்காக ‘பரத்வாஜ இளங்கோ நடன ஆய்வு மையம்’ என்று பெயர் சூட்டி, அதனை அவரே திறந்தும் வைத்துள்ளார். அறிஞரான உங்களுக்குத் தெரியும். பரதம் என்ற சொல்லிக்குரிய அந்த பரத நாட்டியக் கலை என்பது தமிழருடைய சதிராட்டம் என்பதே. இதனை தேவநேய பாவாணர் அவர்கள் மிகப்பெரிய ஆய்வு நடத்தி அதை மெய்ப்பிக்கும் போது ஒரு விவாதத்திலேயே இதே பத்மா சுப்பிரமணியத்தோடு மோதும் பொழுது, அது ஒரு ஆரிய கலை என்றும், அது பரத்வாஜ முனிவருடைய கண்டுபிடிப்பு என்றும் ப‌த்மா சுப்ரமணியம் சொன்னார். அதனால் பின்னாளில் தேவநேய பாவாணருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூட அறிஞர் ஒருவர் எனக்குக் கூறினார். இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டிய நிகழ்வு ஒன்று உண்டு. அன்றைக்கு அந்தக் கலைஞருடைய செய்தியைப் படிக்கும் போது அது எனக்கு நினைவிற்கும் வந்தது. அதனால் கோபமும் ஏற்பட்டது. என்னவென்றால், இதேபோல் ருக்குமணி அரண்டேல் முதன் முதலில் பரத நாட்டியத்தை அரங்கேற்றம் செய்து டெல்லியில் பேசும் போது, இதுதான் பரத நாட்டியம் என்று சொன்னபோது, பரதத்தில் மிகச் சிறந்து விளங்கிய பால சரஸ்வதி அவர்கள் மேடைக்குச் சென்று, இன்று நீங்கள் பரத நாட்டியம் என்று சொல்வது சதிராட்டம் என்கின்ற தமிழர் கலைதான் என்று சொல்லி ஆடி, நிரூபித்து, அது தமிழருடைய கலைதான் என்பதை மெய்ப்பித்தார். இது வரலாறு. அபிநய சரஸ்வதி என்ற பட்டம் பால சரஸ்வதிக்கு உண்டு. இப்படிப்பட்ட நிலையில், இதையெல்லாம் அறிந்திருக்க வேண்டிய, அறிந்து செயல்பட்டிருக்க வேண்டிய தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர், ஆரிய வழிபட்டது இந்தக் கலை என்று சொல்லக் கூடிய பத்மா சுப்பிரமணியத்திற்கு, நடனம் தொடர்பான பள்ளிக்கூடம் என்றே வைத்துக்கொள்ளுங்கள் - ஆய்வு என்பது இருக்கட்டும் - அதற்கு அனுமதித்து, தானே அதனைத் தொடங்கியது வைத்துள்ளார். இது செம்மொழி மாநாட்டினுடைய நோக்கத்திலிருந்து மிகப்பெரிய அளவில் முரண்படுகிறதா இல்லையா? உண்மைதான். பத்மா சுப்பிரமணியத்தினுடைய நடனத் திறன் என்று சொல்லக்கூடியது பிரமாண்டமானது, வியக்கத்தக்கது என்பதில் எள்ளளவும் எனக்கு ஐயமில்லை. அதேபோல, பால சரஸ்வதி மற்றவர்கள் எல்லாம் அதனை தமிழர் கலை என்று மெய்ப்பித்துள்ளார்கள். ஆனால், பத்மா சுப்பிரமணியம் விடாப்பிடியாக, பரதம் என்று சொல்லக்கூடியது சமஸ்கிருதத்தோடு தொடர்புடையது, பரத முனிவரோடு தொடர்புடையது என்று சொல்லி வருகிறார். விடாப்பிடியா தமிழறிஞர்கள் இதனை மறுத்தும் வருகிறார்கள். எனக்கு எப்பொழுது நடந்தது என்று நினைவில் இல்லை. ஆனால் ஒன்று சொல்கிறேன். இதைப்பற்றி கேரளாவில் ஒரு விவாதம் வந்த சமயத்தில், பத்மா சுப்பிரமணியம் அந்த அரங்கில் இருந்தார்கள் என்று நினைக்கிறேன். இங்கிலாந்தில் இருந்து வந்த ஒரு அறிஞர், மிகத் தெளிவாக ஒரு உண்மையைப் போட்டு உடைத்தார். பரத முனிவர் வாழ்ந்தது கேரளா. பரத முனிவர் வாழ்ந்த காலம் என்று சொல்லக்கூடிய அந்தக் காலம் கேரளா தமிழ்நாடாக இருந்த காலம்தான் என்கின்ற உண்மையை போட்டு உடைத்தார். இசை, நடனம் முதலியவற்றிற்கெல்லாம் ஆதார நூல்கள் என்றால் சிலப்பதிகாரம், அரும்பத ஆசிரியர் உரை, அடியாசனார் உரை முதலியவைகளெல்லாம் உள்ளன. அதுமட்டுமல்ல, சங்க இலக்கியத்தில் இருந்து பெரிய அளவில் மம்முது போன்றவர்கள் ஏராளமான ஆதாரங்களை எடுக்கிறார்கள். இசை சங்க இலக்கியத்தில் பெற்றிருக்கிற பதிவுகள், அதேபோல நடனம் பதிவு பெற்றிருக்கிற நிகழ்ச்சிகளெல்லாம், கூத்து பற்றியெல்லாம் நிறைய இருக்கிறது. அப்படியாயின், பரத முனிவர் கேரளாவில், தென் இந்தியாவில் வாழ்ந்தார் என்றால் அது தமிழ்நாடுதான். இளங்கோ வாழ்ந்தது கேரளப் பகுதி. அப்படியென்றால், தமிழ்நாடுதான் இந்த பரதத்திற்கும், இசைக்கும் ஆதாரக் களம் என்பதற்கான ஆதாரங்கள் இப்படி ஏராளம் இருக்கும்போது, திரும்பத் திரும்ப பத்மா சுப்பிரமணியம் சொல்வது அல்லது பரத்வாஜ முனிவரோ யாரோ பெயர் சொல்வது முதலியவைகளெல்லாம், கலைஞர் ஒப்புக்கொண்டு போனால் போகட்டும் அந்தப் பெயர் இருந்திருக்கட்டும், இளங்கோவினுடைய பெயர் இருக்கட்டும் என்று ஒப்புக்கொண்டு, நிலத்தை நன்கொடையாகக் கொடுக்கட்டும், பள்ளி ஏற்படுத்தட்டும் நமக்கு ஒன்றும் மறுப்பில்லை, அது வேண்டும். சொல்லப்போனால் தமிழனுடைய கலைதான் பரதம் என்பதை ஈழத்தவர்கள் மிக நன்றாக அறிந்திருக்கிறார்கள். கலைஞர் எப்பொழுதுமே ஆரியத்தோடும், திராவிடம் என்று பேசினாலும் கூட ஆரியத்தோடு சமரசத்திற்கு எல்லா வகையிலும் உடன்பாடாக இருக்கக் கூடியவர்தான். இந்திய அரசோடு செய்யக் கூடிய சமரசம். சொல்லப்போனால் ஈழத்தை அழிப்பதில் சிங்களவர்களோடும், இந்திய அரசோடும் முழு அளவில் ஈடுபாட்டுடன் செயல்பட்ட கலைஞரிடத்தில் வேறு எதிர்பார்ப்பிற்கு ஒன்றுமில்லை. அவர் அப்படித்தான் செய்வார். அரசினுடைய பார்வையில் இருந்து செம்மொழி மாநாட்டை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் தமிழினுடைய மேம்பாடு தமிழனுடைய விடுதலையில்தான் சென்று முடிய வேண்டும் என்று சொன்னீர்கள். தமிழாய்வு என்பது எப்பொழுதும் ஒரு தமிழியக்கம் போலவே நடைபெற்று வந்துள்ளது. திராவிட இயக்கம் தொடக்க நாளில் மாபெரும் தமிழியக்கமாக இருந்தது. தமிழர்களின் வரலாற்றை தோண்டியெடுத்து நம் காலத்திற்கு தேவையான பொருள் கண்டு அதை அரசியல் களத்தில் வைத்து செயல்படுத்திய இயக்கம் திராவிட இயக்கம். மனோன்மணியம் சுந்தரனார், மறைமலை அடிகள் போன்றோரும் இந்த திராவிட இயக்கத்தை தூண்டி எழுப்பியவர்கள். அண்ணா இந்த இயக்கத்தின் உச்சம். மறைமலை அடிகள், பாவாணர் வழியே தமிழகத்தில் பேராற்றலாக வளர்ச்சி பெற்றது தனித் தமிழ் இயக்கம். அதன் உச்சமாகத் திகழ்ந்தவர் பெருஞ்சித்தரனார் என்று கூறி தமிழ்நாட்டினுடைய சமூக அரசியல் வரலாற்றில் தமிழ் மொழியினுடைய மேம்பாட்டிற்கு உதவியவர்கள் பெயர்களையெல்லாம் குறிப்பிட்டீர்கள். இன்றைய நிலையில் அப்படிப்பட்ட அந்த தமிழாய்வு என்பது தமிழியக்கமாக இப்பொழுது எந்த அளவிற்கு தொடர்கிறது? இன்றைக்கு தமிழியக்கம் என்று சொல்லக்கூடியது, தமிழ்நாட்டோடு மட்டுமல்ல, உலக அளவில் தமிழ் மக்கள் பரவியிருக்கிறார்கள். இலங்கையில் நடைபெற்ற கொடுமைகள் காரணமாக ஏராளமான தமிழஞர்கள், தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்றார்கள். இதேபோல 200 ஆண்டுகளுக்கு இடையில் பிஜி தீவு, தென் ஆப்ரிக்கா முதலிய நாடுகளுக்கு எராளமான தமிழ் மக்கள் போனார்கள். எனக்கு வியப்பு ஏற்பட்ட நிகழ்ச்சி என்னவென்று சொன்னால், தென் கொரியாவில் ஆய்வு செய்யக் கூடிய என்னுடைய ஒரு நண்பர் கொரிய மொழியில் நிறைய தமிழ்ச் சொற்கள் என்று சொன்னார். பிலிப்பைன்ஸில் ஆய்வு செய்யச் சென்ற நண்பரும் சொன்னார் அங்கும் நிறைய தமிழ்ச் சொற்கள் என்று. இவற்றில் ஒன்றும் வியப்பில்லை, ஏற்கனவே அறிந்த செய்திகள்தான். இந்த அளவில் பார்க்கும் பொழுது, இன்றைக்கு தமிழியக்கம் என்று சொல்லக் கூடியது உலக அளவிற்கு தமிழ், தமிழ் நாகரிகம் எங்கெல்லாம் சென்றதோ அதை உள்ளடக்கி செய்ய வேண்டிய ஒரு ஆய்வு. சில அறிஞர்கள் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள். செம்மொழி நிறுவனம் என்பது இவர்களையெல்லாம் உள்ளடக்கி செயல்பட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இதுவொருபக்கம் இருக்க, தமிழ் இயக்கம் என்று சொல்லக்கூடியது, ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேசக்கூடியது அவ்வளவும் தமிழ் இயக்கங்கள்தான். அவற்றிற்கிடையே ஒருங்கிணைப்பு இல்லை என்கிற விமர்சனங்களை முன்வைத்தாலும் கூட, அவை தமிழ் இயக்கம்தான். அந்த வகையில் பார்த்தால், ஈழத் தமிழர்கள் மீது நாம் வைத்திருக்கும் பற்று முதலியவைகளெல்லாம் தமிழியக்கத்தினுடைய கூறுகள்தான். தனித் தமிழ் இயக்கம் என்று சொல்லக்கூடியது முன்பு போல வீருடன் இல்லையென்றாலும் கூட அந்த இயக்கம் இன்றும் இருக்கிறது என்பது உண்மைதான். வட மொழிச் சொற்களை தமிழிலிருந்து நீக்க வேண்டும் என்பதைப் போலவே ஆங்கிலச் சொற்களையும் நீக்க வேண்டும் என்கிற ஒரு உணர்வும் தமிழறிஞர்கள் மத்தியில் இருப்பது என்பது இதனுடைய தொடர்ச்சிதான். தமிழ் இயக்கம் என்று சொல்லும் போது ம.பொ.சி.யை சொல்லியிருந்தேன், ஆதித்தனாரைச் சொல்லியிருந்தேன். இவர்களுடைய இயக்கங்கள் கூட இன்றைக்கு பெரிய அளவில் செயல்படவில்லை என்பது உண்மைதான். அப்பொழுது, தமிழியக்கம் என்று சொல்லக்கூடியது 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வீரோடு, ஆற்றலோடு இன்று இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தமிழ் உணர்வு இருக்கின்றது, தமிழ் அமைப்புகள் என்று சொல்லக்கூடியவை இருக்கின்றன. இவற்றிற்கிடையில் ஒருங்கிணைவு இல்லை என்பது உண்மை என்றாலும் கூட தமிழை மேம்படுத்தி ஆக வேண்டும் என்கின்ற உணர்வு பொதுவாக இருக்கின்றது. உண்மையில் தமிழ் இயக்கம் என்பதில் தமிழ்த் துறையில் பணியாற்றக்கூடிய பேராசிரியர்கள், பள்ளிகளில் பணியாற்றக்கூடிய தமிழாசிரியர்கள் முன்பு போல - முன்பெல்லாம் அத்தனை பெரிய ஈடுபாட்டுடன் இருந்தார்கள். இப்பொழுது அவர்களுக்கு எந்தவகையான ஈடுபாடு இல்லை - மறைமலை அடிகளோ, பாவணரோ எவ்வளவு ஆற்றலோரு தமிழியக்கத்தில் இருந்தார்களோ, ம.பொ.சி., ஆதித்தனார் போன்றோர் எவ்வளவு தூரம் தமிழியக்கத்தை வளர்ப்பதில் ஆற்றலோடு செயல்பட்டார்களோ அந்த ஆற்றலோடு செயல்படக்கூடிய தமிழறிஞர்களையோ, தமிழியக்கத்தையோ இன்று குறிப்பிடும்படி இல்லை. ஒரு சிலர் இருக்கலாம். இவர்களுக்கிடையில் ஒருங்கிணைப்பு இல்லை என்பதைத் தவிர இதைப்பற்றி வேறு சிறப்பாகச் சொல்வதற்கு எதுவுமில்லை என்று நினைக்கிறேன். கீற்று இணைய இதழ் - 2011 ஜனவரி கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு - கோவை ஞானியின் தன்னிலை விளக்கம் நேர்காணல் யமுனா ராஜேந்திரன் கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு, அதை நிராகரிக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் கலைஞர்கள் கூட்டறிக்கை எனும் தளத்தில் தங்களை முன்னிறுத்தி ஒரு சர்ச்சை உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தாங்கள் அறிவீர்களா? சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் திரு.ஞானம் அவர்களின் நிறைவுரையில் என்னைத் தொடர்புபடுத்தி எழுந்த சர்ச்சையைக் குறித்து ஓரளவுக்கு நான் அறிவேன். நீங்கள் தமிழ்நேயம் அமைப்பின் தலைவர் எனவும், அதில் நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இருப்பதாகவும், கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு ஆதரவாக நீங்கள் தமிழக எழுத்தாளர்களுக்கு சுற்றுநிரூபம் அனுப்பி கொழும்பு மாநாட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் செயல்பட்டதாகவும், அதன்பின் தமிழக எழுத்தாளர்களின் எதிர்ப்பு அலை ஓய்ந்துவிட்டதாகவும் மாநாட்டு ஏற்பாட்டாளர்களில் ஒருவரான திரு.தி.ஞானசேகரன் தனது கொழும்பு மாநாட்டு உரையில் தெரிவித்திருக்கிறார். இது குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? திரு.ஞானம் மாநாட்டில் என்னைக் குறித்து தெரிவித்த கருத்துக்கள் பலவும் உண்மையில்லை. என்னைப் பொறுத்தவரையில், நான் ‘தமிழ்நேயம்’ இதழின் ஆசிரியர். ‘தமிழ்நேயம்’ இதழுக்கென்று தனி அமைப்பு எதுவுமில்லை. நெருக்கமான நண்பர்கள் சிலர் எனக்குண்டு. தமிழ்நேயம் அமைப்பில் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் இருப்பதாக திரு.ஞானம் சொல்வதில் சிறிதளவும் உண்மையில்லை. கொழும்பு தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கு தமிழகத்தில் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பை முறியடிக்கும் நோக்கத்துடன்தான் ‘என்னைத் தெரிவு செய்து’, என் கேள்விகளுக்கு திரு.ஞானம் பதில் தந்தார் என்று அவர் தெரிவிக்கும் கருத்தில் அவரது ‘அரசியல்’ தான் புலப்படுகிறது. திரு.ஞானம் அவர்கள் மூலம் நான் அறிந்த செய்திகளை வைத்து தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்களின் கருத்தை மாற்றும் நோக்கில் நான் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. திரு.ஞானம் அவர்கள் தொலைபேசியில் எனக்குத் தெரிவித்த விபரங்களையும் அவருக்கு நான் தந்த என் பதிலையும் என்னளவில் மறைக்க வேண்டாம் என்ற முறையில் நண்பர் திரு. சூரிய தீபனுக்கு ஒரு மடல் எழுதி அதன் நகலை கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். சிங்கள அரசின் அனுமதியோடும் ஆதரவோடும் மாநாடு கூட்டப்படவில்லை என்று திரு. ஞானம் உறுதியாக தெரிவித்ததோடு போர் முடிந்து ஆண்டு கழிந்த நிலையில் தமிழ் எழுத்தாளர்கள் இலங்கையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி குறித்து பேசுவதற்காகவும், நலிவடைந்த எழுத்தாளர்களுக்கு நிதிஉதவி செய்யும் முறையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கிலும் மாநாட்டை நடத்துவதாகவும், சிங்கள அரசுக்கு எதிராக தங்களால் எதுவும் தற்கால சூழலில் செய்வதற்கு இல்லையென்றும் திரு.ஞானம் தெரிவித்ததை ஏற்று, இப்படித்தான் மாநாடு நடைபெறும் என்றால் மாநாட்டுக்கு என் வாழ்த்துக்கள் உண்டு என்றும் திரு.ஞானம் அவர்களுக்கு நான் தெரிவித்த செய்தியை நண்பர்களுக்கு இடையில் மறைக்கவேண்டாம் என்ற முறையில் திரு.சூரிய தீபனுக்கும், கவிஞர் இன்குலாபுக்கும் தெரிவித்தேன். அவர்கள் கருத்தை மாற்றுவது என் நோக்கமாகவும் இருக்கவில்லை. நீங்கள் கொழும்பு எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்களின் கூட்டறிக்கையில் கையொப்பமிட்டிருக்கிறீர்கள். அதே நேரத்தில் நீங்கள் கொழும்பு மாநாட்டை வரவேற்று, வாழ்த்தியிருப்பதாக திருமதி.ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், திரு.தி.ஞானசேகரன் போன்றவர்கள் சொல்கிறார்கள். இது முரண்பாடானதாக இருக்கிறது. என்ன நடந்தது என்பது குறித்து விரிவாகச் சொல்வீர்களா? கொழும்பு மாநாட்டை நிராகரித்து தமிழ் எழுத்தாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் எனக்கு உடன்பாடு உண்டு. சிங்கள அரசு ஈழத் தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தை இந்தியா முதலிய நாடுகளின் ஒத்துழைப்போடு நடத்தி முடித்தது என்பதிலும், ஈழத் தமிழர்கள் மீண்டும் எழுவதற்கான எந்த முயற்சியையும் தொடர்ந்து முறியடிக்கும் என்பதிலும், இலங்கையில் வாழ்ந்து கொண்டு சிங்கள அரசுக்கு எதிராக தமிழ் எழுத்தாளர்கள் எத்தகைய தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியாது என்பதிலும் எனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு. சிங்கள அரசை எந்த வகையிலும் பகைத்துக் கொள்ள இயலாத நிலையில் தமிழ் எழுத்தாளர்கள் கொழும்பில் கூடி இலக்கியம் பற்றி உரையாடுவதில் இலங்கைக்கு வெளியில் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் முரண்பட வேண்டியது இல்லை. கூடுதலாக நான் இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகின்றேன். ஈழ மக்களின் விடுதலையை முன்னர் விரும்பி ஏற்றுக்கொண்ட தமிழர் தேசிய கூட்டணியின் தலைவர் திரு.சம்பந்தம் அவர்கள், போருக்குப் பிறகான சூழலில் மாபெரும் அழிவை எதிர்கொண்ட ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுக்கு வழிதேடும் முறையில் சிங்கள அரசோடு ஒத்துழைப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறி வருவதையும் நான் நினைவில் கொள்கிறேன். மாநாட்டில் அரசியல் எதுவும் பேசமாட்டோம் என்று திரு.ஞானம் கூறியதையும் நாம் புரிந்து கொள்ள முடியும். இலங்கையில் தமிழ் இலக்கிய வாழ்வும் வளர்ச்சியும், தமிழ் மக்களின் வாழ்வுரிமைகளோடு இன்றியமையாத உறவுடையது என்பதையும் நான் மறுக்கவில்லை. இந்நிலையில் சிங்கள அரசோடு தமிழ் எழுத்தாளர் அமைப்பு உள்ளார்ந்த முரண்பாட்டை கொண்டதாகத்தான் இருக்கின்றது. இன்று இல்லை என்றாலும் நாளடைவில் இந்த முரண்பாடு வெளிப்படத்தான் செய்யும். மேலும் நான் தெரிவித்த வாழ்த்து என்பதும் எந்த வகையிலும் சிங்கள அரசு பற்றிய என் கருத்தில் மாற்றத்தை குறிப்பதாக நண்பர்கள் கருத வேண்டியதில்லை. திரு.ஞானம் அவர்கள் தன்னைப் புலி ஆதரவாளர் என்று தொலைபேசியில் எனக்குத் தெரிவித்ததோடு, பல்லாண்டுகளாகத் தான் நடத்திவரும் ஞானம் இதழ்களில் இடம்பெற்ற 13 ஆசிரியர் உரைகளையும் எனக்கு அனுப்பி வைத்தார். அந்த உரைகளில் சிங்கள அரசுக்கு ஆதரவாக ஒரு சொல்கூட இல்லை. அன்றியும் ஈழத்தமிழர் விடுதலை போராட்டத்திற்கு எதிராக ஒரு சொல்லும் இல்லை. திரு. ஞானம் அவர்களை நான் நம்பியதற்கு இதுவும் ஓர் ஆதாரம். திருமதி. இராஜேஸ்வரி அவர்களின் நிலைபாட்டை நானும் நன்கு அறிவேன். அவரது நிலைபாட்டோடு நான் என்றும் உடன்பாடு தெரிவிக்கவும் இல்லை. விடுதலைப்புலிகளின் போரை அவர் தொடர்ந்து மறுத்தே வந்தார். போருக்குப் பிறகான சூழலில் மாபெரும் அழிவை எதிர் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு அரசு தரப்பில் இருந்தும், வேறு இடங்களில் இருந்தும் குறைந்த அளவுக்கேனும் சில உதவிகளை பெறுவதற்காகவே அவர் அலைந்து கொண்டிருக்கிறார் என்று நான் புரிந்து கொள்கிறேன். இலங்கை அரசு ஆதரவாகச் செயல்படுபவர்கள், மகிந்த ராஜபக்சேவின் அரசியலை உலகெங்கும் எடுத்துச் செல்பவர்கள், இலங்கையில் இனக்கொலை நடக்கவில்லை என்பவர்கள் மாநாட்டுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கும் சூழலில், கொழும்பு மாநாட்டின் பிரதான பேச்சாளர்களாகவும் இவர்கள் பங்கு பற்றியிருக்கும் சூழலில் இந்த மாநாட்டுக்கு அரசியல் இல்லை என நீங்கள் கருதுகிறீர்களா? இந்த மாநாட்டினை இலங்கை அரசு பயன்படுத்தாது என நீங்கள் கருதுகிறீர்களா? மாநாட்டில் யார் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்ற பட்டியல் என்னிடம் இல்லை. இவர்களில் சிங்கள அரசின் இனப்படுகொலையை ஆதரிப்பவர்கள் யாரென்பதும் எனக்குத் தெரியாது. இத்தகையவர் மாநாட்டில் பங்கு கொள்வார்கள் என்றால், மாநாட்டின் நோக்கம் குறித்து ஐயுறுவதில் தவறில்லை. இப்படித்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு இல்லை. மாநாட்டை இலங்கை அரசு பயன்படுத்தி கொள்ளத்தான் செய்யும். அதாவது உலக அளவிலான தமிழ் எழுத்தாளர்கள் கொழும்பில் கூடி பலநாட்கள் மாநாடு நடத்தும் அளவிற்கு இலங்கையில் அமைதி நிலவுகின்றது. மனித உரிமைகள் இலங்கையில் மதிக்கப்படுகின்றன என்றெல்லாம் இலங்கை அரசு பரப்புரை செய்ய முடியும். மாநாடு நடைபெற்று முடிந்த நிலையில் உண்மைகள் மெல்ல மெல்ல வெளிப்படத்தான் செய்யும். தமிழில் எதிர் இலக்கியத்தின் வகிபாகம் என்ற அமர்வில் அரசுக்கு எதிரான உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டதாகவும் அறிகிறேன். இதுபற்றி மேலும் செய்திகள் நமக்கு வந்து சேரலாம். நீங்கள் ஒப்பிக் கையொப்பமிட்ட கொழும்பு மாநாட்டை நிராகரிக்கக் கோரும் எழுத்தாளர்கள் கலைஞர்களின் கூட்டறிக்கையானது அடிப்படையில் இனக்கொலை எனும் பிரச்சனையில் எழுத்தாளர்கள் மேற்கொள்ள வேண்டிய அறநிலைப்பாட்டையும், இலங்கையில் எழுத்தாளர்கள் கலைஞர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதனையும், கருத்துச் சுதந்திரத்திற்கு அங்கு இடமில்லை என்பதனையும் முன்வைத்திருந்தது. இன்றைய இலங்கையில் நிலவும் சூழலில் நீங்கள் அறுதியாகத் தேர்ந்து கொள்ளும் நிலைப்பாடு எது? துல்லியமான மொழியில் கேட்பதானால், இன்றைய இலங்கையின் இனப்படுகொலை அரசைக் கருத்தில் கொண்டு, கொழும்பு மாநாட்டினை நிராகரித்த தமிழ் எழுத்தாளர்களோடு தங்களை நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்கிறீர்களா? அல்லது கொழும்பு மாநாட்டின் பின்னிருக்கும் அரசியலற்ற இலக்கிய அரசியலோடு தங்களை இணக்கப்படுத்திக் கொள்கிறீர்களா? சிங்கள அரசின் அனுமதியோடும் முழுமையான ஆதரவோடும்தான் மாநாடு கொழும்பில் கூட்டப்படுகிறது என்ற அடிப்படையில் கொழும்பு மாநாட்டை நாம் நிராகரித்தோம். சிங்கள அரசின் அனுசரணை இல்லாமல் மாநாடு நடத்தப்படுவதற்கு வாய்ப்பிருக்க முடியாது என்றும் நாம் நம்பினோம். மற்றபடி கொள்கையில் இருந்து எந்த வகையிலும் எனக்கு மறுப்பில்லை. அரசின் அனுசரனையோடுதான் மாநாட்டை அவர்கள் கூட்டுகிறார்கள் என்றே வைத்துக்கொண்டாலும் அவர்கள் கருத்துக்கு ஒத்த முறையில் நடத்தும் மாநாட்டை நாம் நிராகரிக்க வேண்டியதில்லை என்ற அளவில் மட்டும் நான் பிறகு வேறுபட்டேன். இலங்கையில் எழுத்தாளர்களுக்கு கருத்துச் சுதந்திரம் இல்லை. அரசுக்கு எதிராக அவர்கள் செயல்பட முடியாது என்பதில் எந்த மறுப்பும் இல்லை. கொழும்பு மாநாட்டை நிராகரித்தல் என்ற அளவில் நான் மாறுபடுகிறேனே ஒழிய மற்றபடி (நிராகரித்து) அறிக்கை வெளியிட்ட தமிழ் எழுத்தாளர்களின் கருத்தில் முற்றான உடன்பாட்டோடுதான் நான் இருக்கிறேன். தற்போதைய நிலையில் அரசியலற்ற இலக்கியம் என்பதை முன்வைத்துத்தான் மாநாட்டை அவர்கள் கூட்டியிருக்க வேண்டும். ஆனால் நாம் கேட்கலாம்; அரசியலற்ற இலக்கியமென்று ஏதேனும் இருக்க முடியுமா? திரு. ஞானம் அவர்கள் என்னை வைத்து ஏதோ செய்ய முனைந்தது எனக்கு மரியாதை தருவதாக இல்லை. நான் சொல்லி எவர் கருத்தையும் மாற்றவும் இல்லை. நான் வாழ்த்து தெரிவித்தேன் என்பதற்காக கூட்டறிக்கையில் கையெழுத்திட்ட எழுத்தாளர்களுக்கு எந்த இழுக்கும் நேர்ந்திருப்பதாக நான் கருதவில்லை. இழுக்கு நேர்ந்தது என்று கருதி நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதும் இல்லை. எனக்கு மட்டும் ஏதோ இழுக்கு நேர்ந்ததென்று நண்பர்கள் கருதலாம். மேலும் ஒன்று சிங்கள அரசையோ கொழும்பு மாநாட்டையோ நாம் விமர்சனம் செய்வது ஒரு புறமிருக்க, திரு. ஞானம் அவர்கள் கேட்டுக் கொண்டபடி, ஈழத்துக் குழந்தைகளின் கல்விக்கு, நலிவடைந்த மக்களுக்கு, தமிழ் எழுத்தாளர் என்ற முறையில் நாம் ஏதாவது செய்ய வேண்டாமா? திருமதி. இராஜேஸ்வரி அவர்கள் கேட்டுக் கொண்டபடி, வெள்ளத்தில் அவதிப்படும் மக்களுக்கு நாம் என்ன செய்ய முடியும்? இதுபற்றி நண்பர்கள் ஏதாவது செய்யத்தான் வேண்டும். உங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2011 - க.காமராசன் கி.பழனிச்சாமி என்கிற கோவை ஞானி தமிழக மார்க்சியச் சிந்தனையாளர்களில் ஒருவர். புதிய தலைமுறை, நிகழ், பரிமாணம் முதலான இதழ்களை நடத்தினார்; வானம்பாடி’ இதழுடன் இணைந்து செயல்பட்டார். இப்போது ‘தமிழ்நேயம்’ என்ற இதழை நடத்தி வருகின்றார். நவீன இலக்கியம் முதல் சங்க இலக்கியம் வரையிலானது இவரது விமர்சனச் செயல்பாட்டுப் பரப்பு. மார்க்சியத்தினுள் ஓயாது கேள்விகள் எழுப்பி, புதியன காணும் ஆர்வமுடையவர். அவருடைய கட்டுரைத் தொகைகள் ‘மார்க்சியமும் பெரியாரியமும்’, ‘தமிழியம் தமிழ்த் தேசியம்’, ‘தமிழ்க் கவிதை’, ‘தமிழ் நாவல்’ என்பவை. இவையில்லாமல பல நூல்கள், தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். அவர் ‘உங்கள் நூலகம்’ வாசகர்களுக்காகத் தன் கருத்துகளை இந்நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். - க.காமராசன் நீங்கள் எவ்வாறு மார்க்சியத்தை வந்தடைந்தீர்கள்? நான் கிராமத்துச் சூழலில் பிறந்து வளர்ந்தேன். எங்கள் குடும்பம் மத்தியதர வர்க்கத்தின் கீழ்நிலையிலிருந்த குடும்பம். எங்கள் பெற்றோருக்கு நாங்கள் எட்டுப் பேர். நாங்கள் வாழ்ந்த சோமனூரில் மில் அதிபர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கும் முறையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் வந்து கூட்டங்கள் நடத்தினர். தோழர் ரமணி ஆற்றல்மிக்க பேச்சாளர். கம்யூனிஸ்ட்டுகளைச் சார்ந்திருந்ததால் எங்கள் மனம் கவர்ந்த டாக்டர் பழனிச்சாமி ஊரைவிட்டு விலக்கப்பட்டார். உயர்நிலைக் கல்வி படித்த காலம் முதற்கொண்டும் பின்னர் தமிழாசிரியராகப் பணியாற்றிய போதும் கோவை நகரத்தில் வாழ்ந்தேன். பஞ்சாலைகள் நிறைந்த நகரம் கோவை. மார்க்சிய இயக்கத்தினர் கோவையில் வலுவாக இருந்தனர். இந்தச் சூழலில் மார்க்சியத்தோடு இயல்பாக எனக்கு உறவு ஏற்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தலைசிறந்த பேராசிரியர்களிடம் தமிழிலக்கியம் கற்றேன். பல்கலைக் கழகத்திலிருந்த மாபெரும் நூலகத்தில் பலமுறை நூல்கள் எடுத்துப் படித்தேன். தமிழ் நூல்களைக் காட்டிலும் ஆங்கில நூல்களே அதிக எண்ணிக்கையில் கற்றேன். வரலாறு, அறிவியல், மெய்யியல், இலக்கியத் திறனாய்வு என்று பல துறைகள் சார்ந்த நூல்கள் கற்றேன். உயர்நிலைப் பள்ளிக் காலம் முதற்கொண்டே தமிழின் மீது எனக்குப் பேரார்வம் இருந்தது. எனக்கு வாய்த்த தமிழாசிரியர்களிடம் இன்று வரை பெரிய மரியாதை கொண்டிருக்கிறேன். கிராமச் சூழலில் பிறந்து ஒரு பெருங்குடும்பத்தில் வளர்ந்து வாழ்வில் சிறுவயது முதற்கொண்டே நிறைய கேள்விகளோடு, கேள்விக்கான விடைதேடி, ஓயாமல் படித்துப் பலரோடு தொடர்ந்து விவாதித்து வளர்ந்த எனக்குள் மார்க்சியம் ஆழமாகப் பதிந்ததில் வியப்பில்லை. கல்வித் துறையிலும் என் தேர்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது. கோவையில் மார்க்சியத்தோடு நெருக்கமான உறவு ஏற்பட்ட நிலையில் தமிழிலக்கியத்தை மார்க்சிய நோக்கில் நண்பர்களோ டிணைந்து கற்றேன். இலக்கியத்தை மார்க்சிய நோக்கில் பயில்வதற்கான விதை எனக்குள் தோழர் ஜீவா, தோழர் ரகுநாதன் மூலம் விழுந்தது. எனக்குள் கூர்மையான நோக்கைத் தூண்டியவர் எஸ்.என்.நாகராசனும், எஸ்.வி.இராச துரையும். கிரிஸ்டோபர் கால்டுவெல், ஜே.டி.பெர்னால், டி.டி.கோசாம்பி, டி.பி.முகர்ஜி என்றெல்லாம் மார்க்சிய அறிஞர்களின் நூல்களோடு எங்களுக்கான உறவு வளமானது. மார்க்ஸ், எங்கெல்ஸ் முதலியவர்களின் ஆகச் சிறந்த நூல்களை நாங்கள் ஆழமாகக் கற்றோம். இத்தகைய வாசிப்பு எங்களுக்குள் மார்க்சியம் பற்றிய புரிதலை விரிவாக ஏற்படுத்தியது.தோழர் எஸ்.என்.நாகராசன், எஸ்.வி.இராசதுரை, புலவர் ஆதி முதலியவர்களோடு இணைந்து சிந்தனை மன்றத்தை உருவாக்கினோம். சிறப்பான விவாதங்கள் வழியே மார்க்சியத்தோடு என் உறவு நெருக்கமாயிற்று. 67-68 காலத்தில் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நக்சல்பாரி இயக்கம் எங்களுக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மாவோ சிந்தனைக்கு வசப் பட்டோம். சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவப் போக்கு அதிகரித்துவருவது பற்றிக் கவலைப்பட்டோம். ‘புதிய தலைமுறை’ என்ற மார்க்சிய தத்துவ இதழ் தொடங்கினோம். காவல்துறையின் கண்காணிப்புக்கும் உள்ளானோம். எஸ்.என்.நாகராசன், எஸ்.வி.இராசதுரை முதலானவர்கள் மார்க்சியம் பற்றிய வாசிப்பில் மிகச் சிறந்தவர்கள். இரஷ்யா, சீன நூல்கள் தவிர மேற்கிலிருந்து வந்த மார்க்சிய நூல்களையும் பல ஆண்டுகள் வெறித் தனமாகப் படித்து எங்களுக்குள் விவாதித்தோம். மார்க்சின் 1844 கையெழுத்துப் படிகளிலிருந்த அந்நியமாதலை எஸ்.என்.நாகராசன் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். ‘புதிய தலைமுறை’யில் அந்நியமாதல் பற்றி கட்டுரைகளும் கதைகளும் வெளியிட்டோம். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதிலும் எங்களுக்குள் உறுதியான கருத்து இருந்தது. பாரதிதாசனைப் பாராட்டிக் கட்டுரை வெளியிட்டோம். சங்க இலக்கியம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும் புதிய தலைமுறையில் வெளியிட்டோம். ’புதிய தலைமுறை’ இன்று வரை மார்க்சியர் சிலர் நெஞ்சிலாவது தங்கியிருக்கிறது. மார்க்சிய நோக்கில் இலக்கியம்பற்றி உங்கள் புரிதல் என்ன? இலக்கியம் குறித்து மார்க்சிய பாட நூல்கள் தரும் விவரம்பற்றி நான் இங்குக் குறிப்பிட விரும்பவில்லை. மாறாக இலக்கியப் படைப்பியக்கம் பற்றி என் கருத்தைச் சொல்ல விரும்புகிறேன். முதலில் மார்க்சிடமிருந்து ஒரு மேற்கோள் “Milton Produced Paradise Lost, War the simple reason that a silkworm produces silk, for it has become its own nature.” அதாவது இங்கே மில்டன் சுவர்க்க நீக்கம் என்ற அற்புதமான காப்பியத்தைப் படைத்தற்கு என்ன காரணம் என்பதை மார்க்ஸ் விளக்கு கிறார். பட்டுப்புழு அழகான பட்டை உற்பத்தி செய்கிறது. உடம்பிலிருந்து பட்டை உற்பத்தி செய்வது பட்டுப் புழுவின் இயல்பு. பட்டை உற்பத்தி செய்யாமல் பட்டுப் புழுவுக்கு வாழ்க்கை இல்லை. பட்டை உற்பத்தி செய்யும் பட்டுப்புழுவை, வெந்நீரில் அமிழ்த்திக் கொன்று பட்டைப் பிரித்தெடுக்கின்றனர். பட்டை உற்பத்தி செய்தால் உன் உயிர் போய்விடும் என்று சொன்னால் பட்டுப்புழு கேட்காது. ‘இது என் உயிரியக்கம். சாவு எனக்குப் பெரிதில்லை’ - இப்படிப் பட்டுப்புழு சொல்லக்கூடும். மில்டன் ஒரு மாபெரும் கவிஞர் இங்கிலாந்தில் நாடாளுமன்றத்தை உருவாக்க மன்னனுக்கு எதிராகப் போர் நடத்தியவர் கிராம்வெல். இவரோடு சேர்ந்து செயல்பட்டவர் மில்டன். கொடுங்கோலனுக்கு எதிரான மக்களாட்சியை நிறுவச் செயல்பட்ட போராட்டத்தில் தன்னை மில்டன் இணைத்துக் கொண்டார். இறுதிக் காலத்தில் மில்டனுக்குப் பார்வையில்லை. ஆயினும் தன் வாழ்வியல் அனுபவத்தைத் தன் காவியத்தில் பதிவு செய்கிறார். எல்லாம் வல்லவர் என்று திருச்சபை சொல்லும் கர்த்தருக்கு எதிராகச் சாத்தானின் போராட்டத்தை மில்டன் தன் காப்பியத்தில் பதிவு செய்கிறார். மில்டன் ஒரு பெருங்கவிஞர் அவரால் எழுதாமல் இருக்க முடியாது. எழுதி எழுதித் தனக்குள் படைப்பியக்கத்தைத் தன் காலம் முழுவதும் வளர்த்துக் கொண்டவர். தனக் குள்ளான படைப்பியக்கத்தில் ஈடுபடுவதன் மூலமே தன் வாழ்வின் நிறைவைக் கண்டவர் மில்டன். படைப்பில் தன் உயிரியக்கத்தைக் கண்டவர் மில்டன். மாபெரும் சமூகப் போராட்டத்தில் தன்னைக் கரைத்துக் கொண்டவர். மார்க்சின் இந்த மேற்கோள் எங்கெல்ஸ்க்குப் பிறகு மார்க்ஸ் விட்டுச் சென்ற மூலதனம் பற்றிய குறிப்புகளைத் தொகுத்து கார்ல் காவுட்ஸ்கி என்பவர் வெளியிட்ட ‘கூhநடிசல டிக ளுரசயீடரள ஏயடரந’ என்ற நூலில் காணப்படுகிறது. தொழிலாளி தன் உற்பத்தித் திறன் மூலம் செய்த எந்தப் பொருளுக்கும் விலை மதிப்பை வகுத்துச் சொல்ல முடியும். ஆனால் கலைப்படைப்பின் விலை மதிப்பை இப்படிக் கணக்கிட முடியாது என்பதை விளக்கும் முறையில் மார்க்ஸ் எழுதுகிறார். கலைஞன் தன் உயிரைக் கொடுத்துக் கலைப் படைப்பைத் தருகிறான். உயிருக்கு விலை இல்லை. பேரி லக்கியங்கள் இப்படித்தான் மிகச் சிறந்த கலைஞர்களால் படைக்கப்படுகின்றன. கலைஞனுக்குள் இயங்கும் படைப் பியக்கத்தை இப்படித்தான் புரிந்துகொள்ள முடியும். இரண்டாந்தர, மூன்றாம்தர படைப்புகளுக்கு இந்த விளக்கம் பொருந்தாது. அவை வணிகமுறைப் படைப்புகள், வெற்று எழுத்துக்கள். இவை ஒரு மொழியின் வளர்ச்சிக்கு உதவாது. கம்பர் தன் காவியத்தை எவ்வாறு படைத்தார் என்பது பற்றி ஒரு தனிப்பாடல் கூறுவதை இங்குக் குறிப்பிடலாம். வெண்ணெய் நல்லூர் சடையன் போட்ட சோற்றுச் செருக்கல்லவா. கம்பன் தன் காவியத்தைப் படைக்கக் காரணமாய் இருந்தது என்று அந்தப் பாடல் சொல்கிறது. சில மார்க்சியரும் கலைப் படைப்பை உருவாக்க ஓய்வு நேரம் தேவை என்று தொடங்கி மேலும் சில விளக்கங்கள் தருகின்றனர். நிழலில் ஒருவரை அமர வைத்து, தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் கலைப் படைப்பு உருவாகிவிடுமா என்ன? கம்பன் இப்படியா படைத்திருக்க முடியும். தன்கால வரலாற்று நெருக்கடிகளுக்கிடையில் தனக்குள்ளிருந்து ஒரு எதிர்வினையைப் படைத்துக் கொண்டவன் கம்பன். கம்பனுக்கு அப்படி என்ன நெருக்கடி நேர்ந்தது என்பதற்கு நமக்குச் சரியான விவரங்கள் இல்லை. அம்பிகாபதி காரணமாக குலோத்துங்கச் சோழனால் கம்பன் நாட்டை விட்டு விரட்டப்பட்டான் என்ற தகவல் மட்டும் உண்டு; வேறு விவரங்கள் இல்லை. கம்பன் பெருங்கவிஞன். வரலாற்று இயக்கத்தில் நீந்தியவன். நீந்திக் கரையேறியவன் என்று நம்மால் சொல்ல முடியும். கம்பன் தன் பேரனுபவத்தைத் தன் காப்பியத்தில் பதிவு செய்திருக்கிறார். கம்பர் காவியம் பற்றி எத்தனையோ விளக்கங்கள் தரப்படுகின்றன. மார்க்சிய நோக்கில் நாம் ஒரு விளக்கம் தரலாம். இராவணன் கொடுங்கோலன். தன்னைச் சூழ இருக்கிற எல்லாவற்றையும் தன் ஆதிக்கத்திற்குள் கொண்டு வர நினைத்தவன். அடுத்தவன் மனைவி அழகு என்றால் அவள் தனக்கு வேணும் என்பவன். இவனை முறியடிக்க இன்னொரு மன்னனால் - ஆதிக்கவாதியால் முடியாது. அவன் தன் அரச பதவியைத் துறந்து காட்டில் வேடர் களோடு அலைந்து அநாகரிகர் என்று சொல்லப்படும் மக்களோடு உறவு கொண்டு, இப்படியெல்லாம் தன் ஆளுமையைத் திரட்டிக் கொண்டு, அதன் பின்னர்தான் ஒரு கொடுங்கோலனை முறியடிக்க முடியும். கம்பரின் இராமன் இத்தகையவன். பின்னர் அரசு பதவி இவனுக்குக் கிட்டும் பொழுது தன் மனைவியைத் தீக்குளிக்கச் செய்கிறான்; காட்டுக்கு அனுப்புகிறான். 3, 4 நூற்றாண்டுகள் படை நடத்தி நாடுகள் பிடித்து உருவான சோழப் பேரரசு எத்தகையதாக இருந்திருக்க முடியும்? நாட்டில் மன்னன் உட்பட எத்தனையோ இராவணர்கள் இல்லாமல் அரசர் ஆதிக்கம் நிலை பெறாது. இவர்களுக்கு எதிராக மக்கள் திரண்டு போரிட அக்காலத்தில் முடியாது. ஆகவே கடவுள் மனிதனாக வந்து பலவகையில் அனுபவம் பெற்று அப்புறம் கொடுங் கோலனை முறியடிக்க வேண்டும். கம்பர் காவியத்தில் நாம் காணும் வர்க்கப் போராட்டம் என்று இதனைத்தான் சொல்ல முடியும். பேரிலக்கியங்கள் இப்படித்தான் இயங்குகின்றன. மார்க்சிலிருந்து இன்னொரு மேற்கோள். பயர்பாக் ஆய்வுரைகளில் இடம் பெறுவது இந்த மேற்கோள். மார்க்ஸ் எழுதுகிறார்: “சூழல் மனிதனைப் பாதிக்கிறது என்பது உண்மையில் ஒரு பாதி மட்டும் - இன்னொரு பாதி, சூழலுக்கு எதிராக மனிதன் செயல்பட்டு அதனை மாற்று கிறான்.” வெறும் பிரதிபலிப்பு மட்டும் மனிதனின் சுய ஆளுமையை உருவாக்க முடியாது. சமூக முரண்பாடு களுக்கிடையில் சிக்கித் திணறிப் போராடி அதன் மூலம் தன் ஆளுமையைப் படைத்துக் கொள்பவன் மனிதன். இம்முறையில்தான் படைப்பாளுமை உருவாகிறது. வரலாற்றில் வளர்ச்சி ஏற்படுவதும் இப்படித்தான். ஒரு கலைஞனுக்குள் மட்டுமல்லால் அறிவியலாளன், மெய்யிய லாளன் முதலியவர்களுக்குள்ளும் படைப்பியக்கம் இவ்வாறு தான் செயல்படுகிறது. மார்க்சுக்குள்ளும் படைப்பியக்கத்தை இப்படியே காணலாம். இலக்கியம் குறித்து மேலும் ஒன்றைச் சொல்லலாம். தமிழிலக்கியத்தை நம் சமகாலத் தேவைக்கேற்ப மறு வாசிப்பு செய்ய முடியும்; வேண்டும். சான்றாக, சிலப்பதிகாரம் பற்றி இங்குச் சொல்வோம். கோவலன் பாண்டிய நாட்டிற்குத் தொழில் செய்ய வந்து சேர்கிறான். கோவலன் அந்நியன், வெளியிலிருந்து வந்தவன். கோப்பெருந்தேவியின் சிலம்பைப் பழுதுபார்க்க வந்த பொற்கொல்லன் அதை மறைத்துவிட்டு, களவு போயிற்று என்றான். தண்டனைக்கு அஞ்சியிருந்தவன் முன் கோவலன் சிலம்போடு வந்து நிற்கிறான். கோப்பெருந்தேவியின் ஊடல் தீர்க்க மனக் கலவரத்தோடு இருந்த பாண்டியன் பொற்கொல்லனை நம்பி காவலர் இருவரை அனுப்புகிறான். கோவலன் முகத்தைப் பார்த்த ஒரு காவலன் அவன் நல்லவனாகத் தென்படுகிறானே என்றான். மற்றவனோ அவன் கையில் சிலம்பு இருக்கிறது அவன் கள்வன். அவனைக் கொல்வது நமக்கு அரசனிட்ட ஆணை என்று அவனைக் கொன்றான். கையில் சிலம்போடு மதுரைத் தெருக்களில் கண்ணகி கதறினாள். நீதி தவறிய இந்த நகரில் தெய்வம் இருக்க முடியுமா? சான்றோர் இருக்க முடியுமா? கற்புடைய மகளிர் இருக்க முடியுமா? என்று கதறினாள். கண்ணகி வழக்குரைத்தாள். பாண்டியன் தன் தவறுணர்ந்து செத்தான். அவனோடு அவன் மனைவியும் செத்தாள். அநீதி நடைபெறுவதைத் தெய்வம் தடுத்திருக்க வேண்டும். சான்றோர் தலையிட்டிருக்க வேண்டும். நீதி தவறியது இந்த நகரம். இந்த நகரம் தீயில் எரிவதற்குத் தகுதி யுடையது. கண்ணகி மதுரையை எரித்தாள். இது கலைஞனின் நீதி. சிலப்பதிகாரத்தை இன்னும் நம் காலத்திற்கு ஏற்ற முறையில், நம் அனுபவத்திற்கு ஒத்த முறையில் மறுவாசிப்பு செய்ய முடியும். இதே போல மணிமேகலையையும் மறு வாசிப்பிற்கு உட்படுத்தலாம். இப்படிச் செய்யும் பொழுது தமிழிலக்கியம் முழுவதும் நமக்கு நெருக்கமாக வரும். தமிழிலக்கியத்தையும் மறுவாசிப்பு செய்வதற்கு இடம் உண்டு. மார்க்சியர்தான் இதைச் செய்ய முடியும். உலக மயமாதல் என்ற நெருக்கடிச் சூழல் நம்மைத் தொடர்ந்து அழுத்தும் நிலையில் தமிழிலக்கியத்திலிருந்து நமக்கான ஆற்றலைப் பெற முடியும். மார்க்சியம் பற்றிய சரியான புரிதல் இதற்கு உதவும். தமிழில் மார்க்சிய நோக்கிலான இலக்கியத் திறனாய்வு எவ்வாறு நடைபெறுகின்றது? பெரும்பாலான மார்க்சியத் திறனாய்வாளர்கள் இலக்கியத்தில் அரசியலுக்கு, குறிப்பாகக் கட்சி அரசியலுக்கு முதன்மை தரும் நோக்கில் திறனாய்வு செய்துவந்தனர். இன்றைக்கும் இப்போக்குத் தொடர்கிறது. இலக்கியத்தின் கலையியல் / அழகியல் அம்சத்தை ஒரத்துக்கு ஒதுக்கிவிட்டு அரசியலுக்கு அழுத்தம் தரும் போக்கு ஸ்டாலின் காலத்தில் முன்நிலைக்கு வந்தது. ஸ்டாலின் அவர்களின் கலாசாரத் துறை அமைச்சர் ஸ்டானோ பெயரால் இப்போக்கு ஸ்டானோவியம் என்று அழைக்கப்பட்டது. இத்தகைய போக்கு தமிழிலக்கியச் சூழலுக்குள்ளும் வந்தது. க.நா.சு. மௌனி முதலிய படைப்பாளிகளை மார்க்சியர் அக் காலத்தில் சாடினார். கலை மக்களுக்காக என்ற கூற்றுக்கு அழுத்தம் தந்து இலக்கியம் பிரச்சாரம் செய்யலாம் என்று கூறியதோடு, பிரச்சாரம் செய்யாத இலக்கியம் என்று எதையாவது கூறமுடியுமா? என்றும் கேள்வி எழுப்பினர். தட்டில் வைத்து வழங்கலாமா, கூடாதா? என்றெல்லாம் கேள்வி எழுப்பினர். பிரச்சாரம் மறைமுகமாக இருக்கலாம் என்றனர். கலையம்சத்திற்கு முதன்மை தருபவர்களை முதலாளியக் கூலிகள் என்றும் சாடினர். இலக்கியத்தை அதன் அழகியலோடு சேர்ந்து பயில வேண்டும் என்பதை மார்க்சியர் அவ்வளவாக ஏற்கவில்லை. இன்று பார்க்கும் பொழுது மார்க்சியருக்கு இவையெல்லாம் கசப்பான அனுபவங்கள். இத்தகைய போக்கு மார்க்சியத்தின், மார்க்சிய இலக்கியத் திறனாய்வின் இன்றியமையாத கூறாக மார்க்சிய மூலவர்களிடம் இருந்ததில்லை என்பதைத் தொடக்ககாலத் தமிழ் மார்க்சியர் பெரும்பாலும் அறிந்துகொள்வதில்லை. ஷேக்ஸ்பியரை மார்க்ஸ் கொண்டாடினார். பால்சாக்கை எங்கெல்ஸ் போற்றினார். நல்ல வேளை டால்ஸ்டாயை லெனின் பாராட்டவில்லையென்றால் டால்ஸ்டாய் நம்மைப் பொறுத்தவரை கிறித்துவ சந்நியாசியாக நாம் ஒதுக்கியிருப்போம். லெனின் தன் இறுதிக் காலத்தில் ஜெர்மானிய இசைப் பேரறிஞர் பீத்தோவின் இசையைக் கேட்க மாஸ்கோ தியேட்டருக்கு குரூப்ஸ்கயா அழைத்துச் சென்றபோது அந்த இசை லெனினுக்குள் மெல்ல மெல்ல நுழைந்து முழுமையாக அவரை ஆக்கிரமித்துக்கொண்ட நிலையில் திடீரென எழுந்து மண்டபத்தைவிட்டு வெளியேறினாராம். இசைக்கு முற்றாகத் தான்வயப்படுவதை லெனின் விரும்பவில்லை. தன் அரசியல் பொறுப்பு கெடும் என்பது அவரது கருத்து. உண்மைதான். லெனின் போன்ற நுண் உணர்வாளர்தான் தன்னிகரற்ற அந்த இசைக் கலையை முழுமையாக உணர முடியும். மாயகோவ்ஸ்கியின் புதுக்கவிதையை லெனின் தொடக்கத்தில் மறுத்த போதிலும் பள்ளி மாணவர் மாய கோவ்ஸ்கியின் கவிதைகளை விரும்பிப் பாடிய பொழுது லெனின் மனம் கசிந்து மயாகோவ்ஸ்கியின் கவிதை நூல்கள் எல்லா நூலகங்களிலும் இடம்பெற ஏற்பாடு செய்தாராம். இத்தகைய பேரனுபவங்கள் முன்பே நமக்குத் தெரிந்திருந்தபோதிலும் தமிழக / இந்தியச் சூழ்நிலையில் அரசியல் மாற்றத்திற்கே அழுத்தம் தந்து கலையுணர்வை நம்மவர் புறக்கணித்தனர். வானம்பாடிக் கவிதைகளுக்குத் தொடக்கத்தில் மார்க்சியக் கட்சி வட்டாரத்திடம் எத்தனை கடுமையான எதிர்ப்பு நிலவியது என்பது நம் அனுபவம். பேரா.சிவத்தம்பி அவர்கள் எண்பதுகளின் இறுதியில் சென்னையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், தொடக்க காலத்தில் அரசியலுக்கு அழுத்தம் தந்த நிலையில் மௌனி போன்றவர்களின் இலக்கிய ஆளுமையை நாங்கள் கண்டு கொள்ளவில்லை என்றார். சோவியத்தின் ஒன்றியம் தகர்ந்த நிலையில் அவர்களின் இலக்கியக் கொள்கை அப்படியே ஏற்றுக்கொண்டதன் மூலம் நாங்கள் தவறு செய்தோ மென்று தொ.மு.சி. ரகுநாதன் அவர்கள் எழுதினார். சிதம்பர சுப்பிரமணியனின் இதயநாதம் என்ற நாவலில், இசையில் தன்னை மூழ்கடித்துக் கொண்ட கலைஞர் ஒருவர் தன் வாழ்வின் ஒரு கட்டத்தில், குரல் உடைந்த பின்னர் தன் மனத்திற்குள்ளேயே ஓயாமல் இசை எழுப்பிக் கொண்டு தனக்குத்தானே பரவசப்பட்டுக் கொண்டது பற்றி கலாநிதி கைலாசபதி அவர்கள் எழுதும்பொழுது, இந்த இசைக் கலைஞரோட அனுபவம் நம்மைப் பாதிக்கிறது என்றாலும், ஏன் என்பது புரியவில்லை என்று எழுதினார். தோழர்.பொன்னீலன் அவர்களின் ‘புதிய தரிசனம்’ நூல் வெளிவந்தபோது கட்சி மார்க்சியரில் ஓரிருவர் தவிர பெரும்பாலானவர்கள் அந்த நாவலைச் சாடினர். அற்புத மான கலைப் படைப்பு என்ற போதிலும் அந்த நாவலில் சோவியத் ரஷ்யாவை, இந்திராகாந்தியின் நெருக்கடிகால பிரகடனத்தை, இதை இந்தியப் பொதுவுடைமைக் கட்சி ஏற்றுக்கொண்டதைப் பொன்னீலன் விமர்சனம் செய்தது கட்சி வட்டாரத்திற்குப் பிடிக்கவில்லை. பொன்னீலன் அவர்கள் ‘கொள்ளைக்காரர்’ நாவலில் புரட்சியாளர் களோடு தன்னை இணைத்துக் கொண்ட புஷ்பபாய், சிலுவையில் அறையப்பட்ட இயேசு நாதர் படத்தைப் பார்த்து மனம் நெகிழ்ந்து இயேசுவும் ஒரு புரட்சிக்காரர், அவர் பாதையில்தான் நானும் செல்கிறேன் என்று தன்னை உணர்ந்து குறிப்பிட்டதை நாவலுக்கு முன்னுரை எழுதிய பேரா.வானமாமலை கண்டுகொள்ளவே இல்லை. சங்க இலக்கியம் தொடங்கி, தமிழிலக்கியத்தின் தொன்மையை மார்க்சியர் மறுத்தே வந்திருக்கின்றனர். கலை முதலிய உணர்வுகள் மேல் கட்டுமானத்தைச் சார்ந்தவை என்றே கருதினர். பண்பாட்டுத் தளமும் இத்தகையது என்றனர். கலை உணர்விலிருந்து மனிதனைப் பிரித்துப் பார்க்கவே முடியாது. கலை உணர்வு மனிதனின் ஒரு உள்ளுறுப்பு. மேல்பூச்சன்று. கதையில்லாமல், கலை இல்லாமல், இசை இல்லாமல், இலக்கியமில்லாமல் மனிதனில்லை. தமிழ் மார்க்சியம் என்று நீங்கள் பேசிவருவதைச் சற்று விளக்கமாகக் கூறமுடியுமா? சங்க காலத்திற்கு முன்னர் நிலவியது ஆதிப் பொதுமைச் சமூகம் - இனக்குழுச் சமூகம் என்பது மார்க்சியர் பலருக்கும் ஒத்த கருத்து. இனக்குழுச் சமூகத்தில் ஆண்டான் அடிமை யில்லை. ஏற்றத்தாழ்வு இல்லை. கிடைப்பதை எல்லோரும் பகிர்ந்து கொள்கின்றனர். முதியவர்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அப்புறம் கலைஞர்களுக்கும் முதற்பங்கு. அடுத்து இருப்பதை அனைவரும் பகிர்ந்து கொள்கின்றனர். அடுத்து வந்த காலத்தில் தனியுடைமையும் அரசதிகாரமும் ஏற்பட்ட சூழலில் முந்திய காலத்துப் போக்கு மறையத் தொடங்குகிறது. படைவலிமையோடு வரும் வேந்தர்கள் பாரி முதலிய வேளிர்களை ஒழிக்கின்றனர். புலவர்களுக்கும் வறியவர்களுக்கும் செல்வத்தைப் பகிர்ந்து கொடுக்கும் கோப்பெருஞ்சோழன், தன் மக்கள் எதிர்ப்புக் காரணமாகப் புலவர்களோடு வடக்கிருந்து சாகிறான். அரசன் தோட்டத்து மாம்பழத்தைத் தின்ற பெண்ணை நன்னன் கொலை புரிகிறான். இளங்குமணன் தன் அண்ணன் குமணனைக் காட்டுக்குத் துரத்துகிறான். ஒரு தலைவனும் தலைவியும் இயல்பாகச் சந்தித்துக் காதல் கொண்டு களவு மணம் புரிவதைக், குலமும் செல்வமும் கருதிப் பெற்றோர் தடை செய்ய, காதலர் ஊரை விட்டு ஓடுகின்றனர். சமூகம் மாறிவிட்டது. தனியுடைமை உள்ளே வந்து சமூகத்தைப் பிளவுபடுத்துகிறது. அரசாதிக்கம் உறவுகளை, குணங்களை அழிக்கிறது. நாகரிகம் இப்படி கோரமாக உள்ளே வருகிறது. ஆதிப்பொதுமைச் சமூகத்தின் பொதுமைப் பண்பாட்டை இன்னும் பற்றிக் கொண்டு வாழ விரும்புகிற தமிழ்ச் சான்றோர் பதறுகின்றனர். ஒரு தெருவில் ஒரே சமயத்தில் ஒரு வீட்டில் மணப்பறையும் இன்னொரு வீட்டில் சாப்பறையும் முழங்கும் முறையிலான சமூகப் பிளவு இவர்களுக்கு உடன்பாடில்லை. எனினும் பொதுமைப் பண்பாட்டைத் தொடர்ந்து தமிழ்ச் சான்றோர் சமூகத்தில் காத்து நிற்கின்றனர். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்கின்றனர். ‘செல்வத்துப் பயன் ஈதல்’ இல்லையென்றால் தவறுகள் நேரும் என்கின்றனர். இப்படித் தமிழ்ச் சான்றோர் கதறுகின்றனர், மன உறுதியோடு மன்னரோடு உரையாடுகின்றனர். உடைமையும் அரசதிகாரமும் உள்ளே வந்து சமூகம் பிளவுபட்ட நிலையிலும், அப்பிளவை ஒப்புக்கொள்ளாமல், பண்பாட்டைத் தமக்குள் தாங்கி, சமூக நீரோட்டத்தில் தக்க வைக்கும் முறையில் கவிதை எழுதுகின்றனர். அறம் உரைக் கின்றனர். இலக்கியம் படைக்கின்றனர். வள்ளுவரும் இளங் கோவும் இந்த அறத்தை உறுதியாகப் பற்றி நிற்கின்றனர். தமிழிலக்கியம் முழுவதும் நிலத்தடி நீர் போல இந்தப் பொதுமைப் பண்பாடு, தமிழறம் நிலவுகிறது. சித்தர் முதலியவர்கள் இந்தப் பண்பாட்டின் விளைச்சல். இந்தப் பண்பாட்டிற்கு இப்பொழுது நாம் வைத்துள்ள பெயர் சமதர்மம். தமிழ்ச் சான்றோர்களுக்குள் மட்டுமல்லாமல் காலம் முழுவதும் உழவர்களுக்குள்ளும் நம் தாய்மார்களுக் குள்ளும் நமக்குள்ளும் இந்தப் பண்பாட்டையே நாம் பேணி வருகிறோம். பகிர்ந்துண்ண விரும்புகிறோம். செல்வச் செருக்கைச் சாடுகிறோம். வரலாற்றில் எத்தகைய மாற்றங்கள் நேர்ந்த போதிலும் பண்பாடு என்ற சாரம் வரலாற்றுக்குள் தொடர்கிறது. இத்தகைய சாரத்திலிருந்து தான் மார்க்சியம் தழைக்கிறது. இந்தப் பேருணர்விற்கு, பண்பாட்டு மேன்மைக்கு, கம்பர் அந்நியமாக முடியாது. காலம் முழுவதும் நமக்குள் கனவாக, கற்பனையாக, பேராசையாகத் தொடர்ந்துவரும் இந்தப் பொதுமைப் பண்புதான் கம்பர் காவியத்தினுள்ளும் இடம் பெறுகிறது. மார்க்ஸ் கூறும் சமூக மாற்றத்தை நாம் ஏற்கிறோம். அடிமைச் சமூகம், ஆதிக்க சமூகம் என்றெல்லாம் மாற்றம் நேரும் பொழுது ஆதிக்கவாதிகளுக்குப் பண்பாடு, பொதுமைப் பண்பாடு தேவையில்லை. ஆனால் உழைக்கும் மக்கள் இந்தப் பண்பாடில்லாமல் வாழ முடியாது. உழைக்கும் மக்கள், தாம் பகிர்ந்து கொள்கின்றனர். இதைத்தான் தமிழ்ச் சான்றோரும் உழைக்கும் மக்களும் போற்றுகிற தமிழறம் என்று நான் குறிப்பிடுகிறேன். தமிழ் மார்க்சியம் என்று நான் குறிப்பிடுவதும் இதைக் கருதித்தான். லெனின் கூற்றில் ஒன்று ‘முன்னைய பண்பாட்டு மரபோடு மார்க்சியம் இணங்கிச் செல்ல வேண்டும். அதாவது முன்னைய மரபிலிருந்து மார்க்சியத்தை வளர்த்தெடுக்க வேண்டும்’ என்பது. தமிழ்ச் சூழலில் மார்க்சியத்தைப் பயிரிடுவதற்குத் தமிழ்மண் இடந்தருகிறது. தமிழ் மரபோடு இணைந்து செல்லும் மார்க்சியமே வளமாக, வளமை உள்ளதாக அமைய முடியும். மாவோ தன் தொன்மைச் சீன மரபோடு மார்க்சியத்தை இணைத்தார் என்று கூறுகிறோம். தமிழ் மரபும் இத்தகைய முறையில் மார்க்சியத்தைத் தனக்குள் வைத்து வளர்க்கும். தமிழ் மரபு அறியாதவர்கள், தமிழ் மரபை ஒதுக்கும்பொழுது, அவர்கள் முன்வைக்கும் மார்க்சியம் தமிழ்மக்கள் நெஞ்சில் பதிவதில்லை. மார்க்சியத் திறனாய்வாளர் பலரிடம் இந்தக் குறைபாட்டைக் காணமுடியும். மார்க்சியத்தை நீங்கள் இந்துத்துவத்தோடு இணைத்துப் பேசுவதாகக் கூறப்படுகிறது. இதற்கு உங்கள் பதில் என்ன? இந்துத்துவத்தோடு, அது முன்வைக்கும் வருண முறையோடு மார்க்சியத்தை எவராலும் இணைத்துப் பேச முடியாது. சமயத்தையும் மார்க்சியத்தையும் ஓரளவிற்குச் சில அம்சங்களில் நான் நெருக்கமாக வைத்துப் பேசுகிறேன். இதன் காரணமாக நான் இந்துத்துவத்தை ஏற்கிறேன் என்று சிலர் கருதுவதுண்டு. இது பற்றிப் பிறகு பேசலாம். அதற்கு முன் சில விசயங்கள். சமயம் பற்றி மார்க்ஸ் முதலியவர்களின் கருத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்டவர் களின் ஏக்கப் பெருமூச்சு மதம் என்றும், ஒடுக்கப்பட்ட சூழலுக்கு எதிரான கலகக்குரல் மதம் என்றும் மார்க்ஸ் எழுதினார். இதயமற்ற உலகின் இதயம் என்றும், ஆன்மா அற்ற உலகின் ஆன்மா என்றும் மார்க்ஸ் தொடர்ந்து எழுதினார். எதார்த்தத்தைத் தலைகீழாக்கிப் பார்க்கிறது மதம் என்றார். இவற்றைத் தொகுத்துச் சொல்லும்போது மதம் மக்களுக்கு அபின் என்றார். சுரண்டலும் ஒடுக்குமுறையும் இவற்றின் காரணமாக வறுமையும் நோய் நொடிகளும் பிற துயரங்களும் மனிதர்களை நொறுக்கும்போது, அவர்கள் தம் உயிரைத் தக்கவைத்துக் கொண்டு குறைந்த அளவுக்கேனும் மூச்சு விட்டுக்கொள்ள வேண்டும். இந்தப் பணியைத்தான் மதம் செய்கிறது. கடவுள் கருணை மிக்கவர். இன்று இல்லா விட்டால் என்றேனும் ஒரு நாள் நல்வாழ்வு கிட்டும் என்று மதவாதி சொல்கிறான்; மக்கள் நம்புகின்றனர். ஒடுக்கப் பட்ட மக்கள் கடவுளே உனக்குக் கண்ணில்லையா என்று கடவுளைச் சாடும் பொழுது இது கடவுளை நோக்கிய கலகக்குரல் ஆகிறது. உலகிற்கு இதயமில்லை. இந்நிலையில் மக்களுக்கு இதயமாக, ஆன்மாவாக மதம் அமைகிறது. மதம் மக்களுக்கு அபின் என்பதும் உண்மைதான். அபின் போதையும் தருகிறது. தீக்காயம் பட்ட நிலையில் அந்தத் துன்பத்தை மறக்கடிக்கும் நிலையில் மார்பினாகவும் மதம் பயன்படுகிறது. இப்படி மார்க்ஸ் குறிப்பிடும்போது மதம் பற்றி நமக்கு ஓரளவுக்கேனும் தெளிவு ஏற்பட வேண்டும். விண்ணுலகில் தெய்வங்களுக்கிடையில் நடைபெறும் சாடல்கள், சண்டைகள், மண்ணுலகத்தில் மனிதர்களுக் கிடையே நடைபெறும் சச்சரவுகளின் பிரதிபலிப்புதான் என்றார் மார்க்ஸ். மதம் காட்டுவது தலைகீழான உலகம் என்பதும் மார்க்சின் கூற்று. எங்கெல்ஸ் கூற்றின்படி மதத்தினுள்ளும் நடை பெறுவது வர்க்கப் போராட்டம். ஜான்லெவிஸ் என்ற பிரிட்டிஷ் மார்க்சிய அறிஞர் மதம் பற்றிய தெளிவுக்கு நமக்கு ஒரு திறவுகோல் தந்திருக்கிறார். மதத்தின் மேலடுக்கு புரோகிதம் என்கிறார். விக்கிரகம், கோவில், திருவிழா, சடங்கு, சாத்திரங்கள், புராணங்கள் முதலியவை மேலடுக்குப் புரோகிதருக்கு இவை தேவை. ஆனால் மதத்தின் உள்ளடுக்கு / உள்ளீடு வேறு என்கிறார். இறைவன் அன்பு மயமானவன். எங்கும் இருக்கிறார். எல்லோருக்குள்ளும் இருக்கிறார். எல்லோருக்கும் படைத்த உலகம் எல்லோருக்கும் உரியது. எல்லோருக்கும் நல்வாழ்வு தருபவன் இறைவன். தீமைகள் ஒருநாள் ஒழியும். இறைவனின் தேவ அரசு எல்லோருக்கும் உரியது. இறைவன் முன்பு எல்லோரும் சமம். இது சமயத்தின் உள்ளீடு. இனக்குழுச் சமூகத்தில் நிலவிய ஆதிப்பொதுமைப் பற்றி நாம் அறிவோம். இந்தப் பொதுமைப் பண்பே மதங்களின் உள்ளீடாக அமைகிறது. இயேசு, புத்தர் என்று எவரை எடுத்துக் கொண்டாலும் இந்த உள்ளீடு பற்றியே கவனம் குவிக்கின்றனர். இவர்கள் அனைவரும் புரோ கிதத்தைச் சாடுகின்றனர். மதத்தின் இந்த இரண்டடுக்கு களுக்கிடையில் கலவரங்கள் ஓய்வதில்லை. ஆகவே தான் வெவ்வேறு மதங்கள் தோன்றுகின்றன. இத்தகைய மதத்தின் உள்ளீடுதான் நெருக்கடிகளுக்கிடையில் மக்களுக்கு ஆறுதல் தருகிறது. இதயமற்ற உலகின் இதயம் என்பது இதுதான். புரோகிதர்களுக்கு முதலாளிகள் ஆளும் வர்க்கத்தின் ஆதரவு வேண்டும். மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களோடு புரோகிதர் / மதவாதிகள், மதபீடங்கள் எப்போதும் ஒத்துழைக்கின்றனர். விக்கிர கங்கள், வழிபாடுகள், புராணங்கள் சொல்லி மக்களை மயக்கி ஆதிக்கத்திற்கு இவர்கள் மக்களை அடிபணிய வைக்கின்றனர். இவர்கள் முன்வைப்பது தலைகீழான உலகம். மேலுலகில் நீங்கள் இன்பமாக வாழ முடியும். இப்பொழுது துயரங்களைச் சகித்துக் கொள்ளுங்கள் என்பவர்கள் இவர்கள். சுரண்டலும் ஒடுக்குமுறையும் நிலவும் காலம் முழுவதும் மதங்கள் நிலவும். புதிய மதங்களும் உற்பத்தி யாகும் நவீன மதங்களும் உற்பத்தியாகும். மார்க்ஸ் சரியாகவே சொன்னார். அரசு இருக்கும் வரை மதமும் இருக்கும். அப்படியானால் மதத்தின் ஆதிக்கத்தை ஒழிக்க என்ன வழி. பகுத்தறிவு பிரச்சாரம் செய்து ஆதிக்கத்தைத் தகர்க்க முடியாது. மாறாக 1949க்குப் பிறகு சீனாவில் செய்தது போலச் சிலவற்றைச் செய்யலாம். கிறித்தவ பாதிரிமார்களை ஓரிடத்தில் கூட்டி வைத்து, சீனமக்கள் உங்களை, உங்கள் கோவில்களைத் தாங்குவார்கள், அந்நியரிடம் உதவி கேட்க வேண்டாம் என்றனர். சில ஆண்டுகள் கழித்துக் கோவில்களுக்கு இருக்கும் நிலச் சொத்துகள் உழைக்கும் மக்களுக்குத் தேவை என்றனர். கோவில் வழிபாடு முதலியவற்றிற்கான செலவை மக்கள் தருவர் என்றனர். நிலவுடைமை மக்களுக்கு மாறியது. இந்நிலையில் கோவிலுக்குச் செல்லும் மக்கள் தொகை குறைந்தது. என் கருத்துப்படி சமயத்தின் உள்ளீடாக சமத்துவம் இருக்கிறது, சமதர்மம் இருக்கிறது. விவேகானந்தர் அத் வைதவாதி. அனைத்தும் பிரம்மம் என்றால் வெள்ளையர் ஏன் இந்தியரை ஆள வேண்டும்? பிராமணன் எவ்வகையில் உயர்ந்தவன்? இப்படிக் கேள்விகள் கேட்டுத் தேசமும் அனைத்துச் சொத்துக்களும் எல்லோருக்கும் உரியவை, சமதர்மமே மனிதப் பண்பாடு என்றார். தென்அமெரிக் காவில் தோன்றிய விடுதலை இறையியல் இயேசுவைப் புரட்சியாளராகக் கண்டது. அரசு ஆதிக்கம், மதபீடங்கள் முதலியவற்றின் ஆதிக்கத்திலிருந்து இயேசு மக்களை விடுதலை செய்ய முயன்றது போல நாமும் செய்ய வேண்டும். இது விடுதலை இறையியல். இத்தகைய போக்கு எல்லா மதங்களுக்குள்ளும் உண்டு. புரோகிதம் நமக்கு எதிரானது. மதங்களின் உள்ளீடு நமக்கு அனுசரனையானது. மார்க்சியரால் இதைப் புரிந்து கொள்ள முடியும். மதத்தைச் சாடிப் பயனில்லை. மக்களை நெருங்கிச் செல்வதற்கு மதம் பற்றிய புரிதல் மார்க்சி யருக்குப் பெரிதும் பயன்படும். இந்துத்துவத்திற்கு ஆதிக்கம் தேவை; பிராமணர் தேவை; முதலாளிகள், இராணுவம், அணுகுண்டு முதலிய அனைத்தும் தேவை. ஆதிக்கங்களி லிருந்து மக்களுக்கான விடுதலை மட்டுமே மார்க்சியனுக்கு தேவை. ‘மார்க்சிய மெய்யியல்’ என்று பேசி வருகின்றீர்களே, அதைப் பற்றிச் சொல்லுங்கள்…? இதுவரையிலான தத்துவங்கள் உலகை விளக்கின. ‘இனி நாம் செய்ய வேண்டியது இந்த உலகை மாற்றுவது தான்’ என்று உறுதியாக மார்க்ஸ் எழுதினார். உயிரியல் விஞ்ஞானம் முழு வளர்ச்சி பெற்ற பிறகு தத்துவத்திற்கு இடமில்லை என்பதாக எங்கெல்ஸ் கூறினார். லெனின், மாவோ முதலியவர்களும் மேலும் சில / பல விளக்கங்கள் கூறினர். இயங்கியல்தான் மார்க்சியத்தின் தத்துவம் என்ற கூற்றும் உண்டு. இவ்வகைக் கூற்றுகளை நாம் மறுப்பதில்லை. காரணம் மார்க்சிய மூலவர்களை நாம் மறுக்க முடியாது என்பதால்தான். இவை பற்றிய ஆய்வுக்கு விரிவான இடமுண்டு. 1844 கையெழுத்துப் படிகளில் மார்க்ஸ் தந்த ஒரு விளக்கத்திலிருந்து தொடங்கலாம். இயற்கையிலிருந்தும் சமூகத்திலிருந்தும் தன்னிலிருந்தும் அந்நியப்பட்ட மனிதன், பின்னர் வரலாற்றின் இன்னொரு கட்டத்தில் மீண்டும் இயற்கையோடும் சமூகத்தோடும் தன்னோடும் ஒன்றுபடுவான். அந்நிலையில் மனிதன் அந்நியமாதலி லிருந்து விடுபடுவான். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் - அதாவது ஆதிப் பொதுமைச் சமூகத்தில் மனிதன் இயற்கையோடு ஒன்றியிருந்தான். அவனை உள்ளடக்கிய சமூகத்தில் பிளவு இல்லை. அவன் தனக்குள்ளும் பிளவுபடவில்லை. வரலாறு என்று அறியப்படுகிற காலச்சூழலில் சமூகத் திற்குள் தனியுடைமை, அதிகாரம் முதலியவை தோன்றின. மனிதர் அனைவருக்கும் பொதுவாக இருந்த இயற்கை இப்பொழுது சிலருக்கு வசப்பட்ட நிலையில் இயற்கையி லிருந்து பலர் பிரிந்தனர் / விலகினர் / விலக்கப்பட்டனர். சமூகத்தினுள்ளும் உடைமையாளன் / உடைமையற்றவன் என்ற பிளவு ஏற்பட்டது. உடைமையற்றவன் உழைப்பாளி. உடைமைக்காரனுக்காக உழைக்க வேண்டும். நிலத்தின் மீது, இயற்கையின் மீது அவனுக்கு உரிமையில்லை. முன்பு ஒன்றாக இருந்த சமூகம் இப்பொழுது தனக்குள் பிளவு படுகிறது. நாளடைவில் பிளவுகள் அதிகரிக்கின்றன. இத்தகைய சூழலில்தான் உடைமையற்றவன், உடைமை யாளனுக்காக உழைக்க நேர்ந்த பிறகு துன்பங்கள், துயரங்கள் அதிகரிக்கின்றன. முன்பு தனக்குள் ஒன்றியிருந்தவன் இப் பொழுது தனக்குள் பிளவுபடுகிறான். எப்படி இது நேர்ந்தது என்பது அவனுக்குப் புரியவில்லை. தனக்குள் கேள்விகள் எழுகின்றன. இந்நிலைக்கு என்ன காரணம்? யார் காரணம்? இந்த நிலை என்று மாறும்? எப்பொழுது மாறும்? சுரண்டலும் ஒடுக்குமுறையும் பல மடங்கு அதிகரிக்கும் பொழுது பேரவலங்களுக்கு உள்ளான நிலையில் மத வாதிகள், கடவுள், ஆன்மா, வழிபாடு, சடங்கு, பாவம், புண்ணியம் என்றெல்லாம் பேசும் நிலையில், நான் யார்? என் வாழ்வுக்கு அர்த்தம் என்ன? நான் எங்கிருந்து வந்தேன்? எங்கே நான் போக வேண்டும்? எதைச் செய்தால் என் கடமை தீரும்? யாரை நான் நம்ப வேண்டும்? இறைவன், ஆன்மா என்றெல்லாம் சொல்வதன் உண்மை என்ன? இத்துயரம் என்றாவது தீருமா? வேறு வழியில்லையா? என்றெல்லாம் மனிதன் தனக்குள் கேட்டுக் கொள்கிறான். மதவாதிகள் இம்மனிதனுக்குச் சாதகமாகவும் பாதக மாகவும் ஏதேதோ கூறுகின்றனர். 10 - 20 ஆயிரம் ஆண்டுக்காலத்தில் குறிப்பாக வரலாற்றுக் காலம் என்று அறியப்பட்ட 2000/3000 ஆண்டுக் காலத்தில் மனிதன் இப்படித்தான் தன்னிலிருந்தும் அந்நியப்பட்டு, தனக்குள் நொந்து ஓயாமல் கேள்விகள் எழுப்பி, ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட விடைகள் கண்டு பின்னர் சிக்கல் அதிகரிக்கும்பொழுது மேலும் நொந்து புதிய கேள்விகள் எழுப்பி, கிட்டும் விடைகள் நிறைவு தராமல், மதங் களுக்குள் மயங்கி, பின்னர் வெளியேறி, இறைவன் உண்டு எனக் கண்டு பிறகு மறுத்து, மகான்கள் என்று சிலரை நம்பி, பிறகு அவர்களிடமிருந்து விலகி இப்படியே பல நூற்றாண்டுகள் கழிந்தது. இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ, கொள்கைகள், கோட்பாடுகள், அரைகுறை விடைகள் இப்படியே கிடைத்து வந்த நிலையில் இறுதியாக மார்க்சியத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம். வரலாற்றுக் காலத்தில் அங்கங்கே சில வெளிச்சங்கள் தென்பட்டன. இவற்றை நாம் மறுக்கவில்லை. இன்னும் நமக்குக் கேள்விகள் இருக்கின்றன. இறுதி விடைகள் உண்டா என்பதும் இவை எப்பொழுது கிட்டும் என்பதிலும் நமக்கு உறுதி சொல்ல முடியவுமில்லை. மனித துயரங்களுக்குக் காரணம் வரலாற்றுக் காலத்தில் தோன்றி வளர்ந்த தனியுடைமை, அரசதிகாரம், மதஆதிக்கம் இந்தியச் சூழலில் சாதி முதலியவை. இவற்றின் வழியே சுரண்டலும் ஒடுக்கு முறையும் வரலாற்றுச் சூழலில் ஏற்பட்ட அந்நியமாதலி லிருந்து மனிதன் விடுபட வேண்டுமென்றால் அரசு, தனி யுடைமை, மதஆதிக்கம் முதலியவை ஒழிந்தாகவேணும். இவற்றை ஒழிக்கும் முறையில் மக்கள் திரண்டு போராட வேண்டும். அண்மைக் காலத்தில் உலகமயமாதல் என்னும் பெயரில் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. மனித வாழ்வுக்கு அர்த்தம் என்ன என்பது மெய் யியலின் முதன்மையான கேள்வி. பிரபஞ்சம் ஏதேனும் அர்த்தத்தோடு இயங்குகிறதா? என்றெல்லாம் கேள்விகள் உண்டு. பரிணாமம் என்ற முறையிலான மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அர்த்தம் உண்டா? என்றும் கேள்வி உண்டு. மனிதத் துயரம் என்றேனும் முற்றாகத் தீருமா? என்றும் கேட்டுக் கொள்ளலாம். மார்க்சியம் என்றேனும் இல்லாத காலம் வருமா? என்றும் கேட்கலாம். வரலாற்றில்தான் நாம் மனிதர் ஆனோம். நமக்குள்ள ஆளுமையை வரலாறு மற்றும் சமூகத்திலிருந்து பெற்றோம். வரலாற்றியக்கம் நமக்குள்ளும் இருக்கிறது. நமக்கான அறிவு, கலைத்திறன் முதலியவை வரலாற்றிலிருந்து பெற் றோம். மாபெரும் இயற்கையோடு ஒத்தும் முரண்பட்டும் தான் நம் வாழ்வுக்கான வளத்தைப் பெறுகிறோம். இயற்கை யன்றி நமக்கு வாழ்வில்லை. பிரபஞ்சம் என்ற பேரியக்கத் தினுள் நாமும் இருக்கிறோம். இயற்கையின் படைப்புத் திறன் நமக்குள்ளும் உண்டு. புதியவை படைக்கும் பொழுதே நம்மையும் புதுப்பித்துக் கொள்கிறோம். பேரின்பம் அடைகிறோம். புரட்சி என்பதும் போராட்டம் என்பதும் மனிதனுக்குள் புதிய ஆற்றலை, புதிய ஆளுமையை, புதிய பேரழகு முதலியவற்றைத் தோற்றுவிக்கிறது. உலகையும் இப்படித்தான் புதிதாகப் படைக்கிறோம். பழைய உலகத்திலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ளும் பொழுது புதிய வெளிச்சத்தைப் பெறுகிறோம். முன்னைய மரபு களை நமக்குள் புதிய சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்கி றோம். இயற்கையை, பேரண்டத்தை, மாபெரும் வரலாற்றை எந்த அளவிற்கு, எத்தகைய முன்னைய ஆய்வுகள் செயல் பாடுகள் முதலியவற்றின் மூலம் புரிந்துகொள்கிறோமோ அந்த அளவிற்கு நமக்குள் விரிவடைகிறோம் நமக்கான வாழ்வும் விரிவடைகிறது. நமக்கான உலகமும் விரி வடைகிறது. நாம் தனிமனிதரில்லை. நமக்குள் நெடுங்கால வரலாறு உண்டு. நமக்குள் உற்றுப் பார்த்தால் கோடிக் கணக்கான மனிதர்களின் சாதனைகள் நம் வாழ்வுக்கான ஆதாரம் என்பது புரியும். இயற்கைக்கு மரணமில்லை. என்றாலும் உலகளவில் பெருகிவரும் ஆதிக்கம் இன்று மாபெரும் இயற்கையை அழிக்க முயற்சி செய்யும் பொழுதே மனிதவரலாறும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. நமக்கான உலகம் வேண்டுமென்றால் நமக்குள்ளும் வெளியிலும் இருக்கின்ற ஆதிக்கங்களை அறவே ஒழித்ததாக வேண்டும். அந்நியமாதல் என்ற கருத்திலிருந்தே மார்க்சிய மெய்யியலுக்கு நாம் வந்து சேருகிறோம். இயற்கை முதலியவற்றிலிருந்து அந்நியப்பட்ட நிலையில்தான் மனிதனுக்குள் பிளவும் துயரங்களும். பின்னர் எதற்கு இந்த வாழ்வு? வாழ்வுக்கு என்ன அர்த்தம்? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. மனிதன் தனக்குள்ளும் வெளியிலும் தேடுகிறான். தேடல் வரலாற்றின் வழியே தொடர்கிறது. பிரபஞ்சம் உள்ளடக்கிக் கேள்விகள் கேட்கிறான். தாறுமாறான விடைகள் தவறான விடைகள் கிடைக்கின்றன. பொய்யான விடைகளும் பிரம்மைகளும் கூட வந்து சேருகின்றன. வரலாற்றுக் காலம் முழுவதும் தேடி அலைகிறான். சாக்ரடீஸ், புத்தர், இயேசு, சங்கரர், கன்பூசியஸ் என்று பலரும் தேடுகின்றனர். இறுதியாக மார்க்சு வருகிறார். மார்க்சும் தனக்குள்ளும் வெளியிலும் தேடுகிறார். உலகத்தை முற்றிலும் மாற்றுவதற்கான சாவி தனக்குக் கிடைத்திருக்கிறது என்று நம்பினார். வர்க்கப் போராட்டத்தின் மூலம் மனித வரலாற்றை மாற்றியமைக்க முடியும் என நம்பினார். இனி புதிய தத்துவங்கள் தேவையில்லை என நம்பினார் மார்க்சு நினைத்த மாதிரி உலகம் மாற்றம் பெறவில்லை. லெனின் போராடினார். மாவோ போராடினார். இன்னும் எத்தனையோ மார்க்சிய இயக்கத்தினர் போராடினர்; போராடு கின்றனர். இடையில் வந்து சேர்ந்தது உலகமயமாதல். சோவியத் ஒன்றியம் தகர்ந்தது. சோசலிசம் கேள்விக்குள்ளாயிற்று. மாவோவின் சீனமும் இப்போது மாறிவிட்டது. முன்னைய மார்க்சியம் தன்னை இன்றைய உலகச் சூழலியலுக்கேற்ப புதிய மாற்றங்கள் பெற்றாக வேண்டும். வர்க்கப் போராட்டம் தொடரத்தான் செய்யும். ஆதிக்கம் எந்த வகையிலும் மனிதர் மத்தியில் சமத்துவத்தை ஏற்படுத்த உதவாது. சமதர்மச் சூழலில் அரசு தேவையில்லை. சாதி முதலியவையும் தேவை யில்லை. இவற்றைக் கட்டிக் காக்கும் சக்திகள் வரலாற்றில் இருக்கும் வரை சமதர்மத்திற்கும் வாய்ப்பில்லை. அந்நியமயமாதல் சிலர் கருதியது போல முதலாளிய கோட்பாடில்லை; மார்க்ஸ் இதைக் கைவிடவுமில்லை. மார்க்ஸ் கால உலகம் இன்று இல்லை. நம் காலத்திற்கு ஏற்ற வகையில் மார்க்சியத்திற்கும் மெய்யியலுக்கும் புதிய பொருள் காண வேண்டும். உலகை மாற்றுவதென்பது இடையறாத நிகழ்வு. உயிரியல் முதலிய ஆய்வுகள் இன்றைக்கும் தொடர்கின்றன. மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் காலத்தைவிட வரலாறு, இயற்கை, பிரபஞ்சம் முதலியவற்றை உள்ளடக்கி அனைத்து வகை ஆய்வுகளும் விரிவும் நுட்பமும் பெற்று வருகின்றன. இவற்றில் மார்க்சியம் அழிந்துவிடாது. இத்தகைய புதிய வகை ஆய்வுகளையும் விடைகளையும் உள்ளடக்கி மார்க்சியம் விரிவு பெற வேண்டும். மார்க்சியத்திற்கு இத்தகைய உள்ளாற்றல் உண்டு. மாவோ கருதியது போல மார்க்சியமும் பழையது என்ற நிலைப்பாடு வருவதையும் தவிர்க்க இயலாது. மனித வாழ்க்கையில் அர்த்தம் தேடுகிற ஆய்வும் செயல்பாடுகளும் தொடரவே செய்யும். வாழ்வுக்குப் புதிய அழகையும் ஆற்றலையும் சேர்ப்பவை இந்தத் தேடல். சமயத்தினுள்ளும் நெடுங்காலமாக நிலவிய கேள்விகளுக்கு மார்க்சியத்தின் மூலமே விடை காண முடியும். இயங்கியல் என்ற ஆய்வுநெறி என்றும் தொடரும். பொருள்முதல்வாதமும் கருத்துமுதல்வாதமும் ஒன்றை முற்றாக மற்றது மறுக்கவில்லை. வரலாறு மற்றும் பொருளியல் சூழலில் வைத்தே எவ்வகை ஆய்வையும் நிகழ்த்த வேண்டும். செயல்பாட்டின் மூலமே எதுவும் மாறும். எவ்வகை அரசியலுக்கும் மெய்யியல்தான் ஆதாரமாக இருக்க முடியும். தமிழ்த் தேசியம் என்ற கருத்துநிலையை எவ்வாறு நோக்குகின்றீர்கள்? தமிழ்த் தேசியம் என்பதை மார்க்சியத்திற்கு முரண்பட்டது என்று நான் கருதவில்லை. தேசியம் என்பதையே முதலாளியம் என்று மார்க்சியர் சிலரேனும் கூறி வருவதை நான் அறிவேன். தேசியம் என்பதற்கு ஸ்டாலின் கூறிய வரையறை ’முதலாளியத்தை உள்ளடக்கிய வரையறை. இன்று அந்த வரையறையை நமக்கு ஒத்த முறையில் மாற்றிக் கொள்வதில் தவறில்லை. மேற்கத்திய சூழலில் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக முதலாளியம் வளர்ச்சி பெற்ற நிலையில், மொழி அடிப்படையில் தேசிய இனம் என்ற கருத்து ஏற்பட்ட போது ஒரு தேசிய இனத்திற்கு ஒரு தேசம் என்ற போக்கும் ஏற்பட்டது. ஒரு தேசத்திற்கு ஒரு தனிமொழி, தொடர்ச்சியான வரலாறு ஒரு பண்பாடு, தொடர்ச்சியான நிலஅமைப்பு, பொருளியலுக்கான வாய்ப்பு என்றெல்லாம் ஒரு தேசம் என்பதற்கான வரையறைகளாக இருந்தன. முதலாளிய சூழலில் தேசம் என்பதனுள் முதலாளியத்திற்கு ஒத்த மொழி, முதலாளி யத்தின் கருத்திற்கு ஒத்த முறையில் வரலாறு, பண்பாடு, பொருளியல் என்பதற்கான விளக்கம் அமைந்திருந்தன. மேற்கத்திய சூழலில் தேசியம் என்ற கருத்தியலை நாமும் இப்பொழுது ஒப்புக்கொண்டால், தமிழ்த் தேசியமும் முதலாளியத்திற்கும் ஒத்த கருத்தியலாகவே இருக்க முடியும். முதலாளியத்திற்கு முதன்மையாக ஆங்கிலம் தேவை. தமிழ் ஓரளவுக்கே தேவை. முதலாளியத்திற்குப் பொருளியல் ஆதிக்கம் இல்லாமல் முடியாது. முதலாளியச் சுரண்டலைத் தமிழ்த் தேசத்திற்குள் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். முதலாளிய அரசதிகாரத்தை நாம் மறுக்க முடியாது. தமிழ் முதலாளிகள் தமிழ் நிலத்திற்கு வெளியில் உள்ள முதலாளியத்திற்குச் சேவை செய்வதை நாம் மறுக்க முடியாது. தமிழ் நிலத்தை முதலாளிகள் கொள்ளையடிக்கலாம். தமிழ்நாட்டு இயற்கையை நாசம் செய்யலாம். முதலாளிய பண்பாடு, நாகரிகம், நுகர்வியல் முதலியவற்றை நாம் மறுக்க முடியாது. தமிழ் முதலாளிகளுக்குத் தமிழ் வரலாற்றுத் தொன்மையோ பெருமிதமோ தேவையில்லை. தமிழின் பெயர் சொல்லித் தமிழ்மொழியை அழிக்கலாம். தமிழ் மக்கள் மீது ஆதிக்கத்தைப் பெறலாம். இத்தகைய முதலாளியத்தை நாம் ஏற்பதற்கில்லை. தமிழ்த் தேசியம் என்ற கருத்தியலை நாம் முன் வைப்பதற்குப் போதிய முகாந்தரங்கள் உள்ளன. தமிழனுக்கு 5000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றுத் தொன்மை உண்டு. தமிழ் மொழிக்கும் தமிழிலக்கியத்திற்கும் தனித் தன்மைகள் உண்டு. தமிழ்மொழி வேறு எந்த மொழிக்கும் கடன்படவில்லை. தமிழ்மொழி வேறு பல மொழிகளின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் ஆதாரமாக அமைந்துள்ளது. தமிழன் ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் ஆளுமை செலுத்தினான். தமிழன் தன் நாகரிகத்தை உலகளவில் விரிவுபடுத்தினான். கிரேக்கத்தோடும் சீனத்தோடும் தமிழன் தொன்மைக் காலத்தில் உறவு கொண்டிருந்தான். கடல் வணிகத்தில் தமிழன் தன்னிகரற்றவனாக இருந்தான். தமிழனுக்குத் தொன்மைக் காலத்திலிருந்தே ஆட்சி முறை உண்டு. தமிழிசையும் தமிழ் மருத்துவமும் தமிழனுக்கு உரியவை. தமிழனுக்கு அறிவியல் உண்டு; பொருளியல் உண்டு; சிறப்பான மெய்யியல் உண்டு. கல்வியிலும் பண்பாட்டிலும் தமிழன் மேன்மை பெற்றிருந்தான். இத்தகைய தொன்மையும் வரலாற்றுப் பெருமையும் தனித்தன்மையும் உலக வரலாற்றுக்கு இவன் தந்த பங்களிப்பும் தமிழன் நெஞ்சில் என்றைக்கும் தங்கியிருக்கிறது. தனக்கென தனியான பொருளியலை, பண்பாட்டை மேற்கொள்ளும் தகுதி இவனுக்குண்டு. தன் ஆதிக்கத்தை இவன் வேறு எவர் மீதும் திணிக்க வேண்டியதில்லை. ஐந்திணை நிலங்கள் இவனுக்கு உண்டு. ஆற்று வளம், நீர் வளம், கடல் வளம் இவனுக்கு உண்டு. இவற்றை இவன் யாருக்கும் விட்டுக் கொடுக்கமுடியாது. வேறு எவர் ஆதிக்கத்தையும் இவன் ஏற்பதற்கில்லை. வெளியிலிருந்து தமிழகத்திற்கு வந்து சேர்ந்த வேறு பல பண்பாடுகளைக் கொண்ட மக்களோடும் இவன் இணங்கி வாழ முடியும். ஏழுகோடி பேர் தமிழ் நிலத்தில் வாழ்கின்றனர். உலகில் ஒரு தனித்தேசமாக வாழ்வதற்கு இவனுக்கு எல்லா நியாயங்களும் உண்டு. நிலக்கிழமை, முதலாளியம், அந்நிய ஆதிக்கம் முதலியவை பல்வேறு காலங்களில் இவன் மீது திணித்த கறைகளை இவனால் துடைத்துக் கொள்ள முடியும். வர்ணாசிரம முறை இவனுக்குத் தேவையில்லை. சாதிகள் தமிழனுக்குத் தேவையில்லை. உலகில் ஒரு தேசிய இனம் என்ற முறையில் இவர் போரின்றி, பூசலின்றி வாழ முடியும். தனக்குள்ளிருந்து சாதி ஆதிக்கம், வர்க்க ஆதிக்கம் முதலியவற்றைக் களைந்துகொள்ள முடியும். இதற்கான கருத்தியல் / மெய்யியல் / பண்பாடு இவனுக்கு உண்டு. சிந்தனைத் திறன் உண்டு. இத்தகைய முகாந்தரங்களின் அடிப்படையில்தான் தமிழ்த்தேசியம் பற்றிப் பேசுகிறோம். மார்க்சியத்திற்கு ஒத்த வரையறைகள் இவை. எனினும் வரலாற்றுச் சூழலில் இந்தியா என்ற துணைக் கண்டத்தினுள் நாம் வாழ நேர்ந்திருக்கிறது. இந்தியா என்ற துணைக் கண்டத்திலிருந்து தற்காலச் சூழலில் வெட்டிக் கொள்ள நாம் விரும்பவில்லை. தேசிய இனங்களின் இறையாண்மையை முழு அளவில் ஒப்புக்கொள்கிற ஒரு கூட்டாட்சியில் நாம் இணைந்தே வாழ விரும்புகிறோம். இந்தியாவில் இன்று நடைபெறுவது இத்தகைய கூட்டாட்சியாக இல்லை. இந்தியாவில் இருப்பது ஒரு அரசு. டெல்லியிலுள்ள மைய அரசின் உறுப்புகளாக மாநில அரசுகள் உள்ளன. மைய அரசு பெரும்பாலான அதிகாரங்களைத் தனக்கென வைத்துக் கொண்டுள்ளது. மைய அரசு இத்தகைய அதிகாரத்தைத் தனக்கெனக் கொண்டுள்ளதால் மேற்கத்தியரின் ஊடுரு வலை, இதன் வழியே மேற்கத்தியரின் அரசியலாதிக் கத்தைத் தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலங்களும் ஏற்க வேண்டியிருக்கிறது. மைய அரசு இந்தியை மாநிலங்கள் மீது திணிக்கிறது. மைய அரசு இந்துத்துவத்திற்கு ஆதர வாகவே செயல்படுகிறது. தேசிய இனங்கள் தம் உரிமை களுக்காகவோ விடுதலைக்காகவோ போராடும் பொழுது பயங்கரவாதம் என்று சொல்லிப் போராட்டங்களை ஒடுக்குகிறது. மைய அரசின் ஆதிக்கத்தை ஒப்புக்கொண்டு தமிழ்நாட்டில் முன்பு இருந்த அரசுகள் தமிழ் நிலத்தின் எல்லைப் பகுதியை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்ததால், இன்று நதிநீர் பிரச்சினை என்பது தமிழ் மக்களுக்குக் கடுமையான சிக்கலாக உள்ளது. மைய அரசின் ஆதிக்கத்தில் தமிழக அரசு இருப்பதனால் ஈழமக்களுக்குத் தமிழ் மக்கள் எதையும் செய்ய முடியவில்லை. முதலாளியமோ, மேற்கத்திய ஊடுருவலோ தமிழ்நாட்டின் இயற்கை வளத்தை, தமிழ்மொழியை, தமிழ்ப் பண்பாட்டைத் தொடர்ந்து நாசமாக்கும் என்பதில் ஐயமில்லை. தனக்கென இறையாண்மையோடு தன்னுரிமையோடு தமிழன் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்றால் தமிழ்த் தேசியம் உருவாக வேண்டும். சோவியத் ஒன்றியம் பல தேசிய இனங்களாகப் பிரிந்தது நமக்கு ஒரு முன்னுதாரணம். இதே போல் எத்தனையோ புதிய தேசங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. மேற்கத்தியரின் வல்லரசு இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து தமிழ் நிலம் விடுபடுவதற்கு உடன்பாடாக இருக்காது. என்பது நமக்குத் தெரியும். இந்தியாவில் ஒரு சரியான குடியாட்சியை நிறுவுவதற்கு இந்தியாவில் உள்ள பல தேசிய இனங்களும் இணைந்து போராட வேண்டும். ஏற்கெனவே காஷ்மீர் முதலிய சில மாநிலங்களில் தேசிய இனவிடுதலைக்கான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றை ஒடுக்க முடியாமல் இந்திய அரசு திணறுவது நமக்குத் தெரியும். மேற்கத்தியரின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தினாலன்றி இந்திய மக்களுக்கு வாழ்வில்லை. தேசிய இனங்களின் விடுதலையென்பது இந்தியத் துணைக் கண்டத்தில் வளத்தையும் வலிமை யையும் பெருக்கும் என்பதில் ஐயமில்லை. இப்படிக் கூறுவது மார்க்சிய நோக்கினாலேயே அன்றி வேறில்லை. தமிழ்த் தேசியம் என்று இன்று பேசும் இயக்கங்கள் பலவற்றிற்கும் இத்தகைய முறையிலான மார்க்சிய புரிதல் இல்லை. தமிழ்த் தேசியம் என்று பேசும் சில இயக்கங்கள், பெரியாரியம் என்று பேசும் சில இயக்கங்கள் பெரியாரியம் என்ற கருத்தியலையே முழுமையாகச் சார்ந்துள்ளன. பெரியாரியமும் மார்க்சியமும் இணைந்து செயல் படுவதற்கும் தேவையிருக்கிறது. கூடு இணைய இதழ் - 2011 அக்டோபர் - ஆனந்து ஞானி ஐயா அவர்களை எனக்கு தமிழோசை என்ற சிற்றிதழ் என் இனிய அண்ணன், தோழர் முனைவர்.கு.முத்துக்குமார் அவர்களுடன் சேர்ந்து நடத்தும் போது இருந்து பழக்கம். எத்தனையோ மாலைப் பொழுதுகளை அவருடன் செலவு செய்துள்ளோம். இனிமையான நாட்கள் அவை யாவும். என் திருமணத்திற்கு அவரும் அம்மாவும் உடல் உபாதைகளுக்கு இடையிலும் முதல் நாளே வந்திருந்து சிறப்பு செய்தனர். கைகளை அவர் பிடித்துக் கொண்டு பேசுவதும், எண்ணற்ற அறிவை அவர் எனக்குள் இறைத்ததும் என்றும் நினைவிருக்கும். என் சிந்தனையின் போக்கை மாற்றிப் போட்டவர். எப்போதும் என் ஐயா. அவரின் நீண்ட உரையாடல் பற்றியும் அதன் செறிவு பற்றியும் எங்களுக்கு தெரியும். எனவே இந்த உரையாடல் எனக்கு அலுப்பாக இல்லை. ஆனால் நண்பர்களே உங்களில் பலருக்கு இது கொஞ்சம் நீண்ட உரையாடல் தான். அவசரம் இல்லாமல் மெதுவாக படியுங்கள். உங்களின் நிரந்தர வைப்பு நிதியில் அழியாச் சொத்தாக நீங்கள் நிச்சயம் உணருவீர்கள். தமிழகத்தின் கலை, இலக்கியம், பண்பாடு, அழகியல், வரலாறு, மார்க்சியம், சூழலியம், மெய்யியல், தமிழ் அறம், திறனாய்வு முதலிய தளங்களில் 50 ஆண்டுகளாக இடையறாது இயங்கி வருபவர் கோவை ஞானி அவர்கள். ஞானியின் அரசியல்/அழகியல் பார்வை ஆகச்சிறந்தது. ஆதிக்கத்தை எந்த ரூபத்திலும் எதிர்க்கும் கீழை மார்க்சியத்தோடு இணைந்தது. 1988 ஆம் ஆண்டு ஏற்பட்ட பார்வை இழப்புக்குப் பின்னர் அதிகளவிலான படைப்புகளில்/திறனாய்வுகளில் ஈடுபட்டுள்ளார். " எனது எழுத்துகளில், என் வாழ்வும், அனுபவமும் அடங்கியிருக்கின்றன" எனும் கோவை ஞானி அவர்களுடனான நேர்காணல்… உங்களைப் பற்றி…. 1935 ல் ஒரு கோவை மாவட்டம் சோமனூர் கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். வளமான வாழ்க்கை எங்களுக்கில்லை. வறுமையிலும், பஞ்சத்திலும் அடிபட்டுத்தான் வாழ்ந்தோம். கிராமத்து இயற்கைச் சூழலில் நண்பர்களோடு விளையாடித் திரிந்தேன். என் தந்தையார் விடுதலை உணர்வுமிக்கவர். நிறைய புத்தகங்கள் வாங்கி வருவார். எனக்கு வாய்த்த ஆசிரியர்களும் தமிழிலக்கிய அறிவில் தேர்ந்தவர்கள். கணிதத்திலும், வரலாற்றிலும் எனக்கு ஆர்வம் அதிகம். ஆறாம் வகுப்பிற்கு பிறகே ஆங்கிலம் கற்றேன். கிராமத்திலிருந்து நகரத்திற்குச் சென்று பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரிக்கல்வி கற்றேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியம் கற்றேன். இளமைக் காலத்தில் என் தமிழ் என்பது ஏறுமுகத்தில் இருந்தது. பெரியார், அண்ணா, அப்பாதுரையார், சேதுப்பிள்ளை, திரு.வி.க, மு.வ, ம.பொ.சி, முதலியவர்கள் தமிழ் வாழ்வையும், வரலாற்றையும் வளர்த்தெடுத்தனர். இந்தச் சூழலில் நானும் கலந்தும், கரைந்தும் போனேன். முதுகலைப் படிப்பிற்கான வாய்ப்பைத் தவறவிட்டேன். பள்ளி தமிழாசிரியராகத்தான் முப்பது ஆண்டுகள் பணிசெய்தேன். எஸ்.என்.நாகராசன், எல்.வி.ஆர் முதலியவர்களோடு மட்டுமில்லாமல் செல்லப்பா, க.ந.சு, ல.ச.ரா முதலியவர்களோடும் நெருக்கமாக இருந்து நவீன கால அரசியல் மற்றும் கலை இலக்கிய வளர்ச்சியைக் கற்றேன். சிற்றிதழ் இலக்கியத்தில் நானும் இணைந்திருந்தேன். மார்க்சிய நோக்கிலான தமிழிலக்கிய திறனாய்வில் பெரிதும் ஈடுபட்டேன். தமிழ் வாழ்வு எனக்கு பெரும் நிறைவைத் தருகிறது. நீங்களேன் படைப்பிலக்கியம் சார்ந்து இயங்குவதில்லை? நான் படைப்பிலக்கியம் சார்ந்து இயங்கவில்லை என்பது உண்மைதான். தொடக்கத்தில் மரபுக்கவிதைகள் சிறப்பாகவே எழுதினேன். வானம்பாடி இயக்கக் காலத்திலும் புதுக்கவிதை முயற்சியிலும் ஈடுபட்டேன். புதுக்கவிதை என்பது குறுகிய வடிவில்தான் இருந்தாக வேண்டுமென்று சிலர் கூறியதை நான் ஏற்கவில்லை. அன்றியும் பழைய தொன்மங்களை நம் காலச்சூழலுக்கு ஒத்தமுறையில், நவீனகால நோக்கையும் உள்ளடக்கி புதுப்பிக்க முடியும் என்ற முறையில் “கல்லிகை” என்ற குறுங்காவியம் எழுதினேன். அகலிகை கதையை மார்க்சிய நோக்கில் புதியதாகப் படைத்தேன் . அதன் பிறகும் தொடர்ந்து புதுக்கவிதைகளை எழுதினேன். எழுதியவற்றில் ஒரு பகுதியே அச்சில் வெளிவந்தது. இடையில் சிறுகதை முயற்சியிலும் ஈடுபட்டேன். ஒரு நாவலும் எழுதினேன். படைப்பைவிட திறனாய்வில்தான் என் நாட்டம் சென்றது. மார்க்சியம் உட்பட பலதுறை அறிவில் எனக்கு எப்போதும் ஈடுபாடு அதிகம். இளமை முதற்கொண்டே வாழ்வியல் சார்ந்த சிக்கல்கள் என்னைக் கடுமையாக பாதித்திருந்தன. சிக்கல்களைப் புரிந்துகொள்ள வரலாறு, பொருளியல், மெய்யியல் என்று பல களங்களிலும் தேடவேண்டியிருந்தது. இதன் தொடர்ச்சியாகவே மாபெரும் படைப்புகளையும் புரிந்து கொள்வதில் எனக்கிருந்த ஈடுபாடு காரணமாக ஒவ்வொன்றையும் வரலாறு முதலிய சூழலில் வைத்து ஆராய்வது தேவையென்று அறிந்தேன். இவ்வகையில்தான் திறனாய்வுத் துறைதான் எனக்குப் பொருத்தமானதென்று தெரிவு செய்தேன். திறனாய்வும் ஒரு படைப்புதான் என்ற உண்மையை என் திறனாய்வுக் கட்டுரைகளைப் படிப்பவர்கள் உணரமுடியும். உங்களிடம் எஸ்.என்.நாகராசனின் பாதிப்பு இருக்கிறதா? எஸ்.என்.நாகராசன் உயிரியல் படிப்பைத் தெரிவுசெய்து, அதன் மூலமாகவே மார்க்சியத்திற்கு வந்துசேர்ந்தவர். 1844 இல் பாரீசிலிருந்தபோது மார்க்ஸ் தன் சிந்தனைகளை தனக்குத்தானே தெளிவுபடுத்திக் கொள்வதற்காக எழுதிய கையெழுத்துப்படிகள் 1930 வாக்கில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு வெளியாயின. மார்க்சியத்தின் வலுவான மெய்யியல் அடிப்படையாகிய அந்நியமாதல் என்ற கோட்பாடு இந்தக் கையெழுத்துப்படிகளில் அடங்கியிருந்தன. இளம் மார்க்சுதான் இந்தக் கோட்பாட்டைக் கொண்டிருந்தார். முதிய மார்க்சு இதை மார்க்சு இதை ஒதுக்கிவிட்டார் என்பது உண்மையில்லை. இந்த அந்நியமாதலை எங்களுக்கு அறிமுகப்படுத்தியவர் எஸ்.என்.நாகராசன்தான். இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் இந்தியச் சூழலில் சமூகம், இலக்கியம், பண்பாடு என்பவற்றை புரிந்துகொள்ளமுடியும். எஸ்.என்.நாகராசன் மார்க்சியத்தின் ஆதார நூல்கள் பலவற்றை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். ஜே.தி.பெர்னால்டு, கிறிஸ்டோபர் கால்டுவெல், ஜோசப்நீதாம், டி.டி.கோசாம்பி முதலிய மார்க்சிய அறிஞர்கள் எங்களுக்குப் பாடநூல்களாயினர். கட்சி மார்க்சியம் என்ற குறுகிய எல்லைக்குள் நாங்கள் என்றும் அடைபட்டதில்லை. சோவியத் மார்க்சியத்தை நாங்கள் உதறியதற்கும், மாவோவின் மார்க்சியத்தை தழுவியதற்கும் தூண்டுதலாக அமைந்தவர் எஸ்.என்.நாகராசன்தான். நாகராசன் அவர்களின் புதிய ஒரு கோட்பாடென கீழைமார்க்சியம் என்பதைக் குறிப்பிடமுடியும். இந்திய/தமிழ் மரபோடு மார்க்சியத்திற்கு நெருக்கமான உறவுண்டு என்ற அடிப்படையில்தான் கீழைமார்க்சியம் என்பதை நாகராசன் முன்வைத்தார். இப்படி எனக்குள்ளும், நண்பர்கள் பலருக்குள்ளும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய எஸ்.என்.நாகராசன் அவர்கள் எனக்கு ஆசான். எஸ்.என்.நாகராசன் அவர்களுடன் இணைந்து “புதிய தலைமுறை” என்ற கோட்பாட்டு சிற்றிதழை நடத்திய அனுபவம் குறித்து சொல்லுங்கள்… 1967-68 காலத்தில் கோவையிலிருந்து வெளிவந்த மார்க்சிய இலக்கிய/தத்துவ திங்களிதழ் “புதிய தலைமுறை”. கட்சி மார்க்சியரோடு முரண்பட்டு கலை, இலக்கியம், தத்துவம் பற்றிய எங்கள் பார்வையை தமிழகத்தில் முன்வைக்கும் முறையில் இந்த இதழைத் தொடங்கினோம். மாவோவின் சிந்தனையை இந்த இதழ்மூலம் பரவலாக்கினோம். எங்கும், எதிலும் தமிழ்தான் என்று எழுதினோம். பாரதிதாசனைப் பாராட்டினோம். சங்க இலக்கியம் பற்றி விரிவாக எழுதினோம். அந்நியமாதல் என்ற அடிப்படையில் சிறுகதைகள் வெளியிட்டோம். ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி பற்றி கூர்மையாக விமர்சனம் செய்தோம். சாலை இளந்திரையன் கவிதைகள் எங்கள் இதழில் வெளிவந்தன. 68 இல் எழுந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஆதரித்து எழுதினோம். கல்கி, விகடன் முதலிய வணிக இதழ்களில் வந்த கதைகளை கூர்மையாக விமர்சனம் செய்தோம். எஸ்.வி.இராசதுரை, புலவர் ஆதி முதலியவர்களின் ஆக்கங்களை தொடர்ந்து வெளியிட்டோம். நிறைய விவாதங்களும் வெளிவந்தன. இந்நிலையில் இந்தியாவில் வடக்கில் தோன்றி தெற்கில் பரவிய “வசந்தத்தின் இடி முழக்கம்” என்ற முறையில் அறிமுகமான நக்சல்பாரி இயக்க உணர்வுகள் எங்களை ஆட்கொண்டன. புதிய தலைமுறையின் அனைத்துப் படைப்புகளிலும் இதன் வெளிச்சத்தைக் காணமுடியும். எங்களுக்குள்ளும் உருவான குறுங்குழு அதிகாரம் காரணமாக நாங்களும் பிளவுபட்டோம். காவல்துறையின் கெடுபிடிகளும் அதிகரித்தன. 23 இதழ்களில் புதிய தலைமுறை தன் ஆயுளை முடித்துக்கொண்டது. பலர் நெஞ்சில் இன்னும் ஆற்றல்மிக்க ஒரு மார்க்சிய இதழாக எங்களின் புதிய தலைமுறை இன்றும் நிலைத்திருக்கிறது. சிறுகதைக்கு ஜெயமோகனை நீங்கள்தான் அறிமுகம் செய்துள்ளீர்கள். தற்போது ஜெயமோகனின் வளர்ச்சியையும், அவர் மீதான விமர்சனங்களையும் எப்படி பார்க்கிறீர்கள்? நண்பர் ஜெயமோகனின் முதல் சிறுகதையை “நிகழ்” இதழில் நான் வெளியிட்டேன் என்பது உண்மைதான். அந்தச் சிறுகதையை தன் காலச்சுவடு இதழில் வெளியிட சுந்தரராமசாமி மறுத்தாரென்பது எனக்குப் பின்னர்தான் தெரியவந்தது. பேச்சிப்பாறை அணைக்கட்டு கட்டிய காலத்தில் காடுகள் அழிக்கப்பட்டதால் அங்கிருந்து வெளியேறிய ஆதிவாசிகளின் பெருந்துயரை அந்தச் சிறுகதையில் சிறப்பாக ஜெயமோகன் எழுதியிருந்தார். நவீன அறிவியல் வளர்ச்சி என்பதற்காக காடுகள் அழிக்கப்படுவதும், மக்கள் வாழ்க்கையில் நெருக்கடிகள் அதிகரிப்பதும் முதலாளிகளுக்குத் தேவையாக இருக்கலாம். நமக்கு அது தேவையில்லை. சுந்தரராமசாமியைப் பொறுத்தவரை அறிவியல் வளர்ச்சியை ஆதரித்தார். மக்கள் வாழ்வில் ஏற்படும் துயரை அவர் பொருட்படுத்தவில்லை. இவை தவிர நிகழ் இதழில் அந்தச் சிறுகதை வெளிவந்தது என்ற செய்தியை கேள்விப்பட்டபோது, ஞானிக்கு இலக்கியம் தெரியாது என்று சுந்தரராமசாமி கூறினாராம். அதை விட்டுவிடலாம். சுந்தரராமசாமி காலத்திலேயே அவரை ஜெயமோகன் கடந்து நெடுந்தொலைவு சென்றுவிட்டார். ஜெயமோகனின் வாழ்வியல் அனுபவங்கள் மிக மிக விரிவானவை. இந்திய தத்துவம் பற்றி அவரது படிப்பும், பார்வையும் வியக்கத்தக்கவை. ஒரு கடிதம் என்றாலும் 20/30 பக்கங்களுக்கு ஒரே அமர்வில் எழுதக்கூடியவர். சங்க இலக்கியத்தில் ஆழ்ந்த தேர்ச்சியுடையவர். இவரது அறிவாற்றலும், கலைத்திறனும் பன்முகப்பட்டவை. இவர் எழுதிய “விஷ்ணுபுரம்” நாவல் தமிழ் நாவல்களில் ஒரு சிகரம். சிலப்பதிகாரத்தின் இன்னொரு பெருவடிவம் “கொற்றவை”. நவீன தமிழிலக்கிய படைப்பாளிகள் குறித்து ஆழமான பார்வையோடு கூடிய இவரது திறனாய்வுகள் மிகச் சிறப்பானவை. சிறுகதைகள், நாவல்கள், திறனாய்வுகள் என இவர் ஓயாமல் எழுதுகிறார். தற்கால தமிழிலக்கியச் சூழலில் இவருக்கு நிகரானவர் என்று இன்னொருவரை சொல்வதற்கில்லை. இந்தியாவின் ஒருமைப்பாட்டை இவர் பெரிதும் போற்றுகிறார். வன்முறை அரசியலை வெறுக்கிறார். அம்பேத்கர், பெரியார் பற்றி நிறைய விமர்சனங்கள் எழுதுகிறார். மார்க்சியம் பற்றி இவரது விரிவான அறிவு வியக்கத்தக்கது. எனினும் இவர் பார்வையோடு எனக்கு உடன்பாடில்லை. காந்தியை எவ்வளவோ பாராட்டலாம். காந்தி பற்றி இவருக்கு சிறிதளவும் விமர்சனம் இல்லை. விடுதலைப்புலிகள் இயக்கத்தை இவர் கொச்சைப்படுத்துகிறார். “பின் தொடரும் நிழலின் குரல்” நாவலில் கட்சி மார்க்சியரின் சீரழிவு குறித்து நிறைய எழுதியிருக்கிறார். இதன் காரணமாக கட்சி மார்க்சியர் இவரைச் சாடுகின்றனர். இவரை முழு அளவில் இந்துத்துவவாதி என்று சிலர் கடுமையாகத் தாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. இவரிடம் எனக்கு பேரளவு நேசமும், மரியாதையும் உண்டு. என்னை இவர் அடிக்கடி ஆசான் என்று குறிப்பிடுகிறார். இவரிடம் நான் நிறைய கற்றுக்கொள்கிறேன். என்னளவில் இவரும் எனக்கு ஆசான்தான். உலகளவிலான இலக்கியங்கள் பற்றி இவரது பேரறிவு பாராட்டுக்குரியது. தமிழ்ச்சூழலில் இவர் பாராட்டப்படவில்லையென்பது தமிழுக்கு ஒரு கேவலம். பிற மார்க்சியவாதிகளால் ஏற்றுக்கொள்ளப்படாத க.நா.சு, சுந்தரராமசாமி முதலியவர்களை நீங்கள் ஏற்றுகொண்டது எப்படி? க.நா.சு, சுந்தரராமசாமி, லா.ச.ரா, மௌனி, அசோகமித்திரன் முதலியவர்களை மார்க்சிய வட்டாரத்தினர் ஏற்கவில்லை என்பது உண்மைதான். இவர்களும் தம் படைப்புகளில் தனிமனிதர்களை முதன்மைப்படுத்தி எழுதினாலும் இவர்களுக்கு ஆதாரமாக இருந்த சமூகம் / சமூகச் சிக்கல் குறித்து எழுதாமல் இல்லை. சமூகத்தில் / வரலாற்றில் வேர்கொள்ளாத மனிதர் என்று எவருமில்லை. கட்சி அரசியலுக்கு முதன்மை தந்த மார்க்சியர், எந்த ஒரு இலக்கியமும் வர்க்கப் போராட்டத்தையும், வர்க்க அரசியலையும் முதன்மைப்படுத்த வேண்டுமென்று கருதினார்களே ஒழிய இப்படி கட்சி அரசியலை முதன்மைப்படுத்தும்போது கலைத்தரம் குறைந்துவிடுவது பற்றி கவலைப்படவில்லை. இலக்கியம் என்பது அரசியலுக்கு சேவை செய்யவேண்டும். கட்சி அரசியலுக்கு சேவை செய்யாத எந்த கலைஞருக்கும் மரியாதையில்லை. மார்க்ஸ் ஷேக்ஸ்பியரைப் பாராட்டினார். ஏங்கல்ஸ் பால்சாக்கை கொண்டாடினார். லெனின் டால்ஸ்டாயைப் பாராட்டிச் சொல்லவில்லையென்றால் டால்ஸ்டாய் மதவாதி என ஒதுக்கப்பட்டிருப்பார். வர்க்க அரசியலுக்கு அழுத்தம் தருவதென்றால் “பிரம்மசாரியின் டைரி” முதலிய நாவல்களை எழுதிய கார்க்கியையும் இவர்கள் சாடவேண்டியிருக்கும். ஜெயகாந்தனையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை. சமூகச்சிக்கலுக்கு கூடுதலான அழுத்தம் தந்ததால் மௌனி முதலிய கலைஞர்களை நாங்கள் மதிக்கத் தவறினோம் என்று சிவத்தம்பி சுயவிமர்சனம் செய்துகொண்டார். க.நா.சு முதலிய அற்புதமான கலைஞர்கள் தமிழிலக்கியத்திற்கு வளம் சேர்த்த அளவிற்கு மார்க்சியர் செய்யவில்லை. மார்க்சியவாதிகளால் அதிகம் விமர்சனத்துக்குள்ளான பொன்னீலனின் “புதிய தரிசனங்கள்” மீதான உங்கள் விமர்சனம் என்ன? பொன்னீலன் அவர்களின் “புதிய தரிசனங்கள்” நாவல் பற்றி எனக்கு விமர்சனங்கள் ஏதுமில்லை. மார்க்சிய கட்சி வட்டாரத்தில் “புதிய தரிசனங்கள்” நாவல் குறித்து கடுமையான விமர்சனங்கள் உண்டு. சோவியத் ஒன்றியத்தை பொன்னீலன் விமர்சனம் செய்தார். இந்திராகாந்தி மூலம் இந்தியாவில் சோசலிசம் வந்துவிடுமென்று நம்பி இந்திராகாந்தியோடு ஒத்துழைத்தார். கட்சி வட்டாரத்தையும், நெருக்கடி நிலையையும் அவர் கடுமையாக சாடினார். மார்க்சிய கட்சி வட்டாரத்தினுள்ளும் அதிகாரம் செயல்படுவதை அவர் மதிக்கவில்லை. கட்சிக்குள் உண்மையான ஊழியர்க்கு மரியாதை இல்லையென்பதை சுட்டிக்காட்டினார். மார்க்சியர் அன்றைக்கு தலித்தியத்தையோ, பெண்ணியத்தையோ பெரியதாக வரவேற்கவில்லை. பொன்னீலன் வரவேற்றார். காந்தியம் பேசுபவர்க்குள்ளும் உண்மையான ஊழியர் உண்டென்பதைச் சுட்டிக்காட்டினார். தென் மாவட்டங்களில் மக்களோடு இணைந்திருந்த பக்தி இயக்கங்களைப் பாராட்டினார். அய்யா வைகுண்ட சாமி இயக்கத்தைப் பாராட்டி எழுதினார். இவை தவிர ஐம்பதுக்கும் மேற்பட்ட பாத்திரங்கள், ஒவ்வொருவருக்கும் தனிமுகம். ஊர், ஊருக்குள் நெருக்கடி நிலைக்கு முன்பும், பின்பும் நடைபெறுவதான உறவுகள், போராட்டங்கள்தான் மையம். ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்கங்களில் தமிழில் ஒரு அற்புதமான நாவல் “புதிய தரிசனங்கள்”. ஆனால் அதில் நக்சலைட் இயக்கத்தைக் கேலி செய்து எழுதியிருக்கிறார். நக்சலைட் இயக்கம் பற்றி எனக்குப் பெரும் மரியாதை உண்டு. ஒரு நக்சலைட்டை கோமாளி என பொன்னீலன் சித்தரித்தார் என்பதைத் தவிர வேறு குறைபாடில்லை. ஈழத்தமிழ் இலக்கியத்தைப் பரவலாக்கும் உங்கள் முயற்சியின் பலன் என்ன? ஈழத் தமிழிலக்கியத்தொடு 60-களுக்குப் பிறகு குறைந்த அளவுக்கு எனக்கு உறவு ஏற்பட்டது. பத்மநாப அய்யர் ஈழத்தமிழ் இலக்கிய நூல்களைக் கொண்டுவந்து எங்களுக்குத் தந்தார். எஸ்.பொ, கணேசலிங்கன், கைலாசபதி, தளையசிங்கம் முதலியவர்களை நாங்கள் முன்பே அறிந்திருந்தோம். தமிழ்நாட்டு தமிழ் இலக்கியவாதிகள், திறனாய்வாளர்களைவிட இவர்கள் மீது எங்களுக்கு கூடுதலான மரியாதை இருந்தது. ஈழத்தமிழ் விடுதலைக்கானப் போராட்டம் எங்களையும் வெகுவாக பாதித்தது. தமிழ்த் தேசியம் பற்றி நாங்களும் கூடுதலாகப் பேசினோம். ஈழத்தமிழ் விடுதலைக்கு தமிழகம் செய்த துரோகத்தை நம்மால் என்றும் துடைக்க முடியாது. போர்க்காலச் சூழலுக்கு முன்னரும், பின்னரும் ஈழத்தமிழ் படைப்புகளின் வீரியத்தை தமிழ்ச் சூழலில் வாழும் நம்மால் எட்டிப்பிக்க முடியாது. 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகச் சூழலில் ‘சுகமாக’ நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெயரளவிற்கு போராட்டங்கள் நடத்துகிறோம். துப்பாக்கிச்சூடு நமக்குத் தெரியாது. மிதப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஈழத்தமிழ் விடுதலை, உலகில் தமிழர் என்ற முறையில் நமக்கும் பெரும் மரியாதையைத் தந்திருக்கும். இத்தகைய மரியாதையை நாம் இழந்துவிட்டோம் . புலம்பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம்தான் இன்றைக்கும் உயிருள்ள தமிழிலக்கியம். தமிழை செம்மொழியாக அறிவித்திருப்பதில் உங்களுக்கு நிறைவிருக்கிறதா? தமிழ், செம்மொழிதான் என்பதை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே உலகளவில் அறிஞர் பெருமக்கள் ஒப்புக்கொண்டனர். தமிழகத்திலும் ஒரு நூற்றாண்டு காலம் எவ்வளவோ, வற்புறுத்தல்கள், போராட்டங்களுக்குப் பிறகுதான் இந்திய அரசு தமிழைச் செம்மொழியென ஏற்றுக்கொண்டது. உலகளவில் மனித நாகரிகத்தின் முதற்பேரெழுச்சியை தமக்குள் பதிவுசெய்து கொண்டிருப்பவை கிரேக்கம், இலத்தீன், பாரசீகம், ஹீப்ரு, சீனம் முதலிய செம்மொழிகள். இந்த மொழிகளின் வரிசையில் இணைவதற்கான எல்லாத் தகுதிகளும், தனித்தன்மையும் கொண்டது தமிழ்மொழி. மேலும் சரியாக சொல்வதென்றால் சமஸ்கிருதத்தைவிட தொன்மையும், வளமும் மிக்கது தமிழ். இந்திய நாகரிகத்தின் மேலடுக்கு ஆரிய நாகரிகம் என்று அறிஞர் பெருமக்கள் உரிமை கொண்டாடினாலும், இந்திய நாகரிகம் என்பதன் அடிப்படைகள் அனைத்திற்கும் ஊடகமாக இருப்பது திராவிட/தமிழ் நாகரிகம்தான். இந்தியாவின் வேளாண்மை, அறிவியல், வணிகம், கட்டிடம், சிற்பம், கணிதம், தர்க்கம், மெய்யியல், இசை, மருத்துவம் முதலிய அனைத்தின் வலைர்ச்சிக்கும் ஆதாரமாக இருந்தது தமிழ் நாகரிகம். தமிழைச் செம்மொழி என்ற பேருண்மையை இந்தியதேசம் ஏற்பதென்பது மீண்டும் ஆதாரங்களோடு மெய்ப்பிப்பதற்கான வாய்ப்பு நமக்கு ஏற்பட்டுள்ளது. தமிழைச் செம்மொழியென நான் கொண்டாடுவதற்கும் இதுவே முதற்காரணம். சமஸ்கிருதம்தான் மூலமொழி என்று பல ஆய்வாளர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்களே? சமஸ்கிருதம் என்பதன் பொருள் திருந்திய / திருத்தம் செய்யப்பட்ட மொழி. ரிக்வேதம் முதலியவை கி.பி முதல் நூற்றாண்டுக்குப் பிறகுதான் சமஸ்கிருதம் என்ற மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த சமஸ்கிருதம் கிரேக்கம், பாரசீகம், தமிழ் முதலிய பல மொழிகளின் கலவை. சமஸ்கிருதம் என்ற மொழி இந்தியாவில் பல்வேறு வட்டாரங்களில் உள்ள அறிஞர்கள், தமக்கிடையில் உறவு கொள்வதற்காக உருவாக்கிக் கொண்ட ஒரு செயற்கை மொழி. சமஸ்கிருதம் என்ற மொழியை தாய்மொழியாகக் கொண்டவர் என்று இந்தியாவில் எவரும் இல்லை. சம்ஸ்கிருத மொழிக்கு என்று ஒரு மாநிலமோ, ஒரு ஊரோ கூட இல்லை. தமிழ் மொழியிலிருந்து தொன்மையான எத்தனையோ சாஸ்திரங்கள் சமஸ்கிருதத்தில் பெயர்க்கப்பட்டன. சமஸ்கிருத மொழியில் பல இலக்கியங்களைப் படைத்தவர்கள் தமிழர்கள். பாணினி, சாணக்கியர், பரதமுனிவர், சங்கரர், மத்துவர் முதலியவர்கள் தமிழகத்தில்தான் வாழ்ந்தனர். சமஸ்கிருதத்தில் எத்தனையோ நூல்கள் எழுதப்பட்ட இடம் காஞ்சிபுரம். வேதங்களின் உள்ளும் தமிழ்ச் சொற்கள், கருத்துகள் நிறைய உண்டு. சில அறிஞர்கள் கூறுவதுபோல சமஸ்கிருதமும் தமிழர்கள் படைத்த மொழிதான். சமஸ்கிருதம் புனித மொழி என்பது இட்டுக்கட்டப்பட்ட ஒரு பொய். இந்தியாவில் இந்தி முதலிய வடஇந்திய மொழிகள் அனைத்திற்கும் அடிப்படை இலக்கணம் தந்தது தமிழ்தான், சமஸ்கிருதம் இல்லை. அம்பேத்கர் கூறியபடி மேற்கிலிருந்து வந்த ஐரோப்பியர்தான் பிராமணர்களையும், சமஸ்கிருதத்தையும் மகிமைப்படுத்தினர். அவர்களே பின்னர் தங்கள் பொய்யை உணர்ந்து கொண்டனர். குலதெய்வக் கோவில்களில் பிள்ளையாரை வைக்க ஆரம்பித்துவிட்டார்களே? ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் நவீன உத்தியா இது? குலதெய்வ கோவில்கள் தொன்றுதொட்டு நம் முன்னோர்களின் வழிபாடு என்ற முறையில் இன்றும் மரியாதையோடு தொடர்வை. ஆயிரக்கணக்கான நம் ஊர்ப்புறங்களில் முன்பு நம் மரபுமுறையில் நடைபெற்ற திருமணங்களில் இப்பொழுதெல்லாம் பிராமணர்களை அழைத்து வேள்வி, முதலிய சடங்குகளை நம் மக்கள் செய்கிறார்கள். ஊர்ப்புரத்து கிராம தெய்வங்களிள் கோவில்களில் ஆடு, கோழி முதலியவற்றைப் பலியிட்டுதான் விழா நடத்திவருகிறார்கள். முன்பு முதல்வராக இருந்த அம்மையார் இவற்றை தடுக்கச் செய்த முயற்சி பலனனிக்கவில்லை. இப்பொழுது குலதெய்வக் கோவில்களில் விநாயகரை வைத்து வழிபடும் போக்கு நுழைத்து வருவதாகத் தெரிகிறது. தன்னளவில் விநாயகர் குழந்தைகளுக்கு பிடித்த ஒரு தெய்வம். குழந்தைகள் விநாயகர் மீது ஓடி விளையாடலாம். மகாராட்டியத்தில் விநாயகர் திருவிழா பேரளவில் நடைபெறுகிறது. இந்துத்துவத்தை மக்கள் நோக்கில் வளர்த்தெடுக்கும் நோக்கில் நூற்றுக்கணக்கான வடிவங்களில் விநாயகர் சிலைகளை விநாயகர் சதுர்த்தியின்போது கொணர்கிறார்கள். முஸ்லீம்களோடு மோதல் ஏற்படுத்தும் நோக்கில் இதை அவர்கள் செய்கிறார்கள். கடவுள் இல்லை என்று பேசி மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுவரும் திராவிட இயக்கத்தை முறியடிக்கும் நோக்கிலும் விநாயகருக்கு தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு ஏற்படுத்த செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாகவே குலதெய்வ கோவில்களிலும் விநாயகர் இடம் பெறுகிறார். மக்கள் பாவம் அப்பாவிகள். இவர்களை ஏமாற்றுவது எளிது கடவுள் உண்டு அல்லது இல்லை என்ற வாதங்களைக் தவிர்த்து உங்களுக்குள் கடவுளை உணருங்கள் என்று பிரசங்கம் செய்யும் கார்ப்ரேட் சாமியார்கள் இன்றைய வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கிறார்களே? இன்றைய சமூக வாழ்வில் கடுமையான நெருக்கடிகள் அதிகரித்துவருவதன் விளைவாக நவீன சாமியார்களுக்கும் பெரும் மரியாதை ஏற்பட்டு வருகிறது. மார்க்சியர் ஒரு காலத்தில் கூறியது போல புரட்ச்சிகரமான சமூக மாற்றம் ஏற்பட்டிருக்குமானால் மக்கள் வாழ்வில் உள்ள நெருக்கடிகளும், துயரங்களும் ஓரளவுக்கேனும் ஒழிந்திருக்கும். அந்நிலையில் சாதிக்கும் மதநம்பிக்கைகளுக்கும், சடங்குகளுக்கும், சோதிடம் முதலியவற்றுக்குமான செல்வாக்கும், மரியாதையும் குறைந்திருக்கும். சரியான முறையில் அனைத்து மக்களுக்கும் கல்வி தரப்பட்டிருக்குமானால் அறிவியல் உணர்வு வளர்ச்சி பெற்று மூடநம்பிக்கைகள் ஆட்டம் கண்டிருக்கும். இவற்றுக்கு மாறாக, உலகமயமாதல் முதலிய பலகாரணங்களால் மக்கள் மத்தியில் சிக்கல் அதிகரித்திருப்பதோடு நவீன நாகரிகம் முதலிய பிரம்மைகளும், மோகங்களும் வளர்க்கப் படுகின்றன. வெற்றுச் சடங்குகள் முதலியவற்றை உபதேசம் செய்யும் பழைய சாமியார்களுக்கிடையில் நவீன முறையில், அறிவியலையும் ஓரளவுக்கு தம்மோடு இணைத்துக்கொண்டு யோகம், தியானம் என்றெல்லாம் பேசுகிற நவீன சாமியார்களுக்குத் தேவை ஏற்பட்டிருக்கிறது. மக்களைப் புதிய பிரம்மைகளில் ஆழ்த்துவதற்கு பெரிய முதலாளிகளுக்கு / கார்ப்ரேட் முதலாளிகளுக்கு இவர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களும் மருத்துவம், கல்விப்பணி, மரம் நடுதல் என்றும் பேசுகிறார்கள். கடவுளைப் பற்றிய பழைய புராணக்கதைகளை இவர்கள் ஒதுக்கிவிடுகிறார்கள் உங்களுக்குள்ளும் கடவுள் உண்டு ஏன் வெளியில் தேடுகிறீர்கள் என்றும் பேசுகிறார்கள். முன்பு வேதாத்திரி மகரிஷிகள் இப்பொழுது ஜக்கிவாசுதேவ் அமிர்தானந்த மயி, மற்றும் சிலர். பெரியாரின் பெண்ணியம் பற்றி நிறைய வாத, பிரதிவாதங்கள் எழுகின்றன. உங்களின் நோக்கில் அதை விவரிக்கமுடியுமா? பெரியாரின் கொள்கைகள் அனைத்தையும் தொகுத்துச் சொல்வதென்றால் அராஜகம் - அனார்க்கிசம் என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். மனிதன் முற்றிலும் அறிவு சார்ந்தவனாக - பகுத்தறிவு சார்ந்தவனாக இருக்கவேண்டும். எத்தகைய ஆதிக்கத்திற்கும் இவன் உட்படாதவனாக இருக்கவேண்டும். சாதி, மதம், சடங்கு, கடவுள் என்ற எதுவும் இவனுக்குத் தேவையில்லை. தேசம், இனம், மொழி என்பதும் இவனைக் கட்டுப்படுத்த வேண்டாம். இன்றைய உலகச் சூழலில் இவை சாத்தியமில்லை என்ற போதிலும் பெரியாருடைய இலக்கு என்பது இதுவாகத்தான் இருந்தது. இவ்வகையில்தான் பெண்ணின் மீது ஆண் செய்யும் அதிகாரத்தை முற்றாக இவர் மறுத்தார். திருமணம் இல்லாமல் ஒரு பெண்ணால் வாழமுடியும். குழந்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு ஆணுக்கு, குடும்ப அமைப்புக்கு பெண் கட்டுப்பட்டுதான் வாழ்ந்தாக வேண்டுமென்பதை பெரியார் ஏற்கவில்லை. மனித இனத்தை, வரலாற்றை தக்கவைத்துக் கொள்வதற்காகத்தான் பெண்ணுக்கு குழந்தைப்பேறு, குடும்பம், திருமணம், கற்பு முதலியவை வேண்டுமென்றால் பெரியார் இவற்றை முற்றாக மறுத்தார். பெரியாரின் இத்தகைய சிந்தனையும் அராஜகவாதம் என்பதில்தான் அடங்கும். அரசு வேண்டாம், அதிகாரம் வேண்டாம், மதம் வேண்டாம் என்பதன் நீட்சிதான் இக்கருத்தும். பெரியாரியத்திற்கு இது ஒத்தக் கருத்து என்றாலும் இதை மார்க்சியம் ஏற்காது. வரலாற்றின் கட்டுப்பாட்டுக்குள்தான் நாம் வாழ்கிறோம். வரலாற்றை ஒரே பாய்ச்சலில் கடந்து செல்லமுடியாது. பெரியாரை நீங்கள் வலதுசாரித் தன்மையோடுதான் அனுகுகிறீர்களென விமர்சனமுண்டே? பெரியாரைப் பொறுத்தவரை வலதுசாரியென்று சொல்லமுடியாது. பெரியாரை இன்று தூக்கிப்பிடிப்பவர்களில் பலர் வலதுசாரிகள். சாதி வேண்டாம், மதம் வேண்டாம், பார்ப்பனியம் வேண்டாம் என்பதை மட்டும் உரத்துச் சொல்லும் இவர்கள் முதலாளியம் வேண்டாம், அரசதிகாரம் வேண்டாம் என்பது பற்றி அக்கறையோடு பேசமாட்டார்கள். முதலாளியத்தோடும், அரசதிகாரத்தோடும் இவர்கள் ஒத்துச்செயல்படுகிறார்கள். சாதி முதலியவை இவர்களுக்குள்ளும் ஊடுருவி இருக்கின்றன. பெரியாரின் மையம் என்று சமதர்மத்தைத்தான் சொல்லமுடியும். தன்மானம் என்பதுதான் பெரியாரின் தத்துவம். தொழிலாளிக்குத் தன்மானம் தேவையென்றால் முதலாளியத்தை மறுக்கவேண்டும். பெண்ணுக்கு தன்மானம் தேவையென்றால் ஆணதிகாரத்தை மறுக்கவேண்டும். எவ்வகை ஆதிக்கமும் மனிதனுக்குத் தேவையில்லை என்ற பெரியாரின் கருத்தும் மார்க்சியரின் கம்யூனிசம் என்ற கருத்தும் ஒரு நிகரானவை. சாதியா? வர்க்கமா? என்று ஓயாமல் முரண்பட்டு பேசுவதில் அர்த்தமில்லை. மனிதன் முற்றிலும் பகுத்தறிவு வயப்பட்டவனாகவுமில்லை. பெரியாரியமும், மார்க்சியமும் ஒன்றுக்கொன்று எதிரானவையும் அல்ல. ஆனால் பெரியாரியமும், மார்க்சியமும் தமிழகச்சூழலில் இணைந்தாகவேண்டும். பெரியாரியம் பேசும் வலதுசாரிகள் இத்தகைய இணைப்பை ஏற்கமாட்டார்கள். முதலாளியம் / அரசு ஒழியாமல் சாதியையும், மதமும், பார்ப்பனியமும் ஒழியா. சாதி, மதம் முதலியவற்றை மட்டும் ஒழிப்பதுபற்றி மட்டும் ஓயாமல் பேசுபவர்கள் வலதுசாரிகள். இன்றைய பெரியாரிஸ்டுகள் யாரும் ஈரோடு திட்டம் பற்றி ஏன் பேசுவதில்லை? 1933 இல் பெரியாரும், சிங்காரவேலரும் இணைந்து ஈரோடு திட்டம் என்பதை உருவாக்கினார்கள். சிங்காரவேலருக்கும், பெரியாருக்கும் இடையில் ஏற்பட்ட பிரிவுக்குப் பிறகு ஈரோடு திட்டம் பற்றி பேச்சில்லை. ரஷ்யாவுக்கு சென்று திரும்பிய பெரியார் தமிழ்நாடு முழுவதும் சமதர்ம மன்றங்களை ஏற்படுத்தினார். சிங்காரவேலர் அழுத்தம் திருத்தமான பொதுவுடைமைவாதி. ஜமீன்தாரி முறையை முற்றாக ஒழித்தாக வேண்டும். லேவாதேவி முறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். இப்படி பல திட்டங்கள். பிரிட்டிஷாரின் சொத்துக்களை எத்தகைய இழப்பீடும் இல்லாமல் அரசு எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதும் ஈரோடு திட்டத்தில் ஒரு முக்கியக் கூறு. திராவிட இயக்கம் இத்திட்டத்தில் ஊன்றி நிற்கவில்லை. திராவிட இயக்கத்தினுள்ளும் நிலக்கிழார்கள், முதலாளிகள் என்று பலரும் இருந்தனர். ஜமீன்தாரி முறை முதலியவற்றிற்குப் பிறகு கட்டுப்பாடுகள் ஏற்பட்டன. அன்று ஈரோடு திட்டம் கைவிடப்பட்டது என்றாலும் திராவிட இயக்கம் பிறகு என்றைக்காவது இதை புதுப்பித்திருக்க வேண்டும். இன்று பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் இந்தியாவின் பொருளியலையும், அரசியலையும் தனக்குள் முற்றாக அடக்கி தேசத்தை, மக்களை, இயற்கையை நாசப்படுத்திக் கொண்டிருக்கிறது. திராவிட இயக்கத்தவர்தான் பன்னாட்டு நிறுவனங்களுக்கெதிராக உறுதியாக நிற்கவேண்டும். லேவாதேவி, ஜமீன்தாரி முறை இன்றும் வெவ்வேறு பெயர்களில் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது. பெரியார் அன்று தன் இயக்கம் புரட்சிகர இயக்கம் என்றார். சீர்திருத்த இயக்கம் இல்லையென்றும் சொன்னார். இன்று எந்த நிலை? பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சியை எப்படிக் கருதுகிறீர்கள்? கார்ப்ரேட் நிறுவனங்கள் இந்தியாவை ஆக்கிரமிப்பதில் முதல் வெற்றியை சாதித்திருக்கின்றன. ஐ.டி. நிறுவனங்கள் மட்டுமல்ல கார்ப்ரேட் மருத்துவமனைகள், பிரமாண்டமான கார்ப்ரேட் பலசரக்கு கடைகள், துணி வணிக நிறுவனங்கள், விவசாயத்துறையிலும் கார்ப்ரேட் உற்பத்தி முறை, இப்படி எத்தனையோ வடிவங்களில் கார்ப்ரேட் கலாச்சாரம் நம் மக்கள் வாழ்வுக்குள் ஆடம்பரமாக, ஆர்ப்பாட்டமாக நுழைந்து தங்கி வருகிறது. கிரிக்கெட் சூதாட்டங்கள், குளிர் பானங்கள், சிப்ஸ் நிறுவனங்கள், ஐஸ்க்ரீம், பிசா முதலிய நூறுவகை உணவு வகைகள், இப்படியெல்லாம் கார்ப்ரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் பெருகிவருகிறது. பணவசதி பெருகி வருபவர்களுக்கு கார்ப்ரேட் கலாச்சாரம்தான் உகந்த கலாச்சாரம். ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் இவர்களுக்கு மாபெரும் விடுதலை போல வந்துசேர்ந்திருக்கிறது. எந்தகட்டுப்பாடும் தேவையில்லை, எங்கும் திரியலாம், ஓடியாடி வரலாம், கைநிறைய காசு. கிராமங்கள்தோறும் விவசாய நிலங்கள் மாபெரும் கட்டிடங்களாக மாறிவிடுகின்றன. இவர்களின் தேவைக்காகவே ஆறு வழிச்சாலைகள், ஐந்து நட்ச்சத்திர விடுதிகள், மலைப்பிரதேசங்களில் குடில்கள். மதுவிற்பனையில் கட்டுப்பாடில்லை, அமெரிக்கப்பயணம் எளிது. இந்த ஆக்டோபஸ் கரங்களில் ஊழியர்கள்/நடுத்தரமக்கள். அது மட்டுமின்றி இன்றைக்கு பெரும்பான்மை மக்கள் விவசாயத்தை விட்டு அப்புறப்படுத்தப்பட்டு விட்டார்கள். அதை சுருக்கமாக விவரிக்க இயலாது. இந்நிலையில் பன்னாட்டு நிறுவனங்கள் விவசாயத்தை கையில் எடுத்து கொள்ளும் பேரபாயம் இருக்கிறது. இந்நிலை தொடருமாயின் மக்கள் அடிப்படைத் தேவைகளுக்கே அம்பானிகளை எதிர்நோக்கும் அவலம் நிகழும். நிச்சயமாக…. மைய அரசு ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சி / காவல் உயரதிகாரிகளை (I .A .S , I .P .S ) வெளிமாநிலத்தவராகவே நியமிப்பது ஏன்? இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் , இந்திய ஆட்சிமுறை, கூட்டாட்சி முறைதான் என்று பெயரளவிற்கு சொல்லிக்கொண்டபோதிலும் unitary government என்ற முறையில் ஐக்கிய ஆட்சியாக / ஒற்றை ஆட்சியாகத்தான் இருக்கிறது. மாநிலங்கள் பெயரளவுக்கு அரசுகள் / states என்று பெயரிடப்பட்ட போதிலும் இந்தியாவில் இருப்பது ஓர் அரசுதான். மைய அரசின் உறுப்புகளாகத்தான் மாநில அரசுகள் உள்ளன. முதன்மையான / முக்கியமான அதிகாரங்கள் எல்லாம் மைய அரசிடம்தான் உள்ளன. மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களையும் தேவைப்படும் பொழுதெல்லாம் மைய அரசு எடுத்துக் கொள்ளமுடியும். இந்த அடிப்படையில்தான் இந்தியாவின் I .A .S , I .P .S முதலிய அதிகாரிகள் மைய அரசால் தெரிவு செய்யப்பட்டு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். மைய அரசு தன் கட்டுப்பாட்டில் மாநிலங்களை வைத்துக் கொள்ளவேண்டுமென நினைக்கிறது. ஆளுநர்களும் இத்தகைய தேவைக்காகவே நியமனம் செய்யப்படுகிறார்கள். நிதி அதிகாரங்கள் முதலியனவும் பெரும்பகுதி மைய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு என்று பெருமைப்பட்டுக்கொள்கிற இந்தியாவின் அரசியல் அவலட்சணம் இதுதான். எந்த மாநிலத்திற்கும் தன்னுரிமை / சுயநிர்ணய உரிமை இல்லை. இராணுவ வலிமையால் இந்தியாவை ஒரு தேசமென பிரிட்டிஷார் அறிவித்தனர். பிரிட்டிஷ் அரசின் வாரிசாகத்தான் இந்திய அரசு இன்றும் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் அயல் மொழியினர் தமிழகத்தில் I .A .S , I .P .S அதிகாரிகளாக, இன்றும் இருக்கின்றனர். இவர்களின் அதிகாரத்திற்கு அமைச்சர்கள் அடக்கம். அன்னா ஹசாரேக்கு ஆதரவான மக்களின் எழுச்சியை காந்தியத்தின் மறுமலர்ச்சியாக கொண்டாடுகிறார்களே? இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைத் தொடர்பான ஊழல் விவகாரம் இந்திய அரசியலில் புயல்போல அடித்துக் கொண்டிருக்கிற அதே சமயம், காமன்வெல்த் விளையாட்டு தொடர்பான ஊழலும், மும்பையில் இராணுவக் குடியிருப்புத் தொடர்பான இந்தியாவையே கலங்கடித்துக் கொண்டிருந்த சமயத்தில் இந்திய அரசியலில் இருக்கிற ஊழல் என்ற பிசாசை இனியும் விடுவைக்க முடியாது என்ற ஆவேசத்துடன் மகாராட்டியத்திலிருந்து அன்னா ஹசாரே என்ற காந்தியவாதி புறப்பட்டார். இத்தனை மோசமான சூழலில் ஒரு காந்தியவாதியால் அமைதியாக இருக்க முடியவில்லை. 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அரசியலில் எத்தனையோ நாசங்கள் நடைபெற்ற போதிலும் கண்டும் காணாதவர் போலத்தான் அன்னாஹசாரே இருந்தாரா என்பது தெரியவில்லை. ஊழலை ஒழிப்பதற்கான திட்டங்கள் / சட்டங்கள் என எவ்வளவோ காலம் பேசப்பட்டபோதிலும் எதுவும் முறையாக நடைபெறவில்லை. அன்னாஹசாரே மாற்றுத்திட்டம் என்ற ஒன்றை முன்வைத்தார். சட்டம் இயற்றுவது என்றால் பாராளுமன்றத்தில்தான் அதை நிறைவேற்றியாக வேண்டும் என்ற முறையில் பிரதமரும் மற்றவர்களும். வாதங்களை முன்வைத்தனர். ஊழல்வாதிகள் நிறைந்திருக்கின்ற பாராளுமன்றத்தில் பெயரளவிற்கு ஏதோ ஒன்றை நிறைவேற்றிவிட்டு அப்புறம் அது செயல்படாமல் இருக்க செய்துவிடுவார்கள். அன்னாஹசாரே உறுதியாக இருந்தார். அப்புறம் ஏதோ நடந்திருக்கிறது. அன்னாஹசாரேவை ஏமாற்றுவது இந்திய அரசியல்வாதிகளுக்கு எளிதாக கைவந்தகலை. இனி காந்தியத்திற்கு வெற்றி கிடைப்பதாவது? இன்றைய இந்திய தேசத்தின் உள்கட்டமைப்பு பிரச்சினைகள் என்னென்ன? இன்று இந்தியாவை ஒரு தேசமெனக் கருதி இந்திய தேசமென்று சொல்வதில் உண்மையில்லை. இந்தியா என்பது பல தேசங்கள் / பலதேசிய இனங்கள் அடங்கிய ஒரு துணைக்கண்டம். இந்தியா என்ற இந்த மாபெரும் துணைக்கண்டத்தை ஒரு தேசமென இராணுவம் முதலியவற்றை கொண்டு ஒடுக்கி உருவாக்குவதன் மூலமாகவே மாபெரும் சிக்கல்கள் தோன்றியுள்ளன. காஷ்மீர் என்பது ஒரு மாபெரும் சிக்கல். அறுபது ஆண்டுகளாக காஷ்மீரை இந்தியாவோடு வைத்திருக்கவேண்டும் என்ற முயற்சியில் பலநூறுகோடி வீண் செலவு. ஆயிரக்கணக்கில் படுகொலைகள். இதுபோல பிற கிழக்கு மாநிலங்களிலும் கடுமையான சிக்கல். இந்தியா என்ற ஒரு தேசத்திற்கு ஒரு மொழி தேவையென்ற நம்பிக்கையில் இந்தியின் ஆதிக்கத்தை தமிழ் முதலிய பலமொழிகள் மீது திணிக்க வேண்டியிருக்கிறது. இந்தியப் பண்பாடு என்று ஒன்று இருப்பதாக நம்பி இந்துத்துவம் என்ற பிசாசை வளர்க்க வேண்டியிருக்கிறது. அரசியல் சட்டத்தினுள்ளும் சாதிக்கு இடம் தரப்பட்டிருக்கிறது. அந்நிய நிறுவனங்களின் பொருளியல், ஆதிக்கத்திற்கு அனுசரணையாகவும் இந்தியாவை ஒரு தேசம் என்று வைத்திருக்க வேண்டியிருக்கிறது. தேசிய இன விடுதலை என்ற பெயரில் எந்தவொரு இயக்கம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றாலும் பயங்கரவாதம்/ தீவிரவாதம் என்று சொல்லி அதை ஒடுக்க அரசு முயற்சி செய்கிறது. மார்வாடிகள் முதலிய ஒருசில இனத்தவர் இந்தியா முழுவதும் பரவி பல மாநிலங்களின் நிலச்சொத்துகளை வாங்குவதுடன் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு அந்தந்த மாநில மக்களின் மேல் தம் ஆதிக்கத்தைப் பெருக்க வாய்ப்பு ஏற்படுகிறது. தமிழ்த்தேசம் இன்று தமிழ்மக்களின் தேசமாக இல்லை. தற்போது தமிழிலக்கிய வளர்ச்சி எந்த நிலையில் உள்ளது? செம்மொழி என்ற தகுதியைப் பெற்ற தமிழைத் தொடர்ந்து வளர்த்தெடுக்கும் ஆற்றல் நம் தமிழ் ஆசிரியர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழைத் தின்று இவர்கள் பிழைக்கிறார்களே ஒழிய இவர்கள் தமிழின் ஆற்றலையும், தமிழின் வாழ்வையும் தமிழ் அறத்தையும் அறவே புரிந்து கொள்ளவில்லை. விதிவிலக்காக ஒரு சிலர் இருப்பது, இன்றைய உலக நெருக்கடிகளுக்கிடையில் தமிழைக் காப்பதற்குப் போதாது. தமிழிலக்கியம் என்ற மாபெரும் செல்வத்தை வைத்துக்கொண்டு இன்று இந்திய அளவிலும், உலகளவிலும் நமக்கான தகுதியைப் பெறும் திறன் இல்லாதவர்களாக இருக்கிறோம். தொன்மைத் தமிழ் இலக்கியத்தின் பேரளவுக்கு ஒத்த முறையில் ஒரு நூற்றாண்டுக்கிடையில் தமிழிலக்கியம் கண்டிருக்கும் வளர்ச்சி வியக்கத்தகுத்தது. இது பற்றி தமிழ்ப் பேராசிரியர்களுக்கு படிப்போ, பார்வையோ இல்லை. கடந்த 50 ஆண்டுக்கால அளவிலும் இறுதியாக கடந்த 25 ஆண்டுக்கால அளவிலும் சிற்றிதழ்கள் சார்ந்தும், சாராமலும் நவீன இலக்கியப் பார்வையோடு படைப்பாளிகள் நூற்றுக்கணக்கில் நவீன கவிதைகள் என்றும் சிறுகதைகள் என்றும் நாவல்கள் என்றும் தொடர்ந்து படைத்து வருகின்றனர். கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வட்டாரங்கள் இவர்களை, இவர்களது ஆக்கங்களைக் கண்டு கொள்ளவேயில்லை. ஞானபீட பரிசு முதலியவற்றிற்கு இவர்களில் பலர் தகுதியுடையவர். தமிழ்த் துறைகளில், பட்டம் பெறாத இவர்களின் நுழைவால் தமிழின் ஆற்றல் வெள்ளம்போல் பெருகும். பெரியவர்கள் கண்டு கொள்ளவில்லையென்றாலும் இவர்கள் பார்வைக்கு அப்பால் தமிழிலக்கியம் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இலக்கியம் பற்றிய உங்கள் மார்க்சிய கோட்பாடு என்ன? வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மைக் காலத்தில் இயற்கையோடு நம் இணைந்திருந்தோம். ஏற்றத்தாழ்வுகள் நமக்கிடையே இல்லை. உழைப்பிலும், பகிர்விலும் நாம் இணைந்திருந்தோம். தனிவுடைமையும், அதிகாரமும் தொடங்கி வளர்ந்த காலத்தில் இயற்கையிலிருந்து நாம் விலகினோம். சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக சமூகத்தினுள்ளும், நமக்குள்ளும் பிரிவுகள் ஏற்பட்டன. போட்டி, பொறாமைகள் போர்கள் பெருகின. ஏற்றத்தாழ்வில்லாத தொன்மைச் சமூகம் நமக்குள் கனவாய், கற்பனையாய், கதைகளாய், கவிதைகளாய் மீண்டும் மீண்டும் எழுந்தன. ஆதிப் பொதுமை சமூக பண்பாட்டில்தான் நாம் உயிர்த்திருக்க முடியும். அத்தகைய சமூகத்தைப் பெறுவதற்காக காலந்தோறும் நாம் போராடுகிறோம். வர்க்கமற்ற சமூக வாழ்வே நமக்கு இலக்கு. சமதர்மமன்றி நமக்கு வாழ்வில்லை. பேரிலக்கியங்கள் இத்தகைய பேருண்மையைத்தான் தமக்குள் தாங்கியிருக்கின்றன. வள்ளுவரின் ஒப்புரவும், சமதர்மமும் வேறானவையில்லை. சமயங்களின் அடித்தளம் என்பது இத்தகைய சமதர்ம உணர்விலிருந்துதான் கடவுளர்கள், காவியங்கள் எழுகின்றன. இலக்கியம் என்பது வெற்று அலங்காரமில்லை. காலந்தோறும் மனிதன் நடத்திய போராட்டங்களின் பதிவுகள்தான் இலக்கியங்கள். இளங்கோவும், கம்பரும் செய்தவை இத்தகைய பதிவுகள்தான். பாரதியும், புதுமைப்பித்தனும் இந்தப் பதிவின் தொடர்ச்சிகள். பிராமித்தியோசை கொண்டாடியவர் மார்க்ஸ். மார்க்சியரின் இலக்கியப்பார்வை என்பதன் மையம் இது. புதுப்புனல் - 2012 திசம்பர் - - மு.வசந்தகுமார் கடந்து வந்த பாதையும் கற்ற அனுபவப்பதிவுகளும் தமிழகத்தில் இன்றுள்ள சிறந்த மார்க்சியத் திறனாய்வாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் கோவையைச் சேர்ந்த ஞானி. பண்டைய இலக்கியங்களைப் பற்றியும், மதம் மற்றும் மக்கள் வாழ்வில் அதன் பங்கு பற்றியும் அவருடைய பார்வை வளமான மார்க்சியத்தின் அடிப்படையிலானது. ஞானி ஒரு திறனாய்வாளர் மட்டுமல்ல; கல்லிகை என்ற ஒரு சிறந்த கவிதைப் படைப்பையும் தந்தவர். வானம்பாடிக் கவிதை இயக்கத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்; புதிய தலைமுறை, பரிமாணம் ஆகிய இதழ்களில் அவருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நிகழ், தமிழ்நேயம் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்து அவர் ஆற்றிய பணிகள் போற்றுதலுக்கு உரியவை. மார்க்சியக் கண்ணோட்டத்திலான தமிழ்தேசியம் அவருடையது. தத்துவம், வரலாறு, இலக்கியம், திறனாய்வு எனப் பல்வேறு தளங்களிலும் தனது சிந்தனைகளைப் பதித்துள்ள ஞானியின் ஆளுமை பற்றிய ஒரு பொதுவான சித்திரத்தை அவருடைய சொற்கள் மூலமே வெளிக் கொணர்வதற்கான ஒரு சிறு முயற்சிதான் இந்த நேர்காணல். உங்கள் குடும்பச்சூழல், கல்வி பயிற்சி முதலியவை உங்கள் முற்போக்கு மற்றும் மார்க்சியம் சிந்தனைகளுக்கு எவ்வாறு உதவியாக இருந்தன? எனது முற்போக்கான பார்வைக்கும், குறிப்பாக, மார்க்சிய சிந்தனைக்கும் அதுபோல பொதுவாக சமூக சிந்தனைக்கு என் குடும்பப் பாரம்பரியமும் எனக்கு வாய்ந்த கல்விச்சூழலும் துணையாக மட்டுமன்றி தூண்டுதலாகவும் இருந்தன என்பதில் ஐயமில்லை. முன்பு ஒரு முறை நான் எழுதியபடி, இன்றியமையாத காரணங்களுக்கு அல்லாமல் மார்க்சியத்தை ஒருவர் ஏற்கவேண்டியதில்லை என்பது என் வாழ்விலிருந்தே நான் கண்ட அனுபவம். எனக்குத் தெரிந்த ஒருசிலர் தொடக்கத்தில் மார்க்சியத்தின் மீது பெரும் அக்கறை கொண்டவர் போலத் தோன்றினாலும், நாளடைவில் மார்க்சியத்தில் அக்கறை குறைந்தமைக்கும். இப்படித்தான் காரணம் சொல்ல முடியும். என் இளமை காலம் கிராமச்சூழலில் கழிந்தது. என் பெற்றோரும் என் உறவினர் பலரும் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்களாகத் தான் இருந்தனர். 42 தொடங்கி 48 வரையிலான காலச்சூழலில் எங்கள் வாழ்வு பெரும் சிரமத்தோடுதான் கழிந்தது. அக்காலத்தில் நம் மக்களைத் தாக்கிய பஞ்சத்தில் நாங்களும் பெரிதும் அடிபட்டோம் உழவர்களும் நெசவாளர்களும் வாழ்ந்த கிராமங்கள். புன்செய் நிலம். விடுதலைப்போராட்டத்தின் சில கூறுகள் எங்கள் கிராமத்திர்குள்ளும் வந்தன. காந்தி முதலியவர்கள் மீது ஈடுபாடு கொண்ட என் தந்தையார் தினமணி இதழைத் தவறாமல் படித்து வந்தார். தொடக்கப்பள்ளியில் எனக்கு வாய்த்த நல்லாசிரியர்களை நான் என்றைக்கும் மறக்க இயலாது. என் பாட்டியும் அத்தைமாரும் அன்பின் உறைவிடங்கள். ஆற்றலும் பெருந்தன்மையும் மிக்கவர் என் தந்தையார். இந்த சூழலில் தான் என் இளமைக்காலம் அமைத்தது இத்தகையச் சூழலுக்குள் வளர்ந்து தான் பின்னர் எனக்குள் ஏற்பட்ட மார்க்கிசிய ஈடுபாட்டிற்கு முதன்மையான காரணம் என்பதை பின்னர் புரிந்து கொண்டேன். இளமை முதற்கொண்டே கடவுள் நம்பிக்கை எனக்குள் ஆழமாக இருந்த போதிலும் சாதி, சடங்கு மீது எனக்கு ஈடுபாடு இல்லை. இவற்றை எனக்குள் யாரும் திணிக்கவும் இல்லை. விடுதலைக்குப் பிறகான வரலாற்றுச் சூழல் குறித்து எனக்குள் இயல்பாகவே அக்கறை இருந்தது. வரலாற்றுச் சூழல் குறித்து எனக்குள் இயல்பாகவே அக்கறை இருந்தது. வரலாற்றுப்பாடம் என்னைப் பெரிதும் கவர்ந்த பாடம். காந்தி, நேரு, நேதாஜி முதலியவர்கள் மீது எனக்கு இருந்த அக்கறையும் பெரிது. கத்தோலிக்க நிறுவனங்கள் நடத்திய பள்ளிகளில் படிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. தமிழின் மீது எனக்குப் பெரும் ஈடுபாடு ஏற்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்ற காலத்த்தில் தமிழிலக்கியம் மட்டுமல்லாமல் வரலாறு அறிவியல், இலக்கியத்திறனாய்வு, மெய்யியல் என்று நிறைய படித்தேன். தியானத்தின் விளைவாக எனக்குள் ஏற்பட்ட சில பேரனுபவங்களுக்கு, எனக்குள்ளும் வெளியிலும் என் ஆதாரங்கள் இருக்க முடியுமென்று தொடர்ந்து பல ஆண்டுகள் தேடினேன். நான் வாழ்ந்த சோமனூரில் தொழிற்சாலைகள் பல இருந்தன. தேர்தல் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் ஆற்றிய உரைகள் எனக்குப் பிடித்தவையாக இருந்தன. தொழிற்சாலைகள் நிறைந்த கோவை நகரத்தோடும் எனக்கு உறவு இருந்தது. அங்கு படித்ததோடு ஆசிரியர் பணியை நான் மேற்கொண்டேன். தொழிலாளர் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்ற கோவை நகரத்தில் வாழும் எவருக்கும் சோசலிசம் குறித்தும் மார்க்சியம் குறித்தும் தெரிந்து கொள்ளாமல் இருக்கவும் முடியாது. என் குடும்பத்திற்குள் சாதி பற்றுக்கு இடமில்லை . என் பாட்டனார் காலம் முதற் கொண்டே எங்கள் குடும்பத்திற்குள் சாதிக்கலப்புகள் இயல்பாய் நடைபெற்றன. சமூக ஈடுபாடு மார்க்சிய சிந்தனை ஆகியவை எனக்குள் ஏற்பட்ட சூழல் பற்றி மேலும் விரித்துக் கொண்டிருக்க எனக்கு விருப்பமில்லை. சுருக்கமாகத்தான் சிலவற்றை சொல்லியாக வேண்டும். பகுத்தறிவுப் பார்வை மீது எனக்கு அக்கறை இருந்த போதிலும் மார்க்சியம்தான் என்னைப் பெரிதும் ஈர்த்தது. மார்க்சியத்தின் வழியேதான் உலகளவுக்கு பெரிதான வரலாற்றுக்குள் shift பயணம் செய்யமுடியும் அது போலவே நம் சமூகத்திற்குள் தொடரும் வறுமை, நோய் நொடிகள், சமூகச் சீர்குலைவுகள் ஆதிக்கங்கள் முதலிய பலவகையான கேடுகளுக்கான பொருளியல் காரணங்களை தேடிச் செல்ல முடியும். தமிழிலக்கியத்தை ஆழ்ந்து கற்றதன் விளைவாக தமிழிலக்கிய வரலாற்றுகுள்ளும் ஆழ்ந்து செல்வதற்கு மார்க்சியப் பார்வைதான் துணையாக இருக்க முடியும். பகுத்தறிவுப் பார்வையோடு நெடுந் தொலைவு செல்ல முடியாது. தமிழை அக்கறையோடு நான் கற்றது போலவே ஆங்கிலத்தையும் அக்கறை யோடு கற்றேன். மார்க்சியம் குறித்த நூல்கள் மட்டுமல்லாமல் வரலாறு, மெய்யியல் போன்ற வேறு நூல்களையும் ஆழமாகக் கற்றுக் கொள்ள ஆங்கிலம்தான் பயன்பட்டது. தமிழாசிரியராய் தான் பணிபுரிந்தேன். பெரும் வருமானத்திற்கு வாய்ப்பில்லை. மனைவியும் ஆசிரியப் பணி புரிந்ததனால் வேறு தொழில் தேடி பணம் ஈட்ட வேண்டிய தேவையில்லை தொடக்கத்தில் வாடகை வீட்டில்தான் வாழ்ந்தோம் பிறகுதான் சொந்தமாக ஒரு வீடுகட்டிக் கொண்டோம் செல்வக் குவிப்புக்கு வாய்ப்பில்லை, தேவையுமில்லை . கோவையில் புலவர் ஆதி முதலிய நண்பர்களின் தூண்டுதலோடு கலை இலக்கிய பெருமன்ற ஈடுபாடு எனக்கு ஏற்பட்டது. எஸ். என். நாகராசன், எஸ்.வி. இராஜதுரை நண்பர்களின் ஒத்துழைப்போடு மார்க்சியத்தைத் தொடர்ந்து கற்றேன். என் வாழ்வுக்கான அர்த்தம் என்ன என்ற தேடலுக்கு மார்க்சியத்தின் வழியேதான் பதில்கள் கிடைக்கின்றன. தமிழிலக்கிய ஆய்வுக்குள்ளும் தொடர்ந்து செல்வதற்கு மார்க்சியம்தான் தூண்டுதலாகவும் துணையாகவும் இருக்கிறது. தமிழக அளவில் மார்க்சியம், இலக்கியம் சார்ந்த நண்பர்களும் கிடைத்தனர். எல்லோருக்குள்ளும் தொடர்ந்து கேள்விகள் விவாதங்கள், ஆய்வுகள் வாழ்வு எனக்கு வளமாக நிறைவாக உற்சாகத்தோடு தான் கழிந்தது. எத்தனைவகை வகையான உறவுகளைச் சேகரித்துக் கொண்டேன். எனக்குள் எத்தனை வெளிச்சங்கள். என் வாழ்க்கை தமிழ்ச்சமூகம் வரலாறு இவற்றோடு மட்டுமல்லாமல் இந்திய வரலாறு அப்புறம் உலகளவிலான வரலாற்றுச்சூழல் எல்லாவற்றினுள்ளும் இழைந்தும் கலந்தும் கிடக்கிறது, இயங்குகிறது. எனக்குள் பிரபஞ்சம் வரை எல்லா வற்றையும், எல்லோரையும் தரிசிக்கிறேன். கடவுளர் எல்லாம் எனக்குள் கரைந்து கிடக்கின்றனர் இயற்கையோடு எல்லாவகை உயிரினங்களோடும் நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இப்படி எவ்வளவோ நான் சொல்ல முடியும் தமிழிலக்கியம் மட்டுமல்லாமல் மார்க்சியமும் எனக்கு இணைந்திருப்பதன் விளைவாகவே இந்தத் தரிசனங்கள்; தொடர்ந்து தேடல்கள். மார்க்ஸ், எங்கெல்ஸ், மில்ட்ன், சேக்ஷ்பியர், கம்பர், வள்ளுவர் இவர்களோடு எஸ்.என். நாகராசன் என் பெற்றோர் நண்பர்கள் - இப்படி இப்படியாக எல்லோரும் எனக்குள் வாழ்கின்றனர். உங்கள் மார்க்சிய பார்வையின் மீது எஸ்.என். ஏற்படுத்திய தாக்கம் என்ன? அவரோடு உங்களுக்கு மாறுபாடு உண்டா? எனது மார்க்சியக் கண்ணோட்டத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதில் எஸ்.என். நாகராசனுக்கு முக்கியமான பங்குண்டு. இன்னும் சிலரை பலரைச் சொல்லத்தான் வேண்டும். இப்பொழுது எஸ்.என். பற்றி மட்டுமே பேசலாம். நாகராசனை சந்திப்பதற்கு முன்பே மார்க்சியத்தின் மீது எனக்கு ஈடுபாடு உண்டு என்ற போதிலும் மார்க்சியம் குறித்த எனது பார்வைக்குத் தேவையான தெளிவையும் விரிவையும் தந்தவர் என்ற முறையால் நாகராசனைத் தான் குறிப்பிடமுடியும். என் மார்க்சிய பார்வையின் மீது நாகராசனின் தாக்கம் என்று தொடங்கினால் அது பற்றி நிறைய எழுதவும் வேண்டும். அதையும் இப்பொழுது தவிர்த்துக் கொள்ள நேரிடையாக உங்கள் கேள்விக்கு வருகிறேன். சமயம் பற்றிய எனது மார்க்சிய பார்வையில் கூடியவரை கூடுதலான தெளிவு ஏற்படுத்தியவர் நாகராசன் தான். ‘இதயமற்ற உலகின் இதயம்’, ஆன்மா அற்ற உலகின் ஆன்மா என்று மார்க்சு கூறியதற்கான தெளிவை நாகராசன் மூலம்தான் நான் பெற்றேன். சமயம் குறித்து எனக்கு ஏற்பட்ட அனுபவம் நாகராசனுக்கு இல்லை. அண்ணாமலையில் நான் படிக்கிற பொழுதே தியானம் செய்வதில் ஈடுபட்டு இறுதியில் நானே பிரம்மம் என்ற பேருணர்வை பெற்றது பற்றியும். அத்வைதம் என்ற பேருணர்வுக்கான பொருண்மைத் தெளிவை நாளடைவில் விவேகானந்தர், தாகூர் பாரதி முதலியவர்களைப் பற்றிய படிப்பறிவின் மூலமும் பெற்றேன். இந்தப் பார்வை எனக்கு மார்க்சியத்தின் மீதான எனது நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியது. இத்தகைய புரிதல் நாகராசனுக்கு இல்லை. நாகராசன் அவர்களும் வைணவ சமயம் முன்வைக்கிற கைங்கரியம் போன்ற பார்வையின் வழியே மார்க்சியத்திற்கு வந்து சேர்ந்தார் என்று சொல்வதில் அர்த்தமில்லை. ‘அகந்தையை ஒழி’ என்ற மாவோவின் பார்வையில் அவருக்கு ஏற்பட்ட தெளிவுக்கு கூடுதலான அர்த்தச் செரிவை அவருக்கு வைணவம் தந்திருக்கக் கூடும் உண்மையில் அவரது குடும்பத்தின் வழியே அவருக்குள் வந்த வைணவச் சார்பு, மார்க்சியத்தை அவர் எளிதாக செரித்துக் கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்திருக்க முடியும். அன்றியும் இராமானுசர் முன் வைத்த விசிஷ்டத்துவைதம் என்ற கருத்தியலின் அடிப்படைக்குள் சென்றால் மார்க்சியம் முன் வைக்கிற இயங்கியலுக்குள் போய்ச் சேரமுடியும். அதாவது எதிர் மறைகளின் இணைவும் போராட்டமும் என்பதான் இயங்கியல் கூற்றும் இராமானுசரின் கருத்தியலும் இணக்கமானவை. நானே பிரம்மம் என்பது அத்வைதம் ஜீவாத்மாவும் பிரமாத்மாவும் வேறுவேறு என்பது துவைதம் ஒன்று ஒருமை தத்துவம் மற்றது இருமை தத்துவம் ஜீவனில்லாமல் பிரம்மனில்லை. பிரம்மமில்லாமல் ஜீவனில்லை என்பது விசிஷ்டாத்துவைதம் இரண்டும் வேறு வேறல்ல ஒன்றனுள் ஒன்று அது இல்லாமல் இது இல்லை. ஒன்றனுள் மற்றது இணைந்தே இருக்கும் இத்தகைய விளக்கம் இயங்கியல் அன்றி வேறில்லை. இவ்வகையில் மார்க்சியத்திற்கும் வைணவத்திற்கும் இடையிலான ஒரு வகை உறவை எங்களுக்குத் தெளிவுப்படுத்தியவர். எஸ்.என். நாகராசன் தமிழ் மரபுக்குள் மார்க்சியம் கண்டு தெளிந்தவர் நாகராசன் இத்தகைய புரிதல் மூலம் தான் மார்க்சியம் நமக்குள் வசப்படும் இப்படிப் புரிந்து கொண்ட பிறகு மார்க்சியத்தை விட்டு நம்மால் விலகிச் செல்ல முடியாது. தமிழிலக்கிய ஆய்வுக்கு மார்க்சியத்தை மிகப்பெரிய அளவுக்கு நான் பயன்படுத்தினேன். நாகராசன் தமிழிலக்கியம் கற்கவில்லை . திருக்குறளை ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலமாவது நீங்கள் படிக்க வேண்டுமென்று நான் எவ்வளவோ முறை சொன்ன போதும் அவர் படிக்கவில்லை. என்றாலும் ஆழ்வார்கள் பாடல் மீது அவருக்கு அக்கறை உண்டு. தமிழிலக்கியத்தை அவர் கற்க வில்லை என்பது அவரைப் பொறுத்தவரை ஒரு குறை என்று நான் கருதவில்லை. தமிழில் மட்டும்தான் இருபத்து ஐயாயிரம் பழமொழிகள் உள்ளன. இத்தனை பழமொழிகள் கொண்ட ஒரு சமூகம் எத்தனை கால மரபையும் ஆழத்தையும் பெற்றிருக்க முடியும். இத்தகைய மரபில் வந்தவனுக்கு மார்க்சியம் ஒரு பொருட்டில்லை என்பதைத் தெளிவோடும் உறுதியோடும் பேசுபவர் நாகராசன். தமிழிலக்கிய ஆய்வின் மூலம் மார்க்சியத்தை செரித்துக் கொண்டவனாகிய நான் நாகராசனோடு இணைந்திருப்பதன் மூலம் தமிழகச் சூழலால் மார்க்சியத்தை வலுப்படுத்துகிறோம். இங்கு இன்னொரு விளக்கமும் தேவைப்படுகின்றது. பிரபஞ்சத்தோடு எனக்கு என்ன உறவு? அதுபோல இயற்கையோடும் வரலாற்றோடும் சமூகத்தோடும் எனக்கு என்ன உறவு? இந்தக் கேள்வியை மேலும் நீட்டிக்கலாம். உலகத்தோடு எனக்கு என்ன உறவு? குடும்பத்தோடு, தாயோடு, மனைவியோடு குழந்தையோடு எனக்கு என்ன உறவு? இதற்கு நாம் காணும் விடை என்னவாக இருக்க முடியும். பிரபஞ்சத்திற்குள் இயற்கைக்குள், வரலாற்றுக்குள் சமூகத்திற்குள் நான் இருக்கிறேன் எனக்குள் பிரபஞ்சமும் இயற்கையும் வரலாறு முதலியனவும் இருக்கின்றன. இன்னும் ஒரு கேள்வி பிரபஞ்சமும் நானும் அதைபோல இயற்கையும் நானும் ஒன்றா? வேறா? இல்லை நானும் பிரபஞ்சமும் ஒன்றாகவும் இருக்கிறோம். வேறாகவும் இருக்கிறோம். எனக்குள் பிரபஞ்சமும் பிரபஞ்சத்திற்குள் நானும் இருக்கிறோம். நான் இல்லாமல் பிரபஞ்சம் இல்லை. பிரபஞ்சம் இல்லாமல் நானில்லை. இதே போலத்தான் இயற்கைக்குள் நானும், நான் இயற்கைக்குள் இரண்டும் ஒன்றுதான் வேறும் தான் ஒன்றுக்குள் இன்னொன்றும் தான் இப்படியேதான் கணவனுக்குள் மனைவியும் மனைவிக்குள் கணவனும் “ஒன்றாய் வேறாய் உடனாய் என்கிறது சிவஞான போதம்” இது எத்தனை பெரிய உண்மை . இது தமிழன் கண்ட பேருண்மை இத்தகைய விளக்கம் இயங்கியலன்றி வேறென்ன? இந்திய தத்துவத்தில் மூன்றுவகை விளக்கங்கள் உள்ளன. சங்கரின் அத்வைதம் (ஒருமை நிலை) இன்னொன்று மத்வரின் துவைதம் (இருமை நிலை) 3. இராமானுசரின் விசிஷ்டாத்துவைதம் (ஒன்றுக்குள் இன்னொன்று ஒன்றோடு இன்னொன்று) இந்த மூவகை நிலைப்பாடும் சமய விளக்கங்களுக்குள் அடங்கியிருப்பதாக மட்டும் நாம் கருத வேண்டியதில்லை. ஏற்கெனவே நான் முன்பு கூறியது போல உலகுக்கும் வரலாற்றுக்கும் எனக்கும் என்ன உறவு என்ற முறையிலான விளக்கத்திற்குள் அடங்கி இருப்பது இந்த மூன்று வகை நிலைப்பாடு இத்தகைய விளக்கம் சமயத்திற்குள் தென்பட்ட போதிலும் இது உலகியல் சார்ந்த விளக்கம். பொருள் முதலியல் விளக்கம் இத்தகைய விளக்கம். சங்கரர் முதலியவர்களுக்குள் இல்லை. ஏதோ பேருண்மையை தான் கண்டது போல கூறினர். இது மார்க்சியத்திற்கும் ஒத்த விளக்கம் இயங்கியல் விளக்கம். கடவுள் என்பதை சமய அறிஞர்கள் எவ்வாறெல்லாம் விளக்கினர் என்பதையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது மேலே நாம் கண்ட இயங்கியல் தரும் விளக்கமன்றி வேறெதுவாக இருக்க முடியும். எஸ்.என். நாகராசனும் நானும் இவ்வகையிலும் ஒன்றுபடத்தான் செய்கிறோம். இவ்வகையிலும் மார்க்சியத்தை நாங்கள் வளப்படுத்தியுள்ளோம். ‘புதிய தலைமுறை’ இதழுடன் உங்கள் உறவு, அதில் உங்கள் பங்களிப்பு, அதனுடன் உங்களுக்கு ஏற்பட்ட முரண்பாடு ஆகியவை பற்றிக் கூறுங்கள்? 1967- 68ம் ஆண்டுக்காலத்தில் கோவையில் புதிய தலைமுறை இதழை வெளியிட்டோம். 1965 வாக்கில் கோவையில் நாங்கள் உருவாக்கி செயல்பட்ட சிந்தனை மன்றத்தின் தொடர்ச்சியாகத் தான் ‘புதிய தலைமுறை’ இதழையும் பார்க்கமுடியும். எஸ்.என். நாகராசன் எங்களோடு வந்து சேர்ந்த பிறகு மார்க்சியம், இலக்கியம், தத்துவம் பற்றிய பிரச்சனைகளை நண்பர்கள் பலரோடு இணைந்து தீவிரமாக ஆயும் நோக்கில் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு சிந்தனை மன்றம் மாதம் ஒரு முறை நடைபெற்ற கூட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் கலந்து கொள்வார்கள். கம்யூனிஸ்ட் கட்சியோடு நாங்கள் இல்லை. விவாதங்கள் தீவிரமாக நடைபெற்றதன் காரணமாக காவல்துறையின் பார்வைக்கு நாங்கள் உள்ளானோம். கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறவில்லை 67’ வாக்கில் புதிய தலைமுறை இதழைத் தொடங்கினோம். மாவோ சிந்தனைகளின் பால் நாங்கள் முன்பே ஈர்க்கப்பட்டிருந்தோம். எஸ்.என். நாகராசன் மார்க்சிய நோக்கில் புதிது புதிதான கருத்துகளை எங்களுக்கு அறிமுகப்படுத்தினர். மரபான மார்க்சியரின் பார்வையில் எங்களுக்கு உடன்பாடில்லை. எங்கள் பார்வைளை தமிழக மக்கள் முன் வைக்கும் முறையில் இதழ் தொடங்கினோம். எஸ். என். நாகராசன், பின்னால் எஸ்.வி. இராசதுரை என்று அறியப்பட்ட மனோகரன் (மனோ) புலவர் ஆதி, நஞ்சப்பன் வெங்கட்ராமன், ஆ.துரைசாமி இவர்களோடு நான். "புரட்சிகர மானுட தத்துவ இதழ் என்பது இதழின் முத்திரை வாசகம்! கட்சி மார்க்சியர் தொடாத பல கருத்தினங்கள் குறித்து நாங்கள் ஆழமாகப் படித்தோம் எங்களுக்குள் விவாதித்தோம். எழுதினோம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது எங்கள் முழக்கம். சங்க இலக்கியம் குறித்துப் பாரதிதாசன் கவிதைகள் குறித்தும் தொல் காப்பியம் குறித்தும் ஆய்வுக் கட்டுரைப் பல வெளியிட்டோம். ரமணன் என்ற பெயரில் எஸ்.என். நாகராசன் அந்நியமாதல் குறித்து தொடர்ந்து எழுதினார். கனல் என்ற பெயரில் புலவர் ஆதியின் ‘சூடான’ கவிதைகள் தொடர்ந்து வெளியாயின அந்நியமாதல் அடிப்படையில் நஞ்சப்பன் சிறுகதைகள் எழுதினார். கல்கி, . விகடன், கலைமகள் முதலிய வார இதழ்களில் வெளியான கதைகளைக் கடுமையாக விமர்சனம் செய்யும் முறையில் இராவணன் என்ற புனைபெயரில் நான் கட்டுரை எழுதினேன். நா. பார்த்த சாரதியின் நாவல்களை விமர்சனம் செய்து பகிரங்க’ கடிதம் எழுதினேன். சாலை இளந்திரையன் கவிதைகளை வெளியிட் டோம். மொழிச்சிக்கல் குறித்து தமிழகத்தில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்ற சூழலில் மொழிச்சிக்கல் குறித்து கட்டுரைகள் பல வெளியிட்டோம். கார்க்கி, டால்ஸ்டாய், முதலியவர்களின் கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிட் டோம். மனோ எழுதிய சிறுகதைகள் சிறப்பானவை. கீழைக்காற்று, என்னும் தலைப்பில் ஆதி ஒரு அற்புதமான கவிதையை எழுதியிருந்தார். மாவோ பற்றிய கவிதை இது. மாதம் ஒரு இதழ் என்ற முறையில் இரண்டாண்டுகள் தொடர்ந்து புதியதலைமுறை இதழ் வெளிவந்தது. ஸ்டாலின் பற்றி இரமணன் எழுதிய கட்டுரை கடுமையான விவாதத்திற்கு உள்ளாயிற்று இரண்டாண்டுகளுக்கு இடையில் ‘புதியதலைமுறை இதழ்’ தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. வசந்தத்தின் இடி முழக்கம் என்று அறியப்பட்ட நக்சல்பாரி இயக்கச்சார்போடு நாங்கள் செயல்பட்டதாலும் புதிய தலைமுறை காவல்துறையின் கடுமையான பார்வைக்கு உள்ளாயிற்று. அச்சகத்தாரை காவல்துறை மிரட்டியது உளவுத்துறையின் தொல்லைகளும் அதிகரித்தன. ஒரு கட்டத்தில் இதழை நிறுத்த வேண்டி வந்தது. எனினும் இரண்டாண்டுகள் மட்டுமே வெளிவந்த இதழ், இன்று வரையிலும் மார்க்சிய வட்டாரத்தில் ஒரு பகுதியினரிடத்தில் அருமையான பாராட்டையும் இன்னொரு பகுதியினரிடத்தில் கடுமையான புறக்கணிப்பையும் பெற்றதாக இருக்கிறது. ‘புதிய தலைமுறை’ இதழ் மாவோவின் சிந்தனைத் துடிப்பை கொண்ட இதழ் என்பதை அன்றே பலரும் அறிவர். புதிய தலைமுறை இதழ் தொடக்கத்தில் மார்க்சிய லெனினிய கட்சி சார்ந்த இதழாக இல்லை . எஸ். என். நாகராசன், எஸ். வி. இராசதுரை, ஆதி, நஞ்சப்பன் இவர்களோடு நானும் இணைந்த ஒரு ஆசிரியர் குழுதான் இதழுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்ட குழு. இதழின் உள்ளடக்கத்தைத் தீர்மானிப்பது இந்தக் குழுவினர்தான். மார்க்சிய பார்வையோடு ஒத்தும் சற்று விலகியும் இருப்பதாகத் தோன்றும் கட்டுரைகள் கருத்தரங்கம் என்ற பகுதியில் வெளியிடப்பட்டு விவாதத்தை எதிர்கொள்ளும். மார்க்சியத்தோடு முரண்படும் கட்டுரைகள் கவிதைகளுக்கு இதழில் இடமில்லை. இதழை இந்த அடிப்படையில் தான் துவக்கி நடத்தி வந்தோம். கட்சியில் ஒரு யூனிட் என்ற முறையில் நாங்கள் இருந்தோம். இதழை கட்சிக்கு நாங்கள் உட்படுத்தவில்லை. யூனிட் என்ற அமைப்பினுள் இருந்த நாங்கள் தலைவரை சந்திப்போம் அவ்வப்பொழுது எழும் அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதிப்போம். தலைவரோடு எங்களுக்கு உடன்பாடும் முரண்பாடும் எழத்தான் செய்தது புதிய தலைமுறை இதழ் குறித்து தலைவரோடு எங்களுக்கு விவாதமில்லை. காரணம் கட்சி கட்டுப்பாட்டில் இதழ் இருக்கவில்லை. ஒரு கட்டத்தில் கட்சி கட்டுப்பாட்டிற்குள் இதழைக் கொண்டு செல்வதென நண்பர்கள் தீர்மானித்தனர். கட்சி யூனிட்டுக்குள் இருப்பதில் எனக்கு மறுப்பில்லை. கட்சி கட்டுப்பாட்டிற்குள் இதழைக் கொண்டு செல்வதில் எனக்கு சிறிதளவும் உடன்பாடில்லை. ஆரோக்கியமாகவே அதுவரை நடந்து வந்த சிறப்பான ஓர் இதழைக் கட்சிக்கட்டுப்பாட்டிற்கு உட்படுத்துவதன் மூலம் இதழின் தரம் அழியும். நான் வெளியேறுவதற்கு முன்பே நாகராசன் கட்சியிலிருந்தும் வெளியேற்றப்பட்டிருந்தார் கட்சி யூனிட் என்ற அமைப்பினுள் நான் இருந்த போது தலைவரோடு நடத்திய உரையாடல்கள், விவாதங்களும் ஆரோக்கியமாக இல்லை இதழை விட்டு நான் வெளியேறிய பிறகும் என் மீது சுமத்தப்பட்ட குற்ற சாட்டுகள் பற்றி நான் இங்கு விவாதிப்பதற்கு இல்லை. தனிப்பட்ட முறையில் நெருக்கமான நண்பர்களோடு இவை குறித்து உரையாடலாமே ஒழிய பொது இடத்தில் விவாதிப்பது முறையாக எனக்குத் தோன்றவில்லை. கட்சிக்குள் ஒரு யூனிட் என்ற அளவில் நான் இருந்த குறைந்தகால அனுபவங்களிலிருந்தே கட்சி கட்டுபாடு என்பதனுள் செயல்படுகின்ற சில இறுக்கமான கடுமையான நச்சுத்தன்மையோடு கூடிய மனித சுதந்திரத்துக்கு மரியாதை இல்லாத, குறுங்குழுத் தன்மையான சில போக்குகளைக் கண்டேன். இவை பற்றியெல்லாம் நான் விரிவாக பேசுவதற்கில்லை. புதிய தலைமுறை காலத்திற்கு பிறகும் மார்க்சிய லெனிய இயக்கங்கள் சிலவற்றோடும் அவற்றிலிருந்து செயல்பட்ட சில தோழரோடும் ஓர் அனுதாபி என்ற முறையில் நான் உறவு கொள்ளாமலும் இல்லை. இன்று வரை மார்க்சிய லெனினிய உணர்வுகள் குறையவில்லை. கட்சிக்குள் இருந்து வெளியேறிய தோழர்களின் கசப்பான அனுபவங்கள் பற்றியும் நான் அறிவேன். எவ்வகை மார்க்சிய கட்சியோடும் குறைந்த அளவுக்கேயான உறவு கொண்டுள்ள ஓர் இலக்கியவாதியினுள்ளும் / ஓர் எழுத்தாளனுள்ளும் இருக்கிற ஒளிவு மறைவான போக்கு விதண்டாவாதம் ஆகியவை எனக்கு வெறுப்பும் அச்சமும் தருகின்றன. ஸ்டாலினியம் என்று சொல்லப்படுகிற இறுக்கமான அரக்கத்தனமான கூறு எங்கோ இரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் மட்டும் இருந்ததாக நாம் கருதுவதற்கில்லை. கம்யூனிஸ்ட் கட்சிக்குள் மட்டும்தான் இவ்வகை இறுக்கம் அல்லது அரக்கதனம் இருக்கும் என்பதில்லை. அதிகார வெறி, ஆணவம், தன்முனைப்பு என்ற போக்கு எங்கிருந்தாலும் அது மனிதத்தன்மையை, மனித மாண்பை, மனித உறவை நாசமாக்கும், நச்சுப்படுத்தும் கட்சி அரசியல் இப்படி மனிதர்களை நாசப்படுத்த வேண்டாம். ஒரு கலைஞன் / எழுத்தாளன், ஓர் ஆசிரியன் இத்தகைய குணத்திற்கு பலி ஆக வேண்டாம், எனக்கு இது சாத்தியமில்லை. சுதந்திரமான காற்று எனக்குத் தேவை. ‘புதிய தலைமுறை’ என்ற இதழின் வழியே, ஓர் எழுத்தாளன் / ஆய்வாளன் என்ற முறையில் நான் சேகரித்துக் கொண்ட அனுபவங்கள் என்னைத் தொடர்ந்து ஊக்குவித்த புதிய தலைமுறையின் வழியே நான் பெற்ற நண்பர்கள் / அறிஞர்கள் உறவுகள் என்னை இன்றளவும் தொடர்கின்றன புதிய தலை முறை என்ற இதழ் முயற்சி தொடர்ந்து பரிமாணம்’ ‘நிகழ்’ தமிழ்நேயம்’ என என் இதழ் முயற்சிகளுக்கும் விதையாக வித்தாக / தொடக்கமாக இருந்திருக்கிறது. வானம்பாடி இயக்கத்தினுள் இருந்த நீங்கள் இயக்கத்திற்கு என்ன செய்தீர்கள் எத்தகைய முரண்பாடு காரணமாக நீங்கள் வெளியேறினீர்கள்? இயக்கம் பற்றி இன்று உங்கள் மதீப்பிடு என்ன ? தமிழ்நாட்டில் செல்லப்பா, க.நா.சு. முதலியவர்கள் மூலம் தோன்றி வளர்ச்சிப் பெற்ற கவிதை இயக்கம் கோவை வட்டாரத்தில் வாழ்ந்த கவிஞர் பலரையும் பாதித்ததில் வியப்பில்லை. செல்லப்பா முதலியவர்கள் பற்றி மார்க்சிய கட்சி வட்டாரத்தினுள் சில கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. கோவை வட்டாரத்தில் வாழ்ந்த கவிஞர்களுக்குள் மார்க்சிய தாக்கமும் இயல்பாகவே இருந்ததில் வியப்பில்லை. செல்லப்பா முதலியவர்களுக்குள் மார்க்சிய தாக்கம் இருப்பதற்கும் வாய்ப்பில்லை. ஆகவே கோவை வட்டாரத்து கவிஞர்களுக்குள் மார்க்சியத்தோடு கூடிய புதுக்கவிதை இயக்கம் எழுச்சி பெற்றது. மார்க்சியத்தின் வீரியம் நாளடைவில் கவிஞர்களுக்குள் தீவிர எழுச்சியைத் தோற்றுவித்தது. மார்க்சியத்தினுள்ளும் மாபெரும் கவித்துவம் உண்டு. சிற்பி, புவியரசு முதலிய எல்லோருக்குள்ளும் கவிதை வீச்சு பேரலை என எழுந்தது. இவர்களுக்குள் நானும் இருந்தேன். கவிதை கற்றேன். புதுக்கவிதை இயக்கம் தற்காலம் சார்ந்தது என்ற போதிலும் தொன்மைக் காலத் தொடர்ச்சி இல்லாமலும் எந்த ஒரு கவிதை இயக்கமும் இயங்க இயலாத தொன்மங்கள் புதுக்கவிதைக்குள்ளும் தற்காலத்திற்கான பொருள் தாங்கி வெளிப்படத்தான் செய்தது. இவ்வகையில் அகலிகை கதையை தற்கால நோக்கில் ‘கல்லிகை’ என நீண்ட கவிதையாகப் படைத்தேன். பெண்ணிய பார்வையும் மார்க்சிய நோக்கிலான வரலாற்றுப் பார்வையும் கல்லிகை சிறு காவியத்தினுள் சிறப்பாகவே இணைந்தன. புதுக்கவிதை இயக்கத்தினுள் இத்தகைய போக்கு சற்று புதுமையாகவும் இருந்தது என்பதில் ஐயமில்லை . மார்க்சியமும் கவித்துவமும் விரிவாகவும் தீவிரமாகவும் இணைவதன் மூலம் தமிழில் ஓர் வலுவான இலக்கிய இயக்கம் சாத்தியம் என நான் நம்பினேன். வானம்பாடிக் கவிஞர்கள் தமிழ்க்கவிதை இயக்கத்தை, தமிழியக்கத்தை இவ்வகையில் தோற்றுவிக்க இயலும் என்றும் நான் நம்பி இவர்களோடு விவாதித்தேன். 70 - 75க் காலத்தில் மாவோவின் மார்க்சியம்தான் இந்தியாவுக்கும் நமக்கும் தேவை யான மார்க்சியம் என்ற நிலை இருந்தது. இந்தியாவினுள் சோவியத் மார்க்சியத்தின் தாக்கம் இந்தியாவை முதலாளிய பாதைக்குள்தான் செலுத்துவதாக இருந்தது. வசந்தத்தின் இடி முழக்கம் தான் தமிழையும் தமிழியக்கத்தையும் புதிய நெறியில் செலுத்த முடியும் என்பது நானும் என்னைச் சார்ந்த சில நண்பர்களும் கொண்ட கருத்து ஆனால் வானம்பாடிக் கவிஞர்கள் சிலருக்கு மார்க்சியமே கூடாது. மாவோவின் மார்க்சியம் அறவே கூடாது. மார்க்சியம் கவித்துவத்தைக் காயடித்துவிடும். நம் வாழ்வின் மெருகு குலையும் என்று கருதி எங்களை வெளியேற்ற சதி செய்து வெற்றிப் பெற்றனர். வெளியேற்றப்பட்ட நாங்கள் வேள்வி’ இதழைத் தொடங்கினோம். இரண்டு இதழ்கள் மட்டும் வெளிவந்தன. நக்சலைட்டுகள் என்ற குற்றச்சாட்டுக்கு ஏன் நாம் இலக்காக வேண்டும் என்று கருதியே இரண்டொரு நண்பர்கள் இங்கிருந்தும் வெளியேறினர். வேள்வி’யை நிறுத்த வேண்டி வந்தது. எனினும் இரண்டு இதழ்களைத் தான் வெளியிட்டோம். என்றாலும் வேள்வி’ இதழ் ஒரு சாதனை என்பதை இதழைப் பார்த்தவர்கள் புரிந்து கொள்ள முடியும். வானம்பாடி இயக்கத்தை விட்டு நாங்கள் வெளியேறிய பிறகு முதலில் கவிஞர் புவியின் பொறுப்பிலும் பின்னர் முழு அளவில் கவிஞர் சிற்பியின் பொறுப்பிலும் வானம்பாடி இதழ் வெளியாயிற்று. வானம்பாடி இதழில் கவிதை எழுதியவர் அனைவரும் வானம்பாடிகள் என்ற கருத்து தவறாகவே நிலை பெறுகிறது. இயக்கமாக வானம்பாடி செயல்பட்ட காலத்தில் அதனுள் இருந்தவர்கள் மட்டுமே வானம்பாடிகள் என்று சொல்வதுதான் சரியாக இருக்க முடியும். இயக்கத்தினுள் இருந்து விரிவாக எங்களுக்குள் விவாதம் செய்து தரமான கவிதைகளை மட்டும் தெரிவு செய்து, வெளியிட்ட நிலைமைக்கும் பின்னர் இரண்டு ஒருவரின் தேவைகளுக்கு ஒத்தமுறையில் கவிதைகளை வெளியிட்ட நிலைமைக்கும் இடையிலான வேறுபாட்டை வைத்தே இயக்கமா? இல்லையா? என்பதை முடிவு செய்ய வேண்டும் அன்றியும் 1975 நெருக்கடி நிலை காலத்தில் சி.பி.ஐ. கட்சியின் சார்பிலான கலை இலக்கிய பெருமன்ற மேடைகளில் முழங்கியதோடு “இந்திராவே இந்தியா” - “இந்தியாவே இந்திரா” - என்று நூல் வெளியிட்டவர் களை மார்க்சிய சார்பிலான வானம்பாடி இயக்கத்தினுள் வைத்து எப்படிப் பேசமுடியும். எண்பதுகளை நெருங்கிக் கொண்டிருந்த காலத்தில் உலகளவில் மார்க்சியம் கேள்விக்குள்ளான நிலையில், மார்க்சியத்தின் மீது நம்பிக்கை / குறைந்த / இழந்த நிலையில் இருத்தலியல் உணர்வு களுக்கு இடம் கொடுத்து மீறல்’ தொகுப்பை புவி வெளியிட்டார். ‘சூரிய நிழல்’ தொகுப்பை சிற்பி வெளியிட்டார். இருத்தலியல் கருத்தியலையும் ஆழமான மார்க்சிய நோக்கில் மதிப்பீடு செய்வதற்கான வாய்ப்பை இவர்கள் தவறவிட்டனர் எனினும் இவர்களுக்குள் இருத்தலியல் நோக்கு - கவிதைகளில் சிறப்பாகவே வெளிவந்தது என்பதற்காக இவர்களைப் பாராட்டமுடியும். இதன் காரணமாகவும் இவர்கள் கவிதைகளில் அழகும் பொருண்மையும் கூடியது. இதுவும் இவர்களின் ஒரு சாதனை என்பது என் கருத்து 80’களுக்குப் பிறகு 90’ஐ நெருங்கும் போது உலகளவில் பொருளியல் முதலிய அனைத்துத் துறைகளிலும் மாபெரும் சீர்குலைவுகள் நேர்ந்தன. பின் நவீனத்துவ உணர்வுகள் மேலோங்கின. தமிழ்க் கவிதையின் போக்கு முற்றிலும் மாற்றம் அடைந்தது. இந்நிலையிலும் தீவிரமான மார்க்சிய பார்வையோடு பின் நவீனத்துவத்தினுள்ளும் இடது சாரி போக்கோடு ஒத்துச் செல்வதாகிய மார்க்சிய பார்வையைக் கண்டறிந்து கவிதை இயக்கத்தைப் புதுப்பித்திருக்கக் கூடிய வாய்ப்பை வானம்பாடி கவிஞர்கள் கண்டறியவில்லை. இதன் காரணமாக முன்னைய வானம்பாடித்தனமான கவிதைகளுக்கு இரண்டாயிரத்துக்குப் பிறகு இடமில்லை. இன்றைய நிலையிலும் எழுபது கால அளவில் தமிழ்க் கவிதை இயக்கத்தை புதிய நோக்கில் வளர்தெடுத்தவர்கள் என்ற முறையில் வானம்பாடிக் கவிஞர்களை - நன்றியோடு தமிழ்க்கவிதை உலகம் பாராட்டத்தான் வேண்டும். ‘கல்லிகை’ என்ற படைப்பிலக்கியத்திற்குப் பிறகு நீங்கள் தொடர்ந்து படைப்பிலக்கியத்தில் நிற்காமல் திறனாய்வுக்குச் சென்றதற்குக் காரணம் என்ன? வானம்பாடி இயக்கத்தில் நானும் ஒருவனாக இருந்த போது கல்லிகை’ எழுதினேன், என்று நீங்களும் நண்பர்களும் கருதுகிறீர்கள். வானம்பாடி என்ற புதுக்கவிதை இயக்கக் காலத்திற்கு முன்பு 1960 இல் நான் எழுதிய தாகூரின் சண்டாளிகா நாடகத்தின் கவிதையாக்கமாகி தீண்டாதவள் படைப்பு அண்மையில் நான் வெளியிட்ட கல்லும்முள்ளும் கவிதைகளும்’ தொகுப்பில் உள்ளதை நீங்கள் பார்த்திருக்க முடியும். தீண்டாதவள் கவிதை நாடகத்தைப் படித்த நண்பர்கள். மரபுக் கவிதையில் கவிதை ஒரு சாதனை என்றும் மரபுக்கவிதை எழுதுவதைக் கைவிட்டு புதுக்கவிதைக்கு நான் வந்திருக்க வேண்டாமென்றும் நான் கவிஞராகவே இருந்திருக்கலாம். திறனாய்வாளராக மாறியிருக்க வேண்டாம் என்றும் கூறுகின்றனர். தீண்டாதவள்’ எழுதிய காலத்திற்கு முன்பும் பின்பும் கூட நான் கவிதை எழுதியிருந்தேன். அவற்றைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கவில்லை. என் குறிப்பேடுகளில் இருந்த தீண்டாதவள் கவிதையை சென்ற ஆண்டுதான் கண்டெடுத்து பின்னர் வெளியிட்டேன். வானம் பாடிக் காலத்திலும் கல்லிகையைத் தவிர வேறு பல கவிதைகளையும் எழுதினேன். கல்லும்முள்ளும் கவிதை தொகுப்பில் உள்ள வெள்ளிவிழாக் கவிதைகள் இப்படி எழுதப்பட்டவைதான் 82’ காலத்திலும் பிறகும் நான் எழுதிய கவிதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. கல்லிகை’ நூல் வடிவில் வந்த போது அத்தொகுப்பில் ‘எனக்குள் நான்’ என்ற நீண்ட கவிதை இருந்ததை நீங்கள் பார்த்திருக்கலாம். ஒரு கவிஞனாக அல்லது எழுத்தாளனாக என்னை நான் கண்டு கொண்ட காலம் முதற்கொண்டே எனக்குள் இருந்த படைப்பியக்கத்தை உணர்ந்து கொண்டேன். எனக்குள் மட்டுமல்ல எந்த ஒரு மனிதனுக்குள்ளும் இப்படி ஒரு படைப்பியக்கம் இல்லாமல் அவன் மனிதனாகவும் இருக்க முடியாது. இந்த இயக்கத்தைக் கண்டு கொண்டு, அதன் மூலம் பரவசப்பட்டு இந்த உணர்வினுள் தன்னை இழந்து இந்தக் கவித்துவ உணர்வை மேலும் மேலும் வளர்த்துக் கொள்வதோடு, இத்தகைய இயக்கத்தின் மூலமே ஒரு கலைஞன் தனக்குள் விரிவும் ஆழமும் ஏற்படுவதைத் தன்னை என்றும், தன்னை ஒரு எழுத்தாளன் என்றும் கண்டு கொள்பவன் கைவிடவே மாட்டான். ஒரு கவிஞனுக்குள்ளும் ஒரு திறனாய்வாளன் இல்லாமல் அவன் கவிதை எழுதவும் முடியாது. என்னைப் பொறுத்தவரை தமிழிலக்கியம் கற்கத் தொடங்கிய காலம் முதற்கொண்டே கவிதை, இலக்கியம் கற்பதோடு வரலாறு மெய்யியல் முதலியனவற்றையும் தொடர்ந்து கற்றேன். வரலாறும்தான். நாம் வாழ்கிறோம் என்பதாலும் நாம் வாழும் சூழலை குறைந்த அளவுக்கேனும் தெரிந்து கொள்ளாமல், கற்றுக் கொள்ளாமல் நம்மால் வாழமுடியாது என்பதாலும் அதே போலவே வாழ்வுக்கான அர்த்தம் என்ன என்பதற்கான தேடல் ஒருவருக்கு ஏற்பட்ட கணத்திலிருந்தே மெய்யியல் முதலியவற்றைத் தேடித் தேடிக் கற்காமல் இருக்க முடியாது என்பதாலும் இவற்றைத் தொடர்ந்து கற்றேன். இப்படி பலவற்றைக் கற்றதன் விளைவாக எல்லாவற்றையும் திறனாய்வு உணர்வோடுதான் புரிந்துகொள்ளமுடியும் என்பதோடு ஒருவன் தன்னைப்பற்றியத் திறனாய்வையும் செய்து கொள்ளாமல் தன்னை வளர்த்துக் கொள்ள இயலாது என்பதனாலேயும் இயல்பாக நான் திறனாய்வாளன் ஆனேன். ஒரு கட்டத்தில் திறனாய்வையே எனக்குரிய - எனக்குப்பிடித்தமான - என்னால் விட்டு விட முடியாத- இதன் மூலம் தான் என்னை நானே வளர்த்துக்கொள்ள இயலும் என்பதாக தீர்மானித்துக்கொண்டே தமிழிலக்கியத்தோடும் சிற்றிலக்கியத்தோடும் விரிந்த அளவில் பலரோடும் தொடர்பு கொண்டதன் விளைவாகவும் ஒரு நல்ல தரமான திறனாய்வாளனாக மாறினேன். கவிஞனாக இருப்பதற்கும் திறனாய்வாளனாக செயல் படுவதற்கும் இடையில் எந்த முரண்பாட்டிற்கும் இடமில்லை / தேவையுமில்லை. இரண்டினுள்ளும் செயல்படுவது படைப்பியக்கம்தான் - இதுவே கவித்துவம். ஒரு அறிவியலாளனுக்கும் வரலாற்றாசிரியனுக்கும் ஒரு மெய்யியலாளனுக்கும் ஒரு உள்ளியக்கமாக இருப்பது இத்தகைய கவித்துவம். ஒரு குழந்தை விளையாடும் பொழுதும் நம் தாய்மார்கள் வீட்டை அலங்கரித்தல் முதலியவற்றில் ஈடுபடும் பொழுதும் உள்ளியக்கமாக செயல்படுவது இந்தக் கவித்துவம்தான். யாருக்குள் தான் இந்தக் கவித்துவம் / படைப்பியக்கம் இல்லாமல் இருக்கும். சங்க இலக்கியம் முதலிய தொன்மை இலக்கியங்களை நம்காலச் சூழலில் மாணவர்கள் கற்பதற்கும் ஆய்வதற்கும் மார்க்சியப் பார்வையை எவ்வகையில் பயன்படுத்த முடியும்? எவ்வகை இலக்கியம் என்றாலும் நம்கால நம் அனுபவத்திற்கும் தேவைகளுக்கும் ஒத்த முறையில் தான் படிக்க ஆய்வு செய்ய முடியும். இவ்வகை ஆய்வுக்கு மார்க்சிய பார்வைப் பெரிதும் பயன்படும் என்பது என் கருத்து. வெறும் இலக்கிய நயம் என்ற பார்வையில் மட்டுமே இலக்கியத்தைக் கற்பது நமக்கு சுவை தரலாம். கம்பராமாயணம் முதலியவற்றை பக்தி சுவைக்காக மட்டுமே இன்றும் பலர் கற்கின்றனர். தமிழ்ப் பெருமிதம் கருதியும் பல இலக்கியங்களைப் படிப்பதும் பாராட்டுவதும் என்பது பலருக்கு உகந்த பார்வையாக இருக்கிறது. இன்றைய வாழ்க்கை பல வழிகளிலும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கிறது இந்த நெருக்கடிகளை மறந்துவிட்டு இலக்கியம் என்றும் தெய்வம் என்றும் பேசிக்கொண்டு இருக்கவும் முடியாது. நெருக்கடிகளுக்கு காரணங்கள் என்ன என்பது பற்றி ஆய்வதும் அவற்றைத் தீர்ப்பதற்கான சில முயற்சிகளில் ஈடுபடுவதும் நம் கடமை தமிழிலக்கிய மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இத்தகைய பொறுப்புணர்வு தேவை. தமிழிலக்கியத்தை இவ்வகையில் நாம் கற்பதற்கு மார்க்சியம் தான் பெரிதும் பயன்படும். இதுபற்றி இங்கு சுருக்கமாகத்தான் சொல்ல முடியும். முதலில் சங்க இலக்கியத்தை எடுத்துக் கொள்வோம். புறநானூற்றில் நக்கீரர் பாடல் தென்கடல் வளாகம் பொதுமை இன்றி என்று தொடங்கும் பாடல் “உலகம் முழுவதையும் கைப்பற்றி ஆளுகின்ற ஒரு மன்னனுக்கும் நள்ளிரவில் கொடிய விலங்குகளை வேட்டையாடித்திரியும் ஒரு வேடனுக்கும் உயிர் வாழ்வதற்கு என்ன தேவைப்படும்? உண்பதற்கு நாழியளவு உணவு உடுப்பதற்கு இரண்டு ஆடைகள் பிறவகையில் இருவருக்கும் தேவைகள் ஒன்று போலத்தான்” இவ்வாறு சொல்லிவரும் நக்கீரர் மேலும் சொல்லுகிறார். “ஒருவரிடம் செல்வம் சேர்ந்திருக்கும் என்றால் அதன் பயன் பிறருக்கும் ஈவதுதான். பிறருக்குக் கொடுக்காமல் தான் மட்டுமே வைத்து அனுபவிப்போம் என்றால் அவர் இழப்பவை பல” என்கிறார். இத்தகையவன் எவற்றை இழக்கிறான் மனித உறவை இழக்கிறான். இயற்கை இன்பத்தை இழக்கிறான் இசை முதலிய வாழ்வின் மேன்மைகளை இழக்கிறான். வாழ்வின் அர்த்தங்களை இழக்கிறான். இங்கு வள்ளுவரின் ஒரு குறளையும் பார்த்துக் கொள்வோம். ஊருணி நீர்நிறைந்தற்றே என்னும் குறள். மழை பெய்கிற ஊர் நடுவில் உள்ள குளம் நிறைகிறது. ஊரில் வாழும் மக்கள் எவரும் தேவையான நீரை குளத்திலிருந்து எடுத்துச் செல்லலாம் யாரும் தடை சொல்வதற்கில்லை. இது போலத்தான் பலர் உழைக்க ஒருவரிடம் செல்வம் குவிகிறது. அறிவுள்ளவனுக்கு இந்த உண்மை புரியும். தம்மிடம் சேர்ந்துள்ள செல்வத்தை தானும் அனுபவிப்பதோடு பலரோடும் பகிர்ந்து கொள்வான். இத்தகையவனை வள்ளுவர் பேரறிவாளன் என்கிறார். தமிழிலக்கியம் நெடுகிலும் இத்தகைய பண்பாடுதான் போற்றப்படுகிறது. தமிழ்ச்சான்றோர் இத்தகைய பண்பாட்டைத்தான் விடாப்பிடியாக கவிதைகளில் சொல்லி வைத்தார்கள். தொன்மைச் சமூகத்தில் அதாவது வரலாற்றுக்கு முற்பட்ட சமூகத்தில் - சங்க காலத்திற்கும் கூட சற்று முற்பட்ட சமூகத்தில், - பிளவுகள் இல்லை - ஏற்றத்தாழ்வுகள் இல்லை - இயற்கையில் கிடைத்தவற்றை பலரும் பகிர்ந்து கொண்டார்கள். சமூகம் பின்னர் மாறியது. தனி உடமை அரசதிகாரம் முதலியவை வந்து சேர்ந்தன. ஏற்றத்தாழ்வுகள் - ஆண்டான் அடிமை முறை வந்தது. பலரை வருத்தி ஒருவன் செல்வத்தை, அதிகாரத்தைச் சேர்த்துக் கொண்டான். இதன் காரணமாக சமூகத்தில் பிளவும் பகைமையும் போர்களும் வந்தன. சான்றோர் முன்னைய பண்பாட்டைத் தமக்குள் கொண்டிருந்ததோடு இத்தகைய பண்பாடுதான் மனித வாழ்வுக்கு அர்த்தம் தரும். இதை இழந்து விடக்கூடாது என்றனர். சங்க இலக்கியம் மட்டுமல்லாமல் பின்னர் தொடர்ந்து வந்த பேரிலக்கியங்கள் இந்த உண்மையைத்தான் விடாமல் பேசின. தமிழிலக்கியம் கற்போர் இந்தப் பேருண்மையை மறுப்பதற்கில்லை. பின்னர் சமூகம் மாறியது. வெளிநாட்டிலிருந்து தொழில் செய்து பிழைக்க கோவலன் மதுரைக்கு வருகிறான். பிழைக்க வருபவன் கையில் விலை உயர்ந்த சிலம்பு இருக்கமுடியாது. அவன் கள்வனாகத்தான் இருக்க முடியும் அரசியின் சிலம்பைத் திருடி மறைத்துக் கொண்ட பொற்கொல்லன் சொல்லுகிறான். மன்னன் நம்புகிறான் ஆய்வு செய்வதற்கு அரசனுக்கு நேரமில்லை அரசியின் சினம் தீர்க்க வேண்டும். கோவலனை கொன்று சிலம்பைக் கொண்டு வாருங்கள் என்று காவலருக்கு கட்டளையிடுகிறான். கோவலன் கொல்லப்பட்டான். பின்னர் என்னவெல்லாம் நேர்கிறது என்பது நமக்குத் தெரியும் அநீதிகள் மலிந்த நகரில் சான்றோர் இல்லை, தெய்வம் இல்லை, பத்தினி பெண்டிர் வாழ முடியாது. இத்தகை நகரை, ஆட்சியை எரித்தாக வேண்டும். கண்ணகி எரித்தாள் என்பது கதை. தமிழ்ச் சமூகத்தில் கொடிய வறுமை வந்தது. திருட்டும் கொலையும் இயல்பாயின காரணம் தமிழ்ச் சமூகத்தில் இடையறாது நடந்த போர்கள். பாரி, அதியன், காரி முதலிய வேளிர்களை மூவேந்தர்கள் ஒழித்தனர். மூவேந்தர்களும் தமக்குள் போரிட்டு மடிந்தனர். வறுமையும் கொடுமையும் அதிகரித்தது. அநீதிகள் பெருகின, மணிமேகலை காவியத்தில் என்ன பார்க்கிறோம். மணிமேகலை கைக்கு அமுத சுரபி வருகிறது. எடுக்க எடுக்க குறையாத உணவு. இப்படி உணவு பெருகினால் மட்டுமே வரியவர் பசி தீர்க்க முடியும். கொடிய வறுமை மன்னர்களோ,செல்வர்களோ மக்கள் பசி தீர்க்க முடியாத அளவுக்குப் பசி கொடுமை இந்தச் சூழலில்தான் தெய்வம் தருகிற அமுதசுரபி பற்றிய அக்கதை, தமிழிலக்கியத்தை வேறு எப்படி பொருள் படுத்த முடியும். நம் காலத்திற்கு இப்படி பொருள் படுத்துவதைத் தவிர்த்து வெறும் சுவை நுகர்வு என்று கற்பது. தமிழிலக்கியத்தை பெருமைப் படுத்துவதாகுமா? இப்படி எல்லாம் பொருள்படுத்துவதற்கு மார்க்சியம் கை கொடுக்கிறது. மார்க்சியம் நம்மை நெறிப்படுத்துகிறது. சமூக அக்கறை உடையவர் என்ற முறையில் இப்படித் தான் இலக்கியம் கற்க முடியும். இலக்கியத்தைப் பொருள் படுத்த முடியும், ஆராய முடியும், இன்றைய தமிழ்ச் சூழலை மறந்து விட்டு, ஒதுக்கிவிட்டு - இப்படிச் செய்வதன் மூலம் நம் உணர்வுகளையும் மனச்சான்றையும் ஒதுக்கிவிட்டு இலக்கியம் கற்பதால் யாருக்கு என்ன பயன்? பெரியபுராணம் கம்பர் காவியம் முதலியவை தமிழின் தலைசிறந்த பக்தி இலக்கியங்கள். பக்தி உணர்வை நாம் மறுக்க வில்லை . தமிழிடம், தாயினிடம் நாம் கொண்டிருப்பது பக்தி உணர்வின்றி வேறில்லை. பக்தி உணர்வு, மனித உணர்வுதான் போர்க் கொடுமைகளும் அதன் காரணமாக வறுமை நோய் முதலியனவும் கடுமையான ஏற்றத்தாழ்வுகளும் பெருகிய சமூகத்தில் மன்னர் மக்களைக் காக்கவில்லை / கைவிட்டனர். போர்களுக்கும் பிற கொடுமைகளுக்கும் கூட மன்னர் காரணம் இந்நிலையில் வாழ்வின் துயரங்கள் குறைய / தீர கடவுளைத்தான் நம்ப வேண்டி யிருந்தது. முதலை உண்ட பாலனை பாடல் பாடி உயிர்ப்பிக்கத்தான் முடியாது. கல்லில் ஒருவரைக் கட்டிக் கடலில் இட்டால் பாடல் பாடி ஒருவர் கரை சேரத்தான் முடியாது. தெய்வ நம்பிக்கை பெருகிய காலத்தில் மக்கள் எதையும் நம்ப வேண்டியிருந்தது. இவையெல்லாம் புனைவுகள்தான். இவற்றை நம்மால் இன்று நம்புவதற்கில்லை வாழ்வில் நமக்கு வரும் துயரங்களுக்கு காரணம் என்னவென்று நம்மால் ஆராய முடியும் மார்க்சிய நெறியில் இலக்கியத்தை நாம் இகழ்வதற்கில்லை. பசுவின் கன்று சாவதற்குக் காரணம் மகன்தான் என்று அறிந்து அவனை தன் தேர்க்காலில் இட்டுக் கொன்ற மநுநீதிச் சோழனின் கதையை நாம் மறுக்க முடியாது. சிவகோச்சாரியருக்கு சடங்குகள் போதும். கண்ணப்பனுக்குக் கடவுளை நேரில் கண்டாக வேண்டும். பூசாரிக்கு தன் மனத்தில் கட்டிய கோவிலுக்கு கடவுள் வந்து சேர்வார் இப்படி எவ்வளவோ அற்புதக் கதைகள். இவற்றை நாம் மதிக்கிறோம். கடவுள் என ஒருவர் இருந்தால் அவரை நேரில் கண்டாக வேண்டும். நெஞ்சில் கடவுளைக் குடியேற்ற முடியும். இப்படியும் இலக்கியம் கற்க முடியும். அப்புறம் கடவுள் என்பதற்கு கடவுள் என்ற கருத்தாக்கத்திற்கு என்ன பொருள் என்றும் தேட முடியும். இங்கெல்லாம் பகுத்தறிவு போதாது வரலாற்று அறிவுவேண்டும். இதற்கு மார்க்சியம் பயன்படும். புராணக் கதைகளைப் பொய் என்று மார்க்சியர் பேச முடியாது உள்நுழைந்து ஆய்வு செய்வதற்கு மார்க்சியம் தேவை. இராவணன் கொடுமை மிகுந்தவன் தன் அதிகாரத்திற்கு எவரும் கட்டுப்பட வேண்டும். சீதையை தான் கவர்ந்தாக வேண்டும் இப்படி ஒரு கொடியவன் சமூகச் சூழலை நாசம் செய்பவன் இவனை அழிப்பதற்கு இன்னொருவன் வரவேண்டும் அவனும் ஒரு அரசன் என்றால் அவனும் கொடுமைக்காரனாகத் தான் இருந்தாக வேண்டும். ஆனால் அரசை இழந்தவன் என்றால் அவன் தன்னைப் போன்ற பலரை தன்னுடன் சேர்த்துக் கொண்டு கொடியவன் இராவணனை அவர்களால் அழிக்க முடியும். கம்பர் காவியத்தில் இப்படியும் ஒரு கதை இருக்கிறது. இது எதார்த்த கதை இதிலிருந்து முளைத்து வளர்ந்த பெரிய கதைதான் காவியமாகி யிருக்கிறது. கொடியவனுக்கு பெயர் இராவணன் அவ்வளவு தான். அவனை அழித்தவனுக்கு பெயர் இராமன். இப்படிக் கம்பர் காவியத்தை அர்த்தப்படுத்த முடியும். பக்தி செய்பவருக்கு இத்தகைய சமூக உணர்வும் தேவை. சமூகத்தை ஒதுக்கிவிட்டு பக்தியால் உருகுவது, அதுவும் ஒரு அரக்கத்தனம். தமிழிலக்கியம் இப்படியெல்லாம் பொருள்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இப்படித் தமிழைக் கற்பதுதான் நம் காலத்தைக் கற்பதும் ஆகும். பரிமாணம், நிகழ், தமிழ்நேயம் ஆகிய சிற்றிதழ்களை நீங்கள் தொடங்கி நடத்தினீர்கள் உங்கள் நோக்கம் என்ன? உங்கள் பங்களிப்பு என்ன? நம் காலத்தில் தமிழிலக்கியம் என்று ஒருவர் பேசுவதென்றால் சிற்றிதழ்களை ஒதுக்கிவிட்டுப் பேசமுடியாது. தொன்மை இலக்கியம் மட்டும் படிப்பதும் பாராட்டுவதும் தமிழிலக்கிய கல்வி ஆக முடியாது. எல்லாக்காலத்திலும் மக்கள் வாழ்க்கையோடு நெருங்கியிருப்பதும் மக்கள் நெஞ்சைக் கவர்வதும் இலக்கியம் என்ற முறையில் நம் காலத்து தமிழிலக்கியத்தின் உயிர்த்துடிப்பின் ஒரு பகுதியான சிற்றிதழ்களைக் கற்பது நம் கடமை. கற்பது மட்டும் போதுமா படைப்பில் ஈடுபடாமல் இருக்கத்தான் முடியுமா? இதன் காரணமாகத்தான் சிற்றிதழ்களோடு நான் தொடக்கம் முதலே உறவு கொண்டிருந்தேன். எழுத்து, கசடதபற, பிரக்ஞை காலச்சுவடு என தொடங்கி எல்லாச் சிற்றிதழ்களோடும் நம் காலத்துப் படைப்பாளிகளோடும் திறனாய்வாளர்களோடும் நான் நெருக்கமான உறவு கொண்டிருந்தேன், செல்லப்பா, சிட்டி, லாசரா, அன்று தொடங்கி எத்தனை பேரை இங்குக் குறிப்பிட முடியும். புதிய தலைமுறையை நடத்தியவர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் சிற்றிதழ் என்ற பேரியக்கம் எனக்குள் வந்து சேர்ந்தது. வானம்பாடிகளின் கவிதை இயக்கத்தினுள்ளும் இருந்து செயல்பட்டேன். புதிய தலைமுறை காலத்தில் நாங்கள் கற்ற மார்க்சியம் எங்களுக்கு போதுமானதாக இல்லை . அரசியல், பொருளியல், தத்துவம், இலக்கியம், அறிவியல், உளவியல் என எத்தனையோ பரிமாணங்களில் மார்க்சிய வரலாற்றுத் தேவைகளை உள்வாங்கிக் கொண்டு வளர்ச்சி பெற்று வந்ததை நாங்கள் தொடர்ந்து கற்றுக் கொண்டிருந்தோம். மார்க்சியம் கற்பதென்பது நம் காலத்தைக் கற்பது இறுதியில் நம்மைக் கற்பது நம்மையும் படைத்துக் கொள்வது என்பதனால் தான் பரிமாணம் தொடங்கினோம். மார்க்சியத்தின் பன்முகப் பரிமாணங்களை தமிழகத்து மார்க்சியர் கற்கவேண்டும் சோவியத் மார்க்சியம், சீன மார்க்சியம் என்பதனுள் முடங்கிவிடக் கூடாது. கட்சி மார்க்சியத்தைக் கடந்து மேற்கிலும் கிழக்கிலும் எனக் கற்பதன் மூலம்தான் நமக்குள் மார்க்சியம் வளம்பெறும் இந்தியாவில் அதுபோல தமிழகத்தில் முன்பு கற்ற மார்க்சியத்தின் எத்தனையோ முடக்குகளும் உள்ளன. நம்மை நாமே நிமிர்த்திக் கொள்ள நமக்குள்ளும் வெளியிலும் தேடித்தேடி மார்க்சியம் கற்கத்தான் வேண்டும். உலகளவில், ஆய்வுலகில் வளர்ந்து வரும் மார்க்சியத்தில் ஒருசில பரிமாணங்களையேனும் நாம் கற்றாக வேண்டும் இந்த எண்ணத்தோடுதான் பரிமாணம் இதழ் தொடங்கினோம். 16 இதழ்கள் வெளியிட்டோம். இவ்வளவுதான் அன்று எங்களுக்கு முடிந்தது. கட்டுரைகள் முதலியவற்றை தொகுத்துப் பார்த்தால் 1600 பக்கங்கள் தேறும். கட்டுரைத் தொகுப்பு விரைவில் வெளிவரும். இவ்வளவும் நான்தான் செய்தேன் என்று சொல்ல முடியாது. எஸ்.என். நாகராசன், எஸ்.வி.ஆர். இப்படி இன்னும் பலர் இணைந்து செய்தோம். கட்டுரைகளைத் தொகுப்பதில் தொடங்கி வெளியில் பலருக்கு அனுப்புவது வரை நான் செய்தேன். பணம் திரட்டுவதில் நண்பர்கள் உதவி மோசமில்லை. என் கைப்பொருள் செலவிடுவதில் எனக்குக் கவலையில்லை. மார்க்சியத்திற்காக, தமிழுக்காக நாங்கள் செய்வதெல்லாம் எங்களுக்கு வரவுதான். 1980’க்கு பிறகு உலக அளவில் மார்க்சியம் கடுமையான கேள்விக்குள்ளானது உலகச்சூழல் பெருமளவு மாறிக்கொண்டு இருந்தது. சோவியத் இரஷ்யாவில் சோசலிசம் தகர்ந்து கொண்டு இருந்தது. சீனாவிலும் பெரும் மாற்றங்கள் உலகமயமாதல் தாராளமயமாதல், தனியார்மயமாதல் என்ற முறைகளில் அனைத்தும் சந்தைப் பொருளாக சந்திக்கு வந்து சேர்ந்தது. நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்ற புதிய போக்குகள். மார்க்சியம் கூர்மையான கேள்விகளுக்கு உள்ளானபோது தமிழ்நாட்டில் பெரியாரியம், பெண்ணியம், தலித்தியம் ஆகியவை முன்னுக்கு வந்தன. இலக்கிய படைப்புகள் முன்னைத்தடத்தில் செல்வதற்கில்லை. எல்லாவற்றையும் கலைத்து பார்க்க வேண்டும். பின்னங்களில்தான் இனி வாழ்க்கை மரபுக்கு அர்த்தமில்லை புதிய எழுத்தாளர்கள், புதிய படைப்புகள். இத்தகைய கடுமையான சிக்கலான சூழலை எதிர்கொள்வதற்கு மார்க்சியத்தில் இன்னும் நம்பிக்கை வைத்துள்ள எங்களைப் போன்றவர் இனி என்ன செய்ய வேண்டும்? நாகராசன் உறுதியாகச் சொன்னார். சோவியத் யூனியனில் தகர்ந்தது சோசலிசம் அல்ல / மார்க்சியம் அல்ல. முதலாளியத்தை உள்வாங்கிக் கொண்ட மார்க்சியம்தான் தகர்ந்தது. மார்க்சியத்தினுள் வந்து சேர்ந்த முதலாளியத்தைக் களைந்தாக வேண்டும் மார்க்சியத்திற்கு இது ஒரு புதிய வாய்ப்பு மார்க்சையும் புதிய வெளிச்சத்தில் பார்க்க வேண்டும். மாவோவையும்தான். இப்படித் தொடங்கி நாகராசன் எவ்வளவோ பேசினார். எழுதினார். நிறப்பிரிகை வட்டாரத்திலிருந்து புதிய எழுச்சிகள் நாங்களும் கற்றுக்கொண்டோம். நிறப்பிரிகையின் தாக்குதலையும் எதிர்கொண்டோம். எங்களை புதுமைப்படுத்திக் கொண்டோம். இலக்கிய இதழ் என்று தான் ‘நிகழை’த் தொடங்கினோம். 1988இல் கண்பார்வை பெரிதும் பாதிக்கப்பட்டதால் ஆசிரியப் பணியிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். ’நிகழ்’ பொறுப்பை முழுமையாக ஏற்றுக் கொண்டேன். தமிழகம் முழுவதிலிருந்தும் எழுத்தாளர், நண்பர்களைச் சேர்த்துக் கொண்டேன் இடைக்காலத்தில் எத்தனையோ கருத்தரங்குகளுக்கு நானும் சென்று வந்தேன் இலக்கு’ முதலிய நண்பர்களோடு இணைந்திருந்தேன். அறிவியல், ஆன்மீகம், அரசியல், பொருளியல், உளவியல், கலையியல் என்று எல்லாக் களங்களிலிருந்தும் புதிய வெளிச்சங்களை உள்ளடக்கிய கட்டுரைகளைப் பெற்றோம் சுற்றுச்சூழல் இயற்கை வேளாண்மை, விடுதலை இறையியல், பெண்ணியம் - இவை சார்ந்த ஆய்வுகளும் மொழியாக்கங்களும் கிடைத்தன. கூடவே கதைகள், கவிதைகள், என படைப்புகள் 300க்கும் மேற்பட்ட நூல் மதிப்புரைகள் நேர்காணல்கள் இப்படி ஒவ்வொரு இதழையம் அற்புதமாகத் தொகுத்து வெளியிட்டேன். இடையிடையே விவாதங்கள், மாற்றுகருத்துகள் இப்படியும் செயல்பட்டேன். மையத்தில் நான் இருந்த போதிலும் நண்பர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எதுவும் நகராது. சில ஆண்டுகளுக்கு முன்பு இலக்கியம் சார்ந்த படைப்புகள் முதலியவற்றைத் தவிர்த்து அறிவியல், ஆன்மீகம், அரசியல் முதலிய அறிவு ஆய்வு சார்ந்த கட்டுரைகளை மட்டும் தொகுத்து ஒரு பெரும் தொகுப்பை, காவ்யாவின் ஒத்துழைப்போடு வெளியிட்டேன். தொகுப்பு எனக்கே பெரும் வியப்பைத் தந்தது. எந்த மொழியிலும் இத்தகைய தொகுப்பு மொழிபெயர்ப்பில் வெளி வரலாம். இப்படி என் மதிப்பீடு. இது ஒரு வகையில் என் சாதனை என்று நான் நண்பர்களிடம் சொல்லிக் கொள்கிறேன். நிகழுக்கு யாரெல்லாம் கட்டுரைகள் தந்தார்கள் என்பதை ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள். தமிழுக்கு இது ஒரு சாதனைதான் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள். ஒன்றை உறுதியாக என்னால் சொல்ல முடியும். மார்க்சியத்தை நாங்கள் காப்பாற்றி வைத்திருக்கிறோம். கட்சி மார்க்சியரின் இறுக்கம் எங்களுக்குள் இல்லை. இதன் காரணமாகவே எங்களுக்குள் எங்களால் காப்பாற்றி வைத்திருக்கவும் முடிகிறது. மார்க்சியத்திற்கு அழிவில்லை என்று நூறுமுறை என்னால் அழுத்திச் சொல்ல முடியும். ‘தமிழ் நேயம்’ பற்றி இனிச் சொல்ல வேண்டும் 67 இதழ்கள் - சுமார் 6000 பக்கங்கள் 98’ இல் தொடங்கி வெளியிட்டு வந்தேன். சில மாதங்களாக இதழ் கொண்டுவர இயலவில்லை. பொருள் வசதி குறைவு இனி வர வாய்ப்பில்லை. சந்தாதாரர்களை நம்பி இனி இதழ் நடத்த முடியாது. நன்கொடைகள் கிடைக்கின்றன. நன்கொடைகளை நம்பியும் இதழ் நடத்த முடியாது. எனக்கும் பொருள் வசதி இல்லை. ஆகவே நிறுத்தி விட்டேன். ‘தமிழ்நேயம்’ ‘நிகழ்’ போல் இல்லை என்கிறார்கள் நண்பர்கள். ஞானி தமிழ்த்தேசியம் என்று பேசுகிறார். மார்க்சியத்தைக் கைவிட்டு விட்டாரா? இல்லை. மார்க்சியத்தை என்னால் கைவிட இயலாது. என்னை மார்க்சியமும் கைவிடாது. கட்சிக்காரர்களுக்கு நான் மார்க்சியன் இல்லை. மார்க்சியத்தைக் குழப்புகிறவன். இது உண்மையில்லை. கட்சிக்காரர்களிடம் மார்க்சியத்தைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். அரசு அதிகாரத்தில் பங்கு பெற அலைகிறவர்கள் மார்க்சியராக இருக்க முடியாது. தொழிற்சங்க அரசியலைத்தான் நடத்திவந்தார்கள் அதன் மூலம் தான் வருமானம் கிடைக்கிறது. இப்பொழுது வாய்ப்பு குறைந்து விட்டது. பலர் இப்பொழுது பணக்காரர்கள் ஆகிவிட்டார்கள். கட்சிக்குள் இவர்களும் அதிகாரிகள். சாதி உணர்விலும் இவர்கள் திளைக்கிறார்கள். காவிரிக்காக, முல்லைப்பெரியாறு ஆற்று நீருக்காக இவர்கள் பாடுபட மாட்டார்கள். கூடங்குளம் வேண்டும் என்பார்கள். இரஷ்ய முதலாளிகளை இன்னும் நம்பியிருக்கிறார்கள். இவர்களைப் போல் நானில்லை. எனக்குத் தமிழ்த் தேசியம் மிக முக்கியம். தமிழ் இல்லாமல் எனக்கு வாழ்வில்லை. தமிழிலக்கியத்தினுள் மார்க்சியத்தைக் கண்டுப்பிடிக்கிறேன். நான் பேசுவது தமிழ் மார்க்சியம் சிவத்தம்பி அவர்களும் ஒப்புக் கொண்டார். தமிழுக்கு தமிழ் வரலாறுக்கு, தமிழ்வாழ்வுக்கு அண்மைக்காலத்தில் நேர்ந்திருக்கும் நெருக்கடிகள், என்னைப் பெரிதும் பாதிக்கின்றன. தமிழ்நாட்டு இயற்கை வளத்தை அந்நியர்கள் அபகரிக்கிறார்கள். தமிழைக் கலைஞர் கைவிட்டார். முதலாளிகளுக்கு தமிழ் தேவையில்லை. அந்நிய நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றன. அரசியல் வாதிகள் எல்லாவற்றையும் அந்நியருக்கு முதலாளிகளுக்கு விட்டுக் கொடுக்கிறார்கள். மைய அரசுக்குத் தமிழை அடிமைப் படுத்தி விட்டார்கள். தமிழ் ஈழத்துக்கும் துரோகம் செய்தார்கள். பெற்றோருக்குத் தமிழ் பற்றில்லை. ஆங்கிலம் இல்லாமல் முடியாது என்று அரசியல்வாதிகள் பேசிப் பேசி தாய்மொழி மீது நம்பிக்கைகளை பெற்றோர் இழக்கச் செய்து விட்டனர். அமெரிக்காவை நோக்கி அறிவுள்ள இளைஞர்கள் படையெடுக்கின்றனர். தமிழ்த் தேசம் பற்றி அவருக்கு அக்கறை இல்லை . முதலாளிகளுக்கு ஆங்கிலம் கொட்டிக் கிடக்கிறது. மாணவர்கள் தலையில் வெற்று விவரங்களைத் திணித்து அவர்களை மடையர்கள் ஆக்கிவிட்டார்கள். நுகர்வுவெறி கொடி கட்டிப் பறக்கிறது. தமிழ் ஆசிரியர்களை நம்பி தமிழை இனி காப்பாற்ற முடியாது. இப்படித்தான் தமிழுக்கு தமிழ் மக்களுக்கு நேர்ந்த நெருக்கடிகளை முன்வைத்து தமிழ் நேயத்தைத் தொடங்கினேன். நான் பேசும் தமிழ்த் தேசியம் மார்க்சியத்தை முழு அளவில் உள்வாங்கிக் கொண்ட தமிழ்த் தேசியம். ‘நிகழ்’போல இல்லைதான் என்றாலும் நிகழ்காலத்திற்கு தேவையான இதழாக தமிழ்நேயம் இருக்கிறது நிகழின் தரத்தில் சில / பல கட்டுரைகளும் உள்ளன. தமிழ்நேயத்தில் இதுவரை வெளிவந்த கட்டுரைகளின் உள்ளடக்கம் பற்றித் தொகுத்துச் சொல்கிறேன். வாழ்வியல் வழி வள்ளுவர் என ஒரு தனி இதழ் வாழ்வுக்குள்ளிருந்து வள்ளுவத்தைப் பொருள் படுத்தும் கட்டுரைகள் இவை மெட்ரிக் பள்ளிகளில் தமிழ் என்னவாயிற்று என்பது பற்றி இருபதுக்கு மேற்பட்ட நண்பர்களின் கருத்துக் கோவை இந்த தனி இதழ் சிறு விஷயங்களின் கடவுள் பற்றி’ அருந்ததி ராய் அவர்களின் நாவல் வெளிவந்த போதே மலையாளத்தில் வெளிவந்த சில கட்டுரைகளின் தமிழாக்கம். இதுவும் தனி இதழ். எம்ஜி சுரேஷின் அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலரும்’ என்ற புதுவகை நாவல் வெளிவந்த போது தமிழகத்தில் பல்வேறு இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இப்படித் தொடக்கத்தில் வெளிவந்த தனி இதழ்கள் இதன் பிறகும் என்னவெல்லாம் செய்தேன்? காவிரி ஆற்று நீர்ச் சிக்கல் குறித்து ஓயாமல் ஆய்வு செய்து, முன்னரே தமிழ் இனத் தலைவர்களுக்கு எச்சரிக்கை செய்து அறிஞர் பூ.அர குப்புசாமி எழுதிய கட்டுரைகள் பின்னர் அவரே தன் வாழ்க்கை வரலாறு பற்றி எழுதிய பல கட்டுரைகள். வரலாற்றில் தமிழனுக்கு என்ன நேர்ந்தது? தமிழன் என் அடிமையானான்? இப்பொருள் பற்றி க.ப.அறவாணன் முதலியவர்கள் எழுதிய பல கட்டுரைகள் தமிழ் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம் என்ற முறையில் ஒரு கருத்துக் கோவை தமிழனுக்கு மெய்யியல் உண்டா இல்லையா? என்ற தனி இதழ்கள் தமிழின் ஆக்கத்திற்கு எவை தடை, தீர்வுகள் என்பது பற்றி நான்கு சிறு தொகுப்புகள். பேராசிரியர் மருதநாயகம் பாவலர் ம.இலெ தங்கப்பா, முனைவர் நளினிதேவி, முனைவர் திருமுருகன், மெய்யறிவின்பன், பேரா இலக்குவனார் இப்படிப் பல தமிழறிஞர்களின் வாழ்வும் பணியும் பற்றித் தனித்தனி தொகுப்புகள் இலக்கிய போராளி எஸ்பொ அவர்களின் படைப்பு பற்றி இரண்டு தொகுதிகள் சிலப்பதிகார அடிப்படையில் கண்ணகி கதையை மறு வாசிப்பு செய்து எழுதிய தமிழ்நாவல் - ஜெயமோகன் எழுதிய கொற்றவை பற்றி இரண்டு கட்டுரைத் தொகுப்புகள். இறுதியாக தோழர் சங்கமித்ரா அவர்கள் இறப்புத் தருவாயில் இருந்த போது எழுதிய ‘நானும் என் தமிழும்’ கட்டுரைத் தொகுப்பு இடையில் ‘சமஸ்கிருதம்’ என்று ஒரு மொழியில்லை அறிஞர் சாத்தூர் சேகரன் எழுதிய கட்டுரைத் தொகுப்பு இப்படியாக 67 தொகுப்புகள் - 6000 பக்க அளவில் தமிழ்நேயம் வெளிவந்தது. தமிழுக்கு எங்களின் காணிக்கை இத்தொகுப்பு. இதற்காக நானும் என் நண்பர்களும் பெருமைப்பட்டுக் கொள்வதில் தவறில்லை. தமிழ்த் தேசியம் பற்றிப் பேசும் நாங்கள் பிற தமிழ்த் தேசிய இனவாதிகளிடமிருந்து எவ்வகையில் வேறுபடுகிறீர்கள்? தமிழ்த் தேசியம் என்று இன்று பலரும் பேசுகிறோம் அனைவருக்குள்ளும் பொதுவாக சில கருத்துகள் உள்ளன. தமிழ்நாட்டில் தமிழில்தான் அரசு நடைபெறவேண்டும் தமிழ்தான் அனைத்து மட்டங்களிலும் பயிற்று மொழியாக இருக்கவேண்டும் நீதிமன்றங்கள், கோவில்களிலும் தமிழ்தான் செயல்படவேண்டும் மைய அரசோடு நாம் உறவுகொள்வதற்கு தமிழ் இருந்தால் நல்லது தான் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றால் ஆங்கிலம் தொடர்ந்து முழு அளவில் செயல்பட வேண்டும். இந்தி குறுக்கே வந்துவிடக்கூடாது. நாடாளுமன்றத்தில் தமிழில்பேச நமக்கு உரிமைவேண்டும். மாநில அளவில் செயல்படுகின்ற மைய அரசின் நிறுவனங்கள் தமிழில் நடைபெறுவது நல்லதுதான் என்ற போதிலும் அப்படி முழு அளவில் செயல்படுவதற்கு வாய்ப்பு குறைவு என்றால் அந்த இடங்களில் ஆங்கிலம் தான் இருக்கவேண்டும். ஆனால் ஆங்கிலத்தையும் ஒதுக்கிவிட்டு இந்தி வருவது நமக்கு உடன்பாடில்லை. இது நேருவின் வாக்குறுதிக்கு எதிரானது. தமிழ்நாடு தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் இந்தியையும் ஒரு மொழியாக ஏற்றுக் கொண்டது போல நாம் ஏற்கவில்லை. இந்தியை தடுக்க ஆங்கிலத்தை நாம் ஏற்றுக் கொள்வதாக சொன்னோம். ஆனால் ஆங்கிலம், தமிழ்மொழியையும் அகற்றி விட்டு இந்த இடத்தையெல்லாம் ஆங்கிலமே கைப்பற்றிக் கொள்ளும் என்று நாம் கருதவில்லை. ஆனால் இன்று தமிழுக்கு இடமில்லை என்று சொல்லுமளவுக்கு ஆங்கிலம் நம்மை ஆதிக்கம் செய்கிறது. இந்தியும் மறைமுகமாக வந்து கொண்டு இருக்கிறது நாளடைவில் தமிழுக்கு இங்கு எந்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்? என்ற கடுமையான தேர்வும் எழுந்திருக்கிறது. பள்ளிகளில், கல்லூரிகளில் அரசு அலுவலகங்களில் ஆங்கிலமே முதன்மை மொழியாக அமர்ந்திருக்கிறது. இந்தச் சூழலில்தான் தமிழ்த்தேசியம் என்று நாம் பேசுகிறோம். தமிழ்ச் சூழலை நம்மால் தக்க வைத்துக் கொள்ள இயலவில்லை. தமிழ்ச் சூழலை இனி நம்மால் ஏற்படுத்த முடியும் என்றும் தோன்றவில்லை . நமக்கு எதிரான சக்திகளே ஆதிக்கத்திலிருக்கின்றன. இவற்றை எதிர் கொண்டு செயல்படும் அளவுக்கு நமக்குள் இணைவு இல்லை. எல்லாவற்றையும் நாம் விட்டுக்கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம். இந்தச் சூழலை எப்படி நாம் மாற்றப் போகிறோம். குறைந்த அளவுக்கு தாய்த்தமிழ் பள்ளிகளைத் தக்கவைத்து கொள்வதிலும் தொடர்ந்து அதிகரிப்பதிலும் நம் கவனம் குவிய வேண்டும். தமிழ்த் தேசியம் என்று பேசும் கட்சிகளும் இயக்கங்களும் தாய்த்தமிழ்ப் பள்ளிகளின் பால் தம் கவனத்தை திருப்ப வேண்டும். மாவட்டம் தோறும் குறைந்த அளவுக்கு ஒரு நூறு பள்ளிகளையாவது அமைத்து தம்மால் செயல்படுத்த முடியும். இப்படி செய்வதன் மூலமே நம் மாணவர் நெஞ்சில் தமிழுணர்வை ஊட்டமுடியும் ஐந்தாம் வகுப்புவரை தாய்த்தமிழ்ப் பள்ளிகள் செயல்படுவது கூட போதாது. குறைந்தது எட்டாம் வகுப்புவரை உறுதியாகச் செயல் படுவதற்கு நமக்குள் ஒரு முனைப்பு வேண்டும். மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகள் இன்றளவும் பெரும்பாலான மாணவர்கள் தமிழில் தான் படிக்கின்றனர். அரசுப்பள்ளிகளிலும் ஆங்கில வகுப்புகள் தொடர்ந்து அதிகரிப்பதை எப்படியேனும் நாம் தடுத்தாக வேண்டும் இதற்கென ஒரு செயல்திட்டம் நமக்கு வேண்டும். தமிழ் ஆசிரியர்களுக்குத் தமிழ்ப்பற்று இல்லை என்பது உண்மை நிலை தமிழ்ப் பேராசிரியரிடமும் தமிழ்ப்பற்று இல்லை. இப்போக்கை மாற்றித்தான் ஆகவேண்டும். தமிழியல் ஆய்வுகளும் தரமாக இல்லை. செம்மொழி நிறுவனத்தையும் தமிழ் ஆய்வு நிறுவனங்களையும் சரியான திசையில் செயல்படுத்துவதற்கும் திட்டம் தேவை இவைபற்றியெல்லாம் தமிழ்த்தேசிய இயக்கங்கள் தமக்கான கடமை என சிந்தித்து செயல்படத்தான் வேண்டும். இல்லையென்றால் தமிழை, தமிழ் இலக்கியத்தை, தமிழ் வரலாற்றை நம்மால் காப்பாற்ற முடியாது. நம் மக்களாலேயே தமிழ் கைவிடப்படும் சூழலில் தமிழ்த் தேசியம் என்று முழங்குவதில் பொருளில்லை இது மொழி சார்ந்த சிக்கல். மொழி சார்ந்த அரசியல். தமிழ்த் தேசிய அரசியல், தமிழ்த் தேசியம் என்று பேசும் இயக்கங்கள் கட்சிகள் முதலியவற்றுக்கு இந்தச் சிக்கல் குறித்து ஈடுபாடு இல்லை. தமிழ் இயக்கங்கள் சில இது பற்றிப் பேசுகின்றன அவற்றிடமும் செயல் திட்டம் என எதுவும் இல்லை . தமிழ் அழியாது என்பது குறைந்த அளவுக்கே ஆன உண்மை . தமிழுக்கு மரியாதை இல்லை. தமிழ் அழியும் நிலையில் தமிழ்த்தேசியம் பேசுவதில் பொருளில்லை. தமிழ்த் தேசிய இயக்கங்கள் ஈழத்தமிழர் பற்றி விடாப் பிடியாக, உறுதியாக உணர்ச்சிரமாக, பேசி வந்தார்கள் / பேசினோம். ஈழத்தமிழர் விடுதலை ஏன் அழிவுக்கு உள்ளானது, அழிக்கப்பட்டது என்பது குறித்தும் உலக அளவிலான அரசியல் முதலியவற்றோடு இணைத்து நாம் பேசவில்லை/ புரிந்து கொள்ள வில்லை. இரஷ்யா, சீனா முதலிய நாடுகள் நமக்கு எதிராகத் தான் இருந்தன. இந்தியாவும் எதிராக இருந்தது. இந்தியா முழுவதும் ஈழத்தமிழர் சார்ந்த இந்தச் சிக்கல் நம்மால் எடுத்துச் செல்லப்பட வில்லை காஷ்மீர் முதலிய பிற மாநிலங்கள் எதிர்கொள்ளும் சிக்கல் குறித்து நம்மவர்களுக்கு அக்கறை இல்லை. போதுமான புரிதல் இல்லை வட இந்திய மாநிலங்களுக்கு ஈழத்தமிழர் பற்றி மட்டுமல்ல இந்தியத் தமிழராகிய நம் மீதும் பரிவு இல்லை. பரிவுக்குப் பதிலாக பகை உணர்வும் இருக்கிறது. இதற்கு என்ன காரணம் வடமொழியை, ஆரிய நாகரிகத்தை, பிராமணர்களை, இந்துத்துவத்தை நாம் எதிர்க்கிறோம். தமிழர் நாகரிகத்தின் தொன்மை பற்றிப் பேசுகிறோம் சிந்துவெளி நாகரிகம் என்கிறோம். தமிழின் தனித்தன்மை பற்றிப் பேசுகிறோம். கடவுள் இல்லை என்கிறோம் திராவிடம் என்றும் பேசுகிறோம். தமிழர் தம் நாகரித்தை கிழக்கிலும் மேற்கிலும் நெடுந்தொலைவு கொண்டு சென்றோம் என்கிறோம் இப்படி எத்தனையோ காரணங்கள். இவற்றையெல்லாம் நம்மால் கைவிட முடியுமா? காங்கிரசு இயக்கம் நம்மோடில்லை கம்யூனிஸ்ட் இயக்கமும் நம்மோடில்லை. வடநாட்டில் சில பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில கோடி மக்கள் தம்மைத் தமிழ் நாகரிகத்தோடு, திராவிட நாகரிகத்தோடும் இணக்கம் காண்பவர்கள். இவர்களையேனும் நம்மால் திரட்ட முடியும். இட ஒதுக்கீடு பற்றி நமக்குள் அக்கறை அதிகம். தேசிய இனங்களின் இறையாண்மை குறித்து இவற்றோடு நமக்கு இறையாண்மை தேவை இவற்றுக்கு ஆங்கிலமும் தேவை இந்தியும் தேவை தமிழ்த் தேசியர்க்கு இதுவும் ஒரு சிக்கல். ஈழத்தமிழர் விடுதலையில் மிகுந்த ஈடுபாட்டோடு பேசும் தமிழ்ததேசியர்கள் அதே அளவு ஈடுபாட்டோடு இந்திய தமிழராகிய நாம் எதிர் கொண்டுள்ள பலவகையான சிக்கல்கள் குறித்துப் பேசுவதில்லை. ஈழத்தமிழர் விடுதலை குறித்துப் பேசுவதோடு இவர்களின் தமிழ்த்தேசிய உணர்வு பல சமயங்களில் முடங்கி விடுகிறது. இவர்கள் காவிரிச்சிக்கல் குறித்தும் முல்லைப் பெரியாற்று நீர்ச் சிக்கல் குறித்தும் பாலாறு குறித்தும் பேசுவதை நாம் மறுக்கவில்லை ஆனால் அதே அளவு உணர்வோடு புரிதலோடும் தமிழ் உழவர்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல் குறித்தும் பேசுகிறார்களா? என்பது பற்றி அதிகம் சொல்வதற்கில்லை. உழவர் நிலங்கள் பறிபோகின்றன. ஆற்றுமணல் பறிபோகிறது. காடுகள் அழிக்கப் படுகின்றன. இராசயன உரம் காரணமாக வேளாண்மை நிலம் நாசமாகிறது. இறால் பண்ணைகளும் இதே வகை அழிவைச் செய்கின்றன. திருப்பூர் முதலிய நகரங்களில் தொழிற்சாலை கழிவுகளால் ஆற்று நீர் நிலத்தடிநீர் நாசமாகிறது. ஏரிகுளங்கள் நாளடைவில் கட்டிட கட்டுமானங்களுக்குப் பலியாகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து தமிழ்நாட்டிற்குள் நுழைகின்றன. அவர்களுக்கு எல்லாவகை உரிமைகளும் வழங்கப்படுகின்றன. தொழிலாளர்களுக்கு உரிமை இல்லை. விளைநிலங்கள் இந்நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்படுகின்றன. இயற்கை வேளாண்மைக்கு தமிழ்த் தேசியர் ஈடுபாடு காட்டுவதில்லை. இவ்வகை போக்குகள் எல்லாம் அந்நியர்களின் ஆதிக்கத்தின் விளைவுகள் என்று இவர்கள் பேசுவதில்லை. அமெரிக்கா முதலிய மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்களிடம் இந்தியாவை மத்திய அரசு அடகு வைக்கிறது. இவை பற்றியெல்லாம் தமிழத் தேசியர் புரிந்து கொண்டு பேச வேண்டும். இந்தியா அடிமைப்படுகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் சிக்கல் பற்றி அக்கறை வேண்டும். மனித உரிமைகள் பற்றி கவனம் தேவை பெண்களின் உரிமைகள் தலித் மக்களின் உரிமைகள், சிறுபான்மை இன மக்களின் உரிமைகள் என இப்படியெல்லாம் நமக்கு விரிந்த பார்வை வேண்டும் இதற்கெல்லாம் பெரியாரியம் போதாது. மார்க்சியம் பற்றிய புரிதல் இருந்தாலொழிய பார்வை விரிவுபடாது. இவ்வாறு சிக்கலில் மார்க்சிய கட்சிகளின் புரிதலும் ஈடுபாடும் போதுமானதாக இல்லை . தமிழ்த்தேசியம் பேசுபவர்களில் ஒரு பெரும் பகுதியினர் பலர் பெரியாரியராகத்தான் உள்ளனர். மார்க்சியம் இவர்களிடம் இடம் பெறுவதைத் தடுக்கின்றனர். பெரியாரியம் மார்க்சியத்தின் நுழைவை ஏற்பதில்லை. தமிழ் மக்களிடம் உள்ள சமய உணர்வை பெரியாரியரைப் போலவே மார்க்சியரும் மறுக்கின்றனர். சமயம் பற்றிய பார்வையில் இருவருக்கும் போதுமான புரிதல் இல்லை. இதன் காரணமாக இந்துத்துவம் தான் இங்கு செல்வாக்குப் பெறுகிறது. தலித் மக்கள் தமிழர் என்றுதான் மதிக்க வேண்டும். கிறித்தவர்களும் இசுலாமியரும் தமிழ் உணர்வாளர்களாக மாறுவதில் நமக்கு அக்கறை தேவை. இப்படித் தமிழ்த் தேசியர் எதிர்கொள்ள வேண்டிய எத்தனையோ சிக்கல்களுக்கு பெரியாரியமும் மார்க்சியமும் தமக்குள் இணைந்து செயல்பட வேண்டும். எந்த இயக்கத்தோடும், அமைப்போடும் முரண்படுகிறோம் என்ற பட்டியல் நமக்குத் தேவையில்லை. தமிழ் தேசிய உணர்வுகள் அனைவரும் தமக்குள் இணைவு கண்டு செயல்பட்டாலொழிய தமக்குள் விடிவு இல்லை. நமக்கான போராட்டம் இந்திய அரசோடு மட்டுமல்ல மேற்கத்தியரோடு மட்டுமல்ல. தமிழகத்தினுள்ளும் எதிரணியினர் பலருண்டு நாம் என்ன செய்ய போகிறோம். மதம் பற்றிய அணுகு முறையில் பெரியாரியத்திற்கும் மார்க்சியத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடுகளாக எதைக் கருதுகிறீர்கள்? மதம் என்பதை முற்றாக மறுத்துப் பேசியவர் பெரியார். மதம் என்பதோடு பார்ப்பனியம் சாதியம், பெண்ணடிமைத் தனம் முதலியவற்றையும் இணைத்துப் பேசியவர் பெரியார். இதன் காரணமாகவே புராணங்களையும், தமிழிலக்கியத்தையும் கூட பெரியார் சாடினார். மதத்தை மற, மனிதனை நினை; என்ற முறையில் மனிதனுக்கு மனித வாழ்வுக்கு அழுத்தம் தந்து பேசியவர் பெரியார். பெரியார் விரும்பியது சமூக விடுதலை. கம்யூனிஸ்ட்டுகளோடு பெரியார் நல்லுறவைப் பெரிதும் நாடினார். தாழ்த்தப் பட்ட மக்களுக்கு, அவரின் சாதி அடிமைத்தனம் தீர வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார் நால்வருணமுறையை அவர் கடுகளவும் ஏற்கவில்லை. வேதங்களையும் கடவுளர்களையும் அவர் கடுமையாகவே சாடினார். மதம் பற்றிய பெரியாரின் கருத்தினம் என்பது மேற்கூறியபடி பலவற்றோடும் தொடர்புடையது. தொடக்கக் காலத்தில் அச்சம் காரணமாகத்தான் மனிதனுக்கு சமய நம்பிக்கை ஏற்பட்டது என்றும் தொடக்கத்தில் மதம் மனிதனுக்கு எதிராக இல்லை என்பதும் பெரியார் கருத்து. மார்க்ஸ் கூறிய மதம் மக்களுக்கு அபின் என்ற ஒரு வாக்கியத்தை வைத்து பெரியாரின் கருத்தும் மார்க்ஸ் / மார்க்சியத்தின் கருத்தும் ஒன்றுதான் என்று மார்க்சியர் பேசுகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப்பெருமூச்சு அதே சமயம் ஒடுக்கப்படுவதற்கு எதிரான கலகக்குரல் என்று தொடங்கி மார்க்ஸ் மேலும் சிலவற்றைச் சொல்லி இறுதியாக முத்தாய்ப்புப் போல சொன்ன வாக்கியம் தான் மதம் மக்களுக்கு அபின் என்பது இடையில் இதயமற்ற உலகின் இதயம், ஆன்மாவற்ற உலகின் ஆன்மா என்றும் மதம் பற்றிக் குறிப்பிடுகிறார். மனிதனின் கரங்களை இறுகப்பிணித்துள்ள தளைகளை மறைக்கும் மலர்த்தொகுதியே மதம் என்றும் மலரைக் களைந்தாலொழிய அவன் கைகளைப் பிணித்துள்ள தளைகள் தெரியாது என்றும் மார்க்ஸ் மேலும் விளக்கியுள்ளார். அதாவது மலர்களைக் களைவதற்காக செய்வதே மதம் பற்றிய பரப்புரை. மலர்களைக் களைந்த பிறகு தளைகளைத் தகர்க்க வேண்டும். அதற்காக மனிதன் அவனைப் பிணித்துள்ள பொருளியல் அடிமைத் தனத்திற்கு எதிராக போராடவேண்டும் என்பது மார்க்ஸ் தந்த விளக்கம். மதத்திற்கு எதிராக பிரசாரம் செய்வது தேவைதான் என்ற போதிலும் அத்துடன் நிறுத்திவிட முடியாது. முதலாளியம் முதலிய சூழலில் மனிதன் பிணிக்கப்பட்டுள்ளான். சூழலை முற்றாக மாற்றினாலொழிய அவனுக்கு விடுதலை இல்லை. மதம் என்பதை முதலாளியசக்திகள் / உடைமை சக்திகள் மனிதனை ஒடுக்குவதற்கான கருவியாக பயன்படுத்திக் கொள்கின்றன. அரசு என்பதும் மனிதனைக் கட்டுப்படுத்த மதத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது. அரசு இருக்கும் வரை மதமும் இருக்கும் என்பதும் மார்க்சின் கருத்து மதம் பற்றிய மார்க்சின் இத்தகைய தெளிவு பெரியாருக்கு இருந்ததாகச் சொல்ல முடியாது. மதம் மக்களுக்கு அபின் என்று அவர் கூறியதையும் பெரியாரியத்திற்கு சாதகமாகக் கொள்வதற்குமில்லை. அபின் என்பது ஒரு வகையில் போதை தருவதும் இன்னொரு வகையில் துயர்களை மறக்கச் செய்வதாகிய மருந்து என்பதுமாகிய இரு பண்புகளைக் கொண்டது. சுரண்டலும் ஒடுக்கு முறையின் காரணமாக கடுமையான துயரங்களை மனிதர் அனுபவிக்க வேண்டிய சூழலில் அந்தத் துயரங்களை மறக்க மறக்கடிக்க மதம் பயன்படுகிறது. தீக்காயங்களால் ஏற்படும் துன்பத்தை உடனடியாக மறக்கடிக்கத் தானே வேண்டும். துயரம் குறைந்த நிலையில் மட்டுமே பொருளியல் அடிமைத்தனம், விடுதலை என்று பேசமுடியும். கருத்து வடிவிலான விமர்சன முறையையும் ஆயுதம் முதலியவற்றைக் கொண்டதான போராட்ட முறையையும் இணைத்துக் காண்பதுதான் மார்க்சியம். பெரியாரியம் முதற்பகுதிக்குத் தரும் அழுத்தம் இரண்டாம் பகுதிக்கு இல்லை . பெரியாரியத்திற்கும் மார்க்சியத்திற்கும் உள்ள அடிப்படையான வேறுபாடு இது. இந்த வேறுபாடு காரணமாக பெரியாரை மார்க்சியத்திற்கு எதிராக நிறுத்த முடியாது. பொருளியல் வகையிலான போராட்டம் கூடாது என்று பெரியாரால் பேச முடியாது. மதம் என்பதை நால்வருண முறையோடும் குறிப்பாக பார்ப்பனியத்தோடும் இணைத்துப் பெரியார் பேசினார். வர்க்கப் போராட்டத்திற்கு மட்டுமே அழுத்தம் தருவதாக சொல்லிக் கொண்ட மார்க்சியர் பார்ப்பனியம், நால்வருணம் சாதி முதலிய வற்றுக்கு எதிராக போராடுவது பற்றி நினைக்கவில்லை. பார்ப்பனியம் முதலியவை கருத்தினங்கள் என்றும் இவை மேல்கட்டுமானம் என்றும் அடிக்கட்டுமானத்தை மாற்றும் போது மேற்கட்டுமானம் சரிந்து விடும் என்றும் இதுவே மார்க்சிய வாய்பாடு என்றும் விடாப்பிடியாக முன்பு பேசினர். மார்க்சியரின் தலைமையில் பார்ப்பனர் இருந்தனர் என்பதும் சாதி வேறுபாட்டை திறமையாக மார்க்சியர் பயன்படுத்திக் கொண்டனர் என்பதும் உடனடியாகச் சொல்ல வேண்டிய உண்மை. அன்றியும் சுரண்டும் வர்க்கம் மட்டுமல்லாமல் அரசும், சாதி முதலியவற்றை வேண்டுமளவுக்கு பயன்படுத்திக் கொண்டுதான் இருந்தது என்ற உண்மையையும் மார்க்சியர் காணத்தவறினர். புரட்சி சாத்தியமில்லை என்று தெரிந்த நிலையில் தீவிரமானப் போராட்டங்களுக்கும் வாய்ப்பு குறைந்த நிலையில் இனி மக்களைத் திரட்டுவதற்கு எது வழி என்று மார்க்சியரே ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் தடையாக இருப்பவை சாதி முதலியன என்று கண்டு அதன் பிறகே சாதிக்கு எதிர்நிலை எடுக்கத் தொடங்கினர். இந்நிலையிலும் தத்துவரீதியான சிக்கல் ஒன்று எழுந்தது. சாதியா? வர்க்கமா? சாதிக்கும் வர்க்கத்துக்கும் இடையிலான உறவு என்ன? சாதிக்குள் வர்க்கமா? வர்க்கத்திற்குள் சாதியா என்றெல்லாம் கேள்விகளை எழுப்பிக் கொண்டு ஆராய்ச்சி செய்கின்றனர். இந்த ஆராய்ச்சியில் இதுவரை கிடைத்த தெளிவு என்ன என்று தெரியவில்லை. உண்மையில் சாதிய அமைப்பு என்பது இந்தியாவைப் பொறுத்தவரை அடிக்கட்டுமானத்தினுள்ளும் தொடர்கிறது என்பதும் உண்மை அப்படியானால் சாதிய அமைப்புக்கு எதிரான போராட்டத்தையும் பொருளியல் போராட்டத்தோடு இணைத்து செய்வதாகத்தான் இருக்க முடியும். எப்படி இணைப்பது என்பதும் தான் கேள்வி? மார்க்சியம் என்பதனுள் ஒரு முக்கியகூறாகிய சமுதாய முரண்பாடுகளுக்கிடையிலான போராட்டம் என்ற வகையிலான வரலாற்றுப் பார்வை பெரியாரியத்தினுள் ஒரு பகுதியாக இல்லை. இத்தகைய பார்வையின் அடிப்படையிலிருந்து ஆராய்ந்தால் மட்டுமே சமுதாயத்தினுள் சாதி, பார்ப்பனியம், வறுமை முதலிய கருத்தினங்கள் எந்த அடிப்படையில், எந்தக் காரணத்தோடு தோன்றின எப்படி அவை தொடர்ந்து நிலை பெறுகின்றன என்ன செய்தால் இவை மாறும் அல்லது மாற்ற முடியும் என்ற வகையிலான வரலற்றியல் அடிப்படையிலான ஆய்வின் மூலமே இவை பற்றி உண்மையைக் காண முடியும். மார்க்சிய அறிஞர் இவ்வகை ஆய்வை எந்த அளவுக்கு செய்தனர் என்பதும் கேள்வி. செய்யவில்லை என்பதும் ஒரு உண்மைதான். ஏன் செய்யவில்லை என்று கேட்டுக் கொண்டால் சாதிக்கட்டமைப்பினுள் இவர்களும் மாட்டிக் கொண்டுதான் இருந்தார்கள் என்பதும் தெரியவரும். பெரியாரின் சிந்தனைகள் தொகுப்பில் ஒரு கட்டுரையில் காணப்படும் கருத்து - திரௌபதி ஐந்து கணவரோடு வாழ்ந்தாள். இசுலாமியத்தில் சிற்றப்பா மகனை ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளலாம் என்பது ஒரு முறை இப்படி கால தேச வர்த்தமானங்களுக்கு ஒத்த முறையில் உறவுகள் அமைகின்றன என்று பெரியார் கூறி இருப்பதனுள் ஏதோ ஒரு வகையில் வரலாறு பற்றிய ஒரு கருத்து காணப்படுகிறது. இந்த ஆய்வை அவர் விரிவுப் படுத்தவில்லை. இந்த ஆய்வை விரிவுப்படுத்தியிருந்தால் புராணக்கதைகள் பற்றிய ஆய்வினுள் பெரியார் சென்றிருக்கமுடியும். பெரியார் சிந்தனைகள் தொகுப்பினுள் இடம் பெற்ற இன்னொரு கருத்து - மதத்திற்கும் கம்யூனிசத்திற்கும் முரண்பாடில்லை. எல்லோரும் கடவுளின் குழந்தைகள் என்று மதம் சொல்லுகிறது. அப்படியானால் மனிதர் அனைவரும் உடன் பிறந்தார்கள். இவர்களுக்கிடையில் தேவையானது சமத்துவம் தந்தையாரின் சொத்து அனைவருக்கும் உரியது இந்தச் சமத்துவம் பற்றித் தானே மதமும் பேசுகிறது. இப்படிச் சொல்லும் பெரியாரின் கருத்தினுள் மதம் என்ற தொகுதியினுள் அடங்கியுள்ள புரோகிதம், சாதி முதலிய கூறுகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் எல்லோரும் கடவுளின் குழந்தைகள் குழந்தைகளுக்கு இடையில் நிலவுவது சமத்துவம் கடவுள் அன்பு மயமானவர். இவ்வகை கருத்தினுள் சமதர்ம உணர்வைக் கண்டுகொள்ள முடியும். மதமும் சமதர்மமும் முரண்பட்டவையல்ல என்ற கருத்திற்கும் நாம் செல்ல முடியும். பெரியாரும் சமதர்மம் பற்றிப் பேசினார். பெரியார் கூறும் சமதர்மத்திற்கும் மார்க்சியர் துல்லியப்படுத்திக் கூறும் சமதர்மத்திற்கும் இடையில் வேறுபாடு உண்டு என்றாலும் இருவர்கிடையில் ஒத்த உணர்வும் உண்டு. சிங்காரவேலரோடு இணைந்து பெரியார் வகுத்த ஈரோடு திட்டம் சமதர்மத்திற்கானத் திட்டம் காலச்சூழல் காரணமாக பெரியார் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டிவந்தது என்ற போதிலும் பெரியாரித்தினுள் இப்படி ஒரு பொருளியல் திட்டத்தை வளர்த்தெடுக்க முடியும். பெரியாரியர் முதலாளியத்தினுள் முடங்க சாதிஎதிர்ப்பு பார்ப்பனிய எதிர்ப்பு என்று மட்டுமே பேசிக் கொண்டு காலங்கடத்த முடியும் என்பதனால் சமதர்மம் என்பதை பெரியரியத்தின் மையம் எனக்கண்டு இவர்கள் வளர்த்தெடுக்கவில்லை. பெரியாரின் தத்துவம் என்பதை சுயமரியாதை | தன்மானம் என்று கூறலாம். கடிகாரத்தினுள் உள்ள ஒரு சிறிய சக்கரத்தைச் சுழற்றினால் அதனோடு இணைந்திருக்கிற பெரிய சக்கரமும் சுற்றும் என்பதைப் போல மனிதனுக்குத் தேவையானது தன்மானம் பெண்ணுக்கு தன்மானம் என்பது ஆணாதிக்கத்தை ஒழிப்பது தொழிலாளர்க்கு தன்மானம் என்பது முதலாளியத்தை ஒழிப்பது இப்படித் தொடங்கினால் ஒரு தேசத்திற்கு இன்னொரு தேசம் அதே போல ஒரு வர்க்கத்திற்கு இன்னொரு வர்க்கம் அடங்கியிருப்பது வேண்டியதில்லை என்பது வந்து சேரும். தன்மானம் என்பது இறுதியில் சமதர்மத்திற்குப் போய்ச் சேரும். இப்படியும் பெரியார் விளக்கினார். தொகுத்துச் சொன்னால் பெரியாரியத்தையும் மார்க்சியத்தையும் முரண்படுத்துவதைத் தவிர இணைப்பதே சரியாக இருக்கும். தமிழிலக்கியம் குறித்துக் கைலாசபதி முதற்கொண்டு மார்க்சிய அறிஞர் பலர் இன்றுவரை தொடர்ந்து பெரும் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழிலக்கியத்தைப் புதுப்பிக்கும் முறையிலும் படைப்பாளிகள் பலரும் எழுதிவருகின்றனர். இவர்களிடமிருந்து நீங்கள் பெருமளவில் மாறுபட்டும் எழுதி வருகிறீர்கள் இவர்களிடமிருந்து நீங்கள் மாறுபடுகிறீர்களா? கைலாசபதி முதலியவர்களிடமிருந்து மார்க்சிய நோக்கிலான இலக்கிய ஆய்வை, பார்வையை நான் எனக்குள் வளர்த்துக் கொண்டேன் என்பதில் ஐயமில்லை. ஆனால் தொடக்கம் முதலே கைலாசபதி முதலியவர்களிடமிருந்து எனக்குள் சில மாறுபாடுகளும் இருக்கத்தான் செய்தன. தமிழை நான் பெருமளவில் நேசித்தேன். அறிஞர் பெருமக்கள் பலரிடமிருந்து தமிழை ஆழ்ந்து கற்றதனாலும் இந்த நேசம் எனக்குள் பதிந்தது. மார்க்சிய அரசியலை நான் என்றும் கைவிட்டதில்லை என்றாலும் கட்சி சார்ந்த அரசியல் பார்வைக்கு மார்க்சியத்தை விட்டுக் கொடுக்க என்னால் என்றும் இயலவில்லை கட்சிக்காரர்களோடு தொடக்கம் முதலே எனக்கு உடன்பாடில்லை. கட்சிக்குள்ளும் அதிகாரம் செயல்பட்டதை என்னால் ஏற்க இயலவில்லை. நாகராசன் அந்நியமாதல் பற்றித் தொடக்கம் முதலே பேசிவந்தார். அந்நியமாதல் என்ற கருத்தைப் பின்னர் மார்க்ஸ் கைவிட்டார் என்பதை கட்சிமார்க்சியர் சொல்வதில் உண்மையில்லை என்பதை நான் புரிந்து கொண்டேன். சமயம் குறித்து கட்சிமார்க்சியரின் பார்வையும் எனக்கு உடன்பாடில்லை அடிக்கட்டுமானம் முழு அளவில் மேற்கட்டுமானத்தை மாற்ற வல்லது என்ற இறுக்கமான மார்க்சியர் வாய்பாடும் எனக்கு உடன்பாடில்லை ஸ்டாலின் காலத்து ஸ்தானோவிசத்தை நாங்கள் முற்றாக மறுத்தோம். இப்படி எத்தனையோ வகைகளில் கட்சி மார்க்சியரோ நானும் என் நண்பர்கள் சிலரும் முரண்பட்டோம். தமிழிலக்கியத்தை ஆழ்ந்து கற்கும்போது நமக்குள் பதியும் தமிழறம் என்பதன் வழியே மார்க்சியமும் நமக்குள் தெளிவுபடும் / உறுதியடையும். தன்னல மறுப்பும் உயிர்கள் / இயற்கை மீது நேசமும் அதிகாரம் ஆணவம் முதலியவற்றின் மீது மறுப்பும் இயல்பாகவே நமக்குள் எழும். இன்றைய அரசியல் / சமூக பொருளியல் சூழலினுள்ளும் சமதர்மம் என்ற பேரறத்தைச் செயல் படுத்துவதற்கான நெறி என்னவாக இருக்க முடியும் என்ற உணர்வும் சிந்தனையும் இயல்பாகவே மேலெழும் மரபோடு மார்க்சியத்தை இணைக்கும் நெறி இது. மரபிலிருந்து மார்க்சியத்தை வளர்த்தெடுக்கும் நெறியும் இது தமிழ்மொழி, தமிழ் வரலாறு, தமிழ்க்கல்வி, தமிழ் அரசியல் இறுதியாக, இவற்றை உள்ளடக்கிய தமிழ்த் தேசியம் இவற்றினுள் இயல்பாகவே பயணம் செய்யும் நெறியும் இது. இதன் காரணமாகவே நான் தமிழ் மார்க்சியம் என்று பேசுகிறேன். அடிக்கட்டுமானம் தான் மேல் கட்டுமானத்தை தீர்மானிக்கும் என்ற இறுக்கமான வாய்பாட்டை மார்க்சியம் என்று உள்வாங்கிக் கொண்ட மார்க்சிய அறிஞர் தமிழிலக்கியத்தை தமிழ் அறத்தை, தமிழ் வரலாற்றை இவ்வாறெல்லாம் பொருள்படுத்தவோ புரிந்து கொள்ளவோ இயலாது. கைலாசபதி, கேசவன், வானமாமலை முதலிய அனைவருக்குள்ளும் இந்தப் போக்கைத்தான் காண்கிறோம். மார்க்ஸ் முதலியவர்களை ஆழ்ந்து கற்றதனாலும் இவ்வகை எல்லாம் எங்களுக்குள் தெளிவு ஏற்பட்டது. மாவோவின் சிந்தனைகளும் எங்களுக்குள் சில தெளிவுகளை ஏற்படுத்தியிருந்தன. சங்ககாலம் ஒரு மாறுதல் காலம் இனக்குழுச் சமூகத்திலிருந்து தனியுரிமை, அரசதிகாரம் ஆகியவற்றை உட்கூறுகளாகக் கொண்ட வர்க்கசமூகம் தோன்றி வளர்ந்தகாலம். சங்க காலத்து தமிழ்ச்சான்றோர்கள் இனக்குழுச்சமூகத்திலிருந்து தொடர்ந்து தங்களுக்குள் வந்து சேர்ந்த பண்பாட்டு மேன்மையை, வர்க்கச் சமூகச் சூழலிலும் கைவிடவில்லை. உடைமைச் சமூகம் கோப்பெருஞ்சோழனை பலி வாங்கியதை அவர்கள் ஏற்கவில்லை. உடைமைச் சமூகத்தின் ஆதிக்கத்திற்கு தமிழ்ச் சான்றோர் இடம் தரவில்லை. கணியன்பூங்குன்றன் காலம் முதற்கொண்டே வள்ளுவன், இளங்கோ, சாத்தனார் என்று தொடங்கும் சான்றோர் மரபினுள்தான் கம்பர் முதலியவர்களையும் பின்னர் சித்தர் முதலியவர்களையும் இறுதியாக பெரியார், பாரதி முதலியவர்களையும் வைத்துக் காணவேண்டும். ‘வண்மை இல்லை ஒரு வறுமை இன்மையால்’ என்று கூறும் கம்பருக்குள் ஒலிக்கும் சமதர்ம பண்பாட்டுக்கு எது காரணம் என்று அறிய முடியாமல் கைலாசபதி திகைத்தார். வள்ளுவர் முதலியவருக்குள் தொடரும் தமிழறம் இன்றைக்கும் நமக்குள் அழுத்தம் பெற்றிருக்கும் சமதர்ம உணர்வுக்குக் காரணம் இப்படித்தான் தமிழிலக்கியத்தை நான் கற்றேன், புரிந்து கொண்டேன். எனக்குள் இருந்த தமிழ்நேயம் இதற்கு காரணம் இந்த நேயத்தை ஜீவா போன்ற சில மார்க்சியருக்குள் தான் என்னால் காணமுடிந்தது. தமிழிலக்கியம் வரலாறு பற்றிய ஆய்வில் இவர்கள் நமக்கு எவ்வளவோ கற்பித்த போதிலும் இவர்களின் அடிப்படை நோக்கம் மார்க்சிய அரசியலுக்கு தமிழிலக்கிய ஆய்வை உட்படுத்துவதாகவே இருந்தது. திராவிட இயக்கத்தோடு / திராவிட அரசியலோடு, அதே போலவே அக்காலத் தமிழ் இயக்கத்தோடு சுந்தரனார். மறைமலை அடிகள் முதலியவர்கள் மூலம் வளர்ந்த தமிழியக்கத்தோடு இவர்கள் முரண்பட்டதும் இதற்கு ஒரு காரணம் உலகளவிலான முதலாளிய / ஏகாதிபத்திய அரசியலோடு சோவியத் இரஷ்யா மட்டுமல்லாமல் இந்திய அரசு முதலியனவும் முரண்பாடு அல்லது இணக்கம் கொண்டிருந்ததும் காரணம். என்னைப் பொறுத்தவரை சமயம் பற்றிய ஆழ்ந்த அனுபவத்தோடு சமயம் பற்றிய தெளிவான பார்வை நான் பெற்றிருந்தேன். இது மார்க்சியத்திற்கு முரண்படாத பார்வை என்பது என் நம்பிக்கை இதன் காரணமாக தமிழில் பக்தி இலக்கியம் பற்றி அதிக அளவு எதிரிடையான பார்வை இல்லை. இனக்குழு சமூகத்திலிருந்து நாம் தொகுத்துக் கொள்கிற கருத்தியலின் ஒரு படிமம் என்பதாகத்தான் பக்தி இலக்கியம் கூறும் இறைமை பற்றியது என் புரிதல். இவற்றுடன் மில்டன் படைத்த இழந்த சொர்க்கம் பற்றி மார்க்சின் புரிதல் என்ற அடிப்படையில் மனிதனுக்குள் செயல்படுகிற படைப்பியக்கம் பற்றிய எனது ஆழ்ந்த புரிதலும் ஒரு காரணம் அதாவது கைலாசபதி முதலியவர்கள் இலக்கிய படைப்பினுள் தாமும் ஈடுபட்டு இருந்திருப்பார்கள் என்றால் இந்த படைப்பியக்கத்தின் மூலம் தமிழ் நேயத்தை அழகியல் உணர்வை இலக்கியம் பற்றிய சரியான பார்வையை மெய்யியல் உணர்வைப் பெற்றிருக்க முடியும் இன்னும் எவ்வளவோ சொல்ல முடியும் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். தமிழியல் ஆய்வு மாணவர்கள் பலர் முனைவர் முதலிய தகுதிகளுக்காகத் தங்களிடம் உதவி கேட்டு பெற்றுக் கொண்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது பற்றி நீங்கள் கூற இயலுமா? தமிழியல் ஆய்வு மாணவர்கள் என்னிடம் உதவி கேட்டு வந்தார்கள் என்பது உண்மைதான். என்னைப் பொறுத்தவரை நான் தொடர்ந்து படித்துக் கொள்வதற்கும் தமிழியல் ஆய்வில் ஈடுபடுவதற்கும் இப்படிச் சிலர் என்னிடம் வந்தார்கள் என்பதற்காக மகிழ்ச்சிதான் அடைகிறேன். முன்னர் நான் படிக்காத சில நூல்களையேனும் இவர்கள் மூலம் படித்துக் கொண்டேன். இவர்களோடு இணைந்து என் தமிழறிவையும் மேம்படுத்திக் கொண்டேன். இத்தகைய வாய்ப்பு எனக்கு இன்னும் கூடுதலாக கிடைத்திருக்க வேண்டும் என்பதும் என் உணர்வு. சிலவற்றை இங்கு நான் சொல்ல முடியும். இவர்களின் பெயரை நான் வெளிப்படுத்துகிறேன் என்பதற்காக இவர்கள் வருந்த வேண்டியதில்லை. என்னிடம் உதவி கேட்டு வந்து நான் மேலும் கற்றுக் கொள்வதற்கு எனக்கு இவர்கள் உதவினார்கள் என்பதற்காகவும் இவர்களுக்கு நன்றி சொல்ல நான் கடமைப் பட்டுள்ளேன். இவர்களில் ஒரு சிலர் தகுதிமிக்கவர்கள். நிறைய படிக்கிறவர்கள். தொடர்ந்து ஆய்விலும் ஈடுபடுகிறவர்கள். இப்படிச் சிலர் இல்லை என்பதற்காக நான் வருந்திப் பயன் இல்லை. சிலரின் பெயர்களைத் தவிர்த்துக் கொள்ளத்தான் விரும்புகிறேன். முனைவர் தகுதிக்கான ஆய்வு நெறி என்பது என்ன என்பதையும் நான் கற்றுக்கொண்டேன். ந.பிச்சமூர்த்தி அவர்களின் படைப்புகள் குறித்து திருமதி மீனாகுமாரி அவர்களோடு இணைந்து நான் விரிவாகவும் முழுமையாகவும் படித்தது இங்கு முதலில் குறிப்பிடவேண்டும். ந.பி.யை - பொறுத்தவரை கவிதைத்துறையைக் காட்டிலும் சிறுகதையில் செய்த சாதனை அதிகம் என்பது என் கருத்து அடுத்ததாக தமிழ்ப் புதுக்கவிதைகளில் மெய்யியல் சிந்தனைகள் என்னும் பொருளில் நண்பர் மதுசூதனன் அவர்களோடு இணைந்து செய்த ஆய்வுகள் - மெய்யியல் சிந்தனைகளிலும் தமிழ்ப் புதுக்கவிதையில் புதுமைப்பித்தன் தொடங்கி ‘எழுத்து’ கசடதபற, ‘வானம்பாடிகள்’ இறுதியாக ‘ழ’ கவிஞர்கள் உட்பட சுமார் 35 கவிஞர்களின் பெரும்பாலான கவிதைகளின் உள்ளியங்கும் மெய்யியல் பற்றிப் பெரும் ஈடுபாட்டோடு நாங்கள் செய்த ஆய்வுகள் தமிழ்ச் சிந்தனைக்கு வளம் சேர்க்கத்தக்கவை. மதுசூதனன் அவர்களின் ஆய்வு பின்னர் சிறப்பான ஒரு நூலாக வெளிவந்தது. அதன் காரணமாக புதுமைப்பித்தன் முதற்கொண்டு தமிழ்ப்புதுக் கவிஞர்கள் பற்றி நான் எழுத வேண்டிய தேவை எனக்கு இல்லை. திருமதி மஞ்சுளா தேவி அவர்கள் வானம்பாடி இயக்க வரலாற்றை, வானம்பாடி கவிஞர்கள் அனைவரோடும், அவர்களின் அனுபவங்கள் பற்றி விரிவான நேர்காணல் செய்து மிகச்சிறப்பான நூலை எழுதினார். அவரது நெறியாளர் சிற்பி அவர்களைப் போலவே அவருக்கு நானும் நெறியாளராக இருந்ததாக மஞ்சுளா சொல்லிக் கொள்கிறார். அப்படித்தானா என்பது பற்றி நான் உறுதியாக கூறுவதற்கில்லை . சங்க இலக்கியத்தில் குறிப்பாக புறநானூற்றில் மெய்யியல் சிந்தனைகள் குறித்து முனைவர் சு.துரை அவர்களோடு நானும் விரிவாக இரண்டு மூன்று ஆண்டுகள் படித்தேன். அவரது விரிவான படிப்பறிவு எனக்கும் பெரும் தூண்டுதலாக இருந்தது. மார்க்சிய நோக்கிலான தமிழிலக்கிய ஆய்விலும் இவர் ஈடுபட்டபோது இவரோடிணைந்து நானும் கற்றுக்கொண்டேன். சிறப்பாக திரு. க. ஜவகர் அவர்களோடு இணைந்து தொல்காப்பியரின் திணைக் கோட்பாடு பற்றி நானும் விரிவாகப் படித்துக் கொண்டேன். சிலப்பதிகாரம், கலங்கத்துப்பரணி, திருவாசகம், இறுதியாக ஜெயமோகனின் ‘காடு’ நாவல் முதலியவை பற்றிய ஆய்வுக்கு திணைக் கோட்பாட்டை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பது பற்றிய கேள்விகளை எழுப்பிக் கொண்டு எங்களுக்குள் விரிவாக விவாதித்தோம். விரிவான படிப்பும் எழுத்துத் திறனும் மிக்கவர் ஜவகர். அவரது ஆய்வு நூல் தமிழியல் ஆய்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த முடியும். யாராவது கவனித்தார்களா என்று சொல்வதற்கில்லை. நாவலாசிரியர் என்ற முறையில் தமிழுக்கு மட்டும் புதிதான பின் நவீனத்துவ பார்வையோடு நாவல்கள் பலவற்றைப் படைத்தவர் எம்.ஜி.சுரேஷ், திருமதி. சர்மிளா அவர்கள் எம்.ஜி. சுரேஷ் அவர்கள் நாவலை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதற்காக அவரைப் பாராட்ட வேண்டும். அவருக்கு நெறியாளராக வாய்த்தவரைப் பொறுத்தவரை மு.வ. படைத்த நாவல்கள் தான் தமிழ் நாவல்களின் உச்சம். ஏற்கெனவே எம்.ஜி.சுரேஷ் நாவல்கள் பற்றி கூடியவரை அதிகமான புரிதலோடு நான் படித்திருந்தேன். தொடக்கத்தில் பெரும் தடுமாற்றங்கள் இருந்த போதிலும் இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் எம்.ஜி. சுரேஷ் நாவல்களை சர்மிளா படித்தார். அவருக்குள் எத்தனையோ கேள்விகள் எல்லாவற்றையும் நாங்கள் விவாதித்தோம். தான் இதுவரைக் கொண்டிருந்த வாழ்க்கை பற்றிய பார்வையையே, என்னோடு இணைந்து எம்.ஜி.சுரேஷ் அவர்களின் நாவல் பற்றிய படிப்பும் விவாதங்களும் மாற்றியதாகவும் இப்பொழுது தான் அதிக அளவு சுதந்திரமான உணர்வைப் பெற்றிருப்பதாகவும் கூறி மகிழ்ந்தார். நெறியாளரோடு அவருக்கு கடுமையான போராட்டங்கள் இறுதியாக நெறியாளர் அவர்களும் மனம் மாறியதோடு பின்னர் அவர் பின்நவீனத்துவ பார்வையில்லாமல் இனி தமிழிலக்கியம், படிக்க முடியாது என்று தம் துறை சார்ந்த பேராசிரியர்களிடம் கூறியதாகவும் கேள்விப்பட்டேன். இன்னும் சிலர் இருத்தலியல், அமைப்பியல், பெண்ணியம், தலித்தியம் பார்வைகள் சார்ந்த ஆய்வுகளுக்கு என்னிடம் உதவி கேட்டு வந்ததும் உண்டு. எனக்கு ஒரு பெரும் வருத்தம். கோவை வட்டாரத்தில் தமிழ் முதுகலை பாடம் வைத்துள்ள கல்லூரிகள் பல இருக்கின்றன. நவீன இலக்கியம் பற்றியோ புதுவகை இலக்கிய ஆய்வு நெறிகள் பற்றியோ இந்தத் தமிழ் மாணவர்களுக்கு சுயமான படிப்பறிவோ ஆசிரியர்கள் மூலம் அறிமுகமோ கிடைப்பதில்லை. பெயருக்கு ஏதோ படித்தோம். ஆய்வு செய்தோம். பட்டம் பெற்றோம் என்றுதான் இவர்கள் வந்தும் போய்க் கொண்டும் இருக்கிறார்கள் இவர்கள் மத்தியில் உரையாடுவதற்கு எனக்கு வாய்ப்பில்லை. அண்மையில் ஒரு தமிழ்த்துறை தலைவர் கூறினாராம் “ஞானியை தமிழ்த்துறைக்குள் நுழைய அனுமதிக்க மாட்டேன்” என்றாராம். இப்படி இருக்கிறது தமிழ்த்துறை தலைவரின் அறியாமை ஆணவம். தமிழை வைத்து வாழ்பவர் இத்தகையவர். எஸ்.வி.ஆரோடு - உங்கள் உறவு பற்றி? எஸ்.வி.ஆர் உடன் என் அனுபவங்கள் பற்றி நான் என்னவெல்லாம் சொல்லமுடியும் என்று கொஞ்சம் நினைத்துப் பார்க்கிறேன். எஸ்.வி.ஆர் அவர்களின் அற்புதமான அருமை என்னை மட்டுமல்ல எல்லோரையும் வசீகரிக்கக்கூடியது. புதியதலைமுறை காலத்திற்கு முன்பே அவரோடு எனக்கு இனிய நட்பு / உறவு ஏற்பட்டது. வியட்நாம் பற்றி உற்சாகமாக முதல் சந்திப்பின் போதே அவர் பேசியது என்னைப் பெரிதும் கவர்ந்தது. சேகுவேரா பற்றி அவரது உற்சாகம் கரைகடந்ததாக இருந்தது. இதே போலத்தான் எல்லாச் சந்தர்பங்களிலும் அவரிடம் வெளிப்படும் உற்சாகம் நம்மைப் பற்றிக் கொள்ளும் மனித உறவுகளுக்கு அவர் தரும் மரியாதைக்கு அளவில்லை . எஸ்.என். நாகராசன் மூலம் தத்துவ அறிவு என்னைப் பற்றிக் கொண்டது போலவே எஸ்.வி.ஆர் மூலம் நான் மார்க்சிய அரசியலை, அரசியல் நெறியை உலகளவிலான அரசியல் அறிவை எனக்கு பெற்றுக் கொண்டேன். மார்க்சின் கையெழுத்துப் படிகளில் வெளிப்பட்ட அந்நியமாதல் பற்றிய மெய்யியலை எஸ்.என். எங்களுக்குக் கற்பித்தார். ஆனால் எஸ்.வி.ஆர் எங்கெல்லாம் இருந்தோ, யார்யாரிடமிருந்தோ அந்நியமாதல் பற்றிய ஆய்வறிவை சேகரித்துக் கொண்டார். எல்லாவற்றையும் ஒரு கனமான நூலாக வடித்தார். அறிவின் உச்சம் எங்களைப் பொறுத்தவரை மார்க்சியம்தான். சென்னையிலிருந்த நண்பர்களுக்கு எக்ஸிஸ்டென்சியலிசம் தான் அப்போதைக்கு அவர்கள் அறிவின் உச்சம் எக்சிஸ்டென்சியலிசம் எப்படி அறிவின் உச்சமாக இருக்க முடியும் என்று ஒரு கை பார்த்து விடலாம் என்று எஸ்வி ஆர் முடிவு செய்தார் அவரும் நானும் இணைந்து 50/60 புத்தகங்களுக்கு மேல் சேகரித்து விடாப்பிடியாகப் படித்தோம் குறிப்புகள் எழுதினோம். சில வகையில் தெளிவு பெற்றோம். அப்புறம் எஸ்விஆர் எக்சிஸ்டென்சியலிசம் பற்றி எவ்வளவு அழகான எவ்வளவு விரிவான புத்தகம் எழுதினார். எக்ஸிஸ்டென்சியலிசம் மார்க்சியத்தை மறுக்கவா முடியும் மார்க்சியத்தின் உள்ளிருந்தே எடுத்து விளக்க முடியும் இப்படி நாங்கள் முடிவுக்கு வந்தோம். இப்படித்தான் எங்கள் இலக்கிய உறவு / எழுத்து உறவு தொடங்கியது. புதியதலைமுறையில் ஒரு சில அற்புதமான கதைகள் எழுதியிருந்தார். அவரது வாழ்க்கை அனுபவங்கள் விரிவானவை மிக நுட்பமானவை இன்றளவும் அவர் சேகரித்த வாழ்வியல் அரசியல் அனுபவங்களை வைத்து ஓர் 1000 பக்க அளவில் ஓர் நாவலை எழுத முடியும். எத்தனையோ முறை அவரிடம் வற்புறுத்தினேன். இதுவரை எழுதியது போதும் நாவல் எழுதுங்கள் என்றும் சொல்லிப் பார்த்தேன் இதுவரை அவர் எவ்வளவு நூல்கள் எழுதியிருப்பார் எத்தனை ஆயிரம் பக்கங்கள் எழுதியிருப்பார். பெரியாரியம் பற்றி வ.கீதா அவர்களோடு இணைந்து அவர் செய்த ஆய்வுகள் எத்தனை அளவு சிறந்தவை. பெரியாரித்திற்கு அவர் செய்த காணிக்கையல்லவா இந்த மாபெரும் நூல்கள். இரஷ்ய இலக்கியங்கள், மேற்கத்திய இலக்கியங்கள் என அவர் படித்த நூல்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் புரட்சியின் சாட்சியங்கள் என இரஷ்ய இலக்கிய வரலாறு பற்றி அவர் எழுதிய நூல் ஒன்று போதும் அவர் பெயரை நிலை நிறுத்த. இன்றுவரை ஓயாது அவர் எழுதுகிறார். ஒருசமயம் அவரைத் தமிழில் இன்னொரு சாமிநாதசர்மா என்று பாராட்டினேன். சாமிநாத சர்மாவைவிட இவரது சாதனைகள் மிகப்பல என்று எனக்குச் சொல்லத்தான் தோன்றுகிறது என்றாலும் எனக்குள் ஒரு வருத்தம் சாமிநாதசர்மா அவர்களின் சாதனையை நான் குறைத்து விட்டேனோ என்று தமிழுக்கு, அதே போல எந்த ஒரு மொழிக்கும் 100/1000 சாமிநாதசர்மாக்கள் தேவை எக்சிஸ்டென்ஸியலிசம் பற்றி நானும் அவரும் படித்த போது சார்த்தர் எங்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தார். அவர் ஒரு கல்மலை. மோதிப் பார்த்தோம் அப்போதும் அசைக்க இயலவில்லை. நான் ஒதுங்கிவிட்டேன் எஸ்விஆர் பிறிதொரு சமயம் மோதினார். கல்மலை அசைந்து கொடுத்தது என்றே கருதுகிறேன். இரஷ்ய மார்க்சிய வட்டாரத்தில் அன்று ஒதுக்கப்பட்டவர் கிராம்சி நண்பர் ராஜ்கவுதமனிடம் கிராம்சி பற்றி இரண்டு நூல்கள் வாங்கி வந்து கிராம்சியின் கருத்துகளை எனக்கு இயன்ற அளவில் தொகுத்து பரிமாணத்தில் ஒரு கட்டுரை எழுதினேன். இக்கட்டுரை ஒரு தொகுப்பு மட்டுமே கிராம்சியின் ஆழமும் அகலமும் அற்புதமானவை. கிராம்சியை கொண்டாடியவர் எஸ்.வி.ஆர். முதலில் ஒரு பெரிய நூல் மீண்டும் இன்னொரு நூல். ஸ்டாலின் பிரச்சனைபற்றி எங்களுக்குள் தொடக்கம் முதலே கூர்மையான கேள்விகள். ஸ்டாலினை முற்றாக மறுக்கவும் முடியவில்லை . ஏற்கவும் முடியவில்லை. ஸ்டாலின் பிரச்சனை பற்றி நான் தேடித்தேடி சிலவற்றையே தொகுத்தேன். ஸ்டாலின் பற்றி ட்ராட்ஸ்கி கருத்து பற்றி எழுதத்தான் வேண்டும் என்றேன். இப்போதைக்கு வேண்டாம் என்றார் எஸ்.வி.ஆர். நானும் தவிர்த்தேன் ஆனால் இன்றுவரை எஸ்.வி.ஆர். ட்ராட்ஸ்கி பற்றி ஏன் எழுதவில்லை. மார்க்சிய லெனினிய கட்சிக்குள் இருந்து அவர் கண்ட அனுபவங்கள் பெற்ற வேதனைகள் அளவில்லாதவை. தருமபுரி வட்டாரத்தில் நக்சலைட்டுகள் என்கவுண்டர் என்ற முறையில் பலர் கொல்லப்பட்டார்கள். தேடித்தேடி விவரங்கள் தொகுத்தார். உச்சநீதிமன்றம் வரை சென்றார். ஒருவரால் வேறு என்ன செய்யமுடியும் மனித உரிமை இயக்கத்தில் அவர் கொண்ட ஈடுபாடு வியப்பிற்குரியது. மரண தண்டனை கூடாது என்று இன்றுவரை இயக்கம் நடத்துகிறார். இவை பற்றியெல்லாம் ஒரு எளிய மனிதராக இருந்து உலகளவில் நண்பர்கள் என நூற்றுக்கணக்கானவரைப் பெற்று அவர் இதுவரை செய்த சாதனைகள் என்னால் நினைத்துப் பார்க்க இயலாதவை. இந்துத்துவம் பற்றி அவர் ஓயாமல் சாடுகிறார். இந்து, இந்தி, இந்தியர் என்று சாடுகிறார். ஒரு கட்டத்தில் இந்தியாவுக்கு ஒரு பெரிய இராணுவம் இல்லாமல் முடியாது என்று எழுதினார். இந்தியா ஒரு தேசமாக இருக்க முடியாது; இந்தியா என்றேனும் உடையும் இதைத் தடுப்பதற்கா ஒரு பெரிய இராணுவம்? இந்தியா உடையாமல் எந்த ஒரு பெரிய இராணுவத்தால் காப்பாற்ற முடியும்? இப்படி நான் எழுதினேன். எஸ். வி.ஆர். கண்டு கொண்டாரா தெரியவில்லை. ஒரு காலத்தில் எஸ்.வி.ஆர். எங்களுக்கு அருகில் இருந்தார் இப்பொழுது எஸ்.வி.ஆர். எங்கெல்லாமோ இருக்கிறார். தொலைவிலிருந்து அவரை நான் தரிசிக்கிறேன். நான் அவருக்கு அறிவு ஆசான் என்று இன்றும் எழுதுகிறார். ஏதோ ஒரு காலத்தில் நான் அவருக்கு ஆசானாக இருந்தேனாம். இப்பொழுது அவரிடமிருந்து நான் கற்றுக் கொள்வதற்கு ஆயிரம் கருத்துகள் / செய்திகள் / உண்மைகள் இருக்கின்றன. இன்றும் குழந்தை போல் தான் என்னிடம் / எங்களிடம் பேசுகிறார். கண்ணீர் விடுகிறார். எஸ்.என். நாகராசனிடமிருந்து இப்பொழுது அவர் விலகிவிட்டார். நான் விலகவில்லை. அவருக்கேயான காரணங்கள் இருக்கின்றன அவரது அரசியல் இயக்க அனுபவங்கள் அவர் உறவு கொண்டிருந்த தலைவர்கள் அறிஞர் பெருமக்கள் பற்றி எனக்கு மிகக் குறைந்த அளவுக்கே தெரியும். ஒருசிலரை எனக்கு அறிமுகம் செய்தார். எழுத்துலகிற்குள் எனக்கும் சிலரது உறவை ஏற்படுத்தித் தந்தார். அவரோடு சில முரண்பாடுகள் எனக்கு உண்டு எங்களுக்குள் உறவு நெருக்கடியும் சில சமயம் ஏற்பட்டது. அமைதியாக இருந்து அரிய சாதனை பலவற்றை செய்தவர் எஸ்.வி.ஆர். அவரோடு குறைந்த தொலைவுக்கே நான் பயணம் செய்தேன் எனினும் அவரது நெடும் பயணம் கண்டு வியக்கிறேன். அவரைக் கொண்டாடுகிறேன். ஜெயமோகனின் படைப்புகள் குறித்தும் தற்போது அவர் செய்து வரும் அவதூறுகள் குறித்தும் உங்கள் கருத்து என்ன? ஜெயமோகனை பல காரணங்களுக்காக நான் பெரிதும் மதிக்கிறேன். சுந்தரராமசாமி அவர்களால் காலச்சுவடு இதழில் வெளியிடுவதற்கில்லை என்று மறுக்கப்பட்ட ஜெயமோகன் எழுதிய சிறந்த முதல் சிறுகதையான படுகையை நிழலில் நான் வெளியிட்டேன் தரமான கதை பேச்சிப்பாறை அணைக்கட்டு கட்டப்பட்டபோது. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட ஆதிவாசிகளின் அவலம் குறித்து கவித்துவ நடையில் சொல்லப்பட்ட சிறுகதை. தொடர்ந்து ஜெயமோகனின் சிறுகதைகள், கட்டுரைகளையும் நான் வெளியிட்டேன் பெரும் மரியாதைக்குரிய சுந்தரராமசாமி அவர்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்தவர் என்று ஜெயமோகனை நான் அப்பொழுதே அறிந்து கொண்டேன் இந்தியா முழுவதும் சுற்றித்திரிந்தவர் இந்திய வரலாறு தத்துவம் என இன்றுவரை ஓயாமல் கற்பவர். விஷ்ணுபுரம் என்ற அற்புதமான நாவலைப் படைத்தவர். பின் தொடரும் நிழலின் குரல் என்ற அருமையான நாவலுக்காக அவரைப் பெரிதும் பாராட்டி எழுதினேன். சீர்குலைந்த மார்க்சியர் பற்றி அவர் எழுதிய அவ்வளவும் உண்மைதான் என்பது என் கருத்து. எம்.என்.ராய். கோவிந்தன் ஆகியவர்களின் மார்க்சியத்தோடு அவருக்கு உடன்பாடு உண்டு என்பது என் நம்பிக்கை. எஸ்.என்.நாகராசன் முன்வைத்த மார்க்சியத்தையும் அவர் பெரும்பாலும் ஏற்கிறார். என்பதையும் நம்பினேன். சங்க இலக்கியம் குறித்து அவர் எழுதிய கட்டுரை போல தமிழில் வேறு எவரும் எழுதியதில்லை. தமிழிலக்கியம் குறித்த அவரது ஆய்வறிவை தமிழறிஞர் கூட்டம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். அவர் எழுதிய கொற்றவை நாவலைப் பிடிக்காமல் இனிச் சிலப்பதிகாரம் பற்றி எவரும் பேசமுடியாது என்றும் எழுதினேன். அவரது முதல் நாவல் இரப்பர் பற்றிக் கோவையில் ஒரு கருத்தரங்கு நடத்தினோம். இந்துத்துவத்தோடு, பார்பனியதோடு அவருக்கு அறவே உறவு இல்லை என்றும் நம்பினேன் அவர் எழுதிய சிறுகதைகள் அனைத்துமே பெரும்பாலும் சாதனை கதைகள். அவர் ஓயாமல் படிக்கிறார். ஒரு கடிதம் என்பதைக் கூட 20/30 பக்கங்கள் உட்கார்ந்த இடத்தில் எழுதிமுடிக்கிறார். அவரது ஆசான் நித்தியசைதன்யயதி அவர்களையும் நடராஜ குருக்கள் அவர்களையும் கற்றதன் விளைவாக இந்தியத் தத்துவம் குறித்து ஆழ்ந்த அனுபவம் பெற்றவர். தொடர்ந்து நாவல்கள் படைகிறார். இணையத்தில் எழுதுகிறார். மிகச்சிறந்த நாவலாசிரியர்கள், படைப்பாளிகள் குறித்து விரிவான தரமான மதிப்பிடுகளை முன்வைக்கும் முறையில் சிறு நூல்கள் எனப் பலவற்றைப் படைக்கிறார். விஷ்ணுபுரம் விருதுகள் என சிறந்த படைப்பாளிகளுக்கு விருதுவழங்க ஏற்பாடு செய்கிறார். கனடாவில் செயல்பட்டு வரும் இலக்கியத்தோட்டம் விருது வழங்கல் விழாக்களில் முன் நிற்கிறார் இந்தியத்துவம் பற்றி அக்கறையோடு பேசுகிறாரே அன்றி இந்துத்துவம் பற்றிப் பாராட்டுவதில்லை இவையெல்லாம் நான் கண்ட உண்மைகள் / நம்பிக்கைகள். என்னை அவர் மதித்தார் என்பதற்காக அவரை நான் பாராட்டவில்லை. என் மரியாதை எனக்குத் தெரியும். பிறர் தரும் பாராட்டுகளை நான் பொருட்படுத்துவதில்லை. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க ஜெயமோகன் மிகுந்த துணிச்சலோடு சிலரைப் பற்றிக் கடுமையாகத் தாக்கி எழுதுகிறார். . கடைசியாக எஸ்.வி.ஆர். மீது அவர் செய்த அவதூறுகள் இவையெல்லாம் அவருக்கு மரியாதை தருவதாக இருக்க முடியாது. இன்குலாப் எழுதுவதில் ஒரு வரி கூட கவிதை இல்லை என்று அவர் ஒருமுறை எழுதினார். எனக்கு உடன்பாடில்லை. கலைஞரைப்பற்றி ஒருமுறை சாடியதாக நினைவு. பின்னர் அமைதியாகி விட்டார் என்று கருதுகிறேன். கொற்றவையில் இடம் பெற்ற தனித்தமிழ் நடையை கண்டறிந்தால் பாவாணரே பார்த்து, பரவசப்பட்டிருப்பார். தமிழின் இன்றைய மிகச்சிறந்த படைப்பாளர்களின் முன் நிற்பவர் ஜெயமோகன். இவரளவுக்கு வரலாறு, தத்துவம் இலக்கியம் என்று கற்றறிந்தவர் என்று இன்னொருவரை சொல்வதற்கில்லை காந்தி பற்றி இவர் நிறையவே எழுதுகிறார் காந்தியிடம் இவருக்கு இருக்கும் விசுவாசம் காந்தியாருக்கு கூட தன் மீது இருந்திராது. பெரியார், அம்பேத்கார், அயோத்திதாசர் என்று பாராட்டியும் பழித்தும் நிறையவே எழுதுகிறார். பல்கலைக்கழகங்கள் யார் யாருக்கோ கௌரவ டாக்டர் பட்டம் தருகிறார்கள் ஜெயமோகன் முதலிய தரமான தமிழறிஞர்களுக்கு படைப்பாளிகளுக்கு பல்கலைக் கழகங்கள் எவ்வளவோ செய்திருக்க வேண்டும். இவர்களைப் பயன் படுத்தியிருக்கவேண்டும். தமிழ் அறிவுத்துறைக்கு இவர் பெரும் பங்கு அளித்திருப்பதை தமிழறிஞர்கள் பாராட்டியிருக்க வேண்டும். நான் அவரைப் பாராட்டினேன். நண்பர்கள் என்னைக் கண்டித்தபோதும் நான் அவரைப் பாராட்டத்தான் செய்தேன். கொற்றவையைப் படியுங்கள் என்று தமிழறிஞர் பலருக்கு நான் பரிந்துரை செய்தேன். சாகித்ய அகாதமி விருதுக்கு கொற்றவை தெரிவு செய்யப்படவில்லை என்பதற்காக குழுவில் இருந்த நடுவர்களை நான் சாடினேன். ஞானபீடத் தகுதிக்கு பல மடங்கு தரமுடையவர் என்றும் நான் அவரை நம்புகிறேன். இவையனைத்தும் என் நம்பிக்கைகள். பிற எழுத்தாளர்கள் மீது பழி சொல்லித்தான் இவர் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு எந்த தேவையுமில்லை. இவரை நான் சாடுவது என் நண்பர் சிலருக்கு உவப்பாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை தான் பிறரைப் பற்றிச் சொல்வது அவதூறுகள் அல்ல உண்மைதான் என்று அவர் என்னதான் அடித்துச் சொன்னாலும் நான் அவர்முன் வைக்கும் வேண்டுகோள் இதுதான். வேண்டாம் இந்தப் போக்கு. முன்பு கோவையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் மீது கடுமையான சாடலோடு இந்திய தேசத்தை இவர்களைப் போன்றவர்கள் சிதைக்கிறார்கள் என்ற முறையில் சாடிப் பேசினார். இந்திய தேசத்தை சிதைக்கிறவர்கள் இன்றுள்ள அரசியல்வாதிகள் தான் என்று சொல்லி இந்த அரசியலை எங்களிடம் விட்டுவிடுங்கள் நீங்கள் இலக்கியம் தத்துவம் என்று பேசிக் கொண்டிருங்கள் என்று நான் சொன்னதை ஜெயமோகன் மறுக்கவில்லை ஏற்றுக்கொண்டார் என்றுதான் நம்பினேன். என் நம்பிக்கை உண்மையில்லை என்று பிறகு அறிந்து கொண்டேன். இந்திய தேசத்தின் மீது தேசியத் தலைவர் என்று சொல்லப்பட்டவர் மீதும் ஏன் இவருக்கு எத்தனை ஈடுபாடு. இவர்களைப் பற்றிய விமர்சனங்கள் செய்பவரிடம் இவருக்கு ஏன் இத்துணை ஆத்திரம் அருந்ததிராய் பற்றியெல்லாம் இவர் எவ்வளவு குறைத்துப் பேசுகிறார். காங்கிரசுகாரர்களை விட இவருக்கு ஏன் இந்த தேசப்பற்று இந்துத்துவவாதிகளை விட இந்தியாவின் மீது இவருக்கு ஏன் இந்த வெறி எஸ்.வி.ஆருக்காகவும்தான் நான் பேசுகிறேன். வேண்டாம் இந்த அவதூறுக் குற்றசாட்டு. கண்ணாடிக் கோபுரத்தின் உள்தான் நாம் எல்லோரும் இருக்கிறோம். கல் எறிய வேண்டாம். ஈழத்தின் விடுதலைக்கான போர் வெற்றி பெறாமைக்கு அக மற்றும் புறக்காரணிகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்? விடுதலைப் புலிகளின் தலைமையில் ஈழப்போர் வெற்றி பெற்றிருக்குமானால் தமிழ் மக்களுக்கான விடுதலையை அவர்களால் தந்திருக்க முடியுமா? ஈழத்தமிழ் மக்கள் கடந்த 50/60 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள அரசோடு, தொடக்கத்தில் ஜனநாயக முறையில் விடாப்பிடியாக போராடிப் பின்னர் அது இயலாத போது ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சிங்கள அரசைப் பொறுத்தவரை ஈழவிடுதலை இயக்கத்தோடு சமரசம் செய்து கொள்வதற்கான வாய்ப்பு எதையும் தரவில்லை. ஈழத் தமிழர்களை முற்றாக ஓழிப்பது, இயலாது என்றால் ஒடுக்குவது என்றுதான் சிங்கள அரசின் நோக்கம். இந்த நோக்கம் ஆயிரமாண்டுகளுக்கு மேலாக சிங்கள அரசுக்கு இருந்தது. இலங்கை வரலாற்றை இதே நோக்கத்தோடு எழுதிவைத்துக் கொண்டார்கள். சிங்கள அரசோடு புத்ததுறவிகள் முழு அளவில் ஒத்துழைத்தார்கள். விடுதலைப் போரின் தொடக்கத்தில் சிங்கள அரசுக்கு நேர்ந்த தோல்விகள் மிகக் கடுமையானவை. ஒரு கட்டத்தில் தனி ஒரு நாட்டை அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு நேர்ந்தபொழுது அமெரிக்காவும் இந்தியாவும் சேர்ந்து விடுதலை இயக்கத்தை எச்சரித்தன. அவர்கள் விட்டுக் கொடுத்தார்கள். அதன் பிறகுதான் சிங்கள அரசு சீனா, இரஷ்யா, இஸ்ரேல், பாகிஸ்தான் முதலிய 14 நாடுகளின் ஆயுதஉதவி, போர்ப் பயிற்சி, நிதியுதவி முதலியவற்றைப் பெற்று விடுதலைப்புலிகளை ஒழிப்பதாகச் சொல்லிக் கொண்டே ஈழத்தமிழ் மக்கள் மீது குரூரமான, போர் முறை நியதி என்று எதையும் கடைப்பிடிக்காமல் வெறித்தனமாக இரசாயன குண்டுகள் முதலியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு விடுலைப்புலிகள் இயக்கத்தை ஒழித்தது. இதையெல்லாம் ஐக்கிய அவையும் பார்த்துக் கொண்டுதானிருந்தது. உலகில் பயங்கரவாதம் எங்கு எழுந்தாலும் முற்றாக அழிப்பது என்ற அமெரிக்காவின் கொள்கையோடு இந்தியாவும் ஒத்துழைத்தது. கலைஞரும் ஒத்துழைத்தார். இப்படி எவ்வளவோ நடைபெற்றதன் விளைவாகவே விடுதலைப்புலிகள் இயக்கம் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. தமிழ் மக்களாகிய நாமும் ஊர்வலம் நடத்தினோம். உண்ணாநோன்பு இருந்தோம். மேடைகளில் உரத்துப்பேசினோம். இன்னும் எவ்வளவோ செய்திருக்க வேண்டும். செய்யும் திறனோ பார்வையோ நம்மவர்க்கில்லை விடுதலைப்புலிகளின் தோல்வி நமக்கும்தான் தோல்வி இந்தியாவிற்குள்ளிருந்து நமக்கும் விடுதலைக்கான வழியில்லை. விடுதலைப்புலிகள் இவ்வளவு கடுமையாக போரில் ஈடுபட்டிருக்க வேண்டாம் என்று சமரசவாதிகள் ஓயாமல் நமக்கும் அறிவுரை சொல்கிறார்கள். இலங்கையில் தமிழ் மக்களுக்கு இனமே இருக்க முடியாது என்று வெறித்தனமாக கிளம்பியது சிங்கள அரசு. பவுத்தத் துறவிகளும் சேர்ந்து சிங்கள மக்களுக்கு வெறி ஏற்றினார்கள். இலங்கையில் இருந்த இடதுசாரி இயக்கம் ஒரே தேசம் - இரண்டு மொழி என்றுதான் பேசிக் கொண்டிருந்தது. விடுதலை இயக்கத்தை அது ஏற்கவில்லை. தமிழ்த்தேசியம் கூடாது என்று அவர்கள் நிலைப்பாடு பிற தமிழியக்கங்களை விடுதலைப்புலிகள் அழித்தார்கள் என்பது ஒரு குற்றச்சாட்டு ஜனநாயக முறையில் போராடுவதற்கு வழியில்லை என்று தீர்மானம் ஆனபிறகு ஆயுதம் எடுத்தே தீரவேண்டும். நெருக்கடிச் சூழல் மேலும் மேலும் கடுமையாகி வருகிறது. சில தமிழியக்கங்களை இந்தியா வசப்படுத்திக் கொண்டது. சில தமிழியக்கங்கள் சிங்கள அரசோடு கைகோர்த்து கொண்டன. நிலவரங்கள் மேலும் கடுமையாக வரும் பொழுது நிதானத்திற்கு வாய்ப்பில்லை. இத்தகைய சூழலும் பிரபாகரன் அமைத்திருந்த நிர்வாகம் மற்றும் நீதி முறை எத்தனை அற்புதமானது. ஆயிரமாண்டுகளுக்கு இடையில் தமிழன் இவ்வளவு அறிவுத்திறத்தோடு போர்த்திறத்தோடு நிமிர்ந்து நின்றான். பிரபாகரன் தலைமையில்தான் தமிழன் தன் இனத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திக் கொண்டான். உலகளவில் மரியாதை பெற்றான். உலகில் இஸ்ரேலின் போர்த்திறனை மிஞ்சுவதாக ஈழத்தமிழரின் போர்திறன் இருந்தது. இப்படியும் ஒரு விடுதலைக்கான போராட்டம் என்று நாம் வியந்து பார்த்துக் கொண்டிருந்தோம். இத்தகைய போர்த்திறம் மிக்கவர்களை அமெரிக்கா எப்படி விட்டுவைக்கும். இந்திய அரசுக்கு சிங்கள அரசு தேவை இந்து மாக்கடலில் இலங்கையின் மூலம் எதிரிகள் இந்தியாவை சூழ்ந்து விடக்கூடாது தடுத்தாக வேண்டும் (தடுக்கத் தான் முடியவில்லை ) இந்தியாவின் முகத்தில் கரிப்பூசுகிறது சிங்கள அரசு இத்தகைய சூழலில் விடுதலைப்புலிகள் இயக்கம் தோல்வியைத் தழுவநேர்ந்தது. இதுவும் தற்காலிகமான தோல்விதான் என்று நம்மவரும் நம்புகின்றனர். வெற்றி பெற்றிருந்தால் ஈழத்தில் ஜனநாயகம் மலர்ந்திருக்குமா சமதர்மம் சாத்தியப்படுமா என்றும் சிலர் கேட்கிறார்கள். ஆனால் போர்க்களச் சூழலில் ஒதுங்கி இருந்த கிழக்கு மாநில இசுலாமியரும் இந்திய வம்சாவழியினர் என்று சொல்லப்படும் தமிழரும், விடுதலைப்புலிகள் இன்று இல்லையே என்று வருந்துகிறார்கள். சிங்கள அரசு இலங்கை மக்களின் பொருளியல் உரிமை முதலியவற்றை அந்நியர் முதலியவர்களுக்கு விட்டுக் கொடுக்கிறார்கள் வெறி ஏற்பட்ட இராணுவத்தினரும் சிங்கள மக்களும் இந்த வெறித்தனம் காரணமாக எத்தகைய மனித உறவை மதிப்பார்கள் / போற்றுவார்கள். போர் வெறிக்கு இவர்கள் பலியானவர்கள். மனித தரத்திலிருந்து சரிந்தவர்கள் இவர்கள் மத்தியிலும் மனித மாண்பை காக்கும் மக்களும்தான் இருக்கிறார்கள் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு நாமும்தான் இருக்கிறோம். நமக்கு இங்கு என்ன வாழ்கிறது? இனியஉதயம் - 2015 அக்டோபர் - - சென்னிமலை தண்டபாணி மார்க்சிய திறனாய்வாளர் கோவை ஞானி நேர்காணல் தமிழகம் நன்கறிந்த மார்க்சியத் திறனாய்வாளர் கோவை ஞானி அவர்கள் கோவை மாவட்டம் சோமனூரில் 1.7.1935ல் பிறந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் படித்து கோவையில் 28 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணிபுரிந்து தமிழ்ப பணியாற்றியவர்.. 1988-இல் கண்பார்வை பறிபோனபின் தனக்கெனத் தனி உதவியாளர் ஒருவரை வைத்துக் கொண்டு தமிழ் இலக்கியச் செழுமைக்கு ஓயாமல் பணியாற்றிக் கொண்டிருப்பவர். இலக்கியம், தத்துவம், கலை, என்று இவர் தொடாத துறைகள் இல்லை. பரிமாணம், நிகழ், வேள்வி, தமிழ்நேயம் என்று பல சிற்றிதழ்களை நடத்தி சிந்தனை உலகில் தடம் பதித்தவர். மார்க்சியம், பெரியாரியம், தமிழியம், தமிழ்த்தேசியம், தமிழ்க்கவிதை, தமிழ்நாவல் என்று பெரும் படைப்பகளைத் தமிழுலகத்துக்குத் தந்தவர். தன்னுடைய நேர்படப்பேசும் திறனாய்வுகளால் இலக்கிய உலகத்தையே அதிரவைத்தவர். இவரால் முகவரி பெற்றவர்கள் இவரைப்பற்றி அவதூறுகளை அள்ளித் தெளிக்கும் போதும் அவற்றைப் புறந்தள்ளி, அவர்கள் ஆடும் ஆட்டங்களையும் போடும் வேடங்களையும் பார்த்துச் சிரித்துக் கொண்டிருப்பவர். அனபில் நெகிழ்ந்து கரைந்து போய்விடுபவர்.. தன் வாழ்க்கை முழுதும் ஓயாத போராட்ட உணர்வோடு தமிழுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் பெரும் பணியாற்றி வரும் அப்பெருமகனாரோடு மேற்கொண்ட நேர்காணல் வாசகர்களின் பார்வைக்கும், சிந்தனைக்கும்… தங்களின் சிறுவயதுச் சூழல் எளிய மக்களோடு கழிந்திருக்கிறது.. பள்ளிக் கல்வி முடிந்தவுடன் தமிழ் இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.. அன்றைய காலகட்டத்தில் தமிழ் படித்தவர்களுக்கு பெரும் வரவேற்பு இருந்ததா? அல்லது திராவிட இயக்கங்களின் எழுச்சிக் காலத்தில் ஏற்பட்ட மன உணர்வால் தமிழ் படிக்கச் சென்றீர்களா? நாற்பது ஐம்பதுகளில் தமிழ் உணர்வு என்பது காற்றில் கலந்திருந்தது.அதாவது உ.வே.சா காலம் முதல் தொடர்ந்து வந்த தமிழ் இலக்கிய எழுச்சி. இதனோடு தமிழை முதன்மைப் படுத்தி எழுந்த அரசியல் இயக்கங்கள். அனைத்தும் சேர்ந்து தமிழ்மீது பேரார்வத்தை ஏற்படுத்தியது. இப்படித் தமிழின் அலைவீச்சுக்கு எனக்குள்ளும் இடம் தந்தேன். ஆகவே தமிழ் கற்க அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்றேன். தமிழில் ஏற்பட்ட மறுமலர்ச்சியைத் தமிழ்த்துறைக் கல்வியாளர்கள் தமக்குள்ளும் தாங்கி மாணவர்களுக்குள்ளும் பதிய வைத்தனர். மற்றபடி திராவிடக் கழகத்தின் பகுத்தறிவுப் பார்வையின் பாதிப்புக்கு நான் உள்ளாகவில்லை. ஆனால் அவர்களும் தமிழ் இலக்கிய வரலாற்றினுள் பதிந்திருந்த பகுத்தறிவுப் பார்வைக்கு இடம் தந்தனர். அக்கலத்தில் எழுந்த தமிழ் மறுமலர்ச்சி இயக்க உணர்வு 70க்குப் பின் பிறந்தவர்களிடம் இல்லை என்பது மட்டுமல்ல, என்னைப் போல பல்லாயிரவர் முன்பு தமக்குள் தாங்கியிருந்த தமிழ் உணர்வின் வீச்சை எவ்வளவு சொன்னாலும் 70க்குப் பின் பிறந்து வளர்ந்தவர்களிடம் புரியவைக்க முடியாது. மார்க்சியத்தில் தோய்ந்து போன நீங்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது தியானம் செய்து சில அனுபவங்களைப் பெற்றதாகக் கூறியிருக்கிறீர்கள். நானே பிரம்மம் என்று உணர்ந்ததாகக் கூறிப் பின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறுகிறீர்கள். இன்றைக்கு அதைப்பற்றி நினைக்கும் போது வெறும் மனப்பிரமை என்று கருதுகிறீர்களா? மனப்பிரமை என்று நான் கருதவில்லை. The Varieties of Religious Experience, என்ற நூலை எழுதிய அமெரிக்க உளவியலாளர் வில்லியம் ஜேம்ஸ் விளக்கியபடி சிறுவயது முதல் கொண்டு மனத்திற்குள் திணிக்கப்பட்ட மனஉணர்வின் எழுச்சி என்று என் அனுபவத்தை நான் புரிந்துகொண்டேன். கவிதை என்ற உணர்வு கவித்துவ உணர்வு நமக்குள்ளிருந்து பொங்குகிறது என்றால் இதை மனப்பிரமை என்று சொல்வதற்கில்லை. பேய், பிசாசு நம்பிக்கைகளை ஒருவேளை பிரமை என்று சொல்லலாம். ’கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை.." ’நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும்" என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்கள்.. அதே நேரம் சோதிடம்,ஜாதகம் பார்ப்பது போன்றவற்றில் இருக்கும் நம்பிக்கைகள் தங்களைவிட்டு அகன்றுபோய் விட்டதாக எண்ணுகிறீர்களா? என்னைப் பொறுத்தவரை சோதிடம், எண்கணிதம், கைரேகைப்பதிவு என்பனவற்றில் ஓரளவு நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என்பதற்கு என் அனுபவம் மட்டுமல்ல, நூற்றுக் கணக்கானவர்களின் உண்மை அனுபவத்தில் இத்தகைய அனுபவத்தைக் காண முடியும். இத்தகைய நம்பிக்கை வைத்துக் கொண்டு நான் ஒருநாளும் வாழ்ந்ததில்லை. அவை என் அறிவுத்தளத்தைத் தொடுவதில்லை. அதாவது சோதிடம் பார்த்து என் வாழ்க்கையை நான் வாழவில்லை. இப்படிச் சொல்வதைக் கொண்டு நான் குழப்பவாதி என்று ஒருவர் சொல்வாரென்றால் அவர் சொல்வதை நான் பொருட்படுத்த மாட்டேன். சோதிடர்கள் சொல்லும் பொய்மைகளைப் பற்றி நானும் அறிவேன். வானம்பாடிகள் ஓர் அமைப்பாகச் செயல்பட்டபோது நெருங்கி இருந்தவர் நீங்கள். அங்கு நீங்கள் கவிதைக்குள் ஆழ மூழ்காமல் விமர்சகராகவே விளங்கியிருக்கிறீர்கள். வானம்பாடிக் காலத்தில் நானும் கவிதை கற்றுக் கொண்டேன். கவிதையின் ஆழத்திற்குள் நானும் மூழ்கியிருந்தேன். அதே சமயம் பிறர் கவிதை குறித்துத் திறனாய்வு செய்வதையும் குறைத்துக் கொள்ளவில்லை. கவித்துவ உணர்வும் திறனாய்வும் தமக்குள் முரண்பட்டதாக நான் கருதவில்லை. ’அனுபவம் இல்லாமல் சமயத்தைப் புரிந்துகொள்ள முடியாது" என்கிறீர்கள்… இப்படித்தானே கடவுள் நம்பிக்கையாளர்களும் கூறுகிறார்கள். தங்களுக்குக் கிடைத்த எத்தகைய அனுபவங்களில் சமயத்தைப் புரிந்து கொண்டீர்கள்? அனுபவம் என்பதை முழுமையாக மறுப்பதற்கும் இல்லை. அனுபவம் குறித்து ஆய்வில்லாமல் இருக்கவும் முடியாது. அனுபவத்தை உரசிப் பார்த்து அதன் உண்மை உண்மையல்லாத தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். அனுபவம் என்ற தளத்தை மட்டுமே வைத்துக் கொண்டு சமயவாதிகளைப்போல் நான் பேசவில்லை. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பின்னர் பல ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்தினேன். அப்படி உட்படுத்தியதின் விளைவாகச் சமயத்தின் எல்லையைக் கடந்து வந்துவிட்டேன். சமயத்திற்குள் ஒருவர் ஆழ்ந்து செல்வார் என்றால் அதிலிருந்து கடந்து வந்துவிடத்தான் வேண்டும். சமய நம்பிக்கைகளை வைத்து வணிகமோ தொழிலோ செய்பவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. சமயம் பற்றிப் புரிந்து கொள்ள சமயத்திற்குள் சென்று அதைக்கடந்து வருவதன் தேவையை நான் வற்புறுத்துகிறேன். சமயமே பொய் (அ) பிரம்மை என்று என்னால் பேச முடியாது. நானே பிரம்மம் என்பது அத்வைத அனுபவம். இந்த அனுபவத்தின் உள் ஆழத்திற்குள் செல்ல முடியுமானால் அனைவரும் சமம். எல்லா உயிர்களும் ஒன்றின் பல வடிவங்கள். இப்படி ஆய்ந்து செல்லும் பொழுது பிராமணனும் சூத்தரனும் முரண்பட்டுக் கொள்ள முடியாது என்பது மட்டுமல்ல, இதன் வழியே சமதர்ம உணர்வை எட்ட முடியும். விவேகானந்தர் இப்படித்தான் சமதர்மத்தைப் புரிந்துகொண்டார். (உங்களுக்குச் சமய நம்பிக்கை இல்லை என்பதால் சமயமே பொய்(அ) பிரம்மை என்று பேசுகிறீர்கள்.அல்லது சிவானந்தர் போன்றவர்களிடம் சமயம் எவ்வகையில் வளமை பெற்றிருந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது.) தமிழர்களின் தொன்மை வரலாறு எந்தெந்த வகைகளில் இருட்டடிப்புச் செய்யப் பட்டிருப்பதாகக் கருதுகிறீர்கள்? தமிழர்களின் தொன்மை வரலாறு என்பதை சிந்து சமவெளிக்கு அப்பாலும் கொண்டு செல்ல முடியும். பூம்புகார் கடலாய்வு தமிழக வரலாற்றை 10ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கொண்டு செல்கின்றது. தமிழர்களின் மருத்துவம், இசை ஆகியவற்றை ஆய்ந்து செல்ல முடியுமானால் எளிதாக 5000 - 10000 ஆண்டுகளுக்கு முன் கொண்டு செல்ல முடியும். இவ்வகை உண்மைகளையெல்லாம் யார் இருட்டடிப்புச் செய்கிறார்கள் என்பது தெரிந்த உண்மைதான் சமஸ்கிருதச் சார்புள்ளவர்கள் தமிழ் வரலாற்றை இவ்வாறு கொண்டு செல்வதை ஏற்பதில்லை. குமரிக்கண்ட ஆய்வை முழு அளவில் மெய்ப்பிப்பதற்கான சான்றுகள் இன்றுவரை நமக்குக் கிட்டவில்லை. தமிழகத்தில் வாழும் சில இனக்குழுக்களின் டி.என்.ஏ ஆய்வுகள் தமிழரின் வரலாற்றை ஓர் இலட்சம் ஆண்டுகளுக்கு முன் கொண்டு செல்கிறது. என்னைப் பொறுத்தவரை இத்தகைய ஆய்வுகளை மட்டும் வைத்துக் கொண்டு தமிழ்ப் பெருமை பேசுவதை நான் மதிப்பதில்லை. இந்தத் தொன்மை, தமிழரை இன்று எவ்வாறு வைத்திருக்கிறது என்று நான் பார்க்க விரும்புகிறேன். நிகழ்கால உலகில் தமிழன் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள பழம்பெருமை பேசிப்பயனில்லை. தற்காலச் சூழலுக்குள் தமிழன் தன்னைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். இன்றைய தமிழ் ஆய்வுகள் எதிர்பார்க்கும் தரத்தில் செய்யப்படுவதில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு. இந்நிலை எந்தத் தளத்தில் இருந்து தொடங்கியது? இதற்கு மாற்றாக என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறீர்கள்? தமிழ்ப்பெருமையை மடடும் பேசிக்கொண்டு தமிழனின் தொன்மைபற்றிப் பெருமிதம் கொண்டு அதே சமயம் அசலான ஆய்வுகள் முதலியவற்றில் ஈடுபடாமல் இறுமாந்து இருப்பவர்கள் இவர்கள். செயலூக்கமற்றவர்கள். தற்கால உலகச் சூழலில் தமிழனுக்குரிய இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள எண்ணாதவர்கள். இவர்களால்தான் தமிழ்வளர்ச்சி பெறவில்லை. மாறாகத் தேங்கிக்கிடக்கிறது மட்டுமல்லாமல் வரலாற்றுச் சூழலில் தமிழ் பின்னோக்கித் தள்ளப்படுகிறது. அந்த இடத்தை ஆங்கிலம் பிடித்துக் கொள்கிறது. இவர்களின் இறுமாப்புணர்வைத் தகர்க்கும் சூழலும் இல்லை. இந்தியை ஒழிப்பதாகச் சொல்லிக் கொண்டு ஆங்கிலத்தை வளர்ப்பவர்கள் இத்தகையவர். தமிழின் உயிர்ப்பைத் தக்கவைத்துக் கொள்ளாதவர்களால்தான் தமிழ் கேள்விக்குரியதாக மாறியிருக்கிறது. ஒருவகையில் மேற்கத்திய ஆய்வுக்கு இவர்கள் கூடியவர்கள். பணம் இவர்களை ஆளுகிறது. அதிகாரத்தின் ஆணவத்திற்குள் தமக்கு ஏதாவது இடம் தேடிக் கொள்பவர்கள் இவர்கள். இத்தகைய சூழலை மாற்றமுடிந்தால் மட்டுமே தமிழில் ஆய்வுகள் முன்னுக்குச் செல்லும். தமிழ்க் கவிதையுலகைத் தொடர்ந்து கவனித்து வருகிறவர் தாங்கள். செவ்வியல் இலக்கியங்களில் இருந்து இன்றைய நவீன கவிதை வரை திறானாய்வு செய்திருக்கிறீர்கள். இவை தமிழுக்கு எத்தகைய செழுமையை ஏற்படுத்தியிருக்கின்றன? இதற்கான விடையைப் பிறர்தான் சொல்லவேண்டும். மேலை இலக்கியத் தாக்கத்தில் பலர் நவீன கவிதை என்றெழுதுகிறார்கள். நவீன கவிதை என்று எவற்றை வகைப்படுத்துகிறீர்கள்.. கவிதைக்குரிய எந்த நுட்பங்களும் இல்லாமல் எழுதப்படும் வறட்டு உரைநடையை நவீன கவிதை என்று வகைப்படுத்துவது வேடிக்கையாக இல்லையா? நவீன கவிதை என்பது நவீன காலத்துச் சிக்கலோடு எழுதப்படுவது. மேற்கத்தியப் பொருளியல் மற்றும் பிற தாக்கங்களால் நமக்குள் சிதைந்து கிடக்கிறோம். துண்டுகள் பலவாகச் சிதைந்து கிடக்கும் நம்மை ஒருமுகப் படுத்திக் கொள்ள நவீன கவிதை எழுதுகிறோம். பழம்பெருமை பேசுவது முதலியவற்றை முற்றாக (மாற்றி) எழுதும் கவிதை நவீன கவிதை. நவீன கவிதை எழுதுவதற்கான மொழிபற்றி இங்குக் குறிப்பிட வேண்டும். சிக்கலான மொழிநடை .கவிதைக்கு உயிர் ஊட்டும். இது வறட்டுத்தனமான உரைநடையாகவும் இருக்க முடியாது. கவிதை என்பது எழுதுகிறவர்களையும் நவீன படுத்த வேண்டும். ஆங்கிலத்தில் உள்ள கவிதைகளை தமிழுக்கு அப்படியே மாற்றுவது ஒரு மொழிபெயர்ப்பாளனின் செயல். இவனுக்குள் நவீன உலகம் எவ்வகையில் தட்டுப்படுகிறது என்பது கேள்விக்குரியதாகும். நவீனமோ, வேறுவகைக் கவிதையோ, கவிதையாக இருக்க வேண்டும். அறிவியல், ஆன்மிகம், அரசியல், இலக்கியம் என்று எல்லாவற்றையும் மார்க்சிய தத்துவத்தில் வைத்தே எடைபோடுகிறீர்கள். மக்களிடத்தில் இந்தச் சிந்தனை எந்தவகையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது? மார்க்சிய நோக்கிலிருந்து பலவற்றையும் பார்க்க முடியும் என்பதை யாரும் ஐயுற வேண்டாம். மார்க்சியத்துக்கு இத்தகைய வளமும் வலிமையும் உண்டு. கட்சிக்காரர்கள் இவ்வாறு செய்வதில்லை. மார்க்சியத்தை வைத்து எடைபோடுவதிலும் தவறில்லை. இதன் தாக்கம் மக்களிடம் போகிறதா இல்லையா என்பதைவிட தமிழில் இன்று கவிதை என்றும் திறனாய்வு என்றும் எழுதுகிறவர்களிடம் இதன் தாக்கம் உண்டா என்பது பற்றித்தான் நாம் கவலைப்படவேண்டும். மக்கள் என்பவர்கள் இந்த வட்டத்திற்கு வெளியே உள்ளவர்கள். பழைய இலக்கியங்களை மறுவாசிப்பு செய்வதன் மூலம் ஒருவர் தன் வேறுபட்ட கருத்துக்களை முன்வைக்க முடியும். எழுதப்பட்ட காலத்தின் சூழலையும் குரலையும் சட்டெனப் புறக்கணித்துவிட முடியும் என்றெண்ணுகிறீர்களா? எழுதப்பட்ட காலச்சூழலுக்குள் இன்று வாழ்பவர்கள் போகமுடியாது. இதன் காரணமாகத்தான் இன்று எழுதுபவர்கள் தம் அனுவத்திலிருந்து பழமையைப் பார்க்க வேண்டும். அன்றியும் காலம் மாறிவிட்டது என்பதை வைத்துப் பழமையைப் புறக்கணிப்பதும் தவறு. மாறுவது கவிதை முதலிய எல்லாவற்றிற்கும் இயல்பானதுதான். வள்ளுவரைப்பற்றி மறுபார்வை தேவையென்பதை யார் மறுக்கமுடியும்.? வள்ளுவரை நம் கால நோக்கில் பார்ப்பது என்பதுகூட வள்ளுவரை நம் காலச்சூழலுக்குள் உயிர்ப்பித்துக் கொள்வதுமாகும். காலத்தால் அழியாதவை என்று சில கூறுகளை நாம் பார்க்கத் தவறவும் கூடாது. மனிதர்களிடத்திலும் உயிர்களிடத்திலும் பேரன்பு கொண்டு வாழும் ஒரு படைப்பாளிக்கு இசங்களும் சித்தாந்தங்களும் எந்தவிதத்தில் பயன்படப்போகிறது..? மனிதரிடமும் பிற உயிர்களிடமும் பேரன்பு கொள்வது என்பது கூட ஒருவகைச் சித்தாந்தம்தான். பழங்காலச் சமணர்கள் மாதிரி எவ்வகை உயிர்க்கும் தீங்கு தன்னால் கூடாது என்ற முறையில் அவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் அல்லது வாழ்வை விட்டு விலகினார்கள் என்று இன்று நாம் பார்க்கிறோம். மனிதனோ அல்லது பிற உயிர்களோ வாழ்வது என்பது கூட பிற உயிர்களின் மீது சாய்வு இல்லாமல் வாழ முடியாது. ஓர் ஆட்டை உணவுக்காகக் கொல்வது என்பதன் முன்னர் கடவுளிடம் வேண்டிக் கொள்வது என்ற நடைமுறை ஒருவகை சித்தாந்தம் அல்லது உயிர்க்கொலை இல்லாமல் வாழமுடியும் என்பதில் உண்மையுமில்லை. அதற்காக உயிர்களைக் கொல்வதையும் நியாயப்படுத்துவதும் இயலாது.. அங்கங்கே சில குழுக்கள்.. அவர்களுக்குள் பரஸ்பர பாராட்டுகள்.. படைப்புகள், விருதுகள், வேறு எவருமே படைப்பாளிகள் இல்லை என்கிற இருட்டடிப்பு… இவையெல்லாம் தமிழ் இலக்கிய மேன்மைக்கு எந்த வகையில் பயன்படப்போகிறது.. கொஞ்சம் விளம்பரம்.. அவ்வளவு தானே? குழுமனப்பான்மையும் நமக்குத் தெரிந்த தமிழ்ச்சூழலில் தவிர்க்க இயலாததாக மாறிவிட்டது. குழுக்கள் கடந்த பார்வையை முன்வைக்க இயலாது என்ற அளவுக்கு இந்தப் போக்கு இன்று இறுகிவிட்டது. இத்தகைய போக்கைத் தமிழ்ச்சூழலிருந்து அகற்ற முடியாது. குழு மனப்பான்மைக்குள்ளிருந்தே தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் ஏதாவது செய்கிறார்களா? இல்லையா? என்றுதான் பார்க்க வேண்டும். கட்சிக்காரர்களின் குழு மனப்பான்மை வெறுக்கத்தக்கதாக மாறியிருக்கிறது. ஒரு சித்தாந்தம் அல்லது கருத்தியல் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமென்றால் பிறவகையான சித்தாந்தங்களையும் மறுக்கவும் இயலாது. நான் உயிர்வாழ இன்னும் நான்குபேர் அல்லது நாலாயிரம் பேர் தேவைதான். இப்படிச் சொல்வதில் ஏதோ இசம் இருக்கிறது என்றால் அது என்ன என்று பார்க்க வேண்டும். தமிழ் இலக்கியத்தில் மெய்யியல் உச்சத்தில் இருக்கும் படைப்புகளாக எவற்றைக் கருதுகிறீர்கள்.. என்ன காரணம்? தமிழ் இலக்கியத்தில் திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், சித்தர் இலக்கியம் ஆகியவற்றில் மெய்யியல் உச்சத்தில் இருக்கிறது. திருக்குறளில் சான்றோர் என்ற கருத்து மையமாக இருக்கிறது. ஒப்புரவு செய்வதற்காக ஒருவர் தன்னை விற்றுக் கொள்ளவும் வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். சிலம்பின் இறுதிப்பகுதி ஒன்றில் கண்ணகி கூறுவதாக ஒரு பகுதி வருகிறது. “தென்னவர் தீதிலன் தேவர்கோன் நல்வாயிலில் இருக்கும் அவனுக்கு நான் மகள்” என்பது போல ஒரு வாசகம் வருகிறது. பாண்டியன் தவறு செய்தான். எதற்காக என்று ஆராயும் போது பொற்கொல்லன் செய்த தீங்கு நம் கண் முன் வருகிறது. பாண்டியனுக்கும் சிலம்பு தேவை. தன் மனைவியின் ஊடல் தீர்ப்பதற்காக. பழங்காலத்தில் நீதி வகுக்கும் முறையும் சரியில்லை. ஆகவே பாண்டியன் செய்த தவறு என்பது அவனாகச் செய்ததாகவும் இல்லை. இந்நிலையில் பாண்டியனை மன்னித்து விடலாம். சினம் தணிந்தவள் கண்ணகி. எல்லாவற்றையும் எண்ணிப் பார்க்கிறாள். தேவர் கோனுக்குப் பாண்டியன் நல்விருந்து ஆயினன். எனக்கும் அவனுக்கும் இருந்த பகைமைக்கு இன்று தேவையும் இல்லை. இப்படிச் செல்கிறது சிலப்பதிகாரக் கதை. சித்தர் இலக்கியம் குறித்துச் சொல்ல வேண்டியதுமில்லை. சங்க இலக்கியத்தையும் விட்டுவிட முடியாது. இவையெல்லாம்தான் தமிழுக்கு உயிரூட்டிய இலக்கியங்கள். கம்பர் காவியம், பெரியபுராணம் இவற்றையும் இதே தளத்தில் இருந்து ஆராய முடியும். கவிதை, நாவல், சிறுகதை, நாடகம் என்று பலவற்றையும் தொடர்ந்து திறனாய்வு செய்கிறீர்கள்.. திறனாய்வு என்ற பெயரில் தங்கள் மனக்கருத்தை வலியத் திணிக்கிறீர்களா.. இல்லை எந்த அடிப்படையில் அவற்றைத் திறனாய்வு என்ற தளத்தில் பார்க்கிறீர்கள்..? திறனாய்வு என்ற பெயரில் நான் எந்தக் கருத்தையும் திணிக்கவில்லை. குறிப்பிட்ட இலக்கியத்தை வாசிக்கும் போது எனக்குள் எழும் உணர்வை முன்வைக்கிறேன். அந்த உணர்வு மார்க்சியம் கலந்ததாகவும் இருக்கிறது. எனக்குள் எந்தவகைக் குழு மனப்பான்மையும் இல்லை. எந்த இலக்கியத்தை மதிப்பீடு செய்யும் போதும் அந்த இலக்கியத்தின் தரம் உயரத்தான் செய்கிறது. எந்த ஓர் இலக்கியத்தையும் நான் தரம் இறக்கிப் பேசவில்லை. இப்படிப் பேச நேரும் என்றால் நான் அந்த இலக்கியத்தைத் தவிர்த்து விடுகிறேன். தலித்தியம், பெண்ணியம், சூழலியம், என்று பல தளங்களில் படைப்புலகம் இயங்கிவருகிறது.. இவற்றிலும் பல உட்பிரிவுகள்… எதிர்காலத் தமிழ் இலக்கியத்தில் இவை எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று கருதுகிறீர்கள்? நிகழ்காலத் தேவைகருதி படைப்புகள் மட்டுமல்லாமல் திறனாய்வுகளும் தோன்றுகின்றன. தமிழகம் இன்று ஒரு கடுமையான நெருக்கடிச் சூழலில் இருக்கிறது. இந்த நெருக்கடியிலிருந்து நாம் விடுபட வேண்டும். தமிழகம் விடுபடுமானால்தான் நாமும் விடுபடுவோம். இல்லையென்றால் நாம் இத்தகைய கேள்வி பதி்ல் சூழலுக்குள்தான் நாம் மாட்டிக்கொள்வோம். தங்களுடைய ’தொலைவிலிருந்து" ’கல்லும் முள்ளும்" ’கல்லிகை" கவிதை நூல்களில் தங்களுடைய கவித்துவம் எந்த அளவு வெளிப்பட்டிருப்பதாகக் கருதுகிறீர்கள்? என்னுடைய இந்த படைப்புகளில் கவித்துவச் சாயலே கிடையாது என்று என்னை நோக்கி விரல் சுட்டுபவர்களையும் நான் பார்க்கிறேன். ஒரு வேளை உங்களுக்கும் இத்தகைய கருத்துக்கள் இருக்குமானால் முதலில் வெளிப்படுத்துங்கள்- தக்க காரணங்களோடு. என்னுடைய ஒவ்வொரு படைப்பையும் எடுத்து நான் பேசுவதற்கு இந்தக் கேள்வி பதில் அரங்கு போதுமானதாக இருக்க முடியாது. அரசியல் இயக்கச் சார்பற்ற கவிஞர்கள், படைப்பாளர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்படுவதாகக் கருதுகிறீர்களா? படைப்பாளிகளை ஒரு வட்டத்திற்குள் வைத்துக் கொண்டு திறனாய்வு செய்ய முற்படுவது சரியானதுதானா? அரசியல் சார்பில் எழுதுபவர்களைக் குறிப்பிட்ட அந்த அரசியல் சூழல் தாங்குகிறது என்பது உண்மைதான். ஒருவேளை அரசியல் கட்சி சார்பில்லாமல் நீங்கள் எழுதுவதாக வைத்துக் கொண்டால் உங்களைத் தாங்கும் அரசியல் சக்தி எதுவும் இல்லை என்பதாலும் இப்படி ஒரு கேள்வியை நீங்கள் முன்வைக்கலாம். இப்பொழுது உங்கள் படைப்பைப் பற்றியும் பேசத்தான் வேண்டும். அதற்கு இது இடமில்லை. புதுப்புனல் இதழில் மாதந்தோறும் தவறாமல் வெளிவரும் உங்கள் கவிதைகள் உண்மையில் அசலான கவிதைகள். உங்களையே நீங்கள் தேடித் துருவிப் பார்க்க முடியுமானால் உங்கள் சார்பில் நீங்கள் கண்டு கொள்ளலாம். பெண் படைப்பாளர்களின் சிறுகதைத் தொகுப்புகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறீர்கள்.. இன்றைய பெண்படைப்பாளர்களின் படைப்புகள் எந்த திக்கு நோக்கிப் பயணிக்கின்றன என்று நினைக்கிறீர்கள்? பெண் படைப்பாளர்களோ அல்லது வேறு எவருமோ படைப்பதென்பது நிகழ்காலத்தில் உள்ள ஒரு தளத்தில் நின்று கொண்டு படைப்பதாகத்தான் இருக்கமுடியும். நிகழ்காலத் தேவைகளைக் குறைந்த அளவுக்கேனும் உள்வாங்கிக் கொண்டு எழுதுவது நிச்சயம். எதிர்காலம் நோக்கிய பயணத்திற்குத் தம்மைத் தயாரித்துக் கொள்வதாகவும் இருக்க முடியும். 2020 என்ற இலக்கை முன் வைத்துக்கொண்டுதான் ஒருவர் படைக்க வேண்டும் என்று சொல்ல முடியாது. எதிர்காலப் படைப்புலகம் எப்படியிருக்கும், எப்படியிருக்கவேண்டும் என்று கருதுகிறீர்கள்? தமிழகச் சூழலிருந்து பார்க்கும்போது நமக்கு எதிர்காலமே இல்லை என்பது போல்தான் பேசியாக வேண்டும். உலகமயமாதல் என்பதற்கான ஆதிக்கத்திற்குள் இந்தியாவும் அப்புறம் இந்தியாவிற்குள் தமிழகமும் மாட்டிக்கொண்டு சீரழிகிறது. இத்தகைய சூழல் குறித்து நம் படைப்பாளிகள் பெரிய அளவில் சிந்திப்பதாகத் தெரியவில்லை. இவர்கள் தமக்குத் தாமே வழிபாடு செய்து கொள்வதாகவும் இருக்கிறார்கள். இந்தச் சுய வழிபாடு மரியாதைக்குரியாதகவும் இல்லை. அமெரிக்க ஆதிக்கம் ஒருபக்கம் ஐரோப்பிய யூனியன் இன்னொரு பக்கம் இரஸ்யா, சீனா இன்னொரு பக்கம் . இவை அனைத்துமே நம்மைப் பழிகொள்ளக் காத்திருக்கின்றன. இவர்களுக்காக இந்தியாவை விட்டுக் கொடுத்து வாழ்வதே போதும் என்ற மனநிலையில் நம் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இப்படித் தொடரும் பேராபத்தை நம் படைப்பாளர்கள் புரிந்து கொண்டு படைக்கத்தான் வேண்டும். இப்படிச் செய்யவில்லையென்றால் இவர்களின் சுயவழிபாடு ஓர் ஆக்கச் சக்தியாக இல்லை. தி இந்து - ஜூன், 2018, - சமஸ் இந்தியாவின் மகத்தான இடதுசாரிகள் காந்தி, பெரியார், அம்பேத்கர்: கோவை ஞானி பேட்டி இந்தியாவுக்கேற்ற பொதுவுடைமை இயக்கத்தை உருவாக்கும் சிந்தனைப் பயணத்தில் மிக முக்கியமான ஒரு புள்ளி கோவை ஞானி. இந்தியத் தளத்தில் மார்க்ஸையும் பெரியாரையும் இணைப்பது ஞானியினுடைய சிந்தனையின் மையம். 30 ஆண்டுகளுக்கு முன், அவருடைய 50-களில் நீரிழிவு நோய் முழுமையாக ஞானியின் பார்வையைப் பறித்தது. எனினும், தன்னுடைய வாசிப்பையோ, எழுத்தையோ, பேச்சையோ எது ஒன்றும் நிறுத்திவிட அவர் அனுமதிக்கவில்லை. காலை 11 மணி தொடங்கி மாலை 5 மணி வரை அவருடைய சிஷ்யையான மீனாட்சி வாசிக்கக் கேட்கிறார். நினைத்ததைச் சொல்லி எழுதுகிறார். முதுமை அவரைச் சங்கடத்துக்குள்ளாக்குவதையும் உணர முடிகிறது. உரையாடலில் உட்கார்ந்துவிட்டால் உற்சாகமாகிவிடுகிறார். கி.பழனிசாமி, எப்போது ஞானி ஆனீர்கள்? என்னுடைய பால்ய கால சினேகிதர் துரைசாமி. ஒரே ஊருக்குள் இருந்தாலும் கருத்துகளைக் கடிதங்களாகப் பறிமாறிக்கொள்வதை விளையாட்டாகச் செய்துவந்தோம். அவர் ஞானி என்ற பெயரில் எழுதுவார். ஒருநாள் ‘இந்தப் பெயரை நான் விட்டுவிடுகிறேன். நீ எடுத்துக்கொள்’ என்றார். தத்துவங்கள் மீது எனக்கு ஈடுபாடு இருந்ததால், இளம் வயதிலேயே நான் ஞானி ஆகிவிட்டேன். இன்றைய ஞானியின் உருவாக்கத்தில் குடும்பத்தின் பங்கு என்னவாக இருந்தது? நான் பிறந்து வளர்ந்த சோமனூர், சின்ன கிராமம். அப்பா கிருஷ்ணசாமி. அம்மா மாரியம்மாள். அப்பா அரிசி, பருத்தி வியாபாரத்தில் இருந்தார். அம்மா குடும்பத்தைக் கவனித்துக்கொண்டார். வீட்டில் என்னோடு சேர்த்து எட்டுப் பிள்ளைகள். தேசிய இயக்கத்தில் பற்றுக் கொண்டிருந்தவர் அப்பா. சுதந்திரத்துக்குப் பின் நாடு மாறிவிடும் என்று நம்பியவர். சாமானிய மக்களின் கனவுகளும் நம்பிக்கைகளும் எப்படி நொறுங்குபடுகின்றன என்பதை அப்பாவின் வழியாகப் பார்த்தேன். காங்கிரஸ் மீதான நம்பிக்கை உடையவும் எது உண்மையான சுயராஜ்ஜியத்தைத் தரும் என்ற மாற்றைத் தேடவும் அப்பாவின் உடைவும் ஒரு காரணம். படிப்பு, வாசிப்புக்கேற்ற சூழலைக் குடும்பமே கொடுத்தது. என்னுடைய காதல் மனைவி இந்திராணி குடும்பத்தை முழுக்க அவர் தோள்களில் சுமந்தவர். என் எழுத்துகள், அரசியல் நிலைப்பாடுகளுக்காக காவல் துறையினரின் கண்காணிப்பு, அச்சுறுத்தல்கள் இருந்த காலத்தில்கூட ஊக்கம் கொடுத்தவர் அவர். பெரிய இழப்பு அவருடைய மறைவு. இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவருமே புகைப்படக்காரர்கள். உடன் இல்லையென்றாலும், என் செயல்பாட்டுக்குத் துணையாகவே இருக்கிறார்கள். நீங்கள் பிறந்து வளர்ந்த காலகட்டமானது, தமிழகத்தில் திராவிட இயக்கம் தழைத்த காலகட்டம். நீங்கள் படித்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அன்றைய மாணவர் அரசியலின் விளைநிலம். உங்களுடைய தமிழுணர்வுக்குக் காரணமாக திராவிட இயக்கத்தைப் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், பொதுவுடைமை இயக்கத்தையே தேர்ந்தெடுத்தீர்கள். ஏன்? என்னுடைய கிராமம் விவசாயிகளுக்கு இணையாக நெசவாளர்களையும் கொண்டது. படிக்கச் சென்ற கோவை, ஆலைத் தொழிலாளர்களால் நிறைந்தது. அப்போது, தஞ்சாவூரில் அரசியல் விழிப்புணர்வோடு ஒருவன் படித்து வெளியே வந்தால், அவன் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவனாக இருப்பான். அதுவே கோவையாக இருந்தால், மார்க்ஸியனாக இருப்பான். நான் அப்படித்தான் மார்க்ஸியனாகிவிட்டேன். பெரியார், அண்ணா மீது மதிப்பு இருந்தது. ஒரு கூட்டம் தவறவிட்டதில்லை. புத்தகங்கள் எல்லாவற்றையும் படித்துவிடுவேன். ஆனால், சத்தமான நாத்திகவாதம் ஒரு தடையாக இருந்தது. கடவுளுக்கான நியாயத்தை என்னால் புறக்கணிக்க முடியவில்லை. கடவுள் - மதம் சம்பந்தமான உங்களுடைய நிலைப்பாடு இங்கு மார்க்ஸியர்களையுமே சங்கடப்படுத்தக் கூடியது. கடவுளுக்கான நியாயத்திலிருந்துதான் மதத்துக்கான நியாயத்தை உருவாக்கிக்கொண்டீர்களா? சின்ன வயதிலிருந்தே ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை இருந்தது. அதேசமயம், ‘கடவுள் இருக்கிறாரா, இல்லையா’ என்ற கேள்வியும் துரத்தியது. அரவிந்தர், ராமகிருஷ்ணர், விவேகானந்தரையெல்லாம் ஆழ்ந்து கற்றேன். கடவுளைக் காணப் போராடினேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில் தீவிரமான தியானப் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன். என்னென்னவோ அனுபவங்கள். ஒருநாள் கண்ணை மூடித் தியானிக்கிறேன். கண்ணுக்குள் ஒரு வெளிச்சம். அதில் மிதக்கிறேன். உச்சந்தலையிலிருந்து ஒரு திரவம் சுரந்து உடம்பினுள் ஓடுவதுபோல இருக்கிறது. உடம்பெல்லாம் பரவசம். தியானம் பழகிவிட்டது. இப்படியே சில மாதங்கள். அந்தச் சமயத்தில் அருகில் இருக்கும் எதைத் தொட்டாலும் கடவுள்போலத் தோன்றும். எல்லாமே கடவுள். பரவசமான அனுபவம். ஆனால், சீக்கிரமே குழப்பத்தை ஏற்படுத்தும் கேள்விகள் வந்துவிட்டன. விடுதியில் சாப்பிடச் சென்றால் சாப்பாடும் கடவுள், நானும் கடவுள். எப்படி கடவுள் தன்னைத்தானே சாப்பிடுவது? சாமி கும்பிடச் சென்றால், நானும் கடவுள், விக்கிரகமும் கடவுள். நான் ஏன் அவனைக் கும்பிட வேண்டும்? பெரிய குழப்பம். உடம்புக்கு முடியாமல் போய்விட்டது. ‘மோகினி அடித்துவிட்டது’ என்று வீட்டில் முடிவெடுத்துவிட்டார்கள். பிற்பாடு தாகூரைப் படித்தபோதுதான் குழப்பம் நீங்கியது. ‘சாதனா’வில் தாகூர் எழுதுகிறார்: ’கடவுள் என்பது இயற்கையைத் தவிர வேறு எதுவும் இல்லை.’ ஆக, என்னுடைய கடவுள் நம்பிக்கை இதுதான். இன்று என்னிடம் கடவுள் இருக்கிறாரா என்று கேட்டால், இல்லை என்பேன். கடவுள் ஒரு அழகான, போதையூட்டும் கருத்தாக்கம்.. அவ்வளவுதான். ஆனால், சமூகத்தில், சாமானிய மக்களிடம் உள்ள கடவுள் - மதத்துக்கான நியாயத்தை என்னுடைய சொந்த விருப்பங்களிலிருந்து அணுக மாட்டேன். மதம் ஒதுக்கப்பட வேண்டிய, ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்றே பெரும்பாலான மார்க்ஸியர்கள் கருதுகிறார்கள். நீங்கள் இந்தத் தளத்தில் நிறையப் பயணித்திருக்கிறீர்கள். இன்றைக்கு எந்த இடத்தை வந்தடைந்திருக்கிறீர்கள்? மதத்தைப் பற்றி மார்க்ஸ் நிறையப் பேசியிருக்கிறார். ‘மதம் ஒரு அபின்’ என்று அவர் சொன்னதை மேற்கோள்காட்டி நிறையப் பேர் இப்படிப் பேசுவதுண்டு. ஜெர்மனில் அபின் என்ற சொல்லுக்கு இரு அர்த்தங்கள் உண்டு. ஒன்று, போதையூட்டக்கூடியது. மற்றொன்று, வலியை மறக்கச்செய்யும் மயக்க மருந்து. பிந்தைய அர்த்தத்திலேயே மார்க்ஸ் அதைப் பயன்படுத்துகிறார். “மக்களின் ஏக்கப் பெருமூச்சு மதம். அது, இதயம் அற்ற உலகின் இதயம். ஆன்மா அற்ற உலகின் ஆன்மா. தனியுடைமை, அரசதிகாரம் இருக்கும் வரை மதமும் இருக்கும். கொடுமையான சமூகச் சூழலில் மதம் தரும் ஆறுதல் இல்லாமல் மனிதர்களால் வாழ்வைச் சகித்துக்கொள்ள முடியாது.” இதையெல்லாமும் மார்க்ஸ்தான் சொல்கிறார். மதம் நாம் நினைக்கிற அளவுக்கு வெறுக்கத்தக்கது இல்லை. ஜான் லெவிஸ் சொல்கிறார், “மதத்தின் மேலடுக்கு பூசாரித்தனம். தெய்வம், கோயில், வழிபாடு, சடங்கு இதெல்லாம் இந்த மேலடுக்கு. உள்ளடுக்கு ஒன்று இருக்கிறது - தீர்க்கதரிசனம்.” என்னைப் பொறுத்த அளவில் இந்த உள்ளடுக்கையே மதமாக நான் பார்க்கிறேன். சமுதாயத்தில் ஒடுக்கப்படும் சூழலுக்கு எதிராக மக்களுக்கு ஒரு சகிப்புத்தன்மை தேவைப்படுகிறது. இதற்கு மதம் பயன்படுகிறது. ஒடுக்கப்படும் சூழல் நிலவும் காலம் முழுவதும் மதம் உயிரோடு இருக்கும். அடுத்து, மதம் சார்ந்து காலங்காலமாக உருவாகியிருக்கும் கலாச்சாரப் பொக்கிஷங்கள். தமிழிலக்கியத்தில் சரிபாதி அளவுக்கு இருக்கும் பக்தி இலக்கியத்தை எடுத்துக்கொள்வோம். மதத்தோடு சேர்த்து அதையும் நாம் புறக்கணித்து விட முடியுமா? திருவாய்மொழிப் பாடலின் வரி இது: ’ஊரிலேன் காணியில்லை உறவுமற்றொருவரில்லை…" எவ்வளவு கொடிய ஏக்கத் துயர் இது! ஆழ்ந்து பார்த்தால், ஒரு இனக்குழுச் சமூகத்தின் மேன்மையான பண்புகளின் கொள்கலமாக அல்லவா கடவுள் மாறிவிடுகிறார். மத வெறி, மத அரசியலுக்கு எதிராக நாம் உயிரையும் கொடுக்கலாம். மதத்தை எப்படி முற்றிலுமாகப் புறக்கணிக்க முடியும்? தொடக்கத்தில் பெரியாரிடத்திலிருந்து தள்ளி நிற்க இதெல்லாமும் சேர்ந்துதான் காரணமாக இருந்தன. பெரியாரியர்களிலேயேகூட பெரியாரை சாதி ஒழிப்பாளராகப் பார்த்தவர்களைக் காட்டிலும் கடவுள் மறுப்பாளராகப் பார்த்தவர்கள் அதிகம். தொடக்கத்தில் நீங்களும் அப்படியே பார்த்திருக்கிறீர்கள் என்று சொல்லலாமா? சொல்லலாம். கடவுள் மறுப்பு என்கிற தளத்தில் மட்டும் இல்லை; அவருடைய பிராமணிய எதிர்ப்பையும்கூட தொடக்கக் காலத்தில் சுருக்கித்தான் புரிந்துகொண்டிருந்தேன். என்னுடைய தாத்தா காதல் திருமணம் செய்துகொண்டவர். என் குடும்பத்தில் நான் உட்பட பலரும் சாதி கடந்து காதல் திருமணம் செய்துகொண்டோம். சாதிக் கலப்பு அல்லது சாதி மறுப்பு எங்கள் வீட்டில் சகஜமாகிவிட்டதால் சாதிப் பாகுபாட்டின் கொடுங்கோன்மையை வீரியமாக நான் புரிந்துகொள்ளவில்லை. என்னுடைய ஆசிரியர்களில் பலர் பிராமணர்கள். தன்னலம் கிடையாது. வேற்றுமை பாராட்டல் கிடையாது. பெரும் அர்ப்பணிப்போடு பணியாற்றியவர்கள். அதனால், பிராமணர்கள் மீதும் பெரிய மதிப்பு எனக்கு உண்டு. இந்தக் காரணங்களால் அந்த வயதில் பெரியாரின் பிராமணிய எதிர்ப்பானது, ‘பிராமணர் எதிர்ப்பல்ல; சாதி ஒழிப்பின் மையம்’ என்பதைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டேன். பிற்பாடுதான் பெரியார் முழுமையாகப் புரிபட்டார். ஒட்டுமொத்த இந்திய சமூகத்தில் சாதியின், பிராமணியத்தின் ஆதிக்கத்தைப் புரிந்துகொண்டேன். பெரியாருடைய கடவுள் எதிர்ப்பு, மத எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு எல்லாமே சமத்துவத்துக்கான முழக்கம்தான். உண்மையில், சுயமரியாதைதான் பெரியாரின் மெய்யியல் - தத்துவம். பகுத்தறிவு என்பதேகூட பெரியாருடைய ஆய்வுமுறையே தவிர, அது அவருடைய மெய்யியல் கிடையாது. பெரியாரியத்தின் மையம் சமதர்மம். இந்தப் புள்ளியில்தான் மார்க்ஸுடன் பெரியாரை இணைக்கிறேன். பிராமணியத்தைப் பற்றிப் பேசுகையில், சாதியடுக்குக் கட்டுமானம், பாகுபாடுகள், தீண்டாமை இவற்றோடு மட்டும் அல்லாமல், அதனுடைய பிற பண்பு வடிவங்களைப் பற்றியும் பேசுகிறோம். உதாரணமாக, இந்தியாவில் நவீன அரசும் நவீன அறிவியலும் வளர்ச்சி முழக்கமும் பிராமணியத்தன்மை கொண்டிருப்பதைச் சொல்லலாம். பிராமணியத்தை விமர்சிக்கக் கூடிய நம்மைப் போன்றவர்கள், அப்படியே அபிராமணியத்தைப் பற்றியும் பேசலாம் என்று நினைக்கிறேன். பிராமணரல்லாத சமூகங்களிடம் உள்ள கலாச்சாரம், பிராமணியத்துக்கு மாற்றான பண்பை நாம் அபிராமணியம் என்று குறிப்பிடலாம் என்றால், இன்றைக்கு அதனுடைய நிலை என்ன? உதாரணமாக அது நவீன அரசு, நவீன அறிவியல், வளர்ச்சி போன்றவற்றை எப்படிப் பார்க்கிறது? பிராமணியத்தை விமர்சிப்பவர்கள் அபிராமணிய பண்பை வளர்த்திருக்கிறார்களா? அவர்களுடைய அன்றாட வாழ்க்கை எந்த மதிப்பீடுகளைக் கொண்டதாக இருக்கிறது? இது ஒரு அபாரமான கேள்வி. ஆரியரும் திராவிடரும் இணைந்து செயல்படாமல் சாதியம் என்ற அமைப்பு இந்தியாவில் உறுதிப்பட வாய்ப்பில்லை. பிராமணர்கள் மட்டுமே பிராமணியத்தைக் கைக்கொள்ளவில்லை என்றாலும், பெருமளவில் பிராமண சமூகத்தின் பண்பே பிராமணியத்தின் பண்பாகவும் இருக்கிறது. அதன் கேடுகளையே நாம் விமர்சிக்கிறோம். மாற்று தொடர்பாகப் பேசுகிறோம். அபிராமணியம் என்று நீங்கள் ஒன்றைக் குறிப்பிடுகிறீர்கள் என்றால், அது பிராமணரல்லாத சமூகங்களின் பண்புகளின் தொகுப்பாக, அவர்களுடைய மதிப்பீடாக இருக்க வேண்டும். இன்னொரு வகையில், பிராமணியத்தில் நாம் விமர்சிக்கும் கேடான விஷயங்களுக்கு மாற்றையும் அபிராமணியம் கொண்டிருக்க வேண்டும். அப்படியான பண்புகள் சமூகத்தில் இயல்பாக இருந்தனவா என்றால், இருந்தன. இப்போதும்கூட பழங்குடி சமூகங்களிடமும் கிராமங்களி லும் அவற்றில் எவ்வளவோ மிச்சம் இருக்கின்றன. பொதுக் கலாச்சாரத்தில் அவை வளர்த்தெடுக்கப்பட்டிருக்கின்றனவா என்றால், இல்லை. இந்தியாவில் இன்றைய வாழ்க்கை என்பது பிராமணியத்தை விமர்சிப்பவர்களும் பிராமணியத்தை கைக்கொள்வதாகவே இருக்கிறது என்பதே நிதர்சனம். பெரியார் ஒரு மாற்றை முன்னெடுத்தார். உதாரணத்துக்கு, சுயமரியாதைத் திருமணம். பிற்பாடு அது வளரவில்லை. தேய்வதையும் பார்க்கிறோம். ஏன்? பிராமணிய எதிர்ப்பு என்பது ஒவ்வொரு சமூகத்திலும் இரண்டு வகையில் நடக்க வேண்டும். ஒன்று, வெளி விமர் சனம். மற்றொன்று, உள் விமர்சனம். பிராமணரில் தொடங்கி தலித்துகள் வரை பின்னையது நடப்பதில்லை. அதனால்தான் ஆள் மாறினாலும் கலாச்சாரம் மாறவில்லை. ஆள் மாற்றத்தைக் காட்டிலும் முக்கியம் கலாச்சார மாற்றம். இந்த இடத்தில்தான் தமிழ் தேசியத்தை ஒரு மாற்றாக நான் முன்வைக்கிறேன். தமிழ் நிலத்தில் ஒரு மாற்று இருக்கிறது. ஆனால், தமிழ் தேசியம் என்று அதைச் சொல்ல முடியுமா? இன்றைக்குக் களத்திலுள்ள தமிழ் தேசியம் மேலும் நம்மைக் குறுக்குவதாக அல்லவா இருக்கிறது? ஒருவகையில் இது சாதி தேசியமும்கூட அல்லவா? உண்மைதான். இன்றைய அரசியல் அரங்கிலுள்ள பிரிவினை தமிழ் தேசியத்தை நான் குறிப்பிடவில்லை. என்னுடைய தமிழ் தேசியமானது, தமிழ் மொழியின் தொன்மை வழியே எனக்குள் இறங்குகிறது. வள்ளுவரை நான் எனக்குள் தரிசிக்கிறேன். கணியன்பூங்குன்றன் எனக்குள் தங்கி வளம் சேர்க்கிறார். ஆழ்வார்களோடும் நாயன்மார் களோடும் நானும் கலந்திருக்கிறேன். ஆண்டாளோடு சேர்ந்து நானும் கண்ணனைத் தேடுகிறேன். நான் குறிப்பிடும் தமிழ் தேசியத்தின் ஆட்சி என்பது தமிழ் நாகரிகத்தின் ஆட்சி. செழுமையான தமிழ்க் கல்வி, சூழலை நசுக்காத தமிழ் வாழ்க்கை, எல்லோரையும் அரவணைக்கும் தமிழ்ப் பண்பாட்டைக் கொண்டது என்னுடைய தமிழ் தேசியம். சங்க இலக்கியம் தொடங்கி தமிழ் நிலம் முன்வைக்கும் அறம்தான் அதன் மையம். ஏகாதிபத்திய எதிர்ப்பில் தொடங்கி வேளாண்மை, கல்வி, மருத்துவம், வரலாறு, பண்பாடு, அரசியல் என்று பல தளங்களிலும் இன்று நாம் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு மாற்றை முன்வைக்கக் கூடியது அது. சங்க இலக்கியத்திலிருந்து இதற்கான கச்சாப்பொருளை நான் பெறுகிறேன். எனக்கு தேசப் பேதம் இல்லை; மொழிப் பேதம் இல்லை; சாதி - மதப் பேதம் இல்லை என்ற பேருணர்வைக் கொண்டது என்னுடைய தமிழ்த் தேசியம். பெரியாரிடத்திலிருந்து பெறும் தொலைநோக்கின் தொடர்ச்சி அது. தேசியம் எனும் கருத்துக்கே எதிரியாக இருந்தவர் பெரியார். “தேசியம் என்பதே புரட்டு; தேசாபிமானம் என்பது யோக்கியமற்ற சூழ்ச்சி” என்றவர். அமெரிக்க தேசியம், இந்திய தேசியம்போல, தமிழ் தேசியமும் ஒரு தேசியம்தான். தேசியத்தில் உள்ள எல்லா ஆபத்துகளும் தமிழ் தேசியத்திலும் தொடரத்தானே செய்யும்? பெரியாரை உங்கள் ஆசான்களில் ஒருவராகக் கருதும் நீங்கள், தமிழ் தேசியத்தை எந்த அடிப்படையில் ஆதரிக்கிறீர்கள்? அதே பெரியார்தானே “தமிழ்நாடு தமிழருக்கே!” என்கிறார்! அதற்குள் தமிழ் தேசியம் இருக்கிறதா, இல்லையா? “அரசு கூடாது” என்கிறார் மார்க்ஸ். ஆனால், அரசைக் கைப்பற்றித்தான் அரசு அற்ற நிலையை உருவாக்க முடியும் என்பதையும் மார்க்ஸியம்தான் சொல்கிறது. முரணியக்கத்தில்தான் வரலாறு இயங்குகிறது. மார்க்ஸியர் கள் கைக்கொள்ள வேண்டிய அரசியலும் இது. ஆனால், இன்னமும் பெரியாரையே இங்குள்ள கம்யூனிஸ்ட்டுகளால் வரித்துக்கொள்ள முடியவில்லையே? மார்க்ஸியர்களுடைய தோல்விக்கான முக்கிய காரணமே, இந்த மண்ணின் தன்மையை அவர்களால் பெற முடியாததுதானே? திராவிட இயக்கத்தை எதிர்க்க வேண்டி இருந்ததாலேயே தமிழ் மரபையும் அவர்கள் ஒதுக்கினார்கள். திராவிட இயக்கத்தோடு தோழமையுடன் மார்க்ஸியர் கள் உரையாடியிருக்க வேண்டும். தமிழ் மெய்யியலை மார்க்ஸியர்கள் காண முடியாமல்போனது தற்செயலானது அல்ல. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமையை பிராமணத் தலைவர்கள் ஆக்கிரமித்திருந்ததன் விளைவையும், இங்கே கம்யூனிஸ்ட் கட்சிகளில் பிராமணியத்தின் தாக்கம் எப்படியெல்லாம் இருந்தது என்பதையும் ஆய்வுக்குள்ளாக்க வேண்டும். உயரிய லட்சியம் என்றாலும், அரசியல் தளத்தில் ஓருலகம் என்று ஒன்று கிடையாது. எந்தத் தத்துவமும் அந்தந்த நில எல்லைக்குள் ஒன்று கலக்கும்போதே அரசியல் அர்த்தம் பெறுகிறது. இந்தியா ஒரு கூட்டாட்சியாக, ஒன்றியமாக மட்டுமே நீடிக்க வேண்டும்; முடியும். இந்தியாவைப் பார்க்கும் விதத்தில் மட்டும் அல்ல; அறிவியல், கலை, இலக்கியம், மதம் இவை ஒவ்வொன்றை யும் பார்க்கும் விதத்தில் மார்க்ஸியர்களிடம் மாற்றம் வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் தேசியம், கர்நாடகத்தில் கன்னட தேசியம் என்று மண்ணுக்கேற்ற மார்க்ஸியத்தை அவர்கள் தழுவ வேண்டும். மார்க்ஸ் முதல் மாவோ வரை இது அந்நியமானதல்ல. முன்பு உங்களுக்கு மாவோயிஸத்தில் நம்பிக்கை இருந்திருக்கிறது. ஆயுதவழிப் புரட்சியை ஆதரித்திருக்கிறீர்கள். இப்போது அதை எப்படிப் பார்க்கிறீர்கள்? மார்க்ஸிய, லெனினிய, மாவோவியக் கூட்டுக் கலவை என்று அந்தச் சிந்தனையைச் சொல்லலாம். அது கனவு காணும் சமூகத்தின் மீதான மதிப்பு இன்னும் குறையவில்லை. ஆனால், ஆயுதப் பாதையை இன்று நான் ஆதரிக்கவில்லை. வன்முறை நம்மைச் சார்ந்திருக்கும் சாதாரண மக்கள் மீது கூடுதலான அரச வன்முறைக்கும் சர்வநாசத்துக்குமே வழிவகுக்கும் என்று நினைக்கிறேன். சாரு மஜும்தார் காலத்திலேயே இங்கு மாவோவிய இயக்கங்கள் கட்டப்பட்ட விதத்தில் எனக்கு முரண்பாடு இருந்தது. சாருமஜும்தாரை நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள், இல்லையா? சந்தித்திருக்கிறேன். எஸ்.என்.நாகராஜன், எஸ்.வி.ராஜதுரை, நான் மூன்று பேருமாகச் சேர்ந்து பார்த்தோம். சாரு மஜும்தார் கோயம்புத்தூர் வந்திருந்தார். சந்திக்க விரும்பினார். சென்றிருந்தோம். 3 மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். ராஜதுரை ஏராளமான கேள்விகளை அவரிடம் முன்வைத்தார். சாரு மஜும்தார் கொடுத்த பதில் திருப்தியாக இல்லை. நிறைய கற்பனையாக, மிகைப்படுத்தல்களாகப் பேசினார். கட்சிமீதோ, உள்ளூர் தலைமை மீதோ நாங்கள் முன்வைத்த எந்த விமர்சனத்தையும் அவர் ஆக்கபூர்வமாக எதிர்கொள்ளவில்லை. ‘இதே கொள்கையுடன் நீங்களும் ஒரு கட்சி தொடங்குங்களேன்’ என்றார். அவருக்குக் கடுமையான ஆஸ்துமா பாதிப்பு அப்போது இருந்தது. அப்படியும் அவர் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருந்ததும், உழைத்ததும் எங்களுக்கு வியப்பையும் மதிப்பையும் தந்தது. ஆனால், நாங்கள் அவருடன் பயணிக்க முடியாது என்று எடுத்த முடிவில் தவறேதும் இல்லை என்ற எண்ணமே அவரைச் சந்தித்துத் திரும்பும்போது ஏற்பட்டது. உங்களுடைய இலக்கியக் கோட்பாடுகள், தமிழ்நாட்டில் அதுவரையிலான மார்க்ஸிய இலக்கியச் சட்டகத்தை உடைத்தவை. ‘புதிய தலைமுறை’, ‘பரிமாணம்’, ‘நிகழ்’, ‘தமிழ் நேயம்’ இப்படி நீங்கள் பங்கெடுத்த சிற்றிதழ்கள் யாவுமே அரசியல், சுற்றுச்சூழல், தத்துவத்துக்கு இணையாக கலை - இலக்கியத்திலும் ஒரு மாற்றுச் சட்டகத்தை உருவாக்க முனைந்திருக்கின்றன. எது இதற்கான அடிப்படையாக இருந்தது? என்னென்ன சிரமங்களை எதிர்கொண்டீர்கள்? நமக்குள் ஒரு டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, கார்க்கி, சோல்ஸெனித்ஸின் ஏன் தோன்றவில்லை என்ற கேள்வி தான் அதற்கான அடிப்படை. ‘கலை இலக்கியத்தில் உருவத்துக்கு, கலையுணர்வுக்கு, அழகியலுக்கு முதன்மை இல்லை; உள்ளடக்கமாகிய அரசியலுக்கே முதன்மை.’ இதுதான் கட்சி மார்க்ஸியர்களின் திறனாய்வுப் பார்வை யாக இருந்தது. ஸ்டாலின் காலத்திய ஸ்தானோவியத்தின் தொடர்ச்சி இது. இலக்கியத்தில் காமத்தைக்கூட வெறுத்தார்கள். தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் எழுத்துகளை எல்லாம் அப்படித்தான் ஒதுக்கினார்கள். முற்றிலும் அதிகார வர்க்க கண்ணோட்டத்திலேயே இலக்கியம் அணுகப்படுமானால், அத்தகைய இலக்கியம் உருப்படாது என்று நான் எழுதினேன். இன்றைக்கு நிறைய மாறியிருக்கிறதே! சிரமங்களாக எதுவும் தோன்றவில்லை. பத்திரிகைகள் நடத்தியதுகூட. ஆளுக்கு நூறு ரூபாய் போட்டு பத்திரிகையைக் கொண்டுவந்துவிடுவோம். எஸ்.என்.நாகராஜன், எஸ்.வி. ராஜதுரை, புலவர் ஆதி இப்படி நிறைய நண்பர்கள். போட்டி போட்டுக்கொண்டு வாசிப்போம். கேள்விப்படும் புதிய விஷயங்கள், சிந்தனைகள் யாவையும் சுற்றியிருப்பவர்களுக்குச் சொல்லிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் செயல்பட்டோம். கடமையாக நினைத்து, பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்ததால் எதுவுமே இழப்பாகவோ, சுமையாகவோ தெரியவில்லை. விமர்சனங்களைக் கடந்து இந்தியாவில் இதுவரையிலான தலைவர்களில் மகத்தான இடதுசாரித் தலைவர் என்று யாரைச் சொல்வீர்கள்? காந்தி, அம்பேத்கர், பெரியார். கொடிய சமத்துவ எதிரியான, ஒவ்வொரு இந்திய உடலுக்குள்ளும் உறைந் திருக்கும் தீண்டாமையின் ஆகிருதியை நமக்கு உணர்த்துகிறார் அம்பேத்கர். அந்தத் தீண்டாமையைத் தத்துவமாக மாற்றும், இந்தியாவின் வலிய எதிரியான பிராமணியத்தை எதிர்ப்பதற்காகவே ஒரு இயக்கத்தை உருவாக்கியதன் மூலம் அதனுடைய ஆகிருதியை உணர்த்துகிறார் பெரியார். எந்த அநீதிக்கும் எதிரான போராட்ட வடிவமான சத்தியாகிரகத்தை நமக்குத் தருகிறார் காந்தி. நாம் அத்தனை பேரும் சாகத் துணிந்து சாத்வீகமாக உட்கார்ந்துவிட்டால், எப்படியான அதிகாரமும் பணிந்துதான் ஆக வேண்டும். ஒரு சாமானிய இந்தியனுக்கு இவர்களைக் காட்டிலும் கைக்கொள்ளப் பற்றுக்கோல்கள் இல்லை. தமிழ் மெய்யியல், தமிழ் அறம் என்றெல்லாம் பேசுகிறோம். உலகமயமாக்கலுக்குப் பிந்தைய அரசியல் - சமூகச் சூழலில் இவையெல்லாம் தொடர்ந்தும் நீடிக்க முடியுமா? தமிழ் அறம் என்பது தொன்றுதொட்டது - இன்று நம்முடைய புழக்கத்தில் இருக்கிற சமதர்மத்துக்கு நிகரானது. இந்தத் தமிழ் அறமானது, தமிழ் இலக்கியம் முழுவதுமே இருக்கிறது. சித்தர் இலக்கியம் இதில் மையம் கொள்கிறது. எத்தனையோ நூற்றாண்டுகளை, சவால்களைத் தாங்கி நின்ற சக்தி தமிழ் மெய்யியலுக்கு உண்டு. உலகம் இருக்கும் வரை அறத்துக்கான தேட்டமும் இருக்கும். FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.