[] [ கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி] கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி ஜோதிஜி திருப்பூர் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com This eBooks is licensed under a Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License This book was produced using Pressbooks.com. உள்ளடக்கம் - கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி - உரிமை - காசும் கல்வியும் - சமர்ப்பணம் - 1. 1. நாலும் புரிந்த நாய் வயசு - 2. 2. எதிரி தான் எழுத உதவினார் - 3. 3. சரஸ்வதி வித்யாசாலை - 4. 4. ஊரும் வாழ்வும் - 5. 5. புரிதலின் தொடக்கம் நேசிப்பு - 6. 6. ஆசைமரம் - 7. 7. இனிய நினைவுகள் - 8. 8. ஈக்கள் மொய்க்கும் உலகம் - 9. 9. உண்டு உறங்கி விடு. செரித்துவிடும். - 10. 10. மனம் என்பது வாழ்க்கை - 11. 11. குழந்தைகள் - பந்தம் வளர்க்கும் ஜீவன்கள் - 12. 12. விதைக்குள் உறங்கும் சக்திகள் - 13. 13. பணம் இருப்பவர்களுக்கு (மட்டுமே) அனுமதி - 14. 14. ஆசிரியர்கள் தரம் -- வளர்ச்சியா? வீழ்ச்சியா? - 15. 15. எந்திரன் உருவாக்கும் கல்வி - 16. 15. கல்வி கற்க காசு. காசு சம்பாரிக்கவே கல்வி - 17. 16. கிசு கிசு முதல் கிச்சு கிச்சு வரை - 18. 17. நான் திருந்த போவதில்லை. - 19. 18. சாமி கண்ணைக் குத்திடும் - 20. 19. சொம்பு இல்லாத நாட்டாமை - 21. 20. கோடை விடுமுறை -- கொடுமையும் குமுறலும் - 22. 21. மிதி வண்டி - வீரமும் சோகமும் - 23. 22. (இன்றைய) கல்வி என்றால் கவலை என்று அர்த்தம் - 24. 23. காசுக்கேத்த கல்வி - 25. 24. சிக்கினாலும் கூட நாம் சிங்கம் தானே? - 26. 25. தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கின்றார் - 27. 26. போரும் அமைதியும் - 28. 27. பேதி மருந்து - 29. 28. மதிப்பெண்கள் என்றொரு கீரிடம் - 30. 29. மொழியே உன் ஆயுள் ரேகை உச்சமா? - 31. 30. அழிக்கப்பிறந்தவர்கள் - 32. 31. ஆங்கில வழிக் கல்வி – விருப்பமா? நெருக்கடியா? - 33. 32. இதற்குத் தானே ஆசைப்பட்டாய்? - 34. மெக்காலே - 35. நன்றி - FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி [konjam-kasu-konjam-kalvi_html_82671e03]   கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி ஜோதிஜி திருப்பூர் மின்னஞ்சல் – powerjothig@yahoo.com கட்டுரை – கட்டுரை வெளியீடு: த.ஸ்ரீனிவாசன் http://FreeTamilEbooks.com மின்னஞ்சல் – tshrinivasan@gmail.com எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே. உரிமை Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். அட்டைப்படம் – மனோஜ் குமார் – socrates1857@gmail.com மின்னூலாக்கம் – த.சீனிவாசன் – tshrinivasan@gmail.com 2 உரிமை உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். This eBooks is licensed under a Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US You are free to: Share — copy and redistribute the material in any medium or format The licensor cannot revoke these freedoms as long as you follow the license terms. Under the following terms: Attribution — you must give appropriate credit, provide a link to the license, and indicate if changes were made. You may do so in any reasonable manner, but not in any way that suggests the licensor endorses you or your use. Non Commercial — you may not use the material for commercial purposes. http://deviyar-illam.blogspot.com/ No Derivatives — If you remix, transform, or build upon the material, you may not distribute the modified material. No additional restrictions — You may not apply legal terms or technological measures that legally restrict others from doing anything the license permits. At the end of the book, add the contents from the page. Free Tamil EBooks எங்களைப் பற்றி http://freetamilebooks.com/about-the-project/ [konjam-kasu-konjam-kalvi_html_2bd4d238] கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி ஜோதிஜி திருப்பூர் மின்னஞ்சல் – powerjothig@yahoo.com 3 காசும் கல்வியும் அந்தப் பொன்னுலகின் கனவு விதைக்கப் பட்டது 90களின் ஆரம்பத்தில். காட் என்றும் டன்கல் என்ற ஒப்பந்தங்கள் இந்தக் கனவின் விதைகள் ஆனது. எல்லைகள் இல்லா உலகம், உலகளாவிய வாய்ப்பு என்ற கோசங்கள் சுழன்று அடிக்க ஆரம்பித்தது. கணினித் துறை வேலை என்பதும், அமெரிக்க வாசம் என்பதும் மத்தியத் தரப் பெற்றோர்களின் ஆதங்கம் என ஆகிப் போனது. நியூ யார்க், வாஷிங்டன், கலிபோர்னியா, நியூ ஜெர்சி என்ற ஊர்கள் எல்லாம் எல்லார் வாயிலயும் விழுந்து புரள ஆரம்பித்தது. உடலால் இந்தியர்களாகவும், சிந்தனையால் ஆங்கிலேயனாகவும் மாறிய குமாஸ்தா வர்க்கம், தன அடுத்த பாய்ச்சலுக்குத் தயார் ஆனது. மாறிய சிந்தனை, மிகப் பெரிய மாற்றத்தைத் தன்னுடன் கொண்டு வந்தது. கல்வி, சுகாதாரம் இரண்டும் அரசாங்கம் தர வேண்டிய தேவை இல்லை என்ற மனப்பாங்கு வளர்ந்தது. தனியார்மயம் என்பதே வளர்ச்சிக்கு ஒரே வழி என்று பேசப் பட்டது. அரசியல் அடியாள்களும், சாராய வியாபாரிகளும், கந்து வட்டி ஆசாமிகளும் கிடைக்கும் இடம் எங்கும் கல்வி வியாபாரத்தை ஆரம்பித்தனர். பெயர் பலகையும், இடமும் அவர்கள் முதலீடு, கட்டிடமும் மற்ற உள்கட்டமைப்பு வசதிகளையும் பொன்னுலகின் கனவில் இருந்த மக்கள் தங்கள் பங்களிப்பாகத் தர ஆரம்பித்தனர். விட்டது தொந்தரவு என்று அரசும் வெற்று அறிக்கைகளை அள்ளித் தெளித்து தனது கடமையை முடித்துக் கொள்கிறது. எப்படிக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்து, முழுமையான ஆளுமைத் திறனை வளர்க்க வேண்டிய கல்விக் கூடங்கள், மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களை உருவாக்கும் தொழில்சாலைகளாக மாறிப் போனது. நன்றாகப் படி, அதாவது நன்றாக மனப்பாடம் செய், அதனைத் தேர்வு நாளில் எழுது, மதிப்பெண்களை அள்ளு, அதன் மூலமாக ஒரு பொறி இயல் கல்லூரியில் நுழை, அங்கே இருந்து கணினித் துறையில் சேர், நல்ல பணம் சம்பாதிக்கும் வேலையில் அமரு, நீ வெற்றி பெற்ற மனிதனாக விளங்கு என்ற மாயச் சுழட்சி வலையில் மாட்டிக் கொண்ட மக்கள் அதையே சரி என்று நம்ப ஆரம்பித்தது. வெற்றி என்பது தன்னை உணர்தல் என்பது மாறி பணம் சம்பாதிப்பது மட்டுமே என்ற எண்ணம் எல்லா இடங்களிலும் ஆழமாகப் பரவ ஆரம்பித்தது. நேரம் காலம் இல்லாத வேலை, அதனோடு இணைந்து வந்த மன அழுத்தம், தாங்க முடியாத போட்டி, தனி மனித உறவு என்பதே இல்லாமல், வெடித்துக் கிளம்பும் திருமணச் சிக்கல்கள், எல்லா இடங்களிலும் பெருகி வரும் முதியோர் இல்லங்கள் என்பதே இந்தப் பொன்னுலகம் காட்டும் வளர்ச்சி என்று ஆனது. பொன்னுலகின் கனவில் சஞ்சரித்த மனிதன், தன நிலை அறிந்து பார்க்கும் போது தெரிந்து கொண்டது தான் கட்டி இருந்த ஒற்றை வேட்டியும் களவாடப் பட்டதைத்தான். எதையும் பார்க்க விரும்பாத, அல்லது பார்க்கத் தெரியாத மனிதர்கள் இன்னும் கனவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள், தாங்கள் நிம்மதியாக இருக்கிறோம் என்ற நினைப்போடு. கல்விகழகு கசடற மொழிதல் – இது கல்வி என்றால் என்ன என்று தமிழ் கூறும் இலக்கணம். கசடறப் புரிந்தால் தான் கசடற மொழிய முடியும். கசடறப் புரிதலே நடக்காத ஒரு கல்வி முறையில் எப்படி கசடற மொழியும் மாணவர்களை நாம் எதிர் பார்க்க முடியும். கற்ப்பித்தல் என்பது வெறும் வேலை இல்லை, அடுத்த தலைமுறைகளை உருவாகும் ஒரு பணி என்ற எண்ணமும், அதனால் வரும் ஒரு ஞானச் செருக்கும் எந்த ஆசிரியர்களுக்கும் இல்லை தாய் மொழியில் படிப்பதும், பேசுவதும் தேவை இல்லை, புரிகிறதோ இல்லையோ ஆங்கிலத்தில் பேசுபவனே அறிவாளி என்ற எண்ணப் பாங்கு தமிழ் நாட்டில் நிலவி வருகிறது. மொழி என்பது வெறும் எண்ணங்களைப் பகிரும் கருவி இல்லை. அது ஒரு வாழ்வியல், வாழும் முறை, கலாசாரம், வரலாறு என்ற புரிதல் இல்லவே இல்லை. இலக்கியமும் வரலாறும் கற்றுக் கொடுக்கும் பாடங்களைப் படிக்க இங்கே மக்கள் தயாராகவே இல்லை, இதிலும் வேதனை பல ஆசிரியர்களுக்கே இந்தப் புரிதல் இல்லை. .அறத்தைப் பற்றிய பேச்சே கல்விக் கூடங்களில் இல்லாமல் ஆகி விட்டது, ஒட்டு மொத்த சமுதாயம் முன்னேறாமல் தான் ஒருவன் மட்டும் முன்னேறினால் ( அதாவது பொருளாதார ரீதியில் முன்னேறினால் ) அதனால் வரும் பொருளாதார ஏற்றத் தாழ்வு என்பது சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட ஒரு சமுதாயத்தைத் தான் உருவாக்கும் என்ற உண்மை போதிக்கப் படவே இல்லை. இன்று நாம் தினம் தினம் படிக்கும் திருட்டு, கொள்ளை என்ற செய்திகள் இதனைத் தான் நமக்கு கட்டியம் கூறுகிறது. பலர் பேசத் தயங்கும் இந்தப் பின்புலத்தில், தன்னையும் தன குடும்ப உறுப்பினர்களையும் பாத்திரங்களாக மாற்றி நண்பர் ஜோதிஜி எழுதிய வலைப் பதிவுகளின் தொகுப்பே இந்த நூல். தனது வாழ்க்கைக் கதையை சொல்வது போல முக்கியமான பல கேள்விகளை இந்த நூலில் எழுப்பி உள்ளார் திரு ஜோதிஜி. இந்தக் கேள்விகள் எல்லா வீடுகளிலும், பள்ளிகளிலும், சாலைகளிலும் கேட்கப் படட்டும். அந்தக் கேள்விகள் மூலம் ஒரு சிந்தனை மாற்றம் வரட்டும் என்றும் மாறாத நம்பிக்கையுடன், இராமச்சந்திரன் (BKR) திருநெல்வேலி வலைபதிவு http://ramachandranwrites.blogspot.ae/ 4 சமர்ப்பணம் [konjam-kasu-konjam-kalvi_html_db2a5b17] நான் வீழ்ந்து விடும் போதெல்லாம் என்னைத் தாங்கிப் பிடிக்கும் என் நண்பர் ராஜராஜனுக்கு இந்த மின் நூலை சமர்ப்பிக்கின்றேன். [pressbooks.com] 1 1. நாலும் புரிந்த நாய் வயசு ஒவ்வொருவருக்கும் இருபது வயதில் இந்த உலகம் அழகாகத் தான் தெரியும். சாதிப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றியே அதிகம் யோசிக்க வைக்கும். வானத்தைக் கூட வில்லாக வளைத்து விட முடியும் என்று நம்ப வைக்கும். மொத்தத்தில் தன்னம்பிக்கை ததும்பி வழியும். ஏறக்குறைய கடலை கரையோரம் நின்று ரசிக்கும் மனப்பாங்கு. ஆனால் கடலில் இறங்கி உள்ளே நுழைவதற்குள் முப்பது வயது டக்கென்று வந்து விடும். வானம், கடல், அலைகள் என்று ரசிப்பதற்காக இருந்த அத்தனையும் அப்படியே மாறி கணக்குகளின் வழியே ஒவ்வொன்றையும் யோசிக்கத் தோன்றும். நாம் சம்பாரிக்க என்ன வழி? என்ற அலை தான் மனதில் ஓயாமல் அடித்துக் கொண்டேயிருக்கும். அப்போது நம்மிடமிருந்த ரசனைகளை வேறொரு அலை இழுத்துச் செல்லும். மீதியிருக்கும் ஆர்வத்தை மற்றொரு அலை வந்து அலைக்கழிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய குழந்தைத்தனம் மாறியிருப்பதை அப்போது தான் நாம் உணரத் தொடங்கியிருப்போம். ஆனாலும் இரவு பகலாக ஏதொவொன்றுக்காக நம் மனம் கெஞ்சிக் கொண்டேயிருக்கும். இந்த அலை மட்டும் இடைவிடாமல் தினசரி வாழ்க்கையில் நம்மைத் தாக்கிக் கொண்டேயிருக்கும். . இந்தச் சமயத்தில் தான் எண்ணிக்கையில் அடக்க முடியாத கணக்கு அலைகள் நம் வாழ்க்கையில் அறிமுகமாகின்றது. அதுவே நம்மை இழுத்துச் செல்லும். அந்த அலை காட்டும் வழியில் நம் பயணம் தொடங்கும். இது கற்றுத் தரும் பாடங்களே நம் வாழ்க்கையை வழி நடத்தும். நம்மிடம் இருந்த கலையார்வம், கலாரசனை அத்தனையும் மறையத் தொடங்கும். வாழ்க்கையில் ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயம் உருவாகின்றது. “இனி நம் தலையைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் ” என்ற நிலையில் திருமணம் என்றொரு படகு நமக்குக் கிடைக்கின்றது. மூச்சு வாங்கி, மூச்சடைந்து இனி நாம் மூழ்கி விடுவோமோ? என்ற சூழ்நிலையில் இது நமக்கு ஆசுவாசத்தைக் கொடுக்கும். பல சமயம் தள்ளு காற்று நம்மை இழுத்துக்கொண்டு செல்லும். பலரும் இதனை அதிர்ஷ்டம் என்கிறார்கள். பயணம் சுகமாகவே இருக்கும். ஆனால் திடீரென்று வாழ்க்கையின் சூழ்நிலை மாறும். தொட்டதெல்லாம் பிரச்சனையாக மாறும். இப்போது தான் எதிர்காற்றில் பயணம் செய்வது எப்படி? என்ற அனுபவம் கிடைக்கத் தொடங்குகின்றது. அப்போது தான் நமக்குள் இருக்கும் சக்தியின் ரூபமே நமக்குப் புரிபடத் தொடங்கும். சில வருடங்களில் படகில் குழந்தைகளும் வந்தமர “பாரம் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள்” என்ற புலம்பல் அலை நமக்கு அறிமுகமாகின்றது. நம் வாழ்க்கைக்குத் தேவையெனக் கருதியிருந்த ரசனையான விசயங்களும், ரசிக்க வேண்டிய தருணங்களும் நம்மை விட்டுச் முழுமையாகச் சென்ற பிறகே நாம் மனதிற்குள் வைத்துள்ள கணக்குகள் இப்போது நம் பயணத்திற்கு உதவக்கூடிய துடுப்பாக மாறுகின்றது. அனுபவங்கள் தரும் வலிகளே நமக்கு வாழ்க்கைத் துணையாக மாறத் தொடங்குகின்றது. இதனை நாற்பது வயதை கடந்தவர்களும், கடந்து அதற்கு மேலே வந்தவர்களும் இதனை உணர்ந்தே இருக்கக்கூடும். ஒவ்வொருவருக்கும் நாற்பது வயது தொடங்கும் போது மூச்சு முட்டும். பலருக்கும் இந்த வாழ்க்கை போராட்டங்கள் பழகிப் போயிருக்கும். “விதி வலியது” என்றதொரு அசரிரீ குரல் வானத்தில் இருந்து ஒலிக்கும். நம் வாழ்க்கையே செக்கு மாட்டுத்தனமாக மாறியிருக்கும். ஆனாலும் நாற்பது வயதை கடந்து சாதித்தவர்களும் இங்கே அதிகம். சாதனைகள் என்றதும் இது வெறுமனே பணம் சார்ந்ததாக எடுத்துக் கொள்பவர்கள் ஒரு பக்கம். எனக்குப் பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்கின்றேன் என்பவர்கள் மறு பக்கம். நான் விரும்பியபடியே என் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்பவர்கள் இங்குக் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்களைப் போன்றவர்களால் எழுத்துலகம் நாள்தோறும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. கலையார்வம் கொண்டவர்களால் மட்டுமே இங்கே கணக்கற்ற படைப்புகளையும் தர முடிகின்றது. இந்தச் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் வழித்தடங்கள். எது சரி? எது தவறு? என்று இன்னமும் எவராலும் இறுதியிட்டு கூறமுடிவதில்லை. பணத்தையே சுற்றிச் சுற்றி வந்தாலும், மனைவியுடன் கொஞ்சிக் கொஞ்சி வாழ்ந்தாலும், குழந்தைகளை உயிராக நேசித்தாலும் தற்போதையை நவீன வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தனித்தனி தீவுகளாகத்தான் வாழ வேண்டியுள்ளது. இதுவே தான் நான் எழுதுவதற்கான காரணங்களையும் உருவாக்கின்றது. தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் போது பலரின் ஆச்சரியமான திறமைகள் வெளியே தெரிய வருகின்றது. நானும் என் எழுத்துத் திறமைகளைக் கடந்த நான்கு ஆண்டுகளாகப் படிப்படியாக வளர்த்து வந்துள்ளேன். காரணம் ஒருவர் தன் வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்கள் எந்த அளவுக்கு அவரைச் செதுக்கி உருவமாக மாற்றுகின்றதோ அதே அளவுக்குத்தான் அவரின் தனிப்பட்ட சிந்தனைகளும் காலப்போக்கில் மாறிக் கொண்டே வருகின்றது. பணத்தேடல்களுக்கு அப்பாற்பட்டு தனது ரசனை உள்ளத்தைக் காப்பாற்றி வைத்திருப்பவர்களிடம் பொறாமை உணர்வு மேலோங்குவதில்லை. உண்டு களித்து உறக்கம் தவிர்த்து ஓயாமல் காட்டு ஓநாய் போலவே உலகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களால் ஒரு நாளும் நிம்மதியாகவும் வாழ முடிவதும் இல்லை. நாற்பது வயதில் தன் விருப்பங்களை விடத் தான் சார்ந்திருக்கும் குடும்ப உறவுகளுக்குச் சரியானவனாக இல்லாத போது அந்த வாழ்க்கை நரக வாழ்க்கையாக மாறிவிடுகின்றது. இதுவே சம்பாரிப்பதே முதல் கடமை என்கிற ரீதியில் நம்மைக் கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றது. அதைத்தவிர வேறொன்றை பேசுவதும் நினைப்பதும் தேவையற்றது என்று இன்றைய சமூகத்தால் சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்தியச் சூழல் மட்டுமல்ல. வளரும் நாடுகளில் இயல்பாக வாழ வேண்டிய வாழ்க்கையைக் கூடப் போராடித்தான் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்கிற நிலையில் வாழ்பவர்கள் அத்தனை பேர்களுக்கும் வாழ்க்கையென்பது சுற்றியுள்ள ரசனைகளை ரசிப்பதற்கல்ல. உயிர் பிழைத்திருப்பதற்கு மட்டுமே.. இங்கே கோடுகளை நாம் கிழிப்பதில்லை. மற்றவர்களால் கிழிக்கப்பட்டு அதற்குள் சிக்கிக் கொள்ள வேண்டியவர்களாக மாறிப் போகின்றோம். இந்தச் சமயத்தில் தான் நம்முடைய அத்தனை விருப்பங்களும் அடிபட்டு அடைய முடியாத கனவுகளை அடை காக்கும் கோழி போல வைத்துக் கொண்டு வாழ்கின்றோம். இந்தியாவில் வேலைகேற்ற படிப்பில்லை. படிப்பிற்கேற்ற வேலையும் கிடைப்பதில்லை. இந்த நிலையில் தான் பிழைப்புக்காக ஒரு துறையில் நுழைந்து நுகத்தடி பூட்டப்பட்ட மாடுகள் போல வாழத் தொடங்கி விடுகின்றோம். பிழைப்புக்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் அவரவர் சார்ந்த துறையில் எத்தனை பேர்களுக்குத் திருப்தி கிடைத்தது? என்பதை யோசிக்கும் போது இறுதியில் ஒவ்வொருவருக்கும் மிஞ்சுவது “நாமும் இந்த உலகில் வாழ்ந்துள்ளோம்” என்பதே. நம் முன்னால் இருக்கும் ஒவ்வொரு போட்டிகளும் பூதாகரமாக நமக்குத் தெரிய காலப் போக்கில் பந்தயக் குதிரையாக மாறி விடுகின்றோம். நமக்கான விருப்பங்கள் அத்தனையும் பின்னுக்குப் போய் விடுகின்றது. இலக்கில்லா பயணம் போல இந்த வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கின்றது. ஒவ்வொருவரும் “பொருள்வாதி”களாகவே வாழ்கின்றோம். அதுவே சரியென்று சமூகம் உணர்த்துவதால் அவ்வாறே வாழ ஆசைப்படுகின்றோம். நம் விருப்பங்கள், மனைவி,, மகள் மகன் என்று தொடங்கி இந்த ஆசைகள் விரிவடைந்து கொண்டே போகின்றது. இன்று பேரன் பேத்திகளுக்கும் சொத்து சேர்க்க வேண்டும் என்று விரிவடைந்து வந்து விட்டதால் பறக்கும் மனிதர்களாகவே மாறிவிடுகின்றோம். ரசிக்க நேரமில்லாமல் ருசிக்க விருப்பமில்லாது இந்த வாழ்க்கையை விரும்பியே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஏக்கத்தைச் சுமந்து ஏக்கத்தோடு வாழ்ந்து “ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்” என்கிற ரீதியில் இந்த வாழ்க்கை முடிந்தும் போய் விடுகின்றது. மனிதர்களின் நாற்பது வயதை “நாய் வயது” என்கிறார்கள். கவ்வியிருப்பது “ஆசை” என்ற எலும்பென்றும் தெரிந்தும் அதையே தான் தூக்கிக் கொண்டு அலைகின்றோம். இதுவே காலப்போக்கில் கவலைகளாக மாறுகின்றது. இந்தக் கவலைகள் தான் வழிகாட்டியாக மாறுகின்றது. நம்மை அழைத்துச் செல்கின்றது. அதுவே நம்மை உருக்குலைக்கவும் செய்கின்றது. அறுபது வயதை மற்றொரு குழந்தை பருவத்தின் தொடக்கம் என்கிறார்கள். அறுபது வயதிற்கு மேல் ஒருவர் ஆரோக்கியத்துடன் வாழும் பாக்கியம் அமையப் பெற்றவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். இயற்கை கொடுத்த வரம் அல்லது இயல்பில் உருவாக்கிக் கொண்ட பழக்கவழக்கம் தந்த பரிசு. மனிதனுக்கு ஆசைகளும், ரசனைகளும் எந்த அளவுக்கு முக்கியமோ அதை வாழ்வின் கடைசி வரை அனுபவிக்க உடல் ஆரோக்கியம் அதை விட முக்கியம். ஆனால் தற்போது கண்களை விற்றே சித்திரம் வாங்கிக் கொண்டிருக்கின்றோம். லாபமோ? நட்டமோ? தேவையோ? தேவையில்லையோ? நானும் எனது வாழ்க்கைத் தடங்களைக் கடந்த நான்கு ஆண்டுகளாக வலைபதிவில் எழுதி வந்துள்ளேன். ஒவ்வொரு சமயத்திலும் நான் பார்க்கும் சமூகத்தைப் பற்றி ஆவணப்படுத்தி வந்துள்ளேன். இதற்கு என்ன தேவை? என்ற நினைப்பு இல்லாமலேயே “கற்றதையும் பெற்றதையும்” கணக்கில்லாமல் எழுதியுள்ளேன். இன்று வரையிலும் எழுதிக் கொண்டு வருகின்றேன். இந்தப் பயணத்தில் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொருவரும் என்னை நகர்த்தி வந்துள்ளார்கள். சொல்ல முடியாத அன்பை ஏதோவொரு வழியில் எனக்குக் காட்டியிருக்கின்றார்கள். என்னை வழி நடத்தி கற்றுத் தந்தும் இருக்கின்றார்கள். தமிழ் வலைதளங்களைத் திரட்டும் திரட்டிகள், என் எழுத்துக்களை உலகம் முழுக்கப் பரவியிருக்கும் தமிழர்களின் பார்வைக்குக் கொண்டு சேர்க்க உதவியது. இங்கு அத்தனை பேர்களுக்கும் ஏதோவொரு திறமை இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் அடையாளம் காணப்படாமல் ஒதுங்கிப் போனவர்கள் தான் அதிகம். அவரவர் உழைப்பை மீறி சில சமயங்கள் இங்கே அதிசயங்கள் நிகழ்வதுண்டு. அதில் நானும் ஒருவனாக இன்று வரையிலும் தாக்குப்பிடித்து நிற்பதற்குக் காரணம் நண்பர்களே. ஆனால் என் அப்பாவுக்கு நண்பர்கள் என்றால் ஆகாது. நட்பு வட்டத்தை ஆதரிக்கவும் மாட்டார். அவர் என்னுள் உருவாக்கிய தாக்கம் தான் என்னை நாற்பது வயதில் எழுத வைத்தது, அவர் மூலம் கற்றுக் கொண்ட பல அனுபவ பாடங்கள் மூலம் தான் என் வாழ்க்கைக்குத் தேவையான நேர்மையைக் கற்றுத்தந்தது. அதை விட எங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தவரும் என் அப்பா தான் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? 2 2. எதிரி தான் எழுத உதவினார் அப்பா இறந்து போகும் வரையிலும் அவர் மேலிருந்த கோபம் எனக்குத் தீரவில்லை. அவர் எந்தத் துரோகமும் எனக்குச் செய்யவில்லை. அவர் தப்பான ஆளுமில்லை. அவரிடம் வெற்றிலை போடும் பழக்கம் கூட இல்லை. அவர் வாழ்வில் கடைசி வரைக்கும் எந்தத் தப்பான பழக்கத்திற்கும் அடிமையானவருமில்லை. மிகப் பெரிய கூட்டுக் குடித்தனத்திற்குத் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் அவரின் கடைசி நாள் வரைக்கும் உழைத்துக் கொண்டே தான் இருந்தார். எங்களையும் உழைப்பின் வழியே தான் வளர்த்தார். ஆடம்பரங்களை அண்ட விடாமல் வைத்திருந்தார். தவறான பழக்கம் உள்ளவர்களை அறவே வெறுத்தார். தான், தன்னுடைய குடும்பம், தன்னுடைய தொழில் என்ற மிகச் சிறிய வட்டத்திற்குள் வாழ்ந்தார். அதுவே பலமென்று கருதினார். ஊருக்குள் நாலைந்து பேர்களைத் தவிர அவர் நெருக்கம் பாராட்டியது மிகக் குறைவு. நட்பு வட்டாரம் என்று பெரிய அளவில் இல்லை. அதை அவர் விரும்பியதும் இல்லை. ஆனால் ஊரில் மதிப்பு மிக்கக் குடும்பம் என்ற பெயரை பெற்று இருந்தார். வீட்டில், வயலில், கடையில் வேலை பார்த்த வேலைக்காரர்களின் குடும்பத் தொடர்புகள் தவிர வேறு எதையும் அனாவசியமான தொடர்புகளாகக் கருதியவர். ஊரில் பேட்டை வியாபாரிகளின் சங்கத்திற்கு இரண்டு முறை தலைவராக இருந்தார். அதுவும் அவரின் இரண்டு நெருங்கிய நண்பர்கள் மட்டுமே மாறிப் மாறி வருவதாக இருக்கும் அந்தப் பதவியும் குறிப்பிட்ட சுற்றில் இவருக்கு வந்த காரணத்தால் ஏற்றுக் கொண்டார். பிறகு இளைஞர்களிடம் அந்தப் பதவி சென்ற போது இவர் வெளியே வந்து விட்டார். கையில் ஒரு மஞ்சள் பை என்பதைத் தனது அடையாளமாகக் கருதிக் கொண்டவர். ஒவ்வொரு காசையும் பார்த்துப் பார்த்துச் செலவு செய்யக் கற்று வைத்திருந்தவர். வாழ்வில் உயர உடல் உழைப்பே போதுமானது என்று நம்பியவர். ஆடம்பரம் என்ற வார்த்தையில் உணவைத் தவிர அத்தனை விசயங்களையும் கருதியிருந்தவர். மகள்கள் கேட்கும் போது மனம் மாறிவிடுபவர், காந்தியவாதி என்பதை விட கடைசிவரைக்கும் காங்கிரஸ்வாதியாகத்தான் இருந்தார். முதன் முதலாக வலைபதிவுகளில் நான் எழுதத் தொடங்கிய போது நாம் எதைப் பற்றி எழுதுவது என்று யோசித்த போது எப்போதும் போல அந்த மதிய வேளையில் எனக்கு என் அப்பா ஞாபகம் தான் வந்தது. ஏறக்குறைய அவர் இறந்து எட்டு வருடம் கடந்திருந்த போதிலும் அவர் உருவாக்கிய தாக்கம் இன்று வரையிலும் குறைந்தபாடில்லை. ஒழுக்கம் தான் முக்கியத் தேவை என்கிற பெயரில் மிகப் பெரிய சர்வாதிகாரத்தை எங்கள் மீது வன்முறைக்குச் சமமாகப் பிரயோகித்திருந்தார். இந்திய சுதந்திர போராட்டத்தில் சொல்லப்படும் “ம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம்” என்பார்களே அதே போலத்தான். அவர் எங்கள் ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்தினார். எங்களை மட்டுமல்ல. அவரின் இரண்டு தம்பிகளையும் கட்டுப்படுத்தித் தான் வைத்திருந்தார். முன் கோபக்காரர். சொல் பேச்சுக் கேட்காத போது டக்கென்று கையை நீட்டி விடும் பழக்கம் உள்ளவர். அனைவரும் அவர் கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் வாழ்ந்தோம். அவரின் எந்தக் கட்டளைகளையும் மீறாமல் தான் வளர்ந்தோம். படித்தோம். நான் மட்டும் என்னை ஆளை விட்டால் போதும் என்று வெளியே வந்து விட்டேன். நான் வாழ்ந்த வாழ்க்கை முழுவதும் எந்த நிலையிலும் வறுமை எதையும் பார்த்ததில்லை. அடிப்படை வசதிகளுக்கும் எந்தப் பஞ்சமில்லை. அப்பா எப்போதும் கல்விக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார். ஆண் குழந்தைகளை விடப் பெண் குழந்தைகளைத் தான் கொண்டாடினார். பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தூரில் அக்கா படிக்கச் சென்ற போது தயங்காமல் கல்லூரி விடுதியில் தான் சேர்த்தார். கல்லூரி அளவில் அக்கா முதல் மதிப்பெண் வாங்கிய போது எவரும் யோசித்தே பார்க்கமுடியாத நாகர்கோவில் ஹோலிகிராஸ் கல்லூரியில் கொண்டு போய்ச் சேர்த்தார். ஆனால் லஞ்சம் என்பதை ஆதரிக்க மாட்டார். தேவையற்ற செலவு என்பதே எங்கும் செய்ய மாட்டார். எவரும் எதிர்பார்க்கவும் முடியாது. உறவினர்கள் மத்தியில் ராமநாதன் குடும்பம் சரஸ்வதி குடியிருக்கிற குடும்பம் என்கிற அளவிற்கு மற்றவர்களின் பார்வைக்கு அவர் குறைகளை மீறி ஒளி விளக்காய்த் தெரிந்தார். அப்பாவிடம் வருகின்ற எவரும் இவர் குணங்கள் தெரிந்தே தான் பேசுவார்கள். அளவாகத்தான் பேசுவார். எப்போதும் அமைதியாகத்தான் இருப்பார். ஆனால் எல்லாவற்றுக்கும் எதிர்மறையான குணங்கள் என்னிடம் இருக்க அதுவே எனக்கும் அவருக்கும் நாளுக்கு நாள் தூரங்கள் அதிகமாகப் போகக் காரணமாகவும் இருந்தது. கல்லூரி முடியும் வரையிலும் முழுமையாக ஒட்டவும் முடியாமல் ஓடி ஒளியவும் முடியாமல் வாழ்ந்தேன். கடைசிச் சித்தப்பா தான் என் விருப்பங்களுக்கு ஊன்று கோலாக இருந்தார். கலையார்வமோ, வேறு எந்த வித விருப்பமோ எதுவும் வீட்டுக்கு அண்டக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார். அது தான் என் முக்கிய நோக்கமாக இருந்தது. படிப்பைத் தவிர மற்ற அத்தனை விசயங்களிலும் கெட்டியாக இருந்த என்னை விரட்டி விரட்டி அடித்த போதும் வீண்வம்புகள் வீடு வரைக்கும் வருவதும் மட்டும் குறைந்தபாடில்லை. என்னை என்னால் மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. என்னைச் சுற்றிலும் உள்ள 20க்கும் மேற்பட்ட நண்பர்களின் பட்டாளத்தையும் குறைக்கும் வழியும் தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் வீட்டுக்குத் தாமதமாகச் செல்லும் அந்த இரவு வேளைகளில் முன்பக்க கதவுகளைத் தாழ்போட்டுத் திறக்கக்கூடாது என்ற கட்டளையோடு காத்திருப்பார். இது தெரிந்து பின்புறம் கொல்லைப்புறம் வழியாக முள்காட்டுக்குள் கவனமாகக் கால்வைத்து ஏறி பின்பக்க கதவு வழியாக வந்து கிசுகிசுப்பாகச் சகோதரிகளை எழுப்பி உள்ளே வந்து சேரும் போது சரியாகக் காத்திருந்து அடிக்கத் தொடங்குவார். பாட்டுக் கச்சேரியுடன் பக்கவாத்தியமாக இடி மின்னல் இசைக்கும். இரவு சாப்பாடு இல்லாமல் கண்ணீர் தான் தூங்க வைத்துள்ளது. ஆகஸ்ட் 25 2001 அன்று அவர் இறந்த போது மிகத் தாமதமாகத்தான் திருப்பூரில் வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு வந்து சேர்ந்தது. சென்னையிலிருந்து பேருந்தில் ஊருக்கு வந்து கொண்டிருந்தவருக்குத் திருச்சி பேருந்து நிலையத்தில், நெஞ்சு வலியினால் அந்த அதிகாலை வேலையில் நொடிப் பொழுதில் இறந்து போனார். நள்ளிரவில் போய்ச் சேர்ந்த போது அப்பாவின் சடலத்தைப் பார்த்த போது தொடக்கத்தில் எந்தச் சலனமும் மனதில் உருவாகவில்லை. இவர் சாவுக்கு நாமும் ஒரு வகையில் காரணமோ? என்று கூடத் தோன்றியது. அவர் எதிர்பார்த்துக் காத்திருந்த வசதியான பெண்களை எல்லாம் புறக்கணித்து ஒவ்வொன்றும் தள்ளிப் போய் என் சம்மந்தப்பட்ட விசயங்களில் ரொம்பவே வெறுத்துப் போயிருந்தார். காரணம் திருப்பூருக்குள் மிகப் போராட்டமாய் வாழ்ந்து வந்திருந்த எனக்கு அந்த வருடம் முதல் படியில் ஏறி ஒரு நிறுவனத்தின் (உற்பத்தி) தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருந்தேன். அந்த வருடம் தான் அப்பா இறந்திருந்தார். தொழில் வாழ்க்கையில் நான் அடைந்த தோல்விகள் ஒவ்வொன்றுக்கும் அப்பா தான் காரணம் என்று உறுதியாக நம்பியிருந்தேன். நம்மிடம் இல்லாத திறமைகள் அனைத்து அவர் கற்றுத் தராததே என்பதாக எனக்குள் உருவகத்தை உருவாக்கி வைத்திருந்தேன். நம்மை அடக்கி அடக்கி வைத்த காரணத்தால் பல விதங்களில் பின் தங்கியிருக்கின்றோம் என்பதாகத்தான் ஆற்றாமையில் வெம்பியிருக்கின்றேன். அவர் திட்டமிட்டுச் செயல்பட்டிருந்தால் மிகப் பெரிய அளவில் சொத்துக்களை விரிவாக்கம் செய்திருக்க முடியும். அவர் விரும்பியிருந்தால் சிலரைச் சென்று பார்த்திருந்தால் அப்பொழுதே எனக்கு அரசு வேலை கிடைத்து இருக்கும். ஆண் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் உன் திறமையில் வளர் என்பதாகத்தான் வெளியே அனுப்பினார். வார்த்தைகளில் தயவு தாட்சண்யம் இருக்காது. முக்கியமான விசேடங்களைத் தவிர மற்ற இடங்களுக்குத் தம்பிகளை அனுப்பி விடுவார். எவரையும் நம்ப மாட்டார். எவரிடமும் அறிவுரையும் கேட்க மாட்டார். தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கின்றது என்பதைப் பற்றியும் யோசிக்க மாட்டார். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படவும் மாட்டார். தான் உண்டு. தன் வேலையுண்டு என்பதைத்தான் தன் வாழ்க்கை நெறிமுறையாக வைத்திருந்தார். காலத்தோடு ஒத்துப் போக முடியாத நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருந்தார். குறிப்பிட்ட காலக் கட்டத்திற்குள் உள்ளூருக்குள் வந்த புதியவர்கள் ஒவ்வொருவரும் வளர வளர இவரால் தன்னை வளர்த்துக் கொள்ளவும் முடியவில்லை. தன் இயல்புகளை மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. எவருக்கும் மனதறிந்து துரோகம் செய்யக்கூடாது என்பதை முக்கியமாகக் கொண்டவரின் கொள்கைகள் எனக்குத் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியைத் தந்த போதிலும் காலத்திற்கேற்ப புதிய முயற்சிகள் கூடத் தேவையில்லை என்பதாக வாழ்ந்தவரின் கொள்கைகள் தான் எங்களுக்கு அதிக எரிச்சலையும் கோபத்தையும் உருவாக்கியது. தானும் வளராமல் எங்களையும் அண்ட விடாமல் தான் சேர்த்த சொத்துக்களை அடைகாத்தார். ஊரில் வாழ்ந்த பலரும் மூன்று தலைமுறைகளாகக் காத்து வந்த சொத்துக்களை மொத்தமாக விற்றுவிட்டு வெளியேறிய போதிலும் இன்று வரையிலும் அவர் சம்பாரித்த எந்தச் சொத்துக்களும் சேதாரம் இல்லாமல் தான் இருக்கின்றது. அவர் தம்பிகளுக்குப் பிரித்தது போக இன்றும் இருக்கின்றது. அப்பா இறக்கும் வரையிலும் உணவு தான் வாழ்க்கை. ருசி தான் பிரதானம் என்பதான சிறிய வட்டத்திற்குள் பொருந்திக் கொண்ட அவருக்கும் உலகத்தை அளந்து பார்த்து விட வேண்டும் என்று போராடிப் பார்த்த எனக்கும் உருவான பிணக்குகள் நாளுக்கு நாள் அதிகமானதே தவிரக் குறைந்தபாடில்லை. கால் நூற்றாண்டுகள் காலம் அவரை வெறுத்துக் கொண்டே வாழ்ந்த வாழ்க்கையில் என் குழந்தைகளின் காலடி தடங்களைப் பார்த்த போது அப்பா என்ற பிம்பத்தின் முதன் முறையாக மரியாதை உருவானது. குழந்தைகளின் மருத்துவத்திற்காக அலைந்த போது தான் அவரின் உண்மையான ரூபம் புரிந்தது. குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற போது தான் எத்தனை அறிவீலியாக இருந்துள்ளோம்? என்பதை உணர்ந்து பார்க்க முடிந்தது. இன்று அம்மா வாழ்ந்திருந்த வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடிகின்றது. அவரின் அசாத்தியமான பொறுமை இன்று என் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கிறது. அவர் மிகப் பெரிய பட்டாளத்திற்குச் சமைத்துப் போட்டு உழைத்த உழைப்பு இன்னமும் நாம் உழைக்க வேண்டும் என்று உந்தித் தள்ளுகின்றது. வீட்டுக்கு மூத்த மருமகளின் கொடூரமான சகிப்புத்தன்மையைத் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களின் மனோநிலையோடு ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடிகின்றது. குறைகள் இல்லாத மனிதர்களே இல்லை. ஆனால் குறைகளை மீறியும் குடும்பத்தைக் காத்தவர்களின் வாழ்க்கையைப் பற்றி இப்போது தான் யோசிக்க முடிகின்றது. அப்பாவுக்கு எந்த வகையிலும் நாம் மகிழ்ச்சியைத் தரவில்லையே என்ற குற்றவுணர்வு மனதிற்குள் இருந்து கொண்டேயிருந்தது. குடும்பத்தினர் திருமணத்தை ஏற்பாடு செய்து உறுதி செய்த போது அப்பா இறந்து மூன்று மாதங்கள் முடிந்திருந்தது. என்னை விட்டு விடக்கூடாது என்று மாமனார் அவசரமாக இருந்தார். ஏதோவொரு வகையில் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று மனதில் வைத்திருந்தேன். மாமனாரிடம் ஒரு வருடம் முழுமையாக முடியட்டும் என்று காத்திருக்கச் சொன்னேன். ஊர்ப் பழக்கத்தில் தாத்தா அப்பா பெயர்களைக் குழந்தைகளுக்கு வைப்பது வாடிக்கை. ஆனால் ஆண் குழந்தைகள் வந்தால் என்னைப் போல இருந்து விடுவார்களோ என்று இயற்கை நினைத்ததோ தெரியவில்லை. ஒன்றுக்கு மூன்றாகப் பெண் குழந்தைகள் வந்து சேர இன்று மூவரும் எங்களைக் கொண்டாடுகின்றார்கள். இப்போது எங்கள் குழந்தைகள் தான் எனக்கு அப்பாவாக இருக்கின்றார்கள். காரணம் இவனைத் திருத்தவே முடியாது என்று புலம்பியவரின் பேத்திகள் தான் என்னைப் பேதியாக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். வீட்டுக்குள் நுழைந்தால் அமைதியாக இருக்க வேண்டும் என்று எங்களை வளர்த்தவரின் பேத்திகள் இன்று கேள்விகளால் துளைத்தெடுக்கின்றார்கள். “உங்க காலம் வேறு. எங்க காலம் வேறு” என்று சரிசமமாக பேசுகின்றார்கள். அமைதியாய் வாழ்வது தான் உண்மையான வாழ்க்கை என்று உணர்த்திய அப்பாவின் வாழ்க்கையின் தத்துவங்களைத்தான் இப்போது நானும் கடைபிடித்துக் கொண்டிருக்கின்றேன். ஆமாம் பல சமயம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அழகாய் ஒதுங்கிவிடத்தான் தோன்றுகின்றது. ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்டுப் பழக வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த நிலைக்கு இப்போது மூன்று பக்கத்திலிருந்து சூறாவளியும் சுனாமியும் ஒன்று சேர எங்களைத் தாக்கிக் கொண்டேயிருக்கிறது. வீட்டில் என்னால் சமாளிக்க முடியல? என்று சொல்லும் அளவுக்குத் தினந்தோறும் வாழ்க்கை அதகளமாகப் போய்க் கொண்டேயிருக்கிறது. அன்று அப்பாவிடமிருந்து ஒதுங்கிச் சென்ற கால்கள் இன்று குழந்தைகளின் மாறிக் கொண்டேயிருக்கும் எதிர்பார்ப்புகளைப் பார்த்து விழிபிதுங்கி நிற்கின்றது. நான் எழுதத் தொடங்கிய பிறகு என்னைப் பற்றி எழுதிப் பார்த்த போது குழந்தைகளின் வளர்ச்சியை, அவர்கள் கடந்து வந்த காலடித் தடத்தினை எழுதிக் கொண்டே வந்தேன். அவர்களின் மாறிக் கொண்டே வந்த குணாதிசியங்கள், அவர்களின் பள்ளிகள். பள்ளிகள் கொடுத்த கல்வி, கல்வி சொன்ன பாடங்கள். கற்ற பாடங்களினால் அவர்கள் எடுத்துக் கொண்டு வாழ்க்கைத் தத்துவங்கள் என்று ஒவ்வொன்றையும் எழுதத் தொடங்கினேன். இதன் மூலம் தற்போதையைக் கல்விச்சூழல், மாறாத இந்தியக்கல்வி முறைகள், குழந்தைகள் அனுபவித்துக் கொண்டு இருக்கும் துன்பங்கள் என்று ஒவ்வொன்றையும் எழுத முடிந்தது. குழந்தைகளின் வளர்ப்பு குறித்து யோசிக்க முடிந்தது. நடுத்தரவர்க்கத்தின் இயலாமையைப் பற்றி எழுத வாய்ப்பு அமைந்தது. மாறிய சூழலில் நம்மைப் பொருத்திக் கொள்ள முடியாத போது உருவாகும் மனஉளைச்சலை புரிந்து கொள்ள முடிந்தது. மொத்தமாக ஒவ்வொன்றையும் சேர்த்துப் பார்த்த போது இது ஆவணமாகத் தெரிந்தது. என் வாழ்க்கையின் ஊடே பெற்ற அனுபவங்கள் படித்த பலரும் தங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடிந்தது என்றார்கள். வலைபதிவுகளில் வாசித்த பலருக்கும் நான் எழுதிய இந்த அனுபவங்கள் பிடித்தது என்பதை விட இது போலவே நாங்களும் எங்கள் குழந்தைகளை வளர்க்க ஆசைப்படுகின்றோம். உங்கள் எழுத்துக்கள் மூலம் பலவற்றையும் எங்களால் கற்றுக் கொள்ள முடிந்தது என்றார்கள். என் எழுத்திற்குக் கிடைத்த விமர்சனத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு புரிந்துணர்வு எனக்குக் கிடைத்தது. காரணம் என் அப்பா எனக்குள் உருவாக்கிய தாக்கமது. வெறுப்புகளை மட்டுமே சுமந்தவனின் வாழ்க்கை அடிப்படையில் அன்புக்கு ஏங்கி தவிக்கும் மனம் உள்ளவனாகத் இருப்பான் என்பதை நீங்கள் தொடர்ந்து வாசிக்கும் போது உங்களால் உணர முடியும். அன்பென்பது பகிரப்படும் போது தான் அதற்கு உயிர்ப்பு வருகின்றது. உள்ளேயே வைத்துக் கொண்டிருந்தால் அதற்கு எந்தப் பலனும் இல்லை. அந்த அன்பு சிலருக்கு மனைவி மூலம் கிடைக்கக்கூடும். எல்லாச் சமயத்திலும் எல்லோருக்கும் கிடைத்து விடுவதும் இல்லை. பரஸ்பரம் சரியான விதத்தில் புரிந்து கொள்ளும் போது மட்டுமே இயல்பாக இருக்கும். ஒரு பக்கம் கூடி மறுபக்கம் குறைந்தால் அதிலும் பிரச்சனை உருவாகி அது விஸ்வரூபம் ஆகிவிடும் வாய்ப்பும் உள்ளதால் ஏறக்குறைய குடும்ப வாழ்க்கையென்பது கம்பி மேல் நடக்கும் கதை தான். கால மாறுதல்கள் கொண்டு வந்துள்ள தொழில் நுட்ப வளர்ச்சிகளும், வீட்டுக்குள் இருக்கும் தொலைக்காட்சிகள் கணக்கற்ற விஷங்களையும் நம்மிடம் விதைத்துக் கொண்டேயிருப்பதால் கவனத்தோடு வாழ வேண்டியுள்ளது. ஆனால் நம் இந்திய சமூகத்தில் குழந்தைகள் தான் கணவன் மனைவியைச் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஒவ்வொரு சமயத்திலும் உருவாக்கி வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும் உண்மையே. நான் இங்கே பார்த்த வரையிலும் அவரவர் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் போது தான் பெரும்பாலான குடும்பங்களில் கணவன் மனைவியிடையே உண்மையான அக்கறை உருவாகின்றது. காரணம், அப்போது தான் இருவருக்குள்ளும் இருக்கும் நான் நீ என்ற ஈகோ குழந்தைகள் மூலம் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுகின்றது நம்மால் குழந்தைகள் வாழ்க்கை பறிபோய்விடுமோ? என்ற அச்சத்தினால் குடும்பத்தில் அமைதி உருவாகின்றது. அதுவே உறவுச் சங்கிலியின் தன்மை கெட்டுப் போகாதவாறு இருந்து விடுகின்றது. குழந்தைகளின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியின் மூலமே இங்கே பல கணவன் மனைவியின் உண்மையான காதல் அனுபவமும் மீண்டும் துளிர்விடத் தொடங்குகின்றது. குடிகாரக் கணவன் குழந்தையின் மேல் உள்ள பாசத்தினால் தன் இயல்புகளை மாற்றிக் கொண்ட பலரையும் பார்த்துள்ளேன். மகள் வளர்ந்துவிட்டாள் என்ற பயத்தில் ஊர் மேய்ந்த மனைவி மாறிய தன்மையும் பல பாடங்களைத் தந்துள்ளது. வளர்ச்சியடைந்த மேலைநாடுகளைக் காட்டிலும் குடும்பப் பாசம் என்ற ஒரு வார்த்தை தான் இந்தியாவில் இன்று வரையிலும் குறைபாடுகளுடன் உள்ள ஜனநாயகத்தைக் காப்பாற்றிக் கொண்டு வருகின்றது. இதுவே தான் நம் இந்திய நாட்டை ஒரு சங்கிலி போல இணைத்து சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொண்டிருக்கிறது. எங்கள் குழந்தைகள் தற்போது ஐந்தாம் வகுப்பு படிக்கின்றார்கள். இன்னும் ஏழு வருடங்களில் மூவரும் கல்லூரிக்குச் சென்று விடுவார்கள். அப்போது அவர்களின் உலகம் வேறுவிதமாக இருக்கக்கூடும். எண்ணங்கள் முழுமையாக மாறியிருக்கும். இன்று இவர்கள் எங்கள் மீது காட்டும் அன்பு கூட மாறிவிட வாய்ப்புண்டு. அந்த உலகத்தில் நான் (நாங்கள்) இருப்பேனா என்று தெரியாது. என்னளவில் என் அப்பாவைப் போலச் சரியானதை மட்டும் இவர்களுக்குச் செய்து கொண்டிருக்கும் விசயங்கள் அவர்கள் மனதில் தப்பு அல்லது வன்முறை போலத் தோன்றியிருக்கக்கூடும். இப்போது வெளியே காட்டிக் கொள்ள முடியாத நிலையில் கூட உள்ளே வைத்திருக்கக்கூடும். காரணம் நானும் அப்படித்தானே யோசித்திருந்தேன்.. அப்போது நான் (நாங்கள்) இவ்வுலகில் இல்லாவிட்டாலும் கூட என் குழந்தைகள் இந்த எழுத்துக்களைப் படிக்கக்கூடும். அப்போது அவர்கள் மனதில் தோன்றக்கூடிய கேள்விகளுக்குச் சில பதில்கள் இந்த எழுத்துக்கள் மூலம் அவர்களுக்கு எதிர்காலத்தில் கிடைக்கக்கூடும்?. 3 3. சரஸ்வதி வித்யாசாலை வித்தியாசமான பெயர் மட்டுமல்ல. நான் படித்த இந்த ஆரம்பப்பள்ளியின் கட்டிடமும் கலைநுணுக்கமாய் இன்று வரையிலும் இருக்கின்றது. மிகத் துல்லியமாகத் தெரியாவிட்டாலும் இந்தக் கட்டிட வயது ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேல் இருக்கக்கூடும். இன்று வரையிலும் எந்த இடத்திலும் ஒரு விரிசல் கூட இல்லை. தற்போது உள்ள நவீன தொழில் நுட்பம் எதுவுமில்லாமல் செட்டி நாட்டுப் பகுதிகளில் உள்ள கட்டிடத் தன்மைகளைப் போல முட்டைச்சாந்து மூலம் கட்டப்பட்ட கட்டிடமாக இருக்கலாம். செட்டிநாட்டுப் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் நாம் பார்க்கும் உழைப்பும் அர்பணிப்பும் இந்தப் பள்ளி கட்டிடத்திலும் உண்டு. செட்டிநாட்டுப்பகுதியில் வாழ்ந்த ஒவ்வொருவரும் அந்தந்த காலகட்டத்தில் பர்மா, மலேசியா,சிங்கப்பூர் என்று திரை கடலோடி திரவியம் சேர்த்த சொத்துகளாகும். இந்தப் பகுதி முன்பு இராமநாதபுரம் மாவட்டம் என்ற எல்லைக்குள் இருந்தது. பின்பு பசும்பொன் முத்துராமலிங்கம் என்று மாறி தற்போது சிவகங்கை மாவட்டம் மாவட்டத்தில் காரைக்குடி தாலூகாவில் உள்ள புதுவயல் என்ற கிராமத்தில் உள்ளது. செட்டிநாட்டுப் பகுதி என்றவுடன் வெறும் செட்டியார்கள் மட்டுமே வாழ்ந்த பகுதி என்று எண்ணிவிட வேண்டாம். எல்லாத்தரப்பினரும் பல்வேறு ஜாதி மூலக்கூறில் வாழ்ந்து கொண்டுருக்கும் பகுதியாகும். இங்குள்ள வீடுகள் ஒவ்வொன்றும் பெரிதாக இருக்கும். வீட்டின் வாசல்படி, நிலைப்படி, என்று தொடங்கி ஒவ்வொரு இடங்களிலும் தச்சு வேலை பார்த்தவர்கள் தங்களின் கலைத்திறமையைக் காட்டியிருப்பார்கள். உணவை ரசித்துத் தின்ற கூட்டமும் ஆன்மீகம், கலையார்வம் என்பதைத் தங்கள் இரு கண்கள் போல வைத்து பார்த்த மக்களும் வாழ்ந்த பகுதியிது. வாழ்க்கை முழுக்க மன அமைதிக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்த அத்தனை பெரியவர்களும் இன்று போய்ச் சேர்ந்துவிட்டனர். இன்று இங்கே நவீனங்கள் உள்ளே புகுந்து விட ஊர் முழுக்க நூற்றுக்கணக்கான நவீன ரக அரசி ஆலைகள் உருவாகி தொழில் நகரமாக மாறிவிட்டது. அரிசி ஆலைகள் மூலம் அவியல் தண்ணீரும், புகையும் ஊர் முழுக்கப் பரவி கொண்டு இருக்கின்றது. இந்தப்பள்ளி யெமு வீதியில் வீடுகளுக்கிடையே இருக்கிறது. புதிதாக இந்த வீதியில் வந்து செல்பவர்களுக்கு இதுவொரு பள்ளியென்று சட்டென்று தெரியவாய்பில்லை. இப்போது உள்ள பள்ளிகள் போல் முன்புறம் பெரிய திடலோ குறிப்பிட்டு அடையாளம் சொல்லும் அளவிற்கு எதுவும் இருக்காது. பள்ளிக்கூடம் முடிந்து வெளியே வரும் மாணவ கூட்டங்களை வைத்து தான் கண்டு கொள்ள முடியும். தேச தந்தை மகாத்மா காந்தி முதல் காஞ்சி பெரியவர் வரைக்கும் உள்ள அத்தனை பிரபலங்களும் இந்தப் பள்ளிக்கு வந்துள்ளார்கள். பள்ளி நிர்வாகம் கடந்து வந்த பாதை வியப்புக்குரியது. கட்டிடத்தின் உள்ளே நுழையும் பொழுதே பெரிய இரும்பாலான வெள்ளி முலாம் போன்று பூசப்பட்ட வண்ணக் கதவு நம்மை வரவேற்கும். முக்கியமான விருந்தினர்கள் அழைப்பாளர்களாக வரும் போது மட்டுமே இந்தப் பெரிய கதவை திறந்து வைப்பார்கள். பள்ளி நாட்களில் அதில் உள்ள சிறிய கம்பிக்கதவை திறந்து மாணவர்கள் உள்ளே செல்லவேண்டும். இந்த நுழைவு வாயிலிருந்து செங்குத்தான் பார்வையில் நாம் மேலே நோக்கினால் கட்டிடத்தின் மேல்பகுதியில் அரை வட்ட வடிவ அலங்காரச் சுவற்றில் சரஸ்வதி வீணை வாசித்துக் கொண்டுருப்பார். அவரைச் சுற்றி ஒளிவட்டம் இருக்காது. அந்த இடத்தில் பள்ளியின் பெயரை நம்மால் பார்க்கமுடியும். இன்று வரையிலும் பள்ளி நிர்வாகம் தனியாரிடம் இருந்தாலும் அரசு நிதி உதவியோடு தான் சிறப்பாக நடந்து வருகின்றது. பள்ளியை கட்டிக் கொடுத்த அந்தப் புண்ணிய ஆத்மா இன்றும் சொர்க்கத்தில் இருக்கக்கூடும். நான் பார்த்தவரைக்கும் எந்தப் பாரபட்சமும் இல்லாமல் தான் நிர்வாகம் இருந்தது. இப்போது பெண்கள் உயர்நிலை பள்ளியாக மாறியுள்ளது. பணிமாறுதல் காரணமாக வந்த ஆசிரியர்கள் முதல் உள்ளேயே பணிபுரிந்து கொண்டிருக்கும் ஆசிரியர்கள் வரைக்கும் ஓய்வு பெறும் வரைக்கும் இருந்திருக்கிறார்கள். ஆசிரியர்களுக்குப் பெரும்பாலான மாணவர்களின் குடும்பப் பின்புலம் நன்றாகவே தெரிந்து இருக்கும். மிக நெருக்கமான மாணவர்களை ஜாதிப் பெயரைச் சொல்லி, தங்களுக்குப் பிடித்தமான நக்கல் வார்த்தைகளையும் கொண்டு அழைப்பார்கள். இன்றுள்ள பிசிஆர் சட்டமெல்லாம் முப்பது ஆண்டுகளுக்கு முன் இல்லை. பக்கத்தில் உள்ள அறுபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குத் தொடக்கக் காலத்தில் இந்தப் பள்ளிக்கூடம் பெரிய வரப்பிரசாதம். ஆனால் கிராமத்தில் இருந்து வந்து படித்த பலரும் தினமும் ஏதோவொரு வகையில் பிரம்படி வாங்காமல் போவது அரிதாக இருக்கும். முக்கியமாக வீட்டுப்பாடத்தை எழுதி வராதவர்களும், ஒப்பிக்கத் தடுமாறுபவர்களும் உதையும் சேர்த்து வாங்குவதுண்டு. வயலும் வாழ்வுமாய் வாழ்ந்தவர்களின் வாழ்க்கையில் வீட்டுப் பாடங்களுக்கு முக்கியம் குறைவு. ஆனால் இது போன்ற சூழ்நிலையில் வளர்ந்து, வாழ்ந்து வந்த மாணவர்கள் இன்று உலகம் முழுக்கப் பரவி உயர்ந்த பதவிகளில் இருக்கின்றார்கள். பள்ளியின் உள்ளே நுழைந்ததும் அரைவட்ட வடிவ சிமெண்ட் தளமும் நடுவில் கொடியேற்று மரமும் இருக்கும். வாரத்தின் தொடக்க நாளில் இரண்டு பக்கமும் உள்ள அரைவட்ட வடிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் விறைப்பாக நின்று ஒரு மாணவன் தலைமையாசிரியர் அருகே நின்று கொண்டு அருகில் உள்ள பத்து வீடுகளுக்குக் கேட்கும் அளவிற்குத் தினந்தோறும் உறுதிமொழி சொல்ல வேண்டும். நான் பலமுறை சொல்லியுள்ளேன். கொடி வணக்க பாடல் எல்லோரும் சேர்ந்து பாட உடம்பில் உள்ள சோம்பேறித்தனம் நீங்கி புத்துணர்ச்சியாய் வாரம் தொடங்கும். ஆசிரியர் வராத நாட்களிலும், மற்ற நேரங்களிலும் இந்த நுழைவு பகுதிகளில் அமர்ந்து கொண்டு சப்தம் போட்டு வாய்ப்பாடு சொல்லவேண்டும். ஓரோன் ஒண்ணு. ஈரோன் ரெண்டு என்ற மொத்த மாணவர்களின் சப்தமும் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டுருக்கிறது. கொடிகம்பத்துக்கு ஒரு பக்கவாட்டில் மகிழம்பூ மரம். அதனை ஒட்டிய எல்லைச்சுவற்றின் மேல் பெரிய மணி கட்டி தொங்கவிடப்பட்டுருக்கும். இந்த மணி எதற்காக என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் படித்த எட்டு வகுப்புகள் வரைக்கும் அந்த மணியை விடுமுறை நாட்களில் நண்பர்களின் சேர்ந்து அடித்துப் பார்த்ததோடு சரி. வேறு எந்த நாளும் அந்த மணி ஒலித்து பார்த்ததில்லை. மகிழம்பூ மரத்திற்குக் கீழே இருக்கும் இடத்தில் தான் ஒவ்வொரு தினத்தின் காலை நேரத்திலும் நான் புளியங்கொட்டை வைத்து விளையாடி டவுசர் பைக்குள் சேர்த்த பொக்கிஷத்தை பாதுகாத்து வைத்துள்ளேன். வகுப்பு முடியும் வரை என் டவுசர் ஒரு பக்கமாகத் தொங்கிக் கொண்டேயிருக்கும். உள்ளே உள்ள புளியங்கொட்டை தந்த சலசலப்புச் சத்தம் தான் உடன் படித்த பலரின் பொறாமையை உருவாக்கியும் இருக்கிறது. மகிழம்பூ மரத்தின் எதிர் புறம் ஒரு கேணியும் அதனை ஓட்டிய பின்புற சந்தும் உண்டு. இந்தச் சந்தின் உள்ளே நுழைந்தால் பள்ளியின் பின்புறத்திற்கு நம்மால் சென்றுவிட முடியும்.. பின்னால் தான் சத்துணவுக்கூடம். இதனை ஒட்டி தொடங்குவது தான் விளையாட்டு மைதானம். அதனைத் தாண்டி பக்கவாட்டுப் பக்கம் வந்தால் பெரிய கால்வாயும் அதனை ஒட்டிய கொக்குமரம் இருந்த மற்றொரு தோட்ட வீட்டின் எல்லைப்புறமும் தொடங்கும். என் வீடு அருகில் இருந்த காரணத்தால் பள்ளியில் போடப்படும் மதிய உணவை ஒரு நாள் கூட நான் சாப்பிட்டதில்லை. ஆனால் கோதுமையை அளக்க, மூட்டையை நகர்த்துபவர்களுக்கு உதவ என்று வகுப்புறைக்குச் செல்லாமல் பாத்திரங்களுடன் உருண்டு புரண்டதுண்டு. மூட்டையிலிருந்து எடுத்து சாப்பிடும் அந்தக் கோதுமையே எனக்குப் போதுமானதாக இருந்தது. பின்புறம் உள்ள சமையல் பகுதியில் வெந்த கோதுமையைச் சுவைத்துப் பார்த்ததும், சூடு பொறுக்காமல் கதறியதும் இப்போது நினைவுக்கு வருகின்றது. இது மறந்து போன இறந்தகாலம். ஆனால் அதுதான் இன்றைய என் வாழ்க்கையின் அஸ்திவாரம். 4 4. ஊரும் வாழ்வும் என்னுடைய வாழ்க்கையில் நான் படித்த புத்தகங்கள் எத்தனை ஆச்சரியங்கள் தந்ததோ அந்த அளவிற்கு நான் பார்க்கும் சக மனிதர்கள் அதிக அளவு ஆச்சரியத்தைத் தந்துள்ளனர். காரைக்குடியில் அழகப்பா கல்லூரியில் பட்டம் பெற்று திருப்பூர் வந்து சேர்ந்து, தினந்தோறும் சந்தித்துக் கொண்டுருககும் மனிதர்கள் அனுபவ பாடங்களைத் தந்தபடியே உள்ளனர். நான் தற்போது இருக்கும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதித் துறையில் புழங்கிக் கொண்டுருக்கும் யூரோ, அமெரிக்கன் டாலர், பிரிட்டன் பவுண்ட் இது போக மற்ற நாட்டுப் பணப் பரிவர்த்தனைகளைக் கையாண்டு கொண்டிருக்கும் எவரும் மெத்தப்படித்த மேதாவிகள் அல்ல. பெரும்பாலும் ஒவ்வொருவரும் அவர்களின் சிறு வயதில் திருவிழாக்களில் விரும்பிய டாலர் செயின் கூட வாங்க முடியாமல் தவித்தவர்கள் தான். உள்ளூர்த் தொடர்புகளும் தினந்தோறும் திருப்பூர் நோக்கி வந்து கொண்டுருக்கும் சர்வதேச தொடர்புகளும் எனப் பலதரப்பட்ட மக்களைப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றேன். மொத்தத்தில் இந்த வாழ்க்கை என்பது மிக அழகானது. டென்ஷன், கோபம், எரிச்சல், ஏமாற்றம், தவிப்பு, பொறாமை, குரோதம் என்று எத்தனை சங்கடங்கள் இருந்தாலும் இவை அனைத்தும் ஏதோ ஒன்றை எனக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. இப்போது கூட என் சொந்த ஊருக்குச் செல்லும் போது அங்கே உள்ளே வாழ்ந்து கொண்டிருப்பவர்களை அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையோடு என் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்த்துக் கொள்வதுண்டு. இருப்பிடம், உறக்கம், உணவுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கையை முடித்துக் கொண்டு விடுகிறார்கள். ஆனால் எனது ஊரிலிருந்து 300 கிமீ தொலைவில் உள்ள திருப்பூரில் தான் தினந்தோறும் எத்தனை எத்தனை மாற்றங்கள்?. இதுவே தான் ஏராளமான அனுபவங்களைத் தந்து கொண்டேயிருக்கின்றது. தன்னம்பிக்கை, உழைப்பு, தொடங்கி அதிர்ஷ்டம்,ஜோதிடம், எண்கணிதம்,கைரேகை போன்ற பல கண்களுக்குத் தெரியாத சக்திகளை நான் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை அனுபவம் மூலமாக உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். நம் செயல்பாட்டுக்கு அப்பாற்பட்ட “ஏதோ ஒன்று”. ஆனால் இந்த நம்பிக்கைகள் தான் இன்று பலருக்கும் முதலீடு போடத் தேவையில்லாத லாபம் கொழிக்கும் தொழில். இன்று நீங்கள் தொலைக்காட்சி விளம்பரத்தில் வந்து கொண்டிருக்கும் விளம்பரங்களை கவனித்து வந்தாலே இது புரியக்கூடும். அரசியல் தலைவர்கள் முதல் திரை நட்சத்திரங்கள் வரைக்கும் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அதிர்ஷ்டத்தை ஒவ்வொரு வழியிலும் மறைமுகமாக நமக்கு உணர்த்துகின்றார்கள். நம்மைச்சுற்றிலும் நமக்குத் தெரியாமல் பல விசயங்கள் உள்ளது. ஆனால் எல்லோருமே இறுதியில் சொல்லும் ஒரே வார்த்தை “உழையுங்கள் முன்னேறலாம்.”, ஆனால் இந்தியாவில் 120 கோடி மக்களுக்கும் உழைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் இன்று வரையிலும் இந்தியாவில் 40 கோடி மக்கள் மூன்று வேளையும் சாப்பிட முடியாத நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தகுதியில்லாதவர்கள் அத்தனை பேர்களும் நமக்குத் தலைவர்களாக இருக்கும் சூழ்நிலையில் மக்களுக்கு இறுதியில் இந்த நம்பிக்கைகள் தான் வாழ்க்கையின் வழித்துணையாக மாறிவிடுகின்றது. இதைத்தான் “விதிப்பயன்” என்ற ஒரு வார்த்தைக்குள் நம் இந்தியர்கள் முடித்துக் கொண்டு சகிப்புத்தன்மையோடு வாழ பழகி விடுகின்றனர். அதிர்ஷடக் கலைகளை நம்பி வாழ்ந்தவர்களும் உண்டு. இதை மட்டுமே நம்பி கெட்டு அழிந்தவர்களும் உண்டு. திருப்பூருக்குள் நான் வந்து சேர்ந்திருந்த போது எதையும் கவனிக்கத் தேவையில்லாமல் காலங்கள் ஓடிக் கொண்டு இருந்தது. காரணம் வறுமையில்லாத இளமைப் பருவம்., அதுவே சமூக அனுபவங்களைக் கவனிக்கத் தெரியாமல் கடந்து வந்தாகி விட்டது. ஆனால் இங்கே வாழ்க்கையின் தன்மை மாறத் தொடங்கியது. என்னைச் சமூகத்தில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. ஒவ்வொன்றையும் அவசரமாய்க் கடக்க வேண்டியதாய் இருந்தது. கிடைத்த வேலைகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் அதன் மூலம் உருவாக்க வேண்டிய குடும்ப வாழ்க்கையும் அவசரமாக என்னை ஓட வைத்துக் கொண்டிருந்தது. விரும்பிய தொழில் வாழ்க்கை வரை ஒவ்வொன்றும் வந்து சேர்ந்தது. தோல்விகளும் துயரங்களும் நம்மைத் தாக்கும் போது தான் நம் ஆழ்மனம் விழித்துக் கொள்கின்றது. அப்போது தான் நம்முடைய கவனிப்பு திறனுக்குப் புதிய சக்தி கிடைக்கின்றது. முதல் இருபது வருடங்களில் குடும்பத்தினர் என் மேல் வைத்திருந்த பல கவலைகளில் என்னுடைய இறை மறுப்புக் கொள்கை. அது வெறும் கொள்கையாக இருந்தாலும் கூடப் பரவாயில்லை. இறை கொலையாக இருந்த காரணத்தால் நான் செய்து கொண்டுருந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் குடும்பத்தினரின் சமூக அந்தஸ்து மிகவும் பாதிக்கப்பட்டது. வந்து சொல்லக்கூடியவர்கள் அத்தனை பேர்களும் கொண்டு வரக்கூடிய முக்கியக் குற்றச்சாட்டுக் கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவிலில் உடைக்கும் சிதறு தேங்காயை எடுத்து தின்று கொண்டு இருக்கின்றான் என்பதே. அவர்களைப் பொறுத்தவரையிலும் அது தோஷம் கழித்த ஒரு நிகழ்வு. அதுவே என்னுடைய பார்வையில் தின்று தீர்க்க வேண்டிய ஒன்று. என்னுடன் இருந்த அத்தனை பேர்களும் அப்படித்தான் திக்குத் தெரியாமல் திரிந்தோம். ஊருக்குள் இருக்கும் வரையிலும் அப்படித்தான் வாழ்ந்தோம். கொள்கை கொண்ட அத்தனை பேர்களும் இன்று மாறிவிட்டார்கள். தாமதமாக என்றாலும் நானும் கூட மாறித்தான் போயுள்ளேன். காரணம் அனுபவங்கள். சதையும் இரத்தமும் நரம்புமாய் வாழும் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களையும் அவர்களின் அனுபவம் தான் முதலில் தீர்மானிக்கிறது. கற்றுத் தந்த ஆசிரியர்களை விட, கற்றுக் கொள்ள உதவிய புத்தகங்களை விட இந்த அனுபவங்கள் தான் ஒருவரை தலைவராக மற்றொருவரை தறுதலையாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.. நான் என் வாழ்க்கையில் சந்தித்த நபர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் முத்து முருகேசன். திரு. முத்து முருகேசன்.