[] []                                                                                                     கொங்கு மண்ணின் சாமிகள்                                                          இரா.முத்துசாமி  நூல் :  கொங்கு மண்ணின் சாமிகள் ஆசிரியர் :  இரா.முத்துசாமி மின்னஞ்சல்  :  iramuthusamy@gmail.com      மின்னூலாக்கம் : த . தனசேகர் மின்னஞ்சல் : tkdhanasekar@gmail.com வெளியிடு : FreeTamilEbooks.com   உரிமை:   Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0  கிரியேட்டிவ்காமன்ஸ். எல்லாரும்படிக்கலாம், பகிரலாம்.    பொருளடக்கம் 1: அண்ணன்மார் சுவாமி கதை:' உன்னதமான கதைப்பாடல் 7  2: பெரிய காண்டி அம்மன் தலவரலாறு 8  3: வாழவந்தி நாடு: காராளன் கோளாத்தாக் கவுண்டர் பவளாத்தாள் 9  4: குன்றுடையான் 10  5: குன்றுடையான் தாமரை திருமணம் 11  6: பொன்னர், சங்கர், அருக்காணி நல்ல தங்கம் பிறப்பு 14  7: பொன்னர் – சங்கர் நெல்லிவள நாட்டுப் பரிபாலனம் 15  8: தலையூர்க் காளி, பொற்கொல்லன் செம்பகுலனை வைத்து செய்த சூழ்ச்சி 17  9: பொன்னர் சங்கர் வீர மரணம் 20  10: கொங்கு மண்ணின் சாமிகள் 22  11: பொன்னர்- சங்கரை மையமாகக் கொண்ட கோவில்கள் 23  12: மாசி மாதத் திருவிழா 25  மாசி பெரியசாமி: கொல்லிமலையில் நாட்டார் தெய்வ வழிபாடு 30  1: நாட்டார் தெய்வ வழிபாடுகள் 31  2: மாசி பெரியசாமி ஒரு காவல் தெய்வ வழிபாடு 32  3: மாசி பெரியசாமி கதை 34  4: அமாவாசை திருவிழா 35  கொங்கு மங்கலவாழ்த்து பாடல் 38  1: கொங்கு மங்கல வாழ்த்துப்பாடல்: சிறு விளக்கம் 39  2: கொங்கு மங்கலவாழ்த்து பாடல் 43    முன்னுரை 'கொங்கு மண்ணின் சாமிகள் ' என்ற இந்தப் படைப்பில் கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள் கொங்கு மண்ணின் சாமியாகக் கும்பிடும் அண்ணன்மார் என்கிற பெரிய அண்ணன் பொன்னர், சின்ன அண்ணன் சங்கர் என்ற அண்ணன் தம்பியின் சரித்திரத்தைச் சொல்லும் வீரப்பாடலான (Heroic Ballad) ‘அண்ணன்மார் கதை’ என்னும் ‘குன்னடையான் கதை’ பற்றி எழுதியிருக்கிறேன். இந்த நூல், சக்திக்கனல் அவர்களால் தொகுத்து, நர்மதா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட "அண்ணன்மார் சுவாமி கதை. சக்திக்கனல். ஏழாம் பதிப்பு. 2001. சென்னை, நர்மதா பதிப்பகம்" என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளேன். கொங்கு நாட்டில் காலகாலமாய் மக்களிடையே செல்வாக்குப் பெற்று வழங்கி வரும் உன்னதமான கதையைத் தமிழ் மக்கள் அறிந்து கொள்வதில் என்ன பயன் என நம்மில் பலருக்குத் தோன்றலாம். வெகுசனத் தெய்வ வழிபாட்டையொட்டி மக்களிடையே பிரபலமாகி வரும் இந்தக் கதைப்பாடல் கொங்கு மண்ணின் கலைகளோடும் வரலாற்றோடும் பின்னிப்பிணைந்துள்ளது. இந்தக் கதைப்பாடல் பற்றியும், வீரப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள பெரியக்காண்டியம்மன் கோவில், அண்ணன்மார் சுவாமிகள் எனப்படும் பொன்னர்- சங்கர் கோவில், மந்திரம் காத்த மகாமுனி சிலை, காளை மாட்டுடன் இணைந்து நிற்கும் சாம்புவன் சிலை ஆகிய வழிபாட்டுத் தலங்களைப் பற்றியும் விவரித்துள்ளேன்.   நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலை, மாசிக் குன்றின்  உச்சியில்  துணைமை (கிராம) காவல் தெய்வமாக அருள்பாலிக்கும் ஸ்ரீ மாசி பெரியண்ணசாமி என்னும் மாசி பெரியசாமியை சோழிய வெள்ளாளர் மற்றும் கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமூகங்கள் குலதெய்வங்களாக ஏற்று வழிபட்டு வருகிறார்கள். கொல்லிமலை மாசி பெரியசாமி  கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.     வாழம்புல் என்ற ஒருவகைப் புல்லினால் அமைத்த சிறிய கூரைக் கட்டிடத்தில் இவருக்குக் கோவில் அமைந்துள்ளது.  மாசி பெரியசாமி வேங்கை வாகனத்தின் மேல் அமர்ந்து கனகம்பீரமாக காட்சியளிக்கிறார். இக்கோவில் பற்றி ஒரு கட்டுரையையும் இந்நூலில் எழுதியுள்ளேன்.   கொங்கு வேளாளர்களின்  கல்யாணங்களில் இடம்பெறும் சடங்குச்சீர்களின் போது மங்கலன் என்ற பெயர் பெற்ற நாவிதர் (Barber) மங்கல வாழ்த்து என்னும் பாட்டைப் பாடுவது மரபு. இந்த மங்கல வாழ்த்துப் பாடல் 'கவிச்சக்கரவர்த்தி' கம்பரால் பாடப்பட்டதாகக் கொங்கு வேளாளர்கள் நம்புகிறார்கள். இந்த மங்கல வாழ்த்துப் பாடல் வரிகள் எல்லோருக்கும் விளங்கும்படி எளிய கொங்குத் தமிழில் அமைந்துள்ளது. சிறு விளக்கவுரையுடன் 'கொங்கு மங்கல வாழ்த்துப்பாடலை' இணைத்துள்ளேன். இந்த நூல் என்னுடைய அகரம்.பிளாக்ஸ்பாட் வலைத்தளத்தில் (http://akharam.blogspot.in/) எழுதி வெளியிடப்பட்ட மூன்று கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதை இந்தத் தளத்தில் வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி. உங்களுடைய அன்பான வரவேற்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். 1: அண்ணன்மார் சுவாமி கதை:' உன்னதமான கதைப்பாடல்   'அண்ணன்மார் சுவாமி கதை' கொங்கு நாட்டில் காலகாலமாய் மக்களிடையே ஊறுப்பட்ட செல்வாக்குப் பெற்று வழங்கி வரும் உன்னதமான கதைப்பாடலாகும். புகழ்மிக்க இக்கதைபாடல் ‘அண்ணன்மார் கதை’ மற்றும் ‘குன்னடையான் கதை’ என்ற பெயர்களில் அறியப்படுகின்றது. கொங்கு நாட்டின் மண்ணின் மைந்தர்கள் கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள். வெள்ளாளக் கவுண்டர்களின் வரலாறு, கொங்கு மண்டல வரலாற்றோடு பின்னிப்பிணைந்துள்ளது. காடு கொன்று, நாடாக்கி, குளம் தொட்டு, வளம் பெருக்கி, கோயில் எடுத்துப் பல இடங்களில் குடியேறிப் பல்கிப் பரந்து பெருகி வாழும் சமுதாயம் கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள் சமுதாயம். பழங்காலத்தில் விசயஸ்கந்தபுரத்தை தலைநகராகக் கொண்டு கொங்கு தேசத்தைக் கவுண்டர்கள் ஆண்டதாகக் கொங்கு தேசராசாக்கள் என்னும் நூல் சொல்கிறது. விஜயநகர அரசு வம்சம் தமிழகத்தில் வேரூன்றுவதற்கு முன்பிருந்தே கொங்கு வேளாளக் கவுண்டர்கள் கொங்கு நாட்டின் பகுதிகளை ஆண்டு வந்துள்ளதாகத் தெரிய வருகிறது. விஜய நகர அரசர்கள் கொங்கு நாடு உட்பட்ட தமிழகத்தைப் பல்வேறு குறுநிலங்களாகப் பிரித்து அமைத்தார்கள். இந்தக் குறுநிலங்களின் பகுதிகளைக் கவுண்டர்களும் குறுநிலத் தலைவர்களாக இருந்து பரிபாலனம் செய்து வந்திருக்கின்றனர்.   இந்தக் கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள் கொங்கு மண்ணின் சாமியாகக் கும்பிடும் அண்ணன்மார் என்கிற பெரிய அண்ணன் பொன்னர், சின்ன அண்ணன் சங்கர் என்ற அண்ணன் தம்பியின் சரித்திரத்தைச் சொல்லும் வீரப்பாடல் (Heroic Ballad) இது. பொன்னர் சங்கர் கதை இவர்களின் தங்கையின் பார்வையிலிருந்தே நகர்ந்ததால், மக்கள் வழக்கில் ‘சின்ன அண்ணன் பெரியண்ணன் கதை’ என்றும் அடையாளப்படுத்துகின்றனர். பொன்னர் சங்கர் சகோதரர்கள் எவ்வாறு தங்கள் நெல்லி வளநாட்டை அமைத்தார்கள், வேட்டுவ கவுண்டர்கள் தலைவனின் சூழ்ச்சிக்கு எதிராக எவ்வாறு தாக்கு பிடித்தார்கள், தங்கள் நாட்டைக் காக்க எப்படியெல்லாம் போராடினர்கள் என்றெல்லாம் அண்ணன்மார் சாமி கதை நமக்குச் சொல்கின்றது.       2: பெரிய காண்டி அம்மன் தலவரலாறு   தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வீரப்பூர் என்னும் வீரம் விளைந்த மண்ணில் கோவில் கொண்டு அருள்பாலிக்கும் பெரிய காண்டி அம்மனின் கோவில் பற்றிய தல வரலாறு மிகவும் சுவையானது.   ஒரு காலத்தில் அஞ்சு தலை நாகம் கடும் தவம் புரிஞ்சு தனக்கு அன்னை பார்வதியே வந்து மகளாகப் பிறக்க வேண்டும் என்று வரம் வேண்டுச்சு.   ஐந்துதலை நாகம் அரவம் குடியிருப்பு நாகந் தவசு அதில் நற்பாம்பு செய்கிறது   அன்னை பார்வதியும் வேணும்கிற வரங்குடுத்து (வரமளித்து) அதற்கேற்ப அஞ்சு தலை நாகத்தின் வயிற்றில் வந்து பிறந்தாலும், தேவியானவள் ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத அலியாகப் பிறந்தாள். தேவி தன்னுடைய அலி நிலையை மாற்றியமைக்குமாறு சிவ பெருமானிடம் வேண்ட அவரும் அன்னையை ஊசி முனையில் நின்று கொண்டு தவமியற்றுமாறு அறிவுரை சொன்னாரு. வருங்காலங்களில் அன்னை தவமியற்றும் அந்த இடத்திற்கு வந்து இரண்டு சகோதரர்கள் தங்கள் எதிரிகளுடன் சண்டையில் ஈடுபடுவார்கள் என்றும் அவர்களின் பொறந்தவளான அருக்காணி தங்கம் அன்னைக்கு அந்த அலி நிலையில் இருந்து விடுதலை அளிப்பாள் என்றும் சொன்னாரு. அவளுக்குத் துணைபுரிய ஆறு கன்னிகளையும் படைச்சாரு. அன்னை தவஞ்செஞ்ச அந்த இடத்துக்குப் பக்கம் இருந்து தவஞ்செஞ்ச வீரமாமுனிக்கு இக்கிட்டாக (இடையூறாக) இருந்துச்சு. இருந்தாலும் தவத்தில் இருந்தவ பார்வதியேன்னு தெரிஞ்சு அம்முனிவரும் அவத்தைக்கு வந்து தேவிக்குக் காவலா நின்னாரு.       