[] []   கீதா கல்யாணமே வைபோகமே! - சுயசரிதை     கீதா சாம்பசிவம் geethasmbsvm6@gmail.com      அட்டைப்படம் - மின்னூலாக்கம் - த.சீனிவாசன் - tshrinivasan@gmail.com    மின்னூல் வெளியீடு - FreeTamilEbooks.com, கணியம் அறக்கட்டளை   உரிமை - Creative Commons Attribution Non Commercial 4.0 international license யாவரும் படிக்கலாம். பகிரலாம்.   பொருளடக்கம் கீதா கல்யாணமே வைபோகமே! - சுயசரிதை 2  கீதா கல்யாணமே வைபோகமே! 6  கல்யாணமாம் கல்யாணம்! பயமுறுத்திய தோடு! 9  கல்யாணமாம் கல்யாணம்! பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்! 13  கல்யாணமாம், கல்யாணம்! தொடர்ச்சி 2 17  கல்யாணமாம், கல்யாணம்! தொடர்ச்சி 3 21  கல்யாணமாம், கல்யாணம்! தொடர்ச்சி 4 24  கல்யாணமாம், கல்யாணம்! தொடர்ச்சி 5 31  கல்யாணமாம், கல்யாணம்! தொடர்ச்சி 6 34  கல்யாணமாம், கல்யாணம்! தொடர்ச்சி 7 37  கல்யாணமாம், கல்யாணம்! கல்யாணத்தில் கோல கலாட்டா! 41  போர்க்கொடிக்கு பதில் கல்யாணமாம், கல்யாணம் 43  சப்தபதி என்றால் என்ன? ஒரு விளக்கம்! 45  மாப்பிள்ளை வந்தார், மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியிலே! 48  கன்னூஞ்சலாடினாள் 51  கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்! 55  நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க! 59  கல்யாணமாம், கல்யாணம்! வாழ நினைத்தால் வாழலாம்! 64  கல்யாணமாம் கல்யாணம்! ஆஹா, மதுரைக்கு வந்த சோதனை இதுவா! 67  கல்யாணமாம், கல்யாணம்! உலை மட்டுமா கொதித்தது? 71  கல்யாணமாம் கல்யாணம்! நான் எழுதுவது கடிதமல்ல; 73  கல்யாணமாம் கல்யாணம்! வேலைக்குப்போறதா வேண்டாமா? 76  கல்யாணமாம் கல்யாணம்! அம்பத்தூருக்கு மாறினோம்! 79  அப்பாடா! "ஜில்"லைவிடச் சீக்கிரமா முடிச்சுட்டேனே! :P 82  FreeTamilEbooks.com 85  கணியம் அறக்கட்டளை 92  தொலை நோக்கு – Vision 92  பணி இலக்கு  – Mission 92  தற்போதைய செயல்கள் 92  கட்டற்ற மென்பொருட்கள் 93  அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள் 93  வெளிப்படைத்தன்மை 94  நன்கொடை 95  UPI செயலிகளுக்கான QR Code 95  கீதா கல்யாணமே வைபோகமே! ம்ம்ம்ம்ம், இந்த கீதா என்ற பெயர் ரொம்பவே பொதுவாய்ப் புழங்கும் பெயர் என்றாலும் எங்க வீட்டில் அம்மா வழியிலும், அப்பா வழியிலும் இன்று வரை நான் ஒருத்திதான் கீதா. கல்யாணம் ஆகி வந்ததும், இங்கே சொந்தங்களிலே ஒன்றிரண்டு கீதாக்கள் இருக்கின்றனர். வலை உலகுக்கு வந்தப்போ கீத்ஸ் னு ஒருத்தர் எழுதிட்டு இருந்தார். அவங்க அப்போ நிறைமாசக் கர்ப்பம் என்பதால் அதிகமாய் இணையம் வரமுடியலை. அப்புறமாக் குழந்தை பிறந்துக் கொஞ்ச நாட்கள் எழுதினாங்களோ என்னமோ தெரியலை. ஆனால் இணையத்திலும் சில காலம் செங்கோல் செலுத்திட்டு இருந்தேன். இப்போ இரண்டு வருஷமா கீதா அசல், கீதா சந்தானம், கீதா 6 என்று சிலர் வந்திருக்காங்க. இப்போ சீதா லக்ஷ்மியைக் கவனிப்போமா??   பள்ளியிலே என் பெயரை சீதாலக்ஷ்மி என்று கொடுத்தது செல்லாமல் போச்சுனு சொல்லிட்டேன் இல்லையா?? தாத்தாக்களைத் தவிர வேறே யாருமே சீதானு கூப்பிட்டதில்லை. அம்மாவுக்கு செண்டிமெண்ட். சீதை கஷ்டப் பட்டாளே அது மாதிரிக் கஷ்டப்படணும்னு. அதோட என்னோட இந்தப் பெயர் கொண்ட பாட்டியும் கஷ்டப் பட்டிருக்காங்க. பெரியவங்க பெயர் என்ற காரணமும் சேர்ந்து கொள்ளவே நிரந்தரமாய் கீதாவானேன். ஆனால் கல்யாணத்திற்குப் பையர் பார்க்கையிலே ஜாதகத்திலே கீதா என்ற பெயரே கொடுக்கலை. சீதாலக்ஷ்மி என்ற பெயர்தான் இருந்தது. என்னோட கணவர் வீட்டிலே அவருடைய கொள்ளுப்பாட்டி பெயர் சீதா லக்ஷ்மி. கொள்ளுத்தாத்தா பெயர் சாம்பசிவம். ரெண்டு பேரும் இப்போ நாங்க ரெண்டு பேரும் எப்படி எல்லாத்திலேயும் காண்ட்ராஸ்டா இருக்கோமோ அதே போல் இருப்பாங்களாம். ஆனால் ரெண்டு பேருமே நல்ல செல்வாக்கோட இருந்திருக்காங்க. சாம்பசிவம் தாத்தா நாச்சியார் கோயிலின் பெருமாள் கோயில், உப்பிலியப்பன் கோயில் போன்ற கோயில்களில் தர்மகர்த்தாவாக (அறங்காவலர்) இருந்திருக்கிறார். அதோடு உள்ளூரின் பெருமாள் கோயிலும் சேர்ந்து கொண்டது. (இந்தப் பெருமாளுக்குத் தான்  திருப்பணி முடிந்து 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கும்பாபிஷேஹமும் நடந்தது.   கொள்ளுத்தாத்தா பெயரைத் தான் என் கணவருக்கு வைச்சிருக்காங்க. ஆகவே எங்களுக்குக் கல்யாணத்தின் போது ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது முதல்லே என்னோட பெயரைப் பார்த்திருக்காங்க. அதிலேயே அவங்க மிகவும் சந்தோஷமாயிட்டாங்களாம். ஆஹா, இந்த மாதிரிப் பெயர்ப் பொருத்தம் கிடைக்கறது ரொம்பவே அரிதுனு நினைச்சு ஜாதகத்தைக் காட்டிஇருக்காங்க. அந்த ஊரிலே இரண்டு, மூன்று பேர் ஜோசியம் பார்ப்பாங்க. எல்லாருமே ஒரே வாக்கா இவங்க பூர்வ ஜன்மத்திலேயும் தம்பதிகள், அதனாலே இவங்களுக்குள்ளே தான் கல்யாணம் நடக்கும் அப்படினு சொல்லி இருக்காங்க. உடனே எங்க வீட்டுக்கும் ஜாதகம் வந்தது. எங்க வீட்டிலே இந்தப்பெயர்ப் பொருத்தம் பத்தி எல்லாம் அப்போத் தெரியாது. மாப்பிள்ளை வீட்டுக்கு என் ஜாதகம் எங்க சித்தப்பா மூலமாப் போச்சு. உடனே அவங்க வீட்டிலே இருந்து என் சித்தப்பா மூலமாவே இவர் ஜாதகம் வந்தது. மாப்பிள்ளை வீட்டில் பொருத்தம் பார்த்தாச்சு என்பதும் ஜாதகம் வந்தப்போ எங்களுக்குத் தெரியாது. அப்போல்லாம் மாப்பிள்ளை வீட்டில் அவ்வளவு சுலபமாப் பெண் வீட்டில் வலுவிலே போய்ச் சொல்ல மாட்டாங்க.    எங்க அப்பாவும் ஜாதகம் பார்ப்பதில் நம்பிக்கை உள்ளவரே. ஜாதகம் பார்த்துச் சொல்லும் ஜோசியரும் உள்ளதை உள்ளபடியே சொல்லக் கூடியவர். அப்படி ஒருவரை அவருக்குப் பின் இன்று வரை நாங்க கண்டதில்லை. ஜோசியரும் பார்த்துட்டு , என் அப்பாவிடம் இந்த வரன் தான் முடியும். இவங்க போன ஜன்மத்துத் தம்பதிகள், இந்தப் பிறவியிலும் சேரப் போறாங்கனு சொல்லி இருக்கார். என் அப்பாவுக்கு முதல் ஆக்ஷேபம் மாப்பிள்ளை தஞ்சாவூர்க்காரர் என்பது, இரண்டாவது ஆக்ஷேபம் அப்போ அவர் புனாவில் இருந்தார்.  ராணுவக் கணக்குத் துறை என்பதும் தெரியாது. ராணுவம், சீருடை அணிந்து செல்லும் வேலை என்றே நினைத்தோம். அவ்வளவு தொலைவெல்லாம் பெண்ணை அனுப்ப முடியாது என்று அப்பாவுக்கு இஷ்டமில்லை. அதற்கு முன்னால் டெல்லியில் இருந்து ஒரு வரன் வந்ததை இதே காரணத்தைச் சொல்லி அப்பா நிராகரித்திருந்தார். ஆகவே அக்கம்பக்கம் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊர்களான திருச்சி, திருநெல்வேலி போன்ற இடங்களில் இருக்கும் பையர்களாகவே பார்த்துக்கொண்டிருந்தார். அப்படி ஒன்றிரண்டு வரவும் வந்தது. அவங்களும் போட்டோவைப் பார்த்துட்டு நேரிலே பேசறதுக்கும் வரச் சொல்லி இருந்தாங்க. ஆகவே அப்பாவுக்குத் திருச்சி வரன் ஒன்று தான் முடிக்க எண்ணம். அப்பா திருச்சிக்குப் போனார். அப்போல்லாம் பெண் வீட்டில் நேரே பையர் வீட்டுக்குப் போய் செய்முறைகள், சீர், செனத்திகள் என்று எல்லாத்தையும் பேசி முடிச்சுட்டு அப்புறமே பெண் பார்க்க வருவார்கள். பெண் பார்த்துவிட்டுச் சீரில் குறைகள் என்று பெண்ணை விடவேண்டாம்னு எண்ணமோ என்னமோ! எல்லாம் பேசி முடிச்சாலே பாதிக் கல்யாணம் முடிஞ்சாப்பலனு சொல்வாங்க. அப்படியும் சிலர் வீடுகளிலே பெண்பார்த்துப் பிடிச்சும், சீர் செனத்திகள் பிடிச்சும் வேறு ஏதேனும் காரணங்களால் நடக்காமலும் போனது உண்டு. ஆனால் எங்க ஜோசியரோ அப்பாவிடம் இதெல்லாம் நடக்காது. உங்க பெண்ணுக்கு அந்தப் பையர் தான். நீங்க பண்ணி வைக்கலைனா அந்தப் பையரே வந்து பண்ணிக்கொண்டு போயிடுவார்னு அடிச்சுச் சொல்லிட்டார். ஆனாலும் அப்பா கேட்கவில்லை. பையர் எங்கேயோ புனாவில் இருக்கிறார். அவர் வந்து பெண்ணைப் பார்த்துப் பிடிச்சு, சம்பந்தம் பேசினு எவ்வளவோ இருக்கு. கையிலே வெண்ணெய் இருக்கு, நெய்க்கு அலைவானேன்னு திருச்சி கிளம்பினார்.   கல்யாணமாம் கல்யாணம்! பயமுறுத்திய தோடு! []   திருச்சி மாப்பிள்ளை வீட்டுக்கு ஒரே பையர். ஏதோ கெமிக்கல் கம்பனி?? சரியா நினைவில் இல்லை. திருச்சிக்குள்ளேயோ அல்லது சுற்றுவட்டாரத்திலோ வேலை. தில்லை நகரில் வீடு. பையரின் அப்பா சங்கரமடத்தில் மிகவும் ஈடுபாடு. இந்த ஜாதகம் திருச்சியிலே பல்லாண்டுகளாய் இருந்த என்னோட ஒண்ணு விட்ட பெரியப்பா ஒருத்தர் மூலமா வந்தது. அவங்க ரொம்பவே வற்புறுத்தினதோடு இல்லாமல் குழந்தையை, (ஹிஹிஹி, நான் தான்) நாங்க ரெண்டு பேரும் கிட்ட இருந்து கண்ணும், கருத்துமாக் கவனிச்சுப்போம்னு உறுதிமொழி வேறே. அப்பா திருச்சியில் அவங்க வீட்டிலே போய் இறங்கி அந்தப் பெரியப்பாவையும் அழைத்துக்கொண்டு பையர் வீட்டுக்குப் போயிருக்கார். பையரின் அப்பா க்ஷேமலாபங்கள் விசாரிச்சு முடிஞ்சதும் நேரடியாக விஷயத்துக்கு வந்துட்டார். பெண்ணுக்கு வைரத் தோடு போடுவீங்களானு கேட்டிருக்கார். அது வரைக்கும் அப்பா இதை நினைச்சே பார்க்கலை. என்றாலும் சமாளிச்சுட்டுப் போடறேன்னு சொல்லி இருக்கார். வைர மூக்குத்தி? அது ஏற்கெனவே இருக்கு. இது அப்பா.  ம்ம்ம்ம்ம்ம், தோடு வாங்கியாச்சா? வாங்கணுமா?? இனிமேல் தான் வாங்கணும், இப்போத் தானே உங்க அபிப்பிராயம் தெரிஞ்சது. "அப்பா. நான் சொல்ற இடத்திலே, நாங்க காட்டற வைரக்கற்களை வாங்கி எங்க தட்டான் கிட்டேத்தான் கட்டணும். நீங்க வாங்கறதெல்லாம் சரிப்படாது. தோடு எங்க பொண்ணுதானே போட்டுக்கப் போறா? அவளுக்கும் பிடிக்கணுமே! நாங்க சொல்ற தோட்டைத் தான் அவ போட்டுக்கணும் அப்பாவுக்கு அஸ்தியில் ஜுரம் கண்டிருக்கும் நிச்சயமா. நாம அப்போவே புரட்சிப் பெண்ணில் ஒருத்தியாகத் தீவிரமாக இருந்தோமே! தினமும் ஏதானும் ஒரு விஷயத்துக்கு எனக்கும் அப்பாவுக்கும் யுத்தம் வரும். நாளைக்குக் கல்யாணமாகிப்புருஷன் வீடு போனால் தெரியும், இந்த அப்பாவோட அருமை!" தெரியட்டும், தெரியட்டும், அவங்க வீட்டிலும் பொண்ணுங்க இல்லாமலா இருக்கும்! கூடப் பிறந்தவங்களோட சண்டை போடாமலா இருப்பாங்க? விஷயம் வேறே ஒண்ணும் இருக்காது. அண்ணா அப்போவே ஹோசூரில் வேலைக்குப் போய்விட்டார். ஆகையால் இருந்தது தம்பியும் நானும் மட்டும் தான். தம்பிக்குத் தட்டலம்பிப் போட்டிருக்க மாட்டேன். அல்லது சாப்பிட்ட தட்டை அவரே அலம்பட்டும்னு சொல்லி இருப்பேன். இப்படி ஏதாவது ஒண்ணு. அதே தம்பியும் நானும், அவருக்குத் தமிழ்க் கட்டுரை எழுதவும், படம் வரையவும் கூட்டுச் சேர்ந்துப்போம். அதனாலே இதை எல்லாம் லக்ஷியமே பண்ணறதில்லை. ஆனால் அப்பாவுக்குத் தம்பியை நான் படிக்கவிடாமல் கெடுக்கிறேன்னு ஒரு எண்ணம். அதோட அவருக்குத் தமிழில் அவ்வளவா எழுத வராதுங்கறதாலே நான் எழுதிக் கொடுப்பேன். அதுவும் பிடிக்காது. ஆகையால் எப்போவும் அப்பாவுக்கும், எனக்கும் ஏழாம் பொருத்தம் தான். ஆனால் அம்மா ஏதானும் செய்து கொடும்மானு கேட்டாலும், அலக்ஷியமாக போம்மா, நான் படிக்கணும் தான்! ஹிஹிஹி, அப்போப் படிச்சுட்டு இருந்தோமுல்ல! அம்மாவும் ரொம்பச் சொல்ல மாட்டாங்க தான். ஏன்னா அம்மா சித்திகளின் பிரசவத்திற்கு உதவிக்குப் போறச்சே எல்லாம் ஸ்கூலுக்குப் போறச்சே கூட சமையலையும் முடிச்சுட்டுத் தான் போயிருக்கேன். அதனால் பொண்ணுக்கு வேலை தெரியும், நம்ம கிட்ட சலுகைனு புரியும். ஆனால் அப்பாவுக்கோ அவர் சொன்னால் உடனே செய்தாகணும். அப்படி இருக்கையில் போற இடத்திலும் மாமனார் இப்படி இருந்தால்???? அப்பாவின் கண்ணெதிரே காட்சிகள் ஓடி இருக்கும்னு நினைக்கிறேன். ஆனால் உள்ளூர அப்பாவுக்கே பிடிக்கவும் இல்லை. அடுத்து நகைகள் பத்திப் பேச்சு. நகைகள் எல்லாம் பண்ணி வச்சாச்சு, அவள் ஸ்கூல் முடிக்கிறதுக்கு முன்னாடியே பண்ணிட்டேன். அப்பா! அதெல்லாம் ஒத்துக்க முடியாது. இப்போ என்ன வயசு உங்க பொண்ணுக்கு? பதினெட்டு முடிஞ்சு பத்தொன்பதா?? ஹும், நாலு வருஷத்துக்கு மேல் இருக்குமே பண்ணி. எல்லாம் பழசாப் போயிருக்கும் பாலிஷ் பண்ணிடறேன். எங்க கடைக்காரர்ட்டே சொன்னால் வைரப் பாலிஷ் கூடக் கொடுத்துத் தருவார். அதெல்லாம் வேண்டாம்னேன். நீங்க அந்த நகைகளை என் கிட்டேக் கொடுங்க. நான் எல்லாத்தையும் எங்களுக்குப் பிடிச்சாப்பல மாத்திடறேன்.  தூக்கிவாரிப் போட்ட அப்பா அப்போ புடைவைகள், சோமன்கள் எல்லாம்?? எல்லாத்துக்கும் பணத்தைக் கொடுங்க, நாங்க இங்கே திருச்சியிலேயே வாங்கிடறோம். அப்பாவுக்குச் சுரத்தே இல்லை. இப்போவே இவ்வளவு கெடுபிடின்னா அப்புறமா என்னென்ன கேட்பாரோ? அப்புறமா வருஷாந்திரச் சீரெல்லாம்??? அததுக்கு யாருக்கு என்ன செய்யணுமோ ஒரு லிஸ்ட் கொடுக்கிறேன். அதுப்படி செய்யணும். சரி. அப்பா திரும்பிவிட்டார். அங்கே எதுவும் பேசாமல் வந்ததே பெரிய விஷயம், சாதாரணமாய்ப் படபடவெனப் பொரியும் சுபாவம் கொண்டவர் பெண்ணுக்குக் கல்யாணம் என்பதால் பொறுத்துக்கொண்டாரோ என்னமோ, தெரியலை. அன்னிக்கே கிளம்பி மதுரைக்கும் வந்தாச்சு. இங்கே வந்து ஆகாயத்துக்கும் பூமிக்கும் ஒரு குதி குதிச்சார் பாருங்க. நாங்கல்லாம் நடுங்கிப் போயிட்டோம். கல்யாணமா பேசறார் அந்த மனுஷன்?? வியாபாரம், இதிலே சங்கரமடத்துக்கு நெருக்கம்னு வேறே பீத்தல். இருக்கட்டும், இவர் இப்படி எல்லாம் கேட்கிறதை நான் அவர் இருக்கிற சங்கர மடத்துக்கே எழுதிடறேன். ஒரே கத்தல். மெல்ல மெல்லப் பெரியப்பா, பெரியம்மா, மாமாக்கள், என்னோட அம்மாவழிப்பாட்டி எல்லாருக்கும் விஷயம் போக எலலாரும் வந்து சங்கர மடத்துக்கு எழுதிடறேன்னு அவருக்கு பதில் போடச் சொன்னாங்க. சரினு அப்பாவும் அந்தப் பையரின் அப்பாவுக்கே சங்கரமடத்தில் இருந்து கொண்டு நீங்க இப்படிக் கேட்டது, பேசியது எதுவும் சரியில்லை. அதனால் சங்கரமடத்திற்கு நான் எழுதி இவற்றை எல்லாம் சொல்லிட்டு அவங்க செய்யலாம்னு சம்மதம் கொடுத்தால் நீங்க சொல்றாப்போலவே செய்துடறேன் என்று எல்லாரையும் சாட்சி வைத்துக்கொண்டு எழுதிப் போட்டுவிட்டார். அங்கே இருந்து பதிலே இல்லை. . ஹோசூரில் இருந்த அண்ணாவுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லைனு லெட்டர் வரவே அம்மாவை மட்டும் அப்பா அனுப்பி வைச்சார். அப்பாவுக்குப் பள்ளி இருந்தது. அதோடு தம்பி அப்போ பியுசி படிச்சுட்டு இருந்தார். அவரோட பரிக்ஷை முடிஞ்சதும், எல்லாருமா வரோம்னு சொல்லி என்னையும், தம்பியையும் மட்டும் இங்கே வைச்சுக்கொண்டார். அதுக்குள்ளே எங்க சித்தப்பா ஜாதகம் பார்த்தாச்சா, பார்த்தாச்சானு லெட்டருக்கு மேலே லெட்டர் அப்பா பாட்டுக்கு அதை எல்லாம் படிச்சுட்டு நிதானமா எங்க கிட்டே மைசூருக்குப் பக்கத்திலே மேல்கோட்டையில் வைரமுடிசேவை பார்க்கப் போறேன். நீங்க ரெண்டு பேரும் பத்திரமா இருங்க. அவன் காலேஜ் போனதும் நீ க்ளாசுக்குப் போ. காலம்பர அவனுக்குக் காபி போட்டுக் கொடுத்துட்டு க்ளாசுக்குப் போனு ஏகத்துக்கு எனக்கு மட்டும் (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) புத்திமதி சொல்லிட்டுப் போயிட்டார். வீட்டுக்காரங்களும், நாங்களும் அடுத்தடுத்து இருந்ததால், ஒண்ணும் பயமில்லை. வீட்டு வாசல் ஒரே வாசல் தான். வீட்டுக்காரங்க போர்ஷனுக்குள் நுழைஞ்சு அவங்க ஹால் வழியா அவங்களுக்குத் தெரிஞ்சு தான் யார் வந்தாலும் உள்ளே வரணும்.  நானும் தம்பியும் மட்டும் தான் இருந்தோம். அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை. ஒருநாள் காலம்பர நான் சமைச்சுச் சாப்பிட்டு விட்டு என்னோட அக்கவுண்டன்சி கிளாசுக்குக் கிளம்பிட்டிருந்தேன். அப்போ வாசல்லே யாரோ எங்க அப்பா பேரைச் சொல்லிக்கேட்டுட்டு இருந்தது காதில் விழுந்தது. யாருனு பார்த்தா, சித்தப்பாவோட தம்பி. நான் அடிக்கடி வங்கி பரிக்ஷை எழுத சென்னை போயிட்டிருந்தப்போ எல்லாம் சித்தி வீட்டில் தான் தங்குவேன். சித்தப்பாவோட தம்பிக்கு அப்போக் கல்யாணம் ஆகலை. அதுக்கு அப்புறம்தான் கல்யாணம் ஆச்சு. அந்தக் கல்யாணத்துக்கு நானும், அப்பாவும் போறதா இருந்து போக முடியலை. போயிருந்தால் ஒருவேளை அங்கேயே என்னோட கல்யாணமும் நிச்சயிக்கப் பட்டிருக்குமோ?     கல்யாணமாம் கல்யாணம்! பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்! []     வாசலில் வந்தது என்னோட சித்தப்பாவின் தம்பி. அவருக்குத் தாமதமாய்க் கல்யாணம். கல்யாணத்தின்போது நான் சின்னமனூரில் இன்னொரு சித்தி வீட்டில் இருந்தேன். திரும்பி வந்ததும் உடனேயே அம்மா ஹோசூர் கிளம்பியதால் நான் மதுரையிலேயே வீட்டில் இருந்தேன். சின்னச் சித்தப்பா உள்ளே வந்தார். காலம்பர சாப்பிட்டுட்டேன் என்று சொன்னார். அதனால் அவசரம் அவசரமா உப்புமா பண்ணிக் காப்பியும் போட்டுக் கொடுத்தேன். அவர் எல்லாம் சாப்பிட்டுவிட்டு, ஜாதகம் பத்திப் பேச ஆரம்பித்தார். நான் அப்பா, அம்மா ஊரில் இல்லைனு சொல்லியும் கேட்கவில்லை. "அந்தப் புனாப் பையர் என்னோடசொந்த மச்சினர் தான், வேறே யாரும் இல்லை. நீ என் கல்யாணத்துக்கு வந்திருந்தியானா அப்போவே பார்த்திருக்கலாம். உன்னைப் பத்தி நாங்க நிறையச் சொல்லி இருக்கோம் அவங்க வீட்டிலே. அவங்க ஆவலோடு இருக்காங்க. நாங்க தான் தலை தீபாவளிக்குப் போறச்சே உன் ஜாதகத்தை எடுத்துண்டு போய்க் கொடுத்தோம். தாராளமாப் பார்க்கச் சொல்லு அப்பாவை!" என்று சொன்னார். அப்பா கிட்டே சொல்லிடறேன்னு சொன்னேன். அப்புறம் கொஞ்ச நேரம் பேசிட்டுக் கிளம்பிட்டார். அப்பா வந்ததும் விஷயத்தைத் தெரிவித்தேன். வேறே வேலை இல்லை. புனாவிலெல்லாம் இருக்கிறவருக்கு எப்படிக் கொடுக்கிறது? அதுவும் மிலிடரியிலே வேலைனு வேறே சொல்லறாரே! அது நமக்குச் சரிப்படாதுனு அந்த விஷயத்தை அதோடு முடித்துவிட்டார். ஜாதகம் வந்தப்போ வேலை சரியாப் போடலை. இப்போ சின்னச்சித்தப்பா வந்து தான் வேலை பத்தித் தெளிவாச்  சொன்னார்.  ராணுவத்தில் வேலை இல்லை என்பதையும் ராணுவக் கணக்குத் துறை எனவும் எடுத்துச் சொன்னார்.அப்பாவின் நண்பர் ஒருவர் அந்தக் காலத்திலே ஆங்கிலேய ஆட்சியின் போது இந்த ராணுவக் கணக்குத் துறையில் வேலை செய்தவர். இரண்டாம் உலகப் போரின் போது அந்த வேலையை விட்டுவிட்டு வந்து விட்டார். ஆகவே ஓய்வூதியம் இல்லை. அப்பாவின் பள்ளியிலேயே ஆங்கிலஆசிரியராகப் பணி புரிந்தார். அப்பா வேறே ஜாதகம் பார்க்க ஆரம்பிக்க, எங்க ஜோசியரோ விடாமல் அந்தப் பையனைப் பாருங்க. வேறே ஜாதகம் நான் பார்த்துத் தரேன். ஆனால் அது தான் நடக்கும்னு விடாமல் சொன்னார். அப்போ சென்னையிலிருந்து என் சித்தப்பாவே வேறே ஏதோ விஷயத்துக்காக மதுரை வந்தவர் எங்க வீட்டுக்கும் வந்தார். அப்பாவிடம் ரொம்ப நேரம் பேசி எல்லாத்தையும் எடுத்துச் சொல்லிட்டு, நீங்க நேரே போய்ப் பாருங்க. அவங்க ஊருக்குப் போற வழி இது. இப்படிப் போகணும். நீங்க வேணும்னா முன்னாடி சொல்ல வேண்டாம். சொல்லாமலேயே போய்ப் பாருங்க. பிடிச்சால் மேற்கொண்டு பெண்பார்க்க வரச் சொல்லுங்கனு அப்பாவோட மனசுக்கு ஏத்தாப்போல் சொன்னார். அப்போல்லாம் பிள்ளை வீட்டை ஜாதகம் பொருந்தின உடனேயே நேரில் போய்ப் பார்த்துக் கொண்டு வந்துடுவாங்க. அதனால் அப்பாவும் ஒரு நல்ல நாள் பார்த்துக்கொண்டு சம்பிரதாயப்படி ஜாதகம் மாற்றவேண்டும் என்பதால் என்னோட ஜாதகத்தையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார். கும்பகோணம் போய் அங்கிருந்து நன்னிலம் செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டு கூந்தலூர் என்னும் ஊரில் இறங்கிக் கொண்டு அங்கிருந்து அரசலாற்றைத் தாண்டி என் மாமனார், மாமியார் இருந்த கருவிலிக்குப் போகவேண்டும். அந்த நாட்களில் அரசலாற்றில் கல்பாலம் போடப் படவில்லை. மூங்கில் பாலம் தான். ;அதோடு கருவிலிக்குப் பேருந்தும் போகாது. கூந்தலூர் அருகே இருக்கும் எரவாஞ்சேரி தான் கொஞ்சம் பெரிய கிராமம். அந்தக் கிராமத்துக்கே நான் கல்யாணம் ஆகிப் போன அந்த வாரம் தான் கும்பகோணம் ராமன் அண்ட் ராமன் பேருந்து விட்டாங்க. அது வரைக்கும் கூந்தலூரில் பேருந்து குறிப்பிட்டது தான் நிற்கும். ஆகவே முன் கூட்டிச் சொன்னால் தான் நல்லது. வண்டி கட்டிக்கொண்டு போய்க் கூட்டி வர முடியும். கூந்தலூருக்கோ, எரவாஞ்சேரிக்கோ வண்டி வரணும்னா, (மாட்டு வண்டிதான்) அரசலாற்றில் இறங்கித் தான் வரணும். ஆற்றில் தண்ணீர் குறைவாக இருக்கும் நாட்களிலும், (அப்போ காவிரிப் பிரச்னை இவ்வளவு இல்லை, அரசலாற்றில் கோடையில் கூடக் கொஞ்சமாவது தண்ணீர் ஓடும்.)மற்றக் கோடை நாட்களிலும் வண்டியைப் பிரித்து மாட்டை அவிழ்த்து ஓட்டி விடுவாங்க. அதுக்கு முன்னாடி வண்டியிலே வரும் பிரயாணிகள் இறங்கிக்கொண்டு மூங்கில் பாலம் வழியாஅக்கரைக்குப் போவாங்க, அவிழ்த்து விட்ட மாடுங்க மெதுவாப் போய் அக்கரைக்குப் போய்க் காத்துட்டு இருக்கும். இங்கே வண்டியை ஆற்றில் இறக்குவாங்க. அக்கம்பக்கம் எப்படியும் நாலைந்து ஆட்கள் தோப்புக்களில் வேலை செய்துட்டு இருப்பாங்க. வண்டி வரதைப் பார்த்துட்டுக் கூப்பிடாமலேயே வருவாங்க. சிலர் வீடுகளில் பண்ணை ஆட்கள் வண்டியோடயே வருவாங்க. எல்லாருமா வண்டியை ஆற்றில் தள்ளிக்கொண்டு போய் அக்கரையில் மேட்டில் ஏத்துவாங்க. அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் கூந்தலூர், அல்லது இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் எரவாஞ்சேரி. அங்கே போய்ப் பேருந்தில் வரவங்களைக் கூட்டி வருவாங்க.  திரும்பி வரச்சே மறுபடியும் அதே. ரிவர்ஸில். அப்புறமா ஊருக்கு வரவரைக்கும் நடுவில் குளங்கள் தான் காணலாம். முட்டை ஆறு என்னும் இன்னொரு ஆறு மூன்று கிலோ மீட்டர் தள்ளிப் பரவாக்கரை போகும் வழியில் இருக்கு. இந்த இரண்டு ஆறுகளுக்கும் நடுவில் தான் எங்க மாமனார் மாமியார் இருந்தாங்க. வயல்கள் எல்லாம் எதிரேயே இருந்தன. அப்பாவோ சொல்லாமல் இல்லை கிளம்பி வந்திருக்கார். அதனால் கூந்தலூர் வந்து அங்கே இறங்கியதும், வழி கேட்டுக்கொண்டு மூங்கில் பாலம் வழியா நடந்தே போயிருக்கார். நல்ல வெயில் காலம், பங்குனி மாசம். பாவம், வேர்க்க விறுவிறுக்கப் போய் மாமனார் பெயரைச் சொல்லி விசாரிக்க, வீட்டுக்கு எதிரேயே இருக்கும் பள்ளியில் படிச்சுட்டு இருந்த என் குட்டி மைத்துனன்,சாப்பிடறதுக்காக வீட்டுக்குப் போயிட்டிருந்தவன், அப்போ நாலு முடிந்து ஐந்தாம் வயசு, எங்க அப்பாவைப் பார்த்துட்டு, வாங்க மன்னியோட அப்பாவா நீங்கனு கேட்டுட்டு உடனே வீட்டுக்கு ஓடித் தகவல் சொல்லி இருக்கார். மன்னியோட அப்பா வரார்னு. கிராமம் வேறே. வீட்டு வாசலில் அக்ரஹாரத்தின் அனைத்து மக்களும் கூட அப்பா உள்ளே எண்ட்ரி. உள்ளே போனதும், அப்பாவுக்குக் காப்பி கொடுத்து சாப்பாடு போட்டுட்டு, அப்புறமாப் பேசி இருக்காங்க. சம்பந்தம் கலக்கும் முன்னே சாப்பிட அப்பா யோசிக்க என் மாமனார் இந்தக் காலத்தில் அதெல்லாம் பார்க்கவேண்டாம். நானே என் மனைவியைப் பார்க்கப் போனப்போ அங்கே தான் சாப்பிட்டேன்னு சொல்லிவிடவே எல்லாம் முடிச்சுட்டு, பெண் பார்க்க வரதைப் பத்திப் பேச ஆரம்பிக்க, என் மாமனாரின் அண்ணாவும் அங்கே தற்செயலாக வந்தவர், தன் பெண்ணுக்கும் கல்யாணம் நிச்சயம் பண்ணி இருப்பதாயும் மே மாதம் ஒன்றாம் தேதி கல்யாணம் என்றும் கல்யாணத்துக்கு அவசியம் வரணும் என்றும் சொல்லி இருக்கார். என் மாமனாரும் எங்க பையரும் இந்தக் கல்யாணத்துக்கு வரப் போகிறதாலே வந்த உடனே பெண் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி இருக்கார். சரினு ஒத்துக்கொண்டு அப்பா வந்துவிட்டார். வருஷப் பிறப்பு கழிஞ்சு பெண் பார்க்கத் தேதியை அங்கேயே நிச்சயம் பண்ணிக்கொண்டு வந்துவிட்டார்.  