[]                 காலம் கடந்தபின்னே (சிறுகதைகள்)  நிர்மலா ராகவன்       அட்டைப்படம் : த.சீனிவாசன் - tshrinivasan@gmail.com  மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியிடு : FreeTamilEbooks.com    உரிமை : Public Domain – CC0  உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.                                      பொருளடக்கம் முன்னுரை 4  1. அணைக்க மறந்ததேனோ! 5  2. ஆத்மநாதம் 10  3. எப்படியோ போங்க! 16  4. என்னைக் கைவிடு! 19  5. காலம் கடந்தபின்னே 22  6. சவடால் சந்திரன் 25  7. இந்தப் புருஷாளே இப்படித்தான்! 29  8. டான்ஸ் டீச்சர் 33  9. நாளும் கோயிலும் 36  10. பெண் பார்த்துவிட்டு 39                                                                      முன்னுரை   `பெண்’ என்றாலே சில (பல?) ஆண்களுக்கு அலட்சியம். ஆனால், பெண்களை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்ற மெத்தனமான போக்குடையவர்களை எல்லா பெண்களுமே பொறுத்துப் போவதில்லை. வெகு சிலர் எதிர்க்கவும் துணிகிறார்கள். வாய்ப்பேச்சால் அல்ல, அமரிக்கையான தம் நடத்தையால். இத்தகைய பெண்களே இத்தொகுப்பின் முதல் ஐந்து கதைகளுக்கு நாயகியராக விளங்குகின்றனர்.   இவர்களுடன், கையில் எதுவுமில்லாமலேயே முழம்போடும் டான்ஸ் டீச்சர், `இயற்கை பெண்ணை வஞ்சிக்கவில்லை, இது காலத்துக்குப் புறம்பான விதி’ என்று ஒப்புக்கொள்ளப்பட்ட பழக்கமொன்றை மாற்றத் துணியும் பெண் (`நாளும் கோயிலும்’) ஆகியோரும் வலம் வருகிறார்கள்.   நன்றியுடன்,   நிர்மலா ராகவன்                 1. அணைக்க மறந்ததேனோ!   “ஏய்! எங்கே புறப்படறே? சாப்பிட்ட தட்டைக் கழுவக்கூட முடியலியோ மகாராணிக்கு?” அவசரமாக வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருந்த அஞ்சனா பதைத்துப்போய், குரல் கேட்ட திசையை நோக்கித் திரும்பினாள். வசவு தொடர்ந்தது: “இந்த திமிரு பொறுக்க முடியாமதானே விரட்டி விட்டுட்டுட்டான் அந்த மகானுபாவன்!”   `யாரும் என்னை விரட்டலே. பொறுக்க முடியாம, நானேதான் விலகி வந்துட்டேன்!’ என்று பதில் சொல்லிப் பயனிலை. அப்பா பேசும் ரகம். கேட்கும் ரகமில்லை.   காலை எட்டரை மணிக்குமேல் மார்க்கெட்டுக்குப் போய், முன்யோசனையின்றி அப்பா வாங்கிவந்த கீரையை ஆய்ந்து,  வாழைப்பூவின் ஒவ்வொரு இதழின் நடுவிலும் இருந்த `திருடனை’ கிள்ளி எறிந்துவிட்டு, நறுக்கி, வேகவைத்து .. அப்பப்பா! சமைத்து முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது அவளுக்கு.   இனி, பஸ்பிடித்துப் போக வேண்டும். அவள் வேலை பார்க்கும் வீடியோ கடைக்கருகே ஏதாவதொரு சாப்பாட்டுக்கடையில் மத்தியான உணவைப் பார்த்துக்கொள்ளலாம் என்றால், அதற்கு ஒரு மணிவரை காத்திருக்க வேண்டும். அதோடு, அங்கு தண்டம் அழும் காசுக்கு வீட்டில் மூன்று நாட்கள் சாப்பிடலாம்.   போன வாரமே முதலாளி கண்டிப்பாகச் சொல்லிவிட்டார், “ஒனக்கென்னம்மா, சரியா எழுதக்கூடத் தெரியலே. இந்த வேலைக்கு ஒன்னைவிட்டா வேற  ஆளா கிடைக்காது?” என்று இரைந்துவிட்டு,  “ஏதோ, ஒங்கப்பா ரொம்ப கேட்டதாலதான் ஒன்னை வேலைக்கு எடுத்தேன்!” என்று, தனது பரோபகார சிந்தனையையும் சமயம் பார்த்துப் பறைசாற்றிக்கொண்டார்.   இப்போது சாப்பிட்ட தட்டைக் கழுவும் நேரத்தையாவது மிச்சப்படுத்தலாம் என்று பார்த்தால், அதற்கும் வழியில்லையே!   செருப்பைக் கழற்றிவிட்டு, புடவைத் தலைப்பை இழுத்திச் செருகிக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள். சுவருடன் ஒட்டியபடி, பயமே உருவாக நின்றிருந்த நித்யா தாவி அவளது இடுப்பைக் கட்டிக்கொண்டாள்.   “விடுடி! ஏற்கெனவே லேட்டாயிடுச்சுன்னு நான் கவலைப்பட்டுக்கிட்டு இருக்கேன். இவ ஒருத்தி!” முரட்டுத்தனமாக மகளின்  கைகளை விலக்கியபோது, தானும் அவளைப்போலவே அப்பாவின் பெரிய குரலைக் கேட்டு பயந்து, அவரைத் தன் வாழ்விலிருந்தே விலக்க முயற்சிப்பதுபோல் அம்மாவின் முழங்காலில் முகத்தைப் பதித்துகொண்டது நினைவில் எழுந்தது.   அப்போதெல்லாம் அம்மா தன் முதுகை ஆதுரமாகத் தடவியோ, வேறு எந்த வழியிலோ ஏன் தன் பரிவைக் காட்டியதில்லை?   பன்னிரண்டு வயதானபோது, பள்ளிப் பரீட்சையில் குறைவான மதிப்பெண்கள் வாங்கிய மாபெரும் குற்றத்துக்காக, குடித்த போதையில் என்ன செய்கிறோம் என்றே புரியாது, அவள் முகத்தில் கத்தியில் அவர் கீறி, ரத்தமும் வடிய ஆரம்பித்தபோது,  ஓடிப்போய் அத்தையைக் கட்டிக்கொண்டாள் -- பெண்ணுக்குப் பெண் ஆதரவாக இருக்கமாட்டாளா என்ற நப்பாசையில்.   “ஒங்க மாமாவும் ஒங்கப்பன்மாதிரி முன்கோபிதான்! நான் வாங்காத அடியா, ஒதையா! நாப்பது வருசமில்ல பட்டிருக்கேன்!” என்று பெருமை பேசியவள், “இப்பவே பழகினா, நீ கட்டிக்கப்போறவன் என்ன செஞ்சாலும் தாங்கிக்க முடியுமில்ல!” என்று வரட்டுத் தத்துவம் வேறு பேசினாள்.   அதன்பின்னர் ஓர் ஆசிரியை , `முட்டாள்! வீட்டுப்பாடத்தில் இவ்வளவு தப்பா? நீங்க எல்லாம் ஏன் படிக்க வர்றீங்க?’ என்று திட்டியபோது, அவமானமோ, வருத்தமோ எழவில்லை. வீட்டில் அப்பா கொடுத்த தண்டனைகளால் தான்தான் எவ்வளவு திடமாக இருக்கிறோம் என்ற அற்ப பெருமைகூட உண்டாயிற்று.   `ஒழுக்கம்’ என்ற பெயரில் தாராளமாக தண்டனைகள் வழங்கிய தம் தந்தைமார்களைப்பற்றி சகமாணவிகள் பேசுகையில், `நாம் மட்டும் தனியாக இல்லை!’ என்று ஆறுதலாக இருந்தது. இடுப்பு பெல்டாலும், குடைக் காம்பாலும் அடிப்பார்களாமே! ஐயோ! அவர்களிடமிருந்து மிகவும் வித்தியாசப்பட்டிருந்த சாந்தினியை ஏக்கத்துடன் பார்க்கத்தான் முடிந்தது அப்பெண்களால்.   ஆனால், அப்பெண்ணைத் தங்களிடமிருந்து விலக்கிவைத்து, அவளைப்பற்றி மட்டமாகப் பேசிய பிற பெண்களுடன் சேர அஞ்சனாவால் முடியவில்லை. அன்று தமிழ் வகுப்பில் டீச்சர் சொல்லவில்லை, `நாம் எந்தப் பிறவியிலோ செய்த பாவ புண்ணியங்களுக்கான பலனை இந்த ஜன்மத்தில் அனுபவிக்கிறோம்,” என்று?   பள்ளி முடிந்ததும், அவளுடைய தோளைப்பற்றி அணைத்து, இன்முகத்துடன் பேசியபடி காருக்கு அழைத்துப்போகும் தந்தையைப் பெற்றிருக்க சாந்தினி முன்பிறவியில் என்ன செய்திருப்பாளோ!   `நான் நன்றாகப் படித்தால், அப்பாவும் இப்படி அன்பாக அணைப்பாரோ?’ என்ற ஆசையுடன், உழைத்துப் படித்தாள். ஆனால், பரீட்சை எழுத பேனாவைக் கையில் எடுத்தபோது, `அப்பா கத்தியால முகத்தைக் கிழிப்பாரா, எரியும் சிகரெட்டால உட்காரும் இடத்தில் சூடு வைப்பாரா, இல்லே, சாப்பாடு, தண்ணி இல்லாம இரண்டு நாள் ரூம்பில போட்டு அடைச்சுடுவாரா?’ என்று முன்பு பெற்றிருந்த தண்டனைகள் ஒவ்வொன்றாக சுழன்றெழ, மூளையை ஏதோ அடைத்தது போலிருந்தது. படித்தது எதுவும் ஞாபகம் வரவில்லை.   பெண்ணாய் பிறந்து தொலைத்துவிட்ட அஞ்சனாவை பதினாறு வயதுவரை வளர்த்ததே பெரிய காரியம் என்பதுபோல், அவளைத் திருமணம் செய்துகொடுக்க அவசரப்பட்டார் அப்பா.   தான் பார்த்த மாப்பிள்ளை சூதாடி, போதைப்பித்தன் என்று நிச்சயதார்த்தம் ஆகுமுன்னரே சந்தேகமறத் தெரிந்தபின்னரும், “படிப்பும் வரலே இந்தக் கழுதைக்கு! இந்தக் காலத்தில எவன்தான் யோக்கியன்? சின்ன வயசு! அதுவும் ஆம்பளை! கொஞ்சம் முன்னேபின்னேதான் இருப்பான்!” என்று அடித்துச் சொல்லிவிட்டார்.   குழப்பத்துடன் மணவறையில் அமர்ந்த அஞ்சனா ஆறுமாதங்களுக்குள்ளேயே தாய்வீடு திரும்பினாள், கண்ணீரும், வயிற்றுக்கருவுமாக. கணவன் என்ன கொடுமை செய்தாலும் பொறுத்துப்போனவள், அவன் தனது பழக்கங்களுக்காக வட்டி முதலைகளிடம் கடன் வாங்கி, அதற்கு ஈடாக அவளைப் போகச் சொன்னபோது, அதற்கு உடன்பட முடியவில்லை.   “கண்டிப்பா அந்த வீட்டுக்கு திரும்பிப் போகமாட்டேன். வற்புறுத்தினீங்கன்னா, விஷம் குடிச்சுடுவேன்!”  அவள் வாழ்க்கையில் துணிந்து பேசிய ஒரே வசனம்.   “இது ஒரு மண்டு! சாமர்த்தியம் இருந்தா, கட்டினவனை நல்லவிதமா மாத்தியில்ல இருக்கணும்!”  என்று ஓயாமல் அப்பா ஏசியபோது, வெறித்த பார்வையுடன் நிற்கத்தான் அவளால் முடிந்தது.   வெறித்த பார்வையுடன் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த அஞ்சனா, “ஹேய்! நீ அஞ்சனாதானே?” என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.   புரோட்டான் வீரா காரில் டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்தாள் அப்பெண். அப்பாவின் தோழமையும், அன்பும் ஒருங்கே கிடைக்கப்பெற்ற அதிர்ஷ்டசாலி!   முகமெல்லாம் சிரிப்பாய், “ஏறிக்க, அஞ்சனா. எங்கே போகணும்?”  என்று அவள் அழைத்தபோது, அவள் பெயர்கூட ஞாபகம் இல்லையே என்ற சிறு அவமானம் கிளர்ந்தது அஞ்சனாவுக்குள்.   பார்த்துப் பதினைந்து வருடங்கள் ஆகியிருக்காது? ஒன்றாய் படித்த அந்த தோழியை பிறகு சந்திக்கவேயில்லை. அப்போதுகூட அவளுடன் நெருங்கிப் பழகினதாக நினைவில்லை. இருந்தாலும், இன்முகம் காட்டுகிறாள்!   யாருமே இதுவரை தன்னைப் பார்த்து இப்படிப் பூரிப்படைந்ததில்லை என்ற சிறு எண்ணம் கசப்பாக எழுந்தது.   “நான் எங்கப்பா கம்பனியிலேயே வேலையா இருக்கேன். நீ?” அவளுடைய கலகலப்பு, பரிவு, அஞ்சனாவிற்குள் தடைப்பட்டிருந்த எதையோ திறந்துவிட்டது.   குனிந்த தலை நிமிராது, கைகளைப் பிசைந்தபடி, தன் வாழ்க்கை என்ற அவலத்தை சொல்லி முடித்தாள். சில நிமிடங்கள் அங்கு கனத்த மௌனம். தெருவில் பிற கார்கள் விரையும் சத்தமோ, பொறுமைகுன்றிய காரோட்டிகளின் ஹார்ன் ஒலியோ இருவருக்கும் கேட்கவில்லை. அதிர்ச்சியிலிருந்து சற்றே விடுபட்டு, “கெட்டவன்னு தெரிஞ்சும், ஒன்னை அவனுக்குக் கட்டிவெச்சாங்களா!” தன்னைத்தானே கேட்டுக்கொள்வதுபோல பேசினாள் தோழி. முகத்திலுள்ள தசைகளையெல்லாம் சுருக்கினாள். பிறகு, “ஒரு குழந்தையா?” என்று விசாரித்தாள்.   “ஆமா. அது வயத்திலே இருக்கிறப்போவே திரும்பி வந்துட்டேனே!”   “இன்னொரு பெண்ணா?”   “என்ன கேக்கறே? ஒண்ணுதான்!”   “இல்லே, ஒங்கப்பா வாயிலே போட்டு மெல்ல இன்னொரு பெண்ணான்னு கேட்டேன்!”   சட்டென அதிர்ந்தாள் அஞ்சனா. அன்று காலை மகள் நின்றிருந்த நிலை நினைவு வந்தது.   முன்பெல்லாம் எது யோசிக்கவும் தயங்கி, அதை அப்பா ஏற்பாரா, வாய்வார்த்தையாகத் திட்டுவாரா, இல்லை அடிப்பாரா என்று பயந்த சுபாவம் முதன்முறையாக ஆட்டங்கண்டது.   அப்பா வன்முறையைப் பிரயோகித்தபோதெல்லாம், `என்மேல் தப்பு இருப்பதால்தானே இப்படியெல்லாம் செய்கிறார்!’ என்று பழியை நம் மேலேயே போட்டுக்கொண்டோமே! கணவன் கொடுமைப்படுத்தியதைத் தாங்கமுடியாது பிரிந்து வந்ததற்கு, `மண்டு,’ `தண்டச்சோறு’ என்று தனக்கு பட்டப்பெயர்கள்!   இப்போதுதான் அஞ்சனாவிற்கு இன்னொன்றும் புரிந்தது. அசடு, பைத்தியம் என்றெல்லாம் அவர் வர்ணித்த அம்மா அப்படி ஒன்றுமில்லை, அதைச் சொல்லிச் சொல்லியே அவளை நம்ப வைத்துவிட்டார்!   அதுதான் அம்மா சில வருடங்களாகவே ஒருமாதிரி ஆகிவிட்டாளா! குளிப்பதோ, தலைசீவிக்கொள்வதோ கிடையாது. அவ்வளவு ஏன், சோற்றைப் பிசைந்துவைத்து, பல முறை நினைவுபடுத்தினாலேயொழிய சாப்பிடக்கூடத் தோன்றாதே!   காலம் மாறிவிட்டது என்கிறார்களே! ரேடியோ மட்டும் இருந்த இடத்தில் டி.வியும், கணினியும் வந்ததால் அம்மாபோன்ற பெண்களுக்கு என்ன ஆயிற்று?   நடை, மாட்டு வண்டி என்றிருந்தது மாறி, இப்போது அவ்வளவாக வசதி இல்லாதவர்கள்கூட விமானப்பயணமாம். அதனால் காலம் மாறிவிட்டதென்று அர்த்தமா?   வாழ்க்கை முறையில் எவ்வளவோ மாற்றங்கள் வந்தாலும், சில நியதிகள் ஏன் மாறவில்லை?   யார் மாற்ற விடவில்லை?   கணவன் எப்படி இருந்தாலும், மனைவி பொறுத்துப்போக வேண்டுமாம். இல்லாவிட்டால், அவளுடைய மகள் அல்லது தங்கைகளின் வாழ்க்கை துளிர்க்காமலேயே பாழாகிவிடுமாம். இப்படியெல்லாம் சொல்லிச் சொல்லியே பெண்களை அடிமைத்தனமான வாழ்க்கைக்குப் பழக்கிவிட்டார்கள்! பாவம், அம்மா! தனக்காக எப்படிப்பட்ட நரக வாழ்க்கையைப் பொறுத்துப்போயிருக்கிறாள்!   வேலைக்குப் போகப் பிடிக்காது, மீண்டும் வீட்டுக்கே திரும்பியபோது, அஞ்சனாவின் மனம் தெளிவாக இருந்தது.   வழக்கம்போல் அம்மாவைக் குப்புறப்போட்டு, முதுகை ஈரத்துணியால் துடைத்துவிட்டபோது, ஏதோ கடவுள் சிலைக்கு அபிஷேகம் செய்வதுபோல ஓர் உன்னதமான உணர்வு எழ, சிலிர்த்தது.   அம்மா பேசுவதே அபூர்வம். அன்று ஏதோ பேச முயன்றாள். “அஞ்சு! நீ.. தனியா.. போயிது,” என்று குழறினாள்.   மகளின் கை ஒரு கணம் செயலிழந்தது. சிறு வயதில் தான் அப்பாவுக்குப் பயந்து, ஓடிப்போய் கட்டிக்கொண்டபோதெல்லாம் திரும்பவும் அணைக்காதவள்! இன்றோ, வார்த்தைகளாலேயே உதவிக்கரம் நீட்டுகிறாள்!   சிறு மகிழ்வூடே உண்மை புரிந்தது. அம்மா அவளுக்கு ஆதரவாக நடந்துகொள்ளாதது அன்பு இல்லாததால் அல்ல. ஆற்றில் மூழ்கிக்கொண்டிருப்பவனால் எப்படி இன்னொருவனைக் கைத்தூக்கி விடமுடியும்?   “நான் போயிட்டா, ஒங்களை யாரும்மா பாப்பாங்க?” என்று கொஞ்சலாகச் சொன்னபோது, அஞ்சனாவால் புன்னகைக்கக்கூட முடிந்தது. பாட வேண்டும்போல இருந்தது.   அன்றிரவு பூராவும் அம்மாவின் உயிரற்ற உடலின் பக்கத்திலேயே அமர்ந்திருந்தாள் அஞ்சனா. அழுகை வரவில்லை.   அம்மாவின் நெற்றியில்.. அது என்ன புடைப்பு?   இன்னுமா பயம்?   வீங்கியிருந்த அந்த நரம்பை ஒரு விரலால் அழுந்தத் தடவியபடி, `இனிமேலாவது நிம்மதியா இருங்கம்மா. இப்போ ஒங்களை யாரும், எதுவும் பண்ண முடியாது,’ என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னாள், ஏதோ பிரார்த்தனை செய்வதுபோல.   அம்மாவுக்கு அவள் குரல் எட்டியிருக்க வேண்டும். அரை மணி நேரத்தில் அம்மாவின் மனம் சீரானதுபோல முகத்தின் இறுக்கம் குறைய, அந்த இடத்தில் அமானுஷ்யமான களை.   அஞ்சனாவுக்கு ஒன்று புரிந்தது. கூண்டைத் திறந்துவிட்டாலும், வெளியே பறக்க அஞ்சும் பறவையைப்போல் இருப்பது மடத்தனம். சந்தர்ப்பம் கிடைக்கும்போது பறந்துவிட வேண்டும்.   “மூட்டை கட்டிட்டு எங்கே பறந்துக்கிட்டிருக்கே? எவனோட ஓடப்போறதா உத்தேசம்?” வார்த்தையிலேயே விஷத்தைக் கக்கிய அப்பாவை நிமிர்ந்து பார்த்தாள் அஞ்சனா. அவளுடைய முதுகும் சமயத்துக்கேற்ப நிமிர்ந்தது.   அதன் எதிர்விளைவுபோல, அப்பாவின் உடல் பின்னோக்கிப்போயிற்று. மூச்சை பலமாக இழுத்துக்கொண்டது அவளுக்கும் கேட்டது.   இந்த மனிதரை எதிர்ப்பது இவ்வளவு எளிது என்று முதலிலேயே தெரியாமல் போய்விட்டதே! “ஒருத்தர் வீட்டிலே தங்கற வேலை!”   “நீ படிச்சுக் கிழிச்ச லட்சணத்துக்கு பின்னே ஆபீசர் உத்தியோகமா குடுப்பாங்க?” என்று எக்காளமிட்டவர், “அந்த வீட்டில எத்தனை ஆம்பளைங்க?” என்று தொடர்ந்தபோது, முதன்முறையாக அஞ்சனாவுக்கு அப்பாவின் மனோநிலையில் சந்தேகம் உண்டாயிற்று. இந்த அப்பாதான் அம்மாவை `பைத்தியம்’ என்று வாய்க்கு வாய் கரித்துக் கொட்டினாரா!   `ஒரு வயசான அம்மா மட்டும்தான். அவங்களுக்கு மருந்து, மாத்திரை குடுத்து துணையா இருக்க! மத்த வேலைங்களுக்கு ஆளிருக்கு!’ என்று சொல்லவந்ததை அடக்கிக்கொண்டாள். அந்தக் கேள்விக்கு மதிப்புக் கொடுத்து பதிலளித்தால், அது தனக்குத்தான் அவமானம்.   “நீபாட்டிலே எங்கேயோ தனியா போய், எப்படியோ சொகுசா இருப்பே! இங்கே நான் ஒருத்தன் தனியா இருந்து கஷ்டப்படணுமா?” உணர்ச்சிப்பெருக்கில், இதுவரை அறியாத பயத்தில், அப்பாவின் குரல் கீச்சென்று ஒலித்தது.   `ஒங்களுக்கு யாரையாவது பாத்துக் கத்தணும். அவ்வளவுதானே! கண்ணாடி முன்னால நின்னு கத்துங்க!’ என்று பதிலடி கொடுக்கத் தோன்றியதை கசப்புடன் விழுங்கிவிட்டு, அவரை ஒரு தடவை உற்றுப்பார்த்தாள். மேலும் தாமதிக்காமல், விறைத்துப்போய் நின்றிருந்த மகளை ஒரு கையால் அணைத்தபடி வெளியே நடந்தாள்.   இப்படித்தானே அந்த தோழியின் அப்பா அவளை ஆதரவாக அழைத்துப்போவார்! அவள் பெயர்கூட -- கமலினியோ, வினோதினியோ! ஏதோ ஒரு `னி’.   அவளைப்போலவே நித்யாவும் ஒரு நாள் பெரிய படிப்புப் படித்து, பெரிய உத்தியோகத்தில் அமர்ந்து, பெரிய காரில் தன்னை எல்லா இடங்களுக்கும் அழைத்துப்போவாள்!   தெருவில் நடக்கையிலேயே, வாய்விட்டுச் சிரித்த தாயை எதுவும் விளங்காது பார்த்தாள் சிறுமி. அவளுக்கும் சிரிப்பு வந்தது.                                                                                     2. ஆத்மநாதம்     "பின்னிட்டீங்க!"   "ஒங்களாலேயே இன்னொரு தடவை இவ்வளவு அருமையா பாட முடியுமாங்கறது சந்தேகம்தான்!"  மேடையைவிட்டு இறங்கிய காமவர்த்தனியின் கையை இழுக்காத குறையாகப்  பிடித்துக் குலுக்கினார்கள் பலரும். அந்த ரசிகர்களின் முகத்திலிருந்த பரவசம் அவளையும் தொற்றிக்கொண்டது.   "போதும். போதை தலைக்கேறிடப்போகுது". யாரும் கவனிக்காத நிலையில் பக்கத்தில் நின்றிருந்த   கணவன் அடிக்குரலில் சீறினான். "வீடுன்னு ஒண்ணு இருக்கிறது நெனப்பிருக்கா, இல்லியா?"     அவள் தடுமாறிப்போனாள். அவன் பேசியது யார் காதிலாவது விழுந்திருக்கப்போகிறதே என்ற பதைப்பு உண்டாயிற்று. அங்கிருந்து எங்காவது ஓடிவிட வேண்டும்போல உத்வேகம் எழ, "பாத்ரூம் எங்க இருக்கு?" என்று கேட்டு வைத்தாள்.   உள்ளே இருட்டாக இருந்தது.   "இதோ ஸ்விட்ச்!" என்றது ஒரு குரல். ஆண் குரல்.   பகீரென்றது அப்பாடகிக்கு. "தாங்க்ஸ்" என்றபடி கையைச் சுவற்றின் மேல் நீட்ட, அவளுடைய கரத்தைப் பற்றியது அந்த ஆணின் வலுவான கை. அக்கையை  உதறிவிட்டு வெளியே ஓடினாள்.   "போகலாங்க," என்று படபடத்த மனைவியை அதிசயமாகப் பார்த்தான் கணவன். "சீக்கிரமா வந்துட்டே!" என்றான் போகிற வழியில.   அப்போதுதான் அவள் அந்தத் தவறு செய்தாள்: "அதை ஏன் கேக்கறீங்க!" என்று அப்பாவித்தனமாக ஆரம்பித்து, எவனோ அந்த இருட்டறையில் தன் கையைப் பிடித்த பயங்கர அனுபவத்தைப் படபடப்புடன் விவரித்தாள். தனது கசப்பான அனுபவத்தை அவன் எப்படி எதிர்கொள்வான் என்று அவள் யோசிக்கவில்லை.  ஆனால், கண்டிப்பாக பழியை அவள்மேலேயே திருப்புவான் என்றுமட்டும் அவள் நினைத்தும் பார்க்கவில்லை.   "அவன்மேல என்னடி தப்பு? நாலு பேர் பாக்கணும்னுதானே இப்படிப் பளபளன்னு டிரெஸ் செய்துக்கிட்டு, மேடை ஏறிப் பாடறீங்க ஒன்மாதிரி பொம்பளைங்க எல்லாம்!"  கணவனது ஒவ்வொரு வார்த்தையிலும் வன்மம் தொக்கி நின்றது. இந்த அயோக்கியன்களின் பேச்சில் மயங்கி, எவனையாவது இழுத்துக்கொண்டு ஓடிவிட்டால் என்னாவது என்ற இனம்புரியாத அச்சம் அவனை அப்படிப் பேசவைத்தது. அவனுடைய தங்கை இப்படித்தானே கண்டவனோடு ஓடிப்போய், குடும்பத்துக்கு மாறாத அவமானத்தை உண்டாக்கி இருந்தாள்! அது இந்த ஜன்மத்தில் மறக்கக்கூடியதா!   இவளை இன்றோடு அடக்கி வைத்துவிட வேண்டும் என்று உறுதி செய்துகொண்டவனைப்போல், "நீ ஆசைப்பட்ட மாதிரியே, அதான் பத்து ஆம்பளைங்க பல்லை இளிச்சுக்கிட்டு ஒன் பின்னாலேயே வந்தாங்களே! பின்னே எதுக்கு என் முன்னால பயந்தவமாதிரி நடிக்கிறே?" என்று தாக்கினான். தொடர்ந்து,  "ஆரம்பத்தில இப்படித்தான் கையைப் பிடிப்பான், அப்புறம், புடவைத் தலைப்பைப் பிடிச்சு இழுத்து.. !" என்று அடுக்கிக்கொண்டே போனான்.   அவளுக்குப் பயம் வந்தது -- தன்மேலேயே.   குழப்பம் ஏற்பட்டது -- கணவனது போக்கால்.   ஏன் இவர் அப்பாமாதிரி இல்லை?   அவளுடைய தந்தைக்குப் பாட்டுதான் உயிர். முப்பது மைல் சுற்றுவட்டாரத்தில் எங்கு சங்கீதக் கச்சேரி நடந்தாலும் தப்பாமல் போய்க் கேட்டு, ரசித்துவிட்டு வருவார். அருகிலிருக்கும் இடங்களுக்கு நான்கு வயதுக் குழந்தையாக இருந்த மகளையும் தோள்மீது படுக்கவைத்து 'ஆட்டுக்குட்டி' தூக்கிப்போவார். அதனால்தானே, "நானும் பாட்டு கத்துக்கறேம்பா!" என்று அவள் கொஞ்சலாகக் கேட்டபோது, அவளை இசையில் ஈடுபடுத்தினார், "இன்னொருத்தர் வீட்டுக்குப் போகப்போற பொண்ணுக்கு எதுக்கு பாட்டும், கூத்தும்?" என்று அம்மா ஆட்சேபித்ததையும் பொருட்படுத்தாது! அப்போது குழந்தைத்தனமாக அம்மாமேல் ஆத்திரப்பட்டோமே, தன் ஆசைக்கு முட்டுக்கட்டை போடப்பார்க்கிறார்களே என்று!   இவளது குற்றச்சாட்டைக் கவனமாகக் கேட்ட அம்மா,  "இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்!" என்று நொடித்தாள். "என்னதான் இருந்தாலும், தான் தொட்டுத் தாலிகட்டின பொண்டாட்டியை நாலு ஆம்பளைங்க தொட்டா, சூடு சொரணை இருக்கற எவன் சும்மா இருப்பான்?" என்று மாப்பிள்ளைக்கு வக்காலத்து வாங்கினாள்.   ஏதோ கீழ்த்தரமான இச்சையுடன் தொட்டுப் பார்க்கவா எல்லாரும் கைகுலுக்கினார்கள்? அவளால் அதை ஏற்க முடியவில்லை. ஆனால், யாரும் அறியாது, அவள் கரத்தைப் பற்ற இருளில் ஒளிந்திருக்கவில்லை ஒரு கயவன்? குழப்பம் அதிகரித்தது.   அப்பாவாவது தன் பக்கம் பேசுவார் என்ற நம்பிக்கையுடன், பெண் அவர்  முகத்தைப் பார்த்தாள். அவரோ,  தான் ஏதோ தவறு செய்துவிட்ட பாவனையில் குனிந்த தலையை நிமிர்த்தாது அமர்ந்திருந்தார்.   வெகுநேரம் அங்கு கனத்த  மௌனம் நிலவியது.   சாப்பிட ஆரம்பிக்கையில், ஒரு கவளம் சோற்றைக் கையில் எடுத்தவர், "இப்படியெல்லாம் கஷ்டப்படறதுக்கு, பாடாமலேயே இருக்கலாம்," என்றார் ஆழ்ந்த வருத்தத்துடன்.   "ஒனக்குப் பாட்டே கத்துக் குடுத்திருக்க வேண்டாம்!" என்று ஒத்துப் பாடினாள் அம்மா.   பெற்றோர் இருவரும் ஒருசேரக் கூறியதை அப்படியே ஏற்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவளுக்கு.   அப்போது அவளுக்குப் புரியவில்லை, இசை அவளுடைய உயிர்மூச்சிலேயே கலந்திருந்தது என்பது.   பாட்டு கற்றுக்கொள்ள ஆரம்பித்து இரண்டு, மூன்று வருடங்களில் கீர்த்தனை பயில ஆரம்பித்தபோது, "உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்மா!" என்று புல்லரித்துப்போய் ஆசி கூறினார் அவளுடைய ஆசிரியர்.   அவர் சொற்படி,  தினமும் விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து, முந்தைய நாளிரவு தாமிரக் குவளையில் பிடித்து வைத்திருந்த நீரைக் குடித்து குரல் தெளிவாக,  ஸ-ரி-க-ம-ப-த-நி-ஸ என்று சரளி வரிசையில் தொடங்கி, ஜண்டை வரிசை, அலங்காரம் முதலான ஆரம்பப் பாடங்களில் இருபது நிமிடங்களுக்குக் குறையாமல் அகார சாதகம் பண்ணிவிட்டு, ஆதி தாளம் அல்லது அட தாளத்தில் அமைந்த ஏதாவது ஒரு வர்ணத்தை மூன்று காலங்களில் பாடி குரல் வளத்தைப் பெருக்கிக்கொள்ள என்ன பாடுபட்டிருப்பாள்!   அந்த நிசப்தமான வேளையில், தான் மட்டும் விழித்துக்கொண்டு அதிசயமாக ஏதேதோ செய்வது பயமாக இருக்க, ஒவ்வொரு மூச்சு எடுத்து விடும்போதும், தன்னெதிரில் உள்ள பிள்ளையாருக்கு வாசமிகுந்த மல்லிகை மலரொன்றினைச் சாற்றுவதுபோல் கற்பனை செய்துகொள்ள, அதுவே தியானமாகி, மனத்திற்குப் பெரும் இதத்தைக் கொடுக்கவில்லை?   கச்சேரி இருக்கும் நாட்களில் வேறு விதமான கட்டுப்பாடு! இரண்டு நாட்களுக்கு முன்னரே மௌன விரதம்தான், பாடும்போது எங்காவது தொண்டை கரகரப்பாக இருந்துவிடப் போகிறதே என்று. எண்ணையில் பொரித்த எதையும் சாப்பிட மாட்டாள். சுடுநீரில் ஒரு சொட்டு நெய்யைக் கலந்து அடிக்கடி குடிப்பாள், குரல் பிசிறில்லாமல், இனிமையாக இருக்க வேண்டுமென்று. தினமும் இரவில் சுண்டக் காய்ச்சிய பால் -- ஒரு ஸ்பூன் தேன் கலந்து.   "கச்சேரிக்கு போறதுக்கு முன்னால, வயிறு நிரம்ப சாப்பிடாதே. நான் ஒரு தடவை அப்படிப்போய், மூச்சுப்பிடிச்சுப் பாட முடியாம  திணறிட்டேன். அதுவே, வயிறு காலியா இருந்தாலும் கஷ்டம்தான்! குரலே எழும்பாது! கருமிளகு, ஜீரகம், பனங்கல்கண்டு -- இதையெல்லாம் பொடிச்சுப்போட்டு, ரெண்டு லோட்டா ஜலத்தைக் காய்ச்சி, ஃபிளாஸ்கிலே மேடைக்கு எடுத்துண்டு போக மறந்துடாதே!" குருவின் பற்பல அறிவுரைகளையும்  தெய்வ வாக்காக ஏற்று, அப்படியே கடைப்பிடித்துதான் இவ்வளவு தூரம் முன்னுக்கு வந்திருக்கிறாள். அதுவே வாழ்க்கை முறையாகிவிட்டிருந்தது. கணவருக்குப் பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு நிற்பது பெரிய வேதனையாக இருந்தது. 'வெளியில்தானே பாடக்கூடாது? சாமிக்கு முன்னால நாலு பாட்டு பாடினா என்ன!' என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டு, ஒரு நாள் சந்தியா காலத்தில், குத்துவிளக்கு ஏற்றிவிட்டுப் பாடத் தொடங்கினாள். போதிய பயிற்சி இல்லாததாலோ, மனம் ஒரு நிலைப்படாததாலோ, குரல் ஒத்துழைக்க மறுத்தது. 'பாடப் பாட ராகம், மூட மூட ரோகம்!' என்று சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள்! துக்கமாக இருந்தது.     இவள் குரல் கேட்டதுமே பூஜை அறைக்குள் எட்டிப் பார்த்த கணவன் கனகோபத்துடன், "ஆரம்பிச்சுட்டியா?" என்று இரைந்தபடி   வெளிநடப்பு செய்தபோது, பயம் அதிகரித்தது. அவன் வீடு திரும்பாமல், அப்படியே எங்காவது போய்விட்டால்?   சுருதிப்பெட்டியை 'கண்டா முண்டா' சாமான்களுடன், ஸ்டோர் அறையின் ஒரு மூலையில் கொண்டு வைத்தாள். அடிக்கடி கண்ணில் பட்டால்தானே துயரம்!   சொல்லி வைத்தாற்போல், மறுநாள் ஒருவர் அவளைத் தேடி வந்தார்.   "எங்க சபாவிலே மும்மூர்த்தி விழா நடத்தறோம்மா. நீங்க வந்து தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரி -- இவங்க பாடின பாட்டை ஒரு  மணி நேரம் பாடணும். ஒங்களுக்கு நல்ல சிட்சை, பாடாந்திரம் எல்லாம் இருக்கு. சின்ன வயசு வேறயா! நல்லா மூச்சுப்பிடிச்சுப் பாடறீங்க. ஒங்க குரல்  இருக்கே-- என்னத்தைச் சொல்றது, போங்க! போன ஜன்மத்தில சுவாமிக்குத் தேன் அபிஷேகம் பண்ணி இருப்பீங்க!" அவர் புகழப் புகழ, அவளுக்குப் பயம் வந்தது.   கச்சேரிக்குமுன் ஒருவர். முடிந்தவுடன் ஐம்பது பேரா!   ஒரு பெரிய மூச்சை உள்ளுக்கிழுத்துக்கொண்டு, "இப்போ சௌகரியப்படாதுங்க," என்று அந்த சமாசாரத்துக்கு ஒரு முடிவு கட்டினாள்.   சௌகரியமோ, இல்லையோ, பாடவேண்டிய அவசியம் வந்தது.   இசைவழி தான் தெய்வங்களை ஆராதிப்பதைத் தடுத்த கணவர்மீது கோபங்கொண்டே அவர்கள் அவரைத் தன்னிடமிருந்து விலக்கி எடுத்துக்கொண்டுவிட்டார்கள் என்று தோன்றியது அவளுக்கு. அவளுடைய பெயரைக்கூட அல்லவா பழித்தான்!   "இது என்ன இப்படி ஒரு பேரு வெச்சிருக்காங்க ஒங்க வீட்டிலே? காமவர்த்தனியாம் காமவர்த்தனி!"   பள்ளிக்கூடத்தில் அவள் படித்தபோது, தேவி, மாலா, மகேஸ் என்று எல்லாப் பெயர்களிலும் மூன்று, நான்குபேர் இருந்தார்கள். ஆனால், இவள் பெயர் மட்டும் யாரும் கேள்விப்படாததாக இருந்தது. இப்போது கணவனும் அதைப்பற்றிக் கேட்கிறார்!  உற்சாகமாக, "அது ஒரு ராகத்தோட பேருங்க! பந்துவராளின்னுகூட சொல்வாங்களே!" என்றாள்.   'காமவர்த்தனி ராகம் இருக்கே, இது ஆயிரத்து இருநூறு வருஷங்களுக்கு முன்னேயே இருந்திருக்கு, 'ராமக்ரிய'ங்கிற பேரில.  தாய் ராகமானதால, ஏழு ஸ்வரங்களும் இதில இருக்கு! கச்சேரி ஆரம்பத்தில பாடினா, கச்சேரி களை கட்டும்'. என்றோ தந்தை தன்னிடம் கூறியதை அட்சரம் பிசகாது கணவரிடம் தெரிவித்தாள். ஆனால் அவளுடைய பெருமையில் பங்குகொள்ளும் மனநிலையில் அவன் இருக்கவில்லை.   "ஒன்னோட புத்திசாலித்தனத்தை எங்கிட்டயே காட்டறியா! நீ காமத்தில எப்படிங்கறது என் ஒருத்தனுக்கு மட்டும் தெரிஞ்சாப்போதும்," என்று அவன் விகாரமாகச் சிரித்தபோது அவளுக்கு உடலெல்லாம் பற்றி எரிவது போலிருந்தது.   பதினைந்து வயதாக இருந்தபோது, "காமம்னா என்ன அர்த்தம்பா?" என்று கேட்டதற்கு, "காமம்னா ஆசை. அது எந்த ஆசையா இருந்தாலும் சரி. ஆனா,  ஆண்-பெண் உடல் கவர்ச்சிக்கு மட்டும்னு பயன்படுத்தி, அதைக் கெட்ட  வார்த்தைமாதிரி ஆக்கிட்டாங்க இந்தக் கதை,  கிதை எல்லாம் எழுதறவங்க!" என்று சொன்னார்.  குரல் அடித்தொண்டையிலிருந்து வர, அவரது முகம் இறுகி இருந்தது. அவளுக்கும் கோபம் வந்தது -- தன்னுடைய அழகான பெயரை அசிங்கப்படுத்தியவர்கள்மேல்.   வாழ்க்கையே அலங்கோலமாக ஆகி விட்டபோதும் விதவைக்கோலம் பூணாது, எப்போதும்போல அலங்கரித்துக்கொண்டு, மீண்டும் கச்சேரி செய்யப்போனாள் காமவர்த்தனி.  தன்னை மறந்து பாடும்போது, அந்தந்த பாடல்களின் பொருளான தெய்வங்களே தனக்குள் ஐக்கியமாகிப் பாடுவதுபோல் நிறைவாக இருந்தது. கூடுமானவரை, 'நான் ஒங்க ரசிகன்' என்று சொல்லிக்கொண்டு அருகில் வந்து, தொட்டுத் தொட்டுப் பேசியவர்களைத் தவிர்த்தாள்.     "வணக்கங்க! எனக்கு ஒங்க பாட்டு ரொம்பப் பிடிக்கும். அதுவும் இன்னிக்கு கரஹரப்ரியாவில 'சக்கனிராஜ' பாடினீங்களே! ஆகா! 'ராஜ பாட்டை இருக்கும்போது, குறுக்குச் சந்திலே போவாங்களா?' -- இது பல்லவி. அனுபல்லவியிலே.. 'பால் இருக்கையில், யாராவது மதுவை நாடிப் போவாங்களா?' அப்படின்னு தியாகராஜர் கேக்கறாரு. அற்புதங்க! என்னையே மறந்துட்டேன். விட்டிருந்தா, ரெகார்ட் பண்ணி, தினமும் கேட்டு ரசிச்சிருப்பேன்!"   வழக்கமான ரசிகர் கும்பலில் அந்த இளைஞன் வித்தியாசமாக இருந்தான். அவள் வயதுதான் இருக்கும் அவனுக்கும்.   பக்கத்திலிருப்பவரிடம், 'இது என்ன ராகம்?' என்று விசாரித்துத் தெரிந்துகொண்டுவிட்டு, ஒரு பாட்டுக்கும், இன்னொன்றுக்கும் இடையே கிடைத்த அவகாசத்தில், 'காம்போதி என்னமா இருந்திச்சு!' என்று முன்னாலிருப்பவரிடம் அளக்கும் சிலரின் பிரதிநிதி இல்லை இவன். விஷயம் புரிந்து பேசுகிறான்.   அவள் ஒருவித சுவாரசியத்துடன் அவனைப் பார்த்தாள். "பாடுவீங்களா?" என்று விசாரித்தாள்.   "அதுக்கெல்லாம் குடுத்து வெச்சிருக்கணுங்க. நான் வெறும் பாத்ரூம் பாடகன்தான்". அவன் உண்மையான வருத்தத்துடன் பேசுவதாகத்தான் தோன்றியது. "ஒங்களைமாதிரி யாராவது  தாளமும், சுருதியும்  இழைய, அர்த்தம் புரிஞ்சு, பாவத்தோட பாடினா ரசிப்பேன்!"   அடுத்தடுத்து அவளுடைய கச்சேரி எங்கு நடந்தாலும், முரளியும் தப்பாமல் வந்து கேட்டு, அக்குவேறு, ஆணிவேறாகப் பிரித்து விமரிசனம் செய்ய ஆரம்பித்தபோது, 'இப்படி நமக்குப் பிடித்ததை இன்னொருவர் புரிந்துகொண்டு பேசினால், மனசுக்கு எவ்வளவு ரம்மியமாக இருக்கிறது!' என்று எண்ண ஆரம்பித்தாள்.   'நமக்கு வாய்த்தவர் ஏன் இப்படி இல்லாமல் போனார்?' என்ற ஏக்கம் காலங்கடந்து எழுந்தது.   'எத்தனை நாளைக்கும்மா நீ இப்படி தனியாவே இருப்பே? எங்களுக்கு அப்புறம் ஒனக்குத் துணை வேண்டாமா?' தந்தை அடிக்கடி அவள் மறுமணம் செய்துகொள்ளவேண்டிய அவசியத்தைப்பற்றி நாசூக்காகக் கேட்டது நினைவில் எழுந்து கிளர்ச்சியை உண்டுபண்ணியது..   இந்த முரளியைக் கல்யாணம் செய்துகொண்டால் என்ன? இருவருக்கும் இடையே பாலமாகப் பாட்டு இருக்கும், என்றென்றும்.   ராகங்களின் அழகையும், பாடல்களின் அர்த்தங்களையும், அவைகளை இயற்றியவர்களின் பக்தியையும்  ஒத்த மனத்தோடு அசைபோடமுடிவது பெரும்பாக்கியம் என்று தோன்றியது. பரவசத்துடன் கண்ணை மூடிக்கொண்டாள். முரளியினுடைய பெண்மை கலந்த முகச்சாயலோ, ஆஜானுபாகுவான தோற்றமோ அதில் பிரதானமாகத் தெரியவில்லை.   அவளுடைய எண்ணங்கள் அவன் மனத்திலும் எதிரொலித்து இருக்கவேண்டும்.  அடுத்துவந்த சந்திப்பில்,  "எனக்கு ஒங்ககிட்ட பிடிச்சது ஒங்க பாட்டு மட்டும் இல்லீங்க!" என்று அவசர அவசரமாகச் சொல்லிவிட்டு, 'கோபித்துக்கொண்டுவிட்டாளோ!' என்ற பதைப்புடன் அவள் முகத்தைப் பார்த்தான் முரளி.   அவள் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டாள்.   "ஒங்க குரல், சங்கீத ஞானம், அடக்கம், பக்தி எல்லாமே பிடிச்சிருக்கு. ஒங்களைமாதிரி ஒரு பொண்ணுதான் என்னோட மனைவியா வரணும்னு எனக்கு ஆசை!" என்றான்.   "என்னை மாதிரியா, இல்லே நானேவா?" என்று கேட்டாள் காமவர்த்தனி. பொங்கியெழுந்த உணர்ச்சிகளை அடக்க முயற்சித்ததில், குரல் பிசிறடித்தது. அவன் பூரிப்புடன் சிரித்தான். "நீங்க எப்படி எடுத்துக்குவீங்களோன்னுதான் சுத்தி வளைச்சுப் பேசினேன்!"   "நான் பாடுவேன்கிறது மட்டும்தான் ஒங்களுக்குத் தெரியும். மத்த விஷயமெல்லாம்..!"   "தேவை இல்லீங்க!" வன்மையாக மறுத்தான் முரளி. "இப்ப ஒங்க குரலைக் கேக்கறதுக்காக நாப்பது, அம்பது மைல் வரேன். ராத்திரி பகலா, எப்போ வேணுமானாலும் அதைக் கேட்டுக்கிட்டே இருக்கலாம்னு ஒரு நிலை வருமானா.., வாழ்க்கையில வேற என்ன சுகம் வேணும், சொல்லுங்க!"   அவளுக்கு அழுகை வந்தது. இவ்வளவு மனம்திறந்து பேசுகிறானே! தனக்குக் கொடுத்து வைக்கவில்லையோ!   "என்னோட பூவையும், பொட்டையும் பார்த்து நீங்க ஏதோ தப்பா நினைச்சுட்டீங்க.  நான் விதவைன்னு தெரிஞ்சா, நாலுபேரு சுத்திச் சுத்தி வருவாங்கன்னு பயந்து, நான் போடற வேஷம் இது".   அவன் திகைப்பிலிருந்து மீளுமுன் அவள் அப்பால் அகன்றாள். கச்சேரியில் சிறப்பாகப் பாடிவிட்டோமென்ற பூரிப்பு இருந்த இடம் தெரியாது மறைய, அவள் மனம் கனத்திருந்தது.      ஆனால், அடுத்த கச்சேரிக்கும் முரளி வந்தான்.   அவளைப் பார்த்துச் சிரித்தான்.   "ஒங்களுக்கு நல்ல துணையா இருப்பேன்னு நம்பறேன்," என்றான். வாழ்க்கைத்துணையாக ஆனான்.   அடுத்தடுத்து வந்த கச்சேரிகள் முடிந்ததுமே அவளுடைய இடுப்பைச்சுற்றித் தன் கரத்தை வளைத்துக்கொண்டு, உரிமையாக முரளி நடந்தது எந்த ஆணையும் மிரளவைக்கப் போதுமானதாக இருந்தது.   அதையும் மீறி, "இன்னிக்கு ஒங்க பாட்டு அற்புதங்க, காமவர்த்தனி அம்மா. ஷண்முகப்ரியாவிலே, "சரவணபவ எனும் திருமந்திரம்தனை"ன்னு பாபநாசம் சிவனோட உருப்படி ஒண்ணு பாடினீங்களே, அப்படியே முருகன் சந்நிதியையே கண்ணு முன்னால கொண்டு வந்துட்டீங்க!" என்று ஒரு முதியவர் பாராட்டியபோது, அவள் முகமெல்லாம் விகசித்துப்போயிற்று. தான் எதை எண்ணிப் பாடுகிறோமோ, அது கேட்பவரையும் போய் அடைவது என்ன பாக்கியம்!   ஆனால், வீடு திரும்பியதும், சாப்பிட்டபடியே,  அவள் பாடிய ஒவ்வொரு ராகத்தையும், பாட்டையும் விரிவாக விமர்சித்து, விளையாட்டாக மதிப்பெண்களும் போடும் வழக்கத்தைக் கொண்டிருந்த முரளி அன்று எதுவும் பேசாது,  நேராகப் படுக்கப்போனபோது  குழப்பம்தான் எழுந்தது.   "ஒடம்புக்கு முடியலியா?" நெற்றியில் வைக்கப்பட்ட அவளது கையை முரட்டுத்தனமாக விலக்கினான் கணவன். படுக்கையில் எழுந்து உட்கார்ந்து, அவளை முறைத்தான். "நீ இனிமே எந்தக் கச்சேரியும் ஒத்துக்க வேணாம்!"   யாரோ மென்னியைப் பிடிப்பதுபோல் இருந்தது அவளுக்கு. "ஏங்க? முந்தியெல்லாம் நீங்க..?" என்று குழறினாள்.   "அது அப்போ. மத்தவங்க ஒன் கிட்ட, கிட்ட வந்து சிரிச்சுப் பேசறது எனக்குப் பிடிக்கல!" மறைந்த கணவனே வேறு உருவத்தில் வந்து மிரட்டியதுபோல் இருந்தது.   ஒருமுறை இசையைப் பறிகொடுத்துவிட்டு, தனது ஆத்மாவின் நாதத்தைத் தொலைத்து நின்ற வேதனை போதாதா? அந்தக் கொடுமையுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், பூவையும், பொட்டையும் தொலைத்ததுகூடப் பெரிதாகத் தோன்றவில்லையே! காமவர்த்தனி அதிநிதானமாகத் தலையை நிமிர்த்தினாள். அவனுடைய கண்களை உற்றுப் பார்த்தாள்.  "ஒங்களுக்கும், என்னோட இசைக்கும் ஒரு போட்டி வெச்சா, நான் பாட்டைத்தான் தேர்ந்தெடுப்பேன். இனிமே இந்தப் பேச்சு வேணாம்!" தெளிவான குரலில் அவளுடைய பதில் ஒலித்தது.   இப்போதெல்லாம் தனியாகவே கச்சேரிகளுக்குப் போய்வருகிறாள் காமவர்த்தனி.   யாராவது தெரிந்தவர்கள், "அவர் எங்கே, கண்ணிலேயே படறதில்லியே?" என்று  விஷமத்தனமாகவோ, வாய் உபசாரமாகவோ விசாரித்தால், "வீட்டில பிள்ளைங்களைப் பாத்துக்க ஆள் வேண்டாமா!" என்று அசட்டுச் சிரிப்புடன் சமாளிக்கிறாள்.   தான் நினைத்ததில் உறுதியாக இருந்து சாதித்துவிட்டதில் அவளுக்கு நிறைவு ஏற்படவில்லை. மாறாக, வேதனைதான் எழுகிறது, ஒரு நல்ல ரசிகனை இழந்ததற்காக.                                                                                           3. எப்படியோ போங்க!   தாம் பெற்ற செல்வங்களுக்கு இவ்வுலகில் இடம்பெற உயிர் கொடுத்ததே பெரிய காரியம் என்ற இறுமாப்பில், `எப்படியோ போங்க!’ என்று `தண்ணி தெளித்து’ விட்டிருந்தார் முத்துசாமி. மூத்தவன் வீடு வீடாக பைக்கில் பீட்சா கொண்டு கொடுக்கும் உத்தியோகத்தில் அமர்ந்திருந்தான். இதுவரைக்கும் நம்மிடம் பணங்காசு கேட்காது, சிகரெட் உள்பட அவன்பாட்டைப் பார்த்துக் கொள்கிறானே என்ற திருப்தி அவருக்கு.   நிறையப் படித்திருக்கக்கூடாதோ என்று தாய்தான் ஆதங்கப்பட்டாள். அதனாலேயே அவருக்கு தன்னைப்போல் இல்லாது, பிள்ளைகளைப்பற்றிய கனவுகளையும், கவலைகளையும் சுமந்திருந்த அன்னத்தைக் கண்டால் ஏளனம்.   “ரமாவைப் பாத்தா எனக்கென்னவோ கவலையா இருக்குங்க. இருக்கிற எடம் தெரியாம, பாடபுத்தகங்களைப் படிச்சுக்கிட்டிருந்த பொண்ணா இது! இப்போ பாட்டுங்கிற பேரில ஏதேதோ கூச்சலைக் கேட்டுக்கிட்டு இருக்கா. எது கேட்டாலும் ஒரு அசட்டுச்சிரிப்பு!”   ஒரு சிறிய டின் பியரைக் கையில் பிடித்தபடி, அந்த கல்யாணமான நடிகைக்கும், இயக்குனருக்குமிடையே இருந்த ரகசிய உறவைப்பற்றி சுவாரசியமாகப் படித்துக்கொண்டிருக்கையில், `இவள் எங்கே வந்தாள்!’ என்ற எரிச்சல்தான் எழுந்தது முத்துசாமிக்கு.   “இந்தக் காலத்திலே இப்படி நடந்துக்கிறதுதான் ஃபேஷன்! டி.வியில பாரு, எப்படி எடுத்ததுக்கெல்லாம் சிரிக்கறாங்கன்னு! நீ ஒரு படிக்காத முட்டாள்! ஒனக்கு எங்கே இதெல்லாம் புரியப்போகுது!” என்றவர், “என்னைமாதிரி இருக்கக் கத்துக்க.` எப்படியோ போங்க,’ன்னு விட்டுட்டு நிம்மதியா இருப்பியா!” என்று அறிவுரை கூறிவிட்டு, மீண்டும் ஞாயிறு பதிப்பில் முகத்தைப் பதித்துக்கொண்டார்   எப்பாடு பட்டாவது தந்தையின் அன்பையும், ஆதரவையும் பெற வேண்டும் என்று முனைப்புடன் படித்தாள் ரமா. ஆனால், “சமைக்கக் கத்துக்குடு, போதும். பொம்பளைப் பிள்ளைக்கு படிப்பு எதுக்கு?” என்று அவளுடைய படிப்புக்கு அரைகுறையாக முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார் முத்துசாமி.   அதிசயமாக, அன்னம் வாதாடினாள். “இப்பத்தான் பதினஞ்சு வயசாகுது இவளுக்கு. ஸ்கூலுக்குச் சம்பளம் கிடையாது. புஸ்தகமும் இலவசமா குடுத்துடறாங்க. அவ படிச்சா, ஒங்களுக்கு என்ன நஷ்டமாகுது?”   ஒரு கணம் அயர்ந்தார் முத்துசாமி. தன்னை எதிர்த்து கேவலம் ஒரு பெண், அதுவும் தனக்கு அடங்கி இருக்கவேண்டிய மனைவியே, பேசுவதாவது!  அவளிடம் நேரிடையாகப் பேசினால் அவளுக்கு மதிப்பு கொடுத்ததுபோல் ஆகிவிடுமென்று, “ரமா! ஒங்கம்மாவோட பேத்தலைக் கேட்டியா? என்னமோ, நீ பெரிய ஆபீசராகிடுவேன்னு நம்பிக்கிட்டிருக்கா. அதையும்தான் பாத்துடுவோமே!” என்றுவிட்டு, பெரிதாகச் சிரித்தார். சற்று ஆசுவாசமாக இருந்தது. வழக்கம்போல், “எப்படியோ போங்க!” என்று அந்த விஷயத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.   ரமாவுக்கு அவமானமாக இருந்தது. தன் புத்திசாலித்தனத்துக்குச் சவால் விடுகிறார் அப்பா! அம்மாவின்மேல் கோபம்கூட எழுந்தது. நான் எப்படியோ தொலைகிறேன். எதற்கு எனக்கு வக்காலத்து வாங்க வேண்டுமாம்?   இத்தனை ஆண்டுகளாக பெற்றோருக்கு அடங்கிய பெண்ணாய், படிப்பில் கெட்டிகாரியாய், ஒழுக்கத்தின் சிகரமாக இருந்து என்ன கண்டோம்! அப்பாவோ, தான் முன்னுக்கு வந்தால் பெருமைப்படப் போவதுமில்லை, கெட்டழிந்தால் கவலையும் படமாட்டார்!   எட்டாவது படிவ பெரிய பரீட்சையில்,  எட்டு பாடங்களில் ஏழு `ஏ’ வாங்கியிருக்கிறாள். அது போதாதென்று, `இன்னும் உழைத்துப் படி,’ என்று விரட்டும் ஆசிரியைகள்!   மலேசியாவில், முந்திய வருடமும், எதிர்வரும் வருடமும்தான் நாடுதழுவிய நிலையில் பரீட்சையாதலால், நான்காவது படிவமான `ஹனிமூன் வருடத்தில்’ கிடைக்கும் சுதந்திரத்தை முழுமையாக அனுபவித்துவிட வேண்டும் என்பதுபோல் நடந்துகொண்டார்கள் பதினாறு வயதான மாணவ மாணவிகள். அவர்களுடன் முதன்முறையாகச் சேர்ந்துகொண்ட ரமாவிற்கும் புதிய அனுபவங்களும், பழக்கங்களும் ஏற்பட்டன.   தன்னையொத்த பிறருடன் சேர்ந்து ஊர்சுற்றும்போதுதான் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறது!  இது தெரியாமல், புத்தகங்களில் முகத்தைப் பதித்துக்கொண்டிருந்தோமே, இவ்வளவு நாளும்!   ஒன்றரை மணிக்கு காலைப் பள்ளிக்கூடம் முடிந்துவிட, மத்தியான வேளைகளில் சிகரெட் பிடித்தபடி பேரங்காடிகளில்  சுற்றும்போது, உலகையே வென்றுவிட்டது போன்ற பெருமிதம் உண்டாயிற்று. மனசாட்சி சிறிது குத்த, `அண்ணா மட்டும் சிகரெட் பிடிக்கிறானே! ஆண்களுக்கு ஒரு சட்டம், பெண்களுக்கு ஒரு சட்டமா!’ என்று சமாதானப்படுத்திக்கொண்டாள்.   தனியாகவே போகும் தைரியம் வந்தது. அப்போது கிடைத்த நண்பன் அவன்.   “ஸ்கூல் போரிங்! வீடு -- அதைவிட போரிங்! பெரிய தலைவலி!” என்று சொல்லிச் சிரித்த குமார் அவளைப்போலவே நாட்களை ஜாலியாக கழிப்பவன். அதனாலேயே அவனை அவளுக்குப் பிடித்துப்போயிற்று. சற்றே பெரியவன். அதனால் என்ன! அனுபவசாலி!   “ஏன்? ஒங்கப்பா எப்பவும் ஒன்னை ஏசுவாரா, குமாரு?” என்று அப்பாவித்தனமாகக் கேட்டாள்.   “அவருக்கு நான் ஒருத்தன் இருக்கிறதே தெரியாது. எனக்கு அம்மா இல்லே. சின்னம்மாதான். அது ஓயாம விரட்டும்!” என்று அவன் மனந்திறந்து பேசினபோது, அவன்பால் பரிதாபமோ, அன்போ, எதுவோ ஒன்று ஏற்பட்டது.   தன் பங்குக்கு, “எங்கம்மா நல்லவங்க. ஆனா, படிச்சாதான் முன்னுக்கு வரமுடியும்னு சொல்லிச் சொல்லியே போரடிப்பாங்க!” என்று சிரித்தபோது, ரமா அவனுடன் நெருக்கமாக உணர்ந்தாள்.   “ரமா! எத்தனை நாள்தான் இந்த சிகரெட்டையே கையில பிடிச்சுகிட்டு இருப்பே? வாயேன்!” என்று அவன் அழைத்தபோது, `இன்னும் புதிய அனுபவங்கள்!’ என்று பூரிப்பு ஏற்பட்டது.   மூன்றே மாதங்கள்! உடல் இளைத்தது. உலகமே இன்பமயமாகத் தெரிந்தது. யாரைப் பார்த்தாலும் சிரிப்பு பொங்கியது. அவ்வப்போது கைகால்களில் நடுக்கம். எதிலும் மனம் நிலைக்கவில்லை.   `இப்படியே போனால், அடுத்த வருடம் பரீட்சை எழுத முடியுமா?’ என்று எப்போதாவது சந்தேகம் எழ, அதை அடக்க குமாரைத் தேடிப்போனாள்.   “இதோ பாரு, ரமா. உனக்கு ஃப்ரீயாவே டாடா (போதை மருந்து) குடுக்க எனக்குக் கட்டுப்படி ஆகாது. நானும் காசு குடுத்து வாங்கித்தானே, மத்தவங்களுக்கு சப்ளை பண்ணறேன்!” என்று கறாராகச் சொன்னவன், அவள் பயந்துவிட்டதைப் பார்த்து உள்ளூர மகிழ்ச்சி அடைந்தான். “ஒண்ணு சொல்றேன், கேளு. நிறைய பணம் பாக்கலாம்!”   அவன் சொன்ன வழியைக் கேட்டு ரமா அதிர்ந்தாள்.   “யோசிக்காதே. நீ என் ஃப்ரெண்டு. அதான் ஒனக்கு ஒரு நல்ல வழியைக் காட்டறேன்!” குமார் விவரமாகச் சொன்னபோது, முதன்முறையாக அவன்மேல் அவநம்பிக்கை பிறந்தது ரமாவுக்கு.   “இன்னிக்கு வேணாம். எனக்கு நிறைய ஹோம் ஒர்க் இருக்கு,” என்று சமாளிக்கப்பார்த்தாள்.   “அட! ஹோம் ஒர்க் எல்லாம் செய்வியா நீ! என்னைமாதிரி ஸ்கூலுக்குப் போறதையே நிப்பாட்டிட்டேன்னு நினைச்சேனே!” என்று அவன் பெரிதாகச் சிரித்தபோது, அப்பாவையே பார்ப்பதுபோல் இருந்தது ரமாவுக்கு.   இவனுடைய சகவாசம் தன்னை எங்கே கொண்டுபோய் விடுமோ! ஒவ்வொரு தீய பழக்கமாகப் பழக்கி வைத்துவிட்டு, `நானா ஒன்னை வற்புறுத்தினேன்?’ என்று கழன்றுகொள்வானோ?   SUGAR DADDY என்கிற ஏற்பாட்டின்படி, எவராவது பணக்காரருக்கு `கம்பெனி’ கொடுக்க வேண்டுமாம். சேர்ந்து சாப்பிடுவதுடன் நின்றுவிடுமா? அவள் நம்பத் தயாரில்லை.   அவ்வளவு கலக்கத்திலும் ரமாவுக்குத் தனது எதிர்காலம் நிழலாகத் தெரிந்தது: ஏழு `ஏ’ வாங்கியவள் நான்! இப்போது என் படிப்பு நின்றுபோனால், என்னைப்போலவே உதவாக்கரை ஒருவனை மணந்து, அவனிடமோ, இல்லை, தன்னிச்சைக்குப் பயன்படுத்திக்கொண்ட `சர்க்கரைத் தந்தை’யிடமோ  ஏச்சுப்பேச்சும், அடி, உதையும் வாங்கி..!   உண்மை புரிய, உடல் நடுங்கியது.   “நான் போறேன்!” என்று விடுவிடென்று நடந்தாள்.   குமார் அலட்சியமாக தோள்களைக் குலுக்கிக்கொண்டான். எங்கே போய்விடப்போகிறாள்! மூக்கொழுக, உடல் நடுங்க, தாங்கமுடியாமல் போனால், தானே நாளைக்கு வருவாள்!   ‘எனக்கு வாய்க்கப்போறவனும், `படிக்காத முட்டாள்’னு வாய்க்கு வாய் என்னை ஏச இடம் கொடுக்கமாட்டேன்!’ என்று ரமா உறுதி எடுத்துக்கொண்டது அவனுக்குத் தெரிய நியாயமில்லை.                                                                                        4. என்னைக் கைவிடு!   “நல்லா யோசிச்சுப் பாத்தியா, சியாமளா?” தந்தையின் குரலில் கவலை மிகுந்திருந்தது. மூன்று வருடங்களோ, இல்லை ஐந்து வருடங்களோ சேர்ந்து வாழ்வதற்கா கல்யாணம்? ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்களே!   பெற்ற ஒரே பெண்ணுக்குத் தன் முயற்சியால் ஒரு கணவனைத் தேடித்தர முடியவில்லையே என்ற அவருடைய நீண்டகால வேதனை இன்னும் மிகுந்தது. “சதீஷ் காண்ட்ராக்டிலே வந்தவன்! அது முடிஞ்சதும் வந்த ஊருக்கே திரும்பிப் போயிடணுமேம்மா!”   கட்டிட வேலை செய்துகொண்டிருந்தபோது, ஒரு விபத்தால் முதுகில் பலத்த அடிபட, சில ஆயிரம் நஷ்ட ஈடு பெற்று, வீட்டிலேயே நிரந்தரமாக இருக்க வேண்டிய நிலை தனக்கு ஏன் வந்தது என்று மீண்டும் மீண்டும் குமைவதைத் தவிர, உருப்படியாக என்ன செய்ய முடிந்தது தன்னால்? எட்டு வகுப்புடன் படிப்பை நிறுத்திக்கொண்ட சியாமளா தொழிற்சாலையில் வேலை செய்வதால்தான் குடும்பமே ஓடுகிறது. இந்த நிலையில் பேச தனக்கு என்ன அருகதை?   “சதீஷ் தானேதான், `நாம்ப ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன?’ன்னு கேட்டாருப்பா,” அவருடைய அனுமதியை வேண்டி நின்ற மகளைப் பார்த்து மெல்லச் சிரித்தார் சுப்பையா.   “ஒனக்குச் சரின்னு பட்டா, சரிதான்!”   சதீஷ் அவர்கள் வீட்டுக்கு வந்தபோதே இப்படி ஓர் எண்ணம் அவனுக்குள் இருக்கும் என்று அவர் பயந்திருந்தது நிஜமாகப் போயிற்றே!   பங்களா தேஷிகளுக்கே உரிய கவர்ச்சியான கண்களும், நீண்ட மூக்கும் எவரையும் கவர்ந்துவிடும். அத்துடன், அவனுடைய கடுமையான உழைப்பும், சேமிக்கும் திறனும்!  இதைவிட அருமையான துணை சியாமளாவுக்குக் கிடைக்க முடியாது என்பதென்னவோ உண்மை என்று ஒரு சிறுகசப்புடன் ஒத்துக்கொண்டார் சுப்பையா.   ஆனால், இருவருக்குமிடைய ஒரு பெரிய வித்தியாசம் இருந்ததே! இருபத்தெட்டு வயது இளைஞன் சதீஷ். சியாமளாவோ இருபத்தெட்டு வயதாகியும், பல வரன்கள் பெண்பார்க்க வந்துவிட்டு, `பெண் கறுப்பு!’ என்று தட்டிக்கழிக்கப் பார்த்து, பின் சற்று இறங்கிவந்து, `எவ்வளவு பவுன் நகை போடுவீங்க?’ என்று பெரியமனது பண்ணி பேரம் பேசிவிட்டு, `வியாபாரம்’ படியாததால் ஒதுங்கிப் போனதன் பலனாக, உள்ளுக்குள்ளேயே மறுகிக்கொண்டிருப்பவள்.   பிறர் அவளை நிராகரித்துவிட்டுப் போகும் ஒவ்வொரு முறையும், தன் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு, `வயசான காலத்திலே ஒங்களுக்குத் துணையாதான் இருந்துட்டுப் போறேனேப்பா!’ என்று சமாதானப்படுத்துவாள் சியாமளா. `இவ்வளவு பேசிட்டு, கட்டிக்கிட்டதும், குடிப்பான். அடிப்பான். நான் சம்பாதிக்கிறதையும் பிடுங்கிப்பான். அதான் அன்னாடம் பாக்கறேனே அந்தக் கண்ராவியை! மூஞ்சியெல்லாம் ரத்தக்காயமா வர்றாளுங்க ஒவ்வொருத்தியும்! நான் சுதந்தரமா இருந்துட்டுப்போறேனே!’   வெளியில் வீறாப்பாகப் பேசினாலும், பழைய தோழிகளை அவர்கள் பிள்ளைகுட்டிகளுடன் பார்க்கும்போது, அவள் மனம் பொருமத்தான் செய்தது.   இப்போது அவளையும் ஒருவன் மணக்க விரும்பி, வேண்டுகிறான்! பெருமையாக உணர்ந்தாள்.   “அப்பா! கல்யாணத்துக்கு அப்புறம் அவரும் நம்பகூட இங்கதான் வந்து தங்கப்போறாரு. ஒங்களைவிட்டு எங்கேயும் வரமாட்டேன்னு கண்டிசனா சொல்லிட்டேன்ல!”   தன் நன்றியை ஒரு புன்முறுவல்மூலம் வெளிப்படுத்தினார் சுப்பையா.   “சாயந்திரம் ஸ்டூடியோவுக்குப் போய், நான் ஒரு போட்டோ எடுத்துக்கணும். அவரோட அம்மாவுக்கு அனுப்ப!”   சுப்பையாவின் முகத்தில் படர்ந்த கலவரத்தைப் பார்த்து சியாமளா சிரித்தாள். “நம்ம தமிழாளுங்கமாதிரி நினைச்சுட்டீங்களா இவரையும்? அழகு, கலர், அந்தஸ்து -- இப்படி எதிலேயாவது குறை கண்டுபிடிச்சு, மத்தவங்களைக் கேவலமா பேசறதாலேயே அவங்க என்னமோ ஒரு படி ஒசந்து இருக்கிறதா நினைக்கிற  சின்ன புத்தி சதீஷூக்குக் கிடையாது!”   சுப்பையாவின் சந்தேகம் முழுவதாக மாறவில்லை என்பதை அவருடைய கவலை தோய்ந்த முகமே காட்டிக்கொடுக்க, சியாமளா மேலும் சொன்னாள்: “நான் ஏன் இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கேன்னு எல்லாத்தையும் அவர்கிட்டே சொல்லிட்டேன். அவர் சொல்றாரு, `ஒன்னோட நிஜ அழகு புரியாம ஒதுக்கிட்டுப் போனவங்க அடிமுட்டாளுங்க!’ அப்படின்னு சொல்றாருப்பா சதீஷ்!”   வார்த்தைக்கு வார்த்தை அவன் பெயரை உச்சரிப்பதிலேயே ஆனந்தம் காணும் மகளின் உற்சாகத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்க விரும்பவில்லை சுப்பையா. `அவன் நிரந்தரமாக இந்த மலேசிய மண்ணில் கால் பதித்து இருக்கமுடியுமோ?’ என்று ஆரம்பத்தில் எழுந்த உறுத்தல்கூட, `இந்த ஒலகத்திலே எதுதான் நிரந்தரம்!’ என்ற வேதாந்தத்தில் மறைந்தது.   மாலையும் கழுத்துமாக சதீஷின் பக்கத்தில் அமர்ந்திருந்த சியாமளா மகிழ்ச்சியின் எல்லையிலிருந்தாள்.   `இவனுங்களை எல்லாம் நம்பவே கூடாது. கையிலே பிள்ளையைக் குடுத்துட்டு ஓடிடுவான்!’ என்று தோழிகள் எச்சரிக்கை செய்ததைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதது எத்தனை நல்லதாகப் போயிற்று!   அவன் மனத்துள் இருக்கும் அன்பு பிறர் கண்ணுக்குத் தெரியவில்லை. ஏழை, அயல்நாட்டுக்காரன், அதிலும் அழகன் என்பதில் விளைந்த அலட்சியம், பொறாமை!   தன்னைப்பற்றி தரக்குறைவாகப் பேசியவர்களைப் பொய்யர்களாகிவிட்டு, இப்போது தாலி கட்டி, மனைவியாக ஏற்றுக்கொண்டிருக்கிறான்!   மாதங்கள் நிமிடங்களாகிப் பறக்க, தன்னைவிட பாக்கியசாலி எவருமில்லை என்று எண்ணி எண்ணி சியாமளா இறுமாந்துபோனாள். மேலே போனால், கீழே விழவும் கூடும் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.   `வேலைக்கு வந்த மலேசிய நாட்டில், இந்நாட்டுப் பெண்களைத்  திருமணம் புரிந்துகொள்ளக் கூடாது என்ற விதியை மீறிய அந்நிய நாட்டுத் தொழிலாளிகள் நாடுகடத்தப்படுவார்கள்!’ புதிய சட்டமொன்று அமுலுக்கு வர, சதீஷின் குறும்புப்பேச்சும், பெரிய கண்களின் மின்னல் வெட்டும் போன இடம் தெரியவில்லை.   சியாமளாவுக்கோ, `இனி என்ன?’ என்ற கேள்வி மட்டும் விஸ்வரூபம் எடுத்து, பயங்கரமாகத் தெரிந்தது. இப்படி அகாலமாக முடிவதற்கா அவ்வளவு இன்பம் நிறைந்த மணவாழ்வு கிட்டியது?   அடுத்த பத்து நாட்கள் நகர முடியாது நகர்ந்தன. வீட்டில் அசாதாரண மௌனம் நிலவியது.   அடுத்த அறிக்கை, `உள்நாட்டுப் பெண்களை மணந்தவர்கள் அவ்வப்போது குறுகிய வருகை மேற்கொண்டு, தம் மனைவி மக்களை பார்த்துப் போகலாம்!’ என்று சிறிது கருணையுடன் வெளிவந்தது.   “சதீஷ்! நீங்க திரும்பிப்போக விடமாட்டேன்!“ கணவனைக் கட்டிக்கொண்டு கதறினாள் சியாமளா. தன்னை மணந்த செயல் ஒரு குற்றமா? அதற்குத் தண்டனைபோல் மீண்டும் பிறந்த நாட்டில் ஏழ்மையிலேயே உழல, திருப்பி அனுப்பி வைக்கப்படுவார் என்ற நினைவே அவளை வாட்டியது.   தன் உடலைச் சுற்றியிருந்த அவளுடைய கரங்களை மெல்ல விலக்கினான் சதீஷ். “நான் திரும்பிப் போனா, அங்கே என்ன இருக்கு? எவ்வளவு படிச்சிருந்தாதான் என்ன! பசி, பட்டினிதான்! அங்கே நல்ல வேலை கிடைச்சிருந்தா, இங்கே எதுக்கு வந்து தொலைச்சிருக்கப் போறேன்!”   சியாமளா அவன் முகத்தையே பார்த்தாள். என்ன சொல்ல வருகிறான்?   “நல்லவேளை, நம்ப கல்யாணம் கோயில்ல நடந்திச்சு. இன்னும் பதிவு செய்யலே!”   அவள் திடுக்கிட்டாள். கல்யாணமே நடக்கவில்லை என்று சாதிக்கப்போகிறானா? அதற்காகத்தான் அவள் எவ்வளவோ வற்புறுத்தியும், அவளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லையோ? சியாமளாவின் முகம் போன போக்கைக் கவனிக்கும் மனநிலையில் இருக்கவில்லை அவன். அது தன்னுடைய வாழ்க்கைப்பிரச்னை மட்டுமே என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தான்.   “நாங்க ஏழைதான்! அதுக்காக, `வந்த இடத்திலே சன்னியாசிமாதிரி இருங்க!’ அப்படின்னா முடியுமா? ஒன்னைப் பிடிச்சுத்தான் கல்யாணம் செய்துக்கிட்டேன், சியாமளா. ஆனா, என் சுயநலத்துக்காக மத்தவங்க கஷ்டப்படணுமா?” “என்ன சொல்றீங்க?” ஈனஸ்வரத்தில் கேட்டாள் சியாமளா.   “நான் சம்பாதிச்சு அனுப்பற பணத்தாலேதான் எங்கப்பா, அம்மா, தங்கச்சிங்க எல்லாரும் நல்லா சாப்பிடறாங்க. தம்பிங்களும் பள்ளிக்கூடத்துக்குப் போக முடியுது. நான் திரும்பிப்போறதா இல்லே!”   சியாமளாவுக்குச் சற்று தெம்பு பிறந்தது. வந்த வேகத்திலேயே அது தொலைந்தது, அடுத்து அவன் கூறியதைக் கேட்டு.   “நாம்ப ஒண்ணா இருந்தா, ஏதாவது தகறாறு வரும். அதனால வேற வேலை தேடிக்கிட்டேன். வேற ஊரிலே!”   அவன் தன்னை விட்டுப் போகப்போகிறான்!   அந்த அதிர்ச்சியைத் தாங்கமுடியாது, அவளுடைய வாய் பிளந்தது. மூச்சு கனவேகமாக, இரைப்பதுபோல் வெளிவந்தது.   முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான். “நான் என்ன செய்யறது! எனக்கு வேற வழி தெரியலே!” மன்னிப்பு வேண்டும் தொனி.   சதீஷ் சற்றும் எதிர்பாராத ஒரு காரியத்தைச் செய்தாள் சியாமளா.   அவனைக் கையெடுத்துக் கும்பிட்டாள்.   “என்னையும் ஒரு பொண்ணா மதிச்சு ஏத்துக்கிட்டீங்களே, அதுவே போதும். நன்றின்னு வாய்வார்த்தையா சொன்னா நல்லாயிருக்காது. அப்பா மொதல்லேயே சந்தேகப்பட்டாரு, இந்த ஒறவு நிலைக்க முடியுமான்னு. ஆனா, கல்யாணம், கணவன், குடும்பம் எல்லாம் வேணும்கிற வெறிதான் அப்போ இருந்திச்சு எனக்கு. இப்போ..!” மேலே பேசத் தெரியாது விக்கினாள்.   குற்ற உணர்வும், வேதனையும் உலுக்க, “சியாமா!” என்று அவளை நெருங்கினான் சதீஷ்.   சரேலென விலகிக்கொண்டாள். “சொல்ல இன்னும் என்ன இருக்கு! என் வேதனையை அதிகப்படுத்தாதீங்க. ப்ளீஸ்! இப்பவே இந்த விட்டைவிட்டுப் போயிடுங்க! இனிமே வராதீங்க!” பெரிதாக அழ ஆரம்பித்தாள் சியாமளா.   அவள் கெஞ்சுவாள், இல்லை ஆத்திரப்படுவாள் என்றெல்லாம் எதிர்பார்த்து, எல்லாவற்றிற்கும் விடை தேடி வைத்திருந்தவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. தலை குனிந்த நிலையில், தனது சொற்ப உடைமைகளைத் திரட்ட ஆரம்பித்தான்.                               5. காலம் கடந்தபின்னே   நாள் பூராவும் அலுவலகத்தில் உழைத்துவிட்டு, அப்படியே ஆஸ்பத்திரிக்குப் போய் தலையைக் காட்டிவிட்டு, பஸ்ஸைப் பிடித்தாள் கல்யாணி. வீட்டில் காலெடுத்து வைத்தவுடன் சமையல்பாட்டைக் கவனித்தாக வேண்டும். கால்கள் கெஞ்சின. `இந்த வாழ்க்கை இன்னும் எத்தனை காலமோ!’ என்ற மலைப்பு எழுந்தது.   தெய்வாதீனமாகத்தான் அந்த விபத்து நிகழ்ந்திருக்க வேண்டும். என்ன, கொஞ்சம் பிசகிவிட்டது. சாகாமல், கோமாவுக்குப் போய்விட்டார், `உன்னை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடுவேனா?’ என்பதுபோல். தானும் உலகத்தார் என்ன சொல்வார்கள் என்று பயந்து, நாள்தவறாமல் அவரைப் பார்க்கப்போக வேண்டியிருக்கிறது.   யாரால் வந்த வினை இது? `ஆண்துணை’ என்று நம்பி, அம்மா தன் தம்பியை வீட்டிலேயே வைத்துகொண்டாளே! அந்த அறிவின்மையாலோ?   இடைநிலைப்பள்ளியில் அப்போதுதான் காலெடுத்து வைத்திருந்த கல்யாணிக்கு உடல் வளர்ச்சியின் தாத்பரியத்தைக்கூடப் புரிந்தகொள்ளாத வயது. தான் கண்டே அறியாத தந்தையின் இடத்தில் தாய்மாமனை வைத்தவளுக்கு அவனுடைய கொஞ்சல் அத்துமீறல் என்று முதலில் புரியவில்லை. சற்று விவரம் புரிந்ததும், “வேண்டாம், மாமா. அம்மாவுக்குத் தெரிஞ்சா திட்டுவாங்க,” என்று கெஞ்சத்தான் முடிந்தது.   `இது தப்பே இல்லைடி. `அம்மை நீ, அப்பனும் நீ, அன்புடைய மாமனும் மாமியும் நீ!’ அப்படின்னு அப்பாவுக்குச் சமமா இல்லே மாமாவை வெச்சிருக்காங்க!’ என்று நைச்சியமாகப் பேசினவனை நம்பத்தான் தோன்றியது அப்பருவத்தில்.    `பிற பெண்களைவிட எனக்கு அதிகமாகத் தெரியும்!’ என்ற சிறுபிள்ளைத்தனமான பெருமைகூட எழுந்தது. நாளடைவில், தன் இழப்பு எவ்வளவு பெரிது என்று புரியப் புரிய, குற்ற உணர்ச்சி ஓங்கி எழுந்தது. யாருடனும் பழகப் பிடிக்காது,  தானே ஒரு தனி உலகத்தைச் சிருஷ்டி செய்துகொண்டு, அதிலேயே அமிழ்ந்துபோனாள்.   அவள் போக்கு அம்மாவுக்குக் கலக்கத்தை உண்டாக்க, கூர்ந்து கவனித்தாள்.   “`அனுவைத் தூக்கி வளர்த்தவன்! அவள்மேல கொள்ளை பாசம்,’ அப்படின்னு எல்லார்கிட்டேயும் பெருமையா பேசுவேனேடா! இப்படிச் செய்துட்டியே!” என்று பொருமியவள், “அனு மைனர். நினைவிருக்கில்ல? நான் போலீசுக்குப் போனா, நீ கம்பி எண்ண வேண்டியிருக்கும். கண்காணாம எங்கேயாவது தொலை!” என்று கத்தினாள்.   அவன் தொலைந்தாலும், அவன் செய்கையின் பாதிப்பு விலகவில்லை. பள்ளிப்படிப்புக்குப்பின் மேலே படிக்க வசதி இல்லாமல் போனதும் நல்லதாகப் போயிற்று. மனம் ஒரு நிலையில் இருந்தால்தானே! இனியும் அம்மாவுக்குப் பாரமாக இருக்கவேண்டாம் என்று ஒரு வேலை தேடிக்கொண்டாள் கல்யாணி.   அவளுடைய அழகுக்காகவே அவளை மணக்க முன்வந்தார் லோகநாதன். சாதுவாக இருந்தார். அன்பைப் பொழியாவிட்டாலும், அவளைத் தன்போக்கில் விட்டிருந்தார்.   இரு குழந்தைகள் பெற்ற பின்னர், அந்த நல்லவரிடமிருந்து தன் ரகசியத்தை மறைக்க முடியவில்லை கல்யாணியால். அவன் கையால் மட்டுமின்றி, மனத்தாலும் அவளைத் தீண்டியிருந்தானே! சில நாடுகள், சில கலாசாரங்கள், வயது வந்தவர்களுக்கு அது இயற்கை என்று ஏற்கலாம். ஆனால், அதற்கு உடந்தையாக இருந்த காரணத்தால் எப்போதும் தன்னை ஆட்டுவிக்கும் குற்ற உணர்வை அவருடன் பகிர்ந்துகொண்டால், அது குறையாது?   தன் எண்ணங்களிலேயே அமிழ்ந்துபோன கல்யாணி, நின்ற பஸ் புறப்படும் சமயத்தில்தான் கவனித்தாள், அது தான் இறங்கவேண்டிய இடம் என்று. அவசரமாக மணியை அழுத்தியவளுக்கு டிரைவரின் வசவு உறைக்கவில்லை.   வீட்டுக்குள் நுழைந்ததும், “அப்பாவுக்கு இப்போ எப்படிம்மா இருக்கு?” என்று மரியாதை குறித்து உமா கேட்டபோது, எரிச்சல்தான் எழுந்தது. பெரி..ய அப்பா! தான் பெற்ற குழந்தைகளுக்காக என்ன செய்திருக்கிறார்? ஒரு நாளாவது அன்பாகப் பேசியிருக்கிறாரா? இல்லை, வெளியில் வாசலில் அழைத்துப்போய், அவர்கள் அறிவுத்திறனைப் பெருக்க முயற்சித்திருக்கிறாரா?   அவளுக்குப் பதிலாக சூள் கொட்டிவிட்டு, ஐஸ் பெட்டியைத் திறந்தாள். பயற்றங்காய் சற்றே வெளிறிய நிறமாக இருந்தது. நுனியில் வாடல். `இனிமே பயத்தங்கா, புடலை, வெண்டை மூணையும் ஒரே நாளில வாங்கக்கூடாது. ஃப்ரிட்ஜில வெச்சா வெறைச்சுப்போயிடுது!’ முணுமுணுத்தாள். `அலுத்துச் சலிச்சு வீடு வந்தா, இதையெல்லாம் சமைக்கிறதுக்குள்ளே உசிரு போயிடும்!’   அவளையுமறியாமல் எழுந்த எண்ணத்தால் அவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது. இன்று என்ன வந்துவிட்டது எனக்கு? `வெறைச்சுப்போய்,’ `உசிருபோய்,’ என்ற வார்த்தைகளாக வந்து விழுகின்றனவே! கணவர் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று அடிமனதில் எழும் எண்ணத்தின் தாக்கமோ? எந்தப் பெண்ணாவது கணவன் ஏன் இன்னும் சாகவில்லை என்று நினைப்பாளா?   உடனே அதற்கு மாற்று எண்ணம் எழுந்தது. `ஆமாம்! எல்லாப் பெண்களும் என்னைமாதிரிதான் காலமெல்லாம் அணு அணுவாகச் சாகிறார்களோ?’ கண்ணால் வெளிவரக்கூடாது என்று தடுத்த நீர் மூக்கால் வந்தது. உறிஞ்சினாள்.   “என்னம்மா? உடம்பு சரியில்லையா? நீங்க ரெஸ்ட் எடுத்துக்குங்க. நான் சமைக்கிறேன்!”   கையில் எடுத்த கத்தியைப் பலகையில் வைத்துவிட்டு, கல்யாணி நிமிர்ந்தாள். மனைவியாக இருந்தவள் நொடிப்பொழுதில் தாயாக மாறினாள். “ஏன் உமா? மத்தியானம் ஸ்கூல்லேருந்து வந்தது!  இன்னுமா யூனிஃபார்மை மாத்தலே?”   கலீரென்று சிரித்தாள் மகள். “ஹெல்ப் பண்றேன்னு வரேன். தாங்க்ஸ் சொல்லாம திட்டறீங்களே!”   கல்யாணிக்கும் சிரிப்பு வந்தது. அப்படி ஒரு சிடுமூஞ்சி அப்பாவுக்கு இப்படி ஒரு மகள்!   “எதை, எப்படி செய்யணும்னு சொல்லிக் குடுத்துட்டுப் போங்கம்மா. அப்பதான் அந்த தடியன், `இதெல்லாம் ஒரு சமையலா!’ன்னு நாக்குமேல பல்லுபோட்டு கேக்கறப்போ, `எல்லாம் அம்மாதான் சொன்னாங்க’ன்னு நான் தப்பிச்சுக்க முடியும்!”   “பயத்தங்காயை ஆவியில் வெச்சு எடு. அது இந்த ஜன்மத்திலே வேகாது!”   “முழுசாவா?”   தலையில் அடித்துக்கொண்டாள் தாய். “என்ன பொண்ணுடி, நீ! ஒன் வயசிலே எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு!”   சற்றும் விட்டுக்கொடுக்காமல் பதிலளித்தாள் உமா. “அதான் இவ்வளவு சீக்கிரம் இப்படி அலுத்துச் சலிச்சு, கிழவிமாதிரி ஆக்ட் பண்ணறீங்க. இன்னும் நாப்பது வயசுகூட ஆகலே! அமெரிக்காவில அம்பத்தேழு வயசான நடிகை ஒருத்தியை கவர்ச்சிக்கன்னின்னு கொண்டாடறாங்க!”   இவளிடம் வாய் கொடுத்தால் மீள முடியாது என்று எச்சரிக்கையானாள் கல்யாணி. “சுண்டு விரல் நீளத்துக்கு, இல்ல, அதில பாதியா நறுக்கி, ஒரு பாத்திரத்தில போட்டுக்க. குக்கர் அடியில மட்டும்தான் தண்ணி!”   “ஸ்டீம் பண்ணுன்னு சொன்னா, எனக்குப் புரியாதா?”   தெரிந்து வைத்துக்கொண்டே தன் வாயைப் பிடுங்கி இருக்கிறாள்! “அஞ்சு நிமிஷம் போதும். நீ பாட்டில அடுப்பிலே வெச்சுட்டு, நாவல் படிக்கப் போயிடாதே! தண்ணி வத்திப்போய், காய் தீஞ்சுடும்!” என்றபடி நகர்ந்தாள்.   `ஒங்களுக்கு நல்லதையே நினைக்கத் தெரியாது!’ என்று சொல்லவந்த உமா தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டாள். பாவம், அம்மா! என்றாவது கேட்கவேண்டும், `ஏம்மா இந்த மனிதரைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க?’ என்று.   அட, இளம் வயதில் விவரம் புரிந்திருக்காது. ஏன், இப்போது தான் இல்லையா? சற்றே உயரமாக, கம்பீரமாக எந்த ஆணைப் பார்த்தாலும் இன்னொருமுறை பார்க்க வேண்டும்போல இருக்கிறது. அதோடு, குரல் ஒரு அமிதாப் பச்சனைப் போலவோ, ஒரு சரத்பாபுவைப் போலவோ இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். அப்பாவிடமும் அந்தமாதிரி அம்மாவுக்குப் பிடித்த அம்சம் ஏதாவது இருந்திருக்க வேண்டும்.   அதுதான் போகட்டும், அம்மாவும் அப்பாவும் அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே சிரித்துப் பேசியதோ, ஒருவரையொருவர் சீண்டிக்கொண்டதோ கிடையாதே, ஏன்?   `நான் புத்திகெட்டுப்போய், அனு அப்பாவிடம் எல்லாத்தையும் சொல்லியிருக்கக் கூடாது!’ காலங்கடந்து தன்னை நொந்துகொண்டாள் கல்யாணி.   `மற்றவர் பாழ்படுத்திய பண்டத்தையா நான் சுவைத்தேன்!’ என்ற அருவருப்பு சுயபச்சாதாபத்தில் கொண்டுவிட, தன் வாழ்க்கையுடன் அவளுடையதையும் சேர்த்து அல்லவா நரகமாக்கிக்கொண்டார்!   “சமையல் ரெடி!” என்று உற்சாகமாகக் கூவியபடி வந்தாள் உமா. அதே சமயத்தில் தொலைபேசியும் அழைத்தது. எதுவும் மறுமொழி கூறாது, அதைக் கீழே வைத்துவிட்டு, வெறித்தபடி நின்றிருந்த தாயைப் பார்த்தாள் உமா.   “யாரும்மா?”   “ஆஸ்பத்திரியிலிருந்து!”   ஒரு நரக வாழ்க்கையின் முடிவு. எதிர்பார்த்ததுதான். உள்ளுக்குள் விரும்பியதும்கூட. ஆனால், திட்டவட்டமாகத் தெரிந்தபோது, மனதில் ஓர் அலாதி வெறுமை.   நீரில் மூழ்குமுன் தன் கடந்த காலம் முழுவதும் ஒருவனுக்குத் தோன்றுமாமே, அதுபோல அவள் வாழ்க்கையைக் கலக்கியிருந்தவர்கள் எல்லாரும் மாறி மாறித் தோன்றினர்.   எங்கு, எப்போது, யாரால் தவறு நிகழ்ந்தது?   `அப்பா இல்லாத பெண், பாவம்!’ என்று அம்மா அவளை குழந்தைத்தனம் மாறாமல், வெளி உலகமே தெரியாது வளர்த்திருந்ததாலா?   `வேலியில்லாத பயிர்’ என்று ஒருவன் அவளுடைய குழந்தைத்தனத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டதாலா?   நான் ஏன் அவன் கை என்மேல் பட்டதுமே, கூச்சல் போட்டு, ஊரைக் கூட்டவில்லை? தவறு என்மேல்தானோ?   இதெல்லாம்கூட பரவாயில்லை. நடந்ததை அவரிடம்வேறு சொன்ன முட்டாள்தனத்துக்கு யாரை நோவது!   தான் காலமெல்லாம் யோசித்தாலும், நடந்தது நடந்ததுதான் என்று தோன்ற, விரக்தி உண்டாயிற்று கல்யாணிக்கு.   “அப்பாவோட இருதயத்தையோ, கண்ணையோ மொதல்லேயே தானம் பண்ணியிருக்கலாம். இல்லேம்மா?”   “எல்லாமே காலம் கடந்துதான் நமக்குத் தோணும், உமா!” பெருமூச்சுடன் வந்தது பதில்.               6. சவடால் சந்திரன்   “ஒங்கப்பா செய்துட்டுப் போயிருக்கிற காரியத்தைப் பாத்தியாடா?” தலைவிரிகோலமாகத் தரையில் அமர்ந்திருந்த சாரதா கதறினாள்.   அவர்கள் குடும்பத்தைச் சோகத்தில் ஆழ்த்துவதற்கென்றே அப்பா தான் ஓட்டிப்போன பைக்கை அந்த லாரிமேல் மோதியிருக்கமாட்டார்தான். ஆனால், அம்மாவிடம் அதை எப்படிச் சொல்வது! சாமந்திப்பூ மாலையும் கழுத்துமாகப் படுத்திருந்தவரைப் பார்த்து அவனுக்கும் கோபம் வந்தது.   `எனக்கு ஒரே ஆசைதான். நீ பட்டம் வாங்கி, பிள்ளைங்களுக்குப் படிச்சுக்குடுக்கறதை என் கண்ணால பாக்கணும் சந்திரா!’   எப்படிப்பா அதை மறந்தீர்கள்? ராத்திரி பகலாக ஏன் டாக்சி ஓட்டி, உடம்பை வருத்திக்கொண்டீர்கள்?   அவரது உடல் நிலையைப்பற்றி சாரதா கரிசனப்படும்போதெல்லாம், `காடி சொந்தக்காரனுக்கு ஒரு நாளைக்கு நாப்பது வெள்ளி குடுக்க வேண்டியிருக்கு, சாரதா. சில நாள் வருமானம் பத்தாம, என் கைக்காசைப் போட்டு சமாளிக்கிறேன். நான் இப்படி ஒழைச்சாத்தான் சந்திரனுக்குக் காசு அனுப்ப முடியும். வீட்டிலே இருக்கிறமாதிரி அவன் சாயம்போன, கிழிசல் சட்டையையா போட்டுக்க முடியும்? மத்த பசங்க என்ன நினைப்பாங்க?’ என்று அவள் வாயை அடைத்துவிடுவார்.     மேனகாவைப்பற்றி வாய்விட்டுச் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தான். அது போன வாரம். இழவு வீட்டில் எப்படி கல்யாணப்பேச்சை எடுப்பது?   ஹாஸ்டலுக்கு மீண்டும் புறப்பட்ட மகனிடம், “அப்பா இல்லாம, வீடே சூனியமா இருக்குய்யா. நீயாவது அடிக்கடி வந்துட்டுப் போ!” கண்ணீருடன் விடை கொடுத்தாள் தாய்.   இன்னொரு பிரச்னையும் நினைவுக்கு வந்து இப்போது அவனை அலைக்கழைத்தது. இனியும் மேனகாவிடம் தன் குடும்பத்தின் உண்மை நிலையை மறைத்து, பெரியமனிதத் தோரணையில் நடக்க முடியாது.   “அம்மா! என்னால முந்திமாதிரி வாராவாரம் வரமுடியாது. பஸ்ஸுக்கு யாரு தண்டம் அழறது!” என்றான் முகத்தில் கடுமையை வரவழைத்துக்கொண்டு.   “சரிப்பா. நீ நல்லாப் படிச்சு, முன்னுக்கு வரணும். அதுக்காகத்தானே அப்பா அப்படி ராத்திரி பகலா ஒழைச்சு..!” மேலே பேசமுடியாமல், குரல் அடைத்துக்கொண்டது.   அம்மாவைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது சந்திரனுக்கு. படிப்பில்லாவிட்டால்தான் பெண்கள் எவ்வளவு பலகீனமாக ஆகிவிடுகிறார்கள்! எல்லாவற்றிற்கும் ஆண்களையே நம்பி வாழ்ந்து, அவர்கள் துணை இல்லாது போனதும், வேரற்ற மரம்போல!   “பாத்துக்குங்கம்மா,” என்று அர்த்தமில்லாமல் என்னமோ சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.   “நீ வந்துட்டுப்போய் ரெண்டு மாசமாயிடுச்சேய்யா! அப்பா போனப்போ வந்ததுதான்!” வாயெல்லாம் பல்லாக -- அதில் சில சொத்தை -- சாரதா மகனை வரவேற்றாள். அவள் முகம் சற்றுத் தெளிந்திருந்ததாகத் தோன்றியது அவனுக்கு. சற்று தெம்பு எழுந்தது. போகிறவர்கள் போனால், இருக்கிறவர்கள் தங்கள் பாட்டைக் கவனிக்க வேண்டாமா!   இந்தத் தடவையாவது மேனகாவைப்பற்றிய பேச்சை எடுத்துவிட வேண்டும் என்று நினைத்தபடி உள்ளே நுழைந்தான்.   வீடு முன்பைவிட சிறியதாகப் போய்விட்டது போலிருந்தது. மலேசிய நாட்டின் மையப்பகுதி என்று பெயர்தான்! நான்கடுக்கு மாடிக்கட்டடம்! அதில் ஒரே அறைகொண்ட பல வீடுகள், ஒவ்வொரு தளத்திலும்.   இதே கோலாலம்பூரில்தான் ஒவ்வொரு அறையிலும் குளிர்சாதன வசதிகள் பொருத்தியிருந்த பங்களாக்களில், ஒரு குடும்பத்துக்கு மூன்று, நான்கு கார்களுடன் வாழ்கிறார்கள் பலர்! `நம்மிடையே இப்படியும் குடியிருப்புகள் இருக்கின்றன!’ என்று யாராவது சொன்னால்கூட நம்ப மாட்டார்கள் அவர்கள்! கழிவும், குப்பையுமாக, அவ்வளவு பின்தங்கிப்போயிருந்தது அவ்விடம். சந்திரன் மூக்கைச் சுளித்துக்கொண்டான்.   குறிப்பிடத்தக்க கல்வியறிவோ, திறனோ இன்றி, சொற்ப காசுக்கு வேலை செய்பவர்கள், வேலையே செய்யாது எந்நேரமும் குடித்தே தம் அவலத்தை மறக்க நினைப்பவர்கள், தக்க வழிகாட்டலின்றி தீய நடத்தைகளில் ஈடுபடும் இளைஞர்கள் -- இவர்கள் மத்தியில் வாழ்ந்தும், தனக்கு ஒரு நல்ல வழியைக் காட்டியிருக்கிறார் அப்பா! அவரில்லாது வீடே வெறிச்சோடிப் போனதுபோலிருந்தது.   பன்னிரண்டு வயதானபோது, “ஒரு டி.வி. வாங்குங்கப்பா! என்று அவன் கெஞ்சலாகக் கேட்டபோது, “நீ படிச்சு, என்ன வேணுமோ வாங்கிக்க!’ என்றார் எப்போதுமில்லாத கடுமையாக.   `பாவங்க! ஆசையாக் கேக்கறான்! மாசாமாசம், தவணை முறையிலே..,’ என்று சிறிது பயத்துடன் ஆரம்பித்த மனைவியையும் அடக்கினார்: `நீ சும்மா இரு! படிக்கிற வயசிலே படிக்கணும்!’   `அவர் சொன்னதற்கு மேலேயே சாதித்துக் காட்டுகிறேன்!’ என்று அந்த இளம் வயதில் கறுவிக்கொண்டான். உதடுகள் இறுகின.   காலங்கடந்து புரிந்தது அப்பாவின் வார்த்தைகளிலிருந்த உண்மை.   “என்னம்மா, வீட்டிலே இத்தனை ஜாமானுங்க அடைச்சு வெச்சிருக்கீங்க? ஒடைஞ்ச நாற்காலியும், மேசையும்!” என்று புகார் செய்த மகனிடம், “எல்லாம் நீ படிச்சு, பெரியாளா வரணும்னு அப்பா ஆசை ஆசையா வாங்கினதுடா!” என்றாள் சாரதா, கெஞ்சலாக. “நம்ப வீட்டுக்கு யாராவது வந்தா, எங்க ஒக்காருவாங்க?” என்று தன் செய்கைக்கு நியாயம் கற்பிக்கப் பார்த்தாள்.   “தரையில ஒக்காரட்டும். நாம்ப லட்சாதிபதி இல்லேன்னு அவங்களுக்குத் தெரியாதா?”   அம்மாவின் முகம் போன போக்கைப் பார்த்து, தான் ஏன் இப்படி ஆகிவிட்டோம் என்று அவனுக்கே வருத்தமாக இருந்தது. அப்பாவின் நிலைமையால் குடும்பம் சீர்கெட்டிருந்தது என்னவோ உண்மைதான். அதற்காக தன் இயலாமையை இந்த அப்பாவி அம்மாமேல் காட்டுவது என்ன புத்திசாலித்தனம்?   தன் வார்த்தைகளால் ஏற்பட்ட பாதிப்பைக் குறைக்கும் முயற்சியில், “என்னோட படிப்பு முடிஞ்சதும் பாருங்களேன்! வேற வீட்டுக்கு ஒங்களைக் கூட்டிட்டுபோய், ராணிமாதிரி வெச்சிருக்கப்போறேன். மொதல்லே வாடகை வீடுதான். ஆனா, இதைவிடப் பெரிசா, நல்லா இருக்கும்”.   அம்மாவின் முகத்தின் இறுக்கம் குறையவில்லை.   “அப்புறம்.., மஸ்ஜிட் இண்டியாக்குப் போய் -- அங்கேதானே நிறைய நகைக்கடைங்க இருக்கு -- அங்கே போய், `ஒங்களுக்குப் பிடிச்சதை எல்லாம் வாங்கிக்குங்கம்மா,’ அப்படின்னு..!” என்று தொடர்ந்தபோது, தான் சொல்வதுபோல் செய்ய முடியுமா என்றெல்லாம் அவன் யோசித்துக் கொண்டிருக்கவில்லை. அந்தக் கனவுகளே அவனுக்கு நிறைவை அளித்தன.   அவனுடைய உற்சாகத்தில் பங்குகொள்ளாது, “எனக்கு இனிமே எதுக்குடா பவுன் நகைங்க?” என்று விரக்தியுடன் தன் விதவைக்கோலத்தை நினைவுபடுத்தினாள் சாரதா. “நாலுபேர் வாயில பூந்து வர்றதுக்கா?”   சந்திரனுக்குக் கோபம் வந்தது. “எனக்கு வசதி இருக்கு, நான் எங்கம்மாவுக்கு வாங்கித் தந்துட்டுப்போறேன்! மத்தவங்களுக்கு அதிலே என்ன பொறாமை?” என்று கத்தினான், என்னவோ அப்போதே பெரிய பணக்காரனாகி விட்டதுபோல.   “சாத்திரத்தை மதிக்க வேணாமா?”   “அதெல்லாம் சும்மா ஆம்பளைங்க போட்ட சட்டம்! அந்தக் காலத்திலே அவங்கதானே படிச்சவங்க! பொம்பளைங்களை அடிமையாவே வெச்சிருக்க, இப்படி ஆம்பளைங்களுக்குச் சாதகமாவே எல்லாம் சொல்லி வெச்சிருக்காங்க! ஒரு பொண்ணு பிறந்ததிலிருந்து அலங்காரம் பண்ணிக்கறா. நடுவிலே வந்த புருஷன் போயிட்டா, அவளும் சூன்யமா?” எப்போதோ கல்லூரி பேச்சுப்போட்டியில் தான் காரசாரமாக விவாதித்ததை உணர்ச்சியுடன் எடுத்துச்சொன்னான்.   சாரதாவின் கோடிட்ட முகத்தில் ஒரு புன்னகை.   “இப்போ எதுக்கு இந்தச் சிரிப்பு?” முறைத்தான்.   “ஒன்னைக் கட்டிக்கப்போற பொண்ணு குடுத்துவெச்சவன்னு நெனப்பு ஓடிச்சா, அதான்!”   “அவ பேரு மேனகா!” சமயம் பார்த்துச் சொன்னான்.   “யாரு?”   “ஒன்னைக் கட்டிக்கப்போற பொண்ணுன்னு சொன்னீங்களே, அவதான்! நான் ஒரு பேச்சுப்போட்டியிலே இப்படிப் பேசினதைப் பாத்து அவளே மயங்கிட்டா!” அந்த நினைப்பில் சந்தோஷமாகச் சிரித்தான்.   “அவங்க குடும்பம் எப்படியாப்பட்டது, சந்திரா?”   “சொந்தமா காடி ஓட்டிட்டு காலேஜூக்கு வருவா! அப்போ  பாத்துக்குங்களேன்!” அவளுடன் சேர்ந்து தானும் ஒரு லட்சாதிபதி ஆகிவிட்டதைப்போன்ற பெருமை அவன் குரலில்.   “நல்லா யோசிச்சுக்கப்பா. ரொம்ப பணக்காரிங்கறே! நம்ப குடும்பம் இப்போ இருக்கிற நிலைமைக்கு அந்தப் பொண்ணு ஒத்து வருமா? இப்போ போய் பொண்ணு கேட்டா, மதிப்பாங்களா!”   அவனையும் பயம் பிடித்துக்கொண்டது. எந்தக் காலத்தில் வேலைக்குப் போவது, பணக்காரனாவது! நூற்றில் ஒருவருக்குத்தான் ஆசிரியர் பயிற்சி கற்றுத் தேர்ந்தவர்களுக்கே உத்தியோகம் கிடைக்கிறதாம்!   தன் பயத்தை அப்பால் தள்ளிவிட்டு, “பெரிய படிப்பு படிச்சு, நல்ல வேலைக்குப் போனா, நானும் பணக்காரனா ஆயிட்டுப்போறேன்!” என்று தாயை சமாதானம் செய்தான்.   “மொதல்லே நல்லபடியா படிப்பை முடிக்கிற வழியைப் பாருய்யா! நான் சொல்ற பேச்சைக் கேளு. கல்யாண யோசனை எல்லாம் இப்போ வேணாம்!”   “நம்ப கல்யாணம் ஆனப்புறமும் இப்படித்தான் படிப்பு, படிப்புன்னு உசிரை விட்டுட்டு இருக்கப்போறியா, மகேஷ்?” செல்லமாகக் கோபித்தாள் காதலி.   “படிக்கிற காலதிலே காதல், கத்தரிக்காய்னு மனசை நழுவ விடக்கூடாதுன்னு எனக்கு ஞானோதயம் வந்திச்சா?” என்று வேடிக்கையாகப் பேசி நிலைமையின் இறுக்கத்தைத் தணிக்கப்பார்த்தான்.   “அதெல்லாம் எனக்குத் தெரியாது. இன்னிக்கே எங்கப்பாவைப் பாக்க வர்றே!”   சந்திரனுக்குச் சபலம் ஏற்பட்டது. ஒரு பெரிய மனிதரின் தயவு இருந்தால், சுலபமாக முன்னுக்கு வந்துவிட முடியாது?   அப்போது அவன் நினைத்திருக்கவில்லை, அவர்கள் குடும்ப நிலவரத்தைத் துருவித் துருவிக் கேட்டுவிட்டு, `என்ன தைரியத்திலே இந்த வீட்டுக்குள்ளே நுழைஞ்சே?’ என்று விரட்டியடிப்பார் அந்தப் `பெரிய’ மனிதர் என்று.     `மேனகாதான் சொன்னாள் என்றால், என் புத்தி எங்கே போயிற்று! அம்மா சொன்னதைக் கேட்டிருக்க வேண்டும். இப்படி சிறுபிள்ளைத்தனமாய்..!’ உடனே அம்மாவைப் பார்த்து, அவள் மடியில் தலைவைத்து அழவேண்டும் போலிருந்தது.   அம்மாவை அழைத்தான். வீட்டின் கீழே இருந்த பலசரக்குக்கடை முதலாளி நல்லவர். கடை சிப்பந்தியை விட்டு அம்மாவை அழைத்துவரச் சொல்வார். “நீங்க சொன்னது சரியாப்போச்சும்மா,” என்று அடைத்த குரலில் ஆரம்பித்தவன், நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னான். அதிகம் பேசினால் அழுதுவிடுவோமோ என்ற பயம் எழ, உரையாடலைத் துண்டித்தான்.   மகனுடைய குரலில் அவ்வளவு சோகத்தை, விரக்தியை என்றுமே கேட்டதில்லையே! சாரதா அதிர்ந்துபோனாள். `டி.வி. கிடையாது!’ என்று அப்பா சொன்னதும், உதட்டை இறுக்கிக்கொண்டு போனமகன். ஏற்கெனவே பிடிவாதக்காரன்! இப்போது அசந்தர்ப்பமாக ஏதாவது செய்துகொண்டுவிட்டால்?   `நீயும் என்னை விட்டுட்டுப் போயிடப்போறியாடா?’ என்று அலறியழுதவள், அவனைக் காண விரைந்து வந்தாள்.   “கண்ணு! கண்ணு!” பலர் பார்க்க தாய் அவன் கன்னத்தைத் தடவியது சந்திரனுக்கு வெட்கத்தை உண்டுபண்ணியது. “என்னம்மா, நீங்க!” என்று சிணுங்கினான்.   “நீ அழறமாதிரி கேட்டுச்சா! பயந்துட்டேண்டா!” என்றாள், படபடப்பு குறையாமலேயே.   “நல்ல அம்மா!” சிரிப்பை வரவழைத்துக்கொண்டான் மகன். “நான் என்னம்மா, தமிழ்ப்பட ஹீரோவா, காதல்லே தோல்வி வந்தா, குடிச்சே என்னை அழிச்சுக்க, இல்லே, மூளைகெட்டதனமா  தற்கொலை செஞ்சுக்க! எனக்கும் பொறுப்பு இருக்கும்மா. நான் யாரோட மகன்?” நெஞ்சை நிமிர்த்தினான். “படிப்பு முடியப்போகுது. வேலையில சேர்ந்து, முதல் மாசச் சம்பளத்திலே ஒங்களுக்கு நகை வாங்கிக் குடுக்கணும். பெரிய வீட்டிலே குடிவைக்கணும். இதெல்லாத்தையும் விட்டுட்டு, நான் ஏன் சாகப்போறேன்!” பழக்கமாகிப் போய்விட்ட சவடால்தனம் இப்போது அம்மாவைச் சமாதானப்படுத்த கைகொடுத்தது.   ஒரு மணி நேரத்துக்குமுன், ஒரு புட்டி நிறைய இருந்த தலைவலி மாத்திரைகளைத் தான் முழுங்க இருந்தபோது, `நீ என்னடா, தமிழ்ப்பட ஹீரோவா, காதல்லே தோல்வி வந்தா, குடிச்சே ஒன்னை அழிச்சுக்க, இல்லே, மூளைகெட்டதனமா  தற்கொலை செஞ்சுக்க! ஒன்னையே நம்பிக்கிட்டு இருக்கிற ஒங்கம்மாவைக் கொஞ்சமாவது நினைச்சுப் பாத்தியா? முட்டாள்!’  என்று ஏளனம் செய்தபடி கடிந்து, அதைப் பிடுங்கிய நண்பன் மனக்கண்முன் தோன்றிச் சிரித்தான்.                                                       7. இந்தப் புருஷாளே இப்படித்தான்!     “அக்கா! ஜானவாசம், ஊஞ்சல் எதுவுமே வேண்டாம்னுட்டாராமே மாப்பிள்ளை!” அத்தையிடம் முறையிட்டாள் அம்மா.   சற்றுத் தூரத்தில் பாயில் அமர்ந்து பட்டுப்புடவைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்த மணப்பெண் ராதா காதைத் தீட்டிக்கொண்டாள். அனுபவம் முதிர்ந்த அத்தை அதற்கு என்ன பதில் சொல்லப்போகிறாள்?   “அத்தனைக்கத்தனை செலவு மிச்சம்னு நெனச்சுக்கோடி விசாலம்!” என்று ஆறுதல் அளித்துவிட்டு, “நம்பாத்திலதான் இது மொதல் கல்யாணம்! மாப்பிள்ளை எல்லாத்தையும் ஆண்டு அனுபவிச்சவரோன்னோ!” என்று ஒரு கசப்பான செய்தியை நினைவுபடுத்தினாள் .   முப்பது வயதை எட்டிவிட்ட தனக்கும் ஒருவர் வாய்க்கப்போகிறார்  என்று ஆனந்த வெள்ளத்தில் நீந்திக்கொண்டிருந்த ராதாவுக்குத் திடீரென்று மூச்சு முட்டியது.   `எளையாளா வா(ழ்)க்கப்பட்டா என்ன? எனக்கும் அப்பாவுக்கும் முழுசா பதினோரு வயசு வித்தியாசம்! இந்த மாப்பிள்ளைப்பையன்  ஒன்னைவிட நாலே வயசுதான் பெரியவர்! குழந்தை குட்டியும் கிடையாது!”   ஏதேதோ சொல்லி, அம்மா அவளைக் கரைத்திருந்தாள். “மூத்தாளோட ரெண்டே வருஷம்தானாம் குடித்தனம். ஒன்னைப் பாத்ததும்தான் ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கவே தோணித்தாம்! பொண் பாக்க வரச்சே அவாக்கா சொன்னா!” குரல் கெஞ்சலாக ஒலித்தது.   தன்னைத் தேடி வரவும் ஆளில்லாமல் போகவில்லை என்று அவள் அடைந்த பூரிப்பு விரைவிலேயே அமுங்கிப்போயிற்று, எண்ணையிலிருந்து எடுக்கப்பட்ட பூரிபோல்.   “அந்தப் பழிகாரி, அதாண்டி, அல்பாயுசில போனாளே ஒன் மூத்தா, அவ பேரு சுதாவாம். அப்படியே ஒன்னை உரிச்சு வெச்சமாதிரி இருப்பாளாம் -- சாட்டைமாதிரி தொங்கற பின்னலும், எள்ளுப்பூபோல மூக்குமா! ஏதோடி, நீ பொறுமையா காத்திண்டு இருந்தது வீணாப்போகலேடிம்மா!” அத்தை மங்களம் இவ்வளவு விவரமாகச் சொல்லாமலே இருந்திருக்கலாம்.   ராதாவுக்கு முதல் இடி அதுதான். வயது வித்தியாசம் சரிதான், ஆனால் அனுபவம்?   கல்யாண பரபரப்பில் அந்த அதிர்ச்சி மங்கிவிட்டிருந்தது. இப்போது அம்மா அதை உசுப்பி விட்டுவிட்டாள்.   `எனக்கு இது முதல் கல்யாணம்தானே? என் மனநிலையை, உற்சாகத்தை அவர் எப்படிப் புரிந்துகொள்ளாமல் போகலாம்?’ என்ற  சிறு கோபம் வந்தது. `சாந்தி முகூர்த்தம்கூட வேண்டாம்னுடுவாரா, பாக்கறேன்!’  என்று விளையாட்டாய் கறுவிக்கொள்கையில் இதழ்களில் புன்முறுவல் நெளிந்தது.   சிறுவர்களுக்குக்கூடப் புரிகிறமாதிரி முதலிரவு காட்சிகளை விளக்கும் புண்ணியத்தைக் கட்டிக்கொண்ட தமிழ்ப்படங்களை நினைத்துக்கொண்டபோது ராதாவுக்குச் சிரிப்பு சிரிப்பாக வந்தது. அப்படித்தானே இன்றிரவுக்காக அந்த அறையை அலங்கரித்திருப்பார்கள்? என்ன மலர்களெல்லாம் உபயோகித்திருப்பார்கள்? மல்லிகை, ரோஜா, சாமந்தி? வாசனை இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அழகாகத்தானே இருக்கிறது என்று வண்ண வண்ணமாக ஆர்கிட் பூக்களைப் பரப்பியிருப்பார்களோ, படுக்கையில்?   நினைவு எங்கோ போக, நாணம் மிகுந்தது ராதாவுக்கு. சீ! இது என்ன வெட்கங்கெட்டத்தனம்!   நாத்தனார் உடன்வர, சகல அலங்காரங்களுடன் நடந்தாள். ஆர்வத்தில் சற்று வேகமாகவே நடக்கிறோமோ? எண்ணப்போக்கு நாணத்தை உண்டாக்க, கால்கள் பின்னிக்கொண்டன. புன்முறுவலுடன் அவளை மெல்ல இடித்தாள் நாத்தனார். “கதவை உள்ளே தாப்பா போட்டுக்கோ!” என்று கிசுகிசுத்தாள்.   வெளியில் ஆரவாரம் எதுவும் இல்லை. அருவருப்பு ஊட்டும் வகையில் தோழிகள் உச்சஸ்தாயியில் சிரிப்பதெல்லாம் படங்களில் மட்டும்தானோ!   மெல்ல தலைநிமிர்ந்தாள். தவறான அறைக்குள் நுழைந்துவிட்டோமா? சுத்தமாக ஒரு அலங்காரமும் இல்லை.   “வா, ராதா!” சிறிதும் தயக்கமில்லாது அவளை அழைத்தான் அவளது கணவன்.   மீண்டும் அவள் பார்வை அந்த அறையை அளவெடுத்தது.   அதைப் புரிந்துகொண்டவனாய், “என்னடா, பால், பழம், பூ எதுவுமே இல்லையேன்னு பாக்கறியா? நாந்தான் அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்னு அடிச்சுச் சொல்லிட்டேன். எதுக்கு வீணா, பழைய ஞாபகத்தையெல்லாம் கிளறணும்!”   `பழைய ஞாபகம்!’   இரண்டு வருடங்களில் மொத்தம் எவ்வளவு இரவுகள்? வேண்டாத கணக்கு எழுந்தது. எதிர்பாராத அதிர்ச்சியால் மயங்கி விழப்போனாள்.   விரைவாக எழுந்தவன் அவளைப் பற்றிக்கொண்டான். “என்னம்மா?” அந்தக் குரலில் சத்தியமாக காதல் இல்லை. புதிய வேகம்? ஊகும்! வெறும் அனுதாபம் மட்டும்தான்.   “தலை சுத்திப்போச்சா? நாளெல்லாம் ஹோமப்புகையில ஒக்காந்திருந்தது! அப்படித்தான் இருக்கும்!”   `ஐயோ! இப்படி எல்லாத்தையும் தெரிஞ்சு வெச்சிண்டிருக்காப்போல பேசாதீங்கோளேன்!’ என்று அலற வேண்டும்போல இருந்தது ராதாவுக்கு.   “தலைவலி மாத்திரை வேணுமா?”   `அந்தக் கசப்பைவேற முழுங்கணுமா?’ மறுத்துத் தலையாட்டினாள்.   “அப்போ சரி. நன்னா தூங்கு!” அறைக்கதவைத் திறந்துகொண்டு வெளியே போனவனையே வெறித்தாள் ராதா. கற்பனைக்கும், உண்மை நடப்புக்கும் இவ்வளவு வேறுபாடா இருக்கும்!   மறுநாள் காலை ராதா கண்விழித்தபோது, நல்ல வெயில் வந்திருந்தது. அவசரமாக எழுந்து, சற்றே கசங்கியிருந்த மெத்தை உறையைச் சீர்படுத்தியபோது, அழுகை வரும்போல இருந்தது. கட்டுப்படுத்திக்கொண்டு வெளியே வந்தாள். நாத்தனார் தயாராகக் காத்திருந்தாள்.   “`அவளை எழுப்பாதேக்கா. ரொம்ப ஓய்ஞ்சு போயிட்டா’ன்னு கிருஷ்ணன் சொன்னான்!” கண்ணைச் சிமிட்டினாள் விஷமமாக. “அப்பாடி! ஒரே நாளிலே என்ன கரிசனம்!”   அதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியாது, தலையை அதீதமாகக் குனிந்துகொண்டாள் ராதா.   தனிமையில் அம்மாவின் பேச்சோ கண்டனமாக ஒலித்தது. “ஏண்டி? இவ்வளவு நேரமா தூங்குவே, ஒரு பொண்ணு? ஒங்க புக்காத்துக்காரா என்ன நினைச்சுப்பா? பொண்ணை சரியா வளக்கலேன்னு என்னைத்தானே குத்தம் சொல்வா?”   “நீ என்ன விசாலம்! கொழந்தைக்கு கால் கடுத்துப்போயிருக்கும்!” என்று அவளுக்கு வக்காலத்து வாங்கினாள் மங்களத்தை. அதே மூச்சில், “ஏண்டா கண்ணா? மாப்பிள்ளை கோபதாபம் இல்லாம இருக்காரா?” என்று அவளை விசாரித்தபோது, ராதாவுக்கு அழுவதா, சிரிப்பதா என்று புரியவில்லை. கோபமாவது, தாபமாவது!   “மங்களத்தை! வாங்கோ, வாங்கோ!”   அதற்கு விடையாக, உள்ளே நுழைந்தவுடனேயே, “மூக்கும் முழியுமா இருப்பியேடிம்மா! என்னடி இப்டி பல்லும் பவிஷுமா போயிட்டே!” என்று அங்கலாய்த்தாள் அத்தை.   அந்தப் பரிவில் உருகிப்போன ராதா தன் மனதிலிருந்ததை -- தன் ஆசைக்கனவுகள், அவை நொறுங்கிய விதம், அருவமாக இருக்கும் சுதாவுடன் தான் போட்டிபோட்டு ஜெயிக்க முடியுமா என்ற அவநம்பிக்கை, அச்சம் -- எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தாள்.   சற்று யோசித்துவிட்டு, முதியவள் பேசினாள்: “ரெண்டாந்தாரம்னு தெரிஞ்சே கழுத்தை நீட்டிட்டு,  இப்போ அழுது என்ன பண்றது!  நாளைக்கே நீ செத்துவெச்சா..!”   “அத்தை!” என்று அலறினாள் ராதா.   “அட, ஒரு பேச்சுக்குச் சொல்றேண்டி. அதுக்குள்ள, தொங்கற நூலை எம்பி எம்பிப் பிடிக்கிற பூனைக்குட்டிமாதிரி குதிக்கறியே!” என்று செல்லமாகக் கடிந்துவிட்டு, “நான் என்ன சொல்ல வந்தேன்னா.., அதான்,” கனைத்துக்கொண்டாள். “ஒனக்கே ஒண்ணு ஆச்சுன்னு வை. ஒங்காத்துக்காரன் நாலே நாள்ல ஜம்ஜம்னு இன்னூரு கல்யாணம் பண்ணிண்டு..,” என்று சொல்லப்போனதை முடிப்பதற்குள் ராதா புரிந்துகொண்டாள்.   தான் இறந்தாலும், தன்னைப் பிறர் மறந்துவிடக்கூடாதே என்ற பதைப்பு எல்லாரிடமும் இருக்கிறது. தான் செய்தது சரிதானோ என்ற குற்ற உணர்வும், மறைந்தவளுக்குத் துரோகம் செய்கிறோமோ என்ற பதைப்பும் அவருக்கு மட்டும் இருக்காதா!   இந்த உண்மை புரியாமல், என்னமோ, தான் ஓயாது படிக்கும் காதல் நவீனங்களிலும், தமிழ் திரைப்படங்களிலும் வரும் கதாநாயகியைப்போல் கனவுகளை வளர்த்துக்கொண்டு, இவரும் ஒரு கமலஹாசன், ஒரு சூர்யாவைப்போல கண்களிலேயே காதலைக் காட்டுவதில்லையே என்று குறைப்பட்டுக்கொண்டது தன் முட்டாள்தனம்! கோடிக்கணக்கிலே சம்பளம் வாங்கினால்தான் அதெல்லாம் முடியும் போலிருக்கிறது!   “ஏண்டிம்மா! என்னதான் ஆத்திலே இருந்தாலும், பகல்லேயும் நைட்டிதானா! புதுசா கல்யாணமானவளா லட்சணமா, புடவை கட்டிக்கோ. ஆம்படையான் கண்ணுக்கு எப்பவும் அழகா, லட்சணமா இருக்கணும். இதெல்லாம் மத்தவா சொல்லியா தெரியணும் நோக்கு!”   `புடவை’ என்ற வார்த்தை காதில் விழுந்ததும், ராதாவின் நினைவு எங்கோ தாவியது.   `இந்த ரெண்டு புடவையில எதைக் கட்டிக்கட்டும்?’ எப்படியாவது கணவனுடன் நெருக்கத்தை உண்டாக்கிக்கொள்ள வேண்டுமென்ற துடிப்பு அவளுக்கு.   `ஏதோ, ஒனக்குப் பிடிச்சதை கட்டிக்கோயேன்!’ அசிரத்தையாக வந்தது கிருஷ்ணனின் பதில்.   `பாத்து ரசிக்கப்போறது நீங்கதானே!’ கண்களிலேயே கிறக்கத்தைக் காட்டினாள்.    அசந்தர்ப்பமாக, `சுதாவும் இப்படித்தான்!’ என்று சொல்லிவைப்பான். `சுயம்மா யோசிக்கத் தெரியாதா பொண்களுக்கு?’   அத்தையின் குரல் அவளைப் பழைய கசப்பிலிருந்து மீட்டு வந்தது. ”ஏண்டி கண்ணா? மாப்பிள்ளை ஆசை ஆசையா ஒன்னை மூக்குத்திக்கச் சொன்னாராம். நீ மாட்டவே மாட்டேன்னுட்டியாமே!”   வேறு யார், நாத்தனார்தான் கனகாரியமாக வத்தி வைத்திருப்பாள்! ராதா உதட்டைச் சுழித்தாள்.   “ஆத்திலேயே வைரபேஸரி இருக்காமே! ஒனக்கென்னடி, கசக்கறதோ?”   எரிச்சலுடன், “அது அவளோடது, அத்தை. என்னை சுதாவா மாத்தப் பாக்கறார்,” என்றவள், அதற்குமேலும் தாளமுடியாது, “அது என்னால முடியாது. நான் ராதாதான். சுதா இல்லே!” என்றுவிட்டுக் கதறி அழுதாள்.   “குளிக்காம இருக்கியாம். இப்ப என்ன மூணு மாசமா? இந்தச் சமயத்திலே இப்படித்தான் எல்லாத்துக்கும் கோபமும் அழுகையும் வரும்! விடு. புள்ள பெத்தா எல்லாம் சரியாப் போயிடும்!” அவளுடைய உணர்ச்சிக் கொந்தளிப்புக்கும் ஒரு வியாக்கியானம் வைத்திருந்தாள் அத்தை. “ஒனக்குப் பிடிக்குமேன்னு, வெண்ணையைக் காய்ச்சி,  மைசூர்பாகு கெளறிண்டு வந்தேன். இந்த சமயத்திலே பிடிச்சதை எல்லாம் சாப்பிட்டுடணும். அப்போதான் கொழந்த கொறையில்லாம பொறக்கும்!” அத்தையின் வாக்கு பலித்தது.   கடைசியில், சுதா செய்ய முடியாத ஒன்றைத் தான் செய்துவிட்டோம்! அவருக்கு வாரிசைக் கொடுத்துவிட்டோம்! ராதாவுக்குப் பெருமையாக இருந்தது.   பாபு பிறந்தபின், கிருஷ்ணன் சுதாவைப்பற்றிப் பேசுவது நின்றுபோனது. குழந்தையே உலகம் என்றிருந்தான்.   அந்த ஆனந்தமும் நிலைக்கவில்லை.   ரம்புத்தான் பழத்தை ஏன் முழுசா வாயில போட்டுண்டான்?     அது அவன் தப்பில்லையே! கொட்டை தொண்டையில் சிக்கிக்கும்னு புரியற வயசா அது!   குழந்தை சத்தம் போடாம இருக்கானேன்னு வந்து பாத்திருக்க வேண்டாம்? அப்படி என்ன கதை படிக்கிற கெட்ட வழக்கம்!   குற்ற உணர்ச்சியில் உழன்ற ராதாவின் துயரம் ஓயவேயில்லை.   “என் தங்கமே! இதெல்லாம் நம்ப கையில இல்லேடி. குழிப்பிள்ளை மடியிலேன்னு சொல்வா. அடுத்த வருஷம் பாபுவே வந்து பிறப்பான், பாரு!” என்ற மங்களத்தையின் ஆறுதல் பேச்சு அப்போது அவளுக்குச் சமாதானத்தை அளிக்கவில்லை. ஆனால், கோபு பிறந்ததும், அந்த வீட்டில் மறைந்த மகிழ்ச்சி மீண்டும் தலைதூக்கியது.   “ஆறு மாசம்தான் ஆறது! அதுக்குள்ளே இதுக்கு எத்தனை விஷமம்கிறேள்! பாலைக் கலக்கிண்டு வந்து பாக்கறேன், இது சோஃபா அடியில ஒளிஞ்சிண்டு சிரிக்கிறது!” என்று சிரித்துவிட்டு, “பாபுவும் இப்படித்தானே பண்ணுவான்!” என்று முடித்தவள் சட்டென நிறுத்தினாள்.   எங்கோ அடிக்கடி கேட்டாற்போல இருந்தது. கோபுவின் ஒவ்வொரு செயலிலும், அசைவிலும் மறைந்த பாபுவைக் கண்டு, அவனை இழந்த சோகத்தை மறக்க நினைக்கிறதா தன் நொந்த மனம்?   இதையே கணவர் செய்தபோது, தன்னால் ஏன் அதைப் புரிந்து, ஏற்க முடியவில்லை?   “என்ன யோசனை, ராதா?”   நனவுலகிற்கு வந்தாள். “என்னமோ நெனச்சுண்டேன். நான் மூக்கு குத்திக்கணும்னு ஆசையா கேட்டேளே! இன்னிக்கு பத்தர் கடைக்குப் போலாமா?”   அவளை அதிசயமாகப் பார்த்தான் கிருஷ்ணன். “எதுக்கு? ஒண்ணும் வேண்டாம். ஒன்னை இப்பிடியே பாத்துப் பழகிப்போயிடுத்து!”   ராதாவுக்கு ஏமாற்றமாக இருந்தது.   நான் செத்தாலும், ஒண்ணு, ரெண்டு வருஷத்திலேயே என்னை மறந்துடுவாரோ?   சே! இந்த புருஷாளே இப்படித்தான்! ரொம்ப மோசம்!                       8. டான்ஸ் டீச்சர்   டான்ஸ் டீச்சர் சுந்தராம்பாள் மேடையே இல்லாமல் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தாள்.   “யார்தான் விமரிசனம் எழுதறதுன்னு ஒரு இது..,” சரியான வார்த்தைக்காகச் சற்று யோசித்தாள். ஆத்திரத்தில் ஒன்றும் பிடிபடாததால், அதையே திருப்பிச் சொன்னாள். “..ஒரு இது வேண்டாம்? நம்ப மாணவிங்களைக் குறை சொல்ல இவன் யாருங்கறேன்! லட்சக்கணக்கான பேர் படிக்கிற தினசரியிலே இப்படி பப்ளிக்கா எழுதியிருக்கான் அந்த.. அந்த..,” பிசாசு என்று வாய்வரை வந்ததைச் சிரமப்பட்டு விழுங்கினாள்.   அவள் தானே அரற்றிக்கொண்டிருந்தாலும், `யாருக்கு வந்த விருந்தோ!’ என்பதுபோல் கண்டும் காணாமல் அமர்ந்திருந்த பசுபதியின் காதுகளில் அந்த வார்த்தைகள் விழத்தான் செய்தன.   “நான் சரியாச் சொல்லிக்குடுக்காமதான் இந்த இருபது  வருஷமா நூத்துக்கணக்கான பொண்ணுங்க எங்கிட்ட வந்து கத்துக்கிட்டுப் போனாங்களா! எத்தனை சலங்கை பூசை, எத்தனை அரங்கேற்றம்!” என்று பொருமினாள்.   வசதி குன்றியவர்களின் குடியிருப்பு ஒன்றில், நான்கு வகுப்புகளுக்கு ஐந்து ரிங்கிட் என்று மிக மலிவாக கற்றுக்கொடுக்கும் ஒருத்தியைப்பற்றி அவள் கேள்விப்பட்டிருந்தாள்.   தான் அவளைவிட ஒரு படி மேல் இல்லையோ? சில மாதங்களாவது கற்றிருக்கிறோமே! அந்த அறிவையும், திரைப்படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கற்றிருந்ததையும் வைத்துக்கொண்டு, துணிவாக ஒரு நடனப்பள்ளி ஆரம்பிக்கும் சாமர்த்தியம் எத்தனை பேருக்கு வரும்!   நாட்டியம் பயில வந்த சிறுமிகளின் பெற்றோரிடம் `நீங்கள் புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும், இப்படி ஒரு தாள ஞானம் மிகுந்த மகளைப் பெற!’ என்று தேனொழகப் பேசிப் புகழ்ந்து தள்ளியதால்தான் சுந்தராம்பாளுக்கு இத்தனை செல்வாக்கு என்பது அவள் கணவருக்குத் தெரியாததல்ல.   ஏதாவது கோயிலில் பண்டிகை காலங்களில் நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய வருகிறவர்களிடம் பணிவுடன் பேசுவது எப்படி என்பதையும் கலையாகவே கற்றிருந்தாள்.   முறையாக, பன்னிரண்டு ஆண்டுகளுக்குமேல் நாட்டியம் கற்றுத் தேர்ந்த சிலரும் நாட்டில் இருந்தனர். நன்கு படித்து, நிரந்தரமான வருமானம் கொண்ட உத்தியோகத்தில் இருந்ததாலோ, அல்லது மேடைகளில் ஆட மாணவிகளை அழைத்துச் செல்கையில் ஆண்களுடன் பழக வேண்டிவரும், அதனால் குடும்பத்தில் விரிசல் ஏற்படுமே என்று பயந்தோ, அதைத் தொழிலாக வைத்துக்கொள்ளாதது சுந்தராம்பாளுக்குச் சௌகரியமாகப் போயிற்று.   `எங்க குடும்பத்திலேயே மொதமொதலா சலங்கை கட்டிட்டு மேடை ஏறப்போறது எங்க மகதான்! ஒங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலே, டீச்சர்!” என்று நெகிழ்ந்துபோன தந்தை இரண்டு, மூன்றிடங்களில் சூபர் மார்க்கெட் வைத்திருந்தார் என்பது அவளுக்குத் தெரியும். குருதட்சணையாக அவள் கேட்ட ஐயாயிரம் ரிங்கிட் அளிப்பதற்கு அவர் சிறிதும் தயங்காதது அவளது தைரியத்தை அதிகரிக்கச் செய்தது.   திரைப்படங்களில் ஒலித்த பாடல்கள் சில இந்தியக்கடைகளில் கிடைத்தன. `ரெகார்டு டான்ஸ்!’ என்று யாராவது பெயர் கட்டிவிடப்போகிறார்களே என்று, திரைப்படங்களில் வந்த நடிகைகள் அணிந்தமாதிரியே ஆடைகள் தயாரித்திருந்தாள்.   இவ்வளவெல்லாம் பிரயாசைப்பட்டும், `நாட்டியம் கற்றுக்கொடுக்க உனக்கு என்ன தகுதி?’ என்று யாராவது கேட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயம் சுந்தராம்பாளுக்கு உள்ளூர இருந்தது.   ரிங்கிட்டில் கிடைத்த பணத்தை ரூபாயாக மாற்றிக்கொண்டு, தாய்நாட்டுக்கு (அவளுடைய தாய் விட்டுவந்த மண்ணுக்கு) பயணமானாள். அந்தக் கொள்ளைப்பணத்தில் அவள் கேட்ட பட்டத்தைத் தர பல சபாக்கள் தயாராக இருந்தன. இருப்பதற்குள் குறைந்த செலவுக்கு ஒப்புக்கொண்ட சபாவைத் தேர்ந்தெடுத்தாள்.   `ஒங்களுக்கு எதுக்குங்க வீண் சிரமம்! நானே எல்லாம் தயாரிச்சுக்கிட்டு வரேன்!’ என்றாள். இன்ன பட்டம் இன்னாரால் இன்ன தேதியில் இவருக்குக் கொடுக்கப்பட்டது என்ற விவரங்களை உள்ளடக்கிய நகைப்பெட்டிமாதிரி ஒன்றைத் தயாரிக்கத் தீர்மானித்தாள். அதைத் திறந்தால், இந்த விவரங்கள் எல்லாம் தங்க எழுத்தில் ஜொலிக்கும். பார்ப்பவர்கள் மயங்குவார்கள் என்று கணக்குப்போட்டாள்.   தொடர்ந்து, அந்த சபாவில் தன் `சீனியர்’ மாணவிகள் இருவரின் நாட்டிய நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்தாள்.   `பெரிய இடம்பா! பாத்து எழுதுங்க!’ என்று ஏற்பாட்டாளர் பயமுறுத்த, `எதற்கு வம்பு!’ என்று அஞ்சியவர்கள்போல், `நாட்டிய உடைகளுக்காக நிறையச் செலவழித்திருக்கிறார்கள்!’ என்று மட்டும் ஒரே ஒரு தினசரியில் வெளியிட்டிருந்தார்கள்.   அகமகிழ்ந்துபோன சுந்தராம்பாள் இரண்டு கிலோ பால்கோவா வாங்கி அனுப்பினாள் அந்த விமரிசகர் வீட்டுக்கு.   வெற்றி வாகை சூடிய மன்னன்போல் முகமெல்லாம் சிரிப்பாக, இனி தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற கர்வத்துடன் திரும்பியவள், முதல் வேலையாக, எல்லா தினசரிகளுக்கும் பேட்டி கொடுத்தாள்.   தினசரிகளில் மட்டும் சும்மாவா போடுவார்கள்! `கட்டட வேலைக்குக் கொஞ்சம் குடுத்துட்டுப் போங்க!’ என்று அவரவரும் கேட்க, அந்தச் செலவை ஈடுகட்ட ஒரு அரங்கேற்றத்தையே நிகழ்த்திக் காட்டினாள். அதற்கான விமரிசனத்தையும் ஒருவர்மூலம் எழுதி வாங்கி, பிரசுரம் கண்டதும், `இன்னிக்கு பேப்பரில பாத்தீங்களா? எங்க நிகழ்ச்சியை எவ்வளவு புகழ்ந்து எழுதியிருக்காங்க!’ என்று தம்பட்டம் அடித்துக்கொண்டாள்.   அவளுக்கு அடுத்த வீடு அரசியலில் ஒரு முக்கிய புள்ளியினுடையது என்று தெரிந்ததும், தன் அதிர்ஷ்டத்தை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை சுந்தராம்பாளால்.   தன் வீட்டு சமையல்காரரை விதவிதமான பட்சணங்கள் செய்யச்சொல்லி, அந்த வீட்டு அம்மாளுக்குக் கொண்டுபோய் கொடுத்து, அவளை சிநேகமாக்கிக்கொண்டாள்.   அந்த சிபாரிசில், அரசாங்க நிகழ்ச்சிகளில் ஆட நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. அம்மாதிரியான கொண்டாட்டங்களில் யாரும் நடனத்தைப் பார்க்காது, பக்கத்திலிருந்த பிரமுகரிடம் பேசுவதிலும், வகைவகையான உணவுப்பண்டங்களைச் சாப்பிடுவதிலுமே கவனமாக இருந்துவிட்டது பெரிய சௌகரியமாகப் போயிற்று. அவர்கள் சிரித்த முகத்துடன் எல்லாரையும், எல்லாவற்றையும் பாராட்டுவதே முன்னேறும் வழி என்ற பேருண்மையை அறிந்து வைத்திருந்தவர்கள். `Quite nice, eh?”  என்று பக்கத்திலிருப்பவர்களிடம் சிலாகித்து, நல்ல பெயர் தட்டிக்கொண்டு போனார்கள். அத்துடன், பாரம்பரிய இந்திய நடனங்களைப்பற்றி எதுவுமே அறியாதவர்கள். தெரிந்தால் மட்டும், உண்மையைச் சொல்லி இருப்பார்களா, என்ன!   பிரபலமாக ஆயிற்று அவளது நடனப்பள்ளி. சில வருடங்களிலேயே, ஒரு பெரிய பங்களா வாங்கமுடிந்தது. இந்த சமயத்தில்தான் அப்படி ஒரு விமரிசனம்!   ஆடிய மாணவி ஒரு பத்திரிகையின் நிருபரது மகள் என்பதால், மரியாதை கருதி, அத்துறையிலிருந்த அனேகருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவர் வேற்று மதத்தினர் ஆனதால், தில்லை நடராஜனுக்கு இவள் கிருஷ்ணனை அபிநயம் பிடிக்கும்படிச் சொல்லிக்கொடுத்திருந்தது புரியவில்லை. தவறாகப்படவுமில்லை.   ஆனால், அந்த நிருபரின் பத்திரிகை ஆசிரியர், தன் கீழ் வேலை செய்பவருக்கு நன்மை செய்வதாக நினைத்து, ஒரு விமர்சகரை அனுப்பிவிட்டார். அவர் விஷயம் தெரிந்தவராக இருந்ததால் வந்தது வினை. `எந்தக் கோயிலில் சிவன் புல்லாங்குழல் வாசிக்கும் சிலை இருக்கிறது? ஒரு நடனத்தின் நடுவில், காரணமில்லாமல் பிரதட்சணம், அப்பிரதட்சணம் இரண்டும் எதற்காக?’ என்றெல்லாம் கேலியாக எழுதியிருந்தார்.   “இவ்வளவு காட்டமா எழுதியிருக்கானே! அந்த  மனுசனுக்கு தி-தி-தை, தக-திமி எல்லாம் போடத்தெரியுமா? இல்லே, அலாரிப்புதான் கத்துவெச்சிருக்கானா?” சுந்தராம்பாளின் மனம் ஆறவே இல்லை. சமயம் கிடைத்தபோதெல்லாம், தன்னை `உதவாக்கரை! பிழைக்கத் தெரியாதவர்’ என்றெல்லாம் பழிக்கத் தயங்காத மனைவி! அவளுடைய தாழ்மையில் பசுபதிக்கு ஒரு குரூரமான திருப்தி உண்டாயிற்று. இந்தவரைக்கும் இவளை அடக்க, இவளது பொய்களை உலகத்துக்கு வெளிக்காட்ட ஒருவர் புறப்பட்டிருக்கிறாரே என்று உள்ளூர மகிழ்ந்தார்.   `ஒருவர் அழகாக இல்லை என்று சொல்ல நாமும் அழகாக இருக்க வேண்டுமா, என்ன!’ என்று அவருடைய யோசனை போயிற்று. எந்த ஒரு உன்னதமான கலையையும் பார்க்கும்போதோ, அல்லது கேட்கும்போதோ, ஆன்மிக உணர்வு ஏற்பட, விவரம் புரியாவிட்டாலும், சிலிர்ப்பு உண்டாக வேண்டும் என்றவரையில் புரிந்து வைத்திருந்தார்.   சுந்தராம்பாள் ஓய்வதாகத் தெரியவில்லை. “அவனோட கிறுக்கலைப் படிச்சுட்டு, நாலுபேரு நின்னுபோயிட்டாங்க! நான் அவன்மேல கேஸ் போட்டு, நஷ்ட ஈடு வாங்கப்போறேன்!”  என்று கத்தினாள். “சரிதானே? என்ன சொல்றீங்க?”   தன் அபிப்ராயத்தைக் கேட்கிறாள்! பசுபதிக்குப் பெருமிதம் எழுந்தது. அவருக்குக் கொஞ்சம்போல சட்ட அறிவு இருந்தது. “கோர்ட்டிலே அந்த நிகழ்ச்சியோட ஒலித்தட்டை போட்டுப் பாப்பாங்க. அவன் பக்கத்திலே உண்மை இருக்குன்னு தெரிஞ்சுடும். நீ எப்படி எப்படியோ..,” கனைத்துக்கொண்டார். “கேஸ் நடந்தா, நீ கஷ்டப்பட்டு சம்பாதிச்சதெல்லாம் காத்தா பறந்து போயிடும்!”   இந்த திருப்பத்தைச் சற்றும் எதிர்பார்க்காத சுந்தராம்பாள் அயர்ந்துபோனாள். அப்படியே சரிந்து உட்கார்ந்தாள். “இப்போ என்னதாங்க செய்யறது?”   அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது அவருக்கு. “இந்த விஷயத்தை இதோட விடு, சுந்தரா. இந்தச் சமயத்திலே நீ உணர்ச்சிவசப்பட்டா, வயத்திலே இருக்கிற குழந்தையைத்தான் பாதிக்கும்! இத்தனை வருஷத்துக்கு அப்புறம் இப்போதான் ஒண்ணு ஒன் வயத்திலே தங்கியிருக்கு”.   அவளும் யோசிக்க ஆரம்பித்தாள். “என்ன செய்யச் சொல்றீங்க?” மீண்டும் கேட்டாள், வழக்கமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கே காட்டிவந்த பணிவுடன்.   “கொஞ்சம் ஓய்வா இரு! குழந்தையை நீயே பாத்துக்கிட்டாதான் நல்லா வளரும்!” என்றார் நைச்சியமாக.   “நீங்க சொல்றது சரிதாங்க! பணமா பெரிசு!”   தன் காதில் விழுந்ததை அவராலேயே நம்பமுடியவில்லை.   “டான்ஸ் கிளாஸை மூடிடப்போறேன். என்ன, எல்லா பொண்ணுங்களும், `இப்படிப் பண்ணிட்டீங்களே, டீச்சர்!’னு கண்ணால தண்ணி விடுவாங்க. ஆனா, என் உடம்பையும் கவனிச்சுக்கணுமில்ல!”   அப்போது பசுபதிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில், மானசீகமாக இறைவனுடைய பாதங்களில் பணிந்தார்: `அப்பனே, நடராஜா! ஒன் கோபத்திலே எங்களுக்குப் பிறக்கப்போற குழந்தையின் காலை முடக்கிப் போட்டுடாதேப்பா!’                             9. நாளும் கோயிலும்   ஒனக்கு இப்போ `நாள்,’ இல்லே?” தாயாரின் குரலில் கவலை தொனித்தது.   மகள் அலட்சியமாகக் கையை வீசினாள். “இப்போ என்ன அதுக்கு?”   “இல்லே, ஹம்சா. நாளைக்குக் கோயில்ல ஆடப்போறியே..,” மீதியைச் சொல்லாமல் விட்டாள். “ஆமா, எந்தக் கோயில்லேன்னு சொன்னே?”“எங்க கிளாஸ் நடக்கிற கோயில்லதான்!”   “காமாட்சி அம்மன் கோயில்!” என்று சொல்லிக்கொண்டாள் தாய், தனக்குள்.   ஹம்சா மேலே எதுவும் பேசவில்லை. பேசப் பிடிக்கவில்லை. ஒரு பாட்டை மனதிற்குள் பாடியபடி அங்கிருந்து நகர்ந்தாள். கை, தன்னையுமறியாமல், அபிநயம் பிடித்தது.   அப்போதைக்கு அம்மாவிடமிருந்து தப்பித்துப்போனால் போதும் என்றிருந்தது அவளுக்கு. மாடியிலிருந்த தனது அறையை நோக்கிப்போனாள்.   அதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரம் மேலெழுந்தது.   `தீட்டு’என்று இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் பெண்களை மட்டமாகவே நடத்தப்போகிறார்கள்?   ஆதிமனிதன் குகையில் வசித்த காலத்தில், காட்டு விலங்குகள் ரத்த வாடையை முகர்ந்து குகைக்குள் வந்துவிடுமே என்று பயந்து, அக்காலங்களில் பெண்களைத் தனியே விலக்கிவைத்திருக்கலாம். இப்போது என்ன வந்தது!   பள்ளிக்கோ, அல்லது வேலைக்கோ வெளியே போகும் பெண்கள் வீட்டில் தனித்து விலக்கி வைக்கப்படுவது வெகுவாகக் குறைந்துவிட்டது. ஆனால், கோயில்களில் மட்டும் பழைய விதிமுறைகளை மாற்றாமல், கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்!   சில கோயில்களில், `இவர்களெல்லாம் கோயிலுக்குள் நுழையக்கூடாது!’ என்று ஒரு பெரிய பட்டியல் தயாரித்து, வெளியிலேயே எழுதி வைத்திருக்கிறார்கள்! மாத விலக்கு வந்த பெண்களும், பெருநோய் வந்தவர்களும் ஒன்றா? கையில்லாத ரவிக்கை அணிபவர்களுக்கு மட்டும் பக்தி இருக்கக்கூடாதா?   அவளுடைய ஆத்திரத்திற்கு முட்டுக்கட்டை போடவேபோல் தொலைபேசி அழைத்தது.   ஹம்சாவுக்குச் சட்டென்று சிரிப்பு வந்தது. யாராவது ஒரு மாணவி, `டீச்சர்! இன்னிக்கு பரத்நாட்யம் க்ளாஸ் இருக்கா?’ என்று கேட்பாள்! முதலில் வரவே யோசித்தவர்களுக்கு இப்போதுதான் எத்தனை ஆர்வம்! நினைத்துப்பார்க்கவே பெருமையாக இருந்தது அவளுக்கு.   பரதநாட்டியம் வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே எட்டக்கூடிய ஓர் உயரம் என்ற எழுதப்படாத விதிமுறையை எதிர்த்து, ஹம்சா அந்த வகுப்பை ஆரம்பித்திருந்தாள்.   பெரிதாக இடம் எடுத்து நடத்த வழில்லை. குடிசைகளுக்குப் பதிலாக்க கட்டப்பட்ட  அடுக்குமாடி வீடுகள் நிறைந்த அவ்விடத்தில் அவர்களுக்கென இருந்த ஒரு சிறு கோயில் பிரகாரம்தான் நாட்டிய வகுப்பு -- பூஜை இல்லாத நேரங்களில்.   அக்கம்பக்கத்திலிருந்த குடும்பங்களிலிருந்து மாணவிகள் வந்தார்கள் -- இலவசம் என்பதைக் கேள்விப்பட்டு. ஆனால், எதிலும் அவர்களுக்கு துடிப்போ, புதியதாக ஒன்றைக் கற்கும் ஆர்வமோ இருக்கவில்லை. எப்போதும் வாயில் விரல். நிமிர்ந்து நிற்கக்கூட தெம்போ, உத்வேகமோ இல்லாதவர்களாக இருந்தார்கள். எட்டு வயதிலேயே கூனலா! இவர்களை எப்படி வழிக்குக்கொண்டு வருவது என்று அயர்ந்தே போனாள் ஹம்சா.   எப்போதோ அம்மா சொன்ன ஒன்று நினைவுக்கு வந்தது: `சின்னப்பிள்ளைங்களுக்குத் தாகமா இருந்தாலோ, பசியா இருந்தாலோ சொல்லத் தெரியாது. வாயிலே விரல் போட்டுப்பாங்க!’   தன்னுடைய தோழிகள் சிலருடன் கலந்தாலோசித்து, அவர்களுக்குச் சாப்பிட எதையாவது கொடுக்க ஏற்பாடு பண்ணினாள்.   `நாட்டியம் கற்றுக் கொள்கிறார்களோ, இல்லையோ, வயிறாரச் சாப்பிட்டுவிட்டாவது போகட்டுமே!’ தான் பசியே அறியாது வளர்ந்திருந்ததில் சிறிது குற்ற உணர்வுகூட ஏற்பட்டது.   வெளியில் எங்கும் கிடைக்காத தோழமையும், சிரிப்பும், அறிவும் அங்கு கிடைப்பதை உணர்ந்தவர்களுக்குச் சில மாதங்களிலேயே உணவில் ஆர்வம் குறைந்துபோயிற்று.   ஆரம்பத்தில் எதையும், `எனக்கு? எனக்கு?’ என்று பிடுங்கியவர்கள்கூட, `நீங்களும் சாப்பிடுங்க, டீச்சர்,’ என்று உபசாரம் செய்யக் கற்றுக்கொண்டார்கள்.   சில நாட்கள், ஓரிரு பெண்கள் வகுப்புக்கு வராததன் காரணத்தை (`அக்கா சுத்தமில்லே!’) யார்மூலமாவது சொல்லி அனுப்பியபோதுதான் அந்த யோசனை எழுந்தது ஹம்சாவுக்கு.   ஒங்க ஒடம்பைப்பத்தி ஒங்களுக்குத் தெரிஞ்சிருக்கணும். நீங்க தீட்டுன்னு நினைக்கிறது தப்பான உணவாலேயோ, ஆரோக்கியக் குறைவாலேயோ கிடையாது”.   ஒரு பெண் கர்ப்பம் தரிக்கத் தயாராக இருக்கிறாள் என்பதைத்தான் உணர்த்துகிறது மாதாந்திர உதிரப்போக்கு. இயற்கையான ஒரு செயல்! அதற்கு ஆயிரம் தப்பு கண்டுபிடித்து.., என்றெல்லாம்  பெண்கள் மருத்துவரான சுந்தரவல்லி அந்த வகுப்புக்கு வந்து விளக்கினாள்.   நம்ப உடம்பை, உயிரை, கடவுள் குடுத்ததுன்னு ஏத்துக்கறோம். இல்லியா? அவரோட செயலே தப்புங்கிறமாதிரி, இயற்கையா நடக்கிற இதுக்குக்காக பயந்துக்கிட்டு, கோயிலுக்கு வராம இருந்துடாதீங்க. எவ்வளவு கஷடப்பட்டு ஒங்களுக்கு டான்ஸ் கத்துக்குடுக்க வராங்க டீச்சர், தெரியுமா?” என்று சந்தடி சாக்கில், ஹம்சா படும்பாட்டையும் குறிப்பிட்டாள் சுந்தரவல்லி. தன் தோழியைப்பார்த்துக் கண்ண்டித்தாள்.   அப்பெண்களின் முகம் தெளிந்தது. தமக்காகப் பாடுபடும் இரு பெண்மணிகளையும் பார்த்து நட்புடன் சிரித்தார்கள்.   ஏன் இப்படி கூனிக்கிட்டு நடக்கறீங்க?” உரிமையுடன் அதட்டினாள் சுந்தரவல்லி.   ஒரு துணிச்சலான பெண் தங்கள் தர்மசங்கடமான நிலைமையை வெளிப்படுத்தினாள்: “எல்லாரும் எங்க ஒடம்பையே மொறைச்சுப் பாக்கறாங்க, டாக்டர்! வெக்கமா இருக்கு!” குரல் அழுகையாக வந்தது.   பிற மாணவிகளும் தலையை ஆட்டினார்கள். உதடுகள் பிதுங்கின   அலட்சியமாக் கையை வீசினாள், அந்த சிறப்பு விருந்தினர். “அதுக்கென்ன பண்றது? சாமி நமக்கு அப்படி அழகான ஒடம்பை நமக்குக் குடுத்திருக்கு!” என்று புன்சிரிப்புடன் கூறியவள், தன் இருகரங்களால் மூன்று வளைவுகளைக் காட்டினாள்.   எல்லாரும் நிம்மதியும், வெட்கமுமாகச் சிரிக்க, ஒரு பெண், “இரண்டுதானே, டாக்டர்?” என்று சிரிப்புடன் வினவ, டாக்டர் யோசிப்பதைப்போல் பாவனை காட்டினாள். “நீ சொல்றது சரி. இரண்டு வளைவுகள்தான்!”   சிரிப்பு பலத்தது. இப்போது எல்லாரும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.   சில சமயம் ஆட முடியலே. வலிக்குது,” என்று ஒரு பெண் சுட்டினாள்.   ஒங்கம்மாவை கருஞ்சீரகத்தை வறுத்துப் பொடி பண்ணி, மோரிலே கலக்கிக் குடுக்கச் சொல்லு. தினமும் குடிச்சா, கருப்பை வலுவாகும்”.   சொல்லக்கூடாத அந்த வார்த்தையைக் கேட்டதும் எல்லாரும் வெட்கத்துடன் சிரித்தார்கள்.   அறிவுரை தொடர்ந்தது: “ரொம்ப வலிச்சா, வெந்நீர் ஒத்தடம் குடுக்கச்சொல்லு. இந்தமாதிரி சமயங்களிலே சுருண்டு படுக்காம, எக்சர்சைஸ் பண்ணணும். அது ரொம்ப முக்கியம்!” அதன்பின், வீட்டில் பாட்டியோ, அம்மாவோ ஆட்சேபித்ததையும் மீறிக்கொண்டு, எந்த நாட்களிலும் கோயிலுக்கு வந்து நாட்டியம் கற்றுக்கொள்ளத் துணிந்தார்கள் அப்பெண்கள்.   நான்கு பேர் பார்க்க நாட்டியமாடும் தகுதி அவர்களுக்கு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட ஹம்சா, சரஸ்வதி பூஜையன்று (அன்று தான்டாக்டர் சுந்தரவல்லியின் உபயம்) அவர்கள் ஆட ஏற்பாடு செய்திருந்தாள். மாணவிகளுடன், அவளும் ஆடவேண்டும் என்று கோயில் குருக்கள் விண்ணப்பித்திருந்தார்.   இப்போது அம்மா அவள் மனத்தைக் கலைத்துவிட்டாள்!   தொலைபேசியில் ரஞ்சனி பேசினாள், தயங்கித் தயங்கி. “டீச்சர்! எனக்கு இப்போ பீரியட். நான் ஆடலாமா?”   “தாராளமா! ஆனா, யார்கிட்டேயும் இதைப்பத்தி சொல்லிக்கிட்டிருக்க வேண்டாம், என்ன?”   ஒவ்வொரு வகுப்புக்கும் தவறாது வந்து, பெருமுயற்சியுடன் கற்ற கலை! இப்போது  பல பேர் பார்க்க தன் திறமையை வெளிப்படுத்த ஒரு தருணம் வந்திருக்கிறது. அது நழுவி விடுமோ என்ற கவலை இனி இல்லை!   “சரி, டீச்சர்!” என்ற சிறுமியின் குரலில் அலாதி நிம்மதி. “ரொம்ப பயந்துக்கிட்டிருந்தேன், டீச்சர் -- டீச்சர் என்ன சொல்வீங்களோன்னு!”   ஹம்சா சிரித்துக்கொண்டாள். “குளிச்சுட்டு வந்தா போதும். காமாட்சி புரிஞ்சுக்குவா!”   “யாரு, டீச்சர்?”   “காமாட்சி அம்மன்!”   “ஓ!” அப்பெண் புரிந்தவளாகச் சிரித்தாள்.   “தைரியமா ஆடு. அதான் முக்கியம். ஏதாவது மாத்தி, தப்பா ஆடினாலும் பரவாயில்லே. அடிச்சு விட்டுடணும். என்னைத் தவிர, யாருக்கும் அது தெரியப்போறதில்லே!” என்று, பல முறை வகுப்பில் சொன்னதையே திரும்பச் சொன்னாள் ஹம்சா. “காமாட்சி அம்மனும் நம்பளைமாதிரி ஒரு பொண்ணுதானே! கோவிச்சுக்க மாட்டா!” தனக்கே தைரியம் அளித்துக்கொள்வதைப்போல் இருந்தது .     கணினியில் பதிவு செய்திருந்த பாட்டை ஒலிக்கவிட்டாள். முகத்தில் புன்னகை  படர, புடவைத்தலைப்பை இழுத்துச் சொருகிக்கொண்டாள்.  தரையைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, பயிற்சியில் இறங்கினாள் ஹம்சா.                                       10. பெண் பார்த்துவிட்டு   “மொத மொதலா நேத்திக்கு ஒரு பொண்ணு பாத்துட்டு வந்தியே!”  என்று கேசவன் ஆரம்பித்ததும், சதாசிவம் பெருமூச்செறிந்தான். `இனி இவனிடமிருந்து தப்பிக்க முடியாதே!’ என்ற அயர்ச்சி பிறந்தது.   இன்று, நேற்று பழகியவர்களாக இருந்தால் இப்படித் தொணதொணக்க மாட்டார்கள். இவனோ, பால்ய சிநேகிதன்! தான் மட்டும் தனிக்கட்டையாக, நிம்மதியாக இருப்பது பொறுக்காது, இந்த ஏழெட்டு வருடங்களாக, குடும்பஸ்தனாகிவிடும்படி பார்க்கும்போதெல்லாம் வற்புறுத்திக்கொண்டிருக்கிறான்.   “பொண்ணு நல்ல உயரம்,” என்று சுருக்கமாகச் சொன்னான் சதாசிவம்.   “பலே!”   “அதனால, ஒல்லியா, சித்தே கூனலா இருக்கு!”   “அதனால என்ன! எக்சர்சைஸ் பண்ணினா சரியாப்போயிடும்! அப்புறம்?” என்று ஊக்கினான் கேசவன். “மூஞ்சியைப்பத்தி ஒண்ணுமே சொல்லலியே நீ! வெக்கப்பட்டுண்டு சரியாப் பாக்கலியா?”   “எனக்கென்ன வெக்கம்! இந்தக் காலத்திலே பொண்களுக்கே வெக்கம்னா என்னன்னு தெரியாது!” என்றுவிட்டு, “சோடாபுட்டிக் கண்ணாடி! அதனால, கண்ணு ரொம்பப் பெரிசாத் தெரியறது,” என்று வர்ணித்தான்.   “சே! முக அழகையே கெடுக்குமே!”   “`அதனால என்ன, காண்டாக்ட் லென்ஸ் போட்டுக்கலாமே!’ அப்படின்னு நீ சொல்வியோன்னு பாத்தேண்டா!” ஏக்கம்.   “சரி, சொல்லிட்டுப்போறேன். காசா, பணமா!  சோடாபுட்டியா இருந்தா என்ன! காண்டாக்ட் லென்ஸ் போட்டுக்கலாமே!” என்றான் நண்பன். “மேலே சொல்லு”.   “யாருடா, இவன்!” தன் அலுப்பை வெளிப்படையாகவே காட்டினான் சதாசிவம்.   “சொல்லேண்டா. ஒங்கம்மா ஒண்ணும் கேக்கலியா?”   “வருங்கால மாமியாராச்சே! கேக்காட்டா நன்னா இருக்குமா? அவ கெத்து என்ன ஆறது?”   “அப்படிப் போடு! மாமி என்ன கேட்டா?”   “வழக்கமா எல்லாரும் கேக்கறதுதான்! `ஒரு பாட்டுப் பாடும்மா,’ன்னா. அம்மா அவ்வளவு அருமையா யார்கிட்டேயும் பேசி நான் கேட்டதில்லே, போ!”   “இதை கல்யாணம் ஆனப்புறம் சொல்லு. சரி. என்ன பாட்டு?”   “என்னமோ கச்சேரி பாட்டு. எனக்குதான் இதிலே எல்லாம் இண்டரெஸ்டே கிடையாதுன்னு ஒனக்குத் தெரியுமே!”   “பொண்ணு எப்படிப் பாடினான்னு நான் கேட்டிருக்கணும்”.   “கொரலைக் கேட்டா, மயில் பயந்து ஓடிடும்னு அப்போ எனக்குத் தோணித்தா! சிரிச்சுட்டேன்”.   “அடப்பாவி! அவா தப்பா எடுத்திண்டிருக்கப் போறாளே!”   “அதான் இல்லே. பொண்ணோட அப்பா, `மாப்பிள்ளை எம்பொண்ணு பாட்டைக் கேட்டதும், எவ்வளவு சந்தோஷப்படறார், பாத்தேளா?’ன்னு அம்மாவைக் கேட்டார்”.   “எனக்கென்னமோ இந்த வரன் அமையும்னு தோணலே. ஏண்டா லூசு, இருந்திருந்து ஒரு பொண்ணு பாக்கப்போனவன், நன்னா விசாரிச்சுண்டு போயிருக்க மாட்டியோ?”   “எதுக்கு? போன எடத்திலேயே, `கல்யாணத்துக்கு நாள்   குறியுங்கோ’ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்”.   நண்பன் அதிர்ந்தே போனான். “என்னது! விளையாட்டுக்குத்தானே சொல்றே?”   “இதில என்னடா விளையாட்டு?  அம்மாவுக்குக்கூட கொஞ்சம் கோபம். நான் ரொம்பத் தழைஞ்சு குடுத்ததால, அவாகிட்ட பேரம் பேசமுடியாம போயிடுத்தேன்னு!” சிரித்தான்.   “கொஞ்சம் இரு. ஆசுவாசப்படுத்திக்கிறேன். பொண்ணோட கொரல் கட்டை. கேக்கச் சகிக்கலே...!” ஒவ்வொரு பதிலையும் அலசினான்.   “அதிலேயும் ஒரு நன்மை. இனிமையாப் பாடினாள்னா, நாளைக்கே கச்சேரின்னு நாலுபேர் கூப்பிடுவா. இவ வீட்டை மறந்துட்டு, ஊர் ஊரா சுத்துவா. அப்பறம் என்னை யார் கவனிப்பா?”   “பாயிண்ட்!” மெச்சினான் கேசவன். “ஒண்ணு கேக்க மறந்துட்டேனே! பின்னலாவது நீளமா, தடியா இருந்ததோ? நீளமா இருந்திருந்தா, `பொண்ணோட தலைமயிர் மொழங்காலைத் தொடறது!’ன்னு ஒங்கம்மா அதைப்பத்திப் பெருமையா நாலுபேர்கிட்டே பேசிப்பா!”   “அதான் இல்லே,” பெருமையாகச் சொன்னான். “மேலே ரெண்டு கால் -- குச்சிமாதிரி. அப்புறம், ஒரே தடி! இடுப்புக் கீழே தொங்கித்து ஒத்தைப்பின்னல்!”   “சவுரியை சரியா வெச்சிருக்க மாட்டாளோ! அப்படி என்ன தலைபோற அவசரம்!” காலங்கடந்து அங்கலாய்த்தான். “நீ வாங்கற பிச்சாத்து சம்பளம் சவுரி வாங்கறதுக்கும், கண்ணாடி மாத்தறதுக்குமே சரியாப்போயிடுமேடா!”   “இந்தக் காலத்திலே யாருடா கேசவா பின்னி விட்டுக்கறா? பேசாம, தோள்வரைக்கும் வெட்டி விட்டுண்டு, நெத்தியிலேயும் ஒரு கத்தை விழறமாதிரி விட்டுண்டா,  ஃபேஷனாயிடறது!”   கேசவனுக்கு இன்னொரு சந்தேகம் எழுந்தது. “பொண்ணு நல்ல சேப்போ? அதான் மயங்கிட்டே! ஒனக்கு அந்தக் காலத்திலே, `கறுப்பு சதா’ன்னு பேர் வெச்சிருந்தோமே!”   “டேய்! டேய்! அப்படியா என்னைப்பத்தி கன்னாபின்னான்னு பேசினேள்?  நீ எங்கிட்ட சொன்னதே இல்லியே, தடியா!”   “அதுக்கென்ன பண்றது! நம்ப கிளாசில மூணு சதாசிவம்! பொருந்தறமாதிரி ஒவ்வொருத்தருக்கும் பேரு வெச்சோம்! ஒன்னை யாரு ஒங்கப்பாவைக்கொண்டு, கறுப்பா பிறக்கச்சொன்னா? அம்மா எலுமிச்சம்பழக் கலர்!”   “இதெல்லாம் நம்ப கையிலேயா இருக்கு!” என்று, நெற்றியில்  ஆள்காட்டி விரலால் ஒரு கீறல் போட்டுக்கொண்டான், விரக்தியுடன். சற்று தெளிந்து, “அவ பேரு சிவகாமியாம்!” என்று தானே தெரிவித்தான்.   “இப்போ அந்தமாதிரி பேரெல்லாம் பாட்டி காரக்டருக்குத்தான் வைக்கிறா கதைகளிலே!”   “போடா! எல்லாத்துக்கும் எடக்கு மடக்கா ஏதாவது சொல்லிண்டு! எங்க ரெண்டுபேர் பேரையும் சேத்துப் பாருடா, ஒத்துமை புரியும். சதாசிவம் - சிவகாமி. இதிலேருந்து என்ன தெரியறது?”   “வித்தியாசமா இருக்கட்டுமேன்னு, நீ அவ பேரை ஒன் பேருக்கு முன்னால போட்டுக்கப்போறே!”   அவனை அடிப்பதற்குக் கையை ஓங்கினான் சதாசிவம்.  “மண்டு! எங்க ரெண்டு பேரும் `எஸ்’ஸிலே ஆரம்பிக்கிறது. நியூமராலஜிபடி, ரொம்ப பொருத்தம்.. அதோட, சிவன்-பார்வதி பேரு வேற!”   இவன் `கறுப்பு’ என்று தன்னைப் பழிக்கவில்லை? இழந்த உற்சாகம் திரும்பியதுபோலிருந்தது. சதாசிவம் தொடர்ந்து பேசினான். “நம்ப நாட்டிலேயோ சரியான வெயில். தெருவுக்குத் தெரு சரும நோய் வைத்தியர்னு போர்டு மாட்டியிருக்காளே, பாத்ததில்லியா, நீ?”   “அதுக்கு?”   “மேல்தோலு வெள்ளையா இருக்கிறவாளுக்குத்தான் பரு, குஷ்டம் -- இந்தமதிரி சரும வியாதி எல்லாம் வருமாம். இவளோ, என்னைவிட கறுப்பு. கல்யாணமானதும், `கறுப்பு’ன்னு ஒங்களைமாதிரி என்னைக் கேலி செய்ய மாட்டா,” என்றவனின் குரல் கம்மியது.   கேசவனுக்கே பரிதாபமாகப் போயிற்று. “என்னதான் சொல்லு, நீ அவசரப்பட்டுட்டியோன்னு நேக்குப்படறது!”   “நீங்க எல்லாரும்தானே என் பிராணனை வாங்கினேள், `கல்யாணம் பண்ணிக்கோடா, பண்ணிக்கோடா’ன்னு,” என்று சலித்துக்கொண்டவன், “இப்ப என்ன! எல்லா விதத்திலேயும் சௌகரியமா அமைஞ்சிருக்கு இந்த வரன்! விடுவியா!” சற்றே திமிராகப் பேசினான்.   “அதான் முக்கியம்! சந்தோஷமா இருங்கோ ரெண்டு பேரும்!” என்று வாழ்த்திய நண்பன், தானும் இவனைப்போல் காத்திருந்து கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்கலாமோ என்று, ஏக்கத்துடன் எண்ணமிட்டான்.   அவசரப்பட்டு, இருபத்து மூன்று வயதிலேயே அழகே முக்கியமென ஒருத்தியை மணந்து, இப்போது, `முப்பது வயசிலேயே ஒங்களுக்கு முன்னந்தலையிலே வழுக்கை! அம்பது வயசிலே மொட்டையாகிடுவேள்!’ என்று தினமும் அவள் கேலியுடன் சிரிப்பதைச் சகித்துக்கொண்டிருக்க வேண்டாமே!   அதே சமயம், சிவகாமி தன் குடும்பத்தினருடன் விவாதம் செய்துகொண்டிருந்தாள். “ஏற்கெனவே என்னை ஆறு பேர் பாத்துட்டு, `பெண் கறுப்பு,’ `மூஞ்சி இன்னும் கொஞ்சம் நன்னா இருக்கலாம்,’ `ரொம்ப ஒல்லியா இருக்காளே, டி.பியோன்னு சந்தேகமா இருக்கு. எதுக்கும் மெடிகல் டெஸ்ட் பண்ணிடறோமே!’ அப்படின்னு ஏதேதோ சாக்கு சொல்லிட்டு, ஓடிட்டா.   “இப்ப வந்தவனோ, பாத்த ஒடனே ஓகே சொல்லிட்டானே! இந்தப் பையனுக்கு நிரந்தரமான வேலை இருக்கா, பெரிய வியாதி ஏதானும் இருக்குமோன்னு எனக்கென்னமோ சந்தேகமா இருக்குப்பா. அவா குடும்பத்திலே என்ன ஊழலோ! எதுக்கு வீண் ரிஸ்க்! வேற வரன் பாருங்கோ!”