(MUTHU MURUGESON), எப்போதுமே தன்னுடைய பெயரை தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் எழுதக்கூடியவர். இந்தப் பெயர் தான் என்னுடைய மொத்த வாழ்க்கையையும் திசை திருப்பிய பெயர், திருமணத்திற்கு முன்பு நான் தங்கியிருந்த அறைக்கு வந்த நண்பர் ஒருவர் இவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது இவர் மதுரையில் திருநகரில் வாழ்ந்து கொண்டிருந்தார். நம்பிக்கைகளுக்கும் உழைப்புக்கும் இடையே போராடிக் கொண்டிருந்த என்னுடைய அன்றைய திருப்பூர் வாழ்வில் திடீர் திருப்பமாக இவருடைய அறிமுகம் கிடைத்தது. “உங்கள் மனக்குழப்பங்கள் தீர வேண்டும் என்றால் இவரைப் போய்ப் பாருங்கள் ” என்று நண்பர் இவரின் முகவரியைக் கொடுத்து விட்டு நகர்ந்து விட்டார். முகவரி கண்டு பிடித்து வீட்டுக்குள் நுழைந்த போது கதர் ஜிப்பா மற்றும் நாலு முழ வேட்டி அணிந்திருந்த அந்த ஒல்லியான உருவம் என்னை வரவேற்றது. வீடு முழுக்க புத்தகக் குவியல் தான் அதிகம் தெரிந்தது. திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று விரட்டிக் கொண்டிருந்தவர்களை மீற முடியாமலும் என்னுடைய லட்சியங்கள் பாதி அளவில் இருந்த காரணத்தாலும் ஒரு வழிகாட்டல் தேவையாய் இருந்தது. ஆன்மீகம் சார்ந்த எண்ணங்களும், இந்த “ உலகில் உழைப்புக்கு அப்பாற்பட்டு ஏதோ ஒன்று இருக்கிறது ” என்பதை உணர்ந்த நேரத்தில் தான் இவரைச் சந்தித்தேன். மூன்று முறை தொழில் ரீதியான வெளிநாட்டுப் பயணங்கள் நின்று போய்விட, முதலீடு போட்டு என்னை உட்கார வைத்து அழகு பார்க்க காத்திருந்தவர்கள் ஒதுங்கிப் போய்விட நினைத்த ஒவ்வொன்றும் தலைகீழாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் தான் இவரைச் சந்தித்தேன். அடுத்தடுத்துச் சூறைக் காற்றும் சூறாவளியும் தொடர்ச்சியாக அடித்துக் கொண்டே இருக்க என் வாழ்க்கை குறித்து அதிகமாக யோசித்த காலமது. அவரின் வழிகாட்டல் என்னுடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கத் தொடங்கியது. அவருடன் பேசி முடித்து விட்டு, அவரைப் பற்றி எதுவுமே தெரியாமல் அவர் கொடுத்த நம்பிக்கையை மட்டும் சுமந்து கொண்டு வந்த என்னை எப்போதும் போலத் திருப்பூர் வாழ்க்கை மறக்கடித்து விட்டது. திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்து பெயர் வைக்கும் சூழ்நிலையில் தான் மறுபடியும் அழைத்தேன். மூன்று குந்தைகளுக்கும் அவர் தான் பெயர் வைத்தார். தேவியர் இல்லம் வாழ்க வளமும் என்றும் அவர் தான் முதன் முதலாக எழுதிக் கொடுத்தார். என் அழைப்பை ஏற்று எங்கள் வீட்டுக்கு வந்தவர் என்னுடைய மறுமலர்ச்சி அத்தியாயத்தின் தொடக்கப் பககங்களை எழுதத் தொடங்கினார். என்னுடைய அறிவியல் கருத்துக்கள் சற்று மூச்ச வாங்க ஆரம்பிக்க வாழ்க்கை ஆணிவேரின் பிடிமான்ம் அன்று முதல் தான் ஆழமாய் ஊன்றத் தொடங்கியது. 1990 வரைக்கும் தமிழ்நாட்டின் மூத்த பத்திரிக்கையாளராக இருந்தவர், பல தரப்பபட்ட அரசியல் தலைவர்களின் நெருக்கமாகப் பழகியவர், அரசியல் களத்தில் கட்சிகளின் வெற்றி தோல்விகளைத் தீர்மானித்தவருடன் உரையாடிய உரையாடல்கள் எனக்கு வழிகாட்டியாக இருந்தது. அக்மார்க் காந்தியவாதி. இன்று வரையிலும் அப்படித்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். காட்டாறு போல ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையைத் தனது கனிவான வார்த்தைகளால் ஒழுங்குக்குக் கொண்டு வந்தார். இவர் மூலம் புரிந்து கொண்ட இறை நம்பிக்கை என் வழிநடத்தியது. திருவண்ணாமலைக்கு மாதந்தோறும் செல்லும் பழக்கம் உருவானது. நமக்கு அப்பாற்பட்ட சக்தியென்பது இங்கே பலருக்கும் மனித ரூபங்களின் மூலம் கிடைக்கின்றது. 5 5. புரிதலின் தொடக்கம் நேசிப்பு ஒவ்வொரு முறையும் திருவண்ணாமலை செல்லும் போதும், சென்ற வந்த பிறகும் அந்த ஊரைப்பற்றி, அங்கு வாழந்து கொண்டிருக்கும் மக்களைப் பற்றியும் அதிகம் யோசித்துருக்கின்றேன். இந்தியாவில் புனிதம் என்று சுட்டிக்காட்டப்பட்ட இது போன்ற ஊர்கள் அங்குள்ள கோவில்களை வைத்தே வளர்கின்றது. வருமானம் அனைத்தும் கோவிலுக்குத்தான் என்றாலும் ஊரின் கட்டமைப்பில் எந்த மாறுதலும் உருவாகிவிடுவதில்லை. உருவானாலும் கூட ஆமை வேகம் தான். குறிப்பிட்ட திருவிழா நாட்களில் கூடச் செல்பவர்களுக்குப் பயமும் பல பாடங்களும் தான் கிடைக்கின்றது. இன்று இது போன்ற புனித தலங்களுக்குச் செல்லும் மனிதர்கள் ஒரு சுற்றுலா மனோநிலையில் தான் செல்கின்றார்கள். தொடக்கத்தில் வாழ்ந்த மனிதர்கள் இது போன்ற தலங்களுக்குச் செல்ல நினைத்தாலே தனது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு உணவு முதல் உறவு வரை உள்ளும் புறமும் பரவச நிலையை உருவாக்கிக் கொண்டு சென்றார்கள். பாதயாத்திரை என்பது ஆரோக்கியத்தின் அங்கமாக இருந்தது. இன்று அனைத்தும் மாறிவிட்டது. மலையில் இருக்கும் சாமியை தரிசிப்பதை விடக் கேபிள் கார் பயணத்தை அனுபவிக்கச் செல்பவர்கள் தான் அநேகம் பேர்கள். மக்களின் வேண்டுதல்களும் மாறியுள்ளது. உடம்புக்குத் தேவைப்படும் அமைதியை விட பொருளாதாரம் சார்ந்த வேண்டுதல்கள் தான் இன்று அதிகமாகியுள்ளது. “நினைத்தவுடன் செல்வது. வேண்டியவுடன் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது” என்று துரித உணவகத்தினைப் போலவே இன்று ஆன்மீகம் வளர்ந்துள்ளது. விருப்பங்களைச் சுமந்து கொண்டு செல்வதற்குப் பெயர் ஆன்மீகம் அல்ல. அது வியாபாரம். அது தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் என் நோக்கம் ஆன்மீகத்தைத் தாண்டியும் சில புரிதல்களைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு இருந்தது. திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டையர் என்று தெரிந்ததும் அழைத்து உறவுகளிடம் சொன்னேன். “போடா கிறுக்குப் பயலே. உனக்கு எல்லாமே விளையாட்டு தான்” என்றார்கள். குழந்தைகள் திருவண்ணாமலையில் தான் பிறக்க வேண்டும் என்று நான் மனதில் வைத்திருந்தபடி ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினேன். திருவண்ணாமலைக்கு மாதம் ஒரு முறை செல்லும் பழக்கம் என்பது மாறி வாரம் ஒரு முறை என்பதாக மாறியது. அலைச்சலும் அவஸ்த்தைகளும் என்றாலும் நமக்குப் பிடித்த ஒரு விசயத்தைச் செய்யும் போது எந்தக் கஷ்டமும் நமக்கு இயல்பானதாகவே தெரியும். மூத்த சகோதரியும் அருகே உள்ள ஊரில் தான் பள்ளி ஆசிரியராக இருந்தார். ஆனால் இது போன்ற விசயங்களில் மற்றவர்களின் அறிவுரையைக் கேட்கும் மனோநிலையில் நான் இல்லை. அறிமுகம் இல்லாத திருவண்ணாமலை என்ற ஊரில் அலைந்து திரிந்து நான் விரும்பியவாறு அமைந்த மருத்துவரின் பெயர் உஷா கல்யாணி. மனித உருவில் வாழும் தெய்வம் என்று தான் போற்றப்பட வேண்டும். அவர் கணவர் இறந்து போன போதிலும் அவரின் இரண்டு பெண் குழந்தைகளையும் மிக உயரிய படிப்பில் இதே மருத்துவத் துறையில் தான் படித்துக் கொண்டிருந்தனர். இரண்டு மகள்களும் படிப்புக்காக ஒரு பக்கம்., இவர் இங்கேயென்று மாதம் முழுக்க ஓய்வில்லா பணியில் தான் இந்தச் சேவையைச் செய்து கொண்டிருந்தார். திருவண்ணாமலை அரசு மருத்துவராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார். அங்குள்ள அரசு மருத்துவமனையில் பணி முடித்து, தனியார் மருத்துவமனையில் ஏற்றுக் கொண்ட கடமைகளை முடித்துத் தன்னுடைய வீட்டிலும் மருத்துவச் சேவை செய்த அவரின் நேர ஒழுங்கும், காசுக்கு ஆசைப்படாத குணாதிசியங்களையும் இன்று நினைத்தால் கூட ஆச்சரியமாகவே இருக்கிறது. பலசமயம் என் அவசரத்தின் பொருட்டு அவரைப் பற்றி விசாரிக்க அங்கிருந்த அரசு மருத்துவமனைக்கே சென்றுள்ளேன். பலருடனும் உரையாடி இருக்கின்றேன். அவர் வீட்டில் நான் பார்த்தவரைக்கும் வந்த அத்தனை பேர்களும் மிக எளியவர்களாகத்தான் இருந்தார்கள். பத்து ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை என்பதான பல மனிதர்களை அங்கே தான் சந்தித்தேன். அவரைச் சந்தித்த போது என் விருப்பங்களையும் ஆசைகளையும் சொன்ன போது வினோதமாகப் பார்த்தார். ஆனால் கடைசியில் இப்படித்தான் சொல்லி எங்களைக் குழந்தைகளோடு பாராட்டி வழியனுப்பி வைத்தார். அவர் சொன்ன வாசகம் இப்போதும் நினைவில் இருக்கிறது. “எத்தனையோ விதவிதமான மனிதர்களை என் தொழில் வாழ்க்கையில் சந்தித்துள்ளேன். அத்தனையிலும் நீங்க வித்யாசம்” என்றார். காரணம் அவர் குழந்தை பிறப்புக்கு குறித்த நாட்கள், எதிர்பார்த்த நாட்கள் என்று அத்தனையும் கடந்து போயிருந்தது. நான் சொன்ன நாள் நெருங்கி வந்தது. அன்று தான் சரியாக இருக்கும் என்று அவருடன் இருந்த குழுவினர் சொன்ன போது தான் “உங்க விசயத்தில் மட்டும் நான் ஒவ்வொருமுறையும் பல வினோதங்களைப் பார்க்கிறேன்” என்றார். நான் குறிகளை வெறுப்பதும் இல்லை. அதிக அளவு விரும்புவதும் இல்லை. அதை ஆலோசனையாகத்தான் எடுத்துக் கொள்கின்றேன். உழைப்புக்கு அப்பாற்பட்ட ஏராளமான விசயங்கள் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றது. விஞ்ஞானத்திற்குப் புரியாத பல புதிர்கள் பல உள்ளன. நம்புவதும் நம்பாததும் அவரவர் அனுபவங்கள் தரும் பாடங்களே. இதை விவாதிக்க வேண்டிய அவசியமேயில்லை. திருவண்ணாமலை கோவிலில் கர்ப்பகிரகத்திற்கு மிக அருகில் நடுசாம பூஜை வரைக்கும் பல நாட்கள் இருந்துள்ளேன். உணர்வும், உயிரும் ஒன்றாகக் கலந்திருந்த அந்தக் காலத்தையும் கடந்து வந்துள்ளேன். ஒரு கிறிஸ்துவ மருத்துமனையில் தான் இரட்டையர்கள் பிறந்தார்கள். ஊரிலிருந்து அம்மா முதல் அத்தனை பேர்களையும் வரவழைத்து இருந்தேன். அம்மா குழந்தைகளைப் பார்க்கும் வரையிலும் இரட்டையர் என்பதை நம்பவே மாட்டேன் என்றார். அந்தச் சிறிய இரண்டு உருவங்களைக் கையில் கொடுத்த போது “இதென்ன கொடுமையா இருக்கு?” என்று ஆச்சரியப்படார். “நம்ம வம்சத்திலே இப்படி இரட்டை வந்ததே இல்லையே” என்றார். எனக்கும் வியப்பு தான். விஞ்ஞானத்தைத் தாண்டியும் பல உண்மைகள் இருக்கிறது என்பதை உணர்த்திய பாடங்கள் இது. . இருவரில் ஒருவர் எடைகுறைவு என்றதும் அப்போது தான் அவரைப் பாதுகாக்கப்பட் வேண்டிய கருவிகளின் பழுதை உணர்ந்தார்கள். அழைத்தவர்கள் வந்தபாடில்லை. நிமிடங்கள் மணிகளானது. நாட்களாக மாறியது. ஆனால் கடந்து கொண்டேயிருந்தே தவிர அடுத்த மூன்று நாட்களில் அவர்களால் எந்த உருப்படியான முன்னேற்பாடுகளையும் செய்து தரமுடியவில்லை. வருத்தங்களை மீறி அப்போதும் விதியின் கரத்தின் விளையாட்டுப் பொம்மை போலத் தான் நாங்கள் இருந்தோம். எல்லாமே முயற்சிக்கு அப்பாற்பட்டது என்பதை மீண்டும் ஒரு முறை உணர்ந்து கொண்டேன். முடிந்தவரைக்கும் முயற்சிக்கின்றோம். பல சமயம் ஜெயித்ததும் நம் முயற்சி என்கின்றோம். இல்லாவிட்டால்? அவசர உதவிகள் என்று அடுத்தடுத்து வந்த போதிலும் எதிர்பார்த்த அளவுக்குப் பலன் கிடைக்காமல் போக ஒருவர் மூச்சு விடவே சிரமப்படத் தொடங்கினார். ஆனால் அப்போது கூட உஷா கல்யாணி அசரவில்லை. அவர் பழக்கத்தில் உள்ள மற்றப் பகுதிகளில் உள்ள மருத்துவர்களை, அவர்கள் வைத்திருக்கும் கருவிகளை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்கு உதவி புரிந்த போலும் காலம் கடந்த ஞானத்தில் முடிவுகள் பயத்தோடு பார்க்கப்பட்டது. இயல்பாக இருந்த என்னிடம் சங்கடப்பட்டு இறுதியாக “இருவரில் ஒருவர் மட்டுமே பிழைக்க வாய்ப்புள்ளது” என்றார். அவர் குழுவினர் எடுத்த முடிவுகளைப் புறந்தள்ளி உங்கள் அறிவியலை விட என் உணர்வுகள் சொல்லும் முடிவே மேலானது என்று தான் திருப்பூருக்கு அழைத்து வந்தேன். அன்று அவர் திகைத்து என்னைப் பார்த்த பார்வை இன்றும் என் மனக்கண்ணில் நிழலாடுகின்றது. பெண் குழந்தைகள், அதுவும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு ஊனமானால் உறவுகள் பார்வையில் எப்படியிருக்கும் என்ற எண்ணங்கள் ஒவ்வொரு பக்கத்தில் இருந்தும் என்னை அம்பாகத்தாக்கியது. இங்கே குடும்ப வாழ்க்கை முடிவுகள் என்பது ஒருவருடன் முடிந்து போவதில்லை. கணவன், மனைவி என்று தொடங்கி ஒரு பட்டாளமே சம்பந்தப்படுகின்றது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கைகள். அதுவே சரியென்று திணிக்கப்படுகின்றது. சம்பந்தப்பட்டவர்களின் உணர்வுகள் மதிக்கப்படுவதேயில்லை. காதல் திருமணங்கள் தோல்விக்கு இரண்டு காரணங்கள். ஒன்று பணம் மற்றொன்று உறவுகளிடமிருந்து கிடைக்காத அங்கீகாரம். பணம் இல்லாத போது அடிப்படை வாழ்க்கையே சிதைகின்றது. அந்தச் சிதைவு மனபிறழ்வை உருவாக்கி பித்துப் பிடிக்க வைத்துத் திசை மாற வைக்கின்றது. ஏமாற்றங்களைத் தாங்க முடியாமல் பரஸ்பரம் ஒருவர் மேல் ஒருவர் குற்றச்சாட்டிக் கொண்டு தாங்கள் கொண்ட காதலை நரக வாழ்க்கைக்கு அர்ப்பணிக்கின்றார்கள். ஆனால் இங்குப் பெண் குழந்தைகள் என்பதால் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் நான் உறுதியாக இருந்தேன். குழந்தைகளை அழைத்து வந்த பிறகு திருப்பூருக்குள்ளும் தேடல் தொடங்கியது. எடை குறைந்த குழந்தைகள் சந்திக்கும் சவால்களின் முக்கியமானது வலிப்பு நோய். எப்போது வரும்? எதனடிப்படையில் வரும் என்றே தெரியாது. தனியாக இருந்த மனைவி தடுமாறிய காலமது. அடுக்கு மாடி குடியிருப்பு என்பதால் அறிவுரைக்கு பஞ்சமே இருக்காது. ஆனால் அவரவர் கொண்ட பயத்தின் சாயலை நன்றாகவே நம்மால் புரிந்து கொள்ள முடியும். திடீரென்று அலுவலகத்திற்கு அழைப்பு வரும். பதறிக் கொண்டு ஓட வேண்டியிருக்கும். வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் அலைந்த பயணங்களை இப்போது நினைத்துப் பார்க்கின்றேன். உயிர் போய் உயிர் வந்தது என்பார்களே. அத்தனையும் அனுபவித்து இருக்கின்றேன். திருப்பூருக்குள் நான் பார்த்த மருத்துவர்களும் ஊனம் உருவாகும் வாய்ப்புகளைத்தான் விவரித்தார்கள். என் மனம் ஏற்றுக் கொள்ளவேயில்லை. காரணம் எங்கள் குடும்பத்தின் தலைமுறையில் ஊனமானவர்களே இல்லை. அமைதியாகவே வாழ்ந்து ஆராவாரமற்று தான் இறந்துபோயிருக்கிறார்கள். விஞ்ஞானம் சொல்லும் கருத்துக்களை மனதில் உள்வாங்கிக் கொண்டே ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்க்கத் தொடங்கினேன். முதலில் குழந்தையின் உடம்பில் எதிர்ப்பு சக்தி வேண்டும். அதன் பிறகே மற்றவற்றை யோசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அடுத்த மருத்துவரை மனம் தேடத் தொடங்கியது. தேடலின் இறுதியில் இறுதியாகத் திருப்பூரில் ஷெரிப் காலணியில் உள்ள சிவகாமி என்ற மருத்துவர் கிடைத்தார். கொண்டு போயிருந்த ஆவணங்களைப் பரிசோதித்து விட்டு இருவரையும் பார்த்தார். தயங்காமல் கேட்டார். “இந்தக் குழந்தை இதுவரைக்கும் பிழைத்திருப்பதே அதிசயம்” என்றார். நான் அமைதியாக இருந்தேன். அடுத்தக் கேள்வி அதைவிடச் சுவராசியமானது. “மேற்கொண்டு எப்படி இவரை வைத்துச் சமாளிக்கப் போறீங்க?” என்றார். மனைவி அழுததை வேடிக்கை பார்த்த என்னை மருத்துவர் வினோதமாகப் பார்த்தார். “உயிரை விடச் சம்மதிப்பேன். ஆனால் ஒருவரைக்கூட இழக்க சம்மதிக்க மாட்டேன்” என்ற போது தான் என்னைப் பற்றி முழுமையாக விசாரித்து என் விருப்பப்படி ஒத்துழைக்கத் தொடங்கினார். “இயற்கை முறையில் உங்கள் மருத்துவம் இருக்கட்டும். குழந்தைக்கு உடல் வலு வேண்டும். அதன் பிறகு மற்றதை நான் பார்த்துக் கொள்கின்றேன்” என்றேன். “எல்லோரும் இப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் பொறுமையாய் கடைபிடிப்பதே இல்லை. உடனடி நிவாரணத்தில் தான் இன்றைய உலகமே ஓடிக் கொண்டிருக்கிறது” என்று புலம்பியபடி பால் மற்றும் கோதுமை நிலக்கடலையுடன் சேர்த்து அரைக்க வேண்டிய சமாச்சாரங்களையும் சொல்லி அதைக் கொதிக்க வைத்து பாலாக மாற்றிக் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய விதங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். “முப்பது நாட்கள் கழித்து வாருங்கள். எப்படிக் குழந்தை இருக்கிறது என்பதை வைத்து தான் மேற்கொண்டு முடிவைச் சொல்வேன்” என்று பயமுறுத்தியே அனுப்பினார். அவருக்கு இரண்டு இடங்களில் மருத்துவமனைகள் இருந்தது. ஒரு மாதம் கழித்து மற்றொரு மருத்துவமனையில் அவரைப் பார்க்க நாங்கள் சென்றடைந்த போது கூட்டம் இல்லாமல் தனியாக ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். இரண்டு பேரையும் அவர் டேபிள் மேல் படுக்க வைத்த போது அவர் கேட்ட கேள்வி “அந்தக்குழந்தை எங்கே?” என்றார். இவர் தான் அவர் என்றோம். விக்கித்துப் போய்விட்டார். காரணம் ஒரே மாதத்தில் 1.750 கிராம் கூடி மூன்று கிலோவிற்கு அருகே கொண்டு வந்திருந்தோம். இப்போது இருவரும் சமமாக இருந்தனர். “நம்ம முடியாத அதிசயத்தைச் சாதித்துக் காட்டியிருக்கீங்க” என்று என் கைகளை வாங்கிக் குலுக்க முற்பட்ட போது மனைவியின் கரத்தை எடுத்து அவர் கையில் வைத்தேன். அன்று தான் என் மனைவி என் வேகத்தின் முழுப்பலனை முழுமையாகவும் என் நேசிப்பின் அருமையையும் உணரும் நேரமாக இருந்தது. மேலே நாம் பார்த்த அவர் இப்போது எப்படி இருக்கின்றார் தெரியுமா? “அப்பா, அம்மாவுக்குச் சமைக்கவே தெரியல.எதிலும் காரமே இருப்பதில்லை. நாக்குக்கு விளங்கலை”என்கிறார். சாப்பாட்டில் உள்ள காரம் தந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே சிரிக்கின்றேன். வார்த்தையிலும் வாழ்க்கையிலும் காரஞ்சாரமாகத்தான் வளர்கின்றார். . 6 6. ஆசைமரம் முந்தைய மூன்று தலைமுறைகளில் எவருக்கும் இல்லாத இரட்டைக் குழந்தைகள் வந்து சேர மொத்த என் சிந்தனைகளும் மாறத் தொடங்கியது. ஏன் எதற்கு அழுகை? எப்போது இவர்களுக்குப் பசிக்கும்? ஒருவருக்குக் கழுவி முடிக்கும் போது அடுத்தவருக்குக் கழுவி விடத் தொடங்கிய போது தான் எனக்குள் இருந்த அத்தனை அழுக்குகளும் கலைந்து போகத் தொடங்கியது. இரண்டு கைகளிலும் நிறைந்து இருந்த அந்தச் சின்ன உருவங்கள் என்னுடைய மாயப் பிம்பங்களையும் கலைத்துப் போட்டது. சட சடவென்று ஒவ்வொன்றாக மாறத் தொடங்கியது. காட்டாறு போல் ஓடிக்கொண்டுருந்த என் வாழ்க்கையை நதியாய் மாற்றத் தொடங்கினர். முதல் மூன்று வருடங்களும் அலுவலக வேலைகளுடன் வேறு எந்த வெளியுலகமும் தெரியாத வாழ்க்கையாய் என்னை ஆக்ரமித்து இருந்தனர். மூன்றாவது வந்தவள் தொழில் மற்றும் வாகன யோகத்தையும் சேர்த்துக் கொண்டு வர அப்போது தான் பிறந்த ஊருக்குச் செல்லும் பழக்கம் உருவானது. அதுவரைக்கும் அத்தனை பேர்களும் திருப்பூருக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர். தொடக்கத்தில் ராக்கோழி கணக்காய் இரவு முழுக்கப் பேருந்தில் பயணித்துக் கண் எரிச்சலோடு அதிகாலை வேளையில் வீட்டுக்குள் நுழைவேன். அரைக் குறை தூக்கத்துடன் அம்மா கேட்கும் முதல் கேள்வி……. “வாடா…….. எப்ப மறுபடியும் திருப்பூருக்கு போகப்போறே?” காரணம் உள்ளே இருந்த கூட்டாளிகளுடன் சேர்ந்து மறுபடியும் கால்கள் நகராமல் இருந்து விடுவேனோ என்ற பயம். அப்பா உடனே ஒத்து ஊதுவார். உடன்பிறப்புகள் நக்கலுடன் நகர்ந்துவிடுவார்கள். ஆனால் மனதிற்குள் இருக்கும் ஆசையை வெளியே எவரும் காட்டிக் கொள்ளமாட்டார்கள். காரணம் மறுபடியும் பூதத்தைப் பாட்டிலுக்குள் அடக்க முடியாது என்று அவர்களுக்குத் தெரியும். அவர்கள் கெஞ்சும் போது மிஞ்சி ஓட்டம் பிடித்தேன். இன்று இருக்க எண்ணம் இருக்கிறது. இரண்டு நாளைக்கு மேல் இருந்து விடாதே என்று சொல்லக்கூடிய தொழிலும் இருக்கிறது. காரைக்குடியில் இருந்து அரை மணி நேரம் பயணம். உள்துறை அமைச்சரின் ஊரைத்தாண்டி உள்ளே நுழைந்தால் உங்களை இனிதே வரவேற்கும். பாலத்தைத் தாண்டும் போதே பக்கவாட்டில் இருந்த புளிய மரத்தைப் பார்ப்பேன். பேய் பிசாச என்று கிளப்பி விட்டு எங்களை அந்தப் பக்கம் வர விடாமல் தடுத்த அக்கா அண்ணன்களின் லீலைகள் இப்போது புரிகிறது. அரிசி ஆலையைத் தவிர வேறு எந்த முக்கியத்துவமும் இல்லாத ஊர். சுற்றிலும் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராமத்திற்குக் கடைத்தெரு உள்ள ஊர். அந்த அளவிற்குத் தான் மக்களின் எண்ணமும் வளராமல் இருந்தது. உள்ளே நுழையும் போதே எதிரே வரும் நபர்களின் முகம் ஒவ்வொன்றையும் உற்றுப் பார்த்துக் கொணடே நடந்து செல்வேன்,. ஒவ்வொருவர் வாயிலும் ஒவ்வொரு விதமான வரவேற்பு. சட்டைக்குள் கைவிட்டு எடுக்கக் காத்திருக்கும் சிலரைத்தாண்டி உள்ளே நடந்து செல்ல வேண்டும். ஓடித்திரிந்த தெருக்கள், உட்கார்ந்து அரட்டை அடித்த பாலம், நாள் முழுக்க அமர்ந்து இருந்த பஞ்சாயத்து போர்டு குட்டிச்சுவர்கள் என்று அத்தனையும் அனாதையாய் இருக்க, பழகிய எவரையும் இன்று காணவில்லை. கற்பக விநாயகர் திருக்கோயில். எதிரே குளம். சுற்றிலும் நூற்றுக்கும் குறைவான கடைகள். ஓரமாய் ஒதுங்கி வேறொருபுறம் சென்றால் ராவுத்தர் தெரு. மீன்கடை, இறைச்சிக்கடை. தொட்டு தொடங்கி மூச்சுப் பிடிக்க ஓடினால் பழைமை வாய்ந்த சாக்கோட்டை, பெயரில் தான் கோட்டை இருக்கிறதே தவிர மொத்த குடும்பமே நூறு இருக்குமா என்று ஆச்சரியம். ஆலமர வரிசையில் மறைந்து கொண்டு இருக்கும் மஞ்சுவிரட்டு பொட்டலும் நடக்கும் களேபரத்தை அடக்கும் காவல் நிலையும் இப்போது அமைதியாய் இருக்கிறது. தாண்டிச் சென்றால் நூற்றாண்டுகளைத் தாண்டி இருக்கும் பெரிய மற்றும் சிறிய கோவில். குழந்தைகளுடன் பெரிய கோவிலுக்குள் நுழைகின்றேன். கோவில். பிரகாரத்தில் மூச்சு விட்டால் படபடக்கும் பறவைகளின் இரைச்சல். இருட்டுக்குள் நடந்து வந்தால் முடை நாற்றம். உடன் படித்தவன் ஐயராக இருக்க முகம் எங்கும் முதுமை பெற்ற தோற்றம். அருகில் பேசச் சென்றாலும் ஏதோ ஒரு தயக்கம். புரியாமல் குழந்தைகளுடன் ஒவ்வொன்றாகத் தொட்டுப் பார்த்துக் கொண்டு நகர்கின்றேன். குழந்தைகளுக்குக் கிடைத்த சுதந்திரத்தில் ஓ……வென்ற இரைச்சல் அந்தக் கோவில் முழுக்க நிரம்பி வழிகின்றது. கூட்டம் இல்லாமல், வருமானம் இல்லாத வரிசையில் வாழ்ந்து கொண்டுருக்கும் அக்கிரகாரத்தைச் சுற்றி வரும்போதே எங்கள் வயலுக்குச் செல்லும் பாதையில் கிராமத்துப் பள்ளிச் சிறுவர்கள் சந்தோஷமாய்ப் பைக்கட்டு தூக்கிக் கொண்டு நடந்து வந்து கொண்டுருக்கிறார்கள். மழை வரும் போல் இருக்கிறது. மண் வாசனை நாசியை நெருடுகிறது. கோவிலுக்கு எதிரே மண்டபத்தில் அமர்ந்து கொண்டு சுத்தமான அந்தப் பெரிய குளத்தை உற்று பார்த்துக் கொண்டுருக்கின்றேன். பக்கத்தில் உள்ள கிராம மக்கள் குடிநீர் எடுக்கக் கூட்டமாய் வந்த தருணங்கள் மனதில் வந்து போகின்றது. படித்துறையில் அடம்பிடிக்கும் குழந்தைகளை அடக்கி அழைத்து வரும் போது எதிரே வந்தவர் புவியியல் ஆசிரியர். பூமிக்கும் வானத்துக்கும் கோபப்படும் அவர் இன்று மருமகளை அண்டி அடங்கி வாழ்ந்து கொண்டுருப்பதை கண்ணீருடன் பேசினார். குழந்தைகள் கேட்ட கேள்விகளுக்குச் சமாளித்துக் கொட்டிக் கிடந்த மணலில் காலை சரட்டிக் கொண்டு அவர்களின் ஓட்ட வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓட முடியாமல் மூச்சு வாங்குகிறேன். தேர்முட்டியைக் கடந்து சென்ற போது கரையான் அரித்த ஓலைகளால் போர்த்தி வைக்கப்பட்ட சின்னத்தேர் பெரியதேர் இரண்டும் நிற்பதை பார்த்தேன். டவுசருடன் மட்டும் வந்த திருவிழாவும், போட்டுருந்த புதுச்சட்டையில் ஒளித்து வைத்த பலூனை மறந்து செய்த களேபரம் நினைவுக்கு வருகிறது. வாங்கிய அடியில் துடைக்காத மூக்குச்சளியை நினைத்து இப்போது உறுத்தலாய் இருக்கிறது. நான் பார்த்த பல வருட திருவிழாக்கள் ஒவ்வொன்றாக என் நினைவில் வந்தது. வெட்டுப்பட்ட ஆட்டுத் தலையும், வெட்டியும் அடங்காமல் துடித்த உயிர் கோழிகளும் சிதறடித்த ரத்த மண் வாசனையைத் தடவிப் பார்க்கின்றேன். தொடர்ச்சியாகக் குழந்தைகளின் கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கிறது. பதில் என்று ஏதோ ஒன்று வந்து கொண்டு இருக்கிறது. மனம் முழுக்க வெறுமையாக இருக்கிறது. ஊரின் மற்றொருபுறம் கார் வந்து நிற்க ரயில் நிலையத்தைக் கண்டவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ஓடுகிறார்கள். மேட்டை கடக்க ரயில் தண்டாவளத்தை ஒட்டி கண்களுக்கு எட்டிய வரைக்கும் தெரிந்த கண்மாய்த் தண்ணீர் இப்போது உட்கார்ந்து கழுவினால் கூடப் போதாத அளவிற்கு வற்றிப் போய் உள்ளது. இதை நம்பி மற்றொரு புறத்தில் இருந்த பல ஏக்கர் வயல்கள் உருவாகப்போகும் குடியிருப்புக்காக அளந்து கொண்டிருப்பதை பார்த்தேன். அருகே ரயில் நிலையம். மயிலாடுதுறை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் வருகைக்காகச் சிலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பெயரில் மட்டும் தான் எக்ஸ்பிரஸ். எக்ஸ் ஒய் இசட் என்று கத்திக் கொண்டே ரயில் ஓடும் வேகத்திற்கு நாமும் ஓடிவிடலாம். இந்த ரயில் பாதை நடைமேடையில் தான் பல மணி நேரம் தவம் போல் அமர்ந்து படித்துக் கல்லூரிப்பாடங்களும் குளிக்க வந்த பெண்களின் காமப் பாடங்களையும் பார்த்த ஞாபகம். மாதவன், கோவிந்தராஜன் சேர்ந்த கூட்டணிகள் இறுதி வரைக்கும் உடையாமல் இருந்தது. அவர்கள் தொழில் நுட்பக்கல்லூரிக்குள் நுழைய எங்கள் மூவரின் வாழ்க்கைத் தடமும் மாறியது. ரயில் நடைமேடைகளைக் கடந்து நெஞ்சி முள் குத்தாமல் ஜாக்கிரதையாகக் கால்கள் வைத்து வேலி தாண்டி வந்து அருகே உள்ள பூங்காவிற்குள் நுழைந்தோம். பழைய தகரங்களைக் கோர்த்து மேடைகளும், எப்போதும் விழும் என்று காத்து இருக்கும் பட்டுப் போன மரங்களுக்கும் இடையே என்னுடைய முக்கியமான மரம் ஒன்று உண்டு. குழந்தைகளின் கைபிடித்து அந்த இடத்தைத் தேடி அலைந்து கடைசியில் கண்டு கொண்டேன். கால் நூற்றாண்டு காலம் ஆனாலும் முதல் காதல் உருவாக்கிய நினைவுச் சின்னம். ஆசையுடன் பார்த்தேன். தாவரத்தின் பட்டை மறைத்து ஆணியால் கீறப்பட்ட இரண்டு பெயர்களில் அவள் பெயர் மறைந்து விட்டது. என் பெயர் மட்டும் மெலிதாகத் தெரிந்தது. அதன் அருகில் குழந்தைகள் தங்களின் பெயரை ஆணியால் செதுக்கிக் கொண்டுருக்கின்றார்கள்.. 7 7. இனிய நினைவுகள் பூங்காவில் இருந்து குழந்தைகளை வெளியே அழைத்து வர முடியவில்லை. மரங்களும் அருகே தெரிந்த பொட்டல்காடுகளும் வேறொரு உலகத்தைப் பார்த்தது போல் இருந்துருக்கலாம். வீட்டுப் பாடங்களும் விளையாட முடியாத சோகங்களும் இன்று முடிவுக்கு வந்தது போலிருந்தது . அவர்கள் போட்டுருந்த செருப்புகள் எங்கோ அனாதையாய் கிடக்க அவர்களின் ஓட்டமும் கத்தலும் மரங்களில் இருந்த பறவைகளைப் படபடக்க வைத்தது. பூங்காவை ஓட்டியிருந்த நண்பன் முருகேசனின் வீட்டின் முன்புறம் அவனின் தங்கை வெளியே நின்று எவருக்கோ எதிர்பார்த்து காத்துக் கொண்டுருப்பது தெரிந்தது. என்னைக் கவனித்தால் அவனின் அம்மா வீட்டுக்குள் வர அழைப்பு விடுப்பார். மொத்தமும் மாறிவிடும். பூங்காவில் இருந்த சறுக்கு மர தகரத்தில் நீட்டிக் கொண்டுருந்த துருப்பிடித்த கம்பிகள் என்னை யோசிக்க விடாமல் தடுக்க குழந்தைகளைப் பிரித்து வண்டிக்குள் அடைத்து பயணித்த தெருவின் இறுதிப் பகுதி பங்களா ஊரணித் தெரு. நடுநாயகமாகக் குளம் அருகே ஆலமரம். எப்போதும் போல மரத்தின் கீழே பிள்ளையார் சிலை. ஒவ்வொரு பகுதிகளுக்கும் இருக்கும் வெட்டி ஆபிசர்களைப் போல இந்தச் சந்துக்குள் கொஞ்சம் அதிகமாகவே உண்டு. பிள்ளையார் சிலைக்குப் பின்புறமாக வந்தால் இரவு நேரம் தவிர எப்போதும் சீட்டாடி கோஷ்டிகள் நிறையப் பேர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு சந்தின் பெயரும் வினோதமான பெயர்க்காரணமாக இருக்கும்.. நடுவீதி, நடராஜபுரம்,கீழப் பெருமாள் கோவில், மேலப்பெருமாள் கோவில், யெமு வீதி இப்படித் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஒரு நீண்ட சந்தில் அதிகபட்சம் இருபது வீடுகள் இருக்கலாம். அடுத்தத் தெருவுக்குப் பிரிக்கும் பாதைகள் எனபது ஒரு முழு வீட்டின் அளவாக இருக்கும். மொத்தத்தில் ஒரு வீட்டின் மொத்த அளவு முடியும் போது இடையில் உள்ள சந்து பிரிந்து அடுத்த வீட்டுக்குத் தொடக்கமாக இருக்கும். முழுவீட்டையும் நான்கு புறமும் சுற்றி வரும் போது லேசாக மூச்சு வாங்கும.. குழந்தைகள் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த கைப்பந்து வலையுடன் ஒன்றிப் போயிருந்தார்கள். பார்த்துப் பழகிய சிலர் கண்களுக்குத் தெரிந்தார்கள். அப்போது என் பார்வையில் பட்டது எதிரே இருந்த வள்ளிக்கண்ணுவின் வீடு. என்னுடைய பள்ளித் தோழி. அறிமுகம் இல்லாதவர்கள் பார்க்கும் முதல் பார்வையில் இவள் மனநலம் குன்றியவளோ? என்று தோன்றக் கூடும். எப்போதும் எதையாவது தின்று கொண்டு இருக்கும் வள்ளிக்கண்ணு. ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே தின்று கொண்டிருப்பாள். . வள்ளிக்கண்ணுக்கு 18 வயதில் திருமணம் ஆனது. 26 வயதுக்குள் வரிசையாகப் பெற்றெடுத்த நாலைந்து பெண் குழந்தைகளுடன் இப்போது விதவை கோலத்துடன் தனியாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மிகப் பெரிய கோட்டை போன்ற வீட்டில் அவளும் குழந்தைகளும் கூட ஒரு வயதான வேலைக்கார பாட்டியுடன் சத்துணவு பணியாளராக வாழ்ந்து கொண்டிருக்கின்றார். ஏழு மணி இருட்டு என்பது வீட்டின் கடைசி வரைக்கும் சென்று வரமுடியாத பயத்தைத் தரும் அளவிற்கு விஸ்தாரமான வீடு. படிப்பு மண்டையில் ஏறாது என்று உணர்ந்த அவளின் பாட்டி சேர்த்து வைத்து இருந்த நகைகளைக் காட்டி எவனோ ஒருவனின் தலையில் கட்டி வைத்து விட்டார். கட்டியவனின் கல்லீரல் கழுதை போல் சுமந்து ஒரு நாள் ரத்தமாகத் துப்பியது,. அன்று தான் அந்த மொடாக்குடியனின் மற்ற வண்டவாளங்களும் தண்டவாளத்தில் ஏறத் தொடங்கியது. வள்ளிக்கண்ணுவின் அப்பா பர்மாவில் வேறொரு குடும்பத்துடன் இருக்க, காத்திருந்த அம்மா கண்கலங்கிக் கொண்டே சேர்ந்துவிட பாட்டி தான் வள்ளிகண்ணுவை வளர்க்க வேண்டியதாகி விட்டது. ஜாதி, சமூகம், இனம் என்பதற்கெல்லாம் மேலானது பணம். பங்காளிச் சண்டையில் பெரிய வீடு இப்போது நீதிமன்ற தீர்ப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. சம்மந்தப்பட்டவர்களின் அனுமதியுடன் முகப்பில் மட்டும் இருந்து கொள்ள வள்ளிக்கண்ணுவுக்கு அனுமதி கிடைத்து குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எவராக இருந்தாலும் வாழ்வில் கை நிறைய காசு இருந்தால் அவர் நம்மவர். இல்லாவிட்டால் யார் அவர்? அம்மா இல்லாத குறை போக்க அதிகச் செல்லம் கொடுத்து வளர்ந்த வள்ளிக்கண்ணுக்கு வெகுளித்தனம் அதிகம். ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது “டேய் கணேசா கடலை அச்சு வேண்டுமாடா?” என்று கேட்டவளை எப்படி மறக்க முடியும்?. சுற்றியுள்ள அத்தனை பகுதிகளிலும் இது போன்ற பிரமாண்ட வீடுகள் தான்.. முதல் இருபது வருட வாழ்க்கையில் அவஸ்ய தேவைகளைத் தவிர்த்து வெளியே எங்குமே சென்றது இல்லை. நான் பார்த்த ஊர்களை எளிதில் பட்டியலிட்டு விடலாம். தமிழ்நாட்டின் மற்ற பகுதிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக் கொண்டே வந்த போதிலும் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் இங்கே புதிய மாறுதல்கள் ஒன்றுமே உருவாகவில்லை. ப. சிதம்பரம் மத்திய அமைச்சராக வந்தார். துணை இணை அமைச்சராகி வர்த்தகம் உள்துறையாக மாறி இறுதியில் நிதியாக மாறியது. மக்கள் சொல்லும் “கெட்டி”யாகத் தான் சீனாதானா மயிரிழையில் தப்பித்து இன்று வரையிலும் மத்திய அரசில் மத்திய அமைச்சராக இருக்கின்றார். சோழ நாட்டின் காவிரிபூம்பட்டினத்தில் இந்தச் சமூக மக்களின் வாழ்க்கை தொடங்கியதாக வரலாறு சொல்கிறது. காலமாற்றத்தில் பாண்டிய நாட்டிற்கு வந்து சேர்ந்தனர். மன்னர் அளித்த காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றிய 9 கிராமங்களில் தொடக்கத்தில் குடியேறினர். இன்று பொதுப் பெயராக மொத்தமாகச் “செட்டிநாடு” என்று அழைக்கப்படுகிறது புதுக்கோட்டை, சிவகங்கை,இராமநாதபுரம் போன்ற ஊர்களை அடிப்படையாகக் கொண்டு சுற்றிலும் உள்ள 96 கிராமங்களில் பரவி வாழ்ந்து கொண்டுருக்கின்றார்கள். வியாபார நிமித்தமாக மன்னர் காலங்களில் வைசியர் குலம் என்று தொடங்கி இருக்க வேண்டும். வர்ணாசிர்மம் என்ற வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள சமாச்சாரங்கள் இங்குத் தேவையில்லை. மொத்தத்தில் தொழில் அடிப்படையில் இந்த ஜாதி மூலக்கூறுகள் உருவாகியிருக்க வேண்டும். தொடக்கத்தில் ஒவ்வொரு தனி மனிதர்களும் தாங்கள் செய்து கொண்டிருந்த தொழில் அடிப்படையில் உருவான சமூக அமைப்பில் உருவாக்கப்பட்டன கிமு நாலாம் நூற்றாண்டு முதல் கிபி ஆறாம் நூற்றாண்டு வரைக்கும், அதன் பிறகு ஏறக்குறைய பத்து நூற்றாண்டுகளில் கோலோச்சிய புத்த சமண மதங்கள் முன்னிலையில் இருந்தாலும் இந்த ஜாதி மூலக்கூறு மட்டும் கவனமாகச் சிதையாமல் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. மன்னர்களுக்கு உதவும் வகையில் வைசியர் குலத்தில் உருவானது தான் இந்தச் செட்டி என்ற சொல்லாக வந்துருக்க வேண்டும். ஆனால் செட்டியார்களின் பலவித செட்டியார்கள் உண்டு என்பதை திருப்பூருக்குள் வந்த போது தான் புரிந்து கொண்டேன். 24 மனை, தெலுங்கு, கன்னடம், வளையல்கார என்று வாணியச் செட்டியார் வரைக்கும் பலதரப்பட்ட செட்டியார்கள் இருக்கிறது. 60 நகரத்தார் கிராமங்கள். 9 விதமான கோவில்களின் அடிப்படையில் 12 ஆம் நூற்றாண்டில் பிள்ளையார்பட்டியை அடிப்படையாக் கொண்டு நிலைபெற்று உருவான சமூக மக்கள். ஒவ்வொரு விதமான பாரம்பரியம். சிங்கப்பூர் முருகன் கோவிலில் முன்புறம் உள்ள அந்தச் சிறிய கல்வெட்டை உற்று கவனித்தால் 1859 ஆம் ஆண்டு அங்கு வாழ்ந்த பெருமக்களின் சேவையை நமக்கு உணர்த்தும். அங்கு மட்டுமல்ல மலேசியாவில் உள்ள பினாங்கு பகுதியில் உள்ள சிவன் கோவிலை சுற்றி வரும் போது நாம் இருப்பது வெளிநாட்டிலா இல்லை தமிழ்நாட்டின் ஒரு பகுதியா என்று நம்மைத் திகைப்படைய வைக்கும். பர்மா வரைக்கும் சென்று பொருள் ஈட்டிய சமூகம், ஈழத்தில் சுதந்திரம் வாங்கிய காலகட்டத்தில் கொழும்புச் செட்டி என்ற தெருவில் நடந்த நிதி ஆதார பரிவர்த்தனைகளை நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அன்றைய காலகட்டத்தில இலங்கையின் மொத்த நிதி ஆதாரத்தில் 90 சதவிகித பங்களிப்பு நம்மவர்களின் கையில் தான் இருந்தது. உச்சக்கட்டமாக இன்றைய அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அண்ணாமலை செட்டியார் தன்னிடம் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கரில் விளைவித்த நெல்லை விற்பதற்குப் பயன்படுத்திய நாடு இலங்கை. தமிழ் நாட்டில் இருந்து நெல் அரிசி மூட்டைகளை இலங்கைக்குக் கொண்டு செல்ல தனியாகவே கப்பல்கள் வைத்து இருந்தது ஆச்சரியத்தின் உச்சம். இன்று அத்தனை வீடுகளும் பாழடைந்து கிடக்கிறது. தேக்கு மர கதவுகளும், பெல்ஜியத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட கண்ணாடி வேலைப்பாடுகள் நிறைந்த அலங்காரங்களும் பொலிவிழந்து போய்விட்டது. 150 ஆண்டுகள் கடந்தும் இன்று ஒரு சுவரில் கூட நான் விரிசலை பார்த்தது இல்லை. முட்டைச் சாற்றைக் குழைத்து முழுமையான அர்ப்பணிப்பும் கலைநுணுக்கமாய்க் கட்டிய மொத்த வீட்டின் வாரிசுகளும் புலம் பெயர்ந்து எங்கேயோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்வின் கடைசிக் கட்டத்தில் வாழும் பெரியவர்களுக்கு இவ்வளவு பெரிய வீட்டில் ஏக்கமான நினைவுகளைத் தவிர வேறொன்றும் துணையில்லாமல் துணிவே துணையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். வள்ளல் அழகப்பர் இல்லையென்றால் வரப்பட்டிக்காட்டு வாசியாக என்னைப் போன்ற பலரின் வாழ்க்கையும் முடிந்து போயிருக்கும். கவிஞர் கண்ணதாசன் இல்லையென்றால் வாய் உச்சரித்துக் கொண்டு இருக்கும் தமிழ் வார்த்தைகள் பாமரனுக்குப் போய்ச் சேர்ந்திருக்குமா? எம்.ஜி.ஆர் என்ற நடிகரைத் தான் நாடாள வைத்திருக்குமா? சமூகக் காவலர்களை நினைத்துக் கொண்டிருந்த போது என் எதிரே கீனா சானா என்றழைக்கப்பட்ட கிறுக்குச் சண்முகம் வந்து கொண்டிருந்தான்… என் பள்ளித் தோழன். பத்தாம் வகுப்பை மூன்று முறை எழுதியும் தேறமுடியாமல் தவித்தவன். இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலை கிராமத்து டாக்டர். 8 8. ஈக்கள் மொய்க்கும் உலகம் குடும்பத்தின் கூட்டுக் குடித்தன வாழ்க்கை முடிவுக்கு வந்த போது ஒன்பதாம் வகுப்பு அறிமுகமாயிருந்தது. வரவு செலவுகள் ஒன்றாகவும் வாழும் இடம் தனியாகவும் பேசி முடிவு செய்து இருந்தார்கள். அந்தப் பெரிய கடைத் தெருவில் குறிப்பாகப் பேருந்து நிலையத்திற்கு அருகே பெரிய வீட்டு வாழ்க்கை எனக்குப் பல விதங்களில் உதவியாக இருந்தது. . வீட்டுக்கு அடுத்த வாசல் தட்டச்சுப் பயிலகம். இதற்குப் பின்னால் ரொட்டிக் கடை.. சாயங்காலம் என்றால் ரொட்டிக்கடையில் இருந்து விதவிதமான வாசனைகள் வந்து கொண்டுருக்கும். அருகே உள்ள சிறிய பாலத்தில் கூட்டணி அமைத்த நண்பர்களுடன் உட்கார்ந்து கொண்டு வந்து போகின்ற மக்களை அளவெடுப்பதோடு சரி. கையில் காசிருந்தால் ரொட்டிக்கடையில் அனைவரும் சேர்ந்து வாங்கிய வெஜிடபிள் பப்ஸ் தின்று திருப்தியாய் நகர்ந்து விடுவதுண்டு. பேருந்து நிலையம். அருகில் உள்ள காரணத்தால் வந்து இறங்கும் அத்தனை பேர்களும் பாலத்தில் அமர்ந்திருக்கும் எங்களைக் கடந்து தான் செல்ல வேண்டும். பலரின் திட்டுக்களும் பாவாடை தாவணிகளின் தரிசனமும் இங்கிருந்து தான் தொடங்கியது. பெயர் தான் பேருந்து நிலையமே தவிர ஊரில் உள்ள பிச்சைகாரர்கள் கூடும் இடமாக இருந்தது. ஒரு தகர கூரை. அதுவும் யாரோ ஒரு புண்ணியவான் தானமாகக் கொடுத்த இடம். யூ வடிவ ஒரு குட்டிச் சுவரை சுற்றி வந்து ஒவ்வொரு பேருந்தும் சற்று நேரம் நின்று விட்டு நகரும்., இந்தக் குட்டிச் சுவருக்குள் சுற்றி வர சோம்பேறிப் பட்டுக்கொண்டு மேட்டுக்கடை பக்கமாகத் திருப்பிக் கொண்டு தனியார் பேருந்துகள் நகர்ந்துவிடும். இதனால் பலரும் எப்போதும் மேட்டுக்கடை அருகே வந்து நின்றுவிடுவார்கள். கனத்த மழையென்றால் ஜனங்கள் முழங்கால் தண்ணீரில் சந்தையில் வாங்கிய நண்டு மீன்களுடன் கப்பு வாடையைக் கடத்திக் கொண்டிருப்பார்கள். டவுன் பஸ் வரும் போது ஓட்டுநர் ஒரு வினோதமான ஒலியை தொடர்ச்சியாக எழுப்பிக் கொண்டே வருவார். அதற்குள் அங்குக் கூடியிருக்கும் மொத்த கூட்டமும் முண்டியடித்துக் கொண்டு தயாராய் இருப்பார்கள். உள்ளே நுழையும் போதே பாதிப்பேர்கள் ஓடும் வண்டியில் ஏற முயற்சிக்க ஒரே களேபரமாக இருக்கும். பேருந்து நின்றதும் பலரும் டயர் வழியே கால் வைத்து ஏறிக் கொண்டிருப்பார்கள். உள்ளே வடிவேல் படச் சிரிப்பு போல் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும், அருகில் உள்ள அத்தனை கிராம மக்களுக்கும் குறிப்பிட்ட இந்தப் பேருந்துக்களை விட்டால் வேறு வழியில்லை. ஊரில் ஒவ்வொரு புதன் கிழமையும் சந்தை உண்டு.. தொடக்கத்தில் கடைத்தெருவுக்குள் இருந்த சந்தை பிறகு எங்கள் வீட்டுக்குப் பின்புறம் இருந்த விலலுடையார் பொட்டலுக்கு மாற்றினார்கள். இந்தப் பொட்டல் என்பது கருவேலக்காடும் காலையில் மலஜலம் கழிப்பவர்கள் வந்து கூடுமிடமாக இருந்தது. அவசரமாகக் கீற்று கொட்டைகளை உருவாக்கி சந்தை என்று மாற்றினார்கள். அன்று தான் சுற்றியுள்ள அத்தனை கிராம மக்களும் ஒன்றாக வந்து கூடுவார்கள். அன்று மட்டும் இந்தப் பேருந்தில் எள் போட்டால் எண்ணெய் வழிந்து ஓடும் போலிருக்கும். தொங்கிக் கொண்டு கர்ப்பிணி போல் அந்த டவுன் பஸ் நகரும் போது பத்தடி தள்ளி நின்று வேடிக்கை பார்த்த காலமது. நடத்துனரை விட்டு நகர்ந்த பேருந்தில் கூரையில் அமர்ந்து இருந்த மக்கள் பின்னால் உள்ள ஏணிப்படி கம்பிகள் வழியாகக் கை கொடுத்து காப்பாற்றி அழைத்த சம்பவங்களும் உண்டு. எட்டாம் வகுப்பு வரைக்கும் படித்துக் கொண்டுருந்த சரஸ்வதி வித்யா சாலை படிப்பு முடிவுக்கு வந்து அந்தப் பள்ளியும் பெண்கள் உயர்நிலை பள்ளியாக மாறிப் போனது. எட்டாம் வகுப்பு முடிவுக்கு வந்த போது பள்ளி ஆண்டு விழாவில் லேனா தமிழ்வாணன் பேச்சைக் கேட்டதும் அவர் மேடையில் பேசியது ஒன்றும் புரியாமல் இவர் ஏன் பகலில் கண்ணாடியை மாட்டிக் கொண்டு இருக்கிறார்? என்று யோசித்தது இப்போது நினைவுக்கு வருகிறது. ஊரில் இருந்த இரண்டு பள்ளிகளுமே தனியாருக்குச் சொந்தமானது தான். வீட்டில் எவருக்கும் படிப்புக்கென்று பெரிதான செலவுகள் ஏதும் செய்ததாக நினைவில்லை. பெரும்பாலும் பள்ளியில் படித்த அனைவருமே நடுத்தர வர்க்கம் என்பதோடு பெரிதான சண்டை சச்சரவு இல்லாமல் படிப்பை தவமாக மாற்றிய ஆசிரியர்கள் தான் பணியாற்றிக் கொண்டுருந்தார்கள். கிராமத்து மாணவர்கள் சைக்கிளில் வந்துவிட முடியாதவர்கள் டவுன் பஸ்ஸில் தான் வந்து படித்துக் கொண்டுருந்தார்கள். எவரும் எந்தத் தவறும் செய்து விட்டு தப்ப முடியாது. ஒவ்வொருவரின் குடும்பப் பின்புலமும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் நன்றாகவே தெரியும். “நாளைக்கு உன் அப்பாவை கூட்டிக்கொண்டு வா ” என்றாலே அழுகையுடன் மூத்திரம் பொத்துக் கொண்டு வந்து டவுசரை நனைத்து விடும். அதற்குத் தனியாக ரெண்டு அடியும் ஒரு வாளி தண்ணீரும் சுமந்து வர வேண்டும். நாங்கள் இருந்த பழைய வீட்டில் வீட்டுக்குப் பின்னால் மிகப் பெரிய தோட்டமும் சிமெண்ட் தளமும் இருந்தது. இப்போது வந்துள்ள புதிய வீட்டில் எந்த மரங்களுமே இல்லை. ஒரே ஒரு முருங்கை மரத்தை மட்டும் விட்டுச் சென்றிருந்தனர். பழைய வீட்டில் இருந்த கொய்யா மா மரங்கள் கூட இங்கே எதுவும் இல்லை. புதிய வீட்டில் கொடுக்காப் புளி மரம் கூட இல்லாத காரணத்தால் பள்ளிக்குச் செல்லும் போது டவுசர் பையில் கொண்டு போகும் எந்தச் சமாச்சாரத்தையும் கொண்டு போக முடியவில்லை. பள்ளியில் பண்ட மாற்று முறையாகப் பரிமாறிக் கொள்ளும் பென்சில் வியாபாரத்தைக்கூட நிறுத்த வேண்டியதாகி விட்டது. ஆனால் மற்றொரு வகையில் எனக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு அமைந்தது. இங்குக் கூட்டாளிக் கூட்டம் அதிகமானது. என் லொட லொட பேச்சை கேட்பதற்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அப்போது எங்கள் கூட்டத்திற்குள் இறுதியில் வந்தவன் பெயர் சண்முக சுந்தரம். அவன் அப்பா பக்கத்து கிராமத்துப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டுருந்தார்.. புதிய வீட்டுக்கு அருகே பஞ்சாயத்து போர்டு அலுவலகம் இருந்தது. சனி ஞாயிறு எவரும் வரமாட்டார்கள். இரண்டு நாட்களும் பள்ளிக்கு விடுமுறையாகத்தான் இருக்கும். அரட்டை அடிக்க, அத்தனை அக்கிரமும் செய்ய மறைவிடங்கள் உண்டு. புகைப்பவர்கள் அங்கே வந்து போய்க் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் அத்தனை பேர்களும் எங்களுக்கு வேடிக்கை மக்கள். கூட்டாளிக் கூட்டத்தில் இருக்கும் எவனுக்கும் எந்தத் தைரியமும் இருக்காது. உயரமும், சதைகளுமாக இருக்கும் மக்கள் கூட சோப்ளாங்கியாய் தான் இருப்பார்கள். அவனவன் வாயாலே ஊதிக்கொண்டு ஊத்திக் கொண்டு படம் காட்டுவதோடு சரி. நாள் முழுக்கத் திருப்தியாய் அளந்து விட்டுக் கொண்டு அன்று பத்திரிக்கையில் வந்த நடிகையைப் பேச்சு மூலமே கற்பழிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் சண்முகம் கூட்டத்திற்குள் வந்தால் பேசவே மாட்டான். காரணம் அவனின் தம்பியும் உள்ளே இருக்கச் சற்று நேரம் இருந்து விட்டு வெளியேறி விடுவான். போகும் போது எப்போதும் போலத் தம்பியைப் பார்த்து ” சீக்கிரம் வீட்டுக்கு வாடா ” ன்னு கத்தலாகச் சொல்லிவிட்டு சென்று விடுவான். எங்களைப் பார்த்துவிட்டு வெளியே போகும் போது அவன் வயிறு உப்பலாகவே இருக்கும். தொடக்கத்தில் எனக்குப் புரியாததை மாதவன் ஒரு நாள் சொன்ன போது தான் புரிந்தது. யார் யார் இங்குக் கூடியிருக்கிறார்கள்? என்று பார்த்து விட்டு அவன் பக்கத்தில் உள்ள புளியமர தோப்புக்குள் சென்று விடுவான். பெரிய தூர் பகுதியாகப் பார்த்து தேர்ந்தெடுத்துக் கொண்டு அமர்ந்து விடுவான். மறுபடியும் நான்கு புறமும் பார்த்துவிட்டு வயிற்றுப் பகுதியில் ஒளித்து வைத்த பாடப்புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு படிக்கத் தொடங்குவான். ஒரு நாள் ஒளிந்து கொண்டு அவனைப் பார்த்த போது மண்டையில் ஏறாத ஆங்கிலப்பாடத்துடன் பெரிய சண்டையே போட்டுக் கொண்டு யாரையோ திட்டிக் கொண்டு நெஞ்சில் குத்திக் கொண்டு போராடிக் கொண்டிருந்தான். அவன் படிப்பதை யாரும் கவனித்து விடக்கூடாது. என்பதற்காகவும், அப்படி அவனை கவனித்தவர்களும் படிக்கத் தொடங்கிவிட்டால் அவன் மதிப்பெண்கள் வாங்க முடியாது என்பதற்காக இப்படிச் செய்து கொண்டிருந்தான். ஆனால் ஒரு நாள் மொத்த கூட்டத்தையும் மாதவன் பூனை போல் நகர்த்தி அந்தத் தோப்புக்கு அழைத்துச் சென்றான். அவன் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த புளியமர தூர் பகுதியைக் காட்டி விட்டு ஒதுங்கி விட்டான். அப்போது தான் மொத்த கூட்டமும் சேர்ந்து அவனுக்குப் புதிய பெயர் வைத்தார்கள். கிறுக்குச் சண்முகத்தின் சுருக்கமாக கீனா சானா. கடைசிவரைக்கும் அவனை வெறுப்பேத்த இப்படித்தான் அனைவருமே அழைத்தார்கள். கவனித்த எங்கள் கூட்டத்தைக் கண்டு மேல்நிலைப்பள்ளிக்குப் பின்னால் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கரில் உள்ள முந்திரித் தோப்புக்கு தனது ஜாகையை மாற்றிக் கொண்டான். அதற்குப் பிறகு அவனைத் தொடர முடியவில்லை. ஆனால் பத்தாம் வகுப்பில் தமிழைத் தவிர அத்தனையிலும் தேர்ச்சியில்லை என்ற போது அவன் அப்பா அடித்த அடியில் எங்கள் கூட்டத்தில் வந்து முதன் முறையாக மனம் விட்டுப் பேசினான். அன்று கடைசியாகப் பார்த்த அவன் இப்போது எதிரே வந்து கொண்டிருந்தான். சைக்கிளை தள்ளிக் கொண்டு வந்தவன் என்னை அடையாளம் கண்டு மெதுவாகச் சிரித்தான். அவன் அருகே வந்தவர் அவன் மனைவியாக இருக்க வேண்டும். எலும்பும் தோலுமாய்க் கன்னம் ஓட்டி ஒரு மாதிரியாகப் புடவையை உடம்பில் சுற்றியிருந்தார். சைக்கிளில் முன்னாலும் பின்னாலும் மூன்று குழந்தைகள் உட்கார்ந்து இருக்கத் தள்ளிக் கொண்டு நடந்து வந்து கொண்டு இருந்தான். குழந்தைகளின் முகத்தைப் பார்த்த போது உடல் நிலை சரியில்லை என்பது மட்டும் புரிந்தது. ” குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை. நான் டாக்டரைப் பார்க்க போய்க் கொண்டுருக்கின்றேன். பிறகு பேசலாம் ” என்று நகர்ந்து விட்டான். அது வரைக்கும் அவன் என்ன செய்து கொண்டு இருக்கிறான் என்பதும் தெரியாமல் இருந்தது, ஆனால் அம்மாவிடம் இரவு வந்து பேசிய போது தான் முழுமையாகப் புரிந்தது. தொடக்கத்தில் ஊரில் சுப்பையா டாக்டர் என்ற பெயரில் பிரபல்ய டாக்டர் ஒருவர் இருந்தார்.. மருத்துவப் படிப்பு எதும் படிக்காமல் யாரிடமோ ஒரு வருடம் இருந்து விட்டு தைரியமாய் ஆர்எம்பி என்ற படிப்பை போட்டுக்கொண்டு டாக்டர் சுப்பையா என்று தொழிலை தொடங்கி விட்டார். ஊருக்குள் ஒரு அரசாங்க மருத்துவமனை இருந்தது. அதில் பணிபுரிந்த எம்பிபிஎஸ் டாக்டர் வைத்திருந்த கிளினிக்கை விட இவரிடம் தான் கிராமத்து மக்கள் நம்பிக்கையுடன் வந்து கொண்டிருந்தனர். உள்ளூர் கிளினிக் போலவே சுப்பையா டாக்டர் பக்கத்து கிராமங்களுக்கும் தான் வைத்து இருந்த ஸ்கூட்டர் மூலம் நடமாடும் கிளினிக் மூலம் சேவை புரிந்து கொண்டிருந்தார். ஐந்து அல்லது பத்து ரூபாய் மட்டுமே வாங்குவார். கடன் சொல்பவர்களும் உண்டு. காளை மாடு கன்று போடாத பிரச்சனைகளையும் கொண்டு வருபவர்களுக்கு ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி நகர்த்தி விடுவார்.. ” ஏஞ்சாமி எங்கையில காசு இல்லை ” என்று கூடச் சொல்லிவிட்டு நடையைக் கட்டிவிடுவார்கள். பெரிதாகக் கோபப்படாமல் செல்லமாகத் திட்டி விட்டு காத்துக் கொண்டிருக்கும் அடுத்தவரை உள்ளே வரச் சொல்லுவார். வருகின்ற 90 சதவிகித கூட்டத்திற்குக் கட்டாயம் ஊசி போட்டு விடுவார். ரெடிமேடு மாத்திரைகள் தயாராக இருக்கும். பேச்சில் தேனும் பாலும் கலந்தடித்து வருபவர்களைத் தைரியப்படுத்துவார். சாகக்கிடப்பவர்கள் கூட நான் சுப்பையா டாக்டரிடம் தான் போவேன் என்று அடம்பிடித்துத் தூக்கிக் கொண்டு வந்த பலரையும் பார்த்ததுண்டு. ஆனால் அவருக்கு வந்த மஞ்சள் காமாலை அவரின் வேலைப்பளூவே காவு கொண்டுவிட்டது. அவரிடம் பணிபுரிந்த நம்ம கிறுக்குச் சண்முகம் சைக்கிளில் ஒவ்வொரு கிராமமாக மருத்துவச் சேவையைச் செய்து கொண்டுருக்கின்றானாம். மூன்றே வகையான மாத்திரைகளும் சில ஊசி மருந்துகளும் மட்டுமே. அதுவும் காசு கொடுத்து வாங்க மாட்டானாம். அவன் தம்பி பணிபுரியும் மெடிக்கல் கடையில் இருந்து எடுத்துக் கொண்டு வந்துவிடுவான். உடல்வலி, காய்ச்சல், சளி. அவ்வளவுதான். சுப்பையா டாக்டர் போல் இனிமையாகப் பேசுவானா என்பது தெரியவில்லை.? ஆனால் பரவாயில்லை. இப்போது பிழைத்துக் கொள்வான் போலிருக்கு. காரணம் நல்ல டாக்டராகப் பார்த்துக் குடும்பத்தைக் கூட்டிக் கொண்டு செல்கிறானே?. என்னைக் கடந்து சென்ற போது அவனின் குரல் மனைவியை நோக்கி பாய்ந்தது. என்னை யாரென்று கேட்டிருப்பாரோ? “புள்ள மேலே ஈ மொய்க்குது. துண்டப் போடு” என்றான். குழந்தை மேல் மொய்த்த ஈக்கள் தான் அவன் ஆதங்கத்தை எனக்கு அடையாளம் காட்டியது. 9 9. உண்டு உறங்கி விடு. செரித்துவிடும். அவர் ஒரு திருப்பூர் ஏற்றுமதி நிறுவனத்தின் மேலாளர் பதவியில் இருப்பவர். தொழிலுக்கு அப்பாற்பட்டு எங்கள் இருவருக்குமே நல்ல புரிந்துணர்வு உண்டு.. நான் திருப்பூரில் இதுவரைக்கும் சந்திக்காத அபூர்வ நபர். தனிமனித ஒழுக்கம் அதற்கு மேல் வெளிநாட்டில் இருப்பவருக்குச் சொந்தமான நூறு கோடி சொத்தை தனது நம்பிக்கை ஒன்றின் மூலம் கட்டிக் காத்துக் கொண்டு இருப்பவர். பல ஆச்சரியங்களை எனக்குள் அன்றாடம் தந்து கொண்டிருப்பவர். குறுகிய காலத்தில் அவரின் உள் வட்டத்தில் என்னைச் சேர்த்து இருந்தார். என்னுடைய தனிப்பட்ட திறமைகளை விட அவருக்குக் காரைக்குடி என்ற ஊரும் அதன் கலாச்சாரமும் ரொம்பவே பிடித்தமானதாக இருந்தது. வேறொரு காரணமும் உண்டு., அவர் விரும்பும் செட்டிநாட்டு சமையல். அவர் கோபியில் பிறந்து கோவையில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் தொழிலுக்கு அப்பாற்பட்டு பேசும் பேச்சில் கடைசியாக வந்து நிற்பது இந்த அசைவ உணவு சமாச்சாரமே. நான் தொடக்கத்தில் இயல்பாக எடுத்துக் கொண்டாலும் அவரின் தீராத சாப்பாடு வெறியை தீர்த்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். இத்தனைக்கும் அவர் மனைவியும் நன்றாக அசைவ உணவு சமைப்பவர். அதனையும் மீறி அவருக்குள் இருந்த ஆர்வத்தைப் போக்கும் பொருட்டு அவினாசி கோயமுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பாளையம் பிரியும் சந்திப்பில் உள்ள பாலத்துக்கு அருகே உள்ள அந்தச் சிறிய கடைக்கு அழைத்துச் சென்றேன். சிறிய ஓட்டு வீடு. உள்ளே பத்துப் பேர்கள் தான் அமர முடியும். அடுத்த வரிசை வருவதற்குள் காத்து இருப்பவர்கள் ஓடிப் போய்த் தான் இடம் பிடிக்க வேண்டும். நாக்குச் சொட்டச் சொட்ட அவர்கள் கொடுக்கும் பக்குவமான அசைவ சமாச்சாரங்கள் விபரம் தெரிந்தவர்களைப் பல மைல்கள் கடந்து வந்து சாப்பிட வைத்துக் கொண்டிருக்கிறது. அங்கு நண்பர் அமர்ந்து சாப்பிட்ட வேகத்தைப் பார்த்த போது எனக்கு என் அப்பா ஞாபகம் தான் வந்தது. ஊரில் நான் வாழ்ந்த வாழ்க்கை கூட்டுக்குடித்தனம் என்பதால் பந்தி போலத்தான் வரிசையாக அமர்ந்து பரிமாறிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு நாளும் திருவிழா போலவே இருக்கும். நான் பார்த்தவரைக்கும் அம்மா சமைத்தே இடுப்பு ஒடிந்து போயிருப்பார். வீட்டில் உள்ள மற்ற அத்தனை பேர்களும் எடுபுடி வேலைக்கு உதவி கொண்டிருப்பார்கள். அடுப்பு என்பது அணையா விளக்கு போல் எரிந்துகொண்டிருக்கும். நான் அழைத்துச் சென்ற கடையில் வெற்றிகரமாக இடம் பிடித்துப் புன்னகையுடன் உட்கார்ந்த நண்பர் சாப்பிட்ட வேகத்தைப் பார்த்தது திகைத்துப் போய் விட்டேன். அப்படியொரு சந்தோஷத்தை அதற்கு முன் அவரிடம் நான் பார்த்தது இல்லை. “மற்றதெல்லாம் அப்புறம் நாம் பேசிக் கொள்வோம்” என்று விளாச ஆரம்பித்து விட்டார். அந்தக் குறுகிய அறையில் இருந்த மின் விசிறி பெயருக்கென்று ஓடிக்கொண்டு இருந்தது. முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைக்க மனமில்லாமல் துண்டுகளைக் கொண்டாடிக் கொண்டிருந்தார். ஊர் வட்டார வழக்கில் சொல்லப்படும் “கொளம்பு” என்பதைக் கையில் ஊற்றிக் கொண்டு தன்னை மறந்து சுவைத்துக் கொண்டிருந்தார். காரணம் சேர்க்க வேண்டிய மசாலா சமாச்சாரத்தைச் சரியான முறையில் அளவில் சேர்த்தால் இந்த அசைவ சமாச்சாரங்கள் என்பது உங்கள் சொத்துக்களை எழுதிக் கேட்டால் கூடக் கொடுக்க வைத்து விடும். அசைவ உணவு சமாச்சரத்தில் முக்கிய இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று சுத்தம் செய்தல். மற்றொன்று மசாலா சேர்மான அளவு. மீனோ ஆட்டுக்கறியோ தண்ணீர் விட்டு அலசுவதைப் போலவே அதனைச் சுத்தம் செய்தல் அதிமுக்கியமானது. தேவையில்லாத கழிவுகளைக் கழித்து விட வேண்டும். வாங்கும் மீன்களின் வாயைத் திறந்து பார்த்தாலே உள்ளே தெரியும் நிறம் வைத்து நல்லதா இல்லை நாறிப் போனதா என்று. விபரம் தெரிந்தவர்களால் கண்டு கொள்ள முடியும். நீங்கள் சாப்பிடும் எந்த உணவகத்திலும் வீடு போல சுத்தம் செய்யவே மாட்டார்கள். மேலும் உணவகத்திற்கென்றே ஒவ்வொரு இடத்திலும் தனியாக வைத்து இருப்பார்கள். கெட்டது, நொந்து போனது, கழிவு போன்ற சமாச்சரங்கள் தான் கடைசியில் பொன் நிற வறுவலாக உங்கள் காசை பறித்துக் கொண்டிருக்கும். அலசி, கழுவி முடித்து மஞ்சள் பொடியை அளவாகச் சேர்க்கும் போது மீதியுள்ள கெட்ட வாடை அகன்று விடும். எஞ்சியுள்ள மஞ்சள் தண்ணீர் கரைசலை வெளியேற்றி தனியாக வைத்து விட்டாலே பாதிப் பிரச்சனை முடிவுக்கு வந்து விடும். மற்றொன்று சமைத்துக் கொண்டு இருக்கும் போது கொதி நிலையில் கவனமாகப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். மண்பாத்திரங்கள் என்றால் அதற்குண்டான மரியாதையும் தனியாக இருக்கும். கொதிக்கத் தொடங்கும் போதே சேர்த்த தண்ணீரின் அளவு பாத்திரத்தில் இறங்கத் தொடங்கும். கரண்டியில் எடுத்து மேலிருந்து கீழாக ஊற்றிப் பார்க்கும் போது அதன் கெட்டித்தன்மையும் உள்ளே வெந்து கொண்டுருக்கும் சமாச்சாரத்தின் சுவையும் புரிய ஆரம்பிக்கும். நாக்கில் ஒரு சொட்டு விட்டு பார்க்கும் போது அதன் திரைக்கதை முழுமையும் தெரிந்து விடும். சுவை கூடி வரும் போது முடிவுக்குக் கொண்டு வந்தால் பந்தி சாப்பாட்டுச் சடுதியாக முடியும். இல்லாவிட்டால் சமைத்தவர் அடிவாங்கிய பந்தியாக மாறி விடும். . வெந்து கொண்டுருக்கும் போது நேரம் கடத்துவதோ, அளவு தெரியாமல் மஞ்சள் பொடியை அள்ளிக் கொட்டுவதோ கடைசியில் சாப்பிடுபவர்கள் அட அக்கிரமமே? என்று திட்ட வைத்து விடும். திருப்பூருக்குள் எந்தப் பக்கம் திரும்பினாலும் செட்டிநாட்டு உணவகம் என்று பெயர்ப்பலகை தொங்கிக் கொண்டுருக்கும். செட்டிநாட்டு உணவகம் என்று பெயர்பலகையில் தான் இருக்கும். ஆனால் அவர்கள் கொடுக்கும் சாப்பாட்டில் இருக்காது. பணத்தாசை அந்த அளவிற்குக் கேவலமாக மாற்றி வைத்து இருக்கும். திருப்பூர் மக்களின் அசைவ வெறி கலாச்சாரத்தைப் புரிந்து கொண்ட எங்கள் ஊரைச் சேர்ந்தவர் உணவகம் ஒன்றைத் தொடங்கினார். பத்து வருடங்களில் அவரின் சொத்து 60 கோடியாக மாற்றியுள்ளது. அத்தனையும் ஊரில் இடமாக அரிசி ஆலையாக மாறியுள்ளது. அப்பாவோ சித்தப்பாக்களோ தொடக்கத்திலேயே சொல்லி விடுவார்கள். “கவுச்சி வாடை வந்து விடக்கூடாது” என்று கட்டளை போலத்தான் சொல்வார்கள். அதிலும் அண்ணாமலை சித்தப்பா பொண்டுகசெட்டி போலவே சமைத்து முடிக்கும் வரையிலும் காத்துக் கொண்டிருப்பார். ரெண்டு துண்டு உள்ளே போனால் தான் அடுத்த வேலைக்கு நகர்வார். ஒவ்வொருவரும் சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் அம்மா முதல் சின்னம்மாக்கள் வரைக்கும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான் இருப்பார்கள்.. கறிக்கொளம்பு, எலும்புக்கொளம்பு, இரத்தப் பொறியல், இது போகத் தெரக்கி எடுத்த கறிக்கூட்டு. வெங்காயப் பச்சடி தனியாக அனாதையாக இலையின் ஓரத்தில் கிடக்கும். மொத்த நபர்களும் சாப்பிட்டு எந்திரிக்கும் போது கூட்டி முடித்து விட்டுத் தண்ணீர் போட்டு துடைத்து விட்டுக் காத்திருக்கும் பெண்கள் பந்தியில் அமர்வார்கள். நான் பார்த்தவரைக்கும் அக்கா அம்மாக்கள் வெறும் எலும்புகளை கடித்துக் கொண்டுருப்பார்கள். இதற்கிடையே வேலையாட்கள் வேறு தனியாக வந்து போய்க் கொண்டுருப்பார்கள். வருமானமும் வசதிகளும் பிரச்சனையில்லாத வரைக்கும் அசைவம் என்பது ஊரில் அத்தனை வீடுகளிலும் சைவ சாப்பாடு போலவே இயல்பாக இருந்து கொண்டிருக்கும். நான் அசைவத்தை விட்டொழித்துப் பத்து வருடங்கள் ஆகிவிட்டது. வீட்டில் இயல்பாகவே அந்தப் பழக்கம் இல்லை. குழந்தைகள் கூட உறவினர்கள் வீட்டுக்குச் செல்லும் போது தான் ஒரு கட்டுக் கட்டுவார்கள். தாத்தா முதல் அப்பா சித்தப்பாக்கள் மற்றும் தொடர் வாரிகள் அத்தனை பேர்களுமே இந்த அசைவத்திற்கு அடிமை சாசனமே எழுதித் தந்தவர்கள் போலத்தான் வாழ்ந்தார்கள். வயல் மற்றும் கடையில் பணிபுரியும் வேலையாட்கள் முதல் வீட்டில் வரும் உறவினர்கள் வரைக்கும் இந்த உயிர்ப்பலியை ரசித்து ருசிப்பவர்கள். நானும் அப்படித்தான் வாழ்ந்தேன் வளர்ந்தேன். முதல் இருபது வருட வாழ்க்கையில் தின்று பழகிய நாக்கின் சுவை அடுத்தப் பத்து வருடங்கள் திருப்பூரின் நான்கு மூலைக்குள் இருக்கும் பொந்து சந்துக்குள் இருக்கும் இடங்களுக்கெல்லாம் அலைய வைத்தது. செட்டி நாட்டு உணவகம் என்ற தொங்கும் அட்டையைப் பார்த்தால் வண்டி இயல்பாகவே நின்று விடும். மூன்று நேரத்திலும் விடாமல் தின்று மொத்தமாகக் குடல் அறுந்து விழுந்து போகின்றது என்று மருத்துவர் எச்சரித்த போது தான சுவாதீனமே வந்தது. குடல் சார்ந்த அத்தனை நோய்களும் திருமணத்திற்கு முன்பே இந்தத் தேடி அலைந்து சாப்பிட்ட சாப்பாட்டால் வரத்தொடங்க. திடீர் என்று ஆன்மீக ஞானமும் வந்து சேர இனி ஒவ்வொன்றாகத் தொலைக்க வேண்டும் என்று ஆரம்பித்தேன். முதல் பலி இந்த உயிர்ப்பலி. மூத்த அண்ணி கூட முதலில் கிண்டலடித்தார். நீங்களாவது? நான் நம்பவே மாட்டேன் என்று கேள்விக்குறியாய் பார்த்தவருக்கு வீட்டுக்காரம்மா ஆமோதித்துச் சொன்னபோது அவர்களின் ஆச்சரியம் இன்றும் என் கண் முன் நிற்கிறது. காரணம் அசைவ வெறியனாகத்தான் வாழ்ந்தேன், ஊரில் இரண்டு உணவகம் பிரபல்யமானது. ஒன்று விடத்தையா விலாஸ். இரவு 7 மணி தொடங்கி நடுசாமம் வரைக்கும் தண்ணீர் மக்களால் தடுமாறிக் கொண்டுருக்கும். அருகில் கல்லூர் என்ற ஊரில் உள்ள சாராயக் கடை ஆறு போல் ஓடிக் கொண்டுருந்தது. பாட்டிலில் கொண்டு வந்து இங்கு நுழைவதற்கு முன்பு ஊற்றிக் கொண்டு உள்ளே நுழைவார்கள். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் நண்பர்களுடன் முழித்துப் படிக்க வேண்டும் என்று ஜல்லியடித்து உருண்டு புரண்டு அனுமதி பெற்று எப்போதும் போலச் சாலையில் உள்ள பாலத்தில் வந்து அமர்ந்திருந்த போது தான் ராஜு வந்தான். எங்களுக்கு ஒரு வருடம் பின்னால் படித்துக் கொண்டிருந்தவன். அவன் அம்மா ஊருக்குள் இருந்த ஒரே அரசாங்க மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிந்து கொண்டுருந்தார். அவன் படிப்பதைத் தவிர மற்ற எல்லாவிசயங்களிலும் ஜெகஜால கில்லாடி. அந்த ராத்திரி நேரத்தில் என்னுடன் இருந்த நாலு பேர்களையும் பார்த்து விட்டு அவன் கேட்ட முதல் கேள்வியே “என்னப்பா அதிசியமா ராத்திரி நேரத்தில் இங்கு வந்து இருக்கீங்க?” என்றான். நான் தான் அவனிடம் மெதுவாகக் கேட்டேன். “விடத்தையா விலாஸில் ரெண்டு புரோட்டா வாங்கித் தருவாயா?” என்றேன். அவனுக்கு லஞ்சமாக ஒரு புரோட்டாவுக்குரிய காசையும் கொடுத்து விட்டு நாங்கள் அருகில் இருந்த மளிகைக் கடையில் ஒளிந்து கொண்டோம். உணவகத்தின் முன்னால் மிகப் பெரிய விலைப்பட்டியல் தொங்கிக் கொண்டுருந்தது.. தலைக்கறி, குடல்கறி, மூளை என்று ஏதேதோ போட்டுருப்பார்கள். புலிநகம் போன்ற ஏதோ ஒன்றை கழுத்தில் மாட்டிக் கொண்டு வலைபின்னல் பனியனும் சிலோன் கைலியுமாய் மைனர் போல் ஒருவர் வெகு சிரத்தையாகக் கொத்திக் கொண்டிருப்பார். கடையைக் கடந்து செல்லும் பெண்களைப் பார்த்ததும் அவர் கொத்தும் விதம் சற்று மாறுபடும். அவரைப் பலமுறை முந்திரிக்காட்டுக்குள் தள்ளிக் கொண்டு செல்லும் போது பார்த்தது உண்டு. அவர் ஸ்டைலாகப் பேசிக் கொண்டே செய்யும் கொத்துப் புரோட்டா சத்தம் ஊர் அடங்கிய வேலையில் தூரத்தில் இருப்பவர்களுக்குக் கூட நாக்கில் எச்சிலை ஊற வைத்துக் கொண்டுருக்கும்.. அப்போது அவன் அறிமுகப்படுத்தியது தான் அருகே இருந்த கண்ணகி உணவகம். பர்மா மலேசியாவில் உள்ள பெரிய வீடுகளில் சமையல்காரராகப் பணிபுரிந்து விட்டுக் கடைசிக் காலத்தில் வந்து கடை போட்டிருந்தார். குடிப்பழக்கம் இல்லாத அத்தனை மக்களுக்கும் இந்தக் கடை தான் வேடந்தாங்கல். நான் பார்த்தவரைக்கும் அம்மியில் அரைத்த மசாலா சமாச்சாரங்களைத்தான் கடைசி வரைக்கும் பயன்படுத்திக் கொண்டுருந்தார்கள். ஊரின் மற்றொருபுறத்தில் முஸ்லீம் மக்கள் வாழும் சந்தில் தான் கறிக் கடைகளும் மீன் கடைகளும் இருந்தது. பெரிய சில்வர் தூக்கு வாளி மற்றும் வேறு இரண்டு மூடியுள்ள சட்டியுமாய் அப்பா பின்னால் சென்று அங்கு அமைதியாய் நிற்க வேண்டும். அங்குக் கடைபோட்டுள்ள முஸ்லீம் மக்கள் அத்தனை பேர்களும் வருகின்ற நபர்களை அழைப்பது மாமா மாப்பிள்ளை பங்காளி போன்ற வார்த்தைகளால் மட்டுமே. இப்போது மாறிப் போன வெறிகலாச்சாரம் எதையும் நான் பார்த்தது இல்லை. அப்பா, அனைவருக்கும் தெரிந்தவர் என்பதால் வரவேற்பு பலமாக இருக்கும். காரணம் வேறொன்றுமில்லை. மூன்று குடும்பங்களுக்கும் சேர்த்து எடுக்க வேண்டிய சமாச்சாரங்களால் ஒவ்வொரும் இங்கே வாங்க என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைத்துக் கொண்டிருப்பார்கள். அப்பா சென்றதும் முதலில் செய்வது உரித்துத் தொங்கிக் கொண்டுருக்கும் ஆட்டின் வாலை இழுத்துப் பார்ப்பார். காரணம் செம்மறி ஆட்டுக் கறியை கலந்து வைத்து வாலை மட்டும் ஒட்டி வைத்து இருப்பார்கள். எலும்பு சதை இரத்தம் ஈரல் என்று ஒவ்வொன்றும் தனித்தனியாக அதற்கான பாத்திரங்களில் அடைக்கப்பட்டுக் கடைக்காரர்களே வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள். வீட்டில் இருக்கும் அத்தனை பேர்களும் ஒரே வரிசையாக அமர வைத்து சாப்பிடும் பழக்கம் உண்டு. எந்த வேலையிருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் ஆஜர் ஆகிவிட வேண்டும். எந்தப் பாரபட்சமும் இல்லாமல் ஒரே மாதிரியான உபசரிப்பு. நண்பர்கள் இடையில் எவராவது தேடிவந்தால் சாப்பிட்டு விட்டு தான் செல்லமுடியும். நேரம் பார்த்து உள்ளே வரும் கோபிநாதன் போல் குறிப்பிட்ட நாளில் கோவிந்தராஜன் வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கவே மாட்டான். இப்போதுள்ள நகர்புற கோழி கலாச்சாரத்தை நான் ஊரில் பெரிதாகப் பார்த்தது இலலை. உடம்புக்குச் சூடு என்று எளிதாக ஒதுக்கி விடுவார்கள். உள்ளடங்கிய கிராமங்களில் நாட்டுக்கோழிக்கு மட்டும் விருந்தினர் வருகையின் போது மரியாதை உண்டு. ஆனால் ஊருக்கு மிக அருகில் இருந்த தொண்டி, மீமிசல்,கோட்டைப்பட்டினம் தொடங்கி இராமேஸ்வரம் வரைக்கும் இருந்த காரணத்தால் மீனும் நண்டும் தினமும் ஊருக்குள் மாலை வேலைகளில் வந்து இறங்கிய சில மணி நேரங்களில் அத்தனையும் காணாமல் போய்விடும். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை. ஆனால் புதன் கிழமை சந்தையின் போது கிராமத்துப் பெரியவர்கள் கொண்டு வரும் அயிரை, கெண்டை,கௌங்கை, போன்ற சிறிய ரக மீன்களுக்கு எப்போதுமே தனி மரியாதை. ஈரமான துணியைத் தரையில் விரித்து அதில் மண்ணுடன் கலந்து வைத்துள்ள அயிரையும் மற்ற மீன்களையும் கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும். கூறு போல் மண்ணுடன் கலந்து வைத்து இருப்பார்கள். நிறைய மீன்கள் இருக்கும் என்று நம்பி வாங்கி வரும் கூறுகளைத் தண்ணிர் விட்டு அலசி கூறாக்கி பார்த்தால் கையில் அடக்கி விடும் அளவுக்குத் தான் தேறும். அம்பானி மார்க்கெட்டிங் போலக் கிராம மக்களின் தந்திரம் அது. கெளுத்தி,திருக்கை, தொடங்கிப் பெரிதான நண்டுகள் வரைக்கும் ஏதோ ஒன்று தினமும் மாலை வேலையில் அம்மா சுத்தம் செய்து கொண்டிருப்பார். பள்ளி விட்டு வந்தவுடன் சுடச்சுட இறக்கிக் கொண்டு அலைந்து திரிந்த இனிய நாட்கள் அது. பள்ளி விடுமுறைகளின் போது சாப்பிட்டு முடித்து விட்டால் கட்டாயம் உடனே தூங்க வேண்டும். அப்பாவின் பல கட்டளைகளில் இதுவும் ஒன்று. காரணம் சாப்பிட்ட சாப்பாடு உடம்பில் ஒட்ட வேண்டும் என்பார். விஞ்ஞான அறிவைப் பற்றி யோசிக்க நேரமில்லாத காரணத்தால் அவர் சொல்வதை எதிர்த்து பேசத் தெரியாமல் அப்படித் தான் வளர்ந்தோம். சமீபத்தில் மூத்தவளிடம் இதையே தான் கேட்டேன். ” அப்பா..சாப்பிட்டவுடன் தூங்கினால் நல்லது இல்லை. கொஞ்ச நேரமாவது வெளியே உட்கார்ந்து இருக்க வேண்டும். எங்க மிஸ் சொல்லியிருக்காங்க “ என்ன பதில் என்னால் சொல்லமுடியும்? 10 10. மனம் என்பது வாழ்க்கை ஒவ்வொருவரும் தாங்கள் கடந்து வந்த வாழ்க்கையில் ஏதோவொரு தருணத்தில் பரதேசி கோலம் பூண்டுருப்போம். உடைகளால் மட்டுமல்ல. உள்ளத்தால் வாழ்ந்திருந்தாலும் பரதேசி தான். படித்த புத்தகம், பார்த்த படம், பாதித்த காட்சிகள் என்று நாம் வாழும் வாழ்க்கையைச் சரிதானா? என்று சில அதிர்வுகளை உருவாக்கியிருக்கும். பைத்தியம் பிடிக்காத குறையில் பரிதவித்துருப்போம். இதற்கென்ன மருந்து? என்று அலைந்திருப்போம். அப்போது சிலருக்கு புத்தி வேகமாகச் செயல்படுகின்றது. பகுத்தறிய தொடங்கும். புதிய அனுபவங்களைக் கற்றுக் கொள்ளத் தயாராய் இருப்பார்கள். மேலும் யோசிப்பை பலப்படுத்தும். ஆனால் பலருக்கும் உள்ளுற இருக்கும் சக்தி இனி இறையே கதியென்று ஆன்மீகத்தை நோக்கி நகர்த்தி விடுகின்றது. நானும் கடந்து வந்துள்ளேன். ஆன்மீகம் என்பதை அழகாய் நெருங்கிப் பார்த்த தருணமது. இறைவன், உருவங்கள், அது வலியுறுத்தும் சக்திகள், உணர்த்தும் பாடங்கள் என்பதைத் தாண்டியும் அறிந்து கொள்ளும் ஆவலில் அலைந்துள்ளேன்.. உணர்ச்சிக்குவியலாய் வாழ்ந்த வாழ்க்கையில் உணர்வை இழுத்துப் பிடித்து ஒரு புள்ளியில் சேர்க்க பாடுபட்ட நேரமது. இன்று திரையில் நடிப்பவர்களும், ஆன்மீக உரைகள் மூலம் கலக்கிக் கொண்டிருப்பவர்களும் திருவண்ணாமலை பக்கம் போகாத காலத்தில் நான் அங்கே தொடர்ச்சியாகச் சென்று கொண்டிருந்தேன். வாழ்க்கை குறித்த தேடலுடன் ஏராளமான ஆசைகளையும் சுமந்திருந்த எனக்கு அதிலிருந்து விடுபடத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். நம்மிடம் உள்ள ஒவ்வொரு ஆசைகளும் தான் நம் வாழ்க்கையை நகர்த்துகின்றது. அதுவே குறிப்பிட்ட காலத்திற்குள் இயல்பான பழக்கமாகவும் மாறிவிடுகின்றது. கிடைத்து விட்டால் புத்தியைக் குறித்துப் பெருமிதம் கொள்கின்றோம். கிடைக்காத போது சக்திகளைத் தூற்றுகின்றோம் அல்லது துணைக்கு அழைக்க முயற்சிக்கின்றோம். அவர் சொன்னார், இவர் சொன்னார், அந்தப் பத்திரிக்கையில் வந்தது என்று ஒவ்வொருவரும் தங்கள் விருப்பங்களை,ஆன்மிகத் தேடலை உள்ளிருந்து தேடுவதில்லை. வெளியிலிருந்து தான் தேடுகின்றார்கள். இன்றைய ஆன்மீகம் குறித்த நம்பிக்கைகள் அனைத்தும் பேச்சு மூலம் மட்டுமே அடுத்தவருக்குக் கடத்தப்படுகின்றது. நம்ப வைக்கப்படுகின்றது. அந்தக் கோவிலுக்குள் நுழைந்தேன். மெய் மறந்து நின்றேன் என்ற வார்த்தைகள் தான் இங்கே பலருக்கும் வேதவாக்காகத் தெரிகின்றது. இறை சக்தியை மட்டுமல்ல. இன்று எதையுமே உணர்ந்து கொள்பவர்கள் குறைவு. உணர்ந்ததாக நடிப்பவர்கள் தான் அதிகம். இதுவே படிப்படியாகக் கடத்தப்பட்டு கோவிந்தா போடும் கூட்டம் தான் நாளுக்கு நாள் அதிகமாகின்றது. தன் உள்ளத்தையும் புரிந்து கொள்ளாமல் அது தரும் உணர்வுகளையும் அறிந்து கொள்ள மனமில்லாமல் வாழும் வாழ்க்கையைத் தான் இங்கே பலரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் ஆசாமியாகத்தான் வாழ்ந்து முடிக்க வேண்டும். ஆனால் வயதும் வாழ்க்கையும் கொடுத்த அதிர்வுகளை அடக்க வேண்டும் என்று முயற்சித்தேன். எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதன் அறியும் ஆவல் இருந்தது. எந்தக் குருவையும் தேடியதில்லை. எனக்குத் தேவையானதை அறிந்து கொண்டதோடு புரியவும் தொடங்கியது. ஆனால் இன்று அதனையும் கடந்து வந்துள்ளேன். குழந்தைகள் வளரத் தொடங்கும் போது நம்முடைய கலாச்சாரத்தில் இந்த ஆன்மீகம் இரண்டறக் கலந்து விடுகின்றது. குழந்தை வளர்ப்பின் அங்கமாகவே கருதப்படுகின்றது. கிராமத்து வாழ்க்கையில் சாமி என்பது கண்டிப்பு வாத்தியார் போலத்தான் உருவகப்படுத்தப்படுகிறது “தப்பு செய்யாதே. கண்ணைக்குத்திடும்” என்று சொல்லியே தப்புக்களை மட்டும் அதிகம் செய்யத் தூண்டப்படுகின்றது. ஒன்று மறுக்கப்படும் போது அல்லது மறைக்கப்படும் போது அங்கே தெளிவு கிடைப்பதில்லை. ஆசைகளும் பிடிவாதமும் தான் அதிகமாகின்றது. தெரிந்தவர்களும் முறைப்படி சொல்லிக் கொடுப்பதும் இல்லை. குழந்தைகளின் வேகம் என்பது இரத்தம் சம்மந்தப்பட்டது மட்டுமல்ல. உணர்வு சம்மந்தப்பட்டது. வளர்ந்த பிறகு உங்களுக்குள் எத்தனையோ கொள்கைகளை உருவாக்கி வைத்திருப்பீர்கள். வாழ்வில் சந்தித்த உங்களின் ஒவ்வொரு அனுபவமும் ஏராளமான பாடங்களைக் கற்றுத் தந்துருக்கும். அது சரியா தவறா? என்ற ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தாலும் முடிவு தெரியாமலேயே சிலவற்றை ஏற்றுக் கொண்டும் மறுத்தும் இருப்பீர்கள். இறுதியாக ஏதோவொரு உருவகம் உங்களுக்குள் உருவாகியே இருக்கும். இதுபோன்ற தருணத்தில் புதிய விசயங்கள் உங்கள் மனம் ஏற்றுக் கொள்வது கடினமாக இருக்கும். திறந்த பானையில் மட்டுமே தண்ணீரை ஊற்ற முடியும்.. ஆனால் குழந்தைகளின் மூளையில் உள்ள ந்யூரான்களில் எந்தச் செய்திகளையும் பதித்து விடலாம். ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் போது சொல்கின்ற விதம் தான் முக்கியம். பிறப்பில் புத்திசாலி என்ற குழந்தைகள் இங்கே யாருமில்லை. வளர்ப்பும் அவர்களை அணுகிய விதமும் தான் முக்கியமாக இருக்கின்றது.. ஊனமுற்ற குழந்தைகளைக் கூட நொண்டிக்குசும்பு என்பார்கள். நோஞ்சான் பிள்ளைகள் கூடக் குடும்பத்தில் சவாலாக இருப்பதைப் பார்த்திருப்போம். குழந்தைகளின் மூளை என்பது எதனாலும் பாதிக்கப்படாமல் இருக்கும் போது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடிகின்றது. எல்லாவற்றையும் குழந்தைகள் விரும்புவதால் இங்கே பலருக்கும் பயம் வந்து விடுகின்றது. இந்தப் பயம் தான் பலவற்றை மறைக்கத் தூண்டுகின்றது. “இந்த வயதில் உனக்கு இது தேவையில்லடா”…. என்று சொல்ல வைக்கின்றது. அய்யோ இதைத் தெரிந்து கொண்டால் கெட்டுப் போய்விடுவானோ என்று எண்ணத் தோன்றுகின்றது. ஆனால் கெட்டுப் போவதன் அர்த்தத்தையும் எவரும் புரிந்து கொள்ளப்படுவதில்லை என்பது தான் இங்கே ஆச்சரியமான விசயம். குடிகாரர்கள் மேதைகளாக இருந்திருக்கிறார்கள். கொடூரமானவர்கள் தலைவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். கெட்டுப் போவதென்பது உடம்பா? மனசா? பத்து வயதிற்குள் இருக்கும் எந்தக் குழந்தையுமே கெட்ட பழக்கங்களைக் கற்றுக் கொள்வதில்லை. பேசும் வார்த்தைகள் கூட வீட்டுக்குள் கேட்கும் வார்த்தைகள் மூலமே வருகின்றது. சிறுவயதில் குழந்தைகளின் மனசை பாதிப்படையச் செய்ய முடியுமே தவிர அதிலும் கூட முழுமையாக மாற்றம் செய்ய முடியாது. குடிகார தகப்பனின் செயலை தினந்தோறும் பார்க்கும் அத்தனை குழந்தைகளும் குடிகாரர்களாகவா மாறுகின்றார்கள். கணவனை மீறி காமத்துக்கு அலையும் பெண்களைப் பார்த்து அவரின் பெண் குழந்தைகள் அத்தனை பேர்களும் காமாந்தாகியாகவா வாழ்கிறார்கள்?. சூழ்நிலை என்பது ஒரு முக்கியக் காரணி. ஆனால் அதுவே எல்லா நிலையிலும் பொருந்துவதில்லை. என் நண்பன் பத்தாம் வகுப்பு வரைக்கும் ஐந்து பாடங்களிலும் தேர்ச்சி அடைந்து பார்த்ததில்லை. ஆனால் கல்லூரி வரைக்கும் அவனை அடிக்க ஆளே இல்லை என்பதாக மாறிப்போனான். அதே அப்பா. அதே அம்மா. குடும்பத்தில் எப்போதும் இருந்த வறுமை. என்ன காரணம்? தொடக்கத்தில் பாடங்களில் கவனம் செலுத்தும் பல குழந்தைகள் காலப்போக்கில் மாறி விடுகின்றார்கள். வேலை பார்க்கும் இடங்களில் கேட்டுருப்பீங்களே? “அவனுக்குச் சொல்லி புரியவைப்பா?” என்று. ஆனால் இங்கே எவரும் புரிய வைக்க முயற்சிப்பதே இல்லை. காரணம் வளர்ந்த மனிதர்களும் மற்றவர்கள் தங்களுக்கு அனுசரனையாக இருப்பதை மட்டும் தான் விரும்புகிறார்கள்.. இந்த அனுசரனை மனிதர்களை மகத்தான சாதனையாளர்களாக மாற்ற உதவுகின்றது. நாம் தான் புரிந்து கொள்வதேயில்லை. குழந்தைகள் குறித்து, அவர்களின் வளர்ப்புக் குறித்துத் தேவையில்லாத பயங்களைப் பட்டியலிட்டு நாமும் வாழாமல் அவர்களையும் வாழவிடாமல் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சமூகத்தில் நாம் படித்து முடித்து நுழையும் தருணத்தில் எத்தனையோ கனவுகள் உள்ளூர இருக்கும். பலருக்கும் பல விதமான விருப்பங்களை அடைகாத்தே வந்திருப்போம். பலருக்கு. சுற்றுலா, உணவு, வீடு என்று இயல்பான நடைமுறை வாழ்க்கை விருப்பங்கள் இருக்கும். ஆனால் பலருக்கும் இந்தக் கனவுகள் அவர்கள் வாழ்நாள் முழுக்க உழைத்தாலும் கிடைப்பதில்லை. முதல் பத்து வருடங்கள் திருப்பூர் எனக்கு ஏராளமான அனுபவங்களைத் தந்திருந்தது. தேடியலைந்த பணம், ஓய்வே இல்லாத உழைப்பு, ஒவ்வொரு சமயத்திலும் கிடைத்த ஏமாற்றங்கள், தேடிக் கொண்டிருந்த அங்கீகாரம் என்ற இந்த நான்கு மூலைக்குள் என் வாழ்க்கை என்னைப் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தது. என் திருமணம் குறித்து யோசிக்க நேரம் இருந்ததில்லை. தொழில் மற்றும் அது சார்ந்த எண்ணங்கள், வெற்றி பெற வேண்டிய இலக்கு மட்டுமே உள்ளுற ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் உள்ளுற ஒரு கனவை மட்டும் தனிப்பட்ட முறையில் அடைகாத்து வைத்திருந்தேன். நமக்குக் குழந்தை பிறக்கும் போது இந்தத் திருவண்ணாமலையில் தான் பிறக்க வேண்டும் என்பதை மனதில் வைத்திருந்தேன். நடைமுறையில் அதனைச் செயலாக்கிய போது எதிர்ப்புகள் எட்டு பக்கமும் என்னைத் தாக்கியது. அஞ்சாமல் நினைத்தபடியே ஜெயித்தேன். குழந்தைகள் பேசத் தொடங்கும் போது தான் கேள்விகள் வருகின்றது. அதன் பிறகு அவர்களின் மூளையில் விருப்பமும் ஆசைகளும் பதியத் தொடங்கின்றது. ஆனால் முதல் மூன்று வருடங்களும் அவர்களின் உறுப்புக்கள் சம்மந்தப்பட்ட ஆரோக்கியத்தில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். அஸ்திவாரம் என்பது சாதாரணமாக இருந்தால் அந்தக் குழந்தைகளின் ஆயுட்காலம் வரைக்கும் அவஸ்த்தை தான். கிராமத்து வாழ்க்கையில் பிரசவம் என்பது பத்து நிமிடங்களில் முடிந்த நாட்டு மருத்துவச்சி என்ற ஏதோவொரு கிழவியின் கைங்கர்யமாக இருக்கும். ஆனால் இன்று அது பல லட்சங்கள் செலவு பிடிக்கும் சமாச்சாரம். அவஸ்த்தைகள் அதிகமாகி பயத்தை உருவாக்கி, பயத்தோடு வாழ வைத்து உடல் உழைப்பே இல்லாமல் வாழும் பெண்கள் ஏறக்குறைய மறுபிறவி தான் எடுக்கின்றார்கள். இன்று பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் அரை மனுஷியாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மருத்துவர்களின் பண ஆசையா? பெண்களின் ஆரோக்கியம் தந்த பரிசா? என்பதை விட மாறி வரும் உலகில் தேவைப்படாத மாற்றத்தையும் நாம் விரும்புவதால் இப்படித்தான் நடக்கும். இன்று உடலுக்கும் உள்ளத்திற்கும் நிறையவே மருந்துகள் தேவைப்படுகின்ற உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். முதல் இருபது வருடங்கள் எனக்கு எந்த மருந்துகளும் தேவைப்பட்டதில்லை. ஆனால் அடுத்தப் பத்து வருடங்களில் மருந்தே தான் வாழ்க்கையாக இருந்தது. அந்த அனுபவங்கள் கற்றுத் தந்த பார்வைகள் தான் என் குழந்தைகள் குறித்த கனவின் எல்லைகளை விரிவாக்கியது. என் திருமணம், எங்கள் குழந்தைகள், குடும்ப ஆரோக்கியம் என்று பரந்து விரிந்தது. ஒவ்வொன்றாக அதனை இப்போது நினைத்துப் பார்க்கின்றேன்.. இன்று குழந்தைகள் தும்மினால் பயம். இருமினால் அதைவிடப் பயம். மொத்தத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் சூழ்நிலையில் இருப்பவர்களின் வாழ்க்கையில் செத்து செத்துப் பிழைப்பது தான் நடந்து கொண்டிருக்கின்றது. குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நான் கனவு கண்டதில்லை. ஆனால் ஒரு குழந்தை எப்படி வளர்க்கப்பட வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். இன்று வரையிலும் அப்படித்தான் இருக்கின்றேன். காரணம் கிராமத்துக் கூட்டுக்குடும்பம், பெரிய குடும்பங்களில் வாழ்க்கை வாழ்ந்த ஒவ்வொரு குழந்தைகளும் தாங்கள் மனதில் வைத்திருந்த ஓராயிரம் கனவுகளையும் இழந்து விட்டுத்தான் சமூகத்திறகுள் வருகிறார்கள். நானும் அப்படித்தான் வளர்ந்தேன். சமூகத்திற்குள் வந்தேன். பாதிப்புகளை மனதிற்குள் வைத்திருந்தால் அதற்குப் பெயர் மனநோய். அதையே நேர்மறை எண்ணமாக்கி அவரவர் தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தால் பாடம். ஆனால் இங்கே அனுபவங்களைப் பாடமாக எவரும் எடுத்துக் கொள்ள விரும்புவதே இல்லை. ஒவ்வொரு சமயத்திலும் அதனை மறக்கவே விரும்புகின்றார்கள். காரணம் உள்ளூற பொங்கும் இயலாமையின் தவிப்பில் ஏக்கம் தான் இறுதியில் மிஞ்சுகின்றது. கனவுகளை மட்டும் பொறித்துக் கொண்டு எந்தக் கோழியும் வாழ்வதில்லை. ஆனால் மனிதர்கள் கனவுகளை மட்டும் தான் விரும்புகிறார்கள். இதனால் தான் இதுபோன்ற குடும்பத்தில் இருந்த வந்த மாணவர்களின் செயல் திறன் சிறகடித்துப் பறக்காமல் நொண்டியடிக்கத் தொடங்குகின்றது. பள்ளிக்கூடங்களில் பொறுத்துப் பார்த்த ஆசிரியர்களும் இறுதியில் நீ என்ன கூமுட்டையா? என்று கேட்கின்றார்கள். மனிதர்களுக்கு இரண்டு விசயங்கள் மிக முக்கியமானது. அதுவும் குழந்தைப் பருவத்திலிருந்து தான் தொடங்குகின்றது. ஒன்று உடல் நலம். மற்றொன்று மனநலம். இரண்டும் சரியான அளவில் இல்லாத போது தான் சமூகம் பல சங்கடங்களைச் சந்திக்க நேர்கின்றது. 11 11. குழந்தைகள் - பந்தம் வளர்க்கும் ஜீவன்கள் விட்டு விடுதலையாகி……… வாசிக்கும் பொழுதே நம் நரம்பில் ஒரு புத்துணர்ச்சி தோன்றுமே? வானத்தில் பறக்கும் அந்தச் சின்னச்சிறு பறவையினங்களைப் பார்க்கும் போது நமக்குள் உற்சாகம் சிறகடித்துப் பறக்கும். நம் உள்ளுற உணர்வில் கலந்திருக்கும் கவலைகள் கூடக் காணாமல் போய்விடும். அந்த நிமிடத்தில் நம் மனதில் தோன்றும் படபடப்பில் நாமும் ஒரு பறவையாகவே மாறியிருப்போம். பல சமயம் கற்பனையில் பறந்திருப்போம். வெட்டவெளி ஆகாயத்தை அந்தச் சிறிய குருவிகள் அளந்து பார்க்கும் ஆச்சரியத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நிற்கத் தோன்றும். கூடவே அருகே பறந்து செல்லும் பட்டாம்பூச்சியின் லாவகத்தில் நம்மை நாம் மறந்திருப்போம். தேடல்கள் தான் இந்த உலகை இயங்க வைக்கின்றது. நம்முடைய தேவைகள் தான் தேடல்களை அதிகப்படுத்துகின்றது. நிர்ப்பந்தங்கள் இல்லாத நிகழ்காலம் சுகமாக இருந்தாலும் அதுவே தொடரும் போது அலுப்பை தந்து விடுகின்றது. எனக்குப் போர் அடிக்குதுப்பா……. என்று சொல்பவர்களின் வாழ்க்கையை கவனித்துப் பாருங்கள். எந்தக் கலாரசனைகளும் அவர்கள் வாழ்க்கையில் இருக்காது. ரசனைகள் இல்லாத வாழ்க்கையை ரசிக்க முடியாது. ருசிப்பதும் ரசிப்பென்பதும் மனிதர்களால் மட்டுமே செய்யக்கூடிய காரியம். அவசர வாழ்க்கையில் வழியில் கேட்கும் ஒரு பாடல் கூடச் சிலருக்கு திருப்தியை உருவாக்கக்கூடியது. வாழ்க்கையில் ரசனை காணாமல் போனால் மிஞ்சுவது ரகளை மட்டுமே. ரசனைகளை விரும்பாதவர்கள் தங்கள் வாழ்க்கையைக் கனவுகளுக்குள் பாதுகாத்துக் கொள்கிறார்கள். ஆமை கண்ட வெந்நீர் சுகம் போல அதுவும் கூட ஒரு சமயத்தில் உண்மைகளை உணர்த்திவிடும். நான் வாழ்வில் பட்ட கஷ்டமெல்லாம் நீ படக்கூடாதுடா……..என்ற சோகத்தினைத் தான் இங்கே பலரும் தங்களது குழந்தைகளுக்குச் சோற்றுடன் சேர்த்து பறிமாறுகின்றார்கள். குழந்தைகளுக்கு வாழ்வில் இயல்பாகத் தோன்றும் கஷ்டங்கள் என்பது மலை போன்றது என்பதாக உருவகப்படுத்தப்படுகின்றது. அதைக் கண்டு அஞ்சி எதிர்கொள்ள முடியாத அளவுக்கு வாழ பழக்கிவிடுகின்றார்கள். எதார்த்தம் என்பது இங்கே பலருக்கும் எட்டிகாயாகக் கசக்கின்றது. எப்படி இருந்தாலும் நாம் எதிர்கொள்ள எப்படி இருக்க வேண்டும்? என்று யோசிக்க முடிவதில்லை. இது போன்ற சமயங்களில் தான் ஆன்மீகம் உள்ளே வரத் தொடங்குகின்றது. கற்பனைகள் உருவகப்படுத்தப்பட்டு, அதுவே பயமாக மாற்றபட்டு ஆன்மீகத்தைத் தெரிந்து கொள்ளாமல் அன்பையும் பகிர்ந்து கொள்ளாமல் இடையில் நின்று போன வண்டி போலத் தான் பலரின் பயணமும் தடைபட்டுப் போகின்றது. நாம் விரும்பும் கனவுகளைப் போல நம் அருகே உயிருள்ள கனவாக வளர்பவர்கள் நம் குழந்தைகளே. . நம் விருப்பம், ஆசைகள், எதிர்பார்ப்புகள் என்ற ஏதோவொரு வடிவத்தில் குழந்தைகளே நம்மை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துகிறார்கள் என்பதை உணர்ந்து இருக்கின்றீர்களா? நாம் வாழ்க்கையைப் பார்ப்பதற்கும் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையைப் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசங்களை நாம் உணர்வதே இல்லை. குடும்ப வாழ்க்கை பயணத்திற்கு இரண்டு தண்டவாளமும் தேவை. இந்தத் தண்டவாளத்திற்கு இடையே இருக்கும் கட்டைகள் போலத்தான் குழந்தைகளும் இருக்கிறார்கள். திருமணம் முடிந்து பத்து வருடத்திற்குள் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியாமல் நடத்தும் வாழ்க்கையென்பது ஏறக்குறைய நரக வாழ்க்கை. புரிந்து கொள்ளாமல், விட்டுக் கொடுக்காமல் அவரவர் கொண்ட கொள்கைகள் அத்தனையும் குழந்தைகளைத் தாக்கி அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தப்படுகின்றது. இந்தியாவில் பலரும் இப்படித்தான் வாழ்கிறார்கள். இதுவே தன்னளவில் சரியென்று உரத்துச் சொல்கிறார்கள். சிலர் மட்டுமே குடும்ப வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்திய கலாச்சாரத்தில் குழந்தைகளின் வாழ்க்கையென்பது முக்கியமானதாக இங்கே கருதப்படுகின்றது. அதிகப்படியான ஆசைகள் தான் அக்கறை என்ற பெயரில் இங்கே வெளிப்படுகின்றது. ஆனால் குழந்தைகளுக்கும் ஒரு மனமுண்டு என்பதை எளிதில் மறந்து விடுகின்றோம். அவர்களுக்கான சுதந்திரம் என்பதை மாற்றிக் கட்டுப்பாடு என்ற நான்கு எல்லைக்குள் கொண்டு வந்து நிறுத்துகின்றோம். என் கட்டுப்பாட்டுக்குள் நீ என்பதாகக் கொண்டு வந்து விடுகின்றோம். நல்ல வளர்ப்பு என்ற வார்த்தையை மனதில் கொண்டு வன்முறையைத் திணிக்கின்றோம். நாம் குழந்தையாய் இருந்த போது கிடைக்காத விசயங்களை மனதிற்கு வைத்துக் கொண்டு இதையே திரும்பத் திரும்பச் செய்கின்றோம். நாமும் முழுமையான சுதந்திரத்தை அனுபவிப்பதில்லை. குழந்தைகளையும் விடுவதில்லை. இங்குப் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சுதந்திரம் என்பதைத் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையே குழந்தைகளின் சுகத்திற்காகத்தான் என்கிறார்கள். நான் அவனுக்கு என்ன குறைவைத்தேன் என்று மூக்கை சிந்துகிறார்கள். நான் வாழ்வதே அவனுக்காகத்தானே என்கிறார்கள். ஆனால் எந்தக் குழந்தைகளும் அப்படிக் கேட்பதிலலை என்பது தான் நாம் குறித்துக் கொள்ள வேண்டிய விசயம். ஆனால் காலம் காலமாக இங்கே இப்படித்தான் பண்டமாற்று போலச் சுதந்திரமும், சுகமும் பறிமாறப்படுகின்றது. சுழற்சி போல நீ கொடு நான் தருகின்றேன் என்பது போல இங்கே ஒவ்வொன்றும் விலை பேசப்படுகின்றது. பேரமென்பது வெளியே தெரியாது. அதற்குப் பாசம் என்ற பூச்சுப் பூசப்படுகின்றது. உண்மையான சுதந்திரம் என்பதன் அர்த்தத்தை ஒவ்வொரு பள்ளிக்கூட வாசலில் நின்று கவனிக்கும் வாய்ப்பிருந்தால் உங்களுக்கு முழுமையாகப் புரியும். விட்டு விடுதலையாகி என்ற வார்த்தைகளின் அர்த்தத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும். சுதந்திரத்தைப் பற்றி நாம் பேச அதனை முழுமையாக அனுபவித்து இருந்தால் தானே புரியும்.? வகுப்புகள் முடிந்து விட்டது என்று மணியடிக்கும் ஓசைதான் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் கோவில் மணியோசை போல மகிழ்ச்சியைத் தருகின்றது. அழுத்தி வைக்கப்பட்ட அத்தனை பேர்களும் அதிலிருந்து விடுபட்டு துள்ளல் நடையுமாகப் பெற்றோருடன் செல்லும் காட்சியைப் பார்க்கும் போதெல்லாம் நம்முடைய கல்வி குறித்து அதிகம் யோசிக்க முடிகின்றது. மன உளைச்சல் அதிகமாகும் போது குழந்தைகள் விளையாடுவதைத் தூர இருந்து கவனித்துப் பாருங்கள்? அர்த்தமற்ற அவர்களின் உரையாடலில் ஆயிரம் வாழ்க்கை சூத்திரங்கள் நமக்குக் கிடைக்கும். கவலையைக் கண்டு, கவலையோடு வாழ்ந்து கழிக்கும் ஒவ்வொரு தினத்தின் அவலத்தினையும் மறக்க உதவும். குழந்தைகளும் பல சமயம் ஆசிரியர்களே. நாம் தான் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஆவலாய் பறக்கின்றோம். முடிந்தவரைக்கும் திணிக்கின்றோம். அளவு தெரியாமல் அல்லாடவும் செய்கின்றோம். இங்கே இன்னமும் மாறுபட்ட சிந்தனைகள் கொண்டு வாழும் கணவன் மனைவி அநேகம் பேர்கள். “இந்தக் குழந்தைகளுக்காகத்தான் இவரோட பொறுத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன்” என்பது போன்ற வார்த்தைகளை நீங்கள் சர்வசாதாரணமாக கேட்டுருக்கலாம். ஆனால் ஒவ்வொரு குடும்பப் போர்க்களத்தை முடித்து வைப்பதும் இந்தக் குழந்தைகளே. குழந்தைகள் உருவாக்கும் போர்க்களம் தான் வித்தியாசமானது. கத்தியின்றி, ரத்தமின்றி நடக்கும் இவர்களின் போர்க்களத்தில் கடைசி வரைக்கும் சுவாரசியத்திற்குப் பஞ்சமிருக்காது. வீட்டுக்குள் குழந்தைகளால் உருவாக்கும் போர்க்களத்தைத் தினமும் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். நீங்கள் ரசித்துருக்கீறீர்களா? ஒரு குழந்தை மட்டும் இருக்கும் வீட்டில் இந்த வாய்ப்பு ரொம்பவே குறைவு. போட்டி போட ஆளிருக்கும் போது உருவாகும் களம் தான் முக்கியம். இங்குத் தினந்தோறும் இவர்கள் உருவாக்கும் ஒவ்வொரு களத்திலும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நான் தான் கடைசியில் சிரிப்பு நடிகராக மாறிப் போகின்றேன். அழுகை காட்சிகள் பல உண்டென்றாலும் அதுவும் கடைசியில் வயிறு வலிக்கும் சிரிப்புக் காட்சியாகவே மாறிவிடுகின்றது.. அலுவலகமோ அல்லது வெளியே எங்கு இருந்தாலும் கூட மதிய சாப்பாட்டைப் பல சமயம் மூன்று மணிக்கு மாற்றி வைத்துக் கொள்வதுண்டு. காரணம் அந்தச் சமயத்தில் தான் பள்ளி விட்டு மூவரும் வரும் நேரம். கிடைக்கும் அந்த ஒரு மணி நேரத்திற்காக வீட்டில் ஆஜராகி விடுவேன். இவர்கள் வீட்டுக்கு வருவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பே வீட்டில் தயாராக இருப்பேன். ட வடிவில் உள்ள சந்தின் முனையில் இருக்கும் வீடென்பதால் இரண்டு பக்கத்திலும் ஆட்கள் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். வீட்டுக்கருகே பள்ளி இருப்பதால் மூன்று நிமிடங்களில் வீட்டுக்கு வந்து விட முடியும். ஆனால் சில சமயம் இவர்கள் வந்து சேர பத்து நிமிடங்கள் கூட ஆகும். காரணம் தெருவில் மூவருக்குள்ளும் ஏதோவொரு பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கின்றது என்று அர்த்தம். ஒருவர் மற்றொருவரை சீண்ட பாதியில் அந்தப் பயணம் தடைப்பட்டுப் போயிருக்கும். ஒரு நாள் கூட மூவரும் அமைதியாக வீட்டுக்கு வந்ததே இல்லை. வரும் வழியில் அல்லது வந்த பிறகு என்று இந்தக் களம் விரிவடையும். இவர்களின் குணாதிசியம் தெரிந்தே வாசலில் நின்று கொண்டேயிருப்பேன். எப்போது வந்து சேருவார்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் நாம் தயாராக இருக்க வேண்டும். என் தலையை வாசலில் பார்த்து விட்டால் ஓ……..வென்று கத்திக் கொண்டு ஓடி வருவார்கள். முதுகில் சுமக்கும் பாரங்கள் ஒரு பக்கம் இழுக்க, கையில் வைத்திருக்கும் கூடை மறுபக்கம் தள்ள ப்ரேக் பிடிக்காத வண்டி போலக் குலுங்கிக் கொண்டு வருவார்கள். பின்னால் வரும் வீட்டுக்காரம்மா அலுத்துப் போய் மூச்சு வாங்க வந்து கொண்டிருப்பார். ஓடி வரும் போதே எனக்குப் பதைபதைக்கும். தடுமாறினால்? என்று யோசிக்கும் போதே நான் ஓடிப்போய் வாங்க முயற்சிப்பேன். குதியாட்டத்தில் நிற்க முடியாமல் தடுமாறி மூச்சிரைத்து என் கையை விடுவித்து மீண்டும் வீட்டை நோக்கி ஓட நான் தடுமாறி நிற்க சிட்டுக்குருவி போலப் பறப்பார்கள். வீட்டுக்குள் இருக்கும் இரும்பு கதவு முன்னால் வந்தவர் தள்ளிய தள்ளலில் சுவற்றில் முட்டி சப்தத்தை உருவாக்கும். முதுகில் சுமந்து வந்த பை வாசலின் உள்ளே பறக்கும். மூச்சிரைப்போடு மற்றொருவர் பையை அடுத்தவர் பிடித்துத் தள்ள அது மற்றொருபுறம் ஜிப் திறந்து போய்ப் புத்தகங்கள் சிதறும். அடுத்த அத்தியாயம் ஆரம்பிக்கும். நான் தான் முதலில்….இல்லையில்லை நான் தான் முதலில் .என்று வேகம் காட்ட காட்டாறு வெள்ளம் அங்கே உருவாகும். காலில் மாட்டியிருக்கும் காலணிகள் கதறும். அதில் உள்ள கொக்கிகள் இவர்கள் படும் அவசரத்திற்கு ஒத்துழைக்காது. சில சமயம் பிய்ந்து போய்ச் சிரிக்கும். நாம் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும். எதுவும் பேசிவிட்டால் வெள்ளம் நம்மை நோக்கி தாக்கும் ஆபத்துண்டு. இருவர் தான் இப்போது உள்ளே நுழைந்திருக்கிறார்கள். மீதி ஒருவர் தெருவில் இருக்கின்ற மரத்தில் உள்ள இலைகளை, கண்ணில் தெரிகின்ற பூக்களைச் சேகரித்துக் கொண்டே வருவார். சுதந்திரத்தை நாங்கள் சொன்னதும் இல்லை. அவர்கள் புரிந்து கொண்டதும் இல்லை. தீர்மானிக்கக் கற்றுக் கொடுத்த பிறகு திரும்பவும் சொன்னால் அறிவுரை. நாமே கடைபிடித்துக் காட்டினால் அதற்குப் பெயர் பாடம். அவர்கள் எங்களுக்குச் சொல்லும் பாடங்களையும் அவர்கள் சமூகத்தில் கற்றுக் கொண்டிருக்கும் பாடங்களைப் பற்றியும் தான் நாம் இனி பேசப் போகின்றோம். 12 12. விதைக்குள் உறங்கும் சக்திகள் நான் பள்ளிக்குச் சென்ற முதல் நாள் இன்னமும் கலங்கலாக என் நினைவில் இருக்கின்றது. கொண்டு போய்ச் சேர்த்தார்கள் என்ற வார்த்தையே தவறு. ஐந்து வயது ஆனதும் அக்காவுடன் அனுப்பி வைத்தார்கள். எனக்கு நான்காம் வகுப்புக்கு ஆசிரியராக வந்த சீனிவாசன் அப்பா பள்ளிக்கூடத்தில் தலைமையாசிரியர் அறைக்கு அருகே ஒரு மூலையில் அமர்ந்திருந்தார். ஒவ்வொருவரின் குழந்தைகளும் வரிசையாக எதிர்புறத்தில் அமர்ந்திருந்தனர். ஒன்றன்பின் ஒன்றாக அவரிடம் அனுப்பி வைக்கப்பட்டனர். என் முறை வந்த போது என்னைப் பார்த்து விட்டு “இவன் யாரு வீட்டு கொழந்த?” என்று கேட்டார். அக்கா அப்பாவின் பெயரை சொன்னார். பெரிய இலையில் நெல் பரப்பியிருந்தது. என் கையைப் பிடித்து அந்த நெல்லில் அ போட வைத்து என்னை உள்ளே அனுப்பி வைத்தார். சுபம். அன்று முதல் பள்ளி வாழ்க்கை தொடங்கியது. வேறெந்த முன்னேற்பாடுகளும் முஸ்தீபுகளும் இல்லை. டவுசர், சட்டை கூட ஒரு மஞ்சள் பை. அதற்குள் ஒரு சிலேட்டு. உடைந்த குச்சி. இதைப் பல்பம் என்றும் சொல்கிறார்கள். ஆனால் வீட்டில் இரட்டையரை பள்ளியில் சேர்க்கும் வயது வந்த போது ஒரு மாதம் முன்பாகவே அத்தனை முன்னேற்பாடுகளையும் அக்கறையுடன் செய்ய வேண்டியதாக இருந்தது. பள்ளி திறந்த முதல் நாளில் அனுப்பவில்லை. திருப்பூரில் இருக்கும் சரஸ்வதி கோவிலுக்கு அழைத்துச் சென்றோம். கல்விக்கென்று உருவாக்கப்படுத்தப்பட்ட அந்தத் தெய்வத்தின் கதையை அவர்களுக்குச் சொன்னோம். ஆனால் அவர்களைப் பொறுத்த வரையிலும் அதுவொரு ஜாலியான ரவுண்ட் போன சுகம். மறுநாள் இருவருக்கும் பள்ளிச்சீருடை அணிவித்து மாட்ட வேண்டிய மற்ற சமாச்சாரங்களையெல்லாம் மாட்டி அலங்கரித்துப் பள்ளிக்கு அழைத்துச் சென்றேன். ப்ரிகேஜி வகுப்பறையில் இரண்டு ஆசிரியைகள் இருந்தார்கள். ஒருவர் வயதானவர். மற்றொருவர் மிக இளமையாக இருந்தார். இருவரும் அங்கே செய்து கொண்டிருந்த பணி தான் என்னை அங்கே சிறிதுநேரம் நிறுத்தி வேடிக்கை பார்க்க வைத்தது. காரணம் அங்கே கொண்டு வந்து சேர்த்த எந்தக் குழந்தைகளும் அடங்குவதாகத் தெரியவில்லை. ஒரே கத்தல் கதறல். உள்ளே நடந்த களேபரத்தில் பல கூத்துக்கள் நடந்து கொண்டிருந்தது. நிச்சயம் தலை தெறிக்க ஓடி வரப் போகின்றார்கள் என்று காத்திருந்தேன். காரணம் வயதான ஆசிரியை வகுப்பறையின் உள்ளே இருந்து கொண்டு அழும் குழந்தைகளைச் சமாதானம் செய்து கொண்டிருந்தார். மற்றொருவர் இரண்டு கதவில் ஒரு கதவை சார்த்தியபடி அம்மா அப்பாவை அனுப்புவதில் குறியாக இருந்து கொண்டு அடுத்து வரும் குழந்தைகளை உள்ளே அனுப்புவதில் கவனமாக இருந்தார். கதவை கெட்டியாகப் பிடித்தபடியே நின்று கொண்டிருந்தார். அவரின் சேலை தலைப்பை சில குழந்தைகள் இழுத்தபடி அழுதன. இருவரும் தடுமாறி தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். என் அலுவலக வேலையை மறந்து விட்டு அங்கேயே சற்று நேரம் நின்று அங்கே நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். பாதிக் குழந்தைகள் கத்திய கத்தல் அந்த மூடிய கதவைத் தாண்டி வெளியே எதிரொலித்தது. கதவின் இடையே தெரிந்த வெளிச்சத்தில் உள்ளே பார்த்தேன். இரட்டையர்கள் இருவரும் அழவில்லை. ஆனால் அங்கே அழுது கொண்டிருந்தவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் கண்களில் மட்டும் லேசாகக் கண்கள் கலங்கியதை தூரத்தில் இருந்து பார்த்த போது புரிந்து கொள்ள முடிந்தது. என் தலையைக் கதவிடுக்கின் வழியே கண்ட போது கூட அடம் பிடித்து வெளியே வர முயற்சிக்க வில்லை. எனக்கே சற்று ஆச்சரியமாக இருந்தது. பெண்ணை கட்டிக் கொடுத்து மாப்பிள்ளையோடு அனுப்பும் போது பெற்றோருக்கும் எவ்வித மனோநிலை இருக்குமோ அந்த மனநிலை அப்போது எனக்கும் தோன்றியது. முதல் இரண்டு வாரங்கள் நண்பகல் 12 மணி வரைக்கும் என்று சொல்லியிருந்தார்கள். அலுவலகப் பணியில் மறந்து போய்விடுவோம் என்று அலைபேசியில் அலாரம் வைத்துக் கொண்டு அடிக்காமல் இருந்து விடுமோ என்று அரைமணிக்கு ஒரு தரம் பார்த்துக் கொண்டிருந்தேன். சரியாக 11.45க்கு டாண் என்று அந்த வகுப்பறையில் வாசலில் தவம் கிடந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். காரணம் இரட்டையரில் ஒருவரின் உடல் நலம் குறித்து அதிகம் கவனம் செலுத்திக் கொண்டிருந்த நாட்கள் அது. பள்ளி நேரம் முடிந்து. வெளியே வந்தவர்கள் முகத்தில் இருந்த புன்னகையைப் பார்த்த போது தான் உயிர் திரும்பி வந்தது. பள்ளிக்குள் இருக்கும் அந்தச் சின்னப் பூங்கா பக்கம் அழைத்துச் சென்று ஊஞ்சலில் ஆட விட்டு அன்றைய வகுப்பறை அனுபவம் குறித்து மெதுவாகக் கேட்டேன். மழலை மொழியில் கூறியது இப்போதும் நினைவில் இருக்கிறது. நாம தான் அ ஆவன்னா ஏபிசிடி எல்லாமே படிச்சாச்சுல்ல. அதாம்பா சொன்னாங்க என்றார்கள். மீதியிருந்த திண்பண்டங்களைத் தின்று கொண்டே வண்டியில் ஏறினார்கள். அன்று தொடங்கிய இலகுவான இவர்களின் கல்வி பயணத்திற்கு நாங்கள் முன்னேற்பாடுகளுக்காகச் செலவழித்த காலம் ஏறக்குறைய மூன்று மாதங்கள். பள்ளியில் கட்டணம் கட்டி உறுதியானதும் பள்ளி குறித்துப் புரிய வைத்தோம். பள்ளியின் அருமையை விளக்கிச் சொன்னேன். பல படங்கள் அடங்கிய புத்தகங்களை ஆறு மாதமாக வாங்கிப் புத்தகங்களின் மேல் உள்ள ஆர்வத்தை உருவாக்கினோம். வீட்டில் எழுத கற்றுக் கொடுத்த போது நான் மட்டும் எழுத வைக்க வேண்டாம். நாலு வயதில் எழுத தேவையில்லை. பேச கவனிக்கத் தெரிந்தால் போதும் என்று அவர்கள் மேல் வலிய எதையும் திணிக்காமல் அவர்கள் போக்குக்கு அனுமதித்தேன். எந்தப் புத்தகங்களை வாங்கிக் கொடுத்தாலும் மூன்று நாட்களுக்குள் அது கிழிக்கப்பட்டு கப்பல் போல ஏதோவொன்றை செய்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். அலுவலக வேலை முடித்து வீட்டுக்குள் வரும் போதே வேறொரு புத்தகத்தை வாங்கி வந்து விடுவதுண்டு. பல புத்தகங்கள். ஒவ்வொரு செலவும் இரண்டு இரண்டாகச் செய்ய வேண்டியிருந்தது. கடைசியில் அட்டையில் போட்ட படங்கள் அடங்கிய பாடங்களை வீட்டுக்குக் கொண்டு வந்த சேர்த்த போது தான் ஒரு முடிவுக்கு வந்தது. அவர்கள் அதையே வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். எங்கள் மூச்சு சீரானது. நம்முடைய கல்வியின் முக்கியப் பிரச்சனையே இங்குத் தான் தொடங்குகின்றது. படங்கள் மூலம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல வளர்ந்த பிறகும் பாடம் நடத்தும் போது எளிதாக மூளைக்குக் கடத்தப்படுகின்றது. ஆனால் இந்திய கல்வியில் செயல்வழி கல்வியை விட எழுத்து வழிக் கல்விக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. வலிய திணிக்கும் போது வாந்தி பேதியாகி கசப்பு மருந்து போல ஆகிவிடுகின்றது. நன்றாகக் கவனித்துப் பாருங்கள். நாமும் படித்து வந்துள்ளோம். நம்முடைய குழந்தைகளும் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். நம்மில் எத்தனை பேர்கள் பள்ளிக்கூடப் புத்தகங்களைக் கதை புத்தகம் போல விருப்பத்துடன் அணுகியிருக்கின்றோம். கடமைக்கு, பயத்துக்கு, கட்டுப்பாட்டுக்கு என்று ஏதோவொரு விதத்தில் தான் ஒவ்வொரு வகுப்பையும் கடந்து வந்துள்ளோம். அதுவே தான் இன்று குழந்தைகள் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கின்றது. தாய்மொழிக் கல்வி என்பது மாறி அந்நிய மொழி கல்வி என்ற போது இன்னமும் திகட்டல் அதிகமாகி விடுகின்றது. இந்திய கல்வியில் மட்டுமல்ல கலாச்சாரத்தில் கூட விருப்பங்களை விடத் திணித்தல் தான் முக்கியப் பங்கு வகிக்கின்றது. மதிப்பெண்களுக்கு உள்ள மரியாதை மனதில் உள்ள கருத்துக்களுக்குக் கிடைப்பதில்லை. எதிர்ப்பு சக்தியை இழக்க வைத்துவிட்டு எதிராளிகளோடு போராட வேண்டிய கலையை இங்கே கற்றுக் கொடுக்கின்றார்கள். ஒரு பக்கம் முழுக்கப் பூச்சி பூச்சியாக வெறுமனே எழுத்துக்கள் மட்டுமே இருந்தால் எத்தனை பேர்கள் விரும்பி வாசிப்பார்கள். அதுவே படங்கள் இருக்கும் போது ஆர்வம் இயல்பாக உருவாகின்றது. ஆனால் இங்கே எழுத்துக்கள் மூலம் மட்டுமே அத்தனையும் புகட்டப்படுகின்றது. மூளையில் உள்ள ந்யூரான்களில் விதைக்கப்படும் விதைகளை விட அதில் செலுத்தப்படும் கருத்துக்களை அடைகாப்பது தான் முக்கியம் என்று போதிக்கப்படுகின்றது. தொடக்கத்தில் மனித இனம் வேட்டையில் தான் தனது வாழ்க்கையைத் தொடங்கியது. அப்போது கலாச்சாரம் என்றொரு வார்த்தையே இல்லை. காலப்போக்கில் பொருளாதார வாழ்க்கைக்கு மாறிய போது தான் கலாச்சாரம் என்றொரு வார்த்தையும் வந்து சேர்ந்தது. எல்லாமே மாறத் தொடங்கியது. பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு மனித இனம் மாறத் தொடங்கிய போதே அவரவர் விரும்பிய வகையில் சட்டங்கள் வளைக்கப்பட்டது. சட்டமியற்றும் அதிகாரத்தில் இருந்தவர்கள் ஒவ்வொன்றையும் உருவாக்கினார்கள். உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் தலைமுறை கடந்தும் பலரால் வெளியே வரமுடியாத அளவுக்கு ஓரத்திற்கே செல்லக் காரணமாக இருந்தது. அனைவருக்கும் கல்வி மறுக்கப்பட்டுக் காரணங்கள் கற்பிக்கப்பட்டது. ஆனால் காலவெள்ளத்தில் ஒவ்வொன்றும் உடைபடவும் தொடங்கியது. வலியவர்கள் பிழைக்க முடியும் என்ற பொது விதி உயிர்பெறத் தொடங்கியது. உலகில் படைக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் மற்றவர்கள் வாழ்க்கையின் நலனுக்கே என்பதாக மாறியது. கருத்துக்கள் அனைத்தும் பகிர்வதற்கே என்று தோன்றிய போது தான் நவீனங்கள் தங்களது வெளிச்சத்தை உலகத்தின் மேல் பாய்ச்சத் தொடங்கியது. விஞ்ஞானம் வளர்ந்தது. பலவற்றையும் வளர்த்தது. ஆனால் இன்று நாம் பார்ப்பது என்ன? வேடவர் சமூகத்தில் தொடங்கிய நமது பயணம் இன்று வேடர்களைப் போலவே நம்மை மாற்றியுள்ளது. தொடக்கத்தில் மனிதன் சிறு புள்ளியாக இருந்தான். வட்டம் தொடங்கியது. தொடங்கிய இடத்திற்கே தற்போது வந்து சேர்ந்துள்ளோம். சக மனிதனை, நாடுகளைச் சுய லாபத்திற்காக வேட்டையாடுதல் தான் இங்கே நடந்து கொண்டிருக்கின்றது. இனம், மதம், மொழி, சாதி என்ற பெயரைக் கொண்டு வேட்டையாடத் தொடங்கி விட்டது. பொறாமை என்பது உள்ளே ஒழித்து வைக்கப்பட்டு அது வன்மமாக மாறியுள்ளது. அதுவே வாழ்க்கை சூத்திரம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றும் விட்டது. இறுதியில் இது தான் சமூகத்திற்கான தகுதியாகவும் மாறியுள்ளது. அப்படியென்றால் இத்தனை காலம் மனித குலம் கடந்து வந்த பாதையில் ஒவ்வொருவரும் கற்ற கல்வி என்ன ஆச்சு? காரணம் குறிப்பிட்ட மக்களுக்குக் கல்வி என்பது ரத்தம் சதை நாளம் நரம்பு என்று அத்தனையிலும் ஊறிப்போய் அதனையே வாழ்க்கையாக ஏற்றுக் கொண்டு வாழ்ந்தவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்வில் உயரத் தொடங்கினார்கள். கற்ற கல்விக்கும் அப்பாற்பட்டும் சிந்தித்தார்கள். உயர்ந்தார்கள். கல்வி சொன்ன பாதையை மட்டுமே நம்பினார்கள். ஆனால் கல்வியை அணியும் ஆடை போல, பூசும் பவுடர் போலப் பயன்படுத்திய அத்தனை பேர்களும் தானும் கற்க முடியாமல் தனக்குப் பினனால் வந்த தலைமுறைக்கும் கற்றுக் கொடுக்காமல் வன்மத்தை விதைத்து வன்முறையை அறுவடை செய்யத் தொடங்கினார்கள். கல்வியென்பது மனதில் மலர்ச்சியை உருவாக்க கூடியது. சிந்தனைகளைச் சிறகாக மாற்றக்கூடியது. இங்கே எத்தனை பேர்களுக்குச் சிறகு முளைத்தது.? இங்கே பலருக்கும் கற்ற கல்வி எந்த மாறுதல்களையும் தந்துவிடவில்லை என்பது தான் முக்கிய விசயம். வீழ்ச்சியைத் தான் தந்துள்ளது. கல்வியைக் குறை சொல்வீர்களா? கற்றுக் கொடுத்தவர்களை வசை பாடுவீர்களா? யாரை குறை சொல்ல முடியும்.? கல்வி என்பது பொதுவானது. ஆனால் அதை இந்தியாவில் கற்பிக்கும் விதம் தான் இங்கே முக்கியமானது. கடந்த 20 ஆண்டுகளில் நம் நாடு கல்வி ரீதியாக மிகப் பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது என்பதைப் பாராட்டு போலச் சொல்லிக் கொள்கின்றோம். ஆனால் தரமென்பது அதலபாதாளத்தில் தானே இருக்கிறது. காரணம் என்ன? செயல் முறைக் கல்வி என்பது செயலோடு கலந்தது. என்றுமே மறக்க முடியாத அளவில் நம்மை மாற்றி விடக்கூடியது. நம்மை நமக்கே உணர்த்தக்கூடியது. ஒவ்வொரு குழந்தைகளுக்குள் இருக்கும் சக்தியை எதைக் கொண்டு உங்களால் அளக்க முடியும்? . ஆலமரத்தின் வீரியத்தைப் போலத் தேக்கு மரத்தின் தகுதியைப் போல மாற வேண்டிய குழந்தைகள் எப்படி வளர்கின்றார்கள்? தற்போதைய கல்வி முறையினால் மொட்டுப் பருவத்திலேயே கருகிப் போய்க் கனவுகளை மட்டும் விதைத்து அறுவடை செய்யத் தயாராக இருக்கின்றோம். மனப்பாடமே முதல் தகுதி என்ற வரையறையில் தான் இங்கே சாதனை என்ற வார்த்தையே உருவாக்கப்படுகின்றது. ஆனால் வெறுமனே எழுத்துக்கள் மூலம் கற்றுக் கொடுக்கும் தற்போதைய கல்வியின் பலன் என்ன தெரியுமா? அரிசி எந்த மரத்தில் வருகின்றது? என்று குழந்தைகள் கேட்கும் அளவிற்கு நாம் வளர்ந்துள்ளோம். 13 13. பணம் இருப்பவர்களுக்கு (மட்டுமே) அனுமதி வீட்டில் குழந்தைகளுக்குப் பள்ளிப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்க எனக்கு அனுமதியில்லை. நான் வீட்டில் இருந்தால் குறிப்பிட்ட சந்தேகங்களுக்கு மட்டுமே பேச அனுமதி கிடைக்கும். காரணம் படிப்பதைத் தவிர மற்ற அனைத்தும் பேச தொடங்கி விடுவதால் எப்போதும் 144 தடையுத்தரவு அமலில் இருந்து கொண்டேயிருக்கும். குழந்தைகளுடன் அவர்கள் பாடம் குறித்துப் பேசும் போதெல்லாம் நான் படித்த பள்ளிக்கூட நினைவுகளுடன் நாம் எப்படிப் படித்தோம்? என்ற யோசனையும் வந்து போய்க் கொண்டேயிருக்கும்? காரணம் குழந்தைகளின் பாடத் திட்டங்களைப் பார்க்கும் போதும் வியப்பும் பயமும் என்னைத் தாக்குவது போலவே இருக்கும். . நாம் படித்த கல்வி எளிமையின் வடிவமா? இல்லை சுமையில்லா பாடமா? போன்றதொரு கேள்வியும் இயல்பாக எழும். எப்போதும் போலக் கோவிந்தன் தான் முதல் இடத்தில் இருப்பான். இரண்டாம் இடத்திற்காக நானும் அன்புக்கரசியும் போட்டி போட்டுக் கொண்டிருப்போம். மாறி மாறி வந்து கொண்டிருப்போம். எட்டு வரைக்கும் படிப்புக்காக எந்த ஆசிரியரும் எந்தக் குறையும் சொல்லாத அளவுக்குத்தான் இருந்தேன். என் கையெழுத்து நன்றாக இருக்கும் காரணத்தால் அதுவே வகுப்புத் தலைவன் என்ற பதவியைக் கூடத் தந்தது. ஆனால் என்ன கற்றுக் கொண்டோம்? எந்த அளவுக்கு வளர்ந்துள்ளோம் என்பதை அருகே இருந்த மற்றொரு பள்ளிக்கு ஒன்பதாம் வகுப்புக்குச் சென்ற போது புரிந்து கொள்ள முடிந்தது. இங்கேயும் ஆறு முதல் 12 வரைக்கும் இருந்தது. ஆனால் இங்கே ஒன்பதாம் வகுப்பில் தான் நுழைந்தேன். பனிரென்டாம் வகுப்பு வரைக்கும் குடும்பத்தினர் எனக்கு கல்விக்கென்று செல்வழித்த தொகை அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கும் என்றே நினைக்கின்றேன். இன்று சராசரியாக ஒரு குழந்தைக்கு வருடத்திற்கு 25000 ரூபாய் செல்வு செய்தால் மட்டுமே சுமாரான பள்ளியில் படிக்க வைக்க முடியும். இருபது வருட இந்திய வளர்ச்சியின் பலன் இதுவே. ஒன்பதாம் வகுப்பில் உள்ளே நுழைந்த பள்ளியில் முதல் இரண்டு மாதங்கள் முழிக்க வேண்டியதாய் இருந்தது. அதே பள்ளியில் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தவர்களுக்குச் சூழ்நிலைகள் இயல்பானதாகவே இருக்க என்னைப் போன்றவர்களுக்குச் சவாலாகவே இருந்தது. பாடம் நடத்திய அத்தனை ஆசிரியர்களும் தேவதூதன் போலவே என் கண்ணுக்குத் தெரிந்தார்கள். முந்தைய பள்ளியில் நடந்த ஆசிரியர் மாணவர்களின் சகஜமான உரையாடல்கள் ஏதும் நிகழாத காரணத்தால் பயமே அடித்தளமாகி படபடப்பே வாழ்க்கையாக மாறத் தொடங்கியது. ஒன்பதாம் வகுப்பில் முதன் முதலாக நடந்த பரிட்சையின் முடிவை கையில் வைத்துக் கொண்டு ஆசிரியர் ஒவ்வொருவரையும் அழைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே பரிட்சை தாளை கையில் கொடுத்திருந்த காரணத்தால் முடமாகிப் போன ஆங்கிலமும் நொண்டித்த கணக்கும் சேர்ந்து டவுசருக்குள் ஒரு நசநசப்பை உருவாக்கியிருந்தது. ஆசிரியர் பெயர் சொல்லி அழைத்ததும் முட்டிக் கொண்டிருந்த மூத்திரத்தை அடக்கிக்கொண்டே அவர் கொடுத்த பிரம்படியை வாங்கிக் கொண்டு வந்தமர்ந்தேன். எப்போதும் போல அங்கேயும் கோவிந்தன் முதல் மூன்று இடத்திற்குள் ஒன்றை தக்க வைத்து முன்னேறிக் கொண்டிருந்தான். ஒன்பதாம் வகுப்பு முழுக்க ஒரு சில பரிட்சைகளில் மட்டுமே சிவப்பு கோடு வாங்காமல் தப்பிக்க முடிந்தது. பத்தும் அப்படியே தான் தொடர்ந்தது. இடைவிடாத முயற்சியில் முன்னேறி இருந்தேன். ஆனால் ஆசிரியர்களின் பார்வையில் நான் பத்தாம் வகுப்பில் தேற மாட்டேன் என்ற பட்டியலில் தான் வைத்திருந்தார்கள். அவர்கள் கணிப்பு பொய்யானது. அவர்கள் ஊட்டி வளர்த்த மாணவர்கள் முடமாகிப் போயிருந்தார்கள். அதிலும் எனக்குக் கணக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியர் நீ எப்படிடா பாஸானாய்? என்று கேட்டது இன்றும் நினைவில் உள்ளது. காரணம் இரண்டு முறைகள் அவரை எதிர்த்து கையோங்க வீடு வரைக்கும் பஞ்சாயத்து வந்து விட்டது. இரண்டு வருட அனுபவம் தந்த பாடங்கள் பயத்தைப் போக்க பதினொன்று பனிரெண்டில் இனி பயமில்லை என்ற தைரியத்தைத் தந்தது. அங்கிருந்த ஆசிரியர்கள் அத்தனை பேர்களும் பழக்கத்தில் வந்திருந்தார்கள். நானும் பள்ளியில் முக்கியமான ஆளாய் மாறியிருந்தேன். அரட்டைக்குத் தக்க நண்பர்கள் கிடைத்திருந்தார்கள். கட்டுப்பாடுகள் கொஞ்சம் குறைந்திருந்தது. வீட்டில் தினந்தோறும் படிக்க வேண்டும் என்ற கட்டளை இருந்தாலும் என்னளவில் பலசமயம் அது காற்றில் பறக்க விட்டு அடி வாங்குவது இயல்பானதாக இருந்தது. ஏதோவொரு புத்தகத்தை வைத்துக் கொண்டு ஒப்பேற்றிவிட்டு படுக்க ஓடிவிடுவதுண்டு. ஆனாலும் இங்கேயும் ஒரே தாண்டலில் தாண்டி கல்லூரி செல்ல முடிந்தது. படித்த பாடத்தை சொந்தமாக எழுதத் தெரிந்ததும் ஒரு காரணமாக இருந்தது. ஆனால் கல்லூரி தான் இதயத்தைத் தொட்டதோடு கணக்கற்ற ஆசைகளை நிறைவேற்றவும் உதவியது. ஜன்னல் மட்டுமல்ல கதவுகளையும் அகலமாகத் திறந்து வைக்கச் சுதந்திர காற்றின் சுவாசத்தை அனுபவிக்க முடிந்தது. இதே பள்ளியில் படித்த என்னை விட மிக அதிகமான மதிப்பெண்கள் வாங்கிய ஒவ்வொருவரும் அவரவர் விரும்பிய துறையில் நுழைய எனக்குப் பிடித்த தாவரவியல் துறையில் நுழைந்த போது பலரும் என்னை ஏளனமாகப் பார்த்தனர். ஊரில் இருந்து சென்றவர்களில் நான் மட்டும் தான் அறுபது சதவிகிதத்திற்கு மேல் வாங்கி அத்தனை பாடங்களிலும் தேர்ச்சி பெற்று இருந்தேன். கல்வி ரீதியான எனக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம் இதுவே. அன்று முதல் தான் எனக்குள் இருந்த திறமைகளுக்கு உண்மையான அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது. மூன்றாண்டுகளும் வெகு இயல்பாக விருப்பத்துடன் படித்த வாழ்க்கையது. என்னுடன் படித்தவர்கள் அத்தனை பேர்களும் கல்லூரிப் பாடங்கள் அனைத்தும் ஆங்கிலவழிக் கல்வி என்றதும் அலறிக் கொண்டு தான் படித்தார்கள். ஆனால் பள்ளியில் படித்த மனப்பாடம் அங்கே வேலைக்கு உதவவில்லை.சொந்தமாக எழுத வேண்டும் என்ற எண்ணமும் எவருக்கும் தோன்றவில்லை. பள்ளியைப் போலவே கல்லூரியை கருதியிருந்தார்கள். தேர்வு நெருங்கும் சமயத்தில் நெஞ்சில் அடித்துக் கொண்டே படித்துக் கொண்டிருந்தார்கள். மூன்று வருடமும் கண்களைக் கட்டி காட்டில் விட்டது போல அலைந்தார்கள். என்னுடன் படித்தவர்களில் ஒருவன் முதல் பருவத் தேர்வில் மொழிப்பாடமான தமிழில் கூட தேர்ச்சியடையவில்லை. அடுத்த பருவம் முதல் அழகாக பிட் எழுதும் கலையைக் கற்றுக் கொண்டு விட இளங்கலையை முடித்து மேற்படிப்புக்கு சென்று அங்கேயும் முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்று பார்டர் வீரனாக வெளியே வந்தான். மேற்படிப்புக்குச் சென்ற இன்னும் சில பேர்கள் இப்போது ஆங்கில வழிக் கல்விக்கூடங்களில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுடன் உரையாடும் போது ஒன்று மட்டும் உறுதியாகத் தெரியும். அவர்களும் மாறவில்லை. அவர்கள் கற்ற கல்வியும் அவர்களை எந்த விதத்திலும் மாற்றவில்லை? பாவம் மாணவர்கள் என்று நினைத்துக் கொள்வதுண்டு. ஆனால் இங்கே இருபதாண்டுக்குள் ஏராளமான மாறுதல்கள் நடந்துள்ளது. கல்வியின் போக்கு மாறியுள்ளது. கற்றுத்தர வேண்டியவர்களின் நேர்மை முதல் அரசாங்கத்தின் கொள்கை வரை அனைத்தும் மாறியுள்ளது. கல்வியைக் காசாக்கும் கள்ளப்பணம் நிறைந்தவர்கள் நடத்தும் ஒவ்வொரு பள்ளிக்கூடமும் இருபது ஆண்டுகளுக்கு நம்பமுடியாத அளவுக்குப் பல்லாயிரம் கோடி தொழில் நிறுவனம் போல மாறியுள்ளது. மனப்பாடம் செய்வதே மாணவனின் தகுதி என்பதாக மாறியுள்ளது. . எனக்கு இன்றைய கல்விச் சூழல் கணக்கற்ற கேள்விகளைத் தினந்தோறும் எழுப்பிக் கொண்டேயிருக்கின்றது. சமச்சீர் கல்வி தேவையற்றது என்கிற நிலைக்குக் கல்விக்கூடங்கள் வந்ததை விட (நடுத்தரவர்க்க) பெற்றோர்கள் அதை ஆதரிக்கவும் விரும்பவில்லை. இது போன்று ஒவ்வொன்றையும் மனதில் நினைத்துக் கொண்டே பல சமயம் ஒதுங்கி நின்று குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதோடு சரி. தினந்தோறும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நகரும் குழந்தைகளின் பைகளைத் தூக்கி எறிந்து விடாலாமோ என்று தோன்றுகின்றது. தாய் மொழி குறித்த அக்கறையில்லை என்பதை விட எந்த மொழி குறித்தும் அடிப்படை புரிதல் இல்லாமல் காசாக்க எது சிறந்ததோ அதுவே வேண்டும் என்கிற நிலைக்குக் கல்வி மாறியுள்ளது. ஐந்து பாடங்களாக இருந்த கல்வி பத்து பாடங்களாக மாறியுள்ளது. எதிர்கால வேலை வாய்ப்புக்கு ஆங்கிலமே அருமருந்து என்று நம்பப்பட்டு அதுவே வரம் தரும் மொழியாக மாறிவிட்டது. அந்நிய மொழி ஒரு பக்கம். அளவு கடந்த பாடத்திட்டங்கள் மறு பக்கம். நான் படிக்கும் போது குடும்பத்தினர் உருவாக்கிய கட்டளைகள் தான் என்னைப் படிக்க வைத்தது. ஆனால் நாங்கள் வீட்டில் உருவாக்கி வைத்துள்ள சூழ்நிலைகள் தான் கட்டாயப்படுத்த தேவையில்லாது எங்கள் பிள்ளைகளைத் தினந்தோறும் படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. தினந்தோறும் குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கும் போது இவர்கள் என்ன மாதிரியான பாடங்களைப் படிக்கின்றார்கள்? எதைக்குறித்து இவர்களுக்கு ஆசிரியர்கள் புரியவைக்கின்றார்கள்? என்பதை உணர்ந்து கொள்ள அவர்களின் பல புத்தகங்களை எடுத்து சில மணி நேரங்கள் படிப்பதுண்டு. பல சமயம் எனக்குத் தலை சுற்றிப் போகின்றது. இன்றைய ஐந்தாம் வகுப்புப் பாடத்திட்டம் என்பது ஏறக்குறைய கல்லூரி பாடத் திட்டத்திற்குச் சமமாகவே உள்ளது. வீட்டில் கேள்வி பதிலை படிக்க வைத்து ஒப்பிக்க என்றொரு போராட்டம் தொடங்கும். ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் பார்ப்பது போலவே இருக்கும். முட்டல் மோதல் அதிகமாகி இடைவிடாத விவாதங்கள் ஓடிக்கொண்டேயிருக்கும். ஆனால் படிப்படியான பழக்கத்தின் வாயிலாக இதுவொரு இயல்பான கடமையாக இன்று மாறியுள்ளது. “எனக்குச் சொந்தமாக எழுத முடிகின்றது. ஆனால் மதிப்பெண்கள் போட மாட்றாங்கப்பா…………” “மிஸ்க்கு உச்சரிக்கவே தெரியலப்பா. வருஷத்துக்கு ஒரு மிஸ்ஸா வந்துகிட்டே இருங்கப்பா……………” “சுத்த போருப்பா….. உள்ளே பேசவே விடமாட்றாங்கப்பா……….” “ஸ்மார்ட் போர்டு வச்சுருக்காங்க. ஆனால் அதுவொரு பந்தாவுக்காக வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை தான் அதில் பாடம் நடத்துறாங்கப்பா….” “ஒரு பீரியட்க்குள்ள நடத்தி விட்டு அதை அழிச்சிட்டு போயிடுறாங்க…. என்னால தொடர்ந்து முழுமையா எழுத முடியல……” இதே போல தினந்தோறும் ஏதோவொரு குற்றச்சாட்டு வந்து விழுந்து கொண்டேயிருக்கும். . கடந்த இரண்டு வருடமாக என்னுடைய முக்கியப் பணியாகப் பள்ளியில் ஆசிரியர் யார்? அவரைப்பற்றிய பின்புலம் என்ன? என்று கேட்டு படிக்க உட்காரும் போது அவர்களைப் பேச வைப்பதுண்டு. காரணம் எந்திரமாகப் படிக்க உட்காருபவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் பொருட்டுப் பல கேள்விகள் கேட்டு அவர்கள் பார்த்த உணர்ந்த அத்தனை பள்ளிக்கூடச் சம்பவங்களும் ஒவ்வொன்றாக வார்த்தைகளாக அவர்களிடமிருந்து வந்து விழுந்து கொண்டே இருக்கும். வாரத்தில் மூன்று நாட்களாகவது ஒரு விஷயம் மட்டும் தவறாமல் வந்து விழும். “மிஸ்க்குத் தெளிவா புரிய வைக்கத் தெரியலைப்பா” என்பார்கள். கொடுக்கும் நாலாயிரம் சம்பளத்திற்கு அப்படிப்பட்ட ஆட்கள் தான் கிடைப்பார்கள் என்று மனதிற்குள் நினைத்துக் கொள்வதுண்டு. பல சமயம் இது போன்ற தகுதியற்ற ஆசிரியர்களை வைத்திருக்கும் பள்ளிக்கூடத்தினால் அடிப்படை அறிவுகளை மாணவர்களுக்கு எப்படிப் புகட்ட முடியும்? என்று நினைத்துக் கொண்டே பாடங்களுக்கு வெளியே உள்ள பல விசயங்களை அவர்களுடன் கலந்துரையாடுவதுண்டு. அவர்கள் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், ஆசைகள், விருப்பங்கள் என்று ஒவ்வொன்றாக வந்து விழுந்து கொண்டேயிருக்கும். இப்போது வீட்டுக்குள் இருந்து ஒரு குரல் வரும். “இவளுக அடிக்கிற அரட்டைகளை மிஸ் கேட்டுக்கிட்டு இருந்தா அரைப்பரிட்சைக்குள் அவங்களால எப்படிப் பாடத்திட்டத்தை முடிக்க முடியும்? ” என்பார். ஆனாலும் விடாமல் அவர்களைப் பேசவைப்பதுண்டு. சமூகம் குறித்த அவர்களின் பார்வைகளைக் கவனமாக உள்வாங்கிக் கொள்வதுண்டு. என் கருத்துக்களை எந்த இடத்திலும் சொல்வதில்லை. இந்தியா குறித்து முழுமையாக இவர்களுக்கு என்ன தெரியப் போகின்றது என்று நினைத்துக் கொண்டு வீட்டில் உள்ள உலக வரைபடம், இந்திய வரைபடம், தமிழ்நாட்டின் வரைபடத்தை வைத்துக் கொண்டு பாடம் நடத்த தொடங்கிய போது அப்பா இதெல்லாம் போன வருஷமே படித்தாகி விட்டது. இந்த வருடம் நாங்கள் படிப்பது இதைப் பற்றி என்று புத்தகத்தைக் காட்டிய போது குழப்பாகவே இருந்தது. மேற்கொண்டு அது குறித்துப் பேச அவர்களின் எல்லை ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் நிறுத்தப்பட்டு இருப்பதை உணர்ந்து அமைதியாகி விடுவதுண்டு. செயல்வழி திட்டத்தை ஆதரிக்காத நமது கல்விச்சூழல் எதிர்காலத்திற்கு எந்த மாதிரியான மனிதர்களை உருவாக்கப் போகின்றது என்பதே என் கேள்வியாக இருக்கின்றது. படிப்பறிவற்ற பெற்றோர்களின் குழந்தைகள் ஆங்கில வழிக்கல்வியில் படிக்கும் போது உருவாகும் பிரச்சனைகளைத் தினந்தோறும் பார்த்துக் கொண்டேயிருக்கின்றேன். வெளிநாட்டில் வேலை. வெள்ளைக்காரன் போல உத்தியோகம் என்ற கேரட் வாயில் கட்டப்பட்டு பந்தயத்தில் ஓட வைக்கப்படுகின்றது. தற்போதைய கல்வியின் பாடத்திட்டங்கள் ஆச்சரியமளித்தாலும் கற்றுக் கொடுப்பவர்களின் தரத்தினை நினைத்து தான் கவலைப்பட வேண்டியதாக உள்ளது. காரணம் இங்கே பண வசதியிருப்பவர்களுக்கு மட்டுமே தரமான கல்வி என்றொரு நிலையை அடைந்து பல வருடங்கள் ஆகி விட்டது. ஆனால் இந்தக் கல்வி நம் குழந்தைகளுக்குத் தகுதியான வாழ்க்கையைத் தருமா? என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியவில்லை. 14 14. ஆசிரியர்கள் தரம் -- வளர்ச்சியா? வீழ்ச்சியா? சமச்சீர் கல்வி, என்ற வார்த்தை இன்று கிராமம் முதல் டெல்லி உச்ச நீதி மன்றம் வரைக்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதைப்பற்றிப் பேசுவதற்கு முன்பு வேறு சில விசயங்களைப் பார்த்து விடலாம். இந்த இடத்தில் என்னை நானே உதாரணமாக எடுத்துக் கொள்கின்றேன். 8வது வகுப்பு இறுதி வரைக்கும் நான் பெற்ற ரேங்க என்பது வகுப்பில் இரண்டாம் இடம். சில சமயம் மூன்றாவது இடம். அப்படி என்றால் வகுப்பாசிரியர் பார்வையில் நான் சிறப்பான மாணவன் தானே? ஆனால் அது தவறு? அது எப்போது எனக்குத் தெரிய வந்தது? இந்தப் பள்ளியில் இருந்து அடுத்தப் பள்ளிக்கு மாறிய போது தான் என் சுய தகுதியும், என்னுடைய அறிவும் எனக்குத் தெரிய வந்தது. எட்டாவது வகுப்பு வரைக்கும் எனக்குச் சொல்லிக் கொடுத்த எந்த ஆசிரியர்களை நான் நினைத்துப் பார்க்கும் அளவிற்கு எந்தப் பெருமையும் இல்லை. என்னவோ சொல்லிக் கொடுத்தார்கள். நானும் படித்தேன் என்கிற இந்த அளவுக்குத்தான் இருந்துள்ளது. ஆனால் முதல் பகுதியில் தினந்தோறும் படிக்கும் பாடங்களை விட, மற்ற விசயங்களைத் தான் இங்கு அதிகம் கற்றுள்ளேன். திருக்குறள், வாய்ப்பாடு, பேச்சுப்போட்டி, நாடகப் போட்டி போன்ற பல விசயங்களுக்கு ஆசிரியர்கள் எனக்கு நல்ல உந்துதலாக இருந்துள்ளனர். இதற்கு மேலாக ஒழுக்கம், பள்ளி வருகையில் கண்டிப்பு என்கிற ரீதியில் என் வாழ்க்கையின் வேராக இருந்துள்ளனர். எந்த நிர்ப்பந்தமும் இல்லை. எது குறித்தும் அச்சப்பட வேண்டியதில்லை. மொத்தத்தில் சுதந்திர வாழ்க்கையைச் சுகத்தோடு அனுபவித்து வந்துள்ளேன். கல்வி என்பது ஒரு பாரமாக இல்லாமல் அது வாழ்க்கையோடு இணைந்த ஒரு வாழ்க்கையாக வாழ்ந்துள்ளேன். கற்ற கல்வியோடு எங்கள் குடும்பத் தொழிலுக்கு உறுதுணையாக இருந்துள்ளேன். நிர்ப்பந்தம் இல்லாமல் வாழ்ந்த கல்வி வாழ்க்கையின் பலனை அடுத்தப் பகுதியில் வேறு விதமாக அனுபவித்துள்ளேன். அடுத்து ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தேன். இந்தப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக முரட்டுத்தனம் நிரம்பிய கூட்டம். ஒவ்வொரு வகுப்பிலும் அதிக மாணவர்களின் எண்ணிக்கை காரணமாகச் செக்சன் வாரியாகப் பிரித்து இருந்தார்கள். அருகில் இருந்த கிராமங்களில் இருந்து வந்து படித்த மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. படிப்பு, விளையாட்டு என்று ஒவ்வொரு விதத்திலும் ஒவ்வொரு மாணவனும் சூரர்களாக இருந்தார்கள். எட்டு வரைக்கும் படித்த பள்ளிக்கூடத்தில் பல விதங்களிலும் நான் ஹீரோவாக இருந்த நான் இங்கு ஜீரோவாக மாறிப் போனேன். நான் பெற்றுருந்த கல்வியறிவு என்று பார்த்தால் ஒன்பதாம் வகுப்புச் சென்ற போது தான் எனக்குத் தெரியத் தொடங்கியது. ஒன்பதாம் வகுப்புக்குச் சென்ற போது தான் ஆங்கிலம் என்றொரு வஸ்துவை முதன் முதலாகக் கண்டு கொண்டேன். ஆங்கிலத்தில் இலக்கணம் என்று இருக்கிறது. அது தெரிந்தால் தான் ஆங்கிலம் பேச எழுத முடியும் என்பதே இங்கு தான் எனக்குப் புரிந்தது. காலம் கடந்து பெற்ற ஞானம். ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி விட்டுச் செல்வார்கள். வேடிக்கை பார்த்துக் கொண்டுருப்பேன். தமிழ் பாடத்தைத் தவிர வேறு எந்தப் பாடங்களும் மண்டையில் ஏறினபாடில்லை. அறிவியல் போன்ற பாடங்கள் எனக்கு அறியாத விசயங்களாக இருந்தது. ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் சாதாரணத் தேர்வுகள் முதல் கால், அரைப் பரிட்சை என்று நடக்கும் எந்தத் தேர்விலும் அதிக மதிப்பெண்கள் பெற்றதே இல்லை. ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்கள் நூற்றுக்கு 20. ரேங்க் அட்டை கொடுக்கும் சமயத்தில் வகுப்பாசிரியர்கள் திட்டுவார்கள். குட்டு வாங்கிக் கொண்டு வந்து அமர்ந்து விடுவேன். பத்தாம் வகுப்பில் மொத்த மதிப்பெண்கள் என்ற ரீதியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருந்த போதிலும் அப்போது வாங்கிய ஆங்கில மதிப்பெண்கள் நூற்றுக்கு 40 என்கிற அளவுக்குத்தான். பத்தாம் வகுப்பில் பெற்ற குறைவான மதிப்பெண்களின் காரணமாக மற்ற நண்பர்கள் பாலிடெக்னிக் சென்றார்கள். நான் எப்போதும் போலப் பதினொன்றுக்குள் நுழைந்தேன். இந்தக் காலகட்டத்தில் கொஞ்சம் சுதாரிப்புத்தனம் இருந்தது. இந்த இரண்டு வருட காலகட்டத்தில் தான் உண்மையான படிப்பின் அஸ்திவாரமே எனக்குக் கிடைத்தது என்று சொல்லமுடியும். ஆனால் முழுமையாக அல்ல. அதற்கும் நானே தான் காரணம். பிராக்டிக்கல் நோட்டு, படம் வரைய வேண்டிய விசயங்களை அக்காவிடம் கொடுத்து விடுவேன். ஒவ்வொரு ஆசிரியர்களையும் நன்றாகப் பழகி வைத்திருந்தேன். அவர்கள் சொல்லும் அவர்களின் தனிப்பட்ட வேலைகளை முடித்துக் கொடுத்து விடுவேன். ஆக நான்கு அறிவியல் பாடங்களுக்கும் வரவேண்டிய ப்ராக்டிகல் மதிப்பெண்கள் சுளையாக வந்து விடும். மீதி தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே. தொடக்கம் முதல் என் எழுத்து அழகாக இருக்கும். தமிழ்மொழி வகுப்பு எனக்குப் பிடித்த காரணத்தால் நிச்சயம் அதிக மதிப்பெண்கள் வந்து விடும். மேலும் ஒன்பது முதல் 12 வரைக்கும் தமிழ் பாடத்திற்கு என்று வந்த ஆசிரியர்கள் இன்றைய இந்த எழுத்துக்கு உரமாக இருந்தவர்கள் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்குத் தமிழ் மொழியை ராகமாக, கதையாக, கட்டுரையாக அனுபவித்து நடத்தியவர்கள். கடைசியாக ஆங்கிலப் பாடம். எப்போதும் போலத் தத்தக்காபித்தக்கா என்று கோலம் போட்டுப் பாஸ் என்கிற நிலையில் பனிரெண்டாம் வகுப்பும் தேறியாச்சு. இங்கேயும் தேர்ச்சி என்கிற நிலையே தவிரச் சிறப்பான மதிப்பெண்கள் என்கிற நிலையில் அல்ல. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?. ஆனால் நான் கல்லூரிக்குள் நுழைந்த போது புத்தருக்கு கிடைத்த ஞானோதயம் எனக்குக் கிடைத்தது. கல்லூரியில் உள்ள சூழ்நிலை, சுதந்திரம், ஆசிரியர்கள், அங்கே இருந்த நூலகம் என்று இன்று வரைக்கும் எனக்குள் தீராத ஆச்சரியத்தை உருவாக்கிய கோவிலது. உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் காரைக்குடி அழகப்பா கலைக் கல்லூரிக்குள் ஒரு முறை சென்று பார்த்து வாருங்கள். ஒவ்வொரு வகுப்புறையின் விசாலம் மற்றும் மொத்த கல்லூரியின் பிரமாண்டம், மற்ற வசதிகளைப் பார்த்து ஆச்சரியப்படக்கூடும். மொத்த மூன்று வருடமும் நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. பனிரெண்டாம் வகுப்பில் எல்லாப் பிரிவுகளிலும் படித்த நண்பர்கள் கல்லூரியில் சேர்ந்தோம். இயல்பியல், வேதியியல் தொடங்கிக் கணக்கு வரைக்கும் எல்லாத்துறைகளிலும் நுழைந்தார்கள். நான் மட்டும் எளிதாக இருக்க தாவரவியல் துறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். கல்லூரிக்குள் நுழைந்த முதல் ஆறு மாதங்களில் முதல் செமஸ்டர் தேர்வு வந்தது. நான் மட்டும் தான் எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றேன். ஒவ்வொரு துறையிலும் சேர்ந்தவர்கள், என்னை விடப் பலமடங்கு பனிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண்கள் எடுத்தவர்கள் என்று அத்தனை பேர்களும் ஒரு பாடம் முதல் நாலைந்து பாடங்கள் வரைக்குக் கோடு வாங்கி இருந்தார்கள். காரணம் கல்லூரியில் அவர்களுக்கு ஆங்கில மொழியென்பது பிரச்சனையாக இருந்தது. என் வாழ்வில் கல்வி ரீதியாகப் பெற்ற முதல் பெருமை இதுவே தான். இதைக் கல்லூரி இறுதி வரைக்கும் தக்க வைத்திருந்தேன். கல்லூரி ஆசிரியர்கள் பல நிலைகளிலும் என்னுடன் நட்பு பாராட்டினார்கள். காரணம் நான் கல்லூரியில் நுழைந்த முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் மிகுந்த சிரத்தையெடுத்துப் படிக்கத் தொடங்கினேன். கல்லூரி ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்த விதம், அவர்கள் என்னுடன் பழகிய விதம் என்று என்னுடைய ஆர்வத்திற்கு எல்லா விதங்களிலும் நல்ல முறையில் தீனி போட்டார்கள். இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் லெக்சரர் பாடம் நடத்தும் போது என்னுடைய வகுப்பறையில் அப்படியே நோட்ஸ் போல் எழுதுவது மொத்த மாணவர்களில் நான் ஒருவன் மட்டுமே. பாடம் நடத்தி விட்டு லெக்சரர் வெளியே சென்றதும், என்னுடைய நோட்டை வாங்க மற்றவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள். நான் ஒருவன் கையில் கொடுத்து விட்டு சென்று விடுவேன். இதற்கு மேலாகக் கூண்டுக்குள் அடைத்து வைத்துக் கொண்டு மிரட்டி படிக்க வைக்காமல் இது சார்ந்த புத்தகங்கள் நமது நூலகத்தில் இருக்கிறது என்று கல்லூரியில் இருந்த லெக்சரர்கள் எனக்கு வழிகாட்டினார்கள். இதற்கு மேலாக ஆங்கிலத்தில் மட்டுமே படிக்க வேண்டும், எழுத வேண்டும் என்று என் மனதில் ஏற்படுத்திக் கொண்ட வைராக்கியம். புரிகின்றதோ இல்லையோ மன்ப்பாடமாக உள்ளே ஏற்றிக் கொண்டு, அது மறந்து போனாலும் மீண்டும் மீண்டும் அர்த்தம் புரிந்து கொள்ள டிக்சனரியை வைத்துக் கொண்டு அலைந்து திரிந்தது என்று ஒவ்வொன்றாக இப்போது நினைவுக்கு வந்து போகின்றது. எனது பள்ளிக்கூடக் காலகட்டங்களில் விளையாட்டு மைதானம் பக்கம் போனதே இல்லை. ஆனால் கல்லூரி காலகட்டத்தில் தினந்தோறும் காலை மாலை என்று நான் படித்தது முழுக்க முழுக்கப் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் தான். பல மணி நேரம் தவமாய்த் தவம் இருந்து இருக்கிறேன். ரயில் நிலைய நடை மேடைகளில் தொடர்ச்சியாக இருட்டு வரும் வரைக்கும் படித்து இருக்கிறேன். வீட்டில் அறிவுரை சொன்ன போதும் கேட்காமல் அலைந்து திரிந்தவனுக்குச் சுய ஆர்வம் வந்த போது அதன் வீர்யம் அதிகமாய் இருந்தது. கல்லூரியில் நடனராஜ், வடிவேல் என்ற இரு லெக்சரர்களைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இருவரும் வெவ்வேறு துருவங்கள். இவர்கள் பாடம் நடத்தும் போது மொத்த வகுப்பறையே நிசப்தமாக இருக்கும். குறிப்பாக வடிவேல் கலர் கலர் சாக்பீஸ் ல் படம் வரைந்து பாகம் குறித்து அவர் நடத்தும் விதங்களை வைத்தே அந்தப் பாடங்களை வீட்டுக்கு வந்து படிக்காமலே பரிட்சை எழுதிவிட முடியும். இன்டெர்னல் தேர்வில் இருபதுக்கு இருபது எடுத்துள்ளேன். அடுத்து எனது துறைக்கு ஆன்சிலரி பாடமாக இருந்த வேதியில் பாடம். இந்தத் துறைக்குத் தலைவராக இருந்தவர் பெயர் சீனிவாசன். பனிரெண்டு வரைக்கும் எனக்கு வேதியில் பாடம் என்றாலே பேதி போய்விடும். கணக்கு என்பதற்கு பயந்து தான் சயின்ஸ் குரூப் எடுத்தேன். பனிரெண்டாம் வகுப்பில் நான் எடுத்திருந்த சயின்ஸ் குரூப்பில் இருந்த வேதியியல் பாட சமன்பாடுகள் என்னை சல்லடையாகத் துளைத்தது. ஆனால் கல்லூரியில் சீனிவாசன் வேதியியல் பாடம் நடத்திய போது இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்க மாட்டாரா? என்று ஆர்வம் உருவானது. இவர் நடத்தும் பாடங்கள் ஒருவருக்குப் புரியவில்லை என்றால் அவனுக்கு மனக்கோளாறு என்று அர்த்தம். அந்த அளவுக்குப் பொறுமையாக எத்தனை முறை சந்தேகம் கேட்டாலும் அலுக்காமல் சொல்லி புரிய வைத்துக் கொண்டேயிருப்பார். ஆனால் இது போன்ற சுதந்திரங்கள் பனிரெண்டாம் வகுப்பு வரையில் கிடைத்ததே இல்லை. பள்ளிக்கூடத்தில் உள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் புத்தகத்தில் உள்ளதை அப்படியே ஒப்பித்து விட்டுச் செல்பவர்களாகத்தான் இருந்துள்ளனர். அவர்களின் தரம் அனைத்தும் நான் கல்லூரி வந்த போது தான் எனக்குப் புரிந்தது. திறமையானவர்கள் ஆசிரியர்களாக இல்லாத போது கல்வி மட்டும் சமச்சீராக இருந்து என்ன பலன்? ஆனால் இப்போது போலத் தொடக்கக் கல்வியில் நாற்பதாயிரம் சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் 1980 ல் இல்லை. கட்டாயம் டியூசனுக்கு வந்தே ஆக வேண்டும் என்று எந்தக் கட்டாயப் படுத்தியவர்களும் இல்லை. காமாந்த நபர்களாகவும் இருந்ததில்லை. . பனிரெண்டு வகுப்பு வரைக்கும் நான் பார்த்த ஆசிரியர்களிடத்தில் எத்தனையோ குறைபாடுகள் இருந்த போதிலும் எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் அத்தனை பேர்களும் ஒழுக்கமான ஆசிரியர்களாக இருந்தார்கள். அவர்களின் ஒழுக்க விருப்பங்கள், என் மேல் திணித்த நிர்ப்பந்தங்கள் இன்று வரைக்கும் எனக்குப் பலவிதங்களிலும் உதவி கொண்டு இருக்கிறது. இன்று என் வாழ்க்கையை இயல்பான வாழ்க்கையாக வாழ கற்றுக் கொடுத்துள்ளது. ஒவ்வொரு முறையும் போராட்டத்தில் இருந்து மீண்டும் மீண்டும் எழுந்து வர உதவியாய் உள்ளது. ஆசிரியர்களின் முக்கியத் தரமே மொத்த மாணவர்களுக்கும் முன்னுதாரணமாக இருப்பது தானே? இன்றைய காலகட்டத்தில் உங்களுக்குத் தெரிந்த ஆசிரியர்களைப் பட்டியலிட்டுப் பாருங்க. இதைப் போலவே இப்போது உங்கள் குழந்தைகளின் பள்ளியில், உறவினர்களின் குடும்பத்தில், படிக்கும் பள்ளி ஆசிரியர்களைப் பற்றி நினைத்துப் பாருங்க. வளர்ச்சியா? வீழ்ச்சியா? என்று புரியக்கூடும், 15 15. எந்திரன் உருவாக்கும் கல்வி “நானெல்லாம் அந்தக் காலத்துல எப்படிப் படித்தேன் தெரியுமா?” “எங்க தாத்தா அந்தக் காலத்துல பேசுன இங்கிலீஸ் பார்த்து வெள்ளைக்காரனே மிரண்டு போயிடுவானாம்(?)” “அரசாங்க உத்யோகத்துக்கு என்னை வீட்டுல வந்து கெஞ்சுனாங்க. எங்க வீட்டுல தான் வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க? “ இது போன்ற வசனங்களை நிச்சயம் உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் பேசக்கேட்டு கடந்து வந்துருப்பீங்க. ஆனால் இவர்கள் சொல்வதில் எத்தனை சதவிகிதம் உண்மை என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. ஒரு வேளை நம் அப்பா தாத்தா சொன்னபடி படித்து நல்ல பதவி மற்றும் பொருளோடு வாழ்ந்திருந்தால் நிச்சயம் நாம் பொருளாதார ரீதியாக இப்போது இருப்பதை விட இன்னமும் கூடக் கொஞ்சம் வளமாய் வாழ்ந்திருக்க முடியும். என்ன செய்வது? அவர்கள் பேசுவதை மட்டும் கேட்கும் சூழ்நிலையில் மட்டும் தானே வாழ்ந்திருப்போம். நான் ஒரு விசயத்தில் மட்டும் தொடக்கம் முதல் உறுதியாய் உள்ளேன். குழந்தைகளிடம் எக்காரணம் கொண்டு என் (எங்கள்) பழைய பஞ்சாங்கத்தினை அவர்களிடம் சொல்வதில்லை. குறிப்பாக என்னைப் பற்றிப் பெருமையாய் எந்த இடத்திலும் சொல்லிக் கொண்டதும் இல்லை. நான் கடந்து வந்த பாதையில் நான் பெற்ற இழப்புகளை, என் பலவீனங்களைப் பற்றி அவர்களுக்குப் புரியும் அளவிற்குச் சொல்லிவிடுகின்றேன். கல்வி ரீதியாக நான் இன்னமும் பெற்று இருக்க வேண்டிய தரத்தினை நான் ஏன் அடையவில்லை? அதன் காரணம் என்ன? போன்ற பின்புலங்களைச் சொல்கின்றேன். தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பற்றி, அதற்குப் பின்னால் உள்ள ஏமாற்றுத் தனங்களைச் சொல்லிக் கொடுக்கின்றேன். நமக்கு இருக்கும் ஆசைகளும், பிறரால் உருவாக்கப்படும் ஆசைகளுக்கும் உண்டான வித்தியாசங்களைச் சொல்லி புரிய வைக்கின்றேன். நமக்கு என்ன வருமானம்? நாம் எந்த அளவுக்கு ஒரு பொருள் மேல் ஆசை வைக்க முடியும்? அப்படி இல்லாமல் அதிகப்படியான ஆசை வைத்துப் பொருட்களை வாங்கும் எங்கெங்கு கடன் வாங்க வேண்டும்? அதன் விளைவுகள் எப்படியிருக்கும் போன்ற விசயங்களைச் சொல்லிக் கொடுக்கின்றேன். இதையெல்லாம் விடச் சிக்கனமாக இருந்தால், சேமிக்கும் பழக்கம் நம் வாழ்வில் என்ன மாறுதல்கள் உருவாக்கும் என்று நடைமுறை வாழ்க்கையை அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதோடு நாங்கள் இருவரும் குழந்தைகளுக்கு முன் உதாரணமாக இருக்க முயற்சிக்கின்றோம். இதனை இன்றுவரைக்கும் கடைபிடித்துக் கொண்டு இருக்கின்றோம். என்னைச் சார்ந்த உறவுகள், அவர்கள் வாழ்க்கை முறை, அவர்களை எப்படி அழைக்க வேண்டும்? அவர்களின் வாழ்க்கை பின்புலம் என்று நடைமுறை வாழ்க்கையைப் பற்றிச் சமயம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிவிடுவதுண்டு. காரணம் உண்டு? சென்ற (2011) கல்வியாண்டு இறுதியில் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் ஒரு சுற்றறிக்கையை வீட்டுக்கு கொடுத்து அனுப்பியிருந்தார்கள். அடுத்த ஆண்டு முதல் சிபிஎஸ்சி கல்வித் திட்டம் தொடங்குகின்றது. உங்கள் குழந்தைகளை அதில் சேர்ப்பீர்களா? என்று கேள்வியாய் கேட்டு இருந்தார்கள். வீட்டுக்கு வந்ததும் குழந்தைகள் ஆர்வமாய் என்னிடம் கொண்டு வந்து கொடுத்த போது ஒரு நொடி கூட யோசிக்காமல் நோ என்ற காலத்தில் டிக் செய்தேன். வீட்டுக்காரம்மாவுக்குக்கூடச் சற்று வருத்தம். ஏன் அந்தப் பாடத்திட்டத்தில் சேர்த்தால் பின்னால் நல்லது தானே? என்றார். ” இந்தக் கேள்வியை அப்படியே மனதில் வைத்துக் கொள். இந்த வருடம் நம் குழந்தைகள் முதல் பரிட்சை எழுதும் போது உனக்கு நாக்கு தள்ளப் போகின்றது? அப்போது நீயே புரிந்து கொள்வாய்”என்றேன். காரணம் தொடக்கம் முதல் குழந்தைகளின் பாடத்தில் பெரும்பாலும் நான் தலையிடுவதில்லை. வீட்டுக்காரம்மா பொறுப்பு என்று நான் ஒதுங்கி விடுவதுண்டு. மூன்றாம் வகுப்பு வரையிலும் இப்படித்தான் இருந்தது. காரணம் குழந்தைகளை எந்திரம் போலவே படிக்க வைத்து ஒப்பிக்க வைத்து அதைத் திருத்தி. எனக்கு எரிச்சலான சமாச்சாரம். என்ன செய்வது நம்முடைய கல்வித்திட்டம் இப்படித்தானே இருக்கிறது? ஆனால் எனக்குத் தெரியும். மூன்றாம் வகுப்புக்குச் செல்லும் குழந்தைகளின் கல்வியில் நாமும் இனி தலையிட வேண்டியிருக்கும் என்று மனதில் யூகித்து வைத்தபடியே இப்போது இரவு நேரங்களில் குறிப்பிட்ட நேரம் செலவழிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக அவர்கள் படிக்கும் பாடத்தில் உள்ள ஹிந்தி மொழிக்கு நான் மட்டும் அதிகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இது போன்ற பாடங்களுக்கு ஒழுங்கான ஆசிரியர்கள் தேவை. ஆனால் பள்ளிக்கூடங்களில் இதை ஒரு கௌரவமாகத் தான் வைத்துள்ளார்கள். எனக்கு ஹிந்தி மொழி எழுதப்படிக்கத் தெரியும் என்பதால் குழந்தைகளுக்கு உதவ முடிகின்றது. ஹிந்தி மொழியின் அடிப்படை தெரியாத பெற்றோர்களுக்கு? 40 குழந்தைகள் ஒரு வகுப்பறையில் இருக்கிறார்கள். ஒவ்வொரு வகுப்புக்கும் செக்சன் வாரியாக ஈ வரைக்கும் பிரித்து வைத்துள்ளார்கள். போட்டிகள் அதிகமாகவே இருக்கும். ஒரு வகுப்பாசிரியர் நிச்சயமாக 40 குழந்தைகளின் மேலும் தனித்தனியாகக் கவனம் செலுத்த முடியாது. ஒவ்வொரு ஆசிரியர்களும் எந்திரம் போலவே செயல்பட வேண்டியள்ளது. அவர்களைப் பொறுத்தவரையிலும் சிலபஸ் முடிக்க வேண்டும். இதைப்போலவே ஒவ்வொரு மாணவர்களும் எந்திரம் போலவே மாறி தேர்வு சமயங்களில் துப்பி விட்டு வரவேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஒவ்வொருவர் வீட்டிலும் பேசும் மொழி தமிழ்மொழி. ஆனால் குழந்தைகள் படிப்பதோ ஆங்கில வழிக்கல்வி. இப்போதுள்ள மெட்ரிகுலேஷன் சிலபஸில் உள்ள பாடங்களைப் படித்துக் குழந்தைகளைப் புரிய வைப்பதற்குள் முழி பிதுங்கி விடுகின்றது. இன்னும் அடுத்தடுத்த வகுப்புகள் செல்லும் போது எப்படி இருக்கும்? இதுவே கிராமப்புறம் சார்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் ஆசைப்பட்டு ஆங்கிலவழி கல்வி கூடங்களில் சேர்க்கின்றார்களே? அந்த மாணவர்களுக்குப் பெற்றோர்கள் எப்படி உதவ முடியும்? கேள்விகளுக்கு நன்றாகப் பதில் எழுதினால் முதல் ரேங்க். அந்தப் பாடத்தில் உள்ள விசயங்கள் புரிந்ததா? இல்லையா? அதன் மூலம் என்ன உணர்ந்து கொண்டார்கள்? போன்றவைகள் எல்லாம் இங்கே அவசிமில்லாமல் போய்விடுகின்றது. ஆனால் இந்த இடம் தான் எனக்கு முக்கியமாகப் படுகின்றது. இரண்டு நாளைக்கு ஒரு முறை வகுப்பாசிரியர் நடத்தும் பாடங்களைக் குழந்தைகளை விட்டே சப்தமாகப் படிக்க வைத்து அதன் தமிழ் அர்த்தங்களை, அந்தப் பாடம் சொல்லும் கருத்துக்களைப் புரியவைக்கின்றேன். இதனால் என்ன லாபம்? நாம் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது, ஒரு பத்தி ஒன்றை கேட்டு இடையே வெறும் கோடு மட்டும் போட்டு வார்த்தைகளை, வாக்கியங்களை நிரப்பச் சொல்வார்கள். நாம் தமிழ்வழிக்கல்வி மூலம் படித்து வந்த போது நமக்கு இருந்த ஆங்கிலப் பாடத்தில் மட்டும் தான் இப்படி வரும். மற்றபடி தமிழ்பாடங்களில் இது போன்ற கோடிட்ட இடங்களில் நன்றாகவே எழுதிவிட்டு வந்திருப்போம். ஆனால் ஆங்கிலப் பாடங்களில் நிச்சயம் ஒத்தையா ரெட்டையா என்று யோசித்து ஏதோவொன்றை நிரப்பிவிட்டு வந்துருப்போம். காரணம் அதன் தமிழ் அர்த்தம் நமக்குத் தெரியாது. நான் கண்களை மூடிக்கொண்டு சாமியை நினைத்துக் கொண்டு கீழே கொடுக்கப்பட்ட வார்த்தைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் நிரப்பி வந்து இருக்கின்றேன். ஆனால் எந்தச் சாமியும் உதவவில்லை. எல்லாமே தப்பு தான். விடைத்தாள் வரும் போது அந்தப் பகுதியில் முட்டை தான் வாங்கியுள்ளேன். ஆனால் என் குழந்தைகள் இது போன்ற விசயங்களில் அட்டகாசமாக எழுதிவிட்டு வந்து விடுகிறார்கள். காரணம் முழுமையாக அர்த்தம் புரிந்த மகிமையிது. இதை விட மற்றொரு ஆச்சரியம். குழந்தைகளுடன் படிக்கும் மற்றக் குழந்தைகளின் அம்மாக்கள் மகள்களிடம் தொலைபேசி வாயிலாகச் சந்தேகம் கேட்டு அவர்கள் குழந்தைகளுக்குப் பாடம் நடத்துகிறார்கள் இதை என்னவென்று சொல்வது? இதில் நான் பெருமைப்பட்டுக் கொள்ள ஒன்றுமில்லை. குழந்தைகளுக்கு உதவும் சூழ்நிலையில் பெற்றோர்கள் இருக்க வேண்டும். அல்லது அந்த அறிவை வளர்த்துக் கொள்ளவாவது வேண்டும். ஆனால் எத்தனை வீட்டில் பெற்றோர்கள் இதில் கவனம் செலுத்துகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி. தொலைக்காட்சி என்பது இன்று ஏறக்குறைய அனைவர் வீட்டிலும் இருக்கிறது. உங்களுக்குத் தெரிந்த ஒரு நூறு குடும்பத்தில் உள்ள பெற்றோர்களிடம் கேட்டுப் பாருங்கள். எத்தனை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிரபிக், அனிமல் போன்ற சேனல்களைப் பார்க்க உதவுகிறார்கள் என்று? நிச்சயம் இருக்காது. குறிப்பிட்ட நாலைந்து சேனல்கள் மட்டும் தான் ஓடிக் கொண்டு இருக்கிறது. பிசாசு போல் ஆட்டிப் படைக்கும் சுட்டி டிவி சேனல்களுக்குக் குழந்தைகள் அடிமையாகவே மாறியுள்ளார்கள். இது தவறல்ல என்றாலும் இதன் அளவீடுகளைப் பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு இப்போது இந்த வருடம் தான் குழந்தைகள் குறிப்பிட்ட நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் வரும் என்று சொல்லி காத்திருந்து பார்க்கும் சூழ்நிலையை உருவாக்க முடிந்தது. இது தவிர ஆங்கிலச் சேனல்களை அறிமுகம் செய்து வைத்துக் கொண்டிருக்கின்றோம். நம் குழந்தைகள் ஆங்கிலம் பேச வேண்டும் என்பதில் மட்டும் ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் ஆசை இருக்கின்றது. இதுவே பல தனியார் பள்ளிகளைக் கொள்ளை அடிக்க வைத்துக் கொண்டு இருக்கிறது. தற்போது கல்வி என்பது பெற்றோர்களுக்கு ஒரு கௌரவம் சார்ந்த விசயமாக மாறியுள்ளதால் இந்தப் பள்ளிக்கூடத்தில் என் மகள் மகன் படிக்கின்றான் என்று மற்றவர்களிடம் பெருமையாய் பேச உதவுகின்றது. சமகாலத்தில் குழந்தைகளின் உடைகள் மேல், அதுவே பெண் குழந்தைகள் என்றால் அவர்களுக்கு மேக்கப் செய்து அனுப்பவதில் அதிகக் கவனம் செலுத்தும் தாய்மார்கள் தங்களை நிறைய மாற்றிக் கொள்ள வேண்டும். இதுக்கு மேலாக அப்பாக்கள் கொஞ்ச நேரமாவது குழந்தைகளுடன் உரையாட வேண்டும். எதார்த்த வாழ்க்கையை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். அடிப்படையில் அந்தக் குழந்தைகளின் பாடங்களின், 200 மடங்கு கவனம் செலுத்த வேண்டும். காரணம் குழந்தைகளின் எதிர்காலம் என்பது உலகளாவிய போட்டிச் சூழலில் உள்ளது. இதில் பள்ளிக்கூடம், ஆசிரியர், மற்றும் குழந்தைகள் மேல் மட்டும் குறையைக் கண்டு கொண்டுருக்காமல் உண்மையான அக்கறையை நாம் தான் தொடங்கி வைக்க வேண்டும். அல்லது அந்தக் குழந்தைகள் மேல் திணிக்கும் அழுத்தத்தையாவது நாம் குறைத்துக் கொள்ள வேண்டும். காரணம் இன்று ஆங்கில வழிக்கல்வி மூலம் படிக்க வைக்கும் பெற்றோர்கள் மனதிற்குள் இருக்கும் ஆசைகளுக்கு பலிகிடா போலவே இந்தக் குழந்தைகளை படுத்திக் கொண்டிருக்கிறார்கள்? ஒரு பயிர் வளர்வதற்கே எத்தனை விதமான அக்கறையை நாம் செலுத்த வேண்டியுள்ளது. நம் குழந்தைகளின் உடல் மன ஆரோக்கியத்திற்குப் பெற்றோர்கள் தான் முழுமையான உரமாக இருக்க வேண்டும். 16 15. கல்வி கற்க காசு. காசு சம்பாரிக்கவே கல்வி “பையன் என்ன பண்றான்?” “சிங்கப்பூர்ல இருக்கின்றான்.” “அப்படியா? சந்தோஷம். நானும் ஒன்னு பெத்து வச்சுருக்கேன், மேலே மேலே படிக்கனும்ன்னு காசை கரியாக்கி எங்களைப் பாடாய் படுத்திக்கிட்டு திரியுறான்.” “பொண்ணு என்ன படிக்கிறாள்?” “ஐ.டி. படிக்கிறாள். கேம்பஸ் இன்டர்வ்யூல டாடா கம்பெனி தேர்ந்தெடுத்து இருக்காங்க. அடுத்த வருடம் பெங்களூர் போயிடுவாள்.” “சம்பளம் எவ்வளவு வரும்?” “முதல் வருடம் மாதம் 20,000 வரும்.,ரெண்டு மூணு வருஷத்துல எப்படியும் டீம் லீடர் ஆயிடுவா” “என் பையனிடம் அப்பவே சொன்னோம். கேட்டபாடில்லை. எம்.எஸ்ஸி, எம்.எஃபில் முடித்தான். இப்ப வேலை கிடைக்காமல் தனியார் பள்ளிக்கூடத்துக்கு 5000 ரூபாய் சம்பளத்துக்குப் போய்க்கிட்டு இருக்கான்.” இது போன்ற பல உரையாடல்களை நீங்கள் கேட்டு இருக்கலாம். படிக்கும் நீங்களே கூட ஒரு காலத்தில் இது போலப் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடும். மொத்தத்தில் படிப்பு என்பது சம்பாரிக்க உதவுவது. எவர் வீட்டிலாவது “அப்பா நான் படித்து முடித்தவடன் சுயதொழில் செய்யப் போகின்றேன்” என்றால் உச்சி முகர்ந்து வழியனுப்பி வைப்பார்கள் என்றா கருதுகிறீர்கள்? உதைக்க வந்து விடுவார்கள். காரணம் பயம்? எனது பிறந்த மாவட்டத்தை விட கொங்கு மண்டலத்தைப் பலமடங்கு விரும்புகின்றேன். காரணம் இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை அதற்கு மேலாகப் பணத்தை அடிப்படையாக வைத்து சிறுவயது முதலே தங்களைத் தயார் படுத்திக் கொள்ளும் விதம். அதிலும் குறிப்பாகப் பெண்கள் ஆண்களுக்குச் சமமாகவே இருக்கிறார்கள். வயதான பெண்மணிகளைப் பார்த்து வியந்து போயிருக்கின்றேன். படிப்பறிவு சுத்தமாக இருக்காது. ஆனால் மனிதர்களைப் பார்த்தவுடன், பேசுவதை வைத்தே இனம் கண்டு பிடித்து விடுவார்கள். குறி தப்பாது. தங்கள் குழந்தைகளுக்காகச் செலவழிக்கும் தொகை சொல்லி மாளாது. கௌரவம் சார்ந்தா? இல்லை உண்மையிலேயே அவர்களின் எதிர்காலம் குறித்த அக்கறையா? பல முறை குழம்பிப் போயிருக்கின்றேன். கல்வியென்பது ஒரு முதலீடு. ஷேர் மார்க்கெட் போல இருபது வருடங்களுக்குப் பிறகு டிவிடெண்ட் வரும் என்ற நினைப்பில் வாரி இறைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் முக்கால்வாசி மாணவர்களுக்குப் படிக்கும் துறை சார்ந்த படிப்பில் சிறப்பான நிலையை எட்டி இருக்கிறார்களோ இல்லையோ சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் எந்தச் செயல்பாடுகளையும் புரிந்து கொள்ளாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். யார் தலைவர்? யார் ஆட்சியாளர்கள்? நடந்து கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளில் செயல்பாடுகள், அரசாங்கம் உருவாக்கும் கொள்கைகளின் பின்விளைவுகள், சர்வதேச மாற்றங்கள், அதனால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உலகப் பொருளாதார வீழ்ச்சிகள் என்று தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இது நமக்கு அவஸ்யமில்லை. நமக்கு அரசியல் தேவையில்லாத விசயம். உலகம் மாறப்போவதில்லை. நாம் அதைப்பற்றித் தெரிந்து ஒன்றும் ஆகப் போவதும் இல்லை. இது போன்ற எண்ணங்கள் ஒவ்வொரு மாணவன் மனதிலும் ஆழமாக வேரூன்றி விடுகின்றது. காரணம் குடும்பமே அப்படிச் சொல்லித்தான் வளர்க்கின்றது. நன்றாகப் படி. நல்ல வேலையில் சேர். கல்யாணம் கட்டிக் கொள். குழந்தைகளைப் பெற்றுக் கொள். சொத்து சேர். கவனமாக இரு. எவரும் மறந்து போய்க் கூட நிச்சயம் ஒரு நாள் செத்துப் போய்விடுவோம். அக்கிரம வழியில் சென்று அழிவை தேர்ந்தெடுத்து விடாதே என்று சொல்வதில்லை. எதிலும் முந்திக் கொள் என்று சொல்லியே முழி பிதுங்கும் அளவுக்கு ஆசைகளை வளர்த்து விட்டுக் கடைசியில் அவர்களை அறியாமலேயே பிஞ்சு மனதில் நஞ்சை விதைத்து விடக் காரணமாக இருந்து விடுகிறார்கள். இது போன்ற சூழ்நிலையில் வளரும் மாணவர்கள் தான் கல்லூரியை விட்டு வெளியே வரும் போது மனதளவில் சவால்களைச் சந்திக்க முடியாத, மனச்சோர்வு அதிகம் உடைய ஒரு பொம்மை போல வந்து விடுகிறார்கள். இப்போதுள்ள சூழ்நிலையில் நான் என்ன படித்து இருக்கின்றேன் என்பதற்கும் நான் இந்தச் சமூகத்தை எப்படிப் புரிந்து இருக்கின்றேன் என்பதற்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கிறது, நீங்கள் பட்டதாரியாக, முதுநிலை பட்டதாரியாக, கணினி துறை விற்பனராக என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இதற்கு மேலாக இந்திரா நூயி போல எம்.பி.ஏ படித்துச் சிறப்பான தங்கப் பதக்கம் கூட வாங்கியிருக்கலாம். நீங்கள் படித்த படிப்பு என்பது வெறும் சான்றிதழ் மட்டுமே. அதுவொரு தகுதி மட்டுமே? அதை மட்டுமே வைத்துக் கொண்டு எந்த நிறுவனத்திலும் உங்களுக்கென்று ஒரு நிலையான இடம் கிடைத்து விடாது. பல படிகள் தாண்ட வேண்டும். ஒவ்வொரு படியும் தடைக்கல்லா இல்லை படிக்கல்லா என்பது உங்களுக்கே உங்கள் அன்றாட அனுபவங்கள் பல பாடங்கள் மூலம் புரியவைக்கும். உண்ர்ந்தால் உத்தமம். உணராவிட்டால்? வேறொன்றுமில்லை. அந்தப் பட்டங்கள் உங்கள் கல்யாண பத்திரிக்கைக்கு உதவக்கூடும். அவ்வளவு தான். நீங்கள் எந்த இடத்தில் எப்படிப் பிரதிபலிக்கின்றீர்கள் என்பதை வைத்தே இந்த வியாபார சமூகம் உங்களுக்குண்டான மரியாதையை அளிக்கின்றது. ஒருவர் பெற்ற பட்டத்தினால் மட்டும் இந்தச் சமூகம் தனியாக மரியாதை அளிப்பதில்லை. இந்தியாவைப் பொறுத்தவரையிலும் எவரும் தாங்கள் படித்து முடித்தவுடன் சுய தொழில் மூலம் நம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்போடு கல்லூரியை விட்டு வந்தவர்கள், வந்து கொண்டிருப்பவர்கள் நூற்றுக்கு ஐந்து சதவிகிதம் பேர்கள் கூட இருப்பார்களா என்பது சந்தேகமே? முதல் காரணம் நம் இந்திய ஜனநாயக கோளாறுகள். உங்களுக்கு என்ன தனித் திறமை இருக்கிறது என்பதைக் கண்டு கொள்ள மேலைநாடுகள் போல எவரும் இங்கில்லை. அதை ஊக்குவிக்கவும் எவருமில்லை. ஒன்று நீங்கள் அரசியல்வாதிகளுக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டும். அல்லது அதிகாரத்தில் இருக்கும் ஒருவருக்கு வாரிசாக இருக்க வேண்டும். மற்றபடி சராசரி குடும்பத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தன் கையே தனக்குதவி என்ற கொள்கையைக் கொண்டு தான் வாழ வேண்டும். சாதிக்க வேண்டும்.. முடிந்தவரைக்கும் போராடத்தான் வேண்டும். எவரையும் நீங்கள் குற்றம் சாட்ட முடியாது. நீங்கள் ஒருவரை கைநீட்டி பேசி முடிப்பதற்குள் உங்களைக் கடந்து பல ஆயிரம் பேர்கள் முன்னேறியிருக்கக்கூடும். நீங்கள் மேலும் காத்திருந்தால் கால வெள்ளத்தில் அடித்த சருகு போலப் பின்னால் வந்து விடக்கூடும். மூச்சு வாங்குகின்றதே என்று ஒதுங்கி நிற்கக்கூட இடம் கிடைக்காது. ஒரு வேளை நீங்கள் தட்டுத் தடுமாறி மேலேறி வந்தாலும் உங்களைக் கவிழ்க்கவென்றே கண்களுக்குத் தெரிந்த தெரியாத ஆயிரெத்தெட்டுப் பிசாசுகள் உங்களைச் சுற்றி இருக்கக்கூடும். நீங்கள் அத்தனையும் சமாளித்து உங்களை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு மேலாக அரசியல்வாதிகள். அதிகார துஷ்பிரயோகம், லஞ்சம், ஊழல் என்று உங்களை இடை விடாமல் தாக்கிக் கொண்டேயிருக்கும். சேரும் அலுவலகத்தில் உழைப்பு முக்கியமா? காக்கா பிடிப்பது அவஸ்யமா? என்பது போன்ற பல புதிய பாடங்கள் கிடைக்கும். அத்தனையும் கடந்து மேலேறி வரவேண்டும். இடைஞ்சல்களுக்கிடையே இனிமையைக் கண்டு கொள்ள வேண்டும். வீட்டில் ஒருவருக்கு நன்றாகப் பாடத் தெரியும் அல்லது ஏதோவொரு இசைக்கருவியை நன்றாக வாசிக்கத் தெரியும் என்கிற சூழ்நிலையில் யாராவது அவரை ஆகா ஓகோவொன்று பாராட்டுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்? எல்லாம் சரிப்பா? பொழைக்கிற வழியைப் பாரு. என்று சொல்லிவிட்டு அந்த ஆர்வத்தில் ஒரு புல்டோசர் மண் எடுத்து போட்டு விட்டு நகர்ந்து விடுவார்கள். ஒரே காரணம் இப்போதுள்ள சமூகத்தில் பணம் சம்பாரிக்க வேண்டும். நிறையப் பணம் வேண்டும். அதற்குண்டான வழிகளில் சென்று கொண்டு இருக்க வேண்டும். படிக்கும் படிப்பு மூலம் ஒரு பதவியை அடைய வேண்டும். அந்தப் பதவி பக்கவாட்டு வருமானத்தைக் கொடுக்கும் என்றால் இன்னமும் சந்தோஷப்படும் சமூகத்தில் தான் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். எது தவறு? எது சரி? என்பது குறித்து எவருக்கும் அக்கறையில்லை. நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவும் மற்றவர்கள் பார்வையில் ஆச்சரியம் தரக்கூடியதாக இருக்க வேண்டும். இது தான் இங்கே இப்போது முக்கியம். 17 16. கிசு கிசு முதல் கிச்சு கிச்சு வரை சமீப காலமாகப் புத்தகக் கண்காட்சி தமிழ்நாட்டில் எந்த ஊரில் நடந்தாலும் களைகட்டுகிறது. பெற்றோர்களுடன் குழந்தைகளும் ஆர்வமாகப் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் இரண்டு முறை குழந்தைகளைத் திருப்பூரில் நடந்து கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துச் சென்று நொந்து போய் வந்துள்ளேன். காரணம் ஆளுக்கொரு புத்தகங்கள் தேர்ந்தெடுத்துவிட்டு அடுத்து அவர்கள் பார்வை செல்வது உள்ளே நுழையும் போது பார்வையில் தென்படும் உணவகத்தின் மேல் தான் விழுகின்றது. அதற்குப் பிறகு அங்கே விற்கும் நொறுக்குத்தீனி வகையறாக்கள் மேல் தான் ஆர்வமாக இருக்கிறது. பள்ளிப் பாட புத்தகங்களில் ஆசிரியர்கள் எதிர்பார்ப்புக்கு மேல் சூரர்களாக இருக்கிறார்கள். ஆனால் மற்றப் புத்தக வாசிப்பில் அந்த அளவிற்கு ஆர்வத்தைக் கொண்டு வர பாடுபட்டுக் கொண்டுருக்கின்றோம். காரணம் ஆசிரியர்கள் மற்றும் நம்முடைய கல்விமுறை. படித்துத் துப்பினால் போதும் என்கிற சூழ்நிலை தான் முக்கியக் காரணமாக இருக்கிறது. என்னுடைய பார்வையில் நான் பார்த்து வந்த ஆசிரியர்கள் போலவே என் குழந்தைகளின் ஆசிரியர்களும் இருக்கிறார்கள் என்பதை உறுதியாகவே சொல்லமுடியும். என்ன காரணம்? எனது இளமைப்பருவத்தை நினைத்துப் பார்க்கும் போது பாடப்புத்தகங்களைத் தவிர வேறெந்த புத்தகங்களும் தேவையில்லை என்பதாகக் கருதிக் கொள்ளும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிவுரையைக் கொண்டு தான் வாழ்ந்து வந்திருக்கின்றேன். கல்லூரி சென்ற பிறகே நூலகத்தில் நாம் படிக்கும் படிப்புச் சம்மந்தப்பட்ட புத்தகங்களையும் தேடிப் படிக்க வாய்ப்புண்டு என்பதைப் புரிந்து கொண்டேன். பள்ளி இறுதி வரைக்கும் எந்த ஆசிரியரும் நூலகத்தின் அருமை பெருமைகளைச் சொன்னதே இல்லை. காரணம் அவர்களும் நூலகம் பக்கம் தலைவைத்துப் படுப்பதும் இல்லை. பள்ளியில் நூலகம் என்றொரு பகுதி இருக்கிறது என்றார்கள். ஆனால் கடைசிவரைக்கும் எந்த மாணவனும் அந்த இடத்திற்குள் நுழைந்ததும் இல்லை, உள்ளே என்ன இருக்கிறது என்பதை எவரும் கண்ணால் கண்டதும் இல்லை. பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களைப் போலவே மற்றக் கதை, கட்டுரை மற்றும் பத்திரிக்கைகளை எப்போது முதல் முதலாகப் படிக்கத் தொடங்கினோம்? என்பதை எப்போதாவது நினைத்து பார்த்து இருக்கீங்களா? எங்கள் வீட்டில் அப்பா கடைசிவரைக்கும் தினமணி மட்டுமே வாங்கினார். வேறு எந்தப் பத்திரிக்கைகளும் வராது. அவர் பார்வையில் மற்றப் பத்திரிக்கைகள் அத்தனையும் காசைப் பிடித்த கேடு. ஆனால் நான் அந்தத் தினமணியை தொட்டுக் கூடப் பார்க்க விரும்பதில்லை. எங்கே பார்த்தாலும் வெறும் எழுத்தாகவே இருக்கும். அதுவும் கவர்ச்சியற்ற அந்த வெள்ளை நிற படங்கள் அழுது வடிந்து கொண்டிருக்கும். வீட்டில் மற்றச் சகோதர சகோதரிகளும் தினமணியைத் தொட மாட்டார்கள். ஆனால் பக்கத்து வீடுகளில் இருந்து வரும் குமுதம், ஆனந்த விகடன் இது தவிர நூலகத்தில் இருந்து எடுத்து வரும் கதைப் புத்தகங்கள் தான் எங்களுக்குத் தீனி போட்டது. இதைத்தவிரப் பொழுது போக்கு என்பது இலங்கை வானொலி நிலைய பாடல்கள். முதன் முதலாகக் கூட்டுக்குடித்தனமாக இருந்த பழைய வீட்டிலிருந்து மாறி ஊருக்குள் கடைவீதிக்கு அருகே இருந்த வீட்டுக்குள் நாங்கள் மாறி வந்த போது தான் எனக்கு வெகுஜன பத்திரிக்கைகள் அறிமுகமானது. வீட்டில் இருந்து 200 அடி தொலைவில் கடை வீதிகள் ஆரம்பமாகும். கடைவீதி என்றதும் பெரிதாகக் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். . ஒரு பிள்ளையார் கோவில். எதிர்புறம் பெரிய குளம். அந்தக் குளத்தின் நான்கு புற கரையின் மேல் வரிசையான கடைகள். இது தான் மொத்த கடைவீதியே. ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்குள் வீட்டில் கட்டாயம் அனைவரும் எழுந்து விட வேண்டும். இது நிரந்தரச் சட்டம். ஆனால் எழுந்தவுடன் என்னுடைய பார்வை வேறொரு பக்கம் செல்லும். வாசலில் உட்கார்ந்து கொண்டு அங்கேயே பார்த்துக் கொண்டிருப்பேன். பேப்பர்கட்டுகள் பேருந்தில் வந்து இறங்கியதை உறுதிப்படுத்தியவுடன் என் கால்கள் அங்கே செல்லத் துவங்கும். பேருந்து நிலையம் அருகே மாணிக்கம் டீக்கடை. அதிகாலை 5 மணிக்கே திறந்து விடுவார்கள். அடுத்தக் கடை முடிதிருத்தும் கடை. அடுத்தது சோலை பெட்டிக்கடை. கடைசியாக அண்ணாமலையண்ணன் மளிகைக்கடை. தினந்தந்தி, தினமலர், தினகரன் என்று இந்தக் கடைகளுக்கு தினந்தோறும் வந்து விடும். காலை ஆறு மணி முதல் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் இந்தப் பத்திரிக்கைகளை கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்து நிச்சயம் வாசித்து விடுவேன். பல பெருசுகளிடம் திட்டு வாங்கியதும் உண்டு. முக்கியமாகப் பத்திரிக்கைகளில் வரும் திரைப்பட ப்ளோ அப், நடிகர், நடிகைகள் சம்மந்தப்பட்ட கிசு கிசு சமாச்சாரங்களைத் தான் முக்கியத்துவம் கொடுத்துப் படிப்பேன். காரணம் இந்த விசயங்களைப் படித்து மனதில் ஏற்றிக் கொண்டால் தான் அன்று சாயங்காலம் கூடும் நண்பர்களுடன் தெருவோர பாலத்தில் அமர்ந்து பேசும் போது கதையளக்க வசதியாக இருக்கும். நடிகைகள் சம்மந்தப்பட்ட விசயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி பாதிக் கற்பனைகளை சேர்த்துக் கொண்டு அவர்களின் படுக்கையறையை நான் எட்டிப் பார்த்தது போலவே சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமில்லாமல் நண்பர்களுக்குச் சொல்லி கிலியை உருவாக்கி விடுவதுண்டு.. இந்த வாசிப்புப் பயணம் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையன்றும் நூலகம் போக வைத்தது. ஊரில் நூலகமென்பது வீட்டுக்கு அடுத்தச் சந்தில் இருந்தது. அதுவொரு பழங்காலத்து செட்டியார் வீட்டின் பின்புற பகுதி. இந்த நூலகத்திற்கென்று மிகக் குறைந்த வாடகையில் ஒதுக்கி கொடுத்திருந்தார்கள். வெளியே சுவற்றில் நூலக ஆணைக்குழு என்று நீல நிற தகரத்தில் சிறிய அளவில் ஒரு போர்டு மாட்டியிருந்தார்கள். நூலகம் இருந்த சந்தின் வழியாகப் பலமுறை நான் சென்று இருந்த போதிலும் இந்த நூலகத்தை நான் கவனித்தது இல்லை. அந்த வீட்டையும் உள்ளே இருப்பவர்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே போயிருக்கின்றேன். வயதானவர்கள் உள்ளே உட்கார்ந்து படித்துக் கொண்டு இருப்பார்கள். சில சமயம் பல அக்காக்கள் உள்ளே சென்று விட்டு வெளியே வரும் போது சில புத்தகங்களைக் கையில் எடுத்துக் கொண்டு போவதையும் பார்த்து இருக்கின்றேன். தயங்கி தயங்கி வேடிக்கை பார்த்தபடி உள்ளே போகப் பயந்து கொண்டு நாட்களைக் கடத்தியிருக்கின்றேன். . நூலகம் குறித்த விபரம் புரிந்த போது நாம் சிறுவனாக இருக்கிறாமோ? உள்ளே விடுவார்களா? என்று யோசித்தபடியே வாசலில் நின்று எட்டிப் பார்த்தபடி மீண்டும் வீட்டுக்கே வந்து விடுவேன். ஒரு நாள் சற்றுத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து விறுவிறுவென்று பத்திரிக்கைகள் வைத்திருக்கும் அந்தப் பெரிய மேஜைக்குச் சென்ற போது உள்ளே அமர்ந்திருந்த ஒருவர் சப்தம் போட்டு என்னை அழைத்தார். பயந்து கொண்டே உள்ளே சென்ற போது கையெழுத்து போட்டாயா? என்று கேட்டார். அப்போது தான் புரிந்தது உள்ளே வருபவர்கள் வாசலருகே வைத்திருக்கும் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன். அன்று முதல் தைரியமாக நூலகப் பயணம் தொடங்கியது. முதல் நோக்கம் அங்கேயிருந்த அம்புலிமாமா. அதன்பிறகு ஒவ்வொன்றாக அறிமுகமாக உள்ளே வரும் அத்தனை பத்திரிக்கைகளையும் காலை எட்டு மணி முதல் மூடும் நேரமான 12 மணி வரைக்கும் வாசித்து முடித்து விடுவதுண்டு. மறுபடியும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணிக்கும் விட்ட குறை தொட்ட குறையாக இருக்கும் ராமகிருஷ்ண விஜயம் போன்ற தனிச்சுற்று புத்தகங்களையும் வாசித்து விடுவதுண்டு. அங்கு வரும் எவருமே தொடாத பல புத்தகங்களையும் படித்து விடுவதுண்டு. புரியுதோ இல்லையோ அதென்னவோ வாசிப்பென்பது ஒரு வெறி போலவே எனக்குள் உள்ளே ஓடிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு ஞாயிறன்றும் தவறாமல் போய் அந்த ஒரு வார புத்தகங்களையும் ஒரு கை பார்த்து விட்டு வருவதுண்டு. மெதுமெதுவாக நூலகரிடம் சிநேகம் பிடித்து உள்ளே அறைக்குள் செல்லும் அளவுக்குப் பழக்கத்தையும் உருவாக்கிக் கொண்டேன். எனக்கு அத்தனையும் இலவசமாக வாசிக்கக் கிடைக்கிறது என்பது தான் முக்கியக் காரணமாக இருந்தது. காரணம் இது போன்ற புத்தகங்களை வெளியே எங்கேயும் வாங்கவும் முடியாது. ஊருக்குள் புத்தக விற்பனை என்று எங்குமில்லை. இப்போது கடைகளில் தொங்குவது போல எங்கேயும் பார்த்ததும் இல்லை. அப்போதுள்ள சூழ்நிலையில் என் கையில் ஐந்து பைசா தேறினாலே ஆச்சரியம். பத்துப் பைசா தேற்றிவிட்டால் அதிகபட்சமாகத் தேன் மிட்டாய் இரண்டு வாங்கித் தின்பது தான் உச்சக்கட்ட சந்தோஷமாக இருக்கும். தேவையில்லாமல் வீட்டில் காசு கேட்க முடியாது. எது தேவையோ அது வீட்டுக்கே வந்து விடும். ஊரிலிருந்த ஜெயசெல்வாம்பிகை என்ற கீற்றுக் கொட்டகை சினிமா தியேட்டரில் வருடத்திற்கு ஒரு படம் பார்த்தால் ஆச்சரியம். வேறு எந்தப் பொழுது போக்குக்கும் வாய்ப்பில்லை. எவரிடமிருந்தாவது புத்தகங்கள் வாங்கினால் வீட்டுக்கும் கொண்டு போக முடியாது. வீட்டில் இருந்தால் பாடப்புத்தகங்களைத் தவிர வேறு எதுவும் படிக்க முடியாது. விடுமுறை நாட்களில் பகல் நேர அரட்டையின் போது நண்பர்களுடன் பேச இந்த வாசிப்பு அனுபவம் பல விதங்களிலும் எனக்குதவியது. தெரிந்தது, தெரியாதது என்று பாரபட்சம் இல்லாமல் கலந்து கட்டி பேச உதவியது. இந்தப் பழக்கம் பனிரெண்டாம் வகுப்பு வருவதற்குள் எனக்குள் பல தாக்கத்தை உருவாக்க உதவியது. என்னை விட வயதான நபர்களுடன் பேச உதவியது. நூலகத்தில் உள்ள வெளிப்பகுதி பத்திரிக்கைகளைப் படித்து முடித்து உள்ளே வரிசைக்கிரமமாக அடுக்கி வைத்திருந்த பைண்டிங் புத்தகங்கள் மேல் பார்வை சென்றது. அதற்குப் பணம் கட்ட வேண்டும் என்ற போது நானும் சகோதரிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரும் மூன்று உறுப்பினர் அட்டை வாங்கிக் கொண்டு புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து வரத் தொடங்கினோம். ஆனால் அப்பாவின் பார்வைக்கு இது தெரியாத அளவுக்கு ஒவ்வொருவரும் கவனமாக இருந்தோம். அப்பாவைப் பொறுத்தவரையிலும் பாடப்புத்தகங்களைத்தவிர வேறு எதையும் படிக்கக்கூடாது. கெட்டுப் போய்விடுவார்கள். கல்லூரி முடிப்பதற்குள் தமிழகத்தில் பிரபலமாக இருந்த அனைவரின் எழுத்துக்களையும் வாசித்து முடித்திருந்தேன். இறுதியாகப் பாலகுமாரன், சுஜாதா அளவுக்கு வந்து நின்றது. தாடி வைத்துக் கொண்டு மாறிய பாலகுமாரன் என்னை விட்டு ஒதுங்கிப் போய்விட இறுதியாகச் சுஜாதா மட்டுமே மிஞ்சினார். திருப்பூருக்குள் வந்து முதல் பத்தாண்டுகள் கடலில் கரைத்த பெருங்காயம் போலவே வாழ்க்கை மாறிவிட வேறொரு புத்தகத்தைப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. உயிருள்ள புத்தகங்கள். மனிதர்கள், அனுபவங்கள், சோகம், துக்கம், வலி, வேதனை, ஆச்சரியம், பொறாமை, உழைப்பு என்று ஒவ்வொரு மனிதரும் ஒரு கதாபாத்திரமாக இருந்து உருப்படியான அனுபவங்களை எனக்குத் கற்றுத் தந்துள்ளார்கள். வாசிப்பு என்பது மாறி கவனித்தல் என்ற நிலைக்கு வாழ்க்கை மாறியது. இந்தப் பயணத்தின் இறுதியாகக் கடந்த நாலைந்து ஆண்டுகளில் கட்டுரை சார்ந்த புத்தகங்களை மட்டுமே படிக்கும் அளவுக்குச் சிந்தனை வளர்ந்துள்ளது. கதைப் புத்தகங்கள் படித்து ஏறக்குறைய 15 வருடங்கள் ஆகிவிட்டது. 32 வயதில் தொழில் ரீதியாக அலுவகத்தில் இணையம் அறிமுகமானது. ஆனால் இன்று எங்கள் குழந்தைகள் எட்டு வயதில் இணையத்தைக் கையாள்கிறார்கள். இன்று வரை பல ஆச்சரியங்களை எனக்குத் தந்து கொண்டிருக்கிறார்கள். நன்றாகக் கவனித்துக் கொள்ளவும். நான் எதுவும் அவர்களுக்குக் கற்றுத் தந்ததே இல்லை. வாய்ப்புகளை மட்டுமே உருவாக்கிக் கொடுக்கின்றேன். அதன் மூலம் அவர்களாகவே அடுத்தடுத்த படிகளை கடந்து சென்று கொண்டு இருக்கிறார்கள். குறிப்பிட்ட விசயத்துடன் நின்று விடும் எனக்கு அவர்களின் தற்போதைய கணினி அறிவு பல சமயம் பயத்தை உருவாக்குகின்றது. அவர்கள் கேட்கும் பாதி விசயங்கள் எனக்குப் புரியாது அல்லது தெரியாது. நைஸாகத் தப்பிச் சென்று விடுவேன். திரும்பி வரும்போது இது தான் இப்படித்தான் என்று விளக்கும் போது சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டு நகர்ந்து விடுவதுண்டு. ஆனால் இவர்களைப் பலமுறை புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துச் சென்று உள்ளேன். ஆர்வமாகப் பல புத்தகங்களை வாங்கிக் கொண்டு வருவார்கள். ஆனால் வீட்டுக்கு வந்ததும் அதைச் சீண்டக்கூட மாட்டார்கள். ஏதோவொரு மூலையில் அனாதையாகத் தூசி அடைந்து கிடைக்கும். கடந்த இரண்டு வருடங்களாக இப்படித்தான் இருந்துள்ளார்கள். பலமுறை மாற்ற முயற்சித்துள்ளோம். இந்த வருடம் தான் (2012) தமிழ் ஆங்கிலப் புத்தகங்களை ஆர்வமாக வாசிக்கத் தொடங்கி உள்ளார்கள். தினந்தோறும் காலையில் தமிழ் பத்திரிக்கைகளை வாசிக்கும் அளவுக்குக் கொண்டு வந்துள்ளோம். கடந்த 20 ஆண்டுகளில் காசு கொடுத்து நான் வாங்கிய புத்தகங்கள் மட்டும் ஏறக்குறைய ஆயிரம் இருக்கலாம். மாறிய இடங்களால் இன்று என் கையில் இருப்பது நூற்றுக்கணக்கான புத்தகங்கள் மட்டுமே. நான் வைத்துள்ள பலவிதமான புத்தகங்களைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைத்த போதிலும் முழுமையாக அவர்களால் தங்களைப் புத்தகங்களுடன் ஈடுபடுத்திக் கொள்ள முடிவதில்லை. காரணம் தொலைக்காட்சி. முதல் இருபது வருடத்தில் நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதையும் பார்த்தது இல்லை. ஊருக்குள் ஒரே ஒரு முஸ்லீம் வீட்டில் மட்டும் தொலைக்காட்சி இருந்ததாக ஞாபகம். நண்பர்களுடன் அங்கே சென்ற போது கூடியிருந்த கூட்டத்தின் காரணமாக எவரையும் அவர்கள் உள்ளே விடவில்லை. இது போன்ற காரணங்களினால் எனக்கு இருந்த ஒரே வாய்ப்பு வாசிப்பு மட்டுமே. ஆனால் இன்று குழந்தைகளுக்கு வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. அதிகமான சுதந்திரத்தை கொடுத்துள்ளோம். எதை வேண்டுமானாலும் பேசலாம் என்கிற அளவுக்கு அவர்களை ஆர்வமூட்டி அவர்களின் கேள்விக்கணைகளைப் பொறுமையாக நான் மட்டுமே கையாள்கின்றேன். நான் ஒவ்வொரு நாளும் வீட்டுக்குள் நுழையம் போது அவர்களின் ஆர்வம் கரைபெருக்கெடுத்து ஓடும். மனதில் உள்ள மொத்த கவலைகளை வாசலருகே விட்டு விட்டு அவர்களின் கேள்விகளை எதிர் கொண்டே உள்ளே வருவேன். “கண்டதையும் அவள்களுக்குச் சொல்லி அவர்களை மேலும் மேலும் வாயாடியாக மாற்றிக் கொண்டுருக்கீங்க” என்று மனைவி கோபித்துக் கொண்ட போதிலும் நான் கண்டு கொள்வதில்லை. சுட்டி டிவி, கார்டூன் என்று தொடங்கி டிஸ்கவரி வரைக்கும் கலந்து கட்டி பார்க்கிறார்கள். தொடக்கத்தில் தொலைக்காட்சியின் மேல் பைத்தியமாகத்தான் இருந்தார்கள். நிறைய கவலைப்பட்டுள்ளேன். இதன் காரணமாக வீட்டுக்காரம்மாவுடன் நிறைய வாக்குவாதம் வந்துள்ளது. பள்ளிக்கூடத்திற்குத் விடுமுறை என்றாலோ ஞாயிற்றுக் கிழமை தினங்களில் முழுக்கத் தொலைக்காட்சியே கதியேயென்று கிடப்பார்கள். கோபத்தில் ஒரு மாதம் ஒயரை பிடுங்கி வைத்துள்ளேன். இது மேலும் ஆர்வத்தைத் தூண்டும் என்பதைப் புரிந்து கொண்டு வெளியே அழைத்துச் செல்லத் துவங்கி அவர்களின் மனோநிலையை மாற்றத் தொடங்கினேன். அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடம் வீட்டுக்கு அருகே இருப்பதால் ஞாயிறன்று பள்ளிக்கூட விளையாட்டு மைதானத்தில் கொண்டு போய் விட்டு விடுவதுண்டு. சிறகடித்துப் பறப்பார்கள். இப்போது குழந்தைகளின் தொலைக்காட்சி ஆர்வம் சற்று மாறியுள்ளது. குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை மட்டும் பார்க்கும் அளவுக்குப் புரியவைத்துள்ளேன், அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்கியுள்ளோம். பார்க்கத் தொடங்கும் போதே குறிப்பிட்ட நேரத்தை சொல்லி அவர்களாகவே அதை விட்டு வெளியே வர பழக்கியுள்ளோம். இப்போது பள்ளிக்கூடத்தில் இருந்து கொடுக்கும் பொது அறிவு சார்ந்த கேள்வி பதில்களுக்கு இணையத்தில் தேடுவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுத்துள்ளேன். தொலைக்காட்சி பார்ப்பது இன்னமும் குறைந்துள்ளது. கணினியில் சிறப்பாகப் படம் வரைய கற்றுள்ளார்கள். சமீபகாலமாக ஆன்லைன் விளையாட்டுகளைத் தானாகவே கற்றுக் கொண்டு ஒவ்வொரு படியாக மேலேறிக் கொண்டு இருக்கிறார்கள். பெரிய அட்டைகள் வாங்கிக் கொண்டு வந்து ஓய்வு நேரங்களில் படம் வரைய ஆர்வமூட்டிய காரணத்தால் இன்று மூலைக்கொருவராய் கலர் பென்சில்களை வைத்துக் கொண்டு தங்களுக்குத் தெரிந்த படங்களை வரைந்து கொண்டு இருக்கிறார்கள். தொலைக்காட்சியில் நான் எப்போதும் பார்க்க விரும்புவது தமிழ் ஆங்கிலச் செய்தி சேனல்களை மட்டுமே. இருவர் மட்டும் என்னுடன் அரசியல் குறித்துப் பேசும் அளவுக்கு வளர்ந்துள்ளார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாகச் சேனல் வைத்துக் கொண்டு போட்டி போட்டு லாவணி கச்சேரி நடத்திக் கொண்டிருப்பதால் மண்டை விண்விண் என்று தெறிக்க வடிவேல் காட்டும் கிச்சுசிச்சுக்களை மட்டுமே கிடைக்கும் குறுகிய நேரத்தில் பார்த்து சிரித்து மகிழ்கின்றேன். குழந்தைகளும் வந்துட்டான்ய்யா………. என்று கத்துகின்றார்கள். 18 17. நான் திருந்த போவதில்லை. நான் வீட்டுக்குள் நுழைந்த போது மூவரில் ஒருவர் வேகமாக ” அப்பா வந்துட்டார்…..” என்று கத்திக் கொண்டே என்னை நோக்கி ஓடிவந்தார். சந்தின் முனையில் வீடு இருப்பதால் திடீர் என்று வாகனங்கள் எதிர்பாராத விதமாக உள்ளே வந்து விடும். பலமுறை எடுத்துச் சொல்லியும் குழந்தைகளுக்குப் புரிவதில்லை. மனைவி ஏற்கனவே ஒரு நாள் போராட்டத்தில் அலுத்துப் போய் வாசல்படியில் அக்கடா என்று அமர்ந்திருப்பார். இவர்களை அன்றாட வீட்டுப் பாடங்களை எழுத வைத்து முடிப்பதற்குள் மனைவியின் முழி பிதுங்கி போயிருக்கும். அடுத்து படிக்கத் தொடங்க வேண்டும். மூவரும் சாதாரண நபர்கள் அல்ல. ஒருவருக்கு ஒருவர் சரியான போட்டி. யார் யாரை எந்தக் காரணம் கொண்டு மாட்டி விடலாம் என்ற பட்டி மன்றமே நடக்கும். இதற்கிடையே இவர்கள் பள்ளியில் தினந்தோறும் தொலைத்து விட்டு வந்த பென்சில் கதை என்று தனியாக உள்ளது.. “வாரத்திற்குப் பத்துப் பென்சில் தொலைப்பது இவர்களாகத்தான் இருக்கும்” என்று. பல முறை புலம்பியிருக்கின்றேன் இவர்களுடன் படிக்கும் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மாணவி வாங்கியிருப்பாள். இவர்களும் மறந்து போயிருப்பார்கள். அப்படியே வந்து இங்கே திட்டு வாங்கிக் கொண்டு இருப்பார்கள். மறுநாள் போய்க் கேட்க வேண்டும் அதை வாங்கிக் கொண்டு வர வேண்டும் என்று தோன்றாது. அது தான் உள்ளே ஸ்டாக் இருக்கிறதே? அதில் ஒன்று எடுத்துத் தாங்க என்று சட்டம் பேசுவார்கள். மீறிப் பேசினால் தந்தால் எழுதுகின்றேன். இல்லாவிட்டால் நீங்க தான் பொறுப்பு என்று மிரட்டல் வேறு. நான் பலமுறை பார்த்துக் கொண்டு சிரித்துக் கொண்டே வெளியே வந்து விடுவதுண்டு. காரணம் இதுவொரு தொடர்கதை. இவர்களை அடக்க முடியாமல் வாசல்படியில் “எக்கேடோ கெட்டு ஒழிங்கடி………..”. என்று கத்திப்பார்த்து விட்டு நான் வீட்டின் உள்ளே நுழையும் போது மனைவி தேமே……. என்று அவர்கள் நடவடிக்கைகளை வெறுப்போடு வேடிக்கை பார்த்துக் கொண்டுருப்பாள். ஒருவர் வண்டியை நிறுத்துவதற்குள் முன்புறம் நின்று கொண்டு டயருக்கு குறுக்கே காலை வைத்துக் கொண்டு நிற்க அடுத்தவர் பின் சீட்டில் ஏற, கடைக்குட்டி என் காலின் வழியே தொற்றிக் கொண்டு மேலே ஏற முயற்சிக்க என் பாடு திண்டாட்டமாகி விடும். இன்ஜின் சூடு கை கால்களில் பட்டு விடுமோ? என்று பதட்டமாக இருக்கும். நான் குழந்தைகளைத் திட்டாமல் மனைவியைத் திட்டினாலும் மனைவி வேண்டுமென்றே அப்படியே எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருக்க நான் பலமுறை தடுமாறி போவதுண்டு. நான் பைக்கை வீட்டுக்குள் நிறுத்துவதற்குள், பைக்கில் ஏற முயற்சித்துக் கொண்டே “அப்பா ஒரு ரவுண்டுப்பா…….” என்பார்கள். இப்போது இரண்டு பிரச்சனைகளை நான் சந்திக்க வேண்டும். ரவுண்டு அடிக்க வேண்டும். அடுத்து மூவரில் ஒருவர் பள்ளியில் இருந்து கொண்டு வந்துள்ள புகாரை கேட்டே ஆக வேண்டும். இல்லாவிட்டால் நான் வீட்டுக்குள் நுழைவதற்குள் ஒரு பெரிய ரணகளமே நடந்து முடிந்து விடும். இந்த இடத்தில் தான் நான் பொறுமையாக இருப்பேன். குழந்தைகளை அடக்க முடியாது. காலையில் இருந்து அடுத்த 12 மணி நேரம் பிரிந்து இருந்த நேரத்தில் அவர்கள் பள்ளியில் சந்தித்த பிரச்சனைகளை என்னுடன் பேச வேண்டும் என்று விரும்புகிறார்கள். நான் வெளியே சந்தித்த பிரச்சனைகளை அதனால் உருவான மன அழுத்தம் குறித்து அவர்களுக்குப் புரியாது. என் சிறுவயதில் ஒவ்வொரு நாளும் அப்பா கடை மூடியதும் இரவு நேரம் வீட்டுக்குள் நுழையும் போது நாங்கள் தூங்கியிருக்க வேண்டும். வீட்டில் இருந்த பல சட்டங்களில் இதுவும் ஒன்று. நாங்கள் அவர் வரும் போது காச் மூச் என்று எங்களின் சப்தம் கேட்டால் அம்மா வாங்கும் திட்டுக்களைப் பல முறை கேட்டுள்ளேன். சில சமயம் எங்களை நோக்கி திட்டுக்கள், மிரட்டல்கள் வரும். அதென்னவோ அப்பாவுக்குப் பிள்ளைகள் என்றாலே ஒழுக்கமாக இருக்க வேண்டும். படிக்க வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும். வேண்டும்…. வேண்டும் என்றொரு ஆயிரத்தெட்டுக் கட்டளைகள். ஆனால் நான் வளர்க்கும் குழந்தைகள் என் வேண்டுதல்கள் எதனையும் நிறைவேற்ற தயாராய் இல்லை என்பதோடு எகிறத் தொடங்கியும் விடுகின்றார்கள். மனைவியிடம் கிடைக்காத சுதந்திரம் என்னிடம் அதிக அளவு கிடைப்பதே முக்கியக் காரணம். என்னை மனைவி பலமுறை குற்றவாளி கூண்டில் நிறுத்துவார். அவளின் தீர்ப்பை வாய்தா கேட்காமல் வாங்கிக் கொண்டு இருக்கின்றேன். ஆனால் அவர்கள் நான் வீட்டுக்குள் நுழைவதற்குள் என்னுடன் பள்ளிக்கூட விசயங்களைப் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் பைக்கை வீட்டுக்குள் கொண்டு வர விடாமல் நிறுத்தி வைத்து பேசத் தொடங்கி விடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் மனைவி கத்திக் கொண்டே பின்னால் வந்த போதிலும் மூவரையும் அடக்க முடிவதில்லை. பத்து நாட்கள் பிரிந்து வெளியே சென்று வந்தவனை எதிர்பார்ப்போடு காத்திருந்து பார்ப்பது போலத் தினந்தோறும் இப்படித்தான் நடக்கின்றது. பைக்கை விட்டு இறங்குவதற்குள் அவர் சொல்ல வேண்டிய விசயத்திற்காக ரோட்டிற்கே வந்து பேசத் தொடங்கி விடுகிறார்கள். . மனைவி பேசிக்கொண்டிருக்கும் ஒருவரை தரதரவென்று இழுத்துக் கொண்டே சென்றாலும் “நான் அப்பாவிடம் சொல்லிவிட்டு அப்புறம் வருகின்றேன்….” என்று ஆர்ப்பாட்டம் தொடங்கி விடுகின்றது. நான் சாலையிலேயே வண்டியை நிறுத்தி விட்டு மனைவியை அடக்கி விட்டு ஒவ்வொருவரையும் அழைத்து ” என்னம்மா? சொல்லும்மா? ” என்றதும் ஒருவர் அழுது கொண்டே பேசத் தொடங்குவார். “அப்பா இன்றைக்கு நான் கொண்டு போன ஸ்நாக்ஸை ஹேமா புடுங்கித் தின்று விட்டாள்? “ இது தான் பிரச்சனை. நான் வீட்டுக்குள் வந்து உட்கார்வதற்குக் கூட அவர்களுக்குப் பொறுமை இல்லை. நிச்சயம் பள்ளி விட்டு வந்தவுடன் அம்மாவுடன் பேசியிருப்பார்கள். ஆனால் இதன் முக்கியத்துவத்தை உணராமல் “சரிடி….என்று அடக்கியிருப்பார். இவர்களும் மீற முடியாமல் நான் வந்ததும் பொங்கி விடுகிறார்கள். மொத்தத்தில் அவர்களுக்குத் தீர்வு வேண்டும் அல்லது அவர்களை நான் தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டு கேட்டேன் என்ற அவர்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். நானும் நடந்த சம்பவங்களைப் பொறுமையாகக் கேட்டு விட்டு, “சரி நாளை நானே வருகின்றேன். உங்க மிஸ்ஸிடம் கேட்டு பிரச்சனையை முடித்து வைக்கின்றேன்” என்று சொன்னபிறகே ஆசுவாசம் ஆவார்கள். இதுபோன்ற சமயங்களில் மனைவிக்குப் பொறுமை எல்லை மீறி முதுகில் இரண்டு மொத்த ஆலைச்சங்கு போல அலறல் தொடங்கும். நான் யாருக்கு ஆதரவு என்பது இப்போது முக்கிய விவாதமாக இருக்கும். நான் குளியல் அறைக்குள் புகுந்து விடுவேன். அழுது ஆர்ப்பட்டம் முடிந்தவுடன் கதையைக் கேட்கத் தொடங்கி அவர்கள் மனதை மாற்றிய பிறகு போர் முடிந்த அமைதி வீட்டில் உருவாகும். குழந்தைகள் முதன் முதலாகப் பள்ளிக்குச் செல்லத் தொடங்கிய போது ஸ்நாக்ஸ் டப்பா வாங்க வேண்டும் என்று மனைவி சொன்னார். எனக்குப் புரியவில்லை? “அதென்ன ஸ்நாக்ஸ் டப்பா?” என்றேன். பள்ளிக்கூடத்தில் சாப்பிட ஒரு டப்பாவில் திண்பண்டங்களை வைத்து கொடுக்க வேண்டும் என்றார். எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “என்னது? பள்ளிக்கூடத்தில் உட்கார்ந்து தின்பதா? படிக்கப் போறாங்களா? திங்கப் போறாங்களா? நாமெல்லாம் அப்படியா உள்ளே கொண்டு போய் வைத்துக் கொண்டு தின்றோம் அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்” என்றேன். ஆனால் மனைவி விடாமல் மூன்று டப்பாக்களை வாங்கி வந்தாள். அதிலும் அவர்களுக்குப் பிடித்த நிறம், அதில் உள்ள படங்கள் என்று தேர்ந்தெடுத்துக் கொண்டு வர” நான் சம்பாரிக்கிற காசெல்லாம் இப்படி வீணாப் போகுதே…” என்று அலுத்துக் கொண்டே வந்தேன். இப்போது நன்றாக வளர்ந்து விட்டார்கள். இன்னமும் இந்த ஸ்நாக்ஸ் டப்பா அவர்களின் பையில் ஓரமாக இருக்கிறது. இப்போது டப்பாவின் அளவு சற்றுப் பெரிதாக வேறு ஆகிவிட்டது. அதிலும் அஞ்சறை பெட்டி போல விதவிதமாக உள்ளது. பாடப்புத்தகங்களை வரிசையாக எடுத்து பைக்குள் ஒவ்வொருவரும் வைக்கின்றார்களோ இல்லையோ முதன் முதலாக இந்த ஸ்நாக்ஸ் டப்பாவில் அம்மா என்ன இன்று வைத்துள்ளார்? என்ற சோதித்து விட்டே வைக்கிறார்கள். அதிலும் ஒவ்வொருவருக்கும் பிடித்த சமாச்சாரம் வேறு. இத்துடன் தண்ணீர் டப்பா என்று தனியாக ஒன்று உள்ளது. ஒரு பொதி மூட்டை போலவே சுமந்து கொண்டு செல்கிறார்கள். மனைவி குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது அவரவர் முதுகில் ஏற்றி விடுவதுண்டு. அவர்களும் அமைதியாகச் சுமந்து கொண்டு செல்வதைப் பார்த்துக் கொண்டு மனைவியைத் திட்டியிருக்கின்றேன். “நீ எடுத்துக் கொண்டு செல். அவர்களால் இந்தச் சுமையை எப்படித் தூக்க முடியுமென்று?” ஆனால் மனைவி ” உங்க வேலையைப் பார்த்துக் கொண்டு கிளம்புங்க” என்று என்னை அதட்ட அமைதியாகி விடுகின்றேன். என்றாவது ஒரு நாள் நான் குழந்தைகளுடன் பள்ளிக்குச் செல்லும் சூழ்நிலை உருவானால் இருவர் தங்கள் பாரங்களை என் மேல் சுமத்தி விடுவார்கள். முழி பிதுங்கி விடும். மூச்சு முட்ட பள்ளியில் கொண்டு போய்ச் சேர்த்து விடுவதுண்டு. பலமுறை ஆசிரியைகளிடம் கோவித்துக் கொண்டதுண்டு. “ஏன் இத்தனை புத்தக நோட்டுகள்? வகுப்பறையில் வைத்துக் கொண்டு தேவையானதை கொடுத்து விட வேண்டியது தானே?” என் குணாதிசியம் தெரிந்து அந்த ஆசிரியை பொறுமையாக எனக்கு விளக்குவார். மனதிற்குள் திட்டிக் கொண்டே அமைதியாய் வந்து விடுவதுண்டு. நான் சிறுவயதில் ஒரு சிலேட்டையும் டவுசருக்குள் அழுக்கான குச்சியையும் கொண்டு சென்றது நினைவில் உள்ளது. படிப்படியாக ஒரு சில புத்தகங்கள் என்று மொத்தத்தில் ஆறாவது படிக்கும் போது தான் நன்றாக நோட்டில் எழுதியதும், சண்முகச் சுந்தரம் வாத்தியர் என் கையெழுத்து மாதிரி இருக்க வேண்டும் என்று மற்றவர்களுக்கு என் நோட்டைக் காட்டியதும் இப்போது நினைவுக்கு வந்து போகின்றது. எட்டாவது வரைக்கும் அதிக புத்தகங்களோ, நோட்டுக்களோ, மூச்சு முட்டும் அளவுக்கும் உள்ள சுமையோ எதுவுமில்லை. நானும் எழுதினேன், படித்தேன், ஓடினேன், ஆடினேன், விளையாடினேன் என்று அந்தப் பருவம் வித்யாசமாகத்தான் இருந்தது. குழந்தைகளின் ஸ்நாக்ஸ் டாப்பா போல எந்த டப்பாவையும் எங்கம்மா கொடுக்கவில்லை. ஒவ்வொரு தீபாவளிக்கும் வீட்டில் சுடும் கைமுறுக்கு, குழல் நெய் முறுக்கு, அதிரசம், லட்டு, சீயம் என்று கெட்டுப் போகாத பலகாரங்களைப் பல டகர டப்பாவில் அடுக்கி வைத்திருப்பார்கள். ஏறக்குறைய அடுத்த மூன்று மாதங்களுக்கு வரும். பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் முதலில் தூளானதை எடுத்துக் கொடுத்து விட்டு, படிப்படியாக உடையாத சமாச்சாரங்கள் என்று மெது மெதுவாக வெளியே வரும். மறுபடியும் அடுத்த தீபாவளி வரைக்கும் காத்திருக்க வேண்டும். இடையிடையே எந்த உறவினர்களாவது வீட்டுக்கு வந்தால் அவர்கள் கொண்டு வரும் திண்பண்டங்கள் தான். இது தவிர பள்ளியில் இடையிடையே வெளியே வரும் போது கையில் காசு எதுவும் தேற்றி வைத்திருந்தால் பக்கத்து ஊரில் இருந்து வரும் ஐஸ்கார பாய் பாம் பாம் என்று அலற வைத்துக் கொண்டு ஐஸ் விற்றுக் கொண்டிருப்பார். அவரிடம் ஐந்து காசு கொடுத்து அந்த ஐஸை வாங்கித் தின்பதை விட அவர் சைக்கிளின் முன்புறம் மாட்டி வைத்துள்ள அந்தப் பாம் பாம் அடிக்கத் தான் ஆர்வமாக இருக்கும். நாம் அவரிடம் ஐஸ் வாங்கினால் அந்தப் பாம் அடிக்க அனுமதிப்பார். இல்லாவிட்டால் திட்டி அனுப்பி விடுவார். மற்றவர்கள் பால் ஐஸ் வாங்கித் தின்பதை பார்த்துக் கொண்டு நின்று விட்டு பெல் அடித்தவுடன் அதை மறந்து விட்டு உள்ளே ஓட வேண்டும். அப்புறம் அதுவும் நினைவில் இருக்காது. பெரிதான ஆசைகள் இல்லாமல் வளர்ந்த காரணத்தால் பெரும்பாலான விருப்பங்கள் எதுவும் நமக்குத் தேவையில்லாமல் இருந்தது. சாப்பாடு ஒன்றே போதுமென்ற சூழ்நிலையில் தான் இளமைப்பருவம் சென்றது. ஆனால் இன்று குழந்தைகளின் ஆசைகள், நோக்கங்கள், விருப்பங்கள் என்று ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் நம்முடைய பல மடங்கு உழைப்புத் தேவைப்படுகின்றது. இது தவிர மற்றொரு சவால் உண்டு. மண்ணில் புரண்டு, கண்ட இடங்களில் திரிந்து, அழுக்கு கைகளோடு தோன்றியவற்றை வாங்கித் தின்று வளர்ந்த உடம்புக்கு அன்று ஒன்றும் ஆகவில்லை. மழை பெய்யும் போது ஆடிய ஆட்டங்கள், வீட்டுக்கருகே தேங்கும் குட்டைகளில் குதித்து விளையாடிய போக்கிரித்தனங்கள் என்று திகட்ட திகட்ட சந்தோஷத்தை அனுபவித்துள்ளேன். ஒரு தலைவலி இல்லை. காய்ச்சல் இல்லை. முதல் இருபது வருடங்களில் மொத்தமாகவே ஏழெட்டு முறைகள் மருத்துவரிடம் சென்றிருந்தால் ஆச்சரியமே. நான் மட்டுமல்ல. குடும்பத்திலிருந்த அத்தனை பேர்களும் அப்படித்தான். பக்கத்து வீட்டுக் கிழவி கொடுக்கும் கசாயம் அல்லது நாட்டு மருந்து என்று ஏதோவொன்று தான் போன உயிரை திரும்ப வரவழைத்துள்ளது. ஆனால் இன்று? குளிக்க வாட்டர் ஹீட்டர், குடிக்கச் சுடுதண்ணி, ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட கடையில் மட்டுமே வாரத்திற்கொரு முறை வாங்கி வந்து ஸ்டாக் வைத்திருக்கும் திண்பண்டங்கள் என்று இன்குபேட்டர் போலவே குழந்தைகளின் ஆரோக்கியம் இருக்கிறது. தொடர்ச்சியாக இருமல் என்றால் நம் உயிர் போய்த் திரும்பி வருகின்றது. ஒருவருக்குக் காய்ச்சல் வந்தால் ஒரு ரவுண்டு போய்த் திரும்பி வருவதற்குள் காந்தி தாத்தா காணாமல் போய்விடுகிறார். ஒருவர் போய் அடுத்து, அடுத்தவர் போய் அடுத்து என்று இரவு நேரங்களில் படும் அவஸ்த்தைகளை எழுத்தில் வடிக்க இயலாது. பல சமயம் தெருவில் போகும் பஞ்சு மிட்டாய் கேட்டு ஒரு பெரிய ஆர்ப்பாட்டமே நடக்கும். மனைவி எச்சரிக்கையும் மீறி சட்டென்று நான் வாங்கிக் கொடுத்துவிடுவதுண்டு. ஆனால் ஐந்து ரூபாய் செலவுக்கு அடுத்த இரண்டு நாள் அனுபவிக்கு நரக வேதனை இருக்கிறதே? சொல்லி மாளாது. மனைவியிடம் இருந்து வரும் கந்த சஷ்டி கவசத்தை அமைதியாகக் கேட்டுக் கொள்வேன். இந்தப் பிரச்சனை வேறு விதமாகத் தொடர்ந்து கொண்டேயிருக்கும். வெளியே காலாற நடந்து சென்று விட்டு வருவோம் என்று அழைத்துக் கொண்டு சென்றால் திரும்பி வரும் போது எனக்கு ஆப்புக் காத்திருக்கின்றது என்று அர்த்தம். குறிப்பிட்ட கடையின் வழியாக என்னைப் பேச்சு வாக்கில் நகர்த்தி அழைத்துச் சென்று விட்டுச் சப்பரமாக அங்கேயே மூவரும் நின்று அவரவருக்குத் தேவையானதை என்னைக் கேட்காமலேயே எடுத்துக் கொண்டு அப்பா காசை கொடுத்து விடுங்க என்பார்கள். நானும் ஒன்றும் பேசாமல் காசை கொடுத்து விட்டு வீட்டுக்கு உள்ளே வந்தால் அடுத்த சுப்ரபாதம் தொடங்கும். காரணம் தின்றவளில் ஒருத்தியே சற்று வேகமாக நடந்து வந்து நைஸாகப் போட்டுக் கொடுத்து விட்டு நான் அம்மாக்கிட்டே சொல்லிட்டேனே………… என்ற போது அடுத்த யுத்தம் தொடங்கும். நான் மாமன்னர் 23ம் புலிகேசி போல தாரை தப்பட்டை முழங்காமல் அமைதியாகத் தரையில் படுத்துக் கொண்டு என் தவறை உணர்ந்து கொள்வேன். அடுத்த ஞாயிறன்று அப்பா நடந்து போயிட்டு வரலாமா? என்று கேட்டு இந்தப் பயணம் தொடங்குவார்கள். மறதி நோய் போல குழந்தைகள் விருப்பம் போல சென்று கொண்டேயிருக்கின்றேன்.. 19 18. சாமி கண்ணைக் குத்திடும் எப்போதும் போல மூன்று பேரும் சேர்ந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். திடீரென்று மூன்று குழந்தைகளுக்குள் பிரச்சனைகள் உருவாகும். எதற்காக? ஏன் என்றே தெரியாது. வீட்டில் பரபரப்புத் தொற்றிக் கொள்ளும். நான் ஏதோவொரு வேலையில் மும்முரமாக இருப்பேன். மனைவி மற்றொரு வேலையில் இருப்பார். குறிப்பாக மூத்தவளுக்கும் கடைக்குட்டிக்கும் தான் எப்போது பிரச்சனை தொடங்கும். மூத்தவள் வில்லன் போல் மாறி அடிதடியில் இறங்கிவிடுவாள். கடைக்குட்டி நின்று நிதானமாக ஒவ்வொரு கேள்வியாக எடுத்து வைப்பார். ஆனால் மூத்தவள் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கீழே தள்ளி அல்லது கையில் கிடைப்பதை எடுத்து வீசி எறிந்து ரணகளமாக மாற்றிக் கொண்டு இருப்பாள். அப்போதும் கூட கடைக்குட்டி அழ மாட்டார். தன் பிடிவாதத்தை மாற்றிக் கொள்ளாமல் நீ செய்தது தவறு என்பது சுட்டிக் காட்ட இந்தப் பிரச்சனை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டேயிருக்கும். தொடர்ந்து கடைக்குட்டியிடமிருந்து காரசாரமான விவாதங்கள் வந்து கொண்டேயிருக்கும். கடைசி மகள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் கல்வெட்டு போலவே இருக்கும். ஒவ்வொரு விசயத்திற்குள்ளும் ஓராயிரம் அர்த்தங்கள் இருக்கும். கடைசி மகளின் ஆசை எதிர்காலத்தில் மருத்துவராக வேண்டும் என்பது. ஆனால் அதற்குண்டான தகுதிகள் அத்தனையும் அவளிடம் உண்டு என்பதைப் பல முறை கவனித்து இருக்கின்றேன். ஆனால் ஊக்குவித்தது இல்லை. இப்போது அவள் சொல்லும் லட்சியம் எதிர்காலத்தில் மாறக்கூடும். அவளுக்கு நடை முறை எதார்த்தம் புரிந்து கொள்ளும் காலத்தில் அந்த லட்சியத்தில் எந்த அளவுக்கு விருப்பத்துடன் இருக்கிறாள் என்பதால் மட்டுமே நாங்கள் அவர்கள் ஆசையை ஊக்குவிப்பதில்லை. நடந்து கொண்டிருக்கும் விவாதங்களை நானும் மனைவியும் கவனிக்காதது போலவே உள்வாங்கிக் கொண்டு இருப்போம். குறிப்பாகச் சண்டையின் போது அவர்கள் உபயோகப்படுத்தும் வார்த்தைகளின் லாவகத்தைக் கவனித்துக் கொண்டிருப்பேன். ஒரு சின்ன அசிங்கமான வார்த்தைகள் கூட வராது. வந்தால் நான் என்ன செய்வேன் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் இரண்டு பேருமே கடைசியாக என்னைப் பஞ்சாயத்து மேடையில் உட்கார வைத்து விடுவார்கள். நான் மனைவியை அழைப்பேன். “அவள்களுக்கும் உங்களுக்கும் வேற வேலையே இல்லை……. என்னை விட்ருங்க” என்பாள். நான் தடுமாறிப் போய்விடுவேன். எவர் பக்கமும் சாய்ந்து விட முடியாது. அவரவர் கருத்துக்ளை என் முன்னால் நின்று கொண்டு உரக்கப் பேசி என்னைக் கதிகலங்க வைத்துக் கொண்டிருப்பார்கள். எனக்குச் சுவாரஸ்யமாக இருக்கும். பிரச்சனைகளை விட்டு விட்டு அவர்கள் பேசுவதை ஊக்குவித்துக் கொண்டிருப்பேன். ஒருவர் பக்கம் உள்ள விசயத்தை அதன் நியாயத்தை அடுத்தவளுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்க முயற்சிப்பேன். மூத்தவள் விட மாட்டாள். அவள் பக்கமுள்ள நியாயத்தை எனக்குப் புரியவைப்பாள். நான் திடீரென்று அவள் பக்கமுள்ள உண்மை நிலவரங்களைச் சொல்லி அவள் பக்கம் உள்ள நிலையை எடுத்துக் கொண்டு அவளுக்குச் சாதகமாகப் பேச, கடைக்குட்டி பேசுவதை விட்டு விட்டு என் தலைமுடியை கொத்தாகப் பிடித்துக் கொண்டு முன்னும் பின்னும் ஆட்ட ஆரம்பித்து விடுவாள். என்னுள் பொறி பறக்க ஆரம்பித்து விடும். “நீங்க எப்ப பார்த்தாலும் பொய் பேசுற அவளுக்குச் சப்போர்ட் செய்றீங்க” நான் படித்துக் கொண்டிருக்கும் சமாச்சாரங்களை வீசியெறிய முயற்சிப்பாள். முடிவுக்கு வராமல் போய்க் கொண்டேயிருக்க திடீரென்று இரண்டு பேருக்கும் நிஜமான கைகலப்பு என்கிற ரீதியில் பிரச்சனை அடுத்தக் கட்டத்திற்கு நகரும். இப்போது தான் இந்த வாக்குவாதத்தில் சம்மந்தப்படாதவள் “அப்பா இவங்க ரெண்டு பேரும் பொய் பொய்யா பேசிக்கிட்டு இருக்காங்க. இவங்க கண்ணைச் சாமி குத்த போகுது” என்பாள். டக்கென்று இரண்டு பேரும் ஒரே கூட்டணியில் சேர்ந்து கொண்டு அவள் மேல் பாயத் தொடங்குவார்கள். எப்போதும் இவர்களைப் போல தேவையில்லாமல் சண்டைக்குப் போகமாட்டாள். ஒருவகையில் இருவரும் அதிமுக பாமக அல்லது திமுக பாமக கூடடணி தான். யாருக்கு என்ன ஆதாயம் என்பதை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டு இருப்பவர்கள். ஆனால் எப்போதும் சண்டைக்குப் போகாத மற்றொருவள் பழைய கம்யூனிஸ்ட் கட்சி போலவே இருப்பாள். தன் கொள்கை, தன் நோக்கம், தன் வாழ்க்கை என்பதாக இருப்பவளுக்கு என் செல்லம் அதிகம் உண்டு. மனைவி பல முறை இந்த என் குணாதிசியத்தைக் கண்டிக்க சற்று மறைமுகமாக இவளுக்கு ஆதரவு கொடுப்பேன். சண்டைக்குப் போகாமல் அமைதியாய் இருப்பவள் அழத் தொடங்குவாள். நான் எனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி வீட்டில் எப்போதும் அமைதியாய் இருப்பவள் பக்கம் சாய்ந்து விடுவேன். ஆனால் இந்தச் சாமி கண்ணைக் குத்திடும் வார்த்தைகள் யார் இவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள் என்பதை யோசிக்கத் தொடங்குவேன். குழந்தைகளின் எதிர்கால ஆசைகள் முதல், அவர்களின் நிகழ்கால விருப்பங்கள் முதல் எதையும் நானோ மனைவியோ சொல்லிக் கொடுப்பதில்லை. எங்கள் விருப்பங்களை அவர்கள் மேல் திணிப்பதும் இல்லை. காரணம் இன்றைய எங்கள் வாழ்க்கை சூழ்நிலை நாளை எப்படி வேண்டுமானாலும் மாறிப் போகலாம். அவர்களின் ஆசைகள் விஸ்ரூபம் எடுத்து வளர்ந்து அதை நிறைவேற்ற முடியாத பட்சத்தில் அது குழந்தைகளுக்கு ஒரு தாக்கத்தை உருவாக்கக்கூடும். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான ஆசைகளை வளர்த்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் என்னவாக ஆக வேண்டும் என்பது வரைக்கும் அவர்களுக்குள் ஒரு நல்ல புரிந்துணர்வு இருக்கிறது. அது வெறும் கனவாக இல்லாமல் அவவ்ப்போது அது குறித்துப் பேசுகிறார்கள். அவர்கள் வைத்துள்ள ஒவ்வொரு கனவுக்குப் பின்னாலும் உழைக்க வேண்டிய விசயங்களை அவர்களுக்குப் புரிய வைக்க முயற்சிக்கின்றோம். அந்தக் கனவென்பது ஆழ்மனத்தில் இருக்க வேண்டுமே தவிர நிகழ்காலத்தில் அது குறித்துக் கவலைப்பட, யோசிக்க வேண்டிய அவஸ்யமில்லை என்பதைப் புரியவைத்துள்ளோம். பள்ளி வாழ்க்கையில் முக்கியமான தருணங்கள் இரண்டு. ஒன்று பத்தாம் வகுப்பு. மற்றொன்று பனிரெண்டாம் வகுப்பு. இதில் நாம் எடுக்கும் மதிப்பெண்கள் தான் நம் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சக்தி படைத்தது என்பதை அவர்களுக்கு உணர வைத்துள்ளோம். ஆனால் என்னவிதமான கருத்துக்களை, கதைகளை அவர்களுக்கு உணர்த்திக் காட்டினாலும் அவர்களின் தனிப்பட்ட குணாதிசியங்கள் என்பது புரிந்து கொள்ள முடியாததாகவே இருக்கின்றது. ஒவ்வொருவரும் அவரவர் பங்குக்குச் சுயநலமாகத்தான் இருக்கிறார்கள். ஒற்றுமையை வலியுறுத்தி ஓராயிரம் கதைகள் சொன்னாலும் கேட்டுக் கொள்கிறார்கள். ஆனால் ஒவ்வொருவரின் செயல்பாடுகளின் டார்வின் கொள்கை போல அவரவர் பிழைக்கும் வழியைத்தான் எடுத்துக் கொள்கிறார்கள். பெரும்பாலும் இரவு நேரங்களில் தூங்கும் சமயத்தில் அவர்கள் கேட்கும் கதைகளைச் சொல்வதுண்டு. அதுவும் மூன்று பேர்களின் ஆசைகளை நாம் தான் சரிசெய்து ஏதோவொன்று குறித்துச் சொல்ல வேண்டும். பெரும்பாலும் மந்திரக்கதைகள். அதுவும் வில்லன் இருக்கக்கூடாது. கதையில் வருபவர்கள் எவரும் கடைசி வரைக்கும் கெட்டவர்களாக இருக்கக்கூடாது என்பது போன்ற பல சட்டதிட்டங்கள். திடீர் என்று சொல்லுங்க சொல்லுங்க என்கிற போது நாம் அதற்கும் தயாராக இருக்க வேண்டும். முதல் வரி சொல்லும் அடுத்த வரியில் சுவராஸ்யம் இருக்க வேண்டும். குறிப்பாக நகைச்சுவை அதிகம் இருக்க வேண்டும். கடைசி வரைக்கும் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்துக் கொண்டே வர வேண்டும். ஆனால் அவர்கள் பார்வையில் அது வெறும் கப்ஸாவாக இருக்கக்கூடாது. எனக்கு எப்போதும் சவாலாகவே இருக்கிறது. தாமதமாக வீட்டுக்குள் வரும் போது கேட்டுக் கொண்டே இருப்பவர்களை மனைவி அடக்கி தூங்க வைத்து விடுவாள். கதை சொல்லிக் கொண்டு வரும் போது அவர்களுக்குத் தூக்கம் வந்தாலும் கொட்டாவியை அடக்கிக் கொண்டு கேட்டுக் கொண்டு இருப்பார்கள். இவர்கள் தூங்கி விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு நாம் எழ முயற்சித்தால் அப்புறம் என்னாச்சு? என்று ஒருவரின் குரல் வரும். மொத்தத்தில் அவர்களின் தேவையை நாம் நிறைவேற்றிய ஆக வேண்டும் என்ற சுதாரிப்பு இருக்கிறது. ஆனால் நிச்சயம் என்றுமே சாமி பற்றிய கதைகளைச் சொல்ல மாட்டேன். காரணம் ஆன்மீகம் என்பது அவரவர் உணர்வுகள் மற்றும் சந்தித்த அனுபவங்கள் உணர்த்துவது என்பதில் உறுதியாக இருக்கின்றேன். வெறுமனே இந்தச் சாமியை கும்பிடு. இந்தச் சாமி நமக்கு இது தரும் என்பது போன்ற பல விசயங்களைக் கடந்த இரண்டு வருடங்களாகச் சொல்வதில்லை. காரணம் நான் பெற்ற அனுபவங்கள். எங்கே சென்றாலும் அங்கே என்ன கோவில் இருக்கிறது என்பதைத்தான் முதன் முதலாகக் கேட்பேன். உறவினர்கள் யார் வந்தாலும் அவர்களின் குழந்தைகள் முதன் முதலாகச் சொல்லும் விசயமே கோவிலைத் தவிர வேறெதும் உங்களுக்குத் தெரியாதா? என்பது போன்ற பல கேள்விகளைச் சந்தித்துள்ளேன். இந்தச் சூழ்நிலை படிப்படியாக மாறிவிட்டது. காரணம் நடக்கும் எந்த நிகழ்வுகளையும் நம்மால் மாற்றி விடமுடியாது. எந்தச் சாமியும் வந்து உணர்த்திக் காட்டுவதும் இல்லை. தீதும் நன்றும் பிறர் தருவதில்லை. நாம் தான் உருவாக்கிக் கொள்கின்றோம்.. இது நம் வாழ்க்கை. நாம் தான் வாழ்ந்தாக வேண்டும். நடக்கும் சாதகப் பாதக அம்சங்கள் நாம் தான் சூழ்நிலைக்கேற்றவாறு புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொன்றையும் சந்தித்தே ஆக வேண்டும். சங்கடங்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தாலும் நாம் பொறுமையாக இருந்தே தான் ஆக வேண்டும் என்பதை எதார்த்த வாழ்க்கை கற்றுக் கொடுத்துள்ளது. அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். ஆனாலும் உழைப்புக்கு, திறமைகளுக்கு அப்பாற்பட்ட இந்த உலகில் வேறு சில கண்களுக்குத் தெரியாத விசயங்களும் இருக்கிறது என்பதை நான் உணர்ந்து இருக்கின்றேன். நடந்து முடிந்த பல சம்பவ்ங்கள் எனக்கு அவற்றை உணர்த்திகாட்டியிருக்கிறது. இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் போன்ற மத நம்பிக்கைகளுக்குள் அடக்க விரும்பவில்லை. எல்லா மத மனிதர்களும் சுயநலமாகத்தான் இருக்கிறார்கள். நான் மதப்பற்று உள்ளவன் என்கிற எவரும் அந்த மதம் சொல்லும் அத்தனை கருத்துக்களையும் பின்பற்றுவதில்லை. அவருக்கு என்ன சாதகமோ அதை மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் அதிகமான தகுதியற்ற ஆசைகளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொண்டேயிருக்கிறார்கள். நெருங்கிய உறவுகள் இறந்து போவதை பார்த்த போதிலும் எவரும் திருந்த தயாராயில்லை. ஆனால் நான் பக்திமான் என்பதை வெளியுலகத்திற்குக் காட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். எல்லாவிதமான கோவில்களுக்கும் செல்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரையிலும் பக்தி என்பது ஒரு வேடம். அந்தக் கதாபாத்திரத்தை தெளிவாகவே புரிந்து வைத்துள்ளார்கள். இதன் காரணமாகவே ஒவ்வொரு கோவில்களிலும் கூட்டம் நாளுக்கு நாள் குவிந்து கொண்டேயிருக்கிறது. ஒருவர் மற்றவருக்குத் தொந்தரவு இல்லாமல், ஏமாற்றாமல் வாழ முடியுமா? என்று யோசிப்பதில்லை. காரணம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓராயிரம் கணக்குகள். எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் என்ன கிடைக்கும்? என்பதில் தொடங்கி இந்தக் கணக்கு விரிவடைந்து கொண்டேயிருக்கிறது. ஆன்மீகச் சுற்றுலா கிளம்புவர்களை நன்றாக கவனித்துப் பாருங்க. அவரவர் மனம் பற்றிய தெளிவு இல்லாதவர்களுக்கு எந்தத் தெய்வம் அறிவை புகட்டும்? திருப்பூர் நிறுவனங்களில் சந்திக்கும் ஆண்கள், பெண்கள், அவர்களின் முறையற்ற பாலுணர்வு தொடர்புகளை ஒவ்வொரு நாளும் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றேன். இதில் மட்டும் முதலாளி, தொழிலாளி என்கிற பாகுபாடு இல்லாமல் 18 வயது பெண்கள் முதல் 60 வயது கிழம் வரைக்கும் புகுந்து விளையாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள், அசிங்கங்கள் என்று எத்தனையோ தினந்தோறும் காதுக்கு வந்து கொண்டேயிருந்தாலும் அந்தத் தவறுகள் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. காரணம் ஆசைகள். அதிகப்படியான ஆசைகள். இதுவே தான் இந்த ஆன்மீகத்தை இன்று வரை வளர்த்துக் கொண்டேயிருக்கிறது. பிராமணர்களின் முகம் இன்று முழுமையாக மாறி விட்டது. அவர்களைச் சொல்லி தவறில்லை. ஃபாஸ்ட் புட் போலவே இன்று சடங்கு சம்பிராதயங்களை மக்கள் நொடிப் பொழுதில் செய்து விட்டு அடுத்த நாளே வாழ்க்கையில் மறுமலர்ச்சி வந்து விட வேண்டும் என்று ஆசைப்படும் போது பிராமணர்கள் என்ன செய்வார்கள்? முடிந்த வரைக்கும் லாபம் என்று கார் வசதி கொண்டு பறக்க ஆரம்பித்து விட்டார்கள். சமீப காலமாக இந்த ஆன்மீகத்தை எல்லாத் தொலைக்காட்சியும் சந்தைப்படுத்த தொடங்கி விட்டன. மக்களும் பத்திரிக்கைகளைப் பார்த்து, இலவச இணைப்பில் கொடுத்துள்ள குறிப்பிட்ட கோவிலுக்குப் படையெடுத்தலும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. கடவுள் என்பதையே தவறாகப் புரிந்து கொண்ட சமூகத்தில் நாம் எதையும் மாற்றி விட முடியாது. தன் அனுபவங்கள் மூலம் புரிந்து கொள்ள முடியாதவர்கள் தான் கடவுளை கோவிலுக்குச் சென்று தரிசிக்க விரும்புகிறார்கள். நீங்கள் நன்றாகக் கவனித்துப் பாருங்க. ஒவ்வொரு ஊரிலும் பல பழங்காலத்துக் கோவில்கள் இருக்கும். ஏன் அங்கே கூட்டம் கூடுவதில்லை? நிச்சயம் யாராவது ஒரு பிரபல்யம் அந்தக் கோவிலுக்குச் சென்றால் இது நடக்கும் என்று ஒரு பத்திரிக்கையில் எழுதட்டும். அடுத்த வாரம் அந்தக் கோவிலில் கூட்டம் குவிய தொடங்கும். இதன் காரணமாகவே சாதாரண மனிதர்களும் கடவுள் அவதாரங்கள் போல் மாறி விடுகின்றார்கள். படித்தவர்களும் இந்த மாய வலைக்குள் விழுந்து அடுத்தவர்களையும் கெடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவரவர்களின் அனுபவங்கள் தான் மாறுதலை உருவாக்க முடியும்.. அதற்கான சந்தர்ப்பங்கள் சிலருக்கு வாழ்நாளில் கிடைத்து விடும். பலருக்கும் கிடைக்காத அளவிற்கு வாழ்ந்து முடித்துச் செத்தும் போய்விடுகிறார்கள். நம்பிக்கை என்பது அவரவர் சார்ந்த தனிப்பட்ட விசயம். இதில் நிர்ப்பந்தம் என்பது எப்போதும் எங்கும் இருக்கக்கூடாது. ஒருவருக்கு நிர்ப்பந்தம் செய்து புகுத்தினாலும் அது நீண்ட நாளைக்குத் தாங்காது. நாம் யாரைப் பின்பற்ற வேண்டும் என்பது நம் கையில் தான் இருக்கிறது. 20 19. சொம்பு இல்லாத நாட்டாமை கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறக்கும் நாள் வந்துவிட்டது. வீட்டில் குழந்தைகள் எப்படா பள்ளிக்கூடம் திறக்கும்? என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சற்று வளர்ந்து நிற்கும் இவர்களின் மனோபாவங்கள், பேச்சுகள், நடவடிக்கைகளை இந்த முறை கவனித்த பொழுது பல விசயங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. இரண்டு வாரங்கள் விடுமுறை இருந்தாலே போதுமானது. உடனடியாகப் பள்ளி திறந்தால் பரவாயில்லை என்கிறார்கள். காரணம் விடுமுறை சந்தோஷங்களை அவர்களால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. குறிப்பாக இங்குள்ள புறச்சூழல் இவர்கள் விரும்பும் அளவுக்குச் சிறப்பாக இல்லை. வீட்டை விட்டு இறங்கினால் வாகனங்கள் பறக்கும் தெரு. மரங்கள் எதுவுமே இல்லாத குடியிருப்பு. திருப்பூருக்குள் சுற்றிப் பார்க்க எந்த இடமும் இல்லை. போக்குவரத்து நெரிசலைப் பார்த்து நானும் எங்கேயும் அழைத்துச் செல்ல விரும்புவதும் இல்லை. மற்றவர்களைப் போல டாம்பீகத்திற்காக எங்கேயும் செல்வதும் இல்லை. என்னுடைய பள்ளிக்கூடக் கோடை விடுமுறை கொண்டாட்டங்கள் இப்போது என் மனதில் நிழலாடுகின்றது. தேர்வு எழுதி முடித்து வீட்டுக்குள் நுழையும் பொழுதே பைக்கட்டை தூக்கி ஏதோவொரு இடத்தில் தூக்கி எறிவதில் இருந்து தொடங்கும். அந்த இரண்டு மாதங்களும் இரவு நேரத்தைத் தவிர வீட்டுக்குள் இருந்ததே இல்லை. அடிக்கும் வெயில் அத்தனையும் தலையில் தான் இருக்கும். ஓடித் திரிந்த காலங்களை இன்று குழந்தைகளுக்கு வழங்க முடியவில்லை. உறவினர் வீடு, பழகியவர் வீடு என்று எந்த இடத்திற்கு அனுப்பினாலும் வெகு விரைவில் இவர்களுக்கு அங்குள்ள சூழ்நிலை அலுத்துப் போய்விடுகின்றது. ஒரே போருப்பா…….. வீட்டுக்கு வந்து விடுகின்றோம் என்று திரும்பி வந்து விடுகின்றார்கள். ஆனால் என்னுடைய பள்ளிக்கூட வாழ்க்கையில் அலுப்பென்பதே துளிகூட இல்லை. இருப்பதை வைத்து அனுபவித்தல் என்ற நோக்கத்தில் வாழ்க்கை இருந்தது. இன்று இவர்களுக்காகவே என்று உருவாக்கிக் கொடுத்த ஒவ்வொரு விசயங்களும் அடுத்தடுத்த தேடல் என்ற நிலைக்கு மாற்றியுள்ளது. ஒவ்வொரு வசதிகளையும் எதிர்பார்த்து பழகியவர்களால் தங்களை மாற்றிக் கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள். இதற்கு மேலாக தொலைக்காட்சி விடுமுறையின் பாதி நாட்களை ஆக்கிரமித்து ஆட அசைய விடாமல் ஒரே இடத்தில் அமர வைத்து விடுகின்றது. கண்வலி, கழுத்துவலி என்று தொடங்கி கடைசியில் மொத்த உடம்பும் சோர்ந்து போய் நிற்கும் சோர்வை அவர்களின் இரவு நேர தூக்கத்தின் போது பார்க்க முடிகின்றது. மூட்டை தூக்கி பிழைப்பு நடத்தும் கூலி வேலை பார்ப்பவர் இரவு நேரத்தின் போது எந்த அளவுக்கு அசந்து தூங்குவாரோ அதைப் போலவே அடித்துப் போட்டது போல தினமும் தூங்குகிறார்கள். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் தூங்குகிறார்கள். பகலில் தூங்க வைக்க முடியவில்லை. பள்ளிக்கூடம் இல்லை தானே என்பது போன்ற வீட்டில் உள்ள வக்காலத்து வார்த்தைகள் அவர்களின் தூக்க நேரத்தை தினந்தோறும் அதிகப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. தினசரி செய்ய வேண்டிய அன்றாடக் கடமைகள் அத்தனையும் தலைகீழாகப் போய்விட்டது. புரிய வைக்க முடியவில்லை. புரிந்து கொள்ளும் சூழ்நிலையிலும் அவர்களும் இல்லை. பள்ளிக்கூட நாட்களில் அனுபவிக்க முடியாத அத்தனை சுதந்திரங்களையும் ஒவ்வொரு நாளும் முழுமையாக அனுபவிக்கிறார்கள். விரும்பிய அத்தனையும் கிடைக்கிறது. வீட்டுக்குள் அவர்கள் விரும்பாத எந்த நிகழ்வும் நடப்பதும் இல்லை. சம்மர் கோர்ஸ் என்ற எந்தக் கண்றாவிக்கும் நாங்கள் அனுமதிப்பது இல்லை. உனக்கு என்ன வேண்டும் என்பதை நீயே தீர்மானித்துக் கொள். உனக்குச் செஸ் ஆட ஆசையா? அதற்கான பொருட்கள் வாங்கித் தருகின்றேன். பக்கத்து வீட்டில் உள்ள அண்ணன் எப்படி விளையாடுகிறார் என்பதைப் பார்த்து நீயே கற்றுக் கொள். என்னை அழைக்காதே. எனக்கு அதில் விருப்பமும் இல்லை. நேரமும் இல்லை. இது போலத்தான் ஒவ்வொரு விளையாட்டையும் அவர்களாகத் தேடித் தேடி கற்றுக் கொள்ளத் தேவையான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கின்றோம். நாம் நுழைந்தாலும் கடைசியில் அவர்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டுமே தவிர அவர்களை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகி விடுகின்றது. மூவருக்கும் நடக்கும் பஞ்சாயத்தில் கடைசியில் வீடே போர்க்களம் ஆகிவிடுகின்றது. அடுத்தவர்களிடம் அனுப்பும் போது பொட்டிப் பாம்பாய் அடங்கி விடுகிறார்கள். மற்றவர்களுடன் பழகும் போது நமக்குத் தேவையான அனுசரணை வேண்டும். அதற்கு மேலாக உண்மையான உழைப்பின் மூலம் மற்றவர்களைக் கூர்ந்து கவனிப்பதன் மூலம் பல விசயங்களைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதைக் குறிப்பால் உணர வைக்கின்றோம்.. ஆனாலும்……… நாம் வாழும் குடும்பச் சூழ்நிலையில் ஓழுக்கச் செயல்பாடுகளை முன்னிறுத்தி அவர்களை உருவமாக மாற்ற முயற்சித்தாலும் வெளி உலகம் கொடுக்கும் தாக்கமும், இவர்கள் மற்றவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளும் செயல்பாட்டின் மூலமும், தேவையற்ற பல விசயங்களையும் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இவர்கள் பெறும் தாக்கமென்பது இறுதியில் நீயும் ரௌத்திரம் பழகு என்பதாகத்தான் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. பணம் என்ற ஒரு வார்த்தை இங்கே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றது. உடுக்கும் உடை, உண்ணும் உணவு முதல் பேச்சில் காட்ட வேண்டிய டாம்பீகம் வரைக்கும் வளரும் பிஞ்சு மனதில் இந்தச் சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை தான் விதைத்துக் கொண்டிருக்கிறது. உள்ளே வெளியே என்று ஒரு ஆடு புலி ஆட்டமாகத்தான் சமகால வாழ்க்கையில் குழந்தைகள் போராடி தங்களை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிள்ளது. தினந்தோறும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் மற்றவர்களுடன் பழகிய தாக்கத்தில் தனக்குத் தானே என்று யோசிக்கத் தொடங்குகிறார்கள். இதுவே குழந்தைகளுக்குத் தான் மட்டும் என்ற எண்ணத்தையும் மறைமுகமாக வளர்த்துக் கொண்டிருக்கிறது. சுயநலம் மேலோங்குகின்றது. போட்டி பொறாமை அதிகமாகி விடுகின்றது. தான் செய்வது தான் சரிதான் என்று பேசத் தொடங்கிறார்கள். நவீன தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொள்வதில் குறையேதும் இல்லை என்ற போதிலும் இவர்களால் உருவாகும் ஒவ்வொரு சவால்களையும் மனைவியால் சமாளிக்க முடியாமல் தடுமாறுகின்றார். எத்தனை முறை ஒற்றுமை குறித்த கதைகள் சொன்னாலும் சுவாரசியம் என்ற நோக்கத்தில் கேட்டுக் கொள்கிறார்களே தவிர காலை எழுந்தது முதல் இரவு தூங்கப் போகும் வரைக்கும் நடக்கும் வீட்டுக்குள் நடக்கும் பஞ்சாயத்துகளை நான் ஒவ்வொரு வார ஞாயிற்றுக் கிழமை மட்டும் தான் பார்க்க வாய்ப்பு கிடைக்கின்றது. மற்ற ஆறு நாட்களிலும் மனைவி தான் ஆலமரத்தில் சொம்பு இல்லாத நாட்டாமையாக நேரத்திற்கு தகுந்தாற் போலத் தீர்ப்புகளை மாற்றி மாற்றிச் சொல்லி சமாளித்து எப்படா பள்ளி திறக்கும்? என்று ஆவலுடன் காத்திருக்கிறார். 21 20. கோடை விடுமுறை -- கொடுமையும் குமுறலும் நான் வீட்டுக்குள் நுழைந்த போது மூவரும் புதுப்பையில் அவர்களின் இந்த வருடத்திற்கான புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தார்கள். வீட்டுப் பூசாரி வருடந்தோறும் சொல்லும் அதே உபதேச வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். “கர்ச்சீப்,பென்சில், ரப்பர் என்று எதையாவது தொலைத்து விட்டு வந்தால் நிச்சயம் வாங்கித் தர மாட்டேன்” என்ற போது தெரியாத்தனமாக நான் வாயைத் திறந்து விட்டேன். “ஆமாப்பா. எனக்கிட்டே வந்து கேட்கக்கூடாது” என்றேன். பூசாரியின் கோபப் பார்வை என் பக்கம் திரும்பியது. “இவங்களைக் கெடுத்ததே நீங்க தான்” என்றார். சிரித்துக் கொண்டே “நான் என்ன தப்புச் செய்தேன்? என்றேன். பொறியை பற்ற வைக்கப் பட்டாசு வெடிக்கத் தொடங்கியது. “தொலைத்து விட்டேன் என்று வந்து நின்றதும் போய்ப் புதுசு வாங்கிட்டு வந்துடுன்னு யார் சொன்னா?” என்று என் முகத்தைப் பார்க்க தலையைக் குனிந்து கொண்டே அறைக்குள் சென்ற போது உள்ளே உரையாடல் நடந்து கொண்டிருந்தது. நமக்குத்தான் பகவான் எப்போதும் நாக்கில் இருப்பவர் தானே. வாய் சும்மாயிருக்குமா? பூசாரி எத்தனை மணி நேரம் இவர்களைப் படுத்தி எடுத்துக் கொண்டிருப்பாரோ? என்று நினைத்துக்கொண்டே சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்று பொதுப்படையான கேள்வியைக் கேட்டு வைக்க அடுத்த வெடிக்கான அச்சாரம் என்று தெரியாமல் போய்விட்டது. “என்னப்பா நாளைக்குப் பள்ளிக்கூடம் திறக்கப் போகுதா? “ஆமா அதுக்கென்ன இப்போ?” மூத்தவரிடமிருந்து சீறிப்பாய்ந்து வந்தது. பூசாரி வாயை பொத்திக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் பூசாரி மூவரையும் உட்கார வைத்து அசராமல் வறுத்து எடுத்துக் கொண்டிருப்பார். அவர் தாளித்துக் கொண்டிருக்கும் போது மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பு போல அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். இவர்களைக் காப்பாற்ற வேண்டுமே? என்று நான் ஆட்டத்திற்குள் நுழைந்தால் மூவரில் இருவர் என்னைக் கவிழ்ப்பதில் தான் குறியாக இருப்பார்கள். இதிலும் ஒருவர் பலே கில்லாடி. கட்சி தாவல் தடைச் சட்டத்தைக் கண்டு கொள்ளாதவரைப் போலக் காரியத்தைப் பொறுத்து என் பக்கம் சாய்வார். ஆனால் மூன்று ஓட்டுகளில் ஒரு ஓட்டு என் பக்கம் நிரந்தரமாக இருக்கும். எப்போதும் என் சூழ்நிலை இப்படித்தான் என்று தெரிந்த போதிலும் விடாமல் கேட்டேன். “என்னப்பா வேற ஏதாவது வாங்கித் தர வேண்டியிருக்கா?” என்றேன். இருவர் வேகமாக “எல்லாமே ஓ.கேப்பா” என்றார்கள் ஒருவர் மட்டும் வேகமாக யோசித்துக் கொண்டே “இன்னும் ஒரு விசயம் பாக்கியிருக்கு” என்றார். நான் என்ன என்று கேட்பதற்குள் “ஸ்போர்ட்ஸ் ஷு” என்றார். அதாவது தனிப்பட்ட முறையில் காலையில் ஓட்டப்பயிற்சி எடுக்க அதற்கு ஒரு ஷு உள்ளது என்று தெரியாத்தனமாக ஏற்கனவே சொல்லி வைத்திருந்ததைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வைத்து சில வாரங்களாக நினைவு படுத்திக் கொண்டே இருக்கின்றார். எனக்குத் தெரியும். இவர் ஆட்டத்திற்குள் நுழைந்து விட்டால் நான் அம்பேல். பூசாரி என்னை ஏறிட்டுப் பார்க்க நான் மெதுவாக வெளியே நகர முயற்சித்தேன். “அப்பா உங்களைத்தான் கூப்புடுறேன். எனக்குப் பதில் சொல்லாமல் போய்க்கிட்டேயிருந்தா எப்படி? ” என்றார். “இல்லம்மா செல் டவர் எடுக்கல. இரு பேசிட்டு வந்துடுறேன்” என்றபடி நகர வேகமாக ஓடிவந்து வாசல்படியில் கைகளை விரித்துக் கொண்டு “உள்ளே போங்க” என்றார். நிச்சயம் இன்றைக்கு ஆப்பு தான் என்று மனைவி முனங்கிக் கொண்டே சொன்ன வார்த்தை என் காதிலும் விழுந்தது. தவிர்க்க முடியாமல் உள்ளே வந்தேன். மிரட்டி பணிய வைக்க முடியாது. உடனே என் சட்டைப்பை, அலைபேசி, பையில் உள்ள கண்ணாடி என்று கைக்கு எட்டும் சமாச்சாரங்களில் கைகளை விட்டுப் பறிக்கத் தொடங்குவார். வீட்டுக்குள் ரணகளம் உருவாகும். மூவரில் மூத்தவர் ஆணாகப் பிறந்திருக்க வேண்டியவர். காவல்துறை அதிகாரியாவது தான் என் லட்சியம் என்று சொல்லியுள்ளார். யார் சொல்லிக் கொடுத்தார்கள்? எதனால் இந்த ஆசை வந்தது என்பது குறித்து எனக்குத் தெரியாது. இரண்டாம் வகுப்பு சென்ற போதே இந்த ஆசையைச் சொல்லிவிட்டார். இந்த வருடம் ஐந்தாம் வகுப்பு செல்கின்றார். அசாத்தியமான திறமைகள் உடையவர். இது தான் எனக்குப் பல சமயம் பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. இவர் பாலர் பள்ளியில் நுழைந்தது முதல் இன்று வரைக்கும் வகுப்பில் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டே தான் இருக்கின்றார். ஆங்கிலம் பயிற்று மொழி என்றாலும் தமிழ் வழிக்கல்வியில் உள்ள புரிதலை தொடக்கத்தில் புரிய வைக்க இன்று இரண்டு மொழியோடு ஹிந்தியிலும் தன்னைச் சரியாக நிலை நிறுத்திக் கொண்டு விட்டார். இவருக்கு கலையார்வம் என்பது ரசிக்க மட்டுமே. அந்தப் பக்கமே செல்ல மாட்டார். ஆதரிக்கவும் மாட்டார். ஆனால் வீட்டில் கடைசிப் பார்ட்டிக்கு இந்தக் கலையார்வம் தான் மூச்சே. அவருக்கு வீட்டில் நான் வைத்துள்ள பெயர் ஜில் ஜில் ரமாமணி. ஒவ்வொரு ஆண்டு விழாவிலும் இவரின் நடனம் இருந்து விடுகின்றது. கூட்டத்தோடு கோவிந்தா போடும் அந்த நடனத்திற்காக இவர் வீட்டில் செய்யும் பந்தா என்பதைச் சொல்லி மாளாது. ஆனால் இதற்குப் பின்னால் ஒரு நுண்ணரசியல் உண்டு. அந்த நடனத்திற்காகப் பள்ளி வசூலிக்கும் பணத்தில் நவீன ரக ஆடைகள் என்ற பெயரில் தரப்படும் ஆடைகளை அன்று மட்டுமே பயன்படுத்த முடியும். அத்துடன் உதட்டுச் சாயம் என்ற பெயரில் ஒப்பனை தொடங்கி ஏராளமான விசயங்களும் உண்டு. அவருக்குப் பிடித்த பல சமாச்சாரங்கள் இருப்பதால் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றார். ஆண்டு விழா நடக்கப் போகும் அந்த ஒரு மாதத்தில் வீட்டில் இருப்பவர்களைப் படுத்தி எடுப்பதென்பது இவரின் கைவந்த கலை. ஆனால் நடுவே இருக்கும் ஒருவருக்கு இது போன்ற எந்த அக்கப் போர்களையும் கண்டு கொள்வதே இல்லை. “நான் மிஸ் ஆகப் போறேன்” என்பதோடு குடும்பக் குத்து விளக்காக இருப்பதிலேயே திருப்தியடைந்து விடுகின்றார். இவர்கள் படிக்கும் பள்ளியில் ஐந்தாம் வகுப்புக்கு பிறகு தான் மாணவர்களை விளையாட்டில் ஈடுபடுத்துகின்றார்கள். விளையாட்டு, நூலகம் என்று ஒவ்வொன்றுக்கும் வருடந்தோறும் கட்டணம் வாங்கினாலும் பிரயோஜனமில்லை. நானும் நேரிடையாகச் சென்று போராடிப் பார்த்தும் பலன் பூஜ்யம் தான். மூத்தவர் முதன் முதலாகப் பள்ளியில் நுழைந்து முதல் மூன்று வருடங்களில் கலந்து கொண்ட அத்தனை விளையாட்டுகளிலும் கோப்பைகளை அள்ளிக் கொண்டு வந்தார். தொடர்ந்து வந்த வருடங்களில் பேச்சு கட்டுரைப் போட்டிகள் என்று எதையும் விட்டுவைக்க வில்லை. ஆனால் அடுத்தடுத்து பள்ளி நிர்வாகம் புதிய கட்டிடங்களைக் கட்டுவதில் தான் குறியாக இருக்கப் பல திறமைகளைக் கொண்ட மாணவர்கள் செய்வதறியாது இருக்கின்றனர். படிப்பதைத் தவிர வேறு ஒன்றும் தேவையில்லை என்பதாக மாற்றி விட்டனர். குழந்தைகளுக்கு விளையாட்டு ரொம்ப முக்கியம் என்று சொல்லி வைக்க வீட்டுக்குள் ஒவ்வொன்றையும் வாங்கி வர வேண்டியதாகி விட்டது. ஒன்றின் ஆர்வம் தீர்ந்து போய் அடுத்த விளையாட்டில் ஆர்வம் தொடங்கும். ஒரு காயலான்கடைக்குத் தேவையான அத்தனை பொருட்களும் சேரத் துவங்கியது. இதில் பள்ளியில் நடக்கும் கராத்தே வகுப்பு மட்டும் மிஞ்ச திடீரென்று ஒருநாள் மூத்தவர் என்னிடம் “நான் கராத்தே வகுப்பு சேர வேண்டும்” என்றார். “சேர்ந்து கொள்” என்றேன். “வியாழன் ஞாயிறன்று அருகே உள்ள இடத்தில் காலை நேரத்தில் நடத்துகின்றார்கள். அங்கேயும் செல்வேன்” என்றார். “சரி. கேட்டுக் கொண்டு வா. ஆனால் நான் எங்கேயும் வர மாட்டேன். நீ தான் போய்க் கொள்ள வேண்டும் ” என்று ஒதுங்கி விட்டேன். அடுத்த ஒரு வாரத்திற்குள் காரத்தே ஆசிரியரின் அலைபேசி எண் வாங்கிக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார். ஞாயிறன்று காலை தூக்கம் போய்விட்டது. காலை ஆறு மணிக்குள் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும். எட்டு மணிக்கு அழைத்து வர செல்ல வேண்டும். ஜல்லிக்கட்டுக் காளையாகத் திரிந்த என்னை அடக்க வந்தவர் போலத்தான் இவரின் ஒவ்வொரு செயல்பாடுகளும் இருக்கின்றது. பயப்பட வேண்டியதாக உள்ளது. அல்லது நடிக்க வேண்டிய அவசியம் உருவாகி விடுகின்றது. மூவருக்கும் ஒரே மாதிரியான சுதந்திரம். அவரவர் பாதையை அவரவர் தீர்மானிக்க வேண்டிய அவசியத்தைக் கற்றுக் கொடுத்து விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். தேவைப்படும் போது தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்றோம். பள்ளி எதிர்பார்க்கும் மதிப்பெண்களிலும் நாங்கள் எதிர்பார்க்கும் ஒழுக்கத்திலும் இன்று வரையிலும் எந்தப் பழுதும் இல்லை. நான் கண்டிப்பாக எதிர்பார்க்கும் மொழி குறித்த திறமையிலும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு இருந்தாலும் கிராமத்துச் சிந்தனைகளுடன் தான் வளர்த்துக் கொண்டு வருகின்றோம். உறவினர்கள் வீட்டுக்கு இவர்கள் செல்லும் போது இது குறித்த ஆச்சரியங்களை அவர்கள் என்னிடம் சொல்வது உண்டு. குழந்தைகளின் எண்ணங்களை நாம் மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை விடச் சூழ்நிலைகளே அவர்களை ஒவ்வொரு இடத்திலும் அவரவர் அனுபவங்கள் மூலம் கற்றுக் கொடுத்து விடும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன். அப்போது எது தேவை? எது தேவையில்லை என்பதை அவர்கள் உணர வேண்டும் என்பதே முக்கியமாக இருக்கும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன். அந்த உணர்தலை தான் என் செயல்பாடுகள் மூலம் புரிய வைத்துக் கொண்டிருக்கின்றேன். கோடை விடுமுறை தொடங்கிய பொழுதே மூவரும் சேமித்த தொகையைச் சுரண்டி எடுத்த போது பத்தாயிரம் அளவுக்குத் தேறியது. கணினித் துறை சார்ந்த நண்பர் விஜய்யிடம் கேட்டு வைத்திருந்தேன். “இப்போது சிறப்புத் தள்ளுபடி ஒன்று வந்துள்ளது. ரூபாய் 14500க்கு கணினி ஒன்றை வாங்க முடியும் என்று சொல்லியிருந்தார்”. யூபிஎஸ் மற்றும் பெரிய எல்ஈடி திரை போன்ற வசதிகளைப் பார்த்த போது நன்றாகவே இருந்தது. நான் பத்தாண்டுகளுக்கு முன் வாங்கிய ஒண்ணே கால் லட்ச கணினியின் விலையென்பது இப்போது ஐந்தில் ஒரு பங்கு. இது கணினித் துறையில் நடந்த புரட்சி. இவர்கள் பிறந்த போது நான் வாங்கிய கணினி கண்ணீர் விடாத குறையாகக் கதறிய போதும் நான் விட்டுவிடத்தயாராக இல்லை. இரண்டு மூன்று முறை அதைச் சரி செய்து பயன்படுத்திக் கொண்டிருந்தேன். கடைசியாக நண்பர் சொன்னார். “நான் ஒரு லேப்டாப் தருகின்றேன். பணம் மெதுவாகக் கொடுங்க” என்றார். அவர் எனக்கு உதவி செய்ததற்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு. நான் கணினி என்ற பெயரில் வைத்துக் கொண்டிருந்த வஸ்துவை ஒவ்வொரு முறையும் அவர் அலுவலகத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று அவரை படாய்ப்படுத்திக் கொண்டிருந்ததே. அதைவிட அதன் உதிரிப்பாகங்கள் சந்தையில் இல்லை என்பதோடு அதன் உற்பத்தியையும் நிறுத்தி விட்டார்கள் என்ற போது தான் என் மனம் மாறியது. மடிக்கணினி வந்த போது சுகமாகத்தான் இருந்தது. மாட்டு வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவன் வில்லு வண்டியை ஓட்டுபவன் போல சுகமாக இருந்தது. உதாரணம் கூட டிவிஎஸ் 50 என்று வரமாட்டேன் என்கிறது. காரணம் நம்ம சிந்தனை அப்படித்தான் இன்று வரைக்கும் உள்ளது. அப்போது எனது சொந்த தொழில் விசயமாக மடிக்கணினி அவசியமாகத் தேவைப்பட்ட நிலையில் இவர்கள் முதல் வகுப்பில் நுழைந்திருந்தார்கள். அப்போது இவர்கள் என் கணினி பக்கம் வந்ததில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பள்ளியில் நடக்கும் கணினி வகுப்புகள், அது சம்மந்தப்பட்ட பாடங்கள் என்று என்னிடம் வந்து கேட்க அது குறித்துச் செயல்முறை விளக்கத்தை மூவரையும் வைத்துப் பாடம் நடத்த நானே வலியச் சென்று ஆப்பு வாங்கிய கதையாக மாறிவிட்டது. காரணம் பள்ளியில் கணினி என்பதைக் காட்சிப் பொருள் போலக் காட்டிக் கொண்டிருந்தார்கள். அவசியத்தைப் புரிந்து கொண்டே இவர்களுக்குக் கணினி குறித்து முக்கியமான விசயங்களைப் பாடமாகச் சொல்லிக் கொடுத்தேன். இருவர் நான் சொல்லிக் கொடுத்த பாடங்களைக் கேட்டுக் கொண்டு அவர்களின் புத்தகங்களைப் படிக்கச் சென்று விட்டார்கள். மூத்தவர் மட்டும் நான் கொஞ்சம் செய்து பார்க்கின்றேன் என்று தான் மடிக்கணினியை என்னிடமிருந்து கைப்பற்றினார். அதுவே சென்ற வருடத்தில் அவருக்கே சொந்தமாக மாறிவிட்டது போல ஒவ்வொன்றையும் கற்றுக் கொண்டு என் கண்களில் விரல் விட்டு ஆட்டத் தொடங்கி விட்டார். ஒருவர் சென்ற பாதையில் மற்ற இருவரும் பின்னால் செல்ல மூவரின் கைப்பட்டு ஏற்கனவே சூடு குறையாமல் இருந்த மடிக்கணினி மயக்கமாகத் தொடங்கி விட்டது. பூசாரியிடம் முறையிட்டேன். எவரும் என் பிரச்சனைகளைப் புரிந்தபாடியில்லை. தனிப்பட்ட முறையில் இவர்களின் நேரத்தை குறித்து வைத்து இந்த நேரத்தில் தான் உங்களுக்கு என்ற போது அலைபேசியில் சரியாக அலாரம் வைத்துக் கொண்டு அசராமல் என்னைக் கண்காணிக்கத் தொடங்கினர். மூவர் கைக்குச் சென்று திரும்பும் போது நான் அங்கே இருப்பதில்லை. ஏதோவொரு வேலை வந்து விட வேறு பக்கம் நான் நகர்ந்து போய்விட வேண்டிய சூழ்நிலையும் அவர்களுக்குச் சாதமாக மாறத் தொடங்கியது. ஆனால் என்ன கற்றுக் கொண்டார்கள்? என்ன செய்கின்றார்கள் என்பதே எனக்குத் தெரியவில்லை.ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொள்ளப் போகின்றார்கள் என்று ஒரு தடவை பூசாரியிடம் முறையிட்டேன். “நீங்க வேணா பாருங்க. மூத்தவ உங்களுக்குப் பாடம் எடுப்பா” என்றார். நான் முக்கி முக்கி கற்றுக் கொண்ட பல விசயங்கள் முனங்காமல் ஒருவர் கற்றுக் கொண்டு அடுத்தவரிடம் சொல்ல அடுத்தவர் அவருக்குப் போட்டியாக மாற ஒவ்வொரு நாளும் ரணகளமாக மாறத் தொடங்கியது. மொத்தத்தில் எனது கடவுச் சொற்களில் கை வைக்கும் அளவுக்கு வளரத் தொடங்கினர். சரி இவர்களை இனி எதிர்த்துக் கொள்வதில் பிரயோஜனமில்லை என்று கூகுளில் போய் எப்படி எந்தத் தளத்தைப் பார்க்க வேண்டும் என்று ஒரு நாள் கற்றுக் கொடுத்தேன். அது வரைக்கும் உள்ளே சேமித்து வைத்திருந்த விளையாட்டுகளில் தான் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்கள். மற்ற நேரங்கள் பெயிண்ட்டில் படங்கள் வரைந்து கொண்டிருந்தனர். பல சமயம் வேர்ட் ல் போய் புத்தகக் கடிதங்களை டைப் செய்து கொண்டிருந்தார்கள். என்றைக்குக் கூகுள் தளத்தை அறிமுகம் செய்து வைத்தேனோ அன்றைக்கே என் விதி மாறத் தொடங்கியது. தேவையில்லாத பக்கம் போகாமல் இருக்க கேம்ஸ் என்ற வார்த்தையை டைப் செய்தால் என்னென்ன வார்த்தைகளை கொண்டு வந்து காட்டுகின்றது என்பது தொடங்கி, கணினியில் உள்ள மோசமான விசயங்கள் எதெது என்று ஒரு பத்து நிமிடங்கள் தான் பாடம் எடுத்தேன். நான் இது குறித்துப் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே மூத்தவர் “சரி சரி நீங்க போகலாம்” என்றார். இவங்களுக்கு என்ன தெரியப்போகின்றது என்ற அசட்டையுடன் ஒதுங்கிச் சென்றது தான் என் முக்கியத் தவறாகப் போனது. கேம்ஸ் சைட் என்னவெல்லாம் இருக்கின்றது என்பதைப் பற்றி அடுத்த இரண்டு நாளில் மூத்தவர் தனது ஆராய்ச்சியை முடிதது வைக்க அடுத்து வந்த ஞாயிற்றுக் கிழமை எனக்குப் புலம்பல் ஞாயிறாக மாறிப் போனது. வேறு எந்த வழியில் யோசிக்கலாம் என்று மண்டையைச் சுரண்டிய போது அடுத்த ஆலோசனையை பூசாரி தான் எடுத்துக் கொடுத்தார். “இனி ஒவ்வொரு ஞாயிறு மட்டுமே உங்களுக்கான நாள். அன்று அப்பா உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டார். என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஆனால் திங்கள் முதல் சனிக்கிழமை வரைக்கும் அதிக அளவு கணினி தொலைக்காட்சி பக்கம் கவனம் செல்லக்கூடாது ” என்ற சமாதான ஒப்பந்தத்தில் மூவருடன் கையெழுத்து போட்டுக் கொண்டேன். வண்டி சரியாகவே போய்க் கொண்டிருந்தது. அலுவலகம் விட்டு வரும்போது தூங்கிக் கொண்டிருப்பார்கள். சில சமயம் அவசரத்திற்கென்று ஞாயிறு அன்று கடன் கேட்டு வாங்கத் தொடங்க மூவரும் அடிக்கப் பாய்ந்து வந்தார்கள். காரணம் ஒவ்வொரு ஞாயிறும் ஆடு புலி ஆட்டம் போலக் கணினியில் முன்னேறிக் கொண்டிருந்ததை நான் யூகித்திருக்கவில்லை. சென்ற வருடத்தில் ஒரு நாள் இவர்கள் என்ன தான் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்ற அரைமணி நேரம் அமர்ந்து பார்த்த போது அப்போது தான் இந்தக் கணினி சம்மந்தபபட்ட விளையாட்டுகளின் சூட்சமத்தை ஓரளவுக்குப் புரிநது கொள்ள முடிந்தது. இவர்களுக்காகத் தியாகம் செய்து விட்டு அமைதி காக்கத் தொடங்க அது வேறொரு வகையில் விஸ்வரூபம் ஆனது. மூத்தவர் விளையாடிய சமயம் போக மற்ற ஆராய்ச்சிகளில் இறங்கத் தொடங்க இரண்டு முறை ரீ இண்ஸ்டால் செய்யும் அளவுக்குக் கொண்டு வந்து விட்டது. ஆனால் இவர்கள் எனக்குப் பாடம் எடுக்கத் தொடங்க எனக்குப் பயம் வரத் தொடங்கிவிட்டது. காரணம் இவர்களின் புத்திசாலித்தனம் என்பது எனக்குப் பலவித பிரச்சனைகளைத் தொடர்ந்து உருவாக்க என்னுடைய விருப்பங்களைத் தியாகம் செய்ய வேண்டியதாக இருந்தது. 