3: வாழவந்தி நாடு: காராளன் கோளாத்தாக் கவுண்டர் பவளாத்தாள்   கரூரை அடுத்து உள்ள பகுதி வீரமலை -   'சீரான சதுரகிரி வீரமலை,' "தெற்கேதான் தோணுமலை தென்னாட்டில் வீரமலை நாலுசதுரமலை சதுரகிரி வீரமலை சுத்தி வளர்ந்த மலை தொடர்விழுந்த வீரமலை" 'கன்னங் கருத்தமலை சாமி கைலாசம் போன்றமலை   நாலுபுரம் சதுரகிரி அதன் நடுவிருக்கும் வீரமலை.'     கோளாத்தாக் கவுண்டர் சேர நாட்டின் வாழவந்தி நாடுங்கற (தற்போதைய நாமக்கல் மாவட்டத்தின் தென் பகுதி) குறுநிலப் பகுதிக்குத் தலைவரு. கவுண்டரு கொங்கு காராள வெள்ளாளர் கிளையைச் சேர்ந்த பெருங்குடியான் கூட்டத்திலே பதினோரு பேரோட பொறந்தவரு. எல்லாத்துக்கும் மூத்தவரு.  இவர் ஒரு “கனத்தமுடிக் காராளன்” "வட்டாரம் பதியாளும் வளநாட்டில் காராளன்" (காராளன் சிற்றரசன் போன்றவர்). மணியங்குரிச்சிக்காரியான பவளாத்தாள் இவரது ஊட்டுக்காரி.   தம்பிகள் அநியாயம் பொறுக்காம கவுண்டரும் பவளாத்தாளும் அவுக நாட்டை விட்டு மதுக்கரை செல்லண்டியம்மன் கோவிலுக்கு வர்ராங்க. அங்கே சேர, சோழ, பாண்டிய மகாராசாங்க அம்மன் சன்னத்திலே உக்காந்து அவுக அவுக தேசத்துக்குண்டான எல்லைக்கோட்டைப் பத்தி பேசிக்கிட்டிருந்தாங்க. கோளாத்தாக் கவுண்டரு அவுக பிரச்சனையைச் சுமூகமாத் தீர்த்து வச்சாரு. சோழ மகாராசா சந்தோசப்பட்டுக் கவுண்டருக்குக் கோநாடு தேசத்தைக் குடுத்தாங்க. கவுண்டரும் கவுண்டச்சியும் கோநாட்டுக்குப் போய்ப் பண்ணயஞ் செஞ்சு செழிக்க வச்சாங்க. நெல்லிவளநாடுன்னு பேரு விளங்கிச்சு. செல்லாண்டியம்மன் கோவிலை எடுத்துக் கட்டி வச்சாரு. வெள்ளாங்குளம் ஏரியையும் வெட்டியவரும் இவருதான்.     4: குன்றுடையான்   கோளாத்தாக் கவுண்டரு தவமிருந்து பெத்த மகன் தான் நெல்லியன் கோடன் என்கிற குன்றுடையான் (பேச்சு வழக்கில் குன்னுடையான் / குன்னடையான்). குன்னடையான் ஒரு விவரமற்றவன் என்ற பொருளில் ‘மசையன், மசச்சாமி, மசக்கவுண்டன்’ அப்பிடினுல்லாம் பேரு போட்டாங்க. இவரு குணத்துக்கு உவமையாக ‘வெள்ளைச் சோளத்தைச்’ சொல்கிறாங்க.   வாழவந்திலே பஞ்சம் வந்துட்டதினாலே மத்த பதினோரு பொறந்தவனுங்களும் நெல்லிவள நாட்டுக்கு (கோநாட்டுக்கு) வந்து தஞ்சம் புகுந்தாங்க. கோளாத்தாக் கவுண்டர் பவளாத்தாள் தம்பதியர் குன்னடையானுக்கு ஐந்து வயதாகும் போதே கண்ணை மூடிட்டாங்க. சாகிறப்போ கவுண்டரு தன் தம்பி செல்லாத்தா கவுண்டரையும் பண்ணாயக்காரன் சோழன் தோட்டியையும் கூப்பிட்டுத் தங்கள் காலத்துக்குப் பொறவு குன்னடையானை அவுக பொறுப்பில விட்டுட்டுப் போறதாச் சொல்லிக் கண்ணை மூடினாங்க. கோளாத்தாக் கவுண்டர் தன் தம்பியிடம் மணியங்குரிச்சியில் உள்ள தன் தங்கை மகள் தாமரை நாச்சியாரை தன் மகனுக்குக் கண்ணாலம் மூச்சுவைக்கறதுக்குன்னு சத்தியம் வாங்கிக்கிட்டாரு.   கோளாத்தாக் கவுண்டர் சாவுக்குப் பொறவு அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான். குன்னடையான் நெல்லிவள நாட்டைப் பரிபாலிக்கும்போது அவரது ஒறம்பற பங்காளிகள் வாசாலம் பேசி (சூழ்ச்சி செஞ்சு) இக்கிட்டு (இடர்பாடு) குடுத்தாக.             5: குன்றுடையான் தாமரை திருமணம்   குன்றுடையான் தன்னைக் குழியிலே போட்டுவிட்டால் அவனுடைய பங்கையெல்லாம் அபகரித்துக் கொள்வமென்று குன்னடையானைக் கருவேல மரத்தில் கட்டிவெச்சு அடிச்சாக. சித்ரவதை செஞ்சாங்க. அவுகளோட சடவு எடுக்கமுடியாம குன்னடையான் ஆதிசெட்டி பாளையம் (தற்போதைய புலியூர், கரூர் மாவட்டம் அருகில் உள்ளது) சென்று தவிடு வியாபாரம் செய்யும் ஒரு செட்டியார் வீட்டில் தங்கிப் பண்ணாயக்காரனா ஊழியஞ் செஞ்சாரு.   குன்னடையன் வந்து சேர்ந்த பொறவு செட்டியாருக்கு ரொம்ப வசதி வந்திருச்சு. குன்னடையன் சித்தப்பா செல்லாத்தாக் கவுண்டரு தன் மகன் மலைச்சாமிக்கு தாமரையைக் கண்ணாலம் கட்டிவைக்கத் திட்டம் போட்டு வேலை செஞ்சாரு. தாமரையின் தகப்பன் மலைக்கொழுந்துவும் தாமரை - மலைச்சாமி கண்ணாலத்துக்குச் சம்மதிச்சாரு. கண்ணாலம் ஏற்படாச்சு. கோளாத்தாக் கவுண்டர் வீட்டிலே பண்ணையஞ் செஞ்ச தமுக்கடிக்கிற சோழ தோட்டி, குன்னடையானை செட்டியார் வீட்டிலே பாத்து மணியங்குரிச்சி அத்தை வீட்டுக்கு கூப்பிட்டு வர்ரான்.   குன்னடையனும் சோழன் தோட்டியும் பிச்சைக்காரர் போல வேஷம் போட்டு தாமரையைப் பாக்குறாங்க. தாமரை அம்மா அவுகளுக்குச் சோளத்தைப் பிச்சை போடச் சொல்றப்போ குன்னடையன் பிச்சை வேண்டாம் பொண்ணைக் குடுன்னு கேட்டான். அங்கே வந்த அவன் மாமன் கடுப்பாகி குன்னடையானை எறும்புப் புத்து இருக்கிற கொட்டடிலே ராத்திரி பூரா அடைச்சு வச்சாரு. மாயவன் சாமி (விஷ்ணு / பெருமாளு) தான் குன்னடையானைக் காப்பாத்தினாரு.   தாமரை நாச்சியார் குன்னடையான் மேலே ஆசைப்படவே இவர்கள் கண்ணாலம் நடந்துச்சு. தாமரை நெல்லிவாளா நாடு போறப்ப தன்னை ஏமாற்றியது பற்றித் தன் தகப்பன் மலைக்கொழுந்துவிடம் மிகவும் கோபப்பட்டாள். "எனக்குச் சிங்கக்குட்டிகள் போல இரண்டு மகன்கள் பிறப்பார்கள். உன் மகனுக்கு இரண்டு மகள்கள் பிறப்பார்கள். என் மகன்களுக்கு உன் பேத்திகளைக் கட்டி வைத்து என் வீட்டுக்குக் கூட்டிச் செல்வேன்னு" ஒரு சபதம் வேறு செய்தாள். இஃது இக்கதையில் முக்கியமான சபதம் ஆகும்.   குன்னடையான் தாமரை நாச்சியார் கண்ணாலத்திற்குப் (திருமணத்திற்குப்) பின் வளநாட்டுக்கு வந்தாங்க. குன்னடையான் ஆகாவழி ஒறம்பறகிட்ட பங்கு கேட்கப் போனாரு. "என்னுடைய பாகத்தை எனக்குக் கொடுங்களென்றான்" கருமாந்திரம் புடிச்ச ஒறம்பற பங்காளிங்ககிட்ட திரும்பவும் ஓரியாட்டம்தான். அவரை எச்சுப் பேச்சு (கண்டபடி) பேசி எகத்தாளம் செய்தார்கள். மீண்டும்:    "கருவேலா மரத்திலே கட்டி அடித்தார்கள் கருணையில்லாப் பாவிமக்கள்." ஒறம்பற பங்காளிகளால் இம்சுப்பட்ட குன்னடையான் சோழ ராசாவிடம் "என்னுட பங்காளிகள் என்பங்கைத்தான் பிடுங்கி; பங்கைப் பிடுங்கிவிட்டார் எனக்குப் பாதகமும் செய்துவிட்டார்; காடுகளும் இல்லையென்று கடுகி முடுக்கிவிட்டார்;" என்று நாயம் (நியாயம்) கேட்டாரு. சோழ ராசா  குன்னடையானுக்கு  "நல்லதென்று ராஜாவும் நலமில்லா பூமிதனை; சீத்தமுள் வனத்தை கொடுத்தாரே" சீத்த முள்ளும், கள்ளியும் நெறஞ்ச மலங்காட்டை வெள்ளாமை செய்யக் கொடுத்தாரு. பாழாய்க் கெடந்த மலங்காடு பசுஞ்சோலையாச்சுது. குன்னடையான் மனம் போல பயிர்கள் நருவசா தழைச்சி வளந்திச்சு.  "ஆயன் கிருபையினால் அவர்கள் குடியீடேற; பசுக்கள் மிகப்பெருகி பாக்கியங்களுண்டாச்சு." நீண்ட நாளா குன்னடையான் தாமரை நாச்சியார் தம்பதிகளுக்கு என்ன நோக்காடோ தெரியலை - கொழந்த  இல்ல. எனவே இந்தக் கொறய நெனச்சு மனம் கலங்கினாக. "மக்களும் இல்லை என்று மனது மிக வாடி" (நாம்) தேடும் திரவியத்தைச் செலழிக்கப் பிள்ளையில்லை வாரியெடுத்தணைக்க மைந்தனும் இல்லையென்று" "மைந்தனாரில்லையென்று மனக்கவலையுண்டாகி! புத்திரனா ரில்லையென்று பெருங்கவலையுண்டாகி!! வேண்டாத தெய்வம் இல்ல. மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவிலுக்குத் தேர் செய்து தேரோட்டம் விட்டார்கள். சிதம்பரம் கோவிலுக்குப் போனாங்க. போகும்போது நிலபுலன்கள் நகை நட்டுக்கள் எல்லாத்தையும் பக்கத்து மாயநாட்டு வேட்டுவ கவுண்டர் தலையூர்  காளி பொறுப்பில் விட்டுவிட்டுப் போனார்கள். காளி பொறாமையுடையவன். குன்னடையான் செல்வாக்குக் கண்டு வெறுப்படைந்தான். சொத்தை அபகரிக்கவும் தாமரையைக் கவரவும் திட்டம் போட்டான். அவன் திட்டம் கண்டு நிலம், நகை எல்லாம் திரும்பக் கேட்டார்கள். காளி திரும்பக் கொடுக்கலை. குன்னடையனையும் அடித்து வீட்டை விட்டு வெளியே தூக்கிப்போட்டான்.   இந்தச் சந்தர்ப்பத்தில் தாமரை : "காளி நீ செய்த நம்பிக்கை துரோகத்துக்கு உன்னை ரத்தம் சிந்தவைத்து அதில் குளிப்பாட்ட வைப்பேன்ன்னு" இரண்டாவது சபதம் செய்கிறாள். இக்கதையில் இது சற்று முக்கியமான சபதம் ஆகும்.   6: பொன்னர், சங்கர், அருக்காணி நல்ல தங்கம் பிறப்பு   சாமி கண்ண திறந்தாரு!   தாமரை நாச்சியார் மாசமானாள் (கருவுற்றாள்)!! மனக்கொற போச்சுது!!!   சித்தப்பா செல்லாத்தாக் கவுண்டரு பிரசவ காலத்தில  திரும்ப சூழ்ச்சி செஞ்சு குன்னடையான் ஆண் வாரிசைக் (கொழந்தையைக்) கொல்ல முயன்றார். மருத்துவச்சி, தாமரையின் பேறுகாலத்தில், ஆண் கொழந்தையைக் கொல்லத் தயாராக இருக்கையில் பொன்னர் வலது விலாவிலிருந்தும், சங்கர் இடது விலாவிலிருந்தும் பிறந்தாக.   "மருத்துவச்சி செய்த வகைமோசம் தானறிந்து வலது விலாவில் வகையான பொன்னருந்தான் இடது விலாவில் இயல்பான சங்கருந்தான் இருவர் பிறந்தார்கள் ஈஸ்வரனார் தன்னருளால் நிலவரையின் கீழே வளர்த்தாரிருவரையும் எல்லவரும்போல தங்காளும் தான்பிறந்தாள்"   சில நாட்கள் கழித்து தாமரை மீண்டும் மாசமானாள்; பெண் கொழந்தை அருக்காணி நல்ல தங்கம் பிறந்தாள்.   "பொன்னர் சங்கருடன் பிறந்த பொற்கொடியாள் நல்லதங்காள்"   பஞ்ச பாண்டவர்கள் பஞ்ச பாண்டவர்கள் துவாபர யுகத்தில் குருஷேத்ர யுத்தம் புரிந்து தர்மத்தை நிலைநாட்டிய பின்னர்ச் சுவர்க்கம் புகுந்தார்கள். பஞ்ச பாண்டவர்கள் கலியுகத்தில் தர்மத்தை மீண்டும் நிலைநாட்டப் பிறப்பெடுக்க வேண்டி வந்தது. குன்னுடையான் - தாமரை தம்பதிகளுக்குத் தர்மராசா பொன்னராகவும், அர்சுனராசா சங்கராகவும், திரௌபதி அருக்காணி நல்லதங்காளாகவும் வந்து பிறந்தார்கள். பீமன் சோழன் தோட்டியின் மகன் சம்புவனாகவும், நகுலன் மற்றும் சகாதேவன் குன்னடையனின் ஒன்றுவிட்ட சகோதரர்களின் மகன்களாகவும் பிறந்தார்கள்.   