[] 1. Cover 2. Table of contents குடும்பம் ஒரு தாம்புக்கயிறு குடும்பம் ஒரு தாம்புக்கயிறு   நிர்மலா ராகவன்   nirurag@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/kudumbam_oru_thambukkayiru மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/kudumbam_oru_thambukkayiru This Book was produced using LaTeX + Pandoc முன்னுரை ‘என்ன வாழ்க்கை இது!’ என்று அலுத்துக்கொள்பவரா நீங்கள்? சிலர் மட்டும் எப்படி வெற்றிக்குமேல் வெற்றி பெறுகிறார்கள், பிறர் ஆட்டுவிக்காமல் இருக்க எப்படித் தைரியம் பெறுவது என்று பலவாறாக மனதைக் குழப்பிக்கொள்கிறவரா? துஷ்டர் என்று தெரிந்தும் தூர விலக முடியாதவரா? கவலை வேண்டாம். நீங்கள் மட்டும் தனியாக இல்லை. சமூகத்தில் பலரும் இப்படித்தான் வாழ்க்கையுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய கதைகளுடன் என் சொந்த அனுபவங்களையும் இக்கட்டுரைகளில் பதிவு செய்திருக்கிறேன். இத்தொடரைச் சிறப்பாக வெளியிட்ட வல்லமை.காம் குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றி. நிர்மலா ராகவன் மலேசியா (2019) கனவுகள் நனவாக சிலருடைய கனவுகள்தாம் நனவாகின்றன. அவர்களிடம் அப்படி என்ன சிறப்பு என்று ஆராய்ந்தால், அவர்கள் தோல்வியைக் கண்டு அஞ்சுவதில்லை என்பது புலனாகும். “தோல்வி என்பது புத்திசாலித்தனத்தை மீண்டும் முயன்று பெற ஒரு வாய்ப்பு,” என்று கூறுகிறார் அந்த அனுபவமுள்ள ஒரு புத்திசாலி. தோல்வி வர தவறுகள் மட்டும் காரணமில்லை. அது நிரந்தரமும் இல்லை. எண்ணித் துணிக கருமம் ஒரு காரியத்தை ஆரம்பிக்குமுன்னரே, ‘என்னால் முடியுமோ?’ என்ற சந்தேகம் எழுந்தால் நம்மை நாமே பலவீனப்படுத்திக்கொள்கிறோம். ‘செய்துதான் பார்ப்போமே! வெற்றி கிடைத்தால் மகிழ்ச்சி. இல்லையேல், அதிலிருந்து ஏதாவது பாடம் கற்கலாம்!’ என்ற துணிவு இருந்தால் சிறக்கலாம். விளையாட்டு வீரர்கள் ஒவ்வொரு பயந்தயத்திற்கு முன்பும், ‘இன்று என் கட்சி ஜெயிக்க முடியுமோ?’ என்று ஐயம் கொள்வது கிடையாது. உடல் வலி இருந்தாலும் அது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. தோல்வியினால் யாராவது இறந்திருக்கிறார்களா? தோல்வியைக் கண்டு அஞ்சி, எடுத்த முயற்சியைக் கைவிட்டுவிட்டு, மனச்சோர்வுடன் வாழ்வதே இறப்பிற்குச் சமானம்தான். திறமை, உழைப்பு ஆகியவைகளுடன் விடாமுயற்சியும் இருந்தால், தோல்விகூட படிப்பினை ஆகிவிடுகிறது. கர்வமே தோல்விக்கு முதல் படி எத்தனையோ வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், ‘எனக்கு நிகர் யாருமில்லை. எவரால் என்னை வெல்ல முடியும்!’ என்ற திமிரே நம்மை அடக்கிவிடும். இந்த உண்மையைப் புரிந்துவைத்திருப்பவர்கள்தாம் அடுத்தடுத்து வெற்றி பெறுகிறார்கள். வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாகவே பாவிப்பதால், எப்போதாவது தோல்வி கிடைத்தால் இவர்கள் மனமுடைந்து போய்விடுவதில்லை, வெற்றி கிடைக்கும்போது பிறரை அலட்சியமாகக் கருதுவதும் கிடையாது. ‘வெற்றிதான் கிடைத்துவிட்டதே!’ என்று மெத்தனமாக இருந்தால், தோல்வி அடையும் நாள் நெருங்கிவிட்டது என்று கொள்ளலாம். நடிப்புத் தொழிலையே கனவாகக்கொண்டு, அதில் பெரும் வெற்றியும் பெற்ற ஒரு நடிகரைக் கேட்டார்கள், “நீங்கள்தான் உலகிலேயே தலைசிறந்த நடிகர். ஒப்புக்கொள்வீர்களா?” “அப்படி நினைத்தால், அன்றே நான் இறந்துவிடுவது மேல்!” என்ற பதில் வந்தது. நீயே காரணம் வெற்றி, தோல்வி இரண்டுமே நம்மால் வருவதுதான். தான் அடைந்த தோல்விக்குப் பிறரைக் குற்றம் சாட்டுபவன் தோல்விமேல் தோல்விதான் அடைய நேரிடும். அவனுடைய எந்தக் கனவும் பலிப்பதில்லை. கதை “என் மகன் பிரதாப் நீங்கள் கற்பிக்கப்போகும் எல்லாப் பாடங்களிலும் தொண்ணூற்றுக்குமேல் மதிப்பெண்கள் வாங்குவான் என்று நீங்கள் உறுதி அளிக்க முடியுமா?” அரசாங்கத்தில் உயர்ந்த உத்தியோகத்தில் இருந்த தந்தை என்னிடம் சவால் விட்டார். “உள்ளீடு (input) இருக்கும்,” என்றேன், என்னைக் குறிப்பிட்டு. “வெளியீட்டைப்பற்றி நான் எப்படி உறுதி கூற முடியும்?” என்று நான் எதிர்க்கேள்வி கேட்டபோது, "அவன் என் மகன்! அதே ஜீன்ஸ்!’ என்று பெருமையாகப் பேசினார். அவர் நம்பிக்கை பொய்த்தது. தந்தையின் சிபாரிசில் நம்பிக்கை வைத்து, அவன் படிப்பில் அக்கறை காட்டவில்லை. ஏன் ஏமாற்றம்? உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றபின் தம் கடந்தகால வாழ்க்கையின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும்போது, சில ஆண்களுக்குப் நிறைவைவிட ஏமாற்றமே அதிகமாக இருப்பதைக் காணலாம். நடிகர் ஜாக்கி சான் தன் சுயசரிதையில், ‘நான் ஒரு தந்தையாகத் தோல்வி அடைந்துவிட்டேன்!’ என்று புலம்பி இருக்கிறார். ஏதாவது குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் சிறுபிள்ளை தந்தையிடம் வந்தபோது, அவருக்கு அவகாசமோ, ‘என்ன பிரச்னை?’ என்று கேட்கும் பொறுமையோ இருந்திருக்காது. சிலர் வன்முறையைப் பிரயோகித்திருப்பார்கள். (நாள் தவறாது அடித்தால்தான் ஆண்பிள்ளை உருப்படுவான் என்று எண்ணும் பெற்றோர் அச்செய்கையால் அவர்கள் கெட்டுப்போக வழிவகுக்கிறோம், அல்லது தம்மைவிட்டு விலகிப்போகிறார்கள் என்பதை உணர்வதில்லை). நாளடைவில், தம் அச்சங்களையும் குழப்பங்களையும் பெற்றோருடன் பகிர்ந்துகொள்ள பிள்ளைகள் முன்வர மாட்டார்கள். அவ்வளவு அவநம்பிக்கை! அவர்களைப்போன்றே குழப்பத்தில் இருக்கும் நண்பர்களை நாடுவது இயற்கை. அப்பிள்ளைகள் தவறான பாதையில் பயணிக்கும்போது, காலங்கடந்து, ‘நாம் எங்கு தவறிழைத்தோம்?’ என்று எண்ணம் போகிறது பெற்றோருக்கு. அவர்களைப்போல் இல்லாத வெகுசில நண்பர்களின் பிள்ளைகள் நல்ல நிலைக்கு உயர்ந்திருப்பதைக் கண்டு ஆற்றாமை ஏற்படுகிறது. பிறரது வெற்றி உன் தோல்வியல்ல கதை 1 கணவன், குழந்தைகள் என்று மகிழ்ச்சியாக இருப்பவர்களைப் பார்த்து, என் கானடாநாட்டுத் தோழி ஏஞ்சலா ஆழ்ந்த வருத்தம் கொண்டிருந்தாள். ஏனெனில், அவள் விவாகரத்து ஆனவள். தன் மனநிலையை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள விரும்பாது, அவளது நிலைமையிலிருந்த இன்னொருத்தியைப்பற்றிப் பேசினாள்: “மேரி, பாவம். இல்லை? அவளைவிட இன்னொரு பெண்தான் உயர்த்தி என்று அவள் கணவன் போய்விட்டானே! மேரியின் மனம் எவ்வளவு நொந்துபோயிருக்கும்!” மேரி இளம்பெண். அழகாக இருந்தாள். நாட்டியம் போதிப்பவள். (கண்ணையும் கழுத்தையும் எப்படி அசைப்பது என்று ஆர்வத்துடன் என்னிடம் கேட்டுக் கற்றுக்கொண்டாள்). நான் பழகியவரை நல்லவளாகத்தான் தெரிந்தாள். “இவளுடைய அருமை புரியாதவன் மடையன் என்று விட்டுத்தள்ள வேண்டியதுதான்!” என்று நான் பதிலளித்தபோது, ஏஞ்சலா தன்னைப்பற்றித்தான் கேட்டாள் என்பது எனக்குப் புரியவில்லை. இன்னொரு முறை, “வீட்டில் ஆண் ஒருவர் இருந்தால், எல்லா வேலையும் நானே செய்ய வேண்டியிருக்காதே!” என்று தன்னைப் பார்த்துப் பரிதாபப்பட்டாள். “Relaionships have their own problems!” என்றேன் பெருமூச்சுடன். எந்த நெருக்கமான உறவில்தான் பிரச்னைகள் இல்லை? ஏஞ்சலா, மேரி இருவருமே தத்தம் கணவன்மார்களைவிட உயர்ந்த நிலையில் இருந்தார்கள். அதைப் பொறுக்க முடியாது, என்றுமே தம்மை மிஞ்ச முடியாத பெண்ணாகப் பார்த்துத் தேடிப்போயிருக்கிறார்கள் அந்த ஆண்கள். விளைவு: விவாகரத்து. திருமணம் செய்துகொள்ளும்போது எல்லாருமே இன்பக்கனவுகளுடன்தான் இல்லறத்தில் காலை வைக்கிறார்கள். நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா? மணமுறிவு தோல்வியல்ல. ஒரு பகுதி முடிய, புதியதொரு வாழ்க்கையின் தொடக்கம் என்று எடுத்துக்கொண்டால்தான் மனம் நிம்மதி அடையும். கதை 2 ஒரு நாட்டிய வகுப்பில் சில ஆண்டுகளே பயிற்சி பெற்ற பெண்கள் இருவர் உயர்கல்விக்கென தாற்காலிகமாக விலகிப்போனார்கள். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்தபோது, முன்பு சிறுமிகளாக இருந்தவர்கள் நாட்டியத்தில் இப்போது தம்மைவிட மிகச் சிறந்துவிட்டதைக் கண்டு ஆயாசம் ஏற்பட்டது. வருத்தம் மிக, வகுப்பிலிருந்து நின்றுகொண்டார்கள். சில காலம் கடுமையாக முயன்றிருந்தால், மீண்டும் நன்கு ஆட முடிந்திருக்கும். ஆனால், பிறருடன் தம்மை ஒப்பிட்டுக்கொண்டு, தாம் தோல்வியுற்றதாக அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டார்கள். தோல்வியையும் குறித்து வை தோல்வி அடைந்துவிட்டவர்களை ‘முட்டாள்,’ ‘பிழைக்கத் தெரியாதவன்!’ என்றெல்லாம் ஏளனமாகக் கருதுபவர்கள்தாமே இவ்வுலகில் அதிகம்! அதனாலோ என்னவோ, வெற்றி பெற்ற பலர் தம் தோல்விகளைக் குறித்துவைப்பது கிடையாது. கனவு ஒரு பக்கமிருந்தாலும், மிகுந்த பிரயாசைக்குப்பின் கிடைக்கும் வெற்றியே இனிமையானது. கதை 1897-இல் பிறந்த எமிலியா இயர்ஹார்ட் (Amelia Earhart) உலகிலேயே தன்னந்தனியாக விமானத்தை ஓட்டிய முதல் அமெரிக்கப் பெண்மணி. தான் செய்துவந்தது அபாயகரமானது என்று புரிந்தும் அயராது, வெற்றி பெறும் திறமை தனக்கிருக்கிறது என்ற துணிவுடன் ஈடுபட்டார். கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டதன் பலனாக பல வாகைகள் சூடினார். முதன் முறையாக அட்லாண்டிக் சமுத்திரத்தைக் கடந்தவர் என்ற பெருமைக்குரியவர் எமிலியா. இறுதியில், ஒரு விமானத்தை ஓட்டிப்போகும்போது மரணத்தைத் தழுவினார். அதை யாரும் குறைவாகச் சொல்வதில்லை. அவரது சாதனைகள்தாம் நிலைத்து நிற்கின்றன. தோல்வி அடையாதவர் யார்? கல்விக்கூடங்களில் பயில்கிறவர்கள் அனைவருமே சிறந்த தேர்ச்சி பெறுகிறார்களா? அவர்களது நாட்டம் வேறு திசையில் இருக்கலாம். பாடுவதிலோ, ஆடுவதிலோ, சித்திரம் வரைவதிலோ நாட்டம் கொண்ட ஆண்குழந்தைகளை பல பெற்றோர் ஏற்காது கடுமையாகத் தண்டிப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை, கல்லூரியில் படித்து, பெரிய உத்தியோகத்திற்குப் போனால்தான் சமூகத்தில் மதிப்பு. பெற்றோரின் கணிப்பை ஏற்று, ‘எனக்கு எல்லாவற்றிலும் தோல்விதான்!’ என்று பிள்ளைகள் தம்மைத்தாமே மட்டமாக எண்ணி, குன்றிப்போவார்கள். தமக்கு வேறு துறைகளில் திறமை இருப்பது அவர்களுக்கே தெரிந்திருந்தாலும், அதை வெளிக்காட்ட வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. கனவுகள் கனவாகவே ஆகிவிடும் கொடுமை இதனால்தான். அவரவருக்குப் பிடித்த துறையில் ஊக்கம் காட்டியிருந்தால், அதில் முழுமனதுடன் ஈடுபட்டு, பெரும் வெற்றி கண்டிருப்பார்களே! குணத்திற்கேற்ற வேலை ஒருவர் தாம் அடைந்த சிறப்புகளைப்பற்றிப் பேசினால், ‘தற்பெருமை!’ என்று முகத்தைச் சுளிப்பார்கள். அதனால், தம் குறைகளை வெளிப்படுத்திக்கொள்வதே அடக்கத்தின் அடையாளம் என்று சிலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். பேட்டியின்போது, ‘எனக்குப் பொறுமையே கிடையாது!’ என்று பெருமையாக அலுத்துக்கொள்பவர் பாலர் பள்ளிக்கோ, பள்ளிக்கூடங்களுக்கோ ஆசிரியராக முடியுமா? ‘உங்கள் பலவீனம் என்ன?’ என்று கேட்கப்படும்போது, ‘அப்படி எதுவும் கிடையாது!’ என்பது இன்னொரு ரகம். யாராவது நம்புவார்களா, என்ன! முதலில் அவ்வேலையை எந்த விதத்திலும் பாதிக்காத பலவீனங்களை கோடிகாட்டிவிட்டு, பிறகு நம் நல்ல தன்மைகளை எடுத்துச் சொல்லலாம். சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி உண்மையைச் சொல்லலாம் என்றாலும், நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியாது என்பது வேண்டாமே! ஆக்ககரமாக ஏதாவது இருக்காதா, என்ன! ‘என்னை நம்பி ஒரு வேலையைக் கொடுத்தால், எப்பாடுபட்டாவது அதை நானே முடித்துவிடுவேன்,’ என்பவர் பிறருக்கும் அவ்வேலையைப் பகிர்ந்து கொடுக்க முடியாத குணத்தை, தம்மையும் அறியாது ஒத்துக்கொள்கிறார். அப்படியானால், பிறரது கூட்டணியில் இணைந்து வேலை செய்ய எப்படி முடியும்? மற்றவருடன் இணைந்து செய்யும் ஒரு காரியம் வெற்றி அடையும்போது, ‘நான்தான் செய்தேன்!’ என்று புகழைத் தட்டிக்கொண்டுபோகப் பார்ப்பவர்களைப்பற்றி என்ன கூறுவது! தலைமைப் பதவியில் இருந்தபோது, தன்கீழ் இருப்பவர்களின் முயற்சியைப் பாராட்டாது, தானே முனைந்து செய்ததுபோல் பாசாங்கு செய்தவரின் கதை இதோ! கதை என் தலைமை ஆசிரியையாக இருந்த திருமதி ராஜன் தன் கீழ் இருப்பவர்கள் – அவர்கள் ஆசிரியர்களோ, அல்லது மாணவியரோ – தவறே செய்யக்கூடாது என்று உறுதியாக நம்பியவள். அவளுடைய வசவுகளைப் பொறுக்க முடியாது தினமும் யாராவது ஒருவர் அழுதுகொண்டிருப்பார். புதிது புதிதாக விதிகள் வகுத்துக்கொண்டே இருப்பாள். ‘பைத்தியம் பிடித்துவிடும்போல் இருக்கிறது!’ என்று மூத்த ஆசிரியை ஒருவர் பொதுக்கூட்டத்தில் கூற, எல்லாரும், ‘நாம் மட்டும் தனியாக இல்லை!’ என்ற நிம்மதியுடன் சிரித்தோம். பள்ளி ஆண்டுவிழாவிற்கு நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சீன நடனம் ஆடுகையில் இரு மாணவிகள் அடிக்கடி காலைத் தூக்கவேண்டியிருந்தது. அப்போதெல்லாம், நிதானமின்றி அவர்கள் உடல் தளர்ந்து ஆடியது. எல்லாவித நாட்டிய நிகழ்ச்சிகளும் என் பொறுப்பில் இருந்ததால், ஒரு வழி கூறினேன்: “உடல் நேராக இருக்கவேண்டும். மூச்சை உள்ளுக்கு இழுத்துக்கொண்டு, அதே சமயம் ஒரு காலைத் தரையில் ஓங்கித் தட்டி, மூச்சை வெளிவிடாது இன்னொரு காலைத் தூக்குங்கள்!” நிகழ்ச்சியின்போது வந்திருந்த பிரமுகர், ’Such perfect balance!" என்று பாராட்டினார், பக்கத்தில் அமர்ந்திருந்த தலைமை ஆசிரியையிடம். ஏதோ தான்தான் அவர்களை பழக்குவித்ததைப்போல், பெருமையுடன் அவரது புகழ்ச்சியை ஏற்றுக்கொண்டு சிரித்தாள் அவள். அவளுக்கு முன்பு இருந்த தலைமை ஆசிரியை, ‘எங்கள் நல்ல காலம், சிறந்த ஆசிரியை அமைந்திருக்கிறார்!’ என்று என் பெயரை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னாள். மேலும் கடுமையாக உழைக்க எனக்கு உற்சாகம் பிறந்தது. (மாணவ மாணவியரின் பெற்றோருக்கும் தொடர்ச்சியாக அறிவுரை கூறியிருக்கிறேன் – அவர்கள் பிள்ளைகளை வளர்க்கவேண்டிய முறை சம்பந்தமாக). எங்களில் பத்து சதவிகிதத்தினர்தான் எப்பாடுபட்டாவது நம்மை நம்பி வந்திருக்கும் மாணவிகளை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும் என்று முனைந்திருந்தோம். ‘பாடம் போதிப்பதுடன் என் கடமை முடிந்துவிட்டது. நான் வாங்கும் சம்பளத்திற்கு இவ்வளவுதான் செய்ய முடியும்!’ என்று ஒதுங்கும் ஆசிரியர்களே மிகுந்து இருந்தார்கள். கதை அரசாங்கம் அளித்த சலுகையால் அயல்நாட்டிற்குப் போய் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வந்தவள் அஸ்லீனா. (பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவளாததால் கிடைத்தது அது என்று உணரும் அளவுக்கு அவளுக்கு விவேகம் இருக்கவில்லை). பிற ஆசிரியைகளைவிட தான் உயர்த்தி என்பதுபோல் அலட்டிக்கொண்டாள். பெரிய பதவி என்றால் எதுவும் செய்யாது, சுவற்றை வெறித்துக்கொண்டிருப்பதுதான் என்று நினைத்தவர்களில் அவளும் ஒருத்தி. ஒரு முறை, “நீங்கள் எதுவும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருக்கிறீர்களே! என் பரீட்சைத்தாளைத் திருத்துவதுதானே!” என்று, அதிகாரமாக ஒரு கட்டை என்முன் போட்டாள். என்ன திமிர்! அடுத்தடுத்து நான்கு வகுப்புகளில் போதித்தபின் நான் சற்று ஓய்வாக இருந்தது அவள் கண்களை உறுத்தியிருக்க வேண்டும். மிக மிக நிதானமாக, “நான் எதுவும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருக்கிறேன். ஏனெனில், என் வேலையை வீட்டிலேயே செய்து முடித்துவிட்டேன். நீயும் உனக்கான வேலையைச் செய் (I suggest you do your own work!)” என்றேன். என் கண்டிப்பான பதிலை சற்றும் எதிர்பாராத அவள் அடுத்து என்ன செய்வது என்று புரியாது, என்னையே பார்த்தபடி நின்றாள். “Anything else?” என்று தலையை நிமிர்த்தி மிரட்டலாக நான் கேட்க, விரைந்தோடினாள். இம்மாதிரியாக, ‘இன்னும் என்ன?’ என்று கேட்பது, ‘உரையாடல் முடிந்துவிட்டது, நீ தொலை!’ என்பதற்கு ஒரு வழி. எங்கோ படித்தது. நம்மை துச்சமாக நினைப்பவர்களை விரட்ட நல்ல உபாயம். தான் மேலானவள் என்று அஸ்லீனா கருதினாலும், ஒருக்காலும் தலைமைப் பதவிக்கோ, வேறு பொறுப்பான பதவிக்கோ உயரமாட்டாள். ஏனெனில் தன் வேலையைக்கூடச் செய்யப் பிடிக்காத சோம்பேறி அவள். குறித்த காலவரைக்குள் தன் வேலையைச் செய்து முடிக்கும் கட்டொழுங்கும் கிடையாது. தன்னையொத்த பிறரை மதிக்கவும் தெரியவில்லை. அப்படியானால், அவளுக்குக்கீழ் இருப்பவர்களை எப்படி நடத்துவாள்? ஏன் அரைகுறை? ‘முடியாது!’ என்று சொன்னால் பிறருக்கு நம்மைப் பிடிக்காமல் போய்விடுமே!’ என்று அஞ்சுபவர்கள் ஒரே சமயத்தில் பல வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார்கள். எல்லாமே அரைகுறைதான். வேலைப்பளுவால் மன இறுக்கம் அதிகரிக்க, பலருக்கும் பிள்ளைப்பேறு கிட்டாமல் இருக்கிறது என்று ஒரு மருத்துவர் என்னிடம் கூறினார். நிறைய வேலை காத்திருக்கிறதா? எது முக்கியம் என்று எழுதி வைத்துக்கொண்டு, மிக அவசியமானதிலிருந்து ஆரம்பிக்க வேண்டியதுதான். பொழுதுபோக்கிற்காகச் செலவழிக்கும் நேரத்தைக் குறைத்தலும் நல்ல வழக்கம். காத்திருக்கும் வேலைகளை முடிக்க முடியுமே! மேலதிகாரி தாக்கினால், அது அவருடைய குறைபாடு என்று எடுத்துக்கொள்ள வேண்டும். நிம்மதி பறிபோகாது. ஐயோ பாவம்! பலருடன் சேர்ந்து வேலை பார்க்குமிடத்தில் ஒரு சிலர் தம் கஷ்டங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். அவைகளை நாமே அனுபவித்ததுபோல் துயரடைந்தால் அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கலாம். ஆனால் நம் மன அமைதி கெடும். இத்தகைய உணர்திறன் (sensitivity) அநாவசியம். எவ்வகையிலாவது உதவ முடிந்தால் போதுமே! அதுவும் முடியவில்லையா? சும்மா கேட்டுவிட்டுப் போகவேண்டியதுதான். வீடா, வேலையா? வேலை நேரத்தில் வீட்டு நினைவே இருந்தாலும் வேலையில் சுணக்கம் ஏற்படாதா! இதற்குத்தான் ‘நிகழ்காலத்தில் இரு!’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். எந்தச் செயலில் ஈடுபடும் முன்னரும், அதிலிருக்கக்கூடிய நன்மை தீமைகளைத் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். தீவிரமான விளையாட்டா? உடலின் பல பாகங்களில் பலத்த அடி படலாம். சில நாட்களோ, மாதங்களோ வலியைத் தாங்க வேண்டிய துணிவு வேண்டும். உடல்நிலை சரியாகி, மீண்டும் அதே விளையாட்டில் ஈடுபட ஆயத்தமாகும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனி. குணத்திற்கேற்ற உத்தியோகமோ அல்லது பொழுதுபோக்கோ அமைந்தால் வாழ்க்கை இனிக்கும். சலிப்பு ஏன் அண்டுகிறது! குறையொன்றும் இல்லை ‘நம்மைப் பிறரால்தான் புரிந்துகொள்ள முடியவில்லை. நாமாவது புரிந்துகொள்ளப் பார்ப்போமே!’ திருமணத்திற்குப்பின் எனக்கு இந்த ஞானோதயம் பிறந்தது. உளவியல் அறிஞர்கள் வகுத்திருந்த கேள்விகளுக்குப் பதில் எழுதி, நானே என்னைப் பரீட்சித்துக்கொண்டேன். விடைகள் எனக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஒருங்கே அளித்தன. பின்னே? ‘முதிர்ச்சி இல்லாதவர் நீங்கள்!’ என்று வந்திருந்தால்? எனக்கு ஆத்திரம் வரவில்லை. அயர்ச்சியாக இருந்தது. எனது ஒவ்வொரு எதிர்மறையான பதிலையும் மாற்றும் நடத்தையை முயன்று பயின்றேன். ‘You are very sane!’ என்று சிலர் வியக்க, அப்பயிற்சிகளை எடுத்துக்கொண்டதை ஒத்துக்கொண்டேன். ‘உன்னிடம் குறைகள் இருப்பதை நீ ஒத்துக்கொண்டதே உனது நேர்மையைக் காட்டுகிறது!’ என்று ஒரு கவுன்சிலர் பாராட்டினார். நகைச்சுவை அற்ற பெண்கள் ‘பெண்கள் தம்மைத்தாமே பார்த்துச் சிரிக்கமாட்டார்கள். அதனால்தான் வெகு சிலரே நகைச்சுவை நடிகைகளாக இருக்கிறார்கள்!’ என்று அமெரிக்க நடிகைகளைப்பற்றி ஒரு விமர்சகர் எழுதியிருந்தார். அதையே சவாலாக ஏற்று, அதைப் பொய்ப்பிக்கும் முயற்சியிலும் இறங்கினேன். நம்மை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கும் நிகழ்ச்சிகளை பிறருக்குத் தெரியாதிருக்க மறைப்பானேன்! அவர்களுக்கு மட்டும் அப்படி எதுவும் நிகழ்ந்திருக்காதா, என்ன! கதை நான் இடைநிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, தையலும் ஒரு பாடமாக இருந்தது. எங்களுக்குப் பிடித்த தருணங்கள் அவை. ஏனெனில், நாங்கள்பாட்டில் அரட்டை அடித்துக்கொண்டிருப்போம். ஆசிரியை மிஸஸ் ஜோன் வகுப்புக்கு வந்ததுடன் சரி. எதையும் கற்றுக்கொடுக்கவில்லை. முழுப்பரீட்சைக்கு வகுப்பினுள், ஆசிரியை கண்ணெதிரே, ஒரு சட்டை தைக்க வேண்டும் என்று அறிவித்தார் மிஸஸ் ஜோன். பெருமையாக, ஒரு கஜம் வெள்ளைத்துணியை எடுத்துப்போனேன். துணியைப் பாதியாக மடித்து, கைக்கு வேண்டியதை வெட்டினால் ஒரே மாதிரி இருக்கும். இது புரியாது, நான் ஒன்று மாற்றி ஒன்று வெட்ட, பூனை ரொட்டியைப் பங்கிட்டக் கதையாக ஆயிற்று. ஒரு கை இன்னொன்றைவிட மிகச்சிறியதாக ஆயிற்று! எப்போதும்போல், “வீட்டில் தைத்துக்கொண்டு வாருங்கள்!” என்று ஆசிரியை பணித்திருக்கக் கூடாதா! அம்மாவிடம் கெஞ்சி, தைத்து வாங்கிக்கொண்டு போயிருப்பேனே! (அப்படிச் செய்தபோதும் நல்ல மதிப்பெண்களே கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம்). என் தோழி வீட்டுக்குப் போயிருந்தபோது, அவளுடைய சித்திமார்கள், “இது என்ன, உங்கள் தையல் ஆசிரியை இவ்வளவு மோசமாக இருக்கிறாள்! நாங்கள் எவ்வளவு அழகாக துணியில் பூவேலை செய்துகொடுத்தாலும், நூற்றுக்கு நாற்பதுதான் கொடுக்கிறாள்!” என்று கோபமாகக் கேட்டார்கள். என் சிநேகிதி, ‘அதையெல்லாம் சொல்லாதீர்கள்!’ என்று பதைப்புடன் சமிக்ஞை செய்ததை அவர்கள் பொருட்படுத்தவேயில்லை. நான் அவளிடம் தனிமையில் கூறினேன், “எதற்கு அவ்வளவு பயப்பட்டாய்? எனக்குப் போட்டுக்கொடுப்பதும் என் அம்மாதான்!” என் தாயார் தையல் வேலைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்தியாவில், தேசிய ரீதியில் பரிசு வாங்கியவர். இருந்தாலும், ஆசிரியை மிஸஸ் ஜோனுக்கு எங்கள் லட்சணம் தெரியாதா! அதனால்தான், தானே முயன்று, சற்றுக் கோணல்மாணலாக தைத்த மாணவிக்கு எங்களைவிட மிக அதிகமான மதிப்பெண்கள்! இக்கதையை நான் விவரிக்கையில், என் குடும்பத்தினர் சிரிப்பார்கள். (வாசகரே, நீங்கள் சிரித்தீர்களா, இல்லை, ‘வெட்கமில்லாமல் இதையெல்லாம் சொல்கிறாளே!’ என்று நினைத்தீர்களா?) பள்ளி இறுதியாண்டுக்குப்பின் துணியில் பூவேலைப்பாடு செய்வதை அம்மாவிடமே கற்றுத் தேர்ந்தேன். பலத்துடன் பலவீனமும் உண்டு நம் பலம், பலவீனம் இரண்டையும் ஒத்துக்கொண்டால், அதற்கு ஏற்றபடி நடக்க முடியும். நம் உணர்ச்சிகள் எதனால் எழுகின்றன என்று புரிந்தால், நம்மை நாமே புரிந்துகொள்ள முடியும். உண்மையை ஒத்துக்கொள்ளும் மனோபலம் சிலருக்கு (பலருக்கு?) இருப்பதில்லை. இப்படிப்பட்டவர்களுக்குப் பொதுவான சில குணங்கள் உண்டு. உண்மையை மறுத்தால் அவர்களுக்கு நிம்மதி கிடைக்கும். தம்மைப்பற்றிய குறைகளை நினைப்பதற்கே அஞ்சுவதால் இப்படி ஆகிவிடுகிறது. அவர்களுடைய குறை என்று நினைக்கும் எதையாவது இன்னொருவர் சுட்டிக்காட்டும்போது, அதைப் பொறுக்காது, பேச்சை மாற்றுவார்கள்; அந்த இடத்தைவிட்டு நழுவுவார்கள், இல்லை, சண்டை பிடிப்பார்கள். (‘நீ மட்டும் தவறே செய்வதில்லையோ?’). உன்னால் நான் கெட்டேன் ஒரு சிலர், ‘அவனால்தான் நான் இப்படி ஆகிவிட்டேன்!’ என்று எவர்மேலாவது பழி போடுவார்கள். இது சிறுபிள்ளைத்தனம். சிறுகுழந்தைகள்தாம், அம்மாவின் முத்துமாலையை அறுப்பது, குங்குமத்தைக் கொட்டுவது என்று ஏதாவது விஷமம் செய்துவிட்டு, அண்ணன் அல்லது அக்காள்தான் செய்தார்கள் என்று சாதிக்கும். அவர்கள் அப்போது வீட்டிலேயே இருந்திருக்க மாட்டார்கள்! குடும்பத்தில் அதிகாரம் கூட்டுக்குடும்பங்களில் அனைத்து அதிகாரமும் யாராவது ஒருவர் கையில்தான் இருக்கும். இருக்கவேண்டும். நாடு என்று ஒன்று இருந்தால், எல்லா மக்களும் தம் விருப்பப்படி நடந்தால் என்ன ஆகும்? அதைச் செவ்வனே நிர்வகிக்கத்தான் தலைவர்கள் இருக்கிறார்கள். (அவர்கள் அப்படி நடக்கிறார்களா என்பது வேறு விஷயம்). அதேபோல்தான் குடும்பமும். அக்குடையின் கீழிருக்கும் ஒவ்வொருவரும் மனம்போனபடி நடக்க முடியுமா? அப்படிப்பட்ட குடும்பங்களில் ஒற்றுமையும் இருக்காது. தம் திறமையை எவரும் பூரணமாகப் பயன்படுத்தவும் முடியாது. குடும்பத்தலைவி பலருடைய நலனையும் மனதில் கொண்டு, அன்பும் கண்டிப்புமாக அவரவர் குணத்திற்கும் தேவைகளுக்கும் ஏற்றபடி விதிமுறைகளை அமைத்து, குடும்பத்தை நல்லபடியாக நடத்திக்கொண்டு போனால் அனைவரும் பயனடைவார்கள். அப்படிப்பட்டவருக்கு குடும்பத்தினரின் மரியாதையும் மதிப்பும் கிடைப்பதில் ஆச்சரியம் என்ன? பிறரது தன்மை, தேவை எல்லாவற்றையும் புரிந்துகொள்ளும் உணர்திறன் பெண்களுக்கு இயல்பாகவே அமைந்திருக்கிறது. எதை, எப்படி, எந்த தருணத்தில் கூறுவது என்று முதலிலேயே யோசித்துவைப்பார்கள். இப்போக்கினால் பிறர் மனம் நோகாது. சிலர், ‘நான் சொல்கிறபடி கேளுங்கள்!’ என்று அதிகாரம் செலுத்த முனையலாம். பயந்தோ, அல்லது மரியாதை கருதியோ அப்படி நடந்தால், யார்தான் சுயமாகச் சிந்திக்க முடியும்? (அதிகாரமாக நடக்கும் ஆசிரியர்களும் இதே தவற்றைச் செய்துவிட்டு, ‘இக்காலத்து மாணவர்களுக்கு அறிவுத்திறன், மரியாதை எல்லாம் குறைவு!’ என்ற முடிவுக்கு வருகிறார்கள்). சிறுவர்கள் அவர்கள் வயதுக்கு ஏற்றபடிதான் எந்தக் காரியத்தையும் செய்வார்கள். ஓயாது நச்சரிக்காமல், அவர்கள் போக்கில் விட்டால் அவர்கள் தன்னம்பிக்கை தகர்க்கப்படாது. மரியாதை குன்றாது நடப்பார்கள். புகழ் மட்டும்தான் வேண்டுமா! ‘நீ நல்ல அம்மா!’ என்று மனமகிழ்ந்து பாராட்டும் சிறுமி, ‘நீ எப்பவும் திட்டறே! பிடிக்கலே!’ என்று வேறோரு சமயம் கூறுகிறாளா? புகழ்ச்சியைக் கேட்க உவப்பாக இருக்கும். அதேபோல், கண்டனத்தையும் கேட்டு, அதில் உண்மை இருக்கிறதா என்று ஆராய்ந்தால், அதை எப்படித் திருத்திக்கொள்ளலாம் என்று யோசிக்கலாம். ‘எனக்குப் பொறுமையே கிடையாது. அதற்கு என்ன செய்வது!’ என்று சமாளிக்க முயல்வதால் என்ன பயன்? நம் குறைகளை உணர்ந்து, கூடியவரை அவற்றை மாற்ற முயற்சி செய்யவேண்டாமா? அப்படிச் செய்தால் – பிறரை விடுங்கள், நமக்கே பெரும் உதவி செய்துகொள்வதுபோல் ஆகுமே! நேர்மைக்கும் உண்டு எல்லை ‘உங்களுக்குப்பிறகு உங்கள் குழந்தைகளுக்கு என்ன விட்டுப்போகப் போகிறீர்கள்?’ ‘வங்கியில் கோடிக்கணக்கான பணம், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல பங்களாக்கள், இன்னும்..!’ பெருமை பேசுகிறார். நமக்குள் ஒரு கேள்வி எழுகிறது. நேர்மை, உண்மை போன்ற குணங்களையும் இவர் தன் பிள்ளைகளுக்கு அளித்திருப்பாரா? தந்தை நம் அறியாத்தனத்தைக் கண்டு சிரிக்கிறார். ‘நேர்மையாக இருந்தால் இவ்வளவு சொத்து சேர்க்க முடியுமா?’ அவரே மாட்டிக்கொண்டு, ‘எப்போது சிறைச்சாலையில் குற்றவாளிகளோடு குற்றவாளியாகத் என்னைத் தள்ளிவிடுவார்களோ!’ என்று அஞ்சும்போதும், ‘வேண்டாதவர்கள் என்மேல் பழி சுமத்துகிறார்கள்!’ என்றெல்லாம் (பொய்யென்று தெரிந்தே) வாதாடுகிறார். நேர்மையின் பலன் நேர்மை என்பது கபடமற்ற தன்மையையும், உண்மையை வெளிப்படையாகப் பேசுவதையும் குறிக்கிறது. உண்மை பேசிவந்தால், எப்போது என்ன சொன்னோம் என்று ஞாபகம் வைத்துக்கொண்டிருக்கவேண்டிய தொல்லை கிடையாது. எதையும் மறைக்கவேண்டிய அவசியம் இல்லாததால் ஒருவித சுதந்திர உணர்வும் உண்டாகும். தம் குறைநிறைகளுடன் தம்மையே ஏற்க, நேர்மையானவர்கள் பிறரால் பாதிக்கப்படுவதில்லை. ‘இவரை நம்பலாம்!’ என்ற நம்பிக்கை எழுவதால் தரமான நண்பர்கள் வாய்ப்பார்கள். இவர்கள் எவருக்கும் அஞ்சவேண்டியதில்லை. பிறர்தான் பயப்படுவார்கள் – தமது பொய்யான வாழ்க்கையைக் கேலி செய்கிறார்களோ என்று. இருப்பினும், சிலர் பிறரது மதிப்பைப் பெற பலரும் கொஞ்சமாவது பொய்யுரைக்கிறார்கள். கதை மலேசிய கல்வி திட்டப்படி, எட்டாவது படிவ அரசாங்கப் பரீட்சையில் மொத்தம் எட்டு பாடங்கள் இருந்தன. முடிவு வந்ததும், என் சக ஆசிரியை மிஸஸ் ஃபூங் (Foong) தன் மகள் ஜென்னி ஏழு பாடங்களில் மிகச் சிறப்பான ‘ஏ’ வாங்கியிருப்பதாகப் பெருமையுடன் அறிவித்தாள். அவள் மறந்தது: அதே பள்ளியில் என் மகளும் அப்பெண்ணுடன் இணைந்து படித்தாள் என்பது. குட்டு வெளிப்பட்டது. மிஸஸ் ஃபூங் இல்லாதபோது, எல்லாரும் சிரித்தார்கள். ஒருத்தி, "போனால் போகிறாள்! அவள் ஒரு அம்மா! நமக்குப் புரியாதா!’ என்றாள் கேலியுடன். எவரும் அவளிடம் மேற்கொண்டு எதையும் விசாரிக்கவில்லை. அதன்பின், அவள் எது சொன்னாலும் நம்பத் தயாராகவும் இல்லை. அப்போது அடைந்த அவமானத்தில், ‘நீ ஏன் மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெறவில்லை?’ என்று ஜென்னியை வாட்டி வருத்தியிருப்பாளோ? எதனாலோ, அப்பெண்ணின் மனநிலை குன்றி, பதினாறாவது வயதில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அவளுடைய கவுன்சிலர் மிஸஸ் ஹோ (Ho), “பெற்றோரது கடுமையான எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியாது, அந்த ‘வார்டு’ பூராவும் சீனப்பெண்கள்தாம்!” என்றாள் கசப்புடன். “இந்தப் பெண்ணோ, வாயே திறக்கமாட்டேன் என்கிறாள்!” என் மகள் தன் சிநேகிதியைப்பற்றி உத்தேசமாகக் கூறியது: “ஜென்னி நல்ல பெண். மிக நேர்மையானவள். இப்படிப்பட்ட கீழ்த்தரமான அம்மா இருந்தாலே பிரச்னைதான்!” சில சமயங்களில், நேர்மைகூட தண்டனைபோல் ஆகிவிடுகிறது. கதை பயிற்சியாளராக ஒரு நிறுவனத்தில் சேர்ந்திருந்தான் கந்தன். கணக்காய்வாளராக சில பரீட்சைகளே பாக்கியிருந்தன. அங்கு பொய்க்கணக்கு எழுதத் தூண்டியபோது, மனம் பொறுக்காமல் வேலையை விட்டான். படிப்பும் பாதியில் நின்றது. ‘இந்தத் துறையே வேண்டாம்!’ என்று முடிவெடுத்தான். வேறு வேலையும் கிடைக்காத நிலையில், மாமியார் வீட்டு மருமகனாக, மதிப்பு குன்றி இருக்க நேரிட்டது. அவனுடைய நிலைமைக்கு பரிதாபப்பட்டு, ஒரு முதியவர் தன் கம்பெனியில் வேலை போட்டுக்கொடுத்தார். முதலில் ஒழுங்காக இருந்தவன், ‘நேர்மையாக இருந்து என்ன கண்டோம்!’ என்று தோன்றிப்போக, நன்றி மறந்து, அவ்விடத்திலேயே திருட ஆரம்பித்தான். கிடைத்த ஒரு வேலையும் போயிற்று. எல்லா கார்களும் தெருவில் தவறான வழியில் செல்லும்போது, ஒருவன் மட்டும், ‘சரியான வழியில்தான் போவேன்!’ என்றால் என்ன ஆகும்? கந்தனைப்போன்ற சிலர் நேர் எதிரான பாதைக்கு மாறுகிறார்கள். வேறு சிலர் குழப்பத்தில் ஆழ்ந்துவிடுவதும் உண்டு. எப்போது பொய் சொல்லலாம்? குழந்தைகளிடம் பொய் சொல்லாத தாய்மார்கள் இருவரை மட்டும்தான் நான் சந்தித்திருக்கிறேன். இருவருக்குமே திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து அருமையாகப் பிறந்த குழந்தை. பிற தாய்மார்கள் எந்த சந்தர்ப்பத்தில் பொய்யுரைப்பார்கள்? ‘சீக்கிரம் சாப்பிடு. காக்கா கொத்திண்டு போயிடும்!’ ‘நானும் அப்பாவும் டாக்டரைப் பாக்கப்போறோம்!’ நன்கு அலங்கரித்துக்கொண்டு திரைப்படத்திற்குப் புறப்படும் தாய் இளம்பிள்ளையிடம் கூறுகிறாள். ஓரிரு முறை அழைத்துப் போயிருப்பார்கள். அங்கு அவனைச் சமாளிக்க முடியாது போக, வேறு வழி தெரியவில்லை. மற்றபடி, நம்மிடம் அபயம் நாடி வந்த ஒருவரைக் காப்பற்ற பொய் சொல்லலாம். அல்லது, நமக்கு உற்ற நண்பர் ஒருவரைக் காட்டிக்கொடுக்காது இருப்பதற்காக. கதை1 பதின்ம வயது மாணவர்களின் கை சும்மா இருக்காது. வகுப்பிலிருக்கும் மேசைமேல் பேனாவினாலோ, ஏதாவது கூரான சாமானாலோ கிறுக்குவார்கள். அதில் கெட்ட வார்த்தைகளே மிகுந்திருக்கும். அப்படி ஒரு முறை நடந்தபோது, நான் அருகிலிருந்த முஸ்தபாவிடம், “யார் கன்னா பின்னாவென்று எழுதியது?” என்று மிரட்டலாகக் கேட்க, “எனக்குத் தெரியாது, டீச்சர்!” என்றான் மெல்லிய குரலில். அவன் முகத்தில் சிறு வேதனை – பொய் சொல்கிறோமே என்று. அவன் முகத்திலிருந்த நேர்மையைக் கண்டு, நான்தான் அவனை மாணவத் தலைவனாகத் தேர்ந்தெடுத்திருந்தேன். முஸ்தபாவின்மேல் எனக்கிருந்த மதிப்பு அதிகரித்தது. நண்பனை ஆசிரியையின் கோபத்திலிருந்து காப்பாற்ற இவன் உண்மையை மறைக்கிறான்! அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில், அந்தப் பையன் பள்ளியில் பல பொறுப்பான பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான். பள்ளிப்படிப்பு முடிந்ததும், ஒரு கௌரவமான வேலையில் அமர்ந்தான். அவனைப்பற்றிய என் கணிப்பு சரிதான் என்ற நிறைவு எழுந்தது. கதை 2 ரத்னாவின் திருமணம் நிச்சயிக்கப்பட்டபின் திடீரென நின்று போயிற்று – பல முறை. அவள் வீட்டார் காரணத்தைக் கேட்டபோது, ஒரு மொட்டைக் கடிதம் அவர்களிடம் காட்டப்பட்டது. பெண்ணின் சித்தியின் கையெழுத்தில் இருந்ததன் வாசகம்: ‘இப்பெண் கர்ப்பத்தைக் கலைத்துக்கொண்டவள்!’ அடுத்த முறை, தாங்களே வலிய மாப்பிள்ளை வீட்டாரிடம் உண்மையைத் தெரிவிக்க, கல்யாணம் நல்லபடியாக நடந்தேறியது. சித்திக்கு அழைப்பில்லை. ‘அநியாயமாக ஒருவரை ஏமாற்றலாமா? அதனால்தான் நடந்த உண்மையை எல்லாருக்கும் தெரிவித்தேன்!’ அரிச்சந்திரனின் வாரிசாகத் தன்னைப் பாவித்துக்கொண்ட சித்தி. யார் செய்தது சரி? செய்த தவற்றை ஒத்துக்கொண்ட ரத்னாவும் அவள் பெற்றோருமா, சித்தியா? எதிர்மறைச் சிந்தனைகள் ஒருவர் பல துறைகளிலும் வெற்றி பெற்றிருந்தால், ‘அவருக்குத்தான் தன்னைப்பற்றிய விழிப்புணர்வு எவ்வளவு துல்லியமாக இருக்கிறது!’ என்று வியந்து பாராட்டத் தோன்றுகிறது. அவரைப் போன்றவர்கள் சிறு வயதிலேயே, ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் தமக்கு ஏன் ஓர் அசாதாரணமான உணர்வு ஏற்படுகிறது என்று அலசியிருப்பர். மூன்று, நான்கு வயதுக் குழந்தைகள் தாயிடம் பொய்யுரைக்கும்போது கவனித்துப் பாருங்கள். முகம் சுருங்கியிருக்கும். ‘தர்மசங்கடம்’ என்ற அவர்கள் நினைப்பு புரியும். அப்படி ஒரு முறை, என் மகள் கேட்டாள், “நான் ஏன் மூஞ்சியை இப்படி வெச்சுக்கறேன்?” நான் லேசாகச் சிரித்தபடி, “அம்மாகிட்ட பொய் சொல்றோமேன்னு!” என்றேன். எந்த வயதானாலும், குற்ற உணர்ச்சி ஒருவரைப் பாடுபடுத்தும். (குழந்தைகள் பொய் சொல்வது தண்டனையைத் தடுக்கும் வழி. அதைப் பெரிதுபடுத்தாது விட்டுவிட்டால், தானே மாறிவிடுவார்கள்). சுயமாகச் சிந்திக்கும் வயதில், எல்லா விஷயங்களிலும் பிறர் எதிர்பார்ப்பின்படி நடப்பது நமக்கே நாம் விலங்கிட்டுக்கொள்வதுபோல்தான். நாம் நினைத்ததை வெளிப்படையாகச் சொல்லவும் முடியாமல் போய்விடும். அப்புறம் சுதந்திரமான எண்ணமும் செயலும் ஏது! பிறரிடமிருந்து மாறுபட்டிருக்கிறோமே என்றுதான் பலரும் குழம்புவார்கள். அதிலும், உடற்குறையுடன் இருப்பவர்களோ! கதை பதின்ம வயதான என் உறவினர் மகள் லல்லியை வெளியில் அழைத்துப் போயிருந்தோம். “எல்லாரும் என்னையே பார்க்கிறார்கள்!” என்றாள் மனத்தாங்கலுடன். பிறவி ஊனத்தால், ஒரு வித கைத்தடியின் உதவியுடன்தான் அவளால் நடக்கமுடியும். “நாமும் அவர்களைப் பார்க்கிறோமே! பிறரைப் பார்ப்பதற்குத்தானே வெளியில் வருகிறோம்!” என்று ஏதோ சமாதானம் சொன்னேன். “இல்லை, எனக்குத் தெரியும். அவர்கள் என்னைத்தான் உற்று உற்றுப் பார்க்கிறார்கள்!” என்றாள். இப்படிப்பட்ட எதிர்மறையான சிந்தனைகளே ஒருவரை மேலும் பலகீனமாக ஆக்குகிறது. என்னைப் பார்க்காதீர்கள்! நீச்சல் குளத்தில் ஒரு தமிழ் மாது நீச்சலுடை அணிந்து வந்திருந்தாள். ‘இதென்ன, கால், தொடை, முதுகு எல்லாம் தெரிகிறதே!’ என்று அவளுக்குத் தோன்றிப்போயிருக்க வேண்டும். இல்லை, குடும்பத்தில் யாராவது முகத்தைச் சுளித்திருப்பார்கள். ஆடையை தொடைப்பகுதியிலும், பின்புறத்திலும் அடிக்கடி இழுத்து விட்டுக்கொண்டாள். ‘இழுத்து இழுத்து விட்டுக்குமே..!’ என்று அவளைக்குறித்துப் பிறர் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். சில நாட்களுக்குப்பின் அவள் வருவது நின்றுபோயிற்று. தாம் பருமனாகவோ, வழுக்கையாக இருப்பதையோ கேலி செய்துகொள்பவர்கள், ‘பிறர் சொல்வதற்குமுன் தாமே சொல்லிவிட்டால், அதன் பாதிப்பு குறையும்!’ என்று நினைப்பவர்களாக இருப்பார்கள். ‘என்ன நினைப்பார்களோ!’ என்று எந்த சந்தர்ப்பத்திலும் பயந்துகொண்டே இருந்தால், முழுமையான மகிழ்ச்சி கிட்டுவதில்லை. ‘நான் இப்படித்தான்! உங்களுக்கென்ன!’ என்று தன்னையே ஏற்றுக்கொள்பவருக்கு மனக்குறை இருக்காது. ‘ஏன் இவ்வளவு குண்டாக இருக்கிறாய்?’ என்று ஒரு பெண் தன் நண்பனிடம் கேட்க, ‘ஆமாம்!’ என்று நொடித்தான் அவன். ‘இப்போ இதுக்குப்போய் கவலைப்படச் சொல்றியா?’ எல்லாருக்கும் அவரவர்பற்றிய சிந்தனைதான். நாம் அஞ்சுவதுபோல்தானே அவர்களும் நாம் அவர்களைப்பற்றி என்ன நினைக்கிறோமோ என்று யோசிப்பார்கள்! இது புரிந்தால், அநாவசியமாக குழம்பத் தேவையில்லை. தம்மை ஒருவர் வார்த்தைகளால் தாக்குமுன் தாம் முந்திக்கொள்ளலாம் என்று சிலர் பிறரிடம் குற்றம் காண்பார்கள். இவர்கள் தம்மைப்பற்றிச் சிந்திக்க அஞ்சுகிறவர்களாக இருப்பார்கள். அலசினால் மேலே எழும் குறைகளை, அவை உண்டாகக் காரணமாக இருந்த சம்பவங்களை மீண்டும் நினைவுகோர நேருமே! இப்போக்கினால் பலகீனம் அடைவது என்னவோ அவர்கள்தாம். சிறு வயதில் நமக்குப் பிடிக்காதவைகளை நிறைய அனுபவித்திருப்போம். அப்பிராயத்தில் தவறு செய்வதும் இயற்கை. அவைகளையே எண்ணி, எண்ணி மறுகியபடி வாழ்க்கையைக் கழித்தால் நரகம்தான். கதை நடராஜனுடைய தந்தையைப் பொறுத்தவரை, ஆண்குழந்தைகளை அடித்தால்தான் ஒழுங்காக வளர்வார்கள். வீட்டுக்குள் நடமாடும்போதுகூட, கையில் பிரம்புடன் பிள்ளைகளைப் பின்தொடர்வார். நடராஜனுடனேயே அவருடைய பயமும் ஆத்திரமும் ஒருங்கே வளர்ந்ததில் ஆச்சரியம் இல்லை. வீட்டில் இருக்கவே பிடிக்காத நிலையில், நண்பர்கள் ஆறுதலாக இருந்தார்கள். ‘என் நண்பர்களுக்காக உயிரைக்கூடக் கொடுப்பேன்!’ என்பார், அடிக்கடி. அவர்கள் கேட்ட, கேட்காத உதவியைக்கூட வலியப்போய் செய்தார். ஆனால், தன் சக்திக்குமீறி பிறருக்காக உழைத்ததில், வீட்டில் தன் மனைவி மக்களிடம் சிடுசிடுப்பாகத்தான் இருக்க முடிந்தது. சிறுவயதில் அடைந்த இனம்புரியாத அச்சம், தனிமை, வருத்தம் எல்லாம் ஆட்டுவிக்க, தன்னைப்போல் துன்பமும் துயரமும் அனுபவிக்காதவர்களிடம் ஆத்திரப்பட்டார். இவரது போக்கைக் கண்டு வீட்டிலும் அலுவலகத்திலும் உள்ளவர்கள் பயந்து ஒதுங்க, ‘நான் யாருக்குமே ஒரு பொருட்டில்லை!’ என்று தோன்றிப்போயிற்று. ஒரு சிறு பிழை செய்தாலும், தடுமாற்றம், அவமானம். ‘நான் தவறு செய்தால், இனி யாரும் பரிகசிக்கவோ, தண்டிக்கவோ போவதில்லை. பிறருக்கு உதவி செய்தால் எனக்கு மகிழ்ச்சி என்றாலும், தக்கவர்களுக்கு மட்டும்தான் உதவ வேண்டும்,’ என்று தீர்மானித்து, சிறிது சிறிதாக அதை நடைமுறையில் கொண்டுவந்தால், ஒருவரது ஆத்திரம் மட்டுப்பட வழியிருக்கிறது. பிறருக்கு ஓயாது உதவுகிறவர்கள் ஏமாளிகளா?! பிறர் தன்னைப்பற்றி அப்படி ஓர் எண்ணம் கொண்டிருப்பது நடராஜனுக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது. அதன்பின், ‘இப்போது முடியாது!’ என்று பணிவுடன் சொல்லக் கற்றுக்கொண்டார். ஆத்திரம் அவ்வப்போது தலைகாட்டினாலும், வெகுவாகக் குறைந்தது. உணர் திறன் வளர தினமும் நம்மைப் பாதித்தவைகளைக் குறித்துவைத்தால், நாளடைவில் நம் உணர்வுகள் புரியவரும். எதையெல்லாம் அடைய விருப்பம் என்பதையும் எழுதலாம். காலப்போக்கில், அப்பட்டியல் மாறிக்கொண்டே போகும்! நம்மையே ஆராய்ந்து நமக்குப் பிடித்தபடி மாற்றிக்கொண்டாலோ, அல்லது பிறர் சொல்வதைக் கேட்டாலோ, நன்மை விளையும். எப்படி என்கிறீர்களா? நம் பலம், பலவீனம் ஆகியவைகள் புரிந்துபோக, பலத்தைப் பெருக்கிக்கொள்ள முயற்சிகள் எடுக்கமுடியும். நம்முடன் நன்கு பழகி, புரிந்தவர்களிடம் நம்மை எடைபோடும்படி கேட்கலாம். ஆனால், அவர்கள் சொல்வதையெல்லாம் அப்படியே ஏற்க வேண்டியதில்லை. பிறருக்குத் தவறு என்று படுவது நமக்கு ஏற்புடையதாக இருக்கலாமே! ‘பிறர் இருக்கிறபடி இருக்கட்டும்!’ என்று விட்டால் இரு தரப்பினருக்கும் நிம்மதி. நம்மை நாமே புரிந்துகொள்வது நம் தனித்தன்மையை நமக்கு உணர்த்துவதுடன், பிறரையும் புரிந்துகொள்ள வழி வகுக்கிறது. அவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்றும் புரியும். அதனால் சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி நடக்கலாம். பிறர் நம்மை ஆட்டுவிக்க இடம் கொடுப்பானேன்! நாம் என்ன, பொம்மையா? கர்மவீரனுக்குப் பெண்பால் என்ன? வாழ்க்கைப்பாதையில் கல்வி, உத்தியோகம், திருமணம், குழந்தைகள் என்று படிப்படியாகக் கடந்தபின், ‘இனி என்ன இருக்கிறது வாழ்வில்!’ என்ற விரக்தி பிறக்கிறது பலருக்கும். அவர்களின் போக்கிற்கு நிச்சயம் வயது மட்டும் காரணமாக இருக்கமுடியாது. உடல் முதுமை அடைவதற்குமுன்பே மனம் தளர்ந்துவிட, நடப்பதே ஒரு பெரிய காரியம் என்பதுபோல் இருப்பவர்களைப் பார்த்தால், ‘நாமும் ஒரு வயதுக்குமேல் அப்படி ஆகிவிடுவோமோ!’ என்ற அச்சம் ஏற்படுகிறது. ‘அவள் எவ்வளவு தைரியசாலி!’ என்று வெகு சிலரைப் பார்த்து மலைப்பு எழுகிறது. அந்த பெண்மணிக்கு அச்சமே கிடையாது என்று அர்த்தமில்லை. அவ்வப்போது எழுந்த அச்சங்களை எதிர்கொண்டவள் என்றுதான் சொல்லவேண்டும். எந்த வயதிலும் உத்வேகத்துடன் செயல்பட வேண்டுமானால், அச்சத்தை விலக்குவது அவசியம். ‘அனுதினமும் உன்னை அச்சப்படுத்தும் ஒரு காரியத்தைச் செய்!’ என்கிறார் ஓர் அனுபவசாலி. ஏன் அச்சம்? ஒரு புதிய காரியத்தைத் தொடங்கும்போது மலைப்பு எழலாம் – இதை எப்படித்தான் முடிக்கப்போகிறோமோ என்று. ஓரிடத்திலிருந்து இன்னொன்றுக்குச் செல்வதற்கு ஒரு காலை மற்றொன்றின் முன்னே வைத்து, ஒவ்வொரு அடியாகத்தான் எடுத்து வைக்கிறோம். இதோ, நீங்கள் படிப்பதைக்கூட ஒவ்வொரு எழுத்தாகத்தான் எழுதினேன் – ‘பிறர் என்ன நினைப்பார்களோ!’ என்ற அச்சத்தை ஒதுக்கிவிட்டு. ‘இந்த காரியத்தைச் செய்தால் பணமோ, புகழோ கிடைக்கப்போகிறதா!’ என்ற அவநம்பிக்கையோடு எதிலும் ஈடுபட்டால் முன்னேறுவது எப்படி? எந்த ஒரு (நல்ல) காரியம் செய்தாலும், அதன்வழி கிடைக்கும் அனுபவத்தால் தன்னம்பிக்கை மட்டுமல்ல, தைரியமும் எழும். இது புரிந்தால், புதியதாக எதிலாவது ஈடுபடத் தயங்கமாட்டோம் – அது எவ்வளவு அற்பமாகத் தோன்றினாலும். பல துறைகளில் ஈடுபாடா? ஒரே நேரத்தில் பலவித உணவுகளை அதன்முன் வைத்தால், நாய் எல்லாவற்றையும் நக்கிவிட்டு, எதையும் முழுமையாகச் சாப்பிடாது வீணடித்துவிட்டுப் போய்விடும். அதேபோல், பேராசையாகப் பல காரியங்களைச் செய்ய முயன்றால், எல்லாமே அரைகுறையாகிவிடும். ஒரே சமயத்தில் வெவ்வேறு காரியங்களைச் செய்ய நாம் அனைவரும் அஷ்டாவதானிகளா, என்ன? காலையில் படிப்பு, மாலையில் பாட்டு, விளையாட்டு என்ற முறையைப் படிக்கும் வயதில் கடைப்பிடித்திருப்போம். அதுபோலவே, ஒரு தினத்தை இரண்டு, மூன்று பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொன்றிலும் ஒரு காரியத்தைச் செய்யலாம். எடுத்துக்கொண்ட ஒன்றில் முழுமனதுடன் ஈடுபட்டு, ஓரளவு செய்து முடித்தபின், இன்னொன்றில் கைவைக்கலாமே! சிதறாத கவனம் பாலர்பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு எளிதில் கவனம் சிதறும். அதைக் கட்டுப்படுத்த ஓர் ஆசிரியை கண்டிப்புடன் அவர்களிடம் சொன்னது: “உங்கள் பக்கத்தில் டைனசோர் வந்து நின்றாலும், அணுகுண்டு வெடித்தாலும் திரும்பிப் பார்க்கக்கூடாது!” அக்குழந்தைகள் அறியவில்லை, அணுகுண்டு வெடித்தால் அதைப் பார்த்து வியக்கவோ, ரசிக்கவோ அவர்கள் இருக்க மாட்டார்கள் என்பது. தற்காலத்தில் டைனசோர் ஏது! இருந்தால் மட்டும் வகுப்பறைக்குள் நுழைந்துவிடுமா? ஆனாலும், ஆசிரியையின் திட்டம் பலித்தது. செய்யும் காரியத்தில் முனைப்பாக இருக்கும் பழக்கம் அவர்களுக்கு வந்தது. தோல்வி எழுந்தால் ஒரு காரியத்தைச் செய்துகொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக நமக்குப் பிடிக்காத விளைவுகளும் ஏற்படக்கூடும். தோல்விகளைப் பொறுக்க முடியாது, ‘இப்படித்தான் நிம்மதியும் இன்பமும் கிடைக்குமோ?’ என்ற அற்ப ஆசையுடன் தீய வழிகளில் ஈடுபட்டால் சலிப்புதான் அதிகரிக்குமே தவிர, நிம்மதி கிடைக்காது. நமக்குப் பிடித்த, பிறருக்கும் உபயோகமானவைகளில் ஈடுபடுவதுதான் புத்துணர்ச்சியைத் திரும்பப் பெறும் வழி. இலக்கு வேண்டும் ‘அடுத்து என்ன செய்யலாம்?’ என்ற தூரநோக்கு இருக்கும்வரை வாழ்க்கை பயனுள்ளதாகத்தான் தென்படும். தள்ளாடியபடி நடக்கும் பெண்மணிகள்கூட கூட்டுக்குடும்பத்தில் சமையல் வேலையை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருப்பதன் ரகசியம் இதுதான். “கடைகண்ணிக்குப்போய் சாமான்கள் வாங்கிவருவது என் மாமனார்! சமையல் பூராவும் என் மாமியார்தான். இருவரும், ‘எங்கள் ஆட்சி இது!’ என்பதுபோல் விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்!” நாற்பது வயதை எட்டிக்கொண்டிருந்த ஒரு மருமகளின் புலம்பல் இது. தனக்கு எந்த பொறுப்பும் இல்லாமல் போய்விட்டதே என்பது அவள் வருத்தம். மூத்தவர்கள் செய்துவந்தது அதிகாரத்திற்காக மட்டுமில்லை, அவர்களுக்கென்று சில வேலைகள் இல்லாவிட்டால், வாழ்க்கையில் பிடிப்பே இல்லாது போய்விடும் என்பது அவளுக்குப் புரியவில்லை. ஆனால் அவர்கள் புரிந்து வைத்திருந்தார்கள். எந்த விஷயத்திலும் பற்றும் ஆர்வமும் இருந்தால், வாழ்வில் பிடிப்பு குறையாது – எத்தனை வயதானாலும். கதை என் தோழியின் தந்தைக்கு தொண்ணூற்றிரண்டு வயதாக இருந்தபோது நான் அவ்விருவருடனும் பயணம் செய்தேன். வழியில், ஆறு வயதுக் குழந்தைக்கான விளையாட்டுச் சாமான் ஒன்றை வாங்கினேன். தாத்தா அதை சுவாரசியத்துடன் பார்த்ததைக் கண்டு, அவரிடம் நீட்டினேன். ஆவலுடன் அதைப் பெற்றுக்கொண்டவர், சாவி கொடுத்தால் ஒரு குரங்கு தாவித் தாவி சிறிய பிளாஸ்டிக் மரத்தின்மேல் ஏறுவதைப் பார்த்துக் குதூலித்தார். அவருள் இருந்த குழந்தை அப்போதும் இருந்தது. கூலியாளாக நாடுவிட்டு நாடு வந்தவர் பெரிய முதலாளியானதன் ரகசியம் புரிந்தது. உடல் வலுவிழந்திருந்தாலும், தன்னைச் சுற்றி நடப்பதில் ஆர்வம் குன்றாமல், ஆரோக்கியமான மனதுடன் வாழ்ந்தவர்! ‘இனி என்ன இருக்கிறது!’ என்ற விரக்தியே ஒருவரை நடைப்பிணமாக ஆக்கிவிடும். கதை “இருபத்து மூன்று வருடங்களாக இந்த வேலையைச் செய்கிறேன்!” என்று அடிக்கடி பெருமையாகச் சொல்லிக்கொண்ட பணிப்பெண் நோர்மாவைப் பார்த்து எனக்கு பிரமிப்பாக இருந்தது. காலை, மத்தியானம் இரு வேளைகளிலும் இரண்டு வீடுகளைச் சுத்தம் செய்வது அவள் வேலை. ஒரு நாளைக்கு பத்து மணிநேரம் கடுமையாக உழைப்பாள்! வாரத்தில் ஐந்து நாட்கள் இப்படித்தான் கழியும். (கர்மவீரனுக்குப் பெண்பால் என்ன?) “கடினமாகவோ, அலுப்பாகவோ இல்லையா?” என்று அவளைக் கேட்டேன். “எனக்கு பள்ளியில் படிக்கும் மகனைத் தவிர, இந்தோனீசியாவில் நூறு வயதான அம்மா இருக்கிறாள். நடக்க முடியாத அக்காவும் இருக்கிறாள். நான் என்னால் முடிந்ததைச் செய்ய வேண்டாமா?” என்ற பதில் வந்தது. படிப்பறிவில்லாத அப்பெண்மணியிடமிருந்து கற்க வேண்டிய பாடம்: நம் பொறுப்புகளை வேண்டாவெறுப்பாக ஏற்றால் அவை பாரமாகப்படும். மனமுவந்து செய்தால், உடலும் ஒத்துழைக்கும். சலிப்பும் கிடையாது. சிலருக்கு மாற்றம் என்றாலே அச்சம். ஒரு முறை கருவேப்பிலையின் அடிப்பாகத்தில் கெட்டியாக ஏதோ இருந்தது கண்டு அருவருப்பாக இருந்தது. பிறகுதான் புரிந்தது, அது கூட்டுப்புழு என்று. வெகு அழகான வண்ணத்துப்பூச்சியாக மாறுமுன், பல மாறுதல்களைக் கடந்து வரவேண்டிய நிலை அதற்கு. மாற்றத்தைக் கண்டு அஞ்சாது துணிந்து நடந்தால், நாமும் – அழகாக மாறாவிட்டாலும் – நல்லவிதமாக மாற வாய்ப்பு கிடைக்கலாமே! பி.கு: வீரனுக்குப் பெண்பால் வீராங்கனை என்று தெரியும். கர்ம வீராங்கனை என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களோ? மதிப்பீடுகள் ‘எதிர்வீட்டில் என்ன, இப்படி கண்ணில் அறைகிறமாதிரி சுவற்றுக்கு வண்ணம் பூசியிருக்கிறார்களே!’ ‘இவ்வளவு குண்டாக இருக்கிறாள்! இவள் தினமும் உடுத்துவதோ கெட்டிச்சரிகைபோட்ட பட்டுப்புடவைதான்! நன்றாகவா இருக்கிறது?’ ஒருவரை அறிமுகப்படுத்தினால், மேலும் கீழுமாகப் பார்த்து அவரை எடைபோடுவர் சிலர் – நம் ஆடையணிகள் நம் குணத்தை அப்படியே பறைசாற்றிவிடுவதுபோல்! அவன் என்ன அப்படி, இவள் என்ன இப்படி! பிறர் செய்வதில் தனக்கு என்னென்ன பிடிக்கவில்லை என்று ஆராய்ந்து, அதை வெளிப்படையாகக் கூறுவது சராசரி மனிதனின் குணம். ஏன் மனிதனுக்கு இப்படி ஒரு குணம்? தன்னைப்பற்றி உயர்வாக எண்ணுகிறான், அல்லது தன் குறைகளைப் பிறர் அறிவதற்குமுன் தான் முந்திக்கொள்ளவேண்டும் என்ற துடிப்பு. எப்போதும் பிறரைக் குறைவாக மதிப்பிடுபவர்கள் தம்மையே பிறர் குறைகூறினால் கொதித்து எழுவார்கள். நாம் ஒருவரிடம் என்னென்ன குணங்கள் பிடிக்கவில்லை என்கிறோமோ, அவையே நம்மிடமும் இருக்கிறது என்பதுதான் விந்தை. ‘கண்ணில் அறைகிறமாதிரி’ வீட்டின் வெளியே வண்ணம் பூச அந்த வீட்டுக்காரர் மூன்று இடங்களில் வேலை பார்த்து, நிறையச் செலவழித்து, தன் திருப்திக்கேற்ப அமைத்திருக்கிறார். அதைக் குற்றம் கூறப் பிறருக்கு என்ன தகுதி? பட்டுப்புடவைகளையே உடுத்துபவளுக்கு அதை வாங்க வசதி இருக்கிறது. அவளுக்குப் பிடித்ததைச் செய்கிறாள். ‘உடலை விமானப் பணிப்பெண்போல் ஆக்கிக்கொண்டு பிறகு அம்மாதிரியான புடவைகள் வாங்கலாம் அல்லது, இதற்காகவே இன்னொரு பிறவி எடுக்கலாம்,’ என்று நியாயமான ஆசைகளைத் தள்ளிப்போட முடியுமா? பிறர் தன்னை ஏற்கும்படி அவள் எதற்காக நடக்க வேண்டும்? பிடிக்காதவர்களைப்பற்றியோ அல்லது பொறாமையாலோ, சிலர் அவதூறாகப் பேசுவது முற்றிலும் உண்மையாக இருக்காது. ‘நான் செய்வதுதான் சரி!’ என்று சாதிப்பவர்களால் பிறரைப் புரிந்துகொள்ள முடியாது. இவர்கள் சில வெற்றிகளை அடைந்திருக்கலாம். அதனால் மட்டும் அவர்கள் எண்ணங்கள் எல்லாமே சரியாகிவிடுமா? ‘ஒருவர் தன் மனதைப் பாதித்தவைகளைப்பற்றிக் கூறுவதை எவராலும் புரிந்துகொள்ளமுடியாது – அவர்களும் அதேபோல் ஒன்றை அனுபவித்திருந்தாலே ஒழிய,’ என்பவரின் கதையைக் கேட்போமா? கோபாலனின் காதல் திருமணம் சில ஆண்டுகளுக்குள் அவர் விவாகரத்து கேட்கும் அளவுக்கு முறிந்துபோயிற்று. தான் எவ்வளவு அனுசரணையாக இருந்தாலும் அதைப் பெரிதாக நினைக்காது, தனது கடந்தகால வாழ்க்கையை ஓயாது குத்திக்காட்டியவளுடன் வாழ்நாள் முழுவதும் இணைந்து வாழ்வது இயலாத காரியம் என்று தோன்றிப்போனதுதான் காரணம். பலரிடம் அதுபற்றிச் சொல்லி, தன் மனப்புண்ணுக்கு மருந்து தேடினார். “ஒருத்தருக்குமே புரியவில்லை. ‘அப்படியா?’ என்று பட்டுக்கொள்ளாது கேட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள். இல்லையேல், அறிவுரை கூற ஆரம்பித்துவிடுகிறார்கள்,” என்று அரற்றினார் என்னிடம். ஒருவர் மனம் நொந்து நம்மிடம் பேச ஆரம்பிக்கும்போது, அவருக்கு அந்த சமாசாரம் எவ்வளவு முக்கியம் என்று புரிந்து வாய் திறவாது கேட்டுக்கொள்ள வேண்டும். நம் முகபாவத்திலிருந்தே, ‘இவளுக்கு நாம் சொல்ல வருவது புரியும்,’ என்ற நம்பிக்கை வர, மேற்கொண்டு பேசுவார்கள். சற்றே அமைதி பெறவும் வழியிருக்கிறது. ஆனால், பிறர் பேசிக்கொண்டிருக்கும்போதே, ‘அடுத்து நாம் என்ன சொல்லலாம்?’ என்றுதானே யோசனை போகிறது! கோபாலன் ஆறுதலை நாடினார் – மதுவில். இப்போது உலகம் அவரைப் பழித்தது: ‘இந்தக் குடிகாரனுடன் எவளால் வாழமுடியும்?’ அவர் அப்படி நடக்கும் சூழ்நிலை ஏன் அமைந்தது என்று யாருமே யோசிக்கவில்லை. பிறரைப் புரிந்துகொண்டு, அவர்களது கண்ணோட்டத்தில் பார்த்தால் எதுவும் தவறாகத் தோன்றாது. கதை தாய்லாந்தில் ஓர் உணவுக்கடையில் நானும் என் மகளும் உட்கார்ந்திருந்தோம். ஒரு பெண் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும் ஒலி கேட்டு, நான் திரும்பிப் பார்த்தேன். சற்றுத் தொலைவில் பதினைந்து வயது மதிக்கத்தக்க அந்நாட்டுப் பெண் ஒருத்தியும், அவளைவிட முதியவர்களான இரு வெள்ளைக்காரர்களும் அமர்ந்திருந்தனர். அவர்கள் என்ன சொன்னாலும் அவள் சிரித்துக்கொண்டிருந்தாள். ‘இவ்வளவு சிறிய பெண் இத்தொழிலைப்போய் செய்கிறாளே!’ என்ற அதிர்ச்சி எழுந்தது. என் கண்களை சந்தித்த அப்பெண்ணின் முகத்தில் சிரிப்பு மறைந்தது. அவமானம் எழ, தலை குனிந்தது. இந்தச் சிறுமியை நோகடித்துவிட்டோமே என்று என்னையே நான் கடிந்துகொண்டேன். அதன்பிறகு என் மகள் என்னுடன் சண்டை பிடித்தாள்: “ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்திருப்பாள். விலைமாதுவாக இருப்பது அவள் தேர்ந்தெடுத்த தொழில். அவள் சம்பாதித்து, குடும்பத்தைக் காக்கவேண்டிய நிலை இருக்கலாம். இந்த தொழிலைச் செய்பவர்கள் சில முறையாவது பாலியல் ரீதியாக வன்முறைக்கு ஆளாகி இருப்பார்கள். நம் நிலையிலிருந்து அவர்களை எடைபோடக்கூடாது!” எவ்வளவு உண்மை! அன்று நான் ஒரு நல்ல பாடம் கற்றேன். கதை கோலாலம்பூரில் நடந்த ஒரு குறும்பட நிகழ்ச்சிக்குப்போயிருந்தேன். பெண்ணைப்போல் ஆடையணிகள் அணிந்திருந்த இளைஞன் வரவேற்பாளராக அமர்ந்திருந்தான். முதலில் நான் அவனைச் சரியாகக் கவனிக்கவில்லை. அவன் கொடுத்த காகிதத்தைப் பார்த்ததும் எந்த இடத்திலிருந்து வந்திருக்கிறான் என்று புரிய, சட்டென தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தேன். அடையாளக்கார்டு மறுக்கப்பட்ட நிலையில், வயிறு பிழைக்க வேறு எந்தத் தொழிலுக்கும் போகமுடியாத அவலம். எங்களிருவர் கண்களும் சந்தித்தன. அவனை அங்கீகரிக்கும் விதத்தில் லேசாகப் புன்னகைத்துவிட்டு அங்கிருந்து அகன்றேன். நான் என் இருக்கையில் அமர்ந்தபின், யதேச்சையாகத் திரும்ப, “ஹாய்!” என்று முகமெல்லாம் சிரிப்பாக முகமன் கூறினான் அதே இளைஞன். நான் கையை உயர்த்தி, அதையே திரும்பக் கூறினேன். தன் பக்கத்தில் இருந்தவளிடம் (இருந்தவனிடம்?), “என் ஃப்ரெண்ட்!” என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டான். மற்றவன் என்னை ஏக்கத்துடன் பார்க்க, “Hello! How are you?” என்று அவனுக்கும் சற்று உரக்கவே முகமன் கூறினேன். கையை உயர்த்தி, ஆர்ப்பாட்டமாக ‘ஹலோ’ சொல்வது என் வழக்கமில்லை. இருந்தாலும், இவர்களுக்குப் பிறர் தம்மை ஏற்பது எவ்வளவு முக்கியம் என்று புரிந்திருந்தது. அவனுடைய முகத்தில் அப்போது தோன்றிய மகிழ்ச்சி! எவரையும் அவர் இருப்பதுபோலவே ஏற்றால் வாழ்க்கை அமைதியாக இருக்கும். தன்னையே பிடித்துப்போனவர்கள் பிறரைத் தாழ்வாக எடைபோட மாட்டார்கள். நாம் இருப்பதுபோலவே நம்மை நாமே ஏற்க என்ன தடை! தவறிழைப்பது ஆண்களின் பிரத்தியேக உரிமையோ? ‘அவர் தானுண்டு, தன் காரியம் உண்டு என்றிருப்பார்!’ என்று சிலரைக் குறிப்பிடுவதுண்டு. ‘நான் செய்வதில் அநாவசியமாகக் குறுக்கிடாமல் இருக்கிறார்!’ என்று பிறரை மெச்சி, அதனால் எழும் நிம்மதி எல்லோருக்கும், எப்போதும் வந்தால் உலகின் கதி என்னவாகும்? கணவனோ, மனைவியோ, ஒருவரை ஒருவர் நிந்திக்கும்போது, ‘இது அவர்கள் குடும்ப விவகாரம்!’ என்று பிறர் ஒதுங்கிப்போவதால் நிலைமை மோசமாகத்தான் ஆகிறது. பிறர் குறுக்கிட்டால், தன்மானம் கருதியாவது ஒற்றுமையாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வார்களே! கதை எங்கள் எதிர்வீட்டிலிருந்து பெருங்குரல் எழுந்தது. ஆண்ட்ரூ தன் மனைவியை வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டிருந்தான். (நாற்பத்து ஐந்து வயதிருக்கும். ஆனாலும், அவனது நடத்தையால் மரியாதை கொடுக்கத் தோன்றவில்லை). அடக்க ஒடுக்கமான மனைவியைத் தான் பழகும் விலைமாதர்களைப்போல் என்றெல்லாம் பழித்த அவச்சொல்லை என்னால் தாங்கமுடியவில்லை. ஆக்னஸ் எனக்கு நெருங்கிய சிநேகிதி. ‘கணவனுக்கு அடங்கியிருப்பதுதான் நல்ல பெண்ணுக்கு அடையாளம்’ என்று பொறுத்துப்போய்க்கொண்டிருந்தாள். அந்த அர்த்த ராத்திரியில் நான் மட்டும் தனியாக அவர்கள் வீட்டுக்குப்போய் தட்டிக்கேட்டால் நன்றாக இராது என்று, என் கணவரையும் எழுப்பி அழைத்துப்போனேன். அவர்கள் வீட்டுக்கதவை நான் தட்டித் தட்டி உடைக்காத குறை. ஒரு வழியாக வந்து கதவைத் திறந்த ஆண்ட்ரூ, “அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் அவரவர் காரியத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். நான் அவர்களைப் பாராட்டுகிறேன்!” என்றான், ஆத்திரத்துடன். ‘உன்னை யார் அழைத்தது?’ என்று சொல்லாமல் சொல்கிறானாம்! நான் அயராது, “என் கணவர் இப்படி என்னை வதைத்தால், அப்போது யாராவது உதவி செய்ய வந்தால், நான் நன்றியோடு இருப்பேன்,” என்றேன். உள்ளேயிருந்து பெரிய விம்மல் கேட்டது. இருபது ஆண்டுகளாகத் தான் படும்பாட்டைப் பெற்றோர்களிடம்கூடக் கூறியதில்லை ஆக்னஸ். கணவனிடம் அப்படி ஒரு விசுவாசம். (வதை படுகிறவர்கள் வதைப்பவர்களைத்தான் முதலில் நாடுவார்களாம்). வெளிப்பார்வைக்கு கண்டிப்பும் கறாருமாக இருப்பதைப்போல் பாசாங்கு காட்டுவாள். தவறு தன்மேல் இல்லை, தனக்கும் ஆதரவு காட்ட ஒருசிலராவது இருக்கிறார்கள் என்று தெளிந்ததும், கணவனுக்கு எதிராக நடக்கும் துணிச்சல் வந்தது அவளுக்கு. விரைவிலேயே, மேற்படிப்பைச் சாக்காக வைத்து வெளிநாடு போனாள் – கணவனை (கயவனை?) தனியே தவிக்க விட்டுவிட்டு. பிறரது வாழ்க்கையில் எதற்காக குறுக்கிடுகிறோம்? நம் செய்கையால் ஒருவருக்கு நிம்மதியோ, மகிழ்ச்சியோ கிடைத்தால், அதைப் பார்த்து நாமும் எதையோ சாதித்ததுபோல் மகிழ்வு உண்டாகிறதே! இப்படி நடந்தால் இரு தரப்பினருமே பயனடைகிறார்கள். சில சமயம், நாம் நல்லதென்று எதையாவது செய்யப்போய், அது எதிர்பாராத விளைவுகளில் கொண்டுவிடுகிறது. அவர்களுக்கு எழும் அவமானத்தை நம் பக்கம் திருப்ப முனைவார்கள். கதை “நாம்ப பெரிய புள்ளை ஆயாச்சு. வகுப்பிலே ஒக்காந்திருக்கையிலே தமிழ் படிச்சுக்குடுக்கற வாத்தியார் என் தோளிலே கைபோடறாருங்க, டீச்சர்!” என்று புகார் செய்தாள் அம்மாணவி. வாரத்திற்கு ஒரு முறை, சனிக்கிழமைகளில் மட்டும் தமிழ் கற்றுக்கொடுப்பது அந்த மனிதனின் வேலை. பள்ளி விடுமுறையாதலால், அப்போதுதான் அங்கு நிறைய பேர் இருக்கமாட்டார்கள். அந்த நிகழ்வைப்பற்றி ஒரு தமிழ் பத்திரிகையில், என் தனிப்பட்ட பகுதியில், எழுதினேன். ஊர், பெயரெல்லாம் கிடையாது. சில நாட்கள் கழித்து, அந்த வாத்தியாரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது, தொலைபேசிவழி. “இப்போது எல்லாருக்கும் அது நான்தான் என்று தெரிந்துவிட்டது. ஒரே ஷேம்!” என்று ஒரேயடியாகக் கத்தினான். வகுப்பில் மாணவியைக் கட்டியணைத்து, அவளுக்கு தர்மசங்கடத்தை உண்டுபண்ணுவது அவனைப் பொறுத்தவரை தவறில்லை. நான் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவனோ நிறுத்துவதாகத் தெரியவில்லை. பொறுக்கமுடியாது போக, "உங்கள் கோபம் எனக்குப் புரிகிறது!’ என்று சொல்லிவைத்தேன். (எதிராளியைச் சமாளிக்க அவர்கள் பக்கம் சாய்ந்துவிட வேண்டும்). சட்டென்று அடங்கினான். “அது நானில்லை என்று எழுதிவிடுங்கள்,” என்று உத்தரவு பிறந்தது. எப்படி எழுதுவது? ‘தன் மாணவியிடம் வகுப்பில் முறைகேடாக நடந்துகொண்டது இன்னார் இல்லை,’ என்றா? ‘எங்கப்பா குதிருக்குள்ளே இல்லை!’ என்ற கதைபோல் இருக்கிறதே! எதற்காக எழுதுவது? வயதில் தன்னைவிட மிகச் சிறியவளான ஒரு பெண்ணிடம் ஒருவர் முறைதவறி நடக்கிறார். அவரை எதிர்க்கும் சக்தியோ, பாதுகாப்போ அற்ற அப்பெண் பயந்து நடப்பதை ஏற்கிறாள். இதைப் பார்த்தும் பார்க்காததுபோல், அறிந்தும் எதுவும் செய்யாமல் இருப்பது சுயநலமின்றி வேறென்ன! இந்த நிலை பரவலாக நடக்க வழிவகுப்பதுபோல் ஆகிவிடுமே! ‘நான் சின்னப்பெண்ணாக இருந்தபோது, என்னை அடிக்கடி வெளியே அழைத்துப் போவார் என் உறவினர். வீடு திரும்பியதும் ஏதேதோ செய்வார். அப்போது அது பாலியல் வதை என்று எனக்குப் புரியவில்லை. எல்லா சிறுமிகளுக்கும் அப்படித்தான் நடக்கும்போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்!’ என்று சமீபத்தில் ஒரு பெண் தினசரியில் எழுதியிருந்தாள். தனக்கு நடந்தது தகாத காரியம் என்று அவளுக்கு ஏன் தோன்றவில்லை? யாரும் இந்த அவலங்களைப்பற்றி வெளிப்படையாகப் பேசி, முன்னெச்சரிக்கை செய்யவில்லை. ‘ஆண்களும், பெரியவர்களும் என்ன செய்தாலும் பெண்ணாய் பிறந்துவிட்டவர்கள் பொறுத்துப் போகவேண்டும்!’ என்று வலியுறுத்தி, நம்பவும் வைத்திருப்பார்கள். இப்படி நம்மில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்! இந்த நிலவரம் பொறுக்காது, தீய நடத்தை கொண்ட எவனையோபற்றிப் பெண்கள் எழுதினால், பல ஆண்கள் ஒன்றுசேர்ந்து, பெண்களைத்தான் சாடுகிறார்கள். ’நீங்க ஆண்களைத் தாக்கி எழுதறீங்களே! நாங்க பெண்களைப்பத்தி எழுதினா?" என்று ஒருவர் என்னிடம் சவால் விட்டார். தீய நடத்தை கொண்டவர்கள் செய்வது அடாத செயல் என்று அவர்களுக்கும் தெரியும். ஆனால், ஒப்புக்கொள்ளும் நேர்மையோ, தைரியமோ குறைவு. “எழுதுங்களேன்! நானா வேண்டாங்கறேன்?” என்றேன். நானே அப்படி எழுதியுமிருக்கிறேனே! தவறு என்று தெரிந்தே செய்வது என்ன, ஆண்களின் பிரத்தியேக உரிமையா, அல்லது சாமர்த்தியமா? இப்படியும் ஆசிரியர்கள்! கல்வியும் அனுபவங்களும் நம் அறிவைப் பெருக்குகின்றன. அறிவு சக்தியை அளிக்கிறது. ‘செல்வம்’ என்று கல்வி குறிப்பிடப்பட்டாலும், இந்த இரண்டிற்கும் இடையே ஒரு வேற்றுமை: அள்ள அள்ளக் குறையாதது கல்வி. ஆசிரியர்கள் எவ்வளவு புத்திசாலிகள்! சிறு வயதில், ‘இந்த ஆசிரியர்கள்தான் எவ்வளவு புத்திசாலிகள்! எத்தனை விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்!’ என்று ஒருவரிடம் ஒருவர் கூறி, பிரமித்து இருப்போம். (இத்தொழிலுக்கு வந்தபின்தான் தெரிந்தது, ஒவ்வொரு நாளும் கற்பிக்கும் பாடத்தை முதல்நாள் கண்விழித்து, நாமே கற்க வேண்டியிருக்கும் என்பது! பல வருடங்கள் தொடர்ந்து ஒரே பாடத்தை கற்பித்தால் மட்டும்தான் அது நினைவில் நிற்கும். ஒரு விஷயத்தை நன்றாகக் கற்றுக்கொண்டால்தானே அப்படிப் பெற்ற அறிவைப் பிறருக்கு வழங்க முடியும்?) என்னதான் தம் வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தையையும் பிறர் உற்றுக் கவனிப்பது ஆசிரியர்களின் பெருமையைக் கூட்டுகிறது என்றாலும், அவர்கள் மேலானவர்கள் என்றாகாது. தாம் பெற்ற அறிவைப் பிறருடன் பகிர்ந்துகொள்கிறார்கள். அவ்வளவுதான். ஆசிரியருக்குத் தெரிந்ததெல்லாம் ஒரு மாணவனுக்கும் தெரிந்திருந்தால், அவன் ஏன் கற்க வருகிறான்? ஆசிரியர்கள் என்ன கற்றுக்கொடுத்தார்கள் என்பது எவர் நினைவிலும் வெகு காலம் தங்குவதில்லை. ஆனால், அவர்களது பண்பும் அணுகுமுறையும் மறக்கவே மறக்காது. கதை என் சக ஆசிரியர் ஒருவர் பள்ளியில் நடந்த ஒரு கண்காட்சிக்கு மாணவர்களை அதிசயிக்க வைக்கவேண்டுமென்று மிகுந்த பிரயாசை எடுத்துக்கொண்டார். அவரது முயற்சியைப் பார்த்துவிட்டு, என்னிடம் ஓடி வந்தார்கள் சில மாணவர்கள். “டீச்சர்! ஸார் ஒரு ராக்கெட் பண்ணியிருக்கார். அது அவ்வளவு ஜோரா மேலே போச்சு, தெரியுமா?” அவர்களுடைய ஆர்வத்தை ரசித்து, “அவரிடமிருந்து நீங்களும் கற்றுக்கொள்ளலாமே!” என்றேன். அவர்கள் முகம் உடனே வாடியது. “நாங்கள் கேட்டோம். சொல்லிக்கொடுக்க மறுத்துவிட்டார்!” தான் மாணவர்களைவிட உயர்வு என்று காட்டிக்கொள்ள நினைத்திருக்கிறார் அந்த ஆசிரியர்! அவருக்கு நேர் எதிரிடை என் இசை குரு, எஸ்.கல்யாணராமன். ஒரு நாள் பாட்டு சொல்லிக்கொடுக்கையில், ஏதோ ஒரு ராகத்தில் மிக வேகமாக, அவருக்கே உரிய பிருகாக்களுடன் ஆலாபனை செய்து காட்டியபோது, அயர்ந்துபோனேன். உடல் பின்னோக்கிப் போயிற்று. ‘நம்மால் முடியுமா?’ என்ற பயம்தான் எழுந்தது. அவர் முகம் பெருமையுடன் விகசிக்கவில்லை. “உன்னை பிரமிக்க வைக்க நான் இப்படிப் பாடிக் காட்டவில்லை. நீயும் இப்படிப் பாடவேண்டும் என்பதற்காகத்தான்! கற்றுக்கொள்!” என்று சீறினார். நல்ல ஆசிரியரானவர் மாணவர்கள் தம்மை மெச்ச வேண்டும் என்று எதையும் செய்யமாட்டார். மாணவர்களின் அறிவைப் பெருக்குவதுதான் அவரது லட்சியமாக அமையும். இந்த நோக்குடன் அவரவருக்குத் தெரிந்த முறையைப் பயன்படுத்துவார்கள். (முன்பெல்லாம் பெண்களைத் திட்டியோ, ஆண்பிள்ளைகளானால் அடித்தாலோதான் விரைவாகக் கற்பார்கள் என்று கருதப்பட்டது. ஏற்கெனவே பயந்த சுபாவம் உடைய ஒரு பையனுக்கு வன்முறையால் படித்ததும் மறந்துவிடும் என்பதை அவர்கள் ஏனோ உணரவில்லை). பிறருக்குக் கற்பிப்பது என்றால் நம் நண்பர்களிடையே பகிர்வதாகவும் இருக்கலாம். இப்படி நினைத்துத்தான் நான் பலருக்கும் என்னாலான உதவி செய்வேன். இது பலருக்கும் புரிவதில்லை. கதை பூகோள ஆசிரியையான ரோஸ் சான் என்னிடம் அடிக்கடி இந்தியாவைப்பற்றிய சந்தேகம் கேட்பாள். எனக்குத் தெரிந்ததை விளக்குவேன். நான் சொல்லச் சொல்லத் துருவுவாள். ஒரு முறை, ஏதோ புத்தகத்தில் எழுதியிருந்ததைப்பற்றி அவள் யாரிடமோ கூறிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. தெரியாத்தனமாக, “அந்த புத்தகத்தைக் கொண்டுவந்து காட்டுகிறாயா?” என்று நான் கேட்டுவிட்டேன். சற்றும் யோசியாது, “அது மூன்றே வெள்ளிதான்!” என்றாள் ஏளனமாக. ‘நீயே வாங்கிக்கொள்ள என்ன கேடு!’ என்ற அர்த்தம் அதில் பொதிந்திருந்தது. நொந்துபோனேன். சுமார் ஓராண்டு காலமாக நான் கூறிவந்ததை பல புத்தகங்களைத் தேடிப் படித்து அவள் தெரிந்து கொண்டிருக்கலாம். சுலபமான வழி என்று என்னை அணுகியிருக்கிறாள்! ‘இது என்னுடையது. உன்னுடையதையும் எனக்குக் கொடு!’ என்பதுபோல் சுயநலத்துடன் வாழ்பவர்கள் வாழ்க்கையில் வேகமாக உயரக்கூடும். இருப்பினும், எப்போதும் பிறரை மிஞ்சவேண்டும், அதனால் நம் அறிவைப் பகிர்ந்துகொள்ளக்கூடாது என்று நினைப்பவர்களுக்கு உண்மையான நண்பர்கள் வாய்க்கமாட்டார்கள். மகிழ்ச்சியும் கிட்டாது. சில நாட்களுக்குப்பின், என்னிடம் ஏதோ சந்தேகம் கேட்க வந்தாள் ரோஸ் சான். “எனக்குத் தெரியாது!” என்றேன், விறைப்பாக. வெவ்வேறு விதமாகக் கேட்டுப்பார்த்தாள். நான் பிடிகொடுக்கவில்லை. எல்லாருக்கும் உதவி செய்து நம் சக்தியைச் செலவழிப்பதைவிட தமக்குத்தாமே உதவி செய்துகொள்ள இயலாதவர்களுக்கு மட்டும் உதவி செய்தால் – அவர்கள் நன்றியுடன் இருக்கிறார்களோ, இல்லையோ – பலனடைவார்களே என்று தோன்றிப்போயிற்று. எழுத்தாளருக்கும் ஆசிரியருக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருக்கின்றன: 1 எல்லாவற்றையும் விளக்கிக்கொண்டே இருந்தால், அவர் சுமாரானவர்தான். இப்படி எழுதுவதை ஆங்கிலத்தில், “Telling” என்பார்கள். மாணவரோ, வாசகரோ, சிலவற்றை அவர் தாமே புரிந்துகொள்ள வழிவகுக்க வேண்டும். 2 ‘இப்படிச் செய்யுங்கள்!’ என்று அதிகாரம் செய்பவர் மிகச் சுமார். (ஒரு கதையில், ‘நீங்களாவது இதிலிருந்து நீதி கற்றுக்கொள்ளுங்கள்!’ என்று எழுதுவது சிறுபிள்ளைகளுக்கான பள்ளிக்கூடப் புத்தகத்தில் வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். பொழுதுபோக்காக நாம் படிப்பவைகளில் இம்முறை அலுப்பைத்தான் தரும்). 3 ‘இதைப்பற்றி மேலும் அறியவேண்டும்!’ என்ற உந்துதலை அளிப்பவர் சிறந்தவர். ஆசிரியர் அருகில் இல்லாவிட்டாலும். அவர் மாணவனுடனேயே போட்டியா! கற்றுக்கொடுத்ததை சிறப்பாகச் செய்யும் தன்னம்பிக்கையை அளிப்பவர் அவர். தட்டிக்கொடுக்கலாமே! அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும் குடும்பத்திலிருந்து வரும் மாணவனுக்கு கற்றுக்கொடுப்பது எளிது. வயதில் மூத்தவர்களிடம் மரியாதையாக நடப்பது அவனுக்கு இளம்வயதிலேயே போதிக்கப்பட்டிருக்கிறது. அவனிடம் பெற்றோர் காட்டிய அனுசரணையான போக்கால் அவனும் அப்படியே நடக்கிறான். அவனுக்கு நேர் எதிரிடையான பின்னணியிலிருந்து வரும் மாணவர்களைத் திட்டினாலோ, அடித்தாலோ அவர்களை நல்வழிப்படுத்த முடியாது. ஏனெனில், அது அவர்களுக்குப் பழகிப்போன சமாசாரம். நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும். அன்பும் கண்டிப்பும் காட்டினால், ‘இந்த ஆசிரியருக்குத்தான் நம்மேல்தான் எவ்வளவு அக்கறை!’ என்று நெகிழ்ந்து போவார்கள். மட்டம் தட்டுவதைவிட தட்டிக்கொடுப்பது இருதரப்பினருக்கும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் ஊட்டவல்லது. போட்டி மனப்பான்மை விழாக்காலங்களில், ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று நாட்டியப்பள்ளிகள் கலந்துகொள்ள நேரும்போது, ‘என் மாணவிகள்தாம் முதலில் ஆடவேண்டும்!’ என்று ஏற்பாட்டாளர்களை வற்புறுத்தி, சண்டையும் பிடிக்கும் ஆசிரியைகளை அடிக்கடி பார்க்கிறேன். பெற்றோர்களிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும்தான் இளவயதினர் தம் பண்பைக் கற்கிறார்கள். ‘நம்மை முன்னிருத்திக்கொள்ள வேண்டும்!’ என்பது ஆசிரியர்கள் மாணவிகளுக்கு அளிக்கும் தவறான பாடம். மாணவிகளும் கர்வத்துடன் நடக்கத் தலைப்படுகிறார்கள். “என் மாணவன் என்னைவிட நன்றாக வாசித்துவிட்டான். அவனை இன்னொருமுறை எல்லாவற்றையும் வாசிக்கவைத்தேன்!” ஓர் இசைப்பதிவுக்குப்பின் ஆசிரியர் ஒருவர் என்னிடம் அதிர்ச்சியுடன் கூறினார். மாணவனுடனேயே போட்டியா! சீடன் குருவை மிஞ்சினால் பெருமை அடைந்து பாராட்ட வேண்டாமா? இசை, நாட்டியம் போன்ற நுண்கலைகள் இறைவனைத் துதிக்கும் வழிகள் என்பதை இப்போது பலரும் உணராமல் போனது காலத்தின் கோலமா? சர்க்கரை பிடிக்காது, மைசூர்பாகு பிடிக்கும் சிலருக்குப் பிறரைப் புகழ்ந்துதான் பழக்கம். தம்மை யாராவது புகழ்ந்தால் அவர்களுக்குத் தர்மசங்கடமாகிவிடும். என்ன சொல்வது என்று புரியாது விழிப்பார்கள். ஏனெனில், அவர்களுக்கே தம்மிடம் ஏதாவது திறமை இருப்பது தெரியாது. எத்தனை சிறு சமாசாரமாக இருந்தாலும், பிறரிடம் இருக்கும் திறமையையோ, நல்ல குணத்தையோ பாராட்டுவது ஒருவரது நற்குணத்தை, இரக்கத்தை, காட்டுகிறது. ஒருவரது நற்பண்பு செவிப்புலன் அற்றவர்களாக இருந்தாலும், அவர்களுக்குக் கேட்கும்; பார்வை இல்லாதவர்களுக்கும் தெரியும் எனப்படுகிறது. நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்டவர்கள் பிறரையும் நல்லவிதமாகவே எடைபோடுவார்கள். நம் மனம்போனபடி நடந்தால் என்ன? ஏன் பிறரிடம் நல்லவிதமாக நடந்துகொள்ள வேண்டும்? இப்படியெல்லாம் கேட்கத் தோன்றுகிறதா? அப்போதுதான், ‘என்னைப் பிறருக்குப் பிடிக்கிறது. நான் நல்லவன்தான்!’ என்ற நிறைவு உண்டாகும். வீட்டிலும் வெளியிலும் நம் உறவுகள் பலப்படுவது நம் பண்பால்தான். தாம் பெற்ற அன்பை யாரும் சேமித்து வைத்துக்கொள்வது கிடையாது. தமக்குக் கிடைத்ததை மேலும் பரப்புகிறார்கள். கதை கோலாலம்பூரிலுள்ள ஒரு நாட்டியப்பள்ளியில் வசதிகுறைந்த மாணவிகளுக்கு என்று ஆரம்பித்து, பயில வரும் அனைவருக்கும் இலவசமாகப் போதிக்கப்படுகிறது. முறையாகப் பயின்றதால் கட்டொழுங்கும், தன்னம்பிக்கையும் பெருக, பத்து ஆண்டுகளுக்குமேல் அங்கு பயின்றவர்கள் தாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெற வேண்டும் என்று உறுதி பூண்டார்கள். நகரின் பல பாகங்களில் வசித்த ஏழை மாணவிகளுக்கு இவர்கள் போதிக்கிறார்கள். எல்லாரும் இந்தியப்பெண்கள். ‘இந்தியர்கள் முட்டாள்கள்!’ என்று பள்ளிக்கூடங்களில் ஒயாத வசவு வாங்கியிருப்பார்கள். இது புரிந்து, தடுமாறி நிற்கும் சிறுமிகளைத் திட்டாது, ஆனால் மிகுந்த கண்டிப்புடன் நடத்த, வட்டம் பெருகிவருகிறது. அமைதியோ, மகிழ்ச்சியோ இல்லாதிருக்கும் குடும்பத்திலிருந்து வருகிறவர்களுக்கு எதையும் கற்றுக்கொடுப்பது எளிதல்ல. தமக்கு உதவ வருகிறார்கள் என்பது புரியாது, ‘எங்களைவிட்டால் உங்களுக்கு வேறு கதியில்லை!’ என்பதுபோல் திமிராக நடப்பவர்களும் உண்டு. அக்கம்பக்கத்தினர், சகமாணவியர் ஆகியோரைப்பற்றி அவதூறாகப் பேசுகிறவர்களும் உண்டு. சிறிது காலம் இவர்களிடம் பராமுகமாக நடந்துகொண்டால், தானே மாறிவிடுவார்கள். இதெல்லாம் புரிந்து நடந்த ஆசிரியரைப்போலவே, அவரது மூத்த மாணவிகளும் பிறரை வழிநடத்திச் செல்லும் தலைமைக்குணத்தைப் பெற்றுவிட்டார்கள். ‘பிறரிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு சம்பாதித்தால் நீண்ட காலமாக நம்மை வருத்தும் ஏழ்மை நிலையிலிருந்து எளிதாக விடுபடலாமே!’ என்று இவர்கள் நினைப்பதில்லை. நிலைத்திருக்கும் மகிழ்ச்சி என்னவென்று இவர்களுக்குப் புரிந்துவிட்டது. பிறருக்கு நன்மையே செய்பவர்களை ஏமாளிகள் என்று உலகம் நினைக்கலாம். இத்தகைய எண்ணப்போக்கால் சிறிதும் பாதிக்கப்படாத உறுதியும், சுதந்திரமான மனப்போக்கும் பலனை எதிர்பார்க்காது நன்மை செய்பவர்களுக்குக் கிட்டுகிறது. (‘பிறர் என்ன சொல்வார்களோ!’ என்று எப்போதும் அஞ்சுகிறவர்கள் சுதந்திரமாக நடக்கும் திறனை இழந்து, பிறரை நாடிக்கொண்டே இருக்கிறார்கள்). கதை ‘என் சிறுவயதில், பெற்றோர் என்னிடம் அன்பு காட்டவில்லை. ஒழுக்கம் போதிப்பதாக எண்ணி, வன்முறையைப் பிரயோகித்தார்கள். இப்போது அவர்களுக்கு வயதான நிலையில், என்னால் அவர்களிடம் இரக்கம் காட்ட முடியவில்லை. முதியோர் இல்லத்தில் விட்டதில் என்ன தவறு?’ என்று நியாயம் கேட்டு ஒருவர் தினசரியில் எழுதியிருந்தார். இவரைப்போல் கடந்த காலத்தின் கசப்புக்களிலேயே வாழ்ந்துகொண்டிருந்தால் நிம்மதிதான் கெடும். ‘பெற்றோரின் காலமே வேறு. அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!’ என்று தோன்றிப்போனால், அவர்களிடம் பணிவாக நடக்க முடியும். அதிகாரத்தால் சாதிக்க முடியாததை அன்பினால் வெல்லலாம் என்பதைப் பலரும் அறிவதில்லை. கதை பாலர் பள்ளியில் சேர்க்கப்பட்ட சுந்தர் காலையில் புறப்படும் முன் தினமும் கதறி அழுவான் – அப்படியாவது, பெற்றோர் மனமிளகி வீட்டிலேயே விளையாடிக்கொண்டிருக்க அனுமதி கொடுப்பார்கள் என்று நம்பிக்கையால்தான்! அவர்களே இப்படித்தானே செய்திருப்பார்கள்! அதனால் மசியவில்லை. வேண்டாவெறுப்பாக பள்ளிக்குப் போக நேரிட்டபிறகு, அங்கு அளிக்கப்பட்ட எந்த வேலையையும் செய்ய மறுத்தான். அது என்ன, அவனுக்குப் பிடிக்காததையெல்லாம் செய்யச் சொல்லிப் பிறர் வற்புறுத்துவது! ஏதாவது எழுத்துவேலை கொடுத்தால், (தான் விரும்பிப் பார்க்கும் கார்ட்டூன் படங்களில் வரும் மிருகங்களைப்போல்) முகத்தில் இறுக்கத்தைக் காட்டிய பையனை எப்படிச் சமாளிப்பது என்று புரியவில்லை அவன் வகுப்பாசிரியைக்கு. தன் இயலாமையை ஒத்துக்கொண்டு, தலைமை ஆசிரியை மாலாவிடம் கொண்டுவிட்டாள். அவள் கனிவுடன், ‘என் மடியில் உட்கார்ந்து எழுதுகிறாயா?’ என்று கேட்க சிறுவனும் சம்மதித்தான். சில நாட்கள் மாலாவின் மடியில் உட்கார்ந்து எழுதியதில், எழுதுவது அப்படி ஒன்றும் கடினமான வேலை இல்லை என்று தோன்றிப்போயிற்று சுந்தருக்கு. அதன்பின், வகுப்பில் நடப்பவைகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டான். அன்பினால் எதையும் வெல்லலாம் என்று சிறுபிராயத்தில் கற்கும் பாடம் எப்போதும் மறக்காது. கதை திருமணமாகி வெளிநாடு வந்திருந்தாள் சுபத்ரா. புதிய சூழ்நிலை. புக்ககத்தினரும் அனுசரணையாக நடக்கவில்லை. அப்போது, பக்கத்து வீட்டில் குடியிருந்த ஒரு அம்மாள், ‘குழந்தைக்காகப் பண்ணினேன்!’ என்று மைசூர்பாகு செய்து கொண்டுவந்து கொடுத்தாள். அவள் ‘குழந்தை’ என்று குறிப்பிட்டது சூல்கொண்டிருந்த தாயை. எதிர்பார்ப்பின்றி வழங்கப்பட்ட அந்த அன்பினால் சுபத்ராவின் மனம் நெகிழ்ந்துபோயிற்று. கருவாக இருந்தபோது அம்மாவின் மனதைக் குளிரச்செய்த அந்த நிகழ்ச்சி பிறந்த குழந்தையின் உள்ளத்திலும் பதிந்துபோயிருக்கவேண்டும். இல்லாவிட்டால், பாலில் சர்க்கரை சேர்த்தால் துப்பிவிடும் குழந்தை வளர்ந்தபிறகு மைசூர்பாகை மட்டும் விரும்பிச் சாப்பிடுமா? ஈகை என்பது வசதியானவர்களுக்கு மட்டுமே உரிய குணமல்ல. கதை நங்கநல்லூர் கோயில் வாசலில் இருந்த பூக்கடையில் ஆசையுடன் ஒரு ரோஜாவைக் கையில் எடுத்தேன். என்னிடமிருந்த காசை பூக்காரியிடம் நீட்டியபோது, “சில்லறை இல்லே!” என்றாள். நான் சிறிது வருத்தத்துடன் பூவை அது இருந்த கூடையிலேயே திரும்பப் போட்டேன். “தலையில் வச்சுக்கத்தானே கேக்கறே? எடுத்துக்கோ!” அவள் என் கையில் திணிக்காத குறை. பிரமிப்புடன் நான் அதைப் பெற்றுக்கொண்டேன். என்னால் அவளுக்கு அன்று ஐந்து ரூபாய் நஷ்டம். எங்கள் வீட்டுப் பூனைக்குட்டி பரீட்சை எழுதிவிட்டோ, வேலை பார்த்துவிட்டோ களைத்து வருகிறவர்களின் கால்விரல்களை நக்கிக்கொடுத்து, அவர்கள் முகத்தில் சிரிப்பை வரவழைக்கும்! மனிதனோ, மிருகமோ, ஒருவரது செய்கைகளும் சொற்களும் பிறருக்கு ஆறுதலாக, ஊக்கம் அளிப்பதாக இருந்தால் மகிழ்வை அளிக்கிறது. நுணலும் வியாபாரமும் பத்தாவது வயதில்தான் ABCD கற்க ஆரம்பித்தவள் நான் என்று அறிந்ததும், ‘நம்மைப்போன்று ஆங்கிலம் கற்பிக்கிறவர்களை இவள் மிஞ்சுவதாவது!’ என்ற ஆத்திரம் சில ஆசிரியைகளுக்கு ஏற்பட்டது. “உனக்கு முக்கியம் என்று தோன்றுவதை நீ எழுதலாம். ஆனால், அது மற்றவர்களுக்கும் பிடிக்கும் என்பது என்ன நிச்சயம்?” “நீ எழுதுவதால் ஏதாவது மாறிவிடப்போகிறதா?” ஒரு மயிரிழையைக் கூறு போடுவதுபோன்ற இத்தகைய தாக்குதல்களுக்கு என்ன பதில் கூறுவது என்று எனக்குப் புரியத்தானில்லை. எப்படியாவது நான் எழுதுவதைத் தடுத்துவிட வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம். அதன்படி நடந்தால், அவர்களை வெற்றிபெறச் செய்வதுபோல் ஆகிவிடுமே! வழக்கம்போல், மௌனமாகிவிட்டேன். எல்லோரையும் எப்போதும் மகிழ்வித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைத்து நடப்பவர்களாக இருப்பவர்கள்தாம் பிறர் சொல்லுக்கு மதிப்புக்கொடுத்து, தம் முயற்சியைக் கைவிடுவார்கள். தோல்வியைக் கண்டு அஞ்சுபவர்களும், தோல்வி அடைய நேரிட்டால் பிறர் தன்னை மட்டமாக எடைபோட்டுவிடுவார்களோ என்று அஞ்சுபவர்களும் இருக்கிற நிலையே போதும், பாதுகாப்பாக இருக்கிறது என்று இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் தம்மைப்போல் இல்லாது, முன்னேற்றப்பாதையில் நடக்கும் பிறரை பழிப்பதுடன் அற்பதிருப்தி அடைகிறார்கள். ‘நானும் செய்யப்போகிறேன்!’ என்று இவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கலாம். ஆனால், எப்போதுதான் காரியத்தில் இறங்குவது? ஸ்வீடனில், சுற்றுச்சூழல் மாசடைந்திருப்பதால் சீதோஷ்ண நிலையும் கெட்டுக்கொண்டிருப்பது கண்டு பொறுக்காது, பதின்ம வயதினர் ஒன்று சேர்ந்து, இந்நிலையை எதிர்த்துப் போராடுகிறார்கள். ‘தோல்வியடைவோம்’ என்னும் அச்சத்தைவிட ‘வெற்றியடைவோம்’ என்கிற மகிழ்ச்சியான எதிர்பார்ப்பு இவர்களுக்கு அமைந்திருக்கிறது பாராட்டப்பட வேண்டிய சமாசாரம். கெட்ட வார்த்தை மலேசிய ஆங்கில தினசரி ஒன்றில் செக்ஸ், மதம் ஆகிய இரண்டு பொருட்களில் எழுதக்கூடாது என்ற நிபந்தனை எழுத்துவடிவிலேயே இருந்தது. நான் பெண்கள் பகுதி ஆசிரியையைச் சந்தித்து, “சிறுமிகள் பாலியல் வதைக்கு ஆளாகிறார்களே! இதைப்பற்றி எடுத்துச் சொல்லாவிட்டால், பிறருக்கு எப்படித் தெரியும்?” என்று முறையிட, “இது கொடுமையான விஷயம்தான்!” என்று ஒப்புக்கொண்டாள். உற்சாகத்துடன், நான் அதைப்பற்றி எழுதி அனுப்பினேன். பிரசுரமாகவில்லை. முயற்சியைக் கைவிடாது, மீண்டும் எழுதினேன், சற்று மாற்றி. மூன்றாவது முறை, ‘அடிப்படையில், செக்ஸ் என்றால் என்ன?’ என்பதுபோல் எழுத, அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. வானொலியிலும் பேச அழைத்தார்கள். அச்சமயத்தில், அமெரிக்க ஜனாதிபதி இது சம்பந்தப்பட்ட வழக்கில் மாட்டிக்கொள்ள, இவ்வார்த்தை அதிகமாகப் புழங்கியது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பாலியல் ரீதியில் துன்புறுத்தல் (sexual harassment), பாலியல் வதை (sexual abuse) ஆகிய தலைப்புகளில் நிறைய எழுதினேன். ‘செக்ஸ்’ என்கிற அந்த ‘கெட்ட’ வார்த்தையை பயன்படுத்தி முதன்முதலில் வெளிப்படையாக எழுதியதில், எனக்கும் (அதிலும் ஒரு பெண்!) கெட்ட பெயர். அதைத் தொடர்ந்து, தன் மாணவிகளிடம் முறைகேடாக நடந்துகொண்ட ஆசிரியரைப்பற்றி பள்ளி நிர்வாகிகளிடம் முறை செய்தேன். பலனில்லாமல் போக, தொலைகாட்சியில் அதுபற்றிக் கூறினேன். (கல்வி இலாகா என்மேல் குற்றம் கண்டுபிடித்து, ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ எனத் தாக்க, ‘தவறு செய்தவள் நானில்லை. செய்தவரைப்போய் கேட்பதுதானே?’ என்றேன், எரிச்சலுடன். சற்று அயர்ந்துவிட்டு, எப்படியோ சமாளித்தார்கள்). ‘தவற்றைத் தவறென்று சொல்லலாமா?’ என்று மக்கள் விழித்துக்கொண்டார்கள். பலர் அதைப்பற்றி எழுத ஆரம்பித்தார்கள். இத்தகைய தீங்குகளை எதிர்த்து சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன. எழுதுவதால் உலக நடப்பை மாற்றமுடியும் என்று என்னைக் கேலி செய்தவர்கள் உணர்வார்களா?. வாளைவிட பேனா மகத்தானது என்று சும்மாவா சொல்லிவைத்திருக்கிறார்கள்! வெற்றி நிலைப்பதில்லை. அதேபோல், தோல்வியால் எவரும் மாண்டுவிடுவதுமில்லை. வழியில் பல இடர்கள் வரலாம். நல்ல சந்தர்ப்பங்கள் தாமாக அமைவதில்லை என்று புரிந்து, நாம்தான் அவைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தோல்விமேல் தோல்வி வந்தாலும், எடுத்துக்கொண்ட காரியத்தில் நம்பிக்கையும் ஆர்வமும் குன்றாது இருந்தால் வெற்றி நமதே. எவர் சொல்வதைக் கேட்டும் நம் லட்சியத்தை அலட்சியம் செய்யாதிருத்தல் அவசியம். (‘சொல்றதையே கேக்கமாட்டே!’ என்று என்னைத் திட்டியவர்கள் என் அந்தப் பிறவிக் குணமும் நன்மைக்குத்தான் என்று உணரவில்லை!) இறுதியில் நாம் சாதித்தவை பிறருக்குப் பாடமாக அமைந்தால், அதுவே நம் வெற்றி. தோல்வி எவருக்கும் ஏற்படுவதுதான். ஆனால், அதைக் கண்டு, ‘இனி நமக்குத் தோல்விதான்!’ என்று மனம் தளர்ந்துவிடுகிறோமா, அல்லது அத்தோல்வியிலிருந்து கற்று, கூடுதலான முனைப்புடன் அதே காரியத்தில் ஈடுபடுகிறோமா என்பதில்தான் வெற்றி-தோல்வி அடங்கியிருக்கிறது. "ஏழு முறை விழு. எட்டாவது முறை எழு! (ஜப்பானிய பழமொழி) அன்ன ஆகாரமின்றி உழைத்தால் விரைவில் வெற்றி கிட்டுமோ? வெளிநாடுகளிலிருந்து மலேசியா வந்தடைந்து, சாப்பாட்டுக்கடைகளில் வேலை பார்க்கும் பலர் இப்படி நடப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆரோக்கியம் கெட்டதுதான் அவர்கள் கண்ட பலன். கதை ஒரு பெரிய கடையில் வேலை பார்த்த அனுமந்து என்னிடம் ஆச்சரியம் தெரிவித்தார்: “மலேசியாவில், விடுமுறை நாட்களில் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வெளியில் வந்து சாப்பிடுகிறார்களே!” இவ்வளவு வியாபாரம் நடக்கிறதே, நாமே ஒரு சிறு கடையை ஆரம்பித்து நடத்தினால் என்ன என்று அனுமந்துவின் யோசனை போயிற்று. சில ஆண்டுகள் கழிந்ததும், சமையலில் நிபுணரான ஒருவருடன் சேர்ந்துகொண்டார். ‘வெற்றி கிடைத்தால் இன்னும் சில கிளைகளைத் திறக்கலாம்! எங்களுக்கு வருகிறவர்களின் திருப்திதான் முக்கியம்!’ என்றார். வெற்றியைப்பற்றிக் கனவு கண்டால் மட்டும் போதாது. ‘கிடைக்கும்’ என்ற நம்பிக்கையுடன், அதற்காக உழைக்க வேண்டும். ‘வெற்றி கிடைக்கும்போது’ என்று உறுதியுடன் மாற்றிச் சொல்லி இருக்கவேண்டும். போட்டியாளர்கள் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் போட்டியாளர்களைச் சமாளிப்பது. ஏதாவது ஒன்றைத் தயாரிக்க தமது கடையில் என்னென்ன சாமான்களைச் சேர்க்கிறோம், அவைகளை யார், எப்படிக் கொண்டுவருகிறார்கள் என்று விவரித்தார். “இவ்வளவு விவரம் வேண்டாமே! ’மாதாமாதம் இறக்குமதி செய்கிறோம்,” என்று பொதுவாகச் சொல்லிவிட்டுப் போங்கள்!" என்றேன். ஒருவர் வீட்டுக்கு வாங்கிப்போக விரும்புவதாகக் கூறியபோது, ‘ஆறிப்போனால் தோசை முறுமுறுவென்று இருக்காது!’ என்று அனுமந்து தடுத்துவிட்டாராம். "நன்றாக இல்லை என்று அடுத்த முறை வராது போய்விடுவாரே! வாடிக்கையாளர்கள் முக்கியமில்லையா?’ என்றார். “வந்த வியாபாரத்தை விடலாமா? ‘ஆறிப்போனால், இப்படியே இருக்காது!’ என்று எச்சரிக்கை செய்தாலே போதுமே! நிச்சயிப்பது அவர் பாடு!” என்றேன் அந்த இளைஞரிடம். நாணயம் அவசியம்தான். அதற்காக நாம் செய்வது, நமக்குத் தெரிந்தது எல்லாவற்றையும் வெளிப்படையாக எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருப்பானேன்! நம் வழிகளைப் பின்பற்றி, வியாபாரத்தில் பிறர் நம்மை மிஞ்சிவிடும் அபாயம் இருக்கிறதே! ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்று அதற்காகத்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள் போலும்! மௌனம் எதற்கு, சண்டை போடலாமே! மூன்று வயதுக் குழந்தைகள் அடிக்கடி தாயை அழைத்துப்பார்க்கும். அவள் வீட்டிலேயேதான் இருப்பாள். இருந்தாலும், அவர்களுக்கு என்னவோ பயம் – தனியாக விட்டுவிடுவார்களோ என்று. ‘நான் எப்பவும் உன்கூட இருப்பேன். பயப்படாதே!’ என்று சில முறை சொன்னால் ஆறுதலும், தாய்மீது நம்பிக்கையும் பிறக்கும். (தந்தை வேலை நிமித்தம் அல்லது நண்பர்களுடன் பொழுதைக் கழிக்க வீட்டைவிட்டு அடிக்கடி வெளியே போய்விடுவதால் இப்படியோர் அச்சம் பிறக்கிறதோ?) சிறு குழந்தைகளுக்கு மட்டுமில்லை, எந்த வயதிலும், எவர்மீதிலும் அவநம்பிக்கை எழலாம். கதை காதலிக்கும்போது தன்னையே சுற்றிச் சுற்றி வந்து கைப்பிடித்த கணவன் திருமணத்திற்குப்பிறகு தான் ஒருத்தி இருப்பதையே மறந்தவன்போல் நடப்பது கண்டு ரேணுவுக்குத் துக்கம் பெருகியது. அழுகையுடன், பிற பெண்களிடம் முறையிடத்தான் அவளால் முடிந்தது. வீட்டிலேயே சில நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு சீட்டாட்டத்தில் தன்னையும் உறவுகளையும் மறந்துபோனான் வேணு. எப்போதாவது மனைவி அதைப்பற்றி முறையிட்டால், ‘உன் தொணதொணப்பு தாங்க முடியாதுதான் நண்பர்களை நாடுகிறேன்!’ என்ற ரீதியில் விவாதித்து பேச்சை முடிப்பான். பெண் தன் கணவன் எப்போதும் தன்னருகில் இருந்தால்தான் அன்பு என்று நினைக்கிறாள். அவளுக்கு அந்த அருகாமை வேண்டியிருக்கிறது. ஆணுக்கோ, நீண்டகால நெருக்கம் மூச்சை அடைப்பதுபோல் இருக்குமாம். நம்பிக்கை எழ வேலை, நண்பர்களுடன் உல்லாசம், தனக்கென ஒரு பொழுதுபோக்கு – இதெல்லாம் அவசியம் என்று ஆண்களுக்குத் தோன்றினாலும், குடும்பத்தினருக்கும் சிறிதளவாகிலும் நேரத்தை ஒதுக்கி, தன் வாழ்க்கையில் நடந்ததை அவ்வப்போது பகிர்ந்துகொண்டால்தான் உறவு பலக்கும். ஒருவருக்கு நேர்ந்தது நல்லதோ, கெட்டதோ, அதைப் பகிர்ந்துகொண்டாலே போதும். இதனால் சில சமயம் சிறு சர்ச்சைகள் எழலாம். ஆனால், வெளிக்காட்டமுடியாத கோபத்துடன் மௌனம் சாதிப்பதைவிட சண்டையாவது போடலாமே! ஒருவர் மனம் மற்றவருக்குப் புரிய வேறு வழி ஏது! யாரைத்தான் நம்புவது! நம் நம்பிக்கையைப் பெற நல்லவர்கள்மாதிரி நடித்து, வலிய வந்து உதவி செய்பவர்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் யாரைத்தான் நம்புவது என்ற அவநம்பிக்கைதான் எவருக்கும் எழுகிறது. ‘நம்மிடமிருந்து ஏதோ காரியத்தைச் சாதித்துக்கொள்ளத்தான் இவர் நல்லவர்போல் நடிக்கிறார்!’ என்று முதலில் அவநம்பிக்கை ஏற்படும். கதை சீனப்பெருநாளன்று, ‘அங் பௌ’ (ANG POW) என்று, திருமணம் ஆகாதவர்களுக்கு உறவினர்களும், பெற்றோரின் நண்பர்களும் பணம் கொடுப்பது வழக்கம். அப்படிக் கிடைத்த பணத்தை எப்படிப் பத்திரப்படுத்துவது என்று அந்த பத்து வயதுச் சிறுமிக்கு தெரியவில்லை. ‘நான் வைத்துக்கொள்கிறேன், கொடு!’ என்று வீட்டிலிருந்த பெரியவர் கைநீட்ட, கொடுத்தாள். ஆனால், அடுத்த சில நாட்கள், “என் காசை எடுத்தீர்களா?” என்று அடிக்கடி கேட்கத் தவறவில்லை! அவளுடைய அவநம்பிக்கை புரிந்து அவருக்குச் சிரிப்புதான் வந்தது. ‘என்னிடமே நிறைய பணம் இருக்கிறது. நான் ஏன் உன்னுடையதை எடுக்கப்போகிறேன்!’ என்று அலட்சியமாகக் கூற, அவளுக்கு அவரிடம் நம்பிக்கை பிறந்தது. பிறர் நமக்குத் தீங்கு இழைக்க மாட்டார்கள், மாறாக, அவர்கள்தாம் நம் நலனையே விழைபவர்கள் என்று தோன்றும்போதுதான் நம்பிக்கை எழ, அவர்களை ஏற்கிறோம். நம்பிக்கை துரோகிகள் ராஜன் படித்து, பெரிய வேலையில் இருந்தார். எந்தவித தீயபழக்கத்தையும் விட்டுவைக்கவில்லை. அவருக்குக்கீழ் வேலை பார்ப்பவர்களைத் தன் வசம் இழுத்து, அவர்களையும் குடிபோதைக்கு அடிமையாக்க பெரும் பிரயத்தனம் செய்வார். மேலதிகாரியைப் பகைத்துக்கொள்ள முடியாது, அவர்களும் அவர் காட்டிய தீய வழிகளில் நடப்பார்கள். விலைமாதர்களை நண்பர்களுக்குப் பரிந்துரைக்கும் ராஜனைப்போல் ஒருவரை எந்தப் பெண்தான் ஏற்பாள்? அவரது குணத்தைப் புரிந்து, கணவன்மார்களை எச்சரித்த மனைவிகளிடம் மனக்குறையுடன், “என்னை நீங்கள் நம்பவில்லை என்று தெரியும்!” என்று பிரலாபிப்பார். தான் செய்துவருவது தவறு என்று அவர் கருதாததுதான் வியப்பு. நம்பிக்கையே ஆயுதமாக சந்தித்த உடனேயே அதிக நட்புடன், நைச்சியமாகப் பேசுகிறவர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். ‘என்னை நம்பு!’ ‘ஐயோ! என்மேல் உனக்கு நம்பிக்கை வரவில்லையே!’ இளம்பெண்களை வசப்படுத்த முயற்சி செய்பவர்கள் அடிக்கடி பிரயோகிக்கும் வசனங்கள் இவை. அப்படி ஒருவர் வெளிப்படுத்தும் போலியான தன்னிரக்கத்தைப் பார்த்து இரங்கி, ‘அன்புக்கு ஏங்குகிறார். அவரை என்னால் திருத்த முடியும்!’ என்று இரக்க குணம் படைத்த பெண்கள் ஏமாறலாம். ஆனால், கீழே இருப்பவர்கள் பிறரையும் கீழே இழுக்கத்தான் பார்ப்பார்கள். அவர்களைத் திருத்த முயல்வது துர்லபம். அப்படி ஒரு நிலையில் இருப்பதுதான் அவர்களுக்குப் பிடிக்கிறது என்றால், விட்டுத்தொலைக்க வேண்டியதுதான். ‘சவால்’ என்று நம்மையே வாட்டிக்கொள்வானேன்! அவர்களைவிட்டு விலகினால் ஆரோக்கியமான உறவுகள் அமைய வாய்ப்புண்டு. துஷ்டர் என்று கண்டும் தூர விலக முடியாதவர்கள் அது ஏன், சிலர் தகாத நட்பு என்று தெரிந்தாலும், அதிலிருந்து விலக முடியாது தவிக்கிறார்கள்? சிறு பிராயத்தில் பெற்றோரை நம்பி, அவர்களால் ஏமாற்றம் அடைந்தவர்களாக இருப்பார்கள். கதை மனைவியை ஒதுக்கிவிட்டு, இளமையான இன்னொரு பெண்ணை மணந்தார் ஒரு சுயநலக்காரர். குழந்தைகளுடன் தம்பியின் வீட்டில் தஞ்சம் புக நேரிட்டது முதல் மனைவிக்கு. வேண்டாத இச்சுமையால் குழந்தைகளைக் கொடுமைப்படுத்தினார் அந்த உறவினர். ‘இருக்கும் ஆதரவையும் பகைத்துக்கொண்டால், குடும்பத்துடன் எங்கு போவது!’ என்று தாய் கண்டும் காணாததுபோல் இருந்தாள். உடனுக்குடனே அவள் ஆதரவாக ஏதாவது குழந்தைகளிடம் சொல்லியிருந்தால் அவர்களுக்கு அவ்வளவு மனக்கிலேசம் ஏற்பட்டிருக்காது. ஆண் குழந்தைகள் முடிவெடுத்தது: எல்லா ஆண்களுமே அப்பாவைப்போல்தான்! கைவிட்டுவிடுவார்கள். நம்பமுடியாது. பெண்களின் முடிவு: ஆண்கள் அனைவரும் பெண்பித்தர்கள்! எந்த விதத்திலாவது பெண்களைக் கஷ்டப்படுத்துகிறவர்கள். வளர்ந்ததும், பெண்கள் தந்தையைப் போன்றவரையே கணவனாக வரித்தார்கள். மகிழ்ச்சியாக இருப்பதைப்போல் காட்டிக்கொண்டார்கள். ஏனெனில், அவர்களுக்குத் தெரிந்த வாழ்க்கைமுறை அதுதான். ஆண்பிள்ளைகளோ, ‘எனக்கு நல்ல நண்பர்களே கிடைக்க மாட்டார்கள்!’ என்று எண்ணியதுபோல், தம்மையும் அறியாது, தந்தையைப் போன்றவர்களையே உற்ற நண்பர்கள் என்று எண்ணி ஏமாந்தார்கள். அவர்களிடம் தந்தை தமக்கிழைத்த அநீதியைச் சொல்லிச் சொல்லி மாய்ந்தார்கள். நம்பிக்கைக்கு உரியவராக இருக்க வேண்டியவரே துரோகம் செய்கிறார் என்று புரியும்போது, முதலில் அதிர்ச்சியும், பிறகு, ‘ஏமாந்துவிட்டோமே!’ என்ற ஆத்திரமும் எழுகின்றன. ஆத்திரம் தணியாமலே இருந்தால் நம் உடல்நிலைதான் கெடும். பாம்பு தன் சட்டையை உரிப்பதுபோல், பழையனவற்றை நம் நினைவிலிருந்து அகற்றிவிட்டு, அதிலிருந்து கற்ற பாடத்தை நினைவில் வைத்துக்கொண்டாலே போதும். அதே குணத்தைக்கொண்ட வேறொருவரைச் சந்திக்கும்போது, ஜாக்கிரதையாகப் பழக முடியுமே! வாடிக்கையாகப் பழிப்பது வேடிக்கையா? “எங்கள் வீட்டில் நாங்கள் யாரும் அதிகமாகப் பேசிக்கொள்வது கிடையாது!” திருமணமாகிய முதல் சில ஆண்டுகளில் தம்பதிகள் நிறையப் பேசியிருப்பார்கள். அதன்பின், அந்த இணக்கம் ஏன் முறிந்துவிடுகிறது? மற்றவரைப்பற்றி அறியவேண்டும் என்று முதலில் இருந்த ஆர்வம் காணாமல் போய்விட்டதுதான் காரணம். அதன்பின், ஒருவர் கூறுவதை மற்றவர் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. அப்படித் தவறாகப் புரிந்துகொள்வதால் வருத்தமோ, கோபமோ வருகிறது. இருவருமே, ‘நான் சொல்வதைக் கேளேன்! என்னைப் புரிந்துகொள்!’ என்று சண்டை பிடிக்கிறார்கள். அல்லது, மனதளவில் ஏங்குகிறார்கள். தான் எண்ணியபடி உற்றவர் இல்லையே என்று வருந்தி, விவாதித்துக்கொண்டே இருந்தால் நல்ல விளைவு உண்டாகுமா? இது புரியாது, சிலர் ‘முட்டாள்!’ என்று மற்றவரைப் பழித்துக்கொண்டே இருப்பார்கள். ‘உனக்கு நான் என்ன சொன்னாலும் புரியப்போவதில்லை. மூளை இருந்தால்தானே!’ இந்த இரு வாக்கியங்களிலேயே பிழை இருக்கிறது. முதலாவதில், நான் என்ற சொல்லுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சொல்பவர் புத்திசாலியோ, இல்லையோ, மற்றவரைவிடத் தனக்குத்தான் அறிவுகூர்மை அதிகம் என்று நம்பிப் பழித்தால், தாக்கப்பட்டவர் குறுகிவிடுவார். அல்லது ஆத்திரமடைவார். ‘மூளை கிடையாது!’ என்று ஒருவர் கூறுவதைப் பலமுறை கேட்கும்போது, அதை நம்பிவிடும் அபாயமும் இருக்கிறது. கதை தமிழ் நாட்டுக் குடும்பம் ஒன்றில், தினசரியில் வந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயித்தார்கள். மாப்பிள்ளை தலைநகரில் மிகப் பெரிய வேலையில் இருந்தான். அதனால், கல்யாணத்தைப்பற்றி யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்ற நிபந்தனையை அதிகம் யோசியாது, பெண்வீட்டார் ஏற்றுக்கொண்டனர். கல்யாணத்துக்குப் பிறகுதான் தெரிந்தது, அவனுக்கு மனநோய் என்று. (ஆனால், உத்தியோகம் பார்க்க முடிந்தது). சாதுவான மனைவியை, ‘நீ பைத்தியம்!’ என்று ஓயாமல் பழிக்க, சில வருடங்களிலேயே அவளும் நிலைகுலைந்துபோனாள். அத்துடன் திருப்தி அடையாது, ஒரே மகளையும் இப்படியே நடத்த ஆரம்பித்தார். சுமார் இருபது வயதான அப்பெண்ணை நான் சந்தித்தபோது தானாகவே, “நான் நார்மல்தான். பைத்தியம் இல்லை,” என்றாள் என்னிடம். என் அதிர்ச்சியைப் பார்த்துவிட்டு, தாய் விளக்கம் அளித்தாள்: “அவளுடைய அப்பா அவளை எப்போதும் ‘பைத்தியம்’ என்பார். அவளும் நம்பிக்கொண்டிருக்கிறாள்!” இம்மாதிரியான சிக்கலான மணவாழ்க்கை முறிந்தாலே நிம்மதி. தனக்குக் குறை இருக்கிறது என்று தெரிந்தும், அதை ஏற்க விரும்பாதவர்கள் தம்மைச் சார்ந்த பிறரிடம்தான் அக்குறை இருக்கிறது என்று நம்பவைப்பார்கள். இன்னும் சிலர், தான் எதில் தோல்வி அடைந்தாலும் அதற்கு மனைவிதான் காரணம் என்று பழி சுமத்துவார்கள். ஒரு மனைவி தன் கணவனிடம் கேட்டாள், சிரித்தபடி: ‘நான் உங்களை விட்டுப்போனால், நீங்கள் தவறான பாதையில் காரை ஓட்டிச் செல்லும்போதெல்லாம் யார்மீது குற்றம் சாட்டுவீர்கள்?’ கதை சகாதேவன் வியாபாரத்தில் தோல்வியடைந்தவர். அதில் அவர் மனைவி எந்த விதத்திலும் ஈடுபடவில்லை. இருந்தாலும், அவள்தான் தன் வீழ்ச்சிக்குக் காரணம் என்று தோன்றிப்போக, ‘முட்டாள்!’ என்று அவளைப் பழித்துக்கொண்டே இருப்பார். அவர் நொந்த மனதைப் புரிந்துகொண்டு, அவளும் எதிர்த்துப் பேசாமல், எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டாள். ‘எல்லாப் பெண்களுமே முட்டாள்கள்தாம்!’ என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை ஏற்பட்டது அந்த மனிதருக்கு. நானும் இருமுறை இவரிடம் மாட்டிக்கொண்டேன். நான் அஞ்சவில்லை. என் எதிர்ப்பை வெளிப்படுத்தினேன். பயம் அவரிடமே திரும்பியது, சுவற்றில் அடித்த பந்துபோல். அச்சத்தை விளைவித்தால், உண்மையான மதிப்பும் மரியாதையும் வருமா? தன்னைப் பார்த்துப் பிறர் பயப்பட வேண்டும், இல்லையேல், தான் அவர்களைக் கண்டு அஞ்ச வேண்டும்! என்ன மனநிலை இது! இவரைப் போன்றவர்களுக்கு உண்மையான நண்பர்கள் வாய்க்கமுடியுமா? சிறுவர்கள்கூட இப்படிப்பட்ட நடத்தையை மற்றவர்களிடமிருந்து கற்று, வீட்டில் பெரியவர்களை அப்படியே நடத்த ஆரம்பிக்கிறார்கள். அப்போதுதான் பிறர் தம்மைக் கவனிப்பார்கள் என்று அவர்கள் எண்ணம் போகிறது. கதை ஐந்து வயதான சுதா தன் சிநேகிதியான பியாங்காவின் வீட்டிற்கு விளையாடப்போய், இரண்டு, மூன்று மணி நேரம் அங்கேயே கழித்தாள். வீடு திரும்பியதும், பெரியவர்களிடம் தாறுமாறாகப் பேச ஆரம்பித்தாள். ‘எப்போதும் மரியாதையாக, அன்புடன் நடந்துவந்தவளுக்கு இப்போது என்ன வந்துவிட்டது?’ என்று யோசித்தார்கள். அவளை அப்படியே விட்டுவிட்டால், அதே நடத்தை தொடரும். வன்மையாகக் கண்டித்தாலோ, அதிகமாக முரண்டுபிடிக்கக்கூடும். முதன்முறை ஆனதால், கண்டும் காணாமல் இருக்க வேண்டியதுதான் என்று தோன்றிப்போயிற்று. “உன் சிநேகிதி பியாங்கா அவளைப் பார்த்துக்கொள்ளும் பணிப்பெண்ணிடம் எப்படி நடந்துகொள்கிறாள்?” என்று கேட்டாள் தாய். “அந்த அக்காவை பியாங்கா எப்பவும் திட்டுகிறாள்,” என்று பதில் வந்தது. பியாங்காவின் தாய் பணிப்பெண்ணை எப்படி நடத்துகிறாளோ, அப்படியே மகளும் நடத்தக் கற்றுவிட்டாள். தவறு தோழியின் தாயின்மேல்தான். வயதில் மூத்தவர்களிடம் அப்படி நடப்பது தவறு என்ற அதிர்ச்சி சுதாவின் பதிலில் காணப்படவில்லை. ஏனெனில், நல்லது, கெட்டது என்று ஆராயும் திறமை குழந்தைகளுக்குக் கிடையாது. பிறரைப் பார்த்துத்தான் எதையும் கற்கிறார்கள். உடனே அப்படியே நடந்தும் காட்டுகிறார்கள். “இனி நீ பியாங்கா வீட்டுக்குப் போகாதே! அவள் உன்னைமாதிரி நல்ல பெண் இல்லை!” என்று அந்த விஷயத்துக்கு ஒரு முடிவு கட்டினர். நாம் சொல்வதையும் செய்வதையும் குழந்தைகள் அப்படியே காப்பி அடிக்கின்றனர் என்பதால் சற்று கவனமாகத்தான் இருக்கவேண்டும். ஒரு காரியத்தைச் செய்யும் முறையை மாணவப் பருவத்திலிருப்பவர்களுக்கு ஆரம்பிக்குமுன் சொல்லிக்கொடுக்கலாம். இருந்தாலும், கூடவே நின்று தொணதொணத்துக்கொண்டிருந்தால், அவர்களுக்கும் பொறுமை மீறிவிடாதா! ‘நான் இப்படிச் செய்வேன். நீ உனக்குத் தோன்றியபடி செய்!’ என்று விட்டுவிட்டால், அவர்களுக்கு நம்மேல் மரியாதை எழும். நாம் காட்டும் முறையை அப்படியே கடைப்பிடிப்பார்கள். வேடிக்கைதானா? ‘வேடிக்கை’ என்று நினைத்து பெரியவர்கள் செய்யத் துணியாததை குழந்தைகளைச் செய்யத் தூண்டுகிறவர்களும் உண்டு. ஒரு பதின்மவயதுப் பெண்ணைக் காட்டி, "இவளைப் பாரேன்! குரங்குமாதிரி ஒக்காந்து சாப்பிடறா!’ என்று ஐந்துவயதுச் சிறுமியான சியாமளாவிடம் காட்டினாள் அவளுடைய அத்தை. (அத்தைக்குக் குழந்தைகள் கிடையாது). அச்சிறுமியின் தாய்வழிப் பாட்டி அவர்கள் வீட்டுக்கு வந்தபோது, “பாட்டி குரங்குமாதிரி ஒக்காந்து சாப்பிடறா!” என்று சியாமளா கேலியாகக் கூறிச் சிரிக்க, எல்லாருக்கும் அவமானமாகப் போயிற்று. இதில் குழந்தையின் தவறு என்ன? சியாமளா ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும், அவள் வயதை ஒத்த மாலாவுடன் அவளை ஒப்பிடுவாள் அந்த அத்தை: “மாலா அசடு! சாப்பிடப் படுத்தும். ஒன்னைமாதிரி சமத்தா சாப்பிடாது!” பெருமையுடன், ஒவ்வொரு முறையும் மூச்சுப்பிடிக்கச் சாப்பிட்டு, குண்டாகிப்போனதுதான் நடந்தது. மாலாவின் தாய் என்னிடம் வருத்தத்துடன் கூறினாள்: “‘நீயும் சியாமளாமாதிரி சமத்து!’ என்று சொல்லிச் சொல்லி இவளை வளர்க்கிறோம். இங்கோ, இப்படிச் சொல்கிறார்கள்!” ‘நீதான் உலகிலேயே உயர்த்தி!’ என்பதுபோல் புகழ்ந்து, சம வயதுக் குழந்தைகளை மட்டமெனக் கருதும் பழக்கத்தை பிள்ளைகளிடம் ஏற்படுத்துவது அன்பின் மிகுதியா? அது அறிவீனம். தான் அப்படியெல்லாம் சிறந்தவள் இல்லை என்று எப்போதாவது உணரும்போது அவர்கள் செய்வது அறியாது திகைத்துப்போய்விடுகிறார்கள். தம்மை அப்படி வளர்த்தவர்கள்மேல் வெறுப்புதான் மண்டுகிறது. அடித்தால்தான் ஆசிரியை! ஆண்கள் மட்டும் பயிலும் பள்ளிக்கூடத்தில் அவ்வருடம்தான் புதிதாகச் சேர்ந்திருந்தேன். ‘ஐயோ! அந்தப் பள்ளிக்கூடமா?’ என்று என்னைப் பார்த்துப் பிறர் பரிதாபப்பட்டது ஏனென்று பிறகுதான் புரியத் தொடங்கியது. “டீச்சர் எங்களை அடிப்பதே கிடையாது. நாங்கள் எதற்கு நீங்கள் சொல்வதைக் கேட்கவேண்டும்?” பதினான்கு வயதான அந்த மாணவர்கள் என்னிடம் சவால் விட்டார்கள். வேறு வழியின்றி, மளிகைக்கடையில் ஒரு பிரம்பை வாங்கிக்கொண்டு போனேன். “உங்களுக்கு அடிதானே வேண்டும்? இதோ பாருங்கள்!” என்று பிரம்பை மேலும் கீழும் ஆட்டியபடி, நிமிர்ந்த நடையுடன். (ஆங்கிலப்படம் ஒன்றில், குண்டர் கும்பல் தலைவன் செய்ததைப் பார்த்துத்தான்!) “வாவ்! டீச்சர் terror, lah! (பயங்கரமானவள்!)” என்ற பாராட்டும்(?) பெற்றேன்! எவராலும் அவர்களை அடக்கவே முடியாதிருந்தது. வகுப்பில் கண்டபடி ஓடுவார்கள், கூச்சலிடுவார்கள். யாராவது ஒருவன் தப்பித்தவறி, “ஏய்! டீச்சர் பேசுவது காதில் விழவில்லை. வாயை மூடுங்கள்!” என்று கண்டிக்கப்பார்த்தாலும், “டீச்சர் உரக்கப் பேசட்டுமே! சம்பளம் வாங்கறாங்க, இல்லே?” என்று பதில் வரும். இவர்களைப் பொறுக்கமுடியாது, மற்ற ஆசிரியைகள் அந்த வகுப்பிற்குப் போகுமுன் என் பிரம்பை கடன் வாங்கிக்கொண்டு போவது வழக்கமாயிற்று. அவர்களைப் புரிந்துகொள்ள, “உங்களுக்கு எந்த ஆசிரியையிடமாவது பயமா?” என்று கேட்டேன். பெரிய குரலுடன் எப்போதும் கத்தும், குண்டாக இருந்த ஒருத்தியைக் குறிப்பிட்டார்கள். அடித்தாலும், கண்டபடி வைதாலும்தான் சொன்னால் கேட்பார்களா? குண்டாக இருந்தால் என்ன, அவர்களை அப்படியே நசுக்கிவிடுவாளா? (இப்படிப்பட்ட மாணவர்கள் உணர்ச்சி ரீதியில் குறைபாடு உள்ளவர்கள். சில நாடுகளில் பள்ளிக்கூடத்திலேயே உளவியலாளர்கள் இவர்களுக்கு அனுதினமும் மாத்திரையோ, ஊசிமூலம் மருந்தோ கொடுத்தால்தான் இவர்களை அமைதியாக ஒரே இடத்தில் உட்கார வைக்க முடியும் என்று சில கால ஆராய்ச்சிக்குப் பிறகு அறிந்தேன்). எங்கள் பள்ளியின் எதிரிலேயே இருந்த பெண்கள் பள்ளியில் பயின்ற மாணவிகள் – இவர்களின் சகோதரிகள் அம்மாதிரி இருக்கவில்லை. பையன்கள் மட்டும் ஏன் இப்படி ஆனார்கள் என்ற கேள்வி எழுந்தது. அவர்களிடமே கேட்டேன். கதை பேச்சோ, அன்போ எதுவுமில்லாது, வாரம் ஒருமுறை ஒரு பெரிய தடியை எடுத்துக்கொண்டு வீடு முழுவதிலும் மகனைத் துரத்துவாராம் ஒரு தந்தை. சிரித்தபடி இதைப் பகிர்ந்துகொண்டான் ஒரு மாணவன். “அப்பா என்ற ஸ்தானத்தால், அவருக்குத்தான் என்னைவிட அதிக அதிகாரம் இருக்கிறது என்று காட்டுகிறாராம்!” என்றவன் குரலில் ஏளனம். “நீ என்னடா செய்வே?” என்று அதிர்ச்சியுடன் அவன் நண்பர்கள் கேட்க, “கழிப்பறையில் போய் ஒளிந்துகொள்வேன். அரை மணி நேரம் கழித்து வெளியே வரும்போது, அப்பா என்னை மறந்திருப்பார்!” என்று மேலும் சிரித்தான். இளவயதினர் அதிகமாக உணர்ச்சிவசப்படுவர். அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய பெற்றோரும் ஆசிரியர்களும் அவர்களைப்போலவே நடந்தால் எப்படி! நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும். (அடக்கவே முடியாத மாணவர்களுடன் பழக நேரிடும்போது, நம் குழந்தைகளும் எங்கே அப்படிக் கெட்டுவிடுவார்களோ என்று ஆசிரியப் பெருமக்கள் தம் செல்வங்களிடம் சற்று அளவுக்கு மீறியே கண்டிப்பைக் காட்டுவார்கள். உரிய காலம் வந்தபின், அதைத் தளர்த்திக்கொண்டால் உறவு பலப்படும்). முன்பெல்லாம், வீட்டுக்கு வந்து பயிற்சி அளித்த ஆசிரியர்கூட கையில் பிரம்பை எடுத்து வருவார். பெற்றோரும் மகிழ்வார்கள், மகன் உருப்பட்டுவிடுவான் என்ற தவறான நம்பிக்கையில். கதை தாய்வழிப் பாட்டி வீட்டில் சிறு பிராயத்தைக் கழித்திருந்த மகனுக்குச் செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டார்கள் என்று கருதி, அதற்கு நேர்மாறான வளர்ப்பு முறையைக் கையாண்டார் தந்தை. பலரும் கூடியிருக்கையில், இடுப்பு பெல்டைக் கழற்றி, அந்த பத்து வயதுப் பையன் கதறக் கதற அடிப்பார். நன்கு படித்து, அயல்நாட்டுக்குப் போன மகன் தாய்நாட்டுக்குத் திரும்ப வரவேயில்லை. அப்பா அடித்தபோது அம்மா தடுக்காததால், அவள்மீதும் வெறுப்பு! வசதியான குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும், ‘பிறர் அன்பு செலுத்த தகுதி இல்லாதவன் நான்!’ என்ற எண்ணம் மனதில் படிந்துவிட, அவனுக்கு எவரையும் நம்பி உறவுகொள்ள முடியாதுபோயிற்று. “மரியாதையின்றி பழகவும், பொய்யுரைக்கவும், முறையாகக் கல்வி பயிலாதிருக்கவும் சிறுவயதிலிருந்தே தண்டிக்க வேண்டும்!” என்று வேடிக்கையாகக் கூறுகிறார் ஒருவர். அதிகார வர்க்கத்தினர் சொல்வதெல்லாம் சரியல்ல என்று தோன்றினால் என்ன செய்வது? தட்டிக்கேட்டால், ‘எதிர்த்துப் பேசாதே!’ என்று இன்னும் திட்டு விழுமே! சில சமயம் மரண தண்டனைகூட உண்டு. கதை இரண்டாம் உலகப்போரின்போது வார்ஸா சிறையில் (Warsaw ghetto) அடைக்கப்பட்டிருந்தாள் ஹெலன். அவளைப்போன்ற பெண்கள் நாள் முழுவதும் தையல் வேலையில்தான் ஈடுபட வேண்டும் என்பது சட்டம். ஏதாவது புத்தகத்தை கையில் எடுத்தால் உடனே மரண தண்டனை! ஹெலனுக்கு Gone with the Wind என்ற புத்தகம் எப்படியோ கிடைத்தது. சரித்திரமும் காதலும் கலந்த அருமையான நவீனம். தூங்கும் நேரத்தில் மூன்று, நான்கு மணியைச் செலவழித்து அதைப் படித்தாள் ஹெலன். மறுநாள், தையல் வேலையில் ஈடுபட்டபடி ஓரிரு மணிக்குள் அக்கதையை சிநேகிதிகளிடம் சொல்வாள். அவ்வளவு சுவாரசியமாக இருக்கும். பிடிபட்டிருந்தால், அனைவருக்குமே மரண தண்டனை! அக்கதையை முழுவதும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவா அந்த அச்சத்தையும் மீறியிருந்தது. ‘ஏதாவது புத்தகம் படித்தீர்களா?’ என்று சிறையில் அடைபட்டிருந்த அப்பெண்களைக் கேட்டால், மறுத்திருப்பார்கள். எப்போது உண்மை பேசினாலும் நம்பாதபோது பொய் சொல்வதே மேல் என்று தோன்றிப்போகிறது. அடிப்பது அலுப்பைத் தரும் “புத்தகத்திலே போட்டிருக்கிற மாதிரியெல்லாம் வளக்கணும்னு பாத்தா முடியுமா?” என்று என்னைக் கேட்டாள், என் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள நான் அமர்த்தியிருந்த பணிப்பெண். “எத்தனை சொன்னாலும் பிள்ளைங்களை அடிக்க மாட்டறீங்க!” இப்போது என் மகள் கேட்கிறாள்: “நீ ஏம்மா எங்களை அடிக்கவேமாட்டே?” பள்ளிக்கூடத்தில் ஆசிரியைகள் அடித்தார்கள், வீட்டில் பணிப்பெண்கள் அடித்தார்கள், அம்மா மட்டும் ஏன் அடிக்கவில்லை என்ற குழப்பம், வளர்ந்தபின்னரும்! “அடிக்கிறது சுலபம். ஆனா, அதுக்கப்புறம் அழற குழந்தையைச் சமாதானப்படுத்தறது கஷ்டம். அதைக் கட்டியணைத்துக்கொண்டு, ‘எனக்கு உன்னைப் பிடிக்கும். தெரியாம அடிச்சுட்டேன்!’ என்றெல்லாம் ஆயிரம் சமாதானம் சொல்ல வேண்டும். போர்! எனக்கு அலுப்பான விஷயம் அது!” அதிகாரத்தால் பெறும் மரியாதை அதிகாரம் செலுத்திப் பிறரைப் பணிய வைக்கலாம். ஆனால், அப்படிப் பெறும் மரியாதை நிலைக்காது. சிறு வயதினரைத் தண்டித்தாலும், ‘ஏன் அப்படிச் செய்யக்கூடாது?’ என்று அவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. ‘நான் படுத்தினேன். அதான் அம்மா திட்டறா!’ என்னும் மூன்று வயதுக் குழந்தைக்கு ‘படுத்தல்’ என்றால் என்னவென்று புரியுமா? ‘சும்மா படுத்தாதே!’ என்று எரிந்து விழுவதற்குப் பதில், ‘நான் வேலையாக இருக்கும்போது தொணதொணக்காதே! போய் விளையாடு! சமர்த்து!’ என்று நிதானம் தவறாது பேசினால் உடனே கேட்பான். அதற்கான பொறுமை இல்லாமல் போகும்போது, எரிச்சலும் கோபமும் எழுகிறது. அதைக் குழந்தையிடம் திருப்புகிறார்கள். பல வருடங்களுக்குமுன் கணவரிடம் அடியும் உதையும் வாங்கியிருந்த ஒரு முதியவள், தான் வளர்த்த பேரனிடம் அப்படியே நடந்துகொண்டாள். கண்டபடி அடிப்பதற்குக் காரணமே வேண்டியிருக்கவில்லை. “அவனை அடிச்சுட்டு, நானும் அழுவேன்!” என்பாள். அநாவசியமாகத் திட்டியோ, அடித்தோ செய்துவிட்டு, குற்ற உணர்ச்சியால் மேலும் அவதிப்படுவானேன்! குடும்பம் என்றாலே குழப்பம்தான் ஒவ்வொரு குடும்பத்திலும் செய்யக்கூடியவை, கூடாதவை என்று எழுதப்படாத சில விதிமுறைகள் இருக்கும். தாய், தந்தை இருவருமே அவைகளை ஏற்காதபோது குழப்பம் வருகிறது. கதை வனமாலா விளையாட்டுகளில் விருப்பமும் திறமையும் கொண்டவள். அவளுடைய தந்தையோ, மகளின் நேரம் அதனால் விரயமாகிறது, அந்த ஆர்வத்தையும், பொழுதையும் படிப்பில் செலுத்தினால் வாழ்வில் நன்றாக முன்னேறலாமே என்று எண்ணினார். அதன் விளைவாக, பள்ளிக்கூடத்தில் அவள் எந்த விளையாட்டுப்போட்டியிலும் கலந்துகொள்ளக்கூடாது என்று தடை விதித்தார். அவளோ பள்ளியின் பிரதிநிதி! மகளுடைய மனம் தாய்க்குப் புரிந்தது. அவள் சிறுமியாக இருந்தபோது எத்தனை இடர்களைச் சமாளிக்கமுடியாது திணறியிருப்பாள்! “நீ சேர்ந்துகொள்! அப்பாவிடம் நான் சொல்லிக்கொள்கிறேன்!” என்று மகளுக்கு பச்சைக்கொடி காட்டினாள். அவர்கள் எதிர்பார்த்தபடி தந்தை அதை யதார்த்தமாக எடுத்துக்கொள்ளவில்லை. தன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தன்னையே எதிர்த்து ஒரு காரியம் செய்வதாவது! “உனக்கு நான் சொல்வதற்கு நேர்மாறாக ஏதாவது செய்தாகவேண்டும்!” என்று அவர் கத்த, “யாராவது மகிழ்ச்சியாக இருந்தால் உங்களுக்குப் பிடிக்காதே!” என்று பதிலுக்கு அவளும் குற்றம் சாட்டினாள். கணவனுக்கும் மனைவிக்கும் வாக்குவாதம் முற்றியது. “நீ சொல்வதுதான் சரியென்று சாதிக்கிறாயே! அதுமட்டும் ஏன் சரியாக இருக்கவேண்டும்?” வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்திருக்கும் பெற்றோர் ஒத்துப்போகாது, தமது விருப்பு வெறுப்பை குழந்தைகள்மீது திணித்தால் அனைவருக்குமே சிரமம்தான். நன்கு படித்து, நிறைய பட்டங்கள் வாங்கினால் பெரிய உத்தியோகத்திற்குப் போகலாம் என்று நம்பினார் வனமாலாவின் தந்தை. அதனால் தானும் பெருமைப்பட்டுக்கொள்ள முடியுமே! நல்லதாகவே இருந்தாலும், பிடித்ததைச் செய்யக்கூடாது என்று தடை விதித்தால் வருத்தமும் மனக்குழப்பமும் உண்டாகும் என்று தாய்க்குப் புரிந்திருந்தது. அதனால், ‘அப்பா சொல்வதைக் கேட்டு நட!’ என்று தன் பொறுப்பைத் தட்டிக்கழித்து, மகளுக்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை. வனமாலாவின் பாடுதான் திண்டாட்டமாக ஆயிற்று. இறுதியில், அப்பாவை எதிர்க்கலாம், அம்மா தனக்கு உறுதுணையாக இருப்பாள் என்று தோன்றிப்போயிற்று. தாய் ரகசியமாக மகளிடம் சொன்னாள்: “விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி, படிப்பில் கோட்டைவிட்டுவிடாதே! அப்புறம் நான்தான் அப்பாவுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்!” மகளுக்குப் பொறுப்பு வந்தது. விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெற்றாள். ஆனால், தன் மகிழ்ச்சியைத் தந்தையுடன் பகிர்ந்துகொள்ளத் தோன்றவில்லை. அவர் ஊக்குவித்தாரா, என்ன! “என்னிடம் யாரும், எதுவும் சொல்வதில்லை!” என்று முணுமுணுப்பாக வருந்தத்தான் முடிந்தது தந்தைக்கு. இந்த மனக்கசப்பை எப்படித் தவிர்த்திருக்கலாம்? கணவன் மனைவி இருவரும் தனித்திருக்கும்போது, தம் குழந்தைகளை எப்படி வளர்க்கலாம் என்று கலந்துபேசி, ஒரு முடிவுக்கு வருவது நல்லது. குழந்தைகளின் எதிரில் அவர்கள் வாக்குவாதம் செய்தால், தமக்கு ஏற்ற ஒருவர்புறம் சாய்ந்து, மற்றவரை அலட்சியப்படுத்தத் துணிவார்கள் குழந்தைகள். ஒரு கட்சி ஓங்கியிருக்கும். எதற்காக வளர்ப்பது? குழந்தைகளை வளர்ப்பது என்பது அவர்கள் பெரியவர்களானதும் நிறையச் சம்பாதித்து, வயது முதிர்ந்த காலத்தில் நம்மையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்கல்ல. பிறருடன் நன்கு பழகி, தமக்கும் பிறருக்கும் உபயோகமாக இருக்க அவர்களைப் பழக்கவேண்டும். ‘நீ செய்யும் தவறுகளுக்கு நீதான் பொறுப்பு!’ என்று இரண்டு வயதிலிருந்தே பழக்க இயலும். வயதுக்கேற்ற பொறுப்பு குழந்தை காகிதக்குப்பையை குப்பைத்தொட்டிக்குள் போடாமல், அலட்சியமாக எடுத்து வீசுகிறதா? “எடுத்து, சரியா உள்ளே போடு!” இது அதிகாரமில்லை. எதையும் சரியாகச் செய்யவேண்டும் என்ற பொறுப்புணர்வைக் குழந்தைக்குக் கற்றுக்கொடுப்பது. வீட்டில் அழ அழச் சொல்லிக்கொடுத்தால், பிறகு நான்கு பேர் அவனைப் பார்த்துச் சிரிக்க மாட்டார்கள். பாராட்டைப் பெறுவான். குழந்தைகளோ, பெற்றோரால் தடை செய்யப்பட்டவைகளை எப்படி மீறலாம் என்பதில்தான் குறியாக இருப்பார்கள். என் மகளுக்கு மூன்று வயதாக இருந்தபோது, எதற்கோ கோபித்தேன். உடனே, “சுபீரா இப்படிச் செஞ்சா பக்கத்தாத்து ஆன்ட்டி திட்டமாட்டா!” என்று எகிறினாள். சுபீராவின் தாயுடைய எதிர்பார்ப்பு வேறு விதமாக இருந்திருக்கலாம். அலட்டிக்கொள்ளாது ,“அப்போ, நீ அங்கேயே போயிடேன்!” என்றேன். பயந்துவிட்டாள். “சும்மா ஜோக் பண்ணினேன்!” “ஏன் சும்மாச் சும்மா திட்டறே? ஒனக்கு என்னைப் பிடிக்காது?” இது நான்கு வயதில். “தப்பு பண்ணினா திட்டணும். (அதாவது, கண்டிக்க வேண்டும்). இல்லேன்னா, நீ அசடாப் போயிடுவே!” என்று விளக்கினேன். ஒரு முறை, உறவினர் வீட்டில் சில தினங்கள் கழித்துவிட்டு, “என்னை இனிமே அங்கே அனுப்பாதே. அசடாப்போயிடுவேன். தப்பு பண்ணினா திட்ட மாட்டேங்கறா!” என்றாள்! இதுதான் மனித குணம். தவறு செய்கிறோம் என்று தெரிந்தே செய்துவிட்டு, மாட்டிக்கொண்டால் முழிப்பது! ஆத்திரமும் குற்ற உணர்ச்சியும் என்னுடன் வேலைபார்த்த மஞ்சித் கௌர், “நேற்று எனக்கு ஒரே ஆத்திரம். Go to hell! என்று என் மகளைப் பார்த்துக் கத்திவிட்டேன்!” என்று தெரிவித்தாள். உற்றவரைப் பார்த்து, ‘நரகத்துக்குப் போ!’ என்று ஆத்திரத்தில் கத்தும்போது, உண்மையில் அப்படி நடந்தால் எப்படித் துடித்துப்போய்விடுவோம் என்று யாரும் நினைத்துப்பார்ப்பதில்லை. குற்ற உணர்ச்சி மெதுவாக வருகிறது. இதை தவிர்க்க முடியாது என்றே தோன்றுகிறது. பொறுமையை இழக்காமலேயே இருக்க முனிவர்களாலேயே முடியவில்லையே, நாமெல்லாம் எம்மாத்திரம்! சற்று நிதானம் பிறந்ததும், ‘நான் களைப்பாக இருக்கும்போது தொந்தரவு செய்தாய். அதான் அப்படிப் பேசிவிட்டேன்!’ என்று மன்னிப்பு கேட்கும் தோரணையில் பேசினால், நிம்மதியுடன் புன்னகைப்பாள் மகள். மன்னிப்பு கேட்கும் நல்ல பழக்கத்தை இப்படித்தான், நம்மையறியாது, புகுத்திவிட முடிகிறது. குழந்தைகளின் எதிர்ப்பு தம் மனக்குழப்பத்தை பெற்றோர்தாம் குழந்தைகளிடம் ஏதோ வழியில் காட்டுவார்கள் என்பதில்லை. கதை தகுந்த பணிப்பெண்கள் கிடைக்காததால், என் மகன் சசி இரண்டு வயதிலேயே பாலர் பள்ளிக்குப் போனான். ஒரு நாள், என்னை முறைத்தபடி, “You so proud!” என்றான். விம்மலில் பிஞ்சு உதடுகள் துடித்தன. அதன் அர்த்தம் அவனுக்குத் தெரியுமா என்பதே சந்தேகம். யாரோ அவன் மனதை நோகடித்திருக்கிறார்கள். அதை இப்படி வெளிப்படுத்துகிறான்! நான் என் குழந்தைகளை நிறையப் புகழ்ந்து, அதன்மூலம் தன்னம்பிக்கையுடன் செயல்படுமாறு வளர்த்திருந்தேன். அவன்மேல் எந்தத் தவறும் இல்லை என்று எப்படி விளக்குவது? “சசியை டீச்சர் நான்சி அப்படிச் சொன்னாளா? டீச்சர் Stupid!” என்றேன், உறுதியான குரலில். தன் பொறுப்பில் இருக்கும் சிறு குழந்தையின் போக்கைப் புரிந்துகொள்ளாதிருந்த ஆசிரியை முட்டாள்தான். (ஆனால், ஏழு வயதான என் குழந்தைகள் தம் ஆசிரியையை தரக்குறைவாகப் பேசினால் கண்டிப்பேன்: ‘அம்மாவை யாராவது அப்படிப் பேசினால், ஒங்களுக்கு எப்படி இருக்கும்?’) வித்தியாசமான வளர்ப்புமுறை சீனர்களின் வளர்ப்புமுறை வித்தியாசமானது. குழந்தைகளை ஓயாது மட்டம் தட்டினால்தான் அடக்கம் வரும் என்று கருதி, திட்டியும், காரணமின்றி பிரம்பால் அடித்தும் வளர்ப்பார்கள். சீனப்பெண் ஆலிஸிடம் அவளுடைய தாய் கேலியாகக் கூறினது: ‘உன் வகுப்பில் நீ முதலாவதாக வந்தாயா! மற்ற மாணவிகள் எவ்வளவு முட்டாளாக இருக்கவேண்டும்!’ பெண்ணுக்கு அடக்கம் வரவில்லை. தாயின்மீது வெறுப்புதான் பிறந்தது. பாராட்டவேண்டிய தருணத்தில் குத்தலாகப் பேசினால்? ‘எனக்குக் குழந்தைகளே வேண்டாம். நானும் என் அம்மாவைப்போல்தானே இருப்பேன்!’ என்று உறுதியுடன் இருக்கிறாள். ஒவ்வொரு குடும்பத்திலும் செய்யக்கூடியவை, கூடாதவை என்று எழுதப்படாத சில விதிமுறைகள் இருக்கும். தாய், தந்தை இருவருமே அவைகளை ஏற்காதபோது குழப்பம் வருகிறது. கதை வனமாலா விளையாட்டுகளில் விருப்பமும் திறமையும் கொண்டவள். அவளுடைய தந்தையோ, மகளின் நேரம் அதனால் விரயமாகிறது, அந்த ஆர்வத்தையும், பொழுதையும் படிப்பில் செலுத்தினால் வாழ்வில் நன்றாக முன்னேறலாமே என்று எண்ணினார். அதன் விளைவாக, பள்ளிக்கூடத்தில் அவள் எந்த விளையாட்டுப்போட்டியிலும் கலந்துகொள்ளக்கூடாது என்று தடை விதித்தார். அவளோ பள்ளியின் பிரதிநிதி! மகளுடைய மனம் தாய்க்குப் புரிந்தது. அவள் சிறுமியாக இருந்தபோது எத்தனை இடர்களைச் சமாளிக்கமுடியாது திணறியிருப்பாள்! “நீ சேர்ந்துகொள்! அப்பாவிடம் நான் சொல்லிக்கொள்கிறேன்!” என்று மகளுக்கு பச்சைக்கொடி காட்டினாள். அவர்கள் எதிர்பார்த்தபடி தந்தை அதை யதார்த்தமாக எடுத்துக்கொள்ளவில்லை. தன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தன்னையே எதிர்த்து ஒரு காரியம் செய்வதாவது! “உனக்கு நான் சொல்வதற்கு நேர்மாறாக ஏதாவது செய்தாகவேண்டும்!” என்று அவர் கத்த, “யாராவது மகிழ்ச்சியாக இருந்தால் உங்களுக்குப் பிடிக்காதே!” என்று பதிலுக்கு அவளும் குற்றம் சாட்டினாள். கணவனுக்கும் மனைவிக்கும் வாக்குவாதம் முற்றியது. “நீ சொல்வதுதான் சரியென்று சாதிக்கிறாயே! அதுமட்டும் ஏன் சரியாக இருக்கவேண்டும்?” வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்திருக்கும் பெற்றோர் ஒத்துப்போகாது, தமது விருப்பு வெறுப்பை குழந்தைகள்மீது திணித்தால் அனைவருக்குமே சிரமம்தான். நன்கு படித்து, நிறைய பட்டங்கள் வாங்கினால் பெரிய உத்தியோகத்திற்குப் போகலாம் என்று நம்பினார் வனமாலாவின் தந்தை. அதனால் தானும் பெருமைப்பட்டுக்கொள்ள முடியுமே! நல்லதாகவே இருந்தாலும், பிடித்ததைச் செய்யக்கூடாது என்று தடை விதித்தால் வருத்தமும் மனக்குழப்பமும் உண்டாகும் என்று தாய்க்குப் புரிந்திருந்தது. அதனால், ‘அப்பா சொல்வதைக் கேட்டு நட!’ என்று தன் பொறுப்பைத் தட்டிக்கழித்து, மகளுக்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை. வனமாலாவின் பாடுதான் திண்டாட்டமாக ஆயிற்று. இறுதியில், அப்பாவை எதிர்க்கலாம், அம்மா தனக்கு உறுதுணையாக இருப்பாள் என்று தோன்றிப்போயிற்று. தாய் ரகசியமாக மகளிடம் சொன்னாள்: “விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி, படிப்பில் கோட்டைவிட்டுவிடாதே! அப்புறம் நான்தான் அப்பாவுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்!” மகளுக்குப் பொறுப்பு வந்தது. விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெற்றாள். ஆனால், தன் மகிழ்ச்சியைத் தந்தையுடன் பகிர்ந்துகொள்ளத் தோன்றவில்லை. அவர் ஊக்குவித்தாரா, என்ன! “என்னிடம் யாரும், எதுவும் சொல்வதில்லை!” என்று முணுமுணுப்பாக வருந்தத்தான் முடிந்தது தந்தைக்கு. இந்த மனக்கசப்பை எப்படித் தவிர்த்திருக்கலாம்? கணவன் மனைவி இருவரும் தனித்திருக்கும்போது, தம் குழந்தைகளை எப்படி வளர்க்கலாம் என்று கலந்துபேசி, ஒரு முடிவுக்கு வருவது நல்லது. குழந்தைகளின் எதிரில் அவர்கள் வாக்குவாதம் செய்தால், தமக்கு ஏற்ற ஒருவர்புறம் சாய்ந்து, மற்றவரை அலட்சியப்படுத்தத் துணிவார்கள் குழந்தைகள். ஒரு கட்சி ஓங்கியிருக்கும். எதற்காக வளர்ப்பது? குழந்தைகளை வளர்ப்பது என்பது அவர்கள் பெரியவர்களானதும் நிறையச் சம்பாதித்து, வயது முதிர்ந்த காலத்தில் நம்மையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்கல்ல. பிறருடன் நன்கு பழகி, தமக்கும் பிறருக்கும் உபயோகமாக இருக்க அவர்களைப் பழக்கவேண்டும். ‘நீ செய்யும் தவறுகளுக்கு நீதான் பொறுப்பு!’ என்று இரண்டு வயதிலிருந்தே பழக்க இயலும். வயதுக்கேற்ற பொறுப்பு குழந்தை காகிதக்குப்பையை குப்பைத்தொட்டிக்குள் போடாமல், அலட்சியமாக எடுத்து வீசுகிறதா? “எடுத்து, சரியா உள்ளே போடு!” இது அதிகாரமில்லை. எதையும் சரியாகச் செய்யவேண்டும் என்ற பொறுப்புணர்வைக் குழந்தைக்குக் கற்றுக்கொடுப்பது. வீட்டில் அழ அழச் சொல்லிக்கொடுத்தால், பிறகு நான்கு பேர் அவனைப் பார்த்துச் சிரிக்க மாட்டார்கள். பாராட்டைப் பெறுவான். குழந்தைகளோ, பெற்றோரால் தடை செய்யப்பட்டவைகளை எப்படி மீறலாம் என்பதில்தான் குறியாக இருப்பார்கள். என் மகளுக்கு மூன்று வயதாக இருந்தபோது, எதற்கோ கோபித்தேன். உடனே, “சுபீரா இப்படிச் செஞ்சா பக்கத்தாத்து ஆன்ட்டி திட்டமாட்டா!” என்று எகிறினாள். சுபீராவின் தாயுடைய எதிர்பார்ப்பு வேறு விதமாக இருந்திருக்கலாம். அலட்டிக்கொள்ளாது ,“அப்போ, நீ அங்கேயே போயிடேன்!” என்றேன். பயந்துவிட்டாள். “சும்மா ஜோக் பண்ணினேன்!” “ஏன் சும்மாச் சும்மா திட்டறே? ஒனக்கு என்னைப் பிடிக்காது?” இது நான்கு வயதில். “தப்பு பண்ணினா திட்டணும். (அதாவது, கண்டிக்க வேண்டும்). இல்லேன்னா, நீ அசடாப் போயிடுவே!” என்று விளக்கினேன். ஒரு முறை, உறவினர் வீட்டில் சில தினங்கள் கழித்துவிட்டு, “என்னை இனிமே அங்கே அனுப்பாதே. அசடாப்போயிடுவேன். தப்பு பண்ணினா திட்ட மாட்டேங்கறா!” என்றாள்! இதுதான் மனித குணம். தவறு செய்கிறோம் என்று தெரிந்தே செய்துவிட்டு, மாட்டிக்கொண்டால் முழிப்பது! ஆத்திரமும் குற்ற உணர்ச்சியும் என்னுடன் வேலைபார்த்த மஞ்சித் கௌர், “நேற்று எனக்கு ஒரே ஆத்திரம். Go to hell! என்று என் மகளைப் பார்த்துக் கத்திவிட்டேன்!” என்று தெரிவித்தாள். உற்றவரைப் பார்த்து, ‘நரகத்துக்குப் போ!’ என்று ஆத்திரத்தில் கத்தும்போது, உண்மையில் அப்படி நடந்தால் எப்படித் துடித்துப்போய்விடுவோம் என்று யாரும் நினைத்துப்பார்ப்பதில்லை. குற்ற உணர்ச்சி மெதுவாக வருகிறது. இதை தவிர்க்க முடியாது என்றே தோன்றுகிறது. பொறுமையை இழக்காமலேயே இருக்க முனிவர்களாலேயே முடியவில்லையே, நாமெல்லாம் எம்மாத்திரம்! சற்று நிதானம் பிறந்ததும், ‘நான் களைப்பாக இருக்கும்போது தொந்தரவு செய்தாய். அதான் அப்படிப் பேசிவிட்டேன்!’ என்று மன்னிப்பு கேட்கும் தோரணையில் பேசினால், நிம்மதியுடன் புன்னகைப்பாள் மகள். மன்னிப்பு கேட்கும் நல்ல பழக்கத்தை இப்படித்தான், நம்மையறியாது, புகுத்திவிட முடிகிறது. குழந்தைகளின் எதிர்ப்பு தம் மனக்குழப்பத்தை பெற்றோர்தாம் குழந்தைகளிடம் ஏதோ வழியில் காட்டுவார்கள் என்பதில்லை. கதை தகுந்த பணிப்பெண்கள் கிடைக்காததால், என் மகன் சசி இரண்டு வயதிலேயே பாலர் பள்ளிக்குப் போனான். ஒரு நாள், என்னை முறைத்தபடி, “You so proud!” என்றான். விம்மலில் பிஞ்சு உதடுகள் துடித்தன. அதன் அர்த்தம் அவனுக்குத் தெரியுமா என்பதே சந்தேகம். யாரோ அவன் மனதை நோகடித்திருக்கிறார்கள். அதை இப்படி வெளிப்படுத்துகிறான்! நான் என் குழந்தைகளை நிறையப் புகழ்ந்து, அதன்மூலம் தன்னம்பிக்கையுடன் செயல்படுமாறு வளர்த்திருந்தேன். அவன்மேல் எந்தத் தவறும் இல்லை என்று எப்படி விளக்குவது? “சசியை டீச்சர் நான்சி அப்படிச் சொன்னாளா? டீச்சர் Stupid!” என்றேன், உறுதியான குரலில். தன் பொறுப்பில் இருக்கும் சிறு குழந்தையின் போக்கைப் புரிந்துகொள்ளாதிருந்த ஆசிரியை முட்டாள்தான். (ஆனால், ஏழு வயதான என் குழந்தைகள் தம் ஆசிரியையை தரக்குறைவாகப் பேசினால் கண்டிப்பேன்: ‘அம்மாவை யாராவது அப்படிப் பேசினால், ஒங்களுக்கு எப்படி இருக்கும்?’) இப்படியும் ஒரு வளர்ப்புமுறை சீனர்களின் வளர்ப்புமுறை வித்தியாசமானது. குழந்தைகளை ஓயாது மட்டம் தட்டினால்தான் அடக்கம் வரும் என்று கருதி, திட்டியும், காரணமின்றி பிரம்பால் அடித்தும் வளர்ப்பார்கள். சீனப்பெண் ஆலிஸிடம் அவளுடைய தாய் கேலியாகக் கூறினது: ‘உன் வகுப்பில் நீ முதலாவதாக வந்தாயா! மற்ற மாணவிகள் எவ்வளவு முட்டாளாக இருக்கவேண்டும்!’ பெண்ணுக்கு அடக்கம் வரவில்லை. தாயின்மீது வெறுப்புதான் பிறந்தது. பாராட்டவேண்டிய தருணத்தில் குத்தலாகப் பேசினால்? ‘எனக்குக் குழந்தைகளே வேண்டாம். நானும் என் அம்மாவைப்போல்தானே இருப்பேன்!’ என்று உறுதியுடன் இருக்கிறாள். மேல்படிப்பு வேண்டாம் வேண்டுமென்றே பரீட்சையில் தவறான பதில்களை எழுதுவார்கள் சில பதின்ம வயதுப் பையன்கள். ஏன்? ‘எனக்கு மேல்படிப்பு வேண்டாம்பா. படி, படின்னு அம்மாவும் அப்பாவும் உசிரை வாங்குவாங்க!’ அப்போது அடைந்த அலுப்பு எந்த வயதிலும் மறைவதில்லை. ‘நல்லவேளை! நான் நல்லா பாஸ் பண்ணலே. இல்லாட்டி, படி, படின்னு வீட்டில உசிரை எடுத்திருப்பாங்க!’ என்று நிம்மதியுடன் என்னிடம் கூறியவருக்கு வயது நாற்பது. அவருடன் சேர்ந்து நானும் சிரித்தேன். ஆனால், வருத்தமும் அடையாது இருக்க முடியவில்லை. உயர்கல்வி இல்லாது, வாழ்க்கையில் ஓரளவுதான் அவரால் உயர முடிந்தது. பெற்றோருக்குப் பயந்தோ, பணிந்தோ, வேண்டாவெறுப்பாக புத்தகத்தைக் கையில் எடுத்தால், நல்ல தேர்ச்சியையா அடையமுடியும்? பெற்றோரின் தொணதொணப்பு அதிகரிக்க, அதிகரிக்க, பையன்களின் தன்னம்பிக்கை குறைவதுதான் பலன். “ஏன் இப்படி அவன் உயிரை எடுக்கிறீர்கள்?” என்று நான் ஒரு தாயைக் கேட்டேன். “இவ்வளவு சொல்லியும் அவனால் நல்ல மதிப்பெண்கள் வாங்க முடியவில்லையே! நாங்கள் சொல்லாவிட்டால், தானாக புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்கவா போகிறான்?” என்ற எதிர்க்கேள்வி பிறந்தது. படிக்கப் பிடிக்காது மிகச் சிறு வயதிலிருந்தே குழந்தைகள் சுதந்திரமாக நடக்கத் தலைப்படுவார்கள். அவர்கள் போக்கில் விட்டால், அவர்களது திறமை வெளிப்படும். அவ்வப்போது வழிகாட்டினாலே போதும். எட்டுமாதக் குழந்தையாக இருக்கும்போதே அதற்குப் பிற்காலத்தில் படிக்கப் பிடிக்குமா இல்லையா என்பது தெரிந்துவிடும். குழந்தையை மடியில் அமர்த்திக்கொண்டு புத்தகத்தில் ஏதாவது படத்தைக் காட்டினால், தலையை வேறு புறம் திருப்பிக்கொள்ளும். முகவாயைப் பிடித்து, புத்தகம் இருக்கும் திசையில் திருப்பினால், தலை இன்னொரு பக்கம் திரும்பிக்கொள்ளும்! இம்மாதிரியான குழந்தைகள் அறிவில் குறைந்தவர்கள் என்பதில்லை. அவர்களுக்கு விளையாட்டிலோ, நுண்கலைகளிலோ அலாதி ஈடுபாடு இருக்கும். அவரவர் போக்கிலேயே விட்டால், புத்தகத்தை எடுத்துப் படிக்காவிட்டாலும், பரீட்சையில் தோற்கமாட்டார்கள். ‘இந்தவரைக்கும் பெற்றோர் தடை செய்யாமல் இருக்கிறார்களே!’ என்று, சற்றுப் படித்தும் வைத்திருப்பார்கள். ‘நீ படித்தே நான் பார்த்ததில்லையே! எப்படி பாஸ் பண்ணினே?’ என்று இப்படிப்பட்ட ஒரு சிறுவனை நான் அதிசயப்பட்டுக் கேட்டதற்கு, ‘பள்ளியில் பெண்கள் ஓயாது பாடங்களை விவாதித்துக்கொண்டு இருப்பார்கள். மௌனமாக அதை கேட்டுக்கொண்டிருப்பேன்!’ என்று பதில் வந்தது. பலரும் எழுத்துக்களை பார்த்தால்தான் புரியும் என்று நினைக்கிறார்கள். காதில் கேட்டாலே போதும். புத்தகங்கள் இல்லாத காலத்தில் செவிவழி அறிவைப் போதித்தது நீடித்த பலனை அளிக்கவில்லையா? (பல பெண்களுக்கு, பள்ளிப்பருவத்திற்குப்பின், படிக்கவே பிடிக்காமல் போய்விடுகிறது. எப்போதும் படித்தால் அறிவு வளர்ந்துவிடும் என்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் நச்சரித்ததாலோ? இவர்கள், அபூர்வமாக, காதல் நவீனங்களை மட்டும் படிப்பார்கள்). செய்வதையே செய்யணுமா? வழக்கமாக, சில காரியங்களையே ஒன்றையடுத்து ஒன்று செய்ய நேரும்போது அலுப்பாகத் தோன்றலாம். ஆனால், அதுவும் அவசியம். செய்வதற்கு எதுவும் இல்லாமல் போகிறபோதுதான் மனம் வேண்டாத யோசனைகளிலோ, காரியங்களிலோ ஈடுபடும். பள்ளிக்கூடத்தைவிட்டு வீட்டிற்கு வந்தால் காலணியைக் கழட்டுவதுபோல், வீட்டுப்பாடம் செய்வதும் பழக்கமாகிவிடும். இது புரியாது, சில தாய்மார்கள், பிள்ளைகள் வீட்டுக்குள் நுழையும்போதே, ‘வீட்டுப்பாடம் இருக்கா? செஞ்சு முடி!’ என்று ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்துவார்கள். இது கசப்பில்தான் கொண்டுவிடும். ‘இவனுக்கு ஒவ்வொண்ணையும் நான் சொல்லிக் குடுத்துக்கிட்டே இருக்கணும்!’ என்று அலுத்துக்கொள்வதுபோல் பெருமை பேசுவது வீண். பதின்ம வயதுச் சிறுவர்கள் சலிக்காது வீட்டு வேலைகளில் உதவ: ஒவ்வொன்றாகச் சொன்னால்தான் நச்சரிப்பு. ஒன்று, இரண்டு என்று காகிதத்தில் பலவற்றை எழுதி வைத்துவிடலாம். முரண்டு பண்ணாமல் செய்து முடித்துவிடுவார்கள். ஏனெனில், எதை முதலில் செய்ய வேண்டும் என்ற முடிவை அவர்களிடமே விட்டுவிடுகிறோம், அல்லவா? என்னால் முடியும்! சிறுவர்களுக்கு மூன்று வயதிலேயே மின்சார சாதனங்களில் அலாதி ஈடுபாடு வந்துவிடும். மூன்று வயதில் தானே அவைகளை இயக்கவேண்டும் என்ற பேராவல் எழுந்துவிடும். இது புரிந்து, என் மகனிடம், ‘ஸ்விட்சைப் போடு!’ என்று பழக்கினேன். (வயதுக்கேற்ற வேலையைத்தான் கொடுக்கவேண்டும் என்பது பிறகுதான் புரிந்தது). ஒரு முறை, துணி துவைக்கும் இயந்திரத்தைப் அவன் பாதியிலேயே நிறுத்திவிட்டு, கதவைத் திறக்க, வெள்ளப்பெருக்கு! ப்ளெண்டரை மூடுமுன்னரே ஆர்வக்கோளாறுடன் ஸ்விட்சைத் தட்ட, அதற்குள்ளிருந்ததெல்லாம் வெளியே பீய்ச்சி அடித்தது. இரண்டு முறையும் பயந்து, அவன் அலறியபடி பின்னால் ஓட, ‘போனாப்போறது! இனிமே நான் சொல்றச்சே நிறுத்து!’ என்று சமாதானப்படுத்தியபடி, அவனை அணைத்தேன். தவறு செய்தவர்களே, ‘இப்படிச் செய்துவிட்டோமே!’ என்று வருத்தப்படும்போது, எதற்காகத் தண்டிப்பது! பெரிது பண்ணாது விட்டுவிட்டால், அடுத்தமுறை கவனமாக இருப்பார்கள். மாறாக, தண்டித்து, அதைப்பற்றிக் கேலியாகவே பேசிக்கொண்டிருந்தால், ‘மீண்டும் தப்பு செய்துவிடுவோமோ?’ என்ற பயத்திலேயே காரியம் கெட்டுப்போகும். கதை இரண்டு லிட்டர் எண்ணைகொண்ட தகரக் குவளையை என்னிடமிருந்து பிடுங்கினான் என் மூன்று வயதுப் பேரன். அவன் அதைத் தூக்கமுடியாது தூக்கி வருவதைப் பார்த்த சில ஆண்கள் என்னை வெறுப்புடன் பார்த்தார்கள் – நான் அவனை வேலை வாங்குவதாக எண்ணி. “எங்கிட்ட குடு,” என்று நான் கைநீட்ட, “I’m big (நான் பெரியவன்)! என்னால் முடியும்!” என்று மறுத்தான். ஒருவர் மட்டும் என்னைப் பார்த்து புன்னகைத்தார். அவருக்குப் புரிந்தது, நான் ஏன் இரண்டடி உயரம்கூட இல்லாத குழந்தையைக் ‘கஷ்டப்படுத்துகிறேன்’ என்று. அடுத்த முறை, ஒரு கூடையில் சில சாமான்களைப் போட்டு, அவனைத் தள்ளிக்கொண்டு வரச்செய்தேன். அவனுக்கு மிகப் பெருமை. ‘நான் help பண்ணினேன்!’ என்று தாயிடம் பீற்றிக்கொண்டான். கொஞ்சுவானேன்? ‘குழந்தை! அவனால் என்ன முடியும்!’ என்று அவனுக்கான வேலைகளையும் பிறர் செய்தால், சுயமாக நடக்கத்தெரியாது, பிறரைச் சார்ந்திருக்கவே தோன்றும். ஓயாமல் கொஞ்சுவதைவிட அவர்களால் இயன்ற வேலைகளைக் கொடுத்தால் குழந்தைகளின் தன்னம்பிக்கை வளரும். இணைந்து செய்வது குழந்தைகள் விளையாடிவிட்டுத் தம் விளையாட்டுச் சாமான்களை தரை பூராவும் பரப்பிவிட்டுப்போவார்கள். அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். ‘நீதான் எல்லாத்தையும் எடுத்துவைக்கணும்!’ இந்த அதிகாரத்தால் அவனுக்கு அழுகைதான் வரும். (தவறு) ‘வா! நாம்ப ரெண்டுபேரும் எல்லாத்தையும் எடுத்து வைக்கலாம். நடக்கிறபோது கால்லே குத்திடுமே!’ (சரி) எந்தக் காரியமானாலும், விளையாட்டுபோல் சேர்ந்து செய்பவருடன் உள்ள நெருக்கம் அதிகரிக்கும். (பண்டிகைகளில் குடும்பத்திலுள்ள அனைவரும் வீட்டைச் சுத்தப்படுத்தி அலங்கரிக்கும்போதும், இணைந்து சமைக்கும்போதும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது!) பாராட்டும் அவசியம் தவறு செய்யும்போது தண்டிப்பதில் குறியாக இருப்பவர்கள் குழந்தைகள் உருப்படியாக ஏதாவது செய்யும்போது அதைப் பாராட்டத் தவறிவிடுவார்கள். பாராட்டினால்தானே தொடர்ந்து நல்வழியில் செல்லத்தோன்றும்? எல்லா இனங்களுக்கும், எந்த வயதிலும், பாராட்டு புரிகிறது. கதை எங்கள் வீட்டில் வளரும் பூனைக்குட்டி தன் பங்கை அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு, பெரிய பூனைக்கு வைக்கும் ஆகாரத்திற்கும் போட்டி போடும். பல முறை தடுத்தபின் அதற்குப் புரிந்தது. ஒரு முறை மெல்ல விலக, “குட்டி சமத்து!” என்று பாராட்டினேன். கண்ணை ஒரு முறை அழுந்த மூடித் திறந்தது, அதை ஆமோதிக்கும் வகையில்! சொன்னபடி செய் பெற்றோர் தம் வாக்கைக் காப்பாற்றத் தவறும்போது பிள்ளைகளின் மதிப்பையும் இழக்கிறோம் என்பதை உணர்வதில்லை. “இன்று எனக்கு பள்ளிக்கூட ஆண்டுவிழாவுக்கான பாட்டுப் பயிற்சி இருக்கிறது,” என்று பூரிப்புடன் சொன்னான் என்னிடம் படிக்க வந்த அமீர். குறித்த நேரத்தில் தாய் வரவில்லை. பையனின் படபடப்பைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது. வழக்கம்போல், இரண்டு மணி நேரம் கழித்து வந்தவளிடம், "நீங்கள் அரை மணியிலேயே வந்துவிடுவீர்கள் என்று அமீர் ஆவலாகக் காத்துக்கொண்டிருந்தான், பாவம்!’ என்றேன். அலட்சியமாகக் கையை வீசியபடி, சூள் கொட்டினாள். அவளுக்கு மகனுடைய ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் முக்கியமில்லை. பெற்றோரின் கட்டாயத்தால் படிப்பில் நாட்டமிழந்த பலருள் அமீரும் ஒருவன். அன்பின் பெயரால் அடுத்தவர் சுதந்திரத்தைப் பறிக்கலாமோ? திருமணமானபின், ’ நாம் இருவர் அல்ல, ஒருவரே!’ என்று பிரதிக்ஞை செய்துகொள்வதை காதல் நவீனங்களிலோ, திரைப்படங்களிலோ ரசிக்க முடியும். அவர்கள் நிலையில் தம்மை வைத்துக்கொண்டு சொக்குவர் இளவயதினர். நிழலை நிஜமென எண்ணி, வாழ்க்கையிலும் இப்படி நடக்க ஒருவர் மற்றவரைத் தூண்டுவது கொடுமை. ஒருவரது சுதந்திரத்தைப் பறித்து, அவரைத் தன் கைப்பாவையாக ஆட்டிவைக்கும் வழி இது. கதை மயக்கும் படலம் தன்னால் ஏன் முன்போல் சுயமாகச் சிந்திக்க முடியவில்லை என்று பிரமிளா குழம்பினாள். கணவனை நினைத்தால் கோபமும், பயமும் ஒருங்கே எழுந்தன. இத்தனைக்கும், காதலித்து மணந்த கணவன்! அவன் அதிகாரத்தால் கட்டுப்படுத்தவில்லை. ஆரம்பத்தில், அவள் அழகில் மயங்கியதாக அடிக்கடி சொல்வான் கேசவன். புகழுக்கு மயங்காத பெண்களும் உண்டோ! பரிசுப்பொருட்கள் வாங்கிக் கொடுத்து, அவள் பார்க்க ஆசைப்பட்ட இடங்களுக்கெல்லாம் அழைத்துப்போய், இப்படி என்னென்னவோ செய்து அவளைத் தன் வசப்படுத்தி இருந்தான். விளையாட்டில்லை சில காலம் கழித்து, அவளை மட்டம்தட்டிப் பேச ஆரம்பித்தான் கேசவன். அவள் வருந்தினாலோ, கோபித்தாலோ, ‘உனக்கு விளையாட்டாகப் பேசுவதுகூடப் புரியாதா?’ என்று சமாதானப்படுத்திவிடுவான். திரும்பவும், பரிசுப்பொருட்கள், உல்லாசப் பயணங்கள் தொடரும். ‘இவ்வளவு அன்பாக இருப்பவரைத் தான்தான் தவறாக எண்ணிவிட்டோமோ!’ என்று ஒரு பெண்ணை யோசிக்கவைக்கும் உத்தி இது. தன்னையுமறியாமல், மேலும் கட்டுப்படுத்தப்படுவதற்கு உட்படுகிறாள். உணர்ச்சிபூர்வமான வதை இது. குற்றச்சாட்டுகள் அவன் செய்யும் ஒவ்வொரு சிறிய காரியத்தையோ, உதவியையோ பாராட்ட வேண்டும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. ஏனெனில் அவள் மாறுபட்டிருந்தாள். அவனைப்போல் யோசிக்கத் தெரியவில்லை. அவனோ, அவளும் தன்னை அப்படியெல்லாம் புகழவேண்டும் என்று எதிர்பார்த்தான். ஏமாற்றம் எரிச்சலாகியது. திருமணத்திற்குமுன், ‘உனக்குச் சூடிதார், குர்த்தாதான் அழகாக இருக்கிறது!’ என்று கேசவன் சிலாகித்தபோது, பெருமையாக உணர்ந்திருந்தாள் பிரமிளா. அவனுக்குப் பிடித்த வெளிர்நீல வண்ணத்திலேயே அவளுடைய பல ஆடைகள் அமைந்திருக்கும். தனக்கு என்ன உவப்பாக இருக்கும் என்பதையே மறந்து, காதலனின் பாராட்டுக்காகவே எதையும் செய்த காலம் அது. திருமணமாகி சில மாதங்கள் கழித்து, அவளுக்குப் பிடித்த சிவப்பு, ஆரஞ்சு வண்ணங்களில் புடவை வாங்கிக்கொண்டபோது, கேசவன் முகத்தைச் சுளித்தான். “என்னோட வரும்போது, இந்தக் கண்ராவியையெல்லாம் கட்டிட்டு வராதே!’ என்று உத்தரவிட்டான்.”ஒன் கருப்புக்கலருக்கு இது நல்லாவா இருக்கு?" பிரமிளாவின் நீண்ட பின்னலை, ’இதாலேதான் என்னைக் கட்டிப் போட்டுட்டே!’என்று புகழ்ந்தது ஒரு காலம். நாகரிகத் தோற்றம் என்று கருதி, அவள் தலைமயிரைக் குட்டையாக வெட்டிக்கொண்ட அன்று பூகம்பமே வெடித்தது. “எனக்கு உன் நீண்ட முடி எவ்வளவு பிடிக்கும் என்று தெரிந்தும் இப்படி ஒரு காரியம் செய்துவிட்டு வந்திருக்கிறாயே! என்னை வருத்தப்படவைக்க வேண்டுமென்றேதான் ஒவ்வொரு காரியமும் செய்கிறாய்!” என்று பொரிந்தவன், “யாரை மயக்க?” என்று தாக்கினான். ‘உனக்கு நான் தொலைந்தால்தான் நிம்மதி!’ இந்த பாணத்தில் எந்தப் பெண்ணும் மசிந்துவிடுவாள். குற்ற உணர்ச்சி எழ, அந்த உறவில் தங்கிவிடுவாள். எதனால் கட்டுப்பாடு? இப்படி நடப்பவர் தீயவர் என்பதில்லை. முதலில் கூறியதுபோல், ஆண்-பெண் உறவைப்பற்றி புத்தகங்களிலிருந்தோ, திரைப்படங்களிலிருந்தோ அறிந்து, அதுதான் இனிமையாக வாழும் முறை என்று நம்பியவர். அவரது குடும்ப வழக்கமாகவும் இருக்கலாம். தனிமைப்படுத்து ஒரு முறை, பிரமிளா வேலை பார்த்த இடத்திலுள்ளவர்கள் ஒன்றாகப் படம் பார்க்கப்போனபோது, “நீ எதுக்கும்மா அவர்களுடன் போக வேண்டும்? நான் அழைத்துப்போகிறேன்!” என்று அன்பு சொட்டச் சொட்ட கேசவன் கூறியபோது, அவளுக்கு மறுக்கத் தோன்றவில்லை. அபூர்வமாக, யாராவது உறவினர் அவர்கள் வீட்டுக்கு வந்தால், என்றோ, ஏதோ செய்ததற்காக அவளுக்குத் திட்டு விழும். ‘இவர்களை எனக்குப் பிடிக்கவில்லை. இனி நம் வீட்டுக்கு வரக்கூடாது!’ என்று மிரட்டுவான். ‘நான் சிநேகிதிகளுடன் தொலைபேசியில் பேசும்போது, தவறாது, கழிப்பறையில் அளவுக்குமீறிய ஓசை எழுப்புவார் என் கணவர்!’ என்று ஒரு பெண்மணி எழுதியிருந்ததைப் படித்திருக்கிறேன். ஆதரவுக்கரம் அளிக்க யாருமின்றி, கணவன் என்ன செய்தாலும் பொறுத்துப்போகும் நிலையை உண்டாக்கச் செய்த தந்திரம் அது. இதேபோல், பிரமிளாவின் உறவினர் மற்றும் நண்பர் குழாம் சுருங்கியது. பக்கபலமாக யாருமின்றி, தனித்துப்போனாள். எது செய்ய ஆரம்பிக்கும்போதும், ‘அவர் என்ன சொல்வாரோ!’ என்ற தடுமாற்றமும் பயமும் எழுந்தன பிரமிளாவுக்கு. தன்னம்பிக்கை வீழ்ச்சி கண்டது. பிறரிடம் தன் அவலத்தைச் சொல்லி அனுதாபம் பெற அவளுக்கு விருப்பமில்லை. யாரையும் நம்பவும் முடியவில்லை. நம்பியவனே இப்படி மாறிவிட்டிருந்தபோது, யாரைத்தான் நம்புவது! அத்துடன், ‘வீட்டில் எது நடந்தாலும், நான்கு சுவற்றுக்குள் இருக்கவேண்டும்!’ என்று சிறுவயதிலிருந்தே போதனை வேறு கிடைத்திருந்ததே! எங்கேயும் எப்போதும் தம்பதியர்களிடையே மட்டும்தான் இப்படிப்பட்ட கட்டுப்படுத்துதல் இருக்கும் என்றில்லை. எந்த வயதிலும், ஏழையோ, பணக்காரரோ, யாரோ ஒருவர் இன்னொருவரைக் கட்டுப்படுத்தி, அதன்மூலம், ‘நான் பலசாலிதான்!’ என்று தன்னையே நம்பும் முயற்சியில் ஈடுபடுகிறார். உடன்பிறந்தவர்களோ, நண்பர்களோகூட இப்படி நடப்பது சகஜம். ஒரு வித்தியாசம்: சிரித்த முகத்துடன் குறைகளைச் சுட்டிக்காட்டுவார்கள். ஏன் சிரித்த முகம்? ‘இவர் நம்மைக் கட்டுப்படுத்த முயலவில்லை, நம்மேல் மிகுந்த அக்கறையால் அப்படிச் செய்கிறார்!’ என்று எண்ணிக்கொள்ள வேண்டுமாம்! வாழ்க்கைப் பின்னணி, கலாசாரம் போன்ற பலவற்றால் நாம் பிறரிடமிருந்து மாறுபடுகிறோம். இது புரியாது, ‘எல்லாரும் என்னைப்போல், நான் சொல்கிறபடிதான் இருக்கவேண்டும்!’ என்று வாதம் புரிந்தால் எப்படி! உதவி அவருக்குத்தான் தேவைப்படுகிறது. இது புரிந்தால், மற்றவர் தன் சுதந்திரத்தை இழக்காமல் தன்னையே காத்துக்கொள்ள முடியும். எப்படித் தற்காத்துக்கொள்வது? ‘நீ என்ன சொன்னாலும் நான் மாறப்போவதில்லை. எதற்கு உன் சக்தியை விரயமாக்குகிறாய்?’ என்ற நேரடி தாக்குதல் எனக்குப் பலனளித்திருக்கிறது. ஆனால், உணர்ச்சிபூர்வமான வதையாக ஆரம்பித்தது வன்முறையாக மாறினால், அந்த உறவிலிருந்து விலகுவதைத்தவிர வேறு வழியில்லை. கதை ஒரு விருந்தில் சந்தித்தேன் அந்த இளம் தம்பதிகளை. காதலர்களாக இருந்தபோது, காதலி சொல்வதையெல்லாம் கேட்டு நடந்தவன் லீ. காதலியோ அழகி. அவளை வேறு யாராவது கொத்திப் போய்விட்டால்? ‘சண்டை போடத்தான் காலம் பூராவும் இருக்கிறதே! இப்போதே என்ன அவசரம்?’ என்றுகூட அவன் நினைத்திருக்கலாம். திருமணமானபின், ஏதாவது பானத்தைக் குடிக்கும்போது, அவன் உறிஞ்சுவதைப் பார்த்து அழகான மனைவி முகம் சுளித்தாள். ‘நாமென்ன ஜப்பானிலா இருக்கிறோம்! அங்குதான் மிகுந்த ஓசையுடன் உறிஞ்சினால்தான் பாராட்டு என்று நினைப்பார்கள்!’ என்று தோன்ற, ‘அசிங்கம்!’ என்று கணவனைக் கண்டித்தாள். அடுத்தமுறை, உறிஞ்சும் ஓசை அதிகமாயிற்று. “நான் ஏதாவது ‘கூடாது’ என்று சொன்னால், லீ இன்னும் அதிகமாகச் செய்கிறார். அதனால், நான் அவரை எதுவும் சொல்வதில்லை,” என்று அவள் சொல்லக் கேட்டு, புன்னகைத்தேன். மௌனமான எதிர்ப்பு பலனளிக்கும் என்று புரிந்தவன்! உறவு என்பது மகிழ்ச்சிக்காக அச்சம் விளைவிப்பதாகவோ, அளவுக்கு அதிகமான அன்பால் திக்குமுக்காட வைப்பதாகவோ உறவு இருந்தால் மாறுதிசை மின்னோட்டத்தில் (alternating current) கையை வைத்ததுபோல்தான். மகிழ்ச்சி கிடைக்குமா? அட, மகிழ்ச்சியை விடுங்கள்! நிம்மதி தொலைந்து போய்விடுமே! மகிழ்ச்சி என்னும் மாயை ‘நாம் அவரைப்போலவா? அவர் மிக்க திறமை வாய்ந்தவர்!’ என்று யாரையாவது பார்த்து பெருமூச்சு விடுகிறவர்கள் அனேகர். திறமை ஓரளவுக்குதான் ஒருவரை உயர்த்தும். அந்நிலை குலையாமலிருக்க நற்பண்பு அவசியம். கதை பதின்ம வயதில் கலைத்துறையில் தனக்கு அசாத்திய ஆர்வத்துடன், திறமையும் இருப்பதைப் புரிந்துகொண்டார் விவேகன். சில விருதுகளைப் பெற்றதும், கர்வம் தலைக்கேறியது. அவர் மிகச் சிறந்தவர் – அவரைப் பொறுத்தவரை. ஓயாது, அதே துறையிலிருந்த பிறரைப் பழித்தார் – அவர்கள் முன்னிலையிலேயே! பிறரது உணர்ச்சிகள் பொருட்டல்ல என்று நினைப்பதுபோல் நடப்பவர்களுக்கு அன்பை யாரிடமிருந்து பெறமுடியும்? அன்பு கிட்டாததால் மகிழ்ச்சியும் குன்றியது. மகிழ்ச்சி மாயை இல்லை. அதை வெளியில் எங்கும் தேடவேண்டிய அவசியமில்லை. நமக்குள்ளேயேதான் ஒளிந்துகொண்டிருக்கிறது. “பிறரைப் புரிந்துகொள்வது அறிவு என்றால், தன்னைத்தானே புரிந்துகொள்வது விவேகம்” (ஒரு தத்துவஞானி). ஏணிப்படிகளில் ஏறிக்கொண்டிருக்கும்போதே, கீழே நோக்கி, ‘அடேயப்பா! எத்தனை படிகளைக் கடந்துவிட்டேன்!’ என்று பெருமிதம் கொண்டுவிட்டால், தலைசுற்றிப் போகாதா! எத்தனை வெற்றி பெற்றாலும், தன்னையே வியந்துகொள்வதும் அதுபோல்தான். வாழ்வில் சறுக்காமலிருக்க எளிமை அவசியம். ‘அவ்வளவு பெரிய மனிதர் பொது இடத்தில் என்னை அப்படித் தூக்கியெறிந்து பேசியிருப்பாரா? எனக்கு அவ்வளவாக திறமை இல்லை!’ என்று நொந்துபோயினர் விவேகனது அகந்தைக்குப் பலியான சிலர். பிறரிடம் என்ன குறை என்பதை ஆராய்ந்தபடியே இருப்பவரை எதற்கு பொருட்படுத்த வேண்டும்? ‘அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!’ என்று விட்டுத்தள்ள வேண்டியதுதான். பிறர் என்ன நினைப்பார்களோ, எப்படியெல்லாம் நம்மிடம் குறைகாண்பார்களோ என்று யோசித்தே ஒவ்வொரு வார்த்தையையும் பேசி, ஒவ்வொரு காரியத்தையும் செய்தால் நம்மை நாமே உணரமுடியாது போய்விடும். மகிழ்ச்சி பறிபோய், மன உளைச்சல்தான் மிஞ்சும். நம் நலனை நாடும் ஒருசிலர் பலர் முன்னிலையில் உரக்கப் புகழ்ந்து, குறைகளைத் தனிமையில், மெள்ள, கூறுவார்கள். புகழ்ச்சியினால் கர்வம் கொள்ளாது, அறிவுரையில் உபயோகமானதை மட்டும் ஆராய்ந்து எடுத்துக்கொள்ளலாம். புதிதாக மணமாகி, கூட்டுக்குடும்பத்துடன் வாழ வந்தவள் கீதா. பலருடனும் ஒத்துப்போகத்தான் முடிவெடுத்து வந்தாள். ஆனால், மாமியாரும் நாத்தனார்களும் அவள் செய்த ஒவ்வொரு காரியத்திலும் குறை கண்டுபிடித்து, அதைப் பலரிடமும் கேலியாகக் கூறியதை அவளால் ஏற்க முடியவில்லை. அனுசரணையாக இருக்க முயன்ற கணவனும், ‘பெண்டாட்டிதாசன்’ என்று கேலிப்பொருளாக ஆனான். பிறரது அதிகாரமும், ‘தன்னை ஒரு பொருட்டாக எவரும் மதிக்கவில்லையே!’ என்ற அவமானமும் கீதாவின் உடல்நிலையைப் பாதித்தன. ஒரு குழந்தைக்குத் தாயானபின்னர் கீதாவின் நிலைமை மோசமாகியது. அவள் பெற்ற குழந்தையிடம் அவளுக்கு எந்த உரிமையும் இல்லாததுபோல், அவள் செய்வதில் எல்லாம் குற்றம் கண்டுபிடித்தார்கள். அப்போது கீதா செய்திருக்க வேண்டியது என்ன? எந்தத் தவறும் தன்மீது இல்லை என்று தெளிந்து, தனியாகப் போயிருக்கலாம். அப்போது கிடைக்கும் சுதந்திரத்தால் நிம்மதியும் எழுந்திருக்கும். குழந்தையும் இரு மாறுபட்ட கட்சிகளால் ஆட்டுவிக்கப்படாது, தாயின் வார்த்தைக்கு மட்டும் கட்டுப்பட்டு வளரும். ‘வயதானவர்களைவிட்டு நாங்கள் தனிக்குடித்தனம் போனால், அவர்கள் பாவம், இல்லையா? பிறர் பழிப்பார்கள்!’ என்று அஞ்சி பொறுமை காக்கலாம். பொறுக்க முடியாவிட்டாலும், மாற்றத்திற்குப் பயந்து ஒரே நிலையில் இருப்பது பொறுமையா? அப்படி, எதையும் தாங்கிய மருமகள் கமலாட்சி என்னிடம் கூறியது: “என் கணவர், ’I hate you, dee” (உன்னை வெறுக்கிறேண்டி) என்று சொல்லிவிட்டார்". அதற்காகவே காத்திருந்ததுபோல் பெருமை தொனித்தது அவள் குரலில். அக்குடும்பத்துக்கு மருமகளாக வந்திருந்த மற்ற இரு பெண்களும் தம் மகிழ்ச்சியைப் பிறருக்காக விட்டுக்கொடுக்க விரும்பாது தனியாகப் போய்விட்டிருந்தார்கள். தமக்கு விரும்பியதைச் செய்ய முடிந்தது. குழந்தைகளைத் தம் விருப்பப்படி பல உபயோகமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுத்தினர். ‘இதெல்லாம் வீண் வேலை! பணம்தான் விரயமாகும்!’ என்று பழிக்க யாரும் அருகில் இருக்கவில்லை. புக்ககத்தினர் கமலாட்சியின் நல்ல குணத்தைப் புரிந்து, அதிக குறுக்கீடு இல்லாமல் அவளுக்கு மரியாதை கொடுத்து நடத்தியிருந்தால் எந்தப் பிரச்னையும் வந்திருக்காது. ‘தன் மகனைத் தன்னிடமிருந்து பிரித்துக்கொண்டு போக வந்தவள்!’ என்று தாய்மார்கள் நினைத்து, மருமகளுடன் போட்டி போடும்போது எல்லாருடைய மகிழ்ச்சியும் பறிபோய்விடுகிறது. கதை அன்பான பெற்றோரைவிட்டு வெகுதூரம் வந்திருந்த சுரேகா அடிக்கடி நீண்ட கடிதம் எழுதினாள். வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, ஓய்ந்த நேரத்தில் அவள் எழுதியதால், வேறு எப்படி குறை சொல்வது என்று மாமியாருக்குப் புரியவில்லை. “நீ இவ்வளவு நீண்ட கடிதம் எழுதித் தள்ளினால், அதை யாரும் படிக்கப்போவதில்லை!” என்றாள், கேலிச்சிரிப்புடன். தான் என்ன செய்தாலும் மாமியார் ஏனோ அதில் குறை கண்டுபிடிக்கிறாள் என்று புரிந்தது சுரேகாவிற்கு. அவள் அயரவில்லை. நிகழ்காலம் பொறுக்க முடியாது இருந்தபோது, கடந்த காலத்தில் பெற்றோரிடமிருந்து பெற்ற அன்பை எண்ணி ஆறுதல் பெறும் முயற்சியிலிருந்து மாறவில்லை. நமக்குப் பிடித்த ஆக்ககரமான செயல்களை முயன்று செய்கையிலேயே மகிழ்ச்சி கிட்டிவிடுகிறது. அடுத்தவருக்காக அதை விட்டுக்கொடுப்பானேன்! கூட்டுக்குடும்பத்தில், ‘உனக்குப் பிடித்ததைச் செய்!’ என்று, வயதுவந்தவர்களுக்கு அனுமதி கொடுத்து, சற்றே விலகியிருந்தால், அவர்கள் ஏன் பிரிந்துபோக நினைப்பார்கள்? பலருடன் இணைந்திருந்தால், பக்கபலமும் பாதுகாப்பும் இருக்கும். செலவும் கணிசமாகக் குறையுமே! ‘எல்லாரும் செய்கிறார்களே!’ என்று மந்தையாடுபோல் நடக்காது, தமக்கென ஒரு தனிப்பாதை வகுத்துக்கொள்ளும் துணிச்சல் வெகு சிலருக்கே இருக்கிறது. கதை (படித்தது) சீனாவில் ஒரு கோடீஸ்வரர் அண்மையில் இறந்தபோது, அவருடைய சொத்து பூராவும் அனாதரவான குழந்தைகளின் கல்விக்கும் இதர தர்ம ஸ்தாபனங்களுக்கும் வழங்கப்பட்டது. இத்தனைக்கும், அவருக்கு ஒரே மகன்! இருபது வருடங்களுக்கு முன்னரே, “நீ சுயமாக உழைத்துச் சம்பாதித்தால்தான் உனக்கு உண்மையான மகிழ்ச்சி கிட்டும். நான் சேர்த்த பணம் உனக்கு வேண்டாம்,” என்று தந்தை கூறியதை ஏற்றுக்கொண்டிருந்தார் மகன். இப்போது தனது நாற்பதாவது வயதில், தந்தையின் செயலால் சிறிதும் பாதிக்கப்படவில்லை. தம் செலவுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, ‘அன்பு’ என்ற பெயரில் குழந்தைகளுக்காக வங்கியில் பணம் சேமிப்பவர்கள் தம் ‘தியாகம்’ குழந்தைகளுக்கு நிரந்தரமான மகிழ்ச்சி அளிக்குமா என்று யோசிக்கத் தவறிவிடுகிறார்கள். கதை தந்தை விட்டுப்போன பெரும் சொத்தால், உத்தியோகத்திற்குப் போகும் எண்ணத்தைக் கைவிட்டவர் சிவகுரு. எளிதாகப் பணம் கிடைக்கும்போது அதன் அருமை புரியுமா? மனைவியுடன் உல்லாசப்பயணம், வெளியூர்களில் நடக்கும் இசைக்கச்சேரிகள் என்று பொழுதைப் போக்கியவருக்கு இருபது வருடங்களுக்குப்பின் அந்த வாழ்க்கை அலுத்துப்போயிற்று. மனம்போனபடி செலவிட்டு, எதிலும் மகிழ்ச்சி கிடைக்காது போக, பணமும் மிகக் குறைந்துவிட்ட நிலையில் வெறுமைதான் மிஞ்சியது. சிவகுருவோடு ஒப்பிட்டால், சீனாக்கார செல்வந்தர் அறிவாளி. மகன்மேல், அவனது நிரந்தரமான மகிழ்ச்சியில், அக்கறை கொண்டவர். முக்கியமாக, மகனும் தன்னைப்போல் சாமர்த்தியசாலிதான் என்ற நம்பிக்கையும், அலாதி துணிச்சலும் கொண்டவர். இக்குணங்களால்தான் பெரும்பொருள் ஈட்ட முடிந்ததோ? நம்மோடு பிறரும் மகிழ நிதரிசனத்தில் அவளுக்கு நிறைவு கிடைக்கவில்லை. ஏனெனில், பெற்றோர் அவளுடைய நலனைப்பற்றி யோசிக்கவில்லை. அதற்கான அவகாசமோ, ஆர்வமோ அவர்களுக்கு இருக்கவில்லை. பிறருக்கு நன்மை இது விந்தையான உலகம். லட்சாதிபதி கோடீஸ்வரனாகவேண்டும் என்று ஆசைப்படுகிறார். கோடீஸ்வரனோ, தன்னிலும் அதிகச் சொத்து சேர்த்திருப்பவருடன் போட்டி போடுகிறார். பணத்தால் மகிழ்ச்சியையோ, திருப்தியையோ வாங்கமுடியாது என்று இவர்கள் அனைவரும் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள். பிறருக்கும் நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையுடன், தாம் எண்ணியதைச் சாதித்தவர்களுக்குத்தான் சிலை வைக்கிறார்கள். ‘என்னால் எதுவும் முடியாது!’ என்று மூக்கால் அழுபவர்கள் தன்னம்பிக்கை குறைந்தவர்கள். மேலானவர்கள் என்று தோன்றுபவர்களின் நடை, உடை, பாவனைகளை அப்படியே பின்பற்றுவார்கள். கதை (பார்த்தது) சிற்றூரிலிருந்து வந்திருந்த ராதாவுக்கு பெரிய நகரில் நல்ல வேலை கிடைத்தது. தனக்குப் பிறருடன் பழகத் தெரியவில்லை என்ற குறையும் கூடவே ஏற்பட்டது. அதே அலுவலகத்தில் வேலைபார்த்த சுமனா கலகலப்பாகவும், எல்லாருக்கும் பிடித்தமானவளாகவும் இருந்தாள். அவளைப்போல் தானும் ஆகவேண்டும் என்ற வெறியே ராதாவுக்கு வந்தது. சுமனா என்ன சாப்பிடுகிறாள் என்று கண்காணித்து, அதையே தானும் வாங்கிச் சாப்பிட்டாள். உடன் வேலைபார்த்த ஒருவன் சுமனாவிடம் மோசமாக நடந்துகொள்ள முயல, அவள் பகிரங்கமாக அவன் மானத்தை வாங்கினாள். ‘என்னிடம் எந்த ஆணும் இப்படி மயங்கவில்லையே!’ என்ற முட்டாள்தனமான ஏக்கம் உண்டாயிற்று ராதாவிற்கு. அக்கயவன் கவனத்தைக் கவரும் வகையில், புடவைத் தலைப்பை நழுவவிட்டாள். (எதைத்தான் பின்பற்றுவது என்று கிடையாதா!) அவள் எண்ணியபடியே அவளை நெருங்கினான். தன் தந்திரம் பலித்துவிட்ட பெருமையில் ராதா மகிழ்ந்து சிரித்தாள். நம்மிடம் என்ன இருக்கிறது, என்ன செய்கிறோம், அல்லது எந்த நிலையில் இருக்கிறோம் என்பதைப் பொறுத்து நிறைவு கிடைப்பதில்லை. நம்மைப்பற்றி நாம் என்ன எண்ணுகிறோமோ, அதுதான் முக்கியம். ராதாவைப் போன்றவர்கள், ‘நான் பிறரிடமிருந்து மாறுபட்டிருக்கக் கூடாது. என்னைவிட உயர்ந்தவர்களைப்போல் நடந்தால்தான் பிறர் என்னைப் பார்த்துப் பிரமிப்பார்கள்,’ என்று எண்ணமிடுகிறார்கள். இத்தகைய எண்ணப்போக்கு நேர் எதிரான விளைவைத்தான் தருகிறது. ராதாவின் நடத்தையை எவரும் சிலாகிக்கவில்லை. அவர்களது முகம்தான் சுளித்தது. நம்மை நாம் இருக்கிறபடியே ஏற்றுக்கொண்டால்தான் தன்னம்பிக்கை வளரும். அப்போது கிடைக்கும் நிம்மதியால் நமக்கு நம்மையே பிடித்துப்போகும். அதன்பின் பிறரிடம் அன்பு செலுத்த தடையேது! மிகப்பெரும் செல்வந்தர்கள் எல்லா உயிர்களிடமும் அன்பு வைத்து, சம்பாதிப்பதில் பெரும் பங்கை தான தர்மங்களுக்காகச் செலவிடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, சம்பாதிப்பது ஒரு விளையாட்டு. வெற்றி என்பது கொள்ளைப்பணத்தை ஈட்டுவதால் அல்ல. செய்யும் காரியத்தால் திருப்தியும் நிம்மதியும் கூடவே வரவேண்டும் என்பதைப் புரிந்து வைத்திருப்பவர்கள் இவர்கள். Bill Gates அமெரிக்காவின் தலைசிறந்த கொடையாளி என்று புகழப்படுகிறார். அப்படி என்ன செய்துவிட்டார்? பில் கேட்ஸ் அளித்த அமெரிக்க டாலர் 36 பில்லியன் (3,600 கோடி) உலகின் பல நாடுகளிலும் காணப்படும் ஏழ்மையை ஒழிக்கவும், அங்கெல்லாம் கல்வித்திறனையும் ஆரோக்கியத்தைப் பெருக்கவும் உபயோகப்படுகிறது. அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் பட்டப்படிப்பு பயிலும், வெள்ளைக்காரர்கள் அல்லாத ஆயிரம் மாணவர்களுக்கு உபகாரச்சம்பளம் வழங்கும் நற்பணியை மேற்கொண்டிருக்கிறார். இதைத் தவிர, ஊதியம் எதுவுமின்றி, வீட்டு வேலைகளையே செய்துகொண்டிருக்கும் இளம்பெண்கள் கல்வியில் பின்தங்கிவிடுகின்றனர், அதனால் தம் முழுத்திறமையை வெளிக்காட்ட முடியாது போகிறது என்று அந்த நிலைமையை மாற்றும் முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார். இந்தியாவிலேயே நடிப்புக்கு அதிகச் சம்பளம் வாங்கும் இந்தி நடிகர் ஓர் இசை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் கழுத்து நிறைய தங்கச்சங்கிலிகள். நிகழ்ச்சி முடியும் சமயத்தில்தான் தெரிந்தது எதற்காக அப்படி – குண்டர் கும்பல் தலைவரைப்போல் – தன்னை அலங்கரித்துக்கொண்டு வந்தார் என்பது. நன்றாகப் பாடியவர்களைப் பாராட்டும் விதமாக, தன் கழுத்திலிருந்த சங்கிலிகளை ஒவ்வொன்றாகக் கழற்றி அவர்களுக்கு அணிவித்தார்! நடிகர்களிலேயே மிகச் சிறந்த கொடைவள்ளல் இவர்தான் என்று பிறிதொரு நிகழ்ச்சியில் அறிவிக்கக் கேட்டேன். தம்மிடமிருப்பதை பிறருக்கும் பகிர்ந்தளிப்பதால் இவர்களுக்கு நிறைவு கிட்டுகிறது போலும்! சிலருக்கு என்ன கிடைத்தாலும் திருப்தி என்னவோ கிடைப்பதில்லை. கதை பல வருடங்களுக்குமுன், மலேசியாவிலிருந்து இந்தியா போகும் கப்பலில் பயணித்திருந்தேன். (இப்போது அந்தச் சேவை கிடையாது). கப்பல் ஆடிய ஆட்டத்தில் பலருக்கும் தலைசுற்றல், வாந்தி. கப்பலின் போக்கைப் பழித்தார்கள். ‘இவங்க காசு மட்டும் வாங்கிக்கறாங்க! சாப்பாடு சகிக்கலே!’ என்றது இன்னொரு கும்பல். யாரோ ஒருவர் மட்டும் கூறினார், ‘இந்தக் கப்பல் 1,600 மைல் கடந்து, குறைந்த செலவில் நம்மை வேறு நாட்டுக்குக் கொண்டுபோகிறதே!’ யாரிடம் என்ன குறை இருக்கிறது என்று மட்டுமே ஆராய்ந்து கொண்டிருப்பதால் நாம் உயர்ந்துவிடமாட்டோம். ஆனால், திருத்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், குறையையும், அதை நிவர்த்தி செய்யும் வழியையும் எடுத்துச் சொல்லலாம். ஏதாவது நோய்வாய்ப்பட்டு, விரைவில் இறக்கப்போகிறோம் என்று தெரிந்தவர்கள் தத்துவார்த்தமாகக் கூறுவது: ‘ஒவ்வொரு நாளையும் இதுதான் நாம் கடைசியாக வாழப்போகும் தினம் என்று நினைத்து வாழ்கிறேன். என்னைச் சுற்றிலும் அன்பானவர்கள் இருக்கிறார்களே என்று நிறைவாக இருக்கிறது’. எந்த நிலையிலும் மனம் வெதும்பிவிடாது, இருக்கும் சில நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்வது அறிவு. ஆனால், தம்மிடம் இருப்பதை எண்ணி திருப்தி அடையாது, எதையோ எண்ணி ஏங்குகிறார்கள் பலரும். கதை ‘நாற்பது வயதிற்குள் நான் லட்சாதிபதி ஆகவேண்டும்!’ என்று அடிக்கடி கூறிவந்தவர் அவர். அந்த லட்சியத்துடன், மேலதிகாரிகளின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்காகக் கடுமையாக உழைத்தார். அவர்களுடைய தனிப்பட்ட தேவைகளையும் முன்னின்று கவனித்துக்கொண்டார். மனைவி மக்களுடனும் சிறிது நேரத்தைக் கழிக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றவில்லை. அவர்கள் தன்னைவிட்டு எங்கே போய்விடப்போகிறார்கள் என்ற அலட்சியம்தான். அத்துடன், ஒவ்வொரு நிமிடமும் காசாயிற்றே! ஒரு விபத்தில் அவரது குடும்பமே அழிந்துபோயிற்று. ‘இனி யாருக்காக சம்பாதிப்பது!’ என்ற விரக்தி ஏற்பட்டது அம்மனிதருக்கு. ‘இப்போது என் குடும்பத்தினர் வந்து வாசற்கதவைத் தட்டினால், அது லட்சத்திற்கும் மேலானது!’ என்று கதறினார். காலம் கடந்து புத்தி வந்து என்ன ஆகப்போகிறது! கதை சில ஆண்டுகளுக்குமுன், நேபாளத்தில் ஒரு சமூக சேவகியைச் சந்தித்தேன். துருக்கி நாட்டைச் சேர்ந்தவள். ’இந்த மலைப்பிரதேசத்தில் பலரும் போலியோ நோயால் பாதிக்கப்படுகிறார்கள். தகுந்த வைத்தியம் கிடைப்பதில்லை. நான் வருடத்தில் பலமுறை இங்கு வந்து, அதற்கான மருந்துகளை கொடுத்து, பிற தேவைகளையும் கவனித்துப் போகிறேன்," என்றவளுக்கு முப்பத்தைந்து வயதுதான் இருக்கும். “உனக்குக் குழந்தைகள் இருக்கிறார்களா?” என்று நான் கேட்டதும், பத்து வயதுக்குட்பட்ட இரு குழந்தைகள் இருப்பதாகத் தெரிவித்தாள். ‘ஊராருக்கு நல்லது செய்வதெல்லாம் கிடக்கட்டும். உன் குடும்பத்தைக் கவனித்துக்கொள்கிறாயோ?’ என்று உடனே தோன்ற, "உன் குழந்தைகளுடன் செலவழிக்க நேரம் கிடைக்கிறதா?’ என்று கேட்டேன். பெற்றோர் ஆதரவாக இல்லை என்று வருந்தி, தீய பழக்கங்களுக்கு ஆளான எவ்வளவு மாணவ மாணவிகளின் கதைகளைக் கேட்டிருக்கிறேன்! அதனால் அக்கேள்வி தன்னால் பிறந்தது. அவள் ஆசியாவைச் சேர்ந்தவள். அதனால், ‘அதிகப்பிரசங்கி,’ என்று என்னைப் பார்த்து முகம் சுளிக்கவில்லை. இன்னொரு தலைமுறையைச் சேர்ந்த என் கேள்வி நியாயமாகப்பட்டிருக்கிறது. “இயன்றவரை, அவர்களையும் என்னுடன் அழைத்துவருகிறேன்,” என்று பணிவாகப் பதிலளித்தாள். கதை ஐம்பது வயதான பெண்மணி உமா என்னுடன் பிரயாணம் செய்துகொண்டிருந்தாள். நாலைந்து நாட்களுக்குப் பிறகு, “நீங்கள் ஏன் கல்யாணமே பண்ணிக்கொள்ளவில்லை?” என்று கேட்டேன், பேச்சுவாக்கில். “எங்கம்மா சமூக சேவகி. வீட்டில் இருந்ததே அபூர்வம். என்னவோ, என் அப்பாவுக்கும் எனக்குக் கல்யாணம் பண்ணிவைக்கணும்னு தோணலே!” என்றாள் விரக்தியை மறைக்காது. உமா பெரிய உத்தியோகத்தில் இருந்தாள். பிறர் மதித்தார்கள். ஆனாலும், தனிமையிலேயே வாழ்க்கையைக் கழிக்கவேண்டும் என்ற செய்கிறோம் என்று, குடும்பத்தைக் கவனிக்காமல் விடலாமா? ஒருவர் தன் சொந்த திருப்திக்காக தன்னைச் சேர்ந்தவர்களின் மகிழ்ச்சியைப் பறிப்பது என்ன நியாயம்? இது விந்தையான உலகம். லட்சாதிபதி கோடீஸ்வரனாகவேண்டும் என்று ஆசைப்படுகிறார். கோடீஸ்வரனோ, தன்னிலும் அதிகச் சொத்து சேர்த்திருப்பவருடன் போட்டி போடுகிறார். பணத்தால் மகிழ்ச்சியையோ, திருப்தியையோ வாங்கமுடியாது என்று இவர்கள் அனைவரும் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள். பிறருக்கும் நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையுடன், தாம் எண்ணியதைச் சாதித்தவர்களுக்குத்தான் சிலை வைக்கிறார்கள். ‘என்னால் எதுவும் முடியாது!’ என்று மூக்கால் அழுபவர்கள் தன்னம்பிக்கை குறைந்தவர்கள். மேலானவர்கள் என்று தோன்றுபவர்களின் நடை, உடை, பாவனைகளை அப்படியே பின்பற்றுவார்கள். கதை (பார்த்தது) சிற்றூரிலிருந்து வந்திருந்த ராதாவுக்கு பெரிய நகரில் நல்ல வேலை கிடைத்தது. தனக்குப் பிறருடன் பழகத் தெரியவில்லை என்ற குறையும் கூடவே ஏற்பட்டது. அதே அலுவலகத்தில் வேலைபார்த்த சுமனா கலகலப்பாகவும், எல்லாருக்கும் பிடித்தமானவளாகவும் இருந்தாள். அவளைப்போல் தானும் ஆகவேண்டும் என்ற வெறியே ராதாவுக்கு வந்தது. சுமனா என்ன சாப்பிடுகிறாள் என்று கண்காணித்து, அதையே தானும் வாங்கிச் சாப்பிட்டாள். உடன் வேலைபார்த்த ஒருவன் சுமனாவிடம் மோசமாக நடந்துகொள்ள முயல, அவள் பகிரங்கமாக அவன் மானத்தை வாங்கினாள். ‘என்னிடம் எந்த ஆணும் இப்படி மயங்கவில்லையே!’ என்ற முட்டாள்தனமான ஏக்கம் உண்டாயிற்று ராதாவிற்கு. அக்கயவன் கவனத்தைக் கவரும் வகையில், புடவைத் தலைப்பை நழுவவிட்டாள். (எதைத்தான் பின்பற்றுவது என்று கிடையாதா!) அவள் எண்ணியபடியே அவளை நெருங்கினான். தன் தந்திரம் பலித்துவிட்ட பெருமையில் ராதா மகிழ்ந்து சிரித்தாள். நம்மிடம் என்ன இருக்கிறது, என்ன செய்கிறோம், அல்லது எந்த நிலையில் இருக்கிறோம் என்பதைப் பொறுத்து நிறைவு கிடைப்பதில்லை. நம்மைப்பற்றி நாம் என்ன எண்ணுகிறோமோ, அதுதான் முக்கியம். ராதாவைப் போன்றவர்கள், ‘நான் பிறரிடமிருந்து மாறுபட்டிருக்கக் கூடாது. என்னைவிட உயர்ந்தவர்களைப்போல் நடந்தால்தான் பிறர் என்னைப் பார்த்துப் பிரமிப்பார்கள்,’ என்று எண்ணமிடுகிறார்கள். இத்தகைய எண்ணப்போக்கு நேர் எதிரான விளைவைத்தான் தருகிறது. ராதாவின் நடத்தையை எவரும் சிலாகிக்கவில்லை. அவர்களது முகம்தான் சுளித்தது. நம்மை நாம் இருக்கிறபடியே ஏற்றுக்கொண்டால்தான் தன்னம்பிக்கை வளரும். அப்போது கிடைக்கும் நிம்மதியால் நமக்கு நம்மையே பிடித்துப்போகும். அதன்பின் பிறரிடம் அன்பு செலுத்த தடையேது! மிகப்பெரும் செல்வந்தர்கள் எல்லா உயிர்களிடமும் அன்பு வைத்து, சம்பாதிப்பதில் பெரும் பங்கை தான தர்மங்களுக்காகச் செலவிடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, சம்பாதிப்பது ஒரு விளையாட்டு. வெற்றி என்பது கொள்ளைப்பணத்தை ஈட்டுவதால் அல்ல. செய்யும் காரியத்தால் திருப்தியும் நிம்மதியும் கூடவே வரவேண்டும் என்பதைப் புரிந்து வைத்திருப்பவர்கள் இவர்கள். Bill Gates அமெரிக்காவின் தலைசிறந்த கொடையாளி என்று புகழப்படுகிறார். அப்படி என்ன செய்துவிட்டார்? பில் கேட்ஸ் அளித்த அமெரிக்க டாலர் 36 பில்லியன் (3,600 கோடி) உலகின் பல நாடுகளிலும் காணப்படும் ஏழ்மையை ஒழிக்கவும், அங்கெல்லாம் கல்வித்திறனையும் ஆரோக்கியத்தைப் பெருக்கவும் உபயோகப்படுகிறது. அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் பட்டப்படிப்பு பயிலும், வெள்ளைக்காரர்கள் அல்லாத ஆயிரம் மாணவர்களுக்கு உபகாரச்சம்பளம் வழங்கும் நற்பணியை மேற்கொண்டிருக்கிறார். இதைத் தவிர, ஊதியம் எதுவுமின்றி, வீட்டு வேலைகளையே செய்துகொண்டிருக்கும் இளம்பெண்கள் கல்வியில் பின்தங்கிவிடுகின்றனர், அதனால் தம் முழுத்திறமையை வெளிக்காட்ட முடியாது போகிறது என்று அந்த நிலைமையை மாற்றும் முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார். இந்தியாவிலேயே நடிப்புக்கு அதிகச் சம்பளம் வாங்கும் இந்தி நடிகர் ஓர் இசை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் கழுத்து நிறைய தங்கச்சங்கிலிகள். நிகழ்ச்சி முடியும் சமயத்தில்தான் தெரிந்தது எதற்காக அப்படி – குண்டர் கும்பல் தலைவரைப்போல் – தன்னை அலங்கரித்துக்கொண்டு வந்தார் என்பது. நன்றாகப் பாடியவர்களைப் பாராட்டும் விதமாக, தன் கழுத்திலிருந்த சங்கிலிகளை ஒவ்வொன்றாகக் கழற்றி அவர்களுக்கு அணிவித்தார்! நடிகர்களிலேயே மிகச் சிறந்த கொடைவள்ளல் இவர்தான் என்று பிறிதொரு நிகழ்ச்சியில் அறிவிக்கக் கேட்டேன். தம்மிடமிருப்பதை பிறருக்கும் பகிர்ந்தளிப்பதால் இவர்களுக்கு நிறைவு கிட்டுகிறது போலும்! சிலருக்கு என்ன கிடைத்தாலும் திருப்தி என்னவோ கிடைப்பதில்லை. கதை பல வருடங்களுக்குமுன், மலேசியாவிலிருந்து இந்தியா போகும் கப்பலில் பயணித்திருந்தேன். (இப்போது அந்தச் சேவை கிடையாது). கப்பல் ஆடிய ஆட்டத்தில் பலருக்கும் தலைசுற்றல், வாந்தி. கப்பலின் போக்கைப் பழித்தார்கள். ‘இவங்க காசு மட்டும் வாங்கிக்கறாங்க! சாப்பாடு சகிக்கலே!’ என்றது இன்னொரு கும்பல். யாரோ ஒருவர் மட்டும் கூறினார், ‘இந்தக் கப்பல் 1,600 மைல் கடந்து, குறைந்த செலவில் நம்மை வேறு நாட்டுக்குக் கொண்டுபோகிறதே!’ யாரிடம் என்ன குறை இருக்கிறது என்று மட்டுமே ஆராய்ந்து கொண்டிருப்பதால் நாம் உயர்ந்துவிடமாட்டோம். ஆனால், திருத்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், குறையையும், அதை நிவர்த்தி செய்யும் வழியையும் எடுத்துச் சொல்லலாம். ஏதாவது நோய்வாய்ப்பட்டு, விரைவில் இறக்கப்போகிறோம் என்று தெரிந்தவர்கள் தத்துவார்த்தமாகக் கூறுவது: ‘ஒவ்வொரு நாளையும் இதுதான் நாம் கடைசியாக வாழப்போகும் தினம் என்று நினைத்து வாழ்கிறேன். என்னைச் சுற்றிலும் அன்பானவர்கள் இருக்கிறார்களே என்று நிறைவாக இருக்கிறது’. எந்த நிலையிலும் மனம் வெதும்பிவிடாது, இருக்கும் சில நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்வது அறிவு. ஆனால், தம்மிடம் இருப்பதை எண்ணி திருப்தி அடையாது, எதையோ எண்ணி ஏங்குகிறார்கள் பலரும். கதை ‘நாற்பது வயதிற்குள் நான் லட்சாதிபதி ஆகவேண்டும்!’ என்று அடிக்கடி கூறிவந்தவர் அவர். அந்த லட்சியத்துடன், மேலதிகாரிகளின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்காகக் கடுமையாக உழைத்தார். அவர்களுடைய தனிப்பட்ட தேவைகளையும் முன்னின்று கவனித்துக்கொண்டார். மனைவி மக்களுடனும் சிறிது நேரத்தைக் கழிக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றவில்லை. அவர்கள் தன்னைவிட்டு எங்கே போய்விடப்போகிறார்கள் என்ற அலட்சியம்தான். அத்துடன், ஒவ்வொரு நிமிடமும் காசாயிற்றே! ஒரு விபத்தில் அவரது குடும்பமே அழிந்துபோயிற்று. ‘இனி யாருக்காக சம்பாதிப்பது!’ என்ற விரக்தி ஏற்பட்டது அம்மனிதருக்கு. ‘இப்போது என் குடும்பத்தினர் வந்து வாசற்கதவைத் தட்டினால், அது லட்சத்திற்கும் மேலானது!’ என்று கதறினார். காலம் கடந்து புத்தி வந்து என்ன ஆகப்போகிறது! கதை சில ஆண்டுகளுக்குமுன், நேபாளத்தில் ஒரு சமூக சேவகியைச் சந்தித்தேன். துருக்கி நாட்டைச் சேர்ந்தவள். ’இந்த மலைப்பிரதேசத்தில் பலரும் போலியோ நோயால் பாதிக்கப்படுகிறார்கள். தகுந்த வைத்தியம் கிடைப்பதில்லை. நான் வருடத்தில் பலமுறை இங்கு வந்து, அதற்கான மருந்துகளை கொடுத்து, பிற தேவைகளையும் கவனித்துப் போகிறேன்," என்றவளுக்கு முப்பத்தைந்து வயதுதான் இருக்கும். “உனக்குக் குழந்தைகள் இருக்கிறார்களா?” என்று நான் கேட்டதும், பத்து வயதுக்குட்பட்ட இரு குழந்தைகள் இருப்பதாகத் தெரிவித்தாள். ‘ஊராருக்கு நல்லது செய்வதெல்லாம் கிடக்கட்டும். உன் குடும்பத்தைக் கவனித்துக்கொள்கிறாயோ?’ என்று உடனே தோன்ற, "உன் குழந்தைகளுடன் செலவழிக்க நேரம் கிடைக்கிறதா?’ என்று கேட்டேன். பெற்றோர் ஆதரவாக இல்லை என்று வருந்தி, தீய பழக்கங்களுக்கு ஆளான எவ்வளவு மாணவ மாணவிகளின் கதைகளைக் கேட்டிருக்கிறேன்! அதனால் அக்கேள்வி தன்னால் பிறந்தது. அவள் ஆசியாவைச் சேர்ந்தவள். அதனால், ‘அதிகப்பிரசங்கி,’ என்று என்னைப் பார்த்து முகம் சுளிக்கவில்லை. இன்னொரு தலைமுறையைச் சேர்ந்த என் கேள்வி நியாயமாகப்பட்டிருக்கிறது. “இயன்றவரை, அவர்களையும் என்னுடன் அழைத்துவருகிறேன்,” என்று பணிவாகப் பதிலளித்தாள். கதை ஐம்பது வயதான பெண்மணி உமா என்னுடன் பிரயாணம் செய்துகொண்டிருந்தாள். நாலைந்து நாட்களுக்குப் பிறகு, “நீங்கள் ஏன் கல்யாணமே பண்ணிக்கொள்ளவில்லை?” என்று கேட்டேன், பேச்சுவாக்கில். “எங்கம்மா சமூக சேவகி. வீட்டில் இருந்ததே அபூர்வம். என்னவோ, என் அப்பாவுக்கும் எனக்குக் கல்யாணம் பண்ணிவைக்கணும்னு தோணலே!” என்றாள் விரக்தியை மறைக்காது. உமா பெரிய உத்தியோகத்தில் இருந்தாள். பிறர் மதித்தார்கள். ஆனாலும், தனிமையிலேயே வாழ்க்கையைக் கழிக்கவேண்டும் என்ற நிதரிசனத்தில் அவளுக்கு நிறைவு கிடைக்கவில்லை. ஏனெனில், பெற்றோர் அவளுடைய நலனைப்பற்றி யோசிக்கவில்லை. அதற்கான அவகாசமோ, ஆர்வமோ அவர்களுக்கு இருக்கவில்லை. பிறருக்கு நன்மை செய்கிறோம் என்று, குடும்பத்தைக் கவனிக்காமல் விடலாமா? ஒருவர் தன் சொந்த திருப்திக்காக தன்னைச் சேர்ந்தவர்களின் மகிழ்ச்சியைப் பறிப்பது என்ன நியாயம்? விழு, எழு! ‘எவ்வளவு நிதானமாகப் போனாலும், பாதியில் நின்றுவிடாதே! வெற்றி உனக்குத்தான்!’ ஆரம்பப் பள்ளியில் நாம் படித்த ஆமை-முயல் கதையில் வரும் நீதி இது. இதனை எத்தனைபேர் கடைப்பிடிக்கிறோம்? நடை பயில ஆரம்பிக்கும்போது பலமுறை விழுந்தாலும், யாரும் நடக்காமலேயே இருந்துவிடுவதில்லை. இதைத்தான் ஐன்ஸ்டீன் இப்படிச் சொல்கிறார்: “வாழ்க்கை மிதிவண்டிக்கு ஒப்பானது. ஒரே இடத்தில் நில்லாது, நகர்ந்துகொண்டே இருக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், விழுந்துவிடுவோம்”. ‘ஏன் வெற்றி நம்மைக் கண்டு அஞ்சி விலகுகிறது?’ என்று காலங்கடந்து சிந்தனையை ஓடவிட்டால் எந்தப் பயனுமில்லை. ‘நேராகப் போனால், சுவற்றில்தான் முட்டிக்கொள்ள வேண்டும்!’ என்று தோன்றினால், அதைச் சுற்றி வேறு வழி இருக்கிறதா என்று ஆராய்வதுபோல், பிரச்னையை எப்படியெல்லாம் சமாளிக்க முடியும் என்ற யோசனை பலனளிக்கும். தோல்வி நிரந்தரமில்லை என்று உணர்ந்தால் போதும். மனம் தளராது, நம் கனவுகளையோ, அதற்கான முயற்சிகளையோ கைவிடாது இருந்தால் வெற்றி நிச்சயம். கதை அபியின் புக்ககத்தினர் ‘ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்து!’ என்பதை வேதவாக்காக பாவித்து நடந்துகொண்டிருந்தனர். அப்பெண்ணின் நாத்தனார்கள், மைத்துனர் ஆகியவர்களின் வாழ்க்கை நரகமாக அமைந்திருந்தது. ‘இவள் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கலாமா?’ என்று எண்ணியதுபோல் அபியை ஆட்டிவைத்தார்கள். பெரியவர்கள் நிச்சயித்த கல்யாணம் பொய்த்தால், அவர்களுக்குத்தான் மனவருத்தம், அவமானம் என்று ஏதேதோ குழப்பம் உண்டாக, தன்னால் இயன்றவரை எதிர்த்துப்பார்த்தாள் அபி. பலனில்லாதுபோக, எல்லா இடர்களையும் பொறுத்துப்போனாள். ஒரு தருணத்தில், இனி பொறுக்கவே முடியாது!’ என்று தோன்றிப்போயிற்று. ஒரு பூட்டைத் திறக்கவென சாவிக்கொத்தில் இருப்பவைகளில் சிலவற்றைப் பரீட்சித்து, முடியாவிட்டால் விட்டுவிடுவோமா? ஒன்று மாற்றி ஒன்றாக எல்லா சாவிகளைக்கொண்டும் முயற்சி செய்வோமே! அப்படித்தான் அபியும் யோசித்தாள்: இன்னும் என்ன செய்யலாம்? சண்டை பிடித்தால்தானே நிம்மதி கெடுகிறது! வீட்டில் எப்போதும்போல் பொறுமையைக் கடைப்பிடிக்க நிச்சயித்தாள். தான் நிம்மதியாகவே இருக்கக்கூடாது என்று நினைத்ததுபோல் நடந்துகொண்டவர்களின் உறவைத் துண்டித்தாள். ஒரு வழியாக, குடும்பத்தில் அமைதி நிலவியது. அபி செய்ததுபோல், இதுவரைத் துணிந்து செய்யாத முயற்சிகளில் இறங்கத் தயங்குவார்கள் பலர். அவை பலனளிக்காவிட்டால் என்ன செய்வது! ‘இப்போது சௌகரியமாகத்தானே இருக்கிறேன்!’ என்று ஒரே நிலையில் இருப்பார்கள். “ஆரம்பிக்காதே! ஆரம்பித்தால், பாதியில் விடாதே!” (சீனப் பழமொழி). எதையாவது செய்ய ஆரம்பித்து, வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் இருக்கையில் அம்முயற்சியைக் கைவிட்டவர்கள்தாம் தோற்கிறார்கள் என்கிறார் தாமஸ் ஆல்வா எடிசன். ‘நான் தோல்வியே அடைந்ததில்லை. ஒரு காரியத்தை எப்படியெல்லாம் செய்யக்கூடாது என்பதைத்தான் விதவிதமாகக் கற்றேன்!’ என்று, தோல்விகளை வெற்றியாக்கிய வித்தையை வேடிக்கையாகப் பகிர்ந்துகொள்கிறார் இவர். இந்த மனநிலையால்தான், 1,093 மின்சாதனங்களைக் கண்டுபிடித்திருக்கிறார் – சில சமயம், குழுக்களுடன் இணைந்து. (அமெரிக்காவிலேயே மிக அதிகமான காப்புரிமை பெற்றவர் என்ற புகழுக்கு உரியவர் எடிசன்). ‘நம்மால் முடியுமா!’ என்ற அவநம்பிக்கையைப் பொய்க்கச் செய்தால், அது அளிக்கும் ஆனந்தமே தனிதான். தோல்வி ஒவ்வொரு மனிதரையும் வெவ்வேறு விதத்தில் பாதிக்கிறது. தாம் தோல்வி அடையும்போது, அதற்கு வேறு எவரையாவது காரணம் காட்டித் தப்பித்துக்கொள்ள நினைப்பது கோழைத்தனம். இப்படிப்பட்டவர் முயற்சி அடைந்து தோற்கவில்லை. முயற்சியில் முழுமனதாக ஈடுபடவில்லை. எல்லா முயற்சிகளும் வெற்றியில்தான் முடியும் என்றில்லை. முதலாவதாக, எடுத்த காரியத்தில் திறமை இருக்கவேண்டும். வற்றாத ஆர்வம் அடுத்து வருவது. ‘முயலாமல் போய்விட்டோமே!’ என்ற வருத்தம் எதற்கு? முயற்சி செய்தபின் தோல்வியடைந்தால், ‘ஏதோ, நம்மால் முடிந்ததைச் செய்தோம்!’ என்ற திருப்தியாவது மிஞ்சும். ‘இந்தக் காரியத்தைச் செய்ய நெடுநேரம் பிடிக்குமே!’ என்று தயங்குவார்கள் வேறு சிலர். காலம் எப்படியும் கடந்துதான் போகும். அதை ஆக்ககரமாகச் செலவழிக்கலாமே! இளமையில் தாங்கள் விரும்பியது கிடைக்காவிட்டால், அந்தக் கனவை பிள்ளைகளின்மூலம் நனவாக்கிக்கொள்ள நினைக்கிறார்கள் பல பெற்றோர். “அவளுடைய நான்கு குழந்தைகளும் மருத்துவர்கள்!” என்று எங்கள் தோழியைப்பற்றி வியந்து கூறினாள் ஒருத்தி. பதிலுக்கு, “அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களோ?” என்று கேட்டேன். பெற்றோரது ஆசைகளைப் பூர்த்தி செய்வது கிடக்கட்டும், பிள்ளைகளுக்கென்று தனியாக மனம் இருக்காதா? அதில் வேறு எதிர்பார்ப்புகள் இருக்காதா? சிலர் ஏன் செய்கிறோம் என்று புரியாமலேயே ஒரு காரியத்தில் ஈடுபடுவார்கள். முழுமனதுடன் ஈடுபடாவிட்டால், காரியம் அரைகுறையாகத்தான் இருக்கும். கதை திருமணம்தான் ஆகவில்லை, படித்தாவது வைக்கிறேனே!’ என்று மருத்துவரானவள் கற்பகம். புத்திசாலி. அத்துடன், சொந்தக்காலில் நிற்கவேண்டிய அவசியமும்கூட. ஆனால், அதற்கான பக்குவம் இருக்கவில்லை. இல்லாவிட்டால், நள்ளிரவில், ‘குழந்தைக்கு உடம்பு ரொம்ப மோசமாக இருக்கிறது, டாக்டர்!’ என்று வீட்டுவாசலில் நின்று பெற்றோர் கதற, ‘எனக்குத் தூக்கம் வருது!’ என்று இழுத்துப் போர்த்திக்கொள்வாளா? ஏன் விழுகிறோம்? முதலாவது முயற்சியில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், அது தொடரும் என்பது நிச்சயமில்லை. ஒரே ஒரு கதை எழுதிவிட்டு, அது பத்திரிகையில் பிரசுரமும் ஆனபின், ‘நான் எப்படி எழுதினாலும் ஏற்றுக்கொள்வார்கள்!’ என்ற மிதப்புடன் கிறுக்கித்தள்ளினால் எப்படி! இந்த ‘உயர்ந்த’ மனப்பான்மை எல்லா மனிதருக்கும் ஏற்படுவது. அதை எதிர்கொள்ள, அடுத்தடுத்து வரும் முயற்சிகளுக்காக இன்னும் கடுமையாக உழைக்கவேண்டுவது அவசியம். தோல்வியை எவரும் விரும்புவதில்லை. அது ஏற்படும்போது, மனம் உடைந்துதான் போகும். ஆனால், விரக்தியிலேயே மூழுகிவிடாது, சொற்பகாலம் கழித்து, வேறு முயற்சிகளில், அல்லது வெவ்வேறு விதமாக ஒரே முயற்சியில் ஈடுபட்டால் பலன் கிடைக்குமே! “நான் ஆங்கில தினசரிக்கு எத்தனையோ எழுதினேன். ஒன்றுகூட பிரசுரம் ஆகவில்லை!” என்று ஓர் இளம்பெண் என்னிடம் வருத்தத்துடன் தெரிவித்தாள். இது சம்பந்தமாக, பிறர் என்னைக் கேட்டது: “உங்களுக்கு யாரைத் தெரியும்?” தெரிந்தவர்மூலம் வெற்றி அடைந்தால் அதனால் ஒருவர் பெருமைப்பட என்ன இருக்கிறது? கதை 1,990-ல், சிங்கப்பூரில் ஒரு விஞ்ஞான கண்காட்சியில், பிரா மாதிரியான ஒரு சாதனத்தை வைத்திருந்தார்கள். ‘இதில் என்ன புதுமை?’ என்கிறீர்களா? இது ஆண்கள் அணிவது. உள்ளே குழந்தை குடிக்கும் பால் இருக்கும். அம்மா வீட்டில் இல்லாதபோது குழந்தை அழுதால், அப்பா இந்த சாதனத்தை அணிந்துகொண்டு, குழந்தையை ‘மார்புடன்’ அணைத்துப் பாலூட்டலாம். ‘இச்செய்தியைப் படித்ததுமே, குமுதம்தான் நினைவில் எழுந்தது!’ என்று ஒரு கடிதத்தைத் தனியாக ஆசிரியருக்கு எழுதி, ஒரு குட்டிக்கதையையும் அனுப்பினேன். உடனே பிரசுரமாகியது, தினசரியில் வந்த படத்துடன். எந்தப் பத்திரிகையில் எப்படி எழுதினால் ஏற்பார்கள் என்று புரிந்துகொள்ள அந்த அனுபவம் உதவியது. ஆன்மிகப் பத்திரிகைக்கு இந்தக் கதையை அனுப்பியிருக்க முடியுமா? சுதந்திரம் என்பது ‘மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கைக்கு கணவன் செவிப்புலன் அற்றவராகவும், மனைவி பார்வையற்றவளாகவும் இருக்க வேண்டும்’. இது மனைவியுடன் ஒத்துப்போகத் தெரியாத ஒருவரின் கருத்தாக இருக்கவேண்டும். இந்த நிலை அவசியமென்றால், எவருமே முழுமையாக இருக்கமுடியாதே! மனைவிக்குச் சுதந்திரமா! “’நான் முன்னுக்கு வந்திருப்பது நீங்கள் எனக்கு அளித்திருக்கும் சுதந்திரத்தால்தான்! என்று தினமும் ஒருமுறை என் கணவரிடம் கூறுவேன்,” என்று என்னிடம் தெரிவித்தாள் நான்ஸி கூ (Khoo). சமூக சேவகியான அவள் குடும்பத்தில் வன்முறையைப் பொறுத்துப்போகும் பல பெண்களைச் சந்தித்திருக்கிறாள். எத்தனை பெண்கள் இவளைப்போல் தம் கணவன்மார்களிடம் நன்றியுடன் கூற முடியும்! நான்ஸி வாரத்தில் மருத்துவமனைகளுக்குச் சென்று நோயாளிகளுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அதைத் தவிர, இசையில் தேர்ந்தவள். மத சம்பந்தமான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வாள். நிலையான உத்தியோகம் வேறு. இப்படியாக பலவற்றிற்கும் நேரத்தைச் செலவழித்தால், அவளுடைய இரண்டு குழந்தைகளுக்கும், கணவருக்கும் போதிய நேரத்தை ஒதுக்க இயலுமா? சிரித்தபடி, அதையும் அவளே கூறினாள்: “உத்தியோகத்திற்காக 50%, பொதுநல சேவைக்கு 30%, வீட்டு வேலைக்கு 10%. குழந்தைகளுக்காகக் கொஞ்சம், மீதி 1% கணவருக்கு!” தன் ஒவ்வொரு தேவையையும் குறிப்பாலேயே புரிந்துகொண்டு, மனைவி அவைகளை நிறைவேற்றவில்லையே என்று ஆத்திரப்படும் ரகமில்லை அவளது கணவர். மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருந்தால்தான் தானும் நிம்மதியாக இருக்கலாம் என்ற விவேகம் அவருக்கு இருந்தது. குழந்தைகளை வெளியில் அழைத்துப்போவது, பாடம் கற்பிப்பது எல்லாவற்றையும் விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஒரு நல்ல கணவர் நல்ல மனைவியாகவும் இருப்பார். ‘ஆண்’ என்றால் முரட்டுத்தனமாக இருக்கவேண்டும் என்று அவர் எண்ணவில்லை. ‘நீ களைத்துப்போய் வந்திருக்கிறாயே! இன்று வெளியில் போய் சாப்பிடலாமா? இல்லாவிட்டால், நான் ஏதாவது செய்யட்டுமா?’ என்று கரிசனப்படுவார். அத்துடன், தான் ஒரு நாளில் செய்வது எல்லாவற்றையும் அன்றே நான்ஸிதான் அவருடன் பகிர்ந்துகொள்கிறாளே! அவள் கூறுவதையெல்லாம் உன்னிப்பாகக் கேட்டுவிட்டு, தகுந்த ஆலோசனையும், உதவியும் செய்யவும் அவர் தயங்கியதில்லை. தீராத நோயால் அவதிப்பட்ட ஒரு மாதுவிற்கு மரணபயம், அவளுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று நான்ஸி தன் குழப்பத்தை வெளியிட்டாள் ஒரு சமயம். ‘உனக்கே சாவு பயம்! இந்த லட்சணத்தில் நீ மற்றவர்களுக்கு அறிவுரை கூறப்போகிறாயா!’ என்ற ரீதியில் கேலி செய்தால், அடுத்த முறை நான்ஸி அவரிடம் எதுவும் சொல்வாளா? அடுத்த நாளே, புத்தகசாலைக்குச் சென்று, அது சம்பந்தமான புத்தகங்கள் சிலவற்றை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தார் கணவர். அவருக்கே அந்த விஷயங்கள் தெரிந்திருக்கலாம். ஆனால், ‘நீ இப்படிச் செய்திருக்க வேண்டும்!’ என்பதுபோல் கூறினால், அது அவளைத் தாழ்த்துவதுபோல் ஆகிவிடும் என்று அவர் அறிந்திருந்தார். அதனால்தான் மறைமுகமான உதவி. நன்றியுடன் அதை ஏற்றவள், கணவருக்கும் மதிப்புக் கொடுத்து நடந்தாள். மனைவிக்கு இருப்பதுபோல் அவருக்கும் சிலவற்றில் தனிப்பட்ட ஆர்வம் இருக்காதா! மிஸ்டர் கூ நண்பர்களுடன் விளையாடிவிட்டு நேரங்கழித்து வீடு திரும்பினால், அவள் சந்தேகப்படாது, ‘இன்று எப்படி விளையாடினீர்கள்?’ என்று அக்கறையுடன் விசாரிப்பாள். இப்படி ஒற்றுமையாகச் செயல்படும் இன்னொரு தம்பதிகள் எனக்கு கோலாலம்பூரில் பழக்கம். அவர்கள் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர்கள். மனைவி மரியாதான் எனக்குத் தோழி. அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தபோது, கணவர் நெடுநாட்கள் பழகியதுபோல் முகமெல்லாம் சிரிப்பாக சில சிற்றுண்டி வகைகளைக் கொண்டுவைத்தார். மனைவி பிற பெண்களுடன் நெருக்கமாகப் பழகினால்கூட தனிமையாக உணர்ந்து, தம் ஆட்சேபத்தை எப்படி எப்படியோ தெரிவிக்கும் ஆண்களில் இவர் வித்தியாசமானவர். மரியா அப்படியொன்றும் – தமிழ் திரைப்படங்களில் வரும் கதாநாயகிகளைப்போல் – நிறைய வளைவுகளுடன் இருக்கவில்லை. சோனியாக, பன்னிரண்டு வயதுப் பையன்போல் இருப்பாள். நான் அவர்கள் வீட்டுக்குப் போகும்போதெல்லாம், களிப்புடன் ஓடி வருவாள். பொதுவாகவே, மனிதர்கள் என்றால் அவளுக்கு உயிர். இது அவருக்குப் புரிந்தது. பெண்’ என்றால் அவளுடைய உருவம் மட்டுமில்லை என்பதை உணர்ந்தவர் அவர். ஸ்வீடன் நாட்டவர் எது நிலையானது, எது வாழ்க்கைக்கு முக்கியம் என்று உணர்ந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் மகிழ்ச்சிக்கும் குறைவில்லை. இம்மாதிரியான புரிந்துணர்வு இருக்கும் குடும்பங்களில் மற்றவரை இழிவுபடுத்தாது, தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். ‘நீங்கள் என்னை மற்றவர் முன்னிலையில் திட்டினாலோ, பழித்தாலோ எனக்குப் பிடிக்கவில்லை,’ என்று திட்டவட்டமாகக் கூறினால், நிலைமை மாறக்கூடும். அடுத்த முறை, சற்று யோசிப்பார். இருவருக்குமே கருத்துச் சுதந்திரம் இருக்கும். ‘சுதந்திரம்’ என்றால் மனம்போனபடி, சமூகம் ஏற்காததையெல்லாம் செய்வதில்லை. ஒருவரது திறமைக்கும் ஆர்வத்துக்கும் ஏற்றபடி நடந்துகொண்டு, பிறருக்குத் தொந்தரவோ, தீமையோ விளைவிக்காது இருத்தல் எனலாம். ஓர் இளம்பெண் கடற்கரைப் பகுதியில் இடுப்புக்குமேல் எதுவும் அணியாது நடந்துகொண்டிருந்தபோது, இங்கு காவல்துறையினரால் பிடிக்கப்பட்டாள். ‘ஆண்களும் இப்படித்தானே நடக்கிறார்கள்! நீங்கள் ஏன் அவர்களைப் பிடிப்பதில்லை?’ என்ற அவளுடைய வாக்குவாதம் செல்லவில்லை. பெண்ணியம், தனி மனித சுதந்திரம் என்றெல்லாம் பேசலாம். ஆனால், சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டாமா? படிக்காத பெண்களும் படித்த பெண்களும் பல ஆண்களுக்கு மனைவி கூறுவதைக் கேட்கவே அலுப்பு ஏற்படும். ‘அறிவார்த்தமாக இவள் என்ன சொல்லிவிடப்போகிறாள்!’ என்ற அலட்சியம். “நீ சும்மா இரு. நீ படிக்காத முட்டாள்!” தாம் பெற்ற ஒரே மகளின் திருமண விஷயத்தில் மனைவியின் குறுக்கீட்டை விரும்பாத பொன்னையா அவள் எது சொன்னாலும் கேட்கத் தயாராக இல்லை. ‘நான் படிக்காதவள்னு தெரிஞ்சுதானே கட்டிக்கிட்டீங்க?’ என்று அவளுக்குக் கேட்கத் தெரியவில்லை. அவள் மனம் அவமானத்தாலும், தன் கையாலாகாத்தனத்தாலும் நொந்தது. அது திசை மாறியது. வேலைக்கு வந்த இடத்தில் அந்த ஆத்திரத்தைக் காட்டினாள். இவளைப் போன்றவர்களுக்கு வீட்டிலும் நிம்மதி கிடையாது; வெளியிலும் மகிழ்ச்சியைத் தாமே குலைத்துக்கொள்கிறார்கள். இளம் வயதில் திருமணமான பெண்ணுக்குச் சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியவே வாய்ப்பு இருந்திருக்காது. கணவனுக்குக் கீழ்ப்படிந்து, புக்ககத்தில் எல்லா இடர்களையும் பொறுத்துப்போவதுதான் நல்ல பெண்ணுக்கு அடையாளம் என்பதுபோல் நடப்பாள். பத்திரிகை ஒன்றில் ஒரு பெண்மணி எழுதியிருந்தாள், “நாங்கள் (எங்கள் காலத்தில்) கணவரிடம் அடிவாங்கினோம், மாமியாரின் ஏச்சுப்பேச்சுகளை சகித்துக்கொண்டோம். பின்பு, நாத்தனார், மைத்துனர் ஆகியோருக்குத் திருமணம் செய்துவைத்தோம். அதனால்தான் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறோம்”. கணவனிடம் அடிவாங்கியது, அதைப் பொறுமையாக ஏற்றது, இவற்றையெல்லாம் பெரிய சாதனைபோல் அவள் எழுதியிருந்தது எனக்கு எரிச்சலை ஊட்டியது. “கணவர் அடிக்கும்போது உங்களுக்குச் சிறிதுகூட மனவருத்தம் ஏற்படவில்லையா?” என்று எழுதிக் கேட்டேன். அவளுக்கு என்மேல்தான் கோபம் வந்தது. வழக்கமாக அனுப்பும் வாழ்த்து அட்டைகள் நின்றுபோயின! நன்கு படித்து, உத்தியோகத்திற்குப் போகும் பெண் திருமணம் செய்துகொண்டால் சுதந்தரத்தை இழந்துவிடுவோமோ என்று அஞ்சுகிறாள். அப்படியே மணவாழ்வில் துணிந்து இறங்கினாலும், மனைவி தன்னை மிஞ்சிவிடுவாளோ என்ற தடுமாற்றம் ஆணுக்கு. அவள் மேலே போகப்போக, தானும் முயன்று, மேலே போக நேரிடுமே! அவள் மட்டும் முன்னேறிவிட்டால், நண்பர்கள் தன்னைக் கேலி செய்வார்களே என்ற பயம் வேறு. ‘அவளைப் பார்! எப்படி பிறர் பாராட்டும்படி இருக்கிறாள்!’ என்று எவளையோ புகழ்ந்து, மனைவியை மறைமுகமாக மட்டும் தட்டுபவர் யோசிப்பதில்லை – தான் பக்கபலமோ, ஊக்கமோ அளிக்காமல் போனதுதான் மனைவி முன்னுக்கு வரத் தடையாக இருந்திருக்கிறது என்ற உண்மையை. என்றும் இளமை இளமை எல்லோரது வாழ்விலும் இயற்கையாகவே இருப்பது. ஆனால், முதுமையிலும் இளமையாக இருக்க சற்று முனைந்து செயல்பட வேண்டும். சிலருக்குத்தான் அது முடிகிறது. இளமை என்பது எழில் தோற்றத்தில் மட்டுமல்ல, சில குணங்களிலும்கூடத்தான். மூன்று வயதான குழந்தை ஓயாமல் கேள்வி கேட்பான். எல்லாவற்றையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவனை அப்படித் தூண்டும். சிலர் பொறுமையாக அவனுக்குப் புரியும் விதத்தில் விளக்குவார்கள். இது இளமையின் ரகசியம். எதையும் அறியவேண்டும் என்ற ஆர்வத்தை எப்போதும் காத்தால், மனம் சோர்வு அடைய வாய்ப்பில்லை. ஆனால், எல்லாத் தாய்மார்களும் தம் குழந்தையினுடைய ஆர்வத்துக்கு தீனி போட இசையமாட்டார்கள். ‘தொணதொணப்பு’ என்று அடக்குவார்கள். சில முறை கேட்டுவிட்டு, பிறகு தானே அடங்கிவிடுவான். அபூர்வமாக சில குடும்பத்தினர் அவன் எல்லாவற்றையும் அறிய விரும்பும் ஆர்வத்தை எழுப்பி இருந்தாலும் (தாமே கேள்வி கேட்டு, பதிலையும் சொல்வது), பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களும் அப்படியே நடப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. பெரும்பாலான ஆசிரியர்கள், ‘நம்மை இவர்கள் கேள்வி கேட்பதா!’ என்று எரிச்சல் அடைந்து, பாடத்தை மட்டும் நடத்துவதற்குத்தான் சம்பளம் வாங்குகிறோம் என்பதுபோல் செயல்படுவார்கள். இதனால் மாணவர்கள் ஆர்வத்தை இழந்து, பள்ளிக்கூடம் என்றால் பிற மாணவர்களுடன் கலந்து பழகுவது, சண்டைபோட்டுப் பொழுதை ’உல்லாசமாக’ப் போக்குவது என்று நினைக்கத் தலைப்படுகிறார்கள். கதை நான் ஆசிரியப் பயிற்சியை மேற்கொண்டிருந்தபோது, என் ஆற்றலை எடைபோட ஒரு பேராசிரியர் வருவதாக இருந்தது. முதல் நாளே, நான் மாணவிகளிடம், “எக்கச்சக்கமாக ஏதாவது கேட்டு, என்னை மாட்டிவிடாதீர்கள், ப்ளீஸ்!” என்று வேண்டுகோள் விடுத்தேன். “When we ask the questions, we don’t know if they are funny,” என்றாள் ஒரு பெண். தாம் கேட்கும் கேள்விகளால் ஆசிரியர்களைத் தடுமாறவைப்பது அவர்கள் நோக்கமல்ல. தமக்குத் தெரியாததைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அவ்வளவுதான். இது புரிந்தால், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே உள்ள உறவு பலப்படும். ‘என்ன வேண்டுமானால் கேட்கலாம்,’ என்று சிறிது நேரத்தை ஒதுக்கினால், அவர்கள் மனப்போக்கு புரியும். களங்கமற்ற அவர்களுடைய உற்சாகம் ஆசிரியர்களையும் தொற்றிவிடும். எத்தனை வயதானாலும், சில ஆசிரியர்கள் இளமைத் தோற்றத்துடன் இருக்கும் ரகசியம் இதுதான். இப்போதெல்லாம், தாய்மார்களுக்குச் சிறு குழந்தைகளுடன் என்ன பேசுவது என்று தெரிவதில்லை. இவர்கள் பேசாவிட்டால், மொழிவளம் எப்படி வரும்? நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதையாவது வேடிக்கை காட்டி விளக்கினாலே போதும். சுற்றுச்சூழலில் ஆர்வம் பிறக்கும். ‘ஒன்று, இரண்டு,’ என்று அவர்கள் விரல்களை மடக்கி எண்ணவும் சொல்லிக்கொடுக்கலாம். ‘நான் பேசினா இதுங்களுக்கு விளங்காதே!’ என்று அலுத்தபடி, தொலைகாட்சியின் முன்னால் உட்கார வைத்துவிடுகிறார்கள், அல்லது தங்கள் கைத்தொலைபேசியை அவர்களிடம் கொடுத்துவிடுகிறார்கள், வங்கி, மருத்துவமனை, பேரங்காடி போன்ற இடங்களில். சிறு குழந்தைகளை அடக்க கைத்தொலைபேசி ஒரு சுலபமான வழி. சிறு வயதில் தம் வயதொத்தவர்களுடன் விளையாடி, தம் விளையாட்டுச் சாமான்களையோ தின்பண்டங்களையோ பகிர்ந்துகொண்டால்தானே பிறருடன் பழகும் ஆற்றல் வரும்? இப்போதோ, மனிதர்களின் இடத்தில் கைத்தொலைபேசி! இம்மாதிரியான குழந்தைகளுக்கு வயதுக்குரிய இளமைகூட வாய்ப்பதில்லை. திரைகளில் காண்பதை வைத்துப் புதிய விஷயங்களைக் கற்கலாம் எனினும், தீமைகளே அதிகம். ஒரு சாதனத்தின் திரையையே வெறித்துக்கொண்டு இருந்தால், மூளையின் நடுப்பகுதி மட்டும்தான் வேலை செய்யும். பக்கவாட்டிலுள்ள இரு புறமும் அதிகமாக உபயோகிக்கப்படாது போக, பல பிரச்னைகள் எழுகின்றன. வலதுகைப் பழக்கம் உள்ளவர்கள் இடதுபுற மூளையை அதிகமாகப் பயன்படுத்துபவர்கள். மொழி, பேசுவது, புரிந்துகொள்வது எல்லாம் இது அளிக்கும் திறன். இன்னொரு புற மூளையானது இசை, மகிழ்ச்சி, படைப்பாற்றல், பிறர் பேசும்போது அவர் அடையும் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது ஆகியவற்றில் ஈடுபடும். இடக்கைப் பழக்கம் உள்ளவர்கள் இயற்கையிலேயே இப்படித்தான். இரண்டு மணி நேரத்திற்குமேல் ஓயாமல் தொலைகாட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கோ, இந்த இரு பகுதிகளுமே முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. அப்புறம், காதால் கேட்பதைப் புரிந்துகொண்டு, பகுத்தறிவது ஏது! எதுவும் படம் அல்லது எழுத்து வடிவில் கண்முன் இருந்தால்தான் புரிகிறது. போதாக்குறைக்கு, தொலைகாட்சியில் தாம் பார்த்ததை எல்லாம் சிறுவர்கள் நம்புவார்கள். வன்முறை இருந்தால், அதையே தாமும் செய்துபார்க்கும் ஆவல் வந்துவிடும். ஐந்து வயதுச் சிறுவன் ஒருவனை தொலைகாட்சியில் தமிழ்ப்படம் பார்க்க அவன் உறவினர் அழைத்தபோது, மறுத்தான். அவன் கூறிய காரணம்: “அப்புறம் நான் தம்பியை உதைப்பேன்!” அவன் செய்வது தவறு என்று புரிய வைத்திருந்தாள் தாய். அன்பு காட்ட வேண்டிய இடத்தில் வன்முறை எதற்கு? “நம்மைச் சூழ்ந்திருக்கும் மனிதர்களின் அன்பு நம்மை இளமையாக வைத்திருக்கிறது,” என்று சொல்கிறார் சோபியா லாரென். அழகிற்கும் இளமைத் தோற்றத்திற்கும் இந்த நடிகை பெயர்போனவர். பல விருதுகளைப் பெற்றவர். இத்தாலி நாட்டைச் சேர்ந்த இவர் ஒரு சிறந்த பாடகியும்கூட. அமைதியான மனம், மகிழ்ச்சி, தன்னம்பிக்கை, தைரியம் ஆகிய அனைத்துமே முதுமையிலும் நம்மை இளமையாகக் காட்டும். இவைகள் நிலைத்திருக்க முக்கியமானவை ஆக்கபூர்வமான செயல்கள். உடற்பயிற்சியின் மகிமை பலருக்கும் தெரிவதில்லை. இங்கு சில பள்ளிக்கூடங்களில், அதற்காக குறிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் கணக்கு, விஞ்ஞானம் போன்ற பாடங்களைக் கற்பிக்கிறார்கள். மாணவிகள் பெரிய பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் எடுத்து, பள்ளிக்கூடத்திற்கு நற்பெயர் ஈட்டித் தருவார்களே! ஆரம்பப் பள்ளியிலேயே இது நடக்கிறது. கண்ணுக்கும், மூளைக்குமே வேலை கொடுத்துக்கொண்டிருந்தால் உற்சாகம் குன்றிவிடுமே! கை, கால், தோள் ஆகிய மற்ற அவயவங்கள் அதிகப் பயிற்சி இல்லாது விரைவில் வலுவிழந்துவிடாதா? படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்ததால் கல்வியில் உயர்ந்து, பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன இறுக்கம், வயிற்றுக்கோளாறு என்று பல்வித உபாதைகளால் பாதிக்கப்படுகிறார்கள். “என் மகன் பதின்ம வயதில் நான் எவ்வளவு அழைத்தாலும் என்னுடன் உலவ வரமாட்டான். ‘எனக்கென்ன வியாதியா!’ என்றுவிடுவான். இப்போது, நாற்பது வயதுக்குமேல் ’ஜிம்’மிற்குப்போகிறான்!” என்று ஒரு முதியவள் என்னிடம் சொல்லிச் சிரித்தாள். இருபது வயதில் நாட்டியம், ‘ஸ்கிப்பிங்’ போன்ற ஏதாவது உடற்பயிற்சியிலோ, அல்லது விளையாட்டிலோ ஈடுபட்ட பெண்கள் திருமணமானபின், ‘எல்லாவற்றிற்கும் வயது இருக்கிறது!’ என்று அலட்சியப்படுத்திவிடுவார்கள். ‘வயதுக்கேற்றபடி இல்லாவிட்டால் பிற பெண்கள் பழிப்பார்களே!’ என்று பயம் வேறு! பிறருக்குப் பயந்து, நீங்கள் கஷ்டப்படப்போகிறீர்களா? ‘முன்போல் முடியவில்லை!’ என்ற சாக்கு எதற்கு? முடிந்தவரை செய்யலாமே! முதுமையுடன் ஆரோக்கியமின்மை தொடர, மனமும் சோர்ந்துவிடும். அறுபதைத் தாண்டிய லூசில் பால் என்ற அமெரிக்க சிரிப்பு நடிகையைக் கேட்டார்கள், “நீங்கள் இவ்வளவு இளமையாக இருப்பதன் ரகசியத்தைப் பிறருக்கும் சொல்லுங்களேன்!” பதில்: “நேர்மையாக நடந்து, மெதுவாகச் சாப்பிடுங்கள். அத்துடன், வயதையும் குறைத்துச் சொல்லவேண்டும்!” வயதைக் குறைத்துச் சொல்வது நேர்மைதானா?! கலிகாலத்தில் நல்லவர்கள் மகிழ்ச்சி அடைவதே தவறு என்பதுபோல் நடந்துகொண்டுவிட்டு, பிறகு தம்மைத் தாமே சமாதானப்படுத்திக்கொள்ளக் கூறுவது: ‘இந்தக் கலிகாலத்தில் நல்லவர்கள்தாம் அதிகமாகக் கஷ்டப்படுவார்களாமே!’ ‘இன்னா செய்தார்க்கும்..’ என்று திருவள்ளுவர் எக்காலத்திலோ சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஆனால், இன்று நமக்குத் தீமை செய்கிறவர்களுக்கு நன்மை செய்தால், நாம் ஏமாளி என்று நினைத்து இன்னும் எல்லை மீறுகிறார்கள். தேவையற்ற துன்பங்களை அனுபவிப்பதற்கு நல்லவர்களாக இருந்து என்ன பயன் என்ற விரக்தி ஏற்பட்டுவிடுகிறது. எதிர்ப்பா, மௌனமா? ‘நல்லவனாக இருக்கத்தான் எனக்குப் பிடிக்கும். ஆனால் அது எப்படி முடியும்?’ என்று கேட்பவர்களுக்கு: பிறர் நமக்குத் தீமை இழைத்தால் அதை பொறுத்துப்போவானேன்! அப்படிப்பட்டவர்களுக்குப் பயந்து நடந்தால், நமது சக்தி அவர்களுக்குப் போய்விடுகிறது. நாம் எதிர்த்தால், அவர்கள்தாம் சக்தியை இழந்துவிடுகிறார்கள். கோபத்தை மௌனத்தால் வெல்லலாம் என்கிறார்கள். சில சமயங்களில் இம்முறை பலனளிக்கலாம். ஆனால், அவசியம் என்னும்போது கோபத்தை வெளிக்காட்டத்தான் வேண்டியிருக்கிறது. அளவுக்கு அதிகமாக பொறுமைகாப்போர் நாளடைவில் பலகீனம் அடைந்துவிடுவதுண்டு. இவர்களில் சிலருக்கு எதிலும் பிடிப்பற்றுப் போய்விடக்கூடும். பிறரோ, எதிர்த்துச் சண்டைபோடத் தைரியம் இல்லாது, பின்புறம் போய் முதுகில் குத்தும் முறையை கையாள ஆரம்பிக்கிறார்கள். கதை புதிய மணப்பெண்ணான பாலம்மா கிராமப்புறத்திலிருந்து வந்தவள். புக்ககத்தினரோ நாகரீகமான நகரைச் சேர்ந்தவர்கள். அவளுக்கு அவர்கள் வாழ்க்கைமுறை புரியவில்லை. எனினும், ‘பெரியவர்கள் சொல்வதையெல்லாம் சற்றும் யோசியாது, அப்படியே கடைப்பிடிக்க வேண்டும்’ என்ற முறையில் வளர்க்கப்பட்டிருந்ததால், எல்லாரையும் அனுசரித்துப்போனாள். திருமணமாகிப்போன அவளுடைய நாத்தனார்கள் பிறந்தகத்திற்கு வந்தபோதெல்லாம் பெற்றோரிடம் துணிச்சலாகப் பேசுவதைப் பார்த்து, தான் எதையோ இழந்துவிட்டதைப்போல ஒரு வெறுமை உண்டாயிற்று. பாலம்மாவுக்கும் சிறிது தைரியம் வந்தது. ஆனாலும், ‘மூத்தவர்களை எதிர்ப்பதா!’ என்று தோன்றிப்போக, அவர்களுக்குப் பின்னால் அவதூறாகப் பேச ஆரம்பித்தாள். குடும்பத்தில் மூத்தவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்தது நற்குணமாக இருக்கலாம். ஆனால், அவளுக்கு எந்த உரிமையையும் கொடுக்காது, ‘அசடு’ என்று அவர்கள் ஓயாது பழித்தபின்னரும் பொறுத்துப்போனது பாலம்மாவின் தவறு. தன்னை மாற்றிக்கொள்ள முடியாது, ‘என் வாழ்க்கையை இப்படியே, பிறர் சொல்வதைக் கேட்டே, கழித்துவிடுகிறேன்!’ என்று கண்டவரிடமெல்லாம் சொல்லிப்பார்த்தாள். அதில் நிறைவில்லை. தன்னைப்போல் இல்லாத, பிற கலாசாரங்களிலிருந்து வந்தவர்களுடன் பாலம்மா தன் அவலத்தைப் பகிர்ந்துகொண்டிருந்தால், ஒருக்கால் தீர்வு கிடைத்திருக்கும். நல்லவனாக நடி ‘என்னை நல்லவர், திறமைசாலி என்று பிறர் பாராட்ட வேண்டும்!’ என்று உறுதி எடுத்துக்கொண்டவர்போல் நடப்பது போலித்தனம். குறுகிய காலத்தில் பதவியையும், அத்துடன் பெரும்பொருளையும் அடைய முனைகிறவர்கள் செய்யும் உத்தி இது. நினைத்ததை அடைந்தவுடன் நல்ல குணமும் முன்பு காட்டிய சுறுசுறுப்பும் எங்கோ காணாமல் போய்விடும்! பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்று நம்பி நடப்பவர்கள் பெரும்புகழை வாங்கலாம். ஆனால், மனோதிடமோ, நற்பண்போ இல்லாவிட்டால் வாழ்வில் எதிர்ப்படும் எல்லா இடர்களையும் கடக்க இயலுமா? பிறர் படும் துயர்களைப்பற்றிப் பேசியே பொழுதைக் கழிப்பவர்கள் தம்மைப்பற்றி சற்று மறக்கலாம். ‘எனக்குப் பிறரது நலனில் மிகுந்த அக்கறை!’ என்று காட்டிக்கொள்ளும் முயற்சி இது. நாம் பேசுவதால் மட்டும் பிறரது கஷ்டங்கள் குறைந்துவிடுமா? அவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்று யோசித்து, காரியத்தில் இறங்கினாலாவது பயனுண்டு. எல்லாருக்கும் நம்மைப் பிடிக்கப்போவதில்லை. நம்மைப் புரிந்துகொள்ளவும் முடியாது. (நமக்கே நம்மைப் புரிகிறதா என்பது வேறு விஷயம்). பார்ப்பவர்கள் அனைவரையும் கவரவேண்டும்; குறைந்த பட்சம் அவர்களது ஆமோதிப்பையாவது பெறவேண்டும் என்றெண்ணியே நடந்தால், சக்தி விரயமாக, சலிப்புதான் மிஞ்சும். நம் எல்லையை நிர்ணயிக்கும் உரிமையை பிறருக்கு எதற்காக வழங்கவேண்டும்? சில சமயம், குடும்பத்தினரே, ‘இவன் வித்தியாசமாக இருக்கிறானே, கஷ்டப்படப்போகிறானே! என்ற கரிசனத்துடன், ஒருவர் தேர்ந்தெடுத்த பாதையைக் குறைகூறினாலும், ’நான் செல்வது நல்வழியில்தான்!’ என்று உறுதியுடன் நடந்தால், அவரையொத்த பிறரது நட்பு கிடைக்கும். அவர்கள் பக்கபலமாக அமைவார்கள். யார் நல்லவர்கள்? பிறரது துன்பத்தை தாமே அனுபவிப்பதுபோல் உணர்ந்து, அதைக் குறைக்கத் தம்மால் இயன்றதைச் செய்பவர்கள். நம்மை நம்பி ஒரு பொறுப்பை ஒப்படைத்திருந்தால், ஏமாற்றாமல் அதைச் செய்பவர்கள். இத்தகையவர்களுக்குப் பிறரது கண்காணிப்பு அவசியமில்லை. கதை ஈவலின் பிலிப்பீன் நாட்டைச் சேர்ந்தவள். கணவரைவிட்டு, பிழைப்பைத் தேடி மலேசியா வந்திருந்தாள். (ஆங்கிலம் தெரிந்திருப்பதால், அந்நாட்டு பணிப்பெண்களுக்குக் கூடுதலான சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது). கணவன், மனைவி, இரண்டு வயதுக் குழந்தை ஆகியோர் மட்டும் கொண்ட சிறிய குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு கிடைத்தது. வீட்டு வேலையைச் சுத்தமாகச் செய்ததால், கவலையின்றி, எல்லா பொறுப்புகளையும் அவளிடமே விட்டது குழந்தை ஏமியின் (Aemi) தாய் செய்த தவறு. ‘என் குழந்தைக்கு என்னைத் தெரியாது! எல்லாவற்றையும் என் ’மெய்ட்’ பார்த்துக்கொள்கிறாள். நான் தனியாக வெளிநாட்டுப் பயணம் செய்யச் சௌகரியமாக இருக்கிறது!’ என்று பெருமை பேசும் ரகம் அவள். மூன்று வயதான ஏமி நோஞ்சானாக இருந்தாள். அதிகமாகப் பேசவில்லை. எதிரிலேயே இருந்த விளையாட்டு மைதானத்தில் தினமுமே அவள் சோர்ந்திருப்பதைப் பார்த்த நான், “ஏமி என்ன சாப்பிட்டாள்?” என்று ஒருநாள் விசாரித்தேன். “ஜூஸ்!” “எப்போது?” என்று துருவினேன். “அவள் தூங்குவதற்குமுன்”. “எப்போது தூங்கினாள்?” என்று கேட்க, ஐந்துமணி நேரத்திற்குமுன் என்று தெரிந்தது. சிறு வயதிலிருந்து என்னைத் தினமும் பார்த்திருந்தும், பதினைந்து வயது ஏமி, “யார் இது?” என்று என்னைக் காட்டி என் பேத்தியிடம் விசாரித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. நான்கு வயதுக்குள் மனித மூளையில் 80% வளர்ந்துவிடுகிறது. அது நல்லபடியாக வளர சத்தான ஆகாரமும், தகுந்த ஓய்வும் வேண்டாமா? ஏமி ஐந்து மணிநேரம் தூங்கினாள் என்றால், அது களைப்பால். ‘பசிக்கிறது’ என்று சொல்லி அழக்கூடத் தெரியாது இருந்ததால், ஈவலின் அடித்து, மிரட்டி இருப்பாள் என்று தோன்றியது. இந்த இரண்டு பெண்களில் யாரை நோவது? யார் நல்லவள், யார் கெட்டவள்? தன் கடமையில் சற்றும் பொறுப்பின்றி, ‘விடுமுறைக்கு என் கணவரைப்போய் பார்த்துவிட்டு வந்தேன். பாஸ் (Boss) எனக்காக விமான டிக்கெட் வாங்கினார்!’ என்று பெருமை பேசிய ஈவலினா, அல்லது குழந்தை எப்படியோ வளர்ந்தால் சரி என்று விட்டேற்றியாக இருந்த அந்தத் தாயா? ஈகோவும் அகங்காரமும் “எனக்கு ஈகோ (ego) இருக்கு!” பெண்பார்க்க வந்தவரிடம் நடிகை ரேவதி கூறியது – அவர் தன்னை மறுத்துவிடுவார் என்ற நம்பிக்கையில். மௌன ராகம் படத்தில். ஆனால், அது தகாத குணமல்ல. பசியோ, தூக்கமோ, ஈரமோ, தனக்குத் தேவையானது கிடைக்கும்வரை குழந்தை ஓயாமல் அழுவது ஈகோவால்தான். பிறந்தவுடனேயே இயற்கையாக அமைந்திருக்கும் தன்மை இது. (அழுகைதான் குழந்தையின் மொழி. கவனித்துக் கேட்டால், ஒவ்வொரு தேவைக்கும் வித்தியாசமான அழுகை ஒலிப்பது புரியும்). சற்றே வளர்ந்தபின், பிறருடன் எப்படிப் பேசிப் பழகவேண்டும் என்று தீர்மானிக்கிறது ஈகோ. வெளியுலகத்தின் தொடர்பை மனதில்கொண்டு, தகுந்த முடிவுகள் எடுக்க வழிசெய்ய இன்றியமையாத குணம் இது. இப்போதெல்லாம் இதை ஏன் தகாத குணம் என்று பழிக்கிறோம்? முறைப்படி நடந்து, தனக்கு வேண்டியது கிட்டாவிட்டால், ‘பிறரது உணர்ச்சிகளுக்கு எதற்காக மதிப்புக் கொடுப்பது?’ என்று தோன்றிப்போக, எப்படியாவது நினைத்ததை அடைய முனையும்போது ஈகோ பிரச்னைக்கு உரியதாக ஆகிவிடுகிறது. அந்த நிலையில் அறிவு மங்கிவிடுகிறது. “அறிவுக்கு நேர் எதிரான விகிதாசாரம் (inversely proportional) கொண்டது ஈகோ!” (ஐன்ஸ்டீன்) இதனால்தான் பிறர் செய்வது பொறுக்காவிட்டால், அது தவறாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றிப்போக, தண்டனை கொடுக்கிறோம். கதை ஸலீனா எங்கள் பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்களின் பொதுவறையில் உட்கார்ந்திருந்தாள். அவளருகே கட்டொழுங்கு ஆசிரியையான இஸ்னாயானி நின்றிருந்தாள். ஸலீனாவின் குற்றம்: காதில் இரு துளைகள்! “நம் மதம் இதை அனுமதிப்பதில்லை!” என்று இஸ்னாயானி கண்டிப்புடன் கூறியது எல்லாருக்கும் கேட்டது. ‘ஏதோ சுவாரசியமான விஷயமாக இருக்கும் போலிருக்கிறதே!’ என்று பலரும் தத்தம் வேலையை விட்டுவிட்டு, அந்த இருவரையும் சூழ்ந்துகொண்டார்கள். பதிலுக்கு, “அம்மா ஒன்றும் தடை சொல்லவில்லையே!” என்று துடுக்காகக் கேட்டாள் அப்பெண். அவ்வளவுதான்! மற்றவர்களும் வாய்க்கு வந்ததைக் கூறி, ஸலீனா செய்தது எவ்வளவு பெரிய பாவ காரியம் என்பதுபோல் பேச, அதற்குமேலும் பொறுக்க முடியாத அப்பெண் கதறி அழ ஆரம்பித்தாள். “ஐயோ பாவம்!” என்றது ஒரு குரல்! தான் அழகாக இருக்கவேண்டும் என்ற ஆசையில் அப்பெண் நடந்திருக்கிறாள். பதின்ம வயதில், எல்லாப் பெண்களுமே தம் தோற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். அதை மறந்து, ‘இவள் நம் பேச்சை மீறுவதா!’ என்று சம்பந்தமே இல்லாத மற்ற ஆசிரியைகளின் ஈகோ தூண்டிவிட, அவளை அழவிட்டார்கள். இந்த ஈகோதான் ‘நான்’ என்ற அகங்காரம். அது பிறரது உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. “செய்வது தவறு என்று தெரிந்தும், அது சரிதான் என்று சாதிக்கிறார்களே, சில ஆசிரியைகள்! ஏன் அப்படி?” பிறிதொரு சந்தர்ப்பத்தில் கைரி என்ற மாணவன் என் மேசையருகே வந்து கேட்டான். (என் வகுப்பில்தான் எது வேண்டுமானாலும் கேட்கும் சுதந்திரம் இருந்ததே!) “இவர்களை power crazy என்போம்,” என்றேன், ஒரு சிறு சிரிப்புடன். புரிந்ததுபோல், கைரி தலையாட்டினான். “இந்தப் பள்ளியில் நிறைய power crazy இருக்கிறார்கள்!” என் சிரிப்பு விரிந்தது. அப்படிப்பட்டவர்களுக்கு எப்போதும் பிறர் தம்மைக் குறை கூறிவிடக்கூடாது என்ற பதைப்பு எழும். அதனால் தாம் முந்திக்கொள்கிறார்கள். நாம் சொல்வதையோ, செய்யும் காரியத்தையோ பிறர் ‘தவறு’ என்று பழித்தால், அதிலுள்ள உண்மையை ஆராய்வது அறிவுடைமை. ‘இன்னும் சிறக்கவேண்டும்,’ என்ற எண்ணம் இல்லாது ஆத்திரம் அடைந்தால், பிரச்னை நம்மிடம்தான். சிலர் ஏன் எப்போதும் நம் குறையையே பெரிதுபடுத்தி, நாம் கேளாமலேயே அறிவுரை கூறுகிறார்கள் என்று அமைதியாக யோசித்தால், அநேகமாக, அது பொறாமையின் விளைவாகத்தான் இருக்கும் என்பது புலனாகும். இவர்கள் பேச்சை அலட்சியம் செய்தால் பிழைக்கலாம். இல்லையேல், நம் நிம்மதிதான் கெடும். இவர்களுக்கு நம் நலன் முக்கியமல்ல. நாம் எதிலும் அவர்களை மிஞ்சிவிடக்கூடாது என்பதில்தான் குறி. ஒருவர் தன்னைப்பற்றிக் கொண்டிருக்கும் உயர்வான எண்ணம் ஆட்டங்காண பிறர் ஏதாவது செய்தாலோ, சொன்னாலோ, ஈகோ தலைதூக்குகிறது. விளைவு: கோபம், வாக்குவாதம், அல்லது பராமுகம். கதை 1 “எனக்கு எவ்வளவு காதலிகள் இருக்கிறார்கள் தெரியுமா?” என்று மணமான ஒருவன் பெருமை பேசுவான், தான் கவர விரும்பும் பெண்களிடம். பணத்தைக் கொடுத்தாவது பெண்களை நாடியவனுக்கு தன்னிடம் உள்ள ஏதோ ஒன்றைப் பார்த்துத்தான் எல்லாப் பெண்களும் மயங்குகிறார்கள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை எழுந்தது. அதனால், அவனை ஒரு பெண் நிராகரித்தபோது, அடக்கமுடியாத ஆத்திரம் எழுந்தது. அவளுக்கு நிறைய தொல்லை கொடுத்தான். அவனுக்கு சரி, தவறு எல்லாம் ஒரு பொருட்டல்ல. தனக்கு வேண்டியதை எப்படியாவது அடையவேண்டும் என்ற உந்துதலே அவனை ஆட்டிவைத்தது. இவனைப் போன்றவர்கள் ஏன் திருமணம் செய்துகொண்டு, அந்த அபாக்கியவதியான மனைவியையும் படுத்தவேண்டும்? ஈகோ அவனுடைய வியாதி. ஆனால், பாதிக்கப்பட்டது அவன் மனைவி. கதை 2 புதிய தம்பதிகள் அவர்கள். எல்லாருக்கும் நடப்பதுபோல், அவர்களுக்கிடையேயும் பூசல் வந்தது. அவள் குறை கூற, அவன் கத்த, நிலைமை மோசமாகியது. ஒரு வாரம் இருவருக்கும் மௌன விரதம்! அடுத்த முறை, அவனிடம் ஏதோ குறைகண்டு, அவள் வேறொரு சண்டையை ஆரம்பிக்க, அவன் யோசிக்க ஆரம்பித்தான். இனிமையாகக் கழியவேண்டிய பொழுதுகளை இறுக்கமான மௌனத்தில் வீணாக்க வேண்டுமா? தான் தவறு செய்யவில்லை, தவறு அவளுடையதுதான் என்று மீண்டும் ஆரம்பித்தால், அது தன்னையே உயர்த்திக்கொள்வதுபோல் ஆகிவிடாதா! தான் உயர்வு என்று எதற்காகக் காட்டிக்கொள்வது! “ஸாரி,” என்றுவிட்டு, அப்பால் நகர்ந்தான். இவன் தோற்கவில்லை. ஈகோவிற்கு அதிக மதிப்பு கொடுத்து நடந்தால் பிறர் நம்மிடமிருந்து விலகுவர் என்று புரிந்த அறிவாளி. இவனைப் போன்றவர்களுக்கு உறவுகள் முக்கியம். ஈகோ பெரிதில்லை. புகழை எதிர்பார்ப்பதும் ஈகோவால்தான். “நான் உனக்காக எவ்வளவு செய்கிறேன்! உனக்கு நன்றியே இல்லை!” என்று தன் கணவர் பழித்ததாக ஒரு மாது என்னிடம் வருத்தமாகக் கூறினாள். அவளுக்கு அறுபது வயது. அவள் கடமையை அவள் சரிவரச் செய்துகொண்டிருந்தாள். அவரை எதிர்த்து வாயாடவில்லை. மிகவும் அடங்கிப்போனாள், ‘மரியாதை’ என்று. ‘நன்றி’ என்றால், அவர் என்ன எதிர்பார்த்தார்? ‘உங்களைப்போல் உண்டா!’ என்ற புகழ்ச்சியை எதிர்பார்த்துச் செய்தால் இரு தரப்பினருக்கும் மகிழ்ச்சி கிட்டாது. குழுவில் ஈகோ ஒரு குழுவில் இணைந்து செயல்படுகையில், யாராவது ஒருவரின் ஈகோ தலைதூக்கினாலும், எடுத்த காரியம் வெற்றி அடையாது. தன்னையொத்த பிறரிடம், ‘இப்படிச் செய், அப்படிச் செய்’ என்று ஓயாமல் விரட்டினால், பாதிக்கப்பட்டவர்கள் மனம் தளர்ந்துவிடுவார்கள். அடுத்த முறை, அவருடன் சேரவே அச்சம் பிறந்துவிடும். ஈகோவால் வருத்தம் காதலர்களோ, தம்பதிகளோ பிரிவது இந்த ஈகோ தொல்லையால்தான். ‘நான் செய்வதுதான் சரி. நீதான் விட்டுக்கொடேன்!’ என்பதுபோல் இருவரும் நடந்தால், எந்த பிரச்னைக்கும் முடிவே கிடையாது. பிரிந்தபின்னர் பலரும் துயரத்திலிருந்து மீள முடியாது, அதிலேயே நீண்ட காலம் ஆழ்ந்துகிடக்கிறார்களே, ஏன்? மனதுக்குப் பிடித்தவரைப் பிரிந்துவிட்டோமே என்பதாலா? அல்லது, ஈகோ தோல்வியுற்றதாலா? குடும்பம் ஒரு தாம்புக்கயிறு “இன்னுமா இந்தியாவுக்குப் போறீங்க? நீங்க இப்போ மலேசியன். அதை மறந்துடதீங்க!” மருத்துவ மனையிலிருந்த அந்த தாதி நான் ஏதோ பெரிய குற்றம் புரிந்துவிட்டதைப்போல் பேசினாள். ‘பிறந்தகம், புக்ககம் இரண்டில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடு!’ என்றால் எப்படி? கல்யாணமானதும், பெற்றோருடன் மற்ற உறவினர்களையும் ஒதுக்கிவிட வேண்டுமா? அப்படியும் சிலர் இருக்கத்தானே செய்கிறார்கள்! கதை பணக்காரக் குடும்பத்தின் ஒரே பெண் மாலினி. திருமணத்தின்போதே நிறைய நகை போட்டிருந்தார்கள். தந்தை இறந்ததும், தாய் வீட்டுக்கு வந்து, இருக்கிற மிச்சத்தையும் சுருட்டிப்போனாள். தாயிடமிருந்து சுரண்ட இனி ஒன்றுமில்லை என்று புரிந்ததும், அங்கு போவதை நிறுத்திவிட்டாள் மாலினி. இத்தனைக்கும், சென்னையில் அவர்கள் இருவரின் வீடுகளுக்கும் இடைய இருந்த தொலைவு ஐந்தே கிலோமீட்டர்கள்தாம்! யாரால் நன்மைகள் கிட்டுகிறதோ, அவர்களிடம் மட்டும் விசுவாசம் காட்டும் வர்க்கத்தைச் சேர்ந்தவள் அவள். சற்றே உயர்ந்த நிலையில் இருக்கும் சிலருக்கு இப்படிப்பட்டவர்களின் மனப்பான்மை புரிவதேயில்லை. தம்மைப்பற்றி மிக உயர்வாக எண்ணி, பிறகு ஏமாற்றம் அடைகிறார்கள். கதை அரசியல்வாதி ஒருவர் நடத்திய பத்திரிகையின் ஆசிரியரான சாரங்கன் எங்கு சென்றாலும், அவருடைய நட்பை விரும்புவதுபோல் பலரும் நடந்துகொண்டனர். அவருக்குத் தன் மகிமையில் பெருமை ஏற்பட்டது. ‘இவரைப் பிடித்தால், பத்திரிகையில் நம் படைப்புகளும் வருமே!’ என்று இரு பெண்மணிகள் அவர் வீட்டுக்கே சென்று கூடை கூடையாக பழங்கள் கொண்டு கொடுத்ததை என்னிடம் பகிர்ந்துகொண்டு, “ரொம்ப நல்லவங்க!” என்று சிலாகித்தார். அவர்கள் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. விரைவிலேயே, அவர்களின் படைப்புகள் அப்பத்திரிகையில் வெளியாக ஆரம்பித்தன. ஏதோ காரணத்தால் சாரங்கனுக்கு வேலை போயிற்று. ஓர் இலக்கிய நிகழ்ச்சியில் வழக்கம்போல் யாருமே சாரங்கனைக் கண்டுகொள்ளவில்லை. தாமே வலிய, “ஹலோ, ஹலோ!” என்றபடி அவர் அங்குமிங்கும் நடக்க, ‘கூடை கூடையாக’ பழங்கள் கொடுத்தவள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ‘இனி இவரால் என்ன உபயோகம்!’ என்ற நினைப்பு எழ, அலட்சியப்படுத்தியிருப்பாள். பிழைக்கத் தெரிந்தவள்! பள்ளிக்கூடங்களில் விசுவாசம் மாணவர்கள் பிரச்னைக்கு உரியவர்களாக இருந்தால், ஆசிரியர்கள் இணைவார்கள் என்பது நியதி. ஆசிரியர்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டாலோ, தலைமை ஆசிரியர் அவர்களை படும்பாடு படுத்துவது எளிது. வெகு சில பள்ளிக்கூடங்களில்தான் மாணவர்களும் ஒழுங்காக, அதிக பிரச்னைகள் கொடுக்காது இருப்பார்கள், ஆசிரியர்களும் ஒற்றுமையாக இருப்பார்கள். இந்நிலை ஏற்பட, நல்ல தலைமைத்துவம் அமையவேண்டும். பள்ளியோ, குடும்பமோ, நாடோ எதுவாகிலும், அது சிறக்க ஒரு தலைவரானவர் தன்னைச் சார்ந்தவர்களைப் பாரபட்சமின்றி நடத்துபவராக இருக்கவேண்டும். இத்தகையவர் தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது, தன்னைச் சார்ந்தவர்களின் நலனையே பெரிதாகக் கருதிச் செயல்படுபவார். ஒன்றாக இணைய வேண்டியவர்கள் தமக்குத் தோன்றியதைச் செய்துகொண்டிருந்தால், ஒற்றுமையோ, நன்மையோ எப்படிக் கிடைக்கும்? தேவையானபோது, தனித்து இயங்குவதற்கான துணிச்சலும் அவர்களுக்கு அவசியமாகிறது. ஓயாது சண்டைபோடும் பெற்றோர் என்னிடம் படிக்க வந்தார்கள் பதின்ம வயதுப் பையன் ஒருவனும், அவனுடைய தங்கையும். பையன் பரம சாது. மரியாதையாக நடப்பான். தங்கை சோபனாவோ நேர் எதிரிடை. ஒரு முறை, பாடத்தில் நான் ஏதோ கேள்வி கேட்க, சற்றும் யோசியாது, ஒரு பதிலை அளித்தாள் சோபனா. “தவறு. நன்றாக யோசித்துச்சொல்,” என்றேன், நல்லவிதமாக. அவளிடமிருந்து பதிலே இல்லை. விறைப்பாக உட்கார்ந்திருந்தாள். பல நிமிடங்கள் பொறுத்துவிட்டு, “நான் காத்துக்கொண்டிருக்கிறேன். எங்கே உன் பதில்?” என, “I gave you an answer!” என்று கத்தினாளே பார்க்கவேண்டும்! ‘மூத்தவர்களிடம் மரியாதையாக இருக்கவேண்டும்!’ என்று போதிக்கும் எனக்குப் பெரும் அதிர்ச்சி. வீட்டுக்குப்போய், ஓர் அறையை உள்ளே தாளிட்டுக்கொண்ட சோபனா, ’அவள் என்னைக் கண்டபடி திட்டுகிறாள். இனி நான் அங்கு போகமாட்டேன். நீங்கள் சரியென்று சொல்கிறவரை வெளியே வரமாட்டேன்," என்றாளாம். அவளுடைய தந்தை என்னிடம் வந்து, “நீங்கள் அவளை pig-headed என்று திட்டியது ரொம்ப சரி,” என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்னவென்றுகூட அப்போது எனக்குத் தெரியாது. தானே அளந்திருக்கிறாள். எப்படியோ, ‘பிடிவாதம்’ என்பதை இப்படியும் வர்ணிக்கலாம் என்று அறிந்தேன்! என்னிடம் வருவதற்குமுன் ஒரு பாடத்தில்கூட தேர்ச்சி பெற்றிருக்காத பையன் நான் போதித்த கணக்கு, விஞ்ஞானம் இரண்டிலும் சிறப்பான தேர்ச்சி பெற்றான். ஆயினும், அவன் ‘மிக மிக’ சிறப்பான மதிப்பெண்கள் வாங்கவில்லையே என்று தந்தைக்குக் குறை. பெற்றோர் எந்த விஷயத்திலும் ஒத்துப்போகாது, ஓயாது விவாதித்துக்கொண்டே இருந்தால், யார் பக்கம் சாய்வது என்ற குழப்பம் குழந்தைகளுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அது அவர்கள் வளர்ச்சியைப் பாதித்து, எடுத்த காரியத்திலெல்லாம் பிடிப்பே இல்லாது செய்துவிடும். மகன் பிரகாசிக்காதது ஏனென்று அவருக்குப் புரியவில்லை. (நிம்மதியே இல்லாத சூழ்நிலையில் வளர்ந்த அந்த இரு குழந்தைகளின் விவாகங்களும் சொற்ப காலத்திலேயே முறிந்துபோயிற்று). பாரபட்சமான குடும்பம் ஒரு குடும்பத்தில் எல்லாரும் ஒரேமாதிரி இருக்க மாட்டார்கள். மற்றவரது கண்ணோட்டத்தைப் புரிந்து, அதைப் பிறருக்கும் விளக்குவது குடும்பத்தலைவியின் பொறுப்பு. அப்போதுதான் பரஸ்பர மரியாதை உண்டாகும். ஒரு மகனை மிக அருமையாக நடத்தி, இன்னொருவனைக் காரணமின்றி தண்டிப்பதையும் காண்கிறோம். சகோதரர்களுக்குள் எப்படி ஒற்றுமை வரும்? வளர்ந்தபின், இருவருமே பெற்றோரிடம்தான் குறை காண்பார்கள். செல்ல மகனாக வளர்ந்தவன் உலகில் எல்லாருமே தன்னைக் கொண்டாடுவார்கள் என்றெண்ணி ஏமாறுகிறான். உலகின் போக்கு புரியாதவிதமாகத் தன்னை வளர்த்தவர்களின்மீது வெறுப்புகூட வரும். மற்றவன் பயந்தவனாக வளரலாம். இல்லையேல், அடக்கி வைத்திருந்த திறமையையும் ஆத்திரத்தையும் படிப்பிலும் உத்தியோகத்திலும் காட்டி உயரக்கூடும். இந்த நிலையில் அதிகமாகப் பாதிக்கப்படுபவர் பெற்றோர்தாம். எங்கு தவறிழைத்தோம் என்று புரியாது குழம்புவர். குடும்பம் ஒரு தாம்புக்கயிற்றுக்கு ஒப்பானது. பலகீனமான ஒருவரை (அவருடைய சொந்த நலனைக் காரணம் காட்டி) குடும்பத்தினரிடமிருந்து பிரிப்பது தாம்புக்கயிற்றின் பிரிகளைச் சிறிது சிறிதாகப் பிரித்து, அதை அறுக்க முயற்சிப்பதுபோல்தான். வெற்றி கிட்டும். ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருந்தால் குடும்பத்திலுள்ள எல்லாருமே பலமாக உணர்வார்கள். அவர்களை எளிதில் பிரிப்பது இயலாத காரியம். அதனால், அக்குடும்பத்தின் அங்கத்தினர்கள் அனைவருமே தம் திறமைகளை முழுமையாக வெளிக்காட்டவும் முடியும். எத்தனை, எத்தனை எதிர்பார்ப்புகள்! “பரீட்சையில் நான் எதிர்பார்த்த கேள்விகள் எதுவும் வரவில்லை!” பெண் பார்த்துவிட்டுப் போனவர்: “உங்கள் பெண் நான் எதிர்பார்த்த அளவுக்கு அழகாயில்லை. ஸாரி!” “எனக்கு ஒரு மனைவி வந்தால், என் எல்லாத் தேவைகளையும் கவனித்துக்கொள்வாள் என்று நினைத்திருந்தேன்!” மேற்கண்ட மாணவன், இளைஞன், கணவர் எல்லாருக்கும் ஏன் இப்படியொரு ஏமாற்றம்? அவர்கள் எதிர்பார்த்ததுபோல் எதுவும் அமையவில்லையாம். பிறரிடம் நாம் எதிர்பார்ப்பது அனேகமாக ஏமாற்றத்தில்தான் கொண்டுவிடும். காதலரோ, காதலியோ தன்னைப்பற்றியே நினைத்து உருகவேண்டும், அடிக்கடி ‘ஐ லவ் யு’ சொல்லவேண்டும், பரிசுப்பொருட்களால் தன்னைத் திணற அடிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் பூசல்களைத்தான் விளைவிக்கின்றன. ஒருவருக்கு ஏமாற்றம், இன்னொருவருக்கு எரிச்சல். உறவுகளில் விரிசல் ஏற்பட இது போதுமே! புதுமணத் தம்பதிகளின் பிரச்னை கதை பெற்றோருக்கு ஒத்துப்போகாததால், இந்திரனுடைய வீட்டில் எப்போதும் மௌனம்தான் என்ற நிலை. தன் மணவாழ்க்கையும் அப்படி ஆகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். உடன் படித்த பத்மினியின் கலகலப்பும் சிரிப்பும் அவன் இதுவரை அனுபவிக்காதது. சாதுவாக இருந்தவன், பிடிவாதமாக பத்மினியை மணந்தான். ‘தான் இவனுக்கு எவ்வளவு தேவைப்பட்டால் இப்படிப் பெற்றோரையே எதிர்க்கத் துணிவான்!’ என்றெண்ணினாள் பத்மினி. அவள் கை உயர்ந்தது. பல பேர் முன்னிலையில் அவனை அவமானப்படுத்த ஆரம்பித்தாள். பத்மினி எதிர்பார்த்தபடி, இந்திரனை மணந்ததால் அவளுடைய செல்வ நிலை உயர்ந்தது. பெரிய வீடு, அவளுடைய சொந்த உபயோகத்திற்கென கார் எல்லாவற்றையும் கொடுத்திருந்த இந்திரன், அவளது ஏச்சுப்பேச்சை சகிக்கமுடியாது, வீட்டில் நேரத்தைக் கழிப்பதையே குறைத்துக்கொண்டான். பிறரால் நமக்கு மகிழ்ச்சி கிட்டும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில்தான் கொண்டுவிடும். பிறர் மெச்ச எல்லாம் இருந்தாலும், ‘கணவன் தன்னை நாடவில்லையே!’ என்று எப்போதும் தனிமையில் நொந்த பத்மினிக்கு வெறுமைதான் ஏற்பட்டது. அவளுடைய பழைய கலகலப்பு மறைந்துபோய், பேசுவதையே குறைத்துக்கொண்டாள். நாளடைவில், மன இறுக்கம் உண்டாயிற்று. ‘உனக்கு என்ன ஆயிற்று?’ என்று யாராவது கரிசனத்துடன் கேட்டால், அவளால் அழத்தான் முடிந்தது. முன்பு படித்த துணுக்கு நினைவில் எழுகிறது. “என் இல்லற வாழ்க்கை சகிக்கவில்லை”. “அடடா! உன் காதலி என்ன ஆனாள்?” “அதை ஏன் கேட்கிறாய்! அவள்தான் இப்போது என் மனைவி!” இந்திரன்-பத்மினி இருவருடையேயும் இருந்த உறவும் இப்படித்தான் பலவீனமாகப் போயிற்று. காதல் போன இடம் தெரியவில்லை. மனைவியைப்பற்றிய எதிர்பார்ப்பு ’உங்கள் வருங்கால மனைவி எப்படி இருக்கவேண்டும்? என்று சிலரைக் கேட்டபோது, ஒருவர் மட்டும், “எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை,” என்றார். எப்படியும், அம்மா காட்டுகிற பெண்தான் தனக்கு மனைவியாக அமைவாள் என்ற விட்டேற்றியான போக்கு அவரிடம் காணப்பட்டது. தாய் சொல்லைத் தட்டி அறியாத மகன்! ஒரு சிலர், ‘நான் மணக்கப்போகிறவள் என்னைவிட அதிகம் படித்தவளாக இருக்கவேண்டும். அவளால் என் நிலை உயரவேண்டும்!’ என்று யோசித்து, அதன்படி நடப்பார்கள். அவளுடைய எதிர்பார்ப்போ வேறுமாதிரியாக இருக்கும். கதை சதீஷ் ஆசைப்பட்டபடியே அவனைவிடப் பெரிய படிப்புப் படித்த லோசனி அவனுக்கு மனைவியாக வாய்த்தாள். சில மாதங்கள் உத்தியோகத்திற்குப் போனதும், கருவுற்றதில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டது. வேலையை விட்டாள். அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள். “இப்போதாவது வேலைக்குப் போயேன்!” என்ற கணவன் கெஞ்ச, “குழந்தைகளை நானே பார்த்துக்கொண்டால்தான் புத்திசாலிகளாக வளர்வார்கள்,” என்று மறுத்துவிட்டாள். அவன் கெஞ்சி, கொஞ்சி, மிரட்டிப்பார்த்தும் அவள் அசைந்து கொடுக்கவில்லை. “உன் மனைவி உண்மையாகவே படித்தவள்தானா?” என்று சில நண்பர்கள் தூபம் போட, அவன் ஆத்திரம் அதிகரித்தது. கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று நம்பி மணந்தவனுக்கு பெரும் ஏமாற்றம். அவனுடைய சம்பளத்தில் இப்போது நான்குபேர்! சில மாதங்களுக்குப்பின்னர் லோசனி மீண்டும் வேலைக்குப் போனாள். ஆனால், நண்பர்களிடம் படாடோபமாகக் காட்டிக்கொள்ளலாம் என்று நினைத்தவனுக்கு ஏமாற்றம். ‘என் பணம்,’ என்று அதைச் சேமித்தாள். தன் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டது சதீஷ் செய்த பிழை. தான் அப்படி ஒரு பெண்ணிற்கு ஏற்றவன்தானா என்று முதலில் யோசித்திருக்கவேண்டும். எதிர்பார்ப்பே கூடாதா? நாம் அடைய வேண்டியதில் மட்டும்தான் எதிர்பார்ப்புகள் அவசியம். நமது முயற்சியைக்கொண்டு வெற்றியடைவது நம் கையில்தான் இருக்கிறது. ‘என்னால் இதைவிட அதிகமாகச் சாதிக்கமுடியும்!’ என்று உறுதிபூண்டால் போதும். பிறரால்தான் அது முடியும் என்ற எதிர்பார்ப்போ ஏமாற்றத்தில்தான் கொண்டுவிடும். இப்படி இருந்தால்… சிலருக்கு ஏன் எதிலுமே பூரண திருப்தி கிடைப்பதில்லை? ‘இப்படி இருந்தால்..!’ என்று எல்லா நிலையிலும் அதிருப்தி அடைகிறவர்கள் இவர்கள். வெளியூர்களுக்குப் போகும்போது, ‘ரயிலில் நேற்றோ, முந்தாநாளோ பண்ணின இட்லியைக் கொடுத்துவிட்டான்! வயிற்றைக் கலக்குகிறது!’ என்று புகார் கூறுபவர் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நாம் விரைவாகப் போகும் வழி இது என்று எண்ணிப்பார்க்கத் தவறிவிடுகிறார். பெரிய எதிர்பார்ப்புடன், புதிய ஊரைச் சுற்றிப்பார்க்கலாம் என்று உறவினர்கள் வீட்டுக்குப் போனால், சிலர், ‘ஏன் வந்தீர்கள்?’ என்பதுபோல் அவர்கள் நடந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு என்ன அசந்தர்ப்பமோ! ‘சுற்றுலா போக மிகச் சிறந்த இடம்!’ என்று யாராவது வந்துகொண்டே இருந்தால், அவர்கள்தாம் என்ன செய்வார்கள், பாவம்! நாம் பரிசுப்பொருட்கள் வாங்கிப்போனால், அது அன்பால் மட்டுமல்ல. பிரதியுபகாரத்தை எதிர்பார்த்துச் செய்யும் வியாபாரம். ஒரு சிறு குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து, ‘முத்தம் கொடு!’ என்று கேட்பதுபோல்தான். ‘இப்படித்தான் நடக்கவேண்டும்!’ என்ற வரையறை வகுத்து, அதன்மூலம் பிறரைக் கட்டுப்படுத்தும் முயற்சி அது. நாம் எதிர்பார்த்ததுபோல் நடப்பார், நடக்கவேண்டும், என்று நம்பி பிறருக்கு உபகாரம் செய்வது வீண். நம் விருப்பப்படியே எல்லாரும் நடக்க வேண்டுமென்றால் ஆகிற காரியமா! வெற்றி நிலைக்காது ஏமாற்றம் ஒரு காரியத்தில் சில முறை வெற்றி கிட்டலாம். ஆனால், அந்த வெற்றி தொடரும் என்று எதிர்பார்க்க முடியுமா? முன்னணி நடிகர்கள் சில தோல்வியடைந்த படங்களையும் கொடுத்திருக்கிறார்கள். போட்டிகளில் சேர்பவர்களுக்கு, Hope for the best. Prepare for the worst என்ற மனப்பான்மை அவசியம். போட்டியில் வெற்றி அடைந்தபோது, பிறரை மதிக்காது அலட்டுபவர்கள் தோல்வி கிட்டும்போது துவண்டுவிடுவது அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பால்தான். எதிர்பார்க்கலாம், ஆனால் அது நிறைவேறாதபோது தாங்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால், ஏமாற்றம் எழாது. கதை பாலித்தீவில் உள்ள பலருக்கு ஒரே ஆசை: வாழ்வில் ஒருமுறையாவது டெல்லியும், ரிஷிகேசமும் போய் பார்த்துவிட வேண்டும். அப்படிப் போய்வந்த வாயான் (Wayan) என்பவர், “இந்தியா நான் எதிர்பார்த்தபடி இல்லை. ஆனால், மக்கள் தொகை பெருகிவிட்ட நிலையில் அனைவரும் நிதானமாக, அமைதியைக் கைவிடாது நடக்கவேண்டும் என்றால் சாத்தியமா?” என்கிறார். நம் எதிர்பார்ப்பு பொய்யாகும்போது, வாயானைப்போல், ‘ஏன் இப்படி?’ என்று கேட்டுக்கொண்டால் ஆத்திரம் எழாது. தெளிவு பிறக்க, பிறரை அலட்சியமாகக் கருதவும் மாட்டோம். உங்கள் சுய அடையாளத்தை இழக்கலாமா? ‘நீங்கள் அப்படியே இருக்கிறீர்களே!’ பல வருடங்களுக்குப்பின் ஒருவரைப் பார்க்கும்போது புகழ்ச்சியாகக் கூறுகிறோம். அதனால், ‘நாங்கள் மாறவே மாட்டோம்!’ ‘எப்படி மாறவேண்டும் என்கிறீர்கள்?’ என்றெல்லாம் பெருமையாகச் சொல்லிக்கொள்ளத் தோன்றுகிறது. மாற்றமில்லாத வாழ்க்கையால் நாம் பாதுகாப்பாக உணரலாம். நாளடைவில், அது சலிப்பைத்தான் உண்டுபண்ணுகிறது. புதிய அனுபவங்கள் சிந்தனையை வளர்த்து, வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வழிவகுக்கும். அதனால்தான் விடுமுறைக்காக எங்காவது போய்விட்டு வந்தால், எவ்வளவு களைப்பாக இருந்தாலும், அப்போது எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும், மனம் என்னவோ உற்சாகமாக ஆகிவிடுகிறது. ‘மாற்றம்’ என்றால் அஞ்சத் தேவையில்லை. சரியான வழியில் முன்னேறுவது ஆக்ககரமான மாற்றம். அந்தப் புதிய பாதை சில சமயம் சறுக்கலாம். எங்கே தவறு நிகழ்ந்தது என்று ஆராய்ந்தால், அடுத்தமுறை அதைத் தவிர்க்கலாம். செய்த தவற்றிலிருந்து கற்பவர்கள்தாம் முன்னேறுகிறார்கள். ‘ஒவ்வொரு முறை விழுந்து எழும்போதும், முன்பு இருந்ததைவிட அதிக உயரத்தை எட்ட முடிகிறது!’ என்று வெற்றியாளர்கள் வியந்து கூறுகிறார்கள். செய்வதற்குமுன் எந்தக் காரியமுமே கடினமாகத்தான் தோன்றும். அதைச் செவ்வனே முடித்துவிட்டால் கிடைக்கும் திருப்திக்கு ஈடே இல்லை. கீழே விழுந்திருந்தபோது நம்மைக் கேலி செய்தவர்கள் முயற்சி செய்யவே அஞ்சுகிறவர்கள். இது புரிந்தால், அவர்கள் நம்மைப் பந்தாட விடமாட்டோம். ‘நானாவது முயற்சித்தேன். உனக்கு அதைச் செய்யக்கூட தைரியம் இல்லையே!’ இப்படி உரக்கச் சொன்னால், சண்டை வரும். மனதுக்குள் திட்டலாம். மகிழ்ச்சியாக இருக்க அவசியமானது இலக்கு. சகமனிதர்களாலோ, பொருட்களாலோ பெறும் நிறைவு எத்தனை காலம் நீடிக்கும்? வாழ்க்கையில் எல்லாமே நாம் எதிர்பார்த்தபடி, நேராக அமைந்துவிட்டால் நிம்மதி கிடைக்கலாம். ஆனால், சுவை இருக்காது. கதை என் சக ஆசிரியை பார்பரா (Barbara) அரசாங்கம் அளித்த உபகாரச்சம்பளத்தில் உயர்கல்வி பயின்றாள். தான் ஆசிரியையாக வேலை பார்க்கப்போகிறோம் என்று முதலிலேயே தெரிந்துவிட்டது. அவளுடைய அண்ணன்மார்களின் நண்பனான விக்டர்தான் அவளுடைய கணவன் என்று இரு குடும்பத்தினரும் அவளுடைய சிறு வயதிலேயே முடிவு செய்துவிட்டனர். ஆக, பார்பராவுக்கு வாழ்க்கையில் எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. நடப்பதே பெரும் சுமை என்பதுபோல் நடப்பாள். ‘நான் ஒரு பயந்தாங்கொள்ளி!’ என்று அடிக்கடி சொல்லிக்கொள்வாள். உத்தியோகமும், கணவனும் எப்படி இருக்கவேண்டும் என்று தீர்மானிக்க இயலாவிட்டால் என்ன? வேறு திறமைகள் இருக்காதா! அவைகளை வளர்த்துக்கொண்டிருக்கலாமே! பார்பரா படித்தவள். உத்தியோகமும் இருந்தது. ஆனால், துணிச்சல் இருக்கவில்லை. அதையே தன் குறையென்று எண்ணியதால், தைரியமாகச் செயல்படுகிறவர்களின்மேல் அவளுக்கு ஆத்திரமும் பொறாமையும் எழுந்தன. தன்னைப்போல் இல்லாத பிறரைப் பார்த்துப் பொறாமைப்பட்டால், திருப்தி எழுந்துவிடுமா! நம்மைப் பார்த்துப் ஒருவர் பொறாமைப்பட்டால் முதலில் வருத்தப்படுகிறோம். எரிச்சலும் எழுகிறது. மாறாக, பெருமைப்படவேண்டிய சமாசாரம் இது. நாம் அவரைவிடச் சிறந்தவர் என்று கருதுவதால்தானே அந்த உணர்ச்சிக்கு ஆளாகிறார்! இயற்கையிலேயே எழும் இந்த உணர்வைக் கட்டுப்படுத்திக்கொள்ளத் தெரியாது, அதனால் ஆட்டுவிக்கப்படுவது ஒருவரை கீழேதான் இழுக்கும். தம் பொறாமைக்கு இலக்கானவர்கள்போல் தம்மையும் மாற்றிக்கொள்ளலாமே! என்னென்னவோ செய்யவேண்டும் என்ற ஆசை எவருக்கும் இருக்கும். ஆனால், ‘நம்மால் முடியுமோ, என்னவோ!’ என்ற தயக்கம் ஒரு காரியத்தை ஆரம்பிக்கவே தடங்கலாகிவிடுகிறது. பயத்தை வெற்றிகண்டால் சாதிக்கலாம். நாம் பிறரைவிட எல்லாவற்றிலும் சிறந்தோங்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால் அது நடக்காத காரியம். அப்போது எழும் பொறாமையைத் தவிர்க்க இயலாது. நம்மால் இயன்றவரை முயற்சிக்கிறோம் என்று திருப்தி போதுமே! பாலர் பள்ளியில் படிக்கும் குழந்தையின் கையெழுத்து அழகாக இல்லை என்று பழிப்பது இதுபோல்தான். ‘ஏதோ, இந்தவரை எழுதுகிறானே!’ என்று மகிழ்ந்து பாராட்டுவது நன்மை தரும். அவன் அப்படியேவா இருக்கப்போகிறான்? வயது கூடினால், மாறமாட்டானா? கையெழுத்து மோசமாக இருந்தால்தான் என்ன? இப்போதுதான் கணினி வந்துவிட்டதே! கல்வி வேறு, வாழ்க்கை வேறு. “பள்ளியில் படிக்கும்போது நான் மிகச் சிறந்த மதிப்பெண்கள் வாங்கினேன். ஏனோ வாழ்க்கையில் பிரகாசிக்க முடியவில்லை!” என்று புலம்புகிறவர்களைப் பார்த்திருப்பீர்கள். கதை படிப்பிலும், பேச்சுப்போட்டிகளிலும் பரிசு பெற்றதில் ஆசிரியர்களுக்குச் செல்லப்பிள்ளை ஆனவன் குமார். ‘பள்ளிக்கும் வீட்டுக்கும் பெருமை தேடித் தருகிறான்!’ என்று அந்த வயதில் எல்லாருமே கொண்டாடினார்கள். தனக்கு நிகர் யாருமில்லை என்ற மதர்ப்புடன் வளர்ந்தான் குமார். வெளியுலகத்திலும் எல்லாரும் அப்படியே தன்னை ஓர் அபூர்வப் பிறவியாகக் கருதமாட்டார்கள் என்று அந்த வயதில் புரியவில்லை. உண்மை புலப்பட்டபோது அச்சம்தான் விளைந்தது. ‘யாருக்குமே தான் ஒரு பொருட்டாக இல்லையே!’ என்ற ஏக்கம் பிறந்தது. தம் சொந்த வாழ்க்கையைப் பெரிதாக எண்ணாது, தகுதியில்லாத பிறருக்காக அதைச் செலவிடுவதில் திருப்தி காண முயன்றான். நண்பர்களின் குடும்பத்திற்காக தம் நேரத்தைச் செலவிட்டுவிட்டு, ‘வெளியில் எனக்கு எவ்வளவு நல்ல பெயர் தெரியுமா? வீட்டில்தான் என்னை யாரும் புரிந்துகொள்வதில்லை!’ என்று குறைப்படும் ரகம் இம்மாதிரியானவர்கள். இவர்களது உபயோகம் குறைந்ததும், அந்த நண்பர்கள் காணாமல் போய்விடுவார்கள். ஆனால், சொந்தக் குடும்பம் இவர்களைக் கைவிடாது. அப்போது, ‘உண்மையான மகிழ்ச்சி எங்கே என்று முதலிலேயே புரிந்துகொள்ளாது போனேனே!’ என்று மனம் நோகும். எதுவுமே இருக்கும்போது அதன் அருமை தெரிவதில்லை. தொலைந்தபின்தான் புரிகிறது – நிழலின் அருமை வெயிலில் தெரிவதுபோல். பிறர் பாராட்டவேண்டும் சிலர் வெகு பிரயாசைப்பட்டு, எல்லாருக்கும் நல்லவராக நடிப்பார்கள். அப்போது கிடைக்கும் புகழ்ச்சி இவர்களுக்கு வேண்டியிருக்கிறது. அதற்காக அதிக சக்தியை விரயம் செய்ய வேண்டிவரலாம். சந்திக்கும் எல்லாருக்கும் நம்மைப் பிடிக்கவேண்டும் என்று நடப்பது (நடிப்பது?) கடினம். இப்படி நடித்துக்கொண்டே இருந்தால், தனக்கான அடையாளமே புரியாமல் போய்விடும் அபாயம் இருக்கிறதே! நடிப்பதைத் தொழிலாகக் கொண்டவர்கள்பாடு இன்னும் திண்டாட்டம்தான். கதை Manmarziyaan என்ற இந்திப் படத்தில் எதற்கும் அடங்காத முரட்டுப்பெண்ணாக வருகிறார் கதாநாயகி டாப்ஸி பன்னு (Taapsee Pannu). படம் முடிந்தபிறகும் அதன் பாதிப்பு விலகவில்லையாம். அவரைக் கேட்காது ஒருவர் படம் பிடித்தபோது, கடுமையாக நடந்துகொண்டதாகத் தகவல். ‘நான் சாதாரணமாக அப்படி நடந்துகொள்ளமாட்டேன். அந்த பாத்திரத்தை என் மனதிலிருந்து அடியோடு அகற்ற இன்னும் முடியவில்லை,’ என்று பேட்டியில் கூறியிருக்கிறார். வேறு ஒரு நடிகர் தம் பாத்திரத்திற்கான குணாதிசயத்தை உள்வாங்கிக்கொள்ள முயற்சித்தார். எப்படி தெரியுமா? ஒரு மாதம் தனியாக ஓர் அறையில் தங்கியிருந்தார், எவருடைய தொடர்புமின்றி! படம் முடிந்தது. ஆனால், இவரோ அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்டிருந்தார். தன் பழைய நிலைக்கு மீண்டுவர, உளவியல் சிகிச்சைக்குப் போக வேண்டியிருந்தது. (தொலைகாட்சி அரட்டை நிகழ்ச்சி ஒன்றில் கேட்டது). ‘ரொம்ப முக்கியம்!’ என்று முகத்தைச் சுளிக்காதீர்கள். வாழ்க்கையில் என்னென்னவோ நடக்கிறது. புரிந்துகொள்ள முயற்சிப்போமே! சரியா, தப்பா? ‘முன்பெல்லாம் நாடு இவ்வளவு மோசமாகவா இருந்தது!’ என்று பலரும் ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள் இன்று. ஆனால், இவர்களில் யாரும் அதை எப்படித் தடுப்பது என்று யோசிப்பதில்லை. முட்டாள்தனத்தாலும், பேராசையாலும் சிலர் நடப்பதால் இந்நிலை ஏற்பட்டுவிட்டது என்று புரிந்தாலும், அதை எப்படி நம்மால் தடுப்பது என்ற பயம்! தீங்கு இழைக்கிறார்கள் என்று புரிந்தும், அவர்கள் பலத்தைக் குறைக்க எந்த முயற்சியும் செய்யாது இருப்பவர்களே நிறைந்த உலகில் தீமை தழைப்பதில் என்ன அதிசயம்? தவறு செய்யலாம், ஆனால் அதைப் பிறர் அறியாவண்ணம் செய்தால் தவறில்லை என்பதுபோல் நடக்கும் சிலரைப் பின்தொடர்கிறார்கள் தன்னலம் மட்டுமே கருதுபவர்கள். ‘நான் தவறே செய்யமாட்டேன்!’ என்று பெருமை பேசுகிறவர்கள் மட்டும் தெய்வப்பிறவிகளா, என்ன! இப்படிப்பட்டவர்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்கள். புதிதாக எதிலும் ஈடுபடும் துணிச்சல் கிடையாது. அதனால்தான் தம்மைப்போல் இல்லாதவர்களை கவிழ்க்கப் பார்க்கிறார்கள். இது புரிந்தால், இவர்கள் சொல்வதையும் செய்வதையும் அலட்சியம் செய்யலாம். கதை நான் பட்டப்படிப்பு படிக்கப்போகிறேன் என்று தெரிந்ததும், என் உறவினர்களில் மூவர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். “எப்படியும், கல்யாணமாகிப் போகப்போகிறவள்! எதுக்கு இன்னும் படிப்பு?” என்று என் தாய்க்குத் தூபம் போட்டார் ஒருவர். “அதிகமாகப் படித்துவிட்டால், மாப்பிள்ளை கிடைப்பது கஷ்டம்,” என்று, கூடுதலான வரதட்சணை கொடுக்க வேண்டிவரும் சிரமத்தை இன்னொருவர் உணர்த்தினார். ‘பெண்களை அதிகம் படிக்கவைத்தால், பிறரை மதிக்கமாட்டார்கள். கட்டுப்படுத்துவது கஷ்டம்,’ என்று ஏதேதோ சொன்னார்கள். எனக்கென்னவோ, என் நலனைக் கருதிதான் அந்த ஆண்கள் அப்படிச் சொன்னார்கள் என்று நம்ப முடியவில்லை. பதின்மூன்று வயதில் வகுப்பில் முதலாவதாக வந்ததற்காக, அதற்கடுத்த வருடம் மைசூர் மகாராஜாவின் கையால் பரிசு பெற்றிருந்தேன். பள்ளி இறுதி ஆண்டில் மாநிலத்தில் குறிப்பிட்ட இடம் பெற்றதற்காக என் பெயரும், பள்ளியின் பெயரும் தினசரிகளில் வந்தன. பேச்சுப்போட்டிகளில் பள்ளியைப் பிரதிநிதித்திருந்தேன். (பிறகு, கல்லூரியிலும்). “நான் நன்னாப் படிக்கிறேனேம்மா! மேலே படிக்கத்தான் போறேன்!” என்றேன் உறுதியாக. அம்மாவின் விருப்பமும் அதுதான். “இவள் ஒரு முடிவு எடுத்தால், அப்புறம் யார் எது சொன்னாலும் கேட்க மாட்டாள்!” என்று அந்த விஷயத்திற்கு ஒரு முடிவு கட்டினாள். அடுத்து வந்த ஆண்டுகளில், நான் படிக்கக்கூடாது என்று நாங்கள் கேளாமலேயே ‘அறிவுரை’ கூறியவர்கள் தம் பெண்களைக் கல்லூரியில் சேர்த்தார்கள்! இப்படி – தெரிந்தே பிறரைக் கவிழ்க்க நினைப்பவர்களை – தருணம் வாய்க்கும்போது பழி தீர்த்துக்கொள்ள எண்ணினால் நாமும் அவர்களைப்போல் பலகீனமாக ஆகிவிடுகிறோம். ‘போகிறார்கள்! அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!’ என்று விட்டுவிட வேண்டியதுதான். பெண்கள் அதிகம் படித்துவிட்டால் அச்சமோ பொறாமையோ கொள்ளும் உலகம் கல்வியில் நாட்டமில்லாது இருப்பவரை ‘முட்டாள்’ என்று பழிக்கிறது. படிப்பில்லாவிட்டால் என்ன? ஒருவருக்கு வேறு திறமை இருக்கலாமே! கதை கீர்த்தி தன் பதின்ம வயதில் காரோட்டக் கற்றாள். உரிமம் கிடைத்தும், தனியாக காரோட்ட துணிச்சல் இல்லை. “அண்ணா எவ்வளவு நன்றாக ஓட்டுகிறான், பார்!” என்று யாரோ அவள் மதிப்பைக் குறைத்து ஒப்பிட, நொந்துபோனாள். அப்பெண் தற்காப்பு கலையில் தேசிய ரீதியில் பரிசுகள் பெற்றவள். பாட்டு, நடனம், சித்திரம் வரைதல், தானே புதிய சமையல்வகைகளைக் கண்டுபிடித்துச் செய்வது என்று அவளுக்கு இருந்த வேறு பல திறமைகளை நினைவுறுத்தியபின் அவள் தெளிந்தாள். பெண்களுக்குப் பேச்சுத்திறமை அளித்த ஆண்டவன், இயந்திரத்திறன்களை ஆண்களுக்குக் கொடுத்துவிட்டார். ஒன்றரை வயதிலேயே பெண் குழந்தைகள் கதை சொல்லும். ஆண் பிள்ளை சிறு காரை வைத்துக்கொண்டு விளையாட, பெண் குழந்தை தனக்கென வாங்கிக் கொடுத்த பொம்மையை மார்புடன் அணைத்துப் பால் கொடுக்கும். சமுதாயக் கோட்பாடு பெண்கள் மென்மையானவர்களாக இருப்பது அவசியம் என்று இப்படிப் பழக்கிவிட்டது. இது புரிந்தால், பெண்கள் தம்மால் இயலாதவற்றுக்காக கவலைப்படத் தேவையில்லை. பிற மனிதர்களோ, சம்பவங்களோ நம் சுயமதிப்பைக் குறைக்கவிடக் கூடாது. முடியாத ஒன்றை நினைத்து கவலைப்படுவானேன்! ‘இப்படி ஆகிவிட்டதே!’ என்று நொந்து, அதைப்பற்றியே பேசினால் என்ன ஆகிவிடப்போகிறது! பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது விஞ்ஞானிகளுக்கு மட்டுமே அவசியமான குணமில்லை. அவ்வப்போது, ‘ஏன் இப்படி?’ என்று நம்மை நாமே கேட்டுக்கொண்டால், எழும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம். கதை வந்தனாவின் தாய்மொழி தமிழ் அல்ல. தமிழில் பேச மட்டும் கற்றிருந்தாள். அவள் மணந்தவனது குடும்பமோ தமிழிசை, நாடகத்துறையில் சிறந்து விளங்கியது. ஒரு பொது நிகழ்ச்சியில் அவள் உரையாற்ற வேண்டியிருந்தது. என்னைக் கேட்டு, ஒவ்வொரு வார்த்தையாக ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டாள். “அந்தமாதிரி குடும்பத்திலே வாழ்க்கைப்பட்டுட்டு, தமிழிலே எழுதப் படிக்கத் தெரியாதா? சும்மா சொல்றா!” என்றார் ஒருவர், ஏளனமாக. தனக்குத் தெரியாததைப்பற்றி, சம்பந்தமே இல்லாததைப்பற்றி, கேலியாகப் பேசுபவன் அறிவிலி என்று அலட்சியப்படுத்துவோமே! ஒரு துணுக்கு (எந்தக் காலத்திலோ படித்தது) வயது முதிர்ந்த தாயிடம் மகள் கேட்கிறாள்: நீ ஏன் உன் வயதுக்கேற்றபடி நடக்காமல், இப்படி குழந்தைபோல் நடக்கிறாய்? தாய்: எல்லாரும், ‘நமக்கு வயதாகிவிட்டதே, இப்படித்தான் இருக்கணும்!’ என்று நடப்பதால்தான் உலகம் இந்த லட்சணமாக இருக்கிறது! அவள் கூறாமல் விட்டது: குழந்தைத்தனமான ஆர்வம் பிறவியிலேயே நம்முள் இருக்கும். இது மறையாது பாதுகாத்துக்கொள்ள இயற்கையை ரசிக்கத் தெரிந்தால் போதும். ‘யாராவது ஏதாவது சொல்லிவிடுவார்களோ!’ என்று அஞ்சி, அந்த ஆர்வத்தை அடக்கிவிடுகிறோம். வயதுக்குரிய வியாதிகளும் வருகின்றன. குதூகலமும் விளையாட்டுப்புத்தியும் மாறாமல் இருப்பவர்களைக் கண்டால் அவர்களுடைய கலகலப்பு நம்மையும் தொற்றிக்கொள்ளாதா! மாறாக, ‘வயதாகிவிட்டது! இனி என்ன இருக்கிறது வாழ்வில்!’ என அலுப்பால் நம்மையே நாசம் செய்துகொள்ள முயற்சிக்கிறோம். தனக்கே குழி பறிப்பவர்கள் ஒரு சிறிய அமைப்பின் தலைவரை அப்பதவி அளித்த அதிகாரபோதை ஆட்டுவித்தது. தனக்குக் கீழே இருப்பவர்களை மரியாதையின்றி நடத்தினார். சீக்கிரமே பலரும் அவரைவிட்டு விலக, குழப்பம் ஏற்பட்டது. தான் எங்கே தவறிழைத்தோம் என்று அவருக்குப் புரியவில்லை. பள்ளிக்கூடங்களில் சில ஆசிரியர்கள் மாணவர்களைக் கேவலமாக நடத்துவார்கள், ஆசிரியர்களை தலைமை ஆசிரியர் மரியாதைக்குறைவாக நடத்துவார். எங்கள் தலைமை ஆசிரியர் எல்லா ஆசிரியர்களையும் அடிமைகள்போல் நடத்தினார். பொறுக்கமுடியாது போக, எல்லாருமாகச் சேர்ந்து அவருக்கு எதிராகப் புகார்க்கடிதம் ஒன்றை எழுதி, மேலிடத்திற்கு அனுப்ப, அவர் தொலைந்தார். தலைவர் ஒருவர் தன் கீழ் இருப்பவர்கள் எல்லாரும் அடிமைகள் என்றெண்ணி நடக்கலாம். ஆனால், எல்லோரும், எப்போதும், முட்டாள்களாக இருப்பதில்லை. பதவி இருக்கும்வரைதான் தன் அதிகாரம் செல்லும் என்று புரியாதவர்தான் முட்டாள். மகிழ்ச்சியைத் தேடலாமே! நமக்கு யாரைப் பிடித்துப்போகிறது? நமக்குள் இருக்கும் நற்குணங்களை, திறமைகளை வெளிக்கொணர்பவர்களை. இது புரியாது, சிலர் தம்மிடம் நெருக்கமாக உள்ளவர்களிடமே தம் ‘பராக்கிரமத்தைக்’ காட்டுவார்கள். குடும்பத்தினரிடம் தம் அதிகாரத்தை (வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ) நிலைநாட்ட முயல்பவர்கள் ஏன் இப்படி நடக்கிறார்கள்? எனது இக்கேள்விக்கு விரிவாக விளக்கமளித்த உளவியல் நிபுணர், “இவர்கள் எப்போதும் போர்க்களத்திலேயே இயங்குபவர்கள்!” என்றார். இவர்களுடைய போராட்டம் தமக்குள்ளேயேதான். ஏதோ ஒருவித பாதுகாப்பின்மையால் உசுப்பப்படுகிறார்கள். இவர்களுக்குச் செல்வம், புகழ், பதவி எல்லாம் இருக்கக்கூடும். ஆனாலும், அவை போதாமல் போய்விடுகிறது. போரில் ஈடுபடுகிறவர்கள் தம்மைச் சுற்றி நடப்பது எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பார்கள், இல்லையா? எப்படித் தாக்கினால் எதிராளி தன் வசமாவான் என்று யோசித்து, அதன்படி நடப்பார்கள். அப்போது அவர்களுடைய மனம், கண் இரண்டிலும் விழிப்புணர்வு கூர்மையாக ஆகிவிடும். பலசாலியாக உணர்வார்கள். அவர்களுக்கு உவகை அளிக்கும் நிலை இது. ஆனால், எத்தனை நேரம்தான் இந்த நிலையிலேயே இருக்க இயலும்! விரைவிலேயே உடல் களைத்துவிடும். உடனே மீண்டும் ஒரு போராட்டத்திற்குத் தம்மைத் தயார்படுத்திக்கொள்வார்கள். இதுவும் ஒருவித போதைதான். இவர்கள் தாமே தம் குறையைப் புரிந்துகொண்டு, திருத்திக்கொள்ள முயன்றால் மாறலாம். ஆனால், தம்மிடம் குறை இருக்கிறதென்று எத்தனைபேர் ஒத்துக்கொள்வார்கள்? ஒருவரை அவருடைய குறைகளுடன் அப்படியே ஏற்கும் தன்மை இருந்தால்தான் இத்தகையவர்களுடன் சேர்ந்து வாழமுடியும். இதுதான் உண்மையான காதல், இதனால்தான் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்கிறார்கள். கதை Legally blind என்ற அடையாளத்துடன் கண்பார்வை மிகக் குறைந்த நிலையில் இருந்த பெண்ணைக் காதலித்து மணந்தான் தர்மராஜ். ‘இப்படிக்கூட மணப்பார்களா!’ என்று பார்ப்பவர்கள் அதிசயித்தார்கள். அப்பெண் திறமைசாலி, எதையும் முன்னின்று நடத்தும் ஆற்றல் அவளுக்கு இருந்தது என்பதைச் சில நிமிடங்களில் அவளுடன் பழகியதுமே எனக்குப் புரிந்தது. தன் தாயைப்போன்று அன்பைப் பொழிபவள் என்ற உறுதியுடன் தர்மராஜ் அவளைத் தேர்ந்தெடுத்திருந்ததில் வியப்பில்லை. பயந்த சுபாவம் கொண்ட அவனுக்கும் அவள் உறுதுணையாக இருப்பாள். ‘தன்னைப் பிறர் கேலி செய்வார்களோ? பிறர்முன் மனைவியைப் பெருமையாகக் காட்டிக்கொள்ள முடியாதே!’ என்றெல்லாம் தர்மராஜ் குழம்பவில்லை. தனக்குச் சரியென்று தோன்றியபடி நடந்தான். அதனால் நிறைவு அடைந்தான். மனைவியின் குறையால் அவள் என்றும் தன்னைச் சார்ந்திருப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. இருவருமே தனித்து இயங்கினார்கள். இணைந்தும் செயல்பட்டார்கள். அக்குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவியது. தற்காலத்தில் மனிதன் மகிழ்ச்சியை இழந்துவிட்டு, எங்கெங்கோ அதைத் தேடிக்கொண்டிருக்கிறான். இன்றைய உலகம் தொழில்துறையைச் சார்ந்ததாக ஆகிவிட்ட நிலையில், எல்லாவற்றையும் முதலிலேயே திட்டமிடுகிற நிலை வந்துவிட்டது. பலரும் நிகழ்காலத்தில் இருப்பதில்லை. பெற்றோரைவிட அதிகமாகச் சாதித்துக் காட்டவேண்டும் என்று தமக்குத்தாமே விதித்துக்கொள்கிறார்கள் சிலர். குடும்பம், குழந்தைகளின் கல்வி, அதிலும், எந்தவிதமான கல்வி, என்று எதிர்காலத்தைப்பற்றி பற்பல யோசனைகள் எல்லா நேரமும். இதனால், எவ்வளவு இருந்தாலும் போதவில்லை என்ற உணர்வு ஏற்படுகிறது. விடுமுறைக்காக ஓரிடத்திற்குச் செல்லுமுன்கூட, ஆரம்பம் முதல் இறுதிவரை எல்லாவற்றையும் திட்டமிட, புதிதாக எதையும் கற்கும் திறனும் ஆர்வமும் மறைந்துவிடுகிறது. கதை ‘நீ தைரியசாலி. புத்திசாலி. எல்லாவற்றிலும் முதலாவதாக விளங்கவேண்டும்,’ என்று பலவாறாக உற்சாகமூட்டப்பட்டு வளர்ந்த பாஸ்கர் நிறைய சாதித்தான். ஆனால், அவனுக்கென்னவோ மகிழ்ச்சி கிடைக்கவில்லை. தன் வளர்ச்சியால் பெற்றோருக்குப் பெருமை தேடித் தருகிறோம் என்ற உணர்வுதான் இருந்தது. ‘ஏன் எனக்கு எதிலுமே நிறைவில்லை?’ என்று யோசிக்க ஆரம்பித்தான் பாஸ்கர். எல்லாவற்றிலும் வெற்றி பெறவேண்டும் என்ற போட்டி மனப்பான்மை வெறியாகவே மாறிவிட்டதை உணர முடிந்தது. வாழ்க்கை நிரந்தரமில்லை. அதை நம் செய்கையால் கட்டுப்படுத்துவது என்பது நடக்காத காரியம்; எதிர்காலத்தைப்பற்றிய சிந்தனையிலேயே காலத்தைச் செலவழிப்பதைவிட நிகழ்காலத்தில், தன்னைச் சுற்றி நடப்பதில் கவனம் செலுத்தினால்தான் நிறைவு ஏற்படும் என்ற ஞானம் பிறந்தது. ‘இதனால் எனக்கு என்ன ஆதாயம்?’ என்று கேட்டுக்கொண்டுதான் ஒவ்வொரு காரியத்திலும் ஈடுபடுகிறார்கள் பலரும். ’ இது என்ன வாழ்க்கை!’ என்று சலித்துக்கொள்பவர்கள் எதையும் எதிர்பார்க்காமல் ஒரு காரியத்தைச் செய்தால் புத்துணர்வு பிறக்கும். தான தர்மம் செய்பவர்கள் அனைவரும் புகழை எதிர்பார்த்துச் செய்வதில்லை. தம் ஆத்ம திருப்திக்காக நன்மை செய்பவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் மனநிறைவு அடைவதே வெற்றிக்கான அறிகுறி. பாஸ்கரும் இனி போட்டிகளில் கலந்துகொண்டு, பிறரை வீழ்த்தி, அதனால் தான் மகிழக்கூடாது என்று முடிவெடுத்தான். பிறருக்கு உதவுவது போன்ற சிறு விஷயங்களால் மனம் மகிழ்ச்சி அடைந்தது. சில வயதானவர்களைப் பாருங்கள். பேரங்காடி, பூங்காபோன்ற பொது இடங்களுக்கு வருவார்கள். அதிகமாக நடக்கக்கூட முடியாத நிலையில். அங்கு போடப்பட்டிருக்கும் ஆசனத்தில் அமர்ந்து சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அப்போது வேறு யோசனைக்கு இடமில்லை. இவர்கள் நேரத்தை வீணடிக்கவில்லை. கடந்த காலத்தைப்பற்றி நினைத்துக்கொண்டு, ‘இப்படிச் செய்திருக்கலாமோ?’ என்று மாற்ற முடியாததைப்பற்றிய வீண் யோசனைகள் செய்யவில்லை. அமைதியை அடைவது எப்படி என்று புரிந்தவர்கள். பலருக்கு இது புரிவதில்லை. ஓயாது புலம்பி, தம்மைச்சுற்றி இருப்பவர்களின் நிம்மதியையும் குலைக்கிறார்கள். உதாரணமாக, திருமணமாகி சில ஆண்டுகள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, பின் ஏதோ காரணத்தால் மனதளவில் பிரிகிறவர்கள் வருத்தத்திலேயே ஏன் உழலவேண்டும்? இன்பமாக கழித்த நாட்களையும் அவ்வப்போது நினைக்கலாமே! கதை அழகிற்காக பைரவியை மணந்தான் செல்வந்தனான ஜெயன். பத்து வருடங்கள் எந்தத் தொல்லையும் இருக்கவில்லை. அதன்பின், அந்த வாழ்க்கை அலுப்புத்தட்ட, சூதாட்டத்தில் இறங்கினான் ஜெயன். சர்வகாலமும் அந்த நினைவிலேயே மனம் சுழல, மனைவியுடன் இருந்த நெருக்கம் குறைந்தது. பணமும் கரைந்தது. ஆரம்பத்தில் கணவனிடம் பணிவும் மரியாதையுமாக இருந்த பைரவி மாறினாள். சீறினாள். அவளுடைய வாய்வீச்சைத் தாங்கமுடியாது, ஜெயன் இன்னும் விலகிப்போனான். ‘எல்லாக் கல்யாணங்களும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை!’ என்று கூற ஆரம்பித்தாள் பைரவி. அவளுடைய மனநிலை கெட்டது. பார்ப்பவர்களிடமெல்லாம் குறை காணத் தோன்றியது. தான் செய்தது தவறுதான் என்று ஜெயன் ஒப்புக்கொண்டாலும், அப்பழக்கத்தை விடமுடியவில்லை. ஒரு பதின்ம வயதுப்பெண் பேரங்காடிகளில் நடந்த பல போட்டிகளில் வெற்றிபெற்று, நிறைய சாமான்களை பரிசாகப் பெற்றாள். பல முறை. அப்படி ஒரு போட்டியில் நானும் வெற்றி பெற்றபோது, அவளுடைய தந்தை என்னிடம் கூறினார், “நாங்கள் எதையும் வைத்துக்கொள்வதில்லை. அப்படியே அனாதை இல்லங்களுக்குக் கொடுத்துவிடுகிறோம்!” அவர்கள் அப்படியொன்றும் செல்வந்தர்களில்லை. அவர் கூற்றை ஆதரிக்கிறார் ஒரு சமூக சேவகி. “கிடைப்பதைப் பகிர்ந்துகொண்டால்தான் மகிழ்ச்சி நிலைக்கும். இறைக்கிற கிணறு சுரப்பது இல்லையா? அதுபோல்தான் நாம் கொடுப்பதும் விரைவிலேயே வேறு விதத்தில் கிடைத்துவிடுகிறது”. இந்த உண்மை புரியாதவர்களே மகிழ்ச்சியைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். அறிவும் புத்தியும் அக்குழந்தைக்கு அன்று ஆண்டுநிறைவு. “குழந்தை புத்திசாலியா?” தன் முதல் குழந்தை நல்லவிதமாக வளரவேண்டுமே என்ற ஆதங்கத்துடன் ஓர் இளம் தாய் என்னைக் கேட்டாள். அதன் கண்களைப் பார்த்தபோது, களங்கமற்ற குணம் மட்டும்தான் தெரிந்தது. “நாம் பேசப் பேசத்தான் குழந்தைகளின் அறிவு வளரும்,” என்று என் அனுபவத்தில் அறிந்ததைக் கூறினேன். பொது இடங்களில், குழந்தையிடம் பேசுவதே வீண் என்பதுபோல் நடக்கிறார்கள் பல தாய்மார்கள். அப்படியே கைத்தொலைபேசியிலிருந்து மிகுந்த சிரமத்துடன் கண்களை அகற்றிப் பேசினாலும், எதைப்பற்றிப் பேசலாம் என்ற கேள்வி எழுகிறது. சில பெரியவர்கள், ‘வேடிக்கை’ என்று நினைத்து, கெட்ட வார்த்தைகளும், பழிப்புச்சொற்களும் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுப்பார்கள். அர்த்தம் புரியாது, குழந்தைகள் அதையெல்லாம் திரும்பச் சொல்லும்போது, மூத்தவர்கள் வேண்டுமானால் சிரிக்கலாம். ஆனால், வளர்ந்தபின் அப்படிப் பேசினால், யாரும் அப்படி வளர்க்கப்பட்ட ஒருவனை மதிக்கமாட்டார்கள். கல்வி ஒருவனை அறிவாளி ஆக்குகிறதா என்பதும் யோசிக்கவேண்டிய சமாசாரம்தான். பள்ளிக்கூடத்தில், “உன் மூளையை உபயோகப்படுத்து!” என்று படித்துப் படித்துச் சொல்வார்கள். தற்காலத்தில், பிறர் தமது மூளையை உபயோகித்து அறிந்தவற்றை நமதாக்கிக்கொள்ள விஞ்ஞானம் வழிவகுக்கிறது. நிறைய விஷயங்களைத் தெரிந்துவைத்து, ஒருவன் தான் புத்திசாலி என்று பெருமிதம் கொண்டிருக்கலாம். ஆனால், வெறும் ஏட்டுச் சுரைக்காயால் என்ன பயன்! நற்குணமும், ஆழமாகச் சிந்திப்பதன் பயனாக உலகைப் புரிந்துகொள்ளும் அறிவும் வேண்டாமா? கதை பட்டப்படிப்பில் மாநிலத்திலேயே முதலாவதாக வந்த சரவணனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைப்பது சிரமமாக இருக்கவில்லை. ஆனால், புத்தக அறிவைத் தவிர வேறு எதுவும் இல்லாதவனுக்குப் பயம் ஏற்பட்டது, புதிய இடத்தில் தான் எப்படி பிழைக்கப்போகிறோமோ என்று. மாற்றங்களை எதிர்கொள்ளும் துணிவு புத்தகப் பாடங்களைப் படித்துப் பெற்ற புத்தியால் கிடைப்பதல்ல. தன் நண்பர்கள் யாருக்காவது அங்கு உறவினர்கள் இருக்கிறார்களா என்று கேட்டுப்பார்த்தான் சரவணன். அவர்களுடன் தொடர்புகொண்டு, “என்னை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்,” என்று கெஞ்சினான். ஆதாயம் எதிர்பார்த்து வலுவில் நட்பை ஏற்படுத்திக்கொண்டபோதும், பிறருடன் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அன்றாடம் வானொலியில் கேட்ட செய்திகளை மட்டும் திரும்பக் கூறுவான். ‘இவன் கல்லூரியில் என்னதான் கற்றான்?’ என்ற கேலிக்கு ஆளானான். ‘தெரிந்தவரை போதும்,’ என்ற மனப்பான்மை இருந்தால் அறிவு எப்படி வளரும்? ‘நான் புத்திசாலி!’ என்று படிப்பையும் உத்தியோகத்தையும் வைத்து இவன் பெருமை கொள்ளலாம். கைநிறையப் பணமும் கிடைக்கலாம். ஆனால், பிறருடன் பழகத் தெரியாவிட்டால், கல்வியால் என்ன பயன்? செய்தித்தாள் மட்டுமின்றி, நிறைய புத்தகங்களையும் படித்து, தான் அறிந்ததை சமயம் கிடைத்தபோதெல்லாம் வெளிக்காட்டிக்கொள்பவன் தன்னைப் புத்திசாலி என்று நினைத்துக்கொள்ளலாம். அப்படிச் செய்வது உள்ளாடைகளைப் பெருமையுடன் வெளியில் காட்டிக்கொள்வதுபோல்தான் என்கிறார் திரு.அனுபவசாலி. உள்ளாடை, புத்தி இரண்டும் ஒருவருக்கு அவசியம் தேவை. ஆனால், பிறர் மெச்சுவதற்காக அல்ல. கேட்கப்பட்ட கேள்விகளுக்குச் சரியான பதில்களைச் சொல்பவனும் புத்திசாலி என்பதல்ல. படித்ததை எவ்வாறு தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தலாம் என்று புரிந்து, அதை உபயோகிக்காவிட்டால், படித்து என்ன பயன்? புதிய விஷயங்களைக் கற்று, புத்திகூர்மையை அதிகரிக்க சரியான கேள்விகளைக் கேட்கவேண்டும். நிறையக் கேள்வி கேட்பவர்களை பலரும் விரும்புவதில்லை. சந்தேகத்துடன் பார்ப்பார்கள். ஆனால், அறிவை நாடுகிறவர்கள் தமக்குள் எழும் கேள்விகளுக்கு விடைகாணும்வரை முயற்சியைக் கைவிடமாட்டார்கள். இவர்களால் வித்தியாசமான பிறரைப் புரிந்து ஏற்கமுடிகிறது. தம் சொந்த வளர்ச்சிக்காக பிறரை நோகடிக்கவோ, அதிகாரம் செலுத்தவோ மாட்டார்கள். ஏனெனில் இவர்களது உணர்ச்சிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். அறிவை எப்படித்தான் வளர்ப்பது? கல்வி மட்டுமின்றி, கலை, ஆரோக்கியமான, கவனம் செலுத்தவைக்கும் விளையாட்டுகள், தியானம் போன்றவைகளால் அறிவு வளரும். அதைக் குறித்து கர்வம் எழாதபோது, தன்னம்பிக்கையும் மிகும். தன்னம்பிக்கையுடைய எழுத்தாளர், சைத்திரிகர், நடிகர் போன்றோர் தனிமையை விரும்புகிறார்கள். கற்பனையில் பல பாத்திரங்களுடன் ஒன்றிணைந்து, அவர்களாகவே மாற வேறு வழியில்லை. இவர்களிடமும் பிறர் குற்றம் கண்டுபிடிப்பார்கள் — பழகத் தெரியவில்லை என்று. இவர்களுக்கு நிறைய நண்பர்கள் வாய்க்கமாட்டார்கள். ஏனெனில், தகுதியானவர்களை மட்டுமே இவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். பிறர் சொல்லாததையும் புரிந்துகொள்ளும் திறமை இருப்பதால் ‘ஆமாம் சாமி’ போட இவர்கள் விரும்புவதில்லை என்பதும் ஒரு காரணம். விஞ்ஞான வளர்ச்சியால் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை கணக்கில் அடங்காமல் போய்விட்டன. எல்லாவற்றையும் முழுமையாகத் தெரிந்துகொள்ளாவிட்டால், நாம் முட்டாள்கள் என்றாகாது. கணினி, கைத்தொலைபேசி என்று பல்வித சாதனங்களையும் ஓயாது உபயோகிக்கும் திறன் மட்டும் இருந்தால் போதுமா? பழகத் தெரியவேண்டும் ஒரு பேரங்காடியில் பார்த்தேன். நாற்பது வயதுக்குட்பட்ட ஆறுபேர் ஓர் நீண்ட இருக்கையில் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். ஒவ்வொருவர் கையிலும் ஒரு தொலைபேசி. பக்கத்தில் இருந்தவர்களைப் பார்த்து யாரும் புன்முறுவல் செய்யவோ, உரையாடவோ முயலவில்லை. மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கையிலும் I pad! அவர்களும் தம் உலகில் மூழ்கி இருந்தார்கள். மனிதர்கள் நிறைந்த இவ்வுலகில், பிறருடன் பழகத் தெரிந்திருக்க வேண்டாமா? கணவன் எப்போதும் கணினியின்முன், மனைவி கைத்தொலைபேசி அல்லது தொலைகாட்சி என்றிருந்தால், சிறுபிராயத்தில் ஒரு குழந்தைக்கு எதையோ இழந்துவிட்டதுபோன்ற ஏமாற்றம் எழும். சமாதானம் செய்யும் வகையிலோ, அல்லது ‘அன்பு’ என்ற பெயரிலோ, ஏதாவதொரு சாதனத்தை வாங்கிக் கொடுக்கத்தான் பொற்றோர்களால் இயலும். இப்படிப்பட்ட குடும்பத்தின் அங்கத்தினர் அனைவரும் தீவுகள்போல் தனித்து இயங்குவார்கள். எல்லா சூழ்நிலைகளிலும் சுயநலத்திற்கே முக்கியத்துவம் கொடுத்து நடக்க முற்படுவது இதனால்தான். கதை ஒருமுறை என் சக ஆசிரியை, "ஆண்கள் வளர்ந்துவிட்ட குழந்தைகள். என் கணவர் குழந்தைகளிடம் பேசியதே கிடையாது. நண்பர்களுடனேயே தன் நேரத்தைக் கழிப்பார். ஒரு விடுமுறை நாள், வீட்டில் உட்கார்ந்திருந்தபோது, அவருடைய ஆத்திரம் பெருக்கெடுத்தது. ‘யாருமே என்னை மதித்து, ஒரு வார்த்தைகூடப் பேச வரவில்லை!’ என்று கத்தினார்!’ என்று சிரித்தாள். இருபது வயதுக்கு மேற்பட்டிருந்தாலும், அவளுடைய குழந்தைகள் தம் வாழ்க்கையில் நடப்பதையெல்லாம் தன்னுடன் ஏன் பகிரவேண்டும் என்ற என்னிடம் ஆச்சரியப்பட்டாள். “உன் குழந்தைகள் ஏதோ, கடவுளைக் கண்டதுபோல் பரவசத்துடன் உன்னைப் பார்ப்பதைக் கவனித்திருக்கிறேன். அது உனக்குத் தெரியுமா?” என்று நான் கேட்டபோது, அவள் விழித்தாள். எதையும் எதிர்பாராது, அவள் தன் நேரத்தை, உழைப்பை, தன் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நடந்த கசப்பான, அல்லது இனிமையான, பொழுதுகளை சிறுவயதுமுதல் அவர்களிடம் சொல்லியிருக்கிறாள். (தமிழ் தெரியாத, அல்லது நெருக்கமாக இல்லாத அக்கம்பக்கத்தினர் இருந்தால், நாம் பெற்ற குழந்தைகளே உற்ற நண்பர்கள் ஆகிவிடுகிறார்கள்). இப்படி வளர்க்கப்பட்ட குழந்தைகள் தாயுடன் நெருக்கமாக இருப்பதில் என்ன அதிசயம்? புத்தி மட்டும் போதுமா? என்னதான் புத்திசாலியாக இருந்தாலும், பெரிய உத்தியோகம் வகித்து, கைநிறைய சம்பாதித்தாலும், சக மாந்தருடன் சுமுகமாகப் பழகுவது, அவர்களைப் புரிந்து நடப்பது போன்ற தன்மைகள் குறைந்துவிட்டால் அறிவு மங்கிவிடும். வெளிநாட்டில் வேலை பார்த்த சரவணன் கூறினான், “என் இரு குழந்தைகளுக்கும் இப்போதுதான் இரண்டு வயது, ஒரு வயதாகிறது. இந்த வயதில் அவர்களுக்கு நான் தேவைப்படமாட்டேன்!” நினைவுதெரிந்த நாளாக, தாய்தந்தையரின் அன்பு கிடைக்கப்பெற்று, அதன்மூலம் வாழ்க்கையில் என்ன இடர் வந்தாலும் எதிர்கொள்ளும் மனோதிடத்துடன் வளர்ந்திருக்கும் எத்தனைபேர் இதை ஒப்புக்கொள்வார்கள்? ** முற்றும்** FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.