வந்து சொன்னார் பெண்பார்க்க வரப் போறதை. அப்போப் பார்த்துக் கோடைக்கட்டி என் முகத்தில். அதெல்லாம் ஒன்றோ இரண்டோ இல்லை. முகம் முழுதும். பெரிசு பெரிசாக் கட்டிகள். எல்லாத்திலேயும் கறுப்பாய்க் கண் மாதிரி இருக்கும். அது உடைஞ்சு ரத்தம் வரும். கீழே குனிய முடியாது. வலி தாங்காது. ஏற்கெனவே டாக்டரிடம் காட்டிட்டு இருந்தேன். அவரோ வருஷா வருஷம் வருது, ஒண்ணும் புதிசில்லையே, மெதுவாத் தான் சரியாகும்னு சொல்றார். பெண் பார்க்க இன்னும் ஒரு வாரம் கூட இல்லை. இந்த மூஞ்சியைப் பார்த்துட்டு என்ன சொல்வாங்களோ/. அம்மாவுக்குக் கவலை. எல்லாருக்கும் சொல்லியாச்சு. என் மாமா வீட்டில், பெரியப்பாக்கள், சின்னமனூரில் இருந்து சித்தி எல்லாரும் தயாராயிட்டாங்க. சின்னமனூர்ச் சித்தி மட்டும் அம்மாவுக்கு உதவ வேண்டி முன்னால் வந்தாங்க. என் முகத்தைப் பார்த்துட்டு உடனேயே அவங்களுக்குத் தெரிஞ்ச ஒருத்தர் மூலமா சித்தப்பாவுக்குத் தகவல் கொடுக்க சித்தப்பாவும் வந்துட்டார். உடனேயே சித்தப்பா ஊசியாலே என்னைக் குத்த ஆரம்பித்தார். ஒரு நாளைக்கு இரண்டு முறை நான்கு விதமான ஊசிமருந்துகளைக் கலந்து போட்டிருக்கார். கட்டி உடையாது. அமுங்கும் என்றும் சொன்னார். ராஜ வைத்தியம் நடந்தது. அதோடு வரவங்களை வரவேற்கவும் ஏற்பாடுகள். எங்க வீட்டிலே இரு தரப்பிலும் மனிதர்கள் நிறைய. முக்கியமானவங்க வரவும் வருவாங்க  என்பதால் அப்பா சமையலுக்கு ஆள் போட்டுவிட்டார். வெளி ஊரிலிருந்து பிள்ளை வீட்டுக்காரங்க வரதாலே அவங்களுக்கு ஊர் திரும்பற வரைக்கும் கவனிக்கணும்னு என்னோட பெரியப்பா வீட்டிலே தங்கவும் ஏற்பாடுகள் பண்ணியாச்சு. ஒருவழியாப் பிள்ளை வீட்டுக்காரங்க எப்போ வராங்கங்கறதுக்குத் தந்தி வந்தது. அப்போல்லாம் தொலைபேசி இல்லை. இமெயில், எறும்பு மெயில் கிடையாது, செல் கிடையாது. அவசரம்னா உடனே தந்திதான். உடனேயே வந்தும் சேரும். அதைப் பார்த்துட்டு அப்பாவும், தம்பியும் ஸ்டேஷன் போய் அழைத்துக்கொண்டு வந்து பெரியப்பா வீட்டில் விட்டுட்டு வந்தாங்க. மறுநாள் காலையிலே பெண் பார்க்கணும்.     கல்யாணமாம், கல்யாணம்! தொடர்ச்சி 2 []   எல்லாரும் பெண் பார்க்கும் சீனுக்கு ஆவலோடு காத்துட்டு இருக்கீங்க. அதிலே ஒண்ணும் சிறப்பான செய்திகள் கிடையாது. சப்புச் சப்புனு தான் இருக்கும். இப்போப் போல அப்போல்லாம் பெண்ணும், பிள்ளையும் பேசிக்கிறதோ, அப்புறமும் கடிதத் தொடர்போ அல்லது, தொலைபேசியில் தொடர்பு வைச்சுக்கிறதோ, வெளியே போறதோ கிடையாது. மறுநாள் காலையிலே விடிஞ்சதும், விடியாததுமாய்க் காப்பி போடச் சொல்லி என் தம்பியும், அவனோட நண்பன் கிருஷ்ணன் என்னும் பையருமாய்க் காப்பியை ஒரு கூஜாவில் விட்டுப் பெரியப்பா வீட்டுக்கு எடுத்துண்டு போனாங்க. பெரியப்பா வீடு கிட்டத்தான் நடந்து போகும் தூரம். அதுக்குள்ளே அங்கே பெரியம்மாவே காப்பி போட்டுக் கொடுத்துட்டு, அவங்களைத் தயார் செய்து அழைத்து வர வண்டியெல்லாம் ஏற்பாடு பண்ணி வைச்சுட்டாங்க. காலை ஏழரைக்குள் அவங்க வரதுக்கு நல்லவேளைனும், ஒன்பது மணிக்குள்ளாகப் பெண்ணைப் பார்த்துடணும்னும் ஏற்பாடு. என்னோட இரண்டு மாமாக்கள், மாமிகள், சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா, இன்னொரு பெரியம்மா(பெரியப்பா இல்லை) இரண்டு பெரியப்பா வழி அண்ணன்மார்கள்னு வீடு நிறைய ஜே ஜேனு கூட்டம். இந்த அழகிலே என்னோட சித்திக்கு என்னுடைய சிநேகிதிகள் யாருமே வரலைனு குறை. கூடத் துணைக்கு ஒருத்தருமே இல்லையே உன் வயசுக்காரங்கனு சொல்லிட்டே இருந்தாங்க.  சாதாரணப் புடைவைதான் கட்டுவேன், நகையெல்லாம் போட்டுக்க மாட்டேன்னு நான் அடம் பிடிக்கப் பெரியவங்க என்னைப் படுத்தி எடுக்க, என் கிட்டே இருக்கிற பட்டுப் புடைவைகளில் ஒண்ணைக் கட்டிப்பேன்னு சொல்ல, அதையும் கேட்காத பெரியவங்க சித்தியோட காஸ்ட்லி புடைவையை எனக்குக் கட்டிக்கச் சொல்லி வற்புறுத்திக் கட்ட வைச்சாங்க. சும்மாவே எனக்குக் கொஞ்சம் சில துணிகளெல்லாம் உறுத்தல் இருக்கும். அதோட வெயிலுக்கு வந்த வேனல் கட்டியின் இம்சை வேறே. கட்டியாலே முகம் சிவந்ததா, கோபமா, இல்லாட்டிப் பெண்பார்க்க வரதினாலே வெட்கமானு கேட்கிற அளவுக்கு முகம் ஜிவு ஜிவுனு இருந்தது எனக்கே தெரிஞ்சது. அம்மாவுக்கோ வருத்தம் தாங்கலை. சாதாரணமாக எல்லாரையும் வம்பு பண்ணிண்டுச் சிரிச்சுண்டு, சீண்டிண்டு இருக்கும் எனக்கு இது எல்லாம் அவஸ்தையா இருந்ததுனு புரியலை. என்னோட இயல்பை மீறி நாடகத்திலே வேஷம் போடறாப்போல் இருந்தது. ஆனால் வேறே வழியே இல்லை. எல்லாரும் வெட்கம் அவளுக்குனு சொல்ல, நானும் பேசாமல் வாயை மூடிண்டேன்.  பெரியப்பாவும், பெரியம்மாவும், அண்ணாவுமாய் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை அழைச்சிண்டு வந்து எங்க போர்ஷனுக்கு மேல் இருக்கும் மாடிக்குப் போயிட்டாங்க. முதல்நாளே மாடி அறையைப் பெருக்கித் துடைச்சு நான் தான் கோலம் போட்டு வைச்சிருந்தேன். ஹிஹிஹி, அப்போல்லாம் கோல எக்ஸ்பர்ட்ங்கறதாலே சொந்தக்காரங்க வீட்டு விசேஷங்களில் எல்லாம் கூப்பிடுவாங்க கோலம் போட. இங்கேயும் கோலம் நானே போட்டிருந்தேன். கீழே நாங்க இருக்க முதல்லே டிபன் கொடுக்கணும்னு சொல்லி என்னோட பெரியப்பாவும், பெரியம்மாவும் டிபனைக் கொடுக்கச் சொல்லிட்டாங்க. சரினு எல்லாருமாய் டிபன் சாப்பிட்டாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னைச் சாப்பிட்டியானு ஒருத்தரும் கேட்கலை. எனக்குக் கொடுக்கவும் இல்லை. அதுக்கப்புறமாய்ப் பெண்ணை அழைச்சிண்டு வாங்கனு கூப்பிடவே, சித்தி என்னை அழைச்சுண்டு மாடிக்குக் கூட்டிச் சென்றார். பொதுவாகவே மதுரைப் பக்கம் பெண்களுக்கு அநாவசியக் கூச்சம்னு நான் பார்த்ததில்லை. எல்லாரையும் கண்களுக்கு நேரேயே பார்த்துப் பேசுவோம். அதனால் எனக்கும் கூச்சம்னு எதுவும் இல்லை, தோன்றவும் இல்லை. நன்றாகவே பார்த்தேன். அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாடி, எம்புட்டு உயரம்! இதான் முதலில் தோன்றியது. அவங்களுக்கும் தோணி இருக்கும். ஆனால் யாரும் எதுவும் சொல்லவில்லை. என்னோட மாமியாருக்குப் பிடிச்சதுனு அவங்க சாப்பிடும்போதே புரிஞ்சு போச்சு எங்களுக்கெல்லாம். மிச்சம் இருப்பது என் மாமனாரும், என் கணவரும் தான். குட்டி மைத்துனரும் கூட வந்திருந்தாலும் அவர் அப்போக் குழந்தை! அப்போ எல்லாம் பெண்ணும், பிள்ளையும் தனியாப் பேசிக்கிறதுனு கிடையாது. பொதுவாய் என் மாமனார் ஓரிரு கேள்விகள் கேட்க நான் பதில் சொன்னேன். பாடத் தெரியுமானு கேட்டதுக்குத் தெரியாதுனு சொன்னேன். என் கணவர் தனியா எதுவும் கேட்கலை. அப்புறமாக எல்லாருமாய் அங்கேயே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மேலே செய்ய வேண்டிய கல்யாண ஏற்பாடுகள் பற்றியே பேச்சு நடந்ததால், நிச்சயம் செய்வதற்கு நாள் பார்த்துவிட்டு பிள்ளை வீட்டில் கடிதம் போட்டதும், வேலை துவங்கவேண்டும் என்ற அளவில் பேசிக்கொண்டிருந்தார்கள். மதியம் சாப்பாடும் ஆனதும், அவங்க சொந்தக் காரங்க காந்திகிராமத்தில் இருப்பதால் அங்கே போயிட்டு ஊருக்குப் போகப் போவதாய்ச் சொல்லவும், அப்பா அப்படியே என் பாட்டிக்கு மாப்பிள்ளையைக் காட்டவேண்டும் என்று கூறிவிட்டு டிவிஎஸ் நகரில் இருந்த என் மாமா வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அதற்கு முந்தைய வருஷம் தான் தாத்தா இறந்து போயிருந்ததால் அப்புறம் பாட்டி வெளியேயே வரவில்லை. கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கும் மேல் குடும்பம் நடத்தி இருக்கார். ஐந்து வயசில் கல்யாணம் ஆகி இருந்தது அவருக்கு. அங்கே கூட்டிப் போய்விட்டுப் பின்னர் மதுரை செண்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் அப்பா அவங்களை காந்தி கிராமத்துக்கு பஸ்ஸில் ஏற்றி விட்டார். திரும்பி வருகையில் அப்பா முகம் சுரத்தாகவே இல்லை. என்னனு எங்களுக்கு யாருக்கும் புரியவில்லை. மறுநாள் அப்பாவைப் பார்க்க அப்பாவின் இன்னொரு நண்பர் வரவே அவரிடம் அப்பா முதல்நாள் பிள்ளை வீட்டுக்காரங்க வந்ததையும், திரும்பிப் போகும்போது என் மாமனார் பெண் உயரம் கம்மி, பிள்ளைக்கு ஏற்ற உயரம் இல்லைனும் பேசிக்கொண்டதாயும், பிள்ளையின் அத்தை பெண் ஒருத்தி இருப்பதால் அவளும் உயரமாயும் இருப்பாள் என்பதால் அதையே முடிச்சுடலாமா என யோசித்துக்கொண்டு பேசிக்கொண்டதாயும் சொன்னார். அப்போப் பார்த்து எங்க ஜோசியர் மாமா வந்தார். அவர் ரொம்ப ஏழை. எல்லாருக்கும் ஜோசியம் பார்க்கவும் மாட்டார். பார்த்ததுக்குப் பணமும் வாங்க மாட்டார். எப்போவானும் அவருக்குத் தேவை அவசியம் என்று தோன்றினால் மட்டுமே அப்பாவிடம் வந்து பணம் வாங்கிப்பார். கூடியவரையில் திரும்பக் கொடுப்பார். அப்பா வேண்டாம்னாலும் விட்டதில்லை. எதாவது அவசியம் என்றால் அன்னிக்கு எங்க வீட்டுக்கு வந்து சாப்பாடு போடுங்கனு கேட்டு வாங்கிச் சாப்பிடுவார். ரொம்ப ஆசாரம் என்பதால் அன்னிக்கு வீட்டில் யாருக்கானும் அசெளகரியம், வீட்டு விலக்கு என்று தெரிந்தால் உள்ளேயே வரவும் மாட்டார். அப்படிப் பட்டவர் அவர் சொல்லித் தான் அப்பா இந்த வரன் விஷயத்திலேயே இறங்கி இருந்தார். இப்போ அவர் பெண் பார்த்துவிட்டுப் போனது என்ன ஆச்சுனு கேட்க வந்தவரை அப்பா ஒரு பிடி பிடித்துவிட்டார். முதல்லேயே வேண்டாம்னு சொன்னேன். இப்போப் பாருங்க பெண்ணைப் பார்த்துட்டு இப்படிப் பேசிக்கறாங்கனு சொல்லி விட்டார். ஆனால் அவரோ அசரவே இல்லை. மறுபடியும் ஜாதகத்தைப் பாருங்கனு அப்பா சொல்ல, "தேவையே இல்லை. :" னு சொல்லிட்டு ஏதோ மனக்கணக்காய்ப் போட்டுவிட்டு, "உங்க பெண்ணுக்கு இந்தப் பிள்ளைதான். அடுத்த மாசத்துக்குள்ளாகக் கல்யாணம் ஆகிடும். வைகாசி மூணாம் தேதிக்குள் உங்க பொண்ணுக்குக் கல்யாணம் இதே பிள்ளையோட நடக்கும்." னு சொல்லிட்டு வேறே எதுவும் பேசாமல் கிளம்பிட்டார். தள்ளாடிட்டு போனவரை அப்பா கூப்பிட்டு, சாப்பிட்டுட்டுப் போங்கனு சொல்ல, "இன்னிக்கு எனக்கு இங்கே போஜனம் இல்லைனு தெரிஞ்சு தான் வந்தேன். நான் அப்புறமா வரேன்"னு சொல்லிட்டுப் போயிட்டார். அப்பா சொன்னதற்கு ஏற்பப் பெண் பார்த்துவிட்டுச் சென்ற உடனேயே எக்ஸ்ப்ரஸ் தபாலில், (அப்போல்லாம் உண்டு, உடனே பட்டுவாடா பண்ணுவாங்க) பெண் பிடித்திருக்கிறது என்றும் ஆனால் உயரம் கம்மி என்பதால் யோசிப்பதாயும், மேலும் கல்யாணத்தை மதுரையில் நடத்தப் போவதாய் என் அப்பா கூறியதால் அவங்க தரப்பில் 200 பேருக்கும் மேல் கல்யாணத்துக்கு வருவாங்க என்றும் அதுக்காகச் சிறப்புப் பேருந்து ஏற்பாடு செய்யமுடியுமா என்றும் கேட்டிருந்தார்கள். இல்லை எனில் கல்யாணத்தைக் கும்பகோணத்தில் நடத்தவேண்டும் என்றும் கூறி இருந்தார்கள். கடிதத்தைப் படிச்சதுமே அப்பாவுக்குப் பிடிக்கலைனு சொல்லாம ஏதோ சுத்தி வளைக்கிறாங்கனு புரிஞ்சு போய் வேறே ஜாதகங்களைப் பார்க்கலாம்னு சொல்லிட்டார். ஆனால் எங்க ஜோசியரோ, "அந்தப்பையரே இந்தப் பெண் தான் வேண்டும்னு தானே வருவார்!" என்று சத்தியமே செய்தார்.   கல்யாணமாம், கல்யாணம்! தொடர்ச்சி 3 []   பிள்ளை வீட்டிலிருந்து கடிதம் வந்திருக்கும் விஷயம் தெரிந்து என் மாமாக்கள், பெரியப்பா, அண்ணாக்கள் எல்லாரும் வந்துவிட்டனர். வீடே ஒரே பரபரப்பு. ஒருபக்கம் வேண்டாம், விட்டுடலாம் என்ற கட்சி, இன்னொரு பக்கம் அதெல்லாம் வேண்டாம், நேரிலே போய்ப் பார்த்தால் சரியாகும் என்ற கட்சி. என்ன செய்யறதுனு அப்பாவுக்குப் புரியலை. ஏற்கெனவே என் கணவரோட பெரியப்பா பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகி அந்தக் கல்யாணத்திற்குத் தான் அவர் புனாவிலிருந்தே வந்திருந்தார். அந்தக் கல்யாணத்திற்கு வரச் சொல்லி அந்தப் பெரியப்பாவும் பத்திரிகை அனுப்பி இருந்தார். ஆனால் போவதா, வேண்டாமானு அப்பாவுக்குப் புரியலை. அந்தக் கல்யாணத்திற்கு இரண்டு நாட்களே இருக்கையில் மீண்டும் ஒரு பத்திரிகை வந்தது. தப்பாய் அனுப்பிட்டாங்களோனு பார்த்தால் விலாசம் எல்லாம் சரியா இருந்தது. ஆனால் முன்னால் விலாசம் எழுதின கையெழுத்து இல்லை. அதோட இந்தக் கவர் நன்கு ஒட்டி இருந்தது. கல்யாணப்பத்திரிகைக் கவரை ஒட்ட மாட்டாங்களே! அதை நான் தான் வாங்கினேன். ஏதோ விஷயம் இருக்குனு உள் மனதுக்குப் புரிய அப்பா ஸ்கூலில் இருந்து வரும் வரைக்கும் காத்திருந்தோம். எங்க வீட்டில் ஒரு பழக்கம். கடிதம் யாருக்கு வந்ததோ அவங்க தான் பிரிச்சுப் படிச்சுட்டு அப்புறமா மத்தவங்களோட பகிர்ந்துக்கறது எல்லாம். என் சிநேகிதிகளின் கடிதம் என்றாலும் கூட அப்பாவோ, அம்மாவோ பிரிக்க மாட்டாங்க. நான் வர வரைக்கும் காத்திருக்கும். அப்பா ஸ்கூலில் இருந்து வந்ததும், கடிதம் வந்திருப்பது அறிந்து பிரித்துப் பார்த்தார். அதிலே ஒரு இணைப்புக் கடிதத்தில் கல்யாணத்துக்குக் கட்டாயமாய் வருமாறும், வந்து பேசிக்கொண்டு நிச்சயத்தையும் செய்து கொண்டு போகலாம் என்றும் எழுதி இருந்தது. அதுவரையிலும் என் மாமனார் பேரில் வந்த கடிதங்களில் எல்லாம் எழுதப் பட்ட எழுத்து இல்லை என்பது அப்பாவுக்கும் புரிந்தது. ஒருவேளை மாப்பிள்ளையே எழுதி இருப்பாரோ? என்றால் அவங்க அப்பா, அம்மா சொல்லாமல் நாம் எப்படிப் போறது? மறுபடி குழப்பம். உள்ளூரிலேயே இருந்த பாட்டி, மாமாக்கள், பெரியப்பா, பெரியம்மா போன்றோருடன் மீண்டும் வட்டமேஜை மாநாடு நடந்தது. பெருவாரியான விருப்பம் போகும்படியே சொல்ல அப்பாவும் சரினு சம்மதிச்சுப் போகறதுக்கு ஆயத்தம் செய்தார். கல்யாணத்துக்கு முதல்நாளே போய்விடுவதாயும், அன்றே பேச்சு வார்த்தைகளை முடித்துக்கொண்டு, எல்லாமும் கூடி வந்தால் கல்யாணத்தன்று சம்பிரதாயத்துக்குப் பாக்கு,வெற்றிலை மாற்றிக்கொண்டு பின்னர் ஒரு நல்லநாள் பார்த்து லக்னப்பத்திரிகை வாசிக்க ஏற்பாடு செய்யலாம் என்று பெரியப்பா கூற அப்பாவும் அரை மனசாக் கிளம்பினார். ஏனெனில் லக்னப்பத்திரிகை வாசிக்கும் விழா நிகழ்வைப்பெரிய அளவில் செய்ய அப்பா திட்டம் போட்டுக்கொண்டிருந்தார். இப்போ இந்தப் பேச்சு வார்த்தை எப்படி முடியும் என்று கூற முடியாத நிலையில் எல்லாருமே போகவும் முடியாது. எல்லாரும் போயிட்டு அங்கே ஒண்ணும் சரிப்பட்டு வரலைனா அவமானமும், வருத்தமும் மிஞ்சும். அப்பா மட்டும் போயிட்டுப் பாக்கு, வெத்திலை மாத்திண்டு வந்ததும், திரும்ப லக்னப்பத்திரிகை விழாவுக்குப் பிள்ளை வீட்டில் சம்மதிக்கணும். அது அவங்க வீட்டில் அவங்க பொறுப்பில் செய்யவேண்டியது. இதான் அப்பாவுக்கு யோசனை. மேலும் தஞ்சைப் பக்கம் பாக்கு,வெற்றிலை மாற்றுவதோடு சரினும், ரொம்பப் பெரிசா எல்லாம் பண்ணறது இல்லை என்றும் என்னோட மாமனார், மாமியார் சொல்லி இருந்தாங்க. ஆண்கள் மட்டுமே கூடிப் பேசிப் பாக்கு,வெற்றிலை மாத்திப்பாங்க என்றும், பெண்கள் அந்த விசேஷத்துக்கு அதிகமாய்க் கலந்து கொள்ள மாட்டார்கள் எனவும் சொல்லி இருந்தாங்க. அப்பா கல்யாணத்துக்கு முதல் நாளே காலையிலே கிளம்பிட்டார். சாயந்திரம் மாப்பிள்ளை அழைப்பின் போது சத்திரத்துக்குப் போயிடுவேன்னு சொல்லி இருந்தார். ஆகவே அன்னிக்குப் பேசி முடிச்சுண்டு, பாக்கு,வெற்றிலை மாற்றவும், கல்யாண முஹூத்தத்துக்கும் நாள் குறித்துக்கொண்டு வருவதாயும் மாப்பிள்ளையின் பெரியப்பா பெண்ணின் கல்யாணம் முடியும் வரை தங்கப் போறதில்லை என்றும் சொல்லி இருந்தார். ஆகவே நாங்க அப்பாவை மறுநாளே மதியம் சாப்பாட்டுக்கே எதிர்பார்த்தோம். ஆனால் அப்பா அன்று வரவில்லை. என்னனு புரியலையே என்று யோசித்தோம். வந்தால் தான் தெரியும் விஷயம்,. இப்போ மாதிரி தொலைபேசியா? செல்பேசியா? ஆகவே கட்டாயமாய்க் காத்திருக்கணும். மறுநாள் காலையில் தான் வந்தார். வந்தவர் உடனே எதுவும் பேசவில்லை. வந்து, எப்போதும் போல் கொண்டு போன பையை ஸ்வாமி அலமாரிக்குக் கீழே வைத்துவிட்டுக் குளித்துச் சாப்பிட்டுவிட்டுப் பின்னர் மெதுவாய்ச் சொன்னார். இன்னியிலே இருந்து பதினைந்தாம் நாள் கல்யாணம். நிச்சயம் பண்ணியாச்சு என்று.  அம்மாவுக்கு ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும் ஒரே பெண்ணின் நிச்சயத்தின் போது தான் உடனிருக்கவில்லை என்ற வருத்தமும். என்றாலும் கேட்டாள்: என்னிக்கு லக்னப் பத்திரிகை வாசிக்கிறாங்களாம்?  அதெல்லாம் நேத்தே வாசிச்சாச்சு. நேத்துச் சாயங்காலம் முடிச்சுட்டாங்க. மாப்பிள்ளைக்கு லீவு கிடையாதாம். கல்யாணம் முடிஞ்சதுமே ஒரு வாரத்திலே திரும்பப் புனா போகணுமாம், அவங்க பெரிய பொண்ணு கூட பிலாயிலே இருந்து வந்திருக்காங்க. அவங்களும் சீக்கிரம் திரும்பிடுவாங்களாம். எங்க பெரிய பொண்ணு இருக்கிறச்சேயே கல்யாணத்தை முடிக்கணும்னு சொல்லிட்டாங்க.  ஏன் இப்படிப் பண்ணிட்டீங்க?" அம்மா. பின்னே? என்னை என்ன பண்ணச் சொல்றே? அவங்க இது போதும்னு சொல்லிட்டாங்க. சரி, சரி ஆகட்டும், இன்னிக்கு நல்லநாள்னா ஆகவேண்டிய வேலையை ஆரம்பிக்கலாம். பக்ஷணம் எல்லாம் நிறைய வைக்கணும், பெரிய குடும்பம். சமையல்கார மாமிக்குச் சொல்லி அனுப்பணும், முன்னாடி நீ மன்னியைக் கூப்பிட்டு என்னிக்கு மஞ்சள் இடிக்கிறது? தோழிப்பொங்கல் என்னிக்குனு எல்லாம் முடிவு பண்ணிக்கோ.  கல்யாண வேலை ஆரம்பம் ஆனது. அது சரி, திடீர்னு எப்படிக் கல்யாணத்துக்கு ஒத்துண்டாங்க? இதன் பின்னணியில் நடந்தவைக்குக் காத்திருங்கள். வேடிக்கை என்னவென்றால் எனக்கே இப்போத் தான் ஒரு வருஷத்துக்கு முன்னாடி நடந்தது எல்லாம் முழுசாத் தெரியும். அதுவரைக்கும் ஆங்காங்கே ஒருத்தரொருத்தர் சொன்னதும், கேட்டதும் தான்.   கல்யாணமாம், கல்யாணம்! தொடர்ச்சி 4 எனக்கு இருப்பது ஒரே பொண்ணு. அவளுக்கு இப்படியா நிச்சயம் பண்ணிண்டு வரணும்? இன்னொரு பெண்ணா இருக்கா? அவளுக்கு நன்னாச் செய்து பார்க்கலாம்னு சொல்றதுக்கு? "அம்மாவின் புலம்பலோடு ஆரம்பித்தன கல்யாண வேலைகள். அன்றைய நாளே நன்றாக இருந்ததாலும், திங்கட்கிழமை என்னோட நக்ஷத்திரத்துக்கு ஏற்றதென ஏற்கெனவே ஜோசியர் சொல்லி இருந்ததாலும் அன்றே கல்யாணவேலைகளை ஆரம்பிக்க முடிவு செய்யப் பட்டது. தம்பியை அனுப்பிப் பத்திரிகை அடிக்க மாதிரிகள் கொடுத்தார் அப்பா. அண்ணாவுக்குத் தந்தி கொடுக்கச் சொன்னார். அக்கம்பக்கம் இருக்கும் சுமங்கலிகளும், தகவல் தெரிந்து, என்னோட பெரியம்மாவும் வந்து சேர, மஞ்சள் இடித்து அன்றைய வேலையைத் தொடங்கினார்கள்.     மஞ்சள் இடிக்கிறது என்பது கல்யாணத்துக்கான வேலைகளை ஆரம்பிக்கும் முன்னர் நாள்பார்த்து குறைந்தது ஐந்து சுமங்கலிகள் சேர்ந்து பிள்ளையார் பிடிச்சுப் பூஜை செய்து, மஞ்சள் கிழங்குகளை உரலில் போட்டு உலக்கையால் கல்யாணத்துக்கு என இருக்கும் பாடல்களைப் பாடிக்கொண்டே மாறி மாறி இடிப்பார்கள். அதுக்கு முன்னாடி உரல் உலக்கைக்கும் மஞ்சள், குங்குமம் எல்லாம் உண்டு. அரிசிமாவை நன்கு அரைச்சுக் கோலம் போட்டு கிழக்குப்பார்த்துச்சிலரும் மேற்குப் பார்த்துச் சிலரும் நின்று கொண்டு மாறி மாறி உலக்கையால் அந்த மஞ்சளை இடிப்பார்கள். இடிச்ச மஞ்சளை நன்கு நீர் விட்டுக் குழைத்துக் கல்யாணப் பெண்ணுக்குப் பூசும் வழக்கமும் சில இடங்களில் உண்டு. சுமங்கலிகளுக்குச் சாப்பாடு போடுவதும் சில வீடுகளில் உண்டு. சிலர் வெற்றிலை,பாக்கு, ரவிக்கைத்துணி வைச்சும் கொடுப்பாங்க. இதைத் தவிர சுமங்கலிப் பிரார்த்தனை. அது தனி. இந்த மஞ்சள் இடிப்பது நடந்ததுக்கு அப்புறம் தான் கல்யாணச் சீர் பக்ஷணங்கள் செய்ய அடுப்பை மூட்டுவாங்க. அடுப்புக்குத் தனியாய்க் கோலம், செம்மண், பூ, பிள்ளையார் எல்லாமும் உண்டு. வீடே கல்யாணக்கோலம்பூண்டிருக்கும். இப்போ எல்லாமே கல்யாண காண்ட்ராக்டர் தானே! :(((((((( அதனால் பழக்கவழக்கங்கள் மறைந்து வருகின்றன. ஒரு விதத்தில் அவற்றை எல்லாம் சொல்லவேண்டியே இந்தப்பதிவுகளும். :))))))))))))))))    )))!! சுமங்கலி ப்ரார்த்தனை அண்ட் சமாராதனை மஞ்சள் இடிக்கறது , குலதெய்வத்துக்கும் குடியானவன் குடும்பத்துக்கும் நெல் பருப்பு அளந்து போடுவா!! அம்மனுக்கு புடவை மஞ்சத்துணில, காசு பிள்ளையாரப்பனுக்கு சுப்ரமண்ய சாமிக்கு தேங்காயும் வெல்லமும். கருப்பண்ணசாமிக்கும், படாளத்தம்மனுக்கும் முதல் பத்திரிகை வைச்சது நினைவிருக்கு. கருப்பண்ணசாமிக்குப் பாக்குப் பழம் மாத்தணும், ஊருக்குப் போகணும்னு அம்மா சொல்லிண்டே இருந்தா. ஆனால் பாக்கு,பழம் மாத்தவே இல்லை.   தோழிப் பொங்கல் என்பது தென் மாவட்டங்களுக்கு மட்டுமே உரியதுனு தான் நினைச்சேன். ஆனால் அது முன்னால் வழக்கத்தில் இருந்திருக்கு என்பதும் அப்புறமாப் புரிந்து கொண்டேன். கல்யாணம் நிச்சயம் ஆனதும் தாய் மாமன் பெண்ணுக்குச் செய்யும் சீர் வரிசைகளை ஒரு நல்ல நாள் பார்த்துப் பெண்ணை வீட்டுக்கு அழைத்துப் புதுப்புடைவை எடுத்துக் கொடுத்துக் கைநிறைய வளையல்கள் அடுக்கச் செய்து, (ஹிஹிஹி, கண்ணாடி வளையல்தான்) விருந்து சமைத்துப் போட்டு, பூச்சூட்டிப் பின்னர் அவள் தோழிகளோடும், மற்ற உறவினர்களோடும் கிட்டத்தட்ட ஊர்வலமாய் அனுப்பி வைப்பார். இப்படி நடக்கும் ஒண்ணு. இதிலே பெண்ணை அவங்க வீட்டிலே இருந்து அழைத்துப் போறச்சேயும், ஒவ்வொரு வீட்டு வாசல்லேயும் ஆரத்தி எடுத்துப் பெண்ணுக்கு வளையலோ, ரவிக்கைத் துணியோ வச்சுத் தருவாங்க. திரும்பி வரச்சேயும் இப்படியே வீதிவலம். ஹிஹி, நாங்க அதெல்லாம் போகமாட்டேன்னு சொல்லிட்டோமுல்ல/ சும்மா சாஸ்திரத்துக்கு மாமா வீட்டுக்குப் போனேன். கல்யாணமே மாமா வீட்டு வாசல்லே தான் பந்தல் போட்டு நடந்தது! :))))))))) ஆனால் இப்போவும் சில குடும்பங்களில் நல்ல நாளில் பெண்ணுக்கு வளையல்களை அடுக்கும்போது கொஞ்சம் விமரிசையாகச் செய்கின்றனர். இரண்டு வருஷம் முன்னால் கூட இரண்டு மூன்று கல்யாணங்களில் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு கல்யாணப்பெண்ணுக்கு வளையல் அடுக்கிட்டு வந்தேன். வளைகாப்பு வளையல் தனி. இது தனி.     சமையல்கார மாமிக்குச் சொல்லி அனுப்பப் பட்டது. பக்ஷணங்களுக்குத் தேவையான சாமான்களின் லிஸ்ட் போடப் பட்டது. வாடிக்கை நெய்க்காரப் பாட்டியை எங்கே இருந்தாலும் தேடிக் கண்டுபிடிச்சுண்டு வர என் தம்பிக்கும், அவன் நண்பனுக்கும் உத்தரவிடப் பட்டது. இரண்டு நாளைக்குள்ளாக ஒரு நல்ல நாளில் புடைவை வாங்க முடிவு செய்யப் பட்டது. ரவிக்கைகளைத் தைக்க டெய்லர் இருந்தாலும் எனக்கும் தையல், எம்ப்ராய்டரி தெரியும் என்பதால் அவசரமாய் வேண்டுபனவற்றை நானே தைத்துக்கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப் பட்டது. புடைவை வாங்க என்னையும் அழைத்துச் செல்லவேண்டும் என்று என் மாமிகள், அம்மா போன்றோர் சொல்ல அப்பா திட்டமாக மறுத்துவிட்டார். கடைசியில் என் பெரியம்மா, அம்மா, அப்பா, மாமிகள் போய்த் தான் புடைவை வாங்கி வந்தனர். மஸ்டர்ட் கலரில் ஊசிவாணம் புடைவை நிச்சயதார்த்தத்துக்கும், ஊஞ்சல் புடைவை பச்சைக்கலரிலும், இன்னொரு புடைவை இங்க்லீஷ் பச்சை என்று சொல்வார்கள் அந்தக் கலரிலும், சுமங்கலிப் பிரார்த்தனைக்கு ப்ரவுன் கலரிலும் புடைவைகள் வாங்கப் பட்டிருந்தன. எங்க ஊர்ப்பக்கம் திருமணம் ஆகாத பெண்களுக்கும் சுமங்கலிப் பிரார்த்தனைப் புடைவை உண்டு. ஏனென்றால் குழந்தையாகவோ திருமணம் ஆகாமலோ கன்னிப் பெண்கள் இறந்திருப்பார்கள். அவர்கள் நினைவாகக் கொடுப்பார்கள். சிலசமயங்களில் மற்ற அந்நியரின் வீடுகளின் பெண்களை அழைத்தும் கொடுப்போம். நவராத்திரியில் இதைக் கட்டாயமாய்ச் செய்து வருகிறோம். இப்போ என் கல்யாணம் என்பதால் பெரியம்மா எனக்குத் தான் கொடுக்கணும், அது தான் குடும்ப வழக்கம் என்று சொல்லிவிட்டார். மதுரை, திருநெல்வேலிப் பக்கங்களில் மாப்பிள்ளை வீட்டிலேயே கல்யாணப் பெண்ணுக்கு நாலு புடைவைகள் எடுப்பாங்க. நிச்சயதார்த்தம், கல்யாணக்கூரை, கிரஹப் பிரவேசம், நலுங்கு விளையாடல் என நாலு புடைவைகள் எடுப்பாங்க. என்னோட இரு பெரியப்பா பெண்களுக்கும் அப்படித் தான் நடந்தது. ஒருத்தர் என் அம்மாவழிச் சொந்தம், இன்னொருத்தர் எங்க பக்கத்துவீட்டிலே இருந்தவங்க தம்பி. ஆகவே பழக்கவழக்கம் எல்லாம் ஒண்ணாய் இருந்தது. ஆனால் இங்கே மாப்பிள்ளை வீட்டில் நாங்க எதுவும் எடுக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்களாம். அப்புறமா அப்பா வற்புறுத்திக் கூரைப்புடைவை மட்டுமாவது எடுக்கணும்னு சொல்லிட்டு வந்திருந்தார். அரை மனசாய் ஒத்துண்டாங்கனு சொல்லிண்டிருந்தார். இப்படிச் சின்னச் சின்னதாய் சில கசமுசாக்கள் இருந்தாலும் கல்யாண வேலைகள் தொடர்ந்து நடந்தன. அவங்க வீட்டிலே போடும் திருமாங்கல்யத்தையும் இங்கேயே செய்யச் சொல்லி இருப்பதால் மாங்கல்யத்துக்குப் பொன் உருக்க நாள் பார்க்க வேண்டி ஜோசியருக்குச் சொல்லி அனுப்பினார் அப்பா. நாள் பார்த்துப் பொன் உருக்கித் தான் அப்போல்லாம் மாங்கல்யம் செய்வாங்க. ஆசாரி வீட்டுக்கு வந்து பூஜைகள் செய்து, பொன்னை வாங்கி ஸ்வாமி காலடியில் வைத்து வேண்டிக்கொண்டு, கையோடு கொண்டு வரும் பொன் உருக்கும் உலையில் போட்டு உருக்கி மாங்கல்ய அச்சில் அதை ஊற்றி மீண்டும் ஸ்வாமி காலடியில் வைத்துவிட்டு எடுத்துச் செல்வார். அதன் பின்னர் மாங்கல்யம் செய்யப் பட்டு பாலிஷ் எல்லாம் போடப் பட்டு நல்ல நாள் பார்த்து மஞ்சள், குங்குமத்துடன் அவரே கொண்டு வந்து கொடுப்பார். இப்போல்லாம் பொன் உருக்கறதில்லை என்றாலும் கூடியவரையிலும் நல்ல நாளைப்பார்த்து ஆர்டர் கொடுப்போம். அதுவும் எங்க குடும்பத்துக்கு ராசியான கடைனு திநகரில் ராமநாதன் கடை மட்டுமே. அங்கே தான் திருமாங்கல்யம் செய்வோம். நல்லி கடையில் கூரைப்புடைவை. (இப்போது) ராமநாத ஐயர் கடை இப்போ இல்லை. அதற்குள்ளாக அங்கே பத்திரிகை அடிச்சுப் பத்திரிகைகளை எங்க சொந்தக்காரங்களுக்குக் கொடுக்கவேண்டி ஒரு பார்சலில் அனுப்பி இருந்தாங்க. மொத்தமாய் வந்த பத்திரிகைகளைத் தவிர்த்து ஒரு தனியான ஒரு கவரில் என் பெயருக்கும் ஒரு பத்திரிகை வந்தது. அதைத் தான் முன்னாடியே எழுதிட்டேன், பின்னூட்டமாக. அதை அனுப்பியது என் கணவர் தான் என்பதை அப்புறமாத் தெரிந்து கொண்டேன். இப்போ இந்தக் கல்யாணம் நிச்சயம் ஆனதின் பின்னணியைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என் அப்பா சொன்னாப்போல் மாமனாருக்கு நான் உயரம் குறைவு என்பதால் கொஞ்சம் அரை மனசாய் இருந்திருக்கிறது. ஆகவே என் கணவரிடம் சொல்லி இருந்திருக்கிறார். அவர் என்னோட அப்பா எதிரே ஒண்ணும் சொல்லவில்லை. ஆனால் ஊருக்குப் போனதும் பேச்சு வார்த்தை நடந்ததில், என் கணவரோட அத்தை பெண் கல்யாணத்துக்கு இருப்பதால் அவங்களையே பார்க்கலாம் என மாமனார் முடிவாய்ச் சொல்லி இருக்கிறார். வரப் போகும் பெரியப்பா பெண் கல்யாணத்துக்கு அவங்களும் வருவாங்க என்பதால் அன்னிக்குப் பேசி முடிவு பண்ணிப் பாக்கு வெற்றிலை மாற்றிடலாம்னு சொல்லி இருந்திருக்கிறார். என் கணவர் மறுத்திருக்கிறார். சொந்தமே வேண்டாம்னு சொன்னாராம். அவங்க அம்மாவும் சொந்தமே வேண்டாம். எல்லாரையும் சொந்தத்திலேயே கொடுத்தாச்சு. இனிமேலாவது வெளியே இருந்து வரட்டும்னு சொல்லி இருக்காங்க. இது இப்படியே இருக்க என் கணவர் அவரோட பெரியப்பா கூப்பிட்டதாலும், பெரியப்பாவிடம் இது குறித்துப் பேசவும் பக்கத்து ஊரான பரவாக்கரைக்குப் போயிருக்கார். அங்கே விஷயத்தைச் சொல்லி இருக்கார். தன்னோட அப்பா அத்தை பெண்ணைத் தான் பண்ணிக்கணும்னு சொல்லுவதையும் தனக்கு இஷ்டமில்லை என்றும் மதுரைப் பெண்ணைத் தான் பண்ணிக்க ஆசைப்படுவதாயும் சொல்லி இருக்கிறார். அப்போ பெரியப்பா அவரிடம் அவரை நானும் பார்த்தேன். நல்லவங்களாத் தான் தெரியுது. ஒரு கடிதம் எழுதிப் போட்டு வரவழை. பேசலாம்னு சொல்லவே, என் மாமனார் நிபந்தனைகள் போட்டுக் கடிதம் எழுதச் சொன்னதை என் கணவர் கூறவே, அவர் யோசித்துவிட்டு, அந்தப் பெண்ணின் அப்பாவை நம்ம வீட்டுக் கல்யாணத்துக்கு வரச் சொல்லி இருக்கேன். வந்தாலும் வருவார். நீ எதுக்கும் இன்னொரு பத்திரிகையை அனுப்பிக் கட்டாயம் வரச் சொல்லு. அப்போ நிச்சயம் பண்ணிக்கலாம்னு உன் அப்பா எழுதறாப்போலவே எழுதிடு. என்று சொல்லி இருக்கிறார். இவர் யோசிக்க, உன் அப்பாவிடம் நான் பேசிக்கறேன். என்று அவர் தைரியம் கொடுத்திருக்கிறார். ஆகவே அப்படியே எழுதி அனுப்பிட்டார். ஆனால் கல்யாணத்துக்கு முதல்நாளான சனிக்கிழமையே போன அப்பா மறுநாள் காலை முஹூர்த்தத்துக்கும் போகலை. அன்று மாலை தான் போயிருக்கிறார். அதுக்குள்ளே இங்கே அத்தை வீட்டுக்காரருக்கும், என் மாமனாருக்கும் பேச்சு வார்த்தை மும்முரமாய் ஆகிவிட்டிருக்கிறது. அத்தையும் தன் அண்ணா பிள்ளைக்குப் பிடிக்கலை என்பதாலும் உறவு வேண்டாம் என்பதாலும் மறுத்திருக்கிறார். ஆனாலும் அவங்க இரண்டு பேரும் விடலை. விடாமல் பேசி எல்லாரையும் ஒத்துக்க வைக்கப் பார்த்திருக்காங்க. என் கணவருக்கோ காலம்பரவே வரேன்னு சொன்ன மனுஷன் சாயந்திரம் வரைக்கும் வரலையேனு ஒரே டென்ஷனா இருந்திருக்கு. அதுக்குள்ளே வேறு வழியில்லாமல் அத்தை சம்மதிக்க ராகு காலம் முடிஞ்சு பாக்கு வெற்றிலை மாத்தலாம்னு சொல்லி இருக்காங்க.  அப்போத் தான் போயிருக்கார் என்னோட அப்பா. கூடவே ஸ்வாமிமலையில் அவரின் சிநேகிதர் வீட்டு மனுஷர்கள். கையிலே பழம், பாக்கு, வெற்றிலை, பருப்புத் தேங்காய், திரட்டுப் பால் சகிதம், மாப்பிள்ளைக்கு வேஷ்டிகள் என ஏற்பாடாய்ப் போய்விட்டார். அப்பாவுக்குக் கும்பகோணம் வந்ததுமே தகவல் தெரிந்து விட்டது, என் கணவரின் இன்னொரு அத்தையின் மூலம். மாப்பிள்ளைக்கு நம்ம பெண்ணைத் தான் பிடிச்சிருக்கு என்பதும், அவளைத்தான் கல்யாணம் செய்துக்கணும்னு ஆசைப் படறார் என்பதும் கும்பகோணத்திலேயே இருந்த அத்தை சொல்லி இருக்காங்க. உடனேயே அப்பா அத்தையிடம் சொல்லிட்டு ஸ்வாமி மலைக்குப் போய் அவரோட சிநேகிதர்கள் வீட்டிலே சொல்லி, எல்லாம் பண்ண ஏற்பாடு செய்திருக்கிறார். என்னதான் சீக்கிரம் பண்ணினாலும் அப்போல்லாம் ரெடிமேடாக எதையும் வச்சுக்க மாட்டாங்க இல்லையா? ஆகவே வீட்டிலே எல்லாத்தையும் பண்ணி எடுத்துண்டு வரதுக்குச் சாயந்திரம் ஆகி இருக்கு. ஆனால் இந்த ஏற்பாடை என் கணவரும் அவரோட பெரியப்பாவும் சேர்ந்து செய்தாங்க என்பது எனக்கு ஒரு வருஷம் முன்னாடித் தான் தெரியும். அது வரைக்கும் என் மாமனார் வீட்டிலே சொன்னது: ஒரே பெண்ணைத் தான் பார்ப்பேன்னு என் கணவர் சொல்லிட்டிருப்பாராம். நாலைந்து பெண்கள் பார்க்கமாட்டேன் பார்க்கும் முதல் பெண்ணைத் திருமணம் செய்துப்பேன், எப்படி இருந்தாலும், அவங்க வீட்டிலே என்ன செய்தாலும், செய்யாட்டியே கூட. என்று சொல்லுவாராம். அதனால்தான் உன்னை விடலைனு சொல்லுவாங்க. பல வருஷங்கள் கழிச்சு இப்போத் தான் பின்னணிக்கதை எனக்குத் தெரிய வந்தது. அதுவும் தற்செயலான ஒரு பேச்சு வார்த்தையில்.   கல்யாணமாம், கல்யாணம் தொடர்ச்சி - 5 என்னோட மாமனார் என்னை மருமகளாக ஏற்கத் தயங்கினாலும் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களில் குறை எதுவும் வைக்கவில்லை. திருமணம் ஆனதும், பெரிய அளவில் கிரஹப் பிரவேசத்துக்கு ஏற்பாடுகள் பண்ணப் போவதாய்த் தகவல் கிடைத்தது. என் மாமனாரின் கூடப் பிறந்தவர்கள் சகோதரராக ஒரே அண்ணன் தான். அவருக்குப் பிள்ளை கிடையாது. ஆகவே என் கணவர் தான் மூத்தவர் என்பதால் குடும்பத்திற்கே நான் தான் முதல் மருமகள். அது அங்கே ஒரு புறம் இருக்க, இங்கே எல்லா பட்சணங்களும் செய்து கொண்டிருந்தார்கள். வீடு தனி வீடெல்லாம் இல்லை. ஒரு வீட்டின் போர்ஷன் தான். தேங்காய் எண்ணெயும், நெய்யுமாகக் கலவையாக வாசனை அடிக்க அங்கேயே உட்கார்ந்து ஒரு பக்கம் நான் தையல் மிஷினை ஓட்டித் தைக்க என்று பரபரப்பாக இருந்தன நாட்கள். இதற்கு நடுவில் பந்தக்கால் முஹூர்த்தம் பார்த்தாயிற்று. என்னோட இரண்டு பெரியப்பா பெண்களில் ஒருத்தருக்கு நாங்க குடி இருந்த வீட்டிலேயே திருமணம் நடந்தது. பக்கத்து வீட்டையும் சேர்த்து வாசலில் பந்தல் போட்டுக் கல்யாணம். கொஞ்சம் தள்ளி இருந்த ஓர் உறவினர் வீட்டில் பிள்ளை வீட்டுக்காரங்கள் தங்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. எதிரே இருந்த என் பெரியப்பா வீட்டில் கல்யாணத்திற்கு வேண்டிய மளிகை சாமான்கள், காய்கறிகள், பூ, பழங்கள் என அனைத்தையும் இறக்கிவிட்டுக் காவலுக்கு என்னோட பெரிய அண்ணா(பெரியப்பா பிள்ளை) இருந்தார். சமையல், சாப்பாடு அங்கேயே இன்னொருத்தர் வீட்டில்.  இன்னொரு பெரியப்பா பெண்ணிற்கு தானப்பமுதலி அக்ரஹாரத்தில் இருந்த மங்கள நிவாஸ் என்னும் கண் ஆஸ்பத்திரிக் கட்டிடத்தில் கல்யாணம். அது எல்லா விசேஷங்களுக்கும் குறைவான வாடகை வாங்கிக்கொண்டு கொடுப்பாங்க. பெரியப்பா அந்த அறக்கட்டளையில் உறுப்பினர்தான். அவர் சொன்னால் கிடைச்சுடும். பெரியப்பாவும் சொல்லத் தயாராய் இருந்தார். ஆனால் கூட்டம் நிறைய வந்தால் சமாளிக்க முடியாது என நினைத்த அப்பா, நகரத்தை விட்டுத் தள்ளி என் மாமா வீடு கட்டி இருந்த டிவிஎஸ் நகரில் திருமணம் நடத்தத் தீர்மானித்துவிட்டுப்பத்திரிகையிலும் அந்த விலாசத்தையே கொடுத்துவிட்டார். இது கொஞ்சம் பெரியப்பாவிற்கும், மற்ற உறவினர்களுக்கும் அதிருப்தியைக் கொடுத்தாலும் என் அப்பாவை மீறி எதுவும் யாரும் பேச முடியாது என்பதால் பேசாமல் இருந்துவிட்டார்கள். ஆகவே பந்தக் கால் முஹூர்த்தத்திற்கு என்னையும் அழைத்துச் செல்லவேண்டும் என்ற ஒரு முடிவு எடுக்கவே, அப்படியே அங்கேயே நான் தங்கிவிடவேண்டும், திரும்ப நாங்க இருக்கும் வீட்டுக்கு வந்து கொண்டிருக்க வேண்டாம் என அப்பா சொல்லி, என்னைப் பெட்டியைத் தயார் பண்ணச் சொன்னார். சுமங்கலிப் பிரார்த்தனை, சமாராதனை போன்றவற்றை நடத்த நாங்க இருந்த வீட்டில் இடம் போதாது என்பதால் பெரியப்பா வீட்டில் நடத்தத் தீர்மானித்திருந்தார்கள். அங்கே மாமிகள் அந்த விசேஷத்தில் பங்கெடுக்க வருகையில் என்னை அழைத்து வரலாம் எனவும், அல்லது முதல்நாளே என் தம்பி போய் அழைத்து வந்துகொள்ளலாம் எனவும் முடிவு செய்தாயிற்று. நாளைப் பந்தக்கால் முஹூர்த்தம். முதல் நாளே நான் மாமா வீட்டுக்குச் செல்ல நல்ல நேரம் குறித்தாயிற்று. நாங்க இருந்த மேலாவணி மூல வீதியில் இருந்து மாமா வீடு இருந்த டிவிஎஸ் நகருக்கு நடந்தே பலமுறை போயிருக்கேன். ரயில் பாதையோடு நடந்தால் குறுக்கு வழி. பேருந்திலும் போயிருக்கேன். அப்போ திருப்பரங்குன்றம் செல்லும் 19-ம் எண் பேருந்து அங்கே பழங்காநத்தத்தில் நிற்கும். பழங்காநத்தத்தில் இறங்கிக் கோவலன் பொட்டலைக் கடந்து தான் டிவிஎஸ் நகருக்குள் போகணும். கோவலன் பொட்டலைத் தாண்டுவதைச் சிலர் எதிர்த்தாலும், டிவிஎஸ் நகரும், அதன் எதிரே சத்யசாயி நகரும் வந்ததும், கோவலன் பொட்டல் பற்றிய ஒரு மூட நம்பிக்கை அறவே ஒழிந்தது என்றே சொல்லவேண்டும்.  ))) ஆனால் இம்முறை போனால் திரும்ப வீட்டுக்கு வர மாட்டேன். அங்கே இருந்து நேரே கும்பகோணம், அப்புறம் கிராமம். அதுக்கப்புறமா அவங்க அநுமதிச்சாத் தான். பெட்டியைத் திறந்து எல்லாவத்தையும் ஒரு முறை பார்த்தேன். இறை அருளால் எனக்கு உடைகளுக்கு எப்போவுமே குறை இருந்ததில்லை. கல்யாணத்துக்கு எடுத்த பட்டுப்புடைவையைத் தவிரவும் என்னிடம் ஐந்து, ஆறு பட்டுப்புடைவைகள் இருந்தன. உடை விஷயத்தில் எதை எடுத்துக்கிறது, எதை வைக்கிறது என்பதில் குழப்பம் எதுவும் இல்லை. ஆனால் புத்தகங்கள்?? அப்போவே என்னிடம் சின்ன அளவில் புத்தக சேமிப்பு உண்டு. உ.வே.சா. நினைவு மஞ்சரி, கூடக் குடி இருந்த திருநெல்வேலி மாமா கொடுத்த அன்பளிப்பு, பாரதியார் பற்றிய புத்தகங்கள், தனிப்பாடல் திரட்டு 1 பொன்னியின் செல்வன் அப்போ இரண்டாம் முறையாகக் கல்கியில் வெளி வந்த நேரம். அதன் பைண்டிங் புத்தகங்கள். சாண்டில்யனின் நாவல்கள். கணையாழியின் தொகுப்புகள், (சித்தப்பா அப்போக் கணையாழியின் பொறுப்பாசிரியராக இருந்ததால் ஒவ்வொரு இதழ்க் கணையாழியும் எங்களுக்கு வரும்) நா.பார்த்தசாரதியின் புத்தகங்கள் என ஒரு சின்ன நூலகமே இருந்தது. அதோடு நான் தையலுக்குப் பயன்படுத்தும் நூல்கண்டுகள், எம்ப்ராய்டரிக்குப் பயனாகும் நூல்கண்டுகள், (கடைகளுக்குத் தைச்சுக் கொடுப்பேன்) ஊசி வகைகள், தைக்கக் கொடுத்த துணிகள், தையல் மிஷின் என எல்லாத்தையும் இங்கேயே விட்டுட்டா போகணும்?? தையல் மிஷினையும், புத்தகங்களையும் மட்டும் கையோடு எடுத்துண்டு போயிடலாமா?? யோசனை, யோசனை, யோசனை. அம்மா அதை எல்லாம் இப்போ தூக்கிண்டு போக முடியாது. எல்லாம் நல்லபடியா முடிஞ்சா தனிக்குடித்தனம் வைச்சா அப்போ நாங்க தூக்கிண்டு வந்து உன் கிட்டேயே கொடுப்போம். எங்கேயும் போகாது உன் சாமான்கள் எல்லாம் என்றாள். என் கணவர் கல்யாணம் முடிஞ்சதும் ஒரு வாரத்திலே புனா கிளம்புவதால் என்னையும் அழைத்துப் போகப் போகிறார் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதனால் நல்ல நாளும் குடித்தனம் வைக்கனு பார்த்துக்கொண்டிருந்தாங்க. அடக்கடவுளே!இப்போ என்ன பண்ணறது?? வெளியே போன அப்பா திரும்ப வந்து கிளம்ப நேரமாச்சு, இன்னுமா கிளம்பலை என அவசரப்படுத்த என்னோட கவலையை அம்மா சொல்ல, அப்பாவுக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வர எனக்கு இனம் புரியா அழுகை வந்தது. சும்மாவே தம்பிக்கும் எனக்கும் இந்தப் புத்தக விஷயத்தில் சண்டை வரும். இப்போ எல்லாத்தையும் அவன் எடுத்துக் கொண்டு விடுவானோ? கஷ்டப் பட்டு சேர்த்தது. பைண்டிங் செய்து கொண்டு வரது தம்பிதான். ஆனாலும்........ எப்போ வேணாலும் எடுத்துப் படிக்க முடியாதே. அழ ஆரம்பித்தேன். ஆனால் இப்போ நான் போவது அப்படி எல்லாம் இல்லை. இனி இந்த வீடு என்னுடையது இல்லை. இன்னொருத்தரோடு நான் தெரியாதஊரில் குடித்தனம் செய்யணும். ஒண்ணுமே புரியலை.அதற்குள்ளாக நானும், என் தம்பியுமாக டிவிஎஸ் நகர் வீட்டுக்குச் செல்ல ரிக்ஷாவுக்கும் சொல்லியாச்சு. நடந்தே போன எனக்கு வந்த வாழ்வு!   என் புத்தகங்களை விட்டுட்டுப் போகமாட்டேன்.   கல்யாணமாம், கல்யாணம்! தொடர்ச்சி 5 ஹும், என்னோட அப்பா கிட்டே எல்லாம் என்ன பிடிவாதம் பிடிச்சாலும் நடக்காது. புத்தகங்களை எடுத்துச் செல்ல அப்பாவின் அநுமதி கிடைக்கவில்லை. (திவா, சந்தோஷமா இருக்குமே) புடைவையோ, நகையோ எத்தனை வேண்டுமானாலும் வாங்குவார். செலவு பண்ணமாட்டார்னு இல்லை. ஆனால் அவரோட எண்ணமே பெண்கள் என்றாலே புடைவை, நகை, பாத்திரம், பண்டங்கள் என்று தான் ஆசைப்படுவார்கள், படணும் என்று. அப்போப் பல பெண்களும் இப்படி ஒரு ஆசைக்கு அடிமையாகத் தான் இருந்தார்கள் என்பதும் உண்மையே. நாங்க குடி இருந்த வீட்டிலே கூடவே குடித்தனம் இருந்த மாமி எல்லாம் மாசம் ஒரு புதுப்புடைவையாவது வாங்குவாங்க. இல்லைனா வீட்டில் ரகளை நடக்கும், பார்த்திருக்கேன். ஹிஹி, நாம தான் அநியாயத்துக்கு விசித்திரப் பிறவியாய்ப்போயிட்டோமா! தீபாவளிப் பட்டாசில் இருந்து அண்ணா, தம்பியோட போட்டி போடுவோமில்ல! அதே போல் படிப்பிலும் போட்டிதான். ஆனால் எனக்குப் புத்தகங்கள் கிடைக்காது. மகளே உன் சமர்த்து! எப்படிப் புத்தகம் வாங்கிப்பியோ, எப்படிப் படிப்பியோ உன் பாடுனுடுவார் அப்பா. புத்தகங்கள் வாங்கித் தந்ததே இல்லைனு தான் சொல்லணும், பெரியப்பா வீட்டிலும், மாமா வீட்டிலும் உதவுவாங்க. என்றாலும் அக்கவுண்டன்சி புத்தகம் யாரிடமும் இல்லாமல் கஷ்டப்பட்டிருக்கேன். அப்பா படிச்சது சுப்ரமணிய ஐயர் என்பவர் போட்ட அக்கவுண்டன்சி புத்தகம். அதைத் தேடி எடுத்துக்கொடுத்துட்டு இதுவே ஜாஸ்தினு சொல்லிட்டார் அப்பா. அப்புறமா அப்பாவின் நண்பர் ஒருத்தர் தன்னுடைய பாட்லிபாய் புத்தகத்தைக் கொடுத்து உதவினார். படிச்சுட்டுத் திருப்பிக் கொடுக்கணும்னு நிபந்தனையோட. இப்போ நான் படிக்கிறதே நின்னு போச்சே! இன்னும் அழுகை வந்தது. பாட்லிபாய் புத்தகத்தை எடுத்துக்கொண்டு போக முடியாது. இன்னொருத்தரோடது. அதோட அங்கே போய்ப் படிக்க முடியாதே. அழுகையுடன் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டு தடவிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். அப்பா ஒரு சத்தம் போட்டார். “அங்கே போய் மாமியார், மாமனாருக்கு ஒத்தாசையா இருக்காமப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு போய்ப் படிச்சுண்டா உட்காரப் போறே? இங்கே மாதிரி புத்தகமும் கையுமா அங்கே எல்லாம் இருக்க முடியாது. அதை நினைவில் வச்சுக்கோ!” என ஒரு அதட்டுப் போட்டார். அம்மா சமாதானத்துக்கு வந்து, “உன்னோட அலமாரியிலேயே வச்சுட்டுப் பூட்டிடு, நாங்க யாரும் எடுக்க மாட்டோம். நீ அப்புறமா வரும்போது, போகும்போதுகொஞ்சம் கொஞ்சமா எடுத்துக்கொண்டு போகலாம்.” என்று சொல்ல அரை மனசாப் புத்தகங்களை விட்டுவிட்டு, என்னோட எம்ப்ராய்டரி நோட்டுப் புத்தகம், ஆட்டோகிராஃப் நோட்டுப் புத்தகம்னு எல்லாத்தையும் எடுத்து வைச்சேன். ஆட்டோகிராஃபிலே டிடிகேயிடம் கையெழுத்துவாங்கியதில் இருந்து பல முக்கியமானவங்க கிட்டே வாங்கின கையெழுத்தெல்லாம் இருந்தது.  ஒரு மாதிரியா பாக்கிங் முடிச்சுட்டு ரிக்க்ஷா வந்ததும் அம்மா சாமி படத்துக்கு எதிரே உட்கார வைச்சு விபூதி, குங்குமம் இட்டுவிட்டு, வேப்பிலை சொருகி, வாசலில் சூரைத் தேங்காய் விட்டுவிட்டுத் தம்பியோட என்னை அனுப்பி வைச்சாங்க. மாமா வீட்டுக்கு வந்தாச்சு. மறுநாள் காலையிலே பந்தக்கால் முஹூர்த்தம். அப்பா, அம்மா காலையிலே வருவாங்க. அன்று மாலை வழக்கம் போல் குளிக்கப் போனேன். கல்யாணத்திற்கு என நகைகள் போட்டிருந்தேன். காதிலே தோடு வேறே புதுசா கனம், தாங்கலை. எல்லாத்தையும் கழட்டி விட்டு இருக்கணும் போல் ஒரு ஆசை. குளிக்கையில் நகைகளைக் கழட்டிட்டு அங்கேயே பாத்ரூமில் ஒரு பக்கமாய் சோப்புப் பெட்டியில் வைச்சேன். எப்போதுமே சோப்புப் பெட்டியைக் கையோடு எடுத்து வரது வழக்கம். குளிச்சுட்டும் கையோடு எடுத்துக்கொண்டு போவேன். அன்னிக்கு என்னமோ மறந்துட்டு வெளியே வந்துட்டேன். சுத்தமா நகைகள் நினைவே இல்லை. வெளியே வந்து மாமாக்களோட சிரிப்பு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம். எங்க அப்பா இல்லைனாத் தான் எங்க வீட்டிலே நாங்க எல்லாம் குதியாட்டம் போடுவோம். அப்பாவுக்கு பயம். ஆனால் இங்கே மாமா வீட்டில் கொஞ்சம் கூட பயமோ, வெட்கமோ, தயக்கமோ இருக்காது. ஒரே சிரிப்பும், விளையாட்டுமாய்த் தான் இருப்போம். அதுவும் எல்லாருக்கும் பள்ளி விடுமுறை. கல்யாணத்துக்கு என என் சித்தி குழந்தைகள் எல்லாரும் வந்திருந்தாங்க. மாமா வீட்டில் தாத்தா, பாட்டி, மூன்று மாமாக்கள், மாமிகள், குழந்தைகள் எனக் கூட்டுக் குடும்பமாய்த் தான் இருந்தாங்க. அதனால் அவங்க வேறே. எல்லாருமாய் விளையாடினோம். ட்ரேட் விளையாட்டு, சீட்டுக்கட்டில் செட் சேர்க்கிறது, ஆஸ் விளையாட்டு, பரமபத சோபானம் என எல்லாரும் தனித்தனியாகவும், குழுவாகவும் விளையாடுவோம். கடைசி மாமாவும் என் பெரியம்மா பிள்ளை(அண்ணா)யுமாகக் காரம் போர்ட் விளையாடினாங்க. மாமா வேணும்னே சீண்டுவார். அப்படி ஒருமுறை சீண்டும்போது காரம்போர்டின் காய்களை என் முகத்திலே வந்து விழ வைச்சார். வேணும்னு தான் பண்ணினார் என்பது புரிந்தது. கோபத்தோடு கையாலே அதை எடுக்கும்போது தான் கவனித்தேன், கைகளில் ஏதோ வெறுமை. ம்ம்ம்ம்?? என்ன ஆச்சு?? கல்யாணத்துக்கு எனப் போட்டுக்கொண்ட கண்ணாடி வளையல்கள் தங்க நிறம் கொண்டவை. அவை இருந்தன. ஆனால் தங்க வளையல்கள்?? அவசரம் அவசரமாய் இரண்டு கைகளையும் பார்த்தால் வளையல்களே இல்லை. என்னையும் அறியாமல் கழுத்தைத் தடவிப் பார்த்தேன். கழுத்திலும் எவையும் இல்லை. காது?? நல்லவேளை, வைரத்தோடு! கழட்டவில்லை. இருக்கு. மூக்கு?? ம்ம்ம்ம் மூக்குத்தியும் இருக்கு. அப்போ வளையல்கள், சங்கிலி, நெக்லஸ் போன்றவைதான் காணோமா? எங்கே வைச்சேன்?? ஆஹா, குளிக்கப் போனப்போக் கழட்டினோமே. சட்டுனு குளியலறைக்குப் போய்ப் பார்த்தேன். அங்கே என்னோட சோப்புப் பெட்டி மட்டுமே வைச்ச இடத்தில் இருந்தது. எனக்கப்புறம் யாரு குளிக்கப் போனாங்க?? ஒவ்வொருத்தரா விசாரிச்சேன். யாருமே நாங்க பார்க்கவே இல்லைனுட்டாங்க. அதிர்ச்சி அடைந்தேன். அப்பாவுக்கு என்ன பதில் சொல்றது??     கல்யாணமாம், கல்யாணம்! தொடர்ச்சி 6 []        நான் குளிச்சுட்டு வரச்சேயே கழுத்திலே நகைகள் இல்லைனு என்னோட பாட்டி பார்த்திருக்காங்க. அம்மாவோட அம்மா. ஹிஹிஹி, என் கல்யாணத்தின் போது அவங்களுக்கு 62 வயசுக்குள்ளேதான். என் அம்மாவுக்கு 40 ஆகலை. அப்பாவுக்கு 50 ஆகலை.  இப்போல்லாம் 60 வயசுக்குத் தான் முதல் பேரனோ, பேத்தியோ! அதுங்க கூட ஓடியாட முடியாமத் தவிக்கற தாத்தா, பாட்டிகள். இதை எல்லாம் யோசிச்சுத்தான் அந்தக் காலங்களிலே அப்படிப் பண்ணினாங்களோ! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மெயின் சப்ஜெக்டை விட்டுட்டு எங்கேயோ போயிட்டேனே. ஹிஹிஹி, இந்த அரசியலில் புகுந்தால் அப்புறமா நாட்டுமக்களைக் கவனிக்கணுமேனு கவலைதான் முன்னுக்கு வருது! கொஞ்ச நேரம் அரசியலை ஒதுக்கி வச்சுடலாம்.  பாட்டி பார்த்துட்டு என்னைக் கேட்கணும்னு இருக்கிறதுக்குள்ளே எனக்கு அடுத்துக் குளிக்கப் போன என் பெரியம்மா பெண் நகைகளைப்பார்த்துட்டா. இப்போவும் இங்கே அம்பத்தூரிலே தான் இருக்கா அவளும்! அவ அதை எடுத்துட்டு வந்து என்கிட்டே கொடுக்க வரச்சே கடைசி மாமா பார்த்துட்டு அதை வாங்கி ஒளிச்சு வைச்சுட்டார். பாட்டியையும், என்னோட அக்கா(பெரியம்மா பெண்)வையும் வாயைத் திறக்கக் கூடாது, அவளா கவனிக்கிறாளா பார்ப்போம்னு சொல்லி இருந்திருக்கார். ஹிஹிஹி, என்னோட கல்யாணம்னு நினைப்பு இல்லைனா கவனிச்சிருப்பேனா? சந்தேகமே. ஆனால் வெளி வீட்டுக்கல்யாணங்களுக்கு எல்லாம் நகைகள் போட்டுட்டுப் போறதில்லை என்பதால் அந்த எண்ணமே வந்திருக்காது. கடைசியில் எப்படியோ கண்டு பிடிச்சுட்டுக் கவலையாப் போச்சு. பாட்டிட்ட கேட்கும்போது பாட்டி என்கிட்டே, “அப்படி என்ன மறதி? இன்னும் இரண்டு நாளில் கல்யாணமாகிப் புக்ககம் போகப் போறே! கழுத்திலிருந்து நகையைக் கழட்டினாக் கையோடு பெட்டியில் வைச்சுப் பூட்டணும்னு நினைவு வராதா? தோணாதா? போய் உன் மாமாவைக் கேள்!” னு சொல்லிட்டாங்க.)))) மாமா முதலில் ஒத்துக்கவே இல்லை. தெரியவே தெரியாதுனு சாதிச்சுட்டார். அப்புறமா ராத்திரி சாப்பாடும் வேண்டாம்னு நான் ரொம்பவே வருத்தமா இருக்கிறதைப் பார்த்துட்டு, ஸ்வாமி அறைக்குப் போய் 108 தோப்புக்கரணம் போடச் சொன்னார். போட்டேன். (யாரானும் சிரிச்சா பார்த்துக்குங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) அதுக்கப்புறமாக் கடுமையான கண்டிப்புடனும், நிபந்தனைகளுடனும் நகைகளை மாமா கொடுத்தார். ஆனால் என்னோட தாத்தா மட்டும் இருந்திருந்தா என்னை இப்படியெல்லாம் அழ விட்டிருக்க மாட்டார். குழந்தையை ஏன்ப்பா தொந்திரவு செய்யறீங்கனு மாமாக்களைக் கண்டிச்சிருப்பார். நான் ரொம்பவே செல்லம் தாத்தாவுக்கு. மறுநாள் அதிகாலையிலேயே பந்தக் கால்முஹூர்த்தம் நடந்து முடிந்தது. மறுநாள் வெள்ளிக்கிழமை நல்ல நாளாய் இருந்ததால் அன்று சுமங்கலிப் பிரார்த்தனை, அதற்கடுத்த சனிக்கிழமை வெங்கடாசலபதி சமாராதனை. ஆகையால் அன்று மாலையே என்னைப் பெரியப்பா வீட்டில் கொண்டுவிடும்படி சொல்லிட்டு அப்பா போயிட்டார். நகை விஷயம் அப்படியே மூடி மறைக்கப் பட்டது. அப்பாவிடம் யாரும் மூச்சுக் காட்டவில்லை. அம்மாவுக்கு மட்டும் தெரியும். இதற்குள்ளாக ஹோசூரிலிருந்து என்னோட அண்ணா என் கல்யாணத்துக்காக லீவு எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தார். அண்ணா அங்கே இருந்தப்போ நாங்களும் அடிக்கடி ஹோசூர் போவோம். எனக்கு ரொம்பப் பிடிச்ச ஊர்களிலே ஹோசூரும் ஒண்ணு. அங்கிருந்த மலைக்கோயிலுக்கு சாயந்திரம் மூணு மணிக்கு மெதுவா ஏற ஆரம்பிச்சு மேலே போய் தரிசனம் பண்ணிண்டுக் கீழே இறங்கி வரச்சே ஏழு மணிஆகும். ஆனாலும் அலுப்பே தெரியாது. அண்ணாவையும் பார்க்கணும், எனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கார்னு பார்க்கணும்னு ஆசை. ஆனால் எங்க வீட்டுக்கு இப்போ வரவேண்டாம், நல்ல நாள், நல்ல வேளை பார்த்துப் போயாச்சு, இனிமேலே திரும்பி வரச்சே கல்யாணம் முடிஞ்சு பால், பழம் சாப்பிடத் தான் வரணும்னு அப்பா சொல்லிட்டார். கொஞ்சம் ஏமாற்றம் தான்! மறுநாள் பெரியப்பா வீட்டில் சுமங்கலிப் பிரார்த்தனை முடிந்தது. அன்று மாலையே எல்லாருக்கும் புடைவை வைச்சுக் கொடுக்க எல்லாருமே புதுசு கட்டிக்கொண்டோம். அதற்கடுத்த மறுநாள் சமாராதனை. முன்பெல்லாம் சமையலுக்கு நேரம் ஆச்சுனா என்ன சமாராதனைக்கா சமைக்கிறே எனக் கேலி செய்வாங்க. உண்மையில் அப்போல்லாம் சமாராதனை என்றால் அவ்வளவு விமரிசையாக நடக்கும். எங்க தெருவே அன்னிக்கு எங்க வீட்டில் சமாராதனையில் கலந்து கொள்வதோடு எல்லாருக்குமே சாப்பாடும் இருக்கும். சமைக்கிறதுக்கு வெளி ஆட்கள் எல்லாம் கிடையாது. வீட்டில் இருக்கும் நபர்கள் தான். வீட்டுக்கார மாமி ஒரு வேலையை எடுத்துப்பாங்க. என்னோட அம்மா, பெரியம்மாக்கள் சமையலில் ஈடுபடுவாங்க. பெரிய பெரிய வெண்கலப் பானையில் சர்க்கரைப் பொங்கல், சாதம் வடிச்சு, ஈயம் பூசிய அண்டாக்களில் ரசம், சாம்பார், மோர்க்குழம்பு, வடை எனத் தயாராகும். குறைந்த பட்சமாக புரட்டாசி மாச சமாராதனைக்கே நூறு பேர் சாப்பிடுவாங்க. இது கல்யாண சமாராதனை. கேட்க வேண்டுமா? அதிலும் எங்க அப்பா வீட்டில் பெரியப்பா பெண்களுக்குக் கல்யாணம் ஆகி இருந்தாலும் அப்பா தலை எடுத்துச் செய்யும் முதல் கல்யாணம். அம்மா வீட்டிலோ அம்மாவின் அக்கா பெண்ணுக்குக் கல்யாணம் இன்னும் நிச்சயம் ஆகவில்லை. ஆகவே திருமணம் நடக்கப் போகும் முதல் பேத்தி நான் தான். மாமாக்களில் முதல் மாமாவுக்குத் தான் பெண். அவள் என்னைவிட நாலைந்து வயசு சின்னவள்.  அதனால் கூட்டம் சமாராதனையிலேயே கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது புரிய வந்தது. சுற்றம், சூழ என்பது அந்தக் காலங்களில் நிஜமாகவே பின்பற்றப்பட்டதோடுவருபவர்கள் உதவியாகவும் இருப்பார்கள். சமாராதனை முடிந்து நாங்க திரும்ப ராத்திரி ஆச்சு. கிட்டத்தட்ட ஒன்பது மணிக்கும் மேல் எல்லாரும் படுத்துக்கொண்டிருந்தோம். அப்போ வெளியே கல்யாணப்பந்தல் அலங்காரங்களைக் கவனித்துக்கொண்டிருந்த என்னுடைய மூணாவது மாமாவும், கடைசி மாமாவும் உள்ளே வந்து பாட்டியை எழுப்பினார்கள். அம்மா, அப்பா மறுநாள் காலை தான் வரப்போறாங்க. ஞாயிற்றுக்கிழமை தான் நாந்தி, விரதம் எல்லாம். அதனால் விடிகாலையில் கிளம்பி வருவாங்க. பாட்டியை எழுப்பின மாமாக்கள் , “அம்மா, சம்பந்தி வீட்டிலே எல்லாரும் வந்துட்டாங்க. அதிலும் மாப்பிள்ளையும், அவங்க அம்மா, அப்பாவும் வந்துட்டாங்க. “ என அறிவித்தனர். பாட்டிக்கு ஒரு நிமிஷம் புரியவே இல்லை. சனிக்கிழமை இரவு வண்டியில் கிளம்பி ஞாயிறு காலை மதுரையை வந்தடையும் வண்டியில் அல்லவோ வரதாகச் சொன்னார்கள்? இப்போ எந்த ரயில் வந்தது?? ரயிலில் வரலையாம். பஸ்ஸிலே வந்திருக்காங்க. மிச்சம் பேரும் அடுத்தடுத்த பஸ்ஸில் வந்துட்டு இருக்காங்களாம்.” கடைசிமாமாவின் நியூஸ். மாப்பிள்ளை வீட்டார் தங்க மாமா வீட்டுக்குப் பக்கத்து வீடு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் அந்த வீட்டு மனுஷங்க கதவைப் பூட்டிக்கொண்டு தூங்கிட்டாங்களே. காலையிலே ஒழிச்சுத் தரேனு சொல்லி இருந்தாங்களே! இப்போ அவங்களை எப்படி எழுப்பறது?     கல்யாணமாம், கல்யாணம்! தொடர்ச்சி 7 []   மாப்பிள்ளை வீட்டில் எல்லாரும் காலையிலே வருவாங்க. குறைஞ்ச பக்ஷமாய் 200 பேர் வருவோம்னு சொல்லி இருக்காங்க. அதனால் வண்டி வேண்டும் என அப்பா, சம்பந்திகளுக்கும் அவங்க குடும்பத்துக்கும் இரண்டு காரும், மத்தவங்களுக்கு இரண்டு வானும் ஏற்பாடு பண்ணி இருந்தார். என்னோட சொந்த அண்ணாவும், பெரியப்பா வழி அண்ணாவும், பெரியம்மாவோடு போய் அழைத்துவரணும்னு ஏற்பாடு. ஆனால் அவங்க எல்லாம் டவுனிலே இருக்காங்க. அதுக்குள்ளே இங்கே இவங்க வந்தாச்சு. காலையிலே வரேன்னு சொன்னவங்க திடீர்னு இப்போ வரப் போறது யாருக்குத் தெரியும்?? மாப்பிள்ளைக்கு ஆரத்தி சுத்திக் கொட்டி உள்ளே அழைக்கணும். அதோட ஏற்பாடு பண்ணி இருக்கிற வீட்டிலே இருக்கிறவங்களை வேறே எழுப்பித் தொந்திரவு செய்யணும். வீட்டைக் காலையிலே தான் ஒழிச்சுக் கொடுக்கிறேன்னு சொல்லி இருந்தாங்க. என்னோட பாட்டி மாமிகளை எழுப்பி அவங்களை வரவேற்கச் சொல்லிட்டு, பக்கத்து வீட்டிலேயும் ஆளை அனுப்பி எழுப்பச் சொன்னாங்க. மாமிகள்போய் ஆரத்தி எடுத்து வரவேற்றுப் பக்கத்து வீட்டிலே கொண்டு விட்டுட்டு, சாப்பாடு பத்தி விசாரிச்சாங்க. எல்லாரும் சாப்பிட்டு வந்தோம்னு சொல்லவே, அவங்க படுக்க ஏற்பாடு பண்ணிக் கொடுத்துட்டு வந்தாங்க. இந்த அமர்க்களத்தோட சமையல்காரங்க குழுவும் வந்து சேரவே அவங்களுக்கு வேண்டிய சாமான் எடுத்துக்கொடுத்துட்டு மாமி, பாட்டி எல்லாம் அதிலே பிசி ஆனாங்க. மறுநாள் தயாராக வந்த வண்டிகளை அவங்க வீட்டுக்கு வந்ததுக்கு மட்டும் ஆன தொகையைக் கொடுத்துத் திருப்பி அனுப்பவேண்டி வந்தது.  எல்லாரும் என்னைக் கேலி செய்தாங்க. மாப்பிள்ளைக்கு அவசரம் பாரு, உன்னைப் பார்க்கறதுக்குனு ஒரு நாள் முன்னாடி வந்துட்டாரேனு. காலம்பர விடிஞ்சது. அப்பாவுக்குச் செய்தி சொல்ல மாமா ஒருத்தர் சைகிளில் கிளம்பிப்போனார். யார் வீட்டிலேயும் தொலைபேசி கிடையாது அப்போ. மாமா அந்தப் பக்கம் போயிருப்பார், இந்தப்பக்கம் அப்பா வந்துட்டார். அப்பா முகமே சரியாய் இல்லை. என்னமோ ஏதோனு நினைச்சா, மாப்பிள்ளை வீட்டிலே இருந்து யாருமே வரலைனு சோகத்தோட சொன்னார். அதுக்குள்ளே அம்மாவும், மற்ற உறவினர்களும் ஒவ்வொருத்தரா வர ஆரம்பிக்க, மாப்பிள்ளையும் அவங்க அம்மா, அப்பாவும் முதல் நாளே வந்துவிட்ட செய்தி அப்பாவுக்குச் சொல்லப் படவே அப்பாவும், அம்மாவும் ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் அவங்க வீட்டின் மிச்ச உறவினர்களும் வர எங்க பக்கத்து உறவினர்களும் சேர்ந்து கொள்ள வீட்டில் இடம் போதவில்லை. அதுக்குள்ளே என்னோட பெரிய நாத்தனார் என்னைப் பார்க்கணும்னுஅங்கே வர அவங்க என்னைப் பார்த்துட்டு ஏதோ ஸ்கூல் போற பொண்ணு போலனு நினைச்சிருப்பாங்க போல. அப்புறமா நான் தான் கல்யாணப்பொண்ணுனு எல்லாரும் சத்தியமே செய்து கொடுத்ததோடு, அவங்க தம்பியையும் கேட்டுக்கச் சொன்னாங்க.    அதுக்குள்ளே எல்லாருக்கும் காபி வரவே, அங்கே இருந்தவங்களுக்கு ஒருத்தரும் மாப்பிள்ளை வீட்டிற்கு இன்னும் இரண்டு பேரும் காபியை எடுத்துச் செல்லக் கூடவே என் பெரியம்மாவும், பெரியப்பாவும் போனாங்க. அப்போல்லாம் மாப்பிள்ளை வீட்டில் வரும் நபர்கள், கல்யாண மாப்பிள்ளை உட்படக் கல்யாணம் நடக்கும் இடத்துக்கே வந்து சாப்பிடறது, காபி, டிபன் சாப்பிடறது எல்லாம் கிடையாது. அநேகமான திருமணங்கள் வீடுகளிலேயே நடைபெறும். வீடுகளும் திருமண விருந்தினர்களைத் தாங்கும் அளவிலேயே கட்டப் பட்டிருக்கும். அப்படி இல்லை என்றாலும் மதுரையில் ஒரு வசதி என்னவென்றால் அந்தக் காலகட்டங்களில் தெருவும், சரி, ப்ளாட்பார்ம் என்னும் நடைமேடையும் சரி சுத்தமாகவே இருந்தது. தினமும் சுகாதாரப் பணியாளர்கள் வந்து தெருவைச் சுத்தம் செய்வார்கள். வீட்டின் முன்னர் இருந்த நடைமேடைகளும் அந்த அந்த வீட்டுக்காரர்களால் சுத்தமாய்ப் பெருக்கப் பட்டுக் கோலங்களோடு காட்சி அளிக்கும். ஆகவே நடைமேடையில் அக்கம்பக்கத்து வீடுகளையும் சேர்த்துப் பந்தல் போட்டு, மணல் நிரவி, கொட்டகை அலங்காரம் செய்து கல்யாண மேடை கட்டித் திருமணங்கள் நடக்கும். இதற்கென அப்போதைய முனிசிபாலிட்டியின் அநுமதி ஒன்றுதான் தேவை. அதுவும் எந்தவிதமான இடையூறுகளும் இன்றிக்கிடைத்தன. அது ஒரு காலம்! என் கல்யாணமும் மாமா வீட்டு வாசலில் அக்கம்பக்கம் மூன்று வீடுகளையும் சேர்த்துப் பந்தல் போட்டுத் தான் நடந்தது. :D எங்கேயோ போயிட்டேனே. மாப்பிள்ளை வீட்டில் சாப்பிட வரமாட்டாங்கனு சொன்னேன் இல்லையா?? அதனால் அவங்க தங்கும் இடத்திற்கே எல்லாமும் போகும். ஒருவேளை சத்திரங்களில் திருமணம் நடந்தாலும் அவங்களுக்கென ஒதுக்கி இருக்கும் அறைகளில் சாப்பாட்டுக் கூடமும் ஒன்று கட்டாயம் இருக்கும். அங்கே எல்லாவற்றையும் எடுத்துப் போய்ப் பரிமாறுவார்கள். தனிப்பட்ட சிறப்பான கவனிப்பு இருக்கும். சாப்பாடும், பரிமாறும் ஆட்களும் மட்டும் போனால் போதாது. கூடவே பெண் வீட்டில் பெரியவங்க யாரானும் இரண்டு பேரோ, நான்கு பேரோ போகவேண்டும். ஆகவே என்னோட பெரியப்பாவும், பெரியம்மாவும் காபி, டிபனோடு போனாங்க. அப்படியே கல்யாணத்துக்கு முதல் நாள் நடக்கும் விரதம்/நாந்தி போன்றவற்றிற்கு அவங்களுக்குத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கவேண்டும். இப்போ இந்த விரதம்/நாந்தி பற்றிய ஒரு சின்ன அறிமுகம் பார்த்துட்டு மேலே தொடரலாமா?? இந்த நாந்தி என்பது குடும்பத்தின் முன்னோர்களுக்கான ஒரு சடங்கு. இதைக் கல்யாணங்களில் செய்வது நல்லது. முன்னோரின் ஆசிகளும், வாழ்த்துகளும் கிடைக்கும் என்பதோடு அவங்க அநுமதியையும் பெற்றுக்கொள்வதற்காக எனச் சொல்வது உண்டு. ஆனால் இதையும் திருநெல்வேலிக் காரங்க செய்யறதில்லை. அவங்களுக்குக் கல்யாணத்தில் நாந்தி செய்வது அச்சானியம் என்று சொல்வதுண்டு. தஞ்சை, மதுரை மாவட்டங்களில் இது கட்டாயமாய் இடம் பெறும். குடும்ப வழக்கத்தைப் பொறுத்து புரோகிதர்கள் வருவாங்க. ஒன்பது பேர் கட்டாயம்னு சில குடும்பங்களில் உண்டு. அன்னிக்குக் கல்யாணத்துக்கு வந்திருக்கும் விருந்தினர் அனைவருமே டிபன், காபி சாப்பிட பெண் வீட்டில் பெண்ணின் அம்மா, அப்பா, கல்யாணப் பெண், பிள்ளை வீட்டில் பிள்ளையின் அப்பா, அம்மா, கல்யாணப் பிள்ளை மட்டும் எதுவுமே சாப்பிடாமல் இவற்றை முடித்த பின்னரே சாப்பிட வேண்டும். அதுவும் ஒரு சிலர் வீடுகளில் இதற்கெனத் தனிச் சமையலும் உண்டு.  அந்தத் தனிச் சமையல் தாயாதிகள் மட்டுமே சாப்பிடலாம்.   நாந்தி குறித்த விளக்கம் தி.வா. என்னும் திருமூர்த்தி வாசுதேவன் கொடுத்தது கீழே! சுப கர்மாக்கள் செய்யும் போது எல்லா தேவர்கள் ஆசியுடன் செய்கிறோம். குல தெய்வ வழிபாடு உண்டு. அதே போல பிருக்களின் ஆசிர்வாதங்களுடனும் செய்ய வேண்டும். இதுவே சுமங்கலி ப்ராத்தனை என்றும் நாந்தீ என்றும் அறிப்படுகிறது. இது சூத்திரங்களில் விதிக்கப்படவையே ஆகும். அதனால் அச்சானியமாக இருப்பதாக நினைத்து விட்டுவிடக்கூடாது. இதை சூத்திரங்களில் 'ப்ரம்மணான் போஜயித்வா, ஆஶிஷோ வாசயித்வா' என்ற வாக்கியங்களும் உணர்த்துகின்றன. பித்ருக்களில் பலவகை உண்டு.அதில் நாந்தீமுகர் என்பவரே சுப காலங்களில் ஆராதிக்கத்தக்கவர். சுமங்கலி ப்ரார்த்தனை, சமாராதனை என்பதைப்போலவே இவையும் செய்யப்பட வேண்டும். ஶ்ரத்தை உள்ளோர் இன்னும் அன்ன ரூபமாகவே - அதாவது ஹவிஸ் வைத்து நாம் வழக்கமாக செய்யும் ஶ்ராத்தம் என்பதை அறிவது போலவே செய்ய வேன்டும். வித்தியாசங்கள் உண்டு. உபவீதத்தை இடமாக போட்டுக் கொள்வதில்லை. எள்ளைத்தொடுவதில்லை. பதிலாக மங்கள அக்ஷதை பயனாகும். வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூப பித்ரு-பிதாமஹ-ப்ரபிதாமஹ என்பதற்குப்பதிலாக - நாந்தீமுக என கூறப்படும். பித்ருக்கள் பலவகையாக இருப்பதுபோலவே விஶ்வேதேவர்களும். இங்கே சுப காரியங்களுக்கு உள்ளோர் ஸத்ய வஸு என பெயருடையோர். இன்னொரு வித்தியாசம் இங்கு ஸ்த்ரீக்களே முதலில் வரிக்கப்படுவர். அவர்களுக்கே முதலில் பூஜை. அதே போல வழக்கமாக கீழே ஆரம்பித்து மேலே அன்னை-பாட்டி-கொள்ளுபாட்டி என்று போகாமல்; அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா என்று போகாமல் மேலிருந்து கீழே வரிசையாக வரும்.  ஹோமத்திலும் இதே போல் நாந்தீமுக என்ற அடைமொழியுடன் ஹோமம். உத்தமமானது விதிவத்தாக ப்ராம்ஹணர்களை வரித்து வருட ஶ்ராத்தம் போல செய்வது. மத்திமம் ஆம ஶ்ராத்தம் என வாழை இலையில் அரிசி வாழைக்காய், தக்ஷிணை, வஸ்த்ரம் வைத்து கொடுப்பது. இதுவும் இல்லாவிட்டால் நிறைய தக்ஷிணை கொடுத்து ஆசீர்வாதம் செய்யச் சொல்ல வேண்டும். சாப்பாடு போட வேண்டிய இடத்தில் காப்பிக்குக்கூட வராத பணத்தை கொடுத்து நாந்தீ செய்ததாக எண்ணக்கூடாது. எங்க அப்பா, அம்மா, இங்கே மாமா வீட்டின் வாசல் பந்தலில் என்னையும் வைத்துக்கொண்டு விரதம் ஆரம்பிக்க மாப்பிள்ளை வீட்டில் அவங்க தங்கி இருக்கும் இடத்திலேயே விரதம், நாந்தி போன்றவற்றைச் செய்து கொள்வதாய்ச் சொல்லிட்டாங்க. தாலி கட்டும் முன்னர் பிள்ளையும் பெண்ணும், மணவறையில் ஒரே இடத்தில் அமரக் கூடாது என்பது அவங்க சொன்ன காரணம். இங்கே பந்தலுக்கு வந்தால் மணமேடையிலேயே அவங்க ஒரு பக்கமும், நாங்க இன்னொரு பக்கமும் உட்காரணும். அதைத் தவிர்க்க வேண்டி அப்படிச் சொன்னாங்க. அதோடு அன்று மாலை நடக்க இருக்கும் நிச்சயதார்த்தத்திற்கும் பெண்ணுக்குத் தனியாகவும், மாப்பிள்ளைக்குத் தனியாகவுமே நடத்தவேண்டும் என்பதையும் வற்புறுத்திச் சொன்னார்கள். தஞ்சைப் பக்கங்களில் பெண்ணையும், பிள்ளையையும் ஒன்றாய் உட்கார்த்தி வைத்து நிச்சய தார்த்தம் செய்ய மாட்டாங்களாம். எங்களுக்கு அது வழக்கமில்லை என்றார்கள். சரினு அவங்க அங்கேயே விரதம் பண்ண ஏற்பாடு செய்து கொடுத்தாங்க. முதல் பிரச்னை கோலத்தில் ஆரம்பம். :))))))))))   கல்யாணமாம், கல்யாணம்! கல்யாணத்தில் கோல கலாட்டா! [] கோலம் போடுதல் கல்யாணத்திற்கு என்பது தனிக்கலை. பெண்ணும், மாப்பிள்ளையும் கிழக்குப் பார்த்தே அமர வைக்கப் படுவார்கள். ஆகவே போடும் கோலமும் அதற்கேற்றாற்போல் இருக்க வேண்டும். மதுரைப் பக்கத்தில் இரட்டைக் கோலம் தான் போடுவார்கள். அதை மணைக்கோலம் என்றும் சொல்வார்கள். இரண்டு பெரிய சதுரங்களைப் போட்டு இரண்டையும் முக்கோணங்களால் இணைத்திருப்பார்கள். கணினியிலே முடிஞ்ச வரைக்கும் அந்த மாதிரியான மணைக்கோலம் போட்டுப் பார்த்தேன், சரியாக வரவில்லை. கூகிளாரைத் தான் கேட்டு வாங்கி இருக்கேன். இப்போ நாம ரெண்டு பக்கத்துக்கோலத்திலும் தூள் கிளப்பிட்டு இருக்கோமுல்ல? . தஞ்சைப் பக்கமோ இதோ இருக்கும் இந்தக் கோலம் மாதிரி ஒரே கோலம். []   ஒரே கோலத்தை எவ்வளவு பெரிதாகவோ, சின்னதாகவோ போட்டுக்கலாம். கல்யாணங்களில் பெரிய கோலமே போடுவார்கள். அநேகமாய் ஒரே கோலமே பலவிதமான அலங்கார வேலைப்பாடுகளுடனும், கிளி, அன்னம் போன்ற வரைவுகளுடனும் மேடையை நிறைத்திருக்கும். இங்கே அதெல்லாம் காண முடியாது. இரண்டு பெரிய கோலங்களை ஒன்றாய் இணைத்திருப்பார்கள். அருகருகே இரண்டு கோலங்கள் போடுவார்கள். அலங்காரங்கள் அதிகம் இருக்காது. ஆகவே விரதம் நடக்கும் இடத்திலும் அப்படித் தான் போடப் பட்டிருந்தது. கோலத்தைப் பார்த்ததுமே என் மாமியாருக்கு அப்செட். இதென்ன சின்னக் கோலமாய் இருக்கு? அதோட ரெண்டு கோலம் வேறே போட்டிருக்கீங்க? இதெல்லாம் வழக்கமே இல்லையே? னு கேட்க, கல்யாணத்துக்கு ரெண்டு கோலம் தான் அப்படினு எங்க வீட்டுப் பெரியவங்க சொல்ல, என் மாமனாரோ இதுக்குத் தான் தெரியாத இடத்தில் சம்பந்தம் வேண்டாம்னு சொன்னேன்னு சொல்ல, ஒரு சின்னக் களேபரம்.  அதற்குள்ளாக என் சித்தி, (அசோகமித்திரன் மனைவி) வந்து மதுரைப் பக்கம் ரெண்டு கோலம் தான் அதனால் என்ன?? சாயந்திரம் நிச்சயதார்த்தத்திலேயும், நாளைக் கல்யாணத்திலேயும் நீங்க சொல்றாப்போல் போட்டுடலாம்னு சமாதானம் செய்ய அப்போதைக்குப் பிரச்னை முடிந்தது. அதுக்கப்புறம் விரதம் முடிந்து நாங்கல்லாம் சாப்பிடும்போது ரெண்டு மணியோ என்னமோ, சரியாய் நினைவில் இல்லை. அப்பாவுக்குப் பசி ஜாஸ்தியாய் இருந்தது மட்டும் நினைப்பு இருக்கு. சாயந்திரம் நிச்சய தார்த்ததில் பெண்ணையும், பையரையும் சேர்த்து உட்கார வைக்கக் கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்திச் சொன்னார்கள். ஜானவாசத்துக்குக் காரா? இல்லைனா சாரட் வண்டியானு கேட்க, கார் தான் ஏற்பாடு பண்ணி இருப்பதாய் அப்பா சொல்லி இருக்கார். அதற்குள்ளாக எங்க ஆஸ்தான ஜோசியர் மாமா வர அவர் அறிமுகம் நடந்திருக்கிறது. அப்போத் தான் என் கணவர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கார். தற்சமயம் புனாவில் இருப்பதால் அங்கே வீடு அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது என்றும், பகடி நிறையக் கொடுக்க வேண்டி இருக்கும் என்பதால் தான் புனேக்கு அருகிலுள்ள, தேசீய ராணுவ அகாடமிக்கு மாற்றல் கேட்டிருப்பதால், அங்கே மாற்றல் கிடைத்ததும், ராணுவக் குடியிருப்புக் கிடைக்கும் என்றும் சொல்லிட்டு, அதனால் தற்சமயம் என்னைப் புனேக்கு அழைத்துச் செல்லப் போவதில்லை என்றும் விட்டு விட்டுத் தான் போகப் போகிறேன் என்றும் சொல்லி இருக்கார்.  இது கொஞ்சம் என் அப்பா, அம்மாவுக்கு அப்செட் தான். மாற்றல் கிடைக்க எத்தனை மாசம் ஆகிறதோ? அது வரைக்கும் இங்கே மாமியார் வீட்டிலேயும், கொஞ்ச நாட்கள் எங்க வீட்டிலேயுமா இருக்கட்டும் என்றும் தீர்ப்பாகி இருக்கிறது. அதுக்குள்ளே எங்க மாமியார் கல்யாணம் ஆகி முதல் முதல் வரச்சே ரெண்டு பேரும் சேர்ந்து தான் வரணும், இப்போ லீவுக்குள்ளே எங்க பிள்ளைக்கு மறுவீடு வர முடியுமா தெரியலைனு சொல்லி இருக்காங்க. அப்போத் தான் நம்ம ஆஸ்தானம் போய்ச் சேர்ந்திருக்கார். அவர் பங்குக்கு அவரும் ஒரு குண்டைத் தூக்கிப் போட யாருமே நம்பவில்லையாம். என் கணவர் உட்பட கேலியாகச் சிரிச்சிருக்காங்க. அவர் சொன்னதும், மற்ற விபரங்களும் தொடரும். அதுக்குள்ளே போர்க்கொடி போர்க்கொடி தூக்கினாங்க இல்லை? ஏன் ரெண்டு பேரையும் சேர்த்து உட்கார வைக்கக் கூடாது என்று உரிமைப் போராட்டம் தொடங்கினாங்க இல்லை? அதைக் கவனிப்போமா?     போர்க்கொடிக்கு பதில் கல்யாணமாம், கல்யாணம் இந்துத் திருமணங்களில் சப்தபதி தான் முக்கியம். அது முடிந்தாலே திருமணம் முடிவடைந்ததாக அர்த்தம். தாலி என்னும் மங்கல சூத்திரம் கட்டியதும் திருமணம் முடிந்துவிட்டதாய்க் கூறுவது முழுத் தவறு. இந்துத் திருமணச் சட்டம் சப்தபதி முடியாத திருமணத்தை அங்கீகாரம் செய்யாது. திருமணம் நடக்கவில்லை என்றே கருதப்படும். இப்போதெல்லாம் பதிவு முறை இருந்தாலும் சாஸ்திர ரீதியாகத் திருமணம் நடந்தால் பதிவு தேவையில்லை; தம்பதிகள் இந்தியாவுக்குள்ளேயே இருக்கும் பட்சத்தில், அதுவே போதுமானது. இப்போது தான் பதிவையும் கட்டாயமாக்கி இருக்கின்றனர். வெளிநாடுகளுக்குச் செல்வதால் பதிவு அவசியமான ஒன்றாகி விட்டது. ஆனால் முன்பெல்லாம் கிடையாது. ஆகவே ஒரு காலத்தில் (இப்போதும்) சப்தபதி முடியும் முன்னரே தாலி கட்டியும் கூட ஒரு சில திருமணங்கள் நின்றிருக்கின்றன. சில திருமணங்கள் மாலை மாற்றல், ஊஞ்சல் போன்றவற்றோடும் நின்றிருக்கின்றன. இதனால் அந்தப் பெண்ணிற்கும், பையருக்கும் ஏற்படும் மன உளைச்சல் அதிகமாய் இருக்கும். அதிலும் அருகருகே நின்று விட்டால் அதன் மூலம் ஏற்படும் ஈர்ப்பு இன்னமும் அதிகமாய் இருக்கும் அல்லவா? பொதுவாய்த் திருமணம் நடக்கும் முன்னர் பையரும், பெண்ணும் ஒருவரோடு ஒருவர் பேசக் கூடாது, பார்த்துக் கொள்ளக் கூடாது, கடிதம் எழுதிக் கொள்ளக் கூடாது என்று சொல்வதன் தாத்பரியமே இதுதான். ஒரு வேளை வேறு எந்தக் காரணத்தாலும் திருமணம் நிற்கலாம். விபத்துக்கள் நேரலாம். மனம் மாறலாம். மனித மனம் ஒரு குரங்கல்லவா? அல்லது பையரின் பெற்றோருக்கோ, பெண்ணின் பெற்றோருக்கோ இன்னும் சிறந்த மணமகனோ, மணமகளோ கிடைத்திருக்கலாம். அதனாலும் மனம் மாறலாம்.  அப்போது இம்மாதிரித் திருமணத்தில் பையரோடு சேர்ந்து நின்றது மனதைப் பாதிக்காமல் இருக்கவேண்டியே தடுக்கின்றனர். இது அந்தக் காலத்தில் சிறு வயது விவாகத்திலேயே தடுக்கப் பட்டது. இப்போதோ கேட்கவே வேண்டாம். குறைந்த பக்ஷமாக இருபத்தைந்து வயதாவது மணமகளுக்கு ஆகிவிடுகிறது அல்லவா? அப்போது திடீரெனத் திருமணம் நின்றால் மனதைக் கடுமையாகப் பாதிக்கும் அல்லவா? அதோடு அப்போதெல்லாம் இந்த ரிசப்ஷன் என்னும் சம்பிரதாயமே சுத்தமாய்க் கிடையாது. ரொம்ப அபூர்வமாகச் சில பணக்காரக் குடும்பங்களிலும், திரைப்பட நடிக, நடிகையர், தொழிலதிபர்கள் போன்றவர்கள் வீட்டுக் கல்யாணங்களிலேயே ரிசப்ஷனைப் பார்க்க முடியும். என்றாலும் என் கல்யாணத்தில் பெயருக்கு ரிசப்ஷன் இருந்தது. அப்பாவின் நண்பர்கள் கேட்டுக்கொண்டதாலும், மாமாவின் அலுவலக நண்பர்களுக்காகவும் ஏற்பாடு செய்யப் பட்டது. நலுங்கு முடிந்து ஐந்தரை மணியில் இருந்து ஆறரைக்குள்ளாக. அப்போது வரவங்க ரொம்பக் கொஞ்சம் பேர் தான் இருப்பாங்க. அதிகம் போனால் ஒரு ஐம்பது பேர். ரிசப்ஷனிலும் ஒரு ஸ்வீட், காரம், காபி, அல்லது ஜூஸ் ஏதேனும் தான் கொடுப்பாங்க. இப்போ மாதிரி விலாவரியாச் சாப்பாடெல்லாம் இருக்காது. அதோட அப்போ வைதீகச் சடங்குகளுக்கு முக்கியத்துவம் இருந்ததால் சரியாய் ஆறரைக்கெல்லாம் புரோகிதர் மணப்பெண்ணையும், பிள்ளையையும் சாஸ்திர ரீதியான சடங்குகளுக்கு அழைத்துச் சென்றுவிடுவார். அவரை மீறி யாரும் எதுவும் சொல்லவோ, செய்யவோ மாட்டாங்க. அது ஒரு காலம். இன்றைய திருமணம் போல் காலையிலேயே அவசரம் அவசரமா முடிக்கிறதெல்லாம் இல்லை. இந்த ரிசப்ஷன், நிச்சயதார்த்தம் போன்றவற்றில் ஏன் முதல்நாளே பெண்ணும், பிள்ளையும் சேர்ந்து அமருவது தடை செய்யப் பட்டது முன் காலங்களில் என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் அல்லவா??   சப்தபதி என்றால் என்ன? ஒரு விளக்கம்! இப்போ சப்தபதின்னா என்னனு ராம்ஜி யாஹூ கேட்டதுக்கு ஒரு சின்ன விளக்கம். திவாவைக் கொடுக்கச் சொன்னேன். அவர் கண்டுக்கவே இல்லை. :P போகட்டும், சப்தபதி என்பது அக்னியை மணமகனும், மணமகளும் சுற்றி வருவது. வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகும் இருவரும் முதல்முதலாகச் சேர்ந்து நடப்பது என்றும் கூறலாம். ஒரு வித்தியாசம் என்னன்னா இங்கே மந்திரங்கள் சொல்லி மனைவியிடம் கணவன் அக்னி சாக்ஷியாகக் கொடுக்கும் உறுதி மொழிகள் என்றும் கூறலாம். எல்லா இந்துத் திருமணங்களிலும் பரதேசிக்கோலம் எனப்படும் சமாவர்த்தனமும், மாலைமாற்றலும், பாணி கிரஹணமும், சப்தபதியும் கட்டாயம் இருக்கும். இப்போ சப்தபதி என்றால் என்னனு பார்ப்போம். இப்போதெல்லாம் தாலி கட்டி முடிஞ்சதுமே ஒரு சின்ன அறிவிப்புக் கொடுப்பார் புரோகிதர்.  திருமணத்துக்கு வந்திருக்கும் மணமகன், மணமகள் ஆகியோரின் நண்பர் வட்டத்துக்கு முக்கியமாச் சொல்லப்படும். தாலி கட்டி முடிஞ்சது தயவு செய்து பரிசுகள் அளிப்பதையோ, கைகளைக் குலுக்குவதையோ வாழ்த்துகள் சொல்லுவதையோ தவிர்க்கவும். சப்தபதி முடிந்ததும், நாங்களே ஒரு அரைமணி நேரம் கொடுத்து மணமகன், மணமகள் இருவரையும் தனியாக அமர வைக்கிறோம். அப்போது உங்கள் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்ளலாம் என்று கூறுவார்கள். இந்த மாதிரி அறிவிப்பெல்லாம் சமீபமாய்ப் பத்து வருஷங்களுக்குள்ளாகவே அதிகம் காண முடிகிறது. பாணி கிரஹணம் என்பது மணமகள் கையை மணமகன் பிடிப்பது. இதற்கும் மந்திரம் உண்டு. இதைப் போன்றதொரு முக்கியமான நிகழ்ச்சியே சப்தபதியும். தம்பதியருக்குள் மன ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிக் கிழக்கு ,மேற்காக இருவரையும் ஏழடி நடக்க வைப்பார்கள். முதலில் பெண் அடியெடுத்து வைக்க அவள் கணவன் கைலாகு கொடுத்து உதவுவதோடு அவளுக்கு உறுதிமொழியும் கொடுக்கிறான். முதல் முதல் பெண்ணோடு நேருக்கு நேர் பேச வேண்டிய நேரமும் இதுதான் என்றே சொல்லலாம். தம்பதியருக்குள்ளாக கூச்சம், சங்கோஜம் போன்றவற்றைப் போக்கவும் உதவும் எனலாம். முதல் அடி எடுத்து வைக்கும்போது கணவன் கூறுவது: மணமகள் மணமகன் வீட்டிற்கு வந்து புத்திரபாக்கியங்களைப் பெற்று குலவிருத்தி செய்து, அனைவருக்கும் சந்தோஷம் அளிக்கவேண்டும் எனவும், அதற்குத் தேவையான உணவுப் பொருட்கள் போன்றவை குறையாமல் இருக்க நாம் இருவரும் மஹாவிஷ்ணுவைப் பிரார்த்தனை செய்வோம். இரண்டாவது அடி: மனைவியின் தேகவலிமைக்கு வேண்டிக்கொண்டும், அவள் ஆசைகள் நியாயமான ஆசைகளாக இருக்கவும், அவை பூர்த்தியடையவேண்டியும், அதற்கான உடல், மன வலிமையை அவள் பெற மஹாவிஷ்ணு தரவேண்டும் எனவும், கேட்டுக்கொள்வான். மூன்றாம் அடி:இருவரும் சேர்ந்து வாழப் போகும் புத்தம்புதிய வாழ்க்கையில் இல்லறத்தை நல்லறமாகச் செய்ய வேண்டிய கடவுள் ஒத்துழைக்கவேண்டும் எனவும், எடுக்கும் முயற்சிகளிலும் இருவருக்கும் நம்பிக்கையும், தர்மத்தை மீறாமலும் இருக்கவேண்டியும் விஷ்ணுவைப் பிரார்த்தனை செய்வான். நான்காம் அடி: கணவன் கேட்டுக்கொள்வது தானும், தன் மனைவியும் பூவுலக இன்பங்களை எல்லாம் குறைவின்றி அனுபவிக்க வேண்டும் என்றும் அது முழுமையாகக் கிடைக்க மஹாவிஷ்ணு அருள் செய்யவேண்டும் எனவும் பிரார்த்தனை செய்வான். ஐந்தாம் அடி: இல்லற சுகம் என்பது வெறும் உடல் சுகம் மட்டுமில்லாமல், மற்ற சுகங்களான வீடு, வாசல், மற்றச் செல்வங்களையும் நீ என் மனைவியாய் வந்து அடைய அந்த மஹா விஷ்ணு அருள் புரியவேண்டும். ஆறாம் அடி: பருவ காலங்களின் தாக்கங்கள் நம்மைப் பெரிய அளவில் தாக்காதவாறும் அதன் மூலம் நம் இல்வாழ்க்கையின் சுகமோ, சுவையோ குறையாமலும் நம் இருவர் மனங்களும் அதற்கேற்ற வல்லமையோடு இருக்க மஹாவிஷ்ணுவைப் பிரார்த்திக்கிறேன். ஏழாம் அடி: மேலே சொல்லப் பட்ட வெறும் சுகங்கள் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதால், நாம் அந்த சுகங்களைப் பெற வேண்டி இயற்கை வஞ்சிக்காமல் பருவகாலங்களில் தக்க மழை, கோடையில் நல்ல வெயில், பனிக்காலங்களில் பனி என அந்த அந்தக் காலங்களில் எப்படித் தானாகப் பருவம் கண்ணுக்குத் தெரியாததொரு ஆற்றல் படைத்த சக்தியால் மாறுகிறதோ, அந்தக் கண்ணுக்குத் தெரியாத வல்லமை உடைய மஹாசக்திக்குச் செய்ய வேண்டிய கடமைகளான அறம் அத்தனையையும் நாம் இருவரும் சேர்ந்து செய்ய வேண்டும். அதற்கு அந்த மஹாவிஷ்ணு உதவட்டும். நான் செய்யப் போகும் வேள்விகள் அனைத்துக்கும் நீ உதவியாகவும் துணையாகவும் இருந்து என் மனதையும், உன் மனதையும் ஆன்மீகத்திலும் செலுத்த வேண்டியும் எல்லாக் கடமைகளையும் தவறாமல் நிறைவேற்றவும் வேண்டிய பலத்தை உனக்கு அந்த மஹாவிஷ்ணு கொடுக்கட்டும்.  இதன் பின்னர் இருவரும் எதிர் எதிரே அமர்ந்து, மணமகளுக்கு உறுதி மொழி கொடுப்பான். உன்னோடு சேர்ந்து நான் ஏழடி நடந்து, ஏழு வாசகங்கள் பேசி உன்னை என் நட்பாக்கிக்கொண்டு விட்டேன். இந்த நட்பு என்றென்றும் நிலைத்து நிற்கக் கூடியது. நான் அந்த நட்பில் இருந்து வழுவ மாட்டேன். நீயும் வழுவக் கூடாது. இதன் பின்னரே இருவரும் சட்டபூர்வமான கணவன், மனைவி ஆகின்றனர்.விவாஹம் குறிப்புகள் 2      மாப்பிள்ளை வந்தார், மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியிலே! []   அப்பாடா, எத்தனை பேருக்கு ஆவல்?? இது ஏற்கெனவே நடந்த திருமணம் தான் என்றாலும் மீண்டும் அனைவரும் உற்சாகத்துடன் பங்கு பெறுவது குறித்து சந்தோஷமா இருக்கு. விரதம் முடிஞ்சு, பாலிகை கொட்டி எல்லாம் ஆனதும், மாலை நடக்க வேண்டிய நிச்சயதார்த்தம், ஜானவாசம் போன்றவை பற்றிப் பேசுகையில் தான் நம்ம ஆஸ்தான ஜோசியர் வந்திருக்கார். எனக்கு இதெல்லாம் தெரியாது. இன்னும் சொல்லப் போனால் நான் புனே செல்லப் போவதில்லை என்பதே எனக்குத் திருமணம் முடிந்த அன்று மதியமாய்த் தான் தெரியும். அதுவரையிலும் யாரும் சொல்லவே இல்லை. உடனே புனே செல்லப் போவதாய் எண்ணிக்கொண்டிருந்தேன். நம்ம ஆஸ்தானம் போனதும் நடந்து கொண்டிருந்த பேச்சு வார்த்தைகளைக் கேட்டுவிட்டு, “உங்க பையர் இப்போப் புனே போயிட்டு உடனே திரும்பிவிடுவார். சென்னைக்கு வந்துடுவார்.” என்று சொல்லி இருக்கார். என் கணவரோ சென்னைக்கு மாற்றல் நான் நாலு வருஷமாக் கேட்டுட்டு இருக்கேன். சதர்ன் கமாண்டிற்குக் கீழே வரும் அலுவலகங்கள் சென்னையிலே மிகவும் குறைவு. அதிலே இருப்பவங்க யாரும் புனே வர ஒத்துக்கலை. எல்லாருக்கும், குழந்தைங்க படிப்பு, வயசான பெற்றோர்னு இருப்பதாலே வேறே ஊர் வேண்டாம்னு வர மாட்டேங்கறாங்க. அதனால் நான் சென்னை வருவது சாத்தியமே இல்லை. புனேயிலேயே ராணுவ அகாடமியைச் சார்ந்த அலுவலகத்திற்கு மாற்றல் கேட்டால் கடக்வாசலாவிலே குடியிருப்புக் கிடைக்கும். அதற்கு எப்படியும் ஆறு மாசம் ஆகும்.” என்று சொல்லி இருக்கார். எங்க ஜோசியரோ, கைகளால் விரல் விட்டுக் கணக்குப் போட்டுவிட்டு, “ஜூன் பனிரண்டாம் தேதியன்று குடித்தனம் வைக்க உங்க ரெண்டு பேருக்கும் நாள் நல்லா இருக்கு. அன்னிக்கே பால் காய்ச்சிச் சாப்பிட்டுவிட்டு, அன்னிக்கே குடித்தனம் ஆரம்பிக்கலாம், வைகாசிக்குள்ளே குடித்தனம் வைச்சாயிடும்.” என்று தீர்மானமாய்ச் சொல்ல என் அப்பாவுக்கு மட்டும் கொஞ்சம் நம்பிக்கை. மாமனார், மாமியார், என் கணவர் போன்ற யாருமே நம்பவே இல்லை என்றிருக்கிறார்கள். இந்தப் பேச்சு வார்த்தையும் எனக்குக் குடித்தனம் வைக்கும்போதே தெரிய வந்தது. எவ்வளவு அசடாய் இருந்திருக்கேன் இல்லை?? ஹிஹிஹி, இல்லை, குழந்தையைப் பயமுறுத்த வேண்டாம்னு சொல்லி இருக்க மாட்டாங்க.  அதுக்கப்புறம் மதியம் டிபன் முடிந்து, மாலை நிச்சயதார்த்தத்திற்கு அனைவரும் தயார் ஆனார்கள். என்னையும் அலங்கரிக்க எங்க வீட்டிலே வருஷக் கணக்காய் வேலை செய்யும் சுப்பம்மாள் என்னும் மூதாட்டி வந்திருந்தார். வளையல்காரச் செட்டிகளான இவங்க மீனாக்ஷி கோயிலில் வளையல் கடை வைத்திருந்ததோடு, வித விதமாய்ப் பூக்கட்டவும் செய்வார்கள். பரம்பரையாக மீனாக்ஷிக்குப் பூக்கட்டிக் கொடுப்பதும் இவங்க குடும்பம்தான். அதனால் கோயிலுக்கு அருகே வீடு இருக்கணும் என்று வடக்கு கிருஷ்ணன் கோயில் தெருவில் இருந்து பிரிந்த சந்தில் வீடு இருந்தது. நாங்க இருந்த மேலாவணி மூலவீதிக்கு மிக அருகே. எங்க குடும்பத்திற்குப் பரம்பரையாக இவங்க குடும்பத்தினர்கள் தான் வீட்டு வேலை செய்யும் பெண்மணிகள். எங்களுக்குத் தலை பின்னுதல், எண்ணெய் தேய்த்தல், விளக்கெண்ணை கொடுத்தல், வேப்பெண்ணெய் கொடுத்தல் போன்றவற்றைச் செய்வார்கள். எங்க அப்பாவைப் பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவுக்கு அதிகாரம் உண்டு. ஒவ்வொரு மல்லிகைப் பருவத்திலும் கட்டுக்கு அடங்காத என் தலைமயிரை வாரி, பூத்தைக்கிறது ஒரு நாள், பிச்சோடா ஒரு நாள், கிருஷ்ணன் கொண்டை ஒருநாள், மலர் அலங்காரம்னு பூப்பின்னல் ஒருநாள் என வித விதமாய் அலங்கரிப்பார்கள். அதோடேயே பள்ளியில் படிக்கும்போது பள்ளிக்குப் போயிருக்கேன். :D நவராத்திரியிலும் விதவிதமாய் அலங்காரம் செய்து விடுவார்கள். என் கல்யாணம் நிச்சயம் ஆனதுமே சுப்பம்மாள் மாப்பிள்ளை அழைப்பு அலங்காரம் என்னோடதுனு என்று உறுதி செய்துவிட்டுப் போயிட்டாங்க. (எங்க பையர் பிறக்கும் வரை உயிருடன் இருந்தாங்க.) அழகான சின்னச் சின்ன ப்ளாஸ்டிக் பொம்மைகள், ஆணும், பெண்ணுமாய்த் தேர்ந்தெடுத்து, அவற்றிலே முத்துக்களைக் கோர்த்து, மல்லிகை, கனகாம்பரம், மரிக்கொழுந்து ஆகிய பூக்களை வரிசையாக வைத்து, வாழைப்பட்டையிலே பொம்மைகளையும், கூடவே வெல்வெட் துணிகளால் ஆன அலங்காரப் பூக்களையும் வைத்துத் தைத்துக் கொண்டு வந்துவிட்டார்கள். தலையை வாரிப் பின்னிக் குஞ்சலம் வைத்து, அந்த வாழைப்பட்டை அலங்காரத்தைத் தலைப்பின்னலில் வைத்துச் சேர்க்கவேண்டியது தான். மேல் தலை அலங்காரம் மட்டும் நேரடியாய்த் தலையிலே செய்ய வேண்டும். அந்த மாதிரிப் பூ அலங்காரம் எல்லாம் இப்போப் பார்க்கவே முடியலை. அலங்காரத்துக்குப் பெயர் போன தஞ்சாவூர்க்காரங்களான எங்க புக்ககத்தினரே வியக்கும்படியாக இருந்தது என் தலை அலங்காரம். தலையிலே ராக்கொடி வைத்து, நெத்திச்சுட்டி, சூரியப் பிரபை, சந்திரப் பிரபை, (தெரிஞ்சிருந்தாலும் பேரெல்லாம் குறிப்பிடுவது, ஒரு சிலருக்குச் சரியாய் அறியவேண்டியே) வைத்து எல்லாவற்றிற்கும் முத்துக்களால் ஆன மாலை போன்ற சரத்தால் கட்டி, தலைப் பின்னலின் நடுவேயும் ஜடைபில்லை வைத்துப் பட்டுக்குஞ்சலம் வைத்து, (எனக்குக் குஞ்சலம் ரொம்பப் பிடிக்கும். விதவிதமான குஞ்சலங்கள் வைத்திருப்பேன்.) தலை அலங்காரம் ஒருவழியாக முடிவடைந்தது. அதற்குள்ளாக மாப்பிள்ளை வீட்டினரை என் அம்மாவும், அப்பாவும் போய் நிச்சயதார்த்ததிற்கு முறைப்படி கூப்பிட்டு விட்டு வந்தார்கள். எனக்குத் துணையாகச் சிலரை மட்டும் வைத்துவிட்டு மற்ற அனைவரும் அருகே இருந்த பிள்ளையார் கோயிலுக்குக் கிளம்பினார்கள். என் கல்யாணம் நடந்த பி-3- ராஜம் ரோடிலிருந்து, கூப்பிடு தூரத்தில் இருந்தது பிள்ளையார் கோயில். அங்கேயே மாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம் முடிந்து, ஜானவாசம் பிள்ளையார் கோயிலில் இருந்து கிளம்பி இரு தெருக்கள் சுற்றிக்கொண்டு இங்கே கல்யாணம் நடக்கும் இடத்திற்கு வர அநுமதி வாங்கி இருந்தனர்.  அங்கே மாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம் முடிந்து, ஜானவாசமும் ஆரம்பித்து வந்தாயிற்று. என் கடைசிச் சித்தி, அவசரம் அவசரமாய் வந்தாள். என்னை விட ஐந்தே வயது பெரியவங்க. என் அம்மா கல்யாணத்தின் போது குழந்தை. அவங்களுக்கு என் கல்யாணம் ஆன வருஷத்திற்கு முதல் வருஷம் தான் கல்யாணம் ஆகிக் குழந்தை பிறந்திருந்தது. பெயர் சொல்லியே கூப்பிட்டிட்டு இருந்தோம். பல வருஷங்கள் கழிச்சே சித்தி என அழைக்க ஆரம்பித்திருக்கிறேன். இப்போச் சித்தி வந்தது, ஜானவாச ஊர்வலம் தெருக்கோடியில் வருகிறது. கீதாவை அழைத்துக்கொண்டு எல்லாரும் மாடிக்குப் போனால் ஜானவாச ஊர்வலத்தை கீதாவும் பார்க்கலாம். அவள் கணவரின் ஜானவாசத்தை அவள் பார்க்க வேண்டாமா?? என்று சொன்னாள். என்னதான் எழுபதுகளின் ஆரம்பம் அப்போ என்றாலும் அந்த அளவுக்குக் கல்யாணப் பெண்கள் போய் ஜானவாசத்தைப் பார்க்கும் அளவுக்கு இன்னமும் முன்னேறவில்லை என்றே சொல்லலாம். என் அப்பா, பெரியப்பா போன்றோர் ஏதானும் சொன்னால் என்ன செய்வது என்று என் பாட்டி பயந்தார்கள். ஆனால் சித்திவிடவே இல்லை. கட்டாயமாய் வரணும், அவங்க வீட்டு வாசலுக்கு வரச்சே ஆரத்தி எடுத்து உள்ளே நுழையறதுக்குள்ளாகக் கீழே இறங்கிடலாம், ஒருத்தருக்கும் தெரிய வேண்டாம் என்று தன் அம்மாவுக்கு சமாதானம் சொல்லிட்டு, என்னைக் கூப்பிட்டுக் கொண்டு மேலே சென்றார்கள். மாடியிலே தான் சாப்பாடு போடவும் ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. மாடி முகப்புக்குப் போனோம். கீழே பார்த்தால், பந்தல் பெரிசா இருந்ததா? பந்தல் தான் தெரிந்தது. அதோட தோரணங்களும் தொங்கினதிலே தெருவே தெரியலை. நாதஸ்வர ஒலி மட்டும் கேட்டது. எம்பிப்பார்த்தாலும் எனக்கு எதுவும் தெரியவில்லை. அருகிலே நாதஸ்வர ஒலி கேட்க, நான் கீழே இறங்கலாம் என்று கூற, என் சித்தி இருடி என அதட்ட, அதற்குள் கீழே ஒரே சத்தம். அப்பாவின் குரல் பெரிசாய்க் கேட்டது. விஷயம் என்ன?? புரியவே இல்லை. நான் மேலே வந்தது தான் தெரிந்துவிட்டதோ? பயத்துடன் வேகமாய்ப் புடைவையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டே கீழே இறங்கினேன். விழுந்துடப் போறே, புதுப்புடைவை தடுக்கப் போறது என்று பின்னாடியே சித்தியும் வந்தாள்.  கல்யாண வீட்டு வாசலிலே ஏதோ அமர்க்களம் நடந்து கொண்டிருந்தது.   கன்னூஞ்சலாடினாள் ஹிஹிஹி, படிக்கிறவங்க எல்லாம் ஆவலோடு காத்துட்டு இருப்பீங்க என்ன அமர்க்களம்னு. ஜானவாசம் அனுமதிக்கப்பட்ட தெருக்களில் போயிட்டு, கல்யாணம் நடக்கும் மாமா வீடு இருக்கும் தெருவிலே நுழைந்ததுமே என் மாமியார் என்னையும் அழைத்து வந்து, காரில் ஒன்றாய் உட்கார்த்திக் கூட்டிச் செல்லவேண்டும் என்று கூற, என் அப்பா, பெரியப்பா போன்றோர் கல்யாணம் முடியும் முன்னர் உட்கார்த்திப் பட்டணப் ப்ரவேசம் போறது வழக்கம் இல்லை, கல்யாணம் முடிஞ்சு பிள்ளை வீட்டில் தான் பட்டணப் ப்ரவேசம் செய்யணும், உங்க ஊரிலே போய்ப் பண்ணுங்கனு சொல்ல, பிடிவாதமாய் என் மாமியார் ஜானவாசத்திலே ரெண்டு பேரையும் சேர்த்து உட்கார்த்தி வைத்துப் புகைப்படம் பிடிக்கணும்னு சொல்ல, என்னோட மாமா ஒருத்தர் சத்தமே போடாமல் உள்ளே வந்து என்னை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார். ஒண்ணுமே புரியாமல் வெளியே வந்த என்னைக் காரில் ஏறச் சொல்லி மாப்பிள்ளை பக்கம் உட்காரச் சொல்ல நான் தயங்க, அவங்க வீட்டிலே எல்லாரும், நீ காரில் ஏறி உட்கார்ந்தால் தான் மாப்பிள்ளை கீழே இறங்குவார்னு கேலி செய்ய, உண்மைனு பயந்த நான் அவசரமாய் ஏறி உட்கார, புகைப்படம் எடுக்க என் மாமாவின் நண்பர் முயல, அப்போ இருந்த படபடப்பிலோ, அல்லது வேறு என்ன காரணமோ காமிரா வேலையே செய்யலை, பத்து நிமிஷம் போல முயன்றார். அதற்குள்ளாகப் பெண்ணுக்கு நிச்சயம் பண்ண நேரம் ஆயிடுச்சுனு புரோகிதர் சத்தம் போட ஆரம்பிச்சுட்டார். உடனேயே என் சித்தியும், மற்றும் சிலரும் என்னை மேடைக்கு அழைத்துச் செல்லப் பின் தொடர்ந்த மாப்பிள்ளையும் வெகு அழகாய், வெகு லாயக்காய் என் அருகே வந்து உட்கார்ந்தார். முதலில் பிள்ளை வீட்டில் யாருக்கும் எதுவும் புரியவில்லை. ஹோவென்ற சிரிப்புச் சப்தம் கேட்க அப்புறம் தான் எல்லாரும் அசடு வழிந்தார்கள். கடைசியில் நிச்சயதார்த்ததில் இரண்டு பேரும் சேர்ந்தே உட்கார்ந்தோம். அன்றைய கலாட்டா முடிந்து அப்புறம் சாப்பிட அவங்க இருந்த வீட்டுக்குப் போயிட்டாங்க. மறுநாள் காலையிலேயே எழுப்பி, (எங்கே? ஏழரைக்குள் முஹூர்த்தம் என்பதால் நடு இரவுனு சொல்லணும், தூங்கவே விடலை :P) மாப்பிள்ளைக்கு எண்ணெய் கொண்டு கொடுத்து, எனக்கும் எங்க மாமி, அத்தை பெண்கள், போன்ற பல பெரியவர்கள் எண்ணெய் வைத்து மங்கள ஸ்நாநம் செய்ய வைத்துப் பின்னிவிட்டார்கள். இப்போ முதல்நாள் மாதிரி அலங்காரம் இல்லை என்றாலும் பூவை மாலை போலக் கட்டித் தலையில் சுற்றினார்கள். தலை பாரமாய் இருந்தது நினைவில் இருக்கு. அதன் பின்னர் ஊஞ்சலுக்கு வாங்கி இருந்த புடைவையைக் கட்டச் சொல்லி, ஒரு மாலையை மட்டும் கழுத்தில் போட்டு மாலை மாற்றலுக்கு உள்ள மற்ற மாலைகளையும் தயார் செய்து, காத்திருந்தோம். அங்கே பிள்ளை வீட்டில் சமாவர்த்தனம்/காசியாத்திரைக்குத் தயார் ஆகிக் கிளம்பிச் சென்று பின்னர் என் அப்பா சென்று அவரிடம் பெண்ணை தானமாய்த் தருகிறேன் என்று சொல்லி அழைத்து வந்தார்.  இப்போ இந்தக் காசி யாத்திரைக்கு மாப்பிள்ளையை அலங்கரிக்கிறது, அவர் காசியாத்திரை என்னும் சம்பிரதாயத்தைச் செய்வதற்கு முன்னாடியே பண்ணறாங்க, ஆனால் இது கல்யாணம் செய்துக்கப் பெண்ணைத் தரேன்னு பெண்ணின் அப்பா சொன்னப்புறமாத் தான் செய்யணும் என்பது சிலர் கூற்று. யோசித்தாலும் அது சரி என்றே தோன்றுகிறது. உங்க பெண்ணைத் தாங்க என்று கேட்கக் கூடாது என்றும், பெண்ணைப் பெற்றவர் மனமுவந்து பெண்ணைத் தர வேண்டும் என்றும் சாஸ்திரங்கள் கூறுவதாயும் சொல்கிறார்கள். அதோடு அந்தக் காலங்களில் எல்லாம் இப்போ மாதிரி ஜாதகம் பார்த்ததாயும் தெரியவில்லை. ஜாதகம் பார்ப்பது எப்போ வந்தது என்பதை திவா போன்றவர்கள் தான் சொல்லணும்.) காசி யாத்திரை பற்றிய விரிவான விளக்கம் தேவையானால் பின்னர் தருகிறேன்.) இதோ காசியாத்திரை போட்டோ. []     அந்தக் காலத்துப் படம் என்பதால் எவ்வளவு ப்ராசசிங் பண்ணினாலும் இப்படித் தான் வருது. நெகட்டிவ்களைப் பார்த்துப் புதுசாப் பிரிண்ட் போடலாம் என்றால் நெகட்டிவ் சரியாவே கிடைக்கலை. காசி யாத்திரை முடிஞ்சு தேங்காய் கொடுத்து மணமகனை அழைத்ததும், பெண்ணைப் பார்க்க காத்திருந்தார். நானும் போனேன். சித்தியெல்லாம் வெட்கம் காட்டணும், மெதுவாய் நடக்கணும் என்றெல்லாம் சொல்ல, என்னால்முடியாமல் போக ஒரே சிரிப்பாய் வந்தது. அப்போத் தான் என்னோட மாமா ஒருத்தர் இன்னிக்குப் பூரா, பூராக் கூட வேண்டாம், தாலி கட்டும் வரைக்காவது சிரிக்காமல் இரும்மா என்று கேலி செய்ய, நானும் சவால் விட்டேன், சிரிக்கமாட்டேன் பாருங்க என. அது இதோ இந்தப் படம் தான். []     [] தாலி கட்டியதும் எடுத்தது. மாலை மாற்றல் வீட்டு வாசலில் வைத்து நடந்தது. நான் பார்த்த கல்யாணங்களில் மாலை மாற்றல் என்பது சாதாரணமாய் நடக்கும். ஒண்ணும் குறிப்பாய் விசேஷம் இருக்காது. ஆனால் இங்கேயோ முதலில் நான் மாலையைப்போடப் போனதும், அவரோட நண்பர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு அப்படியே அவரை இழுத்துக்கொண்டு பின்னே போய்விட்டார்கள். நமக்குத் தான் ஸ்போர்டிவ் ஸ்பிரிட்டா? கேட்கணுமா? ஓடிப் போய்ப் போட்டுட்டேன் போல. தெரியலை! ஹிஹிஹி. அ.வ.சி. அப்புறமாச் சித்தி கோவிச்சுண்டதும் தான் தெரிஞ்சது. அப்படி எல்லாம் செய்யக் கூடாதுனு. அதெல்லாம் எங்கே நினைவில் வருது? நம்மளை ஏமாத்தறாங்க பாரு, தோத்துடப் போறோம்னு தான் தோணிச்சு. அதுக்கப்புறமா அவர் மாலை போட வரச்சே, நானும் பின்னாடி போவேன்னு சொல்லிட்டுப் பின்னாடி போக, அவர் உயரத்துக்கு எட்டி மாலையைப் போட்டுட்டார். :P. இப்படிக் கொஞ்ச நேரம் அந்த அதிகாலையிலே மாலை மாற்றல் நடந்ததும் ஊஞ்சல். இதோ ஊஞ்சல் படம்.        கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்! திங்கட்கிழமை காலையில் ஏழரைக்குள் தாலி கட்டி முடிந்ததும் எல்லாரும் அவங்க அவங்க ஊர் சுத்திப்பார்க்கப்போயிட்டாங்க, பந்தல் கொஞ்சம் வெறிச்சுனு ஆனது! அது போல் இங்கேயும் ஊஞ்சல் முடிஞ்சதுமே எல்லாரும் கிளம்பிட்டீங்க போல! :P  ஊஞ்சல் முடிந்ததும், பெண்ணையும், பிள்ளையையும் மணமேடைக்கு அழைத்து வந்து அவரவர் வீட்டுப் புரோகிதர்கள் மூலம் பெண்ணின் பிறந்த குலத்திலும், பையரின் பிறந்த குலத்திலும் மூன்று தலைமுறைகளைச் சொல்லி இன்னாருடைய மகள், இன்னாருடைய பேத்தி, இன்னாருடைய கொள்ளுப் பேத்தி , அதேபோல் மணமகனுக்கும் மூன்று தலைமுறை மகன், பேரன், கொள்ளுப் பேரன் என முப்பாட்டனார் வரை குலம், கோத்திரம் சொல்லப் படும். இதிலே எந்த ரிஷியின் வழித்தோன்றல்கள் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்வார்கள். இதன் மூலம் பெண்ணின் அறிமுகமும், பிள்ளையின் அறிமுகமும் கிடைக்கிறது. இதன் பலன் என்னவெனில் ஒருவேளை முன்பின் அறியாதவர்களிடம் சம்பந்தம் செய்ய நேரும்போது என்ன இருந்தாலும் கொஞ்சம் கலக்கம் ஏற்படும். இப்படி மூன்று தலைமுறையைக் குறிப்பிடுவதன் மூலம் அவர்கள் குடும்பத்தின் உறவினர் யாரேனும் தற்செயலாக வந்திருந்தால் அவர்கள் உறவு விட்டுப் போயிருந்தாலும் இப்போது இந்தக் குறிப்பிட்ட அறிமுகத்தின் மூலம் கண்டுபிடிக்க முடியும். இது எங்க பொண்ணு திருமணத்தில் நடந்தது. எங்க மாப்பிள்ளையின் தாயாதிகள் எங்க புக்ககத்தின் தூரத்து உறவினர்கள். நாங்க கல்யாணத்திற்குக் கொடுத்த அழைப்பின் பேரில் வந்தவங்க இப்படிப் பட்ட விபரங்கள் மூலம் என் பெண்ணின் புக்ககத்தினரோடு விட்டுப் போன உறவைக் கண்டு பிடித்தனர். இந்த அறிமுகம் செய்து விட்டு எங்க குடும்பத்தைச்சேர்ந்த இந்தப்பெண்ணை இந்த வரனுக்குத் தானமாய் அளிக்கிறேன். இதன் மூலம் எங்கள் குலத்தின் பல தலைமுறைகளும் மகிழ்வு அடையவும், நிம்மதிஅடையவும் வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அப்பா, பெண்ணை அளிக்க, பையரும் பெண்ணைப் பெற்றுக்கொள்கிறார். இதைத் தான் கன்யாதானம் என்று சொல்கின்றனர். இதன் பின்னர் மாப்பிள்ளைக்குக் கால் அலம்பி மாமனாரும், மாமியாரும் மந்திரங்கள் சொல்லி வழிபடுவார்கள். மஹாவிஷ்ணுவும், மஹாலக்ஷ்மியுமாகவே மணமக்கள் கருதப் படுவார்கள். பரமேஸ்வரன், பார்வதி என்றும் கூறுவதுண்டு. அதன் பின்னர் என் கணவர் கூறைப் புடைவையை எனக்குக் கொடுத்து அதைக் கட்டிக்கொண்டு வரும்படி மந்திரங்களின் மூலம் சொல்ல, நானும் கூறைப்புடைவை கட்டிக்கப்போனேன். கட்டிவிடப் பெண்ணின் நாத்தனாரை அனுப்புவார்கள். இதன் மூலம் ஒருவருக்கொருவர் நெருக்கம் ஏற்படவும், மனம் நெருங்கிப் பழகவுமே இந்த ஏற்பாடு என்று சொல்லுவார்கள். ஒன்பது கஜம் புடைவையும் என்னை மூழ்கடிக்க அதைக் கட்டிக்கொண்டு நடக்கத் தெரியாமல் வந்து மேடையில் அமர, தற்கால வழக்கப்படி, அப்பாவின் மடியில் அமர்ந்து கொண்டு(அப்பாவுக்கு வெயிட்டாய் இருந்திருக்க மாட்டேன். 35 கிலோ தானே! :P) திருமங்கல்யதாரணம் நடந்தது. ஏழரைக்குள் மாங்கல்ய தாரணம் என்பதால் அது முடிந்ததும், எல்லாரும் டிபன் சாப்பிடப் போய்விட்டார்கள்.  வந்த கூட்டத்தில் ஒரு பகுதிதான் சாப்பிடப் போயிருந்தது. மாடியிலே இடமில்லை. கீழே இருந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு என் கணவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, “சித்திரைத் திருநாளுக்கு வந்தவங்க எல்லாம் மதுரையிலேயே தங்கிட்டாங்களா?” என்பது தான். புரோகிதர் சொன்ன மந்திரங்களையும் சொல்லிக்கொண்டே அவர் என்னிடம் இப்படிக் கேட்க பதில் சொல்லத் தெரியாமல் நான் விழிக்க, எதுவுமே பேசவில்லை. அதைப் பின்னால் ரொம்ப நாட்கள் சொல்லிக் கேலி பண்ணிட்டு இருந்தார். ஆனால் எங்களுக்கு வைதீகச் சடங்குகள் தொடர்ந்தன. இங்கே இந்த வைதீகச் சடங்குகள் பற்றிய ஒரு சின்ன அறிமுகம் பார்க்கலாமா??  வைதீகச் சடங்குகள் முடிந்ததும், என்னையும், என் கணவரையும் அவங்க தங்கி இருந்த வீட்டிற்கு அழைத்துப் போனாங்க. சாதாரணமாய் இந்த மாதிரிப் பிள்ளை வீட்டினர் தங்கி இருக்கும் இடத்திற்குப் பெண்ணை அழைத்துச் சென்று அங்கே இருவரையும் உட்கார்த்தி வைத்துப்பால், பழம் கொடுப்பதே இன்றெல்லாம் கிரஹப் பிரவேசம் என நிறைவடைகிறது. ஆனால் உண்மையான கிரஹப் பிரவேசம் என்பது பெண் புக்ககத்தினுள் புகும் நாளன்று தான் ஆரம்பம். ஒரு சிலர் உள்ளூரில் திருமணம் நடந்தால் அன்றே பெண்ணையும், மாப்பிள்ளையையும் அவங்க அவங்க வீடுகளுக்கு அழைத்துச் சென்றுவிட்டு வந்துவிடுவார்கள். அது போதும் என்ற எண்ணம் தான். மேலும் இப்போதெல்லாம் வைதீகச் சடங்குகளுக்கு முக்கியத்துவமும் இல்லாமல் போனதும் ஒரு காரணம். ஆனால் எங்களுக்கு கிரஹப் பிரவேசம் ஊரில் போய்க் கிராமத்தில் செய்யப்போறாங்க என்பது எனக்கு அங்கே போனதும் தெரிய வந்தது. அதே போல் என் கணவர் என்னை உடனே புனே அழைத்துச் செல்லப் போவதில்லை என்றும், புக்ககத்தில் விட்டுட்டுப் போகப் போறார் என்றும் அப்போது எல்லாரும் பேசிக்கொண்டதில் இருந்து தெரிய வந்தது. நாங்க தங்கின மாமா வீட்டிற்கு வந்ததும் எல்லாரும் என்னை எப்படி உன் கணவர் இல்லாமல் அங்கே இருக்கப் போகிறாயோ என்றே கேட்டுக் கொண்டிருந்தனர். எனக்கு எதுவும் தோன்றவில்லை என்பது தான் நிஜம்.  இந்தச் செய்தி ஓர் அதிர்ச்சியாகவோ, அல்லது ஏமாற்றமாகவோ இல்லை. ஏதோ நடக்கிறது நம்மைச் சுற்றி, நடக்கிறபடி நடக்கட்டும் என்ற எண்ணமா? அதுவும் தெரியாது. ஆனால் நான் எந்தவிதமான மனநிலையிலும் இல்லை. அப்புறமாய்ச் சாப்பிடக் கூப்பிட்டனர். கல்யாண சமையலில் அப்போதெல்லாம் வெங்காயம், மசாலா சாமான்கள் இருக்காது. ஏனெனில் மாலையும் பெண்ணும், பிள்ளையும் வைதீகச் சடங்குகள் செய்யணுமே. அதனால் தனியாக பிள்ளைக்கு, பெண்ணுக்கு என எடுத்து வைத்திருந்த பலகாரங்களே கொடுக்கப் பட்டன. இதிலே எச்சல் மாற்றுவது என நடக்கும். ஆனால் எங்க கல்யாணத்தில் இது பெரிய அளவில் நடக்கவில்லை. எல்லாருக்கும் கொஞ்சம் ஏமாற்றமே. மாலை நலுங்கில் என்ன நடக்குமோ பார்க்கலாம் என விட்டுவிட்டனர். மாலை நலுங்கும் மூன்று மணிக்கே ஆரம்பித்தது. நலுங்குக்கு எனப் பொதுவாக நாத்தனார்கள் இருந்தால் அவங்க தான் சேர்ந்து புடைவை எடுப்பாங்க. நலுங்கு விளையாட பொம்மைகள், பெண்ணுக்கு சோப்பு, சீப்பு, கண்ணாடி, குங்குமம், சாந்து, (அப்போல்லாம் சாந்துதானே) பவுடர், ஹேர் ஆயில் என அலங்காரப்பொருட்களும் கொடுப்பாங்க. நலுங்கு விளையாட மாப்பிள்ளையைப் பெண் தான் அழைக்கவேண்டும் என்பார்கள். என்னிடம் சித்தி படிச்சுப் படிச்சு உடனே கூப்பிடக் கூடாது, கொஞ்சம் தயங்கிட்டுக் கூப்பிடணும்னு சொல்லி இருந்தாங்க. ஆனால் நான் உடனே கூப்பிட அவரும் உடனே வந்துட்டார். :D நலுங்கு போட்டோ தேடி எடுக்கிறேன். எடுத்ததை எங்கேயோ வைச்சுட்டேன். நலுங்கிலேயும் கண்ணாடி காட்டுகையில் எல்லாரும் என் கணவரைத் திருப்பிக் காட்டச் சொல்ல, நான் பிடிவாதமாய்க் கையோடு சேர்த்துக் கண்ணாடியைத் திருப்ப, ஒரே அமர்க்களம். அதுக்கப்புறமா ரிசப்ஷன். ஐந்து மணிக்கே வரச் சொல்லிட்டாங்க, ஏனெனில் மாலையும் வைதீகச் சடங்குகள் இருந்தன. அதுக்கு ஆறரை, ஏழு மணிக்குக் கூப்பிடுவாங்க என்பதால் ஐந்து மணிக்கே ரிசப்ஷனுக்கும் உட்கார்ந்தாச்சு.   []     இதிலே முதுகைக் காட்டிக்கொண்டு நிற்பது என் தம்பி.  என் சிநேகிதர்கள் சிலர், சிநேகிதிகள் சிலர், அப்பாவின் நண்பர்கள், மாமாக்களின் நண்பர்கள் என ஒரு ஐம்பது வந்திருந்தால் பெரிய விஷயம். அதுக்கப்புறமா வைதீகச் சடங்குகளுக்கு நேரமாச்சுனு புரோகிதர் கூப்பிட்டுக்கொண்டு போய்விட்டார். அன்றைய சடங்குகள் முடிந்தன. மற்ற வைதீகச் சடங்குகள் புக்ககத்தில் . ஆகவே என் பெட்டியைத் தயார் செய்து கொள்ளப் போனேன். திடீர்னு மனதில் ஒரு வெறுமை. பிறந்து வளர்ந்து, இருந்த ஊரை விட்டு, சொந்த, பந்தங்களை விட்டுவிட்டுப் போகப் போகிறோம். திக்குத் தெரியாத காட்டில் வாழ்க்கை ஆரம்பம் ஆகப் போகிறது. எப்படி இருக்கும்? எல்லாரும் நல்லவங்களா? இல்லையா? ஒண்ணுமே புரியலை. மறுநாள் விடிந்தது. கட்டுச் சாதக் கூடைக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்தனர். மூன்றாம் நாளான அன்றைய சம்பிரதாயங்கள் முடிந்ததும், என் மாமியார், மாமனார், கடைசி நாத்தனாரை மட்டும் விட்டுவிட்டு அவங்க முன்னாடி போய் கிரஹப் பிரவேசம் ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டும் எனப் பேருந்தில் செல்லப் போவதாய்க் கூறிச் சென்றுவிட்டார்கள். நாங்கள், அதாவது நான், என் கணவர், என் கடைசி நாத்தனார் மூவரும் என் அப்பா, அம்மா, தம்பியுடன், கூடவே என் மாமி, குழந்தைகளோடு அன்றைய மதியம் கும்பகோணம் செல்லும் ரயிலில் செல்வதாய் ஏற்பாடு. அப்போதெல்லாம் ஜனதா என்றொரு ரயில் ஓடும். முழுதும் மூன்றாம் வகுப்புப் பெட்டிகள். அப்போ இரண்டாம் வகுப்பு உயர் வகுப்பாய் இருந்தது. இப்போதைய ஸ்லீப்பர் க்ளாஸ் அப்போ மூன்றாம் வகுப்பு. ரயிலில் உட்காரும் இருக்கைகள் கட்டையாகத் தான் இருக்கும். இதை மாற்றியது மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த காலத்தில் ரயில்வே துறை மந்திரியாக இருந்த திரு மதுதண்டவதே அவர்கள்.  இன்னும் இரண்டே நாட்கள்!     நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க! []     நாங்க ஊருக்குக் கிளம்பும் முன்னே கோயிலுக்குப் போனோம். கூட என் சித்தியும், மாமியார் விட்டுட்டுப் போயிருந்த என் நாத்தனாரும் வந்தாங்க. எங்க சித்தி முதல் முதல்லே ரெண்டு பேரும் சேர்ந்து கோயிலுக்கு வந்திருக்கிறதாலே ரோஜாப்பூ மாலை வாங்கி ஸ்வாமிக்கும், அம்மனுக்கும் சார்த்தச் சொல்ல, சரினு நம்ம ரங்க்ஸும் மாலை வாங்கிட்டு வா என என்னிடம் 100 ரூ பணத்தைக் கொடுக்க, எனக்கு மயக்கமே வந்துடுச்சு. சித்தியைப் பார்க்க, சித்தியும் போய் வாங்குனு சொல்லிட்டாங்க. கூட யாருமே வரலை. எனக்கென்ன தெரியும் அது எனக்கு வைச்ச முதல் தேர்வுனு! எங்க தெரிஞ்ச மாலைக்கடைக்கு, (எங்க வேலைக்கார அம்மாவின் கடைதான்)போகலாம்னு பார்த்தால் அன்னிக்குனு அது இல்லை. இன்னும் வரலையாம். சரினு பக்கத்துக்கடைக்குப் போய் வாங்கினேன். ஒரு மாலை ஐம்பது ரூபாய்னு கடைக்காரர் சொன்னார். ஏதோ சின்னக்கடைக்கோ, மதுரை வடக்காவணி மூலவீதி மார்க்கெட்டுக்கோ போயிருந்தால் தெரியும். ஒரு பூ வாங்கக் கூடப் போனதில்லை. மல்லிகைப் பூ காசு கொடுத்து வாங்கினதும் இல்லை. மல்லிகை சீசன் என்றால் மதுரையிலே வீட்டுக்கு வீடு லக்‌ஷம் மல்லிகை கொடுப்பாங்க. அதை வாங்கித் தொடுத்து வச்சுண்டாலே தினம் ஒரு மாலையே போட்டுக்கலாம். அந்தக் கடைக்காரரோட மீசை/தாடி?? ஏதோ ஒண்ணு. நான் சின்னப் பொண்ணுதானே! பயம்மா இருந்ததா! சரினு சொன்ன விலைக்கு ரெண்டு மாலை வாங்கிட்டு வந்துட்டேன். [] வந்து மாலையைக் கொடுத்தால் ஆயிரம் கேள்விகள், விசாரணைகள். Audit Objection Started. அன்னிலே இருந்து இன்னி வரைக்கும் அப்ஜெக்‌ஷனுக்கு பதில் கொடுத்துக் கொடுத்துக் கொடுத்துக் கொடுத்துக் கொடுத்து சே, பேசாமல் நான் சிதம்பரம் கட்சியிலே இருந்திருக்கலாம்! :P கடைசியிலே சித்திலே இருந்து எல்லாரும் பேரம் பேசி வாங்காதோ ஒரு பொண்ணுனு கிண்டல்! இந்த barter எல்லாம் அக்கவுன்டன்சியிலேயும், எகனாமிக்ஸிலேயும் படிச்சது தான். நம்மகிட்டே இருந்த பணத்தைக் கொடுத்து மாலைகளை வாங்கியாச்சு. அதோடு விட வேண்டியது தானே! அதான் இல்லையே! objection overruled னு அப்போவே சொல்லி இருக்கணுமோ? இதுக்குனு சித்தி தலைமேலே ஒரு நபர் விசாரணைக் கமிஷன் நியமிச்சுக் கேட்கச் சொன்னார். என் கட்சியிலே ஆட்களே இல்லாமல் தன்னந்தனியாக நான் இருக்க, எதிரிக்கட்சியிலே சேச்சே எதிர்க்கட்சியிலே என் கணவரும், என் நாத்தனாரும் வெற்றிப்புன்னகையோடு காட்சி அளிக்க, :P அப்புறம் கடையிலே போய்க் கேட்டதுக்குச் சின்னப் பொண்ணுனு ஒண்ணும் ஏமாத்தலைங்க, இன்னிக்கு ரோஜாப் பூ மாலையே விலை அதிகம், அதோடு முழுமாலை கேட்டது அந்தப்பாப்பா. (நான் பாப்பா தான் என்பதன் காரணம் புரிஞ்சிருக்குமே) என்று கடைக்காரர் சொன்னார். அப்பாடா! சாட்சியங்களை நான் கலைக்கவே இல்லை, சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் விசாரணை முடிவடைந்தது. :)))))) உண்மையில் மாலை முழுமாலைதான். இரண்டு பக்கமும் நீஈஈஈஈஈஈஈளமாய் வரும். நுனியில் பட்டுக் குஞ்சலம் வைத்திருப்பாங்க. அப்படி ஒரு மாலையை இப்போல்லாம் பார்க்க முடியாது.   []   கோயிலில் இருந்து மறுபடி டிவிஎஸ். நகர் வந்தோம். சாப்பாடு ஆச்சு. மதியம் இரண்டரைக்கு ஜனதா ரயில் மதுரையில் இருந்து சென்னை கிளம்புகிறது. மெயின் லைனில். இரவு பத்து மணி அளவில் கும்பகோணம் போகுமாம். இரவே கிராமம் போகிறோமோ என நினைத்துக்கொண்டேன். எனக்கு அப்போ கிராமம் போவதில் இருந்த கஷ்டங்கள் சரியாய்த் தெரியாது. அப்பா வந்து சொன்னப்போக் கூட விளையாட்டாய்க் கேட்டது தான். ஆகவே ராத்திரியே போயிடுவோம் போலனு நினைச்சேன். ஆனால் என் அம்மா அன்று செவ்வாய்க் கிழமை என்பதாலும், இரவு அகாலம் என்பதாலும் அன்றே புக்ககம் போக முடியாது என்றும் ஸ்டேஷனிலேயே தங்கிட்டுக் காலை தான் போவோம் என்றார். உள்ளூரிலேயே அவங்க அத்தை வீடு இருந்தாலும் முதலில் எங்க வீட்டுக்குத் தான் போகணும், ஒளபாசனப் பானையோட என்பதால் அங்கேயும் போகலை.  அப்போல்லாம் பாக்கிங் செய்வது பற்றிய அறிவும் கிடையாது. ஆகவே அம்மா, அப்பா, சாமான்களைப் பாக் செய்திருந்த விதமே இப்போ நினைச்சாலும் சிரிப்பு வருது. ஒரு சாக்கில் பித்தளை, வெண்கலப் பாத்திரங்கள், இரும்பு அடுப்பு போன்றவற்றையும் ஒரு ஜாதிக்காய்ப் பெட்டியில் எவர்சில்வர் பாத்திரங்களும், அந்தக் காலம் ரொம்பவே பிரபலமாக இருந்த நாகப்பட்டினம் ஸ்டீல் ட்ரங்கில் என் புடைவைகளும், இன்னொன்றில் வெள்ளிப் பாத்திரங்களுமாக கம்பார்ட்மென்டையே அடைக்க, உட்கார இடம் இல்லாமல் நாங்க மட்டுமின்றி( ரிசர்வேஷன் எல்லாம் அப்போ ரொம்பவே லக்சுரி அதுவும் கும்பகோணம், இதோ இருக்கும்பார் அப்பா). எல்லாருமே தவிச்சோம். ஒரு மாதிரிச் சமாளிச்சுட்டு உட்கார்ந்தோம். கட்டுச் சாதக் கூடைச் சாப்பாடே கொண்டு வந்திருந்தது அன்று நாங்க மட்டுமின்றி அந்தப் பெட்டியில் வந்தவங்க எல்லாருக்கும் கொடுக்கிறாப்போல் இருந்தது. ஆகக் கூடி அந்த ரயிலே எங்க திருமணத்தைக் கொண்டாட நாங்க இரவு ஒன்பதரை அளவில் கும்பகோணம் போய்ச் சேர்ந்தோம். மாமனார் உதவி செய்ய வேண்டி நிறுத்தி வைத்திருந்த பண்ணை ஆள் ஒருத்தரும் எங்களோடு மதுரையிலிருந்து வந்திருந்தார். அவர் உதவியோடு சாமான்களை ப்ளாட்பார்மில் இறக்கிவிட்டு, நாங்களும் இறங்கினோம். இதற்கு முன்னால் கும்பகோணம் ஸ்டேஷன் வந்தது இல்லை. என் மாமாவுக்கு திருவலஞ்சுழியில் திருமணம் நடந்தப்போ கும்பகோணத்தை பிக்னிக் மாதிரி சுற்றிப் பார்த்திருக்கோம். அதுவேறே இது வேறேயே. இனி அடிக்கடி வரவேண்டி இருக்கும் இல்லையா? கல்யாணத்தின் போது இருந்தமாதிரியே நான் என்னிலிருந்து பிரிந்து நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஒரு மொட்டை வண்டியில் சாமான்களை ஏற்றினார்கள். வண்டியோடு ஆட்களும் வந்திருந்தனர். மாடுகள் கொம்பில்லாமல் பார்க்கவே விநோதமாக இருந்தது. அத்தகைய வண்டி மாடுகளை மதுரைப்பக்கம் பார்த்ததே இல்லை. அந்த வண்டியில் சாமான்கள் ஏற்றப்பட்டு விடிய விடிய ஊர் போய்ச் சேரும் என்றார் என் கணவர். எனக்கு அதுவும் விநோதமாய்த் தான் இருந்தது. ஸ்டேஷனிலேயே தூங்கினோம். விடிகாலையில் முதல் பஸ்ஸில் போக வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். அம்மா நாலு மணிக்கு எழுப்ப எழுந்து கை,கால் முகம் கழுவிக்கொண்டு புக்ககம் செல்ல ஆயத்தமானேன். பேருந்து நிலையத்திற்கு அருகேயே பஸ் நிற்கும் என்று சொன்னதால் எல்லாரும் அங்கே சென்றோம். பஸ்ஸும் வந்தது. ஒளபாசனப் பானையை எடுத்துக்கொண்டு பேருந்தில் ஏறக் கஷ்டமாய் இருந்தாலும் ஏறிவிட்டேன். எல்லாரும் உட்கார்ந்ததும் பஸ் போக ஆரம்பித்தது. குறுகிய பாதை. பஸ் வளைந்து வளைந்து வளைந்து சென்றது. அப்பா வந்தியத் தேவன் பிரயாணம் பண்ணியதை நினைத்து நினைத்துச் சொல்லிக் கொண்டு அநுபவித்துக் கொண்டு வந்தார். எனக்கோ இது என்ன இப்படிக் குறுகிய பாதையில் பஸ்ஸெல்லாம் எப்படிப் போகிறது என ஆச்சரியப் பட்டேன். அந்தப் பேருந்து கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் பேருந்து. வழியில் கூந்தலூர் என்னும் இடத்தில் பஸ் நிற்கையில் அங்கே இறங்கி அங்கிருந்து மறுபடி மாட்டு வண்டியில் ஊருக்குப் போக வேண்டும் என்றார்கள். கூந்தலூரில் பஸ்ஸும் நின்று நாங்களும் இறங்கினோம். மாட்டு வண்டிகளும் காத்திருந்தன. இன்னொரு மொட்டை வண்டியும் வந்திருந்தது. அதில் சாமான்களை ஏற்றிவிட்டு ஒளபாசனப் பானையும் நான், என் கணவர் மட்டும் மாட்டு வண்டியில் செல்வது எனவும், மற்றவர்கள் நடந்து வரலாம் எனவும் முடிவாகியது. ஆற்றில் வண்டியை இறக்குவது கஷ்டம் என்றும் எல்லாருமே நடக்கலாம் எனவும் மூங்கில் பாலம் தாண்டி ஏறலாம் என்றும் ஒளபாசனப் பானையைக் கையில் எடுத்து வரலாம் எனவும் என் கணவர் கூற எனக்குக் கொஞ்சம் குழப்பம். [] ஆனாலும் மாமனார் சொன்னதன் பேரில் வண்டியில் ஏறி உட்கார்ந்தேன். வண்டி நகர்ந்தது. அழகு அழகான சோலைகள் அடர்ந்த பாதையில் வண்டி செல்ல, விதவிதமான பக்‌ஷிகளின் கூச்சல் கேட்க, என் மனமோ அவற்றோடு ஆடத் துடிக்க வண்டி மெல்ல மெல்ல அரசலாற்றில் இறங்குவது எனக்குப் புரியவில்லை. திடீரெனப் பள்ளத்தில் இறங்கும் உணர்வு தோன்றச் சுற்றும் முற்றும் பார்த்தால் ஒரே வெண்மணல் பரப்பு. என் கணவர் கீழே இறங்கி இருக்க நான் மட்டும் வண்டியில் இருந்தேன். எனக்கும் வண்டியில் அமர்ந்து வர பயம்மா இருந்தது. கீழே இறங்கறேன் என்று சொல்ல, வேண்டாம், இந்த மணலில் உனக்கு நடக்க வராதுனு என் கணவர் சொல்லப் பிடிவாதமாய்க் கீழே இறங்கினேன். ஒளபாசனப் பானையைக் கையில் எடுத்துக்கொண்டு தான். காலைக்கீழே வைத்தேனோ இல்லையோ மணலில் கால் உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளே போயாச்சு. எங்கே இருக்கேன்??     கல்யாணமாம், கல்யாணம்! வாழ நினைத்தால் வாழலாம்! செருப்புப் போட்டு நடந்தால் கால் மணலில் புதையும் என்பது ஓரளவுக்குத் தெரிந்திருந்தாலும் அந்த நேரம் அது நினைவில் இல்லை. அப்புறம் செருப்பையும் கையில் எடுத்துக்கொண்டு ஒளபாசனப் பானையையும் எடுத்துக்கொண்டு நடப்பது கஷ்டம் என்பதால் மூங்கில் பாலத்தில் செல்லுமாறு வற்புறுத்தப்பட்டேன். மூங்கில் பாலத்தைப் பார்க்கையிலேயே பகீர் என்றது. என் அப்பா ஊரான மேல்மங்கலம் கிராமம் தான். ஆனாலும் செல்லும் வழியோ அந்த நாட்களிலேயே (பென்னி குக் தயவு?) நன்றாய் இருக்கும். ஊரும் சுத்தமாய் இருக்கும். மின் விளக்கு, குழாய் எல்லாமும் உண்டு. ஆகவே கிராமம் என்பது பெயரளவுக்குத் தான் இருந்தது. அருகேயே சில மைல்கள் தள்ளி இருந்த இன்னொரு சித்தி ஊரான சின்ன மனூரும் அப்படியே. ஆகவே கிராமம் என்றால் இப்படி ஒரு கிராமத்தை நான் பார்ப்பது அதுவே முதல் தடவை எனலாம். மெல்ல, மெல்லக் கரையேறினேன். மூங்கில் பாலத்தை நோக்கி நடந்தேன். என் அப்பா, அம்மா, நாத்தனார் எனக்குக் காத்திருந்தனர். மூங்கில் பாலத்தில் சர்வ அலக்ஷியமாய் என் நாத்தனார் நடக்க எனக்கு மூச்சே போயிற்று. காலை வைத்தால் தெரியும் இடைவெளியில் கால் உள்ளே போயிடுமோனு பயம். நேரே பார்த்து நட என எல்லாரும் சொல்ல கண்களோ கீழேயே பார்த்தன. அருகே பாலத்தின் கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு மெல்ல மெல்ல நடந்தேன். நான் பிறந்து வளர்ந்ததில் இருந்து என் வாழ்நாளில் அது தான் முதல் முறையாய் மெதுவாய் நடந்திருப்பேன் என நினைக்கிறேன். அதுக்குள்ளே மாடுகள் கரையேறிவிட்டன. வண்டியையும் கரையிலே ஏற்றிக்கொண்டிருந்தனர். ஆஹா, இப்படியும் வாழ்பவர்கள் இருக்கின்றனர் என்பதே அப்போத் தான் தெரியும். இந்தக் கோடை காலத்திலேயே இப்படி என்றால் தண்ணீர் வந்துவிட்டால்?? வண்டியை அப்போ இறக்க மாட்டாங்க என்றார்கள். வண்டி அக்கரையிலேயே நிற்கும். மூங்கில் பாலத்தில் போய்த் தான் கடக்கவேண்டும் என்றார்கள். கடவுளே! எத்தனை முறை இனி இந்தப் பாதையில் வரப் போறேனோ, தெரியலை! முக்கி, முனகிக்கொண்டு போய்ச் சேர்ந்தேன். அப்புறமும் நடந்து வரேன்னு சொல்ல வேண்டாம்; புதுக் கல்யாணப் பொண்ணு நடந்து வரதைப் பார்த்தால் கூட்டம் கூடும் என்றார்கள். அதுவும் சரிதான் என வண்டியில் ஏறி உட்கார மொட் டென இடித்துக்கொண்டு பல்லைக் கடித்துக்கொண்டேன். அதுக்குள்ளே வண்டியோடு சில குழந்தைகள், பையன்கள் என ஓடி வர ஆரம்பித்தனர். வேடிக்கையாக இருந்தது. வலியினால் வந்த கண்ணீரையும் மறந்து சிரித்தேன் அவர்களைப் பார்த்து. வண்டி ஊருக்குள் நுழைந்து விட்டது என்பதை மேளச் சத்தம் உறுதிசெய்தது. வண்டி ஒரு பந்தல் போட்ட வீட்டில் நிற்க, நானும், என் கணவரும் இறங்கினோம். ஒரு சின்ன வீட்டிற்குள் அழைத்துச் செல்லப் பட்டோம். இது என்ன ஆரத்தி எடுக்கலை? வலது கால் எடுத்து வைனு சொல்லலை?? ஆச்சரியப் பட்டுக்கொண்டே உள்ளே சென்றேன். வீடு ரொம்பச் சின்னது. சுற்றும் முற்றும் பார்த்தேன், அங்கே இருந்த பெண்மணி, வாடியம்மா புது மாட்டுப் பொண்ணே, என அழைக்க அவரை நிமிர்ந்து பார்த்தேன், என் மாமியார் இல்லை, கல்யாணத்திலும் இவங்களைப் பார்த்த நினைவில்லை.  அதற்குள் என் நாத்தனார் ஒரு பாத்திரத்தில் டிபனும் , காப்பியும் எடுத்து வந்தாள். அண்ணா. மன்னியைச் சாப்பிட்டுவிட்டுத் தயாராய் இருக்கச் சொன்னாங்க. எட்டு மணிக்கப்புறமா நல்ல வேளையாம் என்று கூற, அந்த வீட்டுப் பெண்மணி, “இது உன் புக்ககம் இல்லை; நாங்க பக்கத்து வீடு; உன் குட்டி மைத்துனன் என் செல்லப் பிள்ளை; என்னை அவன் அத்தைனு கூப்பிடுவான்; நீயும் அப்படியே கூப்பிடு.” என்றார். அப்புறமாய் எங்கள் இருவருக்கும் காலை உணவு அளிக்கப் பட்டது. பின்னர் என்னைப்புடைவை மாற்றிக்கொள்ளச் சொல்ல, நான் குளிக்க குளியலறையைத் தேடினேன். அந்தப்பக்கத்து வீட்டு அத்தை, இப்போக் குளிக்கப் போனால் நேரம் ஆகும், இங்கே குளியலறையும் இல்லை; நீ முதலில் புடைவை மாற்றிக்கொண்டு கிரஹப்ரவேசம் செய்; அப்புறம் குளிச்சுட்டு, சாதம்(ஹவிஸ்) வைக்கணும்; அதுக்கப்புறம் ஹோமம் எல்லாம் இருக்கு; நேரம் ஆகும்.” என்றார். குளிக்காமல் புடைவை மாத்துவதா என நான் யோசிக்க, எல்லாரும் அவசரப் படுத்த வேறுவழியில்லாமல் புடைவைமாற்றப் போனால், ஒன்பது கஜம் புடைவைதான் கட்டணுமாம். கட்டத் தெரியாமல் முழித்த எனக்கு அத்தை கட்டிவிட்டார். அங்கே வந்த மாலைகளைப் போட்டுக்கொள்ளச் சொன்னார். இதற்குள் என் கணவரும் தயாராக இருவரும் மீண்டும் கைகோர்த்தபடி அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தோம்.  பக்கத்து வீட்டில் மேளம் முழங்கிக்கொண்டிருந்தது. வாசலில் பெரிய கோலம் போடப் பட்டிருந்தது. ஒரு சின்ன மேடை போன்ற பந்தலின் கீழே நாங்கள் போய் நின்றதும் மீண்டும் மாலை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொல்லி, மாற்று மாலை கொண்டு வந்தார்கள். மாற்றுமாலையைப் பார்த்ததும் எனக்கு அத்தனை பேர் இருக்கையிலும் சிரிப்பு தன்னையறியாமல் வந்தது. மதுரையில் ரோஜா, மல்லி, முல்லை மாலைகளையே பார்த்திருந்த எனக்கு இங்கே வெறும் இலைகளையும், மரமல்லி ஆங்காங்கே ஒன்றிரண்டு வைத்துக் கட்டப்பட்ட இந்த மாலையைப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது. அம்மா நிமிண்டினாள். அப்புறமாச் சிரிக்கலாம், நேரம், காலம் தெரியாமல்: என்று முணமுணத்தாள். மனசுக்குள் தலையில் அடித்துக்கொண்டிருக்கலாம். மீண்டும் ஓர் முறை மாலை மாற்றல் நடந்தது. ஊஞ்சலும் இருக்குமோனு நினைக்கையில் மீண்டும் சுற்றிக்கொட்டினார்கள். அப்புறமாய் இருவரும் வலக்கால் எடுத்து வைத்து உள்ளே போனோம். நுழை வாசல் குட்டையான உயரம் கொண்டது. என் உயரத்துக்கே இடிக்கும். ஆகையால் வரிசை கட்டி எல்லா உறவினரும் நின்றுகொண்டு குனி, குனி, குனி எனச் சொல்லிக்கொண்டே இருக்க குனிந்த படியே உள்ளே சென்று உள்ளே ஸ்வாமி அலமாரியில் இருந்த ராமரை நமஸ்கரித்துவிட்டு, அங்கே இருந்த ஊஞ்சலில் அமரச் சொன்னார்கள். அமர்ந்தோம். பால், பழம் கொடுத்து உபசரித்தார்கள். அதற்குள்ளாக ஹோமத்துக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ப்ரவேச ஹோமத்துக்கு நேரமாகிவிட்டதால் சீக்கிரம் வரவேண்டும் என்று புரோகிதர் கூற நான் குளிக்கப் போனேன். குளித்துவிட்டு மறுபடியும் ஒன்பது கஜம் புடைவை உடுத்தி ஹோமத்துக்குத் தயாராக வர, என்னைச் சமையலறைக்கு அழைத்துச் சென்ற மாமியார் ஒரு பாத்திரத்தில் உள்ள பாலை முதலில் காய்ச்சச் சொல்லிவிட்டுப் பின்னர் ஹவிஸ் வைக்க ஒரு வெண்கலப்பானையைக் கொடுத்து வைக்கச் சொன்னார்கள். வாத்தியார் கேட்பதற்குள் தயாராக வேண்டும் என ultimatum வேறே கொடுத்தாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்   கல்யாணமாம் கல்யாணம்! ஆஹா, மதுரைக்கு வந்த சோதனை இதுவா! நல்லவேளையாய் அன்றைக்கு ஹவிஸுக்கு வேண்டிய அரிசியைக் கொடுத்துட்டாங்க. இல்லைனா இந்த அளவுக் கணக்கில் பின்னர் ஏற்பட்ட குழப்பம் அன்றே ஏற்பட்டிருக்கும். பின்னர் என்ன குழப்பம்னு கேட்கிறீங்களா? வரேன் மெதுவா, இதை முதல்லே முடிச்சுட்டு. :D ஹவிஸ் தயாரானதும் ஹோமங்கள் நடந்து முடிந்தன. அன்றைய சாப்பாட்டிற்கு நான் தான் முதலில் பாயாசம் பரிமாற வேண்டும் என்று சொல்லி அனைவருக்கும் பரிமாறச் சொன்னார்கள். கிரஹப்ரவேசத்திற்கு மறுநாள் காலையில் வீட்டிற்குப் புதிய மருமகள் தான் வாசல் தெளிக்க வேண்டும் என்பது அந்த நாளைய வழக்கம், சம்பிரதாயம். அப்போதெல்லாம், (என்னைப் பொறுத்தவரை இப்போதும்,) முதலில் வாசல் கதவைத் திறப்பதில்லை. கொல்லைக் கதவைத் திறந்துவிட்டு (இது தனிவீடுகளில் மட்டுமே சாத்தியம்) கொல்லையில் நிலையைக் கைகளால் அலம்பிக் கோலம் போட்டுவிட்டுப் பின்னர் சுவாமி மாடத்தில் விளக்கை ஏற்றி இன்னொரு கை விளக்கையும் கூடவே ஏற்றி அதை எடுத்துக்கொண்டு வாசல் கதவைத் திறந்து வாசலுக்கு வரவேண்டும். எல்லா வீடுகளிலும் விளக்கு மாடம் இருக்கும். அந்த வாசல் மாடத்தில் விளக்கை வைத்துவிட்டுப் பின்னர் வாசல் நிலையைக் கைகளால் அலம்பிவிட்டுப் பின்னரே பசுஞ்சாணி கலந்த நீரால் வாசல் தெளிக்க வேண்டும். வாசல் தெளித்ததும் தான் துடைப்பமோ/விளக்குமாறு போட்டுப் பெருக்க வேண்டும். பெருக்கியதும் மீண்டும் ஓர் முறை சாணி நீரைத் தெளித்துச் சமன் செய்துவிட்டுக் கோலம் போடவேண்டும்.  வீடு துடைக்கையிலும் இவ்வாறே முதலில் விளக்குமாறோ/துடைப்பமோ போட்டுப் பெருக்காமல் முதலில் நீரில் மஞ்சள் பொடி போட்டு அல்லது மண் தரை என்றால் சாணி போட்டு வீடு துடைத்துவிட்டுப் பின்னரே பெருக்க வேண்டும். அதன் பின்னரே மறு முறை வீடு துடைக்க வேண்டும். ஒரே முறை வீடு துடைத்தல் ஆகாது என்று அந்தக் காலத்துப் பெரியவங்க சொல்வாங்க. நல்ல நாட்கள் அல்லாத மற்ற நாட்களில் அதாவது சிராத்தம் போன்ற தினங்களில் மட்டுமே ஒரே முறையாக வீடு துடைக்கவேண்டும், இரண்டாம் முறை துடைத்தல் ஆகாது என்பார்கள். இதை எல்லாம் பெரியவங்க சொல்லிச் செய்து வந்ததால் இன்றும் மறக்காமல் இருக்கிறது. இந்தப் பாரம்பரியத்தைப் பற்றி எழுத வேண்டியே இதை எல்லாம் எழுதுகிறேன். அன்று தான் அப்பாவும், அம்மாவும், தம்பியும் ஊருக்குப் போகிறார்கள். அவங்களுக்கு எல்லாம் விட்டுட்டுப் போறோமேனு ஒரே வருத்தம். மதுரை என்னதான் சின்னக் கிராமம் போன்ற ஊர் என்றாலும் இது குக்கிராமம். வீட்டில் மின்சாரம் கிடையாது. வீட்டில் என்ன வீட்டில்! கிராமத்தில் எவர் வீட்டிலும் மின்சாரமே கிடையாது. ஹரிக்கேன் விளக்கும் கிடையாது. மதுரையிலே பட்டாணி, கடலை வறுக்கிறவங்க அந்தக் காலத்து இங்க் பாட்டிலில் மூடியில் ஓட்டை போட்டு மண்ணெண்ணை நிரப்பி, திரியைப் போட்டு எரிப்பார்கள். அந்த மாதிரிக் காடா விளக்கும், சின்னச் சிம்னி விளக்கும் தான் வெளிச்சத்துக்கு. காடா விளக்குப் புகை எனக்கு அப்போவே மூச்சுத் திணறச் செய்தது. அதோடு மாமியார் வீட்டில் விறகடுப்பும், குமுட்டி அடுப்பும் தான். மதுரையில் குமுட்டி அடுப்பில் சமைத்திருக்கிறேன் என்றாலும், எப்போவோ தானே. அதோடு இங்கே மண் அடுப்பு. தினமும் அடுப்பைச் சாணி போட்டு மெழுக வேண்டும். குமுட்டியும் மண் குமுட்டி. சமையலறை ஜன்னலில் ஒன்றும் மண் விறகடுப்புப் பக்கம் ஒன்றும், இரண்டாம் கட்டில் ஒன்றுமாக இருந்தது. இரும்புக் குமுட்டியும், இரும்பு விறகடுப்பும் இருந்தது. காப்பி எல்லாம் போடுவதற்கு தென்னை ஓலையைப் போட்டு எரிப்பார்கள். மாமனாருக்குத் தென்னந்தோப்புகள் இருந்ததால் எரிபொருட்கள் வீட்டிலே உள்ளதுதான். ஆகவே தென்னை ஓலை, தேங்காய் மட்டைனு எல்லாம் போட்டு எரிப்பாங்க. எனக்குப் பாலில் தென்னை ஓலை வாசம் வரும். (நாக்கு நீஈஈஈஈஈஈஈஈளம்) அவங்களுக்கோ அது பழக்கம். அவற்றில் தான் தினசரி சமையல் செய்ய வேண்டும். காப்பிக்கொட்டை அன்றன்றைக்குக் கொட்டையை வறுத்து அவ்வப்போதுக்கு அரைக்க வேண்டும்.  இதை எல்லாம் படிக்கும் தற்காலத்து அன்பர்கள் ஆணாதிக்கம் என்றும், பெண்களை வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்கள் என்றும் சொல்லலாம். ஆனால் இதை எல்லாம் ஆதிகாலம் தொட்டே செய்து கொண்டிருந்த என் மாமியார் 90 வயசுக்கும் மேல் வயதாகியும் சில வருடங்களாகத் தான் வயதின் காரணமாகவும், கூன் போட்டதின் காரணமாகவும் தனியாக வேலை செய்யாமல் இருந்தார். ஐந்து வருடங்கள் முன்னர் வரையிலும் பூரண ஆரோக்கியத்துடன் எல்லா வேலைகளையும் செய்து கொண்டு வளைய வந்தார். பின்னரும் தினசரி சமையல் பிடிவாதமாக அவர்கள் தான் செய்வார்கள். ஏனெனில் இந்த வேலைகளெல்லாம் ஒரு வகையில் உடல் பயிற்சியாகும். இதை இத்தோடு விட்டுட்டு என் குடும்ப வாழ்க்கையைக் கவனிக்கலாம். அப்பாவும், அம்மாவும் தம்பியோடு கிளம்பிப் போயாச்சு. இங்கே வீட்டில் எல்லாரும் அதாவது என் மாமனார், மாமியார், பக்கத்து வீட்டு அத்தை, ஊரில் இருந்த மற்ற வீட்டு உறவினர்கள், என் நாத்தனார்கள், என் கணவர், அவர் தம்பிகள் என எல்லாருமாக இரண்டாம் கட்டில் கூடிப் பேசிக்கொண்டிருக்க அங்கே போகலாமா வேண்டாமா என்ற தயக்கத்தில் இருந்த என்னை அழைப்பு வந்து குழப்பத்தைத் தீர்த்து வைத்தது. எல்லாருமே பேசிக்கொண்டிருக்கையில் உங்கப்பா வீட்டில் ஊரில் நிலம் இருந்ததா? என்று கேட்க இருந்தது என் பெரியப்பா பொண்ணு கல்யாணம் சமயம் விற்றாங்க என்றேன் நான். என் மாமனார் முழுக்க முழுக்க விவசாயத்தில் மூழ்கியவர். வயலில் இறங்கி வேலை செய்யக் கூடிய ஆற்றல் உடையவர். என்னிடம் உங்க பக்கமெல்லாம் எத்தனை போகம் விளையும் என்று கேட்க, நான் மூன்று போகம் என்று சொல்ல ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டு கேலியாகச் சிரித்தனர். எனக்குக் கோபம் மெல்ல மெல்ல வந்தது. முகம் சிவந்தது.  அதற்குள் என் கணவர் என்னிடம்,” இன்னும் குழந்தையாக இருக்கியே! போகம் என்றால் என்னனு புரியலை உனக்கு!” என்று சொல்ல, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வணிக முறையிலான விளைபொருட்கள் பற்றிய சிறப்புப் பாடம் எடுத்துப் பள்ளியிலேயே படித்திருந்த எனக்குக் கோபம் பொங்கி வர, போகம் என்றால் ஒவ்வொரு முறையும் வயலில் விளைச்சல் ஏற்படுவதைக் குறிப்பார்கள். எங்க பக்கம் மூணுபோகம் நெல் விளையும். பத்திரிகைகளிலே கூட வருமே? எங்க சித்தி ஊரான சின்னமனூர் பக்கம் மார்க்கையங்கோட்டை தான் ஆசியாவிலேயே நெல் விளைச்சலில் மூன்று போகத்தில் அதிக விளைச்சல் காணும் ஊர் என்று என் பொது அறிவைக் காட்ட அவங்க எல்லாருமே சிரித்தார்கள். வைகையிலே தண்ணியே இல்லை; உங்க ஊரிலே நெல் விளையுதா? நிலம் எப்படி இருக்கும்னு தெரியாமல் பேசறே. என்று கேலி செய்தனர்.பின்னர் அப்போப் பயறு, உளுந்து எல்லாம் எப்போத் தெளிப்பாங்க என்று என்மாமனார் கிண்டலாகக் கேட்க அது புரிந்தாலும் நான் அதெல்லாம் காட்டிலே தான் விளையும். இங்கே நஞ்சை நிலத்தில் போட மாட்டாங்க! அதுக்கெனப் புஞ்சைக்காடு இருக்கு என்று சொல்ல மீண்டும் “ஹோ” வென்ற சிரிப்பு. எல்லோருக்கும் சிரித்து மாளவில்லை.   இப்படி ஒரு அசடாக இருக்கியே என என் கணவர் என்னைப் பரிதாபமாகப் பார்க்க, நான் அவரிடம்,” நஞ்சை, புஞ்சை பற்றிப் பள்ளி நாட்களில் படிச்சதே இல்லையா? அதோடு எங்க மாமா அக்ரிகல்சர் படிச்சுட்டு விவசாயத் துறையில் தான் வேலை பார்க்கிறார். எப்போவும் மண்ணை நோண்டிக் கொண்டே இருப்பார். நாங்கல்லாம் அவருக்கு உதவி செய்வோம்.” என்றேன். ஆனாலும் யாருக்கும் அதை ஒத்துக்கொள்ள மனம் இல்லை. வயலெல்லாம் எங்கே பார்த்திருக்கப் போறே என எல்லோரும் சொல்லிச் சிரித்தனர். அவங்க பார்த்தது தஞ்சை ஜில்லாவிலே தை, மாசி மாதங்களில் அறுவடை ஆன உடனே வரப்பிலே பயறு, உளுந்து தெளிப்பதும். வயலிலேயும் போடுவதும் தான். அதைத் தவிர்த்து புஞ்சை நிலம்னு ஒண்ணு இருப்பதை அவங்களால் ஏற்றுக் கொள்ள முடியலை.என் கடைசி நாத்தனாரிடம் பள்ளியில் இதெல்லாம் படிச்சதில்லையா எனக் கேட்க அவங்களுக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. சரினு விட்டுட்டேன்.  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இவங்கல்லாம் புரிஞ்சுக்கவே மாட்டாங்க போலிருக்கே. வாயை மூடிக்கொண்டேன் அப்போதைக்கு. ஆனால் சோதனை வேறொரு உருவில் வந்தது.   இந்த விஷயம் பின்னர் தலை தீபாவளிக்கு மதுரைக்கு வந்த என் மாமனார் என் அப்பா மற்ற உறவினர்களிடம் இதைச் சொல்லிச் சிரித்திருக்கிறார். இது கூடத் தெரியலை, உங்க பெண்ணுக்கு என்று சொல்ல, என் அப்பாவும் மற்ற உறவினர்களும் எங்க பக்கமெல்லாம் புன்செய், நன்செய் என நிலங்கள் தனியாக இருக்கின்றன. என்று சொன்னதோடு என் அப்பா புன்செய் நிலத்தில் தான் பயறு, உளுந்து, காராமணி, கடலை எல்லாம் போடுவோம். இன்னும் புன்செய் நிலம் விற்காமல் வைச்சிருக்கேன் என்று சொல்லி அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தார்.   கல்யாணமாம், கல்யாணம்! உலை மட்டுமா கொதித்தது? ஒரு சில நண்பர்கள் கல்யாணத்தின் சம்பிரதாயங்களையும் அதன் அர்த்தங்களையும் விடாமல் கேட்டதாலும், பழைய பழக்க வழக்கங்கள் மறைந்து வருவதைப்பற்றிய சிலரின் மன வருத்தங்களாலும் அவற்றை நினைவு கூரவும் இளைய தலைமுறை புரிந்து கொள்ளவுமே கல்யாணமாம் கல்யாணம் என்று ஆரம்பித்து எழுதி வருகிறேன். இதில் விட்டுப் போனவை எதாவது இருந்தால் தெரிந்தவர்கள் குறிப்பிடும்படி வேண்டுகிறேன்.  *************************************************************************************** மறுநாள் காலையிலே எழுந்ததுமே இன்னிக்குச் சமையல் புது மருமகள் தான் என்ற குண்டைத் தூக்கிப் போட்டார்கள். எங்க வீட்டிலே சமைத்து அநுபவம் நிறைய இருந்தாலும், புது இடம், அடுப்பிலிருந்து துடுப்பு வரை எல்லாமும் புதுசு, மேலும் அவங்க ருசி எப்படினு தெரியாது. கொஞ்சம் கலக்கமாய்த் தான் இருந்தது. குளித்துவிட்டு வந்ததும், சின்ன நாத்தனார் துணைசெய்ய சமையலைத் துவங்கினேன். நல்லவேளையாய் அடுப்புப் பத்த வைக்கிறது எல்லாம் தெரிந்தே வைத்திருந்தேனோ பிழைத்தேன். :P முதலில் கொடி அடுப்பு என்னும் அடுப்பின் ஒரு சின்ன பாகத்தில் பருப்பைப் போட்டு விட்டுப் பின்னர் வெண்கலப் பானையில் உலை வைக்க நீர் நிரப்பி ஏற்றி வைத்தேன். உலை கொதிக்கும் முன்னர் அரிசி களைந்து தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். புளி கரைத்துக் கொண்டு ரசத்துக்கு எடுத்து ஈயச் செம்பில் வைத்துக் குமுட்டியில் அதை ஒருபக்கம் வைத்துவிட்டு அரிசியை எடுக்க அரிசிப் பானைக்குப் போனேன். அந்த வெண்கலப் பானை அரைப்படி வெண்கலப் பானை. அரைப்படி என்றால் நாலு ஆழாக்குகள் பிடிக்கும். கிட்டத்தட்ட எண்ணூறு கிராமுக்குக் குறையாமல் பிடிக்கும். ஆகவே அரைப்படி அரிசியை எடுத்தேன். அப்போத்தான் விதி சிரித்தது. என் நாத்தனார் எவ்வளவு அரிசி எடுக்கறீங்க என்று கேட்க, நான் அரைப்படி என்று சொல்ல, அது போதாது; இது ஒருபடி வெண்கலப் பானை என்று சொன்ன அவள் ஒரு படி அரிசி போடவேண்டும் என்றும் சொன்னாள். திரு திருவென முழித்தேன் நான். எங்க வீட்டிலே இதை அரைப்படினு தானே சொல்வாங்க. தினமும் எங்க எல்லாருக்கும் இந்த மாதிரியான ஒரு வெண்கலப் பானையில் தானே சாதம் வைப்போம். அது நாகர்கோவில் வெண்கலப் பானை; இது கோதாவரிக் குண்டு. அதனால் அரிசியின் அளவுமா மாறும்? என் சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன மூளைக்கு எட்டவே இல்லை. என்றாலும் முதல் நாள் தேர்வு. தேர்வு நடத்துவதோ சின்ன நாத்தனார். எல்லாருக்கும் கடைசி; என்னைவிட இரண்டு வயதே சின்னவள் என்றாலும் வீட்டில் எல்லாருக்கும் அருமையானவள்; செல்லமானவள்; அவள் சொல்வதே எல்லாரும் கேட்பார்கள். அதை நாங்கள் ரயிலில் வந்தபோதே புரிந்து கொண்டிருந்தேன். அவங்க சொல்லை மீறுவது இங்கே மனக்கசப்பை உண்டாக்கும் என்பதைப் புரிந்து கொண்டிருந்தேன்.ஆகவே அவள் சொன்னாப்போலவே ஒரு படி அரிசியை எடுத்துக் களைந்தேன். உலை நீர் கொதித்துக்கொண்டிருந்தது. பருப்பும் வெந்துவிட்டது; கொதிக்கும் உலையில் அரிசியைப் போட்டுவிட்டுக் கிளறிவிட்டுப் பருப்பில் கொஞ்சம் ரசத்துக்கும், யாருக்கானும் பருப்பு சாதம் சாப்பிடணும்னா அதுக்கு எனவும் எடுத்து வைத்துவிட்டுக் குழம்புக்குக் கரைத்த புளி நீரை ஊற்றிப் பொடி எல்லாம் போட்டு சாம்பாரை வைத்தேன். வைத்துவிட்டுத் திரும்பி சாதம் என்னாச்சு என்று பார்த்தால்?? கடவுளே! அரிசி பொங்கி வழிந்து கொண்டிருந்தது. பானையிலிருந்து வழிந்து கொண்டே இருந்தது. மிளுந்து வருது என்று மதுரைப் பக்கம் வழக்குச் சொல்லில் சொல்வார்கள். அப்படி வந்து கொண்டே இருந்தது. கிளறினால் அகப்பை உள்ள்ள்ள்ள்ள்ளே போய் விட்டது. தண்ணீரே இல்லாமல் பானை முழுதும் அரிசி. இத்தனை அரிசியும் கொதிக்கணும்னா இன்னும் ஜலம் வேண்டும். அரிசியோ பொங்கிக் கொண்டிருந்தது. அதைப்பார்த்துச் செய்வதறியாது திகைத்துப் போனேன். வெண்கலப் பானை, இரும்பு அடுப்பு, குமுட்டி எல்லாமும் படம் எடுத்து அப்புறமாச் சேர்க்கிறேன். படங்களை இதில் சேர்க்க முடியவில்லை.    கல்யாணமாம் கல்யாணம்! நான் எழுதுவது கடிதமல்ல; அப்போ புத்திசாலித் தனமாய் ஒரு வேலை செய்தேன். பொங்கிக் கொண்டிருந்த அரிசியைக் கரண்டியால் அள்ளி வேறொரு பாத்திரத்தில் மாற்றிவிட்டுக் கொடி அடுப்பில் இருந்த சாம்பாரைக் கீழே இறக்கிவிட்டு வேறொரு பாத்திரத்தில் நீரை விட்டுச் சுட வைத்தேன். அதற்குள்ளாக சமையலறையில் விட்ட புது மருமகளிடமிருந்து சத்தமே இல்லையே எனப் பார்க்க வந்தார் மாமியார். கூடவே என்னோட இரண்டாவது நாத்தனாரும் வந்தார். இவரைத் தான் என் சித்தப்பா(அசோகமித்திரன்) தம்பிக்குக் கொடுத்திருந்தது. மாமியார் பார்த்துட்டு அடுப்பைச் சுற்றிச் சிதறிக்கிடந்த அரிசியைக் கண்டு என்ன இது? என்று கேட்க, நான் வாயே திறக்கவில்லை. மெளனமாய் அரிசியைப் பாத்திரத்தில் மாற்றிக்கொண்டிருந்தேன். அதற்குள்ளாக மாமியார் விஷயத்தைப் புரிந்துகொண்டார். அரிசி எவ்வளவு போட்டாய்?  ஒரு படி தான். ஒரு படி போடலை நீ, இரண்டு படி போட்டிருக்கே. இல்லை, ஒரு படி தான் போட்டேன். ராஜி கூட ஒரு படினு தான் சொன்னாள். எங்கே படியில் அரிசியை மறுபடி அளந்து எடுத்து வா. அரிசிப் பானையில் இருந்த படியால் நான் இரண்டு தரம் அரிசியை அளந்து எடுத்து வர, என் மாமியார் நான் நன்னாப் பார்த்தேன் இரண்டு படி தான் எடுத்திருக்கே. இப்படித் தானே அப்போவும் எடுத்திருக்கே? ஆமாம்; ஆனால் இது ஒரு படி அரிசி தான். அந்த நேரம் ஆபத்பாந்தவளாய் வந்தார் என் இரண்டாவது நாத்தனார். அம்மா, அவளைக் குத்தம் சொல்லாதே! மெட்ராஸில் இதுதான் ஒரு படி. நம்ம பக்கம் ஒரு படி என்கிறது அங்கே அரைப்படி. அவள் சரியாய்த் தான் புரிஞ்சுட்டு இருக்கா. அவளையே அளந்து எடுக்க விட்டிருந்தால் குழப்பம் வந்திருக்காது. ராஜி வந்து ஒரு படினு சொல்லவும் அவ பெரியபடியாலே ஒருபடி எடுத்திருக்கானு சொல்லி விளக்கம் கொடுக்க, எனக்கு இது முற்றிலும் புது விஷயமாக இருந்தது. எங்கேயும் எட்டாழாக்கு ஒரு படினு தானே கேள்விப் பட்டிருக்கோம்; இது என்ன புதுசா? என நினைப்பதற்குள்ளாகப் பக்கத்து வீட்டு அத்தையும் இங்கே நடக்கும் கசமுசா காதில் அரைகுறையாய் விழ அவங்களும் வந்து என் மாமியாரிடம் விளக்கினார்கள். அவங்களுக்கும் பெரிய படி, சின்னப் படி என்பது அப்போதே புரிய வர, அதற்குள்ளாக நான் மாற்றிய அரிசியை வேறொரு வெண்கலப் பானையில் வைத்து இரண்டு பக்கமும் சாதத்தை வடிக்க ஒரு மாதிரியாகச் சாதம் தயாரானது. என் இரண்டாவது நாத்தனார் தான் அந்தக் குடும்பத்திலேயே முதல்முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்த பெண். அதற்கு முன்னர் குடும்பத்திலேயே பள்ளி இறுதி வகுப்புக்குப் போனது என் கணவர் தான். அவரோட அக்காவைப் படிக்க வைக்கவில்லை. பதினைந்து வயதுக்குள்ளேயே கல்யாணமும் செய்து கொடுத்துவிட்டார்கள். அதுவும் சொந்தம்; அத்தை பிள்ளைக்கே கல்யாணம் செய்து கொடுத்தார்கள். ஆகவே வெளிப்பழக்கம் என்பதே இல்லை. ஆனால் என் இரண்டாவது நாத்தனாரும், என் கணவரும் ஊரையும் விட்டுவிட்டு என் கணவர் புனாவிலும், நாத்தனார் மும்பையில் இன்சூரன்ஸ் அலுவலகத்திலும் வேலை பார்த்தார்கள். ஆகவே அவங்களுக்குத் தஞ்சையை விட்டு வெளிப் போக்குவரவு இருந்ததால் உடனே புரிந்து கொள்ள முடிந்தது. அதே என் மாமியாரோ,  கடைசி நாத்தனாரோ ஊரை விட்டு வெளியே சென்றது என்பது கும்பகோணம் சுற்றுவட்டாரக் கிராமங்கள் மட்டுமே. அதனால் அவங்களுக்கு என் அளவுக் கணக்கும், எனக்கு மிகவும் புதியதான இந்த அளவும் புரிய வில்லை. அப்புறமாய் இரண்டே நாட்களில் இந்தக் கணக்கில் மாகாணி, வீசம் என்பதில் நான் தேர்ந்தது தனிக்கதை. அதே போல எங்க வீடுகளிலே பேசிக்கிறதும் ரொம்பவே எந்தவிதமான தயக்கம் இல்லாமல் பேசிப்போம். என் அம்மா எங்க பெரியப்பாக்கள் கூடவும், என் தாத்தா என் மாமிகளோடும் தாராளமாய்ப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுப் பேசுவார். ஆனால் இங்கேயோ என் கடைசி நாத்தனார் அவங்க அண்ணாவான என் கணவரோடு பேசியே நான் பார்க்கலை. என் கணவரும் அவங்க அம்மா, அவரோட அக்கா இவங்க கிட்டேத் தான் ஜாஸ்தி பேசுவார். அவங்க அப்பாவும், பிள்ளையும் பேசிக்கொண்டே நான் பார்க்கலை. இரண்டாவது நாத்தனார் மட்டும் கொஞ்சம் கலகலப்பு. எனக்கு இரண்டே வயது மூத்தவங்க என்றாலும் வெளிப்பழக்கம் அதிகம் இருந்ததால் என்னோடு சகஜமாய்ப் பேசினாங்க. இங்கே அண்ணாவோடு சண்டை, தம்பியோடு வம்புனு இருந்த எனக்குக் கொஞ்சம் கஷ்டமாய்த் தான் இருந்ததுனு சொல்லணும். வேறே யாரும் கிடைக்காமல் என் குட்டிமைத்துனனை வம்புக்கு இழுப்பேன். அவனோ, “நீ என்ன மச்சினன் என்ற மரியாதைஇல்லாமல் இப்படி இருக்கே?” என்பான். “போடா!” என்று நான் சொல்ல, “அம்மா, அப்பா கிட்டே சொல்றேன்” என்று அவன் சொல்ல, அவங்க எதிரேயே கூப்பிடுவேன் என்று சொல்லிவிட்டு அப்படியே கூப்பிடுவேன். என் மாமனார், மாமியாருக்கு நாத்தனார், மைத்துனர்களிடம் எனக்கு மரியாதைக் குறைவாக இருப்பதாக அபிப்பிராயம். அவங்களை எல்லாம் பெயர் சொல்லிக் கூப்பிடக் கூடாது. பெரிய மைத்துனர், சின்ன மைத்துனர் என்றே சொல்ல வேண்டும் என்பார்கள்.  இந்த விஷயத்தில் மாமியார், மாமனார் சொல்லைத் தட்டிய மருமகளாகவே இருந்தேன் என்பதே உண்மை. எவ்வளவு முயன்றும் அப்படி ஒதுங்கி இருக்க என்னால் இயலவே இல்லை. இன்று வரையிலும் அவங்களை எல்லாம் பெயர் சொல்லியே கூப்பிட்டாலும், பேச்சுக் குறைந்துவிட்டது. அவங்க அவங்க குடும்பச் சூழ்நிலையில் குறைத்துக் கொண்டுவிட்டோமோ என்னமோ. அண்ணாவிடம் ஏதானும் காரியம் ஆகணும்னா இவரின் பெரிய தம்பி என்னிடம் தான் விண்ணப்பம் வைப்பான். குட்டி மைத்துனன், அவனுக்கு மூத்தவன் இருவருமே எனக்கு ஆறு வயதுக்கும் மேல் சின்னவர்கள் என்பதால் அவங்களோடு பழக எனக்கும் சுலபமாக இருந்தது எனலாம்.  ஆனாலும் மைத்துனர்கள் என்னும் உறவு முறையால் முதலில் கலந்து பேசிய பழக்கம் பின்னர் அடியோடு விட்டுப் போய்விட்டது என்பதே சரி! அடுத்த இரண்டு நாட்கள் போனவிதம் தெரியாமல் என் அண்ணா மதுரையிலிருந்து வர, இவரும் புனாவுக்குத் திரும்பும் நாளும் வந்தது. என் மாமனார் என் நாத்தனாரைக் கொண்டு விடவேண்டும் என ஏற்கெனவே சென்னை செல்ல இருந்தார். எல்லாருமே ஒரே நாளில் கிளம்பினார்கள். வீட்டில் என் பெரிய நாத்தனார், அவங்க மூணு பொண்ணுங்க, என் மாமியார், இரண்டு மைத்துனர்கள் இருந்தோம். என் அண்ணாவும் திரும்பிப் போயாச்சு. அண்ணா மதுரைக்கு அனுப்பச் சொல்லிக் கேட்டதுக்கு இப்போத் தனியாக அனுப்ப மாட்டோம். கல்யாணம் ஆகி முதல்முறை வரும்போது இரண்டு பேரும் சேர்ந்து தான் வர வேண்டும் என என் மாமியார் சொல்லிட்டாங்க. புனாவிலிருந்து கடிதம் வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். கடிதமும் வந்தது.  கல்யாணமாம் கல்யாணம்! வேலைக்குப்போறதா வேண்டாமா? கடிதம் வந்தபோது நான் அன்றைய தினம் சமையலில் இருந்தேன். கடிதம் வந்திருக்கு என்று சொல்லி அதைக் கொடுத்தார்கள். உடனே பிரிச்சுப் படிச்சால் தப்பாயிடுமோ?? யோசனையோடு கடிதத்தை வாங்கித் தனியே வைத்துக்கொண்டேன். அதற்குள் என் நாத்தனார் என்ன விஷயம் என்று கேட்க, அதான் சாக்கு எனக் கடிதத்தைப் பிரித்துப் படிக்க முனைந்தேன். மாமனாருக்கும் கடிதம் வந்திருந்தது. அதற்குள்ளாகக் குட்டி மைத்துனன், “அண்ணாவுக்கு மெட்ராஸுக்கு மாற்றல் ஆகிட்டதாம், மன்னி, உன் கடிதத்திலேயும் அதானே எழுதியிருக்கு?” என்று கேட்க, படபடக்கும் இதயத்தோடு கடிதத்தைப் பிரித்தேன். நாத்தனார்கள் இருவர், மைத்துனர் இருவர், மாமியார், மாமனார் எல்லாரும் சூழ்ந்து கொள்ளக் கொஞ்சம் தர்மசங்கடத்துடனேயே கடிதத்தைப் பிரித்த எனக்கு ஒரு பக்கம் ஏமாற்றம். இன்னொரு பக்கம் ஆறுதல். கடிதத்தில் நாலே வரி: செள.கீதாவுக்கு அநேக ஆசிகள். இப்பவும் இவ்விடம் நான் க்ஷேமம். எனக்கு மெட்ராஸ் மாற்றலாகிவிட்டது. உன் அப்பாவுக்கும் கடிதம் போட்டிருக்கேன். இந்த மாசமே குடித்தனம் வைக்க வேண்டும். நான் வருகையில் வீடு பார்த்து அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வருவேன். நீ தயாராய் இருக்கவும். மற்றவை நேரில்.”   இதான் கடிதத்தில் கண்டது. இன்லண்ட் லெட்டர் தான் என்றாலும் ஒரு கார்டில் அடங்கி இன்னமும் இடம் இருக்கும் அளவுக்கு விஷயமே இல்லாமல் இருந்தது. ஒரு பக்கம் கோபம் வந்தது. கன்னா, பின்னாவெனத் திட்டி எழுதலாமோ என்று தோன்றியது. இன்னொரு பக்கம் ஒரு வாரத்திற்குள் அப்படி எல்லாம் எழுத முடியுமா என்று தோன்றியது. ஒன்றும் புரியவில்லை. மாற்றல் வந்த சந்தோஷத்தைக் கூட மறக்கடித்தது கடிதத்தின் வரிகள் எனலாம். ஒருவாறு ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு பதில் எழுதினேன். அப்போல்லாம் உடனே கடிதம் போயிடுமே. கடிதம் உடனே போய் அதற்கும் பதில் வந்தது. “செள,கீதாவுக்கு அநேக ஆசிகள். உன் கடிதம் கண்டேன். கதை படிக்கிறாப் போல் இருக்கிறது. உனக்குத் தமிழ் நன்றாக வருகிறது. நேரம் இருக்கையில் கதை எழுதிப் பழகு. நன்றாய் எழுதுவாய் என்று தோன்றுகிறது. மற்றவை நேரில்.” க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு அப்போவே சொல்லி இருக்கணும். சொல்லாமல் விட்டுட்டேன். :P ஆனால் வந்த கோபத்தில் அதுக்கப்புறமா என்னோட இலக்கிய நடையையே விட்டுட்டேன்.   ))))) ஆனாலும் அவர் அதுக்கப்புறமும் பல முறை சொல்லி இருக்கார். எழுதிப் பழகுனு. வணங்கவே இல்லை.    இத்தனை வருஷங்களுக்கு அப்புறம் இப்போத் தான் எழுதறேன். ஆனாலும் புதுசாக் கதை எல்லாம் எழுதாமல் சொந்தக் கதையை எழுதுகிறேன். அப்புறமாய் அவர் சென்னை வந்து முதல் முதல் வில்லிவாக்கத்தில் வீடு பார்த்து அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தார். மாமனார், மாமியார் இருந்த ஊரின் பெயர் கருவிலி. பூர்வீக கிராமம் ஆன பரவாக்கரையிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர். மாமனாரின் நிலங்கள் இங்கே இருந்ததால் இங்கேயே தங்கிவிட்டார். கருவிலி வந்து நாள் பார்த்து வைத்திருந்தபடி சென்னைக்குக் கிளம்பினோம். அப்போவும் என் மாமியாருக்கும், என் பெரிய நாத்தனாருக்கும் அவ்வளவாக இஷ்டம் இல்லை. சின்னப்பொண்ணு; இன்னும் கொஞ்ச நாள் பழகட்டும்; அப்புறமாய்க் குடித்தனம் வைக்கலாம்னு சொன்னாங்க. ஆனால் என் கணவர் கேட்கவில்லை. என் மாமியாரும், குட்டி மைத்துனரும் உடன் வர நாங்க இரண்டு பேரும் குடித்தனம் செய்யச் சென்னை வந்து சேர்ந்தோம். என் அம்மாவும் மதுரையிலிருந்து எனக்கு வேண்டிய சாமான்களோடு சென்னைக்கு வந்தாங்க. எல்லாருமே என் சித்தப்பா வீட்டில் தான் இறங்கினோம். அங்கிருந்து வில்லிவாக்கம் வீடுக்கு ரயிலில் போகணும்னு சொன்னாங்க. சென்னைக்கு அதற்கு முன்னர் வந்திருந்தாலும் என் பழக்கம் எல்லாம் திருவல்லிக்கேணி, மாம்பலம், மயிலைக்குள்ளாகத் தான். ஆகவே வில்லிவாக்கம், ரயிலில் போகவேண்டும் என்றதும் புதுமையாக இருந்தது. அப்போதெல்லாம் புகை வண்டிகள் தான். வில்லிவாக்கம் செல்லும் புகை வண்டியில் சாமான்களை எல்லாம் வைத்துக்கொண்டு சாமான்னா என்னனு நினைக்கிறீங்க? ஸ்டவில் இருந்து, குமுட்டி வரை எல்லாமும், சித்தி குடும்பம், நாத்தனார் குடும்பம், என் அம்மா, என் மாமியார், மைத்துனர், நாங்க இரண்டு பேர் எனக் கிட்டத் தட்ட பதினைந்து பேர் போலப் போய்ச் சேர்ந்தோம். கீழே நான்கு குடித்தனம், மாடியில் எங்க போர்ஷனும், வீட்டுக்காரங்க போர்ஷனும் மட்டும் இருந்தது. மாடியிலிருந்து ஒரு ராட்டினம் கட்டிக் கீழே கிணறு வரை வந்திருந்தது. பார்க்கவே மயக்கம் வரும்போல் இருந்தது. தண்ணீர் கிணற்றில் ஊற ஊற எடுத்துக்கணுமாம். காலை முதல்லே வீட்டுக்காரங்க எடுத்ததுக்கு அப்புறம் தான் நாம் கிணற்றில் தண்ணீர் எடுக்கணுமாம். அதுவரைக்கும் காலைக்கடன்களுக்குத் தேவைப்பட்டால் என்ன செய்யறது? முதல் நாளே பிடிச்சு வைச்சுக்கணுமாம். ஏகப்பட்ட கண்டிஷன்கள். ஒண்ணும் புரியலை. சரி, பால் காய்ச்சலாம்னு பால் வாங்கணும்னு சொன்னோம். எதிரேயே கறப்பாங்க பாருங்க, அங்கே போய் வாங்கிக்கலாம்னு சொல்ல, என் மாமியாருக்கு ரொம்ப சந்தோஷம். ஆஹா, நல்ல பால் கிடைக்குதா இங்கேனு சொல்லிட்டு அவங்களே போய் வாங்கிட்டு வந்தாங்க. ஆனால் சென்னைப் பால்காரங்க பத்தி அவங்களுக்கு முழுசாப் புரியலை. பால் கேனை கவிழ்க்கிறாப் போல் காட்டிட்டு உள்ளே தண்ணீர் வைச்சுக் கறப்பாங்களாம். எனக்குமே இதெல்லாம் தெரியாது. பின்னால் எல்லாரும் சொல்லிக் கொடுத்துத் தான் தெரிய வந்தது. அன்றைய தினம் பால் காய்ச்சிச் சமையல் செய்து எல்லாருக்கும் சாப்பாடு போட்டுட்டு வந்தவங்களை வழி அனுப்பி வைத்தோம். வீட்டு மாடியில் இருந்து பார்த்தால் எதிரே ரயில்வே ட்ராக் நன்றாய்த் தெரியும். சென்னையிலிருந்து வரும் ரயில்கள் லோகோ தாண்டும்போதும், திருவள்ளூர் ரயில்கள் கொரட்டூரிலிருந்து வருகையிலும் தூரத்திலேயே கண்டு பிடிக்கலாம். அதுக்கப்புறமா வீட்டை விட்டுக் கீழே இறங்கி ரயிலைப் பிடிக்கலாம். ஒண்ணும் அவசரமே இல்லை. அது ஒரு காலம். இப்போதெல்லாம் போல் கூட்டமும் இருக்காது. ஆகவே எல்லாரும் ரயில் வரதைப் பார்த்துட்டே கிளம்பிப்போனாங்க. மாம்பலம் வரைக்கும் டிக்கெட் எடுத்துட்டா சென்ட்ரல் போய் மாறிக்கலாம். அங்கே எலக்ட்ரிக் ரயில். அப்படியே போனாங்க. எங்க குடித்தனமும் ஆரம்பித்தது. இதற்குள்ளாகக் கல்யாணம் ஆகும் முன்னர் நான் எழுதிய தேர்வுகளில் ஒன்றான எலக்ட்ரிசிடி போர்ட் பரிக்ஷையில் தேறிவிட்டதாய் வேலைக்கு உத்தரவு ஏற்கெனவே வந்திருந்தது. அலுவலகம் தான் கொடுக்கவில்லை. அதற்குள் கல்யாணமும் ஆயாச்சு. இப்போ அதற்கான உத்தரவு வந்திருக்கிறது. மதுரைக்கருகே பரமக்குடியில் போஸ்டிங் போட்டிருந்தாங்க. அப்பா அந்த உத்தரவையும், கூடவே ஒரு கடிதமும் வைத்து அனுப்பி இருந்தார் எக்ஸ்ப்ரஸ் தபாலில். வில்லிவாக்கம் குடித்தனம் வைத்த இரண்டே நாளில் இந்தக் கடிதம் வந்தது. வேலைக்கு உத்தரவா? போறதா? வேண்டாமா?   கல்யாணமாம் கல்யாணம்! அம்பத்தூருக்கு மாறினோம்! அந்த வீட்டில் கீழே குடி இருந்த ஒரு ஐயங்காரின் பையர் மின் வாரியத்தின் சேர்மனுக்கு உதவியாளர். இது தற்செயலா அல்லது தெய்வாநுகூலமா? தெரியாது. ஆனால் என் அம்மா கீழே துணி துவைக்கப் போனப்போ இதைப் பற்றிஅவங்க கிட்டே பேச, அவங்க பையர் கிட்டே சொல்ல, பையரும் கன சிரத்தையாக அவரோட அலுவலகத்தில் இது பற்றி விசாரித்துவிட்டு மறுநாள் என்னைப் பார்த்து, “ஏம்மா, குழந்தை, உனக்கு வேலைக்கு ஆர்டர் வந்திருக்காமே? நீ போய்ச் சேர்மனை நேரிலே போய்ப் பார்த்துப் பேசு. நாளைக்கு மத்தியானத்துக்கு மேலே அவரோடு பேசறதுக்கு முடியும். போய்ப் பாரு” என்று சொன்னார். மறுநாள் நானும் என் கணவருமாகக் காலம்பரேயே கிளம்பி சென்னை மவுண்ட் ரோடில் இருக்கும் மின்வாரியத் தலைமை அலுவலகம் போனோம். அங்கே மதியம் தான் நேர் காணல். அதற்கு எதிரே இருந்த என் பெரியப்பா வேலை செய்ய ஸ்டேட் பாங்க் கிளைக்குப் போனோம். சற்று நேரம் அங்கே இருந்துவிட்டு அருகிலிருந்த என் கணவரோட பெரியப்பா மாப்பிள்ளை வேலை செய்த எல் ஐசி கட்டடம் சென்றோம். அப்போதெல்லாம் சென்னையில் அதுதான் உயரமான கட்டடம். சென்னையை அடையாளம் காட்ட எல்லா சினிமாக்களிலும் தவறாமல் இடம் பெறும். கடைசி மாடி வரை போய்ப் பார்த்துவிட்டுப்பின்னர் கீழே இறங்கி மின்வாரிய அலுவலகம் சென்றோம்.  நிறையப் பேர் மாற்றலுக்கு விண்ணப்பித்தும், வேறு காரணங்களை ஒட்டியும் வந்திருக்க என் முறை வர நான்கு மணி ஆகிவிட்டது. என்னோட பேசின சேர்மன்,”என்னம்மா புரியாத பொண்ணா இருக்கியே? வேலை கிடைக்கறதே கஷ்டம்; அதிலும் நீ முதல்முறையிலேயே தேர்வாகி இருக்கே. கிடைச்ச இடத்திலே போய்ச் சேர்ந்துடு. அப்புறமா மனுப்போடு; பார்க்கலாம், சின்ன வயசுதானே; கொஞ்ச நாட்கள் இங்கேயும், அங்கேயுமா இருக்கலாம்.” என்று சொல்லிவிட்டார். என் கணவரோட உத்தியோகமும், அதற்குப் பரமக்குடி என்ன?? மதுரையிலேயே அலுவலகம் கிடையாதுனும் அவருக்குப் புரிய வைக்கிறதுக்குள்ளே அவர் அதனால் என்ன? ஆறு மாசம் கழிச்சு இங்கே வந்துக்கலாம்; அப்படினு சொல்லிட்டார். என்னனு தெரியாம வெளியே வந்தோம். பலவிதமான எண்ண ஓட்டங்கள். இரண்டு பேரும் பேசிக்காமலேயே பிரயாணம் செய்தோம். அதுக்குள்ளே இங்கே காலம்பர போனவங்களைக் காணோமேனு என் மாமியார் கிட்டத்தட்ட போலீஸுக்குச் சொல்லாத குறை! அவங்களுக்குச் சென்னை நகரமே புதுசு! அதிலே பிரயாணம் பண்ணிக்கொண்டு சென்று வருவது பற்றி எல்லாம் ஒண்ணும் தெரியாது. கிராமங்களிலே இருந்து அதிக பக்ஷமாய்க் கும்பகோணம் தான் நகரம். இதெல்லாம் அவர்களை கொஞ்சம் கலவரப் படுத்தி இருக்கிறது. என் அம்மாவும், மத்தவங்களும் சொல்லியும் கேட்காமல் சாமிக்கு எல்லாம் வேண்டிக்கொண்டு, இரும்புக் கரண்டியைத் தண்ணீரில் போட்டு(ஏதேனும் பொருட்கள் தொலைந்தாலோ, அல்லது வீட்டுக்கு வெளியே போனவங்க வர நேரம் ஆனாலோ இரும்பைத் தண்ணீரில் போட்டால் வந்துவிடுவார்கள் என்பதை இன்று வரை ஒரு நம்பிக்கையாகக் கடைப்பிடித்து வராங்க; குறிப்பிட்ட நேரத்துக்குள் அந்த மனிதர்களோ பொருளோ கிடைத்தும் விடும்) என்று அவர்களுக்குத் தெரிஞ்சதை எல்லாம் செய்து கொண்டு இருந்தாங்க. நாங்க போனோமோ இல்லையோ புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க. அப்போதெல்லாம் தொலைபேசி என்பது எல்லார் வீடுகளிலும் இருக்காது. தெருவுக்கு ஒன்று என்று கூடக் கிடையாது. ரொம்ப அதிசயமா யாரேனும் வைத்திருப்பாங்க. அதுக்கே அலையணும். பொதுத் தொலைபேசியும் அங்கொன்றும், இங்கொன்றுமாய்த் தான் இருக்கும். ஆகவே செய்திகளைச் சொல்ல முடியாது. அவங்களைச் சமாதானம் செய்தோம். விஷயத்தைச் சொன்னோம். அதற்குள்ளாக என் அம்மாவை மதுரைக்கு வரச் சொல்லி அப்பா கடிதம் வந்திருந்தது. தம்பிக்குக் காலேஜ் திறந்துவிட்டது; அப்பாவுக்கும் ஸ்கூல் திறந்துவிட்டது. அம்மா மதுரை போக மறு நாளைக்கு டிக்கெட் ரிசர்வ் செய்திருப்பதாக மதியமே நாங்க பெரியப்பா ஆபீஸ் போயிருந்தப்போ அவர் சொல்லி இருந்தார். ஆகவே மறுநாள் அம்மா கிளம்பிப் போக ஒரு வாரத்தில் என் மாமியாரும், மைத்துனனும் மதுரையில் குடி இருந்த நாத்தனாரோடு அங்கே போயிட்டு அங்கிருந்த வாறே கிராமம் செல்ல இங்கே நாங்க ரெண்டு பேரும் மட்டுமே தனிக்குடித்தனம்.  தண்ணீர் பிரச்னை வேறு. மேலே இருந்து தண்ணீர் இழுக்க முடியவில்லை. கீழே தண்ணீர் ஊறும்போது எடுத்துக்கொண்டு மாடிக்கு வரணும். ஆனால் அதற்குள்ளாக கீழே இருப்பவங்க எடுத்துடுவாங்க. அக்கம்பக்கம் உள்ள வீட்டுக்காரங்க பழக்கத்தில் சில நாட்கள் அங்கே போய்த் தண்ணீர் கொண்டு வருவேன். ஆனால் இது தொடர்கதையாகும் போல் இருக்க, என் கணவர் வேறே வீடு பார்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொண்டார். ஒரு சனிக்கிழமை அன்று மதியம் அவருக்கு அரை நாள் லீவு என்பதால் என்னை வில்லிவாக்கத்தில் ஏறி அம்பத்தூர் வரச் சொன்னார். அங்கே ஸ்டேஷனில் அவர் காத்திருப்பதாயும் இருவருமாய் அம்பத்தூரில் வீடு பார்ப்பதுமாயும் ஏற்பாடு. அவ்வாறே மதிய வேலைகள் முடிந்து நானும் கிளம்பி அம்பத்தூர் போய்ச் சேர்ந்தேன். ஸ்டேஷனில் காத்திருந்த என் கணவரோடு அவர் நண்பர் ஒருத்தரும் இருந்தார். முதலில் அவங்க வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். இப்போ அம்பத்தூர் சத்சங்கம் இருக்குமிடத்தில் அப்போ அவங்க வீடு இருந்தது. அங்கே டிபன், காப்பி முடித்துக்கொண்டு இரண்டு மூன்று தெருவில் இருக்கும் வீடுகளைப் பார்த்தோம். ஒரு இடத்தில் பல குடியிருப்புகள் ஆனால் தனித் தனி வீடுகள் ரயில் பெட்டி போல் நீள வாக்கில் வரிசையாக அறைகள் கொண்ட வீடுகள் இருந்தன. அதில் ஒரு வீடு கொஞ்சம் பெரிதாக நான்கு அறைகளோடு இருந்தது. இரண்டு வீடுகளுக்கு ஒரு பாத்ரூம், கழிவறை. அதை முடிக்கலாம் என என் கணவர் நினைக்க எனக்கோ சாமான்களை வைக்க இடம் போதாதே எனக் கவலை. என் தயக்கத்தைப் புரிந்தோ என்னமோ, நாளை வரேன், இப்போ அட்வான்ஸ் கொடுக்கப்பணம் போதலை என்று சொல்லிவிட்டு வெளியே வந்தோம். வந்தபோது ஒரு வீட்டில் வீடு காலி விளம்பரப் பலகை இருக்க அங்கே நுழைந்தோம். பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய கேட். ஒரு லாரியே நுழையும் அளவுக்கு. வீடும் பெரிய வீடு. வீட்டைச் சுற்றி ஒரு மாந்தோப்பு. குறைந்தது இருபது மாமரங்களாவது இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை என்று பின்னால் சொன்னார்கள். வீட்டைப் பார்த்தாலே இங்கே எல்லாம் வாடகை கொடுத்துக் குடி இருக்க நமக்குக் கட்டுமா என்று தோன்ற வீட்டுக்காரங்க பின்னால் இருப்பதாய்ச் சொல்ல, அங்கே போனோம். முதலில் சாவியைக் கொடுக்க மாட்டேன் என்ற வீட்டுக்காரக் கிழவி பின்னர் என்ன நினைத்தாளோ, வீட்டைப் பாருங்க. பேசுவது எல்லாம் முன் குடித்தனக்காரத் தம்பி தான். அவர் வந்து தான் முடிவு செய்யணும் என்றாள். சரினு வீட்டைப் பார்த்தோம். பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய சமையலறை. பெரிய படுக்கை அறை, பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஹால். ஆனால் ஒரே குறை சமையலறை நுழையும்போதே இருந்தது. என்றாலும் வீடு பிடித்தது. சாமான்கள் வைக்க, அம்மி ஒன்றும் போட்டிருந்தார்கள். குடித்தனம் வந்தால் கல்லுரலும் தருவதாய்க் கிழவி சொன்னாள். கிணற்றடியே நூறு சதுர அடிக்கும் மேலே. பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய கிணறு. நடுவில் இரண்டாகப் பிரிக்கப் பட்டிருந்தது. வீட்டின் அந்தப்பக்கம் இருந்தவங்க அந்தப் பக்கம் இந்தப் பக்கம் இருக்கிறவங்க இந்தப்பக்கமும் தண்ணீர் இழுத்துக்கொள்ளலாம். அவ்வளவு பெரிய கிணறை நான் பார்த்ததே இல்லை. தண்ணீரும் இழுத்துக் குடித்தோம். அப்போதே ஐம்பது அடிக்கும் கீழே தண்ணீர் இருந்தாலும் சுவையாக இருந்தது.  வீடும் பிடிக்க, தண்ணீரின் சுவையும் இழுக்கக் கிழவியிடம் கேட்டால் நாளைக்கு வா என்று சொல்லிவிட்டாள். ஒரு பத்து ரூபாயாவது வைச்சுக்கோங்க, டோக்கன் அட்வான்சா இருக்கட்டும்னா வாங்கிக்கலை. நான் யாருக்கும் விடலை; உனக்கு இல்லைனால் தான் மத்தவங்களுக்கு; நீ நாளைக்கு வா என்று ஒரே பேச்சாகச் சொல்லிவிட்டாள். வேறு வழியில்லாமல் திரும்பினோம். இரவெல்லாம் குழப்பம், வீடு கிடைக்குமா, கிடைக்காதா?   அப்பாடா! "ஜில்"லைவிடச் சீக்கிரமா முடிச்சுட்டேனே! :P அன்றிரவு முழுதும் யோசனையில் இருந்துட்டுக் காலை எழுந்ததும், எழுந்திருக்காததுமா, என் கணவர் காப்பி குடித்துவிட்டு உடனே அந்த வீட்டிற்குப்போய்ப் பார்ப்பதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். சாதாரணமாகவே பேச்சுக் கொடுத்தால் எல்லாத்தையும் வெளிப்படையாகக் கொட்டிவிடும் சுபாவம் கொண்ட நான் அன்னிக்கு மாடியில் வீட்டுக்காரங்க போர்ஷன் பக்கம் இருந்த ராட்டினத்தில் தண்ணீர் இழுக்கையில் ரொம்பக் கஷ்டப் பட்டேன். அதைப் பார்த்த வீட்டுக்கார அம்மா, "வேலைக்கு உதவிக்கு யாரையானும் வைச்சுக்கோ; தண்ணீர் அவங்க சேந்திக் (எங்க ஊரிலே சேந்தி என்றால் பரண் :P) கொடுத்தால் நீ எடுத்து விட்டுக்கோ." என்று யோசனை சொல்லவே, நான் வெள்ளந்தியாக(ஹிஹி பத்திரிகைகள்; சினிமா தயவு :P)(வெகுளியாக) "எதுக்குங்க , அதெல்லாம்? இன்னும் ஒரு வாரமோ; பத்து நாளோ; நாங்க அம்பத்தூர் போறோம்" னு சொல்லிட்டேன். அவங்க ஒரு மாதிரியாப் பார்த்திருக்காங்க. முட்டாள்: மண்டு: அசடு: அது கூடத் தெரியாமல் உள்ளே வந்துட்டேன். அந்த அம்மா கறுவிக்கொண்டு இருந்திருக்காங்க. கணவர் வருகையில் ஒன்பது மணி ஆயிடுச்சு. நான் அதுக்குள்ளே குளிச்சுட்டுச் சமைச்சு வைச்சிருந்தேன். (நல்லாச் சமைப்பேனாக்கும்.:D) வந்ததும், அவரும் குளிச்சுச் சாப்பிட்டுட்டு, (உடனே விஷயத்தைச் சொல்லற வழக்கம் கிடையாது; இப்போவும், :D அப்போ புதுசா, நானா எதுவும் கேட்டுக்கலை; இப்போ துளைச்சு எடுத்துடுவேன் சொல்ற வரைக்கும்.:)))))))))) மெதுவா, "அங்கேயே வாத்தியாரைப் பார்த்து நாள் பார்த்துட்டேன். இன்னிக்கே நாள் நல்லா இருக்காம்; சாயந்திரமா மூணு மணிக்குக் கிளம்பிப் போய்ப் பால் காய்ச்சிடலாம்; 2-50க்கு ரயில் இருக்கு. அதில் போனால் மூணு மணிக்குப் போயிடலாம். ஸ்டேஷன்லே இருந்து வீடு கிட்டக்க. என் நண்பன் வீட்டிலே பால் வாங்கி வைப்பாங்க. அவன் அதை எடுத்துட்டு நேரே வீட்டுக்கு வந்துடுவான். பால் காய்ச்சிச் சாப்பிட்டுட்டு, நாளைக்கு உடனே சாமானை எடுத்துடலாம். நான் நாளைக்கு லீவ் போட்டுக்கறேன். நண்பன் கிட்டேயே சொல்லி அனுப்பிடுவேன்." என்றார். வீட்டுக்கார அம்மாவுக்கு இதை ஒரு செய்தி என்ற அளவிலேயே நான் சொல்லி இருந்ததால் அவங்க கிட்டே சொல்லிட்டேன் என்பதை என் கணவர் கிட்டே சொல்லத் தோணலை. அந்த அம்மாவும் ஒண்ணும் கேட்டுக்கலை. இதிலே ஒரு ஜோக் என்னன்னா அந்த அம்மாட்டே பேசறச்சே அவங்களோட குழந்தைங்க யாருமே அங்கே இல்லாததால், குழந்தைங்க இல்லையானு கேட்டேன். அவங்க, "மூணு பசங்க இருக்காங்க"னு சொல்லி இருந்தாங்க. நான் புரிஞ்சுண்டது மூணும் ஆண் பிள்ளைகள்னு. ஆனால் அவங்களுக்கு மூணும் பெண் குழந்தைகள். அந்தப் பொண்ணுங்க எல்லாம் அவங்க சொந்தக்காரங்க வீட்டிற்கு லீவுக்குப் போனவங்க அன்னிக்கு வரவும், அவங்களைக் காட்டி அந்த அம்மா, இவங்க தான் என்னோட பசங்க னு சொல்லவும் என் வழக்கம் போல் சிரிப்பு வந்தது. நினைத்து நினைத்துச் சிரித்துக்கொண்டிருந்தேன். சிரிப்பாய்ச் சிரிக்கப் போற விஷயம் யாருக்குத் தெரியும்? அன்னிக்கு மத்தியானம் போய்ப் பால் காய்ச்சிச் சாப்பிட்டுவிட்டு, நண்பரோட அம்மா, அப்பா வயசானவங்க வந்திருந்தாங்க. அவங்களை வைச்சுச் சம்பிரதாயப்படி பால் காய்ச்சி, ஸ்வாமி படத்தை வைத்து விளக்கேற்றி நிவேதனம் செய்து, எல்லாருக்கும் கொடுத்துட்டு, கொஞ்சம் அரிசி, பருப்பு, மஞ்சள், வெல்லம் போன்றவைகளையும் வைத்து நிவேதனம் செய்து அவற்றையும் ஸ்வாமி படங்கள், விளக்கு போன்றவைகளையும் அங்கேயே வைச்சுட்டுத் திரும்ப வில்லிவாக்கம் வந்தோம். மறுநாள் வீடு மாத்தணும். காலம்பர சீக்கிரம் எழுந்து குளிச்சுச் சமைச்சாச்சுன்னா கிளம்பறதுக்குள்ளே சாப்பாட்டுக் கடையை முடிச்சுக்கலாம். அப்புறம் அங்கே போய்ப் பார்த்துக்கலாம்னு நினைச்சுச் சமைக்க ஆரம்பிக்கையில் என் சித்தி பையர்கள் இருவர் என்னைப் பார்க்கத் தேடிப் பிடிச்சுக்கொண்டு வந்தார்கள். நல்லதாப் போச்சு, வீடு மாத்த உதவிக்கும் ஆள் கிடைச்சதுனு நினைச்சு அவங்களையும் வரவேற்று சமைச்சுப் போட்டு, சாமான்களை(நல்லவேளையா முழுதும் பிரிக்கலை) எடுத்துக் கட்ட ஆரம்பித்தோம். அதுக்குள்ளே என் கணவர் ஒரு வான் பார்த்துக்கொண்டு வந்தார். அந்த வானில் சாமான்களைப் போட்டுவிட்டு, முன்னாலேயே நாங்க இரண்டு பேரும் உட்கார்ந்து கொண்டு போயிடலாம்னு பேசி இருந்தார். அவங்களும் ஒத்துக்கொண்டு வந்தாங்க. சாமானை இறக்க ஆரம்பிச்சோமோ இல்லையோ வீட்டுக்காரரும், அவர் மனைவியும் வந்து தடுத்தாங்க. காலி பண்ண விடமாட்டோம்னு ஒரே சத்தம், சண்டை. எனக்குப் பயமாப் போச்சு. ஆனால் என் தம்பிங்க எதையும் கண்டுக்காம அவங்களை நகர்த்திவிட்டு சாமான்களை எடுத்துச் செல்ல ஆரம்பிக்க ஒரே களேபரம். ஒரு மாசம் முன்னால் சொல்லணுமாம். இல்லாட்டி அட்வான்ஸ் திருப்பித் தர மாட்டாங்களாம். நல்லவேளையா ஒரு மாசம் தான் அட்வான்ஸ் கொடுத்திருந்தார். மூணு மாதம் அட்வான்ஸுக்கு மிச்சம் அப்புறமாத் தரேன்னு சொல்லி இருந்திருக்கார். அது கொடுக்கிறதுக்குள்ளே இவ்வளவும் கண் மூடித் திறக்கிறாப்போல் என்பார்களே அப்படி நடந்துடுச்சு. அதனால் நாங்க இருந்த நாட்கள் போக மிச்சம் பணம் இருந்ததைக் குறித்துக் கவலைப்படாமல் போனால் போகட்டும்னு சொல்லிட்டுக் கீழே இறங்க ஆரம்பித்தோம். ஓரிரு குடித்தனக்காரர்களும் எங்க பக்கம் பேசினாங்க. தண்ணீரே இல்லாமல் எல்லாத்துக்கும் கீழே வந்து இறங்க வேண்டி இருக்கு; இதுக்கு நூறு ரூபாய் வாடகை கொடுக்க முடியுமா என அவங்களும் கேட்டனர். அம்பத்தூர் வீட்டுக்கு அப்போ அறுபது ரூபாய் வாடகை. கிட்டத்தட்ட அறுநூறு சதுர அடிக்கும் மேலே இருக்கும். அப்போ அந்தக் கணக்கெல்லாம் தெரியாது என்றாலும் வீடு நல்ல பெரிய வீடு, சகல வசதிகளோடும். அந்த வீட்டில் நாங்கள் குடித்தனம் இருந்த போது அடுக்கடுக்காக வந்த அனைத்து விருந்தாளிகளையும் தாங்கியது. நேற்றுத்தான் அம்பத்தூர் வந்தாப்போல் இருக்கிற எங்கள் குடித்தனம் இப்படியாக அம்பத்தூரில் ஆரம்பித்து --------- (D)வருடங்களைக் கடந்துவிட்டது. அப்போ அம்பத்தூர் வந்தது அதிலிருந்து திரும்பத் திரும்ப இங்கே வரதும், வெளிமாநிலங்கள் போறதுமாக இருந்த வாழ்க்கையில் சில வருடங்கள் முன்னால் என் கணவர் பணி ஓய்வு பெற்றதிலிருந்து அம்பத்தூரே நிரந்தரம் என ஆகிவிட்டது.   FreeTamilEbooks.com மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்:  மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்:  ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்:  தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி?  அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா?  கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com  இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்?  யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்?  ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா?  உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com  2. www.badriseshadri.in  3. http://maattru.com  4. kaniyam.com  5. blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது?  இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G +: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது?  அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்?  ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை?  இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி?  நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - email : freetamilebooksteam@gmail.com   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்?  குழு – http://freetamilebooks.com/meet-the-team/    Supported by  கணியம் அறக்கட்டளை - http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை [] rect224   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReport இந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல்   - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.   []