[] 1. Cover 2. Table of contents காரிருளில் ஒரு மின்னல் காரிருளில் ஒரு மின்னல்   கல்கி     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/kaariruril_oru_minnal மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com மெய்ப்புப் பார்ப்பு : விக்கிமூல பங்களிப்பார்கள் அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Proof Reader : Wikisource Constributors Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc 1. “தப்பிலி கப்” கிண்டி குதிரைப் பந்தய மைதானத்திற்குள் நீங்கள் எப்போதாவது பிரவேசித்ததுண்டா? இல்லையென்றால் அதற்காக வருத்தப்பட வேண்டாம். ஏனென்றால், அந்தப் பூலோக சொர்க்கத்துக்குள் நானும் நுழைந்தது கிடையாது. இந்தக் கதையைப் பொறுத்த வரையில் அந்த மைதானத்திற்குள் நீங்கள் பிரவேசித்திருக்க வேண்டுமென்னும் அவசியமும் இல்லை. ஆனால் குதிரைப் பந்தயம் நடக்கும் சனி அல்லது புதன் கிழமைகளில் நீங்கள் கிண்டி ஸ்டேஷன் வழியாக மாலை நேரத்தில் ரெயில் பிரயாணம் செய்ய நேர்ந்தால் சிறிது தலையை நீட்டி வெளியில் பார்க்குமாறு சொல்வேன். அதனால் நீங்கள் அடையும் பலன் என்னவென்றால், சென்னை நகரில் சுமாராக எத்தனை மோட்டார் வண்டிகள் இருக்கின்றனவென்று ஒருவாறு தெரிந்து கொள்ளலாம். புள்ளி விவரங்களில் நீங்கள் பற்று உடையவர்களாயின் பின்வரும் கணக்குகள் போட்டு அறியலாம். 1. சென்னையில் உள்ள மோட்டார் வண்டிகள் எவ்வளவு? 2. சராசரி ஒவ்வொன்றின் விலைகள் என்ன இருக்கும்? 3. மொத்தம் விலை என்ன? 4. ஒவ்வொன்றிற்கும் சராசரி பெட்ரோல் செலவு எவ்வளவு இருக்கும்? 5. மொத்தப் பெட்ரோல் செலவு என்ன? 6. கெட்டுப் போகும் கருவிகளைப் புதுப்பிக்கும் செலவு என்ன? 7. கிராமாந்தரங்களின் ஏழைக் குடியானவர்களிடமிருந்து நகர வாசிகள் பெறும் பணத்தில் மோட்டார் மூலமாக மட்டும் எவ்வளவு ரூபாய் வருஷந்தோறும் அயல்நாட்டுக்கு அனுப்புகிறார்கள்? அல்லது நீங்கள் சமூக நிலைமையைப் பற்றிய ஆராய்ச்சியில் சிரத்தை உடையவர்களானால் அங்கு நிற்கும் மோட்டார் வண்டிகளின் இலக்கங்களையெல்லாம் குறித்துக் கொண்டு பின்வரும் விவரங்களை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கலாம்; கிண்டி குதிரைப் பந்தயத்திற்குப் போகும் சென்னைப் பெரிய மனிதர்களில், 1. சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் எத்தனை பேர்? (2) அட்வொகேட்டுகள் எத்தனை பேர்? (3) நியாயாதிபதிகள் எவ்வளவு பேர்? (4) பத்திராதிபதிகள் எத்தனை பேர்? (5) சட்டசபை அங்கத்தினர்கள் எவ்வளவு பேர்? (6) பாங்கி முதலாளிகள் எத்தனை பேர்? (7) வியாபாரிகள் எத்தனை பேர்? (8) கலாசாலை ஆசிரியர்கள் எவ்வளவு பேர்? பந்தயம் முடிந்து ஜனங்கள் மைதானத்திலிருந்து வெளியே வரும்பொழுது சற்றே கவனித்துப் பார்த்தீர்களானால், நீங்கள் சிறிதும் எதிர்பாராத மனிதர்கள் பலர் அங்கிருந்து வெளிப்புறப்படுவதைக் காண்பீர்கள். மூன்றாம் வகுப்பில் உங்களுக்குப் பாடஞ்சொல்லிக் கொடுத்த உபாத்தியாயர், உங்கள் தகப்பனாரின் சிரார்த்தத்தில் நிமந்திரணத்துக்கு வந்த சாஸ்திரிகள், அன்றைய தினம் சாயங்காலம், திருவொற்றியூரில் தேர் பார்க்கப் போவதாக விடுமுறை பெற்றுச் சென்ற உங்கள் வீடு கூட்டும் வேலைக்காரி முதலியோரைப் பார்த்துத் திடுக்கிடுகிறீர்கள். உங்கள் விஷயம் எப்படி ஆனாலும் சரி, டி.கே. ராஜகோபாலன் இப்பொழுது மேற்படி மைதானத்துக்குக் குள்ளிருந்து வெளிவருவதை அவனுடைய தாயார் பார்த்தாளாயின் மூர்ச்சை போட்டு விழுந்து விடுவாளென்பதில் சந்தேகமில்லை. ராஜகோபாலன் திருவல்லிக்கேணியில் வசிப்பவன். அவனுக்குத் தபாலாபீஸில் ரூபாய் நாற்பது சம்பளம். தாயாரைத் தவிர மனைவியும் தங்கையும் வீட்டிலிருந்தார்கள். ஜீவனத்துக்கு நாற்பது ரூபாய் போதவில்லை. ஆதலால் அவன் ‘நாவல்’ எழுதிப் புத்தகப் பிரசுரக் கம்பெனிகளுக்குக் கொடுத்துக் கொஞ்சம் பணம் சம்பாதித்து வந்தான். அன்று இருபதாம் தேதி. சம்பளம் வர இன்னும் பத்து நாளாகும். மறு நாள் சமையல் பண்ணுவதற்கு வீட்டில் அரிசி, சாமான் ஒன்றும் இல்லையென்று அவன் தாயார் சொன்னாள். இரண்டு மாத வாடகை பாக்கி என்று வீட்டுக்காரன் பிடுங்கி எடுத்தான். "அம்மா! போன மாதம் எழுதிக் கொடுத்த நாவலுக்காக மூர் மார்க்கெட் கோவிந்தசாமி நாயுடு இன்று முப்பது ரூபாய் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதை வாங்கிக்கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு அன்று காலை பத்து மணிக்கு ராஜகோபாலன் வீட்டை விட்டுக் கிளம்பினான். அவன் இப்பொழுது குதிரைப் பந்தய மைதானத்திலிருந்து வெளிவருவதென்றால்? அதிலும், அவனுடைய தோற்றமோ மகாகோரமாக இருந்தது. முகத்திலே பிரேதக் களை; மேலெல்லாம் ஒரே புழுதியும் வியர்வையும். காலையில் அழகாக வகிடு பிளந்து படிய வாரிவிட்டிருந்த தலைமயிர் இப்பொழுது செங்குத்தாக நின்றுகொண்டிருந்தது. அந்தத் தலைமயிர் காற்றினால் கலைக்கப்பட்டிருந்தது. அந்தத் தலைமயிர் காற்றினால் கலைக்கப்பட்டதோடல்லாமல் அவனுடைய கைகளினாலும் வெகு வேதனையை, அடைந்திருக்க வேண்டுமென்று தோன்றியது. அவனுடைய இந்தக் கோர ஸ்வரூபத்தைப் பார்க்க நமக்கே சகிக்கவில்லையென்றால், அவனுடைய தாயாராவது மனைவியாவது பார்க்கும் பட்சத்தில் மூர்ச்சை அடைந்து விடுவார்களென்று கூறுவது மிகையாகுமா? ராஜகோபாலன் வெளியே வந்ததும் அங்கே வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக நின்றுகொண்டிருந்த பஸ்களை ஒரு முறை ஊடுருவிப் பார்த்தான். பின்னர் அவ்வரிசையின் முதலில் ஜனங்கள் ஏறிக் கொண்டிருந்த பஸ்ஸை நோக்கி அதிவேகமாக விரைந்து சென்றான். அந்த பஸ்ஸுக்கு ஒருவர் தான் பாக்கியிருந்தது. “ஏறுங்கோ, சார் ஸ்டார்ட்!” என்றான் கண்டக்டர். ஆனால் ராஜகோபலன் ஏறவில்லை. வண்டியின் முன் பக்கத்தில் இரண்டு தடித்த மார்வாரி சேட்டுகளுக்கு மத்தியில் உட்கார்ந்து திணறிக் கொண்டிருந்த ஒருவனைப் பார்த்து, “அடே சீனு ஒரு சமாசாரம் இறங்கு கீழே!” என்றான். நல்ல வேலை என்று எண்ணிக் கொண்டு கீழிறங்கினான் சீனு. “என்ன சமாசாரம்?” என்றான். “ஒன்றுமில்லை….” “ஒன்றுமில்லையா? பின் எதற்காக என்னை இறக்கினாய்?” “அடே அப்பா! கோபித்துக் கொள்ளாதே! இங்கே வா சொல்கிறேன்” என்று ராஜு சீனுவைச் சிறிது ஒதுக்குப் புறமாய் அழைத்துக் கொண்டு போய், “சட்டைப் பையைப் பார். எவ்வளவு சில்லறை இருக்கிறது?” என்று கேட்டான். சீனு எண்ணிப் பார்த்தான். ஐந்தரை அணா இருந்தது. “நல்ல வேளை! நீ வந்து இருக்கிறாய். இல்லாவிட்டால் அவமானம்” என்றான். பஸ்ஸுக்கு எட்டணா கூலி. “இரண்டு பேருக்கும் ரெயிலுக்காவது இருக்கிறதே” என்றான் ராஜகோபாலன். இருவரும் கை கோர்த்துக் கொண்டு போய் டிக்கெட் வாங்கி ரெயில் ஏறினார்கள். ரெயில் நகர ஆரம்பித்தது. சீனுவின் எதிரில் துக்கமாய் ஒருவர் உட்கார்ந்திருந்தார். மனைவி அல்லது குழந்தை செத்துப் போனால் கூட அவ்வளவு துக்கப்படுவார்களா என்பது சந்தேகம். ரெயில் ஓடத் தொடங்கியதும் அவர் அருகிலிருந்த முதலியார் பக்கம் திரும்பினார். “நாலு நாளாய்ப் ‘பவானி பிரஸாத்’ தான் ஜயிக்க்கப் போகிறது என்று ஊரெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேன். கடைசியில் உன் பேச்சைக் கேட்டுக் குட்டிச்சுவராய்ப் போனேன். என் புத்தியைச் செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டும்” என்று வெறுப்புடன் கூறினார். இப்படிச் சொல்லிக் கொண்டே அவர் தமது காலிலிருந்த செருப்பைக் கழற்றினார். பக்கத்திலிருந்தவர்கள் அவர் எங்கே புத்தியைச் செருப்பால் அடித்துக் கொள்ளப் போகிறாரோ என்று பயந்து விட்டனர். அப்படி ஒன்றும் அவர் செய்யவில்லை. பகலெல்லாம் நின்று கால் வலித்தது போலும்! காலைத் தூக்கிச் சப்பணங் கூட்டி உட்கார்ந்தார். “எவனாவது கண் தெரிந்து ’டாபா’மேல் பணங் கட்டுவானா?” என்றார் ஒருவர். “அந்த ரேஸில் அது தான் கெலிக்கப் போகிறது என்று ஸ்பெஷல் தந்தி போச்சே!” என்றார் முதலியார். “உன் தந்தியைக் கொண்டு உடைப்பில் போடு. குதிரையா அது? கழுதை! கடைசியில் அல்லவா வந்தது!” என்றார் நாயுடு. “ஆமாம் ஐயா, எல்லாவற்றிற்கும் கடைசியாக அது எப்படித்தான் வந்ததோ தெரியாது. எனக்கு வந்த கோபத்தில் அதன் மேல் கல்லை விட்டு எறிந்தேன்” என்றார் ஒரு சாயபு. “தந்திப்படி குதிரை வந்தால் அப்பொழுது மட்டும் என்ன செய்வாய்?” என்றார் முதலியார். “ஆமாம்! உன் குதிரைத்தான் வந்ததே, தெரியாதா, வாலை உயரக் கிளப்பிக்கொண்டு!” என்று சொல்லி நாயுடு கையைத் தூக்கினார். குதிரை வாலை அப்படித் தூக்கிக் கொண்டு போனதென்று காண்பிப்பதாக அவர் எண்ணம். “யாராவது தந்தியைப் பார்த்து நூற்றுக் கணக்காக பணத்தைத் தொலைப்பார்களா? கொஞ்சமாவது குதிரைகள் விஷயம் தெரியாமல் பணத்தைக் கட்டலாமா?” என்று இடம் இல்லாமல் ரெயில் கம்பியைப் பிடித்து நின்று கொண்டிருந்த ஓர் ஐயங்கார் குறுக்கிட்டார். “ஒரு குதிரை எவ்வளவு தூரம் ஓடும்? அதன் வேகம் என்ன? அதற்கு வெயிட் எவ்வளவு? அதன் மேல் எந்த ஜாக்கி ஏறுகிறான்?” என்று இந்த விஷயமெல்லாம் கவனிக்காமல் பணம் கட்டவே கூடாது என்று சொல்லிக் கொண்டே ஐயங்கார், நாயுடுவுக்கும் முதலியாருக்கும் இடையே உட்காரப் போனார். நாயுடு இடம் விட்டார். “ஆமாம், நீர் தான் கணக்குப் போட்டுப் பணம் கட்டுகிறீரே? இது வரையில் எத்தனை மாடி வீடு கட்டியிருக்கிறீர்? போன வாரம் ‘சிவாஜி வரவே வராது, அன்வர் பாஷாதான் கெலிக்கப் போகிறது’ என்று சொன்னீரே! அந்தப் பாஷா எல்லாக் குதிரையையும், துரத்தியடித்துக் கொண்டு வந்தது ஞாபகமில்லையாக்கும்!” “விஷயம் தெரியாமல் பேசாதேயும். அது மட்டும் சரியாக ஓடினால் அதை அடிக்கிற குதிரை ஏது? அன்றைக்கு ஒரே ‘பேவரிட்’ (Favourite) ஆகப் போய் விட்டது. ஜாக்கி ‘புல்’ பண்ணி விட்டான். அதற்கு யார் மேல் முட்டிக் கொள்கிறது?” “குதிரை தின்னுகிறதற்குப் ‘புல்’ பண்ணினானாக்கும்! ‘போமையா போம்’ சமயத்திற்குத் தகுந்தாற்போல் பேசுகிறீரே!” என்று முதலியார் பரிகசித்தார். “ஒரு சமயம் இப்படி ஒரு சமயம் அப்படித்தான் இருக்கும். கணக்குப் பார்க்க வேண்டியதுதான். குதிரை ‘ட்ரையா’ ‘ட்ரை’ இல்லையா என்றும் பார்க்க வேண்டியதுதான்” என்று அதுவரையில் மௌனமாய் உட்கார்ந்திருந்த ஓர் ஐயர் சொன்னார். இவர்கள் பேசுவதைக் காதில் வாங்காதது போல் உட்கார்ந்திருந்த ஒரு கிழவர், “பாருங்கள், நானும் இருபது வருஷமாய் ரேசுக்குப் போய் வருகிறேன். நான் பணங்கட்டியதைப் போல் ஒருவரும் கட்டியிருக்க மாட்டார்கள். இழவை விட்டுத் தொலைக்கலாமென்றாலோ முடியவில்லை. லாபம் வருகிறதோ இல்லையோ நம் பணம் போகிறது நிச்சயம். நூற்றுக்கு எட்டு வீதம் கிளப்புக்காரன் எடுத்துக் கொண்டு விடுகிறான். போதாததற்கு உள்ளே வர டிக்கெட், ரெயில் செலவு, கவலை, கால விரயம் எல்லாம்” என்று பிரசங்கம் செய்யத் தொடங்கினார். ராஜகோபாலனுக்குப் பக்கத்தில் பெரிய மனிதர் போன்றிருந்த ஒருவர் உட்கார்ந்திருந்தார். “இவர்கள் என்னமோ சொல்லுகிறார்கள்? குதிரைப் பந்தயம் என்றால், நாலாயிரம், ஐயாயிரம் ஒரு வரவு செலவாகவே எண்ணக்கூடாது. அதை ஒரு ஸ்போர்ட்ஸாகத்தான் வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்று போனால் இன்னொன்றில் வைத்துத் தாக்க வேண்டும். ஒரு குதிரையில் ஆயிரம் கட்டிப் போனால் இன்னொன்றில் இரண்டாயிரம் கட்டுகிறது. அதுவும் போனால் நாலாயிரம் கட்டுகிறது. குதிரை வராமலா போய்விடும்? அப்படி இருபதாயிரம் முப்பதாயிரம் கட்டுவதற்குக்கூடப் பயப்படக் கூடாது” என்றார் அவர். இந்தச் சமயத்தில் இரண்டு மூன்று பேர், “அடடா! எக்மோர் ஸ்டேஷன் தாண்டிவிட்டதே” என்று தவித்தனர். அவர்கள் எழும்பூரில் இறங்க வேண்டியது. பேச்சு மும்முரத்தில் மறந்து போனார்கள். நாசமாய்ப் போகிற ‘எலெக்ட்ரிக்’ வண்டிகள் ஒரு நிமிஷத்திற்கு மேல் நிற்பதில்லை. ராஜுவும் சீனுவும் ஒரு மூலையில் பேசாமல் உட்கார்ந்திருந்தார்கள். வாய் திறக்கக்கூட இல்லை; மற்றவர்களுக்கெல்லாம், “ஏதோ அடுத்த சனிக்கிழமை அதிர்ஷ்டம் திரும்பாதா? பார்க்கலாம்” என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இவர்களுக்கோ எல்லா நம்பிக்கையும் போய்விட்டது. மற்றொரு பக்கத்தில் பட்டுச் சட்டையும் தங்கச் சங்கிலியும் வைர மோதிரமும் அணிந்து உட்கார்ந்திருந்த ஒருவர், தம் அருகிலிருந்த சிநேகிதருக்கு ராஜுவைச் சுட்டிக் காட்டினார். “அதோ அந்த இரண்டு ஆசாமிகளையும் பார்த்தீர்களா, சார்? முகத்திலே ஈயாடவில்லை, பாருங்கள். இந்த மாதிரி ஆட்கள் தான் தூக்குப் போட்டுக் கொண்டும், விஷத்தைத் தின்றும் சாவது! இவர்கள் எல்லாம் ஏன் ஸார் வருகிறார்கள்?” என்றார். “ஆமாம்; ஒன்று நம்மைப் போல் நூறு, ஆயிரம் லட்சியமில்லாமலாவது இருக்கவேண்டும்; அல்லது சரியாய்க் கணக்குப் பார்த்து நிதானமாய் ஆடவேண்டும். இரண்டுங் கெட்டான் பேர்வழிகள் எல்லாம் வரக் கூடாது” என்றார் அவர் நண்பர். வண்டி பார்க் ஸ்டேஷனில் வந்து நின்றது. “என்னுடைய அறைக்கு வருகிறாயா?” என்று சீனு கேட்டான். “ஆமாம் வருகிறேன். இன்றிரவு அம்மாவின் முகத்தில் விழிக்க என்னால் முடியாது” என்றான் ராஜு. இருவரும் இறங்கிச் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்த சீனுவின் அறைக்குச் சென்றார்கள். நெருப்புப் பெட்டியைத் தேடி எடுத்து விளக்கேற்றி வைத்துவிட்டு, “உன்னை ஏன் கூப்பிட்டேன் தெரியுமா?” என்று சீனு கேட்டான். “ஏன்?” “இன்றிரவு நான் தனியாயிருந்தால் ஏதாவது விபத்து நேருவது நிச்சயம். தூக்குப் போட்டுக் கொள்வேன்.” “நீ கூடவா அப்படி? அவ்வளவு நஷ்டம் ஆகி விட்டதா?” “உனக்கு ஞாபகமிருக்குமே? பாகவதர் பாய்ஸ் கம்பெனியிலிருந்து நான் சண்டை போட்டுக் கொண்டு விலகிய போது என்னிடம் 20,000 ரூபாய் பணம் இருந்தது. எல்லாம் போய்விட்டது. நாளைக்குக் காப்பி சாப்பிடப் பணம் கிடையாது.” “உனக்கென்ன அப்பா! என்ன போனால் தான் என்ன? பெண்டாட்டி பிள்ளையா, தாய் தகப்பனாரா, ஒருவரும் இல்லை. உன் ஒருவனுக்கு எப்படியும் சம்பாதித்துக் கொள்வாய். நீ கொடுத்து வைத்தவன்.” “ரொம்பக் கொடுத்த வைத்தவன் நான். இருக்கட்டும், உன் சங்கதி என்ன? தாயார் முகத்தில் விழிக்க முடியாதென்று சொன்னாயே; ஏன்?” “ஆமாம், வீட்டு வாடகை இரண்டுமாதம் பாக்கி. நாளைக்கு அரிசி இல்லை. 250 ரூபாய் கடன் இருக்கிறது; கடன்காரன் ‘பிராது செய்வேன்’ என்கிறான்.” “ஊரிலே நிலம் இருந்ததே?” “அதெல்லாம் முன்னமே கடன்காரன் கொண்டு போய்விட்டான்.” “அடப்பாவி! அப்படியானால் என்ன செய்யப் போகிறாய்?” “பெண்டாட்டி கழுத்தில் சங்கிலிதான் பாக்கியிருக்கிறது. அதைக்கேட்டு வாங்குவதைவிட நாக்கை பிடுங்கிக் கொண்டு சாகலாம் என்று தோன்றுகிறது.” இப்படிச் சொல்லும்பொழுது ராஜுவின் கண்களில் நீர் ததும்பிற்று. சற்று நேரம் விம்மி விம்மி அழுதான். சீனு அவனைத் தன் தோளில் சார்த்திக் கொண்டு சமாதானப்படுத்தினான். இருவரும் பால்ய நண்பர்கள். சீனு சட்டென்று எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்தான். ராஜுவின் தோளைப் பிடித்து ஒரு குலுக்குக் குலுக்கினான். “இதோ பார், ராஜு ஒரு யுக்தி! முதல் தரமான யோசனை. நிமிர்ந்து உட்கார்ந்து கேள்” என்றான். “இனிமேல் என்ன யோசனை செய்து என்ன காரியம் நடக்கப் போகிறது?” என்றான் ராஜு. “சீச்சீ! இவ்வளவுதானா? எழுந்திரு, சொல்லுகிறேன். எவனொருவன் தனக்கு வரும் விபத்துக்களையும் லாபகரம் ஆக்கிக் கொள்கிறானோ அவனல்லவா மனிதன்?” “சரி; சரி! உன்னுடைய நாடகப் பேச்சில் ஆரம்பித்து விட்டாயாக்கும். என்ன தான் அந்த அற்புத யோசனை? சொல்” என்று கேட்டுக் கொண்டே ராஜு எழுந்து உட்கார்ந்தான். “இதோ பார்! நீயோ ஆசிரியன். நான் பெயர் பெற்ற நடிகன். நாம் இருவரும் சேர்ந்து வெற்றி பெறாவிட்டால் அப்புறம் என்ன இருக்கிறது? இத்தனை நாளும் நீ சிரமப்பட்டு நாவல் எழுதிப் பிறரிடம் கொடுத்துப் பாரத்துக்கு (16 பக்கத்திற்கு) 4 ரூபாயும், 5 ரூபாயும் பெற்று வந்திருக்கிறாய்; போதும் இந்தத் தொழில். இப்பொழுது ஒரு நாடகம் எழுது. குதிரைப் பந்தயத்தைப்பற்றி எழுது. உன்னுடைய அநுபவத்தையே முக்கிய சம்பவமாய்க் கொண்டு கொஞ்சம் காது மூக்கு வைத்து எழுதினால் போதும். நான் ‘ஸ்திரீ பார்ட்’ போட்டுக் கொள்கிறேன். நாடக உலகத்தை நான் விட்டு மூன்று வருஷந்தான் ஆயிற்று. இப்போதும் என் பெயரைக் கேட்டே நாடகத்துக்கு வரக்கூடியவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். நீ கதாநாயகனாக நடிக்கலாம். அதற்கு உன்னைத் தயார் செய்து விடுகிறேன். உனக்குச் சொந்த அநுபவம் இருக்கிறபடியால் உன் அளவு சோகரசத்துடன் யாரும் நடிக்க முடியாது. பாக்கி எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ நாடகம் மட்டும் எழுது” என்றான். “யோசனை நன்றாய்த்தான் இருக்கிறது. ஆனால் நாடகம் நடத்துவது அவ்வளவு சுலபமா? முதலில் தயார் செய்வதற்கெல்லாம் பணம் வேண்டாமா?” “உனக்கேன் இந்தக் கவலை? எனக்கு வந்த மெடல்களை மட்டும் இன்னும் பத்திரமாய் வைத்திருக்கிறேன். அவைகளை விற்றாவது நான் வேண்டிய ஏற்பாடுகள் செய்கிறேன். அதிகம் வேண்டாம்; அடுத்தடுத்து மூன்றே நாடகம் போடுவோம். அதற்குமேல் போட்டால் புளித்துப் போய்விடும். நாடகத்துக்கு ரூ.1000 வீதம் குறைந்தது ரூ.3000 மீதமாகும். தலைக்குப் பாதியாக எடுத்துக் கொள்வோம்.” “எனக்கு இன்னொன்று கூடத் தோன்றுகிறது. புத்தகத்தையும் முதலியேயே அச்சுப் போட்டுவிட்டால், நாடகக் கொட்டகையிலேயே விற்கலாம். மூன்று நாளுக்குள் முதல் பதிப்பு விற்றுவிடும், அதில் குறைந்தது 500 ரூபாயாவது வரும்” என்றான் ராஜு. “அதற்கென்ன! அப்படியே செய்யலாம். புத்தக லாபம் எனக்கு வேண்டாம். நீயே எடுத்துக்கொள். அதற்குப் பிறகு மற்ற நாடகக் கம்பெனியாரும் அந்த நாடகத்தை நடந்த அநுமதி கேட்பார்கள். அவர்களிடம் நாடகத்துக்கு 50 ரூபாய்க்குக் குறையாமல் வாங்கலாம்.” “சரி, சீனு! இது மட்டும் நிறைவேறினால் நான் பிழைப்பேன்; என் குடும்பத்தையே காப்பாற்றியவனாவாய். இன்றிரவே நாடகம் எழுதி ஆரம்பிக்கிறேன். காப்பி சாப்பிட்டுவிட்டு வருவோம், வா.” எனவே, இரவு ஒன்பது மணிக்கு இருவரும் போய்க் காப்பி சாப்பிட்டுவிட்டு வந்தார்கள். ராஜு காகிதமும் பேனாவும் எடுத்துக் கொண்டு எழுதத் தொடங்கினான். “நாடகத்துக்கு என்ன பெயர் கொடுக்கிறாய்?” “தப்பிலி கப்” “பேஷ்! நல்ல பெயர். சத்தியமே ஜயம். எழுது” என்றான் சீனு. உலகத்து மக்களை இட்டார் என்றும், இடாதார் என்றும் பிரித்து, “சாதியிரண்டொழிய வேறில்லை” என்றாள் ஔவை. அந்தக் கிழவிக்குப் பின்னால் இன்னும் அநேகர் ஜனங்களை இரு பிரிவாக்க முயன்றிருக்கின்றனர். வெள்ளைக்காரர் - கறுப்பு மனிதர், முதலாளிகள் - தொழிலாளிகள், கடன் கொடுப்பவர் - கடன் வாங்குபவர், பிராமணர் - பிராமணரல்லாதார் என்ற பிரிவுகளைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறோம். ஆனால் சென்னை நகர மாந்தரைப் பொறுத்த வரையில் இந்தப் பிரிவுகளையெல்லாம் விட, “குதிரைப் பந்தயத்திற்குப் போகிறவர் - போகாதவர்” என்ற பிரிவினை அதிகப் பொருத்தமாயிருக்கும். சீனு இந்த நிலைமையை அறிந்தவன். ஜனங்களின் மனோபாவத்தை அவன் நன்கு கண்டிருந்தான். ஆதலின், அவனுடைய யுக்தி ஆச்சரியகரமான பலனை அளித்தது. ராயல் தியேட்டரில் “தப்பிலி கப்” நாடகம் போடப்பட்ட அன்று அந்தப் பெரிய கொட்டகை முழுவதும் ஏறக்குறைய நிறைந்திருந்தது. குதிரைப் பந்தயத்துக்குப் போவோர் இயல்பாக அந்த நாடகத்தின் பெயரினாலேயே கவரப்பட்டு வந்து சேர்ந்தனர். குதிரைப் பந்தயத்திற்குப் போகாதவர்களோ தங்கள் தங்களுக்கு வேண்டியவர்கள் குதிரைப் பந்தயத்திற்குப் போய்க் கெட்டுப் போவதைத் தடுப்பதற்கு இந்த நாடகம் பயன் படலாமென்ற நம்பிக்கையுடன் வந்து சேர்ந்தார்கள். ஆகவே, கொட்டகை நிரம்பிற்று. நாடகத்தின் கதை என்னமோ சாமானியமானது தான். கதாநாயகன் சென்னையில் ஓர் அட்வொகேட். தொழில் ஆரம்பித்து இரண்டு வருஷந்தான் ஆயிற்று. “பிராக்டிஸ்” அதிகமில்லை. அவனுடைய மாமனார் (கதாநாயகியின் தந்தை) ஓர் எம்.எல்.சி. பெரிய இடங்களுக்கு அதிகம் வேண்டியவர். ஜில்லா முன்சீப் வேலைக்குக் கூடிய சீக்கிரம் ஏற்பாடு செய்வதாகச் சொல்லியிருந்தார். முதல் காட்சியில் கதாநாயகி “இந்த வருஷம் கோடைக்கு ஊட்டிக்குப் போகலாமா?” என்று கேட்கிறாள். தன் அருமை மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல், பாங்கிக் கணக்கில் மூன்று கலமும் பூஜ்யமாயிருப்பதை எண்ணிக் கதாநாயகன் கலங்குகிறான். ஆயினும், அதை அவளிடம் சொல்லாமல் ஊட்டிக்குப் போகாததற்கு வேறு ஏதோ பொய்க் காரணம் கற்பித்துக் கூறுகிறான். இவ்வாறு நாடகமானது ஆரம்பத்திலேயே தொடங்கி ஜனங்களின் உள்ளத்தைக் கவர்ந்து விடுகிறது. ஊட்டிக்குப் போகவேண்டும் என்னும் தன் மனைவியின் விருப்பத்தை எப்படி நிறைவேற்றுவது என்று கதாநாயகன் அல்லும் பகலும் அதே கவலையாக இருக்கையில், அவனுடைய நண்பன் ஒருவன் குதிரைப் பந்தயத்தைப் பற்றி அவனுக்குச் சொல்கிறான். அதில் பத்தாயிரம், லட்சம் என்று பணம் சம்பாதித்தவர்களைப் பற்றி அவன் எடுத்துச் சொல்லச் சொல்ல, கதாநாயகனுக்குப் பந்தயப் பைத்தியம் பலமாகப் பிடித்து விடுகிறது. அது முதல் அவன் குதிரைப் பந்தயத்திற்குப் போக ஆரம்பிக்கிறான். ஆனால் மனைவியிடம் இதை மறைத்து விடுகிறான். திடீரென்று ஒரு நாள் “நாளை நாம் ஊட்டிக்குப் போகிறோம்” என்று சொல்லித் திடுக்கிடச் செய்ய வேண்டும் என்று மனோ ராஜ்யம் செய்கிறான். மேலும் மேலும் நஷ்டமாகி வருகிறது. அவ்வளவுக்குப் பந்தயத்தில் மோகமும் வளர்ந்து விடுகிறது. கடன் வாங்குகிறான். இவ்விடத்தில் மார்வாரி வட்டிக் கடையின் காட்சி நடத்தப்படுகிறது. ஏழைக் கூலிப் பெண்கள் செம்பு முதலிய பாத்திரங்களை அடகு வைத்துவிட்டுக் கால் ரூபாய் கடன் வாங்கி அடுத்த அரை வாரத்தில் அரை ரூபாய் கொடுத்துப் பாத்திரத்தை மீட்டுக் கொண்டு போனார்கள். இவ்விதமாகவே வியாபாரிகள், சொற்பச் சம்பளக் குமாஸ்தாக்கள், பெண்களைப் பெற்ற தகப்பன்மார், தாசி வீடு செல்லும் மைனர்கள் முதலியோர் வந்து கடன் வாங்கும் காட்சி ஹாஸ்யரசத்துடன் நடத்திக் காட்டப் பெற்றது. சபையோர் சிரித்து வயிறு புண்ணாகப் பெற்றனர். மார்வாடிக் கடையில் நம் கதாநாயகனும் கடன் வாங்குகிறான். ஒரு நாள் குதிரைப் பந்தய மைதானத்தில் கதாநாயகனுக்கு அவனுடைய சிநேகிதன் ஒரு தாசியை அறிமுகம் செய்து வைக்கிறான். பிறகு ஒரு தினம் அவளுடைய வீட்டுக்குப் போகலாம் என்று சிநேகிதன் அழைக்கிறான். கதாநாயகனுக்குச் சிறிதும், இஷ்டமில்லை. ஆனால் பத்மாபாய்க்கு ஜாக்கிகள், ட்ரெயினர்கள் அநேகம் பேரைத் தெரியும் என்றும், அவள் “டிப்ஸ்” கொடுத்தால் தவறுவது கிடையாதென்றும் சிநேகிதன் சொன்னபோது, கதாநாயகன் வேண்டா வெறுப்பாய் அவள் வீட்டுக்குச் செல்கிறான். இதுவும் ஒரு ஹாஸ்யக் காட்சி. தாசி விட்டுக்குப் புதிதாக வருவோரைப் பற்றியும், அவர்கள் அங்கே என்ன பேசுவது என்று தெரியாமல் விழிப்பதைப் பற்றியும், அவர்களைத் தாசிகள் ஏமாற்றிப் பணம் பறிப்பதைப் பற்றியும் மிக்க ஹாஸ்ய ரசத்துடன் நடித்துக் காண்பித்தார்கள். ஆனால் அடுத்தாற்போல், கதாநாயகன் பச்சாதாபப் படும் காட்சியானது சிரிப்பை எல்லாம் மறக்கும்படி செய்து விட்டது. குதிரைப் பந்தயத்துக்குப் போவதைத் தன் அருமை மனைவியிடம் மறைத்து வைப்பது போதாதென்று, தாசி வீடு சென்ற துரோகமும் சேர்ந்து விட்டதே என்று அவன் உருகுகிறான். அந்தச் சமயம், “படமுடியாதினித் துயரம்” என்று அவன் பாடியபோது சபையோரெல்லாம் கலகலவென்று கண்ணீர் வடித்தார்கள். கடன் மூண்டு விட்டது. நான்கு பக்கமும் கடன் காரர்கள் பிடுங்கித் தின்ன ஆரம்பித்தார்கள். கதாநாயகன் செய்வதென்னவென்று தெரியாமல் திணறுகிறான். இந்த நிலைமையில் நாளை சனிக்கிழமை “தப்பிலி கப்” என்னும் பந்தயத்தில் ஜயிக்கப் போகிற குதிரைக்கு அவனுக்கு “டிப்” கிடைத்தது. அந்தக் குதிரையை இரண்டு நாளாகப் பல பேர் வாங்க முயற்சி செய்வதாகவும் அவனுக்கு நிச்சயமாகத் தகவல் தெரிந்தது. நாளை மட்டும் அதில் 2,000 ரூபாய் கட்டினால் கட்டாயம் 20,000 ரூபாய் கிடைக்கும். கவலையெல்லாம் தீர்ந்துவிடும். ஆனால், 2,000 ரூபாய்க்கு எங்கே போவது? இந்தச் சமயத்தில் அவனுடைய கட்சிக்காரன் ஒருவன் வந்து, கோர்ட்டில் கட்டுவதற்காக ரூ 2,000 கொடுக்கிறான். தான் படும் கஷ்டத்தைப் பார்த்துக் கடவுளேதான் இந்த ரூபாயை அனுப்பி இருக்கிறார் என்று கதாநாயகன் தீர்மானிக்கிறான். மறுநாள், சனிக்கிழமை. கிண்டிக்குப் போய்த் “தப்பிலி கப்” பந்தயத்தில் குறிப்பிட்ட குதிரையின் மேல் ரூபாய் 2,000மும் கட்டுகிறான். அவனுடைய குதிரை புறப்படும்பொழுது முதலில் புறப்படுகிறது. வரும்பொழுது கடைசியில் வருகின்றது. இடையில், ஜாக்கி அதைப் ‘புல்’ பண்ணிவிட்டான் என்பது கதாநாயகனின் கொள்கை. இனிமேல் எவ்விதக் கவலையும் கிடையாது. செய்யத் தக்கது ஒன்றே ஒன்றுதான் பாக்கி இருந்தது. கதாநாயகன் தனியாகத் தனது அறையில் உட்கார்ந்து தன் மனைவிக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அதில் ஆதியோடந்தமாக எல்லா விவரங்களையும் கூறுகிறான். கட்சிக்காரன் பணத்தை நாளைத் திங்கட்கிழமை கோர்ட்டில் கட்டாவிட்டால், துர்விநியோகம் செய்ததாய் ஏற்படும் என்றும், அட்வொகேட் தொழிலிருந்து தள்ளப்பட்டு அழியாத அவமானத்துக்கும் உள்ளாக வேண்டுமென்றும், அவளுடைய நகைகளை விற்றுக் கொடுப்பது ஒன்றுதான் வழி என்றும், அதைவிடத் தான் தூக்கு போட்டுக் கொண்டு இறப்பதே மேல் என்று தீர்மானித்துவிட்டதாகவும் தெரிவிக்கிறான். அவளிடம் தான் கொண்ட அழியாத அன்பைப் பற்றிப் பிறகு விரிவாக எழுதி, அவளுக்கும் குழந்தைக்கும் தனது லட்சோப லட்சம் முத்தங்களை அளித்துக் கடிதத்தை முடிக்கிறான். கதாநாயகி ஞாயிற்றுக் கிழமை மத்தியானம் குழந்தையுடன் ஒரு சிநேகிதியின் வீட்டுக்குப் போகிறாள். அவள் போன பிறகு கதாநாயகன் மேற்படி கடிதத்தை அவளுடைய அறையிலிருந்த மேஜையின் மேல் வைத்துவிட்டுத் தூக்குப் போட்டுக் கொள்வதற்காகத் தன் அறைக்கு வருகிறான். மேலே உத்திரத்தில் சுருக்குப் போட்டுக் கயிறு கட்டிவிட்டுக் கடவுளை நோக்கித் தோத்திரம் செய்கிறான். ஞாபக மறதியால் வீட்டுக் கதவு எதையும் தாழ்ப்பாளிட மறந்து விடுகிறான். இதற்குள் சிநேகிதி வீட்டுக்குச் சென்ற கதாநாயகி தன் மனம் ஏதோ பரபரப்பு அடைந்திருப்பதைக் காண்கிறாள். உடம்பு ஒரு மாதிரியாய் இருக்கிறதென்று சொல்லிவிட்டு உடனே வீடு திரும்புகிறாள். வீட்டுக்கு வந்து மேஜை மீதிருந்த கடிதத்தைப் பார்க்கிறாள். உடனே பதைபதைத்து ஓடுகிறாள். கதாநாயகன் சுருக்கை மாட்டிக் கொள்ளும் சமயத்தில், அவனைப் போய்க் கட்டிக் கொண்டு கோவென்று கதறுகிறாள். அந்தச் சமயத்தில் பாதிப் பாட்டும் பாதிப் பேச்சுமாகக் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் நடந்த சம்பாஷணையின் போது சபையில் கண்ணீர் விட்டுக் கதறாதவர்கள் யாரும் இல்லையென்று சொல்லலாம். “உங்களை விட எனக்கு இந்த நகை பெரிதா?” என்று சொல்லிக் கதாநாயகி ஒவ்வொரு நகையாகக் கழற்றிக் கொடுக்கிறாள். ஒவ்வொரு நகைக்கும் அவள் ஒரு பாட்டும், பதிலுக்குக் கதாநாயகன் ஒரு பாட்டும் பாடுகிறார்கள். இந்தக் கட்டத்தில் சபையில் முக்கியமாகப் பெண்மணிகள் பகுதியில் உண்டான அல்லோலகல்லோலத்தைச் சொல்ல சாத்தியம் இல்லை. விம்மி விம்மி அழுதபடியால் தொண்டை காய்ந்துபோய், சோடா வாங்கிக் குடித்துத் தாகசாந்தி செய்து கொண்டு, மறுபடியும் அவர்கள் அழலானார்கள். கதாநாயகி தன் வைரக் கம்மலைக் கழற்றிக் கொடுத்த போது ஒரு பெண்மணி உருக்க மிகுதியால் மூர்ச்சை அடைந்தே விழுந்து விட்டாள் என்றால், வேறு சொல்லவும் வேண்டுமோ? எல்லா நகைகளையும் கழற்றி வைத்துவிட்டுக் கதாநாயகி, “இவைகளை எடுத்துக் கொள்ளுங்கள். நாம் இருவரும் கூலி வேலை செய்து பிழைப்போம். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால் ஒரு வரங் கொடுங்கள்” என்று கேட்கிறாள். “என் உயிரைக் கேட்டாலும் தருகிறேன்!” என்கிறான் கதாநாயகன். “இனிமேல் குதிரைப் பந்தயத்திற்குப் போவதில்லை என்று சபதஞ்செய்யுங்கள்” என்கிறாள். “ஆண்டவன் ஆணை! உன் மேல் ஆணை! நம் அருமைக் குழந்தையின் மேல் ஆணை! நான் இனிக் குதிரைப் பந்தயத்திற்குப் போவதில்லை. அதைப் பற்றி நினைப்பதுமில்லை” என்று கதாநாயகன் சபதஞ் செய்கிறான். அச்சமயம் சபையில் வீற்றிருந்தவர்களில் அநேகரும் இவ்வாறே தங்களுக்குள் சபதம் செய்து கொண்டார்கள். நாடகம் சந்தோஷமாக முடிகின்றது. கதாநாயகன் நகைகளை விற்பதற்காகக் கிளம்பும் தறுவாயில் ஒரு தந்தியும் ஒரு கடிதமும் வருகின்றன. தந்தியில் அவனுக்கு ஜில்லா முன்சீப் உத்தியோகமான செய்தி இருக்கிறது. கடிதத்தில் கதாநாயகியின் பாட்டி இறந்து போனதாகவும் அவள் தனது உயிலில் கதாநாயகிக்கு ரூ.30,000 எழுதி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மங்களம் பாடித் திரை விழுந்து நாடகம் முடிவுறுகிறது. எதிர்பார்த்த அளவுக்கு மேல் வெற்றியுடன் நாடகம் நடந்தேறிய தென்பதில் சந்தேகமில்லை. பின்னும் இரண்டு இரவுகள் தொடர்ந்து நடத்தப்பட்டது. முன்னை விட அதிக ஜனங்கள் கூடினார்கள். அதிகக் கண்ணீர் வடிக்கப்பட்டது. அதிகம் பேர் குதிரைப் பந்தயத்திற்குப் போவதில்லை என்று சபதஞ் செய்தார்கள். கடைசியாகப் பொது ஜனங்களின் பிடிவாதமான வேண்டுகோளின் பேரில் அடுத்த ஞாயிற்றுக்கிழமை மாலை ‘மாடினி’ நாடகம் நடத்தினார்கள். அதுவும் சிறப்பாக நடந்தேறியது. திங்கட்கிழமை ராஜுவும் சீனுவும் உட்கார்ந்து கணக்குப் பார்த்தார்கள். எல்லாச் செலவுகளும் போய் 5,000 ரூபாய் மீதம் இருந்தது. தலைக்கு ரூபாய் 2,500 என்று பிரித்துக் கொண்டார்கள். போட்ட திட்டத்தில் ஒன்றே ஒன்று தான் தவறிற்று. புத்தகம் அச்சிட்டார்கள் அல்லவா? நாலு நாளும் நாடகக் கொட்டகையில் விற்றதில் 3 புத்தகங்களே விற்பனையாயின. பாக்கி முழுவதும் மிஞ்சி விட்டது. ஆயினும் இதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. நாளடைவில் விற்றுவிடலாம். அல்லது பத்திரிகைகளுக்கு மதிப்புரைக்கு அனுப்பிச் செலவு பண்ணி விடலாம் என்று தீர்மானித்தார்கள். “இன்னும் 13 நாள் உனக்கு லீவு இருக்கிறதே? என்ன செய்யப் போகிறாய்?” என்று சீனு கேட்டான். “ஊருக்குப் போய் ரொம்ப நாளாயிற்று. எல்லாரையும் அழைத்துக்கொண்டு போகலாம் என்றிருக்கிறேன்” என்றான் ராஜு. “சரி போய் வா! வெகு நாளாக எனக்குக் கொடைக்கானலுக்குப் போகவேண்டுமென்ற ஆசை. அங்கே போகிறேன்” என்றான் சீனு. அடுத்த சனிக்கிழமை உதகமண்டலத்தில் குதிரைப் பந்தய மைதானத்தில் இரண்டு மனிதர்கள் தற்செயலாகச் சந்தித்தார்கள். அவ்விடத்தில் ‘இவ்வாறு ஒருவரை ஒருவர் சந்திப்போம்’ என்று அவர்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லையாதலால், பிரமித்துப் போய் ஐந்து நிமிஷம் அப்படியே ஸ்தம்பித்து நின்றார்கள். “நீ ஊருக்குப் போகவில்லை” என்றான் சீனு. “நீ கொடைக்கானலுக்குப் போகவில்லை?” என்றான் ராஜு. அப்பொழுது அந்த மைதானத்தில் ‘தப்பிலி கப்’ பந்தயத்திற்காகக் குதிரைகள் அதிவேகமாக ஓடி வந்து கொண்டிருந்தன. 2. அரசூர் பஞ்சாயத்து அமிருதம் அரசூர் சின்னசாமிப் படையாச்சியின் மூத்த தாரத்து மகள். சின்னசாமிப் படையாச்சி கொஞ்சம் சொத்துக்காரன். ஆகையால் முதல் தாரம் செத்துப் போனதும் இரண்டாவது மனைவி கலியாணம் செய்து கொண்டான். இவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. கொஞ்ச காலத்துக்கெல்லாம் சின்னசாமிப் படையாச்சி இறந்து போனான். அப்போது அமிருதத்துக்கு வயது பதினாலு. காமாட்சி - இதுதான் சிறிய தாயார் பெயர் - அமிருதத்தைப் பிரியமாய் வளர்த்து வந்தாள். அமிருதம் பார்வைக்கு லக்ஷணமாயிருப்பாள். பள்ளிக்கூடத்தில் நாலாவது வரையில் படித்திருந்தாள். அவளைத் தன் தம்பி வைத்தியலிங்கத்துக்குக் கலியாணம் செய்து வைக்க வேண்டுமென்று காமாட்சிக்கு ஆசை. அமிருதத்துக்குச் சொந்தத் தாய் மாமனின் மகன் சந்திரகாசன். அமிருதமும் அவனும் குழந்தை பிராயம் முதல் கூடி விளையாடியவர்கள். அமிருதத்தின் தாயார் உயிர் வாழ்ந்தபோது சந்திரகாசு சில சமயம் அரசூருக்கு வருவான். சில சமயம் அமிருதம் சேமங்கலத்திற்குப் போவாள். அப்போதிருந்தே அமிருதத்தைச் சந்திரகாசனுக்குக் கொடுப்பதாகப் பேசி வந்தார்கள். அமிருதத்தின் தாயார் அடிக்கடி இதைப்பற்றிச் சொல்லுவாள். குழந்தைக்குப் பல் முளைப்பதற்கு முன்னிருந்து, - ஏன்? சில சமயம் கர்ப்பத்திலிருக்கும்போதே - கல்யாணப் பேச்சுப் பேசுவது நம் ஊர்களில் வழக்கமல்லவா? வெகு நாளாகப் பழகி நேசங்கொண்ட சந்திரகாசனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேனென்று அமிருதம் பிடிவாதம் பிடித்தாள். வைத்தியலிங்கம் அவளுக்குத் திருட்டுத் தாலி கட்டிவிட எண்ணினான். ஆனால் காமாட்சி இதற்கு இடங் கொடுக்கவில்லை. அவள் அமிருதத்துக்கு எவ்வளவோ போதனை செய்து பார்த்தாள். ஒன்றும் பயன்படாமற் போகவே கடைசியில் அவள் சொன்னதாவது:- “நல்லது; உன் இஷ்டப்படியே செய். உன் மாமன் மகனையே கட்டிக்கொள். உங்கப்பனை உத்தேசித்துக் கல்யாணம் மட்டும் செய்து கொடுத்து விடுகிறேன். அதற்குப் பிறகு இந்த வீட்டு வழி நீ அடி எடுத்து வைக்கக்கூடாது. செருப்பாலடித்த சல்லிகூடக் கொடுக்க மாட்டேன். அப்புறம் என்மீது குறைப்படாதே. சந்திரகாசு கள்ளுக் குடிக்கிறான் என்று சொல்லுகிறார்கள். அவனுக்குச் சொத்து கிடையாது. ஓட்டைக்குச்சு வீடுதான் ஆஸ்தி. யோசித்து முடிவு செய்” என்றாள். அரசூரில் பாதிப் பேருக்குமேல் குடிப்பவர்கள். ஆகையால் சந்திரகாசு கள்ளுக் குடிப்பது அமிருதத்துக்குப் பெருங் குற்றமாகத் தோன்றவில்லை. இருந்தாலும் அவளுக்குக் கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது. இந்தக் குற்றம் அவன்மீது சிறிய தாயார் சொல்லும்படியாயிற்றே என்று எண்ணினாள். குடிக்காமலிருந்தால் நன்றாகத்தான் இருக்கும். எப்படியும் கல்யாணம் ஆகிவிட்டால் குடியை விடும்படி செய்துவிடலாம் என்று நினைத்தாள். கல்யாணம் ஆயிற்று. அமிருதம் ரொம்ப ரோஸக்காரி. சிற்றன்னையின் வார்த்தை அவள் மனதில் நன்றாய்ப் பதிந்திருந்தது. கல்யாணத்திற்குப் பிறகு அவள் தன் பிறந்தகத்தை எட்டிப் பார்க்கவே இல்லை. தம்பியின் கல்யாணத்துக்கு மட்டும் ஒரே ஒரு தடவை போனாள். அப்போது அவளுக்கு ஒரு பட்டுச் சேலை கொடுத்தார்கள். கல்யாணத்தன்று மாத்திரம் அதை உடுத்திக்கொண்டு உடனே திருப்பிக் கொடுத்துவிட்டாள். தம்பியும் சிறிய தாயாரும் எவ்வளவோ கெஞ்சியும் அவள் அதைத் தன்னுடன் எடுத்துவரவில்லை. அவர்களுடைய வாழ்க்கை கூடியவரை சந்தோஷமாகவே இருந்து வந்தது. சந்திரகாசு ஒரு ஏர் பயிர்ச் செலவு செய்து வந்தான். சாகுபடி இல்லாத காலத்தில் கூலி வேலைக்குப் போவான். ஏதோ அரை வயிற்றுக் கஞ்சிக்குக் கிடைத்து வந்தது. ஏழை வீட்டில் பிறந்த அவன் பள்ளிக்கூடம் போனதில்லை. அமிருதத்தின் சகவாசத்தால் அவனுக்கு இப்போது படிப்பில் ருசி உண்டாயிற்று. கொஞ்ச காலம் இரவுப் பள்ளிக் கூடத்துக்குப் போய் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டான். அமிருதமும் சில சமயம் தெரிந்த வரையில் சொல்லிக் கொடுத்தாள். கள்ளுக்கடை ஒன்றுதான் அவர்கள் சந்தோஷத்துக்குத் தடையாயிருந்தது. ஆனமட்டும் முயன்றும் சந்திரகாசுவினால் குடியை நிறுத்த முடியவில்லை. சில சமயம் ஒரு வாரம் இரண்டு வாரம் பல்லைக் கடித்துக் கொண்டிருப்பான். அப்புறம் ஒருநாள் புத்தி பேதலித்துவிடும். ஆயினும் அவன் பெருங் குடிகாரனாகவில்லை. அமிருதத்தின் அன்பு அவனை அடியோடு படுகுழியில் விழாமல் காப்பாற்றி வந்தது. பிறகு அவர்களுக்குக் குழந்தை பிறந்தது. அன்று முதல் சந்திரகாசு குடியை எப்படி விடுவது. பணம் எப்படிச் சேர்ப்பது என்று ஓயாமல் சிந்தித்து வந்தான். ஒரு நாள் முருகப்பக் கங்காணி சேமங்கலத்துக்கு வந்ததும் கினாங்குக்குப் போவதுதான் வழியென்று தீர்மானித்து விட்டான். இரவு பன்னிரண்டு மணி. இன்பமான வெண்ணிலவு. சந்திரகாசுவும் அவன் மனைவியும் வீதியில் விரித்திருந்த ஒரு பழம் பாயில் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் மத்தியில் இன்னும் ஒரு வயது நிரம்பாத அவர்கள் குழந்தை பாயில் தூங்கிக் கொண்டிருந்தது. நெற்றியில் தொங்கிய சுருட்டை மயிர் இளங்காற்றில் சிறிது அசைந்தாடிற்று. குடிசைத் திண்ணையில் கிழவி - சந்திரகாசுவின் தாயார் - படுத்துப் பெருங் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தாள். “எப்படியாவது பல்லைக் கடித்துக் கொண்டு இரண்டு வருஷம் பொறுத்திரு. உன்னையும் குழந்தையையும் விட்டுவிட்டு நான் ரொம்ப நாள் இருப்பேனா? கையில் ரூபாய் சேர்ந்ததோ இல்லையோ, ஓடிவந்து விடுகிறேன்” என்றான் சந்திரகாசு. “ஐயோ! அதெல்லாம் முடியாது. நமக்குப் பணமும் வேண்டாம்; எதுவும் வேண்டாம். ஏதோ நாலு காசு நீ சம்பாதித்து வருவதே போதும். கூழோ கஞ்சியோ குடித்துவிட்டுச் சிவனே என்று இருப்போம்” என்றான் அமிருதம். “இதுதான் பெண்பிள்ளை புத்தி. கொஞ்சநாள் கஷ்டப்பட்டால் பின்னால் எப்போதும் சுகமாய் இருக்கலாமென்பது உனக்குத் தெரியவில்லையே” என்றான் சந்திரகாசு. “நீ மாத்திரம் புத்தியாய்ப் பேசுகிறாயா? நீ அக்கரை சீமைக்குப் போய்ப் பணம் தேடி வருவது என்ன நிச்சயம்? அக்கரைச் சீமை போனவர்கள் எத்தனையோ பேர் திரும்பி வருவதேயில்லை” என்று அமிருதம் சொன்னாள். சந்திரகாசு சிரித்தான். அன்று மாலை முழுவதும் அவன் கங்காணியிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டுத் திரும்பி வந்தபடியால் அமிருதத்தின் பேச்சைக் கேட்டு அவனுக்குச் சிரிப்பு வந்தது. “முருகப்பக் கங்காணிக்கு இப்பொழுது ஒரு லட்ச ரூபாய் சொத்திருக்கிறது. அவன் பினாங்குக்குப் போனபோது கையில் ஓட்டாஞ் சல்லிக் கூடக் கிடையாது” என்றான். “ஏன் இப்படிப் பணம் பணம் என்று அடித்துக் கொள்கிறாய்? இந்தக் குஞ்சானின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதாதா?” என்று சொல்லி அமிருதம் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள். ரோஜா மொட்டு ஒன்று திடீரென வெடித்து மலர்ந்தாற்போல அப்போது குழந்தையின் இதழ்கள் சற்றே விரிந்து புன்னகை பூத்தது. கண்மட்டும் திறக்கவில்லை. பின்னர் மறுபடியும் அதன் இதழ்கள் குவிந்தன. தூக்கத்திலுங்கூடத் தாயின் அன்பு அதற்கு மகிழ்வூட்டியதோ? அல்லது இன்பக் கனவு கண்டதோ? யார் கண்டார்கள்? “இவனுக்காகத்தான் நான் போக வேண்டுமென்கிறேன். நீயும் நானும் மட்டுமானால் கவலையில்லை. கிழவி இரண்டொரு வருஷத்துக்குமேல் இருக்கமாட்டாள். ஆனால் குழந்தையை நினைத்தால் தான் எனக்குப் பணம் சேர்க்கும் ஆசை உண்டாகிறது. ஐந்துவயதில் நான் மாடு மேய்த்தது போல் இவனையும் மாடு மேய்க்க விடப் போகிறோமா? பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப வேண்டாமா? சொக்காய் குல்லாய் வாங்கிக் கொடுக்க வேண்டாமா? பார், இப்பொழுதுகூட இவன் கைக்குத் தங்கக் காப்பு செய்துபோட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்!” என்றான் சந்திரகாசு. “நீ கள்ளுக் குடிக்கிற காசை என்னிடம் கொடு. நாலு மாதத்தில் குழந்தைக்குத் தங்கக் காப்பு அடித்துப் போடுகிறேன்” என்றாள் அமிருதம். சந்திரகாசுவுக்குக் கண்ணில் நீர் ததும்பியது. அவன் சொன்னதாவது:- “இந்த மாதிரி நீ எத்தனையோ தடவை சொல்லியாகி விட்டது. நானும் எவ்வளவோ பார்க்கிறேன். என்னால் முடியவில்லை. கள்ளுக் கடையைக் கண்டதும் வெறி வந்து விடுகிறது. ஊரை விட்டுப் போனால்தான் இந்த வெறி போகும். இரண்டு வருஷம் கண்காணாமல் இருந்தால் மறந்து போய்விடும். அதற்காகவே முக்கியமாய் நான் போக வேண்டும்.” “அங்கே மாத்திரம் கள்ளுக்கடை கிடையாதா?” என்று அமிருதம் கேட்டாள். “அதெப்படி அங்கே கள்ளுக்கடை இருக்கும்? இருக்காது” என்றான் சந்திரகாசு. பாவம்! போகுமிடத்திலும் ’பீர்’க்கடையும் பிராந்திக் கடையும் இருக்குமென்னும் எண்ணம் அவனுக்கு இதுவரை தோன்றவில்லை. மறுநாள் கங்காணியைக் கேட்டு நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நினைத்தான். ஆனால் மறுநாள் பிரயாண தடபுடலில் மறந்து போனான். “எப்படியானாலும் நீ போகக்கூடாது. உன்னைப் பிரிந்து நான் இருக்க மாட்டேன். அப்படி என்ன பிரமாதமாகக் குடித்து விடுகிறாய்? போனால் போகட்டும். நீ சம்பாதிக்கும் பணம்தானே? இப்போது நாம் பட்டினியா கிடக்கிறோம்? வேணுமானால் இனிமேல் நானும் கூலி வேலைக்குப் போகிறேன்” என்றாள். “இப்படியெல்லாம் பேசாதே, அமிர்தி! நீ பிறர் வீட்டில் நெல்லுக் குத்தப் போவதை நான் பார்த்துக் கொண்டிருப்பேனா? எல்லாம் முடிவாகி விட்டது. மாட்டை இன்று விற்றுவிட்டேன் எண்பது ரூபாய்க்கு. ஐம்பது ரூபாய் வழிச் செலவுக்கு எடுத்துக் கொண்டு உனக்கு முப்பது ரூபாய் கொடுத்து விட்டுப் போகிறேன். நாலு மாதத்திற்குக் குதிரில் நெல் இருக்கிறது. அதற்குள் கட்டாயம் பணம் அனுப்புகிறேன். இந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்து எனக்குப் போக உத்தரவு கொடு. தடை சொல்லாதே!” என்றான் சந்திரகாசு. “அப்படியானால் நானும் வருகிறேன். குழந்தையையும் எடுத்துக் கொண்டு இரண்டு பேரும் போவோம்” என்றாள் மனைவி. “கிழவியை என்ன செய்வது? அவளைச் சோற்றுக்கு ஆலாய்ப் பறக்க விட்டு விடலாமா?” என்று சந்திரகாசு கேட்டான். “ஐயோ! எனக்கு அழுகை வருகிறது” என்றாள் அமிருதம். அப்படியே அழத் தொடங்கினாள். சந்திரகாசன் வெகு நேரம் அவளைச் சமாதானம் செய்து கொண்டிருந்தான். சந்திரகாசு பினாங்குக்குப் புறப்பட்டுச் சென்ற நான்காவது மாதத்தில் அமிருதம்மாளுக்கு ஒரு கடிதம் வந்தது. தபால்காரன் கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு இரண்டணா கேட்டான். அமிருதம் வீட்டிற்குள் ஓட்டமாய் ஓடிப் பழைய பெட்டியொன்றில் துழாவி, இரண்டணா எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். கடிதத்தை வாங்கி உடைத்துப் படித்தாள். அதிலே சந்திரகாசன் எழுதியிருந்த மொழிகளையும், பிரியமான வசனங்களையும் அவன் எங்கேதான் கற்றுக் கொண்டானோ தெரியாது. ஒவ்வொரு வரி படிக்கும் போதும் அமிருதத்துக்கு மயிர்க் கூச்சல் எறிந்தது. நாலுவரி படித்துவிட்டு, அவள் அழுதாள். இன்னும் நாலு வரி படித்துவிட்டுச் சிரித்தாள். இடையிடையே கடிதத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டாள். இரண்டு மூன்று தடவை படித்தாள். பிறகு அதைக் கிழவியிடம் கொண்டு போய்ப் படித்துக் காட்டினாள். மறுபடி குழந்தையின் பக்கத்தில் உட்கார்ந்து கடிதம் முழுவதையும் அதற்குப் படித்துக் காட்டினாள். குழந்தையும் ஏனோ சிரித்தது. அதன் முகத்தில் கடிதத்தை வைத்து முத்தமிடச் செய்தாள். கடைசியாகப் பெட்டியில் பத்திரமாக வைத்துப் பூட்டினாள். இரண்டு மாதங் கழித்து இன்னொரு கடிதம் வந்தது. அடுத்த மாதம் கட்டாயம் பணம் அனுப்புவதாக அதில் எழுதியிருந்தது. பின்னர் இரண்டு மாதங் கழித்து வந்த கடிதத்திலும் இப்படியே எழுதியிருந்தது. இதற்குள் குதிரில் இருந்த நெல்லெல்லாம் தீர்ந்து போயிற்று. பணத்திலும் பத்து ரூபாய் செலவழிந்து விட்டது. பாக்கி இருபது ரூபாயும் ஆபத்துக்கு வேண்டுமென்று அமிருதம் பத்திரப் படுத்திவிட்டுக் கூலி வேலை செய்ய ஆரம்பித்தாள். நெல்லுக் குத்தவும் களையெடுக்கவும் போனாள். அந்த நேரங்களில் கிழவி குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்படியே ஒன்றரை வருஷ காலம் சென்றது. இரண்டு மாதத்திற்கொரு முறை சந்திரகாசுவிடமிருந்து தவறாமல் கடிதம் வந்து கொண்டிருந்தது. ஆனால் பணம் மட்டும் ஒரு தம்பிடி கூட வந்தபாடில்லை. அமிருதத்துக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது. பகலெல்லாம் வெளியிலும், இரவில் வீட்டிலும், உழைத்து உழைத்து அவள் அலுத்துப் போயிருந்தாள். வெகுநாளாய், ‘அனுப்புகிறேன், அனுப்புகிறேன்’ என்று தன் புருஷன் ஆசை காட்டி வரும் பணம், உண்மையில் எப்போதுதான் வந்து சேருமோவென்று அவள் ஏக்கப்படலானாள். தபால்காரனைக் கண்டபோதெல்லாம் விசாரித்தாள். ஆனால் அவள் சந்திரகாசனுக்கு எழுதிய கடிதங்களில் இந்த ஆவலை அதிகம் வெளிக்காட்டவில்லை. கடைசியாக எழுதிய ஒரு கடிதத்தில் பணம் வந்து சேரவில்லையென்றும், மணியார்டர் தப்பிப் போயிருக்குமோவென்று சந்தேகப்படுவதாகவும், ஒருவேளை இதுவரை அனுப்பியிராவிட்டால் தெரிவிக்க வேண்டுமென்றும், கொஞ்சம் பணம் வந்தால் குழந்தைக்கும் கிழவிக்கும் சௌகரியமாய்த்தான் இருக்குமென்றும் எழுதினாள். இதற்குச் சந்திரகாசுவிடமிருந்து வந்த பதிலை படித்ததும் அமிருதம் இடி விழுந்ததுபோல் திடுக்கிட்டுப் போனாள். அவன் எழுதியிருந்தான்:- “உன்னிடம் இத்தனை காலமாய் ஒரு விஷயம் மறைத்து வைத்திருந்தேன். இனிமேல் சொல்லாமலிருக்கக்கூடாது. நான் கிளம்பிய அன்றைக்கு முதல் நாளிரவு நாம் நிலவில் உட்கார்ந்து பேசியது நினைவிலிருக்கிறதா? முக்கியமாக, கள்ளுக்கடையை மறப்பதற்குத்தான் நான் அக்கரை சீமைக்குப் போவதாகச் சொன்னேன். இங்கே கடை இராதென்று நினைத்தேன். ஐயோ! ஏமாந்து போனேன். அந்தப் பாழும் கடைகள் இங்கேயும் இருக்கின்றன. சம்பளம் அதிகம்தான் கொடுக்கிறார்கள். ஆனால் சாப்பாடுப்போக மிச்சமெல்லாம் குடிக்குத்தான் போகிறது. ஊரிலாவது எனக்குப் புத்தி சொல்லித் தடுக்க நீ இருந்தாய். இங்கே நீயும் இல்லை. அப்படியும் எவ்வளவோ கஷ்டப்பட்டு முப்பது வெள்ளி சேர்த்து உனக்கு அனுப்பலாமென்று வைத்திருந்தேன். பத்து நாட்களுக்கு முன்பு நான் குடித்துவிட்டுப் புத்தி தப்பியிருக்கையில் யாரோ பாவிகள் அதைக் கொண்டுபோய் விட்டார்கள். ஐயோ! நீங்கள் படும் கஷ்டத்தை நினைத்தால் வயிறு பகீரென்கிறது. ஒவ்வொரு நாளும் உங்கள் நினைவாகவே யிருக்கிறேன். கூடிய சீக்கிரத்தில் எப்படியும் பணம் அனுப்புகிறேன்.” அமிருதம் அன்று இரவெல்லாம் தூங்கவேயில்லை. ஓயாமல் அழுதுகொண்டேயிருந்தாள். புருஷன் க்ஷேமமாய் ஊர் வந்து சேர வேண்டுமென்று தெய்வங்களையெல்லாம் வேண்டினாள். மறுநாள் ஒரு கடிதம் எழுதினாள். பணம் சம்பாதித்தது போதுமென்றும், உடனே புறப்பட்டு வந்து விடும்படியும் மன்றாடிக் கேட்டுக் கொண்டாள். “உங்கம்மாள் மேல் ஆணை; என் தலை மேல் ஆணை; குழந்தை மேல் ஆணை; மாரியம்மன் மேல் ஆணை; நீ இனிமேல் கள்ளுக்கடை வழிபோகக்கூடாது” என்று சபதம் வைத்தாள். சந்திரகாசு இதற்கெழுதிய பதிலில் தான் குடிப்பதை விட்டு விட்டதாகவும், இனிமேல் பணம் சேர்ந்து விடுமென்றும், இரண்டு மாதத்தில் நூறு ரூபாய் அனுப்புவதாகவும், பின்னர் ரூபாய் இரு நூறு சம்பாதித்துக் கொண்டு திரும்பி விடுவதாகவும் எழுதியிருந்தான். இப்படியே ஐந்து வருஷம் சென்றது. சந்திரகாசனாவது, பணமாவது வந்து சேர்ந்தபாடில்லை. இதற்கிடையில் கிழவி செத்துப் போனாள். அமிருதம் ஆபத்துக்கென்று வைத்திருந்த இருபது ரூபாயைக் கிழவியின் அந்நிய காலத்தில் அவளுக்கு வேண்டியது செய்வதற்குச் செலவழித்து விட்டாள். அடுத்த வருஷம் அவளே காயலாவாய்ப் படுத்துக் கொண்டாள். ஒரு மாதம் ரொம்பவும் கஷ்டப்பட்டாள். அந்தச் சமயத்தில் கல்லும் உருகும்படியான ஒரு கடிதம் அவள் சந்திரகாசுவுக்கு எழுதினாள். கடிதம் ஒன்று வந்தது. “ரூபாய் நூறு மணியார்டர் செய்திருக்கிறேன்” என்ற வார்த்தைகளை படித்தபோது அமிருதத்தால் நம்பவே முடியவில்லை. உண்மையாகவே அப்படி எழுதியிருக்கிறதாவென்று திரும்பி திரும்பிப் படித்தாள். பிறகு ஓடிப்போய்த் தபால்காரனை வழிமறித்துக் கேட்டாள். “கடிதம் முதலில் வந்துவிடும். பணம் மெதுவாய்த்தான் வரும். பதினைந்து நாள் ஆகும்” என்று தபால்காரன் சொன்னான். ஒரு வாரத்திற் கெல்லாம் குழந்தைக்கு வைசூரி வார்த்தது. அமிருதம் பெரிதும் கவலைப்பட்டாள். பணம் வந்ததும் ஊர்க் கோயில்களுக்கெல்லாம் அபிஷேகம் செய்து வைப்பதாய் வேண்டிக் கொண்டாள். ஒவ்வொரு நாள் காலையும் தூக்கம் விழித்ததும், ‘இன்று பணம் வராதா?’ என்று எண்ணிக் கொண்டே எழுந்திருந்தாள். வெள்ளிக்கிழமை வந்தது. “ஐயோ! இன்று பணம் வந்தால் மாரியம்மனுக்கு மாவிளக்கு ஏற்றலாமே?” என்று நினைத்தாள். தபால்காரன் வருகிறானாவென்று எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள். கடைசியாக, உச்சி வேளையில் தபால்காரன் வந்தான். மணியார்டரும் கொண்டு வந்தான். அமிருதம் தன் கலி தீர்ந்துவிட்டது, தான் தெய்வங்களை வேண்டியதெல்லாம் வீண் போகவில்லையென்று எண்ணினாள். தபால்காரன் சாட்சி போடுவதற்கு ஒருவனைக் கூட அழைத்து வந்திருந்தான். அவன் அந்த ஊர்க் கள்ளுக்கடைக் குத்தகைக்காரன். தபால்காரன் அமிருதத்தினிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு குத்தகைக்காரனிடம் சாட்சியும் வாங்கிக்கொண்டான். பிறகு, தொண்ணூற்றெட்டு ரூபாய் எண்ணிக் குத்தகைக்காரனிடம் கொடுத்தான். பிறகு அமிருதத்தைப் பார்த்து, “நூறு ரூபாய் வந்தால் ஐந்து ரூபாய் வாங்குவது வழக்கம். நீங்கள் ஏழையானதால் இரண்டு ரூபாய் எடுத்துக் கொண்டேன்” என்றான் தபால்காரன். அமிருதம் அவர்கள் செய்தது, சொன்னது, ஒன்றும் புரியாமல், பணம் பெற்றுக் கொள்வதற்காகக் கையை நீட்டினாள். குத்தகைக்காரன் “அம்மா! இது எனக்குச் சேர வேண்டிய பணம். உன் புருஷன் எனக்கு நாற்பது ரூபாய்க்குப் பத்திரம் எழுதிக் கொடுத்தான். வட்டியும் முதலும் சேர்ந்து இப்பொழுது நூற்றுப் பத்து ரூபாய் ஆகிறது. தொண்ணூற்றெட்டு ரூபாய் போனால் பாக்கி பன்னிரண்டு ரூபாய்” என்று சொன்னான். இடி விழுந்ததுபோல் அமிருதம் திகைத்துப் போனாள். அவள் தலை கிறுகிறுவென்று சுழன்றது. எங்கேயோ அவளையே உயரத் தூக்கிக்கொண்டு போவதுபோல் இருந்தது. அப்போது குத்தகைக்காரன், “உன்னை அடியோடு வயிற்றிலடிக்க எனக்கு மனமில்லை. இதை வாங்கிக் கொள்ளு” என்று சொல்லி, நாலு ரூபாய் எடுத்துக் கொடுக்க வந்தான். அமிருதத்துக்கு அப்போதுதான் நிலைமை என்னவென்பது கொஞ்சம் விளங்கிற்று. “ஐயோ! இதென்ன அநியாயம்! இந்த ஊரிலே கேட்பாரில்லையா?” என்று அவள் கூச்சலிட்டாள். கூக்குரல் போட்டதும் கூட்டம் சேர்ந்துவிட்டது. ஊர் நாட்டாண்மைக்காரரில் ஒருவன் வந்தான். “இதைப் பஞ்சாயத்துப் பண்ணித்தான் தீர்க்க வேண்டும். அதுவரையில் பணம் என்னிடம் இருக்கட்டும்” என்று சொல்லி வாங்கிக் கொண்டான். அன்று சாயங்காலம் ஊர்ச் சாவடியில் பஞ்சாயத்துக் கூடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அந்த ஊரில் வழக்க மென்னவென்றால், எந்த வழக்குக்காகப் பஞ்சாயத்துக் கூடினாலும் வாதி பிரதிவாதி இரண்டு பேரும் சேர்ந்து பஞ்சாயத்துக்காரர்களுக்காகக் கள்ளு வாங்கி வைத்துவிட வேண்டும். வெள்ளையப்பன் உள்ளே போனால் தான் நியாயம் நன்றாய் விளங்குமென்பது அந்த ஊர்ப் பிரமுகர்கள் அபிப்பிராயம். ஆனால் இந்த வழக்கிலே வாதி ஏழைப் பெண்பிள்ளை யானதினாலும், பிரதிவாதி கள்ளுக் கடைக்காரனாதலாலும் பிரதிவாதியே எல்லாருக்கும் கள்ளு ‘சப்ளை’ செய்ய வேண்டியதென்று தீர்மானித்தார்கள். ஊர்ச் சாவடியில் பஞ்சாயத்துக் கூடிற்று. மொந்தைகள் ஏராளமாய் உருண்டன. பஞ்சாயத்துக்காரர்களுக்கு மட்டுமின்றி வேடிக்கை பார்க்க வந்தவர்களுக்குங்கூட அன்று வெகு ‘மஜா’. நெடு நேரம் நியாயம் பேசியான பிறகு, பத்திரம் காலாவதியாகி இருந்தாலும் வாங்கிய கடனைக் கொடுக்கத்தான் வேண்டுமென்றும், ஆகையால் பணம் கள்ளுக் குத்தகைகாரனுக்கே சேர வேண்டுமென்றும், இருந்தாலும் அமிருதத்தின் ஏழ்மையை உத்தேசித்து, அவளுக்குப் பத்து ரூபாய் கொடுத்து விட்டு 88 ரூபாய் அவன் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், பத்திரத்தைக் காது கிள்ளி அவளிடம் கொடுத்து விட வேண்டுமென்றும் பஞ்சாயத்து சபையார் தீர்ப்பளித்தார்கள். அமிருதத்தின் அம்மை வார்த்த பையன் நாலு நாளைக்கெல்லாம் இறந்து போனான். பஞ்சாயத்துச் செய்தவர்கள் உள்பட ஊரார் மிகவும் இரக்கப் பட்டுப் பொதுச் செலவில் பிரேதத்தை எடுத்து அடக்கம் செய்தார்கள். அன்றைய தினமே அமிருதத்துக்கு ஒரு கடிதம் வந்தது. சந்திரகாசன் மிகவும் நீளமாய் எழுதியிருந்தான். ஆனால் கரை காணாத துக்கத்தில் மூழ்கியிருந்த அமிருதத்துக்குப் பின்வரும் விஷயங்கள் தான் அதில் புலப்பட்டன:- “பணம் அனுப்பியதும், ஊருக்கு வந்து உன்னையும் குழந்தையையும் பார்க்க வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று - வெறி பிடித்தாற்போல் இருந்தது - கையில் பணமில்லை - ஐம்பது ரூபாய் திருடிக் கொண்டு கிளம்பினேன் - பிடித்து ஜெயிலில் போட்டு விட்டார்கள் - இரண்டு வருஷம் கடுங்காவல் - இதுவும் நல்லதுதான் - ஜெயிலில் கள்ளு சாராயம் கிடையாது - இரண்டு வருஷத்தில் மறந்து விடுவேன் - விடுதலையானதும் உன்னைப் பார்க்க ஊருக்கு ஒரே ஓட்டமாய் ஓடி வருவேன்.” மறுநாள் அமிருதம் காணாமற் போனாள். அரசூருக்கு எட்டு மைல் கிழக்கே ஒரு ஸ்திரீயின் பிரேதம் ஆற்றில் மிதந்து வந்து ஒதுங்கிற்று. அவ்வூர் கிராமாதிகாரி அதை எடுக்க ஏற்பாடுகள் செய்துவிட்டு, விஷயத்தைப் போலீசுக்குத் தெரியப் படுத்தினார். இரண்டு வருஷம் கழித்துச் சந்திரகாசு வெகு ஆவலாக ஊருக்குத் திரும்பிவந்து சேர்ந்தபோது தன் குடிசை இருந்த இடத்தில் குப்பைமேடு போடப்பட்டிருப்பதைக் கண்டான். 3. இடிந்த கோட்டை சமீபத்தில் ஒரு பழைய சிநேகிதர் வீட்டுக்கு நான் போயிருந்த போது அவருடைய குழந்தை என்னை ஒரு கேள்வி கேட்டாள். “மாமா! இப்போதெல்லாம் நீங்கள் ஏன் கதையே எழுதுவதில்லை?” என்றாள். யுத்தத்தினால் காகிதம் ரொம்பக் கிராக்கியென்றும், நானே எழுதிக் கொண்டிருந்தால் மற்றவர்கள் எழுதுவதை விகடனில் போட முடியாதல்லவா என்றும், இம்மாதிரி அவளுக்கு ஏதேதோ சால்ஜாப்பு சொன்னேன். முக்கியமான காரணத்தை மட்டும் அவளுக்குச் சொல்லவில்லை. இப்போது சொல்கிறேன்: உலக வாழ்க்கையில் உண்மையாக நடக்கும் சம்பவங்களைப் பார்க்க பார்க்க கதையாவது காரணமாவது என்று எனக்குத் தோன்றிவிடுகிறது. கதையில் கற்பனை செய்ய முடியாத அத்தனை அதிசயமான சம்பவங்கள் வாழ்க்கையில் நடக்கின்றன. ஒரு விசேஷமென்னவென்றால், அந்த அதிசய சம்பவங்களைக் குறித்து யாருக்கும் சந்தேகம் உண்டாவதில்லை. இப்படியும் நடக்குமா என்று எண்ணுவதில்லை. வெகு தூரத்தில் நடந்த சம்பவமானாலும் பத்திரிகைகளில் வந்து விட்டால் பூரணமாய் நம்பிவிடுவார்கள். உதாரணமாக, சென்ற மாதத்தில் நடந்த ஒரு விபரீத அதிசயத்தைக் கேளுங்கள்: பெங்களூரில் ஒரு விவாகம் நடந்தது. மணமகனும் மணமகளும் ஏழைகள். கல்யாணம் ஆனதும், மாப்பிள்ளையும் பெண்ணும் இன்னும் அவர்களைச் சேர்ந்தவர்களும் சாலையோடு போய்க் கொண்டிருந்தார்கள். வழியில் மணப்பெண் அவளுடைய தோழி ஒருத்தியுடன் ஒரு மரத்தடியில் ஒதுங்கிச் சற்று இளைப்பாற உட்கார்ந்தாள். அப்போது அந்த மரத்தின் கிளை ஒன்று ஒடிந்து விழுந்தது. அது அந்த மணப்பெண்ணின் தலையில் விழுந்தது! மணப்பெண் தட்சணம் உயிர் துறந்தாள்! இந்தப் பரிதாப சம்பவம் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இதுவே ஒரு கதையில் வந்திருந்தால், நாம் இலேசில் நம்பிவிடுவோமா? “அந்த மணப்பெண் அந்த மரத்தடிக்குத் தானா போயிருக்க வேண்டும்? வேறு மரத்தடிக்குப் போயிருக்கக் கூடாதா? அந்த மரக்கிளை ஐந்து நிமிஷத்துக்கு முன்பே ஒடிந்து விழுந்திருக்கக் கூடாதா? அதுவும் மணப்பெண் தலையில் பார்த்துத்தானா விழ வேண்டும்? பக்கத்திலுள்ள யார் தலையிலாவது விழக்கூடாதா?” என்று ஆயிரம் ஆட்சேபங்களைச் சொல்வோம். இதை நினைக்கும் போது தான், எனக்குக் கதை எதற்காக எழுதவேண்டுமென்று தோன்றுகிறது. என் நண்பனின் பெண்ணைப் போன்றவர்களைத் திருப்தி செய்வதற்காக ஏதாவது எழுதித்தான் ஆகவேண்டுமென்றால் வாழ்க்கையில் நடக்கும் சம்பவம் ஒன்றையே எழுதிவிடலாமென்றும் தோன்றுகிறது! அத்தகைய வாழ்க்கைச் சம்பவம் ஒன்றைத்தான் இப்போது எழுத உத்தேசித்திருக்கிறேன். ஏழெட்டு வருஷங்களுக்கு முன்பு ஒரு முறை நானும் என் சிநேகிதர்கள் இருவரும் திருவண்ணாமலைக்குப் போனோம். அண்ணாமலைநாதர், ரமணரிஷிகள், எஸ்.வி.வி. ஆகிய இந்த மூன்று பேரையும் பார்த்துவரும் நோக்கத்துடன் நாங்கள் புறப்பட்டோ ம். அப்போது எஸ்.வி.வி. தமது ஆங்கிலக் கட்டுரைகளில் “ஜயா” என்னும் நாகரிக நங்கையைப் பற்றி அடிக்கடி எழுதிக் கொண்டிருந்தார். “இப்படிப்பட்ட மாதரசியை வாழ்க்கைத் துணையாக அடைந்த பாக்கியசாலி யாரோ? அவரை அவசியம் பார்க்க வேண்டும்!” என்று எங்களுக்கு ஆவலாயிருந்தது. சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்குப் போகும் வழியில் செஞ்சிக் கோட்டை இருக்கிறது. அந்தக் கோட்டையைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையும் எனக்கு வெகு நாளாக உண்டு. போகும் போது கோட்டைக்கு அருகில் மோட்டார் வண்டியை நிறுத்திவிட்டு, அந்தச் சரித்திரப் பிரசித்திப் பெற்ற பிரதேசத்துக்குள் சென்று சுற்றிப் பார்த்தோம். பாழடைந்த அரண்மனைகளையும், அந்தப் புரங்களையும், மண்டபங்களையும், மதில்களையும், நெற்களஞ்சியங்களையும், குதிரைக் கொட்டாரங்களையும் பார்க்கப் பார்க்க, பிரயாண ஆரம்பத்தில் எங்கள் உள்ளத்தில் இருந்த உற்சாகமெல்லாம் போய் சோர்வு அதிகமாகிக் கொண்டு வந்தது. ஆனாலும் அந்தக் காட்சியில் ஏதோ ஓர் அபூர்வமான கவர்ச்சியுமிருந்தது. வெகுநேரம் சுற்றிச் சுற்றி களைத்துப் போன பிறகு, கிளம்ப மனமில்லாமல் தான் அங்கிருந்து கிளம்பிச் சென்றோம். திருவண்ணாமலைக்கு இரவு போய்ச் சேர்ந்தோம். இராத்திரிக்கு ராத்திரியே கதவை இடித்து, எஸ்.வி.வி.யை எழுப்பி, “நீங்கள் தானே எஸ்.வி.வி. என்கிறது? ஜயா சௌக்கியமா? அவளுடையப் பொய்ப்பற்கள் இப்போது எப்படியிருக்கின்றன?” என்றெல்லாம் விசாரித்து அளவளாவித் திருப்தியடைந்தோம். மறுநாள் அண்ணாமலைநாதரையும் ரமண ரிஷிகளையும் தரிசனம் செய்து கொண்டோ ம். சாயங்காலம் வெயில் தாழ்ந்த பிறகு சென்னையை நோக்கிக் கிளம்பினோம். சூரியாஸ்தமான சமயத்தில் வண்டி செஞ்சியை அடைந்தது. எனக்கு இன்னொரு தடவை அங்கே இறங்கிப் பார்த்து விட்டுப் போக வேண்டுமென்று தோன்றிற்று. என் நண்பர்களுக்கு அது சம்மதமில்லை. “நீர் வேண்டுமானால் போய்ப் பார்த்து விட்டு வாரும். நாங்கள் ஊருக்குள் போய் ஒரு கப் காப்பி கிடைக்குமா என்று பார்க்கிறோம்” என்றார்கள். காப்பி என்றதும், நான் அங்கு இறங்காமல் வந்து விடுவேன் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் என் மனத்திலிருந்த தாகம் காப்பியின் மோகத்தை வென்று விட்டது. “சரி நீங்கள் போங்கள். நான் இன்னொரு தடவை பார்த்துவிட்டுத் தான் வருவேன்” என்று சொல்லிவிட்டு இறங்கினேன். “அரைமணிக்குள் திரும்பி வந்து ஹாரன் அடிக்கிறோம். அதற்குள் பார்த்து விட்டு வந்து விட வேணும்” என்றார்கள். தடதடவென்று சத்தம் போட்டுக் கொண்டு வண்டி கிளம்பிச் சென்றது. வண்டி போயிற்றோ, இல்லையோ, அந்த ஏகாந்தப் பிரதேசத்தில் நிசப்தம் குடிகொண்டது. என்னுடைய கால் செருப்பின் சப்தத்தைக் கேட்டு நானே திடுக்கிட்டேன். அந்தி நேரத்தில் அந்த நிர்மானுஷ்யமான பிரதேசத்துக்குள் தன்னந்தனியாகச் சென்ற போது மனத்தில் ஒரு விதக் கலக்கமும் பரபரப்பும் உண்டாயின. “சீ! இதென்ன காரணமில்லாத பயம்?” என்று என்னை நானே தைரியப்படுத்திக் கொண்டேன். மேற்குத் திசையிலிருந்த குன்றுகளுக்குப் பின்னால் சூரியன் திடீரென்று மறைந்தது. வெகு சீக்கிரத்தில் கையெழுத்து மறையும் நேரம் வந்து விட்டது. அப்போது நான் பழைய பாழடைந்த கட்டிடங்களைத் தாண்டிக் கொண்டிருந்தேன். இருளடைந்த பாழும் மண்டபங்களிலிருந்து வௌவால்கள் ’இறக்கை’யை அடித்துக் கொள்ளுகிற சத்தம் கேட்டது. என் மனத்தில் பய உணர்ச்சி அதிகமாயிற்று. நல்ல வேளையாக அன்று பௌர்ணமியாதலால் கிழக்கே பூரண சந்திரன் உதயமாகிக் கொண்டிருந்தான். நிமிஷத்துக்கு நிமிஷம் நிலவின் பிரகாசம் அதிகமாகிக் கொண்டிருந்தது. அன்று பௌர்ணமியாக மட்டும் இராவிட்டால், நான் மேலே போயிருக்க மாட்டேன். பாதி வழியிலேயே திரும்பி இருப்பேன். பாழுங் கட்டிடங்களைத் தாண்டிப் போன பிறகு, குன்றின் மேல் ஏறுவதற்கு அமைந்த படிகள் இருக்கின்றன. இந்தப் படிகளில் கொஞ்ச தூரம் ஏறிச்சென்று அங்கிருந்துப் பார்த்தால் அந்த இடிந்த கோட்டைப் பிரதேசம் முழுவதையும் பார்க்கலாம் அப்படி ஒரு தடவை பார்த்து விட்டுத் திரும்பிப் போக வேண்டுமென்று தான் இவ்வளவு தூரம் நான் வந்தது. படிகளில் ஏறத் தொடங்கினேன். இருபது முப்பது படிகளுக்கு மேல் ஒரு திருப்பம் இருக்கிறது. அங்கு நான் திரும்பியதும் மேலே அடி எடுத்து வைக்க முடியாமல் திகைத்துப் போய் நின்றேன்! ஏனெனில், அங்கே திருப்பத்தின் முதல் படியில் ஒரு மனுஷன் உட்கார்ந்திருந்தான்! அவன் ஓர் இளைஞன். நாகரிகமாக வேஷ்டி, ஜிப்பா அணிந்தவன். தலையை அழகாகக் கிராப் செய்து வாரி விட்டுக் கொண்டிருந்தான். முகம் களையான முகம்; புத்திசாலி என்றும் தோன்றியது. இப்படிப்பட்ட பையனைச் சாதாரணமாக வேறு எங்கே பார்த்தாலும், பயமோ, அதிசயமோ உண்டாக நியாயமில்லை. ஆனால் அந்த வேளையில், அந்த நிர்மானுஷ்யப் பிரதேசத்தில், அவனைத் திடீரென்று வெகு சமீபத்தில் பார்த்ததும் பாம்பை மிதித்தவன் போல் துணுக்குற்றுப் போனேன். அந்த வாலிபன் முகத்திலும் ஆச்சரியமும் திகைப்பும் காணப்பட்டன. ஆனால் அவன் தான் முதலில் சமாளித்துக் கொண்டான். “யார் ஸார் நீங்கள்? இந்த ஊர் இல்லை போலிருக்கிறதே?” என்றான். பேச்சுக் குரல் கேட்டதும் எனக்குத் தைரியம் உண்டாகி விட்டது. ‘நல்ல வேளை! இங்கே ஒரு மனுஷன் இருக்கிறானே! போகிற போது சேர்ந்து போகலாம்’ என்று மனதிற்குள் நினைத்தேன். பிறகு நான் அங்கு வந்த காரணத்தைக் கூறினேன். “ஆமாம்; இந்த இடத்திலிருந்து வெண்ணிலாவில் இந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு எனக்குக் கூட ரொம்பவும் பிடிக்கும். அடிக்கடி இங்கு நான் வருவதுண்டு,” என்றான். அவனருகில் நானும் உட்கார்ந்து, “உமக்கு இந்த ஊர் தானா?” என்று கேட்டேன். “இல்லை. என் சொந்த ஊர் பெரிய குளம். பக்கத்து ஊர்ப் பள்ளிக் கூடத்தில் உபாத்தியாயராகயிருக்கிறேன். வந்து மூன்று வருஷமாயிற்று,” என்றான். அவன் செகண்டரி ட்ரெயினிங் ஆனவன் என்றும், பெயர் குமாரஸ்வாமி என்றும் தெரிந்து கொண்டேன். தன் கையால் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும் அவன் சொன்னபோது, “கல்யாணம் ஆகவில்லையா?” என்று கேட்டேன். “கல்யாணமா?” என்று சொல்லி அவன் வானத்துச் சந்திரனை நோக்கினான். பிறகு, பெருமூச்சு விட்டுக் கொண்டு என்னைப் பார்த்து “இதுவரைக்கும் இல்லை,” என்றான். அப்போது அவனுடைய பார்வையும் புன்னகையும் ஏதோ ஒரு மாதிரியாக இருந்தன. பின்னர் அவனாகவே, “ஆனால் பெண் நிச்சயமாகியிருக்கிறது,” என்றான். “எந்த ஊரில்?” என்று கேட்டேன். “இதே ஊரில், இதே இடத்தில்தான். பெண் நிச்சயமாகி முந்நூறு வருஷமாகிறது…” என்று கூறி, ஒரு நிமிஷம் தயங்கினான். பிறகு, “இன்றைக்குத்தான் கல்யாணம்” என்று சொல்லி முடித்தான். என்னுடைய நெஞ்சு அடித்துக் கொள்ளத் தொடங்கிற்று. ஐயோ! இவனுக்குச் சித்தப் பிரமை போலிருக்கிறதே! இந்த ஏகாந்தமான பிரதேசத்தில் அஸ்தமன வேளையில் இவனிடம் வந்து அகப்பட்டு கொண்டோமே? மெதுவாக அங்கிருந்து கிளம்புவதற்கு நான் யத்தனைக்கையில், அவன், என் மனதிலுள்ளதைத் தெரிந்து கொண்டவன் போல், “எனக்கு மூளை சரியாயில்லையென்று நினைக்கிறீர்களாக்கும். அப்படித்தான் தோன்றும். எனக்கே சில சமயம் இதெல்லாம் சித்தப் பிரமையோ என்று தோன்றுகிறது. உங்களுக்குச் சாவகாசமிருந்தால் முழு விவரமும் சொல்கிறேன். எத்தனையோ நாளாக, யாரிடமாவது என்னுடைய அநுபவங்களைச் சொல்ல வேண்டுமென்று எனக்கு ஆசையுண்டு,” என்றான். அவன் பைத்தியக்காரன் என்ற எண்ணம் எனக்கு மாறிவிட்டது. ஏதோ ரொம்பவும் துக்கப்பட்டவன், துக்க மிகுதியினால் இப்படிப் பேசுகிறான் என்று தோன்றியது. அவனுடைய கதையைக் கேட்டுவிட்டு கூடுமானால் அவனுக்கு யோசனை சொல்லி உதவி செய்ய வேண்டுமென்ற ஆசையும் உண்டாயிற்று. “சீக்கிரமாகச் சொல்லி முடித்தால் கேட்டு விட்டுப் போகிறேன்,” என்றேன். குமாரஸ்வாமி நன்றி ததும்பிய கண்களுடன் என்னைப் பார்த்தான். “ஆகட்டும்! சுருக்கமாக முடித்து விடுகிறேன்,” என்றான். ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு மேலே சொல்லத் தொடங்கினான். "பக்கத்துக் கிராமத்தில் நான் உபாத்தியாயர் வேலைக்கு வந்து வருஷம் மூன்று ஆயிற்றென்று சொன்னேனல்லவா? வந்து ஆறு மாதத்துக்கெல்லாம் சில சினேகிதர்களுடன் இந்தச் செஞ்சிக் கோட்டைக்கு ஒரு முறை வந்திருந்தேன். இந்தப் பாழடைந்த பிரதேசம் எப்படியோ என் மனத்தைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. அடிக்கடி இங்கே வர வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. யாராவது துணைக்குக் கிடைத்த போதெல்லாம் அழைத்துக் கொண்டு கிளம்பி விடுவேன். கொஞ்ச நாளில் யாரும் துணை கிடைப்பது அருமையாகி விட்டது. எனக்குத் தெரிந்தவர்கள் எல்லாரும், ‘வெறுமே அந்தச் சுடுகாட்டில் என்ன வேலை?’ என்று சொல்லி வர மறுத்து விட்டார்கள். பிறகு பள்ளிக் கூடத்துப் பசங்கள் சிலரை அழைத்துக் கொண்டு வரத் தொடங்கினேன். நாளடைவில் அவர்களுக்கும் அலுப்பு வந்து விட்டது. அப்புறம் நான் இங்கே தனியாகவே வருவதற்கு ஆரம்பித்தேன். ஞாயிற்றுக்கிழமை முதலிய விடுமுறை நாட்களில் பிற்பகலில் இங்கு வந்து சுற்றிச் சுற்றி அலைந்து விட்டு இருட்டுவதற்குள் திரும்பி விடுவேன். அம்மாதிரி ஒரு நாள் தனியாக இங்கு வந்திருந்த அன்று தற்செயலாகப் பௌர்ணமியாயிருந்தது. இது நடந்து சுமார் ஒரு வருஷம் இருக்கும். இன்று போல் தான் அன்றும் பூரண சந்திரன் வெள்ளி நிலாவைப் பொழிந்து கொண்டிருந்தான். இந்த இடத்தை விட்டுப் போக மனமில்லாமல் ஏதேதோ ஆகாயக் கோட்டை கட்டிக் கொண்டிருந்தேன். முந்நூறு வருஷத்துக்கு முன்பு இதே நேரத்தில் இந்த பிரதேசம் எவ்வளவு கலகலப்பாய் இருந்திருக்கும். தூரத்திலே கோட்டைக் கதவுகளைச் சாத்துவார்கள்; அரண்மனையில் மேளவாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருக்கும்; குதிரையேறிய கோட்டைக் காவலர்கள் அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருப்பார்கள்; கோயிலில் தீபாராதனை மணி அடித்துக் கொண்டிருக்கும்; மண்டபங்களில் மட மாதர்கள் நடனமாடிக் கொண்டிருப்பார்கள். ராஜகுமாரிகள் அந்தப்புரங்களில் பாதச் சிலம்பு ஒலிக்க நடமாடுவார்கள்… இப்படி நான் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில் திடீரென்று எனக்கு மயிக்கூச்சல் எறிந்தது. இது என்ன ஆச்சரியம்! நிஜமாகவே சதங்கை ஒலி கேட்பது போலிருக்கிறதே? காது கொடுத்துக் கேட்டேன். எங்கேயோ வெகு தூரத்திலிருந்து, ஒரு பெண்மணி பாதச் சிலம்பு கிலுகிலுவென்று சப்திக்க நடந்து வருவதுபோல் ஒரு பிரமை உண்டாயிற்று. அது இந்த உலகத்து ஒலிதானோ? அல்லது வேறு உலகத்தைச் சேர்ந்ததோ? அந்த ஒலியை முன் ஒரு தடவை எப்போதோ, எங்கேயோ, கேட்டிருப்பது போன்ற உணர்ச்சியும் எனக்கு உண்டாயிற்று. ஒரு நிமிஷத்தில் என் உடம்பெல்லாம் சொட்ட நனைந்து போகும்படி வியர்த்துவிட்டது. அந்த மாயையிலிருந்து விடுதலை பெறுவதற்காக தேகத்தை ஒரு குலுக்குக் குலுக்கிக் கொண்டி எழுந்து நின்றேன். விரைந்து ஊர் போய்ச் சேர்ந்தேன். அன்று ராத்திரி நான் ஒரு கண நேரமும் தூங்க வில்லை. காலையில் என்னைப் பார்த்தவர்கள், “என்னப்பா, முகம் இப்படி வெளிறிப் போயிருக்கிறது? பேயடித்தவன் போலிருக்கிறாயே?” என்றார்கள். உண்மையில், நேற்றிரவு பேயுலகத்துக்குப் போய் விட்டுத் தான் நான் திரும்பினேனோ? மறுபடியும் இந்தக் கோட்டைப் பக்கமே வருவதில்லையென்று அன்றைய தினம் தீர்மானம் செய்து கொண்டேன். ஆனால், நாளாக ஆக இந்தத் தீர்மானத்தின் பலம் குறைந்து வந்தது; பௌர்ணமி நெருங்க நெருங்க, இங்கே வரவேண்டுமென்ற என் ஆசையும் வளர்ந்து வந்தது. கடைசியில் அடுத்த பௌர்ணமியன்று அந்த ஆசையை அடக்க முடியாமல் கிளம்பினேன். ஏதோ ஒரு பெரிய சக்தி என்னைப் பிடித்துக் கவர்ந்து இழுப்பதாகவே தோன்றியது. இதே இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டேன். பொன்வட்டத் தகட்டைப்போல் பூரண சந்திரன் மேலே மேலே வந்து கொண்டிருந்தது. அஸ்தமித்து இரண்டு மூன்று நாழிகை ஆயிற்று, ‘சரி, அன்று நாம் கேட்ட சிலம்பொலி வெறும் பிரமைதான்’ என்று எண்ணி எழுந்திருக்க முயன்றேன். ஆனால் பாதி எழுந்தவன் மறுபடியும் உட்கார்ந்து விட்டேன். ஏனெனில், அந்த இனிய சிலம்பொலி அப்போது கேட்கத் தொடங்கியது. முதலில் வெகு தூரத்தில் வேறு லோகத்திலிருந்தே வருவது போலிருந்தது நேரம் ஆக ஆக, நெருங்கி வருவது போல் தோன்றியது. அதற்குமேல் என்னால் அங்கிருக்க முடியவில்லை. எழுந்திருந்து ஓடத் தொடங்கினேன். சிலம்பொலி என்னைப் பின் தொடரவில்லையென்று தெரிந்த பிறகு, கொஞ்சம் சாவதானமாக நடந்தேன். ஆனாலும், ஊர்ப் போய்ச் சேரும் வரையில் என் உடம்பு நடுங்கிக் கொண்டுதானிருந்தது. பிறகு, இங்கே வரக்கூடாதென்ற எண்ணத்தை முழுதும் விட்டு விட்டேன். சாவகாசம் கிடைத்த போதெல்லாம் வரத் தொடங்கினேன். அடிக்கடி பல தடவைகளில் வந்தும் அந்த மாதிரி அநுபவம் எதுவும் ஏற்படாத படியால் ஏமாற்ற மடைந்தேன். ஒரு வேளை பௌர்ணமிக்கும் அந்தச் சிலம்பொலிக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ என்ற சந்தேகத்தினால், அடுத்த பௌர்ணமியன்று போனேன். சந்தேகம் உறுதியாயிற்று. முன் போலவே, சிறிது நேரத்துக்கெல்லாம் சிலம்பொலி கேட்டது. இம்முறை நான் எழுந்து போகவில்லை. என்ன தான் நடக்கிறது என்று பார்க்கத் தீர்மானித்து உட்கார்ந்திருந்தேன். சிலம்பின் ஒலி நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. எனக்கு முன்னால் அதோ அந்தப் படியண்டை வந்ததும் சப்தம் நின்றது. அந்த ஒலி நெருங்கி வந்த போது, ஓர் அபூர்வ பரிமள வாசனை பரவி வந்ததாகத் தோன்றியது. சந்தன வாசனை மாதிரி இருந்தது. ஆனால் மிக மிக இலேசாயிருந்தது. அது வாசனை தானா? அல்லது வாசனையின் ஞாபகமா? எனக்குத் தெரியவில்லை. சிறிது நேரம் நான் மெய்ம்மறந்து சிலை போல் உட்கார்ந்திருந்தேன். பிறகு, சற்று முன் நின்ற இடத்திலிருந்து மறுபடி சிலம்பின் ஒலி கேட்க ஆரம்பித்தது. அது படிகளின் மீது ஏறுவது போலவும் எனக்குப் பின்னால் இருந்த மேல் படியில் வந்து நிற்பது போலவும் தோன்றியது. அந்த மிருதுவான சந்தனவாசனை என்னை முற்றும் சூழ்ந்து கொண்டது. தேகத்தின் ஒவ்வொரு ரோமத் துவாரம் வழியாகவும் நான் அந்த இன்ப மணத்தை அநுபவித்தேன். இப்படி எத்தனை நேரம் மதி மயங்கி இருந்தேனோ தெரியாது. என் தலைக்கு மேலே வெகு சமீபத்தில், இருதயத்தைப் பிளக்கும்படியான ஒரு விம்மல் சத்தம் கேட்டது. அடுத்த விநாடி என் மீது சலசலவென்று நீர்த்துளிகள் விழுந்தன. அளவிலாத திகில் கொண்டவனாய்த் தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்திருந்தேன். அப்படி எழுந்திருந்த போது என் மேலே மிக மிருதுவான பட்டுத்துணி உராய்வது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. பிறகு இவ்விடத்தில் நிற்பதற்குத் தைரியமில்லாமல், அவசரமாய்ப் படிகளில் இறங்கத் தொடங்கினேன். போகும்போது உடம்பெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. மறு பௌர்ணமி எப்போது வரப் போகிறதென்று காத்திருந்தேன். அன்று ஏன் அவ்வளவு அவசரப்பட்டு எழுந்து வந்தோம் என்று என்னை நானே நிந்தித்துக் கொண்டிருந்தேன். அடுத்த பௌர்ணமியும் வந்தது. வழக்கம் போல் இந்தப் படியில் வந்து உட்கார்ந்திருந்தேன். அன்று சதங்கையொலி ரொம்பவும் தயங்கித் தயங்கி வந்ததாகத் தோன்றியது. எனக்கு முன்னால் சற்று நின்றது. பிறகு மேலே ஏறி, எனக்குப் பின்னால் போய் நின்றது. முன் போலவே, அந்த இனிய சந்தன வாசனை என்னைச் சூழ்ந்தது. ஆனால் முன் தடவையைப் போல் இலேசாக இல்லை. சந்தேகமற உணர்ந்து அநுபவிக்கக் கூடியதாயிருந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் பூப்போன்ற மெல்லிய கரங்களால் யாரோ என் தோள்களைக் கட்டித் தழுவுவது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. தலையிலிருந்து கால் வரையில் நான் புளங்காகிதங் கொண்டேன். அந்த ஸ்பரிசம் அவ்வளவு உண்மையாகத் தோன்றியபடியால் தழுவிய கைகளைப் பிடித்துக் கொள்ள என் கரங்களை உயர்த்தினேன். ஆனால் என் கைகள் ஒன்றையும் பிடிக்கவில்லை. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். வெறும் வெட்ட வெளிதான் இருந்தது. அப்படியே நான் மூர்ச்சையடைந்து விழுந்திருக்க வேண்டும். எனக்கு மூர்ச்சை தெளிந்த போது சந்திரன் ஆகாயத்தில் வெகு தூரம் உயர வந்து விட்டது. தள்ளாடிக் கொண்டு நடந்து வீடு சென்றேன். என்னை இன்பப் பரவசத்தில் ஆழ்த்தி மூர்ச்சடையச் செய்த அந்த ஆலிங்கனத்தை நினைக்கும் போதெல்லாம் மயிர்க் கூச்சல் உண்டாயிற்று. மறுநாள் சூரியோதயம் ஆனபோது முதல் நாள் மாலை அனுபவம் வெறும் பொய்யென்று தோன்றிற்று. எனக்கு ஏதோ சித்தப் பிரமைதான் உண்டாகி நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறதென்று நினைத்து, பயந்து போனேன். இனி மேல், இந்தக் கோட்டைப் பக்கம் வரக் கூடாதென்றும் உறுதி செய்து கொண்டேன். ஆனால், அந்த உறுதி வெகு சீக்கிரத்திலேயே குலைந்து போயிற்று. அன்று பள்ளிக்கூடத்துக்குப் போனதும் பிள்ளைகள் சிலர், “ஏன், ஸார்! உங்களிடம் என்ன சார் சந்தன வாசனை கம்மென்று வருகிறதே! எங்கேயாவது கல்யாணத்துக்குப் போயிருந்தீர்களா?” என்றார்கள். ஆகவே, என்னுடைய அனுபவம் வெறும் பிரமையல்ல; மயக்கமல்ல. உண்மையாகவே, பிரதி பௌர்ணமியும் ஒரு மாயரூப மோஹினி என்னைத் தேடி வருகிறாள். அவள் யார்? எப்படிப் பட்டவள்? எதற்காக இந்த ஏழை உபாத்தியாயரைத் தேடி வருகிறாள்? என்றாவது ஒரு நாள் அவளை ரூபத்துடன் நான் காண்பேனா? இந்த அற்புத அனுபவத்தின் மர்மம் இன்னதென்பதைத் தெரிந்து கொள்வேனா? இதற்குப் பதில் அடுத்த பௌர்ணமியன்று எனக்குக் கிடைத்தது. அன்று வழக்கம்போல் சதங்கையொலி கேட்டதும் நான் ஒலி வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தேன். மெய் சிலிர்த்துத் திகைத்துப் போனேன். உண்மையாகவே ஒரு பெண்ணுருவம் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அவ்வுருவம் நடந்து வருவதாகத் தோன்றவில்லை; காற்றில் மிதந்து வருவதாகத் தோன்றியது. அது உண்மை உருவந்தானா? அல்லது, உரு வெளித் தோற்றமா? அருகில் நெருங்க நெருங்க, ஒரு நிஜப் பெண் தான் வருகிறாள் என்று நிச்சயமாயிற்று. படங்களிலே நாம் பார்த்திருக்கும் ராஜபுத்திர கன்னிகைகளைப் போல் அவள் பாவாடையும் தாவணியும் அணிந்திருந்தாள். ஆபரணங்களும் அம்மாதிரியே இருந்தன. தாவணியின் தலைப்பைத் தலையில் முக்காடுப் போட்டுக் கொண்டிருந்தாள். வெண்ணிலாவின் ஒளி அவள் முகத்தில் பட்டபோது, உண்மையில் அந்த முகத்திலிருந்து தான் நிலவொளி வீசுகிறதோ என்று தோன்றியது. அருகில் அவள் நெருங்க நெருங்க, முகம் தெரிந்த முகம் போல் காணப்பட்டது. எப்போதோ, எங்கேயோ, அவளை நான் பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். குலாவியிருக்கிறேன். ஆனால் எங்கே? எப்போது - இப்படி நான் சிந்தித்துக் கொண்டிருக்கையிலே, அவள் என் அருகில் வந்து நின்றாள். அவளுடைய பரந்த கண்களால் என்னை நிமிர்ந்து பார்த்தாள். அந்தக் கண்களில் ததும்பிய நீர்த்துளிகள் வெண்ணிலவில் முத்தைப் போல் பிரகாசித்தன. அப்படிப் பார்த்த வண்ணம், ‘குமார்! என்னை ஞாபகம் இருக்கிறதா?’ என்று கேட்டாள். அந்த இனிய குரல் என் காதில் விழுந்ததும், என் இருதயம் விம்மி வெடிப்பது போலிருந்தது. எப்போதோ ஒரு சமயம், அவளுடைய கையை நான் பிடித்துக் கொண்டு ’இந்த ஜன்மத்தில் மட்டும் அல்ல, ஏழேழு ஜன்மத்திலும் உன்னை நான் மறவேன்; இது சத்தியம்!" என்று அவளுக்கு வாக்கு கொடுத்தது மிகப் பழைய ஒரு கனவைப் போல் ஞாபகம் வந்தது. அவளுடைய கேள்விக்கு ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தேன். அந்தக் கணத்தில் ஸ்மரணையற்றுக் கீழே விழுந்தேன்…" குமாரஸ்வாமி சொன்ன கதையை ஏட்டில் படிக்கும் போது உங்களுக்கு நம்பிக்கை உண்டாகிறதோ, என்னவோ, தெரியாது. ஆனால் எனக்கென்னவோ அவன் சொல்லி வந்த போது எல்லாம் நிஜமாகவே தோன்றிக் கொண்டிருந்தது. அந்த இடமும் அந்த நேரமும் சேர்ந்து அப்படி என்னை மயக்கியிருக்க வேண்டும். தான் மூர்ச்சையடைந்த கட்டத்தில் குமாரஸ்வாமி கதையை நிறுத்தி விட்டு எழுந்திருந்து நின்றான். நாற்புறமும் ஒரு தடவை சுற்றிப் பார்த்தான். பிறகு, மறுபடியும் உட்கார்ந்தான். “அப்புறம் என்ன நடந்தது?” என்று ஆவலுடன் கேட்டேன். குமாரஸ்வாமி தொடர்ந்து சொல்லத் தொடங்கினான். "எனக்கு மூர்ச்சை தெளிந்தபோது, ஒரு பெண்ணின் மடியில் நான் தலையை வைத்துப் படுத்திருப்பதையும் அவள் தன் மென்மையான கரங்களால் என் நெற்றியைத் தடவிக் கொண்டிருப்பதையும் உணர்ந்தேன். உடனே துள்ளி எழுந்து சற்று விலகி உட்கார்ந்தேன். “குமார்! ஏன் என்னைக் கண்டு பயப்படுகிறீர்கள்? என்னை ஞாபகம் இல்லையா? நான் தான் உங்கள் மாலதி,” என்று அவள் கூறியது இனிய சங்கீதம் போல என் செவியில் விழுந்தது. மாலதி! மாலதி! - எவ்வளவு இனிமையான பெயர்! என் மனதுக்குள் நாலு தடவை சொல்லிப் பார்த்துக் கொண்டேன். ‘நினைத்துப் பாருங்கள், குமார்! இதே மாதிரி பால் போல் நிலவு எரித்த ஒரு பௌர்ணமியில், இதே இடத்தில் நீங்கள் என்னிடம் விடைபெற்றுக் கொள்ளவில்லையா? என்னை மறக்காதீர்கள் என்று நான் சொன்னேன். இந்த ஜன்மத்தில் மட்டுமல்ல, ஏழேழு ஜன்மத்திலும் மறக்க மாட்டேன் என்று என் கையில் அடித்து, சத்தியம் செய்து கொடுத்தீர்கள். ஞாபகம் இல்லையா?’ என்று மாலதி கேட்டாள். நான் மூர்ச்சையடைவதற்கு முன்பு இந்தக் காட்சிதான் புகையுண்ட சித்திரம்போல் என் மனக் கண்ணின் முன் தோன்றிற்று என்று சொன்னேனல்லவா? அவளும் அதைச் சொன்னது, அது வெறும் தோற்றமல்ல - உண்மையில் நடந்த சம்பவம் என்பது எனக்கு நிச்சயமாயிற்று. மாலதியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தேன். கங்கு கரையில்லாத பிரேமையுடன் என்னை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய விரிந்த கண்களில் கண்ணீர் ததும்பி நிற்பதையும் கண்டேன். என் உள்ளம் உருகிற்று. அவளுடைய கரத்தைப் பிடித்துக் கொண்டு ‘ஞாபகம் இருக்கிறது. மாலதி! அந்த வாக்குறுதியை இன்னொரு தடவையும் அளிக்கிறேன். உன்னை ஏழேழு ஜன்மத்திலும் மறக்கமாட்டேன்,’ என்றேன். பிறகு, அவள் கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடைய பூர்வ சரித்திரத்தை ஞாபகப்படுத்தினாள். அவள் சொல்லச் சொல்ல, முந்நூறு வருஷத்துக்கு முந்திய அந்தச் சம்பவங்கள் எல்லாம், தெளிவில்லாத ஒரு பழைய கனவைப் போல் எனக்கு ஞாபகம் வந்தன." குமாரஸ்வாமி இங்கே நிறுத்தி, “இந்தச் செஞ்சிக் கோட்டையின் பூர்வ சரித்திரத்தைப்பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” என்று கேட்டான். “இங்கே தேசிங்குராஜா என்று ஒருவன் இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். வேறொன்றும் தெரியாது,” என்றேன். தேசிங்குராஜன் கதை வெறும் கட்டுக்கதை. அதற்குச் சரித்திரத்தில் ஆதாரம் கிடையாது. நானோ உண்மைச் சம்பவத்தைக் கூறப் போகிறேன். சுமார் முந்நூறு வருஷங்களுக்கு முன்பு இந்தச் செஞ்சியில் பிரிதிவிசிங் என்னும் ராஜா இருந்தார். அவர் வீர ராஜபுத்திர வம்சத்தவர். அவருடைய முன்னோர் ஒருவர் டில்லியில் பட்டாணியர் ஆண்ட காலத்தில் அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருக்க மனமில்லாமல் தெற்கு நோக்கி வந்து இந்தக் கோட்டையைக் கட்டிக் கொண்டாராம். இந்தக் கோட்டையையும், இதைச் சுற்றியுள்ள சிறு பிரதேசத்தையும் அந்த வம்சத்தார் சுதந்திரமாக ஆண்டு வந்தார்கள். மொகலாய சைன்யங்களால் பலமுறை முயன்றும் இந்தக் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை. பிரிதிவிசிங்கும் சுதந்திர ராஜாவாக இந்தச் சிறு ராஜ்யத்தை ஆண்டு வந்தார். அந்த ராஜாவுக்கு ஒரு புத்திரி இருந்தாள். அவளுடைய பெயர், மாலதி. குழந்தைப் பிராயத்தில் அவளுக்குக் கல்வி கற்பித்த தமிழ் உபாத்தியாயருக்கு ஒரு பிள்ளை இருந்தான். அவனுக்குச் சுகுமாரன் என்று பெயர். குழந்தைகளாய் இருந்தபோது இவர்கள் இருவரும் ஒருங்கே கல்வி பயின்றார்கள். சுகுமாரனுக்குச் சங்கீதத்தில் ரொம்பவும் ஆர்வம் இருந்தது. அவனுக்குக் கொஞ்சம் வயதானதும் தேச யாத்திரை செய்து சங்கீதத்தில் உயர்ந்த பயிற்சி பெற்று வருவதற்காகக் கிளம்பினான். தஞ்சாவூரிலும், விஜய நகரத்திலும் கொஞ்ச காலம் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டான். பிறகு மகாராஷ்டிரத்துக்குப் போய் அப்போது பிரசித்தியாகிக் கொண்டிருந்த அபங்கங்கள் கற்றுக் கொண்டான். அங்கிருந்து டில்லிக்குப் போய் பெயர் பெற்ற தான்சேனுடைய சிஷ்யர்களிடம் இந்துஸ்தானி சங்கீதமும் பயின்றான். அவன் திரும்பி வந்ததும் செஞ்சி ராஜசபையில் அவனுடைய சங்கீதக் கச்சேரி நடந்தது. ராஜகுமாரி மாலதியும் திரைபோட்ட மேன்மாடத்திலிருந்து தன் பால்ய நண்பனுடைய சங்கிதத்தைக் கேட்டாள். இது சுகுமாரனுக்கும் தெரிந்திருந்தது. அதனால் தானோ என்னவோ அன்று அவன் அற்புதமாய்ப் பாடினான். அவனுடைய பாட்டு கேவலம் பூலோகத்துச் சங்கீதமாக இல்லை; நாரதர் தும்புறு முதலிய தெய்வலோகத்து இசைவாணர்கள் இப்படித்தான் பாடுவார்களோ என்று நினைக்கும்படி, தேவகானமாகவே பொழிந்தான். அந்தக் கானத்தைக் கேட்டு சபையோர் அனைவரும் பரவசமானார்கள். ஆனால், எல்லாரிலும் அதிகமாக அந்தக் கானத்தின் இன்பத்தை அனுபவித்தவள் ராஜகுமாரி மாலதிதான். அவள் அந்தத் தெய்வ கீதத்தின் இன்பத்துக்குத் தன்னுடைய இருதயத்தையே பரிசாகக் கொடுத்தாள். சில நாள்களுக்குப் பிறகு சுகுமாரனிடம் தான் சங்கீதம் கற்றுக் கொள்ள விரும்புவதாக மாலதி தகப்பனாரிடம் தெரிவித்தாள். அந்தக் காலத்தில் ராஜகன்னிகைகள் கோஷா அனுசரிப்பார்கள். ஆனால், உபாத்தியாயர் மகன் தானே என்ற எண்ணத்தினாலும் தன்னுடைய அருமை புதல்வியின் விருப்பத்துக்கு மாறு சொல்ல மனமின்றியும் ராஜா சம்மதித்தார். மாலதி, ராஜபுத்திர வம்சத்தினள் ஆனதால் அவளுக்கு இயற்கையாக வடநாட்டுச் சங்கீதத்தில் தான் ஆசை இருந்தது. சுகுமாரனிடம் அவள் இந்துஸ்தானி சங்கீதம் கற்றுக் கொண்டு வந்தாள். பரஸ்பரம் அவர்களுடைய காதலும் வளர்ந்து வந்தது. இந்தக் காதல் விபரீதத்தில் தான் முடியும் என்று சுகுமாரன் பல தடவை எடுத்துச் சொன்னான். ஆனால் மாலதி கேட்கவில்லை. தான் சுகுமாரனைத் தான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும், தகப்பனாரை எப்படியாவது அதற்குச் சம்மதிக்கச் செய்யப் போவதாகவும் சொல்லிக் கொண்டு வந்தாள். இப்படியிருக்கையில், எதிர்பாராத விதத்தில் ஒரு பெரிய ஆபத்து வந்தது. செஞ்சி ராஜாக்களை ஆற்காட்டு நவாபுகள் வெகு காலமாகச் சிநேகிதர்களாக நடத்தி வந்தார்கள். வடக்கேயிருந்து வந்த மொகலாய சைனியங்களுடன் அவர்கள் சண்டையிட்ட காலங்களில் செஞ்சி ராஜாக்களின் உதவியைக் கோரிப் பெற்றார்கள். அவர்களிடம் கப்பம் வாங்குவது கிடையாது. அப்போது ஆற்காட்டில் நவாபாய் இருந்தவர் மாலதியின் ரூபலாவண்யங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். டில்லி பாதுஷாக்கள் சிலர் ராஜபுத்திர கன்னிகைகளை மணந்திருக்கும் விஷயமும் அவருக்குத் தெரிந்திருந்தது. அவர்களைப் போல் தாமும் ஒரு ராஜபுத்திர கன்னிகையை மணக்க வேண்டுமென்று நவாப் தீர்மானித்து, பிரிதிவிசிங்குக்கும் தூது அனுப்பினார். பிரிதிவிசிங்குக்கும் தமக்கும் உள்ள சிநேக பாந்தவ்யத்தை விவாக சம்பந்தத்தின் மூலம் நிரந்தரமாகச் செய்து கொள்ள விரும்புவதாய் அவர் சொல்லி அனுப்பினார். பிரிதிவிசிங் இஷ்டப்பட்டு அவ்விதம் செய்யாவிட்டால், பின்னால் கட்டாயத்தின் மேல் செய்ய வேண்டியதாயிருக்குமென்றும் எச்சரிக்கை செய்தார். செஞ்சியின் மேல் படையெடுப்பதற்கு ஒரு பெரிய சைனியம் தயாராயிருப்பதாகவும் தூதன் தெரியப்படுத்தினான். இந்தச் செய்தி கேட்டதும் பிரிதிவிசிங் அளவிலாத கோபங்கொண்டு துடிதுடித்தார். மந்திராலோசனை சபை கூட்டி, யோசனை கேட்டார். சபையில் யாரும் யோசனை சொல்லத் துணியவில்லை. ராஜகுமாரியை நவாபுக்கு மணம் செய்து கொடுக்க மறுத்தால் யுத்தத்திற்குத் தயாராக வேண்டும். முந்நூறு வீரர்களை வைத்துக் கொண்டு முப்பதினாயிரம் வீரர்கள் அடங்கிய சைனியத்தோடு சண்டை போட முடியுமா? ‘நவாபுக்கு உங்கள் பெண்ணைக் கொடுங்கள்’ என்று சொல்லவும் யாருக்கும் தைரியம் வரவில்லை. இந்த நிலைமையில், உபாத்தியாயரின் புதல்வன் சுகுமாரன் எழுந்து யோசனை கூற முன் வந்தான். நவாபின் கோரிக்கையை மறுத்து விட வேண்டியது தான் என்று அவன் தைரியமாய்க் கூறினான். ‘நவாப் படையெடுத்து வந்தால் வரட்டும். இந்தக் கோட்டைக்குள் இருந்து கொண்டு குறைந்தது ஆறு மாதம் நவாபின் படைகளை எதிர்த்து நிற்கலாம். மகாராஷ்டிரத்தில் சிவாஜி மகாராஜா இந்து தர்மத்தை ரக்ஷிப்பதற்காகக் கிளம்பியிருக்கிறார். அவருக்குச் செய்தி அனுப்பினால் கட்டாயம் நம்முடைய உதவிக்கு வருவார். நானே போய் அழைத்து வருகிறேன்’ என்றான். பிரிதிவிசிங் மிகவும் சந்தோஷமடைந்து சுகுமாரனை மகாராஷ்டிரத்துக்கு அனுப்ப இசைந்தார். மாசிமகத்துப் பௌர்ணமியன்று இரவு மாலதியைச் சுகுமாரன் சந்தித்து, தான் சிவாஜி மகாராஜாவிடம் தூது போகப் போவதைத் தெரிவித்து விடை கேட்டான். இந்தக் காரியத்தைத் தான் செய்து முடித்தால், மகாராஜா மன மகிழ்ந்து மாலதியைத் தனக்கு மணம் செய்து கொடுக்க இசையலாம் என்றும் கூறினான். மாலதிக்கும் இந்த நம்பிக்கை ஏற்பட்டது. ஆனாலும் சுகுமாரனைப் பிரிவது அவளுக்குப் பெருந்துன்பத்தையளித்தது. அப்பொழுது தான் “என்னை மறந்துவிடாதீர்கள்” என்று அவள் மனமுருகிக் கூறினாள். சுகுமாரனும் “ஏழேழு ஜன்மத்திலும் மறக்க மாட்டேன்” என்று சத்தியம் செய்து கொடுத்தான். சுகுமாரன் போய்ச் சில நாளைக்கெல்லாம் பிரிதிவிசிங்குக்கு மற்ற மந்திரிகள் துர்போதனை செய்து அவருடைய மன உறுதியைக் குலைத்தார்கள். ‘சிவாஜியாவது இங்கே வருவதாவது; நடக்காத காரியம். சுகுமாரன் பைத்தியக்காரன்; உலகம் தெரியாதவன்; ஏதோ போயிருக்கிறான். அவன் சிவாஜியைப் பார்ப்பதே நிச்சயமில்லை; நவாபுடன் சமாதானம் செய்து கொள்வதே நலம்,’ என்றார்கள். மாலதியும் ஒரு தவறு செய்தாள். ஒரு நாள் தந்தையிடம் பிரியமாய்ப் பேசிக் கொண்டிருந்த போது சுகுமாரனிடம் தான் கொண்டிருந்த காதலைப் பற்றிச் சொல்லி, தன்னை அவனுக்கே கல்யாணம் செய்து கொடுக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டாள். இதனால் பிரிதிவிசிங்கின் மனம் அடியோடு மாறிவிட்டது. ‘சங்கீதம் சொல்லிக் கொடுக்கும் வியாஜத்தில் இப்படியா என் பெண்ணின் மனத்தை அந்தப்பாவி வசப்படுத்தி விட்டான்!’ என்ற எண்ணம் அவருக்குப் பெரிதும் ஆத்திர மூட்டியது. அதைவிட, நவாபுக்குக் கொடுப்பதே நலம் என்று எண்ணினார். பெரிய பெரிய ராஜபுத்திர மன்னர்கள் ஏற்கெனவே மொகலாயர்களுக்குப் பெண் கொடுத்து வழி காட்டியிருக்கவில்லையா? நாம் மட்டும் கொடுத்தால் என்ன தப்பு? நம்முடைய பெண்ணும் - அவளுடைய அழகுக்கும் சாமர்த்தியத்திற்கும் ஒரு நூர்ஜஹானைப் போல் ஆகலாமல்லவா? இப்படியெல்லாம் நினைத்தார் அந்தப் பேராசை பிடித்தக் கிழவர். தம் குமாரியின் மன விருப்பத்தை அவர் ஒரு பெரிய காரியமாகவே கருதவில்லை. நவாபுக்குத் தம்முடைய சம்மதத்தையும் தெரிவித்து விட்டார். மாலதிக்கு இது தெரிந்தபோது இடியுண்ட நாகத்தைப் போல் துடிதுடித்தாள். ‘ஏழு ஜன்மத்திலும் தன்னை மறப்பதில்லை’ என்று வாக்களித்துவிட்டுப் போன சுகுமாரனுக்குத் துரோகம் செய்து, இன்னொருவனை மணப்பதென்பது அவளால் நினைக்கவே முடியாத காரியமாயிருந்தது. தகப்பனாரிடம் எவ்வளவோ சொல்லி மன்றாடிப் பார்த்தாள். ஒன்றும் பலிக்கவில்லை. கடைசியாக, ஒரு நாள் இரவு, அரண்மனையிலிருந்து யாரும் அறியாமல் எழுந்து சென்று, இந்தக் கோட்டையின் அதிதேவதையான காளி கோயிலுக்குச் சென்றாள். அந்தக் கோயிலுக்கு அருகில் மிக ஆழமான சுனையொன்று இருக்கிறது. அம்மனைத் தியானித்துக் கொண்டே அந்தச் சுனையில் விழுந்து உயிர் துறந்தாள். பிரிதிவிசிங்கிற்கு இந்த விபத்தினால் பைத்தியம் பிடித்து விட்டது. அவருக்கு வேறு புதல்வர்கள் இல்லை. எனவே, கோட்டையை இலேசாக ஆற்காட்டு நவாபு கைப்பற்றிக் கொண்டார். சிவாஜியைக் காணச் சென்ற சுகுமாரன், எவ்வளவோ கஷ்டங்களுக்கெல்லாம் உள்ளாகி கடைசியில் அந்த மகாவீரரை நேரில் கண்டான். அவனுடைய வேண்டுகோளை சிவாஜியினால் நிராகரிக்க முடியவில்லை. அவருக்கும் வெகு காலமாகத் தெற்கு நோக்கி வரவேண்டுமென்ற எண்ணமிருந்தபடியால், ஒரு பெரிய சைனியத்துடன் கிளம்பி வந்தார். கோட்டை ஒரே நாளில் சிவாஜி வசமாயிற்று. ஆனால் சுகுமாரன் கோட்டைக்குள் வரவில்லை. மாலதியின் கதியை அறிந்ததும், அவனுக்கு உலக வாழ்க்கையில் வைராக்கியம் உண்டாகி விட்டது. கையில் சுரைக்காய்த் தம்பூர் ஏந்திய வண்ணம், அவன் உலக அநித்யத்தைப் பற்றியும் காதலின் மேன்மையைப் பற்றியும் பாடிக் கொண்டு தேச சஞ்சாரம் செய்யப் போய் விட்டான். அந்தச் சுகுமாரன் தான் நான். ஆறு ஜன்மத்துக்குப் பிறகு ஏழாவது ஜன்மத்தில் இங்கு வந்து சேர்ந்தேன். சரி, ரொம்ப நேரமாகி விட்டதே! நீங்கள் போக வேண்டாமா? உங்கல் சிநேகிதர்கள் காத்துக் கொண்டிருக்க மாட்டார்களா?" என்றான் குமாரஸ்வாமி. ஆமாம்; ரொம்ப நேரம் ஆகிவிட்டது. வாஸ்தவந்தான். மணி ஏழரை, எட்டுக்கூட இருக்கும். சாலைப் பக்கம் காது கொடுத்துக் கேட்டேன். மோட்டார் ஹாரன் சப்தம் கேட்கவில்லை. குமாரஸ்வாமி முன்பைவிட அதிகப் பரபரப்பு அடைந்திருப்பதையும், நான் அவ்விடம் விட்டு போக வேண்டுமென அவன் விரும்புகிறானென்பதையும் கண்டேன். அவன் கூறியதெல்லாம் உண்மையாயிருக்க முடியுமா? இன்று பௌர்ணமி ஆயிற்றே! ஒரு வேளை அந்த ஆவி உருவ மோகினி இன்றைக்கு இங்கு வருவாளோ? என் கண்ணுக்குக் கூடப் புலப்படுவாளோ? ஒரு பக்கம் எனக்குப் பயமாயிருந்தது; இன்னொரு புறத்தில் உண்மையை அறியாமல் அவ்விடம் விட்டுப் போகவும் மனம் வரவில்லை. “முக்கியமான விஷயம் நீர் சொல்லவில்லையே? சுனையில் விழுந்த மாலதி என்ன ஆனாள்? நீர் ஏழாவது ஜன்மம் எடுத்து வரும் வரையில் அவள் என்ன செய்து கொண்டிருந்தாள்?” என்று கேட்டேன். “ஓஹோ! அதை நான் சொல்லவில்லையே? இப்படித் தான் எனக்குச் சில சமயம் மனம் குழம்பிப் போகிறது,” என்றான் குமாரஸ்வாமி. அப்புறம் அவன் சொன்னது முன்னே கூறியதெல்லாம் தூக்கி அடிப்பதாயிருந்தது. அப்படி நம்பத்தகாததாயிருந்தது. அதோடு கொஞ்சம் முன்பின் குழப்பமாகவும் இருந்தது. அவன் கூறியதை ஒழுங்கு படுத்தி நானே இங்கே சுருக்கமாக சொல்லி விடுகிறேன்:- காளி கோயில் சுனையில் மாலதி விழுந்தால் அல்லவா? விழும்போதே அவளுக்கு ஞாபகம் தவறிவிட்டது. மறுபடி உணர்வு வந்த போது தன்னை காளித்தாய் தன் கரங்களில் ஏந்திக் கொண்டிருப்பதைக் கண்டாள்! ‘குழந்தாய்! என்ன காரியம் செய்தாய்? நரபலி வாங்கிக் கொண்டேன் என்று என்னையல்லவா ஜனங்கள் நிந்திப்பார்கள்? இப்படிச் செய்யலாமா?’ என்று காளிமாதா கூறியது அவள் காதில் விழுந்தது. மாலதி தான் இப்போது சூட்சும சரீரத்தில் இருப்பதையும் உணரவில்லை. முன் போலவே ஸ்தூல தேகங் கொண்டிருப்பதாகவும் காளித்தாய் தனக்கு மரணம் நேராமல் காப்பாற்றியதாகவும் எண்ணினாள். உடனே காளிமாதாவின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். ‘தாயே! ஒரு வரம் எனக்கு கொடுக்க வேண்டும். கொடுத்தால் தான் காலை விடுவேன்’ என்று கதறினாள். தாயார் கொடுப்பதாக வாக்களித்து, ‘என்ன வேண்டும்?’ என்று கேட்டதற்கு, ‘அம்மா, நான் சொல்ல வேண்டுமா? உனக்குத் தெரியாதா? நான் சுகுமாரனையே பதியாக அடைய வேண்டும். இந்த வரந்தான் எனக்கு வேண்டும்’ என்று கோரினாள். அப்போது மாதா அவளுக்கு அவளுடைய உண்மை நிலைமையை உணர்த்தினாள். அவள் தேகத்தை இழந்து விட்டதையும் ஆவி ரூபத்தில் இருப்பதையும் தெரிவித்து, ஆகையால் இன்னொரு ஜன்மம் எடுத்துத் தான் சுகுமாரனைக் கணவனாக அடைய முடியுமென்று சொன்னாள். மாலதி மாதாவின் காலை விடவில்லை. ‘மறு ஜன்மத்தில் எனக்கு ஞாபகம் இருப்பது என்ன நிச்சயம்? அதெல்லாம் முடியாது. இந்த ஜன்மத்தில் நான் இந்த நினைவோடேயே சுகுமாரனை அடைய வேண்டும்’, என்று பிடிவாதம் பிடித்தாள். ‘அப்படியானால், நீ முந்நூறு வருஷம் காத்திருக்க வேண்டும் அத்தனை நாளும் இந்த மலை பிரதேசத்தில் ஆவி ரூபத்தில் அலைய வேண்டும். ஒவ்வொரு விநாடியும் உனக்கு ஒரு யுகமாக இருக்கும். இதற்குச் சம்மதமா?’ என்று காளி அம்மன் கேட்டாள். மாலதி ‘எவ்வளவு யுகமானாலும் காத்திருப்பேன்’ என்றாள். ‘சரி’ அப்படியானால் நீ கேட்கும் வரம் கொடுக்கிறேன்; இந்த ஞாபகத்துடனேயே நீ சுகுமாரனை அவனுடைய ஏழாவது ஜன்மத்தில் அடைவாய். ஒவ்வொரு ஜன்மத்திலும் அவன் இங்கு ஒரு முறை வருவான். நீ அவனைக் காண்பாய்; ஆனால் அவன் உன்னைக் காண மாட்டான். ஏழாவது ஜன்மத்தில் அவன் வரும் போது உன்னுடைய உருவம் அவனுடைய கண்ணுக்குப் புலப்படும். என்னுடைய சந்நிதியில் நீங்கள் கல்யாணம் செய்து கொள்வீர்கள்’ என்று காளி மாதா வரங்கொடுத்தாள். மாலதி அன்று முதல் ஆவி உருவத்தில் செஞ்சிக் கோட்டையில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். அந்தக் கோட்டையில் நடந்த சகல விஷயங்களையும் அவள் பார்த்து வந்தாள். ஆனால் அவளை யாரும் பார்க்கவில்லை. காளி மாதா கூறியது போலவே அவளுக்கு ஒவ்வொரு விநாடியும் ஒரு யுகமாக இருந்தது. நாளுக்கு நாள் சுகுமாரனிடம் அவள் கொண்டிருந்த பிரேமையின் தாபமும் அதிகமாகிக் கொண்டிருந்தது. தேகம் இல்லாதபடியால் கண்ணீர் விட்டு அழ முடியவில்லை. புலம்ப முடியவில்லை. இம்மாதிரி வழிகளில் தாபத்தைத் தணித்துக் கொள்ள முடியவில்லை. அவ்வளவு தாபமும் உள்ளத்துக்குள்ளேயே குமுறி வெடித்துக் கொண்டிருந்தது. காளி மாதாவின் வாக்கின்படி, ஒவ்வொரு ஜன்மத்திலும் சுகுமாரன் ஒரு தடவை செஞ்சிக்கு வந்து கொண்டிருந்தான். அப்போதெல்லாம் மாலதி அநுபவித்த வேதனைக்கு அளவேயில்லை. அவனை இவள் ஒவ்வொரு தடவையும் தெரிந்து கொண்டாள். அவனுக்கு இவள் இருப்பதே தெரியவில்லை. ஆனால், அவனும் கூட அவ்விடம் வந்ததும் இன்னதென்று தெரியாத கிலேசத்தை அடைந்து ஒவ்வொரு முறையும் அவ்விடத்தை விட்டுப் போவதற்குத் தயங்கினான். கடைசியில், சுகுமாரன் இந்த ஏழாவது ஜன்மம் எடுத்து வந்தபோது தான் காளித்தாய் அருளிய வரத்தின் பிரகாரம் அவளுடைய மனோரதம் நிறைவேறிற்று. குமாரஸ்வாமியின் முன்னால் அவள் உருவம் பெற்று வரவும் அவனுடன் வார்த்தையாடவும் முடிந்தது. குமாரஸ்வாமிக்கும் அவள் சொன்னவுடனே அந்தப் பூர்வஜன்ம சம்பவங்கள் எல்லாம் ஒருவாறு ஞாபகத்திற்கு வந்தன. “அவ்வளவுதான் கதை. உங்களுக்கு நேரமாகி விட்டதல்லவா?” என்று சொல்லி எழுந்திருந்தான் குமாரஸ்வாமி. நானும் எழுந்து நின்று, “நீர் வரவில்லையா? இங்கேயே இருக்கப் போகிறீரா?” என்று, கேட்டேன். குமாரஸ்வாமி ஆகாயத்தில் மேலே வந்து கொண்டிருந்த பூரண சந்திரனைப் பார்த்தான். “இன்று பௌர்ணமி என்பது தெரியவில்லையா?” இத்தனை நேரமும் என் மனதில் கொந்தளித்துக் கொண்டிருந்த கேள்வியை இப்போது கேட்டேன். “உம்முடைய மாலதி இப்போது வருவாள் என்று எதிர்பார்க்கிறீரா?” குமாரஸ்வாமி சிரித்தான். “நான் சொன்னதில் உங்களுக்கு நம்பிக்கையே ஏற்படவில்லை போலிருக்கிறது?” என்றான். அந்தச் சமயத்தில், தூரத்தில் கிணு கிணு வென்னும் கால் சதங்கைச் சப்தமும், கைவளையல்கள் குலுங்கும் சப்தமும் கேட்டது. எனக்கு மயிர்க்கூச்செறிந்தது. உடம்பெல்லாம் வியர்வை துளித்தது. சப்தம் வந்த திசையை நோக்கித் திரும்பினேன். சற்றுத் தூரத்தில், செடிகளின் மறைவில் ஒரு பெண் உருவம் காணப்பட்டது. தெரிந்த வரையில் மணப்பெண்ணைப் போல் அந்த உருவத்துக்குச் சிங்காரிக்கப்பட்டிருந்தது. குமாரஸ்வாமி இரண்டே பாய்ச்சலில் அந்தப் பக்கம் பாய்ந்து சென்றான். எனக்கு உடம்பெல்லாம் வெடவெடவென்று நடுங்கிற்று. அதே சமயத்தில் சாலையில் மோட்டார் ஹாரனின் சப்தம் அலறியது. அது கொஞ்ச நேரமாய்ச் சப்தமிட்டுக் கொண்டிருந்திருக்க வேண்டும். எனக்கு அப்போதுதான் காதில் விழுந்தது. மோட்டார் ஹாரனின் சப்தம் வந்த திசையை நோக்கி நான் விரைவாக நடந்தேன். திரும்பிப் பார்க்கப் பயமாயிருந்தது. நிமிஷத்துக்கு நிமிஷம் பயம் அதிகமாயிற்று. சற்று நேரத்துக்கெல்லாம் ஓடத் தொடங்கினேன். சாலைக்கு ஒரு பர்லாங்கு தூரத்தில் நான் வந்த போது என் நண்பர்கள் எதிரில் வந்தார்கள். அவர்களைக் கண்டதும் நான் ஒருவாறு சமாளித்துக் கொண்டேன். ஆனாலும் நான் பயந்து ஓடிவந்திருக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரிந்து போயிற்று. மெதுவாகக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போய் மோட்டாரில் சேர்த்தார்கள். கார் கிளம்பியதும் எனக்குத் தைரியம் உண்டாயிற்று. அவர்கள் வருவதற்கு ஏன் அவ்வளவு தாமதம் என்று கேட்டேன். ஊருக்குள்ளிருந்து கிளம்பிய போது கார் தகராறு செய்ய ஆரம்பித்ததென்றும், ‘ஸ்டார்ட்’ ஆகவில்லையென்றும், அதைக் கிளப்புவதற்கு ரொம்ப நேரம் ஆகிவிட்டதென்றும் சொன்னார்கள். ஆனாலும், அரை மணிக்கு முன்பே அங்கு வந்து விட்டதாகவும், ஹாரன் அடித்து அடித்துப் பார்த்தும் நான் வரக் காணாதபடியால் அவர்கள் பயந்து போய் என்னைத் தேடிவதற்கு வந்ததாகவும் சொன்னார்கள். எனக்கு ஏன் அத்தனை நேரம், வழி தவறி விட்டதா என்று கேட்டார்கள். ஆமாம் என்று நான் சொன்னேன். என்னுடைய அனுபவத்தைக் கூறினால் நம்பமாட்டார்கள். பரிகாசம் செய்வார்கள் என்று பயந்தேன். செஞ்சிக்கு அடுத்தாற்போல் மின்னலூர் என்று ஒரு கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தின் வீதி வழியாக நாங்கள் சென்றபோது அங்கே ஒரு பெரிய கொட்டாரப் பந்தல் வீதியை அடைத்துப் போட்டிருப்பதைப் பார்த்தோம். காரைத் திருப்பி வேறு வழியாகப் போக வேண்டியிருந்தது. அங்கு என்ன விசேஷம் என்று கேட்டதற்கு, அந்த ஊர் ஜமீன்தார் மகளுக்கு அடுத்த வாரத்தில் கல்யாணம் என்றும், அதற்காகப் பந்தல் போட்டிருக்கிறதென்றும் தெரிந்தது. கல்யாணப் பேச்சு வந்ததும், “இன்று ராத்திரி செஞ்சிக் கோட்டையில் ஒரு கல்யாணம் நடக்கும்” என்று நான் வாய் தவறிச் சொல்லிவிட்டேன். உடனே, என் சிநேகிதர்கள் பிடித்துக் கொண்டார்கள். என்ன, என்ன என்று குடைந்து கேட்டதன் மேல் அவர்களுக்கு விவரம் கூறினேன். நான் எதிர்பார்த்தது போலவே அவர்கள் கதையை முழுதும் நம்பவில்லை. ஆனாலும், நான் உடம்பெல்லாம் நடுங்கிக்கொண்டு திரும்பி வந்ததை எண்ணி நான் சொன்னதில் ஏதாவது உண்மை இருக்குமோ என்றும், சந்தேகித்தார்கள். சென்னை சேர்ந்து இரண்டு மூன்று நாளைக்கெல்லாம் என்னுடைய செஞ்சி அனுபவத்தில் எனக்கே சந்தேகம் உண்டாகி விட்டது. வேறு காரியங்களில் மனத்தைச் செலுத்தி அதை மறப்பதற்கு முயன்றேன். மூன்றாம் நாள் மாலை வெளியான தினசரிப் பத்திரிகைகளில் ஒரு மூலையில் பிரசுரிக்கப்பட்டிருந்த பின்வரும் செய்தி எனக்குச் செஞ்சியை மறுபடியும் நினைவூட்டியது. ஒரு பரிதாப சம்பவம் "பிரசித்தி பெற்ற செஞ்சிக் கோட்டையில் நேற்றுப் பௌர்ணமியன்று மிகவும் பரிதாபமான ஒரு சம்பவம் நடந்தது. அன்று இரவு அங்கேயுள்ள அம்மன் கோயிலுக்கு முன்னால், சுனையின் கரையில் ஒரு வாலிபனும், ஓர் இளம் பெண்ணும் தற்கொலை செய்து கொண்டு மாண்டார்கள். அவர்கள் நஞ்சு அருந்தி உயிர் விட்டிருக்க வேண்டுமென்று வைத்திய பரிசோதனையில் வெளியாயிற்று. இளைஞன் இவ்வூர் எலிமெண்டரி பாடசாலையில் உபாத்தியாயர். சமீபத்தில் அவனுக்கு வேறு ஊருக்கு மாற்றல் உத்தரவு வந்திருந்ததாம். காலஞ்சென்ற பெண் இவ்வூர் ஜமீன்தார் சேஷாசல ரெட்டியாரின் ஏக புதல்வி. இந்தப் பெண்ணுக்கு அடுத்த வாரத்தில் கல்யாணம் நடக்க ஏற்பாடாகியிருந்ததென்பது குறிப்பிடத் தக்கது. குமாரஸ்வாமி என்கிற அந்த இளைஞனும் இந்தப் பெண்ணும் பரஸ்பரம் காதல் கொண்டிருந்தார்களென்றும், அவர்களுடைய கல்யாணத்துக்கு ஜமீன்தார் சம்மதிக்காமல் வேறு பணக்கார இடத்தில் பெண்ணைக் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தபடியால் இந்த விபரீத சம்பவம் நேர்ந்ததென்றும் சொல்லப்படுகிறது. அந்த இளங் காதலர்களின் பரிதாப முடிவைக் குறித்து எல்லாரும் வருத்தப் பட்டாலும் ‘இந்தக் காலத்திலும் இப்படிப்பட்ட காதல் உண்டா?’ என்று அதிசயத்துடன் பேசிக் கொள்கிறார்கள்…" இந்தச் செய்தியைப் படித்ததும், சாதாரணமாய்க் கல் நெஞ்சனென்று பெயர் வாங்கிய என் கண்களிலிருந்து கலகலவென்று நீர் பொழிந்தது. அந்த இளங் காதலர்களின் அகால மரணத்தினால் விளைந்த துக்கத்துடன், “ஆகா! தமிழ்நாடு ஓர் அபூர்வ கதாசிரியனையல்லவா இழந்துவிட்டது!” என்று எண்ணியும் வருந்தினேன். அடப் பாவி! என்னிடம் மட்டும் கதை சொல்லாமல் உண்மையைச் சொல்லியிருக்கக் கூடாதா? அப்படிச் சொல்லியிருந்தால், “அசட்டுப் பிள்ளை! காதல், பிரேமை என்பதெல்லாம் மூன்று நாள் பைத்தியம்! தேசத்துக்காக உயிரைக் கொடுத்தாலும் புண்ணியம் உண்டு,” என்று உபமான உபமேயங்களுடன் புத்தி சொல்லிக் காப்பாற்றியிருப்பேனே? 4. இமயமலை எங்கள் மலை புது டில்லியில் இந்திய சர்க்காரின் காரியாலயம் ஒரு பெரிய சமுத்திரம். அந்தச் சமுத்திரத்தில் ஒரு பெரிய திமிங்கிலம் போன்றவர் ஸ்ரீயக்ஞசாமிஐயர். மாதச் சம்பளம் அவருக்கு இரண்டாயிரம் ரூபாய். பெரிய பங்களாவில் வசித்தார். பெரிய கார் வைத்திருந்தார். அந்தக் காரின் ஹாரன் போடும் பெரிய சத்தம், “இதோ, ராவ் பகதூர் யக்ஞசாமி வருகிறார் பராக்! பராக்!” என்று அலறுவது போலத் தொனிக்கும். யக்ஞசாமி ஐயரின் குமாரி ஹேமாவதி அறிவில் கலைமகளையும், திருவில் லக்ஷ்மியையும் நிகர்த்திருந்தாள். எஸ்.பி.சிவனுடைய கண்களுக்கு அவள், சௌந்தரிய தேவதையாக விளங்கினாள். எஸ்.பி.சிவன் மேற்படி இந்திய சர்க்கார் காரியாலயமாகிய சாகரத்தில் ஒரு சிறு மீனை நிகர்த்தவன். அதாவது டைப் அடிக்கும் குமாஸ்தா. சம்பளம் மாதம் ரூபாய் எண்பது. பஞ்சப்படி ரூபாய் பதினாறு. ஆனாலும் அவனுடைய வாழ்க்கை உற்சாகத்தைப் பார்த்தால் ஏதோ சமஸ்தானத்தின் பட்டத்துக்குரிய இளவரசன் என்று தோன்றும். சங்கீதம், நடனம், நாடகம், முதலிய கலைகளில் அவனுக்கிருந்த ஆர்வமே அத்தகைய வாழ்க்கை உற்சாகத்தை அளித்தது. புதுடில்லி அகில இந்திய ரேடியோவில் நடைபெறும் நாடகங்களில் அவன் அடிக்கடி ஏதாவது ஒரு பாத்திரமாக நடிப்பதுண்டு. வேறு எந்தப் பாத்திரமாகவும் நடிக்க முடியாவிட்டால் பல பேர் சேர்ந்து சிரித்தல், கை தட்டுதல் ஆகியவற்றிலாவது அவன் அவசியம் சேர்ந்து கொள்வான். யக்ஞசாமி ஐயரின் புதல்வி ஹேமாவுக்குச் சங்கீதம் வரும். புதுடில்லி ரேடியோவில் கர்நாடக சங்கீதத்தைக் கொலை செய்ய வேண்டிய அவசியம் நேரும் போதெல்லாம் ஹேமாவதியை அவசியம் அழைத்து விடுவார்கள். யக்ஞசாமி ஐயருக்கே, தம்முடைய மோட்டார் ஹாரனின் சத்தத்துக்கு அடுத்தபடியாக ஹேமாவின் குரல்தான் அதிகம் பிடிக்கும். தம் குமாரியின் சங்கீதக் கலைத் திறமையைப் பற்றி அவருக்கு அசாத்தியப் பெருமை. எனவே, ரேடியோக்காரர்கள் ஹேமாவைப் பாடுவதற்கோ, ஏதாவது கதம்ப நிகழ்ச்சியில் ஈடுபடுவதற்கோ அழைக்கும் போதெல்லாம் யக்ஞசாமி ஐயர் தாமே பெருமித மகிழ்ச்சியுடன் ஹேமாவதியை ரேடியோ நிலையத்துக்கு கொண்டு போய் விடுவார். ரேடியோவில் ஹேமாவதிக்குக் கச்சேரி என்றால் ஒரு வாரம் முன்னாலிருந்து வீட்டில் ஒரே ரகளையாயிருக்கும். ஹேமாவதி காலில் ‘ஸிலிப்பர்’ போடாமல் வெறுந்தரையில் நடக்கக் கூடாது; குளிர்ந்த நீர் சாப்பிடக் கூடாது; கொஞ்சம் தொண்டையைக் கனைத்துவிட்டால் போதும், உடனே டாக்டரை அழைத்துவரக் கார் பறக்கும். கழுத்தில் ஓயாமல் கம்பளி மப்ளரைச் சுற்றிக் கொண்டேயிருக்க வேண்டும். தப்பித் தவறி தும்மி விட்டால், “ஐயோ குழந்தை தும்முகிறாளே, ரேடியோக் கச்சேரி இருக்கிறதே!” என்று வீட்டில் எல்லோரும் தவித்துப் போவார்கள். இவ்வளவு சர்வ ஜாக்கிரதையாக ஹேமாவின் குரலைக் கவனித்துக் கொண்டு வந்த யக்ஞசாமி ஐயர், அவளுடைய உள்ளத்தைப் பற்றிக் கொஞ்சம் அலட்சியமாயிருந்து விட்டார். ரேடியோ நிலையத்தில் அடிக்கடி ஹேமாவதியும் எஸ்.பி.சிவனும் சந்திக்க நேரிட்டது. இந்தச் சந்திப்புகளின் காரணமாக, ஒருவருடைய இருதயத்தில் ஒருவர் இடம் பெற்றுவிட்டார்கள். விஷயம் முற்றி வளர்ந்து ஒருவரையொருவர் கலியாணம் செய்து கொள்வது என்று தீர்மானித்து விட்டார்கள். இந்தச் செய்தி புதுடில்லியிலிருந்த தென்னிந்திய சமூகம் முழுவதற்கும் தெரிந்த பிறகு, யக்ஞசாமி ஐயருக்கும் தெரிந்து விட்டது. உடனே அவர் ரௌத்ராகாரம் அடைந்து, “புதுடில்லி ரேடியோவும் கர்நாடக சங்கீதமும் எக்கேடாவது கெட்டுப் போகட்டும்; ஹேமாவதியை இனி அங்கு அனுப்புவதில்லை!” என்று முடிவு செய்து விட்டார். ஸ்ரீ எஸ்.பி.சிவனுக்கு இந்த விவரம் தெரிந்த போது அவன் வெந்நீரில் விழுந்த மீனைப் போல் துடிதுடித்தான். கடைசியாக ஒருவாறு ஐயரிடம் நேரிலேயே வந்து ஹேமாதியைத் தன் வாழ்க்கைத் துணைவியாக அருளும்படி கோரினான். யக்ஞசாமி ஐயர் அவனைப் பார்த்து, “நீ என்ன படித்திருக்கிறாய்?” என்று கேட்டார். “ஷேக்ஸ்பியர், மில்டன், கோல்ட்ஸ்மித், ஷெல்லி, காளிதாசன், கம்பன், டாகூர், பாரதி இவர்களுடைய கவிதைகளையெல்லாம் படித்திருக்கிறேன்” என்றான் சிவன். “அதைக் கேட்கவில்லை. எந்தப் பரீட்சை பாஸ் செய்திருக்கிறாய்?” என்று கேட்டார். “எஸ்.எஸ்.எல்.சி., இண்டர்மீடியட், பி.ஏ.யில் முதல் பார்ட், ஷார்ட் ஹாண்ட், டைப்ரைட்டிங் பரீட்சைகளில் பாஸ் செய்திருக்கிறேன்” என்றான் சிவன். “வெறும் அரட்டைக் கல்லியாயிருக்கிறாய்; சொத்து, சுதந்திரம், நிலம், புலம் ஏதாவது உண்டா?” என்று கேட்டார். “நிலம் புலன் ஏராளமாய் உண்டு. ஆயிரம் மைல் அகலம், இரண்டாயிரம் மைல் நீளம் உள்ள இமயமலை என்னுடையதுதான்!” என்று ஒரே போடாய்ப் போட்டான் சிவன். “என்னப்பா உளறுகிறாய்? இமயமலை உன்னுடையதா?” “ஆம் ஐயா! மகாகவி பாரதியார் அப்படிப் பாடியிருக்கிறாரே, தெரியாதா? ‘மன்னும் இமயமலை எங்கள் மலையே!’ என்னும் வரகவி வாக்கு பொய்யாகுமா?” “ஆமாம், ‘மன்னும் இமயமலை எங்கள் மலையே’ என்று பாடிய அதே பாரதியார், ‘இன்னறு நீர்க் கங்கை ஆறெங்கள் ஆறே’ என்றும் பாடியிருக்கிறார். ஆகையால் கங்கை ஆற்றுக்கு நேரே போய் அதில் விழுந்து விடு!” என்றார் யக்ஞசாமி ஐயர். இதையெல்லாம் கதவுக்குப் பின்னாலிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஹேமாவதி விம்மி விம்மி அழுதாள். அவள் தன்னுடைய மை தீட்டிய கண்களைத் துடைத்துத் துடைத்துப் பன்னிரெண்டு கைக்குட்டைகள் பாழாய்ப் போயின. ஆனாலும் என்ன பயன்! சிவன் கங்கையில் விழுவதை அவளால் தடுக்க முடியுமா? அல்லது அப்படி விழுந்தவனைக் காப்பாற்றத் தான் முடியுமா? அவளுக்கு நீந்தத் தெரியாதே! மேலும் கங்கை நீர் மிக்க குளிர்ச்சியாக ஜில்லென்று இருக்கும் என்று அவள் கேள்விப்பட்டிருந்தாள். அப்படிப்பட்ட குளிர்ந்த நீரில் கால் பட்டால் குரல் என்னத்துக்கு ஆகும்? கர்நாடக சங்கீதம் என்ன கதி ஆவது? ஹேமாவதி தனக்குக் கிட்ட மாட்டாள் என்று நிச்சயமானதும், எஸ்.பி.சிவனுக்கு உண்மையிலேயே வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு விட்டது. யக்ஞசாமி ஐயர் சொன்னபடி செய்து விடுவது என்று அவன் தீர்மானித்தான். உத்தியோகத்தை சம்பளம், பஞ்சப்படி உள்பட ராஜினாமா செய்துவிட்டுப் புறப்பட்டான். கங்கையின் உற்பத்தி ஸ்தானமாகிய கங்கோத்ரிக்கே போய் விழுந்து உயிரை விடுவதென்று யாத்திரை தொடங்கினான். கங்கோத்ரிக்குப் போகும் வழியில் இமயமலைச் சாரலில் அவன் பிரயாணம் செய்யும்படி நேரிட்டது. வெள்ளிப் பனிமூடிய இமயமலையின் ஆயிரமாயிரம் சிகரங்களைப் பார்க்கப் பார்க்க, அவனுக்குக் கங்கையில் விழுந்து உயிரை விடுவதில் அவ்வளவு உற்சாகம் ஏற்படவில்லை. மேலும் கங்கோத்ரியில் முழங்கால் அளவு தண்ணீர் ஓடியதாலும் அதுவும் பனிக்கட்டியைப் போல் சில்லென்று இருந்த படியாலும் அங்கே கங்கையில் விழுவதற்கு அவன் இஷ்டப்படவில்லை. “மன்னும் இமயமலை எங்கள் மலையே!” என்று பாரதியார் நமக்கெல்லாம் பட்டயம் எழுதி வைத்திருக்கிறார். அத்தகைய அற்புத மலைப் பிரதேசத்தை இன்னும் கொஞ்ச நேரம் சுற்றிப் பார்க்க விரும்பினான். அப்படிப் பார்த்துக் கொண்டே சில காலத்துக்கெல்லாம் அழகுக்குப் பெயர் போன காஷ்மீர தேசத்துக்குப் போய்ச் சேர்ந்தான். காஷ்மீரத்தைப் பார்த்த பிறகு உயிரை விடும் எண்ணம் அவனுடைய உள்ளத்தை விட்டு அடியோடு அகன்றது. இந்த உலகத்தில் பார்த்து அனுபவிக்க இவ்வளவு சௌந்தர்யங்கள் இருக்கும்போது, எதற்காக உயிரை விட வேண்டும்? ஹேமாவதியும் இந்தச் சௌந்தர்யங்களையெல்லாம் பார்த்து அனுபவிக்கத் தன்னுடன் இருந்தால் நன்றாய்த்தானிருக்கும்! அவளுக்குக் கொடுத்துவைக்கவில்லை; அவ்வளவுதான்! போயும் போயும் யக்ஞசாமி ஐயரின் பெண்ணாகப் போய்ப் பிறந்தாளே! என்ன துரதிர்ஷ்டசாலி! ஆனால் அங்கே புது டில்லியில் ஸ்ரீ யக்ஞசாமி ஐயருக்கு அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிருஷ்டமாக அடித்துக் கொண்டிருந்தது. எல்லைப்புற மாகாணத்தின் வரவுசெலவுக் கணக்கு மிக்க மோசமாயிருந்தபடியால், அதைப் பரிசீலனை செய்து ஒழுங்கு படுத்துவதற்காக ஸ்ரீ யக்ஞசாமி ஐயரை மாதம் நாலாயிரம் ரூபாய் சம்பளத்தில் விசேஷ உத்தியோகஸ்தராக இந்திய சர்க்கார் நியமித்தார்கள். ஸ்ரீ யக்ஞசாமி ஐயர் குடும்பத்துடன் ராவல்பிண்டிக்குப் போய்ச் சேர்ந்தார். மாதம் நாலாயிரம் ரூபாய் சம்பளம், ஐந்து மாதம் வாங்கிய பிறகு, எல்லைப்புறமெங்கும் கலகம் மூண்டது. ஹிந்துக்களைப் பூண்டோ டு ஒழிக்கக் கங்கணங் கட்டிக் கொண்டு மலைச் சாதியார் துராக்கிரஹப் போர் துவங்கினார்கள். “உயிர் போனாலும் பாதகமில்லை; சம்பளம் பென்ஷன் எல்லாம் போய் விடுமே” என்று யக்ஞசாமி ஐயர் கவலை அடைந்தார். அதிக நாள் கவலைப்படுவதற்குள்ளே ராவல்பிண்டியை நோக்கிக் காட்டுமிராண்டிகள் படையெடுத்து வருவதாகத் தெரிந்தது. தன் மனைவி மக்களை அழைத்துக் கொண்டு ஸ்ரீ யக்ஞசாமி ஐயர் தம்முடைய சொந்தக் காரில் அவசரமாகப் புறப்பட்டார். வழி தெரியாமல் தட்டுத் தடுமாறி, பல அபாயங்களுக்குத் தப்பித்துக் கடைசியில் பெட்ரோல் இன்றி வண்டியை ஓரிடத்தில் நிறுத்த வேண்டியதாயிற்று. நல்ல வேளையாக வண்டி நின்ற இடத்துக்குப் பக்கத்தில் காஷ்மீரத்தின் எல்லையிருந்தது. எவ்வளவோ கஷ்டங்களுக்கு உள்ளாகிப் பல மலைத்தொடர்கள் கால் நடையாக ஏறிக் கடந்து, காஷ்மீர் நாட்டில் புகுந்தார். இதற்குள் கையில் கொண்டு வந்திருந்த பணம், குடும்பத்தார் அணிந்திருந்த நகைகள் எல்லாம் தீர்ந்து விட்டன. கடைசியாக, இவர்களைப் போல் ஆயிரக்கணக்கில் காஷ்மீரத்துக்குள் புகுந்த அகதிகளின் கோஷ்டியில் சேர்ந்து ஸ்ரீ நகரை நோக்கிப் பிரயாணமானார்கள். ஸ்ரீநகருக்குச் சமீபமாக இந்தக் கூட்டம் வந்து சேர்ந்தபோது, அகதிகளுக்கு தொண்டு செய்யும் படையில் சேர்ந்திருந்த எஸ்.பி.சிவன், ஸ்ரீயக்ஞசாமி ஐயரையும், அவர் குடும்பத்தாரையும் சந்தித்தான். முதலில் அவர்களை அவன் இனம் கண்டு கொள்ளவில்லை. அவ்வளவாக அவர்கள் இளைத்து ‘மெலிந்து’ அழுக்கடைந்த கந்தல் துணிகளை அணிந்து காட்சி அளித்தார்கள். “மிஸ்டர் சிவன்! எங்களைத் தெரியவில்லையா?” என்று ஸ்ரீயக்ஞசாமி ஐயர் ஈனஸ்வரத்தில் கேட்ட பிறகுதான் அவனுக்கு அவர்களை அடையாளம் தெரிந்தது. “அப்பனே! நாங்கள் எல்லோரும் உயிரோடு திரும்பி ஊருக்குப் போகப் போவதில்லை. ஹேமாவதி ஒருத்தியையாவது நீ காப்பாற்றி அழைத்துக் கொண்டு போ!” என்றார் யக்ஞசாமி ஐயர். மேலும் அவர், “புதுடில்லி போனதும், ஒரு நல்ல நாள் பார்த்துக் கலியாணம் செய்து கொள்ளுங்கள்! தீர்க்காயுளுடன் சௌக்கியமாயிருங்கள்!” என்றும் சொன்னார். எலும்புந் தோலுமாயிருந்த உடம்பைக் கந்தல் துணியினால் மறைக்கப் பிரயத்தனம் செய்து கொண்டு பல நாள் எண்ணெய் காணாத கூந்தலுடன் தலை குனிந்து நின்ற ஹேமாவதியைப் பார்த்துச் சிவன் திடுக்கிட்டான். அவனுடைய உள்ளம் ஆயிரம் சுக்கலாக உடைந்தது. உடைந்த சுக்கல்களை ஒன்று சேர்த்துச் சரிப்படுத்திக் கொண்டு, நிலைமை எப்படி தலைகீழாக மாறிவிட்டது என்பதைப் பற்றி ஒரு கனம் சிந்தித்துப் பார்த்தான். முன்னொரு காலத்தில் தக்ஷன் பரமசிவனுக்குப் பார்வதியைக் கலியாணம் செய்துகொடுக்க மறுத்ததற்காகத் தவம் செய்ததும், அப்போது எஸ்.பரமசிவனுக்கு நினைவு வந்தது. அதே சமயத்தில் காலதேச வர்த்தமானங்களைத் தெரிந்து கொண்டு, உருவிலியான மன்மதனும் சில புஷ்ப பாணங்களைப் போட்டு வைத்தான். ஆனால் எஸ்.பரமசிவன் நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரிக்கவில்லை. ஒரு தடவை எரிந்து போன மன்மதனை மறுபடியும் எரிக்க முடியாதல்லவா? யக்ஞசாமி ஐயரைப் பார்த்து, “ஐயர்வாள்! புதுடில்லி போகும் வரையில் காத்திருப்பானேன்? எங்களுக்குச் சொந்தமான இமயமலைப் பிரதேசத்திலேயே கலியாணத்தை நடத்தி விடுவோமே! சாக்ஷாத் பரமசிவனுக்கும், இமவானுடைய குமாரிக்கும் அந்தக் காலத்தில் இமயமலைச் சாரலிலேதானே திருமணம் நடந்தது” என்றான் சிவன். அவன் விருப்பப்படியே சௌந்தரியலக்ஷ்மி குடி கொண்ட ஸ்ரீநகரில் அவர்களுடைய திருமணம் நூறு ரூபாய் செலவில் நடந்தேறியது. எத்தனையோ பொருள் நஷ்டம் தமக்கு நேர்ந்திருந்த போதிலும், ஹேமாவதியின் கலியாணத்துக்காகத் தாம் செலவழிக்க எண்ணியிருந்த ரூபாய் நாற்பதயிரம் மிச்சந்தானே என்று எண்ணி யக்ஞசாமி ஐயரும் சந்தோஷப்பட்டார். மேற்படி சம்பவங்கள் எல்லாம் ஆறு மாதத்துக்கு முந்தி நடந்தவை. எனவே சென்ற வாரத்துத் தினப் பத்திரிகைகளில் வெளியானபின் வரும் செய்தி எனக்கு வியப்பை அளிக்கவில்லை. “காஷ்மீர் மீது படையெடுத்து வந்த எதிரிகளோடு போராடுவதற்காக முதலில் சென்ற படையின் தலைவர் கமாண்டர் எஸ்.பி.சிவன், தீரச் செயல்கள் பல புரிந்து பிறகு காயமடைந்து விழுந்தார். இப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்!” தன்னுடைய குலதனமான இமயமலையை எதிரிகள் வந்தடையாமல் பாதுகாப்பதற்கு ஸ்ரீ எஸ்.பி.சிவன் தீவிரமாகப் போராடியதில் வியப்பில்லைதானே? ஆண்டவன் அருளினாலும், ஹேமாவதியின் மாங்கல்ய பலத்தினாலும் கமாண்டர் பரமசிவன் சிக்கிரம் குணமடைந்து ஹேமாதியுடன் நெடுங்காலம் வாழ்வாராக! 5. என் தெய்வம் திருநீர்மலையைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை எனக்கு வெகு காலமாக இருந்து வந்தது. ஆங்கிலக் கதைகளில் ‘கிரெட்னா கிரீன்’ என்னுமிடத்தைப் பற்றிச் சொல்கிறார்களே, அந்த மாதிரி நம் தமிழ்நாட்டுக்குத் திருநீர்மலை என்று கேள்விப்பட்டிருந்தேன். தொல்காப்பியர் காலத்துத் தமிழ்நாட்டை இந்தக் காலத்தில் திருநீர்மலையில் காணலாம் என்றும் சொன்னார்கள். அதாவது காதல் மணம் செய்து கொள்ளத் தீர்மானிக்கும் ஒருவனும் ஒருத்தியும் திருநீர்மலையைத்தான் சாதாரணமாய்த் தேடி வருவது வழக்கமாம். எனவே அந்த ஊர்க் கோவிலில் அடிக்கடி காதல் திருமணங்கள் நடைபெறுமாம். இக்காரணங்களினால் தான் திருநீர்மலையைப் பார்க்க எனக்கு ஆசை உண்டாகியிருந்தது. எனவே, சமீபத்தில் ஒருநாள் திருநீர் மலையைப் பார்ப்பதற்காகப் பயணம் கிளம்பிச் சென்றேன். ‘விடியாமூஞ்சி எங்கேயோ போனால் எதுவோ கிடைக்காது’ என்பார்களே அது மாதிரி, நான் போன சமயம் பார்த்துத் திருநீர்மலை வேறு எங்கேயாவது போயிருக்குமோ என்று கொஞ்சம் மனதில் பயம் இருந்தது. நல்ல வேளையாக திருநீர்மலை அப்படியொன்றும் செய்துவிடவில்லை. திருநீர்மலைக்கோவிலும் ஊரிலேதான் இருந்தது. இன்னும் நான் போன அன்று அந்தக் கோவிலில் ஒரு கல்யாணமும் நடந்தது. கல்யாணம் என்றால் எப்பேர்ப்பட்ட கல்யாணம்? மிகவும் அதிசயமான கல்யாணம். தம்பதிகளையும் புரோகிதரையும் தவிர, ஒரே ஒரு விருந்தாளி தான் கல்யாணத்துக்கு வந்திருந்தது! அந்த விருந்தாளி மணமகனின் தாயார் என்று தெரிந்து கொண்டேன். திருமாங்கல்ய தாரணம் ஆகி மற்ற விவாகச் சடங்குகளும் முடிந்த பிறகு, புரோகிதர் “சுவாமி சந்நிதிக்குப் போய் முதலில் நமஸ்காரம் செய்யுங்கள்; அப்புறம் அம்மாவுக்கு!” என்றார். ஆனால், தம்பதிகள் இருவரும் சொல்லி வைத்தாற்போல், அம்மாவுக்கு முதலில் நமஸ்காரம் செய்தார்கள். ஆனந்தக் கண்ணீர் என்பதை அப்போது நான் பார்த்தேன். மணமக்களை அன்புடன் அணைத்து ஆசீர்வதித்த அந்த அம்மாளின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகிற்று. கண்ணீர் என்றால் எப்படி? ஒரே அருவிதான்! இதையெல்லாம் பார்த்து என்னால் தாங்கவே முடியவேயில்லை. இந்தக் கல்யாணத்தில் ஏதோ விஷயமிருக்கிறதென்றும், அதைத் தெரிந்து கொள்ளாமல் திருநீர்மலையை விட்டுக் கிளம்புவதில்லையென்றும் முடிவு செய்து கொண்டேன். மாப்பிள்ளைப் பையனுடன் மெதுவாகப் பேச்சுக் கொடுத்து சிநேகம் செய்து கொண்டு கொஞ்சங் கொஞ்சமாக அவர்களுடைய வரலாற்றை அறிந்தேன். இதோ அந்த வரலாறு… சாம்பமூர்த்தி பி.ஏ. அவனுடைய தாயாருக்கு ஒரே பிள்ளை; அவர்கள் பரம ஏழைகள். சாம்பமூர்த்தியினுடைய சிறு பிரயாத்தில் அவன் தாயார் பட்ட கஷ்டங்கள் சொல்லத்தரமல்ல. ஓட்டலில் இட்லிக்கு மாவு அரைத்தும், இன்னும் பிரபுக்கள் வீட்டில் ஊழியம் செய்தும், அவள் காலட்சேபம் நடத்தியதுடன் பிள்ளையையும் படிக்க வைத்தாள். சாம்பமூர்த்தி நல்ல புத்திசாலி. கொஞ்சம் விவரம் தெரிந்ததும், பள்ளிக்கூடத்தில் உபகாரச் சம்பளம் வாங்கிக் கொண்டதோடு, அவனை விடச் சின்ன வகுப்புப் பிள்ளைகளுக்கு வீட்டில் பாடம் சொல்லிக் கொடுத்து பணம் சம்பாதிக்கத் தொடங்கினான். வறுமையின் கஷ்டம் எவ்வளவோ இருந்த போதிலும், தாயும் பிள்ளையும் பரஸ்பரம் கொண்டிருந்த அன்பின் காரணமாக, அவர்களுடைய வாழ்க்கை சந்தோஷமாகவே போய்க் கொண்டிருந்தது. கடைசியாக, அவர்களுடைய தரித்திரம் தீரும் காலமும் வந்தது. பி.ஏ. பரீட்சையில் சாம்பமூர்த்தி முதல் தரமாகத் தேறினான். சுருக்கெழுத்து, டைப் அடித்தல் முதலியவையும் கற்றுக் கொண்டிருந்தான். எனவே, சென்னைப் பட்டினத்தில் மாதம் அறுபது ரூபாய் சம்பளத்தில் அவனுக்கு உத்தியோகம் கிடைத்தது. அதாவது, உத்தியோகத்துக்கு உத்தரவு வந்து விட்டது. சென்னைக்குப் போய் ஒப்புக் கொள்வது தான் பாக்கி. ஊரைவிட்டுப் போகுமுன்னம் சாம்பமூர்த்தி நிச்சயம் செய்து கொள்ள விரும்பிய காரியம் ஒன்றே ஒன்று பாக்கியிருந்தது. அது அவனுடைய கல்யாண விஷயந்தான். கல்யாணம் என்றாலே சிக்கலான விஷயம். அதில் காதலும் கலந்திருந்தால் கேட்கவே வேண்டியதில்லை. சாம்பமூர்த்தியின் கல்யாணம் அவ்வாறு சிக்கலடைந்திருந்தது. ஆமாம்; சாம்பமூர்த்தி காதல் நோய்க்கு ஆளாகியிருந்தான். ஒரு வக்கீலின் குழந்தைகளுக்கு சாம்பமூர்த்தி அவர்கள் வீட்டிலேயே பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். அந்த வக்கீலின் இளம் சகோதரி ஒருத்தியும் வீட்டில் இருந்தாள். அவள் லட்சணமான பெண். எஸ்.எஸ்.எல்.சி. வரையில் படித்தவள். “காதல் ஏன் வளருகிறது? எப்படி வருகிறது என்றெல்லாம் சொல்ல முடியாது. அது தேவ ரகசியம்!” என்று ஒரு பிரசித்தி பெற்ற ஆசிரியர் சொல்லியிருக்கிறார். அத்தகைய தேவரகசியமான காரணத்தினாலே, ரங்கநாயகிக்கும் சாம்பமூர்த்திக்கும் காதல் வந்து விட்டது. வேடிக்கை என்னவென்றால், சாம்பமூர்த்தியும் ரங்கநாயகியும் தங்களை காதல் நோய் பீடித்திருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு முன்னாலேயே அந்த விஷயத்தை வீட்டிலுள்ள மற்றவர்கள் தெரிந்து கொண்டார்கள். இதில் ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் எப்பேர்ப்பட்ட கெட்டிக்காரர்களானாலும் காதலுக்கு வசமாகி விட்டால், அவர்கள் முகத்தில் ஒரு மாதிரி அசடு தட்டி விடுகிறது. அவர்கள் ஒருவரையொருவர் பார்க்கும் போது அசடு வழியப் பார்க்கிறார்கள்; அசடு வழியப் பேசுகிறார்கள். அவர்களுடைய நடை, உடை, பாவனை எல்லாம் ஒரு மாதிரி மாறுதல் அடைந்து காணப்படுகிறார்கள். இதையெல்லாம் மறைத்துக் கொள்ளச் சக்தியும் அவர்களுக்கு இருப்பதில்லை. ரங்கநாயகியின் இந்த நிலைமை வீட்டிலுள்ளவர்களுக்கு நன்றாய்த் தெரிந்துவிட்டது. அதற்கு முன்னாலெல்லாம் ரங்கநாயகி படிப்பிலேதான் அதிக ஆசையுள்ளவளாயிருந்தாள். பள்ளிக்கூடத்து பரீட்சைகளில் முதலாவதாகத் தேற வேண்டுமென்பதே அவளுடைய வாழ்க்கையின் இலட்சியம் போல் தோன்றியது. ஆடை அலங்காரம் முதலியவற்றில் அவள் அதிகக் கவனம் செலுத்துவதில்லை. கொஞ்ச காலமாக இந்த நிலைமை மாறி விட்டது. வீட்டிலே ஒரு வருஷத்துக்கு ஆகும்படியாக மை கூட்டி வைத்திருந்தது. அதையெல்லாம் ரங்கநாயகி வழித்து வழித்துக் கண்களில் பூசிக் கொண்டு தீர்த்து விட்டாள். அது மாதிரியே சோப்புக் கட்டிகள், பவுடர் பெட்டிகள், கூந்தல் தைலங்கள் எல்லாம் மளமளவென்று தீரத் தொடங்கின. தினசரி அலங்காரத்துக்கு அதிக நேரம் செலவாயிற்று. நெற்றியில் பொட்டு, சிறிதாயும், பெரிதாயும், நீளமாயும், அகலமாயும், உயரமாயும் - இப்படிப் பல உருவங்கள் எடுத்தது. இவ்வாறெல்லாம் ரங்கநாயகி தன்னை அழகு செய்து கொள்வதற்கும், சாம்பமூர்த்தி பிள்ளைகளுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்க வருவதற்கும் ஒரு வகையான சம்பந்தம் இருப்பதை வீட்டார் சீக்கிரத்தில் கண்டு கொண்டார்கள். இன்னும், குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதில் சாம்பமூர்த்திக்குக் கவனக்குறைவு ஏற்பட்டதையும் அவர்கள் கவனித்தார்கள். பாடத்தைக் கவனித்துப் படிக்கும்படி சாம்பமூர்த்தி பிள்ளைகளைக் கண்டிப்பதற்குப் பதிலாக, பிள்ளைகள் “என்ன ஸார்! பாடத்தைக் கவனிக்காமல் எங்கேயோ பார்க்கிறீர்களே?” என்று கேட்கும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டது. இதன் முடிவான பலன் என்ன ஆயிற்று என்றால், வீட்டு எஜமான், சாம்பமூர்த்தியிடம், “பிள்ளைகளுக்குப் பாடமெல்லாம் வந்து விட்டது; நீர் சொல்லிக் கொடுத்தது போதும்” என்று சொல்லி, அவனை நிறுத்தி விட்டார். சாம்பமூர்த்தி, ரங்கநாயகி இரண்டு பேருக்குமே அப்போது தான் தங்களுடைய வியாதி எவ்வளவு தூரம் முற்றிப் போயிருக்கிறது என்று தெரிய வந்தது. ஒருவர் இல்லாவிட்டால் ஒருவர் உயிர் வாழ முடியாது என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். உயிர் வாழ்வதே முடியாத காரியம் என்றால், சாம்பமூர்த்தி சென்னைப் பட்டணத்துக்குப் போய் உத்தியோகம் பார்ப்பது எப்படி? அப்போதுதான் ரங்கநாயகி, தான் படித்த பெண், அதோடு மேஜரானவள் என்பதை நினைவு கூர்ந்தாள். பெண் சுதந்திரத்தில் தனக்குள்ள ஆழ்ந்த பற்றையும் வெளிக்காண்பிக்க ஆரம்பித்தாள். அவளுடைய தமையனாரிடம் தனக்காக அவன் வரன் தேட வேண்டிய அவசியம் இல்லையென்றும் சாம்பமூர்த்தி மேல் தான் காதல் கொண்டு விட்டதாகவும், அவரையே தான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் மனம் விட்டுச் சொன்னாள். இதை யார் ஆட்சேபித்த போதிலும், தான் பொருட்படுத்தப் போவதில்லையென்றும் கண்டிப்பாகத் தெரியப்படுத்தினாள். இதெல்லாம் சாம்பமூர்த்திக்கு ஒருவாறு தெரிந்த போது, அவனும் தைரியத்தைக் கையில் எடுத்துக் கொண்டான். (தைரியம் என்பது இங்கே பேனாவைக் குறிக்கும்) ரங்கநாயகியின் தமையனுக்கு ஒரு கடிதம் எழுதினான். ரங்கநாயகியைத் தான் காதலிப்பதாகவும், வாழ்நாளெல்லாம் அவளுக்கு ஒரு குறைவும் இல்லாமல் வைத்துக் காப்பாற்றுவதாகவும், அவளைத் தனக்குக் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டுமென்றும் மரியாதையாகக் கேட்டுக் கொண்டான். அதோடு, ரங்கநாயகியும் தன்னைக் காதலிக்கிறபடியால், மனமொத்த தங்களுக்கிடையில் குறுக்கே வந்து நிற்பதற்கு யாருக்குமே பாத்தியதை கிடையாது என்பதையும் குறிப்பிட்டிருந்தான். மேற்படி கடிதம் எழுதிச் சில நாள் வரையில் அதற்குப் பதில் வருமென்று சாம்பமூர்த்தி எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ஒன்றும் வராமற் போகவே, நேரிலேயே பதிலைத் தெரிந்து கொண்டு திரும்புவதென்று சாம்பமூர்த்தி வக்கீல் வீட்டுக்குக் கிளம்பினான். வக்கீல் வீட்டு வாசலை அடைந்ததும், சாம்பமூர்த்திக்கு உள்ளே ஏதோ ரகளை நடந்து கொண்டிருக்கிறதென்று தெரிய வந்தது. நாலைந்து பேர் சேர்ந்தாற் போல் பேசுகின்ற சத்தம் கேட்டது. அந்த இரைச்சலுக்கிடையே ஒரு விம்முகின்ற குரல் - ஆங்காரம் நிறைந்த குரல் - சாம்பமூர்த்தியின் காதில் விழுந்தது; அவனுடைய நெஞ்சைப் பிளந்தது. அந்தக் குரல் ரங்கநாயகியினுடையதுதான் என்று சொல்ல வேண்டுமா? ஒரு கண நேரத்திற்குள் சாம்பமூர்த்தி உள்ளே நடப்பது என்னவென்பதைக் கற்பனை செய்து கொண்டான். ரங்கம் தன்னைத்தான் கல்யாணம் செய்து கொள்வேனென்று பிடிவாதம் பிடிக்கிறாள். மற்றவர்கள் கூடாது என்று சொல்லி அவளை வற்புறுத்துகிறார்கள்! இப்பேர்ப்பட்ட சந்தர்ப்பத்தில் தன்னுடைய கடமை என்னவென்பதை நிர்ணயிக்கவும் அவனுக்கு அதிக நேரம் ஆகவில்லை. ரங்கநாயகிக்குத் துணையாகப் போய் அவள் அருகில் நிற்க வேண்டியதுதான்; நின்று, அவளைச் சுற்றியுள்ள துஷ்ட மிருகங்களிடமிருந்து அவளைக் காப்பாற்றி அழைத்துப் போக வேண்டியதுதான்; சந்தேகம் என்ன? இலேசாகச் சாத்தியிருந்த வாசற் கதவைப் படீரென்று திறந்து கொண்டு சாம்பமூர்த்தி உள்ளே போனான். ஏறக்குறைய அவன் எதிர்பார்த்தக் காட்சிதான் அங்கே காணப்பட்டது. ரங்கநாயகி கண்ணீரும் கம்பலையுமாய் நின்றாள். கண்களிலிருந்து கண்ணீர் மையுடன் கலந்து வழிந்து கொண்டிருந்தது. வக்கீல் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தார். அவருடைய மனைவி, வயதான விதவை அத்தை, அக்கா, அத்திம்பேர் ஆகியவர்கள் சுற்றிலும் உட்கார்ந்திருந்தார்கள். குழந்தைகள் பயந்த தோற்றத்துடன் அங்குமிங்கும் நின்றார்கள். இதையெல்லாம் ஒரு கண நேரத்தில் சாம்பமூர்த்தி பார்த்தான். சகுந்தலை துஷ்யந்தனைப் பார்த்து, “அட பாவி! என்னை விபச்சாரி என்றா சொன்னாய்?” என்று கேட்கும் காட்சி அவனுக்கு ஞாபகம் வந்த்து. அந்தக் காட்சியில் சகுந்தலையின்மேல் தனக்கு ஏற்பட்ட இரக்கம், துஷ்யந்தன் மேல் உண்டான கோபம் எல்லாம் அப்படியே உள்ளத்தில் தோன்றின. சகுந்தலைக்கு அச்சமயம் தன்னால் உதவியொன்றும் செய்யமுடியவில்லை. ஆனால், இப்போது ரங்கநாயகிக்கு உதவி செய்யும் சக்தி தன்னிடம் இருக்கிறது. அவளை அந்தப் பேய் பிசாசுகளிடமிருந்து காப்பாற்றி அழைத்துப் போக வேண்டியது தன்னுடைய கடமை. இப்படியெல்லாம் சில விநாடி நேரத்திற்குள் சாம்பமூர்த்தி சிந்தித்துத் தீர்மானித்துக் கொண்டு ரங்கநாயகிகு எதிரே போய் நின்று, அவளுடைய முகத்தைக் கம்பீரமாய்க் கருணை ததும்ப நோக்கினான். “ரங்கம், இவர்கள் உன்னை…” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தான். சாம்பமூர்த்தி வந்ததிலிருந்தே, அங்கிருந்தவர்கள் அவ்வளவு பேருடைய முகமும் ஒரு மாதிரியாகி விட்டது. ரங்கநாயகியும் சட்டென்று தலைகுனிந்து சேலைத் தலைப்பினால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். சாம்பமூர்த்தி பேச ஆரம்பித்தவுடனே அவள் பளிச்சென்று தலை நிமிர்ந்து அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். அவனுடைய பேச்சில் குறுக்கிட்டு விம்முகின்ற குரலில், “சார்! இவர்கள் எல்லாம் உங்களைப் பற்றி…” என்று ஏதோ சொல்லத் தொடங்கினாள். இதற்குள் வக்கீல், கோபமான குரலில் “ரங்கம்! உனக்கு என்ன பைத்தியமா? இவனிடம் என்ன சொல்லப் போகிறாய்?” என்றார். ரங்கநாயகி இன்னும் ஆத்திரத்துடன் “ஆமாம், நீங்கள் சொன்னதைத்தான் சொல்லப் போகிறேன். ஏன் மறைக்க வேண்டும்? ஸார்! இவர்கள் எல்லாரும் உங்கள் தாயாரைப் பற்றி அவதூறு சொல்கிறார்கள். உங்கள் தாயார் நடத்தைப் பிசகு உள்ளவராம். இன்னும்…இன்னும்… அவர் விதந்துவான பிறகு உங்களைப் பெற்றாராம். இந்தமாதிரி அபாண்டமான பொய் சொல்லுகிறவர்களிடம் நான் எப்படி இருப்பேன்? என்னை உடனே அழைத்துப் போங்கள்!” என்றாள். இந்தக் கர்ண கொடூரமான வார்த்தைகளை ரங்கநாயகி சொல்லி முடித்த போது அங்கே எல்லையற்ற நிசப்தம் குடி கொண்டது. எல்லோரும் ஒரேயடியாகச் சாம்பமூர்த்தியின் முகத்தை நோக்கினார்கள். அந்த முகத்தில் சொல்ல முடியாத குரோதம் பொங்கிற்று. அவன் உடம்பெல்லாம் நடுங்கிற்று. வக்கீல், ‘இன்று இங்கே கொலை விழப் போகிறது!’ என்று தீர்மானித்துக் கொண்டார். போலீஸ் ஸ்டேஷனுக்கு எப்படிச் சொல்லி அனுப்புவதென்று யோசிக்கத் தொடங்கினார். சாம்பமூர்த்தி ஏதோ பேசுவதற்கு முயன்றான். ஆனால், வாயிலிருந்து வார்த்தை ஒன்றும் வரவில்லை. அடுத்த வினாடி அவனுடைய முகம் தொங்கி விட்டது. முகத்தில் தோன்றிய குரோதமும் வேதனையாக மாறியது. ஒரு நிமிஷம், இவ்விதம் சாம்பமூர்த்தி நின்று கொண்டிருந்தான். பிறகு, ஒரு வார்த்தையும் சொல்லாமல் யாருடைய முகத்தையும் பார்க்காமல் குனிந்த தலை நிமிராமல் அங்கிருந்து வெளியேறினான். அவன் வீட்டு வாசற்படியைக் கடந்த போது, “இப்போது என்ன சொல்கிறாய் ரங்கம்!” என்று வக்கீலின் குரல் கேட்டது. யாரோ சிரிக்கும் சத்தமும் கேட்டது. சிரிப்புக்கு நடுவில் விம்மல் ஒலியும் கலந்து வந்தது. சாம்பமூர்த்திக்குத் தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தது எப்படியென்றே தெரியாது. வீட்டு வாசலை அடைந்ததும் தான் அவனுக்குக் கொஞ்சம் சுய நினைவு வந்தது. வீட்டுக்குள் நுழைந்து ரேழித் திண்ணையில் குப்புறப் படுத்துக் கொண்டான். பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொள்ள முயன்ற போது அது விம்மலாக வெளிப்பட்டது. அவனுடைய உடம்பைத் தூக்கித் தூக்கிப் போட்டது. சற்று நேரத்துக்கெல்லாம் அவன் தாயார் அங்கே வந்தாள். குப்புறப் படுத்துக் கிடந்த புதல்வனைப் பார்த்தாள். கல்லும் கனியும் குரலில், “அப்பா! குழந்தை!” என்று சொல்லிக் கொண்டு, அவன் முதுகின் மேல் கையை வைத்துத் தடவிக் கொடுக்கப் போனாள். சாம்பமூர்த்தி வெடுக்கென்று அவளுடைய கையைப் பிடித்துத் தள்ளினான். மறுபடியும் பலமாகக் குப்புறப்படுத்துக் கொண்டான். தாயார் திடுக்கிட்ட குரலில் “குழந்தை! இதென்ன? ஏன் அழுகிறாய்? என் பேரில் என்ன கோபம்? நான் என்ன செய்தேன்?” என்றாள். சாம்பமூர்த்தி சட்டென்று எழுந்து உட்கார்ந்து, “என்ன செய்தாயா? என்னை எதற்காகப் பெற்றாய்?” என்று கத்தினான். கத்திவிட்டுத் தன் தலையில் இரண்டு தடவை அடித்துக் கொண்டான். தாயார் திகைத்துப் போய் அவனைப் பார்த்துக் கொண்டே நின்றாள். சாம்பமூர்த்தி மேலும், “இந்த அவமானத்தை என்னால் இனி மேல் சகிக்க முடியாது. தூக்குப் போட்டுக் கொண்டு செத்துப் போகிறேன்” என்று கத்தினான். தாயார் வேதனை நிறைந்த குரலில் “குழந்தை! இது எனக்கு வேண்டியதுதான்” என்றாள். சாம்பமூர்த்தி நிமிர்ந்து பார்த்தான். அம்மாவின் கண்களில் இரண்டு துளி ஜலம் துளித்து நிற்பதைக் கண்டான். “ஐயோ! அம்மா! உன்னைப் பற்றி ஏன் இப்படிச் சொல்லுகிறார்கள்” என்று அலறினான். தாயார் அவனை உற்றுப் பார்த்து, “குழந்தை! அவர்கள் வீட்டுக்குப் போனாயா? அவர்கள் ஏதாவது சொன்னார்களா? என்ன சொன்னார்கள்?” என்று கேட்டாள். “என்னத்தைச் சொன்னார்கள்? ஊரிலே எல்லோரும் சொல்வதைத்தான் அவர்களும் சொன்னார்கள்.” “குழந்தை! ஊரிலே எல்லோரும் என்ன சொல்கிறார்கள்! அதைத்தான் சொல்லேன்!” என்றாள் தாயார். “என் வாயால் சொல்லச் சொல்கிறாயா? சரி சொல்கிறேன். ‘எனக்குத் தகப்பனார் யார் என்று தெரியாது’ என்று சொல்கிறார்கள். ‘நீ விதந்துவான பிறகு என்னைப் பெற்றதாகச் சொல்கிறார்கள்.’ போதுமா? இன்னும் சொல்ல வேணுமா?” என்று சாம்பமூர்த்தி கூறித் தலையில் இன்னும் நாலு தடவை அடித்துக் கொண்டான். மறுபடியும் குப்புறப்படுத்துக் கொண்டான். இத்தனை நேரமும் நடையில் நின்று கொண்டிருந்த தாயார் திண்ணையில் சாம்பமூர்த்தியின் காலடியில் உட்கார்ந்தாள். தலைகுனிந்து முகத்தை வைத்துக் கொண்டு சற்று நேரம் சும்மா இருந்தாள். பிறகு தலையை நிமிர்த்திக் கொண்டு, “குழந்தை! சம்பு! எழுந்து உட்கார்! எத்தனையோ நாளாக உனக்கு உண்மையைச் சொல்ல வேண்டும், சொல்ல வேண்டும் என்று இருந்தேன். தைரியம் வரவில்லை. இப்போது கட்டாயம் சொல்ல வேண்டும் சமயம் வந்து விட்டது குழந்தை! எழுந்து உட்கார்ந்து கேள்!” என்றாள். சாம்பமூர்த்தி பளிச்சென்று எழுந்து உட்கார்ந்தான். “என்ன? உண்மையைச் சொல்லப் போகிறாயா! - என்ன உண்மை? ஐயோ! அவர்கள் சொன்னது நிஜந்தானா?” என்றான். அன்னை முன்பைவிட அதிக சாந்தத்துடன் கனிந்த குரலில், “குழந்தை! ஏன் பதறுகிறாய்? கொஞ்சம் பொறுமையாகக் கேள்!” என்றாள். “பொறுமையா? என்னைப் பொறுமையாயிருக்கச் சொல்கிறாயா? கடவுளே!” “ஆமாம், சாம்பு! பொறுத்துத்தான் ஆக வேண்டும். கடவுள் எழுதின எழுத்தை அழித்து எழுத முடியுமா!” “கடவுள்! கடவுள்! கடவுள் ஒருவர் இருக்கிறாரா! இருந்தால் என்னத்திற்காக அவளை நான் சந்திக்கும்படி செய்கிறார்! பிறகு இப்படிக் கொடூரமாகப் பிரிக்கிறார்? என்னத்திற்காக என்னை உயிரோடு வைத்திருக்கிறார்? டைபாய்டு சுரம் வந்ததே? அதிலேயே கொண்டு போயிருக்கக் கூடாதா?” என்று அலறினான் சாம்பமூர்த்தி. தாயார் எங்கேயோ தொலை தூரத்திலுள்ள எதையோ பார்ப்பவள் போல் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, ஒரு நெடிய பெருமூச்சு விட்டாள். சாம்பமூர்த்தியைத் திரும்பிப் பார்த்து, “ஆமாம் சாம்பு! உனக்கு டைபாய்டு சுரம் வந்த போது கடவுள் உன்னைக் கொண்டு போகத்தான் பார்த்தார். நான் தான் குறுக்கே நின்று காப்பாற்றினேன். இருபத்தொரு நாள் இராத் தூக்கம் - பகல் தூக்கம் இல்லாமல் கண் விழித்தேன். டாக்டர்கள் கூடக் கைவிட்டு விட்டார்கள் இன்னும் அரை மணி நேரந்தான் என்று கெடு விதித்தார்கள். நான் உன்னை விடமாட்டேன் என்றேன். நீ அப்போது கண்ணை மூடியிருந்தால் அரை நாழிக்குள் என் உயிரும் போயிருக்கும். இன்றைக்கு இந்த மாதிரி வார்த்தை உன்னிடம் கேட்டிருக்க வேண்டியதில்லை” என்றாள். சாம்பமூர்த்தி “ஐயோ! அம்மா! அதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறாய்?” என்றான். அவன் குரலில் முன் போன்ற வெறியில்லை; சிறிது சாந்தம் ஏற்பட்டிருந்தது. அவன் சொன்னது காதிலே விழாதவள் போல் தாயார் மேலும் சொன்னாள் “டைபாய்டு சுரம் வந்த போது மட்டுந்தானா? பதினோரு வயதில் உனக்கு வயிற்றுக் கடுப்பு வந்தது. முப்பத்தைந்து நாள் கிடந்தாய். அப்போதும் யமன் வாயிலிருந்து காப்பாற்றினேன். அதற்கு முன்னால், உன் மூன்றாவது வயதில் கட்டி விழுந்தது. இரண்டரை வருஷம் ஆயிற்று குணமாவதற்கு. அந்த இரண்டரை வருஷ காலமும் நான் தேடிப் போகாத வைத்தியனில்லை. நான் வேண்டிக் கொள்ளாத கோவிலும் தெய்வமும் இல்லை. உன் அப்பா தொலைத்தது போக பாக்கியிருந்த சொத்தெல்லாம் அந்த இரண்டரை வருஷத்தில் தான் போயிற்று. கட்டிகரைந்தது போல் சொத்தும் கரைந்து விட்டது” என்றாள். “என் அப்பா… என் அப்பா…” என்று சாம்பமூர்த்தியின் வாய் முணுமுணுத்தது. “ஆமாம் குழந்தாய்! உன் அப்பாதான்!” “அப்படியானால், ஊரார் சொல்வதெல்லாம் பொய்தானே, அம்மா!” என்று சாம்பமூர்த்தி அளவற்ற ஆவலுடன் கேட்டான். “பொய்யோ! நிஜமோ? இந்த உலகத்தில் எது பொய், எது நிஜம் யாருக்குத் தெரியும்? நான் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லி விடுகிறேன், சாம்பு! அப்புறம் நீயே பொய் எது, நிஜம் எதுவென்று தீர்மானித்துக் கொள். எங்கே ஆரம்பிக்கிறது, எப்படிச் சொல்கிறது என்று தெரியாமல் திண்டாடுகிறேன்” என்றாள் தாயார். பிறகு, இவ்விதமாக ஆரம்பித்தாள். “உன் அப்பாவுக்கு என்னைக் கல்யாணம் செய்து கொடுத்த போது நான் ஓட்டலில் மாவு அரைக்கும் படியான கதிக்கு வருவேன் என்று என் அப்பாவும் அம்மாவும் சொப்பனத்தில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். என் அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பெண். அப்பா பணக்காரர். கிராமத்தில் ஐம்பது காணி நிலமும், இன்னும் நிறையச் சொத்துக்களும் இருந்தன. அந்தச் சொத்தெல்லாம் எனக்குத்தானே என்று சொத்து இல்லாவிட்டாலும் படித்த பிள்ளையாயிருக்க வேண்டுமென்று வரன் பார்த்தார்கள். கடைசியில் உன் அப்பாவுக்குக் கொடுத்தார்கள். அவர் உன்னைப் போலவே பி.ஏ. பரீட்சை தேறியிருந்தார். கல்யாணம் ரொம்பப் பிரமாதமாக நடந்தது.” அவர்களுடைய இல்வாழ்க்கையானது ஆனந்தமயமாக இருந்தது. அனந்தராமன் பி.ஏ சில காலம் தாலுகா குமாஸ்தா வேலை பார்த்து விட்டு ரெவின்யூ இன்ஸ்பெக்டர் ஆனார். மேலே மேலே உத்தியோக உயர்வு கிடைக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலைமையில் பெண்ணும் மாப்பிள்ளையும் சந்தோஷமாய் வாழ்க்கை நடத்துவதைப் பார்த்துவிட்டுச் செல்லம்மாளின் தாயும் தகப்பனும் காலமானார்கள். செல்லம்மாளுக்கு ஏராளமான மஞ்சட் காணி சொத்தையும் வீட்டுத் துணைக்கு வயதான அத்தை ஒருத்தியையும் அவர்கள் வைத்து விட்டுப் போனார்கள். அதற்குப் பிறகு இன்னும் சில காலம் செல்லம்மாளின் வாழ்க்கை சந்தோஷமாக இருந்து வந்தது. நாளாக ஆக, அவளுடைய மனத்திற்குள்ளே மட்டும் ஒரு அந்தரங்க வேதனை தோன்றத் தொடங்கியது. குழந்தையில்லையே என்ற வேதனைதான் அது. அத்தைக் கிழவி இந்த வேதனைக்கு அடிக்கடித் தூபம் போட்டு வளர்த்து வந்தாள். “அடிப் பெண்ணே! என் கண்ணை மூடுவதற்குள் உன் வயிற்றில் ஒரு குழந்தை பிறந்து பார்க்க மாட்டேனா?” என்று அவள் அடிக்கடி பிரலாபிப்பாள். அதைக் கேட்க கேட்கச் செல்லம்மாளுக்கு என்னமோ செய்யும். பகலிலும் இரவிலும் குழந்தையைப் பற்றியே நினைக்கவும் கனவு காணவும் தொடங்கினாள். அண்டை அயல் வீட்டுக் குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம், அவளுக்கு ஒரு பக்கத்தில் எல்லையற்ற வாஞ்சை உண்டாகும். இன்னொரு பக்கத்தில் காரணமில்லாமல் கண்ணில் ஜலம் துளிக்கும். இப்படி இருக்கும் சமயத்தில், அவளுடைய வாழ்க்கையே பாழாக்கும்படியான இடி விழுந்தது. அனந்தராமன் மேல் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் ஏற்பட்டது. வேலையிலிருந்து அவன் நீக்கப்பட்டதுடன் மேலே கிரிமினல் வழக்கும் நடந்தது. வழக்கு ஹைக்கோர்ட்டு வரையில் போய் முடிவதற்குள் மூன்று வருஷம் ஆயிற்று. கடைசியில் தண்டனை ஒன்றுமில்லாமல் உத்தியோகம் போனதுடன் அனந்தராமன் தப்பி வந்து சேர்ந்தான். இதற்குள்ளாக செல்லம்மாளின் மஞ்சட்காணிச் சொத்தில் பாதி போய்விட்டது. உத்தியோகம் போன பிறகு அனந்தராமன் வீட்டில் சுகமாயிருந்து கொண்டு காலட்சேபம் நடத்தியிருக்கலாம். பாக்கி அவ்வளவு சொத்து. ஆனால் புருஷன் சம்பாத்தியம் இல்லாமல் வீட்டில் சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பது என்னும் விஷயம் அனந்தராமனுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே வியாபாரத்துறையில் இறங்கினான். வியாபாரம் என்றால் கேவலம் ஜவுளிக்கடை, மளிகைக் கடை வைக்க அவன் விரும்பவில்லை. கமிஷன் எஜென்ஸி தொழிலில் புகுந்தான். பல சாமான்களுக்கு ஏஜென்ட் ஆனான். முதலில் ஜில்லாக்களுக்கு ஏஜென்ஸி எடுத்து, பிறகு தென் இந்தியா முழுவதற்குமே அனந்தராமன் ஏஜென்ஸி எடுத்துக் கொண்டான். இதனால் அடிக்கடி சுற்றுப் பிரயாணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஏஜென்ஸி தொழில் மேலும் மேலும் அபிவிருத்தியடைந்தது. இதனால் மூலதனமும் அதிகமாகவே தேவையாயிற்று. செல்லத்தின் மஞ்சட்காணிச் சொத்தும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டு வந்தது. வியாபார விருத்திக்காக நிலத்தை மேலும் மேலும் விற்க வேண்டியதாயிற்று. இதற்கிடையில், செல்லத்தின் அத்தை, “அடி பெண்ணே! உன் வயிற்றில் ஒரு குஞ்சு பிறந்து நான் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே? எனக்குக் கண் பார்வை மங்கி வருகிறதே!” என்று பிரலாபித்துக் கொண்டேயிருந்தாள். இந்த அத்தைக்கு மைத்துனன் பிள்ளை ஒருவன் இருந்தான். அத்தைக் கண்ணை மூடினால் இவன் தான் கர்மம் செய்ய வேண்டியவன். எனவே, தன்னுடைய கடமையை நிறைவேற்றுவதற்குரிய காலம் சமீபித்து விட்டதா என்று பார்க்கும் பொருட்டு, இவன் அடிக்கடி இவர்கள் வீட்டுக்கு வந்து போவது வழக்கம்! அப்போதெல்லாம் செல்லத்தினிடம் உறவு கொண்டாடுவான். செல்லமும் அவனை அத்தான் என்று அழைத்துப் பிரியமாயிருப்பாள். சில சமயம் அவனுடைய நடவடிக்கை வரம்பு கடந்ததாக அவளுக்குத் தோன்றும். அவனுடைய பார்வையும் பேச்சும் விரஸமாகத் தோன்றும். ஆனாலும் தன்னிடம் உயிருக்குயிராயிருந்த அத்தையை உத்தேசித்து, அத்தானுடைய அசந்தர்ப்ப நடவடிக்கைகளையெல்லாம் அவள் பொருட்படுத்தாமல் உதாசீனம் செய்து வந்தாள். கடைசியில், இந்த அத்தான் தான் இடியிலும் பேரிடியான செய்தியைக் கொண்டு வந்தான். முதலில் அவன் அதைச் செல்லம்மாளிடம் நேரில் சொல்லவில்லை. அத்தையிடம் கொஞ்சம் கொஞ்சமாக வத்தி வைத்தான். அதாவது, அனந்தராமன் வியாபார அலுவல் என்பதாகச் சொல்லிக் கொண்டு வெளியூருக்குப் போவதெல்லாம் வெறும் பொய் என்றும், தஞ்சாவூரில் ஒரு மாயமோகினியின் வலையில் அவன் விழுந்து விட்டதாயும் செல்லம்மாளின் மஞ்சட்காணிச் சொத்தெல்லாம் அங்கேதான் போய்க் கொண்டிருக்கிறதென்றும் சொன்னான். அத்தையும் பிள்ளையும் அடிக்கடி காதைக் கடித்துக் கொள்வதையும் ‘ஐயோ! இந்த அசட்டுப் பெண் இப்படிப் பேசாமல் இருக்கிறாளே!’ என்று அங்கலாய்ப்பதையும் சில காலம் வரையில் செல்லம் சகித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உள்ளத்தில் என்னவெல்லாமொ சந்தேகங்கள் கொந்தளிக்கத் தொடங்கின. கடைசியில் ஒரு நாள் அத்தானைக் கேட்டே விட்டாள். விஷயம் தெரிந்ததும் அவள் மகா ஆக்ரோஷத்துடன், “இப்படியெல்லாம் நீ அவர் மேல் இல்லாததும் பொல்லாததும் சொல்வதாயிருந்தால், இனிமேல் இங்கே வரவேண்டாம்!” என்றாள். அத்தான் பிரமித்தவன் போல் நின்று, “நானா? நானா இல்லாததும் பொல்லாததும் சொல்கிறேன்? கடைசியில் நானா பொல்லாதவனாய்ப் போய்விட்டேன்? உண்மையும் பொய்யும் ஒரு நாளைக்கு உனக்கே தெரியப் போகிறது. அது வரையில், நான் இங்கே தலைகாட்டுவதில்லை” என்று சொல்லி விட்டுப் போய்விட்டான். அதற்குப் பிறகு அத்தையின் புலம்பல் அதிகமாயிற்று. “அடி பெண்ணே! உன் தலையில் இப்படியா எழுதியிருந்தது?” என்று ஓயாமல் அங்கலாய்க்கத் தொடங்கினாள். செல்லத்துக்கோ, அப்புறம் ஒரு வினாடி கூட மன அமைதி இல்லாமற் போயிற்று. அத்தான் மேல் அவள் எரிந்து விழுந்த போதிலும் அவன் சொன்னது உண்மைதான் என்று அவள் உள் மனத்தில் ஏதோ ஒன்று சொல்லிற்று. மறுபடியும் அத்தானை வரவழைக்க வேண்டும் அவரைப் பற்றி எல்லா விபரமும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு பக்கத்தில் மனம் துடித்தது. இன்னொரு பக்கம் தன்னுடைய அருமைத் தகப்பனார் கொடுத்த மஞ்சட்காணிச் சொத்தெல்லாம் இப்படியா பாழாய்ப் போய் கொண்டிருக்கிறது என்று எண்ணிய போது அவள் நெஞ்சம் கொதித்தது. தன் உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் யாருக்குத் தத்தம் செய்திருந்தாளோ, யாரைத் தெய்வமாக எண்ணிப் பூசித்தாளோ, இம்மைக்கும் மறுமைக்கும் தன்னுடைய ஒரே கதியென்று யாரை நம்பியிருந்தாளோ அந்தப் புருஷன் இப்படித் தன்னை வஞ்சித்து வருகிறான் என்று எண்ணிய போது அவளுடைய இருதயம் ‘படீர்’ என்று வெடித்துவிடும் போலிருந்தது. மற்றொரு சமயம் அவரை இவ்விதம் மருந்து வைத்து மயக்கி விட்ட மாயக்கள்ளியைக் கொன்று விட வேண்டுமென்று ஆத்திரம் உண்டாயிற்று. அத்தான் மறுபடியும் ஏதோ வியாஜம் வைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான். இந்தத் தடவை செல்லம்மாளே அவனிடம் எல்லா விபரமும் விசாரித்துத் தெரிந்து கொண்டாள். அடுத்த தடவை அனந்தராமன் வீட்டுக்கு வரும் போது, “உங்களுக்கு நான் வேண்டுமா? அவள் வேண்டுமா?” என்று கண்டிப்பாய்க் கேட்டுவிடச் செல்லம்மாள் தீர்மானித்துக் கொண்டாள். அவர் சரியான பதில் சொல்லாவிட்டால், அத்தையுடன் தன்னுடைய பிறந்த ஊருக்குப் போய் பிதிரார்ஜித வீட்டில் தனியாக இருப்பதென்றும் முடிவு செய்து கொண்டாள். ஆனால், அனந்தராமன் அடுத்த முறை வீட்டுக்கு வந்த போது செல்லம்மாள் அப்படி ஒன்றும் கேட்கவில்லை. ஏனெனில் அவன் வரும் போதே 104 டிகிரி சுரத்துடன் வந்தான். வந்து படுத்தவன் படுத்தவன் தான். இருபது நாள் படுத்த படுக்கையாய்க் கிடந்தான். செல்லம்மாள் அந்த இருபது நாளும் இராப் பகல் அவன் அருகிலேயே இருந்து சிச்ரூஷை செய்தாள். கழுத்துச் சங்கிலியை விற்று டாக்டர்களுக்குப் பணம் கொடுத்தாள். ஒன்றும் பிரயோஜனப் படவில்லை. இருபத்தோராம் நாள் அனந்தராமன் கண்ணை மூடினான். அந்த மகா உத்தமியின் உள்ளத்தில் தான் குத்திய முள்ளின் கொடுமையைப் பற்றி அறிந்து கொள்ளாமலேயே உயிரை விட்டான். கடைசி காலத்தில், அவன் ஏதோ செல்லத்திடம் அந்தரங்கமாய்ச் சொல்ல விரும்பியது போல் தோன்றியது. ஆனால் அதற்குத் தக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லையோ, அல்லது அவனுக்குத் தான் தைரியம் உண்டாகவில்லையோ, தெரியாது. அவன் ஒன்றும் சொல்லவும் இல்லை. செல்லம் வற்புறுத்திக் கேட்கவும் இல்லை அனந்தராமன் காலமான பிறகு அவனுக்குச் செய்ய வேண்டிய உத்திரக்கிரியைகளையெல்லாம் செல்லம் நடத்தியதுடன், அவன் பட்டிருந்த கடன்களையெல்லாம் தீர்த்தாள். எல்லாம் போக கடைசியில் சொற்பச் சொத்துத்தான் மிஞ்சியது. அதை வைத்துக் கொண்டு கிராமத்தில் நிம்மதியாய்க் காலங் கழிக்கலாமென்று சென்றாள். ஆனால், ‘நிம்மதி’ மட்டுந்தான் ஏற்படவில்லை. தெய்வமென்று போற்றிய கணவன் தனக்குச் செய்த துரோகத்தை நினைத்து நினைத்து, அவள் மனம் புண்ணாயிற்று. தன் வயிற்றில் ஒரு குழந்தை பிறக்காமல் போன துரதிர்ஷ்டத்தை நினைத்து அவள் வேதனை அடைந்தாள். கடவுளை நொந்து கொண்டாள். இவையெல்லாவற்றையும் விட, தன் பதியின் உள்ளத்தைத் தன்னிடமிருந்து திருடிக் கொண்ட மாயக்கள்ளி யார்? அவள் எப்படியிருப்பாள்? தன்னிடம் இல்லாத வசீகரம் அவளிடம் என்ன இருக்கும் என்று தெரிந்து கொள்ள, அவள் மனம் துடித்துக் கொண்டேயிருந்தது. அப்புறம் அத்தான் இரண்டொரு தடவை வந்தான். செல்லம்மாளிடம் மிகுந்த அநுதாபங் காட்டியதுடன், “இப்பேர்ப்பட்ட உத்தமிக்குத் துரோகம் செய்த பாவி”யைப் பற்றி இடித்துக் காட்டினான். அனந்தராமனுக்குச் செல்லம்மாள் எவ்விதத்திலும் கடமைப்பட்டிருக்கவில்லை என்பதையும், இந்தக் காலத்தில் விதவா - விவாகம் சாதாரணமாய் நடக்கிறதென்பதையும், ஜாடைமாடையாய்க் குறிப்பிட்டு வந்தான். ஆனால், செல்லம்மாளோ அவனை விஷம் போல் வெறுக்க ஆரம்பித்தாள். தன்னுடைய மனம் இப்போது நிம்மதியில்லாமல் தவிப்பதற்கெல்லாம் காரணம் அத்தான் தான் என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றியிருந்தது. அவனை யார் சனீசுவரன் மாதிரி அந்தத் தஞ்சாவூர்க்காரியைப் பற்றிச் சொல்லச் சொன்னது? அவன் சொல்லாமலிருந்தால் தான் புருஷனிடம் கொண்டிருந்த பக்தியில் சிறிதும் களங்கம் ஏற்படாமல் இருந்திருக்குமல்லவா? இப்போது இம்மாதிரி தன் உள்ளத்தை அரித்து எடுத்துக் கொண்டிருக்காதல்லவா? ஒருநாள் செல்லம்மாள் இந்த ஆத்திரத்தையெல்லாம் அத்தானிடம் காட்டி, அவனை, “இனிமேல் இங்கே வரவேண்டாம்” என்று சொல்லி விட்டாள். அவனும் அத்துடன் ஒழிந்து போனான். அனந்தராமன் காலமாகிச் சுமார் ஒன்றரை வருஷ காலம் ஆயிற்று. அப்போது ஓர் அதிசயமான கடிதம் செல்லம்மாளுக்கு வந்தது. அது தஞ்சாவூரிலிருந்து வந்தது. கடிதத்தின் அடியில், “அனாதை அம்முலு” என்று கையெழுத்துப் போட்டிருந்தது. தான் சாகக் கிடப்பதாகவும், சாவதற்கு முன் செல்லம்மாளிடம் ஒரு முக்கியமான் சமாசாரம் சொல்ல வேண்டும் என்றும் சொல்லாமல் செத்துப் போனால், தன்னுடைய நெஞ்சு வேகாது என்றும், ஆகையால் உடனே புறப்பட்டு வந்து தன்னைப் பார்க்க வேண்டுமென்றும், அந்த அனாதை ஸ்திரீ எழுதியிருந்தாள். செல்லம்மாள் அந்தக் கடிதத்தைத் திரும்பித் திருப்பிப் படித்து யோசனை செய்து கொண்டிருந்தாள். கடிதம் எழுதியது யார் என்று அவள் மனதிற்கு உடனே தெரிந்து போய்விட்டது. அதைப்பற்றி அவளுக்குச் சந்தேகமே இல்லை. போவதா, வேண்டாமா என்று தான் யோசனை செய்தாள். “செத்தால் சாகட்டுமே? இவளை நான் என்ன போய்ப் பார்ப்பது” என்று ஒரு சமயம் நினைத்தாள். “இதில் ஏதாவது சூது இருக்குமோ, என்னமோ?” என்று ஒரு பக்கம் பயமாயிருந்தது. இதையெல்லாம் மீறி அவள் எப்படித்தான் இருப்பாள், அவளைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் மேலோங்கிற்று. அவள் அப்படி என்ன சமாசாரம் சொல்லப் போகிறாள் என்று தெரிந்து கொள்ளவும் அவா உண்டாயிற்று. அதோடு அவள் சாவதற்கு முன்னால் நேருக்கு நேராக அவளுக்குச் சாபம் கொடுக்க வேண்டும் என்ற ஆசையும் ஒரு பக்கம் மனத்தில் பொங்கிக் கொண்டிருந்தது. செல்லம்மாள் யோசனை செய்து கொண்டிருக்கும் போதே இரண்டாவது கடிதமும் வந்துவிட்டது. உடனே புறப்பட்டு வராவிட்டால், தன்னை உயிரோடு பார்க்க முடியாது என்றும், முக்கியமாக ஒரு செய்தியை செல்லம்மாள் தெரிந்து கொள்ள முடியாமல் போகும் என்றும் அதில் எழுதியிருந்தது. எவ்வளவு அசௌகரியமிருந்தாலும், உடனே புறப்பட்டு வரவேண்டுமென்று ரொம்பவும் மன்றாடிக் கேட்டுக் கொண்டிருந்தது. செல்லம்மாள் அன்றைக்கே கிளம்பி மறுநாள் தஞ்சாவூர் போய்ச் சேர்ந்தாள். சந்து பொந்துகளுக்குப் பேர் போன தஞ்சாவூரில் கடிதத்தில் கொடுத்திருந்த விலாசத்தைக் கண்டுபிடிப்பது ரொம்பவும் கஷ்டமாயிருந்தது. கடைசியில், எப்படியோ கண்டு பிடித்தாள். கிழ வேலைக்காரி ஒருத்தி செல்லம்மாளை அழைத்துக் கொண்டு போய் மச்சு அறையில் விட்டாள். அங்கே ஒரு கயிற்றுக் கட்டிலிலே ஒரு அனாதை ஸ்திரீ படுத்திருந்தாள். உண்மையிலேயே அவள் சாகக் கிடக்கிறாள் என்பது பார்த்தவுடனே தெரிந்து போயிற்று. அந்த நிலைமையில் கூட அவள் முகத்தில் ஒரு களை இருந்தது. அதைக் காட்டிலும் அந்த முகத்தில் குடி கொண்டிருந்த சோகம் செல்லம்மாளின் உள்ளத்தின் அடிவாரத்தில் மறைந்திருந்த இரக்க உணர்ச்சியை எழுப்பிற்று. செல்லம்மாள் தான் சாபங் கொடுக்க வேண்டுமென்று வந்ததையெல்லாம் மறந்து அவள் சொல்வதைக் கேட்கச் சித்தமானாள். செல்லம்மாளைக் கண்டதும் அந்தப் பெண் படுத்தபடியே இரண்டு கைகளையும் கூப்பிக் கும்பிட்டாள். அவளை தன் அருகில் உட்காரச் சொன்னாள். மிகவும் ஈனமான குரலில், குழந்தைப் பிராயத்தில் சிறு தாயார் கொடுமைகளுக்கு ஆளானதிலிருந்து தொடங்கி, தன்னுடைய துயரக் கதையை ’மளமள’வென்று சொல்லி முடித்தாள். முடிப்பதற்குள் பல தடவை செல்லம்மாளின் கண்களில் ஜலம் துளிர்த்து விட்டது. கடைசியாக, உலக வாழ்க்கையின் கஷ்டங்களைப் பொறுக்க முடியாமல், அம்முலு தண்டவாளத்தில் விழுந்து பிராணனை விடுவதென்று தீர்மானித்தாள். அவ்விதம் தண்டவாளத்தில் படுத்துக் கிடந்த போதுதான் அனந்தராமன் வந்து அவளைத் தொட்டு எழுப்பினார். அவளுக்கு எவ்வளவோ சமாதானம் சொல்லி அழைத்துப் போனார். அவளுடைய நிர்க்கதியான நிலைமையைத் தெரிந்து கொண்டு தஞ்சாவூருக்கு அழைத்துப் போய்த் தனி வீட்டில் குடி வைத்தார். வாழ்நாள் முழுவதும் அன்பான வார்த்தையைக் கேட்டறியாத அம்முலு அனந்தராமனிடம் தன்னுடைய இருதயத்தை ஒப்புவித்தாள். அனந்தராமன் அடிக்கடி செல்லம்மாளைப் பற்றியும் அவளுடைய உயர்ந்த குணத்தைப் பற்றியும் அம்முலுவிடம் சொல்வதுண்டு. அப்போதெல்லாம் அம்முலுவின் மனம் படாத வேதனைப்படும் - அப்படிப்பட்ட உத்தமிக்குத் துரோகம் செய்கிறோமேயென்று. இப்படியே சில காலம் சென்றது. ஒரு நாளைக்கு அனந்தராமன் செல்லம்மாளின் அத்தானை ரயிலில் சந்தித்தார். அவனுடன் பேசியதிலிருந்து அத்தானுக்கு தன்னுடைய இரகசியம் தெரியுமென்று அறிந்து கொண்டார். அவன் போய்ச் செல்லம்மாளிடம் சொல்லி விட்டால் என்ன செய்கிறதென்று அனந்தராமன் பீதியடைந்தார். அம்முலுவிடம் “நானே போய்ச் செல்லம்மாளிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடப் போகிறேன்; அப்புறம் நடப்பது நடக்கட்டும்” என்று கூறி விட்டுக் கிளம்பினார். கொஞ்ச நாளைக்கெல்லாம் அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ஊருக்குப் போய்ச் சேரும் போதே 104 டிகிரி சுரத்துடன் போனதாகவும், ‘காலா ஹஸார்’ என்னும் விஷ சுரம் தன்னைப் பீடித்திருப்பதாகவும், பிழைப்பது துர்லபம் என்றும் தெரிவித்திருந்தார். அதோடு செல்லம்மாளிடம் உண்மையைச் சொல்லத் தனக்குத் தைரியம் வரவில்லை என்றும், அவளுடைய மனத்தைப் புண்படுத்த விரும்பவில்லையென்றும், தனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், அம்முலுவே எல்லாவற்றையும் செல்லம்மாளிடம் சொல்லி விட வேண்டும் என்றும், அவள் அம்முலுவுக்கு உதவி செய்து காப்பாற்றுவாள் என்றும் எழுதியிருந்தார். அதற்குப் பிறகு அனந்தராமனிடமிருந்து கடிதம் ஒன்றும் வரவில்லை. துடியாய்த் துடித்துக் கொண்டிருந்த அம்முலு ஒரு ஆளை அனுப்பி விசாரித்துக் கொண்டு வரச் சொன்னாள். ஆள் வந்து அனந்தராமன் இம்மண்ணுலகை நீத்த விவரத்தைக் கூறினான். “அக்கா அந்த நிமிஷத்திலேயே நான் பிராணனை விட்டிருக்க வேண்டியது. ஆனால், அதோ தொட்டிலில் இருக்கிறானே, அவனுக்காக உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தேன். அவன் அப்போது என் வயிற்றில் இருந்தான், ஆறுமாதம்” என்றாள் அம்முலு. அம்முலுவின் கதையைக் கேட்டுக் கொண்டிருந்த போது செல்லம்மாளின் கவனம் அடிக்கடி அதே அறையின் ஒரு மூலையில் தரையில் வைத்திருந்த தொட்டிலின் பக்கம் சென்று கொண்டிருந்தது. அந்தத் தொட்டிலில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. அம்முலுவின் கதை முடியும் சமயத்தில் குழந்தை தன் கண்களை மலர விழித்து அப்புறமும் இப்புறமும் பார்த்து அழத் தொடங்கியது. செல்லாம்மாள் ஒரு பாய்ச்சல் பாய்ந்து தொட்டிலின் பக்கம் சென்றாள். குழந்தையின் முகம் அப்படியே அப்பாவை உரித்து வைத்தது போல் இருந்ததைக் கண்டாள். “குழந்தை! சாம்பு! அப்போது நீ உன்னுடைய பிஞ்சுக் கைகளை நீட்டிக் கொண்டு, மழலை வாயால் ‘அம்மா’ என்று சொல்லிக் கொண்டு என்னிடம் தாவி வந்தாய். நான் உன்னை வாரி எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டேன். அந்த நிமிஷம் எனக்கு உலகமே மறந்து போய்விட்டது. எனக்குக் குழந்தை இல்லை என்ற குறையைப் பகவான் பூர்த்தி செய்துவிட்டார் என்ற ஒரு நினைவுதான் இருந்தது” என்றாள் செல்லம்மாள். அப்புறம் மூன்று நாள் அம்முலு உயிரோடு இருந்தாள். அந்த மூன்று நாளும் இறந்து போன அனந்தராமனைப் பற்றியே இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்தார்கள். தன்னுடைய நல்ல குணத்தைப் பற்றி அனந்தராமன் கூறியதைப் பற்றிக் கேட்கக் கேட்க செல்லம்மாளுக்கு அனந்தராமன் மேலிருந்த கோபதாபமெல்லாம் போய் விட்டது. அம்முலு கண்ணை மூடிய பிறகு, செல்லம்மாள் கண்ணீரும் கம்பலையுமாய்க் குழந்தையைத் தோளோடு சாய்த்து எடுத்துக் கொண்டு ஊருக்கு கிளம்பிச் சென்றாள். ஊரில் செல்லம்மாளைப் பற்றி வம்பு வளர்க்கத் தொடங்கினார்கள். யாரோ ஒரு அனாதைக் குழந்தையை விலைக்கு வாங்கி வந்திருப்பதாகச் சொன்னார்கள். சாதி தெரியாத குழந்தையை வைத்துக் கொண்டு வளர்ப்பதற்காக அவளைச் சாதியிலிருந்து தள்ளி வைத்தார்கள். இன்னும் சொல்லத் தகாத அவதூறையும் சிலர் வாய் கூசாமல் கேலியாகச் சொன்னார்கள். அதாவது செல்லம்மாளே குழந்தையைப் பெற்று எடுத்துக் கொண்டு வந்ததாகச் சொன்னார்கள். கிராமத்திலிருந்து செல்லம்மாள் பட்டணத்துக்குப் போன போதும், இந்தப் பொய் அவதூறு அவளைத் தொடர்ந்து போயிற்று. ஆனால் இதையெல்லாம் செல்லம்மாள் சிறிதும் பொருட்படுத்தவில்லை. தன்னுடைய சகல கஷ்டங்களையும் துயரங்களையும் குழந்தை சாம்புவின் ஒரு புன்சிரிப்பில் மறந்து வாழ்ந்து வந்தாள். இவ்விதம் செல்லம்மாள் கதையை முடித்ததும், உட்கார்ந்திருந்த சாம்பமூர்த்தி எழுந்திருந்தான். “அம்மா! கடவுள் எங்கேயோ இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். கோவிலிலும் குளத்திலும் போய்த் தெய்வத்தைத் தேடினேன். என் தெய்வம் வீட்டிலேயே இருக்கிறதென்பதை அறியாமற் போனேன். அம்மா! நீதான் என் தெய்வம்!” என்று சொல்லித் தரையில் விழுந்து, தாயின் பாதங்களைத் தொட்டு நமஸ்கரித்தான். செல்லம்மாள் உணர்ச்சி நெஞ்சை அடைக்க ஒன்றும் பேசமுடியாதவளாயிருந்தாள். பிறகு, சாம்பமூர்த்தி எழுந்து நின்று, “அம்மா எனக்குக் கல்யாணமும் வேண்டாம்; ஒன்றும் வேண்டாம். வாழ்நாளெல்லாம் நான் பிரம்மச்சாரியாகவே இருப்பேன். உனக்குப் பணிவிடை செய்வதே என் வாழ்க்கைக் கடமை கடவுள் அறிய…” சபதம் செய்யத் தொடங்கிய போது “நிறுத்து குழந்தை, நிறுத்து!” என்று செல்லம்மாள் நிறுத்தினாள். அதே சமயத்தில், முக்கால்வாசி சாத்தியிருந்த ரேழி நடைக் கதவு படீர் என்று திறந்தது. ஸ்ரீமதி ரங்கநாயகி ஆத்திரத்துடன் உள்ளே வந்தாள். “ரொம்ப அழகாயிருக்கிறது! நீங்கள் பிரம்மச்சாரியாயிருந்து விட்டால், என்னுடைய கதி என்ன? நானும் கன்னியாகவே இருக்க வேண்டியதுதான். நான் உங்களுக்காக உங்களைக் கல்யாணம் செய்து கொள்ளாவிட்டாலும், உங்கள் அம்மாவுக்குப் பணிவிடை செய்வதற்காகவே கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன், அம்மா! எனக்கும் நீங்கள் தான் தெய்வம்!” என்று சொல்லி, ரங்கநாயகியும் செல்லம்மாளின், பாதங்களில் நமஸ்கரித்தாள். அவளுடைய தலையைத் தொட்டுச் செல்லம்மாள் ஆசிர்வாதம் செய்தபோது, ’கலகல’வென்று அவளுடைய கண்களிலிருந்து நீர் பொழிந்தது. சாம்பமூர்த்தி அவ்விதம் குனிந்த தலையுடன் வக்கீல் வீட்டிலிருந்து கிளம்பி வந்த பிறகு, ரங்கநாயகியை அவள் வீட்டார் ரொம்பவும் பரிகசித்துப் புண்படுத்தினார்களாம். இதனால் ரங்கநாயகியின் மனம் உறுதிப்பட்டு விட்டதாம். “நான் அவரைத்தானே கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன். அவருடைய அம்மாவைக் கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை. அவருடைய அம்மா எப்படியிருந்தால் எனக்கு என்ன?” என்று சொல்லிவிட்டு, மற்றவர்கள் எவ்வளவு தடுத்தும் கேளாமல், அவள் சாம்பமூர்த்தியின் வீட்டுக்கு வந்தாளாம். வாசற்படிக்கு அருகில் வந்த போது, உள்ளே தாயாரின் பேச்சுக் குரல் கேட்டதாம். அங்கு நின்றபடியே செல்லம்மாள் சொன்ன கதையின் பிற்பகுதியை எல்லாம் கேட்டுவிட்டுச் சாம்பமூர்த்தி சபதம் கூறும் சமயத்தில் உள்ளே வந்தாளாம். திருநீர்மலையில் கல்யாணம் ஆன அன்று பிற்பகல், மேற்படி வரலாறுகளையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டபின், “ஏன் மாப்பிள்ளை! உங்கள் மனைவியின் வீட்டார் அப்புறம் சமாதானம் அடையவே இல்லையா? இன்னும் கோபமாய்த் தான் இருக்கிறார்களா?” என்று கேட்டேன். “இல்லை; ரங்கநாயகியின் உறுதியைக் கண்டபின், அவர்கள் ஒருவாறு சமாதானம் அடைந்து விட்டார்கள். இந்தக் கல்யாணத்துக்குக் கூட வருவதாகக் கடிதம் எழுதியிருந்தார்கள். ஆனாலு திடீரென்று புயலும் மழையும் அடித்து ரயில் பாதை சீர்கெட்டு விட்டதல்லவா? அதனால் தான் வர முடியவில்லை” என்றான். அப்போது மணப் பெண் ரங்கநாயகி “அதுவும் எங்களுடைய அதிர்ஷ்டந்தான். அந்தக் கும்பல் எல்லாம் வந்திருந்தால், நாங்கள் இன்றைக்கு இவ்வளவு ஆனந்தமாக இருந்திருக்க முடியுமா?” என்றாள். இந்த வருஷம் வைகாசிக் கோடையில் திடீரென்று அவ்வளவு பெரிய புயலும் மழையும் அடித்து, ரயில் பாதை கெட்டதின் காரணம், அப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது. 6. எஸ் எஸ் மேனகா அலைகடலின் நடுவில், ‘எஸ். எஸ். மேனகா’ என்னும் கப்பல் போய்க் கொண்டிருந்தது. அந்தக் கப்பல் அதற்கு முன் எந்த நாளிலும் அவ்வளவு பாரம் ஏற்றிக் கொண்டு பிரயாணம் செய்தது கிடையாது. இந்தத் தடவை அதில் ஏற்றியிருந்த பாரம் முக்கியமாகப் பிரயாணிகளின் பாரமேயாகும். கப்பலின் அடித்தளத்திலிருந்து மேல் தளம் வரையில் எள்ளுப் போட்டால் எள்ளு விழாதபடி பிரயாணிகள், தேனடைகளை மொய்க்கும் தேனீக்களைப் போல் நெருங்கியிருந்தார்கள். அவர்கள் பல தேசத்தினர்; பல சாதியினர். முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்புகளில் வெள்ளைக்காரர்கள் மட்டும் காணப்பட்டார்கள். அவர்களில் ஸ்திரீகளும் குழந்தைகளும் அதிகமாயிருந்தனர். மற்ற பகுதிகளில் கறுப்பு மனிதர்கள் இருந்தார்கள். அவர்களில் ஹிந்துக்கள், முஸ்லீம்கள், தமிழர்கள், வங்காளிகள், மலையாளிகள், பஞ்சாபியர், யாழ்ப்பாணத்தார் முதலியோர் கலந்து காணப்பட்டார்கள். ஸ்திரீகள், புருஷர்கள், குழந்தைகள், கிழவர்கள் ஆகிய எல்லா வயதினரும் இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் கப்பலில் படுப்பதற்கு இடமோ, ஸ்நான வசதியோ ஒன்றும் கிடையாது. அந்த ஜனங்கள் குளித்து நாட்கணக்கில் ஆகியிருக்க வேண்டும். அத்தகைய அழுக்குப் பிடித்த ஜனக்கூட்டத்தை வேறெங்கும் காண்பது துர்லபம். அவரவர்களுக்கு பக்கத்தில் ஒரு பெட்டியோ, மூட்டையோ வைத்துக் கொண்டு ‘சிவ சிவ’ என்று உட்கார்ந்திருந்தார்கள். தண்ணீரைக் கண்டு பல தினங்களான அவர்களுடைய முகங்களில் குடிகொண்டிருந்த சோர்வையும், துயரத்தையும் பயங்கரத்தையும் விவரிக்க முடியாது. சிலர் பேயடித்தவர்களைப்போல் இருந்தார்கள். வேறு சிலர் இராத்திரியெல்லாம் கண் விழித்து மயான காண்டம் பார்த்துவிட்டு வந்தவர்களைப்போல் காணப்பட்டார்கள்; இன்னும் சிலரின் முகத்தில் பிரம்மஹத்தி கூத்தாடிற்று; பசி கொடுமையினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் தோன்றினர். சாதாரணமாக இவ்வளவு நெருங்கிய கூட்டத்தில் இரைச்சல் அசாத்தியமாய் இருக்குமல்லவா? இங்கேயோ, ஜனங்கள் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக்கொள்ளக் கூட இல்லை. யாராவது பேசினால், கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போல் ஈனஸ்வரத்தில் பேசினார்கள். அவ்வப்போது கிளம்பிய குழந்தைகளின் மெலிந்த, அழுகுரல் இருதயத்தை வேதனை செய்வதாயிருந்தது. கப்பலில் எந்தப் பக்கம் பார்த்தாலும், கண்வலி வரும்படியாக ஆபாசமும் அழுக்கும் நிறைந்திருந்தன. ஒழுங்கு, சுத்தம் என்பதையே அங்கே காணமுடியாது. துர்க்கந்தமோ கேட்க வேண்டியதில்லை. கப்பலின் புதியபெயிண்டின் நாற்றம், மூலையில் அழுகிக் கிடந்த வெங்காயத்தின் நாற்றம், பழைய ரொட்டித் துண்டுகளின் நாற்றம், மனிதர்களின் வியர்வை நாற்றம், சுருட்டு நாற்றம், குழந்தைகள் ஆபாசம் செய்த நாற்றம் அம்மம்மா! எத்தனை விதமான நாற்றங்கள்? - நரகம் என்பது இதுதானோ? எஸ். எஸ். மேனகா இந்தக் கதியை அடைந்திருந்ததன் காரணம் என்னவென விரிவாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அது 1942-ஆம் வருஷம் பிப்ரவரி மாத ஆரம்பத்தில் சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய கப்பல் என்று சொன்னாலே போதும். சிங்கப்பூரை ஜப்பானியர் தாக்குவதற்குச் சில நாளைக்கு முன்புதான் அது கிளம்பிற்று. கிளம்பி இப்போது ஆறு நாளாகி விட்டது. ஆனால், கப்பல் தற்சமயம் கடலில் எந்த இடத்துக்கு வந்திருக்கிறதென்று பிரயாணிகளில் யாருக்கும் தெரியாது. அது எங்கே போகிறதென்றுகூட ஒருவருக்கும் நிச்சயமில்லை. அநேகமாகக் கொழும்புக்குப் போகலாமென்று கருதப்பட்டது. ஆனால், எப்போது போய்ச் சேருமோ கடவுளே அறிவார். போய்ச் சேரும் என்பதுதான் என்ன நிச்சயம்? பிரயாணிகள், கப்பலின் வசதிக் குறைவுகளால் அடைந்த கஷ்டங்களைக் காட்டிலும், மனோபீதியினால்தான் அதிகக் கலக்கம் அடைந்திருந்தார்கள். அவர்களில் பலர், மலாய் நாட்டில் ஜப்பானுடைய வெடிகுண்டுகளினால் நேர்ந்த விபரீதங்களை நேரில் பார்த்தவர்கள். அந்த பயங்கரங்களை இந்த ஜன்மத்தில் அவர்களால் மறக்கவே முடியாது. தரையிலேயே ஜப்பானுடைய வெடி குண்டுகளினால் அப்படிப்பட்ட பயங்கரங்கள் நேரிடக் கூடுமென்றால், நடுக் கடலில் கப்பலின்மேல் குண்டு விழுந்தால் கதி என்ன? அதோ கதிதான்! ஆகவே, பிரயாணிகளிற் பலர், அடிக்கடி ஆகாயத்தை அண்ணாந்து பார்த்த வண்ணமிருந்தனர். ஆனால், ஆகாயத்திலிருந்து மட்டுந்தானா அபாயம் வரக்கூடும்? அபாயம், கடலில் மிதந்தும் வரலாம்! கடலுக்கடியிலிருந்து திடீரென்று வந்தும் தாக்கலாம் ஜப்பானுடைய யுத்தக் கப்பல்களும் நீர்மூழ்கிகளும் இந்துமகா சமுத்திரத்திலும் வங்காளக் குடாக் கடலிலும் சஞ்சரிப்பதாகச் சில நாளாகவே வதந்தி இருந்தது. ஆகவே, உயிருடன் ஊருக்குத் திரும்பிப் போவோம் என்கிற நம்பிக்கை யாருக்குமே இல்லை. இப்படிப்பட்ட நிலைமையில், யாருடைய முகந்தான் களையாக இருக்கமுடியும். என்றாலும் அந்த ஆயிரம் பிரயாணிகளுக்குள்ளே ஒரு ஸ்திரீயின் முகம் மட்டும் அப்போது கூட களையாகத் தான் இருந்தது. களை எப்போதாவது குறைந்தால் அந்த ஸ்திரீ தனக்கருகில் வைத்திருந்த பெட்டிக்குள்ளிருந்து களையை எடுத்து முகத்தில் பூசிக்கொண்டாள்! அவள் கண்ணிலே இலேசாக மை தீட்டியிருந்தது. நெற்றியிலே பொட்டு இருந்தது. கூந்தல் பின்னி விடப்பட்டிருந்தது. பிரதி தினமும் மூன்று, நாலு தடவை, அவள் எப்படியோ நல்ல ஜலம் சம்பாதித்து முகத்தை அலம்பிப் பவுடர் பூசிக் கொண்டதுடன், மற்ற அலங்காரங்களையும் செய்து கொண்டாள். தலையில் வைத்துக் கொள்ளப் புதிய பூ இல்லாத ஒரு குறைதான். அதற்குப் பதிலாக, வர்ணநெட்டிப் பூ தலையில் வைத்துக் கொண்டிருந்தாள். அவள் அங்குமிங்கும் உலாவும் போது, மெல்லிய மல்லிகை ஸெந்தின் வாசனை மற்ற நாற்றங்களையெல்லாம் விலக்கிக் கொண்டு வந்தது. இந்த ஸ்திரீயின் விஷயத்தில் மற்றப் பிரயாணிகளெல்லாம் எவ்வளவு அருவெருப்புக் கொண்டிருப்பார்களென்று சொல்ல வேண்டியதில்லை. அவளைப் பார்க்கும் போதே, பலருடைய முகம் சுணுக்கமடைந்தது. அவளைச் சுட்டிக்காட்டி, அநேகர் காதோடு காதாய் இரகசியம் பேசிக் கொண்டார்கள். இன்னும் சிலர், அவள் காதில் விழும்படியாக “சனியன்!” “மூதேவி!” “தரித்திரம் இங்கே என்னத்திற்கு வந்தது?” “பிராணன் போகிற போது கூடப் பவுடர் பூசிக் கொள்ளுவாளோ? யமனையே மயக்கி விடலாமென்ற எண்ணம் போலிருக்கு!” என்று இவ்விதமெல்லாம் பேசினார்கள். மற்றும், அந்தப் பிரயாணிகள் பேசிக் கொண்டதிலிருந்து, மேற்படி ஸ்திரீயின் பெயர் ரஜனி என்றும், சிங்கப்பூரில் அவள் துன்மார்க்க வாழ்க்கையில் ‘பெயர் எடுத்தவள்’ என்றும் தெரியவந்தது. அவள் அருகில் இருந்த பெட்டியின் மேல் ‘மிஸ் ரஜனி’ என்று அச்சிட்டிருந்தது. அவளுடைய வயது என்ன இருக்கும் என்று ஊகிப்பது மிகவும் கடினம். ஒரு சமயம் பார்த்தால், “இவளுக்கு வயது ரொம்ப ஆகியிருக்க வேண்டும்; பவுடரை அப்பிக் கொண்டு பால்யம் மாதிரி நடிக்கிறாள்” என்று தோன்றும். இன்னொரு சமயம் பார்த்தால், “இவளுக்கு வயசு கொஞ்சம்; துர்நடத்தை காரணமாக வயது அதிகம் காட்டுகிறது” என்று தோன்றும். இப்படிப்பட்ட ஸ்திரீயைப் பார்த்து யார் தான் அருவருப்புக் கொள்ளாமலிருக்க முடியும்? அதுவும், அடுத்த நிமிஷத்தில் உயிரோடிருப்போமோ என்பது நிச்சயமில்லாத அந்த சமயத்தில்? எனினும் அவளிடம் அருவருப்புக் காட்டாத ஒரே ஒரு ஆத்மா அந்தக் கப்பலில் இருக்கத்தான் இருந்தது. அவன் அவளிடம் அருவருப்புக் காட்டாததோடு இல்லை, அவசியத்துக்கு அதிகமான அபிமானம் காட்டுவதாகவும் தோன்றியது. பிரயாணிகளில் ஒருவர் அவ்விதம் நடந்து கொண்டாலே அது ஆச்சரியத்தைத் தரும். அவனோ, கப்பல் உத்தியோகஸ்தரில் ஒருவன், உதவி என்ஜினீயர். பார்ப்பதற்கு ஆங்கிலோ இந்தியன் மாதிரி இருந்தான். அவன் பெயர் ஜான் என்று மற்ற உத்தியோகஸ்தர்கள் அழைத்ததிலிருந்து தெரிந்தது. ஆனால் சுத்தமான தமிழ் பேசினான். ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது கப்பல் மேல் தளத்துக்கு உதவி என்ஜினீயர் ஜான் வருவான். ரஜனியும் உடனே அவனை நோக்கிப் போவாள். இரண்டு பேரும் கப்பல் தளத்தில் கிராதியில் சாய்ந்து கொண்டு நிற்பார்கள். அவர்கள் அதிகமாகப் பேசுவது கிடையாது. மேலே ஆகாசத்தைப் பார்ப்பார்கள். சில சமயம், ஜான் ஒரு ரொட்டித் துண்டை மறைத்து எடுத்துக் கொண்டு வருவான். (கப்பலில் உணவுப் பண்டம் கிடைப்பது அவ்வளவு கஷ்டம்) ரஜனி வேண்டாம் என்று மறுப்பாள். பிறகு வாங்கிக் கொள்வாள். இதெல்லாம் மற்ற பிரயாணிகளுக்குப் பிடிக்கவேயில்லை. “கப்பலில் வந்து கூட யாரோ ஒருவனை வலையில் போட்டுக் கொண்டுவிட்டாள், பார்!” என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள். கப்பல் காப்டனிடம் இதைப் பற்றிப் புகார் செய்ய வேண்டுமென்றும் சொல்லிக் கொண்டார்கள். அன்று சாயங்காலம் ரஜனி ஜானைச் சந்தித்த போது, “நாம் இரண்டு பேரும் பேசுவது மற்றப் பிரயாணிகளுக்குப் பிடிக்கவில்லை” என்றாள். “நாம் இரண்டு பேரும் பேசுகிறோமா, என்ன? நாம் பேசுகிறது இதுவரையில் என் காதிலேயே விழவில்லையே” என்றான். ரஜனி, கலீரென்று சிரித்தாள். சொல்ல முடியாத சோகமும் ஆழ்ந்த பீதியும் குடிகொண்டிருந்த அந்தக் கப்பலில் அவளுடைய சிரிப்பின் ஒலி, அபஸ்வரமாய்த் தோன்றியது. அதை அவளே அறிந்து கொண்டு சுற்று முற்றும் பார்த்துவிட்டு “நாம் வெறுமனே சற்று நேரம் நிற்பது கூட அவர்களுக்கு பொறுக்கவில்லை. காப்டனிடம் புகார் செய்யப் போகிறார்களாம்!” என்றான். “உன்மேல் அவர்களுக்கு என்ன கோபம்?” என்று ஜான் கேட்டான். “அதுதான் எனக்கும் தெரியவில்லை. அவர்களுடைய சொத்து சுதந்திரத்தையெல்லாம் நானா பறித்துக் கொண்டேன்? ஜப்பான்காரன் மேல் காட்ட வேண்டிய கோபத்தை என் பேரில் காட்டி என்ன பிரயோசனம்? அசட்டு ஜனங்கள்! நான் முகத்தை அலம்பிப் பொட்டு வைத்துக் கொள்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இன்றைக்கோ நாளைக்கோ சாகப் போகிறோம். இருக்கிற வரையில் சந்தோஷமாக இருந்து விட்டுப் போனாலென்ன? மூதேவி பிடித்தது போல் முகத்தைக்கூட அலம்பாமல் உட்கார்ந்திருப்பதில் என்ன லாபம்?” “சாவைப் பற்றி ஏன் அடிக்கடி பேசுகிறாய்? செத்துப் போக ஆசையாயிருக்கிறதா?” என்று ஜான் கேட்டான். “ஆமாம்” என்று ஒரே வார்த்தையில் ரஜனி பதில் சொன்னாள். “ஏன் அப்படி?” “சாகாமல் இருந்து என்ன ஆகவேண்டும்?” “இந்தியாவில் பந்துக்கள், தெரிந்தவர்கள், யாரும் இல்லையா?” “இல்லை” “உயிரை விடுவதாயிருந்தால், இன்றைக்கு ராத்திரியைப் போல் தக்க தருணம் கிடையாது. ஒன்பது மணிக்குச் சந்திரன் உதயமாகி விடும். அப்புறம் சமுத்திரம் பாற்கடலாயிருக்கும்.” “நான் தயார்” என்றாள் ரஜனி. அன்று சாயங்காலம் அஸ்தமன சமயத்தில், ரஜனி அலங்காரம் செய்து கொள்வதைப் பார்த்து விட்டுப் பிரயாணிகள் அளவில்லாத வியப்பும் அருவருப்பும் கொண்டார்கள்; அருவருப்பை வெளிப்படையாகவும் காட்டிக் கொண்டார்கள். ரஜனி, அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. தனக்குள் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவளாய்த் தோன்றினாள். நேரமாக ஆக அவளுடைய பரபரப்பு அதிகமாயிற்று. ரஜனி, மனோநிலையைப் பிரதிபலிப்பது போல் கப்பல் வழக்கத்தைவிட மிகவும் துரிதமாகச் சென்றது. அதைப் பற்றி பிரயாணிகள் கவலையுடன் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டார்கள். இரவு சுமார் எட்டு மணிக்கு ஜான் கப்பலின் மேல் தளத்துக்கு வந்ததும், ரஜனி விரைந்து எழுந்து வந்து அவன் பக்கத்தை அடைந்தாள். “தயார்தானே? மனதில் சந்தேகம் ஒன்று மில்லையே?” “கொஞ்சங்கூட இல்லை.” “அப்படியானால் என்னோடு வா!” என்று சொல்லிவிட்டு ஜான் முன்னால் நடந்தான். யுத்தகாலமாதலால், கப்பலில் இராத்திரியில் விளக்குப் போடுவது கிடையாது. ஒரே இருட்டாயிருந்தது. ஜானுடைய வெள்ளை உடுப்பின் அடையாளத்தைக் கொண்டு ரஜினி நடந்தாள். ஓரிடத்தில் அவளுக்குக் கால் தடுமாறிற்று. ஜான் திரும்பி அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டான். ரஜனிக்கு மயிர் கூச்செறிந்தது. இரண்டு பேரும் மௌனமாய்க் கொஞ்ச தூரம் நடந்தார்கள். “இங்கே படிக்கட்டு, ஜாக்கிரதையாய் இறங்கி வா!” என்றான் ஜான். இறங்கிப் போனார்கள். இவ்விதம் கால்மணி நேரம் இருட்டில் நடந்த பிறகு, ஜான் ஓரிடத்தில் நின்றான். கதவு திறக்கும் சத்தம் கேட்டது. வெளியிலிருந்து குளிர்ந்த காற்று ’விர்’ரென்று ரஜனியின் முகத்தில் அடித்தது. அலைத்துளிகளும் தெறித்தன. “கடைசித் தடவை கேட்கிறேன். கொஞ்சம் கூட உன் மனதில் சந்தேகம் இல்லையே?” என்றான் ஜான். “இல்லவே இல்லை.” “இந்தக் கதவுக்கு வெளியில் ஏணி தொங்குகிறது. அதன் வழியாகக் கீழேயுள்ள படகில் நாம் இறங்க வேண்டும். படகு பலமாய் ஆடும். அதற்காகப் பயப்பட வேண்டாம். என்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்.” “செத்துப் போவதற்கு இவ்வளவு ஜாக்கிரதையும் தடபுடலுமா?” என்றாள் ரஜனி. ஆனாலும், ஜானின் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். வெளியில் தொங்கிய ஏணி வழியாக இருவரும் படகில் இறங்கினார்கள். கப்பலின் ஓரத்தில் பயங்கரமாகக் கொந்தளித்த ஜலத்தில் படகு தத்தளித்துக் கொண்டிருந்தது. ஜான் ஒரு கையால் ரஜனியைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையால் படகைக் கப்பலுடன் பிணைத்திருந்த சங்கிலியை அவிழ்த்து விட்டான். கப்பலிலிருந்து விடுபட்டதும் படகு அப்படியும் இப்படியும் வெகு பலமாக ஆடிற்று. ஆனாலும், அது உயிர் காக்கும் படகாதலால் கவிழவில்லை. சில நிமிஷத்துக்குள் கப்பலுக்கும் படகுக்கும் நடுவில் வெகுதூரம் ஏற்பட்டுவிட்டதென்று மங்கிய நட்சத்திர வெளிச்சத்தில் தெரிந்தது. “ஐயோ! மறுபடி கப்பலை எப்படிப் பிடிப்பீர்கள்!” என்றாள் ரஜனி. “பார்த்தாயா, முன்னாமேதான் சொன்னேனே?” “எனக்காகக் கேட்கவில்லை. நீங்கள் திரும்பிப் போகவேண்டாமா?” “எதற்காகப் போகவேண்டும்?” “எனக்குத்தான் உயிர் வாழ்வதில் சலிப்பு ஏற்பட்டு விட்டது.” “எனக்கும் அப்படித்தான்.” “ஆனால், கப்பலில் உங்களுக்கு வேலை இருக்கிறதே அதை யார் செய்வார்கள்?” “இன்று இரவு எனக்கு வேலையில்லை, நாளைக்கு யாருமே செய்யவேண்டிய அவசியமிராது.” “என்ன சொல்லுகிறீர்கள்?” “அரை மணி நேரம் பொறுத்துப் பார்த்தால் தெரியும்.” சற்றுநேரம் மௌனமாயிருந்த பிறகு ரஜினி, “நீங்களும் உயிரை விடுவதற்காகத்தான் வந்தீர்களா?” என்று கேட்டாள். “இல்லை; உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வந்தேன். சிலமணி நேரத்துக்கு…” “ஒன்றும் புரியவில்லை.” “அவசியம் புரியத்தான் வேண்டுமானால் சொல்கிறேன். ’மேனகா’வை ஜப்பானி ஸப்மரின் பார்த்துவிட்டது. துரத்திக் கொண்டு வருகிறது. கப்பலில் உள்ளவர்களுக்கெல்லாம் இன்னும் அரைமணி நேரந்தான் உயிர் வாழ்க்கை.” “ஐயோ!” “அவர்களைக் காட்டிலும் இன்னும் சில மணிநேரம் அதிகமாக நாம் உயிரோடிருக்கலாம்.” “எதற்காக இருக்க வேண்டும்.” “எதற்காக சாக வேண்டும்! பகவான் கொடுத்த உயிரை முடிந்தவரையில் காப்பாற்றிக் கொள்ளலாமே?” இச்சமயம் பின்புறத்தில் ஏதோ பளிச்சென்று பிரகாசம் தோன்றவே ரஜனி, திரும்பிப் பார்த்தாள். இருண்ட கடலின் நடுவில் திடீரென்று தோன்றிய தீயின் ஒளி வெகு பயங்கரமாயிருந்தது. அதே சமயத்தில் ஆயிரம் இடி சேர்ந்தாற்போல் இடித்தமாதிரி ஒரு கடூர சத்தம் கேட்டது. மலாய் நாட்டில் வெடிகுண்டு வெடிக்கும் சத்தத்தை ரஜனி கேட்டிருந்தாள். இப்போது கேட்ட சத்தத்துக்கு முன்னால் அந்த வெடிகுண்டுச் சத்தம் ஒன்றுமே இல்லையென்று சொல்லும்படி இருந்தது. அப்போது ரஜனி தன்னுடைய தலை பதினாயிரம் சுக்கல்களாக உடைந்துவிட்டதென்று கருதினாள். ஜான் அவளைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு “ஒன்றுமில்லை; பயப்படாதே!” என்றான். ரஜனியின் அதிர்ச்சி நீங்கி மறுபடியும் கண்ணைத் திறந்து பார்த்தபோது, முன்னர் தீயின் வெளிச்சம் தோன்றிய இடத்திலிருந்து இப்போது கரும் புகைத்திரள் அடர்த்தியாகக் கிளம்பிக் கொண்டிருப்பதைக் கண்டாள். “கப்பல் மூழ்கிவிட்டது” என்றான் ஜான். “ஐயோ! அவ்வளவு பேருடனுமா? என்ன கொடூரம்? எத்தனை பச்சைக் குழந்தைகள்? ஜப்பானியர் மனிதர்களா, ராட்சஸர்களா?” கப்பல் முழுகிய இடத்திலிருந்து கிளம்பிய பிரம்மாண்டமான அலைகள் வந்து படகை மோதத் தொடங்கின. அத்தனைத் தாக்குதலுக்கும் படகு முழுகாமலிருந்தது ரஜனிக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் கரும் புகைப்படலம் நாலாபுறமும் வியாபித்து வானையும் கடலையும் மூடி ஒரே இருள் மயமாகச் செய்து விட்டது. அம்மாதிரியான பயங்கர இருட்டை ரஜனி அதற்கு முன் பார்த்ததே கிடையாது. பயத்தினால் நடுங்கிய கரங்களினால் அவள் ஜானின் தோள்களைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டாள். சற்று நேரத்துக்கெல்லாம் புகைத்திரள் விலகத் தொடங்கியது. வானில் நட்சத்திரங்கள் மறுபடியும் கண் சிமிட்டின. “ஐயோ! என்னத்திற்காக என்னை இப்படி அழைத்துக் கொண்டு வந்தீர்கள்? எல்லாரோடு நானும் இதற்குள்…” “அதோ பார்!” என்றான் ஜான். கீழ்த்திசையின் அடிவானத்தில் தங்க நிறமான பிரகாசம் காணப்பட்டது. “அது என்ன? ஐயோ ஒரு வேளை இன்னொரு கப்பலோ?” “இல்லை இல்லை; கிழக்கே சந்திரோதயம் ஆகிறது.” பார்த்துக் கொண்டிருக்கும் போதே, சந்திரன் கடலில் குளித்துவிட்டு எழுந்திருப்பதுபோல் மேலே வந்தான். வானும் கடலும் சேருமிடத்தில் கடல் நீர் தங்கம் உருகித் தழலாகியது போல் தக தகா மயமாயிருந்தது. “ஆகா! என்ன அற்புதம்?” “அற்புதமாயிருக்குமென்று எனக்குத் தெரியும். இந்த அற்புதத்தைப் பார்த்துவிட்டுச் சாகலாம் என்றுதான் உன்னை அழைத்து வந்தேன்.” “சாவைப்பற்றி ஏன் பேச வேண்டும்? இருக்கிற வரையில் சந்தோஷமாயிருக்கலாமே?” “எப்படிச் சந்தோஷமாயிருப்பது? ஐயோ அவ்வளவு ஜனங்களும் இதற்குள் செத்துப் போயிருப்பார்களல்லவா? பச்சைக் குழந்தைகள் எப்படி தவித்திருக்கும்?” “பார்த்தாயா? சந்தோஷமாய்ப் பேசலாமென்று சொல்லிவிட்டு?” “என்ன சந்தோஷமான விஷயம் இருக்கிறது, பேசுவதற்கு?” “அவரவர்களுடைய வாழ்க்கையில் சந்தோஷமான சம்பவத்தைப் பற்றி சொல்லலாம்.” “நீங்கள் ஆரம்பியுங்கள்.” “இந்த நாளில் எந்தக் காரியத்திலும் ஸ்திரீகளுக்கு முதன்மை கொடுப்பதுதான் சம்பிரதாயம்.” “என் வாழ்நாளில் ஒரே ஒரு மாத காலம் நான் சந்தோஷமாயிருந்திருக்கிறேன். ஆனால், அந்த ஒரு மாதத்தை நினைத்துப் பின்னால் எப்போதும் துக்கப்பட்டிருக்கிறேன்.” “துக்கப்பட்டதைப் பற்றி இப்போது சொல்ல வேண்டாம். சந்தோஷமாயிருந்ததைப் பற்றிச் சொன்னால் போதும்.” “சொல்ல ஆரம்பித்தால் அழுகை வந்துவிடும்.” “கதை மாதிரி சொல்லப் பாரேன்.” சற்று நேரம் மௌனமாயிருந்துவிட்டு ரஜனி சொல்ல ஆரம்பித்தாள். “இருபது வருஷங்களுக்கு முன்னால் ராயபுரத்தில் ஒரு அப்பாவும் அம்மாவும் அவர்களுடைய பெண்ணும் ஒரு சின்ன வீட்டில் வசித்து வந்தார்கள். ஒரு காலத்தில் அவர்கள் ரொம்பப் பணக்காரர்களாயிருந்தவர்கள். அப்பா வியாபாரத்தில் பெருத்த நஷ்டமடைந்து சொத்தையெல்லாம் இழந்தார். இதனால் அவருடைய மனதே குழம்பிப் போய் விட்டது. இழந்த சொத்தை திரும்பச் சம்பாதிப்பதற்காக அவர் குதிரைப் பந்தயத்திற்கு போகத் தொடங்கினார். வீட்டில் பாக்கியிருந்த நகை நட்டுக்களுக்கும் சனியன் பிடித்தது. அம்மாவும் பெண்ணும் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. அவர்களுடைய வீட்டின் மச்சில் ஒரு அறை இருந்தது. அதை வாடகைக்கு விட்டால் கொஞ்சம் பணம் கிடைக்கலாமென்று ‘டு லெட்’ போர்டு போட்டார்கள். அதை ஒரு வாலிபப் பிள்ளை வந்து வாடகைக்கு எடுத்துக் கொண்டார். அவருக்கு ஹார்பரில் வேலை. அப்பாவுக்கு அவரை ரொம்பவும் பிடித்துவிட்டது. நாலு நாளைக்கெல்லாம்,”நீ என்னத்துக்குகாக ஹோட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்கிறாய்? இங்கேயே சாப்பிட்டுக் கொண்டிருக்கலாமே?" என்றார். அவரும் ‘சரி’ என்று சொல்லி, வீட்டிலேயே சாப்பிடவும் ஆரம்பித்தார். கீழ்த்திசையின் அடிவானத்தில் தங்க நிறமான பிரகாசம் காணப்பட்டது. “அது என்ன? ஐயோ ஒரு வேளை இன்னொரு கப்பலோ?” “இல்லை இல்லை; கிழக்கே சந்திரோதயம் ஆகிறது.” பார்த்துக் கொண்டிருக்கும் போதே, சந்திரன் கடலில் குளித்துவிட்டு எழுந்திருப்பதுபோல் மேலே வந்தான். வானும் கடலும் சேருமிடத்தில் கடல் நீர் தங்கம் உருகித் தழலாகியது போல் தக தகா மயமாயிருந்தது. “ஆகா! என்ன அற்புதம்?” “அற்புதமாயிருக்குமென்று எனக்குத் தெரியும். இந்த அற்புதத்தைப் பார்த்துவிட்டுச் சாகலாம் என்றுதான் உன்னை அழைத்து வந்தேன்.” “சாவைப்பற்றி ஏன் பேச வேண்டும்? இருக்கிற வரையில் சந்தோஷமாயிருக்கலாமே?” “எப்படிச் சந்தோஷமாயிருப்பது? ஐயோ அவ்வளவு ஜனங்களும் இதற்குள் செத்துப் போயிருப்பார்களல்லவா? பச்சைக் குழந்தைகள் எப்படி தவித்திருக்கும்?” “பார்த்தாயா? சந்தோஷமாய்ப் பேசலாமென்று சொல்லிவிட்டு?” “என்ன சந்தோஷமான விஷயம் இருக்கிறது, பேசுவதற்கு?” “அவரவர்களுடைய வாழ்க்கையில் சந்தோஷமான சம்பவத்தைப் பற்றி சொல்லலாம்.” “நீங்கள் ஆரம்பியுங்கள்.” “இந்த நாளில் எந்தக் காரியத்திலும் ஸ்திரீகளுக்கு முதன்மை கொடுப்பதுதான் சம்பிரதாயம்.” “என் வாழ்நாளில் ஒரே ஒரு மாத காலம் நான் சந்தோஷமாயிருந்திருக்கிறேன். ஆனால், அந்த ஒரு மாதத்தை நினைத்துப் பின்னால் எப்போதும் துக்கப்பட்டிருக்கிறேன்.” “துக்கப்பட்டதைப் பற்றி இப்போது சொல்ல வேண்டாம். சந்தோஷமாயிருந்ததைப் பற்றிச் சொன்னால் போதும்.” “சொல்ல ஆரம்பித்தால் அழுகை வந்துவிடும்.” “கதை மாதிரி சொல்லப் பாரேன்.” சற்று நேரம் மௌனமாயிருந்துவிட்டு ரஜனி சொல்ல ஆரம்பித்தாள். “இருபது வருஷங்களுக்கு முன்னால் ராயபுரத்தில் ஒரு அப்பாவும் அம்மாவும் அவர்களுடைய பெண்ணும் ஒரு சின்ன வீட்டில் வசித்து வந்தார்கள். ஒரு காலத்தில் அவர்கள் ரொம்பப் பணக்காரர்களாயிருந்தவர்கள். அப்பா வியாபாரத்தில் பெருத்த நஷ்டமடைந்து சொத்தையெல்லாம் இழந்தார். இதனால் அவருடைய மனதே குழம்பிப் போய் விட்டது. இழந்த சொத்தை திரும்பச் சம்பாதிப்பதற்காக அவர் குதிரைப் பந்தயத்திற்கு போகத் தொடங்கினார். வீட்டில் பாக்கியிருந்த நகை நட்டுக்களுக்கும் சனியன் பிடித்தது. அம்மாவும் பெண்ணும் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. அவர்களுடைய வீட்டின் மச்சில் ஒரு அறை இருந்தது. அதை வாடகைக்கு விட்டால் கொஞ்சம் பணம் கிடைக்கலாமென்று ‘டு லெட்’ போர்டு போட்டார்கள். அதை ஒரு வாலிபப் பிள்ளை வந்து வாடகைக்கு எடுத்துக் கொண்டார். அவருக்கு ஹார்பரில் வேலை. அப்பாவுக்கு அவரை ரொம்பவும் பிடித்துவிட்டது. நாலு நாளைக்கெல்லாம்,”நீ என்னத்துக்குகாக ஹோட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்கிறாய்? இங்கேயே சாப்பிட்டுக் கொண்டிருக்கலாமே?" என்றார். அவரும் ‘சரி’ என்று சொல்லி, வீட்டிலேயே சாப்பிடவும் ஆரம்பித்தார். அந்தப் பேதைப் பெண், தன்னை உத்தேசித்துத் தான் அந்த வாலிபர் அவ்விதம் வீட்டில் சாப்பிட ஒப்புக் கொண்டதாக எண்ணினாள். அவள் ஒரு வருஷத்துக்கு முன்பு வரையில் ‘கான்வெண்டு’ ஸ்கூலில் படித்து வந்தவள். அதற்குப் பிறகு அகப்பட்ட நாவல்களையெல்லாம் படித்து, ‘காதல்’ ‘பிரேமை’ என்னும் உலகத்திலே வசித்து வந்தாள். ‘கண்டதும் காதல்’ என்பது தங்களுக்குள் நேர்ந்து விட்டது என்று அவள் நம்பினாள். அந்தப் பேதைப் பெண்ணின் நம்பிக்கையை அந்த மனுஷரும் ஊர்ஜிதப்படுத்தினார். அவளைத் தனிமையில் சந்திக்கும் சந்தர்ப்பங்களை அவர் தேடினார். “உன்னைக் கண்ட பிறகு நான் புது மனுஷனாகிவிட்டேன் என்றும், இவ்வளவு சந்தோஷத்துடன் இதற்கு முன் நான் இருந்ததே இல்லை” என்றும் அடிக்கடி சொன்னார். அந்தப் பெண்ணோ, தான் சுவர்க்க வாழ்க்கையையே அடைந்து விட்டதாக எண்ணினாள். ஆனாலும் சங்கோசத்தினால் வாயைத் திறந்து ஒன்றும் பேசவில்லை. அவர் சொல்லியதையெல்லாம் மட்டும் கேட்டுக் கொண்டு மௌனமாயிருந்தாள். “ஒருநாள் அவர் நான் என்னவெல்லாமோ பிதற்றிக் கொண்டிருக்கிறேன். நீ வாயை திறக்க மாட்டேன் என்கிறாயே?” என்றார். அதற்கும் அவள் மௌனமாயிருக்கவே இந்த ஒரு கேள்விக்காவது பதில் சொல்லு, “நான் இந்த வீட்டில் இருக்கட்டுமா, போகட்டுமா?” என்று கேட்டார். “இருங்கள்” என்று அந்தப் பெண் சொன்னாள். உடனே, அவர் வெகு துணிச்சலுடன் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு ‘ரொம்ப வந்தனம்’ என்றார். அப்போது அவர் பார்த்த பார்வையானது, ‘உனக்காக என் பிராணனை வேண்டுமானாலும் தியாகம் செய்வேன்’ என்று சொல்லுவது போலிருந்தது. ரஜனி சற்று நேரம் மௌனமாயிருந்தாள். “அப்புறம்?” என்றான் ஜான். “அப்படிப்பட்டவர் இருபது ரூபாயைத் தியாகம் செய்வதற்கு மனமில்லாமல் போய்விட்டார்.” “அந்தப் பெண் இருபது ரூபாய் கேட்டு, அவன் கொடுக்க மறுத்துவிட்டானா?” “இல்லை, இல்லை. அவரிடம் போய் இருபது ரூபாய் கேட்பதைக் காட்டிலும் அந்தப் பெண் பிராணனையே விட்டிருப்பாள்” என்றாள் ரஜனி. “இப்படி அவர்கள் இருவரும் ஆனந்த மனோராஜ்ய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கையில், ஒரு நாள் அந்தப் பெண்ணின் அப்பா அவளிடன், ‘உன்னுடைய டிரங்குப் பெட்டியின் சாவியைக் கொஞ்சம் கொடு, அம்மா! என்னுடைய மேஜைச் சாவி கெட்டுப் போய் விட்டது. உன் பெட்டிச்சாவி சரியாயிருக்கிறதா, பார்க்கிறேன்’ என்றார். அந்தப் பெண் அவ்விதமே சாவியைக் கொடுத்தாள்.” “மறுநாள், மாடி அறைக்காரர் வந்து, ‘வீட்டு வேலைக்காரி எப்படி திருட்டு புரட்டு உண்டோ ?’ என்று கேட்டார். மாடி அறையில் இருந்த தம்முடைய பெட்டியிலிருந்து பத்து ரூபாய் பணத்தைக் காணோம் என்று சொன்னார். ‘பெட்டியைப் பூட்டியிருக்கிறீர்களா?’ என்று அந்தப் பெண் கேட்டதற்கு, ‘பூட்டியிருந்தாலென்ன? டிரங்குப் பெட்டியை மறுசாவி போட்டுத் திறப்பதுதானா கஷ்டம்?’ என்றார். உடனே அந்தப் பெண்ணுக்கு, அவருடைய அப்பா டிரங்குப் பெட்டிச்சாவியைக் கேட்டு வாங்கிக் கொண்டது ஞாபகம் வந்தது. அதோடு நேற்றுக் குதிரைப் பந்தய தினம் என்பதும் நினைவுவரவே, அவளுடைய மனது குழப்பமடைந்தது. அந்த மனக்குழப்பம் அவள் முகத்திலும் தெரிந்திருக்கத்தான் வேண்டும். அவர் அதைக் கவனித்தாரோ, மனதில் என்ன நினைத்துக் கொண்டாரோ தெரியாது. ஒன்றும் சொல்லாமலே போய் விட்டார்.” "அன்று மத்தியானம் அப்பாவிடம் அந்தப் பெண் ‘பெட்டிச்சாவி எங்கே?’ என்று கேட்டாள் ‘எங்கேயோ தொலைந்து போய்விட்டது அம்மா! இன்னொரு சாவி உன்னிடம் இருக்கிறதல்லவா?’ என்றார். இதனால் அந்தப் பெண்ணின் சந்தேகம் அதிகமாயிற்று. அடுத்து ஐந்தாறு நாள் அவள் தன் மனத்திற்குள் நரக வேதனை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அதை வெளியில் காட்டாமலிருப்பதற்கு முயன்றாள். அந்த வாலிபரும் அவளுடைய மனோ நிலைமையைப் பற்றி அறிந்து கொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. பணம் திருட்டுப் போனதைப் பற்றி மறுபடியும் பிரஸ்தாபிக்கவும் இல்லை. "அடுத்த குதிரைப்பந்தய நாளான சனிக்கிழமை வந்தது. அன்று காலையிலிருந்து அப்பாவின் போக்குவரவுகளை அந்தப் பெண் ஜாக்கிரதையாகக் கவனித்து வந்தாள். வழக்கம் போல் மாடிக்காரர் காலை எட்டு மணிக்கே ஹார்பருக்குப் போய்விட்டார். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அப்பா மாடிப்படி ஏறிப்போவதைப் பெண் பார்த்தாள். அவருக்குத் தெரியாமல் பின் தொடர்ந்து போய், என்ன செய்கிறார் என்று கவனித்தாள். செய்கிறது என்ன? அவள் பயந்தபடியேதான் நடந்தது. மாடி அறையில் இருந்த டிரங்குப் பெட்டியைத் திறந்து அதற்குள்ளேயிருந்து இரண்டு பத்து ரூபாய் நோட்டை எடுத்தார். அந்தப் பெண்ணுக்கு தலையில் இடி விழுந்தது போலிருந்தது. அப்பா தன்னைப் பார்க்காதபடி கீழே ஓடி வந்தாள். வெகு நேரம் யோசனை செய்தாள். அந்தச் சமயத்தில் அப்பாவிடம் அதைப்பற்றிக் கேட்டால் நிச்சயம் கொலை நடந்துவிடும் என்று அவளுக்குத் தெரியும். குதிரைப்பந்தயப் பிசாசு அவ்வளவு பொல்லாதது அல்லவா? தகப்பனார் சாப்பிட்டுவிட்டுப் போகும் வரையில் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தாள். அவள் பள்ளிக் கூடத்தில் படித்த காலத்திலிருந்து அப்பாவுக்குத் தெரியாமல் சேகரித்து வைத்திருந்த பணம் முப்பது ரூபாய் இருந்தது. அதில் இருபது ரூபாய் எடுத்துக் கொண்டு, தன்னிடமிருந்த டிரங்குப்பெட்டி சாவியையும் எடுத்துக்கொண்டு மறுபடியும் மாடிமேல் ஏறினாள். கைநடுக்கத்துடன் பெட்டியைத் திறந்து இருபது ரூபாய் நோட்டை அதில் வைக்கப் போனாள். அச்சமயத்தில் பின்னால் ஏதோ சத்தம் கேட்டுச் சட்டென்று திரும்பினாள். மச்சுப்படிகளுக்கு மேலே யாரோ ஒருவரின் தலைக் கிராப்புத் தெரிந்தது. தடதடவென்று அவர் கீழே இறங்கிப் போகும் சத்தமும் கேட்டது. அந்தப் பெண் கை கால் வெலவெலத்துப் போய் ஐந்து நிமிஷம் ஸ்தம்பமாய் உட்கார்ந்திருந்தாள். பிறகு அவள் கீழே இறங்கிப் போய் பார்த்த போது, அவரைக் காணோம். அவ்வளவுதான்; அதற்குப் பிறகு அவர் திரும்பி வரவே இல்லை! இரண்டு நாளைக்கெல்லம் அவரிடமிருந்து ஒரு கடிதம் மட்டும் வந்தது. அவசர காரியமாக லீவு எடுத்துக் கொண்டு ஊருக்குப் புறப்பட்டுப் போவதாகவும், திரும்பி வருவது நிச்சயமில்லையென்றும், வாடகைக்கும் சாப்பாட்டுச் செலவுக்கும் பெட்டியிலுள்ள பணத்தையும் சாமான்களையும் எடுத்துக் கொள்ளும்படியும் அந்தக் கடித்தத்தில் எழுதியிருந்தது." “அந்த சந்தேகக்காரன் அப்படிச் சொல்லாமல் போய்விட்டதைப் பற்றி அவனைக் காதலித்த பெண் ரொம்பவும் துக்கப்பட்டாளா?” என்று ஜான் கேட்டான். “ஆமாம்; அவன் போய்விட்டதைப் பற்றி அவள் துக்கப்பட்டாள்; கண்ணீர் விட்டாள்! பைத்தியம் பிடித்தவள் போலானாள். அவளுடைய துக்கத்தை ரொம்ப அதிகமாக்கியது என்னவென்றால், தன்னைக் கேவலம் திருடி என்பதாக நினைத்துக் கொண்டு அவர் போய்விட்டாரே என்பதுதான்” என்றாள் ரஜனி. “பிறகு அந்தப் பெண் என்ன செய்தாள்?” என்று ஜான் தழுதழுத்த குரலில் கேட்டான். “அப்புறம் அந்த பெண்ணின் வாழ்க்கை ஒரே துன்பமும் பயங்கரமும் தான். அதைப்பற்றி சொல்வதற்கு இஷ்டமில்லை. தயவு செய்து கேட்கவேண்டாம்.” “அப்படியானால் கேட்கவில்லை” என்றான் ஜான். “நீங்கள் கதை சொல்லப் போகிறீர்களா? இல்லையா?” என்று ரஜனி கேட்டாள். “நீ சொன்ன கதையைப் பூர்த்தி செய்யட்டுமா?” “ஆகா!” “சரி, கேள்.” “மாடி அறையில் அந்தப் பெண் பெட்டியைத் திறந்து வைத்துக் கொண்டு கையில் பணத்துடன் இருந்ததைப் பார்த்ததும், அந்த வாலிபனுக்கு மண்டை வெடித்து விடும் போல் ஆகிவிட்டது. தன்னுடைய இருதயத்தைக் கொள்ளை கொண்ட மோகினி, அத்துடன் திருப்தியடையாமல், தன் பணத்தையும், திருடுகிறாள் என்பதை அவனால் பொறுக்க முடியவில்லை. யாருக்குத் தன்னுடைய உடல் பொருள் ஆவியெல்லாவற்றையும் தத்தம் செய்ய எண்ணியிருந்தானோ, அவள் கேவலம் இருபது ரூபாய்க்கு ஆசைப்பட்டுத் தன் பெட்டியை மறுசாவி போட்டுத் திறக்கிறாள்! அவளுடைய காதல் கடைக்கண் பார்வையெல்லாம் வெறும் பாசாங்கு! பொய் வேஷம்! மோசம்! இந்த எண்ணத்தினால் வெறி பிடித்தவன் போலாகி அந்த வாலிபன் விரைந்து ஓடினான். அந்த வீட்டின் முகாலோபனமும் இனிமேல் செய்வதில்லை என்று தீர்மானித்தான். பெண் குலத்தையே சபித்தான். தான் அவ்விதம் ஏமாந்து போனதைப் பற்றித் தன்னையே சபித்துக் கொண்டான். ஆனால் நாள் போகப் போக அவனுடைய மனது மாறியது. ஆத்திரம் தணிந்தது. நிதானமாக யோசனை செய்யத் தொடங்கினான். அந்தப் பெண் செய்தது அவ்வளவு கொடிய காரியமா என்பதைப் பற்றி அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று.” “தரித்திரத்தின் கொடுமையினால்தானே அப்படி அவள் செய்திருக்க வேண்டும்? அவளுடைய தாயார் தகப்பனாரைக் காப்பாற்றுவதற்காகத்தானே செய்திருக்க வேண்டும்? இந்த எண்ணம் வலுப்பட்டதும், அவள்மேல் அவனுக்கிருந்த அன்பு இரு மடங்காயிற்று. கொஞ்ச நாள் கழித்து அந்த வீட்டை மறுபடியும் தேடிக்கொண்டு வந்தான். வீட்டில் வேறு யாரோ குடியிருந்தார்கள். ஏற்கனவே குடியிருந்தவர்களைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்ததும் தகவல் கிடைக்கவில்லை. இதனால் அந்த வாலிபனுக்கு உலக வாழ்க்கையின் மேலேயே வெறுப்பு உண்டாகிவிட்டது. துக்கத்தை மாற்றிக் கொள்வதற்காக அவன் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தான். ஜானகி ராமன் என்ற பெயரை ஜான் என்று மாற்றிக் கொண்டான். ஆனாலும் அவனுக்கு மனச்சாந்தி உண்டாகவில்லை. ஒரே இடத்தில் இருக்க அவனுக்கு பிடிக்காதபடியால் கொஞ்ச நாளைக்குப் பிறகு ஹார்பர் வேலையிலிருந்து கப்பல் வேலைக்குப் போனான். ஆகா! அப்படி அவன் கப்பல் வேலைக்குப் போனது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று? இல்லாவிட்டால், இருபது வருஷத்துக்குப் பிறகு அவனுடைய காதலி ராஜத்தை அவன் நடுக்கடலில் சந்தித்திருக்க முடியுமா?” “நடுக்கடலில் சந்தித்தவள் அந்தத் துரதிர்ஷ்டம் பிடித்த ராஜம்மாள்தான் என்று எப்படித் தெரிந்து கொண்டீர்கள்” என்று ரஜனி கேட்டாள். “எப்படித் தெரிந்து கொண்டேனா? என் உடம்பிலுள்ள ஒவ்வொரு அணுவும் இவள் தான் ராஜம் என்று எனக்குச் சொல்லிற்று. மேலும் அவள் அதிகமாக உருமாறவும் இல்லையே! இருபது வருஷத்துக்கு முன்னால் நான் பார்த்தபடியே தான் இருக்கிறாள். ஆனால் ராஜம் என்னை எப்படித் தெரிந்து கொண்டாள் என்பது தான் அதிசயமாயிருக்கிறது. நான் அடியோடு உருமாறிப் போயிருக்கிறேனே?” “உருமாறியிருந்தால் என்ன? கண்களை வேணுமானால் ஏமாற்றலாம்; மனதை ஏமாற்ற முடியுமா? நான் சாவதற்குள்ளே அவரை ஒரு தடவை கண்டிப்பாய் பார்க்க வேண்டும். பார்த்து நான் திருடியில்லையென்பதைத் தெரியப்படுத்த வேண்டுமென்னும் தாபம் என் மனதில் இடைவிடாமல் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட சந்தர்ப்பம் கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையும் இருந்தது. இந்தக் கப்பல் பிரயானந்தான் என்னுடைய கடைசிப் பிரயாணம் என்பதாகவும் எனக்குள் ஏதோ சொல்லிற்று. அப்படியானால், இந்தக் கப்பலில் தானே அவரை நான் சந்தித்தாக வேண்டும்? ஜான் என்ற பெயர் காதில் விழுந்ததும், என்னை இருபது வருஷத்துக்கு முன்னால் கைவிட்டுப்போன ஜானகிராமன் தான் என்று என் மனது சொல்லிவிட்டது.” வான வட்டத்தில் கால் பங்கு தூரம் சந்திரன் பிரயாணம் செய்து மேலே வந்திருந்தான். அலை அடங்கி அமைதியான கடலில், அவனுடைய வெள்ளி உருவம் ஸ்வச்சமாகப் பிரதிபலித்து, கடலுக்குள்ளே ஒரு சந்திரன் உண்டோ என்ற பிரமையை உண்டாக்கிற்று. சந்திரன் உதித்த திசையை நோக்கிப் படகு மெதுவாய் மிதந்து சென்றது. “ஒரு நாள் ராயபுரத்துக் கடற்கரையில் இதே மாதிரி பால் நிலவு எரித்தபோது நாம் இருவரும் உட்கார்ந்து பாடிக்கொண்டிருந்தது ஞாபகம் இருக்கிறதா!” என்று ஜானகி ராமன் கேட்டான். “பேஷாய் ஞாபகம் இருக்கிறது” என்றாள் ராஜம்மாள். “இன்றைக்கு மறுபடியும் பாடலாமா?” “ஆகா!” சாந்தம் குடிகொண்டிருந்த சமுத்திர மத்தியில் இளஞ்சந்திரன் சொரிந்த மோகன நிலவொளியில் ஒரு ஸ்திரீயின் இனிய குரலிலும், ஒரு புருஷனின் கம்பீரமான குரலிலும், பின்வரும் இன்ப கீதம் எழுந்தது. நாதர் முடி மேலிருக்கும் வெண்ணிலாவே - அங்கே நானும் வரவேண்டுகின்றேன் வெண்ணிலாவே! சச்சிதானந்தக் கடலில் வெண்ணிலாவே - நானும் தாழ்ந்து விழ வேண்டுகின்றேன் வெண்ணிலாவே! 7. ஒன்பது குழி நிலம் நாட்டாங்கரையில் கமலாபுரம் என்ற ஒரு கிராமம் உண்டு. ஸ்ரீமான் சினிவாசம் பிள்ளை அந்தக் கிராமத்திலே பெரிய மிராசுதாரர். கிராமத்தில் பாதிக்குமேல் அவருக்குச் சொந்தம். ஆற்றின் அக்கரையிலுள்ள கல்யாணபுரம் கிராமத்திலும் அவருக்கு நிலங்கள் உண்டு. ஆடுமாடுகளுக்கும், ஆள் படைகளுக்கும் குறைவில்லை. அவரைவிடப் பெரிய தனவந்தரின் புதல்வியாகிய அவருடைய வாழ்க்கைத் துணைவி அருங்குணங்களுக்கெல்லாம் உறைவிடமாய் விளங்கினாள். செல்வப் பேற்றில் சிறந்த இந்தத் தம்பதிகளுக்கு ஆண்டவன் மக்கட் பேற்றையும் அருளியிருந்தான். மூத்த புதல்வன் சுப்பிரமணியன் சென்னையில் ஒரு கலாசாலையில் படித்துக் கொண்டிருந்தான். அவனைப் பற்றிச் சீனிவாசம் பிள்ளை கொண்டிருந்த பெருமைக்கு அளவே கிடையாது. பி.எல். பரீட்சையில் தேறியதும் மைலாப்பூரில் பங்களாவும், ‘போர்டு’ மோட்டார் வண்டியும் வாங்கித் தருவதாக வாக்களித்திருந்தார். அவருடைய புகழோ, எங்கும் பரவியிருந்தது. சுற்றிலும் மூன்று தாலுக்காக்களில் கமலாபுரம் பெரிய பண்ணைப் பிள்ளையின் பெயரைக் கேள்விப்படாதவர் எவருமில்லை. இவ்வளவு பாக்கியங்களுக்கும் நிலைக்களனாயிருந்த சீனிவாசம் பிள்ளையை மூன்று வருஷகாலமாக ஒரு பெருங்கவலை வாட்டிவந்தது. அவருக்கும் ஆற்றின் அக்கரையிலுள்ள கல்யாணபுரம் பண்ணை சோமசுந்தரம் பிள்ளைக்கும் நடந்து வந்த விவகாரமே இக்கவலைக்குக் காரணம். சீனிவாசம் பிள்ளையும், சோமசுந்தரம் பிள்ளையும் நெருங்கிய உறவினர்களேயாயினும், வழக்கு ஆரம்பமானதிலிருந்து ஒருவர் வீட்டுக்கு ஒருவர் போவது நின்று போயிற்று. மனஸ்தாபம் முற்றிக் கடும் பகையாக மாறிவிட்டது. விவகாரம் ஓர் அற்ப விஷயங் காரணமாக எழுந்தது. கல்யாணபுரத்தில் சீனிவாசம்பிள்ளையின் வயலுக்கும் சோமசுந்தரம் பிள்ளையின் வயலுக்கும் நடுவே ஒன்பது குழி விஸ்தீரணமுள்ள திடல் ஒன்று இருந்தது. அத்திடலில் இரண்டு தென்னை மரங்கள் இருந்தன. நிலம் நீண்ட காலமாகச் சீனிவாசம் பிள்ளையின் அனுபோகத்தில் இருந்து வந்தது. ஒருநாள் களத்தில் உட்கார்ந்து அறுவடையைக் கண்காணித்துக் கொண்டிருந்த சோமசுந்தரம் பிள்ளை தாகம் மிகுந்தவராய் உறவினருடைய மரம் என்னும் உரிமையின் பேரில் தமது பண்ணையாளை ஏவி, அத்தென்னை மரங்களிலிருந்து இளநீர் கொண்டுவரச் சொன்னார். சின்னப்பயல் (அறுபத்தைந்து வயதானவன்) அவ்வாறே சென்று மரத்தில் ஏறி இளநீர் குலையைத் தள்ளினான். தள்ளியதோடு இறங்கினானா, பானையில் வடிந்திருந்த கள்ளையும் ஒரு கை பார்த்துவிட்டான்? இதை தூரத்திலிருந்து கவனித்த சீனிவாசம் பிள்ளை பண்ணையின் தலையாரி ஓட்டமாக ஓடி வந்தான். பாவம்! அவன் கட்டியது திருட்டுக்கள். அதை மற்றொருவன் அடித்துக் கொண்டு போவதானால்? சின்னப்பயல் இறங்கியதும் ஒருவரோடொருவர் கட்டிப் புரண்டார்கள். அவர்கள் அச்சமயத்தில் பிரயோகித்துக் கொண்ட வசைச் சொற்களை இங்கு வரைதல் அனுசிதமாகும்; சின்னப்பயல், இளநீர் இன்றியே சென்று எஜமானனிடம் ஒன்றுக்குப் பத்தாகக் கூறினான். “உங்கப்பன் வீட்டு மரமா என்று அந்தப் பயல் கேட்டான். நாம் சும்மா விடுவதா?” என்று கர்ஜித்தான். கமலாபுரம் பண்ணையின் கண்ணி வழியாகத் தண்ணீர் விட மறுத்தது, பொதுக் களத்தில் போட்டிருந்த பூசணிக்காயை அறுத்துச் சென்றது, பயிரில் மாட்டை விட்டு மேய்த்தது, போரை ஓரடி தள்ளி போட்டது, முதலியவைகளைப் பற்றிச் சரமாரியாகப் பொழிந்தான். சோமசுந்தரம் பிள்ளைக்கு ஒரு பக்கம் தாகம்; மற்றொரு பக்கம் கோபம். காரியஸ்தரை யோசனை கேட்டுக் கொண்டு மேலே காரியம் செய்ய வேண்டுமென்று வீட்டுக்குத் திரும்பினார். தலையாரி சுப்பன் கள்ளையிழந்த துக்கமும், அடிபட்ட கோபமும் பிடரியைப் பிடித்துத் தள்ள, ஓடோ டியும் சென்று சீனிவாசம் பிள்ளையிடம் பலமாக ‘வத்தி’ வைத்துவிட்டான். அன்று மாலையே சீனிவாசம் பிள்ளையின் ஆட்கள் பத்துபேர் சென்று மேற்படி திடலைச் சுற்றிப் பலமாக வேலியடைத்து விட்டு வந்தார்கள். இச்செய்தி அன்று இரவு சோமசுந்தரம் பிள்ளையின் காதுக்கெட்டியது. அவர் உடனே காரியஸ்தரிடம் “நான் சொன்னேனே, பார்த்தீரா? நமக்கு அந்தத் திடலில் பாத்தியம் இருக்கிறது. இல்லாவிடில் ஏன் இவ்வளவு அவசரமாக வேலி எடுக்க வேண்டும்? தஸ்தாவேஜிகளை நன்றாகப் புரட்டிப் பாரும்” என்று கூறினார். காரியஸ்தர் “தஸ்தாவேஜி இருக்கவே இருக்கிறது. சாவகாசமாகப் புரட்டிப் பார்ப்போம். ஆனால் அந்த வேலையை விட்டு வைக்கக்கூடாது” என்றார். “அதுவும் நல்ல யோசனைதான்” என்று பிள்ளை தலையை ஆட்டினார். இரவுக்கிரவே வேலி மறைந்து போய்விட்டது. மறுநாள் சீனிவாசம் பிள்ளையின் ஆட்கள் பத்து பேருக்குக் கள்ளு குடிப்பதற்காகக் குறுணி நெல் வீதம் கொடுக்கப்பட்டது. அவர்கள் குடித்துவிட்டுச் சென்று கல்யாணபுரம் பண்ணையையும், பண்ணையாட்களையும், பண்ணையைச் சேர்ந்தவர்களையும் ‘பாடத்’ தொடங்கினார்கள். சோமசுந்தரம் பிள்ளையின் ஆட்களும் பதிலுக்குப் பாட ஆரம்பித்தார்கள். பாட்டு ஆட்டமாக மாறி, ஆட்டம் அடிதடியில் முடிந்தது. மறுநாள் இரண்டு பண்ணைக் காரியஸ்தர்களும் தத்தம் ஆட்களை அழைத்துக் கொண்டு, எட்டு மைல் தூரத்திலுள்ள சப்மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்குச் சென்றார்கள். இதற்கிடையில் போலீஸ் எட்கான்ஸ்டேபிள் பண்ணைகளின் வீடுகளுக்கு வந்து ஒவ்வொரு வண்டி நெல் பெற்றுக் கொண்டு சென்றார். நாலைந்து முறைபோய் அலைந்த பிறகு, இரண்டு பண்ணைகளையும் சேர்ந்த ஆட்களில் ஐவருக்கு ஒரு மாதம் கடுங்காவலும் மற்றவர்களுக்குத் தலைக்கு ஐம்பது ரூபா அபராதமும் கிடைத்தன. அபராதத் தொகைகள் பண்ணைகளிலிருந்தே கொடுக்கப்பட்டன. கல்யாணபுரம் பண்ணை காரியஸ்தர் மிகுந்த பிரயாசை எடுத்துக் கொண்டு பழைய தஸ்தாவேஜிகளைப் புரட்டிப் பார்த்து ஒன்பது குழித்திடல் கல்யாணபுரம் பண்ணைக்குச் சொந்தம் என்பதை நிரூபிக்கத் தக்க தஸ்தாவேஜியைக் கண்டு பிடித்தார். முனிசீப் கோர்ட்டில் மறுநாளே வழக்குத் தொடுக்கப்பட்டது. ஊரில் பெரிய வக்கீலாகிய செவிட்டு ஐயங்காரைச் சோமசுந்தரம் பிள்ளை அமர்த்திக் கொண்டபடியால் சீனிவாசம் பிள்ளைக்குத் தகுந்த வக்கீல் அகப்படவில்லை. மிகுந்த யோசனைக்குப் பிறகு, முனிசீபின் மைத்துனருக்கு அம்மான் என்ற உறவு கூறிக் கொண்ட இளைஞர் ஒருவரிடம் வக்காலத்துக் கொடுக்கப்பட்டது. முனிசீபின் உறவினராயிருந்தாலென்ன? யாராயிருந்தாலென்ன? செவிட்டு ஐயங்காரிடம் சாயுமா? ஒன்பது மாதம் வழக்கு நடந்த பிறகு சோமசுந்தரம் பிள்ளை வெற்றி பெற்றார். சீனிவாசம் பிள்ளை சாதாரணமாகவே பிறருக்குச் சளைக்கிற மனிதரல்லர். அதிலும் பல்லாண்டுகளாக அனுபவித்து வந்த நிலத்தைப் பறிகொடுக்க யாருக்குத்தான் மனம் வரும்? அவருடைய அண்டை அயலார்கள் அவரிடம் வந்து இந்தச் சமயத்தில் மாற்றானுக்கு விட்டுக் கொடுத்து விடலாகாது என்று போதிக்கலானார்கள். தஞ்சாவூர் மேல் கோர்ட்டில் சீனிவாசம் பிள்ளை அப்பீல் வழக்குத் தொடுத்தார். தஞ்சாவூரிலுள்ளவர்களில் பெயர் பெற்ற வக்கீல் அமர்த்திக் கொண்டதோடு சென்ற தேர்தலில் வாக்கு பெறும் நிமித்தம் தமது வீட்டிற்கு வந்து சென்ற சென்னை ஸ்ரீமான் இராமபத்திர ஐயரை அமர்த்திக் கொண்டு வரும்படி தமது காரியஸ்தரை அனுப்பினார். தம்மைக் கண்டதும் ஐயர் பரிந்து வரவேற்பார் என்று எண்ணிச் சென்ற காரியஸ்தர் சொக்கலிங்கம் பிள்ளை, பாவம் ஏமாந்தார். ஸ்ரீமான் இராமபத்திரஐயர் தாம் வாக்குத் தேடிச் சென்றவர்களை மறந்து எத்தனையோ நாட்களாயின. கமலாபுரம் பண்ணையிலிருந்து தாம் வந்திருப்பதாக அறிவித்த பின்னரும் வக்கீல் பாரமுகமாக இருந்ததைக் கண்டு காரியஸ்தர் பெருவியப்படைந்தார். கடைசியாக செலவெல்லாம் போக நாளொன்றுக்கு ஐந்நூறு ரூபாய் தருவதாகப் பேசி முடித்து விட்டுச் சொக்கலிங்கம் பிள்ளை ஊருக்குப் புறப்பட்டார். இதற்கு இடையில் இரண்டு பண்ணைகளுக்கும் சில்லரைச் சண்டைகள் நடந்த வண்ணமாயிருந்தன. வாய்க்காலிலும், கண்ணியிலும், வரப்பிலும், மடையிலும், களத்திலும், திடலிலும் இரண்டு பண்ணைகளையும் சேர்ந்த ஆட்கள் சந்தித்த போதெல்லாம் வாய்ச் சண்டை, கைச்சண்டை, குத்துச் சண்டை, அரிவாள் சண்டை, வெட்டுச் சண்டை, இவைகளுக்குக் குறைவில்லை. வெகு நாட்களுக்கு முன் ஆஸ்பத்திரியில் கம்பவுண்டராயிருந்த கமலாபுரத்தில் வந்து குடியேறி இரண சிகிச்சையில் கைதேர்ந்தவரென்று பிரசித்திப் பெற்று விளங்கிய ஸ்ரீமான் இராமனுஜலு நாயுடுவுக்கு ஓய்வென்பதே கிடையாது. பகலிலும், இரவிலும், வைகறையிலும், நடுச்சாமத்திலும் அவருக்கு அழைப்புகள் வந்த வண்ணமாயிருந்தன. அவ்வூர் ‘அவுட் போஸ்ட்’ அதிகாரியாகிய எட்கான்ஸ்டேபிள் நாராயணசாமி நாயுடு தமது மனைவிக்கு வைர நகைகளாகச் செய்து போட ஆரம்பித்தார். தஞ்சாவூர் கோர்ட்டில் வழக்கு விசாரணை ஓராண்டு நீடித்திருந்தது. இவ்வளவு நாட்களுக்குப் பின், சுமார் ஐயாயிரம் ரூபாய் செலவழித்தப் பிறகு, தமது பக்கம் தீர்ப்புச் சொல்லப்பட்டதும், சீனிவாசம் பிள்ளைக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மகிழ்ச்சியை நேயர்களே ஊகித்தறிந்து கொள்ள வேண்டும். இதனால் அவருடைய மகிழ்ச்சி நீடித்திருக்கவில்லை. கல்யாணபுரம் சோமசுந்தரம் பிள்ளை சென்னை ஐகோர்ட்டில் மறுநாள் அப்பீல் கொடுத்து விட்டார் என்ற செய்தி இரண்டொரு நாட்களில் அவர் காதுக்கெட்டியது. சென்னையில் சட்டக் கலாசாலையில் படித்துக் கொண்டிருந்த அவர் அருமைப் புதல்வன் சுப்பிரமணியன், ஒன்பது குழி நிலத்துக்கு ஐயாயிரம் ரூபாய் செலவழித்தது போதுமென்றும், வழக்கில் வெற்றி பெற்றாலும் தோற்றுப் போனாலும் நஷ்டமே தவிர வேறில்லையென்றும் பலகாரணங்களை எடுத்துக்காட்டி நீண்ட கடிதம் எழுதினான். ஆனால் சீனிவாசம் பிள்ளையோ, என்ன வந்தாலும், தமது ஆஸ்தியே அழிந்து போவதானாலும் கல்யாணபுரம் பண்ணைக்குச் சளைப்பதில்லையென்றும், ஒரு கை பார்த்தே விடுகிறதென்றும் முடிவு செய்து விட்டார். ஆதலின் சென்னைக்குச் சென்று அங்கேயே தங்கி வழக்கை நடத்தி வரும்படி தமது காரியஸ்தருக்கு உத்தரவிட்டார். பின்னும் ஓராண்டு கழிந்த பின்னர் ஐக்கோர்ட்டில் தீர்ப்புச் சொல்லப்பட்டது. காரியஸ்தர் சொக்கலிங்கம் பிள்ளை ‘ஜெயம்’ என்று அவசரத் தந்தி கொடுத்து விட்டு அன்று மாலை போட்மெயிலிலேயே ஊருக்குப் புறப்பட்டார். சூரியன் உதயமாகுந் தருணத்தில் சீனிவாசம் பிள்ளைக்குத் தந்தி கிடைத்தது. தந்தியைப் படித்ததும் அவர் ஆனந்தக் கடலில் மூழ்கியவராய், தமது பந்து மித்திரர்களையும் ஆட்படைகளையும் அழைத்து வர ஏவினார். கற்கண்டு, சர்க்கரை, வாழைப்பழம், சந்தனம் முதலியவை ஏராளமாக வாங்கிக் கொண்டுவரச் சொன்னார். கடையைத் திறக்கச் செய்து, ஒரு மணங்கு அதிர்வெடி மருந்து வாங்கி வரும்படி ஓர் ஆளை அனுப்பினார். காலை எட்டு மணிக்குக் காரியஸ்தரும் வந்து சேர்ந்தார். அவரைச் சீனிவாசம்பிள்ளை பரிந்து வரவேற்று, “வாருங்கள், வாருங்கள். ஏன் நேற்றே தந்தி வந்து சேரவில்லை?” என்று வினவினார். “நேற்று மாலை ஐந்து மணிக்குத்தான் தீர்ப்புச் சொல்லப்பட்டது. உடனே சென்று தந்தி அடித்துவிட்டு, ஜாகைக்குப்போய் கைப்பெட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். பட்டணத்துத் தம்பியிடம் கூடச் சொல்லிக் கொள்ளவில்லை. யாரோ மகாத்மா காந்தியாமே! கடற்கரையில் அவருடைய பிரசங்கமாம். தம்பி அங்கே போயிருந்தான். ஆதலால் அவனிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் அவசரமாகப் புறப்பட்டு வந்து சேர்ந்தேன்” என்று சொக்கலிங்கம் பிள்ளை கூறினார். சீனிவாசம் பிள்ளை, அங்கு வந்திருந்தவர்களுக்கெல்லாம் சந்தனம், கற்கண்டு, வெற்றிலைப்பாக்குக் கொடுக்கச் சொன்னார். அதிர்வேட்டு போடும்படி உத்தரவிட்டார். ‘திடும்’ ‘திடும்’ என்று வெடிச்சத்தம் கிளம்பி ஆகாயத்தை அளாவிற்று. அப்பொழுது சீனிவாசம் பிள்ளை அங்கு வந்திருந்தவர்களைப் பார்த்துச் சொல்கிறார்:- “நமக்குப் பின்னால் நமது குழந்தைகள் சொத்துக்களை வைத்து நிர்வகிக்கப் போகிறதேது? பாருங்கள்; ஒன்பதினாயிரம் ரூபாய் செலவழித்தாலும் கடைசியில் பிதுராஜித சொத்து ஒன்பது குழி நிலத்தை மீட்டுக் கொண்டேன். நமது குழந்தைகளோ, ‘ஒன்பது குழி நிலம் பிரமாதமாக்கும்’ என்று சொல்லி விட்டு விடுவார்கள். தம்பி சுப்பிரமணியம் இங்கிலீஸ் படிப்பதன் அழகு, எனக்குப் புத்தி சொல்லி ‘ஒன்பது குழி போனால் போகிறது’ என்று கடிதம் எழுத ஆரம்பித்து விட்டான். அவன் எவ்வாறு இந்தச் சொத்துக்களை வைத்துக் காப்பாற்றப் போகிறான் என்பது பெரும் கவலையாக இருக்கிறது…” என்று இவ்வாறு பேசிக் கொண்டே வந்தவர், திடீரென்று ‘நில்’ ‘நிறுத்து’ என்று கூவினார். நிமிஷ நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. அப்போது ஆற்றில் அக்கரையில் ‘திடும்’ ‘திடும்’ என்று வேட்டுச் சத்தம் கிளம்புவது நன்றாகக் கேட்டது. அங்கே கூடியிருந்தவரனைவரும் திகைத்துப் போய்விட்டனர். சீனிவாசம் பிள்ளை பிரமித்துக் காரியஸ்தர் முகத்தைப் பார்த்தார். காரியஸ்தரோ கல்யாணபுரம் பக்கமாக நோக்கினார். சிறிது நேரத்துக்கெல்லாம் அந்த திசையிலிருந்து ஒருவன் வந்தான். அவனைப் பார்த்து, “கல்யாணபுரத்தில் வேட்டுச் சத்தம் கேட்கிறதே, என்ன விசேஷம்?” என்று காரியஸ்தர் கேட்டார். “நடுப்பண்ணை சோமசுந்தரம் பிள்ளைக்கு வழக்கில் ஜெயம் கிடைத்ததாம். ஏக ஆர்ப்பாட்டம்; வருவோர் போவோருக்கெல்லாம் கற்கண்டும், சர்க்கரையும் வாரி வாரிக் கொடுக்கிறார். வேட்டுச் சத்தம் வானத்தைப் பிளக்கிறது” என்று அவன் பதில் சொன்னான். சீனிவாசம் பிள்ளை அசைவற்று மரம் போலாகி விட்டார். காரியஸ்தர் சொக்கலிங்கம் பிள்ளைக்கு ஏழு நாடியும் ஒடுங்கிப் போய்விட்டது. அவர் கைப்பெட்டியைத் திறந்து தீர்ப்பு நகலை எடுத்துக் கொண்டு அவ்வூரில் இங்கிலீஷ் தெரிந்தவரான போஸ்டு மாஸ்டர் வீட்டுக்குப் புறப்பட்டார். சீனிவாசம் பிள்ளையும் ஆர்வம் தாங்காமல் அவருடன் சென்றார். அங்கிருந்தவர்கள் ஒவ்வொருவராய் நழுவ ஆரம்பித்தார்கள். ஜோசியர் ராமுவையர் இதுதான் தருணமென்று தட்டில் மீதியிருந்த கற்கண்டு முதலியவைகளைத் தலைகீழாகக் கவிழ்த்து மேல் வேஷ்டியில் முடித்துக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தார். போஸ்டுமாஸ்டர் தீர்ப்பைப் படித்துக் கல்யாணபுரம் சோமசுந்தரம் பிள்ளைக்கே ஜெயம் கிடைத்திருக்கிறதென்று கூறியதும், சீனிவாசம் பிள்ளைக்கு ஏற்பட்ட கோபத்தையும், துக்கத்தையும் யாரால் கூற முடியும்? சொக்கலிங்கம் பிள்ளையோ திட்டத் தொடங்கினார்:- “அந்த வக்கீல் குமாஸ்தா சாமிநாதையன் என்னை ஏமாற்றி விட்டான். அயோக்கியப் பார்ப்பான்…” அதற்குமேல் அவர் கூறிய மொழிகள் இங்கு எழுதத் தகுதியற்றவை. பிறகு சீனிவாசம் பிள்ளை என்னவென்று கேட்டதற்கு காரியஸ்தர் கூறியதாவது:- “அந்தப் பாவிகள் கோண எழுத்துப் பாஷையில் தீர்ப்புச் சொல்லி முடித்ததும் வக்கீல் குமாஸ்தா சாமிநாதையனைக் கேட்டேன். தீர்ப்பு நமக்கனுகூலம் என்று கூறி அவன் என்னிடம் பத்து ரூபாய் பறித்துக் கொண்டான். போதாதற்குக் காபி கிளப்புக்கு மூன்று ரூபாய் அழுததுடன், பவுண்டன் பேனா ஒன்றும் ஆறு ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்தேன். ஏமாந்து போனேன். அவசரத்தினால் தம்பி சுப்பிரமணியத்திடம் கூடத் தீர்ப்பைக் காட்டாமல் வந்துவிட்டேன். அந்தப் படுபாவி” என்று மீண்டும் வக்கீல் குமாஸ்தாவைத் திட்ட ஆரம்பித்தார். சீனிவாசம் பிள்ளை அன்று முழுதும் எரிந்து விழுந்த வண்ணமாயிருந்தார். அன்று அவருடைய ஆட்கள் பட்டபாடு ஐயனுக்குத்தான் தெரியும். அவர் எதிரில் வந்தவர்க்கெல்லாம் திட்டும் அடியும் கிடைத்தன. அன்று மட்டும் சோமசுந்தரம் பிள்ளை எதிர்ப்பட்டிருந்தால் பீமனுடைய சிலையைத் திருதராஷ்டிரன் கட்டித் தழுவி நொறுக்கியது போல் பொடிப் பொடியாக செய்திருப்பார். துன்பங்கள் எப்பொழுதும் தனித்து வருவது வழக்கமில்லையே? எதிர்பாராத சமயத்தில் தலைமேல் இடிவிழுந்தது போல மற்றொரு துயரச் சம்பவம் சீனிவாசம் பிள்ளைக்கு நேரிட்டது. சட்டக் கலாசாலையிலே படித்துக் கொண்டிருந்த அவரது புதல்வன் சுப்பிரமணியன் காந்திமகான் பிரசங்கம் கேட்டுவிட்டுச் சட்டக் கலாசாலையை பகிஷ்கரித்து வீடு வந்து சேர்ந்தான். வழக்கை இழந்த சீனிவாசம் பிள்ளை தமது புதல்வன் உயர்ந்து நிலைமையிலிருக்கிறானென்னும் ஒரு பெருமையாவது அடையலாமென்று நம்பியிருந்தார். தம்மிடம் வக்கீல்கள் பறித்துக்கொண்ட பணத்தைப்போல் எத்தனையோ மடங்கு பணம் தமது புதல்வன் மற்றவர்களிடமிருந்து பறிப்பானல்லவா என்று நினைத்து அவர் சில சமயங்களில் திருப்தியடைவதுண்டு. ஆனால், அந்த எண்ணத்திலெல்லாம் மண்ணைப் போட்டு, வெண்ணெய் வரும் சமயத்தில் தாழியுடைவதைப் போல் தமது புதல்வன் பரீட்சைக்குப் போகும் சமயத்தில் கலாசாலையை விட்டு வந்ததும் அவருக்குண்டான மனத்துயரைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? ஆயினும், கண்ணிலும் அருமையாக வளர்த்த ஒரே புதல்வனாதலால், சுப்பிரமணியத்தை அவர் கடிந்து கூறவில்லை. சுப்பிரமணியனும், சமயம் பார்த்து அவருக்குப் பல வழிகளிலும் தனது செய்கையின் நியாயத்தை எடுத்துக் கூறி, அவர் மனத்தைத் திருப்ப முயன்றான். “நீ என்னதான் கூறினாலும் என் மனம் ஆறுதல் அடையாது. இந்தப் பக்கத்தில் நமது சாதியாரிலே உன்னைப் போல் இவ்வளவு சிறு வயதில் எம்.ஏ. பரீட்சையில் தேறி பி.எல். படித்தவர்கள் வெகு அருமை. நீ மட்டும் தொடர்ந்து படித்திருந்தால், நம்முடைய சாதியார்களெல்லாம் தங்கள் வழக்குகளுக்கு உன்னையே நாடி வருவார்களல்லவா? அது எவ்வளவு பெருமையாயிருக்கும்” என்று சீனிவாசம் பிள்ளை கூறினார். “அப்பா! தாங்கள் சொல்கிறபடி நமது சாதியார் அனைவரும் என்னை நாடி வருவார்களென்று நான் நம்பவில்லை. அசூயை காரணமாக வேறு வக்கீல்களைத் தேடிப் போதலும் கூடும். தங்கள் கூற்றை உண்மையென ஒப்புக் கொண்டாலும், நான் நமது மரபினருக்கு நன்மை செய்பவனாவேனா. கோர்ட் விவகாரத்தினால் ஏற்படும் தீங்குக்கு நமது குடும்பமே சிறந்த உதாரணமாக விளங்கவில்லையா? மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பற்றி எனக்கு சிறிதளவிருந்த ஐயமும் இவ்வழக்கினால் நீங்கிவிட்டது. ஒன்பது ரூபாய் பெறக்கூடிய ஒன்பது குழி நிலத்திற்காக நாம் பதினாறாயிரம் ரூபாய் தொலைத்தோம். அவர்களும் அவ்வளவு தொகை செலவழித்திருப்பார்கள். பார்க்கப் போனால் நாமும் அவர்களும் உறவினர்களே. இந்த ஒன்பது குழி நிலத்தை யார் வைத்துக் கொண்டால் தான் என்ன மோசம். பண நஷ்டத்தோடன்றி இந்த வழக்கு நமக்கும் அவர்களுக்கும் தீராப் பகையையும் உண்டாக்கி விட்டது. கோர்ட்டுகளும் வக்கீல்களும் அதிகமாவதற்குத் தகுந்தாற்போல் தேசத்தில் வழக்குகளும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. பெருந் தீங்குகளுக்குக் காரணமாயிருக்கும் இத்தொழில் செய்து சம்பாதிக்கும் பணத்திலோ, பெரும் பாகம் மோட்டாருக்கும், பெட்ரோல் எண்ணைக்கும், பீங்கான் சாமான்களுக்கும், மருந்துகளுக்குமாக அன்னிய நாடுகளுக்குச் சென்று விடுகிறது. அன்னிய அரசாங்கம் இந்நாட்டில் நிலைத்து பலம் பெறுவதற்குக் கோர்ட்டுகளும் வக்கீல்களும் காரணமாயிருக்கின்றனர். இத்தகைய தொழிலை செய்வதை விட எனக்குத் தெரிந்த சட்ட ஞானத்தைக் கொண்டு இப்பக்கத்தில் ஏற்படும் வழக்குகளை கோர்ட்டுக்குப் போகவிடாமல் தடுத்து தீர்த்து வைப்பது சிறந்த வேலையென்று தங்களுக்குத் தோன்றவில்லையா?” என்று சுப்பிரமணியன் பலவாறாக எடுத்துக் கூறி தந்தையை சமாதானம் செய்ய முயன்றான். நாட்டாற்றில் புதுவெள்ளம் பெருக்கெடுத் தோடியது. இரு கரையிலும் மரங்களடர்ந்ததனால், நீரின் மேல் இருண்ட நிழல் படிந்திருந்தது. ஆங்காங்கு ஒவ்வோர் ஒளிக்கிரணம், இலைகளினூடே நுழைந்து தண்ணீரை எட்டிப் பார்த்தது. சீனிவாசம் பிள்ளை ஒரு கரையில் உட்கார்ந்து பல் துலக்கிக் கொண்டிருந்தார். திடீரென்று அவர் முன்னால் எதிர்க்கரை ஓரத்தில் நீரில் ஓரு சேலையின் தலைப்பு மிதப்பதைக் கண்டார் - ஒரு பெண்ணுருவம்! சீனிவாசம் பிள்ளை நன்றாக உற்றுப் பார்த்தார். நீலவானத்தில் மெல்லிய மேகத் திரையால் மறைக்கப்பட்ட களங்கமற்ற முழுமதியை போன்று அந்நீல நீர்ப்பெருக்கில் அலைகளால் சிறிதளவே மறைந்து திகழ்ந்த அவ்வழகிய வதனம் யாருடையது? நுனியில் சிறிது வளைந்துள்ள அந்த மூக்கு, அவ்வழகிய செவ்விதழ்கள், திருத்தமாக அமைந்த அந்த முகவாய்க்கட்டை, நீண்டு வளர்ந்து அலையில் புரளும் கரிய கூந்தல் - ஆ! அவருடைய உறவினர் - இல்லை - பகைவர் சோமசுந்தரம் பிள்ளையின் அருமை புதல்வி நீலாம்பிகையே அவள். ஒரு வினாடிக்குள் சீனிவாசம் பிள்ளையின் மனதில் ஆயிரம் எண்ணங்கள் சுழன்றன. உயிரினும் அருமையாக வைத்துப் போற்றி வளர்த்து வரும் ஒரே பெண் இறந்தொழிந்தால் சோமசுந்தரம் பிள்ளையின் கர்வம் அடங்கி விடுமல்லவா? தாம் பேசாமல் போய் விட்டாலென்ன? ஆனால், அடுத்த கணத்தில், அவர் சோமசுந்தரம் பிள்ளையையும், அவரிடம் தமக்குள்ள பகையையும், ஒன்பது குழி நிலத்தையும், ஒன்பதாயிரம் ரூபாய் நஷ்டத்தையும் முற்றிலும் மறந்தார். குழந்தை நீலாம்பிகை ஆற்றில் போகிறாளென்னும் ஒரு நினைவே அவர் உள்ளத்தில் எஞ்சி நின்றது. அவரையும் அக்குழந்தையையும் பிணைத்த இரத்த பாசத்தினால் இழுக்கப்பட்டவராய், அவர் திடீரெனத் தண்ணீரில் குதித்து நீந்திச் சென்று நீலாம்பிகையைக் கொண்டு வந்து கரை சேர்த்தார். ஆனால், அதன் பின்னர் என்ன செய்வதென்று அவருக்குத் தோன்றவில்லை. உணர்ச்சியற்றுக் கிடந்த உடலில் உயிர் தளிர்க்கச் செய்வதெப்படி? அப்படியே தூக்கிக் கொண்டு தமது வீடு சேர்ந்தார். அவர் புதல்வன் சுப்பிரமணியன், உள்ள நிலைமையை ஒரு கணத்தில் குறிப்பாக உணர்ந்தான். சாரணர் படையில் சேர்ந்து பயிற்சி பெற்றவனாதலால், இவ்வித அபாய காலங்களில் செய்ய வேண்டிய ஆரம்ப சிகிட்சைகளைச் செவ்வையாகக் கற்றிருந்தான். நீலாம்பிகை மீண்டும் உணர்வு பெற்றபோது தான் வேறொருவர் வீட்டில் கட்டிலின் மீது விரிக்கப்பட்ட மெத்தையின் மேல் கிடத்தப் பட்டிருப்பதைக் கண்டாள். அவளுடைய கண்கள், குனிந்த வண்ணம் அவளுக்கு எப்பொழுது உணர்வு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த சுப்பிரமணியனுடைய கண்களைச் சந்தித்தன. நீலாம்பிகையுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுமிகள் ஓட்டமாக ஓடி, சோமசுந்தரம் பிள்ளை வீட்டுக்குச் சென்று அவர்கள் வீட்டுப் பெண் சுழலில் அகப்பட்டு ஆற்றோடு போய் விட்டதாக தெரிவித்தார்கள். சோமசுந்தரம்பிள்ளையும் அவர் மனைவியும் மற்றுமுள்ளவர்களும் அடித்துப் புடைத்துக் கொண்டு ஓடி வந்தார்கள். ஆனால் அவர்கள் சிறிது தூரம் வருவதற்குள் சீனிவாசம் பிள்ளை அனுப்பிய ஆள் அவர்களைச் சந்தித்து, நீலாம்பிகை சீனிவாசம் பிள்ளையினால் காப்பாற்றப்பட்டு அவருடைய வீட்டில் சுகமாக இருப்பதாகத் தெரிவித்தான். அதன்மேல் சோமசுந்தரம் பிள்ளை முதலியவர்கள் சிறிது மன ஆறுதல் பெற்றுச் சீனிவாசம் பிள்ளையின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். குழந்தை நீலாம்பிகையை பார்த்துச் சிறிது துக்கம் தணிந்த பின்னர், சீனிவாசம் பிள்ளையும் சோமசுந்தரம் பிள்ளையும் முகமன் கூறிக் கொண்டார்கள். எல்லோரும் அன்று சீனிவாசம் பிள்ளை வீட்டிலேயே உணவருந்தினார்கள். பழைய உறவினரும் இடையில் பகைவர்களாயிருந்து பின்னர் சேர்ந்தவர்களுமான அவ்விரு குடும்பத்தாருக்கும் விரைவிலேயே புதிய நெருங்கிய உறவு என்ன ஏற்பட்டதென்று வாசகர்களுக்கு நாம் சொல்லவும் வேண்டுமோ? 8. கணையாழியின் கனவு சகுந்தலை சுயம்வரம் கனவுதான்; ஆனாலும், எவ்வளவு இன்பகரமான கனவு! அசோக வனத்திலிருந்த சீதையிடம் திரிஜடை தான் கண்ட கனவைக் கூறி வந்தாள். சீதை மிகவும் மகிழ்ச்சியுடன் அதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். கடைசியாகத் திரிஜடை, “….இராவணனுடைய மாளிகையிலிருந்து செந்தாமரையாள் ஆயிரம் முகமுடைய திருவிளக்கைக் கையில் ஏந்திக் கிளம்பி வந்து விபீஷணன் மனையில் புகக் கண்டேன். ஜானகி! இத் தருணத்தில் நீ என்னை எழுப்பவே கண் விழித்தேன்” என்று கூறி முடித்தாள். அப்போது சீதை, “அம்மா! மறுபடியும் தூங்கு, அந்தக் கனவின் குறையையும் கண்டுவிட்டு எனக்குச் சொல்லு” என்று வேண்டிக் கொண்டாள். (“இது என்ன? நீர் கூட இராமாயண ஆராய்ச்சியில் இறங்கிவிட்டீரா?”) இல்லை, இல்லை உதாரணத்துக்காகவே மேற்படி சம்பவத்தைக் குறிப்பிட்டேன். ரகுராமன் கனவிலிருந்து கண் விழித்ததும் ஏறக்குறைய சீதையைப் போலவேதான் ஆதங்கப்பட்டான். “மறுபடியும் தூங்க மாட்டோ மா? அந்தக் கனவின் பாக்கியையும் காணமாட்டோ மா?” என்று ஏங்கினான். “ரகுராமனா? எந்த ரகுராமன்?” ஓகோ! மன்னிக்க வேண்டும். இராமாயணத்தின் கதாநாயகனாகிய ரகுராமன் அல்ல; இவன் கணையாழி கே.பி. ரகுராமன், பி.ஏ. (“கணையாழியா? எந்தக் கணையாழி?”) அட உபத்திரவமே! கணையாழி என்றால், அநுமார் இராமரிடமிருந்து வாங்கிச் சீதையிடம் கொண்டுபோய்க் கொடுத்த கணையாழி அல்ல. இது, நான் சொல்லப் போகும் கதை நடந்த ஊர். அந்த ஊருக்கு ஏன் ‘கணையாழி’ என்ற பெயர் வந்ததென்பது வேறு கதை. அதை மற்றொரு சமயம் சொல்லலாம். இப்போது ரகுராமன் கண்ட ரஸமான கனவைக் கூறுகிறேன். சகுந்தலை - இது அவளுடைய உண்மையான பெயரல்ல; மற்றோர் இராமயணப் பெயர் வந்தால் வாசகர்களால் தாங்க முடியாது என்று பயந்து நான் மாற்றி இட்ட பெயர். சகுந்தலை ஆற்றங்கரை அரசமரத்தின் அடிக்கிளையில் ஏறி, உல்லாசமாய்ச் சாய்ந்து கால்களைத் தொங்கவிட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். அவள் வலது கரத்தில் ஒரு பூமாலை தொங்குகிறது. கே.பி.ரகுராமனும், இன்னும் கணையாழி கிராமத்திலே கதாநாயகர்களாவதற்குத் தகுதி வாய்ந்தவர்களாயிருந்த இளைஞர்கள் அனைவரும் அந்த மரத்தடியில் நின்று - உட்கார்ந்து - நின்று - உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். தெளிவாய்ச் சொன்னால், தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்தார்கள்! சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர்கள் ஒவ்வொருவராகக் களைத்துப் போய் உட்காரத் தொடங்கினார்கள். ஒருவர், இருவர், மூவர், நால்வர்… உட்கார்ந்து விட்டார்கள். ரகுராமனும், வைத்தியநாதனும் மட்டுந்தான் பாக்கி. கடைசியில், வைத்தியநாதனும் தோல்வியுற்று உட்கார்ந்தான், அப்போது மரத்தின் மீதிருந்த சகுந்தலை குயிலினும் யாழினும் இனிய குரலில், “ரகுராமனே ஜயித்தார். அவருக்கே நான் மாலையிடுவேன்” என்று சொல்லிக் கொண்டே மரத்திலிருந்து கீழிறங்கலானாள். அப்போது ரகுராமன் அவளுக்குக் கைகொடுத்து இறக்கிவிடுவதற்காகத் துள்ளிக் குதித்துச் சென்றான். இத்தகைய ரஸமான, ருசிகரமான, நாவிலே ஜலம் ஊறச் செய்யும்படியான இடத்திலேதான் ரகுராமன் கண் விழித்தது. நிதானித்துப் பார்த்தான். தான் படுக்கையிலிருந்து எழுந்து தாழ்வாரத்தின் தூணையும், கூரை விட்டத்தையும் பிடித்த வண்ணமாய் நிற்பதைக் கண்டான். மறுபடியும் படுத்துத் தூங்கி, அந்தக் கனவின் குறையையும் காணமாட்டோ மாவென்று அவன் உள்ளம் துடிதுடித்தது. ஆனால், பிறகு தூக்கம் வரவேயில்லை. மனம் எண்ணாததெல்லாம் எண்ணிற்று. இந்தக் கனவு, முதல் நாள் சாயங்காலம் தானும் மற்றக் கணையாழி இளைஞர்களும் பேசிக் கொண்டிருந்ததன் பயனேயென்பது அவனுக்கு ஞாபகம் வந்தது. “முன்னெல்லாம்போல் இக்காலத்திலும் சுயம்வரம் ஏன் நடத்தக் கூடாது? நமக்குள் தீரமான காரியம் செய்கிறவன் சகுந்தலையை மணம் புரிவதென்று ஏற்படுத்தி விட்டால்?…” என்றான் கல்யாணசுந்தரம். “அப்படி ஏற்படுத்தினால் நீதான் ஜயிப்பாய் என்று எண்ணமோ?” என்றான் இராமமூர்த்தி. “எனக்கு ஒன்று தெரியும்; யார் அதிகமான தோப்புக் கரணம் போட முடியும் என்று பந்தயம் ஏற்படுத்தினால், ரகுராமன் தான் ஜெயிப்பான்” என்று வைத்தியநாதன் சொன்னான். எல்லாரும் சிரித்தார்கள். வைத்தியநாதன் கூறியதில் கொஞ்சம் உண்மையுண்டு. ரகுராமன் சிறு பையனாயிருந்த போதிலிருந்து பஸ்கி போட்டுப் பழகியவன். முன்னூறு, நானூறு பஸ்கி ஒரே மூச்சில் அவனால் போட முடியும். பிறகு, அவர்களில் ஒவ்வொருவனும் எந்தெந்தப் பந்தயத்தில் ஜயிப்பான் என்பதைப் பற்றிப் பேச்சு நடந்தது. இவ்வாறு, தன்னைப் பரிகாசம் செய்வதற்காக, அவர்கள் சொன்னதையே தான் கனவில் செய்ததாகக் கண்டதை நினைக்க ரகுராமனுக்குச் சிறிது நாணமாயிருந்தது. ஆனாலும் என்ன? மற்றவர்களுக்கு அது தெரியப் போவதில்லை. தன் வரையில் மறுபடியும் கண்விழித்தே எழாமல் அந்தக் கனவு காண்பதிலேயே வாழ்நாள் முழுவதும் கழித்துவிட மாட்டோ மா என்று அவனுக்குத் தோன்றியது. கணையாழியில் அன்றிரவு ரகுராமனைப் போல் பந்தயத்தில் மற்றவர்களைத் தோற்கடித்துச் சகுந்தலையை மணம் புரிவது சம்பந்தமான கனவு கண்டவர்கள் இன்னும் பலர் உண்டு. வைத்தியநாதன் என்ன கனவு கண்டான் தெரியுமா? அவனும், இராமமூர்த்தி, ரகுராமன் முதலியோரும் வரிசையாக இலைகளுக்கு முன்னால் உட்கார்ந்தார்கள். எதிரில் ஒரு பெரிய அண்டா நிறைய இட்டிலியும், ஒரு ஜாடி நிறைய எண்ணெயும், மிளகாய்ப் பொடி வகையராக்களும் வைத்திருந்தன. சகுந்தலை அந்த இட்டிலிகளை எடுத்துப் பரிமாற ஆரம்பித்தாள். அருகில் வைத்திருந்த கறுப்புப் பலகையில் அவர்கள் தின்ற இட்டிலிகளுக்குக் கணக்குப் போட்டு வந்தாள். மற்றவர்கள் எட்டு, பத்து, பதினைந்து, பதினெட்டாவது இட்டிலியில் நின்று விட்டார்கள். ஆனால் வைத்தியநாதனோ மேலே மேலே போய்க் கொண்டிருந்தான். இட்டிலி பரிமாறிக் கொண்டிருந்த - ஒரே ஒரு தந்த வளையல் மட்டும் அணிந்த - சகுந்தலையின் மலர்க் கரத்தை அவன் பார்ப்பான். “இத்தகைய அழகிய கையினால் இட்டிலி பரிமாறப் படுகையில், அந்த அண்டாவிலுள்ள இட்டிலிகளைச் சாப்பிடுவதுதானா ஒரு பிரமாதம்? முடிவென்பதே இல்லாமல் இட்டிலிகளைச் சாப்பிட்டுக் கொண்டேயிருக்கலாமே!” என்று அவனுக்குத் தோன்றும். கடைசியாக, அவன் நாற்பத்தாறாவது இட்டிலி தின்று கொண்டிருக்கையில், சகுந்தலை பவழத்தை வென்ற தன் இதழ்களைத் திறந்து, “இதோ வைத்தியநாதனேதான் வெற்றி பெற்றார். அவருக்கே நான் மாலை சூட்டுவேன்!” என்று கூறி மாலையை எடுத்து வந்தாள். அந்த சமயத்தில் - நாற்பத்தாறாவது இட்டிலி வைத்தியநாதனுடைய தொண்டைக்குக் கீழே இறங்காமல் அங்கேயே நின்றுவிட்டது. திக்கு முக்காடிப் போய் வைத்தியநாதன் உளறிக் கொண்டே படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான். பனிக்காக அவன் தலையில் கட்டிக் கொண்டிருந்த கம்பளித் துணியின் முடிச்சு கழுத்தில் இறுகியிருப்பதை உணர்ந்து அதைத் தளர்த்தி விட்டான். இம்மாதிரியே கல்யாணசுந்தரம், ராஜசேகரன், மாசிலாமணி, இராமமூர்த்தி முதலியவர்கள் எல்லோரும் அன்றிரவு வெவ்வேறு விதமான கனவுகள் கண்டார்கள். கல்கத்தா ரங்கநாதம் கணையாழி, அருணை நதி தீரத்திலுள்ள வளம் பொருந்திய கிராமம். அந்தக் கிராமத்தார் பரம்பரையான புத்திசாலிகள். அவர்கள் தானிய லக்ஷ்மியை இஷ்டதெய்வமாகக் கொண்டு வழிபட்டு வந்தார்கள். இந்த வழிபாட்டில் வட்டி, வட்டிக்கு வட்டி, கூட்டு வட்டி ஆகிய மந்திரங்களை இடை விடாமல் உச்சரித்து வந்தார்கள். சக்திவாய்ந்த இந்த மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டு, தனலக்ஷ்மியும் அக்கிராமவாசிகளுக்கு அடிமை பூண்டு வாழ்ந்து வந்தாள். இத்தகைய கிராமத்தில் இளந்தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் ஆங்கிலப் படிப்புள்ளவர்களாயிருந்ததில் ஆச்சரியமில்லையல்லவா? அந்த ஊரில் இருபது வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் எல்லாரும் அநேகமாக எம்.ஏ.க்கள்; எம்.ஏ. அல்லாதவர்கள் பி.ஏ.க்கள்; அதுவும் இல்லாதவர்கள் பாதி பி.ஏ.க்கள். எல்லோரும் பணக்காரர்கள் ஆதலால், உத்தியோகத்தைத் தேடி அலையாமல் வேண்டுமானால் உத்தியோகம் தங்களைத் தேடி வரட்டும் என்று ஊரில் தங்கி விட்டவர்கள். அப்படிப்பட்ட கணையாழி கிராமத்தில் இப்போது வசித்து வந்த முந்தின தலைமுறையைச் சேர்ந்தவர்களில் கல்கத்தா ரங்கநாதம் என்று ஒருவர் இருந்தார். கணையாழியில் பிறந்துங்கூட லேவாதேவி செய்யாத அபூர்வ மனிதர்களில் இவர் ஒருவர். அக்கவுண்டண்ட் ஜெனரல் உத்தியோகத்திலிருந்து பென்ஷன் பெற்றுச் சமீபத்தில் விலகியவர். வெகுகாலம் கல்கத்தாவில் வசித்தபடியால், இவருக்குக் கல்கத்தா ரங்கநாதம் என்று பெயர் வந்தது. இரண்டு வருஷத்துக்கு முன்பு இவருடைய அருமை மனைவியும், மூத்த புதல்வனும் ஏறக்குறைய ஒரே சமயத்தில் காலஞ்சென்ற பிறகு, தம் புதல்வி சகுந்தலையை ஸ்ரீ ரவீந்தரநாதரின் சாந்திநிகேதனத்தில் விட்டுவிட்டுத் தாம் கணையாழிக்கே வந்துவிட்டார். இங்கு ஒரு சமையற்காரனை வைத்துக் கொண்டு ஏகாங்கியாய் வாழ்ந்து வந்தார். ஐந்தாறு பீரோக்கள் நிரம்பிய அடுக்கி வைத்திருந்த புத்தகங்கள்தான் அவருக்குத் துணையாய் இருந்து வந்தனர். சில சமயம் கணையாழி இளைஞர்களில் சிலர், அவர் வீட்டுக்குப் போய் அவருடன் பேசிக் கொண்டிருப்பதுண்டு. அதாவது, பெரும்பாலும் அவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள்; அவர் கேட்டுக் கொண்டிருப்பார். ஆனால், சிற்சில சமயம் அவர் உண்மையில் தாங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறாரா, அல்லது கேட்டுக் கொண்டிருப்பது போல் பாசாங்கு செய்கிறாரா என்று அவர்களுக்குச் சந்தேகம் உண்டாவதுண்டு. உதாரணமாக, அவர்கள் ஒரு நாள் கிரிக்கெட்டைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், ஸி.கே.நாயுடு எந்த ஊர்க்காரர் என்று கேள்வி பிறந்தது. அவர் தமிழ்நாட்டில் பிறந்தவர்தான் என்று ஒருவன் சொன்னான். “இல்லை, இல்லை! அவர் பங்களூர்க்காரர்” என்றான் மற்றொருவன். “என்ன, உங்களுக்குத் தெரியுமா ஸி.கே.நாயுடு எந்த ஊர்க்காரர் என்று?” என்பதாக ஒருவன் ரங்கநாதம் அவர்களைப் பார்த்துக் கேட்டான். அப்போது அவர் அரை நிமிஷம் திகைத்திருந்துவிட்டு, “ஸரோஜினி நாயுடு தானே? வங்காளி ஸ்திரீதான். சந்தேகமென்ன?” என்று கூறினார். இத்தகைய மெய்மறந்த பேர்வழி ஒரு நாள் கணையாழி இளைஞர்களிடம் மிகவும் உற்சாகமாகவும், பரபரப்புடனும் வார்த்தகளைக் கொட்டிப் பேசத் தொடங்கியபோது அவர்களுக்குப் பெரிதும் ஆச்சரியமாய்ப் போயிற்று. முதலில் அவர் கணையாழி ஸ்டேஷனில் எந்தெந்த ரயில் எவ்வெப்போது வருகிறதென்பதை மிக நுட்பமாய் விசாரித்தார். பிறகு கணையாழியைச் சுற்றி மோட்டார் போகக்கூடிய நல்ல சாலைகள் என்னென்ன இருக்கின்றனவென்று கேட்டார். அப்புறம், அந்த இளைஞர்களில் யாருக்காவது கலியாணம் ஆகியிருக்கிறதாவென்று வினவினார். ஒருவருக்கும் ஆகவில்லையென்றார்கள். ஸ்ரீதரன் என்பவனுக்கு மட்டும் சமீபத்தில் கலியாணம் நிச்சயமாகியிருக்கிறது. மணப்பெண்ணுக்கு வயது பதினொன்று என்று அறிந்த போது அவரால் சிரிப்பைத் தாங்கவே முடியவில்லை. “இந்தக் காலத்திலே கூடவா இத்தகைய பொம்மைக் கலியாணங்கள் நடக்கின்றன?” என்று ஆச்சரியப்பட்டார். கலியாணத்தைப் பற்றிய பேச்சு வளர்ந்தது. “பெண்களுக்கு வயது வந்த பிறகு அவர்களே கணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி விட்டு விட வேண்டும்” என்னும் தமது கொள்கையைத் தாங்கி ஸ்ரீ ரங்கநாதம் விரிவாகப் பேசினார். பிறகு, அந்த ஊரில் படிப்புள்ள ஸ்திரீகள் யாராவது இருக்கிறார்களா என்றும், மாதர்கள் கூடிப் பொழுது போக்குவதற்குரிய சங்கம் ஏதாவது இருக்கிறதா என்றும், இன்னும் என்னவெல்லாமோ விசாரித்தார். ஒரு நாளும் இல்லாத புதுமையாக, கணையாழியின் சமூக வாழ்க்கையில் கிழவர் இவ்வளவு சிரத்தை காட்டியது ஏன் என்பது கடைசியாகத் தெரியவந்தது. அவருடைய புதல்வி சகுந்தலைக்கு விசுவ பாரதியில் கல்விப் பயிற்சி முடிந்து விட்டதென்றும், அவள் மறுநாள் காலை ரயிலில் கணையாழிக்கு வருகிறாளென்றும் இரண்டு முன்று மாதம் இங்கே தங்கியிருப்பாளென்றும் அறிவித்தார். தங்களுடைய வாழ்க்கையிலேயே புதுமையான அநுபவம் ஒன்று ஏற்படப் போகிறதென்ற உணர்ச்சியுடன், அன்றிரவு கணையாழி இளைஞர்கள் படுக்கச் சென்றார்கள். புதுமைப் பெண் வருகை மறுநாள் காலையில் ரயில்வே ஸ்டேஷனில் அத்தனை பேருக்கும் சேர்ந்தாற்போல் என்ன காரியந்தான் இருக்கும்? ரகுராமன் டிக்கட் கொடுக்கும் குமாஸ்தாவின் அறையில் உட்கார்ந்து, அவருடன் வெகு சுவாரஸ்யமாய் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். ஆனால் அவனுடைய கண் அடிக்கடி கடிகாரத்தின் முள்ளைப் பார்த்துக் கொண்டிருந்தது. வைத்தியநாதன், போர்ட்டர் சின்னப்பனுடன் ஏதோ ரஸமான சம்பாஷணையில் ஆழ்ந்திருந்தான். ஸ்ரீதரன், ஸ்டேஷன் பிளாட்பாரத்தைச் சென்னைக் கடற்கரையாகப் பாவித்து உலாவிக் கொண்டிருந்தான். கல்யாணசுந்தரம், எடை போடும் இயந்திரத்தின் மேல் உட்கார்ந்து நேற்று வந்த தினசரிப் பத்திரிகையின் விளம்பரப் பத்திகளை ஏகாக்கிர சிந்தையுடன் படித்துக் கொண்டிருந்தான். வண்டி வந்து நின்றது. ரங்கநாதம் ஸ்திரீகளின் பிரத்தியேக வண்டியை நோக்கி விரைவாய்ச் சென்றார். அவர் அவ்வளவு வேகமாக நடந்ததை ரகுராமன் பார்த்ததேயில்லை. அடுத்த கணம் ஸ்திரீகளின் வண்டிக்குள்ளிருந்து ஒரு சந்திர பிம்பம் வெளியே தோன்றுவதை அவன் கண்டான். ‘இதென்ன பிம்பத்தின் மத்தியில் திடீரென்று முத்து வரிசை தோன்றுகிறது! அடடே! ஒரு பெண்ணின் முகமா அது? அவளுடைய இளநகையா அப்படிப் பளீரென்று ஒளி வீசுகிறது!’ “அப்பா! இதோ இருக்கிறேன்!” என்று அவள் சொன்ன சொற்கள் தேனிற் குழைத்தவையா? அல்லது தேவாமிர்தத்துடன் தான் கலந்தவையா? ரகுராமனுடைய கால்கள் அவனையறியாமல் அந்தப் பக்கம் நோக்கி நடந்தன. சாமான்கள் இறக்கப்பட்டு, சகுந்தலை வண்டியிலிருந்து கீழே இறங்குவதற்குள், கணையாழியில் கதாநாயகர்களாவதற்குத் தகுதிவாய்ந்த அவ்வளவு இளைஞர்களும் அங்கே சூழ்ந்து விட்டார்கள். போர்ட்டர் சின்னப்பன் தனது உத்தியோக வாழ்க்கையில் என்றும் காணாத அதிசயத்தை அன்று கண்டான். சாதாரணமாய் ஒரு சிறு கைப்பெட்டியைத் தூக்குவதற்குக் கூடத் தன்னைத் தேடிப் பிடிக்கும் வழக்கமுடைய சின்ன எஜமான்கள் எல்லாம் தலைக்குத் தலை பெட்டியோ, படுக்கையோ, வேறு சாமானோ எடுத்துக் கொண்டு போவதை அவன் அன்று பார்த்தான். சாமான்கள் ஏற்றப்பட்டு, ரங்கநாதமும் சகுந்தலையும் வண்டியில் ஏறி உட்கார்ந்ததும், “சரி, சாயங்காலம் வருகிறோம். மற்ற விஷயங்கள் பேசிக் கொள்ளலாம்” என்று வைத்தியநாதன் சொன்னான். “சரி, சாயங்காலம் வாருங்கள்” என்று ரங்கநாதமும் சொன்னார். ஆனால் வழியில் சகுந்தலை, “மற்ற விஷயங்கள் என்ன?” என்று கேட்டபோது, அவர் தமது வழுக்கை மண்டையைச் சொறியத் தொடங்கினார். அன்றைய தினத்துச் சாயங்காலமானது, மத்தியான்னம் இரண்டு மணிக்கே வந்துவிட்டதாகத் தோன்றியது. மணி மூன்று அடிப்பதற்குள் ரகுராமன், வைத்தியநாதன் முதலான ஏழெட்டுப் பேரும் ரங்கநாதம் அவர்களின் வீட்டுக் கூடத்தில் கூடிவிட்டார்கள். ரங்கநாதமும் அவர்களை எப்போதையும் விட அதிக உற்சாகத்துடன் வரவேற்றார். ஒரு நாளும் இல்லாத திருநாளாக அவர்களுக்கெல்லாம் காப்பிக் கொண்டு வரும்படி சமையற்காரனுக்கு உத்தரவிட்டார். காப்பியுடன் சகுந்தலையும் வந்தாள். அவள் உட்கார்ந்ததும், “நேற்றுச் சொன்னேனல்லவா? என்னுடைய பெண் இவள் தான்” என்று ரங்கநாதம் கூறினார். “காலையிலேயே தெரிந்து கொண்டோம்” என்றான் கல்யாணசுந்தரம். “காலையில் நீங்களாக அல்லவா தெரிந்து கொண்டீர்கள்! இப்போது நான் முறைப்படி அறிமுகப்படுத்தி வைக்கிறேன்” என்றார். “எனக்கு இவர்களை இன்னார் என்று அறிமுகப்படுத்தவில்லையே, அப்பா?” என்றாள் சகுந்தலை. “ஆமாம், அதைத்தான் இப்போது செய்யப் போகிறேன். இதோ இவர் தான் வைத்தியநாதன்” என்றதும், எல்லாரும் கொல்லென்று சிரித்தார்கள். ஏனென்றால், அவரால் சுட்டிக் காட்டப்பட்டவன் பெயர் கல்யாணசுந்தரம். “இல்லை, என் பெயர் கல்யாணசுந்தரம். அதோ அவர் பெயர் வைத்தியநாதன்” என்றான் கல்யாணசுந்தரம். “வைத்தியநாதன், எம்.ஏ.” என்றான் அவ்வாறு சுட்டிக் காட்டப்பட்டவன். “எம்.ஏ.” என்று பரிகாசமாயச் சேர்த்ததாக அவனுடைய எண்ணம். சமயத்தில் அதையும் போட்டு வைத்துவிடலாமென்று உத்தேசமும் உண்டு. “அப்பா எப்போதுமே இப்படித்தான். அவருக்குப் பெயர், ஊர் ஒன்றும் ஞாபகம் இருப்பதில்லை. ஏன், அப்பா! என் பெயர் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?” என்று சகுந்தலை கேட்டாள். உடனே ஒரு பலமான அதிர்வேட்டுச் சிரிப்பு கிளம்பிற்று. அதில் ரங்கநாதமும் சமையற்காரனும் கூடக் கலந்து கொண்டார்கள். ஆனால் ரகுராமன் மட்டும் சிரிக்கவில்லை. காரணம், அரை நாழிகையாக அவன் வேறொரு யோசனையில் ஆழ்ந்திருந்தான். சகுந்தலையிடம் ஏதாவது பேச வேண்டுமென்பது அவனுக்கு எண்ணம். ஆனால் என்னத்தைப் பேசுவது?… கடைசியாக தைரியம் கொண்டு, “கல்கத்தாவிலே என்ன விசேஷம்?” என்று கேட்டு விட்டான். இந்த மூன்று வார்த்தைகளை வெளியே கொண்டு வருவதற்குள் அவனுக்கு மூச்சு முட்டிவிடும் போல் இருந்தது. “கல்கத்தாவிலா? எவ்வளவோ விசேஷம்!” என்றாள் சகுந்தலை. அப்போது தேசமெங்கும் சுதந்திர இயக்கம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. கல்கத்தாவில் வெகு மும்முரமாயிருந்தது. அது சம்பந்தமான நிகழ்ச்சிகளைச் சகுந்தலை கூறலானாள். வாயில் ஈ புகுந்தது தெரியவில்லை என்பார்களே, அந்த மாதிரி எல்லாரும் அவ்விவரங்களைக் கேட்கலாயினர். சாயங்காலம் அவர்கள் வீடு திரும்பிச் சென்றபோது, “பாரதியார் புதுமைப் பெண் என்று பாடியிருக்கிறாரே, அவள் இவள் தான் போல் இருக்கிறது” என்றான் கல்யாணசுந்தரம். அந்தச் சமயந்தான் முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்ட சம்பாஷணை அவர்களுக்குள் நடந்தது. அன்றிரவேதான் ரகுராமன், வைத்தியநாதன் முதலியோர் இன்பக் கனவுகள் கண்டார்கள். இரவு படுக்கைக்குப் போகுமுன் சகுந்தலை, ரங்கநாதம் அவர்களிடம், “அப்பா! இந்த ஊர்ப் பிள்ளைகள் கொஞ்சம் பைத்தியமாயிருப்பார்கள் போல் இருக்கிறதே!” என்று சொன்னாள். “என்ன? பைத்தியம் என்றா சொன்னாய்?” என்று ரங்கநாதம் கேட்டார். “ஆமாம்.” “ரொம்ப சந்தோஷம்.” “அதில் சந்தோஷம் என்ன, அப்பா?” என்று சகுந்தலை சிரித்துக் கொண்டே கேட்டாள். “இல்லை, நான் அவர்களை அசடுகள் என்று நினைத்தேன், நீ பைத்தியம் என்கிறாயே?” சகுந்தலை இன்னும் அதிகமாகச் சிரித்துவிட்டு, “அதென்ன அப்பா! அசடைவிடப் பைத்தியம் மேலா?” என்று கேட்டாள். “ஆமாம்! அசடுகளினால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் பைத்தியங்களினால் ஏதாவது காரியம் செய்ய முடியும்.” “அவர்களைக் கொண்டு கொஞ்சம் காரியம் செய்விக்கலாமென்றுதான் நினைக்கிறேன்! பார்க்கலாம்” என்றாள் சகுந்தலை. அல்லோல கல்லோலம் கணையாழியில் பெண்கள் பள்ளிக்கூடம் ஒன்று இருந்தது. அதன் உபாத்தியாயரின் பெயர் கனகசபை வாத்தியார். கொஞ்சம் பழைய காலத்து மனிதர். ஐயோ! சாமி! அன்று அவர் அடைந்த காப்ராவைப் போல் அதற்கு முன் அவருடைய வாழ்நாளில் என்றும் அடைந்ததில்லை. “ஸார்! ஸார்! யாரோ வரா, ஸார்?” என்று ஒரு பெண் கூவினாள். உடனே எல்லாப் பெண்களும் ஜன்னலண்டை குவிந்து வேடிக்கை பார்க்கலானார்கள். வாத்தியாரும் அந்தப் பக்கம் நோக்கினார். உடனே பள்ளிக்கூடம், பெஞ்சு, நாற்காலி, மேஜை, மைக்கூடு எல்லாம் அவரைச் சுற்றிச் சுழலத் தொடங்கின. சட்டென்று ‘பிளாக் போர்டு’ துடைக்கும் குட்டையை எடுத்துத் தலைப்பாகையாகச் சுற்றிக் கொண்டார். மேஜை மீதிருந்த தலைப்பாகையை உதறி அங்கவஸ்திரமாகப் போட்டுக் கொண்டார். பிறகு, நாற்காலி முதுகின் மேல் கிடந்த மேல் வேஷ்டியை எடுத்து, அதை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார். இதற்குள், சமீபத்தில் காலடிச் சத்தம் கேட்கவே அதை மேஜை அறையில் செருகிவிட்டுப் பெண்களைப் பார்த்து, “சனியன்களே! உட்காருங்கள். அவரவர்கள் இடங்களில் உட்காருங்கள்!” என்று பாம்பு சீறுவது போன்ற குரலில் அதட்டினார். அடுத்த நிமிஷத்தில் ஸ்ரீமதி சகுந்தலா தேவியும், அவளுடைய தகப்பனாரும் பள்ளிக்கூட அறைக்குள் வந்தார்கள். “வாத்தியாரே! இவள் என்னுடைய பெண், கல்கத்தாவிலிருந்து வந்திருக்கிறாள். பள்ளிக்கூடத்தைப் பார்க்க வேண்டுமென்றாள். அழைத்து வந்திருக்கிறேன்” என்று ரங்கநாதம் கூறினார். வாத்தியாருக்கு இந்த விஷயம் விளங்கச் சற்று நேரம் பிடித்தது. அவர் பள்ளிக்கூட இன்ஸ்பெக்டரெஸ் அம்மாள்தான், தீடீரென்று வந்துவிட்டாள் என்று எண்ணியே அவ்வளவு குழப்பத்துக்குள்ளாகியிருந்தார். இந்தக் காலத்தில் தான் சின்னச் சின்னப் பெண்களுக்கெல்லாம் இன்ஸ்பெக்டரெஸ் உத்தியோகம் கொடுத்து தலை நரைத்த கிழவர்களை மிரட்டுவதற்கென்று அனுப்பி விடுகிறார்களே! வாத்தியாருடைய கோலத்தைப் பார்த்துச் சகுந்தலை புன்னகை செய்து கொண்டு, “உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபம் இல்லையே?” என்று கேட்டாள். “எதற்கு?” என்றார் வாத்தியார். “தினம் நான் இங்கு வந்து குழந்தைகளுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்கலாமென்று நினைக்கிறேன். செய்யலாமல்லவா?” என்றாள். கனகசபை வாத்தியாருக்கு திடீரென்று பேசும் சக்தி வந்தது. “அடடா! இப்படி ஒருவரும் இல்லையே என்று தானே காத்துக் கொண்டிருக்கிறேன்? இந்த ஊரில் இவ்வளவு பேர் இருக்கிறார்களே? ஒருவராவது இங்கு வந்து எட்டிப் பார்த்தது கிடையாது. குழந்தைகள் வீட்டில் இருந்தால் தொல்லையென்று பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி விடுகிறார்கள். அதுவும் பாதி நாளைக்கு அனுப்புவதில்லை. ‘கணக்கு வரவில்லை’, ‘பாட்டு வரவில்லை’ என்று மட்டும் அடிக்கடி புகார் செய்கிறார்கள்…” என்று இவ்வாறு வாத்தியார் தம் முறையீட்டை ஆரம்பித்தார். சகுந்தலை கால்மணி நேரத்திற்குள் பள்ளிக்கூடத்திலுள்ள குழந்தைகளிடத்திலெல்லாம் பேசிப் பெயர், வகுப்பு எல்லாம் விசாரித்து சிநேகம் செய்து கொண்டாள். பிறகு, ‘ஜண்டா ஊஞ்சா ரஹே ஹமாரா’ என்னும் ஹிந்தி தேசியக் கொடிப் பாட்டில் இரண்டடி சொல்லிக் கொடுத்தாள். பின்னர், “நாளைக்கு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வெளிக் கிளம்பினாள். சகுந்தலையும் அவள் தகப்பனாரும் திரும்பி வீட்டுக்குப் போகையில் கணையாழியின் வீதியில் ஓர் அதிசயமான காட்சியைக் கண்டார்கள். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஆண்கள், பெண்கள் எல்லாருக்கும் ஏக காலத்தில் வாசல் பக்கத்தில் என்ன தான் வேலை இருந்ததோ, தெரியவில்லை. புருஷர்களும் கொஞ்சம் வயதான ஸ்திரீகளும் வாசலிலும் திண்ணையிலும் காணப்பட்டனர். இளம் பெண்களோ வீட்டு நடைகளின் கதவிடுக்குகளிலும், காமரா உள்ளின் ஜன்னல் ஓரங்களிலும் நின்று கொண்டு எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். விஷயம் என்னவென்றால், சகுந்தலையும் அவள் தந்தையும் அந்த ஊர்ப் பெண்கள் பள்ளிக்கூடத்தைப் பார்க்கப் போயிருக்கிறார்கள் என்ற செய்தி பரவவே, கல்கத்தா பெண்ணைப் பார்ப்பதற்கென்று அவர்கள் திரும்பி வருவதை எதிர்பார்த்து அவ்வளவு பேரும் காத்துக் கொண்டிருந்தார்கள். இவ்வாறு கணையாழி முழுவதும் ஒரே அல்லோல கல்லோலமாக இருந்தது. புரட்சி சகுந்தலை வந்தது முதல் கணையாழி இளைஞர்களுக்குக் கல்கத்தா ரங்கநாதம் வீட்டில் அடிக்கடி ஏதாவது வேலை ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அவர்களுக்கு எந்த விஷயத்தில், என்ன சந்தேகம் ஏற்பட்டாலும் அதைத் தீர்த்து வைக்கக் கூடியவர் அவர் ஒருவரே என்று கருதுவது போல் காணப்பட்டது. ஒரு நாள் எல்லாரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது சகுந்தலை, “இந்த ஊர் எனக்குப் பிடிக்கவேயில்லை. ஏன் வந்தோம் என்று இருக்கிறது” என்றாள். ரங்கநாதம் சற்றுத் தூக்கிவாரிப் போட்டவர் போல அவள் முகத்தைப் பார்த்தார். “ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்? இந்த ஊரில் என்ன பிடிக்கவில்லை? இந்த ஜில்லாவிலேயே அழகான கிராமம் என்று இதற்குப் பெயர் ஆயிற்றே?” என்று கல்யாணசுந்தரம் சொன்னான். “ஊர் அழகானதுதான். ஆனால், மனிதர்கள் மோசமானவர்கள். எப்பொழுது பார்த்தாலும் தெருவெல்லாம் அசிங்கம். பள்ளிக்கூடத்துக்குப் பக்கதில் குப்பை மேடு; கோவிலுக்குப் பக்கத்தில் மாட்டுக் கொட்டகை; குடியானவர்கள் தெருப் பக்கம் போகவே முடியவில்லை; அவ்வளவு குப்பையும், நாற்றமும். நேற்றுக் கொஞ்சம் தூரம் போய்ப் பார்த்தேன். முடியாமல், திரும்பி வந்து விட்டேன்” என்றாள். அப்போது அவள் தந்தை, “அதற்கு என்ன அம்மா செய்யலாம்? நம்முடைய ஜாதி வழக்கமே அப்படி. வீதிகளையும், வீட்டுச் சுற்றுப்புறங்களையும் சுத்தமாய் வைத்திருப்பதற்கு வெள்ளைக்காரர்கள் தான். நமக்கு எப்போதுதான் அந்த வழக்கம் வரப்போகிறதோ தெரியவில்லை” என்றார். “இந்த நண்பர்கள் எல்லாரும் மனம் வைத்தால் காரியம் ஒரு நிமிஷத்தில் நடந்து விடுகிறது. வேண்டுமானால், சாந்திநிகேதனத்துக்கு அருகாமையில் உள்ள கிராமங்களுக்கு இப்போது வந்து பாருங்கள்! எவ்வளவு சுத்தமாயிருக்கும், தெரியுமா? படித்தவர்களாய் உள்ளவர்கள் கொஞ்ச நாளைக்குச் செய்து காட்டினால் மற்றவர்கள் அப்புறம் கிராமத்தைச் சுத்தமாய் வைத்துக் கொண்டிருக்கத் தாங்களே கற்றுக் கொண்டு விடுவார்கள்” என்றாள் சகுந்தலை. அது என்ன அதிசயமோ, தெரியாது. அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்குள் கணையாழியின் வீதிகளில் குவிந்து கிடந்த குப்பைகள் எல்லாம் எங்கேதான் போயினவோ? கணையாழி இளைஞர்களுக்குத் திடீரென்று கிராம சுகாதாரத்தில் அக்கறை உண்டாகிவிட்டது. வீட்டிற்குள்ளேயும், வெளியிலும் அவர்கள் சுத்தத்தைப் பற்றியே பேசலானார்கள். அவர்களுடைய முயற்சி ‘கீழ்’ ஜாதியினரின் தெருக்களில் கூடப் பலன் தர ஆரம்பித்து விட்டது. கோழிகளும், பன்றிகளும் பேசக்கூடுமானால் அவை தங்களைப் பட்டினிக்குள்ளாக்கிய கணையாழி இளைஞர்களின் மீது பெரிதும் புகார் கூறியிருக்குமென்பதில் சந்தேகமில்லை. உண்மையில் குடியானவர்கள் எல்லாரும் கூடப் புகார் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். “சின்ன எஜமான்கள் இப்படி மூன்று மாதம் வீதி துப்புரவு செய்தால் அடுத்த பஸலி சாகுபடிக்கு வயலுக்கு எருக்கூடக் கிடைக்காது” என்று முறையிடத் தொடங்கினார்கள். இவ்வாறு கணையாழியின் சமூக வாழ்க்கையில் ஒவ்வொரு துறையிலும் புரட்சி ஏற்படலாயிற்று. பெருமழை மற்றொரு நாள் சகுந்தலை வாழ்க்கையிலே வெறுப்புக் கொண்டவள் போல் பேசினாள்! “இந்த உலகத்தில் ஏன் உயிர் வாழ வேண்டுமென்று தோன்றுகிறது. அதிலும் பெண்ணாய்ப் பிறந்தவர்கள் உயிரை வைத்துக் கொண்டிருக்க வேண்டாம். முன்னெல்லாம், நம் தேசத்தில் பெண் பிறந்தால் கங்கையில் எரிந்து விடுவது வழக்கமாமே? ஏன், அப்பா! என்னை ஏன் அப்படி நீங்கள் செய்யவில்லை?” என்று கேட்டாள். ரங்கநாதத்தின் முகத்தில் திகைப்புக் குறி காணப்பட்டது. அருகிலிருந்த ரகுராமன், வைத்தியநாதன், கல்யாணசுந்தரம் முதலியோரின் நெஞ்சுகள் துடிதுடித்தன. அவர்கள் ஒவ்வொருவரும் அந்தச் சமயம் தங்கள் தங்கள் உயிர்களைக் கொடுத்துச் சகுந்தலையின் உயிரைக் காப்பாற்றுவதென்று தீர்மானித்துக் கொண்டார்கள். “ஏன் அம்மா, அப்படிச் சொல்லுகிறாய்?” என்று ரங்கநாதம் கனிந்த குரலில் கேட்டார். “நான் உங்கள் பெண்ணாய்ப் பிறந்ததால் சுகமாய் இருந்து கொண்டிருக்கிறேன். அப்படியின்றி, சொர்ணம்மாளாய்ப் பிறந்திருந்தால்?” “சொர்ணம்மாள் யார்?” என்று ஸ்ரீதரன் கேட்டான். எல்லாருக்கும் அந்தச் சொர்ணம்மாளின் பேரில் சொல்ல முடியாத இரக்கமுண்டாயிற்று. “சொர்ணம்மாள் எங்கள் வீட்டு வேலைக்காரி” என்றாள் சகுந்தலை. உடனே, அந்த இளைஞர்களுக்குக் கொஞ்சம் அலட்சிய புத்தி ஏற்பட்டது. “அவளுக்கு என்ன இப்போது வந்துவிட்டது?” சகுந்தலை சொல்லத் தொடங்கினாள்: “சொர்ணம்மாளுக்கு என்னுடைய வயதுதான். அவள் ஏழு மாதம் கர்ப்பமாயிருக்கிறாள். இன்று காலையில், இனிமேல் அவள் வேலைக்கு வர வேண்டாமென்றும், வேறு வேலைக்காரி வைத்துக் கொள்கிறேனென்றும் சொன்னேன். உடனே அழத் தொடங்கிவிட்டாள். வேலையை விட்டுப் போனால் அவள் புருஷன் அவளைக் கொன்று விடுவானாம். அவள் உடம்பின் மீதிருந்த காயங்களையும், வீங்கியிருந்த இடங்களையும் காட்டினாள். நேற்றுச் சாயங்காலம் அவள் புருஷன் நன்றாய்க் குடித்துவிட்டு வந்து, ‘கண்ணே! நம்முடைய லோகிதாட்சன் எங்கே! கொண்டா இங்கே’ என்றானாம்…” ரகுராமன் முதலியோர் சிரித்தார்கள். “எனக்கும் அதைக் கேட்ட போது முதலில் சிரிப்பு வந்தது. ஆனால் சொர்ணத்தின் உடம்பிலிருந்த காயங்களை மறுபடி பார்த்ததும் அழுகை வந்துவிட்டது. பிறகு பொன்னன், ‘அடி பாதகி! என்னுடைய அருமைக் கண்மணி லோகிதாட்சனைக் கொன்றுவிட்டாயல்லவா?’ என்று சொல்லிக் கொண்டே அவளை அடி அடியென்று அடித்தானாம். வேலைக்குப் போகாவிட்டால் கொன்று போட்டே விடுவான் என்று சொன்னாள்” - அப்போது சகுந்தலையின் கண்களில் நீர் துளித்தது. “இப்படி எத்தனை பெண்கள் கஷ்டப்படுகிறார்களோ? பாழும் கள்ளுக் குடியை ஒழிப்பதற்கு வழியொன்றும் இல்லையா? இந்த ஊரில் பெரிய மனிதர்கள் எல்லாரும் கூடத் தென்னை மரங்களைக் கள்ளுக்கு விடுகிறார்களாமே? என்ன அநியாயம்?” என்றாள். மறுநாள் குடிகாரப் பொன்னன் பக்கத்தில் ரகுராமனும் கல்யாணசுந்தரமும் நின்றார்கள். பொன்னன் சொல்கிறான்: “அதோ வாரும் பிள்ளாய், மதிமந்திரி சத்தியகீர்த்தியே! நம்முடைய அருமை நாயகியான சூர்ப்பணகாதேவியை நீ ஒளித்து வைத்துக் கொண்டு அனுப்ப மாட்டேன் என்கிறாயல்லவா? இந்த நிமிஷத்தில் அவளை இங்கே கொண்டுவிட்டால் ஆயிற்று. இல்லாவிடில் இந்திரஜித்திடம் சொல்லி உம்மைச் சிரச்சேதம் செய்து விடுவோம். பிள்ளாய்!…” “பொன்னா! இதோ பாரு. மதுபானம் குடி கெடுக்கும். ரொம்பப் பொல்லாதது. குடிப்பதை விட்டு விடு” என்றான் ரகுராமன். “எஜமான்களே, இதோ பாருங்க! நீங்கள் காலைக் காப்பி குடிக்கிறதை நிறுத்திவிடுங்க. நானும் மாலைக் காப்பி குடிக்கிறதை விட்டுடறேன்” என்றான் பொன்னன். இம்மாதிரியாக ஒவ்வொரு குடிகாரனையும் இரண்டு மூன்று படித்த, நாகரிக இளைஞர்கள் சுற்றிக் கொண்டு பிரசங்கப் பெருமழை பொழியும் காட்சிகள் மாலை நேரங்களில் காணப்பட்டது. பூகம்பம் கணையாழி கிராமத்து ஸ்திரீ சமூகத்தின் வாழ்க்கையில் ஒரு பெரிய மானஸீக பூகம்பம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அந்த பூகம்பத்தினால் ஏற்பட்ட பெரும் பிளவுகளில், வெகு நாளைய நம்பிக்கைகள், மாமூல் வழக்கங்கள் எல்லாம் விழுந்து மறைந்து போய்க் கொண்டிருந்தன. ஒரு நாள் இரவு, சந்திரசேகரன் வழக்கம்போல் படுக்கையறைக்குள் புகுந்தபோது பெரியதோர் அதிசயத்தைக் கண்டான். அவனுடைய தர்மபத்தினி ஸ்ரீமதி சாரதாம்பாள் ஹரிஹரய்யர் இங்கிலீஷ் பாலபாடத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு, “பி-ஐ-ஜி=பிக்கு=பன்றி” என்று எழுத்துக் கூட்டிப் படித்துக் கொண்டிருந்தாள். “இது என்ன அதிசயம்? இங்கிலீஷ் படிப்பிலே திடீரென்று இவ்வளவு பிரேமை ஏற்பட்டதென்ன?” என்று சந்திரசேகரன் பரிகாசக் குரலில் கேட்டான். “ஆமாம்; பரிகாசம் பண்ணத்தான் உங்களுக்குத் தெரியும். இல்லாவிட்டால் உலகத்தில் நாலு பேரைப் போல் எனக்கு இரண்டு எழுத்துத் தெரிய வேண்டுமென்று உங்களுக்கு இருந்தால் தானே?” என்றாள் சாரதா. அவளுடைய நீலக் கருவிழிகள் கண்ணீர்ப் பிரவாகத்தைப் பெருக்குவதற்கு ஆயத்தம் செய்யத் தொடங்கின. ஆனால் சந்திரசேகரன் வெறும் ஆண் சடந்தானே? ஆகவே அவன் அதைக் கவனியாமல், “நான் வேண்டுமானால் காரணம் சொல்லட்டுமா? சகுந்தலை மாதிரி நாமும் ஆகவேண்டுமென்று ஆசை. நிஜமா, இல்லையா?” என்றான். உடனே ஒரு தேமல் சத்தம் - “எனக்குத் தெரியுமே, நீங்கள் அவளையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று!” - அவ்வளவுதான். கண்ணீர் வெள்ளம் பெருகத் தொடங்கி விட்டது. அன்றிரவு வெகுநேரம் வரை அந்த வெள்ளத்தில் கரை காணாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான் சந்திரசேகரன். மறுநாள் மத்தியானம், (ஸ்ரீராஜமய்யர் அவர்களால் இலக்கியப் பிரசித்தி பெற்ற) வம்பர் மகாசபை கணையாழியில் கூடியபோது, “கல்கத்தாப் பெண்” என்னும் விஷயம் பற்றி விவாதம் நடந்தது. ஏற்கனவே இந்தக் கதையில் ஏராளமான பெயர்கள் வந்துவிட்டபடியாலும், இக்கதையில் பெயர்கள் அவ்வளவு முக்கியமல்ல வாகையாலும், மகாசபை அங்கத்தினரின் பெயர்களை விட்டுவிட்டு விவாகத்தின் சாராம்சத்தை மட்டும் தருகிறேன்: “என் காலத்தில் எவ்வளவோ அதிசயத்தைப் பார்த்துவிட்டேன். இப்போது கல்கத்தாப் பெண் ஒரு அதிசயமாய் வந்திருக்கிறாள். இந்தக் கட்டை போவதற்குள் இன்னும் என்னென்ன அதிசயம் பார்க்கப் போகிறதோ?” “அந்தக் கடன்காரி பார்வதி செத்துப் போனாளே அவள் மட்டும் இருந்திருந்தால் இந்தப் பெண்ணை இப்படி வளர்த்துவிட்டிருக்க மாட்டாள்.” “அவளே இந்தப் புருஷனைக் கட்டிண்டு, எவ்வளவோ சிரமப்பட்டாளாமே? இழுத்த இழுப்புக்கெல்லாம் வரணுமென்று பிடிவாதம் பிடித்தானாம். அந்தக் கஷ்டம் தாங்காமலேயே அவள் கங்கையில் விழுந்து செத்துப் போனதாகக் கேள்வி.” “போனவள் இந்தப் பெண்ணையும் கங்கையில் தள்ளிவிட்டுச் செத்துப் போயிருக்கலாம், ஒரு பாடாய்ப் போயிருக்கும்!” “ஏன் அத்தை, அப்படி அநியாயமாகச் சொல்கிறாய்? சகுந்தலைக்கு என்ன வந்துவிட்டது? ராஜாத்தி மாதிரி இருக்கிறாள். எங்களையெல்லாம் போல் அடுப்பங்கரையே கதியாயிருக்க வேண்டுமா?” என்றது ஓர் இளங்குரல். “அடுப்பங்கரை வேண்டாம்; சந்திக்கரையிலேயே நிற்கட்டும். நாலு குழந்தை பெற்றெடுக்க வயதாச்சு. காளை மாதிரி திரிகிறது! அவளுக்கு என்ன வந்துடுத்தாம்?” “நாலு குழந்தை பெற்றவர்களெல்லாம் என்ன சுகத்தைக் கண்டுவிட்டோ ம், அவள் அதைக் காணாமல் போய் விட்டாள்? கோடி வீட்டு அம்மணியைப் பார். பதினேழு வயது ஆகவில்லை; மூன்றாவது குழந்தை பிறந்திருக்கிறது. தினம் பொழுது விடிந்தால் குழந்தைகளை அடித்துக் கொல்கிறார்கள். என்னைக் கேட்டால், சகுந்தலைதான் பாக்கியசாலி என்பேன்” “ஆமாண்டி, அம்மா! நீயும் வேண்டுமானால் அவளைப் போலச் செருப்புப் போட்டுக் கொண்டு குடை பிடித்துக் கொண்டு வீதியோடு உலாவி வாயேன்.” “செருப்புப் போட்டுக் கொண்டு குடை பிடித்துக் கொண்டு வந்தால் சகுந்தலையைப் போல் ஆகிவிட முடியுமா? அதற்கு வேண்டிய படிப்பும் புத்திசாலித்தனமும் வேண்டாமா?” “அவள் மட்டும் என்ன கொம்பிலிருந்து குதித்து வந்தாளா? என்னையும் படிக்க வைத்திருந்தால் நானுந்தான் அவளைப் போல் ஆகியிருப்பேன், என்ன ஒசத்தி?” “ஆமாம், நீயும் அவளைப் போலவே படித்து, பாஸ் பண்ணி, புடவைத் தலைப்பை வீசிக் கொண்டு திரியணும்; ஊரிலிருக்கிற தடிப் பிரம்மச்சாரிகள் எல்லாம் உன்னைச் சுற்றிக் கொண்டு அலையணும் என்று ஆசைப்படுகிறாயாக்கும்!” “சீ! என்ன அத்தை! வயதாயிற்றே தவிர உங்களுக்கு மானம், வெட்கம் ஒன்றும் கிடையாது. இப்படித்தானா பேசுவது?” சீக்கிரத்தில் கணையாழி வம்பர் மகாசபை அங்கத்தினருக்குள் அபிப்பிராய பேதம் வலுபடலாயிற்று. இளங்கோஷ்டியென்றும் முதிய கோஷ்டியென்றும் பிரிவினை உண்டாயிற்று. இளங்கோஷ்டியைச் சேர்ந்த பெண்கள் சகுந்தலையிடம் அநுதாபமும், அபிமானமும் கொள்ளலானார்கள். சமயம் நேர்ந்தபோது அவளுக்குப் பரிந்து பேசினார்கள். இதற்கெல்லாம் காரணம் ஒரு நாள் ஜானகி துணிந்து சென்று சகுந்தலையைத் தன் வீட்டில் மஞ்சள் குங்குமம் வாங்கிக் கொண்டு போக அழைத்ததுதான். அப்போது ஜானகி வீட்டுக்கு வந்திருந்த இளம் பெண்களுடன் சகுந்தலை வெகு சீக்கிரம் சிநேகம் செய்து கொண்டாள். கணையாழி யுவதிகளுக்கெல்லாம் திடீரென்று படிப்பில் அபரிமிதமான ருசி உண்டாகிவிட்டது. லலிதா ஒரு நாள் ஒரு தமிழ் நாவலைக் கையில் வைத்துக் கொண்டிருந்தாள். சகுந்தலை, “அது என்ன புத்தகம்?” என்று கேட்டுக் கொண்டே புஸ்தகத்தை வாங்குவதற்குக் கையை நீட்டினாள். “இது, தமிழ்; உங்களுக்குத் தெரியாது” என்றாள் லலிதா. சகுந்தலை சிரித்தாள். “அது என்ன? எனக்குத் தமிழ் தெரியாது என்று அடித்துவிட்டீர்களா? என் சொந்த பாஷை தமிழ்தானே?” என்றாள் அவள். “இல்லை; வெகுகாலம் வடக்கேயே இருந்தவளாச்சே; இங்கிலீஷ்தான் தெரியும், தமிழ் படிக்கத் தெரியாது என்று நினைத்தேன்” என்று லலிதா சொன்னான். “அதெல்லாம் இல்லை. வடக்கே இருந்தால்தான் தமிழிலே அபிமானம் அதிகமாக உண்டாகிறது. வங்காளிகளெல்லாம் தங்கள் சொந்த பாஷையில் தான் அதிகமாய்ப் படிப்பார்கள். தெற்கத்தியாரை இங்கிலீஷ் பைத்தியம் பிடித்தவர்கள் என்று பரிகாசம் செய்வார்கள்” என்று சகுந்தலை சொன்னாள். “என்ன இருந்தாலும் இங்கிலீஷ் தெரிந்திருந்தால் அது ஒரு ஒசத்திதானே?” என்றாள் தங்கம்மாள். “ஒரு ஒசத்தியுமில்லை. இங்கிலீஷ் வெள்ளைக்காரர்களுடைய பாஷை. தமிழ் நமது சொந்த பாஷை நம்முடைய பாஷையில் பேசுவதும் படிப்பதும்தான் நமக்கு மேன்மை” என்றாள் சகுந்தலை. ஆண்டாளுவின் குழந்தைக்கு ஆண்டு நிறைவு வந்தபோது குழந்தையை மணையில் வைத்துப் பாடுவதற்குச் சகுந்தலையையும் அழைத்திருந்தார்கள். ஊர்ப் பெண்களெல்லாரும் அவரவர்களுக்கு தெரிந்திருந்த “மருகேலரா,” “சுஜன ஜீவனா,” “நகுமோமு,” “தினமணி வம்ச” முதலிய தியாகராஜ கீர்த்தனைகளைப் பாடினார்கள். “ஒருவருக்கும் தமிழ்ப் பாட்டுத் தெரியாதா?” என்று சகுந்தலை ஜானகியிடம் கேட்டாள். “தமிழில் நலங்குப் பாட்டுத்தான் தெரியும். அது நன்றாயிராது” என்றாள் ஜானகி. “பாரதி பாட்டுக்கூடத் தெரியாதா?” என்று சகுந்தலை மறுபடியும் கேட்டது லலிதாவின் காதில் விழுந்தது. அவள், “ஆகா, நம்முடைய அலமேலுவுக்குப் பாரதி பாட்டுத் தெரியுமே. அலமேலு! சகுந்தலைக்குப் பாரதி பாட்டுக் கேட்கவேண்டுமாம். உனக்குத் தெரியுமே, சொல்லு” என்றாள். அலமேலு கொஞ்ச நேரம் கிராக்கி செய்த பிறகு, ‘இராஜ விசுவாச லாலா லஜபதியே!’ என்று பாடத் தொடங்கினாள். “இராஜத் துரோகக் குற்றத்திற்காகத் தேசப்பிரஷ்டம் செய்யப்பட்ட லஜபதிராய் இங்கே இராஜ விசுவாசியாகி விட்டாரே!” என்று எண்ணியபோது சகுந்தலைக்குத் தாங்க முடியாத சிரிப்பு வந்தது. ஆயினும் சிரிப்பை அடக்கிக் கொண்டாள். அலமேலுவை இன்னொரு பாட்டுப் பாடச் சொன்னார்கள். அவள், ‘வந்தே மாதரமே! மனதிற்கோர் ஆதாரமே!’ என்று ஆரம்பித்து, "காட்சி கண்காட்சியே! திருவனந்தபுரத்துக் காட்சி, கண்காட்சியே!" என்று முடிவு செய்தாள். எல்லாம் முடிந்த பிறகு சகுந்தலை தன் சிநேகிதிகளிடம் அலமேலு சொன்ன பாட்டுக்கள் பாரதி பாடியவையல்லவென்று தெரிவித்தாள். “உங்களுக்கு பாரதி பாட்டுத் தெரியுமா?” என்று ஜானகி கேட்டாள். “எனக்குத் தெரியாது. ஆனால் என்னிடம் பாரதி புத்தகம் இருக்கிறது. நீங்கள் என் வீட்டிற்கு வந்தால் நாமே மெட்டுப் போட்டுப் பாடக் கற்றுக் கொள்ளலாம். உங்களுக்கு ஹிந்துஸ்தானி, வங்காளிப் பாட்டுகளும் சொல்லிக் கொடுக்கிறேன்” என்றாள் சகுந்தலை. “வருவதற்கு இஷ்டந்தான். ஆனால் உங்கள் வீட்டில் ஓயாமல் புருஷப்பிள்ளைகள் வருகிறார்களே?” என்று லலிதா கேட்டாள். “வந்தால் உங்களுக்கென்ன? நீங்கள் ஏன் அவர்களைக் கண்டு பயப்பட வேண்டும்? அவர்கள்தான் உங்களைக் கண்டு பயப்படட்டுமே?” என்றாள் சகுந்தலை. பத்துப் பதினைந்து தினங்களுக்குள் கணையாழியில் இருந்த இளம்பெண்களில் ஒவ்வொருத்தியும் தனித்தனியே சகுந்தலையைத் தன்னுடைய பிராண சிநேகிதியாகக் கருதத் தொடங்கினாள். புயல் சகுந்தலை கணையாழிக்கு வந்து சுமார் மூன்று மாதமாயிற்று. அப்போது கணையாழி வாலிபர்களில் மனோ நிலைமையை, பெரிய புயற் காற்றினால் அலைப்புண்ட தோப்பின் நிலைமைக்கே ஒப்பிடக்கூடும். வாலிபர்களைச் சொல்லப் போவானேன்? வயது நாற்பது ஆனவரின் விஷயம் என்ன? ஸ்ரீமான் இராமசுப்பிரமண்யம் என்பவரின் மனைவி இரண்டு வருஷங்களுக்கு முன்னர் காலஞ் சென்றபோது அவர், ‘கிருகஸ்தாசிரமம் இனி நமக்கு வேண்டாம்’ என்று தீர்மானம் செய்து, வந்த இடங்களையெல்லாம் தட்டிக் கொண்டிருந்தார். அவரே இப்போது சகுந்தலையை முன்னிட்டுத் தமது சங்கல்பத்தை மாற்றிக் கொள்ளத் தயாராயிருந்தாரென்றால், அதிகம் சொல்வானேன்? அவர் என்ணியதாவது; “சகுந்தலையைப் போல் கல்வியறிவும், புத்திசாலித்தனமும் உள்ள பெண்ணுக்கு வாழ்க்கைத் துணையாகத் தகுதியுள்ள இளைஞன் இந்தத் தேசத்தில் எங்கே இருக்கிறான்? அதற்கென்ன? சின்னப் பயல்கள் ‘கக்கேபிக்கே’ என்று பல்லை இளித்துக் கொண்டு வேண்டுமானால் நிற்பார்கள். அதைத் தவிர அவளுடைய அறிவு முதிர்ச்சிக்குத் தகுந்தபடி, மனமொத்து வாழக்கூடிய கணவன் அவர்களுக்குள் இருக்க முடியாது. ஆகையால் சகுந்தலை சின்னப் பையன் யாரையாவது மணந்து கொண்டால் நிச்சயமாக அவளுடைய வாழ்க்கை பாழாகிவிடும். அவளுக்குத் தக்க வாழ்க்கைத் துணையாகக் கூடியவன் நான் ஒருவன் தான்.” நாற்பது வயதுக்காரருடைய மனோநிலை இதுவானால் இருபது, இருபத்தைந்து வயதுப் பிள்ளைகளைப் பற்றிக் கேட்க வேண்டுமா? நாளாக ஆக, அவர்களுடைய உள்ளத்தில் அடித்துக் கொண்டிருந்த புயலின் வேகம் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஸ்ரீதரன் தனக்கு நிச்சயமாகியிருந்த கலியாணத்தைத் தட்டிக் கழித்துவிட்டான். பி.எல். படிக்கும் உத்தேசம் தனக்கு இருப்பதாகவும், நியாயவாதியாகப் போகிற தான் சட்ட விரோதமாய் 12 வயதுப் பெண்ணை மணக்கச் சம்மதிக்க முடியாதென்றும், அடுத்த வருஷம் பார்த்துக் கொள்ளலாமென்றும் அவன் கூறினான். இதைப் பற்றி சகுந்தலை அவனைப் பாராட்டியபோது, வயது வந்த பெண்ணாயிருந்தால் இவ்வருஷமே கலியாணம் செய்து கொள்வதில் தனக்கு ஆக்ஷேபமில்லையென்று குறிப்பாகத் தெரிவித்தான். குப்புசாமி கலியாணமாகி இரண்டு வருஷமாய் இல்வாழ்க்கையில் இருப்பவன். அவனுக்குத் திடீரென்று இப்போது விவாகப் பிரிவினை உரிமையில் விசேஷ சிரத்தை உண்டாயிற்று. “ஆனாலும் நமது சமூக ஏற்பாடுகள் மகா அநீதியானவை. மனிதன் தவறு செய்வது சகஜம். ஒரு தடவை தவறு செய்துவிட்டால் அப்புறம் பரிகாரமே கிடையாதா? ஏதோ நல்ல நோக்கத்துடன் தான் கலியாணம் செய்து கொள்கிறோம். அது தவறு என்று தெரிந்தபின் இரு தரப்பிலும் கலந்து தவறை நிவர்த்தி செய்தல் ஏன் கூடாது? இதை நான் புருஷனுடைய சௌகரியத்துக்காகச் சொல்லவில்லை. புருஷன் தான் எவ்வளவு பேரை வேண்டுமானாலும் கலியாணம் செய்து கொள்ளலாமே? ஸ்திரீகளுடைய நன்மையை உத்தேசித்துத்தான் விவாகப் பிரிவினை முக்கியமாக வேண்டும். இஷ்டமில்லாத பந்தத்தில் அகப்பட்டுக் கொண்டு வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படுவதைவிட ஒரேயடியாக உயிரை விட்டுவிடலாம்” என்று அவன் உபந்நியாசம் செய்த வண்ணமிருந்தான். கலியாணமாகாத கணையாழிப் பிள்ளைகளுக்கெல்லாம் இரவு பகல் ஒரே சிந்தனைதான். சகுந்தலையைத் தனிமையாக எப்படிச் சந்திப்பது, அவளிடம் தங்கள் மனோரதத்தை எப்படி வெளியிடுவது? இதற்குச் சந்தர்ப்பம் வாய்த்தல் நாளுக்கு நாள் கஷ்டமாகி வந்தது. ஸ்ரீமான் ரங்கநாதம் அவர்களின் தோட்ட வீட்டிற்கு இதுவரை கணையாழி இளைஞர்கள் வந்து கொண்டிருந்தது போதாதென்று யுவதிகளும் அடிக்கடி வரத் தொடங்கினார்கள். அவர்கள் வருவதைப் பார்த்ததும் இளைஞர்கள் மெதுவாக நழுவி விடுதல் வழக்கமாயிருந்தது. இதைக் குறித்துச் சகுந்தலை அவர்களைப் பரிகஸித்தாள். “இது என்ன, என்னிடம் உங்களுக்கில்லாத ப்யம் உங்களூர்ப் பெண்களைக் கண்டதும் உண்டாகிறது?” என்று கேட்டாள். அவர்கள் பதில் சொல்ல முடியாமல் திகைத்தபோது, “இருந்தாலும் ரொம்ப அநியாயம் செய்கிறீர்கள். இந்த ஊரில் காலேஜில் படித்த நீங்கள் இவ்வளவு பேர் இருந்துகொண்டு ஸ்திரீகளை இவ்வளவு உலகமறியாதவர்களாய் வைத்திருக்கக் கூடாது. நீங்கள் உங்கள் பாட்டனார்களைப் போலவே இருந்திருந்தால், உங்கள் மனைவிகளையும் பாட்டிகளாக வைத்திருக்கலாம்” என்றாள். தங்களுக்கு வரப்போகும் மனைவிகளைப் பாட்டிகளாக எண்ணிப் பார்த்தபோது அவர்களுக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்தது. ரகுராமன் ஒரு நிமிஷம் யோசித்துவிட்ட்டு “எனக்கு வரப்போகும் மனைவிக்கு நான் எல்லா விஷயங்களிலும் பூரண சம உரிமை கொடுக்கத் தயார்” என்றான். ஆனால் சகுந்தலை அவனுடைய குறிப்பை உணர்ந்ததாகத் தெரியவில்லை. இவ்விஷயத்தில் கல்யாணசுந்தரத்தின் அநுபவமும் அப்படியேதான் இருந்தது. சகுந்தலை ஒரு நாள் அடுத்த கிராமத்துப் பெண் பாடசாலையைப் பார்த்துவிட்டு வரவேண்டுமென்று விருப்பம் தெரிவித்தாள். கல்யாணசுந்தரம் அவளை அழைத்துப் போக முன் வந்தான். எதிர்பாராமல் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தில் தன் உள்ளத்தில் குமுறிக் கொண்டிருந்த காதலை வெளியிட்டு விடுவதென்று தீர்மானித்தான். ஆனால் பேச்சு இலகுவில் வரவில்லை. ரொம்ப நேரம் தயங்கிய பிறகு, தட்டுத் தடுமாறிக் கொண்டு “சகுந்தலை! நாம் இரண்டு பேரும் எங்கேயோ அதிவேகமாகப் போய்க் கொண்டிருக்கிறோம் இல்லையா?” என்றான் கல்யாணசுந்தரம். “நாமா? ரொம்ப மெதுவாகவல்லவோ நடக்கிறோம்? மணிக்கு இரண்டரை மைல் வேகங்கூட இராதே?” என்றாள் சகுந்தலை. இதற்குப் பிறகு கொஞ்ச நேரம் அவனுக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. வழியில் ஒரு மரக்கிளையில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு பட்சிகள் உட்கார்ந்திருப்பதைக் கண்டதும் ஒரு யோசனை தோன்றிற்று. “நாம் இருவரும் இரண்டு பறவைகளாக மாறிவிடக் கூடாதா என்று தோன்றுகிறது. அப்போது உலகக் கவலையென்பதேயின்றி ஆகாயத்தில் என்றும் ஆனந்தமாய் உலாவித் திரிந்து கொண்டிருக்கலாமல்லவா?” என்றான். அதற்கு சகுந்தலை, “இப்போதுதான் ஆகாய விமானம் வந்து, பறவைகளைப் போல் மனிதனும் பறக்க முடியுமென்று ஏற்பட்டுவிட்டதே. இன்னும் பத்து வருஷத்தில் ஆகாய விமானம் சர்வ சாதாரணமாகிவிடும். அப்போது நீங்கள், நான் எல்லோரும் தாராளமாய்ப் பறக்கலாம்” என்றாள். கல்யாணசுந்தரம் மௌனக் கடலில் ஆழ்ந்தான். அமைதி ஒரு நாள் கல்கத்தா ரங்கநாதம் அவர்களின் வீட்டிற்கு ஒரு புதிய விருந்தாளி வந்திருப்பதாகக் கணையாழியில் செய்தி பரவிற்று. அவரைப் பார்த்தால் வடக்கத்தியார் மாதிரி இருக்கிறதென்றும், அவரை எதிர் கொண்டு அழைத்துச் செல்வதற்கு ரங்கநாதமும் அவர் புதல்வியும் ஸ்டேஷனுக்குப் போயிருந்தார்களென்றும், வந்தவருடன் கை கோத்துக் கொண்டு சகுந்தலை ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் நடந்தாளென்றும், இன்னும் இந்த மாதிரி சில்லறை விவரங்களும் அந்தரத் தபால் மூலம் பரவின. நல்ல வேளையாக கணையாழி வாசிகளின் உண்மையறியும் ஆவல் அதிகமாக வளருவதற்கு இடம் ஏற்படவில்லை. ஏனென்றால் ஸ்ரீ ரங்கநாதம் அவ்வூரில் தமக்கு அறிமுகமான இளைஞர்களையெல்லாம் அன்று மாலை ஒரு சிற்றுண்டி விருந்துக்கு அழைத்திருந்தார். எல்லாரும் கூடியதும் அவர் புது விருந்தாளியைச் சுட்டிக் காட்டி, “இவர்தான் சகுந்தலையின் கணவர்; பெயர் ஷியாம் பாபு. இவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவே இச்சிறு விருந்துக்கு உங்களை அழைத்தேன்” என்றார். இப்படி அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் சுமார் 25 வயதுள்ள ஒரு வங்காள இளைஞர். அப்போது அங்கே கூடியிருந்த வாலிபர்கள் எல்லாருடைய மனமும் என்ன நிலையடைந்திருக்குமென்று நினைக்கிறீர்கள்? காதல் சாஸ்திர விதிகளின்படி அவர்கள் மனோநிலை எப்படி ஆகியிருக்க வேண்டுமென்பதை நான் அறியேன். உண்மையாக நடந்தது மட்டும் எனக்குத் தெரியும். அவர்கள் உள்ளத்தில் சென்ற மூன்று மாத காலமாய் அடித்துக் கொண்டிருந்த பெரும் புயல் திடீரென்று ஓய்ந்து, ஆழ்ந்த, நிறைந்த அமைதி நிலவலாயிற்று. பரபரப்பெல்லாம் பழைய கதையாய் விட்டது. அன்று காப்பி சாப்பிட்டபோது யாரும் சட்டையில் கொட்டிக் கொள்ளவில்லை. ஷியாம் பாபு கல்கத்தாவில் ஒரு கலாசாலை ஆசிரியர் என்றும், சத்தியாக்கிரஹ இயக்கத்தில் ஈடுபட்டுச் சென்ற இரண்டு வருஷமாய்ச் சிறையில் இருந்தாரென்றும், அவருடைய நெற்றியில் பெரிய காயத்தின் வடு போலீஸாரின் தடியடியினால் ஏற்பட்டதென்றும், இப்போது மறுபடியும் கல்கத்தா திரும்பியதும் கலாசாலை ஆசிரியர் பதவியை ஏற்றுக் கொள்ளப் போகிறாரென்றும் சம்பாஷணையின் போது தெரியவந்தன. “உங்களுக்கெல்லாம் நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த மூன்று மாதமும் எப்படிப் போகப் போகிறதோ என்று பயமாயிருந்தது. உங்களுடைய சிநேகத்தினால் எவ்வளவோ சந்தோஷமாயும் உபயோகமாயும் காலம் போயிற்று. இரண்டு மூன்று நாளில் பிரயாணப்பட்டு விடுவோம். தமிழ்நாடு முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டுக் கல்கத்தா போவதாயிருக்கிறோம்” என்றாள் சகுந்தலை. இதற்கு அடுத்த நாலாம் நாளன்று கல்கத்தா ரங்கநாதம் அவர்களின் வீடு பூட்டிக் கிடந்தது. கணையாழியின் வீதிகளில் முன்போல் குப்பைகள் சேரலாயின! 9. கவர்னர் வண்டி மறுநாள் தீபாவளி. தலையாரி முத்துவின் பெண்சாதி பணியாரம் சுடுவதற்காக மாவு அரைத்துக் கொண்டிருந்தாள். மகன் சின்னானும் மகள் அஞ்சலையும் ஓர் உடைந்த தகரப் பெட்டியைத் திறப்பதும் மூடுவதுமாக யிருந்தார்கள். அந்தப் பெட்டியில் தீபாவளிக்காக வாங்கிவந்த புதுவேட்டியும், பாவாடையும், இரண்டு மூன்று பட்டாசுக் கட்டுகளும் இருந்தன. பட்டாசுக் கட்டை இப்போதே பிரித்துவிட வேண்டுமென்று சின்னான் சொன்னான். அஞ்சலை “கூடாது, நாளைக் காலையில்தான் பிரிக்க வேண்டும்” என்றாள். தலையாரி முத்து அவசரமாய் உள்ளே நுழைந்தான். “நான் போய்த் தொலைய வேண்டும். இந்தப் பாழும் சர்க்கார் உத்தியோகம் இப்படித்தான். நாள், கிழமை கூடக் கிடையாது” என்றான். “ஐயோ! இதென்ன அநியாயம்? எங்கே போக வேண்டும்? அதெல்லாம் முடியாது. இராத்திரி எப்படியும் வந்துவிட வேண்டும்” என்றாள் அவன் மனைவி மதுரம்மா. “நான் என்ன செய்யட்டும்? யாரோ கவர்னர் துரை வருகிறானாம். ரயில் பாதை முழுவதும் காவல் காக்க வேணுமாம். கணக்குப்பிள்ளை, மணியக்காரர், தலையாரி எல்லோரும் போகிறார்கள். இந்தத் தாலூகா முழுவதும் அப்படி. ரெவினியூ இன்ஸ்பெக்டர் ஐயாகூடத் தடியைப் பிடித்துக் கொண்டு காவல் காப்பாராம்” என்று சொல்லி முத்து சிரித்தான். ரெவினியூ இன்ஸ்பெக்டரை அத்தகைய நிலைமையில் எண்ணிப் பார்த்தபோதே அவனுக்குச் சிரிப்பு வந்தது. “அது எப்படியாவது பாழாய்ப் போகட்டும். பண்டிகை யன்றுதானா இந்த இழவு வந்து தொலைய வேண்டும்? எப்படியும் இராத்திரி திரும்பி வந்து விடக் கூடாதா? ஐயோ! வெள்ளைப் பணியாரம் செய்ய மாவு அரைத்திருக்கிறேனே? நீ இல்லாமற் போனால் சந்தோஷமாகவே இராது” என்றாள் மதுரம். “இராத்திரி வரப்போகிறாராம் துரை. அதற்கு சாயங்கால முதல் காவல் காக்க வேண்டுமாம். வண்டி போனவுடனே புறப்பட்டு ஓடி வந்து விடுகிறேன்” என்றான் முத்து. இதற்குள் அஞ்சலை ஓடிவந்து தகப்பன் கையைப் பிடித்துக் கொண்டு, “அப்பா, அப்பா, எனக்குப் பூ மத்தாப்பு வாங்கிக் கொண்டு வா.” என்றாள். சின்னான் ஓடிவந்து அரை வேட்டியைப் பிடித்துக் கொண்டு, “அப்பா, எனக்குத் துப்பாக்கி வாங்கி வர வேண்டும். என்ன, வாங்கி வருகிறாயா, சொல்லு. இல்லாவிட்டால் உன்னை விடமாட்டேன்” என்றான். “பணியாரமெல்லாம் ஆறிப்போகும். சுடச் சுடச் தின்றால்தானே தேங்காயப்பம் நன்றாயிருக்கும்? உனக்குப் பிடிக்குமே? நீ போகாதிருந்து விட்டாலென்ன? உடம்பு காயலாவென்று சொல்லி விடேன்” என்றாள் மதுரம். “ஐயோ! தலை போய்விடும். இருபது வருஷமாய் வேலை பார்த்துவிட்டு இப்போது கெட்ட பெயர் எடுக்கலாமா? இந்தக் காலத்தில் எட்டு ரூபாய் யார் கொடுக்கிறார்கள்? சர்க்கார் உத்தியோகம் இலேசா?” என்றான் முத்து. தான் சர்க்கார் உத்தியோகஸ்தன் என்னும் விஷயத்தில் அவனுக்கு எப்போதுமே கொஞ்சம் பெருமையுண்டு. பிறகு, மத்தாப்புப் பெட்டியும், விளையாட்டுத் துப்பாக்கியும் வாங்கி வருவதாகக் குழந்தைகளுக்கு வாக்களித்துவிட்டு முத்து புறப்பட்டுச் சென்றான். ஐப்பசி மாதத்து அடை மழை. வானம் ஓயாது கறுத்து இருண்டிருந்தது. பகலிலேயே வெளிச்சம் சொற்பம். இரவில் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அந்த அந்தகாரத்தினிடையே ஒவ்வொரு சமயம் மின்னல் பளிச்சென்று வீசி ஒரு மணிநேரம் பிரகாசம் உண்டு பண்ணி வந்தது. சில சமயம் ‘சோ’ வென்று மழை கொட்டும். சில சமயம் தூற்றல் போடும். அபூர்வமாக ஒவ்வொரு சமயம் தூற்றல் நிற்கும். ஆனால் ஊதல் காற்று மட்டும் இடைவிடாமல் அடித்துக் கொண்டிருந்தது. அதோ வரிசையாக வெகு தூரத்துக்கு மின் மினிபோல் தெரிகின்றதே, அதெல்லாம் என்ன? கம்பங்கள் நாட்டிய விளக்குகளா? - இல்லை. ரயில் பாதையின் இருபுறமும் சுமார் ஐம்பது கஜத்துக்கு ஒருவர் வீதம் மனிதர்கள் நிற்கிறார்கள். அவர்கள் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் லாந்தர்கள் அவை. அப்படி நின்று கொண்டிருப்பவர்களில் நமது தலையாரி முத்துவும் ஒருவன். ஒரு கையில் லாந்தரும், மற்றொரு கையில் தடியும் பிடித்துக் கொண்டிருக்கிறான். வாடைக்காற்று ‘விர்’ என்று அடிப்பதால் அவன் உடம்பு குளிரினால் ‘வெடவெட’ வென்று நடுங்குகிறது. பல்லுக் கிட்டுகிறது. மேலே மழைக்கு ஒரு கோணிப் பை. மழை கோணிப் பைக்குள் நுழைந்து முதுகுக்கு வந்து வெகு நேரமாயிற்று. உடுத்திய வேட்டியைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. சர்க்கார் உத்தியோகத்துக்குத் தலை முழுகிவிட்டு ஓடிப் போகலாமா என்று நினைத்தான் முத்து. மதுரம் சொன்ன புத்திமதியை அப்போதே கேட்காமற் போனோமே என்று வருந்தினான். இத்தனை நேரம் கஷ்டப்பட்டது பட்டோ ம், இனிக் கொஞ்ச நேரந்தானே, இருந்து தொலைப்போம் என்று தைரியமடைந்தான். இதனிடையில் அடிக்கடி தன் மனைவி சுடச் சுடப் பணியாரம் செய்து கொண்டிருப்பாளென்பது ஞாபகம் வந்தது. “போகட்டும், பெண்சாதியும் குழந்தைகளுமாவது தின்பார்களல்லவா?” என்று எண்ணி ஆறுதல் அடைந்தான். சாயங்காலம் நாலு மணிக்கு ஆரம்பித்த காவல் இரவு ஏழு மணி, எட்டு மணி, ஒன்பது மணியாகியும் முடியவில்லை. முத்துவுக்கு அந்த ஐந்து மணி ஐந்து யுகமாயிருந்தது. “ஏது? இனிமேல் தாங்காது” என்று அவன் தீர்மானித்த சமயத்தில், அங்கே கையில் தாழங்குடையும், உடம்பில் கம்பளிச் சட்டையும், தலையில் குரங்குக் குல்லாயும் தரித்து ஒருவர் வந்து சேர்ந்தார். அவர்தான் கிராம முன்சீப் குருசாமி உடையார். ஊரில் பெரிய பண்ணைக்காரர் அவர்தான். நாற்பது வேலி நிலமும், ஒரு ’ல’கரம் ரொக்கமும் அவருக்குண்டு; ஆனாலும் தலையெழுத்து யாரை விட்டது? “முத்து உஷார்! ஆயிற்று, இன்னும் அரை நாழிகைக்குள் வண்டி வந்துவிடும்” என்றார் கிராம முன்சீப். “எங்கப்பனாணை! இனிமேல் என்னால் முடியாது. நான் ஓடிப்போகிறேன், சாமி!” என்று நடுங்கிக் கொண்டே சொன்னான் முத்து. குருசாமி உடையாருக்கு முத்துவின் மேல் அபாரப் பிரியம். வேலையில் எப்போதும் முத்து கொஞ்சம் இழுப்புத்தான். ஆனால் பொய், புனைசுருட்டு, திருட்டுப் புரட்டு என்பது அவனிடம் கிடையவே கிடையாது. ஒரு வகையில் முத்துதான் கிராம முன்சீப்புக்கு மந்திரி என்று கூடச் சொல்லலாம். குருசாமி உடையாரின் குடும்ப யோக க்ஷேமம் எதுவும் முத்துவுக்குத் தெரியாததில்லை. “அடே! புத்தி கெட்டவனே! இங்கே வா, நான் சொல்றதைக் கேளு” என்றார் முன்சீப். சட்டைப் பையிலிருந்து நாலணா எடுத்து, முத்துவின் கையில் கொடுத்தார். “இதோ பார்! உன் ஆசாரம், பக்தி, பூஜையெல்லாம் மூட்டை கட்டி வை. பக்கத்தில் அதோ கடையிருக்கிறது. போய் ஒரு புட்டி குடித்துவிட்டு வா. குளிரெல்லாம் பறந்து போய்விடும். அதுவரையில் நானே இங்கே பார்த்துக் கொள்ளுகிறேன். ஓடிவந்து விடு.” என்றார். முத்துவுக்கு மதுபானம் கெடுதல் என்ற நம்பிக்கை உண்டு. அவன் தெய்வ பக்தியுள்ளவன். கள்ளுக் குடித்தால் சுவாமிக்கு கோபமுண்டாகுமென்ற எண்ணம் அவனுக்கு எப்படியோ ஏற்பட்டிருந்தது. அதிலும் அவன் மனைவி இது விஷயத்தில் மிகவும் கண்டிப்பாய் இருந்தாள். ஒருநாள் அவன் கொஞ்சம் புத்தி பிசகிச் சகவாச தோஷத்தினால் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது மதுரம் படுத்திய பாடு நன்றாய் அவன் உள்ளத்தில் பதிந்திருந்தது. “கிணற்றில் விழுந்து உயிரைவிடுகிறேன்” என்று அவள் ஓடியதும், அவளைத் தடுத்து நிறுத்தத்தான் பட்ட கஷ்டமும் அவனுக்கு ஞாபகம் இருந்தன. அது முதல் அவன் தப்பித் தவறிக் கூடக் கள்ளு சாராயக் கடைப்பக்கம் போவதில்லை. ஆனால் இப்போதோ?… கிராம முன்சீப்பின் போதனையும், குளிரின் கொடுமையும் சேர்ந்து அவன் உறுதியை மாற்றிவிட்டன. “அவளுக்குத் தெரியப் போவதில்லை” என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டான். பணத்தை வாங்கிக் கொண்டுபோய்க் கால்மணி நேரத்தில் திரும்பி வந்தான். “தாகசாந்தி செய்து கொண்டாயா? அதுதான் சரி முத்து! குளிரெல்லாம் பறந்து போயிற்றல்லவா? இன்னும் கொஞ்சம் பொறு; ஊருக்குப் புறப்பட்டுவிடலாம்” என்று சொல்லி விட்டுக் குருசாமி உடையார் தமது இடத்துக்குப் போய்ச் சேர்ந்தார். முத்துவின் குளிர் பறந்து போயிற்று. ஆனால் அத்துடன் இன்னும் ஒன்றும் பறந்துவிட்டது. அது என்ன? உணர்ச்சி! உணர்ச்சி இருந்தால் அல்லவா குளிர் தெரியும்? கொஞ்ச நேரத்துக்கெல்லாம் புத்தி தடுமாற ஆரம்பித்தது. பிறகு மயக்கம் அதிகமாயிற்று. உலகம் கிறுகிறுவென்று சுழன்றது. கையிலிருந்த விளக்குக் கீழே விழுந்து உடைந்து அணைந்தது. ஒரு தந்திக் கம்பத்தைப் பிடித்துக் கொண்டு முத்து நின்றான். கம்பங்கூடச் சரியாய் நிற்காமல் சுழல ஆரம்பித்தது. ஏற்கெனவே காரிருள். இப்போது கண்ணும் இருண்டபடியால் கனாந்தகாரமாயிற்று. திடீரென்று தூரத்திலே ஒரு பெரிய வெளிச்சம் காணப்பட்டது. “அதென்ன பேயா? பூதமா? ஆமாம், தெரிந்தது. கொள்ளிவாய்ப் பிசாசு! பயங்கரமான சத்தமிட்டுக் கொண்டு அது மேலே மேலே அதிவேகமாய் வந்து கொண்டிருந்தது. இதோ அருகில் வந்து விட்டது. என்ன கொடிய பெரிய உருவம்! அதன் வாயில் எவ்வளவு பயங்கரமான தீ! ஐயோ! அது என்னை இழுக்கின்றதே! இதென்ன? நேரே அதன் வாயில் போய் விழுகிறேனே! ஓஹோ! உடையார் ஐயா! மாரியாயி!” அடுத்த கணத்தில் கவர்னர் துரையின் ஸ்பெஷல் ரயில் முத்துவின் உடம்பை ஆயரந் துகளாகச் செய்துவிட்டுப் பறந்து சென்றது. முத்துவின் உயிரும் இப்பூவுலகை விட்டுப் பறந்து போயிற்று. “மேன்மை தங்கிய கவர்னர் துரையும் அவருடைய பரிவாரங்களும் சௌக்கியமாகத் துவரை நகரம் சேர்ந்தார்கள்” என்று மறுநாள் பத்திரிகைகளில் செய்தி வெளியாயிற்று. தலையாரி முத்துவின் மனைவி தீபாவளியன்று காலையில் பணியாரம் செய்து வைத்துக் கொண்டு புருஷன் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தாள். சின்னானும், அஞ்சலையும் நிமிஷத்துக் கொருமுறை வாசல்புறம் போய் மத்தாப்பூ, துப்பாக்கியுடன் அப்பா வருகிறாரா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில் நான் மாயவரம் போனபோது கிராம முன்சீப் குருசாமி உடையாரிடமிருந்து மேற் சொன்ன விவரங்களைக் கேட்டறிந்தேன். உடையார் இப்போது மதுவிலக்கு இயக்கத்தில் பிசாசு பிடித்தவர் போல் வேலை செய்து வருகிறார். தற்போது அவரிடம் யாராவது சென்று கள்ளு, சாராயத்துக்குச் சாதகமாகப் பேசிவிட்டால் அவர்கள் தப்பிப் பிழைத்து வருவது கஷ்டந்தான். 10. காதறாக் கள்ளன் முன்னுரை சில ஆண்டுகளுக்கு முன்னால் திசையெல்லாம் புகழும் திருநெல்வேலி மாவட்டத்தில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். (மாவட்டம் என்பது ஜில்லாவுக்கு நல்ல தமிழ் வார்த்தை. தமிழ் வளர்த்த திருநெல்வேலியாதலால் ‘மாவட்டம்’ என்ற சொல்லை போட்டு வைத்தேன்) சாலைகள் வெகு மனோரம்யமாகயிருந்தன. வழியில் தோன்றிய ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு குன்றும் ஒவ்வொரு கால்வாயும் ஒவ்வொரு ரஸமான கதை சொல்லும் எனத் தோன்றிற்று. ஆனால் ஊரில் காற்றெனக் கடுகிச் சென்று கொண்டிருக்கையில் கதை கேட்பதற்கு நேரம் எங்கே? நல்ல வேளையாக, சிற்றாறு ஒன்று எதிர்ப்பட்டது. அதற்குப் பாலம் கிடையாது. நதியில் இறங்கித்தான் போக வேண்டும். டிரைவர் சிற்றாற்றின் கரையில் வண்டியை நிறுத்தினான். அங்கே ஒரு விசாலமான மருத மரத்தின் அடியில் முறுக்கு வடையும், வெற்றிலை பாக்கும் விற்கும் ஒரு பெண் பிள்ளை தம் கூடைக் கடையுடன் உட்கார்ந்திருந்தாள். அந்தப் பெண் பிள்ளைக்குப் பக்கத்தில் ஒரு பெரியவர் வீற்றிருந்தார். அவருடைய பெரிய மீசை நரைத்திருந்த போதிலும் நன்றாக முறுக்கிவிடப்பட்டிருந்தது. அவர் அப்பெண் பிள்ளையிடம் முறுக்கு வாங்கிக் கையினால் அரைத்துத் தூளாக்கி அதை வாயில் போட்டுக் கொண்டிருந்தார். காரில் இருந்தபடியே எங்களில் ஒருவர், “ஏன் ஐயா, ஆற்றில் தண்ணீர் அதிகமா? கார் போகுமா?” என்று கேட்டார். அதற்குப் பெரியவர், “தண்ணீர் கொஞ்சந்தான்; முழங்காலுக்குக் கூட வராது” என்றார். இதைக் கேட்ட டிரைவர் வண்டியை ஆற்றில் இறக்கினான். பெரியவர் சொன்னது சரிதான். தண்ணீர் கொஞ்சமாகத்தான் இருந்தது. ஆகையால் கார் சுலபமாகத் தண்ணீரைக் கடந்து போய்விட்டது. ஆனால் தண்ணீருக்கு அப்பால் நெடுந்தூரம் பரந்து கிடந்த மணலை காரினால் தாண்ட முடியவில்லை. சில அடி தூரம் போனதும் காரின் சக்கரங்கள் மணலிலேயே நன்றாய்ப் புதைந்து விட்டன. காரின் விசைகளை டிரைவர் என்னவெல்லாமோ செய்து பார்த்தான். பயங்கரமான சத்தங்கள் உண்டாயின. மணலும் புகையும் கலந்து பறந்தன. முதலில் சிறிது நேரம் சக்கரங்கள் இருந்த இடத்திலேயே சுழன்றன. அப்புறம் சுழலவும் மறுத்துவிட்டுப் பூரண வேலை நிறுத்தம் செய்தன. வண்டிக்குள் இருந்தவர்கள் இறங்கி வெளியே வந்தோம். எங்களாலேதான் வண்டி நகரவில்லை என்று நினைத்தானோ என்னமோ டிரைவர் நாங்கள் இறங்கியதும் மறுபடி ஒரு முறை பிரயத்தனம் செய்தான். அதுவும் பலிக்கவில்லை. பிறகு டிரைவரும் காரிலிருந்து கீழே இறங்கினான். சிறிது நேரம் காரைச் சுற்றிப் பிரதட்சணம் வந்தோம். எங்களில் ஒரு ஹாஸ்யக்காரர் காருக்கு முன்னால் நின்று கன்னத்தில் போட்டுக் கொண்டு “அப்பா! காரப்பா! சரணம்! சரணம்!” என்றார். அதனாலும் அந்தக் கார் அசைந்துக் கொடுக்கவில்லை. 1 வெயிலில் சுடுகிற மணலில் என்னால் நிற்க முடியாது என்று நான் கோபமாய் சொல்லிவிட்டு ஆற்றின் தண்ணீரைத் திரும்ப காலினால் நடந்தே கடந்து கரைக்கு வந்தேன். மருத மரத்தின் அடியில் உட்கார்ந்திருந்த பெரியவர் பக்கத்தில் சென்று மேல் துண்டை விரித்துப் போட்டு உட்கார்ந்தேன். “ஏன் ஐயா! இப்படிச் செய்யலாமா? கார் ஆற்றைக் கடக்காது என்று சொல்ல வேண்டாமா?” என்றேன். “அழகாயிருக்கிறது! தண்ணீர் முழங்கால் வரை கூட வராது என்று சொன்னேன். அப்படியேயிருந்ததா, இல்லையா? உங்கள் ஓட்டை மோட்டார் மணலிலே போகாது என்பது எனக்கு எப்படித் தெரியும்? நல்ல கதை! காதறாக் கள்ளன் மரகதவல்லியைக் குதிரையிலே ஏற்றிக் கொண்டு வந்ததனாலே தப்பிப் பிழைத்தான்! உங்கள் மாதிரி மோட்டார் காரிலே வந்திருந்தால் அகப்பட்டுக் கொண்டு விழித்திருப்பான்!” என்றார். நான் அப்போது அடைந்த குதூகலத்துக்கு அளவில்லை. “ஆற்று மணலில் கார் அகப்பட்டுக் கொண்டதே நல்லதாய்ப் போயிற்று; நமக்கு ஒரு நல்ல கதை கிடைக்கப் போகிறது” என்று எண்ணி உற்சாகம் அடைந்தேன். “அது என்ன கதை? காதறாக் கள்ளன் என்றால் யார்? அப்படி ஒரு கள்ளனா? நான் கேள்விப்பட்டதில்லையே!” என்றேன். “நீங்கள் கேள்விப்படாத காரியங்கள் எத்தனையோ இருக்கலாம்! அதற்கு நானா பொறுப்பாளி?” என்று சொன்னார் அந்தப் பெரியவர். “கோபித்துக் கொள்ளாதீர்கள்! கதையைச் சொல்லுங்கள்!” என்றேன். நான் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. அருமையான கதை ஒன்று கிடைத்தது. ‘அருமையான கதை’ என்று எனக்குத் தோன்றியதைத்தான் சொல்லுகிறேன். கேட்டுவிட்டு நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். பெரியவர் சொன்ன கதை அதோ, ஆற்றைக் கடந்ததும், அப்பால் ஒரு கிராமம் தெரிகிறதல்லவா? அதன் பெயர் என்னவென்று தெரியுமோ? ‘பரி உயிர் காத்த நல்லூர்’ என்று பெயர். ஆமாம்; திருநெல்வேலிச் சீமையில் ஊரின் பெயர்கள் கொஞ்சம் நீளமாகத் தான் இருக்கும். சிலர் ‘பரி உயிர் நீத்த நல்லூர்’ என்று சொல்லுவதுண்டு. இந்தக் கிராமத்துக் கோயிலில் உள்ள கல்வெட்டு சாஸனங்களில் ‘பரி உயிர் காத்த நல்லூர்’ என்று தான் இருக்கிறது. அதுதான் சரியான பெயர் என்பது என்னுடைய அபிப்பிராயம். இந்தக் கிராமத்துக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது என்ற கதையைத் தான் இப்போது சொல்லப் போகிறேன். சற்று நீங்கள் வந்த வழியைத் திரும்பிப் பாருங்கள் அதோ ஒரு ‘பொத்தை’ தெருகிறதல்லவா? உங்கள் நாட்டில் என்ன சொல்வீர்களோ தெரியாது. இந்த நாட்டில் சிறிய மொட்டைக் குன்றுகளுக்குப் ‘பொத்தை’ என்ற பெயர். அந்தப் பொத்தைக்கு அப்பாலே ஒரு புளியந்தோப்பு இருக்கிறது. நீங்கள் பார்த்தீர்களோ என்னமோ, தெரியாது. காரில் பறந்து வருகிறவர்கள் எங்கே பார்க்கப் போகிறீர்கள்? நான் சொல்லுகிறதை நம்ப வேண்டியதுதான். அங்கே ஒரு புளியமர தோப்பு இருக்கிறது. எனக்கு வயது நாற்பது ஆகியிருந்த போது அங்கே புளியஞ்செடி நட்டார்கள். இப்போது மரங்களாகியிருக்கின்றன. இந்த நாளிலே ஒருவரும் மரம் நடுகிறதில்லை. அந்தந்த வருஷத்திலே பயன் தருகிற விவசாயமே செய்கிறார்கள். இப்போதுள்ள புளியமரமெல்லாம் போய்விட்டால், நம்முடைய சந்நதியில் வரும் ஜனங்கள் புளிக்கு என்ன செய்வார்களோ தெரியாது. ஒரு புளியம் பழம் ஒரு ரூபாய்க்கு விற்கும் காலம் வந்தாலும் வரும்! நல்ல வேளை அப்படிப்பட்ட காலத்தை பார்ப்பதற்கு இருக்க மாட்டேன். அந்தப் பொத்தைக்குப் பக்கத்தில் இப்போது புளியந்தோப்பு இருக்கும் இடத்தில் அறுபது வருஷத்துக்கு முன்னாலும் ஒரு புளியந்தோப்பு இருந்தது. ஒரு நாள் பௌர்ணமியன்று சாயங்காலம் அந்தப் புளியந்தோப்பில் ஆள்கள் வந்து கூட ஆரம்பித்தார்கள். ஆள்கள் என்றால் இந்தக் காலத்து மனிதர்களைப் போல் நோஞ்சைகள் அல்ல. ஆறு அடி உயரம், ஆஜானுபாகுவான ஆள்கள். அவர்களில் சிலர் கையில் தடி வைத்திருந்தார்கள். சிலர் கத்தி, கபடா, வேல், ஈட்டி முதலிய ஆயுதங்களும் வைத்திருந்தார்கள். அவர்கள் வாள்களையும் வேல்களையும் விளையாட்டாக ஒன்றோடொன்று மோதவிட்டபோது டணார் டனார் என்று சத்தம் எழுந்தது. தடிகளோடு தடிகள் முட்டிய போது சடமடா என்ற சத்தம் உண்டாயிற்று. அவர்கள் ஒருவரோடொருவர் பேசிய வீர வாதங்கள் பாபநாசத்து அருவி விழும் ஓசையைப் போல் பேரிரைச்சலாகக் கேட்டது. சூரியன் மேற்கே அஸ்தமித்தது. அஸ்தமித்ததற்கு அடையாளமாக மேற்கு வானத்தில் சில சிவப்புக் கோடுகள் மட்டும் தெரிந்தன. அப்போது கிழக்கே பூரண சந்திரன் திருமாலின் கையில் சுழலும் சக்கரத்தைப்போல் தகதகவென்று உதயமானான். அதே சமயத்தில் குதிரைகள் வரும் காலடிச் சத்தம் கேட்டது. உடனே அந்தப் புளியந்தோப்பில் பேச்சு அடங்கி நிசப்தம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் காதோடு “மகாராஜா வருகிறார்” என்று சொல்லிக் கொண்டார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் ஏழெட்டுக் குதிரைகள் வந்தன. ஒவ்வொரு குதிரையின் மேலும் ஒரு வீரன் வந்தான். எல்லோருக்கும் முதலில் வந்தவன் அவர்களுடைய தலைவன். அவன் பெயர் தில்லைமுத்துத்தேவன். அவனைத்தான் “மகாராஜா” என்று அந்த வீரர்கள் அழைத்தார்கள். தில்லைமுத்துத்தேவன் ஒரு பெரிய பாளையக்காரன். அறுபது கிராமங்களுக்கு அதிபதி. அவன் சொல்லிவிட்டால், எந்த நேரமும் ஆயிரம் ஆட்கள் வந்து விடுவார்கள். சண்டையில் உயிரைக் கொடுக்கத் தயாராக வருவார்கள். பாளையக்காரன் தில்லைமுத்துத்தேவன் புளியந்தோப்புக்கு வந்ததும், தோப்பில் இடைவெளியிருந்த ஒரு இடத்தைப் பிடித்து அங்கே குதிரையிலிருந்து கீழே இறங்கினான். மற்றவர்களும் இறங்கினார்கள். முன்னமே தயாராக வைத்திருந்த ஒரு சிம்மாசனத்தைக் கொண்டு வந்து போட்டார்கள். அதன் பேரில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு தில்லைமுத்துத்தேவன் உட்கார்ந்தான். அவனுடைய மதிமந்திரியான நல்லமுத்துத்தேவன் உடனே வெற்றிலை பாக்குப் பெட்டியை எடுத்துப் பாக்கும் வெற்றிலையும் எடுத்துக் கொடுத்தான். பாளையக்காரன் வெற்றிலைப் பாக்கைக் குதப்பிக் கொண்டே “நல்லமுத்து! உனக்கு என்ன தோன்றுகிறது? கருடாசலத்தேவன் சொல்லி அனுப்பியபடி ராஜி பேசுவதற்கு வருவான் என்று நினைக்கிறாயா?” என்று கேட்டான். “கட்டாயம் வருவான், மகாராஜா! அவன் தலை என்ன இரும்பா? அப்படி வராவிட்டால் என்ன நடக்கும் என்று அவனுக்குத் தெரியாதா” என்றான் நல்லமுத்துத் தேவன். “அவன் வராவிட்டால் என்ன நடக்கும்? உன் உத்தேசம் என்ன?” என்று பாளையக்காரன் கேட்டான். “முதல் ஜாமம் முடிவதற்குள் அவன் இங்கே வந்து மகாராஜா சொல்கிறபடி நடக்கிறேன் என்று ஒப்புக்கொள்ளாவிட்டால் நம்முடைய காரியத்தை நடத்த வேண்டியதுதான்!…” “நம்முடைய காரியம் என்றால்…” “கருடாசலத்தேவனின் அரண்மனை, சவுக்கண்டி களஞ்சியம், வைக்கற்போர், மாட்டுக் கொட்டகை குதிரைலாயம் எல்லாவற்றையும் அக்னி தேவனுக்கு இரையாக்க வேண்டியதுதான்!” “அட பாவி!…” “மகாராஜா! யார் பாவி? இருபது வயதான மருமகப் பெண்ணை யாருக்கும் கட்டிக் கொடுக்காமல் அரண்மனையில் பூட்டி வைத்திருக்கிறானே, அவன் பாவியா? நான் பாவியா? பெற்று வளர்த்த பிள்ளையைக் கொஞ்சங்கூட மனத்தில் ஈவிரக்கமில்லாமல் வீட்டைவிட்டு விரட்டியடித்தானே அந்த மனுஷன் பாவியா? நான் பாவியா?” “அது எல்லாம் சரிதானப்பா! கருடாசலத்தேவன் மேல் இரக்கப்பட்டு நான் ஒன்றும் சொல்லவில்லை. அரண்மனைக்கு தீ வைத்துக் கொளுத்தினால் அந்தப் பெண் மரகதவல்லிக்கும் ஒரு வேளை ஏதாவது ஆபத்து வரலாம் அல்லவா?” “வந்தால் வந்ததுதான்! அதற்காக நாம் என்னத்தை செய்கிறது? அந்தக் கிழவனுக்கல்லவா அதைப் பற்றிக் கவலையாயிருக்க வேண்டும்?” “இருந்தபோதிலும் என்னுடைய யுக்தி பலித்தால் ஒரு ஆபத்தும் இல்லாமல், ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல் காரியம் கைகூடிவிடும் அல்லவா?” “அதிலே என்ன இலாபம்? மகாராஜா இரத்தம் சிந்துவதற்குப் பயப்படும்படியான காலம் இப்போது என்ன வந்துவிட்டது? போயும் போயும் மகாராஜா ஒரு கள்ளப் பயலிடம் நம்பிக்கை வைத்து ஒரு காரியத்துக்கு ஏவுகிறதென்பது எனக்குப் பிடிக்கவில்லை…” “நல்லமுத்து! அவன் சாதாரணக் கள்ளன் இல்லை. உலகமெல்லாம் சொல்லுகிறார்களே! கள்ளனாயிருந்தாலும் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவன். சொன்ன சொல் தவறமாட்டான்…” “இதெல்லாம் பெண் பிள்ளைகள் கட்டிவிட்ட கதை ‘காதறாக் கள்ளன்’ என்ற பட்டம் அவனுக்குப் பெண் பிள்ளைகள் கொடுத்ததுதானே? அதை எஜமானரும் நம்புகிறீர்களே?” இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது புளியந்தோப்பை நெருங்கி ஒரு ஒற்றைக் குதிரை வரும் காலடிச் சத்தம் கேட்டது. தோப்பில் கூடியிருந்த ஆட்கள் அத்தனை பேரும் தங்களுக்குள் கசு முசு வென்று பேசத் தொடங்கினார்கள். “அந்த ஆள் தான் போலிருக்கிறது” என்றான் பாளையக்காரன். நல்லமுத்துத்தேவன் எழுந்து நின்று கழுத்தை வளைத்துப் பார்த்துவிட்டு, “ஆமாம்; அவன் தான் போலிருக்கிறது. நீங்கள் ஆச்சு; உங்கள் காதறாக் கள்ளன் ஆச்சு; எப்படியானும் போங்கள். நான் விலகிக் கொள்ளுகிறேன்” என்று சொல்லிவிட்டு அப்பாற் போனான். 2 ‘காதறாக் கள்ளன்’ என்பவனைப் பற்றி உங்களுக்கு இப்போது சொல்லி விடுகிறேன். இந்தத் திருநெல்வேலிச் சீமையிலே பெண் பிள்ளைகள் காதிலே பெரிய தொளைகளைப் போட்டுக் கொண்டு ஒன்று இரண்டு மூன்று என்பதாகத் தங்கத் தோடுகளையும் முருகுகளையும் தொங்கவிட்டுக் கொள்வார்கள். இப்போது கூட வயதான பெண் பிள்ளைகளின் காதுகள் அப்படித் தொங்குவதை நீங்கள் பார்க்கலாம். அறுபது வருஷத்துக்கு முன்னால் இது ரொம்பவும் அதிகமாயிருந்தது. ஒவ்வொரு பெண் பிள்ளையின் இரண்டு காதிலும் சேர்த்து கால்வீசை தங்கத்துக்குக் குறையாமல் இருக்கும். அந்த நாளில் இங்கேயெல்லாம் கள்ளர் பயம் அதிகமுண்டு. அதோ தெரிகிறதே, அந்த மாதிரி பொத்தைகள் சாலையில் இருந்தால், கட்டாயம் அங்கே கள்ளர்கள் ஒளிந்திருப்பார்கள். கால் நடையாகவோ, ஒரு வண்டி, இரண்டு வண்டியிலோ யாராவது பெண்பிள்ளைகள் போனால் வயிற்றிலே நெருப்பைக் கட்டிக் கொண்டுதான் போக வேண்டும். காதிலே தொங்கும் தங்கத்துக்காக காதை அறுத்துக் கொண்டே போய்விடுவார்கள். இதனால் அந்த நாளில் காது அறுந்த மாதர் பலரை இந்தத் திருநெல்வெலிச் சீமையெங்கும் காணும்படியிருந்தது. இப்படியிருக்கும் நிலைமையில் ஒரு அதிசயமான பக்காத் திருடன் கிளம்பினான். அவன் மற்றத் திருடர்களைப்போல் கூட்டம் சேர்த்துக் கொண்டு வருவதில்லை. தனி ஆளாகக் குதிரையில் ஏறிக் கொண்டு வருவான். முகத்தில் கீழ்ப் பாதியை, வாய் வரையில், கறுப்புத் துணியைக் கட்டி மறைத்திருப்பான். கையிலே கத்தி, துப்பாக்கி எல்லாம் வைத்திருப்பான். சாலையிலே ஒற்றைக் குதிரைச் சத்தம் கேட்டாலே பிரயாணிகள் நின்றுவிடுவார்கள். அவன் ஒருவனாக வந்து, குதிரை மேலிருந்து இறங்கி, எல்லாரையும் மடியை அவிழ்த்துக் காட்டச் சொல்லுவான். மூட்டைகளைப் பிரித்துப் பார்ப்பான். அவனுக்கு இஷ்டமான பொருள்களைச் சேர்த்துக் கட்டிக் கொண்டு குதிரையில் ஏறிப் போய் விடுவான். பெரும்பாலும் அவன் ஏழைகளை ஒன்றும் செய்யமாட்டான். பணக்காரர்களிடமிருந்துதான் பணத்தைப் பறிப்பான். பணக்கார ஸ்திரீகளிடமிருந்து நகைநட்டுகளைப் பறித்துக் கொள்வான். ஆனால் மற்றத் திருடர்களுக்கும் அவனுக்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. ஸ்திரீகளின் கழுத்திலும் கையிலும் உள்ள நகைகளைக் கழற்றிக் கொள்வானே தவிர, காதை அறுக்க மாட்டான். இது காரணமாக அவனுக்குக் ‘காதறாக் கள்ளன்’ என்று பட்டப் பெயர் ஏற்பட்டது. முக்கியமாக, மாதர்கள் இந்தப் பட்டப் பெயரை எங்கே பார்த்தாலும் பிரபலப்படுத்தினார்கள். அவனிடம் நகைகளைப் பறிகொடுத்த ஸ்திரீகள்தான் அவனைப் பற்றி அதிகமாகப் புகழ்ந்து பேசினார்கள். ‘நகை போனால் போகட்டும்; காது தப்பியதே!’ என்று அவர்களுக்குச் சந்தோஷம். பெண் புத்தி பேதைப் புத்தி என்று தெரியாமலா பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்? அது மட்டுமல்ல; முட்டாள் ஜனங்கள் இன்னும் என்னவெல்லாமோ அந்தக் கள்ளனைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். அவன் பணக்காரர்களிடம் பணத்தைப் பறித்து ஏழைகளுக்கு ஒத்தாசை செய்கிறான் என்றெல்லாம் பேசத் தொடங்கினார்கள். என்ன விசித்திரம் பாருங்கள்! செய்கிறது திருட்டுத் தொழில்! அதிலே தான தர்மம் செய்து ‘தர்மப் பிரபு’ என்ற பட்டம். அவன் பிறந்த வேளை அப்படி! வேறு என்னத்தை சொல்லுகிறது? அவனைப் பிடித்துக் கொடுப்பதற்கு யார் யாரோ முயற்சி செய்தார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. ஏன்? பாளையக்காரன் தில்லைமுத்துத்தேவன் கூடக் காதறாக் கள்ளனைப் பிடிக்கப் பார்த்தான்; முடியவில்லை. இப்போது அந்தக் கள்ளனைத் தன்னுடைய காரியத்துக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்று வரவழைத்தான். காதறாக் கள்ளன் வந்து பாளையக்காரனுக்கு முன்னால் நின்றதும், பாளையக்காரன் அவனை ஏற இறங்கப் பார்த்தான். “கள்ளா! உன் தைரியத்தை மெச்சினேன்!” என்றான். துணியால் மூடியிருந்த வாயினால் கள்ளன் பேசியது கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போலக் கேட்டது. “என்னுடைய தைரியத்தை மெச்சும்படியாக நான் இன்னும் ஒன்றும் செய்யவில்லையே” என்றான் கள்ளன். “என்னுடைய ஆட்கள் இருநூறு பேருக்கு நடுவில் நீ தன்னந்தனியாக என் முன்னால் வந்து நிற்கிறாயே அதற்கு எத்தனை தைரியம் வேண்டும்!” என்றான் தில்லைமுத்துத்தேவன். கள்ளன் இலேசாகச் சிரித்துவிட்டு, “ஆமாம்; அந்த தைரியத்தை மெச்ச வேண்டியதுதான்! ஆனால், இதற்காக, - என்னுடைய தைரியத்தைச் சோதிப்பதற்காக - மட்டுமே என்னை வரவழைத்தீர்களா? வேறு ஏதாவது காரியம் உண்டா!” என்று கேட்டான். “காரியம் இருக்கிறது; அதிலே உன்னுடைய தைரியத்தோடு சாமர்த்தியத்தையும் பரிசோதிக்க உத்தேசம்!” “சொல்லுங்கள். கேட்கிறேன்.” “இங்கிருந்து அரைக்காத தூரத்தில் கருடாசலத் தேவரின் அரண்மனை இருக்கிறதே உனக்குத் தெரியுமா?” கள்ளன் சிரித்துவிட்டு, “மேலே சொல்லுங்கள்!” என்றான். “என்ன சொன்னாலும் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரிக்கிறாயே? அதற்கு அர்த்தம் என்ன?” என்றான் பாளையக்காரன். “அது என் சுபாவம். மேலே சொல்லுங்கள். கருடாசலத்தேவரின் அரண்மனையை எனக்குத் தெரிந்தால் என்ன, தெரியாமற்போனால் என்ன? அங்கே உங்களுக்கு என்ன காரியம் ஆக வேண்டும் என்பதைச் சொல்லுங்கள்.” “சரி, சொல்லுகிறேன், கேள்! கருடாசலத் தேவர் இரவு இரண்டாம் ஜாமத்தில் இங்கே என்னைப் பார்ப்பதற்காக வருவார். அநேகமாக இதற்குள் அரண்மனையை விட்டுப் புறப்பட்டிருப்பார். உன்னைப் போல் அவர் தனியாக வர மாட்டார். அவருடைய முக்கியமான ஆட்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு வருவார். அரண்மனையில் அச்சமயம் காவல் காப்பதற்கு அதிகம் பேர் இருக்க மாட்டார்கள் தெரிகிறதா…?” “நன்றாகத் தெரிகிறது. அச்சமயம் நான் என்ன செய்யவேண்டும்?” “இங்கிருந்து நீ சாலை வழியாகப் போகாமல் வேறு குறுக்கு வழியாகப் போக வேண்டும். கருடாசலத்தேவருடைய அரண்மனையை நெருங்கவேண்டும். உன்னுடைய புகழ்தான் எங்கும் பரவியிருக்கிறதே? உன்னைப் பார்த்தவுடனேயே அரண்மனையைக் காவல் காப்பவர்கள் நடுங்கிப் போவார்கள். பிறகு, உன்னுடைய சாமர்த்தியத்தினால் அரண்மனைக்குள் எப்படியாவது புகுந்துவிட வேண்டும். அங்கே கருடாசலத்தேவரின் மருமகள் மரகதவல்லி இருப்பாள். அவளைக் கருடாசலத்தேவர் ஐந்து வருஷமாகச் சிறையில் வைத்திருப்பது போல் வைத்திருக்கிறார். அவளை விடுதலை செய்து கொண்டு வந்து என்னிடம் ஒப்புவித்துவிடவேண்டும். கள்ளா, என்ன சொல்கிறாய்? உன்னால் இது முடியுமா?” கள்ளன் சற்று மௌனமாயிருந்தான். பிறகு “எதற்காக மரகதவல்லியைக் கொண்டுவரச் சொல்லுகிறீர்கள்? அந்தப் பெண் விஷயத்தில் உங்களுடைய நோக்கம் என்ன?” என்று கேட்டான். “நோக்கம் என்னவாயிருக்கும்? நீதான் ஊகித்துக் கொள்ளேன். மூன்று வருஷத்துக்கு முன்னால் மரகதவல்லியை எனக்குக் கட்டிக் கொடுக்கும்படி கருடாசலத் தேவரைக் கேட்டேன். அவர் கண்டிப்பாக ‘முடியவே முடியாது’ என்று சொல்லிவிட்டார். அதற்குக் காரணம் எதுவும் சொல்லவில்லை. ஆனால் நான் ஒன்றில் மனதைச் செலுத்திவிட்டால், அதை இலேசில் விட்டு விடுவேனா? பலாத்காரமாக அவருடைய அரண்மனையில் புகுந்து மரகதவல்லியைக் கைப்பற்றிக் கொண்டுவந்து விடுவது என்று தீர்மானித்துவிட்டேன். அதற்கு இன்றைக்குத்தான் நாள் குறிப்பிட்டிருந்தேன்…” “பின்னே, என்னை எதற்காகக் கூப்பிட்டு அனுப்பினீர்கள்? இத்தனை ஆட்களோடு நீங்கள் போய்ச் செய்ய முடியாத ஒரு காரியத்தை…” “செய்யமுடியாத காரியம் என்று யார் சொன்னது? நான் படையெடுப்புக்கு ஆயத்தம் செய்வதைக் கருடாசலத்தேவர் அறிந்து கொண்டு ஆள் மேல் ஆள் விட்டார். கடைசியாக, இன்றைக்கு இந்தப் புளியந்தோப்பில் ராஜி பேச வருவதாகச் சொல்லி அனுப்பினார். நானும் சம்மதித்தேன். அவர் என்ன ராஜி பேசப் போகிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்த மனுஷர் மூன்று வருஷமாக என்னைக் காக்கவைத்து இழுத்தடித்ததற்குப் பழி வாங்க வேண்டாமா? அவரும் நானும் இங்கே ராஜிப் பேச்சுப் பேசிக் கொண்டிருக்கும் போது, நீ அந்தப் பெண்ணைக் கைப்பற்றி இங்கே கொண்டு வந்து என்னிடம் ஒப்புவித்தால் அவருக்கே நல்ல புத்தி புகட்டினதாயிருக்குமல்லவா? வீணில் இரத்தச் சேதம் ஏற்படாமல் தடுத்தபடியாகவும் இருக்கும்.” “அப்படி இரத்தச்சேதம் ஏற்பட்டாலும் அது இந்த கள்ளனுடைய இரத்தமாயிருக்கட்டும் என்று உங்கள் உத்தேசமாக்கும்?” “அப்படியானால் உனக்கு இஷ்டமில்லையா? பயப்படாதே! மனதில் உள்ளதைச் சொல்லிவிடு.” “நீங்கள் சொல்லுகிறபடி செய்து முடித்தால், எனக்கு என்ன லாபம்?” “இன்று இராத்திரி மரகதவல்லியை இங்கே கொண்டு வந்து என்னிடம் ஒப்புவித்து விட்டாயானால் அப்புறம் என்னுடைய ஆட்கள் உன்னைத் தேட மாட்டார்கள். நானும் உன்னுடைய வழிக்கே வரமாட்டேன்…” “நீங்கள் சொல்லுகிற காரியத்தை நான் செய்யாவிட்டால்?…” “இன்றைக்கு இங்கிருந்து நீ பத்திரமாய்ப் போய்விடலாம். நாளை முதல் நீ என் விரோதி. என் ஆட்கள் உன்னைத் தேடுவார்கள். நீ எந்த மலைக்குகையிலோ அல்லது மேக மண்டலத்திலோ போய் ஒளிந்து கொண்டாலும் உன்னைப் பிடித்துப் போலீசாரிடம் கொடுத்து விட்டுத்தான் நான் மறுகாரியம் பார்ப்பேன். நல்லது, இப்போது என்ன சொல்கிறாய்?” கள்ளன் சற்று யோசனையில் ஆழ்ந்திருந்தான். பிறகு, “ஆகட்டும், போய்ப் பார்க்கிறேன். ஆனால் நீங்கள் சொல்லும் காரியத்தில் வெற்றி பெறுவேனோ என்னமோ?” என்றான். “நீ வெற்றி பெறாவிட்டால் நான் இருக்கிறேன். என் ஆட்கள் இருக்கிறார்கள். அதைப்பற்றிக் கவலையில்லை” என்றான் தில்லைமுத்துத்தேவன். காதறாக் கள்ளன் குதிரைமேல் தாவி ஏறி விரைவாகச் சென்றான். 3 இந்தச் சமயத்தில் கோழிகூவாப் புத்தூர் கருடாசலத்தேவரைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும். கருடாசலத்தேவர் ஒரு காலத்தில் தில்லைமுத்துத்தேவரைப் போலவே செல்வாக்கு வாய்ந்தவராயிருந்தார். ஆனால் வயது காரணமாக அவர் உடம்பு தளர்ந்து போயிருந்தது. அதைக் காட்டிலும் அவருடைய வாழ்க்கையில் சில துயர சம்பவங்கள் ஏற்பட்டு அவர் மனம் இடிந்து போயிருந்தது. முக்கியமாக ஐந்து வருஷத்துக்கு முன்னால் அவருக்கும் அவருடைய ஏக புதல்வனுக்கும் சண்டை உண்டாகி பையன் வீட்டை விட்டு வெளியேற நேர்ந்தது. அற்ப விஷயத்தில் மன வேற்றுமை உண்டாயிற்று. தந்தை, மகன் இருவரும் பிடிவாதக்காரர்களாதலால் அந்த வேற்றுமை முற்றி விபரீதமாகி விட்டது. குடி மயக்கத்திலிருந்த கருடாசலத்தேவர் சொன்னபடி மகன் ஏதோ செய்யவில்லை என்பதற்காக நாலு பேர் இருக்கும்போது அவன் மீது செருப்பை விட்டெறிந்தார். ரோஸக்காரனாகிய மகன் “இனி உங்கள் முகத்தில் விழிப்பதில்லை” என்று சொல்லிவிட்டு அரண்மனையிலிருந்து கிளம்பிப் போனவன் தான்; திரும்பி வரவே இல்லை. அருமை மகன் வீட்டை விட்டுப் போன சில நாளைக்கெல்லாம் தேவரின் மனைவி அந்த ஏக்கத்தினாலேயே படுத்த படுக்கையாகி உயிர் துறந்தாள். ஆனால் தேவர் வஜ்ரத்தைப் போன்ற இதயம் படைத்தவர். அவர் கொஞ்சமாவது மகனுக்காக வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. மனையாள் இறந்ததைப் பொருட்படுத்தியதாகவும் தெரியவில்லை. எங்கேயோ மதுரைக்குப் பக்கத்திலே இருந்த அவருடைய தங்கையையும் தங்கை மகளையும் அழைத்து கொண்டு வந்து வீட்டிலே வைத்துக் கொண்டார். இரண்டு வருஷத்துக்கு முன்னால் தங்கையும் காலமாகி விட்டாள். பிறகு மரகதவல்லி மட்டும் கருடாசலத் தேவரின் பிரமாண்டமான அரண்மனையில் தன்னந்தனியாக வசித்து வந்தாள். அவளைக் கலியாணம் செய்து கொள்ள விரும்புவதாகப் பாளையக்காரன் கேட்டதற்கு “முடியாது” என்று கருடாசலத்தேவர் பதில் சொல்லிவிட்டார். நயத்தினால் முடியாததைப் பயத்தினால் சாதித்துக் கொள்ள எண்ணித் தில்லைமுத்துத்தேவன் ஆள் படைகளைத் திரட்டிக் கொண்டு வந்தான். உயிர்ச்சேதம் வேண்டாம் என்று கருதினால் புளியந்தோப்பில் வந்து தம்மைச் சந்திக்கும்படி சொல்லியனுப்பினான். கிழவரை இவ்விதம் தருவித்துவிட்டு, அந்த சமயத்தில் கள்ளனை அனுப்பிப் பெண்ணைக் கொண்டு வந்து விடச் செய்யலாம் என்று தில்லைமுத்துத்தேவன் யுக்தி செய்திருந்தான். அந்த யுக்தி அநேகமாகப் பலித்துவிட்டது என்றே சொல்லலாம். ஏனெனில் கருடாசலத்தேவர் தம்முடைய முக்கியமான ஆட்களையெல்லாம் தன் துணைக்கு அழைத்துக் கொண்டு தில்லைமுத்துத்தேவனைச் சந்திப்பதற்கு வந்து சேர்ந்தார். கள்ளன் புறப்பட்டுப் போன சிறிது நேரத்துக்கெல்லாம் அவர் வந்து விட்டார். தில்லைமுத்துத்தேவன் அவரைத் தக்கப்படி வரவேற்று மரியாதை செய்தான். முக்கியமான விஷயத்துக்கு வருவதற்கு முன்னால் ஊரை வளைத்து என்னவெல்லாமோ பேசிக் கொண்டிருந்தான். கள்ளன் தான் ஒப்புக் கொண்ட காரியத்தைச் செய்வதற்குப் போதிய சாவகாசம் கொடுக்க வேண்டும் என்பது பாளையக்காரனின் எண்ணம். 4 கள்ளன் போன இடத்தில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலாய்த் தானிருக்கும். அதை இப்போது சொல்கிறேன். கோழிகூவாப் புத்தூர் அரண்மனையிலிருந்து கருடாசலத்தேவன் ஆட்களுடன் புறப்பட்டுப் போய்விட்டார் என்பதைக் கள்ளன் வழியிலேயே தெரிந்து கொண்டான். ஆகையால் ஊருக்குள்ளே தைரியமாக நுழைந்து போனான். வருகிறவன் காதறாக் கள்ளன் என்பதை ஊரார் அறிந்து கொண்டு பயந்து கதவைச் சாத்திக் கொண்டார்கள். அரண்மனையின் வாசலில் வந்ததும் கள்ளன் தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து ஒரு வெடி தீர்த்தான். ஏற்கெனவே பயந்திருந்த காவற்காரர்கள் சிதறி ஓடிப் போனார்கள். முன் வாசல் திறந்திருந்தபடியால் திருடன் அரண்மனை முன் கட்டில் பிரவேசித்தான். ஆனால் இதற்குள் விஷயம் தெரிந்துகொண்டு வேலைக்கார ஸ்திரீகள் பின் கட்டுக் கதவுகளைத் தாள் போட்டார்கள். கள்ளன் முற்றத்தின் நடுவில் நின்று இன்னொரு வெடி தீர்த்தான். கதவுகளையெல்லாம் உடனே திறக்கும்படியும் இல்லாவிட்டால் அதாஹதம் செய்துவிடுவேன் என்றும் கள்ளன் சத்தமிட்டுக் கூவினான். அரண்மனைப் பின் கட்டின் மச்சிலேயிருந்து மரகதவல்லியும் அவளுடைய தாதிப் பெண்களும் இந்தக் காட்சியைப் பார்த்தார்கள். அச்சமயம் கள்ளன் தன் முகத்தின் கீழ்ப் பாதியை மறைத்துக் கட்டியிருந்த துணி தற்செயலாக அவிழ்ந்து விழுந்தது. அப்போது அவனுடைய முகம் பூரண சந்திரனுடைய நிலா வெளிச்சத்தில் நன்றாய்த் தெரிந்தது. தாதிப் பெண்களில் ஒருத்தி ஆச்சரியத்தினால் அலறினாள். மரகதவல்லியின் காதில் ஏதோ சொன்னாள். கள்ளனுடைய அட்டகாசம் இதற்குள்ளே இன்னும் அதிகமாயிற்று. அரண்மனைப் பின் கட்டின் கதவு சீக்கிரத்தில் திறக்கப்பட்டது. மரகதவல்லியும் தாதிப் பெண்ணும் நிலா முற்றத்திற்கு வந்தார்கள். கள்ளன் இதற்குள்ளே தன் முகத்தின் பாதியை மூடி மறைத்துக் கொண்டான். அதனால் அவனுடைய உருவம் கோரமாகத்- தானிருந்தது. ஆயினும் மரகதவல்லி சிறிதும் அஞ்சவில்லை. “கள்ளா! ஏன் இப்படிக் கூச்சல் போட்டுத் தடபுடல் செய்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டாள். நிலவின் வெளிச்சத்தில் மரகதவல்லியின் முகத்தை பார்த்த கள்ளன் ஒரு நிமிஷம் தயங்கி நின்றான். அவனுடைய இரும்பு மனமும் இளகிப் போய்விட்டது. மறுபடியும் மரகதவல்லி “இங்கே ஆண்பிள்ளைகள் யாரும் இல்லை. பெண்பிள்ளைகள் இருக்கிறோம். இங்கே வந்து ஏன் ஆர்ப்பாட்டம் செய்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்? நகை நட்டுகள் வேண்டுமானால் கழற்றித் தந்து விடுகிறோம். வாங்கிக் கொண்டு பேசாமல் போய்விடு!” என்றாள். கள்ளனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. தயங்கித் தயங்கி “எனக்கு உன் நகை நட்டுகள் வேண்டாம்” என்றான். “வேறு என்ன உனக்கு வேண்டும்?” என்று மரகதவல்லி கேட்டாள். 5 “நீ என்னோடு புறப்பட்டு வரவேண்டும்!” என்றான் கள்ளன். “இப்போதே வர வேண்டுமா? அல்லது மாமா வருகிற வரையில் காத்திருக்க முடியுமா? மாமா வந்ததும் அவரிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டால் நிம்மதியாயிருக்கும்.” கள்ளனுக்கு மேலும் திகைப்பு உண்டாயிற்று. “என்னை ஏய்க்கவா பார்க்கிறாய்? அதெல்லாம் முடியாது. உடனே புறப்பட்டு வருகின்றாயா, அல்லது உன்னைப் பலாத்காரமாய்த் தூக்கிக் கொண்டு போகட்டுமா?” என்று கர்ஜித்தான் “உனக்கு அவ்வளவு கஷ்டம் வேண்டாம். நானே இதோ வருகிறேன்” என்று சொல்லிவிட்டு மரகதவல்லி அவனுக்கு முன்னால் நடந்தாள். கள்ளன் அடங்காத வியப்புடன் அவளை அழைத்துக் கொண்டு அரண்மனை வாசலுக்குச் சென்று முதலில் அவளைக் குதிரை மேல் ஏற்றினான். பிறகு தானும் தாவி ஏறிக் கொண்டான். குதிரையை மெதுவாகவே செலுத்தினான். மரகதவல்லி அவ்வளவு சுலபமாகத் தன்னுடன் வரச் சம்மதித்தது கள்ளனுக்குச் சொல்ல முடியாத ஆச்சரியத்தை உண்டாக்கியிருந்தது. ஆகையால் கோழிகூவாப் புத்தூரைக் குதிரை தாண்டிச் சென்றதும், “பெண்ணே! என்னுடன் வருவதற்கு உனக்குப் பயமாயில்லையா?” என்று கேட்டான். “எனக்கு என்ன பயம்? நீ ‘காதறாக் கள்ளன்’ என்பது எனக்குத் தெரியும். பெண்களுக்கு எவ்விதத் தீங்கும் நீ செய்யமாட்டாய் என்று உலகமெல்லாம் தெரிந்ததுதானே? ஆகையால் எனக்கு என்ன பயம்?” என்றாள் மரகதவல்லி. “உலகம் சொல்லுவதை நம்பியா நீ கள்ளனோடு புறப்பட்டாய்?” “உலகம் வேறுவிதமாய்ச் சொல்லியிருந்தாலும் நான் கிளம்பித்தானிருப்பேன். ஐந்து வருஷமாகக் கூண்டிலே கிளி அடைபட்டிருப்பது போல் அடைப்பட்டிருந்தேன். அப்படி அடைபட்டுக் கிடப்பதைக் காட்டிலும் கள்ளனோடு வெளியே புறப்படுவது கூட நல்லது தான் என்று தோன்றியது.” “பெண்ணே! உன்னை உன் மாமன் அவ்வளவு கஷ்டப்படுத்தி வந்தாரா!” “ஐயோ! பாவம் அவர் என்னை கஷ்டப்படுத்தவே இல்லை. என் பேரில் உயிராயிருந்தார். ஆனாலும் எனக்கு வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்தது கஷ்டமாகத்தானிருந்தது. அந்தக் கடும் சிறைச்சாலையிலிருந்து என்னை நீ விடுதலை செய்தாயே! உனக்கு நான் எந்த விதத்தில் கைமாறு செய்யப் போகிறேன்?” “அசட்டுப் பெண்ணே! அதிகமாகச் சந்தோஷப்பட்டு விடாதே!…” “ஏன்? நான் அதிகமாகச் சந்தோஷப்படுவது உனக்குப் பொறுக்கவில்லையா?” “உன்னை நான் எதற்காக அழைத்துப் போகிறேன் என்பதை தெரிந்து கொண்டு அப்புறம் சந்தோஷப் படு! பாளையக்காரர் தில்லைமுத்துத்தேவர் என்று கேள்விப்பட்டிருக்கிறாயா?” “ஆமாம்; அந்த மனுஷர் என்னைக் கல்யாணம் கட்டிக் கொள்ள ஆசைப் படுவதாகக் கேள்விப்பட்டேன்.” “அவரிடம் உன்னைக் கொண்டு போய் ஒப்புவிக்கப் போகிறேன். அதற்காகவே உன்னை அழைத்துக் கொண்டு போகிறேன்.” “அடபாவி!” 6 “ஏன் என்னைத் திட்டுகிறாய்? தில்லைமுத்துத்தேவர் ரொம்பப் பெரிய மனிதர். அவரிடமுள்ள பணத்துக்கு கணக்கே கிடையாது. அவருடைய எல்லைக்குள் அவர்தான் ராஜா. நீ அவரை கலியாணம் செய்து கொண்டால் ராணி மாதிரி இருக்கலாம்.” “சீச்சீ! நான் எதற்கு ராணியாகிறேன்? ஐயையோ இப்படியா செய்யப் போகிறாய்? இது தெரிந்திருந்தால் வந்திருக்கவே மாட்டேனே!” “அதனாலேதான் அவசரப்பட்டுச் சந்தோஷப்படாதே என்று சொன்னேன். இப்போது தெரிகிறதா?” “கூண்டிலிருந்து கிளியை விடுதலை செய்து காட்டுப் பூனையிடமா ஒப்புவிக்கப் போகிறாய்? இந்த மாதிரிப் பாவம் யாராவது செய்வார்களா?” “பாவமாவது? புண்ணியமாவது! பெரிய பாவத்தை நான் தடுத்தேன். நான் வந்து உன்னை இப்படி அழைத்துப் போகாவிட்டால் தில்லைமுத்துத்தேவர் இருநூறு ஆட்களோடு வந்திருப்பார். உன் மாமனின் உயிருக்கும் ஆபத்து வந்திருக்கும். ஊரே பற்றி எரிந்திருக்கும். எத்தனையோ பேர் செத்துப் போயிருப்பார்கள். இவ்வளவு பாவங்களையும் தடுப்பதற்காகவே நான் வந்தேன்.” “ஐயையோ! என்னாலேயா இவ்வளவு சங்கடம்? மாமா சாயங்காலம் ஐம்பது ஆட்களோடு புறப்பட்டுப் போனாரே? எங்கே போனாரோ தெரியவில்லையே?” “எனக்குத் தெரியும் சொல்லுகிறேன். அதோ கொஞ்ச தூரத்தில் ஒரு பொத்தை தெரிகிறதல்லவா?” “ஆமாம், அதோ தெரிகிறது.” “அதற்குப் பக்கத்தில் ஒரு புளியந்தோப்பு இருக்கிறது. அதில் தில்லைமுத்துத்தேவரும் அவருடைய ஆட்கள் இருநூறு பேரும் திரண்டு இறங்கியிருக்கிறார்கள். உன்னுடைய மாமன் அங்கேதான் போயிருக்கிறார்.” 7 “ஐயோ! அங்கே இரண்டு கட்சிக்கும் சண்டை வந்திருக்குமோ?” “வந்திராது. சண்டை நடவாமல் தடுப்பதற்காகத் தான் நான் உன்னைக் கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டு வந்தேன். தில்லைமுத்துத்தேவர் இப்போது உன் மாமாவுடன் சமாதானமாகப் பேசிக் கொண்டிருப்பார்.” “என்னை அங்கே கொண்டு போய் விட்டால் அப்புறம் என்ன ஆகும்?” “நீ பாளையக்காரரைக் கலியாணம் செய்து கொள்ளச் சம்மதிப்பதாகச் சொன்னால் சண்டை ஒன்றும் வராது. உன் மாமாவும் ஒத்துக் கொள்வார்.” “உயிர் போனாலும் நான் அதற்குச் சம்மதிக்க மாட்டேன். நான் சம்மதித்தாலும் என் மாமா சம்மதிக்க மாட்டார். சம்மதிக்கிறவராயிருந்தால் இத்தனை நாள் காத்திருப்பாரா?” “பெண்ணே! உன் மாமாவின் உத்தேசந்தான் என்ன? உன்னை எப்போதும் கன்னிப் பெண்ணாகவே அவருடைய வீட்டில் வைத்திருக்க உத்தேசமா?” “இல்லை, இல்லை, அவருக்கு ஒரு பைத்தியக்கார ஆசை இருந்தது.” “அது என்ன பைத்தியக்கார ஆசை?” “மாமாவின் மகன் ஆறு வருஷத்துக்கு முன்னால் கோபித்துக் கொண்டு ஓடிப்போய் விட்டானாம். அவன் என்றாவது ஒரு நாளைக்குத் திரும்பி வருவான். அவனுக்கு என்னைக் கட்டிக் கொடுக்கலாம் என்று அவருக்கு ஆசை. கள்ளா! இது பைத்தியக்கார ஆசைதானே?” கள்ளன் இதற்குப் பதில் சொல்லாமல் மௌனமாயிருந்தான். குதிரை இரண்டு பேரைத் தாங்கிக் கொண்டு சாலையில் மெள்ள மெள்ளப் போய்க் கொண்டிருந்தது. கள்ளனும் அதை விரட்டவில்லை. அவனுடைய மனம் யோசனையில் ஆழ்ந்திருந்தது. புளியந்தோப்பும் நெருங்கி வந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் மரகதவல்லி, “கள்ளா! என்ன யோசனை செய்கிறாய்?” என்று கேட்டாள். “என்னமோ யோசனை செய்கிறேன். உனக்கென்ன அதைப்பற்றி?” “அதைப்பற்றி எனக்கு ஒன்றுமில்லை. ஆனால் உன்னை ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன்” என்றாள். “என்ன கேள்வி? சீக்கிரம் கேட்டுத் தொலை! அதோ புளியந்தோப்பு நெருங்கி வந்துவிட்டது.” “கள்ளா! நீ ஒன்றும் உனக்காகத் திருடுவதில்லை. மற்ற ஏழை எளியவர்களுக்காகவே திருடுகிறாய் என்று உலகத்தார் சொல்லுகிறார்களே, அது உண்மையா?” “உண்மையாயிருக்கலாம்; அதற்கு என்ன இப்போது?” “இன்றைக்கு ஒரு நாள் உனக்காகத் திருடலாமே என்று சொல்கிறேன்.” “எனக்காக என்னத்தைத் திருடச் சொல்கிறாய்? நீ நகை நட்டுக் கூட அதிகமாகப் போட்டுக் கொள்ளவில்லையே? எல்லாவற்றையும் கழற்றி வைத்துவிட்டு வந்திருக்கிறாயே?” “சே! உன்னைப் போய் நகை திருடும்படி நான் சொல்வேனா?” “பெண்ணே! வேறு என்னத்தைத் திருடும்படி சொல்கிறாய்?” “தெரியவில்லையா உனக்கு! உன்னைப்பற்றி என்னவெல்லாமோ பிரமாதமாக்ச் சொலுகிறார்களே? இவ்வளவு புத்தி கட்டையான மனுசனா நீ? அந்தப் பாளையக்காரனுக்கு நாமத்தைப் போட்டுவிட்டு நீயே என்னைத் திருடிக் கொண்டு போகும்படிதான் சொல்லுகிறேன்.” இந்த வார்த்தைகளைக் கேட்டக் கள்ளனுடைய உடம்பு சிலிர்த்தது. குதிரையை ஒரு நிமிஷம் நிறுத்திவிட்டு முன்னால் பார்த்து உட்கார்ந்திருந்த மரகதவல்லியைத் தன்னைப் பார்க்கும்படி திரும்பி உட்கார வைத்துக் கொண்டான். இருபுறமும் மரமடர்ந்த அச்சாலையில் அந்த இடத்தில் இடைவெளியிருந்தது. வெண்ணிலாவின் வெளிச்சம் அவளுடைய முகத்தில் பட்டது. கள்ளன் தன் முகமூடியையும் நீக்கிக் கொண்டான். மரகதவல்லியின் முகத்தைத் தூக்கிப் பிடித்துக் கனிவுடன் உற்றுப் பார்த்தான். “பெண்ணே! நீ சொல்வது இன்னதென்று தெரியாமால் சொல்லுகிறாய். நான் வீடுவாசல் இல்லாதவன். மலையிலும் காட்டிலும் அலைந்து திரிகிறவன். அரண்மனையில் சுகமாக வாழ்ந்த நீ என்னோடு எப்படி வாழ்வாய்?” 8 “கள்ளா! உன்னுடைய அரண்மனையே எல்லாவற்றிலும் பெரிய அரண்மனை! பூமியே உன் வீட்டின் தரை, ஆகாசமே கூரை. இதைக்காட்டிலும் பெரிய மாளிகை ஏது? அந்தப் பாளையக்காரனை ஒரு தடவை நான் பார்த்திருக்கிறேன். அன்று இராத்திரியெல்லாம் தூக்கத்தில் பயந்து உளறினேன். அவனிடம் என்னை நீ ஒப்புவித்தால் உடனே உயிரை விடுவேன். ஸ்திரீஹத்தி தோஷம் உனக்கு வரும். உன்னோடு வெளிக் கிளம்பிய பிறகு, மாமா வீட்டிற்குத் திரும்பிப் போகவும் முடியாது. கள்ளா! என்னை உன்னோடு அழைத்துக் கொண்டு போ!” “பெண்ணே! என்னைப் போலீஸாரிடம் பிடித்துக் கொடுக்க ஏற்கனவே பலர் பிரயத்தனம் செய்கிறார்கள். இன்று முதல் பாளையக்காரரின் இருநூறு ஆட்களும் நம்மை வேட்டையாடுவார்கள்.” “வேட்டை நாய்களைக் கண்டால் நான் கொஞ்சங்கூடப் பயப்படுவதில்லை. கள்ளா! உனக்குப் பயமா?” என்று கேட்டாள் அந்த மரக்குலத்து மங்கை. அங்கே புளியந்தோப்பில் பாளையக்காரன் தில்லைமுத்துத்தேவனும் ஜமீன்தார் கருடாசலத்தேவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். தில்லைமுத்துத்தேவன் கருடாசலத்தேவர் மீது பல புகார்களைச் சொன்னான். தன்னை அவமதித்துப் பேசியதாகவும் தன்னுடைய கிராமங்களில் மாடுகளை விட்டு மேய்த்ததாகவும் குற்றம் கூறினான். அதற்கெல்லாம் கருடாசலத்தேவர் சமாதானம் கூறினார். இப்படிக் கொஞ்ச நேரம் போக்கிய பிறகு பாளையக்காரன் கடைசியாக முக்கியமான விஷயத்துக்கு வந்தான். “உம்முடைய மருமகள் மரகதவல்லியை எனக்குக் கல்யாணம் செய்து கொடுங்கள். மற்றக் குற்றங்களையெல்லாம் மறந்து விடுகிறேன்!” என்றான். “என்னுடைய ஜமீனில் பாதி கேட்டாலும் கேள்; கொடுத்து விடுகிறேன்; என் மருமகளை மட்டும் கேட்காதே” என்றார் கருடாசலத்தேவர், “அது என்ன பிடிவாதம்? யாருக்காவது கட்டிக் கொடுக்க வேண்டியதுதானே? என்னைக் காட்டிலும் நல்ல மாப்பிள்ளை உமக்கு எங்கே கிடைக்கும்?” என்று தில்லைமுத்துத்தேவன் பச்சையாகக் கேட்டான். “எனக்கோ வயதாகிவிட்டது. வேறு யாரும் உற்றார் உறவினர் இல்லை. அவளும் இல்லாவிட்டால் வீடு பாழடைந்து போகும்” என்றார் ஜமீன்தார். “அதெல்லாம் வெறும் ஜால்ஜாப்பு! நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்றான் பாளையக்காரன். கடைசியாக ஜமீன்தார் தம் மனதில் உள்ளதை வெளியிட்டுச் சொன்னார். “ஒரு நாளைக்கு என் மகன் திரும்பி வருவான் என்று ஆசை வைத்திருக்கிறேன். மரகதவல்லியை அவனுக்கென்று உத்தேசித்திருக்கிறேன்!” என்றார். பாளையக்காரன் சிரித்தான். “ஆறு வருஷமாக வராதவன் இனிமேல் வரப்போகிறானா? உமக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது. அதற்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்கப் பார்க்கிறீர். அதை நான் ஒப்புக் கொள்ள முடியாது!” என்றான். இப்படி ஜமீன்தாருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த போதே பாளையக்காரனுடைய காது கவனமாக உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தது. சாலையில் குதிரை வரும் சத்தம் கேட்கிறதா என்றுதான். ஏறக்குறைய சந்திரன் உச்சி வானத்துக்கு வந்தபோது சற்றுத் தூரத்தில் குதிரை காலடிச் சத்தம் கேட்டது. உடனே பாளையக்காரன் எழுந்தான். “நீர் ஏதோ உமது மருமகளைப் பத்திரமாய் அரண்மனையில் வைத்துப் பாதுகாப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறீர். நீர் இல்லாத சமயம் என்ன நடக்கிறதோ என்னமோ! வயது வந்த பெண் எத்தனை நாளைக்கு உம்முடைய அதிகாரத்துக்கு உட்பட்டிருப்பாள்?” என்று சொன்னான். இதைக் கேட்டதும் ஜமீன்தாருக்கு இரத்தம் கொதித்துக் கண்கள் சிவந்தன. “நீயும் ஒரு மனிதனா? உன்னிடம் பேச வந்தேனே?” என்று எழுந்தார். “கொஞ்சம் பொறுத்துக் கொள்ளும். குதிரையில் யார் வருகிறதென்று பார்த்துவிட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டுத் தில்லைமுத்துத்தேவன் சாலையை நெருங்கிச் சென்றான். அவனுடைய ஆட்கள் ஜமீன்தாரைச் சூழ்ந்து கொண்டு அவர் போவதைத் தடுக்கும் பாவனையாக நின்றார்கள். “இப்படிப்பட்ட இக்கட்டில் நாமே வலிய வந்து அகப்பட்டுக் கொண்டோ மே? இதிலிருந்து எப்படித் தப்பித்துக் கொள்வது?” என்று கருடாசலத்தேவர் யோசனையில் ஆழ்ந்தார். தில்லைமுத்துத்தேவன் சாலையருகிலே போய் நின்றான். குதிரை புளியந்தோப்பை நெருங்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. ரொம்பக் கூர்மையான காது உள்ளவனாதலால், வருகிற குதிரை மேல் இரண்டு பேர் ஏறி வருகிறார்கள் என்பதைக் குதிரைக் காலடிச் சத்தத்திலிருந்து தெரிந்து கொண்டான். அவனுடைய உற்சாகம் எல்லை கடந்தது. தன்னுடைய மனோரதம் நிறைவேறி விட்டதென்றே நம்பினான். இவ்வளவு சுலபமாக, உயிர்ச்சேதம் எதுவுமின்றி, காரியம் கைகூடி விட்டதை எண்ணிச் சந்தோஷப்பட்டான். குதிரை மேலும் நெருங்கி வந்தது. இதோ வந்து விட்டது! அதன் மேலே இரண்டு பேர் இருப்பதும் நிலா வெளிச்சத்தில் தெரிந்தது. அவன் நின்ற இடத்துக்கு நேரேயும் வந்தது. அதற்கு அப்பாலும் சென்றது. “நில்! நில்!” என்று கத்தினான். ஆனால் குதிரை நிற்கவில்லை. புளியந்தோப்பையும் அதையடுத்து நின்ற பொத்தையையும் தாண்டி மின்னல் மின்னும் நேரத்தில் இராமபிரானுடைய கோதண்டத்திலிருந்து கிளம்பிய பாணத்தைப் போல குதிரை போயே போய்விட்டது! 9 அப்புறந்தான் தில்லைமுத்துத்தேவன் விழித்துக் கொண்டான். கள்ளன் தன்னை ஏமாற்றிப் பெண்ணை அடித்துக் கொண்டு போகிறான் என்று தெரிந்து கொண்டான். உடனே “கொண்டு வா குதிரையை!” என்று அலறினான். அவனுடைய குதிரை வந்ததும் தாவி ஏறிக் கொண்டான். “மடையர்களே! என்னோடு வாருங்கள்!” என்று கத்தினான். மற்றும் ஏழு குதிரைகளிலும் ஆட்கள் ஏறிக் கொண்டார்கள். முன்னால் சென்ற கள்ளனுடைய குதிரையைத் தொடர்ந்து பாளையக்காரனுடைய எட்டுக் குதிரைகளும் பாய்ந்து சென்றன. குதிரைகளுக்குப் பின்னால் காலாட்களும் தலை தெறிக்க ஓடினார்கள். ஜமீன்தார் கருடாசலத் தேவருக்கு இது ஒன்றும் புரியவில்லை. சற்று நேரம் திகைத்து நின்றுவிட்டுத் தம்முடைய ஆட்களைத் திரட்டிச் சேர்த்துக் கொண்டு அரண்மனைக்குத் திரும்பினார். காதறாக் கள்ளனுடைய குதிரை வாயுவேக, மனோ வேகமாகப் பறந்து சென்றது. ஆயினும் அக்குதிரை ஏற்கெனவே வெகு தூரம் பிரயாணம் செய்திருந்ததல்லவா? அதோடு இரண்டு பேரைத் தன் முதுகில் சுமந்து கொண்டிருந்தது. ஆகையால் பின்னால் வந்த குதிரைகள் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து கொண்டிருந்தன. கடைசியாகக் கள்ளனுடைய குதிரை இந்த ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தது. ஆறு இன்றுபோல் அன்றில்லை. வெள்ளம் இரு கரையும் தொட்டுக் கொண்டு போயிற்று. ஆறு அடி உயரமுள்ள ஆளுக்கும் நிலை கொள்ளாது. பிரவாகத்தின் வேகமோ அதிகம். திரும்பிப் போகவோ மார்க்கமில்லை. ஆற்றங்கரையில் தயங்கி நின்றால் அகப்பட்டுக் கொள்வது நிச்சயம். வேறு வழியில்லாமல் கள்ளன் குதிரையைத் துணிந்து ஆற்றில் இறக்கினான். குதிரை அவர்கள் இரண்டு பேரையும் சுமந்து ஆற்றில் இறங்கி வெள்ளத்தின் வேகத்தைச் சமாளித்துக் கொண்டு நீந்திச் சென்றது. கள்ளனிடம் அந்த வாயில்லாப் பிராணி அவ்வளவு விசுவாசம் வைத்திருந்தது. எப்படியோ தட்டுத்தடுமாறி அக்கரையை நெருங்கியது. ஆனால் துறையில் போய்ச் சேராமல் கொஞ்சம் அப்பால் சென்றுவிட்டது. அங்கே கரை செங்குத்தாயிருந்தது. குதிரை முன்னங்காலை வைத்துத் தாவி ஏற ஆனமட்டும் முயன்றது; முடியவில்லை. கள்ளன் பார்த்தான், மறுகரையிலோ பாளையக்காரனுடைய குதிரைகள் வந்துவிட்டன. பாளையக்காரன் அதட்டும் குரல் கேட்டது. சில குதிரைகள் ஆற்றில் இறங்கிவிட்டன. இந்த நிலைமையில் கள்ளன் ஒரு யோசனை செய்தான். கடவுள் அருளும் இருந்தது. மரகதவல்லியைத் தன் இரு கைகளினாலும் தூக்கிக் கரையில் விட்டெறிந்தான். அவள் கரையில் பத்திரமாய் விழுந்ததைப் பார்த்ததும் தான் குதிரை மீதிருந்து குதித்தான். இரண்டு எட்டில் நீந்திக் கரையேறினான். பிறகு, குதிரையையும் கரை சேர்ப்பதற்காகத் திரும்பிப் பார்த்தான்! ஐயோ! பாவம்! அந்தக் குதிரையின் சக்தி அத்துடன் தீர்ந்து போய்விட்டது. எஜமானனை அக்கரை சேர்ந்ததும் அது வெள்ளத்துடன் போராடும் ஊக்கத்தையும் இழந்துவிட்டது. வெள்ளம் அதை அடித்துக் கொண்டு போய்விட்டது. கள்ளனுடைய நெஞ்சு பிளந்துவிடும் போலிருந்தது. ஆயினும் குதிரைக்காகத் துக்கப்பட்டுக்கொண்டு அங்கே நின்றால் தன் காதலியையும் இழக்க நேரிடும். அதற்குள்ளே மரகதவல்லியும் எழுந்து நின்று அவனருகில் வந்தாள். இருவரும் கைகோத்துக் கொண்டு அங்கிருந்து விரைவாகச் சென்றார்கள். ஆற்றங்கரையை அடுத்திருந்த காட்டுக்குள் புகுந்து அந்தச் சமயத்துக்குத் தப்பித்துக் கொண்டார்கள். பாளையக்காரனுடைய குதிரைகளில் ஒன்றாவது பாதி ஆறு கூடத் தாண்டவில்லை. நாலு குதிரைகள் ஆற்றோடு போய்விட்டன. கள்ளனைப் பிடிக்க முடியாமல் பாளையக்காரன் ஏமாந்து திரும்பினான். ஜமீன்தார் கருடாசலத்தேவர் தம் அரண்மனைக்குத் திரும்பிப் போனதும் அங்கே மருமகள் இல்லை என்பதை அறிந்தார். ஆனால் அவளை அழைத்துக் கொண்டு போனவன் தம்முடைய மகன் தான் என்று தாதிப் பெண்கள் மூலமாக அறிந்து திருப்தி அடைந்தார். அதோ, ஆற்றுக்கு அக்கரையிலே உள்ள ஊருக்கு ‘பரி உயிர் காத்த நல்லூர்’ என்ற பெயர் வந்த காரணம் என்னவென்று இப்போது தெரிகிறதல்லவா? பின்னுரை மேற்கண்ட கதையை அந்தப் பெரியவர் சொல்லி முடித்தார். இதற்குள்ளே எங்கள் மோட்டார் வண்டியைப் பத்து முப்பது ஆட்கள் வந்து சேர்ந்து தள்ளி அக்கரையிலே கொண்டு சேர்த்திருந்தார்கள். என்னை வரும்படி சொல்லி மோட்டாரின் குரல் அலறியது. “கதை ரொம்ப நன்றாயிருக்கிறது” என்று சொல்லி கிழவனாரிடம் ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்தேன். அவர் அதை வாங்கி மடியில் செருகிக் கொண்டே, “கதை இல்லை, ஐயா! உண்மையாக நடந்தது!” என்றார். “உண்மையாக நடந்ததென்று எப்படிச் சொல்கிறீர்? நீர் பார்த்தீரா?” என்று கேட்டேன். “ஆமாம் பார்க்கத்தான் பார்த்தேன்!” என்று கிழவர் சொன்னதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. “ஓகோ! கள்ளன் தப்பித்துக் கொண்டு போவதற்கு நீர் ஒருவேளை உதவி செய்தீரா?” என்று கேட்டேன். “இல்லை, ஐயா! நான் அவனுக்கு உதவி செய்யவில்லை. எனக்குத்தான் அவனால் ரொம்ப உதவி ஏற்பட்டது. காதறாக் கள்ளன் உயிரோடிருக்கும் போதும் எத்தனையோ பேருக்கு உதவி செய்தான். இறந்த பிறகும் ஒரு பெரிய குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறான். அவன் புண்ணியவான்!” என்றார் பெரியவர். “உமக்கு அவன் என்ன உதவி செய்தான்?” என்று கேட்டேன். பெரியவர் தம்முடைய மடியில் வைத்திருந்த ஒரு பழைய நைந்த காகிதத்தை எடுத்துப் “பாருங்கள்!” என்று சொல்லிக் கொடுத்தார். அதில் இங்கிலீஷில் பின் வருமாறு ‘டைப்’ எழுத்தில் எழுதிச் சர்க்கார் முத்திரையும் பதிந்திருந்தார். “காது அறுக்காத கள்ளன் என்று இந்தப் பக்கங்களில் பிரசித்தி பெற்றிருந்த முத்து விஜய சேதுத்தேவன் என்னும் பக்காத் திருடனைப் பிடிப்பதற்கு உளவுகூறி ஒத்தாசை செய்த கொள்ளை முத்துத்தேவனுக்கு இந்தப் போலீஸ் சர்டிபிகேட்டும் மாதம் பதினைந்து ரூபாய் வீதம் ஜீவிய காலம் வரையில் பென்ஷனும் காருண்ய பிரிட்டிஷ் துரைத்தனத்தாரால் அளிக்கப்படுகிறது.” இதைப் படித்ததும் அந்தப் பெரியவரை கொஞ்சம் அருவருப்புடன் பார்த்துவிட்டு எழுந்தேன். “அந்தப் புண்ணியவானுக்கு நான் எவ்வளவோ நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். சென்ற ஐம்பது வருஷமாக அவனால் என்னுடைய குடும்பம் பிழைத்து வருகிறது. அவனுக்கு நான் ஏழு தலைமுறையும் கடமைப் பட்டவன்!” என்று சொன்னார் பெரியவர். வேகமாக ஆற்றைக் கடந்து அக்கரையில் நின்ற மோட்டாரைப் பிடித்து ஏறிக் கொண்டேன். அந்தக் கிழவனார் இருந்த இடத்திலிருந்து சீக்கிரத்தில் போனால் போதும் என்று இருந்தது. பாரத தேசம் குடியரசுப் பதவியை அடையப் போகும்நாள் நெருங்கும் சமயத்தில் எனக்கு அந்தக் கிழவனார் சொன்னக் கதை ஞாபகத்துக்கு வருகிறது. காதறாக் கள்ளனை காட்டிக் கொடுத்து நன்மையடைந்த அக்கிழவனார் அந்தக் கள்ளனை இன்றுவரை நினைத்துக் கொண்டு அவனிடம் நன்றியோடாவது இருக்கிறார். பாரதத்தின் மக்களாகிய நாம் நமக்கு அன்னிய ஆட்சியிலிருந்து விடுதலையளித்த காந்தி மகாத்மாவை யமனிடம் காட்டிக் கொடுத்துவிட்டோம்! அவரை நன்றியோடு ஞாபகம் வைத்துக் கொண்டாவது இருக்கப் போகிறோமா? 11. காரிருளில் ஒரு மின்னல் முன்னுரை ஆரம்பிக்கும்போது, என் கதையை நீங்கள் நம்புவீர்களோ என்ற சந்தேகம் உண்டாகிறது. வேறு யாராவது இத்தகைய சம்பவம் தங்கள் வாழ்க்கையில் நடந்தது என்று சொன்னால் எனக்கும் அவநம்பிக்கைதான் பிறக்கும். கைதேர்ந்த கதாசிரியர்களைப் போல் அசாத்தியமான விஷயங்களையும் நடந்தது போல் நம்பச் செய்யும்படி எழுதும் சக்தியும் எனக்கில்லை. எழுதும் பழக்கம் எனக்கு அதிகம் கிடையாது. ஒரே ஒரு தடவை கிறுக்குப் பிடித்துப் போய் ஒரு நாவல் எழுதுவதென்று தொடங்கினேன். காமா சோமாவென்று அதை எழுதி முடித்தும் விட்டேன். ஆனால் அதை அப்புறம் ஒரு முறை படித்தபோது சுத்த மோசமென்று தோன்றியபடியால் அதை அச்சிடும் முயற்சி எதுவும் செய்யவில்லை. சிநேகிதர் ஒருவர் ஒரு தடவை என் வீட்டிற்கு வந்திருந்த போது அந்த கையெழுத்துப் பிரதியைப் பார்த்துவிட்டு, அதைப் படிக்க வேணுமென்று சொல்லி எடுத்துக் கொண்டு போனார். அதை அவர் திருப்பிக் கொடுக்கவுமில்லை; நான் அதைப்பற்றிக் கவலைப்படவும் இல்லை. எனக்கு எழுதும் திறமை இல்லைதான். ஆகையால் காது வைத்து, மூக்கு வைத்து, எல்லாவற்றையும் பொருத்தமாய்ச் சேர்த்து எழுத முடியாது. நடந்தது நடந்தபடி தான் சொல்லக்கூடும். “ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கை அநுபவங்களைக் கொண்டு ஒரு சிறந்த கதை கட்டாயம் எழுத முடியும்” என்று யாரோ ஓர் அறிஞர் கூறியிருக்கிறார். அந்தத் தைரியத்தினால் தான் இதை நான் எழுதத் துணிகிறேன். 1 நான் பி.ஏ., எல்.டி. பட்டம் பெற்று, சென்னையிலுள்ள அழகப்ப செட்டியார் ஹைஸ்கூலில் வாத்தியார் வேலை பார்த்து வந்தேன். என் வாழ்க்கையின் முக்கிய சம்பவம் நடந்தபோது, எனக்கு வயது முப்பது. ஆனால் கலியாணம் ஆகவில்லை. காரணம் சொன்னால், உங்களுக்கு வேடிக்கையாயிருக்கும். நான் சிறு பையனாயிருந்த காலத்தில் ஒரு நாள், என் வீட்டில் என்னுடைய தாயார், பாட்டி, அம்மாமி, சித்தி எல்லாரும் உட்கார்ந்து வம்பு பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் ஏதோ விஷமம் செய்தேன். அம்மாமி, “இப்படி நீ அசடா யிருந்தால், உனக்கு யார் பெண் கொடுப்பார்கள்? கலியாணமே ஆகாது போ!” என்று சொன்னாள். அதற்கு என் பாட்டி, “அவனுக்கென்று ஒருத்தி எங்கேயோ பிறந்து காத்துக் கொண்டுதானே இருப்பாள்?” என்றாள். பாட்டி சொன்னது எப்படியோ என் மனதில் ஆழமாய்ப் பதிந்து வேரூன்றி விட்டது. எங்கேயோ ஒரு பெண் தன்னந் தனியாக உட்கார்ந்து என் வரவை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும் தோற்றம் என் மனக் கண்ணின் முன் ஓயாமல் வந்து கொண்டேயிருந்தது. அவள் யார், எப்படி இருப்பாள், எங்கே உட்கார்ந்திருப்பாள் என்பதொன்றும் தெரியவில்லை. மெல்லிய பனிப் படலத்தினால் மறைக்கப்பட்டது போன்ற அத் தோற்றம் மட்டும் என்னுடைய நனவிலும் கனவிலுங்கூடத் தோன்றிக் கொண்டேயிருக்கும். இதை நான் ஒருவருக்கும் வெளியிட்டுச் சொல்லவில்லை. ஆனால் இதன் காரணமாகவே, என்னுடைய பெற்றோர்களும் மற்றவர்களும் செய்த கலியாண ஏற்பாடுகளை யெல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டு வந்தேன். கொஞ்ச நாளைக்குப் பிறகு, பந்துக்களின் தொந்தரவு பொறுக்க முடியாமல், நான் கலியாணமே செய்து கொள்ளப் போவதில்லையென்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டேன். என்னுடைய பாலிய சிநேகிதனும் கலாசாலைத் தோழனுமான சாம்பமூர்த்தி இது விஷயத்தில் என்னுடன் போட்டி போடுவதாகச் சொன்னான். வெகு காலம் அவனும் கலியாணம் செய்து கொள்ளாமலே இருந்தான். கடைசியில் சென்ற வருஷம் அவன் தோல்வியடைந்தான். அவன் சென்னையில் பிரபல உத்தியோகஸ்தர் ஒருவரின் பிள்ளை. தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு பெரிய மிராசுதாரின் பெண்ணுக்கும் அவனுக்கும் கலியாணம் நடந்தது. நான் கூடக் கலியாணத்துக்குப் போயிருந்தேன். தீபாவளிக்கு முதல் நாளைக்கு முதல் நாள் அவன் என்னிடம் வந்து, “ஸாமி! நீயே என் கதி” என்று சொல்லி, ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரித்தான். “உன் கதியைக் கலங்க வைக்காமல் சமாசாரத்தை சொல்லலாமே” என்றேன். “தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்குப் போக வேண்டியதாயிருக்கிறது. தன்னந் தனியாக அவ்வளவு பெரிய அபாயத்தை எதிர்க்க எனக்குத் தைரியமில்லை” என்றான். “இதோ அபயப் பிரதானம் கொடுத்தேன். ஸ்ரீமதி காந்தாமணி தேவியிடம் நீ தனியாக அகப்பட்டுக் கொண்டு முழித்தாயானால், ‘ஸாமி!’ என்று ஒரு குரல் கொடு, உடனே நான் ஜாக்கிரதையாகி, யாரும் அவ்விடம் தலை காட்டாமல் பார்த்துக் கொள்கிறேன்” என்றேன். 2 தீபாவளிக்கு முதல் நாள் காலையில் எழும்பூரில் ரயில் ஏறினோம். சாயங்காலம் ஆறு மணிக்கு வண்டி பாபநாசத்தை அடையும். அங்கிருந்து வண்டி பிடித்துக் கொண்டு கிளம்பினால், இராத்திரி சாப்பாட்டுக்கு வரதராஜபுரம் போய்ச் சேரலாம். இப்படி எண்ணிக் கொண்டு கிளம்பினோம். ஆனால் இந்த எங்கள் எண்ணம் வருண பகவானுக்குக் கொஞ்சங்கூடத் தெரியவில்லையென்று தோன்றியது. காலையில் கிளம்பும் போதே வானம் இருண்டிருந்தது. செங்கற்பட்டுக்கும் விழுப்புரத்துக்கும் இடையில் அசாத்தியமான காற்றும் மழையும் அடித்ததில், ரயில் ஒரு மணி நேரம் தாமதித்தது. பிறகு, சீர்காழிக்கருகில் ஒரு கூட்ஸ் வண்டி தண்டவாளத்தைவிட்டு அகன்று விட்டபடியால் இன்னும் மூன்று மணி நேரம் தாமதமாயிற்று. பாபநாசம் ஸ்டேஷனை அடைந்த போது, இரவு பத்து மணி இருக்கும். ஸ்டேஷனில் விசாரித்ததில்; வரதராஜபுரத்து மிராசுதாரின் வில்வண்டி வந்து காத்திருந்ததாகவும், “ரயில் சீர்காழியில் தங்கிவிட்டது; வராது” என்று சொன்னதன் பேரில் திரும்பிப் போய் விட்டதாகவும் அறிந்தோம். மாப்பிள்ளை விறைப்பு என்பதை அப்போதுதான் நான் பார்த்தேன். “ஸாமி! சுத்த மரியாதையற்ற ஜனங்கள் இவர்கள்! இரண்டு மணி நேரம் நமக்காகக் காத்திருக்கக்கூட இவர்களால் முடியவில்லை. பேசாமல் இவர்கள் மூஞ்சியில் கூட முழிக்காமல் திரும்பிப் போய்விடுவதுதான் சரி…” என்று அவன் சொல்ல, “ரொம்ப சரி சாம்பு! டிக்கட் வாங்கி விடட்டுமா?” என்றேன் நான். “பேஷாக வாங்கிவிடலாம். திரும்பியும் போய்விடலாம்? ஆனால் இந்தப் பட்டிக்காடு ஜனங்களுக்கு ஒரு பாடங் கற்பிக்காமல் போவதா என்றுதான் பார்க்கிறேன். ‘நீங்கள் இவ்வளவு மரியாதைக் குறைவாக நடந்துகொண்டாலும் நாங்கள் மரியாதைத் தவறு செய்யமாட்டோ ம்’ என்று அவர்களுக்குக் கன்னத்தில் அறைந்ததுபோல் காட்டினால் தான் புத்தி வரும்” என்றான் சாம்பு. ஆகவே, சாம்புவின் மாமனாருக்குப் புத்திவரச் செய்வதற்காக, பாபநாசத்தில் யாராவது மோட்டார் வண்டி வாடகைக்கு விடுகிறார்களா என்று பார்க்கலானோம். அன்று முழுதும் அடைமழை பெய்தபடியால் சாலை ரொம்ப மோசமாயிருக்கிறதென்றும், வண்டி போகாதென்றும் அநேகர் சொல்லிவிட்டார்கள். கடைசியில், எங்களைப் போலவே, தன் மோட்டாருக்குப் புத்தி கற்பிக்க எண்ணங் கொண்ட ஒருவன், பதினைந்து ரூபாய் வாடகைக்குத் துணிந்து வண்டி கொண்டுவந்தான். 3 நாங்கள் கிளம்பும் போது சரியாக இரவு மணி பன்னிரண்டு. இருட்டென்றால் இப்படி அப்படியான இருட்டல்ல. கன்னங்கரிய காரிருள். வானத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து குமுறிக் கொண்டிருந்தன. சாலையில் இருபுறமும் மரங்கள் அடர்த்தியாயிருந்தபடியால், அவ்வப்போது இருளை வெட்டிக் கொண்டு தோன்றிய மின்னலொளியும் அந்தச் சாலைக்குள் புகுவதற்கு முயன்று தோல்வியடைந்து திரும்பிச் செல்வதுபோல் காணப்பட்டது. சாலையின் ஒரு புறத்தில் வயல்கள். மற்றொரு புறம் வாய்க்கால். வயல்களில் மழை ஜலம் நிரம்பி, சாலை மீது வழிந்து போய்க் கொண்டிருந்தது. இதனால் சாலையிலுள்ள குண்டு குழிகள், மரங்களின் வேர்கள் ஒன்றையும் தெரிந்து கொள்வதற்கில்லை. வண்டி திடீர் திடீரென்று சாலையின் குழிகளில் விழுந்து எழுந்தது. கால் மணி நேரத்திற்குள் நானும் சாம்புவும் இருநூறு தடவை ஒருவரோடொருவர் முட்டிக் கொண்டோம். அங்கங்கே வாய்க்கால் மதகுகள் வேறு வந்து கொண்டிருந்தன. மதகுகளின் ஏற்ற இறக்கங்களில் வண்டி ஏறி இறங்கிய போது, சறுக்கலினால் டிரைவர் ஒரு பக்கம் திரும்பினால், வண்டி இன்னொரு பக்கம் திரும்பிற்று. எந்த நிமிஷத்தில் வண்டி வாய்க்காலில் இறங்கிவிடுமோ, அல்லது மரத்தில் முட்டிக் கொள்ளுமோ என்று திகிலாய்த்தான் இருந்தது. இடி முழக்கமோ சொல்லவேண்டியதில்லை. எந்த நிமிஷமும் வானம் பிளந்து துகள் துகளாகிவிடுமென்று தோன்றியது. ஒவ்வொரு பேரிடி இடித்தபோதும் அண்டகடாகங்களுடனே எங்கள் மண்டைகளும் அதிர்ந்தன. சாம்புவின் நெஞ்சைத் தொட்டுப் பார்த்து, “ஏண்டா உனக்கு இருதயம் இப்படி ரோடு என்ஜின் மாதிரி அடித்துக் கொள்கிறது?” என்று கேட்டேன். “ஸாமி! என் மாமனாருக்கு மட்டும் ஒரு பாடம் கற்பித்து விட்டேனானால், அப்புறம் இந்த உயிர் எனக்கு லட்சியமில்லை” என்றான். இச்சமயம் வண்டி ஒரு குழியில், தொபுகடீரென்று விழுந்தது; எங்கள் தலைகள் முட்டிக் கொண்டன. வண்டி எழுந்திருக்கும் போது இன்னொரு முட்டலுக்கு நான் தயாரானேன். ஆனால் ஏமாந்து போனேன். வண்டி எழுந்திருக்கவில்லை. பயங்கரமாகக் கர்ஜித்துக் கொண்டிருந்த மோட்டார் என்ஜின் ஓர் அலறல் அலறிவிட்டு அப்புறம் மௌனம் சாதிக்கத் தொடங்கியது. டிரைவரும், அவனுக்குத் துணையாக வந்தவனும் கீழே இறங்கினார்கள். இரண்டு மூன்று தடவை மோட்டார் வண்டியைப் பிரதக்ஷிணம் செய்தார்கள். “ஏண்டா! உன் புத்தியை எங்கேடா அடகு வைத்து விட்டு வந்தாய்?” என்று டிரைவர் தன் சிநேகிதனைப் பார்த்துக் கேட்டான். “ஏன்? செட்டியார் கடையிலேதான் அடகு வைத்துவிட்டு வந்தேன்” என்றான் அவன் சிநேகிதன். எனக்கும் சாம்புவுக்கும் கோபம் அசாத்தியமாய் வந்தது. “நீங்கள் சண்டை போடுவது அப்புறம் இருக்கட்டும் அப்பா! வண்டி என்ன சமாசாரம்?” என்ரு கேட்டேன். “வண்டி நின்னுடுத்துங்க!” என்றான் டிரைவர். “அதுதான் தெரிகிறதே! அதைக் கிளப்புவதற்கு என்ன வழி?” என்றான் சாம்பு. “இந்த முட்டாளை நீங்களே கேளுங்க. இராத்திரியிலே கிளம்பினால் கையிலே லாந்தர் கொண்டு வரவேணுமென்று எத்தனை தடவை அழுதிருக்கிறேன்” என்றான் டிரைவர். “நான் தான் முட்டாளாச்சே. புத்திசாலியாயிருக்கிறவங்க கிளம்புகிற போது ஞாபகப்படுத்துகிறதுதானே!” என்றான் டிரைவரின் சிநேகிதன். “இல்லைங்க, ஸார்! இந்த ஆளுக்கு ஊரிலே தீவட்டித் தடியன் என்று பெயர். பேருக்குத் தகுந்தபடி இந்தச் சமயம் தீவட்டி போடவேண்டுமல்லவா? பின்னே இவன் தீவட்டித் தடியனாயிருப்பதில் என்ன பிரயோஜனம்?” என்றான் டிரைவர். அந்தச் சமயத்தில் கோபித்துக் கொள்வதால் பிரயோஜனமில்லையென்று அறிந்த நான், “சரிதான்; அப்பா மேலே நடக்க வேண்டியதைப் பாருங்கள்” என்று சாந்தமாகச் சொன்னேன். “அதுதான் நானும் யோசிக்கிறேன்” என்று கூறிய டிரைவர் ஏதோ சட்டென்று நினைவு வந்தவன் போல், “ஏன் ஸார்! உங்களிடத்தில் டார்ச் லைட் இருக்குமே?” என்றான். நாங்கள் இல்லையென்று சொன்னதும், மிகவும் ஏமாற்றமடைந்தவனாய், “இவ்வளவுதானா! உங்கள் மாதிரி இராத்திரிப் பயணம் கிளம்புகிறவங்க எப்போதும் கையிலே டார்ச் லைட் வைத்துக் கொள்ளவேணும், ஸார்!” என்றான். “அட போக்கிரி படவா!” என்று மனத்திற்குள் திட்டினோம். டிரைவரிடமும் அவனுடைய சிநேகிதனிடமுமிருந்த இரண்டு நெருப்புப் பெட்டிகளையும், நாங்கள் கொண்டு வந்திருந்த மத்தாப்புப் பெட்டிகளில் ஐந்தாறையும் காலி செய்தும் பிரயோஜனப்படாமல் போகவே, “அடமடையா ஓடுடா! இந்த ஐயாக்களுக்குத்தான் அவசரமில்லையென்றால் நமக்குக் கூடவா அவசரமில்லை? காலையில் தீபாவளிக்கு வீடு போய்ச் சேர வேண்டாமா? ஓடிப்போய் இப்போது நாம் தாண்டி வந்தோமே, அந்த ஊரில் யார் வீட்டிலாவது கதவைத் தட்டி ஒரு லாந்தர் வாங்கிக் கொண்டு வா!” என்று டிரைவர் அந்தத் தீவட்டித் தடியனை விரட்டினான். 4 அவன் போய்க் கால் மணி நேரமாயிற்று. திரும்பி வரவில்லை. டிரைவர் உட்கார்ந்தபடியே குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கினான். சாம்புவும் ஆடிவிழுந்தான். எனக்கு மட்டும் இன்னதென்று சொல்லமுடியாத ஒரு படபடப்பு ஏற்பட்டிருந்தது. தேகத்தின் ரோமங்கள் குத்திட்டு நின்றன. அப்போது, எங்களுக்கு எதிரே சுமார் கால் மைல் தூரத்தில் ஒரு சின்னஞ்சிறு வெளிச்சம் தெரிந்தது. உடனே அது அணைந்தது. அம்மாதிரி இன்னும் இரண்டு தடவை அது பளிச்சென்று ஒளி வீசி மறைந்தது. பிறகு என்னால் வண்டியில் உட்கார்ந்திருக்க முடியவில்லை. அந்த வெளிச்சம் தோன்றிய இடத்திலிருந்து வந்த ஏதோ ஒரு வகைக் காந்த சக்தி என்னைப் பிடித்து இழுப்பதை உணர்ந்தேன். வண்டியிலிருந்து கீழிறங்கினேன். வாடைக்காற்று ஜிலீரென்று மேலே பட்டது. உடம்பெல்லாம் நடுங்கிற்று. நல்ல வேளையாக அச்சமயம் மழை பலமாகப் பெய்யவில்லை. சிறு தூற்றலாகத் தூறிக் கொண்டிருந்தது. “சாம்பு! எதிரே கொஞ்சம் தூரத்தில் ஒரு டார்ச் லைட் தெரிவது போல் இருந்தது. நான் போய்ப் பார்க்கிறேன். அதற்குள் அவன் லாந்தர் கொண்டு வந்து வண்டி கிளம்பினால், புறப்பட்டு வாருங்கள். நான் வழியில் நிறுத்தி ஏறிக் கொள்கிறேன்” என்றேன். சாம்புவுக்கு அரைத் தூக்கமாயிருந்தபடியால், “சரிதான்” என்றான். என் பேச்சைக் கேட்டு விழித்துக் கொண்ட டிரைவர், “வேண்டாம், ஸார்! போகாதிங்க, ஸார்! போனாத் திரும்ப மாட்டீங்க, ஸார்!” என்று உளறினான். “உன் வேலையைப் பார்!” என்று சொல்லிவிட்டு நான் சாலையில் நடக்கலானேன். அந்தக் காரிருளில் அவ்வப் போது மரக்கிளைகளினிடையே நுழைந்து வந்த மின்னல் ஒளியின் உதவி கொண்டு தட்டுத் தடுமாறி நடந்து சென்றேன். சுமார் பத்து நிமிஷம் இவ்வாறு சென்றதும், சாலையில் மரங்களின் அடர்த்தி அதிகமில்லாத இடம் வந்தது. எதிரே சமீபத்தில் ஒரு பாலம் தென்பட்டது. அந்தப் பாலத்தின் ஒரு பக்கத்துக் கைப்பிடிச் சுவரில் கறுப்பாய் ஏதோ தெரிகிறதே, அது என்ன? மனித உருவமா அது? திடீரென்று சமீபத்தில் யாரோ தேம்பி அழும் சத்தம் கேட்டது. அந்த அழுகைக் குரல் என் நெஞ்சைப் பிளந்து விடும்போல் இருந்தது. அவ்வளவு சோகமும் தாபமும் ஏக்கமும் அந்தக் குரலில் தொனித்தன. பாலத்தின் மதகிலிருந்துதான் அந்த விம்முதல் வந்தது. என் உடம்பெல்லாம் பதறியது. ஆனாலும் விரைந்து நடந்தேன். பளீரென்று ஒரு மின்னல் வானத்தையும் பூமியையும் ஒரு கணம் ஜோதி வெள்ளத்தில் மூழ்கடித்தது; அடுத்த கணத்தில் மறுபடியும் ஒரே அந்தகாரம். ஆனால் அந்த ஒரு கணத்தில் நான் தேடி வந்ததைக் கண்டுவிட்டேன். பாலத்தின் மதகின் மேல் சோகமும் சௌந்தரியமும் ஒன்றாய் உருவெடுத்தது போன்ற ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். அந்த மின்னல் மின்னிய ஒரு கண நேரத்தில் அவளுடைய ஆச்சரியம் நிறைந்த கண்களிலிருந்தும் ஒரு மின்னல் கிளம்பி என் இருதயத்தில் பாய்ந்தது. அந்த மின்னலின் வேகத்துடனேயே பின்வரும் எண்ணமும் என் உள்ளத்தில் ஊடுறுவிச் சென்றது: எனக்காகவென்று பிறந்து வளர்ந்து என் வரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நங்கை இவள்தான்! ஒரு யுகம்போல் தோன்றிய ஒரு நிமிஷத்துக்குப் பிறகு, என் மார்பைக் கையால் அமுக்கிக் கொண்டு, “நீ யார், அம்மா! இந்த நடுராத்திரியில் ஏன் இங்கே தனியாய் உட்கார்ந்திருக்கிறாய்?” என்று கேட்டேன். அதற்குப் பதிலாக, பளிச்சென்று என் முகத்தில் வெளிச்சம் அடித்தது. அந்தப் பெண்ணின் கையிலிருந்த டார்ச் லைட்டிலிருந்து அந்த வெளிச்சம் வந்தது. “நீங்கள் ஏன் கேட்கவேண்டும்?” என்ற கேள்வி விம்மலுடன் கலந்து வந்தது. “எனக்குக் கேட்க உரிமையுண்டு. எத்தனையோ காலமாக உன்னை நான் தேடிக் கொண்டிருந்தேன். இன்று கண்டுபிடித்தேன்…” “அப்படியானால் நான் யார் என்று ஏன் கேட்க வேண்டுமோ?” சற்றுத் திகைத்து விட்டேன். பிறகு சமாளித்துக் கொண்டு, “சரி, எழுந்திருந்து வா! போகலாம்” என்றேன். அவள் எழுந்திருந்தாள். இதற்குள்ளே தூரத்தில் மோட்டார் கிளம்பும் சப்தம் கேட்டது. இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் வண்டி எங்களண்டை வந்து நின்றது. உடனே நான், “சாம்பு! என்னை மன்னி. நான் உன்னுடன் வருவதற்கில்லை. எத்தனையோ வருஷமாக என்னுடைய வாழ்க்கைத் துணைவியை நான் தேடிக் கொண்டிருந்தேன், இன்று கண்டுபிடித்தேன். அவளுடன் நான் போகவேண்டும்” என்றேன். சாம்பு, கண்ணைத் துடைத்துக் கொண்டு பார்த்தான். “சாமி! இது என்ன, சொப்பனமா? நிஜமா?” என்றான். அவனுக்கு நான் பதில் சொல்லாமல் டிரைவரைப் பார்த்து, “நீ விடப்பா வண்டியை!” என்றேன். அப்போது சாம்பு, “ஸாமி! இது என்ன பைத்தியம்? உன் பின்னால் நிற்பது யார்? எங்கே கண்டாய்? என்ன சங்கதி? இந்த இருட்டில் நீங்கள் எங்கே போவீர்கள்?” என்று சரமாரியாய்க் கேள்விகளை அடுக்கினேன். “எல்லாம் இரண்டு நாள் கழித்துப் பட்டணத்தில் சொல்கிறேன்” என்றேன். இதற்குள் டிரைவர் “ஐயோ! நான் வேண்டாமென்று சொன்னேனே? கேட்டாரா பாவி! அநியாயமாய்ப் பூட்டாரே?” என்று சொல்லிக் கொண்டே வண்டியை விரைவாக விட்டான். அவன் ஒரு கில்லாடியாயிருந்ததே அந்தச் சமயம் எனக்கு நல்லதாய் போயிற்று. இல்லாவிட்டால், சாம்பு இலேசில் அங்கிருந்து கிளம்பியிருக்க மாட்டான். 5 கொஞ்ச நேரம் சாலையோடு மௌனமாய் போனோம். நாங்கள் மட்டும் மௌனமாய் இருந்தோமே தவிர எங்களைச் சுற்றி மௌனம் குடிகொண்டிருக்கவில்லை. இடிகளின் பெருமுழக்கம் சற்று நின்றபோது ஆயிரக்கணக்கான தவளைகளின் கோஷம் காதைத் தொளைத்தது. மின்னல் ஒளி இல்லாதபோது ஆயிரம், பதினாயிரம், லட்சம் என்று கணக்கிடக்கூடிய மின்மினிப் பூச்சிகள் கண்ணுக்கெட்டிய தூரம் பரவிக் காட்சி தந்தன. சற்று நேரத்திற்கெல்லாம், ‘சோ’ என்ற சத்தத்துடன் பெருமழை வந்தது. “இங்கே ஒரு பாழடைந்த சாவடி இருக்கிறது. அதில் தங்கலாம்” என்றாள். அந்தச் சாவடிக்குள் போய், டார்ச் லைட்டின் வெளிச்சத்தில் கொஞ்சம் இடம் சுத்தம் செய்து கொண்டு உட்கார்ந்தோம். “பொழுது விடிய இன்னும் நாலு மணி நேரம் இருக்கிறது. நமக்கோ தூக்கம் வரப்போவதில்லை. ஒருவருக்கொருவர் நம்முடைய சுய சரித்திரத்தைச் சொல்லிக் கொண்டோ மானால் பொழுது போகும்” என்றேன். “என் கதை ரொம்பப் பயங்கரமானது. சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்” என்றாள். “இன்றைய சம்பவத்துக்குப் பிறகு, உலகில் நான் நம்ப முடியாதது ஒன்றுமே இல்லை.” இன்னும் சற்று விவாதத்துக்குப் பிறகு, “அப்படியானால் கேளுங்கள்” என்று அவள் சொல்ல ஆரம்பித்தாள். 6 "என் தகப்பனார் செல்வக் குடும்பத்தில் பிறந்தவர்; வீட்டிற்கு ஒரே பிள்ளை. ஆகையால் இளம் வயதில் அவர் வைத்ததே சட்டமாயிருந்தது. அவர் காலேஜில் படித்துக் கொண்டிருந்தபோது மாதம் 200 ரூபாய் செலவழித்துக் கொண்டிருந்தாராம். என் தாயாரும் அம்மாதிரியே பெரிய குடும்பத்தில் பிறந்தவள் தான். இதனால் இல்வாழ்க்கை தொடங்கிக் கொஞ்ச காலம் அவர்கள் பணக் கஷ்டம் இன்னதென்று தெரியாமல் காலங் கழித்து வந்தார்கள். என் தகப்பனார் பி.எல். பரீட்சை கொடுத்து வக்கீல் தொழில் செய்யத் தொடங்கினார். அவர் ரொம்பப் புத்திக் கூர்மையுள்ளவர். அத்துடன் இல்லாமல் மற்றவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்றும் நினைப்பவர். இக்காரணங்களினால், அவர் வக்கீல் தொழிலில் அதிகமாய்ப் பிராபல்யம் அடையவில்லை. இதைக் கண்ட அவருடைய மாமனார் பலமான சிபாரிசுகள் பிடித்து, அவருக்கு ஜில்லா முனிசீப் வேலை பண்ணி வைத்தார். இந்த உத்தியோகம் அவர் நாலு வருஷந்தான் பார்த்தார். அவருக்கும் அப்பீல் கோர்ட்டு ஜட்ஜுகளுக்கும் ஓயாமல் தகராறு ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது. கடைசியாக, அவர் செய்த ஒரு தீர்ப்பு ரொம்பப் பிசகானது என்று ஹைகோர்ட்டில் முடிவானபோது, அவர் ஹைகோர்ட் ஜட்ஜுகளின் மூளைகளைப் பரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தி ஒரு ராஜினாமாக் கடிதம் எழுதி அனுப்பி விட்டார். பிறகு சென்னையில் வந்து வக்கீல் தொழில் நடத்தத் தொடங்கினார். ஜில்லா முனிசீப் வேலையை ராஜினாமா செய்தவரென்றும், ஹைகோர்ட் ஜட்ஜுகளையெல்லாம் திட்டினவரென்றும் பிரசித்தியடைந்தவரிடம் எந்தக் கட்சிக்காரன் வந்து வழக்குக் கொடுப்பான்? ஆகவே வீட்டு வாசலில் போர்டு தொங்கினதுதான் மிச்சமாயிற்று. அப்பாவுக்காவது, அம்மாவுக்காவது செட்டு என்றால் இன்னதென்றே தெரியாது; ஆகவே வீட்டுச் செலவுகள் எல்லாம் எப்போதும் போலவே நடந்து வந்தன. இதற்கிடையில் குடும்பமும் பெருகி வந்தது. ஐந்தாறு குழந்தைகள். நான் தான் எல்லாரிலும் மூத்தவள். எனக்கும் பதினைந்து வயதான போது வீட்டில் தரித்திரம் அதிகமாகிவிட்டது. என் கல்யாணத்தைப் பற்றிய பேச்சு வந்தது. நல்ல இடமாகக் கொடுக்க வேண்டுமென்றால், வரதட்சிணை ஏராளமாகக் கேட்டார்கள். கிணற்றில் தள்ளுவது போல் என்னை யாருக்காவது கொடுத்துவிட என் பெற்றோர்களுக்கு இஷ்டமில்லை. இப்படியாக மூன்று நான்கு வருஷங்கள் கழிந்துவிட்டன. இதற்கிடையில் என் தகப்பனார் மனோவியாகூலத்தினால் தேக சுகத்தை இழந்தார். அவருடைய சுபாவம் நாளுக்கு நாள் கெட்டு வந்தது. கோபம் அதிகமாயிற்று. என் தாயாரையும் குழந்தைகளையும் காரணமில்லாமல் திட்டவும் அடிக்கவும் ஆரம்பித்தார். என்னை மட்டுந்தான் அவர் ஒன்றும் சொல்வதில்லை. என்னிடம் அவர் வைத்திருந்த ஆசைக்கு அளவே கிடையாது. எவ்வளவு அசாத்தியமான கோபத்திலும் நான் ‘அப்பா!’ என்று கூப்பிட்டால் அடங்கி விடுவார். 7 வீட்டில் அன்றைய சாப்பாட்டுக்கு அரிசி இல்லாத நிலைமை ஏற்பட்டது. அப்பாவுக்குத் தெரியாமல் அம்மா எங்கள் பந்துக்களுக்கு கடிதம் எழுதுவாள். நேரிலும் போய் உதவி கேட்பாள். அதெல்லாம் பயன்படவில்லை. என் தகப்பனார் முனிசீப்பு வேலையை விட்ட நாளிலிருந்து எங்களுடைய பந்துக்கள் எங்களை அலட்சியம் செய்யத் தொடங்கினார்கள். கொஞ்ச நாளைக்கெல்லாம் எங்களை எட்டிப் பார்ப்பதையே விட்டுவிட்டார்கள். என் தந்தையைக் ‘கிறுக்கன்’ என்றும், என் தாயாரைத் ‘துக்கிரி’ என்றும் வைதார்கள். கஷ்டம் பொறுக்க முடியாமல் போன சமயம், ஒரு நாள் என் தகப்பனார் என்னைக் கூப்பிட்டு, வெறி கொண்டவரைப் போல், ‘மைதிலி! உன்னை விற்றுவிடப் போகிறேன், தெரியுமா? உன்னைப் பலி கொடுப்பதற்காக விற்கப் போகிறேன்’ என்றார். அவரை நான் சாந்தப்படுத்தி என்னவென்று கேட்டேன். தஞ்சாவூர் ஜில்லாவைச் சேர்ந்த ஒரு தனவந்தர் - ஐம்பது வயதுக்கு மேலானவர். என்னைத் தமக்குக் கலியாணம் செய்து கொடுத்தால் பத்தாயிரம் ரூபாய் தருவதாகச் சொல்கிறார் என்று அறிந்தேன். அப்பா, அந்த விவரத்தைச் சொல்லி விட்டு குழந்தாய்! நான் சொல்கிறதைக் கேள். இன்று ராத்திரி நீ கிணற்றில் விழுந்து செத்துப் போய்விடு!’ என்று கூறித் தேம்பித் தேம்பி அழுதார். நான் அவரைத் தேற்றி, ‘அப்பா! நான் கிணற்றில் விழப்போவதில்லை. கட்டாயம் அவரைத்தான் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன். எல்லாம் விதிபோல் நடக்கும். பாலிய வயதுள்ளவர்களைக் கலியாணம் செய்து கொண்டவர்கள் எல்லாம் என்ன சுகப்பட்டு விட்டார்கள்? எப்படியாவது இந்தக் குடும்பத்தின் தரித்திரம் தீர்ந்தால் போதும்’ என்றேன். கலியாணம் நடந்து, என் பதியுடன் அவர் ஊருக்குச் சென்றேன். அவர் இந்தப் பாபநாசம் தாலூக்காவில் பெரிய மிராசுதாரர். சிறந்த கல்வியறிவுள்ளவர். அவருடைய முதல் மனைவி சந்ததி இல்லாமலே இறந்து போனாள். வேறு நெருங்கிய பந்துக்கள் அவருக்கு யாருமில்லை. தள்ளாத வயதில் தனிமை வாழ்க்கையைச் சகிக்க முடியாமல் தான் என்னைக் கலியாணம் செய்து கொண்டதாக அவர் அறிவித்தார். எனக்கு ஒருவிதமான குறையும் வைக்கவில்லை. எந்தவிதத்திலும் என் இஷ்டத்துக்கு மாறாக நடக்கச் செய்யவும் இல்லை. நான் அவருடைய வீட்டில் இருப்பதே அவருக்குத் திருப்தியாயிருந்தது. அவருடன் உட்கார்ந்து படித்தாலும் பேசினாலும் பரம சந்தோஷமடைவார். இப்படியே என் வாழ்நாள் முழுதும் கழித்து விடுமென்றே எண்ணினேன். ஆனால் விதி வேறு விதமாயிருந்தது. 8 "ஒவ்வொரு வருஷமும் கோடைக் காலத்தில் இரண்டு மாதம் நாங்கள் தரங்கம்பாடிக்குப் போய்த் தங்குவது வழக்கம். தரங்கம்பாடியில் எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் கும்பகோணத்தில் பிரபல வியாபாரியான ஒரு பம்பாய் ஸேட் வந்து தங்குவதுண்டு. ஒரு வருஷம் பம்பாயிலிருந்து அவருடைய மருமகனும் அங்கே வந்து தங்கினான். இந்த இளைஞன் பெயர் கிரிதரலால். கதையை வளர்த்தாமல் சொல்கிறேன்; சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு கிரிதரலால் தான் வியாபார நிமித்தமாகக் கிழக்காப்பிரிக்கா போவதாகச் சொல்லி, தன்னுடன் கிளம்பி வந்துவிட இஷ்டமா என்று கேட்டான். இங்கே ஒரு விஷயம் உங்களுக்கு நான் சொல்ல வேண்டும். என் கணவருடன் நான் வாழ்ந்த நாலு வருஷ காலத்தில், என் வெளி வாழ்க்கை அமைதியாய்த் தானிருந்தது. ஆனால் என் உள்ளத்தில் மட்டும் சாந்தி இல்லை. ஏதோ சொல்ல முடியாத ஏக்கம் என் இருதயத்தில் குடி கொண்டிருந்தது. யாரையோ எங்கேயோ போய்ப் பார்க்க வேண்டும்போல் தோன்றியது. ஆனால் யாரைப் பார்க்க வேண்டும், அதற்கு எங்கே போக வேண்டும் என்பதொன்றும் தெரியவில்லை. பெண்களில் சிலருக்குப் பேய் பிடிக்கிறது என்கிறார்களே, அந்த மாதிரி என்னையும் ஏதாவது பிடித்திருக்கிறதோ என்று கூட சில சமயம் சந்தேகப்படுவேன். எந்த உருவம் தெரியாத மனிதரைக் காணவேண்டுமென்று நான் ஏக்கம் கொண்டிருந்தேனோ அவரல்ல இந்தக் கிரிதரலால் என்று எனக்குத் தெரிந்திருந்தது. ஆனாலும் நான் அவனுடன் போகச் சம்மதித்தேன். வாழ்க்கையில் எனக்கு அவ்வளவு அலுப்பு உண்டாகிவிட்டது. எங்கேயாவது போக வேண்டும் என்ற அளவில்லாத தாபம் ஏற்பட்டிருந்தது. இன்னும் கொஞ்ச நாள் அங்கேயே இருந்தால் பைத்தியம் பிடித்து விடுமோ என்று பயந்தேன். ஒரு நாள் என் கணவர் ஏதோ கோர்ட்டுக் காரியமாய்த் தஞ்சாவூர் போயிருந்தபோது நாங்கள் புறப்பட்டுச் சென்னை சேர்ந்து கப்பல் ஏறினோம். கப்பலில் ஏறிய மறுநாளே கிரிதரலாலின் சுபாவம் தெரிய வந்தது. அவன் பெருங்குடிகாரன், எவ்விதப் பாதகத்துக்கும் அஞ்சாதவன் என்று அறிந்தேன். கடைசியில் நைரோபியில் இறங்கியதும், அவன் என்னை ஒரு வீட்டிற்கு அழைத்துப் போய் அங்கிருந்த ஒரு மாதினிடம் என்னை ஒப்புவித்து விட்டுச் சென்றான். அன்று இராத்திரி, அது ஒரு விபசார விடுதியென்றும், கிரிதரலால் மூவாயிரம் ரூபாய்க்கு என்னை அந்த விடுதியின் சொந்தக்காரிக்கு விற்றுவிட்டுப் போய்விட்டான் என்றும் அறிந்தேன். 9 எனக்கு வந்த கோபத்தையும் ஆத்திரத்தையும் சொல்லி முடியாது. மனநிலையைப் பொறுத்தவரையில் ராக்ஷஸியாகி விட்டேன். மறுநாள் இரவு என்னுடைய அறைக்குள் வந்த குடிகாரன் ஒருவனை அவனிடமிருந்த கத்தியைப் பிடுங்கிக் கொண்டு அதனாலேயே குத்திக் கொன்றேன். அந்த இரத்தக் கறை தோய்ந்த கையைத்தான் இப்போது நீங்கள் பிடித்துக் கொண்டு நிற்கிறீர்கள்…" என்றாள் மைதிலி. ஒரு கணம் என் உடம்பெல்லாம் நடுங்கிற்று. ஆனாலும் நான் அவளுடைய கரத்தை விடவில்லை. மைதிலி மேலே கதையைத் தொடர்ந்தாள்: "அந்த விடுதியின் சொந்தக்காரி வந்தபோது கத்தியைக் காட்டி அவளையும் கொன்று விடுவதாகச் சொன்னேன். அவள் நல்ல வார்த்தை சொல்லி என்னைச் சமாதானப் படுத்தினாள். என்னைத் தொந்தரவு செய்வதில்லையென்றும், இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பி விடுவதாயும் வாக்குறுதியளித்தாள். ஒரு நாள் இரவு நான் உணவு அருந்தியதும் என்னை மீறிய தூக்கம் வந்தது. ஏதோ மயக்க மருந்து கொடுத்து விட்டார்கள் என்று மனத்தில் தோன்றியவுடனே, அப்படியே மயங்கி விழுந்தேன். மறுபடி உணர்ச்சி வந்து கண்விழித்துப் பார்த்த போது, மகாபயங்கரமான ஒரு காட்சியைக் கண்டேன். இங்கிலீஷ் கதைகளில் வாசித்திருக்கிறோமே அம்மாதிரியான ஆப்பிரிக்காதேசத்துக் காட்டு மிராண்டி ஜனங்கள் அநேகர் என்னைச் சூழ்ந்து கையில் பயங்கரமான ஆயுதங்களுடன் நின்றார்கள். சற்றுத் தூரத்தில் பெரும் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அறிவு சிறிது தெளிந்ததும், நிலைமை இன்னதென்று எனக்கு விளங்கிற்று. அந்தப் பெண் பேய், என் மேல் பழிவாங்குவதற்காக இந்தக் காட்டுமிராண்டிகளிடம் என்னை அனுப்பிவிட்டாள். அவர்கள் இப்போது என்னைப் பலி கொடுத்து, நெருப்பில் போட்டு, நரமாமிச பக்ஷணம் செய்யப் போகிறார்கள். இந்த எண்ணம் தோன்றியதும் மறுபடியும் கண்களை மூடிக் கொண்டேன். எந்த நிமிஷமும் என்மேல் ஈட்டிகள் பாயுமென்று எதிர்பார்த்தேன். என்மீது பரிபூரண நம்பிக்கை வைத்திருந்த என் கணவருக்குச் செய்த துரோகத்திற்குப் பலன் கிட்டிவிட்டதென்று எண்ணினேன். என் தந்தை, ‘உன்னைப் பலி கொடுக்க விற்று விட்டேன்’ என்று சொன்ன வாக்குப் பலித்துவிட்டது என்றும் நினைத்துக் கொண்டேன். அப்போது, அந்தக் காட்டுமிராண்டிகளின் வாத்தியங்களிலிருந்து கிளம்பிய பயங்கர ஒலி சட்டென்று நின்றது. அதற்குப் பதிலாக, ‘ர்ர்ர்ர்’ என்ற சத்தம் ஆகாய வெளியிலிருந்து கேட்டது. உடனே அது என்ன சப்தமென்பதை அறிந்தேன். கண்ணைத் திறந்து பார்த்தேன். ஆகாய விமானம் ஒன்று இறங்கிக் கொண்டிருந்தது. அது அருகில் வந்ததும், அந்த நரமாமிச பக்ஷிணிகள் வெருண்டு நாலாபுறமும் ஓட்டமெடுத்தார்கள். ஆகாய விமானத்திலிருந்து இறங்கிய ஒரு வெள்ளைக்காரப் பெண் தன் கையிலிருந்த கைத்துப்பாக்கியால் நாலாபுறமும் பார்த்துச் சுட்டாள். அந்தக் காட்டுமிராண்டிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். உடனே என்னுடைய கட்டுக்களை அவள் அவிழ்த்து ஆகாய விமானத்தில் ஏற்றிக் கொண்டாள். அந்த வெள்ளைக்காரி ஆப்பிரிக்காக் கண்டத்தை ஒரே மூச்சில் தாண்டும் பந்தயத்திற்காகப் பறந்து கொண்டிருந்ததாகவும், பந்தயம் போனாலும் போகட்டும் என்று அவ்விடத்தில் கீழிறங்கி என்னைக் காப்பாற்றினதாகவும் சொன்னாள். ஒரு ஜீவனுக்கு அந்தியமக் காலம் வரவில்லையென்றால், எப்படிப்பட்ட ஆபத்திலிருந்தும் எந்த விதத்திலாவது தப்பிக்க முடியும் என்பதற்கு நானே சாட்சியாயிருக்கிறேன். 10 என்னை அந்த வெள்ளைக்காரப் பெண் நைரோபி துறைமுகத்தில் கொண்டு வந்து சேர்ந்து தானே கப்பல் சார்ஜு கொடுத்து இந்தியாவுக்குச் செல்லும் கப்பலில் ஏற்றியும் விட்டாள். கப்பல் கடலில் போய்க் கொண்டிருந்தபோது, என் உள்ளத்தில் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. ‘எங்கே போவது?’ என்னும் கேள்வி என் மனத்தை அலைத்துக் கொண்டிருந்தது. என்னிடம் எதுவும் எதிர்பாராமல் எனக்கு மட்டும் சகல சௌபாக்கியங்களையும் அளித்த என் பதியிடம் மறுபடி திரும்பிச் செல்வதா? ஐயோ! அவருடைய மனம் என்ன வேதனையடைந்ததோ? அவர் என்னைத் திரும்பி அங்கீகரிப்பாரா? - இப்படிப் பல நாள் யோசித்தேன். அவரிடம் நேரே போவதற்குத் தைரியம் எனக்கு ஏற்படவில்லை. நான் ஏறியிருந்த கப்பலோ, கன்னியாகுமரியைச் சுற்றி, கடற்கரையோரமாகச் சென்னை போவதாயிருந்தது. வேண்டுமானால் நான் நாகப்பட்டினத்தில் இறங்கி அவரிடம் போகலாம். அதற்கு எனக்குத் துணிச்சல் ஏற்படவில்லை. சென்னைப் பட்டணத்திலே இறங்கி என் தகப்பனாரிடம் தஞ்சம் புகுவதென்றே தீர்மானித்தேன். ஆனால் மறுபடியும் விதி குறுக்கிட்டது. நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து ஒரு நாள் இரவு கப்பல் புறப்பட்டது. மறுநாள் அதிகாலையில் சென்னை போய்ச் சேர வெண்டும். ஆனால் அது சென்னை போய்ச் சேரவேயில்லை. அன்று இரவு கடலில் பிரமாதமான புயல் அடித்தது. அலைகள் மலைகளைப் போல் எழுந்தன. உலகத்தில் எவ்வளவு விதமான அபாயங்கள், கஷ்டங்கள் உண்டோ அவ்வளவையும் நான் அநுபவிக்கவேண்டுமென்று பிரம்மதேவன் என் தலையில் எழுதியிருந்தான். கப்பலுக்கு அபாயம் வந்துவிட்டதென்றும், உயிர் தப்ப விரும்புகிறவர்கள் படகுகளில் ஏற வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டோம். எனக்கு உயிர் தப்ப விருப்பமில்லை. ஆகவே பேசாமலிருந்தேன். ஆனால் அந்தக் கப்பல் தலைவன், ஸ்திரீகளை முதலில் படகில் ஏற்ற வேண்டுமென்று கட்டளையிடவே, என்னைப் பலவந்தமாய் இழுத்துப் போய் ஒரு படகில் ஏற்றினார்கள். வெகுநேரம் நாங்கள் ஏறியிருந்த படகு, அலைகளிடையே ஊசலாடிக் கொண்டிருந்தது. முடிவில், ஒரு பிரமாண்டமான அலை அடித்து அதைக் கவிழ்த்தது. என் துன்பங்களுக்குக் கடைசியாக விமோசனம் வந்துவிட்டதென்று எண்ணினேன். அந்த எண்ணம் நிறைவேறவில்லை. படகு கரைக்கு வெகு சமீபம் வந்திருக்க வேண்டும். ஒரு நிமிஷம் மூச்சுத் திணறுமாறு அலைப்புண்ட பிறகு, கடற்கரை மணலில் நான் கிடப்பதை உணர்ந்தேன். உடனே, உயிர் ஆசை பற்றிக் கொண்டது. ஏற்கனவே குளிரினால் நடுங்கிக் கொண்டிருந்த உடம்பில், ஈரக்காற்று சவுக்கு கொண்டு அடிப்பதுபோல், சுளீர் சுளீர் என்று அடித்தது. அந்தக் கும்மிருட்டில் இன்ன திசையை நோக்கி போகிறோமென்று தெரியாமல் ஓடினேன்; அநேக முறை தடுக்கி விழுந்தேன்; மறுபடி எழுந்திருந்து ஓடினேன். உடம்பில் உயிர் உணர்ச்சி இருந்தவரையில் ஓடியபின் இனி ஓரடியும் எடுத்து வைக்க முடியாத நிலைமை வந்தது. அப்படியே உட்கார்ந்து கீழே சாய்ந்தேன். நான் உட்கார்ந்த இடம் ஒரு வீட்டின் கொல்லைப் புறத்து வாசற்படி போல் தோன்றியது. அடுத்த கணம் நினைவு இழந்தேன். எனக்கு மீண்டும் நன்றாய் ஞாபகம் வந்த போது, என் பதி எனக்குச் சுச்ரூஷை செய்து கொண்டிருப்பதைக் கண்டேன். என் கண்களிலிருந்து ஜலம் பெருகிற்று. அதைப் பார்த்த அவர் ‘மைதிலி, நீ மறுபடியும் என்னைத் தேடி வந்தாயே, அதுவே எனக்குப் போதும். நீ எங்கே போனாய் ஏன் போனாய் என்றெல்லாம் நான் ஒன்றும் கேட்கவில்லை’ என்றார். என் இருதயம் பிளந்து விடும் போல் இருந்தது. ஒரு வார்த்தையும் சொல்லாமல் தேம்பித் தேம்பி அழுதேன்…" இப்படிச் சொல்லி வந்த போது மைதிலி உணர்ச்சி மிகுதியில் விம்மினாள். என்னுடைய மனோ நிலைமையையோ விவரிப்பதற்கு இயலாமலிருந்தது. சற்றுப் பொறுத்து அவள் கதையைத் தொடர்ந்து சொன்னாள்: "ஆறு மாதத்திற்கெல்லாம் என் கணவர் இறந்து போனார். அவருடைய ஏராளமான ஆஸ்திகளுக்கெல்லாம் என்னைச் சர்வசுதந்திர எஜமானியாக அவர் ஆக்கியிருந்தார். அச்சமயம் என் தாயாரும், சகோதரர்களும் வந்திருந்து, ஈமக்கடன்கள் முடிந்ததும் என்னை உடன் அழைத்துச் சென்றார்கள். என் தகப்பனார் வராததற்குக் காரணம், அவருக்குச் சித்தம் சரியில்லாததுதான் என்று தெரிந்தது. என்னுடைய கலியாணத்திற்குப் பிறகு, அவர் அடிக்கடி, ‘மைதிலி! உன்னை விற்றுவிட்டேன்; உன்னைப் பலி கொடுத்து விட்டேன்’ என்று சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தாராம். கடைசியில், இது சித்தப் பிரமையாகவே போய்விட்டதாம். இப்போது என்னைக் கண்டதும் அவருக்குச் சட்டென்று பிரமை நீங்கிற்று. அறிவு தெளிந்தது. ‘குழந்தாய்! வந்து விட்டாயா!’ என்று சொல்லி என்னைக் கட்டிக் கொண்டு அழுதார். அதற்குப் பிறகு அவரும் வெகு காலம் உயிரோடிருக்கவில்லை. மூன்று மாதத்திற்கெல்லாம் காலமானார். சென்னையிலேயே நான் வசிக்கத் தொடங்கினேன். உலகத்திலே பணத்திற்கு எவ்வளவு சக்தி உண்டென்பதை அறிந்து ஆச்சரியமடைந்தேன். நாங்கள் பசிக்கு உணவில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த போது எங்களை எட்டிப் பாராத இஷ்டமித்திர பந்துக்களெல்லாம் இப்போது வந்து கும்பல் போடத் தொடங்கினார்கள். எனக்குக் கலியாணம் சீக்கிரம் பண்ணாததற்காக எங்களைச் சாதியை விட்டுத் தள்ளவேண்டுமென்று அப்போது சொன்னவர்கள் எல்லாம் இப்போது என்னிடம் பயபக்தியுடன் நடந்து கொண்டார்கள். என் மனத்திலே மட்டும் பழைய ஏக்கம் - யாரையோ பார்க்க வேண்டுமென்ற தாபம் - குடி கொண்டிருந்தது. கடைசியாக, என் இருதய நாதனை நான் இந்த ஜன்மத்தில் காணப் போவதில்லை யென்றும் அது ஒரு வெறும் நிழல் மாத்திரந்தான் என்றும் தீர்மானித்தேன். வாழ்க்கை வேம்பிலும் கசப்பாகிவிட்டது. என்னுடைய சொத்துக்களையெல்லாம் என் சகோதரர்களுக்கும், தர்மங்களுக்கும் எழுதி வைத்துவிட்டு, ஒரு நாள் தன்னந்தனியாக என் கணவருடைய கிராமத்தை அடைந்தேன். மூன்று நாள் அவர் வீட்டில் வசித்து விட்டு நாளாம் நாள் இரவு நடுநிசியில் கிளம்பி வந்து அதோ அந்தப் பாலத்தின் மேலிருந்து வெள்ளம் புரண்டோ டிய நதியின் நடுவில் குதித்தேன். எத்தனையோ விபத்துக்களுக்கெல்லாம் தப்பிய என் உயிரைக் கடைசியில் தானாகவே மாய்த்துக் கொள்ள வேண்டுமென்று என் தலையில் எழுதியிருந்தது…" மைதிலி கதையை நிறுத்தினாள். “அப்புறம் என்ன?” என்றேன். “மரணத்திற்கு அப்புறம் என்ன? ஒன்றுமில்லை” என்றாள். “அப்படியானால், நீ யார்?” “அதுதான் எனக்கும் தெரியவில்லை, அற்பாயுளில் மாண்டவர்களின் ஆவி இறந்த இடத்திலேயே உலவுமென்கிறார்களே, அதுதானோ என்னவோ?” நான் பிடித்துக் கொண்டிருந்த அவளுடைய கரத்தை வலுவாக அமுக்கினேன். “ஐயோ! வலிக்கிறது!” என்று அவள் கதறினாள். பிறகு, நான் சாவதானமாக, “சரி! மேலே கதையைச் சொல். ‘ஷுட்டிங்’ எல்லாம் முடிந்து, வேஷத்தைக் கலைத்துவிட்டு, எல்லாரும் ஊருக்குக் கிளம்பினீர்களாக்கும்!” என்றேன். ஒரு நிமிஷம் மைதிலி திகைத்துவிட்டாள். என் இரண்டு கைகளையும் அமுக்கிப் பிடித்துக் கொண்டு “உங்களுக்கு எப்படித் தெரிந்தது?” என்றாள். “பிறகு சொல்கிறேன்; முதலில் நீ உண்மையைச் சொல், உன் கதையில் எவ்வளவு வரை நிஜம், எவ்வளவு வரை நடிப்பு?” என்று கேட்டேன். 11 மைதிலிக்குத் துக்கம் பொங்கிக் கொண்டு வந்தது. “இந்த நடுநிசி வேளையில் பயங்கரமான இடி முழக்கங்களுக்கு மத்தியில், என் கதையை நீங்கள் கட்டாயம் நம்புவீர்களென்று எதிர்பார்த்தேன். அது பிரயோஜனப்படவில்லை” என்றாள். “நீ சொன்னதில் நிஜக் கதையும் கொஞ்சம் கலந்துதானிருந்தது. எது வரையில் உன் கதை, எது வரையில் டாக்கிக் கதை என்று தான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என்றேன். "என்னுடைய நிஜக் கதையைச் சொன்னால் நம்பமாட்டீர்களென்றும், ஒரு வேளை பரிகாசம் செய்வீர்களென்றும் நினைத்தேன். நான் சொன்னதில் என் தகப்பனாரையும் குடும்பத்தையும் பற்றிச் சொன்னதெல்லாம் நிஜம். என்னைக் கிழ மிராசுதாருக்கு விற்றதிலிருந்துதான் கதை. அதற்குப் பதிலாக, என்னை என் தகப்பனார் ஒரு டாக்கி முதலாளிக்கு விற்றார். ஏழாயிரம் ரூபாய் கிடைத்தது. எங்கள் குடும்பத்தின் தரித்திரம் தீர்ந்தது. ஆனால் என் தந்தை மட்டும் மனம் நொந்து போனார். என்னுடைய முதல் டாக்கி வெளியான சில காலத்துக்கெல்லாம், அவர் காலஞ்சென்றார். கதையில் நேர்ந்தது போலவே ஏற்கனவே எங்களைப் புறக்கணித்த பந்துக்கள் எல்லாம் இப்போது வந்து சூழ்ந்து கொண்டார்கள். என்னுடைய மாமா ஒருவர் பெரிதும் பணத்தாசை உண்டக்கி விட்டார். ஆகவே, இன்னொரு டாக்கியில் நான் நடிப்பதற்காக பேரம் நடந்தது. அப்பா இறந்து போனபின், நான் மனம் குன்றிப் போயிருந்தேன். ஒரே டாக்கியுடன் நிறுத்திக் கொண்டு என்னைக் கலியாணம், செய்து கொடுத்துவிட வேண்டுமென்பது அவருடைய எண்ணம். அவர் விருப்பத்திற்கு மாறாக மீண்டும் டாக்கியில் நடிக்க எனக்கு இஷ்டமில்லையென்றாலும், அம்மா மாமா இவர்களுடைய பிடிவாதத்துக்கு உட்பட வேண்டியதாயிருந்தது. இரண்டாவது டாக்கியின் கடைசிக் காட்சிகளை இரண்டு நாளைக்கு முன்பு இங்கே தான் எடுத்து முடித்தார்கள்; கதாநாயகி அதோ அந்தப் பாலத்திலிருந்து விழுந்து தான் இறந்து போகிறாள். ஷுட்டிங் முடிந்ததும் எல்லாரும் போய்விட்டார்கள். என்னுடைய தாயாருக்கு உடம்பு சரிப்படாமலிருந்ததால், நாங்கள் மட்டும் அடுத்த கிராமத்திலுள்ள ஜாகையிலேயே சில நாள் தங்கினோம். ஏற்கெனவே, எனக்கு உயிர் கசந்து போயிருந்தது. டாக்கி எடுக்கும் போது எந்தெந்த மாதிரி ஸ்திரி புருஷர்களுடனெல்லாம் பழக வேண்டியிருக்கிறதென்பதை உங்களால் கற்பனை செய்யவே முடியாது. அம்மா! அவர்கள் மூஞ்சியும் முகரக்கட்டையும்! டாக்கியில் வேஷம் போட்டுப் பார்த்தவர்களை அப்புறம் பார்க்கவே வேண்டியிராது. இன்னும், டாக்கி நட்சத்திரங்களின் முகத்தை பார்ப்பதற்கென்று பல்லிளித்துக் கொண்டு வருகிறவர்களைப் பற்றியோ கேட்க வேண்டியதில்லை. இதனாலெல்லாம் ‘இது என்ன வாழ்வு’ என்று ஏக்கங் கொண்டிருந்தேன். முன்னமே இப்படியென்றால், இந்த டாக்கி முடிந்ததும், என் மனச்சோர்வு நூறு மடங்கு அதிகமாயிற்று; இப்படி வேஷம் போட்டுப் பணம் சம்பாதித்து யாருக்காக உயிர் வாழவேண்டுமென்று தோன்றியது. ஆகவே, நேற்றிரவு நடுநிசிக்கு, டாக்கியின் கதாநாயகி உயிரை விட்ட இடத்திலேயே நானும் உயிரை விடுவதென்று வந்தேன்…" 12 “பின்னே ஏன் தாமதித்தாய்?” என்று கேட்டேன். “மதகிலிருந்து குதிக்கப் போன சமயம், மோட்டார் குழலின் சத்தம் கேட்டது. எக்காரணத்தினாலோ, உடனே என் தைரியம் போய்விட்டது…” என்று கூறி, மேலே பேசுவதற்குத் தயங்கினாள். “காரணம் நானே சொல்லிவிடட்டுமா? டாக்கியின் கதாநாயகியைப் போலவே, உன்னுடைய உள்ளமும் உருவந் தெரியாத ஒருவரைத் தேடிக் கொண்டிருந்தது. அவர் அந்த மோட்டாரில் வருகிறார் என்று உன் இருதயத்தினுள்ளே ஏதோ சொல்லிற்று. இல்லையா?” என்றேன். மைதிலி கண்களில் அளவிலா ஆச்சரியம் தோன்ற “இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரிந்தது? நீங்கள் மந்திரவாதியா?” என்றாள். மழை நன்றாய் விட்டுவிட்டது. ஆகாயத்தில் மேகங்கள் கலைந்து கொண்டிருந்தன. கீழ்வானம் சிறிது வெளுத்தது. வயல் மடைகளில் சலசல என்று ஜலம் பாயும் ஒலி கேட்டது. “வானம் வெளிவாங்கிவிட்டது. வா, போகலாம்” என்று சொல்லி எழுந்து நின்றேன். அவள் எழுந்திருக்கவில்லை. “உன் இருதயம் சொன்னது சரி. மின்னல் வெளிச்சத்தில் இன்று உன்னை நான் முதல் தடவை பார்த்ததும்…” “நிஜமாகவா? ஏற்கனவே என்னை நீங்கள் பார்த்ததில்லையா? என்னுடைய முதல் டாக்கியில் ஒரு வேளை பார்த்திருப்பீர்கள், அதனால் அடையாளம் கண்டுபிடித்திருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன்?” “நான் உன்னுடைய முதல் டாக்கிக்குப் போகவில்லை. உன்னை அதற்கு முன்னல் பார்த்ததும் இல்லை. நீ தேடியது போலவே, மனக்கண்ணுக்கு நன்கு தெரியாத ஒரு உருவத்தை நானும் தேடிக்கொண்டிருந்தேன். உன்னைப் பார்த்தவுடனே நான் தேடியவள் நீதான் என்று என் இருதயம் சொல்லித் தெரிந்து கொண்டேன்.” மைதிலி எழுந்து நின்றாள். “ஐயா! என்னைப் பரிகாசம் செய்கிறீர்களா? நிஜமாய்ச் சொல்லுங்கள். நீங்கள் யார்? நான் சொன்னது டாக்கிக் கதையென்று உங்களுக்கு எப்படித் தெரிந்தது? நீங்கள் என்னைத் தேடியதாகச் சொன்னதெல்லாம் உண்மையா, அதுவும் ஒரு கதைதானா?” என்றாள். “மைதிலி, என்னுடைய வாழ்நாளில் நான் ஒரே ஒரு கதைதான் எழுதினேன். அதைத்தான் நீ சற்று முன்பு சொன்னாய்; நானே கேட்டு மயிர்க் கூச்செறியும்படி சொன்னாய்…” என்பதற்குள், மைதிலி அளவிலா வியப்புடன், “என்ன? என்ன? நிஜமாக நீங்களா அந்தக் கதை எழுதியது?” என்றாள். “ஆமாம்! என்னுடைய நாவலின் கையெழுத்துப் பிரதியை ஒருவர் வாசிப்பதற்கு எடுத்துக் கொண்டு போனார். சில நாளைக்கெல்லாம் அவர் இந்தியாவை விட்டு மலாய் நாட்டுக்குப் போய்விட்டார் என்று அறிந்தேன். போவதற்குமுன் அந்த அசட்டுக் கதையை உங்கள் முதலாளியிடம் அவர் விற்றுவிட்டுப் போயிருக்க வேண்டும். தமிழ் டாக்கிக்காரர்கள் தான் கதை அகப்பட்டால் போதுமென்று இருக்கிறார்களே… அஸம்பாவிதங்கள் நிறைந்த அந்தக் கதை எனக்கே பிடிக்கவில்லைதான். ஆனால் அதில் ஓர் அம்சம் மட்டும் உண்மையானதாகையால் எனக்குப் பிடித்திருந்தது. என்னுடைய உள்ளத்திலிருந்த ஏக்கத்தையே தான் அந்தக் கதாநாயகியின் மூலம் நான் வெளியிட்டிருந்தேன். கதை எழுதியபோது, என்னுடைய இருதயத்தேட்டம் பூர்த்தி பெறவில்லையாதலால், கதாநாயகி உயிரை விட்டாள் என்று சோகமாய்க் கதையை முடித்திருந்தேன்” என்றேன். பட்சி ஜாலங்கள் உதயராகம் பாடிச் சூரியோதயத்தை வரவேற்கும் மனோகரமான காலை நேரத்தில், கார்காலத்தின் குளிர்ந்த காற்று மரக்கிளைகளின் மீது விளையாடி மழைத் துளிகளை உதிர்த்துக் கொண்டிருந்த கிராமாந்தரத்துச் சாலையில், நானும் மைதிலியும் கைகோத்துக் கொண்டு, எங்கள் வாழ்க்கைப் பிரயாணத்தைத் தொடங்கினோம். 12. கைதியின் பிரார்த்தனை கைலாஸம் மணிக்கு முப்பத்தைந்து மைல் வேகத்தில் போய்க் கொண்டிருந்தான். (“போய்க் கொண்டிருந்தது” என்று முடித்து, உங்களைத் திகைக்கச் செய்யவேண்டுமென்று எனக்கு ஆசைதான். ஆனால் மலையைக் கதாபாத்திரமாக வைத்து எழுதும் திறமை இன்னும் எனக்கு வரவில்லை. மனிதர்களைத்தான் கட்டிக்கொண்டு அழ வேண்டியிருக்கிறது.) அந்தப் பட்டிக்காட்டுச் சாலையில் அவ்வளவு துரிதப் பிரயாணத்தைச் சாத்தியமாகச் செய்தது கைலாஸம் ஏறியிருந்த புதுமாடல் மோட்டார் வண்டிதான். வழியிலே அவன் கடக்கும் படியாக நேர்ந்த கிராமங்களில் வாழ்ந்த தெரு நாய்கள் மோட்டாரைத் தொடர்ந்து துரத்திக் கிராமத்துக்கு வெளிப்புறம் வரையில் கொண்டு விட்டு விட்டுத் திரும்பின. தாங்கள் துரத்தியதால் தான் அந்தப் பயங்கர பூதம் பயந்து ஓடிப்போனதாக அவற்றின் மனத்திற்குள் எண்ணம். ஆனால் கைலாஸம் இது ஒன்றையும் கவனித்ததாகத் தெரியவில்லை. அவனுடைய முகத்தைப் பார்த்தால், மோட்டார் எவ்வளவு வேகமாய் ஓடிற்றோ அதை விடப் பதின்மடங்கு வேகமாக அவனுடைய உள்ளம் ஓடிக் கொண்டிருந்ததென்று தெரியவந்தது. சட்டென்று வண்டி நின்றது. கைலாஸம் வண்டியிலிருந்து கீழே இறங்கி நாற்புறமும் நோக்கினான். கிழக்கே கொஞ்ச தூரத்தில் ஒரு கிராமத்தின் கோவில் ஸ்தூபி தெரிந்தது. அதைப் பார்த்துக் கைலாஸம் பெருமூச்சு விட்டான். மேற்கே பார்த்தான். சுமார் பத்து மைல் தூரத்தில் திருச்சி மலைக்கோவிலும், அதற்குச் சமீபத்தில் பொன்மலையும் தெரிந்தன. தெற்கேயெல்லாம் பசுமையான வயல்கள், வடக்கே மரம் அடர்ந்த ஒரு தோப்பு. அந்தத் தோப்புக்கு அப்புறத்தில் காவேரி ஆறு. கைலாஸம் வண்டியைச் சாலையில் நிறுத்திவிட்டு அந்தத் தோப்பைக் கடந்து ஆற்றங்கரையை அடைந்தான். அங்கே மேல் துணியை விரித்து உட்கார்ந்து கொண்டான். அவன் உள்ளத்தில் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. கிழக்கே கொஞ்ச தூரத்திலிருந்த கிராமத்துக்குப் பெருமாள்புதூர் என்று பெயர். அவ்வூருக்குப் போகலாமென்ற எண்ணத்துடனே தான் கைலாஸம் அந்தப் பக்கம் வந்தான். ஆனால் ஊர் கிட்டத்தட்ட நெருங்கிய போது சந்தேகம் தோன்றிவிட்டது; போகலாமா, அல்லது வந்த வழியே திரும்பிவிடலாமா? பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னால் ஒரு முறை அதே சாலை வழியாக அதே ஊருக்குக் கைலாஸம் போனதுண்டு. அப்போது அவன் இருபது வயது வாலிபன். அந்தத் தடவை இரட்டை மாடு பூட்டிய பெட்டி வண்டியில் அவன் சென்றான். இன்னும் ஸ்திரீ புருஷர்கள் பலரும் வெவ்வேறு வண்டிகளில் வந்தார்கள். எல்லாரும் மறுநாள் பெருமாள் புதூரில் நடக்க இருந்த கைலாஸத்தின் திருக்கலியாண மகோத்ஸவத்துக்காகவே வந்தார்கள். அவர்களுடைய மாட்டு வண்டிகள் எல்லாம் இப்போது கைலாஸத்தின் மோட்டார் நின்ற அதே இடத்தில் தான் வந்து நின்றன. எல்லாரும் இறங்கிக் காவேரிக் கரைக்கு வந்தனர். பெண் வீட்டார் அனுப்பியிருந்த சிற்றுண்டிகளை அருந்தினர். சிரிப்பும் விளையாட்டும் பரிகாஸப் பேச்சுக்களும் ஏகக் குதூகலமாயிருந்தன. சூரியாஸ்தமன சமயத்தில் கிராமத்தை அடைந்தார்கள். அதோ தெரிகிறதே, அந்தக் கோவிலில்தான் முதன் முதலில் இறங்கினார்கள். ஊராரெல்லாரும் வந்து சர்க்கரை, கற்கண்டு, வெற்றிலை பாக்கு வழங்கிய பிறகு, ‘ஜானவாஸ’ ஊர்வலம் ஆரம்பமாயிற்று. ஊர்வலத்தின் போது, அதற்கு ஐந்தாம் நாள் இரவு அதே குதிரை ஸாரட்டில் தன்னுடைய பிரியநாயகி சகிதமாக ஊர்வலம் போவோம் என்று எண்ணி உடல் பூரித்ததெல்லாம் கைலாஸத்துக்கு ஞாபகம் வந்தது. அடடா! என்னென்ன ஆகாசக்கோட்டைகள்! ஊர்வலம், சம்பந்திகளுக்காக ஏற்படுத்தியிருந்த ஜாகையில் வந்து முடிந்தது. கைலாஸம் வீட்டினுள் சென்று ஊர்வல உடுப்புகளை விரைவாகக் களையத் தொடங்கினான். அவற்றை அவன் அணிந்திருந்த வரையில், “அப்பாடா! கலியாணம் என்றால் இலேசு இல்லை; ரொம்பக் கனமாய்த்தான் இருக்கிறது” என்று அடிக்கடி எண்ணம் உண்டாயிற்று. அவன் காலர், நெக் டை இவற்றை அவிழ்த்துவிட்டுக் கோட்டைக் கழற்றிக் கொண்டிருந்தபோது, விஷமத்தனமான பார்வையுடன் கூடிய ஒரு பெண் அங்கே வந்தாள். அவள் வேறு யாருமில்லை என்பதை அவள் தெரிந்து கொண்டு, “மாப்பிள்ளை! உமா உங்களிடம் இந்தக் கடுதாசை இரகசியமாய்க் கொடுக்கச் சொன்னாள்” என்று கூறி ஒரு கடிதத்தை அவன் சட்டைப் பையில் திணித்துவிட்டு ஓடினாள். கைலாஸத்துக்கு ஏற்பட்ட வியப்பும், ஆவலும், பரபரப்பும் சொல்ல முடியாது. மயிர்க்கூச்சல் எறிந்தது. நெஞ்சை என்னவோ செய்தது. விளக்கண்டை சென்று பார்த்தான். மேல் உறையில் “எம்.ஆர்.ஆர்.ஒய். டி.பி.கைலாஸம்” என்று பெண் கையெழுத்தில் இங்கிலீஷில் எழுதியிருந்தது. உள்ளே இருந்த கடிதத்தை எடுத்து படித்தான்: "ஐயா, தங்களை விவாகம் செய்து கொள்ள எனக்கு இஷ்டம் இல்லை. என்னுடைய மனம் இன்னொருவர் மேல் சென்று விட்டது. என்னை நீங்கள் மணந்து கொண்டால், நம் இருவருடைய வாழ்க்கையிலும் துன்பந்தான் குடி கொண்டிருக்கும்! காதல் இல்லாத கல்யாணத்தினால் என்ன பயன்! இப்படிக்கு, உமா." படித்துக் கொண்டிருக்கும் போதே விளக்கு, வீடு எல்லாம் சுழல ஆரம்பித்தன. இரண்டு, மூன்று நிமிஷம் பிரமை கொண்டவன் போல் இருந்தான் கைலாஸம். அப்புறம் பல்லைக் கடித்துக் கொண்டு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன் போல் விரைவாகச் சென்றான். கைலாஸத்துக்குத் தகப்பனார் இல்லை. இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தவரும், நடத்தி வைக்க வேண்டியவரும் அவனுடைய தாய் மாமன் தான். அவரிடம் சென்று, “மாமா! பெண்ணின் தகப்பனாரிடம் ஒரு முக்கியமான காரியம் பேச வேண்டும். அதற்குப் பிறகு தான் இந்தக் கலியாணம் நிச்சயம்” என்று சொல்லி அழைத்துச் சென்றான். பெண்ணின் தகப்பனாரிடம் போனதும், “ஐயா! தங்கள் மகளிடம் ஒரு நிமிஷம் நான் தனிமையில் பேச வேண்டும். அவளிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டுத் தான் நான் கலியாணத்துக்குச் சம்மதிப்பேன்” என்று கூறினான். அவர், “முன்னாலேயே இதைச் செய்திருக்க வேண்டியது. இன்று பெண்ணைப் பார்ப்பது சம்பிரதாய விரோதம். ஆனாலும் பாதகமில்லை. உங்கள் இஷ்டப்படியே ஆகட்டும்” என்று கூறி அவ்வாறே ஏற்பாடும் செய்தார். கைலாஸம் இருந்த அறைக்கு உமா வந்ததும் அவன் அவளை அப்படியே எடுத்து விழுங்கிவிடுபவன் போல் ஒரு பார்வை பார்த்தான். பிறகு கடிதத்தை நீட்டி, “இந்தக் கடிதம் நீ எழுதியதுதானா?” என்று கேட்டான். “ஆமாம்” என்று தழுதழுத்த குரலில் பதில் வந்தது. “ரொம்ப சந்தோஷம். நீ உன் மனத்திற்கிசைந்த புருஷனையே மணந்து கொள், அம்மா! அதற்குக் குறுக்கே நிற்கும் பாவத்தை நான் கட்டிக் கொள்ளத் தயாராயில்லை” என்று கூறிவிட்டு மணப்பெண்ணை மறுமுறை பார்க்கவும் செய்யாமல் வெளியே வந்தான். நேரே பெண்ணின் தகப்பனாரிடம் போய், “ஐயா! தங்களுடைய பெண்ணை மணக்க எனக்கு விருப்பமில்லை. தயவு செய்து மன்னிக்க வேண்டும்” என்று கூறிவிட்டு உடனே வெளியே வந்து வண்டியைப் பூட்டச் சொன்னான். ஏக அல்லோல கல்லோலம். யாரோ என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தும் பயன்படவில்லை. கைலாஸம் ஒரே பிடிவாதமாயிருந்தான். தன்னுடைய பிடிவாதத்துக்குச் சமாதானம், காரணம் எதுவும் சொல்ல உறுதியாக மறுத்து விட்டான். “இஷ்டமில்லையென்றால் விட்டு விடுங்கள்! அவ்வளவுதான்!” இவ்விஷயத்தில் பெண் வீட்டாருக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்குத் தான் சிறிதும் பொறுப்பாளியல்லவென்பதில் அவனுக்குச் சந்தேகம் இருக்கவில்லை. கைலாஸம் திருச்சியில் படித்துக் கொண்டிருக்கையில் பெருமாள்புதூரிலிருந்த தன்னுடைய தாய்மாமன் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. அந்தக் காலங்களில் சில சமயம் எதிர் வீட்டிலிருந்த உமாவைப் பார்த்திருந்தான். ஆகவே, கலியாண பேச்சு வந்தபோது பெண் பிடித்திருப்பதாகச் சொல்லிவிட்டான். பெண்ணின் தகப்பனார் படித்த மனிதர். ரிடயர் ஆன உத்தியோகஸ்தர். அத்துடன் தியாஸாபிகல் ஸொஸைடியைச் சேர்ந்தவர். ஆகவே, அவர் கட்டாயம் தம்முடைய பெண்ணின் சம்மதத்தைக் கேட்டிருப்பாரென்று எதிர்பார்த்தான். அவர் அப்படிச் செய்யவில்லையென்றால், இவனா அதற்கு ஜவாப்தாரி? இரவுக்கிரவே திரும்பி ஊருக்குப் போன கைலாஸம் அங்கே ஒரு நாள் கூடத் தங்கவில்லை. ஒருவரிடமும் விவரம் தெரிவிக்காமல் பம்பாய்க்குப் புறப்பட்டுச் சென்றான். அங்கே ஒரு கம்பெனியில் வேலைக்கு அமர்ந்து, தன்னுடைய திறமை காரணமாக, கூடிய சீக்கிரம் மானேஜர் பதவிக்கு வந்தான். ஏராளமாகப் பணம் சம்பாதித்தான். இடையில் சத்தியாக்கிரஹ இயக்கத்தில் ஈடுபட்டுச் சிறை புகுந்து காங்கிரஸ் கூட்டங்களில் புகழடைந்தான். எல்லா வகையிலும் அவனுடைய வாழ்க்கை திருப்திகரமாயிருந்ததென்றே சொல்லவேண்டும். ஆயினும் மனச்சாந்தி மட்டும் ஏற்படவில்லை. மாப்பிள்ளை அழைத்த அன்று இரவில் நடந்த எதிர்பாராத நாடகம் மனத்தை விட்டு அகலவேயில்லை. தன்னுடைய கேள்விக்குப் பதிலாக, ‘ஆமாம்’ என்று தழுதழுத்த குரலில் கூறிய உமாவின் உருவம் அவன் மனக் கண்முன் அடிக்கடி தோன்றி வந்தது. வேறு விஷயங்களில் கவனத்தைச் செலுத்தி, இதை மறக்க எவ்வளவோ முயற்சி செய்தும் கைகூடவில்லை. ஞாபகம் வந்த போதெல்லாம், “ஐயோ! இதென்ன ஜன்மம்?” என்று வாழ்க்கையிலேயே வெறுப்புண்டாகும். பம்பாய் சென்று பன்னிரண்டு வருஷங்களுக்குப் பிறகு, சொந்த நாட்டைப் போய்ப் பார்க்கவேண்டுமென்று ஆவல் உண்டாயிற்று. ஆறு மாதம் லீவு வாங்கிக் கொண்டு அங்கிருந்தே மோட்டாரில் யாத்திரை கிளம்பினான். திருச்சிக்கு வந்த போது, ஏனோ பெருமாள்புதூருக்குப் போகவேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. எவ்வளவுதான் முயன்றும் அந்த ஆவலை அடக்குவதற்கு முடியவேயில்லை. ஆனால் பெருமாள்புதூருக்குக் கிட்டத்தட்ட வந்த விட்ட போது மனக்குழப்பம் உண்டாயிற்று. அவள் இந்த ஊரில் இருக்கப் போவதில்லை. இருந்தாலும், யாரோ ஒருவனைக் கல்யாணம் செய்து கொண்டிருப்பாள். நாலைந்து குழந்தைகள் பிறப்பதற்குக் காலமாயிற்று. சீ! இந்த நினைவே சகிக்க முடியவில்லை! நேரில் பார்த்து எப்படி சகிப்பது? மேலும், அங்கே போய் யாரையாவது விசாரிக்க வேண்டும்! தான் இன்னான் என்று சொல்ல வேண்டியிருக்குமல்லவா? பழைய கதையை உடனே எல்லாரும் சொல்ல ஆரம்பிப்பார்கள். காரணம் கேட்பார்கள். வேண்டாம், வேண்டாம்! பேசாமல் திரும்பிப் போவதுதான் சரி. இவ்வாறு தீர்மானித்து மேல் துணியை உதறி எடுத்துக் கொண்டு எழுந்திருந்தான். தலையிலே “படார்!” என்று ஓர் அடி; கழுத்தில் “கும்” என்று ஒரு குத்து. கைலாஸம் தலைக்குப்புறக் கீழே விழுந்தான். “தெரியுமா? பேசாமல் உன்னுடைய உடுப்பைக் கழற்றிக் கொடுத்துவிடு. கொடுத்துவிட்டால் உன்னை ஒன்றும் செய்யவில்லை. ஏதாவது தகராறு பண்ணினாயோ, அப்படியே மென்னியைத் திருகி ஆற்றில் போட்டு விடுவேன்!” என்னும் சொற்கள் கைலாஸத்தின் செவியில் விழுந்தன. தலையில் விழுந்த அடியினால் கலக்கம் அடைந்திருந்த அவனது மூளை சிறிது சிறிதாக தெளிவு பெற்றது. முன்னொரு தடவை இதேவிதமாக மண்டையில் அடிபட்டு அவன் புத்தி கலங்கியதுண்டு, அது சட்டம் மீறி உப்பு எடுக்கச் சென்றபோது போலீஸ் தடியினால் பட்ட அடி. அச்சமயம் அவனுக்கு ஸ்மரணை வந்தபோது, காதிலே, ‘வந்தே மாதரம்!’ ‘மகாத்மா காந்திக்கு ஜே!’ என்னும் கோஷங்கள் ஒலித்தன. இப்போது அதெல்லாம் ஒன்றுமில்லையென்றும், இது வேறு சங்கதியென்றும் உணர்ந்தான். கண்ணைத் திறந்து பார்த்தான். சிறை உடை தரித்த ஒருவன் தன் மார்பின் மேல் ஒரு காலை வைத்து அமுக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. அடுத்த நிமிஷம் கைலாஸமும் கைதியும் காவேரிக் கரையில் கட்டிப் புரண்டு கொண்டிருந்தார்கள். இப்படி எவ்வளவு நேரம் சென்றது என்பது கைலாஸத்துக்குத் தெரியாது. திடீரென்று போலீஸ் ஊதுகுழலின் சத்தம் கேட்டது. பிறகு பூட்ஸ் அணிந்த காலடிச் சத்தம். அடுத்த கணம், தன் மேல் உட்கார்ந்து அமுக்கிக் கொண்டிருந்த பூதம் எழுந்திருந்து விட்டதென்பதைக் கைலாஸம் உணர்ந்தான். அவனும் எழுந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தான். போலீஸ்காரர்கள் இருவர் கைதிக்கு விலங்கு பூட்டத் தயாராயிருந்தார்கள். அதைவிட அவனுக்கு ஆச்சரியம் அளித்த மற்றொரு காட்சியையும் கண்டான். “மென்னியைத் திருகிக் காவேரியில் போடுவேன்!” என்று அவனைப் பயமுறுத்திய முரட்டுப் பூதம் இப்போது கண்ணிலே நீர் பெருக்கிக் கொண்டிருந்தது. கைதி திடீரென்று கீழே விழுந்து கைலாஸத்தின் கால்களைப் பிடித்துக் கொண்டான். “ஸ்வாமி, நீங்கள் தான் எனக்கு ஒரு ஒத்தாசை செய்யவேணும்” என்று கூறி விம்மி விம்மி அழத் தொடங்கினான். அதைக் கண்டு போலீஸ்காரர்கள் கூடச் சிறிது தயங்கி நின்றார்கள். அந்த முரட்டுப் பேயினிடம் பட்ட அடிகளினால் கைலாஸத்துக்கு உடம்பு முழுவதும் இன்னும் வலித்துக் கொண்டிருந்தது. ஆயினும், அவன் இப்போது காட்டிய துக்கமானது கைலாஸத்தின் உள்ளத்தை இளக்கிவிட்டது கடைசியில் அவன், “என்ன ஒத்தாசை வேண்டும் என்று சொல்லு; முடியுமானால் செய்கிறேன்” என்றான். “ஸ்வாமி! உங்களுக்குக் கோடி புண்யம் உண்டாகும். உங்கள் குழந்தை குட்டிகளைப் பகவான் காப்பாற்றுவார். அதோ தெரிகிறதே கோவில், அதுதான் பெருமாள்புதூர். அங்கே கைக்கோளர் தெருவில் மருதமுத்து வீடு என்று கேட்டால் சொல்வார்கள். அந்த வீட்டில் தாயில்லாக் குழந்தைகள் மூன்று பேர் இருக்கிறார்கள். என் பெண்டாட்டி சாகும்போது, பாவி என்னிடம் குழந்தைகளை ஒப்படைத்து, அவற்றைக் காப்பாற்றுவதாகச் சத்தியம் வாங்கிக் கொண்டு போனாள்…” (இங்கே மருதமுத்து அழத் தொடங்கினான். பிறகு சமாதானம் அடைந்து மேலே சொன்னான்.) “ஐயோ! பாழும் குடியினால் கெட்டுப் போனேன் நான். போன வருஷம் தீபாவளியன்று ஊர்க் குழந்தைகள் எல்லாம் புதுத் துணி உடுத்தி, பட்டாஸ் கொளுத்திச் சந்தோஷமாயிருந்தார்கள். என் குழந்தைகள் மட்டும் அழுது கொண்டிருந்தன. ‘அடுத்த தீபாவளிக்கு உங்களை நான் இப்படி வைப்பதில்லை’ என்று சத்தியம் செய்து கொடுத்தேன். நாளைக்குத் தீபாவளி, அவர்களை நான் பார்க்கவே மாட்டேன்!” என்று மறுபடியும் விம்மினான். கைலாஸத்துக்கு இப்போது ஒருவாறு விஷயம் புரிந்தது. “அழாதே, நான் என்ன செய்ய வேண்டும் சொல்லு. பெருமாள்புதூருக்குப் போய் உன் குழந்தைகளைப் பார்க்க வேண்டுமா?” என்று கேட்டான். மருதமுத்து போலீஸ்காரர்களைத் திரும்பிப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டுத் தன்னுடைய மோவாய்க் கட்டையையும், கன்னத்தையும் இரண்டு தடவை தட்டினான். அவனுடைய வாயிலிருந்து மூன்று கால் ரூபாய்கள் கையில் விழுந்தன. அவற்றைக் கைலாஸத்தினிடம் கொடுத்து விட்டுச் சொன்னான்: “ஸ்வாமி! இந்தப் பணத்திற்குப் பட்டாஸ் கட்டும் மத்தாப்பும் வாங்கிக் குழந்தைகளிடம் கொடுங்கள். ‘உங்கள் அப்பன் அனுப்பினான்’ என்று சொல்லுங்கள். இன்னும் இரண்டு மாதத்திலே வந்துவிடுவான் என்று சொல்லுங்கள். சொல்வீர்களா ஸ்வாமி?” கைலாஸத்தின் கண்களில் ஜலம் துளித்தது; அவனுக்குச் சிறையநுபவம் உண்டாதலால், சிறைச்சாலையில் மேற்படி மூன்று கால் ரூபாய்களைச் சேர்க்க மருதமுத்து எவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டுமென்பதை அறிந்திருந்தான். சிறைக்குள்ளே ஒவ்வொரு கால் ரூபாயும் ஒரு பவுனுக்குச் சமானம். அவற்றை அவன் வாங்கிக் கொண்டு, “அப்பா கட்டாயம் அப்படியே செய்கிறேன். நீ கவலைப்படாதே” என்று உறுதி கூறினான். “ஸ்வாமி! ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்; நினைவாக ஒரு ஊசிக் கட்டு வாங்கிக் கொண்டு போங்கள்” என்றான் கைதி. இதுவரை பொறுத்திருந்த போலீஸ்காரர்கள் இப்போது பொறுமையிழந்தவர்களாய், “போதும் நாடகம்; கிளம்பு!” என்று சொல்லிக் கையில் விலங்கைப் பூட்டி இழுத்துச் சென்றார்கள். போலீஸ்காரர்களும் கைதியும் மறைந்ததும், கைலாஸத்துக்கு இதெல்லாம் உண்மையா, கனவா என்று சந்தேகம் வந்துவிட்டது. கையிலிருந்த மூன்று கால் ரூபாய் நாணயங்கள், ‘கனவு அன்று; உண்மை!’ என்பதை வற்புறுத்தின. பெருமாள்புதூரைத் தேடித் தான் வந்த நோக்கம் என்ன, இப்போது போகும் காரியம் என்ன என்பதை எண்ணியபோது அவனை அறியாமல் சிரிப்பு வந்தது. ஆயினும் வாக்குறுதி கொடுத்தாய்விட்டது. போகத்தான் வேண்டும். பத்து நிமிஷத்துக்கெல்லாம் பெருமாள்புதூர்வாசிகள், தங்கள் ஊர்ச் சாலைப்புறத்தில் தீபாவளிக்கென்று வைத்திருந்த பட்டாஸ் கடையில் ஒரு மோட்டார் வண்டி வந்து நிற்கிறதென்பதை அறிந்து அதிசயம் அடைந்தார்கள். மோட்டாரில் வந்த பெரிய மனிதர் கேவலம் முக்கால் ரூபாய்க்கு மட்டும் பட்டாஸ்களும், மத்தாப்புகளும் வாங்குவதைப் பார்த்து அவர்களுடைய ஆச்சரியம் அதிகமாயிற்று. முதலிலே தன்னுடைய சொந்தப் பணத்தைக் கொண்டு இன்னும் அதிகம் வாங்கலாமென்று கைலாஸம் நினைத்தான். ஆனால் அப்படிச் செய்வது ஏதோ தெய்வத்துக்கு அபகாரம் செய்வது போலாகுமென்று அவனுக்குத் தோன்றியது. தகப்பனுக்கும் மக்களுக்கும் இடையே தான் பிரவேசிப்பது பாவமென்று எண்ணினான். எனவே, அந்த முக்கால் ரூபாய்க்கும் வெடி வகையராக்கள் வாங்கிக் கொண்டு கைக்கோளர் தெருவுக்கு வழி விசாரித்துச் சென்றான். அங்கே மருதமுத்து வீட்டைக் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமாயிருந்தது. ஏனெனில் மோட்டாரில் வந்திருக்கும் பிரபு, கேவலம் ‘கேடி’ மருதமுத்துவின் வீட்டைத் தேடி வந்திருப்பாரென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எவரெவர் வீட்டையோ காட்டினார்கள். கடைசியில் அந்தக் ‘கேடி’ மருதமுத்துவின் வீட்டை அடைந்தபோது, வீட்டுக்குள்ளே கைலாஸம் பார்த்த காட்சி வாசற்படியிலேயே அவனைத் திகைத்து நிற்கும்படி செய்தது. ஏழ்மை நிலையிலிருந்த குழந்தைகள் நால்வர் உயர் குலத்து மங்கை ஒருத்தியைச் சுற்றி நின்றார்கள். அவள் ஒரு மூட்டையிலிருந்து துணிமணிகளை எடுத்து அக்குழந்தைகளுக்கு ஒவ்வொன்றாய்க் கொடுத்துக் கொண்டிருந்தாள். அந்த மங்கை யார்? பன்னிரண்டு வருஷத்திற்கு முன் பார்த்த உமாவின் உருவம் கைலாஸத்தின் மனக்கண்முன் நின்றது. இவள் அவள் தமக்கையா என்ன? இல்லை, இல்லை, அவளே தான்! சில நிமிஷத்துக்கெல்லாம் உமா திரும்பிப் பார்த்தாள். ஒரு கணம் அவளுடைய கண்களில் ஆச்சரியம் தோன்றிற்று. பின்னர் அக்கண்களில் இயற்கை அமைதி குடிகொண்டது. சற்று நேரம் இருவரும் சும்மா இருந்தார்கள். பிறகு உமாவின் முகத்தில் தோன்றிய கேள்விக்குப் பதில் கூறுவான் போல் கைலாஸம், “இந்தக் குழந்தைகளின் தகப்பன் இவர்களுக்குப் பரிசு அனுப்பினான். அவற்றைக் கொண்டு வந்தேன்” என்றான். தகப்பன் என்றதும் குழந்தைகள் கைலாஸத்தை வந்து சுற்றிக் கொண்டன. ஆச்சரியமும் பயமும் ததும்பிய கண்களுடன் அவனைக் கண் கொட்டாமல் பார்த்தன. கைலாஸம் திரும்ப மோட்டாருக்குச் சென்று, அங்கிருந்த சிறு மூட்டையை எடுத்து வந்து, பட்டாஸ் கட்டுகளையும், மத்தாப்புப் பெட்டிகளையும் அவர்களிடம் கொடுத்தான். உமா கொடுத்த துணிமணிகளை வாங்கிக் கொண்ட போதெல்லாம் சாதாரணமாயிருந்த குழந்தைகளின் முகத்தில் இப்பொழுது குதூகலம் ததும்பிற்று. “ஐயா! நீங்க எங்க அப்பாவைப் பாத்தீங்களா?” என்று மூத்த பெண் தயக்கத்துடன் கேட்டாள். “ஆமாம், அம்மா! இதெல்லாம் அவர் தான் கொடுக்கச் சொன்னார்” என்றான் கைலாஸம். “அப்பா எப்ப வருவாங்க?” என்று மறுபடி அவள் கேட்டபோது, கண்களில் ஜலம் ததும்பிற்று. “இன்னும் இரண்டு மாதத்தில் கட்டாயம் வந்துவிடுவார், அம்மா!” அதற்குப் பின் அந்தப் பெண் ஒன்றும் கேட்கவில்லை. எல்லாக் குழந்தைகளும் பட்டாஸ், மத்தாப்புகளில் கவனம் செலுத்தின. “நான் போய்வருகிறேன்!” என்று கைலாஸம் உமாவைப் பார்த்துச் சொன்னான். அவள் ஒரு நிமிஷம் தயங்கிப் பிறகு, “இந்தக் குழந்தைகள் விஷயத்தில் இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொண்டீர்களே! இவர்களுடைய தகப்பன் வரும் வரையில் இவர்களைக் காப்பாற்ற ஏதாவது வழி செய்துவிட்டுப் போங்கள்” என்றாள். “அவர்களை ரக்ஷிக்கத் தேவியேதான் இங்கே இருக்கிறாளே! அவர்களுக்கென்ன குறை?” “அந்தத் தேவியின் ரக்ஷணை இனிமேல் அவர்களுக்கு இல்லை.” “ஏன் அப்படி?” “பன்னிரண்டு வருஷ காலமாக அவள் யாரைக் குறித்துத் தவம் செய்தாளோ, அந்தத் தேவன் இன்றுதான் பிரசந்நமாயிருக்கிறார். அவருக்கு மனமிருந்து அழைத்துப் போனால், அவருடன் போவேன். அவர் மறுபடியும் என்னை விட்டுச் சென்றால், மனிதர்கள் யாரும் முடிவாகச் செல்லுமிடம் செல்வேன்.” கைலாஸத்துக்கு மயிர்க்கூச்சல் எடுத்தது. இவள் என்ன சொல்கிறாள்? யாரைக் குறித்துச் சொல்கிறாள்? “கொஞ்சம் விளங்கும்படி சொன்னால் நன்றாயிருக்கும்” என்றான். “வீட்டுக்கு வந்தால் சொல்கிறேன். இந்தக் குழந்தைகள் இங்கே சந்தோஷமாயிருக்கட்டும்.” “வீட்டிற்கா?” என்று கைலாஸம் இழுத்தான். “வீட்டில் என்னைத் தவிர என் தாயார்தான் இருக்கிறாள்! வேறு யாரும் இல்லை.” பன்னிரண்டரை வருஷத்துக்கு முன்னால், தட்டிப் போன கலியாணத்துக்கு முதல் நாளிரவு, ஊர்வல உடையைக் கூட முழுதும் களையாமல் எந்த வீட்டிற்குள் கைலாஸம் பிரவேசித்தானோ, அதே வீட்டிற்குள் இன்று மாலை மறுபடியும் நுழைந்தான். “அம்மா! விருந்தாளி வந்திருக்கிறார்!” என்று உமா வாசற்படி நுழைந்ததும் கூறினாள். கொஞ்சம் வயதான ஸ்திரீ ஒருத்தி வந்து கைலாஸத்தை உற்றுப் பார்த்தாள். “பார்த்த ஞாபகமிருக்கிறது. நன்றாய் ஞாபகமில்லை…” என்று கூறி, அப்புறம் ஏதோ சொல்ல ஆரம்பித்து நிறுத்தி விட்டாள். “என் பெயர் கைலாஸம்!” என்றான். உடனே அந்த அம்மாளின் கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது. “என் பெண்ணின் தவம் வீண் போகவில்லை. பகவானே! நீர் தான் துணை” என்று தழுதழுத்த குரலில் கூறினாள். பிறகு உமாவைப் பார்த்து, “சற்று நேரம் பேசிக் கொண்டிரு, அம்மா! ஒரு நிமிஷம் சமையல் செய்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றாள். கைலாஸத்தின் நெஞ்சு வெடித்து விடும்போல் இருந்தது. மனக்குழப்பமோ சொல்ல முடியாது. “வீட்டுக்கு வந்தால் ஏதோ சொல்லுவதாகக் கூறியபடியால் வந்தேன்” என்றான். “ஞாபகம் இருக்கிறது, எப்படிச் சொல்வதென்று தான் தெரியவில்லை; கதை மாதிரிச் சொல்லலாமல்லவா?” “எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்!” “இந்த ஊரிலே துர்ப்பாக்கியசாலியான ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு அவள் பெற்றோர் தக்க வரனைத் தேடிக் கலியாணம் நிச்சயம் செய்திருந்தார்கள். கலியாணத்துக்கு முதல் நாள் இரவு மாப்பிள்ளையும் அவரைச் சேர்ந்தவர்களும் வந்து சேர்ந்தனர். அந்தப் பெண், தனக்குப் புருஷனாக வரப்போகிறவருக்கு ஒரு கடிதம் எழுதித் தன் தோழியிடம் கொடுத்தனுப்பினாள். அப்படி அவள் செய்தது தவறுதான்; ஆனால் அது அவ்வளவு பெரிய தவறு என்று அவள் அப்போது நினைக்கவில்லை. மாப்பிள்ளை அந்தக் கடிதத்தைப் பார்த்துக் கோபித்துக் கொண்டு அன்றிரவே புறப்பட்டுப் போய்விட்டார்.” “அந்தப் பெண் தன்னுடைய செயலால் நேர்ந்த விபரீதத்தை அறிந்தபோது துயரக் கடலில் ஆழ்ந்தாள். தன்னைத் தானே நொந்து கொண்ட போதிலும், தான் செய்த தவறை வெளியே சொல்ல வெட்கிப் பேசாமல் இருந்தாள். ஆனால் வேறு கலியாணத்தைப் பற்றிப் பேச்சு வந்தபோது தகப்பனாரிடம் உண்மையை ஒப்புக் கொள்ள நேர்ந்தது. தன் மனத்திலே வரித்து ஒருமுறை நிச்சயமானவரைத் தவிர வேறு யாரையும் மணக்க மாட்டேன் என்று கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டாள். அவள் தகப்பனார் அதே மாப்பிள்ளையைப் பற்றி மறுபடியும் விசாரித்தார். ஆனால் அவர் உடனே ஊரை விட்டுப் போய்விட்டாரென்றும், அவரைப் பற்றி யாருக்கும் ஒரு தகவலும் தெரியாதென்றும் செய்தி கிடைத்தது.” “ஆனால் அந்தப் பெண் மட்டும் நம்பிக்கை இழக்கவில்லை. தன்னுடைய ஹிருதயத்தில் உண்மை அன்பு இருந்தபடியால், என்றைக்காவது ஒரு நாள் அவர் திரும்பி வருவார் என்று நம்பியிருந்தாள். ஒரு வருஷமல்ல, இரண்டு வருஷமல்ல, பன்னிரண்டு வருஷங்கள் அந்த நம்பிக்கையுடன் கழித்தாள்…” “அவள் அனுப்பிய கடிதத்தில் என்ன எழுதியிருந்தது என்று சொல்லவில்லையே?” என்று கைலாஸம் கேட்டான். “அந்தக் கடிதமே இருக்கிறது. இதோ கொண்டு வருகிறேன்!” என்று உமா எழுந்திருந்து சென்று ஒரு மிகப் பழைய பழுப்படைந்த காகிதத்தைக் கொண்டு வந்து தந்தாள். அதில் பின் வருமாறு எழுதியிருந்தது. "என் உயிருக்குயிரான பிராணநாதருக்கு, நான் இதை எழுதுவது தவறாயிருந்தால் தயவு செய்து மன்னிக்கும்படி பிரார்த்திக்கிறேன். தாங்கள் கலியாணத்திற்குக் கதர் வேஷ்டிதான் வேண்டுமென்று சொல்லி அப்படியே வாங்கியிருப்பதாகத் தெரிகிறது. இதைப்பற்றி என் தோழிகள் எல்லாம் என்னைப் பரிகாசம் செய்கிறார்கள். ‘கோணிச்சாக்கு மாப்பிள்ளை’ என்று சொல்லுகிறார்கள். ஆகையால் தாங்கள் என் மேல் கருணை கூர்ந்து பட்டு வேஷ்டியே வாங்கிக் கொள்ளும்படி வணக்கமாய்க் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, அடியாள் உமா" கைலாஸம், அதை இரண்டு தடவை, மூன்று தடவை படித்துவிட்டு, முகத்திலே திகைப்புடன், “இது என்ன? நான் படித்த கடிதம் இது அல்லவே?” என்றான். “நான் எழுதிய கடிதம் இதுதான். ஆனால் நீங்கள் படித்த கடிதம் வேறு. அதை நீங்கள் மேல் கவருடன் காட்டிக் கேட்டதால், மேல் விலாசத்தின் எழுத்தைப் பார்த்து விட்டு ‘நான் எழுதியது தான்’ என்று சொல்லி விட்டேன். நீங்கள் அப்பால் போனதும், உறையைப் பிரித்துப் பார்த்தபோது தான் விஷயம் தெரிந்தது. என் தோழி விஷமத்துக்காக ஒரு நாவலிலிருந்து அந்த மாதிரி எடுத்து எழுதி உங்களிடம் கொடுத்து விட்டாள். அதைப் படித்ததும் அப்போது எனக்கு ஏற்பட்ட திகைப்பில் இன்னது செய்வதென்று தோன்றவில்லை. நீங்களோ உடனே போய் விட்டீர்கள். பகவானே! அந்த நாட்களில் நான் அநுபவித்த வேதனையை நினைத்தால் இப்போதும் உடல் நடுங்குகிறது” “அடடா! என்ன அநியாயம்! அந்த விஷமக்காரப் பெண் அப்படிப்பட்ட காரியம் ஏன் செய்தாள்?” “பாவம்! அவள் பட்ட துன்பமும் கொஞ்சமில்லை. தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டு அழு அழு என்று அழுதாள். என்னுடைய அசல் கடிதத்தைத் திருப்பிக் கொடுத்தாள். ஆனால், அப்போதும் சரி, இப்போதும் சரி, அவள் பேரில் எனக்குக் கோபமே கிடையாது. நான் உங்களைக் ‘கதர் கட்டிக் கொள்ள வேண்டாம்’ என்று எழுதியதற்குத் தண்டனையாக ஏற்பட்டதுதான் என்னுடைய துன்பம் என்றே கருதி வந்தேன். அதற்குப் பிராயச்சித்தமாக, அந்த வருஷம் முதல் ஒவ்வொரு தீபாவளிக்கும் ஏழைகளுக்குக் கதர் வேஷ்டி இனாம் அளித்து வருகிறேன். இந்த வருஷம் வாங்கிய கதர் வேஷ்டியில் தற்செயலாக ஒரு ஜோடி மிகுந்திருக்கிறது…” “மருதமுத்து மகாராஜனாயிருக்கவேண்டும். அவன் சிறையிலிருந்து தப்பி ஓடி வந்திராவிடில் இன்று உன்னை நான் சந்தித்திருக்க மாட்டேனல்லவா?” என்றான் கைலாஸம். “அவன் ஏழேழு ஜன்மத்துக்கும் மஹாராஜனாயிருக்கட்டும். அவன் போன வருஷத்தில் எங்கள் வீட்டில் கன்னம் வைத்துத் திருடிவிட்டு ஜெயிலுக்கும் போயிராவிட்டால், இன்று அவன் குழந்தைகளுக்குத் துணி வாங்கிக் கொண்டு நான் அங்கே வந்திருக்கமாட்டேன்” என்றாள் உமா. பன்னிரண்டு வருஷ காலமாகத் தீபாவளிக் கொண்டாட்டம் இல்லாதிருந்த பெரிய வீட்டில் இந்த வருஷம் தடபுடலாகத் தீபாவளி உத்ஸவம் நடப்பதைப் பார்த்துப் பெருமாள்புதூர்வாசிகள் அளவிலாத ஆச்சரியம் அடைந்தார்கள். கைலாஸத்துக்கும் உமாவுக்கும் அந்தத் தீபாவளி எவ்வளவு சந்தோஷமாயிருந்திருக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ? ஆனால் அவ்வளவு நெடுங்காலம் பிரிந்திருந்து எதிர்பாராத முறையில் ஒன்று சேர்ந்த அந்தக் காதலர்களின் ஆனந்தங்கூட அதே சமயத்தில் மருதமுத்துவின் மக்கள் ஒரு சீனவெடி சுட்டதில் அடைந்த இன்பத்துக்கு ஈடாகுமா என்பது சந்தேகம் தான். 13. கோவிந்தனும் வீரப்பனும் கோவிந்தனும், வீரப்பனும் அண்டை வீட்டுக்காரர்கள். வாழ்க்கை நிலைமையில் ஏறக்குறைய இருவரும் ஒத்திருந்தார்கள். கோவிந்தனுக்குப் பருத்தி ஆலையில் வேலை; வாரம் ஆறரை ரூபாய் சம்பளம். வீரப்பனுக்கு ரயில்வே ஒர்க் ஷாப்பில் வேலை; அவனுக்கும் வாரம் ஏழு ரூபாய் சம்பளம். மனைவியும் இரண்டு குழந்தைகளும் கோவிந்தனுக்கு உண்டு. வீரப்பனுக்கும் அப்படியே. கோவிந்தன் வாரத்திற்கு முக்கால் ரூபாய் வாடகை கொடுத்து ஐந்தாறு குடித்தனங்கள் உள்ள வீட்டில் ஒரு சின்ன அறையில் குடியிருந்தான். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் இருந்தது. வீரப்பன் ஒர்க் ஷாப்பிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் ஒரு சாராயக் கடை உண்டு. அவன் அந்தக் கடை வழியாகத் தான் வீட்டுக்கு வருவது வழக்கம். கோவிந்தன் ஆலையிலிருந்து வீட்டுக்கு வரும் வழியிலும் கள்ளுக்கடை, சாராயக் கடை, பீர்க்கடை எல்லாம் உண்டு. ஆனால் அவன் குறுக்கு வழியாகச் சந்து பொந்துகளில் புகுந்து வீட்டுக்கு வருவது வழக்கம். இந்தச் சிறு வித்தியாசத்தினால் அவர்களுடைய வாழ்க்கை முறையில் நேர்ந்த பெரும் வேற்றுமைச் சொல்கிறேன் கேளுங்கள். சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு கோவிந்தனுக்கு ஆலையில் சம்பளம் கொடுத்தார்கள். ரூபாய் ஆறரையையும் அவன் வாங்கிப் பத்திரமாய் முடி போட்டுக் கொண்டு குறுக்கு வழியாய் வீடு வந்து சேர்ந்தான். அவன் மனைவி சுந்தரமும், மகன் நடராஜனும் சந்தோஷத்துடன் அவன் வரவை எதிர்பார்த்திருந்தார்கள். நடராஜன் திம், திம் என்று குதித்துக் கொண்டு “அப்பா! சமுத்திரம் பார்க்கப் போகவேண்டும். சமுத்திரம் பார்க்கப் போகவேண்டும்!” என்று கூச்சலிட்டான். பிறகு கோவிந்தனும் அவன் மனைவியும் உட்கார்ந்து கணக்குப் பார்த்தார்கள். பின் வருமாறு செலவு ஜாபிதா போட்டார்கள்:- ரூ. அ. பை வீட்டு வாடகை 0 12 0 அரிசி 1 8 0 பருப்பு, உப்பு, புளி சாமான்கள் 0 8 0 மோரும், நெய்யும் 0 8 0 எண்ணெய் 0 4 0 காய்கறி முதலிய சில்லறை செலவுகள் 0 8 0 4 0 0 வழக்கமாக சேவிங்ஸ் பாங்கியில் போட்டு வந்த முக்கால் ரூபாயையும் சேர்த்து ரூ. 4-12-0 தனியாக எடுத்து வைத்தார்கள். பாக்கிச் செலவு செய்வதற்கு ரூ. 1-12-0 கையில் இருந்தது. “சரி, சமுத்திரக் கரைக்குப் போகலாம், புறப்படு!” என்றான் கோவிந்தன். சுந்தரம் மகனுக்குச் சட்டையும் குல்லாவும் போட்டு நெற்றியில் பொட்டு வைத்தாள். தானும் முகங்கழுவிக் கண்ணாடி பார்த்துக் குங்குமப்பொட்டு வைத்துக் கொண்டாள். பிறகு கைக்குழந்தைக்குக் கம்பளிச் சட்டை போட்டு இடுப்பில் தூக்கிவைத்துக் கொண்டு கிளம்பினாள். வழியில் கோவிந்தன் காலணாவிற்குப் பெப்பர்மெண்டு வாங்கி மகனுக்குக் கொடுத்தான். கடற்கரையில் காற்றுவாங்கப் பெரிய பெரிய மனிதர்களெல்லாம் வந்திருந்தார்கள். ஆனால் பெரிய மனிதர், சின்ன மனிதர் எல்லாருக்கும் ஒரே காற்றுத்தான் அடித்தது. கோவிந்தனும் சுந்தரமும் அலையோரத்தில் உட்கார்ந்து ஆனந்தமாய் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். மோட்டாரில் வந்தவர்களைவிட இவர்கள் அருபவித்த இன்பந்தான் அதிகமென்று சொல்லலாம். நடராஜன் குதித்து விளையாடினான். அலை மோதிக்கொண்டு வரும்போது கரைக்கு ஓடுவதும், அலை திரும்பிச் செல்லும்போது அதைப் பிடிக்க ஓடுவதும் அவனுக்கு அற்புதமான விளையாட்டாயிருந்தது. இந்த சமயத்தில் தூரத்தில் பட்டாணிக் கடலை முறுக்கு விற்பவன் போய்க் கொண்டிருந்தான். நடராஜன் ஓடிச் சென்று அவனை அழைத்து வந்தான். அரையணாவுக்கு முறுக்கும் முக்காலணாவுக்குக் கடலையும் வாங்கினார்கள். நடராஜனுக்குத் தலைகால் தெரியவில்லை. திரும்பி வீடுபோய்ச் சேரும் வரையில் தனக்குக் கிடைத்த பங்கைத் தின்று கொண்டிருந்தான். பொழுது போனதும் அவர்கள் வீட்டிற்குத் திரும்பினார்கள். மத்தியானமே சமைத்து வைத்திருந்த சாப்பாடு தயாராயிருந்தது. எல்லாரும் சாப்பிட்டுவிட்டுக் கவலையின்றித் தூங்கினார்கள். கடற்கரைக்குப் போய் வந்ததற்காக கோவிந்தனுக்கு உண்டான செலவு ஒன்றரை அணாதான். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்ததும் இன்றைக்கு என்ன செய்யலாமென்று யோசித்தார்கள். பீப்பிள்ஸ் பார்க்குக்குப் போக வேண்டுமென்று தீர்மானமாயிற்று. சுந்தரம் அவசர அவசரமாய்ச் சமையல் செய்தாள். கோவிந்தன் மார்க்கட்டுக்குப் போய்க் காய்கறி வாங்கிக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு வேஷ்டி சட்டைகளுக்குச் சவுக்காரம் போட்டுத் துவைத்தான். பிறகு குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தான். நடராஜன் வீட்டுக் கணக்குகளைப் போட்டான். எவ்வளவோ அவசரப்படுத்தியும் கிளம்புவதற்கு மணி ஒன்றாகி விட்டது. சுந்தரம் சிற்றுண்டிக்காகக் கொஞ்சம் அப்பம் செய்து ஒரு பொட்டணத்தில் கட்டி எடுத்துக் கொண்டாள். புரசவாக்கம் வரையில் அவர்கள் நடந்துசென்று அங்கிருந்து டிராம் வண்டியில் போனார்கள். மாலை நான்கு மணி வரையில் பீப்பிள்ஸ் பார்க்கைச் சுற்றிச்சுற்றி வேடிக்கை பார்த்தார்கள். நடராஜனுக்குக் குரங்குகளைவிட்டுப் பிரிந்து வருவதற்கு மனமே இல்லை. மூர்மார்க்கட்டில் ஊதல் வாங்கித் தருவதாய்ச் சொன்னதின் மேல்தான் அவன் வந்தான். இதுவரை டிராம் சத்தம் ஒன்றறை அணாவும், பீப்பிள்ஸ் பார்க் டிக்கட் மூன்றணாவும் ஆக நாலரை அணா செலவாயிருந்தது. மூர்மார்க்கட்டில் அவர்கள் பின்வரும் சாமான்கள் வாங்கினார்கள்:- ரூ. அ. பை கோவிந்தனுக்குப் பித்தளை டிபன்பாக்ஸ் 0 11 0 சுந்தரத்திற்கு ஒரு தந்தச் சீப்பு 0 2 6 நடராஜனுக்கு ஒரு ஊதலும் பெல்ட்டும் 0 3 0 குழந்தைக்கு ஒரு ரப்பர் பொம்மை 0 2 6 சாயங்காலம் 5 மணிக்கு அவர்கள் வீடுபோய்ச் சேர்ந்தார்கள். போகும்போது டிராம் சத்தமும் சேர்ந்து ரூ. 1-9-0 செலவாயிற்று. நேற்று ஒன்றரை அணா செலவாயிற்று. ஆக ரூ. 1-10-6 போக பாக்கி இருந்த ஒன்றரை அணாவை ஒரு சிமிழில் போட்டு வைத்தார்கள். சுந்தரத்துக்குச் சேலை வாங்குவதற்காக இந்த மாதிரி ஏற்கனவே ரூ. 2-8-0 வரையில் சேர்ந்திருந்தது. மறுநாள் திங்கட்கிழமை காலையில் சுந்தரம் புதிய தந்தச் சீப்பினால் தலையை வாரி முடித்து, நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டாள். சந்தோஷமாய்ப் பேசிக் கொண்டு சுறுசுறுப்பாக வீட்டுக் காரியங்களைச் செய்தாள். ஏழரை மணிக்குள் கோவிந்தனுக்குச் சோறுபோட்டு, மத்தியானத்திற்கும் பலகாரம் பண்ணிக் கொடுத்தாள். கோவிந்தன் ஸ்நானம் செய்து, சுத்தமான வேஷ்டியும் சட்டையும் அணிந்து, புதிய டிபன்பாக்ஸை கையில் எடுத்துக் கொண்டு உற்சாகத்துடன் ஆலைக்குப் புறப்பட்டான். நடராஜன் இடுப்பில் புதிய பெல்டு போட்டு அதில் ஊதலைத் தொங்கவிட்டுக் கொண்டு குதூகலத்துடன் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பினான். குழந்தை கையில் ரப்பர் பொம்மையை வைத்துக் கொண்டு ஆனந்தமாய் விளையாடிக் கொண்டிருந்தது. இனி அடுத்த வீட்டில் வீரப்பனுடைய குடும்பத்தார் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையை எப்படிக் கழித்தார்களென்று பார்ப்போம். சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு வீரப்பனுக்கு ஏழு ரூபாய் கிடைத்தது. அவன் அதை வாங்கி அலட்சியமாய்த் தன் கந்தல் சட்டைப்பையில் போட்டுக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டான். வழியில் பீர்க்கடையைக் கண்டதும் ஒரு நிமிஷம் நின்று தயங்கினான். அப்போது உள்ளிருந்து ஒருவன் “அண்ணே! ஏன் நிற்கிறாய்? வா!” என்றான். வீரப்பன் கடைக்குள் நுழைந்தான். முதலில் ஒரு சீசா குடித்துவிட்டுக் கிளம்பி விடலாமென்று நினைத்தான். ஆனால் ஒரு சீசா குடித்ததும் இன்னொரு சீசா குடித்தால்தான் தாகம் தணியுமென்று தோன்றிற்று. ஆனால் தடுத்துக் கொண்டான். ஒரு ரூபாய் கொடுத்துச் சில்லறை கேட்டான். சில்லறை கொடுக்கச் சற்று நேரமாயிற்று. இதற்குள் சில சிநேகிதர்கள் வந்தார்கள். அவர்கள் குடிக்கும்போது தான் மட்டும் சும்மாயிருக்கக் கூடாதென்று இன்னொரு சீசா கேட்டான். அதையும் குடித்த பிறகு “இன்று இரண்டு சீசா பீர் குடித்தாகிவிட்டது. நாளைக்கு வரக்கூடாது. ஆகையால் சாராயக் கடையில் ஒரு திராம் வாங்கிக் குடித்து விடலாம்” என்று யோசித்து அப்படியே சாராயக் கடைக்குப் போனான். ஒரு திராம் வாங்கிக் குடித்து விட்டுப் பிறகு இன்னொரு அரை திராம் போடச் சொன்னான். கடைக்காரன் கொடுத்த சில்லறையில் ஒரு அரைக்கால் ரூபாய் செல்லாப்பணம். வீரப்பனுக்கு போதை நன்றா யேறியிருந்தபடியால் அது தெரியவில்லை. கடைக்காரன் கொடுத்த சில்லறையை எடுத்துச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். அவற்றில் நல்ல இரண்டணா ஒன்று சட்டைப் பையில் விழாமல் தரையில் விழுந்தது. அதை அவன் கவனிக்கவில்லை. ஆகவே சாயங்காலம் ஆறு மணிக்கு நல்ல பணம் ரூ. 5-12-0ம் செல்லாப் பணம் இரண்டணாவும் எடுத்துக் கொண்டு அவன் வீடு போய்ச் சேர்ந்தான். வீட்டில் அரிசி, பருப்பு சாமான் ஒன்றும் கிடையாது. அன்று காலைச் சாப்பாட்டுக்கே நாகம்மாள் அரிசி கடன் வாங்கிச் சமைத்திருந்தாள். எனவே மிகுந்த எரிச்சலுடன் அவள் வீரப்பன் வரவுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். வந்ததும் சண்டை பிடிக்கத் தொடங்கினாள். வீரப்பன் தன்னிடமிருந்த பணத்தை அவள் முகத்தில் வீசி எறிந்துவிட்டுத் தானும் கூச்சல் போட்டான். இதைக் கண்டு அவர்களுடைய மகன் ராமன் - ஏழு வயது பையன், பயந்து வாசல்புறம் ஓடிப் போனான். நாகம்மாள் அதற்குப் பிறகு கடைக்குப் போய் சாமான் வாங்கிக்கொண்டு வந்து சமையல் செய்தாள். சாப்பிட்டு முடிய இரவு பத்து மணியாயிற்று. அப்புறம் அரைமணி நேரம் அவர்கள் காட்டுப் பூனைகள் போல் சண்டை போட்டுக் கொண்டிருந்துவிட்டுப் பிறகு தூங்கிப் போனார்கள். மறுநாள் காலையில் கறிகாய் வாங்கி வருவதற்காக வீரப்பன் பணம் கேட்டான். நாகம்மாள் செல்லாப்பணம் இரண்டணாவைக் கொண்டு வந்து கொடுத்தாள். வீரப்பன் உடனே சண்டை பிடிக்கத் தொடங்கினான். முதல் நாள் இரவு கடைசாமான் வாங்கியபோது நாகம்மாள் ஏமாந்து செல்லாப்பணம் வாங்கி வந்திருக்க வேண்டும் என்று சொன்னான். “குடி வெறியில் நீதான் வாங்கிக் கொண்டு வந்தாய்” என்றாள் நாகம்மாள். இந்த சண்டையின்போது ராமன் நடுவில் வந்து “நோட்டு பென்சில் வேண்டும்” என்றான். அவனுக்கு ஒரு அறை கிடைத்தது. நாகம்மாள் போட்டிக்குக் கைக் குழந்தையை அடித்தாள். ஏக ரகளையாயிற்று. வீரப்பனுக்கு வேஷ்டி துவைக்க நேரங் கிடைக்கவில்லை. இத்தனை தொந்தரவுகளுக் கிடையில் நாகம்மாள் சமைத்தபடியால் குழம்புக்கு உப்புப்போட மறந்து போனாள். சாப்பிடும்போது வீரப்பன் குழம்புச் சட்டியைத் தூக்கி நாகம்மாள் மேல் எறிந்தான். அது குழந்தை மீது விழுந்தது. மறுபடிய்ம் ரணகளந்தான். இன்று பீர்க்கடைக்குப் போகவேண்டாமென்று முதல்நாள் வீரப்பன் தீர்மானித்திருந்தான். ஆனால் மாலை மூன்று மணி ஆனதும் இந்தத் தொல்லைகளையெல்லாம் மறந்து சற்று நேரம் “குஷி”யாக இருந்து வரலாமென்று தோன்றிற்று. ஆகவே முழு ரூபாய் ஒன்றை எடுத்துக் கொண்டு சாராயக் கடையைத் தேடிச் சென்றான். சாராயக் கடையில் பன்னிரண்டணா தொலைந்தது. அடுத்த சந்தில் சூதாடும் இடம் ஒன்று உண்டு. வீரப்பன் அங்கே போனான். பாக்கி நாலணாவையும் அங்கே தொலைத்தான். இருட்டிய பிறகு வீட்டுக்குக் கிளம்பினான். வழியில் குடிமயக்கத்தில் விளக்குக் கம்பத்தில் முட்டிக் கொண்டான். ஒரு புருவம் விளாங்காய் அளவுக்கு வீங்கிப் போயிற்று. வீட்டுக்குப் போனதும் படுத்துத் தூங்கிப் போனான். நாகம்மாள் சாயங்கால மெல்லாம் ஒரு மூலையில் படுத்து அழுது கொண்டிருந்தாள். இரவு சமைக்கவில்லை. ராமன் மற்றப் பிள்ளைகளுடன் தெருவிலும் சாக்கடையிலும் விளையாடிவிட்டு இரவு ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்தான். நாகம்மாள் மத்தியானம் மீதியிருந்த சோற்றை அவனுக்கும் போட்டுத் தானும் சாப்பிட்டான். வீரப்பனை எழுப்பிச் சோறு போடவில்லை. திங்கட்கிழமை காலையில் வீரப்பனுக்குத் தலை நோவு பலமாயிருந்தது. புருவம் வீங்கி ஒரு கண் மூடிப்போயிற்று. முணு முணுத்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான். நாகம்மாள் மெதுவாகத்தான் எழுந்திருந்தாள். முதல் நாள் அழுது அழுது இப்பொழுது அவள் முகம் பார்க்க முடியாதபடி கோரமாயிருந்தது. தலைமயிர் ஒரே பரட்டை. முனகிக் கொண்டே குழம்பும் சோறும் செய்தான். வீரப்பன் அவசர அவசரமாய் அறை வயிற்றுக்குச் சாப்பிட்டுவிட்டு மத்தியானச் சோற்றுக்காகச் சண்டை போட்டு இரண்டணா எடுத்துக்கொண்டு அழுக்குச் சட்டையும் கந்தல் வேஷ்டியுமாய் ஓடினான். ராமனுக்கு அன்று காலை இரண்டு மூன்று தடவை அடி விழுந்திருந்தது. கணக்குப் போடவில்லையாகையால் பள்ளிக்கூடத்துக்கும் போய் அடிபடி வேண்டுமேயென்று அவன் கண்ணைக் கசக்கிக் கொண்டே பள்ளிக்கூடம் சென்றான். கைக் குழந்தையைக் கவனிப்பார் யாருமில்லை. அது ஒரு மூலையில் படுத்து அழுது கொண்டிருந்தது. வீரப்பனைப் போன்ற எத்தனையோ ஏழைத் தொழிலாளிகளின் வாழ்க்கை கள்ளு, பீர், சாராயக் கடைகளினால் பாழாகி வருகின்றது. அந்தக் கடைகளைத் தொலைக்க நீங்கள் என்ன உதவி செய்யப் போகிறீர்கள்? 14. சாரதையின் தந்திரம் “அடி அக்கா, எனக்கு உன்னைத் தவிர வேறு யாரிருக்கிறார்கள்? என் கவலைகளை யாரிடம் சொல்லி ஆறுவேன்? இத்தனை நாளாக எட்டிப் பாராமல் இருந்துவிட்டாயே!” என்று சொல்லி, சாரதையின் மடியில் முகத்தை வைத்துக் கொண்டு கண்ணீருகுத்தாள் லக்ஷ்மி. “அசடே நீ என்ன இன்னமும் பச்சைக் குழந்தையா? பதினெட்டு வயதாகிறது. ஒரு குழந்தை பெற்றெடுத்து விட்டாய். வெட்கமில்லாமல் அழுகிறாயே. சங்கதி என்ன? சொல்” என்று சொல்லி, சாரதை அருமையுடன் லக்ஷ்மியின் கண்ணீரைத் துடைத்தாள். இப்பெண்மணிகள் மயிலாப்பூரில் மாடவீதி ஒன்றிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு தெருவில் ஓர் அழகிய புது வீட்டின் மாடி மீதிருந்த ஹாலில் அமர்ந்திருந்தனர். அவர்களில், சாரதை பத்தரைமாற்று பொன்னொத்த மேனியினாள். விசாலமான நெற்றியும், அறிவு ஊறித்ததும்பும் கண்களும் படைத்தவள். அவள் கண்களினுள்ளே இருந்த கருவிழிகளோ, அங்குமிங்கும் குறுகுறுவென்று அலைந்து கொண்டிருந்தன. தன் கடைக்கண் வீச்சாகிய ஒரே ஆயுதத்தின் துணைகொண்டு ஆடவரையும் பெண்டிரையும் அடக்கியாளும் திறனுடையவள் அவள் என்பது அவ்விழிகளை ஒருமுறை பார்த்த அளவினாலே விளங்கும். அப்போதலர்ந்த ரோஜா மலரின் இதழையொத்த தன் அதரங்களில் புன்னகையிருக்க, வேறு பொன் கல் நகைகள் எதற்கு என்று கருதியே போலும், அவள் அதிக ஆபரணங்கள் அணிந்துகொள்ளவில்லை. தலைப்பில் சரிகைக்கரை போட்ட நீலநிறக் கதர்ப்புடவை அவள் மேனி அழகைப் பதின்மடங்கு மிகுதிப்படுத்திக் காட்டிற்று. இப்பொன்னொத்த வண்ணமுடையாளினின்றும் பல வகையிலும் மாறுபட்டிருந்தாள் லக்ஷ்மி. அவள் மாநிற மேனியினாள். திருத்தமாக அமைந்திருந்த அவள் திருமுக மண்டலம், இதுகாலை சோகத்தினால் வாட்டமுற்றிருந்ததாயினும், அழகும் அமைதியுமே அதன் இயற்கை அணிகள் என்பது நன்கு விளங்கிற்று. அவள் கண்ணில் அளவிடப்படாத தூய உண்மைக் காதல் பொங்கித் ததும்பிக் கொண்டிருந்தது. எல்லோரையும் மகிழ்விக்கும் இனிய குணமும் அளவற்ற அன்பும் அவள் தோற்றத்திலே நிகழ்ந்தன. சோகத்திலும் மலர்ந்திருந்தன அவளது செவ்விதழ்கள். அவள் தரித்திருந்தது. விலையுயர்ந்த சிவப்பு வர்ணப் பட்டுபுடவை. பொன் வைர நகைகளும் அவள் அணிந்திருந்தாள். லக்ஷ்மி, முத்து முத்தாகத் துளித்துப் பெருகிய கண்ணீரைத் தன் புடவைத் தலைப்பினால் துடைத்து, சாரதையின் இரு கரங்களையும் தன் கரங்களால் பிடித்துக் கொண்டு சொல்வாள். “அக்கா! எனக்கு வயதாகிவிட்டது. உண்மையே. ஆனால் உன்னைக் கண்டால் நான் குழந்தையேயாகி விடுகிறேன். என்னை விட நீ ஒரு வயதுதான் மூத்தவள். ஆயினும் எனக்கு வினாத் தெரிந்தது முதல் நீ எனக்குத் தாய் போல் இருந்து வரவில்லையா? பெற்ற தாய் இறந்த துயரத்தை நான் உணராமல் செய்தது யார்? என் சித்தி கோபித்துக் கொண்டால் உடனே உன்னிடம் ஓடி வந்து ஆறுதல் பெறுவேன்…” “இந்தக் கதையெல்லாம் இப்போதெதற்கு? இனிமேல் அம்மாதிரி நாம் குழந்தைகளாகப் போகிறோமா?” என்று சாரதை இடைமறித்துக் கூறினாள். “இல்லை அக்கா, கொஞ்சம் பொறு. நமது இளம் பிராய நட்பின் நினைவுகள் எனக்கு எத்தனை மகிழ்ச்சி அளிக்கின்றன? அத்தான், பள்ளிக்கூட விடுமுறைக்கு ஊர் வரும்போதெல்லாம், நாம் அளவு கடந்த மகிழ்ச்சியடைவோம். அவரும் நம்மிடம் பிரியமாயிருந்தார். நமக்குப் பாடஞ் சொல்லிக் கொடுப்பார். கதைகள் சொல்லிக் காலங்கழிப்பார். நம்முடன் சேர்ந்து விளையாடுவார். ஊரில் எல்லோரும் அத்தானுக்கு உன்னைக் கலியாணம் செய்து கொடுக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டார்கள். நீ மட்டும் ‘இல்லவே இல்லை. அத்தானுக்கு லக்ஷ்மிதான் வாழ்க்கைப்படப் போகிறாள். அத்தானும் சாது, லக்ஷ்மியும் சாது. அவர்கள் இருவருக்கும்தான் பொருத்தம். நான் நல்ல போக்கிரி ஒருவனுக்கு வாழ்க்கைப்படப் போகிறேன். பின்னர், அவனையடக்கிச் சாதுவாக்கி விடுவேன்’ என்று வேடிக்கையாகச் சொல்லிக் கொண்டு வருவாய். அப்போதெல்லாம் உன்னிடம் எவ்வளவு நன்றி பாராட்டினேன்? அவ்வளவுக்கு இப்போது உன்னைச் சபிக்கிறேன்” என்று கூறுகையில், லக்ஷ்மி விம்மி விம்மி அழலானாள். சாரதைக்குச் சற்று விளங்க ஆரம்பித்தது. “அடியே என்ன சொல்லுகிறாய்? அத்தான் உன்னைத் துன்புறுத்துகிறானா, என்ன சொல்லு?” என்றாள். அவள் கண்களின் ஓரங்கள் சிறிது சிவந்து கோபக்குறி காட்டலாயின. “ஐயோ, துன்பப்படுத்தினால் பாதகமில்லையே? உன்னிடம் சொல்லியிருக்கவே மாட்டேன்… ஆம், அக்காலத்தில் எல்லாம் நீ சொன்னபடியே ஆயிற்று. தெய்வம் நமக்குச் சகாயமாயிருந்தது. கடைசியாக, அத்தானுக்கு என்னையே கலியாணம் செய்து கொடுத்தார்கள். உனக்கு அகத்துக்காரர் பட்டணத்திலிருந்து வந்தார். நீ சொல்லியபடியே கிராப்பும், உடுப்பும், பூட்ஸும், மூக்குக் கண்ணாடியுமாக அவர் வந்தார். நாங்கள் ‘போக்கிரி மாப்பிள்ளை’ என்று சொல்லிக் காட்டினோம். ‘பேசாமலிரு, இரண்டு வருஷத்தில் எல்லாம் அடக்கிப் போடுகிறேன்’ என்று நீ சொல்லிக் கொண்டு வந்தாய். அந்த மாதிரியே செய்து முடித்தாய். காலரும் கழுத்து சுருக்கும் மாட்டிக் கொண்டு வந்தவர். இப்பொழுது நாலுமுழக் கதர்த் துணியுடன் நின்று வருகிறார். ஆனால், என்னுடைய சாது அத்தானோ?” “அதைச் சொல்! என்ன செய்தான்?” “நீ அவர் மீது கோபிப்பதில் பயனில்லை. அக்கா! எனக்குச் சாமர்த்தியமில்லை, அழகில்லை, அதிர்ஷ்டமும் இல்லை. அவ்வளவுதான். இருந்தாலும் உன்னிடம் என் குறையைச் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வேன்? மேலும் எல்லாம் உன்னாலேயே வந்தது. நீ ஏன் திருவல்லிக்கேணிக்குப் போனாய்? போனதுதான் போனாய்; எங்களை ஏன் உடன் அழைத்துக் கொள்ளவில்லை? நீ போன பிறகே எனக்கு இத்துயர் வந்தது.” “ஆ, கள்ளி, இந்த ஒரு வருஷமாகவா நீ இப்படிக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாய்? ஏன் இத்தனை நாளாக எனக்குச் சொல்லவில்லை?” "இல்லை, அக்கா! இதுவரை எனக்குத் திட்டமாக விவரம் தெரியவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு தான் தெரிந்தது. அதற்குப் பின் நீ இங்கு வரவேயில்லை. நீ இவ்வூரைவிட்டுப் போவதற்கு முன்பு எங்கள் வாழ்க்கையைப் பற்றி உனக்குத் தெரியுமே! அத்தகைய இன்ப வாழ்க்கை இனி இந்த ஜன்மத்தில் உண்டா என்று நான் ஏங்குகிறேன். ஆபீசிலிருந்து அவர் நேரே வீட்டுக்கு வருவார். சில தினங்கள் நாங்கள் எல்லாரும் சேர்ந்து கடற்கரைக்குப் போவோம். என்றாவது ஒரு நாள் சினிமா அல்லது கதை, பாட்டுக் கச்சேரிக்குச் செல்வோம். என்னை அழைத்துக் கொள்ளாமல் அவர் எங்கும் போனதில்லை. வெளியே போகாத நாட்களில் புத்தகம் ஏதேனும் வாசித்துக் காட்டுவார். இல்லாவிடில், பாடச் சொல்வார். ஆபீசுக்குப் போக வேண்டியிருக்கிறதே என்று கஷ்டத்துடன் சொல்வார். வேறெங்கும் நிமிஷமும் தங்கமாட்டார். ஆனால், நீ இவ்வூரை விட்டுப்போன இரண்டொரு மாதங்களில், அதாவது இவ்வருஷ ஆரம்பத்தில், இந் நிலைமை மாறிவிட்டது. சில தினங்களில், வெகு நேரங்கழித்து வீட்டுக்கு வருவார். சனி ஞாயிறுகளில் கடற்கரை முதலிய இடங்களுக்கு என்னை அழைத்துக் கொண்டு போவதை நிறுத்திவிட்டார். என்னுடன் பேசுவதிலேயே அவருக்கு முன்போல் இன்பமில்லையென்பதைக் கண்டேன். ஜனவரி, பிப்ரவரி இவ்விரண்டு மாதமும் இவ்வாறே நிகழ்ந்து வந்தது. பிறகு அவ்வளவு மோசமில்லை யாயினும் முன்னிருந்த அன்பும் ஆதரவும் பார்க்க முடியவில்லை. முன்னெல்லாம் சீட்டாட்டம் என்றால் எரிந்து விழுந்து கொண்டிருந்தவர், இப்போது சீட்டாட்டத்தில் அளவிறந்த பித்துக் கொண்டார். சில தினங்களில் அவருடைய நண்பர்களைக் கூட்டிக்கொண்டு வந்து சீட்டுக் கடை போட்டு விட்டார். எல்லாருக்கும் காபி வைத்துக் கொடுக்கச் சொல்வார். அப்பா! எத்தகைய நண்பர்கள்! அவர்களைக் கண்டாலே எனக்கு எரிச்சலாயிருந்தது. ஆயினும், நான் வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை. உன்னுடைய பிடிவாதத்தில் உன் அகத்துக்காரர் சுருட்டுக் குடிப்பதை விட்டுவிட்டார் என்று சொன்னாயே, அக்கா! இந்த அவமானத்தை எவ்வாறு சொல்வேன்? இதுகாறும் சுருட்டுக் குடிப்பவர்களைக் கண்டாலே அருவெறுத்து வந்தார். இப்போது தாமே சுருட்டுக் குடிக்க ஆரம்பித்து விட்டார். இவையெல்லாம் அற்ப விஷயங்களென்று நான் உன்னிடம் கூடச் சொல்லவில்லை. ஆனால், இந்த டிசம்பர் மாதம் பிறந்த பிறகே எனக்கு உண்மை தெரிய வந்தது. ஒரு நாள், அவரும் அவருடைய நண்பர்களும் பேசிக் கொண்டிருந்தபோது, கிண்டிக்கு ரயிலில் போகலாமா, மோட்டாரில் போகலாமா என்று கேட்டுக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது…" “ஐயோ, துரதிர்ஷ்டசாலியான பெண்ணே!” என்று சாரதை லக்ஷ்மியைக் கட்டித் தழுவிக் கொண்டாள். “முழுவதும் சொல்லிவிடுகிறேன், அக்கா! உடனே என் தலையில் இடி விழுந்தது போலிருந்தது. கிண்டி குதிரைப் பந்தயத்தால் அடியோடு அழிந்த குடும்பங்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோமல்லவா? அன்று நான் ஒரு தப்புக் காரியம் செய்தேன். அத்தான் வெளியே போயிருந்த போது, அவர் பெட்டியைத் திறந்து, பாங்கிக் கணக்குப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன். இந்த நான்கு வருஷமாக, மாதச் சம்பளத்தில் வீட்டுக்குச் செலவாவது போக, குறைந்தது ஐம்பது ரூபாய் நாங்கள் மீத்து வருகிறோம். முதலும் வட்டியும் சேர்ந்து குறைந்தது மூவாயிரம் ரூபாயாவது இருக்க வேண்டுமென்பது என் எண்ணம். ஆனால், பாங்கிக் கணக்கின் கடைசியில் 58 ரூபாய் சொச்சமே பாக்கி இருப்பதாகக் குறிப்பிட்டிருந்ததைக் கண்டதும், என் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டியது போலாயிற்று. இவ்வருஷ ஆரம்பத்தில் ஜனவரி, பிப்ரவரி இரண்டு மாதங்களில் சுமார் இருநூறு ரூபாய் பாங்கியிலிருந்து வாங்கப் பட்டதாக எழுதியிருந்தது. இதிலிருந்து, என்னுடைய சந்தேகங்கள் நிவர்த்தியாயின. ஆனால் என் துக்கம் பதின்மடங்கு அதிகமாயிற்று. அதற்கடுத்த சனிக்கிழமையன்று, அக்கா - வெளியில் சொன்னால் வெட்கம். போன வருஷம் இருநூறு ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்த வைரமூக்குத்தியை வாங்கிக் கொண்டு போனார். அதற்காக என்னிடம் பொய்யும் சொன்னார். யாரோ நண்பர் ஒருவர் வீட்டில் கலியாணம் என்றும், இரவல் கேட்கிறார்களென்றும் கூறினார்…” “அயோக்கியன், கோழை, திருடன்…” என்று ஸகங்ரநாம பாராயணம் செய்யத் தொடங்கினாள் சாரதை. “சை, என்னெதிரில் இப்படியெல்லாம் சொல்லாதே. நகையும் பணமும் நாசமாய்ப் போகட்டும். எங்கள் வாழ்வு குலைந்துவிடும் போலிருக்கிறதே, என்ன செய்வேன்? அவருக்குப் பத்திரிகை வந்ததும் எவ்வளவு ஆவலுடன் வாங்கிப் படிப்பார்? எவ்வளவு உற்சாகத்துடன் பத்திரிகையிலுள்ள விஷயங்களை எடுத்துச் சொல்வார்! இப்பொழுது அந்த உற்சாகமெல்லாம் எங்கேயோ போய்விட்டது. இது மட்டுமா? நான் கதர்ப்புடவைதான் கட்டிக் கொள்ள வேண்டுமென்று முன்னெல்லாம் எவ்வளவு பிடிவாதமாகச் சொல்வார்? பத்து நாளைக்கு முன் வாசலில் பட்டுப் புடவை வந்தது. வாங்கட்டுமா என்று கேட்டேன். எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள் என்றார். அந்தப் பாழாய்ப்போன குதிரைப் பந்தயத்தைத் தவிர வேறொன்றிலும் அவருக்கு இப்போது சிரத்தையில்லை. ஒரு மாதமாக இராட்டினம் சுற்றுவதையும் நிறுத்தி விட்டார். என்னிடம் இச் செய்தியை ஒளித்து வைத்திருப்பதால் என்னோடு பேசுவதற்கே அவருக்கு வெட்கமாகயிருக்கிறது. அக்கா! என்ன செய்யலாம், சொல்லேன். அவரிடம் எல்லாம் எனக்குத் தெரியுமென்று சொல்லிவிடட்டுமா? இவையெல்லாம், போனாலும் இன்னும் ஒரு பெரும் பயம் ஏற்பட்டிருக்கிறது. அவர் நண்பர்கள் எல்லாரும் குடிகாரர்கள் எனத் தெரிகிறது. ஒரு நாள் அவர் ‘அதற்குமட்டும் என்னைக் கூப்பிடாதீர்கள்’ என்று சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். ‘இன்னும் எத்தனை நாளைக்கு?’ என்று அந்த அழகான நண்பர்களில் ஒருவர் சொன்னதும் காதில் விழுந்தது. அன்றிலிருந்து, ‘இன்னும் எத்தனை நாளைக்கு’ என்றுதான் நானும் என் மனதில் கேட்டுக் கொண்டு வருகிறேன். குழந்தைப் பருவத்திலிருந்து எனக்குக் கஷ்டம் வந்தபோதெல்லாம் உன்னிடமே தஞ்சம் புகுந்தேன். இப்போதும் உன்னிடமே வந்தேன். நீயே என் வாழ்க்கையைக் காப்பாற்றித் தரவேண்டும்” என்று லக்ஷ்மி சொல்லி முடித்தாள். சாரதை எழுந்து சென்று ஜன்னலின் பக்கத்தில் தெருவைப் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நின்றாள். சற்று நேரம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்து, திரும்பி வந்தாள். “லக்ஷ்மி! இதோ பார், நளாயினி, தமயந்தி, சீதை இவர்களைப்பற்றி நீ கேள்விப்பட்டிருக்கிறாயா?” என்று கேட்டாள். லக்ஷ்மி ஒன்றும் புரியாமல், “ஆம்” என்றாள். “அவர்களுடைய வரலாறுகள் தெரியுமா?” “தெரியும்.” “அப்படியானால் இந்த விவரங்களையெல்லாம் என்னிடம் ஏன் சொன்னாய்?” லக்ஷ்மி விம்மி அழ ஆரம்பித்தாள். சாரதை அவளைக் கட்டி அணைத்துக் கொண்டு, “அடி அசடே, அழாதே. உன்னுடைய சக்தியை நீ தெரிந்து கொள்ளவில்லை. உன் உள்ளத்தில் காதல் இருக்கிறது. உன் முகத்தில் மோகம் இருக்கிறது. உன் கண்களில் இன்பம் இருக்கிறது. (அச்சமயத்தில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கண்விழித்து எழுந்தது). இதோ இந்தச் செல்வன் இருக்கிறான். இவ்வளவு ஆயுதங்களையும் கொண்டு உன் கணவனுடன் போராடி வெற்றி பெறாவிட்டால், நீ எதற்குப் பிரயோஜனம்? உன் கணவனுக்கு, குதிரைப் பந்தயத்திலும், சீட்டாட்டத்திலும் உள்ள சிரத்தை உன்னிடம் ஏற்படாவிட்டால் அது யாருடைய தவறு?” லக்ஷ்மி ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றாள். “ஒன்று சொல்கிறேன் கேள். உன் கணவன் தன் குற்றத்தை மறைக்க விரும்பும் வரையில், உனக்கு க்ஷேமம். அதைத் தெரிந்து கொண்டதாக நீ காட்டிக் கொள்ளாதே. அதற்காக உன்னிடம் அவன் ஒருக்காலும் சந்தோஷப்படமாட்டான். ஒன்றும் நேரிடாததுபோல் முன்னைவிட அதிகமாக அன்பு காட்டு. அவன் கவனத்தைக் கவர முடியாவிட்டால், உன் காதல் ஒரு பைசா பெறாது.” அடுத்த சனிக்கிழமை தான் மறுபடியும் வருவதாக உறுதி கூறிவிட்டு, சாரதை புறப்பட்டுச் சென்றாள். வீடு சென்றதும், அவள் தன் கணவன் மேஜையைத் திறந்து கடிதமும் பேனாவும் எடுத்து ஏதோ எழுதினாள். எழுதி முடிந்ததும், “சாது அத்தான் இப்படியா செய்கிறான்? இருக்கட்டும், அவனை இலேசில் விடுகிறேனா பார்க்கலாம்” என்று தனக்குதானே மொழிந்து கொண்டாள். தான் எழுதியதை இன்னொருமுறை பார்த்துவிட்டுக் கைகொட்டிச் சிரித்தாள். அடுத்த சனிக்கிழமை காலை, ஸ்ரீமான்நாராயணன் பி.ஏ. (ஆனர்ஸ்) தன் வீட்டின் முன்புறத்திலிருந்த ஹாலில் சாய்மான நாற்காலியொன்றில் சாய்ந்து கொண்டிருந்தான். நமது கதாநாயகன், பி.ஏ. (ஆனர்ஸ்) பட்டம் பெற்று அரசாங்க உத்தியோகத்தில் ரூ.150 சம்பாதிப்பவனாயினும், கதை ஆசிரியனுக்குள்ள உரிமையால் அவனை, ஏக வசனத்திலேயே அழைக்கின்றோம். கையிலிருந்த ஆங்கில மாதாந்திர சஞ்சிகையொன்றில் அவன் கருத்துச் சென்றிருந்தது. பந்தயக் குதிரையோட்டியொருவன், எப்படி ஒரு கோடீசுவரன் புதல்வியால் காதலிக்கப்பட்டுப் பல இடையூறுகளுக்குள்ளாகி, கடைசியில் அவளை மணம் புரிந்தான் என்று கூறும் ஒரு சிறு கதையை அவன் படித்துக் கொண்டிருந்தான். நாற்காலிச் சட்டத்தின் மீது ஆங்கில தினசரிப் பத்திரிகையும், ஒரு சிறு புத்தகமும் கிடந்தன. பத்திரிகையில் பந்தயங்களையும் மற்றும் விளையாட்டுகளையும் பற்றிய விவரங்கள் உள்ள பக்கம் மேலே காணப்பட்டது. புத்தகம் கிண்டி குதிரைப் பந்தயத்தில் போட்டியிடப்போகும் பற்பல குதிரைகளைப் பற்றிய விவரங்கள் அடங்கியது. நாராயணனது முழுக் கவனத்தையும் அக்கதை கவர்ந்ததாகத் தெரியவில்லை. அடிக்கடி சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தை ஏறிட்டு பார்த்துக் கொண்டிருந்தான். மணி பத்தரை ஆனதும், சஞ்சிகையை மூடி வைத்துவிட்டு “லக்ஷ்மி, சமையல் ஆகவில்லையா இன்னும்?” என்று உரத்த குரலில் கேட்டான். “ஆகிவிட்டது, வாருங்கள்.” இச்சமயத்தில் “ஸார், தபால்!” என்று கூறிக் கொண்டு தபால்காரன் வந்தான். நாராயணன் எழுந்து சென்று கடிதத்தை வாங்கி உறையை உடைத்து உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தான். அவன் கண்களிலே அப்போது தோன்றிய அசட்டுப் பார்வை கடிதத்தின் பொருள் அவனுக்கு விளங்கவில்லையென்று காட்டிற்று. கைக்குட்டையை எடுத்துக் கண்களை நன்றாகத் துடைத்துக் கொண்டு, மற்றொரு முறை படித்தான். அக்கடிதத்தில் பின் வருமாறு எழுதப்பட்டிருந்தது:- பிரியமுள்ள ஐயா, ஆலகால விஷத்தையும் நம்பலாம் ஆற்றையும் பெருங்காற்றையும் நம்பலாம் சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தயங்கித் தவிப்பரே என்ற பாட்டைத் தங்கள் சிந்தையிற் பதித்தல் நலம். தங்கள் நன்மையை விரும்பும் நண்பன். “ஏன் சாப்பிட வரவில்லை?” என்று குயிலோசையினும் இனிய குரலில் கேட்டுக் கொண்டு வந்தாள் லக்ஷ்மி. “ஏதோ கடிதம் வந்திருக்கிறது போலிருக்கிறதே. எங்கிருந்து வந்தது? விசேஷம் ஏதேனும் உண்டோ ?” “விசேஷம் ஒன்றையுங் காணோம்” என்று சொல்லி நாராயணன் கடிதத்தைச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு சாப்பிட எழுந்து சென்றான். அன்று நாராயணன் சாப்பிடும் போது, அதிசயமான ஒரு காரியம் செய்தான். லக்ஷ்மி உணவு பரிமாறுகையில், அவள் தன்னைப் பாராத சமயம் பார்த்து, திரும்பத் திரும்பச் சுமார் இருபது முறை அவளை உற்று உற்றுப் பார்த்தான். இன்னதென்று தெளிவாக விளங்காத பலவகை ஐயங்கள் அவன் உள்ளத்தைக் குழப்பிக் கொண்டிருந்தன. சட்டென்று அவனுக்கு ஒன்று நினைவு வந்தது. லக்ஷ்மியின் நடத்தையில் சென்ற ஒரு வாரமாக ஒருவகை மாறுதல் இருப்பதாக அவனுக்குத் தோன்றிற்று. வழக்கத்தை விடச் சற்று அதிகமாகவே இந்தச் சில தினங்களாய் அவள் தன்னிடம் அன்பு காட்டி வருவதாக நினைத்தான். இம்மாறுதலுக்குக் காரணம் என்ன? - இதற்கு விடை கூறிக்கொள்ள அவனுக்கே அச்சமாயிருந்தது. சாப்பிட்ட பின்னர், நாராயணன் மீண்டும் வந்து நாற்காலியில் சாய்ந்து கொண்டு கடிகாரத்தைப் பார்த்தான். கிண்டிக்குப் போகும் முதல் ஸ்பெஷலைப் பிடிக்க வேண்டுமானால் உடனே கிளம்ப வேண்டும். அடுத்த ஸ்பெஷலுக்குத்தான் போவோமே என்று எண்ணிக் கொண்டு அந்தக் கடிதத்தை இன்னொரு முறை எடுத்துப் படித்தான். அதை யார் எழுதியிருக்கக்கூடும்? அந்த எழுத்து? - எங்கேயோ பார்த்தது போலத் தோன்றிற்று. தலையை இரு கரங்களாலும் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு யோசித்தான். பயனில்லை. இதற்குள் மணி 12.30 ஆகிவிட்டது. இன்று ஒரு நாள் போகாவிட்டால் என்ன?…சை! “இந்தப் பைத்தியக்காரக் கடிதத்துக்காகவா போகாமலிருந்து விடுவது? நண்பர்கள் என்ன நினைப்பார்கள்?…” உடனே எழுந்து உடுப்புகளைத் தரித்துக்கொண்டு விரைந்து சென்றான். கடைசி ஸ்பெஷல்தான் கிடைத்தது. வழக்கம் போல் நண்பர்கள் முதல் ஸ்பெஷலில் போயிருக்க வேண்டும். அந்தக் கூட்டத்தில் அவர்களைக் கண்டு பிடிப்பதெப்படி? அன்று அவர்களைக் கண்டுபிடிக்க அவன் அவ்வளவு ஆவல் கொள்ளவுமில்லை. அதிசயங்களிலெல்லாம் அதிசயம், அன்று நாராயணன் ஒரு பைசாகூடப் பந்தயம் வைக்கவில்லை! உண்மையில் அவன் மனம் பந்தயத்தில் செல்லவேயில்லை. லக்ஷ்மியின் அதிகப்படியான அன்பு - அக் கடிதம் - அதிலுள்ள எழுத்து - இவைகளிலேயே அவன் சிந்தை உழன்று கொண்டிருந்தது. பந்தயம் முடிந்து, எல்லோரும் திரும்பிய போது, நாராயணனும் புறப்பட்டான். வண்டியில் நண்பர்களை சந்தித்தான். “ஓ! மிஸ்டர் நாராயணன்! உம்மைத் தேடித் தேடிப் பார்த்தோமே! எந்த ஸ்பெஷலில் வந்தீர்?” என்று ஒருவர் கேட்டார். “கடிகாரத்தின் தவறு. முதல் ஸ்பெஷல் புறப்பட்டு இரண்டு நிமிஷங் கழித்து வந்தேன்.” “ஓ! ஏதோ நேரிட்டு விட்டதென்று பயந்தோம். ஆனால், முகம் ஏன் வாட்டமுற்றிருக்கிறது? ஏதேனும் பணம் தொலைந்து போயிற்றா?” அப்பொழுதுதான் நாராயணனுக்குத் தன் சட்டைப் பையிலிருந்த சில்லரையைத் தவிர வேறு பணம் கொண்டு வரவில்லையென்று நினைவு வந்தது. ஆயினும் நமது கதாநாயகன் - எழுத வெட்கமாயிருக்கிறது - மீண்டும் ஒரு பெரும் பொய் சொன்னான். “ஆம், ஸார், இருநூறு ரூபாய்.” “கவலைப்படாதேயும். அடுத்த வாரம் அதிர்ஷ்டம் அடிக்கலாம்” என்றார் அந்த ‘அழகான’ நண்பர்களில் ஒருவர். மறுநாள் முதல், தன் கணவனுடைய நடத்தையில் ஒரு வகை மாறுதலைக் கண்டு லக்ஷ்மி அதிசயித்தாள். ஆபீஸ் விட்டதும் நாராயணன் நேரே வீட்டுக்கு வரத்தொடங்கினான். அவனுடைய நண்பர் குழாத்தை அழைத்துக் கொண்டு வருவதில்லை. என்றுமில்லாத வழக்கமாக ஒரு நாள் ஆபீஸ் வேலையிலேயே வீட்டுக்கு வந்தான். இதற்குக் காரணமான தலைவலி, வீட்டுக்கு வந்து பத்து நிமிஷத்தில் மருந்து மாயமில்லாமல் சொஸ்தமாகி விட்டது. லக்ஷ்மிக்குச் சிறிது ஆச்சரியமளித்தது. அவ் வாரத்தில் லக்ஷ்மி பல முறையும் சாரதாவை நன்றியறிதலுடன் நினைத்துக் கொண்டாள். தான் அவள் சொற்படி அதிக அன்புடனும் ஆதரவுடனும் நடந்து கொள்வதே தன் கணவன் நடத்தையில் மாறுதலேற்படக் காரணமென அவள் நம்பினாள். அடுத்த சனிக்கிழமை காலை பத்து மணிக்கு வழக்கம் போல் நாராயணன் சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டு, கடிகாரத்தை பார்த்த வண்ணமாயிருந்தான். ‘தபால்’ என்ற சத்தம் கேட்டதும் அவன் நெஞ்சம் திடுக்கிட்டது. கடிதத்தின் உறைமீது விலாசத்தைப் பார்த்ததும். அவன் ஹிருதயம் படபடவென்று அடித்துக் கொள்ளலாயிற்று. அக் கடிதத்தில் பின் வருமாறு எழுதப்பட்டிருந்தது. பிரியமுள்ள ஐயா, எச்சரிக்கை! இந்தச் சனிக்கிழமை மாலை விழிப்புடனிருந்தால், நீர் அறிய விரும்பும் விஷயத்தை அறிந்து கொள்ளலாம். தங்கள் நன்மை விரும்பும் நண்பன். நாராயணனுக்குச் சட்டென்று ஒரு யோசனை வந்தது. எதிர் வீட்டில் பி.எல் பரீட்சைக்குப் படிக்கும் மாணாக்கர் ஒருவர் இருந்தார். அவர் நாராயணனின் நண்பரல்லர். ஆயினும், கொஞ்சம் பழக்கமுண்டு. அவசரமாக எழுந்து சென்று எதிர் வீட்டு வாயிற்படியில் நின்று கொண்டு, “ஸார்! ஸார்!” என்று கூப்பிட்டான். பி.எல். மாணாக்கர் வெளியே வந்தார். நாராயணன் அவரை ஏற இறங்கப் பார்த்தான். அவர் முகத்தில் எவ்வித மாறுபாடும் காணப்படவில்லை. “ஒன்றுமில்லை, என் கடிகாரம் நின்று போய் விட்டது. தயவு செய்து மணி பார்த்துச் சொல்லுங்கள்” என்றான். மாணாக்கர் உள்ளே போய் அங்கிருந்து ஏதோ சொன்னார். அது சரியாகக் காதில் விழாத போதிலும், “சரி, வந்தனம்” என்று நாராயணன் கூறிவிட்டுத் திரும்பினான். அன்று உணவு அருந்தியதும் நாராயணன் ஆடம்பரமாக உடுப்பு அணிந்து கொண்டான். பின்னர் சமையல் அறைக்குச் சென்றான். லக்ஷ்மி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் நீர் ததும்பிக் கொண்டிருந்தது. சென்ற ஒரு வாரமாகத் தன் கணவர் நடந்து கொண்ட மாதிரியிலிருந்து, ஒரு கால் இன்று போகாமலிருந்துவிட மாட்டாராவென்று அவள் ஆசைப்பட்டாள். ஆனால், நாராயணன் உடுப்பணிய ஆரம்பித்ததைப் பார்த்ததும், இந்நம்பிக்கையைக் கைவிட்டாள். அவளையறியாமலே துக்கம் பொங்கிற்று. “லக்ஷ்மி, நான் போய் வருகிறேன்” என்றான் நாராயணன். லக்ஷ்மிக்கு ஆச்சரியமாயிருந்தது. ‘ஒரு நாளாவது சொல்லிக் கொண்டு போனதில்லை. கொஞ்சம் மனம் இளகியிருக்கிறது. இதுதான் தருணம்’ என்று அவள் எண்ணினாள். “எங்கே போகப் போகிறீர்கள்? இன்று போக வேண்டாமே. சாயங்காலம் என்னையும் எங்கேனும் அழைத்துக் கொண்டு போங்களேன்” என்றாள். ‘ஆ! பாசாங்குக்காரி! உலகில் பெண்களை ஆண்டவன் எதற்காகப் படைத்தான்?’ என்று நாராயணன் எண்ணிக் கொண்டான். அவனுக்கு வந்த கோபத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, “இல்லை இன்று அவசியம் போகவேண்டும். இன்னொரு நாளைக்குப் பார்த்துக் கொள்வோம்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான். அன்று பிற்பகலில் மயிலாப்பூர் மாடவீதிகளிலுள்ள வீட்டுமாடி ஒன்றிலிருந்து யாரேனும் பார்த்திருப்பின், ஸ்ரீமான் நாராயணன், பி.ஏ. (ஆனர்ஸ்) அவ்வீதிகளைச் சுற்றிச் சுற்றி வலம் வந்துகொண்டிருப்பதைக் கவனித்து ஆச்சரியமுற்றிருப்பார்கள். மணி சுமார் மூன்றரை இருக்கும். நாராயணன் தனது வீடிருக்கும் தெரு முனைக்குப் பன்னிரண்டாவது முறையாக வந்தபோது தன் வீட்டுக்கெதிரில் ஒரு குதிரை வண்டி நின்று கொண்டிருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டான். ஒரு கணநேரம் அவன் மூச்சு நின்று விடும் போலிருந்தது. அவ்வண்டிக்குள் இளைஞன் ஒருவன் இருந்தான். ஆனால் அவன் எதிர்ப்புறமாய்க் குதிரையை நோக்கி திரும்பி உட்கார்ந்திருந்தபடியால், முகம் தெரியவில்லை. “வண்டி இப்போதுதான் வந்து நிற்கிறதா? வண்டியில் இருப்பவன் இறங்கப் போகிறானா?” என்று எண்ணி, நாராயணன் திக்பிரமை கொண்டவன் போல் தெரு முனையிலேயே நின்றான். என்ன துரதிர்ஷ்டம்! வண்டிக்காரன் குதிரையைச் சவுக்கால் அடித்தான். நாராயணன் அதே கணத்தில் தன் வீட்டு மாடியை நோக்கினான். ஒரு ஜன்னல் திறந்திருந்தது. அதன் வழியே பெண் கரமொன்றும், புடவைத் தலைப்பும் தெரிந்தன. இரண்டு நிமிஷங்களில் வண்டி தெருக்கோடிச் சென்று மறைந்தது. நாராயணன் அந்த இரண்டு நிமிஷமும் நரக வேதனையனுபவித்தான். மறுபடியும் அண்ணாந்து தன் வீட்டு மாடியின் ஜன்னலை நோக்கியிருப்பானாயின், அங்கே சாரதை நின்று கண்களில் விஷமக் குறிதோன்றத் தன்னைப் பார்த்துப் புன்னகை செய்து கொண்டிருந்ததைக் கண்டிருப்பான். ஆனால் அப்போது அவன் உள்ளம் இருந்த நிலையில், கண்கள் திறந்திருந்தும் எதிரிலுள்ள பொருளைக் கூட அவன் பார்க்கவில்லை. முதலில், விரைந்து வீட்டுக்குச் செல்லலாமாவென்று அவன் நினைத்தான். ஆனால் அமைதியுடன் யோசனை செய்தல் இப்போது அவசியமென உணர்ந்தான். எனவே கடற்கரையை நோக்கிச் சென்றான். மாலைக் கடற்காற்று அவனுக்கு கொஞ்சம் சாந்தம் அளித்தது. யோசனை செய்யலானான். முதலில், தான் தெருமுனையில் நில்லாமல் வீதிகளைச் சுற்றி வந்து கொண்டிருந்தது தவறு என்று முடிவு செய்தான். பின்னர், நிச்சயமான அத்தாட்சியில்லாமல் அவசரப்பட்டு எதுவும் செய்யக் கூடாதென்று தீர்மானித்தான். பிறகு குதிரை வண்டியைப் பற்றி யாரையும் விசாரித்தால் அவமானத்துக்கும், ஆபத்துக்கும் இடமாகுமென்னும் முடிவுக்கு வந்தான். கடைசியாக உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டுமானால், தன் மனைவியிடம் சந்தேகங் கொண்டதாகக் காட்டிக் கொள்ளக் கூடாதென்றும் அவளிடம் அன்பு கொண்டிருப்பதாக நடிக்க வேண்டுமென்றும் தீர்மானித்தான். நாராயணன் புத்திசாலி! இல்லாவிட்டால், பி.ஏ. (ஆனர்ஸ்) பரீட்சையில் தேறியிருக்க முடியுமா? ஒரு வாரம் சென்றது. அடுத்த சனிக்கிழமையும் வந்தது. நாராயணன் தன் ஐயங்களை அநேகமாக மறந்து விட்டான். “என்ன பைத்தியம்? நமது லக்ஷ்மியைச் சந்தேகிக்கப் போனோமே! குழந்தையைப் போல் கள்ளங்கபடற்ற இவளா அத்தகைய பெருந்துரோகம் எண்ணுவாள்?” என்று அவன் கருதலானான். அத்துடன் வீட்டில் இன்ப விளக்கையொத்த இவளை வைத்து விட்டுத்தான் வெளியில் எங்கேயோ இன்பந்தேடி அலைந்தது எவ்வாறு என்ற வியப்பும் அவன் உள்ளத்தில் சற்றே தோன்றலாயிற்று. எனினும், இன்றைய தினம் கிண்டிக்குப் போய் வருவது என்று அவன் தீர்மானித்தான். மனைவியின் பேரில் தவறான ஐயங்கொண்டு அதற்காக கிண்டிக்குப் போகாமலிருப்பதா? என்ன அவமானம். யாருக்காவது தெரிந்தால் நகையார்களா? இன்னும் இரண்டு வாரந்தான் பந்தயம் நடைபெறும். இழந்த மூவாயிரம் ரூபாயில் ஏதேனும் ஒரு பகுதியையேனும் மீட்க வேண்டாமா? ஆனால் அந்தக் கடிதங்கள்? அவற்றின் நினைவு இடையிடையே தோன்றி, நாராயணன் மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்தது. அந்த எழுத்தை எங்கேயோ, பார்த்த நினைவாயிருந்தது. ஆயினும் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் எங்கே என்று அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. இன்றைய தினம் கடிதம் ஒன்றும் வராவிடின், பழைய கடிதங்களைத் தீயிலிட்டுப் பொசுக்கிவிட்டு, எல்லாவற்றையும் மறந்து விடுவதென்று தீர்மானித்தான். எனவே தபால்காரன் வரவை மிகுந்த ஆவலுடன் எதிர் நோக்கியிருந்தான். எதிர் நோக்கியது வீண் போகவில்லை. கடிதம் வந்தது. நாராயணனின் அப்போதைய மனோநிலையை வருணித்தல் நமது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. உறையை உடைத்துக் காகிதத்தைப் படித்தான். பிரியமுள்ள ஐயா, இன்று மாலை, உமது மனைவி எங்கேனும் புறப்பட்டுப் போக விரும்பினால், தடுக்க வேண்டாம். அவளுக்குத் தெரியாமல் பின் தொடர்ந்து செல்லும். தங்கள் நன்மையை நாடும் நண்பன். பற்பல ஐயங்கள், மனக்குழப்பம் எல்லாம் மீண்டும் முன்னைவிட அதிகமாகவே ஸ்ரீமான் நாராயணனைப் பற்றிக் கொண்டன. பொறாமையும், கோபமும் அவன் உள்ளத்தில் கொழுந்துவிட்டெரியலாயின. அவன் உடல் நடுங்கிற்று; கண்களில் நீர் ததும்பிற்று. கள்ளங் கபடற்றவள், தன்னைத் தவிர வேறு கதியில்லாதவள் என்று எண்ணி, தான் அளவற்ற நம்பிக்கையும் அன்பும் வைத்திருக்கும் ஒரு பெண், தன்னைப் பயங்கரமாக ஏமாற்றி, மகத்தான துரோகம் செய்வது மட்டுமன்று; இந்த அவக்கேடான விஷயம் மூன்றாவது ஆசாமி ஒருவனுக்குத் தெரிந்தும் இருக்கிறது. அவமானம்! அவமானம்! இத்தகைய சந்தர்ப்பங்களில் மனைவியைக் கொன்று விட்டுத் தற்கொலை செய்து கொண்டவர்களைப் பற்றிப் பத்திரிகைகளில் படித்த பல விவரங்கள் நாராயணன் நினைவுக்கு வந்தன. கைத்துப்பாக்கியின் மீதும், விஷமருந்தின் மீதும் அவன் எண்ணம் சென்றது. லக்ஷ்மி உள்ளிருந்து வந்தாள். அன்றலர்ந்த தாமரை போன்ற அவள் வதனத்தில் செவ்விதழ்கள் புன்னகை பூத்துத் திகழ்ந்தன. கள்ளமற்ற உள்ளத்தினின்று எழுந்த காதற்சிரிப்போ அது? “சாப்பிடவாருங்கள்” என்ற அவள் மொழிகள், நாராயணன் செவிகளில் இன்பத்தேனெனப் பாய்ந்தன. ‘ஒன்று இவள் இவ்வுலகிலுள்ள நூறு கோடிப் பெண் மக்களில் பொறுக்கி எடுத்த இணையற்ற வஞ்ச நெஞ்சப் பாதகியாகயிருத்தல் வேண்டும்; அல்லது… நமக்குப் பகைவன் யார்? நம்மை இவ்வாறு வருத்துவதில் யாருக்கு என்ன லாபம்? எப்படியும் இன்று உண்மையைக் கண்டுவிடலாம்’ என்று நாராயணன் எண்ணினான். சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் லக்ஷ்மி, “நான் இன்று திருவல்லிக்கேணிக்குப் போய் வரட்டுமா?” என்று கேட்டாள். இக்கேள்வியினால் நாராயணன் உள்ளக் கடலில் எழுந்த கொந்தளிப்பை, லக்ஷ்மி மனக்கண் கொண்டு பார்த்திருப்பாளாயின், அந்தோ அவள் பயந்தே போயிருப்பாள். “எதற்காக?” என்று நாராயணன் கேட்டபோது அவன் குரலிலிருந்த நடுக்கத்தை லக்ஷ்மி கவனித்தாளில்லை. “சாரதை அக்கா, அடிக்கடி வரச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். நீண்டகாலமாய் வரவில்லையென்று கோபித்துக் கொண்டாள். இன்று கட்டாயம் வரச் சொன்னாள்.” “சரி!” என்று ஒரே வார்த்தையில் நாராயணன் பதில் கூறினான். “நீங்களும் வாருங்களேன். வேறு அவசியமான வேலையிருக்கிறதா?” என்று லக்ஷ்மி பயத்துடன் கேட்டாள். “என்ன மோசம்! என்ன வேஷம்! அப்பா!” என்று முணுமுணுத்தான். “என்ன சொல்லுகிறீர்கள்?” “ஒன்றுமில்லை, நான் வேறிடத்துக்கு போக வேண்டும் நீ போய் வா.” சாப்பாடு ஆனதும் நாராயணன், “வண்டி வேண்டுமா? பார்த்துக் கொண்டு வரட்டுமா?” என்று கேட்டான். “காலையில் தெருவில் ஒரு வண்டி போயிற்று. வண்டிக்காரனிடம் சொல்லியிருக்கிறேன்.” ஏற்பாடு ஒன்றும் பாக்கியில்லை என்று நாராயணன் எண்ணிக் கொண்டு, “சரி நான் போய் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே போனான். ஒரு குதிரை வண்டிக்காக மயிலாப்பூர் எங்கும் அலைந்தான் என்ன துரதிர்ஷ்டம்? அன்றைக்கென்று ஒரு வண்டி கூடக் காணோம். “இந்தப் பாழும் மோட்டார் பஸ்கள் வந்து குதிரை வண்டியே இல்லாமற் செய்துவிட்டன. நாசமாய்ப் போக!” என்று சபித்தான். எங்கும் சுற்றிவிட்டுத் திரும்புகையில், எதிரில் லக்ஷ்மி ஒரு வண்டியில் வருவதைக் கண்டான். அவள் தன்னைப் பாராவண்ணம் குளப்படியில் இறங்கி மறைந்து நின்றான். அவன் உள்ளம் தீவிரமாக வேலை செய்தது. வண்டியைத் தொடர்ந்து நடந்து செல்வது இயலாத காரியம். ரிக்ஷாவும் அவ்வளவு வேகமாகச் செல்லாது. குதிரை வண்டியோ கிடைக்கவில்லை. மோட்டார் பஸ்ஸில் ஏறிக் குதிரை வண்டிக்கு முன்னால் திருவல்லிக்கேணிக்குப் போய்விடுவதென்றும், மணிக் கணக்குப் பார்த்து, சாரதையின் வீட்டுக்கு நேரே போய்ச் சேர்கிறாளாவென்று கண்டுபிடித்து விடலாமென்றும் தீர்மானித்தான். அவ்வாறே அவசரமாகச் சென்று, புறப்படவிருந்த மோட்டார் ஒன்றில் ஏறினான். ஆனால் இவ்வுலகில் இடையூறுகள் தனித்து வருவதில்லையே? ராயப்பேட்டை போனதும், மோட்டார் ‘பட்பட்’ என்று அடித்துக்கொண்டு நின்றுவிட்டது. வண்டி ஓட்டி ஆன மட்டும் வண்டியை முடுக்கிப் பார்த்தும் பயனில்லை. பெட்ரோல் இல்லையென்னும் விவரம் அப்போதுதான் அவனுக்கு நினைவு வந்தது. உதவி வேலைக்காரனை டிராம் வண்டியில் ஏறிப்போய் மௌண்ட் ரோட்டிலிருந்து பெட்ரோல் வாங்கிவர ஏவினான். வண்டியில் இருந்தவர்கள் சபிக்கலானார்கள். இன்னும் பணங்கொடாதவர் வண்டியை விட்டிறங்கினர். நாராயணன் எல்லாரையும் விட அதிகமாகச் சபித்தான். மோட்டார் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவனுடைய ஏழு தலை முறையும் நாசமாய்ப் போகவேண்டுமென்று அவன் எண்ணினான். பணங்கொடுத்திருந்தானாயினும், போனால் போகட்டும் என்று இறங்கிவிட்டான். பின்னால் வந்த மோட்டார் பஸ்கள் எல்லாவற்றிலும் ஜனங்கள் நிரம்பியிருந்தபடியால், அவனுக்கு இடங்கிடைக்கவில்லை. கொஞ்ச நேரம் கழித்து வந்த டிராம் வண்டியொன்றில் ஏறிக் கொண்டான். வழி நெடுகஜனங்கள் காத்துக் கொண்டிருந்தபடியால், டிராம் அடிக்கடி நின்று சென்றது. உலகமெல்லாம் தனக்கு விரோதமாகச் சதியாலோசனை செய்திருப்பதாய் அவனுக்குத் தோன்றிற்று. மௌண்ட் ரோட்டிலும் சற்று நேரம் காத்திருக்க நேர்ந்தது. திருவல்லிக்கேணி போகும் வண்டிகள் எல்லாம் நிறைந்திருந்தன. கடைசியாக நாராயணன் திருவல்லிக்கேணி சேர்ந்து சாரதை வீடு இருந்த வீதிக்குச் சென்றபோது, மாலை நான்கு மணியாகி விட்டது. வீட்டு வாயிலில் லக்ஷ்மி ஏறி வந்த வண்டி நின்று கொண்டிருந்தது. அவ்வண்டி நேராக மயிலாப்பூரிலிருந்து சாரதை வீட்டுக்கே வந்ததாவென்று கண்டுபிடிப்பது எங்ஙனம்? வண்டிக்காரனையோ வீட்டிலுள்ளவர்களையோ விசாரிப்பது அறிவீனம்; அவமானத்துக்கிடம். ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் சாரதையின் வீட்டுக்குள்ளிருந்து, சாரதையும், லக்ஷ்மியும், சாரதையின் கணவனும் வெளிவந்து வண்டியில் ஏறிக்கொண்டார்கள். எங்கேயோ வேடிக்கை பார்க்கப் புறப்பட்டுச் சென்றார்கள் போலும். நாராயணனின் வயிற்றெரிச்சல் அதிகமாயிற்று. சாரதையும் அவள் கணவனும் எத்தகைய இன்ப வாழ்க்கை நடத்துகிறார்கள் என்று நினைத்துப் பெருமூச்சு விட்டான். கடற்கரைக்குப் போய் வெகு நேரம் உட்கார்ந்துவிட்டு இரவு வீடு போய்ச் சேர்ந்தான். லக்ஷ்மியை அவள் போயிருந்த விஷயமாக ஒரு வார்த்தை கூடக் கேட்கவில்லை. அன்பார்ந்த ஐயா! ஜாக்கிரதைக் குறைவினால் இரண்டு முறை உமது முயற்சியில் தவறி விட்டீர். நாளை சனிக்கிழமை மத்தியானம் வெளியே சென்று விட்டுச் சரியாக நான்கு மணிக்கு வீட்டுக்குத் திரும்பிச் செல்லும். உண்மையறிவீர். தங்கள் நன்மை விரும்பும் நண்பன். இக்கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தான் நாராயணன். சென்ற ஒரு மாத காலமாகத்தான் அனுபவித்து வரும் துன்பங்கள் அத்தனையும் ஒரு பெருங்கனவோ என்று எண்ணினான். கனவன்று, நிஜமே என்பதைக் கையிலிருந்த கடிதம் வலியுறுத்திக் காட்டிற்று. எப்படியும் இன்று உண்மை வெளியாகி விடுமென்று நினைத்துப் பெருமூச்சு விட்டான். ஆனால், அவ்வுண்மை எவ்வளவு பயங்கரமானது? முதல் நாள், தான் ஒரு நண்பரிடம் மிகவும் சிரமப்பட்டு இரவல் வாங்கிக்கொண்டு வந்திருந்த கைத் துப்பாக்கியை மேஜைக்குள்ளிருந்து எடுத்து மீண்டுமொருமுறை பார்த்தான். அதை எவ்வாறு உபயோகிப்பதென்பதை இருபத்தைந்தாம் முறையாக மனத்தில் உறுப்போட்டுக் கொண்டான். அவன் கண்களில் கொலைக் குறித் தோன்றிற்று. பகல் ஒரு மணிக்கு வீட்டை விட்டு வெளியே புறப்பட்டான். அப்போது அவன் உள்ளக் கடலில் எழுந்த பேரலைகளின் இயல்பை யாரோ வருணிக்க வல்லவர். சரியாக மாலை நான்கு மணிக்கு நாராயணன் வீடு திரும்பினான். வாயிற்கதவு சாத்தித் தாளிடப் பட்டிருந்தது. மாடி அறையில் ஏதோ பேச்சுக் குரல் கேட்டது. அவனுக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. ஆயினும், நிதானந்தவறிவிடக் கூடாதென்று எண்ணிப் பற்களை கடித்துக் கொண்டான். கதவை ஓங்கி இடித்தான். இரண்டு நிமிஷங்கழித்துக் காலடிச் சத்தம் கேட்டது, “யார் அங்கே?” அது லக்ஷ்மியின் குரல். “நான் தான்; கதவைத் திற.” கதவு திறக்கப்பட்டது. லக்ஷ்மி முகத்தில் வியப்புக் குறிதோன்றிற்று. சந்தேகம் என்னும் திரைவழியே பார்த்த நாராயணனுக்கு அவள் பயத்தினால் திடுக்கிட்டு நடுநடுங்குவதாகத் தோன்றிற்று. வாயிற்படி தாண்டி உள்ளே நுழைந்ததும், உயர்தரக் கம்பெனி ஜோடுகள் நாராயணன் கண்ணில்பட்டன. அவனுக்கு எல்லாச் சந்தேகமும் நிவர்த்தியாயிற்று. தன் கைத்துப்பாக்கிக்கு அன்று இரையாகப் போகிறவன் மாடிமீதிருப்பதாக அவன் உணர்ந்தான். விரைந்து சென்று மாடிப்படிகளில் ஏறலானான். ஆனால், லக்ஷ்மி அவனுக்கு முன்னால் ஓடிப் பாதிப்படிகள் ஏறிய நாராயணனை வழிமறித்துக் கொண்டும், “உயரப் போகாதேயுங்கள்” என்று கொஞ்சும் குரலில் கூவினாள். நாராயணின் கோபவெறி அளவு கடந்தாயிற்று. லக்ஷ்மியை ஒரு கையினால் பிடித்துப் பலங்கொண்ட மட்டும் இடித்துக் கீழே தள்ளினான். பாவம்! லக்ஷ்மி பத்துப் பன்னிரண்டு படிகளிலும் உருண்டு சென்று கீழே தரையில் விழுந்தாள். அவளைத் திரும்பியும் பாராமல், நாராயணன் மேலே ஓடினான். மாடி ஹாலில் கதவை ஓங்கி ஓர் உதை உதைத்தான். கதவு தாளிடப்படாமையால், தடால் என்ற சத்தத்துடன் திறந்து கொண்டது. அப்போது அவன் அவ்வறையினுள்ளே கண்ட காட்சி அவனைத் திகைக்கச் செய்துவிட்டது. எத்தனையோ விதப் பயங்கர காட்சிகளை அவன் மனத்திலே கற்பனை செய்து பார்த்துத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தான். ஆனால் இப்போது அவன் முன் தோன்றிய காட்சியை அவன் எதிர்ப்பார்க்கவேயில்லை. தலையில் இடியே விழுந்துவிட்டது போல் திடுக்கிட்டு நின்று விட்டான். அக்காட்சி வேறொன்றுமில்லை. நாராயணன் நீண்ட நாளாய் மூலையில் போட்டிருந்த இராட்டினத்தை எடுத்துச் செப்பனிட்டுச் சாரதையின் கணவன் ஸ்ரீனிவாசன் நூல் நூற்றுக் கொண்டிருந்தார். நூல் அடிக்கடி அறுந்து போய்க்கொண்டிருந்தது. சாரதை அருகில் உட்கார்ந்து “நிறுத்துங்கள், இழுங்கள்” என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டும், நூல் அறும்போது இணைத்துக் கொண்டுமிருந்தாள். நாராயணன் தடபுடலாக உள்ளே நுழைந்த சத்தங்கேட்டு அவள் தூக்கிவாரி போடப்பட்டவள் போல் எழுந்தாள். “என்ன அத்தான், கொஞ்சமும் உனக்கு ‘நாஸுக்’ தெரியாமல் போய்விட்டது. என்ன தடபுடல்? சொல்லிவிட்டு உள்ளே வரக்கூடாதா?” என்றாள். நாராயணன் அசட்டுச் சிரிப்புச் சிரித்தான். “இல்லை; நீங்கள் இங்கிருப்பது எனக்குத் தெரியாது, மன்னியுங்கள்” என்று தடுமாறிக் கொண்டே கூறினான். “தெரியாதா? லக்ஷ்மி அடுப்புள்ளேயே இருக்கிறாளா என்ன?” லக்ஷ்மி தன்னைத் தடுத்ததின் காரணம் இப்பொழுது நாராயணனுக்குப் புலனாயிற்று. இதற்குள் சாரதையின் கணவன், “அது கிடக்கட்டும், நீங்கள் சற்று இங்கே வாருங்கள். உங்களுக்கு நன்றாக நூல் நூற்கத் தெரியுமே? கொஞ்சம் கற்றுக் கொடுங்கள். என் உயிரை வாங்குகிறாள்” என்றார். “இதோ வருகிறேன்” என்று நாராயணன் சொல்லி விட்டுத் தன் சட்டைப் பையில் மறைத்து எடுத்துக் கொண்டு வந்த கைத் துப்பாக்கியை அலமாரிக்குள் வைத்துப் பூட்டப் போனான். அதற்குள், “அதென்ன அத்தான்” என்று சாரதை கேட்டுக்கொண்டு அருகில் வந்து, “ஓ! கைத்துப்பாக்கியெல்லாம் எப்போதிருந்து? யாரைக் கொல்லப் போகிறாய்?” என்றாள். பின்னர் சற்று தணிந்த குரலில், “குதிரைப் பந்தயத்துக்குப் போகிறவர் எல்லாருக்கும் கையில் துப்பாக்கிகூட வேண்டுமா என்ன?” என்று கேட்டாள். நாராயணனின் மூளை இயந்திரம் இப்போது தான் சுழல ஆரம்பித்தது; பளிச்சென்று அவனுக்கு உண்மை விளங்கிற்று. அவனுக்கு வந்த கடிதங்களில் கண்ட எழுத்து எங்கோ பார்த்த நினைவாயிருந்ததே! சாரதையின் கையெழுத்தல்லவா அது? லக்ஷ்மிக்குச் சாரதை எப்பொழுதோ எழுதிய இரண்டொரு கடிதங்களிலல்லவா அந்தக் கையெழுத்தைப் பார்த்தது? கொஞ்சம் சிரமப்பட்டு மாற்றி ஏமாற்றி விட்டாள்? லக்ஷ்மியின் மீது தான் கொண்ட சந்தேகங்கள் அவ்வளவும் ஆதாரமற்றவை என அறிந்து நாராயணன் ஆனந்தக் கடலில் மூழ்கினான். அவன் ஹிருதயத்தை அமுக்கியிருந்த ஒரு பெருஞ்சுமை நீங்கியது போலிருந்தது. சட்டென்று அவனுக்கு இன்னொரு சந்தேகம் உண்டாயிற்று. சாரதையின் கணவனுக்கு இந்த விவரங்கள் தெரியுமோ? தெரிந்திருந்தால் எத்தகைய அவமானம்! அவர் முகத்தை ஏறிட்டுப் பார்ப்பதெப்படி? அவன் எண்ணத்தைக் குறிப்பாக உணர்ந்த சாரதை தன் கணவரைப் பார்த்து, “நூல் நூற்பது இருக்கட்டும். அத்தானிடம் நாம் வந்த காரியத்தைச் சொல்லுங்கள். நேரமாகிவிட்டதே, போக வேண்டாமா?” என்றாள். அவர், “நாராயணன்! தங்களுக்குச் சங்கதி தெரியுமா? எங்கள் வீட்டில் இப்போது ‘ஹோம் ரூல்’ தான். இவள் வைத்ததே சட்டம். ‘இன்று மாலை சினிமாவுக்கு போக வேண்டும்’ என்றாள். உடனே புறப்பட்டு வந்தேன். உங்கள் பாடு பாதகமில்லை. அன்றொரு நாள் இவளை இங்கே கொண்டு விட வந்த போதும், உங்களைக் காணோம். (ஓ! அன்று வீட்டு வாசலில் வண்டியில் இருந்தவர் நீங்கள்தானோ? என்ன அசட்டுத்தனம்? என்று எண்ணிக் கொண்டான் நாராயணன்.) லக்ஷ்மியைத் தனியே விட்டு விட்டு நீங்கள் பாட்டுக்குப் போய்விடுகிறீர்கள். போகட்டும். இன்றாவது வந்தீர்களே. வாருங்கள் போவோம்” என்றார். அவருடைய வார்த்தைகள் நாராயணனுக்குச் சுருக்கென்று தைத்தன. ஆனால், அவருக்குத் தன் அசட்டுத் தனத்தைப் பற்றி எதுவும் தெரியாதென்று அறிந்து ஆறுதல் அடைந்தான். நன்றியறிதலுடன் சாரதையைப் பார்த்து விட்டு, “ஓ போகலாம், இதோ கீழே போய்விட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு வெளியே சென்றான். சாரதை, அவனுடன் போய் மாடிபடியில் வழியை மறித்துக் கொண்டு, “அசட்டு அத்தான்! லக்ஷ்மியிடம் ஒரு வார்த்தையும் சொல்லாதே, அவளிடம் சந்தேகப்பட்டாய் என்று தெரிந்தால் உயிரை விட்டுவிடுவாள். மேலும் என்னை மன்னிக்கவே மாட்டாள்?” என்றாள். “சாரதை உனக்குக் கைம்மாறு என்ன செய்யப் போகிறேன்?” என்றான் நாராயணன். “கைமாறா? நீ என் மீது கோபித்துக் கொள்ளப் போகிறாயோவென்று பயந்தேன். நல்லது, எனக்குக் கைம்மாறு செய்ய விரும்பினால், குதிரைப் பந்தயத்தை மறந்துவிடு. உன் மனைவியைத் தனியே விட்டு விட்டு ஊர் சுற்றவும், சீட்டு விளையாடவும் போகாதே” என்றாள். “இல்லை, இல்லை. ஆண்டவன் ஆணை! இந்த ஒரு மாதமாய் நான் அனுபவித்தது போதும்” என்று கூறிக் கொண்டு நாராயணன் விரைந்து கீழே ஓடினான். லக்ஷ்மி ஒரு தூணில் சாய்ந்து கொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். தன் கணவனின் கடுங்கோபத்துக்கு உரியவளாவதற்குத் தான் செய்த தவறு இன்னதென்பது அவளுக்குப் புலனாகவில்லை. நாராயணன் கீழிறங்கி வந்து அவளருகில் உட்கார்ந்தான். தாமரை இதழ் போன்ற மிருதுவான அவள் இருகரங்களையும் பிடித்துக் கொண்டு, “லக்ஷ்மி! என்னை மன்னித்து விடு” என்றான். “ஐயோ அப்படியெல்லாம் சொல்லாதேயுங்கள்” என்று லக்ஷ்மி அவன் வாயைத் தன் கரத்தினாள் மூடினாள். “ஒரு வருஷமாக உனக்குத் துரோகம் செய்து விட்டேன். பாழுங் குதிரைப் பந்தயமோகத்தில் மூழ்கிக் கிடந்தேன். பணத்தைத் தொலைத்தேன். இன்றுடன் குதிரைப் பந்தயத்துக்குத் தர்ப்பணம் செய்து விடுகிறேன்” என்றான். மாடியின் மீது ஸ்ரீநிவாசனும், சாரதையும் காத்துக் காத்துப் பார்த்தனர். லக்ஷ்மியாவது நாராயணனாவது வரும் வழியைக் காணோம். எனவே சினிமாக் காட்சிக்குச் செல்லும் யோசனையை அவர்கள் கைவிட வேண்டியதாயிற்று. ஆனால் இதன் பொருட்டு அவர்கள் சிறிதும் வருந்தினார்களில்லை. ஸ்ரீநிவாசன் அன்று நன்றாக நூல் நூற்கப் பழகிக் கொண்டார். 15. சின்னத்தம்பியும் திருடர்களும் ஒரு ஊரில் சின்னத்தம்பி என்ற ஒரு வாலிபன் இருந்தான். அவன் ஏழை; தகப்பனில்லாதவன். ஒருநாள் அவன் பணம் சம்பாதித்து வருவதற்காகப் பட்டணத்துக்குப் புறப்பட்டான். அவன் கிளம்பிய போது அவன் தாயார் அவனிடம் ஒரு வைரக்கல்லைக் கொடுத்துப் பின் வருமாறு சொன்னாள்:- “குழந்தாய்! உன்னுடைய தகப்பன் உனக்குத் தேடி வைத்த சொத்து இந்த வைரம் ஒன்றுதான். இதை நீ வெகு ஜாக்கிரதையாகக் கொண்டு போக வேண்டும். பட்டணத்தில் இதற்கு நல்ல விலை கொடுப்பார்கள். இதை விற்று வரும் பணத்தை முதலாக வைத்துக் கொண்டு நாணயமாக வியாபாரம் செய்தால் சீக்கிரம் நல்ல பணம் சம்பாதித்துக் கொண்டு திரும்பலாம். வழியிலே திருடர் பயம் அதிகம். வழிபோக்கர்கள் யாரையும் நம்பிவிடாதே. சிலர் உன்னோடு சிநேகமாய்ப் பேசிக்கொண்டே வந்து சமயம் பார்த்து வைரத்தை அடித்துப் பறித்துக் கொள்வார்கள். ஜாக்கிரதையாயிருந்து பிழை” என்றாள். அந்த வைரத்தின் பெயர் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அதன் பெயர் அறிவு. சின்னத்தம்பி வைரத்தை வாங்கிப் பத்திரமாய் முடிந்துகொண்டு புறப்பட்டான். சாலையில் கொஞ்ச தூரம் சென்றதும் அவன் ஒரு வழிப் போக்கனைக் கண்டான். “தம்பி, தம்பி, எங்கே போகிறாய்?” என்று கேட்டான் வழிப்போக்கன். “பட்டணத்துக்குப் பணம் சம்பாதிக்கப் போகிறேன். ஐயா!” என்றான் சின்னத்தம்பி. “அப்படியா? நானும் பட்டணத்துக்குத்தான் போகிறேன். இருவரும் சேர்ந்து போகலாம்” என்று வழிப்போக்கன் சொன்னான். சின்னத்தம்பி தன் தாயார் சொல்லிய புத்திமதிகளை நினைத்துக் கொண்டான். “உன் பெயரென்ன?” என்று கேட்டான். “என் பெயர் சோம்பல்” என்றான் வழிப்போக்கன். “ஓகோ! உன்னைப்பற்றி என் தாயார் சொல்லியிருக்கிறாள். நீ பொல்லாத திருடன். உன் சகவாசம் வேண்டாம்” என்று சொல்லிவிட்டுச் சின்னத்தம்பி ஓட்டம் பிடித்தான். திருடன் “இந்தா! பிடி!” என்று கூச்சலிட்டுக் கொண்டே தொடர்ந்து ஓடினான். என்ன ஓடியும் சின்னத்தம்பியை அவனால் பிடிக்க முடியவில்லை. இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும் வேறொரு ஆள் எதிர்ப்பட்டான். “தம்பி, தம்பி, எங்கே போகிறாய்?” என்று கேட்டான். “பட்டணத்துக்குப் போகிறேன்” என்றான் சின்னத்தம்பி. “அப்படியா? சந்தோஷம். நாம் இருவரும் பேசிக் கொண்டே போகலாம்” என்றான் அம்மனிதன். “நீ யார்?” என்று கேட்டான் சின்னத்தம்பி. “என்னைத் தெரியாது? நான் தான் வியாதி” என்று அம்மனிதன் கூறினான். “ஐயோ; நீ சோம்பலை விடப் பொல்லாத திருடனாயிற்றே! நீ என் சுகத்தைத் திருடிக்கொள்வாய் வேண்டாம் உன் உறவு எனக்கு” என்று சொல்லிவிட்டுச் சின்னத்தம்பி ஓட்டம் பிடித்தான். வியாதி ஓடி ஓடிப் பார்த்தும் அவனைப் பிடிக்க முடியவில்லை. இன்னும் போகப் போக வழியில் சூதாட்டம், கோபம், சண்டை, மூர்க்கம் விபசாரம் முதலிய திருடர்கள் ஒவ்வொருவராக எதிர்ப்பட்டுச் சின்னத் தம்பியை வழி மடக்கப் பார்த்தார்கள். எல்லாரையும் ஏமாற்றிப் பின்னால் விட்டுவிட்டுச் சின்னத்தம்பி முன்னால் போய்க்கொண்டிருந்தான். மேலே சொன்ன சோம்பல், வியாதி, விபசாரம் முதலிய திருடர்கள் எல்லாரும் ஒரு பெரிய கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். இக்கூட்டத்திற்கு ஒரு தலைவன் இருந்தான். அவன் பெயர் மதுசாரம். இவன் சமயத்துக்குத் தகுந்தபடி வேஷம் போட்டுக் கொள்வதில் தேர்ந்தவன். கள்ளு, சாராயம், ஒயின், பிராந்தி, விஸ்கி, பீர், அபினி, கஞ்சா என்று விதவிதமான பெயர்களை வைத்துக்கொண்டு பெயருக்கேற்ப வெவ்வேறு வேஷங்கள் போட்டுக் கொள்வான். கடைசியாக, இத்திருடர் தலைவனை நமது சின்னத்தம்பி சந்தித்தான். “தம்பி, தம்பி, எங்கே போகிறாய்?” என்றான் திருடர் தலைவன். “பட்டணத்துக்குப் போகிறேன். நீ யார்?” என்று சின்னத்தம்பி கேட்டான். “என் பெயர் மதுசாரம்” என்றான் திருடன். சின்னத்தம்பி தனக்குள் யோசித்துக் கொண்டான்:- “இவனைப் பற்றி என் தாயார் ஒன்றும் சொல்லவில்லை. இவன் வெகு உற்சாக புருஷனாகக் காணப்படுகிறான். உடல் பருத்து நல்ல உடையணிந்து பெரிய மனிதன் போல் தோன்றுகிறான். இவன் திருடனாயிருப்பானா? எப்படியானாலும் நாம் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். தாயார் ஒரு வேளை இவனைப் பற்றிச் சொல்ல மறந்திருக்கலாம்.” இப்படியெண்ணிச் சின்னத்தம்பி வேகமாய் நடக்கலானான். அப்பொழுது திருடர் தலைவன், “ஏனப்பா இவ்வளவு விரைவாக ஓடுகிறாய்? கொஞ்சம் மெதுவாய் நட; என்ன அவசரம்? பட்டணத்தில் நான் ரொம்ப அனுபவமுள்ளவன். பணஞ்சம்பாதிக்கும் வழியெல்லாம் உனக்கு நான் சொல்லித் தருகிறேன்” என்றான். சின்னத்தம்பி இந்த ஆசை வார்த்தையில் மயங்கிவிட்டான். “இவன் திருடனாயிருக்க மாட்டான். இவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டு கொஞ்சம் முன்னாலேயே போய்க் கொண்டிருக்கலாம். அப்படி ஒரு வேளை இவன் திருடனாயிருந்து நம்மை பிடிக்க வந்தாலும், ஒரே ஓட்டமாய் ஓடித் தப்பி விடலாம். இத்தனை திருடர்களை ஏமாற்றி வந்த எனக்கு இந்தப் பொதியனைத்தானா ஏமாற்ற முடியாது?” என்று அவன் எண்ணினான். அதனால் கொஞ்சம் மெதுவாய் நடந்தான். திருடர் தலைவன் இனிமையாகப் பேசிக் கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்தான். “ஆஹா! இவனுடன் பேசினால் எவ்வளவு உற்சாகமாயிருக்கிரது?” என்று சின்னத்தம்பி நினைத்தான். அவன் அருகில் வந்ததும் திருடர் தலைவன் ஒரே தாவலாய்த் தாவி சின்னத்தம்பியைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டான். சின்னத்தம்பி ஆனமட்டும் அவன் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள முயன்றான். ஒன்றும் முடியவில்லை. திருடன் அவனைச் சோதனை போட்டு அவன் பத்திரமாய் முடிந்து வைத்திருந்த வைரத்தைப் பிடுங்கிக் கொண்டான். இதற்குள் பின்னால் தங்கிய வியாதி, விபசாரம், சூதாட்டம், சோம்பல் முதலிய திருடர்களும் ஓடிவந்து சின்னத்தம்பியை சூழ்ந்து கொண்டார்கள். திருடர் எல்லாரும் சேர்ந்து அவனைத் தங்கள் இருப்பிடத்துக்கு வரும்படி அழைத்தார்கள். சின்னத்தம்பி பார்த்தான். “வைரந்தான் போய்விட்டது. பட்டணத்துக்குப் போய் என்ன செய்வது? இவர்களுடன் தான் போவோமே?” என்றெண்ணினான். பாவம்! இவ்வாறு சின்னத்தம்பி திருடர் தலைவனுக்கு அடிமைப்பட்டான். மற்ற எல்லாத் திருடர்களுக்கும் அவன் குற்றேவல் செய்ய வேண்டியிருந்தது. இவ்வாறு சில காலம் அடிமையாயிருந்து உழைத்து விட்டுக் கடைசியில் அவன் மாண்டு போனான். வாழ்க்கைப் பிரயாணம் தொடங்கும் எத்தனையோ ஏழை ஜனங்கள் சின்னத்தம்பியைப் போல் மதுசாரம் என்னும் கொள்ளைத் தலைவனுக்கு அடிமையாகிறார்கள். முதலிலேயே அவன் பெரிய கள்ளன் என்பதை அறிந்து அருகில் நெருங்கவிடாதிருந்தால் பிழைத்திருக்கலாம். அவனுடைய இனிய பேச்சுக்குக் கொஞ்சம் செவி கொடுத்து விட்டால் பிறகு வலையில் விழ வேண்டியதுதான். நயவஞ்சகத்தில் அவன் மிகத் தேர்ந்தவனாதலால் அறியாத ஜனங்கள் எத்தனையோ பேர் அவனை நெருங்க விட்டு அதோகதி அடைகிறார்கள். இந்தக் கொடிய கள்ளனைப் பிடித்து நாட்டைவிட்டுத் துரத்துவது சர்க்காரின் கடமையல்லவா? ஆனால் அதற்குப் பதிலாக ஆங்கில சர்க்கார் இவனுடன் சண்டைபோட முடியாதென்று இந்தப் பாதகனுக்கு ‘லைஸென்ஸ்’ கொடுத்து வழிப்போக்கர்களைத் தன் வலையில் போட்டுக் கொள்ளும்படி விட்டிருக்கிறார்கள்! 16. தண்டனை யாருக்கு? இருவரும் ஏழைக் குடியானவர்கள். ஏழைகளானாலும் சந்தோஷத்திற்குக் குறைவில்லை. எவ்வளவு மகிழ்ச்சியோடு அவர்கள் சிரித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் போகிறார்கள் பாருங்கள்! அதிலும் மறுநாள் பொங்கல் பண்டிகை. ஆதலால் குதூகலம் அதிகம். ஆனால் சந்தோஷம், சிரிப்பு, குதூகலம் எல்லாம் கடைக்குள் நுழையும் வரையில்தான். கடையில் நுழைந்து இரண்டு புட்டி குடித்துவிட்டால்? சந்தோஷமாய்ப் பேசிச் சிரித்துக்கொண்டு கடைக்குச் சென்றவர்கள் திரும்பி வருகையில் விரோதிகளானார்கள். குடிவெறி ஏறியதும் காரணமில்லாமல் திடீர் திடீரென்று கோபம் வந்தது. பேச்சு வலுத்துக் கூச்சலாயிற்று. முகங்கள் கோரமாயின. வாய்ச் சண்டை முற்றிக் கைச் சண்டையாக முடிந்தது. சிறியதோர் கலவரம். ஆனால் இது இவ்வளவுடன் போகுமா? சில சமயம் பெரிய சண்டையும் ஆகும். குடி வெறியில் தலைகால் தெரியாது. கத்தியோ, அரிவாளோ, மண்வெட்டியோ கையில் அகப்பட்டதை எடுத்துக் கொள்வார்கள். கொலை நடப்பதும் உண்டு. போலீஸார் சும்மா இருப்பார்களா? சர்க்கார் லைஸென்சு பெற்ற கள்ளுக்கடையில்தானே குடித்தான் என்று அவர்கள் தாட்சண்யம் காட்டுவதில்லை. கலகம் செய்தவனைப் பிடித்துக் கையில் விலங்கு பூட்டிக் கொண்டு போகிறார்கள். இப்போது குடிவெறி கொஞ்சம் தணிந்தது. ஆனால் என்ன செய்யலாம்? ‘ஐயோ! கெட்டேனே!’ என்று கண்ணீர்விட்டு அழுவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை. வீட்டையும் மனைவி மக்களையும் நினைக்கும்போது துக்கம் அதிகமாகிறது. வெளியில் போன புருஷன் வரக்காணோமே என்று மனைவியும் மக்களும் வீட்டுவாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எத்தனை நேரம் காத்திருந்தால்தான் என்ன பயன்? போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனவன் வீட்டுக்கு எப்படி வருவான்? மறுநாள் பொங்கல் பண்டிகை எவ்வளவோ சந்தோஷமாய்க் கொண்டாடலாமென்று எண்ணியிருந்தார்கள். பாழுங்கள்ளினால் அது பெரிய துக்க தினமாயிற்று. சண்டையில் குத்தப்பட்டவன் இறந்து போனான். குத்தியவன் மீது கொலைக்குற்றம் சாட்டிக் கச்சேரியில் விசாரணை நடக்கின்றது. “நீ கத்தியால் குத்திய துண்டா?” என்று மாஜிஸ்ட்ரேட் கேட்கிறார். “குத்தியதுண்டு, எஜமானே! ஆனால் சுயபுத்தியுடன் செய்யவில்லை, குடிவெறியில் குத்திவிட்டேன். கள்ளுதான் காரணம்” என்று பதில் சொன்னான். மாஜிஸ்ட்ரேட் என்ன தீர்ப்பளிப்பார்? குடியானவனுக்கு தூக்குத் தண்டனை அளித்தார். ஆனால் அது நீதியாகுமா? அதற்கு மாறாக - தூக்குத்தண்டனை கள்ளுக்கு விதிப்பதன்றோ நியாயமாகும்? உண்மைக் குற்றவாளி அந்தப் பாழும் கள்ளே யல்லவா? 17. தற்கொலை தற்கொலை! ஆம். அந்தப் பயங்கரமான முடிவுக்கு வந்தான் ஜகந்நாதன். இத்தகைய பேரவமானத்துக்குப் பின்னர், மானமுள்ள ஓர் ஆண் மகன் எவ்வாறு உயிர் வைத்திருக்கக் கூடும்? ஒரு பாகமேனும் தேறியிருக்கக் கூடாதா? அதிலும் இது இரண்டாம் தடவை. இண்டர்மீடியட் பரீட்சையில் ஜெகந்நாதன் முதல் தரத்தில் தேறியவன். அதுவரை ஒரு வகுப்பிலாவது பரீட்சையில் தவறியது கிடையாது. பி.ஏ. வகுப்பில் முதல் முறை இரண்டு பாகத்திலும் தவறியபோது அவன் அடைந்த ஏமாற்றமும் துயரமும் சொல்லத்தரமல்ல. ஆயினும் எப்படியோ சகித்துக் கொண்டு இரண்டாம் முறை அதிகக் கவலையுடன் படித்தான். ஆயினும் பயனென்ன? ‘மேல் மாடி காலி’ என்பதற்காக அவன் கேலி செய்த ‘மண்டுக்கள்’ எல்லாரும் தேறிவிட்டார்கள். அவன் மட்டும் அம்முறையும் தவறிவிட்டான் - இரண்டு பாகத்திலும். அவமானம்! அவமானம்! தற்கொலையினாலன்றி இந்த அவமானம் தீருமா? இது ஒரு புறம் இருக்கட்டும். செல்லத்தின் முகத்தில் எவ்வாறு விழிப்பது? தன்னிடம் அளவிறந்த காதல் வைத்துள்ள அப்பேதை இவ் அவமானத்தை எங்ஙனஞ் சகிப்பாள்? பரீட்சைக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு செல்லத்தைப் பிறந்தகத்துக்கு அனுப்பியபோது அவளுக்கும் தனக்கும் நிகழ்ந்த விவாதம் ஜெகந்நாதனுக்கு நினைவு வந்தது. அவள் அப்போது கூறினாள் - “என்னை ஏன் அனுப்புகிறீர்கள்? நான் உங்கள் படிப்புக்கு எவ்விதத்திலாவது குறுக்கே வருகிறேனோ? நான் இருந்தால் உங்களுக்கு எவ்வளவோ சௌகரியமாயிற்றே! உங்கள் அறையைப் பெருக்கி சுத்தமய் வைக்கிறேன். புத்தகங்களை அடுக்கி வைக்கிறேன். குளிப்பதற்கு வெந்நீர் போட்டுக் கொடுக்கிறேன். இரவில் நீங்கள் படிக்கும் போது உங்கள் படுக்கையை விரித்து விட்டே நான் சென்று படுத்துக் கொள்ளுகிறேன். உங்களுக்கு எவ்வளவு நேரம் மீதியாகிறது? ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு தனியறையில் இருந்தால் இவைகளையெல்லாம் நீங்கள்தானே செய்யவேண்டும்? இவ்வளவு சௌகரியம் இருக்குமா? எனக்காக நீங்கள் அதிக நேரம் செலவிடுவதேனும் உண்டா? மாலைப் பொழுதினில் நீங்கள் வெளியிலிருந்து வந்ததும் அரைமணி நேரம் மாடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். இதைத் தவிர வேறு எப்போதாவது உங்கள் படிப்புக்குக் குறுக்கே நான் வருகிறேனா? மேலும், உங்கள் தேக சௌக்கியத்தை என்னைப் போல் யார் கவனிப்பார்கள்.” செல்லம்மாளின் இவ்வளவு வாதமும் அப்போது ஜகந்நாதன் செவியில் ஏறவில்லை. சென்ற வருஷம் பரீட்சையில் தவறியதும், அவனது நண்பர்களும் மற்றவர்களும், “ஆம்படையாள் ஆத்துக்கு வந்ததும் பையன் சுழி போட்டு விட்டான்” என்று கேலி செய்தது அவன் மனதை விட்டு அகலவில்லை. இந்தக் கேலிப்பேச்சு அவன் உள்ளத்தில் உறுத்திக் கொண்டேயிருந்தது. கடைசியில் தான் பரீட்சையில் தவறியதற்குத் தன் மனைவியே காரணம் என்னும் நம்பிக்கையை உண்டு பண்ணிவிட்டது. எனவே, இம்முறை அவளை ஊருக்கு அனுப்பியே தீரவேண்டுமென்றும், இல்லாவிடில் தனக்குப் பரீட்சை தேறாதென்றும் அவன் நிச்சயம் செய்து கொண்டிருந்தான். இப்போதோ? “அவ்வளவு பிடிவாதமாக என்னை ஊருக்கு அனுப்பினீர்களே? பரீட்சையில் தேறி விட்டீர்களா?” என்று செல்லம் கேட்டால், என்ன விடையளிப்பது? தன் புண்பட்ட மனதை இன்னும் புண்படுத்தக் கூடாதென்று அவள் இவ்வாறு கேளாமலிருக்கலாம்; தேறுதலும் சொல்லலாம். இருந்தாலும், அவள் மனதில் இவ்வெண்ணம் இருக்கத் தானே செய்யும்? அவள் முகத்தில் விழிப்பதெப்படி? இனி, கிராமத்திலுள்ள பெற்றோர்களோ? அவர்களைப் பற்றி எண்ணியபோதே ஜகந்நாதனுக்கு வயிரு பகீர் என்றது. தகப்பனார் உழையாத உழைப்பும் உழைத்து மூத்த புதல்வனான தன்னைப் படிக்க வைத்தார். இப்போது அவருக்கு தள்ளாத வயது வந்து விட்டது. குடும்பத்துக்கு 1,500 ரூபாய் கடன் இருந்தது. இன்னும் இரண்டு புதல்விகளுக்கும் கல்யாணம் நடக்க வேண்டும். ஒரு பையனைப் படிக்க வைத்தாக வேண்டும். நிலத்தில் கிடைக்கும் வருமானம் காலட்சேபத்துக்கே போதும் போதாததாயிருந்தது. ஜகந்நாதனுக்கு வாங்கின வரதட்சணை ரூ. 2000-த்தில் ஒரு பைசாக் கூடத் தொடாமல் அவன் பி.ஏ. படிப்பதற்காகக் கொடுத்து விட்டார். அவன் உத்தியோகம் செய்யப் போகிறான் என்ற நம்பிக்கையே குடும்பத்துக்கு இப்போது ஆதாரமாயிருந்து வந்தது. போன வருஷமே அவர்கள் அடைந்த ஏமாற்றம் வருணிக்குந் தரமன்று. இம்முறையும் தவறிப்போன செய்தி கேட்டால் அந்தோ! அவர்கள் மனம் இடிந்தே போய்விடும். அவர்கள் துயரத்தை பார்த்து எவ்வாறு சகித்துக் கொண்டிருப்பது. நல்ல வேளை, உயிரை விடுவதும் வைத்துக் கொண்டிருப்பதும் ஒருவனுடைய விருப்பத்தைப் பொறுத்ததாயிருக்கிறதே, அதை நினைத்துச் சந்தோஷப்பட வேண்டியதுதான். அவமானத்தைப் பொருட்படுத்த வேண்டாம்; மனைவியையும் பெற்றோர்களையும் கவனிக்க வேண்டாம்; எனினும் அடுத்தாற்போல் செய்வதற்கென்ன இருக்கிறது? வரதட்சிணைப் பணம் ரூ. 2000-மும் இந்த மூன்று வருஷங்களில் செலவழிந்து போயிற்று. பாங்கிக் கணக்கில் 30 ரூபாயோ என்னவோதான் பாக்கி. இன்னமொரு வருஷம் படையெடுத்து சென்று பரீட்சைக் கோட்டையை முற்றுகை போடுவதென்பது இயலாத காரியம். மாமனாரிடம் பணம் கேட்கலாமா? சை! அதைவிட நாக்கைப் பிடுங்கிக் கொண்டு உயிர் விடலாம். உத்தியோகத்துக்குப் போவதென்றாலோ, பரீட்சையில் தவறிய பி.ஏ.க்கு என்ன சம்பளம் கொடுப்பார்கள்? 30, 35-க்கு மேல் இல்லை. இந்த 35 ரூபாயைக் கொண்டு பட்டணத்தில் மனைவியுடன் எவ்வாறு வாழ்க்கை நடத்துவது? சென்ற வருஷத்தில் மாதம் 60 ரூபாய் போதாமல் கஷ்டப்பட்டோ மே? பின்னர், பெற்றோர்களுக்கு பணம் அனுப்புவதெப்படி? தம்பியைப் படிக்க வைப்பதும் தங்கைகளுக்குக் கல்யாணம் செய்து வைப்பது எங்ஙனம்? "ஆ! பரீட்சையில் மட்டும் தேறியிருந்தால்! நினைத்தபடி இன்கம்டாக்ஸ் ஆபீஸில் ஓர் உத்தியோகமும் கிடைத்திருந்தால்! ‘சம்பளத்தைக் கொண்டு நீ உன் காலட்சேபத்தை நடத்திக் கொள். மேல் வரும்படியை மட்டும் மாதாமாதம் எனக்கு அனுப்பிவிடு’ என்று தந்தை அடிக்கடி கூறியது அவனது நினைவுக்கு வந்தது. ‘மேல் வரும்படி’ விஷயத்தில் தானாக யாரையும் ஒரு பைசாவேனும் கேட்பதில்லையென்று அப்போதே தீர்மானித்திருந்ததும் ஞாபகம் வந்தது. இன்கம்டாக்ஸ் ஆபீஸில் உத்யோகம் அகப்படாவிட்டாலும் ரயில்வேயில் ரூ.100 சம்பளத்தில் வேலை கிடைத்திருந்தால் போதுமே!… சை, சை என்ன வீண் நினைவுகள்! இவைகளைப் பற்றி இப்போது எண்ணி என்ன பயன்! தற்கொலை! தற்கொலை! தற்கொலை! அதைப் பற்றியன்றோ இப்போது சிந்திக்க வேண்டும்! ஒரே ஒரு யோசனை, நாம் போய்விட்டால் மனைவி பெற்றோர்களின் கதி என்ன? நல்ல வேளையாக மனைவியின் பெற்றோர்கள் கொஞ்சம் பணக்காரர்கள். எனவே அவளைப் பற்றிக் கவலையில்லை. உயிரோடிருந்தாலும் பெற்றோர்களுக்கு உதவி எதுவும் செய்ய முடியாது. அவர்கள் எல்லாரும் அளவு கடந்த துக்கத்தில் ஆழ்ந்து விடுவார்கள் என்பது உண்மையே. ஆனால், உயிரோடிருந்து அவர்கள் துயரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைவிட இறந்து போய் விட்டால், பிறகு யார் எப்படிப் போனால் நமக்கென்ன தெரியப் போகிறது? இவ்வளவு எண்ணங்களும் ஜகந்நாதன் மனதில் கோர்வையாக எழுந்து மறைந்தன. அவனுடைய அறிவு அந்த நெருக்கடியான தருணத்தில் மிகத் தெளிவு பெற்றிருந்தது. அச்சமயத்தில், “நான் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?” என்னும் விஷயமாக ஒரு கட்டுரை வரையச் சொல்லியிருந்தால் அவன் மிக நன்றாக எழுதியிருப்பான். இவ்வளவு தெளிந்த அறிவுடன் பரீட்சையில் எழுதியிருந்தால் எந்தக் குருட்டுப் பரீட்சகனும் அவனைத் தேர்தல் செய்யத் தவறியிரான்! தற்கொலை செய்துகொள்ளும் விதத்தைப் பற்றி ஜகந்நாதன் அதிகமாகச் சிந்திக்கவேயில்லை. ஒரே கணத்தில் இந்த விஷயத்தில் முடிவுக்கு வந்துவிட்டான். இரவு ஏழு மணியாயிற்று. மனைவிக்கொரு கடிதமும், தந்தைக்கொரு கடிதமும் எழுதினான். மனைவிக்கெழுதிய கடிதம் வருமாறு:- “என் அன்பே! நான் பரீட்சையில் இம் முறையும் தவறி விட்டேன். இனி உன் முகத்தில் விழிக்க என்னால் முடியாது. தற்கொலை செய்து கொண்டு இன்றிரவு உயிர் விடப் போகிறேன். ஜகந்நாதன்” தந்தைக் கெழுதிய கடிதமும் இவ்வளவு சுருக்கமானதுதான். இரண்டையும் மடித்து உறையில் போட்டு விலாசம் எழுதி மேஜையின் மீது வைத்தான். மரண விசாரணையில் அடையாளம் தெரிவதற்காகத் தன்னுடைய விலாசம் எழுதிய ஒரு காகிதத்தைச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். (என்ன முன்யோசனை) அறையை பூட்டி விட்டு வெளியே கிளம்பினான். இரவு ஒன்பது மணி அமாவாசை இருட்டு. தென் இந்திய ரயில் பாதையில் ஒரு சிறு வாய்க்காலின் பாலத்தின் மீது ஜகந்நாதன் உட்கார்ந்து கொண்டிருந்தான். நிர்மலமான நீல வானத்தில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டி மனிதர்களின் அறியாமையைக் குறித்துக் கேலி செய்து கொண்டிருந்தன. மேல்வான வட்டத்தின் அடிவாரத்தைக் கரிய மேகத்திரள் மறைந்திருந்தது. ஒவ்வொரு சமயம் அம்மேகத்திரளை மீறிக்கொண்டு ஒரு பொன் மின்னற்கொடி வெளிக் கிளம்பி ஒரு கணம் கண்ணைப் பறித்துவிட்டு உடனே மறைந்தது. கிழக்கே வெகு தூரத்தில் பட்டணத்தில் மின்சார விளக்குகள் மங்கலாகக் காணப்பட்டன. வெறுப்புத் தரும் வாடைக் காற்றில் கலந்து, காட்டில் ஊளையிடும் நரியின் கூக்குரல் வந்து கொண்டிருந்தது. அவ்வப்போது மத்திம ஸ்தாயியில் இடிகள் உறுமின. பக்கத்திலிருந்த புளிய மரத்தில் ஒரு கோட்டான் கோரமாகக் கத்திக் கொண்டிருந்தது. அடுத்த ஸ்டேஷனிலிருந்து போட்மெயில் புறப்பட்டுவிட்டதென்பதற்கு அறிகுறியான ஊதல் சத்தம் கேட்டது. ஜகந்நாதன் எழுந்து சென்று தண்டவாளத்தின் மீது குறுக்காகப் படுத்துக்கொண்டு கண்ணை இறுக மூடிக் கொண்டான். இதயம் ‘பட்பட்’ என்று அடித்துக் கொண்ட சத்தம் அவன் செவியில் நன்றாகக் கேட்டது. அவன் மனைவியும், மாமனாரும், மாமியாரும், தந்தையும், தாயும், தம்பியும், தங்கைகளும் ஒவ்வொருவராக அவன் முன்பு தோன்றி, “ஐயோ பைத்தியமே! இப்படி செய்யாதே” என்று கெஞ்சுவதுபோல் அவனுக்குத் தோன்றிற்று. இந்தப் பிரமையினின்று விடுபடும் பொருட்டு அவன் கண்களைத் திறந்து ரயில் வரவேண்டிய திக்கை நோக்கினான். அவ்விடத்தில் இரயில் பாதை நேராக அமைந்திருந்தபடியால் வெகுதூரத்தில் ரயில் வருவது காணப்பட்டது. குழந்தைப் பருவத்தில் கொள்ளிக் கண்ணன் என்னும் இராட்சதனைப் பற்றிக் கேட்ட கதை அவனுக்கு நினைவு வந்தது. பெரிய கரிய வடிவமும் கொள்ளிக் கண்களும் உடைய ஒரு பூதம் பயங்கரமாக உறுமிக் கொண்டு தன்னை விழுங்க வருவது போல் அவனுக்குத் தோன்றிற்று. இத்தோற்றத்தினால் பீதியடைந்து அவன் மீண்டும் கண்களை மூடிக் கொள்ளப் போனான். ஆனால், அச்சமயத்தில் சுமார் ஐம்பது அடி தூரத்தில் ரயில் பாதை ஓரமாக வெள்ளைத் துணியால் முக்காடணிந்த உருவம் ஒன்று தன்னை நோக்கி வருவதைக் கண்டுவிட்டான். பேய், பிசாசுகளிடம் ஜகந்நாதனுக்கு நம்பிக்கையில்லை. இருந்தாலும் அப்போது அவன் உடலும் நடுங்கிவிட்டது. வியர்வை வியர்த்து துணிகள் எல்லாம் ஒரு கணத்தில் சொட்ட நனைந்து போயின. அச்சமயத்தில் அவன் உணர்வு போனவழி காரியம் செய்தானேயன்றி, அறிவைப் பயன்படுத்தி யோசித்து எதுவும் செய்யவில்லை. அவ்விடத்திலிருந்து உடனே போய்விட வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. மெதுவாக நகர்ந்து பக்கத்திலிருந்த பாலத்துக்கு வந்து அங்கிருந்து கீழே வாய்க்காலில் சத்தமின்றி இறங்கி விட்டான். ஏற்கெனவே காரிருள்; அதிலும் பாலத்தின் நிழல். அங்கிருந்து அவ்வுருவத்தைப் பார்த்துக் கொண்டே நின்றான். என்ன அதிசயம்! அவ்வுருவம் சற்று முன் ஜகந்நாதன் படுத்திருந்த இடத்துக்கே வந்து நின்றது. முக்காடு போட்டிருந்த துணியை எடுத்துக் கோவிலில் ஸ்வாமி தரிசனம் பண்ணும்போது செய்வது போல் இடுப்பில் வரிந்து கட்டிக் கொண்டது. பின்னர் தண்டவாளத்தின் மீது குறுக்காகப் படுத்தது. அத்தகைய நிலைமையிலும் ஜகந்நாதனால் புன்னகை கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அவ்வுருவம் தன்னைப் போலவே ஏதோ ஒரு காரணத்தினால் தற்கொலை செய்து கொள்ள வந்த துரதிர்ஷ்டசாலியான ஒரு மனிதனே என்பதை அவன் தெள்ளத் தெளியக் கண்டான். அவனுயிரை அச்சமயம் தான் காப்பாற்றாவிட்டால், அக்கொலை பாதகத்துக்கு உடந்தையாயிருந்த பாவம் தன்னைச் சாரும் என்று அவனுக்கு ஓர் உணர்ச்சி உண்டாயிற்று. ரயிலோ சமீபத்தில் வந்து விட்டது. அவன் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தேறிச் சென்று படுத்திருந்த உருவத்தை முதுகில் தொட்டான். அவ்வுருவம் அப்படியே வீறிட்டுக் கொண்டு துள்ளி விழுந்தது. பாவம்! ரயில் வண்டி தன்மீது ஏறிவிட்டதாக அந்த துரதிர்ஷ்டசாலி நினைத்திருக்க வேண்டும். ஜகந்நாதன் அதனைப் பாதிதூக்கிக் கொண்டும் பாதி இழுத்துக் கொண்டும் கீழே பாலத்தின் அடியில் கொண்டு வந்து சேர்த்தான். “ஆம், மூன்று ஆண்டுகளாக நான் அலையாத இடமில்லை. நான் போகாத ஆபீஸ் இல்லை. விண்ணப்பம் எழுதி எழுதி கையும் சலித்துவிட்டது. நடந்து நடந்து காலும் ஓய்ந்து விட்டது. மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றியாக வேண்டும். பாங்கியில் இரண்டாயிரம் தான் பாக்கி. அதை வைத்துக் கொண்டு எங்கேயாவது கிராமத்திற்கு போய் அவர்களாவது சௌக்கியமாயிருக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தேன். இன்னும் இரண்டு வருஷம் நான் இந்த நகரத்தில் இருந்து வேலை தேடிக் கொண்டிருந்தால், அந்தப் பணமும் தொலைந்து போய் விடும். பின்னர், என் மனைவி குழந்தைகளின் கதி என்ன? ஆகையினாலேயே இன்று முடிவாக பி.ஏ. பட்டத்துக்குரிய பத்திரத்தை சர்வகலாசாலை ரிஜிஸ்ட்ராருக்கே திருப்பியனுப்பிவிட்டு, உயிரைவிடும் துணிவுடன் புறப்பட்டு வந்தேன். நீர் அதற்குக் குறுக்கே நின்றீர்” என்று கூறி முடித்தார் மகாதேவஐயர். ஜகந்நாதன் கொல்லென்று சிரித்தான். அவர்கள் பாலத்தின் மீது உட்கார்ந்திருந்தார்கள். “என் வரலாற்றை உம்மிடம் கூறியது குறித்து வருந்துகிறேன். பிறர் துன்பத்தைக் கேட்டு சிரிக்கும் குணமுள்ளவர் நீர் என்பதே எனக்குத் தெரியாது போயிற்று” என்று மகாதேவ ஐயர் சற்றுக் கோபத்துடன் கூறினார். “தயவு செய்து மன்னித்து விடுங்கள். நான் கூறப்போவதைக் கேட்டால் நான் சிரித்ததற்குக் காரணம் உண்டென்று நீங்களே சொல்வீர்கள். நான் சென்ற வருஷமும் இவ்வருஷமும் பி.ஏ. பரீட்சைக்குச் சென்று தவறிவிட்டேன். இதன் பொருட்டு தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடனேயே நானும் இங்கு வந்தேன். நீங்கள் திடுக்கிடுகிறீர்களல்லவா! எந்த இடத்தில் நீங்கள் படுத்துக்கொண்டீர்களோ, அதே இடத்தில் ஒரு நிமிஷத்திற்கு முன்பு நான் படுத்துக்கொண்டிருந்தேன். தங்களைக் கண்டு பயந்துகொண்டு கீழிறங்கினேன். பி.ஏ. பரீட்சையில் முதன்மையாகத் தேறிய தாங்கள் அப்பட்டத்தினால் ஒரு பயனுமில்லையெனக் கண்டு அதைத் திருப்பி அனுப்பி விட்டு உயிர் துறக்கத் துணிந்திருக்கையில், அப்படிப்பட்ட பட்டம் கிடைக்கவில்லையேயென்பதற்காக நான் தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்ததை எண்ணிய போது, என்னையறியாமல் சிரிப்பு வந்துவிட்டது. இப்பொழுது சொல்லுங்கள். நான் சிரித்ததில் தவறு உண்டா என்று” என்றான் ஜகந்நாதன். இதைக் கேட்டதும் மகாதேவ ஐயருக்கு கூட நகைப்பு வந்துவிட்டது. சற்றுநேரம் இருவரும் இடி இடியென்று சிரித்தார்கள். அந்த நிர்மானுஷ்யமான இடத்தில், அந்த நள்ளிரவில் அவர்களுடைய சிரிப்பின் ஒலியைக் கேட்டு, அதுவரை சத்தம் போட்டுக் கொண்டிருந்த பூச்சிகள், தவளைகள் முதலியன பயந்து வாய் மூடிக் கொண்டன. அருகிலிருந்த புளிய மரத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு பறவை கண் விழித்துக் ‘கிறீச்’ என்று கத்திற்று. “உயிர் விடும் யோசனையை மறந்துவிடுவோம்” என்று மகாதேவ ஐயர் கூறினார். “ததாஸ்து” என்றான் ஜகந்நாதன். பின்னர் அவன் சொன்னான்:- “இன்றிரவிலிருந்து, நாம் இருவரும் உயிர் நண்பர்களானோம். நாமிருவரும் ஒரே நோக்கங்கொண்டு இருவரும் ஒருவரது உயிரை ஒருவர் காப்பாற்றினோம். இருவரும் ஏறக்குறைய ஒரே நிலையில் இருக்கிறோம். நம்மிருவரையும் சேர்த்து வைக்க வேண்டுமென்பது கடவுளுடைய திருவுள்ளம்போல் தோன்றிற்று.” “ஆம். நண்பர் ஒருவர் இல்லாத காரணத்தினாலேயே, நான் இவ்வளவு விரைவில் மனஞ் சோர்ந்து விட்டேன் என்று இப்போது தோன்றுகிறது. தங்களுடைய நிலையும் அப்படித்தான் இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன். இனி இருவரும் சேர்ந்து புதிய பலத்துடனும் உற்சாகத்துடனும் வாழ்க்கைப் போராட்டத்தில் இறங்குவோம்.” “அப்படியேயாகட்டும். ஆனால், என்ன செய்வது என்பதுதான் எனக்கு விளங்கவில்லை.” “இனி பரீட்சைக்குப்போகும் எண்ணத்தை விட்டு விடுங்கள். என்னிடம் இரண்டாயிரம் ரூபாய் இருக்கிறதென்று சொன்னேனல்லவா? அதை வைத்துக் கொண்டு ஏதேனும் தொழில் நடத்துவோம்.” இவ்வாறு சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு இருவரும் கை கோர்த்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார்கள். மறுநாள் ஜகந்நாதனுக்கு, அவனுடைய காதல் மனைவி செல்லத்தினிடமிருந்து ஒரு கடிதம் கிடைத்தது. அதன் பிற்பகுதியை இங்கே தருகிறோம்:- "…இந்த துக்க சமாசாரத்தில் நமக்கு ஒரு சந்தோஷமான அம்சமும் இல்லாமற் போகவில்லை. அத்தைக்கு என்னிடம் எப்போதுமே நிரம்பப் பிரியம் என்று தங்களுக்குச் சொல்லியிருக்கிறேனல்லவா? அந்திய காலத்தில் நான் அவளுக்குச் செய்த பணிவிடை அந்தப் பிரியத்தைப் பதின்மடங்கு வளர்ந்துவிட்டது. எனவே அவளுடைய மரண சாசனத்தில் பாங்கியில் அவள் பெயரால் இருந்த ரூபாய் மூவாயிரத்தையும் எனக்கு கொடுத்து விட்டதாக எழுதி வைத்திருக்கிறாள். இந்தப் பணம் தங்களாலேயே எனக்குக் கிடைத்தது என்பதை நினைவூட்டுகிறேன். தாங்கள் என்னை வற்புறுத்தி பிறந்தகத்துக்கு அனுப்பியிராவிடில் அத்தைக்குப் பணி விடை செய்யும் சந்தர்ப்பம் கிடைத்திராது. அப்போது அவள் பணத்தை எனக்குக் கொடுத்திருப்பது நிச்சயமில்லை. ஆதலின், அந்தப் பணம் முழுதும் தங்களுக்கே உரியதாகும். இன்னொரு சமாசாரம், தங்கள் பரீட்சையின் முடிவு இதற்குள் தெரிந்திருக்க வேண்டும். தேறியிருந்தால் சந்தோஷம், இல்லாவிட்டாலும் நாம் கவலைப்பட வேண்டியதில்லையென்று எனக்குத் தோன்றுகிறது. பட்டம் பெற்றவர்களுக்கும் கூட இக்காலத்தில் உத்தியோகம் இலேசில் கிடைப்பதில்லையென்று எல்லாரும் சொல்லுகிறார்கள். மேலும் கைகட்டுச் சேவகம் செய்யும் பிழைப்பு தங்கள் இயல்புக்கு ஒத்ததன்று. எனவே இந்த மூவாயிரம் ரூபாயும் மூலதனமாக வைத்துக்கொண்டு, தாங்கள் ஏதேனும் ஒரு தொழில் ஆரம்பித்து நடத்தினாலென்ன? அடியாள் தங்களுக்குப் பிடியாவிட்டால் அதற்காக என்னைக் கோபித்துக் கொள்வதில் பயனில்லை. தாங்கள்தான் செல்லங் கொடுத்துக் கொடுத்துத் தங்கள் செல்லத்தைக் கெடுத்து விட்டீர்கள். பிற விஷயங்கள் தங்களை நேரில் தரிசிக்கும்போது." மேற் சொன்ன சம்பவங்கள் நிகழ்ந்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. இப்போது மகாதேவ ஐயரும் ஜகந்நாதனும் “மகாநாதன் கம்பெனி” என்ற பெயருடன் புத்தக வியாபாரமும், பிரசுரமும் நடத்தி, நல்ல லாபம் சம்பாதித்து வருகிறார்களென அறிகிறோம். ஜகந்நாதனுடைய தந்தை மட்டும் “என்னதான் இருந்தாலும், மாதா மாதம் சம்பளமும் அதன் மீது கொஞ்சம் மேல் வரும்படியும் கிடைப்பதுபோல் ஆகுமா?” என்று சொல்லி வருகிறாராம். 18. திருவழுந்தூர் சிவக்கொழுந்து இரவு எட்டு அடித்து முப்பதாவது நிமிஷம் ரயில் ஐயம்பேட்டை ரயில் ஸ்டேஷனில் வந்து நின்றது. பளிச்சென்று வீசிய மின்னலில் ஸ்டேஷன் கட்டடம், பிளாட்பாரம், அப்பால் அடர்ந்து வளர்ந்திருந்த மரங்கள் எல்லாம் ஒரு கணம் தெரிந்து அடுத்த கணத்தில் மறைந்தன. மின்னலுக்குப் பிறகு இருட்டு முன்னை விடப் பதின்மடங்கு அதிகமாகத் தோன்றிற்று. மினுக் மினுக்கென்று தோன்றிய ஸ்டேஷன் லாந்தர் அந்த இருட்டை எடுத்துக் காட்டுவதற்காகப் போட்ட வெளிச்சமாகக் காணப்பட்டது, ‘நீ என்ன என்னை எடுத்துக் காட்டுவது?’ என்று இருள் கோபங் கொண்டு அந்த லாந்தரை அமுக்கிக் கொன்றுவிடக் கவிந்து வருவது போலிருந்தது. சில பேர் ரயிலில் ஏறி விட்டால் உடனே அவர்கள் கண்ணைச் சுற்றத் தொடங்கி விடுகிறது. வண்டி இரண்டு அசைப்பு அசைந்ததும் தூங்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் எனக்கு ரயிலில் தூங்க முடிவதே இல்லை. அதிலும் இடியும் மின்னலுமாய் இருந்த அந்த இரவில் தூக்கம் எப்படி வரப் போகிறது? ராத்திரி முழுவதும் ரயிலில் கழித்தாக வேண்டுமே என்று கவலையாயிருந்தது. ஒரு கதைப் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். ரயிலின் ஆட்டத்தில் படிப்பதும் சுலபமாக இல்லை. இந்த நிலைமையில், “ஐயம்பேட்டை ஐயம்பேட்டை!” என்ற போர்ட்டரின் குரலைக் கேட்டதும் சாத்தியிருந்த ஜன்னல் கதவுகளைத் திறந்து வெளியே பார்த்தேன். கதவைத் திறக்கும் போதே ‘தவுல் கந்தப்பனுக்கு இந்த ஊர்தானே?’ என்ற நினைவு எழுந்தது. ஐயம்பேட்டைக் கந்தப்பன் என்று நீங்கள் கேள்விப் பட்டிருக்க மாட்டீர்கள். ஏனென்றால் அவருடைய ஊரையும், பெயரையும் நான் மாற்றியிருக்கிறேன். இந்தப் பெயர் பெற்ற தவுல் வித்வானை நந்தி தேவரின் அவதாரம் என்றே சிலர் சொல்வார்கள். அவர் தவுல் வாசித்தால் அது கேவலம், தவுலாக இராது. தேவ துந்துபி என்று சொல்லும்படியாகத்தான் இருக்கும். ஒரு சமயம் புதுக்கோட்டை தக்ஷிணாமூர்த்திப் பிள்ளை இவருடைய தவுல் வாசிப்பைக் கேட்டாராம். உடனே தம்மிடமிருந்த மிருதங்கம், கஞ்சிரா அவ்வளவையும் உடைத்து எறிந்து விட்டு, ஆறு மாதகாலம் தோல் வாத்தியத்தையே தொடாமல் இருந்தாராம். அவ்வளவு சிறந்த தவுல் வித்வான் ஐயம்பேட்டைக் கந்தப்பன். அதோடு தேசிய விஷயங்களில் அதிக சிரத்தையுள்ளவர். கதர் தான் கட்டுவார். காங்கிரஸ் மாநாடுகளில் அவரை அடிக்கடி பார்த்திருந்ததுடன், ரொம்ப ரசமாகப் பேசக் கூடியவர் என்றும் தெரிந்து கொண்டிருந்தேன். ஆகையினால் தான் அவரைப் பற்றிய நினைவு உண்டாயிற்று. ஒரு வேளை கந்தப்பன் தப்பித் தவறி இதே வண்டியில் வந்து ஏறினால் இராத்திரிப் பொழுது போவது தெரியாமல் போகுமல்லவா? என்று எண்ணினேன். இப்படி எண்ணியதுதான் தாமதம். இரண்டு மூன்று பேர் பிளாட்பாரத்தில் அவசர அவசரமாக நடந்து வருவது தெரிந்தது. யார் என்று உற்றுப் பார்த்தேன். முதலில் வந்த ஆசாமி, தவுல் கந்தப்பன் தான்! இதைப் பற்றி நான் ஆச்சரியப்பட்டு முடிவதற்குள்ளாக நானிருந்த வண்டியின் கதவு திறக்கப்பட்டது. கந்தப்ப பிள்ளை உள்ளே ஏறினார். பின்னோடு வந்தவர்கள் இரண்டு தவுல்களையும் பெட்டி படுக்கைகளையும் வண்டியில் ஏற்றினார்கள். “எல்லா சாமானும் வந்துடுத்தா?” “எல்லாம் வந்துடுத்துங்க.” “சரியா இருக்கா, பார்த்திடுங்க.” “போய்ட்டு வரீங்களா, தம்பீ!” “போய்ட்டு வரோம், அண்ணே!” “ஓடு! ஓடு! வண்டி கிளம்பிட்டுது. பக்கத்து வண்டியிலே ஏறிக்கோ! விழுப்புரத்திலே தூங்கிடாதே! தெரியுதா?” ரயில் நகரத் தொடங்கியது. ஒரு நிமிஷத்திலே ஸ்டேஷன் விளக்கு மறைந்தது. காடாந்திரமாகக் கவிந்திருந்த இருளைக் கிழித்துக் கொண்டு ரயில் துரிதமாகச் சென்றது. “என்ன, கந்தப்பபிள்ளை சௌக்கியமா?” என்று கேட்டேன். கந்தப்பபிள்ளை திடுக்கிட்டு, என்னைத் திரும்பிப் பார்த்தார். “சாமி நீங்களா? சௌக்கியந்தானுங்க. உங்களைப் பார்த்தது ரொம்ப சந்தோஷம்” என்றார். “உம்மைப் பார்த்தது எனக்கு அதைவிட சந்தோஷம். ஒரு வேடிக்கையைக் கேளுங்கள். ஐயம்பேட்டை ஸ்டேஷனில் வண்டி நின்றதும் உம்மை நான் நினைத்துக் கொண்டேன். தப்பித் தவறி இதே வண்டியில் நீரும் வந்து ஏறினால் எவ்வளவு நன்றாய் இருக்கும் என்று எண்ணினேன். அடுத்த நிமிஷம் பார்த்தால் நீரே வந்து இந்த வண்டியில் ஏறுகிறீர். நாளைக்கு சென்னை பட்டினத்தில் என் ஸ்நேகிதர்களிடம் நான் சொன்னால் நம்பவே மாட்டார்கள். ‘இயற்கைக்கு விரோதம்’ என்பார்கள்” என்றேன். “எந்த இயற்கைக்கு விரோதம், ஸ்வாமி” என்று கந்தப்பபிள்ளை கேட்டார். “இது என்ன கேள்வி! எந்த இயற்கைக்கு விரோதம் என்றால்…?” “இல்லை, ஐயா! இப்போது பாருங்கள். இந்த ரயில் இருக்கிறது. தண்டவாளத்தில் ஓடுவது இதன் இயற்கை. அந்த இயற்கையை நம்பித்தான் நாம் எல்லோரும் ரயிலில் ஏறுகிறோம். ஆனால் திடீரென்று எப்போதாவது ஒரு தடவை ரயில் தண்டவாளத்தில் இருந்து இறங்கி விடுகிறது. அதனால் விபத்து நேரிடுகிறது. இந்த விபத்தை நேரில் பார்க்காதவர்கள் ‘அதெல்லாம் இல்லை; அப்படி ஒரு நாளும் ரயில் தண்டவாளத்தை விட்டு நகர்ந்திராது; இயற்கைக்கு விரோதம்’ என்று சொல்லலாம் அல்லவா?” இதற்கு என்ன பதில் சொல்வதென்று நான் யோசிப்பதற்குள் அவர் மேலே பேசத் தொடங்கி விட்டார், “இதோ கேளுங்கள். வானத்தில் இடி இடிக்கிறது. இந்த ஐந்து நிமிஷத்தில் பத்து இடி இடித்துவிட்டது. இம்மாதிரி உலகத்தில் தினம் பதினாயிரம், லக்ஷம் இடி இடித்துக் கொண்டுதானிருக்கிறது. அந்த இடியெல்லாம் பூமியின் மேல் விழுந்தால், இந்த உலகத்திலே ஒரு மனுஷன், ஒரு பிராணி உயிரோடு இருக்க முடியுமா? முடியாது. ஆகையால், இடி இடித்துவிட்டு ஆகாயத்திலே மறைந்து விடுவதுதான் இயற்கை. ஆனால் எப்போதோ ஒரு தடவை இடியானது பூமியின் மேல் விழுகிறது. அதுவும் ஒரு மனுஷன் மேல் விழுகிறது. அந்தப் பாழும் இடி அவனைக் கொல்லாமல் அவன் கண்ணன் மட்டும் கொண்டு போய் விடுகிறது! இதற்கு என்ன சொல்கிறீர்கள், ஸ்வாமி! இது இயற்கையா? இயற்கைக்கு விரோதமா?” இப்படிக் கேட்டு விட்டு கந்தப்பன் என்னைப் பார்த்தார். நானும் அவரைப் பார்த்தேன். வேறு எனக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. “என்ன சாமி, பேசாமல் இருக்கீங்க? சொல்லுங்களேன்? இடி விழுகிறது இயற்கையாய் இருந்தால், நம் எல்லோர் தலையிலும் ஏன் இடி விழவில்லை? நம் எல்லார் கண்ணும் ஏன் அவிந்து போகவில்லை? அது இயற்கைக்கு விரோதமாய் இருந்தால் ஒருத்தர் மேல் மாத்திரம் எப்படி விழுந்திருக்கும்! அவர் கண் மட்டும் எப்படிப் போயிருக்கும்? இது நடக்கக் கூடியதா ஸ்வாமி? நடக்கக் கூடியது இல்லாவிட்டால் எப்படி நடந்தது?” கந்தப்ப பிள்ளையின் அப்போதைய அறிவுத் தெளிவைப் பற்றி எனக்குச் சந்தேகம் உண்டாயிற்று. தஞ்சாவூர் ஜில்லாவில் இன்னும் மதுவிலக்குச் சட்டம் வரவில்லை என்பது ஞாபகம் வந்தது. ஒரு வேளை… அப்படி இருக்குமோ? சே! சே! ஒரு நாளும் இல்லை. அவர் அந்த ஊர் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். காந்திக் குல்லா போட்டுக் கொண்டு கள்ளுக்கடை மறியல் செய்தவர். அப்படிப்பட்ட மனுஷரா மதுபானம் செய்திருப்பார்? இல்லவே இல்லை. பின்னே, ஏன் இப்படி என்னவெல்லாமோ சம்பந்தமில்லாமல் பேசுகிறார்? இடியாவது? தலையில் விழுவதாவது? இயற்கைக்கு விரோதமாவது? எல்லாம் சர்வ பேத்தலாகவல்லவா இருக்கிறது? பேச்சை மாற்றுவதற்காக நான், “பட்டணத்துக்குத் தானே வருகிறீர்கள்? அங்கே நாளைக்கு கச்சேரியாக்கும்! கல்யாணக் கச்சேரியா?” என்று கேட்டேன். “ஆமாம் சாமி! நாளைக்குப் பட்டணத்திலே கச்சேரிதான்” என்றார் கந்தப்ப பிள்ளை. இப்படிச் சொல்லிவிட்டு, தவுலை எடுத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டார். அதன் உறையை அவிழ்த்தார். தவுலின் இரண்டு புறத்தையும் தடவிக் கொடுத்தார். ஒரு தாயார் தன்னுடைய குழந்தையின் அழகான கன்னங்களைத் தடவுவதுபோல் அவ்வளவு செல்லமாகத் தடவினார்! மனுஷர் இந்த இரயில் வண்டியில் தனித் தவுல் கச்சேரி ஆரம்பிக்கப் போகிறாரா என்ன? தூக்கம் வருகிறதற்கு நல்ல உபாயந்தான்! - இப்படி நினைத்து மனத்திற்குள் சிரித்துக் கொண்டேன். அப்போது அவர் சொன்னார்: "சாமி! நானும் தினம் பொழுது விடிந்தால் தவுல் அடித்துக் கொண்டுதானிருக்கிறேன். எத்தனையோ நாதஸ்வர வித்வான்களுக்கு வாசித்திருக்கிறேன். ஆனால் நேற்றைக்கு ராத்திரி நான் பரவசமாய் வாசித்தது போல் வாசித்தது வெகு அபூர்வம். இந்தத் தோல் வாத்தியத்திலிருந்து நேற்று என்னெல்லாம் நாதங்கள் வந்தன? நானா வாசித்தேன்? இல்லை, இல்லை. நந்தி பகவானே என் விரல்களிலே வந்து உட்கார்ந்து கொண்டார்! இதைக் கேட்டதும் அவருடைய பேச்சில் எனக்கு சிரத்தை உண்டாயிற்று. சற்று முன் அவர் தலைகால் இல்லாமல் பேசியதெல்லாம் முதல் நால் கச்சேரியின் ஆவேசந்தான் என்று அறிந்து கொண்டேன். “அப்படியா? எந்த ஊரில் ஐயா, அவ்வளவு நல்ல கச்சேரி? நாயனம் யார் வாசித்தது?” என்று கேட்டேன். “திருவழுந்தூர் சிவக்கொழுந்து என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா, சாமி?” “திருவழுந்தூர் சிவக்கொழுந்தா? அது யார்? நான் கேட்டதில்லையே?” என்றேன். வெகு காலத்துக்கு முன்பு சிவக்கொழுந்து என்று பிரசித்து பெற்ற நாயனக்காரர் இருந்ததாக நான் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் அவர் நான் பிறப்பதற்கு முன்னாலேயே காலஞ்சென்ற மனிதர். அவருக்குத் திருவழுந்தூருமில்லை! “கேட்டதே இல்லையா? நினைத்துப் பாருங்க சாமி. 1929-30இல் நீங்க எங்க இருந்தீங்க?” "ஓஹோ! 1929-30 லா? பாதி நாள் சர்க்கார் விருந்தாளியா இருந்தேன். பாக்கிப் பாதி நாள் சேலம் ஜில்லாவில் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வெகு தூரத்திலுள்ள கிராமத்தில் இருந்தேன். “சரிதான்; அதனால் தான் நீங்கள் கேள்விப்படவில்லை. திருவழுந்தூர்த் தம்பி அந்த இரண்டு வருஷ காலம்தான் பிரசித்தமாயிருந்தது. ஆனால் அந்த இரண்டு வருஷத்திலேயே அது சங்கீத உலகத்தையே ஜயித்துவிட்டது.” எனக்குப் பகீர் என்றது. கலை உலகில் மகா மேதாவிகளாக கிளம்பும் சிலர் அற்பாயுஸிலே இறந்து விடுவது சகஜமாயிருக்கிறதல்லவா? உடனே, கிட்டப்பாவின் ஞாபகம் எனக்கு வந்தது. “ஐயோ, பாவம்! கிட்டப்பா மாதிரி…” “இல்லீங்க, சாமி, இல்லீங்க! உங்கள் வாயாலே, அப்படிச் சொல்லாதீங்க. தம்பி தீர்க்காயுஸா இருக்கட்டும்னு சொல்லுங்க.” “ரொம்ப சந்தோஷம், ஐயா! தீர்க்காயுளாய், சிரஞ்சீவியாய், என்றும் பதினாறாய், மார்க்கண்டனைப் போலிருக்கட்டும். ஆனால், பெயர் ஏன் இப்போது மறைந்து போச்சு? ஏன் அவர் வாத்தியம் வாசிக்கிறதில்லை?” “ஏன் வாசிக்கிறதில்லை? வாசித்தால் உலகம் தாங்காது. எல்லாரும் பைத்தியம் பிடித்துப் போய் விடுவார்கள். அதனால் தான் நான் கூட அடிக்கடி தம்பியைப் பார்க்கப் போகிறதில்லை. நேற்று ராத்திரி அது வாசித்துக் கேட்டேன். அப்போது முதல் வெறி பிடித்தது போலிருக்கு. தவுலைக் கிழித்து எறிந்து விட்டு, ‘இனி மேல் ஒருத்தனுக்கும் தவுல் வாசிக்கிறதில்லை’ என்று சபதம் பண்ணத் தோன்றுகிறது. அடாணா ராகம் ராத்திரி வாசிச்சுது பாருங்கள்! ஒரு நிமிஷம் எனக்குக் கண்ணிலே ஜலம் வந்தது. மறு நிமிஷம் எழுந்து ஆனந்தக் கூத்தாடலாம் என்று தோன்றிற்று. அதை நினைக்கும் போதே மயிர்க் கூச்சல் எறிகிறது.” கதையே அடியே பிடித்துச் சொல்லும்படி நான் ரொம்பவும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதன் பேரில் தவுல் கந்தப்ப பிள்ளை சொல்லத் தொடங்கினார். "திருவழுந்தூர்த் தம்பியை நான் முதன் முதலில் சந்தித்துப் பன்னிரண்டு வருஷத்துக்கு மேலிருக்கும். அப்போதுதான், அதனுடைய பெயர் பிரபலமாக ஆரம்பித்திருந்தது. ஒரு கோயில் கும்பாபிஷேகத்தில் தம்பியின் கச்சேரிக்கு என்னை தவுலுக்கு அழைப்பதற்கு வந்திருந்தார்கள். ஒரு மைனர் பையனின் கச்சேரிக்குப் போய் வாசிக்கிறதாவது என்று நினைத்து முதலில் சாக்குப் போக்குச் சொன்னேன். ஆனால் வந்தவர்கள் என்னை விடவில்லை. ‘உங்களைத்தான் தவுலுக்கு அமர்த்த வேணுமென்று சிவக்கொழுந்து பிள்ளை பிடிவாதமாய்ச் சொல்லியிருக்கிறார். நீங்கள் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்’ என்று வற்புறுத்தினார்கள். உடனே அப்படிப்பட்ட பையனைப் பார்க்க வேணுமென்று எனக்கும் தோன்றி, சம்மதம் கொடுத்து அச்சாரமும் வாங்கிக் கொண்டேன். கச்சேரி செய்யக் கிளம்பி இரண்டு வருஷத்துக்குள்ளே பிள்ளையாண்டான் இவ்வளவு பேர் எடுத்திருக்கிறானே, ஏதோ சுமாராய் ஊதுவான் என்று நினைத்துக் கொண்டுதான் போனேன். ஆனால், தம்பி நாயனத்தை வாயிலே வைத்து ஊத ஆரம்பித்தானோ இல்லையோ, இது சுமார் வாசிப்பில்லை, பிரமாதம் என்று தெரிந்து போயிற்று. அரைமணி வாசிப்பதற்குள் எனக்குப் பரவசமாய்ப் போய்விட்டது. மன்னார்குடி சின்னப்பக்கிரி, செம்பொன்னார் கோயில் ராமசாமி முதலிய மகாவித்வான்களின் பரம்பரைக்கு வாரிஸாக வந்திருப்பவன் இந்தப் பிள்ளையாண்டான் தான் என்று தீர்மானித்து விட்டேன். என்னைத்தான் தவுலுக்கு வைக்க வேண்டுமென்று தம்பி வற்புறுத்திய காரணம் என்னவென்று தெரிய வந்தது. என்னுடைய தவுல் வாசிப்பின் மேல் சிவக்கொழுந்துக்கு அபாரப் பிரியம். அது மட்டுமல்ல, கொஞ்ச காலமாகத் தம்பி எங்கே கச்சேரிக்குப் போனாலும் அங்கே சண்டையாக முடிந்து கொண்டிருந்ததாம். தம்பியின் மேல் மற்ற நாதஸ்வர வித்வான்களுக்கெல்லாம் அவ்வளவு அசூயை உண்டாகியிருந்தது. சாமி! புகழ் என்பது இருக்கிறதே, அது மகா பொல்லாதது. ஒரு மனுஷனுக்கு ஒரு பக்கத்தில் எவ்வளவு புகழ் பெருகுகிறதோ, அவ்வளவுக்கு இன்னொரு பக்கம் அவன் மேல் கோபமும் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதிலும், கலை, வித்வத் என்று சொன்னால் போதும். ‘நேற்று முளைத்த இந்தப் பையன் இவ்வளவு நன்றாக வாசிக்கிறதா? இவ்வளவு செல்வாக்கு அடைகிறதா?’ என்று எல்லாருக்கும் ஒரே வயிற்றெரிச்சல். ஆகவே, நாதஸ்வரக்காரர்கள் கூடுமிடமெல்லாம் திருவழுந்தூர்த் தம்பியை இகழ்ந்து பேசுவதே வேலையாய்ப் போயிருந்தது. அதற்கு ஒரு மாதத்துக்கு முன்னால் ஒரு பிரசித்தமான கோயிலில் பங்குனி உற்சவத்துக்குச் சிவக்கொழுந்தை வரவழைத்திருந்தார்களாம். உள்ளூர் நாயனக்காரர் ஒருவரும் வாத்தியம் வாசித்தார். உற்சவம் ஆரம்பித்ததிலிருந்து இரண்டு கோஷ்டிக்கும் புகைந்து கொண்டிருந்தது. திருக்கல்யாண உற்சவத்தின் போது மண்டபத்தில் கச்சேரி நடந்தது. தம்பி வாசித்துக் கொண்டிருக்கையில் உள்ளூர் நாயனக்காரரும் அவருடைய ஸெட்டைச் சேர்ந்தவர்களும் பின்னால் உட்கார்ந்து கேலி செய்து கொண்டிருந்தார்கள். ‘நாயனத்தை நிமிர்த்திப் பிடிக்கிறதா, தலை கீழாய்ப் பிடிக்கிறதா என்று தெரியாத பசங்களெல்லாம் கச்சேரி பண்ண வந்துடறாங்க" என்று ஒருத்தன் சொன்னானாம். ’கேட்கிறவனுங்க ஞானசூன்யங்களாயிருந்தால், எவன் வேணுனாலும் தான் வாசிக்க வருவான்’ என்றானாம் இன்னொருவன். இதெல்லாம் சிவக்கொழுந்தின் காதில் பட்டும் படாமலும் விழுந்து கொண்டிருந்த போதிலும், அதைக் கொஞ்சமும் இலட்சியம் செய்யாமல் தம்பி வாசித்துக் கொண்டிருந்தது. ஆனால் உள்ளூர் ஸெட்டின் தவுல்காரர் ஒரு தடவை ‘தாளம் தப்பிப் போச்சு!’ என்று சொன்னபோது தம்பிக்குக் கோபம் வந்து விட்டது. திரும்பிப் பார்த்து, ‘யாரடா தாளம் தப்பிப் போச்சு என்று சொல்லுகிறவன்? முன்னாலேயே வந்து தாளம் போடுங்கடா!’ என்று காரமாய்ச் சொல்லிற்று. தம்பியின் மேல் அபிமானம் உள்ளவர்கள் பக்கத்தில் பலர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு பிரமாதமாய்க் கோபம் வந்துவிட்டது. அவர் ‘இவன்கள் கிடக்கானுக, தம்பி, ரொம்ப தாளத்தைக் கண்டுட்டானுக! சோத்துக்குத் தாளம் போடறவனுகதானே! நீ பாட்டுக்கு வாசி’ என்று சொல்லிவிட்டார். அவ்வளவுதான். கலகம் முற்றி விட்டது. உள்ளூர் நாயனக்காரர் நாயனத்தைத் தூக்கி அடிக்க வந்தார். தவுல்காரர் ஒருவரையொருவர் கோலினால் அடித்துக் கொண்டார்கள். ஜாலர்களைப் பிடுங்கி எறிந்தார்கள். சற்று நேரம் ஒரே அல்லோல கல்லோலமாய்ப் போய்விட்டது. தர்மகர்த்தா, குருக்கள் முதலியவர்கள் வந்து சண்டையை விலக்கி நிறுத்தினார்கள். பிறகு யார் மேல் குற்றம் என்று விசாரணை நடந்தது. சபையிலும் இரண்டு கட்சி, சிலர் உள்ளூர் அபிமானத்தின் மேல் உள்ளூர் நாயனக்காரர் கட்சியில் சேர்ந்து கொண்டார்கள். அதிகம் பேர் தம்பியின் கட்சியில் இருந்தார்கள். ஆனால் தர்மகர்த்தா உள்ளூர்க் கட்சியில் இருந்தார். அவர் தம்பியின் மேல் தான் குற்றம் என்று தீர்மானித்து, ‘நீ வாசித்தது போதும் எழுந்து போகலாம்’ என்று கட்டளையிட்டார். ஆனால், கோயில் குருக்கள் ஐயாவுக்கு, தம்பியின் வாசிப்பு என்றால் உயிர். ஆகையால் அவர், ‘சிவக்கொழுந்து கோயிலை விட்டுப் போனால் நானும் இதோ கிளம்பி விடுகிறேன்’ என்று ஆவேசம் வந்தவர் போல் கிளம்பி விட்டார். அப்புறம் மறுபடியும் மத்தியஸ்தம் பண்ண வேண்டியதாயிற்று. இந்த மாதிரி ஒரு தடவை, இரண்டு தடவை இல்லை; பல தடவைகளில் கலகம் நடக்கவே சிவக்கொழுந்து யோசனை பண்ணி, என்னை எப்படியாவது தவுலுக்குச் சேர்த்துக் கொண்டு விட வேண்டும் என்று முடிவு செய்தது. நான் அதோடே சேர்ந்து விட்டால் அப்புறம் எவனும் வாலை ஆட்ட மாட்டான் என்று தம்பிக்கு அவ்வளவு நிச்சயம். இதெல்லாம் பிற்பாடு தம்பியே மனசைவிட்டுச் சொல்லித் தான் நான் தெரிந்து கொண்டேன். அது முதல் நாங்கள் இருவரும் சேர்ந்தே கச்சேரிக்குப் போகத் தொடங்கினோம். மற்ற நாயனக்காரர்களுக்கெல்லாம் இதனால் என் பேரில் காய்ச்சல், என்னை பகிஷ்காரம் பண்ணுகிறது என்றும் தீர்மானம் செய்திருந்தார்கள். ஆனால், எனக்கு என்ன வந்தது சாமீ! உண்பது நாழி, உடுப்பது நான்கு முழ கதர் வேஷ்டி. சோற்றுக்குத் துணிக்கு ஏதோ பகவான் கொடுத்திருக்கிறார். ‘கிடக்கிறான்கள்’ என்று நான் அலட்சியமாய்த் தான் இருந்தேன். அந்த சமயத்தில் அவர்களுடைய பகிஷ்காரம் எல்லாம் எங்களை ஒன்றும் செய்யவில்லை. தினம் பொழுது விடிந்தால் கச்சேரிதான். தம்பியின் வாசிப்போ நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருந்தது. இதற்கு முன்னாலெல்லாம் நான் பணத்துக்காகத் தவுல் வாசித்துக் கொண்டிருந்தேன். தம்பிக்கு வாசிக்க ஆரம்பித்த பிறகு, என்னை மறந்து பரவசமாய் வாசித்தேன், ஸ்வாமி! அது என்ன மனோதர்மம்? அது என்ன கற்பனை? அது என்ன பொருளுதயம்? - இத்தனைக்கும் தம்பி, பெரியவர்கள் காட்டிய வழியிலிருந்து அந்தண்டை இந்தண்டை நகரவில்லை. இந்தக் காலத்திலே போல், ஒத்துக்குப் பதில் தம்புரா சுருதி வைத்துக் கொள்ளவில்லை. தவுலுக்குப் பதில் தபலா, அப்புறம் பக்க வாத்தியத்துக்கு ஹார்மோனியம், மோர்சிங்கு - இப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. இந்த சமயத்தில் நான் குறுக்கிட்டு, “பிள்ளைவாள்! தம்புரா சுருதியைப் பற்றி எதற்காக இவ்வளவு…?” என்று ஆரம்பித்தேன். நான் மேலே பேச அவர் இடங் கொடுக்கவில்லை. "எனக்குத் தெரியும் சாமி, தெரியும். நீங்கள் தம்புரா சுருதியை ஆதரிக்கிறவர் என்று அந்த விவகாரம் இப்போது வேண்டாம். திருவழுந்தூர் தம்பி அப்படியெல்லாம் புது வழிக்குப் போகவில்லையென்றுதான் சொல்கிறேன். ஆனாலும் வாசிப்பு அற்புதமாயிருந்தது. தேவகானம் என்றால் தேவகானந்தான். அதற்கேற்றார் போல் நாளுக்கு நாள் செல்வாக்கும் அதிகமாகிக் கொண்டிருந்தது, பணம் வந்து குவிந்தது. இதையெல்லாம் பார்க்கப் பார்க்க எனக்கு எவ்வளவோ சந்தோஷம் உண்டாயிற்று. ஆனால், ஒரே ஒரு விஷயம் மனத்திற்கு மிகவும் துன்பத்தை கொடுத்து வந்தது. கலைக்கும் வித்வானுக்கும் பெரிய சத்ரு எது தெரியாதா, சாமி! தம்பிக்கும் அந்தக் கொடிய மதுபானப் பழக்கம் இருந்தது. எப்படியாவது அந்தப் பழக்கத்திலிருந்து தம்பியை விடுவிக்க வேண்டுமென்று நான் ஆத்திரம் கொண்டிருந்தேன். அடிக்கடி ஜாடை மாடையாகச் சொன்னேன். சில சமயம் தெளிவாகவும் சொன்னேன். தம்பிக்கு, என்னிடம் ரொம்பப் பயபக்தி உண்டு. ஆகவே, நான் சொல்லும் போது பதில் பேசாமல் கேட்டுக் கொண்டிருக்கும். கெட்ட பழக்கம் என்று அதுக்குத் தெரியாமலுமில்லை. ஆனால் விடுவதற்கு மட்டும் முடியவில்லை. ஏதோ, நான் சொல்லிக் கொண்டு வந்ததன் பயனாக, ரொம்ப மீறிப் போகாமல் கட்டுக்குள் இருந்தது. இந்த மட்டிலாவது இருக்கிறதே என்று நான் ஒருவாறு திருப்தியடைந்திருந்தேன். இப்படியிருக்கையில், மகாத்மா காந்தியின் உப்பு சத்தியாக்கிரகம் ஆரம்பமாயிற்று. தேசமெங்கும் அமளிதுமளிப்பட்டது. எனக்கு ரொம்ப நாளாகவே தேசிய விஷயங்களில் சிரத்தை உண்டு என்று உங்களுக்குத் தெரியுமே! அந்த நாளில் அடிக்கடி பொதுக் கூட்டங்களுக்குப் போய்க் கொண்டிருந்தேன். சில சமயம் தம்பியையும் அழைத்துக் கொண்டு போவேன். அந்தக் கூட்டங்களில் தலைவர்களுடைய பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டுத் தம்பியின் மனம் கனிந்து கொண்டிருந்தது என்பதை அறிந்தேன். கடைசியில், காந்தி மகானைக் கைது செய்து விட்டார்கள் என்ற செய்தி வந்தது. அன்று கும்பகோணத்தில் பிரமாண்டமான கூட்டம். பட்டணமே திரண்டு வந்தது போலிருந்தது. தம்பிக்கு இரண்டு வருஷமாகக் கும்பகோணத்தில் தான் ஜாகை. நானும் அடிக்கடி கும்பகோணம் வருவேன். அன்றைய தினம் பொதுக்கூட்டத்துக்கு நானும் தம்பியும் போயிருந்தோம். கூட்டத்தில் அன்று பேசியவர்கள் எல்லாரும் ரொம்பவும் உருக்கமாகப் பேசினார்கள். என் பக்கத்திலிருந்த தம்பியின் கண்களில் ஜலம் பெருகி வழிவதைப் பார்த்தேன். கூட்டம் ஒரு மணி நேரம் நடந்தபிறகு, திடீரென்று சலசலப்பு உண்டாயிற்று. கொஞ்ச தூரத்தில் போலீஸ்காரர்கள் கையில் குண்டாந்தடிகளுடன் கூட்டமாக வருவது தெரிந்தது. கூட்டங்களைத் தடியால் அடித்துக் கலைத்து விடும்படி அன்றைய தினந்தான் மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததாம். ஜனங்களுக்கு இது ஒன்றும் தெரியாது. அவர்களில் பெரும்பாலோர் திரும்பிப் பார்த்து, இது என்ன சமாச்சாரம் என்று யோசிப்பதற்குள் போலீஸ்காரர்கள் திடும் பிரவேசமாக கூட்டத்திற்குள் பிரவேசித்து தாறுமாறாக அடிக்கத் தொடங்கினார்கள். உடனே, கூட்டம் கலைய ஆரம்பித்தது. இரண்டு நிமிஷத்துக்குள் முக்கால்வாசிப் பேர் ஓடிப் போய் விட்டார்கள். கடைசி வரையில் இருந்தவர்களில் அடியேனும் ஒருவன். நான் ஓடவில்லை. தோளிலும் முதுகிலும் நாலைந்து அடி வாங்கிக் கொண்ட பிறகு மெதுவாகத்தான் அங்கிருந்து சென்றேன். தம்பி முன்னயே ஓடிப் போய் எனக்காக ஒரு சந்தின் முனையில் காத்துக் கொண்டிருந்தது. என்னைக் கண்டதும் வந்து கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டழுதது. இருவரும் அதிகமாகப் பேசாமல் வீட்டை நோக்கிச் சென்றோம். வழியில் கடைத்தெருவில், ஹனுமார் கோயிலண்டை வந்ததும் தம்பி, ‘நில்லுங்க, அண்ணே!’ என்று கூச்சல் போட்டது. அனுமார் சந்நிதியில் விழுந்து நமஸ்காரம் செய்துவிட்டு எழுந்தது. “ஸ்வாமி! ஆஞ்சநேயா! இன்று முதற் கொண்டு மதுபானம் என்பதையும் கண்ணாலும் பார்க்க மாட்டேன்; கையாலும் தொடமாட்டேன். சத்தியம்! சத்தியம்” என்று பிரமாணம் செய்தது. பாவி நான், அப்போது, சும்மா இருந்திருக்கக் கூடாதா? “தம்பி, அனுமார் கலியுகத்தில் கண்கண்ட தெய்வம். அதிலும் கடைத்தெரு அனுமார் ரொம்ப சக்தியுள்ளவர். அவருடைய சந்நிதியில் பிரமாணம் செய்திருக்கிறாய், ஜாக்கிரதை! ஞாபகமிருக்கட்டும்” என்றேன். அப்போது தம்பி, “அப்படி நான் என் பிரமாணத்தை மீறினால், என் தலையில் இடிவிழட்டும்; என் கண் அவிந்து போகட்டும்” என்று உரத்த குரலில் சொல்லிற்று. ஸ்வாமி! நிஜமாகச் சொல்கிறேன், அப்போது என் உடம்பெல்லாம் நடுங்கிற்று. ரோமங்கள் எல்லாம் குத்திட்டு நின்றன. ‘அட பாவி! இவ்வளவு பயங்கரமான சபதம் ஏன் செய்தாய்?’ என்று உரத்த குரலில் சொல்ல விரும்பினேன்; ஆனால் நா எழவில்லை. சிவக்கொழுந்தினிடம் எனக்கு அபிமானம் அதிகமாவதற்கு இன்னொரு காரணமும் சேர்ந்தது. என் தமக்கை ஒருத்தி கும்பகோணத்தில் புதுச் செட்டித் தெருவில் இருந்தாள். நான் கும்பகோணம் போனால் அங்கேதான் தங்குவது வழக்கம். அவள் மகள் வனஜாட்சியை இந்த மானக்கேடானா தொழிலுக்கு விடக்கூடாது. நல்ல இடமாய்ப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிட வேண்டும் என்று நானும் சுந்தர காமாட்சியுமாக யோசித்து முடிவு கட்டி வைத்திருந்தோம். நான் கும்பகோணத்தில் இருக்கும் காலங்களில் சிவக்கொழுந்து தம்பி அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவதுண்டு. அப்போதெல்லாம் நான், “ஆகா! நம்முடைய வனஜாவுக்கும் சிவக்கொழுந்துக்கும் மட்டும் கல்யாணம் பண்ணி வைத்து விட்டால் எவ்வளவு மேலாய் இருக்கும்?” என்று எண்ணுவேன். என்னுடைய ஆசை நிறைவேறலாம் என்பதற்கு அறிகுறிகளும் தோன்றி வந்தன. அவர்கள் இரண்டு பேருக்கும் ஒருவர் மேல் ஒருவர் பிரியம் ஏற்பட்டு வந்ததாகத் தோன்றியது. வனஜா, பார்க்கிறதற்கு, ரம்பை, ஊர்வசி என்று சொல்கிறார்களே அந்த மாதிரியெல்லாம் பிரமாதமாக இருக்க மாட்டாள். ஆனால், அப்படி அவலட்சணமும் இல்லை. முகத்தில் நல்ல களை. குடித்தனப் பெண் பாங்காய் இருப்பாள். ஆனால் புத்திசாலித்தனத்தில் அவளுக்கு ஈடான பெண்ணை நான் பார்த்ததே கிடையாது. ஏனோ என் மருமகளாச்சே என்று நான் சொல்கிறதாக நீங்கள் நினைக்கக் கூடாது. எனக்கே சொந்தத்திலே குழந்தை குட்டிகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் பற்றி நான் அப்படிச் சொல்கிறேனா? கிடையாது. வனஜாவை சங்கீதக் கச்சேரிக்கோ நாட்டியத்துக்கோ தயார் செய்யும் உத்தேசம் எங்களுக்கு இல்லை. இந்தத் தொழில் எல்லாம் எங்கள் தலை முறையோடு போகட்டும், குழந்தைகள் எல்லாரும் குடியும் குடித்தனமுமாக இருக்கட்டும் என்று ஆசைப்பட்டோ ம். ஆகையால், வனஜாவைப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பினோம். ஏழெட்டு கிளாஸ் வரையில் படித்த பிறகு பள்ளிக் கூடத்தையும் நிறுத்தி ஆயிற்று. அப்புறம் வனஜா வீட்டில் சும்மா தான் இருந்தாள். என்ன இருந்தாலும் பரம்பரையாக வந்த கலை போகுமா? வனஜாவுக்கு சங்கீதம் நாட்டியம் அபிநயம் எல்லாம் இலேசாக வந்தது. ஆனால் அவ்வளவும் குறும்புத்தனமாக மாறிற்று. வனஜா எங்கே என்னத்தைப் பார்த்தாலும் அதே மாதிரி தானும் செய்து விடுவாள். யார் எப்படிப் பாடினாலும், அதே மாதிரி பாடிக் காட்டுவாள். நாடகம் பார்த்தால், யார் யார் எப்படி நடித்தார்களோ அப்படியே நடித்துக் காட்டுவாள். மனுஷ்யாளுடைய சாதாரண நடை உடை பாவனைகள் அவளுக்கு அப்படியே வந்துவிடும். யார் எப்படிப் பார்க்கிறார்கள், எப்படிப் பேசுகிறார்கள், எப்படி நடக்கிறார்கள் - அம்மாதிரியெல்லாம் செய்து காட்டி பரிகாசம் பண்ணுவாள். வனஜா இருக்கும் இடமெல்லாம் ஒரே சிரிப்பும் விளையாட்டும் ஆகத்தான் இருக்கும். யாருக்கும் பயப்பட மாட்டாள். அலட்சியமாகத் தூக்கி எறிந்துதான் பேசுவாள். ‘இப்படியெல்லாம் இருக்கக்கூடாது. பதவிசா இருக்க வேண்டும்’ என்று அவளுக்கு நான் அடிக்கடி புத்தி சொல்வதுண்டு. ஆனால், வனஜாவின் விஷமம், வாய்த் துடுக்கு, சிரிப்பு, விளையாட்டு, எல்லாம் ஒரே ஒரு ஆசாமியின் முன்னால் மட்டும் மாயமாய் மறைந்து போயின. சிவக்கொழுந்து தம்பி வந்துவிட்டால் இல்லாத நாணம் வெட்கம் எல்லாம் வந்துவிடும். தம்பி முன்னால் அவள் அதிர்ந்து பேச மாட்டாள். ஏதாவது கேட்டால் தான் பதில் சொல்வாள். வழக்கம் போல் கலீரென்று சிரிக்க மாட்டாள். தம்பி ஏதாவது வேடிக்கையாகப் பேசினால் இலேசாகச் சிரிப்பாள். சிவக்கொழுந்தின் நாயனம் கேட்பதில் அவளுக்கு ரொம்ப ஆசை. கும்பகோணத்தில் உத்ஸவம், ஊர்வலம் எதற்காவது தம்பி வாத்தியம் வாசித்தால் அதை அவள் கேட்காமல் இருக்க மாட்டாள். அடுத்தாற்போல் சிவக்கொழுந்து வீட்டிற்கு வரும்போது, அந்த ராகம் நன்றாய் இருந்தது, இந்தக் கீர்த்தனம் அபூர்வமாயிருந்தது என்றெல்லாம் சொல்வாள். நான் எப்போது வீட்டுக்கு வந்தாலும், பின்னால் தம்பி வருகிறதாயென்று ஆவலுடன் பார்ப்பாள். வராவிட்டால், ஜாடையாக, “அவர் சௌக்கியந்தானே? உடம்புக்கு ஒன்றுமில்லையே?” என்று கேட்பாள். சிவக்கொழுந்தின் மனமும் இப்படித்தான் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன். தம்பி இந்த வீட்டுக்கு வரும் போதெல்லாம் வனஜா வாசலில் நின்று வரவேற்காவிட்டால், அவனுடைய கண் சுற்றும் முற்றும் பார்க்கும். வீட்டை விட்டுப் புறப்படும் போதும் அப்படித்தான். வனஜாவிடம் விடைபெற்றுக் கொள்ளாமல் போக மாட்டான். “போகலாமா! மாமா!” என்று கேட்டுக் கொண்டு நிற்பானே தவிர, கிளம்பமாட்டான். இந்தப் பிள்ளைகளுடைய மனசு எனக்குக் கண்ணாடி மாதிரி தெரிந்து போயிற்று. சிவக்கொழுந்துக்கும் வனஜாவுக்கும் தான் பகவான் பிணைத்துப் போட்டிருக்கிறார் என்று நான் தீர்மானம் பண்ணிக் கொண்டேன். இதைப் பற்றி எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்தைச் சொல்லி முடியாது. என் சகோதரிக்கும் இது ரொம்பத் திருப்தியாகத்தானிருந்தது. எங்களுடைய எண்ணம் இவ்வளவு சுலபமாகப் பலிக்கப் போகிறதை எண்ணி நாங்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கையில், எங்களுடைய சந்தோஷத்தில் மண்ணைப் போடுவதற்கு ஒரு பாவி வந்து சேர்ந்தாள். அவளை உங்களுக்கும் தெரிந்து தான் இருக்கும். திருச்செந்தூர் மனோரஞ்சிதம் என்று பெயர். இப்போது அவள் பெயர் மங்கிப் போயிருக்கிறது. ஆனால், அடேயப்பா! அந்தக் காலத்தில் அவளுக்கிருந்த மவுஸைச் சொல்ல முடியாது. அவளுடைய நாடகக் கம்பெனி கும்பகோணத்துக்கு வந்து சேர்ந்தது. வந்து பத்து நாளைக்குள் கும்பகோணமே பயித்தியமாய்ப் போய்விட்டது. கதைக்குக் காலில்லை என்பார்களே, அந்தமாதிரி, கலை உலகத்தில் ஒருவருக்குப் புகழ் ஏன் வருகிறது, ஏன் போகிறது என்பதற்குக் காரணமே சில சமயம் இருப்பதில்லை. அந்த மனோரஞ்சிதம் என்கிற பெண் பிள்ளை ரொம்ப சாதாரணம் என்பது என் அபிப்பிராயம். இராத்திரியிலே, முகத்திலே பவுடரை வாரி அப்பிக் கொண்டு, பளபளவென்று சம்கி புடவையைக் கட்டிக் கொண்டு, எலக்டிரிக் லைட்டுக்கு முன்னால் வந்து நின்றால் ஏதோ பிரமாதமாய்த் தானிருக்கும். வேஷத்தைக் கலைத்துவிட்டுப் பகலிலே பார்த்தால், என் முகத்திலே இருக்கிற லட்சணம் கூட இருக்காது. அவள் பாட்டோ ரொம்ப மட்டம். ஹிந்துஸ்தானி மெட்டுகளிலே தளுக்காய் நாடகத்துக்கு வேண்டிய பாட்டுக்கள் பாடுவாள். அவ்வளவுதான். சாரீரம் சுமாராயிருக்கும். ஆனால் கால் மணி நேரம் காம்போதியைப் பிடித்து ஆலாபனம் பண்ணச் சொல்லுங்கள்; வெறும் பூஜ்யம். தாளம் தவறாமல் ஒரு தியாகராஜ கீர்த்தனத்தைப் பாடச் சொல்லுங்கள்; முடியாது! ‘தாளத்தை வீட்டிலே வைச்சுட்டு வந்திருக்கேன், எடுத்துக்கிட்டு வரலை’ என்று சொல்லக் கூடிய பேர்வழி. இந்த சாதாரண நாடகக்காரியின் மேலேதான் கும்பகோணம் அப்படி பயித்தியம் பிடித்து அலைந்தது. ஒரு நாளைக்கு டிக்கடி கிடைக்கவில்லை என்று, ஜனங்கள் கொட்டகை மேல் கல்லை விட்டெறிந்தார்கள். எவ்வளவுக் கூட்டம் வந்திருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். இன்னும் அந்தப் பெண் பிள்ளை பகலிலே எங்கேயாவது வெளியிலே கிளம்பினால் போதும், ஆயிரம் ஜனங்கள் பின்னோடு போய்க் கொண்டேயிருப்பார்கள். அவள் கோயிலுக்கு ஸ்வாமி தரிசனம் செய்ய வந்தால் அன்றைக்கு உற்சவம் மாதிரிதான். அவ்வளவு ஜனங்கள் கூடிவிடுவார்கள். ஆனால் எல்லாரும் அந்த நாடகக் காரியைத்தான் பார்த்துக் கொண்டிருப்பார்களே தவிர, ஸ்வாமியைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். இப்படி ஊரெல்லாம் பயித்தியமாகப் போனதில் நான் ஆச்சரியப்படவில்லை. பாலாமணி காலத்திலிருந்து இந்த மாதிரி எத்தனையோ நான் பார்த்திருக்கிறேன். ஆனால் திருவழுந்தூர்த் தம்பியும் அந்த மாதிரி பிரமை பிடித்துப் போனதுதான் எனக்கு ரொம்ப ஆச்சர்யமாய் இருந்தது. அதனால் எனக்கு உண்டான மன வேதனைக்கு அளவே கிடையாது. தம்பியினுடைய வித்வத் என்ன? யோக்யதை என்ன? செல்வாக்கு என்ன? இவன் போய் அந்த நாடகக்காரி காலிலே விழுகிறதாயிருந்தால் அதைவிட அவமானம் வேறென்ன இருக்கிறது சாமி? அந்த நாடகக் கம்பெனி கும்பகோணத்துக்கு வந்ததிலிருந்து சிவக்கொழுந்து ஒரு நாள் நாடகமாவது பார்க்காமலிருந்தது கிடையாது. வெளியூர்களுக்கு எங்கேயாவது கச்சேரிக்குப் போனாலும் நாடகம் நடக்கும் ராத்திரிக்கு எப்படியாவது வந்து சேர்ந்து விடுவான். மனோரஞ்சிதம் மேடைக்கு வந்து விட்டால், நம்ம பையனைப் பார்க்கவே முடியாது. தேன் குடித்த குரங்கு என்பார்களே, அந்த மாதிரிதான். வேடிக்கையை வேணுமானால் கேளுங்கள். சிவக்கொழுந்துக்குப் பிடித்திருந்த நாடகப் பைத்தியம் வனஜாட்சியையும் பிடித்துக் கொண்டது. அவளும் தவறாமல் நாடகத்துக்குப் போய் வந்தாள். ஆனால் அவள் நாடகம் மட்டும் பார்க்கப் போனதாக எனக்குத் தோன்றவில்லை. இரண்டு மூன்று நாள் நானும் கவனித்தேன். சிவக்கொழுந்து மேடையையே பார்த்துக் கொண்டிருக்க, வனஜாட்சி சிவக்கொழுந்தையே பார்த்துக் கொண்டிருப்பாள். கொட்டகையில் அவன் ஒரு மூலையில் இவள் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தாலும், எப்படியோ அவளுடைய கண் அவன் இருக்குமிடந்தேடிக் கண்டுபிடித்துவிடும். இதெல்லாம் எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. வனஜாட்சியின் மனவேதனை எனக்கு நன்றாய்த் தெரிந்தது. அவள் இந்த அசட்டுப் பிள்ளையை நினைத்து நினைத்து உருகிப் போய்க் கொண்டிருந்தாள் என்பதையும் கண்டேன். நாடகக் கம்பெனி வந்ததிலிருந்து, சிவக்கொழுந்து எங்கள் வீட்டுக்கு வருவது கிடையாது. வனஜாட்சி சில சமயம் “ஏன் மாமா! இந்த நாடகக் கம்பெனி எப்போது ஊரை விட்டுப் போகப் போகிறது?” என்று கேட்பாள். கேட்கும் போதே அவள் கண்களில் ஜலம் தளும்பி நிற்கும். நான் அவளுடைய குறிப்பை அறிந்து கொள்வேன். என்னுடைய மனமும் கஷ்டப்பட்ட தென்றாலும், வெளிப்படையாக, “சீ! பைத்தியமே உனக்கு என்ன அதைப் பற்றிக் கவலை? ஊரில் யார் எக்கேடு கெட்டால் உனக்கென்ன? ஏதாவது வேலை இருந்தால் பார் போய்!” என்பேன். இன்னும் சில சமயம் அவள், “மாமா! நானும் டிராமாவில் சேரப் போகிறேன்” என்பாள். நாடகத்தில் மனோரஞ்சிதம் பாடியபடியெல்லாம் பாடி, அவள் நடித்தபடியெல்லாம் நடித்துக் காட்டுவாள். “ஐயோ! இந்தப் பெண்ணுக்குப் பைத்தியம் பலமாகப் பிடித்து விட்டதே” என்று எண்ணி வருத்தப்படுவேன். நம் ஊர்க்காரர்கள் சாதாரணமாய் ஒன்று என்றால், நூறு என்பார்கள். ஒன்றும் இல்லாத போதே பொய்யும் புளுகும் கற்பனை செய்வார்கள். கொஞ்சம் நிஜமும் இருந்தால் கேட்க வேணுமா? சிவக் கொழுந்தின் பைத்தியக்காரத்தனத்தைப் பற்றித்தான் ஊரெல்லாம் பேச்சு. இந்த மாதிரி மேதாவியான பிள்ளைக்கு இப்படி அசட்டுப் பட்டம் வந்ததேயென்று எனக்கு எவ்வளவோ வருத்தமாய் இருந்தது. கடைசியாக நாடகம் முடிந்தது. அதாவது கும்பகோணத்தில் மனோரஞ்சிதம் கம்பெனியாரின் நாடகம் முடிந்தது. அவர்கள் அடுத்தபடியாக சென்னை பட்டிணத்திற்குக் கிளம்பினார்கள். அவர்கள் ஊருக்குக் கிளம்புகிற அன்று சிவக்கொழுந்து அந்த நாடகக் காரியின் ஜாகைக்குப் போய் அங்கேயே இருந்ததாகவும், ரொம்பவும் அசட்டுப் பிசட்டு என்று நடந்து கொண்டதாகவும் தெரிய வந்தது. ரயில்வே ஸ்டேஷனுக்கும் அவர்களை வழி அனுப்புவதற்குப் போயிருந்தானாம். ரயில் கிளம்பிக் கொஞ்ச தூரம் போன பிற்பாடு கூட, சிவக்கொழுந்து, “நான் பட்டணத்துக்கு வரேன், அவசியம் வந்து உங்களைப் பார்க்கிறேன்” என்று இரைந்து கத்தியதாகவும், அதைக் கேட்டு பிளாட்பாரத்தில் இருந்தவர்கள் சிரித்ததாகவும் கேள்விப்பட்டேன். நாடகக் கம்பெனி ஊரை விட்டுப் போன பிறகு, வனஜாவுக்குக் கொஞ்சம் உற்சாகம் பிறந்தது. “ஏன், மாமா! இனி மேல் திருவழுந்தூர்த் தம்பி நம் வீட்டுக்கு வருவாங்கல்ல?” என்று கேட்டாள். அவள் கேட்டதற்கு தகுந்தாற்போல், சிவக்கொழுந்தும், இரண்டொரு தடவை வீட்டுக்கு வந்தான். அப்போதெல்லாம் வனஜாவின் தோரணையைப் பார்க்க வேண்டுமே? அடேயப்பா! ராணி தான்! குறுக்கே நெடுக்கே போவாள். சிவக்கொழுந்தை நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டாள். ஏதாவது கேட்டால், பதில் சொல்லவும் மாட்டாள். காதில் கேட்காதது போல் போய்விடுவாள். இதையெல்லாம் பார்க்கப் பார்க்க எனக்கு ஒரு பக்கம் வேடிக்கையாகவும் ஒரு பக்கம் வருத்தமாயுமிருந்தது. நான் அவர்களுக்கு, புத்தி கித்தி ஒன்றும் சொல்லவில்லை சாமி! என்னுடைய உலக அனுபவத்திலே தெரிந்து கொண்டிருக்கிறேன். இந்த மாதிரி இளம் பிள்ளைகள் காரியத்திலே, புத்தி சொல்கிறதனால் பிரயோசனமே ஏற்படுவதில்லை. அதனால்தான் சிவக்கொழுந்து அந்த நாடகக்காரி மையலில் அகப்பட்டிருந்தபோது கூட நான் ஒன்றும் சொல்லவில்லை. இதிலேயெல்லாம் அவர் அவர்களும் பட்டுப் பட்டுத் தேற வேண்டும். கஷ்டமோ, சுகமோ, அனுபவித்துத்தான் புத்தி வர வேண்டும். குறுக்கே ஏதாவது சொன்னோமானால் பைத்தியம் முற்றிப் போய்விடுகிறது. இப்படி இரண்டு மூன்று மாதம் ஆயிற்று. சென்னைப் பட்டணம் கந்தஸ்வாமி கோயில் உற்சவத்திற்கு சிவக்கொழுந்தை அழைத்துக் கொண்டு வரும்படி எனக்குக் கடிதம் வந்தது. பட்டணத்தில் அந்தப் பழிகாரி இருக்கிறாளே என்று அப்போதே மனசில் நினைத்துக் கொண்டேன். ஆனாலும் அதற்காக வந்தக் கச்சேரியை விட முடியுங்களா? கிளம்பிப் போனோம். ஆகா! சாமி! அந்தக் கச்சேரியில் சிவக்கொழுந்து என்னமாய் வாசித்தது என்கிறீர்கள்? அது தான் கடைசி கச்சேரி என்று தம்பியின் அந்தராத்மாவுக்குத் தெரிந்திருந்தது போலிருக்கிறது. அதனால்தான், அவ்வளவு அற்புதமாய் அமைந்ததோ, என்னமோ? ஒரு நாள் ராத்திரி தம்பி பைரவிராகம் வாசித்த போது, கேட்டவர்கள் எல்லாம் அழுது விட்டார்கள். தம்பியின் வாசிப்பில் முன்னைக்கு இப்போது கொஞ்சம் வித்தியாசம் ஏற்பட்டிருந்தது. முன்னேயெல்லாம், கல்யாணி, சங்கராபரணம், ஹம்ஸத்வனி, நாட்டை, கேதாரம் இந்த மாதிரி ராகங்கள் வாசிப்பதிலேதான் தம்பிக்கு உற்சாகம். எனக்கும் தவுல் வாசிக்க ரொம்ப உற்சாகமாய் இருக்கும். கொஞ்ச நாளாகத் தம்பி காம்போதி, கேதாரகௌளம், உசேனி, முகாரி, கமாசு - இப்படி அதிகமாக வாசிக்க ஆரம்பித்திருந்தது. இந்த ராகங்களெல்லாம் வாசிக்கும் போது, எனக்குச் சில சமயம் கண்ணில் ஜலம் வந்துவிடும். உடம்பெல்லாம் மயிர்க்கூச்சு எறியும். தவுல் வாசிப்பதற்கே ஓடாது! ஏதோ விரல் வழக்கம் போல் தட்டிக் கொண்டிருக்குமே தவிர, மனசெல்லாம், தம்பியின் வாசிப்பில் ஈடுபட்டிருக்கும். நடு நடுவே, இரண்டு கையையும் தூக்கிக் கும்பிட்டு, ‘ஹர ஹர! மகாதேவா!’ என்பேன். இதைப் பார்த்துவிட்டு, சிலபேர் சிரிப்பார்கள்; முட்டாள்கள்! சங்கீதம் அனுபவிக்கும் விதம் அவர்களுக்கென்ன தெரியும்? மூன்று நாள் கச்சேரியும் முடிந்தது. நாலாம் நாள் பொழுது விடிந்தது. “இன்றைக்கு ஊருக்கு புறப்படலாமா, தம்பி!” என்றேன். “கொஞ்சம் பொறுங்கள் மாமா. புதன் கிழமை தானே சிதம்பரத்தில் கச்சேரி? நேரே காரிலேயே போய் விடலாம்” என்றது தம்பி. சிவக்கொழுந்துக்குக் கொஞ்ச நாளாக மோட்டார் கார் பைத்தியமும் ஏற்பட்டிருந்தது. ‘டிரைவ்’ பண்ணக் கத்துக் கொண்டிருந்தான். அடுத்த தடவை பட்டணம் போகும்போது கார் வாங்கி வர வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தான். அன்று பகலெல்லாம் சுற்றி, கடைசியில் இரண்டாயிரம் ரூபாய்க்கு ஒரு ‘ஸெகண்ட் ஹாண்ட்’ கார் வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தான். சொற்ப மைலே ஓடியிருந்த படியால், ’ஸெகண்ட் ஹாண்டா’ய் இருந்தாலும் வண்டி பார்ப்பதற்கு ரொம்ப நன்றாயிருந்தது. நல்ல வேளை; கச்சேரியிலும் கார் வாங்குவதிலும் புத்தி சென்றதனால் மனோரஞ்சிதத்தை மறந்துவிட்டான் என்று நான் எண்ணி சந்தோசப்பட்டேன். ஆனால், அது அற்ப சந்தோஷமாய் போயிற்று. அன்று இராத்திரி சிவக்கொழுந்து நாடகத்துக்குப் போனான். “நீங்களும் வரீங்களா அண்ணே!” என்று அரைமனசாய்க் கூப்பிட்டான். “ரொம்ப சிரமமாய் இருக்கிறது; நான் வரவில்லை” என்று சொல்லி விட்டேன். அன்று இராத்திரியெல்லாம் என் மனசில் வேதனை குடி கொண்டிருந்தது. மறுநாள் காலையில் தம்பி ரொம்ப நேரம் கழித்து தான் எழுந்தான். எழுந்ததும் பரபரப்புடன் ஸ்நானபானாதிகளை முடிக்கத் தொடங்கினான். ஜோராக டிரஸ் பண்ணிக் கொண்டான். எல்லாம் ஆனதும் “மாமா! கொஞ்சம் வெளியிலே போய் விட்டு வருகிறேன். சாப்பாட்டுக்கு எனக்காகக் காத்திருக்க வேண்டாம். திரும்பி வருவதற்கு நேரம் ஆனாலும் ஆகும்” என்றான். “தம்பி! இதென்ன பேச்சு? நாளைப் பொழுது விடிந்தால் சிதம்பரத்தில் இருக்க வேண்டுமே? புறப்படுவதற்கு ஏற்பாடு செய்யாமல் எங்கேயோ போகிறேன் என்கிறாயே?” “கட்டாயம் இன்று இராத்திரியே கிளம்பி விடலாம் மாமா! ராத்திரி பத்து மணிக்குக் காரில் கிளம்பினால், பளபளவென்று பொழுது விடியும் போது சிதம்பரம் போய்விடலாம். உங்களுக்குத் தூக்கம் விழிக்க வேண்டாமென்றிருந்தால் நீங்கள் வேணுமானா ராத்திரி ரயில் ஏறி விடுங்கள்” என்றான். இப்படிச் சொல்லிவிட்டு வெளியே போனவன் இனிமேல் சாயங்காலம் தான் திரும்பி வருவான் என்று நினைத்தேன். ஆனால் ஒரு மணி நேரத்துக்குள் அவன் திரும்பி வந்துவிடவே எனக்கு ஆச்சர்யமாய்ப் போயிற்று. “என்ன தம்பி! அதற்குள்ளே வந்துவிட்டாய்?” என்று நான் கேட்டதற்குப் பதில் ஒன்றும் சொல்லாமல், உள்ளே போய் படுக்கையை விரித்துப் படுத்துக் கொண்டான். சற்று நேரத்துக்கெல்லாம் அவன் விம்மி அழும் சத்தம் கேட்டது. தம்பியுடன் சோக்ரா பையனும் போயிருந்தான். அவனைக் கூப்பிட்டு “என்னடா சமாசாரம்?” என்று விசாரித்தேன். அவன் எல்லா விவரமும் சொன்னான். ஸாந்தோமில் இருந்த மனோரஞ்சிதத்தின் பங்களாவுக்குப் போனார்களாம். வாசலில் ஏற்கனவே ஐந்து ஆறு மோட்டார் வண்டிகள் காத்துக் கொண்டிருந்தனவாம் “கும்பகோணம் சிவக்கொழுந்து பிள்ளை வந்திருக்கார்” என்று தம்பி சொல்லியனுப்பிச்சுதாம். வாசல் சேவகன் திரும்பி வந்து, “இப்போது அம்மாவுக்கு வேலை இருக்காம். பார்க்க முடியாதாம். இன்னொரு சமயம் வரச் சொன்னாங்க” என்று தெரிவித்தானாம். தம்பிக்கு முகம் அப்படியே சிறுத்துப் போச்சாம். வண்டியைத் திருப்பச் சொல்லி நேரே ஜாகைக்கு வந்து விட்டதாம். சாமி! இந்த விஷயம் எனக்கு ஆச்சர்யத்தை விளைவிக்கவில்லை. அந்தப் பெண் பிள்ளையை மதறாஸ்காரர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுகிறார்கள் என்று நான் கேள்விப்பட்டிருந்தேன். பெரிய பெரிய வக்கீல்கள் என்ன, ஹைக்கோர்ட் ஜட்ஜுகள் என்ன, ஐ.சி.எஸ். உத்தியோகஸ்தர்கள் என்ன இப்படிப்பட்ட சீமான்களெல்லாம் அவள் வீட்டு வாசலில் போய்க் காத்துக் கொண்டிருந்தார்களாம்! இப்படியெல்லாம் பெருமை வந்தால், நல்ல மனுஷ்யர்களுக்கே கர்வம் தலைக்கேறிப் போய்விடும். ஒரு சாதாரண பெண் பிள்ளைக்குக் கேட்க வேண்டுமா? கேவலம் ஒரு மேளக்காரனை அவள் மதிப்பாளா? சிவக்கொழுந்தின் மேல் எனக்குக் கோபமாய் வந்தது, இவனுடைய வித்வத் எங்கே? அவள் எங்கே? அந்த அற்பப் பெண்பிள்ளை எங்கே? அவள் வீட்டை தேடிக்கொண்டு இவன் ஏன் போகிறான்? இந்த அவமானம் அவனுக்கு நன்றாய் வேண்டும்! அப்போதுதான் புத்தி வரும். அழட்டும் நன்றாய் அழட்டும். இப்படி எண்ணி, அவனை சமாதானப்படுத்துவதற்கு நான் போகவில்லை. எனக்கு சில மனுஷ்யர்களை பார்க்க வேண்டியிருந்தது. அவர்களைப் பார்த்து விட்டு வரலாம் என்று வெளியே போய்விட்டேன். சாயங்காலம் ஐந்து மணி சுமாருக்குத்தான் திரும்பி வந்தேன். வந்ததும், தம்பியைப் பற்றி விசாரித்தேன். சுமார் நாலு மணிக்குத் தம்பி அறையிலிருந்து எழுந்து வந்ததாகவும், நான் எங்கே என்று விசாரித்ததாகவும், உடனே வண்டியில் ஏறிக் கொண்டு புறப்பட்டுச் சென்றதாகவும், தெரிந்தது. ரயிலில் ஏறி நாம் பாட்டுக்குப் போய்விடலாமா, தம்பி எப்படியாவது திண்டாடிக் கொண்டு வந்து சேரட்டும் என்று முதலில் நினைத்தேன். அப்புறம் இந்த மாதிரி நிலைமையில் அவனைத் தனியாக விட்டு விட்டுப் போகக் கூடாது என்று தோன்றிற்று. மனத்திலே என்னமோ திக்திக்கென்று அடித்துக் கொண்டது. ஒருவேளை தம்பி வந்து சேராவிட்டால் நாளைக்குச் சிதம்பரத்தில் கச்சேரி என்ன ஆவது? அவன் தான் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டால், அதற்காக நாமும் அசட்டுத் தனமாகப் போகலாமா என்று நினைத்து, அவன் வரவுக்காகக் காத்திருந்தேன். சாயங்காலம் ஏழு மணிக்குத்தான் வாசலில் வண்டி வந்து நின்றது. “மாமா வந்துட்டாங்களா?” என்று சிவக்கொழுந்து உற்சாகமாகக் கேட்டுக் கொண்டு உள்ளே நுழைந்த போது, ‘போகிறது, பிள்ளைக்குப் புத்தி சரியாய்ப் போய்விட்டது போலிருக்கு’ என்று நான் நினைத்துச் சந்தோஷப்பட்டேன். ஆனால் அந்த சந்தோஷம் ஒரு நிமிடங்கூட இல்லை. உள்ளே வந்த தம்பியைப் பார்த்தேனோ இல்லையோ, அவனுடைய உற்சாகத்துக்குக் காரணம் என்னவென்று தெரிந்து போய்விட்டது. அப்படியே என் மனம் இடிந்து போயிற்று. ‘அடி பாவி! சண்டாளி! உன்னால்தானே விபரீதம் வந்தது!’ என்று அந்த நாடகக்காரியை மனத்திற்குள் திட்டினேன். நான் அன்று சாயங்காலம் தம்பியைத் தனியாய் விட்டு விட்டுப் போனதற்காக என்னையே நொந்து கொண்டேன். ‘இப்போது நான் ரயிலில் போவது என்பது முடியாத காரியம். கூட இருந்து தம்பியை அழைத்துக் கொண்டு தான் போக வேண்டும்.’ இந்த இடத்தில் கந்தப்ப பிள்ளை சொன்னது எனக்கு நன்றாய்ப் புரியவில்லை. எதையோ சொல்ல விட்டு விட்டார் என்று தோன்றிற்று. “நீர் சொல்வது எனக்கு அர்த்தமாகவில்லை, ஐயா! அப்படிச் சிவக்கொழுந்தினிடம் என்ன மாறுதலைக் கண்டீர்?” என்று கேட்டேன். "தெரியவில்லையா, சாமி! அதைச் சொல்வதற்குக் கூட எனக்குச் சங்கடமாயிருக்கிறது. பையன் நன்றாகத் ‘தண்ணி’ போட்டுவிட்டு வந்திருந்தான்! அவ்வளவுதான். அனுமார் கோயிலிலே செய்த சத்தியம் போச்சு! மறுபடியும் ‘சோக்ரா’ பையனை விசாரித்தேன். சாயங்காலம் இன்னொரு தடவை அந்த நாடகக்காரி வீட்டுக்குப் போனதாகவும், அப்போதும் ‘பார்க்க முடியாது’ என்றே பதில் கிடைத்ததாகவும், இவர்கள் வாசலில் நிற்கும் போதே அவள் வெளியில் கிளம்பி வந்து மோட்டாரில் ஏறிக் கொண்டு போய்விட்டதாகவும் தம்பியைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லையென்றும் ‘சோக்ரா’ சொன்னான். அதற்குப் பிறகு தம்பி கொஞ்ச நேரம் எங்கெல்லாமோ சுற்றி அலைந்து விட்டுக் கடைசியில் ஸென்ட்ரல் ஸ்டேஷனுக்கு அருகில் வண்டியை விட்டுக் கொண்டு போயிற்றாம். நாசமாய்ப் போகிறவன்கள் தான் மதுபானக் கடைகள் வைத்திருக்கிறார்களே? சக்கைப் போடு போட்டு விட்டு வந்து விட்டான்! இதையெல்லாம் கேட்டபோது ஒரு புறத்தில் எனக்குத் தம்பியின் பேரில் கோபம் வந்தாலும், இன்னொரு பக்கம் இரக்கமாயுமிருந்தது. அவன் மனசு எவ்வளவு வேதனைப் பட்டிருந்தால், இந்த மாதிரி கோயிலில் செய்த பிரமாணத்தைக் கைவிட்டு மது பானம் செய்யத் தோன்றியிருக்கும்? பாழும் பெண் மோகத்தின் சக்திதான் என்ன? - போனது போகட்டும், இந்த தடவை எப்படியாவது பையனை ஜாக்கிரதையாய் ஊருக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால், அப்புறம் கவலையில்லையென்று நினைத்தேன். ‘இந்த நாடகக்காரிப் பைத்தியம் இத்துடன் இவனுக்கு விட்டுப் போயிற்று. பிறகு வனஜா இருக்கிறாள், பார்த்துக் கொள்கிறாள்!’ என்று எண்ணி என்னை நானே தேற்றிக் கொண்டேன். சாப்பாடு எல்லாம் முடித்துக் கொண்டு கிளம்புவதற்கு இரவு பத்து மணி ஆகிவிட்டது. கம்பெனிக்காரர்கள் அனுப்பியிருந்த டிரைவர் வண்டி ஓட்டிக் கொண்டு வந்தான். சிவக்கொழுந்து டிரைவருக்குப் பக்கத்தில் முன் ஸீட்டில் உட்கார்ந்தான். நாங்கள் எல்லாம் பின்னால் இருந்தோம். தம்பி வண்டி ஓட்ட ஆரம்பிக்காமலிருக்க வேண்டுமே என்று என் மனசு திக்திக் என்று அடித்துக் கொண்டது. ஆனால் அவனிடம் அதைப் பற்றி நான் சொல்லவில்லை. சொன்னால், ஒரு வேளை ‘குரங்கை நினைத்து கொண்டு மருந்து தின்னாதே’ என்று சொன்ன கதைபோல் ஆகிவிடலாமல்லவா? ஆகையால் வாயை மூடிக் கொண்டு இருந்தேன். அன்றிரவு வானத்தில் மப்பும் மந்தாரமுமாயிருந்தது. ஆனால் நாங்கள் கிளம்பும் போது மழை பெய்யுமென்று தோன்றவில்லை. செங்கற்பட்டு தாண்டுகிற பொழுதுதான் சிறு தூற்றல் போட்டது. அப்போது ஆகாயத்தைப் பார்த்தேன். ஒரே காடாந்தகாரமாயிருந்தது. பெருமழை பிடித்துக் கொள்ளாமலிருக்க வேண்டுமேயென்று கவலைப்பட்டேன். இப்படி எண்ணிச் சற்று நேரத்துக்கெல்லாம் நான் கண்ணசந்திருக்க வேண்டும். எவ்வளவு நேரம் தூங்கினேனோ தெரியாது. பெரிய இடிச் சத்தத்தைக் கேட்டு தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்திருந்தேன். ஆஹா! அந்த மாதிரி மின்னலையும் இடியையும் என் ஜன்மத்தில் நான் பார்த்தது கிடையாது. அந்த இடிச் சத்தமானது ஆகாயத்தில் எங்கேயோ ஒரு மூலையில் கிளம்பி, மேகங்களைக் கீறிப் பிளந்து கொண்டு, ஆகாயத்தின் இன்னொரு மூலைக்குப் பிரயாணம் செய்வது போலிருந்தது. அதுவும் சட்டென்று அவசரமாய்ப் போய்விடவில்லை. அண்டகடாகங்களையெல்லாம் கிடுகிடுவென்று நடுங்கச் செய்து கொண்டு நிதானமாகப் பிரயாணம் செய்தது. அதே சமயத்தில் பளீரென்று மற்றொரு மின்னல் கிளம்பிற்று. கோடி சூரியன் ஒரே சமயத்தில் கிளம்பினால் எப்படியிருக்கும்? அவ்வளவு பிரகாசமான மின்னல் அரை நிமிஷம் நின்று உலகத்தை ஜகஜ்ஜோதியாகச் செய்தது. அந்த ஜகஜ்ஜோதியின் வெளிச்சம் தாங்காமல் என் கண்கள் மூடிக் கொண்டன. ஆனால் அப்படி மூடிக் கொள்வதற்குள், என் வயிற்றில் நெருப்பைக் கட்டும்படியான காட்சியைப் பார்த்துவிட்டேன் சாமீ! எனக்கு முன்னால் டிரைவரின் ஸீட்டில் உட்கார்ந்து சிவக்கொழுந்து வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான். ‘ஐயோ! விபரீதம் வரப் போகிறதே!’ என்று என் மனத்தில் மின்னலைப் போல் ஒரு எண்ணம் தோன்றியது. அவ்வளவுதான், விபரீதம் வந்துவிட்டது! அந்த ஒரு வினாடியில் நேர்ந்த சம்பவங்களை எப்படி நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்? படீர் என்று ஒரு பெரிய பயங்கரமான சத்தம்; என் ஜன்மத்தில் அந்த மாதிரி சத்தத்தை நான் கேட்டதே இல்லை; இனிமேல் கேட்கப் போகிறதுமில்லை. ஆகாயம் அப்படியே இடிந்து திடீரென்று நம் தலையில் விழுந்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் தோன்றிற்று. அந்தப் பெரும் சத்தத்தினால் என் காது செவிடானது ஒரு வினாடி. அடுத்த வினாடியில் ஒரு பெரிய அதிர்ச்சி; பூலோகத்திலிருந்து என்னை யாரோ தூக்கிப் பாதாளத்தில் எறிவது போலிருந்தது. எனக்குப் புத்தி தெளிந்து கண்ணை விழித்துப் பார்த்தபோது, நான் கண்ட பயங்கரமான காட்சியை என் ஆயுள் உள்ள வரையும் மறக்க மாட்டேன். எனக்கு எதிரே, ஒரு பெரிய ஆலமரம், பச்சை ஆலமரம், நெருப்புப் பற்றி எறிந்து கொண்டிருந்தது! அந்த மரத்துக்கு அடியில் ஒரு மோட்டார் வண்டியும் தீப்பற்றி எறிந்து கொண்டிருந்தது. ஆகாயத்திலும் பூலோகத்திலும் சூழ்ந்திருந்த காடாந்தகாரத்துக்கு நடுவில், இம்மாதிரி ஒரு பச்சை மரமும், அதனடியில் ஒரு மோட்டாரும் நெருப்புப் பிடித்து எரிந்து கொண்டிருந்தால் என்னமாயிருக்கும்? அப்போது சிறு தூற்றல் வேறு போட்டுக் கொண்டிருந்தது. அந்த மழைத்துளிகள், எரிகின்ற தீயின் ஜ்வாலையில் விழுந்து மறைந்து போய்க் கொண்டிருந்ததைப் பார்க்கும் போது, அக்னி பகவான், நாக்கை நீட்டி அந்த மழைத் துளிகளை ருசிப்பது போலவும், ‘என்னுடைய பெருந் தாகத்துக்கு இந்தத் துளிகள் போதுமா?’ என்று மேலும் மேலும் மேக மண்டலத்தை நோக்கிப் போவது போலவும் இருந்தது. இந்தப் பயங்கரக் காட்சியைப் பார்த்துக் கொண்டு ஒரு நிமிஷம் கிடந்த இடத்திலேயே கிடந்தேன். தெய்வாதீனமாக, அப்போது காரில் என் தவுல் இருந்தது ஞாபகம் வந்தது! உடனே எனக்கு உயிர் வந்து விட்டது, மறு நிமிஷம் பாய்ந்து சென்று வண்டியின் அருகில் போனேன். வண்டி மரத்தில் முட்டி நொறுங்கிக் கிடந்தது. நல்ல வேளையாக என்ஜினில்தான் நெருப்புப் பிடித்து கொண்டிருந்தது. இன்னும் அடிப்பாகத்துக்கு வரவில்லை. தவுலையும், நாயனங்களையும் எடுத்து அப்புறப்படுத்திவிட்டு, மனுஷர்களின் நிலைமை என்னவென்று பார்த்தேன். டிரைவர் அப்போதுதான் எழுந்து வந்து கொண்டிருந்தான். அவன் தலையில் அடிபட்டு இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. “அடபாவி! இப்படிப் பண்ணிவிட்டாயேடா! நீ நாசமாய்ப் போக!” என்று வைது விட்டு, தம்பி எங்கே என்று பார்த்தேன். கொஞ்சம் தூரத்தில் அவன் கிடந்ததைக் கண்டதும் இரண்டு எட்டில் பாய்ந்து ஓடினேன். கட்டை மாதிரி கிடந்தான். ஐயோ! பாவி போய்விட்டானோ? மாரைத் தொட்டுப் பார்த்தேன்; அடிக்கிற சத்தமே கேட்கவில்லை. கையைப் பிடித்துப் பார்த்தேன்; நாடி அடிக்கவில்லை. மூக்கின் அருகில் கையை வைத்தேன்; இலேசாக மூச்சு வருவது போல் தோன்றிற்று; கொஞ்சம் எனக்கு உயிர் வந்தது. இதற்குள்ளாக ஜனங்கள் பேசுகிற கலகல சப்தம் கேட்டுச் சுற்று முற்றும் பார்த்தேன். எழெட்டுப் பேர் கையில் லாந்தர்களுடன் ஓடி வந்து கொண்டிருந்தார்கள். அதற்கு வெகு சமீபத்தில் ரயில்வே ஸ்டேஷன் இருந்ததாகப் பின்னால் தெரிந்து கொண்டேன். கடவுளுடைய செயலைப் பாருங்கள் ஐயா! அவர் தண்டனை அளிக்கும் போதுகூட, கொஞ்சம் கருணையும் காட்டுகிறார்; சஞ்சாரமே இல்லாத இடத்தில் இந்த மாதிரி விபரீதம் நடந்திருந்தால் எங்கள் கதி என்ன ஆகியிருக்கும்…?" “பிள்ளைவாள்! எனக்குப் புரியவில்லை! என்ன தான் நடந்தது? ஏன் மரம் பற்றிக் கொண்டது? ஏன் மோட்டார் எரிந்தது?” என்றேன். “தெரியவில்லையா ஐயா! பச்சை மரம் ஏன் எரியும்? நீங்கள் தான் சொல்லுங்களேன்? இடி விழுந்து தான்…” “ஐயோ, அனுமார் கோயிலில் செய்த சபதம்…” "ஆமாம் சாமி, ஆமாம்! அனுமார் கோயிலில் சிவக்கொழுந்து செய்த சபதம் பலித்து விட்டது. அவ்வளவு சமீபத்தில் இடிவிழுந்த அதிர்ச்சியினால் தம்பியின் மூளைகலங்கிப் போயிருக்க வேண்டும். ஸ்டீரிங்கிலிருந்து கை நழுவியது. வண்டி மரத்தின் மேல் முட்டியது. மூலைக்கு ஒருவராய்ப் போய் விழுந்தோம். ஆனால், அதிசயத்தைக் கேளுங்கள்! யாரும் சாகவில்லை. எங்களுக்கெல்லாம் சிறு காயங்களுடன் போயிற்று. தம்பிக்கு மட்டும் - தம்பிக்கு மட்டும்… சாமி! அதை நினைக்கும் போது தெய்வத்தின் தண்டனை என்று தான் நம்ப வேண்டியிருக்கிறது. ஆனால் அந்தச் சமயம் இதைப் பற்றியெல்லாம் நான் நினைக்கவில்லை. தம்பிக்கு மூர்ச்சை தெளிவிப்பதற்கு என்னவெல்லாமோ செய்து பார்த்தோம். மூர்ச்சை தெளியவில்லை. அடுத்த ரயிலில் கும்பகோணத்துக்கு டிக்கட் வாங்கிக் கொண்டு கிளம்பினோம். ரயிலில் தம்பியின் முகத்தை உற்றுப் பார்த்த போது தான் ‘ஐயோ! இது தெய்வ தண்டனைதானோ’ என்று எனக்குச் சந்தேகம் உதித்தது. கட்டை மாதிரி அவன் பிரக்ஞையற்றுக் கிடந்தபடியால் உயிர் இருக்கிறதோ இல்லையோ என்று எனக்கு அடிக்கடி பயம் ஏற்படும். உடனே தம்பியின் முகத்தைப் பார்ப்பேன். அந்த முகத்தில் ததும்பிய ஜீவ களையைப் பார்த்து தைரியம் அடைவேன். இப்படி ஒரு தடவை பார்த்த போது மூடியிருந்த தம்பியின் கண்களின் ஓரத்தில் ஏதோ பளபளவென்று சிவப்பாகத் தெரிந்தது. உற்றுப் பார்த்தேன், பகவானே! அப்போதுதான் என் நெஞ்சை யாரோ ஈட்டியால் குத்திப் பிளப்பது போல் இருந்தது. ஏனெனில் மூடியிருந்த இரண்டு கண்களின் முனையிலும் இரத்தத் துளிகள் காணப்பட்டன! எலக்டிரிக் லைட்டின் பிரகாசத்தில் அவை அப்படி உயர்ந்த ரத்தினக் கற்களைப் போல் பிரகாசித்தன! என் மனசில் அப்போது ஏற்பட்ட பயங்கரமான சந்தேகம் நாலு நாளைக்கெல்லாம் ஆஸ்பத்திரியில் உறுதிப்பட்டது. கும்பகோணத்தில் நம்முடைய பிரபல காங்கிரஸ் டாக்டர் இருக்கிறார் அல்லவா? அவருடைய ஆஸ்பத்திரிக்குத்தான் அழைத்துச் சென்றேன். முதல் மூன்று நாலு நாளும் டாக்டர் ஒன்றும் சொல்லவில்லை. நாலாம் நாள், என்னைக் கூப்பிட்டு, ஸ்பஷ்டமாகச் சொல்லிவிட்டார். “பையனுக்கு மனம் கொஞ்சம் குழம்பியிருக்கிறது. கொஞ்ச நாளில் இது சரியாகப் போய்விடும். ஆனால் கண் இரண்டும் போனது போனதுதான்” என்று சொன்னார். அவரை நான் காரணம் ஒன்றும் கேட்கவில்லை. எனக்குத்தான் காரணம் தெரியுமே? ஹனுமார் கோயிலில் தம்பி செய்த பிரமாணம் அப்படியே பலித்து விட்டது. இனிமேல் மதுபானம் செய்தால், என் தலையில் இடி விழட்டும், என் கண் அவிந்து போகட்டும் என்று சபதம் செய்தபடியே ஆகிவிட்டது. தம்பி மூன்று மாதம் ஆஸ்பத்திரியில் இருந்தான். கொஞ்சம் கொஞ்சமாக புத்தி தெளிவடைந்து வந்தது. பத்து நாளைக்குள் நான் இன்னாரென்று தெரிந்து கொண்டு பேச ஆரம்பித்தான். கண்ணுக்கு இன்னும் கட்டுப் போட்டிருந்தது. கண் போய் விட்டது என்ற செய்தியைச் சொல்ல எனக்குத் தைரியம் வரவில்லை. நான் இல்லாத சமயத்தில் டாக்டரையே தெரிவிக்கும்படி சொல்லிவிட்டேன். இனிமேல் தனக்குக் கண் தெரியவே தெரியாது என்று அறிந்ததும் அவனுக்கு மறுபடியும் சித்தப் பிரமை மாதிரி ஆகிவிட்டது. சம்பந்தமில்லாமல் தனக்குத்தானே பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டுமிருந்தான். இவ்வளவு கூத்தில் அவன் அந்த நாடகக்காரியை மட்டும் மறக்கவில்லை. அடிக்கடி ‘மனோரஞ்சிதம்’, ‘மனோரஞ்சிதம்’ என்று சொல்லிக் கொண்டும் வாய்க்குள்ளே சிரித்துக் கொண்டும் இருந்தான். இதனால் வனஜாவை அவனைப் பார்ப்பதற்கு அழைத்து கொண்டு வருவதற்கு எனக்குப் பிடிக்கவில்லை. வனஜாவோ, தான் அவரைப் பார்க்க வேண்டும், பார்க்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாள். யாரும் பார்க்கக் கூடாது என்று டாக்டர் கண்டிப்பாய் கட்டளையிட்டிருப்பதாகச் சொல்லிக் காலம் ஓட்டிக் கொண்டிருந்தேன். கடைசியில் அவளுடைய தொந்தரவு பொறுக்க முடியாமல் ஒரு நாளைக்கு அழைத்துக் கொண்டு வந்தேன். அவள் பார்க்க வரும் விஷயத்தைத் தம்பியிடம் தெரியப்படுத்த வேண்டாமென்று இரண்டு பேருமே பேசித் தீர்மானித்திருந்தோம். அவ்வாறே அவள் அவன் படுத்திருந்த அறையில் வந்து பேசாமல் மௌனமாய் நின்றாள். நான் பயந்தபடியே ஆயிற்று. சிவக்கொழுந்து தனக்குத் தானே பேசிக் கொள்கையில், ’அடி மனோரஞ்சிதம்! என் கிளியே! மடமயிலே! மானே! தேனே, என்றெல்லாம் பிதற்றினான். நான் மிகுந்த கவலையுடன் வனஜாவைப் பார்த்தேன். ஐயா! ஸ்தீரிகளின் இதயத்தை ஆண் பிள்ளைகளால் கண்டு பிடிக்க முடியாது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களல்லவா? அது உண்மையென்று அப்போது எனக்குத் தெரிந்தது. இந்த மாதிரி சிவக்கொழுந்து இன்னும் மனோரஞ்சிதத்தின் பெயரை ஜபம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, வனஜா மனம் வெறுத்துப் போய்விடுவாள் என்றும், தம்பியின் மேல் அவளுக்கிருந்த பாசம் போய்விடுமென்றும், அப்புறம் அவனைப் பார்க்க வர வேண்டுமென்றே சொல்ல மாட்டாள் என்றும் நினைத்தேன். ஆனால் நடந்தது இதற்கு நேர்மாறாக இருந்தது. வனஜாவின் மனம் கொஞ்சம் கூட சலிக்கவில்லையென்று கண்டேன். உண்மையில் அவளுடைய பாசம் முன்னைவிட அதிகமானதாகத் தோன்றிற்று. தினந்தோறும் தன்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போக வேண்டுமென்றும் ஆனால் தம்பிக்குச் சொல்லக் கூடாதென்றும், அவள் பிடிவாதம் பிடித்தாள். தம்பிக்குத் தன் வீட்டிலிருந்துதான் சாப்பாடு கொண்டு வர வேண்டுமென்றும் சொன்னாள். அவளே சில சமயம் எடுத்துக் கொண்டு வந்தாள். இதெல்லாம் எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. முன்னே சிவக்கொழுந்துக்கும் வனஜாவுக்கும் கலியாணம் பண்ணி வைக்க வேண்டுமென்று நான் எண்ணியது வாஸ்தவந்தான். ஆனால் இப்போது அது நடக்கக் கூடிய காரியமா? அவளுடைய தாயார் சம்மதிப்பாளா? இந்தப் பைத்தியக்காரப் பிள்ளைதான் சம்மதிக்கப் போகிறானா? இவ்வளவுக்குப் பிறகு இன்னும் அவனுக்கு ‘மனோரஞ்சிதம் பிரேமை’ போகவில்லையே! பின்னே வனஜாவின் பாசத்தை வளர விடுவதில் என்ன பிரயோஜனம்? இப்படி நான் எண்ணிக் கொண்டிருக்கையில் வனஜா சொன்ன ஒரு விஷயம் என்னைத் திடுக்கிடச் செய்துவிட்டது. “மாமா, நான் சொல்கிறதற்கு நீங்கள் சம்மதிக்க வேணும்” என்று அவள் ரொம்ப நேரம் பூர்வ பீடிகை போட்டுவிட்டுக் கடைசியில், “நான் என் பெயரை மாற்றி மனோரஞ்சிதம் என்று வைத்துக் கொள்ளப் போகிறேன். நீங்கள் சம்மதம் கொடுக்க வேணும்” என்றாள். முதலில், அவளுடைய நோக்கம் இன்னதென்பது எனக்கு விளங்கவில்லை. பிற்பாடு அவளுடன் பேசித் தெரிந்து கொண்டேன். தம்பிக்குத் தான் கண் தெரியாதல்லவா? இதைச் சாதகமாக வைத்துக் கொண்டு வனஜா தன்னை மனோரஞ்சிதமாக மாற்றிக் கொள்ளப் போவதாய்ச் சொன்னாள். மனோரஞ்சிதம் மாதிரியே தன்னால் பேசவும் பாடவும் முடியுமென்றும் சொல்லி, அந்தப் படியெல்லாம் எனக்குச் செய்து காட்டினாள். குரல் பேச்சு எல்லாம் தத்ரூபம், நாடக மேடையில் நான் பார்த்தபடியே இருந்தது. எனக்கென்னமோ தம்பியை இப்படி ஏமாற்றுவது பிடிக்கவேயில்லை. அதனால் என்ன கேடு விளையுமோ என்னமோ என்று பயமாயுமிருந்தது. ஆனாலும் வனஜாவின் பிடிவாதத்தையும் கண்ணீரையும் என்னால் எதிர்த்து நிற்க முடியவில்லை. ’மாமா! எனக்கு அவரைத் தவிர வேறு கதி கிடையாது. வனஜாவை அவருக்குப் பிடிக்காதபடியால் மனோரஞ்சிதமாகி விடுகிறேன். இதற்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிரை விட்டு விடுவேன். ஸ்திரீ ஹத்தி தோஷம் உங்களை விடாது" என்றாள். பல நாள் தயங்கித் தயங்கி, கடைசியாக இந்த மோசடிக்கு நான் சம்மதித்தேன். அந்தப் பெண்ணின் துயரத்தை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. ஒரு வேளை யுக்தி பலித்தால், சிவக்கொழுந்து மனந்தேறி முன்போல் மனுஷனாகலாம் என்ற ஆசையும் எனக்கு இருந்தது. ஆனால் கவலையும் திகிலும் ஒருபுறம் இல்லாமற் போகவில்லை. முதலில் யுக்தி பலிக்க வேண்டும்; பிறகு உண்மை வெளியாகும் போது, தம்பி என்ன செய்வானோ, என்னமோ? பகவான் இருக்கிறார், நடக்கிறபடி நடக்கட்டும் என்று தீர்மானித்து விட்டேன். மறுநாள், வனஜாவை அழைத்துக் கொண்டு தம்பியின் வீட்டுக்குப் போனேன். தம்பியிடம் இந்தப் பேச்சை எப்படி எடுக்கிறது என்று நான் தயங்கிக் கொண்டிருக்கையில், தற்செயலாக வனஜாவின் கைவளைகள் குலுங்கின. அதைக் கேட்டதும் தம்பிக்கு ஒரே ஆச்சரியமாய்ப் போயிருக்க வேண்டும். “மாமா! யார் அது?” என்று கேட்டான். நல்ல வேளையாய்ப் போச்சு என்று நான் நினைத்துக் கொண்டு “தம்பி! உன்னைப் பார்ப்பதற்காகப் பட்டணத்திலிருந்து மனோரஞ்சிதம் வந்திருக்கு” என்றேன். “என்ன மனோரஞ்சிதமா?” என்று கேட்டுக் கொண்டு தம்பி படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான். ஒரு நிமிஷம் எனக்கு ரொம்பப் பயமாய்ப் போய்விட்டது. அதே சமயத்தில் வனஜா சட்டென்று அருகில் வந்து “ஆமாம், நான் தான் வந்திருக்கிறேன். நீங்கள் படுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிக் கொண்டே, அவனுடைய தோள்களைப் பிடித்து மெதுவாக படுக்க வைத்தாள். ஐயோ! அப்போது தம்பி பார்த்த பார்வை இன்னும் என் மனசில் அப்படியே நிற்கிறது. ஒளி இழந்த அவனுடைய கண்களால் அப்படி வெறிக்க வெறிக்க விழித்துப் பார்த்தான். ஒரு பொருளை இழந்த பிறகு தான் அதனுடைய அருமை மனுஷர்களுக்கு நன்றாய்த் தெரிகிறதல்லவா? அவ்விதமே, கண் பார்வையின் அருமையை அந்த சமயத்தில் தம்பி ரொம்பவும் உணர்ந்திருக்க வேண்டும். ‘போன பார்வை திரும்பி வராதா?’ என்ற அளவில்லாத ஆத்திரத்தை அச்சமயம் அவனுடைய முகத்திலே பார்த்த போது, எனக்கு பெரிய வேதனை உண்டாயிற்று. இவனை ஏமாற்றுகிறோமே என்ற பச்சாதாபமும் ஏற்பட்டது. ஆனால், எப்படியோ அந்தப் பெண்ணின் வார்த்தையைக் கேட்டு இந்த மோசடியில் இறங்கியாகி விட்டது. இனிமேல் தயங்கி என்ன பிரயோஜனம்? முன்னாலேயே நானும் வனஜாவும் யோசித்துக் கற்பனை செய்திருந்த கதையை அப்போது சொன்னேன். தம்பி ஸ்மரனையிழந்திருந்த போது அடிக்கடி ‘மனோரஞ்சிதம்’ என்று சொல்லிக் கொண்டிருந்ததாகவும், அவள் வந்தால் தான் அவனுக்குக் குணமாகுமென்று நினைத்து நான் கடிதம் எழுதினதாகவும், அதன் பேரில் அவள் வந்திருப்பதாகவும் பாடம் ஒப்புவித்தேன். வனஜா நான் சொன்னதை ஆமோதித்தாள். “மாமாவின் கடிதம் பார்த்ததும் ஓடி வந்தேன்; உங்களுக்கு உடம்பு நன்றாய் சௌக்கியமான பிறகுதான் திரும்பிப் போகப் போகிறேன்” என்றாள். கொஞ்ச நேரம் ஏதோ பேசிக் கொண்டிருந்த பிறகு, “எங்கே, அம்மா! ஒரு பாட்டுப் பாடுங்கள். தம்பி கேட்கட்டும்” என்றேன் நான். இதையும் முன்னாலேயே பேசி வைத்திருந்தோம். மனோரஞ்சிதம் நந்தன் சரித்திரத்தில் நந்தன் வேஷம் போட்டுக் கொள்வதுண்டு. அப்போது ‘பட முடியாதினித் துயரம்’ என்னும் அருட்பாவை ராக மாளிகையில் பாடுவாள். இப்போது வனஜா அந்தப் பாட்டை அதே மாதிரி ராகமாளிகையில் பாடினாள். குரல், பாடும் விதம், அங்கங்கே விழுந்த சங்கதிகள் முதற்கொண்டு அப்படியே இருந்ததைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். தம்பியோ பாட்டைப் பரவசமாய்க் கேட்டுக் கொண்டிருந்தான். ஒளி இழந்த அவனுடைய கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் வந்து கொண்டிருந்தன. எங்களுடைய யுக்தி இவ்வாறு பலித்து விட்டதைப் பற்றி நாங்கள் இருவரும் அசாத்தியமான சந்தோஷம் அடைந்தோம். பிறகு, வனஜா தினந்தோறும் தம்பியைப் பார்க்க வந்து கொண்டிருந்தாள். பகலெல்லாம் பெரும்பாலும் அவனுடைய வீட்டிலேயே கழிப்பாள். தம்பிக்கு நெருங்கிய உற்றார் உறவினர் யாரும் இல்லை. வீட்டில் தவசிப் பிள்ளையையும் சோக்ராவையும் தவிர வேறு யாரும் கிடையாது. அவர்களை நான் தயார்ப்படுத்தி வைத்திருந்தேன். கொஞ்ச நாளைக்கெல்லாம் நான் வேறு நாதஸ்வர வித்வான்களுடன் கச்சேரிக்குப் போக ஆரம்பித்தேன். ஒரு தடவை அந்த மாதிரி போய் விட்டுத் திரும்பி வந்த போது சிவக்கொழுந்து மிகவும் உற்சாகத்துடனே, “மாமா! நானும் மனோரஞ்சிதமும் கலியாணம் பண்ணிக் கொள்ளப் போகிறோம். இனிமேல், அவள் நாடக மேடை ஏறி நடிப்பதில்லை என்றும் தீர்மானமாகி விட்டது” என்று சொன்னான். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. இது என்ன விபரீதமாக அல்லவா இருக்கிறது? ஏனோ, தம்பிக்கு உடம்பு குணமாவதற்காக இந்த ஏமாற்றத்துக்கு நான் சம்மதித்தேன். எப்போதுமே அவனுக்கு உண்மை தெரியாமல் இருக்குமா? தெரியும்போது என்ன கதி ஆவது? ஆனால் இந்த ஆட்சேபம் ஒன்றும் வனஜாவிடம் பலிக்கவில்லை. “பிற்பாடு நானல்லவா கஷ்டப்பட போகிறேன்? உங்களுக்கு என்ன?” என்றாள். அழுது கண்ணீர் விட்டு எப்படியோ என்னை சம்மதிக்கப் பண்ணிவிட்டாள். அவளுடைய தாயாரையும் சம்மதிக்கச் செய்தாள். அடுத்த மாதம் திருநாகேசுவரம் கோயிலில் அவர்களுக்குக் கல்யாணம் நடத்திக் கொண்டு ஊருக்குத் திரும்பி வந்து சேர்ந்தோம். இப்படிச் சொல்லி விட்டு, கந்தப்ப பிள்ளை சும்மா இருந்தார். ஏதோ பெரிய யோசனையில் ஆழ்ந்தவர் போல் தோன்றினார். “அப்புறம் என்ன?” என்று கேட்டேன். “அப்புறம் என்ன? மாப்பிள்ளையும், மருமகளும் சௌக்கியமாயிருக்கிறார்கள். மணிமணியாய் இரண்டு ஆண் பிள்ளைக் குழந்தைகள் பிறந்திருக்கின்றன” என்றார். எனக்குத் திருப்தி உண்டாகவில்லை. அவர் சொல்ல வேண்டியது இன்னும் பாக்கி இருப்பதாகத் தோன்றியது. “இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?” என்று கேட்டேன். "முந்திரிச் சோலை என்று கேட்டிருக்கிறீர்களா, சாமி? காரைக்காலுக்கும் முத்துப்பேட்டைக்கும் நடுவே மத்தியில் சமுத்திரக் கரையோரத்தில் இருக்கிறது. முந்திரிச் சோலை மாரியம்மன் கோயில் வெகு பிரசித்தம். கிராமம் வெகு அழகாயிருக்கும். சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் முந்திரி மரங்களும், சவுக்கு மரங்களும் தான். ஊருக்குக் கிழக்கே கொஞ்ச தூரம் வரையில் இந்தத் தோப்புகள்; அப்புறம் நாணல் காடு. நாணல் காட்டைத் தாண்டினால் வெண் மணல். அதற்கும் அப்பால் அலை வீசும் சமுத்திரம். இடைவிடாமல் அலைகளின் ‘ஓ’ வென்ற சப்தமும், சவுக்குத் தோப்புகளின் ‘ஹாய்’ என்ற சப்தமும் கேட்டுக் கொண்டே இருக்கும். இந்த முந்திரிச் சோலைதான் என்னுடைய பூர்வீக கிராமம். இங்கே எனக்கு ஒரு சின்ன வீடும் கொஞ்சம் காணியும் உண்டு. சிவக்கொழுந்து, பெயரும் புகழுமாய் நன்றாயிருந்த காலத்தில், இந்த கிராமத்துக்கு இரண்டு மூன்று தடவை வந்திருக்கிறான். ஊர் தனக்கு ரொம்பப் பிடித்திருப்பதாகவும், எப்போதாவது கச்சேரி செய்வதை நிறுத்தினால், இந்த ஊரில் வந்து வசிக்கப் போவதாகவும் அடிக்கடி சொல்வான். கல்யாணம் ஆன சில நாளைக்கெல்லாம் தம்பி, “மாமா! நான் முந்திரிச் சோலைக்குப் போகப் போகிறேன். உங்கள் வீட்டை எனக்குக் கொடுக்க வேணும்” என்றான். அதெல்லாம் கூடாதென்று நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். “கண் பார்வை இல்லாமற் போனால் என்ன, தம்பி? அதற்காக நீ வாத்தியம் வாசிப்பதை நிறுத்தி விடக்கூடாது. அந்த காலத்தில் சரப சாஸ்திரியார் கண்ணில்லாமல் புல்லாங்குழல் வாசிக்கவில்லையா? கச்சேரி வராதோ என்று நினைக்காதே எதேஷ்டமாய் வரும்” என்றேன். எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை. “வேணுமானால் பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம். சில வருஷமாவது நான் கிராமத்தில் இருக்கப் போகிறேன். கொஞ்ச நாளைக்கு நாயனத்தையே நான் தொடப் போவதில்லை” என்று பிடிவாதமாய்ச் சொன்னான். அந்தபடியே அவனும் வனஜாவும் முந்திரிச் சோலைக்குப் போய்விட்டார்கள். இன்னமும் அங்கேதான் இருக்கிறார்கள். இவ்வாறு கந்தப்ப பிள்ளை மறுபடியும் கதையை முடித்தார். ஆனால் என் மனம் சமாதானம் அடையவில்லை. அவருடைய கதையில், இடி விழுந்து சிவக்கொழுந்தின் கண் போனதைக் கூட நான் நம்பினேன். ஏனெனில், இம்மாதிரி அபூர்வ சம்பவங்களை நானே பார்த்திருக்கிறேன். ஆனால் வனஜா மனோரஞ்சிதமாக மாறி, சிவக்கொழுந்தை மோசம் செய்த விஷயத்தை மட்டும் என்னால் நம்ப முடியவில்லை. என்னதான் கண் குருடாயிருந்தாலும் இந்த மாதிரி ஏமாற்றுவது சாத்தியமா? அப்படிக் கலியாணம் நடந்திருந்தாலும், பின்னால் தெரியாமல் இருந்திருக்குமா? இப்படி எண்ணி, “அப்புறம், சிவக்கொழுந்துக்குத் தெரியவேயில்லையா? உங்களுடைய மோசத்தைக் கண்டு பிடிக்கவில்லையா?” என்று கேட்டேன். "ஸ்வாமி! இந்த எண்ணத்தினால் எத்தனை நாள் தூக்கம் பிடிக்காமல் கஷ்டப்பட்டிருப்பேன் என்று நினைக்கிறீர்கள்? தம்பி எப்போது உண்மையைத் தெரிந்து கொள்வானோ, அப்போது அவனுக்கு எப்படிப்பட்ட கோபம் வருமோ, என்ன செய்வானோ என்று எனக்குத் திக்திக்கென்று அடித்துக் கொண்டுதானிருந்தது. இந்த பயத்தினாலும், அவர்கள் பேரில் எனக்கிருந்த பிரியத்தினாலும் அடிக்கடி முந்திரிச் சோலைக்குப் போய்க் கொண்டிருந்தேன். நாலு மாசத்துக்கு ஒரு தடவையாவது கட்டாயம் போய் விடுவேன். இரண்டு பேரும் ரொம்ப சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதைப் பார்த்து நானும் சந்தோஷமடைந்தேன். இந்த மாதிரி ஒரு தடவை போயிருந்தபோது, வீட்டுக் கூடத்தில் தம்பியின் வாத்தியம் வைத்திருந்ததையும், அதன் பக்கத்தில் சுருதிப் பெட்டி ஒன்று இருந்ததையும் பார்த்தேன். வனஜாவை, “தம்பி இப்போது வாத்தியம் வாசிப்பதுண்டா?” என்று கேட்டேன். சில சமயம் ராத்திரியில் வாசிப்பாங்க; நான் சுருதி போடுவேன்" என்று சொன்னாள். நல்ல வேளையாகத் தவுல் எடுத்துக் கொண்டு போயிருந்தேன். அன்று ராத்திரி ரொம்பவும் பிடிவாதம் செய்து தம்பியை நாயனம் வாசிக்கச் சொல்லி, நானும் தவுல் அடித்தேன். ஆகா! அது என்ன வாசிப்பு? என்ன வாசிப்பு! சாமி! அது மனுஷ்யர்களுடைய சங்கீதமல்ல; தேவ சங்கீதம். ஒரு சமயம் அழுகை வரும்; ஒரு சமயம் சிரிப்பு வரும். ஒரு நிமிஷம் எங்கேயோ ஆகாயத்தில் தூக்கிக் கொண்டு போவது போலிருக்கும்; அடுத்த நிமிஷம் மலை உச்சியிலிருந்து பாதாளத்தில் உருட்டி விடுவது போலிருக்கும்; ஒரு சமயம் ஊஞ்சலாடுவது போலிருக்கும், இன்னொரு சமயம் எழுந்திருந்து கூத்தாட வேண்டுமென்று தோன்றும். நடுவில் நடுவில் நான் தவுல் அடிப்பதை நிறுத்திவிட்டு, ஆஹா! ஆஹா! என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருப்பேன். இம்மாதிரி தம்பி வாத்தியம் வாசிக்கிற விஷயம் தெரிந்ததிலிருந்து முன்னைக் காட்டிலும் அதிகமாகவே முந்திரிச் சோலைக்குப் போகத் தொடங்கினேன். நாளாக ஆக, தம்பியை ஏமாற்றிய விஷயமாய் எனக்குப் பயம் குறைந்து வந்தது. இனிமேல் அவனுக்கு எங்கே தெரியப் போகிறது என்றே நினைத்து விட்டேன். முந்திரிச் சோலையில் தம்பியும் வனஜாவும் போய்த் தங்கி மூன்று, நாலு வருஷம் இருக்கும். ஒரு தடவை நான் அங்கே போயிருந்தபோது, தம்பியின் முன்னால் ஞாபக மறதியாக ‘வனஜா’ என்று கூப்பிட்டு விட்டேன். உடனே, என் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டேன். “வனஜாவா? அது யார் மாமா?” என்றான் சிவக்கொழுந்து. “இங்கே யாருமில்லை, அப்பா! என் மருமகள் ஞாபகமாகக் கூப்பிட்டு விட்டேன்!” “அதனால் என்ன மாமா, இவளும் உங்கள் மருமகள் தானே? வனஜா என்ற பெயர் உங்களுக்குப் பிடித்திருந்தால், அப்படியே கூப்பிடுங்களேன்” என்றான். “நல்ல வேளை, பிழைத்தோம்” என்று நினைத்துக் கொண்டேன்! அன்று ராத்திரி வழக்கம் போல் சிவக்கொழுந்து வாத்தியம் வாசித்தான். அவன் சஹானா ராகம் வாசித்த போது என்னால் சகிக்கவே முடியவில்லை. ஒரு பரவசமாய் ‘ஆண்டவனே! என்று அலறி விட்டேன். வாசித்து முடிந்ததும், ’தம்பி! கடவுளுக்கு அல்லவா கண்ணில்லை போலிருக்கிறது? இப்பேர்ப்பட்ட நாத வித்தையை உனக்குக் கொடுத்து விட்டு, உன் கண்ணை எடுத்துக் கொண்டு விட்டாரே?’ என்று வாய் விட்டுக் கதறினேன். அப்போது சிவக்கொழுந்து புன்னகை செய்தபடி, “மாமா! ஸ்வாமி என் கண்ணை எடுத்துக் கொள்ளவில்லை. உண்மையில் எனக்குக் கண்ணைக் கொடுத்தார். வனஜாவைக் காட்டிலும் இன்னொருத்தி ஒசத்தி என்று நினைத்தேனே? என்னை விடக் குருடன் யார்?” என்றான். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. “என்ன சொல்கிறாய், தம்பி” என்றேன். “மாமா! எனக்குக் கண்ணில்லையென்று என்னை நீங்கள் ஏமாற்றப் பார்த்தீர்கள். ஆனால் உண்மையில் உங்களைத்தான் நான் ஏமாற்றினேன். முதல் நாள் ஆஸ்பத்திரிக்கு வந்த போதே இவள் வனஜாதான் என்று எனக்குத் தெரியும்” என்றான். அச்சமயம் அங்கு வந்த வனஜாவின் முகத்தைப் பார்த்தேன். அவளுடைய புன்சிரிப்பிலிருந்து அவளும் இதற்கு உடந்தைதான் என்று தெரிந்து கொண்டேன். “வனஜா! நீயும் சேர்ந்து தான் இந்தச் சூழ்ச்சி செய்தாயா? தம்பிக்குத் தெரியுமென்பது முதலிலேயே உனக்குத் தெரியுமா?” என்று கேட்டேன். “இல்லை, மாமா! கல்யாணத்துக்கு மறுநாள் தான் எனக்குத் தெரியும். ஆனால், உங்களுக்குச் சொல்லக் கூடாது என்று என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டாங்க! நீங்க அவரை ஏமாற்ற நினைத்ததற்காக உங்களை தண்டித்தார்களாம்!” என்றாள். “எப்படியும் நீங்கள் இரண்டு பேரும் ஒன்றாய்ப் போய் விட்டீர்களல்லவா? நான் தானே பிறத்தி மனுஷனாய்ப் போய்விட்டேன்? எனக்கென்னவேலை இங்கே? நான் போகிறேன்” என்று சொல்ல்விட்டுக் கிளம்பினேன். என் மனத்திற்குள் எவ்வளவோ சந்தோஷம். ஆனால் வெளிக்கு மட்டும் கோபித்துக் கொண்டவன் போல் நடித்தேன். அவர்கள் இரண்டு பேரும் ரொம்பவும் சிரமப்பட்டு என்னை சமாதானப்படுத்தினார்கள். ஒரு மாதிரியாகக் கோபம் தீர்ந்தபிறகு, “போனது போகட்டும், தம்பி! முதல் நாளே இவள் வனஜாதான் என்று உனக்குத் தெரிந்து விட்டது என்றாயே? அது எப்படித் தெரிந்தது?” என்று கேட்டேன். அதற்குச் சிவக்கொழுந்து சொன்ன பதில் என்னை ஆச்சரியத்தில் பிரமிக்கும்படி செய்து விட்டது. "பகவான் ஒரு அவயத்தை எடுத்துக் கொண்டால், இன்னொரு அவயத்தைக் கூர்மையாக்கி விடுகிறார். மாமா! எனக்குக் கண் போச்சு! ஆனால் காது கூர்மையாச்சு. வளையல் குலுங்கிய போதே வனஜாதான் என்று தெரிந்து கொண்டேன். மேலும் மனோரஞ்சிதம் வந்திருக்க மாட்டாள் என்று எனக்கு நிச்சயமாய்த் தெரியும். சென்ட்ரல் ஸ்டேஷனில் நான் என் பிரதிக்ஞைக்கு பங்கம் செய்து கொண்டிருக்கும் போது, அடுத்த அறையில் அவளுடைய போதைச் சிரிப்பைக் கேட்டேன். அப்போதே என் மனம் ‘சீ!’ என்று வெறுத்து விட்டது. அப்படிப்பட்டவளா என்னைப் பார்க்க வரப் போகிறாள்? ஒரு நாளுமில்லை. எனக்கேற்பட்ட ஆச்சரியமெல்லாம் நீங்கள் ஏன் அவ்வளவு பெரிய பொய் சொல்லி என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள் என்பது தான். அதன் காரணமும் நானே ஊகித்துக் கொண்டேன். நான் ‘மனோரஞ்சிதம், மனோரஞ்சிதம்’ என்று வெறுப்பினால் சொல்லிக் கொண்டிருந்ததைத் தப்பாக நினைத்துக் கொண்டு இப்படி என்னை மோசம் செய்யப் பார்க்கிறீர்கள் என்று தெரிந்து கொண்டேன். இவள் ‘பட முடியாதினித் துயரம்’ என்று பாடியதும் கொஞ்ச நஞ்சமிருந்த சந்தேகமும் எனக்குப் போய் விட்டது. மாமா! நீங்களும் ஒரு சங்கீத ரஸிகர் என்று சொல்லிக் கொள்கிறீர்களே? அந்த நாடகக்காரியின் பாட்டுக்கும், உங்கள் மருமகள் பாட்டுக்கும் எப்படி வித்தியாசம் தெரியாமல் போச்சு? ராகம், குரல், சங்கதிகள் எல்லாம் அப்படியே இருந்தது வாஸ்தவம்தான். ஆனால் அந்த நாடகக்காரியின் பாட்டிலே ஆத்மா கிடையாது; அது தொண்டைக்கு மேலிருந்து வந்த பாட்டு. ஆனால் உங்கள் மருமகளோ இருதய அந்தரங்கத்திலிருந்து பாடினாள். இந்த வித்தியாசம் உங்களுக்குத் தெரியவில்லையா?" என்றான். இப்படி மருமகனும் மருமகளும் சேர்ந்து எனக்கு அசட்டுப் பட்டம் கட்டினார்கள். ஆனால் அதைக் குறித்து நான் வருத்தப்படவில்லை. ஐயா! என் தலையிலிருந்து ஒரு பாரம் நீங்கியது போலிருந்தது. எப்படியாவது குழந்தைகள் இரண்டு பேரும் சந்தோஷமாயிருந்தால் சரி! எனக்கென்ன வந்தது? சாமி! காடு வா வா என்கிறது. வீடு போ போ என்கிறது. இந்த உலகத்தின் சுகதுக்கங்களெல்லாம் அனுபவித்தாகிவிட்டது. தம்பியின் நாத வித்தையில் சொர்க்கத்தின் சுகத்தைக் கூட அனுபவித்து விட்டேன். பகவான் எப்போது கூப்பிடுகிறாரோ அப்போது போகத் தயாராயிருக்கிறேன். வண்டி விழுப்புரம் ஸ்டேஷனில் நின்றது. கந்தப்ப பிள்ளையின் ‘சோக்ரா’ பையன் வேறு வண்டியிலிருந்து வந்து ஏறி, அவருடைய பிரிக்காத படுக்கையையும் பெட்டியையும் தூக்கிக் கொண்டான். கந்தப்ப பிள்ளை தவுலை ஒரு தட்டுத் தட்டிப் பார்த்து விட்டு அதைத் தாமே கையில் எடுத்துக் கொண்டு இறங்கினார். “போய் வருகிறேன், ஐயா! பட்டணத்துக்கு வந்தால் பார்க்கிறேன்!” என்று சொல்லிவிட்டுச் சென்றார். அன்றிரவு பாக்கி நேரமும் எனக்குத் தூக்கம் வரவில்லை. ஐயம்பேட்டைக் கந்தப்பன் கூறிய அதிசயமான சம்பவங்கள் திரும்பத் திரும்ப ஞாபகம் வந்தன. அவையெல்லாம் உண்மையாக நடந்தவைதானா? அல்லது, அவ்வளவும் கந்தப்ப பிள்ளையின் கற்பனையா? மறுபடியும் அவரைப் பார்க்கும் போது விசாரித்து உண்மை தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் நிஜமாயிருந்தாலும் சரி, கதையாயிருந்தாலும் சரி, ஒரு விதத்தில் பரம திருப்தியாயிருந்தது. என்னுடைய கதைகளைப் போல் துயரமாக முடிக்காமல் ‘பிள்ளை குட்டிகளுடன் சௌக்கியமாயிருக்கிறார்கள்’ என்று மங்களகரமாகக் கதையை முடித்தாரல்லவா? FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.