[]       கொரோனா கவிதைகள்  அ.தமிழ்ச்செல்வன்            அட்டைப்படம் : அ.தமிழ்ச்செல்வன் - a.tamilselvan42@gmail.com    மின்னூலாக்கம் :சீ.ராஜேஸ்வரி - sraji.me@gmail.com    வெளியீடு : FreeTamilEbooks.com    உரிமை : Creative Commons Attribution -NonCommercial-ShareAlike    உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம், விற்பனை கூடாது    எல்லாக்கருத்துகளும்  நூல் ஆசிரியருடயவையே            தூய்மைப் பணியாளர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் தன்னார்வலர்கள் காவலர்கள்… கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் அனைவருக்கும் இந்நூல் சமர்ப்பனம் []                       பொருளடக்கம் நூல் அறிமுக உரை 6  நூல் ஆசிரியர் அறிமுக உரை 7  கவிஞர்களை பற்றி 8  உறக்கத்தில் நானும் என் பூனையும் 9  வாழ்வதற்காக போராடுகிறோம்... 11  வெட்டியானைப் போல உணர்கிறேன் 13  கொரோனா எனும் கொலைகாரன் 15   மதமாய் மாறிய மனிதம் 17   என்னாகும் புரியலியே... 20  கொரோனா நோய் அல்ல... 24  மனிதர்களே நீங்கள் அவ்வளவுதானா? 27  தனிமையில்‌ தொங்கும்‌ பூட்டுகள்‌ 29  பேரிடர் மிச்சங்கள் 31  புரியாததும் புரிந்தது … 33  மரணம் நோக்கி... 36  தீண்டப்பாடதவன் தெய்வமானான்... 38      நூல் அறிமுக உரை   கொரோனா காலம் இதுவரை மனித குலம் சந்தித்திராத சவால். இதற்கு முன்  அனுபவம் இல்லாத சிக்கல்களையும், பல புதிய பிரச்சனைகளையும் உருவாக்கியிருக்கிறது.             மனித குலம் தோன்றிய 2 லட்சம் ஆண்டுகளில் எத்தனையோ சவால்களை சந்திருக்கிறது. நல்லதங்காள் பஞ்சம்,தாதுவருட பஞ்சம் உள்ளிட்ட வறட்சியினால் ஏற்பட்ட இன்னல்கள்.குறிப்பாக இதற்கு முன்பும் பெரியம்மை போன்ற வைரஸ் தாக்குதல்கள், உலக முழுவதும் 5 கோடிக்கு மேல் பலி கொண்ட ப்ரெஞ்ச் ப்ளு வைரஸ் தாக்குதல்கள், எய்டஸ் போன்ற தாக்குதல்களை சந்தித்திருக்கிறது.             மனித குலம் பல விஞ்ஞான வளர்ச்சிகளை கண்டிருக்கிறது. மரபணு ஆய்வுகள் அதில் குறிப்பானவை. மனிதர்கள், விலங்குகள்,தாவரங்களின் மரபணுக்களை தேவைக்கேற்ப மாற்றி அமைக்கிற திறன் பெற்றது மனித குலம். அப்படியிருந்தும் கொரோனா வைரஸ் தாக்குதல் மனிதகுலத்தை சின்னபின்னமாக்கி விட்டது.மனிதர்களின் வாழ்கையை புரட்டிப் போட்டுவிட்டது            ஒட்டு மொத்த மனித குலமும்  பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட ஒவ்வொரு தனி மனிதனினுக்கும் தனி தனி அனுபவங்கள் உண்டு. அதனை கவிதையாக தொகுக்கும் முயற்சி இது.   []                                           நூல் ஆசிரியர் அறிமுக உரை   [] தமிழகத்தில் கொரோனா பரவத்தொடங்கிய நாட்களில் நமக்கு பெரிதாக பாதிக்காது என்ற எண்ணினார்கள் மக்கள். வைரஸ் யாரையும் விட்டுவைக்காது என்ற செய்தி ,அது பரவுகிற முறை, முகக்கவசம்,அடிக்கடி கை கழுவிக்கொள்ளுதல் போன்றவை சற்று அச்சத்தை ஏற்படுத்தியது.குழுவாக  வாழ்ந்து பழகியவர்கள் தமிழர்கள். அவர்களை ஊரடங்கு வீடுகளில் முடக்கியது.          வெளியுலகத் தொடப்பு முடங்கி போதல்,பொருளாதார சிக்கல்கள், வீட்டுக்குள்ளேயே இருப்பதால் ஏற்படுகிற மன அழுத்தம் உள்ளிட்ட இதுவரை இல்லாத பிரச்சனைகள், சிக்கல்களை ஒவ்வொரு தனிமனிதனும் சந்தித்தார்கள்.               கொரோனா  காலம் இன்னும் சில மாதங்களில் ஒரு நிகழ்வாக மாறிவிடும். சில ஆண்டுகளில் ஒரு வரலாற்று நிகழ்வாக மாறிவிடும். முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக தளங்களில் தங்கள் அனுபவங்களை   கவிதையாக,மீம்ஸ்களாக,கட்டுரைகளாக,காணொளியாக பலர் பகிர்ந்து கொண்டார்கள். அதில் கவிதை வெளியிட்ட நண்பர்களின் முழு ஒப்பதலுடன் ,விருப்பத்துடன் பல கவிஞர்களின் கவிதை தொகுப்பே கொரோனா கவிதைகள் ...                                     கவிஞர்களை பற்றி    1.வதிலைபிரபா - கவிஞர்,கட்டுரையாளர்,’மகாகவி’ மாத இதழின் ஆசிரியர்,ஓவியா பதிப்பகத்தின்   நிறுவனர்,உலக தமிழ்சிற்றிதழ் சங்கத்தின் நிர்வாகி. 2. ப.கவிதா குமார் - பத்திரிக்கையாளர்,கவிஞர்,கட்டுரையாளர்.  3. பாண்டிச்செல்வி - கவிஞர்,கட்டுரையாளர்,சமூக செயல்பாட்டாளர். 4. பா.மகாலட்சுமி - கவிஞர்,சமூகசெயல்பாட்டாளர். 5. சிவமணி - கவிஞர்,சமூக ஆர்வலர். 6. முத்து பாண்டியராஜா - கவிஞர்,கட்டுரையாளர்,வரைகலையாளர் 7. இளங்கோவன் கார்மேகம் - கவிஞர்,சமூக ஆர்வலர் 8.  அ.தமிழ்ச்செல்வன் - கவிஞர்,பத்திரிக்கையாளர்,கட்டுரையாளர்.  9. ந. க. துறைவன்‌ - கவிஞர் 10. பா.ரமேஷ் - கவிஞர் 11.மகாலெட்சுமி வேணுகோபால் - கவிஞர் 12.சுதாகர் - கவிஞர்,வழக்கறிஞர்  13.கண்ணன்  - ஆசிரியர்,கவிஞர்      []         உறக்கத்தில் நானும் என் பூனையும்   மெல்ல என்னிலிருந்து என் பூனை வெளியேறுகிறது. ஊரடங்கின் சாமத்தில் மதில்மேல் பூனையாய் என் காதலின் கவனத்துடன் எதிர்வீடடைகிறது.   கவிழ்த்து வைக்கப்பட்ட சட்டியிலிருந்து வெளியேறுகிற மத்தியான கருவாட்டுக் குழம்பு  வாசனை பிடிப்பதுபோல் காதலியின் படுக்கையறை நுழைகிறது.   []   சமூக இடைவெளியாம்  என ஆளுக்கொரு மூலையில் உறங்குகிறவர்களில் என்னவள் யார்? கைகளைச் சோப்புப்போட்டு  கழுவுவது போல் கண்களைக் கழுவி உற்றுப் பார்க்க பக்கத்தில் கொரோனாவைப் போன்ற பயமுகத்துடன் உறுமியபடி அவள் அப்பன்..   வெளியேறிய என் பூனையை செல்லமாகத் தடவியபடி  மீண்டும் என்னுள் நுழைத்தபடி உறங்கிப் போகிறேன். ஊரடங்கும் தளரும் ஒருநாள் என்றபடி ஆழ்ந்த உறக்கத்தில் நானும் என் பூனையும். []   வதிலைபிரபா   வத்தலக்குண்டு- திண்டுக்கல் மாவட்டம்                   வாழ்வதற்காக போராடுகிறோம்...   ஊரடங்கிக் கிடக்கிறது நோயின் பிடியை விட பசியிடமிருந்து தப்பிக்க வழி தெரியாது     வலி சுமந்த எங்களின் வெப்ப மூச்சு அனல் காற்றில் தீயைப் பற்ற வைக்கிறது. அதைப்பற்றி அறியாத குழந்தைகள் காற்றில் பறக்கும் பட்டங்களை ரசித்துக்  கொண்டிருக்கிறார்கள்.   பூனை படுத்துறங்க அடுப்படியில் நெருப்பு இல்லை. அலைந்து திரிந்து கடையில் அது எங்களின் அடிவயிற்றுச் சூட்டில் படுத்துப் பழகிக் கொண்டது. []       அன்றாடம் இரை வைத்துப் பழகிய பறவைகளிடமிருந்து  எப்படி தப்பிப்பது? உணவில்லையென்ற உண்மையை அவற்றிடம் எப்படி சொல்லி விளங்க வைப்பது?   வடிவம் தெரியாத கொரோனா வைரஸை விட முகம் தெரியாதவர்களிடம் கையேந்த வைத்த பசி நோயைக் கொல்ல   ஆயுதங்களைத் தேடுகிறோம். ஏனெனில் [] தானாக செத்தால் தற்கொலை  வழக்கு பாயும் என்பதால் வாழ்வதற்காக போராடுகிறோம்.    ப.கவிதா குமார்                         மதுரை.     வெட்டியானைப் போல உணர்கிறேன்   என்னை.....! ஆம் அப்படித்தான் பழக்க படுத்தியிருக்கிறது இச்சமூகம்.! ஊரெல்லாம் நிர்வாண கோலத்தில் நான் மட்டும் எந்த ஆடையுடுத்த,....!   பரவும் கொரானா செய்திக்காக, உச் கொட்டி தேனீரில் சீனி  கூடுதல் என்றேன்.....! []     தமிழ் நாட்டிற்கும் நெருங்கிவிட்ட சேதி கேட்டு கொண்டே , சட்னி காரமென்றேன்!...   என் ஊருக்கே வந்துவிட்ட செய்திகளின் ஊடே விளம்பரங்களின் அறிவுறுத்தல்கள் ஸ்டாக் உள்ள வரை.!   முந்தினேன் கடைக்காரரிடம் எது எப்படியோ, எனக்கு மட்டும்  ஒதுக்கிவை. சமர்த்தியாய்   உரையாடினேன் . அரவமின்றி பயணித்தேன் அங்காடிக்கு எண்சாண் உடம்புக்கு, [] வயிறே பிரதானம். நான் ஒரு வெட்டியானைப்போல் உணர்கிறேன்.!   பாண்டிச்செல்வி திருமங்கலம்- மதுரை மாவட்டம்                           கொரோனா எனும் கொலைகாரன்    கொடிய நோய் ஒருபுறமிருக்க பசியொருபுறம் உயிர் நெருக்க...   சித்திரை வந்தாலென்ன பங்குனி போனாலென்ன பட்டினி தீர்ந்துவிடுமா பட்ட கடன் அடைந்திடுமா...   கோபுரமா வாழ்க்கையில்ல அடிநிலை வாழ்க்கை இருந்த வாழ்வையும் சிதைக்க கொடும் நோய் வந்துருச்சே []   மைல் கடந்து வந்தாலும் ஊர்போயி சேரல அனாதைப் பொணமானோம் வாய்க்கரிசிப் போட சொந்த சனமில்லை நாட்டுக்குள்ள அகதியானோம் கூலிவேலை பாத்தும் வருமானம் இல்ல வீட்டுக்குள்ள இருக்கச்சொன்னா வயித்துக்கு என்ன செய்ய வக்கத்த எங்களுக்கு வயிறு நிறையுமா செத்தொழிஞ்சு போயி சனத்தொகை குறையுமா.   []   பா.மகாலட்சுமி மதுரை                                    மதமாய் மாறிய மனிதம்  ஒரு தலைவன் தேவைப்படுகிறான் உண்மையின் உரைகல்லாய் இருக்க வேண்டும்   ஒரு புரட்சி தேவைப்படுகிறது புரட்டிப் போடும் வீரம் இருக்கவேண்டும்   ஒரு மறுமலர்ச்சி தேவைப்படுகிறது மனிதச் சங்கிலிகள் மனம் வைக்க வேண்டும்   ஒரு அமைதி தேவைப்படுகிறது அநீதிகளை தட்டி கேட்டிடும் குரல் வேண்டும்   ஒரு நிம்மதி தேவைப்படுகிறது அராஜகங்களை ஒடுக்கும் கரம் வேண்டும்   ஒரு சந்தோஷம் தேவைப்படுகிறது கர்மாக்களை கூட்டிடாத சமூகம் வேண்டும்   []   ஒரு சகோதரத்துவம் தேவைப்படுகிறது மனிதம் சரியாத மதங்கள் வேண்டும்   ஒரு பேரன்பு தேவைப்படுகிறது மன்னிக்கும் மண்ணை பெற்றிட வேண்டும்   ஒரு சுகாதாரம் தேவைப்படுகிறது ஓசோனை உயிர்ப்பிக்கும் வரம் வேண்டும் உலகத் தலைவனாய் ஒன்று முளைத்தது அனைத்தையும் வென்று மீட்டது ஒரே மதமாய் மாறிப்போன மனிதமாய் கொரானா []   சிவமணி வத்தலக்குண்டு- திண்டுக்கல் மாவட்டம்                                                        என்னாகும் புரியலியே...   ஊரு அடங்கணுமாம்... வீட்டுக்குள்ளே இருக்கணுமாம்.... வெளிய வந்து நின்னா நோயி கவ்விச் சாகணுமாம்...   அரசு அறிக்கவிட்டு ஊரெல்லாம் சொல்லிருச்சாம்... அவசரமா சட்டம் போட்டு எல்லாத்தயும் நிறுத்திருச்சாம்....   நாலுபேரு ஒண்டிக்கிடக்க வீட்டு வாடக நாலாயிரம்... இருவாரம் ஒருமுறைக்கு எஞ்சம்பளம் நாலாயிரம்...   முழுசாச் சம்பாரிச்ச பணத்தினிலே சோறு திண்ணா ஒரு வேள பசிய மட்டும் எப்போதும் மிச்சம் வப்போம்...   புள்ள குட்டி ரெண்ட வச்சி பொழப்பு தழப்பு இல்லியின்னா.. மொத்த வயிறும் பட்டினியில் இத்துத்தானே செத்துப்போகும்....   யாருகிட்ட சொல்லி  அழ... கேட்பதற்கு இல்ல... வித்துத்திங்கத்தான்   சொத்துபத்து ஏதுமில்ல..   வருஷமெல்லாம் உழைச்சோமே ஒரு காசு சேக்கலியே... ஒரு மாசம் உலாக்கலேனா என்னாகும் புரியலியே... []                     அரசு தந்த ஆயிரத்தில் மாசமெல்லாம் நகத்தணுமே... அந்த காசும் தீந்ததுன்னா அந்தரத்தில் நிக்கணுமே... நோயி வந்து சாவோமா பசியில் நொந்து சாவோமா சொல்லிவிட்டு போயிடடா ஊருகாத்த குலசாமி... நோய எதுத்துத்தான் போர்க்களத்தில் அரசிருக்கு... பசிய எதிர்த்தவன பாதியில விட்டுருச்சு... கொரோனா ன்னு பேருவச்சு நீ சொன்ன ஒருசேதி எனக்கு இப்போ புரிஞ்சிருச்சு... பட்டியலு ரெண்டு வச்சு தேவையில்ல ஏழையின்னு அரசு இப்போ பிரிச்சிருச்சு..   []   முத்து பாண்டியராஜா மதுரை .                                                  கொரோனா நோய் அல்ல...   காற்றே இப்போதுதான் கொஞ்சம் மூச்சுவிடுகிறது ! கொரோனாவுக்கு நன்றி சொல்லி !   உலகத்திலேயே உயர்ந்த  இமயமலை கூட இப்போதுதான்  எட்டிப்பார்க்கிறது ! கொரோனாவுக்கு நன்றி சொல்லி !   மரங்கள் இப்போதுதான்   கோடாரி சத்தத்தை  மறந்திருக்கிறது !  கொராணவுக்கு நன்றி சொல்லி !   தம் பாட்டன் பூட்டன் இழந்த  சொர்க்கத்தை இப்போதுதான் வந்து பார்த்துவிட்டாவது போகிறது கானக ஜீவிகள் ! கொரோனாவுக்கு நன்றி சொல்லி !   இயற்கை அன்னை ஈன்ற உயிர்களில் மனிதா உன்னை  தவிர அனைத்து உயிர்களும்  ஆனந்தமாய் குதுகலிக்கிறது ! கொரோனாவுக்கு நன்றி சொல்லி !   மனித சக உயிர்கள் உன் பங்காளிகள் ! பங்காளி  துரோகம்  செய்யாதே!   உணர்  உலகம் உனக்கானது மட்டுமல்ல !     []     கொரோனா நோய் அல்ல மனிதா  நீ எல்லா உயிர்களையும்  தன் உயிர் போல் போற்றாக்கடையால் வந்த வினை ! உனை அழிக்க வந்த படை !   ஈன்றாள்  பசிகாண்பாள்  ஆயினும் செய்யற்க சான்றோர்  பழிக்கும் வினை என்றான் வள்ளுவன் !   நீ  உனை ஈன்ற இயற்கை  தாயிக்கே  சான்றோர் பழிக்கும்  வினை செய்தாய் ! சிந்திக்காததால்!   கொரோனா இயற்கை  அன்னை உனக்கு தந்த தண்டனை !  காக்கை குருவி எங்கள் சாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று நீ வாழாததால்!   []   இளங்கோவன் கார்மேகம்                                         மனிதர்களே நீங்கள் அவ்வளவுதானா?    விமானம் ,ராக்கெட் கண்டுபிடித்தீர்களே நீங்கள் அவ்வளவுதானா?  என பறவை கேட்டது...    உலகை பல முறை அழிக்கும்  அணுகுண்டு கண்டுபிடித்தீர்களே  நீங்கள் அவ்வளவு தானா ? என மரம் கேட்டது...    எங்களை  மரபணு மாற்றம் செய்தீர்களே நீங்கள் அவ்வளவு தானா ? என காய்கறிகள் கேட்டது...   நான் உயர்ந்தசாதிக்காரன், நான் பெரிய பணக்காரன் என பீற்றிக்கொண்டீர்களே நீங்கள் அவ்வளவு தானா?  என காற்று கேட்டது...      உலகை ஆளப்பிறந்தவர்கள்  நாங்கள்  அழிவற்றவர்கள்  என தலைக்கனம் கொண்டீர்களே   நீங்கள் அவ்வளவு தானா?  என டைனோசர் கேட்டது....    இந்தப் பிரபஞ்சத்தில் எங்கும் இல்லாத பரிணாமம்   நாங்கள் என்றீர்களே நீங்கள் அவ்வளவு தானா?  என பூமி கேட்டது... []     இந்த பூமிக்கு நீங்கள் வந்து செல்லும் விருந்தினர்கள் மட்டும் நீங்கள் அவ்வளவுதான் என்றது இயற்கை   []     அ.தமிழ்ச்செல்வன்   திருமங்கலம்- மதுரை மாவட்டம்               தனிமையில்‌ தொங்கும்‌ பூட்டுகள்‌   சூன்யவெளி எங்கும்‌ மெளனமாய்‌ மலைகள்‌ ஆழ்ந்த சும்மாயிரு தியானத்தில்‌   நிழல் தேடியலைந்து திரியும்  பறவைகள்‌ மரக்கிளையில்‌ உட்கார்ந்து வேறெங்கே பயணிக்கலாமென யோசனை காய்ந்த வயல்களில்‌ மேய்ந்திடும்‌ மாடுகள்‌ பத்துநாளாய்‌ வெளியே வரவில்லை   விலைபொருள்‌ சுமந்து செல்ல வாகனங்கள்‌ இன்றி  தவிக்கும்‌  கிராமத்து சம்சாரிகள்‌ வெள்ளனே எழுந்து நகரம்‌ நோக்கி பயணப்பட்டவர்கள்‌ வழியிடையில்‌ தவிப்பு இன்னும் திறக்காமல்   ஜனநெருக்கடி பாதையில்‌ மூடப்பட்டக்‌ கடைகள்‌ வாசலில்‌ தனிமையில்‌ தொங்கும்‌ பூட்டுகள்‌   []     டொக்கன்‌ எப்பொழுது தருவார்கள்‌ என்று விழித்திருக்கும்‌ வியாபாரிகள்‌ முகங்களில்‌ தூக்கக்‌ கலக்கம்‌ அச்சத்தோடு பொழுது விடிந்தது பரபரப்பாய்‌ நிற்கிறது  நீண்ட வரிசை...     []   ந.க துறைவன்‌. வேலூர்         பேரிடர் மிச்சங்கள் பேரிடர் நாளொன்றில் வீதி நெடுக பூட்டிய வீடுகளின் வாயிலில் வைக்கப்பட்ட குப்பைகளைச் சேகரித்த வண்ணம் வந்தார் தூய்மைப் பணியாளர்   ஒரு வீட்டில் பழங்களின் தோல்கள் ஒரு வீட்டில் காய்கறி மிச்சங்கள் ஒரு வீட்டில் பிஸ்கட் கவர்கள் ஒரு வீட்டில் எலும்புத் துண்டுகள் ஒரு வீட்டில் முட்டை ஓடுகள் ஒரு வீட்டில் எஞ்சிய குழம்பு ஒரு வீட்டில் துடைத்து வழிக்கப்பட்ட வாழை இலைகள்   []         ஒரு வீட்டில் மது போத்தல்  மற்றும் நசுக்கப்பட்ட சிகரெட் துண்டுகள் ஒரு வீட்டில் பீட்சா டப்பாக்கள் என முடிந்த வீதியின் கடைசி வீடான பூட்டிய குடிசை வாசலில் பேப்பரில் சுற்றப்பட்ட உணவுப் பொட்டலம். []   பா.ரமேஷ்  மதுரை - 16         புரியாததும்  புரிந்தது …   இதுநாள்வரை நாம் வீசிடும்  குப்பைகளை  வாரிடும் மனிதம் புரிந்தது!!!   வெண்ணிற தேவதைகளில் சில ஆண்களும் உண்டெனப் புரிந்தது!!!   வீதியில் கால்கடுக்க காத்திருக்கும் காக்கிக்காவலன் என்றும் நம் நண்பனெனப் புரிந்தது!!! []       ஏர்பிடித்து உழைப்பவன் என்றுமே உடனிருப்பான் எனப் புரிந்தது!!!   அன்பின் அருவியாய் அள்ளித்தந்திட்ட வள்ளல்களின் வறுமை புரிந்தது!!!   கருணையின் கடலாய்   விலங்கிற்கும் உணவிட உள்ளமுண்டெனப் புரிந்தது!!!   கண்ணில் கண்டதெல்லாம் நம் தேவையென எண்ணிய மணம் பேராசையெனப் புரிந்தது!!!   ஊரடங்கு உத்தரவு சிறையென நினைத்திருக்க   உறவுகளின் இணக்கம் வேண்டுமெனப் புரிந்தது!!!   இளமைகால நட்பையும், தொலைத்திட்ட உறவையும் தேடி...தேடி... சேமித்திட   வேண்டுமெனப் புரிந்தது!!!   வல்லரசென்று நினைத்திட்டோரெல்லாம் ககலங்கி நின்றிட...... எந்நாட்டில் இரும்புக் கரங்கள் உண்டெனப் புரிந்தது!!!   யார் பெற்ற பிள்ளைகளெல்லாம் நமக்காய் போராடுவது புரிந்தது!!!   நாம் பெற்ற பிள்ளைகளையும்  இவ்வாறு வளர்த்திட வேண்டுமெனப் புரிந்தது!!! ஊர்காத்திடும் தலைவர்கள் நம்மில் பலருண்டெனப் புரிந்தது!!!   நம் பாட்டி சொன்னதெல்லாம் ஏட்டிலில்லா எதிர்ப்புசக்திகள் எனப் புரிந்தது!!!   இன்றைய நம் விலகல் – வீழ்த்திடும் கொரோனாவை   விரைவிலெனப் புரிந்தது!!!   நமக்கு நாமே என்றுமே துணையெனத் துரிதமாய்ப் புரிந்தது!!! கொரொனா  நீ! எதிரியென்றாலும் எம் நன்றிகள் உமக்கும்  உண்டு..... புரியாத தெல்லாம் புரியவைத்ததற்காய்!!!! []    மகாலெட்சுமி வேணுகோபால்  திருச்சி           மரணம் நோக்கி...   இந்த நகரத்திற்கு   நாங்கள் வரும் முன்...    எங்கள் கையகல   கழனியைப்   பிடுங்கி...  காரோட்டும்   கனவான்கள் விரைந்து  செல்வதற்காகப் போட்ட...  []   அதே எட்டுவழிச்சாலையில்தான்  எட்டுவைத்த எங்கள் பயணம்  மெல்ல நகர்கிறது.  மரணம் நோக்கி...    மாமன்னரே!  நீங்கள் சொல்வது போல்...  நாங்களும் வீட்டிலிருக்கவே   ஆசைப்படுகிறோம்.  வீட்டிற்கு எங்கே போக...    நீங்கள் சொன்னபடியே   நாங்கள் கைகழுவிக் கொண்டிருக்கிறோம்  எசமான்...  எங்களை  கால்வயிற்றைக்   கழுவுவது எப்போது என்பதறியாமலே!   []   சுதாகர்   மதுரை                                       தீண்டப்பாடதவன் தெய்வமானான்...   தீண்டப்படாதவைகள் தெய்வங்களாகின தீண்டப்படாதவன் தெய்வமானான் பாத பூஜை செய்கிறான் பணிந்து அவனை தொழுகிறான்.. []       இன்னும் கொஞ்ச காலம் தான் மலம் அள்ளும் சாதி என்று ஏசுவான் இன்று தெய்வமென்பான் நாளை கீழ்சாதி என்பான் மனுசனாக நினைக்கமாட்டான் இறுதிவரை..   கொஞ்சகாலம் அவனின் அருமை புரிய வைத்த   கொரோனாவே நன்றி,நன்றி,நன்றி.... []   கண்ணன்  திருமங்கலம் -மதுரை மாவட்டம்