7: பொன்னர் – சங்கர் நெல்லிவள நாட்டுப் பரிபாலனம்   குன்னடையான் தாமரை நாச்சியார் சாவுக்குப் பொறவு பொன்னர் - சங்கர் நெல்லிவள நாட்டைப் பரிபாலனம் செஞ்சாங்க. தாய் தகப்பன் மடிஞ்ச துயரத்தை மறக்க தங்கை அருக்காணி நல்ல தங்கம் தனது பொறந்தவங்ககிட்ட (அண்ணன்மாரிடம்) தனக்குக் கிளி, மயில், புறா எல்லாம் வேணுமின்னு கேட்டாள். பொன்னர், சங்கரை வீரமலைக் காட்டுக்கு அனுப்பினாரு. அவத்தைக்கு   "மயில்கள் குயில்பிடித்து மாடப்புறா தான்பிடித்து அன்னமுடன் தாராவும் அனேகமாய்த் தான்பிடித்து"   வரும்போது ஒரு பெரிய அறுபதடி வேங்கை சங்கரைத் தாக்க வந்துச்சு. சங்கர் அந்த அறுபதடி வேங்கையை மளார்னு வெட்டிக் கொன்னாரு.   இந்த வேங்கை வேட்டை பல விபரீதங்களை உண்டு பண்ணிச்சு. மேனாட்டு வேட்டுவ படைத் தலைவன் தலையூர்க் காளி என்பவன் காட்டின் எல்லையில் வளர்ந்த வேங்கையாம் அது. தன் காட்டின் எல்லையில் சங்கர் வேங்கையைக் கொன்னதையும், கிளி, மயில், புறா பிடிச்சுக்கிட்டு போன சேதி தெரிந்த தலையூர்க் காளி கொதிச்சுப்போனான்!   அண்ணன்மாரை ஒழிச்சுக்கட்டினால்தான் தனது செல்வாக்கு நெலக்குமுன்னு நெனச்சான். காளி படையைக் கூட்டினான்.  விசுக்குன்னு படை கிளம்பிப் போச்சு. காளி படை கோயில்களையும் கிராமங்களையும் கொள்ளையடிச்சது. எல்லாத்துக்கும் மேல பச்சனா முதலி (பச்சையண்ண முதலி) மகள் குப்பாயிங்கர புள்ளய (பெண்ணை) அலுங்காம சிறையெடுத்தது:   "பச்சனா முதலிமகள் பருவமுள்ள குப்பாயி" “அன்னலூஞ்சல் தொட்டியிலிலே அனந்தல் செய்யும் வேளையிலே, அனந்தல் தெளியாமல் அலுங்காமல் தானெடுத்து”   பொன்னர் தன் தம்பி சங்கரை அழைத்து காளியின் படையை துவம்சம் செஞ்சு அம்மணியை (குப்பாயியை) அலுங்காம சிறைமீட்டு வருமாறு பணிச்சாரு. சங்கர் வேட்டுவ கவுண்டருடன் சண்டை போட்டது வீரமலையில். அந்த சண்டையில், “மெல்லிய வாள் தும்புவிட்டு வீசினார் நல்லசங்கு    காலற்று வீழ்வாரும் கையற்று வீழ்வாரும்    வேலற்று வீழ்வாரும் மேனிதுண்ட மாவாரும்    குதிரைக்கால் மிதிபட்டுக் குளம்படியில் சாவாரும்    அய்யா சரணமென்று சாஷ்டாங்கம் செய்வாரும்”  “வணங்கிப் பணி செய்தவரை”   சங்கர் - வாள் முனையில் தள்ளிவிட்டாரு.    “கும்பிட்டாரை வெட்டாத குருகுலத்தவர்”   சங்கர் வேங்கைபோல் பாய்ந்து காளியுடன் போரிட்டு வென்று குப்பாயி அம்மணியை சிறைமீட்டு வந்தாரு.   சிலநாள் கழிச்சு மணியங்குறிச்சியிலே தாய் மாமன் வீட்டில பொன்னர் சங்கர் சகோதரர்கள் இரண்டு பேருக்கும் ஒட்டுக்கா கண்ணாலம் நடந்துச்சு. சகோதரர்கள் சம்சாரியாகி குடும்பம்  நடத்தினாங்க.  ஒரு சமயம் சோழ ராசா வெச்ச வேண்டுகோளின்படி தலையூர்க் காளியின் பன்றியை வேட்டையாடிக் கொல்ல வேண்டிவந்துச்சு. பன்றி வேட்டைக்கென்று வாளும், வேலும், வில்லும் தயாராச்சு. நெல்லிவள நாட்டு மக்கள் அண்ணன்மார் தலைமையில் பன்றி வேட்டைக்குப் புறப்பட்டார்கள். வேட்டை நடந்தது, பன்றி கொல்லப்பட்டது.                     8: தலையூர்க் காளி, பொற்கொல்லன் செம்பகுலனை வைத்து செய்த சூழ்ச்சி   அண்ணன்மார் செல்வாக்கைப் பாத்து தலையூர்க் காளி ஏகமாய் மனம் வெதும்பினான். பொற்கொல்லன் செம்பகுலனை  ஏவி, சூழ்ச்சி செஞ்சி, அவர்களை ஒழிக்க நெனச்சு திட்டம் போட்டான். செம்பகுலன் என்ன சூழ்ச்சி செஞ்சான்னு தெரியுமா?   "அந்த மாவிலங்க மரத்தை வெட்டி மரநாழி திருக்கடைந்து; அரைமாத்தின் பொன்னெடுத்து அரைத்து வழித்தெடுத்து; கால்மாத்தின் தங்கத்தில் அதிலே கலந்து உருக்கியேதான்; பொன்நாழி என்றிருக்க அதைப்பூசுகிறான் மேல்பூச்சாய்; தங்கத்தினால் நாழியென்று அதைத் தடவுகிறான் மேல் பூச்சாய்"   மாவிலிங்க மரத்தில ஒரு மரநாழி செஞ்சான்.  பொறவு  மரநாழிக்குப் பொன்முலாமும் பூசினான். முலாம் பூசிய அந்த மரநாழியை எடுத்துக்கிட்டு அண்ணன்மார் அரண்மனைக்குப் போனான். பொன்னரிடம், "சோழ ராசாவுக்கு பொன்நாழி செஞ்சு எடுத்துக்கிட்டுப் போறேன்னு" சொன்னான். அன்னக்கி ராத்திரி அண்ணன்மார் அரண்மனலே தங்கி அடுத்த நாள் கருக்கல்லே போக பொன்னரிடம் உத்தரவு கேட்டான். பொன்னர் மதி மயங்கி தன் தங்கை தடுத்தும் கேளாமல் அவனுக்கு உத்தரவு குடுத்தாரு. ராத்திரி செம்பகுலன் தன் திட்டத்தை வேகு வேகுன்னு செஞ்சான். வெளக்கு சுடர்ல  காட்னதும் அந்த சூட்டுலே    மரவள்ளத்தில் பூசிய  பொன்முலாம் உருகிப்போச்சுது. அந்த வள்ளம், முலாம் கலைஞ்சு, பழையபடி மரவள்ளமா மாறிப்போச்சு.   தான் வரும்போது எடுத்துக்கிட்டு வந்தது பொன் வள்ளமுன்னும், அதுக்குப் பதிலா மரவள்ளத்தை மாத்தி வைச்சு பொன்னர் தன்னை ஏமாத்திட்டார்னு பொற்கொல்லன்  பழி சுமத்தினது மட்டுமில்ல, அவரைச் சத்தியம் செய்யிறதுக்கு வெள்ளாங்குளத்து ஏரிக்கரைக்கி வரச்சொல்லி ஓரியாண்டு கூப்புட்டான்.   பொன்னரும் அவன் ஆசப்பட்டபடியே சத்தியஞ் செய்யச் சம்மதிச்சாரு. அவங்கூட  போறதுக்கு முன்னாடி, பொன்னர் தாம் திரும்பி வர்ர வரைக்கும் வேட்டுவப் படை வந்தாலும் சங்கரும் மதவங்களும் கோட்டய விட்டு வெளியில வர வேண்டாமுனு  எச்சரிக்கை செஞ்சாரு. பொன்னர் வெள்ளாங்குளத்து ஏரிக்கரக்கிப் போன சமயம் பாத்து தலையூர்க் காளி படைதிரட்டி நெல்லிவள நாட்டக் கொள்ளை அடிக்க வந்தான். பொன்னர் சங்கரின் மூன்று மச்சினங்களும் சம்புவனும் படை திரட்டிப்போய் காளி படையை விரட்டி அடிச்சாங்க. ஜெயிச்சுட்டு திரும்ப வர்ரப்போ  மச்சினர்கள் மூனு பேரும் ஒரு கொளத்தில தண்ணி குடிச்சாங்க. அந்தக் கொளத்து தண்ணிலே  காளியால வெஷம் கலக்கப்பட்டிருந்தச்சு. தண்ணி குடிச்ச மூனு  மச்சினங்களும்  செத்து மடிஞ்சாங்க. சம்புவன் தண்ணி குடிக்காததனாலே உசிரு  பொழச்சுக்கிட்டான். அரண்மனக்கிப் போயி  சங்கரிடம் தகவல் சொன்னான். சங்கர் இது கேட்டு ரௌத்திரம் கொண்டான்.  சங்கர் தன் படையுடன் காளியைத் தேடி சங்காரம் செய்யத் தன் குதிரையில போனாரு.   “கடலும் சமுத்திரமும் கலந்து பிரிந்ததைப் போல்”   வேட்டுவர் படையும் வேளாளர் படையும் கைகலக்கின்றன. படைகள் அணியணியாய் நின்று கலந்து போர் செய்கையில்    “காரிடி போல் முழுங்குதப்போ, வானமிரைக்கிறது,   வீரமலை வனங்களெல்லாம் சிலையோடும்.”   சங்கர் காளி படையைச் சங்காரம் செஞ்சு ஜெயம் கொண்டாரு. அப்போ பாரதம் (பொன்னர் சங்கர் கதையை) முடிக்கிறதுக்கு மாயவர் - வேடன் தலையூர்க் காளி போல வடிவம் தாங்கி  ஒளிஞ்சிருந்து - சங்கர் மீது அம்பைச் செலுத்தினாரு. அம்பு சங்கரு நெஞ்சிலே பாஞ்சிடுச்சு. சங்கர் தன் மீது பாஞ்ச அம்பைப் பிடுங்கிப் பார்த்தப்போ  அது மாயவன் அம்புன்னு புரிஞ்சுது.   “வைகுந்தம் பார்வையுந்தான், கைலாசம் பார்த்த கண்ணு- குமாரசங்கு - கண்ணுறக்கமாகி விட்டார்.”   மாற்றாரின் வஞ்சனையால் தம்பி சங்கர் இறந்தார் என அறிந்த “பொறுமை பொறுத்த பொன்னம்பலசாமி”க்கும் சினம் பொங்குகின்றது.   “மோனட்டு வேடுவர்கள் எழுபது வெள்ளம் சேனை    அணியணியாய்ப் போற்படை துணிதுணியாய் வெட்டும்பொன்னர்   பொன்னாளிக்கையா புனுகணிந்த மணிமார்பா   சந்தன மணிமார்பா தளத்துக்கெல்லாம் வன்னியனே   வேடுவரைக் குலவையிட்டு விழிபிடுங்கும் நல்லபொன்னு   கும்பிட்டாரை வெட்டாத குருகுலத்து வங்கிசமே   சாய்ந்தாரை வெட்டாத சதுரமுடி நல்ல பொன்னு”     9: பொன்னர் சங்கர் வீர மரணம்   நெஞ்சிலே காயம்பட்ட சங்கர் அவமானப்பட்டு உயிர் வாழ விரும்பல. சம்புவனிடம் சொல்லி வாளை நாட்டுவைச்சு அதில பாய்ஞ்சு உயிர் துறந்தாரு.   பொன்னர் தன் பொறந்தவனின் வீர மரணம் கேட்டதும் தன் படையோட போயிக்   காளியைத் தேடிக் கொன்னாரு. பின் படுகளம் போயி தன் தம்பி, சம்புவன், மூன்று மச்சின்னங்க மற்றும் படைவீரரெல்லாம் மடிஞ்சது கண்டு மனம் நொந்து போனாரு. படுகளத்தில் சங்கர் மடிஞ்சது கண்ட பொன்னர், தம்பியின் பிரிவைத் தாங்காம தாமும் தமது மார்பில் அம்பு பாய்ச்சி மண்டியிட்டபடி உயிரைவிட்டாரு.   அரண்மனையிலே பொன்னர் சங்கர் மனைவிமார் முத்தாயி மற்றும் பாவாயி ஆகிய ரெண்டுபேரும் அவிக  ஊட்டுக்காரங்க சண்டேலே வீரமரணம் அடைஞ்ச சேதி கேட்டு மனமொடஞ்சு போயி தீ வளர்த்து தங்கள் உசிரை மாச்சிக்கிட்டாங்க (மாய்த்துக் கொண்டார்கள்).   பொறந்தவ சொப்பனம்   அரண்மனையில் இருந்த பொறந்தவ சொப்பனம் கண்டாள். கெட்ட சகுனங்கள் கெட்ட அறிகுறிகள் எல்லாம் கண்ட அருக்காணி நல்ல தங்காளுக்கு தம் அண்ணன்மார்களுக்கு ஆபத்துன்னு தெரிஞ்சு போச்சு!   அருக்காணி நல்ல தங்கம், படுகளம் நோக்கிப் புறப்பட்டாள். நெஞ்சிலே வேதனை பொங்க, கையில் திருக்கரகம் ஏந்தி அந்த உத்தமித் தெய்வம் தங்காள் இட்டேறியில் (காட்டு வழியில்) நடந்தாள். அண்ணன்மார் இருவரையும் தேடி,  கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓட, நடந்து வந்த தங்கத்தைக் கண்ட உடனே அலியாக இருந்த பெரிய காண்டி அம்மன் திரும்ப பெண்ணாக மாறினாள்.   