[] கீரனின் கவிதைக் கீற்றுகள் கவிதை பேரா. முனைவர் ப.அர. நக்கீரன் வெளியீடு - FreeTamilEbooks.com [Creative Commons License] கீரனின் கவிதைக் கீற்றுகள் by முனைவர் ப.அர. நக்கீரன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. பொருளடக்கம்   - கீரனின் கவிதைக் கீற்றுகள் - 1. நான் - 2. இவை - 3. பொற்காலம் - 4. கல்லாமை வாழ்க! - 5. பட்டங்கள் - 6. அடிமைகள் - 7. எவ்வழி நல்லவர் - 8. தமிழா ஆங்கிலமா? - 9. தரவட்டம் தருமா தகுந்த ஒரு தீர்வு? - 10. மதிப்பை உயர்த்தும் மாண்பை அறிவோம்! - 11. வடம்பிடிக்கும் தோழர்கள் - 12. தோழர் - 13. வள்ளுவன் எனும் மேலாண்மை வித்தகன் - 14. ஆசிரியன் - 15. மீனாட்சி சுந்தரம் மீட்டிய நரம்புகள் ...... - 16. மா.கி. இரமணன் மாண்புடன் வாழ்க! - 17. மாணவர்கள் - 18. அறிஞன் - 19. ஆயிரம் அறிஞர்கள் வேண்டாம்! - 20. ஓ பெண்ணே! - 21. மொழி வாழ்க! - 22. செல்லம் ! - 23. வணங்கா மண் - 24. எப்படி? - 25. தை வருக - 26. ஏக்கம் - 27. உடனே தேவை - முனைவர் ப.அர.நக்கீரன் B.E.M.Sc.(Engg).Ph.D. 1 கீரனின் கவிதைக் கீற்றுகள் முனைவர் ப .அர. நக்கீரன்       1 நான் நான்- பாவலன் அல்லன் பைந்தமிழ்க் காவலனும் அல்லன்- ஆனால்- அறிவியல் தமிழை ஆக்க முயலும் ஆவலன்- மின்னணு முதல் முன்னேற்றப் பொறிகள் வரை சின்ன உளிகளால் சீரான கருவியெல்லாம் அருமை தெரிந்து அளந்து தமிழ் செய்யப் பொறியியல் கடலில் அறிவைக் கடைந்த போது ஆழத்தில் இருக்கும் ஒரு ஆமை நான்- நான்- ஆசிரிய நக்கீரன்- என் தொழிலும் சங்கு அறுப்பதுதான்- அதனால்- அறுத்தால் பொறுத்திருங்கள் அவசரப்பட்டு எரித்து விடாதீர்கள்! * * * * * 2 இவை எண்ணங்கள் கீறி எழுத்துக்கள் உருவாகி கருத்தைக் கருவுற்றுக் காலத்தால் விளைந்த கோபத்தால் பிறந்த நெருப்புக் கவிதைகள்!   நேர்முனையை இழுக்க நீட்டியுள்ள எதிர்முனை!   எதிர்மறை என்று எதிர்மறையாய்ச் சிந்தியாமல் நேர்முறையாய்ச் சிந்தித்தால் நியாயங்கள் புரியும்! * * * * * 3 பொற்காலம் அசோகரின் காலம் பொற்காலம் ! அக்பரின் காலம் பொற்காலம்! ஏன்?   ஏனென்றால் அவர்கள்- மரம் நட்டார்கள் சாலை போட்டார்கள்! சத்திரங்கள் கட்டி சாப்பாடு போட்டார்கள்! என்பதனால்-   அசோகரின் காலம் பொற்காலம்! அக்பரின் காலம் பொற்காலம்! – என்று இன்றும்-   சாலை போடுகிறோம்! மரம் நடுகிறோம்! சத்திரங்கள் கட்டி சத்துணவு போடுகிறோம்! பொற்காலம் வந்ததென்று பூரித்து இருக்கிறோம்!   கட்சிகளின் பெயரால் கலகம் விளைந்தது! மனித நேய மரங்கள் விழுந்தன!   சாதிகள் பெயரால் சண்டைகள் நடந்தன! அன்புச் சாலைகளில் ஆயிரம் விரிசல்கள்! மதங்களின் பெயரால் மனங்கள் சுருங்கி மானுடம் என்பது மண்ணில் புதைந்தது!   மானுடம் போன பின்னர் மயானக் கல்லறைகள் அழகாய் இருந்தென்ன? உலக அதிசயமாய் இருந்தென்ன?   கோபுரங்கள் கட்டுவதில் குறியாய் இருந்து விட்டு மூலத்தை மறந்த மூடர்கள் யாரிங்கே?   ஆரோக்கிய மாயிருந்த அழகை அழித்து விட்டு ஆராய்ச்சி ஒப்பனையால் அலங்கரிக்கும் அவலம் ஏன்?   கண்ணாடிகளை வெளிச்சத்தில் வைத்து விட்டு இருட்டில் நின்று கொண்டு முகம் தேடும் மடமை ஏன்? நாடு என்பது நல்ல மனிதர்களால் ஆனது! நல்ல மனிதர்களை நாம் உருவாக்குவோம்! பொற்காலம் தன்னால் பூக்கத் தொடங்கும்! * * * * * 4 கல்லாமை வாழ்க! கல்லாமை வாழ்க! கல்லார் எல்லாரும் வாழ்க!   இதயத்தை அடகு வைத்து அறிவை வாங்கினோம்! இறுதியில்- இதயங்கள் மீட்கப்படாமல் மூழ்கிப் போயின!   