2007 ல் வாங்கிய மடிக்கணினி கதறத் தொடங்கியது. சரி செய்தாலும் மடிக்கணினி சமாதனம் ஆகாமல் படுத்துவிடக் கீழே இதற்கென்று செய்யப்பட்ட மின்விசிறியை வைத்தே பிறகே மடிக்கணினி உயிர் பெறத் தொடங்கியது. அடுத்தப் பிரச்சனை உருவானது. விசைப்பலகையில் உள்ள எழுத்தை அமுக்கினால் உள்ளே போய் நின்று அடம் பிடிக்கத் தொடங்கியது. மூவரும் குத்திய குத்தில் அதுவும் அல்ப ஆயுசோடு முடிந்து போக அதற்கென்று தனியாக இணைப்பு விசைப்பலகையை மாட்டி வைக்க வேண்டியதாகி விட்டது. அப்போது கூடப் புதிய கணினி வாங்க வேண்டும் என்ற எனக்கு எணணம் வரவில்லை. இவர்கள் விளையாடிய மோட்டார் பைக் ரேஸ்கள் முதல் மற்ற விளையாட்டுகள் அனைத்து கணினி உள்ளே இருந்த பாகங்களைப் பதம் பார்க்கத் தொடங்க பொறுமை இழந்து வெறியோடு கத்தத் தொடங்கினேன். அப்போது தான் பூசாரி சொன்னார். ” நண்பர் சொன்ன அந்தச் சிறப்புத்தள்ளுபடியை கொண்டு வந்துடுங்க”. என்றார். அப்போது மூவரிடமும் பொதுவாகச் சொல்லி வைத்தேன். “மூவரும் மாதம் தோறும் கிடைக்கும் பணத்தைச் சேமித்து வைங்க. இந்த வருட கோடை விடுமுறையில் புதிததாகக் கம்ப்யூட்டர் வாங்கலாம்” என்றேன். பத்தாயிரம் தேறியது. இவர்களுக்காக வாங்குவதா? நம் கௌரவம் என்னவாகும் என்று யோசித்துக் கொண்டே தள்ளுபடியில் கிடைத்த தொகையோடு இன்னும் சில வசதிகளைச் சேர்க்கச் சொன்ன போது மொத்தமாக 20000 என்ற அளவுக்கு வந்து சேர்ந்தது. அங்கங்கே சுரண்டி கணினியை வீட்டுக்கு கொண்டு வந்த போது நண்பரிடம் சொன்னேன். “இரண்டு பாதைகளை உருவாக்கி வைத்து விடுங்க. அவர்கள் பக்கம் சாதாரண விசயங்களை வைத்துடுங்க” என்றேன். மூத்தவரிடம் என் பக்கம் உள்ள கடவுச்சொல்லை சொல்லவில்லை. புதிய கணினி, மாற்றிய இணைய வேக கட்டணச் சலுகை என்று உருவாக்க இணைய வேகம் மின்னல் வேகத்தில் செல்ல எனக்குச் சுகமாக இருந்தது. இதுவரையிலும் யூ டியுப் பக்கம் செல்லவில்லையே என்று பிடித்த தளங்கள் ஒவ்வொன்றையும் பார்வையிட்டுச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன். என் பின்னால் நின்று கொண்டிருந்த மூத்தவர் நான் என்ன கடவுச் சொல்லை அடிக்கின்றேன் என்று கவனித்திருப்பார் போல. நான் பார்த்து விட்டேன் என்று கத்திய போது தான் இவர் பின்னால் இருந்ததை உணர்ந்து திடுக்கிட்டேன். அடுத்த ரெண்டு நாளில் எதை நோண்டினாரோ மீண்டும் புதிய கணினியில் ரீ இன்ஸ்டால். சரி இனிமேல் ஒவ்வொன்றையும் மூடி வைத்தால் தான் பிரச்சனை என்று மூவரையும் வைத்துக் கொண்டு புதிய ஒப்பந்த நகல் ஒன்றை உருவாக்கி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டேன். அரை மணி நேரம் உட்கார்ந்து பாடம் எடுத்தேன். ரகசியம் எதுவுமில்லா நிலையில் மூவரும் புதிய கணினியை ஆக்ரமித்தனர். “இவர்கள் பார்க்கும் தளத்தைப் பார்த்துக் கொள்” என்று பூசாரியிடம் சொல்லியிருக்கப் பெரிதான எந்தப் பிரச்சனையும் உருவாகவில்லை. இவர்களின் கோடை விடுமுறை தொடங்கும் போது புதிய கணித புதிர்கள் சார்ந்த விளையாட்டுகளை அறிமுகம் செய்து வைப்போம் என்று சென்னையில் பள்ளித் தோழனிடம் சொல்லி வாங்கி அனுப்பி வை என்றேன். அவன் புத்திசாலித்தனமாக வாங்கிய அத்தனை விளையாட்டுக்களையும் அவன் கணினியில் சேமித்து வைத்து விட்டு அதனை ஒரு குறுந்தகட்டில் சேமித்து வைத்து எனக்கு அனுப்பினான். அதை எப்படிக் கணினியில் செயல்பாட்டுக் கொண்டு வர வேண்டும் என்பதையும் அழைத்துச் சொல்ல எனக்குப் பாதிதான் புரிந்தது. தபால் மூலம் வீட்டுக்கு உள்ளே வந்த போது இவர்களின் கோடை விடுமுறை தொடங்கியிருந்தது. அலுவலகத்தில் இருந்து மதியம் உள்ளே வந்தவனுக்கு மூவரும் எனக்குச் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். சந்தேகப்பட்டு என்னவென்று கேட்க வந்த சிடியை காட்டி தயார் செய்து கொடுங்க என்றனர். நண்பனிடம் கேட்டு அதைப் பாதித் தான் புதிய கணினியில் ஏற்றியிருப்பேன். மூத்தவர் நான் பார்த்துக் கொள்கின்றேன் என்று என்னை அலுவலகத்திற்கு விரட்டினர். காரணம் என்னால் முழுமையாக வெற்றிக் கோட்டைத் தொட முடியவில்லை. சிடியில் இருந்ததைக் கணினியில் சேமித்து வைத்து விட்டு பார்த்துக் கொள்ளுங்க என்று அலுவலகம் சென்று விட இரவு வந்து பார்த்தபோது அதனைப் பற்றி விலாவாரியாகச் சொன்னார்கள். ஆனால் அதுவும் ஒரு வாரத்திற்குள் அலுத்துப் போய்விட மறுபடியும் ஆன்லைன் பக்கம் தாவிவிட்டனர். சரி யூ டியுப் பக்கம் சென்று விண்வெளி பற்றிய தளங்களை அறிமுகம் செய்து வைத்த போது அதுவும் முடிவுக்கு வர அடுத்தடுத்துத் தாவிக் கொண்டேயிருந்தனர். என்னால் இவர்களின் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓட முடியவில்லை என்பது மட்டும் புரிந்து ஒதுங்கத் தொடங்கி விட்டேன். நான் அதற்குப் பிறகு கண்டு கொள்ளவில்லை. ஆன்லைனில் உள்ள பல கடினமான விளையாட்டுகளை கையாளத் தொடங்க வேடிக்கை பார்ப்பதைத்தவிர எனக்கு ஒன்றும் புரியவில்லை. மனதிற்குள் இருந்த பயம் மட்டும் நாளுக்கு நாள் என்னுள் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. மீண்டும் நண்பனை அழைத்தேன். இவர்களின் செயல்பாடுகளைக் குறித்துச் சொல்லி சரியா? தவறா? என்று கேட்க அவன் கேட்ட கேள்வியை என்னிடமே கேட்டுத் திரும்பத் தாக்கத் தொடங்கினான். “உன் வயசுக்கு நாக்கை அடக்க முடியல என்கிறாய். அவர்களை ஏன் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றாய். இன்று வரைக்கும் உன் அப்பாவை குறை சொல்லத் தெரிகின்ற நீ ஒழுங்கான அப்பாவாக மாற முடியவில்லையே” என்று அம்பை என் பக்கம் வீச அமைதி காத்தேன். “பேச்சு வார்த்தை குறைந்து போய் இது குறித்த ஆர்வம் மட்டுமே மிஞ்சி விடாதா” என்றேன். “ஒரு நாள் முழுக்க ஒயரை பிடிங்கி வைத்து விட்டுப் பார். உன்னால் அவர்களுடன் சரிசமமாகப் பேச முடியாது” என்றான். செய்து பார்த்தேன். என்னை விட வீட்டில் பூசாரிக்கு ஒவ்வொரு பிரச்சனையும் பூதாகரமாக மாறத் தொடங்கியது. பூசாரி கெஞ்சத் தொடங்கினார். “குழந்தைகள் நிறையப் பேச வேண்டும். விவாதம் செய்ய வேண்டும் என்று நீங்க சொல்லி இன்று ரெண்டு மடங்கு பேசி என்னைக் கொல்றாங்க.” என்றார். இது போன்ற சமயங்களில் பூசாரி இறுதியான ஆயுதத்தை எடுப்பார். “அடுத்த வருடம் ரெண்டு பேரை கொண்டு போய் ஹாஸ்ட்டல்ல கொண்டு போய்ச் சேர்க்கப் போகின்றோம்” என்பார். டக்கென்று பதில் பாய்ந்து வருகின்றது. “நீங்க ரெண்டு பேரும் போய்ச் சேருங்க” என்கிறார்கள் அடக்குமுறைகள் என்பதை ஒவ்வொரு தலைமுறையும் தங்களுக்குத் தெரிந்த வகையில் உடைத்துக் கொண்டே தான் வருகின்றார்கள். என் அப்பா மேல் நான் வைத்த குற்றச்சாட்டுக்களைப் போல என் குழந்தைகள் என் மேல் வைக்காமல் இருக்கத் தினந்தோறும் போரட வேண்டியதாக உள்ளது. இப்போது கதவை திறந்து வைக்க வீட்டில் தென்றல் வீசுகின்றது. 22 21. மிதி வண்டி - வீரமும் சோகமும் மூத்தவளுக்குப் பள்ளி செல்ல மிதி வண்டி வேண்டுமாம். கடந்த நாலைந்து வாரமாக வீட்டுக்குள் ஒரே அமளி. நான் கண்டு கொள்ளவே இல்லை. காரணம் பள்ளிக்கும் வீட்டுக்கும் இருக்கும் தொலைவு ஐநூறு மீட்டர் மட்டுமே. மூன்று வருடங்களுக்கு முன்பே வாங்கிய மிதிவண்டி வேறு வீட்டுக்குள் இருக்கிறது. ஆனால் மூன்று பேர்களின் கைங்கர்யத்தில் அது பரிதாபமாக வீட்டு முலையில் பரிதாபமாகக் கிடக்கின்றது. சும்மா சொல்லக்கூடாது. பிரித்து மேய்ந்து விட்டார்கள். வீட்டருகே உள்ள முக்கியச் சாலைகள் தவிர அத்தனை சந்துகளிலும் இவர்களின் ராஜ்யங்களை நடத்தி முடித்து விட்டார்கள். தற்போது இருவர் மிதி வண்டியை அநாயாசமாகக் கையாள்கிறார்கள். ஒருவருக்கு மட்டும் இன்னும் கைகூடவில்லை. மெதுவாகவே கற்றுக் கொள்ளட்டும் என்று நானும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் இப்போது மூத்தவளின் எதிர்பார்ப்பு வேறு விதமாக உள்ளது. நான் மிதி வண்டியை பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். புது வண்டி தான் வேண்டும் என்ற கோரிக்கையுடன் நச்சரிக்கத் தொடங்கினாள்.. “என்னுடன் படிக்கும் தோழிகள் பலரும் எடுத்து வருகிறார்கள். நானும் இந்த வருடம் எடுத்து வரப்போவதாகச் சொல்லி விட்டேன்” என்று வீட்டின் நிதி மந்திரியிடம் சொல்லி வைக்க அதுவே இப்போது விஸ்ரூபமாக வந்து நிற்கிறது. இந்தப் பிரச்சனையை மனைவி தான் தொடங்கி வைத்தார். அசந்தர்ப்பமாகப் பள்ளி இறுதித் தேர்வின் போது கொடுத்த வாக்குறுதியிது. இப்போது புயலாகத் தாக்கிக் கொண்டு இருக்கிறது. “அம்மா நீங்க சத்தியம் செய்து கொடுத்துருக்கீங்க. மீற மாட்டீங்க தானே” என்றவளை பார்த்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தேன். மூத்தவள் மனைவியுடன் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறாள். கடந்த ஒரு வாரமாகவே நினைவூட்டிக் கொண்டு இருந்தவள் இப்போது அடிதடியில் இறங்கி விட அபயக்குரலுடன் மனைவி என்னருகே வந்து விட்டார். காரணம் பள்ளி நாளை திறக்கப் போகிறார்கள். கீழ் சபையில் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு என் பார்வைக்கு வந்துள்ளது. நானும் கடத்திக் கொண்டே வந்து விடத் தற்போது உச்சகட்ட போராட்டமாய் வீட்டில் சட்டம் ஒழுங்க கெட்டு 144 தடையுத்தரவு போடும் அளவுக்கு வந்துள்ளது. மகளின் வார்த்தைகளை மனைவியால் எதிர்கொள்ள முடியாமல் என்னை உதவிக்கு அழைத்தார். மகளிடம் ஒரு விதமான சாமர்த்தியம் உண்டு. ஒரு காரியம் நடக்க வேண்டுமென்றால் முதலில் அறிவிப்பாக வெளியிடுவாள். பிறகு சந்தர்ப்பம் பார்த்து நினைவூட்டுவாள். பிறகு எப்போது வாய்ப்புண்டு என்பதை நோட்டம் விட்டுக் கொண்டு அதற்கான நேரத்தை வாக்குறுதியாகப் பெற்றுக் கொள்வாள். பெற்ற வாக்குறுதியை அலைபேசியில் நினைவூட்டலாகப் பதிந்து வைத்து விடுவாள். மறந்து விடுவாள் என்று நினைத்துக் கொண்டே இருப்போம். அவளும் மறந்து விடுவாள். ஆனால் அலைபேசி ஒலி அவளுக்கு மறுபடியும் நினைவூட்டி விடும். மறுபடியும் ரணகளம் தொடங்கும். அந்த ரணகளம் தான் நடந்தது. நான் தாமதப்படுத்தியத்திற்கு வேறு சில காரணங்களும் இருந்தது. முக்கியமாகப் பள்ளியில் மூன்று வருடத்திற்கு ஒரு முறை பள்ளிச் சீருடையை மாற்றுகிறார்கள். என்ன யுக்தியோ தெரியவில்லை?. சுளையாக ஒரு பெரிய தொகையைச் செலவளிக்க வேண்டியுள்ளது. சாதாரணப் பள்ளிச் சீருடைகள், விளையாட்டு நாள் சீருடை என்று ஒவ்வொரு நாளுக்கும் தனித் தனியான உடைகள். உடைகளைப் பள்ளியில் தான் வாங்க வேண்டும். இதைவிட மற்றொரு கொடுமையுண்டு. இந்தச் சீரூடைகளைத் தைப்பவரிடம் கொடுத்து வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்ப்பதென்பது சவாலான விசயமாக இருக்கிறது. காரணம் பள்ளிக்கருகே இருக்கும் அவரிடம் மலை போலக் குவிந்து கிடக்கும் உடைகளைப் பார்க்கும் நமக்குக் கண்ணைக் கட்டும். அங்கே தைக்கக் கொடுக்கும் மொத்த சீரூடைகளையும் பார்க்கும் போது மலைப்பாகவே உள்ளது. குறிப்பிட்ட மாதங்களில் அவரின் உழைப்பையும், வருமானத்தையும் கணக்கிட்டுப் பார்த்தால் வியப்பாக இருக்கும். உத்தேச கணக்காக அவருக்குச் சுமாராக இந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு லட்சம் ரூபாய் வருமானம். நடுத்தர வர்க்கத்தில் இயல்பான வருமானம் உள்ள பெற்றோர்கள் இந்தச் செலவீனங்களைப் பார்த்து தடுமாறி விடுகின்றார்கள். இது போன்ற சமயங்களில் தான் என்னுடைய பள்ளிக்கூட நாட்களில் தபால் பெட்டி டவுசரோடு பள்ளிக்குச் சென்ற காலம் நினைவுக்கு வந்து போகின்றது. தற்போது குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கும் பள்ளியென்பது திருப்பூரில் உள்ள மற்றப் பள்ளிகளை விட இயல்பான பள்ளிக் கட்டணம் இருக்கிறது. நன்கொடை என்பது இல்லை. தேவையில்லாத அக்கிரம செயல்பாடுகள் எதுவுமே இல்லை. இருந்த போதிலும் வருடந்தோறும் குறிப்பிட்ட வகையில் பள்ளிக்கட்டண தொகையை ஏற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள். எதனால் என்று புரியவே இல்லை. ஆனால் உள்ளே பணிபுரியும் எந்த ஆசிரியர்களுக்கும் அவர்களின் ஊதியத்தை உயர்த்தவில்லை. நகர்புறங்களில் வாழும் எல்லா அப்பாக்களின் வாழ்க்கையுமே பட்ஜெட் பத்மநாபன் வாழ்க்கை தான். எல்லாவற்றையும் யோசித்துக் கொண்டு பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். ஆனால் சூழ்நிலை வேறு விதமாக இருந்தது. வீட்டுக்குள் நடந்த உரையாடல்களைக் கவனித்துக் கொண்டே குளியலறைக்கு நகர முற்பட்ட என்னை மனைவியும் குழந்தைகளும் நகர விடாமல் தடுத்தார்கள். சட்டென்று சமாளிக்க இரண்டு வாரத்திற்குக் கடைபிடிக்க வேண்டும் என்று அதிரடி திட்டத்தை அமல்படுத்தினேன். ஒவ்வொருவரும் அடுத்த ஒரு வாரத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டுக் கொடுத்தேன். குறிப்பாக மூன்று பேர்களுக்குள் சண்டை வரக்கூடாது. தினந்தோறும் இரண்டு முறை குளிக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு முறையாவது தியானம் செய்ய வேண்டும் என்பது போன்ற பல கட்டளைகள்., அப்படா…. இப்போதைக்குத் தப்பித்தாகி விட்டது என்று நகர்ந்தேன். ஆனால் என்ன ஆச்சரியம்? ஒவ்வொரு நாளும் அட்சரம் பிறழாமல் எல்லாவற்றையும் கடைபிடித்து என்னைக் கலங்கடித்தார்கள். அத்துடன் மற்றொரு காரியத்தையும் கூடவே செய்தார்கள். அலுவலகத்தில் இருக்கும் எனக்குக் குறுஞ்செய்தி மூலம் இதை முடித்து விட்டோம் என்ற சாட்சி கடிதம் வேறு. எனக்குப் புரிந்து விட்டது. இந்த வாரம் மாட்டிக் கொள்ளப் போகின்றோம் என்று. சென்ற வாரம் கடைக்குச் சென்ற போது ஞாயிறு என்பதால் கடை மூடியிருந்தது. மூத்தவளின் மூஞ்சி சுருங்கிப் போனதை மனதிற்குள் குறித்து வைத்துக் கொண்டேன். ஒரு பொருளை அடைவதற்கு முன்பு இருக்கும் அவளின் முஸ்தீபுகளைக் குறித்துக் கொண்டேன். அடுத்த ஞாயிற்றுக் கிழமைக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை? இன்று காலையில் பக்குவமாக நடந்து மூவரும் சேர்ந்து அதே கடைக்கு அழைத்துச் சென்றார்கள். எப்போதும் போலவே பூட்டியிருந்தது. அப்பா இங்கே வாங்கப்பா என்று நாலைந்து கடைகள் தாண்டி மற்றொரு மொத்த கொள்முதல் கடைக்கு அழைத்துச் சென்ற போது தான் எனக்குப் புரிந்தது. ஏற்கனவே வீட்டுக்கருகே இருந்தவர்களிடம் விசாரித்துத் திட்டமிட்டு இங்கே கொண்டு வந்து நிறுத்திய விதம். அமைதியாய் பணத்தைக் கட்டி விட்டு உள்ளே கவனித்தேன். எந்த வகையான வண்டி, என்னென்ன வசதிகள் அதில் இருக்க வேண்டும் என்று உள்ளே மிதி வண்டியை கோர்த்துக் கொடுப்பவர்களிடம் கட்டளையிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அங்கே இருப்பதை மூவருமே கண்டு கொள்ளவேயில்லை என்பது தான் யான் பெற்ற இன்பம் 23 22. (இன்றைய) கல்வி என்றால் கவலை என்று அர்த்தம் “கல்வியே வாழ்வின் கலங்கரை விளக்கம். அது தான் ஒருவருக்கு என்றுமே அழியாத சொத்து.” “கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.” “கல்வியறிவு இல்லாதவர் கண் இருந்தும் குருடனாவர்.” இது போன்ற எத்தனை பழமொழிகளைக் கேட்டுருப்போம். ஆனால் இன்றைய கல்வியென்பது இரண்டு கட்டத்திற்குள் தான் நிற்கின்றது. விற்க தயாராக இருப்பவர்கள். அதை வாங்க தகுதியிருப்பவர்கள். இவர்கள் இருவரையும் தாண்டி மிச்சம் மீதி இருப்பவர்களைப் பற்றித் தான் நாம் பேசப் போகின்றோம். என் மகன் பக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கின்றான் என்பது பழைய நிலை. என் மகன் இந்தப் பள்ளியில் படிக்கின்றான் என்பதே தற்போதைய கல்விச்சூழல். இது தவிர இன்னமும் சிறப்பான கல்வியை எந்தப் பள்ளி தருகின்றது என்ற ஆராய்ச்சியும் ஒவ்வொருவர் மனதிலும் இடைவிடாது ஓடிக்கொண்டே தான் இருக்கின்றது. தற்போது சிறப்பான கல்வி என்பதற்குச் சில குறிப்பிட்ட வரையறை உண்டு என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். பள்ளியின் பெயர் பிரபல்யமாக இருக்க வேண்டும். பள்ளியில் தமிழைத் தவிர மற்ற அத்தனை மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பள்ளியின் பாடத்திட்டம் மத்திய அரசாங்கத்தின் பாடத்திட்டமான சிபிஎஸ்சி யில் இருக்க வேண்டும். குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து ஓராண்டுக்குள் ஆங்கிலத்தில் பேச கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். இது போல இன்னமும் பலப்பல. இங்குச் சிறப்பான கல்வி என்பது அறிவின் அடிப்படையில் அல்ல. அதிகமான மதிப்பெண்கள் வாங்குவது அல்லது வாங்க வைக்க உதவும் கல்விக்கூடங்களுக்குத்தான் மரியாதை. இந்த கல்விக்காகத் தான் திருவாளர் நடுத்தரவர்க்கம் தங்கள் தகுதிக்கு மீறி தரமில்லாத பள்ளியில் சேர்த்து கையோடு காலையும் சுட்டுக் கொண்டு தடுமாறிக் கொண்டிருக்கின்றது. அரசாங்கமும் கல்வியென்பது எங்கள் பொறுப்பல்ல என்று கைகழுவ தயாராகிக் கொண்டிருப்பதால் தனியார் கட்டண கொள்ளைகளைக் கொள்கை என்ற பெயரில் கண்டும் காணாமல் நகர்ந்து கொண்டேயிருக்கின்றது. ஆனாலும் மக்களின் மாறியுள்ள மனோபாவத்தின் காரணத்தால் வருடந்தோறும் கல்வி வியாபாரிகள் வளர்ந்து கொண்டே தான் இருக்கின்றார்கள். கடந்த இருபது வருடத்திற்கு முன்னால் ஒரு சிறிய ஓட்டு வீட்டுக்குள் தொடங்கிய கல்விக்கூடங்கள் இன்று பல ஏக்கர் பரப்பளவில் பெரிய நிறுவனமாக வளர்ந்து வருடந்தோறும் கோடிகளை அள்ளி குவிக்க முடிவதால் கேடிகளின் கடைசி அடைக்கலமே இன்று கல்விச் சந்தையாக மாறியுள்ளது. நம் நாட்டில் கல்வியென்பது தொடக்கத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே என்பதாக இருந்தது. அதற்குக் குரு சிஷ்யன் என்று புனிதம் பூசப்பட்டது. அதுவே படிப்படியாக மாறி திண்னைப் பள்ளிக்கூடம் என்கிற ரீதிக்கு வளர ஏராளமான மாற்றங்கள் தேவைப்பட்டது. கல்வியென்பது பரவலாக்கம் ஆகாத காரணத்தால் பல நூற்றாண்டுகள் இந்தியா என்பது அறியாமை இருளுக்குள்ளே முழ்கி கிடந்தது. உழைக்க மட்டுமே தெரிந்த மக்களுக்குப் பிழைத்துக் கிடப்பதே இந்த வாழ்க்கை என்கிற சூழ்நிலையில் கல்வியென்பது அந்நியமாகவே இருந்தது. இந்தியா சுதந்திரமடைந்தும் கூடத் திடீர் மாற்றங்கள் எதுவும் உருவாகவில்லை. இதுவே குறிப்பிட்ட சிறுபான்மையினர் மட்டுமே அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்தவும் வசதியாக இருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்றதும் படிப்படியான மாற்றங்கள் உருவான போதிலும் கல்வி ரீதியான மாற்றங்கள் மட்டும் மந்தகதியிலேயே இருந்தது. ஆங்கிலேயர்கள் உடலளவில் இந்தியன். உள்ளத்தளவில் ஆங்கிலேயன் என்கிற புதிய தலைமுறைகளை உருவாக்கி வைத்திருந்த காரணத்தால் எந்த மாற்றமும் இங்கே எட்டிப் பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி தோற்றது. அதன் உண்மையான காரணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அரசியல் சாயம் பூசப்பட ஆட்சி மாற்றம் உருவான போது தான் இங்கே காமராஜர் என்றொரு தனிமனிதனின் சாதனைகளைச் சரித்திரம் குறித்துக் கொள்ளத் தொடங்கியது. பெருந்தலைவர் காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வந்த பிறகே கல்வியென்பது அனைவருக்கும் உரியது. அரசாங்கம் இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டிய ஒன்று என்பதாக மாறியது. சாதி, மதம் என்ற அறைக்குள் அடைக்கப்பட்டு வைத்திருந்த கல்விக்கு அதற்குப் பிறகே இறகு முளைத்தது. வாழ்க்கையென்பது ஒரு வட்டம் தானே? இன்று கல்வியென்பது தொடங்கிய நிலைக்கே வந்து கொண்டிருக்கிறது. வசதியிருப்பவர்களுக்கே கல்வியென்றும் மற்றவர்களுக்கு எட்டா கனியாக மாறிக் கொண்டு வருகின்றது. இன்று இந்தியாவில் கல்வியென்பது விலை மிக்கப் பொருளாக மாறியுள்ளது. மலைபிரதேசங்களில் வாழ்பவர்களின் குழந்தைகளுக்கு இந்த விளக்கு கூடக் கிடைக்காமல் சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டுகளுக்குப் பின்பும் கல்வியறிவு இல்லாத இருட்டில் தான் இன்றும் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். சில காரணங்கள். அரசாங்கத்தின் தெளிவற்ற கொள்கைகள். ஆட்சியளார்களின் கல்வி குறித்த அலட்சிய மனப்பான்மை. மக்களின் மாறிக் கொண்டிருக்கும் மனோபாவங்கள். உருவான தொழில் வளர்ச்சியால் வளர்ந்த நடுத்தர வர்க்கம். அரசு பள்ளிகளின் பணியாற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை முறைப்படுத்தாத அரசாங்கத்தின் கொள்கையினால் உருவான வீழ்ச்சி. அரசு பள்ளிக்கூடங்கள் என்பது அரசாங்கத்தால் கண்டும் காணாமல் இருக்க இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களிலும், அடிப்படை சுகாதாரமில்லாத நிலையில் தான் உள்ளது. கடந்த பத்தாண்டுகளாக அரசு பள்ளிகளின் வீழ்ச்சியென்பது அதளபாதாளத்தில் உள்ளது. இன்று உலகமென்பது கிராமமாகச் சுருங்கியிருந்தாலும் இன்றும் இந்தியா என்பது மேலைநாடுகளால் கிராமத்தின் வடிவமாகவே பார்க்கப் படுகின்றது. எந்த மாற்றமும் இங்கே வந்து விடக்கூடாது என்பதில் தான் ஆட்சியாளர்கள் கவனமாக இருக்கின்றார்கள். தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டியவர்கள் தலையைத் தூக்கி கேள்வியேதும் கேட்டுவிடக்கூடாது என்பதில் தான் கவனம் செலுத்துகின்றனர். உருவாகக்கூடிய மாற்றங்களும் குறிப்பிட்ட சதவிகித மக்களுக்கு மட்டுமே போய்ச் சேர்ந்து கொண்டிருப்பதால் இங்கே 90 சதவிகித மக்களுக்கு மழுங்கடிக்கப்பட்ட சிந்தனைகளைத் தான் கல்வி என்ற பெயரில் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். கல்வித்திட்டத்தை இன்று வரையிலும் மாற்ற வேண்டும் என்ற எண்ணமில்லாத ஆட்சியாளர்களால் குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்வியைக் கற்பதிலே நாம் பெருமையடைகின்றோம். உண்மையான கல்விக்கும் நாம் கற்றுக் கொண்டிருக்கும் கல்விக்கும் உண்டான வித்தியாசங்களைப் பார்த்து விடுவோம். கேள்வி மீன் எங்கே வசிக்கின்றது? பதில். மீன் தண்ணீரில் வசிக்கின்றது. இதுவொரு இயல்பான கேள்வி பதில். ஆனால் உண்மையான அறிவை வளர்க்கும் கல்வி எப்படி இருக்க வேண்டும்? மீன் ஏன் தண்ணீரில் வசிக்கின்றது? என்ற கேள்வி எழுப்பப்படும் போது தான் மீனிற்கு உள்ள உடல் அமைப்பு முதல் அதன் வாழ்வியல் குறித்த அத்தனை விபரங்களையும் ஒரு மாணவனால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் பள்ளியில் நடத்தப்படும் பாடங்கள் அனைத்தும் கேள்வி பதில் என்கிற ரீதியில் இருப்பதால் அது குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் சிந்தனைகள் சென்று விடாதவாறு இருக்க வைக்கப்படுகின்றது. உண்மையான அறிவு என்பது தேடுதலில் இருந்தே தொடங்கப் படவேண்டும். ஒரு பதிலில் இருந்து கேட்கப்படும் பல கேள்விகள் மூலமே ஒரு மாணவனின் அறிவு கூர்மையாகின்றது.. ஆனால் இங்கே பதில் என்பது வாங்கும் மதிப்பெண்களுக்காக என்கிற ரீதியில் மாற்றப்பட்ட பிறகு கூர்மை குறித்துக் கவலைப்படுபவர் யார்? தொடக்கத்தில் இங்கே கல்வியென்பது ஒரு கனவாக இருந்தது. அது குறித்துக் கூட யோசிக்கக்கூட எவருக்கும் நேரம் இருக்கவில்லை. உடல் உழைப்பை வைத்து வாழ்ந்து வாழ்க்கையை முடித்துக் கொண்டு சென்றுவிட அடுத்து வந்த தலைமுறைகளும் அதன் வழியே நடக்க இருட்டுக்குள் இந்தியாவாக இருந்தது. அவரவர் நம்பிக்கைகளே வழி நடத்தியது. ஆனால் இன்று தலைகீழாக மாறியுள்ளது. கல்வி என்பது இயல்பான ஒன்று. அது வாழ்க்கையின் அங்கம். படிக்காதவர்கள் என்றால் அவர்களுக்கு மரியாதையில்லை. கைநாட்டு மக்கள் இன்னமும் அதிக அளவில் உள்ள இந்தியாவில் கல்வி மூலம் வாழ்வில் உயர்ந்து அடுத்த நிலைக்கு நகர்ந்தவர்கள் கோடிக்கணக்கான பேர்கள் இருந்தாலும் உருவான மாறுதல்கள் என்பது இன்னமும் முழுவீச்சில் நடந்தபாடில்லை. இன்று ஏழை, நடுத்தரவர்க்கம், என்று பாரபட்சமில்லாது தங்களின் குழந்தைகளின் எதிர்காலக் கனவுக் கோட்டையில் கல்வியைத் தான் அஸ்திவாரமாகக் கருதுகின்றார்கள். தங்களது மகன் மகள் எப்படியும் படித்து முடித்து ஒரு நிலையான வேலையில் அமர்ந்து விட வேண்டும் என்று எண்ணமில்லாத பெற்றோர்களே இன்று இல்லை என்று சொல்லலாம். நன்றாக நினைவு வைத்துக் கொள்ளவும். ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகள் நல்ல சம்பளம் வரக்கூடிய வேலையில் தான் அமர வேண்டும் என்று நினைக்கின்றார்களே தவிர மறந்தும் கூட ஒரு குறிப்பிட்ட தொழில் சார்ந்த விசயத்தில் ஈடுபட்டு மேலே வர வேண்டும் என்று நினைப்பதில்லை. காரணம் நமது கல்வி சுயசார்புத் தன்மையைப் போதிப்பதில்லை. அண்டி வாழ்வதையும் மடங்கி நிற்பதையும் புத்திசாலியாகக் கற்பிக்கப்படுகின்றது. காரணம் கூர்மையில்லாத ஆயுதமென்பது குத்திக் கிழிப்பதில்லை. கற்ற கல்வி பயத்தையும், நம்பிக்கையின்மையை வளர்த்துவிட வாழ்வதற்கு ஒரு வேலை போதும் என்கிற நிலைக்கு இயல்பாகவே தள்ளப்படுகின்றது. இந்தியா சுதந்திரம் பெற்றபோது இருந்த முப்பது கோடி மக்கள் தொகை இன்று 120 கோடியாக மாறியுள்ளது. அதிலும் படிப்படியாக உருவான தொழில் வளர்ச்சியில் இன்று நடுத்தரவர்க்க மக்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இதுவே வாங்கும் சக்தியை நாளுக்கு நாள் அதிகமாக்கிக் கொண்டிருக்கின்றது. இதனால் எல்லாவற்றையும் வாங்க முடிகின்றது. கூடவே கல்வி என்பதையும் வாங்க வேண்டியதாக மாறிக் கொண்டு வருகின்றது. 24 23. காசுக்கேத்த கல்வி என்ன பாலர் பள்ளிக்குக் கல்விக்கட்டணம் ஐம்பதாயிரமா? என்று கொண்டு போய்ச் சேர்ப்பவரிடம் கேட்டுப் பாருங்கள்? டக்கென்று பதில் வந்து விழும். நல்ல பள்ளிக்கூடம் என்றால் செலவு செய்வதில் என்ன தப்பு? உங்கள் கேள்விக்குறி உங்களையே கேலிக்குறியாக மாற்றி விடும்.. இதற்குப் பின்னால் உள்ள சில எளிமையான காரணங்களை மட்டும் இங்கே பார்த்து விடலாம். ஒரு குடும்பம் கிராமத்தில் வாழும் போது அவர்கள் சார்ந்திருப்பது பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழிலில் மட்டுமே. தொடக்கத்தில் மழையை நம்பியதோடு கிணற்றுப் பாசனத்தை நம்பி விவசாயம் இருந்தது. தொடர்ந்து கண்மாய்ப் பாசனம், ஏரிப்பாசனம், ஆற்றுப்பாசனம் என்பது வரைக்கும் தொடர்ந்தது. எளிமையான வாழ்க்கை, இயல்பான பழக்கவழக்கங்கள். மொத்தத்தில் ஆசைக்கும் அச்சத்திற்கும் இடையே வாழ்ந்த வாழ்க்கை. கனவுக் கோட்டைகள் ஏதும் தேவையில்லாத வாழ்க்கை. இன்று எல்லாமே மாறி விட்டது. இன்று தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கணக்குகளில் காவேரி ஆற்றுப் பாசனமென்பது அதோகதியாகிவிட்டது. பருவமழையும் பெய்யெனப் பெய்யும் மழையில் இருந்து மாறிவிட்டது. ஆழ்குழாய் தண்ணீர் வற்றிப் போனதோடு மிச்சம் மீதி இருக்கும் நீரை எடுக்க முடியாத சூழ்நிலையில், வராத மின்சாரத்தை நினைத்து கருகும் பயிர்களைப் பார்த்து மனம் ஏங்கும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டது. கூடவே உடல் உழைப்பை விரும்பாத மக்களும், தங்களுடன் இந்த விவசாய வேலைகள் முடிந்து போகட்டும் என்ற எண்ணம் கொண்ட பெற்றோர்களும் சேர்ந்து இன்று அலுலவக வேலைகளை மட்டுமே விரும்பும் காலகட்டத்தில் வந்து நிற்கின்றோம். மிச்சமென்ன? கிடைத்தவரைக்கும் லாபம் என்று எண்ணிக் கொண்டு விற்றுவிட விவசாயப் பூமிகள் வந்த விலைக்கு விற்கப்பட்டு குடியிருப்பு கட்டிடங்களாக மாறி வருகின்றது. கடைசியாக ஒவ்வொருவரும் நகர்புறங்களை நோக்கி நகரத் தொடங்கி விடுகின்றனர். கிடைத்த வேலையில் ஒட்டிக் கொண்டுவிட மாதம் தோறும் கிடைக்கும் பணம் அதிக நம்பிக்கைகளைத் தந்து விட நுகர்வு கலாச்சாரத்தின் ‘குடி’மகனாக மாறி விடுகின்றனர். நகரத்தில் கிடைத்த வாய்ப்புகளை முறைப்படி பயன்படுத்திக் கொண்டவர்கள் தங்களின் முதல் தலைமுறைகளைக் கல்வி ஏணியில் ஏற்றிவிடச் சமூகத்தில் அந்தஸ்து முதல் அதிகாரம் வரைக்கும் அத்தனையும் எளிதாகக் கிடைத்து விடுகின்றது. அவரவர் வசிக்கும் நகரங்களில் கிடைக்கும் ஏராளமான வாய்ப்புகளில் இந்தக் கல்வி குறித்த சிந்தனைகள் அதிகமாக உருவாகி ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி என்ற எண்ணத்துக்கு வந்து விடுகின்றனர். இந்த இடத்தில் தான் கல்வி வியாபாரிகளின் சேவைகளுக்கும் அரசாங்க பள்ளிகளின் செயலற்ற தன்மைக்கும் போட்டி உருவாகின்றது. கல்வி என்பது அரசாங்கம் பொது மக்களுக்குக் கொடுக்க வேண்டிய கடமை அல்ல. தனியார் மூலம் கொடுக்கப்படும் போது அரசுக்குச் சுமை குறைகின்றது என்ற அரசின் கொள்கையினால் இன்று கல்வியின் நிலையே தலைகீழாக மாறியுள்ளது. படிக்காதவர்கள் மேதைகளாக மாறுவதும் படித்தவர்கள் அடிமை வாழ்க்கை வாழ வேண்டியதுமான சூழ்நிலை தான் இந்தியாவில் உள்ளது. இன்று ஒவ்வொரு தனியார் நடத்தும் கல்வி நிறுவனங்களும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். எட்டாக்கனியாக இருந்த மெட்ரிகுலேஷன் படிப்பென்பது இன்று நடுத்தரவர்க்கத்திற்கு இயல்பானதாககவே மாறியுள்ளது. எப்போதும் போல அரசாங்கப் பள்ளிகள் என்பது எந்த மாற்றமும் இன்றி இருந்தாலும் இந்தப் பள்ளிக்கூடங்களிலும் ஜெயித்து வருபவர்களை அரசாங்கம் கூட ஆதரிக்கத் தயாராக இல்லை. நம்முடைய மனோபாவங்களின் உள்ளே பார்த்தால் வண்டலாகச் சுயநலம் குவிந்து கிடக்கும். அரசாங்க மருத்துவமனைகள் தரமற்றது. அரசு பள்ளிக்கூடங்கள் தகுதியற்றது. ஆனால் அரசு வேலை என்பது கிடைத்து விடாதா? என்று ஏக்கத்தில் வாழவைப்பது. ஏன் பெற்றோர்களின் மனோநிலை மாறியது?. நகர்ப்புறத்தில் வசிப்பவர்கள் மட்டுமல்ல, வளர்ந்து கொண்டிருக்கும் கிராமப் பகுதிகளில் வசிப்பவர்கள் கூடத் தமது குழந்தைகள் ஆங்கில வழிப்பள்ளியில் படித்துவிட்டால் நிச்சயம் எதிர்காலம் சுபீட்சமாக இருக்கும் என்றே உறுதியாக நம்புகின்றார்கள். அரசுப் பள்ளிகளில் படிக்க வைத்த பெற்றோர்கள் கூடத் தங்களிடம் பணம் கட்ட வசதியிருந்தால் தனியார் பள்ளிக்கூடங்களில் சேர்த்து விடலாமே என்ற ஏக்கத்தில் தான் இருக்கின்றனர். இந்தியாவில் உள்ள சில கல்வி அமைப்பை முதலில் பார்த்து விடலாம். இந்தியாவில் கல்வி என்பது இரண்டாகப் பிரிகின்றது. ஒன்று மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மற்றொன்று மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிக்கூடங்கள். இதிலும் மேலும் இரண்டு பிரிவுகள் பிரிகின்றது. ஒன்று அரசாங்கத்தின் நேரிடையான கண்காணிப்பில் இருக்கும் பள்ளிகள். அடுத்து அரசாங்கத்தின் நிதி உதவியை மட்டும் பெற்றுக் கொண்டு தனியார் நிர்வாகத்தில் இருக்கும் பள்ளிகள். இது தவிர மற்றொன்றும் உண்டு. சிறுபான்மையினரின் கல்விக்கூடங்கள். மேலே சொன்ன இரண்டுக்கும் இந்தச் சிறுபான்மையினர் கல்விக் கூடங்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால் அரசாங்கத்தின் எந்தக் கொள்கையும் இவர்களைக் கட்டுப்படுத்தாது. ஆனால் அரசாங்கத்தின் அத்தனை பலன்களும் இவர்களுக்குப் போய்ச் சேர்ந்து கொண்டேயிருக்கும். வரம் வாங்கி வந்து கல்வியைச் சேவையாகச் செய்து கொண்டிருப்பவர்கள். இந்தச் சிறுபான்மை இனம் என்பது முக்கியமாகக் கிறிஸ்துவம், இஸ்லாம், இது தவிர மொழி ரீதியாக உள்ளவர்கள் என்று இதில் வருகின்றனர். உதாரணமாகச் சௌராஷ்டிர மொழி தொடங்கிப் பல மொழிகள் பேசுபவர்கள் போன்றவைகள் இதில் வருகின்றார்கள். பெரும்பான்மையாக மொழி பேசும் மாநிலங்களில் சிறுபான்மையினராக ஒரு குறிப்பிட்ட மொழி பேசுபவர்கள் இருக்கும் அத்தனை பேர்களுக்கும் இது பொருந்தும். அரசாங்கம் சொல்லும் இட ஒதுக்கீடு போன்ற எந்தச் சமாச்சாரமும் இது போன்ற நிறுவனங்களுக்குள் வராது, செல்லுபடியாகாது. அடுத்து இந்தியாவில் உள்ள கல்வித்திட்டங்களைப் பார்த்து விடுவோம். 25 24. சிக்கினாலும் கூட நாம் சிங்கம் தானே? வளர்ந்த நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் அருகில் தான் உள்ளது. நாம் இன்னமும் வளர்ந்து கொண்டே இருக்கின்றோம். அடுத்தப் பத்தாண்டுகள் கழிந்தும் இதையே தான் சொல்லப் போகின்றோம். மற்ற நாடுகளை இந்தியாவுடன் ஒப்பிட்டு பேசும் போது அனைவரும் ஒரு பதிலை தயாராக வைத்திருப்பார்கள். சிறிய நாடுகள் எளிதில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து விட முடியும். நாம் பெரிய நாடு. நமக்கு அப்படி வாய்ப்பில்லை என்பதாக முடித்து விடுகின்றோம். ஆனால் கடந்த முப்பதாண்டு காலத்தில் சீனா வளர்ந்த வளர்ச்சியை நாம் எட்டுவதற்கு இன்னும் 60 ஆண்டுகள் தேவைப்படும். வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் உள்ள முக்கியப் பிரச்சனை என்ன தெரியுமா? துறைகள் சார்ந்த ஒருங்கிணைப்பு. இந்தியாவில் உள்ள அரசாங்கத்துறைகள் ஒவ்வொன்றும் இன்று வரையிலும் தனித்தனி தீவுகளாகத்தான் உள்ளது. இதுவே வெளிப்படையற்றத் தன்மையைக் கெட்டியாகப் பாதுகாத்து மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடைவெளியை அதிகப்படுத்தி வைத்துள்ளது. இந்தியாவில் கல்வி என்றால் அதுவொரு தனித்தீவு. அதற்குள்ளும் பல பிரிவுகள். பாடத்திட்டங்களை உருவாக்குவது, அதற்கு அனுமதி வழங்குவது என்பது இரு வேறு நிலையில் தான் உள்ளது. தமிழ்நாட்டின் பூகோள அமைப்பைப் பற்றித் தெரியாதவர் தமிழ்நாட்டு மாணவர்களுக்குப் பாடத்திட்டத்தை வடிவமைப்பவராக இருப்பார். மாநில சமூகவியல், அந்தந்த மாநில கலாச்சாரத்தைப் பற்றியே தெரியாதவர்கள் உருவாக்குவது தான் நம்முடைய கல்வித் திட்டங்கள் என்றால் எப்படியிருக்கும்? நாம் இந்தியக்கல்வியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது ஏன் இந்த ஒருங்கிணைப்பை பற்றிப் பேச வேண்டும்?. கல்விக்கூடம் ஒரு இடத்தில் உருவாகின்றது என்றால் அரசாங்கத்தின் எத்தனை துறைகள் அத்துடன் சம்மந்தப்படுகின்றது ? 1 பள்ளி கட்டப்படத் தேர்ந்தெடுத்த இடம் குறிப்பிடப்பட்டுள்ள மாணவர்களுக்குத் தேவையான அளவுக்கு இருக்கின்றதா? 2. கட்டப்பட்ட கட்டிடம் நிலைத்த உறுதித்தன்மையோடு இருக்கின்றதா? 3. வகுப்பறைகள் குறிப்பிட்ட அளவில் இருக்கின்றதா? 4. குழந்தைகள் விளையாட மைதானம் இருக்கின்றதா? 5. அவசர கால வழிகள் சரியான முறையில் உருவாக்கப்பட்டுள்ளதா? 6. மாடிப்படிகள் குழந்தைகள் ஏறிச்செல்ல வலுவான முறையில் சரியான அளவில் உருவாக்கப்பட்டுள்ளதா? 7.பள்ளிக்கருகே மாசுக்களை விளைவிக்கும் தொழிற்சாலைகள் ஏதும் உள்ளதா? 8.கல்விக்கூடங்கள் பயன்படுத்தும் வாகனங்கள் சரியாக உள்ளதா? முறைப்படி பராமரிக்கப்படுகின்றதா? 9கல்விக்கட்டணங்கள் அரசாங்கம் நிர்ணயித்த அளவின்படியே பள்ளியால் வாங்கப்படுகின்றதா? 10. நிர்ணயிக்கப்பட்ட பாடத்திட்டங்கள் தான் நடத்தப்படுகின்றதா? இது போன்ற பல சமாச்சாரங்கள் உள்ளது. இதில் என்.ஓ.சி. என்று சொல்லப்படுகின்ற தடையில்லாச் சான்று என்ற பல படிகளைக் கடந்து வர வேண்டும். அரசாங்கத்தின் பல துறைகள் ஒவ்வொரு இடத்திலும் சம்மந்தபபடுகின்றது. தமிழ்நாட்டில் கும்பகோணம் பள்ளிக்குழந்தைகள் தீயில் கருகியது முதல் நேற்று உங்கள் ஊரில் நடந்த பள்ளி வாகனத்தினால் நடந்த கொடுமைகள் வரைக்கும் ஒவ்வொன்றாக உங்கள் மனதில் கொண்டு வந்து நிறுத்திப் பாருங்கள். எப்படிக் குற்றவாளிகள் தப்பித்தார்கள்? துறைகள் சார்ந்த ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால் குற்றத்திற்குக் காரணமாக இருப்பவர்கள் மேலும் பள்ளிகளைத் திறந்து கல்வித்தந்தையாகச் சமூகத்தில் நடமாட முடிகின்றது. இங்கே சட்டத்திற்கும் சாமானியனுக்கும் உள்ள தூரம் அதிகமாக இருப்பதால் போராட முடியாதவர்கள் தங்கள் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ளத் தொடங்கி விடுகின்றனர். அவர்வர் வாழ்க்கை குறித்த பயமே இங்கே பலரையும் பலவிதமான அக்கிரமத்தையும் தொடர்ந்து செய்ய வைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு மேலாக அரசின் தொடர்ச்சியான கண்காணிப்பு இல்லாத காரணத்தால் பலருக்கும் அசாத்தியமான தைரியத்தைத் தந்து விடுகின்றது. தமிழ்நாட்டின் கல்வித்துறை ஒவ்வொரு முறையும் தனியார் கல்விக்கூடங்களில் செய்யும் சோதனைகளை அரசு பள்ளிகளில் செய்கின்றார்களா? அது வருடந்தோறும் நடத்தப்படும் சடங்காகவே இன்று வரையிலும் உள்ளது. அரசு பள்ளியின் வளர்ச்சி வீழ்ச்சி குறித்த வெள்ளையறிக்கை ஏதும் வெளியிட்டு பார்த்துள்ளோமா? இதன் காரணமாகத்தான் பலரும் தெரிந்தே தனியார் கல்வி என்ற குழிக்குள் விழ வேண்டியுள்ளது. குறிப்பிட்ட பள்ளியில் தங்கள் குழந்தைகக்கு இடம் கிடைத்து விடாதா? என்று ஏக்கத்தில் இருக்கும் பெற்றோர்கள் அந்தப் பள்ளியின் கட்டுமானத்தைப் பற்றியோ தங்கள் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் குறித்தோ யோசிப்பதில்லை. பள்ளி வாங்கும் கட்டணத்திற்கும் அங்கே பணியாற்றும் ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளத்திற்கும் பின்னால் உள்ள நுண்ணரசியலை எவரும் புரிந்து கொள்வதே இல்லை. ஒட்டப்பட்ட லேபிளுக்குள் வைக்கப்பட்ட அழுகிய பண்டத்தினைச் சுவைக்கும் போது உண்டான அருவெறுப்பு தான் இங்கே உருவாகின்றது. பள்ளியின் பெயருக்கும் கற்றுக் கொடுக்கும் ஆசிரியரின் தரத்திற்கும் சம்மந்தமில்லாது போக என்ன உருவாகும்? வாந்தி எடுப்பவர் வாத்தியார். அதை வேடிக்கை பார்ப்பவர் மாணவர். இது தான் இங்கே நடந்து கொண்டிருக்கின்றது. இது தவிர இங்கே மற்றொரு விசயமும் பேசு பொருளாக வைக்கப்படுகின்றது. கடந்த 20 ஆண்டுகளில் ஆங்கிலம் தெரிந்த காரணத்தினால் மட்டுமே இங்கே பலருக்கும் வேலை கிடைத்துள்ளது. பொருளாதார ரீதியாகத் தடுமாறிக் கொண்டிருந்த நடுத்தரவர்க்கம் இப்போது தான் சற்று மூச்சு விட முடிகின்றது. தமிழ் தமிழ் என்று சொல்லிக் கொண்டு தங்கள் குழந்தைகளை மட்டும் ஆங்கில வழியில் படிக்க வைத்து விட்டு நமக்கு அறிவுரையை வண்டி வண்டியாக வழங்க வந்து விடுகின்றார்கள்? தமிழ் வழிக்கல்வியை ஆதரிப்பவர்கள் எவரோனும் தங்கள் குழந்தைகளைத் தமிழ் வழிக்கல்வியில் படிக்க வைத்து விட்டு அதன்பிறகு அறிவுரை சொல்ல வரட்டும்? இது போல இன்னமும் பலப்பல விசயங்கள் தாய் மொழி குறித்துப் பேசும் போது நம்மை வந்து தாக்கும். இன்றைய போட்டி மிகுந்த வாழ்க்கை சூழ்நிலையில் ஒருவரிடம் உனக்கு மொழி முக்கியமா? வாழ்க்கை முக்கியமா? என்று கேட்டால் எவராயினும் வாழ்க்கையே முக்கியம் என்று சொல்வர். பொருளாதார ரீதியாக எந்த மொழி வாழ்க்கையில் உயர் உதவுகின்றதோ அந்த மொழியே தேவை என்பதாக ஒரு காலகட்டத்தில் தான் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இன்றைய நடுத்தரவர்க்கம் நம்பிக் கொண்டிருக்கும் ஆங்கிலக்கல்வி என்பது படிக்கும் அத்தனை மாணவர்களுக்கும் சிறப்பான எதிர்காலத்தைத் தந்து விடுமா? மொழிக்கும் அறிவுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை உணரத் வாய்ப்பில்லாத நடுத்தர வர்க்கத்தின் பல்லாயிரக்கணக்கான கோடிகள் வருடந்தோறும் கல்வி வியாபாரிகளிடம் கள்ளப்பணமாக மாற்ற உதவிக்கொண்டிருக்கின்றார்கள். இன்றைய சூழ்நிலையில் ஆங்கிலம் என்பது தேவை என்பதை மறுக்கமுடியாது என்பதைப் போல அதுவே அருமருந்து என்பது ஒரு மாயத்தோற்றமே. காரணம் ஆசைப்பட்டு ஆங்கிலப்பள்ளியில் சேர்த்து விட்டு, தங்களது தகுதிக்கு மீறிய பணத்தை வருடந்தோறும் கட்டி தங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்து ஒவ்வொரு நாளும் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெற்றோர்கள் வேறு சில விசயங்களையும் அவசியம் புரிந்து இருக்க வேண்டும். தங்கள் குழந்தைகள் படிக்கும் கல்வியின் தரத்தைப் போல இதற்கும் மேம்பட்ட தரத்தில் பல கல்வித்திட்டங்கள் இங்கே உண்டு என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். இதில் பல்லாயிரக்கணக்கான பேர்கள் வருடந்தோறும் படித்து மேலேறி சென்று கொண்டிருக்கின்றனர். பல படிகளுக்குப் பின்னால் தான் நாம் இருக்கின்றோம் என்பதை உணர்ந்து வைத்திருக்க வேண்டும். ஆனால் எவரும் உணரத் தயாராக இல்லை என்பதோடு தங்களது அழுத்தங்களைத் தங்கள் குழந்தைகளின் மேல் திணித்துக் கொண்டிருப்பது தான் இங்கே நடந்து கொண்டிருக்கின்றது. சிலவற்றைப் பார்க்கலாம். மத்திய அரசாங்கத்தின் கீழே வரும் பள்ளிகள் Kendrya Vidyalaya Sangathan (KVS), Navodaya Vidyalaya Samiti (NVS), Central Tibetan Schools Organisation (CTSO), Sainik Schools Society C.B.S.E. CENTRAL BOARD OF SECONDARY EDUCATION ஒவ்வொன்றாக நாம் பார்க்கலாம். கேந்திரியா வித்தியாலயா பள்ளிகளைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். மத்திய அரசாங்கப் பணியில் இருப்பவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட பள்ளிகள். குறிப்பிட்ட பெருநகரங்களில் மட்டுமே உள்ளது. இந்தியா முழுக்க எங்கே வேண்டுமானாலும் மாறுதல் ஆகக்கூடிய மத்திய அரசு ஊழியர்களுக்காகவே உருவாக்கப்பட்டது. சற்று விபரம் தெரிந்தவர்கள் சைனிக் பள்ளிக்கூடங்கள் பற்றிக் கூடத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் நவோதயா என்பது தமிழ்நாட்டிற்குள் வர விடாமல் செய்த புண்ணியம் நமது அரசியல் தலைகளுக்கே போய்ச் சேர வேண்டும். தமிழ் அழிந்து விடும் என்ற நல்லெண்ணத்தில் எடுத்த முடிவாம். தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள். அதே போலத் திபெத் அகதி என்ற சொல்லை வைத்துக் கொண்டு இந்தியர்களின் வரிப்பணத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் திபெத் அகதிகளுக்காக உருவாக்கப்பட்ட கல்விக்கூடங்கள். இவை அனைத்தும் மத்திய அரசாங்கத்தால் நடத்தப்படுவது. இந்தச் சமயத்தில் இலங்கையில் இருந்து வந்து இங்கே வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையை நினைக்கத் தோன்றுகின்றது. மத்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட கல்விக்கூடங்கள் அனைத்து சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின்படியே பாடங்கள் நடத்தப்படுகின்றது. அனைத்துப் பாடங்களும் ஆங்கிலவழிக்கல்வி என்ற போதிலும் ஹிந்தி என்பது முக்கியமான பாடமாக உள்ளது. இந்தப் பள்ளிக்கூடங்கள் தமிழ்நாட்டிற்குள் இருந்தாலும் அங்கே தமிழுக்கு வேலையில்லை. மாநில அரசாங்கத்தின் கீழ் Tamil Nadu Matriculation Board தனியார் கல்வி நிறுவனங்கள் மூலமே நடத்தப்படுகின்றது. தொடக்கம் முதலே அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி இருந்த போதிலும் அது பெரிய அளவுக்கு வெற்றி பெறவில்லை. அது குறித்த புரிதலும் பெரும்பாலான பெற்றோருக்கும் இருக்கவில்லை என்பதும் உண்மையே. தற்போதைய மாறிய சூழலில்தான் இந்த ஆங்கில மோகம் என்பது டைனோசார் மிருகம் போலப் பிரமாண்டமாய் எழுந்து நிற்கின்றது. மக்களின் விருப்பத்தைப் பூர்த்திச் செய்கின்றோம் என்ற நோக்கத்தில் 2013 ஆம் ஆண்டுக் கல்வியாண்டில் அதிமுக அரசும் அரசுபள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைக் கொண்டு வந்துள்ளது. Tamil Nadu State Board தமிழ்நாடு அரசாங்கத்தின் தமிழ்வழி அரசு பள்ளிக்கூடங்கள். மேலே நாம் பார்த்த அத்தனை பள்ளிக்கூடங்களைத் தவிர்த்த இந்தியா முழுக்க ஆயிரக்கணக்கான சர்வதேச பள்ளிக்கூடங்கள் உள்ளது. இதன் பாடத்திட்டம் என்பது ICSE and IICS/ Cambridge International Certificate of Education (ICE) இதைத்தான் இன்டர்நேஷனல் ஸ்கூல் என்கிறார்கள். பலருக்கும் தெரிவதில்லை. சர்வதேச பாடத்திட்டங்கள் அடங்கிய ரெசிடன்ட் ஸ்கூல். இங்கே ஒவ்வொரு நாடும் அதன் பெயரில் நடத்துக்கின்றார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிரபல தொழில் அதிபர்கள் தனியாக நடத்துகின்றார்கள். இந்திய கல்வித்திட்டத்தில் ஒரு மாணவர் படிக்கும் எந்தப் பாடத்திட்டத்தையும் எந்த மேலைநாடுகளும் ஏற்றுக் கொள்வதில்லை. தகுதியான நபர்கள் என்ற போதிலும் குறிப்பிட்ட நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்றால் அதற்கென உள்ள சிறப்புத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே அங்கே செல்ல முடியும். ஆனால் சர்வதேச பள்ளிகளில் இயல்பாகவே குறிப்பிட்ட மேலைநாட்டுக் கல்வித்திட்டத்தில் பாடங்கள் நடத்துவதாலும், மேலைநாடுகள் போலவே செயல்வழிக்கல்வி திட்டத்தின்படி மாணவர்களை உருவாக்க அவர்களுக்குத் தனிச் சிறப்பு உண்டு. மேலைநாட்டு கல்லூரி பாடத்திட்டம் என்பது பள்ளி அளவில் குறைவாகக் கல்லூரி அளவில் மிக விரிவாக என்று படிப்படியான வளர்ச்சியில் கல்வி முறை இருக்கும். ஆனால் நமது கல்வித்திட்டம் என்பது தலைகீழானது. பத்தாம் வகுப்பு முடிப்பதற்குள் சுமத்தப்பட்ட அழுத்தத்தில் மாணவர்களின் சிந்தனைகளைக் கிழடு தட்ட வைப்பது. இதைப் போலவே மத்திய அரசாங்கத்தின் நேரிடையான கண்காணிப்பில் உள்ள பள்ளிகளில் தகுதியான சூழ்நிலையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் நடத்தப்படும். ஆனால் தனியார்கள் நடந்தும் ஆங்கிலவழிக்கல்வியில் வருடத்திற்கு ஒருவர் என்கிற ரீதியில் ஒவ்வொரு ஆசிரியர்களும் பல்வேறு காரணங்களால் மாறிக் கொண்டே இருப்பதால் வரும் ஆசிரியர்களும் பாடம் புரிவதில்லை. படிக்கும் மாணவர்கள் குறித்து நிர்வாகம் கவலைப்படுவதும் இல்லை. ஆங்கிலவழிக்கல்வியே சிறந்தது என்ற வாதத்தை முன் வைப்பவர்கள் ஒரு முக்கிய உண்மையைப் புரிந்து வைத்திருக்க வேண்டும். இன்று தமிழ்நாட்டில் உள்ள 70 சதவிகித பள்ளிகளில் ஆசிரியர் பணியில் இருப்பவர்கள் அத்தனை பேர்களும் இயல்பான தமிழ்வழிக்கல்வியில் படித்து வந்தவர்களே. எவரும் தேவலோகத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல. சில கல்விக்கூடங்கள் மட்டுமே ஆங்கிலோ இந்தியன் ஆசிரியர்களை வைத்துப் பாடம் கற்பிக்கின்றார்கள். மற்றபடி ஆங்கிலத்தை ஒரு மொழியாக நினைக்காமல் அறிவாக நினைத்துக் கற்பித்துக் கொண்டுருப்பவர்களிடம் தான் நம் குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கின்றது என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். கூலிக்கேத்த ஆசிரியர்கள் மூலம் தான் நமது குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் பல பள்ளிகளில் பெயர் பிரபல்யம் என்கிற ரீதியில் தான் கைநிறைய காசு கொண்டு வாங்க. உங்கள் குழந்தைகளின் மதிப்பெண்களுக்கு நாங்கள் பொறுப்பு என்று கூவிக்கூவி அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். நடத்தும் ஆசிரியர்களுக்கே புரியாத பாடத்தைப் போலவே இந்தியாவில் உள்ள பலதரப்பட்ட கல்வித் திட்டங்களும் வெகுஜனம் அறியாதது. சாதாரண மெட்ரிக் பள்ளிக்கூடங்கள் பெற்றோர்களிடம் பணம் பறிக்க என்ற நோக்கத்தில் அவசர கோலத்தில் கொண்டு வரும் சிபிஎஸ்சி பாட வகுப்புகள் என்பது கூட்டத்தில் சேர்ந்து கும்மியடி என்கிற கதை தான். சராசரி மாணவர்கள் ஏணி வைத்து ஏறும் நிலையில் இருப்பவர். ஆனால் சர்வதேச பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஒரே முயற்சியில் சென்று கொண்டு இருப்பார்கள். இது தான் எதார்த்தம். இந்தியாவில் உள்ள பெரு நகரங்கள். தமிழ்நாட்டில் சென்னை, ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற ஊர்களைத்தவிர அருகே பெங்களூரில் அதிக அளவில் இண்டர்நேஷனல் பள்ளிக்கூடங்கள் உள்ளது. தொடக்கத்தில் கிறிஸ்துவ மிஷினரிகள் இது போன்ற பல பள்ளிகளை இங்கே நடத்த தொடங்கினர். ஆனால் இன்று சர்வதேச உறைவிடப் பள்ளிகள் என்ற பெயரில் கடந்த ஐந்தாண்டுகளில் பல இடங்களில் உருவாகிக் கொண்டு இருக்கின்றது. தற்பொழுது கல்விச் சந்தையில் கிராக்கி என்பது இந்தச் சர்வதேச பள்ளிகளுக்கு மட்டுமே. எனக்குத் தெரிந்த ஒரு நண்பரின் இரண்டு பையன்களும் பெங்களூரில் ஜெயின் சமூகம் நடத்தும் சர்வதேச பள்ளியில் படிக்கின்றார்கள். வருடத்திற்கு உத்தேசமாக ஒருவருக்கு எல்லாவற்றையும் சேர்த்து 12 லட்சம் செலவு செய்து கொண்டிருக்கின்றேன் என்றார். “என்ன சிறப்பு” என்று கேட்டேன்? அந்தப் பள்ளியின் முதலாளி எப்போதும் பெற்றோர்களிடம் சொல்லும் வாசகத்தை நண்பர் என்னிடம் சொன்னார். “எனது பள்ளியில் படிப்பவர்கள் வேலைக்குச் செல்பவர்கள் அல்ல. வேலைகளை உருவாக்கி நூற்றுக்கணக்கான பேர்களுக்கு வேலையைக் கொடுக்கக்கூடிய ஆற்றலை உருவாக்கும் அளவுக்கு ஒரு மாணவனைத் தயார் படுத்துகின்றோம். ஒரு வட்டத்திற்குள் வாழ வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்களும் தேவையில்லை. அது போன்ற குறுகிய எண்ணம் கொண்ட மாணவர்களையும் நாங்கள் உருவாக்க விரும்பவில்லை” என்றாராம். இது போன்ற பள்ளிகளில் படித்து வருபவர்கள் தொழில் நிறுவனங்களை உருவாக்குகின்றார்களோ இல்லையோ நிச்சயம் பொருளாதார ரீதியான உயர்வான நிலைக்குச் செல்லக்கூடிய அத்தனை சாத்தியக்கூறுகளும் இவர்களுக்கு இருப்பதை மறுப்பதற்கில்லை. மேலும் இதிலும் ஒரு பிரச்சனை உண்டு. மேலைநாட்டுக் கல்வித்திட்டத்தில் படித்து வெளியே வருபவர்கள் இந்தியச் சூழல் சார்ந்த நிறுவனங்களில் ஜெயித்து வர முடியுமா? காரணம் வெளிநாட்டு நிர்வாகத்தைச் சார்ந்த விசயங்களைக் கரைத்துக் குடித்து வெளியே வருபவர்களுக்கு இங்குள்ள சூழ்நிலைகளைக் கையாள முடியுமா? என்று கேட்ட போது உடனடியாகப் பதில் வந்து விழுந்தது. “இந்தியாவில் இருப்பதற்காகவா இத்தனை செலவு செய்கின்றேன்?” என்றார். முறைப்படுத்தப்பட்ட சர்வதேச பள்ளிகள் கல்வியை அதன் தரத்தை அளவுகோலாக வைத்து தான் நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள். இங்கே இட ஒதுக்கீடு, சாதி மதம் போன்ற எந்தப் பஞ்சாயத்தும் எடுபடாது. பணம் இருந்தால் போதுமானது. அரசியல்வாதிகள், திரைப்படப் பிரபல்யங்கள், அதிகாரவர்க்கத்தில் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள், பெரும் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் மட்டும் படிக்கின்றனர். இங்கும் மாநில மொழிகளுக்கு வேலை இல்லை. நடுத்தரவர்க்கத்தினரும், நடுத்தரவர்க்கத்தில் சற்று உயர்ந்த நிலையில் உள்ளவர்களும் இது போன்ற பள்ளியில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்தாலும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் பணம் கட்ட முடியாமல் சிபிஎஸ்சி அல்லது மெட்ரிக் பள்ளிகளுக்கு மாற்றியுள்ளதை பலமுறை பார்த்துள்ளேன். இதே போலத் தங்கள் குழந்தைகளை மெட்ரிக் பள்ளியிலிருந்து நிறுத்தி விட்டு அவசரம் அவசரமாகச் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் சேர்த்தவர்களும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் பணம் கட்ட முடியாமல் திணறுவதையும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். ஆனாலும் தினந்தோறும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் புத்திசாலி கனவுகளை விதைப்பதிலேயே குறியாக இருக்கின்றார்கள். 26 25. தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கின்றார் “வீடு ரொம்ப நல்லா இருக்குடா” என்றார். அம்மா முதல் முறையாக வீட்டுக்கு வந்த போது சொன்ன வார்த்தைகளை விட அவரைத் திருப்பூருக்கு அழைத்து வந்ததே பெரிய சாதனையாக எனக்குத் தெரிந்தது. புதிய கார் எடுத்த ஒரு மாதத்தில் கட்டாயப்படுத்தி அழைத்து வந்தேன். ஊரிலிருந்து ஆறு மணி நேர பயணத்தில் வீட்டில் கொண்டு வந்து நிறுத்திய போது பயந்தபடி அவரின் கால் வீங்கவில்லை. காருக்குள் அளவாக வைத்திருந்த குளிர்சாதன வசதியால் பயண அலுப்பு கூட அம்மாவுக்குத் தெரியவில்லை. மகிழ்ச்சியுடன் வீட்டுக்குள் நுழைந்தவர் “கார் நல்லா ஓட்டுறாண்டி” என்று மனைவியுடன் பேசிக் கொண்டிருந்த போது எனக்குச் சற்று நம்பிக்கை வந்தது. நிச்சயம் சில மாதங்கள் இங்கே இருப்பார் என்றே நம்பினேன்?. அம்மா வந்த போது குழந்தைகள் பாலர் பள்ளியை முடித்திருந்தார்கள். வீட்டுக்குள் சுவற்றுக்குள் மாட்டியிருந்த பலவிதமான அட்டைகளை வினோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். எண்கள், எழுத்துக்கள், படங்கள் எனக் குழந்தைகளின் கல்வி ஆர்வத்தை வளர்க்க ஒவ்வொன்றாக வாங்கி மாட்டி வைத்திருந்தேன். பலவிதமான கல்வி சார்ந்த பொம்மைகள் வீடு முழுக்க இருந்தன. ஆர்வமாய் ஒவ்வொன்றையும் பார்த்தவர், “இப்படியெல்லாம் தான் நீங்க படிச்சீங்களா?” என்று கேட்டு சிரித்தார். இது தவிர அவர்களின் கல்விக்கென வேறெந்த பெரிதான முயற்சியையும் செய்யவில்லை. அதிகாலைப் பொழுதில் குளிக்க உதவும் போது அவர்களுடன் பேசுவதைத் தவிர வேறெந்த சமயமும் வாய்ப்பதில்லை. பள்ளி முடியும் சமயத்தில் அவசரமாகச் சென்று அழைத்து வீட்டில் விடுவதோடு என் கடமை முடிந்து விடும் அலுவலகம் முடிந்து நள்ளிரவில் வீட்டுக்குள் நுழையும் பொழுது தூங்கிக் கொண்டிருப்பார்கள். எனக்கும் குழந்தைகளுக்கும் உண்டான உறவும், உரையாடலும் மிகக் குறைவாகவே இருந்தது. இதன் விபரீதம் அம்மா வந்த பொழுது, அவர் குழந்தைகளுடன் உரையாடும் சமயங்களில் தான் எனக்கு முழுமையாகப் புரிந்தது. அம்மாவின் திருமண வாழ்க்கைக்குப் பிறகு அவர் காசி பயணத்தைத் தவிர வெளியுலகத்தைப் பார்த்த தருணங்கள் மிக மிகக் குறைவு. மிகப் பெரிய கூட்டுக்குடித்தனத்தின் அச்சாணியே அவர் தான். நாள் முழுக்க உழைப்பு. அந்த உழைப்பு மட்டுமே குடும்பத்தின் ஆதாரமாக இருந்தது. அவர் உடம்பும் எண்ணமும் உழைப்பதற்கென்றே மாறிப் போன காரணத்தால் பக்கத்து ஊர்கள் குறித்துக் கூடத் தெரிந்து கொள்ள ஆர்வமின்றி நாற்பதாண்டு காலத்தைக் கழித்தவர். அவருக்கும் பயணம் என்றால் பயம் பிடிக்கும் சமாச்சாரம். கனத்த உடம்பு படுத்தி எடுப்பதால் ஆசைகள் இருந்தாலும் அவரின் உடம்பு ஒத்துழைப்பதில்லை. வெளியுலகம் என்பதே அப்பாவின் மறைவுக்குப் பிறகே அவருக்கு வாய்த்த காரணத்தால் ஒரு படபடப்பு அவருக்குள் இருந்து கொண்டேயிருக்கும். சாலையில் படபடக்கும் வாகனங்கள் கூட அவருக்குப் பயத்தைத் தருகின்ற சூழ்நிலையில் வாழ்ந்த காரணத்தால் கவனமாகக் காரில் அழைத்து வந்தேன். ஒருவரின் மாற்ற முடியாத விசயங்களை அப்படியே மாற்றாமல் நாம் ஏற்றுக் கொள்வதும் ஒரு வகையில் நல்லது தானே. ஆனால் அம்மாவிடம் மாறாத கொள்கை ஒன்று உண்டு. “பெண்ணாய்ப் பிறக்கக்கூடாது. பெண் குழந்தைகள் என்றால் ஆகாது”. காரணம் அவரின் துயரக்கதை சீனப் பெருஞ்சுவற்றை நீளமானது உயரமானதும் கூட. கஷ்டப்படுவதற்கென்று பிறப்பெடுப்பவர்கள் பெண்கள் என்ற கொள்கையை இன்று வரையிலும் அவர் மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. நான் இதனை உணர்ந்திருந்த போதிலும் பேத்திகளை விட்டுக் கொடுக்க மாட்டார் என்று நினைத்தே அழைத்து வந்தேன். குழந்தைகள் பிறந்த போது பார்த்த முகத்தைப் பல வருடங்கள் கழித்துப் பார்த்த போது குழந்தைகளின் தோற்றத்தில் சொக்கிப் போனார். புது முகத்தைப் பார்த்த இருவர் விலகி நின்ற போது ஒருவர் மட்டும் எளிதாக ஒட்டிக் கொள்ள, தொடர்ந்து வந்த நாட்களில் அவர்களும் ஒன்றிப்போக இயல்பாகத்தான் போனது. பல சமயம் விடுமுறை தினங்களில் பாட்டி பேத்திகளின் உரையாடல்களைப் பார்க்கின்ற வாய்ப்புக் கிடைத்தாலும் அலுவலகச் சுமையின் காரணமாக வீட்டில் இருக்க வாய்ப்புகள் அமையாது. அந்தப் பெரிய வீட்டின் மற்ற இடங்களையும் விட வாசலில் அமர்ந்திருப்பதே அம்மாவுக்குப் பிடிக்கும். வீட்டுக்கு வெளியே இருந்த பெரிய வேப்ப மரக் காற்றின் சுகமே அவருக்குப் போதுமானதாக இருந்தது. வாசலின் குறுக்கே காலை நீட்டிக் கொண்டு வெற்றிலைப் பையைப் பிரித்து வைத்துக் கொண்டு மெல்லுவதும் எச்சிலை அருகே உள்ளே தோட்டத்து மண்ணில் துப்பிக்கொண்டிருப்பதும், தெருவில் செல்லும் ஆட்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் அன்றாட வாடிக்கையாக இருந்தது. இங்கே இருந்து தான் பிரச்சனை தொடங்கியது. உள்ளே விளையாடிக்கொண்டிருக்கும் குழ்ந்தைகள் கத்திக் கொண்டே வாசலை நோக்கி ஓடி வர, விரட்டிக் கொண்டே வருபவர் வெளிப்புற சந்தின் வழியே வாசலுக்கு வர காலை நீட்டிக் கொண்டிருக்கும் அம்மாவுக்கு ஒவ்வொரு முறையும் காலை மடக்குவதும், மீண்டும் நீட்டுவதுமெனப் புதிய வேலையை உருவாக்கத் தொடங்கினர். முட்டி வலியும், முதுகு வலியையும் நிரந்தரமாக இருந்தவரால் தாக்கு பிடிக்க முடியவில்லை. எரிச்சலை உருவாக்கினாலும் அவரால் வேறொரு இடத்தைத் தேர்ந்தெடுத்து உட்கார மனமில்லாது கத்தத் தொடங்கினார். இதற்கு மேலாக அவருக்குப் பேச்சுத் துணைக்கு ஆட்கள் இல்லை. பக்கத்து வீடுகளில் இருந்தவர்களின் நாகரிக பேச்சும், கொங்கு பாஷையும் வினோதமாகத் தெரிய அதையும் விரும்பாமல் வானத்தை வெறிக்கத் தொடங்கினார். நாற்பது வயதுக்கு மேல் நாய்ப்புத்தி என்பதைப் போல அறுபது வயதை மீண்டும் குழந்தையாக மாறும் தருணம் என்கிறார்கள். விதிவிலக்குகளைத் தவிர்த்து நாற்பது வயதிற்குள் தனக்கான இடத்தை அடையாதவர்களின் வாழ்க்கையென்பது இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமலும், அலைவதை குறைத்துக் கொள்ள முடியாமல் அவஸ்த்தைகளின் தொடக்கம் ஆரம்பித்து விடுகின்றது. உடல் ஆரோக்கியத்தின் சவாலும் இந்த வயதிலிருந்தே தொடங்குகின்றது. இதுவே அறுபது வயதில் கண் பார்வை குறைந்து, செவிப்புலன் திறன் இழந்து எரிச்சலையும் ஏக்கத்தையும் இயல்பான குணமாக மாற்றி விடுகின்றது. இயல்பான விசயங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்க்கும் பொழுது எரிச்சல் உருவாகும். மனஉளைச்சல் அதிகமாகும். தலைமுறை இடைவெளி பூதாகரமாக உருவாகும். இந்த வயதில் தான் ருசியை மட்டுமே உணவாக வைத்து வாழ்ந்தவர்களின் வாழ்க்கையில் வாய்க்கும் வயிற்றுக்கும் மிகப் பெரிய போராட்டமே தொடங்குகின்றது. ருசி தான் வேண்டும் என்ற மனமும் இதெல்லாம் இனி ஆகாது என்று வயிறும் சண்டை போட வாழ்வே நரகமாக மாற வாரிசுகள் மீதுள்ள அன்பு கூடப் பலசமயம் மாறிவிடுகின்றது. சிலர் பழக்கத்தினால் தங்களை மாற்றிக் கொண்டு விடுகின்றார்கள். பலர் தங்கள் வாழ்க்கையைக் கழிவிரக்கமாக மாற்றி வைத்துக் கொண்டு உடனிருப்பவர்களைப் படுத்தி எடுக்கத் தொடங்கி விடுகின்றார்கள். இதற்கு மேலாக வயதானவர்களுடன் உரையாடும் தொடர்பு மொழி முக்கியமானது. அவர்களுக்குப் பிடித்த அவர்கள் விரும்பும் நிலையில் இருந்து பொறுமையுடன் உரையாட வேண்டும். பலராலும் இது முடிவதில்லை. ஒரு சமயம் “அப்பத்தா இதைக் கேளுங்க” என்று மகள் அட்டையை எடுத்துக் கொண்டு அவர் அருகே சென்ற போது அம்மாவின் விலகல் என்னைக் கூர்மையாகக் கவனிக்க வைத்தது. மனைவியிடம் கேட்ட போது “இவங்க பேசுறது அவங்களுக்குப் புரியலையாம்” என்றார். எங்கேயிருந்து இந்தக் குழப்பம்? என்று ஆராயத் தொடங்கினேன். குழந்தைகள் பள்ளிக்குச் சென்றார்களே தவிர அவர்களின் கல்வி குறித்தோ, அவர்களின் மற்றச் செயல்பாடுகள் குறித்தோ அதிகம் கவலைப்பட்டுக் கொண்டதில்லை. குறிப்பாகத் தனித்தீவாக ஒதுங்கி போனதால் உறவுகள் கூட வருடத்துக்கு ஒரு முறை என்கிற ரீதியில் இருந்த காரணத்தால் வீடே வாழ்க்கை பள்ளிக்கூடமே உலகம் என்பதாக வளர்ந்து கொண்டிருந்தார்கள் தமிழை ஆங்கிலத்திற்கு இடையே பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். பள்ளி கொடுத்திருந்த கல்விச்சூழல் அவர்களை அப்படி மாற்றியிருந்தது. புதிய மொழியும் அவர்களின் பழக்க வழக்கங்களும் அம்மாவிற்கு அதிகக் குழப்பத்தை உருவாக்கியிருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. எல்லாமே சின்னச் சின்ன விசயங்கள் தான். அதுவே ஒவ்வொரு முறையும் வினோதமான பிரச்சனைகளை உருவாக்கியது. இன்று உள்ளூரில் வேலைவாய்ப்புகள் குறைந்து மாவட்டங்கள்,. மாநிலங்கள் தாண்டி பல்வேறு நாடுகளில் வாழ வேண்டிய சூழ்நிலையில் உறவுகளுக்குண்டான மரியாதை என்பது தற்போது சில நிமிட தொலைபேசி அழைப்புகள் தான் உயிர்ப்புடன் வைத்துள்ளது. இந்தத் தொடர்பில் தொடர்பு மொழியே பிரச்சனை எனில் அங்கே அந்தச் சங்கிலியும் அறுபடத் தொடங்குகின்றது. வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு இந்த மொழித் தொடர்பு பிரச்சனை என்றால் தற்போது இங்கே உள்ள கல்விச்சூழல் என்பது வினோத கலாச்சாரத்தை வளர்த்துக் கொண்டிருப்பதால் மொழியின் தன்மை மாறிக் கொண்டேயிருக்கின்றது. குழந்தைகள் வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருப்பார்கள். சிறுநீர் கழிக்கும் அவசரத்தில் “அப்பத்தா ஒன் பாத் ரூம்” என்று கத்திக் கொண்டே ஒடிவர இவர் குழப்பத்துடன் என்னவென்று அறியாமல் வாசலுக்கு அருகே படுத்து இருப்பார். எந்திரிக்காமலே தலையைத் தூக்கிப் பார்ப்பார். கவுனை தூக்கிக் கொண்டு அவர்கள் வரும் வேகத்தைப் பார்த்து வேகமாக எந்திரிக்க, வந்த வேகத்தில் ஒருவருடன் ஒருவர் முட்டிக் கொள்ள ரசபாசமாகத் காட்சிகள் மாறிவிடும். பொழுது போகாத சமயத்தில் குழந்தைகளை அழைத்துப் பேசத் தொடங்குவார். அவர் கேட்கும் கேள்விக்கு இவர்களுக்குத் தெரியாது. இவர்கள் சொல்லும் பதில்கள் அவருக்குப் புரியாது. ராஜா கதை சொல்லும் போது குறுக்கே ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகக் குறுக்குக் கேள்விகள் எழுப்ப அவருக்குக் குழப்பம் வந்துவிடும். அவர் ஒதுங்கி விடுவார். கடைசியாக இவர்கள் நாங்க உங்களுக்கு ரைம்ஸ் சொல்லட்டுமா? என்பார்கள். பேந்த பேந்த முழித்துக் கொண்டு கேட்பார். மொழி புரியாது. சுவராசியம் இருக்காது. “ஏதாவது கதை சொல்லுங்க அப்பத்தா” என்றால் இவர் சொல்லும் வட்டார வழக்குத் தமிழ் வார்த்தைகள் அவர்களுக்குப் புரியாமல் அது குறித்து அப்டின்னா? என்று தொடர் கேள்விகளை எழுப்ப அம்மாவுக்கு அலுப்பாகி விடும். இரண்டு மாதம் இருக்கின்றேன் என்று சொல்லிவிட்டு வந்தவர் ஒரு மாதத்தில் சென்று விட்டார். மனைவி மூலம் விசயங்களைப் புரிந்து கொண்டு உறவுச்சங்கிலிகள் உடையும் விதங்களைப் பற்றி யோசிக்கத் தொடங்கினேன். அதற்கான பதில் அம்மாவை கொண்டு போய் விட்ட தம்பி வீட்டில் எனக்குக் கிடைத்தது. அம்மாவிடம் தம்பி மகன் வேகமாக வந்து “ஏய் கிழவி கீழே படு” என்றான். அம்மா டக்கென்று மல்லாக்க படுக்க நெஞ்சில் ஏறி தொம் தொம்ன்று குதிக்க எனக்குப் பாதி உயிர் வாயில் வந்து நின்று விட்டது. அம்மா சிரித்துக் கொண்டே “இருடா குப்புற படுக்குறேன்” என்று சொல்லிவிட அவன் ஆட்டம் தொடர்ந்து கொண்டேயிருந்தது. கால்வலி, முதுகுவலி, பயணஅலுப்பு மீறி அவரின் நெருக்கமும், பேரனின் வார்த்தைகளும் அவருக்குப் புதிய உற்சாகத்தைத் தந்ததைக் கவனித்துக் கொண்டே அவர்களின் உரையாடலை கவனித்த போது சில மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கூட நண்பனுடன் பேசியது அப்போது என் நினைவில் வந்து போனது. நண்பனின் அண்ணன் அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெற்று இருக்கின்றார். தொடக்கத்தில் ஊருக்கு வருடத்திற்கொருமுறை வந்து கொண்டிருந்தார். கடந்த சிலவருடங்களாக வருவதில்லை. அவனைச் சந்ததித்த போது “அண்ணன் வீட்டுக்கு வருவதில்லையா?” என்று கேட்டேன். “அம்மா வேண்டாம் என்று சொல்லிவிட்டார்” என்றான். காரணம் பேரனுக்கும் பேத்திக்கும் தாத்தா பாட்டியுடன் உரையாட தமிழ் தெரியவில்லை. இவர்களுக்கு அவர்கள் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ளத் தெரியவில்லை. 27 26. போரும் அமைதியும் அலுவலகத்தில் எந்த வேளையிருந்தாலும் தினந்தோறும் மதியம் மூன்று மணிக்கு வீட்டில் இருப்பது போலப் பார்த்துக் கொள்வது வழக்கம். அந்த நேரம் பள்ளி விட்டு மூவரும் வீட்டுக்கு வரும் நேரம். ஒருவர் மட்டும் சிலசமயம் தாமதமாக வருவார். காரணம் பள்ளி விட்டதும் நேராக விளையாட்டு மைதானத்திற்குச் சென்று களைத்துப் போகும் அளவுக்கு விளையாடி விட்டு வர மற்ற இருவரும் வந்து விடுகின்றார்கள். பள்ளியில் ஆறாவது வகுப்புக்கு மேல் தான் மாணவர்களை விளையாட்டு மைதானம் பக்கம் அனுப்புகின்றார்கள். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரைக்கும் வகுப்பு நேரத்தில் திடீரென ஏதோவொரு விளையாட்டை விளையாடச் சொல்லி கண்காணிப்போடு வகுப்பறைக்கு அனுப்பி விடுகின்றார்கள். ஆனால் வீட்டில் மூத்தவருக்குப் படிப்பைப் போல விளையாட்டிலும் அதீத வெறி. பன்முகத் திறமைகள் கொண்ட குழந்தைகள் உருவாவது இயற்கை தந்த வரம். ஒவ்வொரு முறையும் ஆச்சரியமாக இருக்கும். பயிற்சி இல்லாமலேயே அவர் காட்டும் ஆர்வமும், முயற்சியும் வியப்பில் ஆழ்த்தும். தடை சொல்லாமல் அனுமதிப்பதால் அவராகவே முயற்சித்துக் கொண்டிருக்கின்றார். எங்கள் வீட்டுக்கருகே பள்ளி உள்ளது. அருகாமைப் பள்ளியென்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் ஆயிரமாயிரம் சந்தோஷத்தை தரக்கூடியது. பள்ளியிலிருந்து தொலைவில் இருந்து வருபவர்கள் படும் பாட்டையும், பள்ளி வாகனங்களில் வந்து போகும் குழந்தைகளின் அவஸ்த்தைகளையும் பார்த்துக் கொண்டிருப்பதால் நகர்புற வாழ்க்கையில் இது போன்ற அனுபவங்கள் ஏறக்குறைய நரகத்திற்குச் சமமானதே. எங்கள் வீட்டிலிருந்து பள்ளிக்கு ஐந்து நிமிடத்திற்குள் நடந்து போய் விடலாம். ஆனால் அவர்கள் வீட்டுக்குள் நுழையும் போது அவர்களின் அலுப்பை பார்க்கும் போது தொடக்கத்தில் பாடச் சுமையின் தாக்கமோ? என்று நினைத்துக் கொண்டதுண்டு. ஆனால் நாள்பட அவர்களின் சுகவாசி தன்மையை உணர வைத்தது. கிராமத்துப் பள்ளிகளில் ஐந்து கிலோ மீட்டர் மிதிவண்டி மூலம் பள்ளிக்கு வந்தவர்களும், நீண்ட தூரத்தை கடந்து வந்தவர்களையும் பார்த்த வாழ்க்கையில் எங்கள் குழந்தைகளின் அருகே உள்ள பள்ளியின் தூரத்தைக் கணக்கீடும் போது பெரிய தூரமில்லை தான். ஆனால் இன்று குழந்தைகளின் உடல் வலுவின் தன்மை மாறியுள்ளது. ஓடி விளையாடிய காலம் மலையேறிவிட்டது. வீடு தான் மைதானம். கணினியும், தொலைக்காட்சியும் தான் விளையாட்டுப் பொருட்கள். இதுவே குழந்தைகளின் கண்களையும், கவனத்தையும் திருடிக் கொள்ள அடிப்படை ஆரோக்கியமும் அதோகதியாகிவிட்டது. நடுத்தர வாழ்க்கையில் குறுகிய வீடுகளும், போராட்ட வாழ்க்கையும் ஓட வைத்துக் கொண்டிருக்க நாம் விரும்பிய வாழ்க்கையை விடக் கிடைத்த வாழ்க்கையைத் தக்க வைப்பதே பெரும்பாடாக உள்ளது. ஒரே இடத்தில் உட்கார்ந்து பழகி விட்ட குழந்தைகளிடத்தில் ஆரோக்கிமென்பது அளவாகத்தானே இருக்கும். “அடைகோழியாட்டாம் என்னடா வீட்டுக்குள்ளே?” என்று கேட்டு வெளியே விரட்டிய கிராமத்து வாழ்க்கையென்பது தற்போது “வெளியே போகாதே. கண்ணு மணணு தெரியாமா வர்றவன் மோத போறான்” என்று பயந்து வாழும் வாழ்க்கையில் சிலவற்றை இழந்து தான் குழந்தைகள் வளர வேண்டியதாக உள்ளது. நாம் தான் காரணம். இதுவும் ஒருவகையில் நாம் உருவாக்கி வைத்துக் கொண்ட வசதிகளை யோசிக்க வைக்கின்றது. எது நமக்குத் தேவை? என்பதை விட நம் குழந்தைகள் ஆசைப்படுகின்றார்கள் என்பதற்காக ஒவ்வொன்றாகச் சேர்த்து வைக்க அதுவே குறிப்பிட்ட காலத்திற்குள் தேவையாகவும் மாறிவிடுகின்றது. இவர்கள் வீட்டில் காலை ஆறு மணிக்கு எழுந்தது முதல் எப்போதும் போலப் பரபரப்புத் தொற்றிக் கொள்ளும். பல சமயம் கரையைக் கடக்கப் போகும் புயலைப் போல ஒவ்வொரு நிமிடமும் திகிலாக நகரும். ஆனால் வீட்டுக்குள் நடக்கும் பஞ்சாயத்துக்களில் நான் கலந்து கொள்வதில்லை. காரணம் நாம் தான் கடைசியில் ப்யூஸ் போன பல்பு போல மாறிவிடும் அபாயமிருப்பதால் தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதோடு சரி. வீட்டுக்குள் மூன்று பேர்கள் இருக்கின்றார்கள் என்று தான் பெயரே தவிர முப்பது பேர்கள் இருப்பதைப் போலவே ஒவ்வொரு முறையும் களேபரப்படுத்துகின்றார்கள். ஓயாத பேச்சும், நிறுத்த முடியாத சண்டைகளும், விடாத கேள்விகளுமாய்க் காலையில் இரண்டு மணி நேரத்திற்குள் வீட்டுக்குள் ஒரு போர்க்கள சூழலை கொண்டு வந்து விடுகின்றார்கள். பத்து வயதில் நாமெல்லாம் இப்படியா இருந்தோம்? என்ற வயதானவர்கள் எப்போதும் சொல்லும் கேள்விகள் மனதிற்குள் வந்து போனாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கவனித்துக் கொண்டே வருவதுண்டு. என்ன செய்கின்றார்கள்? ஏன் செய்கின்றார்கள்? என்ற இரண்டு கேள்விகளுக்கும் தினந்தோறும் ஏராளமான பதில்களும் உடனடியாகக் கிடைத்து விடுகின்றது. மூவரும் காலை எழுந்தது முதல் பள்ளிக்குச் செல்வது வரைக்கும் உண்டான ஒவ்வொரு அடியிலும் எவரோ ஒருவரின் சப்தம் ஓங்கியிருக்கும். தேவையிருக்கின்றதோ இல்லையோ எவரோ ஒருவர் மற்றொருவருடனும் வம்பிழுப்பதும் வாடிக்கையாகவே உள்ளது. நிறுத்தவும் முடியாது. அறிவுரையாகச் சொன்னாலும் எடுபடவும் செய்வதில்லை. “வலுத்தவான் வாழ்வான்” என்று நினைத்துக் கொண்டு கவனித்தாலும் கடைசியில் அதுவும் தோற்றுப் போய்விடுகின்றது. சண்டைகள் உக்கிரமாகி என்னவோ நடக்கப் போகின்றது என்று யோசிக்கும் தருணத்தில் சம்மந்தமில்லாமல் வெள்ளைக்கொடி பறப்பதும், எதிர்பாராத சமயத்தில் வாள் சண்டையின் ணங் டங் என்ற சப்தம் கேட்பதும் வாடிக்கை என்றாலும் ஒவ்வொரு முறையும் நம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பார்க்க வேண்டியதாக உள்ளது. எதிர்பாராத சமயத்தில் கைகுலுக்கிக் கொள்கின்றார்கள். உள்ளே நுழைந்த நாம் தான் பல்பு வாங்க வேண்டியதாக உள்ளது. “என் பென்சிலை பார்த்தீங்களா?” “என்னுடைய ஹோம் ஒர்க் நோட்டை காணல” என்று தொடங்கிக் கடைசியில் “என் ஜட்டியை இவள் போட்டுக்கிட்டாள்” என்பது வரைக்கும் நகைச்சுவைக்குப் பஞ்சமில்லாமல் ஒவ்வொரு நாளும் நகர்ந்து கொண்டேயிருக்கின்றது. வெறும் கேள்விகளாக வந்துகொண்டிருக்கும் அவர்களின் ஒவ்வொரு எதிர்பார்ப்புகளுக்கும் நாம் கண்டும் காணாமல் இருந்தாலும் திட்டுக்கள் வரும். நான் கண்டு பிடித்துத் தருகின்றேன் என்றாலும் “ஆமா நீங்க கண்டு பிடித்து தருவதற்குள் எங்க பள்ளிக்கூடம் ஆரம்பிச்சுடுவாங்க” என்று நோ பால் ஆக்கும் தந்திரமும் நடக்கும். அவர்கள் தேடுகின்ற அனைத்தும் அருகே தான் இருக்கும். ஆனால் செயல்களின் அவசரமும், பொறுமையின்மையும் களேபரப்படுத்த நமக்கு அதிகக் கோபத்தை உருவாக்கினாலும் மூவரும் பள்ளிக்குச் சென்றதும் வீட்டைக் கவனித்ததால் வீட்டுக்குள் நிலவும் அமைதியென்பது நமக்குத் தாங்க முடியாத வெறுமையை உருவாக்குகின்றது. குழந்தைகள் பள்ளிக்குச் சென்றதும் வீட்டை கவனித்தால் மிகப் பெரிய அமைதி தெரியும். இது வெறுமனே அமைதி என்று மட்டும் சொல்லி விட முடியாது. நாம் கதைகளில் படிக்கும் போர்க்களம் முடிந்து நிலவும் அமைதியைப் போலத்தான் இருக்கின்றது. இரைந்து கிடைக்கும் புத்தகங்களும், ஒழுங்கற்ற மேஜையில் ஓரத்தில் கிடக்கும் புத்தகங்களுமென எங்கெங்கு காணினும் ஏதோவொரு புத்தகங்கள். தொடக்கத்தில் அலுவலகத்தைப் போல ஒழுங்கை வீட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று முயற்சித்த போது முட்டி பெயர்ந்து முகம் முழுக்கக் காயம் பட்டது தான் மிச்சம். புத்தகங்களைச் சொத்து என்கிறார்கள். ஆனால் வீட்டுக்குள் புத்தகங்கள் மட்டுமே சொத்தாக இருக்கின்றது. பள்ளி விட்டு வரும் பொழுதே சுமந்து வந்த பைகளை மூலையில் தூக்கி எறிந்து விட்டு அப்படியே உடைகளைக் கூட மாற்றாமல் தரையில் படுத்துக் கொண்டு இரண்டு காலையும் அருகே உள்ள நாற்காலியில் தூக்கி வைத்துக் கொண்டு முழு வேகத்தில் சுழலும் மின் விசிறிக் காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தவர்களைப் பார்க்கும் போது கோபத்தில் கத்தியிருக்கின்றேன். சென்ற ஆண்டு, “அப்பா, கொஞ்ச நேரம்” என்றார்கள். ஆனால் இப்போது “ஏம்ப்பா டென்சன் ஆகுறீங்க.பாத்ரூம் ஓடியா போகப்போகுது? அங்கே தான் இருக்கும்” என்கிறார்கள். இது போன்ற சமயத்தில் அமைதியாய் இருந்தால் தான் நம் ஆரோக்கியத்தை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். இதனைத் தொடர்ந்து வரும் நேரலைக்காட்சிகள் தான் திகில்படம் போல நகரத் தொடங்கும். ஒருவர் மேல் ஒருவர் படுக்க முயற்சிக்க அடுத்தவர் அலற அருகே உள்ள மேஜை நகர, வைத்திருக்கும் பாத்திரங்கள் உருள, உள்ளேயிருந்து வரும் மிரட்டல் சப்தம் என நடந்து கொண்டிருக்கும் ரணகளத்தைக் கிளுகிளுப்பாய் ரசிக்கக் கற்றுக் கொண்ட பிறகே என் பிபி குறையத் தொடங்கியது. இது போன்ற சமயங்களில் தான் சமீப காலத்தில் அதிகம் பரவியுள்ள “ஒரு பிள்ளை கலாச்சாரத்தை” நினைத்துக் கொள்வதுண்டு. கிராமத்திலிருந்து நகர்ந்து வந்தவர்களும், நகரமயமாக்கலும், இடப்பெயர்வும் தனி மனிதர்களுக்குப் பலவிதமான சுதந்திரங்களை வழங்கியுள்ளது. ஓரளவுக்கேனும் சாதி வித்தியாசத்தை மாற்றிக் கொண்டு வருகின்றது என்பதைப் போல அவரவர் விரும்பும் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க வைத்துள்ளது. விரும்பிய உடைகள், விரும்பிய நேரத்தில் உணவு என உருவான காலமாற்றங்கள் கலாச்சாரம் என்ற வார்த்தையைக் காவு வாங்கி விட்டது. அடுத்த வீட்டுக்கு தெரிந்து விடுமோ? என்ற பயம் மாறி விட்டது. சந்து முழுக்கப் பரவி விடுமோ என்ற அச்சம் போய்விட்டது. ஊர் முழுக்கக் காறித்துப்பி விடுவார்கள் என்ற எண்ணம் மாறி எண்ணிய அனைத்தையும் இயல்பான வாழ்க்கையாக மாற்றிக் கொள்ள முடிந்துள்ளது. இப்போது கூட்டுக்குடித்தனம் என்றால் கணவன், மனைவி, குழந்தைகள் ஒரு வீட்டுக்குள் இருந்தாலே அதுவே பெரிய சாதனையாக மாறியுள்ளது. ஆனால் நாம் இழந்த கூட்டுக்குடித்தனங்கள் உருவாக்கிய “அளவான சிந்தனை நீடித்த ஒற்றுமை” என்பது மாறிப் போனாலும் தனி நபர்களின் சுதந்திரமும், விரும்பியவற்றை அனுபவிக்கக் கிடைத்த வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. நாகரிக சமூகமாக மாற்றியுள்ளது. இதன் தொடர்ச்சியாகப் பெரும்பாலான வீடுகளில் ஒரு பிள்ளை கலாச்சாரம் என்பது இயல்பான ஒன்றாக மாறியுள்ளது. இதற்குப் பின்னால் சமூக, பொருளாதார, உடல் ரீதியான என்று பல காரணங்கள் இருந்தாலும் ஒரு பிள்ளை மட்டும் வைத்திருப்பவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் சொல்லி மாளாது. குறிப்பாகக் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் என்கிற ரீதியில் திடீர் பிரச்சனைகள் உருவாகும் போது வீட்டில் உருவாகும் பதட்டமும், அதனால் பெற்றோர்கள் அடையும் மன அழுத்தத்தைப் பல குடும்பங்களில் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன். சில மாதங்களுக்கு முன் நள்ளிரவில் நண்பன் அழைத்த போது தூக்க கலக்கத்தில் அலைபேசியை எடுத்த போது அவனின் அழுகுரல்தான் முதலில் கேட்டது. பள்ளித்தோழன் என்பதால் அவனின் குடும்ப விபரங்கள் அனைத்தும் தெரியும். மனைவியுடன் சண்டை போட்டு முடிவே இல்லாமல் போகும் போது அழைப்பான். ஆனால் இந்த முறை அவன் பையன் மருத்துவனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்திருப்பதாகச் சொன்ன போது அவசரமாக ஓடினேன். அந்தப் பெரிய மருத்துவமனையின் வாசலில் இருவருமே நின்று கொண்டிருந்தார்கள். இருவர் கண்ணிலும் நிற்காமல் கண்ணீர வழிந்து கொண்டிருந்தது. இவர்களைப் பொருட்படுத்தாமல் குறிப்பிட்ட பகுதியில் உள்ள நர்ஸ்ஸைப் போய்ப் பார்த்துப் பேசிய போது இவர்களின் முட்டாள் தனத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. மூன்று நாட்களாக மலம் கழிக்காமல் இருந்த பையனை இருவருமே கண்டு கொள்ளாமல் இருந்தன் விளைவு இப்போது இங்கே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. ஏற்கனவே பத்து வயது பையன் நோஞ்சானாக இருக்கின்றானே? ஒரு புள்ளையை வளர்க்கின்ற லட்சணமா? என்று பலமுறை திட்டியுள்ளேன். “டேய் சின்ன வயசுல நாமும் இப்படித்தானே இருந்தோம்” என்று சப்பைக்கட்டுக் கட்டியிருக்கின்றான். ஆனால் இன்று தான் அதற்கான முழுமையான விடை எனக்குக் கிடைத்தது. இது பையனின் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல. நாம் தேர்ந்தெடுத்துள்ள வாழ்க்கை முறையும் சேர்த்து அடங்கியுள்ளது. விஸ்தாரமான வீடுகள் மறைந்து தீப்பெட்டி வீட்டுக்குள் வாழ வேண்டிய சூழ்நிலையும், ஆதரவற்ற அண்டை வீடுகள் என் எல்லாமும் சேர்ந்து வீட்டுக்குள் முடங்க வைக்க உருவாகும் மனஅழுத்தத்தைப் போக்க இன்று உதவிக்கொண்டிருக்கும் ஒரே சமாச்சாரம் இந்த டிவி பெட்டிகள் தான். பேச முடியாத பொரணிகளை நெடுந்தொடர் கொண்டு வந்து விடுகின்றது. ஆட முடியாத ஆட்டங்களைத் திரைப்படங்கள் காண்பிக்க, பத்து முறை பார்த்த காட்சியென்றாலும் கண் இமைக்க மறந்து குடும்பமே பெட்டிப்பாம்பாய் அடங்கி விடுகின்றது. நண்பன் இரவு வேலை முடித்து அதிகாலை வந்தாலும் அவன் பார்க்கும் காட்சிகள் தொடங்கி, அவன் மனைவி பார்க்க விரும்பும் சீரியல் என்று நாள் முழுக்க ஏதோவொரு காட்சிகள் ஓடிக்கொண்டேயிருக்கின்றது. பாவத்தின் சாட்சியாய் வீட்டில் குழந்தைகள் இருக்கக் குடும்பத்தின் அடிப்படை ஆரோக்கியம் அதோகதியாகிவிடுகின்றது. கவனிக்க ஆளில்லை. கவனித்துச் சொல்லவும் இருப்பவர்களுக்கு நேரமும் இல்லை. இதற்கு மேலாகப் பள்ளிகளில் கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்கள் என்றொரு பெரிய கொடுமை ஒன்று உண்டு. பாலர் பள்ளி படிக்கும் குழந்தைக்கு வயது அதிகபட்சம் நான்கு வயது கூட முடிந்து இருக்காது. கைவலிக்க இரண்டு மணி நேரம் எழுத வைக்கும் கொடுமை தான் இப்போதுள்ள நவீன கல்வி. “மிஸ் வெளியே நிறுத்திடுவாங்க” என்ற பயம் பாதி. வெறுப்பு மீதி என்கிற ரீதியில் கழிவுகளை உடம்புக்குள் அடக்க, அதுவே பழக்கமாகி விடக் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமன்நிலை மாறிப் போய்விடுகின்றது. காலையில் அவசரமாய் ஓட வேண்டும். மாலையில் வீட்டுக்கு வந்ததும் எழுத உட்கார வேண்டும். குழந்தைகளுக்கு விளையாட நேரமில்லை. விளையாட விடுமுறை கிடைத்தாலும் வெளியே சென்று வர இடமும் இருப்பதில்லை. ஒரு நகர்புற நடுத்தரவர்க்கம் என்றால் இழப்பை பொருட்படுத்தாமல் இயல்பாக வாழ கற்று இருக்க வேண்டும். தினந்தோறும் வீட்டை விட்டு நகர்ந்தால் தான் அப்பாவுக்குக் காசு. அத்தனை பேர்களும் வீட்டை விட்டுக் கிளம்பினால் அம்மாவுக்கு நிம்மதி. எங்கே கொஞ்ச முடியும்? எப்போது பேச முடியும்? இருப்பதை வைத்து வாழ நினைப்பவர்களை இயலாமையின் வெளிப்பாடு என்கிறார்கள். எல்லாவற்றையும் பெற்றவர்களின் வாழ்க்கையை உழைப்பின் பலன் என்கிறார்கள். ஆனால் இருவருமே சுதந்திரத்தின் வெளிப்பாடாகத் தங்களை மாற்றிக் கொள்ளத் தொடங்கும் போது தான் இங்கே பலருக்கும் வாழ்க்கையே மாறிவிடுகின்றது. 28 27. பேதி மருந்து மூன்று நாட்கள் தொடர்ச்சியாகப் பள்ளிக்கு விடுமுறையிருந்தால் வீட்டில் கட்டாயம் இந்த உரையாடல் நடக்கும். “என்னங்கடா…… எதுவும் படிக்க, எழுத வேண்டியது எதுவும் இல்லையா?” என்று கேட்டால் சட்டென்று மூவரும் ஒரே குரலில் சொல்வார்கள். “கிளாஸ் டெஸ்ட் எதுவும் இல்லப்பா” அன்றும் இன்றும் மாணவர்களைப் பரிட்சைகள் தான் படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. என்னுடன் ஒன்பதாம் வகுப்பு வரை படித்த ஒருவனுக்குப் பரிட்சை என்றால் காய்ச்சல் வந்து விடும். மற்றப் பரிட்சைகளில் கண்டு கொள்ளாத ஆசிரியர்கள் காலாண்டு அரையாண்டு சமயத்தில் இழுத்து வந்து உட்கார வைத்து விடுவார்கள். பரிட்சைத்தாளில் ஏதாவது எழுதி வை என்பார்கள். ‘ஆல் பாஸ்‘என்கிற ரீதியில் வந்தவன் பத்தாம் வகுப்பில் ஓடியே போய்விட்டான். மாறிய உலகில் இன்னமும் மாறாமல் நமது கல்வித்திட்டம் இப்படித்தான் இருக்கின்றது. சமீப காலமாகத்தான் தனியார் பள்ளிக்கூடங்களில் பத்தாம் வகுப்பில் முழுமையான தேர்ச்சி போய்விடும் என்ற பயத்தால் கழித்துக் கட்டி வெளியேற்றுவதும் மறைமுகமாக நடந்து கொண்டிருக்கின்றது. +2 வகுப்பை எளிதாக ஊதித்தள்ளி கல்லூரிக்குள் நுழைந்தவரா? மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் பார்க்கலாம்? தினந்தோறும் பாடங்களை ஆர்வத்துடன் தான் படித்தேன் என்று? ஆம் என்றால் நீங்கள் கடைசி ஐந்து சதவிகித மாணவர்களில் ஒருவராக இருக்கக்கூடும். நாம் பார்க்கப் போவது மீதி உள்ள 95 சதவிகித மாணவர்களைப் பற்றியே. இந்த 95 ல் நானும் ஒருவன். என் குழந்தைகளும் அப்படி இருந்து விடக்கூடாது என்பதற்காகப் பாடத்திற்கு அப்பால் உள்ள விசயங்களைப் பல முறை அவர்களுடன் உரையாடுவதுண்டு. நக்கலாய், நையாண்டியுடன் ஜாலியாய் பேசுவதுண்டு. சுற்றி வளைத்துப் பாடம் சொல்லும் கருத்தை மெல்ல அவர்களுக்குள் புகுத்துவதுண்டு. மாறாத ஆசிரியர்களைப் போல நம் பாடத்திட்டங்களும் மாறவில்லை.இங்கே சாபங்கள் தான் மாணவர்களுக்கு வரமாக உள்ளது. இதற்குள் நின்று கொண்டு சிறப்பான தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே இங்கே எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. பிரகாசமென்பது உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கக்கூடிய துறைக்குச் செல்லக்கூடிய படிப்பில் சேர உதவுவது. நான் படித்த போது தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், வரலாறு என ஐந்தே பாடங்கள். அறிவியல் பாடத்தில் இயற்பியல், வேதியியல், உயிரியல். இது தவிர வரலாறு பாடத்தில் தனியாகப் புவியியல். இன்று பாடத்திட்டங்களின் தன்மை மாறியுள்ளது. ஆனால் அதே பழைய கள். ஆனால் ஒழுகும் குப்பிகள். பள்ளிக்கூடங்களில் தமிழ்ப்பாடங்களை வெறுத்தவர் எவருமே இருந்திருக்க மாட்டார்கள். நிச்சயம் ஒவ்வொரு தமிழாசிரியர்களும் நல்ல கதை சொல்லிகளாகத்தான் இருந்திருப்பார்கள். வரலாற்றுச் சம்பவங்களில் சுவாரசியம் இருந்ததோ இல்லையோ, ஆனால் வரலாற்றுப்பாடத்தை நடத்திய ஆசிரியர் சம்பவங்களைத் தொடர்பு படுத்தி ஆர்வமுடன் சொல்லத் தெரிந்திருந்தால் சில சமயம் சுவராசியமாக இருந்துருக்க வாய்ப்புண்டு. அறிவியலின் மாற்றங்களை உணராதவர்களும், கணக்கு என்பதைக் கல்லில் உரிக்கும் நாறாக மாற்றியவர்களையும் வைத்துப் படித்த பாடங்கள் எதுவும் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டியிருக்கும் என்றா நம்புகின்றீர்கள்? ஆங்கில வகுப்பு என்பது பேதி வர வைப்பது. ஷேக்ஸ்பியரைப் பற்றி நடத்தும் போதெல்லாம் டூரிங் டாக்ஸியில் பார்த்த பழைய படங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தது தான் இப்போது என் நினைவிற்கு வருகின்றது. ஆங்கில இலக்கணமென்பது ஆலகால விஷமாகத் தான் நடத்தியவர்கள் புரியவைத்தார்கள். மொத்தத்தில் பத்து மாத கஞ்சியை ஊற வைத்து ஊட்டி விட்டால் எப்படியிருக்கும்? இப்போதும் அப்படித்தான் இருக்கின்றது. 2013 ஆம் ஆண்டின் இந்திய தொழில் நுட்பத்தின் சாதனையான செவ்வாய்க்கு ஏவப்பட்ட மங்கள்யான் குறித்து மாணவர்கள் தங்கள் பாடங்களில் படிக்க இன்னும் ஐந்து வருடங்கள் ஆகலாம். பாடத்திட்டத்தை எழுதும் ஆசிரியருக்கு அது குறித்து எந்த அளவுக்குத் தெரிகின்றது என்பதை விட அதை எப்படி மாணவர்களுக்குப் புரிய வைப்பது? எதையெல்லாம் சுட்டிக்காட்ட வேண்டும்? எப்படி சுருக்கப்பட வேண்டும்? போன்றவற்றை உணர வாய்ப்பில்லாமல் பாடத் திட்டங்கள் தயாரிப்பது தான் மாணவர்களுக்கு வந்து சேர்கின்றது. அதுவும் மதிப்பெண்களுக்காகத் தயாரிக்கப்பட்ட பட்சணம் போலத்தான் இருக்கும். ஐந்து அல்லது பத்து மதிப்பெண்களுக்கு படித்து எழுதியதும் இந்தச் சாதனைகள் மனப்பாடத்தில் மறந்தே போய்விடும். இதே தவறுகள் தான் இங்கே 25 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்றது. கல்வித்துறை, திட்டங்கள், அதிகாரிகள், வல்லுனர்கள், விற்பனர்கள் என்ற ஏராளமான பட்டாளங்கள் இங்குண்டு.ஆனால் இறுதியில் மாணவர்களுக்கு மிஞ்சுவது எரிச்சலும் ஏமாற்றமும் மட்டுமே. மூன்று நாட்கள் விடுமுறை விட்டாலும் புத்தகப்பைகள் ஏதோவொரு மூலையில் அனாதை போலத்தான் வீட்டில் கிடக்கும். தினந்தோறும் வகுப்பில் வைக்கும் பரிட்சைகளும், பொதுத் தேர்வுகளுக்கும் பயந்தே தான் இங்கே குழந்தைகள் படிக்கின்றார்கள். பாடத்திற்கு அப்பால் உள்ள தேடல்களை எந்தப் பாடமும் சொல்லித் தருவதில்லை என்பதை விட அது குறித்த புரிதல்களும் ஆசிரியர்களுக்கே இருப்பதில்லை. ஆசிரியர்களைக் கேட்டால் ‘எங்கள் சுமை உங்களுக்குப் புரிவதில்லை‘ என்கிறார்கள். புத்தகத்தை வைத்தே எழுதும் தேர்வுகளை வெளிநாட்டில் வைத்திருப்பது போல இங்கே பிட் வைத்து எழுதும் ‘தன்முனைப்பு‘ மாணவர்களை நம் கல்வித்திட்டம் தந்துள்ளது. தேர்வு என்ற பெயரில் பயத்தை உருவாக்கி, அதையே வளர்த்து பள்ளிப் பாடங்கள் என்றால் பயம் என்கிற நிலைமைக்கு வளர்ந்துள்ளோம். மாணவர்களுக்குக் கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்களுக்கு அவர்களின் தரம் குறித்து அறிய தேர்வு வைத்த போது தேறியவர்கள் எத்தனை பேர்கள்? எத்தனை எதிர்ப்பு உருவானது? அவர்களின் தேர்ச்சி சதவிகிதத்தைப் பார்த்த பிறகு தான் நம்முடைய ஆசிரியர்களின் உண்மையான தரமே புரிகின்றது. இவர்கள் தான் தரமான மாணவர்களை உருவாக்க வரி கட்டும் அளவுக்கு மாத ஊதியம் பெற்று உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள் 29 28. மதிப்பெண்கள் என்றொரு கீரிடம் “அப்பா வர்ற சனிக்கிழமையன்று பள்ளிக்கு செல்ல வேண்டும்” மூவரும் ஒரே குரலில் சொன்னார்கள். ஒருவர் உடனே சுவற்றில் மாட்டியிருந்த காலண்டரில் அடுத்து வரும் சனிக்கிழமை நாளை பெரிதாகச் சிவப்புக் கலரில் வட்டம் போட்டு வைத்தார். மற்றொருவர் அலைபேசி அலாரத்தில் அந்தத் தேதியை தயார் செய்து வைத்தார். உசாரான பா(ர்)ட்டீங்க? அன்று தான் காலாண்டு பரிட்சைக்கான மதிப்பெண்கள் (RANK CARD) தருவார்கள். பெற்றோர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும். முன்பு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டமொன்றை வருடந்தோறும் நடத்தினார்கள். கடந்த மூன்றாண்டுகளாக அது நிறுத்தப்பட்டு விட்டது. முக்கியக் காரணம் பெற்றோர்களின் மனோபாவம். நிர்வாகத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை. அதற்குப் பதிலாகக் காலாண்டு, அரையாண்டு பரிட்சை ரேங்க் அட்டை கொடுக்கும் போது ஒவ்வொரு பெற்றோர்களையும் பள்ளிக்கு நேரிடையாக வரவழைத்து விடுகின்றார்கள். மாணவர்களின் தரம் குறித்து, குறைபாடுகளைப் பற்றிப் பேச முடியும். இந்தச் சமயத்தில் பெற்றோர்களின் பார்வையில் பள்ளி குறித்த அவரவர் எண்ணங்களை எழுதித்தர ஒரு விண்ணப்ப படிவம் போல ஒன்றை கொடுக்கின்றார்கள். அந்தத் தாளில் சகல விபரங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். எந்தப் பாடம் பிரச்சனையாக இருக்கின்றது? எந்த ஆசிரியர் பாடம் நடத்துவது புரியவில்லை? போன்ற பல கேள்விகள். கடைசியாக நம் எண்ணங்களை அதில் பதிவு செய்ய முடியும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள். ஏதோவொன்றை டிக் செய்ய வேண்டும். அதன் பிறகு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அறையில் இருக்கும் வகுப்பாசிரியரை சந்திக்கச் செல்ல வேண்டும். முழுமையாகப் பேச முடியும். நமக்குரிய அத்தனை சந்தேகங்களையும் கேட்கலாம். சென்ற வருடம் சென்றிருந்த போது நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தது. சென்ற வருடம் பணியாற்றிய சில ஆசிரியைகள் தாக்கு பிடிக்க முடியாமல் சென்று விட்டார்கள். நானும் ஒரு வகையில் காரணம். இரண்டு நாளைக்கு ஒரு முறை பள்ளியில் நடக்கும் அத்தனை விசயங்களையும் கேட்டு தெரிந்து கொள்வதுண்டு. அந்தந்த வகுப்பாசிரியர்களின் தரம் நமக்குப் புரிந்து விடும். திருத்தப்படாத வீட்டுப்பாடங்கள், திருத்திய போதும் தாமதமாக வழங்கிய நோட்டுகள். உடனே பரிட்சை வைக்கும் அவசரங்கள் என்று அனைத்தையும் ஆசிரியையின் பார்வைக்கு எடுத்துச் செல்வதோடு பலன் இல்லையெனில் உடனடியாகப் பள்ளிக்கூட நிர்வாகியின் பார்வைக்கு எடுத்துச் சென்று விடுவதுண்டு. என்னால் பாதிக்கப்பட்ட ஆசிரியை வீட்டிலிருந்து நான்கு சந்து தாண்டி தான் இருக்கின்றார். இன்று வரையிலும் சாலையில் என்னைச் சந்தித்தாலும் தலையைத் திருப்பிக் கொண்டு தான் செல்கின்றார். ஆசிரியர் தொழில் என்பதே மன அழுத்தம் மிகுந்த தொழில் தான். மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி போலத்தான் செயல்பட வேண்டும். சந்தேகமே இல்லை. ஆனால் ஆசிரியர்களுக்குத் தகுந்த திட்டமிடுதல் இல்லையெனில் பாதிக்கப்படுவது வகுப்பில் உள்ள மொத்த குழந்தைகளுமாக இருப்பதால் பலருக்கு இந்தத் திட்டமிடுதலை சொல்லி புரியவைத்தாலும் எடுத்துக் கொள்வதில்லை. “சித்தம் போக்கு சிவன் போக்கு” என்கிற ரீதியில் தான் செயல்படுகின்றார்கள். ஒரு வாரம் முழுக்கத் திருத்தப்படாமல் வைத்திருந்து ஒரே நாளில் வழங்கப்படும் போது அணையைத் திறந்தவுடன் வெளிப்படும் வேகமான தண்ணீரில் மாட்டிய ஜந்து போல மாணவர்கள் மலங்க மலங்க முழிக்கின்றார்கள். சரியான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தயார் படுத்தி விடுகின்றார்கள். சராசரி பெற்றோர்கள் தடுமாறி பிள்ளைகளைப் படுத்தி எடுக்கத் தொடங்கி விடுகின்றார்கள். உடனடியாக வகுப்புத் தேர்வு என்கிற பெயரில் வைக்கப்படும் பரிட்சையில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் போது மாணவர்கள் படும் பாடு சொல்லி மாளாது. காரணம் தாமதமாக வழங்கப்படும் நோட்டுக்கள் என்பதைச் சற்றுத் தாமதமாகத்தான் கண்டு கொண்டேன். இவர்கள் புத்தகங்களை வைத்து படித்த போதிலும் பல சமயம் தடுமாறி விடுகின்றார்கள். அழுத்தப்பட்ட சுமையைத் தாங்க முடியாமல் அவர்களின் தவிப்பு என்பது எழுத்தில் எழுத முடியாது. காரணம் இந்திய கல்வி முறையென்பது எழுதியதை படித்து வாந்தி எடுப்பது தான் நடைமுறையாக இருக்கிறது. சொந்தமாக எழுதும் போது மதிப்பெண்கள் குறைவாக வழங்கப்படுவதைப் பார்த்துக் கொண்டேயிருப்பதாலும் உண்டான மன உளைச்சலை ஒரு நாள் சென்று கொட்டிய விளைவால் அந்த வருடம் சில ஆசிரியைகளின் தலைக்கு மேல் கத்தி தொங்கத் தொடங்கியது. வருட இறுதியில் அதுவே அவர்களைப் பதம் பார்க்கவும் தொடங்கி விட்டது. காரணம் அவர்களுக்கு வழங்கப்பட்ட எந்த வாய்ப்புகளைப் பொருட்படுத்த தயாராக இல்லை என்பதோடு மாணவர்களைக் குறை சொல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்த முறை வகுப்புவாரியாகப் பிரித்து வைத்து, ஒவ்வொரு வகுப்பிற்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியிருந்தார்கள். காலையில் இருவருக்கும். மதியம் ஒருவருக்கும் என்று பிரித்து வைத்திருந்த காரணத்தால் முழுமையாக வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை. இவர்களைப் பொறுத்தவரையிலும் மகத்தான மகிழ்ச்சி. காரணம் மதிப்பெண்கள் குறித்த பயமில்லை என்பதோடு அந்தந்த வகுப்பாசிரியர்களிடம் பெற்றுள்ள சிறப்புச் சலுகைகள். நன்றாகப் படிப்பவர்கள் தான் வகுப்புத்தலைமை. இது தவிர ஸ்மார்ட் போர்ட்டுக் கிளாஸ் நடக்கும் சமயத்தில் கணினி இயக்க முன்னுரிமை. முழுப் பாடத்தையும் மாணவர்களுக்கு வாசித்துக் காட்டுதல் போன்ற பல சலுகைகள். இவர்களுக்கு வகுப்பில் கௌரவம் சார்ந்த விசயங்கள். வீட்டில் இரண்டு பேர்கள் இந்த வேலைகளைச் செய்வதால் அவர்களுக்குத் தாங்க முடியாத பெருமை. ஒருவருக்கு அது குறித்த கவலை மனதிற்குள் இருந்தாலும் அதிகமாக அலட்டிக் கொள்வதில்லை. “நீ ஏண்டா முயற்சி செய்யவதில்லை?” என்றால் டக் கென்று பதில் வரும். “முதல் ரேங்க் எடுக்குறவுங்க தான் இந்த வேலை செய்யனும்ன்னா மத்தவங்க எல்லாம் முட்டாளாப்பா? மொதல்ல மிஸ்களை நல்லாப் பேசச் சொல்லுங்கப்பா? யாருமே பாடத்தைத் தவிர வேறு எதையுமே பேச மாட்டுறாங்க. எங்களையும் உள்ளே பேச விட மாட்டுறாங்க.” உடனே மற்ற இரண்டு பேரும் இது போன்ற சமயத்தில் சேர்ந்து கொண்டு ரவுண்டு கட்டத் தொடங்கி விடுவார்கள். “இவளுக்கு எப்பப் பார்த்தாலும் கிளாஸ் ரூம்ல கதையளக்கணும்ப்பா. மிஸ் பாடத்தை நடத்தும் போது அதைக் கவனிக்காமல் மற்ற எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டிருப்பாள்.” உடனே சிறிய போர்க்களம் உருவாகும். அமளி வெள்ளத்தில் நாங்கள் இருவரும் அடித்துச் செல்ல நான் தான் இவளை கரை சேர்த்தாக வேண்டும். வாய் வார்த்தைகள் கை கலப்பில் தொடங்கிப் பாயத் தொடங்கும் போது அவளுடன் வெளியே ஓடித் தப்பிக்க வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ குழந்தைகளின் அறிவை கற்பூர புத்தி, கரிப்புத்தி, வாழைமட்டை என்று என்று என் ஆசிரியர்கள் சொன்னது இப்போது நினைவுக்கு வருகின்றது. இது சரியா? தவறா? என்று தெரியவில்லை. ஆனால் குழந்தைகளின் இயல்பில் இருக்கும் அறிவுத்திறனையும் இவர்களைச் சந்திக்க வரும் மற்றத் தோழிகளின் குணாதிசியங்களையும் பார்க்கும் போது பல சமயம் இது சரியோ? என்று தோன்றுகின்றது. ஒருவர் பாடப் புத்தகங்களை வீட்டில் வந்து தொடுவதே இல்லை. வீட்டுப் பாடங்களைக் கூடப் பள்ளியிலேயே அவசர அவசரமாக முடித்து விட்டு வந்து விடுவார். படிக்க வேண்டியது எதுவும் இல்லையா? என்றால் அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தெனாவெட்டாகப் பதில் அளித்த போது தொடக்கத்தில் சற்று குழப்பமாகவே இருந்தது. இதென்ன வினோதமான பழக்கமென்று? ஆனால் பாடத்திட்டத்திற்கு அப்பால் அவள் வளர்ந்து நிற்பதை உணர்ந்து கொண்ட போது அதற்குப் பிறகு அவளைத் தொந்தரவு செய்ய முடியவில்லை. வீட்டுக்குள் இறைந்து கிடக்கும் புத்தகங்களில் ஏதோவொன்றில் மூழ்கி கிடப்பாள். சிறுவர் மலர், வார மலர், நீதிக்கதைகள், குழந்தைகள் கதைகள் என்று ஏதோவொன்று. படிக்க ஏதுமில்லை என்றால் பழைய பத்திரிக்கைகள். காரணம் தினந்தோறும் காலையில் வரும் பத்திரிக்கைகளையும் ஒரு கை பார்த்து விடுவதுண்டு. சென்ற ஆண்டு இவரைப் பற்றி வகுப்பாசிரியர் ஒரு வினோதமான குற்றச்சாட்டை வைத்தார். “ரொம்பச் செல்லம் கொடுக்குறீங்களோ?” என்றார் குழப்பத்துடன்” ஏனுங்க” என்றேன்? “மொத்த மதிப்பெண்கள் 800. வாங்கியிருப்பது 780. அவ தான் ஏ ஒன் கிரேடு அதாவது முதல் ரேங்க். அவ நினைச்சுருந்தா இன்னும் பத்து மார் கூட வாங்கியிருக்க முடியும். ஆனால் அதைப் பற்றிக் கண்டு கொள்ளவே மாட்டுறா? நாங்க சொல்லும் போது தலையாட்டுறா? அப்புறம் மறுபடியும் அவ போக்குல தான் போய்க்கிட்டு இருக்கா?” என்றார் வகுப்பாசிரியருக்கு மகளின் மதிப்பெண் என்பது அவரது கீரிடத்தில் வைக்கப்படும் வைரக்கல். எனக்கோ அது முக்கியமென்றாலும் அது மட்டுமே முக்கியமல்ல என்பதை அவரிடம் எப்படிச் சொல்ல முடியும்? சிரித்துக் கொண்டு அமைதியாக இருந்தேன். 30 29. மொழியே உன் ஆயுள் ரேகை உச்சமா? ஏதோவொரு சமயத்தில் குழந்தைகளின் தோழியர்கள் என் கண்ணில் படுவார்கள். வீட்டுக்கு அருகே இருப்பவர்கள் தங்களின் பிறந்த நாளுக்கு கேக் கொண்டு வருவார்கள். சிலர் சேர்ந்து விளையாடுவதற்கென வருவார்கள். இது போன்ற சமயங்கள் என் சோதனைகள் தொடங்கி விடும். தொடக்கத்தில் அவர்களுடன் ஜாலியாக அரட்டையைத் தொடங்கி மெதுவாக அவர்களின் கல்வி குறித்து மேலோட்டமாகக் கேட்டுவிட்டு கடைசியாக ஒரு கேள்வியைக் கேட்பேன். “பரவாயில்லையே? பள்ளியில் நன்றாகப் படிப்பாய் போல…..”. என்று சொல்லிக் கொண்டே அருகே இருக்கும் தமிழ் ஆங்கிலச் செய்தித்தாளைக் கொடுத்து “இதைக் கொஞ்சம் வாசித்துக் காட்டுப் பார்க்கலாம்” என்று சொல்லுவதுண்டு. இனி தப்ப முடியாது என்பதைப் புரிந்து கொண்டு “இங்கிலீஷ் பேப்பர முதலில் வாசிக்கட்டுமா அங்கிள்?” என்பார்கள். “சரிம்மா” என்றால் அவர்களின் வாசிக்கும் விதத்தை வைத்து ஓரளவிற்கு அவர்களின் “நிலையை” நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். ஐந்தாம் வகுப்பு படிக்கும் பத்தில் எட்டுக் குழந்தைகளுக்குத் தமிழ் மொழி வாசிப்பு என்பது 50 வருடத்திற்கு முன்னால் உள்ள கட்டைவண்டி பயணம் தான். கடித்துத் துப்பி வார்த்தைகளை அரைத்துப் பாதியில் நிறுத்தி விடுகின்றார்கள். சிலர் தங்களால் முடியாத நிலையில் பதட்டமாகிவிடுகின்றார்கள். ஆங்கிலச் செய்தித்தாளை தமிழ் அளவுக்குச் சிரமப்படாமல் வாசிக்க முயற்சித்தாலும் வார்த்தைகள் வசப்படாமல் ஒரு சக்கரம் இல்லா வண்டி போல இழுத்துக் கொண்டே செல்லும். பார்த்து வாசிக்கவே சிரமப்படும் குழந்தைகளுக்கு எப்படி மொழி வசப்படும்? வாயில் வசம்பு வைத்துத் தேய்த்தாலும் மொழியே உன் விலை என்ன? என்கிற கதை தான். ஆச்சரியம் என்னவென்றால் பெரும்பாலும் 80 சதவிகித மதிப்பெண்களை எடுப்பவர்களாக இருக்கின்றார்கள். பயிற்றுவிக்கப்பட்ட பந்தயக்குதிரைகளாக மாறியுள்ளனர். இது தான் நான் இங்கே பார்க்கும் தனியார் பள்ளிக்குழந்தைகளின் நிலைமை. மொத்தத்தில் தற்போது தமிழ்மொழி தீவிர சிகிச்சை பிரிவிலும், ஆங்கிலமும் அதை நோக்கியே போய்க் கொண்டிருக்கின்றது. தனியார் பள்ளிக்கூடங்களில் ஹிந்தி மொழி வேறு தனியாக உள்ளது. ஒரு வகுப்பில் படிக்கும் பாதிக்கும் மேற்பட்ட சராசரி குழந்தைகளுக்கு அது வீபரித மொழியாகவே தெரிகின்றது. இன்றைய கல்வி குறித்த குற்றச்சாட்டை விட இரண்டு சூழ்நிலைகளைப் பற்றிப் பேச வேண்டும். முதலில் தனியார் பள்ளிக்கூடங்களில் தங்கள் குழந்தைகள் படித்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று கருதும் நடுத்தரவர்க்க பெரும்பாலான பெற்றோர்களுக்கு மொழிப்புலமை ஒன்றும் பெரிய அளவில் இல்லை. ஆனால் நாம் உயரத் தடையாக இருந்த விசயங்கள் நம் குழந்தைகளுக்குத் தடையாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் தான் பலருக்கும் ஆங்கிலம் என்பது அருமருந்தாக இருக்கின்றது. இன்று நடுத்தரவர்க்கத்திற்கென ஒரு கனவு. அந்தக் கனவில் குழந்தைகளின் கல்வி முக்கியப் பங்கு வகிக்கின்றது. கல்வி என்பது பின்னால் லாபம் தரக்கூடிய முக்கிய மூதலீடு போலவே பார்க்கப்படுகின்றது. அதிக லாபம் வர வேண்டுமென்றால் ஆங்கிலமே முதன்மையானது என்ற சூழ்நிலையில் இருப்பதால் தரமில்லாத தனியார் பள்ளிக்கூடங்களில் தகுதியில்லாத ஆசிரியர்களால் மாணவர்களின் கனவுகள் வளர்க்கப் படுகின்றது. பெற்றோர்களின் ஆசைகளில் அள்ளித் தெளிக்கப்படும் வாக்குறுதிகளால் குழந்தைகளின் எதிர்காலம் நிச்சயம் ஏதோவொரு வெளிநாட்டில் இருக்கக்கூடும். குறைந்தபட்சம் நல்ல சம்பளத்தில் ஏதோவொரு நிறுவனத்தில் வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கை ஒவ்வொருவர் மனதிலும் அழுத்தமாகப் பதிய வைக்கப்படுகின்றது. பாத்திகளில் வளர்க்கப்படும் குரோட்டன்ஸ் செடிகள் போல அழகாகத் தெரிகின்றார்கள். ஆனால் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பது குறித்து அதிகம் யோசிக்க வேண்டியதாக உள்ளது. கடந்த இரண்டு வருடமாகப் பல குழந்தைகளைப் பார்த்து விட்டேன். பள்ளியிலும் நடக்கும் பல கூத்துக்களையும் பார்த்துக் கொண்டே வருகின்றேன். இன்றைய கல்வி மொழியை வளர்க்கவில்லை என்பதோடு தனிப்பட்ட முறையில் எந்த மாணவர்களின் ஆளுமைத்திறனையும் வளர்க்கவில்லை. இதில் என்ன ஆச்சரியம்? தெரிந்தது தானே என்று கேட்பீர்கள்? ஆனால் நமக்கு எது தேவை? என்கிற ரீதியில் மாணவர்கள் கற்றுக் கொள்ளும் விசயங்கள் தான் ஆச்சரியமாக இருக்கின்றது. “ஆசிரியரே கேட்க விரும்பாத விசயங்களையெல்லாம் நீங்க கேட்குறீங்க? இதனால எங்களுக்கு என்ன லாபம் அங்கிள்?” என்று கேட்ட மாணவியைப் பார்த்து வியந்து போய்ப் பார்த்தேன். சுர்.. என்று கோபம் வரவழைக்ககூடிய கேள்வி. ஆனால் அதில் இருந்த உண்மைகள் தான் எனக்குப் பிடித்திருந்தது. படி………. நினைவில் வைத்துக்கொள்….. எழுது….. ஜெயித்துவிடு…. நான்கு திசைகளைப் போல நான்கே கட்டங்கள் தான் இன்றைய கல்வி. ஜெயித்து வந்தால் வாய்ப்புகள் உருவாகின்றது அல்லது உருவாக்க முடியும். அந்த வாய்ப்புகளே வசதிகளைத் தந்துவிடும் என்ற நம்பிக்கைக்குச் சமூகத்தில் பல உதாரணங்கள் மூலம் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகின்றது. மொழியறிவு என்பதே வெறுமனே உரையாடலுடன் முடிந்துவிடக்கூடியதாக மாறியுள்ளது. உரையாடல் என்பது முக்கால்வாசி ஆங்கிலம் கால்வாசி தமிழ் என்கிற ரீதியில் உள்ள வளர்ச்சியை அடைந்துள்ளோம். பேசத் தெரிந்தால் போதும் என்கிற நிலைமைக்கும் தமிழ் பார்க்கப்படுகின்றது என்பதை விட அந்த அளவுக்குத் தெரிந்தாலே போதும் என்கிற புள்ளியோடு நிறுத்தப்படுகின்றது. இப்போது எதிர்காலத்தில் தமிழ் மொழியே இருக்காது. அது தேவையில்லாமல் போய்விடும் என்ற நம்பிக்கையும் நமக்கு விதைக்கப் படுகின்றது. ஆங்கிலமோ, தமிழோ மேம்போக்கான வார்த்தைகளை எழுதச் சொன்னால் முழிபிதுங்கி போய்விடுகின்றார்கள். இது குழந்தைகளின் மேல் வைக்கப்பட வேண்டிய குற்றச்சாட்டல்ல. இப்போதுள்ள கல்வி சார்ந்த சூழ்நிலைகளைப் பற்றியே யோசிக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு வருடமும் பத்து மற்றும் பனிரெண்டு பொதுத்தேர்வு முடிந்தவுடன் செய்தித்தாளில் வரும் முழுப்பக்க விளம்பரங்களைக் கவனித்துப் பாருங்கள். எங்கள் பள்ளியின் சாதனை என்று நீட்டி முழங்கியிருப்பார்கள். இன்று ஒவ்வொரு பள்ளியின் வாசலிலும் கதாநாயகர்களுக்கு வைக்கப்படும் கட் அவுட் போல நிரந்தரமாகப் பெரிய ப்ளக்ஸ போர்ட்டில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களின் சாதனை விபரங்களைப் பார்க்க முடியும். மாணவர்கள் இதைப் பார்க்கின்றார்களோ இல்லையோ பள்ளிக்கு வரும் ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் இதுவே உத்வேகம் அளிக்கக்கூடிய டானிக். என் பிள்ளையும் இது போல வரவேண்டும் என்பது மறைமுகமாக மனதில் விதைக்கப்படுகின்றது. வீட்டில் குழந்தைகளை ஐந்தாம் வகுப்புக்கு மேலே சரியான பாதைக்கு நகர்த்த வேண்டும் என்பதில் தொடக்கம் முதலே தெளிவாக இருந்தேன். அதுவரைக்கும் அவர்களின் ஊக்கமென்பது எதன் மூலம் இயல்பாகப் பெறுகின்றார்களோ அதையே கவனித்துக் கொண்டிருந்தால் போதுமானது என்றே நினைத்திருந்தேன். சென்ற வருடம் வாசிப்புத் திறன் எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறியும் பொருட்டு வைத்த சோதனையில் ஒவ்வொருவரின் தரமும் ஒவ்வொருவிதமாக இருந்தது. இவர்கள் கற்கும் கல்வி வாசிப்பை வளர்க்க உதவாது என்பதைப் புரிந்து கொண்டு வாங்கிப் போட்ட தமிழ் ஆங்கிலப் புத்தகங்கள் அனைத்தும் சீந்துவாரற்றுக் கிடந்தது. காலையில் வீட்டுக்குள் வந்து விழும் செய்தித்தாளை கவனமாக உள்ளே எடுத்து வந்து வைத்து விட்டு நகர்ந்து விடுவார்கள். தொலைக்காட்சி ஆர்வத்தை மாற்ற முடியவில்லை. இயல்பான நாட்களில் அரைமணிநேரமே பயன்படுத்திய போதிலும் அதன் தாக்கம் விடுமுறை தினங்களில் அதிகமானதை உணர்ந்து கொள்ள முடிந்தது. கல்வியென்பது அதிக மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே என்ற கொள்கை மனதிற்குள் ஆழமாய் ஊடுருவியிருந்தது. ஆசிரியர்களும் அப்படியே சொல்லிக் கொண்டிருந்ததே முக்கியக் காரணமாக இருந்தது. களம் தெரிகின்றது. பிரச்சனைகளும் புரிகின்றது. எங்கிருந்து தொடங்குவது என்பதை யோசித்து அன்றொரு நாள் எதிர்பாராதவிதமாக வகுப்பாசிரியர் ஒருவரை சந்திக்கப் பள்ளிக்குச் சென்றிருந்த போது அங்கே வேறொரு அரங்கேற்றம் நடந்து கொண்டிருந்தது. அன்று ஒரு பெண்மணி ஒரு வகுப்பாசிரியரை சற்று அதிகமாகவே சப்தம் போட்டுக் கொண்டிருந்தார். முழுமையாக விசாரித்தபோது ஆசிரியர் அவர் மகனின் பரிட்சைத்தாளில் வரிசையாகப் பல பதில்களுக்கு அரை மதிப்பெண்கள் குறைத்து போட்ட காரணத்தினால் காரணத்தினால் அவனால் ஏ1 கிரேடு வரமுடியாமல் போய் விடுகின்றதாம். பல முறை ஆசிரியர்கள் என்னிடம் புலம்பியுள்ளனர். “ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஏ1 எடுத்தால் என்ன? பி1 எடுத்தால் என்ன? ஒரு மாணவனின் மற்ற நடவடிக்கைகள் குறித்துப் பக்கவாட்டில் பல கட்டங்களில் தனியாகக் கிரேடு கொடுக்கின்றோம். எவரும் அதைப் பார்ப்பதே இல்லை. எல்லோருமே மதிப்பெண்களில் மட்டும் கவனம் வைத்து எங்களைப் படுத்தி எடுக்கின்றார்கள்” என்றார். மாற்றங்களை உருவாக்க நினைக்கும் சில ஆசிரியர்களுக்கு முன்னால் இருக்கும் சவால்கள் புரிந்தது. ஒவ்வொன்றையும் யோசித்துக் கொண்டே வீட்டில் சில காரியங்களைச் செய்யத் துவங்கினேன். “லஞ்சமே மிகச் சிறந்த ஆயுதம்” என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு இதைப்படித்தால் இந்தப் பரிசு என்று அவர்கள் அறியாமலேயே மூக்கில் மூக்காணங்கயிறு கட்ட வண்டியின் பாதை ஒரு வரையறறைக்கு வர ஆரம்பித்தது. இரவில் சொல்லப்படும் கதைகள் வார்த்தைகளை யோசிக்க வைக்க வண்டியின் பயணம் இன்னும் கொஞ்சம் இலகுவாக நகர்ந்தது. படிப்படியான நகர்தல் இன்று நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. வண்டியில் எத்தனை சொகுசு இருந்தாலும் பாதையில் பள்ள மேடுகள் இருந்தால் எப்படியிருக்கும்? பள்ளிக்கூடம் கொடுக்கும் தாக்கம் தான் இங்கே குழந்தைகளின் அறிவு வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. பள்ளியில் “என் பையனுக்கு இன்னமும் இங்கிலீஷ் பேசத்தெரியல? என்ன இங்கிலீஷ் மீடியமோ?” என்று கத்திய அம்மாவின் குரலைப் பார்த்து அரண்டு போயிருக்கேன். இது போன்ற சமயங்களில் தான் எதார்த்தம் உரைக்கின்றது. கூடவே ஒரு கேள்வியும் மனதில் உருவாகின்றது. இன்றைய உலகளாவிய போட்டியில் ஜெயித்து வர மொழி முக்கியமெனில் ஜெயித்து வந்தபிறகு வாழ வேண்டிய வாழ்க்கைக்கு எந்த மொழி தேவை? அடர்ந்த காடு. தூரத்தில் தெரிகின்றது வெளிச்சம். அது வெளிச்சமா? மின் மினி பூச்சியா? 31 30. அழிக்கப்பிறந்தவர்கள் “”அன்னிய மொழியில் கல்வி என்பது நமது குழந்தைகளின் மூளையைச் சோர்வடையச் செய்யும். தேவையில்லாத பளுவினை அவர்கள் மீது சுமத்தி அவர்களை வெறும் உருப்போடுபவர்களாகவும் போலி நடத்தை உடையவர்களாகவும் ஆக்கிவிடும். சொந்தமாகச் சிந்திக்கவோ செயல்படவோ தகுதியற்றவர்களாக அவர்களை ஆக்கும். நமது சொந்த நாட்டிலேயே நமது குழந்தைகளை அன்னியர்களாக்கிவிடும். தற்போதைய கல்வி முறையின் மிகப்பெரிய சோகம் இதுதான். நமது தாய்மொழியின் வளர்ச்சிக்கு அன்னியக் கல்விமுறை பெரும் தடையாகும். எனக்கு மட்டும் ஒரு சர்வதிகாரியின் அதிகாரங்கள் அளிக்கப்படுமானால் அன்னிய மொழியில் கல்வி பயில்வதற்குத் தடை விதித்துவிடுவேன். நமது ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தாய்மொழிக் கல்விக்கு மாறச் செய்வேன். இதற்கான பாடப் புத்தகங்கள் தயாரிக்க வேண்டுமே என நான் பொறுத்திருக்க மாட்டேன். அவை தன்னாலேயே இந்த மாற்றத்திற்கு ஏற்ப மாறிக்கொள்ளும். உடனடியாகப் பரிகாரம் தேடவேண்டிய மிகப்பெரிய தீமை அன்னிய மொழியில் கல்வி கற்பிப்பதாகும். அன்னிய ஆட்சியினால் விளைந்த பல தீமைகளில் மிகப்பெரிய தீமை நம் நாட்டு இளைஞர்களுக்கு அன்னிய மொழியில் கல்வி கற்பிப்பதாகும் என நமது வரலாறு பதிவு செய்யும். மக்களிடமிருந்து அவர்களை அன்னியப்படுத்திவிடும். கல்விக்கான செலவு தேவையில்லாமல் அதிகமாகிவிடும். இந்தக் கல்வி முறை தொடர்ந்து நீடிக்குமேயானால் தேசத்தின் ஆன்மாவை அவை அழித்துவிடும். எனவே அன்னியக் கல்விமுறை என்ற மாயையிலிருந்து தேசம் எவ்வளவு விரைவில் விடுதலை பெறுகிறதோ அவ்வளவுக்கு மக்களுக்கு நல்லதாகும்”. (தி செலக்டட் ஒர்க்ஸ் ஆஃப் காந்தி – வால்யூம் 6 “தி வாய்ஸ் ஆஃப் ட்ரூத்) தமிழ்நாட்டில் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை பின்கண்டவாறு உள்ளன. தொடக்கப் பள்ளிகள் 38,82,092. நடுநிலைப் பள்ளிகள் 23,48,141. உயர் நிலைப் பள்ளிகள் 19,15,409. மேல்நிலைப் பள்ளிகள் 48,74,565. ஆக மொத்தம் 1,30,20,207 மாணவர்கள் பயிலுகிறார்கள். தொடக்கப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை 1,15,568 ஆகும். உயர் தொடக்கப் பள்ளிகளில் இந்த எண்ணிக்கை 62,156 ஆகும். உயர்நிலைப் பள்ளிகளில் அரசு மற்றும் தனியார் துறை ஆகியவற்றைச் சேர்ந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 71,794 ஆகும். மேல் நிலைப் பள்ளிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 1,41,509 ஆகும். உலகெங்கும் ஆசிரியர், மாணவர் விகிதாசாரம் 1:20 ஆகும். தமிழ்நாட்டில் இந்த விகிதாசாரம் 1:80 ஆகும். இது எவ்வளவு கவலைக்கிடமானது என்பதை உணர்ந்து, இந்த விகிதாசாரத்தை உயர்த்தி மாணவர்களின் கல்வித் தகுதியை அதிகரிப்பதற்குப் பதில் அவர்களின் மேல் தாங்கமுடியாத சுமைகளைச் சுமத்துவதால் என்ன பயன்? பெரும்பாலான பள்ளிகளில் கட்டடங்கள், விளையாட்டுத் திடல்கள், தேவையான கரும்பலகை போன்ற கல்வி உபகரணங்கள் போன்றவை பற்றாக்குறையாக உள்ளன. சுகாதார வசதிகளும், குடிநீர் வசதியும் போதுமானவையாக இல்லை. கிராமப்புற பள்ளிகளின் நிலைமை மிகவும் மோசம். இவற்றை மேம்படுத்துவது மிகமிக அவசரமான முன்னுரிமையான வேலைத் திட்டமாகும். ஆனால், இவற்றில் கவனம் செலுத்தாமல் ஆங்கில வழிக் கல்வித் திட்டத்தைப் புகுத்துவது என்பது மாணவர்களின் படிப்பைப் பாழாக்குவதாகும். இவர்களில் ஆங்கில வழி கற்றவர்களானலும் தமிழ் வழி கற்றவர்களானாலும், கல்லூரிகளில் சேரும்போது அங்கு ஆங்கிலமே கல்விமொழியாக உள்ளபோதிலும், தமிழ் வழிக் கற்ற மாணவர்கள் அதன் காரணமாகப் பின் தங்கிவிடவில்லை. ஆங்கிலத்தை ஒரு பாடமாக மட்டுமே கற்றுவந்தபோதிலும் அவர்கள் கல்லூரியிலும் மிகச் சிறப்பாகப் பயின்று வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இன்னும் சொல்லப் போனால், ஆங்கில வழி கற்றுத் தேர்ச்சி பெற்றுவந்த மாணவர்களைவிடத் தமிழ்வழிக் கல்வி கற்று வந்த மாணவர்கள் ஒருபடி மேலாகவே விளங்குகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இந்த ஆண்டு (2012) “பிளஸ்-2′ தேர்வில் 100 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சிபெற்றுச் சாதனை படைத்திருக்கின்றன. மேலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதமும் உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் எஸ்.சி. மாணவர்களில் 70.4 சதவீதம் பேரும் எஸ்.டி. மாணவர்களில் 71.5 சதவீதம் பேரும் தேர்ச்சிப் பெற்றள்ளனர். அதைப் போல் 90 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு 7,324 மாணவர்கள் 90 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் ஒட்டுமொத்த சராசரி தேர்ச்சிவிகிதம் 86 முதல் 88 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இவை சாதாரணமான சாதனை அல்ல. மிகவும் பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்த ஏழ்மை நிலையில் இருப்பவர்களின் பெற்றோர்கள் கற்றவர்கள் அல்லர். இத்தகைய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து படிப்பதைத் தவிர வேறுவழியில்லை. மெட்ரிக் பள்ளிகளில் உள்ள கல்வி வசதி கட்டமைப்புகள் அரசுப் பள்ளிகளில் இல்லை. இருந்தாலும் இந்த மாணவர்கள் பாராட்டத்தகும் வகையில் தேர்ச்சி பெற்றிருப்பது ஒரு உண்மையை எடுத்துக்காட்டுகிறது. அந்த உண்மை தாய்மொழியில் அவர்கள் கல்வி கற்றதுதான் என்பதாகும். இதே மாணவர்களை ஆங்கிலவழிக் கல்வி கற்க வைத்தால் நேர்மாறான விளைவுகள் ஏற்பட்டு அவர்களின் கல்வியும் எதிர்காலமும் பாழாகிவிடும். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வந்த 19 ஆயிரம் பேர்களில் 5 பேர் மட்டுமே “அரசுப் பள்ளியில் வேலை வேண்டாம்’ என்று தெரிவித்திருக்கிறார்கள். இந்தச் செய்தி உணர்த்தும் உண்மை என்ன? தகுதித் தேர்வில் வென்றவர்கள் அரசுப் பள்ளிகளில்தான் பணியாற்றுகிறார்கள், தகுதித் தேர்வில் வெல்லாதவர்கள்தான் தனியார் பள்ளிகளில் பணியாற்றுகிறார்கள். அப்படியானால், தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிறப்பானவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஒரு மொழியாக ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்வதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், அதுவே பயிற்று மொழி என்று கூறும் போதுதான் எதிர்க்க வேண்டியுள்ளது. விண்வெளி ஆராய்ச்சித்துறையின் தலைசிறந்த விஞ்ஞானிகளான அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்றவர்கள் தமிழைப் பயிற்சி மொழியாகக் கொண்டு பள்ளிக் கல்வி பயின்றவர்கள் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். 1930-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் தாய் மொழி வழிக் கல்வியை வலியுறுத்திப் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இறுதியாக 1952-ஆம் ஆண்டுத் தமிழ் வழிக்கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. 1954-ஆம் ஆண்டு முதல் காமராஜர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலகட்டத்தில் உயர் நிலைப் பள்ளிவரை தமிழே பயிற்சி மொழியாக இருந்தது. கல்வியமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம் பல்கலைக்கழக மட்டத்திலும் தமிழே பயிற்சிமொழியாக வேண்டும் என்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தார். 1960-ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் அனுமதியுடன் கோவையில் உள்ள அரசுக் கல்லூரியில் வரலாறு, அரசியல், பொருளாதாரம், நிலவியல், மனவியல் போன்ற பாடங்களில் பட்டப்படிப்புகள் தமிழில் தொடங்கப்பட்டன. 1961-ஆம் ஆண்டில் மேலும் மூன்று கல்லூரிகளுக்கு இத்திட்டம் விரிவாக்கப்பட்டது இத்திட்டத்தை மாநிலம் முழுவதிலும் கொண்டுவருவது குறித்தும் ஆராயப்பட்டது. பட்டப்படிப்பை தமிழ் வழிக் கல்வியில் மேற்கொள்வோருக்கு கட்டணச் சலுகைகள் அளிக்கப்பட்டால் மட்டும் போதாது அவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. ஆனால், 1965-ஆம் ஆண்டு முதலமைச்சராகப் பக்தவத்சலம் பொறுப்பேற்றபோது இத்திட்டம் மெல்லமெல்லக் கைவிடப்பட்டது. பள்ளிகளில் தமிழே பாடமொழியாக இருந்ததை மாற்றும் வகையில் ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பிரிவு ஆங்கில வழிப் பாடமொழியாக இருக்கும் என அவர் பிறப்பித்த உத்தரவு தமிழ் பாடமொழிக்குச் சாவுமணி அடித்துவிட்டது. முன்பு பக்தவத்சலம் அரசு செய்த தவறை இப்போதுள்ள அரசும் செய்யக்கூடாது. அரசுப் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் ஆங்கில வழிப் பிரிவு தொடங்குவது என்பது இறுதியாகத் தமிழ் பயிற்சி மொழி இல்லாது ஒழித்துவிடும். 1967-ஆம் ஆண்டிற்குப் பிறகு திராவிடக் கட்சிகளின் ஆட்சி ஏற்பட்டது. பக்தவத்சலம் செய்தத் தவறை திருத்துவதற்குப் பதில் அதை இக்கட்சிகள் தொடர்ந்தன. இதன் விளைவாக ஆங்கில வழிக் கல்வியின் ஆதிக்கம் பரவியது. 1978-ஆம் ஆண்டுவரை மெட்ரிக் பள்ளிகள் மொத்தம் 34 மட்டுமே இருந்தன. அவையும் சென்னை, மதுரை, பல்கலைக் கழகங்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தன. பிறகு இப்பொறுப்பைப் பல்கலைக் கழகங்கள் கை கழுவிய பிறகு இவற்றுக்காக மெட்ரிக்குலேஷன் போர்டு அமைக்கப்பட்டது. இப்போது உயர்நிலைப் பள்ளிகளில் மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கை 2,053 ஆகும். மேல் நிலைப் பள்ளிகளில் இவற்றின் எண்ணிக்கை 1,421 ஆகும். ஆக மொத்தம் 3,474 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. வெறும் 34 ஆக இருந்த இப்பள்ளிகளின் எண்ணிக்கை நூறு மடங்குக்கு மேல் பெருகிவிட்டது. இப்பள்ளிகளில் போதுமான கட்டமைப்பு வசதிகள் கிடையாது. ஆசிரியர்களும் பற்றாக்குறை. பணியில் அமர்த்தப்பட்ட ஆசிரியர்களில் 57 சதவீதம் பேர் ஆசிரியப் பயிற்சி பெறாதவர்கள். கொத்தடிமை ஆசிரியர்களைப் போல மாதம் ரூ.2,000 அல்லது அதற்குக் குறைவான ஊதியம் பெற்று வேலை பார்த்துத் தீரவேண்டிய கட்டாயத்தில் பெரும்பாலான ஆசிரியர்கள் இருக்கின்றனர். இவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக அமைக்கப்பட்ட சிட்டிபாபு தலைமையிலான நிபுணர் குழு மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான விதிமுறைகளை அரசுக்குப் பரிந்துரைத்த போதிலும் இதுவரை அரசு ஆணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் போதுமான தேர்ச்சியில்லாமலும், தமிழ் தெரியாமலும் வளர்ந்து வருகிறார்கள். இது எவ்வளவு பெரிய சமூகக் கேடு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தாய்வழிக் கல்வி நசிந்து வருவதைக் கண்டு மனம் பொறாத 101 தமிழறிஞர்கள், மூத்த தமிழறிஞர் தமிழண்ணல் தலைமையிலான சான்றோர் பேரவையின் சார்பில் 25-4-1998-ஆம் ஆண்டில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். குறைந்தபட்சமாக முதல் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்புவரை தாய் மொழியிலேயே கல்வி கற்பிக்கப்படவேண்டும் என்பதுதான் அவர்கள் முன்வைத்த ஒரே கோரிக்கையாகும். அப்போது முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதி, அமைச்சர் தமிழ்க் குடிமகனை அனுப்பி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் விளைவாக இக்கோரிக்கையை ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை செய்வதற்காக நீதிநாயகம் எஸ். மோகன், தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். அக்குழு அளித்த பரிந்துரையில் 1 முதல் 5 வரை உள்ள பள்ளிகளில் தாய் மொழிக் கல்வி அளிப்பதற்கான சட்டத்தைத் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் எனத் திட்டவட்டமாகக் கூறியது. ஆனால், சட்டம் கொண்டு வருவதற்குப் பதில் 1999-ஆம் ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி அரசு ஆணை ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது. இந்த ஆணையை எதிர்த்து ஆங்கில வழிப் பள்ளிகளின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு அரசு ஆணை செல்லாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு செய்த மேல்முறையீடு இன்னமும் விசாரிக்கப்படாமல் அப்படியே கிடக்கிறது. மோகன் குழு அளித்த பரிந்துரையின்படி தமிழ்வழிக் கல்விக்கான சட்டத்தைக் கருணாநிதி கொண்டு வந்திருந்தால் அது நிலைத்து நின்றிருக்கும். ஆனால் அவ்வாறு செய்யாமல் அரசு ஆணை பிறப்பித்ததின் விளைவாகத் தாய்மொழிக் கல்வி குழி தோண்டி புதைக்கப்பட்டது. தமிழக அரசின் கட்டுத் திட்டங்களுக்கு உட்படாமல் தப்புவதற்காக ஆங்கில வழிக் கல்வி பள்ளிகள் தங்களை மத்திய அரசின் கல்விக் கழகத்துடன் இணைத்துக் கொள்கின்றன. அங்கு ஆங்கில வழிக் கல்வி மட்டுமல்ல இந்தியும் கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. இப்பள்ளிகளில் தமிழ் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் 200-க்கு மேற்பட்ட ஆங்கிலவழிப் பள்ளிகளில் தமிழ் கற்பிப்பதே இல்லை. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆங்கில வழிப் பள்ளிகள் மத்திய அரசின் கல்விக் கழகத்துடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. பள்ளி வளாகத்திற்குள் குழந்தைகள் தங்களுக்குள் தமிழில் பேசினால் அதற்குத் தண்டனை விதிக்கப்படுகிற கொடுமையும் சில பள்ளிகளில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் தமிழே புறக்கணிக்கப்படுகிற நிலை நீடிப்பது நமது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாழ்படுத்திவிடும். உலகம் பூராவும் சிறிய நாடுகளாக இருந்தாலும் அந்தந்த நாடுகளில் தாய்மொழியில்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்தியாவிலும் அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம், ஆந்திரம் மற்றும் வங்கம், மராட்டியம், குஜராத் போன்ற பல மாநிலங்களில் பள்ளிப் படிப்பு என்பது தாய்மொழியில்தான் நடைபெறுகிறது. ஆங்கிலத்தை ஒரு பாடமாக அங்கெல்லாம் பயிலுகிறார்களே தவிர ஆங்கிலத்தையே பாடமொழியாகக் கொண்டு பிற பாடங்களையும் கற்பதில்லை. அறிவியலிலும் பொருளாதாரத்திலும் மிக முன்னேறிய நாடுகளான சீனாவும், ஜப்பானும் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை ஒரு பாடமாக மட்டுமே கற்றுக்கொடுக்கின்றனர். பல தரப்பட்ட ஐரோப்பிய தேசங்களில் இன்று வரையிலும் அலுவலக மொழியாகவும் அவர்களின் அன்றாட வாழ்க்கை மொழியாகவும் அவரவர்தாய் மொழியே இருக்கின்றது. 32 31. ஆங்கில வழிக் கல்வி – விருப்பமா? நெருக்கடியா? நம் குழந்தைக்கு இங்கே வேலை அமைந்து விடாதா? என்று இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெற்றோரையும் ஏங்க வைத்துக் கொண்டிருக்கும் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த நாடுகளின் மேலுள்ள ஆர்வம் மட்டும் எவருக்கும் குறைந்தபாடில்லை. ஆனால் இந்த நாடுகளில் செயல்பாட்டில் உள்ள கல்வி ரீதியான முறைகளைப் பற்றியும் எவரும் தெரிந்து கொள்ள விரும்புவதே இல்லை. காரணம் ஆங்கிலமென்ற அருமருந்து தங்கள் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் நல்ல வாழ்க்கையைத் தந்து விடும் என்ற மயக்கத்தில் இருப்பதால் மட்டுமே. ஒரு சின்ன உதாரணத்தைப் பார்த்து விடுவோம். இன்று ஜப்பான் என்றால் அந்த நாட்டின் பிரமாண்டமான தொழில் நுட்ப வளர்ச்சி தான் நம் கண்களுக்குத் தெரிகின்றது. ஆனால் ஜப்பான் நாடு 1868 ஆம் ஆண்டிலேயே தனது ஆண்டு வருமானத்தில் 43 சதவிகிதத்தைக் கல்விக்காக ஒதுக்கி 1893 ஆம் ஆண்டில் கல்லாதவர்கள் நிறைந்திருந்த ஜப்பான் நாட்டு ராணுவத்தில் 1906 ஆம் ஆண்டில் கற்றவர்கள் நிறைந்ததாக மாற்றிவிட்டது. ஐரோப்பிய நாடுகளைப் போலப் பொருளாதார ரீதியாக முன்னேறாத காலகட்டத்திலேயே கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தக் காரணத்தினால் இன்று அதன் அறுவடையை எடுத்துக் கொண்டிருக்கின்றது. “ஒரு அரசாங்கம் கல்விக்காகச் செலவிடும் ஒவ்வொரு ரூபாயும் கல்வியின் அத்தியாவசியக் கூறுகளை ஊக்குவிக்கும்” என்றார் அமர்த்தியா சென். அரசாங்கம் நடத்தும் பள்ளிகளில் குறைபாடுகள் இருந்தால் அதைக் களைய முயற்சி எடுக்க வேண்டுமே தவிரக் கல்வி என்பது அரசாங்கத்தின் பணியல்ல என்று தனியார் முதலாளிகளிடம் தள்ளிவிடும் போக்கும் தான் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இன்று கையில் இருக்கும் காசு வைத்தே கற்கும் கல்வியின் தரம் என்பதாக மாறியுள்ளது. அதிக லாபம் தரக்கூடிய ஒரு தொழில்துறை என்ன என்று இன்றைய நிலையில் கேட்கப்பட்டால், ‘கல்வி நிறுவனங்களைத் தொடங்குவதுதான்’ என்று தயங்காமல் பதில் சொல்லலாம். அந்த அளவிற்கு, கல்வி வியாபாரமாக்கப்பட்டு, கல்விக் கொள்ளைகள் கட்டுக்கடங்காமல் நடந்துகொண்டுள்ளன. கையில் பணம் இருப்பவர்கள் எல்லாம் இன்று சற்றும் யோசிக்காமல், தமக்கு அந்தத் தகுதி துளியளவேனும் இருக்கிறதா? என்று சிறிதும் கவலைப்படாமல், பள்ளிகளையும், கல்லூரிகளையும் நிர்மாணித்து நடத்துகின்றனர். இந்தச் சூழ்நிலையில் தற்போது மத்திய அரசாங்கம் மற்றொரு சீரழிவை அறிமுகம் செய்து வைத்துள்ளது. அதன் பெயர் பிபிபி (PPP PUBLIC PRIVATE PARTNERSHIP) இந்த வகைப் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கீழ்வருமாறு மத்திய அரசு வறையறைக்கின்றது. இப்பள்ளிகள் கேந்திரிய வித்தியாலாயா பள்ளிகளுக்கு நிகரானவை. குழந்தைகளின் வளர்ச்சியே இப்பள்ளிகளின் முதன்மையான இலக்கு. சிபிஎஸ்சி கல்விமுறை, பயிற்று மொழி ஆங்கிலம், 40 சதவிகித மாணவர்களை அரசு நுழைவுத்தேர்வு மூலம் சேர்க்கும். 60 சதவிகித மாணவர்களைப் பள்ளி உரிமையாளர் தங்கள் விருப்பப்படி சேர்த்துக் கொள்ளலாம். அரசு சேர்க்கும் மாணவர்களுக்கும் எட்டாம் வகுப்புக்கு மேலே கட்டணம் உண்டு. 60 சதவிகித மாணவர்களின் கட்டணம், ஆசிரியர்களின் சம்பளம் போன்றவற்றைத் தனியார் தங்களது விருப்பப்படி அமைத்துக் கொள்ளலாம். மத்திய அரசின் மானியம் பத்தாண்டுகளுக்கு மட்டுமே.இப்போதைய நிலையில் மாநில அரசுகளின் பணி நிலம் எடுக்கவோ, ஏற்கனவே இருக்கும் பள்ளியை ஒப்படைக்கவோ தயாராக இருக்க வேண்டும். பள்ளியின் முழுக்கட்டுப்பாடு பள்ளியின் முழு நிர்வாக மேலாண்மை முழுவதும் தனியாருக்கே சொந்தம். இத்தகை பள்ளிகள் தமிழ்நாட்டில் 355ம் நாடு முழுவதும் 3162ம் தொடங்கப்படும். தனியார் தங்கள் இஷ்டம் போலப் பள்ளிக்கு பெயர் வைத்துக் கொள்ளலாம். பெயருடன் ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்யாலயா என்னும் பெயரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதுவே அரசு தனியார் பங்கேற்பு அடிப்படையில் தொடங்கப்படும் மாதிரி பள்ளிகளைப் பற்றிய சுருக்கம். உங்களுக்குத் தலைசுற்றுகின்றதா? “இந்திய நாட்டின் அத்தனை அடிப்படைத் துயரங்களுக்கும் காரணம் முறையான கல்வியறிவு இன்மையே“ என்றார் ரவிந்தரநாத் தாகூர். ஆனால் இந்தியா சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் அதற்காக ஆய்த்த ஏற்பாடுகளைக் கூடச் செய்ய அரசுகள் முன்வரவில்லை என்பது தான் மகத்தான சோகம். மத்திய அமைச்சர் 2013 ஆம் ஆண்டு இந்திய கல்வி வளர்ச்சி குறித்து இவ்வாறு கூறியுள்ளார். “கேந்திர வித்யாலயா எனப்படும் மத்திய அரசின் கல்விக் கூடங்கள் நாடு முழுவதும் புதிதாகத் திறக்க மத்திய அரசு விரும்புகிறது. எனினும் அதற்கான நிதி தங்களிடம் இல்லை” என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் மக்களவையில் தெரிவித்தார். இதைப் பற்றி மேலும் அவர் கூறியதாவது. “கடந்த ஆண்டுக் கேந்திர வித்யாலயாவுக்காக ரூ. 1500 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டதாகக் கூறிய அமைச்சர், தற்போதுள்ள 981 கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு அனைத்துத் தொகையும் செலவாகி உள்ளதாகக் கூறினார். மேலும் அதிக நிதி கிடைக்காதவரை புதிய கேந்திர வித்யாலயா பள்ளிகள் திறக்க இயலாது” என்றும் அவர் கூறினார். கேந்திர வித்யாலயா பள்ளிகளின் செயல்பாடுகளைப் புகழ்ந்துரைத்த அமைச்சர், இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு கேந்திர வித்யாலயா பள்ளி இருக்க வேண்டும் என்று தாம் விரும்புவதாகக் குறிப்பிட்டார். ஆனால் தற்போது சுமார் 275 மாவட்டங்களில் ஒரு பள்ளி கூட இல்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். நம் நாட்டில் உள்ள பெரும்பாலான அமைச்சர்கள் அத்தனை பேர்களும் அமெரிக்கா முதல் உலகில் புகழ்பெற்ற மேலைநாட்டுக்கல்வி கூடங்களில் பட்டம் பெற்றவர்கள். இவர்களின் சிந்தனைகளும் எதிர்பார்ப்புகளும் இப்படித்தான் இருக்கும். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமேயில்லை. ஆனால் என்னமாதிரியான பாதகமான விளைவுகளை இங்கே உருவாகப்போகின்றது என்பதைச் சற்று விரிவாகப் பார்த்து விடுவோம். சொன்னதைச் சொல்லும் ‘கிளிப்பிள்ளை’ கல்விமுறை, தகவல்களை இட்டு நிரப்பும் ‘வங்கியியல்’ கல்விமுறையாகத் தற்போதைய இந்திய கல்வி முறை உள்ளது., சுய சிந்தனை உள்ளவர்களையும் அடிமையாக இருக்க மறுப்பவர்களையும், ஒதுக்கும் முறையே தற்போதைய நம்முடைய ‘வடிகட்டல்’ கல்விமுறை. கல்விமுறைகள் குறிந்த உலக அறிஞர்களின் விமர்சனங்களை உள்வாங்கிக்கொண்டு, விவாதத்தை முன்னெடுத்திருக்கும் காலமிது. ஆனால் ‘தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்று, கற்றலையும் கற்பித்தலையும் பற்றியெல்லாம் கவலையில்லாமல், கற்பிக்கும் மொழியில் ஒரு எதிர் புரட்சியை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றது தமிழக அரசு!. ‘அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்படும்’ என்னும் தமிழக அரசின் இந்த அறிவிப்பு, தமிழ்வழிக் கல்வியா – ஆங்கில வழிக் கல்வியா? என்ற நெடு நாள் விவாதத்திற்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. தமிழ்ச் சமூகத்தில், தாய்மொழி வழிக் கல்விக்கு ஆதரவாக, தமிழ் உணர்வாளர்கள், மொழி அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியியலாளர்கள், முற்போக்காளர்கள் என்று அறிவுசார் வட்டங்களில் ஆதரவு இருக்கின்றதே தவிர, பொது மக்களில் பெரும்பான்மையினர் ஆங்கில வழிக் கல்வியையே விரும்புகின்றனர் என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மேலோட்டமாக நோக்குமிடத்து, கணினியுகத்தில் / உலகமயச் சூழலில் ஆங்கிலத்தின் தேவையும், ஆங்கிலம்தான் உலக மொழி, பொது மொழி, அறிவியல் மொழி போன்ற கருத்துருக்களும் தான், ஆங்கில வழிக் கல்விக்கு ஆதரவான மனநிலையைச் சமூகத்தில் விதைத்திருப்பதாகத் தோன்றலாம். ஆனால், ஒரு சமூகம் முழுமைக்குமே, தன் தாய் மொழியைக் கை-கழுவிவிட்டு, அயல் மொழியில் பயில முனைப்புக் காட்டுவதும் – மேல்தட்டு மக்கள், நடுத்தர வர்க்கம், பாட்டாளிகள் என்று வர்க்க பேதமில்லாமல், துறை / தொழில் பேதமில்லாமல், சிறுவர்கள் இளைஞர்கள் பெரியவர்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல், ஆங்கில மோகத்தில் திளைத்திருப்பது, கடைசியில் பிரச்சனைகளில் தான் கொண்டு சேர்க்கும். அது அந்தச் சமூகம் சந்தித்திருக்கும் உளவியல் நெருக்கடி!. அதிகார வர்க்கம் காரிய நோக்கத்தோடு திட்டமிட்டு ஏற்படுத்திய உளவியல் நெருக்கடி!. ஆங்கிலப் பட்டறைகளும் – ஆளனுப்பும் ஊடகங்களும் பன்னாட்டுத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான, ஆங்கிலம் தெரிந்த ‘அதிசயக் கருவி’களை உற்பத்திசெய்வதற்கும், உற்பத்தியாகும் பொருட்களை நுகர மேற்கத்திய சமூகத்தை உருவாக்குவதற்கும் தான், நம் நாட்டு முதலாளிகளின் கல்வி நிறுவனங்களும் ஊடகங்களும் இரவு பகலாகக் கண்விழித்து வேலை செய்து வருகின்றன. எதிர்கால இந்தியாவின் தூண்களில், யார் ‘அதிசயக் கருவி’யாகத் தேறி வருவார்கள் என்பது நிச்சயமில்லாத நிலையில், அத்தனை பேருக்கும் ஆங்கில மோகத்தை விதைப்பதைத் தவிர, அவர்களுக்கு வேறு வழியில்லை. ‘கருவி’களை உற்பத்திசெய்துகொள்ளும் அளவிற்கு, இன்னும் நமது கல்வி நிறுவனங்களின் ‘தரம்’ உயர்த்தப்படவில்லை. அதற்கான முயற்சியில் தான், தொலைக்காட்சி ஊடங்கள் இறங்கியுள்ளன. இருபத்து நான்கு மணிநேரமும் மக்களை அதற்காகப் பயிற்றுவித்துக்கொண்டுள்ளன. தொழில்நுட்பத்தின் மகத்துவத்தைப் பாருங்கள்… இனி… விளையாட்டு, பயணம், உரையாடல், பொழுதுபோக்கு, ஓய்வு, வாசிப்பு எல்லாம், தொலைக்காட்சியில் வருபவைகள். நீங்கள் எதற்கும் சிரமப்பட வேண்டியதில்லை, எல்லாம் தொலைகாட்சிகள் பார்த்துக்கொள்ளும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தொலைகாட்சி பார்ப்பது மட்டும்தான். மொத்தத்தில் நீங்கள் எங்களுக்கு வேண்டும், எப்படி வேண்டுமோ அப்படி!. அதனால் தொடர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே இருங்கள். அது மனித இயல்பு. மூளையை முடமாக்கும் லேகியம் விற்றுக்கொண்டிருக்கின்றன ஊடகங்கள். ஆங்கிலம் தெரியாத எந்த ஒரு கிராமமும் விடுபட்டுவிடக்கூடாது என்ற சிறப்புக் கவனத்தோடு, தமிழ் நாடு முழுமைக்கும், ‘தமிழர்களுக்காக’ ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், முடிந்தவரை ‘ஆங்கிலத்தில்’ இருக்கும்படி பார்த்துக்கொள்ளப்படுகின்றன. எந்நேரமும் திரையை ஆக்கிரமித்திருக்கும் சிறிய மற்றும் பெரிய திரைக் கலைஞர்கள் சேர்ந்து அடிக்கும் ஆங்கிலக் கூத்தும், கிண்டலாக உச்சரிக்கப்படும் உரைநடைத் தமிழும், பார்க்கும் பார்வையாளர்களை, கழுத்தில் கத்தியைவைத்து ஆங்கிலப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கின்றன. தொலைக்காட்சியை அனைத்துவிட்டு, வீட்டின் கதவைத் திறந்து வெளியில் பார்த்தால், ஆங்கிலம் நிற்குமோ என்ற அச்சத்தை உண்டுபண்ணுகின்றன. இப்படி, மேற்கத்திய மற்றும் ஆங்கில மோகம் சமூகத்தில் முதலாளித்துவ ஊடகங்களால், தொடர்ந்து வன்முறையாகத் திணிக்கப்படுகின்றன. இத் தொடர் வன்முறை, தமிழ்ச் சூழலில், பல அசிங்கமான உளவியல் விளைவுகளை உண்டுபண்ணியிருக்கின்றன. தமிழ்ச் சமூகத்தின் ஆங்கில உளவியல் தமிழ் சமூகத்தில், ஒரு பட்டதாரி, ஆய்வுகள் செய்து முனைவர் பட்டமே பெற்றிருந்தாலும், ஆங்கிலம் பேசத் தெரியவில்லை என்றால், சான்றிதழைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு தற்குறிகளின் வரிசையில் அமர்ந்துகொள்ள வேண்டும். அவரை இச் சமூகம் ஒருபோதும் படித்தவராகப் பார்க்காது. அந்த முனைவரும் கூட, உளவியலாக அதற்குப் பழக்கப்படுத்தப்பட்டுவிடுவார். மொத்தத்தில் ஆங்கிலம் என்பது படித்தவர்கள் பேசும் மொழியாகவும் பட்டதாரிகளுக்கு இருக்க வேண்டிய அறிவாகவும் கருதும் மனப்பான்மை, நமது சமூகத்தில் பரவலாக நிலவுகின்றது. அதே நேரத்தில் தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் நாட்டிலேயே படித்துப் பட்டம் பெற்ற ஒரு பச்சைத் தமிழனின் உச்சபட்ச மரியாதை ‘தமிழ் அவ்வளவாக எழுத வராது’ என்பதில் இருக்கின்றது. இந்த அசிங்கமான உளவியல், ஆங்கில மோகத்தோடு நின்றுவிடவில்லை. தாய் மொழியை இகழவும், தாழ்வானதாகத் தரமற்றதாக நம்பவும் கற்றுக்கொடுத்துள்ளது. ஒரு கடைக்காரரிடம் brown sheet என்று கேட்டுப்பாருங்கள். அவர், விலை மற்றும் தரம் உயர்வான polyurethane coated அட்டையைத் தருவார். அதையே ‘காக்கி அட்டை’ என்று தமிழில் கேட்டுப் பாருங்கள் polyurethane பூச்சு இல்லாத, விலை குறைவான, மட்டமான அட்டையைத் தருவார். சமூகத்தின் அனைத்து மட்டத்திலுமான, இந்த மோசமான தாக்கம் உருவாக்கப்பட்டு விட்டது. அமெரிக்கர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்தி உருவாக்கும் நகைச்சுவைகளைப் (self deprecating jokes) போன்றது அல்ல. இது, அமெரிக்கக் கனவோடு proud to be an Indian என்று குறுஞ்செய்தி அனுப்பும், ஒரு முரண்நகை உளவியலைக்கொண்ட சமூகத்தின் அவல நிலை! வெண்டைக் காயை ladies finger என்பதற்குச் சிரிக்காத தமிழன், சேனைக் கிழங்கை elephant foot என்பதற்குச் சிரிக்காத தமிழன், ‘கைப்பேசி’ என்ற அழகான ‘காரணப்பெயர்’-ஐ கேட்டுத்தான் சிரிக்கின்றான். ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைக் கேட்டு, தன் மொழியைத் தானே ஏளனம் செய்து மகிழ்கின்றான். இந்தக் கேள்விகள் பெரும்பாலான நேரங்களில், அவனது ஆங்கில அறிவைப் போலவே, மொன்னையாகவே இருக்கின்றன. sim க்கு நிகரான தமிழ்ச் சொல் கேட்டு குறுஞ்-செய்திகளைப் பறக்கவிடுகின்றான். subcriber identity module என்பதன் சுருக்கமான (Abbreviation) எஸ்.ஐ.எம் என்பதை, ‘சிம்’ என்று சேர்த்து வாசிப்பதில் அவனுக்குச் சிக்கல் இல்லை. வார்த்தையல்லாத ஒன்றுக்கு இணையான தமிழ் வார்த்தையைக் கேட்டுவிட்டு, அறிவார்ந்த கணையைத் தொடுத்துவிட்டதாகப் புளங்காகிதம் அடைவதிலேயே குறியாய் இருக்கின்றான். புதிய கண்டுபிடிப்புகளுக்கு, புதிதாய்தான் பெயரிட முடியும் என்ற, அடிப்படை அறிவு அவனுக்கு இல்லாமலில்லை. தன் தாய் மொழியைத் தானே ஏளனம் செய்து புளங்காகிதம் அடையும் பரவச நிலையில், அதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு அவனுக்கு நேரமில்லை. அல்லது அவன் எடுத்துக்கொண்ட உளவியல் பயிற்சி அவனைச் சிந்திக்க அனுமதிப்பதில்லை. ஆங்கில வழிக் கல்விக்கான, இச் சமூகத்தின் ஆகப் பொது ஆதரவுக் கருத்தும் கூட, கிட்டத்தட்ட இதே ஞானத்தோடுதான் இருக்கின்றது. அது, ‘தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது’ என்பது. சரி, ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு? நமது மாணவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியுமா! ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள், எத்தனை வருடங்கள்… எத்தனை பாடங்கள்… எத்தனை வகுப்புகள்… எத்தனை தேர்வுகள்… எத்தனை படித்திருப்பார்கள்… எத்தனை எழுதியிருப்பார்கள்… அத்தனையும் ஆங்கிலத்தில்!. அத்தனையிலும் தேர்ச்சியும் பெற்று வந்தவர்களுக்கு, ஆங்கிலம் தெரியும் என்று சொல்வதற்குத் திராணி இருக்கின்றதா?. உண்மையில், ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள, அந்த மொழி வழியிலேயேதான் கல்வியே கற்க வேண்டும் என்பதே அபத்தம். சமீபத்திய ஆய்வு ஒன்று தமிழ்நாட்டு மாணவர்களைத் தற்குறிகள் என்கிறது. PISA (program for international student assessment) என்பது அந்த ஆய்வு. சர்வதேச மாணவர்களுக்கு, எழுத்தறிவு, கணிதவியல், அறிவியல் ஆகிய பிரிவுகளில் தேர்வுகள் நடத்தி, மதிப்பிட்டு, ஆறிக்கை தருவது அதன் வழக்கம். 2009-10-ல், 74 economies (பிரதேசங்கள்) கலந்துகொண்ட தேர்வில், இந்தியாவிலிருந்து இமாச்சலப் பிரதேசமும் தமிழ்நாடும் கலந்து கொண்டன. எழுத்தறிவுத் தேர்வில், தமிழ்நாடு 72-வது இடத்தையும் இமாச்சலம் 73-வது இடத்தையும் பெற்றுள்ளன. கணிதவியல் அறிவியல் தேர்வுகள் முறையே, தமிழ்நாடும் இமச்சலமும் 72,73 – 72,74 வது இடத்தைப் பெற்றுள்ளன. எழுத்தறிவு (Literacy) என்பதற்கு PISA கொடுத்த விளக்கம் – ‘படித்த பொருளைப் புரிந்துகொண்டு, அதை வெளிப்படுத்தத் தெரிந்திருப்பது’. இதன் அடிப்படையில், இந்திய மாணவர்கள் பெரும்பான்மையினர் தற்குறிகளாக (illiterate) இருகிறார்கள் என்கிறது. தேர்வு எழுதிய மாணவர்களின் முதல் மொழியும் பயிற்று மொழியும் வெவ்வேறாக இருந்ததே, இதற்குக் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளது. எழுத்தறிவு, கணிதவியல், அறிவியல் ஆகிய அனைத்துப் பிரிவுகளிலும் முதலிடத்தில் ஷாங்காய் (சீனா) இருக்கின்றது. பொறியியல் மருத்துவம் என்று மேற்படிப்புகள் அனைத்தையும், தன் தாய் மொழி வழியிலேயே கற்கும் சீனா எப்படி, ஆங்கில வழியில் நடந்த தேர்வில் முதலிடத்தைப் பெற்றது?. அதுதான் தாய் மொழிக் கல்வியின் மகத்துவம்!. மொழியும் தாய்-மொழியும் முதலில் (தாய்) மொழி என்பதை எவ்வாறு விளங்கிக்கொள்வது என்பதைப் பார்ப்போம். அயல் மொழியாக இருந்தாலும் தாய் மொழியாக இருந்தாலும் இரண்டும் மொழிகள்தான் என்றும், மனிதர்கள் தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கான ஒரு கருவி என்பதைத் தாண்டி, மனித வாழ்க்கையில் மொழிக்கு வேறெந்தப் பங்கும் இல்லை என்றும், பொதுவாக நிலவும் கருத்துக்கள் சரியா? என்றால், ‘இல்லை’ என்கிறார் தலைசிறந்த மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி. மனித இனத்தின் உழைப்பு, அதன் உடல் அமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவந்தது போது, மனித இனத்தின் பிரிக்க முடியாத அங்கமான மொழியும், மூளையில் அதற்கென ஒரு கட்டமைப்பை உருவாக்கிக்கொண்டதில் வியப்பென்ன இருக்க முடியும். மேலும் மனித மொழிகள் அனைத்திற்கும், ஒரு பொதுவான இலக்கணம் (Universal grammar) இருப்பதாகவும் கூறுகிறார் சோம்ஸ்கி. இதன் அடிப்படையில்தான், ‘குழந்தைகள் மனதளவில் எந்தத் தொல்லையுமில்லாமல், ஒரு மிதிவண்டியை ஓட்டிப் பழகுவதைப்போல் தாய் மொழியை எளிமையாகக் கற்றுக்கொள்கின்றார்கள்’ என்கிறார் சாம்ஸ்கி. மேலும், தாய் மொழியைக் கற்றுக்கொள்ளும் குழந்தைகள் வாக்கியங்களை அப்படியே பிரதி எடுப்பதில்லை, கற்றுக்கொள்ளும் போது they deduce rules from it என்கிறார் (இலக்கணத்தை – விதிகளை ஊகித்துணர்தல்). அறிவு வளர்ச்சியின் முன் தேவையாக, இயற்கையான சிந்தனைப் பசியால் உள்வாங்கிக்கொள்ளப்படும் முதல் மொழி என்பதால், அந்த rules deduction இயல்பாகவே நடந்துவிடுகின்றது.. குழந்தைகள் மரத்தைக் காட்டி என்ன என்று கேட்கும் போது, மரம் என்று சொல்லி முடித்துக்கொள்கிறோம். நாம் அதை மரம் என்று ஏன் சொன்னோம்? அதுதான் அந்தப் பொருளின் பெயர். ஆனால் ஒரு பொருளுக்குப் பெயர் இருக்கும் என்பதே குழந்தைகளுக்குத் தெரியாதே!. அறிவியல் விளக்கங்களை ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ, நாம் நமது குழந்தைகளுக்கு, ஐம்பது வார்த்தைகளுக்கு மேல் கற்றுக்கொடுத்திருக்க மாட்டோம் என்பது நமக்குத் தெரியும். இலக்கணமும் அப்படியே! எந்த ஒரு குழந்தைக்கும் தாய்-மொழி பிறரால் வலிந்து கற்றுக்கொடுக்கப்படுவதில்லை. குழந்தைகள் தங்கள் தாய் மொழியைத் தாங்களே தங்கள் சமூகத்தோடு சேர்ந்து இயல்பாகக் கற்றுக்கொள்கிறார்கள், அல்லது முயன்று அடைகிறார்கள் என்பது தெளிவு. (தாய் மொழி என்பதற்கான சரியான விளக்கம் இதற்குள்ளாகத்தான் இருக்க முடியும்) எனவே தாய்-மொழி என்பது, வெறும் மொழியாக அல்லது கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் கருவியாக மட்டும் இருக்க முடியாது. அது கிட்டத்தட்ட, ஒரு மனிதனின் அடிப்படை அறிவுத் திறனாக அமைகின்றது. மற்ற எதையும் அவன் இதன் வழியாகத்தான் கற்கின்றான், அது இன்னொரு மொழியாகவே இருந்தாலும். கற்றலில் அவன் தொடும் எல்லையைத் தீர்மானிப்பதில், தாய் மொழித் திறன் முக்கியப் பங்காற்றுகிறது. இங்குக் கற்றல் என்று நாம் குறிப்பிடுவது, கல்வி கற்றல், அறிவுசார் கற்றலைத் தான். மிதிவண்டி கற்றலை அல்ல. அது கற்கக் கூடியதும் அல்ல, பயின்று, பழகக் கூடியது. இரண்டையும் போட்டுக் குழப்பிகொள்ளக் கூடாது. குழந்தைகள் மீதான வன்முறை இயற்கையாக, அனைத்தையும் தன் தாய் மொழியில் புரிந்துவைத்திருக்கும் குழந்தைகளுக்கு, பள்ளிக் கூடங்களில் அயல் மொழியில் கற்பிக்கும் போது, அவர்களின் சிந்தனை தொந்தரவிற்குள்ளாகின்றது. இது, குழந்தைகளின் சிந்தனையில் நாம் செலுத்தும் கொடிய வன்முறை ஆகும். தொடர்ந்து கட்டாயப்படுத்தித் திணிக்கப்படும் அயல் மொழி வழி கற்பிக்கும் ‘முயிற்சி’, படிப்படியாகக் குழந்தைகளின் தாய் மொழித் திறனையும் காலி செய்துவிடுகின்றது. முடிவாக அவர்கள் கற்பதையே (learning) நிறுத்திவிடுகின்றனர். ஆசிரியர்களும் கற்பித்தலை (teaching) நிறுத்திவிடுகின்றனர். பிறகு நடப்பதெல்லாம் மதிப்பெண்களை நோக்கிய பயிற்சிதான் (coaching). அவர்கள் எடுக்கும் பயிற்சி, புத்தகங்களில் இருப்பதைப் பிரதி எடுப்பதற்குத்தான். எடுக்கப்படும் பிரதிகள் ஆங்கிலத்தில் இருந்துவிடுகின்றன அவ்வளவுதான். மற்றபடி ஆங்கிலப் புலமையெல்லாம் ஆங்கிலம் கற்பதால் சாத்தியமே தவிர, ஆங்கில வழியில் பிரதி எடுப்பதால் (கற்பதால்?) அல்ல. பிற்காலத்தில் தங்களை அதிசயக் கருவிகளாகிக்கொள்ள, எப்படிச் சிரிப்பது, எப்படிக் கை-குழுக்குவது, எப்படிப் பார்ப்பது, எப்படித் தன்னை விற்பது! (interview skills ) என்று, பட்டைதீட்டி நிமித்துவதற்கு முன் தேவையாக – சுய மரியாதை, சுய சிந்தனை, படைப்புத்திறன் ஆகியவற்றை, அடித்து நொறுக்கி அழித்தொழித்துப் புடம்போடப்படும் இடமாகத்தான் இந்தப் பள்ளிக் கூடங்கள் இருக்கின்றன. கற்றலில் மொழி பள்ளி என்பது கற்றலைக் கற்பிக்கும் இடம் தான், உண்மையான கல்வி பள்ளியை விட்டு வெளியேறிய பிறகே நடக்கிறது – என்கிறார், கல்வியியலாளர் ஜான் டூவி (john dewey). அயல் மொழி வழியில் கற்கும் மாணவர்களைப் பொறுத்தவரையில், பள்ளிகுள்ளும் சரி, பள்ளிக்கு வெளியிலும் சரி, கற்றல் அதன் உண்மையான பொருளில் நடப்பதே கிடையாது. எந்த ஒரு மொழியிலும் பாண்டித்தியம் இல்லாத ஒருவரால், எதையும் முழுமையாகக் கற்க முடியாது. ஒரு ஆழமான புத்தகத்தைக் கூடப் படித்துப் புரிந்துகொள்ள முடியாது. வாசிக்கும் மொழியில் பாண்டித்தியம் அல்லது வாசிக்கப்படும் பொருளில் அடிப்படை அறிவு, இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றாவது இல்லாமல், தினத்தந்தி செய்தியைக் கூட முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. PISA தேர்வில் நமது மாணவ மணிகளின் நிலை இதுவாகத்தான் இருந்திருக்கின்றது. சீன மாணவர்கள் தாய் மொழி வழியில் படித்திருந்தாலும், தேர்வுப் பொருள் பற்றி அவர்களுக்கிருந்த அடிப்படை அறிவு, ஆங்கிலத்தைச் சுலபமாக எதிர்கொள்ளச் செய்திருக்கின்றது. தாய் மொழியில் கற்ற கல்வி, அம் மொழியில் அவர்களுக்கிருந்த பாண்டித்தியம், தேர்வுப் பொருள் பற்றிய அடிப்படை அறிவிற்கு ஆதாரமாக இருந்திருக்கின்றது. ஏதேனும் ஒரு மொழியில் பாண்டித்தியம் என்பது கற்றலுக்கு அவசியமான ஒன்று. தாய் மொழியில் பாண்டித்தியம் பெறுவதே இயற்கையானதும் எளிமையானதும் ஆகும். அதற்குத் தாய் மொழி வழியில் கற்பதே சிறந்த வழி. இப்படிக் கூறுவதானது, தாய் மொழியைத் தவிர, வேறு மொழிகளில் பாண்டித்தியம் பெற முடியாது என்பதாகுமா?. அப்படியில்லை. ஒரு நூலை எவ்வாறு கற்பது என்பதற்கே, 1000 பக்கங்களில் விளக்கப் புத்தகங்கள் தேவைப்படுகிற நூல், காரல் மார்க்ஸின் Das capital. அவ்வளவு கடினமான நுட்பமான நூலை, ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்க, பதின்ம வயதில் தன் வாழ்வை புரட்சிப் பணிக்கு அர்பணித்த, தோழர் தியாகு-விற்கு முடிந்திருக்கின்றது. (Das capitalai-ஐ பொருத்தவரை, இந்திய மொழிகளிலேயே, இது தான் முதல் முழுமையான மொழிப் பெயர்ப்பு. தோழர் தியாகு தான், தமிழகத்தின் முதல் தாய்த் தமிழ்ப் பள்ளியைத் தொடங்கியவர். அதே பள்ளியில், தனது மகளை முதல் மாணவியாகச் சேர்த்தவரும் கூட). ஆக, அயல் மொழியில் பாண்டித்தியம் என்பது சாத்தியமே. ஆனால் இது போன்ற விதிவிலக்கான சாத்தியப்பாட்டை நோக்கி, ஒரு சமூகத்தையே அயல்-மொழியில் நகர்த்துவது முட்டாள்த்தனம் என்கிறோம். ஆங்கிலத்தையோ வேறு ஏதேனும் அயல் மொழியையோ கூடக் கற்றுக்கொள்வது, இக் காலங்களில் அவ்வளவு கடினமானது அல்ல. கைப்பேசி போன்ற பல மின்னியல் உபகரணங்கள் (gadgetries), எப்போதும் கைகளில் இருக்கும்படியான மின்னியல் அகராதிகள், இணையதளப் பயன்பாடு, ஆசிரியர்களைத் தொடர்புகொள்ள எளிமைப்படுத்தப்பட்ட வசதிகள், பன்மொழி திரைப்படகளையும், செய்திகளையும் பார்க்கும் வாய்ப்புகள் போன்றன, அயல் மொழி கற்றலை எளிமை படுத்த கூடியனவாக இருக்கின்றன. எனவே ஆங்கிலத்திற்காக, ஆங்கில வழியிலேயே கல்வியைத் தேர்ந்தெடுத்துத் தற்குறிகளாக வேண்டிய அவசியமில்லை. நம் சமூகத்திற்கு, ஆங்கிலம் பயன்படலாமே தவிர, ஆங்கில அயல் மொழி மொழிக் கல்வி, கேடு விளைவிக்கவே செய்யும். எந்த ஒரு சமூகத்திற்குள்ளும், அதன் சமூக (தாய்) மொழியைப் புறக்கணித்து, அயல்மொழி வழிக் கல்வியைத் திணிப்பது, அச் சமூகத்தின் ஆழுமையைச் சீரழிக்கக் கூடியது. சமூகத்தோடு ஒண்றி வாழாத, உற்பத்தியில் பங்குகொள்ளாத, மேல்தட்டு மக்களுக்குச் சாதகமானது. உழைக்கும் பாட்டாளி மக்களைப் பலகீனப்படுத்தக்கூடியது. சமூகத்தின் பெருவாரி மக்களை அறிவிலிகளாக்கி, போராட்ட உணர்வை மழுங்கடித்து, ஒட்டச் சுரண்ட வழிவகுக்கக் கூடியது. ஜெர்மெனி, பிரான்ஸ், சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகளில், மேற்படிப்புகள் கூட, தாய் மொழியில் கற்க முடிகின்றது. (ஆங்கிலமே இயல்பு மொழியாகவுள்ள (de facto), இங்கிலாந்து அமெரிக்கா ஆஸ்திரேலியாவையும் கூட இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம் தானே?). உலகிலேயே, வளமையான மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்ட தேசிய இனங்களுக்கு, அடிப்படைக் கல்வியையே அயல் மொழியில் கற்பிக்கும் நாடு, இந்தியா மட்டும் தான்!. வேறெந்த நாட்டிலும் இந்த அவலம் இல்லை. இதை மக்களின் விருப்பம் என்பது, எல்லோரையும் சொல்லி ராசா குசு விட்ட கதை (சொலவடை) தான். இது நமக்கான உரையாடல். நமது மொழி – நமது பலம், நமது கல்வி – நமது உரிமை. அமெரிக்கா சென்றால் என்ன செய்வது… ஆஸ்திரேலியா சென்றால் என்ன செய்வது… டெல்லியில் குடியேறினால் என்ன செய்வது… குஜராத்தில் குடியேறினால் என்ன செய்வது… என்ற, சொற்ப மேல்தட்டு கனவான்களின் சுய அரிப்பிற்காக, நமது உரிமையை விட்டுக்கொடுத்துச் சீரழிய முடியாது. இக் கனவான்கள், அங்குள்ள உழைக்கும் மக்களோடும் கூட ஒன்றி வாழப் போவதில்லை, ஒட்டச் சுரண்டும் ஒட்டுண்ணியாகவே செல்கிறார்கள், என்பது திண்ணம். . ஆப்பிள் கணினி தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்த ஸ்டீவ் ஜாப்ஸ்-காகக் கண்ணீர்விடும் இக் கனவான்களுக்கு, நமது ஆறுகளின் அவலநிலையைப் பற்றிக் கவலையில்லை. கணினி தொழில் நுட்ப புரட்சியின் பிதாமகன் பில் கேட்ஸ் எந்தத் தேதியில், எங்கே ஒண்ணுக்குப் போனார் என்று தெரிந்த இவர்களுக்கு, தனது மாவட்டத்தில் எத்தனை ஆறுகள் ஓடுகிறன என்பது தெரியாது. இவர்களின், ஐரோப்பிய கனவிற்கு, நமது தேசியத்தைச் சாட்டையால் அடித்தா சாத்தியப்படுத்த முடியும்?. 33 32. இதற்குத் தானே ஆசைப்பட்டாய்? இறுதியாக, நாம் இதுவரையிலும் பார்த்தவற்றை இந்தப் பகுதியில் கேள்வி பதிலாக முடிவுக்குக் கொண்டு வருவோம். மொழி என்றால் ? ஒருவரின் அறிவு நிலைப்பட்டுள்ளது என்பதை நமக்கு உணர்த்துவதே மொழி தான். குழந்தை பேசத் தொடங்கும் பொழுது உறுப்புகள் வளர்வதைப் போல அதன் சிந்தனைகளும் வளர, தேடலும் தொடங்கி விடுகின்றது. ஒன்றைத் தேடத் தொடங்கும் போது அறிவும் வளரத் தொடங்கி விடுகின்றது. அறிவின் அடிப்படை தேடல். தேடலின் அடிப்படை சிந்தனை. சிந்தனையின் அடிப்படை மொழி. மொழியின் முக்கியத்துவம்? தனி மனிதனின் வளர்ச்சியை அவன் வாழும் சூழ்நிலைகள் தீர்மானிக்கின்றது. ஒருவன் எந்த இடத்தில் வாழ்கின்றானோ அதற்குத் தகுந்தாற் போல அவனது எண்ணம், நோக்கம், செயல்பாடுகள் என்று ஒவ்வொன்றும் படிப்படியாக மாறிவிடுகின்றது. கடல்புறப் பகுதியில் மலைப்பிரதேசங்களில்,கிராமப்புறங்களில், சிறிய மற்றும் பெரிய நகர்புறங்களில்,வெளிநாடுகளில் உள்ள வாழ்க்கை வெவ்வேறாக இருப்பதால் மொழி தொடர்பு ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்றது. ஒரு இடத்தில் பேசப்படும் மொழி வேறோரு அடுத்த இடத்தில் வேறொரு விதமாக உள்ளது. ஒரே மாநிலத்திற்குள் மாவட்டம் தோறும் வித்தியாசமான வட்டார வழக்கு மொழிகள் இதன் காரணமாகவே உருவாகின்றது. குறிப்பிட்ட பழக்கவழக்கங்கள், பண்பாட்டு கலாச்சார முறைகள் என அனைத்தும் புவியியல் அமைப்பின்படியே தோன்றிவிடுகின்றது. மொழி என்பது வெறுமனே தொடர்பு சாதனம் மட்டுமல்ல. தலைமுறை தலைமுறையாக ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையின் தடங்களைக் கடத்திச் செல்ல உதவுவதும் இந்த மொழியே. தாய்மொழியின் சிறப்பு? தாய்மொழியின் முக்கியச் சிறப்பே குழந்தைகள் ஒன்றோடு ஒன்றை ஒப்பிட்டுக் கொள்ள உதவுகின்றது. படித்த கல்வியின் மூலம் பார்க்கும் காட்சிகளை ஒன்றாகச் சேர்த்து பார்க்க உதவுகின்றது.அதன் மூலம் தோன்றும் கேள்விகளுக்குப் பதில் தேடும் போது அது அறிவை விசாலமாக்குகின்றது. இதனால் எல்லாவற்றையும் எளிதில் கற்றுக் கொள்ள முடிகின்றது. தாய்மொழியில் கற்கும் போது குழந்தைகள் ஆசிரியர்களுடன் எளிதில் உரையாட முடிகின்றது. உரையாடும் போது நம்பிக்கை உருவாகின்றது. பயம் நீங்க கல்வி என்பது ஆர்வத்துடன் செய்யப்படும் இயல்பான கடமையாக மாறி விடுகின்றது. தாய்மொழியின் முக்கியத்துவம்? மொழியென்பது ஒரு தொடர்பு சாதனம் மட்டுமல்ல. அறிவுக்குரியது என்ற எல்லையோடு மட்டும் நிற்பதல்ல. தாய்மொழி என்பது நாம் வாழும் சூழ்நிலையில் உள்ள பழக்கவழக்கங்கள்,கலாச்சார நடைமுறைகள் அனைத்தையும் அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க உதவுகின்றது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு கலாச்சாரத்தை வைத்துத் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. அங்குள்ள சூழ்நிலையின் அடிப்படையைக் கொண்டே உருவாகின்றது. வாழும் சூழ்நிலை வேறு. கற்பிக்கும் சூழ்நிலை வேறு என்பதாக வளரும் மாணவனின் அறிவு குழப்பத்தில் தொடங்கிக் குழப்பத்தோடு வாழ வேண்டியதாக உள்ளது. மாற்று மொழி சொல்லும் கலாச்சாரத்தைப் படிக்கும் மாணவனின் பெற்றோர்களின் வாழ்க்கை ஒரு விதமாகவும் மாணவனின் சிந்தனைகள் வேறுவிதமாகவும் மாறத் தொடங்கி விடுகின்றது. இந்தியாவில் கல்வி? இங்கே கல்வி என்பதைக் குழப்பதோடு தான் பார்க்கப்பட்டு வருகின்றது. கற்றுக் கொள்வதற்கும் சிந்திப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசங்களைப் பற்றி எவரும் புரிந்து கொள்ளத் தயாராக இல்லை. அதை முறைப்படி புரியவைக்கவும் எவரும் விரும்பவும் இல்லை . கல்வியில் இரண்டு வகைகள் உள்ளது. ஒன்று தெரிந்து கொள்வதற்காகக் கல்வி. மற்றொன்று சிந்திப்பதற்கான கல்வி. ஒரு விசயத்தைப் படித்துத் தெரிந்து கொண்டு அதை அப்படியே எழுதி விட்டால் ஆசிரியர் எதிர்பார்க்கும் மதிப்பெண்கள் மாணவர்களுக்குக் கிடைத்து விடும். ஆனால் அந்த விசயத்திற்கு முன்னால் பின்னால் உள்ள எந்தப் புரிதலும் அந்த மாணவனுக்குத் தேவையில்லை என்பதான கல்வி தான் இந்தியாவில் உள்ளது. கல்வி கற்றும் சிந்திக்கத் தெரியாதவர்களை உருவாக்குவதில் தான் நாம் வெற்றியடைந்துள்ளோம். இந்தியாவில் ஆங்கில மொழிக்கல்வி வளர முக்கியக் காரணமாக உள்ளதன் பட்டியல். 1. இந்தியாவில் தொடக்கத்தில் இருந்த வறுமை பலரையும் கல்வி கற்க விடாமல் பெரும் தடையாக இருந்தது. 2. கல்வியென்பது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே என்பது போன்ற காரணங்கள் இந்தத் தடைகளை மேலும் வளர்த்தது. 3ஆங்கிலேயர்கள் உருவாக்கிய நிர்வாக அமைப்பில் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே வேலை என்ற காரணிகள் ஆங்கிலத்தை வளர்க்க முக்கியக் காரணமாக இருந்தது. 4. ஆங்கிலத்தினால் வசதியான வாழ்க்கை பெற்றவர்கள் அதுவே சரியென்று சொல்ல ஆங்கிலேயர்கள் சென்ற பிறகும் இங்கே கல்வி முறையில் எவரும் மாற்றம் கொண்டுவர விரும்பவில்லை. மேலும் மக்களின் வாழ்க்கை முறை ஒரு விதமாகவும் அந்த மக்களை ஆள்கின்றவர்களின் அலுவல் மொழி வேறொன்றாகவும் இருக்க மக்களுக்கும் ஆட்சியாளர்களும் மிகப் பெரிய இடைவெளி இயல்பாகவே உருவாகத் தொடங்க அதுவே ஊழல் முதல் எதிர்த்துக் கேள்வி கேட்ட முடியாது என்கிற நிலை வரைக்கும் கொண்டு வந்து நிறுத்திவிடுகின்றது. காலம் முழுக்க எளியவர்களுக்குண்டான உரிமைகள் மறுக்கப்படுவதென்பது இயல்பானதாகவும் மாறிவிடுகின்றது. மறுக்கப்பட்டவர்கள் இந்த மொழிப் பிரச்சனையின் காரணமாக மருகிக் கொண்டே வாழ வேண்டியதாகவும் உள்ளது. 5. நாகரிகம் என்ற பெயரில் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் அதிகமாக அடையக்கூடிய வசதிகளுக்கு எது உடனடியாகப் பயன்படுகின்றதோ அதுவே மக்களும் தேவையெனக் கருதத் தொடங்க கல்வி முதல் பழக்கவழக்கங்கள் என ஒவ்வொன்றும் மாறத் தொடங்கியது. இதன் மூலம் தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் கல்வி கற்றால் தான் வளமான வாழ்க்கை வாழ முடியும் என்ற நம்பிக்கை பெற்றோர்களின் மனதில் ஆழமாகப் பதியத் தொடங்கியது. 6. பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த நாடுகளை மக்கள் வாழத் தகுந்த இடம் என்ற நம்பிக்கை உருவாக அந்தந்த நாடுகளின் மொழிகளைத் தங்கள் குழந்தைகள் கற்றால் எளிதில் அங்கே வேலை கிடைக்கும் என்ற எண்ணம் வலுப்பெறத் தொடங்கியது. 7.இன்று இந்தியாவில் ஒருவனது பொருளாதாரமே அனைத்தையும் தீர்மானிக்கக்கூடிய சூழ்நிலையில் இருப்பதால் ஒவ்வொருவரும் சூழ்நிலைக் கைதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மொழிக்கும் அறிவுக்கும் உள்ள வித்தியாசம் மறைந்து விட்டது. முந்தியவர்களுக்கு முன்னுரிமை என்பது இயல்பானதாக மாறிவிட்டதால் அவரவர் தாய்மொழி எண்ணம் பின்னுக்குப் போய்விடப் பிழைக்க ஒரு மொழி என்கிற நிலைக்கு வந்துள்ளார்கள். 8. இன்று வரையிலும் மேலைநாடுகளில் அரசின் மூலம் நடத்தப்படும் பொதுப்பள்ளிகள் தான் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. இது தவிர ஒவ்வொரு நாட்டிலும் அருகாமைப் பள்ளி என்பது ஒரு முக்கியமான நடைமுறை கொள்கையாகவே வைக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்பவர் வேறொரு இடத்தில் கொண்டு போய்த் தங்கள் குழந்தைகளைச் சேர்கக வேண்டும் என்றால் அதற்குச் சரியான காரணங்கள் இல்லாவிடில் வாய்ப்பு மறுக்கப்படும். இதன் காரணமாக அந்தந்த பகுதியில் இருப்பவர்களுக்கு முன்னுரிமையும், பள்ளியில் கூட்ட நெரிசலும் தவிர்க்கப்படும். இங்கே அந்தப் பழக்கம் இல்லை என்பதோடு அப்படியெல்லாம் உண்டா? என்கிற வினோத கேள்வி தான் நம்மை வந்து தாக்கும்? இதே போல இங்கே உருவாகும் போது அரசாங்கம் கட்டாயம் குறிப்பிட்ட பகுதிகளில் தேவைப்படும் பள்ளிகளைத் திறந்தே ஆக வேண்டும். தாய்மொழி வளர அரசாங்கம் செய்ய வேண்டிய முக்கியக் கடமைகள். 1. கிராமத்துப் பள்ளியில் படிப்பவர்களுக்கு உயர்கல்வி முதல் வேலைவாய்ப்பு வரைக்கும் ஒவ்வொரு இடங்களிலும் முன்னுரிமை. இப்போதுள்ள இடஒதுக்கீடு போல ஒவ்வொரு துறையிலும் குறிப்பிட்ட சதவிகிதம் இவர்களுக்கே என்கிற சட்ட தீர்மானம் கொண்டு வந்து விட்டாலே பாதிப் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து விடும். 2. அரசுப்பணி என்பது அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமே. 3 அரசியல்வாதிகளின் குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்க வைக்காவிட்டால் அவர்கள் பதவியில் இருக்க முடியாது என்கிற நிலை. 4. ஒருவர் அரசு ஊழியராக இருப்பவர்கள் தங்கள் குழந்தைகள் அரசு பள்ளியில் குறைந்தபட்சம் தொடக்கக் கல்வி வரைக்கும் படிக்க வைக்காவிட்டால் அவர்களின் வேலை பறிபோய்விடும். 5.நகர்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளின் எண்ணிக்கையைக் குறைத்துப் புறநகர்களில், கிராமங்களில் அதிக அளவு உருவாக்குதல். நகர்புறங்களுக்குக் குடும்பமே இடப்பெயர்வுக்கு இது முடிவு கட்டும். 6.கல்வி அமைப்பு என்பதைத் தன்னாட்சி பெற்ற நிர்வாகமாக மாற்ற வேண்டும். இரண்டு வருடத்திற்கொரு முறை உலக மாறுதல்களுக்கேற்ப ஏற்ப பாடத் திட்டங்களை மாற்றுதல். இந்தியா முழுமைக்கும் பொதுக்கல்வி திட்டம் ஒன்றை உருவாக்குதல். அந்தந்த மாநில கல்விக்குழுக்கள் மூலம் ஒப்பு நோக்குதல். தொடக்கக் கல்வி என்பது அந்தந்த மாநில மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம். 7.பத்தாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையில் உள்ள தற்போதையைச் சூழ்நிலையை முற்றிலும் மாற்றி விட்டு மூன்று வகுப்புகளையும் கல்லூரி போல மூன்றாண்டு கல்வித்திட்டமாக மாற்றுதல். ஒன்பதாம் வகுப்போடு மொத்த பாடங்களையும் கற்பிப்பதை நிறுத்தி விட்டு பத்து முதல் அடுத்த மூன்றாண்டுகளுக்கு ஒரு மாணவன் எந்தத் துறையில் தனது மேற்கல்வியைப் படிக்க விரும்புகின்றானோ அந்தத் துறை சார்ந்ததை மட்டும் கற்பித்தல். இந்த மூன்றாண்டு பாடத்திட்டத்தில ஆங்கிலம் மற்றும் மாநில மொழியில் கற்க வாய்புகளை உருவாக்கிக் கொடுத்தல். வக்கீல் படிக்க விரும்புவனுக்குக் கணக்கு தேவையிருக்காது. மென்பொருள் துறையில் சேர விரும்புவனுக்கு வரலாறு தேவையிருக்காது. கல்லூரியில் நுழையும் பொழுதே அவனது துறை சார்ந்த கல்வி எளிதாக மாறி விடும். அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் அத்தியாவஸ்யமான துறைகளை ஒரு பாடமாக வைக்கப்படும் போது எளிய குடும்பத்தில் இருந்து வருபவர்களுக்கு இந்தத் துறை வரப்பிரசாதமாக இருக்கும். “கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள் “ என்பது நிஜமாகவே சாத்தியமாகும். 8 ஒவ்வொரு வருடமும் தனியார் அரசாங்க பள்ளிகள் என்று பாரபட்சமில்லாது ஆசிரியர்களின் தகுதியை தேர்வு வைத்து சோதித்தல். தகுயில்லாதவர்கள் மீண்டும் ஒரு முறை வாய்ப்பளித்து அதிலும் தேர்ச்சியடையவில்லை என்கிற பட்சத்தில் எங்கும் கல்விப்பணி ஆற்ற தடைவிதித்தல். தற்போது தமிழ்நாடு அரசாங்கம் 2013 கல்வியாண்டில் அரசுபள்ளியில் கொண்டு வந்துள்ள ஆங்கில வழிக்கல்வி? உறுதியாக விரைவாகத் தோற்றுவிடும் சாத்தியக்கூறுகள் தான் அதிகமுள்ளது. நமது மக்கள் இலவச மனப்பான்மையை விரும்பும் காரணத்தால் இன்னும் சில ஆண்டுகள் அதனை விரும்புவார்கள்.இதற்கு மேலாகத் தகுதியற்ற ஆசிரியர்களால் தங்களின் குழந்தைகளின் வளர்ச்சியடையாத திறமைகளைக் கண்டு மீண்டும் தனியார் பள்ளி பக்கமே ஒவ்வொரு பெற்றோர்களும் வரத் தொடங்குவர். தற்போதைய சூழ்நிலையில் மாணவர்களுக்குத் தேவையான மொழிகள். இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நிச்சயம் தமிழோடு ஹிந்தி ஆங்கிலம் அவசியம் தேவை. தமிழ்நாட்டிற்குள் மட்டும் வாழவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்குத் தாய்மொழியோடு ஆங்கிலமும் அவசியம் தேவை. மொழியறிவை வளர்க்கும் காரணிகள். சூழ்நிலை தான் முக்கியப் பங்கு வகிக்கின்றது. அரசு பள்ளியில் படித்தவர்கள் அமெரிக்காவிற்குத் தங்கள் கல்வித்தகுதி அடிப்படையில் சென்ற போதிலும் அங்குச் சென்றதும் இயல்பான் அமெரிக்க ஆங்கிலமென்பது அவர்களிடம் வந்து விடுவதில்லை. அங்குள்ள சூழ்நிலை நெருக்கிக் தள்ள இதுவொரு இயல்பான பழக்கமாக மாறிவிடுகின்றது. ஐந்து பரீட்சை எழுதி ஹிந்தியில் தேர்ச்சியடைந்தவர்கள் எவரும் நல்ல விதமாக ஹிந்தி பேச முடிவதில்லை. அதுவே மும்பையில் ஆறு மாதங்கள் கூலித் தொழிலில் சேர்ந்து ஹிந்தியை வெளுத்து வாங்கியவர்கள் அதிகம். என் பிள்ளை ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்கள் முதலில் செய்ய வேண்டியது வீட்டுக்குள் குழந்தைகளிடம் எளிய ஆங்கிலத்தில் பேசி பயிற்சியைத் தொடங்க வேண்டும். படிப்பறிவு இல்லாத பெற்றோர்கள் அதற்கான சூழ்நிலையைத் தங்கள் குழந்தைகளுக்குத் தனிப்பட்ட முறையில் உருவாக்க வேண்டும். இது செலவு பிடிக்கும் சமாச்சாரம் என்றால் மாணவன் கடைசியில் செல்லாக்காசாகி விடுவதைத் தவிர்க்க முடியாது. இன்று கல்லூரி வரைக்கும் ஆங்கில வழிக்கல்வியில் படித்த போதிலும் திக்கி திணறிக் கொண்டிருக்கும் மாணவர்கள் போலத்தான் ஆங்கிலம் என்பது பின்னங்கால் பிடறி தெறிக்க ஓட வைக்கும் பூச்சாண்டியாக இருக்கும். ஆங்கிலக் கல்விக் கூடத்தில் தங்கள் குழந்தைகள் படித்தால் ஆங்கிலத்தை நன்றாகப் பேச முடியும் என்பது விழலுக்கு இறைத்த நீரே. என் குழந்தை அலுவலக வேலையில் மட்டுமே அமர வேண்டும் என்பவர்களுக்கு மட்டுமே இந்த ஆங்கில மொழி அவசியம் தேவை. ஆனால் இங்கே பிழைக்க ஆயிரம் வழிகள் உண்டு. பொருளீட்ட பல தொழில்கள் உண்டு என்பதையும் ஒவ்வொரு பெற்றோர்களும் உணர்ந்திருக்க வேண்டும். தாய்மொழியறிவு? உத்தேச கணக்காக இந்த உலகம் 460 கோடிகள் ஆனது. இந்த உலகத்தில் முதல் மனிதன் தோன்றி 30 லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டது. தன்னுடைய பிரச்சனையை உணரத் தொடங்கி, மனிதன் மிருகத்தன்மையில் இருந்து மாறி 50 ஆயிரம் ஆண்டுகள் ஆகி உள்ளதாக மானிடவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அந்த 50 ஆயிரம் ஆண்டுகள் என்பது ஏறத்தாழ உத்தேச கணக்காக 600 தலைமுறைகள். இதில் கவனிக்க வேண்டியது என்ன தெரியுமா? ஏறக்குறைய 36 ஆயிரம் ஆண்டுகள் வெளி உலகம் ஏதும் தெரியாமல் குகைக்குள்ளேயே தன்னுடைய குறைகள் ஏதும் தெரியாமல் குகைக்குள்ளேயே வாழ்ந்து கழித்து இருக்கின்றான். கடந்த 70 தலைமுறைகளில் தான் எழுத்து, பேச்சு, விவசாயம் போன்ற அத்தனை முன்னேற்றங்களும், குறிப்பாக ஆறு தலைமுறைக்கு முன்னால் தான் அச்சடித்த வார்த்தைகள், எழுத்துக்கள் என்று அத்தனை முன்றேங்களும் நிகழ்ந்துள்ளது. அச்சடித்த வார்த்தைகள் உருவான பின்பு தான் நாகரிகம் என்பது மிக வேகம் பிடித்து ஓடத் தொடங்கியது. ஆனால் இந்தக் காலக் கட்டத்தில் எத்தனை மொழிகள், கலாச்சாரம், பண்பாடுகள், எழுத்துக்கள் உருவாகி உள்ளது என்பது யோசித்துப் பாருங்கள்? வாழ்ந்த மக்களை எத்தனை விதமாய்ப் புடம் போட்டு பார்த்து இருக்கிறது. ஆனாலும் இந்தத் தமிழ் மொழி இன்று வரையிலும் சுட்ட தங்கம் போல ஜொலிப்பாய் தான் இருக்கிறது. அமெரிக்காவின் மிக உயர்ந்து பொக்கிஷமாகக் கருதப்படும் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் போல முப்பது மடங்கு பெரிதான பிரமிடுகளைத் தந்த எகிப்தியர்களின் எகிப்து மொழி எங்கே போயிற்று? 3000 ஆண்டுகளுக்கு முன்னால் உலகில் சிறந்த மொழி சமஸ்கிருதம் தான் என்று திணிக்கப்பட்ட இந்த மொழி இன்று எங்கே போயிற்று? மாபெரும் வல்லரசை உருவாக்கிய ரோமபுரி மன்னர்களின் இலத்தின் மொழியை இன்று காணவில்லை? புத்தர் பரப்பிய பாலி மொழி, மகா அலெக்சாண்டர் பேசிய கிரேக்க மொழி, ஏசு நாதரின் கிப்ரூ மொழி என்று இன்று வரையிலும் நீண்ட பட்டியல் உண்டு. இவையெல்லாம் காத்திருப்பு பட்டியல் அல்ல? காணாமல் போன மொழிகளின் பட்டியல்? ஆனால் தமிழனின் தமிழ்மொழி? இன்று வரையிலும் உரித்துக்கொண்டே உடைந்து கொண்டே உருமாறிக்கொண்டே தன்து பயணத்தை ஜீவநதி போல் தனது ஓட்டத்தை நிறுத்தாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. தொடக்கத்தில் ஓவியத்தில் தொடங்கினார்கள். அதுவே கல்வெட்டுத் தமிழாக மாறி காலமாற்றத்தில் ஓலைச்சுவடிக்கு மாறியது. காகிதம் வந்ததும் அச்சுத்தமிழாக உருமாற்றம் அடைந்தது. அதுவே இன்று விஞ்ஞானத் தொழில் நுட்ப சாதனைகளினால் கணினித் தமிழாக மாறி உலகத்தமிழர்களை ஓரே கூரையின் கீழ் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. மிகப்பழமையான தமிழ்மொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு விதமாகப் பேச்சு எழுத்து மொழியில் மாறி வந்து கொண்டிருந்த போதிலும் இன்றைய நவீன விஞ்ஞான உலகத்திலும் அழிந்து போய்விடவில்லை. தமிழ்மொழியின் வளர்ச்சி நின்று போய் உள்ளதே தவிர ஆனால் அழிந்தே போய்விடும் என்ற எண்ணத் தேவையில்லை. 500 வருடங்களில் உருவான ஆங்கில மொழியில் கூட ஷேக்ஸ்பியர் காலத்து ஆங்கிலமென்பது இன்று இல்லை. ஆனால் மாறுதல்களைக் கவனமாக ஆவணப்படுத்தி முறைப்படியான மாறுதல்களை ஏற்றுக் கொண்டே தான் ஆங்கிலம் இன்றும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. ஆனால் இங்கே தமிழ் மொழி வளர வேண்டும் என்பவர்கள் தான் தமிழுக்கு எதிரியாகவும் இருப்பதால் அதன் விசால வீச்சு இன்று குறுகிய சந்துக்குள் நிற்கும் அளவிற்கு மாறியுள்ளது. தாய் மொழியை ஆதரிப்போம் சொல்கின்ற அத்தனை பேர்களும் வசதியான வளமான வாழ்க்கை கொண்டிருப்பவர்கள். கவனமாக இரட்டை முகமூடி அணிந்தவர்கள். அவர்கள் வாழும் வாழ்க்கை மேலைநாட்டு கலாச்சாரத்திலும் பேசும் வார்த்தைகள் மட்டும் இந்திய கலாச்சாரத்திலும் இருப்பதால் மக்களின் நம்பகத்தன்மை அடியோடு மாறி நாமும் பிழைக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் பிழைப்புவாதிகளாக மாறிக் கொண்டேயிருக்கின்றனர். இப்போதைய சூழ்நிலையில் பேசும் மொழியை வைத்தே ஒருவனின் தகுதியை எடை போடும் சூழ்நிலையில் காலச் சக்கரம் நம்மைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. பெரும்பான்மையான முட்டாள்களின் மத்தியில் வாழ வேண்டிய சூழ்நிலையில் அந்த முட்டாள்தனத்தையே ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலையையும் இந்தக் காலச்சக்கரம் உருவாக்கியிருப்பது வினோத முரண். ஆட்சியில், அதிகாரத்தில் இருப்பவர்கள் பெரும்பான்மையினர் வறுமையைப் பற்றி அறியாத தங்கஸ்பூன் கோமகன்களாக இருப்பதால் எளியவர்களின் வாழ்க்கை குறித்தோ, அவர்களின் அடிப்படை வசதிகள் குறித்தோ யோசிக்க முடியாத சூழ்நிலையில் வாழ்வதால் எளியவர்களுக்ககான கல்வி உரிமை மறுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது. அப்படியே உரிமை உருவானாலும் அதை அவர்கள் அடைய முடியாத உயர்த்தில் வைத்து தான் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றார்கள். அடைய முடியாத லட்சியத்திற்கு இடையூறாக இருப்பது இந்தத் தாய்மொழியே என்று ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் முதலில் பலிகொடுப்பது தமிழ்மொழியே. நம்மால் செய்யக்கூடியவை? குழந்தைகள் ஆசிரியரோடு இருக்கும் நேரமென்பது ஏறக்குறைய எழு மணிநேரம் மட்டுமே. நாளின் மற்றப் பொழுதுகள் அனைத்தும் பெற்றோர்களுடன் தான் குழந்தைகள் இருக்கின்றார்கள். முதல் ஆசிரியரே பெற்றோரே. மொழியறிவு, தாய்மொழியறிவு, பழக்கவழக்கங்கள் போன்ற அனைத்துக்கும் காரணமாக இருப்பவர்கள் பெற்றோர்களே. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் நகர்புற கணவன் மனைவியும் இருவரும் பொருள் ஈட்டச் செல்ல குழந்தைகள் கண்டதையும் கற்றுக் கொள்ளத் தொடங்கி விடுகின்றனர். இதற்கு மேலாக வாசிப்பு என்பது அது பள்ளிக்கூடப் பாடங்கள் மட்டுமே என்கிற பெற்றோர்கள் இன்று வரையிலும் அதிகமாக இருப்பதால் குறுகிய புத்தியுள்ள சமூகம் விரைவாக வளர்ந்து கொண்டேயிருக்கின்றது. வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்குத் தங்கள் குழந்தைகள் வெளியே வந்தால் பல நாட்டுக் குழந்தைகளுடன் பழக வேண்டிய சூழ்நிலையில் பத்துச் சதவிகிதம் கூடத் தாய்மொழியின் அவசியம் தேவைப்படாது. தங்கள் மாநிலங்களை விட்டு மற்ற மாநிலங்களிலும் வாழ்பவர்களுக்கு அங்கே உள்ள மாநில மொழி தான் அவசியம் தேவையாக இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் வாழ்பவர்களுக்கு என்ன பிரச்சனை? அவரவர் வாழ முடியாத தன்மையை, அடைய முடியாத லட்சியத்தை, அனுபவிக்க முடியாத சந்தோஷத்தை மனதில் வைத்துக் கொண்டு உங்கள் அழுத்தங்களைக் குழந்தைகளின் மேல் காட்டும் போதும் அவர்கள் படித்த மேலைநாட்டுக் கலாச்சாரக் கல்வியின்படி உங்களை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டு போய் விடுவது தான் கடைசியாக நடக்கும்……. தவறு அவர்கள் மேல் இல்லை. நீங்கள் தொடங்கி வைத்தீர்கள். அவர்கள் முடித்து வைக்கின்றார்கள். இது முடிவே இல்லாத சுழற்சி. -)(- 34 மெக்காலே “நாம் ஆளுகின்ற லட்சக்கணக்கான மக்களுக்கும் நமக்கும் இடையே இணைப்பாகச் செயல்பட ஒரு வகுப்பினரை நாம் உருவாக்கிட வேண்டும். இந்த வர்க்கத்தினர் ரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாகவும், ரசனையில், கருத்துக்களில், நெறிமுறைகளில், அறிவில் ஆங்கிலேயர்களாகவும் விளங்கவேண்டும்.” – 1835 ல் இந்தியக் கல்வித் திட்டத்தை உருவாக்கியபோது மெக்காலே எழுதியதில் இருந்து. 35 நன்றி [konjam-kasu-konjam-kalvi_html_36f73d0f] நேரம் ஒதுக்கி வாசித்த உங்களுக்கு என் நன்றியும் பிரியங்களும். உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்த powerjothig@yahoo.com வலைபதிவு http://deviyar-illam.blogspot.com/ என்றும் மாறாத அன்புடன் ஜோதிஜி. திருப்பூர் 29.09.2015 [konjam-kasu-konjam-kalvi_html_c3ab8dc5] [konjam-kasu-konjam-kalvi_html_c4329d5c] 1 FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/ Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/   2 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !