[] [காற்று மழை வெயில் வெளிச்சம் ] காற்று மழை வெயில் வெளிச்சம் காற்று மழை வெயில் வெளிச்சம் முருகானந்தம் ராமசாமி மற்றும் அன்பரசு சண்முகம் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை காற்று மழை வெயில் வெளிச்சம் பதிப்புரிமை © 2014 இவரால் / இதனால் Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. This book was produced using PressBooks.com. உள்ளடக்கம் - முன்னுரை - முருகானந்தம் அவர்களுடன் முதல் சந்திப்பு - 1. 22.9.2012 - 2. 26.9.2012 - 3. 30.9.12 - 4. 1.10.12 - 5. 2.10.2012 - 6. 3.10.2012 - 7. 6.10.2012 - 8. 9.10.2012 - 9. 12.10.12 - 10. 17.10.2012 - 11. 25.10.2012 - 12. 26.10.12 - 13. 28.10.12 - 14. 5.11.2012 - 15. 6.11.2012 - 16. 7.11.2012 - 17. 24.11.2012 - 18. 27.11.12 - 19. 1.12.2012 - 20. 3.12.2012 - 21. 4.12.2012 - 22. 5.12.2012 - 23. 9.12.12 - 24. 13.12.2012 - 25. 15.12.2012 - 26. 16.12.2012 - 27. 24.12.2012 - 28. 25.12.12 - 29. 28.12.2012 - 30. 30.12.2012 - 31. அருகில் நிழல் எங்கும் இல்லை 1.1.2013 - 32. 3.1.2013 - 33. 6.1.2013 - 34. 19.1.2013 - 35. 26.1.13 - 36. 2.2.2013 - 37. 3.2.2013 - 38. 6.2.13 - 39. 8.2.2013 - 40. 8.3.13 - 41. 16.3.13 - 42. 27.3.13 - 43. 1.5.2013 - 44. 25.5.2013 - 45. 26.5.2013 - 46. 29.5.2013 - 47. 15.6.2013 - 48. 19.6.2013 - 49. 23.6.2013 - 50. 26.6.2013 - 51. 29.6.2013 - 52. 3.7.2013 - 53. 17.7.2013 - 54. 22.7.2013 - 55. 28.7.2013 - 56. 29.7.13 - 57. 6.8.2013 - 58. 9.8.2013 - 59. 12.8.13 - 60. 13.8.2013 - 61. 17.8.2013 - 62. 19.8.13 - 63. 23.8.13 - 64. 27.8.13 - 65. 5.10.2013 - 66. 7.10.2013 - 67. 15.10.2013 - 68. 23.10.2013 - 69. 28.10.2013 - 70. 5.11.2013 - 71. 9.11.2013 - 72. 13.11.2013 - 73. 21.11.2013 - 74. 27.12.2013 - 75. 30.12.2013 - Free Tamil Ebooks – எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 முன்னுரை முருகானந்தம் ராமசாமி எளிய விவசாயி மற்றும் இலக்கிய வாசகருக்கும், மெல்ல இலக்கியங்கள் வாசிக்கத் தொடங்கும் நண்பரான அன்பரசு சண்முகத்திற்கும் இடையிலான கடிதங்கள் குடும்பம், சமூகம் ஆகியவற்றின் வழியே இலக்கியங்களைப் பற்றிய அனுபவப் பகிர்தலை நிகழ்த்துகிறது. சாதாரண கடிதங்களைப்போலில்லாது, தனித்துவமான இலக்கியப்பகிர்வை நிகழ்த்துகின்ற எழுத்துக்களை நாம் இதில் காணமுடிகிறது. இருவரும் ஒருவரையொருவர் முழுக்க அடையாளம் கண்டுகொண்டதே கடிதங்களில்தான் என்பதை, இருவரின் வார்த்தைகளிலிருந்தே கண்டு கொள்ள முடியும். கடிதங்கள் எழுதுவது என்பது குறைந்துவிட்ட காலத்தில் இது போன்ற கடிதங்கள் உறவின் வெம்மையை உள்ளங்கையில் உணர்த்துகிறது. இதனை இருவரின் நண்பரான அரசமார் நேர்த்தியாக தொகுத்தளித்திருக்கிறார். இந்நூலினை அனைவரும் தரவிறக்கி படிக்கலாம், யாருடனும் பகிரலாம். நன்றி. நூல் பற்றிய விமர்சனங்களை, கருத்துக்களை அனுப்ப, அன்பரசு, 57,கிளுவன்காடு, வடக்குப்புதுப்பாளையம்(அ), ஊஞ்சலூர்(வழி), ஈரோடு-638152 இரா.முருகானந்தம், 130, தொப்பம்பட்டி(அ), தாராபுரம், திருப்பூர் – 638657 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். 2 முருகானந்தம் அவர்களுடன் முதல் சந்திப்பு என் சகோதரர் மூலம் அன்றுதான் முருகானந்தம் ராமசாமி அவர்களைச் சந்தித்தேன். அப்போது எவ்வளவு தூரம் அபத்தமாக பேச முடியுமோ அவ்வளவு பேசினேன். அப்போது திருப்பூரார் அருகிலிருந்தார். முகவரி பெற்றுக்கொண்டதும் எனக்கு பெரிய மகிழ்ச்சி. எந்த விஷயத்தையும் பேசுவதற்கு இன்றுவரையில் என் சமவயது தோழர்கள் யாரும் கிடையாது. எந்த ஒரு விஷயம் குறித்தும் தெளிவான பார்வை, தான் சார்ந்த கட்சி குறித்த நேர்மையான நிலைப்பாடு, எந்த விஷயம் குறித்தும் தயக்கமில்லாமல் முருகுவிடம் உரையாடலாம். முருகானந்தம் ஒரு நெகிழ்வான மனிதரும் கூட. எதனையும், எளிதாக அவரிடம் கூற முடியும். பல விஷயங்கள் பேச்சில் வந்தாலும் நான் முடிந்தவரை கலைகள் குறித்து பல நேர்த்தியான அனுபவப் பகிர்தலை நிகழ்த்த மேற்கொள்ள முயற்சித்தேன். [pressbooks.com] 1 22.9.2012 இரா. முருகானந்தம் அவர்களுக்கு,   அன்பரசு எழுதுவது, உண்மையிலேயே நீங்கள் தாராபுரம் வருகிறாயா என்று கேட்டது அற்புதமான கணம். பைக்கில் சென்ற அப்பயணம் விவரிக்க முடியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நெடுநேரம் பைக்கில் பயணித்தது அதுதான் எனக்கு முதல்முறை. காலச்சுவடில் உங்களது இரங்கல் கட்டுரை லட்சுமி சேஹலின் முழுமையான வாழ்க்கையை இருபக்கங்களில் கண்முன் நிறுத்தியது. தேர்ந்த சொற்களால் எழுதப்பட்ட அக்கட்டுரை, அவரைப்பற்றிய விவரங்களை யாரும் எளிதில் தெரிந்து கொள்ளும் விதமாக இருந்தது சிறப்பு. படிப்பதற்கு நிறைய புத்தகங்கள் சேர்ந்து விட்டதால் வேகமாக படிக்க முடியவில்லை. உங்களிடம் வாங்கி வந்த நூல்களை என் பெயர் ராமசேஷன் படித்துவிட்டேன். இப்போது சேட்டன் பகத் எழுதும் ஆங்கில நாவல்களை போல அப்போதே எழுதியிருக்கிறார் ஆதவன். ஒரு கல்லூரி, ஒரு காதல், உடலுறவு என செல்லும் நாவலில் ராமசேஷன் மாலா, கி. ராம், பிரேமா, ராம்பத்ரன், வி.எஸ்.பி என கதாபாத்திரங்கள் குறைவு. பிராமண இளைஞன் செய்யும் காஸனோவா செயல்கள்தான் கதை. மிக சுவாரசியமான கதை. மறுக்கவே முடியாது. எப்போது எந்த வருடம் படித்தாலும் ஏற்றுக்கொள்ள முடியும் இந்தக் கதையை. ‘Barfi” படம் பார்த்திருப்பீர்கள்! படம் உங்களை மகிழ்வித்ததா? ஆனி ப்ராங்க் மேரி எவ்வளவு படித்திருக்கிறீர்கள்? நலமறிய ஆவல். உங்கள் அன்பரசு 2 26.9.2012 அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு,   அன்பரசு எழுதுவது, நலமாக இருக்கிறீர்களா? சென்னை சென்று திரும்பி ஊருக்கு வந்துவிட்டீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. சுவரை வெறித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். நடந்து செல்லும் நிரூற்று எனும் சிறுகதைத் தொகுப்பை இப்போதுதான் வாசித்து முடித்தேன். இந்த நூலிலுள்ள அனைத்து கதைகளிலும் இயந்திரமாகி பின் தொலைத்த ஏதோவொன்றை தேடிக்கொண்டே இருக்கும் மனிதர்கள் நிறைந்துள்ளார்கள். அவர்கள் குறையாக பிழையாக யாரையும் கூறவில்லை என்றாலும் அவர்களது கதை சில மனிதர்களின் மன குரூரத்தை அப்பட்டமாக கூறுகிறது. ‘பி. விஜயலட்சுமியின் சிகிச்சைக்குறிப்புகள்’ எனும் சிறுகதை சிற்சில குறிப்புகளாக அவள் மனபிளவிற்கு உள்ளான கதையை எளிமையாக விளக்கிச் செல்கிறது. புதிய புத்தகங்கள் ஏதாவது வாசித்தீர்களா? தங்களுக்கு நேரம் இருந்தால் கடிதம் எழுதி பகிர்ந்தால் தேடிப்பிடித்து படிக்க எனக்கு உதவியாக இருக்கும். உண்மையிலேயே மனம் இயந்திரம் ஆகாது சில மனிதத் தன்மைகளும் மிச்சமிருக்க காரணமே புத்தகம் வாசிக்கும் பழக்கமே. தொடர்ந்து எங்காவது புதிய பகுதிகளுக்கு பயணிக்க வேண்டும். நம்மை நமக்கு யாரென கண்டு சொல்லும் ஒரு குரல் புத்தகங்கள்தான். இசையும், புத்தகங்களுமே என்னை நோக்கிய சுய வெறுப்பிலிருந்து என்னை மீட்டெடுத்து கொண்டு இருக்கிறது. வர்கீஸ் குரியன் இரங்கல் குறிப்பை எழுதி அனுப்பியிருப்பீர்கள். வெப்பத்தின் வாசனை மெல்ல காபியின் மணமாகவும், தேளின் நஞ்சாய் உடலில் மேலேறிக்கொண்டு இருக்கிறது. சென்னை சென்றிருந்தீர்கள் என்றால் ஏதாவது படங்கள், புத்தகங்கள் பார்த்திருப்பீர்கள், வாங்கியிருப்பீர்கள். உங்களது கண்களைப் பார்த்தே நம்பிக்கை கொள்கிறேன் என் மீது. உங்கள் அன்பரசு. 3 30.9.12 அன்பான அன்பரசு, உண்மையிலேயே உனது 22, மற்றும் 26 தேதியிட்ட இருகடிதங்களும் விவரிக்கமுடியாத மகிழ்வையும் மன எழுச்சியையும் அளித்தது. அரசு அலுவலகங்களின் கடிதங்கள், அழைப்பிதழ்கள் ஆகியவையே கடிதங்களாக வரும் சூழலில் உனது கடிதங்கள் அற்புதமானதாக இருந்தது. ஒரு சங்கடமும் எனக்கு அதில் இருந்தது. ’’முருகானந்தம் அவர்களுக்கு’’ என்ற விளித்தல் அதீதமாக இருக்கிறது. அண்ணன் என்றே விளித்தால் சரியாக இருக்கும்.”barfi” உண்மையிலேயே மகத்தான படம். ரன்பீரை இவ்வளவு சூட்டிகையாகவும் இலியானவை இவ்வளவு அழகாகவும் பார்க்கமுடியுமா? என்று தெரியவில்லை. பிரியங்காவை உலகிலே அதிக மனநெருக்கம் கொண்ட பெண்ணாக உணர்கிறேன். எல்லா இழிவுகளையும் தாண்டி வாழ்க்கை எவ்வளவு வசீகரமானதாக இருக்கிறது!!! ‘கமீனே’, ‘ஸாத்கூன்மாப்’ ஆகியவற்றிலிருந்து புதிய உயரத்தை பிரியங்கா இப்படம் மூலம் அடைந்திருக்கிறார். நம் சமகாலத்தின் ஆகச்சிறந்த நடிகைகளில் ஒருவர் அவர். முன்பு நான் சிலாகித்தபோது ஏளனமாகப்பேசிய எனது நண்பர்கள் இப்போது அமைதி காக்கிறார்கள். அந்த மகத்தான தோழிக்கு நன்றி சொல்கிறேன்.எனது நம்பிக்கையை உறுதிபடுத்தியதற்கு. ’ஆனிபிராங்க் டைரி’ இன்னும் வாசிக்கத்துவங்கவில்லை. மோட்டார் சைக்கிள் பயணங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை.அதற்கு பிறகு நானும், நந்துவும் ஒருநாள் குச்சனூர்வரை(சுமார் 200கி.மீ)பைக்கில் சென்று வந்தோம். மிகவும் அற்புதமான பயணமாகவே இருந்தது. பயணங்கள் முடிவதில்லை போலும்! -இரா.முருகானந்தம் 4 1.10.12 அன்பு… “பர்பி” குறித்து பேசவும், எழுதவும் நிறையவே உள்ளது. வாழ்வின் மீதான ஊக்கமும் ஈடுபாடும்தான் எத்தனை மகத்தானது. சமூகப்பொறுப்புகள் குறித்து பேசுவது என்பது அவலங்களைக் காட்சிப்படுத்துவது, முழக்கங்களை முன்வைப்பது என்பதாகப் புரிதல் கொண்ட சூழலில் மானுடமேன்மையை புகார்களில்லாத வாழ்வை முன்வைப்பதே சமூகத்தின் வன்மத்தை தணிக்கும். என அனுராக் பாசு கருதியிருக்கக்கூடும். அவருக்கு என் வணக்கங்கள். ஆதவன் குறித்த உனது மதிப்பீடு துல்லியமானது. இன்றும் கூட நான் தாராபுரம் பேருந்து நிலையத்தின் முன்பு நின்று பொழுதோட்டிக்கொண்டிருந்த வாலிபப் பட்டாளத்தைப் பார்த்தபோது அவரின் கதாபாத்திரங்கள் எக்காலத்திலும் உள்ளனர் என்றே எனக்கும் தோன்றுகிறது. வர்க்கீஸ் குரியன் குறித்த இரங்கல் குறிப்பை நான் இன்னும் எழுதிமுடிக்கவில்லை என்பதை மிகுந்த குற்றவுணர்வுடன் குறிப்பிட விரும்புகிறேன். ’சிந்தாமணி’ சூப்பர்மார்க்கெட்டில் நேற்று அமுல்புரோ என்கிற ஊட்டச்சத்துக்கலவை வாங்கினேன். பூஸ்ட் போன்ற அதைவிடச்சிறந்த சுவையுடையதாக உள்ளது. முதன்முறையாக அதை பருகியபோது திரு.குரியன் குறித்து இன்னும் எழுதாத என் தடித்தனத்தின் மீது எனக்கே எரிச்சலும் கோபமும் வருகிறது. நான் இன்னும் அனிதாதேசாயின் ‘மலைமேல்நெருப்பு’ நூலை கொஞ்சம்,கொஞ்சமாக படித்து வருகிறேன். வாசிப்பிலும் சோம்பேறித்தனம் கூடிவருகிறதை நினைக்கும்போது என்மீதான கோபம் மேலும் கூடிவருகிறது. இரா.முருகானந்தம். 5 2.10.2012 அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு,   நலமா? உங்களிடம் பெற்ற புத்தகங்களில் அவஸ்தை இன்று காலையிலேயே படித்து முடித்துவிட்டேன். கிருஷ்ணப்ப கௌடாவின் வாழ்க்கையே அவஸ்தை. அவரை யாருக்கும் எளிதில் பிடித்து விடுகிறது. அவர் கேட்காமலேயே அனைத்து உதவிகளும் தேடிவரும் தெய்வீக சக்தி பெற்ற ஆளுமை. வாழ்வின் முன்பகுதி மற்றும் பின்பகுதி அக, புற நேர்மை பற்றிய நிகழ்ச்சிகள் அவரது மனதை அமாவாசை கடல் போலாக்குகிறது. நல்ல சுவாரசியமான தொடர்ந்து வாசிக்க வைக்கும் சிறப்பான மொழியாக்கம். குமாரின் திருமண அழைப்பிதழ் கவர் போட்டு மஞ்சள் தடவும் பணி இன்று காலை நேரத்தை விழுங்கிச் செரித்தது. இந்த மாதம் ஐந்தாம் தேதி திருப்பூர் வருவேன் கண்பரிசோதனைக்கு. தங்களின் இரங்கல் அறிக்கை காலச்சுவடில் வருகிறதா என்பதைத் தெரிவிக்கவும். இசை கேட்பது என்பது பற்றிய பல விஷயங்களை ஓஷோவின் புத்தகங்களிலிருந்து படித்து அறிந்தேன். மந்திரம் ஓதுவது என்பது சொற்கள், சொற்களிலிருந்து ஒலி, ஒலியிலிருந்து உணர்வு எனும் வரிசையில் பயணிக்கிறது. சொற்கள் என்பவை அர்த்தமின்மையை உணர்த்துகின்றன. எனவே சொற்களை விடுத்து அதன் ஒலி அது ஏற்படுத்தும் உணர்வை தியானமாக கொள்ளவேண்டும் என்பது நூலிலிருந்து படித்தறிந்தது. தொடர்ந்து எழுதுவேன், நான் படித்த, கேட்ட, உணர்ந்த விஷயங்களை. நன்றி! உங்கள் அன்பரசு 6 3.10.2012 அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு,   முக்கியமான படங்களைப் பற்றி எழுதித்தரக்கூறினீர்கள். நீங்கள் எதுமாதிரியான படங்களைப் பார்ப்பீர்கள், விரும்புவீர்கள் என்று எனக்குத் தெரியாது. சில புதுமையான முயற்சிகளைச் செய்கிறவர்களை நான் மிகவும் விரும்புகிறேன். அந்தவகையில் அப்படி சில நபர்களை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். விஷால் பரத்வாஜ் இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக ஆளுமை கொண்டவர். அவரது படங்களான Kaminey, 7koon maaf, Omkara,ishqiya. இதில் இஸ்கியா தயாரிப்பும், இசையும், திரைக்கதையும் இவர் செய்திருப்பார். இயக்கம் இவரது சீடர். அனுராக் காஷ்யப் இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என தற்போது விநியோகஸ்தர் எனுமளவிலும் செயல்படுகிறார். இவரது படங்களான dev d, gangs of wasseypur, gulaal,ugly என்பனவும் தலைவரின் புகழ்பாடும் சித்திரங்கள். திபாகர் பானர்ஜியும் கூட திரைக்கதையாசிரியாக புகழ்பெற்றவர். Love sex aur dhoka, oye luckey luckey oye, shanghai ஆகிய படங்களைப் பாருங்கள். இவை தவிர சில புதிய முயற்சிகள் கொண்ட படங்களும் உள்ளன. இவை எப்படி இந்தியில் மட்டும் சாத்தியம் என்று எனக்கு புரிவதேயில்லை. இப்போது “aiyaa” படப் பாடல்களைக் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். இசை அமித் திரிவேதி. சாருவின் தேவ் டி பட விமர்சனத்தில் அமித் திரிவேதி பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதிலிருந்துதான் இவரை பின்தொடர்கிறேன். ஏமாற்றம் அடையவில்லை இன்றுவரை. நாட்டுப்புற செவ்வியல் தன்மையோடு, மேற்கத்திய இசையின் சேர்ப்பு தனித்துவமான இசையாக இவரிடமிருந்து வெளிவருகிறது. எளிதில் இதனைக் கண்டுபிடித்துவிடுகிறேன் இப்போதெல்லாம். அமித் திரிவேதி தான் இசையமைத்த தேவ் டி படத்திற்காக தேசியவிருது வாங்கினார். பின்நவீனத்துவ இசை என்கிறார் சாரு நிவேதிதா. அது என்னவோ, எனக்கு புதுமையான இசை என்றால் மிகப்பிடிக்கும். நீங்களும் கேட்டுப்பாருங்கள். உங்கள் அன்பரசு.     அன்பு… எனது கடிதங்கள் உன்னை அடைந்தது குறித்த அறிகுறிகள் எதுவும் உனது கடிதத்தில் இல்லை. உனது நுண்ணுணர்வின் மீதான நம்பிக்கையில்தான் அப்படிக்கோரினேன். உனது பரிந்துரைகளான விஷால் பரத்வாஜ், அனுராக் காஷ்யப் இருவரின் படங்களில் சிலதை பார்த்துள்ளேன். திபாகர்பானர்ஜியின் படங்களைப் பார்த்ததில்லை. கேட்கவேண்டிய இசைவடிவங்கள் திசையெங்கும் பறந்து கிடக்கின்றன, படிக்கவேண்டிய நூல்களைப்போலவே. இசைகூட மனதின் மொழிதானே! நாகேஷின் குணச்சித்திரநடிப்பில் வந்த ‘நீர்க்குமிழி’ படத்தைப் பார்த்தேன். எக்காலத்திற்குமான ஏதோ ஒன்று அதில் உள்ளதாக உணர்கிறேன். சமீபத்திய தமிழ்ப்படங்கள் பலவும் அசூசை அளிக்கக் கூடியதாகவே உள்ளன. இவற்றைப்பார்க்கும் தருணமே வாழ்வின் போதாத காலம் என்றுகூட நினைக்கிறேன். -இரா.முருகானந்தம். 7 6.10.2012 அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு,   நலமா? காலச்சுவட்டில் வெளிவந்த சிறுகதை படித்தீர்களா? முரளிதரன் மொழிபெயர்ப்பு நன்றாக இருந்தது. வாக்கு அரசியல்வாதியின் செயல்கள்தாம் கதை. சொல்லில் அடங்காத இசையை படித்து பின் குறிப்பெடுத்துக்கொண்டு இருப்பதால் வேகமாக படிக்க முடியவில்லை. இந்த வாக்கியமே பிழை. இசையை எப்படி வாசிக்க? உணர, உயிரில் உணர மட்டுமே முடியும். பல்வேறாக இசையின் வடிவங்கள், நுட்பமான இசை கேட்பதற்கான விஷயங்கள் என பரந்துபட்ட விஷயங்கள் வாசிக்கும் போது தெரியவருகின்றன. நம் ஊரின் செவ்வியல் இசை தாண்டி பல்வேறுபட்ட நாட்டிலுள்ள மக்களின் உயிரின் உணர்வாகிய இசையைக் கேட்க விருப்பமேற்பட்டுள்ளது. என்னை பயமுறுத்தியது அந்நூலிலுள்ள தற்கொலைப் பாடல்தான். பாடலைக் கேட்டவரெல்லாம் ஒரு சூழலில் அதை தனக்கும் மற்றவருக்கு நினைவுறுத்திவிட்டு துயரம் தாங்காது உயிர்துறந்து விட்டார்களாம். அப்பாடலை எழுதிய இசையமைப்பாளர் உட்பட. நீங்கள் புதிதாகப் படித்த மலர்ச்சி செய்த புத்தகங்களை குறிப்பிடுங்கள். அன்பரசு 57, கிளுவன்காடு, வடக்குப்புதுப்பாளையம்(அ), ஊஞ்சலூர்(வழி), ஈரோடு 638152. எனது முகவரி இதுதான். குறித்துக்கொள்ளுங்கள். தவறு எனதே. தங்களது முகவரியைக் கேட்கும்போதே எனது முகவரியை உங்களிடம் தெரிவித்திருக்க வேண்டும். இனி கவனமாக இருப்பேன். நன்றி! உங்கள் அன்பரசு. 8 9.10.2012 அன்பு முருகுவிற்கு,   நீங்கள் எழுதிய மொத்தக் கடிதங்களும் இன்றுதான் படிக்கக் கிடைத்தன. ஒரு விஷயத்தை நாமாக கடும் முயற்சி செய்து செய்வது எந்த அளவு சரியாக வரும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் வர்கீஸ் குரியன் பற்றி அனைவரும் அறியவேண்டும். அதற்கான முயற்சிகளை விரைந்து செய்து முடிப்பீர்கள் என்று நம்புகிறேன். எந்த புகழும் இல்லாமல் அமைதியாக அனைத்தையும் அறிந்து மறையும் இவரைப்போல எத்தனை பேர் உண்டு நம்மிடம். ஒருவருக்கு சிலைவைப்பது என்பதே அநாகரிகம் என்று நினைக்கிறேன். அவரின் சொற்களை கடைபிடிக்க சோம்பல் பட்டு, சிலைவைத்து பூக்கள் தூவி நம் குற்றவுணர்வுகளை மறைத்துக் கொள்கிறோமோ என்னவோ! அந்த தலைவர் எதனை முன்னிட்டு போரிட்டாரோ அதனை முனைமழுங்கச் செய்யும் தந்திரம் இதுவோ என்று ஐயம் எனக்கு. அலெக்சாந்தர் பூஷ்கினின் ‘கேப்டன் மகள்’ படித்துக்கொண்டிருக்கிறேன். இன்று காலையில்தான் சரத் சந்திர சட்டோபாத்யாய எழுதிய ‘தேவதாஸ்’ சு. கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்ப்பில் படித்து முடித்தேன். காலச்சுவடு வெளியீடு. காதலின் துயரம் சரளமாக பக்கத்திற்கு பக்கம் தேவதாசன் இறக்கும் வரை தொடர்கிறது. வேறு அதிக விவரங்கள் இல்லை. தேவதாஸ், சந்திரமுகி, பார்வதி என மூன்று கதாபாத்திரங்கள் கொண்ட சிறு நாவல். எளிமையாக பல பக்கங்களை அதிக பிரயத்தனமின்றி படிக்கமுடிந்தது. பத்திரிக்கை வைக்க பாப்பினி போய்விட்டு இப்போதுதான் வந்தேன். நல்ல படங்களை பார்க்க நாமும் சிறிது உழைக்க வேண்டும். பல கமர்சியல் குருமாக்களுக்கு மத்தியில்தான் ‘பர்பி’ படம் வெளிவந்தது. நல்ல படங்கள் பார்க்க விரும்புவன் தேடி அலைந்துதான படங்களைப் பார்க்கவேண்டும். இப்போதைய நிலைமை அதுதான். ஹிந்தி படங்களில் சற்று கருத்து சுதந்திரம் இருப்பது போல் உணர்கிறேன். பல்வேறு படங்கள் என உங்களுக்கு பிடித்த வகையில் படங்களை பார்க்க முடிகிறதல்லவா? அந்தவகையில் மகிழ்ச்சிதான். உங்கள் அன்பரசு. 9 12.10.12 அன்பு.. எனது கடிதங்கள் உன்னை அடைந்திருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி. சென்ற ஞாயிறன்று திருச்சி சென்ற போது அங்கு என்பிடி நடத்தும் புத்தகக் கண்காட்சி சென்றிருந்தேன். தகழியின் ‘செம்மீன்’ சு.ரா மொழிபெயர்ப்பு,அம்ருதா பிரீதமின் ‘ராதையுமில்லை ருக்மணியுமில்லை’, பொற்றேக்காட்டின் ‘விஷக்கன்னி’ ஆகியவற்றை வாங்கினேன். வாசிப்பிற்கான நேரத்தை அதிகரிக்க முடியவேயில்லை. ஒரு காலத்தில் நண்பர்கள் மற்றும் எழுத்தாளர்களின் கடிதங்களுக்காக ஆவலாக காத்திருந்த தருணங்களை உனது கடிதங்கள் இப்போது நினைவில் மீட்கின்றன. தகவல் தொடர்பின் யுகசந்தியை நம்காலத்தில் நாம் கடந்திருக்கிறோம் அது குறித்த பிரக்ஞை இல்லாமலே. வீட்டில் திருமண முஸ்தீபுகளில் இருப்பார்கள். குமார் திருமண வாழ்க்கை குறித்த கனவுகளின் அதீதத்தில் மூழ்கியிருப்பான். கவிதாவின் திருமணத்தில் நாம் சந்திக்கலாம். -இரா.முருகானந்தம். 10 17.10.2012 அன்பு முருகுவிற்கு,   நலமா இருக்கிறீர்களா? நான் உங்களுக்கு இந்த கடிதத்தில் மண்ட்டோ பற்றி, எனக்கு மனதில் பட்டதை பகிர்ந்து கொள்கிறேன். நந்துவிடமிருந்து மண்ட்டோ படைப்புகளை நினைவுறுத்தி பெற்று வந்து படித்துக்கொண்டிருக்கிறேன். மதம் பற்றிய ஆழமான வெறுப்பு அவரது கதைகளில் பகிரங்கமாகவே வெளிப்படுகிறது. முன்பு ஆதியில் ஒன்றாக இருந்த மனிதர்கள் இப்படி பிரிவுபட்டு நிற்பது மதம் என்ற ஒன்றினால்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மதக்கலவரம் என்ற பெயரில் தன் மனதின் வக்கிரங்களை, குரூரங்களை நிறைவேற்றிக் கொள்ளும் கூட்டங்கள் அவற்றின் செயல்பாடுகள், மதம் அவர்களின் மூளையை மழுங்கடித்துக்கொண்டிருப்பது என இவரது கதைகளைப் படிக்கும்போது நம் மதத்தின் மீது எழும் குரோதம் அளவிடமுடியாத ஒன்றாக உள்ளது. மண்ட்டோவை இப்படித்தான் புரிந்து கொள்ளவேண்டுமோ! இல்லையென்றால் நமக்கு எல்லாமே மரத்துப்போய்விட்டது என்று எண்ணிக்கொள்ள வேண்டியதுதான். ஆர். எல் ஸ்டீவன்சனின் ‘ஆள்கடத்தல்’ என்ற நாவலைப் படித்துவிட்டேன். டேவிட் என்பவனின் தனது சொத்துக்கான தேடல் சாகசங்கள்தான் கதை. டாக்டர் ஜெக்கியூம், மிஸ்டர் ஹைடும் என்ற கதையில் சமுதாயத்தில் நல்ல மனிதன் என்ற அடையாளத்திற்கான உருவத்தையும், தன்னுடைய மகிழ்ச்சி மற்றும் கோபத்தை வேறு ஒரு உருவத்தில் வெளிப்படுத்தி வாழ நினைக்கும் ஒரு மருத்துவரின் சாகசக்கதை இது. சிறந்த சாகச நாவல் இது. அமேசிங் ஸ்பைடர் மேன் கதையில் வரும் டாக்டர் மிருகமாகி பிரச்சனை தருவாரே அது போன்ற கதைதான். நான் ஈரோட்டில் சிபி சரவணனின் வீட்டில் புத்தகங்கள் வாங்கிப் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது வேலை செய்யுமிடத்தில் ஆனந்த் என்பவர் எதற்கு புத்தகங்கள் படிக்கிறாய் ? என்ன பிரயோஜனம்? என்றார். சிரித்து வைத்தேன். நீங்கள் சொல்லுங்கள். புத்தகங்களை எதற்கு படிக்கிறோம்? என்ன பிரயோஜனம்? உங்கள் அன்பரசு. 11 25.10.2012 அன்பு முருகுவிற்கு,   நலமாக இருக்கிறீர்களா? நாம் செய்ய நினைக்கும் விஷயத்தில் எதுவும் புறத்தூண்டுதல் இல்லாமல் அகத்தூண்டலாகவே இருந்தால் சிறப்பான ஒன்றாக இருக்கும் அல்லவா? தொடர்ந்த பயணங்களினூடே இரு புத்தகங்கள் படித்தேன். அலெக்சாண்டர் டூமாசின் ‘பிரபு மாண்டி கிறிஸ்டோ’ நான்கு பேர் செய்யும் சூழ்ச்சிகளால் ஒருவன் தன் காதலியை இழந்து சிறையில் பதினான்கு வருடங்கள் கழிக்க நேர்கிறது. பின் வெளியே வந்து பார்க்கும்போது அவன் ஒரே உறவான தந்தையும் பசியில் உயிர் விட்டிருக்கிறார். அவன் எப்படி தன் வாழ்வை உருக்குலைத்த நான்குபேரையும் பழிவாங்குகிறான் என்பது மீதிக் கதை. ஒரே மூச்சில் இடைவேளை இல்லாமல் படித்து முடித்தேன். மொழியாக்கத்திற்குத்தான் என் முதல் பாராட்டு. பரபரப்பு, திகில் என வேகம்..வேகம். சித்திலெப்பை மரக்காயர் எழுதிய அஸன்பே சரித்திரம் இது தமிழில் வெளிவந்த முதல் நாவல் என்கிறார்கள் முன்னுரையில். அஸனின் சொத்துக்காக ஏற்படும் சதிகள், தான் யார் என்று தெரிந்துகொள்ள அலையும் தேடல்கள் இவைதான் கதை. தற்போது தாந்திரீகம் பற்றிய அமரகதை என்கிற நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். ஆதிபகவன் படத்தின் பாடல்களைக் கேட்டீர்களா? அதில் ஒரு பாடல் முழுக்க ஹிந்தியாக உள்ளது. இதன் தாளம் உற்சாகம் கொள்ளவைப்பதாக உள்ளது. ஷாஜியின் சொல்லில் அடங்காத இசை நூல்தான் பல்வேறு இசைகளைக் கேட்க செய்தது. அதன் நுணுக்கங்களை கவனிக்கச் செய்தது என்று உளமார சொல்லுவேன். எம்.எஸ்.வியின் பாடல்களை வாங்க வேண்டும். நீங்கள் என்ன புதிதாக படித்தீர்கள்? அனுபவங்கள், மகிழ்ச்சியைக் கொண்டாடுவதிலும், பகிர்ந்து கொள்வதிலும்தான் வாழ்வே நிறைகிறது. பிறகு எழுதுவேன் பிறிதொன்றைப் பற்றி….                                                                                   உங்கள் அன்பரசு 12 26.10.12 அன்பு… நீ என்னை சந்திக்கும் முன் எழுதிய கடிதங்கள் கிடைத்தன. நீ வாசித்தவற்றை குறித்து உனது பார்வை சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. சாதத் ஹஸன் மண்ட்டோ புத்தகம் நான் நந்துவுக்கு அளித்தது பரிசாக. மண்ட்டோ குறித்த உனது கருத்துக்கள் மண்ட்டோவின் பாதிப்புடனே உள்ளன. மண்ட்டோ இந்திய இலக்கியங்களில் உருவான நவீனத்துவகாலத்தின் கனிகளில் ஒருவர். மதம் குறித்த மண்ட்டோவின் வெறுப்பும்,ஏன் காழ்ப்பும் என்றுகூட சொல்லலாம் அது நவீனத்துவத்தின் பாதிப்பால்தான். மதங்கள் புதிய ஜனநாயக அமைப்பில் நிறுத்தப்பட்டு விசாரணைக்குள்ளாக்கப்பட்ட காலம் அது. மண்ட்டோ தவிரவும் இந்தியாவின் பலமொழி இலக்கியங்களாலும் நவீனத்துவம் பெரும் வீச்சுடன் பாதிப்பை செலுத்தியது. தமிழில் ஜி.நாகராஜன், சம்பத், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் என ஒரு நீண்ட பட்டியலே உண்டு. நீ சமீபத்தில் வாசித்த ஆதவன்கூட ஒப்பீட்டில் மண்ட்டோவுக்கு மிக நெருக்கமானவரே. மதம் குறித்த கசப்பும்,வெறுப்பும் மண்ட்டோவின் படைப்புகளில் வெளிப்படுகிறதென்றால், சு.ரா படைப்புகளில் அது பகடியாகவும், எள்ளலாகவும் வெளிப்படுகிறது.(ஜே.ஜே சில குறிப்புகள்) பழையன பற்றிய எள்ளல், மதங்கள் குறித்த கடும் விமர்சனம், பண்பாடு குறித்த கட்டுடைத்தல், விழுமியங்கள் அடைந்துள்ள வீழ்ச்சி குறித்த கேலி, அறம் சார்ந்த விஷயங்களின் அபத்தம் ஆகியவை இந்நவீனத்துவ அலையின் பொதுவான குணாம்சங்கள். எழுத்து நடையில் புதுமையும்,பாய்ச்சலும், கச்சிதமான கதைசொல்லல் முறை, நேர்கோட்டிலான கதை சொல்லல்முறை ஆகியவை படைப்புவடிவங்களில் இருந்த பொதுஅம்சங்கள்.இவ்வகையில் உருது இலக்கியத்தின் உச்சமான நவீனத்துவ ஆளுமை மண்ட்டோதான். சிறுகதை வடிவத்தில் இந்தியாவில் அக்காலத்தின் முக்கிய ஆளுமையும் கூட. இருப்பினும் மண்ட்டோவின் இதர நவீனத்துவங்களின் மதிப்பீட்டைக் காட்டிலும் மதம் மனிதசமூகத்தின் வரலாற்றுப்பயணத்தில் பெற்றுள்ள இடம் அவ்வளவு எளிதானதோ,ஒதுக்கிடவிடக்கூடியதோ அல்ல. இதனை விரிவாகப் புரிந்துகொண்டவரும், இவ்வகையான புரிதலுடன் மதம் மற்றும் அது சார்ந்த விஷயங்களின் இருப்பின் காரணிகளை ஆழமாக அணுகியவரும் இந்திய நவீனத்துவர்களிலேயே யு.ஆர் அனந்தமூர்த்தியே ஆவார். மற்றவர்களுடையதைப் போல தட்டையாக கேலிசெய்வது, கடுமையாக விமர்சிப்பது, அல்லது துச்சமாக ஒதுக்குவது போன்றவற்றைத்தாண்டி வாழ்வின் பின்புலத்தில் இவற்றை வைத்து அணுகியவரும் அவரே. மனித குல வரலாற்றில் மதங்களை அப்படி ஒற்றைத்தன்மையுடன் மட்டும் அணுக முடியாது. இனக்குழு காலத்திலிருந்து பெரும்மக்கள் சமூகங்களை இணைத்து சமூக வாழ்விற்கு நகர்த்தியவை மதங்களே. அதன்மூலம் மனிதனின் ஆதிகுணமான ஒருவரை ஒருவர் வெற்றிகொள்ளும் உளவியலை ஒருவரையொருவர் ‘தன்னைப்போன்றவரே இவர்’ என்றுணரும் தளத்திற்கு நகர்த்தியவையும் மதங்களே. மனிதகுலத்தின் உயர்ந்த அறம் மற்றும் விழுமியங்கள் மதங்களாலேயே இம்மண்ணில் உருவாக்கி வளர்க்கப்பட்டன. கலை, பண்பாடு, கல்வி, தத்துவம் ஆகியவை மதங்களின் கொடையே. நம்நாட்டில் கோயில்களே கல்வி புகட்டும் இடமாகவும், கலைகளை போற்றிய தளமாகவும் இருந்தது அதனால்தான். தமிழில் சமணர்களின் துறவியர் வாழ்ந்த பள்ளிகளே இன்றைய பள்ளி என்பதன் ஆதார அமைப்புகள். மதங்கள் ஒன்றையொன்று வென்றிட முனைந்தபோது அந்த மதங்களைச்சார்ந்த வெகுமக்கள் மீது நடந்த வன்முறை, அரசர்கள் மதங்களைத் தழுவி நின்றபோது அதற்கு எதிரான மதப்பிரிவினர் எதிர்கொண்ட வன்முறை, அதனால் தொடர்ந்த படையெடுப்புகள், போர்கள் ஆகியவை மனிதகுலத்தை நிலைகுலைய வைத்ததும், அதன்பிறகு அவை சுரண்டலுக்கான, அடிமைப்படுத்தலுக்கான கருவிகளாகப் பயன்பட்டதும், இதன்பிறகு உருவான மதசீர்திருத்த, சமூக மறுமலர்ச்சிஇயக்கங்களும், அதனால் ஏற்பட்ட பலநாடுகளிலான, தேசிய எழுச்சி அரசியலும்,ஜனநாயகச்சிந்தனைகளும் ஆன காலகட்டத்தின் இறுதியில் நவீனத்துவர்கள் மதங்களை கூண்டிலேற்ற முற்பட்டது ஒன்றும் வியப்பானதல்ல. இருப்பினும் இதற்குப்பின்னும் மனிதன் மதங்களினூடே வாழ்கிறான் என்கிற நிதர்சனத்தின் பின்னணி சாதாரணமல்ல. மதங்களை நாம் விமர்சிக்கலாம், கூண்டிலேற்றலாம், விசாரிக்கலாம், தண்டிக்கலாம், ஆனால் ஒருபோதும் நிராகரிக்கமுடியாது. அடிப்படையில் மதங்களை வழிபாடுகளின் தொகுப்பாகவோ, பத்தாம்பசலித்தனத்தின் கூடாரமாகவோ, மூடநம்பிக்கைகளின் மூட்டையாகவோ, வன்முறையின் ஊற்றுக்கண்ணாகவோ ஒருகாலகட்டத்தின் இலக்கிய, அறிவுலக ஆளுமைகள் பார்த்திருக்கலாம். அது அக்காலத்தின் கட்டாயமும் தேவையுமாக இருந்திருக்கலாம். ஆனால் உலகத்தின் வரலாற்றையும், அதற்கு மனிதகுலத்திற்குமான உறவையும் புரிந்து கொள்ள முற்படும் யாரும் அப்படி மட்டுமே பார்க்க முடியாது, பார்க்கவும் கூடாது என்பதே எனது கருத்து.   -இரா.முருகானந்தம் 13 28.10.12 அன்பு…   இலக்கியப்பிரதிகளை வாசிப்பதால் என்ன பயன்? என்ற கேள்வியை எதிர்கொள்ளாத வாசகரோ, எழுத்தாளரோ இருக்கமுடியாது. நாலாந்தர திரைப்படங்களை லஜ்ஜை ஏதுமின்றி பார்ப்பது குறித்து எந்தவித உறுத்தலுமின்றி பார்த்து விட்டு இலக்கியம் படிப்பதால் என்ன பயன்? என்று கேட்பது சமூகத்தின் சிந்தனை வறட்சியையும், நோய்க்கூறையுமே பிரதிபலிக்கிறது. குடித்துவிட்டு போதையில் பொதுஇடத்தில் அநாகரிகமாக நடப்பவர்களைக்கூட எளிதாகக் கடந்துசெல்பவர்கள் இலக்கியம் படிப்பவர்களை ஏதோ போலப்பார்ப்பதும், மொண்ணைத் தனமாகக் கேள்வி கேட்பதும் நாம் என்ன மாதிரியான மனநிலை கொண்ட சமூகத்தில் வாழ்கிறோம் என்பதை உணர்த்துகிறது. ஆனால் கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டு பழமைவாய்ந்த மொழியென்றும்,பேரிலக்கியங்கள் பலவற்றை கொண்டிருக்கும் மொழியென்றும் கருதும் ஒரு மொழி அம்மொழி பேசும் சமூகத்தில் இத்தகைய கேள்விகள் எழுவது நாம் வழிதவறி வெகுதூரம் வந்திருப்பதை நமக்கு அறிவிக்கிறது. நமக்கு நமதான ஒரே வாழ்க்கையே இருக்கிறது. பரந்த மனித சமூகம் பன்முகப் பரிமாணம் கொண்டது. பல்வேறு தரப்பட்ட நிலப்பரப்புகளில் வாழும் வெவ்வேறு மண்டலியல் கூறுகளைக்கொண்ட இனக்குழுக்கள், சமூகங்கள், அவர்களின் பண்பாடுகளையும் அறியவும், இவற்றையெல்லாம் தாண்டிய மானுடப்பொது உணர்வையும்,வாழ்வின் பேரறத்தை தரிசிக்கவும் இலக்கியமே ஒரே வழியும், வாய்ப்பும். தேர்ந்த வாசகன் உலகின் எந்த நிலப்பரப்பில் பயணிக்கும் போதும் அதை அந்நியமாக உணர்ந்ததில்லை. பன்முகத்தன்மை கொண்ட உலகினை அங்கீகரிப்பதும் ஏற்பதும் தயக்கம் தருவதில்லை. தொடர்ந்த புறக்கணிப்பு, போலிகளைக் கொண்டாடும் பண்பு, நுண்ணுணர்வு மழுங்கிப்போன தடித்தனம் அனைத்தையும் சகித்துக்கொண்டு இம்மொழிக்காக உலகியல் வாழ்வில் பெருந்துன்பங்களை வரம் போல ஏற்றுக்கொண்டு தங்களை அர்ப்பணித்து பணியாற்றிய எண்ணற்ற ஆளுமைகள் தமிழைத்தவிர இருந்திருக்க முடியாது. கடந்த நாற்பது ஆண்டுகளில் அரசாங்கமும், நிறுவனங்களும் செய்யத்தவறிய மாபெரும் மொழியியல், இலக்கியக்கொடைகள் அனைத்தும் இத்தகையவர்களால் அளிக்கப்பட்டவையே. இந்த மகத்தான ஆளுமைகள் வழியாகவே பெரும் இலக்கியமரபு கொண்ட இம்மொழி தனது இருப்பைத்தக்க வைத்துக்கொண்டுள்ளது. மற்றபடி இதனால் என்ன பயன் என்பவர்களை பொருட்படுத்தப்படுத்த தேவையில்லை. -இரா.முருகானந்தம் 14 5.11.2012 பிரிய முருகுவிற்கு,   நலமா? தங்களது கடிதங்களின் தொகுதி கிடைத்தது. மண்ட்டோவின் பாதிப்பு இல்லையோ என்னவோ சமூகத்தின் கடைபட்டவர்களை எழுதியது ஜி. நாகராஜன்தான் என்று அவரது குறத்தி முடுக்கு, நாளை மற்றும் ஒரு நாளே படித்தபோது உணர்ந்தேன். மதங்கள் மனிதனுக்கு நிறைய உதவியிருக்கலாம். ஆனால் அதைக்கொண்டு வாழ்க்கை நடத்துபவர்களால் காவிநிறமே அச்சுறுத்தும் நிறமாகிவிட்டது நமது நாட்டில். ‘ஹெய்டி’ எனும் ஜோஷன்னா ஸ்பைரி எழுதிய குழந்தைகள் நாவல் வாசித்தேன். அடல் ஹெய்டி எனும் சிறுமி தன்னைச் சுற்றியுள்ள உலகை அன்பினால் எப்படி நெய்கிறாள் என்பதுதான் கதை. அவளை எல்லோருக்கும் பிடிக்கிறது. தன்னைவிட மற்றவரின் நலத்தை , அகத்தை விரும்புகிறாள். இவளின் அன்பு, காதலால் கிளாரா எனும் கால் ஊனமுற்ற சிறுமி நோய்மையைத் துறக்கிறாள். ஜோனாதன் ஸ்விப்ட் எழுதிய ‘கலிவரின் பயணங்கள்’ நாவல் படித்தேன். பயணங்கள் என்றாலே சுவாரசியம்தானே. இதில் கலிவர் பயணிக்கும் பயணத்தில் தீவுகள், விசித்திர மனிதர்கள் என புனைவுலகை உருவாக்கி அங்கதச்சுவையை அள்ளித்தெளிக்கிறார். குள்ள மனிதர்களின் தீவு, உயர மனிதர்களின் தீவு, பறக்கும் மனிதர்கள் தீவு, குதிரைகளின் தீவு என செல்லும் கதையில் கிடைக்கின்ற இடங்களிலெல்லாம் பகடி வயிறு வலிக்க வைக்கிறது. குதிரை தீவுகளில் யாகூ எனும் மனிதக்குரங்கு கூட்டத்தை வேலையாளாக வைத்திருக்கும் குதிரைகளின் நேர்மையை வியந்து கலிவர் தன்னை குதிரையாகவே மாற்றிக்கொண்டால் என்ன என்று அது போல நடந்துகொள்ள விரும்புவது மனிதனின் மேலுள்ள வெறுப்பு போலவே படுகிறது. சந்திப்போம். உங்கள் அன்பரசு.     பிரிய முருகுவிற்கு,   நலம் விழைய பிரார்த்திக்கிறேன். நான் தங்களை சந்தித்து விட்டு வெங்குட்டுவன் அண்ணாவை வஞ்சிபாளையம் பிரிவு நிறுத்தத்தில் இறங்கி சந்தித்தேன். வெங்குட்டுவன் பல சிறுகதைகள், கவிதைகள் எழுதுகின்றவர் கூடவே ஜோதிடமும் கற்றுக்கொண்டவர், மேலும் திரு. வக்கிரத்திற்கு மிகப்பிடித்தவர்.மெலிதான புன்னகையும், கசியும் வியர்வை நெடியுமாக அருகில் வந்து கைபிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். வீட்டை ஒட்டிய அறையில் பவர்லூம் தறி ஓடிக்கொண்டிருந்தது. அவரின் அம்மாவின் ஐயப்பார்வை என் முதுகில் அம்பாய் துளைத்து நின்றது. முதன்முதலில் அவரிடம் பேசுகிறேன் என்பதால், தங்களிடம் வாங்கிய நூல்களைப்பற்றிப் பேசலாம் என்று அவரிடம் நூல்களைக் காட்டினேன். புத்தகங்களை வாங்கிப்பார்த்துவிட்டு, நமது சூழலைப் பாதிக்கும் கதைகளை மட்டும்தான் என்னால் படிக்கமுடிகிறது. மும்பையில் ஒருவன் இறந்தால் என்னால் நிச்சயம் அழமுடியாது. நான் ஏன் அழவேண்டும்? பிற மொழி இலக்கியம் படிப்பது, படிப்பதாகச்சொல்லுவது எல்லாம் டாம்பீகம் தவிர வேறொன்றுமில்லை. நீ என்ன தெரிஞ்சுகிட்ட? என்னமோ மண்ட்டோ பத்தி பேசற? என்ன அதிலிருந்து தெரிஞ்சுகிட்ட சொல்லு பார்ப்போம். மண்ட்டோ தண்ணி போட்டுட்டு திரிஞ்சவன் ஏன் நீ இப்ப படிச்சயே ஜி. நாகராஜன் அவனும் அப்படித்தான் என்றார். நான் எதுவும் பேசாமல் மேசையின் சிறு வளையங்களின் நிறத்தெறிப்பை பார்த்துக்கொண்டிருந்தேன். அதன்பிறகு, நான் எதுவும் அவரிடம் பேசவில்லை. உங்களின் பேச்சுவன்மை இருந்தால் பதில் சொல்லியிருக்க முடிந்திருக்கலாம். ஏனோ தொடர்ந்து வெங்குட்டுவன் விரக்தியாகவும், இறுக்கமாகவும் இருப்பது போலிருந்தது. காலையில் 9.45 மணிக்கு கொடுவாய் வந்து பஸ் ஏற்றிவிட்டார். அதற்கு முன் அவரிடம் வாங்கலாம் என்று எடுத்து வைத்திருந்த நூல்களையும் அவரிடமே கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். ஓடு, ஆபத்து என்று ஒரு குரல் உள்ளே தமிழ் டப்பிங் குரல் கேட்டது. பிறமொழி, களம் என்றெல்லாம் இருப்பினும் அது நம்மைப்போன்ற மனிதனின் வாழ்க்கை தானே. அது மாறுவதில்லையே. நுண்ணிய நுட்பமான உணர்வுகள்தான் அது என்றும் மாறுவதில்லை. சொல்லியிருக்கலாம். சொல்லவில்லை. மிகத்தீவிரமான எரிச்சலோடு பேசுவது போலிருக்கும் மனிதர்களிடம் தலையசைப்பைக் கூட இயல்பாக என்னால் செய்யமுடியவில்லை. அனுமதி கேட்க வேண்டுமோ என்ற அச்சமும், தலைமை ஆசிரியர் அல்லது கணக்கு ஆசிரியரின் முன்நிற்பது போல் பதட்டமும் வெங்குட்டவனோடு இருந்த கணம் முழுக்க நிரம்பியிருந்தது. வாழ்க்கையின் வெம்மையில் அனைத்தையும் தொலைத்துவிட்டவர் போல மிகத்தீவிரம் கொண்டு பிடிவாதமான கருத்துக்களை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்பதைப்போல பேசுபவர்களில் முதலிடம் வெங்குட்டுவனுக்குத்தான். ஒவ்வொரு மனிதருமே சுவாரசியம்தான்.சந்திப்போம். உங்கள் அன்பரசு. 15 6.11.2012 பிரிய முருகுவிற்கு,   நலம் விழைய இயற்கையை வேண்டுகிறேன். உங்களிடம் வாங்கிய புத்தகங்களைப் படிப்பதில் சிறிய தொய்வு ஏற்பட்டிருக்கிறது. மாக்சிம் கார்க்கியினுடைய ‘எனது குழந்தைப்பருவம்’ என்ற நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். தமிழில் நம்பி. சற்று சோம்பல் தரக்கூடிய சுவாரசியம் குறைந்த நூல்தான் இது. வண்டி ஓட்டக் கற்றுக்கொண்டதுதான் திரு. வக்கிரத்தின் திருமணத்திற்கு அலைந்ததில் கிடைத்த ஒரே நல்ல விஷயம். அடுத்தமுறையில் நம்பிக்கையில்லை. இருந்தாலும் வாய்ப்பிருந்தால் தாராபுரத்தை சுற்றியுள்ள வேறு ஏதாவது இடத்திற்கு செல்லலாம். பார்ப்போம். ஜெயமோகனை சந்தித்தது நல்ல ஒரு நிகழ்வு. சென்னையில் கூட அவரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தங்களின் மூலம் வாய்ப்பு கிடைத்தது. நன்றி. நேற்று இரவு ‘ ladis vs rickey ball’ இந்திப்படம் பார்த்தேன். நான் அவனில்லை என்ற படம் இருக்கிறதே அந்த வகை. ரன்வீரின் முகம், உடல் வசீகரமானதாக இருக்கிறது. ஜாலியான படம். பணத்திற்காக பேராசைப்படும் பெண்களை ஏமாற்றுவதுதான் கதை. சுவரில்லா சித்திரங்கள் படம் துயரமும் கண்ணீரும் நெருக்கித்தள்ள, டிவிடி பிளேயரும் கண்ணீர் விடத்தொடங்க, படம் நின்று நின்று ஓடி, கண்ணைக்கட்டிவிட்டது. கம்ப்யூட்டர் வாங்குவது பற்றி சொன்னீர்கள். இயக்குவதற்கான சக்திக்கு என்ன செய்வீர்கள்? சந்திப்போம். உங்கள் அன்பரசு. 16 7.11.2012 பிரிய முருகுவிற்கு,   நான் நலம். தாங்கள் நலமா? மெல்ல நிலம் தன் தாகம் தீர்த்துக்கொண்டிருக்கிறது. வெயில் மறைவில் சற்று சோம்பல் மேலிட்டு இருக்கிறது. வெளிச்சக்குறைவால் அதிகம் படிக்க முடியவில்லை. லார்ட் ஆப் தி ரிங்ஸ் படம் பார்த்துக்கொண்டிருந்தேன். கால்வினோவின் சிறுகதைகள் படித்து விட்டேன். இவரைப் பொறுத்தவரையில் மிகச் சிக்கலான கதைகள் எல்லாம் எதுவும் இல்லை. ஒரு குளியலறை ஷவரில் வெளிவரும் நீர் பற்றி இப்படியெல்லாம் யோசித்து எழுதமுடியுமா என்று யோசிக்க வைக்கும் கதை. இதைத்தான் எழுதவேண்டும் என்றில்லாமல், கதை அதன் போக்கிலே நீளுகிறதான் புதுமை. இது போலவே முன்பு எளிய அடையாளமாக இருந்த தன் முகத்தை பார்வைக்குறைபாட்டினால் அணியும் ஒரு கண்ணாடி எப்படி சமூகத்திலிருந்து அந்நியப்படுத்துகிறது என்று கூறும் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் கதையும் அதுதானே!. தி. ஜானகிராமனின் ‘அடி’ உணர்ச்சிக்கும், அறிவுக்குமான போராட்டத்தை எளிமையாக நேர்மையாக விவரிக்கும் படைப்பு. கதையில் அவனும், அவளும் அதை உணர்ந்தே மனம் ஒருமைப்பட்டே ஈடுபடுகிறார்கள். அது பற்றிய அச்சமும் அவர்களிடம் இருந்தாலும் ஏதோ ஒன்று அவர்களை ஒரே சரடில் இணைக்கிறது. மனைவி அவனை மெல்ல அதிலிருந்து மீட்டெடுக்கிறாள். அதுதான் அடி. இன்று உளறுவதெல்லாம் உண்மை என்று பஞ்சாயத்து நடந்து ஏதோ ஒரு கப் பஞ்சாயத்து போல ஒரு தீர்ப்பு எழுதுகிறார்கள். ஆணுக்கும், பெண்ணுக்குமான உறவுச்சிக்கல்கள் என்றும் முடியாத ஒன்று. பெரும் சுவர் இருவருக்கும் இடையில் நிற்கின்ற வரை ஆணுக்குப் பெண்ணைப்பற்றியும்,பெண்ணுக்கு ஆணைப் பற்றியும் அறிந்தே தீரும் ஆவல் தீரவே தீராது. யாஷ் சோப்ராவின் இறுதிப்படமான ஜப் தக் ஹை ஜான் படத்தின் பாடல்களைக் கேட்டீர்களா? பிறகு சந்திப்போம். உங்கள் அன்பரசு. 17 24.11.2012 அன்பு முருகு அண்ணாவிற்கு,   தங்களின் நலத்திற்கு எனதன்பு. புதிதாக வாங்கிய நூல்கள் ஏதாவது படித்தீர்களா? ஆனி ப்ராங்கின் நாட்குறிப்புகளை தற்போது படித்துக்கொண்டிருக்கிறேன். அற்புதமான எழுத்து. அவர் இன்னும் சிறிது காலம் இருந்திருந்தால் பல சிறப்பான நூல்கள் கிடைத்திருக்கக் கூடும். தேங்காய் வெட்டிற்கு ஒரு வாரமாக செல்வதால், நூல்களை முன்னைப்போல வேகமாக படிக்கமுடியவில்லை. தினமும் ஐம்பது பக்கத்திற்கு குறையாமல் படிக்க முயற்சிக்கிறேன். திருமண அலைச்சல்கள் சற்று குறைந்து அரவங்கள் குறைந்திருக்கின்றன. வக்கிரமும், அவரின் துணையும் சென்னை சென்றுவிட்டார்கள். நாட்குறிப்பை கணினியில் எழுதலாம் என்றாலும் சோம்பல் எனக்கு அதிகமாகிவிட்டதால், தாளில் எழுதி பொறுமையாக அதனை கணினியில் தொகுக்க எண்ணியிருக்கிறேன். பார்ப்போம். தேங்காய் வெட்டு முடிந்ததும், தங்களின் இல்லத்திற்கு வரலாம் என்று எண்ணியிருக்கிறேன். வெங்குட்டுவன் அண்ணா திரு.வக்கிரத்திற்கு ‘நாகம்மாள்’ நூலை பரிசளித்திருக்கிறார். தாங்கள் தொடர்ந்து இரங்கல் குறிப்பு மட்டும் அல்லாது முக்கிய ஆளுமைகள் குறித்து எழுதி வைக்க வேண்டும். தங்களின் உடைத்தேர்வு மெருகேறி வருகிறது. உடைகள் கச்சிதமாக பொருந்திவருகிறது. சந்திப்போம். உங்கள் அன்பரசு 18 27.11.12 அன்பு…   அ.முத்துலிங்கத்தின் ‘வியத்தலும் இலமே’ ஒரு சிறந்த நூல் என்பது மட்டுமல்ல அ.முத்துலிங்கம் அவர்கள் மொழி பெற்ற பெரும் பேறு. தமிழால் தகுதி பெற்றவர் தமிழை பலதளங்களில் தகுதிப்படுத்த அரும்பணியாற்றியவர். நமது மரபில் யட்சன் என ஒன்றுண்டு. யட்சன் தன்னைத்தொடர்ந்து வர பெண்கள் முடி, வளையல் போன்றவற்றை விட்டுச்செல்வார்களாம். எனது மொழியில் எனக்கு அ.முத்துலிங்கம் ஒரு யட்சன். அவருக்காக நான் எதையும் விட்டுச்செல்வேன் நண்பா! நான் தொடர்ந்து விரிவாக எழுதுவது என்பது எனது சோம்பல், தடித்தனம் போன்றவற்றால் தொடர்ந்து தடைபட்டே வருகிறது. எழுதும் மனோபாவம் கூட வரம்தான் போலும். மனதை சரியான திசையில் நிலைப்படுத்திக்கொள்வதும், ஆக்கப்பூர்வமாக முன்னகர்ந்து செல்வதும் கூட கடும் சவாலான விஷயமாக உள்ளது. தற்போதுள்ள மனநெருக்கடிகளையும், பணநெருக்கடிகளையும் கடந்தபின் அது சாத்தியம் என நம்புகிறேன். -இரா.முருகானந்தம் 19 1.12.2012 பிரிய முருகு அண்ணாவிற்கு,   நலம் விழைய வேண்டுகிறேன். தங்களது 27ம் தேதியிட்ட மடல்கள் கிடைத்தன. மன, பண நெருக்கடிகளைப்பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். பணத்தில் நிறைவு பெற்றால் மனம் சமநிலைக்கு, நிம்மதிக்கு அரற்றுகிறது. நிம்மதியான சூழலில் நமக்கு உள்ள பணப்போதாமையான தரித்திரம் குறித்து சமூகம் கூரிய வஞ்சப் புன்னகையால் பல கேள்விகளைக் கேட்கிறது. நாம் எதிலும் எளிதில் நிறைவு பெறுவதில்லை. அடங்காத பேராசை வாழ்வை நிர்கதியில் தள்ளுகிறது. அ. முத்துலிங்கம் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். புனைவா, அனுபவமா என்று மயங்கும் வடிவத்தில் சுவாரசியமான தணியாத அங்கதமான நடை கொண்ட எழுத்துக்கள் கொண்டவர் அவர். எந்த ஒன்றும் அவருடைய எழுத்தில் அற்புதமான அனுபவமாக மாறுவது குறித்து எனக்கு ஆச்சர்யம்தான். அது எப்படி என்று புரியவில்லை. உறவுகளை அணுகுவதில் பல தடுமாற்றங்களை அனுபவித்து வருகிறேன். முடிந்தவரை அவற்றிலிருந்து விலகியே இருந்து வருகிறேன். தற்போது காலச்சுவடு நேர்முகம் 2000-2003 தொகுப்பை வாசித்து வருகிறேன். ட்ராட்ஸ்கி மருது, ஞாநி, நிர்மல்சர்மா போன்றோரது நேர்காணல்களை படித்துவிட்டேன். இன்னும் சிறு பகுதி இருக்கிறது. உங்களுக்கு நான் எழுதும் கடிதங்கள் எனக்கு பெரிய ஆசுவாசமாக இருக்கிறது. இதில் சொல்லாத பல விஷயங்கள் இருந்தாலும், பகிர்ந்து கொண்டவையே பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. தேங்காய் வெட்டு முடிந்துவிட்டது. சந்திப்போம். உங்கள் அன்பரசு 20 3.12.2012 பிரிய முருகுவிற்கு,   நலம் விழைய வேண்டுகிறேன். நீங்கள் கூறியதைப் பின்பற்றி முதல்வேலையாக பாஸ்கரனின் உதவி பெற்று விண்ணப்பத்தை நிரப்பி, இன்று அனுப்பப் போகிறேன். எழுத்துத் தேர்விற்கான பயிற்சிகளைத் தொடங்கிவிட்டேன். தேர்வுமையம் சென்னையில். அறச்சலூர் இந்தியன் போலீசிடம் ‘forest Gump” என்ற படத்தை வாங்கிவந்து பார்த்தேன். மிகுந்த நம்பிக்கை தரும் படம். நடக்க முடியாத கால்களைக் கொண்டுள்ள சிறுவன் தன் நம்பிக்கையால் கால்கள் குணமாகி, தடகள வீரனாகி, ரக்பி வீரனாகி, பின் ராணுவத்தில் சேர்ந்து, பல பதக்கங்கள் பெற்று, பிறகு ஓய்வு பெற்ற பின் தன் தோழனான இறந்துபோன நண்பனின் நினைவாக மீன்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலை தொடங்கி அவன் அம்மாவிற்கு உதவிசெய்கிறான். இறுதியில் தன் நீண்ட நாள் தோழியான ஜெனியைத் திருமணம் செய்து, அவள் இறந்துவிட. தன் ஒரே குழந்தையை பள்ளிக்கு அனுப்பிவைப்பதோடு படம் நிறைவடைகிறது. பல காட்சிகள் நான் கூறவில்லை. டாம் ஹேங்க்ஸ் நடித்துள்ள இப்படம் சிறந்த வசனங்களைக் கொண்டது. ‘’ வாழ்க்கை என்பது ஒரு பெட்டி நிறைய உள்ளிருக்கும் இனிப்புகள் போல. ஆனால் அவற்றில் எது நமக்கு கிடைக்கும் என்பதை நாம் அறிவதில்லை’’, ‘’தினந்தோறும் வாழ்க்கையில் அதிசயங்களும், ஆச்சர்யங்களும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கிறது’’. வியட்நாம் போர் முதல் அமெரிக்காவின் அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளிலும் பாரஸ்ட் கம்ப் கலந்துகொள்கிறார் எப்படி? அது இயல்பாகவே நடக்கிறது. படம் கிடைத்தால் பாருங்கள். பல்வேறு விருதுகள் வாங்கி குவித்த படம். ஒரு பேருந்து நிறுத்தத்தில் வந்து உட்காரும் ஒவ்வொருவரிடமும் தன் கதை சொல்கிறார் பாரஸ்ட் கம்ப். கதை மெல்ல விரிந்து, பின் நிகழ்காலம் திரும்புகிறது. அற்புதங்களை திரையிலும் உருவாக்க முடியும் நம்பிக்கையும், நல்ல திரைக்கதையும் மானுட நேயமும் இருந்தால் என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம். சந்திப்போம். உங்கள் அன்பரசு 21 4.12.2012 பிரிய முருகு அண்ணாவிற்கு,   நலம் விளைய வாழ்த்துகிறேன். உங்களுக்கு என்னையும், திரு. வக்கிரத்தையும் நினைத்து சினமேற்படக்கூடும். சென்னையில் படித்துக்கொண்டிருக்கும்போது, கூடவே நேரமிருந்ததால், பகுதி நேரமாக ஏதாவது பதிப்பகத்தில் வேலை பார்க்க விரும்பினேன். காலச்சுவடில் வேலை கிடைக்குமா என்று வக்கிரத்திடம் ஆலோசித்தேன். நானே சென்று பார்க்க விரும்பினேன். அதற்குள் வக்கிரம் தங்களுக்கு அலைபேசி சிபாரிசு கேட்டுவிட்டான். எனக்கு பெரும் சங்கடமாகிவிட்டது. நட்பு வேறு, இது போன்று சிபாரிசிற்கு பயன்படுத்துவது வேறு. தகுதியை வளர்த்துக்கொள்ளாமல் சிபாரிசை நம்பி பயணிப்பதை நான் விரும்பவில்லை. கற்றுக்கொள்ள விரும்பி அப்பதிப்பகம் செல்ல விழைந்தேன். தங்களோடு இருக்கும் ஒவ்வொரு நொடியும் கதகதப்பான உள்ளங்கை என் தோளில் படிந்து கடும் குளிரிலும் என்னை காப்பாற்றுவது போல் உணர்கிறேன். நட்பில் பலன்களை எதிர்பாராமல் இருப்பது பெரிய விஷயம். நான் தங்களிடம் பல புதிய அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவே விரும்புகிறேன். வயிறு காய்ந்து இலக்கியம் படிக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். மறுக்கமுடியாதது தங்களது வாதம். நான் சிலசமயம் என் மனதின் அழுகையை வெளியில் சூழல் தெரியாது பிதற்றி விடுவேன். எனக்கு யாரிடமும் பேசுவது என்பது ஒன்றுபோலத்தான். பழகத்தெரியாதவன் என்று அண்ணாநகர் ஆண்டன் செகாவ் வக்கிரத்திடம் எப்போதும் கூறிக்கொண்டே இருப்பார். தங்களிடம் எனது சுயவாழ்க்கை பற்றி பேசாததற்கு காரணம் அவை வெற்று புலம்பல்களாகிவிடும் என்கிற பயம்தான் காரணம். தங்கள் உபசரிப்பிற்கு என்றும் நன்றியுடன் இருப்பேன். மென் சொற்களைக் காட்டிலும், வன் சொற்கள் தன்வேலையை மிகச்சரியாக செய்கின்றன. ஒரு சொல் அடிக்கும். ஒரு சொல் ஆதுரமாக இருக்கும். வங்கியின் கிளர்க் பதவிக்கு விண்ணப்பிக்க முயற்சித்தபோது, கல்வித்தகுதி பற்றிய இடங்களை எப்படி நிரப்புவது என்று என் மந்தபுத்திக்கு தெரியவில்லை. கற்பனை உலகை வயிற்றில் எரியும் தீ வெகு நிச்சயம் எரித்துவிடும். ஆனால் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. புலம்பல்கள் நிச்சயம் சலிப்பிற்குத் தள்ளும். எனது புத்தியும், அறிவும், நிலைகொள்ளாத மனமும், பரபரக்கும் கால்களும் எங்கேயும் என்னை நிற்க விடுவதில்லை. ஓடிக்கொண்டேயிருக்கச் சொல்லுகின்றன. உங்களது வழிகாட்டல்கள் எனக்கு பயன்படப்போவதில்லை. மன்னியுங்கள். சென்னையில் முன்னிருந்த தீவிரம் படிப்பில் இல்லை. மெல்ல ஏதோவொன்று என்னைப் பிடித்தது. இரவுகளில் நாட்குறிப்புகளில் கிறுக்கிக்கொண்டு அழுது அரற்றிக்கொண்டு வானத்தைப் பார்த்தபடி இருப்பேன். பின் அதனை இறுதியாக வக்கிரத்திடம் கொடுக்க, அவர் அதனை தன் நண்பர்களிடம் பகிர, அவர்களால் பரிகாசத்திற்கும், ஏளனத்திற்கும் ஆளானதுதான் மிச்சம். பின் அதனைக் கிழித்து தீயின் பசிக்கு உணவிட்டபோது மனதில் எழுந்த நிம்மதிக்கு அளவேயில்லை. ஒவ்வொருவருக்கும் யாரோ ஒருவருடைய தோள் தேவைப்படுகிறது. நான் வக்கிரத்தை நினைத்தேன். அவர் மைலாடிப் பெண்ணை நினைத்தார். ஏணியில் ஏறி இடத்தை அடைந்துவிட்டவர்கள், ஏணியே இல்லாமல் சுவரின் உயரத்தை பார்த்தபடி நிற்பவனை பரிகசிப்பது புதிதல்லவே. யாரையும் குற்றமுரைக்க என்ன தகுதி எனக்கு? எதிர்பார்ப்பில்லாத உறவு மட்டுமே நீடிக்கும் என்பது நான் உணர்ந்த ஒன்று. பயன் இல்லாத ஒருவரை யார் சீண்டுவார்கள் என்று வெங்குட்டுவன் சொன்னார்; அது, ஊர்ஜிதமாகிக்கொண்டு இருக்கிறது ஒவ்வொன்றாக. நான் யாரிடமும் பெரிய நம்பிக்கை கொள்வதில்லை. கடந்து சென்றுவிடுகிறேன். உப்பாறு அணைக்கு அழைத்து சென்றதற்கு மிக்க நன்றி. சந்திப்போம். உங்கள் அன்பரசு 22 5.12.2012 பிரிய முருகுவிற்கு,   நலமுடன் இருக்க வாழ்த்துகிறேன். உடல்நலம்தானே மனதிற்கு அடிப்படை. ஜெயமோகனின் விமர்சன நூலையும், நாகரத்தினம் கிருஷ்ணாவின் ப்ரஞ்சு சிறுகதைத் தொகுப்பு ஒன்றினையும் வாசித்தேன். உறவுகளின் பூசல்களை திரு.வக்கிரத்தை விடவும் நான் அதிகம் சமாளிக்க வேண்டியிருக்கிறது. எங்களது ஊர் நூலகர் சம்பள நாளில் மட்டுமே ஊரில் தென்படுகிறார். மாற்றலுக்கு விண்ணப்பித்துவிட்டு வீட்டில் ஓய்வெடுக்கிறாராம். ரன்பீர் கபூர் நடித்த ‘பர்பி’ இந்திப்படம் அண்மையில்தான் இந்தியன் போலீசின் உதவியுடன் பார்த்தேன். பிரியங்கா மற்றும் ரன்பீருக்கான காட்சிகள் அனைத்துமே இசையும், ஒளியுமாக அட்டகாசப்படுத்திவிடுகிறார்கள். வாழ்வில் வரும் நெருக்கடிகளைக் கூட இவ்வளவு எளிதில் கடந்துபோக முடிகிறதே எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் இல்லாமல் என்று பொறாமையாக கூட இருந்தது. தெருவிளக்கை கீழே தள்ளி சோதனை செய்யும் காட்சியில் இலியானா ரன்பீரின் கையை உதறிவிடுவார்,பிரியங்கா நம்பிக்கையோடு பிடித்திருப்பார். அதிலிருந்துதான் காதலே ரன்பீருக்கு பிரியங்கா மேல் தோன்றும். ஆட்டிசம் அல்லது மனநோயாளிகளை உடல் ஊனமுற்றவர்களை வணிகரீதியான சினிமாவில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இழிவுபடுத்துகிறார்கள். இந்த மனநிலைதான் என்னை தமிழ்ப்படங்களிலிருந்து பிரித்து இந்திப்படங்களுக்கு உள்ளே செலுத்துகிறது. இங்கேயும் மோசமான மசாலாக்கள் இருக்கிறது. ஆனால் தேடினால் நல்லதும் கிடைக்கிறது. புத்தகம் புதிது ஏதாவது வாசித்தீர்களா? பிறகு சந்திப்போம். உங்கள் அன்பரசு 23 9.12.12 அன்பு…   தொடர்ந்த உனது கடிதங்கள் கிடைத்தன. வெங்குட்டுவன் இது போல சொன்னது வியப்பானதல்ல. ஒவ்வொரு மனிதனும் ஒரு வாழ்க்கை அனுபவத்தை பெற்றிருக்கிறான். ஆனால் சிலரே இலக்கிய அனுபவத்தைப் பெற முடிகிறது. அதுவும் தங்கள் சொந்த வாழ்வனுபவங்களுடன் இலக்கியப் பிரதி ஏதேனும் ஒரு புள்ளியில் உடன்படும் போது கிடைக்கும் சிலிர்ப்பு பிறமொழிப்படைப்பு என்பதால் கிடைக்காமல் போவதில்லை. எல்லாசமூகங்களும், கொண்டும் கொடுத்துமே நீடித்து வருகின்றன. வாழ்வின் கசப்புகளை எல்லாவிடங்களிலும் அடையாளம் கண்டுபிடித்துக்கொள்வது எனக்கு உடன்பாடானதல்ல. ‘இருபது வருஷங்கள்’,‘பொன்மணல்’, போன்ற படைப்புகளை எழுதிய எம்.எஸ். கல்யாணசுந்தரம் திருமணமின்றி தனிமை வாழ்க்கை வாழ்ந்தார். ஆனால் அவரால் எப்படி ரசனையான பகடியுடன் வாழ்வை எழுத முடிந்தது? ஒளிமிக்க பெண்களையும், குழந்தைகளையும் கதாபாத்திரங்களாக்க முடிந்தது? என ஜெயமோகன் எழுதியிருந்தார். இதில் வியப்பொன்றுமில்லை என நான் நினைக்கிறேன். சமநிலையுடன் வாழ்வை, எழுதவும் முடியும். அவரவர்க்கு அவரவர் வாழ்க்கை என்பதைத்தாண்டி மானுட வாழ்க்கை என்றொன்று உண்டென நான் நம்புகிறேன். ‘பர்பி’ போன்ற ஒரு படம் எப்படி ஒரு மலர்ச்சியான மனநிலையைத் தருகிறது என்பது இந்த மானுடப் பொதுவுணர்வின் பின்னணியில்தான் துலங்கும். அவநம்பிக்கைகளையும், மனச்சோர்வையும் கடக்காமல் யாரும் வருவதில்லை. குறிப்பாக இலக்கிய வாசகன் இருக்கவே முடியாது. ஆனால் அவநம்பிக்கைகளையும் கசப்பையும் எனக்கு அடுத்த தலைமுறையிடம் விதைப்பது எனது ஆதாரமான மானுட உணர்வுக்கு ஒருபோதும் ஒவ்வாதது. வாழ்க்கை அழகானது என்றெல்லாம் நான் சொல்லமுடியாது. அது மிகவும் இயல்பானது என்பதே நான் சொல்ல வருவது. வாழ்வில் வெற்றி, தோல்வி எனக்கிடையாது. பின்னகர்தலும், பின்னடைவுமே உண்டு. இது அடிப்படையான காந்தியின் தரிசனம். காந்தியை குறைந்தபட்சம் வாசித்தவர்களுக்கும், புரிய முயற்சித்தவர்களுக்கும் அவர்தரும் வாழ்க்கை கொடை இந்த தரிசனமே. நான் எழுதவேண்டும் என்கிற உனது அவா எனக்கு மிகவும் உந்துதல் தருகிறது. உனது பகிர்வுகளுக்கு நான் என்றும் நன்றியுடன் இருக்க முயற்சிப்பேன். இனி நான் முனைப்புடன் எழுதும் அனைத்துக்கும் அது ஒரு முக்கியக்காரணமாக இருக்கும். -இரா.முருகானந்தம் 24 13.12.2012 பிரிய முருகு அண்ணாவிற்கு,   நலமா? உங்களுக்காக பேனா ஒன்று வாங்கி வைத்து இருக்கிறேன். கூடவே கருப்புநிற மசிக்குப்பியும். நீங்கள் உணர்ந்த விஷயங்கள், கண்ட காட்சிகள் என பலவற்றையும் என்னால் முடிந்தவரை உள்வாங்க முயற்சிக்கிறேன். தகவல்களைக் கூறும் பேச்சும், நம்பிக்கையான எழுத்தும் தங்களிடம் தனிச்சிறப்பானவையாக நான் கருதுகிறேன். தாராபுரத்து கடைத்தெருவீதிகளில் மனப்பாடமாக சொன்ன கிறிஸ்துவ பாடல்கள், அதன் அர்த்தம் ஆகியவை தங்களுக்கு எவ்வளவு அவை பிடித்திருக்கிறது என்பதை உணர்த்தியது. அந்நாளை நான் என்றும் மறக்கவே முடியாது. நினைவாற்றல் தங்களது பெரும்பலம் ஐயா. எம்.எஸ் கல்யாண சுந்தரம் பற்றி கூறியிருந்தீர்கள். அவர் தம் வாழ்வில் பல துன்பங்களை அடைந்தார். ஆனால் அது எந்தவகையிலும் அவரது படைப்புகளை கசப்பாக்க வில்லை என்றீர்கள். எப்படி அது நிகழ்ந்தது என்று தாங்கள் கூறவேண்டும். எப்படி தன் மனதைப் பக்குவப்படுத்திக்கொண்டார் என்று அறிய விரும்புகிறேன். எல்லாக் காலத்திலும் மனிதர்களுக்கு வெவ்வேறு வடிவில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. அலைச்சல்களை நிகழ்த்திதான், பயணித்துத்தான் பல எழுத்தாளர்களும் எழுதுகிறார்களா? அனுபவ பாரத்தினால் என் தோள்களில் குருதி கசிகிறது. என் உடல் சாம்பல் போல மிதக்கிறதா என்ன? நாவிலும்,மனதிலும் பேதி ஆரம்பித்துவிட்டது. பிறகு சந்திப்போம். உங்கள் அன்பரசு 25 15.12.2012 பிரிய முருகுவிற்கு,   சுகம் பெற்றிருக்க வாழ்த்துகிறேன். உங்களது வழிகாட்டலின் படி நான் படித்துக்கொண்டிருக்கிறேன். ஜெயமோகனின் புதியகாலம் எனும் சமகால எழுத்தாளர்கள் பற்றிய விமர்சன நூலைப் படித்துக்கொண்டிருக்கிறேன் இடையிடையே. ஒவ்வொரு புதிய மனிதனும் ஒரு புதிர்தான். அதை அறிய நாம் முயல்வதுதான் சுவாரசியமாக இருக்கிறது. இலக்கு எதுவாகவும் இருக்கட்டும். அதற்கான பயணம், பயணிக்கிற இன்பம் போதும். தங்களது கடிதங்களை நான் அறிந்தவரையில் இந்த விஷயம் நிறைந்திருக்கிறது என்றே நம்புகிறேன். புதிய மனிதர்களை சந்திக்கவேண்டம் என்கிறீர்களா? மனிதர்களின் சுயபிரதாப பேச்சுக்களும், தன்னை உயர்த்திக்கொள்ள செய்யும் தந்திரங்களும் எனக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. தினமும் எழுந்ததும் மலையைப் பார்க்கவேண்டும். அப்படி ஒரு வீட்டில் குடியேற வேண்டும். ஏகாந்தத்தில் அவ்வீடு அமைந்திருந்தால் மிக உன்னதம். அனிதா தேசாயின் கதாபாத்திரம் கூட இப்படித்தான் உணர்கிறது. சந்தடி, கூச்சல் இல்லாத தனிமை. அதுவே அச்சுறுத்தலாவது வேறு. உடலும் மனதும் குறிப்பிட்ட ஒரு நிலையில் உற்சாகமாக இருக்கும்போது, சில செயல்பாடுகளைச் செய்துவிடவேண்டும். பின் மனம் நினைக்கலாம், ஆனால் உடல் இணங்காது. படைப்பாற்றல் என்பது வாழ்வு முழுவதும் வரும் என்று நினைக்கவே முடியாது. பாரதியை எடுத்துக்கொள்ளுங்கள். மிகத்தீவிரமாக செயல்பட்டது பத்து ஆண்டுகளாக இருக்கக்கூடும். மெர்கன்டைல் பேங்கில் கிளர்க் பதவிக்காக ஆன்லைன் தேர்வு எழுதவேண்டும். சில புத்தகங்கள், தேர்வு தயாரிப்புகள், டைரிக்குறிப்புகள் என நேரம் நகருகிறது. சந்திப்போம். உங்கள் அன்பரசு 26 16.12.2012 அன்பு முருகுவிற்கு,   என்றும் எனதன்பு. ‘வியத்தலும் இலமே’ எனும் முத்துலிங்கம் அ. எழுதிய நூலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். மலேசியா முதல் கனடா வரை எனும் பயண நூலும் இடையிடையே படிக்கிறேன். அஞ்சலி பற்றி எழுத ஒருவரை தேர்ந்தெடுத்து எழுதுவது சிறப்பு என்றாலும், அவரின் அறியாத திறமைகள் குறித்தும் எழுதலாம். பால்தாக்கரே பற்றி எழுத முயலலாம். முழுக்க விமர்சன நோக்கிலோ, அப்படி இல்லாமலோ கூட அவரது வாழ்க்கையை சிறிய அழகிய பதிவாக மாற்ற முடியும். எழுத்து தங்களுக்கு மிக உகந்தது என்பது என் தாழ்மையான கருத்து. தன் ஆறு, சூழல் குறித்து பேசவே தேசியக்கட்சியில் இணைந்திருக்கிறீர்கள் என்பது நிச்சயம் பெருமையான துணிச்சலான முடிவுதான். அ. முத்துலிங்கத்தின் பகடி குறையாதது. வியத்தலும் இலமே முழுக்க கதை எழுதுபவர்கள் பற்றிய ஒரு முழுமையான பதிவாக இருக்கிறது. எழுத்தாளர்களின் நேரடிப்பகிர்வை எழுதுகிறார். ஒரு எழுத்தாளர் ஒரே சமயத்தில் ஐந்து நூல்களைப் படிக்கிறாராம். நான் இரண்டைத் தாண்டமுடியவில்லை. உழைப்பில்லாமல் எதுவும் சாத்தியமில்லை. பிறகு சந்திப்போம்.   உங்கள் அன்பரசு. 27 24.12.2012 பிரிய முருகு அண்ணாவிற்கு,   இப்போதுதான் ‘ராதையுமில்லை, ருக்மணியுமில்லை’ எனும் அம்ருதா ப்ரீதம் எழுதிய நாவலைப் படித்துமுடித்தேன். முழுக்க அகவய உணர்வுகளின் சித்தரிப்பு இந்நூலில் அதிகம். அனைத்துமே ஹரிகிருஷ்ணனின் நினைவுகளின் வழி கதை உயருகிறது. ஓவியத்தின் வண்ணங்கள் மூலமாக அவனுக்கு ஆன்ம தரிசனம் கிடைத்துவிடுகிறது. ‘மலை மேல் நெருப்பு’ எனும் அனிதா தேசாய் எழுதிய நாவல். இதனை அசோகமித்திரன் மொழிபெயர்த்திருக்கிறார். இது முன்னதிற்கு எதிர்ப்பதமான நூல். புறவயமான காட்சி வழியாக மன உணர்வுகளை சித்தரிக்க அனிதாதேசாய் பெருமுயற்சி செய்கிறார். திரைப்படம் செய்ய இது உதவியாக இருக்கும். நந்தா கௌல், ராக்கா, ஈலாதாஸ் என மூன்று பேர் வசிக்கிறார்கள் கரிக்னோ மலை மீது. ஈலாதாஸின் வாழ்க்கை மிகவும் துயர் வடியும் பகுதி. அவளது வறுமை, பட்டினி, ஒட்டுப்போட்ட பை, உடை என அவளை விவரித்து பின் அவள் தன் தோழியான நந்தாவிடம் உரையாடும் காட்சியில் எனக்கு கண்ணீர் நிற்காமல் பெருகி வழிந்தது. உண்மையில் அவள் தெருவில் நடக்கும்போது அவளது உருவம் கேலிக்குள்ளாகும் தருணம், அவளது அவல வாழ்வு முடிந்துபோனால்தான் என்ன எனும்போது, திருமணமாகாத அவள், அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவனால் கற்பழிக்கப்பட்டு தாக்கி கொல்லப்படுகிறாள். அதை ஏற்றுக்கொள்ள மனம் ஏற்கனவே தயாராகிவிடுகிறது. துயரமான சாவு இல்லையா? நந்தா கௌலின் மனதில் துயரச்சுமை எரியத் தொடங்குவதுடன் கதை நிறைவுறுகிறது. நீங்கள் வேறு ஏதாவது வாசித்தீர்களா? காலச்சுவடும், சன்டே இந்தியனும் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. டபங் 2 வருகிறது. பார்க்க விருப்பமிருக்கிறதா இல்லையா? நல்ல உறக்கம் கிடைக்க இது போல படங்களும் தேவைப்படுகிறதே தோழரே! உங்கள் அன்பரசு 28 25.12.12 அன்பு… தொடர்ந்த உனது கடிதங்கள் கிடைத்தவண்ணம் இருக்கின்றன. நான் பதில் எழுதாமல் அவ்வப்போது விட்டுவிடுவது குறித்தெல்லாம் கவலைப்படாமல் நீ தொடர்ந்து எழுது. நான் அவ்வப்போது இப்படி இருந்துவிடுவது திட்டமிட்டதல்ல. எம்.எஸ். கல்யாணசுந்தரம் பிற்கால வாழ்வில் எதிர்கொண்ட சிரமங்கள் குறித்து தெளிவற்ற சித்திரங்களே நம் முன் உள்ளவை. வாழ்க்கை குறித்த சமநிலை அணுகுமுறை கொண்ட மனது வாய்க்கப்பெற்றவன் படைப்பாளியாகவும் இருந்தால் கசப்பின் சித்திரங்களை தருவதேயில்லை. வாழ்வின் மீதான ஊக்கம் பிரவாகமாக பெருக்கெடுத்த ஒரு மனம் அது. அவரின் பிற்கால வாழ்வில் அடைந்த சிரமங்கள் திருமணம் செய்துகொள்ளாதவர் அடையும் நடைமுறைச் சிரமங்கள். அவரின் படைப்பின் புன்னகை அதைவிட வசீகரமானது. வலிமையானது. இன்று கிறிஸ்த்துமஸ். அன்று தாராபுரம் கடைவீதியில் பாடித்திரிந்த இயேசு காவியத்தின் வரிகள் மீண்டும் நினைவில் வருகின்றன. ஒரு இலக்கிய வாசகனாக எனக்கு பைபிள் மிகவும் பிடித்தமானது எப்போதைக்கும். அது மிகவும் கவித்துவமிக்க பிரதி. அதைத்தமிழாக்கம் செய்தவர்கள் கூட கிறிஸ்த்துவ இறையியலுக்கும் அதேசமயம் தமிழுக்கும் மாபெரும் கொடையை வழங்கியுள்ளதாகவே கருதுகிறேன். இயேசுவின் வருகை அறிவிப்பது ஒரு மாபெரும் விடுதலையை என்கிற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. கிறிஸ்துவப்பள்ளியில் தொடக்கக்கல்வி பயின்ற எனக்கு செம்மறியாட்டுக்குட்டியை மார்போடு அணைத்துக்கொண்டு நிற்கும் இயேசுவின் உருவம் மிகுந்த மனஎழுச்சியை எப்போதும் தருகிறது. கூடவே செம்மறியாடுகள் மீதான பிரியத்தையும். குமார் என்னிடம் பேசியபோது குடும்பத்தில் நிலவும் அசாதாரண சூழல்கள் குறித்து கூறினான். ஆனால் இவையெல்லாம் உன்னை மனதளவில் தாக்கவில்லை என்பதை உனது கடிதங்கள் மூலம் உணர்கிறேன். பரஸ்பரம் வெறுப்பின் நிழல் துரத்தும் வாழ்க்கை குறித்து என்ன சொல்ல…? சில சமயம் வெறுப்பே மனதுக்கு மிகவும் உவப்பானதாக மாறிவிடுகிறது போலும். இதில் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொள்வது, கேட்கும் மனதில் காயங்களை ஏற்படுத்தும் முனைப்பில் பேசுவது என பலவித உத்திகள் கையாளப்படுவதை நானும் கண்டுள்ளேன். உமாமகேஸ்வரியின் ஒரு நூலின் தலைப்பு ‘யாரும் யாருடனும் இல்லை’ என்பது. -இரா.முருகானந்தம் 29 28.12.2012 பிரிய முருகுவிற்கு,   தற்போதுதான் ‘சுவாமியும் நண்பர்களும்’ நூலைப்படித்து முடித்தேன். மிகச்சரளமான நடை. அட்டை ஓவியம், பக்கங்களுக்கு இடையேயான ஓவியங்கள் மீண்டும் பார்க்கும்படி உள்ளன. சுவாமி, மணி, ராஜம் என மூன்று நண்பர்களின் கதை. குழந்தைகளின் அறிவை வெளிப்படுத்தும் உரையாடல்கள்தான் இந்நூலின் பெரும்பலமே. ஏறத்தாழ அவர்களது புரிந்துகொள்ளல் தொடர்பான தடுமாற்றம்தான் நகைச்சுவையே. ஒரு கிராமத்து பள்ளியில் இதைக்காட்டிலும் கூடிய விஷயங்கள் நடக்கும் என்றாலும், மால்குடியின் சூழல், கதை மாந்தர்கள் என வாழ்ந்த அயர்ச்சி வருகிறது இல்லையா அங்குதான் நூலின் வெற்றி கண்சிமிட்டுகிறது. தகழியின் ‘இரண்டுபடி’ நாவலைப் படித்தேன். கோரன், சிருதை ஆகியோரது வாழ்வு, நிலப்பண்ணைக்காரர்களால், எப்படி சிதைக்கப்படுகிறது என்பதே கதை. தகழியின் வசனங்களின் இழைப்பின்னல் நம் மனதில் நூலாடுகிறது. சமூகத்தின் கடையர்களாக ஒதுக்கப்பட்ட பறையர்கள், பள்ளர்கள் பற்றிய கதை இது. தகழி செம்மீன் நாவலை இருபது நாளில் எழுதியவராம். நம்பவே முடியவில்லை. முழு நாவலே 350 பக்கங்கள் என்றால் இருபது நாட்களில் எழுத வேண்டுமென்றால் மனதிலேயே பாதி உரையாடலை நிகழ்த்தி பார்த்திருக்க வேண்டும். தணிக்கையும் செய்திருக்க வேண்டும். அந்த தூண்டல், வேகம் கிடைக்காதது தான் பலரது எழுத்து மடிய காரணமாகிறது. என்பிடியில் சலீம் அலி பற்றிய புத்தகம் வந்திருக்கிறது. பார்த்திருப்பீர்கள். காலச்சுவடு நான் பெற்று இன்னும் படிக்கத் தொடங்கவில்லை. சண்டே இந்தியன் இன்னும் வரவில்லை. சந்திப்போம். உங்கள் அன்பரசு 30 30.12.2012 பிரிய முருகுவிற்கு,   தங்கள் கடிதங்கள் இப்போதுதான் வாசித்தேன். வெறுப்பும், துவேஷமும் வாழ்வை அதிகம் வெறுக்கவைக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள சிறிது காலம் எடுத்துக்கொண்டுவிட்டேன். நீங்கள் அசோகமித்திரனை சந்திக்க விரும்பினால் விரைவில் சந்திக்க முயற்சியுங்கள். ஒரு பேட்டியில் இந்த வாழ்வு வலியோடு முடியாமல் இருந்தால் நல்லது என தனது நோய்மை குறித்து கவலையுற்று கூறியிருந்தார். ‘செம்மீன்’ படித்து முடித்துவிட்டேன். கறுத்தம்மா, பரீக்குட்டி என காதலிக்கும் இருவேறுபட்ட மதங்களில் பிறந்தவர்களை அந்த மதங்களே பிரிக்கிறது. ஆனால் அதன் பின்னான அவர்களது சமூக வாழ்வு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும், கடும் வசைகளிலும் தூற்றலிலும் திகைத்து நிற்கிறது. கறுத்தம்மா தொடர்ந்து ஏன் ஒரு குழந்தை பிறந்த பிறகும் நிரூபிக்க வேண்டியிருக்கிறது தன் கணவனிடமும், ஊராரிடமும். ஏன் குப்பத்து மக்களிடம் தனி அந்தரங்கம் என்பது கிடையாது. ஒருவரின் வாழ்வு மற்றவரோடு நேரடியாக தொடர்புடையது. இறுதியில் பரீக்குட்டியும், கறுத்தம்மாவும் கேள்விகள், சந்தேகங்களால் சூழப்பட, இருவரும் தற்கொலை செய்துகொள்கிறார்கள். கறுத்தம்மா பரீக்குட்டியின் தோள்சாயும் நேரம் மீன்பிடிக்கச்சென்றிருக்கும் அவள் கணவன் பழனி கடலலையினால் இழுத்து செல்லப்படுகிறான். மனைவியின் கற்பே கணவனைக் கடலில் காப்பாற்றும் என்கிற தகழியின் கருத்து எனக்கென்னவோ ஒப்பவில்லை.என்பிடியில் இந்த முறை நிறைய புத்தகங்கள் வெளியாகின்றன. மறுபடியும் தாங்கள் வாசிப்பை தீவிரப்படுத்தவேண்டும். எழுதவும் வேண்டும் என்பது என்னுடைய விருப்பமும், வேண்டுகோளுமாகும். உங்கள் அன்பரசு. 31 அருகில் நிழல் எங்கும் இல்லை 1.1.2013 பிரிய முருகுவிற்கு,   புத்தாண்டு பல புதிய மனிதர்களையும், அவர்களது வாயிலாக அனுபவங்களையும் தந்து புதிய வாழ்வனுபவங்கள் தங்களை நிறைவு செய்ய இறைவனை வேண்டுகிறேன். இப்போதுதான் ‘சீமானின் திருமணம்’ – ஐவான்துர்கநேவ் எழுதிய குறுநாவல் படித்தேன். 95 பக்கங்களில் சொல்லாத காதல் கதையினை துயரத்துடன் பகிர்கிறது. ஆஸ்யா மிகுந்த எண்ணக்கொதிப்புகள் கொண்ட பெண். அவளை வர்ணிப்பதாகட்டும், அடைமழை போன்று பெருகியோடும் அவளின் காதலையாகட்டும் வெகு நேர்த்தியாக கூறியிருக்கிறார் ஆசிரியர். இதை முக்கியமாக கருத என்வயதும் ஒரு காரணமாயிருக்கக் கூடும். கதையில் மூன்று கதாபாத்திரங்கள்தான் காகின், ஆஸ்யா, நான் என கதை கூறும் நபர். திருப்பூராருக்கு காடு நாவலை திரைப்படமாக்க பரிந்துரை செய்தேன். என்ன காரணம் என்றால் காதல் பகுதிகள் மிகுந்த பித்து நிலைக்கு அருகில் உள்ளது. சினிமாவுக்கு வணிகத்தேவை அதுதானே. கிருபாகரன் பிள்ளை மலைக்காய்ச்சலில் மலையத்தியை பறிகொடுத்துவிட்டு அவளை தேடியலையும் காட்சிகளில் கதறியழுதிருக்கிறேன். வாழ்வின் முழுப் பொருளையும் மரணம்தான் இறுதியில் உணர்த்துகிறதா? ஸ்ரீராம், சிபிசரவணன், தங்களிடம் என இரந்து பெற்று படிக்கும் நல்ல நூல்களை மனதில் படியவைக்க முயல்கிறேன். சிறு குறிப்புகள் எடுத்துக்கொள்ளவேண்டும். திரைப்படம் வேறு. இலக்கியப் பிரதி வேறு. அனுபவங்களைக் கூறுகிறேன். உங்கள் அன்பரசு. 32 3.1.2013 பிரிய முருகுவிற்கு,   இந்த புத்தாண்டில் விஜய் டிவியில் முக்கியமான எழுத்தாளர்கள், ஆளுமைகள் கலந்துகொண்டு ஆண்டின் சிறந்த நாவல்,சிறு நகரம் குறித்து பேசினார்கள். சார்லஸ் டிக்கன்சின் ‘டேவிட் காப்பர்பீல்டு’ தமிழில் சிவனின் தேர்ந்த மொழிபெயர்ப்பில் படித்தேன். டேவிட் தன்னைப்பற்றித் தானே கூறுவது போலத்தொடங்கி, தன் வாழ்வின் இளைஞனாவது வரை நீளும் நாவலில் பெற்றோர் மறைவு, பள்ளிப்படிப்பு தண்டனை, தன் அத்தை பெஸ்டி டிரஸ்வுட்டிடம் சேருவது என பல நிகழ்வுகள் இருந்தாலும், துயரத்தை வர்ணிப்பதில்தான் ஆசிரியருக்கு முழுத்திறன் இருக்கிறது என்பதை கண்டுகொள்ள முடிகிறது. மால்கோஷ் எனும் வங்க சிறுகதைகளையும் படித்துக்கொண்டிருக்கிறேன். படித்துறை சொல்லும் கதை எனும் தாகூர் எழுதிய கதை பிடித்திருந்தது. பிற கதைகள் பெரும் போதனை போல் இருந்தது. வலிய துயரை ஏற்படுத்தும் குணங்கள் அதில் நிரம்பியிருந்தன. தாகூரின் கதையில் பால்ய மணம் புரிந்து கணவன் மரித்தபின் இளவயது பெண் தன் காமத்தை ஆற்றில் கரைக்க முயற்சித்து கைகூடாது, துறவி ஒருவரின் மீது காதலுற்று அதுவும் தோற்று, ஆற்றில் மூழ்கி தன்னை மாய்த்துக்கொள்வதுதான் கதை. எளிமையான சிறுகதைகள்தான் அனைத்துமே. உங்கள் அன்பரசு. 33 6.1.2013 அன்பு… ‘தர்பாரிராகம்’ படித்து முடித்தேன். பதினாறு முதல் இருபத்திரெண்டு வயது வரை இந்திய இலக்கியமென்னும் பெருங்கடலில் விழுந்து தத்தளித்து மூழ்கி முத்தெடுத்து… அக்காலத்தில்தான் முதன்முறையாக ‘தர்பாரிராகம்’ படித்தேன். இரண்டாம் முறை வாசிக்கும் இப்போது சுமார் பதினைந்து ஆண்டுகால நடைமுறை அரசியலில் தொடர்ந்து உழன்று வந்தபின்னும் கூட இப்படைப்பு தனது தனித்தன்மையான வாசிப்புஅனுபவத்தை தருகிறது. இந்திய நவீன இலக்கியப் பரப்பில் ஆகச்சிறந்த செவ்வியல் அங்கதம் இதுதான் என்பேன். ஒருகாலம், ஒருவரலாறு, ஒருசமூகம், ஒருகலாச்சாரம் ஆகியவை இவ்விதம் தங்கள் நிர்வாணத்துடன் மனம் குறித்த பிரக்ஞையைத் தராமல் அலைபாய்கின்றன நாவலில். நான் நிர்வாணமாக உணர்வது போலுள்ளது. நீ வாசிக்கும் வேகமும், எழுதும் நேர்த்தியும் வியக்கவைக்கிறது. எனது பத்தொன்பது, இருபது வயதில் எனக்கிருந்த வாசிப்பின் மீதான தீவிரம் தற்போது உனக்கிருப்பதாக கருதுகிறேன். ‘மோகமுள்’ நாவலை உண்டு, உறங்கிய நேரம் தவிர தொடர்ச்சியாக ஒன்றரைநாளில் படித்தேன். வாசிப்பு தனது தீவிரமான தருணத்தில் ஒரு தியானத்தின் அனுபவத்தைத் தருவது. அதன் ருசி அதீதமானது. புனைவு, அபுனைவு என நிறைய வாசித்தும் கூட அது பூனை குடித்த கடல் போலத்தான். அது ஒருபோதும் வாசித்து தீர்வதேயில்லை. ‘வியத்தலும் இலமே’ மீண்டும் ஒருமுறை வாசித்தேன். அ.முத்துலிங்கம் போல வாழ்வின் ருசி கொண்ட ஒரு மனிதன் படைப்பாளியானது தமிழ் பெற்ற பெரும்பேறு. வடகிழக்குப் பருவமழை தவறிப்போனதால் நாளுக்குநாள் வறட்சியின் தீவிரம் கூடிக்கொண்டே போகிறது. தீவனப்பற்றாக்குறையால் கால்நடைகள் போன விலைக்கு விற்கப்படுகின்றன. தென்னைமரங்களின் மட்டைகள் பழுக்கத்தொடங்கிவிட்டன. 2003-04 காலங்களில் தினம் ஒரு மட்டையாக வீழ்ந்து மொட்டையாகி உருக்குலைந்து வீழ்ந்து மண்ணான மரங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அந்த வெக்கையை நினைக்கும்போதே உடல் தகிக்கிறது. தண்ணீரின் அருமையை இருக்கின்ற காலங்களில் சமூகம் எப்போதும் உணர்வதேயில்லை. நெருக்கடி வரும்போது நிலைகுலைந்து போவது வாடிக்கையாகிவிட்டது. வறட்சி மனிதனின் நல்லியல்புகளையும் உறிஞ்சி வற்றச்செய்வதை நான் எனது அனுபவத்தில் கண்டுள்ளேன். ‘தானம்தவமிரண்டும் தங்காவியனுலகம் வானம் வழங்காப்பெறின்’ என்கிற வள்ளுவம் எவ்வளவு துல்லியமான தரிசனம்… வறட்சி மூலம் தன்னை இயற்கை நேர்படுத்திக்கொள்கிறதோ என்று தோன்றுகிறது. மனிதனை ‘கிட’ எனச்சொல்வது போல. பின்பு கருணை சுரந்து செழிக்கிறது போலும். பண்பாடு, சிந்தனை, அறவுணர்வு, ஆகியவற்றில் நமது சமூகம் எப்போதோ வறண்டுவிட்டது. நிலம் குறித்து மட்டும் ஏன்? நிறைய அலைச்சல்களும், அலுவல்களும் கொண்ட சூழலில் உழல்வதால் படிப்பதோ, எழுதுவதோ அரிதாகவே உள்ளது. மனுக்களும், அரசு அலுவலகக் கடிதங்களும், பத்திரிக்கைக் குறிப்புகளுமே இப்போது அதிகம் எழுதுவது. திருப்பூரில் வருடந்தோறும் இசைவிழா நடக்கும் இச்சமயம், சிறந்த கர்நாடக இசைக்கலைஞர்களின் இசை கேட்கக் கிடைக்கும். இவ்வருடம் எப்போது என நந்துவிடம் கேட்கிறேன். நான் சென்றால் உன்னையும் அழைக்கிறேன். இயலுமானால் சந்திப்போம்.இல்லையெனினும் பொங்கல் வாழ்த்துகள் உனக்கும், குடும்பத்தினருக்கும். -இரா.முருகானந்தம் 34 19.1.2013 பிரிய முருகுவிற்கு,   சென்னையில் நான்கு நாட்கள் இருந்தேன். நண்பரின் லேப்டாப்பில் ‘நீதானே என் பொன் வசந்தம்’ எனும் கௌதம் வாசுதேவ் மேன் இயக்கிய படத்தைப் பார்த்தேன். காதலர்களாக இருந்தாலும், இருவரின் பெற்றோரிடம் இருக்கும் பணம் அவர்களை, அவர்களிடையேயான உறவை ஏற்றத் தாழ்வுக் குள்ளாக்குகிறது. பெண்ணின் மீதான அக்கறை படம் முழுவதும் உள்ளது. இது சமந்தாவிற்கான படம். ஜீவாவின் பங்கு குறைவுதான். என்ன பேச்சு அதிகமாகிவிட்டது. காட்சி கடுமையாக சோதிக்கிறது. ஆங்கிலக் கெட்டவார்த்தைகள் இல்லை. ஆனால் அடுத்தப்படத்தில் அதை நிறைவு செய்யும்விதமாக ரசிகர்கள் இந்தப்படத்தை ரசிக்கவில்லை. காரணமென்ன? அப்டேட் வேணும் தலைவா! வறட்சி மனதையும் வருத்தி ஈரமற்று போகச்செய்துவிடுவது ஒரு சுழற்சிதான். நன்கு பாளம்பாளமாக வெடித்துப்போன பின் பெய்யும் மழைதான் மண்ணின் உள்ளிறங்கும். பிறகு செடிகள் தலைநிமிர்த்திப் பார்ப்பதும் அழகுதான். இயற்கையோடு இணைந்த எளிய வாழ்வு யாரையும் வேதனைப்படுத்திப் பார்க்காது. காரணமும், விளைவுவான நிகழ்ச்சிகளில் விளைவுக்கு வருந்துகின்ற மனங்கள் காரணங்களை பொருட்படுத்துவதே இல்லை. சந்திப்போம். உங்கள் அன்பரசு 35 26.1.13 அன்பு… வீடடைந்து வாசிக்கத்துவங்கியிருப்பாய் என நினைக்கிறேன். ‘மண்பொம்மை’ தான் முழுமையாக படித்தேன். அது மிகவும் எளிமையான கதைதான். பர்ஜீ போன்ற ஒருவனின் அர்ப்பணிப்பும், மனவிலாசமும் நம்ப இயலாததுதான். ஆனால் காந்தியயுகம் ஊர்தோறும் பர்ஜீக்களை உருவாக்கியிருந்தது. உள்ளொளியின் ஒளிரும் சுடர்களாக அவர்கள் நடமாடினர். குற்றங்காண்பதும், பிறரைக் குறைகூறுவதும் அல்லாமல் எல்லாவற்றையும் தன்னிலிருந்தே துவங்கும் தலைமுறை அது. ஊளையிடுதல் ஓநாய்களின் வேலை. ஒருபோதும் ஆக்கபூர்வமான மனிதன் அதைச்செய்வதேயில்லை. சரஸ்வதி ராம்னாத்தான் ஸ்ரீலால் சுக்லவின் தமிழ்மொழிபெயர்ப்பு. நேரடியாக ஹிந்தி மொழியாக்கமும், ஹிந்திவழியிலான பிற இந்தியமொழிகளின் படைப்புகளின் மொழியாக்கமும் அவரால் நிறைய மேற்கொள்ளப்பட்டன. நவீன இந்திய மொழிகளின் செவ்வியல் படைப்புகள் இப்படிப்பட்ட அர்ப்பணிப்பு மிக்கவர்களால் தமிழுக்கு வந்தன. இதன்மூலம் நம்மொழியின் வளமைக்கும், நம்நாட்டின் கலாச்சாரப்புரிதலுக்கும் ஆற்றியுள்ள பணி நம்மால் எப்போதும் நினைக்கத்தக்கது. திருமதி.சரஸ்வதி ராம்னாத்தின் பூர்வீகம் தாராபுரம்தான். -இரா.முருகானந்தம் 36 2.2.2013 பிரிய முருகுவிற்கு,   நலத்துடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். திருப்பூர் புத்தகச்சந்தையில் பிடித்த நூல்களை வாங்கி வாசிக்கத் தொடங்கியிருப்பீர்கள். அதைப்பற்றி பின்னர் பகிர்ந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். தாகூரின் ‘கோரா’ நாவல் த.நா குமாரசாமி மொழிபெயர்ப்பில் படித்துக்கொண்டிருக்கிறேன். முடிவுறும் தருவாயில் உள்ளது. மதம் பற்றிய சர்ச்சையே நூல் முழுவதும் வியாபித்து நீக்கமற உள்ளது. இரு பாத்திரங்கள் சந்தித்த இரண்டாம் நொடி தர்க்க, மத விவாத மகாயுத்தம் தொடங்கிவிடுகிறது. இரு வேறு மதங்களைச் சார்ந்த மனிதர்கள் இருவரும் மதம், தர்க்கம், கர்வம் குலைத்து எவ்வாறு கொள்கை ரீதியாக ஒன்றிணைகிறார்கள் என்பதே 600 பக்க நாவலின் கதை. நாட்டின் சீரழிந்த நிலை, தலைவர்களில்லா சூழல், சுயநலம் நிச்சயமற்ற அன்றாட வாழ்வு, பேராசை என பல்வேறு சீற்றமான நிலையில் கோராவின் சொற்கள் நிச்சயம் நம்பிக்கையைத் தருகின்றன என்பது உண்மை. கோராவின் மனதின் அழியாத அறவுணர்வே இந்நாவலை தொடர்ந்து படிக்கச்செய்யும் வழுவாத இழையாக உள்ளது. நம்பிக்கையை ஊற்றாகப் பெருகச் செய்யும் நூல் என்பேன். நன்றி! உங்கள் அன்பரசு. 37 3.2.2013 பிரிய முருகுவிற்கு,   நலம் விழைகிறேன். ‘கோரா’ நாவலுக்குப் பிறகு நூலகம் போனால் நூலகர் காணவேயில்லை. காடு நாவலை படமெடுத்தால் கிறிஸ்தவம் பற்றிய பகடியை தாங்குவார்களா ஊழியர்கள், பாதிரிமார்கள்? அங்கதம், பகடி, சுய எள்ளல் போன்றவற்றை ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை என்பது குறைந்து கொண்டேயிருக்கிறது. இதற்கு என்ன செய்யலாம்? ஒவ்வொரு ஜாதி சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்து தணிக்கைத் துறையில் படத்தை பார்த்துவிட்டு அவரவர் குலதெய்வம் சத்தியமாக படம் யாரையும் புண்படுத்தவில்லை என்று சான்றிதழில் கையெழுத்து வாங்கிவிட்டு அனுப்பிவிடலாம். இந்த முறையை அமல்படுத்தும்போது, தமிழ்நாட்டில் திரையிடப்படும் ஒரு படத்தை பாதிப்பேர் தணிக்கைத் துறையிலேயே பார்த்துவிடுவார்கள். படத்திற்கு நஷ்டமாகுமே? சங்கங்கள், உட்சங்கங்கள், உறவின் முறை சங்கங்கள் என அதற்கு என்ன யோசனை, நீங்களே சொல்லிவிடுங்கள் முருகு. காப்கா போல் ஜாதியை ‘க’ அல்லது ஆங்கில எழுத்துக்களில் வைத்துவிடலாம். சந்திப்போம். உங்கள் அன்பரசு. 38 6.2.13 அன்பு… இதற்கு முன்பு நான் உனக்கு எழுதிய இருகடிதங்கள் எனது நினைவடுக்குகளில் ஒளிந்து கொண்டிருந்தபடியால் அஞ்சல் செய்யப்படாமல் இப்போதுதான் செய்துள்ளேன். உனது அன்பிற்கும் பேனா மற்றும் மசிக்கும் என்றும் நன்றியுடையவனாவேன். அப்பேனா சற்று பட்டையடிக்கிறது பார்த்தாலே உனக்கு தெரியும். எனக்கு ஒரு உர நிறுவனம் பச்சைஅட்டை கொண்ட நாட்குறிப்பை பரிசளித்துள்ளது. அதில் நான் அப்பேனா கொண்டே எழுதுகிறேன். நாட்குறிப்பேதும் ஆனிப்ராங்கின் நாட்குறிப்பு போலல்ல. நினைவுக்காக நிகழ்ச்சிநிரல் மட்டும் குறித்துக்கொள்கிறேன். அன்றாடம் நாட்குறிப்பெழுதுவது குறித்து அவ்வப்போது நான் சிந்திப்பதுண்டு பல்வேறு விஷயங்களைப்போலவே. சிந்திக்க மட்டும் முடிவதான விஷயங்களில் அதுவும் ஒன்று என்பது போல, இக்கடிதம் எழுதும் பேனா கேம்லின் மினி எனும் மை பேனா. சிறிதாக எழுத்த தோதாக இருக்கிறது. ஸ்ரீலால் சுக்ல, சுனில் கங்கோபாத்தியாய ஆகிய இருவரும் சென்ற ஆண்டில்(2012) நம்மைப்பிரிந்துவிட்ட மகத்தான இந்திய இலக்கிய ஆளுமைகள். ரவீந்திரநாத் தாகூர், பக்கிம்சந்திரசட்டர்ஜி, சரத்சந்திரர், வீபூதிபூஷன் பந்தோபாத்தியாய என வங்கத்தின் நடுத்தரவர்க்க சிந்தனை மறுமலர்ச்சி சட்டென ஆட்டங்கண்ட ஒரு தருணத்தில்(1960) எழுதவந்த சுனில் கங்கோபாத்தியாயவின் ‘ஆத்ம பிரகாஷ்’(தன் வெளிப்பாடு) வங்க இலக்கியத்தின் திசையை சட்டென்று மாற்றியது. ஒரு லட்சியவாத யுக எழுத்தின் முடிவில் துவங்கிய இருத்தலிய யுகத்தின் தனிக்குரலாக அது வெளிப்பட்டது. இவ்வகையில் மொத்த இந்திய இலக்கியச்சூழலில் கூட அதன் இடம் பிரதானமானது. -இரா.முருகானந்தம். 39 8.2.2013 பிரிய முருகுவிற்கு,   தங்களுடைய கடிதங்கள் கிடைத்தன. திருப்பூரில் என்னென்ன புத்தகங்கள் வாங்கினீர்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன். போதி சத்வ மைத்ரேய எழுதிய ‘சிப்பியின் வயிற்றில் முத்து’ தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி செய்திருக்கிறார். மீனவர்களின் வாழ்க்கையை முடிந்தவரை மறைக்காது சொல்ல முயன்றிருக்கிறார். கிறிஸ்தவர்கள் மீதான விமர்சனங்களும் இந்நாவலில் உண்டு. இன்றைக்கும் படிக்க சுவாரசியம் குறையாத வாழ்வை தரிசிக்கமுடிகிறது என்பது ஆசிரியரின், மொழியாக்கம் செய்தவரின் ஆகிய இருவரின் உழைப்பை ஒருங்கே உணர முடிகிறது. கடவுளின் இடைமுகமாக நமக்கு இருக்கும் பாதிரிமார்களின் கூற்றாக இருப்பது வேறு. இயேசு கூறிய பாடல்கள் வேறு என்று ஓஷோ கூறுகிறார். நாம் ஏன் வாழ்வை குற்றவுணர்ச்சியினால் மூழ்கடித்துக் கொள்ளவேண்டும்? தற்போது ஓஷோவின் ‘படிப்படியாக தியானம்’ படித்துக் கொண்டிருக்கிறேன். வங்க எழுத்தாளர்கள் வாழ்வினை, அனுபவங்களை சிறப்பாக சித்தரிக்கிறார்கள். நூலகத்தில் தொடர்ந்து படித்து வருவது அவர்களுடையதே. பெரிதும் த.நா குமாரசாமியின் மொழிபெயர்ப்பில்தான். சந்திப்போம். உங்கள் அன்பரசு. 40 8.3.13 அன்பு… நீ எழுதிய கடிதங்கள் கிடைத்தன. உடன்பதிலெழுத முடியவில்லை என்பதற்கு பல காரணங்களைச் சொல்வதைவிடவும் முடியவில்லை என்று மட்டும் சொல்வது நேரடியானதும், நேர்மையானதுமாக இருக்கும். புதிதாக, பெரிதாக ஏதும் படிக்கவில்லை. இந்திய அரசமைப்பு சட்டத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு படித்தேன். பாலாஜி பப்ளிகேஷன் வெளியீடு. இவர்கள் எளிமையான நேர்த்தியான வகையில் சட்டநூல்களை தமிழில் வெளியிடுகிறார்கள். இம்மாத காலச்சுவட்டில் ‘அப்பாவின் மிதிவண்டி’ சுகுமாரன் சிறுகதை நீ படித்தாயா? அவலமும், அங்கதமும் இணையும் ஒரு புள்ளியில் கதை முடிகிறது. குமார் அவ்வப்போது பேசுகிறான். மற்றபடி ஏதுமில்லை. -இரா.முருகானந்தம். 41 16.3.13 அன்பு… உனது கடிதங்கள் கிடைத்தன. உணர்வெழுச்சியின் பாற்பட்ட வார்த்தைகள் வழக்கமான தெளிவிலிருந்து விலகியுள்ளன. உனது கடிதங்கள் எனக்கு ஆர்வத்தையும், உவப்பையுமே தருகின்றன. ஆனால் எதன்பொருட்டும் உன்னை வற்புறுத்த நான் விரும்ப வில்லை. எப்போது தோன்றுகிறதோ அப்போது எழுது. எனது பணிகள் மிக சாதாரணமானவை. எனக்கு தெரிந்தவகையில் சமூகத்துடன் உறவாடுகிறேன். குறைந்தளவே படிக்கிறேன். அம்ருதா ப்ரீதமின் ‘ராதையுமில்லை ருக்மணியுமில்லை’ படிக்கத் துவங்கியுள்ளேன். உனது அப்பாவும், சுதாவின் அப்பாவும் சென்னை வரப்போவதாக குமார் சொன்னான். ஏதோ ஒன்றின் நிமித்தம் மனிதர்கள் பயணித்துக் கொண்டேயிருக்கிறார்கள். -இரா.முருகானந்தம். 42 27.3.13 அன்பு… நலமா? நான்கு நாட்கள் கேரளாவிலிருந்துவிட்டு நேற்று முன்தினம்தான் திரும்பினேன். இந்த இடைவெளியில் அம்ருதா ப்ரீதமின் ‘ராதையுமில்லை ருக்மணியுமில்லை’, பி.ஏ கிருஷ்ணனின் ‘கலங்கிய நதி’ என இரண்டு நூல்களை படித்து முடித்தேன். முதல்நூலை நீ முன்பே படித்திருக்கிறாய். ‘கலங்கிய நதி’ கிருஷ்ணனின் இரண்டாவது நாவல். முந்தைய நாவல் ‘புலிநகக்கொன்றை’ இரண்டுமே முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பின் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை. ‘கலங்கிய நதி’ கடத்தப்பட்ட அரசு அலுவலரை மீட்கும் பொருட்டு செல்லும் மற்றொரு அரசு அலுவலர் அரசதிகாரத்தின் உயர்மட்டத்திலும், குடும்பவாழ்விலும், சமூகத்திலும் எதிர்கொள்ளும் நிகழ்வுகளின் பலபரிமாணங்களைப் பேசியபடி செல்கிறது. இது கிருஷ்ணனின் சுயஅனுபவத்தினை அடிப்படையாகக் கொண்ட நாவல். -இரா.முருகானந்தம். 43 1.5.2013 அன்புள்ள தோழர் முருகுவிற்கு,   நலம் விழைகிறேன். ‘உயரப்பறத்தல்’ என்ற வண்ணதாசன் எழுதிய சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன். கூடவே நீலபத்மநாபனின் 898 பக்க கட்டுரைத் தொகுதியையும். வண்ணதாசனின் எழுத்துக்கள் நாம் பார்க்கின்ற மனிதர்கள், செடிகள், கொடிகள் என அனைத்தையும் நேசிக்க கற்றுக்கொடுக்கும் எழுத்துக்கள். எந்த எதிர்மறை பேச்சுக்களோ, கதாபாத்திரங்களோ இல்லாமல் நேசிப்பையும், அன்பையும் கொண்டு அக்கறையாக எழுதப்பட்ட எழுத்துக்கள். இவரின் முகவரி தெரியவில்லை. இருந்தால் ஒரு கடிதம் எழுதிவிடலாம் என்று நினைத்தேன். என்றாவது ஒருநாள் இதற்கு அவரிடம் நன்றி தெரிவிக்கவேண்டும். சென்னை பதிப்பகங்களிலிருந்து நீலபத்மநாபனின் நாவல்கள் அவர் சாகித்ய அகாதமி விருது பெற்றும் கூட திரும்பி வந்து விடுகின்றனவாம். பல நூல்களை தானே பதிப்பித்து இருப்பதால், வலி கூடிய எழுத்துக்களாக இருக்கின்றன பல கட்டுரைகளில். இவரின் எழுத்தில் ‘பள்ளிகொண்டபுரம்’ நாவலை காலச்சுவடின் வெளியீட்டில் நூலகத்தில் படித்திருக்கிறேன். தமிழின் வெளியீட்டு சிரமம் காரணமாக மலையாளத்தில் எழுதத் தொடங்கியிருப்பதாக கூறுகிறார். சென்னைப்பயணம் இனிமையாக அமைந்ததா? புத்தகங்கள் பற்றிய பரிந்துரைகளை எழுதுங்கள். சந்திப்போம். உங்கள் அன்பரசு. 44 25.5.2013 பிரிய முருகுவிற்கு,   நலம் விழைக. அண்மையில் ஒரு உரையாடலில் என்னைப்பற்றி அங்கதமாக ஏதாவது எழுது என்று கூறினீர்கள். தங்களைக் குறித்த கதையை ஒரு மாதம் முன்னதாக எழுதி முடித்துவிட்டேன். இதைப்பற்றி தங்களுக்கு கூறாததன் காரணம் அது முழுமையான கதையாக இல்லை என்பதனால்தான். பிரசுர வாய்ப்பு தணிக்கைகள் எனக்கு பிடிக்காது. நண்பர்களுக்குள் பரிமாற எழுதப்பட்டது. நீங்கள் அதனைப் படித்துவிட்டிருப்பீர்கள். உங்கள் கருத்து என்னவோ? ஆர்.எம் என்ற பாத்திரம்தான் நாயகன். அவனின் விதியற்ற, களிப்பான வாழ்க்கையைக் குறிக்க மஸ்த்தி பெயர் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். மஸ்த்தி மத்திய அரசின் தயாரிப்பாக வெளிவரும் ஆணுறையின் பெயர். சன்னி லியோன் வேறு கதாபாத்திரமாக வருவதால், தங்களது வீரிய இளமையும் ஒருங்கிணைந்தால் ‘மஸ்த்தி’ அல்டிமேட் கொண்டாட்டம் தோன்றிவிட்டது. எல்லை கடந்து விட்ட மாதிரி தோன்றினால் மன்னித்துவிடுங்கள். இன்னமும் வலிகள், வேதனைகள், ஏக்கங்கள் பலவும் ஆர்.எம்முக்கு இருக்கலாம். மஸ்த்தியில் வருபவர் ஜனநாயக களியாட்டக்காரன் என்ற பார்வை மட்டுமே. சந்திப்போம். உங்கள் அன்பரசு. 45 26.5.2013 பிரிய முருகுவிற்கு,   நலம் விழைக. பத்திரிக்கை அலுவலகங்களுக்கு வேலைதேடி அலைவது தவிர்த்து சமையல் செய்வதும், புத்தகங்கள் படிப்பதும்தான் மற்ற நேர விஷயங்கள். தி.ஜானகிராமனின் ‘மரப்பசு’ இப்போதுதான் படித்துமுடித்தேன். அம்மணி என்ற பெண்ணை உறுதியான பெண்ணாக வார்த்திருக்கும் முக்கியப் படைப்பு இது. சமூகத்தின் கட்டுப்பாடுகள், ஒழுங்குவிதிகள் என அனைத்தையும் தகர்த்து விட்டு தன் மனதின் கொள்கைகளுக்கேற்ப வாழும் சுதந்திரத் தன்மை கொண்ட கதாபாத்திரம் இது. உலகத்திலுள்ள அனைவரையும் ஒருமுறையாவது தொட்டுப்பார்த்துவிட வேண்டும் என்கிற ஆசையுடன் திருமணம் செய்து கொள்ளாமல் சங்கீத வித்வான் ஒருவரோடு வாழும் அம்மணி எதிர்கொள்ளும் அனுபவங்கள், உணர்வுகள்தான் கதை. 324 பக்கங்களில் அவளின் நாற்பது வயது வரை கதை பயணிக்கிறது. பெண்ணிற்கும், பசுவிற்குமான ஒப்பீடு கடைசிப்பக்கங்களில் நடைபெறுகிறது. பசுவின் பால் முழுவதையும் உறிஞ்சிவிட்டு, வயதான பின் இறைச்சி கூடத்தில் அதை எறிவது போல் பெண்ணிற்கும் ஏற்படுகிறது. அன்பரசு, 3/32, பஜார் தெரு, முதல் சந்து, மயிலை, சென்னை 600004. என்ற முகவரிக்கு கடிதங்களை அனுப்புங்கள். நன்றி. உங்கள் அன்பரசு. 46 29.5.2013 மதிப்பிற்குரிய முருகுவிற்கு,   நலம் விழைக. ‘குழந்தைப்போராளி’ – சைனா கெய்ரெற்சி எழுதிய சுயசரிதை நூலைப் படித்தேன். கருப்பு பிரதிகள் வெளியீடு ரூ.180. நூலைப்படித்து முடித்து இந்த கடிதம் எழுதும்வரை என் உடல் நடுக்கம், பயம், பதட்டம் குறையவில்லை. சைனா கெய்ரெற்சி என்ற உகாண்டா நாட்டுப் பெண்ணின் குடும்ப வாழ்வு, அப்பாவின் சித்திரவதை, வன்முறை, குழந்தைப்போராளியாக என்ஆர்ஏ வில் இணைவது, அதிகாரிகளால் பாலியல் வன்புணர்வு செய்யப்படுவது, உறவுக்கு மறுக்கும் தருணத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனைக்குள்ளாவது, பின் டென்மார்க் தப்பிச் செல்ல யுஎன்ஓ உதவுவது என பேரதிர்ச்சிக்கு உள்ளாகும் வகையில் குழந்தையிலிருந்து இளம்பெண் பருவம் வரை உளநிலையை பிறழ்ந்து போகச் செய்யும் நிகழ்ச்சிகள் என இந்நினைவுகளி -லிருந்து மீளவே நான் பெரும்பாடு பட்டேன். ராணுவத்திலுள்ள அதிகார வெறி பிடித்தவர்களால், பெற்றோர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக குழந்தைகள் பிரிக்கப்பட்டு ராணுவத்தில் முதல் படையணிவீரர்களாக சேர்க்கப்படும் காட்சி வர்ணனைகள் உறக்கத்திலும் கனவாக வருமோ என்று பயமுறுத்தும் நிஜங்கள். குழந்தை போராளியாக மாற்றப்பட்டவர்கள் பிற எதிரி படையினரை செய்யும் சித்திரவதைகள் என அது தனியாக விவரிக்கப்படுகிறது. இத்தனை துயரங்கள், வலிகள், குரூரங்கள் தாண்டி ஒரு பெண் வாழ விரும்பினால் அது ஏன்? எப்படி அது சாத்தியம் என்ற கேள்விகள் உங்கள் மனதில் தோன்றினால் நிச்சயம் இந்த நூலை படித்துதான் ஆக வேண்டும். பேராசைக்காரர்களின் கையில் சிறுகுழந்தைகள் எப்படி நசுக்கப்படுகிறார்கள் என்பதை தெளிவாக தன் வாழ்விலிருந்தே கூறுகிறார் சைனா. போரில் ஈடுபடும் குழந்தைகளின் வாழ்வு பின்னாளில் எப்படி உளவியல் பாதிப்பு ஏற்பட்டு என்றுமே கண்ணில் உறுத்தும் சதையாக இருக்கப்போகிறது என்பதை அவர்கள் அறியமாட்டார்கள் என்று கூறும் சைனா இன்று வரை அந்த வேதனையை எதிர்கொண்டு தாங்கிக்கொண்டு வாழ்கிறார். வாழ்வின் கவர்ச்சியே அதுதானே! சந்திப்போம். உங்கள் அன்பரசு. 47 15.6.2013 அன்பு முருகுவிற்கு, நலம் விழைக.   எங்களது ஊர் நூலகத்தில் 500 புத்தகங்கள் 35000 ரூபாய் செலவில் வந்திறங்கி உள்ளது. அவற்றை நூலக முத்திரை இட்டு ஒழுங்குபடுத்திக்கொண்டு இருக்கிறேன். பருவ இதழ்களாக காட்சிப்பிழைத்திரை, கலைமகள், குடும்ப நாவல், அந்திமழை ஆகியவையும் வருகிறது. ‘நீந்திக்களித்த கடல்’ –குறும்பனை சி. பெர்லின் எழுதிய நூலை என்சிபிஎச் வெளியிட்டுள்ளது. பனிரெண்டு சிறுகதைகள் நேர்த்தியான பதிவுகளாக மீனவர்களது வாழ்வினை உப்புக்காற்றும், மீன் கவுச்சியுமாக நம்மேல் வீசுவது போல் எழுதியுள்ளார். கடல் நீவாட்டு கீழாட்டு, காணா கனவு, ஆனி ஆடி ஆத்தலும், தூத்தலும் என்ற சிறுகதைகள் முக்கியமானவையாக கருதுகிறேன். நேரத்தை எப்படியாவது பெற்று பதிப்பாகிறதோ இல்லையோ சிறிது எழுதிவந்தால் நன்றாக இருக்கும் என தங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். தமிழ் சினிமாவை விட மலையாள சினிமா சிறிய தொகையில் நேர்த்தியான கதைகளை படமாக எடுக்கிறார்கள். மெய்யருள் அண்ணாவின் வீட்டில் ‘மை பாஸ்’, ‘உஸ்தாத் ஹோட்டல்’ ஆகிய படங்களைப் பார்த்தேன். பின் வீட்டில் ‘இன்செப்ஷன்’ ‘காட்பாதர்’ ஆகிய படங்களைப் பார்த்தேன். இவை தமிழ் டப்பிங் என்றாலும் மலிவான நகைச்சுவை சொற்களோ, காட்சிகளோ இல்லை என்பதில் நிம்மதி. ‘உஸ்தாத் ஹோட்டல்’ திரைப்படத்தின் திரைக்கதை அஞ்சலி மேனன் என்பவராம். சமையல் எதற்கு, யாருக்கு, ஏன் என்பதை உருக்கமாக கூறியிருக்கிறார்கள். இந்தப்படம் மதுரைக்கும் இடையில் பயணிக்கிறது. படத்தின் காட்சி எனக்கு சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா டுடேவில் வெளிவந்த வெளியே தெரியாத உன்னத மனிதர்கள் பற்றிய நிகழ்ச்சி ஒன்றை நினைவுபடுத்தியது. மதுரையில் தகவல் தொழில் நுட்பத்துறை ஒன்றில் பணிபுரிந்துகொண்டிருந்த ஒருவர் சாலையில் மனம் பிறழ்ந்த ஒருவர் சாலையில் உணவாக மலத்தை அள்ளி உண்ணுகிறார். அதைக் காண்பவர், தன் பணியை விடுத்து, சேமிப்பு பணத்தை எடுத்து மனநிலை பிறழ்ந்தவர்கள், பிச்சைக்காரர்கள், ஆதரவற்றோர் என உணவிடுதலை மேற்கொள்ளத் தொடங்கிவிடுகிறார் என்ற செய்திதான் அது. மனித நேயத்தை, மனிதனை நேசிக்கச் செய்கிற திரைப்படம் அது. தற்போது சாருவின் ‘கெட்டவார்த்தை’ கட்டுரைத்தொகுப்பை படித்துக்கொண்டு இருக்கிறேன். நன்றி! உங்கள் அன்பரசு. 48 19.6.2013 அன்புள்ள முருகுவிற்கு,   நலம் விழைக. உயிரெழுத்து இதழில் கணேசகுமாரன் எழுதிய ‘காமத்தின் நிறம் வெள்ளை’ சிறுகதை பெருகும் காமத்திற்கு வடிகால் ஏதுமில்லாமல் ஒருவன் இறப்பதோடு நிறைகிறது. இதில் வெண்புள்ளி நோய் கணவனுக்கு வருவதால் அவனைத் தவிர்க்கும் மனைவியால் ஏற்படும் உளநிலை பாதிப்பு பற்றிய விவரணை முக்கியமானது. சிறுகதையின் தொடக்க வார்த்தைகளே தூக்கத்தின் உச்சத்தில் தூக்க மாத்திரை போட்டுக்கொள்ளும் ஒரு தன்மையினை ஏற்படுத்துகிறது. இதோடு என்.ஸ்ரீராம் எழுதிய ‘ மீதமிருக்கும் வாழ்வு’ கோமதி என்ற பெண்ணின், கணவனை இழந்தபின், தந்தையை மட்டும் எதிர்பார்த்து நிற்கும் நிராதரவான நிலை பற்றிய கதையைக் கூறுகிறது. இதுபற்றி சொல்ல ஏதுமில்லை. எழுத்தாளனிடம் வருவதைத் தவிர்த்து எதிர்பார்க்க என்ன இருக்கிறது. பேராசை நம் உடலைத்தான் கெடுக்கும். ‘கோதை சிரித்தாள்’ – க.நா.சு எழுதியுள்ள இந்த நாவல் நடைமுறை வாழ்விற்கான பள்ளியைக் கட்டமைக்க உழைக்கும் இருபெண்களின் அர்ப்பணிப்பான வாழ்வைக் கூறுகிறது. அந்திமழை இதழ் ஓரளவு நன்றாக இருக்கிறது. மாதம் ஒரு சிறுகதை மற்றும் ஏதோ ஒரு சிறப்பிதழாகவும் வெளிவருகிறது. சுகுமாரன் எழுதுகிறார். காட்சிப்பிழை வெகுஜன சினிமாவின் பெரும் ஆதரவாளனாகவும், அதில் முயற்சி செய்த சிறு விஷயங்கள் பற்றியும் பேசுகிறது. பா.செயப்பிரகாசம் எழுதிய சிறுகதை புதிர்கள் போட்டு அதை சாமார்த்தியமாக அவிழ்க்கும் மின்னல் என்பவரின் வாழ்வு எப்படி புதிராக மாறுகிறது, அதை அவர் எப்படி சமாளித்தார் என்பதே கதை. கச்சிதமான கதை. சந்திப்போம். உங்கள் அன்பரசு. 49 23.6.2013 பிரிய முருகானந்தம் அவர்களுக்கு,   நலம் விழைக. இந்த முறை இரு நூல்களைப் பற்றி பேசுகிறேன். ‘விசாரணை’ – ப்ரான்ஸ் காப்கா, தேசாந்திரி – எஸ்.ராமகிருஷ்ணன் என இரு நூல்கள்தான் அவை. விசாரணை நாவலைப் படிக்க மனவலிமை அதிகம் தேவை. நீண்டு கொண்டே கனவின் புதிர்த்தன்மை கொண்ட பாதையாய் விரிந்து செல்லும் முற்றுப்புள்ளிகளில்லாத உரையாடல்கள் பெரும அயர்ச்சியைத் தருகிறது. விசாரணை ஏற்படுத்தும் கடும் மன உளைச்சலை படிக்கும் வாசகனுக்கும் ஏற்படுத்துவது ஆசிரியனின் திறமையாக, இலக்காக கூட கொண்டிருக்கலாம். க என்பவரின் மீது தொடுக்கப்படும் வழக்கும் அதன் நீட்சியாகத் தொடங்கும் வழக்கு விசாரணைகளும். இதன் விளைவாக க எதிர்கொள்ளும் குழப்பங்களும், கவலைகளும், சிக்கல்களும், வேதனைகளும் இறுதியில் க விற்கு என்ன நேருகிறது என்பதை படித்து அறியுங்கள். நீங்கள் இதனை முன்பே படித்திருப்பீர்கள். தேசாந்திரி நூலை விசாரணையின் அயர்ச்சி போக இடையில் படிக்கத் தொடங்கி, முழுமையாக படித்து முடித்துவிட்டேன். சிறந்த பயண நூல்தான் இது. இடம் பற்றிய விவரிப்பு, இன்றைய நிலைமை, நமது எண்ணங்கள் என உயிரோட்டமான எழுத்து பயணத்திற்கு செல்ல நம்மை ஆயத்தப்படுகிறது. சாரநாத் ஸ்தூபி, ஆர்மீனியன் தேவாலயம், அடையாறு ஆலமரம், சித்தன்ன வாசல், வானம், வெயில், மணல் என்று பார்த்த விஷயங்களையே இன்னும் நுட்பமாக, ஆழமாக எப்படி பார்ப்பது என்று தூண்டும் அற்புதமான எழுத்து. ஜெயமோகன் அந்திமழையில் மொழி, வட்டார வழக்கு, மொழியின் தேய்வு பற்றிக் கட்டுரை எழுதியிருந்தார். நவீன மொழியில் வட்டாரமொழிச் சொற்களை சேர்க்கலாம் என்று கூறியிருந்தார். சந்திப்போம். உங்கள் அன்பரசு. 50 26.6.2013 பிரிய முருகானந்தம் அவர்களுக்கு,   நலமுடன் வாழ இயற்கையை வேண்டுகிறேன். லட்சுமி நாராயணஸ்வாமி கோயில் கும்பாபிஷேகம் விழா காண உதவியதற்கு நன்றிகள் பல. அன்று ஏனோ சோர்ந்தது போல் இருந்தீர்கள். தோட்டியின் மகன் நூலின் முன்னுரையில் சு.ரா இந்தக்கதை மக்களிடம் சென்று சேர்ந்ததா என்று தெரியவில்லை. இதைப் படித்துவிட்டு வாசகர்கள் கடிதம் எழுதினார்களா என்று கூடத் தெரியவில்லை என்று குறிப்பிடுகிறார். சு.ராவின் எழுத்தைப் படித்ததிலிருந்து இனி நான் படிக்கும் நூலின் ஆசிரியருக்கு முகவரி இருந்தால், எனது கருத்தினை தெரிவிக்க முயற்சிக்கலாம் என்றிருக்கிறேன். யாராவது ஒருவரிடம் ஏதாவது கற்க, தவிர்க்க என நிச்சயம் ஒன்று இருக்கிறது. சந்திப்போம். உங்கள் அன்பரசு. 51 29.6.2013 பேரன்புத் தோழமைக்கு,   நலமுடன் வாழ வாழ்த்துகிறேன். ஜே.ஜே சில குறிப்புகள் –சு.ரா எழுதிய நாவலைப் படித்தேன். திரும்ப, திரும்ப படிக்கத் தூண்டும் வசீகரமான நாவல். பகடி, எள்ளல், எனப் பயணிக்கும் மிக கச்சிதமான எழுத்து நடை,ஜோசப் ஜேம்ஸ் எனும் எழுத்தாளரின் இறப்பைக் கூறி முதல் அத்தியாயம் தொடங்குகிறது. கதையைக் கூறுபவர் பாலு என்றும், அவரறிந்த ஜே.ஜே பற்றிய உருவம் மெல்ல புலப்படுகிறது. பின் ஜே.ஜே வின் நாட்குறிப்புகளின் வழி அவரது வாழ்வு, எண்ணங்கள் என தெளிவாகவே செல்கிறது. ஜே.ஜேவைப் பற்றி மற்றவர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக, அவரைப்பற்றிய நூலை பாலு எழுத முயற்சிப்பதுதான் கதை. சு.ராவின் மிகச்சிறந்த எழுத்தை இந்நூலில் தரிசிக்க முடிகிறது. எழுத்து அதோடான அகநேர்மை என்ற ஒன்றுதான் சு.ராவை இன்றும் படிக்கத் தேர்ந்தெடுக்க உதவுகிறது. ‘மிர்ச்சி’ என்ற தெலுங்கு திரைப்படம் பார்த்தேன். இரு பெரிய குடும்பங்களுக்கும் இடையில் உள்ள பகையால் அவர்களின் ஊர்க்கார மக்களுக்கும் நிம்மதி இல்லாமல் போகிறது. இரு குடும்பத்தையும் நட்பாக்கி, எப்படி பகையை மிளகாயின் காரத்தோடு அடிதடி, குத்து பாட்டுக்கள் சகிதம் சமாளித்து இறுதியில் வெற்றிபெறுவதுதான் கதை. இதற்கு டிஎஸ்பியின் இசை பின்னணியில் தடதடக்கிறது. ‘தீயாய் வேலை செய்யணும் குமாரு’ படம் ஏதோ இங்கிலீஷ் படம், கொரியன் படம் என குறுக்குசால் ஓட்டுகிறார்கள். சுந்தர்.சி படம் கொஞ்சம் அப்டேட் ஆயிட்டாரு போல. இயக்குநரை நம்பிப்போனால் ஏமாற்றமில்லை. அவ்வளவுதான். சுந்தர். சியின் கதை குறித்து கூற ஒன்றுமில்லை. படம் பாருங்கள்.சிரியுங்கள். சந்திப்போம். உங்கள் அன்பரசு 52 3.7.2013 அன்புத்தோழருக்கு, நலம் வாழ வாழ்த்துகிறேன்.   ‘சங்கச்சித்திரங்கள்’ – ஜெயமோகன் எழுதிய சங்கப்பாடல்களை வாழ்வனுபவங்களோடு இணைத்து புதிய பரிணாமம் தரும் விதமான எழுத்தை இந்நூலில் சந்திக்கலாம். நம் மரபின் பாடல்களை படிக்க பெரும் ஈடுபாட்டை ஏற்படுத்த முயற்சிக்கும் முக்கியமான படைப்பு. ‘கோமாளியும் காதலனும்’ என்று 31 வது அத்தியாயம் தொடங்கும். தன்னைப் பேச அனுமதித்து, இயல்பாக பேசுபவனிடம் பெண்ணுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது என்று கூறி சங்கப்பாடல் ஒன்றையும் கூறுவார். கடைவீதியில் நீங்கள் கூறிய சிலப்பதிகாரப் பாடல் நினைவுக்கு வந்தது. வாழ்வனுபவங்கள்தான் கவிதையோ,கதையையோ முளைக்கச் செய்யும் மண்ணாக இருக்கிறது. ‘எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே’ என்று ஔவையார் அதியமானின் வாயிற்காவலனிடம் கூறுவதைப் படித்து கண்ணீர் வழிந்தது துடைக்க துடைக்க. இது பாடப்படுவது வாயிற்காவலனிடம் என்பதுதான் பரிதாபமே. புலமை என்றும் அவமானப்படுத்தலின் உரத்தில்தான் வளருகிறதோ!. முன்னமே இதனை நீங்கள் படித்திருக்கக் கூடும் இந்நூலை. ஜெயமோகனின் நூல்கள் அனைத்தும் கவனமான வாசிப்பை கோருபவை என்ற போதும்,ஒரு போது சலிப்பை, அயர்வை ஏற்படுத்துவதேயில்லை. தன்னிகரற்ற எழுத்தாளர் இவர் என்று வாசிக்கும் யாரும் எளிதில் உணர முடியும். சந்திப்போம். உங்கள் அன்பரசு. 53 17.7.2013 பிரிய முருகுவிற்கு,   நலமறிய ஆவல். நீயா நானா நிகழ்ச்சி தங்களை பலருக்கு அடையாளம் காட்டியிருக்கிறது. தங்களின் செயல்பாடுகளும் பெரிய அளவிற்கு செல்ல முடியும் என்று நம்புகிறேன். திரு.வக்கிரத்தின் காவு சிறுகதை உயிரெழுத்து ஜூலை இதழில் வெளிவந்திருக்கிறது. காவு பற்றி சொல்லவேண்டுமென்றால், மொழி நன்றாக வந்திருக்கிறது என்று கூறலாம். இன்னொன்று கவிதை மொழியிலுள்ள தணியாத காதல் மீதான உணர்வு, கதையில் வடிவழகு மீது தாக்கம் ஏற்படுத்தி சீர்குலைவை தன்னியல்பாக ஏற்படுத்தி, அடுத்தடுத்து கடந்து போகும் திரைக்காட்சிபோல சாதாரணமாக கடக்கிறது. தன்னை முன்னிலைப்படுத்த முயலும் எந்த எழுத்தாளருக்கும் நிகழுவதுதான் இது. ஓப்பாரி பாடுவது, ஈசல் பிடிப்பது என்பது சரி. இதெல்லாம் புற வர்ணனைதான். மையம் சின்னம்மாவின் இறப்பு எப்படி ஏற்படுகிறது என்பதுதான். அது குறித்த பெரிய கவலை எழுத்தாளருக்கு இல்லை. சரி நமக்கு மட்டும் ஏன்? ‘கடலும் கிழவனும்’ – எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய நோபல் பரிசு பெற்ற நாவல் படித்தேன். மீன் பிடிக்கச் செல்லும் கிழவர் ஒருவருக்கு கடலின் மையத்தில் நிகழும் சம்பவங்கள்தான் கதை. யோகி என்பவரின் நேர்த்தியான மொழிபெயர்ப்பு. வாசிக்கும் காலம், மனநிலை பொறுத்து வெவ்வேறான வாசிப்பை, அனுபவத்தை தரும் பிரதி இது. சந்திப்போம். உங்கள் அன்பரசு. 54 22.7.2013 பிரிய முருகானந்தம் அவர்களுக்கு,   நலம் விளைய வாழ்த்துகிறேன். புதிய தலைமுறை பத்திரிக்கையில் இருந்து பத்திரிக்கையாளர் பணிக்கு அழைப்பு வந்தது. மொத்தம் 15 பேர் எழுத்துத் தேர்விற்கு வந்திருந்தார்கள். முக்கியமான தலைவர்கள், ஜாதிக்கலவரம், அரசுத் திட்டங்கள் பற்றியும், இதழின் தொடர்கள் தொடர்பாகவும் சில கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. மொத்தம் நூறு மதிப்பெண்கள். இது முதல் கட்டத் தேர்வுதான். இன்னும் இரண்டு, மூன்று தேர்வுகள் இருக்கும் போலத் தெரிகிறது. ஈக்காட்டுத்தாங்கலில் கலைமகள் நகரில் ஜெயா டிவி அலுவலகம்தான் பேருந்து நிறுத்தம் அங்கிருந்து, சாலையைக் கடந்து எதிர்ப்புறம் சென்றால் புதிய தலைமுறை அலுவலகம் நிமிர்ந்து பார்க்க வைக்கும் உயரமான கட்டிடம். அதனைத்தாண்டி சென்றால் பத்திரிக்கை அலுவலகம் உள்ளது. ரயில் பயணத்திற்கான கட்டணத்தைக் கொடுத்துவிட்டார்கள். அலுவலகத்தை சுற்றிலும் வெவ்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. சிப்காட் தொழிற்பேட்டையினுள்தான் டிவி, பத்திரிக்கை அலுவலகங்கள் உள்ளன. நீலபத்மநாபனின் கட்டுரைத்தொகுதியில் 400 பக்கங்களை தாண்டிவிட்டேன். அண்ணாநகர் எழுத்தாளரின்(அ.எ) புத்தகங்களை வக்கிரத்தின் அறையில் வைத்துவிட்டு வந்துவிட்டேன். அ.எ வீட்டிற்கு செல்ல நினைத்தேன். அவருக்கோ கடும் கோபம் என்மீது. கொரியரில் அனுப்பச்சொல்லிவிட்டு வந்துவிட்டேன். காலம் கடந்துகொண்டே இருக்கிறது. எனக்கு இன்றைய பொழுது முக்கியம். சந்திப்போம். உங்கள் அன்பரசு. 55 28.7.2013 அன்புத்தோழர் முருகுவிற்கு,   நலம் விழைக. நீலபத்மநாபனின் கட்டுரைத்தொகுதியை இன்னும் நிறைவு செய்யவில்லை. தனது எழுத்து தமிழ்நாட்டில் அதிகளவு வாசிக்கப்படவில்லை, புறக்கணிக்கப்படுகிறது. இதற்கு காரணம் தான் மலையாளி எழுத்தாளர் என்று பார்க்கப்படுவதுதான் என்று பல இடங்களில் கடும் மன உளைச்சலுடன் கூறுகிறார். தனது நாவல்களில் வரும் கதாபாத்திரங்கள் குறித்து மிக விரிவாக பேசுகிறார். பள்ளி கொண்டபுரத்தில் ஒரு வசனம் எனக்கு நினைவுக்கு வருகிறது. ‘’அணைக்கத் தெரிஞ்சவன்தான் பத்த வைக்கணும்’’ இது எந்த இடத்தில் வருகிறது என்பதை எளிதில் நல்ல வாசிப்பு அனுபவம் கொண்டவர்கள் அறிந்திட முடியும். கார்த்திகாயினி கூறும் முக்கிய வாசகம் இது. ‘அம்ருதா’ இதழில் நினைவோடை பகுதியில் வைதீஸ்வரன் தன் அத்தையின் மூடநம்பிக்கை பற்றி எழுதியிருப்பார். இதனால் தன் மகனை இழந்துவிடுவார் என்பது துயரமான விஷயம். இந்த குற்றவுணர்வு தாங்கமுடியாமல் பதினேழு வயதான தன் மருமகளையும் தவிக்கவிட்டு இறந்துவிடுகிறார். ஏறத்தாழ ஒரு மகன் பிறந்த தருணம் கணவன் இறந்துவிட, அவனை வளர்த்து ஆளாக்கும் தனது இறந்த கால நிராதரவான நிலையினை தன் மருமகளுக்கும் பரிசளிக்கிறார் அவர். அபிலாஷ் எழுதிய ‘மனநலம்’ குறித்த பத்தி நமது அநாவசிய மனச்சிக்கல்கள் பற்றி அவற்றை களையும் எளிய வழிகளையும் பகிர்கிறது. அதில் உள்ள மொழிபெயர்ப்பு சிறுகதை பற்றி என்ன சொல்வது? சுப்ரபாரதி மணியனின் மொழிபெயர்ப்பு. வாய்ப்பு கிடைத்தால் படியுங்கள். நூலகத்திற்கு இளையவர்கள் வந்தால் பாடப்புத்தகங்களையே தேடுகிறார்கள். வயதானவர்கள் தங்கள் ஜாதியில் பெண், மாப்பிள்ளை பார்க்க உதவும் கொங்கு இதழ்களைப் படிக்கிறார்கள். தலித், இஸ்லாமிய நூல்களை முழுமையாக புறக்கணிக்கும் போக்கு எங்கள் ஊர் நூலகத்தில் நிலவுகிறது. ராமாயணம், கி.வா.ஜ, வாரியார், வத்தல் குழம்பு செய்வது, முப்பத்தெட்டு வகை கூட்டு, பொரியல், கிச்சடி, ராணிமுத்து ரக அலுவலக ரக காதல் கதைகள் என தேடித்தரச் சொல்லி உயிரை வாங்குகிறார்கள். தனியாகவே அவற்றை எடுத்து வைத்துவிட்டேன். வயதானவர்களிடம் முடிந்தவரை உரையாட முயற்சிக்கிறேன். அவர்களின் அனுபவச்சாறினை ஒரு துளியேனும் பருக விரும்புகிறேன். அவர்களுக்கும் அது மகிழ்ச்சி என்பதை அவர்களின் கண்களிலிருந்து உணர்கிறேன். இதுதான் தற்போது எனது வாழ்வு. சந்திப்போம். உங்கள்                                                         அன்பரசு. 56 29.7.13 அன்பு… வணக்கம். உனது கடிதங்கள் கிடைத்தும் வாசிக்கப்பட்டும் வருகின்றன. உனது எழுத்து சார்ந்த எதிர்காலத்திற்கான பயிற்சியாகக் கருதி தொடர்ந்து எழுதக்கோருகிறேன். எங்கள் ஊரில் நல்லவிஷயம் ஒன்று நடந்துள்ளது. தாராபுரம் நகராட்சியின் ஆணையராக வந்துள்ள சரவணக்குமார் என்ற இளைஞர் நகரில் பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளார். அதில் ஒன்றாக சீரழிந்து போயிருந்த நகராட்சிபூங்காவை பொது நூலகத்துறையோடு இணைத்து திறந்தவெளி நூலகமாக மாற்றியுள்ளார். நேற்று அமைச்சரால் திறந்துவைக்கப்பட்டது. நிறைய இருக்கைகள் போடப்பட்டுள்ளதாம். இந்த சமயத்தில் இங்கு அடிக்கும் பேய்க்காற்று வாசிக்கத்தடையாக இருக்கக்கூடும். ஆனால் இது சிறப்பான விஷயமே. பத்திரிக்கைப்பணி உனக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கக்கூடும். வாய்ப்புக் கிடைத்தால் விடாமல் பற்றிக்கொள். ‘தி இந்து’ கூட தமிழ் நாளிதழ் வெளியிடும் திட்டம் இருக்கிறதாம். விரைவில் வெளியாகக்கூடும். மொண்ணையான தமிழ் இதழியல் சூழலில் இது ஒரு உற்சாகம் தரும் விஷயம். அவர்களின் அனுபவமும், வணிகத்தொடர்புகளும் அவர்கள் முயற்சி வெற்றிகரமாக அமைய கூடுதல் சாத்தியங்களாக உள்ளன. மிகக்குறைவாகப் படிக்கிறேன். நண்பர்களுடன் அதிக நேரம் இருக்கிறேன். உனது கடிதம் எனக்கு உற்சாகத்தை தருகிறது. நன்றி! -இரா.முருகானந்தம். 57 6.8.2013 அன்புமிக்க முருகு அண்ணாவிற்கு, நன்னிலை பெற வாழ்த்துகிறேன். 4.8.13 அன்று புத்தகத்திருவிழாவிற்கு ஈரோடு சென்றேன். என்பிடியும், சாகித்திய அகாதமியும்தான் என் முதல் தேர்வாக இருந்தன. உள்ளே நுழைந்த உடன் கண்ணில் படுவது வலது ஓரத்தில் இருக்கும் என்பிடிதான். அதில் தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி என மூன்று நாவல்கள் 86 ரூபாய்க்கு பதினைந்து விழுக்காடு தள்ளுபடியுடன் வாங்கினேன். சாகித்திய அகாதமியில் கன்னட நூல் ஒன்றும், தெலுங்கு நூல் ஒன்றுமாக இரண்டு வாங்கினேன். இதில் 110 ரூபாய் செலவழித்தேன். மத்திய அரசின் பப்ளிகேஷன் டிவிஷனில் ‘திட்டம்’ எனும் மாத இதழுக்கு நூறு ரூபாய் சந்தா கட்டினேன். ‘ராமகிருஷ்ண விஜயம்’ இதழ் நூலகத்திற்கு வருமாறு ஆண்டு சந்தா 110 ரூபாய் கட்டினேன். பின் இந்தியன் போலீசிற்காக காத்திருந்தேன். அவர் இரண்டு மணிக்கு வந்தபின் என்பிடியில் நிறைய வாங்கினார். நூல்பட்டியலில் இருந்த பல புத்தகங்கள் கடையில் இல்லை. ஆங்கிலத்தில் குழந்தைகள் நூல்கள் நல்ல விற்பனை. என்பிடி, சாகித்திய அகாதமி, பப்ளிகேஷன் டிவிஷன் கடைகளில் உள்ள புத்தகங்களைப் பற்றி வாசிப்பு நேசம் கொண்டவர்களிடம் பரிந்துரைக்கிறேன். விழா இறுதியில் என்பிடி இயக்குநர் சிக்கந்தர் பேசுகிறார். சந்திப்போம். உங்கள் அன்பரசு. 58 9.8.2013 பிரிய தோழர் முருகுவி்ற்கு, நன்னிலை பெற வாழ்த்துகிறேன்.   தங்களது 29.7.13 தேதியிட்ட கடிதங்கள் கிடைத்தன. புதிய தலைமுறை பத்திரிக்கையில் வாய்ப்பு கிடைத்தால், பணம் என்று இல்லாமல் பல புதிய மனிதர்களை சந்திக்கும் வாசலாக அதை எண்ணுகிறேன். இது மூன்றாவது கட்டத் தேர்வு. புதிய தலைமுறை இதழில் நம் சமூகத்தில் நம்பிக்கை ஏற்படுத்தும் வண்ணம் செயல்படும் மனிதர்களைப் பற்றிய தொடர் தொடங்குகிறது. விகடனில் பாரதிதம்பி எழுதிய தெருவிளக்கு எனும் தொடரைப் போன்றது அது. தங்களைப்போல செயல்படும் சிலரை எழுதி முன்னிலைப்படுத்தினால் இளையவர்கள் பலருக்கும் அது முன்னுதாரணமாக இருக்கும். இது கூட தனிமனிதர்களை, சமூக இயக்கம் தடைபடாமல் தன்னை, தன் ஆன்மாவினை விளக்காக எரித்துக்கொள்ளும் மனிதர்களைப் பாராட்டி வாழ்த்துவது சிறு கௌரவம்தான். எளிய அங்கீகாரம்தான். மற்றபடி புகழுக்காக எதையும் எதிர்பார்த்து செய்பவர்களாக அவர்கள் இருக்க மாட்டார்கள். சபர்மதி அறக்கட்டளைக்கு தொடர்ந்து செயல்பட ஏதாவது உதவிகள் கிடைக்கலாம். தேரினை வடம் பிடித்து இழுக்க பல உள்ளங்கள் தேவைப்படுகின்றன. செயல்பாடுகள் அதிகரிக்க வேண்டும். கரங்கள் என்பன ஒன்றிணைந்தால்தானே வலிமை. சந்திப்போம். உங்கள் அன்பரசு. 59 12.8.13 அன்புத்தோழமை முருகு அண்ணாவிற்கு,   10.8.13 அன்று இரண்டாவது முறையாக புத்தகத்திருவிழாவிற்கு சென்ற போது, மிக்கைல் நைமி, ஓம்பிரகாஷ் வால்மீகி மற்றும் கன்னட, தெலுங்கு நாவல்களை வாங்கினேன். புதிய புத்தகம் பேசுது சந்தா 150 ரூபாய் கட்டினேன். ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய விலங்குப்பண்ணை, கயிறு – தகழியினுடையது, வழிப்பறிக் கொள்ளையனின் வாக்குமூலம், தலைமுறைகள் –நீல பத்மநாபன் புத்தகங்கள் வாங்கவில்லை. பிரகாஷ் பப்ளிஷர்ஸ் கடையில் லயன் காமிக்ஸ் வாங்க வேண்டும்.காமிக்ஸ் படித்தால் படத்தைவிட அதிக யதார்த்தமாக இருக்கிறது. குதிரைகள், துப்பாக்கிகள், பாலைவனங்கள், காடுகள் என தனித்துவ வாசிப்பு அனுபவம் அதில் கிடைக்கிறது. இந்தியன் போலீஸ் கன்னட இலக்கியத்தாகம் மிக்கவராக புத்தகங்களை வாங்கி குவிக்கிறார். பிரேம்சந்தின் சிறுகதைகள் கிடைக்கவில்லை. சரியாக நான் தேடவில்லை. காமிக்ஸ் வாங்க இன்று போகவில்லையெனில் இனி வாங்க ஒரு ஆண்டு ஆகிவிடும். காலச்சுவடு படித்துக்கொண்டிருக்கிறேன். சந்திப்போம். உங்கள் அன்பரசு.     60 13.8.2013 அன்புத்தோழர் முருகுவிற்கு,   நலமா? 12.8.2013 அன்று புத்தகத்திருவிழாவில் லயன் காமிக்ஸ் எண்பது ரூபாய்க்கு வாங்கினேன். என்னோடு வந்திருந்த நண்பன் ராம் ‘’காமிக்ஸினால் என்ன பிரயோஜனம்? என்றான். நானும் அதைத்தான் புத்தகங்களில் தேடிக்கொண்டு இருக்கிறேன். அறிந்ததும் நிச்சயம் உன்னிடம் கூறுவேன் என்றேன். பாரதி புத்தகாலயத்தில் ‘ஆயிஷா’ புத்தகத்தை மாணவிகளிடம் மிகவும் சிரமப் பட்டு விற்றுக்கொண்டிருந்தார்கள். வாசிப்பு பழக்கத்தை தொலைக்காட்சிகள் மிகவும் குலைத்துத்தான் போட்டுவிட்டதோ? சாகித்திய அகாதமியின் நூல்கள் பலவும் விலை குறைக்கப்பட்டு விற்கப்பட்டன. அதற்குள் அனைத்துத் தொகையினையும் நான் செலவழித்திருந்தேன். இனி தங்களிடம் தான் நூல்களைப் பெற்று படிக்கவேண்டும். வாங்கிய காமிக்ஸை படித்து வருகிறேன். காலச்சுவடில் ‘வீடு திரும்பும் கலை’ சிறுகதையை படித்தீர்களா? கதை கவித்துவ சொற்களடங்கிய நடையினால் திரும்பத் திரும்ப படிக்கத்தூண்டும் கதை. சந்திப்போம். உங்கள் அன்பரசு. 61 17.8.2013 அன்புத்தோழமைக்கு, நலம் வாழ வாழ்த்துகிறேன்.   நேற்றுதான் ‘ஜூதான்’ எனும் ஓம்பிரகாஷ் வால்மீகியின் வலி நிறைந்து மன உளைச்சல் தரும் சுயசரிதையைப் படித்து முடித்தேன். பால்யம் தொடங்கி இன்றைய காலம் வரை ஒரு அடையாளமாக காணப்படும் தன் ஜாதி பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். காந்தி பற்றிய தனது விமர்சனம் ஒன்றினையும், பகவத் கீதை படிப்பது பற்றிய கருத்தினையும் தெரிவிக்கிறார். இவர் கூறியுள்ள பலவற்றை நீங்கள் எப்படி உணர்வீர்களோ? ஆனால் எனக்கு இந்த நிகழ்ச்சிகள் பலவற்றில் ஒத்திசைவு உண்டு என்பதால் பெரும் மனச்சோர்வு ஏற்படுத்திய படைப்பு என்பேன். ‘Colour of Paradise’ எனும் படம் ஒன்றை இந்தியன் போலீசிடமிருந்து பெற்று பார்த்தேன். பார்வையற்ற சிறுவன் ஒருவனின் உலகத்தை அவன் பாட்டி, அக்கா, தங்கைகள் என அனைவரும் வண்ணமயமாக்க முயலுவதே கதை. சிறுவனின் தந்தைக்கு மகனின் மீது பெரும் விருப்பம் இல்லை. வெறுப்பு சூழ அவனை என்ன செய்வது என்று, மர வேலையில் சேர்த்து விடுகிறார். அவனின் பாட்டி அவனைக் காணாது அவனை நினைத்தே அதிகாலை ஒன்றில் இறந்துவிடுகிறார். தனது இரண்டாவது திருமண முயற்சிக்கு பணம் சேர்க்கும் முயற்சியில் உள்ள தந்தை மகனை மர ஆலையிலிருந்து கூட்டி வரும்போது, ஒரு பழைய பாலத்தில் குதிரையோடு ஆற்றில் விழ,மகன் பிழைத்தானா என்பது கண்ணீர் சொரியும் இறுதி முடிவு. காட்சிகள் பலவற்றையும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவு அழகான, நிதானமான காட்சிகள். கவிதையைப் போல ஒரு படம் என்று உறுதியாக இதனைக் கூறுவேன். படத்தை பார்க்கும்போது இதனை உறுதியாக உணர்வீர்கள். சந்திப்போம். உங்கள் அன்பரசு. 62 19.8.13 பிரியமுள்ள தோழர் முருகுவிற்கு, நலம் விழைகிறேன்.   ‘முதலில்லாததும், முடிவில்லாததும்’ –ஸ்ரீரங்க எழுதிய கன்னட நாவல் உணர்ச்சிக்கும், அறிவுக்குமான நீடித்த போராட்டத்தைப் பற்றி பேசுகிறது. ராமண்ணா, சரளா, குமுதா, மோகன் என்ற நான்கு பேரே உள்ள 250 பக்க நாவல் இருபாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ராமண்ணா தன் மனைவி சரளாவை நேசிக்கிறபோதே, அவள் அழைத்துவந்த அத்தை மகளான குமுதாவையும் சிறிதுசிறிதாக நேசிக்கத் தொடங்குகிறான். சரளா நோயுற்று மரணப்படுக்கையில் இருக்கும்போது, ராமண்ணா குமுதாவுடன் உடலுறவில் ஈடுபடுகிறான். சரளாவின் இருப்பு இவ்விருவரையும் கடும் குற்றவுணர்வுக்கு உள்ளாக்க முதலில்லாதது நிறைகிறது. முடிவில்லாதது எது காமமா, காதலா என்பதை கண்டறிய முயலும் ராமண்ணா, குமுதாவின் பிற்கால வாழ்வுதான் இறுதிப்பகுதி. ராமண்ணாவுக்கும், குமுதாவுக்கும் திருமணமாகி மோகன் என்ற சிறுவன் இருக்கிறபோது உடலைத்தாண்டிய ஒன்று அவ்விருவரையும் பிணைக்கிறது. முதலில்லாததும், முடிவில்லாததும் நினைவுச்சுழல்களாக சொல்லப்படுகிறது. சரளாவின் இருப்பு, வாழ்வு ராமண்ணா, குமுதா இருவரின் பழைய நினைவுகள் என மாறி மாறி பயணிக்கும் வாழ்வு சிறிது அயர்ச்சியைத் தருகிறது. முடிவில்லாதது பகுதி முடியாதோ என அச்சம் கொள்ளும் அளவு வெகுநீளம். புதிய புதிய சம்பவங்கள், மனிதர்கள் இல்லை. வீடு, படுக்கையறை, சமையலறை, இவற்றை இடமாகக் கொண்டு நகரும் காட்சிகள், முழுக்க அக உணர்வுகளின் அருவி போன்ற வீழ்ச்சிதான் முதலில்லாததும், முடிவில்லாததும் நாவல் சந்திப்போம். உங்கள் அன்பரசு. 63 23.8.13 அன்புத்தோழர் முருகு அவர்களுக்கு,   நலம் விளைய இயற்கையை வேண்டுகிறேன். அரசின் திட்டங்கள் பற்றிய இதழான ‘திட்டம்’ வாசித்துக்கொண்டிருக்கிறேன். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எழுதிய ‘சத்தியசோதனை’ நூலை படித்துவருகிறேன். காந்தியின் தந்தையின் இறப்பு வரை படித்திருக்கிறேன். விகடன் மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டு இருபது ரூபாய் ஆகிவிட்டது. தபால் அலுவலகங்களில் போஸ்ட் கார்டு கிடையாதாம். தலைமை தபால் அலுவலகத்திலும் கார்டுகள் இல்லையாம். எங்கள் பகுதியில் விவசாய வேலைகள் வேகம் கொண்டுவிட்டன. முன்பு எடுத்த ஆதார் அட்டை செல்லாதாம். இரண்டாவது முறை எடுக்கவேண்டும் என்று ஆசிரியை ஒருவர் கூறிவிட்டார். ஆனால் அது பற்றிய முழுமையான விளக்கங்கள் எதுவும் அவருக்கு தெரிந்திருக்க வில்லை. இந்த வேலைக்கு என தனிசம்பளம், பயிற்சி வேறு. உயிரெழுத்து இதழில் புலியூர் முருகேசன் எழுதிய ‘சங்கர்…’ சிறுகதை படித்தேன். ஆகஸ்ட் இதழின் சிறந்த சிறுகதை அதுதான் என்று கருதுகிறேன். பள்ளிக் கட்டணம் செலுத்த கடன் வாங்க முற்படும் பல வாசிப்பு அனுபவங்களைக் கொண்ட ஒருவன் எப்படி தன்னை கடன் தருபவரிடம் தாழ்மையாகிறான் என்பதுதான் கதை. நிஜத்திற்கும், கனவிற்குமான துயரத்தை, இடைவெளியைப் பேசும் கதை. சந்திப்போம். உங்கள் அன்பரசு. 64 27.8.13 மதிப்பிற்குரிய முருகு அவர்களுக்கு,   நலமறிய ஆவல். காந்தியினுடைய 622 பக்க சுயசரிதையைப் படித்தேன். தன் வாழ்க்கையை நேர்மையாக வாழ்ந்த ஒரு மனிதனின் பதிவுகளாக நம்பிக்கையூட்டுகிறது. தாய்மொழிக்கல்வி, நீர்சிகிச்சை, கதர் உற்பத்தி, தன்வேலைகளைத் தானே செய்துகொள்வது, என மிக எளிய வாழ்வு வாழ்ந்த மனிதரின் மனம்தான் ஆச்சர்யப்படுத்துவது. தபால் அட்டை தட்டுப்பாடு நீங்கியபின் தங்களுக்கு கடிதம் எழுதுவேன். இங்க்மர் பெர்க்மனின் ‘ஏழாவது முத்திரை’ எனும் திரைப்படத்தின் திரைக்கதையை வெங்கட் சுவாமிநாதனின் தமிழாக்கத்தில் படித்தேன். இது திரைப்படம் என்றாலும் நாடகத்தின் சாயல் விலகவில்லை. சொல்லும் விஷயம் மிக அர்த்த ஆழம் கொண்டது. அந்தரங்கத்தில் மட்டும் உணரக்கூடிய ஒன்று. பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையில் உள்ள வாழ்வில் மனிதர்கள் சந்திக்கும் அவலங்களே கதை. கன்னட தலித் இலக்கியம் எனும் தமிழவன் தொகுத்த சாகித்திய அகாதமி நூலை வாசித்துக் கொண்டு இருக்கிறேன். குசுமபாலே, அமாச, பம்பரம் எனும் மூன்று சிறுகதைகளையும், ஊரும் சேரியும் என்ற தன்வரலாறு, சித்தராமிலிங்கையா எழுதியதும் படித்திருக்கிறேன். வேலை தொடர்பான விஷயங்கள் சற்றும் மனம் தளராத அரசன் போல நீண்டு கொண்டே போகிறது. வக்கிரத்தின் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறப்போகிறது. தங்களுக்கு அழைப்பு உண்டா? பணத்தை சரிபார்த்துக்கொள்ளுங்கள். திரும்பி வராது. சந்திப்போம். உங்கள் அன்பரசு. 65 5.10.2013 அன்புத்தோழமைக்கு, வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன்.   ராஜாராணி திரைப்படம் பெரும் வெற்றியை பெருநகரங்களில் ஈட்டியிருக்கிறது. அதற்கு காரணம் இளைஞர்களுக்கான படமாக மாற்றிவிட, சில காதல் காட்சிகளும், பெண்களைச் சீண்டும் சில காட்சிகளும் போதுமானதாக இருக்கிறது. எந்தவொரு பாத்திரமும் வலுவாக ஒரு அடித்தளம் நோக்கி, இயக்கப்படாமல் பெரும் அயர்ச்சியையே ஏற்படுத்துகிறார்கள். ஜானும், ரெஜினாவும் இணைந்தால் என்ன? இடி விழுந்து செத்தால் என்ன என்ற முடிவிற்கு இறுதியில் வந்துவிட்டேன். தன்னிடம் இல்லாத ஒன்றை அடுத்தவரிடம் பரஸ்பரம் இருவரும் மற்றவரிடம் தேடும் வாழ்வு எந்த நிம்மதியையும் தராது. ரெஜினாவுக்கு சமகால கணவனை விடுத்து, இன்னொரு கணவனையும், சமகால மனைவியை விடுத்து இன்னொரு மனைவியையும் கிடைக்க வழி செய்யும் திருமணம் அது. புதுவை ராஜா தியேட்டரில் நல்ல கூட்டம். நீங்களும் பார்த்துவிடுங்கள். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் பாலச்சந்திரன், குமரவேலன் என்ற இருவரின் பகலிலிருந்து இரவு வரையிலான வாழ்வை பேசுகிறது. இருவரும் மதுவை கைவிடுவதால் தாங்கள் விரும்பியதை அடைகிறார்கள். ‘ரௌத்திரம்’ படத்தில் சிறிய அளவிலான நகைச்சுவை இதில் படம் முழுக்க 120 ரூபாய் கொட்டாயில் சிரிப்பு அடங்கவே நேரமாகிறது. ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் இரு படங்கள் பார்த்தேன். வெண்ணிற இரவுகள் படம் காதலை மையப்படுத்தியது. பரவாயில்லை. ‘மை பாதர் ஹவுஸ்’ படம் போட்டபின் பாஸ்கரன் உறங்கிவிட்டார் என்பது படம் முடிந்தபின்தான் தெரிந்தது. படத்தில், மனுஷ்ய புத்திரன் பேசினால் டிவியில் கேமிராவை நாட்டிவிடும் நிகழ்ச்சி நடக்குமல்லவா? அதுதான் இங்கேயும் நடந்து தொலைத்தது. காபி ஒன்று 86 ரூபாய்க்கு வாங்கித்தந்தார். சந்திப்போம். உங்கள் அன்பரசு. 66 7.10.2013 அன்பிற்கினிய முருகுவிற்கு,   நலம் வாழ பிரார்த்திக்கிறேன். கிருஷாங்கினி கதைகள் நூலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். எழுதியுள்ள சிறுகதைகள் அனைத்துமே அக உணர்வுகளை தெளிவாக தெரிவிப்பனவாக உள்ளன. சிறுசிறு கதைகள், அதிலும் கூற வந்ததை சொற்சிக்கனமாக இரண்டே கால் பக்கத்தில் கூறிவிடுகிறார். டாம் டைக்கர் இயக்கிய ‘perfume’ படத்தைப் பார்த்தேன். பேட்ரிக் சஸ்கைன்ட் எழுதிய பர்ஃபியூம் எனும் நாவலைத் திரைப்படமாக்கியுள்ளார்கள். மீன்சந்தையில் பிறக்கும் நாயகனுக்கு எந்த வாசனையையும் எளிதில் முகர்ந்து அதைக் கண்டுணரும் திறமை மனிதருக்கும் மீறிய ஒன்றாக இருக்கிறது. பல அடிமை வேலைகள் செய்கிறான் என்றாலும் வாசனை அவனை வாசனை திரவியம் தயாரிப்பவரிடம் கொண்டுபோய் சேர்க்கிறது. அவர் அவனை சோதனை செய்து பார்த்து ஏற்றுக்கொள்கிறார். அவன் அங்கு உருவாக்கும் விதவிதமான மணங்களை அவர் எப்போதும் நுகர்ந்ததேயில்லை. ரோஜா, லேவண்டர் என பாரம்பரிய முறைகளைக் கற்றவனுக்கு அதில் பெரிய ஆர்வம் பிறப்பதில்லை. அவன் ஆர்வம் மனிதனின் இயல்பான உடல் மணத்தை பின்பற்றுவதில் திரும்புகிறது. பெண்களின் உடலிலிருந்து வரும் மணத்தை உள்ளடக்கி வாசனைதிரவியம் தயாரிக்கத் தொடங்குகிறான். இதனால் பல பெண்கள் இறக்கிறார்கள். அவர்களது உடல்கள் தெருக்களில் படுக்கையில் இன்னும் பல இடங்களில் நிர்வாணமாக கிடத்திவிட்டு செல்கிறான். ஒரு பெண்ணிடம் வாசனை திரவியம் தயாரிக்க அவளைப்பிடிக்க முயலும்போது, காவலர்கள் அவனைப்பிடித்து மரணதண்டனை விதிக்கிறார்கள். அதற்குள் பல பெண்களின் உடலிலிருந்து எடுத்த வாசனைதிரவியங்களை ஒன்றாக கலந்து வசீகரமான ஒரு வாசனை திரவியத்தை அவன் கண்டுபிடித்து, காவலர்களை மனமயக்கத்திற்கு கொண்டு சென்றுவிடுகிறான். தண்டனை நிறைவேற்றும் சதுக்கத்திற்கு அவனை கொண்டு சென்று அவன் கீழிறங்கும்போது, தண்டனையைக் காண அந்த ஊரே, திரண்டு இருக்கிறது. அங்கு அவன் தன் வாசனை திரவியத்தை தெளிக்க, அந்தக் கூட்டமே மயக்கநிலையில் தன்னை மறந்து குழுவாக உடலுறவு கொள்ளுகிறார்கள். அவன் அங்கிருந்து தப்பிவிட்டாலும், முதலில் ஒரு பெண்ணின் உடல் நறுமணத்தினால் கவரப்பட்டு, அவள் அருகில் சென்று நிற்க, அவள் பயந்து அலறுவதைத் தடுக்கும்போது விபத்தாக அவள் இறந்துவிடுவாள். அவளின் உடல் மணத்தை அவன் பெறமுடியாது போனது அவன் மனதில் கடும் குற்றவுணர்ச்சியாக, தோல்வியாக இருக்க இறுதியில் அவன் என்ன செய்கிறான் என்பதுதான் இறுதிக்காட்சி. புனைவான இந்தக்கதை அதன் மூலநூலைப்படிக்க என்னைத் தூண்டுகிறது. தமிழில் இதே கருவை எஸ்.ராமகிருஷ்ணன் நாவலாக முயன்றிருக்கிறார் என்று ஒரு நினைவு. இதில் அப்படியே நம்மை தொலைத்துவிடும் மாயம் திரைப்படத்தில் நிகழுகிறது. வாய்ப்பு கிடைத்தால் பாருங்களேன். தமிழருவி மணியனின் ‘ஊருக்கு நல்லது சொல்வேன்’ படித்துக்கொண்டிருக்கிறேன். சந்திப்போம். உங்கள் அன்பரசு. 67 15.10.2013 அன்புத்தோழர் முருகுவிற்கு, நலம் வாழ வாழ்த்துகிறேன்.   யூமா வாசுகி எழுதிய ‘மஞ்சள் வெயில்’ இப்போதுதான் படித்து முடித்தேன். சிறிது கவனமாக இல்லையென்றால் வார்த்தை சுழல்களில் நம்மை உள்ளிழுத்து பெரும் துயரத்தை மனதில் ஏற்றி நம்மை நாமே இழந்துவிடும் வாய்ப்பு கொண்ட நாவல். மனமும் உடலும் ஒன்றிணைந்து நலமாக இருக்கும் தருணத்தில் மட்டும் படித்தேன். பெரும் வலியையும், நிராசையும் உணரும் எனக்கென உள்ள இரவுப்பொழுதினில் படித்ததனால், படைப்பு மொழியின் மயக்கத்தினால் பெரிதும் பாதிக்க நேர்ந்தது. நிறைவேறாத துயரத்தைக் கூறினாலும், தனித்து ஒவ்வொருவருக்குமான படைப்பு மனதின் யதார்த்த வெம்மையில் துடிக்கும் நிலையைக்கூறும் படைப்பு இது. ‘ராஜா ராணி’ திரைப்படத்தில் இந்த நாவலில் வரும் சிறிய உணர்வைக் கொண்டு வந்திருந்தால் கூட அது வேறு மாதிரியாக இருந்திருக்க கூடும். சரி, படைப்பாளி தான் செய்ததை விட, அதிகமாக எதிர்பார்த்தால் எப்படி? நமது தவறுதானே அது. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் கருத்தினையும் கூறுகிறார்கள் என்றாலும் அதில் ஒரு வாழ்வு இருக்கிறது. விகடன் இதனைக் கேலி செய்கிறது. விகடனின் வெற்றிப்படமான ‘சிவா மனசுல சக்தி’ என்ன கூறவருகிறது. அதிலுள்ள மதுக்காட்சிகள் பற்றி ம்..மூச்சு விடக்கூடாது. தன்னைத் தவிர மற்றவர்கள் நேர்மையாக இருக்கவேண்டும் என்கிற நல்லுள்ளம் கொண்ட ஊடகம். சமூகத்தில் மாற்றங்களை தான்தான் முதலில் உருவாக்கவேண்டும் என்கிற ஆர்வம், வணிகம் என பேச்சு ஒன்று, மனது ஒன்று என இரட்டை வேடம் தேவைப்படுகிறது. ஒன்று என்பது யாருக்கும் போதுமானதாகயில்லை. சந்திப்போம். உங்கள் அன்பரசு. 68 23.10.2013 அன்புள்ள முருகுவிற்கு,   நலமா? பத்திரிக்கையில் வேலை செய்வதற்கான முயற்சிகள் எப்போதும் போல தொடர்ந்துகொண்டு இருக்கின்றன. நேரடியாக பத்திரிக்கை அலுவலகம் சென்று வாய்ப்பு தேடினால் ஏதோ பிச்சை கேட்டு வந்தது பெரும் அவஸ்தையாய் முகத்தைப் பார்க்கிறார்கள். அலைச்சலும், அயர்வும், எரிச்சலும், இலவச இணைப்பாக நம்பிக்கை வார்த்தைகளும் கிடைக்கின்றன. ஜெ.பிஸ்மி எழுதிய ‘களவுத்தொழிற்சாலை’ எனும் போதி பதிப்பகத்தின் வெளியீடான நூலைப்படித்தேன். சினிமா எனும் ஊடகத்தைப் பற்றி கடும் விமர்சனத்தை முன்வைக்கிற நூல் இது. அறமின்மை எப்படி உட்புகுந்திருக்கிறது என்று நடிகர்கள், இயக்குநர்கள், கலை, ஒளிப்பதிவாளர்கள், விநியோகம் செய்பவர்கள், தயாரிப்பாளர்கள், சங்கம் என விலாவரியாக சாட்டையை சுழற்றிப் பேசும் நூல் இது. தினகரன் தீபாவளி மலர் 2013 இலவசப் பொருட்கள் தந்தார்கள் என்பதற்காக வாங்கவில்லை. போன ஆண்டு நன்றாக இருந்தது, கட்டுரையா என்றால் அதுவும்தான் இலவசமான விளக்கும்தான். அப்பா வாங்கியது. ‘இந்து’ தீபாவளி மலர் வாங்கலாம்தான். எத்தனை வாங்குவது? வக்கிரத்திற்கு செய்தித்தாள் என்றால் தினகரன். தீபாவளி என்றால் சேமியா தரும் தினகரன் தீபாவளி மலர்தான். விகடன் 120 ரூபாய், இந்துவும் அதேதான். தினகரன் 125 ரூபாய் அதிகம். வெ.நீலகண்டன், கே.என் சிவராமன் எழுத்து ஒன்றாகயிருக்கும் என்றே வாங்கினேன். இதில் ஐந்து கட்டுரைகள் வெ. நீலகண்டன் எழுதியுள்ளார். சுகா, ஏக்நாத்தின் சிறுகதைகள் படிக்க நன்றாக இருந்தன. ‘மூடர்கூடம்’ படம் புதுவையில் கேபிளில் பாஸ்கரன் அறையில் பார்த்தேன். புதிய உத்தியில் அமைந்த திரைக்கதைதான் படத்தின் பெரும் பலமே. படம் ஏதோ வெளிநாட்டுப் படத்தின் காப்பி என்கிறார்கள். இன்ஸ்பிரேஷன் கூத்து ரிடர்ன்ஸா? ஆனால் படம் கூற வந்ததை தெளிவாக கூறுகிறது. மார்க்சிய பார்வை வெளிப்படுகிறது வசனங்களில். சரி, ஆனால் இயக்குநரிடம் திறமை இருக்கிறது. அடுத்த படத்தை எதிர்பார்க்க வைக்கிற படம் இது. பெரிய வரவேற்பை தமிழில் இப்படம் பெறுமா என்றால் ஐயமே. வரவேற்க வேண்டிய படம். தன்னுடைய பார்வையை படத்தில் நேர்மையாக பதியவைத்திருக்கும் பட்சத்தில். சந்திப்போம். உங்கள் அன்பரசு. 69 28.10.2013 அன்புத்தோழர் முருகுவிற்கு,   நலமறிய ஆவல். சென்னையில் வேலைவேண்டி தபால் அனுப்பும், தயாரிக்கும் நேரம் போக மீதி நேரத்தில் நூலகம் போவது, பழைய புத்தகங்களை வாங்கிப் படிப்பது என்று நேரம் கழிக்கிறேன். தி.நகரில் சேட்டன் பகத்தின் ‘டூ ஸ்டேட்ஸ்’ மற்றும் ‘த்ரீ மிஸ்டேக்ஸ் ஆப் மை லைப்’ ஆகிய இரு நூல்களை 150 ரூபாய்க்கு வாங்கினேன். ‘த்ரீ மிஸ்டேக்ஸ் ஆப் மை லைப்’ புத்தகம் கோவிந்த், ஓமி, இஷான் என்ற மூன்று இளைஞர்களின் கதை. மூன்று பேரில் கோவிந்த் என்பவன் செய்யும் மூன்று தவறுகள் அவர்களின் மூவரின் வாழ்விலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இஷான் முஸ்லீம் சிறுவனை சிறந்த கிரிக்கெட் வீரனாக்க முயலும் முயற்சிகள் பின்னாளில் கடும் சிக்கலை விதைக்கிறது. குஜராத்தில் நிகழும் கோத்ரா ரயில் எரிப்பு, இஸ்லாமியர் மீதான தாக்குதல்கள், படுகொலைகள், பூகம்பம் என நிகழும் சம்பவங்களில் இஸ்லாமியர் மீதான தாக்குதலில் ஓமி இறந்து போகிறான். கோவிந்த் டியூசன் சொல்லிக்கொடுக்க, இஷானின் வீட்டிற்குப் போக, அங்கு அவனின் தங்கை மீது காதல் வருகிறது. அது இஷான், கோவிந்த் நட்பில் விரிசலை ஏற்படுத்துகிறது. கோவிந்த் தூக்கமாத்திரைகளைத் தின்று தற்கொலைக்கு முயற்சிக்க, மருத்துவமனையில் சே.பகத்திடம் கதை கூறுவது போல நாவல் நகருகிறது. இளைஞர்களுக்கான மொழியைக் கண்டறிந்திருக்கிறார் என்பதால்தான் நம்பர் 1 எழுத்தாளராக சேட்டன் பகத் இருக்கிறார். கோவிந்த் இஷானின் தங்கை வித்யாவிடம் பேசும் உரையாடல்களெல்லாம் இளமைக் கொண்டாட்டம்தான். புரிந்துகொள்ளும்படியான ஆங்கிலத்தில் எளிதான நூல்தான் இது.   ‘சுட்டகதை’ திரைப்படத்தினை திங்கட்கிழமை வக்கிரத்தின் ஆலோசனையின் பேரில் பார்த்தோம். கோரமலையில் பழங்குடித்தலைவர் ஒருவர் இறந்து விடுகிறார். அவரைக் கொன்றது யார் என்று கண்டுபிடிப்பதுதான் கதை. இதற்கான முயற்சியில் இறங்கும் ராம்கி, அருண் பாண்டியன் ரசிகர்களான இரு போலீஸ்காரர்களின் கலாட்டாக்கள்தான் ஜாலி எபிசோட்கள். போலீஸ் சங்கிலிக்கு வலது காது கேட்காது. மற்றொருவனான ராம்கிக்கு எதையாவது திருடிவிடும் தன்னிச்சையான பழக்கம் இருக்கிறது. இவர்களது புலனாய்வு நடவடிக்கைகள்தான் கதையின் செயல்பாடுகளே. குறும்படமாக இதை எடுத்திருக்க முடியும். இரண்டுமணிநேரம். 120 ரூபாய் தெண்டம். டிக்கெட் வாங்க போகும்போது, டிக்கெட் வேகமாக தீர்ந்துகொண்டிருக்கிறது என தியேட்டரில் மேலே திரையில் எழுத்துக்கள் ஓடியது. உள்ளே போய் பார்த்தால் பதினைந்து பேர் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களில் பத்துபேர் இடைவேளையின் போது எழுந்து போய்விட்டார்கள். நாங்கள் என்னடா செய்வது என்று உட்கார்ந்திருந்தோம். வசனமா, காட்சியா என்று போராட்டத்தில் படமே முடிந்துவிட்டது. சங்கிலியாக நடித்திருக்கும் வெங்கி நன்றாக நடித்திருக்கிறார். எவ்வளவு அழகான கதையாக இது மாறியிருக்க கூடும். ‘பிங் பான்ந்தர்’ ஆங்கிலப் படத்தின் பாதிப்பு படம் முழுவதும் தெரிகிறது. மேட்லி ப்ளூஸ் குழுவின் இசைதான் படத்தின் ஒரே பலம். சந்திப்போம். உங்கள் அன்பரசு. 70 5.11.2013 பிரிய முருகுவிற்கு, நலம் வாழ வாழ்த்துகிறேன்.   ‘புதுயுகம்’ டிவி ஓரளவு தரமாகவே இருக்கிறது. அவர்களது தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் அல்லது வாங்கும் படங்களை அப்படியே பு.யுத்தில் போட்டுக்கொள்ளலாம் என்று திட்டம்போல. விளம்பரமே இல்லாமல் ‘சுட்டகதை’ படம் ஒளிபரப்பினார்கள். ‘அந்நியன்’ – ஆல்பெர் காம்யூ எழுதிய நாவலைப் படித்தேன். சமூகம் பற்றிய எந்த கவனமும் இல்லாத ஒருவனை அவன் விபத்தாக செய்யும் ஒரு தவறு, சமூகத்தின் முன் குற்றவாளியாக்கி, மரணதண்டனை வரை கூட்டிச்செல்கிறது. காட்சி ரீதியான வர்ணனைகள் வீடு, நீதிமன்றம், கடற்கரை என இடம் பற்றிய கவனத்தை ஊட்டுகிறது. இவ்வளவு சிறிய புத்தகம் நோபல் பரிசு பெற்றிருப்பது 1000 பக்கத்திலிருந்து, லட்சம் பக்கம் என அடுத்த நாவலுக்கு திட்டமிடும் எழுத்தாளர்களுக்கான செய்தியாக இருக்குமோ!. தற்போது எஸ்.வி ராமகிருஷ்ணனின் ‘வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்’ எனும் கட்டுரைத்தொகுப்பை படித்துக்கொண்டிருக்கிறேன். தாராபுரத்தை தாரை என்றே அழைக்கிறார் இவர். அன்றைய காலத்திலிருந்து இன்றைய காலம் வரை பார்க்கையில் பல சுவாரசியங்களைக் கூறினாலும், தனது சமுதாயத்தைப்பற்றி, ஜாதி பற்றிய பெருமைகளை கிடைக்கிற வாய்ப்புகளிலெல்லாம் திணிக்கிறார். தாராபுரத்திற்கு ரயில் இல்லை என்பதுதான் முதல் கட்டுரை. ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ – மிஷ்கின் இயக்கிய படம் விஜய் டிவியில் பார்த்தேன். காட்சிரீதியாக வலுவான படம்தான் இது. ஒவ்வொரு உரையாடலும் கதையின் முடிவை நோக்கி நகர்த்துகிறது. காட்சிக்கு ஈடுகொடுக்க இசை தடுமாறுவதாக உணர்கிறேன். பார்க்கும்போது நவீன நாடகம் போல் காட்சியளிப்பதற்கு காரணம் மிஷ்கினின் எங்கும் நிறைந்திருக்கும் ஆளுமைத்திறன்தான். மனித நேயத்தை வலியுறுத்துகிற படமாக இது இருப்பதால்தான் கவருகிறதோ என்னமோ. மிஷ்கினின் இன்றியமையாத கிளிஷேவான நின்ஜாக்கள் போன்ற உடையணிந்தவர்களுடன் சண்டைக்காட்சிகள் உண்டு. மிஷ்கினை ஏதாவது சொன்னால் ஆயில்யத்திற்கு கண் வேர்த்து விடுகிறது. அடுத்த வார்த்தைக்கு கேப்டனாகி சுவரைப் பார்த்து ஓடி நம்மேல் ரிவர்ஸ் ஷாட் அடிக்க கோணம் பார்க்கிறார். வெறித்தானமான ரசிகர்களப்பா. சந்திப்போம். உங்கள் அன்பரசு 71 9.11.2013 அன்புள்ள முருகு அவர்களுக்கு, வாழிய நலம்.   தமிழ் இந்து நாளிதழில் ஜெயமோகன் முக்கியமான விவாதம் ஒன்றினை தொடங்கிவைத்திருக்கிறார். தமிழ்மொழியை பேசுகிற வேகத்தில் ஆங்கில எழுத்துக்களின் வழி தட்டச்சு செய்ய முடிகிறது. தமிழுக்கு ஆங்கிலம் மூலம்தான் அந்தஸ்து கிடைத்திருக்கிறது என்று சொல்லப்போக, பலரும் இதற்காகத்தானே காத்திருந்தோம் என்று களமிறங்கி பொங்கிவிட்டார்கள். அப்படி எப்படி நீ சொல்லலாம் என்று. தொழில்நுட்பம் இன்று பலதையும் எளிமைபடுத்தியிருக்கிறது. தமிழ் தட்டச்சையும் எளிதாக கற்றுக்கொள்ள முடியும். ஒரு வாரம் எனக்கு தேவைப்பட்டது. கர்நாடகாவில் படிப்பது ஆங்கில வழி என்றாலும், தேர்வுகள் கன்னட மொழியில்தான் மாணவர்கள் எழுதிவருகிறார்கள் என திட்டம் இதழ் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. அழகி, முரசு, என்ஹெச்எம் என இணையதளங்களில் பயன்படுத்த பலப்பல மென்பொருட்கள் உள்ளன. டிடி நேஷ்னலில் அடூர் கோபால கிருஷ்ணனின் ‘நிழல்குத்து’ மற்றும் மராத்திப் படம் ஒன்று ஒளிபரப்புவதாக நேற்றிரவு 11.00 மணிக்கு கூறப்பட்ட செய்தியைப் படித்தேன். அதைப் பார்க்க முடியவில்லை என்றாலும் ‘Stanley ka Dabba’ என்ற அமோல் பாலேக்கர் இயக்கிய குழந்தை தொழிலாளர் பற்றிய படத்தினைப் பார்த்தேன். உண்மையில் இந்தி தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று இந்த படத்தினைப் பார்க்கும்போது உணர்ந்தேன். பல்வேறு மொழிகள் இருந்தாலும் அரசு மசோதாக்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில்தான் மக்கள் பார்வைக்கு வெளியிடப்படுகின்றன. இந்தி கற்க முயற்சிக்கலாம் என்று இருக்கிறேன். சந்திப்போம். உங்கள் அன்பரசு. 72 13.11.2013 அன்புள்ள தோழர் முருகுவிற்கு, வாழிய நலம்.   ‘கடற்புறத்து தேசம்’ – அனிதா தேசாய் எழுதிய குழந்தைகள் நாவலைப் படித்தேன். ஒரு இந்திய கிராமம் எவ்வாறு தன் இயற்கைச் சமநிலையை இழந்து அங்கு வாழும் மனிதர்கள் அதையொட்டி தம் வாழ்வை மாற்றிக்கொள்கிறார்கள் என்று கூறும் நாவல் இது. கிம் கி டுக்கின் ‘Samaria’ படம் பார்த்தேன். வசுமித்ரா, சாமரியா, சொனாட்டா என மூவரின் வாழ்க்கையைக் கூறும் கதையில், ஒருவருக்கு நிகழும் நிகழ்வு எப்படி தொடர்ச்சியாக மற்றவருக்கு நினைவில் இருந்து வலியைத் தருகிறது என்பதைக் கூறுகிற படம். பண்டிட் ஹரிபிரசாத் சௌராசியாவின் மெல்லிய புல்லாங்குழல் ஓசையோடு ‘கடற்புறத்துதேசம்’ நாவலைப் படித்தேன். கலை குறித்து ட்ராட்ஸ்கி மருது கூறியதுதான் நினைவுக்கு வருகிறது. ஓவியம், எழுத்துக்கள் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அவை மனதை சிறிது மேல்நோக்கி உயர்த்திக் கொள்ளத்தான். ஆனால் ஓவியமாக பார்த்து புரியவில்லை என்பவர்கள் அதனை உடையில் அச்சிட்டு தந்தால் எந்த கேள்வியும் இன்றி பெற்றுக் கொள்கிறார்கள். ஒவ்வொன்றிலும் பயனை எதிர்பார்க்கிற மனப்பான்மை அதிகரித்துவருகிறது என்று கூறியிருந்தார் நேர்காணலில். ‘புதிய புத்தகம் பேசுது’ சந்தா கட்டி மூன்று மாதங்கள் ஆனபின்பு முதல் இதழ் வந்து சேர்ந்தது. இதற்காக மூன்று ரூபாய்க்கு அஞ்சலட்டைகள் எழுத நேர்ந்தது. ஆறு ரூபாய்க்கு அலைபேசியில் பேசி, ரசீது எண் சொன்னேன். தோழர்கள் எல்லோருமே போராட்டத்திற்கு கிளம்பிவிட்டார்களோ!!!. சந்திப்போம். உங்கள் அன்பரசு. 73 21.11.2013 மதிப்பிற்குரிய தோழர் முருகுவிற்கு,   நலமா? வக்கிரத்திற்கு ஆண் குழந்தை பிறந்துவிட்டது. சொல்ல வேறொன்றுமில்லை. ‘ஷோபாவும் நானும்’ – பாலுமகேந்திரா எழுதி குமுதத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகள் வலதுசாரி எம்எல்சியாரின் உதவியினால் கிடைத்தது. ஷோபா, பாலு என இருவருக்குமான நேசம், திருமணம் குறித்து எப்படி நிகழ்ந்தது என கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறார் பாலுமகேந்திரா. ‘Invisible target’ எனும் படம் கடுமையான ரத்தம் செலவிடும் காட்சிக்கு காட்சி ரத்தம் தெறிக்கும் படம். இதில் வில்லன்தான் அடி பின்னி எடுக்கிறார் நாயகர்களை. என்னா அடி. கிளைன்ட ஈஸ்ட் வுட் நடித்துள்ளது ‘fist of gold’ என்ற படம். ஊரையே பயமுறுத்தி வைத்திருக்கும் ஒரு ரவுடிக்கூட்டத்தை நாயகன் எப்படி ரத்தம் வழிய வழிய கொன்று நம்மை மகிழ்ச்சியில் உய்விக்கிறார் என்பதே படத்தின் அரிய அரிய கதை. தமிழ் ‘இந்து’ நாளிதழ் ஓரளவு சந்தையைப் பிடித்துவிட்டார்களோ! செய்திகளைத் தாண்டி கட்டுரைக்கு நகர்ந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். நடுப்பக்க கட்டுரைகள், இலக்கியப்பகுதி நன்றாக இருக்கிறது என்று நினைக்கிறேன். வளரட்டும் நாளிதழ். எழுத்து – காட்சி – கற்பனை என்பன தலைமுறைக்கு தலைமுறை முன்னேறிக்கொண்டு வருகிறது. இதை கவனித்துப் பார்த்தால் தெரியும். சந்திப்போம். உங்கள் அன்பரசு. 74 27.12.2013 மதிப்பிற்குரிய முருகு அண்ணாவிற்கு,   நலம்தானே! படைப்பாளிகள் இன்று அச்சு ஊடகத்தைக் காட்டிலும் இணையத்தில் நிரம்பவே எழுதி வருகிறார்கள். அவர்களை நோக்கியும் நம் பார்வை விரிந்தால் ஆண்டின் சிறந்த படைப்பாளி என்பதைக் கண்டறிய உதவியாக இருக்கும். லியோ டால்ஸ்டாயின் ‘புத்துயிர்’ மாப்பசானின் ‘வாழத்தெரிந்தவன்’ என இருநூல்களை படித்தேன். முன்னது அறம், அறத்திற்கான நெருக்கடியை பல நிலைகளில் பொருத்திப் பார்த்திட முயலும் படைப்பு என்று கொள்ளலாம். காடுஷா, நிக்லியுடாவ் ஆகிய இருவரின் வாழ்வே காட்சியாக நம் கண் முன் நிற்கிறது. குற்றவாளியாக நிற்கும் காடுஷாவைக் காப்பாற்ற நிக்லியுடாவ் செய்யும் முயற்சிகள்தான் கதை. இறுதியில் நாம் உணர்வது அனுபவங்களாக வேறுவிதமாக இருக்கும். ‘வாழத்தெரிந்தவன்’ எனும் கதை இன்றைய உலகில் வாழ ஒருவன் எப்படி தன்னை தயார்செய்து கொள்கிறான் என்பதை அப்பட்டமாக கூறும் நாவல். முன்னாள் ராணுவ வீரனான ஜார்ஜஸ் தன் கவர்ச்சிகரமான தோற்றம் காரணமாக தன்னிடம் விட்டில் பூச்சிகள் போல மயங்கும் பெண்களை உறவு கொண்டுவிட்டு, அவர்களை, அவர்களின் சமூக அந்தஸ்துவைப் பயன்படுத்தி தன் வாழ்வை மேம்படுத்திக்கொள்கிறான். பல பெண்களின் மூலமே அரசியல், பொருளாதாரத்தின் உச்சாணியை எட்டிப்பிடிக்கிறான். அறம் பற்றி ஒரே ஒரு இடத்தில் கூறப்படுகிறது. இருண்மை கொண்ட மனிதனின் முகத்தை பல சூழல்களில் திரும்ப, திரும்ப பார்க்கிறோம். இதில் வருபவர்கள் ஆண்கள், பெண்கள் என அனைவருமே ஒருவரையொருவர் உறிஞ்சிக்கடித்து துப்புகிறார்கள். இந்நாவல் எழுப்பும் பல கேள்விகளை நீங்கள் படித்தால்தான் உணரமுடியும். உயிர்ப்பான இந்நாவல் திரைப்படமாக வந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம். மணிவண்ணனின் ‘அமைதிப்படை’ உள்ளதல்லவா, அத்தகைய கருவின் ஆழமான செயல்பாடுகளே படம். சந்திப்போம். உங்கள் அன்பரசு. 75 30.12.2013 மதிப்பிற்குரிய முருகு அவர்களுக்கு,   2014 ஆவது ஆண்டு தங்களுக்கு இனியதாகவும் அமைய வாழ்த்துகிறேன். புற உலகின் பொருள் சார்ந்த தேவைகளின் விளைவாக அகவுலகமும் சீர்படுத்தமுடியாத அளவு சிதைந்து போகிறது. வணிகம், பொருளாதாரம் உறவுகளுக்குள்ளும் நுழைந்து எந்த உறவு அதிக பயனுள்ளது என அகழ்ந்து பார்க்கத் தூண்டுகிறது. தொடர்ந்து ஒன்றாக இருக்கும் ஸ்தூல உடல்களின் மனமோ, ஒருவரிடமிருந்து கணக்கிட முடியாத அளவு தள்ளியே நிற்கிறது. அ.முத்துலிங்கம் தொகுத்துள்ள ‘கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டுள்ளது’ நூலில் மனம் கவர்ந்த படைப்புகளைப் பற்றி எழுத்தாளர்கள் பேசுகிறார்கள். இந்திரா பார்த்தசாரதி பரிந்துரைத்த ‘Double’ – Jose saragamo, சுகுமாரனின் பரிந்துரையான ‘Badin Summer’ முத்துலிங்கத்தின் பரிந்துரையான ‘TeacherMan’ – Frank Mccourt என இவற்றைப் படிக்கக் கூடிய புத்தகங்களாக கருதுகிறேன். ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ தொடர்ந்து சரிந்துவரும் மதிப்பீடுகள், நம்பிக்கைகள், எண்ணங்கள் ஆகியவற்றின் தளையவிழ்ப்பை கோடு காட்டி விட்டு செல்கிறது. வடக்கு வீட்டு அகமதுக்கண்ணு பல்வேறு அநியாய செயல்பாடுகளால் சொத்து சேர்த்தவர். மஹ்மூது எனும் சுறாப்பீலி விற்பவனால் அவரது ஆணவம் இடிந்துபோகிறது. தொடர்ந்து ஊரில் ஆங்கிலப்பள்ளி வருகை, மகளின் திருமணத்தோல்வி என அகமதுவின் அதிகாரம் தளர்ந்துபோகிறது. அவர்மீது பரிதாபம் தோன்றுகிற சமயம் ஆசிரியர் திடீரென ஒரு பத்தியைச் சேர்க்கிறார். அகமதிற்கு நடந்தது சரி என வாசகன் நம்பவைப்பதற்கான முயற்சி . ஆனால் அது உறுத்தலாகவே கடைசிவரை இருந்தது. புதிய மாற்றங்களை அவ்வூர் மக்கள் ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள். அகமது மனம் பிறழ்ந்துபோக, மகள் தற்கொலை செய்வதோடு கதை நிறைவடைகிறது என்றாலும் இன்னும் நிறைவடையவில்லை என்றே படுகிறது. இஸ்லாமிய வாழ்வை இயல்பாக சித்தரிக்கும் நாவல் இது. சந்திப்போம். உங்கள் அன்பரசு. 1 Free Tamil Ebooks – எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1.ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2.தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3.சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. 2 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை வெளியிடலாமே   உங்கள் படைப்புகளை மின்னூலாக வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !