[] []       கொழும்பு வழியே ஒரு பயணம்   வித்யாசாகர்    அட்டைப்படம் : GNUAnwar -  gnuanwar@gmail.com  மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியிடு : FreeTamilEbooks.com    உரிமை : CC BY-NC-SA 4.0  உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.                      பொருளடக்கம் என்னுரை 4  பகுதி – 1 7  பகுதி – 2 8  பகுதி – 3 9  பகுதி – 4 11  பகுதி – 5 14  பகுதி – 6 17  பகுதி – 7 22  பகுதி – 8 25  பகுதி – 9 31  பகுதி – 10 38  பகுதி – 11 42  பகுதி – 12 44  பகுதி – 13 50  பகுதி – 14 51  பகுதி – 15 56  பகுதி – 16 58                          என்னுரை   என் உறவுகளுக்கு வணக்கம்,   இவ்வரலாற்றுச் சுவடுகள் பதிந்த படைப்பினை பணம் கொடுத்து படிக்க வாங்கிய என் இன உணர்வளராகிய உங்களுக்கு, நன்றிகடந்த மதிப்பு மிக்கதோர் வணக்கத்தை முன்வைக்கிறேன். இப்படைப்பு’ பணம் புகழ் மரியாதை இழப்பு பிரச்சனை லாபம் நட்டம் என எதையுமே கருதாது’ என் இனத்தின் இத்தனைவருட தவிப்பினை, நடந்ததோர் பெருங்கொடுமையினை பதிவு செய்யும் ஒரு நோக்கமாக மட்டுமே படைக்கப்பட்டிருக்கிறது. மிக்க தரமாக செய்து, அதேநேரம் மிக குறைந்த விலையில் யாவரும் படிக்கும்வண்ணம் கொடுக்கவேண்டும் என்பதே எங்களின் முழு எண்ணமாக இருந்தது. . என் அன்பு உறவுகளாகிய தம்பிகள் அகிலனும் பாரதித் தம்பியும் அதற்கான அதிகபடி அக்கறையுங் கொண்டு இப்படைப்பினை மிக தரமாக தயாரித்து தந்தது வருங்காலத்தின் நன்றிக்குரிய செயலாகும்.   தமிழனுக்கு ஒரு துயரெனில் உலகின் விளிம்புவரைச் சென்று போராடத்தக்க உன்னதத் தலைவரும், இலக்கியப் போர்வாள் என்றுப் போற்றத் தக்க ஆழமான பேச்சுத் திறனும், படைப்புசார் அக்கறையும் பொதுநல் நோக்கமும் கொண்ட’ சகோதரத்துவம் நிறைந்த அன்பு மனிதருமான’ ஐயா திரு வை. கோபால்சாமி அவர்கள் தனது பல வேலைகளின் நெருக்கத்திலும், தன் இன உணர்வின் ஒற்றை வெளிப்பாடாக இப்படைப்பிற்கு சிறந்ததொரு அங்கீகாரத்தை அணிந்துரையாக தந்து இவ்வரலாற்றுப் பதிவிற்கு மேலும் பலம் சேர்த்தமை மிக்க நன்றிக்கும் நன்மதிப்பிற்கும் உரியதாகும். அதோடு, குவைத்தின் அரங்கந்தனில் தன் தமிழ் வீச்சுகளால் காலத்திற்கும் மறையாத தடம் பதித்துச் சென்ற இலக்கியப் புயல் என்று இவ்விடம் பெருமையுடன் அறியத்தக்க மாமனிதர் புலவர் திரு. கங்கை மணிமாறன் அவர்களுக்கும், கண்ணீரெனச் சொட்டிய எம் இனத்தின் ஒவ்வொரு துளி ரத்தத்தையும் அதன் இறுக்கம் குறையாமல் எழுத்தாக உறையவைத்துவரும், ஈரம் குறையா வைரவரிகளின் சொந்தக் கவிஞர் திரு. தீபச்செல்வன் அவர்களுக்கும், அவர்கள் தந்த இந்நூலிற்கான அணிந்துரையின் பொருட்டு’ காலத்தின் நன்றிகள் பல நிறைந்து கனக்கும். மேலும் என் உறவுகளே, தயவுசெய்து இதை படித்துமுடித்ததும் மற்ற புத்தகங்களை படித்துவிட்டு வைப்பதுபோல் லேசாக அலமாரியில் வைத்துவிட்டு மறந்துவிடாதீர்கள். இதை மீண்டும் மீண்டும் வேறு யாருக்கேனும் படிக்கக் கொடுத்து நம் இனத்தின் தேவைக்குரியப் புரிதலை நமைச் சார்ந்த அனைவருக்கும் ஏற்படுத்திக் கொடுங்கள். ஏறத்தாழ இவ்வருட ஆரம்பத்தில் எழுதி முடித்த கதையிது. வெளிவரும் தருணம் எம் மக்கள் ஒட்டுமொத்தமாய் கொதித்தெழுந்து ஒற்றுமையை உலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருப்பது பார்க்கப் பெருமிதமாக உள்ளது. எனினும், இன்னும் நாம் ஆங்காங்கே பல காரணங்களை கையில் அடக்கிக் கொண்டு நகரும் காலத்தின் மீது பிரிந்தே எறியப் பட்டிருக்கிறோம் என்பதை முழு நினைவில் கொள்ளுங்கள். தனை எரித்து விடுதலை தீபமேற்றிய சகோதரர் முத்துக் குமரன், மற்றும் சகோதரி செங்கொடியின் இன உணர்வினை இன்னும் ஒவ்வொருவருக்குள்ளும் தீயென பற்றி எரியச் செய்து’ கண்ணெதிரே நாளை மலரவிருக்கும் எஞ்சிய மக்களின் ஈழ விடுதலையினைக் கண்டு பேரானந்தம் கொள்ளும் அறவழிப் போராளிகளாய் அத்தனைப் பேரும் இருங்கள். நம் நோக்கம் போராட்டமல்ல, ஆங்காங்கே இரண்டாம்பட்சமாக்கப் பட்ட இனத்திற்கான ஒற்றை விடுதலை. நம் நோக்கம் யாரையோ எதிர்ப்பதோ யாரையேனும் வீழ்த்துவதோ அல்ல; நமக்கான வெற்றி எதுவென்று புரியவைப்பது, நம் தேவையை அவர்களுக்கு உணர்த்துவது, நாம் பட்ட அடிகளை, நம் வலிகளை’ இத்தனை வலித்தது பாரென்றுக் காட்டி நம் நியாயத்தை மட்டுமே வேண்டுவது. அதற்காக, உயிர்விடுவதும் அத்தனை துச்சமல்ல உறவுகளே. நம் உயிர் என்பது நம் இனத்திற்கான பேராயுதம் என்றுக் கொள்ளுங்கள். உயிராயுதம் ஏந்திக் கொள்வது உயர் போராட்டத்தின் பேரிழப்பெனப் புரிந்துக் கொள்ளுங்கள். எவ்வழியிலும் தற்கொலை செய்துக் கொள்வது தவறு என்பதைக் கடந்து அது நமக்கான ஈடுசெய்ய இயலா பேரிழப்பு என்பதையும் உணர்ந்து தன் உரிமைக்கென்று நேர்வழியில் நின்று ஒட்டுமொத்தப் பேரும் போராட முற்படுங்கள் இந்நாவலின் ஒற்றை நோக்கமே அதுதான், உணர்வு படுத்துவது. பின் அதன்வழி நின்று அறவழியில் சிந்திப்பது. சிந்தித்தலில் தீர்வு இதுவென்று உணர்ந்து பின் அதன் வெற்றிக்கென, எல்லோருக்கும் பொதுவான நீதியின்கண் நின்று அனைவருமாய்ப் போராடுவது. போராட்டத்திற்கான கர்ஜனையை அத்தனைப் பேரும் கூடிநின்று தன் ஒற்றைத் தமிழினத்தின் குரலாய்க் கொடுப்பது. ஆக, முடிவில் நாம் கையிலெடுக்கும் அந்த ஒற்றுமை எனும் ஆயுதமே இந்நாவல் பயணிக்கும் மொத்த இத்தனை தூரத்தின் ஒற்றைச் சாரமாகும். பொதுவில், இப்படைப்பின் கதைக் கோர்ப்புக்கள் கற்பனையே என்பதையும் இவ்விடம் சொல்லிக் கொண்டு, அதேநேரம், கதைக்கான கரு மற்றும் பல சம்பவங்கள் உண்மையில் நடந்ததாக என்னொரு பயணத்தில் நண்பர்கள் சிலர் சொல்லி அழுதைவைகளும் ஆங்காங்கேச் சென்று நிறையப் பேரை இதன்பொருட்டு விசாரித்தறிந்த உண்மைச் சம்பவங்களும், பின் பலர் வந்து என்னிடம் நடந்தவைகளைக் கூறி அழுதவைகளுமே இங்கே உலகின் பார்வைக்கென நாவலாக்கப் பட்டு நீதி கேட்டு நிற்கிறது.   எனவே இது ஒரு கதை மட்டுமல்ல, ஒரு இனத்தின் அழிவினை, அடிமைத் தனத்தினை எதிர்த்து சிந்திக்கவும், யாருக்கும் நோகாமல் எம் உறவுகளின் இத்தனைக் காலப் போராட்டத்தினை வெல்லவும், விடுதலை பெருமூச்சை ஒட்டுமொத்தமாய் இழுத்துவிடவும்’ நடந்த உண்மைகளை செய்தி வழியாகவும், இணைய உதவிகளாலும் திரட்டி வரலாற்று உண்மைகளோடு பின்னிப் புனையப் பட்ட படைப்பே இது.  இவ்வரலாற்று நாவலில் வரும் கால அளவுகளெல்லாம் படித்த சில இனைய புத்தகங்களின் படியும் மேலும் அவைகளைப் பற்றி இயன்றவரை விசாரித்தும், அவசியமானவர்களை சந்தித்துமே எழுதப் பட்டிருக்கின்றன. தவிர, புரட்சி என்று வந்துவிட்டால், இச் சமூக நன்மாற்றத்திற்கென தன் உயிர்விடவும் தயாராகும் மாணவர்களின் தின்ம நிலையை இந்நாவலின் சில காட்சிகளில் படைப்பின் நடையோட்டத்திற்கேற்ப அமைந்திருக்கிறோம். அது கண்டிப்பாக வன்முறையாக சிந்திக்கும் நோக்கத்தில் எழுதப் பட்டதல்ல என்பதையும் இவ்விடம் பதிவுசெய்கிறோம்.   என்றாலும், இந்நாவல் பொருத்தவரை அவரவர் எண்ணப்படி நிறைய மாற்றுக் கருத்துகள் இருக்கலாம், மாற்று யோசனைகள் வரலாம், மறுப்புக் கூட தெரிவிக்க முனையலாம், அதை அவரவரின் எண்ணத்திற்குத் தக்க, கருத்து சார்ந்த, வலி சார்ந்த, அனுபவம் சார்ந்த, அறிவும் தெளிவும் சார்ந்த, அக்கறையின் கோணத்திற்குத் தக்கதான ஒரு சுதந்திரம் என்றே எடுத்துக்கொள்வோம். எதுவாயினும், இதுவரை இழந்தவைகளை கடந்து எஞ்சிய மக்களுக்கேனும் வளம் சேர்க்கக் கூடிய எண்ணங்களை சிந்திக்க வைக்கும் ‘ஒரு இனத்தின் விடிவின் சிந்தனைக்கான தூண்டுதலை ஏற்படுத்துமொரு பொறி மட்டுமே இது’ என்பதையும் தெரிவித்து, நடந்த இழிசெயல்களையும், என் இன மக்களுக்கு இயற்றப் பட்ட கொடுமைகளை’ கொடூர, மனித தன்மையற்ற செயலினை பதிவாக்கும் பொருட்டாகவும், உண்மை நிகழ்வின் முடிவு ஒருவேளை இக்கதையில் வரும் முடிவினைப் போல் நடந்திருந்தாலும் பிற தேசங்களுக்கு இதனால் நட்டமில்லையே என்பதை எல்லோருக்கும் தெரிவிக்கும் வண்ணமும், உடனிருந்தே சதி செய்வோருக்கு எங்களின் தேவை இதுமட்டுமே என்று அறியப் படுத்தும் ஒரு யோசனையாகவும் கூட இக்கதையின் நோக்கமிருப்பதன்றி வேறு எந்த எண்ணமுமில்லை’ என்பதனை இதுவரை எனைத் தொடர்ந்து படித்து கருத்துப் பரிமாறி ஆதரவு நல்கிவரும் நல்லுள்ளங்களுக்கும், உலகலாவியுள்ள அன்புத் தமிழுறவுகளுக்கும், இணையத் தள தோழமைகளுக்கும், பிற அச்சு இதழ்களுக்கும் தெரிவித்து, நன்றி பாராட்டி நிறைவு செய்கிறேன்.     முழுதாய் படித்துவிட்டு எப்பொழுதும் போல் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள். ஒருவேளை எங்கேனும் வலித்தால்; விடிவிற்கென சிந்தியுங்கள். ஈழ மக்களின் முழு விடுதலைக்கென உலக தமிழர்களே ஒன்று படுங்கள்.    வித்யாசாகர்  www.vidhyasaagar.com   (12 நவம்பர் 2011)                                                        பகுதி – 1 காற்று வீசிடாத வான் கிழித்து, பசுமை பூத்திருந்த தரைநோக்கி விரைந்தது நான் பயணிக்கும் அந்த ஸ்ரீலங்கன் விமானம்.  என் தாயின் மடி தொடும் உணர்வில் – விமானம் நெருங்க நெருங்க ஆசை பூரித்து, வாசலின் முன்வந்து, தரையிறங்கியதும் திறக்கவிருக்கும் கதவு நோக்கிச் நின்றுக்கொண்டேன். விமானம் அறிவித்திருந்த நேரப் படி தாமதமின்றி கொழும்பு விமானதளம் நோக்கி தரையிறங்கியது. விமானப் பணிப்பெண் ஒருவள் அவசரமாக என்னருகில் ஓடிவந்து, விமானம் தரையிறங்குகையில் அமர்ந்துக் கொள்ளவேண்டும் நிற்கக் கூடாதுயென்று கட்டளையிட்டாள். என் தேசத்தின் சுவாசக் காற்றினை முதன் முதலாக சுவாசிக்கும் தருணத்திற்கு காத்திருப்பவனாய், இரண்டு கைகளையும் இறுக்கி கட்டிக்கொண்டு ஜன்னலின் வழியே கொழும்பு நகரத்தின் இயற்கை வளங்களை பார்தாவரே; அருகிலிருந்த இருக்கை ஒன்றினில் அமர்ந்துக் கொண்டேன். சற்று நேரத்தில் விமானம் விமானநிலையத்திலிருந்து சற்று தூரத்திலேயே நின்றுவிட, எல்லோரும் அவசர அவசரமாக தற்காலிக படிக்கட்டின் வழியே இறங்கி அங்கு வெளியே நின்று கொண்டிருந்த ஒரு பேருந்தினுள் ஏறிக் கொண்டிருந்தார்கள்., நானும் மெல்ல நகர்ந்து என் ஈழத்துமண்ணின் தரையை பார்க்கையில் முதல்முதலாய் தன் தாயை பார்க்குமொரு குழந்தையினைப் போல் பார்த்துக்கொண்டே இறங்கினேன். மேலிருந்து கீழிறங்குகையில் உள்ளே ஒரு படபடப்புப் பற்றிக் கொண்டது.  ‘ஏனோ என் தாயின் தலைமேல் பாதம் பதிக்கப் போகிறோமோ எனும்போல் ஒரு தனைமீறிய மரியாதை வந்தது. என் தாய்மண்ணின் உடல் தொட்டுப் பூரிக்கப் போகிறோமோ எனும் படபடப்பு எனக்குள் எழுந்தது. பின்னால் வருபவர்கள் என் தயக்கம் பார்த்து நகர்ந்து எனை கடந்து முன்னே சென்று விட, நான் தரை தொடும் முன் சற்றமர்ந்தவாறு கீழே குனிந்து முதலில் தரைதொட்டு ஒரு துளி மண்ணெடுத்து என் தமிழீழத் தாயே என கண்களில் ஒற்றிக் கொண்டு ‘கால் பதித்தேன். அருகில் எனை கடந்து சென்றவர் ஒருவர் சிரித்துக் கொண்டே போனார். அதை பற்றியெல்லாம் எனக்கு யோசிக்கவேத் தோணவில்லை. உள்ளே இம்மண்ணின் விடுதலைக்கென இத்தனை வருடங்களாய் சிந்திய ரத்தமனைத்தும் ஒரு நொடி மண்ணைத் தொட்டதும் எனக்குள்ளே சுட்டு குளிர்ந்தது. வெகு நாளின் ஆசை இது. ஈழத்திற்கு வரவேண்டுமெனக் காத்திருந்த வெகுநாளின் கனவு இது. எப்படியோ இன்று அது நிகழ்ந்துவிட்ட மகிழ்வில் திளைத்து நடக்கிறேன்.. ‘எங்கோ என்றோ பிரிந்து போன உறவுகளின் ஸ்பரிசம் என்னுள்ளே பட, ஊரெல்லாம் சுற்றியலைந்த நான் இன்று எனக்கான ஒரு தேசத்தில் கால் பதித்துவிட்டதாய் எண்ணி மகிழ, என் இத்தனை வருட காத்திருப்பிற்கு எனக்கு வெகுமதியாகக் கிடைத்தது வெறும் நான்கு மணி நேரத்து தங்கும் அவகாசம் தான்.               பகுதி – 2 நானொரு லண்டன் செல்லவிருக்கும் பயணி. இடையில் நான்கு மணிநேரம் கொழும்பு விமானத்தில் விமானம் தரையிறங்கி காத்திருக்கவேண்டுமென்பது ஸ்ரீலங்கன் விமான நிர்வாகத்தின் பயணத் திட்டம். அதன்மூலம் என் தமிழீழ தேசத்து மண்ணினைத் தொட்டுக் கடந்து போக இந்த பதினேழு வருட வெளிநாட்டுப் பயணத்தில் இன்றுதான் இப்படி ஒரு வாய்ப்பமைந்தது.  விமான நிலையம் மிக சுத்தமாகவும், காண கலாச்சார பார்வை பொருந்தியதாகவும், புத்தர் இருந்துச் சென்ற வாசத்தை காற்றில் மிச்சம் வைத்துக்கொண்டும் ‘மிக அழகாகக் காட்சியளித்தது. ஒரு பரவசத்தோடு இயற்கை வளம் பொருந்திய அந்த அழகிய கொழும்பு நகரத்தின் நாலாப்புறமும் சுற்றிப் பார்க்கிறேன். கண்ணாடிகளின் வழியே தென்படும் மலைப்பாங்கு பிரதேசங்களும்; மரங்களின் ஏற்றயிறக்க அமைப்புக்களோடு கண்ணைப் பறிக்கும் பசுமையின் கொள்ளை அழகும் ஒரு ரசனையான மனப்பான்மைக்கு எனை இட்டுச் செல்லும் காட்சிகளையும் கண்டு அதனூடே என் மூதாதையர் வாழ்ந்த பெருமையை எல்லாம் எண்ணி நிறைவடைந்துக் கொள்கிறேன். அடுத்த ஒரு அரை மணி நேரத்திற்கு, இங்குமங்குமாய் விமான நிலையத்தினுள் சுற்றித் திரிந்துவிட்டு, எங்கேனும் அமைதியாக உட்கார எண்ணி, ஆட்கள் குறைவாக உள்ள ஓர் அமைதியான இருக்கைப் பார்த்து அமர்ந்து கொண்டேன். மனதிற்குள், வருவதற்கு முன் நடந்த அத்தனை நிகழ்வுகளும், ஒவ்வொன்றாய் நினைவில் வந்து இழையோடிக் கொண்டிருந்தன. ஏதோ பெயருக்கு வாழ்வதாய் எண்ணிக் கொள்ளுமொரு நிறைவில்லா வாழ்க்கைதானே இந்த வெளிநாட்டு வாழ்க்கை. போன மாதம் இந்நேரமெல்லாம் ‘என்று என் ஊருக்குப் போய் என் ஊர் உறவு மக்களோடு நானும் ஒன்றாகப் புழங்கிக் கிடப்பேனோ என்று ஏங்கிக் கிடந்தேன். பின், விடுமுறை கிடைத்து ஊருக்கு சென்று யாரை பார்த்தேன் யாரை பார்க்க வில்லை, என்ன செய்தோம், என்ன செய்யவில்லை என்று கூட யோசிக்கும் முன், ஒரு மாத விடுமுறை முடிந்து, என் கை பிடித்தழுத உறவுகள் நண்பர்கள் என எல்லோரையும் விட்டுவிட்டு இப்படி தனியே வந்தமர்ந்துக் கிடப்பதும், மீண்டும் ஊர் செல்லவிருக்கும் அந்நாளுக்காய் வருடங்களிரண்டினை நோக்கிக் காத்துக் கிடப்பதும் ‘ச்ச..’ ஓர் வாழ்வா ன்று தோன்றியது. உண்மையில் வெளிநாட்டில் வாழும் நாமெல்லாம் ‘எதையோ இழக்கிறோம், ஏதோ கிடைக்கிறதென்று; அவ்வளவுதான் நம் வாழ்க்கை. வேறென்ன சொல்ல, வாழ்க்கை முழுதும் இப்படித் தான் நாமெல்லாம் போலென்று உள்ளே மனம் நொந்து, கண்ணிமை நனைய, அக்கம்பக்கம் திரும்பி யாரேனும் பார்க்கிறார்களா என்று பார்த்துவிட்டு கண்களை துடைத்துக் கொண்டேன். கண்கள் வெறிக்க சில மணித்துளிகள்வரை தூரத்தில் காற்றினால் ஆடிக் கொண்டிருக்கும் மரங்களை பார்த்துக் கொண்டிருக்கையில், மீண்டும் தனக்குள்ளே தான் நொந்துப்போக வேண்டிதானிருந்தது. அங்கே வசந்தமும் மரம் செடி கொடிகளும் இருக்கத் தான் செய்கின்றன, ஆனால் காற்று வீசுவதை கண்ணாடிக்குள்ளிருந்து பார்க்க மட்டுமே நாம் விதிக்கப் பட்டிருக்கிறோம். நம் வாழும் வாழ்க்கையும் இப்படித் தானே; எல்லாமிருந்தும் இடையே பணம் எனும் ஒரு கண்ணாடி எல்லாவற்றையும் மறைத்துக் கொண்ட வாழ்க்கைதானே நம் வாழ்க்கையும் என்று எண்ணிக் கொள்ள, மனது மீண்டும் விக்கித்தது. இனம்பாரா வருத்தத்தில் கண்களை மூடிக் கொள்ள, எதேச்சையாய் யாரோ என்னை நோக்கி வருவதாய் உணர்ந்து எதிர்புறம் நோக்கித் திரும்பினேன், இரண்டு பேர் ஆர்மி காரர்கள் துப்பாக்கியோடு என்னை பார்த்து ஓடி வந்துக் கொண்டிருந்தனர். நான் யாரென்று ஒருவேளை அவர்களுக்குத் தெரிந்துபோயிருக்குமோ எனும் ஒரு பதற்றம் எனக்கும் வந்தது.         பகுதி – 3 இருவரும், என்னருகில் வந்து நின்று துப்பாக்கியை சரி செய்து வைத்துக் கொண்டு. யார் நீ என்றார்கள். லண்டன் செல்லவிருக்கும் ஒரு பயணி என்றென். அப்படியா விமானச் சீட்டு காட்டு என்றார்கள், காட்டினேன். கடவுசீட்டு காட்டு என்றார்கள், காட்டினேன். அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து, சிங்கள மொழியில் ஏதோ பேசிக் கொண்டனர்.  நான் ஒன்றும் புரியாதவனாய் அவர்களையே பார்க்க, பையில் என்ன வைத்திருக்கிறாய் பிரி என்றார்கள், பிரித்து உள்ளே வைத்திருந்த மடிக் கணினியினை காட்டினேன். சரி சரி போ என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு, முகத்தை சற்று சந்தேக தொனியோடு வைத்துக் கொண்டு என்னைப் பார்க்க, நான் எங்கும் போக விரும்பவில்லை, என் விமானம் புறப்பட இன்னும் அவகாசங்கள் உள்ளன என்றென். அவர்கள், ஒன்றும் பேசிக் கொள்ள வில்லை. எப்படியோ கிட என்பது போல் ஜாடை செய்துவிட்டு, சட்டெனத் திரும்பி அவர்களுக்குள் என்னவோ விவாதித்துக் கொண்டு வந்த வழியே போயினர். நான் அவர்களின் சிங்கள மொழி புரியாதவனாய், சற்று பின்னோக்கி தலைதிருப்பி என் இருக்கைக்கு பின்னால் இட்டிருந்த கண்ணாடிக்குள்ளிருந்து தெரியும் என் தோற்றத்தினைப் பார்த்தேன். வரும் அவசரத்தில் வெட்டாத தாடியும், அழுத கண்ணீரில் நனைந்து; பின்னரும் கவலையில் கழுவாத முகமும், ஆங்காங்கே கசங்கிய கருப்பு கலந்த அடர்நீலச் சட்டையும், தோளில் மாட்டிவந்த மடிக்கணினிப் பையும், எல்லாவற்றையும்விட; பார்த்த உடனே தெரியும் ‘தமிழன்’ என்னும் முகமும்தான் அவர்களின் சந்தேகத்திற்கு காரணம்போலென்று எண்ணிக் கொண்டேன். அவர்கள் விமான நிலையத்தின் வெளியே தமிழரை பார்க்கும் பார்வையின் நம்பிக்கையற்ற தன்மை; விமான நிலையத்தின் உள்ளே ‘தெள்ளெனத் தெளிந்த நீர்போல்’ புரிந்தது. எம் நிலை என்று மாறும் இறைவா என்றெண்ணி கண்களை அழுந்த மூடி, பின்னால் தலை சாய்த்துக் கொண்டேன். நேற்றைய ஞாபகங்கள் மீண்டும் வந்து நினைவைத் தீண்டின. நேற்று விமான சீட்டு வாங்கச் சென்றதும், வாங்க சென்ற இடத்தில் இந்த தேசம் பற்றி பேசிக் கொண்டதுமெல்லாம் நினைவிற்கு வர, கிராமத்து நடுவே அமர்ந்து வெளிநாடு போக விமான சீட்டு பதிந்துக் கொடுக்கும் அந்த அண்ணன் மேகநாதனும் நினைவிற்கு வந்தார். அவர் ஈழம் பற்றியும் அதற்கான போராட்டம் பற்றியும் இன்றைய நிலவரங்கள் பற்றியுமெல்லாம் பேசியது, கேட்டது, நான் கோபமுற்றது பின்பு கைகுலுக்கிப் பிரிந்தது என எல்லாம் ஒவ்வொன்றாய் கோர்வையாக நினைவில் வந்தது. திடிரென யாரோ எதிரில் நிற்பது போல் தெரிய, பட்டென கண்களை திறந்தேன், வேறு மூன்று ஆர்மி காரர்கள் நின்றிருந்தனர். சற்று பதட்டமாக எழுந்து நின்றேன்.. பரவாயில்லை பரவாயில்லை அமர்ந்துக்கொள் என்றனர். பின் சிரித்து கைகுலுக்கி பெயரென்ன என்றார்கள், சத்தியசீலன் என்றேன். எங்கேயிருந்து வருகிறாய், எங்கேப் போகிறாய் என்றார்கள்; மொத்த விவரமும் சொன்னேன். ஒருமாதிரி இருக்கிறாயே பார்க்க; உடம்பிற்கு ஏதேனும் முடியலையா என்றார்கள். இல்லை, வீட்டை நினைத்துக் கொண்டேன், அதான் சற்று வருத்தம் என்றேன். அதற்காக கவலைப் பட்டால் பின் மனிதன் தன் பயணத்தை உலக எல்லைவரை எட்டித் தொடுவதெப்படி என்றார்கள். என்னைப் பொருத்தவரை உலகமே என் வீட்டார்தான் என்றென். ‘உறவுகளைப் பார்த்துவிட்டு பின் பிரிந்துவருவதென்பது பெரிய வருத்தம் தான், இரண்டு நாளானால் சரியாகும் கவலைபடாதே என்றார்கள். அதுவரை அமைதியாக நின்றிருந்த மூன்று பேரில் ஒருவர், இன்னும் எத்தனை மணிநேரம் காத்திருக்க வேண்டுமிங்கே என்றார். நான் மறதியாக தமிழில், நான்கு மணிநேரம் என்றேன். அவர் மன்னிக்கவும் எனக்கு தமிழ் அத்தனை சரிவர தெரியாது என்று ஆங்கிலத்தில் தெளிவாகச் சொன்னார். உடனே அருகிலிருந்த இருவரும் அவருடன் சேர்ந்து ‘நாங்கள் சிங்களவர்கள், நீங்கள் தமிழரா?’ என்று நயமான ஆங்கிலத்தில் கேட்டு மென்மையாகப் புன்னகைத்தனர். நானும் மனிதரிடையே வேற்றுமை காட்டிக் கொள்ளவேண்டாமே என்றெண்ணி, அப்படியா நல்லது நல்லது, விமானநிலையம் அழகாக சுத்தமாக உள்ளது, ஆங்காங்கே தமிழில் கூட எல்லாமே எழுதி இருக்கிறதே என்றென். அவர்கள், ஆம் ஆம், தமிழ் எமது இரண்டாம் ஆட்சி மொழி என்றார்கள். எனக்கு அந்த இரண்டாம் என்பது சற்று வலிக்கத்தான் செய்தது. யாரை வந்து யார் இரண்டாம்பட்சமாக்குவது என்றெண்ணிக் கொண்டாலும் அதை காட்டிக் கொள்ளவேண்டிய மனிதர்களல்ல இவர்கள் என்று நினைத்துக் கொண்டு, அப்படியா மகிழ்ச்சி என்றென். சாப்பிட்டாயா என்று கேட்டார்கள் பறிவுடன் மூவரும். இல்லை, பசி தெரியவில்லை என்றென். தேனீர் ஏதேனும் வேண்டுமா என்றார்கள். எழுந்து அவர்களின் கை பற்றிக் கொண்டேன். மிக்க நன்றி அதலாம் ஒன்றும் வேண்டாம், மனசு கொஞ்சம் கனத்து கிடக்கிறது, உங்களின் உபசரிப்புக்களுக்கு நன்றி. தனியாக அமர்ந்திருந்தால் போதுமென்றேன். அவர்கள் சிரித்துக் கொண்டே கை குளுக்கிவிட்டு, எங்களின் விமானத்தில் பயணிப்பதற்கு நன்றி, மீண்டும் அடுத்த பயணத்தில் சந்திபோம் என்று சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே என்னைக் கடந்து போயினர். அதில் ஒருவர்வேறு சற்று தூரம் சென்று வளைவில் திரும்பும்முன் நின்று என்னைத் திரும்பிப்பார்த்து சிரித்தவாறே கையசைத்துச் சென்றார். பாறைக்குள் நீரில்லாமல் இல்லை, தமிழருக்குத் தான் தக்க இடமும்; போதிய விடுதலையும் இன்னும் கிடைக்கவில்லை போல்’ என்று எண்ணிக் கொண்டேன்..                                         பகுதி – 4 சற்று நேரத்திற்கெல்லாம், எதைஎதையோ யோசித்து அசை போட்டவாறே அயர்ந்து போனவனாக கண்களை மூடிக் கொண்டு இருக்கையின் மீது அமர்ந்தவாறே சாய்ந்து படுத்துக் கொள்ள, ஊரில் சந்தித்த அந்த அண்ணன் மேகநாதன் நினைவிற்கு வந்தார். அவரோடு பேசியதெல்லாம் கூட ஒவ்வொன்றாய் நினைவிற்கு வந்தன. கைகளை மேலே உயர்த்தி உடம்பை சற்று முறுக்கி எனை ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். ஒவ்வொன்றாய் எல்லாம் நினைவில் ஊரின… “வாங்க சத்யா.., எங்க சொன்னீங்க துபாய்தானே” “இல்லைண்ணே, லண்டன் போகணும் துபாய் வழியா இருந்தாலும் பரவாயில்லை” “லண்டனா…., என்னைக்கு போனோம்..?” “நாளைக்குண்ணே, முன்பே தொலைபேசியில் அழைத்து சொன்னேனே” “ஓ.. மறந்து போனேன்யா…, நீ வருவியோ மாட்டியோன்னு யார் கண்டா…?” “அதெப்படிண்ணே சொல்லிட்டு வராம, எப்பவும் எடுக்குறவக தானே..” “சரி, என்னைக்கு வேணும்?” “நாளைக்கு..” “நாளைக்கா??!!!!!!! நாளைக்கு லண்டனுக்கு சீட்டு இல்லைன்னு சொன்னாப்பலையேப்பு…” “பாருங்கண்ணே.., வேறு வழி மாறி போற மாதிரி ஏதாவது இருக்கான்னு பாருங்க” “செத்த இரு, நான் எங்க பார்க்கிறது, கேட்டு தான் சொல்லணும்” “சரி கேட்டு தான் சொல்லுங்க..” அவர் சற்று சலிப்பாகவும் வீம்பாகவும் கொஞ்சம் பின்னால் நகர்ந்து தொலைபேசியை எடுத்து நகரத்து டிராவல்ஸ் ஒன்றின் தொடர்பு எண்களை அழுத்தி யாரிடமோ பேசினார். நலமெல்லாம் விசாரித்துப் பின் விவரம் சொன்னார். இவ்வளவு குசலம் விசாரிப்பதிலேயே தெரிந்தது இவர் எத்தனைப் பேருக்கு இங்கே பயணச் சீட்டு பதிந்துக் கொடுக்கிறார் என்று. இருந்தாலும் எனக்கும் இவரை விட்டால் வேறு வழியில்லை. நம்மால் நகரத்து தூரம் வரைச் சென்று விமானச் சீட்டு வாங்க இயலாது. நேரமும் போதுமானதாக இல்லை. போனமுறை இவர் எடுத்துக் கொடுத்த நம்பிக்கையில் தான் இம்முறையும் வந்தேன். அதற்குள் பேசிக் கொண்டே இருந்த அவர் என் பக்கம் திரும்பி தொலைபேசியின் ஒரு முனையை கையில் மூடிக் கொண்டு - “ஸ்ரீலங்கா வழியா தான் இருக்காம் பரவாயில்லையா…?” என்றார். கண்ணாடி அவருடைய மூக்கின் மேல் இறங்கி அவரின் கண்களே என்னை கேள்வி கேட்டன. இருந்தாலும் ஸ்ரீலங்கா என்றதும் கொஞ்சம் பரபரப்பு கூடியது. “ஸ்ரீலங்காவா!!!!!!!!!!!!!!!!? பரவாயில்லையாவா!!!!!!!!!!!? என்னண்ணே நீங்க, தாரளாமாக போடுங்க, புண்ணியமா போகும் உங்களுக்கென்றேன். “இல்லைப்பா, அங்க வேற சண்டை, பிரச்சனை, அது இதுன்றான்களே அதான் கேட்டேன்” “ஆமாம், சண்டை தான், காலங்காலமாய் போராடும் மண்ணிற்கான, நம் தமிழர் உரிமைக்கான போர்ண்ணே அது.. “ “அதான், அதனால தான், வேணுமான்னு கேக்குறேன்.., பொதுவா சிலபேர் இலங்கை வழி இல்லாம போடுங்கன்னு தான் கேட்டு வாங்குறாங்க” “உண்மையாவா சொல்றீங்க???” அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவரிடம் எதற்கோ சரியென்று சொல்லிவிட்டு இணைப்பினை துண்டித்து வைத்துவிட்டு - “உண்மையைத்தான் சொல்றேன், பொய் சொல்ல எனக்கென்ன ஆசையா. அவன்தான் நம்மாளுங்க கிட்ட சண்டை போடுறானாமே பிறகு அவனோட நாட்டுக்கு நாம் ஏன் வருமானம் தேடி தரதுன்னு தான்” “ஆமாம்ணே; அதுவும் யோசிக்கவேண்டிய விஷயம் தான்” “இருந்தாலும் நம்ம கிட்ட வரதே ஒன்னோ ரெண்டோ கஸ்டமர்தானேப்பு, அதுக வேணாம்னு சொல்லும்..? எதுக்கோ என்னவோ யார் கண்டா, போவ பயமோ என்னவோ; தமிழன்னு சொல்லி ஆர்மி காரன் அடிச்சிப் புட்டானா?” அவர் நெக்கலாக என்னைப் பார்த்து கண் சிமிட்டினார். எனக்கு அந்த கண்ணைப் பார்த்து ஓங்கி ஒரு குத்து விடலாமா என்று கோபம் வந்தது. “ஏன் அப்பு உன்னை அடிச்சிப் பிடுவான்னு பாக்குறியா?” “மேல கைபட்டா தலைய திருவி; தமிழன்னா யாருன்னு காட்டுவேன்” “இந்த வாய் ஒண்ணுதான் தமிழனுக்கு” “ஒட்டுமொத்தமும் அப்படி இல்லைண்ணே” “ஒட்டுமொத்தமும்னா ?” “உன் போராட்டமும் என் போராட்டமும் சோத்துக்கும் தன் பிழைப்புக்கும் தான்,  அவர்கள் தமிழ் தேச உணர்வுக்காகவும்; தன் விடுதலைக்காவும் போராடுறவுங்கண்ணே “ “இலங்கை காரங்களா…? எல்லாம் ஒரு குட்டையில ஊறின மட்டை தானே?” “என்னண்ணே பேசுற நீயி, தமிழன்னா உனக்கு என்ன நீயும் நானும் மட்டும்னு நினைச்சியா? உன்னை மாதிரி என்னை மாதிரி தன் வயித்துக்கு சாவுறவன்னு நினைச்சியா? காலங்காலமா தனகுன்னு ஒரு தேசமும், தன்னிடமிருந்து பறித்துக் கொண்ட மண்ணின் சுதந்திரத்தையும் வாங்க ரத்தமும் உயிரும் கொடுத்துப் போராடும் ஒரு இனம்..” மண்ணைப் பற்றி மண்ணுரிமை பற்றி பேச எழ சற்று உணர்ச்சிவயப் பட்டுப்  போனேன். அதையும் அவர் கண்டுபிடித்து விட்டார் போல். “சரி, அதுக்கு நீ  ஏன்பா இப்படி உணர்ச்சிவசப் படுற?” “பின்ன என்னண்ணே; என்னமோ நீங்க நம்ம குழாயடிச் சண்டை மாதிரி அவுங்களையும் இணைத்து மொத்த தமிழரையே மட்டமா பேசுறீங்க” “வேறென்னவாம்; அவன் சண்டை போட்டா நமக்ககென்னப்பு???” “அண்ணே, அது ஒரு இனத்தின் விடுதலைக்கான சண்டைண்ணே? அறுபது வருடமா தன் உரிமைகளை மீட்பதற்காக நடக்கும் போர் அது.. “ “ஆமா LTTE – க்கும் ஸ்ரீலங்கா காரனுக்கும் சண்டை நடக்கும்னுவாங்களே, அதானே” “என்னங்க, எல்.டி.டி.ன்னு என்னமோ யாரையோ சொல்றா மாதிரி சொல்றீங்க” “ஆமா. அவனுங்க எல்.டி.டீ தானே??????????” “அப்போ அவர்கள் எல்.டி.டீ.ன்னா நீங்களும் எல்.டி.டீ இல்லையா?” “அட ஏய்யா வெறுப்ப கிளப்பற? நான் ஏன் எல்.டி.டீ யாவனும்? என்ன புடிச்சி உள்ளே போடறதுக்கா??? நீ ஒரு காரியம் செய்யி; இங்க நம்ம மூனாவட்டம் தெரு இருக்குல்ல அதுல போயி தலையில முக்காடு போட்டுக்குனு ஒரு ஸ்ரீலங்கா பொம்பளை இருக்கா, அவகிட்ட நீ என்ன எல்.டி.டீ.யான்னு கேளு காரி மூஞ்சில துப்புவா. நான் கேட்டேன், கேட்டதுக்கு என் மேல எப்படி சீறி வந்தான்னு எனக்குள்ள தெரியும். அந்த எல்.டி.டீ. காரங்க தான் எங்களை இப்படி நாடுகெட்டு அலைய விட்டானுங்கன்னு அவதான் சொன்னா(ள்)” எனக்குக் கோபம் தலைக்கேறியது. இருந்தாலும் இதுபோன்ற மனிதரிடம் இனியும் பேசுவதில் எந்த அர்த்தமுமில்லை போல் தோன்றியது. “சரி விடுங்க சீட்டு இருக்கான்னு பார்த்து சொல்லுங்க நான் போறேன்” “என்னப்பா நீயி லண்டன்லாம் போறவர, விவரம் போதலையே…, ஆமா நான் தெரியாம தான் கேட்கிறேன் ‘அவனுங்க சும்மா அடிச்சிக்கினு வெட்டிக்கினா நாமளா அதுக்கு பொறுப்பு?” ஓங்கி ஒரு அரை விடலாமா என்றிருந்தது எனக்கு. பெரியவர் ஆயிற்றே என்று அடக்கிக் கொண்டேன். “ஏன்யா என்னைய முறைக்கிற?” “வேற…” சலிப்புடன் தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன் நான். “என்னய்யா, உனக்கு ஏன் இம்புட்டு கோபம் வருது, நாம என்ன இலங்கைக்கு பொறுப்பு சுமந்தா கெடக்குறவ….இங்க??????????????” இதற்குமேல் என்னால் தாங்கமுடியவில்லை. “ஆமாய்யா………., பொறுப்பு தான். நாம பக்கத்துலயே இருந்தும் நம்ம மக்கள் சாவுதே, நாம அதுக்கு பொறுப்பில்லையா? நாம் பொறுப்பில்லாம என்ன பக்கத்து நாட்டானா பின்ன வருவான். பக்கத்து வீட்டான் சண்டை போட்டா போய் கேட்குறியே எங்கயோ இருந்து வந்தவன் அடிக்கிறானே; பொறுப்பில்லாம எங்க போயிட்டோம்??? உன் மக்கள், உன் இனம், உன்னைய நம்பின சனங்க அடிபட்டா நீ தான்யா கேட்க போவனும்” கோபத்தில் எழுந்து மேஜை மேல் தட்டி கத்தியே விட்டேன். அவரும் சாதாரண ஆளில்லை. அவர் என்னைப்போல் நிறைய பேரிடம் இப்படி சண்டை போட்டிருப்பார் போல். சாவுதானமாக எழுந்து நின்று - “அடப் போப்பா நீயி..” என்றார். என்னை உசுப்பேத்துறாரோ என்றொரு எண்ணம் கூட வந்தது. நான் சற்று பொறுத்துக் கொண்டு, “’என்னண்ணே, நம்ம தமிழன்ண்ணே, நம்ம தமிழன் தான் அங்க நம்ம இனத்துக்குக்குன்னு ஒரு நாடு கேட்டு செத்துக் கொண்டிருக்கிறாண்ணே. கொஞ்சம் கூட அத்தனை பேர் கொல்லப் படுகிறார்களேன்ற எண்ணம் கூட உங்களுக்கில்லையா?” “அட ஏன்பா நீ வேற காலையில வந்து மனுசனை இப்படி படுத்துற. நீ வேணும்னா பாரு இவுங்க மட்டும் நீ சொல்ற ஈழத்தை புடிச்சிட்டா நாளைக்கே தமிழ்நாட்டை சல்லி காசுக்கு மதிக்கிறாங்களா பார், இப்பயே அவுங்க நம்ம பத்தி இழிவா ஒட்டுமொத்தப் போரையும் குறைசொல்லி பேசுறதையெல்லாம் காதுகொடுத்து கேட்க முடியலை. வேணும்னா இன்னும் கொஞ்சம் நல்லா தூத்திப் பேசுவாங்க நாளைக்கு, நடக்குதா இல்லையான்னு பாரு. பெறவு இந்த அண்ணனை வந்து ஏன் சொன்னேன்னு கேளு..” அவர் அவரை சரியாக மட்டுமே எண்ணிக் கொண்டு பேசினார். நிறைய பேர் இப்படி தான்; மண்ணை நனைத்த ரத்தத்தின் காரணம் புரியாமலே; அதன் இழப்பு புரியாமலே; உயிர்குடிக்கும் கயவர்களின் தந்திரம் புரியாமலே, மோசடித்தனம் புரியாமலே பேசிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு இந்த போராட்டத்தின் காரணம் புரிந்துவிட்டால் பின் நிற்பவர்களில் முதலாய் ஆவார்கள் என்று சற்று நிதானித்துப் புரிந்துக் கொண்டேன். அவரையே அமைதியாக பார்த்தேன்.           பகுதி – 5 அவர் சற்றும் சலிக்காமல் சவால் விட்டவராகவே எதிரே எழுந்து நின்றிருந்தார். நான் மனதை அடக்கிக் கொண்டு -  “அப்படி இல்லைண்ணே. நீங்க சொல்ற மாதிரி எல்லாம் கற்பனை பண்ணிக்க  இது சமயமில்லைண்ணே. அங்கே எத்தனை உயிர்கள் செத்து மடிந்துக் கொண்டிருக்கு அது உங்க கண்ணையே உருத்தலையா???” “விடு தம்பி விட்டுட்டு சீட்டு வாங்குற வழிய பாரு, என் வாயக் கிளராத, ஏதோ எப்பவும் வர, தம்பியாச்சேன்னு பார்க்கிறேன், இவனுங்க எடம் புடிச்சானுங்கனா நாளைக்கென்ன எனக்கு வீடு போட்டா தரப் போறானுங்க இலங்கையில? போவியளா…” என்னால் இந்த சுயநலத்தை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அண்ணனாவது மண்ணாவது எழுந்து சட்டையை பிடித்துக் கொண்டேன். “யோவ்… யோவ்.. மனுசனாயா நீ? மனுசனா நீ? சிந்திக்கவே தெரியாம, வரலாறே புரியாம, உன்னை எல்லாம் பெரியமனுசன்னு சொல்லிக்கவே வெட்கமாயிருக்குயா. ஒரு இனத்தோட பற்றுன்னு எதனா இருக்கா உனக்கு? உலகமெலாம் ஆளும் தேசங்களுக்கு மத்தியில ஒரு துண்டு மண்னை ஒரு தமிழன் ஆண்டான்னா அது எப்படி இருக்கும்னு காட்றதுக்கான ஒரு போர்-யா அது. ஏன்; என் பாட்டன்முப்பாட்டன் ஆண்ட மண்ணுல கொஞ்சத்தை தமிழருக்குன்னு கொடுத்தா இந்த உலகம் என்ன சுருங்கியா போயிடும்????  “ “தோ பார், இதலாம் என்கிட்ட வாணாம், முதல்ல நீ சட்டையில இருந்து கையை எடு, எடுய்யான்னா!!!!!!!! நான் என்ன டை கட்டிக்குனு தனியா உட்கார்ந்திருக்கேன்னு பார்த்தியா??? நான் மோசமானவன் பார்த்துக்கோ. ஒரு போன் பண்ணா போதும் தெருவெல்லாம் ஆட்டோ வந்து நிக்கும் பார்க்குரியா, பார்க்குரியா..” அவர் எகுறி குதித்தார் வானத்திற்கும் பூமிக்குமாய். “ச்சி … அற்ப மனிதனே” வாயாற சொல்லியே விட்டேன். “என்ன அற்ப மனிதனே???????? நீ என்ன தெய்வ பிறவியா? எவன பத்தியோ சொன்னா உனக்கேய்யா இப்படி கோபம் பொத்துக்குனு வருது? இப்படி எவவனுக்கோ வக்காலத்து வாங்கித் தான் தமிழ்நாடு இப்படிக் குட்டிச்சுவுரா போயிடுச்சி” அவர் கோபப் பட்டாலும், ஒருபுறம் மிகக் கலவரப் பட்டும் போனார். சட்டையைப் பிடித்திருக்கக் கூடாது தான். வயதானவர் வேறு. கோபத்தாலா அல்லது பயத்தாலா தெரியவில்லை, கைகால் சற்று படபடத்து ஆடியது அவருக்கு. பேச வார்த்தைகள் முழுதாக வராமல் சட்டையை பிடித்துவிட்ட அவுமனத்தில் மட்டும் கொதித்துப் போனார். ஒரு சிறு  அறை,  ஒரு கணினி மட்டும் வைத்துக் கொண்டு தூரத்திலிருக்கும்  விமான போக்குவரத்து அலுவல்களை தொடர்பு கொண்டு, பயணச்சீட்டு வாங்கி உள்ளூரில் கொஞ்சம் கூடுதலான விலை வைத்துக் கொடுத்து தொழில் செய்யும் ஒரு சாதாரண லட்சியமே இல்லாத ஒரு மனிதர் இவர். இவருக்கு என் ஈழம் சார்ந்த பேச்சு அத்தனை ஈடுபாடினைத் தரவில்லை என்பது முன்பிலிருந்தே புரியாமலில்லை. என்றாலும், பேச்சுக்கு பேச்சு என விட்டுவிட முடியாமல் இப்படி சட்டை பிடிக்கும் வரை வந்துபோச்சே என்று சற்று வருந்தினேன். கடைக்கு வந்ததும் வா சத்யான்னு வாஞ்சையா வரவேற்று வீடு சவுகரியம் விசாரித்து, உடனே ஓடி போய் தேனீர் வாங்கி வந்து, மேஜை மேல் இருக்கும் மின் விசிறியை கூட என் பக்கம் திருப்பி வைக்கும் அன்பான மனிதர். வருமானம் குறைவு மட்டுமல்லாது, வந்ததை தின்று காலத்தை போக்க ஒரு கணினியும் ஒரேயொரு டை’யும் கட்டிக் கொண்டு சோத்துக்கு நாட்களை கழிக்கும் பிழைப்பு. நான் வேறு இடையில் வந்து சட்டையை பிடித்து மிரட்டி விட்டதும் அவரால் தாளமுடியவில்லை. அவரை என்னுடைய கோபம் சற்றிற்கு அதிகமாகவே பாதித்திருக்கவேண்டும் போல் தெரிந்தது. படபடத்துப் போனார். கோபத்தில் பயத்தில் கண்கள் கொஞ்சம் இயல்பைவிட சிவந்து போனது. நான் சற்று அமைதியானேன். கொஞ்ச நேரம் அவர் விருப்பத்திற்கு வாய்க்கு வந்தவாறு ஏதேதோ பேசினார். நான் அதை செய்வேன் இதை செய்வேன், குத்திப் போடுவேன் வெட்டி சாய்ப்பேன் என்றெல்லாம் குதித்தார். நான் சற்று யோசித்தேன், அவரின் அவஸ்தையை நன்கு புரிந்துக் கொண்டேன். ஆரம்பமே தெரியவில்லை அவருக்கு. ஈழம் என்றாலே என்னவென்று தெரியவில்லை அவருக்கு.  என் உறவுகள் என்றாலே யார் என்று கேட்கும் ரக மனிதர். இலங்கைப் பிரச்சனை தானே’ என்று தெரிந்தவர்களுக்கு, ஈழம் என்று தெரியாதவர்களுக்கு, ஈழம் அந்நியமாகத் தானே இருக்கும்? பிறகு, இவரிடம் கோபப் பட்டு பயனில்லை. நான் செய்ததுதான் தவறு. அவர் பாவம். இப்படி தவித்து போனாரே!!. நான் தான் உணர்ச்சிவயப் பட்டுவிட்டேனோ’ என்று நினைத்துக் கொண்டு, என்னை நானே மீண்டும் ஆசுவாசப் படுத்திக் கொண்டு - அவர் கத்தியடங்கும்வரை அவர்முன்னிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்துக் கொண்டேன். அவர் வெளியே போய் ஒரு ஐந்து நிமிடம் கழித்து வந்து என் எதிரே நின்றார். நான் எழுந்து நின்று அண்ணா மனதார மன்னித்து விடுங்கள் என்றேன். அதற்குள், சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தெல்லாம் ஓடிவந்து கதவுதிறந்து என்ன என்ன என்றார்கள். அதலாம் ஒன்றுமில்லை நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என்றார்  அவர். அப்போ தான் அவரை புரிந்தது. அவர் வேண்டுமெனில் இவன் இப்படி செய்தானே, சட்டையை பிடித்து அடித்தானே என்று சொல்லி வேறேதேனும் கூட செய்திருக்கலாம், ஆனால் செய்யவில்லையே. நாம் தான் அவசரப் பட்டுவிட்டோமோ என்று எண்ணி, அமைதியாக அவரையே பார்த்தேன். அவர் என்னையே பார்த்து முறைத்தார். “பரவாயில்லைண்ணே விடுங்கண்ணே” என்றேன். “என்ன விடுங்க??????????????? லண்டன் போயிட்டு வந்துட்டா பெரிய்ய்ய்ய மயி…..ரா நீ” அந்த அறை தாண்டி கேட்கும் அளவிற்குக் கத்தினார். மீண்டும் கோபம் வந்தது. அடக்கிக் கொண்டேன். “கோபப் படாதீங்க உட்காருங்க. உட்கார்ந்து பேசுங்க” “சட்டைய புடிக்கிற.. அடிக்க வர.. நான் யாரு தெரியுமா???????????” “தெரிஞ்சிடுச்சி. தப்புதாண்ணே சொல்றேன்ல. வேணும்னா ஒரு அடி அடிச்சிடுங்க மனசாரட்டும். அண்ணன் தானேன்னு நினைச்சிக்கிறேன்” அப்படி சொன்னது தான் தாமதம், மனுஷன் உருகிவிட்டார். “இப்படிப் பேசையில மட்டும் அண்ணன்னு சொல்ற, அப்புறமா சட்டையை புடிப்ப” “இல்லைண்ணே இனி செய்ய மாட்டேன் தப்புதான்.., மன்னிச்சிடுங்க” உண்மையிலேயே நான் பணிவா பேசியது அவருக்கு கொஞ்சம் அமைதியை தந்ததுபோல். சற்று மௌனமாகி என்னையேப் பார்த்தார். வேகமாக வாங்கிய மூச்சு மெல்ல மெல்ல சமாதானம் கொண்டது. நானே லேசாக புன்னகைத்தவாறு “சரிண்ணே, பயண சீட்டு கிடைக்குமா கிடைக்காதா? கேளுங்க நான் புறப்படனும்” என்றேன். “கிளம்பு கிளம்பு.. உனக்கு சீட்டெல்லாம் கிடைக்காது.. நீ போகலாம்” “மன்னிச்சிடுங்கண்ணே. தவறுதான். உங்களிடம் கோபப் பட நியாயமில்லை. இது சற்றேறக் குறைய ‘தமிழருக்கு தன் தமிழ் இனத்து உறவுகள் பற்றி முழுமையாக தெரியாத கதை’ என்னவோ; ஆங்கிலம் தெரியவில்லை என்று ஒரு தமிழ் மாணவனை தமிழ் ஆசிரியரே அடிப்பதற்கு சமமாக, ஆகிவிட்டதுசெய்வது, என்னசெய்வது, அத்தனை நாம் ஈழத்திலிருந்து அந்நியமாகி விட்டோம். தமிழருக்கு தமிழரையே அந்நியமாக்கும் ஓர் அரசியல் சூழ்ச்சி சூழ்ந்த தேசத்தில் வளரப் பட்டுவிட்டோம். அதற்குத் தக்க நம் மண்ணைப் பற்றி கூட நமக்கு சரியாக தெரியாத ஒரு வரலாறே நமக்குப் பாடமாக்கப் பட்டுள்ளது. பிறகு, உங்களைப் போன்றோரிடத்தில் கோபப்பட்டு மட்டும் பயனில்லை தானே? ஒரு தலைமுறை மாறிப் போன பிறகு, எல்லாம் மறக்கடிக்கவும், மறைக்கவும் பட்டுவிடுகிறது. பிறகு, உங்களிடம் இத்தனை உணர்ச்சிவசப் பட்டிருக்கக் கூடாது தான். தப்பு தான்ணே. நான் அபப்டி நடந்திருக்கக் கூடாது தான்” மன்னிப்பென்ற வார்த்தைக்கு தான் எத்தனை சக்தி!! தன் தவறு தான் என்றதும், அவர் சற்று நிமிர்ந்து அமர்ந்தார். மன்னித்துக் கொள்ள கேட்டதும் ‘அட ஏம்பா என்பது போலும், அவர் என்னை என்னவோ, ஒரு குற்றவாளியை மன்னித்து விடும் நிரபராதி போலவும், அதேநேரம் சற்று உருக்கமாகவும் பார்த்தார். “சட்டைய பிடிச்சியா, அதான் கஷ்டமா போச்சி, ஒரு பைய இங்க என்னைய இப்படி செய்ய மாட்டான் தெரியுமா” என்றார் “தப்பு தான்ண்ணே, விடுங்கண்ணே” “யார்னா பார்த்திருந்தா என் மானம் மரியாதை என்னாயிருக்கும்???” “க்குக்கும்…. பெரிய…..” என்று மனதில் எண்ணி நிறுத்திக் கொண்டேன். “மன்னிச்சிக்கண்ணே” “சரி.. சரி.. விடுங்க.. அதுக்கெதுக்கு மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு..” “வயசுல பெரியவரு தான்-னாலும் தேசத்தை பத்தி குறையா சொல்லிடவே.. கொஞ்சம் கோபமாயிடுச்சி” “பாத்தீங்களா, இப்பவும் அதை தான் தேசம்னு சொல்றீங்க. மறுபடியும் என்னையே முட்டாளாக்குறீங்க பாருங்க.., நாம இந்தியரு அவங்க இலங்கைங்க.” இப்போ என்ன செய்வது இவரை???? யோசித்துவிட்டு பிறகு தொடருங்கள்..                               பகுதி – 6 நான் ஒன்றும் பேசவில்லை.  பேசாமல் அவரையே பார்த்தேன். என் அமைதியில் நான் அடக்கிக்கொள்ளும் கோபத்தினை அவர் கண்டிருப்பார் போல் - “எனக்கென்ன சீட்டை வாங்கிக் கொடுத்தோமா போனோமான்னு இருக்கனும், ஆனா, தனியா அறைப் போட்டு, ஏசி போட்டு, கூட மேஜைமேல் கூடுதலாக ஒரு மின்விசிறியும் வெச்சு, சுத்துப்பட்டு கிராமத்துல டை கட்டின ஆளா திரியிறேனா, அதான் கோபம் சுருக்குனு வந்துட்டுது”  என்று அவர் தன்னை பொருமைப் படுத்திக்கொண்டு பேசினார். என்றாலும் அவர் இத்தனை விளக்கிக் கூறியப் பின்பும் ‘அதென்ன நம் தேசமா? நாம் இந்தியர், அவர்கள் இலங்கையர் தானே? என்றதும், குறிப்பாக அதென்ன நம் தேசமா நாம் வக்காலத்து வாங்க என்றதும்; எனக்கு முகம் பாராத ஒரு கோபம் சுள்ளென வந்தது. “என் மக்கள் வாழ்ந்த, என் உறவுகள் வாழும் அந்த மண்ணை என் தேசமென்று சொல்லாமல் வேறெப்படிண்ணே சொல்வது? சரி அதை விடுங்க, உங்களிடம் பேசி ஒரு பயனும் இல்லை. இனியும் இது தொடர்ந்தால் எனக்கு மீண்டும் கோபம் தான் வரும். கொழும்பு வழியாவே ஒரு பயணச் சீட்டு இருக்குன்னீங்களே அதையே பதிஞ்சி கொடுங்க நான் போறேன் “ “சரி தம்பி……, அண்ணன்னு சொல்லிப்புட்டு ஏன் இத்தனை கோபப் படுறிய? நான் தெரிஞ்சிக்கத் தானேக் கேட்கிறேன்? அது ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்கீங்க, மூச்சுக்கு முன்னூறு தரம் ஈழம் ஈழம்றீங்க, அது நம்ம மக்கள் வாழ்ந்த தேசம்னு சொல்றீங்க, உண்மையாவே தெரிந்துக் கொள்ளனும்னு ஒரு அவா; இலங்கை என்ன நம்ம தேசமா?” “ஆமாம்னே, இலங்கைன்றது நம்ம மக்கள் வாழ்ந்த இடம்ண்ணே, வரலாற்றுப் படி பார்த்தோம்னா ‘இலங்கைன்னு ஒரு பெயரே அங்கு முன்பு கிடையாது. இலங்கைன்றது இப்போ சில நூற்றாண்டுகளுக்கு முன் வைத்த பெயர். லங்கா என்றால் தீவு என்று அர்த்தம். அதோடு நம் தமிழர் முறை படி முதலெழுத்து ‘இ’ சேர்த்து இலங்கை ஆனது. மங்களகரம் வேண்டி ஸ்ரீ  சேர்த்து  ஸ்ரீலங்காவாக மாற்றம் கொள்ளப் பட்டது. ஆனால்; ஈழம் என்பதற்கு கிட்டத்தட்ட நான்காயிரத்து முன்னூறு வருடத்திற்கும் மேலான வரலாறு உண்டு.  இப்பவும் வடமேற்குப் பகுதியில் புத்தளத்திலிருந்து, கிழக்கே அம்பாறை மாவட்டம் துவங்கி  வடக்கே யாழ்ப்பாணம் வரை நம்ம மக்கள் தான் இருக்காங்க, நடுவில் புகுத்தி  வளர்க்கப்பட்ட சிங்களந்தான் தன் அரசபலத்தால் நகர்ந்து நகர்ந்து நம்மை ஈழம் விட்டே விரட்டப் பார்க்கிறான்” “அப்படியா???!!! அப்போ நீ போறியே கொழும்பு வழி; அதலாம் ஈழம் நாட்டை சேர்ந்தது தானா?” “இப்போ இருக்குற ஈழம்னு எடுத்துக்குட்டீங்கன்னா கொழும்பு தாண்டி  போகனும்ண்ணே. கொழும்பு, கொழும்பு தாண்டினா கம்பகா, கம்பகா தாண்டி புத்தளம், அப்புறம் அங்கிருந்து ஈழம் துவங்குது” “அப்படியா!! சரி சரி..” “ஆனா, மொத்தமாவே நம்ம வளர்ச்சி புடிக்காம சிங்களன் ஒரு பக்கம் ஆடுறான்னா, கூட சேர்ந்து வல்லரசு நாடுகளுமில்ல நிக்குது. எங்க ஈழம்னு ஒரு தனிதேசம் வந்தா நாளை தமிழகமும் அதோடு சேர்ந்துக் கொள்ளுமோ; பிறகு அதை பார்த்து பிற மாநிலங்கள் தனி தேசம் கேட்கத் துவங்குமோன்ற ஒரு அரசியல் நோக்கு இந்தியாவிற்கே இருக்கலாம்”  “ஓ… அதனால தான் இந்தியா இலங்கைக்கு, மன்னிக்கணும் சிங்களனுக்கு துணை போவுதா?” “அதனாலையா இல்லை ஆள்பவர்களுக்கு அதையும் கடந்து சுய விருப்புவெருப்புக்கள் உண்டான்னு கடவுளுக்குத் தான் தெரியும்” “இவனுங்க என்னத்த நினைத்து என்ன பண்ண? அதது கிடைக்கவேண்டியவர்களுக்கு கிடைக்கும் தம்பி” “அந்த பயம் தான் அவர்களுக்கு, எங்கு நாம் நம் தேசமென்று ஈழத்தை பிடித்துக் கொண்டு; பிறகு மெல்ல மெல்ல அவர்களை விரட்டி விடுவோமோ எனும் பயம். அதற்கு உடன்பட்டுவிடக் கூடாதே நம்ம பகுதியிலிருந்து அதாவது வடதேசத்திலிருந்து போனவர்களால் குறிப்பாக நம்மைச் சார்ந்த இனத்திலிருந்து உருவான இனமாயிற்றே சிங்கள இனமெனும் சுயநலம் கொண்ட பாகுபாடுகளும் உள்ளே நம் இந்திய நாட்டவரான வடநாட்டவர்களுக்கு உண்டு. அதின்றி; எப்படி எல்லாம் நம்மை அழிக்கலாம் என்று கங்கணம் கட்டித் திரியும் நம் அண்டை  மாநிலத்து சதிகாரர்களும் இந்த இன அழிப்பிற்கு உடந்தை. மத்தியில் வீரியமில்லாத, எங்கு அதை கேட்கப் போய்; தன் இருக்கை பறிபோகுமோ என்று பயந்துக் கிடக்கும் நம் அரசியல்வாதிகளின் சுயநலக் கயமைத் தனம்; அவனுக்கு பலகாரம் செய்ய சர்க்கரை கிடைத்தது போல் ஆயிற்று. ஆக இப்படி ‘உள்ளுக்குள்ள கூட்டுச் சேர்ந்துக் கொண்டு, தனியா நின்னு போராட முடியலைன்னாலும் பார்க்வங்க பார்வைக்கு ‘சிங்களன் அடிச்சான்னு’ வீர வசனங்கள் வேற. எல்லாத்துக்கும் மத்தியில நம்ம உடைமைகளை பிடுங்கிக் கொண்டு; நம்மை அவர்களின் அடிமை போல, இரண்டாம்பட்சமாவே வைத்து அடக்கி ஆளப் பார்க்கிறான் நம்ம பின்னால வந்து நம்ம மண்ணுல புகுந்தவனால் உருவானவன்” “யாரு?” “சிங்களன் தான்..” “இப்பவும் அடிக்கிறானா?” “இனிமேலாவது கண்களை கொட்ட திறந்து ஈழம் பற்றிய செய்திகளை படிங்கண்ணே. கொத்து கொத்தா அழிக்கிறான்.  அடிக்கிறானான்னு கேட்கிறீங்க. ஒரு நாயி நாதி அதை ஏன்னு கேட்கலை. ஊர் உலகமெலாம் தமிழர் இருந்தும் என்ன புண்ணியம்? கேவலமா இருக்குண்ணே நம்மை நினைத்தாலே” “வாஸ்தவந் தே(ன்)…” “அதான் எனக்கு கோவம். வெட்டி முறிக்கனும்னு கோபம்” “பின்ன வராத பின்ன??” “அப்படி வாடி ஆத்தி; இப்போ புரிதில்ல; அப்போ கூட நாம் இலகிடுவோம்ண்ணே. நம்ம மனசு அதலாம் மன்னிச்சிடும். ஆனா, அவனுங்க போனாப்போகட்டும்; நம்ம மக்களை நாம மறக்கக் கூடாது இல்லையா? அவர்களுக்கு எதாச்சும் நம்மால முடிந்ததை செய்யனுமால்லையா?” “கண்டிப்பா செய்யணும் தம்பி” “நம்ம ஈழம்ண்ணே அது, நம்ம தமிழீழம்ணே அது. நம்ம தமிழர் வாழ்ந்த, வாழும் மண்ணுண்ணே அது. அதை எப்படின்னா மீட்கனும்ண்ணே. எல்லாத்தையும் நீ கொண்டு போ; என் பாட்டன்முப்பாட்டன் வாழ்ந்த மண்ணுல, என் சனம் வாழுற இடத்தையாவது மீட்டு; தாடான்னு  பிடிங்கியாவது; தமிழர்னா என்னன்னு அவனுக்கும், தமிழன் வாழ்ந்தா எப்படி வாழ்வான்னு இந்த உலகத்திற்கும் ஆண்டு காட்டனும்ண்ணே. நடப்பதை எல்லாம் நினைச்சாலே, சிலதை எல்லாம் செய்தியில படிக்கக் கூட மனசு உருகிப் போகுதுண்ணே. நம் எத்தனை வீரதீர செயல்களுக்கு முன்னால்; நாகரீகம் போதித்த ஓர் வல்லமை படைத்த இனத்தின் வழி வந்தும் இப்படி தலைகுனியும் சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டோம்னா அது நம் பாடம் வழியா நமக்கு இழைக்கப்பட்ட துரோகமன்றி வேறு காரணமில்லைண்ணே. நம்ம வரலாறையே நம்மக் கண்ணுலக் காட்டாம இப்படி நம்மை இருட்டடிப்பு செய்திருக்காங்களேன்னு நினைத்தால்; ரத்தம் பொங்கிக் கொதிக்கிறது.  எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறோம் தெரியுமா நாம? அந்த மண்ணுல புதைக்கப்பட்டு வருகிற நம்ம வரலாறு எப்படிப் பட்ட வரலாறு தெரியுமா?  எத்தனை நம் தமிழ் மன்னர்களால் அன்றிலிருந்தே ஆளப்  பட்ட மண்ணது தெரியுமா அது?  பண்டார வன்னியன் வீரசாகசம் புரிந்து வெற்றிகொண்டு மீட்ட மண்ணது. அதற்கும் முன், இராஜேந்திரச் சோழன் போரில் வென்று ஆண்ட மண்ணது. அதற்கும் முன்னால் எல்லாளன்ற மன்னனால ஆளப் பட்டிருக்கு…, அதுக்கும் முன்னாடி நாகர்கள் என்ற பெயரில் தமிழர்களே அங்கு வாழ்ந்திருக்கிறாங்க.  அது தவிர, இயக்கர்கள் என்ற பெயரில் சிங்களரல்லாதவர்களும்  வாழ்ந்து வந்த சமயம் இடையே வந்து அக் குடியில் மணம் முடித்து சிங்களக் குடிக்கு முதல் விதை தூவி; இன்று நான் தான் நாட்டுக்கே அரசன்னு சொன்னா அது தவறு தானே???”  “ஆமாமா…” “அப்படியே நீ அரசனா கூட இருந்துட்டுப் போ; எங்களை ஏன் சீன்டனும்?” “வேற??!!!” “அதுதான்ண்ணே கோபம், அதுக்காக புல்லு பூண்டு வரை எங்கல்லாம் தமிழ் கேட்குதோ அங்கல்லாம் அவன் தந்திரமா வெளிய ஒண்ணு காமிச்சு உள்ளே ஒண்ணு செய்து எல்லாத்தையும் அழிச்சிகிட்டு வரான்..” “சரி தம்பி, நம்ம தானே முதல்ல இருந்தே இருக்கோம் பிறகு எப்படி நம்ப தேசம் மொத்தமும் அவனுக்கு கைமாறி போச்சி?” “அது ஒரு காலக் குறைண்ணே. ஒண்ணு வெள்ளைக்காரன் செய்த ஒரு பெரிய அநியாயம் அல்லது சதின்னு சொல்லலாம். இன்னொன்னு, சரி விடுங்க அதை பிறகு சொல்றேன். அதுக்கும் முன்னால – நம் நாடு என்னும் இந்தியாவின்’ வடதேசத்தில் இருந்து போன விஜயன்னு ஒருத்தன் போய் உருவாக்கிய இனம் தான் சிங்கள இனம். இதை அவர்களின் மகாவம்சம் எனும் ஒரு பாளி மொழியில் எழுதப் பட்ட வரலாற்று நூலே உறுதி செய்து”  “ஓஹோ.. பிறகு ஏன் இவர்களுக்கு இந்த கொள்ளை அநியாயம்???” “அதுதான்ண்ணே என் கேள்வியும். நான் அடிக்கடி இப்படி நினைத்துக் கொள்வதுண்டு; ஒருவேளை விஜயன்னு ஒருத்தன் (அப்போதைய மகத நாடான பிகாருக்கும், கலிங்கத்து தேசமான ஒரிஸ்ஸாவுக்கும் இடையேயான வங்கப் பகுதியிலிருந்து) வட இந்தியாவிலிருந்து ஈழத்திற்குப் போகலைன்னா,  கலிங்கத்தை வென்ற பின் பௌத்தத்திற்கு மாறிய அசோக சக்ரவர்த்தியோட மகன் மகிந்தன் அங்க வந்து புத்த மதத்தை பரப்பலைன்னா, புத்தமதத்தை பரப்ப புத்த பிக்குகள் பாளி மொழியில் எழுதிய மகாவம்ச நூலை தனக்கென்று ஒரு தனி இனம் வேண்டிய அவசியம் கருதி சிங்களரை ஆதரித்து உணர்ச்சி ஊட்டி விட்டிருக்கவில்லைன்னா; அங்க சிங்களன்னு ஒருத்தன் இன்னைக்கு இருந்திருப்பனா? ன்றது கூட சந்தேகம் தான்”  “காலத்தை யாரால மாத்தமுடியுது தம்பி? அது என்ன நினைக்குதோ அதைத்தானே அதன் விருபத்திற்கு நகற்றிக் கொள்ளுது” “மனிதர் மட்டுமில்லைண்ணே, இந்த இயற்கை கூட நமக்கு சதிண்ணே.” “அதெப்படி” “போரோட அதுவும் ஒண்ணுமா இன்னைக்கு வந்து  அழித்த கடல்கோளிலிருந்து அன்னைக்கு நீரில் மூழ்கிப் போன லெமூரியா கண்டம் வரை, இயற்கையின் சதி தானே? அன்னைக்கு மட்டும் அந்த லெமூரியா கண்டம்னு ஒண்ணு கடல்ல மூழ்கலைன்னா; இன்று ஈழம் இன்னொரு தேசமா ஆயிருக்குமா?  உலகாளும் ஒரு தமிழ்பெருங்குடியா நாமே இருந்திருப்போம்!!” “அப்படியா?!!!! சரி, அதென்ன லெமூரியா கண்டம்?”  “அது முன்பு இருந்த நாகரிகம் வளர்ந்திருந்த செழுமையான ஒரு கண்டம்ண்ணே.  அதில் தமிழர்கள் தான் மூலக் குடியினர் என்பதற்கு உலகின் சான்றாக நம் மண்ணின் அமைப்பு இருப்பதோடில்லாமல், இயற்கையினால் கடல்கோல் வந்து கொண்டுசெல்லப் பட்ட, மூழ்கப் பட்ட ஒரு பரந்த தமிழ் கண்டம் அது. தற்காலிகமாக அதை அறிந்து ஆராய்ந்த விஞ்ஞானி  ஒருவரின் பெயரான லெமூரியா என்பதை வைத்தே அதை லெமூரியா கண்டம் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.  ஆக இப்படி ‘இயற்கையும் அதன் பின் வந்த மனிதர்களும் சேர்ந்து செய்த சதியினால் பாருங்கள், இன்று ஆண்ட தமிழனையே வாழ ஒரு மண்ணின்றி போராட வைத்துவிட்டது  ஏதோ ஒரு சுழற்சியின் விதி? தன் மக்களை இழந்து, உறவுகளை இழந்து, தாயின்றி தந்தையின்றி, பெற்றக் குழந்தைகள் கூட வயிற்றின் கர்ப்பத்திலேயே கொள்ளப் பட்டு, ஆண்டாண்டு காலமாக  ரத்தம் சிந்தி; உயிர்விட்டு; வருந்த வைத்துவிட்டது அந்த விதி. அறுபது வருடத்திற்கும் மேலாக எத்தனை உயிர்? எத்தனை குழந்தைகள்; எத்தனை பெண்கள்? எவ்வளவு தியாகம்? எவ்வளவு பொது ஜனம்ண்ணே சாவறது அந்த மண்ணுல???”  “அப்படியா, அதலாம் நமக்கு தெரியாதே தம்பி………” “தெரிந்துக் கொள்ளனும்ணே. இதலாம் தெரியாம பேசுறோமே, பெரிய இவரு மாதிரி வாயை கிழிக்கிறோமே; மேஜைக்கு கீழ தர நாலு காசு லஞ்சத்துக்கும், அதை தொடர்ந்து கொடுக்கிற அரசியல் இருக்கைக்கும்  மனித மரியாதயினை எல்லாம் விட்டு கீழிறங்கிவந்து; மானங் கெட்டுப் போய் நிற்கிறோமே; தவறில்ல அது?” “இவ்வளவு இருக்குன்னா தப்புதான் தம்பி, கண்டிப்பா தப்பு தான்” “மெல்ல சொல்லாதீங்க; நம்ம இனம் அழிய நாமே அமைதி கொண்டு இப்படி பார்த்துக் கொண்டிருந்தா கண்டிப்பா அது தவறு தான் தவறு தான் தவறு தான்னு உரக்கச் சொல்லுங்க” “நீங்க இதலாம் படிக்கிறீங்க தெரியுது, நமக்கெங்க அதலாம் சத்யா?” “சும்மா படிக்கலைண்ணே; வலி. கொத்து கொத்தா மக்கள் சாவுறதை பார்த்துட்டு வந்த வலி, வலிச்சி, தனியா யாரு இல்லாதப்போ தொலைகாட்சியில் செய்தியில் வருவதை எல்லாம் பார்த்துவிட்டு ஓ’ன்னு கத்தியழுத வலி. தடுக்க முடியாத கோபம். ஒத்தையாப் போயி ‘நிறுத்துங்கடா போரைன்னு’ நிறுத்திட முடியாத வெறுமை. நம்  கையாலாகாத் தனத்தால நாணிக் கிடந்த தருணத்தின் வெம்மை. ஏன் இப்படி நடக்குது, எங்கே தவறு நிகழ்ந்ததுன்னு தேடி தேடி பார்த்ததுல படித்ததுல தெரிந்துகிட்ட கொஞ்சநஞ்ச பாடம்” “அப்போ, சுத்தி வளச்சி யோசிச்சா;  நம்ம இலங்கையை நமக்கே திருப்பி கொடுக்கணும்றீங்க, அதானே?” “அவ்வளவு வேணாம்ண்ணே, அங்கிருக்கறதும் அப்பாவி ஜனங்க தானே? நமக்கெதுக்குண்ணே அவன் சுதந்திரம் பறிக்கும் ஆசை எல்லாம்? அவர்களும் மனிதர்கள் தானே? அங்கும் குழந்தையும் பெண்களும் பொதுமக்களும் வாழ்கிறார்கள் தானே? அவர்கள் வாழும் இடத்தில் அவர்கள் வாழ்ந்துக் கொண்டு போகட்டும். நம்ம ஆதிகாலத்துல இருந்தே ஆண்ட இடத்தைக் கூட விட்டுட்டு வெளியே வந்து பார்த்தா  தெரியுதுபார்; இப்போ நம் மக்கள் வாழும் மண்ணு, அது நமக்கு கிடைத்தா போதும். ஓடி ஓடி நாட்டை பிடித்து கொடி நட்ட தமிழன், வாழ ஒரு குடிசை தேடி; நாடு நாடா அலைந்து கப்பலில் திருப்பி யனுப்பப் படும் சோகங்கள் நிகழாம இருந்தால் அது போதும்.  நம்ம இடம் மட்டும் நமக்குக் கிடைத்தால் அது போதும்ண்ணே.  ஆனால், வருத்தம் பார்த்தீங்கன்னா ‘இது யாருக்குமே தெரியவோ புரியவோ மாட்டேங்குது. நாம இப்பக் கூட அவனுடைய இடத்தையா கேட்கிறோம்; நாங்க ஆளும் வரை எங்களுக்கு கொடுங்கடா, நாங்க தனியா வாழ்ந்துக்குறோம்னு தானே கேட்கிறோம்? அதை கொடுக்கமறுத்து நம்மையே அழிக்கவும் பார்த்தால்; தமிழன் சும்மா இருப்பானா?” “அதெப்படி??” “அதான் அடிக்கிறான். அதனால தான் சண்டை வருது. அதனாலத் தான் அன்னைக்கும் வந்தது, இன்னைக்கும் நடக்குது, இத்தனை வருடங்களா அதுக்குத் தான் போராடவும் செய்யுறோம். இதை, கூட நாம் புரிந்துக்கொள்ளாமல் விட்டுவிட்டு தூர நின்று வேடிக்கை பார்க்க அவர்கள் யாரு, யாரோ வேறு வேற்று மக்களா? போகட்டும்னு விட. வேற்று மக்கள்னாலே விடமாட்டோம், அப்படிப் பட்ட தமிழர் பரம்பரை நம்ம பரம்பரை. அதுக்கே என்னடா இப்படி பன்றானுவளேன்னு மனசு தவிக்கும், கேட்கும் உரிமை அற்றுப் போயும் அவர்களுக்காய் உருகும். பிறகு, இவர்கள் நம் குடிகளாயிற்றே; ஏன்டா ன்னு ஒரு குரல் நாம கொடுத்திருந்தா அவனுங்க இப்படி ஏறிவந்து விஷ குண்டு போட்டு நம்மை அழிக்க; நம் அடையாளங்களை அழிக்க; நம்மை வரலாற்றிலிருந்தே அகற்ற எண்ணம் கொள்வானா???  அதிலும், இன்றைய சூழ்நிலை பார்த்தீங்கன்னா; நாம தொலைத்த சில நம்மோட பழந்தமிழர் அடையாளங்களை கூட மாறாம அதிகபட்சம் வைத்துக் கட்டிக் காப்பதும், அழகிய தமிழ் பேசி தமிழுக்காகவும் தமிழருக்காகவும் வீருகொண்டெழுவதும்; தமிழ்மண்ணின் புகழை உலக அரங்கில் நிறுத்த முயல்வதும் அந்த நம்ம ஈழ மக்கள் தான்ணே. நாம் இந்தியா எனும் ஒரு  வட்டத்தில் நின்றுக்கொண்டு வெறும் இந்தியராகத் தான் இருக்கிறோம். அவர்கள் தான் இன்னும் தமிழராய், தமிழீழ தேசத்தின் விடுதலைக் காற்றாகத் தன்னையே  தன் தேசத்திற்கென இழந்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் நம்ம பழமை பாரம்பரியங்களை தொலைக்காம பத்திரமா வைத்திருக்க அவுங்க வாழனும்ணே” “கண்டிப்பா கண்டிப்பாப்பா, கண்டிப்பா வாழனும்பா. அவர்களை அழியவிடக் கூடாது, அவர்களை கொள்ளவிடக் கூடாது. அவர்களுக்கு ஏதேனும் செய்யனும் சத்யா….., அதுக்கு என் தலையை கொடுக்கணும்னா கொடுப்பேன்!!!!!!                                     பகுதி – 7 அவர் உணர்வுகளால் தகித்திருந்தார். “தலையை எல்லாம் கொடுக்க வேண்டாம்ண்ணே. தலையை பயன்படுத்தனும். அவர்களின் விடிவிற்கு எது சரின்னு பார்க்க ஒரு தலைமையை தேர்ந்தெடுத்து, எந்த அரசியல் நிறமும் சேர்த்துக் கொள்ளாத ஓர் தலைமையின் கீழ் நின்று; அவசியமெனில் எல்லோரும் புறப்படத் தயாராகனும். அப்படி ஒரு தலைமை வேண்டுமே முதலில்!! என்று யோசனை வரலாம், வருமெனில்; போகும் நூறு பேரில் ஒருவரை தேர்ந்தெடுப்போம். உடனிருக்கும் ஆயிரம் பேரில் ஒருவரை நம்பி நிற்கவைப்போம். அவர் கீழ் பணியாளனாக நிற்பதற்கு பதிலாக இணையாக நின்று தோள் கொடுப்போம். தோள் கொடுப்போர் அவருக்கு நிகராக நின்று சிந்திப்போம், எது நம் தமிழரின் மதிப்பினை கூட்டுமோ, எது நமக்கு நம் செல்வாக்கினை, நிலையான ஒரு பிடி மண்ணினை மீண்டும் பெற்றுத் தருமோ, அடிமை நிலையிலிருந்து எது நம்மை நிலைமாறச் செய்யுமோ, இரண்டாம் பட்ச இடத்தை தூக்கி எறிந்துவிட்டு தனக்கான சுதந்திரத்தோடு வாழ,  எந்த நிலைப்பாடு  நம்மை மாற்றித் தருமோ, வாழ்விக்குமோ, நம் விடுதலைக் காற்றினை சுவாசிக்க எது தக்க வழிவகையின செய்யுமோ; அதற்கென சிந்திக்கனும். புதிய உத்திகளோடு நாம் நம் பழைய இடத்தினை அடையனும். அதற்கு தலை வேணும்ண்ணே” “அப்போ நாமோ பழையமாதிரி இல்லாம மாறிட்டோம்ங்றியா?” “கண்டிப்பா. நிறைய இடத்தில் நாம் மாறிவிட்டோம். எத்தனை அந்த மாற்றம் நமக்கு நல்லது செய்கிறது, கெட்டதாக அமைகிறது என்பதை விட, அதனால் நாம் இழந்தவை எத்தனை, என்னென்ன என்று யோசித்தால் கவலை வந்துவிடுகிறது. எப்போ; வெள்ளைக்காரனின் வாழ்க்கை நமக்கு உயர்வாக பட்டுவிட்டதோ; அன்றிலிருந்தே சிறுமை பட்டுப் போனோம்ண்ணே. ஆங்கிலத்திற்கு ஆசைப் பட்டு தமிழை விற்கும் கயமைத் தனத்தை வேறெந்த இனமும் இத்தனை வேகமாக செய்திருக்காது. வாட்சை தமிழென்றும், பக்கெட்டை தமிழென்றும், ஷூவை தமிழென்றும், லோன் தமிழென்றும், கரண்ட் தமிழென்றும், லெட்டர் தமிழென்றும், லெப்ட்டும் ரைட்டும் சரியென்று நினைத்தும் வளரும் குழந்தைகளுக்கு கைகடிகாரம், வாளி, பாதுகை, கடன், மின்சாரம், கடிதம், இடது, வலது என்று சொல்லித்தந்தால் என்ன மானம்குறைந்தா  போய்விடும்? ஆனால், இனி ‘எல்லோரும்’ அப்படி தெரிந்துக் கொள்ளவோ பழக்கி விடவோ தூய தமிழில் பேச தன்னை தயார்படுத்தவோக் கூட மீண்டும் ஒரு பிறப்புதான் தேவை என்று அஞ்சும் நிலை ஏற்பட்டுவிட்டதே; அது நம் குறை தானே??? தொலைக்காட்சியை நாம் கண்டுபிடிக்கவில்லை போகட்டும், ரேடியோ நாம்கண்டு பிடிக்கவில்லை போகட்டும், கார் பஸ்சு ஏரோபிளேன் நாம் கண்டுபிடிக்கவில்லை போகட்டும், நன்றி வணக்கம் மன்னிப்பு போன்ற சொற்கள் கூட அற்றுப் போன ஓர் இழி பிறப்பா நாம்??? வாட்ச் கட்டு, டீ.வி போடு, போன் கொடு, பக்கெட்ல ஊத்து, அண்ணாக்கு பாய் சொல்லு, மாமாக்கு கிஸ் பண்ணு…னு’ இப்படி ஆங்கிலத்தை கலந்து கலந்து மழலையில் சிரிக்கும் பார்க்கும் தவழும் போதிலிருந்தே நாம் சொல்லிக் கொடுத்து குழந்தைகளை கெடுத்துவிட்டால், பிறகு தமிழில் இதற்கெல்லாம் என்ன வார்த்தையென்று எப்படி அவர்களுக்கு சரியாக தெரியவரும்ண்ணே?” “ஏன்பா அதுக்குன்னு தொலைபேசியில் பேசு, மகிழுந்தில் போ’ கார்மேகம் சூழ்ந்து மழை பெய்யும் நேரம்’ என்றெல்லாம் பேசினால்; கேட்கிறவன் சிரிப்பானேப்பா!!!” “சிரிக்கிறவனை அடிக்கனும்ண்ணே………., தமிழரிடத்தில் தமிழில் பேசினால் ஒருத்தன் சிரிப்பான்னா அவனை உதைக்கனும். ஆனால் அவனை அடிக்கும் முன்னாடி யோசிக்கவும் செய்ய வேண்டிய கட்டாயவாதிகள் தான் நாமெல்லோரும். காரணம், அவனை அப்படி வளர்த்ததே நாம் தானே??? பிறகு சிரிக்கிறவனை திருத்துவதும் நம் கடமை இல்லையா? சிரிக்கிறவனை சிரிக்கிறவனுக்கு புரியவைத்துவிட்டால் பிறகு சிரிப்பனா? தெருவுல குடிச்சிட்டு விழுந்து புரளும் போது சிரிக்குதே மக்கள், குடிக்கிறதை விட்டுட்டோமா? அடுத்தவன் ஒரு இனத்தையே அழிக்கிறான், உலகமே தமிழகத்தின் மௌனத்தை எண்ணி சிரித்ததே; பொங்கி எழுந்துட்டோமா? பிறகு இதுக்கு மட்டும் எங்கிருந்துண்ணே வந்தது மானமும் வெட்கமும் அசிங்கமும்??? தமிழன் தமிழில் பேசினால் ஒருத்தன் சிரிச்சான்னா அவன் சிரிக்கட்டும், அவனை முட்டாள் என்று எண்ணிவிட்டு போவோம்ண்ணே. ஆங்கிலம் பேசும்போது இடையில் தமிழ் கலந்து பேசுறோமா? ஹிந்தி பேசுகையில் இடையில் தமிழில் பெசுறோமா? பிறகு தமிழில் பேசுகையில் ஆங்கிலம் கலந்துப் பேசுவது மட்டும் எப்படி அழகும் நாகரிகமும் ஆனது? கேட்டால், ஆங்கிலமே பேசலைன்னா உச்சரிப்பு வராதாம். வராதுதான். அதற்குத் தனியே அமர்ந்து ஆங்கிலத்தில் மட்டும் பேசி பயிற்சி எடு. ஏன், தமிழரிடம் தமிழில் பேசிவிட்டு தனியே ஆங்கிலத்தில் பேச அவசியம் ஏற்படும் போது, துல்லியமாக தெளிந்த ஆங்கிலத்தில் பேசு; யார் அதை மறுப்பார். அதைவிடுத்து; தமிழில் ஆங்கிலம் கலந்து பேசிவிட்டு பின் தமிழுக்கே தமிழன் பயிற்சி எடுப்பது என்பது எத்தனைப் பெரிய குறை இல்லையா நமக்கு? மொழி என்பது முக்கியம்ண்ணே. ஒரு இனத்தின் உயிர், மொழி தான். மொழி தான் நம் அடையாளம். தாய் மொழியை தாய்மொழியாக மட்டுமே கருதனும். தமிழனாகிய என் தாய்மொழி தமிழ் மட்டும்தானேத் தவிர, தமிழும் ஆங்கிலமுமல்ல’ என்று உறுதியினை மனதில் கொண்டு, தமிழரிடத்தில் பேசுகையில் நாம் தமிழில் மட்டுமே பேசவேண்டும். ஏன் பேசாவிட்டாலென்ன? தமிழ் பேசாவிட்டால் என்ன சோறா கிடைக்காது என்றெண்ணுகின்றனர் சிலர். சோறு கிடைக்கும், அதைத் தின்னும் நாம் தமிழராய் தின்னமாட்டோம். மொழி அழிந்தால் இனம் அழியும் என்று புரியாத வரை; தமிழர் தன்னை ஆதிப் பெருமைக்கு உரிய முதல் மனிதராய் எக்காலத்திலும்  அடையாளப் படுத்திக் கொள்ளப் போவதில்லை. பல மொழி கற்றவன் பல மனிதனுக்கு சமம் என்பார்கள். வரவேற்போம். ஆயிரம் மொழி கற்போம். அந்தந்த இனத்தவரிடம் அவருடைய மொழியில் பேசுவோம். அதற்கு முன் தமிழரிடத்தில்; தமிழில் பேசுவோம்ண்ணே… தேங்க்ஸ் என்று பல முறை சொல்லும் இடத்தில் நன்றி ஐயா, நன்றி மணி, நன்றி துரை என்று சொல்லிப் பழகட்டுமே; பற்களா கொட்டிப் போகும்? ‘சாரி’ சொல்லச் சொல்ல மீண்டும் சாரி சொல்லத் தயாராகிறான் ஒவ்வொரு தமிழனும். மன்னித்து விடச் சொல்லிக் கேட்டுப் பாருங்கள்; செய்த தவறுக்காய் வெட்கி நாணிப் போவீர்கள். தவறுகள் திருத்தப் படனும்னா தவறை எண்ணி வெட்கப்படனும் வருந்தனும். தனை திருத்திக் கொள்ள அறிவு மனசை உறுத்தனும். தவறு செய்யக் கூடாதேன்னு உள்ளே உரைக்கனும். அப்படி உரைக்கனும்னா மன்னித்துக் கொள் என்று சொல்லிப் பாருங்கள். தவறு நிகழும்போதெல்லாம், மன்னித்துக் கொள் என்றே சொல்லுங்கள். அப்படி ஒவ்வொரு முறை சொல்லும் முன்பும் இனி சொல்லக் கூடாதென்றும் யோசிக்கத் தயாராவீர்கள். அப்படி யோசிக்கும் இடத்திற்கு மொழி நம்மை அழைத்துச் செல்கிறது. தமிழரினம் தமிழராய் தன்னை மீட்டெடுத்துக் கொள்ள வேண்டுமெனில், முதலில் நாம் தமிழராய் நம் இன உணர்வோடு பண்பு மாறாது வாழனும்ண்ணே..” “பண்பு மாறாம வாழனும் தான், ஆனால், எவன்பா வாழறான்?” “யாரும் இதில் ஒருவரை ஒருவர் எதிர்பார்த்தோ அல்லது குற்றம் சொல்லியோப் பயனில்லை. பிறரை கை காட்டும் முன் தன்னைப் பற்றி மட்டுமே ஒவ்வொரு தமிழரும் சிந்திக்கவேண்டும். இது ஒரு காலநகர்தலின், வளர்ச்சி வேகத்தின் இடையே – இடைச்சொருகளாய் நிகழ்ந்துவிட்ட குற்றம். ஆனால் அந்த காலநகர்த்தலின் குற்றத்திற்கு நாமும் காரணமானோம் என்பதே வருந்தத் தக்கது. கடைசியாய் வெள்ளைக்காரன் விட்டுப்போகும் போது எல்லோரையும் இந்தியர்னு சொல்லிப் பிரித்து, தனியே இலங்கைன்னு சொல்லிப் பிரித்துச் சென்றதில்லாமல், அதற்கு முன்னதாகவே; சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட தேசத்தை,  பின் களப்பிரர்கள், களப்பிரர்களுக்குப் பின் பல்லவர்கள்,  பல்லவர்களோடு இடையாக சாளுக்கியர்கள்,  விஜயநகர பேரரசுகள், மொகலாயர்கள், மராட்டியர்கள் இடையே வந்து வந்துப் போன டச்சுக் காரர்கள், போர்ச்சுக் கீசியர்கள், பிரெஞ்சு காரர்கள் என்று கொஞ்சம் கொஞ்சம்னு; அவரவர் பங்குக்கு அவரவர் புகுந்து, நான் தான் நாட்டுக்கு ராசான்னு நடந்து போன பாதையில் விழுந்த நம் வீரதீரத்தால், நேரிட்ட மாற்றங்களால் நமக்குள் புது விதைகள் பல நன்மையையும் தீமையுமாய் இரைக்கப் பட்டுவிட்டது.  ஆனால்; அவைகளிலிருந்தெல்லாம் விலகி நின்று நாம் யார்? எப்படி வாழ்ந்தவர்கள்? எங்கு நிற்கிறோம்? இனி எப்படி வாழப் போகிறோம் என்று சிந்திக்க வேண்டிய பிறப்பு நம் தமிழர் பிறப்பில்லையா?  270  வருடதிற்கும் மேலாக நம்மை முழுமையாய் அடிமை படுத்தி ஆண்ட வெள்ளைக் காரானிலிருந்து எல்லோருக்குமே சென்னைன்னா ஒரு வசதியான துறைமுகம் மட்டிமில்லாம  தமிழ்நாடுன்னா வரப் போக வெல்லம் சாப்பிட்ட மாதிரியாச்சே!! இவுங்களுக்கு மத்தியிலெல்லாம் நம்ம பண்பும் வாழ்க்கை முறையும் பேச்சு வழக்கும் சற்று மாறத் தானே செய்யும், ஆனால் முற்றும் மாறிவிடுவது தவறில்லையா??? இதுல சமஸ்கிருத கலப்பு, வடமொழி திணிப்பு, ஆங்கில ஆசைன்னு நம்மள சற்று ஒழுங்கும்; நிறைய நாசமும் பண்ணின சக்திகள் நம்மை கடந்து போகவில்லை, தமிழினத்தை தந்திரமாய் மிதித்துப் போயிருக்கிறது.. இதுல வேற தெலுங்கு, சவ்ராஸ்ட்ரம், மலையாளம்னு எல்லாம் சேர்த்துக் குழப்பி நம்முடைய அடையாளத்தையே நாம மெல்ல மெல்ல நமக்கேத் தெரியாமல் தொலைப்பதுபோல் செய்ய; நம் மொழி, பண்பாடு, கலாச்சாரம், வாழ்வின் தேவை, தேடுதல்கள் என எல்லாவற்றிலுமே முறைகேடான மாற்றத்தை சந்திக்கும் நிலைக்கு நாம் ஆட்பட்டுப் போனோம். என்ன ஒன்னு, என்னதான் யார் வந்து யார் போனாலும் கடைசியா எப்படியோ தமிழர்கள் வாழும் பகுதியென;  தமிழ்நாடுன்னு ஒரு பேரு மட்டுமே நமக்குன்னு மிச்சப் பட்டிருக்கு. ஆனால், அதற்கு வைக்கப்பபட்ட பெயர் பலகைகள் கூட ஆங்காங்கே ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருக்கிறதே; அதை பற்றியேனும் நாம் சிந்திக்கவேண்டாமா??!!! “நம் இனத்தைப் பற்றி சிந்திக்க இவ்வளவு தகவல்களை வைத்துக் கொண்டு வெறும் டிக்கெட் மட்டும், இல்லை இல்லை பயணச் சீட்டினை மட்டும் போட்டுக் கொடுத்துக் காலத்தை கழித்து விட்டேனே சத்யா? சரிப்பா; வேற யாராவது வரதுக்கு முன்ன “ஸ்ரீலங்கா பத்தி சொல்லேன், வேற கஸ்டமர் யாராவது வந்துடப் போறாக..” “வேறென்னண்ணே, நாம வாழ்ந்த மண்ணு, அதில்லாம நாம் வியர்வை சிந்தி உருவாக்கின மண்ணு, அதை நாம தான் காக்க வேணும், அதுக்கு என்ன வழின்னு பார்க்கணும்” “அதென்ன உருவாக்கின மண்ணு? “ “ம்ம்.., அங்கே நாம் உருவாக்கின மண்ணும் இடங்களும் கூட உண்டுண்ணே. அது நாம் வாழ்ந்த இடம் என்பதில்லாம காட்டினை அழித்து உருவாக்கின உழைப்பும் அந்த மண்ணில் உண்டுண்ணே.., இந்த நூற்றாண்டுல சுதந்திரம் வேண்டி ரத்தம் சிந்தினோம், இதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் ரத்தத்தை வியர்வையாய், உயிராய் – விட்டு ஊர் அமைத்து, விவசாயம் செய்துக் கொடுத்தோம். எல்லாவற்றையுமே செய்தோம்; இழந்தோம்; இழந்ததை எவனோ அனுபவிக்க, தமிழர் ஏமாளியாயினர்” “அதை பத்தி சொல்லுங்களேன்…?     பகுதி – 8 “பிரிட்டீஷ்காரனுங்க எப்பவுமே ஒரு இடத்தோட வாழ்ந்தோமா இருந்தோமான்னு போக மாட்டானுங்க. அப்பல்லாம், நாடு புடிக்க அலையிறதே அவனுங்களுக்கு வேலை. அதில்லாம, அவனுங்க நாட்டுல தப்பு பண்ணினா(ல்), தண்டிக்க அமெரிக்கா என்கிற குடியேற்றப் பகுதியில் போட்டு தண்டிக்கிறது தான் அப்போதைய அவனுங்க வழக்கமா இருந்துது”  “அமெரிக்காவுல போட்டா!!!?” “ஆமாம், அமெரிக்காவுல தான்” “அமெரிக்காவுக்கும் கதை இருக்கா?” “நம்ம தெருவுக்கு பேரு ‘முனியப்பன் தெரு’வுன்னு வைத்ததற்குக் கூட ஒரு கதை இருக்கும். நாம் தான் ஆராய்வதுமில்லை. வரலாற்றை ஆராய்ந்து தேடி படித்து நம்மை நாம் முழுமையாய் தெரிந்துக் கொள்வதுமில்லை” “சரி அமெரிக்கா பெரிய கதையா? உன் கூட பேசி பேசி நேரம் போனதே தெரியலையேப்பா” இருவரும் பேசி பேசியே மதியம் வரை கடந்திருந்தார்கள். நடுவில் மேகநாதனிடம் நாளை சத்யா புறப்படுவதற்கான விமானப் பயணச் சீட்டு கொண்டுவந்து கொடுக்கப் பட்டது.  இருவரும் பேசிக் கொண்டே நடந்துச் சென்று அருகாமையில் உணவகம் ஒன்றில் உணவுண்டார்கள். சாப்பிட்டுவிட்டு வந்து மீண்டும் அதே அறையில் ஏசி சரியாக பணி செய்யவில்லை என்று திட்டிக் கொண்டே மின்விசிறியின் வேகத்தினை அதிகப் படுத்திக் கொண்டு அமர்ந்துக் கொண்டார்கள். சத்யா அமெரிக்கா பற்றி சொல்லத் துவங்கினான். “அது ஒரு உருவாக்கப்பட்டு பின் விரிவு படுத்தப்பட்ட ஐம்பது மாநிலங்களின்  கூட்டணி தேசம்ண்ணே. முதலில், நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் பன்னிரெண்டாயிரம் ஆசிய மக்கள் சென்று வாழ்ந்த இடம் அது. பின் பல நாட்டு மக்களின் குடியேற்றத்திற்கு  பிறகு, ஜெர்மனியின் வரைபட நிபுணரான மார்டின் வால்ட்ஸ்முல்லர் என்பவரால்; மேற்கத்திய அரைக்கோள நிலப்பகுதிக்கு ‘இத்தாலிய ஆய்வுப் பயணியாக வந்தவரும், வரைபட நிபுணருமான அமெரிக்கோ வெஸ்புகியின்‘ பெயரில் அமெரிக்கோ எனப்பட்டது சற்று மருவி “அமெரிக்கா” வானது. பிறகு அது வளர்ந்து பெரிய அமெரிக்கக் கண்டமாக அறிவிக்கப்பட்டது என்பதெல்லாம் வேறு நிறைய பெரிய கதை.  இருப்பினும், அப்போதைக்கு அங்கே, குறைந்தளவே மக்கள் வாழ்ந்து வர, அவர்களோடு மேலும், ஐம்பதாயிரம் குற்றவாளிகளை தண்டிப்பதற்காக, பிரிட்டீஷிலிருந்து கொண்டுபோய் அமெரிக்காவில் சிறைவைத்து, அவ்விடத்தினை ஒரு தவறு செய்பவர்களை நாடுகடத்தித் தண்டிக்கப் பயன்படுத்தும் அடிமைகளின் இடமாகவே வைத்திருந்தார்கள் பிரிட்டீஷ் காரர்கள். அதேப் போல இந்தியாவுல தப்பு பண்ணா தண்டிக்கவும், தண்டிக்கையில யாருமே வந்து என்னன்னு கேட்காத மாதிரியும் ஓரிடம் தேவைப் பட்டதாகக் கருதி பிரிட்டீசாரால் தேர்ந்தெடுக்கப் பட்ட தீவு தான் அந்தமான்” “அதுசரி, அப்போ அப்படி தான் அந்தமான் வந்துதா” “அப்படி பயன்படுத்தப் பட்டது” “அமெரிக்கா கூட அவர்கள் உருவாக்கியது தானா? “அவர்கள் உருவாக்கியது கிடையாது, பிரித்தானியர்களால் நாடுகடத்தப் பட்ட குற்றவாளிகள் அங்கே விடப்பட்டு, அடிமைகளாக வைத்து ஆளப் பட்ட இடம். பின் பல குடியேற்றங்களுக்குப் பிறகு; தன்னை ‘அமெரிக்க ஐக்கிய நாடுகள்’ என்று தன் ஒற்றுமையாலும், உழைப்பாலும், முன்னேற்றத்தாலும் அறிவித்துக் கொள்ளுமளவிற்கு வளந்துப் போனது அமெரிக்கா” “ஓ… ஹோ…” “அந்த உத்தியில தான் பெரிய பெரிய குற்றவாளிகளை யெல்லாம் இன்றும் அந்தமான் ஜெயிலுக்கு மாத்துவாங்க. இந்த அந்தமான் பிரித்தானியர்களால் எப்படி இதற்கென கவரப் பட்டதோ; அது போல் அவனை துறைமுகம் சார்ந்தும், அழகு சார்ந்தும், மிகவும் கவர்ந்த இடம் தான் ‘திரிகோணமலைப் பகுதியாகும். இந்த திரிகோணமலை நம்ம பாரம்பரியத் தமிழர் வாழ்ந்த  பகுதியில் ஒன்று.  உலகின் நிறைய நாடுகளை, தனக்கு கீழாக வைத்திருந்த பிரிட்டீசாரின் பல நாடுகளுக்கு மத்தியில்; இந்தியா ஒரு சிம்ம சொப்பனமாக இருந்தது வெள்ளையனுக்கு. எனவே,  எங்க இலங்கையை சும்மாவிட்டா அது வழியா வந்து பிரெஞ்சு காரங்க இந்தியாவை கைப்பற்றுவாங்களோன்னு பயந்து டச்சுக் காரர்களிடமிருந்த இலங்கையையும் அவனே பிடித்துக் கொண்டான். அதற்கு மிக முக்கிய காரணமாக; இலங்கையில் இருந்த அந்த திரிகோணமலை துறைமுகமும், அந்த திரிகோணமலை ஒரு பூலோக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையப் பெற்றதுமாக இருந்தது. பின் கண்டி மலை நாட்டைக் கையகப்படுத்தி இலங்கையை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்து, மொத்த இலங்கையையே முழுதாகப் பிடித்து ஆளத் துவங்கினான். அவனை பொறுத்த வரை இலங்கை வேறில்லை, இந்தியா வேறில்லை, எல்லாம் தனக்குக் கீழான அடிமை தேசங்கள், அவ்வளவு தான்.  அப்பவும், தமிழன் ஒரு புறம், சிங்களர் ஒரு புறம்னு வாழ்ந்து வந்த நிலையில்; இலங்கை முழுதும் ஆளத்தொடங்கிய வெள்ளையன், அவனுக்கு சாதகமா எல்லோரையும் ஒரு ஆட்சியின்கீழ் கொண்டுவருவதாயெண்ணி ஒட்டுமொத்த தமிழர் மற்றும் சிங்களர் வாழ்ந்த பகுதிகளையும் சேர்த்து சிங்களதேசம்னு அறிவித்துவிட்டுப் போயிட்டான். அவன் (வெள்ளையன்) ஆடிய ஆட்டமும்பாட்டமும் கொஞ்சம் நஞ்சமல்ல. அதை தாங்கயிலாமால் ‘எப்படியேனும் அவன் கொட்டத்திலிருந்து, அவன் செய்யும் கொடுமைகளிலிருந்து விடுபடல் ஒன்றே போதுமென்று எண்ணிய தமிழ் மக்களும்; சிங்களன் இத்தனை பெரிய கொடுங்கோளனாக வருவான் என்று எள்ளளவும் எண்ணாது வெள்ளையனிடமிருந்து விடுதலை ஒன்று கிடைத்தால் போதுமென்றே காத்திருந்து; பின் கிடைத்த விடுதலையை சிங்களனிடம் தொலைக்க வேண்டியதாகிப் போனதெல்லாம் காலம் செய்த கோலத்தின் எழுதாவிதியாகிவிட்டதென்பது ‘நாம் நாணப் படவேண்டிய விடயத்தில் ஒன்று. இதற்கு முன்னதாக, தன் ராஜ்யத்தின் கீழுள்ள இந்திய மக்கள்வேறு (இருப்பதையெல்லாம் வந்தேறிகள் சூறையாடிக் கொண்டதால்) ஆங்காங்கே வருமையில் கிடப்பதாய் எண்ணி, அதையெடுத்து இங்கே விட்டலாவது நல்ல வேலைப் பார்க்க ஆளாகுமே என்று கணக்கிட்டு; 1827 ஆம் ஆண்டு ‘எட்வட் பர்ன்ஸ்’ற ஆங்கில கவர்னர் ஒருவனால், கண்டி மலைப் பிரதேசத்தில் காபித் தோட்டங்களை நிர்மாணித்து; அவற்றில் வேலை செய்வதற்காக சென்னை மாகாணத்தில் இருந்து 300 தொழிலாளர்கள் வரவழைக்கப் பட்டார்கள். இந்த எண்ணிக்கை தான் காலப் போக்கில் பல மடங்காகப் பெருகிப் போனது. காரணம், அவர்களின்  உழைப்பில் திகைத்துப் போய் வாயடைந்துப் போன வெள்ளைக்காரன் பிறகு பாலம் கட்டுவதிலிருந்து, சாலை அமைப்பது வரைக்கும்; நம்ம தமிழரை வைத்துத் தான் செய்திருக்கிறான். அதோடு விட்டானான்னா; அதுவும் இல்லைன்னு தான் சொல்லுது வரலாறு”  “அதுசரி..” அவர் புதிதாக கேட்கும் கதைபோல கேட்டுக் கொண்டிருந்தார். “முதலில் காப்பி தோட்டம் அமைத்து, பிறகு; காபிக்கு பூச்சி பிடிக்கும் ஆபத்து வருவதைக் கண்டு, காப்பி தோட்டத்தினை அப்படியே கைவிட்டுவிட்டு தேயிலை தொழிலை ஆரம்பித்து, அதை விருத்தி செய்ய இன்னொரு புறம் மீண்டும் தமிழர்களை போட்டுக் குவித்து, அடர்ந்து பயங்கரமாக வளர்ந்திருந்த காடுகளையெல்லாம் அழித்து, அழகான பசுமை பிரதேசங்களாக உருவாக்கின, தமிழர்களால உருவான, தமிழனின் ரத்தம் அன்றே வியர்வையாய் சிந்தி ஊறிய மண் அது ஈழம்” “எந்த வருசத்துல.. தம்பி” “வருசம்லாம் சொன்னா நிறைய சொல்லனும்ணே” “தெரிஞ்சா சும்மா சொல்லுங்களேன், கேட்டு வைப்போமே” “எனக்கு தெரிந்த வரையும், படித்தது வரையும் சொல்றேன், மீதியை நீங்கதான் ஆராய்ந்து சரிபார்த்துக் கொள்ளனும் சரியா..” “எண்ணத்த பாக்க, அதான் இவ்வளோ விவரமா சொல்லுதியலே, விவரமா தானே படிச்சிருப்பிய, சும்மா சொல்லுங்க” “கி.மூ 500க்கும் முன்னால் விஜயன்ற இளவரசன் நடத்தைக் கேடு காரணமாக தனது பதினெட்டாவது வயதில் நாடு கடத்தப்பட்டு, எழுநூறு பேரோட இலங்கையின் தம்பலகாமத்திற்கு வந்திருக்கிறான். (அவ்விடம் தங்கப்ப்பண்ணி என்றும் கூறப்படுகிறது. (இப்போதய அமைப்பு படி அவ்விடங்கள் மன்னார், நேகோம்போ, புத்தளம் என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்)  அங்கனம் வந்தவன், அங்கு வசித்துவந்த இயக்கர் இனத்தின் தலைவியான குவேனியை மனம் முடித்து அவ்விடத்தின் தலைவனாகி, பிறகு பதினைந்து வருடம் கழித்து பாண்டிய மன்னனின் இளவரசியை மணந்து இலங்கையின் மன்னனாக விளங்கியதாக மகாவம்சமும் சில வரலாற்று குறிப்புகளும் கூறுகின்றன. . அவன் அங்கு மன்னனானதோடு அல்லாமல் அவனோடு வந்து குடியேறிய எழுநூறு பேரும், அங்கு வசித்துவந்த தமிழ் பெண்களையே மணம் முடித்து, பிறகு அவர்களால் ஒரு கலப்பு சமூகம் உருவாகி, வளர்ந்து, அவ்வம்சாவழிகளால் புத்தம் பரப்பப் பட்டு, சிங்களம் உருவாக்கினதா சிங்கள ஆசிரியர்களே சொல்வதுண்டு. பாளி மொழி பேசும் மகாவம்சத்தினருக்கு புத்தம் பரப்ப வேண்டி இங்ஙனம் ஒரு தனி இனம் தேவைப்பட, அவர்களின் ஆதரவின் பெயரில் தமிழர்களிடமிருந்தே தனித்த ஒரு இனமாக சிங்களர்கள் அடையாளப் படுத்தப்பட்டு மேன்மைபடுத்தவும் பட்டனர். அப்போதைய தேச அமைப்பு படி, மகத நாடும், கலிங்க நாடும் அருகாமை தேசங்கள். மாகத நாடு என்பது வங்கத்து ஒரு பகுதியை சேர்த்து பீகாரோடு அமைந்திருந்த இந்தியாவின் பல சிறப்புக்களைக் கொண்ட ஒரு பெரிய தேசமாகும்.  கலிங்க நாடு என்பது, ஒரிஸ்ஸா மற்றும் ஆந்திராவோடு சேர்ந்து வடக்குத் தெற்காக சுபர்ணரேகா நதியிலிருந்து கோதாவரி வரையிலும், கிழக்கு மேற்காக வங்காள விரிகுடாவிலிருந்து அமர்கந்தாக் மலைத் தொடர் வரையும் பரந்திருந்த வளம் பொருந்திய தேசமாகும். அதுமட்டுமின்றி வலிமை மிக்க கடற்படை கொண்ட பேரரசாக விளங்கிய இந்தப் பேரரசின் கப்பல்கள் இலங்கை, பர்மா, தாய்லாந்து, வியட்நாம், போர்னியோ, பாலி, சுமாத்திரா மற்றும் ஜாவா ஆகிய நாடுகள் வரை பயணம் செய்து வணிகத்தில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப் படுகிறது.  இதன் மூலமாக சிலர் விஜயன், வங்கத்தை சேர்ந்தவன் என்றும் சிலர் ஒரிசாவை சேர்ந்தவன் என்றும் சிலர் வேறு சிலவாறும் சொல்வதுண்டு. ஆனால், உண்மையில் நடந்ததாக மகாவம்சம் விஜயன் பற்றிய வரலாற்றுக் கதை ஒன்றினை கூறுகிறது.  அது, வங்கதேசத்து மன்னன் ‘வங்கா‘ என்பவன் கலிங்கதேசத்தின் மன்னனின் மகளை மணந்ததாகவும்,  அவனுக்குப் பிறந்த சுபதேவி உலகமகா அழகும் அதேநேரம் காமரசமும் கொண்டவளென்றும், அவள் விதியின் வசப்படி சிங்கத்துடன் சேர்ந்து”  “சிங்கத்துடனா?????!!!” “இவ்வளவு பெரிய ஆச்சர்ய குறி போட்டால் பின் அதன் கிளை கதைகள் நீண்டு போகும் பிறகு நேரம் பத்தாதாது” “இல்லை இது கதையா ? அல்லது நடந்த வரலாறா?” “இப்படி கேட்டால் நானும் பதில் சொல்ல இயலாது. இப்படி நடந்ததாக சிங்கள வரலாற்று நூல் ஒன்று தெரிவிக்கிறதாம். அதாவது, சிங்கள வரலாறு தேடித் போனாள், கடைசியில் அவர்கள் மதிக்கும் பாளிமொழி வரலாறே இக்கதையினை தான் சொல்கிறது. ஆக, இந்த வங்க மன்னனுக்கு ஏற்கனவே சுபதேவி பிறந்த போதே ஜோதிடர்கள் கணித்து நம் தேசத்தின் வரலாற்றில் இப்படி ஒரு சோகம் இருக்கிறதென்று சொல்லி விடுகிறார்களாம். அதாவது, இக்குழந்தை மிக அழகாகவும் அதே நேரம் காமவிரோதங்கள் ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும் என்றுக் கூற, அன்றே அதிர்ச்சியான மன்னர், அவள் பிறந்த பிறகு நிறைய கட்டுப்பாடுகளை விதித்து எத்தனை தான் அடக்கி வளர்த்தாலும், அவள் ஒரு ஆண் பிறப்பினைப் போல தன்னை ஒரு வீரனாக அடையாளம் காட்டிக் கொள்பவளாகவும் அவள் விருப்பத்திற்கு இருப்பவளுமாகவே வளர்ந்து வருகிறாள். இதை விரும்பாத மன்னன் அவளை ஒரு ஒதுக்கு புறமான ஒரு காட்டுப் பகுதிக்கு அனுப்பி வைக்க -  அங்கே, ஓர்தினம் எதிரி நாட்டிலிருந்து தன் நாடு பிடிக்க வருபவர்களை மடக்கி சண்டையிடப் போகும் வீரர்கள் அணிவகுத்துச் செல்வதைப் பார்க்கிறாள். ஆர்வத்தில் தானும் அவர்களோடு தன்னை இன்னாரென்று காட்டிக் கொள்ளாமல் கலந்துக் கொள்கிறாள். அப்படி கலந்து எல்லோருமாய் எதிரி படையினை நோக்கிப் போகும் வழியில், ‘ஒரு பெரிய காட்டுச்சிங்கமொன்று அவர்களை வழிமடக்கி கொள்ளப்பார்க்கிறது. அத்தனைப் பேரும் அந்த சிங்கத்தினைப் பார்த்து அஞ்சி ஒதுங்க, சுபதேவி அந்த சிங்கத்தோடு சண்டையிட்டு, சிங்கத்தை தன் வீரத்தால் மட்டுமின்றி அழகு ஒளிவீசும் பெண்வாசத்தாலும் அடக்கி தன்வசப் படுத்தி போர்வீரர்களை அதனிடமிருந்து விடுவிக்கிறாள். அவளோடு ஒன்றிப் போன சிங்கமானது காம உணர்வுக் கொள்ள, இவளும் காமுற்று, பின் அந்த சிங்கத்தோடு சேர்ந்து நெருங்கி கருவுற்றும்போக, அவளுக்கு சிங்கபாபு மற்றும் சிங்கஷிவாளி என்று இரண்டு ஆண்பெண் குழந்தைகள் பிறக்கிறார்கள். அதன் பின், சிறிதுகாலம் ‘சிங்க அடையாளம் கொண்ட அந்தக் குழந்தைகளுடனே அவளும் சேர்ந்து வாழ்ந்து, அங்கிருந்த ஒரு குகைக்குள்ளேயே அவர்கள் காலத்தைக் கழிக்கிறார்கள். ஆனால் சிங்க மற்றும் மனித உடலமைப்புக் கொண்ட அக்குழந்தைகள் இரண்டும் வளர்ந்து பிற சிங்கங்களின் தொல்லைக்கு ஆட்பட, சுபதேவி அவர்களை அந்த குகையிலிருந்து அழைத்துக் கொண்டு வேறு ஒரு தனி இடத்திற்கு நகர்கிறாள். பின் அங்கிருந்து மீண்டும் மாறி வேறொரு சிற்றூருக்கு குடி பெயர்ந்து கொஞ்ச காலம் வாழ்கிறாள். இப்படி இடத்திற்கு இடம் மாறி, சிறிது சிறிதாக நகர்ந்து கடைசியாக ஓரிடத்தில் ஒரு முறையான வாழ்விடத்தினை அமைக்கிறார்கள். அவ்வாறான ஓர் சமயம், சிங்கபாபு தன் தந்தையை கொன்றுவிட்டு தங்கை சிங்கஷிவாளியை மணக்கிறான். அப்படி அவளோடு அவன் வாழ்ந்து பின்னால் விருத்தி செய்யப்பட்ட இடம்தான் சிங்கூர் என்றும் சிங் பூர் என்றும் விளங்கி பின் சிங்கப்பூர் ஆனது. (அதாவது சிங்கம் வாழ்ந்த இடம் என்பது அர்த்தம்)  சிங்கஷிவாளிக்கு இரண்டு இரட்டையர்கள் பிறக்கிறார்கள். அவர்களில் மூத்தவன் விஜயன். இளையவன் சுமித்தா. மூத்தவனான விஜயன் பேய்களிடம் தொடர்பு கொண்டவனாகவும் ஏக அட்டகாசங்கள் செய்பவனாகவும் இருக்க, அதை பொருக்க இயலாத மன்னன் சிங்கபாபுவால் அவனும் அவனோடு சேர்ந்து ஏழுநூறு பேர் கொண்ட படையுமாக நாடு கடத்தப் படுகிறார்கள். ஆக, வங்கத்து தேசத்தின் ஒரு பகுதி மகத நாட்டோடு சேர்ந்திருந்தமையாலும், மகத நாடென்பது இப்போதைய பீகார் மாநிலம் என்பதாலும், கலிங்கம் ஒரிசாவை உள்ளடக்கியதாலும், களிங்கத்து இளவரசி வழியாக வந்த வம்சத்தை சேர்ந்தவன் என்பதாலும், விஜயனை சிலர் பிகாரிலிருந்து வந்தானென்றும், சிலர் ஒரிஸ்ஸாவிலிருந்து வந்தானென்றும், சிலர் வங்கத்து இளவரசன் விஜயனென்றும் வேறு வேறாக கூறுவதுண்டு” சத்யா மேகனாதனுக்குக் கதைசொல்லி நிறுத்த - “ஆக இலங்கையை பிடித்துக் கொண்டு இது என் நாடு, எனது மண்; என்று சொல்லும் சிங்களர்கள் வந்தேறி குடிகள் தான் இல்லையா சத்யா?” “அதிலென்னண்ணே சந்தேகம். அப்படி வந்தவர்கள் தானே இப்போ நம்மை ஆள்கிறார்கள். அதை சற்று விரிவாக பிறகு பேசுவோம். ஆகமொத்தம், விஜயன்ற மன்னன் நம்ம மண்ணில் வந்து கி.மு 543-இல் துவங்கி கி.மு 504 வரை, கிட்டத்தட்ட 38 ஆண்டுகள் நிறைவாக ஆட்சி செய்ததாக மகாவம்சம் கூறுகின்றது.  அதற்குப் பிறகு, அசோகச் சக்ரவர்தியின் மகன் மகிந்தன் எனும் மகிந்த தேரரும் அவனுக்குப் பின்  வந்த அவனின் சகோதரி சங்கமித்தையும் சேர்ந்து புத்தம் பரப்பினதாவும், அவர்களுக்கு முன்னரே அங்கு நாகர் இயக்கர்னு நான் முன்னம் சொன்னதுபோல நம்ம இனமக்கள் அங்கே வாழ்ந்ததாவும் தான் வரலாறு இருக்கு. அதுக்கப்புறமும் கூட நம்ம எல்லாளன் கி.மு 145 இல் இருந்து கி.மு 101 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை  44  வருடம் ஆண்டிருக்கிறார்”  “சரி, எல்லாம் சரி தான், ஆனால் கதைய மாத்தீட்டீங்களே!!! முதல்ல வெள்ளைக் காரன் ஆட்சியில தமிழர் சென்னையிலிருந்து போய் அங்கே காடழித்து ஊர் வளர்த்தார்கள் என்று சொன்னீங்களே!!!  அதை முழுசா சொல்லலியே?” “அதலாம் பெரிய கொடுமைண்ணே. இந்தியாவானாலும் சரி இலங்கையானாலும் சரி இரண்டுமே பிரிட்டீஷாரின் கீழிருந்த காரணத்தினால் எங்கும் எல்லோருமே அடிமைகள் தானே எனும் வருத்தம் எல்லோருக்குமே இருந்தது. யாரையும் யாரும் பிரித்துப் பார்த்துக் கொள்ளவில்லை. அனைவரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் குடிமக்கள் எனபதை மட்டுமே கருத்தில் கொண்டு இந்தியாவிலிருந்து கண்டிக்குப் புறப்பட்டனர். யாரும் செல்லவே இயலாத அடர்காடுகளுக்கு இம்மக்கள் அனுப்பப்பட்டு தன் ரத்தத்தை வியர்வையாக்கி இலங்கையின் பிற்கால ஏற்றுமதி உற்பத்திக்கு தன் உயிரையும் உழைப்பினையும் முதலாக இட்டனர். அவர்களால் செழுமை படுத்தப் பட்ட அந்நிலமே பின்னர் அழகிய மலையகமானது. அதற்கென அவர்கள் கொடுத்த உயிர்களின் என்னிக்கை கணக்கிலடங்காதவை என்கிறது வரலாறு. 1926-இல் மட்டும் மலையகம் வந்தவர்களில் நூற்றில் நாற்பது சதவிகிதத்தினர் அங்கு இறந்துபோனதாகவும், 1841-ற்கும் 1849 -ற்கும் இடையில் எழுபதாயிரம் பேர், அதாவது 25 சதவிகிதத்தினர் இறந்துப் போனதாகவும் பத்திரிகை செய்தியொன்றினால் சொல்லப் படுகிறது. அதன் பொருட்டே; 1837 – இல் 4,000 ஏக்கராக இருந்த காபித் தோட்டத்தின் பரப்பு 1881 இல் 2,56,000 ஏக்கராக வளர்ச்சி கண்டுள்ளது. பின், 1860 இல் தேயிலை பயிரிடுதல் அறிமுகப்படுத்தப்பட்டு 1870-இல் பூச்சிகள் தாக்கி காபிச் செடிகளெல்லாம் சேதமானதை கருத்தில்கொண்டு அவைகளெல்லாம் தேயிலை தோட்டங்களாக மாற்றப் பட்டன. அதன் பொருட்டு 1917 இல் தேயிலை உற்பத்தி 4,26,000 ஏக்கராக ஏற்றம் கண்டது.  இப்படி இன்றைய இலங்கையின் முதன்மை உற்பத்தி தொழிலான தேயிலை உற்பத்திக்கு அடி உரமாக தமழரின் உயிரும், பாலம் கட்டுதல், இருப்புப்பாதை மற்றும் சாலைகள் அமைத்தல் என வியர்வை சொட்டுமிடமெல்லாம் உடன் தமிழரின் ரத்தம் சொட்டப் பட்டும்; உருவான ஒரு மண்ணில் இன்று சொந்த ஒரு வீட்டிற்கு கூட இடமின்றி, போதிய சுதந்திரத்தோடு வாழ தகுதியற்றுப் போனான் தமிழன் எனில்; சொல்பவரை திருப்பி யடிக்க மாட்டானா தமிழன்???? சொட்டு சொட்டாக உயிரை விட்டு விட்டு காத்து வந்த மண்ணில் தனக்கு உரிமையில்லை என்றால், ‘இல்லையென்றவனை எட்டிச் சுடமாட்டானா தமிழன்??? உலகிற்கு நாகரீகம் போதித்து; வாழ்விற்கு அர்த்தம் சொல்லிக் கொடுத்து, ஆயிரமாயிரம் ஆண்டுக்கு முன்னரே கொடி பறக்க வாழ்ந்த இனத்தை பின்னால் வந்தவன் வெளியேறு என்றால்; வெளியேறி விடலாமா தமிழன்?” அவன் ஆத்திரம் பொங்கக் கேட்கிறான். சத்தியாவின் கேள்வியில் எழும் கோபத்திற்கு பதிலற்ற இவ்வுலகின் ஊமைப் பார்வையின் வழியே மேகநாதனும் அமைதியாய் அவனையே பார்க்க; கொடுங்கோபம் வந்தவனாய் தன் சட்டையினை வெடுக்கென தன்னிரு கைகளால் பிய்த்தெரிந்து மார்பை காட்டி பார்த்தியா!! பார்த்தியா!! என்று மார்புகளைக் காட்டிக் கத்த, மார்பில் ‘ஈழம் எம் மூச்சு, ஈழம் எம் தேசம், ஈழம் எம் லட்சியம்’ என்று பச்சை குத்தி எழுதப் பட்டிருந்தது. மேகநாதன், சற்று அதிர்ச்சியுற்றவராகப் பார்க்க, சடாரென நான்கு பேர் அந்த அறைக்குள் நுழைந்து  மேகனாதனை நோக்கிப் பாய, சத்தியன் சிரித்துக் கொண்டே தன் மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு அங்கிருந்த மேசையின் மீதேறி அமர்ந்து ஹா ஹா என்று கொக்கரித்து அரக்கத் தனமாக சிரிக்க, அந்த நான்கு பேரில் இரண்டு பேர் உடனே பாய்ந்து மேகநாதனைப் பிடித்து ஜன்னல் கம்பிகளினூடாக கயிறு போட்டுக் கட்டிவிட, மற்ற இரண்டு பேர் எகுறி பாய்ந்து மேகநாதனை சதக் சதக்கென கத்தியினால் குத்தி ரத்தசகதியாக்க, சத்தியன் வானமே அதிரும் அளவிற்கு மீண்டும் சிரிக்கத் துவங்கினான்….       பகுதி – 9 சடாரான ஏதோ வந்து மேல் விழுந்தது போலிருந்தது. கண்களை திடுக்கிட்டுத் திறந்தால் அம்மாவின் கையை விட்டுவிட்டு ஓடிவந்த குழந்தையொன்று என் மீது விழுந்து எழுந்து மன்னித்துக் கொள்ளுங்கள் அங்கிள் என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு ஓடியது. ஒரு நொடி எனக்கு எங்கிருக்கிறேன் என்னானது என்று ஒன்றுமே புரியவில்லை. பின் ஓரிரு வினாடிகள் போனபின் என்னை நானே ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். விமான நிலையத்திலிருப்பதையும் யோசித்துக் கொண்டே கண்ணயர்ந்துப் போனதையும் கொஞ்சம் கொஞ்சமாய் நினைவுறுத்திக் கொண்டேன். மேகனாதனுடன் பேசியதை நினைவுற்றுக் கொண்டே உறங்கியதால் கனவு வேறு வந்துவிட, கனவிற்கிடையே அந்த குழந்தை வந்து இடித்துவிட்டதால் அதிர்ந்தெழுந்துத் திரும்பினேன். இப்பொழுது அந்த பாப்பா சற்று தூரம் சென்றும் திரும்பிப் பார்த்து சிரித்துக்கொண்டே போனது. அதை பார்த்துக் கையசைத்துவிட்டு தலையில் கைவைத்து அமர்ந்துக் கொண்டேன். “ச்ச… ஏதேதோ யோசித்துக் கொண்டே உறங்கிப் போனேனா… கடைசியில். கனவு வேறு கண்டிருகிறேன், அதும் பாவம் மேகநாதன் அண்ணன் என் கண்ணெதிரிலேயே கத்தியால் ‘சதக் ‘சதக்கென்று  குத்தப் பட்டதுபோல் கனவு!! என்ன மனிதன் நான், இதைப் பார்த்துக் கொண்டு சிரிக்க வேறு செய்கிறேன். என்னாலேயே என்னை புரிந்துக் கொள்ள முடியவில்லை. எனை தாண்டி எப்படி கனவு வரும்; ஏதோ அவர் மீதான கோபம் உள்ளூர இன்னும் இருந்துக் கொண்டிருப்பதன்றி வேறில்லை. ஏன் நாமெல்லாம் இப்படி இருக்கிறோம்? முழுமையாய் மன்னிக்கும் மனோபாவமே மனிதரான நம்மிடத்திலில்லையா? ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மிருகத்தை வைத்துக் கொண்டுதான் திரிகிறோமா நாமெல்லோரும்? எண்ணற்ற கேள்விகள் எனக்குள் எழ, என் கேள்விகளால் நானே வருந்தினேன். மேகநாதண்ணன் பாவம், எத்தனை பரிவு காட்டினார் கடைசியில், ச்ச, இப்படி செய்தே இருக்கக் கூடாது நான். இருந்தாலும் எப்பொழுது தூங்கினேன்; எப்போது கனவு வந்ததென்றே விளங்கிக் கொள்ள முடியவில்லை என்னால்.  ஆழ்ந்து யோசித்தத்தில் எனையறியாது சோர்ந்து தூங்கிவிட்டேன் போல். உண்மையில் மேகநாதண்ணன் ஆரம்பத்தில் அத்தனை அர்த்தமற்று பேசினாலும் அவரை விட்டுப் பிரிகையில். பிரியா விடை பெற்றேன் என்று சொன்னாலே தகும். ஏனெனில் ஈழம் பற்றி கடைசியாக அவ்வளவு உருகினார் அவர், ஈழம் பற்றிய எந்த உதவி வேண்டுமாயினும் உடனே அழைக்கச் சொன்னார், அல்லது ஏதேனும் தமிழகத்தில் இருந்து செய்வது என்றாலும் பரவாயில்லை செய்யத் தயாரென்று சொல்லியனுப்பியதெல்லாம் நினைவிலேயே இருந்தது. அவரிடமிருந்து விடை கொள்கையில்; யாரோ ஒரு ஜீவனுக்குள் இருந்த விடுதலையின் தீயை மேலும் ஒரு சொட்டு எண்ணெய் ஊற்றி எரியவைத்ததாகவும், ஈழம் குறித்த விழிப்பினை; நாம் கொள்ளவேண்டிய அக்கறையினை நம் தமிழ்மண்ணின் மைந்தர் ஒருவருக்கு தன்னால் இயன்றவரை கொடுத்துவிட்டு வந்ததாகவும் ஒரு திருப்தி எனக்குள் இருந்தது. யோசித்துக் கொண்டேயிருக்கையில் திடீரென நேரமாயிருக்குமோ என்றொரு பதட்டம் வர கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்.. ஒரு மணி நேரத்திற்கு மேல் கழிந்து விட்டிருந்தது. மனதிற்குள் என்னவோ பல வருட வாழ்க்கையினை மூன்று மணிநேர திரைப்படத்தில் பார்த்துவிடுவதுபோல்.. நாளெல்லாம் நாங்கள் பேசி கழித்த பொழுதுகளெல்லாம் ஒரு மணி நேர ஓட்டத்தில் நினைவினை தொட்டு கடந்து போயிருந்தது. மேகநாதண்ணன் மற்றும் அவரை போல் ஈழத்தின் விடிவு குறித்து எந்த அக்கறையுமே இல்லாதவர்கள் பற்றியும், தன் வீடு, உறவுகள், குழந்தைகள், நாடு, இனத்தின் விடியல் என எல்லாம் குறித்தும் சிந்திக்க சிந்திக்க மனதிற்குள் ஏனோ மிக வெறுமை உணர்வே உண்டானது. மனதோடு சேர்ந்து சற்று உடலும் பாரமாக, வெகு நேரம் உட்கார்ந்தே உறங்கிவிட்டதால், கணவு போல நேரம் கடந்துவிட்டதால், உள்ளே ஏதோ ஒரு பதட்ட உணவெழ; எழுந்து நின்று கைகளை சோம்பல் முறித்தவனாய் இங்கும் அங்கும் திரும்பிப் பார்க்கிறேன். கைப் பையினை  இருக்கையின் மீது வைத்துவிட்டு, மடிக்கணினியை மட்டும் எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு, ‘கொழும்பு விமான நிலையத்தின் அடைக்கப் பட்ட கண்ணாடியோரம் நின்று; விமானங்களையும், விமானத்தை புறப்பட தயாராக்கிக் கொண்டிருக்கும் ஊழியர்களையும், உடன் சேர்ந்து பணி புரியும் பெண் தொழிலாளர்களையும், ஆணுக்குப் பெண் நிகராக பளு தூக்கி, குறிப்பெடுத்து, ஆண்களோடு சேர்ந்து நேசமோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் சிறப்பினையும் கண்டு எல்லாவற்றையும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டே வருகிறேன். ஒவ்வொரு விமானங்களையாக மாறி மாறிப் பார்ப்பது சற்றுத் தூரத்தில் இருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்த ஆர்மிக் காரர்களுக்கு எப்படித் தெரிந்ததோ என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. கூர்ந்து அவர்கள் என்னையே கவனிப்பது பக்கவாட்டில் தெரிந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் அவர்கள், விர்ரென எழுந்து, தேடிக் கொண்டிருந்த திருடன் ஒருவனை பிடித்துவிட்டது போல்; அவசரமாக தோளில் மாட்டியிருந்த துப்பாக்கியினை வெளியே எடுத்து சரி செய்துக் கொண்டே எனை நோக்கி ஓடி வந்தனர். நான் புகைப்படம் எடுப்பதை அவர்களுக்காக நிறுத்தவில்லை. அவர்கள் என்னருகில் வந்ததும் என்ன செய்கிறாய் என்றனர். சிரித்துக் கொண்டே மிக அழகான ஊர் உங்கள் ஊர் என்றேன். விமானங்களை ஏன் படம் எடுக்கிறாய் என்றார்கள். விமானம் தாண்டி பசுமை பூத்திருக்கும் ஊரைத் தானெடுத்தேன், விமானம் எங்கள் ஊரில் இதைவிட நிறைய நிற்கும் என்றேன். சற்று  முறைத்தவாறு “உன் பெயரென்ன? கேட்பதற்கு மட்டும் பதில் சொல்” என்றனர். சொன்னேன். எங்கிருந்து வருகிறாய் என்றனர், சொன்னேன். பிறகு எங்கே போகிறாய் என்ன செய்கிறாய் யாருடன் வந்தாய் போன்ற சாதாரண கேள்விகள் தான், என்றாலும், இடையே புகுந்த ஒரு கருங்காளி யொருவன் வெடுக்கென என் கையிலிருந்த புகைப்படப் பெட்டியை பிடுங்கிக் கொண்டு ‘என்ன வைத்திருக்கிறாய் பையில் என்றான், கணினி என்றேன். திற என்றான், திறந்தேன். அது என்ன என்றான்; மடிக் கணினி என்றேன். கணினியை மேலே எடு என்றான். எடுத்தேன். கீழே அடியில் தெரியுதே அது என்ன என்றான்.  போச்சுடா..!! என்று நினைத்துக் கொண்டேன். எனக்கு தூக்கிவாரி போட்டது.  அதொன்றும் இல்லை, எல்லாம் புத்தகங்கள் தான் என்றேன், அந்த புத்தகத்தை எடு என்று அடியிலிருந்து கொஞ்சம் மட்டும் தெரியும் ஒரு புத்தகத்தை காட்டினான். அவன் காட்டிய இடத்தில் எனக்கு வந்த எமன் போல அழகாக ஓரம் மட்டுமாய் தெரிந்துக் கொண்டிருந்தது அந்த புத்தகம். புத்தகத்தின் அட்டையில் கொட்டை எழுத்தில் ‘விடுதலையின் வேட்கை’ எனும் பெயர் பதிக்கப் பட்டிருக்க, பார்த்தாலே தெரிந்துவிடும் அது ஈழம் பற்றிய, ஈழப் போர் பற்றிய, ஈழத்தில் நடந்த அநீதிகள் பற்றிய கவிதைகளின் தொகுப்பென்று. அதை வெளியில் எடுத்தது தான் தாமதம், ஆர்மிக் காரர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதற்குள் ஒருவன் அதைப் பிடுங்கி இரண்டுப் பக்கம் தான் பிரித்தான்’ உள்ளே “அண்ணன் பிரபாகரனுக்கு சமர்ப்பணம்” என்றிருக்க முயலை காது பிடித்துத் தூக்கிப் போவார்களே; அதுபோல என்னை தூக்காத குறை தான்; ஒரு நிமிடத்தில் அவர்களின் தோற்றம் செயல் பார்வை பேச்சு என எல்லாமே மாறிப் போனது. ஒருத்தன் அடி என்றான், ஒருத்தன் பிடி என்றான், குத்திடுவேன் வெட்டிடுவேன்னு ஆளாளுக்கு குதிக்கிறானுங்க மாறி மாறி. நான் எதற்கும் துணிந்தவனாகவே சாதாரணமாக நின்றிருந்தேன். அதற்குள் ஒருவர் அமைதிப் பூனைப் போல வந்து என் தோளில் கைபோட்டு நேராக விமான நிலையக் காவல் துறையின் உயர் அதிகாரிகள் இருக்கும் அறைக்கு அழைத்துக் கொண்டு போனார். எல்லோரும் என் பின்னே கத்திக் கொண்டே ஓடிவந்து அந்த அறைக்குள் புகுந்தனர். வரும் வழியிலேயே வாக்கிடாக்கியில் யார் யாரையோ அழைத்து சொல்லிவிட்டார்கள் பின்னால் வந்தவர்கள். உள்ளே அறைக்குள் போனதும், ஒருவரை மாற்றி ஒருவர் எனை அடிக்க கை ஓங்கினர். ஒருவன் துப்பாக்கி எடுத்து குத்தவந்தான். நான் சற்றும் பொருமை இழக்கவில்லை, பயம் துளியும் கொள்ளவில்லை; வெகு தெளிவாக கூறினேன், என்னைப் பற்றிய விவரம் சரிவர கேட்காது யாரும் என் மேல் கைவைக்க அதிகாரம் கிடையாது., நான் உங்கள் விமானத்தில் பயணிக்க விருப்பப்பட்டு வந்த ஒரு பயணி. வேண்டுமெனில் தீர விசாரித்துக் கொள்ளுங்கள், பிறகு நீங்கள் சொல்வதற்கு நான் கட்டுப் படுகிறேன், காரணம் நீங்கள் ஏன் இப்படி என்னை நடத்துகிறீர்கள் என்பதே எனக்குப் புரியவில்லை’ என்றேன்’ ஒன்றும் தெரியாதவனைப் போல. ஒருவன் பின்னால் வந்து தலையில் கைவைத்துத் தள்ளினான்.. ‘நீ என்ன பெரிய புடுங்கியா, உனக்கு சொல்லனும்னு எல்லாம் அவசியம் கிடையாது என்பது போல் ஏதோ சிங்களத்தில் திட்டினான். நல்லவேளை எனக்குப் புரியவில்லை அது, என்றாலும் அந்த தலையில் கைவைத்து தள்ளிய கோழிக் கிறுக்கன் யாரென்று பார்ப்பதற்குள் அதிகாரி ஒருவர் அங்கே அவசரமாக ஓடிவந்து; ‘யாரும் பயணியின் மேல் கை வைக்காதீர்கள், நாம் விசாரித்துவிட்டு சந்தேகமெனில் சிறப்புக் காவலாளிகளிடம் ஒப்படைத்து விடுவோம்’ என்று சொல்லிவிட்டு விசாரிக்க மட்டும் உத்தரவிட்டார். “எப்படி வந்தது இந்த புத்தகம் உன்னிடம்?” என்றார் இடையே வந்த ஒருவர். இல்லை இல்லை இது இவனுடைய புத்தகம் புகைப்படம் இருக்கே, பின்னாடி பார் என்றான் மற்றொருவன். அவன் புத்தகத்தை திருப்பி பின்பக்கம் பார்த்து விட்டு - “எத்தனை புத்தகம் எழுதி இருக்கிறாய், யார் நீ?” “நானா?!!!!!!!!!, நான் சத்தியசீலன். ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கணக்காளன். எனக்கும் புத்தகத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை’ என்றேன். என்ன கதையடிக்கிறாய் இதோ உன் புகைப்படம் இருக்கிறதே?” என்றான் ஒருவன் ஆவேசமாக. அதை நன்றாக பாருங்கள், அவர் வேறு நான் வேறு. நானென்ன அத்தனை சிறுவனா? எனக்கு முப்பத்தேழு வயதாகிறது. பார்வை மங்கி கண்ணாடி இட்டுத் திரிகிறேன். அவர் வேறு யாரோ’ நானல்ல” என்றேன். இல்லை இல்லை பொய் சொல்லாதே உன்னை போலவே இருக்கே இந்த புகைப் படம் என்றனர். அதற்கு நான் பொறுப்பில்லை. அவர் என்னைப் போல் இருக்கலாம் அதற்காக சத்தியசீலன் எப்படி “காதம்பரி” ஆக முடியும்? அதும் அது ஒரு பெண்ணினுடையப் பெயர் எப்படி எனதாக இருக்க முடியும். நானொரு ஆண். சொல்ல வேண்டிய கட்டாயம் வேறு எனக்கு. ஆனால், நானொரு ஆண், அது ஒரு பெண்ணின் பெயர் என்ற போது தான், அவர்களுக்கு தெளிவே வந்தது. ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக் கொண்டனர். தமிழ் தெரிந்த ஒருவரை அழைத்துவந்து கேட்க, புத்தகத்தில் ‘காதம்பரி’ என்று எழுதியிருப்பதாக அவர் சொல்ல. பிறகு இந்த புத்தகம் எப்படி உன் பையில் வந்தது?” என்றனர். “நான் வரும் வழியில் ஒரு கடையில் விற்றது, வாங்கினேன்” என்றேன். “அப்போ இந்த படத்தில் இருப்பது நீயில்லையா?” “சத்தியமாக நானில்லை. இதோ என் கடவுச் சீட்டு, பயணச் சீட்டு எல்லாம் பாருங்கள்” எடுத்துக் கொடுத்தேன். ஒவ்வொன்றினையாய் பிரித்து எல்லோரும் பார்த்தார்கள். நல்லவேளையாக அதில் தற்போது கடவுச் சீட்டு மாற்றி வாங்குகையில் பதிந்த புதிய புகைப்படமே இருந்தது. விமானம் புறப்பட இன்னும் ஏறக்குறைய ஒரு மணிநேரமே உள்ளது நான் புறப்படுகிறேன் என் புகைப்படக் கருவியையும் கடவுச் சீட்டையுமெல்லாம் கொடுங்கள் என்றேன். அவர்களுக்குள்ளேயே ஒரு ஐந்து நிமிடத்திற்கு கலந்து பேசிக் கொண்டார்கள். முடிவாக விட்டுவிடலாமா என்று பேசிக் கொண்டிருக்கையில் ஒரு சதி காரன் எங்கிருந்தோ வந்தான். புத்தகத்தை வாங்கிப் பிரித்து பார்த்து விட்டு - “இதோ இந்த புத்தகத்தில் தான் வலைதள முகவரி இருக்கிறதே என்று காட்ட; புத்தகத்தில் உள்ள முகவரிபடி இணையத்தை திறந்து வலைதளத்தை காட்டி, தமிழ் படிக்கத் தெரிந்த ஒருவரை அழைத்து படித்துச் சொல்லச் சொன்னனர். அவர் உடம்பில் ஒடுவதென்ன தமிழர் ரத்தம் தானே ஏதோ விவகாரம் உள்ளதரிந்து; அவர் அத்தனை சரியாக முழுதாக சொல்லிடவில்லை. இதை அருகில் நின்று பார்த்த கொஞ்சநஞ்சம் தமிழ் தெரிந்த சிங்கள ஆர்மி காரர்கள் கண்டுக் கொள்ள, ஒருவன் அவரைப் பார்த்து உறுமினான். இவன் புலியோட ஆளு, கள்ளன், சரியாய் சொல்லமாட்டான், விடாதீங்க இவனை; என்று அவனை சட்டையை பிடித்து தள்ளிவிட்டு, தமிழ் படிக்கத் தெரிந்த வேறு ஒரு சிங்களக் காரரை கூட்டி வந்து படிக்கச் சொல்ல, அவன் லேசாக அங்கும் இங்குமாய் பார்த்துவிட்டு ‘இது ஒரு பொது வலைத்தளம் தான், வெறும் காதல் கவிதைகள் தான் இருக்கிறது என்றான் மேம்போக்காக. அதற்குள் இன்னொருவன் தொடர்பு விவரம் இருக்கா பார் என்று சொல்லி எப்படியோ இதை அதை அழுத்தி பெயர் – சத்தியசீலன், விலாசம் இது இது மேலும் குவைத் என்றிருக்க, அதை அந்த சண்டாளன் படித்தும் காட்டிவிட,  எகுறி எல்லோரும் என் மேல் பாயாத குறையாக, எட்டிச் சட்டையை பிடித்துக் கொண்டார்கள். நான் எதற்கும், அசருவதாக இல்லை. ஒரேயடியாக அடித்து என் தலைமீது சத்தியமாக நான் இல்லவே இல்லை என்றேன். ‘காதம்பரி’ என்றால் எனக்கு யார் என்ன என்று கூடத் தெரியாதென்றேன். அதெப்படி ஒரே முகம் ஒரே பெயர் வருமென்று கேட்டு ஒருவன் துப்பாக்கியால் பின்னாலிருந்து நன்றாக வலிக்குமாறு குத்தினான். வலி பொறுத்துக் கொண்டேன். விட்டுக் கொடுக்கவுமில்லை. அதைப் பற்றி எனக்கு கவலையே இல்லை. என் பெயர் சத்தியசீலன், நானிருபப்து லண்டனில் நீங்கள் குவைத்தினை பார்த்துவிட்டு பேசுகிறீர்களே’ என்று சத்தமாகவும் அழுத்தமாகவும் கேட்க; அவர்கள் பயணச் சீட்டினை வாங்கி மீண்டும் பார்த்துவிட்டு – சரி அந்த வலைதள முகவரிப் படி கொடுத்துள்ள குவைத் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பினை கொடுங்கள் என்று சொல்ல - உடனே அந்த எண்ணில் அழைத்து பேசிப் பார்க்க, குவைத்திலிருந்து தொலைபேசி எடுக்கப் பட்டு எப்படியோ யாரோ ஒருவர் ஆமாம் ‘காதம்பரி’ என்பவர் இங்கு தான் இருக்கிறார். இந்த தொலைபேசி எண் கூட அவருடையது தான், அவரிடமிருந்து என் நண்பர் வாங்கிக் கொள்ள, என் நண்பரிடமிருந்து நான் தற்காலிகமாக வாங்கினேன்’ என்று சொல்ல, லோட்ச்பீக்கரில் அதை கேட்ட எனக்கு நிம்மதிப் பெருமூச்ச்சே வந்தது. “பார்த்தீர்களா; நான் சொன்னேனில்லையா, இப்போது லண்டனுக்கு அழைத்துப்பாருங்கள் என்று லண்டனின் நிறுவன விவரம் சொல்ல; அவர்கள் சந்தேகத்தில் அங்கும் அழைத்தார்கள். அங்கே என் நிறுவனத்தைச் சார்ந்தோர் “ஆம் இங்ஙனம் பெயரில் ஒருவர் இங்கு பணியாற்றி வருகிறார் என்று தெரிவிக்க மீண்டும் நான் அழுத்தமாக பிடித்துக் கொண்டேன் - “ஏன் ஒருவரை போல் ஏழு பேர் இருப்பதாய் சொல்வார்களே உங்களுக்கு தெரியாதா? அதும் நான் ஒரு இந்தியன் என்னை இப்படி நடத்துகிறீர்களே என்றேன் (உள்ளே கொஞ்சம் வருத்தமாகத் தான் இருந்தது). அதலாம் விடு, அதிகம் பேசினால் பிடித்து சிறப்பு காவலாளியிடம் ஒப்படைத்து விடுவோம் என்றான் ஒருவன். உன்னை சுட்டு அதோ அந்த மூலையில் கடாசிவிட்டு ‘புலி’ என்று சொல்லி விசாரணையை கூட ரத்து செய்துவிடுவோம், கூடுதல் பேசாதே’ என்றான் இன்னொருவன். மாறி மாறி ஒவ்வொருவர் ஒவ்வொன்று சொன்னார்கள். வயலுக்குள் திரிந்த எலியை பத்து கழுகுகள் சூழ்ந்து கொண்டது போல் இருந்தது எனக்கு. புத்தகத்தில் என்ன எழுதியுள்ளது என்று தெரியுமா என்றார்கள்; என்னவோ கவிதை தொகுப்பு போல் என்றெண்ணி தான் வாங்கினேன் இன்னும் படிக்கவில்லை’ என்று சொல்ல. என் முகத்தை மாறி மாறி பார்த்தார்கள். சாணக்கியனின் நினைவு மட்டுமே உள்ளிருந்து வந்ததெனக்கு. எதிர்காலத்தில் ‘என் தமிழ்மக்கள் சானக்கியனுக்கு பதில் என்னை சொல்லட்டும் என்பது போலொரு உறுதியினை உணர்வு முழுக்க நிறைத்துக் கொண்டு பாவம்போல் அமர்ந்திருந்தேன். என்னை உட்கார வைத்துவிட்டு கால் மணிநேரம் அவர்களுக்குள் அவர்கள் மாறி மாறி பேசிக் கொண்டார்கள். பிறகு; இதுபோன்ற புத்தகத்தை எல்லாம் இனி வாங்கிவரக் கூடாதென்று சொல்ல, தொடக் கூட மாட்டேன் என்றேன். சரி, அப்போ போ…, விடு போகட்டும்’ என்றார் அந்த மேலதிகாரி. நான் நகர்ந்து வெளியே வர, என் பின்னே ஒருவன் ஓடிவந்து; ‘இடைஞ்சலுக்கு மன்னித்துக் கொள்ளுங்கள், எங்கள் பணியை நாங்கள் செய்தோம்’ தவறாக எண்ண வேண்டாம், இந்தியரை நாங்கள் மதிக்கிறோம்’ என்றான். மண்ணாங்கட்டி” என்று மனதில் நினைத்துக் கொண்டு, பரவாயில்லை பரவாயில்லை ஒரு பயணியை நாலுபேர் பார்க்க இப்படி அழைத்துவந்து அசிங்கம் செய்கிறீர்கள். எனக்கு விமானத்திற்கு வேறு நேரம் நெருங்கிவிட்டது, விடுங்கள் நான் போகிறேன்” என்று அவசரம் காட்ட - அவனோடு இன்னும் இருவரும் வந்து நிற்க, அவர்கள் மூவரும் கலந்து பேசிவிட்டு; அங்கிருந்தே வாக்கிடாக்கியில் விமான அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி, பிறகு, என்னோடு விமானமேறும் அறைவரைக்கும் வந்து; விமான ஊழியர்களிடம், சோதனையின் காரணமாக தாமதமாகிவிட்டது என்று விவரம் தெரிவித்து, இருந்தாலும் எதற்கும் சற்று கவனம் கொள்ளுமாறு அவர்களது மொழியில் கிசுகிசுத்து விட்டு  அங்கிருந்து புறப்பட்டனர். அவர்களை எல்லாம் நான் கூடுதல் கவனத்தில் கொள்ளவில்லை, விமானத்தில் ஏறி அமர்ந்தேன். ஆர்மிக் காரர்களால் கொண்டுவந்து விடப் பட்டதால் எல்லோரும் என்னையே ஒரு குற்றவாளி போல் பார்த்தனர். ஒரு நடுத்தர வயது பெண். கண்ணீரில் ஊறிய விழிகளோடு என்னருகில் வந்து நின்று என்னைப் பார்த்தாள். அதை எல்லாம் நான் கண்டுக் கொள்ளவேயில்லை. என் எண்ணமெல்லாம் எங்கோ இருந்தது. என்னை அவர்கள் பிடித்துக் கொண்டதும், பிறகு விட்டுவிட்டதும் என்னவோ எனக்கொரு கனவு கண்டு விழித்தது போலவே இருந்தது. என்னை விட்டுவிடுவார்கள் என்று நான் உண்மையில் நம்பவேயில்லை. எப்பொழுதும்; வேகமோ உணர்ச்சிவயப் படலோ சில இடத்தில் அத்தனை பயனைத் தருவதில்லை. இங்கும், அவர்களிடத்திலும், அது தான் நடந்தது. சற்று யோசித்து என் கடவுச் சீட்டில் என்று நான் இந்தியா போனேன். எப்போது மீண்டும் லண்டன் சென்றேன். குவைத் இதற்கு முன் சென்றுள்ளேனா, இல்லையா, குவைத்தின் அச்சுகள் குத்தப் பட்டுள்ளதா.. என, எந்த ஒரு சரியான விவரமும் அவர்களுக்குப் பார்த்திடத் தோணவில்லை. ஒரு சின்ன குழந்தையிடம் இப்படி நடந்தது என்று சொன்னாலும், ஏன் நான் குவைத்திலிருந்துவிட்டு ஊர் சென்றிருக்க கூடாது, பிறகு லண்டன் போயிருக்கக் கூடாது’ என்றெல்லாம் அந்த குழந்தைக் கூட யோசித்து விட்டிருக்கக் கூடும். ஆனால் அவர்களுக்கது தொனவேயில்லை, ஒருவேளை அப்படி இவர்களும் யோசித்து என் கடவுச் சீட்டினைச் சரியாகப் பார்த்திருந்தால் நான் தான் அந்த “காதம்பரி” என்பது மிகத் தெளிவாக அவர்களுக்குப் புரிந்துப் போயிருக்கும். அந்த புத்தகத்தை எழுதியது நான்தானென்று கண்டிப்பாக அறிந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. இதலாம் தான் கடவுள் செயல் போலும். அறிவாளிகள் தவறு செய்வதும், முட்டாள் தெளிந்துவிடுவதும் கூட சிலநேரம் யதார்த்தமாகவே நடந்துவிடுகிறது உலகில். அதற்குள், இதலாம் நான் சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒருசில நிமிடங்களுக்குள் வெளியிலிருந்து வந்துக் கொண்டிருந்த மீதப் பயணிகளும் விமானத்தினுள்ளே வந்தமர ஒரே சலசலப்பு கூடி இங்குமங்கும் சப்தமாகவே இருந்தது. சிலர் ஆங்காங்கே தன் இருக்கை பார்த்து அமர்ந்தும், பொதிகளை இடம் மாற்றி வைத்துக்கொண்டும் எடுத்துக் கொண்டும்  இருந்தனர். நான்  ஒரு பெருமூச்சு விட்டவனாய் அமைதியாக என் இருக்கையில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டேன். விமான நிலையத்துனுள் நடந்தது நினைவு வந்தது. அந்த பின்னாலிருந்து வந்து தலையில் தட்டிய ஆர்மி குபீரென நினைவிற்கு வந்தான். அதை யோசிக்க வேண்டாமென மாற்றி வேறு எதை எதையோ எல்லாம் யோசித்தேன். மறுமுறை அந்த துப்பாக்கியால் குத்திய ஆர்மியும் நினைவிற்கு வந்தான். உயிர்போனால் போகட்டுமென திருப்பி யடித்திருப்பேன் தான், நான் தானடா “காதம்பரி” என் தங்கையின் பெயரையே புனைப் பெயராய் வைத்து எழுதுகிறேன், என்னத்தை கிழித்து விடுவாயடா, அதிகமாக செய்வதெனில் சுடுவாய்’ அவ்வளவு தானே சுடு!!’ என்று மார்பை விரித்துக் காட்டிக் கேட்டிருப்பேன். ஆனால்; எனக்கு என் சுய மானத்தை விட, எனக்கு நான் படும் என் அசிங்கத்தை விட; என் தேசம் பெரிதாகப் பட்டது. என் மக்கள் பெரிதாகப் பட்டார்கள். சட்டென மண்டையில் ஏற்றிக்கொகொள்ளும் கோபத்தைவிட, அமைதி காத்து சாதிக்கும் வல்லமை ஒரு வித்தை. மிச்சமிருக்கும் என் கடமைகளை முடிக்க அந்த வித்தை எனக்கு இப்போதைக்கு சரியெனப் பட்டது. மேகநாதன் போல் இன்னும் நிறைய பேர் தமிழகத்தில் இருக்கிறார்கள்; அவர்களிடம் அவருக்கு சொன்ன விவரத்தையெல்லாம் கொண்டு சேர்க்கவேண்டும்’ என்று நூலிழையிலான நேரத்தில் மின்னலென வெட்டியது அந்த எண்ணம். என் உறவுகள் கொத்து கொத்தாய் தூக்கிப் போட்டு பிணமாக எரித்த கோர சம்பவங்களை, ஒரு தேசம் எனும் பெயரில் மறைந்துக் கொண்டு இன்னொரு இனத்தையே அழிக்க செய்த மோசடிகளை’ இதுபோல் என் புத்தகம் வாயிலாக பதிவு செய்திடல் வேண்டும் எனும் எண்ணம் எனை பொறுமை இழக்காமல் என் கைகளை கட்டிப் போட்டது. உயிரை கொடுத்த என் உறவுகளுக்கு மத்தியில், ஆண்டாண்டு காலமாய் மாய்ந்த  என் மாவீரர்களுக்கு மத்தியில்; அவன் தலையில் தட்டியது ஒன்றும் அத்தனை எனை பேரவுமானத்திற்குள் தள்ளிவிடாது. காலம் ஓர் தினம், திரும்பி என் இனத்தின் வீழ்ச்சிக்கான பதிலை சொல்லாமலா போகும்? அன்று எனக்குள்ளே நான் கர்வப் பட்டுக் கொள்வேன்’ என்று நினைத்துக் கொண்டே இருக்கையில்; அந்த வலியும், திருப்பி அவனை பதிலுக்கு அடிக்க இயலா சுயமானமும் கண்ணீராக கரைந்து சூடாக என் கன்னங்களில் வழிந்தது. கண்களை இன்னும் இறுக்கி மூடிக் கொண்டேன். ஒரு விமானப் பணிப்பெண் வந்து அழைத்தாள். விமாணம் புறப்பட உள்ளது என்று சொல்லி நேராக அமரும் படி கேட்டுக் கொண்டார். நிமிர்ந்து அமர்ந்தேன். “ஏதேனும் இயலாமையா? உதவிகள் ஏதேனும் வேண்டுமா” என்றாள்? அதலாம் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு, மொத்தம் நீங்கள் எத்தனை பணிப்பெண்கள் இந்த விமானத்தில் உள்ளீர்கள் என்றேன், அவளிடம். அவள்; ஏன் என்று வினவிவிட்டு; பின் சற்று நிதானித்தவளாக, மொத்தம் எட்டு பேர் வரை உள்ளோம் என்றார். எல்லோருமே தமிழா என்றேன். இல்லை இல்லை; எல்லோருமே சிங்களம் என்றார் ஆங்கிலத்தில். அப்படியா!! நல்லது என்று சிரித்துக் கொண்டேன். ஏன் இதலாம் கேட்கிறாய் என்றாள் அவள். இல்லை தெரிந்துக் கொள்ளத் தான் கேட்டேன்’ என்று சொல்ல – சிரித்துக் கொண்டே போனார் அந்த சகோதரி. எனக்கு உள்ளே ஈட்டி போல இறங்கியது, அந்த ஓரவஞ்சக அமிலம். இலங்கையில் நடக்கும்  ஒரு இன அழிப்பின் தந்திரம் இங்கிருந்தும் எனக்குப் புரியவந்தது. சரி, தமிழில் ஏதேனும் ஒரு வார்த்தையேனும் சொல்கிறார்களா என்று பார்த்தேன்; ஒருவள் தமிழுக்கு பதில் ட்டமிலில் ஏதோ பயிற்சி எடுத்துக் கொண்டு பேசுவது போல் ‘வண்கம்’ ‘மகிச்சி’ ‘நெஞ்றி’ எனபது போல் என்னத்தையோ பேசிவிட்டு ;ஆங்கிலத்தில் ஏதோ பேசப் போனாள்; பொறுமையே இல்லை எனக்கு. முதுகில் அடிக்கும் கோழைகள்; குள்ள நரிகள்; பத்து பேரில் ஒரு தமிழச்சிக்கு வேலை கொடுத்தாலென்ன விமானம் நொறுங்கி வீழ்ந்துவிடுமா’ என்றேன் உணர்ச்சி அடக்கமாட்டாமல். என்னருகில் அமர்திருந்த சகோதரி ஒருவர் ‘விமானம் எல்லாம் நொறுங்காது, தமிழராகிய நாம் தமிழராக அடையாள பட்டுப் போவோமே என்றாள். நான் தமிழில் பேசிய ஒரு பெண் குரல் கேட்டு மகிழ்வும் சற்று ஆச்சரியமும் பட்டவனாக திரும்பி அவரைப் பார்த்து ‘நீங்கள் தமிழா’ என்றேன். “ஆம்” “எந்த ஊர்?” “ஈழம்” “ஈழத்தில் எங்கே?” “கிளிநொச்சியை சேர்ந்தவள்” “கிளிநொச்சியா?” சற்று சத்தமாக கேட்டுவிட “சத்தம் போடாதீர்கள். நானே தப்பித்து செல்பவள்” என்றார் அவர் எனக்குப் புரியவில்லை. என்னாச்சு எங்கிருந்து என்று சந்தேகப் பார்வையோடு அவர்பக்கம் திரும்ப. விமானம் மேலே ஏறி நடுவானத்தைப் பிடித்து பறக்கத் துவங்கியது. பணிப்பெண் ஒருத்தியும் ஒரு ஆடவருமாக வந்து எங்கள் அருகில் நின்று தள்ளுவண்டியினுள் இருந்து உணவினை எடுத்து எங்களின் முன் இருக்கையில் ஒட்டியிருந்த தட்டினை கழற்றி அதன் மேல் வைத்துவிட்டு சிரித்துக் கொண்டே போயினர். என்னருகில் இருந்த அவள் சைவம் பெற்றுக் கொண்டாள், நானும் எனக்குத் தந்த அசைவத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு அவளுக்காக சைவமே போதுமென்றேன். அவள் அந்த உணவுத் தட்டினை வாங்கி வெறுமனே வைத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தால். எனக்கோ; நேற்று மாலையிலிருந்தே  ஒன்றும் தின்றிடாத மயக்கம் ஒருபுறம் தலையைச் சுற்றியது. இருந்தாலும் நான் மட்டும் தனியாக உண்பதற்கு நெருடலாக இருக்க; ஏன் நீங்கள் சாப்பிட வில்லையா’ என்றேன் “சிங்களன் கையில் சொட்டுத் தண்ணி வாங்கிக் குடிப்பதை விட நானென் கழுத்தை இங்கேயே அறுத்துக் கொண்டு சாவேன்” என்றாள். அவளின் வீரியம் என்னை கலவரப் படுத்தியது. ஏன் என்பதுபோல் அவளைப் பார்த்தேன். “இதை நான் குடித்தால் என் மண்ணுக்காக மாய்ந்த எம் வீரர்களுக்கு பாவம் தான் சேரும்” என்றாள். “அப்போ நீங்கள் யார்?” என்றேன் என் மண்ணிற்காக செத்த மாவீரர்களுக்கு மத்தியில்; உயிரை காப்பாற்றிக் கொள்ள, கள்ள கடவுச் சீட்டில் நாடு கடந்துப் போகும் ஒரு கோழை” என்றாள் அவள். “என்னிடம் சொல்கிறீர்களே நான் யாரிடமேனும் சொல்லிவிட்டால்?” என்றேன். உன்னை கொன்றுவிட்டு பிறகு நானும் செத்துப் போவேன் என்றாள். சற்றும் யோசிக்காமல்..                         பகுதி – 10  “என்னைப் போல் எத்தனை பேரை கொள்வீர்கள் என்றேன்” அவளும் அதிர்ச்சியுற்றாள்.  நான் விடாமல் அவளை தொடர்ந்து “வேறென்ன காட்டிக் கொடுக்கும் சமுகத்திற்கு மத்தியில் தானே நம் போர், பிரச்சனை, எல்லாமே…?” என்றேன். “அதென்னவோ சரியாகத் தான் சொன்னீர்கள், அந்த சண்டாளன் அன்று எங்கட தலைவரை விட்டுப் போகல்லை யென்டால்; இன்று இத்தனை பெரிய அவலம் ஏது எம் மக்களுக்கு? இன்று நிகழும் இத்தனை கொடுமைகளுக்கும் அவன் செய்திட்ட துரோகம் தானே காரணமாகிறது. இப்பொழுதும் ஒவ்வொரு செயலுக்கும் பின்னாலிருந்து அவன் தானே துணைப் போகிறான்; தேசத் துரோகி யவன்” “நீங்கள் ஏன் அப்படி நினைக்கணும், இன்னொரு மாதிரியாக அதை மாற்றி யோசித்துப் பாருங்களேன்” “எப்படி” “அவன் யார்?” “யாரென்றால்?” “அவனும் ஒருநேரம் நம் மண்ணுக்காக போராடியவன் தானே?” “ஓம்..” “ஆக்கப் பூர்வமான  செயல்பாடுகளில் அவனுடைய பங்கும் தலைவருக்குத் துணையாக இருந்தது தானே?” “அதற்காக நாட்டை கூட்டி கொடுப்பானா? பாவி…” “அப்படி இல்லை ‘திருமதி……..’ உங்கள் பெயரென்ன?” “அதை நீங்கள் தெரிந்துக் கொள்ளவேண்டிய அவசியம் இப்போதைக்கு இல்லை, விசயத்திற்கு வாருங்கள்” “அவன் தலைவரின் முக்கிய நம்பிக்கைக்கு உரியவனாயிருந்து, அவருக்கு வலது கை போல உடனிருந்து செயல்பட்டவன் தானே?” “கண்டிப்பாக அதை மறுப்பதற்கில்லை. அவன் பலம் மிக்கவன். நல்ல திறமைகள் பொருந்தியவன். அதில் ஒன்றும் சந்தேகமேயில்லை, யார் யார் எங்கு நிக்குனம், எவ்வழி போயினம்; எல்லாம் அறிந்தவன் அந்த சண்டாளன் தான்” ஒருவேளை அவரே நாளை அவர்களை திருப்பிக் கொண்டால்? “என்ன சொல்ல வாரியள்?” அவள் சற்று அதிர்ந்து நோக்கினாள் உதட்டில் புன்னகைப் பூத்தது. “ஆம்!! யார் கண்டது, தமிழன் ரத்தம் தானே? மண்ணிற்காகப் போராடியவர் தானே? சுதந்திரம் கேட்டு மக்களின் விடுதலைக்காக காடும் மேடும் அலைந்தவர் தானே?” “எல்லாவற்றிற்கும் ஓம் என்று சொல்லலாம், கடைசியாய் என்ன சொல்லப் போறீங்க யென்டு, சொல்லி முடியுங்கள்” “நாளை அவரே அவர்களுக்கு எதிராக நின்று அவனை உடனிருந்தே வீழ்த்தவும் வாய்ப்புள்ளது தானே???? யார் கண்டது” “ஆ… அது நடக்கோணும். அப்படி; அவன் நல்ல தமிழன் என்டால்; அவன் குடித்த பால் ஒருத்தியோடவாக இருக்குமென்டால்; அவன் அதை செய்யவேணும், அவன் செய்வான். அவன் செய்யக் கூடிய ஆள் தான். எனக்கும் சில நேரம் அப்படித் தோணும், இப்படிப் போயிட்டானே இந்த பாவி என்று நினைக்கையில், எப்படியாச்சும் கடைசியா வந்துவிடுவான் என்று நானும் நம்பியதுண்டு..” “சரி அண்ணன் எப்படி இருக்கார்?” “யார்?” “நமக்கென்று வேறு எத்தனை அண்ணன்கள் இருக்கிறார்கள்” “தலைவரையா கேட்கிறீங்க?” “ஆம்” “அவரை பற்றி கதைக்க வேண்டாம் விடுங்கள், எனக்கு கெட்ட கோபம் வந்துவிடும்” “ஏன்????!!! அவர் மீதா உங்களுக்கு கோபம்!! என்னால் நம்பவே முடியலையே..” “நம்ப மாட்டியள், வெளிய இருந்து பார்க்கிறவர்களுக்கு என்ன தெரியும்? அவர் சரியா இருந்திருந்தால் எல்லாம் சரியா இருந்திருக்கும். இன்று நிராதரவாய் நாங்கள் நிற்கிறோமே!! இப்படிக் கள்ளத் தோணி ஏறி அலையுறோமே யார் காரணம் இதற்கெல்லாம்??? இதோ அந்த சிங்கள கொடும்பாவி போரில் அப்பாவி மக்களை கொன்டு போட்டதில்லாமல், காலங்காலமாக நாங்கள் கோவில் போல புனிதமாக பாவித்த ‘துயிலகத்தைக் கூட இடித்துத் தகர்த்துவிட்டான், இனி அவர் திரும்பி வந்து மட்டும் அவருக்கு என்ன மிச்சம் கிடைத்துவிடும்? போனதை மீட்டுத் தர அந்த தெய்வம் வந்தாலும் இனி நடக்காது தானே???” அவள் கண்களில் தீ பறந்தது. உணர்ச்சிவசப் பட்டு விட்டால் என்று நன்றாகத் தெரிகிறது. ஆனாலும் என்னவோ சொல்ல வருகிறாள் என்பதை கவனித்து பொறுமையாக அவளருகில் சென்று - “பக்கத்தில் இருக்கவன் பார்க்கிறான், பொறுமையா பேசுங்க” என்றேன். “அப்ப விடுங்க, இதலாம் ஒன்றும் கதைக்க வேண்டாம், நீங்கள் உங்க வேலையை பாருங்க” “அச்சச்சோ ரொம்ப கோபப் படுறீங்களே, நான் அப்படி சொல்லவில்லை. அவர் பாவம் இல்லையா? எத்தனை வருடம் இந்த மண்ணுக்காவே மக்களுக்காவே பாடுபட்டவர் தானே நம் தலைவர்???” “பட்டார், நிறைய செய்தார், அவரை மாதிரி உலகத்தில் ஒரு தலைவனும் வர இயலாது. ஆனால் அதற்கு பலன் கிடச்சுதான்னு பார்க்கவேணும்? புடுச்சி புடுச்சி போனியளே எம் புள்ளைய கொடு, உன் புள்ளைய குடுன்னு உருவி உருவி போனியளே, எம் புள்ளை புருசனை எல்லாம் கொடுத்தோமே; கடைசியா என்னத்தை கண்டோம்? தெருவில் அனாதையாய் மானங் கெட்டு நின்றோமே, அதுதானே மிச்சம்” “வாயடைத்துப் போனேன் நான்” “தோ, நேற்று செய்தி பார்த்தியள் தானே, அவரையும் சுட்டுவிட்டோம் இனி புலிகளே கிடையாது என்கிறான் கொடும் பாவி, துயிலகம் வரை அகற்றி விட்டோம் இனி தமிழர்களின் அடையாளமே கிடையாது என்கிறான் சிங்களவன். அவரோட தல மயிரக்க்க்க்க்க்க்க் கூட இவனுகளால அசைக்க இயலாது. அது எனக்குத் தெரியும். ஆனா ஒருக்கால் அவர் போயிருந்தால்!!!!???” கேள்வியின் ஊடையில் அழை வந்துவிட்டது அவளுக்கு. விம்மினாள். ஒரு கையில் கண்களை துடைத்தவாறே மற்றொரு கண்ணால் என்னைப் பார்த்து பேசினாள் - “எங்கட தலைவர் போனால், பிறகு நாங்களும் போனோம் என்று அர்த்தம். அவர் தான் எங்களுக்கு தாய்.. தந்தை.. தெய்வம்.. எல்லாம். அவரில்லாமல் எங்களுக்கு விடியலே கிடையாது. அவரை அந்த படுங்குழியில் போன தெய்வம்தான் மேல்வந்து நின்று காக்கவேணும். நான் சத்தியம் செய்து சொல்வேன்; எங்கட தலைவர் மாதிரி உலகத்துல ஒருத்தன் வரமாட்டன், எங்களை மீட்க” கண்களை துடைத்துக் கொண்டாள். அழையை நிறுத்திக் கொண்டாள். நான் அவளையே பார்த்தேன். அவளிடம் ஒரு வீராவேசம் இருந்தது. அவள் மிக தெளிவாக தன்னை வார்த்தைகளால் வெளிப்படுத்தினாள் - “அவரை எல்லாம் யாராலும் அழிக்க முடியாது. உண்மை தான், எங்கட தலைவர் ஒரு காக்கும் சக்தி கொண்டு பிறந்தவர். எப்படி ஆண்டாருப் பாருங்க எங்கட ஈழத்தை; கொஞ்ச காலம் ஆண்டாலும் அப்படித் தான் வைத்திருந்தார். இன்னும் கொஞ்ச காலம் மட்டும் ஆண்டிருந்தால் தமிழீழம் உலகத்துக்கே ஒரு பாடமாக விளங்கியிருக்கும். அவர் வந்த பிறகு தான் எங்கட ஈழத்தில் நீதின்னா என்னன்னு மக்களுக்கு மீண்டும் புரியவந்தது. ஒரு பொடியன் அப்போ குடிச்சானில்லை. குடிய அறவே ஒழிச்சது அவர் தான். தோ, இவனுங்களைப் போல் யாரிருப்பார்கள் உலகத்தில்; இந்த சிங்களக் கூட்டம் எம் பெண்டுகள் எல்லாம் செத்தப் பிறகு கூட பரவாயில்லையென்டு உயிர்போன பிறகும் மேல ஏறி மெறிப்பினும். சிங்கத்துக்கு பிறந்தவனுகள். ஆனால் எங்கட புலிங்க அப்படி இல்லை” பேச்சை நிறுத்தி விட்டு என்னை கிட்ட வந்து பார்த்தாள். “உண்மையை தான் கதைக்குறன், பாருங்க, யாராச்சும் ஒரு சிங்களத்தியை எங்கட புலிகள் கெடுத்தாங்க,  பொம்பளை மேல கைய வெச்சாங்கன்னு சொல்லச் சொல்லிடுங்களேன் பார்ப்பம். சுட்டேப் போடுவார் எங்கட தலைவர். அவர் அப்படிப் பட்டவர். எங்களை எல்லாம் தான் பெற்ற மகளுக்கு நிகராகவும்; தன்னோட தங்கையை மாதிரியும் பார்த்தவர். பெண்களுக்கு ஒரு கேடென்றால் அதை ஒருக்காலும் பொருக்க மாட்டார், ஆனால் தவறை யார் செய்தாலும் தவறு தான், அவரிடத்தில் தவறுக்கு மட்டும் தண்டனை இல்லாமல் போகாது. அது அந்த ஆண்டவனாகவே இருந்தாலும் சரி, தண்டனை வேண்டுமெனில் மரணமாகக் கூட இருக்கும்” அவள் பேசிக் கொண்டிருக்கையில் இடையே, உணவு கொடுத்துவிட்டுப் போன பணிப்பெண் திரும்பப் பெற்றுக் கொள்ள எங்களிடம் வந்தாள். நாங்கள் இருவருமே கொடுத்த உணவை உண்ணாமல் அப்படியேத் திரும்பக் கொடுக்க; அவள் சற்று அதிர்ச்சியுற்று, வாங்கி உள்ளே வைத்துக் கொண்டு வேறேதேனும் வேண்டுமா என்றாள் அவளைப் பார்த்து. அவள் அதலாம் வேண்டாம் என்று மறுக்க நானும் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி, அந்த பணிப்பெண்ணிற்கு வழிகொடுத்து அனுப்பிவிட, மீண்டும் நான் அவளைப் பார்த்தேன். அவளுக்கு தான் மனதிற்குள் இருப்பதை எல்லாம் யாரிடமேனும் கொட்டிவிட வேண்டும் போல் துடித்துக் கொண்டிருந்ததுபோலும், அது எனக்கும் புரிந்துவிட்டதையறிந்து அவளே என் பக்கம் திரும்பி பேசினாள் - “நான் சொன்னது விளங்கிற்று தானே?” “ஆம், தலைவரை பற்றி சொன்னீர்கள், நீதி வழுவ மாட்டார் என்றீர்கள்” “ஓம், நெசம் தான். அவரிடத்தில் மன்னிப்பென்பது கிடையாது. செய்யக் கூடாது யென்டு சொன்னால்; கூடாது தான். மீறி செய்தால் கழுத்தை வெட்டனுமென்டால், வெட்டனும், கண்ணைத் தோண்டனுமென்டால்   தோண்டனும்” “கொடுமையா இருக்கே” “கொடுமை இல்லை. ஒரு ஆட்டை வெட்டினால் தான் பத்து ஆட்டுக்கு பயம் வரும். அப்படி தான் திருந்துச்சி எங்கட ஆளுங்க. அதுக்கு முன்னாடி குடி கூத்து கும்மாளம் என எல்லாம் ஆங்காங்கே இருந்தது தானே? யார் வந்து மாத்தினது அதை யெல்லாம்? எங்கட தலைவர்!! நடுவில் சிங்களனால் சீர்கெட்டுப் போன தமிழீழத்தை பழைய மாதிரி மீட்டுத் தந்தவர் எங்கட தலைவர்” “அவர் இப்பவும் இருக்கார் என்கிறீர்களா?” “என்ன கேள்வி இது பச்சை புள்ளையாட்டம், அவர் இன்ன பொடியனென்டா நினைச்சியள்? அவர் எங்கட தெய்வம். தெய்வம் வீழுமா???” அவள் அவர் மேல் கொண்டிருந்த பக்தி என்னை கலங்கடித்தது. அதை மறைத்துக் கொண்டு “செய்தியில சொன்னாங்களே?”என்றேன். “ஆயிரம் முறை சிங்களவன் அப்படித் தான் சொல்லிக் கொண்டு போறான். அவன் சொல்லுறதை உலகம் நம்பும், நாங்கள் நம்ப மாட்டம். அரசு பூர்வமா பதினாறு முறை அறிவிச்சான் தானே, அதுபோல ஒன்னு இது யென்டு எண்ணிக் கொள்ளுங்கள்” அவனுக்கு வேண்டுமென்டால் அவரை பரிசோதனை செய்த டோக்டருன்ட சான்றிதழ் இருக்கும் தானே அதை சமர்ப்பிக்கச் சொல்லுங்களேன் பார்ப்பம். சும்மா அங்கனால யாரையாச்சும் புடுச்சி இது தான் புலின்னு காட்டிட்டா ஆச்சா? பூனை புலி எப்படி ஆகும் என்பது என்னட கேள்வி” “சரி, நான் ஒன்னு கேட்டா கோபப் பட மாட்டீங்களே?” “சும்மா கேளுங்க, நீங்க ஆம்பளை, உங்கட மேல எனக்கென்ன கோபம், சும்மா கதையிங்க” “இல்லை, அவர் பேரை சொன்னதும் இப்படி இவ்வளோ பேசிட்டீங்களே” “ஓம்… பின்ன எங்கட மண்ணுக்கு உழைத்த எங்கட தலைவரை சொன்னா, சும்மா விடுவோம்னு நினச்சியலா???” “இல்லை, அதை சொல்லவரவில்லை, ஆதலாம் சரி தான், என்னிடமே யாரேனும் வந்து அவர் இப்படி என்று குறையாகச் சொன்னாலும் நானும் அதை நம்ப மாட்டேன்தான். ஆனால் நீங்க முன்ன குறைபோல சொன்னீங்களே?” அவள் படக்கென என்னைத் திரும்பிப் பார்த்தாள். எல்லாவற்றிற்கும் அவளது கண்கள் பத்ரகாளிபோல் விருந்துக் கொள்கிறது. பயங்கர கோபக்காரியாக இருப்பாள் போலிவள். “என்ன சொன்னேன்” “அவர் தான் காரணம் என்றீர்களே” “ஆமாம், இப்பவும் தான் சொல்லுறன்” “இப்படி நீங்க இந்த விமானம் ஏறி வருவதற்கும் அவர் தான் காரணமென்றீர்களே?” “எங்க வந்து கற்பூரம் அடிச்சி சொல்ல சொன்னாலும் சொல்வேன். அவர் தான் காரணம், யார் கேட்டது எங்கட பிள்ளைங்களை ஒவ்வொன்னா புடுச்சி போயி புடுச்சி போயி விட்டுட்டு இப்படி எம் மக்களை தெருவுல நிக்கவைக்க சொல்லி??? ம்ம்?? யார் கேட்டது??? ஒரு வயசுப் பிள்ளைய; ஒரு வாய் அண்ணந்தண்ணி குடிக்க விடாதவாக தானே நீங்க? கேட்டா, ஆர்மிய அடக்கனும்னுவிய, அது புலியால தான் முடியும்பிய, அடக்குனியளா இன்னைக்கு??? “ஆமாம், வீட்ல வந்து ஆள் கொண்டு போவாங்களா?” “வீட்ல வந்தா? வேறென்ன கதையா கேட்கிறியள், சோத்துல கைய வெச்சி சாப்பிட உட்கார்ற பிள்ளைய வந்து வா அங்கே ஆர்மி நிக்கிறான் ஆள் பத்தலைன்னு போலாம்னு’ வரச் சொல்லிக் கேட்பினும். ரெண்டு இருந்தா ஒன்னை குடுக்கணும். மூன்று இருந்தா ரெண்டைக் கொடுக்கனும், கேட்டா நாட்டுக்கு என்பினும். எல்லாத்தையும் ஒன்னுஒன்னா கொடுக்கத் தானே செஞ்சோம் நாங்களும், கடைசியா பொம்பளைய விட்டியளா? பொட்டச்சியைக் கூட ‘வாடி பட்டாளத்துக்குன்னு வீட்ல இருக்குற பொண்ணுங்களை யெல்லாம்கூட கூட்டிதான் போனீங்க, கடைசியா எண்ணத்தை சாதிச்சீங்க??? இன்னைக்கு எம் மக்கள் நிக்குதே அம்போன்னு??? தெரு தெருவா சுத்துதே?? நாடோடியா உட்கார ஒரு அடி மண்ணு தேடி அலையுதே.., அடி அடின்னு அடிக்கிறானே சிங்களவன்!!!! கேட்டீங்களா? நின்னு எதிர்க்க முடிஞ்சிதா கடைசிவரையும்? பிறகு எதுக்குயா எம் புள்ளைய எம் பொண்ணை யெல்லாம் கொடுன்னு கூட்டிகிட்டு போய் மண்ணுல புதச்சீங்க??????” கண்களில் அவளுக்கு நெருப்பு கொட்டிடாத குறைதான். “ஒண்ணுமே நடக்காததுக்கு எதுக்குயா எங்க வீட்டு தாலியை யெல்லாம் அறுத்தீங்க? அன்னைக்கு அதை செய்ததெல்லாம் நீங்கன்னா; இன்னைக்கு நடக்குறதுக்கு காரணம் யாரு? நாங்க இப்படி நிக்க நாடு இல்லாம அலையறதுக்கு காரணம் யாரு? தாயிழந்து தந்தை இழந்து மனைவி இழந்து அப்பா அம்மா இழந்து அண்ணன் தம்பி இழந்து குழந்தைகளை எல்லாம் இழந்து ஒத்தையா நிக்க காரணம் யாரு? அதுக்கும் நீங்க தானே காரணம்???” அவள் கேள்வியில் நெஞ்சி கனத்துப் போனென். உண்மை ஒவ்வொன்றும் கேட்க கேட்க மனதைச் சுட்டது. என்னால் அவளிடம் தொடர்ந்து பேசவோ அவளைப் பார்க்கவோ கூட முடியவில்லை. தலைகுனிந்து அவள் சொல்வதை மட்டுமே கேட்க எண்ணி மௌனம் கொண்டேன்.     பகுதி – 11 அவளே சற்று நேரத்திற்கெல்லாம் என் மௌனம் புரிந்து கொஞ்சம் அவளை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். சற்று நிதானித்துவிபிறகென்னை பார்த்தாள். கலங்கிய விழிகளில் கோபத்தை கடந்து உடைத்துக் கொண்டு வழிந்தது கண்ணீர் அவளுக்கு.  எனக்கு அவளைப்  பார்க்கையில் மனம் எனையறியாது கலங்கித்தான் போனது. எத்தனை வலியிருக்கும் அவளுக்கு!! ஒரு நாள் குழந்தையை காணாவிட்டால் எப்படி துடித்துப் போகிறோம் நாம்? கடைக்குப் போன அம்மா திரும்பி வர தாமதமானால் வீடு எப்படி விரிச்சோடிப் போகிறது? வேலைக்குப் போன அப்பா நேரத்தில் வராவிட்டால் எப்படித் தவிக்கிறோம், பள்ளிக்குப் போன பிள்ளை எங்கோ அடிப்பட்டு ரத்தசகதியாய் வீழ்ந்துக் கிடக்கிறது என்றால்  எத்தனை துடி துடித்துப் போவோம் நாமெல்லோரும்??? இவர்களெல்லாம் பின் எந்த மனநிலைக்கு உட்படுபவர்களாவர்? பள்ளிக்குப் போனக் குழந்தைகளை கொத்தாக குண்டு போட்டு சிதறடித்துவிட்டான் ஆர்மி காரன், என்று கேட்ட தாய் எந்த சுவற்றில் முட்டி அழது தன் உயிரை விடுவாள்? இருந்த ஒற்றை மகன் ஒற்றை மகள் கை சிதறி கால் சிதறி வாசலில் போடப் பட்டு வைத்தியம் பார்க்கக் கூட சூழலில்லாத தேசத்தில் அந்த தாய் எப்படி மார்பில் அடித்துக் கதறி இருப்பாள்? கணவன் இறந்த சேதி மட்டும் கேட்டு ஓடிப் போய் ‘ஐயோ என் ஐயா என்று கட்டிப் பிடித்தழ’ உடலின் ஒரு பாகம் கூட கிடைக்கப் பெறாமல் மண்ணில் சிதைந்து ரத்தமாக கலந்துப் போன ஒரு மாவீரனின் மனைவி எந்தக் கடவுளிடம் சொல்லியழத் துணிந்திருப்பாள்? வீடு விட்டு ஒரு நாள் பிரியலாம், ஒரு மாதம் பிரியலாம், ஒரு வருடம் கூட பிரியலாம்; அல்லது என்றேனும் திரும்பப் போய்விடுவோம் என்று எண்ணி வாழலாம், ஆனால், இனி அந்த மண்ணே எனக்கு சொந்தமில்லை எனில், நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண்ணைவிட்டே கடைசிக்கும் பிரிவதெனில்; அதைவிட உலகில் கொடுமையும் வேறுண்டா? தேள் கடிக்குமோ, பாம்பு கொத்துமோ, பேய் அண்டுமோ, பிசாசு தின்னுமோ என்ற பயமெல்லாம் அற்று; ஐயோ ஆர்மி வருவானோ!! என்னைக் கொள்வானோ!! என் பிள்ளைகள் முன்னமே வைத்து எனை சித்தரவதை செய்வானோ? மானபங்கப் படுத்துவானோ, படுக்கச் சொல்லி அடிப்பானோ? கெடுப்பானோ!! இல்லை ஒருவேளை என்னை விட்டு என் மகளையோ தங்கையையோ…………………. ???? ஐயோ இறைவா!!!!’ என்று நொடிக்கு நொடி தவித்து வளர்த்த மகள் முண்டச்சியாய் நிற்கவும், முண்டமாய் கிடக்கவும்; காண எத்தனைப் பெரிய வலி வலித்திருக்கும் உயிர்வரை??? அப்படி ஒரு வலிதான் அவளுக்குள்ளும் வலித்து கண்ணீராய் வழிந்தோடியது. விருட்டென அவள் கண்களை துடைத்து அழாதே என்று சொல்ல என்னால் இயலவில்லை. அழுவதற்கென்றே பிறந்த இழிபிறப்புக்கள் நாங்கள் என்பதுபோல் துச்சமாக எனைப் பார்த்தாள் அவள். கண்களில் நீர் மேலும் கலங்கியது. அவளின் மன நிலை என்னையும் உடைத்துப் போட, என் கரிசனம் அவளுக்கும் புரிந்திருக்கும் போல். “என் அண்ணனென்டு எண்ணி உங்களிடமொன்று சொல்லுறன்…” ஏதோ சொல்ல வாயெடுத்து, முடியாதவளாய் மீண்டும் அழுதாள். என்னால் அவள் தலை சாய்த்து கண்ணீரை துடைக்க துணிந்துவிட முடியாமல் போனது. வேறு பக்கம் திரும்பி என் கண்களைத் துடைத்துக் கொண்டேன். அவளுக்கு என் சிவந்த கண்களின் உண்மை புரிய, சற்று அருகில் வந்து அமர்ந்துக் கொண்டாள். “என்ட அண்ணையை போல இருக்கியள். கொஞ்சநஞ்ச அவதியல்ல நாங்கப் பட்டது. எங்கட கஷ்டம் எல்லாம் சொன்னாலும் உலகிற்கு வெறும் வார்த்தையில் புரியாது. இதலாம் ஒரு கொடூர வலி, என்ன பாவம் செய்தோமோ……….” விசும்பினாள்.. “எங்கடப் போல கஷ்டம் ஒரு மனுசனுக்கும் வரக்கூடாது. அன்றைக்கும் இன்றைக்கும் ஒரு மாற்றமும் இல்லாமல் கண்ணீருக்கு மட்டுமே அடிமையான இனமாகிப் போனோம்” எனக்கு வேறு வழி தெரியவில்லை விருட்டென அங்கிருந்து எழுந்தேன், இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு கழிவறை நோக்கி நடந்தேன், உள்ளேச் சென்று கதவினை தாளிட்டுக் கொண்டு கண்ணாடியினைப் பார்த்து நின்றேன். ஓ...வென வாய்விட்டு கத்தி கதறியழ வேண்டும் போல் இருந்தது. இம்மக்களுக்காய் என்ன செய்யப் போகிறோம்???? எதைக் கொண்டு துடைக்கப் போகிறோம் இந்தக் கண்ணீரை? யார் யார் பொருப்பிந்தக் கண்ணீருக்கெல்லாம்???? கேள்விக் கணைகள் இதயத்தை துளைத்தெடுத்தன.., கண்ணாடியில் தலை முட்டி அழவேண்டும் போலிருந்தது. எல்லாம் உணர்வுகளையும் மொத்தமாகச் சேர்த்து ‘அழுதுவிடக் கூடாதெனும் வீம்பின் உச்சத்தில்’ வெறும் கோபமாக, உணர்வுகளை எல்லாம் அடக்கிக் கொண்டேன். இந்தக் கோபம் எனக்குள் ஒரு ஆயுதமாக பிறப்பெடுக்கும் என்றொரு நம்பிக்கை எனக்கு இருந்தது. இப்பொழுதே இந்த விமானத்தை கைகொண்டு உடைத்து தகர்த்து விட்டு நேரே இலங்கை சென்று என் மக்களுக்கான நீதி கேட்டு; என் மண்ணை என் மக்களிடம் பிடுங்கிக் கொடுக்கவேண்டும் எனும் அசூர துணிச்சல் உள்ளெழுந்தது. ஒருவேளை அவர்களுக்கு எம் நியாயம் இனியும் புரியாதெனில் உலக கண்களில் கைவிட்டு இமைகிழித்து பாரென்று ‘எம் ஒட்டுமொத்த இழப்பையும் காட்டிவிடத்   துடிக்கும் ஓர் துணிச்சலை வேகத்தை உள்ளடக்கி வைத்துக் கொண்டு தண்ணீரெடுத்து முகத்தில் அடித்து அடித்துக் கழுவினேன். அதற்குள் யாரோ ஒருவர் வந்து கழிவறையின் கதவு தட்ட – கதவை திறந்தேன். அவள் கதவிற்கு வெளியே நின்றிருந்தாள்!! கண்கள் அவளுக்குத் தீயென சிவந்திருந்தது!!                                           பகுதி – 12 “ஏன் நான் உங்களை தொல்லை செய்கிறேனா?” “ச்ச ச்ச.. போயிட்டு வாங்க, நான் அங்கிருக்கிறேன் பேசுவோம்” கழிவறை கதவு மூடிவிட்டு வெளியே வந்தேன். அவள் முகத்தை சோகமாக வைத்தவாறு என் பின்னே வந்து நின்று “நான் உங்களை காணோமே என்றுதான் வந்தேன், வாருங்கள் போவோம்” என்று சொல்லிவிட்டு என்னுடனேயே வந்து என் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். ஓரிரு நிமிடம் மௌனமாக அமர்ந்திருந்தோம். ஜன்னல் பக்கம் தெரிந்த வெண்பஞ்சு போன்ற மேகங்களையும், எதிரே விமானத்தினுள் இருக்கும் தொலைக்காட்சி மற்றும் ஆங்காங்கே விமானத்தினுள் எழுதப் பட்டிருக்கும் தமிழ் எழுத்துக்களையுமெல்லாம் பார்த்துக் கொண்டே அவள் பக்கம் திரும்பினேன் - “ஏன்.. கழிவறைக்குள் சென்று அழுதீர்களா?” என்றாள் “அழக் கூடாதென்று முடிவெடுத்து வந்தேன்” என்றேன் “அதானே பார்த்தேன், தமிழகத்தில் உள்ளவர்கள் எங்களுக்காக அழுதிருந்தால் எங்களின் கண்ணீர்தான் என்றோ துடைக்கப் பட்டிருக்குமே…?” “பார்த்தீர்களா, இது தான்.., இதுதான் நம் பெரிய குறையே!! நீங்கள் நினைப்பது மிகப்பெரிய தவறு. தமிழகத்தை நீங்கள் மேம்போக்காக பார்க்கிறீர்கள். தமிழகம் பலமடங்கு பெரிய மாநிலம். தனி நாட்டுத் தகுதியுள்ள ஓர் மக்கள் சக்தியும் பரப்பளவும் கொண்ட மண் அது. உலக தமிழர்களின் தாய்நிலம், ஆனால் நல்ல அரசியல் வாதிகளை தேடியே தன் தனித் தன்மையினை இழந்துக் கொண்டுள்ளது என்பது தான் வருத்தத்திற்குரிய நிலை. அப்படியே மீறி உள்ளிருக்கும் அரசியல் வாதிகளே துணிந்து போராட வெளிவந்தாலும்; இந்தியா எனும் ஓர் வட்டத்தால் அவர்கள் முடக்கப் பட்டு விடுகிறார்கள். இந்தியா என்று எடுத்துக் கொண்டால் அது பலதரப்பட்ட ஒருதலைப்பட்ச மனநிலையையும், சுய விருப்புவெறுப்புகள் சார்ந்த கோபத்தையும், பாரபட்சம் பார்த்து பிறரை ஒதுக்கி தன்னை வளர்த்துக் கொள்ள முனையும் அரசியல்வாதிகள் மற்றும் அண்டை மாநிலத்தினரைப் பெற்ற கொடிய வட்டமாகவே உள்ளது. மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தும் என்னால் கொடுக்க முடியாதென்று குடிக்கும் தண்ணீரை கூட தன் பக்கமே அணைக் கட்டி மடக்கிக் கொள்ளும் அற்ப பதர்களுக்கு மத்தியில் ஆளுமொரு வாழுமொரு நிலை தமிழகம் சார்ந்த நிலை. தமிழர்கள் இப்படி முழு ஆதரவில்லா ஓர் நிலையில் கூட தன்னால் இயன்ற ஆதரவினை ஏற்படுத்திக் கொள்ளவேண்டிய, போராடிப் பெறவேண்டிய அரசியல் தலைவர்களோ சுயநலப் புழுக்களாகவும், தூக்கிவீசப் பட்ட தன் பங்கிற்கான உடமைகளை தூக்கிக்கொண்டு திரியும் சுயநலமிகளாகவோ இருக்க, இவர்களை நம்பியே தன் உரிமையினை தொலைக்கும் ஒற்றைத் தவறில்; தமிழக மக்களின் பார்வையிலிருந்து முழுதாக அறியப் படாமல் அந்நேரம் மறைக்கப் பட்டுவிட்டது போர் மற்றும் இழப்பு சார்ந்த செய்திகள் எல்லாம். ஏதோ சண்டை என்று அறிந்தவர்களால்; ஏன் சண்டை எதற்கு சண்டை, யாருக்கு இழப்பு, என்ன செய்யவேண்டும் எனும் அடுத்தடுத்த நடவடிக்கைகளையோ தீர்வுகளையோ எடுக்கக் இயலாமல் போனதற்கு; தேவையான விழிப்புணர்வினை ஊடகங்கள் ஏற்படுத்தாமையும், அதற்கு பின்னால் நின்று தக்க பலம் சேர்க்காத அரசியல் தரப்பும் தானே காரணமன்றி ஒட்டுமொத்த மக்களும் அல்லவே அல்ல. அம்மக்கள் இன்றும் ஈழத்து போராட்டங்களை எண்ணி ரத்தம் கொதித்தே திரிகிறார்கள். ஆயினும் - இப்பொழுதெல்லாம் பாருங்கள்; தமிழருக்கு மத்தியில்வேறு ‘தமிழக தமிழர், ‘இலங்கை தமிழர், ‘மலேசிய தமிழர் என்று நாடுவாரியாக பிரிந்துக் கிடப்பதன்றி அந்தப் பிரிவுணர்வு இதற்குள்ளும் கூட வந்துவிடுகிறது. தமிழருக்குள்ளே; தமிழராக மட்டும் நாம் ஒருங்கிணைந்து நில்லாமல்; நமக்குள்ளேயே நாம் குறை சொல்லித் திரிந்து நம் முதுகிலேயே நாம் இட்டுக் கொண்ட பிரிவினை கோடுகள்தான் இன்றும் நம்மை வெவ்வேறு பக்கமாக திருப்பி வைத்துள்ளது என்றே எண்ணுகிறேன் நான். இதலாம் கடந்து - ‘தன்னால் ஒன்றுமே செய்ய இயலவில்லையே எனும் வேட்கையில்; என் மக்களுக்காக எதையுமே செய்திட முடியாதவனாக உள்ளேனே எனும் வருத்தத்தில் ‘ஒரு வார்த்தை எதிர்த்துக் கேட்கக் கூட நான் வக்கற்று போனேனே இம்மண்ணில் எனும் வேதனையில், இனி நான் வாழ்ந்து ஆகப் போவதென்ன என்ற ஒரு விரக்தியில், ஈழ விடுதலைக்காக தன் உயிரை  மாய்த்துக் கொண்டு இறந்து போனால் நாலுபேருக்கு அதுவேனும் ஒரு விழிப்பினை ஏற்படுத்தாதா என்று’ தன் உயிரை மட்டுமே விட முடிந்த ஒரு சகோதரன் கூட அதே ஈழத்து மக்களால் அவதூறாக விமர்சிக்கவும் ஏளனமாகப் பேசவும் படுகிறான். இருந்தும், அதையும் கூட அவர்கள் வஞ்சிக்கப் பட்டவர்கள், வலியில் பேசுகிறார்கள் என்று சொல்லி, தன்னால் இயன்றதை இனியேனும் செய்வோம் என தமிழ் உணர்வும் இன உணர்வும் நாளுக்குநாள் பெருகி, ஈழம் எம் விடிவு; ஈழம் மட்டுமே எம் லட்சியமென்று தமிழகத்தின் எத்தனையோ தெருக்கள்; விடுதலை வேண்டி விழித்துக் கொள்ளுங்களென்று முழங்கவும், அரசுக்கு எதிராகக் கூட கொடிபிடித்து பல இளைஞர்கள் ஈழ மக்களின் விடிவிற்கென திரியவும்  ஆரம்பித்து விட்டனர். சிறைசென்று போராடவும் துணிந்துவிட்டனர். ஓட்டுப் போட செல்கையில் கூட, என் மக்களை காக்காத அரசு ஓர் அரசா? எத்தனை இந்த தமிழகத்திற்கு செய்தாலென்ன அங்கே ஈழத்தில் எம் உறவுகள் கூண்டோடு சுட்டு வீழ்த்தப் பட்டபோது ஏனென்றுக் கேட்க திராணியற்றும், உடன் நின்று உதவும் வேற்று மாநிலத்தவரோடு கைகோர்த்தும் நிற்கும் அரசெல்லாம் எப்படி எங்களின் அரசாகும் என்று  கேட்கும் தூக்கிவீசுமொரு எழுச்சிமிகு இளைஞர்களாக இன்றைய சாமானிய இளைஞர்கள் கூட புறப்பட்டு விட்டார்கள்” “பார்த்தீர்களா, உங்களுக்கே, உங்களின்ட தமிழகத்தை பற்றி ஒரு வார்த்தை சொன்னதும் இத்தனை பேசி, சிபாரிசு செய்து ‘மெச்சிக் கொள்ளும் மனநிலை தான் இருக்கின்றது” “இல்லை; இது மெச்சுதல் பார்வை இல்லை சகோதரி, எனை நம்புங்கள், இது ஒரு சிநேகமான தன்னிலை விளக்கம். நமக்குள் இருக்கும் பிரிவினைக் கோடுகளை அகற்றிக் கொள்ள கெஞ்சிக் கேட்பதற்கு பதிலாய், இப்படி நம் நிலையினை விளக்கிச் சொல்ல முயற்சிக்கும் ஒரு உணர்விது. காரணம் அவர்கள் அப்படி.., அவர்கள் அப்படியென்று ஒட்டுமொத்தப் போரையும் ஒருவர் சொல்வதால் அது அந்த நூறு பேருக்கும் வலிக்கிறது. அப்படி ஒருவனால் நூறு பேரை குறை சொல்லிச் சொல்லி தான் நாம் மெல்ல மெல்ல நமக்குள் பெருத்த பிரிவினையினையே வளர்த்துக் கொண்டோம். ஒவ்வொருமுறை இதுபோன்ற தமிழகத்தை பற்றிய இழிவான சொற்களை வாதங்களை கேட்கையில் படிக்கையில் என்று திருந்துமோ இந்த மக்களெனும் வருத்தமே யெனக்கு வரும். வெறுமனே நாலுபேரை கூட்டி ஒருவரை இழிவு படுத்துவதென்பது அத்தனைப் பெரிய கடினமான செயலல்ல. அதனால் இழப்பு என்பது நம்மினதிற்குள் தான் வருமேயன்றி வேறில்லை சகோதரி” “நீங்கள் சொல்வது சரி தான் நமக்குள் வேறு பாடு கூடாது, ஆனால் இது ஒரு பழிச் சொல் கிடையாது, இது எங்கட மக்களின்ட கோபம். அடிப் பட்டு அடிப்பட்டு துடித்தவருக்கு, காப்பாற்ற ஒரு நாதியற்று கிடப்பவருக்கு ‘பக்கத்தில் நிற்கும் சகோதர உறவுகள் கூட இப்படி கைகட்டிக் கொண்டு மௌனமாக இருந்து பாதாகம் விளைவித்ததே எனும் வலி; அங்கே வெடிகுண்டு வெடிக்கும் சப்தமும் குழந்தைகள் அலறும் சப்தமும் கேட்க, இங்கே தீபாவளிப் பட்டாசு வெடித்து குதூகலித்துக் கொண்டிருந்ததை தூரமாய் நின்று அறிந்ததன் பேரில் எழுந்த ஒரு ஆதங்கம் அண்ணை அது” “மறுக்கவில்லை, அங்கே உயிர்விட்டு துடிக்கும் மக்களை மறந்து ‘மானாட மயிலாட’ பார்க்கும் இழிவுச் செயலென்பது கேவலம் தான். அதற்காக அவர்கள் விழிப்புற்று விடுதலை உணர்வினை தலையில் ஏந்தி, உயிர்விடவும் துணிந்தலையும் நேரம், நூறுபேரையும் கோழை என்பதோ, ஏளனத்திற்குள்ளாக்கிச் சிரிப்பதோ எட்டு கோடி மக்களையும் அவமதிப்பதாகாதா?” “ஹ்ஹா… பெரிய எட்டுகோடி, எங்கட உயிர்பிரிகையில் இல்லாத எட்டுக் கோடி; செத்துப் பிணமான பின் மேல்விழுந்து அழதென்ன பலன்?  அல்லது எரித்துக் கொண்டு தன்னை மாய்த்துக் கொள்வதில் தான் இனி நடக்கப் போவதென்ன?” “அதை மறுப்பதற்கில்லை, ஈழம் என்றாலே தெரியாத ‘இலங்கை என்று மட்டுமே தெரியக் கூடிய சதிகார வரலாறு படித்து வளரும் மக்களுக்கு ஈழத்தின் போர் குறித்த விவரம் கூட தெரியாமல், தன் இன உணர்வுகளைக் கூட பிறர் வந்து புதுப்பிக்கும் அவசியம் என்பது காலமாற்றத்தின் கொடுமையோ அல்லது அரசியல் துரோகத்தின் கேடோ அன்றி வேறில்லை. என்றாலும், இனியேனும் நாம் சேர்ந்து நிற்போம், நமக்கு மத்தியில் இருக்கும் பழிச் சொல் திரைகளை கிழித்தெறிவோம், பல கைத் தட்டும் ஓசை இதுவென்று’ உலகிற்கு தமிழர் ஒற்றுமை மூலம் காட்டுவோம் சகோதரி. எனை போன்ற அல்ல; எனை விடவும் மிக நல்ல நல்ல இளைஞர்கள் திறமை வாய்ந்த இளைய சமுதாயம் என்ன செய்வதென்று வழி தெரியாமல் ஈழக் கனவு சுமந்து  திரிகிறார்கள் தமிழகத்தில். அவர்களை எல்லாம் சகோதரத்துவமாய் ஒன்றிணைப்போம். நெற்கட்டு சுமந்துப் போனாலும் பிரித்துப் பார்க்கையில் நான்கு புற்களின் துண்டுகள் இல்லாமல் இல்லையே; அதுபோல் எண்ணி அக்கறை இல்லா மனிதர் ஓரிருவர் இருப்பின் அவர்களை களைந்துவிட்டு லட்சியத்தோடு கைகோர்க்கும் நிறைய பேரைக் கொண்டு நம் கனவினை வெல்வோம் சகோதரி” “ஏதோ சொல்கிறீர்கள், உங்கடை பேச்சை கேட்கையில் ஒரு தார்மீக நம்பிக்கை எனக்கும் உள்ளே ஊறித் தான் போகின்டது. பார்ப்பம், நல்லது நடந்தால் யாரு மறுப்பினும். எல்லாம் ஒரு மண்ணிலிருந்து உருவாகி பின் பிரிந்து வளர்ந்த மைந்தர்கள் தானே..” “அதுதான் சகோதரி, குறையில்லா இடமில்லை. அதை நிறையாக்கிக் கொள்பவன் தானே வெற்றியாளன்? இப்போதெல்லாம் பார்த்தால், நம் புலிகளை கூட ஏசுகின்றன சில நம் மக்கள், எப்படித் தான் அவர்களுக்கு மனது வருகிறதோ தெரியவில்லை” “ஏதோ, என்னை வம்பிற்கிழுக்கும் எண்ணமென்டு நினைக்குறன்” “இல்லை இல்லை” “எனக்கு நீங்கள் கதைப்பதைப் பார்த்தால் அப்படித் தான் விளங்குனும்” “நீங்கள் சொல்வது வேறு, உங்களுக்கான ஆதங்கம் வேறு. ஆனால்; வேறுசிலர் தரக் குறைவாக கூட பேசுகிறார்களே புலிகளைப் பற்றி, நமக்கென உயிர்த்தியாகம் செய்த ஒவ்வொரு மாவீரர்களும் நமக்கென மண்ணில் புதைந்த விதைகள் என்றல்லவா பூஜிக்க வேண்டும் நாம்? அவர்களெல்லாம் சொட்டு சொட்டாக தன் உயிரை ரத்தமாகவும் புரட்சியாகவும் சிந்தி கனவுகளுக்கிடையே வீழ்ந்தவர்கள் இல்லையா?” “ஆம், சரியாக சொன்னீர்கள், அதுமட்டுமல்லாது என்னையும் புரிந்துக் கொண்டீர்கள். நான் கூறியது, கவலைப் பட்டதென்பதெல்லாம் வெறும் என் கோபத்தினைக் கொண்டு மட்டுமல்ல. என்னைப் போல் நொடிக்குநொடி தனிமையினாலும், தனியா விடுதலை தாகத்தாலும் எண்ணி எண்ணி நினைவுகளால் மடிந்துக் கொண்டிருக்கும் எண்ணற்றோர் கொண்டுள்ள கேள்விகளின் வெப்பமது. ஆனால், உண்மையில் புலிகள் புலிகள் என்று புலிகளை குறை சொல்லியும் பயனில்லை. அன்று அவர்கள் இறங்கி களத்தில் நிற்காவிட்டால். என்றோ எங்களை தொலைத்திருப்பான் சிங்களவன். நாங்கள் எல்லாம் அப்போ சிறு கண்ணிகள். எனக்கு நான்கு சகோதரிமார்கள் இருந்தனர், அந்த நாளோடு என்னையும் சேர்த்து அஞ்சிப் பெண்டுகளையும் கரை சேர்க்க எண்ட அப்பன் பட்ட பாடு, ஒ.. சொல்லி மாளாது. இந்த சிங்கள நாய்கள் இரவானால் வரும் பகலில் கூட அரிப்பெடுத்தால் நிற்காது” “வீட்டுக் குள்ளேயே வருவாங்களா?” “குளிக்கிறன்னு தெரிந்தால் கூட விடமாட்டினும், எல்லாருக்கும் முன்னமை வைத்தே எல்லாம் நடக்கும். இதுபோல் வெளியில் தெரியாமல் கூட எத்தனையோ கதைகள் நடந்ததுண்டு. நிறைய பேர் சொல்ல பயந்து சொல்ல மாட்டினும். உயிருக்கும், உயிரை விட மானத்திற்கும் பயந்து பயந்தே மடிந்த குடும்பங்களும் பயித்தியமாகிப் போனவர்களும் கூட எண்ணற்றபேர் உண்டு. ஆனால், இதை எல்லாம் ஏனென்டு கூட கேட்க இயலாது, கேட்டால் சுட்டுட்டு போய் கொண்டே இருப்பான். தெருவில் ஆர்மி வரான் என்றாலே அடி வயறு கலங்கும் எங்களுக்கெல்லாம். உயிர்போனால் கூட பரவாயில்லை. மானம் போகும் என்று முன்னமே தெரிந்தால் அதை விட கொடுமை வேறில்லை அண்ணை. அதை எல்லாம் அனுபவித்த பாவிகள் நாங்கள். சொன்னா நம்ப மாட்டியல், சின்ன சின்ன குழந்தையை கண்டால் கூட இந்த நாய்கள் விடுவதில்லை. ஜட்டிய கழட்டிட்டு பார்ப்பானுகள், ஆணா பொண்ணா என்று. பொண்ணுன்னா போகட்டுமென்டு விட்டுப்போவினும், ஆணென்டால் அங்கடையே வேடிவைத்துக் கொள்ளுவினும். “குழந்தைக்கா?????????!!!” “ஓம்….” “குழந்தைக்கு பாம் வைப்பானுங்களா?” “ஓம் அண்ணை, கழற்றிட்டு பார்ப்பானுகள், பொண்ணா இருந்தா களத்துக்கு வாராதுன்னு விடுவினும், ஆணென்டால் புலியாகி விடுமாம் அது வளர்ந்தால். அப்படியே அதுக்கு பாம் வைத்து கண்ணெதிரே சிதற சிதற சாகடிப்பானுகள்” “ச்ச நம்பவே முடியலையே?” “இதுக்கே திகச்சிட்டா? இவனுங்க செய்ததை எல்லாம் கேட்டா உலகம் மன்னிக்காது. இதுக்கெல்லாம் கடவுள் ஒரு நாள் கூலி கொடுக்காம விடம்மாட்டான். பச்சமண்ணு னு கூட பார்க்காம சுட்டுப் போடுற பசங்க தானே இவனுங்க. நினைச்சா வயிறு எரியுது, என் கண்ணு முன்னாடியே சென்ஜானுகளே” “என்ன செஞ்சாங்க?” “என் கூட எங்கட ஊர்ல இருந்தே வந்தவ ஒருத்தி, அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு எதிரிக்கு கூட துரோகம் நினைக்காதவ அவ. அவளையும் விட்டு வைக்கவில்லை அந்த ஆர்மிக் காரர்கள். வெளியேச் சொன்னால் வெட்கக் கேடு இந்த ஆர்மி காரனுண்ட செயலெல்லாம்” “என்ன செய்தார்கள் என்று சொல்லுங்களேன் சகோதரி, அவர்களின் இழிசெயலை உலகிற்கு தெரிவிப்போம், நியாயத்தை உலக தமிழர்கள் எடுக்கட்டும்” “வேறென்ன, நம்மட விடுதலைப் புலிகள், நம் வீடு தோரும் வந்து நீ வா நீ வா என்டு கொண்டுபோய்க் கொண்டே இருந்தால் கடைசியாக யார்தான் போறது? ஒருகட்டத்தில் எல்லோருமேப் போனோம். விடுதலை ஒன்னு தான் குறியென்டு எண்ணி மொத்த தமிழரும் போனோம். அந்த நிலையிலும் எண்ட அப்பன் மானம் ரோசம் குடும்பம்னு பார்த்துத் தான் எங்க அஞ்சு பேரையும் வளர்துச்சு. அதே எங்கட வளர்ப்பு போலவே வளர்ந்தவள் தான் அவளும். அவ பேரு மலர்விழி. சாந்திரம் ஆறு மணி ஆகும்னாலே எங்கட அப்பன் எங்களை அஞ்சு போரையும் காட்டுக்கு கூட்டி போய் விட்டுவரும். பகலென்டாலும் பேசலாம் கத்தலாம் யாரையேனும் அழைக்கவேனும் செய்யலாம். இரவில் யாரை அழைப்பது என்ன செய்வது, நேரா வீட்டில் வந்து யாரை பிடிக்குதோ அவிகளை கொண்டு போறது, பிறவு எங்காச்சும் வெச்சு கொன்னுட்டு வேலையை முடிச்சிகிட்டு தூக்கிப் போட்டுவிடுவது. மறுநாள் எங்கேனும் பிணம் கிடக்கும். காக்கா கழுகு கத்தினால் அந்த குடும்பம் அழுதுக் கொண்டே அங்கு ஓடணும். கேட்டா, புலிகள் எதிர்க்க வந்தார்கள் சுட்டோம்னு செய்தி போடுறது. அதுக்கு பயந்துக் கொண்டுதான் எங்கட அப்பன் எங்களை இரவானால் காட்டுக்கு கொண்டுபோய் விட்டுவிடும். பாவம் அந்த கிழவன், தன்னோட வயசான காலத்துல எப்படி எல்லாம் கஷ்டப் பட்டுது. நாங்க அஞ்சு பேரும் குமரியாயிட்டம் பாருங்க. அதுல நாங்க மூத்தவ மூணு பேரும் மாப்பிள்ளை பார்க்க இருந்தோம். அதுக்கு பயந்தே அந்த கிழம் திரியும். எங்களை கொண்டு வந்து காட்டுல பதுக்கி வெச்சிட்டு சோறு கொண்டாரப் போகும்.  திரும்பி வரும் வரை எங்களுக்கு சோறு வருமா அப்பா வருவாரான்னு நிலை இருக்காது. சிலநேரம் உயிர் போனா போகுதுன்னு துணிந்துவிடத் தோணும். ஆனால் எங்கட அண்ணனுகள் விடமாட்டார்கள். நாங்கள் சொல்வதை கேட்க மாட்டார்கள். நாமெல்லாம் கெளரவமா வாழ்ந்த குடும்பம். நமக்கு ஆர்மியை எதிர்த்தெல்லாம் ஒன்டும் செய்ய இயலாதுன்னு சொல்லி அடக்கிடுவானுகள். ஒரு பக்கம் புலிகள்னு பயம் வரும், இன்னொரு பக்கம் சிங்களனுக்கும் பயப்படனும்” “புலிகளுக்கு ஏன் பயப்படனும்?” “ஒரு பயந்த்-தே(ன்), அவிகளும் என்ன லேசுபட்டவங்களா? அவைகளும் மனுசாலு தானே? வந்து இதை கொடு அதை கொடுன்னா என்ன மறுக்கவா முடியும்? அதுகளுக்கு போராட பொருள் என்ன வானத்திலிருந்தா  வரும்? எங்களிடம் இருந்து தான் கேட்பாங்க, உரிமையோட வந்து வாங்கிப் போவாங்க. கொஞ்சம் மனசு வந்து கொடுப்போம் கொஞ்சம் மறைச்சி வைப்போம். ஆனா இருந்தும் மறச்சோம்னு தெரிஞ்சா அவர்களுக்கு கோபம் வரும். அதும், அதுகள பார்க்கவே கண்ணு தாங்காது, புலிகள் என்டால் என்ன கிழமெண்டா நினைச்சியள், எல்லாம் வாலிபக் குமாரர்கள், படிக்கும் வயதில் துப்பாக்கித் தூக்கப் பணிக்கப் பட்டவர்கள். பாவம், இளசுகளா வரும். சிலநேரம், அக்கா அக்கா கொஞ்ச சோறு போடுங்கக்கான்னு வந்து நிக்கும், அதுகளை பார்க்கையில வயிறு பத்தி எரியும். இப்படி திரியுதுகளே ன்னு மனசு தவிச்சி போகும். அதுகளுக்காகவாவது உயிரை விட்டுத் தொலைப்போம் போ’ன்னு இருக்கும். அப்பவே போயி புலியோட செர்ந்துடுவோமுன்னு நினைப்பேன் நானெல்லாம். வாங்கடி செல்லங்களான்னு சோற போட்டாலும் திங்கும், கஞ்சிய ஊத்தினாலும் குடிக்கும்க பாவம். இது வேணும் அது வேணும்னு கரைசல் எல்லாம் கிடையாது சாப்பிடுறவிசயத்துல. இருக்கறத தின்னுப்புட்டு போவுங்க பாவம். அபப்டியெல்லாம் கஷ்டப் பட்டு, அங்க இங்க பயந்து எங்கட அப்பன் ராத்திரிக்கு  ஆனா சோறு கொண்டு வரும். அதை வேற எவனா பார்த்தா எங்க போற யாருக்கு சோறு கொண்டு போறன்னு அதை அங்கனையே சுட்டு போட்டாலும் கேட்க கேள்வியில்லை நாதியுமில்லை. அப்படி ஒரு விதமா எங்களை காட்டுக்குள்ளையும் வீட்டிற்குள்ளேயும்னு பொத்தி பொத்தி வெச்சிதான் எங்களை எங்க அப்பன்மாறுங்க எல்லாம் வளர்த்தாங்க, இந்த ஆர்மிக்கு பயந்து. அப்படி எங்க கூடவே இருந்து பக்கத்து வீட்டுல வளர்ந்தவ தான் அவ. அந்த மலர்விழின்னு சொன்னேன்ல அவ. என்ன செவேல் னு இருப்பா தெரியுமா? நல்ல ஆம்படையான் கிடைச்சான் அவளுக்கு, அவரும் ஒரு கட்டத்துல புலிகள் கூட சேர்ந்து போராட களத்துக்குப் போயிட்டாரு. அந்த நேரம் பார்த்து இவ கற்பமாயிட்டா, போர் உக்குரத்துல இருக்கு. திடீர்னு ஒரு நாள் ஆர்மி காரனுக ஊர் உள்ள புகுந்துட்டாங்கன்னு தெரியவர; புள்ளைய காப்பாத்தனுமேன்னு எங்க எங்கயோ ஓடினாள், ஓடி ஓடி அந்த வயித்தோட அலைஞ்சா பாவம், அவளையாச்சும் விட்டானுகளா நாசக் காரனுக? தேடி பிடுச்சி கொண்டானுங்க பாருங்க, பாவிங்க… அந்த கதைய கேட்டிங்கனா நெஞ்சு வெடிச்சிடும்” “கொன்னுட்டாங்களா?!!!!” “அதை ஏன் கேட்குறீங்க. அவளை ஒரு கற்பவதின்னு கூட பார்க்காம கொன்னு கர்ப்பழுச்சி அவ வயித்த கீறி அவ வயித்துல வளர்ற குழந்தையை எடுத்து சுட்டுப் போட்டாங்களாம். கேட்டால் தமிழனோட சிசு வயித்துல கூட வளரக் கூடாதுன்னு சொல்லிப் போனாங்க பாவிமாருங்க” அவள் சொல்லி நிறுத்தினாள். எனக்கு காதை கொடுத்து அதற்குமேல் எதையுமே கேட்டிட இயலவில்லை. மனசையே யாரோ போட்டு பிசைந்தாற்போல இருந்தது. அப்பவும் நம்ப இயலாம “உண்மையாவா சொல்லுறீங்க?” என்று கேட்க – அவள் “என்னை யென்ன வேலை கெட்டவன்னு நினைச்சியிலா, மரத் தமிழச்சி நானு, என் நாக்குல பொய் வராது, நாக்கை பார்தியலா...” நாக்கை வெளியே நீட்டிக் காட்டினாள். “இல்லை இல்லை நான் உங்களை சந்தேகமா கேட்கலை. இந்தளவுக்கு செய்ய முடியுமான்னு தான்…” முடிக்காமல் இழுத்தேன். “இதை விட எல்லாம் செய்தவர்கள் சிங்களவர்கள். எங்கட கதை கேட்டால் செத்தப் பொணம் கூட எழுந்து உட்கார்ந்துக் கொள்ளும். நானெல்லாம் பொருத்து பொருத்துப் பார்த்து வேற வழியில்லாம துப்பாக்கி தூக்கியவள் தான். இதை நான் என்னைக்கோ செய்திருக்கனும், இன்னும் நாலு ஆமிக் காரனுகளை சுடவாச்சும் செய்திருப்பேன். நெசந் தான் அண்ணை, இவனுங்களை ஏழேழு ஜென்மத்துக்கும் நாங்க மன்னிக்க மாட்டோம். அணு அணுவா எங்களை சாகடிச்ச இவனுங்களும் அணு அணுவா சாகணும். அப்பாவி மக்கள் மீது எங்கள் கோபமில்லை. அது சிங்களமாவே இருந்தாலும்  அவிகளும் பெண்டும் குழந்தைகளும் தானே. அவிகளை ஒன்டும் செய்யக் கூடாது, ஆனால் இந்த ஆமிக் காரர்களுக்கு புரியவேண்டும். வெடித்தால் எப்படி வலிக்கும், வெட்டினால் எப்படி வலிக்கும், சுட்டால் எப்படி வலிக்குமுன்டு தெரியவேணும். இன்னும் என்ன எல்லாம் செய்வானுங்கன்னு கேட்டால் செய்ய இனி ஒன்டுமே யில்லை என்று சொல்லும் அளவுக்கு செய்து விட்டானுகள். முற்றுமாய் நாங்கள் வாழ்ந்த அடையாளத்தையே இங்கு மாற்றிவிட்டார்கள். எங்களை கொண்டுபோய் காட்டில் விடுவினும். காட்டில் வசித்த சிங்களமாரை நாங்கள் நாகரீகமாய் வசித்த ஊரில் குடிவைபினும். இவனுகளை எல்லாம் யார் தட்டிக் கேட்பது. எங்களுக்கெண்டு இருந்த ஒற்றை தலைவரும் எங்கிருக்கிறார் எப்போது வருவார் என்று தெரியாது. ஆனால், கண்டிப்பாக வருவார் என்று நம்பிக்கை மட்டுமே இன்றும் எங்களை உயிராக வைத்திருக்கிறது. இன்றில்லை என்டாலும், ஒர்தினம் நாங்கள் வெல்வோம். எங்கட ரத்தத்திற்கு அந்த ரத்தம் குடித்த மண்ணு பதில் சொல்லியே தீரவேண்டும். எங்கட உயிர் விட்டு ஊறிய மண்ணில் ஓர்நாள் எங்கட கொடி பறக்கும்!!!!!!!!!!!!! எங்கள் எதிரிகள் எங்கட கண்ணீருக்கெல்லாம் பதில் சொல்லியே ஆகவேண்டும்” அவள் பேச பேச நரம்பு புடைத்து ஒரு வெறி தலைக்கேறி வீரதீரத்தோடு அமர்ந்துக் கொண்டது எனக்குள். அந்த எரியும் கனலை கண்ணில் புதைத்துக் கொண்டு – அவர் சொல்வதையே கவனித்துக் கொண்டிருந்தேன். நான் தலையாட்ட தலையாட்ட என் புரிதலுற்ற பார்வை அவளுக்கு நம்பிக்கையை கொடுத்தது. “பிறகு ஏன் இப்படி பட்டவர்களை எல்லாம் விட்டுவிட்டு இப்படி விமானம் ஏறி எங்கோ போகிறேனேன்னு உங்களுக்குத் தோணும், ஆனால்…” அவள் வேறேன்னவோ சொல்ல வந்தாள், அதற்குள் ஒலிப் பெருக்கியில் ஆங்கிலத்தில் அறிவிப்பு வர அதை நோக்கி கவனித்தோம். விமானம் கீழ் சாய்ந்து இறங்குவது போல் அங்குமிங்குமாய் ஆடியது. சற்று நேரத்தில் விமானம் செல்லும் வழியினிடையே ஓரிடத்தில் தரை இறங்க உள்ளதாகவும். அங்கு ஒரு மணிநேரம் நின்று, அங்கிருந்து புறப்படவுள்ள பயணிகளை எடுத்துக் கொண்டு போகுமென்றும், அறிவிப்பு வர, விமாணப் பணிப்பெண் வந்து எல்லோரையும் நேராக அமரும் படியும். கச்சை பட்டி அணியவும் சொல்லிவிட்டுப் போனாள். இருவரும் நேராக அமர்ந்து சற்று அமைதியானோம். உள்ளுக்குள் அவள் சொன்னது சொல்ல வந்தது எல்லாமே எண்ணி ரத்தம் கொதித்துக் கொண்டிருந்தது எனக்கு. இருக்கையில் பின்சாய்ந்தவாறு அமர்ந்து கண்களை மூடிக்கொண்டேன். விமானம் மெல்ல, மெல்ல மெல்ல தரையிறங்கியது..                         பகுதி – 13 சாரையாக ஊர்ந்துக் கொண்டிருக்கும் எறும்புகளின் வரிசைக்கிடையே கைவைத்துக் கலைத்தால் அது எப்படி நகர்ந்து இங்குமங்குமாய் நாலாப்புறமும் சிதறி ஓடுமோ அப்படி ஒரு பத்து பேர் விமானத்தினுள் ஏறி இங்குமங்குமாய் பரவி சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். அதில் ஒருவன் எங்களுக்கருகில் வந்தான். அவளை நெருங்கி ‘மாதங்கி அக்கா என் பெயர் கிருபன் என்றான். எனக்கு சற்று அதிர்ச்சி ஏற்பட்டது. அவள் திரும்பி என்னைப் பார்ப்பாள் என்று பார்த்தேன் அவள் பார்க்கவில்லை. எல்லாம் தயார் தானே என்றாள். அதற்குள் அங்கிருந்து ஏறிய ஒருவர் தன் கைப்பையினை மேலறையில் வைக்கவேண்டி எங்களின் அருகே வர அவன் அங்கிருந்து நகர்ந்து கழிவறை பக்கம் கண்காட்டிவிட்டுப் போனான். ஐந்து பத்து நிமிடத்திற்கு மேல் கதவு திறக்கப் படவேயில்லை. வேறொருவர் வந்து கதவு தட்ட அவன் தரை துடைத்துக் கொண்டே வெளியேறுவதுபோல் வந்தான். எதிரே வெளியிலிருந்து உள்வர நின்றிருந்த பயணி ஒருவனைத் தடுத்து உள்ளே போவாதே என்றான், அவன் அவசரமென்று ஏதோ சொல்ல, இதில் வேண்டாம் வேறு கழிவறையில் போ என்று சொல்லி அவனுக்கு வேறொன்றினை காட்டினான். இவள் விருட்டென எழுந்து அவனை நோக்கிப் போக அவன் கவனியாதது போல் வெளிச்சென்று, விமான வாசலில் நின்று எதிரே பார் என்று சைகை காட்டிவிட்டுப் போனான். எதிரே, வந்ததிலிருந்து எங்களுக்கு சேவை செய்த அந்த விமானப் பணிப்பெண் நின்றிருக்க, அவளிடத்தில் இவள் பார்வையால் ஏதோ சொல்லிவிட்டு வந்து என்னோடமர்ந்தாள். சற்று நேரத்தில் விமானம் புறப்பட்டு பறக்கத் துவங்கியது. அந்த விமானப் பணிப்பெண் ஒரு குவளையினை கொண்டுவந்துக் கொடுத்துவிட்டு கழிவறைக்குள் போக, மாதங்கி அவள் கொடுத்த குவளையில் இருந்து தண்ணீர் அருந்துவதுபோல் அருந்திவிட்டு தண்ணீருக்கு அடியில் இருந்த ஏதோ ஒன்றினை தன் கைப் பை எடுத்து அதற்குள் கொட்டிக் கொண்டாள். விமானம் தரையிறங்க இன்னும் ஒன்னரை மணிநேரமே மீதம் இருந்தது. எனக்கு எண்ண செய்வதென்று எந்தவொரு யோசனையும் வரவில்லை. இம்மூவருக்கும் ஒரு தொடர்பிருப்பது மட்டும் புரியவர, அமைதியாக அமர்திருந்தேன். அவளின் பார்வை அதாவது மாதங்கியின் பார்வை நடத்தை எல்லாம் பார்க்க ஒரு எந்திரத் தனமாக இருந்தது. எனை பார்க்கும் பார்வையிலேயே ‘என் மீதான நம்பிக்கையினை அவள் தன் கண்களில் காட்டினாள். நானும் எனை மௌனப் படுத்திக் கொண்டு ஒன்றுமே பேசாமல் அமர்ந்திருக்க - அவள் சற்று நேரத்திற்கெல்லாம் எழுந்து கழிப்பறைக்குள் போக, நான் வெகு வேகமாக என்னருகில் வைக்கப் பட்டிருந்த அவளின் கைப் பையினை எடுத்து ஆராய்ந்ததில் கடவுச் சீட்டும் மற்றும் பயணச் சீட்டும் கிடைக்க, அவசர அவசரமாகப் பார்த்ததில் அதிர்ந்தே போனேன். அதில் அவள் பெயர் ‘நாராயணி பிரேமதாச’ என்றிருந்தது. பிறப்பு கண்டி என்றும், இனம் சிங்களம் என்றுமிருந்தது.                 பகுதி – 14 அவள் பெயர் ‘நாராயணி பிரேமதாச’ என்றும், இனம் சிங்களம் என்றும் கண்டதும் அதிர்ந்துப் போனேன். அதற்குள் அவள் வெளிப்பட்டாள். நான் அவளின் கைப்பையினை அவசரமாக கீழே வைப்பதையும் அவள் பார்க்கத் தவறவில்லை. பார்த்துவிட்டாள் என்று தெரிந்ததில் சற்று வியர்த்துத் தான் போனது எனக்கும். அதேநேரம் ஒரு சிறிய டியூட்டி ப்ரீ பிரிவின் பெயர் பொருந்திய பாலித்தின் பையினை கையில் அவள் புதிதாக கொண்டுவருவதாயும் நான் கவனித்துக் கொண்டேன்.  என்னருகில் வந்து நின்றதும் என்னை வெளியே எழுந்து வா என்றாள், வந்தேன். அவள் உள் பக்கம் சென்று அமர்ந்து பைக்குள் இருந்து ஏதோ எடுத்து எதையோ போட்டு கடைசியில் சிறுசிறு துண்டுகளாக இருந்த சில எந்திர பாகங்களை ஒவ்வொன்றாக எடுத்து மாட்டினாள். அவ்வப்பொழுது ஆட்கள் இங்குமங்குமாய் வரும்நேரம் பார்த்து அதை அப்படியே பையோடு கீழிட்டாள். சற்று நேரத்தில் மீண்டும் அந்த விமாணப் பணிப்பெண் அக் கழிவறைக்குள் புகுந்து என்னவோ செய்துவிட்டு வெளியே வர, சற்று நேரம் கழித்து மாதங்கியும் அங்கே சென்று வந்தாள். போகும்போதும் வரும்போதும் கையில் அந்த டியூட்டி ப்ரீ பிரிவைச் சார்ந்த பை இருந்தது. “கடைசியாய் வந்தமர்ந்த போது. நீ சிங்களமா?” என்றேன் “ஏன் பயமாக இருக்கிறதா?” என்றாள் “ஹும்.. எனக்கென்ன பயம்?” என்றேன் அவள் என்னையே கூர்ந்து நோக்கினாள். “என்ன ஒன்னு எதிரியிடமே என் வீட்டைப் பற்றி பேசிவிட்டேனே என்றொரு வருத்தம் வரும்”  என்றேன் “அப்போ இப்போது வருத்தமில்லையா?” “ஏன்?” “நான் சிங்களத்தியாக இருப்பேனோ” என்று “இல்லை, அதலாம் விடு, நீயே சொல் யார் நீ?” “முதலில் வந்த போதே சொன்னேனே ‘போராளி என்று. மீண்டும் கேட்பீர்களேயானால் தமிழச்சி என்று சொல்லலாம்” “அப்போ ஏன் கடவுச் சீட்டில் சிங்களம் என்றிருக்கிறதே” “தமிழச்சிக்கு அத்தனை சுதந்திரமில்லை எங்கட நாட்டில், சிங்களத்தி என்றால் ஓடும் விமானம் கூட எனக்காக உடனே நின்று, ‘எங்கு வேண்டுமோ அங்கு தரையிறங்கும்” “ஆம், எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன், என்றாலும் அவர்களிடம் தண்ணீர் வாங்கிக் கூட குடிக்க முடியாதவள் எப்படி இத்தனை சுலபமாக….. தன்னை சிங்களத்தி என்று சொல்லிக் கொள்ள முடிகிறது?” “எங்கட கோபமெல்லாம் அப்பாவி ஜனங்க மீது கிடையாது,  சிங்கள அரசிடம்.  அரசு சார் அமைப்புகளிடம். சிங்கள ஆர்மியிடம். அதற்காக சிங்களத்தி என்று என்னை சொல்லிக் கொள்வது ஒன்றும் அத்தனை சுலபமுமில்லை, அதற்குபதில் மரணத்தை பதிலாக வாங்கிக் கொண்டுதான் வந்திருக்கிறேன்” “என்ன???!!!” “எல்லாம் கடந்து நாங்கள் எங்களின் விருப்பிற்கு வாழ்பவர்கள் அல்ல, லட்சியத்திற்காக உயிரை விடவும் சம்மதித்துள்ளவர்கள். தலைமை ‘போ என்றால் போகவேண்டும் அவ்வளவுதான்” “அது புரிகிறது மாதங்கி” “வேறென்ன புரியவேண்டும்” “கள்ளக் கடவுசீட்டு தானே அது?” “ஆம்” “ஏன் அப்படி” “கட்டளையின் படி வந்துள்ளேன். வேறொன்றும் சொல்வதற்கில்லை” “தப்பித்துப் போவதாக சொன்னாயே?” “தப்பித்து வருவதாக சொன்னேன், அதற்காக விட்டுவிட்டு  ஓடுவதாக சொல்லவில்லையே” “பிறகு கடவுச் சீட்டில்…. உன் பெயர் …………. கூட…. வேறாக பார்த்தேனே” “பார்த்திருப்பாய் என்று தெரியும்” “ஒருவேளை நான் யாருடமேனும் சொல்லி இருப்பின்” “சொல்லமாட்டாய் என்றும் தெரியும்” “அதெப்படி, இதலாம் கவனமின்மை” “கற்பனை செய்துக் கொள்ளாதீர்கள், அதிகம் பேச எனக்கு நேரமில்லை, போராளி என்றாள் என்ன துப்பாக்கி சுடமட்டும் தெரிந்தவள் என்று எண்ணிவிட்டீர்களா?” “சரி, நேரே விசயத்திற்குவா என்ன செய்யப் போகிறாய் இந்த விமானத்தை” “அதலாம் சொல்ல எனக்கு அனுமதி கிடையாது. எனக்கு இட்ட கட்டளையை கூட உமக்காக தாமதப் படுத்திக் கொண்டுள்ளேன்” “எனக்காகவா……………….????!!!” “ஆம். நீங்கள் யார் என்பதை நான் கொழும்பு விமான நிலையத்திலேயே அறிந்துக் கொண்டேன். உம்மை நாங்கள் மொத்த பேரும் நம்பி இருக்கிறோம்” அவள் என்னென்னவோ சொன்னாள். ஒரு சிறிய நினைவடக்கியினை (மெமரி சிப் ஒன்றை) எடுத்து என் கைக்குள் திணித்தாள். இதில் நிறைய புகைப்படங்கள் உள்ளன. எல்லாம் சிங்களன் செய்த போற்குற்றத்தை நிரூபிக்கக் கூடியது. அதை உலக மக்களிடம் சேர்க்க வேண்டும் சேர்ப்பாயா என்றாள். கண்கள் கலங்கிப் போனது. இதை செய்யாத என் பிறப்பெல்லாம் பிறப்பா என்று தோன்றிற்று. ஆனால், வெளிக்காட்டிக் கொள்ளாமல் “அதை நான் பார்த்துக் கொள்கிறேன் மாதங்கி ‘எங்கே போகிறாய் நீ? என்ன செய்ய வந்துள்ளாய்?” என்றேன் “போவதை பற்றி பிறகு தெரிந்துக் கொள்வாய். இருக்கும் வரை நடந்ததை சொல்கிறேன் கேள் - ‘அன்றொரு மாலை நேரம், பூந்தோட்டம் போன்ற எங்கள் வீடு குழந்தைகளின் சிரிப்பில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. அப்பாவும் நானும் வீட்டில் புழுக்கமாக இருப்பதாக எண்ணி காற்றாட வெளியில் வந்து அமர்ந்தோம். அண்ணன் அப்போது தான் கடைத்தெரு வரை போகிறேன் என்று வெளிவந்து எங்களோடு பேசிக் கொண்டே நின்றார். அதற்குள் அவருடைய பெரிய குழந்தையொன்று ஓடிவந்து, அப்பா நானும் கடைக்கு வரேனென்டு அழ அவர் ஒரு அடிபோட்டு உள்ளே நின்றிருந்த அண்ணியிடம் விட்டுவிட்டு வந்தார். அதையெல்லாம் கேட்காமல் அக்குழந்தை மீண்டும் அழ, அண்ணி இரண்டாம் மகளை காட்டி பார்த்தியா உன்னிண்ட தங்கச்சியானாலும் எப்படி  நல்ல பிள்ளையாக நடந்துக் கொள்கிறாள், நீ பெரியவனாக இருந்தும் இப்படி அடம் பிடிக்கலாமா என்று கேட்க அந்த சின்னக் குழந்தை பெரியவனை நோக்கி ‘வா அண்ணா நாம் விளையாடலாம் என்று அழைத்துக் கொண்டு அவன் கை பிடித்து ஓட பின்னாலேயே இவனும் ஓட., இருவரும் - ஹே… என்று கத்திக் கொண்டே, ஓடிச் சென்று வெளியே வாசலில் அமர்ந்திருந்த அப்பாவை தொட்டுவிட்டு இருவரும் வீட்டிற்குள் ஓடுகிறார்கள். பின் வீட்டிலுள்ள அண்ணியை தொட்டுவிட்டு வாசலுக்கு ஓடி வருகிறார்கள். வீடெல்லாம் அவர்களின் சிரிப்பு சப்தம் நிறைந்துப் போகிறது. மீண்டும் அந்த சின்னக் குழந்தை ஓடி வாசலுக்கு ஓடி வந்து யே… அப்பா’ என்று அண்ணனைத் தொட்டுவிட்டு வீட்டிற்குள் ஓட அண்ணா அவர்களையே பார்த்து சிரித்துக் கொண்டு நிற்க; நொடிப் பொழுதில் சீறி வருகிறதந்த விமானம், கண்ணிமைக்கும் பொழுதிற்கெல்லாம் இரண்டுமூன்று குண்டுகளை சரமாரியாக வீட்டின்மீதும் தோட்டத்துப் பக்கமும் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த பக்கமும் என வாரிவீச வீடும் குழந்தைகளும் சிதறிப் போகிறது. திரும்பிப் பார்க்கும் வேளையில் குண்டுப் போட்டுக் கொண்டேப் போன அந்த விமானத்தின் சப்தம் காதிலிருந்து ஓயும் முன், சிதறி பஞ்சு பஞ்சாக பிய்ந்துப் போனார்கள் அண்ணியும் அந்த குழந்தைகளும். கை தனியே கால் தனியே சக்கை சக்கையாக பொறுக்கி எடுத்து கூடையில் போட்டுக் கொண்டு மார்பில் அடித்து அழுதக்  கதை கேட்டால் நெஞ்சை சுடவில்லையா?” கண்களில் நெருப்பு சிதறுவதைப் போல் கோபத்தை வைத்துக் கொண்டு என்னைப் பார்த்துக் கேட்டாள் மாதங்கி. அந்த காட்சியை கண்ட இடத்திலேயே அப்பா மூர்ச்சையாகி பின் அன்றே இறந்தும் போனார். கையில் தன் மனைவியையும் இதுவரை விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளையும் தூள் தூளாக எடுத்துப் பார்த்த பெரியண்ணனுக்கு அப்போதே மதி கேட்டுப் போனது. இன்று வரை அவருக்கு பைத்தியம் தெளிந்த பாடில்லை, தெருவெல்லாம் அண்ணியின் குழந்தைகளின் பெயர்களைச் சொல்லிக் கொண்டே சுற்றி அலைகிறாராம். ஆனால் பாருங்கள், அவர்மேல் இன்றுவரை ஒரு குண்டு விழாமல் நோக நோக உயிரோடு வைத்திருக்கிறது இந்த பாழாப்போன விதி கூட. கடைசியில் எல்லாம் இழந்து எனக்கென மீதம் இருந்தது ஒரே ஒரு சின்னண்ணன் மட்டும் தான். அவரையும் ‘புலி’ என்று சந்தேகப் பட்டு அதற்கெல்லாம் முன்னாலேயே கொண்டு போய் எத்தனை சித்திரவதைகளை செய்தார்கள் தெரியுமா?’ நாங்கள் கூட எங்கோ வேலை காரணமாக போயிருக்கிறார் என்று தான் முதலில் எண்ணியிருந்தோம். பிறகு யாருமற்று நானிருந்த இருட்டு நாளொன்றில் வந்தார் சின்னண்ணா. அடையாளமே மாறியிருந்தார். கேட்டதற்கு ‘உடம்பெல்லாம் நெருப்பால் சுட்டான் சிங்களவன் என்று சட்டையை கழற்றிக் காட்டி அழுதார். நடந்த கதையெல்லாம் சொல்லிக் கதறினார். கைவிரல் நகத்தை மட்டும் ஒவ்வொன்றாக துண்டித்தார்களாம் பாவிகள். அதலாம் கூடத் தாங்கிக் கொள்வேன்; சிங்களன் பேண்டதை கையிட்டு வாரச் சொல்லி அடித்தார்களாம். ஒவ்வொன்றினையாய் வந்து சொல்லி கதறி கதறி அழுதார். இந்த கையை வெட்டிவிடுகிறேன் என்று சொல்லி சொல்லி துடித்தார். ஒரு கட்டத்தில் பெரியண்ணன் உள்ளே வர - அவரை  பைத்தியமாக கண்டபிறகு தான் வேறு வழியின்றி அண்ணியும் குழந்தைகளும் என்ன ஆனார்கள் என்பது பற்றியும், அப்பா இறந்துவிட்ட விவரம் பற்றியும் சொல்லவேண்டி வந்தது. அன்று அதலாம் கேட்டுவிட்டு தாளமுடியாமல் ‘இந்த மண்ணே எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு தெரு நோக்கி ஓடியவர் தான்; இன்றும் எங்கிருக்கிறார் என்று தெரியாது. இது என் ஒற்றை வீட்டின் கதை எனில், இன்னும் எத்தனை எத்தனை வீடுகள், எத்தனை எத்தனை மனிதர்கள் எல்லாமே இந்த சிங்களனின் சுயநல வெறியால் எப்படி மண்ணோடு மண்ணாகப் போனார்கள் தெரியுமா????????? கண்ணீர் வந்தாலே தாங்காத உறவுகளை ரத்தசகதியாக பார்ப்பதென்பது எத்தனை கொடுமை? அதன் பின்னும் ஏனிந்த உயிர் வைத்து இத்தனை காலம் இருந்தேன் தெரியுமா???” நான் ஏனென்றெல்லாம் கேள்வி கேட்கவில்லை, அவள் எது செய்தாலும் சரி என்று எண்ணியிருந்தேன். “இதோ பார்…..” எதையோ எடுத்துக் காண்பித்தாள். உற்றுப் பார்க்கையில் எலும்பென்று தெரிந்தது. கண்கலங்கி கண்ணீர் வர அதை; அழவொன்றும் அவசியமில்லை இனி என்பது போல் துடைத்துக் கொண்டு, அவளே ‘இது யாரினுடியது தெரியுமா?’ என்றாள் அதற்குள் விமானம் தரை இறங்குவதற்கான அறிவிப்பு வந்தது. அந்த பணிப்பெண் ஓடிவந்து முன்னிருந்த இருக்கையில் எதிரே அமர்ந்துக் கொண்டாள். எல்லாம் தயார் என்பது போல் – கைகாட்டி கண்ணசைத்தாள். மாதங்கி அவசரமாக எழுந்து கழிவறைக்குள் போக’ சும்மா தடுப்பது போல் அந்த பணிப்பெண் எழுந்து ‘ஏய் என்கு போகிறாய் போய் அமர்ந்துகொள் என்று சொல்ல, அவள் அவசரம் என்று ஏதோ சொல்லிக் கெஞ்சுவதுபோல் பார்ப்போர்முன் நடித்துவிட்டு கழிவறைக்குள் போனவள் விமானம் தரை இறங்கும் வரை வெளியே வரவே இல்லை. நான் பதற்றமுற்று உள்ளேப் பார்க்கப் போக, அந்தப் பணிப்பெண் எனை தடுத்து உள்ளே போகாதே என்று சப்தமாக சொல்லிவிட்டு ‘அவள் இருக்கையில் போய் பார்’ என்று மெல்லமாக கிசுகிசுத்தாள். நான் வேகமாக வந்து அவள் இருக்கையில் பார்த்தேன். அந்த பையும் ஒரு கடிதமும் இருந்தது. அந்த பையில் சில காணொளிகளின் குறுந்தட்டுகள் இருந்தன. அதை எடுத்து துரிதமாக என் பெட்டியில் வைத்துக் கொண்டேன். கடிதத்தை படித்து விவரம் தெரிந்துக் கொண்டேன். விமானம் நின்றதும் அவள் வருவாளா என்று பார்க்க கழிவறை பக்கம் நோக்கி எழுந்து போனேன். அந்த பணிப்பெண் வந்து விரைவாக இறங்கிவிடு என்றும், முதலாக இறங்கி ஓடிவிடு என்றும் மட்டும் சொன்னாள். ஏன் என்று கேட்டேன். இந்த விமானம் இன்னும் ஒருசில மணித் துளிகளில் வெடிக்கப் போகிறது என்று சொல்லிவிட்டு, என் மூலம் அந்த காணொளியும் புகைப்படங்களும் உலக மக்களுக்கு சேர வேண்டுமென்றும் ஒரு காகிதத்தில் எழுதி கையில் கொடுத்தாள். நான் மாதங்கி??? என்று கேட்கத் துணியவில்லை. அவளோடு அமர்ந்துப் பேசக் கிடைத்த மணித்துளிகளை எண்ணி பெருமிதம் கொண்டவனாய் ஏதோ செய்யப் போகிறார்கள், ஆனால் காரணமாகத் தான் செய்வார்கள் என்று கடிதத்தில் எழுதியிருந்தபடி எண்ணிக் கொண்டு அவர்களுக்கு ஒத்துழைக்கும் விதமாக, சற்று முன் நகந்து அவளிடம் புறப்படுவதாக சைகை காட்டிவிட்டு ‘வேகமாக விமானம் விட்டிறங்க முன் சென்றவர்களை நகர்த்தித்  தள்ளிக் கொண்டு ‘வேறு விமானம் பிடிக்க வேண்டும் என்று பொய் சொல்லிவிட்டு முன்னோக்கி நடந்தேன். எனக்கு முன் ஒன்றிரண்டு பேர் அவசரமாக இறங்கிப் போகப் பார்த்தார்கள். அவர்களை முந்திக் கொண்டு நான் சற்று வேகமாக நடந்து அவர்களுக்கு முன் சென்று வெளியேறுவதில் மட்டும் குறியாக இருந்தேன். என்னோட லட்சியமெல்லாம் அவள் தந்தந்த புகைப்படங்களையும் காணொளிகளையும் கொண்டுப்போய் உலகத்தாரிடம் சேர்ப்பதில் மட்டுமே இருந்தது. நான் வெளியேறி விமான நிலையத்தில் நுழைந்ததும் - மாதங்கி ஓடி வந்து விமானத்தின் வாசலின் முன் நின்றுக் கொண்டாள். சட்டையை கழற்றி தூர எறிந்துவிட்டு பாருங்கள் நான் பாம் கட்டியிருக்கிறேன் அழுத்தினால் வெடித்துவிடும் என்று காட்டினாள். எல்லோரும் அதிர்ச்சியுற்று அவளைப் பார்க்க, தாமதிக்கவேண்டாம் ஓடி தப்பிக்க முடிந்தவர்கள் ஓடுங்கள் என்று சொல்ல, கோர்ட் சூட் போட்டுக் கொண்டு முன்னாள் முதலிட இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவன் எழுந்து ஓடப் பார்க்க எட்டி அவனைப் பிடித்துக் கொண்டாள். அசைந்தால் அழுத்தி விடுவேன் என்று சிவப்பு நிற பொத்தானை காட்டினாள். எதிரே படாரென சுட ஓடிவந்த இரண்டு மூன்று காவலாளிகளை நோக்கி வேண்டாம் துப்பாக்கியை கீழே போடுங்கள் என்றுகத்திக் கொண்டே  கையை மேலே தூக்கி சிவப்பு நிற பொத்தான் ஒன்றினை காட்டி ‘இனி யார் அசைந்தாலும் அழுத்திவிடுவேன் என்றாள். அவர்கள் செய்வதறியாது நின்று பார்க்க மீண்டும் ‘துப்பாக்கியை கீழே போடுங்கள் என்று மிரட்ட எல்லோரும் கீழே போட்டனர். என்றாலும், ஒருவன் மட்டும் சற்றும் தயங்காது சடாரென முன் ஓடிவந்து வீரசாகசம் செய்வதுபோல் சரமாரியாக மாதங்கியை நோக்கி சுட்டு சுட்டு சல்லடையாக்கினான். தமிழீழம் என் தாயகமென்று சுவாசித்த உயிர்மூச்சை மண்ணில் சரிந்தவாறே நிறுத்திக் கொண்டதந்த மாதங்கி என்னும் விடுதலைத் தீ. இதுவரை விடுதலைக்காக எறிந்த தீபமது அணைந்து ஜோதியற்று காற்றில் கலந்துப் போனது. மக்களெல்லாம் அலறி இங்கும் அங்கும் திண்டாடி ஓடினார்கள். அவள் அந்த சிவப்பு நிறப் பொத்தானை அழுத்துவதற்குள் உயிர்பிரிந்து சட்டென கீழே சரிய, நம்புவதற்கே இடமின்றி அதே கணம் அந்த விமானம் வெடித்து சுக்குநூறானது. அந்த கோர்ட் சூட் போட்டவனும் விமானத்தோடு வெடித்துச் சிதறினான்!!     பகுதி – 15 விமானம் எப்படி வெடித்தது, ஏன் வெடித்தது, வாசலில் நின்று மிரட்டிய மாதங்கி யார்? அவள் ஏன் அப்படி செய்தாள் ஒன்றிற்குமே விடை கண்டுபிடிக்க இயலாமல் தவித்தனர் லண்டன் விமான நிலையத்தினர்.  சத்தியசீலன் முதலில் இறங்கிக் கொண்டமையால் யார் கண்ணிலும் படாமால் அவசர பயணியைப் போல் அங்கிருந்து வெளியேறி,  காவலாலிகளோ அல்லது மற்ற யாரோ சந்தேகப் படுவதற்குள் அலைபாய்ந்து ஓடிக் கொண்டிருந்த மக்களோடு மக்களாகக் கூடி தப்பித்து விமான நிலையத்திலிருந்து வெளியேறினான். வெகு வேகமாக ஒரு மகிழுந்து பேசி எடுத்துக் கொண்டு நேராக வங்கிக்கு சென்று, அங்கு அவன் முன்பு சேமித்து வைத்திருந்த மொத்த பணத்தையும் எடுத்து அமெரிக்க டாலராக மாற்றிக் கொண்டு லண்டனிலிருந்து விமானம் மூலம் வான்வழி போகாமல், வேறொரு மகிழுந்து பிடித்து தரைவழியே லண்டனைக் கடந்து வேறொரு ஐரோப்பா நாட்டிற்கு சென்று அங்கிருந்து மாதங்கி கொடுத்த அத்தனை புகைப்படங்கள் காணொளிகளை இணையம் மூலம் பதிவு செய்து சில முக்கிய நண்பர்களுக்கு அனுப்பினான். அனுப்பிவிட்டு அவர்களை அழைத்து இங்ஙனம் இங்ஙனம் நடந்ததென்றும் இனி அவசரத் திட்டமாக வேறு என்னசெய்யப் போகிறோம் என்ற தகவல்களையும் தெரிவித்துவிட்டு அங்கிருந்து இந்தியா ஏர்லைன் மூலம் சென்னை வந்து இறங்குகிறான். ——————-*——————-*——————- மாதங்கி  ஏன் அந்த விமானத்திற்கு வெடி வைத்து தகர்க்க வந்தாள், யார் அந்த விமானத்திற்குள் பயணித்தார்கள், அந்த கோர்ட் சூட் போட்டிருந்த ஆசாமி யார், ஏனவனைஅவள்  கொள்ளவேண்டும், அவள் அந்த சிவப்பு நிற பொத்தானை இயக்கிடாத போதும் வேறு யார் அந்த விமானத்தை வெடிக்கச் செய்திருப்பார்கள்’ என்ற எல்லா விவரமும்  பின்னர் அந்த காணொளிகளை கண்டதும் சத்ய சீலனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் புரிய வந்தது.  நண்பர்கள் நடந்த நிகழ்வுகளை எல்லாம் பார்த்தும் மற்ற இதர விடயங்களை கேள்வியுற்றும் திகைத்துப் போனார்கள். ரகசியமாய் ஓரிடத்தில் மொத்தப்பேரும் கூடினார்கள். காணொளி மற்றும் புகைப்படங்களை எல்லாம் ஒவ்வொன்றாக அலசிப் பார்த்து அவைகளை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதை எல்லாம் தீர்மானித்துக் கொண்டார்கள். இடையே சில காட்சிகளை பார்க்க இயலாமல் கைவைத்து மறைத்தும் வாய்விட்டு அழவும் செய்தார்கள். இனி என் உயிரே போனாலும் போகட்டும் இதற்கு ஒரு முடிவு கட்டியே தீருவதென்று உறுதி ஏற்றார்கள். இனி வீடு உறவு உலகம் நியாயம் தர்மம் அத்தனையும் மறந்து புறப்பட்டார்கள். அவரவருக்கு பிரித்துக் கொள்ளப் பட்ட அவரவர் கடமைகளை ஆற்றுவதை தன் லட்சியமாகவும் ஈழம் ஒன்று மட்டுமே அவர்களின் இறுதி வெற்றி என்றும் தீர்மானங்கள் கொள்கின்றனர். அதன் முதல் படியாக, குழந்தைகள் சிதறி சக்கை சக்கையாக வாரிப் போட்டதிலிருந்து, மாதங்கியின் அண்ணன் பயித்தியமாய் திரிந்தது வரை, மலர்விழி வயிறு கிழித்து கர்ப்பத்திலிருந்து குழந்தையை எடுத்து சுட்டுப் போட்டது முதல், சின்ன வயசு பையன்களுக்கு சட்டி கழற்றிப் பார்த்து வெடி வைத்தது வரை, கணவனின் கண் முன்னாள் மனைவியையும், பிள்ளைகளின் கண் முன்னாள் பெற்றெடுத்தத் தாயையும் கர்ப்பழித்தது முதல் மாதங்கி வெடித்துச் சிதறி செத்தது வரை எல்லாமும் சாட்சிகளோடு கல்லூரி மாணவத் தலைவனுக்கு நண்பர்களால் காண்பிக்கப்படுகிறது. பிறகு அவன் மூலம் இதர கல்லூரி நண்பர்களையும் அழைத்துப் பேசி சாட்சி விவரங்கள் காண்பித்து, மெல்ல அது தமிழகத்தின் மொத்த கல்லூரிக்கும் பரவி, தமிழக இளைஞர் அணிக்குத் தெரியப் படுத்தப் பட்டு, அவர்கள் ஒருபுறம் படை சூழ, மறுபுறம் மடை உடைத்து வரும் வெள்ளத்தினைப் போல் கல்லூரி மாணவர்கள் திரண்டு வர; எல்லா ஏற்பாட்டினையும் வெளியே யாரையும் அறியவிடாமல் செய்துக் கொண்டு திடீரென வெடித்த வெடிகுண்டுப் போல ஓர்தினம் நிர்ணயிக்கப் பட்டு,  அன்று தமிழகம் முழுக்க வெடிக்கிறதொரு ஈழத்திற்கானப் புரட்சி. அனைத்துக் கல்லூரிகளுக்கும் பஞ்சினில் பரவிய தீ போலப் பரவி, காட்சிகள் ஆங்காங்கே ஒட்டப் பட்டு காண்போர் மனதையெல்லாம் கண்ணீரால் சுட்டுக் கதற வைத்தனர் இளைஞர் படையினர். இதுவரை எங்கோ இலங்கையில் சண்டை என்று கேட்டிருந்த மக்களுக்கும் மாணவர்களுக்கும், சண்டை ஈழத்தில் என்றும் அது தன் மக்களுக்கான இழப்பு மட்டுமே என்றும் அறிவிக்கப் பட - தான் உண்டு; தன் படிப்புண்டு என்றிருந்த மாணவர்களுக்கு, குழந்தைகள் இப்படி செய்யப் பட்டுள்ளார்கள், அக்காத் தங்கைகள் இப்படி செய்யப் பட்டுள்ளார்கள், தாய்மார்கள் வயோதிகர்கள் இப்படி வன்முறைக்கும் வன்புணர்சிக்கும் ஆளாக்கப் பட்டுள்ளார்கள் என்பது ஆதாரத்தோடு அறியப் பட கோபத்தை அடக்கமுடியவில்லை அவர்களால். மொத்தக் கல்லூரி மாணவகளும் ஓரிடத்தில் தன் சுய சிந்தனையோடு யார் தலைமையும் இன்றி ஒன்றுகூடி ஈழத்திற்கென ஒட்டுமொத்தமாய் கொடி பிடித்தனர். தீர்பு இங்கே நிர்ணயிக்கும் வரை படிப்பு கிடையாது கல்லூரி கிடையாது ஒன்றும் கிடையாது என்று பகிரங்கமாக அறிவித்தனர். மீறி எங்களுக்கான கோரிக்கை நிறைவேறா விட்டால் சாகவும் துணிவோம், அவசியப் பட்டால் சாகடிக்கவும் துணிவோமென்று மிரட்டாமல் தன் துணிவினை ஒர்ருமையினால் காட்டினர். தமிழக மூளை முடுக்கெல்லாம், பட்டிதொட்டியெல்லாம், எங்கு காணினும் ஈழத்து புகைப்படங்களும், கையின்றி காலின்றி தலையின்றி நிர்வாணப் படுத்தப் பட்டு, உடல் சள்ளடையாக்கப் பட்டு, குழந்தையின் தலை கூட சிதறடிக்கப் பட்டு பார்ப்பதற்கே உடம்பு கூசும் படங்களும், அங்கு நடந்த அத்தனை போர்க்குற்றத்திற்கும் ஆதாரம் காட்டும் விதமாகவும் ஒவ்வொன்றினையும் செய்தனர். மக்கள் ஆங்காங்கே நடந்ததை கண்டுத் துடித்து வெறி பிடித்து எழும் விதமாக அத்தனை இளைஞர்களும் தன்னாலியன்றதை செய்தனர். அவரவருக்கு இட்ட கட்டளைப் படி அவரவர் செயலாற்றினர். ஆண் பெண் பெரியவர் சின்னவர் என்று எல்லோருமாய் ஒன்று சேர்ந்து ஈழம் என்னும், தமிழர் என்னும் ஒரேயொரு ஒற்றைக் குடைக்குள் நின்றனர். பாவாடைச் சட்டை போட்ட பெண்குழந்தைகள் கூட தனித்தனியாக நின்று கோஷமெழுப்பி, பெரியோர்களுக்கும் இளைய சமுதாயத்திற்கும் முழு பலமாக நின்றனர். எந்த புள்ளியிலும் அடங்கி விடாமல், யார் சொல்வதையும் கெட்டுவிடாமல், எதற்கும் பயந்தோ விட்டுக் கொடுத்தோ சுயநலம் கொண்டோவிடாமல் மொத்த கல்லூரி மாணவர்களும் களத்தில் இறங்க; விஷயம் தீ போல் பரவி, கல்லூரி மூலமாக மட்டுமின்றி  ஊடகங்கள் வாயிலாகவும் அண்டை மாநிலத்திற்கெல்லாம் தகவல் சென்றடைந்து, இரக்கப் பட்ட மனமெல்லாம், மனிதம் நிறைந்த மனமெல்லாம் ‘களத்தில் இறங்கி ஈழத்திற்கென பரிந்துப் பேசியது. ஒரு கட்டத்தில் காவலாளிகள் அரசு சார்ந்தவர்கள் கூட மாணவர்களின் நியாயம் புரிந்து, மக்களின் எழுச்சி புரிந்து ‘அங்கு நடத்தப் பட்ட கொடுமைகள் அத்தனையும் அறிந்து; அந்த துரோகத்திற்கு ஒரு முடிவு கட்ட இதுவே சமயமென்றெண்ணி தன் கோபக் கண்களை மூடிக் கொள்ள; நாடு முழுக்க வெடிக்கிறதொரு ஈழப் புரட்சி; ஸ்தம்பித்து போகிறது இந்திய அரசு! மாணவர்கள் மொத்தபேரும் ஒன்று திரண்டனர். இளைஞர்கள் ஒருவரும் எக்காரணம் கொண்டும் அசர வில்லை. விடயம் கட்டுப் படுத்த இயலாமல் போக சென்ரல் போலிஸ் வந்து தமிழகத்தில் குவிய ஆரம்பிக்கிறது. மொத்தபேரும் சத்திய சீலன் இருக்கும் கல்லூரியை முற்றுகை இடுகிறார்கள். ஆங்காங்கே 144 சட்டம் போடப் போவதாக அறிவிக்கப் படுகிறது. என்றாலும், யாரால் எது நடக்கிறது, யார் இதை முதல் ஆரம்பித்தார்கள், யார் யார் கூட்டு, யார் இதற்கெல்லாம் மூலக் காரணமென்று ஒன்றுமே தெரிய வாய்ப்பின்றி மொத்த மாணவர்களும் இளைஞர்களும் ஆண்பெண் சமுகமென மொத்தப் பேரும் தமிழராய் மட்டும் கிளர்த்தெழுந்து நிற்க; வானம் நோக்கி முதல் எச்சரிக்கையாய் துப்பாக்கிக் கொண்டு சுடுகிறது மத்தியக் காவல் துறை..     பகுதி – 16 பீரங்கிக்கே துணிந்துவிட்ட தமிழினம் துப்பாக்கிக்காகவா பயம் கொள்ளும். மார்பை விரித்துக் காட்டி நின்றனர் எல்லோரும். யாரைச் சுடப்போகிறாய் என்னைச் சுடுகிறாயா? சுடு சுடு.. என்னை சுடு இவனை சுடு எங்கள் எல்லோரையும் சுட்டுவிட்டுப் போ. என்ன கிடைத்துவிடும் உனக்கு, எங்களின் பிணம் வழியெங்கும் இரைந்துக் கிடக்க அதன்மீதேறி படுத்து உறங்கினால் உறங்கிவிடுவாயா நீ? உறங்கிவிடுவாயெனில் ம்ம் சுடு……………..” ஒருவன் உரக்க கத்த ஒரு கூட்டமே அவன் பின் குரல் கொடுத்து மார்பு காட்டி நின்றது. “உன் குழந்தை ஒன்றை ஒரு கையில் தூக்கி வானத்திற்கு காட்டி பொட் பொட்டெனச் சுட்டால் அப்போ தெரியும் உனக்கு உயிரின் வலியும் விடுதலையின் விலையும் என்னவென்று!!” அந்த கூட்டம் மீண்டும் வலியோடு பேச; காவலாளிகள் ஒரு அடி பின்னே விலகினர். இது உணர்ச்சிவயப் பட்ட கூட்டமல்ல, சிந்தித்து சிந்தித்து அழுது அழுது வேறு வழியின்றி நரம்புப் புடைத்தெழுந்த மக்கள் சக்தி என்று அவர்களுக்குத் தெள்ளனவே விளங்கிற்று. ஆயினும், காவலர்கள் கட்டளைக்கு உட்பட்டவர்கள் என்பதால் வேறொருவன் மிக வேகமாக முன்வந்து துப்பாக்கியெடுத்து மாணவர்களின் கால் பார்த்துச் சுட; சற்றும் அசராத அந்த மாணவனில் ஒருவன் எகுறி துப்பாக்கியை அவனிடமிருந்து பறித்து ‘உனக்கு சுடத் தானே வேண்டும் இதோ நான் சுடுகிறேன், டிஷ்யூம்!! டிஷ்யூம்!! டிஷ்யூம்!! மூன்று மாணவர்களின் காலைப் பார்த்து அந்த மாணவனே சுட்டான், “போதுமா போதுமா.. இதோ டிஷ்யூம்!! அவன் தன் காலிலும் சுட்டுக் கொண்டான், இன்னும் பார்க்க வேண்டுமா டிஷ்யூம்!! தன் ஒரு கையில் இன்னொரு கையினால் துப்பாக்கி முனையை வைத்து அழுத்திச் சுட்டுக் கொண்டு கையில் ரத்தம் சொட்டச் சொட்ட போதுமா போதுமா என்றான். அதற்குள் சத்தியசீலனுக்கு ஒரு பொறி தட்டியது, உயிரை திரியாக்கி துப்பாக்கியில் இட்டானவன், ஓடிச் சென்று அந்த மாணவனிடமிருந்து  அந்த துப்பாக்கியைப் பிடுங்கினான், டிஷ்யூம்!! டிஷ்யூம்!! டிஷ்யூம்!!  தன் இரண்டு காலில் மாறி மாறி சுட்டுக் கொண்டான், மக்களெல்லாம் அவனை காப்பாற்ற ஓடி வந்தது.., “யாரும் அசைய வேண்டாம், நமக்கு நம் உயிர் பெரிதல்ல, நம் விடுதலை முக்கியம்’ என்று அவன் ‘பேசிக் கொண்டிருக்கும் போதே மாதங்கி விமானத்தில் உடன்வருகையில் பேசியதும், குழந்தைகளை சிங்களன் கொன்றதும், பெண்களை எல்லாம் பாலினக் கொடுமைக்கு ஆளாக்கி துன்புறுத்தப் பட்டதும்,  காடுகளில் தமிழரை இருத்தி தமிழர் வாழ்ந்த இடத்திலெல்லாம் சிங்களக் குடிமக்களை அமர்த்துவதும் என எல்லாம் ஒவ்வொன்றாய் நினைவில் வர - தன் நெற்றியில் துப்பாக்கியை வைத்தான்; கடைசியாய் “காவலாலிகளே இதோ என் உயிரும் இனி எம் விடுதலைக்கு துச்சம், எம் தாகம் தமிழீழ தாயகம்’ என்று சொல்லி; டிஷ்யூம்!! துப்பாக்கி வெடித்து ரத்தம் எதிர் முனையில் பாய சத்யசீலன் உயிரற்று கீழே விழுந்தான். காவலாளிகள் துப்பாக்கியை போட்டுவிட்டு ஓடி அவனைத் தூக்க எல்லாம் நேரடி ஒளிபரப்பாக ஊடகம் மூலம் உலகம் முழுக்கக் காட்டப் பட்டது. ஒவ்வொரு நகர்வும் செய்தியாக்கப் பட்டது. துடிதுடித்தனர் உலகமக்கள். ஆங்காங்கே படை திரண்டனர் தமிழர்கள். அத்தனையையும் பதிவு செய்து இணையம் முழுதும் ஒளிபரப்பி அதன் மூலம் தங்களின் நியாயத்தை உலகின் பார்வைக்கு விளக்கி முன்வைத்தனர். அடுத்தடுத்த வினாடிகளில் ஒவ்வொன்றாய் பரவி இந்தியாவின் மூலைமுடுக்கெங்கும் இது மட்டுமே தலைப்புச் செய்தியானது. ஆங்காங்கே ஒருசிலர் மாணவர்களின் போராட்டத்தை பலப் படுத்தும் விதமாக உயிரோடு தீக்குளித்தனர். குடும்பமாக மாடியில் இருந்து குதித்துக் காட்டினர். இனியும் தக்க நடவடிக்கை எடுக்கவில்லையெனில் இனி பிணக்குவியல்களே தெருவெங்கும் கிடைக்கப் பெறுமென்று எச்சரிக்கை விடுத்தனர். இது ஈழ விடுதலை கிடைக்கும்வரை நீடிக்கும் என்று அறிவிப்பு செய்து சுவரெல்லாம் ஒட்டி தன் கண்ணீரை விளம்பரப் படுத்தினர். உலகநாடுகள் இவைகளை எல்லாம் கேள்வியுற்று தொலைகாட்சிகளின் மூலம் கண்டு பதறி அவசர நடவடிக்கை யெடுக்கும் படலாமாக உடனடியாக ஒன்று கூடியது. ஐ.நா தலையிட்டு விசாரித்து, தமிழருக்கு எதிராக நடந்தவையில் அதிகபட்சம் போர்குற்றமே என்றும் உடனே அரசை களைத்து உரியவர் மேல் தக்க நடவடிக்கை எடுக்கும்படியும், சம்மந்தப் பட்ட அனைவரையும் சர்வதேச குற்றவாளி கூண்டில் அடைக்குமாரும் தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டு பகிரங்கப் படுத்தி உலக நாடுகளுக்கு அறிக்கை விட்டது. சிங்கள அரசு எத்தனை முண்டியடித்தும் தீவிரமாய் மறுத்தது உலக நாடுகள். இத்தனை நடந்தபின்னும் அம்மக்களுக்கு சிங்கள அரசால் விடிவு கிடைக்காது. கிடைத்தாலும் அது அடிமைத்தனம் கொண்டதாகவே இருக்கும். அதனை காட்டிலும், ஒரு ஆதி மொழி கொண்ட இனம், தனியே வாழ தகுதியுள்ள ஓர் இனம், இத்தனை கோடி மக்கள் தொகையை கொண்ட ஓர் இனம் வெகு நிச்சயமாய் தனிநாடாக விடுதலை பெற முழு உரிமையும் பலமும் கொண்டுள்ளதென்று உலகநாடுகள் அத்தனையும் சிபாரிசு செய்தன. இந்தியா பொறுத்துப் பார்த்து தன் படையை மொத்தமும் பின்னுக்கெடுத்தது. போர்குற்றம் வெட்டவெளியாக அம்பலமாக, தான் இனி இலங்கை அரசுக்கு துணை நிற்கப் போவதில்லை என்றும், அதர்ம வழியில் போரிட்டு மக்களை அழித்தமையால் தான் இனி தன் உதவிகளை அனைத்தையும் ரத்து செய்துக் கொள்ளப் போவதாகவும், தமிழ் மக்களுக்கு தனிநாடு தருவதொன்றே அவர்களுக்கு பாதுகாப்பினை  அளிக்கவல்லதென்றும் திட்டவட்டமாக அறிவித்தது. தமிழர்கள் வானம் பார்த்து கைகூப்பினர். இந்தியக் கொடி கண்டு நிமிர்ந்து நின்று வணக்கம் செலுத்தினர். இந்தியா என் தேசம்; எம் மக்களின் நலனுக்கு துணை சேர்த்த இந்தியர் எம் சகோதரர்கள் என்று மேடைகளில் முழங்கினர். உலக நாடுகள் இந்தியாவிற்கு வாழ்த்துக்கூறி ஐ. நா வை முன்னிலை படுத்தி சிங்களத்தை தனியாகவும் தமிழர்கள் வாழும் பகுதியினை தனியாகவும் வேறு வேறு நாடுகளாக அறிவிக்கக் கூறின. உலக தமிழர்கள் தன் ஒட்டுமொத்த நன்றியையும் உலக நாடுகளுக்குத் தெரிவித்து ‘இந்தியாவை தன் சகோதர தேசமென்று கொண்டாடினர். தமிழீழ தேசம் அமைப்பதன் பேரில் தலைவர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப் பட்டு பதினைந்திற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கூடிய கூட்டத்தில் வெகு மனிதம் மிக்கவராகவும், துரோகம் இழைத்தவனையும் மன்னிக்கத் தக்கவராகவும் பேசுகிறார். ‘தண்டனைக்குரிய ‘சிங்கள அரசு சார்ந்தோரை மன்னித்து விட்டுவிட வேண்டு மென்றும், ஆர்மி செய்த தவறுகளால் அப்பாவி மக்கள் ஒருபோதும் தண்டிக்கப்படக் கூடாதென்றும், அரசின் தவறான அணுகுமுறைக்கு பொதுமக்கள் பொருப்பல்ல என்றும், இனி வாழும் எம் எஞ்சிய மக்களேனும் நிம்மதியும் மகிழ்வும் பூரித்திருக்கத் தக்க நாங்கள் வாழும் ‘தமிழிழீழம்’ வரை எங்கள் தேசமென்று அறிவித்தால் போதுமென்றும், அவர்கள் ஆளுமிடத்தை இலங்கையாக அவர்களே ஆண்டுக் கொள்ளட்டுமென்றும் கூற, ‘தமிழரின் பெருந்தன்மையும், இத்தனை நடந்தும் எஞ்சிய மக்களுக்காக சிந்தித்த நியாயம் வழுவிடாத மனமும் உலக மக்களிடத்தில் மொத்த தமிழினத்திற்கே பெருமையை சேர்த்தது. மன்னிப்பினை ஏற்றுக் கொண்ட சிங்கள அரசும், காலத்தின் சூழலில் நாங்களும் கட்டாயத்திற்கு தள்ளப் பட்டோம் என்றாலும், நடந்தவை போர்முறை சார்ந்ததன்றி தமிழர் மேல் எங்களுக்கும் எந்த தனிக் கோபமுமில்லை. அவர் பூமியை அவர் ஆளட்டும் எங்கள் இலங்கையை நாங்கள் ஆண்டுக் கொள்கிறோம்” என்றும் முழங்க - பட்டாசு வெடித்தது  விடுதலையின் ஆரவாரம் ஊரெங்கும் பரவியது. சுதந்திரத்தை தன் மண்ணில் பெற்றுவிட்ட சந்தோஷம் உள்ளூரப் பொங்கியது. உலகமெங்கும் அகதிகளாய் திரிந்த தமிழரெல்லாம் ஈழம் நோக்கி உடனடியாகத் திரும்பினர். வராதவர்களும் அன்பு கரம் கொண்டு வரவழைக்கப் பட்டனர். தமிழீழக் கொடி ஓர் நல்ல நாள் பார்த்து வானில் கனகம்பீரமாக பறக்க, தலைவர் கண்களில் பெருகிய நீர்துளியோடு மாவீரர்களை நினைத்து மனமுறுகி நிற்க; இந்திய பிரதமர், இலங்கை அதிபர், உலக நாடுகளின் இன்னபிற தலைவர்களின் முன்னிலையில், தமிழக முதல்வரும் அருகில் நின்று எல்லோரும் சேர்ந்து எழுப்பிய கரவொலியின் ஆராவரத்தில் ‘தமிழீழ தேசம்’ விடுதலைப் பெற்ற சகோதரத்துவ நாடாக அறிவிக்கப் பட சுதந்திர இசை முழக்கத்தின் மத்தியில் பெருங்கம்பீர்மாய் ஒலித்ததந்த சத்யசீலனின் கவிதையொன்று - கனவு சுமந்தோம் கனவு சுமந்தோம் ரத்தம் சொட்ட வருடம் சுமந்தோம், உயிரை துறந்தோம்; உயிரை துறந்தோம் ஓர்நாள் வெல்லும் உறுதியைக் கொண்டோம்!  விடிவு பிறக்கும் வாசல் திறக்க உயிரை கடந்தும் காத்துக் கிடந்தோம், வருடம் தொலைந்து உறவுகள் இழந்தும் - வெல்லும் உறுதியில் கனவு சுமந்தோம்!  வேரூர் பறந்து உறவு பிரிந்து விடியல் நோக்கிப் பயணம் செய்தோம், அகதியாய் பட்டக் கரையைத் துடைக்க ஈழக் கொடியை ஏந்தி பிடித்தோம்!  உறுதி யெடுப்போம் உறுதி யெடுப்போம் ஒற்றுமை யெமது நெற்றிப் பொட்டென வளர்ச்சி யொன்றே என்றும் மூச்சென மதமும் இனமும் கடந்துப் பறக்கும் -  ஈழக் கொடியினை உயர்த்திப் பிடிப்போம்; உலக மக்கள் பார்வையி லெங்கள் – தமிழை தமிழரை பெருமைபடுத்தி – தேசம் சிறக்க கனவு சுமப்போம்!  கனவு சுமப்போம் கனவு சுமப்போம் மா – வீரர்கள் கண்ட கனவையும் சுமப்போம்; கனவுகள் வெல்லும் முழுமை நாளில் தமிழராய் மட்டுமோர் குடையினில் நிற்போம்!!  ————————  …முற்றும்…                          []