குற்றியலுலகம் பா. ராகவன் Chennai, Tamilnadu ட்விட்டர் இணையத் தளத்தில் http://twitter.com/writerpara பக்கத்தில் பா. ராகவனால் எழுதப்பட்ட இந்த குறுவரிகளின் உரிமை ஆசிரியரை மட்டுமே சாரும். இந்த மின் புத்தக வடிவம் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால் இதனை அச்சு நூலாக்கும் உரிமை நூலாசிரியரைத் தவிர யாருக்குமில்லை. ஆசிரியரை அணுக: writerpara@gmail.com This book was produced using PressBooks.com. 1 சமர்ப்பணம் நண்பர் டைனோபாய்க்கு, அன்புடன். Contents - சமர்ப்பணம் - முன்னுரை பாரா - 1. இயல் பாரா - பின் குறிப்பு 2 முன்னுரை முன்னுரை பாரா ட்விட்டராகப்பட்டது , கிபி 2006 ம் வருடம் மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்டு , 2008 ம் வருடம் மே மாதம் 25 ம் நாள் முதலாக என்னால் பயன்படுத்தப்பட்டு வருகிற ஒரு சமூக இணையத்தளம் . என்ன வேண்டுமானாலும் எழுதலாம் ; ஆனால் 140 கேரக்டர்களுக்குள் முடியவேண்டுமென்கிற இதன் கொள்ளளவு சார்ந்த சவால் என்னை இதன்பால் ஈர்த்தது . ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை இந்தப் பக்கம் நான் போகாமலிருந்த தினமென்று ஒன்றில்லை . செய்திகள் , தகவல்கள் , வெண்பா ( ம் ) கள் , சிந்தனைகள் , நகைச்சுவை , உரையாடல் , விவாதம் , விதண்டாவாதம் , இலக்கியம் , சினிமா , வெட்டிப்பேச்சு என்று என்னவும் செய்யலாம் . கடும் பணிகளுக்கு இடையே வெகு நிச்சயமாக ஒரு நல்ல ஓய்வையும் புத்துணர்ச்சியையும் ட்விட்டர் எனக்குத் தந்து வந்திருக்கிறது . அதைவிட முக்கியம் , ரசனை ஒருமித்த ஏராளமான நட்புகள் சித்திக்கும் பேட்டையாக இது இருப்பது . இவ்வகையில் FaceBook ஐக் காட்டிலும் நான் ட்விட்டரை மிகவும் விரும்புகிறேன் . ஃபேஸ்புக்கில் நட்பெனப்படுவது பெரும்பாலும் எண்ணிக்கை சார்ந்ததாக மட்டுமே இருக்கிறது . ட்விட்டரில் அது ஆத்மார்த்தமானது . இந்தச் சந்து இல்லாது போனால் இன்றளவும் நண்பர்கள் என நினைத்ததும் மனத்தில் தோன்றும் பலபேர் எனக்குக் கிடைத்திருக்க மாட்டார்கள் . ட்விட்டர் எனக்கு எம்பெருமானின் தனிக்கருணை . 0 இந்த நூலில் நான் அதிகம் சேர்க்காத – ஆனால் பெருமளவில் நான் எழுதிய வெண்பாம் என்னும் நவீன இலக்கிய நாசகார வடிவத்தை முதல் முதலில் ட்விட்டரில்தான் பரிசோதித்துப் பார்த்தேன் . அசப்பில் வெண்பாவைப் போலவே இருக்கும் . ஆனால் அது வெண்பா அல்ல . இலக்கணங்களுக்குள் அகப்படாது . 140 கேரக்டர்கள் என்னும் ட்விட்டரின் இலக்கணம் ஒன்றுதான் இதற்கும் இலக்கணம் . ஆனால் சந்தம் தப்பாது . எதுகை மோனை பிறழாது . வெண்பாமிலிருந்து வெண்பாவுக்குச் செல்வது மிகவும் சுலபம் . சநாதனவாதிகள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளத்தக்க வகையில் – அதே சமயம் , சமகால சங்கதிகளைக் குறுவரிகளில் பொதித்துத் தர வசதியாக இதனை நான் பயன்படுத்த ஆரம்பித்தேன் . இதனால் கவரப்பட்டுப் பலபேர் வெண்பாம் எழுத முன்வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது . வெண்பா உள்ளிட்ட அனைத்துப் பா வகைகளுக்கும் சுத்த இலக்கணம் அறிந்த இலவசக் கொத்தனார் , பெனாத்தல் சுரேஷ் , என் . சொக்கன் போன்றவர்கள்கூட தயங்காமல் இதில் ஈடுபட்டது என் தனிப்பட்ட மகிழ்ச்சி . கிரிக்கெட் விமரிசனம் , அரசியல் விமரிசனம் , சினிமா விமரிசனம் , புத்தக விமரிசனம் , சமையல் , சமூகம் , சரித்திரம் , சாராயம் என்று ஒன்றையும் மிச்சம் வைக்காமல் நாங்கள் வெண்பாம்களில் விளையாடித் தீர்த்திருக்கிறோம் . அதிகபட்சம் பத்து முதல் பதினைந்து வினாடிகளுக்குள் வெண்பாம் எழுதும் புலிகளை நீங்கள் இந்தச் சந்தில் காணலாம் . இவர்களால் வெண்பாக்களும் இதே வேகத்தில் எழுத இயலும் என்பதை ட்விட்டருக்கு வெளியே பலர் அறியமாட்டார்கள் . 0 எழுத்து எனக்குத் தவமல்ல . தரிசனமல்ல . கை பழகிய நுட்பம் . புனைவாயினும் , புனைவற்றதாயினும் எழுதும்போது இந்த உணர்வில்லாமல் நான் தொடங்குவதில்லை . ஆனால் எழுத்து எனக்குச் சவாலாக இருக்கும் ஒரே பிராந்தியம் ட்விட்டர் மட்டுமே . ஒன்று , ஒன்றரை , அதிகம் போனால் ஒன்றே முக்கால் வரிகளுக்குள் ஓர் அனுபவத்தைத் தருவது என்பது எளிதல்ல . அதற்குள் ஒரு சிறு புன்னகையையாவது ஒளித்துவைத்து அனுப்பவேண்டும் என்பதே எனக்கு இதிலுள்ள ஆகப்பெரிய அக்கறை . ஏனெனில் , இந்தச் சுருக்கத்துக்கு நேர் எதிரான விரிவுரைகளையே பெரிதும் விரும்பும் தொலைக்காட்சித் தொடர்களிலும் இயங்கிக்கொண்டிருப்பவன் நான் . இரு எல்லைகளுக்கும் நெருக்கமான பிராந்தியத்தில் இருப்பிடத்தை அமைத்துக்கொள்வதற்காகவேனும் ட்விட்டரை நான் விடாமல் பிடித்துக்கொண்டிருக்கிறேன் . 0 ட்விட்டரில் எழுதுவதை ஒரு கடமையாகவோ , கட்டாயமாகவோ நான் எப்போதும் நினைத்ததில்லை . பொதுவில் , இணையத்தில் எழுதும் எதையுமே பொழுதுபோக்குக்காக மட்டும் என்று தெளிவாகப் பிரித்து வைத்திருக்கிறேன் . ஆனால் , பொழுதுபோக்கையும் ரசனையுடன் மேற்கொள்ள என்னைத் தூண்டியது ட்விட்டர் . எனவே அதற்கு நன்றி சொல்லிவிட வேண்டும் . ட்விட்டரில் உள்ள எனது சுமார் இரண்டாயிரம் நண்பர்களுள் சில நூறு பேருடன் மட்டுமே நான் விவாதித்திருக்கிறேன் என்பதை இதனைத் தொகுக்கும்போது கவனித்தேன் . அதிலும் சுமார் 20-30 பேருடன்தான் தொடர்ந்து பேசி , விவாதித்து வந்திருக்கிறேன் . நான் ட்விட்டரில் உலவும் நேரமும் இதற்கு ஒரு முக்கியக் காரணம் . இயங்கியவரையில் , பேயோனுடன் செலவழித்த பொழுதுகளை மிகவும் விரும்பினேன் . இணையம் கண்டெடுத்த , நம்பமுடியாத அறிவு ஜீவி , திறமைசாலி . பல சந்தர்ப்பங்களில் நண்பர்கள் நானே பேயோனாக வருகிறேனோ என்று சந்தேகம் கிளப்பியிருக்கிறார்கள் . அவர்கள் சந்தேகத்தை வலுப்படுத்துவதற்காக வேண்டுமென்றே என் மொழி நடையில் மாற்றம் செய்து சில ட்விட்களை நான் எழுதியிருக்கிறேன் . அவரும் மிக அழகாக இந்த விளையாட்டுக்கு ஈடு கொடுத்திருக்கிறார் . எழுத்தில் முடியாதது எதுவுமில்லை ; வெட்டி விளையாட்டு உள்பட . கடந்த நான்காண்டுகளில் சுமார் எட்டாயிரம் ட்விட்டுகளை எழுதியிருக்கிறேன் . அவற்றில் பெரும்பாலானவற்றை என்னால் சேகரிக்க இயலாது போய்விட்டது . கிடைத்த கொஞ்சத்தில் எனக்குப் பிடித்த சிலவற்றை மட்டுமே இதில் தொகுத்திருக்கிறேன் . இன்னும் கொஞ்சம் நேரம் செலவழித்திருக்க முடியுமானால் மேலும் சில நூறு ட்வீட்களைப் பிடித்திருக்க முடியும் . ஆயினும் என்ன ? பதம் பார்க்க இது போதும் . 0 இந்நூலை என் இனிய நண்பர் டைனோபாய்க்கு அன்புடன் சமர்ப்பிக்கிறேன் . தமிழ் இணையம் எனக்கு அறிமுகமான இரண்டாயிரமாவது ஆண்டுத் தொடக்கத்தில் உயிருடனும் உயிர்ப்புடனும் இயங்கிய ராயர் காப்பி க்ளப்பில் அறிமுகமாகி , இன்றைய ட்விட்டர் காலம் வரை நீளும் எங்கள் நட்புக்கு வயது அநேகமாக எட்டரை . ஒரே ஒரு முறைதான் இதுவரை நேரில் சந்தித்திருக்கிறோம் . அதுகூட வெகு சமீபத்தில் . பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் பக்கத்து இருக்கையில் இருப்பவர் போலவே எப்போதும் நான் டைனோவை உணர்கிறேன் . இதனைச் சாத்தியமாக்கியதும் ட்விட்டர்தான் . பாரா [pressbooks.com] 1 இயல் பாரா - நிஜமான வாசகன் புத்தகம் வாங்கித்தான் படிக்கிறான் . டவுன்லோட் வாசகர்கள் ஹார்ட் டிஸ்கை மட்டுமே நிரப்பிக்கொள்கிறார்கள் . - சுறா மோசமான படமல்ல . அதைவிடச் சுமாரான படங்கள் சில முன்னதாக வந்திருப்பதுதான் அதன் பிரச்னை . - தமிழ்ச் சூழல் என்பது சுற்றுச் சூழலைப் போலவே ரொம்ப மாசு படிந்திருக்கிறது . - பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒன்று சேரும்போது தன்னியல்பாக இலக்கியவாதிகளாகிவிடுகிறார்கள் . அரைமணியில் அவர்களுக்கிடையே அபிப்பிராய பேதங்கள் எழுந்துவிடுகின்றன . - கட்டுடைப்பு விமரிசனங்களில் இறங்கிவிடுகிறார்கள் . அதன் பிந்தைய செயல்பாடுகள் யாவும் சிறு பத்திரிகைகள் போலவே சுவாரசியமாக இருக்கின்றன . - கலாசலா கலசலா என்னும் கலாசாலை சாகித்தியத்தைக் கேட்டேன் . செல்லாத்தா செல்ல மாரியாத்தாவுக்குப் பிறகு உணர்ச்சிவசப்பட வைக்கத்தக்கதாக இருந்தது . - படங்களுக்கு மட்டுமே கட்டுடைப்பு விமரிசனம் எழுதும் நண்பர் மகாதேவன் இந்தப் பாடலுக்கும் அந்த ஆயுதத்தைப் பிரயோகிக்க வேண்டுகிறேன் . - இந்த நீரோ மன்னனின் பிடில் வாசிப்பு கேசட் , சிடி ஏதாவது மார்க்கெட்டில் இருக்கிறதா ? - @ sankara4 சரித்திரம் அடிக்கடி இதைக் குறிப்பிடுகிறதே , கேட்டுப்பார்க்கலாம் என்றுதான் . - உக்கிரம் கொடுமையுள்ளது , கோபம் நிஷ்டூரமுள்ளது ; பொறாமையோவென்றால் , அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார் ? # கிறிஸ்தவஈமெயில்கேம்பெயின் # மொழியழகு - மைடியர் டார்லிங் உன்ன மல்லிகா கூப்புட்றா . மல்லிகா நீ கடிச்சா நெல்லிக்கா போல் இனிப்பா . # கவித்துவம் - மே மாம்பலம் கிராண்ட் ஸ்வீட்ஸுக்கு ஒரு கலாசார சுற்றுப்பிரயாணம் மேற்கொண்டு திரும்பினேன் . இரவு ஒரு மணிக்குப் பிறகு பயணக்கட்டுரை தயாராகும் . - கிராண்ட் ஸ்வீட்ஸிலிருந்து வாங்கி வந்த பட்சணங்களை தர்மபத்தினி எங்கோ ஒளித்துவைட்டுவிட்டாள் . எனவே அதர்ம பட்டினி . - @Dalailama நான்கு தினங்களாக உங்கள் பொன்மொழிகளை வாசிக்காமல் தவித்துவிட்டேன் . விளைவாக , இரண்டு தினங்களாக மலச்சிக்கல் . - @donion / செப்மாமி / யார் இவர் ? நல்லா சமைப்பாரா ? - @jyovram ஒரு கவிஞருக்குக் கவிதையாகவும் உரைநடையாளனுக்கு உரையாகவும் தெரியும்படி எழுதுவது சாதனை . @haranprasanna ஆசீர்வதிக்கப்பட்டவர் . - ஒழிகிறது , நீங்கள் ஒரு கவிஞர் என்று ஒப்புக்கொண்டுவிடுகிறேன் . தயவுசெய்து விமரிசன விபரீதங்களில் எல்லாம் இறங்காதீர்கள் . @haranprasanna - @kavi_rt இந்த நாசமாய்ப் போன கிரிக்கெட்டால் ட்விட்டர் மட்டுமல்ல . அனைத்து சந்துபொந்துகளும் நாறுகின்றன . ஊழலைவிட இதை ஒழித்தால் தேவலை . - ஷோபா சக்தியின் கப்டன் சிறுகதை , தமிழில் நிகழ்த்தப்பட்டிருக்கும் ஒரு பெரும் சாதனை . பல நவீன இலக்கியவாதிகள் இனி அவரை வரிசையாக எதற்காகவாவது திட்ட ஆரம்பிப்பார்கள் . - அறிவுஜீவிகள் ஏன் ரஜினி படம் பார்க்கிறார்கள் என்பதே எனக்குப் புரிவதில்லை . திட்டுவதுதான் முக்கியமென்றால் , பார்க்காமலும் திட்டலாம் . @narain - மல்கோவா சாப்பிட்டேன் . மாம்பழம் மாதிரியே இருக்கிறது . - @manion @iamkarki உலகில் பல உன்னதக் காதல்களில் வயது கொஞ்சம் கோக்குமாக்காகத்தான் இருந்திருக்கிறது . - காலையிலிருந்து ஒரே வாழ்த்து மழை . எனக்கு யாராவது நோபல் அல்லது விஷ்ணுபுரம் பரிசு கொடுத்துவிட்டார்களா என்ன ? # வலைபாயுதேவிளைவு - @chetan_bhagat வலைபாயுதேவில் உங்கள் ட்வீட் எதுவும் இன்னும் இடம்பெறாத நிலையில் உங்களை ஓர் எழுத்தாளராக அங்கீகரிக்க இயலாது . - @penathal சரித்திரத்தைத்தான் திரும்பிப் பார்க்கவேண்டும் . சமகாலத்தையல்ல . - கவிதை சார்ந்த சில காரணங்களுக்காகவாவது பா . விஜய் நடிக்கச் சென்றதை நாம் வரவேற்கத்தான் வேண்டும் . @penathal - @poadiyan நான் இருப்பவன் . இரா கவனாக்காதீர் . - @scanman ரேடியாலஜி என்றால் என்ன ? சுசித்ரா போன்றவர்கள் இயங்கும் துறையா ? - சற்றே பகுத்தறிவுள்ள இயக்குநர்கள் இப்போதெல்லாம் ஒற்று வராத தலைப்பாகத் தேடுகிறார்கள் . @srikan2 - @unmaithamilan கிறுக்குவதன் நிறுத்தல் விகாரமே எழுதுவது . - @vivaji ஒரு காலத்தில் தேவாவை நிறைய ஆராய்ந்திருக்கிறேன் . அவரளவு சிந்திக்கச் செய்த இசையமைப்பாளர் தமிழ்ச்சூழலில் யாருமில்லை . - உலகப்பட விழாவில் பவர் ஸ்டார் சீனிவாசன் படம் ஏதும் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது . ரெட்ராஸ்பெக்டிவ் பிரிவில் விஜயடியாரையாவது பரிசீலித்திருக்கலாம் . - @writerpayon ) ? ; ஆகிய மூன்றும் இருக்குமானால் அது பிஎச்சுப்பி என்பது என் துணிபு . - @writerpayon நிரல்வரிகள் வேண்டுமானால் முற்றுப்புள்ளியில் தொடங்காதிருக்கலாம் . கவிதை தொடங்கும் . - கிராமப்பொருளாதாரம் வளரவேண்டியதுதான் . அதற்காக காதி கிராஃப்ட் வீரிய லேகிய விற்பனையில் இறங்கியிருப்பதை மனம் ஏற்க மறுக்கிறது . - இன்று நவராத்திரி தொடக்கம் . இன்று சர்வதேச வெறிநாய்க்கடி நோய் தினமும் கூட . - கொலுவின் முதல் பார்வையாளராகப் பக்கத்துவீட்டுப் பெண்மணி வந்திருக்கிறார் . ஆளைப் பார்த்தால் பாடுபவராகத் தெரியவில்லை என்பது ஆசுவாசமளிக்கிறது . - குஷ்புவைவிட சு . சுவாமிக்கு ட்விட்டரில் அதிக பின்தொடர்பாளர்கள் உள்ளனர் . இது நம் மக்களின் அரசியல் விழிப்புணர்வைக் காட்டுகிறது . # அவதானிப்பு - விளையும் இடத்தில் கிலோ 80 க்குக் கிடைக்கும் பூண்டு , இரண்டு வீதிகள் தாண்டி கடைக்கு வரும்போது 170. என்ன ஒரு மாய யதார்த்தம் ! # கெருகம்பாக்கதரிசனம் - அணை அரசியலின் மோசமான விளைவுகளைக் கண்டு வருந்துகிறேன் . தமிழகம் சில நல்ல சாயா மாஸ்டர்களை இதன்மூலம் இழக்க நேரிடும் . - பழந்தமிழ் இலக்கியங்களுக்கு @nchokkan செய்யும் தினசரி முகச்சவரம் அசரவைக்கிறது . யாராவது சீக்கிரம் ஒரு விருது கொடுத்துவிடுங்கள் . #365paa - இன்று மைக்ரோவேவ் அவனில் ( வீட்டில் ) செய்த பிஸ்கட் சாப்பிட்டேன் . கட்லெட் தோற்றத்தில் , பொறைபோல் ருசித்தது . - @haranprasanna இசையில் பாவம் என்பது அடிப்படை . அது நுட்பமல்ல . பிராண வாயு போல . பவதாரிணி அதைப் பிடுங்கிப் போட்டுவிட்டுத்தான் பாடுகிறார் . - @ nchokkan ராஜாவின் பலவீனம் பவதாரிணி . - Pogo கிடைக்குமானால் அரசு கேபிளுக்கு மாறிவிடலாம் என்கிறாள் மகள் . எதுவந்தாலும் எனக்கு நியூஸ் பார்க்கக்கூட அனுமதி கிடைப்பதில்லை . - குறிப்பிட்ட சில அஞ்சல்களை ஸ்பாமில் தள்ளிய பிறகும் இன்பாக்ஸுக்கே தொடர்ந்து வருகின்றன . ஜெ ஆட்சியில் இதற்கெல்லாம் அதிரடி நடவடிக்கை கிடையாதா ? - நாளை ஒரு பிரபல அதிமுக பிரமுகரைச் சந்திக்கிறேன் . நல்லியில் பச்சை சால்வையே இல்லை . - மாதம் ஒரு விருது வீடுதேடி வர எங்கே சந்தா கட்டவேண்டும் ? - யாருக்கோ எங்கோ என்னவோ பரிசு கிடைத்திருப்பதாக யாரோ எங்கேயோ சொன்னார்கள் . யாரையாவது வாழ்த்துகிறேன் . - பேபிகார்ன் மசாலா தோசை , பூரி , தயிர்சாதம் . இன்றிரவு எழுத்துவேலை இல்லை என்பதை இவ்வாறு கொண்டாடினேன் . - இன்று எந்த சிறப்பு நிகழ்ச்சியையும் காணப்போவதில்லை என்பதே நான் பிள்ளையாருக்கு அளிக்கப்போகும் பிறந்தநாள் பரிசு . - @ Thesureshpillai பங்கரை என்பது கோவிந்தசாமியின் அனைத்து கல்யாண குணங்களும் ஒருங்கே சேருவது . கோவிந்தசாமியின் குணங்களை அறியவிரும்பினால் நீங்கள் என்னைப் பின் தொடர்வது தவிர வேறு வழியில்லை . - ஜெமொ , எஸ்ரா இருவர் தளங்களுமே திறக்கமறுக்கின்றன . ஆடி வெள்ளியை முன்னிட்டு ஏதாவது முடிவெடுத்திருக்கிறார்களா ? - மொழிபெயர்ப்புப் புத்தகங்களைவிட டப்பிங் படங்கள் பெரும்பாலும் மோசமாக இருப்பதில்லை . - பிறந்தநாள் வாழ்த்துகள் . யாருக்கு என்று கேட்காதீர்கள் . இன்று யாராவது அவசியம் பிறந்திருப்பார்கள் . - எச்சில் துப்புவதுபோல் மழைபெய்தால்கூட எக்கச்சக்கமாக நாறிவிடுகிறது . நாலாவது அவென்யுவின் மறுபெயர் நாராச அவென்யு . - புரட்சிகர பின்னவீனத்துவப் படைப்புகளுக்கு நிறைய மதிப்புரையாளர்கள் உருவாகிறார்கள் . இவ்வெண்ணிக்கை , நாட்டிலுள்ள நவீன கவிஞர்களின் எண்ணிக்கையை விஞ்சுகிறதா என்பதே என் எதிர்பார்ப்பு . - ஃபேஸ்புக்கில் நட்பு கோருபவர்களில் பத்துக்கு இரண்டு பேர் செந்தில்குமார்களாக இருக்கிறார்கள் . # அவதானிப்பு - லாலிபாப் என்ற பெயர் பிடித்திருக்குமளவு அந்த மிட்டாய் பிடிக்கவில்லை . - எப்பேர்ப்பட்ட எழுத்தாளனுக்கும் இம்சையான காரியம் , கதைச்சுருக்கம் எழுதுவதுதான் . - @writerpayon இந்த மதிப்புரையை எழுதிய அனானிமஸ்தான் பிரபல பழமொழிகளை எழுதிய யாரோ என்பவரா ? - தாகூரின் தாடி நன்கு பராமரிக்கப்பட்ட ஒன்று . சாய்பாபாவின் தலைமுடி போல . @writerpayon. - டிரை குலோப்ஜாமுன் என்ற வஸ்து இன்று சாப்பிடக் கிடைத்தது . பழைய தேன்மிட்டாயை நினைவூட்டியது . - @ kavi_rt ஞாராசேவை முழுதும் புரிந்துகொள்ள நீங்கள் மோகமுள் பார்ப்பதைவிட ‘முகம்’ பார்ப்பது நல்லது . நீங்கள் ஞானகவிராஜனாகிவிடுவீர்கள் . - அழிவுகள் துக்கத்தை உண்டாக்குகின்றன . பேரழிவுகள் உணர்ச்சிகளை மரத்துப்போகச் செய்கின்றன . - 111111111 என்கிற எண்ணை அதே எண்ணால் பெருக்கினால் 12345678987654321 என்ற எண் விடையாக வருகிறது . கவிஞர்களைவிட கணிதம் நன்றாகக் கவிதை எழுதுகிறது . - ஃபேஸ்புக்கில் நான் like போடும் எதையும் படிப்பதில்லை . படிக்கும் எதற்கும் லைக் போடுவதில்லை . இதில் ஒரு குரூர மகிழ்ச்சி இருக்கிறது . - ஒரு லட்சம் ஓமப்பொடி பாக்கெட்டுகளை உதிர்த்துப் போட்டது மாதிரி இருக்கிறது ஞாயிறு மாலை மெரினா . - @ jyovram பின்னவீனத்துவத்தில் படுகொலைகள் இயற்கை மரணமாக்கப்பட்டுவிடும் . - அகராதி டாட்காமில் ராகவன் என்று அடித்துப் பார்த்தால் எலி , பெருச்சாளி என்று அர்த்தம் வருகிறது . இது ஏதோ தனிப்பட்ட வஞ்சமாயிருக்கக்கூடும் . - @nchokkan @kryes @RagavanG இலக்கியங்களை ஓரளவுக்குமேல் மொழிச்சுத்தஉதாரணங்களாகஎடுத்துக் காட்டுதல் அபாயம் . இலக்கணப் புத்தகத்தை அண்டுவதே சரி . - @nchokkan @kryes @RagavanG காட்டிலோர் பொந்திடை வைத்தேன் என்று பாரதியாரே தப்பு செய்வார் . ஓசை நயத்துக்காக . - அட்சய திருதியைக்கு மனைவிக்கு என்ன செய்வீர்கள் என்று நண்பர் கேட்டார் . தினமும் எட்டு மணி சீரியலை இடையூறின்றிப் பார்க்க அனுமதிப்பது பெரிதில்லையா ? - அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் செய்யும்போதுதான் அரிசி உப்புமா அதன் நிஜ ருசியைக் காட்டுகிறது . - ஆடியோ வெளியீடுகளில் பேசுபவர்கள் எல்லாம் ஒரே கோனார் நோட்ஸைப் படித்துப் பரீட்சை எழுதுபவர்களைப் போல் பேசுகிறார்கள் . போரடிக்கிறது . - ஆழ யோசித்தால் புற்றுநோய் மட்டுமே கடவுளையும் விஞ்ஞானத்தையும் சேர்த்து தோற்கடித்துக்கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது . - இட்லி உப்புமாவின் ருசி ஏன் இட்லியிலோ உப்புமாவிலோ இருப்பதில்லை ? - இணையத்தில் மேயும்போதெல்லாம் மனைவி வெட்டிவேலை என்கிறார் . வெட்டியாயினும் வேலையென்று ஒப்புக்கொள்வதைப் பாராட்டத்தான் வேணும் . - இந்திரன் மழைக் கடவுள் . ரமணன் மழையெதிர்க் கடவுள் . - எந்திரனில் ஷங்கர் செய்தவற்றைப் பன்னெடுங்காலமாக ஒரு குடிசைத் தொழில்போல் ராமநாராயணன் செய்துகொண்டிருந்தார் என்னும் எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை . - இயற்கைக் காட்சி வால்பேப்பர் பின்னணியில் பிரியமானவளுக்குக் கவிதையெழுதுவோரை இப்போது ஃபேஸ்புக் வாழவைத்துக்கொண்டிருக்கிறது . - இலக்கிய விழாக்களுக்கு இத்தனை பேர் வருகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது . ரிடையர் ஆனதும் இலக்கியவாதி ஆகிவிடவேண்டியதுதான் . - இன்று காலை 7.24 க்குள் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒசாமா , வினவு போன்ற பெயர்களை வைப்பது நல்லது . http://bit.ly/jV17rZ - இன்று மதிய உளவு காஷ்மீரி புலவ் . ஒரு தமிழ்ப் புலவனை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்றறிய ஆவலுடன் காத்திருக்கிறேன் . - உள்ளதிலேயே திராபையான ட்வீட்களைப் பொறுக்கிப் பிரசுரிப்பதில் விகடன் வலைபாயுதே பொறுப்பாளர்களை விஞ்ச ஆளில்லை . - எதிர்நீச்சல் – வலையுலகம் தோன்றாத நாளில் எழுதப்பட்ட வலைப்பதிவுத் தனமான புத்தகம் . வாண்டுமாமா அவரது குழந்தைக் கதைகளால் மட்டுமே வாழ்பவர் . இது குழந்தைத்தனமான கதை . - எந்திரன் குறித்து நண்பர் @Dalailama ஏன் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை ? - எருமைப்பால் காப்பி சாப்பிட்ட தினத்தில் உடலுறவு கொண்டால் திருப்தியாக இராதாம் . வள்ளலார் சொல்கிறார் . சன்னியாசிகள்தான் இந்த விஷயத்தில் சரியாகப் பேசுகிறார்கள் . - என் சமையல் விமரிசனங்கள் @maamallan ன் இலக்கிய விமரிசனங்கள் போன்றவை . சமரசமற்றவன் என்பது என் மனைவிக்குத் தெரியும் . - மகளின் பொதுத்தேர்வுகள் இன்று முடிந்தன . கருத்துக் கணிப்புகளை மெய்ப்பித்து சிறப்பான வெற்றி கண்டிருக்கிறாள் . - எனக்கு இயற்பியல் தெரியாது . ஆனால் நான் குதித்தால் எப்போதும் தண்ணீர் உள்ளேதான் போகும் . கீழே இருந்தபடிதான் என்னை மேலே தூக்கி ஏந்தும் . - ஒரு சிறு அலுவலக அளவில் நடைபெறும் வாக்கெடுப்பில்கூட செல்லாத ஓட்டுகள் விழுகின்றன . தமிழன் தவறின்றித் தவறு செய்வதில் தேர்ந்தவன் . - ஒரு நல்ல படத்தை மோசமான படமாக உணரச் செய்வது எப்படி ? கலைஞர் டிவி எடிட்டர்கள் கையில் கொடுத்துவிடவேண்டும் . இன்றைய படுகொலை அபியும் நானும் . - ஒரு பத்து ரூபாய்த் தாளில் பாதியைக் காணோம் . யாரோ கடைக்காரன் ஐந்து ரூபாய் மிச்சத்தை இவ்வாறு கொடுத்திருக்கிறான் . - குல்லாய் வியாபாரி தலையில் என்ன கொண்டு சென்றான் என்றொரு வினா மகளின் பாடப்புத்தகத்தில் உள்ளது . இரண்டாம் வகுப்பிலேயே தத்துவப் பாடங்கள் தொடங்கிவிடுகின்றன . - ஒரு பயிலரங்குக்காக எடிட்டிங் மேனுவல் ஒன்று தயார் செய்தேன் . வாசித்துப் பார்த்த நண்பர் நல்ல புனைவு என்று மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார் . - ஒரு மாபெரும் கூட்டத்தில் விசுவாசமான வாசகர்களைப் பிரித்து அடையாளம் காணச் சிறந்த வழி , வலைத்தளத்தில் கதை எழுதுவதுதான் . - ஒரு வழியாக நந்தலாலா பார்த்துவிட்டேன் . பெரிதாகப் பாராட்ட ஏதும் தோன்றாததால் நானொரு இலக்கியவாதி இல்லை என்பது எனக்கே உறுதிப்பட்டது . - ஒவ்வோராண்டின் இறுதியிலும் இயற்கையின் பெரும் சீற்றம் என்பது சில ஆண்டுகளாக வழக்கமாகிவிட்டது . இந்த ஆண்டு விருதகிரி . - கூகுள் மின்னஞ்சல் கணக்குகளைத் திறப்பதுபோல் கலைஞர் கட்டடங்களைத் திறந்து வைத்துவிடுகிறார் . - சிலதெல்லாம் புரியாதிருப்பதே புரிந்ததைக் காட்டிலும் அழகாக இருக்கும் . - செம்மொழி மாநாட்டை ஒட்டி நாம் செய்யக்கூடிய சிறந்த சேவை , பா வடிவங்கள் அனைத்தையும் நவீனமாக்கி நாரடிப்பதே . - செம்மொழிப் பாடல் காட்சியில் ராஜமுந்திரி மண்ணின் மகள் அஞ்சலி தோன்றுவதற்கு மொழி , இனம் தாண்டிய தத்துவப் பின்னணி ஏதாவது இருக்குமா ? - டக்ளஸ் தேவானந்தாவுக்கும் நரேந்திர மோடிக்கும் ஒரே முகஜாடை என்பது தற்செயலாகத்தான் இருக்கவேண்டும் . - ட்விட்டரில் நம்மை யாரெல்லாம் பின் தொடர்கிறார்களோ அவர்களை நாமும் தொடர்வதுதான் மரியாதையாம் . யாராவது தாக்கினால் திருப்பித் தாக்குவதுதான் மனிதநேயம் என்பது போலல்லவா இது இருக்கிறது ? - தினத்தந்தி விளம்பரத்தில் சூர்யாவின் படத்தலைப்பு குழப்புகிறது . சிங்கம் படத்தை கலாநிதிமாறன் என்று பெயர் மாற்றிவிட்டார்களா என்ன ? - @nchokkan அன்சைஸ் நபர்களின் ஆபத்பாந்தவர் நல்லி செட்டியார் தயாரிக்கும் டீ ஷர்ட்டுகளில் பாக்கெட் உள்ளது . - தினத்தந்தியின் வரலாற்றுச் சுவடுகள் வந்தது . சரித்திர ஆவணமோ என்னமோ . சரித்திர ஆயுதம் . நல்ல கனம் . - நல்லவர்கள் ஏன் கவிதையாக வாழவேண்டும் ? அவர்கள் நன்றாகத்தான் வாழ்வார்கள் . - நாஞ்சில் நாடன் தமிழ்மண நட்சத்திரமாம் . எல்லாம் கலைமாமணி ராசி . - நூற்றுக்கணக்கில் வாசக அஞ்சல் பெறும் எழுத்தாளர்களைக் கண்டு பொறாமைப்படுகிறேன் . குறி நீட்டிப்பாளர்கள் தவிர எனக்கு யாருமே கடுதாசி போடுவதில்லை . - பல வருடங்களாகத் தொடர்பில் இல்லாதிருந்த உறவினர்களை ஃபேஸ்புக்கில் பார்க்கிறேன் . இன்னும் உறவினர்களாகத்தான் இருக்கிறார்கள் . - பள்ளி விடுமுறை அறிவிப்பின்மூலம் தமிழ் செம்மொழிதான் என்பதைத் தெரியப்படுத்தியது அரசின் பெரிய சாதனை . - பியா ! என்ன ஒரு பெயர் ! ஒரு புள்ளி விடுபட்டிருக்கிறது என்று நினைக்கிறேன் . - புத்தர் எதிரில் வந்தார் . புத்ததேவ் தோற்றுவிட்டார் என்றேன் . நல்ல மனிதர் , ஆனாலும் கம்யூனிஸ்ட் என்று நகர்ந்து போனார் . - புத்தர் எதிரில் வந்தார் . நானா , அருள்செல்வனா , யார் ரொம்பப் படுத்துவது என்றேன் . உங்களை நான் என்றார் . @ arulselvan - பெரிய எழுத்தாளர்களுக்கு வாசகர் கடிதம் எழுதுவோர் கூட சரியான இடம் பிடித்துத் தொடரும் போட்டுத்தான் எழுதுகிறார்கள் . - பெரும் இலக்கியம் என்பதே ஒரு ஸ்பாம்தான் . - சமைத்ததும் கிடைக்கும் ருசியைவிட வத்தக்குழம்பு இரண்டு நாள் ஃப்ரிட்ஜில் கிடந்தால் ருசி கூடுகிறது . என் வீட்டில் அதற்கு சாராயம் என்று பெயர் . - பேச்சு மற்றும் எழுத்திலிருந்து இளையராஜாவை யாராவது காப்பாற்றிவிட முடியுமானால் அவரால் இன்னும் 100 ஆண்டுகளுக்கு நன்றாக இசையமைக்க முடியும் . - ஆ , மலிங்கா ! நான் படமெடுத்தால் கண்டிப்பாக நீங்கள்தான் பாம்பு . - அனகாரிக தர்மபாலா இலங்கை அணியில்தானே இருக்கிறார் ? - க்ரிக்கின்ஃபோவில் பந்துக்குப் பந்து கமெண்ட்டரி எழுதுகிறார்கள் . கவித்துவம்தான் இல்லை . - திருமதி சானியா மிர்சா ஷோயப் , ஆட்டத்தைக் கண்டுகளிக்க வந்திருக்கிறார் போலிருக்கிறது . ஆடை பெரிதாக இருப்பதால் அடையாளம் தெரியவில்லை . - இந்த மேட்சில் பாக் . வென்றால் பஞ்சாபில் தலா 25 ஏக்கர் நிலமாம் . எந்தப் பக்க பஞ்சாப் என்று பீதியைக் கிளப்புகிறார் என் மனைவி . - இந்த பாண்டிங்குக்கு ஆசாரமே தெரியவில்லை . எப்பப்பார் உள்ளங்கையில் எச்சில் துப்பித் துடைக்கிறார் . கருமம் . - வைட் , எல்பிடபிள்யூ , பவர் ப்ளே என்ற மூன்று அம்சங்கள்தான் எனக்கு கிரிக்கெட்டில் புரியாதவை . இவற்றை நீக்கிவிட்டால் நல்லது . - மலிங்காவின் பொருளாதாரம் 5.94 என்கிறது ஸ்கிரீன் . லட்சமா ? கோடியா ? - மலிங்காவைப் போல் வீச தமிழ்நாடு காங்கிரசில் குறைந்தது 100 பேர் உண்டு . தேர்வுக்குழுவுக்கு சில வீடியோ க்ளிப்பிங்ஸ் அனுப்பவேண்டும் . - க்ரிக்கின்போவில் not out not out என்று ஏன் போடுகிறார்கள் ? now playing என்று மங்களகரமாக இருக்கலாம் அல்லவா ? # எக்ஸ்பர்ட்டொப்பீனியன் - இந்த மேட்சில் அம்பயரை ஏன் யாரும் ஒரு வைகோ அளவுக்குக் கூட மதிக்கமாட்டேனென்கிறார்கள் ? - அணியில் யுவராஜ்சிங் , மகேந்திரசிங் , ஹர்பஜன்சிங் என்று ஒரே சீக்கியர் ஆதிக்கம் . எல்லாம் நாம் சர்தார்ஜி ஜோக்ஸ் சொல்லி மகிழ்ந்த பலன் . - முதல் பந்தில் 4 அடிப்பது என்ன விசேஷம் ? முதல் பந்தில் ஸ்டம்ப் பறந்தால்தான் விசேஷம் . - தள்ளாத வயதில் டெண்டுல்கரைப் பந்துவீசச் சொல்வது தோனியின் சர்வாதிகாரத்தனத்தைக் காட்டுகிறது . - க்ளார்க் என்பவர் ஆடவந்திருக்கிறார் . ஒரு காலத்தில் இவருடைய டேபிள் எனக்கு மிகவும் உதவியிருக்கிறது . - reserve umpire என்றொருவர் இருக்கிறாரே , அவரென்ன ரிசர்வ் தொகுதி வேட்பாளர் மாதிரியா ? - ராகுல் காந்தி மேட்ச் பார்க்கிறார் . இந்தியா ஜெயித்தால் தோனிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி உறுதி . - ஒருவர் அவுட் ஆவதற்கு வருந்துவது அழகல்ல . புதியவரை வரவேற்கத் தயாராவதுதான் தமிழர் பண்பாடு - ஆங்கில செய்தி சானல்கள் மொகாலி ஆட்டத்தை லிபிய மக்களுக்கும் கடாபிக்கும் நடக்கும் யுத்தம்போல் வருணிப்பதைப் பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது . - @ elavasam பவர் ப்ளே என்பதை சக்தியாட்டம் அல்லது அதிகார ஆட்டம் என்று மொழிபெயர்க்கலாமா ? ஆற்காட்டார் ஆடியது பவர்கட் ப்ளே என்பதை நினைவுகூர்ந்து . - நேற்று மேட்சில் இந்தியா வென்றதற்கு என் தியாகம்தான் காரணம் . இரண்டாம் பாதியைப் பார்க்கவேயில்லை . - @ kavi_rt நாசம் என்பது தேசிய குணம் . மோசம் என்பது சர்வதேச குணம் . - இந்த சனியன் பிடித்த அக்ரோபாட் ரீடர் தினசரி ஏதாவது அப்டேட் செய்துகொண்டே இருக்கிறது . அப்படி என்னதான் ஏற்றுகிறார்கள் ? - மழையை எதிர்பார்த்து ரெயின் கோட்டுடன் வண்டியை எடுக்கிறேன் . இயற்கை ஏமாற்றுகிறது . சாலையில் என்னை நான் பூச்சாண்டியாக உணரும் தருணமிது . - மனித வாழ்வின் மாபெரும் சோகம் , ஒரு ஜோக்கடித்துவிட்டுப் பின்னர் அதை விளக்க நேர்வது . - இரான் அதிபர் மீது யாரோ ஷூ வீசியிருக்கிறார்கள் . அவரும் காங்கிரசில் சேர்ந்துவிட்டாரா என்ன ? - @mayavarathaan @ksnagarajan பேயோன் என்பவர் நானாக இருக்க முடியாது . அநாவசியமாக அவரைச் சந்தேகப்படாதீர்கள் . - கஸ்தூரி ரங்கனைத் தவிர வேறு யாருக்கும் கணையாழி செய்ய வராதென்பது அதன் மூன்றாவது பிறப்பிலும் உறுதிப்பட்டிருக்கிறது . - மனிதன் விண்வெளிக்குப் போய் இன்றோடு 50 ஆண்டுகள் முடிகின்றன . வடைசுடும் பாட்டி இன்னும் யார் கண்ணிலும் படவில்லை . - மொழியின் சவால்களின்மீது விளையாட விரும்புவோருக்கு மரபுப் பயிற்சி பெரிய வரம் . மொக்கை பென்சில் போதுமென்றால் சந்தேகமின்றி இது துயரம் . - லியோனிட் கய்தே என்றொரு இயக்குநர் இருக்கிறார் . அவரை வீட்டார் எப்படி கூப்பிட்டிருப்பார்கள் ? - வாஸ்கோடகாமா ஏன் பிள்ளையார் சுழியோடு கையெழுத்திடுகிறார் ? http://upload.wikimedia.org/wikipedia/commons/6/63/Vasco_da_gama_signature.svg - விடியும்போது ஷேவ் செய்யவேண்டும் . எழுதும்போது சேவ் செய்யவேண்டும் . இரண்டிலும் எப்போதும் சொதப்புகிறேன் . இன்றைய இழப்பு 600 சொற்கள் . - வெயில் தாங்கவில்லை . யாராவது என்னை சைபீரியாவுக்கு நாடு கடத்தினால் நல்லது . - வேட்டைக்காரன் போஸ்டர்களில் அனுஷ்கா விஜயின் பெரியம்மா போல் தெரிகிறார் . நான் கண்ணாடி மாற்றியாக வேண்டும் . - ஜெயா டிவி காட்டும் தேர்தல் பணப்பட்டுவாடா காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன . கேமராமேனுக்குச் சொல்லியனுப்பிவிட்டுத்தான் பணக்கட்டை எடுப்பார்களா ? - ஸ்டாலின் பிறந்த நாளுக்கு எங்கள் ஏரியாவில் வீட்டுக்கு இரண்டு குப்பைத்தொட்டிகள் கொடுத்தார்கள் . எதைத் தூக்கிப் போட ? - ஸ்ரீசாந்த் திறமையான வீச்சாளர் . அவரை நாம் ரஞ்சி டிராபிகளுக்குச் சேமித்து வைக்கலாம் . - ஸ்ரீதமிழ் ஹிந்துவில் ஸ்ரீ அரவிந்தன் புத்தகம் பற்றி ஸ்ரீ ஜடாயு எழுதியுள்ள மதிப்புரை . http://www.tamilhindu.com/2011/01/nambakoodatha-kadavul-book-intr/ - குஷ்புவைப் பின்பற்றச் சொல்கிறது ட்விட்டர் . நான் இதற்குமேல் குண்டாவதாக இல்லை . - வாசகர்களுக்கு சந்திர கிரகண நல்வாழ்த்துகள் . பாம்பு முக்கால்பாகம் விழுங்கிவிட்டது . இன்னும் கொஞ்சம்தான் பாக்கி . - கிரகணம் விட்டிருக்கு . தலைக்குக் குளிங்க என்கிறார் மனைவி . காப்பி வேண்டுமென்றால் அறிவியல் சிந்தனைகளைப் பரப்பும் முயற்சியைக் கைவிட்டாகவேண்டும் . - ஒற்றில்லாவாக்கியங்களைவிட , பொருத்தமற்ற இடங்களில் வரும் ஒற்றுப்பிரயோகங்கள் மனத்தளவில் வன்முறையை அதிகம் தூண்டுகின்றன . - அபரஞ்சிசோப்பில் குளிப்பதால் மட்டும் காந்தியவாதியாகிவிட முடியுமா என்று நண்பர் கேட்டார் . வேறென்ன செய்ய ? சென்னையில் ஆட்டுப்பால் கிடைப்பதில்லை . - இசையை விலக்கிப் பார்த்தால் குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா என்பதைப் போன்ற ஒரு மகா திராபைப் பாடல் உலகில் வேறில்லை . - ஒருவரை மெண்ட்டல் என்று குறிப்பிடுவதே ஆகப்பெரிய அநாகரிகம் என்று நினைக்கிறேன் . ஆனால் சிலவற்றை வேறெந்தமாதிரியும் நினைக்கத் தோன்றுவதில்லை . - @ writerpayon உங்கள் கவித்துவக் கவிதைகளைவிட ஓவியத்துவ ஓவியங்கள் சற்று நன்றாகவே இருப்பதாகப் படுகிறது . - முழுப் பொழுதும் வேலை இருக்கும் ஒரு தினத்தை ஞாயிறு என ஏற்க மனம் மறுக்கிறது . - இன்றிரவு ஏதாவது ஒரு நல்ல உலகப்படம் பார்க்கலாம் என்று முடிவு செய்து வீராசாமியைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் . - அகல் விளக்கு வடிவில் ஒரு பிஸ்கோத்து . நடுவே முந்திரிகள் மிதக்கும் சாக்லேட் குழம்பு என்றொரு பதார்த்தத்தை நேற்று உண்டேன் . கோன் ஐஸின் கள்ளக்குழந்தை போலிருந்தது . - கடிதம் எழுதும் வழக்கம் நின்றதுபோல் மின்னஞ்சல் வழக்கமும் அருகுகிறது . மெசஞ்சர் தாண்டி மொழி வர மறுக்கிறது . - சமீபத்தில் வெளியானவற்றிலேயே தலைசிறந்த இலக்கியப் பிரதியாக தினத்தந்தி சனிப்பெயர்ச்சிப் பலன்கள் புத்தகத்தைச் சொல்வேன் . - சமகால அவலங்களை யதார்த்தமாகவும் வருங்காலம் குறித்த தரிசனங்களை மேஜிக்கலாகவும் சிறப்பாக முன்வைக்கிறது இந்நூல் . - இக்காலம் பொதுவில் மகாகவிகளுக்குப் பேராபத்து விளைவிக்கக்கூடியதாக இருக்கிறது . வாழ்க பின்னவீனத்துவர்கள் . - ஆதம்பாக்கம் என்பது சற்றே அளவில் பெரிய கார்ப்பரேஷன் லாரி போல் உள்ளது . - இன்றைய பொழுதைச் சேவையுடன் தொடங்கினேன் . மக்கள் சேவை , மகேசன் சேவையல்ல . லெமன் சேவை , தேங்காய் சேவை . - கோடம்பாக்கத்தில் எந்தச் சாலையில் நுழைந்தாலும் குறைந்தது ஓரங்குல உயரத்துக்கு சாக்கடைக் கழிவுகள் . இந்த மழைக்கு நோய் அபாயம் அதிகம் . கொடநாட்டில் சாக்கடைக் கலப்புப் பிரச்னைகள் இருக்காதென்று நினைக்கிறேன் . - இலக்கிய உபன்னியாசங்களுக்குத் தொடர்ந்து செல்லும் இரண்டு பேரை இன்று சந்தித்தேன் . மாலையிட்ட ஆடுகள் போல் இருக்கிறார்கள் . - வயதான நடிகர்களின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் வயதைக் குறைக்க மீசையை எடுத்துவிடுகிறார்கள் . யதார்த்தத்தில் மீசையை எடுத்தால் வயதுகூடியே தெரிகிறது . - 42 வருட ஆட்சி என்பது அயர்ச்சி தரக்கூடியது . யாருக்கு அதிக அயர்ச்சி என்பதே முடிவைத் தீர்மானிக்கிறது . # லிபியா - மனித வாழ்க்கை இரண்டு காலங்களினாலானது . ஒன்று லெஃப்ட் காலம் . இன்னொன்று ரைட் காலம் . - அப்பா என்று கூப்பிடுவதை நிறுத்திவிட்டு , அப்பாடக்கர் என்று கூப்பிட ஆரம்பித்திருக்கிறாள் மகள் . சினிமாஇனிமா ! - சுக்ராமுக்கு இந்தச் சின்ன வயதில் கிடைத்திருக்கும் சிறையனுபவம் குறித்து சிந்தித்துக்கொண்டிருக்கிறேன் . தண்டனை அவருக்கா ? சிறைக்காவலர்களுக்கா ? - சமகாலத்தில் ராதாமோகன் படங்களை மட்டும்தான் வசனங்களுக்காகவே திரும்பப் பார்க்கத் தோன்றுகிறது . - மகளுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுத்தர ஆரம்பித்திருக்கிறேன் . இன்று எப்படியும் ஒரு கிலோ எடை குறைந்திருப்பேன் . - இன்று காலை எழுந்ததும் தாந்திரிக் முறையில் பல் துலக்கி , தாந்த்ரிக் தோசை சாப்பிட்டேன் . சட்னியில்தான் சற்று தாந்திரிகம் குறைவு . - @ rgokul தாந்திரிகத்தில் யந்திரங்கள் உண்டு . ஆனால் எல்லா யந்திரங்களும் தாந்திரிகத்தினுள் அடங்கா . Macpro உள்பட . - ஒரு குழந்தைக்கு கின்யாஸ்ரீ என்று பெயர் வைத்திருக்கிறார்கள் . இதற்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறேன் . - விகடன் சனிப்பெயர்ச்சிப் பலன்படி பார்த்தால் அடுத்த 2 வருஷத்தில் நான் 1.76000 கோடி சம்பாதித்துவிடுவேன் போலிருக்கிறது . - ஜாலியாக ஒரு படம் பார்க்கலாம் என்று தோன்றிய மறுகணமே எப்போதும் கரகாட்டக்காரன் தான் முதலில் நினைவுக்கு வருகிறது . - சென்னைக்கு வெளியே கெருகம்பாக்கம் என்று ஒரு ஊர் இருக்கிறது . கோடம்பாக்கத்திலிருந்து புறப்பட்டால் கச்சத்தீவுக்குப் போவதுபோல் இருக்கிறது . - யாராவது திருடுவதற்காகவாவது ஒரு சைக்கிள் வாங்கவேண்டும் . - சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா கூட பகுதியளவு ஆட்டோஃபிக்‌ஷன் தான் . - மு.வரதராசனாரின் கள்ளோ காவியமோ படிக்கத் தொடங்கியிருக்கிறேன். ரொம்ப நல்ல தமிழ். பல்லைத்தான் உடைக்கிறது. - கோயம்பேடு என்பது ஒரு காலத்தில் திருப்பாற்கடலாக இருந்திருக்கலாம் . இன்றைய மழைக்கு சாலைகளில் இரண்டடி ஆழத் தண்ணீர் . - @ NattAnu வெ . ஆ . மூர்த்திக்கு யாருமே வசனம் எழுதமுடியாது . அவர் வாயில் வருவதுதான் விசனம் . - ரொம்ப நாளாகிவிட்டது . என்னுடைய இணையத்தளத்தில் இந்த வாரம் என்னவாவது எழுதலாமென்றிருக்கிறேன் . எழுதத் தோதுப்படவில்லையென்றால் டெம்ப்ளேட்டையாவது மாற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் . - தமிழ் சினிமா உலகிலும் இப்போது முக்கியஸ்தர்களை ஜி போட்டு அழைக்கிறார்கள் . இது இந்தி மறு திணிப்பா ? இந்துத்துவ வளர்ச்சியா ? - அண்ணா நூலகம் , அண்ணா சமாதி ஆவது பற்றி வருந்துகிறேன் . உண்மையிலேயே அது கலைஞர் அரசின் பெரிய சாதனை . - கடவுளே , இந்த @writerpayon ஏன் கவிதையாக எழுதித் தள்ளுகிறார் ? கவிதையை ஓடோமாஸாக நினைக்கிறாரா ? - பல்லவ இளவரசன் தமிழ் பேசுகிறான் . சீனாக்காரர்கள் இங்கிலீஷ் பேசுகிறார்கள் . கலைதான் என்னென்ன சாதிக்கிறது ! # பாதிகூடதருமமில்லை - ஒரு கறுப்பு தினமானது திரும்பத் திரும்ப அதே தேதியில் ரிப்பீட் ஆகுமா ? # இலக்கியசந்தேகம் - இன்று காலை 6 மணி முதலே லோ வோல்டேஜ் பிரச்னை கொல்கிறது . யாராவது ஒழிக . - இந்த தீபாவளி எனக்கு விசேஷமானது . முதல் முறையாக என் சைசுக்கு ஏற்ற ஜீன்ஸ் பேண்ட் கிடைத்திருக்கிறது . - விக்கிபீடியாவில் நன்கொடை வேண்டுகோள் பிரசுரமாகும்போதெல்லாம் நவீன இலக்கியவாதிகளின் வசதிக்குறைவு குறித்த வருத்தமே மேலோங்குகிறது . - மதுராவிலிருந்து ஸ்ரீகிருஷ்ணர் அல்வாவும் பால்பேடாவும் ஒருபிடி மண்ணும் அனுப்பியிருக்கிறார் . மூன்றாவதைத்தான் என்னசெய்வதென்று புரியவில்லை . - உள்ளாட்சித் தேர்தலில் எத்தனை சுயேச்சைகள் வெல்கிறார்கள் என்பதை வைத்துத்தான் மக்களின் தற்போதைய சுரணையை மதிப்பிட முடியும் . - பல இணைய இலக்கிய விவாதங்கள் ஆதித்யா சேனலில் வெளியிடத் தகுதி வாய்ந்தவையாக உள்ளன . - ட்விட்டரில் இலக்கணம் மற்றும் ஸ்பெல்லிங் சந்தேகம் கேட்பவர்கள் , திரும்பத் திரும்ப செய்த தவறையே செய்வதை ஒரு மரபாகக் கடைப்பிடிக்கிறார்கள் . - முன்பெல்லாம் தீபாவளி மலர்களில் சங்கராசாரியார்தான் அருள்வாக்கு தருவார். இப்போது ராமச்சந்திர குஹா. - @ mislexic சுஜாதா இலக்கியவாதிதானே ? இல்லாவிட்டால் உயிர்மையில் அவர் புத்தகங்கள் வராது . - தூக்கத்துக்குமுன் சில நிமிடங்கள் சிந்திக்கச் செய்யுமே தவிர , தூங்க விடாத படைப்பு என்று யதார்த்தத்தில் ஏதுமில்லை . - ஸ்டீவ் ஜாப்ஸுக்கு ஓர் இரங்கல் பா எழுதினேன் . @penathal மரணத்தை விட மோசம் என்று சொல்லிவிட்டபடியால் வெளியிட விரும்பவில்லை . - ராஜ் டிவியில் உன்னால் முடியும் தம்பி . ட்விட்டரர்களைப் போலவே கமல் ஓயாமல் சமூகக் கவலைப் படுகிறார் . - இந்த நள்ளிரவில் ஒருபோலிஸ்காரர் எதிர்ச்சுவரோரம் நின்று சிறுநீர் கழிக்கிறார் . பால்கனியில் நான் பார்ப்பதை அவர் அறியார் . போலீசுக்காரனென்றாலும் தமிழனல்லவா ? - சமையலறையில் பல்லி எதையோ தள்ளிவிட்டு , பெரும்சத்தம் . மனைவி உறக்கம் கலைந்தால் என்னை பல்லியாகக் கருதக்கூடிய அபாயம் இருக்கிறது . - இன்று முழுதும் அறிவுஜீவிகளால் கசாப்புறப் போகிற மகாத்மாவை நினைத்தபடி கண்விழிக்கிறேன் . நாட்டு மக்களுக்கு காந்தி ஜெயந்தி வாழ்த்துகள் . - சிஏஜர்னல் என்றொரு பத்திரிகை , கட்டுரையாளர்களுக்கு ரூ .10000 சன்மானம் தருகிறது . ஆனால் மனுஷன் படிக்கமுடியாத கட்டுரைகளாக மட்டுமே இருக்கவேண்டும் . - நண்பர் @zenofzeno வுக்கு யானியை அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறேன் . விளக்கெண்ணெய் குடித்தமாதிரி உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறார் . - கொலு தொடங்கிவிட்டது . முதல் பார்வையாளராகப் பக்கத்துவீட்டுப் பெண்மணி வந்திருக்கிறார் . ஆளைப் பார்த்தால் பாடுபவராகத் தெரியவில்லை என்பது ஆசுவாசமளிக்கிறது . - புத்தகஷெல்ப் ஒன்று கொலுப்படி ஆகியிருக்கிறது . தாற்காலிகமெனினும் பெட்டிக்குள் புத்தகங்களைப் பார்த்தால் கண்ணீர் வருகிறது . - எல்லா போலிஸ் ஸ்டேஷன் வாசல்களிலும் உடைந்த ஆட்டோக்கள் , துருப்பிடித்த பைக்குகள் குவிந்திருக்கின்றன . எதையாவது குறிப்பாலுணர்த்த விரும்புகிறார்களா ? - டிவியை ஆன்செய்தாலே எண்ணெய மாத்துங்க என்று ஆடிப்பாடுகிறார்கள் . நான் டிவியை மாற்றலாம் என்றிருக்கிறேன் . - தெரிந்தவர் ஒருவர் , என்னிடமிருந்த அனிமல் ஃபார்ம் படிக்க எடுத்துச் சென்றார் . இப்போது பன்றிக்கறி விரும்பிச் சாப்பிடுவதாகச் சொல்கிறார் . # முடிவற்ற இலக்கிய சாத்தியங்கள் - நல்ல கவிஞர்கள் ஒற்றுப்பிழையோடு எழுதுவதில்லை . நல்லவர்கள் கவிதை எழுதுவதில்லை . - நவீன கவிதைப் பரப்பு என்பது சுமாராக எத்தனை ஸ்கொயர்ஃபீட் வரும் ? http://t.co/NVYdS8Tf @marudhan 2011-09-26 - இன்று ஆதம்பாக்கத்தில் ஒரு கடையில் ஜிகிர்தண்டா சாப்பிட்டேன் . சமூகக் கோபங்களைத் தாற்காலிகமாக மறக்கப் பேருதவி புரிந்தது . - சிலபேர் சுட்டிக்காட்டும் புத்தகங்கள் யாவும் முக்காமல் எழுதப்படுவதில்லை போலிருக்கிறது . - ஆப்பிள் துண்டுகளில் லேசாக மாங்காய் தொக்கு தடவி சாப்பிட்டால் நன்றாக இருக்கிறது . - மெரினாவில் இன்று நக்மாவைப் பார்த்தேன் . சட்டென்று அடையாளம் காணமுடியாத அளவு இளைத்திருக்கிறார் . ஜோதிகாவின் தங்கைபோல் உள்ளார் . - சமூகப் பிரச்னை, இலக்கியப் பிரச்னை தவிர வேறேதும் பேசக்கூடாது என்னும் ட்விட்டரின் ஏகாதிபத்திய உணர்வை எதிர்க்கிறேன். - விஜயகாந்த் அரசியலுக்குப் போய்விட்டார் . மங்காத்தாவுக்குப் பின் அர்ஜுனும் கெட்டவராகிவிட்டார் . இனி இந்தியாவின் பாதுகாப்பு என்னாவது என்று மனைவி கவலைப்படுகிறார் . - அவ்வையார் , சரக்கடிக்கும் ஒரு புரட்சிப் பெண்கவிதான் என்னும் தகவலைப் புறநாநூற்றிலிருந்து (23 1-3) பெற்று , உறங்கச் செல்கிறேன் . - எழுத்தாளர்களுக்கு தரிசனம் தேவை என்பதால் இப்போதெல்லாம் தினமும் கோயிலுக்குச் செல்லத் தொடங்கியிருக்கிறேன் . - ஃபேஸ்புக் பக்கம் போனாலே எழு தமிழா , ஓடு தமிழா , பற தமிழா என்று மிரட்டுகிறார்கள் . மனுஷன் நிம்மதியாகத் தூங்கவேண்டாமா ? - ஏர்டெல் கஸ்டமர் கேர் செண்டர்களில் கிலோ கணக்கில் நிறுத்துத்தான் ஆள் எடுக்கிறார்கள் போலிருக்கிறது . எந்த ஜந்துவுக்கும் ஒன்றுமே தெரிவதில்லை . - அடிமைப்பெண் பார்த்துக்கொண்டிருக்கிறேன். கலைச்செல்வி ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்குக் கத்திச்சண்டை கற்றுத்தருகிறார். என்ன உணர்ச்சிமயமான காட்சி! - பாரதியாரானாலும் உள்ளதிலேயே திராபையைத் தேர்ந்தெடுத்துத்தான் பாட்டு கிளாஸ் டீச்சர்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கிறார்கள் . - சந்தோஷ் திருந்திவிட்டான் . பிரேம் திருந்திவிட்டான் . காமேஷ் திருந்திவிட்டான் . ஸ்ரீநிதி மன்னிப்பு கேட்டுவிட்டாள் . அனுபல்லவி முடியப்போகிறதா ? - இன்று கோடம்பாக்கத்திலிருந்து மேற்கு மாம்பலத்துக்கு இலக்கியப் பயணம் ஒன்று மேற்கொண்டு திரும்பினேன் . - இலக்கியவாதிகளின் சினிமா வசனங்களை பிஎச்பி கோடிங் போல் இருப்பதாகச் சொல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன் . - லைட்டிங் ஆஃப் குத்துவிளக்கு என்று ஏதாவது அழைப்பிதழில் பார்க்கும்போதெல்லாம் யாரையாவது குத்தலாம்போல் தோன்றிவிடுகிறது . - சமகால சிந்தனையாளர்கள் , தமது சொந்த தங்கநிற முடிகொண்ட குதிரைகளைப் பற்றி பேசப் பீதியுறும்போதே சாக்ரடீஸைச் சரணடைகிறார்கள் . - இன்று பெற்ற வைரம் : “ அடிக்க அடிக்க மேல எழுந்திருக்கற பொணம்டீ நான் !” # அத்திப்பூக்களில் அஞ்சலி . - ரோமானியர்கள் ஐயர்கள் என்பதில் சந்தேகமில்லை . வடமாளா பிரஹசரணமா என்பதுதான் கண்டுபிடிக்கப்படவேண்டியது : http://bit.ly/ph4clV # வாழ்கவிக்கிதமிழ் - கைக்கும் வாய்க்கும் பொருந்தாத உயர நீளங்களில் சமோசாவை வடிவமைத்தவருக்குக் கலையுணர்வு போதவில்லை . முக்கோணம் என்பது உண்பதற்கான வடிவமல்ல . - கல்குதிரை படிப்பதோடல்லாமல் , ஸ்கேன் செய்தும் வைக்குமளவு நீங்கள் தீவிரராக இருப்பீர் என்று நினைத்ததில்லை . கோணங்கி கொடுத்துவைத்தவர் . @kavi_rt - பொதுவாக , தமிழ் உணர்வாளர்கள் பேசும் , எழுதும் தமிழில் எக்கச்சக்கமான இலக்கணப்பிழைகள் உள்ளன . - இந்த ஜெயமோகனைவிட அவர் குழுமத்தில் உள்ளவர்கள் ஏராளமாக எழுதிக் குவிக்கிறார்கள் . டைஜஸ்ட் ஆப்ஷன்கூடத் தாங்கமாட்டாததாக உள்ளது . - எழுதாமல் வைத்திருக்கும் விஷயங்கள்தாம் எழுத்தாளனாகத் தொடர்ந்து உணரவைக்கின்றன . - கேலண்டர் ஒன்றுதான் எப்போதும் உண்மை பேசுகிறது . - நண்பர் @marudhan சற்றுமுன் , நான் இன்னமும் சே’வை நம்புகிறேன் என்றார் . நான் காராசேவை நம்புகிறேன் . - எனது தளத்தில் 10 நிமிஷத்துக்கு ஒருமுறை இண்டர்னல் சர்வர் எரர் வருகிறது . இது சுரேஷ் கல்மாடி வியாதி போன்றதா ? @njganesh - மனைவி , புற்றுக்குப் பால் ஊற்றப் போயிருக்கிறார் . திரும்பி வந்ததும் எனக்கு காப்பி போட்டுத் தருவார் . - பலமாக இடித்தது . ஒரு சொட்டு மழையைக் காணோம் . ஆகாயமும் அதிமுகவில் சேர்ந்துவிட்டது . - கோதுமைரவை வாங்கும்போது பேக்கிங் டேட் பார்ப்பது , மருந்துக்கு எக்ஸ்பயரி டேட் பார்ப்பதைக் காட்டிலும் அவசியம் . பூச்சி மற்றும் மனைவி வழிக்கல்வி . - பனை மரத்தின் அடியில் நின்று ஒருவன் ஏன் பால் குடிக்கவேண்டும் ? - மகளின் பள்ளியில் நேற்று பாடப்புத்தகங்கள் கொடுத்தார்கள் .2 ம் வகுப்பு தமிழ்ப்பாட நூலில் ஒவ்வொரு பக்கத்திலும் குறைந்தபட்சம் ஒரு பிழை . - இன்றைய இரவுணவு குழிப்பணியாரம் . அசப்பில் என் அப்ரிட்ஜ்டு வர்ஷன் மாதிரியே இருக்கிறது . - சன் நியூஸ் திடீர் நடுநிலை சானலானது இந்தத் தேர்தலின் மிகப்பெரிய அரசியல் - வரலாறு - புவியியல் - வேதியல் நிகழ்வு . - மலாய் பொன்மொழிகளை வரிபரப்பும் ப்ளகின் வேண்டுமா என்று வேர்ட்ப்ரஸ் கேட்கிறது . மொழிபெயர்ப்பு சாத்தியமில்லையாம் . என்ன அழுகுணி . - வருக தோழமையே , சிந்தனைகளைப் பகிர்ந்து தருக என்று ஃபேஸ்புக்கில் ஜோதிகாவை வரவேற்கிறார் ஒருவர் . அச்சுறுத்தினால் பயந்து ஓடிவிடமாட்டாரா ? - வாகை சூட வாவில் புதிய இசையமைப்பாளரின் இசை ரீங்கரிக்கிறது . அடுத்த இளையராஜா என்று சொல்லி யாரும் அவரை காலிபண்ணிவிடாதிருக்கவேண்டும் . - நல்லவர்கள் , மனத்தில் வாழ்கிறார்கள் . புரட்சியாளர்கள் கொஞ்சம் வெளியே , பனியனில் வாழ்கிறார்கள் . - மசனொபு ஃபுகோக்காவுடன் மத்தியானம் கம்பங்கூழும் கேப்பக்களியும் சாப்பிட்டேன் . - எத்தனை சுவாரசியங்களிருந்தாலும் சவக்களையுடன் எழுதுவதில் தமிழ் விக்கிபீடியாவை விஞ்ச ஆள்கிடையாது . http://bit.ly/mUZ2iy - போனஜென்மத்தில் @maamallan ராமானுஜராகப் பிறந்திருப்பாரா ? அனைத்தையும் கோபுரமேறிக் கூவுகிறார் . - சிறந்த இலக்கியங்களைப் படைப்பாளிகள் உருவாக்குகிறார்கள் . ஆகச்சிறந்த இலக்கியங்களை க்ளீஷேக்கள் உருவாக்குகின்றன . - ஏமாற்றம் எவ்வடிவிலும் வரும் . பீர்க்கங்காய்க் கூட்டை வெள்ளரிக்காய்க் கூட்டு என்று நம்பி ஏமாந்து உண்டது இன்றைய துயரம் . - சில சினிமா விமரிசனங்கள் , சினிமாக்களே பரவாயில்லை என்று நினைக்கவைத்துவிடுகின்றன . - இன்றுள்ள தனிநபர் தமிழ்த் தளங்களிலேயே பார்க்க மிக லட்சணமாக இருப்பது என்னுடையதுதான் என்பதைத் தன்னடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் . - ஒரு முறை ஒரு படத்தைப் பார்த்துவிட்டால் எத்தனையாவது முறையாகப் பார்த்ததாகவும் சொல்லி , புதிய தரிசனங்களைப் பதிவு செய்யலாம் . # சமகால சாத்தியங்கள் - எல்லா புகழ்பெற்ற திரைப்படங்களையும் இவர் லாகவமாகக் கைமா பண்ணுகிறார் - http://goo.gl/8tnGl - நட்புக் கோரிக்கை அனுப்பி , இணைந்தவர்கள் ‘நீங்கள் யார் ? என்ன செய்கிறீர்கள் ?’ என்று கேட்கிற பாரம்பரியம் ஃபேஸ்புக்கில் மட்டுமே உண்டு . - அவன் இவன் பார்த்துவிட்டேன் . என்னை நீங்கள் பாராட்டலாம் . - this blog should be printed out and put on every house in the city என்று ஒரு கமெண்ட் . கெட்ட சக்திகளை இப்படியாக இனம் காண்கிறேன் . - நடேசன் பூங்காவில் ஆர்பி சௌத்ரி வாகிங் போகிறார் . நடிக்க முடிவெடுத்தால் விஜயகுமாருக்குச் சரியான போட்டியாவார் . - எந்தக் கலைப்படைப்பும் தராத பிரமிக்கத்தக்க அனுபவங்களைச் சமயத்தில் மனிதர்கள் தந்துவிடுகிறார்கள் . சந்தேகமின்றி கலையைவிட மனிதன் பெரியவன் . - தனக்குத் தான் மிகவும் நெருக்கமில்லாத எழுத்தாளர்கள்தாம் நண்பர் ஒருவர் என்று கட்டுரையை ஆரம்பிப்பார்கள் . - இன்னும் 3 நிமிடங்களில் மின்சாரம் போய்விடும் . அதற்குள் வேலைகளை முடித்தது , யாரையோ பழிவாங்கிய திருப்தியைத் தருகிறது . - ‘ஒரு சைக்கிள் பழசாவதைப் போல மூளையும் பழசாகக் கூடும் என்பதை ஹெமிங்வே நம்ப மறுத்தார்’ - என்ன உவமை! http://bit.ly/mZYDYF - ஆறு வரிகள் கொண்ட ஒரு சராசரி பத்தியை இலக்கியப் பத்தியாக்க ஏழு சொற்கள் தேவை . அவையாவன : தேர்ந்த சிறந்த ஆகச்சிறந்த வழியாக மரபின் புனைவு தளமாக . - 2 ஜியை விஞ்சிவிட்டார் போலிருக்கிறது பத்மநாபர்ஜி . - அசப்பில் ஐபோனை நிகர்த்த , தொடுதிரை கொண்ட , தமிழில் எழுத / வாசிக்க வசதியான , எழுத்தாளர்களுக்கேற்ற விலையில் நல்ல மொபைல் உள்ளதா ? # தகவலுதவி - விடிந்த கணம் முதல் ஹலோ fm ல் விஜய் பாடல்கள் . டப்பாங்குத்துக்கு இவரளவு சேவை செய்தோர் உலகில் வேறு யாருமில்லை . - நண்பரின் குழந்தைக்கு லா , லீ , லொவில் தொடங்கும் பெயர் வேண்டுமென்றார் . லோரல் இப்சம் என்று வைக்கச் சொன்னேன் . நன்றாயில்லையாம் . ரசனையற்றவர்கள் . - தமிழ்ச்சூழலில் எனக்குப் பிடித்த மாதிரி ஒரு சிங்கிள் காலம் தீம் கிடைக்கமாட்டேனென்கிறது . - விகடனின் வியப்புக்குறி மோகம் எல்லை மீறிவிட்டது . இணையத்தளத்தில் விகடன் ! என்று போட்டிருக்கிறது . - இரவு உணவாக கருவேப்பிலை தோசையும் கொத்துமல்லி சட்னியும் . என்னதான் என் மனைவி ஜெ ரசிகை என்றாலும் இதை எதிர்க்கிறேன் . - வேர்ட்பிரஸ் சார்ந்து ஏதாவது உதவி தேவையா என நண்பர்களைக்கேட்டால் எகிறிக்குதித்து ஓடுகிறார்கள் . எழுத்தாளனாகவே இருந்துவிடலாம் போலிருக்கிறது . - தமிழக பெண்கவிஞர் ஒருவர் தமது பதிவில் இதயமே இல்லாது விதயம் விதயம் என்று திரும்பத் திரும்ப எழுதுகிறார் . அவர் மனதளவில் மன்னார் போலிருக்கிறது . - மழை. குளம். பள்ளம். சாலையில் நான் வண்டி ஓட்டிய காட்சி, எம்பேரு மீனாகுமாரி பாடலுக்கு அந்த வில்லன் நடிகர் ஆடுவதுபோல் எனக்கே தோன்றியது. - சாலையில் எங்குபார்த்தாலும் யூனிநார் யூனிநார் என்று சுவர்கள் அலறுகின்றன . இது நார்ச்சத்து மிக்க ஏதேனும் புதிய உணவுப்பொருளா ? - @marudhan க்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்நான பவுடர் வாங்கிக் கொடுத்தேன் . ‘ இன்று குளித்தேன்’ என்று சொன்னார் . கடவுளே , நேற்று வரை ? - கிரிக்கெட்டில் எனக்கு மிகவும் பிடித்தது ட்ரிங்ஸ் இண்டர்வல் . - ஊரெங்கும் மாவா கிடைத்தாலும் புரசைவாக்கம் சேட்டுக்கடை ருசி எங்குமில்லை . முன்னவீனத்துவவாதிகளுக்கு மட்டும் அவர் தனி கைப்பக்குவம் காட்டுகிறார் . - போன் செய்யும் பல இலக்கிய நண்பர்கள் சுரம் என்கிறார்கள் . கொசுக்களுக்கு நன்றி . அவை கமர்ஷியல் எழுத்தாளர்களைக் கடிப்பதில்லை . - கேத்தி ஆக்கரோ , பாஷோவோ உதவாத தருணங்களில் ஜவ்வாதுபட்டிப்புதூர் ஜவ்வை ஜட்டிடம்தான் சரணடைய வேண்டியிருக்கிறது . சிந்திக்கத்தூண்டும் எழுத்தாளர் . - முன்மாதிரிகள் தயாரிக்கப்படுவதல்ல . அவை மழைக்காளான்போல் தானே வருவது என்பது தினத்தந்தி சாணக்கியனுக்குத் தெரியும் . - விட்டால் ஒசாமா பின்லேடன் இறுதிச் சடங்குக்கு நீ ஏன் போகவில்லை என்று கேட்பார்கள் போலிருக்கிறது . - ஆடி அமர்க்களம் . வீட்டுவாசல் அம்மன் கோயிலில் நேற்று குறைந்தது பத்து பேர் சாமியாடினார்கள் . கேப்மாரிக்குள்ளே கருமாரி வருவாளா ? - ஆடி தொடங்கி முடியும்வரை திநகர் பக்கம் போவதில்லை என்று அம்மனுக்கு நேர்ந்துகொண்டிருக்கிறேன் . - கூவம் ஒரு நல்ல நீர்நிலை . பல வால்யூம் டைரிகள் எழுதிய ஆனந்த ரங்கப்பிள்ளை அதில் குளித்திருக்கிறார் . - @mayavarathaan டாஸ்மாக் என்பது நீர்நிலையில் சேர்த்தியானது . - நாக்கமுக்கவுக்கு நிகரான ஒரு பிரபல லத்தீன் வார்த்தையைக் கண்டுபிடித்தேன் . Lorem Ipsum. - நாம் எவ்வளவுக்கெவ்வளவு மொக்கை போடுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு பிரபலம் நிச்சயம் என்கிற பேருண்மையை ஃபேஸ்புக் புரியவைக்கிறது . - அறுபதாயிரம் பக்க நாவலை வாசிக்க ஆவலாயிருக்கிறேன் . எந்தப் பதிப்பகம் வெளியிடுகிறது ? # குற்றமும்தண்டனையும் - காலை 8.45 க்கு வெங்கட்ரமணா போளி ஸ்டாலில் அதிரசம் வாங்கி , நின்றபடியே சாப்பிட்டுக்கொண்டிருப்போருக்கு எவ்வளவு ஷுகர் இருக்கும் ? - நாம் நனையாதவரை , நின்று மழையை ரசிக்க முடிகிறது . ரசித்து முடித்ததால் படுக்கச் செல்கிறேன் . நல்லிரவு . - வேறு எந்த கெட்ட காரியத்தையும் இத்தனை நாள் தொடர்ந்து செய்த நினைவில்லை . ட்விட்டரில் எனக்கு இது நான்காவது வருடம் . 1 பின் குறிப்பு பரிசோதனையாகச் செய்து பார்க்கப்பட்ட புத்தகம் இது. குறைகள் ஏராளம் உள்ளன. ஒவ்வொன்றாக இனி நீக்கி சரிசெய்ய வேண்டும். விரைவில் அதனைச் செய்துவிடுவேன். பாரா