பெரியக்காண்டி அம்மனும் கன்னிமார் ஏழு பேரும் அவளுக்குத் துணையாயிருந்து படுகளத்திற்கு கூட்டிக்கிட்டு வந்தாங்க. பெரியக்காண்டி அம்மன், பொன்னர் சங்கருக்கு மீண்டும் உயிர் கொடுத்து புதுப் பிறவி எடுக்க வைத்தாள். படுகளத்தில் மாண்ட அண்ணன்மார்கள் மீண்டு எழுந்து தங்கத்திடம் என்னவெல்லாமோ பேசினார்கள்.  பொன்னர் சங்கர் சகோதரர்கள் அமரத்துவம் அடைவதற்கு பெரியகாண்டி அம்மன் தன் சக்தியால் அருள் பாலித்தாள். அவர்களுடைய தங்கை அருக்காணி நல்ல தங்கத்தை பெரியகாண்டி அம்மனும் அவள் பணிப்பெண்களும் பாதுகாக்கிறார்கள்.     10: கொங்கு மண்ணின் சாமிகள்   நாள் செல்லச் செல்ல அண்ணன்மார் இரண்டுபேரையும் கொங்கு மண்ணின் சாமிகளாக ஏத்து மக்கள் கும்பிட்டுக்கிட்டு வர்றாங்க. மனம் திருந்தின ஒறம்பற பங்காளிகள் சகோதரர்களாகிய இரண்டு வீரதெய்வங்களுக்கும்  கோயிலு கட்டி  நோம்பி சாட்டிக் கொட்டி முழக்கிக் கும்பிடுறாங்க. விழாவில் சோழர் குடியும் பாண்டியர் குடியும் பகை தீர்த்து ஒன்று பட்டார்கள். கொங்கு நாட்டு மக்கள் எல்லாரும் அண்ணன்மாரைக் காணியாச்சியாக (குலதெய்வமாகக்) கொண்டாடி வழிபட்டு வருகிறார்கள்.   “குடிசெழித்துக் குலம்பெருகப் பெரியக் காண்டி குன்றுடையான் மக்கள் பொன்னர் சங்கரோடு அடிதவறா நல்லதங்கம் அத்தை பிள்ளை அழகுமகா முனி சாம்பான் இனிதே வாழ்க! படியிலிதை நினைப்போர் அச் சிட்டோர் கேட்டோர் பாடியவர் செல்வமெலாம் பெற்றே வாழ்க!”                 11: பொன்னர்- சங்கரை மையமாகக் கொண்ட கோவில்கள்   வீரப்பூர்   திருச்சி மாவட்டம், வையம்பட்டி வட்டம், மணப்பாறை நகரிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ள,  நல்லாம்பிள்ளை அருகே வீரப்பூர் - பின் கோடு 621302 கிராமத்தில்  பெரியக்காண்டியம்மன் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறாள். அமைவிடம்:10° 40' 29.2019" N அட்சரேகை 78° 23' 51.9031" E தீர்க்கரேகை ஆகும். இங்கு பெரியக்காண்டியம்மன் கோயிலுக்கு அருகில் அண்ணன்மார் சுவாமிகள் எனப்படும் பொன்னர்- சங்கர் கோவில் உள்ளது. அருகில் “நான் உங்களுடனேயே இருக்கிறேன்; பிறகு என்ன கவலை? உங்களுக்குப் பயம் எதற்கு?” என்று கூறி அருள்பாலிக்கும் காவல் தெய்வமாய், பிரமாண்டமான உயரத்தில் அமைந்து மிரட்டும் விழிகளுடன் விளங்கும் மந்திரம் காத்த மகாமுனி சிலை, காளை மாட்டுடன் இணைந்து நிற்கும் சாம்புவன் சிலை ஆகிய தெய்வங்கள் உள்ளனர். அருகே வீரமலை மீது பெரியக்காண்டியம்மன் தவம் செய்த இடமெனக் கூறப்படும் தவசுக் கம்பம் உள்ளது. []       பொன்னர்- சங்கரை மையமாகக் கொண்ட கோவில்கள்   வீரமலையின் ஒரு பகுதியில் கூவனாம் பள்ளம், வீரப்போர் நடந்த இடமாகக் கருதப்படும் படுகளம் கோவில், அண்ணன்மார் சுவாமி கதையில் வெள்ளாங்குளம் என்று கூறப்படும் இனாம்குளத்தூர், வளநாடு அண்ணன்மார் கோட்டை கோவில், கன்னிமார் அம்மன் கோவில், கரூர் மாவட்டம் மாயனூர் அருகே உள்ள செல்லாண்டியம்மன் கோவில் என வீரப்பூரை, பொன்னர்- சங்கரை மையமாகக் கொண்ட கோவில்கள், முக்கிய இடங்கள் எனக் குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஏராளமான தலங்கள் உள்ளன.   முன்பெல்லாம் (சுமார் 30 - 40 ஆண்டுகளுக்கு முன்) கட்டுச்சோறு கட்டி எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டு இரண்டு அல்லது மூன்று நாள் பயணமாக வீரப்பூர் செல்வார்களாம். தங்களின் ஊரில் இருந்து வீரப்பூரின் அடையாளமாக விளங்கும் ஏதேனும் ஒரு கோவிலில் இருந்து புறப்பட்டு வீரப்பூரை மையமாகக் கொண்ட அத்தனை கோவில்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்வது வழக்கமாக இருந்தது. அப்போது பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்காக தண்ணீர்ப் பந்தல் (நீர்மோரும் கிடைக்கும்) அமைத்து தரும காரியம் செய்து வந்தனர்.   நேர்த்திக்கடன்   அங்குள்ள பெரிய கோவிலில் (வீரப்பூரில் பெரியக்காண்டியம்மன் கோவிலை அங்கு இவ்வாறு சொல்வார்கள்) குழந்தைகளுக்கு முடியிறக்கி, பொங்கல் வைத்து, கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவதாக மாறிவிட்டது. புறப்பட்டு வரும் வழியில் கூடுதலாக படுகளம் கோவிலில் சுவாமி கும்பிட்டு விட்டு வருவதோடு முடிந்து விடுகிறது.                   12: மாசி மாதத் திருவிழா   அண்ணன்மார் சாமி கதை நடந்த இடமாக கருதப்படும் வீரப்பூரில் வருடம் தோறும் மாசி மாதம் நடைபெறும் திருவிழாவைக் காணக் கண்கோடி வேண்டும். பத்து நாட்கள் நடக்கும் இத்திருவிழாவிற்கு வரும் பெரும்பான்மையான மக்கள் அந்த பத்து நாட்களும் இப்பகுதிகளிலேயே தங்கியிருந்து திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள். இலட்சக் கணக்கில் கூடும் மக்கள் கூட்டத்தால் இப்பகுதியே திமிலோகப்படுகிறது.   சிவராத்திரிக்கு அடுத்த நாள் தொடக்கம்   வீரப்பூர் கோவிலில் மாசித் திருவிழா சிவராத்திரிக்கு அடுத்த நாள் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். இதைத் தொடர்ந்து காப்பு கட்டுதல், படுகளம், வேடபரி, தேரோட்டம் என கோலாகலமாக நடைபெறுகிறது. கொங்கு மண்டலப் பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நெல்லி வளநாட்டில் கூடிவருவார்கள். முதல் நாள் வீரப்பூரில் பெரியக்காண்டியம்மன், பொன்னர் - சங்கர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.   படுகளத் திருவிழா - தொப்பம்பட்டி   பொன்னர் - சங்கர் கோட்டை எழுப்பி ஆட்சி புரிந்த நெல்லி வளநாட்டில் திருவிழா நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. வேட்டுவர் படைகளை வீழ்த்துவதற்காக பொன்னர் - சங்கர் படுகளம் சாய்ந்த நிகழ்வைப் போற்றும் படுகளத் திருவிழா தொப்பம்பட்டியில் நடைபெறுகிறது.  தொப்பம்பட்டியில் படுகளம் சாய்ந்தவர்களை பொன்னர் - சங்கர் உடன்பிறந்த தங்கை அருக்கானித் தங்காள் புனித நீர் ஊற்றி உயிர்த்து எழுப்பும் நிகழ்வுடன் இந்தத் திருவிழா தொடங்குகிறது.     எட்டாம் நாள்: வேடபரி திருவிழா   திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வேடபரி திருவிழா எட்டாம் நாள் நடைபெறுகிறது. மாலை 4.30 மணியளவில், குதிரை வாகனத்தில் அமர்ந்து பொன்னர் முன்னே செல்கிறார். பெரியக்காண்டியம்மன் யானை வாகனத்தில்  எழுந்தருளி அருள்பாலிக்கிறார். பக்தர்கள், மிகுந்த பக்தியுடன் குதிரை மற்றும் யானை வாகனங்களைச் சுமந்து வருகிறார்கள். பொன்னர் - சங்கரின் தங்கை அருக்காணித் தங்காள் கையில் தீர்த்தக் குடத்துடன் வேடபரி நிகழ்வில் வலம் வருகிறாள்.   இளைப்பாற்றி மண்டபம் - அணியாப்பூர்   மாலை 5.30 மணியளவில் வீரப்பூருக்கும்-அணியாப்பூருக்கும் இடையே உள்ள இளைப்பாற்றி மண்டபத்தில் பெரியக்காண்டியம்மனும், அருக்காணித் தங்காளும் ஓய்வெடுக்க, குதிரை வாகனத்தில் அமர்ந்து அணியாப்பூர் செல்லும் பொன்னர் மாலை 6.30 மணியளவில் அம்பு போட்டு இளைப்பாற்றி மண்டபம் திரும்பவதுடன் வேடபரி திருவிழா நிறைவு பெறுகிறது. வேடபரித் திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருகிறார்கள்.   ஒன்பதாம் நாள் திருவிழா   இதைத் தொடர்ந்து, தேரோட்டத் திருவிழா ஒன்பதாம் நாள் நடைபெறுகிறது. அன்றைய தினம் கோவில் முன்பு உள்ள பெரிய தேரில் பெரியக்காண்டியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். தொடர்ந்து, பக்தர்கள் வடம்பிடித்து இழுக்கும் தேரோட்டம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுகிறது.   பத்தாம் நாள்  மஞ்சள் நீராட்டு   பத்தாம் நாள்  மஞ்சள் நீராட்டுடன் இந்தத் திருவிழா நிறைவு பெறுகிறது. மாசி மாதத் திருவிழாவின்போது வீட்டுக்கு ஒருவரேனும் சென்று நெய்விளக்குப் போட்டுவிட்டு வருவது வழக்கத்தில் உள்ளது. திருவிழாவிற்கு ஒருமுறை நீங்கள் போய் வந்தால் பின்னர் தொடர்ந்து வருடாவருடம் போய் வருவீர்கள்.   ஆய்வு மற்றும் தரவுகள்   ஒரு மக்கள் குழுவினரிடையே வழங்கி வரும் அல்லது வழங்கி வந்த பாடல்கள், கதைகள், பழைய மரபுக்கதைகள், தொன்மங்கள், பழமொழிகள், புதிர்கள், நகைப்புகள் முதலான இலக்கியங்கள் நாட்டுப்புற இலக்கியங்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. கொங்கு நாட்டுப் பகுதியில் பல நாட்டுப்புற இலக்கியங்கள் பல இடங்களில் மலர்ந்துள்ளன. அண்ணமார் சுவாமி கதை இவற்றுள் முன்னோடியானது. கிட்டத்தட்ட 400 - 450 ஆண்டுகளுக்கு முன் (கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில்) கரூர் பகுதிகளில் வரலாற்றுக் கதைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிகின்றது.   வாய்மொழி மரபு வழியே பல காலம் வழங்கி வந்த அண்ணமார் சுவாமி கதையையும், கதைநிகழ்ச்சிகளையும், சம்பவத் தொடர்களையும் பின்னால் எழுதப்பட்ட நூல்கள் சற்று செம்மைப்படுத்தின. அண்ணமார் சுவாமி கதை பற்றி பற்பல புத்தகங்கள் உள்ளன என்றாலும் பிச்சை பட்டரின் "அண்ணமார் சுவாமி கதை", பெரிய எழுத்து கதைப் புத்தகமாக பாதிப்பிக்கப்பட்ட  பி.ஏ. பழனிசாமி புலவரின் "பொன்னழகரென்னும் கள்ளழகர் அம்மானை," "வரகுண்ணா பெருங்குடி கூட்டம் பொன்னர் சங்கர் வரலாற்று நூல்" மற்றும் எரிசினம்பட்டி இராமசாமியின்  "குன்றுடையான் வமிச வரலாறு" ஆகிய வரலாற்று நூல்களே உண்மையான கதையைக் கூறுவதாக நம்பப்படுகிறது. கவிஞர் சக்திக்கனல் (இயற்பெயர் கல்வெட்டுப்பாளையம் பெரியசாமி பழனிசாமி) அவர்கள் பதிப்பித்த பிச்சன் கவியின் “அண்ணன்மார் சாமி கதை” சிறு மரபில் (Little Tradition) தோன்றிய காப்பியம்.   அண்ணமார் சுவாமி கதையைப் பற்றிய ஆய்வினை மேற்கொண்ட மானுடவியல் அறிஞரான (Anthropologist) ப்ரெண்டா பெக்  (Brenda E.F. Beck) என்ற அமெரிக்க (from University of British Columbia), / கனடா நாட்டுப்  பெண்மணி (now living in Toronto) இது ஒரு நாட்டார் காப்பியம் என்று மதிப்பிடுகிறார்.  இவர் வீரப்பூர் பகுதிகளில் 1962 முதல் 1964 வரை அலைந்து திரிந்து தம் சொந்த செலவில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இவர் சேகரித்த ஆவணங்கள் 40 மணி நேர ஆடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே  இவ்வாய்வாளர் அண்ணன்மார் சுவாமி கதையை தமிழில் முதல் நாட்டார் காப்பியம் என்று  அடையாளப்படுத்தியுள்ள மதிப்பீடு மிகவும் பொருத்தமானதாகும்.   பொன்னர்- சங்கர் கதையை நாடகமாக (தெருக்கூத்து வடிவம் - பாடல், அதற்கான விளக்கமாக கொஞ்சம் வசனம்) நடித்துவரும் குழுக்கள் ஏராளம் உள்ளன. வீரப்பூர் திருவிழாக் காலங்களில் குறிப்பாக படுகளம் அன்றும் வேடபரித் திருநாளன்று இரவும் சுமார் நூறு நாடகக் குழுக்களேனும் ஆங்காங்கே மேடை போட்டு அண்ணன்மார் கதையை நாடகமாக நடித்து வரும் களமாக இன்றளவும் உள்ளது. குலதெய்வ வழிபாடு, வீரப்போர் நடந்த இடம் என்பதையெல்லாம் தாண்டி முத்தமிழில் ஒன்றான நாடகத் தமிழை வளர்க்கும் இடமாகவும் வீரப்பூர் உள்ளதென்றால் அது மிகையல்ல.     படிப்பினை (Lessons Learned)   அண்ணன்மார் சுவாமி கதை அல்லது அண்ணன்மார் சாமி கதை கொங்கு நாட்டின் தேசிய இலக்கியமாகக் கருதப்படுகிறது (national literature of Kongu Nadu).   முற்பகுதிக் கதையோ இரு சகோதரர்களின் அண்ணன்மாரின் பெற்றோராகிய குன்னடையான் தாமரை நாச்சியார் ஆகியோருடைய துன்பம் நிறைந்த வாழ்க்கையையும், இவர்களுக்குப் ஒறம்பற பங்காளிகளே இடையூறாக விளங்கியதையும் சித்தரிக்கின்றது. பிற்பகுதிக் கதை கொங்கு வெள்ளாளர் தலைவர்களாகிய பொன்னரும் சங்கரும் வேட்டுவர் தலைவராகிய தலையூர்க் காளியுடன் வீரப்போர் புரிந்து மடிந்து போவதை விவரிக்கிறது.   கொங்கு நாட்டு வெள்ளாளர்களின் சமூக அமைப்பு, பண்பாடு, வெகுளித்தனம் (வெள்ளை உள்ளம்), உண்மைக்காக உயிர் கொடுக்கும் பண்பு போன்ற அம்சங்களை அண்ணன்மார் சாமி கதை தெளிவாக விளக்குகின்றது.   "சோளம் குத்திப் போட்டுக் கஞ்சி குடித்தல், ஒன்றும் அறியாதானை வெள்ளை மனத்தானை, ‘மங்கு மசையா’ எனல், முறைப்பெண்ணை மணப்பதில் மகிழ்ச்சி, குடி கெடுப்பானைக் கூழை எனல், கருவேல மரத்தில் கட்டி அடித்தல், சாட்டால் பொதியளத்தல், கொங்கணக் கம்பளியும் போட்டுக் கொப்பிகட்டிய கவையும் ஊன்றி நடத்தல், தமுக்கடித்துச் செய்தியை ஊரார்க்கு அறிவித்தல், அம்பலத்துக்கு ஆணும் அடிக்கிளைக்குப் பெண்ணும் என்ற  பழமொழி, ‘அருள்வரப் பெறுதலைச் சன்னத்தம்’ ஆதல் எனல், இணுங்குச் சோளம் குத்தல், மணியம் கணக்குப்பார்த்தல், அஞ்சுமணிக் கயிற்றால் அடித்தல், குடைசீத்தை முள்ளைக் கோழியின் காலில் கட்டுதல், செம்பூலாஞ்செடி வனத்தில் புலி வாழ்தல், புரவிக்குப் புலிநகச் சங்கிலி அணிவித்தல், பல்லி சொல் கேட்டல், தெய்வங்களுக்குப் பூசைபோடுதல், குதிரையைப் பலவாறு அலங்கரித்தல், கனவு கண்டு சொல்லுதல், உடன் பிறப்பை எண்ண ஓரானைப்பலம் வரும் எனல், பிரம்புக் கூடையில் சோறு இடல், பல்லாங்குழியாடுதல், மாவிலங்க மரத்தில் மரநாழி கடைதல், அதன் மேல் பொன்முலாம் பூசுதல், ஊணான் கொடி பிடுங்கிக் கட்டுதல், தேங்காய் உடைத்து சகுனம் காணுதல், தாம்பூலம் தரித்தல் எனப் பற்பல செய்திகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன." பல லட்சம் மக்கள் வந்து செல்லும் இந்த வீரப்பூர் மண் வீரம் விளைந்த மண். பாசத்தைச் சொல்லும் புண்ணிய பூமி. நம்பிக்கையைப் போற்றி வளர்த்த மனிதர்கள் வாழ்ந்த தலம்.  இவை எல்லாவற்றுக்கும் மேலாக சரித்திரத்தின் சாட்சி…!   மேற்கோள்கள்   1. அண்ணன்மார் சுவாமி கதை. சக்திக்கனல். ஏழாம் பதிப்பு. 2001. சென்னை, நர்மதா பதிப்பகம்.  (download from Scribd) http://www.scribd.com/doc/28974760/%E0%AE%85%E0%AE%A3-%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9-%E0%AE%A9%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B0 2. அண்ணன்மார் சுவாமி கதை. http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?pno=1&book_id=237 3. அண்ணமார் சுவாமி வீரவரலாறு. https://www.facebook.com/truegodannamar 4. அண்ணமார் கதை எழுத்து மூலம் - பிச்சைப்பட்டன் (சக்திக்கனல் தொகுப்பு) உடுக்கடிக்கதை - பூளவாடி பொன்னுசாமி http://annamarstory.blogspot.in/2010/04/annamar-swami-kathai-pichai-pattan.html 5. பொன்னர் - சங்கர் கதையில் புகையும் சர்ச்சை http://vettuvagoundersangam.blogspot.in/2011_04_01_archive.html 6. எழுத்து மூலம் - பிச்சைப்பட்டன் (சக்திக்கனல் பதினைந்தாம் நூற்றாண்டு ஓலைச்சுவடியிலிருந்து தொகுப்பு) - Annamar swami kathai (Pichai Pattan ) full download link http://www.esnips.com/web/Annamarswamikathai. 7. Annanmar Story. Sathy R. Ponnuswamy. Kongu.Us           மாசி பெரியசாமி: கொல்லிமலையில் நாட்டார் தெய்வ வழிபாடு   []         1: நாட்டார் தெய்வ வழிபாடுகள்   தமிழர்கள் நாட்டார் தெய்வ வழிபாட்டில் மிகவும் நம்பிக்கை கொண்டவர்கள். பொதுவாக நாட்டார் தெய்வ வழிபாட்டில் மூன்று விதமான வழிபாடுகளைக் காண இயலும். ஊர்க் காவல் தெய்வ வழிபாடு, கிராம தெய்வம் அல்லது கிராம தேவதை வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு போன்ற வழிபாடுகள் நாட்டார் தெய்வ வழிபாட்டு மரபு எனலாம். குலதெய்வ வழிபாட்டில் இறந்து போன தனது முன்னோர்களையும், தாய், தந்தையரையும் வழிபடத் தொடங்கினர்.   பெண் தெய்வ வழிபாடுகள்   தன்னுடைய சந்ததிகள் பெருகுவதற்கு, பெண்ணிடம் மிகுந்த சக்தி இருப்பதை உணர்ந்து, பெண்ணைத் தெய்வமாக வழிபட ஆரம்பித்தனர். நாட்டுப்புறத் தெய்வங்களில் தாய்த் தெய்வங்கள் மற்றும் கன்னித் தெய்வங்கள் ஆகிய பெண் தெய்வங்களே மிகுதி எனலாம். இறந்து போன கன்னிப்பெண்கள், பத்தினிப்பெண்கள், மானம் காப்பதற்காக உயிரைத் துறந்தவர்கள், வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த பெண்கள் எல்லாம் பெண் தெய்வங்களாயினர். உதாரணம் - அங்காளம்மன், இசக்கி, உச்சிமாகாளி, எல்லையம்மன், கண்டியம்மன், காளியம்மன், சீலைக்காரியம்மன், சோலையம்மன், திரௌபதையம்மன், பேச்சியம்மன், பேராச்சி, மந்தையம்மன், முத்தாலம்மன், வீருசின்னம்மாள், நாச்சியம்மன், ராக்காச்சி, ஜக்கம்மா போன்றோர்.   காவல் தெய்வ வழிபாடுகள்   இது போல பல குடும்பங்கள் அல்லது சமூகம் அல்லது நாடு விளங்க தங்கள் இன்னுயிரைக் கொடுத்து காப்பாற்றிய ஆண்கள், போரில் மாண்டவர்கள், தவறாகத் தண்டிக்கப்பட்டு பின்னர் குற்றமற்றவர் எனத் தெரிந்துகொண்டு மரியாதை செய்யப்படுபவர்கள் எல்லாம்   காவல் தெய்வங்களாக ஊருக்கு வெளியே வைத்து வணங்கப்படுகிறார்கள். உதாரணம் - ஐயனார், கருப்பசாமி, காத்தவராயன், மதுரைவீரன், சுடலைமாடன் போன்ற தெய்வங்கள். சில ஆண் தெய்வங்கள் பரவலாக வணங்கப்படுவதால் இவை சில முதன்மைத் தெய்வங்களாயின. குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் வணங்கப்படும் பல ஆண் தெய்வங்கள் துணைமைத் தெய்வங்களாயின. 2: மாசி பெரியசாமி ஒரு காவல் தெய்வ வழிபாடு   மாசி பெரியசாமி ஒரு துணைமை (கிராம) காவல் தெய்வம். இவருக்கு சங்கிலி கருப்பு, முனி, பெரியசாமி, பெரியண்ணன் என்று பல பெயர்கள் உண்டு. நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலையின் உச்சியில் உள்ள மாசிக் குன்றில் வாழம்புல் என்ற ஒருவகை புல்லினால் அமைத்த சிறிய கூரைக் கட்டிடத்தில் இவருக்குக் கோவில் அமைந்துள்ளது.  மாசி பெரியசாமி வேங்கை வாகனத்தின் மேல் அமர்ந்து கனகம்பீரமாக காட்சியளிக்கிறார்.   மாசி பெரியசாமி பல நூறு ஆண்டுகளுக்கு முன் இவ்விடத்தில் சுயம்புவாய் தோன்றினாராம். நாளடைவில் பெரியசாமியின் வலப்புறம் காமாட்சி அம்மனும் இடப்புறம் மீனாட்சி அம்மனும் இணைந்து கொண்டுள்ளனராம். காத்‌தவராயன் போன்ற சாயலில் காவல்தெய்வம் சிங்கத்தின் மீது அமர்ந்து வேட்டைக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறார். பூசாரிகள் இவரை கருப்பணன் என்றும் சொல்கிறார்கள்.   மூலக்கோவில் []     கொல்லிமலை மாசி பெரியசாமி  கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.  பெரியசாமியை  சோழிய வெள்ளாளர் மற்றும் கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமூகங்கள் குலதெய்வங்களாக ஏற்று வழிபட்டு வருகிறார்கள். மாசி பெரியசாமிக்கு நாமக்கல், துறையூர், திருச்சி வட்டங்களில் பல பெரியண்ணன் கோவில்கள் உள்ளன. மாசிக்குன்றிலிருக்கும் இந்தக் கோவில்தான் மூலக்கோவில் என்கிறார்கள்.  மேலே சொன்ன. இடங்களில் அமைந்துள்ள பெரியண்ணன் கோவில்கள், மூலக்கோவில் மாசி பெரியசாமியின் உத்திரவு வாங்கி அடிமண் எடுத்து வந்தபின்பு கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளனவாம்.   3: மாசி பெரியசாமி கதை   காசியிலிருந்து தேவி பார்வதியும், பெருமாளும் தென்திசை நோக்கி வந்தார்களாம். தேவி பார்வதி  காமாட்சியாகவும், பெருமாள் பெரியண்ணனாகவும் மானிட ரூபமெடுத்துள்ளார்கள். துறையூர் பக்கம் வைரிசெட்டி என்பவரின் வீட்டில் காமாட்சி தங்கிவிட்டாளாம். பெரியண்ணன் மட்டும் கொல்லிமலைக்கு போனாராம். பெரியண்ணன் கொல்லி மலையில் உள்ள குன்றில் ஏறி நின்றபோது அது அவரின் பலம் தாங்காமல் ஆட்டம் கண்டது. எனவே பெரியண்ணன் அந்த குன்றிலிருந்து அடுத்த குன்றுக்கு மாறிச் சென்றார் . அடுத்த குன்றும் ஆட்டம் கண்டது. இது போல ஏழு குன்றுகளில் ஏறி நின்ற பிறகு கடைசியாக மாசிக் குன்றை அடைந்தார். மனித உருவிலிருந்த பெரியண்ணனை அங்கிருந்த மக்கள் வழிபடவே, அவர்களின் பக்தியினால் மகிழ்ந்த பெரியண்ணன் அங்கேயே தங்கி மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.   கல்லாத்துக் கோம்பு என்பது கொல்லி மலையின் அடிவாரத்தில் அமைந்த ஊர். வைரிசெட்டியின் வீட்டிலிருந்த காமாட்சி நெடுநேரமாகியும் பெரியண்ணன் வராததால் அவரைத்தேடி கொல்லி மலைக்குச் போனார். கொல்லிமலையின் மாசிகுன்றில் பெரியண்ணன் இருப்பதைப் பார்த்த காமாட்சி தானும் அங்கு தங்குவதாகச் சொன்னார். பெரியண்ணனோ வேண்டாமென்று சொல்லி காமாட்சியை கல்லாத்துக் கோம்பையில் தங்கவைத்தார்.   []     4: அமாவாசை திருவிழா   மாசிக்குன்றுதான் கொல்லிமலைத் தொடரில் மிகவும் உயர்ந்த மலைப்பகுதி என்று தெரிந்தது. இக்குன்றுக் கோவிலுக்குச் செல்ல மூன்று பாதைகள் உள்ளன. இம்மூன்று பாதைகளில் எந்தப்பாதையில் சென்றாலும் சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற பிறகுதான் கோவிலை அடைய இயலும். பாதை நெடுக முட்புதர்களும் பாறைக்கற்களும்,  நிறைந்ததுள்ள செங்குத்தான மலைப்பாதையில் சற்று சிரமப்பட்டே நடந்து சென்றோம். மாசி பெரியசாமி கோயில் மலை உச்சியை அடையும் போது சில்லென்று குளிர்ந்த காற்று நம் முகத்தில் வந்து அறைகிறது. களைப்பெல்லாம் பறந்தோடி விட்டது.   அமாவாசை நாட்களில் கோவில் களைகட்டுகிறது. கூட்டம் தள்ளிச் சாய்கிறது. அமாவாசையன்று காலை ஆறு மணிக்கு கோவிலுக்கு வருகிறவர்கள் வரிசையில் நின்று பெரியசாமியை கும்பிட்டுவிட்டு வருவதற்கு காலை பத்து மணிக்கு மேலே ஆகிவிடுகிறதாம். அவ்வளவு கூட்டம் வருகிறது. சற்று தாமதமாக மதியம் போனால் சாமி கும்பிட எவ்வளவு நேரம் ஆகும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.   நேர்த்திக் கடன்கள்   பல நம்பிக்கைகள், வேண்டுதல்கள், நேர்த்திக் கடன்கள் எல்லாம் கோவிலைச் சுற்றி இடைவிடாது நடக்கின்றன.   தொட்டில் கட்டி பிள்ளை வரம் வேண்டினார்கள். கல்யாணப்பிராப்தி வேண்டி வேல் நட்டார்கள். வீடு கட்ட நினைப்பவர்கள் பலகைக்கற்களால் அடுக்கி கல்வீடு அமைத்தார்கள். நேர்த்திக் கடனாய் ஆட்டுக்கிடாய் வெட்டினார்கள். கோழியை உயிருடன் பிடித்து வேல்களில் குத்தி வைத்தார்கள். செத்து அழுகிப்போன கோழிகள் மூலம் ஒரு விதமான கெட்ட வாசம் வீசியது. இன்னும் பற்பல நேர்த்திக்கடன்கள். விபூதி மந்திரிப்பவர், அருள்வாக்கு சொல்லும் பூசாரி எல்லாம் கொடிமரத்தின் கீழே கும்பலாய்க் குந்தியிருந்தார்கள். சற்று தூரத்தில் இன்னொரு பூசாரி வேப்பங்குளையுடன் பேய்ப்பிடித்த பெண்ணை மிரட்டிக்கொண்டிருந்தார். இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தது போல வேறொரு பூசாரி நீண்ட அரிவாள் மீது நின்றபடி கண்ணை மூடிக்கொண்டு ஆடியபடி அருள்வாக்கு சொன்னார்.   சந்தை   கோவில் அருகே ஒரு சந்தை. மலைவாழ் மக்கள் பாலாச்சுளைகள், அன்னாசி பழங்கள், நாட்டு மாதுளம் பழங்கள், கொய்யா பழங்கள், மலை வாழை பழங்கள் என்று எல்லாம் விற்கிறார்கள். நேர்த்திக்கடன் செலுத்தியவர்கள் சூடாக குழிப்பணியாரம் தின்கிறார்கள்; முடவட்டுக்கால் கிழங்கு சூப் குடிக்கிறார்கள்.   எவ்வாறு செல்வது?   நாமக்கல் கொல்லிமலைக்கு அருகில் உள்ள நகரம். நாமக்கல்லிலிருந்து கொல்லிமலைக்கு பஸ் வசதியுண்டு. பஸ் அறப்பள்ளீசுவரர் கோவில் வரை செல்லும். இறங்குமிடம் பூந்தோட்டம் என்றால் நான்கு கி.மீ நடக்க வேண்டும்; இறங்குமிடம் கிழக்குவளைவு என்றால் இரண்டு கி.மீ நடந்தால் போதும். ஆனால் பாதை மோசம். வழியில் ஒரு ஓடை வரும் பின்பு வழுக்குப் பாறை தாண்டினால் கோவில் தெரியும். இயற்கை காட்சிகள் நிறைந்த சூழல். மீதமான வெய்யில். சில்லென்ற காற்று. கிராமத்து மக்கள். கோவிலில் மாசி பெரியசாமியின் வரம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. இயற்கையை அனுபவிப்பதுகூட ஒரு வரம் தானே.     கொங்கு மங்கலவாழ்த்து பாடல்     []   https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8b/Hopy_Ribbon_-_Thali.jpg/1280px-Hopy_Ribbon_-_Thali.jpg             1: கொங்கு மங்கல வாழ்த்துப்பாடல்: சிறு விளக்கம்   கொங்கு வேளாளர்களின்  கல்யாணங்களில் இடம்பெறும் சடங்குச்சீர்களின் போது மங்கலன் என்ற பெயர் பெற்ற நாவிதர் (Barber) மங்கல வாழ்த்து என்னும் பாட்டைப் பாடுவது மரபு. மங்கலன் வாழ்த்துப்பாடி நடைபெறும் சீரில் மேளகாரர் ஒவ்வொரு அடி பாடியதும் மேளம் கொட்டுவார். நாவிதர் கொங்குநாட்டுப் பகுதியில் குடிமகன் என்றும் அழைக்கப்படுகிறார். 'கவிச்சக்கரவர்த்தி' கம்பர் இந்த மங்கல வாழ்த்துப் பாடல் 'கவிச்சக்கரவர்த்தி' கம்பரால் பாடப்பட்டதாகக் கொங்கு வேளாளர்கள் நம்புகிறார்கள். இந்த மங்கல வாழ்த்துப் பாடல் வரிகள் எல்லோருக்கும் விளங்கும்படி எளிய கொங்கு தமிழில் அமைந்துள்ளது. திருச்செங்கோடு அட்டாவதானம் முத்துசாமிக் கோனார் அவர்கள் 1913 ஆம் ஆண்டு இந்தப் பாடலைப் பதிப்பித்துள்ளார். பாரத தேசத்தை,  சூரிய வம்சம், சந்திர வம்சம், அக்னி வம்சம் ஆகிய மூன்று வம்சங்களைச் சேர்ந்த சத்திரியர்கள் ஆண்டு வந்துள்ளார்கள். இந்த மூன்று வம்சங்களைச் சேர்ந்தவர்கள்தான் மூவேந்தர்கள் ஆவர். சோழர்கள் சூரிய வம்சத்தையும், பாண்டியர்கள் சந்திர வம்சத்தையும், சேரர்கள் அக்கினி வம்சத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். கங்கா குல வெள்ளாளர்கள் வரலாறு வடக்கே கோசல தேசத்தில் கங்கைக் கரையில் கங்கா குல வெள்ளாளர்களை வேளாண்மை செய்வதற்கு மாயவர் தோற்றுவித்தாராம். சூரிய வம்சத்தைச் சேர்ந்த அரசி ஒருத்தி கங்கை நதியில் குளிக்கும்போது ஒர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். கங்கையில் பிறந்த இந்த ஆண்மகனுக்கு "கங்காத்தான்" என்று பெயரிட்டு அழைத்தனர். இந்தக் கங்கத்தான் வழிவந்தவர்கள் "கங்கா குலத்தார்" என்று பெயர்பெற்றனர். இவர்களை "கங்கா குல வெள்ளாளர்கள்" “மரபாள சூளாமணி” என்னும் சரித்திர நூலும் குறிப்பிடுகிறதாம். போதாயன மகரிஷி கங்கா குல வெள்ளாளர்களுக்கு வேளாண்மை செய்வதற்குக் கற்றுத் தந்தாராம். கங்கா குல வேளாளர்களை வேளாண்மை செய்யாதபடி அவந்தி தேச அரசன் தொல்லை கொடுத்தானாம். இது காரணாமாக இந்தக் கங்கா குல வேளாளர்கள் புலம்பெயர்ந்து காஞ்சிபுரம் வந்தனர். சோழ தேசத்தின் வடபகுதியான தென்பெண்ணை ஆற்றங்கரையை ஒட்டி அமைந்த காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள காடழித்து நாடாக்கி வேளாண்மை செய்து வந்தனர். கரிகாலச்சோழ ராஜாவிற்குத் தாசி மூலம் பிறந்த இரண்டாவது மைந்தனான ஆதொண்டன் என்பவனுக்குப் பட்டம் கட்டி, கங்கா குல வேளாளர்கள் வாழ்ந்த இப்பகுதியினைப் பிரித்துத் தொண்டைநாடு என்று பெயர் சூட்டினர். இந்த ஆதொண்டனுக்குக் கங்கா குல வேளாளர் வீட்டில் பெண் கேட்டான் சோழன். அரசன் பெண் கேட்டும் பெண் தர விருப்பமின்றிக் கருநாயை கட்டி வைத்துவிட்டு, கங்கா குலத்தார் மீண்டும் வடதிசை நோக்கி இடம் பெயருவதற்குப் புறப்பட்டனர். கங்கா குல அரசனான சேரன் அவர்களைத் தடுத்து தனது நாட்டில் அமைந்துள்ள காடு மிகுந்த (தற்போதைய கொங்கு) பகுதிக்குச் சென்று வேளாண்தொழில் செய்யுமாறு வேண்டினான். கங்கா குலத்தவருக்கு காடு காணிகளை சாசனமாக எழுதிக் கொடுத்தானாம். இப்படி கொங்குகாணி பட்டயம் என்று சொல்லப்படும் பூர்வ பட்டயம் கொங்கு தேசத்தின் பூர்வகுடி மக்களான நற்குடி 48,000 வெள்ளாளர்களும், பசுங்குடி 12000 செட்டிமார்களும்  காஞ்சியிலிருந்து இடம்பெயர்ந்து குடியேறி கொங்கு தேசமென்னும் பூமியை 24 தேசங்களாக பிரித்து அமைத்துக்கொண்டு தம் குலகுருக்களின் வழிகாட்டுதலின்படி சீரும் சிறப்புமாய் வாழ்ந்து வருகிறார்கள். இது மரபாள சூளாமணி சொல்லும் புராணக்கதையாகும்.   []     இவ்வாழ்த்தினுள் 'கங்காகுலம் விளங்கக் கம்பர் சொன்ன வாழ்த்துரைத்து' (254 ஆம் அடி) என்று சொல்லும்  அடியால் கங்காகுலத்தவர்கள், கம்பர் குலத்தவர்களே என்பது தெளிவு.   அகவல்பா   "ஆல்போல் தழைதழைத்து, அருகுபோல் வேர்ஊன்றி, (320) மூங்கில்போல் கிளைகிளைத்து, முசியாமல் வாழ்ந்திருக்க!"   வாழ்த்துரை   "பாரத தேசம் பண்புடன் வாழி! கொங்கு நாட்டுக் குடிகளும் வாழி! காராள குலதிலகர் கவுண்டர்கள் வாழி! வேளாள குலதிலகர் வேளாண்மை வாழி! மாப்பிள்ளை பெண்ணும் மகிழ்வுடன் வாழி! வாழிய யானும் மகிழ்வுடன் வாழி! என்குரு கம்பர் இணையடி வாழி!"   அகவல் பாடலின் இறுதியிலும் வாழ்த்துரையிலும் "கொங்கு நாட்டுக் குடிகள்," "காராள குலதிலகர் கவுண்டர்கள்," "வேளாள குலதிலகர் வேளாண்மை வாழி" என்று குலப்பெயர் சொல்லி வாழ்த்துகிறது இந்த மங்கல வாழ்த்துப்பாடல்.   []   https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/47/Assigning_one_per_nadu.jpg/250px-Assigning_one_per_nadu.jpg     2: கொங்கு மங்கலவாழ்த்து பாடல்   காப்பு வெண்பா \ நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால் அல்லல்வினை எல்லாம் அகலுமே – சொல்லரிய தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும் நம்பிக்கை உண்டே நமக்கு.   அகவல்பா   அலைகடல் அமிழ்தம் ஆரணம் பெரியவர் திங்கள் மும்மாரி செல்வம் சிறந்திடக் கந்தன் இந்திரன் கரிமா முகத்தோன் சந்திர சூரியர் தானவர் வானவர் முந்திய தேவர் மூவருங் காத்திட நற்கலி யாணம் நடந்திடும் சீர்தனில் தப்பிதம் இல்லாமல் சரசுவதி காப்பாய்! சீரிய தினைமா தேனுடன் கனிமா பாரிய கதலிப் பழமுடன் இளநீர் சக்கரை வெல்லம் தனிப்பலாச் சுளையும் (10)   மிக்கதோர் கரும்பு விதவிதக் கிழங்கு எள்அவல் நெற்பொரி இனித்த பாகுடன் பொங்கல் சாதம் பொரிகறி முதலாய் செங்கை யினாலே திரட்டிப் பிசைந்து ஆரமுது அருந்தும் அழகு சிறந்த பேழை வயிற்றுப் பெருமதக் களிறே அடியேன் சொல்லை அவனியில் குறித்துக் கடுகியே வந்தென் கருத்தினில் நின்று நினைத்த தெல்லாம் நீயே முடித்து மனத்துயர் தீர்ப்பாய் மதகரி சரணம்! (20)   மங்கல வாழ்த்தை மகிழ்ச்சியாய் ஓத என்குரு நாதன் இணையடி போற்றி கிரேதா திரேதா துவாபர கலியுகம் செம்பொன் மகுடம் சேரன் சோழன் பைம்பொன் மாமுடிப் பாண்டியன் என்னும் மூன்று மன்னர் நாட்டை ஆள்கையில் கருவுரு வாகித் திருவதி அவள்புகழ் சிறந்த மானிடம் தாயது கருப்பம் வாழ்வது பொருந்திச் சிறந்திடுங் காலம் இந்திரன் தன்னால் இங்குவந்த நாளில் (30)   பக்குவம் ஆகிப் பருவங் கொண்டு திக்கில் உள்ளோர் சிலருங் கூடி வேதியன் பக்கமே விரைவுடன் சென்று சோதிடனை அழைத்துச் சாத்திரங் கேட்டு இந்த மாப்பிள்ளை பேர்தனைக் கூறி இந்தப் பெண்ணின் பேர்தனைச் சொல்லி இருவர் பேரையும் இராசியில் கேட்டுக் கைத்தலம் ஓடிய இரேகைப் பொருத்தம் ஒன்பது பொருத்தம் உண்டெனப் பார்த்துத் தாலிப் பொருத்தம் தவறாமல் கேட்டு வாசல் கௌலி வலிதென நிமித்தம் (40)   தெளிவுடன் கேட்டுச் சிறியோர் பெரியோர் குறிப்புச் சொல்லும் குறிப்புரை கேட்டு உத்தம பாக்கியம் தச்சனைக் கேட்டுப் பொருந்தி இருத்தலால் பூரித்து மகிழ்ந்து சிலபேர் உடனே சீக்கிரம் புறப்பட்டு வெண்கல முரசம் வீதியில் கொட்டத் தங்க நகரி தானலங் கரித்து முற்றமும் மனையும் முத்துகள் பரப்பிச் சித்திரக் கூடம் சிறக்க விளக்கி உரியவர் வந்தார் உன்மகளுக் கென்று (50)   பிரியமுடன் வெற்றிலை மடிதனில் கட்டி நாளது குறித்து நல்விருந்து உண்டு பூட்டு தாலிக்குப் பொன்னது கொடுத்து வாழ்வது மனைக்கு மனமகிழ வந்துமே கற்றோர் புலவர் கணக்கரை அழைத்துத் தேம்பனை யோலை சிறக்கவே வாரித் திசைதிசை எங்கும் தென்னவரை அனுப்பிக் கலியாண நாளைக் கணித்துஅறி வித்தார் பாங்குடன் முகூர்த்தப் பாலக்கால் நாட்டித் தென்னம் குலையும் தேமாங் கொத்தும் (60)   பந்தல்கள் எங்கும் பரிவுடன் தூக்கி வாழை கமுகு வளர்கூந் தற்பனை மாவிலைத் தோரணம் மகரத் தோரணம் சோலை இலையால் தோரணங் கட்டி மூத்தோர் வந்து மொழுகி வழித்துப் பார்க்குமிடம் எங்கும் பால்தனைத் தெளித்துப் பெண்டுகள் வழங்கும் பெரிய கலத்தைக் கொண்டு வந்ததனைக் குணமுடன் விளக்கி நேரிய சம்பா அரிசியை நிறைத்துப் பாரிய வெல்லம் பாக்கு வெள்ளிலை (70)   சீருடன் நெய்யும் தேங்காய் பழமும் வாரியே வைத்து வரிசை குறையாமல் முறைமை யதாக முக்காலி மேல்வைத்து மணம் பொருந்திய மாப்பிள்ளை தனக்குக் குணம் பொருந்திய குடிமகனை அழைத்துத் தெள்ளிய பாலால் திருமுகம் துடைத்தபின் அரும்பிய மீசையை அழகுற ஒதுக்கி எழிலுடை கூந்தலுக்கு எண்ணெய் தனையிட்டுக் குணமது சிகைக்காய் கூந்தலில் தேய்த்து ஏழு தீர்த்தம் இசைந்திடும் நீரை (80)   மேள முடனே விளாவியே வார்த்துச் செந்நெல் சோற்றால் சீக்கடை கழித்து வண்ணப் பட்டுடை வத்திரந் தன்னை நெருங்கக் கொய்து நேர்த்தியாய் உடுத்தி மன்னவர் முன்னே வந்தவ ருடனே வாசல் கிளறி மதிப்புடன் கூட்டிச் சாணங் கொண்டு தரைதனை மெழுகிக் கணபதி தன்னைக் கருத்துடன் நாட்டி அருகது சூடி அருள்பொழிந் திடவே நிரம்பி யதாக நிறைநாழி வைத்து (90)   வெற்றிலை பழமும் விருப்புடன் வைத்து அலைகடல் அமுதம் அவனியின் நீரும் குழவிக்குக் கங்கணம் குணமுடன் தரித்து முளரி மெச்சிட முகமது விளங்கிடக் களரி வைத்துக் காப்பது கட்டிக் குப்பாரி கொட்டிக் குலதேவதை அழைத்துச் செப்பமுடன் மன்னவற்குத் திருநீறு காப்பணிந்து சாந்து புனுகு சவ்வாது பன்னீரும் சேர்த்துச் சந்தனம் சிறக்கவே பூசிக் கொத்தரளி கொடியரளி கோத்தெடுத்த நல்லரளி (100)   முல்லை இருவாச்சி முனைமுறியாச் செண்பகப்பூ நாரும் கொழுந்தும் நந்தியா வட்டமும் வேரும் கொழுந்தும் வில்வ பத்திரமும் மருவும் மரிக்கொழுந்தும் வாடாத புட்பங்களும் புன்னை கொன்னை பூக்கள் எல்லாம் கொண்டு வந்து கொண்டை மாலை தண்டை மாலை சோபனச் சுடர்மாலை ஆடை ஆபரணம் அலங்கிருதம் மிகச்செய்து திட்டமுடன் பேழைதனில் சோறுநிறை நாழிவைத்து நட்டுமெட்டுத் தான்முழங்க நாட்டார்தன் நாட்டுக்கல்லை (110)   நன்றாய் வலம்வந்து நலமாக நிற்கையிலே செஞ்சோறு ஐந்துஅடை சிரமதைச் சுற்றித் திட்டி கழித்துச் சிவசூரி யனைத்தொழுது அட்டியெங்கும் செய்யாமல் அழகுமனைக்கு வந்து மணவறை அலங்கரித்து மன்னவரைத் தானமர்த்தி இணையான தங்கையரை ஏந்திழையைத் தானழைத்துச் மந்தாரை மல்லிகை மருக்கொழுந்து மாலையிட்டு ஆடை ஆபரணம் அழகுறத் தான்பூண்டு கூறை மடித்துவைத்துக் குணமுள்ள மங்கையவள் பேழைமூடி தான்சுமந்து பிறந்தவனைச் சுற்றிவந்து (120)   பேழைதனை இறக்கிவைத்துப் பிறந்தவளை அதில்நிறுத்தி கூறைச்சேலைத் தலைப்பைக் கொப்பனையாள் கைப்பிடித்து மாப்பிள்ளை கக்கத்தில் மறுமுனையைத் தான்கொடுத்து அருமைப் பெரியவர் அழகுமாப் பிள்ளைகையை அரிசியில் பதியம்வைத்து ஐங்கரனைப் பூசித்து மங்கல வாழ்த்துக்கூற மணவறையில் குடிமகனுக்குச் செங்கையால் அரிசியள்ளிச் சிறக்கக் கொடுத்திடுவார் வேழ முகத்து விநாயகர் தாள்பணிந்து சந்திரரும் சூரியரும் சபையோர்கள் தானறிய இந்திரனார் தங்கை இணையோங்க வந்தபின்பு (130)   அடைக்காயும் வெற்றிலையும் அடிமடியிற் கட்டியபின் முன்னர் ஒருதரம் விநாயகருக்கு இணைநோக்கிப் பின்னர் ஒருதரம் பிறந்தவர்க்கு இணைநோக்கி இந்திரனார் தங்கை இணையோங்கி நின்றபின்பு தேங்காய் முகூர்த்தமிட்டுச் செல்ல விநாயகனைப் பாங்காய்க் கைதொழுது பாரிகொள்ளப் போறமென்று மாதா வுடனே மகனாரும் வந்திறங்கிப் போதவே பால்வார்த்துப் போசனமும் தான்அருந்தித் தாயாருடை பாதம் தலைகுனிந்து தண்டனிடப் போய்வா மகனேஎன்றார் பூங்கொடிக்கு மாலையிடப் (140)   பயணமென்று முரசுகொட்டப் பாரிலுள்ள மன்னவர்கள் மதகரி அலங்கரித்து மன்னவர்கள் ஏறிவரத் தந்தை யானவர் தண்டிகை மேல்வரத் தமையன் ஆனவர் யானையின் மேல்வர நாடியே வந்தவர்கள் நட்சத்திரம் போல்வரத் தேடியே வந்தவர்கள் தேரரசர் போல்வரப் பேரணி முழங்க பெரிய நகாரடிக்கப் பூமிதான் அதிர புல்லாங்குழல் ஊத எக்காளம் சின்னம் இடிமுரசு பெருமேளம் கைத்தாளம் பம்பை கனதப்புத் தான்முழங்கச் (150)   சேகண்டி திமிர்தாளம் சிறுதவண்டை ஓசையெழத் துத்தாரி நாகசுரம் சோடிகொம்பு தானூத வலம்புரிச் சங்கநாதம் வகையாய் ஊதிவர உருமேளம் பறைமேளம் உரம்பை திடும்படிக்கப் பலபல விதமான பக்கவாத்திய முழங்கப் பல்லக்கு முன்னடக்கப் பரிசுகள் பறந்துவர வெள்ளைக்குடை வெண்கவரி வீதியில் வீசிவரச் சுருட்டி சூரியவாணம் தீவட்டி முன்னடக்க இடக்கை வலக்கை இனத்தார்கள் சூழ்ந்துவரக் குதிரை மீதிவர்ந்து குணமுள்ள மாப்பிள்ளை (160)   சேனைகள் முன்னே சிறந்து முன்னடக்கக் கட்டியங்கள் கூறிக் கவிவாணர் பாடிவர நாட்டியங்கள் ஆடிவந்தாள் நல்ல தேவடியாள் பாகமாஞ் சீலைப் பந்தம் பிடித்திட மேகவண்ணச் சேலை மின்னல்போல் பொன்னிலங்க அடியாள் ஆயிரம்பேர் ஆலத்தி ஏந்திவரப் பெண்ணு வீட்டார் பிரியமுடன் எதிர்வந்து மன்னவர் தங்களை வாருங்கள் என்றழைத்து எதிர்ப்பந் தத்துடன் எதிர்மேளம் முழங்க உடந்தையாய் அழைக்க ஒருமன தாகிப் (170)   பந்து சனங்கள் பண்புமித் திரர்வர வந்தனை ஆன வாத்தியம் ஒலிக்கப் பட்டன் புலவன் பண்பாடி தக்கைகொட்டி திட்டமாஞ் சோபனஞ் செப்பிமுன் னேவர அரம்பை மேனகை அணிமிகும் திலோத்தமை திறம்பெறும் ஊர்வசித் தெரிவையர்க்கு ஒப்பாய் வண்மைசேர் கூத்தி வகைபெற நின்று நன்மைசேர் பரத நாட்டியம் ஆடிட வெகுசனத் துடனே விடுதியில் இறங்கி வாழ்வரசி மங்கைக்கு வரிசை அனுப்பும்என்றார் (180)   நாழியரசிக் கூடை நன்றாக முன்னனுப்பிப் பொன்பூட்டப் போகிறவர் பேடை மயிலிக்கு நல்ல முகூர்த்தம் நலமுடன் தான்பார்த்துப் பெட்டிகளும் பேழைகளும் பொன்னும் சீப்பும் பட்டுத்துணி நகையும் பார்க்கக் கண்ணாடியும் சத்துச் சரப்பணி தங்கம்பொன் வெள்ளிநகை முத்துச் சரப்பணி மோகன மாலைகளும் திட்டமுள்ள மங்கையர்க்குத் திருப்பூட்டப் போறமென்று அட்டதிக்கும் தானதிர அடியுமென்றார் பேரிகையை அருமைப் பெரியவரும் அன்ன நடையாரும் (190)   பெருகும் வளைக்கையால் பேழைமுடி ஏந்திநின்று இன்னுஞ்சில பெண்கள் இவர்களைச் சூழ்ந்துவரச் சென்றுஉட் புகுந்தார்கள் திருப்பெண்ணாள் மாளிகையில் கொண்டுவந்த அணிகலனைக் கோதையர்க்கு முன்வைக்கக் கண்டுமனம் மகிழ்ந்தார்கள் கன்னியர்கள் எல்லோரும் நாட்டில்உள்ள சீர்சிறப்பு நாங்கள் கொண்டுவந்தோம் பூட்டுமென்றார் தோடெடுத்துப் பொன்னவளின் திருக்காதில் அடைக்காயும் வெற்றிலையும் அன்பாக மடியில்கட்டி ஆணிப் பொன்னாளை அலங்கரித்துக் குலங்கோதிச் சாந்துப் பொட்டிட்டுச் சவ்வாது மிகப்பூசி (200)   ஊட்டுமென்றார் நல்லுணவை உடுத்துமென்றார் பட்டாடை பொன்பூட்ட வந்தவர்க்குப் பூதக்கலம் தான்படைத்து அன்பாக வெற்றிலை அடைக்காயும் தான்கொடுத்தார் தாய்மாமன் தன்னைத் தன்மையுடன் அழைத்து சந்தனம் மிகப்பூசிச் சரிகைவேட்டி தான்கொடுத்துப் பொட்டிட்டுப் பொன்முடிந்து பேடை மயிலாட்குப் பட்டமும் கட்டினார் பாரிலுள்ளோர் தானறிய ஆரணங்குப் பெண்ணை அலங்கிருதம் மிகச்செய்து மாமன் குடைபிடித்து மாநாட்டார் சபைக்குவந்து வலமதாய் வந்து நலமதாய் நின்று (210)   செஞ்சோறு ஐந்துஅடை சிரம்கால் தோளில்வைத்து நிறைநாழி சுற்றியே நீக்கித் திட்டிகழித்து அட்டியங்கள் செய்யாமல் அழகு மனைக்குவந்து மங்கள கலியாண மணவறையை அலங்கரித்து அத்தியடித் துத்திப்பட்டு அனந்த நாராயணப்பட்டு பஞ்சவண்ண நிறச்சேலை பவளவண்ணக் கண்டாங்கி மாந்துளிர்சேர் பூங்கொத்து வண்ணமுள்ள பட்டாடை மேலான வெள்ளைப்பட்டு மேற்கட்டுங் கட்டிஉள்ள அருமையுள்ள வாசலிலே அனைவோரும் வந்திறங்கிப் பொறுமையுள்ள வாசல்தனைப் பூவால் அலங்கரித்துச் (220)   சேரசோழ பாண்டியர்கள் சேர்ந்திருக்கும் வாசலிலே செம்பொன் மிகுந்தோர்கள் சிறந்திருக்கும் வாசலிலே வீர இலக்குமி விளங்கிடும் வாசலிலே விருதுகள் வழங்கிடும் விருப்பமுள்ள வாசலிலே தரணியில் அன்னக்கொடி தழைத்திருக்கும் வாசலிலே பன்னீரா யிரம்பேர் பலர்சேர்ந்த வாசலிலே நாட்கரசு நாட்டி நல்ல முகூர்த்தமிட்டுப் பேய்க்கரும்பை நாட்டிப் பிறைமண்ணும் தான்போட்டுச் சாலுங் கரகமும் சந்திர சூரியரும் அம்மி வலமாக அரசாணி முன்பாக (230)   ஆயிரப் பெருந்திரி அதுவும் வலமாகச் சுத்தமுடன் கலம்விளக்கிச் சோறரிசி பால்பழமும் பத்தியுடன் அத்தனையும் பாரித்தார் மணவறையில் மணவறை அலங்கரித்து மணவாளனை அங்கிருத்தி அழகுள்ள மணப்பெண்ணை அலங்காரம் பலசெய்து மாமன் எடுத்து மணவறை சுற்றிவந்து மகிழ்ச்சியது மீதூற வலதுபுறம் தானிருத்திக் குலம்பெரிய மன்னவர்கள் குவலயத்தார் சூழ்ந்திருக்க இராமன் இவரோ! இலக்குமணன் இவரோ! கண்ணன், இந்திரன், காமன் இவர்தானோ! (240)   கார்முகில் இவரோ! காங்கேயன் இவர்தானோ! என்றே பாரிலுள்ளார் ஏத்திப் பாராட்ட அத்தை மகள்தனை அழகுச் செல்வியை முத்து இரத்தினத்தை முக்காலிமேல் இருத்திக் கணபதி முன்பாகக் கட்டும்மங் கிலியம்வைத்து அருமைப் பெரியவர் அன்புடன் வழிபட்டு மாப்பிள்ளை பெண்ணை மணவறையில் எதிர்நிறுத்திக் கெட்டிமேளம் சங்குநாதம் கிடுகிடென்று கொட்டியார்ப்ப மாணிக்க மாங்கல்ய வைடூர்யத் திருப்பூட்டி மாலைதனை மாற்றி மணவறையில் அமர்ந்தபின்னே (250)   மாப்பிள்ளைக்கு மைத்துனரை வாவெனத் தானழைத்துக் கலம்பெரிய அரிசிதனில் கைகோர்வை தானுமிட்டுச் சிங்கார மானபெரும் தெய்வச் சபைதனிலே கங்காகுலம் விளங்கக் கம்பர்சொன்ன வாழ்த்துரைத்து மங்கலமும் கன்னிசொல்ல வாத்தியமெலாம் மடக்கி மறையோர் வேதம்ஓத மற்றவர் ஆசிகூறப் பிறைஆயிரம் தொழுது பிள்ளையார்க்குப் பூசைசெய்து அருமைப் பெரியோர் அருகுமணம் செய்தபின்னர் கைக்குக் கட்டின கங்கணமும் தானவிழ்த்துத் தங்களுக்குத் தாங்கள் தாரைக்கோர் பொன்கொடுத்து (260)   உரியதோர் பாட்டன் இருவருடை கைதனிலே தண்ணீர் ஊற்றியே தாரையும் வார்த்தபின்பு பிரியமுள்ள மணவறையைப் பின்னும் சுற்றிவந்து செங்கை யினாலே சிகப்பிட்டு இருவருக்கும் மங்கலக் கலியாணம் வகையாய் முடிந்ததென்று சாப்பாடு போசனம் சந்தோச மாய்ப்போட உண்டு பசியாறி உறவுமுறை எல்லோரும் கொண்டுவந்த பொன்முடிப்பைக் கொடுத்துச் செலுத்துமென்றார் மண்டலத்தோர் எல்லோரும் மணப்பந்தலில் இருந்து கலியாணத்தார் தம்மைக் கருத்துடனே அழைத்து (270)   கண்ணாளர் தமையழைத்துப் பொன்னோட்டம் காணுமென்றார் அப்போது கண்ணாளர் அவ்விடமே தானிருந்து பணமது பார்த்துக் குணமது ஏற்றுக் கல்லு வராகன் கருவூர்ப் பணமும் வெள்ளைப் புள்ளடி வேற்றூர் நாணயம் சம்மன் கட்டி சாத்தூர் தேவன் உரிக்காசுப் பணம் உயர்ந்த தேவராயர் ஆண்மாடை பெண்மாடை அரியதோர் பொற்காசு ஒருவிழி விழிக்க ஒருவிழி பிதுங்கப் பலவகை நாணயமும் பாங்காய்த் தெரிந்து (280)   முன்னூறு பொன்முடிப்பு ஒன்றாய் முடிந்தவுடன் பாட்டன் இருந்து பரியம் செலுத்தினார் பந்தல் பல்லி பாக்கியம் உரைக்க மச்சினன் மார்கள் மகிழ்ந்து சூழ்ந்திருக்கச் சிற்றடிப் பெண்கள் சீர்கள் சுமந்துவரச் சந்தோ சமாகித் தங்கமுடி மன்னவர்கள் பந்தச் செலவு பலபேர்க்கும் ஈந்தார்கள் ஆடுவான் பாடுவான் ஆலாத்தி யுட்பட நாடிவந்த பேர்களுக்கு நல்ல மனதுடனே தனிப்பணம் தான்கொடுத்துத் தங்கிஇரும் என்றார் (290)   வாழிப் புலவர்க்கு வரிசைதனைக் கொடுத்துத் திடமுள்ள பந்தல்கீழ் வந்துநின்ற பேர்களுக்கு அரிசி அளந்தார்கள் அனைவோரும் தானறிய கரகம் இறக்கிவைத்துக் கன்னி மணவாளனுக்கும் புடவைதனைக் கொடுத்துப் பொற்பாய்த் தலைமுழுகிச் சட்டுவச் சாதம் தளிர்க்கரத்தால் மாப்பிள்ளைக்கு இல்லத்தாள் பரிமாறி இனிதுண்டு இளைப்பாறிப் பண்ணை மாதிகனைப் பண்பாகத் தானழைத்து வில்லை மிதியடிகள் மிகவே தொட்டபின்பு காலும் விளங்கக் கன்னியைத் தானழைத்து (300)   மஞ்சள் நீராட்டி மறுக்கஇரு அழைப்பழைத்து மாமன் மார்களுக்கு மகத்தான விருந்துவைத்து மங்கல சோபனம் வகையாய் முடிந்தவுடன் மாமன் கொடுக்கும் வரிசைதனைக் கேளீர் துப்பட்டு சால்வை சோமன் உருமாலை பஞ்சவண்ணக் கண்டாங்கி பவளநிறப் பட்டாடை அத்தியடித் துத்திப்பட்டு ஆனையடிக் கண்டாங்கி இந்திர வண்ணப்பட்டு ஏகாந்த நீலவண்ணம் முறுக்கு வளையல்களும் முகமுள்ள கொலுசுகளும் பதக்கம் சரப்பணி பகட்டான காசுமாலை (310)   கட்டிலும் மெத்தையும் காளாங்கி தலையணையும் வட்டில் செம்பும் வழங்கும் பொருள்களும் காளை வண்டியும் கன்றுடன் பால்பசுவும் குதிரையுடன் பல்லாக்கு குறையாத பலபண்டம் நிறையக் கொடுத்தார்கள் நேயத்தோர் தானறிய! எல்லாச் சீரும் இயல்புடன் கொடுத்து அடைவுடன் வரிசைபெற்ற அழகு மணவாளன் மக்கள்பதி னாறும்பெற்று மகிழ்ச்சியாய் வாழ்ந்திருக்க! வாழி மணமக்கள் வந்தவர்கள் வாழ்த்துரைக்க! ஆல்போல் தழைதழைத்து, அருகுபோல் வேர்ஊன்றி, (320)   மூங்கில்போல் கிளைகிளைத்து, முசியாமல் வாழ்ந்திருக்க!   வாழ்த்துரை   ஆதி கணேசன் அன்புடன் வாழி! வெற்றி வேல்கொண்ட வேலவன் வாழி! எம்பெரு மானின் இணையடி வாழி! மாது உமையவள் மகிழ்வுடன் வாழி! திருவுடன் பெருமாள் சேவடி வாழி! முப்பத்து முக்கோடித் தேவரும் வாழி! நாற்பத் தெண்ணாயிரம் ரிசிகளும் வாழி! வேதம் ஓதிடும் வேதியர் வாழி! பாரத தேசம் பண்புடன் வாழி! கொங்கு நாட்டுக் குடிகளும் வாழி! காராள குலதிலகர் கவுண்டர்கள் வாழி! வேளாள குலதிலகர் வேளாண்மை வாழி! மாப்பிள்ளை பெண்ணும் மகிழ்வுடன் வாழி! வாழிய யானும் மகிழ்வுடன் வாழி! என்குரு கம்பர் இணையடி வாழி! வையத்து மக்கள் மற்றவரும் வாழி! வாழி மணமக்கள் வந்தோர் வாழ்த்துரைக்க! இப்பாட்டுக் கேட்டவர் எல்லோரும் வாழியே! -oOo-                                                                 வாழ்க வளமுடன்