மூளையையும் வயிற்றையும் இணைக்கும் முயற்சியில் முதுகுத் தண்டுகள் வளைந்து விட்டன!   துணிவும் வீரமும் தூரதேசம் போய்விட அச்சம் மட்டுமே மிச்சமாய்த் தவிக்கிறது!   அறிவு நோக்கமின்றி அடிமைகளாய்ப் பொருள் தேட அவதரித்த காரணத்தால் பட்டங்கள் பெருகப் பாமரராய் ஆகின்ற விந்தையான கல்வியிது!     கல்லாதவன் கொஞ்சம் கடவுளுக்காவது அஞ்சுகிறான் கற்றவன் குற்றங்களுக்குக் காரணம் தேடுகிறான்!   விலைவாசி ஏறிப்போன வீணான இக்கல்விக்காக வீட்டை விற்றுக் காட்டை விற்று வீதிக்கு வந்த பின்னர் வேலையில்லை என்றானால் விளைவுகள் என்னாகும்!   காசு கொடுத்து வாங்கிய கல்வி என்பது அறிவுக் காலிகளின் கட்டாரியாகும்! வெட்டும் கொள்ளையும் வாடிக்கையாகும்!   சமுதாயம் என்பது சந்தியில் நிற்கும் புரட்சித் தீயில் இந்நாடே அழியும்!   எனவே- இதுதான் கல்வியென்றால் - கல்லாமை வாழ்க! கல்லார் எல்லாரும் வாழ்க!! * * * * * 5 பட்டங்கள் அடைக்கும் வடிகால்கள் அகற்றும் வழியறியோம் அடுக்கு மாளிகைகள் அழகழகாய்க் கட்டுகிறோம்!   குடிக்க நல்ல தண்ணீர் குவளை தரும் வகையறியோம்! குவளையிலே குழந்தைபெறும் சூத்திரங்கள் கற்கின்றோம்!   இருந்த ஏரிகளை ஏலம் விட்டு வீடு கட்டி கிணறுகள் காய்ந்ததற்குக் காரணம் தெரியாமல்   மழைநீர் சேகரிக்கத் திட்டங்கள் போடுகிறோம்! தும்பை விட்டு வால்பிடித்துத் துன்பத்திலே வாடுகிறோம்!   நேருக்கு நேர் நின்றும் நேரான ஓர் கருத்தை யாருக்கும் புரிய வைக்க எங்களால் இயலவில்லை!   பாருக்கு வெளியே விண்கலம் அனுப்பித் தொடர்பை வளர்க்கச் சோதனை செய்கிறோம்!   பணிசெய்ய வென்றே படித்த மருத்துவம் வணிகப்பொருளாய் வீதிக்கு வந்ததேன்?   கருவிகளை வாங்கிக் கடைபோட்ட காரணத்தால் இருமலுக்கும் சோதனை ஏழைகளுக்கோ வேதனை!   ஒரு உறுப்பு நலம்காண ஒரு உறுப்பை விலைபேசும் தரகர்கள் நடமாட்டம் தரணியில் பெருகியதேன்?   பணம் படைத்தோர் மட்டுமே பலன் காண முடியுமென்றால் ஏழை உயிர்கள் எங்கே போய் ஓலமிடும்!   உருப்படியாய் இருந்ததெல்லாம் ஓடாய்ப் போவதற்கே சட்டங்கள் இங்கே சதிராடிக் காத்திருக்கும்!   பணம் பிடுங்க வென்றே படிப்படியாய் மேலேறி சட்டத்தை உடைப்பதற்கே கருப்புச் சட்டைகள்!   நீதியும் சட்டமும் தனித்தனி என்றான பின்னர் நீதிக்குத் தண்டனையாய் கண்களிலே கருப்புத் துணி!   கண்களுக்கு எதிரில் கழுத்தை அறுத்தாலும் சாட்சி இல்லையென்று தப்பிக்க சட்டமுண்டு. * * * * * 6 அடிமைகள் நாங்கள்- அந்நியர் ஆட்சியால் அடிமைகள் ஆகவில்லை! அடிமைகளாய் இருந்ததால் அந்நியருக்கு ஆட்பட்டோம்!   1947-ல் - இந்தியா என்னும் இருட்டுச் சிறையின் காவலர் மாறினர்!   கைதிகளில் ஒருவன் காவற் பொறுப்பை ஏற்றான்! சிறைக் கதவுகள் திறக்கப்படாமலேயே போய்விட்டன!   இங்கே- பொதுநலன் என்பது செட்டியார் ஊற்றிய பால்- உதட்டில் பூசிய சாயம்-   குப்பையைக் கூட்டி பக்கத்தில் கொட்டிவிட்டு சுத்தம் வருமென்று சுற்றிச் சுற்றிப் பார்க்கின்றோம்!   வீடு எரியும் போதும் ஒன்றாகச் சேராமல் அவரவர் வீட்டின்மேல் நீர் ஊற்றிக் கொண்டிருந்தால் ஊர் என்னவாகும்?   வரதட்சணை என்றொரு திருட்டுப் புழக்கம் வீதியைத் தாண்டி வீட்டுக்குள் வந்ததேன்?   திருமண இதழில் பெயர் போட வேண்டாமென்று ‘பெரியவர்’ சொன்னதும்   அடியார் அனைவரும் அப்படியே செய்தனர்! பெயர் போடுவதை அடியோடு விட்டனர்!   பாவம்- ஆயிரங்களுக்கு முன்னால் ஆசிகள் என்ன செய்யும்!   கடவுளுக்குக் கண்ணை மறைத்து நாமம் போட்டிருப்பது கூட இதையெல்லாம்- கண்டு கொள்ளாமல் இருக்கத் தானோ?   மனத்தின் பசுமையைப் பணத்தால் அழித்ததினால் அன்பு மழை தவறி அடியோடு காய்கிறது!   வரதட்சணை வேண்டாமென்று வாய்கிழிய ஓலமிடும் பெண்ணைப் பெற்றவர் பிள்ளைக்கு வரன்தேடி ஊர் ஊராய் அலைகின்றார்!   தனக்கென்று ஒரு நீதி தனித்தனியாய் ஆக்கிக் கொண்டால் பொதுநலன் என்பது புரையோடிப் போகாதா?   வாய்ப்புகள் வராத போது அனைவரும் நல்லவர்கள்! ஆட்சி கையில் வந்தால் அன்பளிப்பே அரசு செய்யும்!   வாக்கு என்றொரு வைரத்தை விற்று விட்டுக் கூழாங் கற்களையே கோட்டைக்குத் தேர்ந்தெடுத்தோம்!   சந்தனக் காடெரித்துக் கரிமூட்டை தலையில் வைத்து விற்பதற்கு வீதிதோறும் வேதனையில் கூவுகிறோம்!   அருமை தெரியாமல் ஆட்களைத் தேர்ந்தெடுத்து வசதிகள் வருமென்று வான்நோக்கி வாடுகிறோம்!   கழுதைகள் நாட்டில் ஒரு கழுதையே தலைவன்! அடிமைகள் நாட்டில் ஒரு அயோக்கியனே தலைவன்! வாணிகம் செய்ய வந்தவன் நாட்டையே வளைக்க எப்படி முடிந்தது?   நாய்களாய் ஓலமிட்டு நமக்குள்ளே சண்டையிட்டு வந்தவர் தாளில் வணங்கி வரவேற்று நம்மை ஆள நாமே வேண்டினோம்!   விடுதலை என்பது வாங்கும் பொருளல்ல நமக்குள்ளே இருப்பது! நமதுரிமையானது   உள்ளத்தில் மாற்றமின்றி உண்மை விடுதலை ஒரு நாளும் வருவதில்லை! வந்தாலும் நிற்பதில்லை!   இனியாவது – அடிமை வாழ்வை அடியோடு ஒழிப்போம் சிந்திக்கத் தொடங்குவோம் செயல்திறன் வளர்ப்போம் நோக்கம் தெரிந்து கல்வி கற்போம்   இனமும் மொழியும் உடலும் உயிருமாம் என்பதை உணர்வோம்! எந்நாளும் வாழ்வோம்!   * * * * * 7 எவ்வழி நல்லவர் உலக வயலில் மனித விதைகளை நட்டு வைத்தோம்!   இன்று- விளைச்சலே மோசமென்றால் வயலிலே குற்ற மில்லை- சோடை விதைகளைச் சற்று தூக்கிப் பதம் பார்ப்போம்!   ஆணிவேர்க் காரணங்கள் அலசிக் களைவோம்! ஆவதும் தேய்வதும் அனைத்தும் நம் கையில்!   அரசியல் சேற்றை அகற்ற வேண்டின் அவரவர் அழுக்கை முதலில் அகற்றுங்கள்!   தன்னுடல் என்று தாமதம் செய்யாமல் புரையோடிப் போன புண்ணை அகற்றுங்கள்!   நாளை சமுதாயம் நல்ல பழம் சுவைக்க இன்று மரம் நடுவோம்! புதிய உலகம் செய்யப் புறப்படுவோம்! வாருங்கள்!   தியாகம் செய்யாமல் சமுதாயம் வளர்வதில்லை! சுயநலக் கடல்நீரில் தாகம் தீர்வதில்லை!   மக்களே வாருங்கள் மனம் திருந்தி வாருங்கள்! நம்மைச் செதுக்குவோம் நல்லதோர் உலகம் செய்ய!   * * * * * 8 தமிழா ஆங்கிலமா? அறிவா                             பட்டமா? மனப்படமா                     மனப்பாடமா? சிந்தனையா                     மந்தமதியா? செயலா                            சீரழிவா? ஆளுமையா                     அடிமைத்தனமா? தலைமையா                    கூலியா? ஆக்கமா                           அழிவா? தமிழா                               ஆங்கிலமா? தமிழா                                விழிப்பாய்! * * * * * 9 தரவட்டம் தருமா தகுந்த ஒரு தீர்வு? நேற்று –   வளமான நாடு -  உலகில் வாழத் தகுந்த நாடு நிலவளமும் நீர்வளமும் மலைவளமும் மரவளமும் கலைவளமும் கல்விவளமும் கொள்ளையரைச் சுண்டி ஈர்த்த செழிப்பான செல்வ வளமும்   என- பலவளமும் கொண்டிருந்த பண்டைய நாடு இது –   நாகரிகத் தொட்டிலில் நடை பயின்ற மனிதன் இங்கே ! நாளாந்தா முதல் சங்கம் வரை-கல்வி நாளும் வளர்ந்த நாடு   இன்று –   நாளொரு ஊழல் பொழுதொரு பயங்கரம் ஆறாக மது அகலாத வறுமை ஒழுக்கமில்லா வாழ்வு உள்ளத்தில் அச்சம் –   கொடுமைகள் வளர்ந்து கொந்தளிப்பில் நாடு சிக்கித் தவிக்கிறதே தீர்வுக்கு என்ன வழி   என்று - ஏங்கிக் கண்ணயர்ந்தேன் கனவினிலே அன்னை வந்தாள்!   “எல்லா வளமிருந்தும் எந்நாளும் கையேந்தும் நிலைக்கு  நீ வந்ததற்கு   நின் – அடிமைத்தனமொன்றே அடிப்படைக் காரணமாம்! அடிமைகளுக்கு – சொந்தமென்று எதுவுமில்லை   சொந்தமின்மையால் பாதுகாப்பில்லை பாதுகாப்பின்மையால் பயம் பயத்தால் வரும் சுயநலம் சுயநலம் ஏற்படுத்தும் பேராசை   பேராசையால் சேர்ந்த செல்வம் செல்வத்தைக் காப்பதில் சந்தேகம் சந்தேகத்தால் ஏற்படும் வெறுப்பு வெறுப்பால் விளையும் சண்டை   சண்டை ஏற்படுத்தும் பிரிவினை பிரிவினையால் அழியும் ஒற்றுமை ஒற்றுமையின்மையால் அந்நியர் ஆட்சி அந்நியர் ஆட்சியில் தொடரும் அவலம்!   வாணிகம் செய்ய வந்தவர்களிடம் வளநாட்டைக் கொடுத்துவிட்டு விடுதலை என்பதின் பொருள் புரியாமலேயே போராட்டம் நடந்தது!   நாம்- அந்நியர் ஆட்சியால் அடிமைகள் ஆகவில்லை – அடிமைகளாய் இருந்ததாலேயே அந்நியருக்கு ஆட்பட்டோம்   என்ற- உண்மை தெரியாமல் – விரட்டுங்கள் அந்நியரை விடுதலை கிடைக்கும் என்று – பொருள் புரியாமல் போராட்டம் நடந்தது!   விடுதலை நாள் வந்தது- அடிமை விலங்கின் சாவி அந்நியர் கைகளிலிருந்து அடிமைகளின் கைகளுக்கு வந்தது – ஆனால் – பூட்டு மட்டும் திறக்கவே இல்லை   அந்நியர் செய்ததையே – புதிய ஆட்சியாளர்களும் செய்தனர் –   அவர்கள் – கோடிகோடியாய்க் கொள்ளையடித்துத் தம் நாட்டில் குவித்தார்கள்.   இவர்களும்- கோடிகோடியாய்க் கொள்ளையடித்து சுவிஸ் வங்கியில் குவித்தார்கள் – அதற்கு வசதியாய் – அடிமைத்தனத்தை ஆழமாய் வளர்த்தார்கள் –   சிந்தனை செயலிழக்க தெருவெல்லாம் மது ஆறு – மதுவால் உடல் அழுகி மரண வாசலில் மக்கள் கூட்டம்!   இலவசப் புழுக்களுக்காக விலைவாசித் தூண்டிலை விழுங்கி ஏமாறும் மக்கள் –   ஒரு உரூபாய்க்கு அரிசி ஒன்பது உரூபாய்க்குத் தண்ணீர் –   சேவையாய் இருந்த மருத்துவமும் கல்வியும் வணிகமாய் மாறி –   கொள்ளையடிப்பவர்க்குக் கொட்டிக் கொடுக்கிறது –   சாராயம் காய்ச்சுவோர் – கல்வித் தந்தையானார்கள் – கல்வியாளர்கள் அவர்களின் அடிமைகள் ஆனார்கள். கல்லும் மணலும் கொள்ளை போனது! காடும் கழனியும் வறண்டு போனது! ஏரியும் குளமும் வீடுகளானால் – எரியும் அடுப்பில் எதைவைத்துச் சமைப்பது! கொள்ளையடிப்பதற்குக் கொட்டிக்கொடுத்தால் கோழி என்ன செய்யும் –   ஈமு என்றால் – ஈடில்லா முட்டாள் தனமா!   எத்தனை முறை ஏமாற்றினாலும் ஏமாறக் காத்திருக்கும் எத்தனை நல்லவர் நாம்! அரசியல்வாதிகள் முதல் ஆதினங்கள் வரை – அனைவருக்கும் ஒரே கொள்கை - ஊரை அடித்து உலையில் போடுவது! பசப்பு வார்த்தையால் போதை ஊட்டுவது!   இங்கே – வாய்ப்பில்லாதவர்களே கொள்ளையடிப்பதில்லை!   அவலங்கள் அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் – உன் அடிமைத்தனமும், அறியாமையும்   என்பதை அறிந்தால் விடிவு பிறக்கும் வாழ்வும் சிறக்கும்” !   என்று சொல்லி அன்னை மறைந்தாள்!   என்ன புரிகிறதா, என்னருமைத் தோழர்களே!   சிக்கலைக் கண்டறிந்து சீர்தூக்கி ஆராய்ந்து வேர்போன்ற காரணங்கள் தோண்டி அதற்கொப்ப தீர்வுகள் காணும் திறமுடை அறிவு பெற்று   அடிமைத்தனம் அகற்றும் அரிய வழி தேடிக் கூடி நாமுழைப்போம்! குறைகள் களைவோம்!   புதிதாகப் பிறப்போம் புதியதோர் உலகம் செய்ய!   * * * * * 10 மதிப்பை உயர்த்தும் மாண்பை அறிவோம்! ஏற்றங்கள் வேண்டின் – நிதி ஏராளம் தேவையில்லை- சிறு மாற்றங்கள் போதும் – மனிதன் மனம் மாற வேண்டும்!   ஆலின் விதை! கடலை அளக்கும் படகு! நெம்பும் கோலின் உயரம் ! யானை கொல்லும் எறும்பு!   இவை-   அளவில் சிறிது-ஆனால் ஆற்றலில் வலியது! உடைப்பதைப் பொறுத்தே கல் சல்லியாவதும் சிலையாவதும் –   இருக்கும்இடத்தில் இருந்தால் எச்சிலும் தேனாகும்! இடம்மாறிப் போனால் அது ஏளனப் பொருளாகி விடும்!   சுட்டபின் சாம்பல் – நெற்றிப் பட்டையாகலாம்! குப்பைத் தொட்டிக்கும் போகலாம்! செய்யும் முறையும் தேர்ந்த இடமும் பெய்யும் மழையும் பெயரும் காலமும்   தடமறிந்து செய்தால் இருட்டும் ஒளியாகும்! இடம் மாறிப் போனால் ஒளியும் இருண்டுவிடும்!   கட்டு கட்டாகக் கணக்கிலாச் செல்வமும் தொழுது பின் தொடரும் தொண்டர்தம் படையும்   மக்களை மிரட்டும் மாண்புயர் பதவியும் மனிதனின் மதிப்பை உயர்த்துவதில்லை!   அன்பும் அருளும் கொண்ட ஆர்வலர் தன்னலம் கருதாத் தகைமைச் சான்றோர்   மக்களின் நலனை மட்டுமே போற்றி மன்றம் ஏறித் தொண்டாற்றியவர்கள் ஒன்றாகக் கூடி ஒன்றிய நோக்கில் வென்று  முடிக்கும் வழியைக் காட்டிடும்   கருவிகள் தெரிந்து காரியம் ஆற்றி மதிப்பை உயர்த்தும் மாண்பை அறிவோம்!   * * * * * 11 வடம்பிடிக்கும் தோழர்கள் மிதிமிதிமிதி என வண்டியை மிதித்து திமுதிமுதிமு என பணிமனை அடைந்து சடசடசட என அட்டையைக் காட்டி விடுவிடுவிடுஎன பணியைத் தொடங்கி   கடகடகட என ஓடும் எந்திரம் அடிஅடிஅடி எனச் சுத்தியல் ஓசை விறுவிறு எனச் சுழலும் விசிறி மடமடமட என மாறும் கருவிகள்   சரசரசர என நகரும் சரக்குகள் படபடபட என நெஞ்சம் துடிக்க தடதடதட எனத் தரத்தை அளந்து சுடுசுடுசுடு என டீயைக் குடித்து   கிறுகிறுகிறு என ஓடிஆடி சுறுசுறுசுறு என வேலையை முடித்து கிடுகிடுகிடு என உற்பத்தி உயர்த்தி தரம் தரம் தரம் என்று சங்கம் முழங்கி   உழை உழை உழை என்று உழைக்கும் தோழர்கள்- அழுக்காகாமல் இருப்பதற்கா கறுப்பாய் இருக்கிறார்கள்! இல்லை - அழுக்கில் இருப்பதால் அனலில் சுடுவதால் கறுப்பாகிப் போனார்கள்!   இவர்கள் - அரங்கிற்கு வருமுன் ஆடையுடன் அறிவையும் அலமாரியில் பூட்டிவிட்டு   கைகளை மட்டும் கருவியாய்க் கருதிக் காலங்காலமாய்க் கருகி உழைத்தவர்கள்   இவர்களின் - கறுப்பு நிறம் மாற்றும் சிகப்பழகு களிம்புதான் தரவட்டம் என்னும் தாரக மந்திரம்!   காக்கி உடை களைந்து கண்ணுக்குக் குளிர்ச்சியாய் வண்ண உடையணிய வைத்ததும் தரவட்டம் - அறிவும் உண்டு என ஆளுமை பெற்று அலுவலர் – பணியாளர் இடைவெளி குறைத்து -   எந்திரங்களாய் இருந்தவர்கள் எண்ணங்களால் உயர்ந்து   தரத்திற்கு வேர் எனத் தன்மை பெற்றதும் தரவட்டம் என்னும் சக்கரம் சுழல்வதால்!   எனவே -   உயர்வுக்கு உதவி செய்ய ஊருக்கு நலம்புரிய எல்லாரும் வாழவே ஏற்றங்கள் காண்பதற்கு   தடைகள் கடந்து தடம்மாறிப் போகாமல் தொழில் சாலையில் ஓடி சாதனை செய்யவே   தரவட்டத் தேரினை வடம்பிடிக்க வாருங்கள்! வாழ்நாளெல்லாம் வளமுடன் வாழுங்கள்!   * * * * * 12 தோழர் தொழில் மூன்றெழுத்து                -  தொழில் செய்யும் களம் மூன்றெழுத்து                -  களத்தில் விளையும் பொருள் மூன்றெழுத்து                -  பொருளின் தேவை தரம் மூன்றெழுத்து                -  தரத்தில் ஏற்படும் பழுது மூன்றெழுத்து                -  பழுது நீக்கும் ஆய்வு மூன்றெழுத்து                -  ஆய்வுக்குத் தேவையாம் கருவி’ மூன்றெழுத்து                -  கருவிகளின் பயனாம் ‘தீர்வு’ மூன்றெழுத்து                -  தீர்வுக்குப் பின்வரும் லாபம் மூன்றெழுத்து                -  லாபம் பெற்றுத்தரும் வெற்றி மூன்றெழுத்து                -  வெற்றி பெற்றுத்தரும் பரிசு மூன்றெழுத்து                -  பரிசு பெறக் காத்திருக்கும் தோழர் மூன்றெழுத்து * * * * * 13 வள்ளுவன் எனும் மேலாண்மை வித்தகன் வளங்கள் அல்ல- நல்ல மக்களே நாட்டை வளர்ப்பது!   பண நோட்டுக்களின் மேல் படுத்துக்கொண்டு பிச்சை கேட்பதைப் போல்-   சந்தனக் காடெரித்துக் கரியாக்கி விற்பதைப்போல்-   நல்ல வளங்கள் நனி சிறந்திருந்தும் வளங்களின் பயனறியா வறிய மக்களால் விளங்குமா நாடு!   என்பதை யறிந்தே எழுசீர் நூலோன் மக்களை ஆக்கும் மறையைச் செய்தான்!   அறம் பொருள் இன்பமாய் அதிகாரம் செய்தான்!   அறம் எனப்படுவது தனிமனித ஒழுக்கம்! பொருள் எனப்படுவது சமுதாய ஒழுக்கம்! அன்பு அருள் அடக்கம் வளர்த்து உள்ளம் உயர்ந்து ஒழுக்கம் பேணி   துன்பம் நீக்கும் சூட்சுமம் அ றிந்து இன்பமாய் வாழ இயம்புவது அறமாம்!   நாளுக்கு இரண்டுமுறை நல்ல காலம் காட்டும் ஓடாத கடிகாரம்!   ஆனால் - வாளாவிருக்கும் நல்ல மனிதனால் நன்மைகள் எதுவும் நடப்பது இல்லை.   கூடுவது தொடக்கம் கூடி இருப்பது வெற்றி கூடிச் செயலாற்றுவது வளர்ச்சி!   செயலொன்றே நாட்டைச் செம்மைப்படுத்தும்!   எனவே – பழகும் பாங்கறிந்து பலருடன் சேர்ந்து சுயநலம் நீக்கிச் சோர்விலாது நாளும் நல்லமனிதனை நயம்பட ஆக்கும் பொருட்பால் என்னும் பொன்மணிப் பெட்டகம்.   மலை ஒரு கடவுள் பெய்யும் மழை ஒரு கடவுள் கலை ஒரு கடவுள் வீசும் காற்றும் ஒரு கடவுள் -எனக்   கருத்துக் கெட்டா காட்சிகளுக்கு எல்லாம் கடவுள் என்று காரணம் கூறி   ஏன் என்று கேட்டு ஏற்றம் காணா சிந்திக்க மறந்த சமுதாய மாந்தர்க்கு   எப்பொருள் யார் சொன்னாலும் – அது எத்தன்மைத் தாயினும் மெய்ப்பொருள் காண் என்ற அறிவியலாளன்!   தெய்வத்தாலாகா தெனினும் முயற்சி கூலிதரும் என்ற பகுத்தறிவாளன்! அறிவுடையாரே எல்லாம் உடையார் என்று – கல்விக் கண் திறந்த கல்வியாளன்!   வேலன்று வெற்றி தருவது! தன் வலி அறிந்து குறைகள் களைந்து காலம் இடம் செயல் தெளிந்து-   சுற்றம் சூழ சேர்ந்து வினையாடினால் வெற்றிமாலைகள் விழுவது உறுதி என்றும்-   ஏருழுது எருவிட்டுக் களைபிடுங்கிக் காப்பாற்றி வேளாண்மை செய்யும் விவரங்ளோடு   ஆளுமைத் தத்துவங்கள் அன்றைக்கே சொன்ன மேலாண்மை வித்தகன்!   பசித்தபின் புசியென்ற பக்குவம் கூறி மருந்தின்றி நோய்க்கு மருத்துவம் சொன்னவன்! வருமுன் காக்கும் வழியை அறிந்தவன்!   மலரினும் மெல்லிது காமம் என்று காதலைப் பாடிய கவிஞர் கோமான்!   ஒப்புயர்வு இல்லா ஓங்கு புகழ் வள்ளுவன் வழியைப் போற்றி வளமுடன் வாழ்வோம்!   * * * * * 14 ஆசிரியன் கிண்டிவிட்டு அறிவுதனைக் கிளைக்க வைத்தவன் நீ! வண்டியிட்ட தடம் போல் வழியைக் காட்டியவன் நீ!   மண்டிய அறியாமை மயக்கம் தொலைத்தவன் நீ! கண்டிப்பும் அன்பும் கலந்து கொடுத்தவன் நீ!   முகப்பார்க்கு எண்ணம் போல் முன்நிற்கும் மலரும் நீ! முகம் பார்த்து மயங்கா முடிவுகள் செய்பவன் நீ!   வகுப்பறையில் மாணவர்க்கு வற்றாத வள்ளல் நீ! உகுப்பார்க்குச் சுவையாகும் ஊர் நடுவே மரமும் நீ!   கடைவிரித்து விளக்கைக் கையில் வைத்து அழைத்துத் தடையின்றிப் பல்லறிவும் தாராளமாய்த் தந்தவன் நீ! முறையான கல்விதனை முயன்று முயன்று நாள்தோறும் குறையாமல் அள்ளி அள்ளிக் கொடுத்துச் சிறந்தவன் நீ!   கல்விக் களம் கண்டு காலத்தின் அழியாத செல்வக் களஞ்சியம் நீ! செகம் புகழும் ஒளியும் நீ!   பல்லோரும் போற்றப் பாரில் உயர்ந்தவன் நீ! இல்லாரும் ஏற்றும் எம்மான் உறவு நீயே!   * * * * * 15 மீனாட்சி சுந்தரம் மீட்டிய நரம்புகள் ...... எங்கள் ஊர் - கருப்பு மலை கதிர் விளையும் வயல்கள் நீர் வழியும் கிணறுகள் நீண்ட தெருக்கள்- நாடாவின் ஓசை   கூழும் தொக்கும் கூட்டிச் சுவைக்கவே பொழுது புலரும் பொதட்டூர் பேட்டை   எங்கள் வாழ்க்கை -   எருமை மாடுகள் ஏர் கலப்பைகள் வறுமை உழுத வாழ்க்கை வயல்கள்   நெசவு நாடாபோல் நாளும் ஓடும் பசைபோட்ட பாவுபோல் சுருட்டிய வாழ்க்கை - எங்கள் பள்ளி -   பாவோடிய வீதிகளில் பசையின் ஈரம் பாதம் படாமல் பள்ளிக்குச் சென்றவர்கள்   பள்ளி இறுதிவரை படிக்காமல் நின்றவர்கள் படிகள் பல ஏறி பட்டம் பெற்றவர்கள்   என்ற நிலைமாற்றி ஏற்றம் பல காண மீட்பராக வந்தவர் மீனாட்சி சுந்தரம்!   ஊருக்குள் வெளிச்சம் மின்சாரம் வந்ததால் - பல வீடுகளில் வெளிச்சம் மீனாட்சி சுந்தரம் வந்ததால் -   கடனே என்று கல்வியைக் கருதாமல் கருத்துடன் கற்பித்த தலைமை யாசிரியர் -   வந்த ஊரே சொந்த ஊராய் வாழ்ந்து காட்டிய கடமை வள்ளல் !   இவரால் - உயர்வு பெற்றவர்கள் ஊரில் பலபேர்! யாரைச் சொல்ல   பேரைச் சொன்னால் நேரம் செல்லும்.   ஆசிரியர் பலபேர் அரசியலில் சிலபேர் பொறியியல் மருத்துவம் பட்டம் பெற்றவர்-   வழக்கு மன்றங்களில் வாதுகள் புரிவோர் - சமயக் குரவர்கள் சான்றோர் பலர் என யாரைச் சொல்ல !   பேரைச் சொன்னால் நேரம் செல்லும்!   இவரால் -   மாணவர் மட்டுமா மாண்புயர்வு பெற்றார்கள்! கடவுளர் கூட காட்சிக்கு வந்தனர்!   சிவனைக் கேளுங்கள்! சேதிகள் சொல்லுவார்! மண்ணுக்குள் கிடந்த மத்தூர் நாயகி கண்ணுக்குள் விரிந்த கதையைக் கூறுவாள் !   ஓய்வுக்குப் பின்னரிவர் உள்ளத்தில் பல நாளாய்க் காய்ந்துக் கிடந்த கருத்து விதை ஒன்று   மாணவர் மனமெனும் மண்ணில் விழுந்து முளைக்கத் தொடங்கும் ஆலமாய்  ஓர் அறக்கட்டளை! உயர்வுக்கு உதவி செய்ய ஊருக்கு நலம்புரிய வேரில்லாச் செடிகளுக்கு தேரீந்த பாரிபோல்   ஆளில்லா ஏழைகளும் ஏற்றங்கள் காண்பதற்கு நன்றி உணர்வோடு நயந்து துணை செய்ய   இன்று புறப்படும் இந்தத் தேரின் வடம் பிடித்திழுக்க வள்ளள்களே வாருங்கள்! * * * * * 16 மா.கி. இரமணன் மாண்புடன் வாழ்க! உள்ளத்தின் உயர்வால்                 உண்மை அன்பால் கள்ளமில்லா நட்பால்                கருணை மொழியால் அள்ள அள்ளக் குறையா                அமுதத் தமிழால் துள்ளும் நடையால்                தூய அறிவால் ஆன்மீகம் தொட்டு                அறிவியில் வரைக்கும்   ஊன்றிப் படித்து                உரைக்கும் பொழிவால் கானம் படிக்கும்                கவிதைக் குயிலாய் மோனப் புன்னகை                மொய்க்கும் முகத்தில் மீசையும் கூட                மாட்சிமை கூட்ட ஆசிரியப் பணியில்                அறிவு ஊட்டி மானுடம் வளர்த்த                மா.கி. இரமணன் மாண்புடன் வாழ்க                மலைபோல் நலமுடன்!   * * * * * 17 மாணவர்கள் இதோ வருகிறார்கள் எங்கள் மாணவர்கள் உங்கள் கதவுகளை உடனே திறந்து வையுங்கள்!   இவர்கள் பொறியியல் கடலில் ஆர்வமாய்க் கடைந்து அறிவு அமிழ்தம் அருந்தி வருகிறார்கள்!   இவர்கள்- முற்றுகையிட்ட நாள் முதலாய் முயன்று முயன்று ஒவ்வொன்றாய் திங்கள் தோறும் திரண்டு வரும் தேர்வுப் படைகளைச் சந்தித்து வெற்றி கொண்ட வீரர்கள்!   இவர்கள்- வரைந்த கோடுகளை வகுத்துப் பார்த்தால் பருவச் சிக்கல்களின் பயணம் புரியும்!   இவர்கள்- அன்பைப் பற்றவைத்து வார்த்த மனத்தோடு புதியன தேடும் புலமைக் கூர்மையர்!   இதோ வருகிறார்கள்- தொழிற்சாலைகளே! உங்கள் கதவுகளை உடனே திறந்து வையுங்கள்!   * * * * * 18 அறிஞன் பட்டங்கள் உடுத்திப் பதவிப் பூச்சூடி ஆசைப் பொட்டிட்டு அதிகார மையிட்டு   ஆளை வளைக்கும் அறிவு வலை வீசி தன்மான முந்தானை தாராளமாய் விரித்து   சுயநல அரிப்பே சொர்க்கம் என்றெண்ணிச் சமுதாய வீதியில் சதிராடும் வேசிகளுக்கு   அறிஞர் என்று ஒரு அழகிய பட்டமுண்டு!   இவர்கள்- ஆமாம் போட வென்றே அவதரித்த தாளங்கள் அதிகாரக் கொல்லையில் காய்ந்த மாடுகள்! * * * * * 19 ஆயிரம் அறிஞர்கள் வேண்டாம்! நாகசாகி நெருப்புப் பாலைக் குடித்த பிறகும் இந்தப் பூனைகளுக்கு இன்னும் புத்திவரவில்லை!   அழிவும் அச்சமும் ஏவு கணைகளாய்க் கண்முன்னே நிற்கின்றன!   இருக்கின்ற ஒரு நோய்க்கு மருந்தைத் தேடி இல்லாத பல நோய்கள் ஏற்படுத்தும் விளையாட்டா விஞ்ஞானம்!   வேண்டவே வேண்டாம்! சாண் ஏறி முழம் சறுக்கும் அவலம் வேண்டாம்!   அணு அணுவாய் நகர்ந்தாலும் அன்பும் அறிவும் அமைதியும் இன்பமும் ஆழமாய் வேரூன்றி ஆலமாய்ப் பரவிட   ஒரே ஒரு காந்தி போதும் ஆயிரம் அறிஞர்கள் வேண்டாம்! * * * * * 20 ஓ பெண்ணே! ஓ! பெண்ணே! உன் மேனி தங்கம் தான் நகைக்காகவே உருக்கிப் பார்க்கிறார்கள்   காரிகையே நீ கரியாகிப் போவதேன்?   ஒளிமயமான எதிர்காலத்தை உடனே காண மண்ணெண்ணெய்க் குளியல் மாமியார் தயவில்!   மின்னியல் பொறியாளர்களே! நீரில்லை என்று- நெய்வேலி நிலக்கரி இல்லையென்று ஏங்கியிருக்காதீர்!   இதோ- உயிருள்ள ஒரு யோசனை   வரதட்சணைக் காட்டில் வற்றாத எரிபொருள் இங்கே- வண்டி வண்டியாய்க் கிடைக்கிறதே!   * * * * * 21 மொழி வாழ்க! மானுடம் இன்றேல்               மொழிகள் இல்லை! மொழிகள் இன்றேல்              தொடர்புகள் இல்லை! தொடர்புகள் இன்றேல்              அறிவு இல்லை! அறிவு இன்றேல்              வளர்ச்சி இல்லை! வளர்ச்சி இன்றேல்              மானுடம் இல்லை! மானுடம் இன்றேல்              மொழிகள் இல்லை! * * * * * 22 செல்லம் ! மலரின் மென்மை              மதியின் குளிர்மை   தளர்நடை பயிலும்              தண்டையின் இனிமை   கிள்ளைப் பேச்சு              கிறங்கும் கண்கள்   கொள்ளை அழகு              கொடையாய்க் கொண்ட   எங்கள் செல்லம்              ஏற்றமுற ஏற்கும்   மங்களப் பிறந்தநாள்              மாண்புற விரும்பி   சுற்றமும் நட்பும் சூழ வந்து              வற்றா வளம்பெற வாழ்த்த வருகவே ! * * * * * 23 வணங்கா மண் தலைவன் இல்லாமல் தத்தளிக்கும் தமிழகம் போலவே வணங்கா மண் கப்பலும் கடலில் தவிக்கிறது. எங்கே இருக்கிறாய் எங்கள் தலைவனே எங்களைக் கரை சேர்க்க எப்பொழுது நீ வருவாய். * * * * * 24 எப்படி? ஈழத்தில் தானே குண்டு போட்டார்கள் ஆனால்- தமிழகத்தில்- தமிழினத் தலைவர்களும் கவி அரசர்களும் தமிழ்ச் சான்றோர்களும் தமிழ்க் காவலர்களும் செத்துப் போனார்களே அது எப்படி? * * * * * 25 தை வருக அன்புடை நல் நெஞ்சத்தை ஆசையின் அடக்கத்தை இன்ப இல்லத்தை ஈழத்தின் வீரத்தை உற்றநல் குழுமத்தை ஊறிலா உடல்நலத்தை என்றுமுள வளத்தை ஏறுபுகழ் செல்வத்தை ஓப்புரவு நீங்காத ஓங்கிவளர் ஞாலத்தை ஔவையின் ஞானத்தை எமக்களிக்க வருக நீ தை * * * * * 26 ஏக்கம் பழைய சோறும் பச்சை வெங்காயமும் கம்பங் களியும் கருவாட்டுக் குழம்பும் நெல்லு சோறும் நெத்திலிக் குழம்பும் தின்ன நாக்கு தினமும் ஏங்கும். * * * * * 27 உடனே தேவை நீதியைக் காக்கும் நீதிபதிகள் பேராசையில்லாக் கல்வியாளர்கள் சோரம் போகாத அதிகாரிகள் சிந்திக்கும் நல்ல மக்கள் உடனே தேவை! விவரங்களுக்கு அணுகவும் இந்தியா!   * * * * * 1 முனைவர் ப.அர.நக்கீரன் B.E.M.Sc.(Engg).Ph.D. [backpageofbook copy]