[] [cover image] 1. Cover 2. Table of contents காந்தியைக் கண்டுணர்தல் காந்தியைக் கண்டுணர்தல்   ஆர்.பட்டாபிராமன்   pattabieight@gmail.comதமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/gandhiyai_kandunarthal} முன்னுரை காந்தி காலம் கடந்தவரா- அவரது நடைமுறைகளும் சிந்தனைகளும் இன்றுள்ள உலகிற்கு பொருத்தமற்றவையா எனத் தேடுவதற்காக காந்தி ஆக்கங்களிலும் அவர் குறித்த எழுத்துக்களிலும் பயணிக்க ஆரம்பித்தேன். காந்தி மிகப் பொருத்தமானவர்- என்னால் ஒருக்கணம் கூட அவர் போல் நிற்க முடியவில்லை என்பதை உணரத்துவங்கினேன். காந்தியைக் கண்டுணர்தல் எனத்துவங்கி என் அகங்காரத்தை- உண்மை புறக்கணிப்புகளை- பல தருணங்களில் பிசிரற்ற மானுடநேயம் தொலைத்ததை என்னால் கண்டுணரமுடிந்தது. இக்கட்டுரைகளை எழுதிப்பார்த்ததில் எனது குணப்போதாமைகளின் நீள் சுவர்களை காணமுடிந்தது. எனது அதைரியத்தை கண்டறிய முடிந்தது. பேச்சுக்கும் செயலுக்கும் இடையே எப்போதும் நீளும் இடைவெளியை குறைக்க முடியாமையை உணரமுடிந்தது. மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்பதில் படுதோல்வி அடைந்துள்ளதை உரக்கச் சொல்லும் தைரியத்தால் ஆகப் போவது ஏதுமில்லை. இங்கு இடம்பெற்றுள்ள கட்டுரைகள் எனது இணையதளத்தில் கடந்த சில மாத இடைவெளிகளில் வெளிவந்தவைகள்தான். கட்டுரைகளை தொகுத்தால் எனக்கு மட்டுமில்லாமல் வேறு எவருக்கும் கூட சற்று உதவியாக இருக்குமே என்கிற ஆசை உந்துதலால் ’காந்தியைக் கண்டுணர்தல்’ புத்தக வடிவமாக வருகிறது. மேலும் காந்தியின் 150 ஆண்டுகள் என்கிற சூழலும் இந்த ஆர்வத்திற்கு காரணமாயிற்று. வாழ்க்கை என்பது கடமைக்கான காலம் என்பதை தானே வாழ்ந்துகாட்டி தன் வாழ்நாட்களில் உணர்த்தியும் சென்றவர் காந்தி. தன்னை உணரச்செய்திடும், தன்னை பிரதிபலிக்கும் , தன்னை மாற்றத்திற்குள்ளாக்கும் தொடர் நிகழ்வாக காந்தி அரசியலை உணர்ந்தார். சுயத்தை தேடும் மனிதன் ஒருவரின் நன்னெறியின் வெளிப்பாடாக அரசியலை அவர் புரிந்துகொண்டார் . புரட்சியின் மதிப்பைவிட மதிப்புகளின் புரட்சியை அவர் வலியுறுத்தினார். நன்னெறிக்கான புரட்சி அவசியம். உண்மையைத் தேடல் என்பது அதிகார ஆசையில்லாத நிலையில்தான் சாத்தியமாகும். கடமையை அனைவரும் செய்வோமானால் உரிமைகள் வசப்படும் என்கிற வரிகளை இக்கட்டுரைகளில் நாம் காணமுடியும். அகிம்சை உலகாளும் எனில் பெண்வழி உய்வாகவே அது உலகில் மலரும் என்றவர் காந்திஜி. உள்ளத்தை ஆட்கொள்ளும் அபூர்வ ஆற்றல் பெண்களைப்போல் ஆண்களுக்கு வருவதில்லை என்பதும் அவரது மதிப்பீடு. மனைவி தோழியாதல் வேண்டும். அவள் காண்ட்ராக்ட் அடிமையல்ல என அனுபவ வழியே அறிந்து சொன்னவர் காந்தி. அறிவெனில் அது ஆங்கிலம் என கருதிக்கொள்ளும் நோய் குறித்தும் பேசியவர் காந்தி. பெற்றோரிடமிருந்து பெறவேண்டியவை சொத்தைவிட நன்னடத்தை நற்குணங்கள்தான் என்பதை சமூகம் கற்கவேண்டுமே என செயல்பட்டவர் காந்தி. விடுதலைக்கு பின்னர் பெரும் விஷயங்களில் மட்டுமே கவனம் குவிந்துவிடும்- சிறு விஷயங்கள் (little things) உதாசீனமாக்கப்பட்டுவிடும் என்கிற கவலை அவருக்கு இருந்தது. நமது கிராமங்கள் சிறு விஷயங்களை நம்பியே இருக்கின்றன என அவர் கருதினார். மக்களுக்கு தங்களிடம் உள்ள ஆதாரங்களை எவ்வாறு கையாள்வது எனத்தெரிந்தால் போதும் பட்டினி என்பதற்கான அவசியம் இருக்காது என தன் இறுதி நாளில் அவர் தனது செய்தியை தந்தார். அனைத்து மதங்களும் அன்பையும் அருளையுமே போதிக்கின்றன என்பதை அடிப்படையாக எடுத்துக்கொண்டு விட்டால் என் மதம் மட்டுமே புனிதமானது என்பதோ என் மத அபிமானத்தால் பிற மதங்கள் மீதான வெறுப்பு என்பதோ எழாது . காந்தியின் மதம் குறித்த புரிதலில் நாம் இதை சரியாக உணரமுடியும். ’தொழிலாளர்’ அரசியல்வாதிகளின் ’செஸ் ஆட்டக்’ காய்களாகிவிடக்கூடாது என எச்சரித்தவர் காந்தி. வேலைநிறுத்தம் ஒன்றை காந்தியடிகள் எவ்வாறு நடத்திக்காட்டினார் என்ற ஆர்வத்தில் அகமதாபாத் பஞ்சாலை வேலைநிறுத்தம் குறித்த கட்டுரை இடம் பெற்றுள்ளது. 40 ஆண்டுகள் தொழிற்சங்க பணியாளன் என்ற வகையில் பங்கேற்ற போராட்டங்களில் நான் இவ்வாறு பொறுப்பாக நடந்து கொண்டேனா என்கிற விமர்சனபூர்வ கேள்வி என்னுள் எழுந்தது. அப்போராட்டத்தின் நூற்றாண்டு தருணத்தில் இக்கட்டுரை எழுதப்பட்டது. சாதி குறித்த காந்தியின் புரிதல் மற்றும் வெளிப்படுத்தல்கள் எப்படி சாதி ஒழியட்டும் என்பதாக பயணித்தது என்பதை பேசும் கட்டுரையும் இங்கு இடம் பெற்றுள்ளது. காந்தியின் சாதி குறித்த தொகுப்புகள் முன்னரே சில வந்திருந்தாலும் நிஷிகாந்த் கோல்கேவின் சாதிக்கு எதிரான காந்தி முக்கியமாக எனக்குப்படுகிறது. அப்புத்தகம் குறித்த அறிமுகவுரை தர காந்தி கல்வி நிறுவன நண்பர்கள் வாய்ப்பளித்தனர். அவர்களுக்கு எனது நன்றி. அம்பேத்கர் காந்தி இருவரும் தீண்டாமை ஒழிப்பு என்ற ஒரே இலக்கை அடைய வெவ்வேறு அணுகுமுறைகளை மேற்கொண்டவர்கள் என்றாலும் அவர்கள் பகைப்புலனில் வைத்து பார்க்கப்படவேண்டியவர்களா இணக்கப்படுத்திக் கொள்ளப்படவேண்டியவர்களா என்கிற விவாதம் பெருமளவில் நடந்து வருகிறது. இதுகுறித்த கட்டுரை ஒன்றும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. காந்தியும் பெண்களும் கட்டுரை புதிய செய்தி எதையும் தராது எனினும் சுருக்கமான பார்வை ஒன்றை வாசகர்களுக்கு நல்கும் என நம்புகிறேன். காந்தி - பகத்சிங் சர்ச்சை தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. பகத்சிங்கை காந்தி காவு கொடுத்தாரா எனும் கட்டுரை இது குறித்து விரிவாகப் பேசுகிறது. இத்தொகுப்பில் உள்ள முக்கிய கட்டுரை மறுப்பின் மெய்யியல். ரமீன் ஜெகன்பெக்லூ எனும் இரானியர் காந்தி குறித்து புத்தகங்கள் எழுதி வருபவர். அவரின் கீழ்ப்படியாமை – மறுப்பு மற்றும் காந்தி அதை செயல்படுத்தியது குறித்து காந்தி கல்வி நிலையத்தில் உரையாற்ற வாய்பு கிடைத்தது. அக்கட்டுரை இன்றுள்ள அரசியல் சூழலில் ஒருவருக்கு தேவைப்படும் மறுப்பிற்கான தைரியத்திற்கு மேலும் பலம்கூட்டும். இத்தொகுப்பிலுள்ள ஆறுகட்டுரைகளை மார்க்சியர் காந்தியர் உரையாடலாக எடுத்துக்கொள்ளலாம். மார்க்சியம் - கம்யூனிசம் குறித்த காந்தி மற்றும் காந்தியர் பார்வையும், காந்தி - காந்தியம் குறித்த மார்க்சியர் பார்வையும் இக்கட்டுரைகளில் பரக்கப் பேசப்பட்டுள்ளன. இவ்விவாதங்களில் நிர்மல் குமார் போஸ் மற்றும் பன்னலால் தாஸ் குப்தா ஆளுமை மிக்கவர்கள். அவர்கள் எழுத்துக்களை இடம் பெற செய்யாமல் தவறியுள்ளேன். இறுதி இரு கட்டுரைகள் விடுதலை நெருக்கத்தில் நிலவிய சூழலையும் காந்தியின் மனப்போராட்டத்தையும் ஒரளவு வெளிப்படுத்துகின்றன. ஆகஸ்டு 1947ல் எப்படி எங்கே தன் போராட்டத்தை அவர் நடத்திகொண்டிருந்தார் என ஒரு கட்டுரை பேசினால், அவரின் இறுதி வாழ்நாள் எவ்வாறு பெரும்பணிகளின் ஊடாக கடமைகளால் மட்டுமே கடந்தது என மற்றொரு கட்டுரை பேசுகிறது. இருந்தபோதும், சுடப்பட்டு மரணிக்கும் தருணத்திலும், மறைந்த பின்னரும் அவர் மகாத்மாவாகவே உணரப்பட்டார். காந்தி பேசாப் பொருளில்லை. அவரைப் பேச பேச அவர் பெருகிக் கொண்டேயிருக்கிறார். -ஆர். பட்டாபிராமன் 08-09-2019 மதச்சார்பின்மை காந்தியின் புரிதல் காந்தியடிகளின் மதம் குறித்த பார்வை பன்முகத் தன்மையிலானது. சர்வமதங்களின் அடிப்படை உண்மை என்பதில் அவருக்கு நம்பிக்கையிருந்தது. எந்தவொருமதத்தின் போதனையையும் அதனை நம்புவோர் படித்தறியும் வகையில் நாம் புரிந்து கொள்ளத் துவங்கினால் சமயங்களின் ஊடே காணப்படும் இணக்கமொழியை உய்த்துணரமுடியும் என அவர் கருதினார். உண்மையைத் தேடுவதில் பொதுவிவகாரம், தனிவிவகாரம் எனப் பிரித்து பார்க்க அவர் விரும்பியதில்லை. மதம் குறித்தும் அவருக்கு அப்படிப்பட்ட பார்வை இருந்தது. உண்மை தான் இறுதியானது. என்ன விலையானாலும் சரியானதை செய்யும் தைரியம் என்பதுதான் வழிகாட்டும் நெறி. எவ்வளவு பேசினாலும் நம்மை நாம் ஆள்வதற்கு அப்பேச்சுக்கள் மட்டுமே நம்மை தகுதிப்படுத்திவிடாது. செயல் மூலம் நாம் நடந்துகொள்வதில்தான் ஆள்வதற்கு பொருத்தமானவர்களாக ஆகமுடியும். இறையை நம்பி அவருக்கு மட்டும் பயந்து நடந்தால் நாம் மகாராஜாக்களுக்கு, நம்மை இரகசியமாய் மோப்பம் பிடிப்பவர்களுக்கு, வைஸ்ராய்களுக்கு அஞ்சவேண்டியதிருக்காது. இதுதான் தன்னைப் பொறுத்தவரை கோல்டன் ரூல் என்றார் காந்தி. மதசார்பின்மை மேற்கத்திய அனுபவத்தில் அரசியல் அதிகாரத்திற்கும் மதபீட அதிகாரத்திற்குமான முரண்பாட்டில் தேவாலயத்திற்கும் அரசியலுக்குமான அதிகார செல்வாக்கு வெளியை பிரிக்க வேண்டிய சூழலை சந்தித்தது. ’மதத்தை ஏற்காத மதசார்பின்மை’ என்கிற கருத்து மதசார்பின்மையின் விளக்கமானது. சமரசமாக மதம் மனித வாழ்க்குரிய புனித இடத்தையும், அரசாங்க நிறுவனங்களில் அரசதிகாரம் மதசார்பற்றும் என்கிற கருத்துக்கள் ஏற்கப்பட்டன. இந்திய அனுபவத்தில் மதம் மற்றும் அரசியல் மோதல் போக்கில் உருவான ஒன்றல்ல மதச்சார்பின்மை. அனைத்து மதங்களையும் நல்லிணக்கப்படுத்துவது என்பதை கடந்து மதத்தை முற்றிலுமாக பிரித்து நீக்குவது என்பது பொதுவான மார்க்சிய புரிதல். ஆனால் காந்தியைப் பொறுத்தவரை அவரது அணுகுமுறை மத நிராகரிப்பு என்பதாக இல்லை. சர்வ மத சம பாவிப்பு- மத நம்பிக்கை-எம்மதத்தின் மீதும் வெறுப்பின்மை என்பதாக இருந்தது. இந்துமதம், இஸ்லாம் வாழ்வியல் சார்ந்தவைகளாக உணரப்பட்ட இந்திய சூழலில் மேற்குவகைப்பட்ட மதச்சார்பின்மையின் பொருத்தப்பாடு குறித்த விவாதங்கள் தொடர்கின்றன. காந்தி செக்யூலரிசம் என்பதையும் மதம் என்பதையும் எதிர்நிலை கருத்துருவங்களாக பார்க்கவில்லை. அரசியலிருந்து மதம் முறித்துக் கொள்ளவேண்டும் என்பதை அவர் ஏற்கவில்லை. அரசியலில் பங்கேற்பவர்களுக்கும் அவர்கள் வழிநடத்தும் திரளான மனிதர்களுக்கும் மதம் உதவிகரமாக இருக்கும் என்றே அவர் கருதினார். மதம் அவசியமா இல்லையா என்பதல்ல அவருக்கு பிரச்சனை. அனைத்து மதமும் அவரவர் மதத்தை சரியாக கடைபிடிப்பதா அல்லது மதம் என்கிற பெயரில் செக்டேரியன் ஆக, வகுப்புக்கலவரத்தை, மதவெறியை தூண்டுபவராக இருப்பதா என்பதே அவர் முன் நின்ற சவால். உண்மையான மதநம்பிக்கை என்பதற்காக அவர் தன்னை ஆற்றுப்படுத்திக்கொண்டார். பன்மைத்துவ வாழ்க்கைமுறையை ஏற்று ஒழுகுதல் என்பதில் அவர் உறுதிபட நடந்து காட்டினார். நடைமுறை பிரச்சனைகள் குறித்து கவனிக்காத எம்மதத்தையும் மதம் என தன்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என சொல்லும்போது மதம் இந்த பூமிசார்ந்த பிரச்சினை, சொர்க்கலோக பிரச்சினையல்ல என்பதை அவர் தெளிவுபடுத்தினார். செக்யூலரிசம் என்பதை விழிப்படைந்த மதத்தன்மையாக அவர் பார்த்தார். அனைத்து மதப்பிரிவினரும், அனைத்து சாதியினரும், பெண்களும் விடுதலை இயக்கத்தில் இணையவேண்டும் என்கிற உயர்நோக்கு அவரை இயக்கிக்கொண்டிருந்தது. அதில் பேதமுற்று நின்றால் சேதாரமாகும் என்பதை அதிகம் புரிந்தவராக காந்தி விளங்கினார். அனைவரின் ஒன்றிப்பு என்பதை அவர் வெறும் தந்திர நடவடிக்கையாக கைக்கொள்ளவில்லை. இந்து முஸ்லீம் பிரச்சினை மதம் சார்ந்த ஒன்றாக இருப்பதால் மதங்களின் நல்லிணக்கம் ஒற்றுமை என்பது நடைமுறை அவசியம் என்பதை அவர் ஆழமாக உணர்ந்து இருந்தார். கிலாபத் இயக்க ஆதரவு கூட உணர்ச்சிவசப்பட்டு அவர் எடுத்த முடிவல்ல. அரசியலில் மதம் கலப்பது குறித்த விமர்சனத்தை அவர் இதில் எதிர்கொள்ளாமல் இல்லை. இந்து முஸ்லீம் பிரச்சினையில் அரசியல் பொருளாதார நலன்கள் எதிர்பார்ப்புகள் இருப்பதையும் அவர் புரிந்துகொள்ளத்துவங்கினார். நாட்டின் பிரிவினையின்போது ஜின்னா பொறுப்பேற்று ஒன்றுபட்ட இந்தியாவை தலைமை தாங்கலாம் என அவர் தெரிவிக்க தயங்கவில்லை. அவரின் ராமராஜ்யம் என்பதுகூட குறுகிய பொருளில் புரிந்துகொள்ளப்படும் இந்துராஜ்யமல்ல. அப்படி ஒரு கனவை வளர்த்துக்கொள்வது தேசபக்தியாகாது என்கிற கருத்து அவருக்கு 1924லேயே இருந்தது. அரசாங்க மதம் என ஒன்று கூடாது என்றே அவர் கருதினார். நாடுமுழுக்க ஒரே மதத்தினர் வாழ்ந்தாலும்கூட அரசாங்க மதம் ஏற்புடையதல்ல என்றார். நாட்டின் சட்டங்களை மதித்துவாழும் குடிமகன் அவர் விரும்பும் மத அனுசரிப்புகளை மேற்கொள்வதில் தடை இருக்கக்கூடாது என தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். நான் சர்வாதிகாரியாக இருந்தால் மதமும் அரசும் தனித்தே இருக்கும் என்றார். . அரசாங்கத்தின் கடமைகளில் ஒன்றாக அவர் மதத்தை பார்க்கவில்லை. மதம் தனிப்பட்ட விவகாரம் என்பதில் நாம் வெற்றி அடைந்துவிட்டால் அரசியலில் எல்லாம் நன்றாகவே போகும் எனவும் அவர் தெரிவித்தார். பெரும்பான்மையினருக்கு என்ன உளதோ அதே அளவு சுதந்திரத்தை அனைவருக்கும் உறுதி செய்திடாத விடுதலை எத்தகைய விடுதலை என்கிற கேள்வியை அவர் மற்றவர் விழிப்படைய கேட்டுக்கொண்டிருந்தார். அரசை நம்பி தன் இருப்பிற்கு செயல்படும் மதம் எப்படி மதம் என்கிற தன்மையை வெளிப்படுத்தும் எனவும் அவர் வினவ தவறவில்லை. சமுகத்தில் அனைத்து மதங்களுக்கும் சம பாவிப்பு என்கிற பார்வையை வலியுறுத்தியவர் காந்தி. தனது அன்றாட வாழ்க்க்கையின் நிகழ்வுகளின் தொகுப்புதான் தன் மதம் என்றார். நமது அனைத்து நடவடிக்கைகளிலும் மதம் உள்ளார்ந்து இருக்கவேண்டும் என்று சொல்லும்போது அன்றாட வாழ்வின் நடத்தை மட்டும் செயல்களை குறிப்பதாகவும் அவை உண்மை மற்றும் நீதிநெறி சார்ந்தவைகளாக இருக்கவேண்டும் என்கிற விளக்கத்தை அவரிடம் பெறமுடியும். அன்றாட தனது செயல்களை மீறிய மதம் என ஏதுமில்லை எனவும் தெரிவித்தவர் காந்தி. கடவுள் சொர்க்கத்திலோ , பாதாளலோகத்திலோ இல்லை. நம் ஒவ்வொருவரிலும் இருக்கிறார். மானுடசேவை மூலம் கடவுளை பார்க்க நான் முயற்சிக்கிறேன் என்றார். இந்து மதம் என்பதை பிற மதங்களைவிட உயர்வாக கொண்டாடுவதல்ல என் மதம். இந்துயிசம் கடக்கத்தெரிந்தது அது. உண்மையை எப்போதும் இணைத்துக்கொள்வது, நமது செயல்களை சுத்தப்படுத்துவது என அவர் விளக்கினார். டாக்டர் இராதாகிருஷ்ணணிடம் உரையாடும்போது என் மதம் இந்துமதம்- அனைத்து மத உயர்வானவற்றையும் கொண்ட மதம், மானுடத்தின் மதம் என்கிறார். பல்வேறு மார்க்கங்களின் வழியே ஒரே இலக்கைத்தான் பல சமயங்களும் அடைகின்றன. எனது அண்டைவீட்டாரின் நம்பிக்கை என் நம்பிக்கையைவிட தாழ்ந்தது என எவ்வாறு எண்ண முடியும் எனக் கேட்டவர் காந்தி. மதங்கள் குறையுள்ளதாக ஏன் தெரிகிறது என்பதற்கு முழுமையற்றவர்கள் வழியாக விளக்கங்களை நாம் பெறுவதால் என்கிற தெளிவை அவர் தந்தார். மற்றவர்க்கான பிரார்த்தனை என்பது அவர்கள் உயர் வளர்ச்சிக்கான ஒளியை அவர்களுக்கு வழங்கிடுக என்பதானதே. பிற மதங்களின் புனிதநூலை நம்புவது என்பதற்காக தனது மதத்தை ஒருவர் விடவேண்டியதில்லை என அவர் வற்புறுத்தினார். மதமாற்றம் என்பதை அவர் ஏற்கவில்லை. கீதையைப் போலவே அவர் பைபிள் குரான ஆகியவற்றையும் செரித்து புரிந்துகொண்டவர். தனது பைபிள் விளக்கப்படி தான் கிறிஸ்துவர், குரான் விளக்கத்தில் தான் முசல்மான் என அழைத்துக்கொள்ளும்போது இந்து, கிறிஸ்துவர், இஸ்லாமியர் என்பவை ஒத்த பதங்கள் என்றே உணர்வதாக அவர் பேசியிருக்கிறார். இஸ்லாமியர்களின் நண்பன் நான். அவர்களின் சுகதுக்கங்கள் எனதானதாகவும் இருக்கின்றன. அவர்களின் தவறு எனது தவறும்கூட. அவர்களின் நல்லனவல்லாத செயல் என்னை இந்து ஒருவரின் நல்லனவல்லாத செயல் போலவே பாதிக்கிறது. சிறு தவறுகளை நாம் ஊதி பெரிதாக்கிவிடக்கூடாது என்கிற அறிவுரை மூலம் மதநல்லிணக்க வழியை காட்டியவர் காந்தி. மதசகிப்பு என சொல்லும்போதுகூட தமது மதம் உயர்ந்தது என்கிற எண்ணம் எழுந்துவிடலாம் என்பதற்காக அவர் பரஸ்பர மரியாதை எனப் பேசினார்.. அனைத்து மதங்களும் அடிப்படையில் சமதையானவைகளே என்பதை அழுத்தமாக சொல்லியும் அனுசரித்தும் வந்தார். நாம் முதலில் இந்தியனாக இருப்போம். பின்னர் இந்து, முஸ்லீம், பார்சி, கிறிஸ்துவராக இருக்கலாம் என்றார். அவரை பொறுத்தவரை செக்யூலர் என்பது மதமறுப்பு கருத்தாக்கமல்ல. சமமதிப்பு கருத்தாக்கம். சி எஃப் ஆண்ட்ரூஸ் காந்தியை அரசியலில் துறவி என மதிப்பிட்டார். முழுமையாக மானுடகுலத்துடன் என்னை அடையாளப்படுத்திகொள்ளாமல் எனது மத நடைமுறை இல்லை என்றார் காந்தி. எனது அரசியலும் பிற நடவடிக்கைகளும் சமயத்திலிருந்து பெறப்பட்டவைதான். அரசியல் நுழையாத சமய வாழ்க்கை இல்லை என்ற கருத்து அவரிடம் தொழிற்பட்டது. காந்தி தன்னை புலமையாளராக காட்டிக்கொண்டதில்லை. நடைமுறை செயலுக்குரியவராகவே தன்னை உணர்த்தியவர்.. தேசத்தில் அனைத்து மதங்களும் அருகாமையில் ஒன்றை ஒன்று பொறுத்துக்கொண்டு உயர்ந்த நாகரிக மனிதர்கள் போல் வாழவேண்டும் என்பது அவரின் இந்தியக்கனவு. அவரது கனவுப்பாதையில் இந்தியா சறுக்கிடாமல் செல்லுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. பன்மதங்களின் நம்பிக்கை கொண்ட மக்கள் வாழக்கூடிய இந்தியாவில் மதச்சார்பின்மை என்பதை எவ்வாறு விளங்கிக்கொள்வது என்பது விடுதலைக்கால தலைவர்களுக்கு மிக முக்கிய பிரச்சினையாக இருந்தது. இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் இந்துஸ்தான் உரியது என்றார் காந்தி. விடுதலை அடையும் இந்தியா இந்து ராஜ்யமாக இருக்காது, இந்திய ராஜ்யமாகவே இருக்கும் என்றார். இந்து இஸ்லாம் என்கிற பெயரில் இருதேச கொள்கை தனக்கு உடன்பாடானதல்ல என்றார் காந்தி. காந்தியின் ராமராஜ்யம் என்பது இந்து ராஜ்யமல்ல. அது ஒருவகை விவசாயிகளின் உடோபியா என்கிற விளக்கமும் நமக்கு கிடைக்காமல் இல்லை. எம் என் சீனிவாஸ் சமய பிரச்சனைகளில் காந்தியின் நவீனத்துவம் பற்றி உயர்வாக குறிப்பிடுவார். குழந்தை மணம் எதிர்ப்பு, வரதட்சிணை கொடுமை, விதவைகளை கொடுமையாக சமூகம் நடத்துவது, தீண்டாமை எதிர்ப்பு போன்றவற்றில் அவரது நவீனத்துவத்தை சீனிவாஸ் பேசுகிறார். காரணகாரிய அறிவிற்கு உட்படுத்தப்படாத மத அனுஷ்டானங்களை ஏற்காமை என்பதை அவர் அனைத்து மதங்களிலும் சரிபார்த்துக்கொண்டார் என்கிறார் சீனிவாஸ். மத நம்பிக்கைகளுக்கு ஏற்ற இறக்க படிமுறைகளை கடைப்பிடித்தவர் அல்ல காந்தி. மத சடங்குகளில் உட்படுத்திக்கொள்ளாமல் அதன் உள்ளார்ந்த ஆன்மீகத்தன்மைக்கு அவர் முன்னுரிமை கொடுத்தார். அவரின் வர்ணாஸ்ரம நம்பிக்கை விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது. அவர் தான் ’பங்கியாக’ பிறக்க விரும்புவதாக அறிவித்தவர். ஆசிரம வாழ்க்கை துவங்கி பொதுச் சமூகம்வரை வேலை, வழிபாடு, சட்டதிட்ட முறைகள் என்பதில் சமத்துவம் என்பதை அவர் உயர்த்திப்பிடித்தார். அனைத்து மதங்களின் பொது ஈவாக அவர் விழைந்தது அன்பு, அகிம்சை, நன்னெறி. இஸ்லாம் என்பதற்கு அமைதி எனப்பொருள் என்றார். அது உலக அமைதியும் கூட என என தனது புரிதலை விரிவுபடுத்தினார். இந்திய கலாச்சாரம் என்பது இணைவு கலாச்சாரம். இங்கு வந்து தங்கியவர்கள் எல்லாம் செல்வாக்கு செலுத்தியுள்ளனர். செல்வாக்கிற்கும் உள்ளாகியுள்ளனர். அது இந்திய கலாச்சாரம். இந்து கலாச்சாரமோ, இஸ்லாமிய கலாச்சாரமோ அல்லது முழுமையாக வேறு ஒன்றின் கலாச்சாரமோ அல்ல. கீழைத்தேய ஒன்றிப்பது. இந்தியர் என அழைத்துக்கொள்ளும் ஒவ்வொருவரும் அதன் மதிப்புணர்ந்தவர்களாக தாக்குதலை தடுப்பவர்களாக இணைவுத்தன்மையை காப்பவர்களாக இருப்போம் என்றார் காந்தி. காந்தியின் கீதை மகாத்மா காந்தியடிகள் கீதையுரையை குஜராத்தியில் முதலில் தந்தார். அவை குறிப்பு எடுக்கப்பட்டு புத்தக வடிவம் பெற்றது. ஆஸ்ரம நண்பர்கள் அது கடின நடையில் இருப்பதாக தெரிவித்தனர். அதற்கு எளியவகையில் விளக்கங்களை எரவாடா சிறையில் இருந்தபோது 18 கடிதங்கள் மூலம் 1930 நவம்பர் முதல் தரத்துவங்கினார். பின்னர் அவை தொகுக்கப்பட்டன. ஆங்கிலத்தில் GITA Discourses என அவை இப்போது கிடைத்து வருகின்றன. காந்தியடிகள் கீதையை மதப்பிரதியாகவே பார்த்தார். தனக்கு துன்பம் நேரிட்டபோதெல்லாம் அதில் தெளிவு கிடைத்ததாக நம்பினார். தனது வாழ்க்கை வழிகாட்டியாக கீதையை எடுத்துக்கொண்டார். அவரின் 30வது வயதில்தான் ஆங்கில நண்பர்கள் வழியே அவருக்கு கீதை அறிமுகமாகிறது. எட்வின் ஆர்னால்ட் மொழிப்பெயர்ப்பில்தான் அவர் கீதையை படித்து உணர்ந்தார். பலரின் கீதை நூல்களை அவர் படித்திருந்தாலும் எட்வின் புத்தகத்தை எப்போதும் உயர்ந்து பாராட்டிச் சொல்வார். அகமாதாபத் ஆசிரமத்தில் 1926 பிப்ரவரி 24 முதல் நவம்பர் 27 வரை 218 சொற்போழிவுகளை அவர் கீதை குறித்து அவர் செய்திருந்தார். அவற்றை மகாதேவ தேசாய் குறிப்புகளாக வைத்திருந்தார். அவை தொகுக்கப்பட்டு அனாசக்தி யோகா என்ற பெயரில் 1930 மார்ச்சில் குஜராத்தி புத்தக வடிவம் பெற்றது. பின்னர் ஆங்கிலத்தில் Gita According To Gandhi என கொணரப்பட்டது. பல்வேறு மதங்களிலிருந்தும் கிறிஸ்துவம், தாவோ, புத்தம், இஸ்லாம் என தத்துவ உரையாடல் நிரம்பியதாக அப்புத்தகம் வாசகர்க்கு கடினமானதாக போய்விட்டது என்ற செய்தி அவருக்கு சென்றவுடன் மேற்குறிப்பிட்ட கடித விளக்கங்கள் தரப்பட்டன. கீதையை இலக்கியம் எழுத்து என்ற வகையில் பார்த்தால் முரண்பட்டதாக தோன்றும்- Letter Killeth , spirit giveth Life என்றார் காந்தி. திலகர் கீதா ரகஸ்யம் கூட அய்ரோப்பிய தாக்கம் நிறைந்தது என காந்தி கருதினார். எனவே அதற்கு மாற்று ஒன்று தேவை என காந்தி கருதியிருக்கக்கூடும். கீதையை புரட்சியாளர்க்கு கருவியாக மாற்ற திலகர் பார்த்தார் என்ற எண்ணம் காந்திக்கு இருந்திருக்கலாம். கீதையை கொள்கை சார்ந்த treatise ஆய்வுரையாக ஆக்கிட அவர் விரும்பவில்லை. அனைவரும் ஒரே மாதிரி சொல்வதற்கான வாய்ப்பாடு என அவர் நினைக்கவில்லை. பல விளக்க சாத்தியங்களை அவர் ஏற்கிறார். ஆனால் மய்யச்சரடு சார்ந்த ஒற்றுமையை அவை ஏற்படுத்த வேண்டும் என கருதினார். விளக்கங்கள் ஏற்கப்படுதலும் நிராகரிக்கப்படுதலும் இயல்பே என்றார். கீதை விளக்கத்தில் கலப்படமற்ற உண்மை என்பது எதில் உள்ளது என காண்பது இயலாது என்கிறார். குற்றம் கண்டுபிடிக்கவேண்டும் என கீதையை படிக்கத்துவங்கினால் ஏராளம் காணமுடியும்- வெற்றியும் அவர்களுக்கு கிட்டும். இது வஞ்சப்புகழ்ச்சியா- statement of fact என சொல்கிறாரா தெரியவில்லை. விடுதலை நோக்கில் பார்ப்பவர்க்கு அது சரியான பாதை என்கிறார். அறிவியல் பார்வையில் கீதையை ஆய்ந்திட அது அறிவியல் அல்ல என்ற காந்திஜி அதில் அறிவியலை பெறமுடியும் எனவும் பேசுகிறார். புனித நூல்களிலிருந்து நற்செய்தி பெறுவதற்கு அவற்றின் வரலாறு அவசியமல்ல என்பது அவர் கருத்தாகவுள்ளது. சமுக நிறுவனங்கள் எப்படி இருந்தன, எவ்வாறு செயல்பட்டன என்பதெல்லாம் அதை அறிவதற்கு அவசியமில்லை என அடுத்த வாதத்திற்கும் அவர் நகர்ந்து செல்கிறார். பிரபஞ்ச உண்மைக்கு மாறாக சொல்லப்பட்டுள்ள எந்த சாஸ்திரங்களும் நிற்கப் போவதில்லை என்ற தனது நம்பிக்கையை அவர் முன் வைக்கிறார். வரலாற்றில் எது நிகழவில்லையோ அது ஒருபோதும் நிகழாது என பேசுவது மனித மாண்பின் மீது நம்பிக்கையற்ற வாதமாகும் என்கிற விமர்சனப் பார்வையில் பேசுகிறார். அவரைப் பொறுத்தவரை கீதை allegory உருவகப்படுத்தப்பட்ட ஒன்று. கிருஷ்ணனை அவர் வரலாற்று புருஷராக காணவில்லை. வரலாற்றில் பல கிருஷ்ணர்கள் இருந்திருக்கலாம் என்பதை அவர் மறுக்கவில்லை. தர்மஷேத்திரம் என்பது அவரைப் பொறுத்தவரை மனம்தான். ஒவ்வொரு மனதிலும் நடைபெறும் இருபக்க உரையாடல்தான் கீதை உரையாடல் என காந்தி கருதினார். யுத்தம் பற்றியோ அதில் பங்கேற்ற குடும்பங்களின் விவரண வரலாறோ அல்ல கீதை. மானுடன் உண்மையை கண்டுணர உதவும் பாதை. அது தர்மகிரந்தம் என்றார் காந்தி. காந்தி கீதையின் மையமாக அனாசக்தியை காண்கிறார். பயன் எதிர்பாராத கர்மம். அவரைப் பொறுத்தவரை அத்தியாயம் 3, 4, 5 இணைத்து புரிந்து கொள்ளப்படவேண்டியவை. அங்குதான் சுயநலமற்ற யோகம் பேசப்படுகிறது. மற்ற அத்தியாயங்கள் அதை அடைவதற்கான வழிகள் பற்றி பேசுவன என்கிறார். தனது சத்தியாக்கிரகம்கூட இதன் வெளிப்பாடுதான் என்கிறார். காந்திக்கு செயலுடன் பக்தி முக்கியம். பக்தியற்ற செயல் காய்ந்த புழுதிக்கு சமம் என்கிற விமர்சனம் அவரிடம் இருந்தது. அது நம்மை அடிமையாக்கும் என்பது அவர் கருத்து. உண்மையான ஞானத்தை இதய கடைசல் மூலமே பெற முடியும். வெறும் அறிவார்ந்த விருந்தின் மூலம் அது கிடைப்பதில்லை என்றார் காந்தி. இதயத்தை அழைத்துக்கொள்ளாத அறிவு வெறும் கோட்பாட்டு அறிவாகிவிடும் என்பது அவரது முடிவு. உண்மையான உணர்வு இதயம் உணர்வதில்தான் உள்ளது என்கிறார் அவர். பக்தியுடன் இணையாத ஞானத்தை அவர் ஏற்கவில்லை. துறவிற்கும் அவர் விளக்கம் தருகிறார். செயல்களின் பலன்களை துறப்பதுதான் துறவு- செயல்களை அல்ல என்கிறார். கர்மயோகி தனது கடமை மற்றும் பாதை குறித்து விழிப்புடன் இருப்பவன் என்கிறார். அவரின் துறவு பரிசிற்கான எதிர்பார்ப்பில்லாதது. அதேநேரத்தில் விளைவுகளை பாராமுகமாக வைத்துக்கொள்ளாதது.. கீதையைப்பேசும் பண்டிதர்கள் அல்ல அவரின் தேவை. அவருக்கு கர்மயோக சத்தியாக்கிரகிகள்தான் தேவைப்பட்டனர். ’அவதாரம்’ என்பதை பிரபஞ்ச உண்மையின் வெளிப்பாடு என்ற பொருளில் அவர் புரிந்து கொள்கிறார். அதை absolute முற்று முழுதான ஒன்று என எல்லைகளுக்கு அப்பால் நிறுத்தாமல் உண்மையின் வெளிப்பாடு என்கிற தன்மையில் பேசுகிறார். கீதை யுகத்திற்கு முன்னரே அகிம்சை இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார். அக்கால மக்கள் சிந்தனையில் யுத்தம் என்பது taboo விலக்கபட்ட ஒன்றாக இருந்திருக்காது. அகிம்சைக்கும் யுத்தத்திற்கும் முரண்பாடு இருப்பதாக அவர்கள் கருதியிருக்க மாட்டார்கள் என காந்தி உரையாடுகிறார். கீதையை பின்பற்றிய அனுபவத்தில் துறவு என்பது அகிம்சையில்லாமல் சாத்தியமில்லை என்கிறார். உண்மையையும் அகிம்சையையும் கடைபிடிக்கும்போது வாழ்வு எளிதாகிவிடுகிறது . தான் என்கிற அகந்தை இல்லாமல் செயலாற்றும் போது ஒருவர் செயல்களால் கட்டப்படுவதில்லை. அனாசக்தி வன்முறையை தவிர்த்துவிடும் என்கிறார். அகிம்சை சார்ந்த செயல் என்பது அவருக்கு மிக முக்கியமானதாக இருந்தது. அகிம்சை அவருக்கு மிக உயர் தர்மம். காந்தியை பொறுத்தவரை பக்தன் என்பவன் சேவகன். செயல்படாதவன் பக்தனல்ல என்பார். விருப்பு வெறுப்புகளை விடுவதற்கான பயிற்சி மிக கடினமானது என்கிறார். செயலிலிருந்து விடுதலையை செயலில் ஈடுபடாமல் அடையமுடியாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார். நமது இயல்பே செயல்படுவதுதான். செயலில் மரணம் கிட்டுமெனில் அது மோட்சம். இந்த வாழ்க்கை சந்தோஷங்களை தேடுவதற்கல்ல- கடமைக்காகத்தான் என்கிறார். சுயநலத்துடன் செயல்படும்போது தியாகம் என்பது ஏது எனக்கேட்டு தியாக மனப்பான்மை வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்கிற அவசியம் குறித்து சொல்கிறார். சந்நியாசம் என்பது செயல்களை விடுதல். ஆனால் தியாகம் செயல்களின் பலனை துறத்தல் என்ற வேறுபாட்டை எளிமையாக புரிய வைக்கிறார். சுயநலமற்ற செயல் அனாசக்தி எனப்படுகிறது. ஏமாற்றிக்கொள்ளாமல் செயல்படுவது- பற்றறுத்து செயல்படுவது அனைத்து முரண்பாடுகளையும் களைந்துவிடும் ஆற்றல் கொண்டது. ஒவ்வொருவரும் அவரவரால்தான் காக்கப்படுகிறார் அல்லது அழிந்துபோகிறார் என்பதை கீதை உணரச் சொல்கிறது. உனக்கு நீயே நண்பன், பகைவனும் கூட என்பது கீதை வாசகம். . ஆன்மாவை நண்பனாக்கிக்கொள்ள பழகவேண்டும் என்கிறார் காந்தி. கீதையில் வர்ணாஸ்ரமம் குறித்தும் அவர் பேசுகிறார். சுயதர்மம் ஸ்வதர்மா என்பதில் உயர்வு தாழ்வு என்பதில்லை என விளக்குகிறார். கீதை கொள்கையை முன்மொழிவுகளைத் (principles) தான் தருகிறது. அமுலாக்கம் நம்மிடம்தான் இருக்கிறது என்று தன் வழியில் அதை குற்றசாட்டிலிருந்து விடுவிக்க பார்க்கிறார். சுபாவம் சார்ந்த செயல் என சொல்லும்போது வெளியிலிருந்து திணிக்கப்பட்ட ஒன்று அல்ல என கீதை பேசுவதாக குறிப்பிட்டு இயல்பிற்கு மாறாதை செய்யாமல் இருத்தல் என ஸ்வதர்மாவிற்கு (one’s own duty determined by one’s own nature and station) விளக்கம் தருகிறார். சுயநலமற்று அவரவர் தம் கடமையை செய்யும்போது நேர்த்தியை அடையலாம். இதில் உயர்வு தாழ்வு என ஏதுமில்லை என்கிற விளக்கம் அவரிடம் இருந்தது. உயர்வு தாழ்வு கற்பிக்காத சதுர்வர்ணம் என்பதை அவர் பேசுகிறார். இன்று வர்ணாஸ்ரமம் என புரிந்து கொள்ளப்பட்டுள்ளது monstrous parody அரக்கத்தனமாக அதிகப்படுத்தப்பட்ட ஒன்று என்பது அவரது கருத்து. சுயராஜ்யம் பெறுவது சுயநலத்திற்கல்ல என கீதையை விடுதலை அடைந்த தேசத்தின் தன்மை குறித்த உரையாடலுக்கு காந்தி நகர்த்துகிறார் . செயலை பொருட்படுத்தாமல் இருக்கக்கூடாது. ஆனல் பலனை எதிர்பார்க்கக்கூடாது என்கிற அனாசக்தி, அகிம்சையுடன் செயல், உண்மையிலிருந்து ஒருபோதும் விலகிடாத செயல் என்பதை அவர் கீதையின் பாதையாக எடுத்துக்கொண்டார். சாதிக்கு எதிராக காந்தி (புத்தக அறிமுகம் ஜூலை 4 2018ல் சென்னை காந்தி கல்வி நிலையத்தில் உரையாக வழங்கப்பட்டது. இங்கு எழுத்து வடிவில் தரப்படுகிறது) Gandhi Against Caste அம்பேத்கருக்கு சமர்ப்பணம் ஆகியுள்ள புத்தகம். ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் 2017ல் வெளியிட்ட புத்தகம். ஆசிரியர் நிஷிகாந்த் கோல்கே. Dr Nishikant Kolge திரிபுரா பல்கலை பேராசிரியர். காந்தி ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவர். தொடர்ந்து கட்டுரைகளை எழுதிவருகிறார். IIT Madras department of humanitiesல் அவரின் டாக்டர் பட்ட ஆய்விற்காக 2014ல் அவர் எழுதியது Gandhi Against Caste. அவ்வாய்வு புத்தக வடிவம் பெற்றுள்ளது.. இதுவரை போதுமான அளவு வெளிக்கொணரப்படாத காந்தியின் சாதிக்கு எதிரான ஸ்டார்டிஜி குறித்த விரிவான ஆய்வை நாம் கண்டுணர முடியும். சாதிக்கு எதிரான சண்டையில் காந்திக்கு ஏதாவது செயல்தந்திரம் இருந்ததா, காந்தி எதற்காக நின்றார், எதை அடைய எத்தனித்தார், அவரிடம் பரிணமித்து வந்த சாதி ஒழிப்பு செயல்தந்திரம் என்ன போன்ற மிக முக்கிய அம்சங்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அம்பேத்கார், ஆர்ய சமாஜ், காந்தி அணுகுமுறைகள் குறித்த விமர்சன பார்வையும் வைக்கப்படுகிறது. அருந்ததிராய்க்கு பதில் என்ற வகையில் கோல்கே எழுதிய கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்திற்கான முன்னுரையை ராஜ்மோகன்காந்தி எழுதியுள்ளார். கோல்கே தர்க்கரீதியாக துல்லியமாக ஆய்வை நகர்த்துகிறார் என்பதை ராஜ்மோகன் காந்தி ஏற்கிறார். எனது நடத்தை நடவடிக்கைகளிலிருந்து உணரமுடியாத ஒன்றை எனது வார்த்தைகளிலிருந்து பெறமுடியாது என்கிற காந்திய வாக்கியம் கோல்கேவை அவரது நடைமுறை - அன்றாட செயல்பாடு குறித்து ஆய்விட வைக்கிறது. காந்தியடிகளின் முன்பின் முரணான சீரற்ற கருத்துக்கள் மூன்றுவகையால் உருவாகியிருக்கலாம். அவரது சிந்தனை முரண், காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றம் அல்லது அவரின் செயல்யுக்தி வகைப்பட்டதாக இருக்கலாம். கோல்கே செயல்யுக்தி என்கிற முடிவிற்கு வருகிறார். இங்கு ஸ்ட்ராடஜி என்பது ஏதோ சாதுர்யமான ஒன்றல்ல- திறமையான வழிமுறைகள், குறிப்பிட்ட வழிகளில் மற்றவரை நிதானமாக செயல்பட்டு ஏற்க செய்திடும் வகையானது. இதை காந்தியே தெளிவுபடுத்துகிறார். எனக்கு கருத்து இருப்பது வேறு அதை மற்றவர் மீது வலிந்து திணிப்பது என்பது வேறு. எனக்கு 125 ஆண்டு வாழ வாய்ப்பிருந்தால் இந்துக்களை முழுமையாக இணங்க செய்ய முடிந்துவிடும் என்கிற நம்பிக்கையை 1947ல் அவர் தெரிவித்தார். கோல்கே பொறுத்தவரை காந்தி ஸ்ட்ராடிஜி கொண்டவர் என நிரூபிப்பது கூட கடினமான ஒன்றேயாகும். அது புத்திசாலித்தனமாக நியாயமற்ற வழிகளில் செய்யப்படுவதல்ல. குறிப்பிட்ட திசைவழியை விவாதித்து பிறர் ஒப்புதலுடன் ஏற்பை உருவாக்குவது . தனது அரசியல் நிலைப்பாட்டில் பலம்கூடக்கூட அவர் இந்துக்களிடம் வைக்கும் கோரிக்கைகளின் உக்கிரம் அதிகமானதாக ராஜ்மோகன் குறிப்பிடுகிறார். தனது 12ஆம் வயதிலேயே சாதிக்கு எதிரான போராட்ட உணர்வு எழும்பத்துவங்கிவிட்டதாக காந்தி குறிப்பிடுவார். அவரின் சொந்த வாழ்க்கை அனுபவங்களை நாம் பட்டியலிட்டுக்கொள்ள இயலும். தீண்டாமை ஒழிப்பு, சாதி உயர்வு தாழ்வு இல்லை, வர்ண பேதமில்லை, அனைவருக்கும் பள்ளி, நீர்நிலை குளம் பயன்பாடு, கிராமத்தொழில் வாய்ப்பு, சாஸ்திரங்களின் லிமிடேஷன், சேர்ந்து உண்பது, கலப்பு மணம், சமஸ்கிருத மாயை கலைப்பு, கீழ்நோக்கி திரள்தல் என அவரது போராட்ட எல்லைகள் விரிவாகவே இருந்தன. அவருக்கு அந்நிய ஆட்சியிலிருந்து விடுபடுதல் மட்டுமே சுயராஜ்யம் ஆகாது. இணக்கத்துடன் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வதற்கான கூட்டுமுயற்சியின் திறமையும்கூட சுயராஜ்யம்தான். நன்னெறியையும் காரண காரிய அறிவிற்கும் உதவிடாத சாஸ்திரங்கள் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. காந்தி தன்னை போர்வீரர் களப்பணியாளர் என அழைத்துக்கொள்வார். கொள்கையாளர் எனக் காட்டிக்கொள்ளமாட்டார். யுத்தபுரிதலுடன் செயல்படுபவர் என்பார் (பூனா செப்4 1924). சிறந்த தளபதியாக இருப்பவர் காலம் இடம் பார்த்துதான் போர் அறிவிப்பார். நிலைமை கைநழுவி எதிரிக்கு போய்விட அனுமதிக்க மாட்டார் என காந்தி விளக்கமளிப்பார். அவரது எழுத்துக்களில் சாதி, வர்ணம் குறித்த உயர் மதிப்பீடுகள் இல்லாமல் இல்லை. இயற்கையான நிறுவனங்கள் போல் அவற்றைக் கருதினார். இந்து மத உடைவை அவை தடுப்பதாக நம்பினார். முறைப்படுத்தப்பட்டால் பயன் அளிக்கும் என்றுகூட கருதினார். அதே நேரத்தில் கடுமையான விமர்சனங்களை வைக்காமல் இல்லை. காந்திக்கு எதிர் காந்தி என்பது எளிதான ஒன்றே என ஜோசப் லேலிவெல்ட் சொல்வார். சாதிக்கு எதிராக உக்கிரமான நேரிடை தாக்குதலை காந்தி தராமை என்பது தந்திரோபாயம் (டாக்டிக்ஸ்) என நந்தா, சுகர்கோட்டட் பில்ஸ் என ராஜ்மோகன் காந்தி, அவரது செயல்பாட்டை கொண்டே அவரை மதிப்பிடவேண்டும் என ராகவன் போன்றவர் சொல்கின்றனர். எனவே கோல்கே அவரது தனிப்பட்ட வாழ்க்கை, ஆசிரம வாழ்க்கையை விவாதிக்கிறார். இந்துக்களின் சாதி விதிகளில் நான்கு அம்சங்கள் அடிப்படைகளாக உள்ளன. தீண்டாமை - தொட்டால் தீட்டு, சேர்ந்து உண்ணாமை, அகமணம், தந்தைவகைப்பட்ட குலத்தொழில் இந்த நான்கையும் அவர் அனுசரிக்கவில்லை. சிறுவயதில் உகா அனுபவம், தென்னாப்ரிக்காவில் கஸ்தூர்பாவிடம் நடந்துகொண்டது, மாதவிலக்கில் தள்ளிவைப்பு இல்லாதது, நாயக்கர் எனும் தலித்தை உடன் அழைத்துவருதல், இந்தியாவில் லட்சுமியெனும் தலித் குழந்தையை தத்து எடுத்தல், வார்தாவில் கோவிந்த் என்பார் சமைத்து தருபதை உண்ணுதல் போன்றவற்றை கோல்கே அடுக்கித் தருகிறார். தென்னாப்ரிக்காவில் போலக் கிறிஸ்துவப் பெண்ணிற்கு ஹென்றிபோலக் யூதரை மணமுடித்தல், சேர்ந்து தன்னுடன் தங்க வைத்தல், மகன் ராம்தாஸ் வேறு சாதிப்பிரிவில் செய்த மணம், தேவதாஸ் வேறு வர்ண மணம், ஆசிரமப் பெண் லட்சுமிக்கு பிராமண பையன் மணம் ஆகியவை அவரால் ஏற்கப்பட்டே நடந்தன. அதே போல் உடல் உழைப்பிற்கு மரியாதை, கழிப்பறை சுத்தம், துவைத்தல், செருப்பு தைத்தல், தையல், விவசாயம் என அனைத்தையும் ஈடுபாட்டுடன் செய்தல்- தொழில் கல்விக்கு முன்னுரிமை என உடல் உழைப்பின் மேன்மையை கொண்டாடுதல் அவரிடம் இருந்தது. தனது அறிவிற்கு பாதகமாக பேசும் சாஸ்திரங்களை அவர் ஏற்றதில்லை. கடவுளிடமிருந்து ஏதும் நேராக வரவில்லை- தீர்க்கதரிசிகள், விரிவுரையாளர்கள் எனகிற இரு வடிகட்டல்களுக்கு பின்னர்தான் நம்மிடம் வந்து சேர்ந்துள்ளன என அவர் வெளிப்படையாக சொன்னவர். நான் கோயிகளுக்கு செல்வதில்லை. தேவையை உணர்வதில்லை என எழுதியவர் (MKG “ I cannot let a scriptural text supercede my reason.. nothing comes from God directly.. they suffer from a process of double distillation- human prophet then thro interpretation of commentators.. my seat of authority- he pointed his chest.. lies here. Hardly ever prayed in temples less visits “ I do not vist temples and I felt no need to go ( March 19 1933) “An idol does not excite any feeling of veneration in me “ (oct 6 1921) சைவ உணவு, பிரார்த்தனை என்பதை நடைமுறையாக காந்தி வைத்திருந்தார். அங்கும் உருவ வழிபாடு இருக்காது. அனைத்துமத பிரார்த்தனைகள், சொற்பொழிவு, புனித புத்தகங்களிலிருந்து சில விளக்கம் என்பதாக பிரார்த்தனை நேரம் இருந்தது. அவரது நடைமுறையில் வைதீகத்தன்மை (ஆர்த்தோடாக்சி) இல்லை. அவர் புரட்சிகரமாக நடந்துகொள்ளாமல் இருக்கலாம் சீர்திருத்தவாதியாக இருந்தார் என கோல்கே மதிப்பிடுகிறார். 1904ல் போனிக்ஸ் ஆசிரமம், 1910ல் டால்ஸ்டாய் பண்ணை, இந்தியாவில் 1915ல் அகமதாபத் அருகில் கோச்ராப் சபர்மதி சத்யாக்கிரக ஆசிரமம், 1936 வார்தா சேவாகிராம் போன்ற ஆசிரமங்களின் நோக்கம் அன்றாட செயல்பாடுகள், அனுசரிப்புகளை கோல்கே விவரிக்கிறார். முதல் ஆசிரமம் இந்திய ஒப்பினியனுக்கு நிதிதிரட்ட, இரண்டாவது சத்தியாக்கிரக போராளிகளின் குடும்பத்திற்கு உதவிட, மூன்றாவது நான்காவது சத்தியாக்கிரக போராட்டமுறை பழக்கிட அமைக்கப்பட்டன. அவரது ஆசிரமத்தில் பல சாதியினர், பல மதத்தினர் சேர்ந்தே இருந்தனர். ஒன்றாக உணவு, பிரார்த்தனை. உடல் உழைப்பில் பல்வேறு வேலைகளில் சுழல் முறையில் அவர்கள் ஈடுபட்டனர். அங்கு குலத்தொழில்முறை அனுசரிக்கப்படவில்லை. வர்ணாஸ்ரமம் இல்லை. கலப்பு மணம்கூட நடந்தன. இந்து - டெண்டுல்கர் மணம் நடந்தது.. என்னை தீர்ப்பிட ஆசிரமம் சரியான அளவுகோல் (“ Ashram is the measuring rod people can judge me “) என்றார் காந்தி. தலித் விமர்சகர்கள் ’ காந்தி பார்ப்பனர்க்கு மேலான பனியாவாக இருக்கிறார்- வர்ணாஸ்ரமம் ஆதரிக்கிறார் - மூதாதையர் தொழில் என்கிறார்- நவீனதொழில்முறையாவதை விமர்சிக்கிறார்- கர்மா என்கிறார்’ என்ற விமர்சனங்களை வைத்துவருகின்றனர். ஆனால் காந்தி ஈழவர் கூட்டத்தில் உங்கள் வரலாற்றை நீங்களே நிர்மாணியுங்கள் மனிதன்தான் அவனது வரலாற்றை உருவாக்குபவன் என்று உற்சாகப்படுத்தினார். வைதீகத்தை ஆசார அனுஷ்டானங்களை அதனிடத்தில் விட்டுவிடுங்கள் என்றார் (13-3-1925 ezhava meet varkalai) II காந்தி சிறந்த உத்தியியலாளர். அவரது சீரற்றதன்மையே (inconsistency) அவரது உத்தி என்கிறார் கோல்கே . (Yes strategist- His inconsistencies are the basic strategy) இந்தியா வந்தவுடன் இங்குள்ள இந்துக்கள் இன்னும் தயாராக இல்லாத நிலையை கண்ணுற்றார். எனவே நிதானகதியில் மாற்றங்கள் உருவாக்கம் எனும் உத்தியை அவர் மேற்கொண்டார். அவரது சுயராஜ்ய தூண்கள் தீண்டாமை ஒழிப்பு, இந்துமுஸ்லீம் ஒற்றுமை, காதி. நான்காவது தூண் வர்ணாஸ்ரமம் என ஒருபோதும் அவர் சொல்லவில்லை- ஏற்கவும் இல்லை. அவர் கோட்பாட்டைவிட நடைமுறை செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் தந்தார். அறிவின் தாகத்திற்காக ஏதும் செய்பவராக இல்லை. செயல்தான் அவர் தளம். காந்தி ” I am not built for academic writings. Action is my domain என்பார். தென்னாப்பிரிக்காவின் 21 ஆண்டுகள் அவருக்கு வெகுஜனமக்களை திரட்டும் பெரும் பயிற்சியை தந்தது. அந்த உத்தியை அவர் கற்றார். இந்தியாவில் பிறந்தேன் தென்னாப்பிரிக்காவில் உருவானேன் என்பார். நிறபேதம், தலைமைத்துவம், விவாத திறன், பத்திரிகை அனுபவம், சத்தியாக்கிரகம், இந்துமுஸ்லீம் ஒற்றுமை, தீண்டாமை எதிர்ப்பு, பிரம்மசர்யம், பெண்களை பொது இயக்கத்தில் பங்கேற்க வைத்தல் ஆகியவை மிக முக்கிய பயிற்சிகளாயின. அவரது 1909 இந்து சுயராஜ் பல வாசிப்புகளுக்கு இடம் தந்த ஆக்கம். தத்துவ பின்புலம் கொண்ட, உத்தி சார்ந்த, தேசிய தடம் கொண்ட, நாகரீகங்களின் மோதலை உணர்த்தும் படைப்பது போன்ற பல வாசிப்புகள் உள்ளன. தேசிய உரையாடலில் பாராளுமன்ற ஜனநாயகம் என்பதுடன் உரையாடலை அப்படைப்பு நிறுத்திக்கொள்ளவில்லை. இங்கிலிஸ்தானுக்கு பதில் இந்துஸ்தான் அல்ல என்பார் காந்தி. இந்தியாவின் பண்டைத்தன்மைதான் என்ற புகழ்பாடலோ, மேற்கின் அனைத்தும் மோசம் என்கிற பாரபட்ச விமர்சனமோ இல்லை. மருத்துவமனைகள், ரயில் போன்றவற்றை அவர் பயன்படுத்தாமல் இல்லை. அவரது மூத்த குரு கோகலேவானாலும் , அவரது சீடர் நேருவானாலும் மேற்குகல்வி பின்புலம் கொண்டவர்களே. காந்தி இந்தியாவை இருண்ட காலம் நோக்கி அழைத்துச் செல்ல திட்டமிடமில்லை. அவரது சுயராஜ்ய புத்தகத்தின் சான்றாதார புத்தகங்களில் இரண்டு மட்டுமே இந்திய ஆசிரியர்களுடையது. காந்தியிடம் அரசு என்பது ஆன்மா அற்ற எந்திரம் என்கிற பார்வை பலமாக இருந்தது. வன்முறையின் உருண்டு திரண்ட வடிவமாககூட அதை அவர் பார்த்தார். தனிமனித கெளரவம் என்பதன் அடிப்படையை உணர்வது என்கிற சரடு அவரிடம் ஓடியது. அந்தோணி பரேல் அவரது சுதந்திரம் பற்றிய பார்வையை மிகப்பொருத்தமாக வர்ணிக்கிறார் . ”gandhian freedom and self rule means national independence, political, economic freedom of the individual and spiritual freedom or self rule. Though each distinguishable, together inseparable”-. அவரது தேசபக்தி என்பது மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டது. பிரிட்டிஷ் கொடுங்கோன்மை போன்றதே இந்திய கொடுங்கோன்மையும் என்று வெளிப்படையாக பேசியவர் காந்தி. இந்தியாவில் லட்சக்கணக்கானோரை தீண்டாமை கொடுமையில் ஆட்படுத்தும் நமக்கு அந்நியரிடம் நீதி கேட்க என்ன உரிமை என்றவர். சுதந்திரம் பெற உங்களை தகுதிப்படுத்திக்கொள்வீர் எனக்கோரியவர் காந்தி. அது கீழிருந்து துவங்குகிறது. அது கூட்டாக அந்நியர்களிடமிருந்து விடுதலைப்பெறுவது மட்டுமல்ல- தனிநபர்கள் கூட்டாக இணக்கமாக வாழ்வதற்கான சக்தியும்கூட. கடமைகள் உரிமைகள் விவாதத்தில் அவர் எச் ஜி வெல்ஸ் இடம் கடமைகளை செய்வோம் உரிமை வந்து சேரும் என்றார். என்னைவிட அதிக உரிமை பெற்ற நபர் யார் எனக் கேட்டார். மனிதனை கெட்ட சாத்தான் என எண்ணவேண்டாம், அடிப்படை மனித சாரம் என்கிற ஒற்றுமை இழையை காண்போம் என்றார். அவரின் பொருளாதார கருதுகோள்கள் எளிமையானவை. தானே ஏற்றுக்கொள்ளும் எளிய வாழ்க்கைமுறைக்குரியவை அவை. தன்னிறைவு சுயதிருப்தி ஆகியவற்றின் அடிப்படையிலானவை அவை. லைசென்ஸ் என்பது சுயநலம் சார்ந்த ஒன்று. அவரைப்பொறுத்தவரை பொருளாதார சுதந்திரம் என்பது தேவைகளின் சுருக்கத்தில்தான் இருக்கிறது ( Economic freedom is ability to minimize one’s needs). அவரது இலட்சிய சமூகம் சுய ஆட்சி கொண்ட தனிநபர்களின் கூட்டுத்தொகுதி. தேச வாழ்வில் சுயக்கட்டுப்பாடு என்பது அன்றாட நிகழ்வானால் பிரதிநிதித்துவம் என்பது பெரிய விஷயமல்ல என்பார் காந்தி. இதில் எங்கு வர்ணாஸ்ரம் இருக்கிறது என கோல்கே வினவுகிறார். விடுதலை போராட்டத்தை விடுத்த நிலையில்தானே தீண்டாமை எதிர்ப்பு என்கிற பொருளில் ஆண்ட்ரூஸ் எழுதியபோது காந்தி வருத்தமுற்றார். சுதந்திர போராட்டத்தைவிட அவ்வேலை பெரியது. அரசியல் வேலையில்லாமல் சமூகவேலை இருக்கமுடியாது என்பதால் அரசியல் வேலையில் ஈடுபடுவதாக குறிப்பிட்டார் காந்தி. சமூக வேலைக்கு உதவும் அளவிற்குத்தான் அரசியல்வேலை என்றார். நாகரீகம் என்கிற பெயரிலோ பழமை என்கிற பெயரிலோ தனிமனிதமுறிவு உடைவு கலைப்பு என்பதை அவர் நிராகரித்தார். அவரின் இலட்சிய சமூகத்தில் தனிநபர் சுதந்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. அங்கு சாதியோ வர்ணமோ அடிப்படையில்லை. அவரின் போராட்டத்தில் சாதி எதிர்ப்பு தனித்த ஒன்றல்ல. விடுதலைப்போராட்டத்தின் ஊடானதான ஒன்று. ஒன்று மற்றதிற்கு துணைநிற்பதாக இருக்கிறது. கோல்கே 1915-20, 20-27, 27-32, 32-45 மற்றும் 1945-48 காலகட்டத்தில் காந்தியின் தீண்டாமை எதிர்ப்பு, சாதி, வர்ணம், சனாதனம், சாஸ்திரங்கள், சேர்ந்துண்ணல், கலப்புமணம் ஆகியவை குறித்த அவரது உத்திகளை ஆய்விடுகிறார். அனைத்துமே விடுதலைப்போராட்டம் என்கிற பின்புலம் சார்ந்து நிற்கின்றன. காங்கிரசில் 1918வரை அவருக்கு பெருமளவு முக்கியத்துவம் இல்லை. 1917ல் சப்ஜக்ட் கமிட்டிக்கு நுழைய 3 வாக்கு மட்டுமே பெற்றதால் போகமுடியவில்லை. அன்னிபெசண்டின் ஹோம்ரூலில் அவர் இருக்கவில்லை. 1918 பம்பாய் கூட்டத்தில் மாண்டேகு செம்ஸ் விவாதத்தில் அவர் இல்லை. ஆனால் செம்ஸ்போர்ட் அழைப்பை ஏற்று யுத்த ஆளெடுப்பில் ஈடுபட்டார். படேலுடன் அதற்காக தினம் 20 மைல் பயணித்தார். சாந்தி நிகேதன் சென்றபோது ஏன் பிராம்மண சமையல்காரர் என அவர் வினவினார். வேறு ஆசிரமம் ஒன்றில் உடல் உழைப்பை பற்றி வலியுறுத்தினார். ஹரித்வாரில் தூய்மை சுகாதாரம் சர்க்காவின் முக்கியத்துவம் பற்றி உரையாடினார். அகமதாபாத் கோசார்ப் ஆசிரமத்தில் சர்க்காவை அவசியமாக்கினர்- 1915 செப்டம்பரில் தலித் குடும்பம் அங்கு சேர்ந்ததால் உறவினர் மகன்லால் உட்பட பலர் வெளியேறினர். பணம் வருவதும் நின்றது. சமூக பகிஷ்காரம் என்ற பேச்சும் வந்தது. அவர் அப்போது 46 வயதில் இருந்தார். தான் இந்துமதத்தை அழிக்க வரவில்லை. தூய்மைபடுத்தவே முயற்சி எடுப்பதாக தெரிவித்தார். தானும் சனாதனிதான் என்றார். ஆசிரம பள்ளிகளை நிறுவினார். 1919 ரெளலட் அடுத்து அக்டோபரில் பஞ்சாப் கிராமங்களுக்கு சென்றார். கிலாபத் இயக்கத்தை தீவிரப்படுத்தினார். தனது இந்து முஸ்லீம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு என்பதற்கு அரசியல் அவசியம் என்றார். கடவுளின் படைப்பில் பாவ மனிதன் ஏது என கேள்விதொடுத்தார். தொட்டால் தீட்டு என்பதற்கு மத ஆதாரமில்லை என்றார். அப்போது அவர் உணவு, திருமணம் பற்றி பேசவில்லை. தீண்டாமை இருந்தால் சுயராஜ்யத்திற்கு நாம் தகுதி பெற்றவராக மாட்டோம் . ’சாதிமுறை’ முறைப்படுத்தப்பட்டால் பயன்தரும் நிறுவன வடிவமே என தெரிவித்தார். அகமணமுறை ஒருவகை சுயக்கட்டுப்பாடு என்றார். தீண்டாமையை வைத்துக்கொண்டு சுயராஜ்யத்திற்கு எவ்வாறு தயாராகமுடியும் எனக்கேட்டுக்கொண்டிருந்தார். காங்கிரசை சம்பிரதாய சட்டவடிவம் என்பதிலிருந்து மக்கள் திரள் இயக்கமாக்கியவர் காந்தி. வன்முறையற்ற அகிம்சைவழியில் ஏழைகளும் எதிர்த்து நிற்கமுடியும் என்பதை அவரால் உணர்த்த முடிந்தது. வைக்கம் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்று அங்கு நம்பூதிரிகளுடன் விவாதித்தார், நாராயணகுருவை சந்தித்தார். பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் விவாதித்தார். தீண்டாமையை கொண்டாடுவது இந்து மத அழிவிற்குரியது என்றார். சுயராஜ்ய பிரச்சனையைவிட இது பெரியது. அவர்களுக்கு குளம், சாலை பயன்படுத்த, கல்விக்கூடம் செல்ல தடைகூடாது. சமஉரிமைகள் கொடுக்கப்படவேண்டும் என்றார். நால்வர்ணம் என்பதை ஏற்றே பேசிவந்தார். தன்னை சனாதனி என அழைத்துக்கொண்டார். 1921 தமிழக சுற்றுப்பயணத்தில் திண்டுக்கல்லில் செப் 1921ல் சனாதனி என்கிற வகையில் தீண்டாமை அவசியமில்லை என நான் சொல்வேன் என்கிறார். அதற்கு சாஸ்திரங்களில் இடமில்லை. நால்வர்ணம் என்றாலும் எந்த வர்ணத்தவரும் மற்றவர் குணம் முற்றிலும் அற்றவராக இல்லை என்றார். உணவு, நீர்நிலை, திருமணம் போன்றவற்றில் நாம் அனுசரிப்பவை முக்கிய விதிகள் இல்லை என்றார். அவரது செல்வாக்கால் 1929 காங்கிரஸ் செயற்குழு கோயில் நுழைவு கமிட்டி ஒன்றை அமைத்தது. மணிலால் முஸ்லீம் பெண் ஒருவரை மணமுடிக்க கோரியபோது கூடாது அவசியமற்ற பிரச்சனைகள் வரலாம் என்றார். 1932ல் உபசாதிகள் எதற்கு என்றார். சாஸ்திரங்களில் சாதிக்கு இடமில்லாதபோது ஏன் இவ்வளவு சாதிகள் என்றார். Caste is an excrescence just like Untouchability upon Hinduism . சாதிகள் இந்துமதத்தில் ஏற்பட்ட மிகை வளர்ச்சி தேவையற்ற சதை என்றார். அவரது 1932 பட்டினிப்போர் மிக முக்கியமானதாக உன்னத நோன்பாக பியாரிலால் அவர்களால் வர்ணிக்கப்படுகிறது. சைமன் கமிஷன் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு என சொன்னது. முதல் வட்டமேஜைக்கு காங்கிரஸ் செல்லவில்லை. அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன் சென்றனர். இரண்டாவதில் காந்தி பங்கேற்றார். தனி வாக்காளர் தொகுதி ஏற்கமுடியாதென்றார் 1931-செப்-நவ நடந்த மாநாட்டில் முடிவு எட்டப்படாததால் பிரதமர் ராம்சேவிடம் முடிவிற்கு விடுவது என்பதை ஏற்றனர். பிரதமர் ராம்சே தனது அவார்டை ஆகஸ்ட் 17 1932ல் தந்தார். எதிர்ப்பை தெரிவித்து காந்தி கடிதம் எழுதினார். செய்தது சரி என பிரிட்டிஷ் பதிலைத்தந்தது. அறிவித்தபடி காந்தி செப்டம்பர் 20, 1932ல் உண்ணாநோன்பு மேற்கொண்டார். அடுத்தநாள் பத்திரிகை பேட்டியில் பொதுத்தொகுதியில் இட ஒதுக்கீடு ஏற்கலாம் கோயில் நுழைவை வலியுறுத்தலாம் என்றார். சாதி இந்து தலைவர்கள் மாளவியா தலைமையில் கூடினர். அம்பேத்காருடன் பேச்சுவார்த்தை நடந்தது. பிறப்புவழி தீண்டாமை அனுசரிக்கக்கூடாது. பொது உரிமைகள் நிலைநாட்டப்படவேண்டும் என்கிற தீர்மானம் இயற்றப்பட்டது. அம்பேத்கார் தனக்கு முன் நிற்கும் பெரும் பிரச்சனையை வெளிப்படுத்தினார். காந்தி உயிர் என்பதை நிராகரிக்க முடியவில்லை.( “ There was before me a duty as apart of common humanity to save Gandhi from sure death. There was before me the problem of Untouchability- Political rights which the PM had given them”) அம்பேத்கார் கூட்டுத்தொகுதிகளை ஏற்கலாம் 197 இடங்கள் என்றார். பிரிட்டிஷ் அரசு 78 என்று சொல்லியிருந்தது. பேச்சுவார்த்தையில் 148 ஏற்கப்பட்டது. ராஜாஜி, சாப்ரூ, ஜெயகர் உதவினர். இடஒதுக்கீடு காலம் 10 ஆண்டுகள்- பின்னர் விவாதித்து முடிவெடுக்கலாம் என்றனர். அரசாங்கம் செப் 26 1932 ல் பூனா உடன்பாட்டை ஏற்க காந்தியின் உண்ணாநோன்பு முடிந்தது. ராஜாஜியும் அமபேத்கரும் தங்கள் பேனாக்களை மாற்றிக்கொண்டனர். பின்வந்த ஆண்டுகளில் 1945-46ல் அம்பேத்கர் இதை கடுமையாக விமர்சித்தார். அதற்கு ராஜாஜி, சந்தானம் போன்றவர்கள் பதிலை எழுதினர். நேரு, ஈஎம் எஸ் போன்றவர்கள் கூட தேவையற்ற ’டைவர்சன்’ என்றனர். காந்திக்கோ இந்துமத பிளவை காக்கவேண்டும் என்பது அவசியமாக இருந்தது. காந்திக்கு என்ன நோக்கம் என கோல்கே ஆய்வு செய்கிறார். வேண்டுமென்றே தனது அரசியல் தலைமையை நிறுவ உண்ணானோன்பு மேற்கொண்டாரா? பெருகிவரும் அம்பேத்கர் செல்வாக்கு தனக்கு ஆபத்து என நினைத்தாரா? இந்துக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கவேண்டும் என முயற்சித்தாரா? சாதியின் வேர் மட்டத்தில் தாக்குதல்தர சரியான நேரம் எனக் கருதினாரா? தண்டியாத்திரை என பிரிட்டிஷாருக்கு எதிராக போராடியவர் இந்த ஒதுக்கீடு அவார்ட் எதிர்த்து ஏன் உண்ணானோன்பு என முடிவெடுத்தார் என பல கேள்விகளை எழுப்பி ஆய்வை தொடர்கிறார் கோல்கே. அவரது நடவடிக்கைகளிலிருந்து பதிலைப்பெற முயற்சிக்கிறார் கோல்கே. உண்ணாநோன்பு முடிந்தவுடன் உடனடியாக ஹரிஜன் சேவா சங்கம் பிர்லா, தக்கர்பாபா பொறுப்பில் உருவாக்கப்பட்டடது. 1933 ஹரிஜன் வார இதழ்- இந்தி, குஜராத்தி, தமிழ், உருது, பெங்காலி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் கொணரப்பட்டது. ஆத்ம சுத்தியுடன் தீண்டாமை ஒழிப்பு பணி நடைபெற காந்தி விரும்பினார். இதற்காக 21 நாட்கள் உண்ணாநிலை மேற்கொண்டார் (fast for 21 days may 8-28 1933 self purification). தேவதாஸ்- லஷ்மி திருமணம் இக்காலத்தில் நடைபெற்றது. ’ஹரிஜன யாத்ராவை’ மிக முக்கியமாக கருதி 1933 நவம்பர் 5 முதல் ஆகஸ்ட் 2 1934 வரை 12500 மைல் தூரம் நடத்தினார். தினம் 50 மைல் பயணித்தார். தனிப்பட்ட அனுபவங்களைப் பெற்றார். ஒரிஸ்ஸாவில் பெளரிஸ் சாதிப்பிரிவினர் பிற ஸ்வீப்பருடன் சேர்ந்து உண்ண மறுப்பதைக் கண்ணுற்றார். சில இடங்களில் காந்திக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டது. நாக்பூரில் முட்டை வீசினர். பனாரசில் உருவபொம்மை எரித்தனர். பூனாவில் குண்டு வீசினர். அவர் பூனா சென்ற ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்தது. பீகார் பகுதிகளில் கல்வீசப்படது. பல இடங்களில் இந்து தர்ம விரோதி என துண்டறிக்கைகள் வீசப்பட்டன. பம்பாய் காங்கிரஸ் கூட்டத்திற்கு 1934 அக்டோபரில் காந்தி சென்றார். ஆனால் விவாதங்களில் அவர் மனம் லயிக்கவில்லை, காங்கிரசிலிருந்து விலகினார். 1934-39 ஆண்டுகளில் வார்தாவிலிருந்து செயல்பட்டார். சேவாகிராம் என்பது ஹரிஜன் குடியிருப்பு பகுதி. 1936 காங்கிரஸ் கூட்டத்தை கிராமப்பகுதியில் பைஸ்பூரில் நடத்த வைத்தார். பங்கேற்கும் தலைவர்களும் தொண்டர்களுமே சுத்தம் செய்யவேண்டும் என வற்புறுத்தினார். பங்கிகளை கூலிக்கு அமர்த்தவில்லை - Be minister of cleanliness என்றார். தனது 6வது மகன் என தலித் இளைஞன் கோவிந்தை ஏற்றார். அவரால் சமைக்கப்பட்ட உணவை எடுத்துக்கொண்டார். கோவிந்தனுக்கு முடிவெட்ட மறுத்த முடிதிருத்துவோரிடம் கசந்து தான் போவதை நிறுத்திகொண்டார். வார்தாவில் 1937ல் கல்வி மாநாட்டை கூட்டினார். 7 முதல் 14 வயது முடிய இலவசகல்வி என்றார். தலமட்ட தேவைகளை அனுசரித்த பாடமுறையை காங்கிரஸ் அரசாங்கம் செய்ய வற்புறுத்தினார். 1942 ஜூலையில் காங்கிரஸ் செயற்குழு வார்தாவில் கூடியது. பூர்ணசுயராஜ், தீண்டாமை ஒழிப்பு- அவசியமெனில் போராடுவோம் எனப் பேசினார். பம்பாயில் ஆகஸ்ட் 8, 1942 இந்தியாவை விட்டு வெளியேறு அறைகூவல் விடப்பட்டது. ஆகஸ்ட் 9ல் கைதுபடலம் தொடங்கியது. அரசாங்கம் போராளிகளை தாக்கி ஒடுக்க முனைந்தது. மார்ச்சில் 1942 கிரிப்ஸ் தூது வந்து தோல்வியடைந்தது. வேவல் 1945 ஜூலையில் சிம்லா கூட்ட அழைப்பு விடுத்தார். இங்கிலாந்தில் லேபர் கட்சி ஜுலையில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. காந்தியின் நண்பர் பெதிக் லாரென்ஸ் புதிய அரசு செயலர் பொறுப்பேற்றார். III நிஷிகாந்த் கோல்கேவின் ஆய்வின் முடிவாக கீழ்கண்டவற்றை வகைபடுத்தலாம். காந்தி சிறுவயதிலிருந்தே தீண்டாமை எதிர்ப்பு உணர்வில் வளர்ந்து வந்தவர். 1916-20ல் உடல்தொடாமை எதிர்த்தும், 1920-27களில் பள்ளி போன்ற பொது உரிமைகளுக்காகவும் போராடியவர். 1927-32களில் ஆலய நுழைவிற்காகவும், 1932-45ல் இவை அனைத்திற்காகவும் போராட்டத்தை தொடர்ந்து நடத்தியவர். ஹரிஜன சேவா சங்கம் சார்பில் புத்தகங்கள் வழங்குவது, உடுக்கத். துணி, பொருளாதார வளர்ச்சி, கல்வி பரப்புதல், ஸ்காலர்சிப், 12500 மைல் நீண்ட பயணம் போன்றவைகளை பட்டியலாக கோல்கே நினைவூட்டுகிறார். 1934ல் சாதி ஒழியவேண்டும் என்றார். . In 1934 “ Castes are a human manufacture, daily weakening and have to go ( 12th Jan 1934). In 1935 Caste has to go “ The present caste system is the very antithesis of varnashrama. The sooner the public opinion abolishes it better ( 11th Nov 1935) வர்ணம் பிறப்பால் மட்டுமே அல்ல நடத்தையால் உறுதியாகிறது ( 23rd sep 1934) என சொல்லும்போது மூதாதையர் தொழில் என்பதிலிருந்து அவர் வேறுபடுகிறார் . வர்ணம் என பேசினால் ஒரு வர்ணம் போதும் அனைவரும் சூத்திரர்களாக இருப்போம் என்கிற downward mobility கட்டுகிறார். காந்தியின் 1942 கான்ஸ்டிட்யூஷன் விளக்கத்தில் தீண்டாமை குற்றம் என சொல்லப்பட்டது. தீண்டாமை தீட்டு என மனத்தடை கொண்ட சமூகத்தில், அமைப்புரீதியாக தீண்டாமை ஒழிப்பை தீவிரப்படுத்துவது, அவசியம் எனில் அரசின் துணையுடன் கூட செய்வது என்ற நிலைக்கு பயணிக்கிறார். உணவு- திருமணம் என்பதில் 1916ல் கட்டுப்பாடுகள் தேவை என்று பேசிய அவர்- பின்னர் அவை விதியல்ல- உபசாதிக்கள் மணக்கலாம் என்கிறார். திருமணம் என்றாலே மணமகனோ மகளோ ஒருவராவது ஹரிஜனாக இருக்கவேண்டும் என்கிறார். அவ்வாறில்லாத திருமணங்களுக்கு போவதை நிறுத்திக்கொள்கிறார். (His ideal mixed marriage is with harijan on one part) ஹரிஜன சேவா சங்க விவாதத்தில் (1946) அவர் அம்பேத்கார் கருத்திற்கு இணையாக வந்து சேர்கிறார். அவரது முறை Continuity with tradition and articulating the struggle என்பதாகவும் அதற்கு இந்து சாதியாரின் ஆதரவைக்கோருவதாகவும் இருந்தது. அடுத்து அவரின் முக்கிய பங்களிப்பு கீழ்நோக்கிய இயக்கம். சமஸ்கிருதம், பிராம்மண பாரம்பரியம் - கலாச்சாரம்தான் உயர்வு என்கிற மாயை அவரிடம் இல்லை. அதை ஏற்கவும் இல்லை. (The uniqueness in his strategy in being free from the logic of sanscritisation- Uniqueness in refusing to accept the superiority of Brahminical tradition, culture customs.). விவேகானந்தர்கூட ’மேல்நோக்கி செல்ல’ சமஸ்கிருதம் படி என அழைப்பவராக இருந்தார். தலித்கள் அவரை பிராமண பனியா சிந்தனாவதியாக, தலித் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டவராக, ராமராஜ்யம் போன்ற சிம்பல்களை பயன்படுத்தியவராக பார்த்தனர். அவரது செயலோ எழுத்தோ பிராமணியம் மீதான நம்பிக்கை எதையும் உணர்த்தவில்லை. கிராம்சிய மேலாண்மை கருத்தாக்கத்தில் காந்தி பிராமண கலாச்சார மேலாண்மைக்கு எதிராக நின்றார் என்கிறார் நிஷிகாந்த் காந்தி பிரிட்டிஷ் எதிர்த்து மட்டுமல்ல சாதி எதிர்ப்பிலும் பெரும் உத்திகொண்டவராக இருந்தார். சாதி சீர்திருத்தம், தலித்கள் எழுச்சி, காந்திய முறைகள் என மூன்று வடிவங்களில் சாதி எதிர்ப்பு வெளிப்பட்டது. ஆர்ய சமாஜ் வேதகாலம் திரும்புவோம். காயத்ரி கற்போம் என்றது. சுத்திகரணம் என பேசியது. ஆர்யசமாஜின் சுத்திகரண இயக்கம் தனது கம்யூனல் குணத்தை இழந்து எழவில்லை என்கிறார் கோல்கே. இதில் அம்பேத்கார், காந்தி இணைவு அவசியமாகிறது. அம்பேத்கர் (1891-1956) பகிஸ்கிரித் ஹிதகாரி சபை 1924, பம்பாய் சட்டமன்ற அனுபவங்கள், 1927ல் மகத் சத்தியாகிரகம், 1930 நாசிக்கில் காலாராம் ஆலய நுழைவு, 1936ல் ஐ எல் பி கட்சி, 1942 ல் செட்யூல்ட் பெடெரேஷன், ஜூலை 1941 வைஸ்ராய் நியமித்த பாதுகாப்பு கமிட்டி, 1942 வைஸ்ராய் கவுன்சிலில் லேபர் அமைச்சர், பின்னர் விடுதலை இந்தியாவில் சட்ட அமைச்சர், அரசியல் அமைப்பு சட்ட வரைவுகுழு தலைமை என பரிணமித்து வந்தார். அவரது உத்தி சிவில் சமத்துவ உரிமை, அரசியல் அதிகாரம், பொருளாதார முன்னேற்றம் என்பதாக இருந்தது. அவர் காந்தியுடன் முரண்பட்டு பொருதிவந்தார். காந்திக்கு இருபகுதியும் பாதிக்கப்பட்டவர்களே (விக்டிம்). ஆனால் அம்பேத்கார் அதை ஏற்கவில்லை. அம்பேத்கரிடம் இந்துக்கள் சாதி அனுசரிப்பது மனிதநேயமற்றவர்கள் என்பதால் அல்ல- அவர்களின் மதம் காரணமாகவே என்ற கருத்து இருந்தது. இதை annihilation ஆக்கத்தில் அவர் விரிவாக எழுதியுள்ளார். காந்தி சாஸ்திரங்களை விமர்சனபூர்வமாக பார்த்தாலும் ’அழி ஒழி’ என சொல்லவில்லை. தனிநபர் மற்றும் சமூகம் திருந்தி ஏற்படவேண்டிய அவசியமான மாற்றம் தேவை என விழைந்தார். அரசின் உதவி - சட்டம் என்பவை பெருமளவு உதவாது என காந்தி கருதினார். தனி அடையாளம் கோருவது சமூக மோதலை அதிகரித்துவிடும். தேவையற்ற போட்டி சூழலை உருவாக்கும். அதிகாரம், செல்வம் சேர்க்க முண்டியடித்துக்கொண்டு செல்வது நிகழும் என்றார் காந்தி. அம்பேத்கருக்கு அரசியல் சட்டப்பாதுகாப்பு, அரசின் தலையீடு அவசியம். அவருக்கு இரு தனித்த அடையாளங்கள் அவசியமாயின. தனித்த அரசியல் சக்தி எனும் அடையாளம், தனித்த சமூக மத அடையாளம். எனவே அவரது இயக்கம் பிராயசித்த இயக்கமல்ல- சுயமரியாதை கொண்ட தன் கையே தனக்கு உதவி இயக்கம். ஆகவே தன் மக்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும் உத்திகள் அவருக்கு தேவைப்பட்டது. (The movement cannot be for self purification.. he stood for self help removal of injustice by the actions of sufferes. “No borrowed or hired person who does not belong to your class can further your welfare by the least degree” and so his method creating self confidence self respect and rejected the patronizing idea). காந்திக்கு மேற்குமயம் நவீனமயம் சுரண்டலின் வேறுவடிவமே தவிர அதை நீக்காது என்ற பார்வை இருந்தது. காந்தி போராட்டத்தில் குறைகளே இல்லையா – அதன் வரம்புகள் (லிமிடேஷன்) என சில அம்சங்களை நிஷிகாந்த் பட்டியலிடுகிறார். ஏற்றத்தாழ்வான பொருளாதார முறையை அது பெரிதாக பேசவில்லை. சாதி வெறும் மனம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல அரசியல் பொருளாதார ஏற்பாடாகவும் இருந்தது. எனவே அதிகார வெளியில் மாற்றம் என்பதும் அதில் தேவை என்கிற புரிதல் இல்லை. அரசின் பங்கை குறைத்து மதிப்பிடுவதாக இருந்தது. நீண்டகால திட்டமாக ஏதும் முன்வைக்கப்படவில்லை. பெரும்பாலும் சுய நடைமுறை சார்ந்த பரிசோதனைகள். மற்றவரை ஏற்க செய்ய எடுக்க நேரும் நீண்டநெடிய காலம், தலித்களை உற்சாகப்படுத்தாமல் நம்பிக்கை அழிப்பிற்கு உள்ளாக செய்தல், அவர்கள் தாங்கள் passive object ஆக வைக்கப்பட்டதாக உணர்தல் போன்றவைகளை குறிப்பிடலாம். இவற்றை டி ஆர் நாகராஜின் புத்தகம் மிகச்சரியாக விளக்கும். நிறையெனப்பார்த்தால் நிதானமாக மெதுவாக இருந்தாலும் சமூக அமைதியை அடிப்படையாக கொண்டு, சுதந்திர போராட்ட ஒற்றுமையை சிதற அடிக்காமல் மேற்கொள்ளப்பட்டது காந்தியின் இயக்கம் என சொல்லலாம். நிஷிகாந்த் புத்தகத்துடன் குமரப்பா அவர்கள் தொகுத்த Removal of Untouchability, பிரபு தொகுத்த Caste must go, நாகராஜன் அவர்களின் Flaming Feet and Other Essays, அம்பேத்கார் அவர்களின் க்யூபெக் சர்வதேச மாநாட்டிற்கான குறிப்பு Ambedkar Presentation at Canada Conference 1942, What Congress Gandhi have done, ராஜாஜியின் Ambedkar Refuted, K.சந்தானம் அவர்களின் Ambedkar Attacks- critical examination, Rajmohan’s rejoinder to Arundhati Roy போன்றவற்றையும் இணைத்து வாசிக்கும்போது காந்தியின் சாதிப் போராட்டப் புரிதல் தெளிவாகும். அம்பேத்கார்- காந்தி இணைவு இந்திய சமூகத்தின் ஜனநாயக அடித்தளத்திற்கு பெரும் பலம் கூட்டும் என்றே உணரவேண்டியுள்ளது. அம்பேத்கர் காந்தி இணக்கம் விடுதலைக்கு முன்னர் எனில் இத்தலைப்பு காந்தி அம்பேத்கார் இணக்கம் என்று எழுதப்பட்டிருக்கவேண்டும். காந்தியுடன் அம்பேத்காரை இணக்கப்படுத்துவது என்பதற்கான முயற்சிகள் அப்போது பெருமளவு தேவைப்பட்டன. காந்தி குறித்த விமர்சனங்களை வெளிப்படையாக அம்பேத்கார் பேசியும் எழுதியும் வந்தார். 1930களில் கம்யூனல் அவார்ட் எனும் ராம்சே மக்டானல்ட் அவார்ட் காலத்தில் இவ்விணக்கத்திற்கான பெரும் முயற்சியை வரலாறு பதிவிட்டுக்கொண்டுள்ளது. தனித்தொகுதி- பொதுவாக்காளர் என்கிற சமரசம் குறித்த உரையாடல்கள் இன்றும் தொடராமல் இல்லை. விடுதலை இந்தியாவில் அம்பேத்கரின் பங்களிப்பு பெரும் போற்றுதலுக்குரியதானது- விடுதலைக்குப் பின்னர் காந்தி மெதுவாக பின் தள்ளப்படுவதும் நடந்தேறியது. பல இயக்கங்களிலிருந்து பல்வேறு தரப்பட்டு வெளிப்பட்ட விமர்சனங்கள், அவரைப் பார்த்து பழகி வந்த தலைவர்கள் அருகிப்போனது , காந்தியின் நூல்தொகைகள்- எழுத்துக்கள் பரவலாக சென்றடையாமையும் காரணமாக இருக்கலாம். அம்பேத்கருக்கு பின்னரான அம்பேத்கரிய இயக்கங்கள் மற்றும் மகராஷ்ட்ர அரசு முயற்சி காரணமாக அம்பேத்கர் எழுத்துக்கள் ஓரளவிற்காவது கிடைக்கத்துவங்கின. பல்வேறு மொழிகளிலும் கிடைக்கத்துவங்கின. அவரை கொண்டாடும் எழுச்சிகளும் பெருகின. அம்பேத்காரையும் காந்தியையும் எதிர் எதிரே நிறுத்தும் முயற்சிகளும் அவ்வப்போது விவாத அரங்கிலே இடம்பெறலாயின. இச்சூழலில் அம்பேத்காருடன் காந்தியை இணக்கப்படுத்தும் எதிர்வினைகள் தேவைப்படலாயிற்று. அப்படி எழுந்த எதிர்வினையில் ஒன்றாக மதுலிமாயி எழுதிய 5 சிறிய கட்டுரைகள் அமைந்துள்ளன. அவர்தம் கட்டுரைகளின் சாரம் இங்கு தரப்படுகிறது. மனு-காந்தி மற்றும் அம்பேத்கார் என்கிற புத்தகம் மதுலிமாயி 1993-94 களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்தியாவில் தாராளமயமாக்கம் அமுலாக்கபட்ட காலமது. உலகவர்த்தக அமைப்பு காட் ஒப்பந்தம் விவாதகாலம்.-சோவியத் வீழ்ச்சிக்கு பின்னர் ருஷ்ய உறவுகள் குறித்து பேசப்பட்ட காலம் கன்ஷிராம் மாயாவதி அரசியல் மாற்றாக விவாதிக்கப்பட்ட காலம். இவை அனைத்தும் குறித்த லிமாயின் 29 கட்டுரைகள் கொண்ட புத்தகமது. பல ஆண்டுகளுக்கு பின்னர் அதன் மறுபதிப்பு 2016ல் வந்தது. லிமாயி ஜெயபிரகாஷ் நாரயண், லோகியா, தந்தவதே போன்றவர்களுடன் பணியாற்றிய சோசலிஸ்ட் தலைவர்களுள் ஒருவர். இங்கு இடம்பெறும் கருத்துக்கள் அவரின் சாதி- சமூகநீதி எனும் பகுதியில் உள்ள சிறிய 5 கட்டுரைகளிலிருந்து தரப்பட்டுள்ளன. புத்தகத்தின் தலைப்பாக்கப்பட்டுள்ள மனு காந்தி அம்பேத்கார் என்பதும் இப்பகுதியில் இடம்பெற்றுள்ள சிறிய கட்டுரையே. காந்தியை சிறுமைப்படுத்துவதை நிறுத்துங்கள் என்கிற கருத்தில் முதல் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. மகாத்மாபூலே, நாராயணகுரு, பெரியார், அம்பேத்கார் குறித்த நன்மதிப்புகள் அவசியமானதே. அவர்கள் சாதியற்ற சமூகத்திற்காக போராடியவர்கள். அதேநேரத்தில் இவர்கள் குறித்த நன்மதிப்பீடுகள் காரணமாக காந்தியை சிறுமைப்படுத்தப்படவேண்டிய அவசியமில்லை. காந்தி துயர்நிறைந்த மானுட சமுதாயத்தின் பக்கம் நின்ற உலக குடிமகன். சர்வதேச பிரதிநிதி. ஷெட்யூல்ட் மக்களுக்காக போராடியவர். ஒடுக்கப்பட்டவர்க்கும் ஆயுதமற்றவர்க்கும் சிவில் ஒத்துழையாமை எனும் பேராயுதம் தந்தவர். அம்பேத்கார் போலவே அனைவருக்கும் வாக்குரிமை என நின்றவர் காந்தி. சர்ச்சில்கூட அம்பேத்கரிடம் வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை நடைமுறை சாத்தியமில்லை என்றே தெரிவித்தார். பிரிட்டிஷ் மக்கள் வாக்குரிமை பெற 150 ஆண்டுகள் சொந்த ஆட்சியரிடமே போராடவேண்டியிருந்தது. சவுத்பரோ கமிட்டி முன்பு அம்பேத்கர் திறமையாக வாதங்களை எடுத்துவைத்தார். படித்தவர்க்கு மட்டும் வாக்குரிமை என்பதுடன் நிறுத்தக்கூடாது என்றார். பாமரருக்கும் வாக்குரிமை என்பதே ஒருவகை கல்விதான் என்றார். சைமன் கமிஷனிடம் அவர் Joint Electorate with Adult Franchise என்பதற்கு ஏற்பை தெரிவித்தார். கர்னல் ஃபாக்ஸ் உடன் அம்பேத்கர் நடத்திய உரையாடலில் பூர்வீககுடிகள் கிரிமினல் டிரைப்ஸ் பகுதிக்கு வாக்குரிமை தரமுடியுமா என்கிற விவாதம் வருகிறது. அப்போது அது இயலாத ஒன்று என்பதை அம்பேத்கர் ஏற்கிறார். அவ்விவாதத்தில் வயதுவந்தோர் வாக்குரிமை- இடஒதுக்கீடு என்பதில் உறுதியான வாதங்களை அடுக்குகிறார். வயதுவந்தோர் வாக்குரிமை என்பதை பரிசீலிக்கமுடியாவிட்டால் என்கிற கேள்விக்கு தனித்த வாக்காளர் (separate Electorates) என பதில் தருகிறார். பூர்வீககுடிகள் வாக்குரிமை எனும் அம்சத்தில் அம்பேத்கர் 1945 மே வரை அவர்களுக்கு அரசியல் திறமை வளர்ந்திருக்கவில்லை என்ற கருத்தையே வைத்திருந்தார். “ ..these aboriginals tribes do not yet possess the political capacity which is necessary to exercise political power for one’s own good” (Dr Ambedkar writings and speeches vol 1 page 357-379) அதேபோல் முஸ்லீம்களை சமாதானப்படுத்துவது (Appeasement) குறித்தும் விமர்சனங்களை அம்பேத்கர் தந்திருந்தார். தக்கர் பாபா பூர்வீககுடிகள் குறித்து அம்பேத்கார் கூறிய கருத்துக்கு மறுப்பளித்து பழங்குடிகள் உட்பட அனைவருக்கும் வாக்குரிமை என குரல் கொடுத்தார். கராச்சியின் 1931 காங்கிரஸ் தீர்மானத்தில் இடம்பெற்ற வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை, இலவச ஆரம்ப கல்வி, பண்ணையடிமை விடுதலை என்பதெல்லாம் காந்தி வலியுறுத்தியவைகளே. அதே ஆண்டில் டிசம்பர் 3 அன்று ஹரால்ட் லாஸ்கியுடன் காந்தி மேற்கொண்ட உரையாடலில் அனைவருக்கும் வாக்குரிமை என்பதன் மூலம் தீண்டப்படாதவர்கள் கையில் பெரும் அதிகாரம் ஒன்றை தரமுடியும் என்கிற கருத்தை வெளிப்படுத்தினார். விடுதலைக்குப் பின்னர் வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை நிலைநாட்டப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 1/5 செட்யூல்ட் பகுதியிலிருந்து வரவேண்டும் என்பதும் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த புதிய சூழலில் காந்தி வர்ணாஸ்ரமவாதி என்றோ- அம்பேத்கர் ட்ரைப்ஸ்களுக்கு வாக்குரிமையை அன்று வலியுறுத்தவில்லை என்றோ விவாதம் தொடர்வது அவசியமற்றது என்கிற கருத்தை லிமாயி முன்வைக்கிறார். அம்பேத்கர் தலைமையேற்று உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்தில் மேற்கூறியவைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. காந்தி எதிர் அம்பேத்கர் என்பது தேவையற்ற சர்ச்சை என்கிற மற்றொரு கட்டுரையை லிமாயி எழுதினார். அம்பேத்கார் அறிவுத்தேடலுக்கு முன்னுரிமை தந்தவர். தனிநபர் வழிபாட்டை சாடியவர். அம்பேத்கரும் காந்தியும் ஒரே இலக்கை நோக்கி வெவ்வேறு பாதைகளில் பயணித்துள்ளனர் என்கிற புரிதல் பலப்படவேண்டும் என வேண்டுகோளை லிமாயி வைத்தார். 1895ல் காங்கிரஸ் மாநாட்டில் திலகர் ஆதரவாளர்கள் சோசியல் மாநாடு (social conference) என்பதையும் சேர்த்து நடத்துவதற்கு எதிர்ப்பை தெரிவித்தனர். அம்முறை காங்கிரசால் அப்போது கைவிடப்பட்டது. இதை அம்பேத்கர் விமர்சித்தும் உள்ளார். காந்தியின் 1919-20 வரவால் காங்கிரஸ் சமூக பிரச்சனைகளை தனது நிகழ்ச்சிநிரலில் இணைத்துக்கொள்ளவேண்டியதானது. அதன் உச்சத்தை 1932-33களில் அவ்வியக்கம் உணர்ந்தது. கம்யூனல் அவார்ட் பிரச்சனையில் காந்தியின் உண்ணாநோன்பு காரணமாக அம்பேத்கர் தன் இறுக்கமான நிலையை கைவிட்டு அன்றிருந்த சூழலை தணித்திட உடன்பாட்டுக்கு வருதல் அவசியமானது. சாதிகள் இருக்கும்வரை விலக்கப்பட்ட சாதியும் இருக்கும் என்கிற எச்சரிக்கையை அம்பேத்கர் தந்தார். சாதி என்பது கருத்துநிலை- மனோநிலை. எனவே மனதில் புரட்சி எழவேண்டும் என விழைந்தார். சாஸ்திரங்களும் புராணங்களும் ஒழியவேண்டும் எனக் கோரினார். சமத்துவ மனப்பான்மையுடன் மனிதர்கள் எழவேண்டும் என்பது அவரது இந்தியக் கனவாக இருந்தது. வர்ணாஸ்ரமம் ஒழியாமல் தீண்டாமை ஒழியாது என்கிற ஏற்பில் காந்தி இல்லை. ஆனால் தீண்டாமை எதிர்த்த விட்டுக்கொடுக்கமுடியாத போராட்டம் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். கோட்பாட்டில் சண்டை என்பதிலிருந்து நடைமுறை போராட்டம் என்ற செயல்வகைப்பட்டு பணிபுரிந்தார். நாம் இருவரும் இறுதியில் ஒரே கேம்பில் நம்மை பார்த்துக்கொள்ளமுடியும் என்ற நம்பிக்கையை தெரிவித்து அம்பேத்கருக்கு காந்தி எழுதினார். சட்டமோ, பொருளாதார முன்னேற்றமோ மதத்தில் சமத்துவத்தை உருவாக்கிவிடாது. சாதி இந்துக்களின் மனமாற்றத்தில் அது சாத்தியப்படும் என்கிற கருத்தை காந்தி வெளிப்படுத்தினார் (நூல்தொகை 53 பக்307). இந்து சமூகம் சாதியற்ற சமூகமாக மாறினால்தான் தன்னை தற்காத்துக்கொள்ளும் சமூகமாக இயங்கமுடியும் என அம்பேத்கர் கருதினார். பிறப்பின் வழி சாதி உயர்வு தாழ்வு பார்க்கும் சமூக பலவீனத்தை காந்தியும் உணர்ந்தவராக இருந்தார். கலப்புமணத்திற்கு ஆதரவு தரக்கூடியவராக தன்நிலையை மாற்றிக்கொண்டார். தன்குடும்பத்திலும் காந்தி அதை அனுமதித்தார். அரசியல் அமைப்பு சட்ட வரைவுக்குழுவின் தலைமை பொறுப்பு தனக்கு அளிக்கப்பட்டதை ஆச்சரியமான ஒன்றாகவே அம்பேத்கர் கருதினார். காங்கிரசின் பங்களிப்பிற்கு பாராட்டையும் அவர் தெரிவித்தார். லிமாயி அம்பேத்கரியம் அசலும் போலியும் என்கிற கட்டுரை ஒன்றையும் எழுதினார். ’காந்தி எதிர்ப்பு ட்ரைப்ஸ்’ என ஒன்று உருவாகிவிட்டது. அது அவ்வப்போது தலையை காட்டி தொடர்கிறது என்கிற தனது விமர்சனத்தை லிமாயி வைத்தார். இந்துமகாசபா, சங்பரிவார், சாவர்க்கர்வாதிகள் என்கிற பெயரில் அது வெகுகாலமாக நடந்துவருகிறது. அவ்வமைப்புகள் தங்களின் பிராம்மண பெருமிதம் என்கிற பார்வையிலிருந்து காந்தியை விமர்சித்தன. பனியா வந்து வழிநடத்துவதா என்கிற சிக்கல் அவர்களுக்கு. கன்சிராம், மாயவதி போன்றவர்கள் வேறு கோணத்திலிருந்து காந்தியை விமர்சித்து வந்தனர். அம்பேத்கர் ஆழக்கற்றலின் முன்மாதிரி. அவ்வாறு கற்கவேண்டும் என சொல்லிக்கொடுத்தவர். இவர்களில் பலர் அறியாமையுடன் பேசுவதை பார்க்கமுடிகிறது என்பது லிமாயி அவர்களின் விமர்சனம். விடுதலைக்கு முன்னர் காந்தி காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்களை அம்பேத்கர் செய்திருந்தார். அதேநேரத்தில் பட்டேல் கேட்டதற்கிணங்க அவர் அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் பெரும் பங்களிப்பை தந்திட முன்வந்தார். செட்யூல்ட் பகுதியினருக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்தினார். தீண்டாமை ஒழிப்பு, வயதுவந்தோர் வாக்குரிமை, இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டன. சுயராஜ்ய போராளி, அகிம்சாவாதி என்பதையெல்லாம்விட தீண்டாமை ஒழிப்பில் நின்றவர் எனபதை காந்தி உயர் மதிப்புகொண்டதாக பாவித்தார் என்பதை அம்பேத்கார் உணராமல் இல்லை. இராஜ்யசபாவில் செப் 6, 1954ல் அம்பேத்கர் ஆற்றிய உரையில் தீண்டாமை என்பது மனநோய்- மனத்திருகல் எனக் குறிப்பிட்டார். ஆனால் தொடர்ந்து நாம் செட்யூல்ட் பகுதியினர் முன்னேற அவர்களின் அரசியல், சமூக, பொருளாதார நலன்களுக்கு போராடியே ஆகவேண்டும். தீண்டாமை ஒழிகிறதோ இல்லையோ இந்தப்பணியை நிறுத்த எந்தக் காரணமும் இல்லை எனப்பேசினார். உப்புவரியைக்கூட கொணரலாம். அன்று காந்தி போராடியபோது அரசிற்கு அது 10 கோடி வருமானத்தை தந்திருக்கலாம். இன்று 20 கோடிகிடைக்கும். அதை காந்தியின் பெயராலேயே டிரஸ்ட் அமைத்து செட்யூல்ட் வகுப்பார் நலனுக்காக பயன்படுத்தலாம். மறைந்த காந்தியின் ஆசியும் நமக்கு கிட்டும் எனப் பேசினார். காந்தி தீண்டாமையை மனத்திருகல் (mental twist) என விமர்சிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் பாவம் (Sin) எனக் கருதினார். இந்துக்களின் மனமாற்றமே சமூகநிலைமை மாறிட உதவும் எனவும் நம்பினார். எனவே காந்தியின் மனசாட்சி அம்பேத்கார் என்கிறார் லிமாயி. மனு காந்தி அம்பேத்கார் என்பதும்கூட சிறிய கட்டுரைதான். காந்தியைப் பொறுத்தவரை தான் கொண்டிருக்கும் கருத்துக்களில் மாற்றம் தேவை என உணர்ந்தார் எனில் தயங்காமல் செய்துகொள்வார். அவரிடம் கலப்புமண தம்பதிகள் சிம்லாவில் கொடுமைக்கு உள்ளாகின்றனர். சிறைக்கு அனுப்பப்படுகின்றனர் என்கிற செய்தியை கேள்வியாக செப்டம்பர் 1946ல் முன்வைத்தபோது சீர்திருத்த சிந்தனையாளர்கள் சிறை செல்ல அஞ்சக்கூடாது. துன்பத்தை சகித்துக்கொண்டு செய்தவைக்காக நிற்கவேண்டும் என்கிற பதிலைத் தந்தார். முன்னதாக ஜூலை 1946ல் அவர் ஹரிஜன் இதழில் கலப்புமணம் பற்றிய தனது முன்னுரிமையை தெரிவித்திருந்தார். உயர் நடத்தை கொண்ட சாதி இந்துவை ஹரிஜனப் பெண் மணம் செய்துகொள்ளும்போது இருசாராருக்கும் நன்மை கிடைக்கும். பிறக்கும் குழந்தைகளும் தீண்டாமை மறைய உதவுவர். சாதி இந்துப்பெண் ஹரிஜனக் கணவனை பெறுவதும் விரும்பத்தக்கதுதான். ஆனால் அதுதான் சிறந்தது என சொல்லத்தயங்குகிறேன். எனது வழியில் அதை நான் ஊக்குவிக்கவே செய்வேன். ஆனால் தற்போதுள்ள நிலையில் அரிஜனப்பெண் சாதி இந்து மணமகனைப் பெறுவது சிறந்தது எனக் கருதுகிறேன். திருமணத்திற்கு பின்னர் வெற்றி என்பதும் அவசியமாகிறது என காந்தி கருதினார். சீர்திருத்தங்கள் மெதுவாக நத்தை வேகத்தில்தான் நகரும். மெதுவாக நடைபெறுகிறதே என அதிருப்தி அடையக்கூடாது. இறுதியில் ஒரே சாதி- அதுவும் அனைத்தையும் சீர்செய்து சுத்தமாக்கும் பங்கி ( Bangi) என்றாகும். அந்த நாளிற்காக பிரார்த்திப்போம் என எழுதினார் காந்தி. இப்படி பேசிவந்த காந்தியை மனுதர்மவாதி என முழுமையாக அறியாமல் விமர்சிப்பது சரியா என லிமாயி வினவினார். மனு இருந்திருந்தால் காந்தியின் கருத்துகள்- செயலுக்காக அவரை சிறையில் தள்ளியிருப்பார் என்கிறார் லிமாயி. அம்பேத்கார் டாக்டர் சவீதாவை மணம் முடித்தார். அப்போது பட்டேலின் வாழ்த்து செய்தியில் பாபு (காந்தி) உயிருடன் இருந்திருந்தால் தங்களுக்கு மனப்பூர்வ ஆசியை தந்திருப்பார் என எழுதினார். பதிலாக அம்பேத்கார் ஆமாம் ஏற்கிறேன். காந்தி என் திருமணத்திற்கு நல்லாசியை தந்திருப்பார் என எழுதினார். கன்னாட் பிளேஸ் பகுதியில் பியாரிலால் வருவதை கண்ணுற்ற அம்பேத்கார் காரிலிருந்து இறங்கிப்போய் காந்தி இல்லாமல் போய்விட்டாரே அவரது ஆசி கிடைத்திருக்கும் என்கிற தனது வருத்தம் தோய்ந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். We did not understand him என்றார். ஆமாம் காந்தியை நாம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளாமல்தான் தொலைத்துவருகிறோமோ? பகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி? இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச சமூகம் குறித்த வேட்கை பரவலாக அறியப்பட்டவைதான். அவரின் தியாக மரணம் இன்றும் ஆதர்சனமாக இளைஞர்களை கவ்விப்பிடிக்கும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. லாகூர் சதிவழக்கில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மரணதண்டனை என்பது முடிவான பின்னர் அவர்களை காப்பது காந்தியின் பெரும் பொறுப்பு என்கிற எதிர்பார்ப்பு அதிகமானது. தூக்குத்தண்டனை மாற்றப்படாமல் நிறைவேற்றப்பட்டப்பின்னர் இப்பிரச்சனையில் காந்தி குறித்த விவாதங்கள் நடக்கத்துவங்கின. அவை இன்றும் ஓய்ந்தபாடில்லை. பகத்சிங் போன்ற போராளிகளின் நடவடிக்கைகள், காந்தியின் பங்குபாத்திரம், பிற தலைவர்களின் நிலைப்பாடுகள் இக்கட்டுரையில் சுருக்கமாக விவாதிக்கப்பட்டுள்ளன. ஒத்துழையாமை-பகிஷ்கரிப்பு போராட்டத்தை காந்தி அறிவிக்கிறார். ரெளலட் சட்டம் ஜாலியன்வாலாபாக் காலத்தில் பஞ்சாப் நுழைய காந்திக்கு அரசாங்கத்தடை இருந்தது. அக்டோபர் 1919ல்தான் தடை நீக்கப்படுகிறது. காந்தி கூட்டம் லாகூரில் என அறிந்து தனது நண்பர்களுடன் பகத்சிங் செல்கிறார். காந்தியின் உரையைக்கேட்டு 9வது படித்துக்கொண்டிருந்த பகத்சிங் பள்ளியிலிருந்து வெளியேறி ஒத்துழையாமை போராட்டத்தில் பங்கேற்கிறார். ஜனவரி 4, 1922 உத்தரபிரதேசம் செளரி செளரா பகுதியில் போலீஸ்காரர்களின் ரசனை குறைவான சங்கேதங்களால் போராளிகள் கோபமூட்டப்பட்டனர். காவல் நிலையம் தீக்கிரையானது. போலீஸ்காரர்கள் மாண்டனர்.. அகிம்சை அறவழிப் போராட்டத்திற்கு நாடு தயாராகவில்லை என போராட்டத்தை காந்தி திரும்ப பெற்றார். ஆறு ஆண்டுகள் கடும் தண்டனை கொடுக்கப்பட்டு அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அந்நிய துணிகள் தீக்கிரையாக்கும் போராட்டத்தில் பகத்சிங் நண்பர்கள் தீவிரமாக பங்கேற்றனர். காந்தி அறைகூவலை கேட்டு பள்ளிப்படிப்பை நிறுத்தியதும் காந்தி போராட்டத்தை கைவிட்டதுமான செயல்கள் பகத்சிங்கின் மனப்போராட்டத்தை அதிகப்படுத்தின. நண்பர்கள் மத்தியில் விவாதம் எழுந்தது. ஓரிரு நிகழ்வுகளை காரணம் காட்டி போராட்டத்தை நிறுத்தியது தவறு என பகத் பேசத்தொடங்கினார்.. சர்தார் கர்த்தார்சிங் தனது 19ஆம் வயதில் ஆயுத கலகத்தால் கைதாகி மரணதண்டனை பெற்று உயிர்த்தியாகம் செய்ததும் அவரது உரையும் பகத்சிங்கை கவர்ந்தன. அகிம்சை வழியில் பிரிட்டிஷாரை தூக்கி எறிய முடியாது என்ற எண்ணம் பகத்திற்கு ஏற்பட்டது. லாலா லஜ்பத்ராய் துவரகாதாஸ் நூலகம் ஒன்றை அமைக்கிறார். நூலக பொறுப்பாளர் ராஜாராம் சாஸ்திரிக்கும் பகத்திற்கும் ஏற்பட்ட நல்லுறவால் அவர் பரிந்துரைத்த புத்தகங்களை படிக்கிறார் பகத். மார்க்ஸ், பகுனின் புத்தகங்கள் அறிமுமாயின, பகுனின் அவரை கவர்கிறார். சோசலிச கோட்பாடுகள் அதற்கான புரட்சிப்போராட்டங்கள் ஆதரிக்கப்பட வேண்டியவை என்ற கருத்திற்கு பகத்சிங் வந்து சேர்கிறார். நூலகத்திற்கு வந்த புதிய புத்தகம் அனார்க்கிசம் குறித்த கட்டுரைகள் அவருக்கு தரப்படுகிறது. அதில் இடம் பெற்ற வன்முறையும் உளவியலும் பிரஞ்சு அனார்க்கிசவாதி வேலன் அறிக்கையும் அவரை கவர்கின்றன. தொழிலாளி வர்க்கம், தொழிற்சங்கங்கள் குறித்த பதிவையும் பிரஞ்சு சட்டமன்றத்தில் அவரால் வீசப்பட்ட குண்டுகுறித்த பதிவையும் பகத் அறிகிறார்.. நூலகர் சாஸ்திரியிடம் நாமும் இவ்வாறு செயல்படவேண்டும் என்கிறார் பகத். பொது இடங்களில் இப்படிப்பட்ட கருத்துப்பகிர்வு கூடாது என சாஸ்திரி எச்சரிக்கை உணர்வை தருகிறார்.. இப்புத்தகம் 60க்கும் மேற்பட்ட முறை நூலகத்திலிருந்து பகத் பெயரால் பெறப்பட்ட செய்தியை நாம் அறிய முடிகிறது. காந்திய இயக்கத்தால் சாதிக்கமுடியாது என பகத்சிங் நம்பத்துவங்கினார். மதன்லால் திங்கராவின் செயலை காந்தி ஏற்கவில்லை. தவறான வழியில் செய்யப்படும் தியாகம் என அது பற்றி அவர் கருத்துக்கூறி இருந்தார். பகத்சிங்கிற்கோ அது ஈர்ப்பை தந்தது. இந்துஸ்தான் ரிபப்ளிக் அசோசியேசன் 1923ல் ஏற்படுத்தப்பட்டு சச்சீந்திர சன்யால் மானிபெஸ்டோ வெளியிட்டார். யுனைட்டேட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா எனும் குடியரசை ஆயுதபுரட்சி மூலம் உருவாக்குவது திட்டமாக சொல்லப்பட்டது. இதன் மூலம் சுரண்டலை ஒழிக்க முடியும் என தெரிவித்தனர். கதர் இயக்கம், இந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக்கன் அசோசியேஷன் மூலம் வளர்கிறார் பகத்சிங்.. லாகூர் ரகசிய புரட்சிகரகுழுவில் முக்கிய தோழர்களாக சந்திரசேகர் ஆசாத், பகத்சிங், ராம்பிரசாத் பிஸ்மில், ரஜிந்தர் லாஹிரி, அஷ்வகுல்லாகான், பதுகேஸ்வர் தத் செயல்பட்டுவந்தனர். தங்களது நடவடிக்கைகளுக்கு நிதி கிடைப்பதில் உள்ள சிரமங்களை தீர்த்திடும் வகையில் அரசாங்க நிதியை கொள்ளையிடுவது என முடிவெடுத்தனர். ஆக 9 1925 லக்னோவிற்கு மிக அருகாமை ககோரியில் தங்கள் இடுப்பு துப்பாக்கிகளுடன் அரசாங்க நிதி ரூ8600யை கொள்ளயிட முடிந்தது. ஆனால் அதற்கு அவர்கள் பெரும் விலை கொடுக்க வேண்டியதானது. பல புரட்சியாளர்களுடன் பிஸ்மில்லும் கைதானார். ராம்பிரசாத் பிஸ்மில், ராஜேந்திரலாஹிரி, அஷ்வகுல்லா, ரோஷன்சிங் ஆகிய தோழர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.. அவர்களை தப்பவைத்து மீட்டிட பகத்சிங், சந்திரசேகர் ஆசாத், சுகதேவ், ராஜகுரு, பதுகேஷ்வர் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. புரட்சியாளர்கள் நால்வரும் தூக்கு கயிற்றில் வீரமரணம் அடைந்தனர். சைமன் கமிஷன் திரும்பிப் போ இயக்கம் 1928ல் தீவிரமாக எழுந்தது. லாலாலஜ்பத்ராய் தலைமையில் நடந்த போராட்டத்தில் அவர் கடுமையாக பிரிட்டிஷ் போலீசாரால் தாக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் வலுவிழந்து செப்டம்பர் 1928ல் உயிர் இழந்தார். கர்னல் வெட்ஜ் உட் லாலாஜியின் மரணம் போலீஸ் தாக்குதலால் நிகழ்ந்ததா- நியாயமான விசாரணை தேவை என்கிற கேள்வி எழுப்பியபோது யேர்ல் வின்டர்சன் என்கிற அரசாங்க அதிகாரி அவ்வாறில்லை எனவும் விசாரண ஏதும் தேவையில்லை எனவும் நிராகரித்தார். இந்த இயக்கத்தில் பங்கேற்ற பகத்சிங் போன்ற இளைஞர்கள் மனத்தளவில் பெரிதும் பாதிப்புக்குள்ளாயினர். பிரிட்டிஷாருக்கு பாடம் புகட்ட விரும்பினர். ஃபெரோஷா கோட்லாவில் பகத்சிங், சுகதேவ், குந்தன்லால், சிவ வர்மா, ஜெயதேவ் குப்தா, விஜய் குமார் சின்ஹா போன்ற புரட்சியாளர்கள் கூடினர். பகத்சிங் அக்கூட்டத்தில் பல்வேறு மாநில பிரதேசங்களிலுள்ள புரட்சிகர குழுக்கள் இணைந்து செயலாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்பதை தெரிவித்தார். நாம் ஹிந்துஸ்தான் சோசலிச குடியரசு அசோசியேசன் என்ற அமைப்பின் பெயரால் இயங்கலாம். ஆசாத் பங்கேற்க முடியாவிட்டாலும் அவர் சேர்மன் என்றும், பஞ்சாப் பிரிவிற்கு சுகதேவ், ராஜஸ்தான் பிரிவிற்கு குந்தன், உத்தரபிரதேச பிரிவிற்கு சிவ வர்மா, பீகாருக்கு ஃபனிந்திர நாத் பொறுப்பாக்கப்பட்டனர். அனைத்து பிரதேச ஒருங்கிணப்பு பொறுப்பிற்கு பகத், விஜயகுமார் நியமிக்கப்பட்டனர். அரசு வங்கியில் கொள்ளை என்பதும் முடிவானது. டிசம்பர் 10, 1928ல் அசோசியேஷன் கூடி ஸ்காட் போலீஸ் அதிகாரியை கொன்று பழி தீர்ப்பது என முடிவெடுக்கிறது. போலீஸ் நிலையத்திற்குள்ளேயே அவனை கொல்ல அனுமதி வேண்டும் என்கிறார் ராஜகுரு. ஆசாத் அறிவுரைக்குப் பின்னர் பொருத்தமான நேரத்திற்காக புரட்சியாளர்கள் காத்திருந்தனர். டிசம்பர் 17 அன்று காவல்நிலையத்திலிருந்து வெளிவந்த போலீஸ் அதிகாரி ஜான் சாண்டர்ஸை ராஜகுரு தலையில் சுடுகிறார். பகத்சிங் தொடர்ந்து சுடுகிறார். பகத்தை பிடிக்கவந்த சந்தன் சிங் என்கிற போலீஸ்காரர் ஆசாத்தால் சுடப்படுகிறார். அருகாமையில் இருந்த சைக்கிளில் ஏறி போராளிகள் தப்புகின்றனர். சாண்டர்ஸை ஜேம்ஸ் ஸ்காட் என நினைத்து கொன்றாலும் தோழர்கள் கடமையை செய்ததாக கருதினர். பொது பாதுகாப்பு மசோதா, தொழிற் தகராறு மசோதாக்களை கொண்டுவர பிரிட்டிஷ் தீவிரமாக இருந்தது. மசோதா மத்திய சட்டமன்றத்தில் கொண்டுவரும் நாளில் குண்டெறிவது என்கிற பகத்சிங் ஆலோசனை ஏற்கப்பட்டது. பகத்சிங் வெளியே இருப்பது அமைப்பிற்கு தேவை என்றும் பதுகேஷ்வரும், விஜய் சின்ஹாவும் சட்டமன்றத்திற்குள் குண்டெறிவது என்றும் அமைப்பு முடிவெடுத்தது. துண்டறிக்கைகள் மூலமல்ல நமது வாழ்வை தியாகம் செய்வதே பெரும் பிரச்சாரமாகவும் விழிப்புணர்வை உருவாக்குவதாகவும் அமையும் என பகத்சிங் கருதினார். அசெம்பிளிக்கு நுழைவு அனுமதி பெறுவதற்கான ஏற்பாட்டை ஜெயதேவ் கபூர் செய்தார். 1929 ஏப்ரல் 8 அன்று சட்டமன்றம் கூடியது. மோதிலால் உட்பட தலைவர்கள் இருந்தனர். மசோதாக்கள் அறிமுகம் துவங்கியவுடன் பதுகேஷ், பகத்சிங் இருவரும் குண்டுகளை யாருக்கும் காயம் ஏற்படாதவாறு எறிந்தனர். பதட்டம் பரவியது. அனைவரும் ஓடத்துவங்கினர். மசோதா தாக்கல் செய்த ஜான் ஷீஸ்டர் மேசைக்கு கீழே பதுங்கிக் கொண்டார். தோழர்கள் இன்குலாப் முழக்கமிட்டனர். ஜின்னா, மாளவியா, விதல்பாய் படேல் அசெம்பிளியில் அமர்ந்திருந்தனர். போலீசார் முன்னேறி வந்தனர். போராளிகள் கைதாக தயார் என்பதற்கான செய்கைகளை காட்டினர். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஏப்ரல் 8 1929 குண்டு வீசப்பட்டப்பின்னர் பகத்சிங்கும், தத்தும் தப்பிக்க நினைக்கவில்லை. சார்ஜெண்ட் டெர்ரியிடம் நீங்கள் கைது செய்துகொள்ளலாம் என்றனர். பகத்சிங்கிடம் இருந்த துப்பாக்கியை எடுக்கவும் எந்த தடையும் செய்யவில்லை. இதுவே பின்னர் அவர்களது சாண்டர்ஸ் கொலை வழக்கில் குற்றத்தை உறுதிப்படுத்த தடயமானது. நாங்கள் பிரிட்டிஷ் ஆட்சிமுறைக்கு எதிராகவே, கேளா காதினரை கேட்க செய்யவே குண்டு வீசினோம். எவரையும் கொல்வது நோக்கமல்ல என்றனர். புரட்சியாளர்களின் உலகளாவிய நெஞ்சுரத்தை பேசிய அவர்களது அறிக்கை வெளியிடப்படக்கூடாது என அரசாங்கம் கருதியது. ஆனால் பயானீர் அதற்கு முன்பே அதை வெளியிட்டது. அசெம்பிளி குண்டு வழக்கில் ஜூன் 12 1929 அன்று ’அந்தமான் நாடுகடத்தல்’ என்கிற தண்டனை வழங்கப்பட்டது. உயர்நீதிமன்றத்திற்கு ஆசப் அலி வழக்கை எடுத்துச் சென்றார். எங்களை கொலையாளிகள் என அழைக்கக்கூடாது என்றார் பகத்சிங். இதனிடையில் குண்டுகள் தயாரிக்கப்படும் இடம் ஒன்றை போலீசார் கண்டறிந்து HSRA தோழர்கள் கைது செய்யப்பட்டனர். பகத்சிங், தத் இதில் தொடர்புடையவர்கள் என்பது கண்டறியப்பட்டது., லாகூர் சதி வழக்கு என புகழ்வாய்ந்த வழக்கில் சாண்டர்ஸ் கொலை, வங்கிக் கொள்ளை, அசெம்பிளியில் குண்டுவீச்சு போன்ற குற்றங்கள் இணைக்கப்பட்டன. சிறைக்கைதிகளுக்கு நேரும் அவலங்களை, கொடுமைகளை கண்டித்து லாகூர் சிறையில் ஜூன்14 , 1929 முதல் பட்டினிப் போரை தோழர்கள் மேற்கொள்கின்றனர். சுகதேவ், ராஜகுரு, ஜதிந்திரர், ஜெயதேவ், அஜாய்கோஷ், சிவவர்மா அச்சிறையில் பகத்சிங்குடன் பட்டினிப்போரில் ஈடுபடுகின்றனர். மூத்த போராளி பாபா சோகன் சிங் சிறையில் 1915 முதலே இருந்து வந்தார். சாண்டர்ஸ் கொலை வழக்கும் நடக்கத் துவங்கியது. பட்டினி பலவீனத்துடன் மருத்துவ படுக்கையிலேயே பகத்சிங், பதுகேஷ்வர் இருவரையும் நீதிமன்றம் அழைத்து செல்கின்றனர். தேசபக்தர்களுக்கு கைவிலங்கு போடப்படுவதை எதிர்க்கிறார் பகத். பகத்சிங், பதுகேஸ்வர், ஜதிந்திரநாத் ஆகியோர் லாகூர் பார்ஸ்டல் சிறையில் பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது நேரு அவர்களை ஆக 9 1929ல் சந்தித்தார். கைதிகளின் நிலைமைகளை மேம்படுத்த அவர்கள் போராடிவந்தனர். மோதிலால் நேருவை கண்டவுடன் அவர்கள் ஏகாதிபத்தியம் வீழட்டும்- புரட்சி ஓங்குக என முழக்கமிட்டனர். சிறைக்கைதிகளின் நிலையை மேம்படுத்தக்கோரி போராளிகள் பட்டினிப்போர் மேற்கொண்டனர். மிக உயர்ந்த இலட்சியதாகமும் சுதந்திர வேட்கையும் கொண்ட இவர்களை கிரிமினல்போல் நடத்துவது சரியல்ல என மதன்மோகன் மாளவியா அசெம்பிளியில் கண்டித்தார். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டினார். ஜதிந்தர் தன்னை வங்காளி மாதிரி நடத்தவேண்டாம். நான் இந்தியன் என குறிப்பிட்டிருந்தார். . அரசாங்கம் நீரோ போல் நடந்துகொண்டது என மோதிலால் விமர்சித்தார்.. புருஷோத்தம் டாண்டன் இனி இப்படிப்பட்ட சிறை அவமானங்களை சகிக்ககூடாது என எச்சரிக்கைவிடுத்தார். சிறை விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டு சில மேம்பாடுகளை அது பரிந்துரைந்தது. ஜதிந்தர் தாஸ் நிலைமை மோசமானது . பட்டினியால் இரத்த ஓட்டம் நின்றது. கை கால் விளங்காமல் போனது. பார்க்கவந்த டாக்டர் கோபி சந்த பார்கவா ஏன் மருந்து தண்ணீர்கூட மறுக்கிறீர்கள் எனக்கேட்டார். அரசியல் கைதிகள் நிலைமேம்பட நாட்டிற்காக என் உயிர் போகட்டும், மன உறுதி இருக்கும்வரை உயிர்வாழ்வேன் என்றார் ஜதிந்தர். போராட்டத்தை நிறுத்தினால் ஜதிந்திரரை விடுதலை செய்யலாம் என்றது சிறை நிர்வாகம். பகத்சிங் போராட்டத்தை நிறுத்தி ஜதிந்திரரை காக்க விரும்பினார். சிறை நிர்வாகம் ஏமாற்றுவதாக உணர்ந்த பகத்சிங் தனது பட்டினிப்போரை நீட்டிக்கிறார். செப் 13 அன்று ஜதிந்திரரை மரணம் கவ்வியது. இந்திய விடுதலைபோரின் மகத்தான தியாக வரலாற்று நாளாக அந்நாள் மாறியது. சாண்டர்ஸ் வழக்கில் 24 பேர் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டனர். பகத், சுகதேவ், ராஜகுரு, பதுகேஷ்வர், கமல்நாத் திவாரி, கிஷோர்லால், சிவ வர்மா, அஜாய்கோஷ், குந்தன்லால் போன்றவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். ஆசாத், பகவான் தாஸ், பகவதி வோரா போன்றோர் தலைமறைவாய் இருந்தனர். ஜெய்கோபால், மன்மோகன் பானர்ஜி, லலித் முகர்ஜி போன்றவர் அரசு தரப்பு சாட்சிகளாக மாறிப்போயினர். செப் 12 1929ல் நீதிபதிகளுக்கு கட்டற்ற அதிகாரம் தரக்கூடிய மசோதா ஒன்றை- குற்றம் சாட்டப்பட்டவர்களை பார்க்காமல் கூட வழக்கு நடத்திட அதிகாரம் தரும் மோசமான மசோதா ஒன்றை கொணர்ந்தனர். மோதிலால்நேரு இதைக் கடுமையாக எதிர்த்தார். இர்வின் பிரபு மூவர் விசாரணை கமிட்டி ஒன்றை லாகூர் சதி வழக்கிற்காக மே1,1930ல் அமைத்தார். இதை சட்ட விரோதமானது என பகிஷ்கரிக்க பகத்சிங் முடிவெடுத்தார். பின்னர் தோழர்கள் அறிவுரைப்படி லாலா துனிசந்த் என்பவர் வாதாட ஒப்புதல் தருகிறார். மே 12, 1930ல் இன்குலாப் முழக்கத்துடன் விசாரணைக்கூடத்திற்கு புரட்சிகர தோழர்கள் வருகின்றனர். அவர்கள் போலீஸ்காரர்களால் அங்கு தாக்கப்படுவதை கண்டிக்கும் வகையில் மூவர் கமிட்டியில் ஒருவரான நீதிமான் அகாஹைதர் நீதிமன்றத்திலிருந்து வெளியேறுகிறார். தனது மாறுபட்ட கருத்தையும் பதிவு செய்கிறார். ஆகஸ்ட் 26, 1930ல் வழக்கு முடிவிற்கு வருகிறது. அக்டோபர் 7, 1930 அன்று தீர்ப்பாய பிரதிநிதி சிறைச்சாலை வந்து தீர்ப்பின் 68 பக்க நகலை வாசிக்கிறார். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவருக்கும் மரணதண்டனை என்பது படிக்கப்படுகிறது. அதிர்ச்சி நிலவுகிறது. மூவரும் புன்முறுவல் செய்கின்றனர். இன்குலாப் முழக்கம் இடுகின்றனர். மற்றவர்களுக்கு காலவரையுடன் கூடிய தண்டனைகள் விதிக்கப்பட்டன. பகத்சிங் புரட்சிகர குழுவில் அஜாய் கோஷ் அவர்களுக்கு 3 ஆண்டுகள் தண்டனை என அறிவிக்கப்படுகிறது. அஜாய் பின்னாட்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக ஆனார். நாடு முழுதும் இளைஞர்களின் போராட்டங்கள் எழுகின்றன. தீர்ப்பை கண்டித்து பொதுக் கூட்டங்கள் சென்னை உட்பட பெரு நகரங்களில் நடக்கின்றன. ஆயுள் தண்டனை பெற்ற பதுகேஷ்வர் தீர்ப்பறிந்து மனநிலை பாதிக்கப்படுகிறார். பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய தோழர்களுக்கு பிரிட்டிஷ் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து மார்ச் 23 1931 அன்று அதை நிறைவேற்றியது. வன்முறை மீது நம்பிக்கையற்ற காந்தி பகத்சிங்கை காப்பாற்ற உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்கிற விமர்சனம் பரவலாக சென்றது. மஹாத்மாவின் சிந்தனை எப்படி இருந்தது? பகத் வழக்கு குறித்து எப்படி எதிர் வினை ஆற்றினார்? புகழுடன் விளங்கிய மஹாத்மா தனது அகிம்சை கொள்கை காரணமாக பகத்சிங் பிரச்சினையில் emotional ஆக involve ஆகவில்லை என சொல்வதை கேட்கிறோம். இறுதிகட்டம் வரை பல்வேறு முயற்சிகளை செய்தார்- அவர் வெற்றி பெறவில்லை என சிலர் சொல்வதையும் பார்க்கமுடியும். இர்வினிடம் அதிகமான அழுத்தம் தந்தார் எனவும்-வைஸ்ராய் அவரை வஞ்சித்துவிட்டார் எனவும் வேறுபட்ட பார்வைகள் நமக்கு கிடைக்கின்றன. இர்வின் காந்தி இருவரும் நினைத்திருந்தால் தூக்குதண்டனயை மாற்றியிருக்கமுடியும் என்கிற பொதுவான கருத்தும் நிலவுகிறது. The Assumption is questionable- பிரிட்டீஷ் சிஸ்டம் என்கிற சூழலை வைத்து நாம் பார்க்கவேண்டும்- புரிந்துகொள்ளவேண்டும். பகத்சிங் தூக்குப் பிரச்சனையில் காந்திய அரசியலை மட்டும் விமர்சிப்பவர்கள் பிரிட்டிஷ் சட்டமுறைக்கு பகத்சிங் பலியானவர் என சேர்த்துப் பேசுவதில்லை. காந்தி இர்வினை சந்தித்து Remission of death sentence என்பதைக்கோரி வருகிறார். என்பதை அறிந்த பஞ்சாப் கவர்னர் காந்தியின் முயற்சி வெற்றிபெறக்கூடாது என எண்ணினார். அவர்கள் மார்ச் 24 என்பதற்கு ஒருநாள் முன்னதாக மார்ச் 23 அன்றே இரகசியம் காக்கப்பட்டு தண்டனையை நிறைவேற்றுவது என முடிவெடுக்கின்றனர். காந்தி மார்ச் 23 அன்றும் விடியற்காலை மணி ஒன்றுக்கு நீண்ட கடிதம் ஒன்றை இர்வினுக்கு எழுதுகிறார். மாளவியா, நேரு, தேஜ்பகதூர் சாப்ரு ஆகியோரும் பெருமுயற்சி எடுக்கின்றனர். காந்தி மார்ச் 26 1931 கராச்சியில் கூடிய காங்கிரஸ் அமர்வில் எடுக்கப்பட்ட முயற்சிகளை விளக்குகிறார். முயற்சி பலனளிக்கும் என நம்பியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். மார்ச் 23 அன்று பகத்சிங்கின் குடும்பத்தாரை காந்தி சந்திக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தன. காந்தியை வில்லனாக சித்தரிக்கும் முயற்சிகள் பின்னரும் நடைபெறாமல் இல்லை. II காந்தி- இர்வின் இருவரையும் சகல அதிகாரங்களும் கொண்ட தனிநபர்களாக பார்ப்பது சரியா?. காந்திக்கு பகத்சிங் உயிர்மேல் அக்கறையே இல்லையா? வெளியில் அம்மாதிரியான இளைஞர்களின் தேசபக்தியை பாராட்டிவிட்டு செயல்படாமல் இருந்தவரா காந்தி? அவர் எடுத்த நடவடிக்கைகள் முழுமனதுடன் எடுக்கப்படவில்லையா? பகத்சிங் பிரச்சனையில் காந்தி ஏமாற்றியவரா? இவை போன்ற கேள்விகள் தொடர்ந்து பொதுவெளிகளில் ஆதாரத்துடனும் ஆதாரமில்லாமலும் விவாதிக்கப்படுகின்றன பகத்சிங்கிடம் மார்க்சியம் லெனினியம் மட்டுமல்லாது பல்வேறு சிந்தனைகளின் தாக்கம் செல்வாக்கு செலுத்தியது. தனது சொந்த அனுபவங்களின் மூலம் அவர் கற்கவும் செய்தார். தனது உயிர்தியாகத்தால் நாட்டின் மனசாட்சியை அவரால் உலுக்கமுடிந்தது. இந்த மாதிரியான இளைஞர்கள் காட்டிய போர்க்குணமிக்க தேசியம் ஆபத்தான போக்கு என காந்தி உறுதியாக நம்பினார். காந்தி மார்ச் 7, 1931 பொதுக்கூட்ட உரையில் ஆயுதம் ஏந்தியவர் அதனாலேயே மரணிக்கப்படலாம் எனப் பேசினார். வெளியில் பரிவுகாட்டுவது போல் பேசிவிட்டு வைஸ்ராயுடன் சேர்ந்து தூக்கிற்கு பகத்சிங் செல்ல காந்தி நின்றுவிட்டார் என்கிற விமர்சனமும் எழாமல் இல்லை. வழக்கின் விசாரணைப்படி பார்த்தால் சுகதேவ் உண்மையான மூளையாக செயல்பட்டார் எனத் தெரியவந்தது. அவர் அந்த அளவிற்கு பெரிதாக மக்கள் மத்தியில் கொண்டாடப்படவில்லை. அவருக்கு வரலாற்று வெளிச்சம் போதுமான அளவு கிடைக்கவில்லை என்கிற விமர்சனமும் சேர்ந்தே நிலவுகிறது. சுதந்திரம் என்பதை பிறரை கொன்று அடையமுடியாது என்பதை 1909லேயே தனது கருத்தாக வெளிப்படுத்தியவர் காந்தி. பிரிட்டிஷ் வைஸ்ராய் அல்லது குடும்பத்தார்- அதிகாரிகள் மீது வன்முறை தாக்குதல் நடந்தபோதெல்லாம் அதை கண்டித்தவர் காந்தி. இர்வின் துணைவியார் மீது டெல்லியில் டிசம்பர் 23, 1929ல் குண்டு வீசப்பட்டதையும் கண்டிக்கும் தீர்மானத்தை அடுத்து நடந்த லாகூர் காங்கிரஸ் அமர்வில் அவர் முன்மொழிந்தார். அதற்கு எதிர்ப்பு இருந்தது. ஆனாலும் அதன் நியாயத்தை எடுத்துச்சொல்லி காந்தி தீர்மானத்தை ஏற்கவைத்தார். வைஸ்ராய் குண்டு வெடிப்பில் தப்பிய நிகழ்விற்கு பின்னர் காந்தி எழுதிய கல்ட் ஆப் பாம் என்பதற்கு பகவதி சரண் ’தி பிலாசபி ஆப் பாம்’ என பதில் ஒன்றை எழுதினார். அது அமைப்பின் தலைவர் என்ற பெயரில் வெளியானது. காந்தி அதையும் யங் இந்தியாவில் வெளியிடுகிறார். “The philosophy of bomb” Satyagraha is insistence upon truth. why press, for the acceptance of truth by soul force alone? why not add physical force also to it? While revoultionaries stand for winning independence by all the forces physical as well as moral, at their command, the advocates of our soul force would like to ban the use of physical force.. ” ”உண்மையின் வடிவாக சத்தியாக்கிரகம் பேசப்படுகிறது. அது ஆன்ம சக்தி என சொல்லப்படுகிறது. அது ஆன்மாவின் சக்தியாக மட்டும்தான் வெளிப்படவேண்டுமா- உடலின் சக்தியாக வெளியிடப்படக்கூடாதா- அதில் உண்மை இருக்கக் கூடாதா? கேள்வி வன்முறையா இல்லையா என்பதல்ல- சத்தியாக்கிரகத்திற்கு ஆன்ம சக்தி மட்டும்தானா- உடல் சக்தியும் உண்டா இல்லையா என இளைஞர்கள் அதில் கேள்வி எழுப்பினர். ( the question is whether you will have soul force plus physical force or soul force alone not violence.). எங்களுக்கு மக்களைப்பற்றி என்ன தெரியும் என கேட்கப்படுகிறது. காந்தி ரயில் பாதைகளில் மோட்டார் செல்லும் பாதைகளில் பயணித்திருப்பார். காய்ந்த சருகுகளை கொளுத்தி அந்த வெளிச்சத்தில் அமர்ந்து பேசும் விவசாயக் குடும்பங்களுடன் உட்கார்ந்து காந்தி அவர்கள் தேவையை உணர்ந்திருப்பாரா? பாக்டரிக்கு சென்று தொழிலாளர்களை சந்தித்து பேசியிருக்கிறாரா?. நாங்கள் இதைத்தான் செய்து வருகிறோம். எனவே மக்களை அறிவோம் “ என ஆவேசமாக இளைஞர்கள் காந்திக்கு எதிர்வினையை தந்தனர். பகத்சிங் குறித்த அக்கறை காந்திக்கு இருந்தது என குல்திப்நாயர் தெரிவிக்கிறார். ஆனால் பகத்சிங்கின் வன்முறை பாதையை அவர் ஏற்கவே இல்லை. பகத்திற்கு சிலை எழுப்பும் இயக்கத்திலும் அவர் பங்கேற்கவில்லை. காந்தி இன்னும் சற்று தீவிர முயற்சியை எடுத்திருந்தால் பகத்சிங்கை காப்பாற்றியிருக்கலாம் என்பது எச் ஆர் பக்‌ஷியின் கருத்தாக இருக்கிறது. டி எஸ் டியோலும் பகத்சிங் விடுதலையை நிபந்தனையாக்கி இர்வினுடன் காந்தி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்கிறார். பகத்சிங் போன்றவர்கள் வலுப்பெறுவதை காந்தி விரும்பவில்லை என்பது ஜெனரல் மோகன்சிங் பார்வையாக இருக்கிறது. மரணதண்டனையை மாற்றி ஆயுள் தண்டனையாக்கலாம் என்கிற காங்கிரசின் கருத்தை காந்தி ஏற்றார். அதை அமைதி திரும்புவதற்கான நிபந்தனையாகக் கூட வைக்கலாம் என காங்கிரஸ் செயற்குழு கருதியது. ஆனால் காந்தி நேர்மையாக கராச்சி காங்கிரஸ் அமர்வை எதிர்கொள்ள விரும்பினார். ஒருவேளை அந்த இளைஞர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என்பது உறுதியானால் அது கராச்சி சந்திப்பிற்கு முன்பே நடந்துவிடவேண்டும் (If the boys should be hanged they had better be hanged before the Congress session than after it) என்றார் காந்தி. காந்தி முயற்சிகள் எடுத்தார் என்றாலும் வைஸ்ராய் அவரை ஏமாற்றிவிட்டார் என புரிந்துகொண்டவர்களும் இருக்கின்றனர். இக்கருத்தை கே கே கல்லு பிரதிபலிக்கிறார். இர்வின் சுயசரிதை எழுதிய அல்லாம் கம்பெல் ஜான்சன் இர்வின் காந்தி உடன்பாட்டிற்கு பின்னர் பகத்சிங் தூக்கு குறித்த உரையாடல் மனிதர்களுக்குள் போல் இல்லை என்ற பதிவைத் தருகிறார். “ Sir Herbert Emerson, the Home Member who was called upon to play a prominent role in Delhi negotiations records listening with amusement to Irwin and Gandhi after agreement had been reached by them that Bhagat singh must be executed, engaged in a prolonged decision not as between two statesman but as between two saints on the sanctity of human life” மனசாட்சியுடன் போராடிய இர்வின் இரவெல்லாம் தூங்கவில்லை. மறுநாள் தூக்குத்தண்டனை மாற்றம் என்பதை அவர் ஏற்கவில்ல என்கிறார் ஆண்ட்ரு ராபர்ட்ஸ். காந்தி தண்டனையை நிறுத்திவைக்கத்தான் கோரினார். இரத்து செய்யக்கோரவில்லை. காந்தி கடைசிவரை சென்று முயற்சிக்கவில்லை. இர்வின் காந்தி உரையாடல்களை வெளிப்படையாகவும் அவர் தெரிவிக்கவில்லை என ஏ ஜி நூரணி எழுதினார். காந்தியின் மேல் சுமத்தப்பட்ட குற்றசாட்டுகளுக்கு பதில் தரும் வகையில் காந்தி அனைத்து முயற்சிகளையும் செய்ததாக அனில் மெளரியா தெரிவிக்கிறார். காந்தி தூக்குத்தண்டனையை மாற்றக் கோரினார். மகாதேவ தேசாயின் குஜராத் குறிப்புகளின்படி பார்த்தால் இர்வின் உடன்பாட்டின் அம்சமாக இடம்பெற செய்யவும் காந்தி முயற்சித்தார் என்பது மெளரியா தரும் தகவல். உரிய காலத்தில் முயற்சி எடுக்கவில்லை- மார்ச் 3 1931ல்தான் எடுத்தார் என்கிற நூரணி தகவல் சரியானதல்ல. காந்தி பிப் 19 முதல் பெருமுயற்சிகளை எடுத்தார் என்பது மெளரியா முன்வைக்கும் வாதம். காந்தி பெரும் முயற்சிகளை எடுத்தார். வைஸ்ராய் எந்த உறுதிமொழியையும் தராவிட்டாலும் தண்டனைக் குறைப்பு- ரிமிஷன் கிடைக்கும் என காந்தி நம்பியதாக மீராபென் தெரிவித்துள்ளார். பகத்சிங் கலகக்காரர் அதற்குரிய தண்டனை தரப்படலாமே தவிர மரணதண்டனை வேண்டாம் என்றார். அனைவராலும் மதிக்கப்படும் ஆய்வறிஞர் பிரேம் பசின் காந்திக்கு இர்வின் உறுதிமொழி தந்ததாக எழுதினார். அப்படி உறுதிமொழி பெறப்பட்டதை காந்தி காங்கிரஸ் செயற்குழுவில் பகிர்ந்துகொண்டுள்ளார். ஆனால் இச்செய்தி வெளிச்சென்றால் முடிவு எடுப்பதில் சிக்கல் நேர்ந்துவிடலாம் என்கிற எச்சரிக்கையும் தரப்பட்டது. ஆனால் பஞ்சாப் பிரதிநிதி அச்செய்தியை பத்திரிகைக்கு தெரிவித்தார். இதனால் பிரிட்டனின் ஆளும் தலைமை கொதிப்பு அடைந்து ஒட்டுமொத்த ராஜினாமா செய்துவிடுவோம் என இர்வினுக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பியதாக பிரேம் சொல்கிறார். பஞ்சாப் அரசாங்க பார்வையில் பகத்சிங் தூக்கு பிரச்சனையை அணுகவேண்டுமே தவிர காந்தியை முன்வைத்து பார்க்கக்கூடாது என ஆளும் தரப்பினர் அறிவுறுத்தினர். காந்தி ஜனவரி 26 1931ல் விடுதலையான பின்னர் பிப்ரவரி 18 முதல் மார்ச் 5 வரை இர்வினுடன் பேச்சுவார்த்தை நடந்தது. எட்டு சுற்றுக்கள் 221/2 மணிநேரம் பேச்சுவார்த்தை நடந்ததாக அறியமுடிகிறது. மார்ச் 5 காலை எட்டப்பட்ட உடன்பாட்டில் நேருவிற்குகூட ஏமாற்றம் இருந்தது. காங்கிரசின் முக்கிய தலைவர்கள் மார்ச் 4 அன்று இரவெல்லாம் விழித்து காந்திக்காக காத்திருந்தனர். காந்தி உடன்பாடு ஏற்பட்டு மார்ச் 5 விடியற்காலை 2 மணி அளவில் திரும்புகிறார். ராபர்ட் பெர்னேசின் டைரிகுறிப்புகள் இவ்வுடன்பாட்டு நிகழ்வுகளை பேசுகின்றன. சிவில் ஒத்துழையாமையை நிறுத்திக்கொள்வது, வட்டமேசையில் பங்கேற்பது, சுயாட்சிக்கான அரசியலமைப்பு சட்டவிதிகள், வன்முறையில் ஈடுபட்டிராத அரசியல் கைதிகளை விடுவிப்பது, அரசாங்க ஒடுக்குமுறைகளை நிறுத்துவது, பறிமுதலான சொத்துக்களை திரும்பத்தருவது, அரசாங்க ஊழியர்களுக்கு திரும்ப வேலை, உப்பு தயாரிக்க அனுமதி, வரிகளை கட்டுவது என்பது உடன்பாட்டின் சாரமாக இருந்தது. ஆனால் 22 மணி நேரத்திற்கு மேலாக நடந்த விவாதங்கள் பதிவாகவில்லை. ஜனவரி 26 1931ல் தான் காந்தி விடுதலையாகி வருகிறார். இர்வினுடன் பேச்சுவார்த்தை என்பதில் அவருக்கு ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது. பின்னர் பிப்ரவரி 17ல் துவக்குகிறார். மதன் மோகன் மாளவியா பிப்ரவரி 14 அன்று கருணைகாட்டவேண்டும் என்கிற வேணுகோளை விடுக்கிறார். மனிதாபிமான அடிப்படையில் மரணதண்டனையையை மாற்றவேண்டும் என்கிறார். அதே நாளில் தேஜ்பகதூர் சாப்ரு மற்றும் ஸ்ரீனிவாச சாஸ்திரிகளிடம் கருணைமனு தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மகாதேவ தேசாய் மூலம் காந்தி செய்தி அனுப்புகிறார். இதை சந்தர் பால் சிங் பதிவு தெரிவிக்கிறது. சந்தர்பால்சிங் காந்தியின் தொடர்ச்சியான இர்வின் சந்திப்புகளையும் தெரிவிக்கிறார். On Feb 17, 1931, Gandhi discussed this matter with the viceroy. According to Gandhi, he told the viceroy, “This has no connection with our discussion and it may even be inappropriate on my part to mention it. But if you want to make the present atmosphere more favourable, you should suspend Bhagat Singh’s execution.” என்கிற குறிப்பை பேராசிரியர் ஜெயின் நாரயண் சர்மா தருகிறார். . பிப்ரவரி 18 அன்று காந்தி பகத்சிங் பிரச்சனையை பேசினார். பொதுவாக காந்தி மரணதண்டனைக்கு எதிராக நின்றவர். முதல் சந்திப்பில் தண்டனை மாற்றம் குறித்து ஏதும் பேசவில்லை என்று இர்வின் தரப்பு குறிப்புகள் தெரிவிக்கின்றன. கண்ணுக்கு கண் என்பது உலகை குருடாக்கிவிடும். எவராக இருந்தாலும் திருந்த வாய்ப்பு தரவேண்டும் என்பதே அவரது பார்வை. பகத்சிங் பிரச்சனையில் மரணதண்டனையில் மாற்றம் என்றால் கூடுதலாக அமைதி நிலவும் என்றும் காந்தி கருத்து தெரிவித்தார். சரியோ தவறோ வெகுஜன கருத்து அவ்வாறு இருக்கிறது என்றும், இந்த உயிர்களை காப்பதன் மூலம் பல அப்பாவி உயிர்கள் பலியாவதும் தடுக்கப்படலாம் எனவும் காந்தி இர்வினுக்கு மார்ச் 23 அன்று எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார். சிறப்பு பிரதிநிதி மூலம் அக்கடிதம் அனுப்பபட்டது. Execution is an irretrievable act. If you think there is slightest chance of error of judgment, I would urge you to suspend for further review, an act that is beyond recall . Charity never faileth என்கிற வாசகம் கொண்ட அக்கடிதத்தை அனுப்பிவிட்டு அவசியமெனில் நேரில் வந்து பேசவும் தயார் என காந்தி தெரிவித்தார். இர்வின் தனக்கு மார்ச் 27, 1931 அன்று கொடுக்கப்பட்ட பிரிவு உபச்சார விழாவில் காந்தியின் வற்புறுத்தலை குறிப்பிட்டுப் பேசினார். தனது கொள்கைக்கு எதிராக நடந்துகொண்ட இளைஞனுக்காக மரணதண்டனையை மாற்றவேண்டும் என அந்த அகிம்சை மனிதர் தன்னிடம் வலியுறுத்தியதையும், அரசியல் செல்வாக்கிற்கு உட்பட்டு இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்க கூடாது என தான் உணர்ந்ததாகவும் விளக்கிக்கூறினார். இதை ட்ரிப்யூன் செய்திப்பத்திரிகை மார்ச் 28 1931 அன்று பிரசுரித்திருந்தது. பகத்சிங்கை தூக்கில் ஏற்றினால் அவர் தேசத்தியாகியாக கொண்டாடப்படுவார். நிலைமைகள் சற்று விபரீதமாகும். ஆனாலும் சட்டப்பிரச்சனைகளில் அதன்படி செயல்படுவதுதான் தனக்கு சரியாகப்படுகிறது என்பதையும் காந்தியிடம் தான் சொன்னதாக இர்வின் தெரிவித்தார். மேலும் பகத்சிங்கிற்கு அத்தண்டனை சரியானதே என்பதால் அதை மாற்றவேண்டும் என்பது தன்னால் இயலமுடியாத ஒன்றானது என்றும் இர்வின் தெரிவித்திருந்தார். The Earl of Halifax- fullness of daysல் இப்பதிவு இருப்பதாக அறியமுடிகிறது. ஆரம்பத்தில் பகத்சிங்கின் பட்டினிப்போராட்டத்தின்போது ஜின்னா ஆதரவான நிலையை எடுத்தார். பின்னர் தாகூர் போன்றே ஜின்னா தூக்குதண்டனைப் பற்றி மெளனம் காத்தார். குண்டுவீசிய வழக்கிற்கு பகத்சிங் சார்பாக ஆசப் அலி வழக்கறிஞராக இருந்தார். வன்முறை வழியை ஏற்கவில்லை என்கிற பொருட்பட நகல் ஒன்றை எழுதிக்கொண்டுபோய் பகத்சிங்கை ஏற்கவைத்து அவரின் ஒப்பம் பெற்றுவந்து காந்தியிடம் காட்டினால் பகத்சிங் தண்டனை குறைப்பிற்கு காந்தியின் கரங்களை அது வலிமைப்படுத்தும் என ஆசப்பலி கருதினார். இம்முயற்சி குறித்து காந்திக்கு தெரிவிக்கப்பட்டது. பகத்சிங்கும் நண்பர்களும் வன்முறையை ஏற்கவில்லை என்பதை உரிய அதிகாரிகளுடன் விவாதித்துவிட்டு தனக்கு தெரிவிக்குமாறு காந்தி அறிவுறுத்தினார். ஆனால் உள்துறைச் செயலர் பகத்சிங்கை சந்தித்து ஆசப் அலி உரையாட அனுமதி மறுத்துவிட்டார். பஞ்சாப் அரசாங்க செயலரின் தனி உதவியாளர் ஆண்ட்ரூஸ் மகளைத்தான் சாண்டர்ஸ் திருமணம் செய்வதாக இருந்தார் என்கிற செய்தியும் நமக்கு கிடைக்கிறது. அவரின் செல்வாக்கும் இவ்வழக்கில் இருந்திருக்கலாம். ராவல்பிண்டிக்கு மாற்றப்பட்ட போலீஸ் சூப்பரிண்டெண்ட் ஜேம்ஸ் ஸ்காட்டும் வழக்கின் திருப்பங்களை உன்னிப்பாக கவனித்து ஆலோசனைகளை சொல்லிவந்ததாகவும் அறியமுடிகிறது. ஆண்ட்ரூஸ் பல ஆங்கில அதிகாரிகளை சந்தித்து முறையிட்டதாகவும் தனக்கு ஆறுதலாக நிற்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதையும் அறியமுடிகிறது. ஆங்கில மாதுகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது என்கிற தாக்கம் பரவலாக்கப்பட்டது. அப்போது பொறுப்பில் இருந்த 7 கவர்னர்கள் உறுதியாக நிற்குமாறு வைஸ்ராயை வலியுறுத்தினர் என்கிற செய்தியை ராபர்ட் பெர்னே தெரிவிக்கிறார். பகத்சிங் மரணதண்டனையை ரத்துச் செய்ய அடிப்படைகள் காந்திக்கும் இல்லை என அறிந்தும் அவர் மனிதாபிமான அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டதாக ராபர்ட் பெர்னே சொல்கிறார். பஞ்சாப் போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு ராஜினாமா எச்சரிக்கையை செய்ததாக பீப்பிள் என்கிற பத்திரிகை தலையங்க செய்தியில் எழுதியது. அந்த இளைஞர்கள் இரு போலீஸ் உயிரை பறித்தவர்கள் என்கிற போலீஸ்தரப்பு வாதத்தை எழுதியது. பகத்சிங்கின் தந்தை கிஷன் சிங் கவர்னர் ஜெனரலின் அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்தி பிரைவி கவுன்சிலுக்கு பெட்டிஷன் ஒன்றை செப் 20, 1930ல் தந்தார். பிப்ரவரி 17, 1931ல் அது நிராகரிக்கப்பட்டது. வழக்கறிஞர்கள் லால்கபூர், பால்ஜித் சிங் போன்றவர்கள் பிப்ரவரி 16 அன்று வைஸ்ராய்க்கு தந்தி அனுப்பினர். நீதிமன்ற அமர்வுக்காலம் முடிந்த நிலையில் மரணதண்டனை செல்லாது என்றனர். பிப்ரவரி 25ல் ஆட்கொணர்வு மனு ஒன்றை போட்டனர். அவர்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. On 27th Feb, 1931 , Viscount Dunedin , while rejecting the appeal to the Privy Council, observed “Their Lordship must add that although the Governor General thought it to expound the reasons which induced him to promulgate this Ordinance, this was not in their Lordships’ opinion in any way incumbent on him as a matter of law. Their Lordships for these reasons have humbly advised His Majesty that this petition should be dismissed” பிரிட்டன் நாடாளுமன்ற உறுபினர்கள் மாக்ஸ்டன், கிங், ஜோவெல்ட் போன்றவர்கள் பகத்சிங் மரணதண்டனையை மாற்றவேண்டும் என வைஸ்ராய்க்கு வேண்டினர். இர்வின் அவர்களின் இல்லத்தில் ஆங்கில அதிகாரிகளை சமாதானப்படுத்தும் வகையில் அவசரக்கூட்டம் ஒன்று மார்ச் 12 மற்றும் 13 1931ல் நடத்தப்பட்டு கருத்துக்கள் கேட்டறியப்பட்டது. வைஸ்ராய் அரசாங்க செயலருக்கு தந்தி மூலம் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்தார். தலமட்ட அரசாங்கம் சொல்வது சரியாக தெரிகிறது. கராச்சி காங்கிரசிற்கு பின்னர் தண்டனை நிறைவேற்றம் என்பதில் சாதகமான அம்சம் ஏதும் தெரியவில்லை. எனவே மார்ச் 23க்குள் நிறைவேற்றிவிடலாம் என்பது தெரிவிக்கப்பட்டது. மார்ச் 24 1931ல் தணடனை நிறைவேற்றம் என இருந்தது. கடுமையான போராட்டங்கள் எழலாம் என அரசாங்கம் அறிந்து முதல் நாள் மார்ச் 23 அன்றே தூக்கை நிறைவேற்றும் வகையில் கடைசி விருப்பம் கேட்கப்பட்டது. அம்மா சமைத்த உணவு என்றார் பகத்சிங். புரியாமல் விழித்த வார்டனிடம் கவலை வேண்டாம் இங்குள்ள போகா என்கிற கழிப்பறை சுத்தம் செய்யும் தொழிலாளியைத்தான் அம்மா என குறிப்பிடுவதாக தெரிவித்தார். கண்ணீர் மல்க தயங்கிய அத்தொழிலாளியை தனக்கு உணவு சமைக்க சம்மதிக்க வைத்தார் பகத்சிங். காந்தி மார்ச் 23 அன்று எழுதிய கடிதத்தில் வைஸ்ராயை சந்திக்கும் விருப்பத்தை தெரிவித்திருந்தார். கராச்சி செல்வதை ஒருநாள் ஒத்தியும் போட்டார். காந்தி கராச்சி சென்றபோது திரும்பி போ முழக்கத்துடன் இளைஞர்கள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்தனர். காந்தியம் வீழட்டும் என முழக்கம் இட்டனர். பிரிட்டிஷ் சுரண்டலாளர் பக்கம் காந்தி என்கிற வசை வீசப்பட்டது. கொடி ஏந்திவந்த ஒருவர் காந்தி மண்டையில் அடித்தார். கராச்சி காங்கிரசில் உற்சாகம் இல்லை. மூவரின் தூக்கு என்கிற சோகம் கவ்விப்படர்ந்திருந்தது. பகத்சிங் பெயர் பெருமளவு உச்சரிக்கப்பட்டது. காந்தியை புகழ்ந்தவர்கள் எழுதிய தீர்மானம் கூட மொழி உக்கிரத்தை கொண்டிருந்தது என பட்டாபிசீதராமைய்யா பதிவு சொல்கிறது. காந்தி தனது அகிம்சை குறித்த நிலைப்பாட்டை விளக்கி சொற்பொழிவாற்றினார். வன்முறையால் சுயராஜ்யம் உருவாகாது- அழிவே மிஞ்சும் என்றார். என்னைக் கொல்லலாம். காந்தியம் இருக்குமே என்றார். உண்மையை அகிம்சையைக் கொன்றால்தான் காந்தியத்தைக் கொல்லமுடியும். சுயராஜ்யத்தை உண்மையான அகிம்சை வழியில் பெறுவது என்பதுதானே காந்தியம். மரணதண்டனையை மாற்றுவது என்பதை இர்வினுடன் உடன்பாட்டு அம்சமாக தான் மாற்றவில்லை என்பதையும் அவர் தெளிவுபடக்கூறினார். I pleaded Viceroy as best as I could. I brought all pressure at my command to bear him. I poured my soul into it but no avail என அவர் குறிப்பிட்டார். பகத்சிங்கின் தியாகத்திற்கு புகழாரம் சூட்டினார் நேரு. வன்முறை பாதையாகாது, அழிவிற்கு கொண்டு சேர்க்கும் என்றார். கீழ்கண்ட தீர்மானத்தை நேரு முன்மொழிந்தார். அரசியல் வன்முறையில் காங்கிரஸ் தன்னை இணைத்துக்கொள்ளாது- ஏற்கவும் செய்யாது. பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியவர்களின் வீரத்தை தியாகத்தை போற்றுகிறது. அவர்களுக்கு அஞ்சலி செய்கிறது. நாடு முழுமையாக கோரிய தண்டனை குறைப்பை அரசு நிராகரித்து மூவரையும் தூக்கிலிட்டது அரசின் பழிவாங்குதல் செயலே என்கிற வகையில் தீர்மானம் சென்றது. தீர்மானத்தின் முதல்வரி குறித்து எதிர்ப்புகள் எழுந்தன. காந்தி மறுமுறையும் உரையாற்றினார். பகத்சிங் வழியை காப்பியடிக்க முடியாது. கொலைகளின் வழியே நியாயத்தை நிலைநிறுத்த முடியாது. அப்படித்தான் நியாயத்தை பெறவேண்டும் என்கிற எண்ணம் நம்மிடம் எழுந்துள்ளது என்பதாக அவர் உரை சென்றது.. மார்ச் 23 அன்று லெனின் புத்தகத்தை பகத் படித்துக்கொண்டிருந்தார். அதை முடிக்கவும் விரும்பினார். இன்குலாப் முழக்கம் கேட்க துவங்கியது. தலைமை வார்டன் சர்தார் சத்தார் சிங் முடிவு வந்துவிட்டது மகனே என்றார். எப்போது அந்த அதிர்ஷ்ட நிமிடம் என்றார் பகத்சிங். இன்று மாலை என்றனர். என்னை படைத்தவனை சந்திக்கும் நேரம் வந்துவிட்டது என்றார். பிரார்த்தனை செய் மகனே என்றார் வார்டன். உங்கள் உணர்வை மதிக்கிறேன். நீங்கள் முன்னதாக தெரிவித்திருக்க வேண்டாமா என்றார் பகத்சிங். மாலை 3 மணிக்கு தான் உறுதி செய்தனர் என்றார் வார்டன். கடைசி நேரத்தில் நான் இறைவனை பிரார்த்தித்தால் அவர் என்னை கோழை என நினைத்து விடுவார் என்றார் பகத். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பதில் அன்றிருந்த கம்யூனிஸ்ட்களைப் போலவே பகத்தும் நம்பிக்கை வைத்திருந்தார். சோசலிச புரட்சி என பேசிவந்தார். கம்யூனிஸ்ட் அகிலம் வாழ்க எனக் கூட முழங்கினார். ஆனாலும் அவர் கம்யூனிஸ்ட் கட்சிக்குழுக்களில் சேர்ந்து ஏன் செயலாற்றவில்லை என்பது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. தான் தனிநபர் பயங்கரவாதி அல்ல என தெளிவுபடுத்த முயன்றார். தங்களை விடுதலைப் போரின் இராணுவப்பிரிவாக புரிந்து கொள்ளவேண்டும் என்றார். புத்தக வாசிப்பையும் அறிவு பெருக்கத்தையும் நேசித்தவர் அவர். அவரும் தோழர்களும் படித்த நூற்றுக்கணக்கான புத்தக பட்டியல் கூட வெளியாகியுள்ளது. நான் ஏன் நாத்திகன் ஆனேன் உட்பட ஏராள கட்டுரைகளை எழுதியவர் பகத்சிங். இந்திய இளைஞர்களின் ஆதர்ஷ நாயகனாக பகத்சிங் மின்னத்துவங்கினார். The country will be served better by my sacrifice என்றவர் பகத்சிங். தண்டனைமாற்றம் பெறுவது என்பதைவிட தியாகத்தால் ஆற்றும் தேசக்கடமை உயர்ந்தது என பகத்சிங் கருதினார். துணைநின்றவை: 1. Shaheed Bhagat sing An immortal revoultionary The marxist ap 2006 2. Bhagath Sing- Doctorate Thesis Rupinder Kaul 3. GANDHI AND BHAGAT SINGH – V N DUTTA 4. The life and times of Bhagat Singh by Mahesh Sharama 5. The History of Legend by Kama Maclean 6. What Mahatma Gandhi did to save Bhagat Singh Chander Pal Singh Gandhi Marg, October-December 2010 7. Mahatma Gandhi and Bhagat Singh : A Clash of Ideology by Prof J N sharama Gandhi Marg Jan 2012 காந்தியடிகள் வழிகாட்டிய வேலைநிறுத்தம் (பஞ்சுமில் தொழிலாளர் வேலைநிறுத்த நூற்றாண்டு- 2018) அகமதாபத் மில் தொழிலாளர்கள் பிளேக் கால போனஸ் என 1917ல் 70 சதம் பெற்று வந்தனர். பிளேக் போனஸை நிறுத்தி அதற்குப் பதிலாக 20 சதம் ஊதிய உயர்வு தருவதாக மில் முதலாளிகள் கூறியது பிரச்சனையானது, தொழிலாளர் 50 சதமாவது வேண்டும் என்றனர். காந்தி தலையிட்டபின் 35 சதம் என்பதில் உறுதியாக இருப்பது என்பது தொழிலாளர் கூட்டத்தில் ஏற்கப்பட்டது. சிலபகுதி தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். முதலாளிகள் கதவடைப்பை செய்து மில்களை மூடினர். காந்தி கலெக்டரை நடுவராக கொண்டு பிரச்சனையை தீர்த்துக்கொள்ளலாம் என்றார்.. இப்போராட்டம் 22 நாட்கள் நீடித்தது . பின்னர் மார்ச் 18, 1918ல் வேலைநிறுத்தம் முடிவிற்கு கொணரப்பட்டது. வேலைநிறுத்தம் நடந்த நாட்களில் காந்தி தொழிலாளர் மத்தியில் தினம் அறிக்கை வாயிலாகவும் உரைகள் வாயிலாகவும் என்ன பேசினார் என்பது வரலாற்று ஆவணம் மட்டுமல்ல, இன்றைக்கும் தேவைப்படும் அனுபவமாக இருக்கிறது. காந்தியடிகள் தனது சூழலில் நேர்மையின்மையையோ, போலித்தனத்தையோ, எதையும் ஆழ்ந்து கற்காமல் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்ளுதலையோ, கபடத்தையோ, தன்னை முன்வைத்துக்கொள்ளுதலையோ செய்யவில்லை. யாரை எதிர்த்து போராட்டமோ அவர்களை தரக்குறைவாக பேசுவதையும் பொறுத்துக்கொள்ளாமல் இருந்துள்ளார் என்பதை இந்நாட்களின் பதிவுகளில் பார்க்கமுடிகிறது. 1918 பிப்ரவரி மாதத்தில் வேலைநிறுத்தம் என்பதை அறிந்து காந்தியை அமைதி உருவாக்க உதவவேண்டும் என அம்பலால் சாரபாய் அழைக்கிறார். அம்பலால் மில் முதலாளி. காந்தியுடன் நின்ற சோசலிச தாக்கம் கொண்ட அனுஷ்யா பென்னின் சகோதரர். சங்கர்லால் பேங்கர் முலம் காந்தி தொழிலாளர் நிலைமைகளையும் அவர்களின் கோரிக்கை குறித்தும் தீர விசாரித்து அறிந்தார். கோரிக்கைகளின் நியாயத்தை உணர்ந்தார். பிப்ரவரி 22, 1918 லாக் அவுட் செய்த முதலாளிகள் மார்ச் 12 அன்று கதவடைப்பை விலக்கிக்கொண்டு தொழிலாளர் மத்தியில் பிளவை உருவாக்க முயற்சித்தனர். காந்தி மார்ச் 15 முதல் உண்ணாநோன்பு மேற்கொள்கிறார். அன்னிபெசண்ட் முதலாளிகளிடம் காந்தியின் முக்கியத்துவம் பற்றியும் சிறிய நிகழ்வுகளில் அவர் உடல் பாதிக்கப்படக்கூடாது என்பதையும் எடுத்துரைக்கிறார். பின்னர் மார்ச் 18 அன்று நடுவர் தீர்ப்பிற்கு உடன்பட்டு பிரச்சனை முடிவிற்கு கொணரப்படுகிறது. காந்தியடிகள் அகமதாபத் பஞ்சாலைத் தொழிலாளர் கூட்டத்தில் பங்கேற்று வந்தவுடன் மில் உரிமையாளர் அசோசியேஷனுக்கு கடிதம் ஒன்றை பிப்ரவரி 21, 1918ல் எழுதினார். எட்டணா சலுகை பெறுவதற்கு தொழிலாளர் சில நிபந்தனைகளை ஏற்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். எந்த ஆவணத்திலும் தங்களின் ஆலோசகர்களிடம் கலந்து பேசாமல் கையொப்பம் இடவேண்டாம் என அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.. தகராறில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட ஆட்சியரை நடுவராக கொண்டு நடுவர் தீர்ப்பிற்கு ஏற்பாடு செய்யலாம். சில மில்களில் தொழிலாளர் வேலைநிறுத்தத்தில் இறங்கிவிட்டனர். அவர்கள் வேலையில்லாமல் இருப்பது உகந்த சூழலாகாது என்பதை அக்கடிதம் வாயிலாக காந்தி தெரிவித்தார். மில் உரிமையாளர்கள் என்ன சம்பளம் தருகிறார்கள் என்கிற விவரத்தை எனக்கு கொடுக்க வேண்டுகிறேன். நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை கணக்கில் கொள்ளாமல்கூட மில் உரிமையாளர்கள் பல்வேறு கேடகரி தொழிலாளர் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதையும் தெரிவிக்க வேண்டுகிறேன். எந்த உறுதிமொழியும் தராமல் தங்கள் பிரதிநிதிகள் எங்களுடன் விவாதத்தில் பங்கேற்க இயலுமா? நான் தொழிலாளர் பக்கம் என்கிற கருத்து நிலவுகிறது. நான் நியாயத்தின் பக்கம் நிற்கிறேன். அவர்களிடம் நியாயம் இருக்கிறது. கடினமான இவ்வேலையில் தங்கள் ஒத்துழைப்பு இருக்கும் என நம்புகிறேன். இக்கடிதத்திற்கு பதில் தரப்பட்டால் மகிழ்ச்சியாக இருக்கும். நாங்கள் என்ன விவாதிக்கிறோம் என்பதை விரைவில் தெரியப்படுத்துகிறோம் என அக்கடிதம் சென்றது. பிப்ரவரி 26 1918 அன்று அவர்கள் வெளியிட்ட துண்டுபிரசுரத்தில் வேலைநிறுத்தம், நடுவர் மன்றம் பற்றி விவரிக்கப்பட்டது. கலெக்டர் தலைமையில் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. காந்தி, வல்லபாய் படேல், சங்கர்லால் ஆகியோர் தொழிலாளர் தரப்பிலும், மில் உரிமையாளர் தரப்பில் அம்பலால் சாராபாய், ஜகபாய் தல்பத்பாய், சந்துலால் இடம் பெற்றனர். நடுவர் தீர்ப்பிற்கு முன்னர் வேலைநிறுத்தம் என்பதில் முதலாளிகள் கோபம் அடைந்தனர். ஊதிய உயர்வு 20 சதம், ஏற்பில்லையெனில் வேலையிலிருந்து வெளியேறலாம் என்றனர். அறம்சார்ந்த போராட்டம் (Righteous Struggle) என்ற அடிப்படையில் தினம் துண்டறிக்கைகளை தொழிலாளர்களுக்கு கற்பிக்கும் வகையில் அனுஷ்யா பென் சாரபாய் வெளியிடுவது என முடிவெடுக்கப்பட்டது. காந்தியே அவற்றை எழுதினார். இவ்வறிக்கைகள் மாலைநேர கூட்டங்களில் தொழிலாளர் மத்தியில் படிக்கப்பட்டன. தங்களுக்கு 50 சத உயர்வு வேண்டும் எனக் கோரி வந்த தொழிலாளர்களை 35 சதம் நியாயமாக இருக்கும் என்பதை ஏற்கவைத்து அதைக்கோருவது என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.. 35 சத உயர்வு பெறாமல் வேலைக்கு திரும்புவதில்லை, அமைதியான வன்முறையற்ற வழிகளில், சொத்துக்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்படாமல் போராட்ட உறுதிமொழிகளை தொழிலாளர் ஏற்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பிப்ரவரி 26 அன்று கதவடைப்பின் 5வது நாள். காந்தி தொழிலாளர் மத்தியில் உரை நிகழ்த்தினார். போராட்டம் விரைவில் முடியாமல் கூட போகலாம். சாகவே நேர்ந்தாலும் போராட்டத்தை கைவிடக்கூடாது. பணமில்லாமல் இருக்கலாம். உழைப்பதற்கான கரங்களை பெற்றுள்ளீர்கள். கோரிக்கையை 100 சதம் உயர்வு எனக்கூட நியாமில்லாமல் வைக்கலாம். சூழலில் எது சாத்தியமோ அதை கண்டறிந்து திருப்தி அடைய வேண்டும் என்பது உரையின் சாரமாக இருந்தது. அடுத்தநாள் பிப்ரவரி 27 அறிக்கையில் உலகம் தொழிலாளர் இல்லாமல் நகரவில்லை. நீங்கள் இல்லாமல் செல்வத்தை எவரும் அனுபவிக்கமுடியாது. இவ்வளவு சக்தி கொண்ட நீங்கள் சில மேலான குணங்களையும் கற்கவேண்டும். பொய் ஏதுமின்றி உண்மையாக இருக்க கற்கவேண்டும். உறுதியாக நிற்கும் தொழிலாளரை எவராலும் தோற்கடிக்கமுடியாது. தொழிலாளருக்கு தைரியம் தேவை. வேலை போய்விட்டால் என்ன செய்வது என்கிற பயத்தால் நாம் அடிமைப்போல் ஆகிவிட்டோம். நமக்கு விரைவில் நியாயம் கிடைக்கும் என்கிற வகையில் எவர் மீதும் காழ்ப்புணர்ச்சி வேண்டாம். நாம் மீண்டும் அவர்களிடம்தான் வேலை செய்யப்போகிறோம் என்று அவ்வறிக்கை பேசியது. அன்று மாலை கூட்டத்தில் உங்கள் வெற்றி உங்கள் கையில்தான் இருக்கிறது என காந்தி உரையாற்றினார். உங்களின் பலம்தான் உங்கள் வெற்றியை உறுதிசெய்யும் என்றார். பிப்ரவரி 28 அன்று வெளியிட்ட அறிக்கையில் நாம் வேலையில்லை என்பதால் சோம்பித்திரியக்கூடாது என்பது வற்புறுத்தப்பட்டது. சூதாட்டம், பகல்தூக்கம், முதலாளிகள் மற்றும் பிறர் குறித்து அரட்டை வம்பு பேசுதல் கூடாது. அடிக்கடி தேநீர்கடை சென்று நேரம் வீணடிப்பதும் கூடாது. கதவடைப்பு செய்த மில் வாயிலில் சென்று நிற்றல் கூடாது. வேலைக்கு செல்லும் காலத்தில் நாம் வாழும் இடங்களை தூய்மையாக வைக்க நேரமிருந்திருக்காது. இப்போது செய்யலாம். படிப்பதற்கு நேரம் கிடைத்துள்ளது. புத்தகம் படிக்கலாம். நூலகம் செல்லலாம். படிப்பறிவு அற்ற பிற தொழிலாளர்க்கு கற்றுத்தரலாம். தையல், கார்பெண்டர்வேலை தெரியும் எனில் அதை செய்யலாம். எந்த வேலையும் தகுதி குறைந்ததாக கருதாமல் செய்து பழகலாம். கதவடைப்பு கால நாட்களை பயனுள்ளதாக மாற்றிட வேண்டும் என்பது பேசப்பட்டது. மார்ச் 1 அன்று வெளியிட்ட அறிக்கையில் நாம் பொதுமக்களிடம் தொழிலாளர் துயரை எடுத்து செல்லலாம். அவர்களுக்கு உணவளிக்காமல் நாம் உண்ணவேண்டாம். முடியாதவர்களுக்கு மருத்துவ உதவி செய்வோம் என்பன வலியுறுத்தப்பட்டது. நாம் முழு பொறுப்புணர்வுடன் இப்பிரச்சனையில் நிற்கிறோம் என்பதை அவ்வறிக்கை மூலம் காந்தியடிகள் வெளிப்படுத்தினார். அதே நாளில் அம்பாலால் சாரபாய்க்கு கடிதம் ஒன்றை அவர் எழுதுகிறார். தங்களின் முயற்சி வெற்றிபெற்றுவிட்டால், ஏற்கனவே ஒடுக்கப்பட்ட அந்த ஏழை தொழிலாளர்கள் மேலும் ஒடுக்கப்படுவார்கள். பணத்தால் அனைவரையும் வாயடைக்க செய்யமுடியும் என்றாகிவிடும்.. உங்களின் முயற்சிகளை விஞ்சி தொழிலாளர் வெற்றி பெற்றால் முடிவை தோல்வியாக நீங்கள் உணரக்கூடும். பணம் ஆளவேண்டும் அதன் கர்வம் அதிகரிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? உங்களின் தோல்வியில் வெற்றி இருக்கிறது என நீங்கள் உணரவில்லையா? ஆழமாக யோசித்து மனதின் சிறு குரலுக்கு செவிமடுக்க வேண்டுகிறேன். என்னுடன் உணவருந்த வரலாமா என்கிற அழைப்புடன் அக்கடிதத்தை காந்தி முடித்திருந்தார்.. மார்ச் 2 அன்று அடுத்த அறிக்கை வெளியானது. 35 சத ஊதியம் கிடைத்து உள்ளே செல்லலாம். அதைப் பெறமுடியாமல் சென்றால் மனம் நொந்து மீண்டும் அடிமை போல் செல்ல நேரிடும். அப்படியொரு நிலை ஏற்படுவது ஆரோக்கியமானதல்ல என காந்தி கருதினார். எனவே 35 சதம் பெற்று வேலைக்குப்போகும் சூழல்தான் உகந்தது என வலியுறுத்தினார். தொழிலாளர் வெற்றி பெற்றால் தலைக்கனம் கூடிவிடும் என அஞ்சுவது பேதமை என்றார். தொழிலாளர் ஒடுக்கப்பட்டால் அவர்கள் சமயம் கிடைக்கும் போது புரட்சிகரமாக எழுந்துள்ளார்கள் என்பதாகவே உலக வரலாறு இருக்கிறது என்றார் காந்தி. தொழிலாளர்களின் ஆலோசகர்களையும் தொழிலாளர்களையும் பிரிப்பது என்கிற செயலிலும் ஒருவர் வெற்றி பெறமுடியாது. தொழிலாளர் கோரியது கிடைக்கப்பெற்றால் திருப்தி கொண்டவர்களாக பணி செய்வார்கள். அவ்வாறு செய்யாவிட்டால் அவர்களின் ஆலோசகர் மூலம் கூட அவர்களை சரி செய்யமுடியும். தொழிலாளரின் வெற்றியில்தான் முதலாளிகளின் வெற்றியும் அடங்கியுள்ளது. அவர்களின் தோல்வி முதலாளிகளின் தோல்வியும்கூட.. இதுதான் தூய நியாயம் .இதற்கு பதில் மேற்கத்திய நியாயத்தை அனுசரிப்பது சாத்தானின் நியாயமாகிவிடும் என்றார் காந்தி. மார்ச் 3 அன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் இந்த தூய நியாயம் (pure Justice ) என்பதை அவரது கண்ணோட்டத்தில் மேலும் விளக்கினார். எஜமான் மற்றும் வேலைக்காரர்களின் பண்டைய இந்திய நல்லுறவுகள் பற்றியும்,. அதிகமாக வேலை கூடிவிட்டது என்பதால் கூலி உயர்வு என்பதோ, வேலையே இல்லை என்பதால் கூலி குறைப்போ இல்லாத காலம் இருந்தது . இருபக்க கடமை உணர்ந்த காலமது என அவர் எடுத்துரைத்தார். தொழிலாளர் தரப்பிலும் செய்யமுடியாத கோரிக்கைகளை வைப்பது சாத்தான் நியாயமாகவே இருக்கும். செய்ய முடிந்தவைகளை செய்ய முதலாளிகள் மறுப்பதும் சாத்தான் நியாயமே என்றார் காந்தி. யானைக்கூட்டம் எறும்புகளை நசுக்குவது போல் முதலாளிகள் ஒன்று சேர்ந்து கொள்வது தர்மம் அல்ல என்றார் காந்தி. ஜைன , வைஷ்ணவ நம்பிக்கை கொண்ட முதலாளிகள் தொழிலாளர்க்கு தரவேண்டியவற்றை மறுப்பது சரி என கருத மாட்டார்கள். எனவே மேற்கு நியாயத்திலிருந்து அனைவரும் வெளிவந்து பண்டைய இந்திய சிந்தனைப்படி நியாயம் செய்வோம் என்றார் காந்தி. மார்ச் 4 அன்று வெளியிட்ட அறிக்கையில் தென்னாப்ரிக்கா ரயில்வே தொழிலாளர் போராட்ட அனுபவத்தை அவர் விவரித்தார். அவர்கள் கூடுதல் உயர்வு என்பதோடல்லாமல் ஆட்சியை கைப்பற்றுவோம் என்கிற சாத்தான் நியாய போராட்டம் நடத்தினர். இதனால் அரசிற்கும் அவர்களுக்கும் பெரும் கசப்பு வளர்ந்தது. சில அப்பாவிகள் கொல்லப்பட்டனர். ஒருவர் மற்றவரின் மோசமான செயல்களை முன்வைத்து பேசினர். யாருக்கும் நியாயம் பற்றிய கவலையில்லாமல் இருந்தது. இந்திய தொழிலாளர் 20000 பேர் சத்தியாக்கிரகத்தில் இறங்கினர். அவர்களுக்கு அரசை தூக்கி எறிவதல்ல நோக்கம். அய்ரோப்பிய தொழிலாளர் இதை பயன்படுத்த விழைந்தபோது, இந்திய தொழிலாளர் தங்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டனர். தான் யாரை எதிர்த்து போராடுகிறோமோ அவர்களின் சங்கடமான சூழலை சாதகமாக்கிக் கொள்ள இந்திய தொழிலாளர் விரும்பவில்லை. அவர்கள் கோரிக்கைகளில் வெற்றியும் பெற்றனர் என்ற அனுபவத்தை காந்தி பகிர்ந்துகொண்டார். சத்தியாக்கிரகத்தில் இருதரப்பும் உண்மைக்கு நெருக்கமாக இருக்கமுடியாவிட்டால்கூட ஒரு தரப்பு உறுதியாக இருந்தாலும் அது வெற்றியடையும் என்றார். மார்ச் 8 அன்று வெளியிட்ட அறிக்கையில் தென்னாப்பிரிக்கா மண்ணில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு சிறையில் உயிர்நீத்த 75 வயது விவசாய தொழிலாளி ஹர்பத்சிங் பற்றியும், ட்ரான்ஸ்வாலில் வர்த்தகராக இருந்த மொகமத் கசாலியா சிறையில் வாடி தனது வியாபாரம் முழுமையாக இழந்தது குறித்தும், 17 வயதில் சிறைப்பட்டு தனது முழு உடல் சுகவீனத்தை தாங்கி சிறைதண்டனைக்காலம் முழுக்க அனுபவித்து வெளிவந்த ஒருவார காலத்திற்குள் மரித்துப்போன வள்ளியம்மை பற்றியும் காந்தி எடுத்துரைக்கிறார். அவர்கள் பொதுநன்மைக்காக தியாகம் செய்தவர்கள்.. தொழிலாளர்களாகிய நீங்கள் உங்கள் மேம்பாட்டிற்காக போராடும்போது அப்போராட்டம் உங்களுக்கு சற்று எளிமையான ஒன்றே என காந்தி எடுத்துரைக்கிறார். அந்த உதராணங்கள் உங்களுக்கு மேலும் உத்வேகம் தருவதற்காக சொல்லப்பட்டன என்றார். மூன்றுமாதம் ஊதியமின்றி, வீடுவாசலை விற்று உணவுப்பொருள் பெறக்கூட காசின்றி அவர்கள் அவதிக்கு உள்ளானதை குறிப்பிடுகிறார். அதில் இந்து முஸ்லீம் என அனைத்து தரப்பினரும் இருந்தனர். சிறையில் கஷ்டப்பட்ட அப்துல் காதர், சூரத்தின் ததமியா காஜி, தமிழகம் சார்ந்த 17 வயது இளைஞர்கள் நாராயணசாமி, நாகப்பன் கடுமையான சிறைக்கொடுமைகளில் தியாகம் செய்ததை அவர் குறிப்பிடுகிறார். மார்ச் 7 அறிக்கையில் வட்டிக்கு வாங்கி கொடும் அவதியில் மில் தொழிலாளர் வாழ்வதை அவர் குறிப்பிடுகிறார். 35 சத உயர்வு அவர்களை மீட்டுவிடாது. இரு மடங்கு ஊதியம் பெற்றால் கூட அவர்கள் வறுமை நீங்காது. ரூபாய்க்கு அணா வட்டி கொடுக்கிறார்கள். அதாவது ஆண்டிற்கு 75 சத வட்டி கட்டுகிறார்கள். நாட்டில் நிலவும் 12 முதல் 16 சதமே கூடுதல் வட்டிதான். சிலர் ரூபாய்க்கு 4 அணா கொடுத்து வருகின்றனர். அதாவது 300 சத வட்டி. வட்டி கட்டியே அவர்கள் மீளாமல் மாள்வர். புனித குரான் வட்டியை தவறு என்கிறது. எனவே அதிக வட்டி தரமுடியாது என்கிற போராட்ட உறுதி தேவைப்படுகிறது. கூட்டுறவு கடன் நிறுவனங்களை தொழிலாளர்களுக்கு துவங்கி இப்பிரச்சனையை தீர்க்கவேண்டும் என்கிற ஆலோசனையை அவர் முன்வைத்தார். மார்ச் 11 அன்று வெளியிட்ட அறிக்கையில் முதலாளிகள் செயல்கள் பற்றி பேசினார். கதவடைப்பு விலக்கப்படும். 5 தொழிலாளரை வேலைக்கு அழைத்துவரக்கூடியவர்க்கு தனி சன்மானம் வழங்கப்படும் என்கின்றனர். இதையெல்லாம் கேள்விப்பட்டு நாம் பதிலுக்கு ஏதும் செய்ய வேண்டாம் என்றார் காந்தி. முதலாளிகள் தொழிலாளர்களை பெறுவதற்கு எடுக்கும் முயற்சி அவை. தொழிலாளர் என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்வியை முன்வைத்து அவர் விளக்கினார். ஊதிய உயர்வு 35 சதம் இல்லையெனில் திரும்ப மாட்டோம் என்பதில் உறுதி காட்டுவது- விவரம் அறியாமல் யாராவது 20 சத உயர்விற்கு போனால் அவர்களிடம் நிலைமைகளை எடுத்துரைப்பது. அதேநேரத்தில் அவர்களை நாம் தொந்திரவு செய்யக்கூடாது. காலையில்தானே எவரும் வேலைக்கு செல்லமுடியும். நாம் 7.30 க்கு கூடுவோம். கூட்டத்திற்கு அனைவரையும் வரவழைக்க முயற்சி எடுப்போம். ஒன்றை நாம் அறியவேண்டும். உங்கள் உழைப்பு திருடப்படமுடியாதது. ஆனால் முதலாளிகள் தவறாக நிர்வாகம் செய்தால் வீழ்வர். உழைக்க முடியும் என்பவர் வீழமாட்டார். சோம்பேறிகள் வேண்டுமானால் பட்டினி கிடக்கலாம் என தொழிலாளர் சோர்ந்துவிடாமல் அவர்களுக்கு நம்பிக்கையை அவர் விதைத்தார். மார்ச் 12 அன்று கதவடைப்பை முதலாளிகள் விலக்கி கொண்டனர். எனவே இனி வேலைக்கு செல்லவில்லை எனில் அந்நாட்கள் வேலைநிறுத்த நாட்களாகும் . சத்தியம் மீறி செல்பவர்கள் பலவீனமானவர்கள். அவர்களைக் கொண்டு முதலாளிகளால் ஏதும் செய்யமுடியாது. சத்தியம் பக்கம் நிற்போம் என காந்தி உரையாற்றினார். கையில் திறமை உள்ள தொழிலாளி இந்த முதலாளி இல்லையெனில் வேறு வேலை தேடிக்கொள்ள முடியும். நீங்கள் உறுதியாக இருந்தால் கல்நெஞ்சமும் கரையும் என்றார் காந்தி. பொதுவேலையில் நாம் இந்து முஸ்லீம் குஜராத்தி மதராசி என்றெல்லாம் வேறுபடுத்திப் பார்க்கக்கூடாது. அனைவரும் ஒன்றுதான் என்பதையும் அவர் குறிப்பிட்டார். அதே தினத்தில் அம்பலால் சாரபாய்க்கு கடிதம் எழுதினார். அதில் தனது நிலையை அவர் தெளிவுபடுத்துகிறார். யாராவது தொழிலாளி மில்லிற்கு போகவிரும்பினால் அவரை மில்வரை கொண்டுவந்து விட்டுவர தான் தயாராக இருப்பதாக எழுதினார். அதே நேரத்தில் உங்கள் வீட்டிற்கு வர இது சரியான நேரமில்லை. உங்கள் குழந்தைகளை பார்க்கவேண்டும் தான். ஆனால் பின்னர் பார்க்கலாம் எனக் குறிப்பிடுகிறார். மார்ச் 15 கூட்டத்தில் எந்திரங்களை கேலி செய்து நாம் பேசவேண்டியதில்லை. அவற்றில்தான் நீங்கள் போய் வேலை செய்யப் போகிறீர்கள். கவிஞர்கள் முதலாளிகளை கடுமையான வார்த்தைகள் கொண்டு எழுதவேண்டாம் என்றார். அன்னிபெசண்ட் அம்மையார் அக்கூட்டத்தில் பங்கேற்று சுயராஜ்யம் பற்றி உரையாற்றினார் . மார்ச் 15 அன்று வெளியிட்ட அறிக்கையில் பணக்காரர்களுக்கு பணம் பலம் எனில் உழைப்பவர்க்கு உழைப்பு பலம் என்றார் காந்தி. பணத்திற்கு வேலை கொடுக்காத பணக்காரனும் உழைக்க தயங்கும் தொழிலாளியும் பட்டினிதான். உழைப்பதற்கு தயங்குபவன் உண்பது உரிமையாகாது. எனவே நாம் ஏதாவது வேலை செய்யவேண்டும். கடல்நீர் உப்புத்தன்மையை இழக்கமுடியாது என்பது போலவே தொழிலாளர் உழைப்பு எனும் குணத்தை இழந்துவிடமுடியாது என்றார். என்னைப் பொறுத்தவரை நாமே முன்வந்து உண்மைக்காக ஏற்கும் துன்பங்கள் வீண்போகாது. பலனைத்தரும் என்று நம்பிக்கையூட்டினார். காந்தியும் அனுஷ்யா பென்னும் காரில் வருவார்கள், போவார்கள் பட்டினியா நம்போல் கிடப்பார்கள் என்கிற விமர்சன பேச்சு காந்தியை எட்டுகிறது. அவர் தனது நிலையை விளக்கிப் பேசுகிறார். நான் உங்கள் வாழ்க்கையுடன் விளையாடவரவில்லை. எனக்கு உண்மை உயர்ந்தது போலவே உங்களுக்கான சத்தியமும் உயர்ந்தது என கருதுகிறேன். நான் விழிப்புடன் மனத்தூய்மையுடன்தான் உங்களுடன் சேர்ந்து நிற்கிறேன் என்றார். உங்களுடன் வீழவும் தயார்தான் என்றார். பிரச்சனை தீரும்வரை காரில் ஏறப்போவதில்லை என்றார் காந்தி. உண்ணாநோன்பு மேற்கொண்டார். என் மீது இரக்கம் காண்பித்து 35 சதம் தரவேண்டியதில்லை. தொழிலாளர் கோரிக்கையில் நியாயம் உணர்ந்து தந்தால் போதும் என்றார். தொழிலாளர் கூட்டத்தில் திலகர் மகராஜ் பெருமிதங்களை எடுத்துரைத்தார். மதன் மோகன் மாளவியா பற்றியும் சொல்கிறார். இவ்வுலகில் கபடங்கள் அதிகமாகவே உள்ளன. அப்படிப்பட்ட சூழலில் இருக்கமுடியுமோ எனக்கூட நினைத்திருக்கிறேன். தென்னாப்பிரிக்காவில் ஒருமுறை நான் திடிரென உங்கள் மத்தியிலிருந்து காணாமல் போனால் ஆச்சரியப்படாதீர்கள்- அப்படி போனால் திரும்ப மாட்டேன் எனக்கூட சொல்லியிருக்கிறேன் என்பதை தெரிவித்தார். முதலாளிகளிடம் போய் 35 சதம் தாருங்கள் அப்போதுதான் உண்ணாநோன்பை முடிப்பேன் என சொல்வதும் முறையாகாது என்றார் காந்தி. அவர்கள் முடிவை சொல்லும்வரை காத்திருக்கலாம் என்றார். தொழிலாளர்கள் சபதம் எடுக்கலாம். எங்களை கலந்து எடுக்கும் உறுதிப்பாட்டிற்கு எங்கள் உயிரையும் தர நாங்கள் சித்தமாகவும் இருப்போம் என்றார். ஆனால் கலந்து பேசி உறுதி ஏற்க வேண்டும் என்றார். மார்ச் 18 அன்று 22 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் 27 சதம் பெறுவது, நடுவர் தீர்ப்பு 20 சதம் என்றால் 7 சதம் திரும்பத்தந்துவிடுவது, 35 சதம் எனில் முதலாளிகள் மீதியை தருவது என்பது முடிவானது.. மார்ச் 19 , 1918 அன்று இருபக்கமும் வெற்றி என்கிற அறிக்கை வெளியிடப்பட்டது. தொழிலாளர் பணிக்கு திரும்பும் மார்ச் 20 அன்று 35 சதம் உயர்வு பெறுவார்கள். அடுத்தநாள் 20 சதம் கொடுக்கப்படும். அதற்கடுத்தநாள் துவங்கி நடுவர் தீர்ப்பு வரும்வரை 27 சதம் என்பது உடன்பாடு என காந்தி அறிவித்தார். புகழ் வாய்ந்த பேராசியர் அனந்த சங்கர் பாபுபாய் நடுவராக இருப்பார். மூன்று மாதத்தில் அவர் தன் தீர்ப்பை நல்குவார் என்பதும் ஏற்கப்பட்டு இறுதி நியாயத்தை தொழிலாளர் பெற்றனர். இப்போராட்டத்தில் இருவகை நியாயங்கள் நிலைநாட்டப்பட்டுள்ளன. தொழிலாளர் மரியாதை காக்கப்பட்டுள்ளது. தகராறு என்பதை நடுவர் ஒருவர் மூலம் தீர்க்கலாம் என்பது ஏற்கப்பட்டுள்ளது எதிர்காலத்திலும் இம்முறையை பின்பற்றப்படமுடியும் என்றார் காந்தி. அதே நேரத்தில் மிகச் சாதாரண பிரச்சனைக்கெல்லாம் மூன்றாம் நபரிடம் போவதும் ஆரோக்கியமாக இருக்காது என்றார் காந்தி. நாம் 35 சதம் நியாயமானது என உணர்ந்ததால் கோரினோம். முதலாளிகள் நமது கோரிக்கையின் தவறை சரியாக நம்மை உணர செய்திருந்தால் நாம் நம்மை மாற்றிக்கொண்டிருப்போம் என்றார் காந்தி. தொழிலாளர்கள் நேர்மையாக மனம் உவந்து வேலை செய்தால் முதலாளிகளின் ஆதரவை பெற முடியும். ஒருவரின் மரியாதையை விலையாக வைத்து பெறப்படும் எந்த அதிகாரமும் தூசியானதுதான் என்றார் காந்தி. சிறிய பிரச்சனையோ பெரும் பிரச்சனையோ அவர் தன் வழிமுறைகளை மாற்றிக்கொண்டதில்லை. பகை காணாத மனிதநேயம் என்பதில் நின்றவர். பிறருக்கு தோல்வி உணர்த்தாமல் வெற்றி பெறமுடியும் என்பதற்காக தொடர்ந்து போராடியவர் காந்தியடிகள். பெண்கள் குறித்து காந்தியடிகள் மனித இனத்தின் இளம் பயிரினை காத்து வளர்க்கும் பெரும்பொறுப்பு தாயின் மகத்தான தனி உரிமையாகவும் பெருமைக்குரியதாகவும் இருக்கிறது. அடிப்படையில் ஆணும் பெண்ணும் ஒன்றே எனினும் உருவ சிறப்பியல்கள் மாறுபடுகின்றன. வேலைகளும் வெவ்வேறாக அமைகின்றன. சத்திய அகிம்சை வழி எனில் பெண்ணின் தலைமைக்கு ஆட்சேபம் இராது. ஆடவரைவிட குறைந்தவள் என்கிற எண்ணமும் மறையும் என்று பேசினார் காந்தி. பெண்கள் உரிமை எனும் விஷயத்தில் தான் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என தன் நிலைப்பாட்டை உறுதிபட அறிவித்தவர் காந்தி. சமூக சட்டங்கள் என நிலவுவதெல்லாம் ஆண்கள் உருவாக்கியவையே. பெண்கள் இயல்பு எனச்சொல்லி சாஸ்திரங்கள் செய்யும் அவதூறுகள் அகற்றப்படவேண்டாமா? எப்படி செய்வது. நமது தீர மாதர்களான சீதை, தமயந்தி, திரெளபதி ஆகியவர்கள் பற்றிய குறைவாக சொல்லப்பட்டவற்றை புறந்தள்ளி மீட்டெடுப்போம். பெண் சமநிலையில் சம அறிவு கொண்ட தோழி என்கிற உணர்வு பெருகட்டும். மதம் என்ற நிலையில்கூட இவ்வுணர்வு தேவை. பெண்களை கலந்து சமூக சட்டங்களை ஆடவன் உருவாக்கவில்லையே. எஜமான மனப்பாங்குடன் அவை உருவாக்கப்பட்டு அனுசரிக்கப்படுகின்றன என்கிற விளக்கம் காந்தியிடம் கிடைக்கிறது. பெண் அகிம்சையின் அவதாரம். அகிம்சை எனில் அளவற்ற அன்பும் ஆற்றலும் நிறைந்தது. துன்பம் கண்டு கலங்காது ஏற்கும் பக்குவம் அதற்குண்டு. சமம் எனப் பேசும்போது ஒரேமாதிரி வேலை என புரிந்துகொள்ள வேண்டியதில்லை. ஒருவருக்கொருவர் நிரப்பிகள் என்பதாகவே இயற்கை ஆண், பெண் என இருபாலரையும் படைத்திருக்கிறது என்கிற புரிதலை காந்தியடிகள் முன்வைக்கிறார். யங் இந்தியாவில் (செப் 15, 1921) பணிவு, பக்தி, ஞானம், தியாகம், சகிப்புத்தன்மையின் உறைவிடம் பெண் என எழுதினார். பெண்கள் பலவீனமானவர்கள் இல்லை. ஆண்களைவிட உயர்ந்தவர்களே என எழுதினார். பெண்ணிற்கு கொடுமைதனை செய்திடும் ஆணினம் தண்டனையை அனுபவிக்கவேண்டும். ஆடவனின் சட்டங்களை மீறிய பெண்புரட்சி அகிம்சை வழியில் கிளம்பவேண்டும் என ஏப்ரல் 16 1925ல் அவர் எழுதினார். நான் பெண்ணாய் பிறந்திருந்தால் ஆணின் கட்டுக்கதைகளை எதிர்த்து புரட்சி செய்வேன் என டிசம்பர் 8 1927ல் அறிவித்தார். அபலை என முத்திரையிடுதல் அநீதி என்றார். அகிம்சை உலகாளும் எனில் பெண்வழி உய்வாகவே அது உலகில் மலரும் என்றவர் காந்திஜி. உள்ளத்தை ஆட்கொள்ளும் அபூர்வ ஆற்றல் பெண்களைப்போல் ஆண்களுக்கு வருவதில்லை என்பதும் அவரது மதிப்பீடு. குடும்ப பராமரிப்பிற்கு எஞ்சி நேரம் இருக்குமெனில் அவர்கள் ஊதிய வேலைக்கு போகலாம் என காந்திஜி கருதினார். இதை குறிப்பிட்டு ஹரிஜன் மார்ச் 16 1940ல் எழுதினார். வீட்டில் கணவனின் பெருமைபாடுவதையும், அவனுக்காக அலங்கரித்துக் கொள்வதிலும் பொழுதைக் கழிப்பது அநாகரிகம் என காந்திஜி கருதினார். இந்தக் கொடுமையிலிருந்து பெண்கள் விடுபடல் வேண்டும் என விழைந்தார். சுயமாககூட வாக்களிக்கமுடியாமல் அவர்கள் குடும்ப ஆண்கள் சொல்படி மட்டுமே என்பதில் என்ன சுதந்திரம் இருக்கமுடியுமோ எனவும் அவர் வினா எழுப்பினார். பெண்களுக்கு தக்க கல்வி வேண்டும் என வற்புறுத்திய காந்திஜி ஆடவன் போல் நடிப்பது அவசியமில்லை என்றார். போட்டி என வந்தால் பெண்கள் வெற்றி பெறுவர். ஆடவன் குறைகளை நிவர்த்தி செய்யும் தன்மையாலும், அவனால் முடியாத சிலவற்றை செய்ய முடிந்தவளாகவும் இருப்பவள் பெண். தங்கள் வீட்டுப்பெண்கள் ஆங்கிலம் பேசவேண்டும் என சில ஆடவர் எண்ணி கற்பிக்கவும் செய்கிறார்கள். அறிவெனில் அது ஆங்கிலம் என கருதிக்கொள்ளும் நோய் இது. நம் அடிமைத்தனத்தின் அறிகுறியாக கணவன். மனைவி, குழந்தைகள் மத்தியில் ஏன் தாய்மொழியில் கடிதம் எழுதப்படாமல் ஆங்கிலத்தில் எழுதப்படுகிறது எனப் புரியவில்லை. இதை சகிக்க முடியவில்லை என்றார் காந்திஜி. ஆண், பெண் சேர்ந்து பயிலும் கல்விக்கூடங்கள் மேல்நாடுகளில் வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை. அம்முயற்சியிலும் விபரீத விளவுகளே ஏற்பட்டன. அது சோதனை நிலையில் இருப்பதால் நல்லதா, கெட்டதா என சொல்லிவிடமுடியவில்லை என்றார் காந்திஜி. முதலில் குடும்பத்தில் தடையேதுமின்றி வளர்ப்பு என்பதில் துவங்கவேண்டும். பின்னர் சேர்ந்து கல்விகற்றல் சாத்தியமாகலாம் என அவர் கருதினார். திருமணம் என்பது புனித காரியம் என்றால், பெண் தன் துணையை தேர்ந்தெடுப்பதில் கலந்து பேசப்படவேண்டும். தொடரப்போகும் அவ்வாழ்க்கையின் விளவுகள் குறித்த புரிதலுடனும் அதை செய்யவேண்டும் என அவர் யங் இந்தியாவில் ஆகஸ்ட் 19, 1926ல் எழுதினார். வரதட்சிணை கேட்பவன் தன் கல்வியையும் நாட்டையும் அவமதிக்கிறான். இந்த மானக்கேடான வழக்கத்திற்கு எதிராக பொதுஜன அபிப்ராயத்தை மேம்படுத்தவேண்டும். மணம் என்பது பெற்றோர் செய்துகொள்ளும் பணப் பேரமாயிருக்கக்கூடாது. சாதிக்கட்டுபாடு என்ற பெயரில் இக்கொடுமை நிகழும் என்றால் இளஞர்கள் சாதிக்கட்டுகளை தகர்த்தாக வேண்டும் . மனப்போக்கில் புரட்சிகரமான மாறுதலுக்குரிய கல்விமுறை வளரவேண்டும் என ஹரிஜன் இதழ் மே 23, 1936ல் எழுதினார். வரதட்சணை திருமணங்களை அவர் Marriage of purchase எனவும் விமர்சித்தார். பணம் கொடுத்தால்தான் பெண்ணிற்கு திருமணம் செய்யவேண்டும் என்ற நிலை தன் கட்டுப்பாட்டில் உள்ள பெண்களுக்கு ஏற்படும் எனில் அவர்களிடம் மணம் செய்துகொள்ளாமல் இருப்பதே நல்லது என சொல்வேன் என்றார். பாரம்பரியம் சமூக அந்தஸ்தை பார்க்காமல் வெறும் அன்புவயப்ப்பட்ட மணவாழ்க்கையோ அல்லது அந்தஸ்து பாரம்பரியம் இருந்து அன்பில்லாத மணவாழ்க்கையோ ஏற்பிற்குரியதாக இருக்காது என்கிற கருத்தை அவர் ஹரிஜன் ஜூன் 5 1937 இதழில் எழுதினார். புலனடக்க இல்லறம் என்பதை அவர் லட்சியமாக சொல்கிறார். மனைவி தோழியாதல் வேண்டும். அவள் காண்ட்ராக்ட் அடிமையல்ல. தன் வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்க மனைவிக்கும் கணவனைப்போல் உரிமை உண்டு என்று சத்திய சோதனையில் அவர் குறிப்பிட்டார். தான் கருதுவது சரி என நினைக்கும் மனைவி அவ்வழி சென்று விளைவுகளைப் பற்றி வாய் திறக்காமல் அனுபவிக்க உரிமை உண்டு என அவரது அக்டோபர் 21, 1926 யங் இந்தியா பேசியது. ஆடவன் ஆசைகாட்டுபவனாகவும் ஆக்கிரமிப்பாளனாகவும் இருக்கிறான் என அவர் ஹரிஜன் ஜூலை 23 1938ல் எழுதினார். ஒருவர் கெட்டால் அக்குடும்பத்திற்கே கெடுதல் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லையே என அவர் ஹரிஜன் இதழில் கற்பிக்கிறார். மூடுமந்திரமில்லாத ஒளிவுமறைவற்ற மணவாழ்க்கையில் இருவரும் ஒருவராகும்போது சிறந்த வாழ்க்கை அமையும். சிற்றின்பத்திற்கான அலங்காரம் என்பதை அவர் ஏற்கக்கூடாது என பெண்ணிடம் எடுத்து சொல்கிறார். வரம்புமீறிய இன்பம் மனித சாதியின் ஆரோக்கியத்திற்கே பாழ் என்பதை அவர் அழுத்தமாக விளக்கி வந்தார். உயிரை உண்டாக்கவல்ல உயிர்தாதுவான விந்தை தன் புலத்தில் கண்டவாறு ஏற்பது குற்றம் என அவர் கருதினார். ஆற்றல் அழிப்பு என்பதுமட்டுமல்ல கடவுளுக்கும் சமூகத்திற்குமான துரோகம் எனவும் அவர் பேசினார். இளைஞர்களுக்கு பாலியல் கல்வி குறித்தும் பயிற்சி கொடுக்கப்படவேண்டும் என்றார் காந்திஜி. ஆணின் கைப்பாவையல்ல மனைவி. அழைப்புகளையும் நிராகரிக்கவேண்டிய திடம் வேண்டும் என எடுத்துச் சொல்வார். பிள்ளைப்பேறு ஒன்றிற்காகவே கலவி, மற்றக்காலம் பிரம்மசரியம் என அவர் வற்புறுத்தியவர். கலவி என்பது பிள்ளைப்பேறு என்கிற விருப்பம் சார்ந்த ஒன்றிற்குரியதாகவும் அதற்குரிய தகுதி பெற்றவர் தாங்கள் என்பதறிந்தும் இருந்தால் நலம் என்பதையும் அவர் சுட்டிக்கட்டினார். . செயற்கைமுறைகளை அனுசரிப்பது என்பதை அவர் ஏற்கவில்லை. அதை துர்நடத்தைக்கு துணைபோதல் என்கிறார். அதில் நோய்நீக்கம் இல்லை. நோய் உருவாதல் நரம்புத்தளர்ச்சியில் கொண்டுபோய்விடும். வீரிய இழப்பு உடல் ஆன்மா ஆகியவற்றின் ஆரோக்கிய வீழ்ச்சியாகவே அமையும் என அவர் யங் இந்தியா ஏப்ரல் 2 1925ல் எழுதினார். நடுத்தர வகுப்பை சேர்ந்தவரே தன் பிறப்பு உறுப்பை அதிகம் தவறாக பயன்படுத்தி பலம் இழப்பவராக இருக்கின்றனர் என அவர் ஹரிஜன் மார்ச் 28 1936ல் எழுதினார். விவசாயிகள் போல் வயலில் அருகருகே நின்று வேலை செய்பவர்களுக்கு சதா சிற்றின்ன்பம் என்பது இருப்பதில்லை. வாழ்க்கையெனும் போராட்டமே முன்நிற்கிறது என்றார். செயற்கை முறைகளால் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் ஞானோதயம் பற்றி அவர் கேலி செய்தார். உணவு பற்றாக்குறை ஏற்பட்டு பாதாளம் போய்விடுவோமா என கேள்வி எழுப்பினார். பிள்ளை வேண்டும் என விருப்பம் இல்லாதபோது ஏன் தீண்ட அனுமதிக்க வேண்டும் என்பது அவர் தொடர்ந்து தொடுத்த கேள்வி. மறுக்கும் மனோதிடம் வேண்டும் என்பதை பெண்ணிடம் காந்திஜி எதிர்பார்த்தார். மணவாழ்க்கை உலகிற்கு உதவுவதையும் நோக்கமாக கொண்டது. இங்கு நடத்தை என்பது மிக முக்கியமானது. இருபாலரையும் இந்து மதம் சரிநிகர் சமானமாகவே கருதுகிறது. பல தீமைகள் பின்னர் புகுந்திருக்கலாம். ஆண்பெண் உறவு உலக அன்பிற்கான படிக்கட்டு என்றார் காந்திஜி. மணவாழ்க்கைகு ஆன்மீக வளர்ச்சி அவசியம் எனக் கருதினார். சட்ட வழிகளில் கணவனுக்கு தண்டனை பெற்றுத்தருதல், மற்றும் ஜீவனாம்சம் பெறுதல் போன்ற நடவடிக்கைகள் பயன்படுவதில்லை என்பதே தனக்கு கிடைத்துள்ள அனுபவம் என்றார் காந்திஜி. கணவன் தவறிழைத்தால் பெண் தனியே போய் வாழ உரிமையுள்ளவள் என்பதை அவர் ஏற்காமல் இல்லை. இந்துமத தூய்மையை விரும்பினால் சிறுவயது கைம்பெண்களுக்கு நன்றாக மணம் செய்விக்கவேண்டும். அதை மறுமணம் என சொல்ல தாம் விரும்புவதில்லை என்றார் காந்திஜி. முதலில் நடந்தது மணமா என வினவினார். நாம் பசுபாதுகாப்பு எனப்பேசுகிறோம். பெண்ணின் கற்பு பாதுகாப்பு முக்கியமல்லவா. மிருகத்தன்மையுடன் நடந்துகொண்டால் இந்தியா உய்வதற்கு வாய்ப்பில்லை என்றார் காந்திஜி. பெண்டிரை அவரவர் குடும்ப தாய், சகோதரி போல் பார்ப்பதற்கு கற்க வேண்டாமா எனக்குரல் கொடுத்தார். பெண்களுக்கு மட்டும் விபச்சாரிகள் என பட்டம் தருகிறோம். நடத்தைக்கெட்ட ஆண்கள் விபச்சாரிகள் அல்லவா . உடல் விற்றுப்பிழைக்கும் தொழிலை சட்டவிரோதமாக்கவேண்டும் என செப்டம்பர் 15, 1946 ஹரிஜன் இதழில் அவர் முன்மொழிந்தார். சட்ட உதவியுடன் பொதுஜன அபிப்ராயம் இதற்கு துணைநிற்கவேண்டும் என்றார். பெண்ணை விபச்சாரம் செய்கிறாள் என குற்றம் சுமத்துபவர்கள் ஆண்களால்தான் இது நேருகிறது என்பதையோ ஆணின் நடத்தைக்குஷ்டம் என்பதையோ அறிந்து செயல்பட்டால் விபச்சாரம் இராது. அனைவரும் பார்த்துக்கொள்ள முடிவெடுத்தால் சுற்றுவட்டாரங்களில் இத்தீமை நிகழாது. தீமை இருக்காது. அந்த அபாக்கியவாதிகளின் வீடுகளுக்கு போவாரிடம் நம் பிரச்சாரம் செல்லட்டும் என்றார் காந்திஜி. தேவதாசிகள் என அழைத்து மதத்தின் பெயரால் தேவதேவனை அவமானப்படுத்துகிறோம் என்றார். ஆண்கள் தங்கள் நடத்தைக்கேட்டிற்கு தனிவகுப்பார் ஒன்றை வைத்திருப்பது மனித வாழ்க்கை குறித்த என் கவலையை அதிகப்படுத்துகிறது. பெண்ணைக் காப்பதில்தான் ஆணுக்கான பெருமையிருக்கிறது என்றார். பெண் தான் தாக்கப்படுகையில் அகிம்சை முறைகளைப் பற்றி யோசிக்கவேண்டியதில்லை. நகங்களும் பற்களும் கடவுள் அளித்துள்ளார். முடிந்தவரை உபயோகிக்கலாம். தற்காப்பு முயற்சியில் உயிரை விடநேர்ந்தாலும் முயற்சிக்கவேண்டும் என அவர் ஹரிஜன் மார்ச் 1 , 1942ல் எழுதினார். பெண்கள் தற்காப்பு என வரும்போது அவர்களுக்கு அகிம்சையை அவர் வலியுறுத்தவில்லை. நகைகளில் என்ன கலையழகு இருக்கிறது. கழுத்தாகட்டும், கையாகட்டும் தலையில் சூடுவதாக இருக்கட்டும்- பார்க்க சகிக்காமல் அழுக்குச் சேர உதவுகின்றன. விலை அதிகம் உள்ள இவைகளால் நாட்டிற்கு நஷ்டமே. இதில் ’முதல்’ முடக்கப்படுகிறது. நகைகள் கைகால் சங்கிலி விலங்கு என்ற எண்ணம் தேவைப்படுகிறது. பார்ப்போரை கவரத் தக்கவகையில் உடை தேவையா? பவுடர் வர்ணம் கொண்டு இயற்கைக்கு மாறாக காட்டிக்கொள்ளவேண்டுமா என்கிற கேள்வியையும் காந்திஜி எழுப்பினார். பெண்களுக்கு எஜமான் ஆண்கள் என்ற எண்ணம் மாறவேண்டிய காலம் வந்துவிட்டது. ஒருவர் மற்றவர் மீது ஆதிக்கம் செய்யவேண்டிய அவசியமில்லை என்றார். பெண்களின் அழகு ஆடை ஆபரணங்களில் இல்லை- அவர்களின் தூய உள்ளத்தில்தான் இருக்கிறது. பெண்கள் தங்களை அலங்கரித்துக்கொள்வதை விட்டுவிடலாம். ஏதாவது மணம் வீசவேண்டும் என அவர்கள் விரும்பினால் உள்ளத்தின் நறுமணமாக இருக்கட்டும் என்றார் காந்திஜி. ஆண்களையல்ல, மானுடத்தையே வசப்படுத்தும் சக்தியாக பெண்கள் திகழவேண்டும். கணவன் மனைவி உறவில் உடல் சார்ந்த அன்பு என்பதை விஞ்சி ஆத்மார்த்த அன்பே இருக்கவேண்டும் . II கஸ்தூரிபாய் அவர்களின் பொறுமையான நடவடிக்கைகள் காந்திஜியை நிதானம் அடைய செய்தன என்பதை அவரே எற்றுள்ளார். அதிகாரமிக்க கணவன் என்பதிலிருந்து வாழ்வின் சகதோழன் என்ற நிலைக்கு தான் மாறியதையும் அவர் குறிப்பிட்டுள்ளார், அவர் பாலின சமத்துவம் என்பதை தந்தைவழி மதிப்பீடுகளிலிருந்து வெளிப்படுத்துகிறார். பெண்களின் ராஜ்யம் என்பது வீடு என்றும், வெளிஉலகு ஆணுக்கு என்றும் வேலைப்பிரிவினை என்ற அம்சத்தில் அவர் பேசுகிறார். பெண்ணை தேச அன்னை என்றார். பெண்களுக்கு வாக்குரிமை என்கிற பிரச்சனையில் ஆதரவு அவசியம் தேவை என்றார். விடுதலை இயக்கம் பெரும் மக்கள் இயக்கமாக மாறவேண்டும் எனில் பெண்களும் அதில் பங்கேற்க தகுந்ததாக இருக்கவேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். என் எதிர்கால இராணுவத்தில் பெண்களே அதிகம் இருப்பர் என்கிற விழைவைக்கூட தெரிவித்தார். அபலைகள் என சொல்வதை கடுமையாக எதிர்த்தவர் காந்தி. பெண்களின் வீரம் நிறைந்த காவியக்கதைகளின் வரலாறு நம்மிடம் இருக்கிறது. பெண்கள் நாட்டிற்கு புகழ் சேரவேண்டும் என நினைத்துவிட்டால் அவர்களால் சில மாதங்களில் தேச முகத்தையே மாற்றிவிடமுடியும் என்கிற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார். மகப்பேறு தரும் பெண் தனது தூய அன்பை உலகம் முழுக்க கிடைக்குமாறு மாற்றினால் அவள் தான் உலகின் மெளனமான தலைமையாவாள். பெண்ணால்தான் சத்தியாக்கிரகத்தை, அகிம்சை போராட்டத்தை ஆண்களைவிட சிறப்பாக புரிந்துகொள்ள இயலும் என்றவர் காந்திஜி. மரபுசார்ந்த வாழ்க்கைமுறை என்பதை காந்திஜி ஆதரித்தார். ஆனால் அதில் எச்சரிக்கை உணர்வையும் அவர் வெளிப்படுத்தினார். மரபுடன் நீந்தி செல்வது நலம்- அதில் மூழ்கிவிடுதல் தற்கொலைக்கு ஒப்பாகும் என எச்சரித்தார். நமது சாஸ்திரங்கள் சொல்கின்றன என்று தெரிவிக்கப்பட்டாலும் குழந்தை மணம், பர்தா முறை, வரதட்சணை ஆகியவை தீங்கானவை என்றார். பெண்கள் தங்களை அரசியல் இயக்கங்களில் ஈடுபடுத்திக்கொள்ளும்போது இப்படிப்பட்ட சமூகத்தடைகள் உடைபடும் என்றார். 1931 அடிப்படை உரிமைகள் தீர்மானத்தில் ஆண், பெண் சம உரிமை என்பதை காங்கிரஸ் ஏற்றது. 1917ல் மார்கரெட் கசின் அவர்கள் முன்முயற்சியால் இந்திய பெண்கள் அசோசியேஷன் துவக்கப்பட்டது. 1926ல் இந்திய பெண்கள் தேசிய கவுன்சில் உருவானது. 1927ல் அனைத்து பெண்கள் மாநாடு நடந்தது. ஆண்களைப்போலவே பெண்களும் சிவில் ஒத்துழையாமையில் பங்கேற்று சிறைப்பட்டனர். 1932ல் அய்ரோப்பிய பெண்கள் மாநாட்டிற்கு செய்தியை காந்தியிடம் கோரியிருந்தனர். அய்ரோப்பா அகிம்சையில் ஊறி திளைக்கமுடியும் என்றால் அந்நாட்டு பெண்களால்தான் அது சாத்தியமாகும் என செய்தி தந்தார் காந்திஜி. ஆயுதமில்லாமல் எதிர்த்து நிற்கும் முறை பலாபலன்களை தருவதுடன் எதிர்ப்பவர் எதிர்க்கப்படுபவர் மதிப்புகளையும் உயர்த்தும் என்றார். பெண்களின் சிறிய அளவு பங்கேற்புகூட அகிம்சைக்கான வழியை பலமாக்கும். அவர்கள் அமைதியாக உறுதியுடன் துயரங்களை துன்பங்களை தாங்கத்தெரிந்தவர்களாக இருக்கின்றனர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி காந்திக்கு எழுதிய கடிதத்தில் சமூக மாற்றத்திற்கு உகந்த கல்வி, மேம்பட்ட பொது மருத்துவம், துப்புரவு ஆகியவை பெண்கள் கல்வி மூலமே சாத்தியமாகும் என குறிப்பிட்டார். பழக்க வழக்கம் என்கிற பெயரில் பெண்ணின் சுயம் நொறுக்கப்படவில்லையா? பெண்கள் கல்வி பெற்று அவளின் உடல் மனம் வளர்ச்சிக்கும் நினைத்ததை சொல்வதற்கும் உகந்த சூழல் நிலவுகிறதா ? உடல், அறிவு, ஆன்ம வளர்ச்சியை குழந்தை திருமணம் வேருடன் சாய்க்கவிலையா? இளம் வயது விதவைகளின் சொல்லணா துயர் உடனடி குணமருந்தை கோரவில்லையா? இந்து மதத்தின் பெயரால் இவ்வாறெல்லாம் நடக்கலாமா? தேசிய கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் பெண்களின் கொடுமைகள் பிரச்சனைக்கு மருந்து காணவேண்டிய பொறுப்பு இல்லையா? பெண்கள் விடுதலைக்காக காரியமாற்றவேண்டாமா ? எதிர்கால நிர்வாகிகளாக வரப்போகிறவர்கள் மனதில் மாற்றம் ஏற்படவேண்டாமா? சுதந்திரம் பிறப்புரிமை எனும் பேசும் நாம் முதலில் நம் பெண்களின் விடுதலையை அடையவேண்டாமா? என அடுக்கடுக்கான கேள்விகளை காந்திஜியிடம் தொடுத்திருந்தார். எனவே காந்திஜி தாங்கள் இதற்கான ஆலோசனைகளை அறிவுரைகளை தரவேண்டும் என முத்துலட்சுமி அவர்கள் எழுதி இருந்தார்கள். முத்துலட்சுமி அவர்களின் எதிர்பார்ப்பு மிகச்சரியானது என்றார் காந்திஜி. தீங்கு வேர்பிடித்து நிற்கிறது. நமது கல்விமுறையே அழுகிப்போய் உள்ளது. ஆண்களுக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது. அதே நேரத்தில் மேற்கு கல்வி கற்ற பெண்கள் தங்கள் பீடத்திலிருந்து இறங்கிவரவும் வேண்டுமே என்ற கேள்வியையும் காந்திஜி எழுப்பினார். கிராமப்புற வாழ்வை மறுகட்டுமானம் செய்வதில்தான் தீண்டாமை ஒழிப்பு, பொருளாதார பலன்களை மேம்படுத்தல், பெண்கள் விடுதலை மற்றும் இந்தியாவின் விடுதலை அடங்கியிருக்கிறது என யங் இந்தியா மே 23 1929ல் எழுதினார். என்னைப்பொறுத்தவரை ஆணும் பெண்ணும் சமதையாகவே சமூகத்தில் நடத்தப்படவேண்டும். ஆணின் அதிகாரம் மற்றும் புகழுக்கான துரத்தல் பேராசைதான் அனைத்து கேடுகளுக்கும் வேர். சொத்து மூலம் அவனிடம் அதிகாரம் பற்றுகிறது. சொத்து எனில் அதில் ஆண் பெண் இருபாலரும் சம பங்குக்குரியவர்கள்தான். அதேநேரத்தில் பெற்றோரிடமிருந்து பெறவேண்டியவை சொத்தைவிட நன்னடத்தை நற்குணங்கள்தான் என்றார் காந்திஜி. பெண் தந்தையின் வர்ணத்தை திருமணம்வரை பெறுகிறார். பின்னர் கணவரின் வர்ணத்தைப்பெறுகிறார். ஆணோ பெற்றவரின் வர்ணத்தில் தொடர்கிறார். அவர்கள் குழந்தைகளுக்கு வர்ணத்தை தேர்ந்தெடுக்க உரிமை உண்டா என கேள்வி எழுப்பப்பட்டது. என்னைப்பொறுத்த்வரையில் வர்ணம் என்பது எங்கு இன்று இருக்கிறது. பெயரளவில்தான் இருக்கிறது. இந்து சமூகத்தில் குழப்பம்தான் உள்ளது. வர்ணம் எனில் ஒரே வர்ணம்தான். ஆனோ, பெண்ணோ அனைவரும் சூத்திரர் என்ற வர்ணம்தான் என பதிலை தந்தார் காந்தி. மனுவைக்காட்டி பெண்களுக்கு சுதந்திரமில்லை என்பது புனிதமான ஒன்றல்ல ( For woman there can be no freedom, saying attributed to Manu is not to me sacrosanct). நமது மரபில் சகதர்மினி அர்தங்கனா (the better half) , தேவி என்றெல்லாம் அழைப்பதும் இருக்கிறது. என்னைப்பொறுத்தவரை வர்ணம் கூட உரிமை, சலுகை சார்ந்த அம்சம் அல்ல. கடமை மற்றும் பொறுப்பாக பாவிக்கப்படவேண்டும். பெண் வீட்டின் ராணியே தவிர வெறும் உடைமைப்பொருளல்ல என்பதே என்பார்வை என காந்திஜி ஹரிஜன் அக்டோபர் 12, 1934 இதழில் விளக்கமளித்தார். இத்தாலி பெண்களுக்கான செய்தியில் அவர் பெண்கள் மிலிட்டரிசம் என்பதை அகிம்சைபாற்பட்டு வெற்றிகரமாக எதிர்கொள்ளமுடியும் என்றார். இந்தியப் பெண்கள் சமூகத்தடைகளை மீறி வெளிவந்து நடத்திவரும் போராட்டங்களை பெருமையுடன் அவர் எடுத்துச் சொன்னார். அவர்கள் சிறை சென்றதை, குண்டாந்தடியால் அடிபட்டு இரத்தம் சொறிந்ததை பற்றி பெருமிதம் பொங்கப் பேசினார். மேற்கு மனிதர்கள் வழியிலேயே மிருகத்தனமான பாதைக்கு பெண்கள் செல்லவிரும்பினால் இந்திய பெண்களிடம் நீங்கள் கற்க ஏதுமில்லை என துணிச்சலாக அவர்களிடம் 1932ல் எடுத்துவைத்தார். போர் இனி இல்லை என உலக நாடுகளால் பிரகடனப்படுத்தமுடியவில்லை. பெண் படைப்பிரிவை உருவாக்கி ஆயுதம் ஏந்தப் பழக்குகிறார்கள். பெண்ணை வீட்டைத் துறந்து துப்பாக்கி ஏந்த வைப்பது அவமானத்திற்குரியது என்பது அவரது எண்ணம். அது அழிவின் துவக்கம் என எச்சரித்தவர் காந்திஜி.. பெண்கள் அகிம்சையின் அற்புத ஆற்றலை விளங்கிக்கொள்ளும் இதயம் இருந்துவிட்டால் உலகில் நல்லதே நடைபெறும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிகை என பெண் ஒருவர் எழுதியதை ஹரிஜனில் வெளியிட்டு காந்திஜி அதற்கான தனது பதிலை தந்திருந்தார். காங்கிரசில் பணியாற்றும் ஆண்கள் அகிம்சையில் முழு நம்பிக்கைவைத்து செயல்பட்டால் பெண்கள் வேறு மார்க்கத்தில் செல்லப்போவதில்லை. ஆனால் ஆண்களைவிட பெண்களால்தான் புதிய சோதனைகளை திறம்பட செய்யமுடியும் என நவம்பர் 5 1938ல் எழுதினார் காந்தி. ஆண்களுக்கு அவர்களின் மோசமான பழக்கங்களிலிருந்து விடுபட்டு அகிம்சை, உண்மைவழி செல்ல கற்றுக்கொடுத்தது போல் பெண்களுக்கு நீங்கள் காட்டும் வழி என்ன- பெண் என்ற வகையில் பாலின சுமை வந்துகொண்டே இருக்கிறது (the burden of my sex) என எழுதிய பெண்ணின் கடிதத்தை அவர் ஹரிஜனில் வெளியிட்டார். பதிலாக தனது கருத்தையும் பதிவு செய்திருந்தார். இருவருக்கும் ஆன்மா, உணர்வுகள் ஒன்றுதான். ஒருவரில்லாமல் மற்றவர் இல்லை. ஏதோ ஒரு காலத்தில் ஆணின் ஆதிக்கம் என்பது ஏற்பட்டுவிட்டது. ஆணைவிட பெண் இளைத்தவள் என்ற உணர்வு உருவாக்கப்பட்டு வருகிறது.. தாயின் குணங்கள் என்பதை ஆண்கள் பெறவேண்டியதில்லாமல் போனது. she is passive- he is active என்கிற எண்ணம் பதிந்துள்ளது. பெண் தன் அடுப்பங்கரையை காக்க ஆயுதம் ஏந்த சொல்வது வேறுவகைப்பட்ட காட்டுமிராண்டித்தனமாகவே இருக்கும். ஆண் குதிரை ஏறி வீரனாக வருவது போல் பெண்ணும் குதிரை ஏற்றம் பழகவேண்டும் என சொல்வது இருபாலருக்கும் மேலானதல்ல. தன் குடும்பத்தை சிறப்பாக பராமரிப்பது மற்ற எல்லா வீரச்செயல் போன்ற தைரியமான செயலே. உலகின் கேள்விக்கு அப்பாற்பட்ட தலைமை பெண்ணிடம் இருக்கிறது. தாங்கள் பலவீனமான பாலினமல்ல என்பதை பெண்கள் உணரவேண்டும் . அகிம்சை என்பது அளவற்ற அன்பை சொல்கிறது. துயர் தாங்குதல் இல்லாமல் அன்பு இருக்காது. பெண்களிடம் இந்த ஆற்றல் அதிகம். அவரவர் பிறந்த பாலினத்தில் இயற்கைக்குகந்த வேலைமுறைகளில் கடமையாற்றுவதே சிறந்ததாக தோன்றுகிறது என்றார் காந்தி. ஆணாகிய நம் ஒவ்வொருவருக்கும் பெண் முதலில் தாயாகவே வருகிறாள். பின்தான் தாரம் என்பது பெறப்படுகிறது. எழுத்தாளன் பேனாவை திறந்துகொண்டு தாய் என்பதை எழுத துவங்கினால் அவன் அங்க லட்சணங்களை அலங்காரங்களையா எழுதிச் செல்வான். நமது உபநிடதம், குரான், பைபிள் அவ்வாறு உடலை வர்ணிக்கிறதா? என ஹரிஜன் நவம்பர் 21, 1936 இதழில் காந்தியார் குறிப்பிட்டிருந்தார். III குழந்தை மணம் என்பதை சமஸ்கிருத பிரதிகளைக்கொண்டு நியாயம் செய்யமுடியாது. இம்முறையால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படும். இளம் விதவைகள் என்கிற கொடுமையும் சமூகத்தில் சேர்கிறது. இந்துமத பெயரால் இப்படி இளம் பெண் குழந்தைகளை பலவீனமாக்கும் செயல்களை தடுக்கும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவு நல்கவேண்டும் என அவர் யங் இந்தியா ஆகஸ்ட் 27 1925ல் குறிப்பிட்டிருந்தார். காந்தியடிகள் 1931 மக்கள்தொகை கணக்கெடுப்பின் விவரம் ஒன்றை எடுத்து சொல்கிறார். அதில் 5 வயதிற்குள் ( ஒருவயதில் கூட) பெண் குழந்தைகளில் 14.8 சதத்தினருக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. 5 வயது முதல் 10 வயதில் உள்ளவர்களுக்கு 19.3 சதம் நடந்துள்ளது. 10 முதல் 15 வயதில் 38.1 சதம். அதாவது 15 வயதிற்குள் திருமணமான பெண்கள் 80 சதமானவர். ஏறத்தாழ 100 பெண்களில் ஒருவருக்கு ஒரு வயது குழந்தையாக இருக்கும்போதே திருமணம் நடத்தப்பட்ட கொடுமையை பார்க்க முடிகிறது. 1921ல் ’ஒரு வயது மனைவிகள்’ 9066 என்றால் 1931ல் 44082 என 5 மடங்கு உயர்ந்துள்ளது. தீமை வேகமாக வளர்கிறது. ஆணுக்கு இதில் பெரும்பங்கு உள்ளது. அவன் மிருகமாகிவிட்டால் காரணகாரிய அறிவிற்கு செவி சாய்க்கமுடியாது. அதே போல் வயது வாரியான கைம்பெண்கள் என பட்டியல் தரப்படுகிறது. ஒரு வயதிற்குள் விதவை என்பதில் 1515 பெண் குழந்தைகள் காட்டப்பட்டுள்ளனர். 5 வயதிற்குள் என்றால் 30 ஆயிரம் பெண்குழந்தைகள். 15 வயதிற்குள் எனில் 2.20 லட்சம் என சொல்ல முடிகிறது. பிள்ளைப்பேற்றின் போது மட்டும் இளம் தாயார்கள் ஆண்டிற்கு 2 லட்சம் மரிக்கிறார்கள். அதாவது மணிக்கு 20 சாவு. இங்கிலாந்தில் ஆயிரம் பேருக்கு 4.5 சாவு எனில் இந்தியாவில் 24.5 ஆக இருக்கிறது. சராசரியாக பிறந்தவுடன் மரிக்கும் குழந்தைகள் 1000க்கு 181. சில இடங்களில் இது 400 தாண்டுகிறது. நமது கிராம சீர்திருத்த ஆர்வலர்கள் சர்வவியாபக கிராம வளர்ச்சி என்பதில் கவனம் செலுத்தினால்தான் தீமைகளை கட்டுப்படுத்த இயலும் என ஹரிஜன் நவ16 1935 இதழ் குறிப்பிட்டிருந்தது. மாணவர்கள் புத்தகத்தில் மட்டும்தான் அறிவைப்பெறமுடியும் என கருதவேண்டியதில்லை. உடல் உழைப்பு கண்ணியமானது எனக் கருதினால் வேலையின்மையை போக்கமுடியும். படித்தவர்கள் உழைப்பளர்களுடன் சேர்ந்து நிற்கமுடியும்,. அதேபோல் மணவாழ்க்கை என்பதை அவர்கள் கட்டாயத்தின் அடிப்படையில் ஏற்கத்தேவையில்லை.-எதிர்க்கலாம் என ஹரிஜன் ஜனவரி 9 1937 இதழில் காந்தி எழுதினார். கல்வி என்பது சரக்காக வியாபார விஷயமாக பார்க்கப்படுகிறது. குடும்பம் பெரிது - அனைவருக்குமாக உழைக்க வேண்டியுள்ளது என சொல்வதையும் ஏற்கமுடியாது, குடும்பத்தில் உடல் ஆரோக்கியம் உள்ள ஒவ்வொருவரும் உழைக்கமுன்வரலாமே. கைத்தொழில் செய்யலாமே. எம் ஏ படித்துவிட்டு சகோதர சகோதரிகளுக்காக உழைக்கிறோம் என சொல்பவருடன் இணையாக அக்குடும்ப உறுப்பினர்களும் உழைக்க இறங்கினால் பிரச்சனை குறையுமே என்ற பார்வையை காந்தி கொண்டிருந்தார். படித்த மாணவர்கள் கருத்தடை சாதனம் பற்றிக் கேட்கிறார்கள். மனைவி, கணவன் இருவருமே சுயகட்டுப்பட்டுடன் இருக்கமுடியும் என்பதை ஏன் குறைத்து மதிப்பிட்டுக்கொள்கிறார்கள் என காந்தி வினவினார். நமது செயல்களுக்கான விளவுகளை எதிர்கொள்ள தயங்குபவன் கோழை. தீமையுடனான போராட்டத்தை மறுப்பது ஆண்மையில்லை. அப்போராட்டத்தில் மகிழ்ச்சி இருக்கவேண்டும் என அவர் ஹரிஜன் ஏப்ரல் 17 1937 இதழில் எழுதினார். தலைவர் எவ்வழி குடிகள் அவ்வழி என்கிறது பகவத்கீதை. எனவே பணக்காரர்கள் எளிய வாழ்க்கையை நடத்தி முன்னுதாரணமாக திகழவேண்டும். ஆடம்பர திருமணங்களை கைவிட்டு எளியவகை திருமணமுறையை அனுசரித்துக் காட்டவேண்டும் . ஏழைகளும் இதனால் பலன் அடையமுடியும். திருமணகடன்களிலிருந்தும் அபார வட்டிகளிலிருந்தும் தப்பமுடியும். வீண்விரய செலவுகளை தவிர்க்கவேண்டும் என அவர் யங் இந்தியா செப் 26 1929ல் எழுதினார். ஒருமுறை ஹரிஜன் டிசம்பர் 31 1938 இதழில் நவீன பெண் அரைடஜன் ரோமியோக்களுக்கு ஜூலியட் ஆக காட்சிதருகிறாள் என காந்தியார் எழுதியது விமர்சனத்திற்குள்ளானது. அந்த ஜூலியட்டிற்கும் தன்னை தற்காத்துக்கொள்ளும் தைரியம் இருக்கிறது என அவருக்கு கடிதம் வந்தது. காந்தி அதற்கு பதிலளித்தார். ஆங்கில கல்வி பெறும் பெண்கள் எல்லாம் மாடர்ன் கேர்ல்ஸ் என தான் கருதவில்லை என்றார். மாணவர்களின் தொந்தரவு குறித்து எனக்கு பல தகவல்கள் வருகின்றன. தங்களை தற்காத்துக்கொள்ளவேண்டும் பெண்கள். தங்களுக்கு உதவிக்கொள்ளாதவர்க்கு கடவுள்கூட உதவமுடியாது என அவர் ஹரிஜன் பிப் 4 1939ல் பதில் தந்தார். படித்த இருவர் காதல்வயப்பட்டு கருவுற்று பின்னர் தற்கொலைக்கு உள்ளான செய்தி அறிந்தவுடன் காந்தி எழுதினார். இருவர் விரும்பி மணமுடித்தால் அதை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. சமுதாயம் அதை ஏற்காமல் இருக்கலாம். ஆனால் அவர்களை தற்கொலைக்கு தள்ளும் அழுத்தத்தை தரக்கூடாது. திருமணம் சமூக பயன்பாட்டிற்குரிய வகையில் நடந்தேறுகிறது. இடத்திற்கு இடம் அது மாறுபட்டு இருக்கும். மணம் ஒத்து வாழ விரும்புவர்கள் பொதுக்கருத்தை சாதகமாக உருவாக்க முயற்சிக்கவேண்டும். இயலாமல் போனாலும், சமூகம் பகிஷ்கரித்தாலும் அதைப் பொறுத்துக்கொண்டு வாழ கற்கவேண்டும் என்றார். அதேபோல் சமூகம் இதயமற்று பாராமுகமாக இத்திருமணங்களைப் பார்க்கக்கூடாது என்கிற அறிவுரையை அவர் ஹரிஜன் இதழ் மே 29 1937 முலம் வழங்கினார். கடமைகள் குறித்து விழிப்புணர்வு உருவாக்காத சடங்குகள் மீது எனக்கு நம்பிக்கையில்லை. என்னைப்பொறுத்தவரை பாலிச்சைக்காக என்றால் திருமணம் தேவையில்லை. குழந்தை வேண்டும் என்கிற அவசியம் உணரும்போது மட்டுமே பாலியல் உறவு என்கிற எண்ணத்துடன் தம்பதிகளின் சேர்க்கை இருக்கவேண்டும். மிருக இச்சை போன்ற ஒன்றிற்காக திருமணம் என்கிற எண்ணம் மாற்றப்படவேண்டும். இரு சமதையாளர்கள்தான் திருமணம் செய்துகொள்கிறோம் என்கிற உணர்வு பெருகவேண்டும். சுவாமி எனில் அப்பெண் சுவாமினியாகவேண்டும். மனம் சிந்தனை செயல் ஆகியவை ஒருங்கிணக்கப்படவேண்டும். தூய எண்ணம் நம்மை ஆட்கொள்ளட்டும். கஸ்தூரிபாவை பாலியல் இச்சை இல்லாமல் பார்க்க கற்றப்பின்னர்தான் தனது மணவாழ்க்கை மிகச்சிறப்பாக மாறியது என்கிற அனுபவத்தை காந்தி எடுத்துரைத்தார் . ஆனால் தனக்கு விழிப்பு காலம்கடந்து வந்தது என்பதையும் ஏற்க அவர் தயங்கவில்லை. அவரது ’சீதா’ ராமனுக்கு அடிமையானவள் அல்ல. கணவன்மார்கள் மனைவிமார்களின் கருத்தறியவேண்டும் என்கிற எண்ணமில்லாமல் வளர்ந்துள்ளனர். மீராபாய் மனைவிக்கு மார்க்கம் உண்டு எனக் காட்டினார். வாழ்க்கை என்பது கடமைக்கான காலம். மனிதகுல சேவைக்கான காலமும் கூட. மணவாழ்க்கையில் ஒருவர் ஒழுங்கை மீறினால் மற்றவர்க்கு உறவை துண்டித்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது என காந்திஜி தெளிவேற்படுத்தினார். மனைவி என்பவள் ஒருவரின் சொத்து போன்றவள் அல்ல. அவர் வாழ்வின் சரிபாதி. ஒருமித்த அமைதிக்கான வாழ்க்கை இருவர் கரங்களிலும் இருக்கிறது. ஒளிவுமறைவற்ற வாழ்க்கைதான் உகந்தது. ஆனால் மனைவி சொல்லத்தயங்கும் விஷயத்தை கட்டாயப்படுத்தி மனதை காயப்படுத்தவேண்டிய அவசியமில்லை. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள ஒழுங்கின் வழி செல்ல போராட்டத்தைக் கைவிடவேண்டியதில்லை. வங்கம், பீகார், அய்க்கிய மாகாணம் பகுதியில் பர்தாமுறை வழக்கமாக இருக்கிறது. படித்தவர் குடும்பங்கள்கூட இந்த மோசமான பழக்கத்திலிருந்து மீளமுடியவில்லை. Chastity is not a hot- house growth. It cannot be superimposed. It cannot be protected by the surrounding wall of the Purdha. ஆண்கள் தங்கள் குடும்ப பெண்கள் மீது நம்பிக்கை கொள்ளவேண்டும். ஒருகாலை பலவீனப்படுத்தி நாம் நன்றாக நடந்துவிடமுடியாது. பர்தா எனும் பழக்கம் ஆணின் பலவீனத்தைதான் காட்டுகிறது. அதை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என அவர் பிப்ரவரி 3, 1927 யங் இந்தியாவில் எழுதினார். அதேபோல் ஒழுக்கநெறி என்பது இதயத்தில் பற்றவேண்டும் என ஹரிஜன் ஜூன் 8 1940 இதழில் குறிப்பிட்டிருந்தார் காந்திஜி. குழந்தைகளை நல்வழிபடுத்திட அவர்கள்மீது தாயார் கோபப்படுவதை நான் அகிம்சைக்கு விரோதமானது என எடுத்துக்கொள்ள மாட்டேன் . நான் புத்திசாலி தாயார்களை மனதில்வைத்து இதை சொல்கிறேன் என திருத்தம் ஒன்றையும் காந்தி தந்தார். விதவை திருமணம் என்பது ஒருவகையில் அவசியம்தான். அந்த சகோதரிகளை மானம் மரியாதையுடன் சமூகமும் குடும்பமும் நடத்தாமல் இருப்பது துயரமானது. அவர்கள் யாரிடம் முறையிடுவார்கள்? குழந்தையில் விதவை எனில் மறுமணம் செய்ய முன்வருவது ஆண்களின் கடமையாகும் . சாதி, அந்நிய கல்விமுறை, பிரிட்டிஷ் அரசு என நாம் அடிமையாகியுள்ளோம் என அவர் பிப்ரவரி 4, 1926ல் யங் இந்தியாவில் எழுதினார். கங்காராம் என்பார் எழுதியுள்ள முதலில் சமூக சீர்திருத்தம், அடுத்து பொருளாதார சீர்திருத்தம் , முன்றாவதாக அரசியல் விடுதலை என்கிற கையேடு ஓவ்வொருவர் கைக்கும் கிடைக்கட்டும். ரானடே, கோகலே, சந்தவர்கர் ஆகியோர் அரசியல் விடுதலை என்பதுடன் சமூக சீர்திருத்தம் என்பதற்காகவும் உழைத்தனர். திலகரையும் நாம் குறைத்து சொல்லமுடியாது. இதில் ஒன்றன்பின் ஒன்று என்றில்லாமல் சேர்ந்து செல்லவேண்டியதும் அவசியமாகிறது. ஒவ்வொரு சீர்திருத்தமும் விழிப்புணர்வை உருவாக்கும் பொருட்டே செய்யப்படுகிறது. ஒருதுறையில் மட்டும் சீர்திருத்தம் என்பதுடன் விழிப்படைந்த மனம் திருப்தியுறமுடியாது என்ற விளக்கத்தை காந்தி ஆக 5 1926ல் தந்தார். அதே நேரத்தில் கங்காரம் ஏற்படுத்தும் விழிப்புணர்வின் அவசியத்தை அவர் வற்புறுத்தாமல் இல்லை. குழந்தைப் பருவ திருமணங்கள் தடுக்கப்படவேண்டும். பதிவிரதா தர்மம் என்பது பற்றியெல்லாம் இப்பெண் குழந்தைகளுக்கு என்ன தெரிந்திருக்கமுடியும். திருமண பந்தம் உண்மையில் புனித பந்தமாக வேண்டும் என்றால் பெண்கள் வளர்ச்சியுற்ற நிலையில் நடைபெறவேண்டும். இந்து விதவை என்பவள் சொத்துதான். ஆனால் பெண்குழந்தைகளை விதவையாக வைத்திருப்பது கறையே என அவர் ஆக்ஸ்ட் 19 1926ல் யங் இந்தியாவில் விவாதித்திருந்தார். வளர்ந்த நிலையில் ஆணோ, பெண்ணோ மறுமணம் செய்வது பாவமாகவே கருதுவேன் என்கிற கருத்தும் அவரிடம் இருந்தது. இது குறித்த பதிவை அவரின் அக் 14 1926 யங் இந்தியாவில் பார்க்கமுடிகிறது. அவருடன் தொடர்ந்து விவாதம் எழுப்பப்பட்டபோது நான் பாபம் என சொன்னேன் தவிர கிரிமினல் என சொல்லவில்லை என தெளிவுப்படுத்தினார். பாவம் என்பது மனசாட்சி மற்றும் கடவுள் சம்பந்தப்பட்டது. ஆனால் கிரிமினல் என்பது ஆண்வழிப்பட்ட அரசதிகாரம் கொண்டது என்ற தன்நிலைப்பட்டை அவர் நவம்பர் 18, 1926 யங் இந்தியாவில் தெரிவித்தார். Preservation of the High Ideals of Hindu Marriage and WidowHood என்கிற வாதம் அவரிடம் முன்வைக்கப்பட்டபோது அதை Prostitution of High Ideals எனச் சொல்லி நிராகரித்தார் காந்தி. குழந்தைகளின் ஓனர் அல்ல பெற்றோர். அவர்களின் காவலர்கள்தான் என்றார். தனக்கு பரிசு என்றால் என்ன எனத்தெரியாதபோது கன்யாதான் என்கிற பெயரில் பரிசளிப்பது எப்படி சரியாகும் என்றார் காந்தி. There is no gift where the capacity to receive is lacking என்கிற பதிலை அவர் நவ 11, 1926ல் யங் இந்தியாவில் எழுதியிருந்தார். பெண்குழந்தைகளுக்கு 15 வயதிற்குள் விதவை என பட்டம் தருவதை தன்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. பெண்ணின் மனம் ஒப்பாமல் அவளுக்கு கட்டயமாக மணம் முடிப்பது திருமணம்தானா என்பது கேள்வியாகிறது. விதவைப் பெண் ஒருவர் தன்னால் தூய்மையான வாழ்க்கை நடத்த இயலாது எனக் கருதினால் அவள் மறுமணம் செய்து கொள்ள உரிமை படைத்தவளே. இந்த மூன்று அம்சங்கள் குறித்தும் சமூகம் தனது தீர்வைக் காணவேண்டும் என அவர் ஆக 18, 1927 யங் இந்தியாவில் கோரியிருந்தார். I have repeatedly said that every widow has as much right to remarry as every widower. Voluntary widowhood is a priceless boon in Hinduism; enforced widowhood is a curse என அவர் ஹரிஜன் ஜூன் 6 1935ல் தனது நிலையை மேலும் தெளிவாக்கினார். கணவர் இறந்தபின் தன்னை அழித்துக்கொள்வது என்பது எந்த ஒரு பலனையும் தரப்போவதில்லை. அச்செயல் மோசமானது. தன்னை மாய்த்துக்கொள்ளாமல் தனது கணவரின் குடும்பத்தார்க்கோ, நாட்டிற்கோ சேவை செய்வதுதான் உகந்த பாதை. அவள் தனது வசதிகளை, புலன் உணர்வுகளை உதறலாம். இதற்காக குறுகிய குடும்ப வேலைகளில் தன்னை அடிமையாக்கிக்கொள்ள வேண்டியதில்லை. அதனது அனுபவத்தை, அடக்க உணர்வை கொண்டு தனது மறைந்த கணவர் சார்ந்த தன்மையுடன் அடையாளப்படுத்திக்கொண்டு உலகுடனும் அடையாளப்படுத்திக்கொள்ள கற்கவேண்டும். சதிக்கொடுமையை ஏற்கமுடியாது என அவர் யங் இந்தியாவில் மே 21 1931ல் எழுதினார். உயர்கல்வி படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் மணவாழ்க்கை குறித்து புரிந்துகொள்ளவேண்டும்.. 20 வயதிற்கு முன்னர் திருமணம் எதற்காக? மேற்கின் பாதிப்பிலிருந்து இக்கருத்தை சொல்லவில்லை குழந்தை மனைவி என்பது சரியானதல்ல. சில பிராம்மண இளைஞர்கள். தங்களுக்கு 16 வயதை கடந்த பெண் கூட கிடைக்கமாட்டாள். 12, 13 வயதில் அவர்கள் குடும்பத்தில் திருமணம் நடந்துவிடுகிறது என தெரிவித்தபோது , காந்தி அவர்களிடம் அப்போது பிரம்மணனாக இருக்காதே. 16 வயதைக் கடந்த விதவை பெண்களைக்கூட திருமணம் செய்துகொள்ளலாமே என விவாதித்தார். அப்படியும் இல்லையா நீ விரும்பும் வேறு 16 வயது கூடிய பெண்ணை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாமே என்றார். பெண்களுக்கு நாங்கள் எங்கே போவது எனக் கேட்கவேண்டாம். பெரும் புகழ்வாய்ந்த கல்விக்கூடம் என்கிறீர்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த, காரக்டரை நெறிப்படுத்த உதவாத கல்வி என்ன கல்வி? வர்ணாஸ்ர தர்மம் என நான் பரிந்து பேசிவருகிறேன். தீண்டாமை, விதவைத்தன்மை போன்றவற்றை பொறுத்துப்போகும் பிராம்மணீயம் எனக்கு நாறுகிறது. It is a parody of Brahmanism. நான் உங்கள் புத்தியுடன் உரையாட விரும்பவில்லை. மனதுடன் இதயத்திற்கு நெருக்கமாக உரையாட விழைகிறேன் . நாட்டின் நம்பிக்கை நீங்கள் என நான் எண்ணுகிறேன் என அவர் செப் 15, 1927ல் யங் இந்தியாவில் எழுதியிருந்தார். Ref: Gandhi on women Women and social injustice M K Gandhi சமூகத்தில் பெண்கள் காந்தியும் மார்க்சும் காந்தியர்கள் மார்க்சியம் குறித்தும் மார்க்சியர்கள் காந்தி- காந்தியம் குறித்தும் அவ்வப்போது எழுதியுள்ளனர். சோசலிஸ்ட்களுடனும் காந்தி தனது உரையாடலை நடத்தியுள்ளார்.. இவ்வகையில் ஆர் பி சின்ஹா அவர்களின் MAHATMA GANDHI AND KARL MARX (A STUDY OF SELECTED SOCIAL THINKERS) குறிப்பிடத்தகுந்த ஆக்கமாகும். ஆர் பி சின்ஹா பாட்னா ஏ என் சின்ஹா சோசியல் ஆய்வு மய்யம் சார்ந்தவர். அந்த மய்யம் 1958 ஜனவரியில் டாக்டர் பாபு ராஜேந்திரபிரசாத் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது. சின்ஹா பார்வையின் சாரம்சம் இங்கு விவாதிக்கப்பட்டுள்ளது. மார்க்ஸ் மறைந்தபோது காந்திக்கு வயது 14. மார்க்சைப் பற்றி அவர் அவ்வயதில் அறிந்திருக்க முடியாது. உலக விவகாரங்கள் பற்றி கவலை ஏதுமின்றிக்கூட இருக்கின்ற பருவமது. காந்திக்கு அவரின் 13 ஆம் வயதிலேயே மணமுடிக்கப்பட்டது. தந்தை ஸ்தானத்தில் இருந்த அவர் தனது 19 ஆம் வயதில் சட்டம் படிக்க லண்டன் சென்றார். அங்கு மாதம் 20 டாலரில் சிக்கனமாக 3 ஆண்டுகள் இருந்தார். பாரிஸ்டராக நாடுதிரும்பினார். தனது 23ஆம் வயதில் வழக்கு நிமித்தம் தென்னாப்பிரிக்கா சென்ற காந்தி அங்கிருந்த இந்தியர் உரிமைகளுக்கு போராடத்துவங்கினார். அரசியல் விஷயங்களின் தீர்விற்கு சிவில் ஒத்துழையாமை என்பதை அவர் பரிசோதித்தார். இந்து முஸ்லீம் ஒற்றுமையை அவசியமாக்கினார். இந்துக்கள் பலமொழியினர், பல சாதிக்காரர்கள். அவர்கள் மத்தியில் தீண்டாமை அனுசரிக்கப்படாமல் உடன் இருக்க கற்றுக்கொண்டார் -கற்றுக்கொடுத்தார். எவருக்குமே அவரது குடும்பச் சூழல்தான் முதல் கற்கைநெறிகளை தருகிறது. காந்திக்கும் அவரின் தாய் தந்தை பெரியவர்கள் மற்றும் நட்பு சூழல் செல்வாக்கை செலுத்தின. பின்னர் டால்ஸ்டாய், ரஸ்கின் செல்வாக்கு செலுத்தினர். புத்தர், ஜீசஸ், நபிகள், கீதை என அனைத்திலும் அவர் அகிம்சைவழிப்பட்ட தன்மைகளை காந்தி எடுத்துக்கொண்டார். இந்திய மக்களின் அரசியல் பொருளாதார சமூக சூழல்களை உள்வாங்கி அகிம்சை, ஒத்துழையாமை சத்தியாக்கிரகம், உண்மை- கடவுள், தர்மகர்த்தாமுறை, சோசலிசம் போன்றவற்றிற்கான விளக்கங்களை அவர் தந்தார். அவர் நடைமுறைக்கு முன்னுரிமை தந்தவர். எனவே அவரை இசம் சார்ந்து அதில் வைத்து பேசுவது கடினமாக இருக்கும். அவர் பழமைவாதியாக தெரிவார்- அனார்க்கிஸ்ட் ஆகவும் காணப்படுவார். முதலாளித்துவவாதி எனவும் அதே நேரத்தில் புராதன கம்யூனிஸ்ட் ஆகவும் தெரிவார். He belongs to all these camps and none என்கிற வரையறையைத்தான் சின்ஹா தனது மகாத்மாவும் மார்க்சும் என்கிற ஆக்கத்தில் தருகிறார். இவ்வரையறை ஏற்கத்தகுந்த ஒன்றே. உண்மை அகிம்சைக்குரிய அளவுகோலிருந்து தான் அனைத்தையும் காந்தி பார்த்தார். சுயமாக வரித்துக்கொள்ளும் எளிமை, உடல் உழைப்பிற்கு மரியாதை, அனைத்துமத சமத்துவம், மனித சகோதரத்துவம், வர்க்க மோதல் மூலம் சமூக அமைதிக்கு பங்கம் என்பதை ஏற்காமை, மனிதர்களுக்கு தொண்டு என்பதை விட்டுவிடாத துறவு மனப்பாங்கு, சுயத்துயர் மூலம் பிறர் மனதை மாற்ற முயற்சி போன்றவற்றை அவர் சோதித்தார். My bent is not political but religious என்பார். அவரிடத்தில் பொதுவாழ்வு நடைமுறைக்கும் தனி வாழ்வு நடைமுறைக்குமான பேதமில்லை. காந்தி தன்னை கோட்பாட்டாளராக முன் நிறுத்திக்கொள்ளவில்லை. அவர் அதில் ஆர்வம் கொண்டவராகவும் காட்டிக்கொண்டதில்லை. தனது பெரும் அனுபவங்களை கோட்பாடாக சாரப்படுத்தவும் அவர் முயற்சிக்கவில்லை. அவர் நடைமுறை இலட்சியவாதியாக அறியப்படலாம். Satyagraha is not a subject for research. you must experience it, use it, live by it என அவர் சொல்வார் . ஒவ்வொரு தனிநபரும் மரியாதையுடன் கெளரவத்துடன் அதேநேரத்தில் உழைப்புடன் வாழவகை செய்திடும் முறைக்கு அவர் நின்றார். தேவைகளை அதிகரித்துக்கொண்டே போவதற்கும் உழைப்பை குறைப்பதற்கும் அவர் ஏற்பை தெரிவிக்கவில்லை. அகிம்சை மற்றும் அன்பு எனும் சக்கரங்களால் வாழ்க்கைத்தேர் இயங்கட்டும் என்று வாழ்ந்து காட்டியவர் காந்தி. வலுத்தவர் நோஞ்சான்களை காக்கும் நெறிநிறை சமூகத்தை அவர் விழைந்தார். அதை கடமையாக்கிக்கொள்ள வேண்டினார். கடமையை சரியாக செய்து மற்றவற்றை கடவுளின் தீர்ப்பிற்கு விட்டுவிடலாம் என்கிற பார்வை கொண்டிருந்தார். ’ சர்வோதயா’ அனைவருக்கும் ஆக உயர் நன்மை என்பது அவரால் பேசப்பட்டது. அனைவருக்கும் நன்மை என்பது உரிமைகோரல்களால் வராது என்றார். கடமைகளால் தியாகங்களால் தான் அதை நிறைவேற்ற இயலும் என வற்புறுத்தினார். தனது இலட்சிய கனவுகொண்ட சமூக கட்டுமானம் எதிர்காலத்தில் எவ்வாறு அமையும் என்பதில் முற்று முழுதான நம்பிக்கை என எதையும் அவர் வெளிப்படுத்தவில்லை. காந்தியின் செயல்பாட்டில் தீர்வுமட்டுமல்ல அதற்கான வழிமுறைகளும் மிக முக்கியமானவை. இன்னும் சொல்லப்போனால் தீர்வைவிட வழிமுறைகளுக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கும் ( emphasis on means rather than ends). சோசலிசம் ஸ்படிகம் போல் தூய்மையானது எனில் அதற்கு ஸ்படிகம் போன்ற தூய நடைமுறைகளும் அவசியமாகிறது. உண்மையற்ற வழிமுறைகளால் உண்மையை பெற இயலாது என்பதில் வலுவாக நின்றார் வழிமுறைகள் என்பன நமது சக்திக்குள் நிற்பவை. முடிவுகளை நாம் அறியமுடிவதில்லை. நமது அற்புத உணர்வுகளை முடிவுகள் என்பதற்காக நாம் இழந்துவிடக்கூடாது. மோசமான வழிமுறைகள் மோசமான முடிவுகளுக்கே இட்டு செல்லும். It is dangerous ethics to make the end as the criterion என்கிற பார்வையை அவர் தந்தார். மனிதகுலத்துடன் ஒன்றி அடையாளப்படுத்தமுடியாத சமய வாழ்க்கையை என்னால் நடத்தமுடியாது என்பதில் உறுதியாக இருந்தார் காந்தி. இதற்கு அரசியல் பங்கேற்பு அவசியம். அவசியப்பட்ட அரசியலில் அகிம்சை எனும் போராட்டவடிவைக் கலந்தது காந்தியின் பிரதான பங்களிப்பாக பார்க்கப்படுகிறது. பொருளாதாரம் மதம் என்பதில் சுரண்டல் கூடாது என்றவர் காந்தி. தனிநபர் உடலில் எப்படி உறுப்புகள் தலைமுதல் கால்வரை சமமாக பாவிக்கப்படவேண்டுமோ அவ்வாறே உறுப்பினர்களாகிய மனிதர்கள் சமூகத்தில் சமமாக இருக்கவேண்டும் என்கிற சோசலிசம் அழகானதுதான் என்றார். அதில் இளவரசரும், விவசாயியும் செல்வந்தரும் ஏழையும் சம மட்டத்தில் இருப்பர். அதே நேரத்தில் எந்த நாடும் முழுமையாக நடைமுறையில் சோசலிஸ்ட் நாடாக இருப்பதாக தெரியவில்லை என்றார். காந்தியின் திட்டத்தில் 18 அம்சங்கள் இருந்தன 1. மத ஒற்றுமை 2. தீண்டாமை ஒழிப்பு 3. மதுவிலக்கு 4. காதி பயன்பாடு 5. கிராமத்தொழில்கள் 6. கிராம சுகாதாரம் 7. அடிப்படைக் கல்வி 8. வயதுவந்தோர் கல்வி 9. பெண்கள் கல்வி மற்றும் மேம்பாடு 10. ஆரோக்கியம் 11. மாநில மொழிகள் 12. தேசிய மொழி 13. பொருளாதார சமத்துவம் 14. விவசாயிகள் நலன் 16.. தொழிலாளர் நலன் 17. தொழுநோயாளர் நலன் 18. மாணவர் மீதான அக்கறை எதுவும் இவ்வுலகில் நிலைத்திருப்பதில்லை. அனைத்தும் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. இப்படிப்பட்ட சுழற்சிதனில் இல்லாமல் (கடவுளாக இருந்தால் தவிர) யாரும் இருக்கமுடியாது. அகிம்சை மார்க்கத்தில் செல்ல செல்ல வளர்ச்சியின் தூரங்களும் புலப்படும். சத்தியாக்கிரகம் என்கிற நாணயத்தில் நீங்கள் ஒருபுறம் அன்பையும் மறுபக்கம் உண்மையையும் காணமுடியும். அது சிறந்த தற்காப்புக்கருவி. எதிரி தடுக்கும்போது அது அதிகமாக ஒளிரும். எதிரியை காயப்படுத்தாது அவரின் சிந்தனைக்கு வேண்டுகோள் வைக்கும் முறையது என்பதை அவர் திரும்பத் திரும்ப சொல்லிவந்தார். கடவுள் மறுப்பு கொண்ட சோசலிசம் மீது அவருக்கு சந்தேகம் இருந்தது. மனிதனை எங்கே அது அழைத்துச் செல்லும் என்கிற கேள்வி இருந்தது. கடவுள்- சோசலிச இணைப்பு தேவை என அவர் கருதினார். வர்க்க போராட்டம் தவிர்க்கப்படவேண்டியது என்பதில் நின்றார். உண்மையில் போராட்டம் புரிதலுக்கும் அதன் இன்மைக்குமானதே என்றார். புரிதலின்மையை நாம் நீக்கவேண்டும் . மூலதனமும் உழைப்பும் ஒன்றுகொன்று நிரப்பிகளாக இருக்க வேண்டும். துணைபுரிவதாக இருக்க வேண்டும் என விழைந்தார். அவரது நிகழ்ச்சிநிரலில் எதையும் ஒழிப்பது என்பதில்லை, சீர்படுத்துவது என்பதே இருந்தது. இந்தியாவில் வர்க்கப்போராட்டம் அவசியமான ஒன்றல்ல என்றே அவர் கருதினார். அகிம்சையின் குரல் ஒலிக்கத்துவங்கினால் வர்க்கப்போர் என்பதற்கான தேவையும் எழாது என்றார். மூலதனத்திற்கு எதிராக காந்தி இருந்தாலும் முதலாளிகளுக்கு எதிராக இல்லை என்கிறார் சின்ஹா. மூலதனம் உழைப்பாளரை மாஸ்டராக கொள்ளவேண்டும் என காந்தி விழைந்தார். அளவிற்கு அதிகமாக பெற்றுள்ளவர் கடவுளின் குழந்தைகளான மனிதர்களுக்கு தன்னை தர்மகர்த்தா என உணரவேண்டும் என அவர் வேண்டினார். இந்த பொருளாதார நியதி சமயத்தன்மைக்கு உகந்ததாக அவருக்கு தோன்றியது. அகிம்சைக்கு பொருத்தமானதாகவும் தோன்றியது. உயர்ந்தவர் அடங்கிப்போகவேண்டியவர் என்பதில்லாமல் பரஸ்பர நலன்களுக்கானது தர்மகர்த்தா கொள்கை எனக் கருதினார். அரசாங்க சட்டவிதிகளுடன் கூடிய தர்மகர்த்தாமுறை என்று அவர் பரிந்துரைத்தார். இன்றைய முதலாளித்துவம் தன்னை ஒழுங்குபடுத்தி சரிப்படுத்திக்கொள்ள வாய்ப்பளிக்கிறது அக்கொள்கை. தனியார் சொத்துரிமை பெருக்கத்திற்காக தர்மகர்த்தா கொள்கை நிற்கவில்லை.. குறைந்தபட்ச வாழும் ஊதியம் என்பது போலவே அதிகபட்ச வருவாய் உச்சவரம்பும் தேவை. அந்த வித்தியாசம் பெருமளவு இருந்துவிடக்கூடாது. அவ்வப்போதைய சூழலில் அது equitable தன்மை கொண்டதாக இருக்கவேண்டும் என்பதை அவர் சொல்லிவந்தார்.. அவர் மார்க்சிய சோசலிசம், அனார்க்கிச கொள்கைகளை ஏற்கத் தயாராக இருந்தார். ஆனால் அகிம்சை, கடவுள் நம்பிக்கை, சத்தியாக்கிரகம் என்கிற கருத்துக்களுடன் சேர்ந்ததாக இருந்திட வேண்டும் என்றார் . காந்தியை எந்த அரசியல் கோட்பாட்டிற்குள்ளும் அடைத்துவிட செய்யும் முயற்சி தோல்வியிலேயே முடியும் என சின்ஹா வரையறுக்கிறார். ரஸ்கினும் காந்தியும் உயர்தட்டுப்பகுதியினருக்கு வேண்டுகோள் கொடுப்பவராக இருந்தனர். அவர்களின் மனமாற்ற சாத்தியம் குறித்துப் பேசினர். காந்தியின் தனிச்சிறப்பு சாதாரண மக்களின் பலத்தை செயலுக்கு வெளிக்கொணர்ந்ததில் இருக்கிறது. தனிநபருக்கு முக்கியத்துவம் என்றாலும் மனிதன் சமூக பிராணி என்ற புரிதல் காந்திக்கு இல்லாமல் இல்லை. தனிநபர்தன்மையை சமூக முன்னேற்றத்துடன் சரிகட்டிக்கொள்ள தெரிந்தவனாக மனிதன் இருக்கிறான் என அவர் தெரிவிக்காமல் இல்லை. தளையற்ற வரம்பற்ற தனிநபர்வாதம் என்பதை அவர் ஏற்கவில்லை. பாரம்பரிய சமூகத்தின் ஊடாகவே காலத்திற்கு தேவைப்படும் மாற்றங்களை தனிநபர் நன்மை கருதி அனுசரிக்கவேண்டியதன் அவசியத்தை- அதனால் வரவேண்டிய சமூக மாற்றத்தை அவர் வலியுறுத்தி வந்தார். We must gladly give up custom that is against reason, justice and religion of the heart என தெரிவித்தவர் காந்தி. கஞ்சப்பிரபுக்களிடம் தவறாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் செல்வம் போன்றவையே மோசமான சமூக பழக்கங்கள்- அவை விட்டொழிக்கப்படவேண்டியவை என்றார். தலைவர் என்றால் தைரியம், சகிப்புத்தன்மை, தியாக மனப்பாங்கு இருத்தல் வேண்டும் என்றபடி வாழ்ந்து காட்டியவர் காந்தி. வெகுஜனங்கள் மீதான நம்பிக்கை இழப்பு என்கிற கன்சர்வேடிவ் குணம் அவரிடம் இல்லை. தனது ஜனநாயகத்தில் ஒடுக்குமுறைக்கு இடமிருக்கக்கூடாது எனக்கருதினார். அகிம்சைபாற்பட்டதாக இருக்கவேண்டும் என்றார். மனம் செயல் மொழிகளால் காயம் ஏற்படுத்தாமை என தன் அகிம்சைக்கு விளக்கம் தந்தார். அவர் இலட்சிய மனிதராகவும் நடைமுறை வாழ்விற்கு முக்கியத்துவம் தருபவராகவும் இருந்தார். . அடைந்துவிட்டபின் இலட்சியம் இராது (Ideal ceases to be an ideal when it is realized) என்பார். மனிதனின் முழுமையடையாத குறை குணங்களால் வன்முறை நடந்தேறிவிடுகிறது என்கிற உண்மையை அவர் உணராமல் இல்லை. அவர் வெறும் கனவுலக சஞ்சாரியல்ல- அவரை pratcitical idealist எனக் கருத முடியும். ’கடவுள் மனிதர்கள்’ என்பாரிடமும் குறைகள் இருக்கும், தவறுகள் இருக்கும். ஆனால் அவர்கள் அதை உணர்ந்தவராக அறிந்தவராக இருக்கின்றனர். சரி செய்ய முயற்சிப்பவராக இருப்பர் என்பதில்தான் அவர்கள் உயர்வு இருக்கிறது எனக் கருதியவர் காந்தி. Gandhian ideal is to attain perfectibility and not perfection என்கிறார் சின்ஹா. நேரு சாத்வீகமான வழியில் சோசலிசத்தை அடையமுடியாவிட்டால் வேறுவழிகளில் சாத்தியம் என்றால் ஏற்கத்தான்வேண்டும் என சொல்லிவந்தபோது காந்தி தனது எதிர்வினையை தந்தார். வழிமுறைகள் குறித்த வேறுபாடுகள் எங்கள் மத்தியில் இருக்கிறது என்றார். வன்முறை வழியில் விடுதலை எனில் அது உண்மையானதல்ல என்றார் காந்தி. மனித நடத்தையைவிட புத்திக்கு நேரு முக்கியத்துவம் தர விரும்பினார். காந்தி அவ்வாறு செய்யவில்லை. புத்திக்கு அடுத்த நிலையையே அவர் தந்தார். அரசு என்பது திரட்டப்பட்ட வன்முறை வடிவக் கருவி என காந்தி கருதினார். அவரது இலட்சிய அகிம்சையை அரசு எனும் கருவி மேற்கொள்ளாது எனவும் கவலைப்பட்டார். அவர் பொன்னுலகு என கற்பனை செய்துகொள்ளாவிட்டாலும் தனிநபரின் வளர்ச்சிக்கு ஊறுவிளைவிக்காத, கிராம சமுதாயங்களின் கூட்டமைப்பு பற்றி பேசினார். அரசற்ற ஜனநாயகம் stateless democracy குறித்த பார்வையை கொண்டிருந்தார். அவரது இலட்சிய அரசை கீழ்கண்டவாறு புரிந்துகொள்ளலாம் 1. முற்றுமுழுதலானது என்கிற கொள்கை ஏற்காமை 2. உடல் உழைப்பிற்கு மரியாதை 3. அனைவருக்குமான உயர் நன்மை 4. குறைந்த அளவிலான அரசின் செயல்பாடு 5. குற்றம் தண்டனை என்கிற அளவில் மட்டுமே ஒடுக்குமுறை 6. சிறைக்கூடங்கள் சீர்திருத்தக்கூடங்கள் என்கிற அணுகுமுறை 7. போலீசார் மக்களின் நண்பர்கள் என்கிற தன்மையை பலப்படுத்தல் 8. முடிந்தவரை வழக்குகளை பஞ்சாயத்து மட்டத்தில் தீர்த்தல் 9. சமூக நீதிக்கு உகந்த பொருளாதர நிலைமைகளை உருவாக்குதல் 10. தர்மகர்த்த கொள்கை சார்ந்த நடைமுறை செயல்கள் 11. வருவாய் முறைகளை மாற்றுதல்- மதுபானங்களிலிருந்து வருவாய் ஏற்காமை 12. உழைப்பவர்களுக்கான ஊதிய கூலி முறைமை 13. அடிப்படைக்கல்வி மேம்பாடு 14. உரிமைகளைவிட கடமை சார்ந்த சமூகம் கட்டுதல் சின்ஹா காந்தி மார்க்ஸ் ஒப்பீட்டை செய்கிறார் . கார்ல் மார்க்ஸ் (1818-1883) பல்கலை படிப்பிற்கு பின்னர் பத்திரிகை துறைக்கு நுழைந்தவர். அன்றுள்ள ஜெர்மன் சூழலில் அவரது பத்திரிகை எழுத்துக்கள் தீவிரப்பட்டதாக பார்க்கப்பட்டது, அதிலிருந்து வெளியேறி தனது 25 ஆம் வயதில் பாரிஸ் செல்கிறார். பாரிசில் புருதான் போன்ற பிரஞ்சு சோசலிச செல்வாக்கில் இருக்கிறார். பின்னர் அவருடன் வேறுபடுகிறார். எங்கெல்சின் தோழமை கிடைக்கிறது. பிரஸ்ஸல்சில் தங்குகிறார். 1848ல் இருவரின் புகழ்வாய்ந்த கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியாகிறது. தொடர்ந்த வாழ்க்கைப்போராட்டத்திற்குப் பின்னர் லண்டன் வந்து வாழ்நாள் முழுதும் தங்குகிறார். அமெரிக்க பத்திரிகைகளுக்கு சிலகாலம் எழுதிவந்தார். அவரின் மூலதனம் முதல் வால்யூம் 1867ல் வெளியாகிறது. அவர் 1883ல் மறைகிறார். அவரது அடுத்த வால்யூம்கள் 1885, 1895ல் வெளியாகின்றன. மார்க்ஸ் இயக்கவியல் பார்வையை ஹெகலிடம் கற்று அதை நேர்படுத்திக்கொண்டார். பெரும் உழைப்பாலும் மேம்பட்ட அறிவுத்திறனாலும் பலநாடுகளின் நிலைமைகள் குறித்து கற்றறிந்தார். ஹெகல், மார்க்ஸ் இருவருமே மனித வாழ்க்கையின் முன்னேற்றத்தை கட்டம் கட்டமாக பார்த்தனர். மார்க்ஸ் ஒன்றை மறுத்து அதிலிருந்து எழும் அடுத்த உயர்நிலையாக சமூக வரலாற்றைப் பார்த்தார். ஹெகலின் அந்நியமாதலையும் மார்க்ஸ் ஏற்றார். முதலாளித்துவ சமூகம் குறித்த தீவிர ஆய்வும் அதை வீழ்த்தி எழும் சோசலிச சமூகம் கட்டமைக்கும் அனைவருக்குமான பெரும் நன்மைகள் பற்றிய பிரதியை பொருளாதார தீர்மானகரவாதம் என குறிப்பிடுபவர்களுடன் சின்ஹா இணைகிறார். Critique of political economy ல் மார்க்சின் கோட்பாடு சொல்லப்படுகிறது. உற்பத்திஉறவுகள் மனிதர்களின் மிகமுக்கிய பரஸ்பர உறவாகிறது. சமூக கட்டத்தின் அடிப்படையாக இந்த உற்பத்தி உறவுகள் நிலவுகின்றன. அதன் மேல்கட்டுமானமாகத்தான் அரசியல், சட்டம் போன்ற சமூக உணர்வுகளின் தொடர்புகள் பிரதிபலிக்கின்றன. இருப்புதான் உணர்வை தீர்மானிக்கிறது. உணர்வு சமூக இருப்பை தீர்மானிக்கவில்லை. நிலபிரபுத்துவ சமுதாய உறவுகளிலிருந்து மாறிவந்த முதலாளித்துவ சமுதாயமும் உற்பத்தி சார்ந்த சமூக நடவடிக்கைகளில் பகைமை முரண்பாடுகளை கொண்டிருக்கிறது. அச்சமூகத்தில் எழுந்து வரும் உற்பத்தி சக்திகள் அதன் தீர்விற்குரிய பொருளாதாரம் உருவாக்கும் காரணிகளில் ஒன்றாகவும் இருக்கிறது. இது வர்க்கப்போராட்டத்திற்கு இட்டுச் செல்கிறது. அடிப்படையில் மார்க்சிய பொருளாதார நிர்ணயவாதம் சமுகத்தை அடிப்படையாக கொள்கிறது- தனிநபரை அல்ல. எனவே அதன் தீர்மானகரவாதம் சமுகத்தில் தங்கியிருக்கிறது என்பது சின்ஹாவின் கருத்தாகவுள்ளது. முதலாளித்துவ உற்பத்திமுறையில் ஊதியம் பிழைத்துவாழும்நிலை அளவிற்கு வைக்கப்படுகிறது. குறைந்த ஊதியத்திற்கு போட்டியின் காரணமாக உழைப்பாளர் சந்தையில் கிடைக்கின்றனர். இந்த iron law of wages மூலம் பெரும் சுரண்டலுக்கு உழைப்பாளர் உள்ளாக்கப்படுகின்றனர். சுரண்டலால் உபரி மதிப்பு கிடைக்கிறது. உபரிமதிப்பை அதிகரிக்க முதலாளிகள் நடவடிக்கைகள் எடுப்பர். இந்த முரண்பாடு எதிர்வினையாக தொழிலாளிவர்க்க உணர்வை அதற்கான அமைப்புவடிவங்களை உருவாக்குகிறது. பாட்டாளிகளின் பலம் அதிகரிக்க முதலாளித்துவத்திற்கு சவக்குழி தோண்டப்படும். உற்பத்தி சாதனங்கள் தொழிலாளர் கைகளுக்கு மாறும். அதை அவர்கள் சோசலிச முறைகளில் நிர்வகித்து அனைவருக்குமான நல்வழிகளை உருவாக்குவர் என மார்க்சியர் பேசுவர். ஒவ்வொரு புரட்சிகரப்போராட்டமும் அதுகாறும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஒரு வர்க்கத்திற்கு எதிராகவே நெறியாண்மை செய்யப்படுகிறது. கம்யூனிஸ்ட் உணர்வு பேரளவான வீதத்தில் உருவாவதற்கும், இந்த லட்சியத்தின் சாதனைக்கும் மனிதர்கள் பேரளவான வீதத்தில் மாறுதல் அடைவது அவசியம். இந்த மாறுதல் ஒரு புரட்சியில் மட்டுமே நடைபெறமுடியும். புரட்சி காலகாலமான குப்பைகளைக் களைந்தெறிவதில் வெற்றிகண்டு சமுதாயத்தை புதிதாக நிறுவுவதற்கு தகுதி வாய்ந்ததாக முடியும். முதலாளித்துவம் தூக்கி எறியப்பட்டு தொழிலாளர் ஆட்சிநிர்வாகம் ஏற்படும். இதுவும் ஒருவகை தர்மகர்த்த முறை என வகைப்படுத்துகிறார் சின்ஹா. இவ்வாதத்தை மார்க்சியர்கள் நிராகரிப்பார்கள். பாட்டாளிவர்க்க அரசாங்கம் செய்யவேண்டிய சில நடவடிக்கைகளை மார்க்ஸ் சொல்கிறார். 1. வாரிசு சொத்துரிமை ஒழிக்கப்படும் 2. நிலவுடைமை இருக்காது. வாடகைமுறையில் பயன்படுத்தவழியிருக்கும் 3.முற்போக்கான வரிவிதிப்பு 4. தேசிய வங்கி முறையில் கடன்கள் 4.போக்குவரத்து, வர்த்தக முறைகள் நாட்டுடைமை 5.கட்டாய உழைப்பு 6.இலவசக் கல்வி- பொதுப்பள்ளி, கல்வியை பொருள் உற்பத்தியுடன் இணைத்தல் 7.கிராம நகர நம்பிக்கையிழப்பு மற்றும் பகைமைகளைஅகற்றல் 8.ஆலை உற்பத்திகருவிகள் விரிவாக்கம்- தரிசு நில மேம்பாடு 9.உழைப்பு அனைவரின் கடமை 10.விவசாயத்தை தொழில் துறையுடன் இணைத்தல் 11. குழந்தை உழைப்பு ஒழிப்பு பொதுப்பட சொத்துடைமையை ஒழிப்பதல்ல, முத்லாளித்துவ சொத்துடைமையை ஒழிப்பதே சோசலிசத்திற்குரிய சிறப்பியல்பு. சொத்தானது அதன் தற்கால வடிவில் மூலதனத்திற்கும் கூலியுழைப்பிற்கும் இடையிலான பகைமையை அடிப்படையாகக் கொண்டதாகும். மூலதனம் தனியாளின் சக்தியல்ல, சமூக சக்திகொண்டது. கம்யூனிச சமுதாயத்தில் சேமித்துத் திரட்டப்பட்ட உழைப்பானது தொழிலாளியின் வாழ்வை வளமடைந்து ஓங்கச் செய்வதற்கான ஒரு சாதனமாகவே இருக்கும். சமுதாயத்தின் உற்பத்திப் பொருட்களை சுவீகரித்துக் கொள்வதற்கான வாய்ப்பைக் கம்யூனிசம் எம்மனிதனிடமிருந்தும் பறிக்கவில்லை. இப்படி சுவீகரிப்பதன் மூலம் அவன் ஏனையோரது உழைப்பை அடிமைப்படுதுகிறவனாகும் வாய்ப்பைத்தான் அவனிடமிருந்து பறிக்கிறது என மார்க்ஸ் விளக்குவார். மார்க்சிய கோட்பாடுகளை ஆய்வு செய்தால் வழிமுறைகள் குறித்த முக்கியத்துவம் ஏதும் இராது என்கிற முடிவிற்கு சின்ஹா வருகிறார். இறுதி இலக்கு முக்கியத்துவம் பெறும். முதலாளித்துவ சக்திகள் ஒழிக்கப்படவேண்டும்.. தொழிலாளர் அரசு அதே நேரத்தில் மையக் கட்டுப்பாட்டுடன் ஏற்படும். மார்க்சை நாம் சமூகவியலாளர் என சொல்லவேண்டும் என்கிறார் சின்ஹா. ஆனால் பின்வரும் எங்கெல்சின் விளக்கத்தை சின்ஹா பரீசீலிக்கவில்லை போல் தெரிகிறது. ”கேள்வி 16 தனியார் சொத்துடைமை ஒழிப்பை சமாதான முறைகளில் ஏற்பாடு செய்ய முடியுமா? நடைபெறக்கூடும் எனில் அது விரும்பத்தக்க காரியம். சதிதிட்டங்கள் எல்லாம் பயனற்றவை என்பது மட்டுமல்ல, கேடு விளைவிப்பவையுங்கூட என்பதைக் கம்யூனிஸ்ட்கள் நன்கு அறிவார்கள். புரட்சி முன் கருதலுடனோ தன்னிச்சையாகவோ செய்யப்படுவதில்லை என்பதையும், புரட்சி எல்லா இடங்களிலும், எல்லாக் காலங்களிலும், குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் முழு வர்க்கங்களின் சித்தம் மற்றும் தலைமையில் இருந்து அறவே சுதந்திரமான புற நிகழ்வுகளின் இன்றிமையாத விளைவே என்பதையும் அவர்கள் நன்றாக அறிவார்கள் (கம்யூனிசத்தின் கோட்பாடுகள் எங்கெல்ஸ் ).” மார்க்ஸ் காந்தி ஒப்பீட்டில் அவரவர் அணுகுமுறையில், வர்க்க முரண்பாடு, வர்க்க உணர்வு, முதலாளித்துவ ஒழிப்பு, சோசலிசம், தர்மகர்த்தாமுறைக்கான வழிகளை பேசியிருக்கின்றனர். சோசலிசம் உருவாக்கத்தில் வர்க்கமோதல், வழிமுறைகளுக்கான முக்கியத்துவம், மய்யம் நீக்கிய அதிகாரமுறை என்பதில் அடிப்படையான வேறுபாடுகள் இருவர் இடையேயும் பார்க்கமுடிகிறது. இசம் என்கிற வகையில் சோசலிசத்திற்கான பல்வேறு விளக்கங்களும் வந்துள்ளன. வன்முறை தவிர்க்கமுடியாத வழி என்பதை காந்தி ஏற்கவில்லை. காந்தி Man is the measure of reason என்பதில் பாயர்பாக் அருகில் வருகிறார். வர்க்கப்போராட்ட முறையில் வர்க்கமற்ற சமூகம் என்பதுடன் மார்க்சிய இயக்கவியல் நின்றுபோவதாக சின்ஹா கருதுகிறார். காந்திய இயக்கவியலில் the application of a technique of action to any situation of human conflict, a process essentially creative and inherently constructive என்பது சின்ஹாவின் மதிப்பிடலாக இருக்கிறது. கார்ல் பாப்பர் மார்க்சிய கொள்கையை வரலாற்றுபூர்வ கொள்கை என்றார். எதிர்கால பொருளாதாரம், அதிகாரம் ,அரசியல் வளர்ச்சி எவ்வாறு என கணிக்கும் வரலாற்றுபூர்வ வழியிலான கொள்கை என்றார். மார்க்சிடம் இருந்ததுபோலவே காந்தியிடமும் நம்பிக்கைகளை செயல் மூலம் சோதிக்கவேண்டும் என்ற உறுதியிருந்தது. ஆனால் காந்தி முன்முடிவாக எதையும், இப்படித்தான் மோதல் போகும் என்பதை வரையறுத்து வைக்காமல் இருந்தார். அவரது சத்தியாக்கிரகம் என்பது தெரியாத தீர்வை நோக்கிய நகர்தலாக இருந்தது. மனிதன் பகுத்தறிந்து நடந்துகொள்வான் என்கிற நம்பிக்கையின்பாற்பட்ட செயல் வடிவமாக இருந்தது என்கிற சுருக்கத்தை சின்ஹா தெரிவிக்கிறார். காந்திக்கு சமயம் மறுத்த அரசியல் அல்லது சோசலிசம் என்பது இல்லை- மார்க்சிய சோசலிசத்தில் இறைவனுக்கு இடமில்லை. Never covet any body’s position என்கிற ஈசோ உபநிடத வாக்கியத்தில் சோசலிச வேரை காந்தி கண்டதாக சின்ஹா சொல்கிறார். வன்முறை வழியாக பாட்டாளிகள் ஆட்சி அதிகாரம் கிடைக்கப்பெறுமானால் அதைவிட கூடுதல் வன்முறையால் அதை அவர்கள் இழப்பர் எனக் காந்தி கருதினார். எனது அரசு மக்களின் விருப்ப உறுதியை நிறைவேற்றவேண்டுமே தவிர அவர்களை கட்டாயப்படுத்தி கட்டளையிட்டுக் கொண்டிருக்கக்கூடாது என்றார். மேற்கத்திய சோசலிஸ்ட்கள் அரசாங்கத்தை தங்கள் கட்டுக்குள் கொணர்ந்தால்தான் சமத்துவத்தை கொணரமுடியும் என்கிறார்கள் என்கிற சந்தேகப்பார்வையை அவர் முன்வைத்தார். எனது சோசலிசத்தில் முதலாளி- தொழிலாளி, நிலப்பிரபு- குத்தகையாளர் இடையிலான இணக்கம் இருக்கும். அது அகிம்சை வழிப்படி இருக்கும் என்றார் காந்தி. ஆனால் மார்க்சிய மொழி இதை ஏற்பதில்லை. வேறுபட்ட வர்க்க நலன்கள் நிலவுவதால் இணக்கமும் ஒத்துழைப்பும் ஏற்படாது. மோதல் புரட்சி மூலமே பெரும்பான்மை வர்க்கமான பாட்டாளிகளின் ஆட்சி உருவாகி வர்க்கமற்ற இணக்க சமுதாயம் மலரும். வன்முறையா சமாதான வழியா என்பது எதிரி ஏந்தும் ஆயுதங்களைப் பொறுத்தது என்கிற பொதுப் புரிதலை நாம் அங்கு அறியமுடியும். காந்தியின் இலட்சியமான நிர்மாண திட்டத்தில் ( Constructive Programme) 18 அம்சங்கள் காணப்படுகிறது. மத ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, மது ஒழிப்பு, காதி, கிராமத்தொழில்கள், கிராம சுகாதாரம், அடிப்படைக்கல்வி, முதியோர் கல்வி, பெண்கள் கல்வி மற்றும் முன்னேற்றம், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த கல்வி, மாநில மொழிகளை வளர்த்தல், தேசிய மொழி, பொருளாதார சம்த்துவம், விவசாயிகள் முன்னேற்றம், தொழிலாளர், ஆதிவாசிகள், தொழுநோயாளிகள், மா ணவர் மீதான கவனம் ஆகியவை திட்ட அடிப்படைகள் மார்க்ஸ் , காந்தி இருவர் திட்டத்திலும் செயல்களிலும் ‘பங்கேற்போர் தியாகம்’ வலிந்து சொல்லப்படுகிறது. வன்முறையில் தியாகம் தேவைப்படலாம் என மார்க்சியம் பேசினால், காந்தி எதிராளிகளின் மனமாற்றத்திற்கு போராளிகளின் சுயவதைகளை self suffering பற்றி வலியுறுத்துகிறார். மார்க்சியம் காந்தியம் இரண்டிலும் இலக்கு அடைவதற்குரிய உறுதிப்பாட்டிற்கான முக்கியத்துவம் இருப்பதை நம்மால் உணரமுடியும். காந்தியத்தில் வழிமுறைகளின் முக்கியத்துவமும் சேர்ந்தே வலியுறுத்தப்படும். துணைநூல்கள்: 1. Mahatma and Marx R P sinha 2. மார்க்ஸ் எங்கெல்ஸ் நூல்தொகை 1 மஷ்ருவாலா பார்வையில் காந்தியும் மார்க்சும் கிஷோரிலால் மஷ்ருவாலா காந்தியின் நெருக்கமான தோழர்களில் ஒருவர். உப்பு சத்தியாக்கிரகம் , பிரிட்டிஷாரே இந்தியாவை விட்டு வெளியேறு போராட்டங்களில் பங்கேற்றவர். காந்தி துவங்கிய ஹரிஜன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். மஷ்ருவாலா 1952ல் தனது 62ஆம் வயதில் மறைந்தார். கல்வி முறை, சர்வோதயா குறித்த புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார். ’காந்தி மார்க்ஸ்’ அவரின் மிக முக்கிய ஆக்கங்களில் ஒன்று. இதற்கு வினோபா பாவே முன்னுரை தந்துள்ளார். இந்த இரு ஆளுமைகளும் முன்வைக்கும் சாரப்பொருள் இக்கட்டுரையில் இடம்பெறுகிறது. சொர்க்கம் கிட்டும் என்ற நம்பிக்கையில் திரும்ப திரும்ப புராணங்களை படிப்பவர்கள் இருக்கிறார்கள். அதே போல் நமது நண்பர்கள் சிலர் ருஷ்யாவில் சொர்க்கம் தரை இறங்கிவந்ததாக படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிற கேலியுடன் வினோபாபாவே முன்னுரை துவங்குகிறது. நூல் நூற்கும் போது ஒருமணிநேரம் கம்யூனிஸ்ட் நண்பரை தேர்ந்தெடுக்கப்பட மார்க்ஸ் நூல்களை வாசிக்க சொல்லிக் கேட்பேன். மார்க்சின் மூலதனத்தை முன்பே படித்திருந்தபடியால் என்னால் எளிதாக உள்வாங்க முடிந்தது. அவை திரும்பக்கூறல் முறையிலேயே இருப்பதை நான் கண்ணுற்றேன். அவர்கள் பெளதீகம் சித்தம் என்கிறார்கள். இந்தியா போன்ற நாட்டில் வன்முறையற்ற வழியில் புரட்சி சாத்தியமானது. ஜனநாயக முறைகளிலேயே சாத்தியம் என்பது எனது கருத்து என சொல்கிறார் வினோபாஜி. எந்த சமூக அமைப்பும் நிரந்தரமானதல்ல- சர்வாம்சமானதல்ல- காலாகாலத்திற்குமானதல்ல. குறிப்பிட்ட நிலைமைகளுக்கேற்ப , இடத்திற்கேற்ப, பல்வேறு காரணிகளுக்கேற்ப மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும். சமூக கட்டுமானத்தில் மூட நம்பிக்கை வைப்பது பயனளிக்காது. நடத்தை நெறிகளை மேம்படுத்தும் கட்டுமானங்களை உருவாக்கினால் பயனளிக்கும். அதற்கு அவசரப்படமுடியாது. மெதுவாக நடந்தேறினாலும் காத்திருக்கத்தான் வேண்டும். இதன் பொருள் மனிதர்களை தேவதைகளாக மாற்றும் செருக்கல்ல. நெறிகளின் மீதான விடாப்பிடியான நம்பிக்கையில் ‘சமூக கட்டுமானம்’ என்கிறோம். காந்தியை ’மகா ஆத்மா’ என்றும் மார்க்சை ’மகா முனி’ என்றும் வினோபாஜி குறிப்பிடுகிறார். கசடாகவாவது உலகில் ஏதாவது தங்கும் என்றால் அவர்கள் இருவருடைய கருத்துக்களாகத்தான் இருக்கும். காந்திய தத்துவம் என்பது எங்கும் அமைப்புப்படுத்தப்பட்டதாக திரட்சியானதாக இல்லை. ஆனாலும் சரியான சிந்தனை முறையின் வீரியத்தை அது கொண்டிருக்கிறது.. அமெரிக்காவின் முதலாளித்துவமா அல்லது ருஷ்யாவின் கம்யூனிசமா என்பது போட்டிக்குரியதாக தெரியலாம். ஆனால் காந்தியம் தான் பலப்பரிட்சையில் உள்ளது.. சிலர் Gandhism is communism minus violence என்கிறார்கள். ஆனால் அவை அடிப்படையில் வேறுபடும் கோட்பாடுகள் என்பது வினோபாவே தரும் விளக்கம். கம்யூனிசம் Intellectual jaundice கொண்டதாக உள்ளது என விமர்சிக்கிறார் வினோபா பாவே. அவர்கள் Mind Matter சர்ச்சையில் தெளிவாக கருத்துக் கூறுகின்றனர். ஆனால் ஆத்மா என எதையும் ஏற்பதில்லை. A soul less ideology has no place for the freedom of the individual. தனிமனிதர் வருவர் போவர் ஆனால் சமூகம் இருக்கும் என்பார்கள். புரட்சியின்போது ஆரம்பத்தில் ரத்த ஆறு ஓடினாலும் பின்னர் தேனும் பாலும் பாயும் என்கிறார்கள். ஜியோமதி கணக்குப் போல் புரட்சியின் விஞ்ஞானம் பற்றி அவர்கள் பேசுகிறார்கள் என்பது அவரின் மற்றொரு விமர்சனம். . காந்தி இந்திய கலாச்சார பின்னணி உடையவர் என்பதால் அம்மக்களின் மொழியிலேயே அவர் உரையாடினார்.. வர்ண வியஸ்தா என்பதற்கு அனைத்துவகை வேலைகளுக்கும் சம ஊதியம், போட்டியின்மை, தலைமுறைகளின் சக்திதனை முழுமையாக பயன்படுத்துவது போன்ற விளக்கங்களை நாம் பெறமுடியும். அதே போல் தர்மகர்த்தா கொள்கை என்பதையும் காந்தி விரிவுபடுத்தினார். அது சொத்துக்குரியது மட்டுமல்ல. மேலான அம்சங்கள் எனக் கருதப்படுகின்ற அனைத்திற்கும் உரியது. தன்னிடம் மிகுந்து இருப்பதாக கருதும் எதற்கும் அவன் தர்மகர்த்தா என்கிற மனோபாவம் என அதை விரிந்து காந்தி பொருள்தருவார்.( Whatever talents, physical strength, wealth or other capacities a person might possess, he should tkae them as having been given to him as a trustee, for the benefit of the world. loka sangraha- accommodation and adjustment of every one or the total well being of all.) இதை எவ்வாறு நிராகரிக்கமுடியும் என கேட்கிறார் வினோபாஜி. மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களைப்போலவே மெஷின்களும் அவனை அடிமையாகக்கூட ஆக்கிவிடுகிறதே. எனவே தான் மய்யம் நீக்கம் என்கிறோம். அது தொழிலுக்கு மட்டுமல்ல. அரசு அதிகாரத்திற்கும் ஆனது. உதிர்ந்து விழும் என ருஷ்யாவில் கம்யூனிஸ்ட்கள் பேசினாலும் அரசு இருந்துகொண்டும் பலப்பட்டுக்கொண்டுமே இருக்கிறது. டிராட்ஸ்கி தலையிலும் சம்மட்டி விழுந்ததே என்று குறிப்பிட்டார் வினோபாஜி. காந்தியம் மார்க்சியத்திற்கு மத்தியில் பொதுத்தன்மையே இல்லை என சொல்லமுடியாது. இல்லாதவர் குறித்த கரிசனம், பெரும் திரள் மக்களிடமிருந்து அவர்கள் நலன்களுக்காக எழுவது என்பதில் ஒற்றுமை நிலவுகிறது. ஆனால் அன்பால் மட்டுமே தீர்வு வந்துவிடுவதில்லை. தீர்வை கொணரத் திறனும் தேவை. . காந்தி வன்முறையில்லாத கம்யூனிஸ்ட் என்றும் காந்தியம் வன்முறை நீங்கிய கம்யூனிசம் எனவும் சொல்பவர்கள் உண்டு. ஆனால் இவ்வரையறை துல்லியமானதல்ல என்று வாதாடுகிறார் மஷ்ருவாலா. இப்படிப்பட்ட எளிய சுருக்கங்கள் மேலெழுந்தவாரியானவை.. காந்தியத்தை மார்க்சிய வழியில் சொல்லவேண்டும் என்கிற விழைவால் வருவது. முதலாளித்துவத்துடன் மார்க்சியம் முரண்பட்டாலும் மய்ய அதிகாரம் என்பதில் பொதுநிலையைக் காண்கிறது. பணப்பொருளாதாரம் பற்றியே இரண்டும் பேசுகின்றன என மஷ்ரூவாலா விசனப்பட்டார். அடித்தட்டு மக்களின் ஒடுக்கப்பட்டோரின் ஆதரவற்றவர்களின் உயர்வு என்பதில் மார்க்சியம் காந்தியம் பொதுப்புள்ளிகளை எட்டுகின்றன. ஆனால் அதை எட்டுவதற்கான பயணங்களில் வெவ்வேறு திசைப்படுகின்றன. மனிதர்கள் தங்களுக்கு முன்னர் சொல்லப்பட்ட கோட்பாடுகளில் நிறைவுறாது புதியன தேடுகிறார்கள். விளக்குகிறார்கள். தன் விளக்கப்படியான உலகை மாற்ற முயற்சிக்கிறார்கள். இதில் சிலர் வழிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. மார்க்ஸ் காந்தி இருவருமே ஒரு மூல அடிப்படை கொண்டவர்கள் (monobasists) என கிஷோரிலால் வரையறுக்கிறார். காந்திக்கு அடிப்படை பொருள் அல்ல வாழ்க்கை (basic is Life not matter– accepts the doctrine of God or Life alone is ). வாழ்வு என ஒன்றில்லாமல் பொருள் தன்னை சோதிட்டுக்கொள்ள முடியாது அனைத்து வாழ்வும் ஒன்றே என்கிற கருத்தை காந்தி வைத்திருந்தார். அனைத்தும் கடவுளின் படைப்பு என்றால் வெறுப்பு எப்படி இருக்கமுடியும். எவ்வாறு எனது இலக்கிற்காக எவரையும் தியாகம் செய்யமுடியும் என வினவினார். மார்க்சியத்தில் பொருள் தீர்மானகரவாதம். முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து பாட்டாளிகளின் ஆட்சியை ஸ்தாபிப்பது அங்கு இலட்சியம். பாட்டாளிகள் அதிகாரம் மூலம் கம்யூனிசம் என்றால் அங்கு வர்க்க மோதல்கள் இருக்காது- தனியார் சொத்துரிமை இராது- இலாபம் இராது என்பதும் பேசப்படுகிறது. பின்னர் வன்முறைக்கு வேலையிருக்காது என்கிறார்கள். இந்த லட்சிய முடிவை எட்டவேண்டும் என்பதில் அழுத்தம் தருவார்கள். வழிமுறைகள் பற்றி கவலைப்படுவதில்லை. இங்கு நியாய வழிகள் அநியாய வழிகள் என் பேசிக்கொண்டிருப்பதெல்லாம் அர்த்தமற்றவை. இந்த இலக்கிற்கு தடையாக எவர் வந்தாலும் அவர் துடைத்தெறியப்படுவார். இதற்கு நாடு தழுவிய அளவில் புரட்சி தேவைப்படும். நெறிகள் மதங்கள் எல்லாம் மக்களை குழப்புவன. அவை அபின் போன்றவை. சுரண்டுபவரின் சாதனங்கள் என்கிற கருத்தும் அங்கு நிலவுகிறது. காந்தியோ தொழில் வளர்ச்சிக்கு எதிராக சர்க்கா எனப் பேசிக்கொண்டிருந்தார். உலகம் பின்னோக்கி நகராது. எனவே காந்திய பொருளாதாரவாதம் தோல்விக்குரியது என்கிற நிராகரிப்புவாதம் எழுந்தது. ( According to Marxists, Gandhism is incompatible with communism). பொருளாதார காரணங்கள் மட்டுமல்ல, காந்தியம் மதம் கடவுள் என்கிறது. வன்முறையை நிபந்தனையாக்குகிறது என்பதாலும் காந்தியம் ஒத்துப்போகும் ஒன்றல்ல என மார்க்சியம் கருதுகிறது. அரசாங்கம் என இருந்தால் அது வன்முறையை இறுதியாக பயன்படுத்தியே தீரும். எனவே அதை எதிர்ப்பதற்கும் புதிய அரசு அதிகாரம் வருவதற்கும் வன்முறை தேவைப்படலாம். எனவே வன்முறை புரட்சி ஒன்றின் மூலம் பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசு என்கிறது மார்க்சியம். சிலர் சமூகத்திற்கு முக்கியத்துவம் தந்து தனிநபர்களை காவு கொடுப்பது பற்றி பேசுவார்கள். வேறு சிலர் தனிநபர்கள் இல்லாமல் சமூகம் இல்லை என்பார்கள். எனவே வாழ்க்கை குறித்து அனைவருக்கும் ஏற்புடைய ஒரே கண்ணோட்டம் இருப்பதில்லை. சிலர் தங்களது கருத்துதான் மிகச்சரியானது என்கிற வறட்டுபிடிவாதத்தில் நிற்பர். தங்களை ஏற்காதவர்கள் அறிவிலிகள், எதிரிகள் என்பர். எனவே அவர்களை அழித்து ஒழிக்க தங்களுக்கு அதிகாரம் தேவைப்படுகிறது என நியாயப்படுத்துவர். மானுட முன்னேற்றம் என்பது அறியாமையிலிருந்து விடுதலை என்பதாகவும், சார்ந்திருத்தல் என்பதிலிருந்து தன்னிறைவு என்பதாகவும், வறுமை அதிகாரமின்மை என்பதிலிருந்து வளம் அதிகாரம் என்பதாகவும் பார்க்கப்படுகிறது. உண்மையை அறியும் கடப்பாட்டில் அனைவரும் இருக்கின்றோம். நியாயமாக அன்பாக நடத்தப்படவேண்டும் என விழைகிறோம். அச்சமின்றி இருக்க வேண்டும் என விழைகிறோம். சமூகமும் தனிநபரும் சேர்ந்தே வளரவேண்டியுள்ளது. அதற்கு பரஸ்பர விட்டுக்கொடுப்புகள் அவசியமாகிறது. சில நேரங்களில் தனிநபர்கள் சமூகத்திற்காக தியாகம் செய்கிறோம். சிலநேரம் சமூகம் தனிநபருக்காக தியாகம் செய்துகொள்ள வேண்டியும் இருக்கிறது. குடும்பத்தில் இதை நாம் பார்க்கிறோம். உணர்கிறோம். இப்படி கடமையை செய்கிறோம் என்கிற உணர்வுக்கூட இல்லாமல் அங்கு அது நடந்தேறுவதையும் பார்க்கிறோம். எங்காவது சுயநலம் தலைதூக்கும்போது அதை சுட்டிக்காட்டும் நிலை ஏற்படலாம். எல்லா நெருக்கடிகளிலும் முடியாதவர், பலவீனமானவர்கள்தான் முதலில் காப்பற்றப்படவேண்டியவர்களாக இருக்கிறார்கள். காந்தியின் பாதை மத்திய காலத்திற்கு நம்மை இட்டு செல்லும் என்கிற விமர்சனம் சரியானதல்ல. கடந்தகாலம் பொற்காலம் என்கிற பொதுவான கூற்றும் சரியானதல்ல.. அவ்வப்போது மனிதன் ஏற்படுத்திக்கொண்டுவரும் முன்னேற்றங்களை நாம் விட்டுவிடவேண்டுமா. அந்த அந்தக்காலத்தில் சாக்ரடிஸ், புத்தர், கன்பூசியஸ், யேசு என கிடைத்ததுபோல்தான் காந்தியும் என்கிறார் கிஷோரிலால். அரசியல் நிறுவனம் என்கிற வகையில் முடியாட்சி, ஜனநாயகம், ஒற்றையாட்சி, ஃபெடெரல் ஆட்சி என்று மனிதன் ஏராள சோதனைகளை செய்துள்ளான்.. மார்க்ஸ் இவற்றின் உருவாக்கத்தை பொருளாதார காரணிகளிலிருந்து பார்த்தார். இனி வருங்காலம் தொழிலாளர் கரங்களில் ஆட்சி என்கிற முடிவினை எட்டினார். அதற்கு முயற்சிக்க கோரினார். இந்த முடிவினை எட்ட அதற்கு முன்னரான சமூகத்தின் பல நூற்றாண்டு ஆன்மீக நெறி சார்ந்த அம்சங்களை கைவிடவேண்டும் எனும் போது மார்க்சியத்தால் முழுமையான உண்மை என்கிற நிலையை எட்ட முடியவில்லை. காந்தியைவிட மேலான மனிதன் வரமுடியும். அற்கு ஆயிரக்கணக்கான தனிநபர்கள் நெறி சார்ந்த போராட்டங்களை மேலும் மேலும் தூய்மைபடுத்திக்கொண்டேயிருக்க வேண்டும். பலகொடுங்கோலர்களைவிட மோசமான கொடுங்கோலன் என்ற பெயரை வரலாற்றில் ஹிட்லர் எடுத்தர். ஹிட்லரைவிட கொடுங்கோலன் வரவும் வாய்ப்பிருக்கிறது. அத்ற்கான சாகசங்களை நடத்துவதன் மூலம் தான் அத்தகைய பிறப்பு ஒன்றும் நடந்தேறலாம். The moral goal is as important as political and economic goal. இதை புறக்கணிக்கும்போது பொருளாதார நன்மைகள் கூட உருவாகாமல் போகலாம். மார்க்ஸ் பேசிய வர்க்கமற்ற சமூகம் உருவாக வர்க்கப்போராட்டம் என்பது moral and psychological மாற்றங்கள் என்பதில்லாமல் வெற்றிபெறாது என்கிற கருத்தை கிஷோரிலால் தெரிவிக்கிறார். ஜாரின் கொடுங்கோன்மையை வன்முறை மூலம் வீழ்த்திவிட்டு அதனிடத்தில் குறிப்பிட்டவகை சர்வாதிகாரத்தை நிறுவியுள்ளதால் அதே முறையில் அவ்வாட்சியும் துடைத்தெறியப்படலாம் என்றார் கிஷோரிலால் மஷ்ரூவாலா. காந்தியின் பார்வையில் மனிதகுல மகிழ்ச்சிக்குரிய அடிப்படையான தேவைகள் என்பன :- அ) கடமையின்பாற்பட்டு மனிதர்கள் இயங்குவது- பேராசை, அதிகாரம், இலாப நோக்கத்திற்காக இல்லாமல் செயல்படுதல் ஆ) தன்னிடம் கூடுதலாக இருக்கும் அதிகாரம், சொத்து, கல்விப்புலமை, உடல்வலிமை போன்ற எதையும் தான் சமூகத்திற்கான டிரஸ்டி என்பதை உணர்ந்து செயல்படுதல். இதனை மூலதனமாக வைத்து சுரண்டாமல் இருத்தல் இ) தங்களின் திறமைகளுக்குரிய நேர்மையான கணக்குடையவர்களாக இருத்தல்- தனது ஆகச்சிறந்ததை கொடுப்பதற்கு ஈடாக குறைந்தபட்சமும் நியாயம் அடிப்படையிலும் தேவைப்படுவதை நுகர்தல். இந்த நிபந்தனைகளுடன் கூடிய மனித இயக்கம் மகிழ்ச்சியைத்தரும். காந்தி அடிப்படைகளை குறித்து கவனம் செலுத்தியவர். மனிதன் அன்பு என்பதைக் புறக்கணித்து எப்போதும் வெறுப்பை உட்கொள்ளமுடியாதவன். மனிதன் தன் வாழ்நாள் முழுதும் பயமுறுத்தும் பெரும் பேய் ஆக இருக்கமுடியாது என்கிற நம்பிக்கை அவரிடம் செயல்பட்டது. காந்தி வர்ணதர்மா என பேசும்போது உயர்வு தாழ்வு என்ற பொருளில் பேசவில்லை. அவரவர் வழிவழி வேலை என்பதை மட்டமானது அருவருக்கத்தக்கது என்கிற பொருளில் அவர் பேசவில்லை. கடின உழைப்பு - உடல் உழைப்பு என்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் அவரிடம் இருந்தது. அதேபோல் தனியார் சொத்துரிமை என்பதை அவர் எந்தவித சார்புகொண்டும் ஆதரிக்கவில்லை. அதை ஒழிப்பதற்கு உண்மையான வன்முறையற்ற அகிம்சா வழிதனை அவர் கண்டறியவில்லை என்கிற புரிதல் தேவை என்கிறார் மஷ்ருவாலா. உடல் உழைப்பு, சிறிய தன்னிறைவு வகைப்பட்ட தொழில் முறைகள், மய்யம் குவிக்கப்படாத அரசியல் பொருளாதார ஏற்பாட்டுமுறைகள் ஆகியவற்றிற்கு காந்தி அழுத்தம் தந்தார். மேற்கு வகைப்பட்ட பெருந்தொழில் மீது அவருக்கு உடன்பாடில்லை. கிராமங்கள் தன்னிறைவு கொண்டவைகளாக மாறவேண்டும் எனக் கருதி செயல்பட்டார். இதன் பொருள் எளிய வாழ்க்கை முறையில் வன்முறை அறவே இராது என்பதல்ல. அங்கு அது குறைவாக இருக்கும். எளிதில் கண்டுகொள்ளத்தக்கதாக- விரைவில் தடுக்கத்தக்கதாக இருக்கும் என்கிறார். அரசின் ரெஜிமெண்டேஷன் குறைவாகவும் தனிநபரின் சுதந்திரம் அதிகமாகவும் இருக்கவேண்டிய சமூகம் குறித்து காந்தி பேசினார். நகரங்களின் கோமான்கள் வாழ்க்கைக்கும் உழைப்போர் வாழ்க்கைக்கும் இடையிலான வேறுபாட்டைவிட நிலச்சுவான்தாரின் விவசாயத்தொழிலாளியின் வேறுபாடுகள் கிராமங்களில் குறைவாகவே இருக்கும் . கருத்துவேறுபாடுகள் மோதல்களை உருவாக்கும் என்கிற நிலையில் உண்மையான வன்முறையற்ற வழிகளில் தீர்வு என்பது மிக அவசியமாகிறது. நல்லமுடிவுகளை எட்ட தூயவழிகள் என்பது சமதையான சமூக உருவாக்கத்திற்கு அவசியமானது. அங்கு ஏமாற்று வழிகள் மூலம் அடைதல் என்பது இருக்காது. தான் சரி என நம்பிவிட்டதால் அப்படி நடந்து கொண்டோம் என்கிற சமாதானம் தேவைப்படாது. உன்னத சமூகம் அமைப்பதற்கு குறுக்கு வழிகள் சுலபப்பாதைகள் என ஏதும் இல்லை. காந்தியத்திற்கும் கம்யூனிசத்திற்கும் வேறுபாடுகளைவிட காந்தியத்திற்கும் முதலாளித்துவ சுரண்டல், சாதிய ஏற்றத்தாழ்வு கொண்ட நிலப்பிரபுத்துவ சமூகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் அதிகம் என்றார் மஷ்ருலா. அப்படி உயர்தட்டில் பொருளாதாரரீதியாக, சாதிரீதியாக இருப்பதாக நினைப்பவர்கள் டிரஸ்டியாக சமூகத்தில் மாறி தங்கள் சமூக பொறுப்புகளை உணர்ந்து நடக்கவில்லையெனில் வேறு விளைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டும். வன்முறையற்ற வாழ்க்கை முறை குறித்து பேசிய காந்தியடிகள் இல்லாத நிலையில் வன்முறையுடன் கூடிய கம்யூனிசம் என்பது தவிர்க்கப்படமுடியாத ஒன்றே என்கிற முடிவிற்கு மஷ்ருலா வந்தடைகிறார். காந்தியியம் என நாம் பேசுவது ரேங்க், தீண்டாமை, சாதியற்ற இந்தியா என்பதைத்தான். வட்டாரவாதம், வகுப்புவாதமற்ற இந்தியாவைத்தான். சுயநலமற்ற, ஏற்றத்தாழ்வுகள் இல்லாத இந்தியாவைத்தான். கடமையை உணர்ந்த ஜனநாயகத்தைதான். எனது கருத்துக்கள் என்பவை எப்போதும் இறுதியானவை அல்ல என காந்தியே பலமுறை தெரிவித்துள்ளார். ”என் வாழ்நாளில் மாற்றிக்கொள்ளக்கூடியனவாகவே எனது கருத்துக்கள் இருந்துள்ளன. ஆனால் குன்றுகளைப்போல உண்மையும் அகிம்சையும் பழமையானவை. இவற்றுடன் சோதனை மேற்கொண்டதே நான் செய்தவை எல்லாம்” என்றே அவர் பேசினார். அகிம்சை என்பது நான் மெதுவாக கற்றுத்தேர்ந்தது. காந்தியியம் என்பதில் எந்த இசமும் இல்லை என்பதுதான் உண்மை என சொல்லவிரும்புகிறேன் என்றார் காந்தி. உள்ளுணர்வு உந்துதலால் உண்மையின் பக்கமே நின்றிருக்கிறேன் என்றார் அவர். பிரச்சனைகளை உண்மையுடன், சேவை மனப்பான்மையுடன், அகிம்சை வழியில் அணுகவேண்டும் என்பதே காந்தி தரும் வெளிச்சம் என்கிறார் மஷ்ருவாலா. உண்மை என்பதற்கான விளக்கத்தையும் அவர் தருகிறார். உண்மை என்பது திற்ந்த மனதுடன் இருப்பது, அஞ்சாமல் தவறு என்றால் ஏற்பது, முரட்டு வன்முறைத்தன்மைக்குப் பதில் ஆத்ம சக்தியை அனுசரிப்பது என்றார் (Truth means that you will be always open minded and never afraid of retracing from or confessing an error, and will be prepared to risk your all for the cause, which for the time being you clearly conceive to be true-Soul force than brute force). அவருக்கு ஆழ்ந்த பிடிப்பை ஏற்படுத்தாதவை குறித்தோ, தானே முன்நின்று நடத்தவேண்டும் என நினைக்காத ஒன்றுக்காக காந்தி போராடுவதில்லை. ’சவுண்ட் கிளப்பும்’ போராட்டங்களில், மீடியா வெளிச்ச போராட்டங்களில் அவர் நம்பிக்கை அற்று இருந்தார். (He does not believe in sound box agitations or soap bubble demonstrations made more for the sake of newspaper reports than for coming to grips with the problem in hand.) ஆகாகான் மாளிகையில் அவர் தங்கியிருந்த காலத்தில் கம்யூனிஸ்ட் புத்தகங்களை காந்தி படித்ததாக மஷ்ருவாலா தெரிவிக்கிறார். மார்க்சின் தாஸ் காபிடலுடன் எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் நூல்களையும் படித்தார். சீனக் கம்யூனிஸ்ட்கள் குறித்தும் படித்தறிந்தார். துன்பப்படும் மனிதர்களின் துயர் நீக்குதல் கம்யூனிசம் என புரிதல் அவரிடம் இருந்தது. அவரது ஆசிரமத்தில் To each according to his need, from each according to his capacity என்பது வழிகாட்டும் வாசகமாக இருந்தது. காந்தி தனது சட்டபூர்வ தர்மகர்த்தாமுறை (statutory trusteeship) குறித்து விளக்கம் அளித்தார். முதலாளிகளுக்கு இது நல்வாய்ப்பு என்றார். தர்மகர்த்தா முறையில் பொறுப்பை சொந்தப்படுத்திக்கொள்தல் கீழிலிருந்து துவங்கவேண்டும் என்றார். பஞ்சாயத்துக்களில் துவங்கட்டும் என்றார். இன்று கம்யூனிஸ்ட்கள் சமத்துவம் என்பது குறித்த பிரச்சாரங்களில் மட்டும் இருக்கிறார்கள். ஆனால் அதில் வெறுப்பும் சேர்ந்தே விதைக்கப்படுகிறது என்கிற தனது கவலையை அவர் பகிர்ந்துகொண்டார். எனது திட்டத்தில் அரசாங்கம் மக்களின் விருப்ப உறுதிகளை நிறைவேற்றுவதாக இருக்குமே தவிர தன் அதிகாரத்தை பிரயோகிக்கும் ஒன்றாக இருக்காது. வன்முறையற்ற வழியில் சமத்துவம் என்பதைக் கொணரவேண்டும். அதற்கு மக்களை ஏற்க செய்திட வேண்டும். I claim to be a foremost communist எனக்கூட அவர் சொல்லிக்கொண்டார். சத்தியாக்கிரக வெற்றிக்கான நிபந்தனைகளாக அவர் மூன்றை குறிப்பிட்டார். எதிரி குறித்த வெறுப்புணர்வு இல்லாமை, பிரச்சனையின் நியாயத்திற்காக இறுதிவரை துயர்களை ஏற்கும் சித்தம் மற்றும் உறுதி என்பனவே அவை. லூயி பிஷருடன் அவர் நடத்திய உரையாடலின் போது சோசலிஸ்ட் நண்பர்களின் தன்னல மறுப்பு, தியாகம் ஆகியவற்றை தான் போற்றுவதாகவும் அவர்களுடன் வன்முறை -அகிம்சை என்பதில் தான் வேறுபடுவதாகவும் காந்தி தெரிவித்தார். சோசலிஸ்ட்கள் பலர் பிறப்பதற்கு முன்னரே நான் சோசலிஸ்ட் ஆனவன். ஜோகன்ஸ்பர்க்கிலேயே அதற்கான உறுதிப்பாடு எனக்கு ஏற்பட்டுவிட்டது. My socialism means even unto this last. I want freedom of full expression of my personality. சோசலிசத்தில் தனிநபருக்கு சுதந்திரம் இல்லையெனில், எதை அடையமுடியும். எனது சோசலிசம் ருஷ்ய வடிவத்திலிருந்து மாறுபட்ட ஒன்று. அரசாங்கமே எல்லாம் என்பதானதல்ல அது. மார்க்சியத்தை கம்யூனிஸ்ட்கள் பழுதாக்கிவிட்டனர். லெனின் துவங்கிவைத்தார். ஸ்டாலின் முடித்துவைக்கிறார் என்கிற விமர்சனப் பார்வை காந்தியிடம் இருந்தது என்பதை மஷ்ருவாலா முன்வைக்கிறார். ஆதாரம்: Gandhi and Marx sep 1951 K G Mashruwala லோகியா பார்வையில் காந்தியும் மார்க்சும் நவீன அரசியல் சித்தாந்தத்தில் ராம் மனோகர் லோகியா முக்கிய பங்களித்தவர். விடுதலை போராட்டம், காங்கிரஸ், காங்கிரஸ் சோசலிஸ்ட், சோசலிஸ்ட் இயக்கங்கள் என பயணித்தவர். தான் சரி என கண்டறிந்தவற்றிற்காக போராடியவர். மார்க்சியம்- காந்தியம்- ஆசியவகைப்பட்ட ஜனநாயக சோசலிசம் என பேசிவந்தவர். இந்திய வரலாற்றை வெறும் வர்க்க போராட்டம் என சுருக்கிவிடமுடியாது. சாதிய வரலாறை பார்க்காமல் இந்திய வரலாற்றை அய்ரோப்பிய நான்கு கட்ட சமுக அமைப்பு என மார்க்சிய விளக்கத்தினுள் அப்படியே பொருத்திவிட முடியாது என பேசியும் எழுதியும் வந்தவர் . சாதி குறித்த விரிவான உரையாடலை நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் நடத்தியவர். லோகியா மார்க்சை விட காந்தியிடம் நெருக்கமாக வந்தார். நேருவுடன் நட்பும் விமர்சனங்களையும் கொண்டிருந்தார். ஜெயபிரகாஷ் நாரயண், ஆச்சார்ய நரேந்திரதேவ் போன்றவர்களுடன் ஒன்றாக நின்று பணியாற்றினார். அவர்களுடன் கடுமையான வேறுபாடுகளை பகிரங்கமாகவும் வைத்தார். சோசலிஸ்ட் இயக்கம் மிக கடுமையான உடைவுகளுக்கு உள்ளாகி தனது அரசியலை நீர்க்க செய்துகொண்டுவிட்ட இன்றைய சூழலிலும் அவரது எழுத்துக்களின் பொருத்தப்பாடு குறித்த உரையாடல்களை உதிரியாக உள்ள லோகியா சிந்தனைவாதிகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவரது சில முக்கிய ஆக்கங்கள் இப்போதும் பேசப்படுகின்றன. 70 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் நடத்திய மார்க்சியம்- சோசலிசம் குறித்த உரையாடல்கள், சமத்துவம் குறித்த பேச்சுகள், உலக மனம்- மானிடவர்க்கம் போன்றவை தொடர் விவாதத்திற்கு உரியனவாக இருக்கின்றன, அவரது எழுத்துக்களில் சில முக்கியமானவை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வந்துள்ளன. மார்க்ஸ்- காந்தி- சோசலிசம், மார்க்சிற்கு பிந்திய பொருளாதாரம், Meaning of Equality, caste essays- speeches, சரித்திர சக்கரம் போன்றவை பொருட்படுத்த வேண்டிய ஆக்கங்களாக உள்ளன. இங்கு அவரின் மார்க்சியம் காந்தியம் குறித்த பார்வை சுருக்கமாக முன்வைக்கப்படுகிறது. மார்க்சியர் பேசிவருகிற வரலாற்று பொருள்முதல்வாத சமூக கட்டங்களை அப்படியே உலக நாடுகள் முழுமைக்கும் பொருத்த முடியாது என்பது லோகியாவின் முடிபு. இந்திய மார்க்சியர் சிலர் அடிமைச் சமுதாயம் இருந்ததாக பேசுவது அவருக்கு திரித்துக் கூறலாகவே படுகிறது. அதே போல் உலகம் முழுமையும் ஒரே கட்டத்தில் நிலபிரபுத்துவமும் ஏற்பட்டிருக்கமுடியாது. சோசலிசம் ஏற்பட்டு விஞ்ஞானத்தை பூரணமாக பயன்படுத்திவிட்டால் பொன்னுலகம் என்று பேசுவது யாந்திரிகமானது போன்ற விமர்சனங்களை லோகியா தொடுக்கிறார். எதிர்கால பொன்னுலகு (Golden Future) என்பதை அவர் விமர்சித்தார். மார்க்ஸோ வரலாறு என்பதே வர்க்கப்போராட்டத்தின் வரலாறு தான் என்கிறார். வர்க்கப்போராட்டம் என்பதை லோகியா மறுக்கவில்லை. உள்நாட்டு, வெளிநாட்டு பாட்டாளிகளுக்கான வேறுபாடு என்ற ஒன்றை மார்கஸ் கவனிக்க தவறினார் என்பது லோகியாவின் விமர்சனம். உலக ரகசியங்களை வெளிப்படுத்திய பொருள்முதல்வாத விளக்க சாவி மிக எளிதானதாக இருக்கிறது. ஆனால் அதன் ஒளி எந்த இருளை அகற்றியது என தெரியவில்லை என்றார். ஒன்றுக்கு மேற்பட்ட விதிவிலக்குகள் கொண்ட எதுவும் எப்படி பொதுவிதியாக இருக்கமுடியும் என கேள்வி எழுப்பினார். பொருள்முதல்வாதம் கூட ஐரோப்பிய பெருமிதவாதமாகவே அவருக்கு தெரிந்தது. வர்க்கங்களை ஒழிக்கவேண்டும் என்ற ஆர்வம் யாரைவிடவும் தனக்கு குறைவானதல்ல எனவும் தன்னை அவர் தற்காத்துக்கொண்டார். ருஷ்யாவில் உணவு பிரச்சனை தீர்க்கப்பட்டது சாதனை என பேசப்படுகிறது. அதிக நிலப்பரப்பு, குறைந்த மக்கள் சமூகம் உடைய நாடு ஒன்றை இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை - குறைந்த நிலப்பரப்புடன் ஒப்பிட முடியாது. ருஷ்யாவில் சதுர மைல் ஒன்றில் 20 பேரும், இந்தியாவில் 300 பேரும் வாழ்கிறார்கள். சரித்திர பூகோள நிலைகளை கணக்கில் கொள்ளாமல் செய்யப்படும் ஒப்பீடும் அதே முறையை எடுத்துக் கொள்வதும் எதிர்மறை விளைவுகளைக் கூட உருவாக்கும் என்பது லோகியாவின் வாதம். கருத்துமுதல்வாதம்- பொருள்முதல்வாதம் என நவீனமனம் இரண்டாக பிளவுபடுத்திக் கொண்டுவிட்டது. இரண்டிற்குமான முரண்பாடு தனக்கு தோன்றவில்லை என்றார் லோகியா. சரித்திரத்தில் நாம் பேசும் அசோகன், புத்தனைவிட புராண ராமனும் சிவனும் மக்களை கவ்வி பிடித்துள்ளனர். அன்பு, பக்தி, தயை போன்ற புனைவுகள் அய்க்கியம் ஒன்றை உருவாக்குவதை நாம் பார்க்காமல் இருக்கக்கூடாது. மனிதகுல வாழ்விற்கு வரலாறு உரைநடை என்றால், தொடர்ந்து மக்களிடம் செல்வாக்கு செலுத்திவரும் புராண புனைவுகள் கவிதைகள் போல் இருக்கின்றன. வரலாற்றிலிருந்து மட்டுமல்ல, புராணங்களிலிருந்தும் கூட மனிதகுல வரலாற்றை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. மதம் குறித்த விவாதத்தில் மதம் அபின் என்ற மேற்கோள்களுடன் நிற்க முடியாது. ஒழுக்கம், தனிநபர் குணநலன் மேம்பாடு ,பண்பாட்டுபோதனையில் கருணை புலனடக்கம் என்பதில் நாம் மதம் என்பதை ஒதுக்கமுடியாது என அவர் கருதினார். பொருளாதாரத்திற்கும், ஆன்மிகத்திற்கும் நிரந்தர பகைத்தன்மை இல்லாமல் உறவு ஏற்படவேண்டும் என்றார். போராட்டமின்றி எந்த மாற்றமும் வராது என்பதை ஏற்கும் லோகியாவால் அது ரத்தக்களறி மூலம் வந்தால்தான் சிறப்பு என்பதை ஏற்கமுடியவில்லை. ’புரட்சி’ புனிதமான நோக்கத்துடன் உறவுகொள்ள வேண்டும்.. இல்லையேல் எழாது- நிற்காது. நல்ல ஒன்றை தீய வழிகளால் அடையமுடியாது என்கிற காந்தியத்திற்கு அவர் வந்து சேர்கிறார். மூலதன குவிப்பு, ஏகபோகம் உருவாதல் ஆகியவற்றில் மார்க்சியத்தை நிராகரிக்க முடியாது என்பதை ஏற்கும் லோகியாவால், ஏழ்மை, வர்க்கபோராட்டம், புரட்சி ஆகிய விதிகளில் அவரை நிலைநிறுத்திக்கொள்ள முடியவில்லை. முதலாளித்துவத்தின் இறுதி கட்டமே ஏகாதிபத்தியம் என்கிற லெனினிய வரையறுப்பில் அவருக்கு விமர்சனங்கள் இருந்தன. ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் இரண்டும் சேர்ந்தே வளர்வதாக அவர் கருதினார். முதலாளித்துவம் வளர்வதற்கு இடமில்லாத நிலையில் போர்கள் ஏற்பட்டன என்பதை அவர் ஏற்கிறார். ஏகாதிபத்திய எல்லைக்குள் பல முதலாளித்துவங்கள் செயல்படுகின்றன. முதலாளித்துவம் குறித்த மார்க்சிய வரையறுப்புகள் மேற்கு அய்ரோப்பிய நிலவரங்களின் விளக்கங்களாகவே உள்ளன என்றார். குறிப்பிட்ட ஒருகாலகட்டத்தில் ஒரு தொழிலாளி பெறும் ஊதியம் எவ்வளவு, அக்காலத்திய உற்பத்தியில் ஒவ்வொரு தொழிலாளியின் சராசரி பங்கென்ன – அதன் வித்தியாசம்தான் உபரிமதிப்பு என்பதுதான் சரியான கணக்கீடு. இந்த கணக்கீடு உலகளாவியது. காலனிகள் முதலாளித்துவத்தின் கிராமங்கள் என பேசும்போது ரோசாலக்சம்பர்க் அருகில் லோகியா வருகிறார். நமது நகரங்கள் கிராமங்களை சுரண்டுவதைவிட காலனிநாடுகளை முதலாளித்துவ நாடுகள் சுரண்டுவது மிக அதிகமானது . இருவட்ட கருத்துதனை புரிந்து கொள்ளாமல் உபரிமதிப்பு கணக்கீட்டை சரியாக வரையறுக்க முடியாது என்பதும் அவரது விமர்சனம். ருஷ்யா சோவியத்தில் இலாப நோக்கில்லை என்றாலும் முதலாளித்துவ தொழில்நுட்ப அடிப்படையிலேயே செயல்படுகிறது என்றவர் லோகியா. ஒருநாட்டின் தொழில் நிறுவன பிரச்சனை வேறு- அது தனிஉடைமையா அல்லது பொது உடைமையா என்பது வேறு என்கிறார். விஞ்ஞானத்தை உற்பத்திக்கு பயன்படுத்தவேண்டிய எந்த நாட்டிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கவே செய்யும். உற்பத்தி, நுகர்வு, சேமிப்பு ஒன்றுடன் ஒன்று இயங்குபவை. முந்திய ஆண்டுகளில் சேமித்த உழைப்பு சக்தியே சோசலிச பொருளாதாரத்தில் மூலதனமாகிறது. கனரக எந்திரங்களாக காட்சி அளிக்கிறது. அதே நேரத்தில் குவியல் முறையில் எந்திரங்களை புகுத்தி பொருளாதாரத்தை நவீனப்படுத்தும் முயற்சி வறட்டுத்தனமாக அங்கு நடைபெறுகிறது என்ற விமர்சனத்தை அவர் வைத்தார். மார்க்சியம் தனது இறுதி இலட்சியமாக சுரண்டலற்ற சமுதாயம் அமைப்பது பற்றி பேசுகிறது. செயல்படகோருகிறது. அப்படி அமையும் சமுதாயம் மானுட ஆளுமைகளை உயர்த்தும் என நம்புகிறது. அங்கு சில காலத்திற்குள் அரசாங்கம் இற்று வீழும் என்றும் சொல்கிறது. எந்த இசத்தையும் பேசுகிற இறுதி இலட்சியங்கள் என்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து அதை மதிப்பிடவேண்டுமா? அதன் நோக்கங்களுக்கு அனுசரிக்கும் வழிமுறைகள் மதிப்பிடலுக்கு அப்பாற்பட்டவையா? கையாள விரும்பும் முறைகளின் சரி தவறு பற்றி பேசக்கூடாதா? வரலாற்றின் புதிய கட்டம் மார்க்சியம் கூறுவதுபோல்தான் கட்டாயம் நடக்கவேண்டுமா? வேறு எந்த வகையிலும் நடக்க இயலாது என்று விதியே தீர்மானித்துவிட்டதா போன்ற கேள்விகளை லோகியா எழுப்பினார். தன்னை pro Marxist என்றோ Anti Marxist என மதிப்பிடவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். உலகப் புரட்சிக்காக எவ்வழியும் உகந்ததே என மார்க்சியர்கள் கருதுகின்றனர். ஒழுக்கநெறி குறித்து அவர்களிடம் விவாதிக்க முடிவதில்லை. புரட்சிக்காக ஜனநாயகத்தை சிதைக்கவும் அவர்கள் தயங்குவதில்லை என்கிற விமர்சனம் லோகியாவிடம் இருந்தது. முதலாளித்துவ சங்கிலி அதன் வலிமையான கன்னியில் உடைவுறும் என மார்க்ஸ் நம்பினார். அதன் பலவீனக்கன்னி ருஷ்யாவில் உடைகிறது என டிராட்ஸ்கி எழுதினார். லெனின் எங்கு பாட்டாளிகள் இயக்க கட்சி வலுவாக தலையிடுகிறதோ அங்கு உடையும் என்றார். முதலாளித்துவ சங்கிலி உடைவது பற்றிய பார்வைகள் மாறுபட்டு தமக்கு கிடைப்பதாக லோகியா எழுதினார். உற்பத்தி சக்திகளை பொறுத்து அமெரிக்காவும் ருஷ்ய கம்யூனிசமும் ஒன்றுபோலவே நடப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இன்றுள்ள இந்தியாவில் (1952ல்) நபருக்கு ரூ 150 மதிப்புகொண்ட உற்பத்தி கருவிதான் இருக்கிறது. ஒட்டுமொத்த மூலதனமும் அவ்வளவுதான். முதலாளித்துவத்தை ஒழித்தபின் இச்சூழலில் நாம் அமெரிக்கா ருஷ்யா பொருளாதார நிலையை எட்ட வேண்டும் எனில் 20 கோடி வேலைக்கு தலா ரூ 10000 மூலதனமாவது வேண்டும். அதாவது 2 லட்சம் கோடி வேண்டும். 2000 பில்லியன் கோடி தேவை. நமது 5 ஆண்டு திட்ட ஒதுக்கீடோ 25 பில்லியன் அளவில் தான் இருக்கிறது. கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்தால் முதலீட்டிற்கு என்ன செய்வார்கள். ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் இறுதிகட்டம் என்பதெல்லாம் சரியல்ல. இரண்டும் இரட்டைப் பிறவிகள். சேர்ந்து வளர்ந்துவருபவை என்றார் லோகியா. மார்க்சியத்தின் அற்புதமான அம்சம் சொத்து குறித்த நாட்டத்திலிருந்து வெளியேற்றம் என்பதே ( Not to be fascinated by property). இந்தியாவின் இன்றுள்ள பொருளாதார நிலைமைகளை மேம்படுத்த அது முதலாளித்துவம் அல்லது சோசலிசம் என எந்த வழியானாலும் குறைந்தது 80 ஆண்டுகளாவது தேவைப்படலாம் . ஆசியா ஆப்ரிக்கா மக்கள் தங்கள் நாகரீகத்தை மேற்கு பாணியில் கட்ட முடியாது . முதலாளித்துவம் மனிதகுல முழுமைக்கும் மேம்பாட்டை தந்த முற்போக்கான ஒன்றாக ஒருகாலத்தில் இருந்தது. ஆனால் இப்போது சீரழிவுகளை தந்துவருகிறது என மார்க்சியம் சொல்வதில் திருத்தம் தேவை என்றார் லோகியா. அய்ரோப்பாவிற்கு ஒருகாலத்தில் முற்போக்கானதாக மேம்பாடுகளை தந்தது என்றுதான் சொல்லவேண்டும் என்றார். கம்யூனிஸ்ட்கள் தாங்கள் மிகப்பெரிய லட்சியத்திற்கு வரித்துக்கொண்டவர்கள் என்பதால் நாம் பேசும் நன்னடத்தை உபதேசங்களை அலட்சியப்படுத்துகிறார்கள். உலக புரட்சி என்பதால் ஜனநாயக சீர்குலைவுகளைப்பற்றி கவலைப்படுவதில்லை. தங்களின் சோசலிச சமூகம் என்கிற உண்மைக்காக கொலைகளுக்கு அஞ்சுவதில்லை. உலக தொழிலாளர் ஒற்றுமை என்பதன் பொருட்டு நாடுகளின் சுயேட்சைத்தன்மை பற்றிக் கவலைப்படுவதில்லை. எனவே நெறிகளைப் பற்றி அவர்களுடன் உரையாட முடிவதில்லை. எங்களைப் போன்றவர்களை ‘அமெரிக்கன் ஏஜெண்ட்’ எனச் சொல்லி சோசலிஸ்ட்களை ஒழித்துவிடலாம் என நினைக்கிறார்கள். மனிதனை சொத்துரிமை ஆசையிலிருந்து வெளியேற செய்வது என்பது மார்க்சியத்தின் பெரும் கொடை என்றார் லோகியா. மார்க்ஸ் கருத்துக்களில் தவறு இருந்தாலும் சொத்துரிமை ஒழிப்பு என்பது அதன் தனிச்சிறப்பு என்கிற ஏற்பை தந்தார் லோகியா. சில காந்தியர்கள் பேசுவதைப் போல முதலாளித்துவ அமைப்பில் நல்லொழுக்கம், நீதிநெறி போன்றவற்றை இடம்பெறச் செய்யலாம் என்பது பகற்கனவு. ஆயிரக்கணக்கான முதலாளிகளை தர்மகர்த்தாக்களாக ஆக்கிடவும் இயலாது என்கிற காந்தியம் குறித்த விமர்சனப்பார்வையையும் சேர்த்தே முன்வைத்தார் லோகியா. முதலாளித்துவம் தங்குதடையற்று பொருளாதார ஏற்பாடாக நிலவவும் மற்றொருபுறத்தில் நல் ஒழுக்கம், நன்னெறி என்கிற கலாச்சார வாழ்வு எனச் சொல்வதும் அபத்தமே. அது காந்தியை சுருக்கி புரிந்து கொள்வதாகவே அமையும் என்றார் லோகியா. தனிமனிதனும் சூழலும் இணைந்து முன்னேறும் வகையில் சொத்துரிமையை அகத்திலும் புறத்திலும் ஒழிப்பது சவாலான செயல் என்றாலும் இயலாத ஒன்றல்ல என்கிற தனது நம்பிக்கையும் அவர் வெளிப்படுத்தினார். மார்க்ஸ் எழுதியவை சித்தாந்தமாகிவிட்டது. ஆனால் காந்தி தீர்க்கதரிசிகளைவிட திட்டவட்டமாகவும், தத்துவ அறிஞர்களைவிட பொதுப்படையாகவும் எழுதியும் பேசியும் வந்தார். அவரது செயல்கள் மூலம்தான் அவர் மிளிர்கிறார். அவரது அன்றாட வாழ்க்கை செயல்பாடுகள் மூலமே அவர் அதிகம் பரவினார். காந்தியியம் என்ற செயல்முறையில் வடிகட்டப்பட்டு வெளிப்படும் சோசலிச கருத்துக்கள் கசடற்று தூய்மை பெறுவதுடன் காந்திய நிறத்தையும் ஓரளவு பெறும் வாய்ப்பு கொண்டது என்றார் லோகியா. காந்தி தனது பெரும் எழுத்துப் படைப்புகளால் .உலகத்தை வசீகரிக்கவில்லை. தனது செயலால் வாழ்ந்து காட்டுவதன் மூலம் அவர் மக்களை ஈர்த்தார். வாழ்ந்ததற்கும் செயல்பட்டதற்குமான கமெண்டரி என அவர் எழுத்துக்களை எடுத்துக்கொள்ளலாம். அவர் இருந்த காலத்தில் இருந்த முதலாளித்துவம், சோசலிசம் என்கிற முறைமைகளில் அவர் செல்வாக்கு செலுத்த முடிந்திருந்தால் பெரிதும் மகிழ்ந்திருப்பேன் என்றார் லோகியா. அநீதிக்கு எதிரான நியாயத்திற்கான சுய துன்பத்தை ஏற்றுக்கொண்ட உலக அடையாளம் என காந்தியை சொல்லமுடியும். நாம் காணும் உலகில் பெரும் அமைப்பில் அதன் பாகமாக உணரும் அளவில் மட்டுமே தனிமனிதன் தெரியமுடியும். அய்ரோப்பா தனிநபர் அமைப்பின்றி ஆதரவற்றவன் போல் இருக்கிறான். இந்த மேற்கு சூழலில்தான் மகாத்மா வருகிறார். உன்னிடம் ஆயுதம் இல்லாவிடிலும், அமைப்பு இல்லாவிடிலும் உன்னிடம் உள்ள அநீதி எதிர்க்கும் ஆன்ம சக்தி உள்ளது. அதனால் ஏற்படும் துன்பங்களை தாங்கிக்கொள்ளும் மனவலிமை உள்ளது என சாதாரண மனிதனுக்கு காந்தி உணர்த்தினார். நவீன உலகில் கூட்டத்தின் ஒருபகுதியாக தனிமனிதன் இருந்தால்தான் பயனுள்ள முறையில் இயங்க முடிகிறது. தகுந்த அமைப்பின் அரவணைப்பு இல்லையெனில் அவன் எலியைப்போல் ஆகிவிடுகிறான். இன்னல்களை சகித்துக்கொள்ளும் ஆற்றலை கற்கும் மனிதன் அநீதி எதிர்த்து போரிடும் ஆன்ம பலம் கொண்டவனாகிவிடுவான் என ஒவ்வொருவருக்கும் நடைமுறையில் உணர்த்தியவர் காந்தி. மிகச்சாதாரண தனிமனிதனின் ஆன்மபலத்தை உணரசெய்தவர் காந்தி. தனியாகவும் கூட்டாகவும் பொருந்தா சட்டங்களை மீறும் புதுவழி ஒன்றை காந்தியிடமிருந்து மக்கள் பெற்றனர். அன்பு ஆயுதங்களுக்கு எதிரானது. உலகின் தலை சிறந்த மனிதர்கள் தங்கள் சிந்தனை மற்றும் செயலை ஆயுதமற்ற வகையில்தான் தந்துள்ளனர். ஆனால் தங்கள் பகுதியினர் மேல் அன்பு என்பது மானுடம் மீதான அன்பிற்கு எதிராக போவதை பார்க்கமுடிகிறது. மனிதன் தன்னை பிறரிடமிருந்து நிலைநிறுத்திக்கொள்ள ஆயுதம் தேவை எனக் கருதுகிறான். ஆயுதம் என்றாலே அநீதி என்பது அதன் வேர் ஆகிவிடுகிறது. ஆயுதம் இல்லாமல் எப்படி போலீஸ், அந்நிய படையெடுப்பு தற்காப்பு என கேட்கப்படுகிறது. உலகில் சமத்துவ நீதியை வன்முறையற்று நிலைநாட்டுவது எப்படி என்பதுதான் மையமான கேள்வி. அதற்கு பதில் காந்திய சிவில் ஒத்துழையாமை என்பதே என்றார் லோகியா. காந்தி பன்மைத்துவவாதி (Gandhi was a pluralist-). அவர் கடவுள் பற்றி அதிகம் பேசியிருக்கலாம். ஆனால் அவருக்கு இலட்சியவாதம், பொருளாதாரவாதம் என எதுவும் முற்று முழுமையானதல்ல. அவர் அனைத்துவகை சாத்தியங்களையும், காரண விளைவுகளையும் பார்ப்பவராக இருந்தார். அவரிடம் மோனிசம் இல்லை. காந்தியிடம் pragmatic liberalism இருந்தது எனலாம். இலட்சியப் பயணத்தில் சாதனம் எனும் வழிமுறைகளும் இலட்சியத்திற்குரியவை என வலியுறுத்தினார் காந்தி. நல்வாழ்வு என்பதை கொலைகள் மூலம் கண்டடையமுடியாது என உரக்கத் தெரிவித்தார். இன்றைய பொய்களின் மூலம் நாளைய உண்மையை நிலைநாட்டமுடியாது. சர்வாதிகாரம் ஜனநாயகத்தை தந்துவிடும் என்பது கட்டுக்கதை என்றார். ஓர் அடி ஆனாலும் அதுவே போதும் என்பதன் மூலம் அனைவரையும் அனைத்து செல்லவேண்டிய பொறுப்பை உணர்த்தினார் காந்தி. எண்ணமுடியாத ஏணிப்படிகளில் இலட்சக்கணக்கானவருடன் இணைந்த பயணத்தை ஒவ்வோர் அடியாக செய்தவர் காந்தி. புரட்சியா பார்லிமெண்ட்டா என்பதல்ல பிரச்சனை. ஓட்டின் மூலமா- துப்பாக்கியா என்பது கூட தவறான கேள்விதான். பதில் காணவேண்டிய கேள்வி மக்களின் சத்தியாக்கிரக உரிமையா- ஒரு சிலரின் துப்பாக்கி உரிமையா என்பதுதான் என்றார் லோகியா. கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்த மக்களின் சத்தியாக்கிரகம் எனும் மகத்தான ஆயுதத்தை உதாரணமாக்கியுள்ளார் காந்தி. கிராம அளவில் தரமான ஜனநாயகம் என்பதை காந்தி முயற்சித்தார். சுயதேவையை பூர்த்தி செய்துகொள்ளமுடிந்த கிராமக் குடியரசு தேவை என்றார். ஆனால் நமக்கு கிடைத்த பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் ராட்டை காணாமல் போய்விட்டது. பஞ்சாலை சிமெண்ட் ஆலைகள் எழுந்தன. கிராம அரசு விரும்பத்தக்கது என ஒற்றை வரியுடன் அரசியல் அமைப்பு சட்டம் திருப்தியுற்றது என்கிற விடுதலைக்குப் பின்னரான நிலைமைகள் குறித்து லோகியா தனது விமர்சனத்தை வைத்தார். நூற்புக் கருவியின் செய்தி என்ன? வாழும் இடம் தன்னிறைவு கொண்டதாக, தன்கட்டுப்பாட்டிற்குள் டெக்னாலஜியைக் கொண்ட கிராம நிர்வாகம் என்பதுதான். காந்திக்கு எளிமையும், எளிய கருவிகளும் அவசியமாக தெரிந்தது. ஆனால் நம்மவர்களுக்கோ அது கேலிக்குரிய ஒன்றாகிவிட்டது. கம்யூனிஸ்ட் ஹோசிமின் கூட எளிமையான வாழ்க்கையைத்தான் காட்டுகிறார்.. கம்யூனிஸ்ட்களுக்கு அதில் கோட்பாட்டுத்தன்மை இல்லை. ஆனால் காந்திக்கோ அது கோட்பாடு சம்பந்தமானது (To communism simple living is not doctrinal, where as to Gandhism it is) . எளியவகை வாழ்க்கையே கூட புரட்சிகரமானதுதான். இன்றுள்ள நிலைமையில் காந்தி பேசியவை எல்லாம் மரியாதைக்குரிய கருத்துக்கள் அவ்வளவே. நடைமுறை அமுலாக்கத்திற்கு உகந்தவை அல்ல என்பதற்கான நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. காந்தியின் கருத்துக்களை பொருளாதார, நிர்வாக முறைகளில் இணைத்துக்கொண்டு செயல்பட்டால் இந்தியா உலகிற்கு புதியதோர் நாகரீகத்தன்மையை காட்டமுடியும். மனிதன் நல்லவனாக இருந்தே தீரவேண்டும் என்கிற சமூக கட்டுமானமாக அது இருக்கும் என்று எழுதினார் லோகியா. இந்திய விடுதலைப் போர் சில சமரசங்களை செய்துகொண்டது. எதிராக போராடிவந்த காந்தியம் (Gandhi in opposition) தனது போராட்டத்தை இறுதிவரை எடுத்துச் செல்ல முடியாத பலவீனங்களிலிருந்து கூட ‘அரசாங்க காந்தியியத்தின்’ போதாமைகள் வந்திருக்கலாம் ஆட்சிக்கு வந்தவுடன் அவரது சீடர்கள் அவரின் மிக முக்கிய சிவில் ஒத்துழையாமை போன்றவற்றிற்கு அஞ்சுகிறார்கள். ஆட்சி எதிர்த்த காந்தியம் புரட்சிகரமானதாக இருந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் காந்திய அரசாங்கம் என்றவர்கள் முன்பு இருந்த அதே நடைமுறையை அப்படியே பின்பற்றினார்கள். மார்க்சியமோ ஆட்சிக்கு எதிரே நிற்கும்போதும், ஆட்சியிலே அமர்ந்தபோதும் புரட்சிகரமாக இருக்கவேண்டியுள்ளது. முன்பிருந்த நிலைமைகளை அது அடியுடன் மாற்ற போராடுகிறது என்கிற வேறுபாட்டை லோகியா நேரு மீதான விமர்சனமாக வைத்தார். ஒருமுறை சுபாஷ் லோஹியாவிடம் கேட்டார். காங்கிரசா- காந்தியா யார் பலமானவர்கள். காந்திதான் என்பதை அறிந்தே தான் செயல்படுவதாக லோகியா பதில் தந்தார். காங்கிரஸ் இயற்றிய தீர்மானம் ஒன்றை காந்தி வீட்டோ செய்தார். அதை காங்கிரஸ் ஏற்ற நேரத்தில் இக்கேள்வி எழுந்தது. காந்தி உலககுடிமகன் என்பதில் நம்பிக்கை வைத்திருந்தார். சாதி, இன, வர்க்கங்களுக்கு அப்பால் அச்சிந்தனை தேவை எனவும் கருதினார். அவரது தர்மகர்த்தாமுறை பயன்தராது என்கிற கருத்து லோகியாவிற்கு இருந்தது. ஆனாலும் காந்தி என்ன சொல்லவருகிறார் என்பதை லோகியா பார்க்கத்தவறவில்லை. காந்தி முதலாளிகளுக்கு இருக்கும் அதிகாரத்தை மட்டுப்படுத்த விழைகிறார். சமூகத்திற்கு அவர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என கோருகிறார் என லோகியா எழுதினாலும் முதலாளிகளை மனமாற்றம் செய்வதெல்லாம் சாத்தியமல்ல என கருதினார். கடவுள், சர்க்கா, தர்மகர்த்தா கொள்கை என்பதில் லோகியாவிற்கு உடன்பாடில்லை. ஆனால் காந்தியன் ஸ்பிரிட் என்பதில் நிற்க விரும்பினார். போர்க்குணமிக்க சோசலிசம் ‘காந்தியலீகசியுடன்’ என லோகியா விரும்பினார். காந்திக்கு அரசியல் என்பது நெறி சார்ந்த அதை மேம்படுத்தும் அம்சம். அரசியலில் நெறிபிறழ்வு என்பதை அவர் ஏற்க மறுத்தார். உண்மையான அதிகாரம் அல்லது சக்தி ஒவ்வொரு தனிமனிதனிடமும் உறைந்திருக்கிறது. அதிகாரம் அரசாங்கத்திடம் அல்லது சட்டமன்றங்களில் கெட்டிப்பட்டுவிடக்கூடாது என்பார் காந்தி. லோகியா அகிம்சை என்பதை பயன்படுத்தவில்லை . தீர்மானகர கோபம் தேவை எனக்கருதினார். அதேபோல் உண்மை எனப் பேசும்போது லோகியா எப்போதும் நாம் பார்த்தவரையிலான உண்மை partial truth என்றே பேசினார். மேற்கு நாகரீகத்தை ’moral and religious’ அடிப்படையில் காந்தி விமர்சித்தால் லோகியா அரசியல் நெறிசார்ந்து விமர்சித்தார். ஜமன்லால் பஜாஜ் மூலம்தான் காந்தியின் அறிமுகம் லோகியாவிற்கு கிடைக்கிறது. லோகியாவின் திறமையை காந்தி பயன்படுத்த தவறவில்லை. அவரின் சில கட்டுரைகளை ஹரிஜன் பத்திரிகையிலும் வெளியிட்டார். மிகவும் தைரியமான மனிதர் லோகியா என்கிற புகழாரத்தை காந்தி சூட்டினார். தான் அவரின் மேதமைக்காக புகழவில்லை. அவரின் தீர்மானகர குணத்திற்காக புகழ்கிறேன் என்றார் காந்தி. 1946 லோகியாவின் கோவா விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவை நல்கினார் காந்தி. போர்த்துக்கீசியர்கள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தபோது இந்தியாவின் ஆன்மா சிறையில் என்றார் காந்தி. காந்தி மனிதனுக்கு முக்கியத்துவம் தந்து சூழலின் செல்வாக்கை குறைத்து மதிப்பிட்டுவிட்டார் என்கிற குறையை லோகியா வெளிப்படுத்தாமல் இல்லை. சோசலிஸ்ட்களாகிய நாம் மனிதனை குறைத்து மதிப்பிட்டு வருகிறோம். சோசலிசம் ஏற்கனவே மானுட நிகழ்ச்சி நிரலில் முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. காந்தியக் கருத்துக்களை அதனுடன் சேர்த்து ஏற்புடைய சோசலிச கோட்பாடுகளை உருவாக்கிக்கொள்ளலாம் என்றார் லோகியா. மனிதன் கருவிகளுக்கு அடிமையாகிவிட்டான் என்பதை நாம் ஏற்கவேண்டும். காந்தியம் சம்பிரதாயமான மரியாதைக்குரிய ஒன்றாக மாற்றப்பட்டுவிட்டது. ’sagehood, sainthood satyagraha’ என்பன காந்தியிடமிருந்து எடுத்துக்கொள்ளத்தக்கனவாக இன்றும் இருக்கின்றன. சத்தியாக்கிரகம் எனும் நியாயம் கேட்கும் முறை, நற்பண்பு நாட்டம், எளிமை நிறைந்த மனிதன் என்பதே காந்தி அளித்த வாழ்க்கைமுறை. உதவிய நூல்கள் 1. Marx Gandhi and Socialism by Lohia 2. Gandhi and Lohia etrnal optimists- mainstream weekly oct 10, 2009 3. 3. Economic Ideas of Lohia: Some Aspects Mainstream, March 24, 2012 ஹிரன் முகர்ஜியின் காந்தி மார்க்சியம் சார்ந்த எழுத்துக்கள் மூலம் அயராது தோழர்களுக்கு கற்று கொடுத்த மிக முக்கிய தலைவர்களுள் ஹிரனும் ஒருவர். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது நேரு உட்பட முக்கிய தலைவர்கள் அவரது உரையை கவனமாக கேட்டனர். சொற்செறிவும் ஆழமும் மிகுந்த அவரது ஆங்கிலம் நேருவை மிக அதிகமாக கவர்ந்தது. அவரின் பெங்காலி, உருது மொழியாற்றலும் பிரமிக்க தகுந்தவையாக இருந்தது. நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் மனசாட்சி என அவர் கருதப்பட்டார். ஹிரன்முகர்ஜி பார் அட் லா பாரிஸ்டர் பட்டம்பெற்று 1934ல் இந்தியா திரும்பினார். சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் அறிவுரையை ஏற்று ஆந்திரா பல்கலைகழகத்தில் வரலாறு மற்றும் அரசியல் விரிவுரையாளராக சேர்ந்தார். பிறகு கல்கத்தா சுரேந்திரநாத் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியத்துவங்கினார். கல்கத்தா பல்கலைகழக இலாகத்துறை தலைவராக 1940ல் உயர்ந்தார். ஹிரன் முகர்ஜி 1936ல் தோழர் பி சி ஜோஷி பிற நண்பர்கள் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்கிறார். அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம், சோவியத் நண்பர்கள் அமைப்புகளில் செயல்படுகிறார். கட்சியில் வங்க மாநில கமிட்டியில் ஆரம்பத்தில் செயல்பட்டுவந்தார். பின்னர் 1958-68களில் தேசிய கவுன்சிலில் செயல்பட்டார். முதல் நாடாளுமன்ற தேர்தல் துவங்கி 5வது லோக்சபா 1977வரை 25 ஆண்டுகள் ஹிரன் முகர்ஜி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 1990ல் பத்மபூஷனும் 1991ல் பத்மவிபூஷனும் அவருக்கு வழங்கப்பட்டது. ஒரே நேரத்தில் ஹிரனின் காந்திய ஆய்வும், இ எம் எஸ் அவர்களின் மகாத்மா இசம் என்கிற ஆக்கமும் வெளியாயின. இங்கு இடம்பெற்றுள்ள கட்டுரையில் காந்தி குறித்த ஹிரன் முகர்ஜியின் ஆய்வு சுருக்கமாக விளக்கப்படுகிறது. காந்தியின் பெருமிதமே அவரது அச்சமற்ற தன்மையில்தான் இருக்கிறது. பேச சக்தியற்ற மக்களை நியாயம் கேட்கத்தெரிந்த மனிதர்களாக உயர்த்தினார் காந்தி. திரண்டு தங்களால் போராட இயலும் என்பதை அவர்களுக்கு உணர்த்தினார். மற்ற மாபெரும் மனிதர்களைப்போலவே அவர் உலகிற்கு உரியவரானார். நாங்கள் புரட்சிக்காரர்களாக இருக்கலாம். ஆனால் எங்களில் பலர் மகாத்மா காந்தியின் நேரடியான அல்லது மறைமுக சீடர்களாகவே இருக்கிறோம் என ஏப்ரல் 7, 1958ல் வியத்நாமின் ஹோசிமின் கூறினார். மார்க்சிய அறிஞரும் இந்திய விடுதலைக்கால நிகழ்வுகளை உற்றுநோக்கி இந்திய கம்யூனிஸ்ட்களுக்கு வழிகாட்டியாக இருந்தவருமான ரஜினிபாமிதத் காந்தியை முதலாளிகளின் முகமூடி என 1939ல் குறிப்பிட்டது சற்றுக் கடுமையானது . மற்ற எல்லோரையும்விட காந்தியால்தான் மக்களை போராட்டப் பாதைக்கு அழைத்துவரமுடிந்தது. அதேபோல் புரட்சி அளவிற்கு அது போகிவிடாமல் தடுக்கவும் முடிந்தது. இந்த அபார சக்தியால் அவரால் பிரிட்டிஷாரை விவாதமேடைக்கு கொணரமுடிந்தது என ருஷ்ய அறிஞரும் இந்திய ஆய்வாளருமான உல்யாவ்னாஸ்கி 1970ல் எழுதினார். கம்யூனிஸ்ட் கட்சி லைன் என காந்தியைப்பற்றி திட்டவட்டமாக வரையறை ஏதும் இல்லை. அவரது பங்களிப்பு, பாத்திரம் குறித்த பொதுவான புரிதல் கட்சியிடம் இருந்தது. ஹிரனின் காந்தியை படித்தல் புத்தகம் வந்தநேரத்தில் பியாரிலாலின் காந்தி இறுதி கட்டமும், இ எம் எஸ் நம்பூதிரிபாடின் மகாத்மா- இசம் என்கிற ஆக்கங்களும் வெளிவந்தன. இந்தியாவைப்போலவே முரண்பாடுகள் கொண்ட மனிதராக காந்தி இருந்தார். அதே நேரத்தில் மற்ற அனைவரையும்விட உயர் பார்வைதீர்க்கம் கொண்டவராக அவர் விளங்கினார். இந்திய வேர்கள் என்பதிலிருந்து வந்தாலும் எங்களைப் போன்றவர்களை மார்க்சியம் ஈர்த்தது. காந்தியம் என்பது தன்னிடம் காணப்படவில்லை, காந்தியம் என்கிற ஒன்றுடன் தான் வேறுபட்டு இருந்தாலும் அது மகத்தான சிந்தனையாக இருந்தது என ஹிரன் சொல்கிறார். விஞ்ஞான சிந்தனை என்ற பெயரால் எல்லாம் அதை புறக்கணித்துவிட முடியவில்லை என்கிற உணர்தல் தம்மிடம் இருந்ததாகவும் ஹிரன் ஏற்கிறார். காந்தியை அவரின் புகழை குறைத்து மதிப்பிடாமலும், அதே நேரத்தில் அவரின் சிந்தனை செயல்பாட்டில் உணரப்பட்ட வரம்புகள் (limitations) குறித்து கண்ணை மூடிக்கொள்ளாமலும் ஆய்விட வேண்டும். நமது புராணங்களில் கடவுளை எதிராக நின்று விமர்சிக்கும் தன்மையும் பதிவாகியே இருக்கிறது. அத்தகைய விமர்சனபார்வையுடன் தன் ஆய்வை ஹிரன் நடத்தி செல்கிறார். காந்தி மிருதுவானவர். அதே நேரத்தில் பிடிவாதமானவரும்கூட. அப்பிடிவாதம் எழுந்துவிட்டால் அவர் பின்வாங்குவதில்லை. தென்னாப்பிரிக்கா சோதனையில் அவரிடமிருந்த உட்டோபியனிசத்தை நாம் பார்க்கமுடிகிறது. அவரது குடியேற்ற முறைகளில் சமத்துவத்துவத்தையும் சக மனிதர் என்கிற உணர்வையும் அவர் அடைந்தார். போராட்டம் என வந்தபோது அதன் உச்சிக்கு சென்றார். மனிதர்களை மத சாதி வகைப்பட்டு வேற்றுமை பாராட்டும் இந்திய முட்டாள்தனத்தை அவர் பொதுமேடையில் சாடினார். அப்படி எழுந்த முதல் பெருங்குரலுக்குரியவராகவும் அவர் இருந்தார். தாகத்தால் சாவேனே தவிர இஸ்லாமியர் ஒருவரிடம் தண்ணீர் வாங்கி பருக மாட்டேன் என்பதை முட்டாள்தனம் என்றார். கிலாபத் காலத்தில் இந்து- முஸ்லீம் என இரு சாராருக்கும் உரிய பொதுத்தலைவராக அவர் உணரப்பட்டார். அரசியலை ஆன்மீகப்படுத்துவது என்பதில் பெரும் நம்பிக்கையுடன் செயல்பட்டார். அரசியலில் மதம் என்பது குறித்து அவர் அச்சப்படவில்லை. மகாத்மா- செளகத் அலி வாழ்க என்பதைவிட இந்து- முஸ்லீம் ஒற்றுமை வாழட்டும் எனப் பேசினார். இரு சாராரும் சேர்ந்து அல்லாஹூ அக்பர், பாரத்மாதாகி ஜே, இந்து முசல்மான் கி ஜே என ஏன் முழக்கமிடக்கூடாது என வினவினார். காந்தி தான் முதலாளிகளின் கருவி என்கிற எண்ணமின்றி செயல்பட்டிருக்கலாம். ஆனால் அவரின் போராட்டமுறைகள் அதன் எல்லைகள் முதலாளிகளின் எண்ண ஓட்டத்திற்கு இசைவாக இருந்தது என்பது ஹிரனின் மதிப்பீடு. அந்நிய பொருட்களை எரியூட்டிய இயக்கம் விமர்சிக்கப்பட்டபோது எனது அவமானத்தை எரியூட்டுகிறேன் என்றார் காந்தி. மக்களின் கோபத்தை மனிதர்களிடமிருந்து பொருட்களுக்கு திருப்பியதாக காந்தி தெரிவித்தார். ஹஸ்ரத் மொகானி பரிபூர்ண சுதந்திரம் என்கிற தீர்மானம் கொணர்ந்தபோது காந்தி அதற்கு உடன்படவில்லை. இன்றுள்ள எல்லைகளை புரிந்துகொள்ளாமல் பொறுப்பற்ற தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என்றார் . சம்பரான், அகமதாபாத் மில் தொழிலாளர் வேலை நிறுத்தம், சிவில் சட்டமறுப்பு- செளரி செளரா அனுபவம் வழியே பர்தோலி கிராமத்தில் வரிகொடா இயக்கம் என மக்கள் போராட்டங்களுடன் அவர் மக்களின் பேரன்புக்குரிய தலைவராக அவர் உயர்ந்துவந்தார். செளரி செளரா நிகழ்வால் அவர் பிப் 12, 1922ல் சட்டமறுப்பு இயக்கத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார். நூற்பு, தீண்டாமை ஒழிப்பு திட்டங்கள் என இயங்கினார். அரசியல்ரீதியாக தன் முடிவு விமர்சிக்கப்பட்டாலும் சமயரீதியாக சரியான முடிவே என்றார். உண்மைக்கும் அகிம்சைக்கும் உடன்பாடில்லாமல் காங்கிரசில் இருக்க வேண்டியதில்லை என்றுகூட சற்று காரமாக பேசினார். காந்தியின் இவ்வகைப்பட்ட கோட்பாட்டு அணுகுமுறை அவரது தலைமையையே வரம்பிற்கு உட்படுத்திவிட்டது. எனவேதான் காந்தியால் சுரண்டலுக்கு எதிராக பேசமுடிந்தாலும் நடைமுறையில் சுரண்டுபவர் நலன்களை தடுக்கமுடியவில்லை என்பது ஹிரனின் ஆய்வு முடிவாகவுள்ளது. காந்தியின் கட்டுமான திட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் மக்களை திரட்ட உதவியது என்பதை மறுக்க முடியாது. ஆனால் பாதுகாப்பான எல்லைக்குள் எல்லாம் என்றாக்கப்பட்டது. அவர் பூர்ஷ்வாக்களின் தலைவர் என நினைத்துக்கொள்ளாமல் காரியமாற்றியிருந்தாலும், அதன் நலன்களுக்கு உட்பட்ட வகையில் மக்களை திரட்டி போராடவைக்கும் அவ்வர்க்கத்தின் இயல்பிற்கு காந்தியின் போராட்டமுறை பொருத்தமாக போய்விட்டது. நேருவின் மூலம் இடதுசாரி இயக்கங்களையும் காந்தி தனது கட்டுக்குள் வைக்க விரும்பினார். நேருவும் அவரது மாஸ்டரின் அன்புசிறைக்குள் கட்டுண்டு நின்றார். பூர்ஷ்வாக்களின் உலகம் உண்மைக்கு அப்பாற்பட்ட ஏமாற்று உலகம். அவர்கள் வர்க்கம் என்கிற வகையில் ஒழுக்கசீர்கேடுகளைப் பற்றியோ வன்முறைகள் குறித்தோ எந்த பொருட்படுத்தலையும் செய்வதில்லை. காந்திக்கு இது ஒரு பெரும் முரண். காந்தி அவர்களின் விருப்பமான கருவியாக செயல்பட்டார் என சொல்வது அற்பவாதமாக இருக்கும். காந்தி மக்களின் இதய கதவுகளைத் திறந்தவர். அவர்களின் மதிப்பை உயர்த்தியவர். நம்மை அடிமைப்படுத்தி வாழவைத்தவர்களிடம் அச்சமற்று இருக்க கற்றுத்தந்தவர். அதே நேரத்தில் அவரது தலைமையில் காணப்பட்ட சில வித்தியாசமான தன்மைகள் (oddities) விமர்சனத்திற்கு உள்ளாகாமல் இல்லை என்கிறார் ஹிரன் . காந்தி- இர்வின் உடன்பாடு பெரும் ஏமாற்றத்தையே தந்தது. அடுத்து நடந்த கராச்சி மாநாட்டில் இளைஞர்கள் அதிருப்தியுடன் அவருக்கு எதிரான மனநிலையில் இருந்தனர் என்பதை சுபாஷ் சந்திரபோஸ் வெளிப்படுத்தினார். காந்தி 1932ல் தனது முழு கவனமும் அரிசன மக்கள் முன்னேற்றம் நோக்கி என அறிவித்து செயல்படலானார். அரிசன முன்னேற்றம் முக்கிய பிரச்சனைதான் - ஆனால் தேச விடுதலை இயக்கத்தை நிறுத்திவிட்டு செய்யவேண்டுமா (at the cost of halting the national movement) என்கிற விமர்சனம் காந்தியார் மீது வரத்துவங்கியது. தன்னைத் தியாகம் செய்துகொள்ள இப்படிப்பட்ட பக்கவாட்டு பிரச்சனைகளை (side issue) அவர் ஏன் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார் என்று பலர் புதிராக பார்த்தனர். பெரும் தியாகங்களை மேற்கொண்ட நமது இயக்கம் சிறிய அவ்வளவாக முக்கியமில்லாத பிரச்சனைகளுடன் கட்டப்படவேண்டுமா என்கிற வேதனையை நேரு வெளிப்படுத்தினார். அதே நேரத்தில் உரிய உளவியல் தருணத்தை அவர்தான் சிறப்பாக அறிந்து வழிகாட்டுகிறார் என நேரு சமாதானமும் அடைந்தார். 1934 மே மாதம் கூடிய காங்கிரஸ் ஒத்துழையாமையை விலக்கிக்கொள்ள முடிவெடுத்தது. சத்தியாகிரகத்தை மக்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை என வருந்தினார் காந்தி. ஆன்மீக கருவிகளை ஆன்மிகமற்ற ஊடகங்களால் மேற்கொள்ளும்போது அவை வலுவிழக்கும் (Spiritual instruments suffer in their potency when their use is taught thro non spiritual media ) என்றார். 1928ல் சக்லத்வாலாவுடன் காந்தி சந்திப்பும் உரையாடலும் நடந்தது. இந்தியாவின் பிரச்சனைகள் குறித்த சரியான புரிதல் சக்லத்வாலாவிற்கு இல்லை எனினும் அவரின் தியாகம் போற்றப்படவேண்டும் எனக் கருதினார் காந்தி. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி அமைப்பு 1934ல் துவங்கப்பட்டது. காந்தி சோசலிசம் குறித்தோ தொழிலாளர்- விவசாயி அமைப்புகள் குறித்தோ விமர்சனங்களை அடுக்கி அரசியல் செய்யவில்லை. ஒவ்வொன்றையும் புரிந்துகொண்டு தனது தராசில் அவைகளை எடை போட்டார். சி எஸ் பியின் முக்கிய தலைவரான நரேந்திரதேவாவிடம் விஞ்ஞான சோசலிசம் என்றில்லாமல் நடைமுறை சோசலிசம் பற்றிய புரிதலுடன் வாருங்கள் என்றார் காந்தி. உங்கள் திட்ட நகலை எதார்த்த நடைமுறை வாழ்க்கையில் செயல் ஆற்றுபவர்களுடன் கலந்து பேசி மேம்படுத்துங்கள் என்றார். 1940ல் பாகிஸ்தான் கோரிக்கை தீவிர வடிவம் எடுத்தது. தங்களின் நலன்களுக்கான மக்களின் எழுச்சிகர இயக்கம் மட்டுமே வகுப்புவாத சூழலுக்கு இறையாண்மைகொண்ட தீர்வாக இருக்க முடியும் என ரஜினி பாமிதத் எழுதினார். இதை காந்தியடிகளும் காங்கிரஸ் தலைவர்களும் புரிந்துகொள்ள தவறிவிட்டனர் என்பது அவரது விமர்சனமாக இருந்தது. எரியும் தீக்கு எண்ணெய்யாக அவர்கள் நடவடிக்கைகள் அமைந்துவிட்டன என்றார் தத். காந்தி அரசியல் தலைவராக செயல்படவேண்டியிருந்ததால் அவர் துறவி ஆசனத்திலிருந்து இறங்க வேண்டியிருந்தது. தனது கொள்கை நிலைகளில் உறுதிப்பாட்டை கொண்டிருந்தாலும், மக்களுடன் தொடர்ந்து பயணித்தவர் என்ற முறையில் தனது நிலைகளை மாற்றிக்கொள்ள அவர் தயங்கவில்லை. அதே நேரத்தில் சில அடிப்படைகளை கைவிடாமல் பயணித்தார். இரண்டாம் உலகப்போர் காலமான 1940ல் பிரிட்டிஷாரே தங்களை காப்பாற்றிக்கொள்ள போராடிக்கொண்டிருக்கும்போது அவர்கள் நம்மை எப்படி காப்பார்கள் என்றார் காந்தி. மெளலான உள்ளிட்ட தலைவர்கள் மக்கள் இயக்கம் என்றபோது இப்போது சிவில் ஒத்துழையாமை கூடாது என்றார் காந்தி. ’காங்கிரசின் தேசியம்’ என ஜின்னா கேலி விமர்சனம் செய்துகொண்டிருந்தார். இந்துக்கள் தேசியம் என சாவர்க்கர் பேசிவந்தார். கே.எம் முன்ஷி போன்றவர் அகண்ட இந்துஸ்தான் என்றனர். காந்தி தனக்கான எதிர்வினைகளை காணத்துவங்கினார் என இச்சூழல் பற்றி ஹிரன் விவரிக்கிறார். எனது ராமராஜ்யத்தில் இளவரசருக்கும் ஆண்டிக்கும் ஒரே உரிமையே என காந்தி பேசினார். அவருக்கு ஏழைகள்பாற் நலன் என்பதில் பெரும் உறுதிப்பாடு இருந்தது. உயர்ந்தோர் பெறும் சமூக சலுகைகளும் பீடங்களும் ஏழைகளின் அவதிகளும் சில சரிகட்டல்களுடன் சமவாழ்வு நடத்தமுடியும் என அவர் நம்பினார். ஜனவரி 1940ல் அவர் தன்னிடம் சிவப்பு அழிவிற்குரிய (Red ruin) பாதையை எதிர்பார்க்கவேண்டாம் என்றார். எனது வாரிசு ராஜாஜி அல்ல, நேருதான். நேரு எனது மொழி புரியவில்லை என்கிறார். மொழி முக்கியமல்ல. இதயங்களின் ஒன்றிணைவுதான் முக்கியம். நான் மறைந்தபிறகு எனது மொழியை நேரு பேசுவார் என்றார் காந்தி. 1942 மே மாதம் இந்தியாவிற்கும் பிரிட்டிஷ் மக்களுக்கும் இதயபூர்வ ஒற்றுமை ஏற்படவேண்டுமெனில் உடன் பிரிட்டிஷ் வெளியேறவேண்டும் என்றார். காங்கிரசிடம் விடக்கூட அவர் சொல்லவில்லை. இந்தியாவை இறைவனிடம் நம்பி விட்டுச் செல்லுங்கள் என்றார். இருக்கிற கட்சிகள் சண்டையிட்டுக்கொள்வார்கள். அவர்கள் சமாதானமும் அடைவர். தீர்வையும் எட்டிவிடுவார்கள் அனைத்து குழப்பமான நிலையிலும் அகிம்சை எழும் என்றே தான் நம்புவதாக காந்தி குறிப்பிட்டார். விவசாயிகள் வரிகொடா இயக்கத்தையும் நிலமீட்பு போராட்டத்தையும் நடத்துவர். நிலப்பிரபுக்கள் ஓட்டம் பிடித்து ஒத்துழைக்கவேண்டும். அவசியம் என்றால் பொதுவேலைநிறுத்தம் கூட இறுதியில் தேவைப்படலாம் என லூயி பிஷருடன் நடந்த தனது உரையாடலில் காந்தி தெளிவுபடுத்தினார். 1942 ஆகஸ்ட் ’செய் அல்லது செத்துமடி’ உரையில் காந்தி நேரிடையாக விவசாயிகளுக்கோ, தொழிலாளர்க்கோ அறைகூவல் விடுக்கவில்லை. பத்திரிகையாளர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், வீரர்கள் உதவலாம் எனப் பேசினார். உடனடியாக விடிவதற்குள் விடுதலை எனவும் குறிப்பிட்டார். வெறும் அமைச்சரவைக்கான பேரமில்லை. முழுவிடுதலை என பிரகடனப்படுத்தினார். செய் அல்லது செத்துமடி மந்திரமானது. அவர் அறைகூவலில் இரகசியம் ஏதுமில்லை. சுதந்திரமனிதன் இரகசிய அமைப்புகளில் வேலை செய்யவேண்டியதில்லை என்பது அவரது நிலைப்பாடு. அரசாங்கம் அனைத்து தலைவர்களையும் சிறையில் அடைத்தது. போராட்டத்தை தீவிரமாக ஒடுக்கியது. அரசாங்கத்தின் மோசமான அடக்குமுறையால்தான் மக்கள் மேலும் வெகுண்டு எழுந்துள்ளனர். அழிவுகள் நேர்ந்திருந்தால் அதற்கு அரசே பொறுப்பு என காந்தி பேசினார். வைஸ்ராய்க்கு செப் 23, 1942ல் கடிதமும் எழுதினார். அடக்கி ஒடுக்குதல் கசப்பையே கூட்டும்- அதிருப்தியை அதிகரிக்கும் என்பது வைஸ்ராய்க்கு உணர்த்தப்பட்டது. பாகிஸ்தான் எனும் தனி ’ஸ்டேட்’ பற்றிக்கூட புரிந்துகொள்ளலாம்- ஆனால் தனி இறையாண்மை என்பதை ஏற்கமுடியவில்லை. பிரிவினை நாம் மட்டும் உணரும் ஒன்றாக இருக்கலாமே ஒழிய உலகத்திற்கு அதை காட்டவேண்டியதில்லை (The separation should be within ourselves and not separation in the face of the world) என்கிற பொருள்பட அறிவுறுத்தினார். இந்து பிரிவினைவாதிகளும் காங்கிரஸ்- லீக் மத்தியில் விரிசலை அதிகப்படுத்திவிட்டதாக காந்தி கருதினார். கப்பற்படை எழுச்சிக்கு சில நாட்கள் முன்னர் காந்தி நாட்டில் உலாவும் வெறுப்பு குறித்து கவலையுடன் பேசினார். அது பொறுமையிழந்தவர்களுக்கு வாய்ப்பாகிவிடும் என்றார். கப்பற்படை எழுச்சி ஏற்பட்டபோது அவரால் அதை மோசமான உதாரணமாகவே பார்க்கமுடிந்தது. சிந்திக்காமல் செயல்பட்டுவிட்டனர் என்பது அவரது அபிப்ராயமாக இருந்தது. பிரிட்டிஷ் வெளியேறுவதாக பேசிக்கொண்டிருக்கும் சூழலில் இது மாதிரியான போராட்டங்கள் அந்நிலைப்பாட்டை தள்ளிப்போட்டுவிடும். அருணா ஆசப்அலிக்கு வேண்டுமானால் அரசியல் சட்ட வழியல்லாது போர்முனையில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை ஏற்படுத்தலாம் என்கிற நம்பிக்கை இருக்கலாம். அகிம்சை வழி நம் மக்களை உறக்கத்திலிருந்து எழுப்பியதா இல்லையா என்பதை அருணாவும் அவரது தோழர்களும் மனசாட்சியை கேட்டுக்கொள்ளட்டும் என்றார் காந்தி. மெஷின் துப்பாக்கி காலத்தில் 18ஆம் நூற்றாண்டுவகை போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கமுடியாது என்றார் நேரு. விடுதலை நாளான ஆகஸ்ட் 15 1947 அன்று தன்னிடம் எந்த செய்தியும் இல்லை (There is no message at all- if it is bad, let it be so) என்றே காந்தி கூறினார். அவரை அணுகியவர்கள் ஜனவரி 26 1948 ல் கேட்டபோதுகூட தான் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவித்தார். வகுப்புக் கலவரங்கள் அவரை பெரும் வேதனையில் ஆழ்த்தியிருந்தன. அமெரிக்க பேராசிரியர் ஒருவரிடம் அகிம்சைவழியில் இருப்பதாக இந்திய மக்கள் நடித்துக்கொண்டிருந்ததாகவும் சத்தியாக்கிரகம் ஆழமாக இறங்கவில்லை என்பதை உணர்ந்ததாகவும் அகிம்சை போல் தோற்றம் கொண்டவை நொறுங்கி போயுள்ளதாகவும் அவர் விசனப்பட்டார். காந்தி வயதாகி நோய்ப்படுக்கையில் கிடந்து இறக்கவில்லை. தான் கொண்டிருந்த நம்பிக்கையின்பாற்பட்டே சுடப்பட்டு மரணித்தார். இருநாட்கள் முன்பாகக் கூட தான் சுடப்பட்டு சாகலாம் என்கிற உள்ளுணர்வை அவர் வெளிப்படுத்தியிருந்தார். நேரு கூறியபடி தன் முழுகட்டுப்பாட்டில் அனைத்தும் நடந்துவந்த காலத்தில் அவர் மறைந்தார். வாழும் நாட்களிலேயே வழக்கற்றுப்போய் சாவு படுக்கையில் கிடந்த வந்த மரணமல்ல அது. அவரது வாழ்க்கையை அம்மரணம் மேலும் உயர்த்திவிட்டது. ஒற்றுமைக்கான பெரும் தியாக மரணமது. காந்தியால் தீண்டாமையை ஒழிக்கமுடியாமல் போயிருக்கலாம். ஆனால் அதை ஆட்டம் காணச்செய்தார். வறுமை நீக்கம் மற்றும் வளர்ச்சி குறித்த காந்தியக் கருத்துக்கள் மரியாதைக்குரியனவாக இருக்கலாம். நடைமுறையில் அவை வலுவற்றனவாக இருக்கின்றன. காந்தி மட்டுமே சுதந்திரம் பெற்றுத்தந்த கர்த்தா என்பது உண்மைக்கு நெருக்கமான ஒன்றல்ல என்பது ஹிரனின் மதிப்பீடு. சத்தியாக்கிரகம் மட்டுமே சுதந்திரத்தை பெற்றுத்தந்தது என்பதை தாண்டி வரலாற்று மாணவர்களால் செல்லமுடியும். ஆனால் மக்களை தட்டி எழுப்பிய பெரும் இயக்கமது. காந்திக்கு இணையாக செயலாற்றியவர் எவரும் இல்லை என்றாலும் காந்தி தரிசு நிலத்தில் செயலாற்றிடவில்லை. அவர் மட்டுமே என்பதிலும் உண்மையில்லை. காந்தி பூர்ஷ்வா இயக்கத்திற்கு பெரும் அசைவைக் கொடுத்தார். மக்களை திரட்டி எல்லைக்குள் கட்டுக்குள் போராடவேண்டும் என்கிற முயற்சியை செய்தார். அது சொத்துரிமை கொண்ட வர்க்க நலன்களுக்கு பாதுகாப்பாகவும் அமைந்தது. எந்த நேரத்திலும் எதையும் சந்திக்க வேண்டிய நிலையில் நடைமுறை சார்ந்தவர்களாக சோசலிஸ்ட்கள் இருக்க வேண்டியுள்ளது. சோசலிசம் என்பதே கூட moral objective கொண்டதுதான். நெறிகோட்பாடுகளை பின்பற்றவேண்டிய ஒன்றுதான். ஆனால் முன்கூட்டியே முடிந்த முடிவான ஒன்றாக எதுவும் எப்போதும் இருக்கமுடியாது என்பதையும் புரிந்து செயலாற்றவேண்டியுள்ளது. உயர் இலட்சிய தாகம் கொண்ட நடைமுறை சார்ந்து இயங்கிய பழமையும் புரட்சிகரதன்மையும் கொண்ட கலவையாக (Gandhi was at the same time conservative and revolutionary combination of practicality with highest idealism) இருந்தார் காந்தியடிகள். காந்தியத்தைவிட காந்தி பலமடங்கு உயர்ந்து நிற்கிறார். நான் உண்மைக்கான வழியைத்தான் காட்டுகிறேனே தவிர உண்மையையே காட்டவில்லை என அவர் தெளிவுபடுத்தினார். தனிநபர் ஒழுக்கம்-நன்னெறி மேம்பாடு என்பவற்றை அவர் வலியுறுத்திவந்தார். வாழ்ந்தும் காட்டினார். எந்த சமூக இயக்கமும் இவற்றை புறக்கணிக்கமுடியாது. அன்புநிறை செயல்- மனிதகுல அன்பின்பாற்பட்டு செயல் என்பதையும் எவரும் மறுக்கமுடியாது. ஆதார நூல் Gandhi A study Hiren Mukerjee PPH July 1958 5th edition Ap 2010 தோழர் இ எம் எஸ் பார்வையில் காந்தியும் அவரது இசமும் எளிய வாழ்க்கையில் நிறைவுபெற்றவராகவும், எந்நேரமும் தளர்வின்றி உழைப்பவராகவும் இருந்தவர் இ எம் எஸ் நம்பூதிரிபாட். மார்க்சிய அறிவுஜீவியாக ஏற்கப்பட்டவர். விவசாய இயக்கத்திலிருந்து தனது வர்க்கப்போராட்டத்திற்கான களப்பணியை துவக்கியவர் இ எம் எஸ். கேரளாவில் வெகுமக்கள் மத்தியில் அரசியல் மற்றும் தத்துவார்த்த உரையாடலை தொடர்ந்து செய்து வந்த இ எம் எஸ் தனது தாய்மொழியில் ஏராளம் எழுதி குவித்துள்ளார். 1942ல் கம்யூனிஸ்ட் கட்சி சட்டரீதியாக இயங்க வாய்ப்பு பெற்றது. சி பி அய் கட்சியின் முதல் காங்கிரஸ் 1943ல் நடந்தது. அம்மாநாட்டில் இ எம் எஸ் மத்திய கமிட்டிக்கு தேர்வு செய்யப்படுகிறார். 1953-54ல் நடந்த மூன்றாவது கட்சி காங்கிரசில் அவர் பொலிட்ப்யூரோ உறுப்பினராகிறார். நியுஏஜ் பத்திரிக்கைக்கும் ஆசிரியராகிறார். கட்சியில் காங்கிரஸ் குறித்த அணுகுமுறை, சீன யுத்த கருத்துவேறுபாடுகள் தீவிரமாக இருந்தன. கட்சி பிளவுபட்டது. 1977ல் நம்பூதிரி அவர்கள் சி பி எம் கட்சியின் பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்ந்து 14 ஆண்டுகள் செயல்பட்டார். Mahatma and the Ism, Nehru Ideology and Practice, Indian Freedom Struggle, கேரளா குறித்த ஆய்வுகள், இந்தியாவின் சோசலிச பாதை, கம்யூனிஸ்ட்களும் நாடாளுமன்ற ஜனநாயகமும் போன்றவை அவரின் குறிப்பிட தகுந்த முக்கிய ஆக்கங்கள். ஆதிசங்கரின் தத்துவம், இந்திய விடுதலை இயக்க வர்க்கத்தன்மை, கேரளாவில் விவசாய இயக்கம், வர்க்கம்- சாதி- கட்சி, முதலாளித்துவ நீதித்துறை, கிராம்ஸி சிந்தனை போன்ற சில முக்கிய கட்டுரைகளை அவர் எழுதினார்.. அவரது கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஆங்கிலத்தில் இரண்டு வால்யூம்களாக வெளியிடப்பட்டுள்ளன. இ எம் எஸ் அவர்கள் நியுஏஜ் பத்திரிகையில் 1954-56 ஆண்டுகளில் காந்தியடிகள் குறித்து கட்டுரைகள் எழுதினார். அக்கட்டுரைகளுடன் புதிய கட்டுரைகளாக ’காந்தியம் பற்றி, காந்திக்கு பின்னர் காந்தியம்’ என எழுதப்பட்டு மகாத்மாவும் அவரது இசமும் என்கிற புத்தக வடிவத்தை அவை பெற்றன. அப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இ எம் எஸ் அவர்களின் காந்திஜி குறித்த பார்வை இங்கு சுருக்கமாக முன்வைக்கப்பட்டுள்ளது. காந்தியரில் சிலர் பேசுவது போல் காந்தியம் என்பது வன்முறை தவிர்த்த கம்யூனிசமா என்ற பிரதான கேள்வியை இ எம் எஸ் எழுப்பினார். மார்க்சியம் குறித்து ஆய்ந்திட ஏராளமான அடிப்படை நூல்கள் இருக்கின்றன. எங்கெல்சின் சோசலிசம் கற்பனாவாதம் விஞ்ஞான சோசலிசம், லெனினின் கார்ல் மார்க்ஸ், ஸ்டாலினின் இயக்கவியல் வரலாற்று பொருள்முதல்வாதம் போன்றவை உதவும். ஆனால் காந்தியம் பற்றி புரிந்துகொள்ள அவரது வாழ்க்கை செயல் அனைத்தையும் பார்க்கவேண்டும். அது எளிய ஒன்றல்ல என்பதை இ எம் எஸ் ஏற்கிறார்.. காந்திஜி பற்றிய சுய அனுபவத்தை இ எம் எஸ் சொல்கிறார். ’’காந்தியம் என்றால் என்ன என்பது குறித்த விளக்கங்கள் எதுவும் வரவில்லை. டெண்டுல்கர், பியாரிலாலின் வால்யூம்களை பார்க்கவேண்டும்.. தனது காந்திஜி குறித்த மதிப்பீடுகள் விமர்சனத்திற்கு உள்ளாகாமல் இல்லை என்பதை ஏற்ற இ எம் எஸ்,. தனது மதிப்பீடு மார்க்சிய லெனினிய அடிப்படையிலானது என்றார். பலரைப்போலவே மார்க்சியனாவதற்கு முன்னர் அவரும் காந்திஜியின் சீடர்தான். அவரது 12 வயதிலேயே காந்தியை குறித்த ஈர்ப்புகள் வரத்துவங்கின. காந்தியர் மத்தியிலேயே இடது குணம்கொண்ட நேருவை பின்பற்றுபவராக அவர் இருந்தார். ஜெயபிரகாஷ் துவங்கிய காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இ எம் எஸ் உள்ளிட்டவர் இருந்தனர். சிறையில் இருந்தபோது முக்கிய காந்தியர்களான ராஜாஜி, பட்டாபி சீதாரமையா, புலுசு சாம்பமூர்த்தி, கொண்ட வெங்கடப்பையா போன்றவர்களுடன் காந்திஜி குறித்த உரையாடல்களை 18 மாதங்கள் இ எம் எஸ் அவர்களால் நடத்த முடிந்தது. உறங்கி கிடந்த லட்சக்கணக்கான மக்களை எழுந்து போராட வைத்தவர் என்று மதிப்பிடும்போது அவர் முதலாளிகளின் லீடர் என்று சொல்வது முரண்பாடில்லையா எனக் கேட்கிறார்கள். பூர்ஷ்வா என்பதை மோசமான பதமாக எடுத்துக்கொள்ளவில்லையெனில் முரண்பாடு இல்லை என புரிந்துகொள்ளலாம் என்கிற விளக்கத்தை நாம் இ எம் எஸ் இடம் பெறுகிறோம். மக்களை திரட்டி விழிப்படையவைத்து போராட அழைத்துச் செல்லும் பூர்ஷ்வா தலைமைக்கு எல்லைகள் இருக்கிறது. இதற்கு மேல் செல்ல அவர்கள் விரும்புவதில்லை என்ற வரையறை இருக்கிறது.. . இந்திய மக்களுக்கு குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு அவர் பெரும் தீர்க்கதரிசி. காந்தியின் அன்பு, அகிம்சை, உண்மை, நீதி என்பன அனைவரையும் வசீகரித்தவை. இந்திய தொழிலாளிவர்க்கம், படித்த மத்தியதரவர்க்கம் என அனைவரையும் அவர் ஈர்த்தார். உயர் நோக்கத்திற்காக போராடுவதையும் அதற்காக தியாகம் செய்வதற்கும் அவர் கற்றுத்தந்தார். காந்தியின் இலட்சியவாதம் பலத்தையும் பலவீனத்தையும் கொண்டதுதான். மக்களை கட்டுக்குள் வைக்கும் அகிம்சையை அவர் வற்புறுத்துகிறார். தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரக இயக்கத்திற்கு நிதி உதவி செய்தவர்கள் பட்டியலில் ரதன் ஜி ஜாம்ஷெட்ஜி டாட்டா ரூ 25000, அகாகான் 3000, ஹைதராபாத் நிஜாம் 2500 போன்றவர் இருந்தனர் என இஎம் எஸ் பட்டியலிடுகிறார். காந்திஜி நடைமுறைகளின் விளைவுதான் என்ன ? நரகத்திற்கான பாதைக்கூட நல்லெண்ணங்களின்படி சமைக்கப்படுகிறது. காந்திஜியின் பிற்போக்கான சமூகப்பார்வையும் போராட்டக்குணத்துடன் சேர்ந்தே மக்களிடம் சென்றது. இந்தவகையில் அவர் லெனின் ஸ்டாலின் எனும் தனது காலத்திய மனிதர்களுடன் வேறுபடுகிறார். காந்தி இங்கிலாந்தில் விஜிடேரியனிசம் என எழுதிக்கொண்டிருந்த காலத்தில் லெனின் ருஷ்யாவில் முதலாளித்துவ வளர்ச்சி என எழுதிக்கொண்டிருக்கிறார் என இ எம் எஸ் ஒப்பீடு செல்கிறது. 1909ல் காந்தி எழுதிய இந்திய சுயராஜ்யம் மேற்கு நாகரீகம் மீதான கண்டனம் என புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையின் படி அதை மதிப்பிட்டால் குட்டி முதலாளித்துவ சோசலிச பார்வை கொண்ட வர்ணனையாக இருக்கிறது என்றார் இ எம் எஸ். காந்தியின் மேற்கு குறித்த கண்டனம் ஒடுக்கப்பட்ட மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வாக இல்லை. காந்திஜி தான் ஒரு விசுவாச பிரிட்டிஷ் பிரஜை என சொல்லியும் நடந்தும் காட்டினார். சர் கர்சான் வைலி கொலைவழக்கில் மதன்லால் திங்கரா தேசபக்தன் என்ற வகையில் தான் செய்தது சரியே என வாதாடினார். இந்தியாவிற்கு இன்று தேவை வீரம்நிறைந்த தியாக மரணம். அதனையே நான் செய்துள்ளேன் என்றார் திங்கரா. அன்று துணைச் செயலர் ரேங்கில் இருந்த சர்ச்சில் கூட தேசபக்தி என்ற பெயரில் நடந்துள்ள நேர்த்தி என இதை மதிப்பிட்டார். ஆனால் காந்தியோ திங்கரா போன்றவர்களின் நடவடிக்கை தவறானது என்றார். அவர் தேசபக்தர் ஆனால் கண்மூடித்தனமான இருக்கிறது என்று கருத்து தெரிவித்தார். தனது உடலை தவறாக அவர் தந்துவிட்டார். அதன் விளவுகள் mischievous என்றார். கோகலே உட்பட அவர் காலத்திய மூத்தவர்களானாலும், மற்ற காங்கிரஸ் தலைவர்கள் ஆனாலும் காந்தியைபோன்று அரசியல் இயக்கம் பற்றிய கருத்துக்களை கொண்டிருக்கவில்லை. அவரின் வரவால் செயல்பாட்டுத்தன்மையால் பலர் வாயடைத்துப்போய் அவரால் வசீகரிக்கப்படலாயினர். அவரைவிட அறிவில் சிறந்தவர்கள் கூட அவரின் முடிவிற்கு கட்டுப்படலாயினர். கோகலே, நெளரோஜி மிதவாத அரசியலுக்கு மாற்றாக திலகர், லாலாஜி, பிபின் லால் தீவிர அரசியல் தலைவர்களாக பார்க்கப்பட்டனர். நவீன அரசியல் இயக்கத்தில் உருவான தலைவர்களுள் திலகர் 6 ஆண்டுகள் கடும் தண்டனை பெற்ற முதல் தலைவர் என்ற மரியாதையைப்பெற்றார். தேசிய உயர் தலைவர்கள் டோரிகள் அல்லது லிபரல் போல் அரசியல் பார்வை வைத்திருந்தால், தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த காந்தியடிகளுக்கு கிறிஸ்துவமத செல்வாக்குடனான இந்துயிச அடிப்படை இருந்தது. செக்யூலர் அரசியல் என்பதின் விலகலாக அவர் தெரிந்தார். ஆனால் மிக முக்கியமாக ஓர் அம்சத்தில் அவர் வேறுபட்டவராகவும் விளங்கினார். மக்களுடன், அவர்களின் பிரச்சனையின்பாற்பட்டு, அவர்கள் விருப்பம்சார்ந்து வாழ்பவராக இருந்தார். செயல் என்பது காந்தியத்தின் பிரதான குணமாக இருந்தது. சம்பரான் போராட்டம் அய்ரோப்பிய தோட்ட முதலாளிகளை எதிர்த்து மக்களை திரட்டிய போராட்டம். அங்கிருந்த முக்கிய அறிவுஜீவிகளான ராஜேந்திரபிரசாத், கிருபளானி, மஸ்ருல் ஹக் போன்றவர்களை ஈர்த்த போராட்டம். தியாக மனப்பான்மை கொண்ட உயர்தட்டு மத்தியதர வர்க்கம் உழைக்கும் மக்களுடன் நின்று அவர்களின் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினார்கள். அகமதாபாத் 1918 பிப்- மார்ச் மில் தொழிலாளர் போராட்டம் காந்தியவகைப்பட்ட தொழிற்சங்க இயக்கம் உதயமாக வழி செய்தது. அகிம்சை எனப் பேசிய அவர் ஏகாதிபத்திய யுத்தத்திற்கு இந்திய இளைஞர்களை மனசாட்சியின்றி திரட்டினார். இவ்விஷயத்தில் அவர் பூர்ஷ்வா அரசியல்வாதியாகவே இருந்தார். ரெளலட் பில் அரசிதழில் வந்தவுடன் சத்தியாக்கிரக உறுதிமொழியை பட்டேல், சரோஜினி, சங்கர்லால், அனுஷ்யா ஆகியோர் சட்டமறுப்பு இயக்க அறிக்கையுடன் வெளியிட்டனர். உண்மையும் அகிம்சையும் பின்பற்றப்படும் என்றனர். பம்பாயில் சத்தியாக்கிரக உறுதிமொழியில் 1200 பேர் 15 நாட்களில் கையொப்பம் இட்டனர். தடை செய்யப்பட்ட காந்திஜியின் இந்திய சுயராஜ்யம், சர்வோதயா போன்ற ஆக்கங்களை கொணர்வது என முடிவெடுத்தனர். ஏப்ரல் 6, 1919ல் ஹர்த்தால் என்றார் காந்தி. இப்போராட்டம் ஜாலியன்வாலாபாக் படுகொலைகளில் முடிந்தது. 1920 மார்ச்சில் கிலாபத் அறிக்கையை தந்தார். இந்த நிகழ்வுகளின் ஊடாக அவர் ஆகஸ்ட் 1920ல் ஒத்துழையாமையை அறிவித்தார். காந்தியும் அலி சகோதரர்களும் சுற்றுப்பயணம் செய்து மக்களை திரட்டினர்.. காங்கிரசும் செப்டம்பர் 1920ல் கூடி அகிம்சை வழியில் ஒத்துழையாமை என்றது. நீதிமன்றம், கல்விக்கூடங்களை விட்டு வெளியேறுதல், பட்டங்களை திரும்ப தருதல் போராட்டமுறைகளாக அறிவிக்கப்பட்டன. வெளிநாட்டுப் பொருட்கள் பகிஷ்கரிப்பும் சொல்லப்பட்டது. இந்த திட்டத்தின் வர்க்க பின்புலத்தை எளிதில் அறியமுடியும். ஏகாதிபத்தியத்திற்கு எந்த உலுக்கலையும் தராத போராட்டம். போர்க்குண போராட்டங்களில்லை. இது இயல்பான பூர்ஷ்வாக்களின் அச்சம் தவிர வேறல்ல என மதிப்பிடுகிறார் இ எம் எஸ். 1922 செளரி செளராவரை சிவில் ஒத்துழையாமை தன் கைமீறி செல்லும் என்பதை அவர் உணரவில்லை. அவரின் அகிம்சை என்பது மிதவாதிகளை திருப்திபடுத்தியது என்றால் அவரின் மக்கள் போராட்ட அறைகூவல் தீவிரமாக செயல்படுபவர்களை உற்சாகப்படுத்தியது. எது பாதை? பிரிட்டிஷாருடன் அமைதியான பேச்சுவார்த்தையா- போர்க்குணமிக்க போராட்டம் மூலம் தீர்வா என்கிற பிரச்சனை எழுந்தது. சிவில் ஒத்துழையாமை நிறுத்தப்பட்டதில் அதிருப்தி ஏற்பட்டது. மோதிலால் போன்ற சுயராஜ்யவாதிகள் சட்டமன்ற கவுன்சில் நுழைவு என்றனர். அதைவிட மேலான வழியை மற்றவர்கள் சட்டமன்றத்திற்கு வெளியே செயல்பட்டுத்தான் நிரூபிக்கவேண்டும் என ராஜாஜி போன்றவர்க்கு காந்திஜி எடுத்துரைத்தார். 2 காந்தி நாடுமுழுதும் சென்று மக்களை சந்தித்து தனது திட்டம் குறித்த விளக்கிவந்ததன் மூலம் அவர்கள் திரட்டப்பட்டார்கள். அதேநேரத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பில் போர்க்குண போராட்டங்களிலிருந்து தடுக்கப்பட்டார்கள். அவர் மக்களிடம் ஏகாதிபத்தியம், நிலபிரபுத்துவம் ஆகியவற்றின் கொடுமைகளை பேசாமல் மக்களின் பொதுவான கஷ்டங்கள், ஏற்ற இறக்க வேறுபாடுகள்- அசமத்துவம் , அதை மாற்றவேண்டும் என பொதுப்படையாக பேசினார். அவர் அனைத்துப்பகுதி மக்களின் வாழ்க்கைமுறைகளையும், துயரங்களையும் அறிந்தவராக இருந்ததால் மக்கள் அவருடன் திரண்டனர். தேவதாசிகளுடன் கூட கெளரவ வாழ்க்கைமுறைக்கு திரும்புவது குறித்து அவரால் உரையாடமுடிந்தது. தேவதாசிகள் என அழைத்து மதத்தின் பெயரால் கடவுளை நாம் நிந்திக்கிறோம் என்றார் காந்தி. 1927ல் சக்லத்வாலாவுடன் அவர் உரையாடினார். சக்லத்வாலா விவரங்களை ஆய்வு செய்யவில்லை, ஆனால் நேர்மையானவராக எழை எளியவர் குறித்த அக்கறை கொண்டவராக இருக்கிறார் என்றார் காந்திஜி. கதர் மூலமாக சமதையான வாழ்க்கைமுறை நோக்கியும் சுயராஜ்யம் நோக்கியும் செல்லமுடியும் என காந்திஜி பேசினார். அதில் தொழிலாளர் முதலாளி நல்லுறவு இருக்கிறது என்றார். பொதுவாக செயலூக்கத்தை உருவாக்கினார் காந்தி. அதன் நோக்கமே சுயராஜ்யத்திற்குத்தான் என்கிற உணர்வை உருவாக்கினார். அரசியல் அம்சமற்ற அவரது கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தை அரசியல் செயல்வீரர்களுடன் இணைத்தார். பிரிட்டிஷ் அரசாங்கத்தை வசைபாடுவது என்கிற அரசியல் கடமையுடன் நடைமுறை வேலைத்திட்டத்தை அவர்களுக்கு முன் வைத்தார் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் மதரீதியான வகுப்புவாத மோதல் காந்திஜிக்கு சவாலாக முன்நின்றது. இறுதியில் காந்தியின் அனைத்து முயற்சிகளையும் தாண்டி நாடு பிரிவினைக்கு உள்ளாகி பாகிஸ்தான் உருவாவதில் முடிந்தது. இந்து மதவெறியர் அவரை கொலை செய்திட்ட துயரமும் நிகழ்ந்தது. 1920களில் வெளிநாடுகளிலிருந்து புதிய கருத்துக்கள் இந்திய இளைஞர்களை ஈர்க்கத்துவங்கின. அயர்லாந்தின் போராட்டங்கள், துருக்கியில் ஏற்பட்ட மாற்றங்கள், சோவியத்தின் புரட்சி, பெருநகரங்களில் குறிப்பாக பம்பாய் கல்கத்தாவில் கம்யூனிஸ்ட் குழுக்கள் தோன்றின. தனிநபர் பயங்கரவாதத்தின் மீது நம்பிக்கைக்கொண்ட குழுக்கள் உருவாயின. காங்கிரஸ் தலைமையில் இருந்த காந்திஜி மோதிலால் போன்றவர்கள் டொமினியன் அந்தஸ்து என்கிற நிலைப்பாட்டிலிருந்தனர். மதராசில் நடந்த காங்கிரஸ் கூட்டம் 1927ல் பூர்ண சுயராஜ்யம் இலக்கு என தீர்மானம் இய்ற்றியது. காந்தி அதை கடுமையாக எதிர்த்தார். காங்கிரஸ் தன்னால் நிறைவேற்ற முடியாதவற்றை தீர்மானமாக போடுவதாக கூறி விமர்சித்தார். பள்ளிச் சிறுவர்கள் போல் நடந்துகொள்வதாக கடிந்துகொண்டார். லாகூரில் நடந்த காங்கிரஸ் 1929ல் உடனடி நோக்கம் பரிபூர்ண சுதந்திரம் என தீர்மானம் நிறைவேற்றியது. தனது அறிவுரையை நேரு ஏற்று இசைவு தெரிவிக்க காந்திஜி முயற்சித்தார். சில ஆங்கிலம் தெரிந்தவர்களே இந்தியாவாகிட முடியாது என்றார் காந்திஜி. மோதிலால் விடுதலை டொமீனியன் என்கிற குழப்பம் எல்லாம் வேண்டாம், நாம் அறிந்த சுயராஜ்யம் என்பதை பயன்படுத்துவோம் என்றார். பட்டேல் தலைமை பொறுப்பிற்கு வருவது என்பதை காந்திஜி ஏற்கவில்லை . நேருவை கட்டுப்பாடு நிறைந்தவர், நடைமுறை சார்ந்து இயங்கத் தெரிந்தவர் என அவர் எழுதினார். லாகூர் காங்கிரசிற்கு பின்னர் காந்தியும் முழுவிடுதலை என்பது நமது தூர லட்சியம் அல்ல. உடனடி நோக்கம் என்றார். 1930 ஜன 26 சுதந்திரதினமாக அனுசரிக்கவிடப்பட்ட அறைகூவல் மக்களிடம் ஈர்ப்பாக பற்றியது. இதற்கான பிரகடன ஆவணம் பிரிட்டிஷாரின் ஆட்சியை கடுமையாக சாடியது. சுதந்திர உறுதிமொழியாகவே அது ஏற்கப்பட்டது. தொடர்ந்த உப்பு சத்தியாக்கிரகம் தண்டி யாத்திரை மக்களை கவ்விப் பிடித்தது. கல்கத்தா, சென்னை, கராச்சியில் துப்பாக்கி சூடு நடந்தது. கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை போடப்பட்டது. சிட்டகாங் ஆயுதகிடங்கு சூறையாடப்பட்டது. போராட்டக்காரர்கள் வசம் சோலாப்பூர் என்ற நிலையும் உருவானது. பதான்களுக்கு எதிராக குண்டுகள் போடப்பட்டன. இந்த பீறிட்ட உற்சாகத்தை மடைமாற்றி பூர்ஷ்வா வர்க்கத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வண்ணம் வழக்கம்போல் காந்தியும் காங்கிரஸ் தலைவர்களும் நடந்துகொண்டனர்.. முழுவிடுதலை எனப் பேசிவிட்டு நடைமுறையில் அதை கைவிட்டனர் என்பதை இ எம் எஸ் விமர்சனமாக முன்வைக்கிறார், நிலவருவாயை 50 சதம் குறைத்தல், சிவில் ஊழியர் சம்பளத்தை 50 சதம் என மாற்றி குறைத்தல், மதுவிலக்கு, அந்நிய துணிகளுக்கு உரிய வரிமுறைகள், அரசியல் கைதிகள் விடுதலை, சி அய் டி கண்காணிப்பு முறையை கைவிடுதல் போன்ற கோரிக்கைகளை வைஸ்ராய் பரிசீலித்தால் சிவில் ஒத்துழையாமை எழாது என்றார் காந்திஜி. அவரைப் பொறுத்தவரை சிவில் ஒத்துழையாமை என்பது தனிநபர்களின் நன்னடத்தையை அடிப்படையாககொண்டதே தவிர எண்ணிக்கை பலம்சார்ந்த ஒன்றல்ல. சுயவதைகள் துன்பங்களை அனுபவிப்பவர்கள் தேவை என அவர் நினைத்தார். கோடிக்கணக்கான தொழிலாளர் விவசாயிகள் கோரிக்கையை அவர் இடம்பெற செய்யவில்லை. கராச்சி காங்கிரசில் அடிப்படை உரிமைகள் தீர்மானத்தில் பல இடம்பெற்று இருந்தன . வாழ் ஊதியம், வேலைநேர வரையறுப்பு, சுகாதார பணிச்சூழல், வயதுகால பாதுகாப்பு, விவசாய வாடகை குறைப்பு போன்றவைகள் எல்லாம் மக்களை திரட்டி தாங்கள் விரும்பும் எல்லையுடன் கோரிக்கைகளை தீர்த்துக்கொள்வதற்குத்தான் என இ எம் எஸ் விமர்சனம் வைக்கிறார். பிரிட்டிஷ் அரசாங்கம் மக்களை ஒடுக்கியது. காங்கிரஸ் தலைமையுடன் பேச்சுவார்த்தையும் நடத்தியது. இந்த இரட்டை நிலை நிர்வாகம் அவர்களுக்கு வசதியாக இருந்தது. வட்டமேஜை மாநாட்டில் காங்கிரஸ் தனித்துவிடப்பட்டது. அரசு கம்யூனல் அவார்ட் அறிவித்தது. அரசியல் அமைப்பு சட்ட பிரச்சனைகளில் காங்கிரசின் பலவீனம் தெரிந்தது. காந்தி லண்டனிலிருந்து திரும்பும் நேரத்தில் நேரு உட்பட பலர் சிறையில் இருந்தனர்.. தண்டி யாத்திரைக்கு பின்னர் உப்பு எடுக்க அனுமதி என்பதும், அரசியல் கைதிகள் விடுவிப்பு என்பதும் ஏற்கப்பட்டது. ஜனவரி 4 1932ல் காந்தி கைது செய்யப்படுகிறார். மார்ச் 11ல் அவர் கம்யூனல் அவார்ட் குறித்து தனது நிலைப்பட்டை தெரிவித்து கடிதம் எழுதுகிறார். காந்தியின் உண்ணாநோன்பால் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் உடன்பாடு ஏற்படுகிறது. சிறையிலிருந்து ஹரிஜன் சேவை என்பதை காந்தி துவங்குகிறார். பின்னர் அவ்வேலைகள் இதய சுத்தியுடன் நாடுமுழுதும் நடக்கவில்லை எனச்சொல்லி ஆத்மசுத்திக்கான 21 நாட்கள் உண்ணாநோன்பு மேற்கொள்கிறார். 1933-34 காலத்தை நாடுமுழுதும் சுற்றிவர பயன்படுத்திக்கொள்கிறார். ஒவ்வொருமுறையும் மாபெரும் மக்கள் இயக்கம் எழுந்தபோதெல்லாம் சுப்ரீம் தலைவரான காந்திஜி ஏன் தீண்டாமை போன்ற மைனர் பிரச்சனைகளில் கவனத்தை மாற்றுகிறார் என இ எம் எஸ் கேள்வி எழுப்பினார். காந்திஜி அரசியல் என்பதைவிட சமூக பிரச்சனைகளை மேலானதாக பார்த்தவரா என கேள்வி எழுப்பி இல்லை என்கிறார் இ எம் எஸ். புத்திகூர்மையான முதலாளித்துவ நலன்களுக்காக எப்போதும் செயல்பட்ட அரசியல்வாதி அவர் என்கிற கருத்திற்கு வருகிறார் இ எம் எஸ். காந்திஜியின் ஹரிஜன நலன் என்பது வெறும் சோசியல் பிரச்சனைக்கானதல்ல-. நின்றுபோன பேச்சுவார்த்தையை அரசாங்கத்துடன் துவக்கி புதிய நிலைமைகளில் காங்கிரசை மீண்டும் முன்னிலைப்படுத்துவதே ஆகும். பாராளுமன்ற நடவடிக்கைகள் என்கிற போக்கிற்கு செல்வதாகும். ஆனால் நேரு உட்பட பலருக்கும் கேள்வி இருந்தது. ஏகாதிபத்திய எதிர்ப்பிற்காக பாராளுமன்ற நடவடிக்கைகளா- அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கான சாதனமா என்பதே அக்கேள்விகளாக இருந்தன என்கிறார் இ எம் எஸ். செப்டம்பர் 1934ல் காந்தி படேலுக்கு கடிதம் எழுதினார். நேரு தலைமையில் சோசலிஸ்ட் குழு ஒன்று வளர்ந்து வருகிறது. சோசலிஸ்ட்கள் வெளியிட்ட கொள்கைதிட்டத்தில் எனக்கு வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் அக்கருத்துக்கள் பரவுவதை என்னால் தடுக்கமுடியாது என்று அதில் தெரிவித்திருந்தார். காங்கிரசிலிருந்து விலகுவது குறித்தும் அவர் செப் 17 1934ல் அறிக்கை வெளியிட்டார். சோசலிஸ்ட்கள் வளர்ச்சியை தன்னால் தடுக்கமுடியாது. தான் அகிம்சைமீது முழுமையாக நம்பிக்கை கொண்டு சத்தியாக்கிரகம் நடத்துபவன் என்றார்.. காங்கிரசில் உள்ள பல்வேறு கருத்தோட்டம் கொண்டவர்க்கும் தேவையற்ற ’மாரல் பிரஷர்’ தராமல் இருந்திடவும், தான் விரும்பும் திட்டத்தை சுதந்திரமாக செயலாக்குவதற்கும் காங்கிரசிலிருந்து வெளியேறுவதாக என அவர் விளக்கமளித்தார். பம்பாயில் கூடிய காங்கிரஸ் காந்திஜிக்கு கொடுத்த வேண்டுகோள் பயனளிக்காத நிலையில் அவர்மீது முழுமையான நம்பிக்கை வைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றிக்கொண்டது. காங்கிரசிலிருந்து விலகியதற்கு பின்னர் அவர் ஹரிஜன் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவந்தார். முரண்பட்ட அரசியல் அறிக்கை ஏதும் தராமல் இருந்தார். காதி, கிராமத்தொழில்கள், தீண்டாமை, சுற்றுப்புறத்தூய்மை, பசுபாதுகாப்பு, பிள்ளைப்பேறு கட்டுப்பாடு போன்ற தற்காலிக அரசியலுக்கு தொடர்பற்ற அம்சங்களில் கவனம் செலுத்தினார் என இ எம் எஸ் விமர்சன கண்ணுடன் எழுதுகிறார். அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர்களுடன் எப்போதும் கலந்துரையாடிவந்தார். முக்கிய தலைவர்கள் அரசியல் ஆலோசனைக்காக அவரிடம் விரைந்தனர். எனவே காங்கிரசிலிருந்து விலகல் என்றாலும் அது அரசியல் விலகலாக இல்லை எனவும் இ எம் எஸ் கூறுகிறார். காங்கிரஸ் சோசலிஸ்ட் தலைவர்களுக்கும் அவர் அறிவுரை வழங்காமல் இல்லை. ஆச்சார்யா நரேந்திர தேவாவை நேருவுடன் ஆலோசித்து செயல்பட அறிவுறுத்தினார். விஞ்ஞான சோசலிசம் என்றில்லாமல் நடைமுறை நிலைமைகளுக்கு உகந்த இந்திய சூழல் சோசலிசம் என்பது பற்றி திட்டமிட அறிவுறுத்தினார். நேருவையும் லாகூர் காங்கிரசிற்கு தலைமையேற்க செய்தார். இளைஞர்களின் வேகம் முறைப்படுத்தப்பட்டு கட்டுக்குள் வைக்கப்படுவது, அளவறிந்து செயல்படவைப்பது குறித்து அவர் பேசினார். காங்கிரஸ் ஓர் அமைப்பு என்கிற வகையில் பலதரப்பட்ட போக்குகளுக்கு இடமளித்து தன்னை முன்நகர்த்தவேண்டியிருந்தது. பாராளுமன்றவாதம், சோசலிஸ்ட் சிந்தனைகள், வலதுசாரி போக்கு, சமூக மத பிரச்சனைகளின் தாக்கம் ஆகியவற்றை விவாத அமர்வுகளில் எதிர்கொண்டு செல்லவேண்டியிருந்தது. அனைத்துதரப்பினரையும் தகமைத்துக்கொள்வது பெரும் சவாலாக இருந்தது. காங்கிரஸ் உண்மையாகவே ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களை நடத்துகிறதா என்பதை இடதுசாரிகள் சோதித்துக்கொண்டே இருக்க வேண்டிய நிலையில் இருந்தனர். நேரு தலைமை மூலம் காங்கிரஸ் 1929, 1946 களில் அதைக் காட்ட விரும்பியது. நேரு 1936-1937லும் சுபாஷ் 1938லும் தலைமைக்கு அமர்த்தப்பட்டனர். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியினர் காரியக்கமிட்டியில் இக்காலங்களில் இருக்கமுடிந்தது. 1936ல் நேருவிற்காக தன்பெயரை விலக்கி கொண்டபோது நேருவின் அனைத்து கருத்துக்களிலும் தனக்கு உடன்பாடில்லை என பட்டேல் தெரிவித்தார். பல காங்கிரஸ் தலைவர்களுக்கும் நேருவிற்கும் பெருத்த வேறுபாடுகள் இருப்பதாகவும் வெளிப்படுத்தினார். காங்கிரஸ் எந்த தனிநபருக்காகவும் இல்லை. ஆனாலும் நேரு சிறந்தவர் ஆதரவு தருவோம் என பட்டேல் பேசினார். 1936-38 நேரு காலத்தில் விவசாய திட்டம், காங்கிரஸ் சோசலிஸ்ட்கள் மற்றும் நேருவின் மக்கள் சந்திப்பு இயக்கங்கள் நடந்தன. 1937 தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று செல்வாக்கை நிரூபித்தது. கவர்னர்களுக்கு இருந்த அதிகாரம் குறித்த பிரிட்டிஷ் எதிர்த்த சர்ச்சையில் இடதுசாரிகள் முழுமையாக நின்றனர். காந்தியும் இந்திய அரசாங்க சட்டம் 1935 விடுதலையை தராவிட்டாலும் கத்தியின்பாற்பட்ட சாம்ராஜ்யம் என்பதை பெரும்பான்மை மக்களின் ராஜ்யம் என்கிற அளவிற்காவது செய்துள்ளது என எழுதினார். மூன்றுகோடி வாக்காளர் என்பது சாதாரண விஷயமல்ல என்றார். எனவே அவர்களின் பிரதிநிதிகள் மக்களுக்கு ஏமாற்றம் தராமலும் பிரிட்டிஷார் நோக்கத்திற்கு இடம்தந்துவிடாமலும் பணியாற்ற வேண்டும் என்றார். காந்திஜி மீண்டும் காங்கிரசின் தலையாய சக்தி என்பதை காட்டினார். அமைச்சரவைக்கு அறிவுரை தந்துகொண்டிருந்தார். மதுவிலக்கு, கல்வி, வரி குறித்து எழுதினார். கவர்னர், வைஸ்ராயுடன் முரண்கள் ஏற்பட்ட காலத்தில் தலையிட்டார். காங்கிரஸ் அமைச்சரவை விவசாயிகள் போராட்டம் போன்ற எதிர்ப்புகளை காணவேண்டியிருந்தது. அதிருப்தியும் எழுந்தது. காந்தியின் வழிக்காட்டலுடன் இருந்த காங்கிரஸ் தலைமைக்கு இருவகை போராட்டங்களை சந்திக்கும் அவசியம் ஏற்பட்டது. பிரிட்டிஷ் எதிர்ப்பு, இடதுசாரிகளின் முயற்சியால் எழும் மக்கள் போராட்டங்கள். எனவே இடதுசாரி வலதுசாரி மத்தியில் இணக்கம் என்பதில் சிக்கல் நிலவி காங்கிரசில் வலதுபிரிவு தங்களின் செல்வாக்கை நிலைநாட்டும் போராட்டம் எழுந்தது. மக்கள் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டன என்பதுடன் சிந்தாந்த கொள்கை போராட்டங்களும் வலதுபிரிவால் முன்னெடுக்கப்பட்டன. காந்தியும் இந்தவகை அடக்குமுறைகளை தனது புரிதலில் நியாயப்படுத்தினார். சிவில் உரிமைகள் என்பன கிரிமினல் சுதந்திரமல்ல என்றார். காங்கிரஸ் மாகாணங்களின் தொழிற்துறை அமைச்சர்கள் மாநாடு கூட்டப்பட்டு நேரு, கே டி ஷா பொறுப்பில் கமிட்டி அமைக்கப்பட்டது. விஸ்வேஸ்வரய்யா திட்டம் அடிப்படையாக எடுத்துக்கோள்ளப்பட்டது. அதேபோல் கல்வி மாநாடு ஒன்றும் நடத்தப்பட்டு புதிய கல்வித்திட்டம் பேசப்பட்டது. இப்படிப்பட்ட ஆரோக்கிய முன் எடுப்புகளுடன் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் கவனமாக இருப்பது என்பதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. சமஸ்தான (பிரின்ஸ்லி) அரசுகள் என்பதிலும் ஜனநாயகப்படுத்துவது என்கிற பார்வை மேலோங்கியது. ஹரிபுராவில் 1938ல் கூடிய காங்கிரஸ் சமஸ்தானஆட்சிப் பகுதிகளுக்கான கொள்கைகளை தீட்டியது. காந்திஜியே ஆலோசனைகளை சொல்லத்துவங்கினார். அவரது சகாக்களான பட்டாபி சீதாரமைய்யா, பஜாஜ் போன்றவர்களின் தலையீடும் உற்சாகமாக நடந்தேறியது. ராஜ்கோட் பிரச்சனையில் காந்திஜி முன்நின்று போராட்டமும் நடத்தினார். அங்கும் மக்கள் எழுச்சிகர போராட்ட வடிவங்களுக்கு சென்று விடாமல் கட்டுக்குள் நிறுத்தப்பட்டனர். நியுயார்க் டைம்ஸ் நிருபர் டொமினியன் அந்தஸ்து ஏற்கலாம் என நீங்களும் முழுவிடுதலை என சுபாஷும் பேசுவது வேறுபாடில்லையா எனக் கேட்டார். இல்லை இருவரும் வேறு வார்த்தைகளை மொழியை பயன்படுத்துகிறோம் கருத்துவேறுபாடு ஏதுமில்லை என்றார் காந்தி. ஆனால் அது வெறும் வார்த்தை வேறுபாடல்ல. காந்திஜியின் பட்டாபி சீதராமைய்யா சுபாஷால் தோற்கடிக்கப்பட்டார். பட்டாபி சீதாரமைய்யா போன்ற வலதுசாரி வேட்பாளரை நிறுத்துவது முக்கியமல்லாத ஒன்றல்ல என சுபாஷ் விமர்சித்தார்.. இடது வேட்பாளர் எனில் அவர்களுக்கு தொண்டையில் சிக்கிய முள் போன்று உள்ளது என்ற ’கமெண்ட்டை’ சுபாஷ் தந்தார். மெளலானா, நேரு,பிரசாத், புலாபாய் தேசாய், கிருபளானி, மகாத்மா ஆகியோருடன் தாமும் இருந்து எடுத்த முடிவுதான் பட்டாபி சீதாரமையாவை நிறுத்துவது என பதில் உரைத்தார் பட்டேல். ஆனால் நேரு தான் கலந்துகொண்டது உண்மைதான், பட்டாபி சீதாராமைய்யாவா சுபாஷ் சந்திரபோஸா என்பதில் தான் கமிட் ஆகவில்லை என விளக்கம் தந்தார். சுபாஷ் தலைமையில் இயங்க விரும்பாமல் வலதுப்பிரிவின் தலைவர்கள் 12 பேர் தங்கள் விலகலை தெரிவித்தனர். நேரு அக்கடிதத்தில் கையொப்பம் இடாவிட்டாலும் விலகுவதாக அறிவித்தார். நெருக்கடி அதிகமானது. காந்தியை கலந்து செயற்குழு அமைப்பது எனும் முயற்சியை சுபாஷ் ஏற்று அவருடன் விவாதித்தார். விவாதத்தில் சுபாஷ் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் தன்னால் காணமுடியாத நிலையில் அவரே அமைத்துக்கொள்வதுதான் சரி என காந்தி தெரிவித்தார். காந்திஜியின் அணுகுமுறையால வேறுவழியில்லாமல் சுபாஷ் தனது விலகலை தரநேர்ந்தது என இ எம் எஸ் எழுதுகிறார். இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் பொறுப்பிற்கு ராஜேந்திரபிரசாத் வந்தார். காங்கிரஸ் தலைமையை கேட்காமல் எங்கும் சத்தியாக்கிரகம் கூடாது என முடிவெடுத்தனர். பொறுப்பிற்கு நேரு கூட இல்லாமல் வலது பிரிவினர் நியமிக்கப்பட்டனர். சுபாஷ் போன்றவர்கள் எதிர்ப்புநாள் அனுசரித்தனர். ஒழுங்கு மீறல் என அவர்மீது நடவடிக்கையை காங்கிரஸ் தலைமை எடுத்தது. ஆகஸ்ட் 1939 முதல் மூன்று ஆண்டுகளுக்கு நேதாஜி சுபாஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இரண்டாம் உலகயுத்தம் துவங்கிய நேரத்தில் பிரிட்டிஷ் வெல்லவேண்டும் என காந்திஜி விரும்பினார். அதே நேரத்தில் வன்முறை எதிர்த்த தனது அகிம்சையை வற்புறுத்தியும் வந்தார் என்பது உண்மையென தன்னால் ஏற்க முடியவில்லை என்பது இ எம் எஸ்ஸின் முடிவு. முதல் உலகப்போர் காலத்தில் அவர் பிரிட்டனுக்கு யுத்த ஆளெடுப்பிற்கு உதவினார். சுயராஜ்ய போராட்டத்திற்கு இது எதிரான ஒன்றல்ல என்றார். ஆனால் 20 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாம் உலகப்போர் காலத்தில் மாநில அரசாங்க அனுபவம் என்பது காங்கிரசிற்கு கிட்டியது. அடுத்து மத்திய அரசாங்க உரிமை என்பதை காங்கிரஸ் நிபந்தனையாக்கியது. முஸ்லீம் லீக், இந்துமகாசபா என அனைவரும் அதையே பேசினர். அவர்களுக்கு காங்கிரஸ் மீது விமர்சனம் இல்லாமல் இல்லை. காங்கிரஸ் தலைவர்களில் பட்டேல் ராஜாஜி போன்றவர்கள் கூட காந்தியின் நெறிசார்ந்த அகிம்சை என்பதில் உடன்படமுடியவில்லை என சொல்லத்துவங்கினர். பிரிட்டிஷருக்கு நிபந்தனையற்ற ஆதரவு என காந்திஜி சொல்லிவந்தார். காங்கிரஸ் செயற்குழு நிபந்தனையுடன் என்றது. யுத்த சூழழால் பிரிட்டிஷ் எந்த பேச்சுவார்த்தைக்கும் தயார் என்ற நிலையில் இல்லாமல் இருந்தது. அய்ரோப்பிய நலன்கள், ராணுவம், மன்னர்கள் ஆட்சி, வகுப்புவாத மோதல்கள் என்கிற நான்கு தூண்களை நம்பி பிரிட்டிஷார் ஆள்கின்றனர் என்று காந்திஜி சொல்வார். அதில் வகுப்புவாத எழுச்சி அதிகமானதை காங்கிரஸ் உணர்ந்தது, முஸ்லீம் லீக் தன்னை பலப்படுத்திக்கொண்டு வந்தது. நிலைமைகளை சீராக்க அமைச்சரவை ராஜினாமா என்கிற தீர்மானத்தை காங்கிரஸ் கைக்கொண்டது. 1934க்கு பின்னர் மீண்டும் ராம்கரில்தான் காந்தி காங்கிரஸ் கூட்டத்தில் உரையாற்றவருகிறார். ஒவ்வொரு காங்கிரஸ் கமிட்டியும் சத்தியாக்கிரக கமிட்டியாகட்டும் என்றார் காந்திஜி. 1940களின் மத்தியில் பிரிட்டன் உட்பட மேற்கு அய்ரோப்பா நாஜிகளால் பின்னடைவிற்கு உள்ளாக்கப்படுகிறது. சர்ச்சில் ஆட்சி போய் சாம்பர்லின் வருகிறார். காங்கிரஸ் செயற்குழு பிரிட்டனின் தேசப்பாதுகாப்பு என்கிற முற்றிய சூழலில் காங்கிரசுடன் உடன்பாட்டிற்கு வருவதே உகந்தது என கருதினர். ஜுன் 1940ல் நாட்டின் பாதுகாப்பு என்பதில் அகிம்சை சமயப்பற்று போல் இருக்கமுடியாது என செயற்குழு முடிவெடுத்தது. ”Mahatma Gandhi desires the Congress to be true to the creed of non- violence and to decalre its willingness that India should maintain armed forces to defend her freedom against external aggression or internal disorder while they themselves are unaable to go to the full length with Gandhiji; but they recognise that he should be free to pursue his great ideal in his own way and therefore absolve him from the responsibility for the programme and activity which congress has to pursue.” காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெரிவித்தாலும் காந்தி அவரது நம்பிக்கையை எடுத்துச் செல்ல எந்த தடையும் இல்லை எனவும் தெரிவித்தது. காங்கிரஸ் இந்திய விடுதலைக்கான அரசியல் ஸ்தாபனம், உலக சமாதான நிறுவனம் இல்லை. அது பலவீனம்தான். மகாத்மா அளவிற்கு எங்களால் செல்லமுடியவில்லை என செயற்குழு தன் நிலைப்பட்டை விளக்கியது. பின்னர் பிரிட்டிஷாருடன் ஏற்பட்ட தொடர் முரண்பாட்டில் யுத்தம் எதிர்த்த தனிநபர் சத்தியாக்கிரகம் என்கிற காந்திஜியின் ஆலோசனையை காங்கிரஸ் ஏற்றது. முதல் சத்தியாக்கிரகியாக வினோபாபாவே அனுப்பப்பட்டார். நமது பேச்சு மற்றும் எழுத்துரிமைக்கான போராட்டம் என காந்திஜி அப்போராட்டத்தை முன்னிறுத்தினார். டிசம்பர் 1941ல் பர்தோலியில் செயற்குழு கூடியது. அகிம்சையை முக்கியத்துவம் எனக் கருதாத யுத்த எதிர்ப்பு என்பதால் தன்னால் உடன்படமுடியாத நிலையை காந்தி விளக்கி கடிதம் எழுதினார். பிப்ரவரி 1942ல் சியாங்காய் ஷேக் டெல்லி வந்தார். பிரிட்டனின் இந்தியாவிற்கு வேண்டுகோள் விடுத்தார். இந்தியாவிற்கு விடுதலை எனவும் பேசினார். மார்ச் 7 1942ல் ரங்கூன் ஜப்பானிடம் வீழ்ந்தது என்ற செய்திக்கு பின்னர் சர்ச்சில் கிரிப்ஸ் தூதுக்குழு பற்றி பேசினார். ஜப்பானை முறியடிக்க இந்தியா தனது சக்தி முழுமையும் தரவேண்டும் என்றார். ’குவிட் இந்தியா’ முழக்கம் வந்த நேரத்தில் தேசப்பாதுகாப்பிற்கு வன்முறை என்பதோ வேறு நெறிகளோ பிரச்சனையாக இல்லை. பிரிட்டிஷாருக்கு நெருக்கடி தந்து எவ்வாறு பேச்சுவார்த்தையை அமைத்துக்கொள்வது என்பதே இருந்தது. காந்தியின் ’அகிம்சை’, ’போர் சூழலிலும் அகிம்சைவழிநிற்றல்’ என்பதெல்லாம் பிரிட்டிஷார் மீது உருவாக்கவேண்டிய தாக்கம் என்பதாகத்தான் இருந்தது. எனவே காங்கிரஸ் செயற்குழுவிற்கு காந்திஜியின் பின்னால் நிற்பது என்பதில் எவ்வித பிரச்சனையும் எழவில்லை. நடைமுறையில் காங்கிரஸ் தலைமை அதிகாரமாற்றம் என்பதற்கு உத்தரவாதமெனில் பிரிட்டிஷாருக்கு ஒத்துழைப்பு என்றே செயல்பட்டது. அவ்வப்போது காந்தியின் அறிவுரை ஆலோசனை என அவரிடம் காங்கிரஸ் தலைமை செல்லாமல் இல்லை. பிரிட்டிஷ் எதிர்ப்பு போர் எதிர்ப்பு இயக்கம் மீண்டும் காந்தியிடமே தலைமை பாத்திரத்தை கொடுத்தது. அவரே இந்தியாவை விட்டு வெளியேறு என்கிற முழக்கத்தையும் தந்தார். மக்கள் திரள் போராட்டங்களில் நடந்த வன்முறையை முதல்முறையாக அவர் கண்டிக்காமல் இருந்தார். அரசின் வன்முறைக்கு இயல்பான எதிர்வினை எனவும் கருத்து தெரிவித்தார். லூயி பிஷரிடம் உரையாடும்போது முதலில் வரிகொடாமல் இருக்கும் விவசாயிகள் நெஞ்சுரத்துடன் தனித்து போராடும் ஆற்றலைப்பெறுவர். அவர்கள் நிலப்பறியும் செய்வர். நிலப்பிரபுக்கள் ஒத்துழைக்கவேண்டும் என்றார். எவ்வாறு என்கிற கேள்விக்கு அவர்கள் ஓட்டம் பிடித்து ஒத்துழைப்பர் என்றார் காந்திஜி. அவர்கள் வன்முறையுடன் எதிர்த்தால் அந்த எதிர்ப்பு 15 நாட்கள் இருக்கலாம். முழுமையாக கட்டுக்குள் கொணரப்படும் என அழுத்தமான கருத்தை காந்திஜி வெளிப்படுத்தினார். இவ்வாறெல்லாம் பேசினாலும் அவர் தொழிலாளர்களையோ விவசாயிகளையோ புரட்சிகரமாக திரட்டி போராட அழைக்கவில்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் அவர் ஆற்றிய இரண்டுமணிநேர உரையில் இதற்கான அழைப்பும் ஏதுமில்லை. இந்து- முஸ்லீம் பிரச்சனை இணக்கம் பற்றி பேசினார். வாழ்வா சாவா போராட்டம் என சொல்லி சில நிமிடம் பேசினார். இளவரசர்கள், பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்களுக்கு சிறப்பான வேண்டுகோளை விடுத்தார். போர்க்குணமிக்க இயக்கம் ஏதும் வந்துவிடக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார் என அவரது உரை குறித்த மதிப்பீட்டை இ எம் எஸ் தருகிறார். விவசாயிகளிடமும் அவர் அரசாங்க எதிர்ப்பு என்பதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டுகோள் வைத்தார். ஆகஸ்ட் இயக்கத்தை புரட்சிகரமானது என்று கருதிக்கொள்வதற்கு ஏதுமில்லை (There is therefore, no cause for assumption, still made by several political groups and individuals, that August Revoultion had been planned by Gandhiji as a really revolutionary mass struggle) என்பது இ எம் எஸ்ஸின் விமர்சனமாக இருக்கிறது. பிரிட்டிஷ் அரசாங்கமும் எழுந்த இயக்கங்களை செப்டம்பர் 1942க்குள்ளாகவே ஒடுக்கிவிட்டது. தொடர்ந்த நிகழ்வுகளுக்கு பின்னர் காந்திஜி உண்ணாநோன்பு மேற்கொண்டார். அவரின் வயது உடல்நிலையை கருத்தில்கொண்டு அரசாங்கம் செவி சாய்க்க வேண்டியிருந்தது. காந்திஜி விடுவிக்கப்பட்டால் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என அனைத்து தலைவர்களும் வேண்டுகோள் வைத்தனர். 1943 உண்ணாநோன்பின்போது காங்கிரஸ் முஸ்லீம்லீக் இணக்கத்திற்கான பார்முலாவை ராஜாஜி காந்தியிடம் தெரிவித்தார். அதை ஜூலை 1944ல் வெளியிடவும் செய்தார். காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து சிறைகளில் வாடவேண்டிய நிலை இருந்தது. காந்திஜியின் உடல்நிலை சீர்கெடுகிறது என அறிந்து அவர் மே 1944ல் விடுவிக்கப்படுகிறார். காந்திஜி வைஸ்ராய்க்கு சில முக்கிய கோரிக்கைகளுடன் ஒத்துழைப்பை தெரிவிக்கும் வகையில் கடிதம் எழுதினார். உடனடி விடுதலை என்கிற பிரகடனம் செய்யப்படுமானால் காங்கிரஸ் யுத்த நடவடிக்கைகளில் ஒத்துழைப்பது என்பது சாத்தியமாகும். தேசிய மத்திய அரசாங்கம் ஒன்றை அமைக்கலாம். இந்தியாவிற்கு நிதிச்சுமை இல்லாமல் இன்றுள்ளபடி இராணுவ நடவடிக்கைகள் தொடரலாம் என அவர் எழுதினார். செப்டம்பரில் காந்திஜி ஜின்னா பேச்சுவார்த்தையும் துவங்கியது. ஒருபுறம் இந்தியாவைவிட்டு வெளியேறு இயக்க பின்வாங்குதல் நடந்தது. மற்றொரு பக்கத்தில் வெளிநாடு தப்பி சென்று ராணுவ முயற்சிகளை சுபாஷ் மேற்கொண்டதும் நடந்தது. நாட்டை மீட்கும் புனிதப்போருக்கு தேசத்தந்தையான மகாத்மாவின் ஆசிகோருகிறேன் என்கிற உரையை நேதாஜி ரங்கூனில் நிகழ்த்தினார்.. காந்திஜியிடம் எப்பதிலும் இதற்கு இல்லை. இரண்டு தலைவர்களின் நடவடிக்கைகளுமே வெற்றி பெறவில்லையென இ எம் எஸ் மதிப்பிடுகிறார். INA கைதிகள் விடுவிப்பு என்ற கோரிக்கையில் போராட்டங்கள் எழுந்தன. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தூக்கிப்போட்ட வக்கீல் கோர்ட்டை நேரு அணிந்து வாதாட சென்றார். புலாபாய் தேசாய் தேசத்தின் கவனத்தை இதில் ஈர்த்துவந்தார். 1942 போராட்டத்தை ஒடுக்கியதாக இருந்தாலும் சுபாஷின் அய் என் ஏ கைதிகளை ஒடுக்கிய நிலைமைகளிலும் RIN கப்பற்படை எழுச்சி ஏற்பட்டது. அதற்கு ஒருவாரம் முன்பாகத்தான் காந்திஜி ஹரிஜனில் எழுதியிருந்தார். ஐ என் ஏ மயக்கம் நாட்டில் இருக்கிறது. நேதாஜியின் தேசபக்தி எவருக்கும் குறைந்த ஒன்றல்ல. அதற்கு மேல் என்னால் பாராட்டமுடியாது என குறிப்பிட்டிருந்தார். கப்பற்படை எழுச்சியை அவர் ஏற்கவில்லை. பிரிட்டிஷாருடன் காங்கிரஸ் முஸ்லீம் லீக் தலைமைகளின் பேச்சுவார்த்தைகள் அடிப்படையில் இடைக்கால அரசாங்கம் அமைந்தது. நாடு பிரிக்கப்பட்டு இந்தியா பாகிஸ்தான் என இரு நாடுகளின் விடுதலையாக பிரிவினையுடன் வரலாறு உருக்கொண்டது. ஆகஸ்ட் 15 நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட அன்று காங்கிரஸ் தலைவர் ஆச்சார்யா கிருபளானி தனது கருத்தை வெளியிட்டார். கோடிக்கணக்கான மக்களுக்கு குறைந்தபட்ச வன்முறையுடன் இரத்தம் அதிகம் சிந்தாமல் இப்படிப்பட்ட மாற்றம் உலகில் எங்கும் நிகழ்ந்ததில்லை. மகாத்மாவின் வசீகர தலைமையால் இது சாத்தியமானது. அவர் அகிம்சைவழியில் நம்மை அழைத்து சென்றார் என்ற மதிப்பீட்டை கிருபளானி தந்தார். ஆனால் மகாத்மாவே இதை ஏற்றதாக தெரியவில்லை. அவர் எந்த கொண்டாட்டத்திலும் பங்கேற்கவில்லை. நான் வற்றிப்போய்விட்டேன் என்றார். என்னிடம் செய்தி ஏதும் இல்லை என்றார். அப்படி சொல்வது நல்லதல்ல எனில் அப்படியே இருந்துவிட்டுபோகட்டும் என்றார். காந்திஜி சுடப்பட்டு மரணிப்பதற்கு நான்கு நாட்கள் முன்னதாக ஜனவரி 26 அன்று அவர் “சுதந்திரம் என்பதை நாம் இன்று கையாள்பவராக இருக்கிறோம். ஆனால் எனக்கு எந்த மயக்கமும் இல்லை, உங்களுக்கு இருக்கலாம்” என்றார் . அப்போது நடந்த வகுப்பு மோதல்களால் அவர் வருத்தமுற்றிருக்கலாம். எப்போதும் அன்பின் வழி என்றே அவர் உரிமை பாராட்டியிருந்தார். ஆனால் அவரின் வழிமுறைகள் தோற்றதை அவர் கண்ணுற்றார். இந்தியர் மனங்களையே ஒன்றுபடுத்தி மாற்றமுடியவில்லை. அவர் பேசிய பிரிட்டிஷ் ஆன்மா மாறியிருக்குமா என்கிற கேள்வியை இ எம் எஸ் முன்வைத்தார். காந்திஜி தான் வாழ்நாள் முழுதும் பேசிவந்த கொள்கைகள் தோல்வியுற்றதாக தெரிவித்தார். அவரின் வருகையால் நவகாளி, கல்கத்தா டெல்லியில் மதமோதல்கள் சற்று மட்டுப்பட்டது உண்மைதான். ஆனால் இருபக்க வெறியர்களின் குறியாக தான் ஆகியுள்ளதையும் அவர் உணராமல் இல்லை. இதை நன்குணர்ந்தே அவர் ராஜ்குமாரி அம்ரித் அவர்களிடம் ஜனவரி 28 1948ல் பைத்தியக்காரன் குண்டிற்கு தான் இரையாகி மடிந்தால் புன்முறுவலுடன் சாவை ஏற்பேன் என்றார். அப்படிப்பட்ட துயரம் இரண்டே நாட்களில் நடந்துவிட்டது. நவம்பர் 1947ல் காங்கிரஸ் தலைவராக இருந்த கிருபளானி தான் விலகிவிடுவதாக அறிவித்தார். செல்வாக்கு வாய்ந்த அரசாங்க தலைவர்களாக விளங்கிய நேருவும் பட்டேலும் காங்கிரஸ் கட்சித்தலைமையை கலப்பதில்லை என்பது கிருபளானிக்கு வருத்தமானது. அவரையடுத்து ராஜேந்திரபிரசாத் பொறுப்பேற்றார். நேரு, படேல் உறவுகள் சீர்கெட்டன. காந்திஜி தான் சுடப்படும் ஜனவரி 30 அன்று மாலை 4 மணிக்கு படேலுடன் உரையாடுகிறார். வழிபாட்டு கூட்டத்திற்கு பிறகு நேரு ஆசாத் சந்திக்க இருந்தனர். காங்கிரஸ் தனது வரலாற்றுக் கடமை முடிந்த தறுவாயில் தன்னைக் கலைத்துக்கொண்டு லோக் சேவக் சங் ஆக மாற வேண்டுகோள் வைத்தார் காந்திஜி. மற்ற எல்லோரும் விடுதலை கொண்டாட்டங்களில் திளைத்தபோது அவர் இந்திய அரசின் நிலைத்தன்மை மீது கவலையுடன் இருந்தார். மதமோதல்கள், காங்கிரஸ் அமைப்பின் பலவீனங்கள் அவரை விசனமுற செய்தன. . முப்பது ஆண்டுகள் போதித்த அன்பை இந்திய மக்கள் கடைப்பிடிக்காமல் மதத்தின் பெயரால் பிரிந்து கிடந்து மோதிக்கொண்டது ஏன்- இருநாடுகள் உருவானதேன்? அவரின் சீடர்களாக தியாகம் பல செய்த தலைவர்கள் அதிகாரம் புகழ் என மோதிக்கொள்வதேன்? ” He was unabale to give rational explanation as to why after three decades of his preaching the gospel of love, he had had the misfortune to see in his last days the Indian People so divided into two warring communal camps that the very consummation of his political aim- the creation of independent state- led to the creation of two anatagonistic states set up on the basis of religion.Nor could he offer convincing explanation as why the very people, who had, under his leadership, made tremendous sacrifices for the cause of the nation, started quarrelling among themselves for power and personal aggrandizement." என இரு முக்கிய கேள்விகளை காந்தியின் சோதனைகள் கொள்கை மீது இ எம் எஸ் வைத்தார். இன்று இ எம் எஸ் அல்லது அவர் காலத்திய எந்த மார்க்சிய இயக்கத்தோழர்க்கும் இம்மாதிரி கேள்விகள் தங்கள் பணி குறித்து பிற்காலத்தில் எழும் என்பதை இ எம் எஸ் அன்று உணர்ந்திருப்பாரா எனத் தெரியவில்லை. பூர்ஷ்வா உலகக் கண்ணோட்டம் காந்திஜியிடம் இருந்ததால் அவரால் இந்த பிரச்சனைகளை உணரமுடியவில்லை. சமூக வளர்ச்சி விதிகள் குறித்து அறியமுடியவில்லை. காந்தியம் ’புதிய மனிதன் உருவாக்கம்’ என்பதில் ’சமூக தத்துவம்’ என்ற வகையில் முழுத்தோல்வி அடைந்துவிட்டதாக தீர்ப்பிடுகிறார் இ எம் எஸ். காந்தியம் என்றால் என்ன என்கிற தனி அத்தியாயம் ஒன்றை இ எம் எஸ் இவ்வாக்கத்தில் எழுதியிருக்கிறார். காந்திஜி சத்திய சோதனை என சொல்கிறார், காந்திஜியின் வளர்ச்சியை நாம் எப்படி பார்ப்பது- பிரிட்டிஷாருக்கு உலகப்போரில் ஆள் சேர்த்த மனிதரிலிருந்து தேசத்தந்தையாக போற்றப்படுவது- பிரிட்டிஷாரே வெளியேறு என போராட்டம் மேற்கொண்டது, போர்பந்தர் சிறு மன்னர் ஆட்சியில் இடம்பெற்ற பிரபுத்துவ சூழலிலிருந்து இந்திய ஜனநாயகத்திற்கு போராடியது, லண்டனில் விஜிடேரியன் சொசைட்டியில் இளைஞனாக சென்று பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியது போன்றவற்றை எவ்வாறு விளக்குவது என்கிற கேள்வியை முன்வைத்து விடை தேடுகிறார் இ எம் எஸ்.. வினோபாஜியின் பூதான் இயக்கம் காந்திஜியின் செல்வாக்கால் ஏற்பட்ட ஒன்றே. அதை நாம் புறக்கணிக்கமுடியாது. நில சொத்துக்கு எதிரான அகிம்சைவழி இயக்கமது. கம்யூனிஸ்ட் கட்சி நீங்கலாக காங்கிரஸ் மற்றும் அதன் பலபிரிவுகள் காந்திஜியின் பெயரை சொல்லியே இயங்குகின்றன. காந்திஜி உயர் அளவில் சிக்கலான ஆளுமை. அவரது போதனைகளும் அப்படிப்பட்டவையே. எளியவகை முடிவுகளுக்கு நம் வந்துவிடமுடியாது. மக்களை திரட்டி ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னெடுத்து சென்றவர் என்பது ஒருபக்கம். எதிர்புரட்சியாளர் என்கிற வகையில் மக்கள் எழுச்சியை மட்டுப்படுத்தியவர் என்பது மறுபக்கம். ஏராள நிகழ்வுகளின் பெரும் பரப்பு அவரது வாழ்க்கை. எவரும் சிலவற்றை கோர்த்து இதுதான் காந்தியம் என்றே சொல்லக்கூடும். ஆனால் அவர் குறித்துவரலாற்று பார்வையில் ஒருங்கிணைந்த புரிதலுக்கு வருவது கடினமான ஒன்றாகும். எளியவகைப்பட்ட புகழ்பாடல்களும், எளியவகை புரிதலுடன் வசைபாடல்களும் தான் உள்ளன என்கிற முடிவிற்கு இ எம் எஸ் வருகிறார். காந்திஜி ஒரு கருத்துமுதல்வாதி. நெறிசார்ந்த உண்மை, அகிம்சை, சந்ந்தோஷங்களை தேடாமை ஆகியவற்றிற்கு அவர் நின்றார். சுதந்திரம், ஜனநாயகம், அமைதி என்கிற அரசியல் அவரிடம் இருந்தது. சாதி ஏற்றத்தாழ்வு கூடாது, பெண்கள் முன்னேற்றம், மத ஒற்றுமை என்கிற சமூக மதிப்புகளுக்காக நின்றார்.’ செமி ரிலிஜியஸ்’ மொழியாடலை அவர் கையாண்டார். அவரை ’ரீஆக்‌ஷனரி’ என எளிய முத்திரை குத்திவிடவும் முடியாது. ஏனெனில் அந்த ரீஆக்‌ஷனரிதான் மக்களை பெருமளவு திரட்டியவர். இந்த முரண் நாட்டின் உண்மையான அரசியல் சூழலின் உருவாக்கம்- ஏனெனில் தலைமை தாங்கியவர்கள் நிலபிரபுத்துவத்துடன் இணைப்பு கொண்ட பூர்ஷ்வாக்கள் (This self contradiction is a manifestation of the contradiction in the real political life of our nation, arising out of the fact that the national democratic movement was led by the bourgeoisie, linked with feudalism) எனவும் மதிப்பிட்டார் இ எம் எஸ்.. கிராமப்புற மக்களை விவசாயிகளை திரட்டியதில் காந்திக்கு பெரும் பங்களிப்பு உள்ளதை மறுக்கமுடியாது. அதே நேரத்தில் அனைத்தும் காந்திஜியால்தான் என்பதும் ஏற்புக்குரியதல்ல. ஜனநாயக போராட்டம் குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வை அனைத்து தரப்பார் மத்தியிலும் உருவாக்கியவர் காந்திஜி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தன் சொந்த பூர்ஷ்வா வர்க்க எல்லைக்குள் வைத்ததும் அவரே . இங்கு புரட்சிகர மக்கள் எழுச்சி என்பதற்கு ஆயுதம் ஏந்திய வன்முறை போராட்டம் என்கிற அர்த்தம் இருக்கிறதா என வெளிப்படையாக இ எம் எஸ் அவர்கள் இவ்வாக்கத்தில் பேசவில்லை. காந்திஜி பூர்ஷ்வா வர்க்கத்தின் அனைத்து நடவடிக்கைளுக்கும் துணையாக இருந்தார் என்று சொல்லக்கூடாது என்கிறார் இ எம் எஸ். நடைமுறை அரசியல் சார்ந்த படேலும் விஞ்ஞான நவீன பார்வை கொண்ட நேருவும் தங்களுக்குள் வேறுபட்டனர். காந்திஜியுடனும் கூட மாறுபட்டனர். காந்திஜி தொடர்ந்து வலியுறுத்திய நெறிகள் ஆட்சி பொறுப்பு ஏற்க இருந்தவர்களுக்கு தடையாகவும் இருக்கத் துவங்கியது. காந்திஜியோ ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் காட்டிய அதே மதிப்பீடுகள் தொடரவேண்டும் என செயல்படுபவராக இருந்தார். காந்தி மறைந்த 10 ஆண்டுகளில் அவரின் காந்தியத்திற்கு என்ன நேர்ந்தது என்கிற அத்தியாயம் ஒன்றையும் இ எம் எஸ் எழுதியுள்ளார். 1940ல்தான் வினோபாவே தெரியவந்தார். அவர் காந்தியின் கொள்கைகளை உண்மையிலேயே பின்பற்றுபவர் என ஏற்கப்பட்டார். 1951ல் காந்திஜியின் சாரத்தில் பூதான் துவங்கினார். மக்கள் சக்தி மூலம் நிலப்பிரச்சனையை தீர்த்துக்கொள்ள முடியும் என பேசினார் வினோபாபாவேஜி. வர்க்க பேதமற்ற சமூகம் அகிம்சை வழியில் என சிலர் புகழவும் செய்தனர். சிலர் கம்யூனிஸ்ட் எதிர்ப்பிற்கு என அதைப் பயன்படுத்தினர். . அரசதிகாரம் வந்தவுடன் மக்கள் போராட்டம் என்பதை தடையாக காந்திஜியை கொண்டாடி வளர்ந்தவர்கள் நினைத்தனர். காங்கிரசை கலைத்துவிட்டு லோக் சகாயக் சங் அமைப்பீர் என காந்திஜி சொல்லியதை அவர்கள் கேட்கவில்லை.. மன மாற்றம் மூலம் மட்டுமே தீர்வு என்பது சாத்தியமல்ல. அரசின் தலையீடு வேண்டும் என கம்யூனிஸ்ட்கள் சொல்லிவந்தனர். எனவே தான் நிலப்பிரபுக்கள் வர்க்கம் என்கிற வகையில் சமூக மாற்றத்திற்கு உதவமுடியாது என்கிற கருத்தை கம்யூனிஸ்ட்கள் பேசினார்கள். எந்த வர்க்கமும் தன் அதிகாரத்தை தானே முன்வந்து இழக்காது என்பது மார்க்சிய பாடமாகும். Ref: The Mahatma and the Ism- EMS Jan 1959 எம் என் ராயின் காந்தி எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்ப்பு பெற்றவர். கம்யூனிசம், தேசவிடுதலை இயக்கம், மானுட இயம் என பயணித்தவர். லெனின், ஸ்டாலின் உள்ளிட்ட சோவியத் தலைவர்கள் ஜெர்மன் மற்றும் சீனத்தலைவர்களுடன் உயர் மட்டத்தில் பணியாற்றியவர். திறந்த மனதுடன் புதியன கண்டு அஞ்சாமல் பரிசீலித்து கருத்தை மாற்றிக்கொள்ள தயங்காதவர். தீரா தாகம் கொண்ட வாழ்க்கைப்பாதைக்கு சொந்தக்காரர். ராய் தனது 14 வயதில் வங்க புரட்சிகர தொடர்புகள் கிடைக்கப்பெற்றார். ஆயுதம் வாங்க எனக்கிளம்பி பர்மா, இந்தோனேஷியா, சீனா, ஜப்பான் நாடுகளில் பயணித்து அமெரிக்கா சென்றடைந்தார் . அங்கிருந்து மெக்சிகோ சென்று கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் பொறுப்பேற்க வாய்ப்பு பெற்றார். சோவியத் தொடர்புகளால் மாஸ்கோ சென்றார். சோவியத், ஜெர்மன், சீன கம்யூனிஸ்ட் இயக்கங்களுடனும், இரண்டாவது அகிலத்திலும் பெற்ற பயிற்சிகள் மூலம் உச்சம் சென்று பின்னர் வீழ்ச்சி அடைந்தவர் ராய். தாய்நாட்டிற்கு 16 ஆண்டுகள் கழிந்து 1930ல் திரும்ப நேரும் சூழல் அவருக்கு அமைந்தது. மார்க்சிய கருத்தாயுதத்துடன் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பில் பங்கேற்கும் எண்ணத்துடன் ராய் செயல்படத்துவங்கினார். சுபாஷ், காங்கிரஸ் சோசலிஸ்ட்கள், கம்யூனிஸ்ட்கட்சி, ராயிஸ்ட்கள் என நான்கு இடது பிரிவுகளின் ஏற்ற இறக்க உறவுகளுடன் காங்கிரஸ் தலைமையுடன் விமர்சனபூர்வ உறவைக் கொண்டிருந்தார் ராய். சிறை அனுபவங்களுக்கு பின்னர் 1940ல் ராடிகல் டெமாக்ரடிக் கட்சி துவங்கினார். காங்கிரசுடன் மட்டுமல்லாது கம்யூனிசத்துடனும் அவர் விமர்சனபூர்வ உறவுகளை மேற்கொள்ளத்துவங்கினார். இரண்டாம் உலகப்போர் காலத்தில் சோவியத்திற்கு நெருக்கமான நிலைப்பாட்டை எடுத்தாலும் ராய்க்கு மரியாதை நாட்டிலும் சோவியத்திலும் கிடைக்கவில்லை. 1948ல் ராடிகல் கட்சிக்கும் மேலாக Renaissance - New Humanism என செல்லத்துவங்கினார். ஜனநாயகமா- டோடலிட்டேரியனிசமா என்கிற விவாதத்தை ஆரம்பத்திலேயே துவக்கியவராக ராய் இருந்தார். முதலாளித்துவமா சோசலிசமா என்கிற கேள்விக்கான பதிலையும் அவர் அதில் பார்த்தார். ஸ்டாலினுக்கு மிகத் துணிச்சலாக அவர் எழுதிய கடித வாசகம் ஒன்றை தனது நினைவலைகளில் குறிப்பிடுகிறார். போல்ஷ்விக்குகளிடம் நேர்மை விசுவாசம் பற்றியெல்லாம் கருத்தில்லை என அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். ( “ I cannot reconcile myself to the idea that decency, loyalty and honesty should have no place in the catalogue of Bolshevik virtues“.) போல்ஷ்விக்குகளின் நன்னடத்தை குறித்த விமர்சனமாக அவ்வாக்கியம் இங்கு அமைந்தது. காரணகாரிய அறிவிற்கு ராய் முன்னுரிமை கொடுத்தார். 1937 பைஸ்பூர் காங்கிரஸ் அமர்வின்போது காந்தி தனது மாலைநேர பிரார்த்தனை நிகழ்விற்கு ராயை அழைத்தார். ராய் செல்லவில்லை. மானுட முன்னேற்றத்தில் காந்தியடிகள் ஓரடி முன்வைத்து ஈரடி பின் இழுத்துவிடுகிறார் என ராய் கருதினார். நேருவை மட்டுமே மேற்குலக பாணி மனிதனாக காங்கிரசில் பார்க்கமுடிகிறது என்றார் ராய். இந்துவைதீக முறையிலான தேசிய முன்வைப்பு முஸ்லீம் வகுப்புவாத வளர்ச்சிக்கும் உதவியது. ஆகையால் மகாத்மா காந்தி விழைந்த இந்து முஸ்லீம் ஒற்றுமை உருவாகவில்லை என்கிற விமர்சனம் ராயிடம் இருந்தது. அதேநேரத்தில் காந்தி தோற்ற இடத்தில் மற்றவர் வெல்லவும் முடியாது என்பதையும் அவர் புரிந்திருந்தார். காந்தியின் காஸ்மோபாலிடன் மனிதநேயப் பார்வையின் அவசியத்தை அனைவரும் உணரவேண்டும் என ராய் வேண்டினார். காலகாலமாக நிலவும் சில மதிப்பீடுகளை நிலமான்ய-முதலாளித்துவ வகைப்பட்டவை என ஒதுக்கிவிட்டால் எதிக்ஸ் என்பதே இருக்காது. எந்த வர்க்கமும் வர்க்கப்போராட்டத்தால் முற்றிலுமாக அழிக்கப்படுவதில்லை என்கிற உண்மையையும் நாம் அறிய வேண்டும். சமூக நலன்கள் என்பவை வர்க்கங்கள் சேர்ந்து வாழவேண்டிய நிர்பந்தத்தத்தையும் தருகின்றன என்பதையும் உணரவேண்டும். பொருளாதார அடிப்படையில் கூட உபரிமதிப்பு என்பதை ஒழிப்பது நடைமுறையில் சாத்தியமல்ல. தங்கள் நுகர்வைவிட மிஞ்சக்கூடிய உற்பத்தி என்பதை சமூகம் செய்துகொண்டே இருக்கவேண்டியுள்ளது. அதே நேரத்தில் ஒரு வர்க்கம் உபரியை உறிஞ்சுவது என்பது ஏற்புடையதல்ல. இதில் பொருளாதார அம்சம் மட்டுமல்லாமல் நெறிசார்ந்த அம்சங்களும் உள்ளன என்றார் ராய். வரலாறை படைக்கும் மனிதர்கள் என நாம் பேசுகிறோம். முன்னதாக ஒவ்வொருவரும் தனி மனிதர்களாக இருக்கின்றோம். சமூகம் எனும் தொகுப்பில் ’உறுப்பு’ தனிமனிதர் என்கிறோம். தனிமனிதர்களின் தொகுப்பாகவே சமூகம் இருக்கிறது. அவனின் பெருமிதம், படைப்பாற்றல் ஆகியவை குறித்த விழிப்படைந்த மனிதனாக அவன் இருக்கவேண்டியுள்ளது. எனவே சமூகம் என்பது வழிதான். தனிமனிதன்தான் அதன் முடிவு எல்லை என்கிற பார்வையை எம் என் ராய் தந்தார். தனிமனித சுதந்திர மறுப்பு என்பதன் மூலம் விடுதலைக்கான பாதை அமையாது . இருக்கின்ற வலிமையானது எதுவோ அது சரியானது என ஹெகல் தொடங்கினால் மார்க்ஸ் வருகின்ற வலிமையானது சரி என முடிக்கிறார். (Hegelian doctrine held that ‘that present might is right’. Marx projecting the Hegelian doctrine into future declared that ‘coming might to be also right’). மார்க்ஸ் ஹெகலை நேராக நிமிர்த்தியிருக்கலாம். ஆனால் தன் மூளையை அதில் வைத்து அதை மார்க்ஸ் செய்துள்ளார் என்பது ராய் தரும் விளக்கம். ராய் தன்னை மார்க்சின் ஸ்பிரிட்சுவல் வாரிசு என அழைத்துக்கொண்டார். மார்க்ஸ் மகத்தான மனிதாபிமானி. மனிதன் தன்னை புரட்சியின் மூலம் விடுவித்துக்கொள்ளமுடியும் என்பதுகூட வலிமையான நெறிசார்ந்த அறைகூவல்தான். அதை மார்க்ஸ் ரொமாண்டிஸ்ட் ஆக செய்தார் என்றார் ராய். மனிதனின் மீளாக்க படைப்புத்திறன் மீது மார்க்சின் நம்பிக்கை கோடிக்கணக்கானவர்களை கிளர்ந்தெழ செய்துள்ளது என்பதை ராய் புறக்கணிக்கவில்லை. காந்தி குறித்தும் ராய்க்கு விமர்சனவகைப்பட்ட பார்வையே இருந்தது. தேசம் காந்தி இரண்டும் ஒரே அர்த்தம் தரும் இணைச்சொற்களாக மாறிவிட்டன, தேசம் தேசபக்தி எனப்பேசுபவர்கள் காந்தியர்கள் என கருதப்படுகின்றனர், தேசபக்தி குறுக்கப்பட்டுவிட்டது என்றார் ராய் . காந்தி குறித்த உரை ஒன்றை அவர் ஏப்ரல் 21, 1940ல் பரிசால் எனும் பகுதியில் வழங்கினார். தேசியவாதிகளிலேயே உயர் ஆத்மாவாக காந்தி இருக்கலாம். ஆனால் காந்திய கோட்பாடுகளை ஏற்பவர் மட்டுமே விடுதலை போராட்டத்தில் தகுதியான பங்களிப்பை தருகிறார் என உரிமைகோருவது விவாதத்திற்குரிய அம்சம் என்றார் ராய். மாஸ்கோவில் இருந்தபோது ராய் தனது ’மாறும் கட்டத்தில் இந்தியா’ என்கிற அவரது புகழ்வாய்ந்த ஆக்கத்தில் காந்தி குறித்த மதிப்பீடுகளை வைக்கிறார். அது நடைமுறை அரசியலுக்குரிய ஒன்று என்பதால் அரசியலில் நெறி என்பதில் நடைமுறை சார்ந்த மதிப்பீடுகளையும் வைக்கவேண்டியுள்ளது. தீர்க்கதரிசிகளின் வெளிப்பாடு போன்ற ஒன்றல்ல காந்தியம். அது நடைமுறை செயல் தத்துவம். அவர் கருதுகோள்களில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. காரியங்களில் செயல்முறைகளில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர். எனவே காந்தியம் என்பது உடோபியனிசமல்ல. அதே நேரத்தில் காந்தியத்தால் அரசியலில் நெறி என்பதில் வெற்றி பெறமுடியவில்லை. நவீன கலாச்சாரத்தின் நெருக்கடிகளுக்கு அதனால் தீர்வை தரமுடியாமல் போனது. இன்றுள்ள சூழலில் காந்தியத்தை அமுல்படுத்துவது இயலாதாகியுள்ளது என்கிற முடிவிற்கு ராய் வந்தார். மேற்கு மற்றும் முதலாளித்துவ சமூகம் குறித்த காந்தியின் விமர்சனங்களை ராய் ஏற்றாலும் அவர் முன்வைக்கும் மாற்றுகள் சாத்தியமானவையல்ல என்றார். காந்தி பேசிவரும் ’அன்பின் வழியது உய்வு’ என்றால் சுயராஜ்யம் சொர்க்கத்திலிருந்து வந்தால்தான் உண்டு என ராய் கேலிபட பேசினார். ராய்க்கு காந்தியுடன் தொழிற்துறை சமூகம் பற்றிய கருத்துவேறுபாடு இருந்தது. உயர் கல்வி என்பது நவீன தொழில்நுட்பத்திற்கு அவசியமானது. நவீன தொழில்நுட்பம் இல்லையேல் சுதந்திரம்-சமத்துவம்- ஜனநாயகத்தை உறுதி செய்வது இயலாத ஒன்று என ராய் கருதினார். தொழிற்துறை இல்லாத சமூகத்தில் உயர்கல்விக்கு பெரும் செலவு பிடிக்கும் என்றார். நமது பெண்களுக்கும் அய்ரோப்பிய அமெரிக்க பெண்கள் போல் சுதந்திரம் தேவை. அதன் பொருள் இந்தியப்பெண்மை என்பதை கைவிடுவதாக பொருள் கொள்ளவேண்டாம். ராய்க்கு வைதீக தேசியம் (orthodox nationalism) மீது விமர்சனம் இருந்தது. முதலாளித்துவம் தேவைப்பட்டாலும் அங்கு பொருள்வகைப்பட்டு நிலவும் பேராசை நமக்கு தேவையில்லை. மேற்குலக வளர்ச்சியை உள்வாங்கும்போது காந்திய எளிமையை எடுத்துக்கொள்ளும் இசைவை ராய் நல்குவதாக நாம் புரிந்துகொள்ளலாம். மேற்கை நிராகரிக்காமல் இந்தியவகைப்பட்டு தூய்மைப்படுத்திக்கொள்ளமுடியும் என்கிற synthesis பார்வையை ராய் முன்வைக்கிறார். நமது சமூகத்தின் மூடநம்பிக்கைகள் சார்ந்த மதப்பார்வையை விட்டொழித்து காரணகாரிய அறிவு முறையை கைக்கொள்ளவேண்டினார் ராய். காந்தியின் ‘return to village’ என்பதையும் ராய் அம்பேத்கார் போலவே நிராகரித்தார். பாரம்பரிய சமூக அலகுகளை- பழக்க வழக்கங்களை அப்படியே நீடிக்கவைத்துக்கொண்டு புதிய சமூக நிர்மாணம் செய்வது இயலாது- வளர்ச்சியும் உருவாகாது என ராய் கருதினார். அதே போல் காந்தியின் பட்டினிப்போராட்டங்களை ஒருவகை கட்டாயப்படுத்தல் (a form of moral coercion) என்றே ராய் விளங்கிக் கொண்டார். பகுத்தறிவு சார்ந்த விவாத முறையில் பிறரை ஏற்க செய்யாமல் பட்டினிகிடந்து நிர்பந்தம் உருவாக்குவது- கட்டாயப்படுத்துவது ஏற்பிற்குரியதல்ல என்கிற விமர்சனம் ராயிடம் இருந்தது. காந்தியின் அரசியல் பகுத்தறிவு அரசியல் அல்ல- நெறிசார்ந்த அரசியல் என்றார் ராய். காந்தியம் என்பது ஒருவகை நோய்த்தன்மையை கொடுத்துவிடும் என்கிற கடும் விமர்சனமும் அவரிடம் இருந்தது. மாற்றாக Radicalist ideas are healthy என ராய் சொல்லத் துவங்கினார். ஒரு கட்டத்தில் காந்தியும் ராயை முதல் எதிரி என்றார். பிலிப் ஸ்பிராட் போன்றவர்கள் காந்தியம் ஒருவகை பாசிசம் என வகைப்படுத்தி பேசிவந்தனர். காந்தியின் மறைவிற்குப் பின்னர் ராயின் பார்வையில் சற்று நிதானம் ஏற்பட்டது. தனது தீவிர மனிதாபிமானம் என்பதில் அவர் காந்தியின் மதம் குறித்த பார்வையை நிராகரித்தாலும் பொருளாதார மய்யம் நீக்குதல், நெறிசார்ந்த வழிமுறைகள் , கட்சி அரசியல் என்பதைவிட மக்கள் ஒருங்கிணைப்பு போன்ற அம்சங்களில் காந்தியை நெருங்கினார். அவரின் மறுமலர்ச்சி தேசியம் என்பதை அவர் விமர்சித்து வந்தார். காந்தி தியாக மரணமுற்றார் என்கிற செய்தி ராயிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரை விமர்சித்துவந்த ராய் 1948 பிப்ரவரி, ஏப்ரலில் காந்தி மீதான தமது மரியாதையை உணர்த்தும் வண்ணம் இரு கட்டுரைகளை எழுதினார். காந்தியின் செய்தி சர்வாம்சத்தன்மை கொண்ட மனிதாபிமான அடையாளமாகவும் நெறிசார்ந்த ஒன்றாகவும் இருக்கிறது என்றார் ராய். மார்க்சை பொறுத்தவரை மானுடத்தின்வேர் மனிதன்தான். காந்திக்கு மனிதன் ஆன்மசக்தி. இருவரின் அணுகுமுறை வேறானது. ராய் அனைத்தின் அளவையும் மனிதன்தான் என்பதை ஏற்றிருந்தார். காந்தியும் ராயும் தனிமனிதனுக்கு மிக முக்கியத்துவத்தை கொடுத்தனர். மார்க்சியத்தில் பொருளாதார சமத்துவ வலியுறுத்தல் இருந்தால் ராயிடமும் காந்தியிடமும் நெறிசார்ந்த வலியுறுத்தல்கள் இருந்தன. நெறியான மனிதர்கள் அமையும்போது சரியான சமூகத்தை கட்டி அமைக்கப்படமுடியும் என காந்தி கருதினார். ராயும் ’மாரல் சமூகத்திற்கு மாரல் மனிதன்’ என்றார். ஆயுதங்களற்ற ஆன்ம சக்தியில் நியாயம் பெற இயலும் என்பது காந்தியின் வலியுறுத்தல். மாஸ்கோவில் 1921ல் ராய் எழுதிய India in Transition ஆக்கத்தில் காந்தி குறித்த விமர்சனங்கள் இருந்தன. இரண்டாவது அகிலத்தில் லெனின் ராய்- பிற நாட்டு கம்யூனிஸ்ட் தலைவர்களின் விவாதங்களின் அடிப்படையில் அவ்வாக்கம் எழுதப்பட்டிருந்தது. பூர்ஷ்வா இயக்கங்களுக்கு ஆதரவு என லெனின் சொல்வதை கைவிட்டு காலனிய பாட்டாளி இயக்கத்திற்கு கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என ராய் கருதினார். மக்களை பெருமளவு திரட்டும் சக்திவாய்ந்த காந்தி- காங்கிரஸ் தலைமை புரட்சிகர சக்தியாகத்தானே இருக்கமுடியும்- அதற்கு ஆதரவு தருவது சரியான அணுகுமுறையாக இருக்கும் என லெனின் கருதினார். காங்கிரஸ் தலைமை புரட்சிக்கு துரோகம் செய்துவிடும் என்றார் ராய். காந்தியின் பங்குபாத்திரம் குறித்து லெனினுக்கும் எனக்கும் வேறுபாடு இருந்தது என ராய் தெரிவித்தார். மக்களின் மத்தியகால மனநிலக்கு காந்தியின் சமய சிந்தனைகள் தீனிபோடுவதாக லெனினிடம் ராய் குற்றம் சாட்டினார். ‘I reminded Lenin of the dictum that I had learnt from him: that without a revolutionary ideology, there could be no revolution.’ These arguments formed the basis of the position on Gandhi – அதாவது புரட்சிகர கொள்கை இல்லாமல் புரட்சி சாத்தியப்படாது என்பது ராயின் பதிவாக இருந்தது ராயின் மார்க்சியம் சார்ந்த சர்வதேசிய பார்வை ’தேசியம்’ என்பதை ஏற்க அவருக்கு தடையாக இருந்தது. இதனால் தேசிய விடுதலை இயக்கத்தை சந்தேகக் கண்கொண்டே அவரால் பார்க்க முடிந்தது. எதார்த்த நிலைகளின்படியிலான காந்திய மதிப்பீடுகளை அவரால் செய்ய இயலவில்லை. இத்தருணங்களில் ராயின் துணைவியாரான எவ்லின் அவர்களும் காந்தியை கடுமையாக விமர்சித்தே கட்டுரைகள் எழுதிவந்தார். புத்தி சாதுர்யமான பொருளாதார திட்டம் ஏதுமில்லாதவர் காந்தி என்பது அவர்களின் தலையாய விமர்சனமாக இருந்தது. வர்க்க மோதலை புரிந்துகொள்ளாமல் வறட்டுபிடிவாத சமூக ஒற்றுமை என காந்தி பேசி வருவதாகவும் ராய் விமர்சித்தார். The revolt against the Raj is a question of economics, not metaphysics.’ என்றனர் ராய் தம்பதியர். காந்தி எந்திரங்களின் காலத்தை கற்காலத்திற்கு திருப்ப நினைக்கிறார் என வறட்டுத்தனமாகவும் ராய் பேசிவந்தார். காந்தி மேற்கின் நாகரீகம் பற்றி விமர்சிக்கிறார். எளிய வாழ்க்கை என்கிறார் என்பது உண்மைதான். காந்தியின் முதலாளித்துவ சமூகம் பற்றிய விமர்சனம் என்பது புரட்சிகர கண்ணோட்டமற்றது. சொத்துரிமையை காப்பதாக இருக்கிறது என எழுதினார் ராய். நீர்த்துப்போகும் பலவீனமான மாற்றங்கள் மட்டுமே காந்தியிடம் இருக்கிறது என்று பேசிவந்த ராயிடம் அவர் சிறையில் அடைக்கப்பட்ட ஆண்டுகளில் சில மாற்றங்கள் வரத்துவங்கின. சிறையில் மற்ற தலைவர்களைப் போலவே ராய் ஏராளமாய் படித்தார். நெறிசார்ந்த வாழ்வு- அரசியல் என்பதை தீவிரமாக கருதத்துவங்கினார். மார்க்சியத்திடமிருந்து அவர் விலகத்துவங்குகிறார் என்கிற எண்ணம் பரவியது. அரசியல் சுதந்திரம், சமூக மகிழ்ச்சி, பொருளாதார சுபிட்சம் என்பதற்கெல்லாம் அப்பாலானது ஆன்ம விடுதலைக்கான இலக்கு என ராய் பேசத்துவங்கினார். அவர் ஆன்மீகவாதிகளின் மொழியில் பேசவில்லை என்றாலும் அவர் பேசத்துவங்கிய spiritual freedom என்பது மார்க்சியர்களின் சொல்லாடல்களில் ஒன்றல்ல. அவரின் சிறைக்குறிப்புகளின்படி பார்த்தால் அவர் காந்தி நோக்கி நகர்ந்துவிட்டார் என சொல்வதற்கு இல்லை. அரவிந்தர், விவேகானந்தர் பதங்களை ராய் பயன்படுத்துகிறார். Indian Renaissance என்பதை விளக்க ஆரம்பிக்கிறார். சுயமுரண்பாடுகளின் மூட்டை காந்தியம் என்கிற விமர்சனத்தை அவர் கைவிடவில்லை. மக்களை அது அன்பு அகிம்சை என்கிற பெயரில் செயலிழக்க பலமிழக்க செய்துவிடும் என்றே எழுதிவந்தார். அவரின் சிந்தனைகள் செயல்பாடுகள் கலாச்சார பிற்போக்கிற்கே ( ‘the ideological reflex’ of India’s ‘cultural backwardness’ and ‘superstition’ ) உதவிகரமாக இருக்கும் என்றார் ராய். உண்மையான வளர்ச்சிக்கு காந்தி தடையாக இருப்பதாகவே ராய் கருதினார். ஆனால் 1940களின் இறுதியில் காந்திய சீடர்களைவிட காந்தியின் சரி தவறை தானே மேலாக புரிந்துகொண்டுள்ளதாகவும் எழுதினார். காந்தியை அரசியல் விழிப்புணர்வாளர்- வெகுஜனங்களைத் தட்டி எழுப்பியவர் என்று புகழ அவர் தயங்கவில்லை. இந்திய மக்களின் உருவம் என உயர்வுபடுத்தவும் செய்தார். ராய்க்கு நெருக்கமாக இருந்த பிலிப் ஸ்ப்ராட் ராயின் எழுத்துக்களின் தொகுப்பு ஒன்றிற்கு முன்னுரை எழுதியிருந்தார். அதில் காந்தி குறித்த ராயின் மதிப்பிடுகள் குறித்து தெளிவுபடுத்துகிறார். காந்தி குறித்த ராயின் விமர்சனம் அந்நியர் நாட்டவர் ஒருவர் செய்வது போலவே அமைந்தது. மக்களுக்கு புரியும் வகையில் அவரால் வைக்க இயலவில்லை. அவர் காந்தியைப் போலவோ அவரது சீடர்கள் போலவோ யோசித்து அதன் பலாபலன்களை அறியாதவராக இருந்தார் என்பது பிலிப் தரும் செய்தி.. விடுதலைகாலத்தில் நடந்த வகுப்புக்கலவரங்களின் நேரத்தில் காந்தியின் செயல்பாடுகள் ராயை மாற்றியதாக ஸ்ப்ராட் சொல்கிறார் எம் என் ராய் காந்தியின் அரசியல் நிலைப்பாடுகளை அவரின் தத்துவப்பார்வையை விமர்சித்தவர்தான். ஆனால் அவரின் greatness மீது அளப்பரிய மரியாதை கொண்டவர். எம் என் ராயின் பார்வையில் விமர்சனம் என்பது உரிய பாராட்டை ஒதுக்கிய ஒன்றல்ல (criticism does not exclude appreciation). கண்மூடித்தனமான பக்தியோ கீழ்ப்படிதலோ தமக்கு இல்லை என்றும். அவரை மனோ உந்துதல்படி பார்க்காமல் விமர்சன ஒளியில் தான் பார்ப்பதாகவும் ராய் தெரிவித்தார். விமர்சித்தாலே எதிரியாக புரிந்துகொள்ளப்படுகிறோம். critical appreciation என்பதன் மதிப்பு சமூகத்திற்கு தெரியாமல் இருக்கிறது என்றார் ராய். கோட்பாடுகளை ஆய்விற்கு உட்படுத்தும்போது நாம் நிராகரிக்க வேண்டியதாக இருந்தாலும் சில அம்சங்கள் நமக்கு நிறைவு தரக்கூடியதாக உயர் மதிப்பீட்டிற்குரியதாக காணப்படலாம். அதை நேர்மறையாக மதிப்பிட்டு நாம் பாராட்டவேண்டும். காந்தியின் மீது வழிபாடு செய்பவர்களைவிட விமர்சனரீதியாக பார்க்கும் தனக்கு அவர் குறித்த மேலான புரிதலும் உயர் மதிப்பீடுகளும் இருப்பதாக ராய் எழுதினார். காந்தி வரலாற்றில் தீர்க்கதரிசியாக இடம் பெறமாட்டார். ஆனால் மக்களை அரசியல்ரீதியாக பெரும் விழிப்பிற்கு உள்ளாக்கியவர் எனப் பெயர் பெறுவார். நமது விடுதலைப் போராட்டம் காந்தி நுழைந்த 1920க்கு பின்னர்தான் உருவானது என்பதை ராய் ஏற்கவில்லை.. இந்திய மக்களின் உருவாக்கம்தான் மகாத்மா காந்தி என்றே அவர் மதிப்பிட்டார். அது வரலாற்றுத் தருணம். மக்களின் மொழியில் காந்தி பேசினார். மக்களும் அவரை கொண்டாடி பின் சென்றனர். ஆனால் மக்களின் புரிதல் உணர்வு கீழான நிலையில்தான் இருந்தது. ஒருவர் உயர அவர்களையும் உயர்த்த அவர்கள் அளவு இறங்கி வரவேண்டியிருந்தது. இப்படி தன்னை இறக்கிக்கொள்வதே மகத்தானது. காந்தியின் அரசியல் முதிர்ச்சியற்றது, பழுதானது என்றெல்லாம் விமர்சிக்கலாம். வரலாறே சிறந்த மனிதர்களின் சுயவரலாறுதான் என்கிற புரிதல் இப்போதில்லை. அவர்கள் அவதாரம் அல்ல. அவர்கள் தங்கள் காலத்தின் சரியான பிரதிநிதியாக இருக்கிறார்கள் என்பதில் அவர்கள் மேன்மை தங்கியுள்ளது. காந்தி அப்படிப்பட்ட மேன்மையாளர். Greatness cannot be unlimited. நான் காந்தியை முட்டாள்தனமாக தொழுது வணங்கமாட்டேன். அவரின் உண்மையான மகத்துவம் போற்றுவேன் என்றார் ராய். தேசப்பெருமித துறவி காந்தி. அதே தீவிர பெருமித இறைவியாக எழுந்த அகண்ட இந்துஸ்தானுக்கு அவர் பலியிடப்பட்டார். அந்த வெறித்தனம் அதன் சொந்த தேசம் பேசிய துறவியையே பலியாக கேட்டுவிட்டது. மகாத்மாவின் மொழியானது தியாகம் சுயதுன்பம் அனுபவிப்பதை தாண்டிய ஒன்று. நெறிசார்ந்த மனிதாபிமான அப்பீல் கொண்டது அதன் சிறப்பு என எழுதினார் ராய். காந்தி ராமராஜ்யம் அல்லது கடவுளின் ராஜ்யம் என பேசிவந்தார். எனக்கு சொர்க்கம் என்றால் என்ன எனத் தெரியாது. தூரப்பார்வைக் கொண்டு பார்க்கவேண்டும் என்கிற அவாவும் எனக்கில்லை. நிகழ்காலம் நன்றாக அமைந்து நடைபெறும் என்றால் எதிர்காலமும் வேறுமாதிரியாக அமையாது என நம்புகிறேன் என்றார் காந்தி காந்தியின் அகிம்சை கோட்பாடு அரசியல் நடைமுறையில் நேர்மை என்பதை இணைத்தது. ஆனாலும் தனிப்பட்ட முறையில்தான் அவர் அதை கடைப்பிடிக்கமுடிந்தது. அவரின் அரசியல் சீடர்கள் பலர் மீறும்போது அவர் வாளா இருக்கவேண்டியிருந்தது. அந்த நேரத்தில் அவர் அரசியல் மனிதனாக மட்டுமே இருக்க முடிந்தது. அதை அவர் மனம் ஒப்பி செய்தார் என ராய் சொல்லவில்லை.. அவரது நெறிகள் மற்றவர்க்கு வறட்டுகோட்பாடுகளாக தெரிந்தது. அவர் பண்டைய முனிவர்களின் ஞானிகளின் மத அனுபவங்களுடன் அதனை குழைத்தார். ஆனால் பகுத்தறிவு அரசியல் நடைமுறை என்ற பெயரில் அவற்றை நிராகரிக்காமல் செக்யூலர் பார்வையில் ஏற்கமுடியும் என ராய் கருதினார். ’அதிகாரஅரசியல்’ வழிகளைப்பற்றி கவலைப்படாமல் போய்க்கொண்டிருக்கிறது. இதனால் காந்தி பொருத்தமில்லை என்ற சூழலும் உருவாக்கப்படுகிறது. ஆனால் காந்தி அரசியலை தூய்மைப்படுத்த விழைந்தார் என்பதை எவ்வாறு புறக்கணிக்க முடியும் என ராய் வினவினார் . மற்ற மத தீர்க்கதரிசிகளைப்போலவே காந்தியும் தனது தோல்வியை கண்டுள்ளார். தனிமனித சுத்ந்திரம் இல்லையெனில் மனிதாபிமானம் சாத்தியப்படுவதில்லை என்பதை ராய் இந்திய அனுபவங்களில் கண்டடைந்தார். ஆதார நூல்கள் 1. Men I Met M N Roy 2. Mahatma and Roy A study in Contrast and convergence Hari singh Verma மறுப்பு மற்றும் ஒத்துழையாமையின் மெய்யியல் காந்தியை முன்வைத்து ரமீன் ஜெகன்பெக்லூ ( சென்னை காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 24.04.2019 அன்று செய்யப்பட்ட அறிமுகவுரையின் கட்டுரை வடிவம்) ரமீன் ஜெகன்பெக்லூ (ஆர்ஜே) ஈரானியர். 28 புத்தகங்கள் எழுதியுள்ளார். ஈரானில் வாழமுடியாது சிறை சித்திரவதைகளுக்கு உள்ளாகி கனடாவிலும் இந்தியாவிலும் மாறி மாறி வாழ்ந்துவருகிறார். ஜிண்டால் பல்கலையில் மகாத்மா காந்தி துறையில் குறிப்பாக அகிம்சை சமாதானம் துறையில் நெறியாளராக துணை டீன் ஆக இருக்கிறார். The Decline of Civilisation, Gandhian Moment, The Disobedient Indian போன்றவை இந்தியாவில் பேசப்பட்ட முக்கிய ஆக்கங்கள். ரமீன் பாரீஸ் பல்கலையில் டாக்டர் பட்டம் பெற்றவர். அங்கு 20 ஆண்டுகள் இருந்தவர். பிரஞ்சு, ஆங்கிலம், பெர்ஷியன் மொழிகளில் எழுதிவருபவர். ஈரானிய மீடியாக்கள் அவரை சி அய் ஏ உளவாளி என்றன. அவர் 2006ல் கைதாகி கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். எபாடி ஷெரின், நோம்சாம்ஸ்கி, உம்பர்டோ எகோ, ஹபர்மாஸ், திமோதி, அந்தோணியா நெக்ரி, ஹோவார்ட் சைன் உள்ளிட்ட 400க்கு மேற்பட்ட அறிவுத்துறையினர் அவர் விடுதலையைக்கோரினர். நான்குமாத தண்டனைக்குப் பின்னர் அவர் ஆகஸ்ட் 30 2006ல் விடுதலையானார். அது குறித்தும் Time will say Nothing என்கிற ஆக்கத்தை ஆர்.ஜே எழுதினார். பல்வேறு கலாச்சாரங்களுக்கிடையே ஆரோக்கியமான உரையாடலை மேற்கொள்வது என்பதில் நம்பிக்கை கொண்டவர் ரமீன். டெகரானில் இருந்த இளம் பருவத்திலேயே தாகூர், நேரு, ஆனந்தகுமாரசாமி எழுத்துக்களை அவர் அறிந்திருந்தார். ரஜினி கோதாரி நிறுவிய சி எஸ் டி எஸ் உடன் தொடர்பு அவருக்கு கிடைத்தது. அஷீஷ் நந்தியுடன் நெருக்கமாக இருந்தார், இசையா பெர்லினுடன் உரையாடல்கள் மேற்கொண்டவர் ரமீன். கன்பர்மிசம் எதிர்த்து உரக்க குரல்; கொடுத்து வருகிறார்.. Pursuit of excellence, No herd mentality என்பதை அவர் வலியுறுத்திவருகிறார். ரமீன் மாறுபடும் காந்தியை முன்நிறுத்துகிறார். அவ்வாறு மாறுபட்டு செயலாற்றுதல் என்பது குழப்பத்தையோ வன்முறையையோ உருவாக்கும் காரணியல்ல- அது புத்தாக்கம் கொண்ட ஆக்கபூர்வ செயல் என்பது அவரது நிலைப்பாடு. பணியாமை ஒத்துழையாமை என்பது அரசியல் கருவி, அது ஒருவகை கொள்கையும் கூட. பணிதல், மதமதப்பு, ஏற்று ஒத்துப்போதல் (obedience, complacency, conformism) நிலவுகின்ற சுழலில் ’மாறுபடுவது’ உரிமையும் கடமையுமாகிறது.. வெகுஜனவாதம், திரள்அறியாமை, சிந்திப்பற்ற சராசரித்தனம் (Populism, mass immaturity, thoughtlessness- mediocrity) கொண்ட வாழ்க்கை எதிர்மறையானது. ஜனநாயகம் என்பது கேள்விக்கு உட்படுத்துவதும் மாறுபடுவதற்குமானது. குடிமக்கள் கேள்விகேட்பது என்பதை விட்டுவிட்டு அனைத்தையும் ஏற்று பணிந்து நிற்பது என்ற நிலை ஆபத்தானது. மாறுபட்டாலே தேசத்துரோகம் என கட்டம்கட்டி கொலைக்கூட செய்துவிடும் காலத்தில் நாம் வாழ்கிறோம். வெகுமக்கள் அறியாமையும் பாப்புலிசமும் ஒன்றை ஒன்று தாங்கிப்பிடித்துள்ள உலகில் பரஸ்பர விவாதங்கள் மூலம் மாற்றம் கொணர வேண்டும். மாறுபடுதல் என்பது எப்படி எதிர்த்தல் என்பதிலிருந்து வேறுபட்டது என்பதை ரமீன் முன்நிறுத்துகிறார். மெத்தனம் (கிடக்கட்டும் விடு மனப்பாங்கு) ஏற்று பணிதல் என்கிற தன்மைக்கும் வன்முறை வழிபாடு ஆகிய இரண்டிற்குமான மாற்றாக மூன்றாவது வழியாக காந்தியின் ஒத்துழையாமை- மறுப்பு முறை அமைந்துள்ளது. நியாமற்ற சட்டங்களை எதிர்த்து ஒத்துழையாமல் நிற்பது- அதை நியாயபூர்வ வழிமுறைகளில் செயலாக்குவது எளிமையான காரியம் அல்ல. அசோக் வாஜ்பாய் முன்னுரை எழுதியுள்ளார். அசோக் இலக்கிய கர்த்தா- இந்தி கவிஞர். லலித கலா அகாதமியின் சேர்மனாக இருந்தவர். ஐ ஏ எஸ் அதிகாரியும்கூட.. காங்கிரசின் அர்ஜுன் சிங் உடன் நெருக்கமாக இருந்தவர்.. ரமீனின் சிறப்புமிக்க ஆக்கத்தை poetics of disobedience என அவர் மதிப்பிடுகிறார். II காந்தியின் பணியாமை கலைப் பற்றி அறிய இவ்வாக்கம் உதவலாம் என்கிறார் ரமீன். இப்புத்தகத்தில் ரமீன் மேற்கு சிந்தனையாளர்கள் பலரை பேசவைக்கின்றார். அரிஸ்டாட்டில், ஹன்னா அரெந்த், கார்னிலியஸ் காஸ்டோயரிடஸ், வில்ஹெல்ம் ரெயிச், கார்ல் ஜாஸ்பர்ஸ், எரிக் பிராம் பல இடங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றனர். விடுதலை, ஜனநாயக நடத்தை, வன்முறை, உண்மை, கன்பர்மிசம், மாறுபடுதல், கேள்விகேட்டல் போன்ற கருத்தாங்கள் உரக்க விவாதிக்கப்படுகின்றன. ஜனநாயகத்தை ஊழல்படுத்தும் மதமதப்பு, பணிந்து ஏற்றல் ஆகியவற்றை தோல்வி அடையசெய்தலில்தான் மறுப்பின் பெருங்கடமையே இருக்கிறது. செயல்படாமை , அப்படியே செயல்பட்டாலும் செக்குமாட்டுத்தனம் என்பதிலிருந்து உடைவு தேவைப்படுகிறது. (the real task is dissent to challenge and defeat the twin corruptions of democracy: imposed conformism and normalised complacency-What is needed : grammar based on breakthro from the passivity of perpetually renewed sameness) ரமீன் Politics and Political ஆகிய இருபதங்களை விரிவாக விவாதிக்கிறார். ஒன்றின் எதிர்மறைத்தன்மையும் மற்றதின் ஆக்கபூர்வ புத்தாக்க செயல்பாடு குறித்தும் அற்புதமாக விளக்குகிறார். Political ஒன்றுபடுத்தும், உடன் நிற்பதற்குரிய ’சாலிடாரிட்டியை’ வலுப்படுத்தும். Politics பிளவுபடுத்துகிறது. அரசியல் வெகுஜனமயமாக்கம் என்பது லும்பன் தன்மையாக்கப் படுகிறது. சக மனிதர்களுடன் பரஸ்பர இணக்கம்- ஒத்திசைவு என்பதை பொலிடிகல் சார்ந்துள்ளது. அதிகமான பொலிட்டிகல் எனில் கூடுதலான மனிதாபிமானமே. உலகை கேள்விகளின் மூலம் புரிந்துகொள்வோம். நமது வாழ்க்கைக்கு கேள்விகள் வழியே உருவாகும் பணியாமை எனும் பொறுப்புணர்வால் புதிய அர்த்தம் கொணர்வோம் அரசியல் மனிதர்களை சமூக உயிரிகளாக ஆள்வதை உத்தியாக வைத்துள்ளது. ஆனால் பொலிட்டிகல் ஒன்றாக வாழ்வதற்கான பொதுவுணர்வாகவுள்ளது. இணக்கத்தை, பரிமாற்றத்தை வளர்க்கிறது. மேலாண்மை (Dominance) என்பது இல்லாமல் தனிநபர்களுக்கு சுதந்திரம் என்பதை கட்டமைக்க பொலிடிக்கல் நிற்கிறது. விவாதம் இருந்தால் வன்முறை இருக்காது. (Politics- space of dominating others, political living and speaking together. Where there is a possibility of dialogue there is absence of violence.). அரசியல் ரெகுலேஷன், அதிகார பிரதிநிதித்துவம் என்கிறது. பொலிட்டிகல் திறந்த வளமையான உரையாடலுக்கு நிற்கிறது. இன்று ஒருவகையான எதிர்மறை சுதந்திரம் தொழிற்படுகிறது (negative liberty). சுதந்திரம் என்பது தன்னை கேள்விக்கு உட்படுத்துவது, தன்னை கண்டறிவது என்பதாக இருக்கவேண்டும் (freedom means self questioning and self invention and determination). தற்காலிக அரசியலின் பலவீனமே வெளிப்படைதன்மையற்ற, தைரியமற்ற போக்காகும்- (lack of courage and outspokenness.) சுயகேள்வி, விருப்புறுதி, புதியன காணல் (Self qng, invention, determination) ஆகியவற்றிற்கு பொறுப்பேற்காத சுதந்திரம் எதிர்மறையானதாகிவிடுகிறது. சுதந்திரத்தின் போக்கு என்பதே அரசு நிர்ணயிக்கும் அம்சமாக மாறியிருக்கிறது. இப்படிப்பட்ட உரிமை வரம்புக்குள் சமூக நிறுவனங்களை ஆதரித்து நிற்கவேண்டும் என வரையறுக்கப்படுகிறது. சுயேட்சையான விமர்சனபூர்வ செயல்பாட்டை ஊக்குவித்தல், இருப்பனவற்றை கேள்விக்கு உட்படுத்தல் என்பதும் ஒருவரின் சமூக அரசியல் இயக்கத்தில் நின்றுபோகிறது. வரைமுறையற்ற ஆதரவைத் தரும் கூட்டமாக மக்கள் சுருக்கப்படுகிறார்கள். Reign of Undoubt- சந்தேகமற்ற ராஜ்யம் என ஒன்றை நிறுவ முயற்சிக்கிறார்கள். உண்மையை பேசுகிறோம் என உரிமைகோரி வருபவர்களிடம் சந்தேகம் எழாமல்- அப்படிப்பட்ட தன்மையால் ஏற்படும் விளவுகளை பொருட்படுத்தாத சூழல் உருவாக்கப்படுகிறது. கூட்டம் அதுவே இறுதியானது என்பதை ரமீன் விமர்சிக்கிறார். கூட்டம் தன்னை தானே கட்டுப்படுத்திக்கொள்ளும் தன்மையற்றதாக இருக்கிறது. அது சிலரால் கட்டுப்படுத்தப்படுகிறது. கேள்விகேட்டுக் கொள்ளாத, எளியவகைப்பட்ட புரிதல்களுடன் சிந்திக்காத தன்மை கொண்டிருக்கிறது. அது தோற்றம் தாண்டி சிந்திக்க பழகவில்லை. ஆனால் பொலிட்டிகல் என்பது கேள்வி கேட்பதன் மூலமாக வளரவேண்டிய ஒன்றாகும். ஆயிரக்கணக்கானவர் தலைவர் ஒருவருக்கு பணிந்து கிடப்பதை வெறும் கோழைத்தனம் என சொல்லிவிடமுடியாது. அது indifference servitude ஆ என்னவென சொல்வது. இந்த திசையில் வா என அறைகூவல் விடப்படுகிறது. தலைவன் தனக்கென ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டுவிட்டால் அவன் கோருவதையெல்லாம அக்கூட்டம் செய்துவிடுகிறது என Elias Conneti சொல்கிறார். கூட்ட மனப்பான்மையில் நாம்- அவர்கள் என்பது கட்டப்படுகிறது. நண்பன் எதிரி உருவகங்கள் ஏற்படுத்தப்படுகிறது. தைரியமற்ற வெளிப்படையற்றத்தனம் (A lack of courage and outspokenness) என்பதுதான் நடப்பு அரசியலின் பலவீனம். பொதுவாக தெரியாதவர் பக்கத்தில் மனிதன் அச்சத்துடன் நிற்கிறான். ஆனால் கூட்டத்தில் நிற்கும்போது இந்த அச்சம் அவனுக்கு தெரிவதில்லை. ஆனால் கூட்டம் தன்னை தானே ஆள்வதில்லை. அதை சிலர்தான் கட்டுக்குள் வைத்துள்ளனர். . (The crowd is never ruled by itself, but it is guided and governed by a few.) நவீன அரசியல் எல்லோரையும் எல்லா நேரங்களிலும் ஏமாற்ற முயற்சிக்கிறது. அது பொய்யுரைப்பதை விழிப்புடன் கவனத்துடன் செய்கிறது. உரக்கப்பேசுவதை, வாயடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. தற்கால உலகில் அரசியலின் வளர்ச்சி என்பது கேள்விகேட்காத, எந்தவித பொறுப்பிற்கும் உட்படாத, கொத்தடிமையாக குடிமகனை வைத்து பார்ப்பதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. உலகின் தற்காலிக ஜனநாயகம் ரெகுலேஷன்களின் விளையாட்டுபோல் இருக்கிறது. நிறுவனங்கள் மக்களை அப்படியே அசையாத திரளாக பார்க்கின்றன. அவர்களை depublicised individuals ஆக சுருக்கி தங்களுக்கான பொலிட்டிகல் உருவாக்கத்தில் எந்த பெருமித உணர்வும் அற்றவராக மாற்றிவிடுகின்றன. கீழ்ப்படியாமை என்பது எதிர்மறை கருத்தாக, சட்டமறுப்பாக, நியாயமற்ற வாதமுறையாக பார்க்கப்படுகிறது. ஆழமாக பார்த்தால் அது நமது அரசியல் நடைமுறை மீதான விரிவான கேள்விகளை கொண்டதாக, சுதந்திரம் தன்னாட்சிக்கான கூறுகளை வலுப்படுத்துவதாக அமைகிறது. கீழ்ப்படியாமை/ பணியாமை என்கிற மனம் எவருக்கும் தன்னை உட்படுத்திக்கொள்ளாமல் சிந்தனை மற்றும் செயலுக்கு மட்டும் கடப்பாடுகொண்டதாக இருக்கும். ஏற்று ஒப்புக்கொடுத்தல் இல்லா சமுகத்தை (Non conformist community) உருவாக்க முயற்சிக்கும் அன்றாட வாழ்வில் populism- Mass immaturity ஆளும்போது மனசாட்சியுடன் புதியன காண்பதற்கான உறுதிப்பாடாக மாற்றம் மற்றும் பரிமாற்றத்திற்காக அது நிற்கும். சமூகத்தில் உள்ளார்ந்து காணப்படும் சராசரித்தனத்தை (mediocrity) வெளிக்கொணர ஒத்துழையாமை (disobedience- dissent) சாதனமாக இருக்கும். சாக்ரடிசிலிருந்து கீழ்ப்படியாமையின் வரலாறு துவங்குவதாக கொள்ளலாம். எண்ணங்களை, செயல்களை, நிறுவனங்களை கேள்விகேட்கும் மனத்திண்மை, நெறி மற்றும் அஞ்சாமை நிலவும்போது அங்கு கீழ்ப்படியாமையின் மதிப்பு மானுடவிடுதலைக்குரிய ஒன்றாகிறது. அரசின் சட்டங்களைவிட உயர்ந்தது மனசாட்சியின் நெறி (Moral conscience is higher law than the law of State- Inner voice) உள்குரல் என்பார் சாக்ரடிஸ். தாமஸ் ஜெபர்சன் That Govt is best which governs least என்றார். தோரோவோ That Govt is best which governs not at all என்றார். அரசியல் என்பதைவிட மனசாட்சிக்கு சேவகனாக இருப்பது, சாக்ரடிஸ் தன்மையிலான கேள்வியாளனாக இருப்பது அவசியமானது. அரசாங்கத்திற்கு விசுவாசியாக இருப்பதா அல்லது மனம் சிந்தனைக்கு ஒருவர் விசுவாசியாக இருப்பதா என்பதுதான் கேள்வி. எந்த நேரத்திலும் தான் சரி என வரித்துக்கொண்டதை செய்வது உரிமையாகும் என தோரோ பேசினார். அதேபோல் தவறு என கண்டனம் செய்யப்படும் எதற்கும் என்னை ஒப்பவிடாமல் பார்த்துக்கொள்வதும் அவசிமாகிறது. கேள்விகேட்பதும், கீழ்ப்படியாமையும் அவமானகரமானவை அல்ல. நியாயமற்ற சட்டங்களை பெரும்பான்மை ஏற்கும்வரை காத்திருப்போம் என்பதும், எதிர்த்தால் இருப்பதைவிட மோசமாகிவிட்டால் என்னவாகும் என்ற பதில் அளிப்பதும் தீமை நீடிக்க ஒப்புதல் தருவதேயாகும் என்றார் தோரோ. கண்மூடித்தனமான பின்பற்றல் இன்றி ஜனநாயகத்தை ஜனநாயகப்படுத்தல் (democratize democracy) என்பார். கேள்விகேட்கப்படாமல் பணிந்துபோவது கடமை என்றாகும் தருணம் சுதந்திரம் மரணிக்கும் தருணமாகிறது என்றார் ஜார்ஜ் உட்லாக். (George woodlock :when the duty to obey without qn is accepted that is the moment of freedom’s death) . விடுதலை என்பது அரசியல் செயல் மட்டுமல்ல நெறிமுறை வகைப்பட்டதுமாகும். எட்வர்ட் செய்த் அதிகாரத்துடன் உண்மை பேசுதல் speaking truth to power என்றார். கேள்வி கேட்டலே சிந்திப்பதாகும் - சிந்தனையின் அழைப்பே சுதந்திரமாகும் - (Thinking is questioning -The call of thought is the call of freedom ) ஆகும். கேள்விகேட்டு வளரும் சூழலில்தான் புத்தாக்கம் நடைபெறும். இதை Heidegger “ To think is to put the world and ourselves into question என்றார். கேள்வி கேட்பதின் மூலமே பொதுவாழ்வின் பங்குதாரராக, சுதந்திரத்தை உணர்பவராக ஒருவரால் இருக்கமுடியும். . தன்னை பிரபலிக்கும், சுயநம்பிக்கைகொண்ட, உளவியல் மற்றும் சமூக ஆற்றல் நிறைந்த தனிநபர்கள் சமூக சட்டங்களை மீறுதல் என்பது மனித உருவாக்கத்திற்குரியதே. இதை autonomous democracy கற்றுத்தருகிறது. சமூகத்தை தீவிர கேள்விக்கும் வரையற்ற விசாரணைக்கும் உட்படுத்தும் வெளியது. இதையே காஸ்டோரியாடிஸ் கூட்டு சுய ஆட்சி- இணக்க பரிமாற்றம் (Collective self governance- harmonious exchange among citizens to make , to do and to institute) என்கிறார். சுவீகரிக்கப்பட்ட கருத்தாங்கள் மீதான தீராத கேள்விகளை உருவாக்கி பகுத்தறிபூர்வ நடவடிக்கைகளில் பணியாத மனம் இறங்கிடவேண்டும். நிறுவப்பட்ட உண்மைகள் என்பதை தாண்டியும் அது பயணிக்கவேண்டும். (Moving against all forms of established truth). அசமத்துவத்திற்கும் அதாரிட்டியேரினசத்திற்கும் எதிரான போராட்டமாக அது இருக்கவேண்டும். கேள்வியுடன் ஆன சிந்தனைமுறை வெறும் கணக்கீட்டுமுறையல்ல. பணியமுடியாது எனும்போது அடிமை மனத்தன்மையிலிருந்து விடுபடுகிறோம் எல்லோரும் சிந்திக்கும் ஆற்றல் உடையவர்களா? என்கிற கேள்வியும் எழலாம் . மெத்தனம் (Complacency) , ஏற்று அநுசரித்தல் (conformity) ஆகியவை அவலமான உணர்வே ஆகும். அது ஒருவகைப்பட்ட சுயத்தை மெளனமாக்குவதாகும் ( self silencing). மாறுபடும் வெளியாள் மற்றவர் (Dissenting outsider) என்பதன் மூலம் ஒருவர் மானுடத்தின் அடிப்படைகளை கட்டமுடியும். வாழ்க்கையில் - நடைமுறையில் எடுத்துக்காட்டானவர் என்பதன் மூலம் பொதுவாழ்க்கையில் தாக்கத்தை உருவாக்க இயலும். Decivilisation என்கிற ஊழலை தடுக்கமுடியும். எந்த நிறுவனத்தையும் கேள்விகேட்கமுடியும் என்கிற மனம் கொண்டவனே நல்ல குடிமகன். இதனால்தான் தொந்திரவு தரும் குடியரசு (republic of gadflies) உருவாகும். நல்ல அரசியல்வாதி எனில் அவன் dissentயை புரிந்து கொள்ள வேண்டும். மற்றவரை உள்ளடக்கி கொள்ளும் விழைவும் விவாதத்திற்கு தயாரான மனநிலையும் கொண்டவனாக இருக்கவேண்டும். விசாரணையற்ற அரசியல் வாழ்வு (Unexamined Political Life) என்பதில் கூட்டுவாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடுகிறது. எல்லோரும் எதற்கும் கேள்விகேட்டால் குழப்பம் மிஞ்சாதா என்ற கேள்விக்கு அப்படி ஏதேனும் மிதமிஞ்சி நடந்துவிட்டதா என்ன என்கிற பதிலை ரமீன் தருகிறார். கேள்வி கேட்பவன் பெரும்பாலும் தனித்தே விடப்படுகிறான். Dissenter is a lonely hero. மனிதன் தன் உள்குரலை கேட்க கற்கவேண்டும். அது மிகவும் கடினமான ஒன்று. தான் மட்டும் தனியே தன்னுடன் இருக்கும் நிலையில் அது உருவாகிறது. எனவே தனியாகிவிடுவோமா என்பதற்கு அஞ்ச முடியாதவன் கீழ்ப்படியா மனிதனாகிறான். (Disobedient man does not fear to be alone with himself, for the good reason, that he listens to himself without being freightened at the prospect of facing himself. Disobedience is neither a task for power nor a passion to destroy) III காந்தி 20ஆம் நூற்றாண்டின் arch dissenter. காந்தி சுயமாற்றம் விளவிக்கும் சுய அமைப்பாக்கம் கொண்ட (self organizing self transforming democracy) ஜனநாயகத்திற்காக நின்றார். இன்று காந்தியாக இருப்பது என்பது காதி அணிவதும் ஆஸ்ரம வாழ்க்கையுமல்ல. பணியாமை எனும் மனம் வசப்படுதல். அவர் மானுடத்தின் நெறிவிழிப்பு (moral conscience) தருணமாகியுள்ளார். Gandhi was not a man of conformity and complacency. அவர் இருக்கும் நிலைமைகளை அப்படியே ஏற்று அனுசரிக்கவேண்டும் என்றோ அதில் மனநிறைவு கொள்ளவேண்டும் என்றோ நினைக்காதவர். மெத்தனம் இல்லாதவர். அவர் தோராவை 1907ல் படித்தார். அவருக்கு கவர்ந்த அம்சமாக நியாயமற்றவற்றை எதிர்ப்பதில் உள்ள மனசாட்சி நெறி என்பது இருந்தது- தான் பேசும் Inner voice என்பது கொலைகாரனுக்குரிய ஒன்றல்ல. அவன்கூட தனக்கு அப்படி ஒன்று இருப்பதாக சொல்ல முடியும் என தனது உள்குரல் குறித்த விளக்கம் அளித்தவர். மார்ச் 3, 1936ல் நான் காந்தியியம் என எதையும் உருவாக்கவில்லை எந்த செக்ட் குறித்த ஆதரவாளனாகவோ அதை பரப்புவனாகவோ இல்லை என காந்திஜி தெளிவுபடுத்தினார். காந்தியை பொறுத்தவரை அரசியல் செயல்பாடு என்பது சட்டபூர்வதன்மை- ஒத்துழையாமை (கீழ்ப்படியாமை) இரண்டுமே உண்மை மற்றும் நன்னடத்தையை அடிப்படையாக கொண்டதாக இருக்கவேண்டும். மேலும் டிஸொபிடியென்ஸ் என்கிற செயல் சமூகத்தில் நீதி நியாயத்தை வலுப்படுத்துவதாகவும், சமூக அரசியல் நிறுவனங்களின் மாரல் டிம்பரை உயர்த்துவதாகவும் அமையவேண்டும். அச்செயல் வெறும் விமர்சனத்தன்மை கொண்டதல்ல. மதிப்பீடுகளின் புரட்சியாகவும் அமையவேண்டும். (Not only a critique of authority, but also a revolution of values- not mere tactical value but having ethical significance) குடிமகனின் நெறிசார்ந்த கடமை என்பது நல்ல அரசு சூழல், அரசின் இருப்பு நியாயத்தில் காணப்படுவது அல்ல. ஒருவரின் சுயாட்சிக்குரிய திறன் மேம்பாட்டில்தான் தங்கியுள்ளது அக்கடமை என்பதை காந்தி உணர்ந்திருந்தார். உணர்த்த முயன்றார். விரிவடைந்த பன்மைத்துவம் (Enlarged pluralism) என்பதை கட்டுவதற்கு காந்தி முயற்சித்தார். எவர் ஒருவரின் குரலும் கேட்கத்தகுந்த அதன் மூலம் மாறுதலுக்கு உட்பட உகந்த நிறுவனங்களை - நடைமுறைகளை அவர் விழைந்தார். காந்தியின் ஒத்துழையாமை உண்மையை அடிப்படையாக கொண்டது. சிவில் சமூகத்தின் மாற்றத்திற்குரிய ஒன்று. அகிம்சைவழி நிற்பது- வன்முறையை ஏற்காதது. ஒத்துழையாமை காரணமாக வரும் தண்டனைகளை புகாரின்றி ஏற்பது. நெறிப்பயிற்சி, நன்னடத்தை பயிற்சிகளுடன் இருப்பது என அந்தோணி பரேல் சொல்வார். காந்திஜி உண்மையை ஏற்கனவே நிறுவப்பட்ட ஒன்றாக பார்க்கவில்லை. வாழ்க்கை உண்மைக்கான தாகம் கொண்டதாகவும் நியாயத்திற்கான போராட்டமாகவும் இருக்கிறது. அதாரிட்டி என்பதின் மீதான அச்சமற்ற தன்மை- அவசியமானால் எதிர்த்து நிற்கும் ஆற்றல் என்பதற்காக அவர் நின்றார். சிலர் அதிகாரத்தை அடைந்துவிடுவதால் அல்ல, அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படும்போது அதை எதிர்க்கும் சக்தியை எல்லோரும் பெறுவதன் மூலமே உண்மையான சுயராஜ்யம் வரும் என்பதை நடைமுறையில் காட்ட முடியும் என நம்புகிறேன் என்றார் காந்தி. அவர் அரசை ஆன்மாவற்ற அப்பாற்பட்ட அதிகாரவர்க்க எந்திரம் என்றார் (impersonal bureaucratic soulless machine). அதேபோல் வரன்முறையற்ற கட்டற்ற தனிநபர் என்கிற கருத்தாக்கத்தையும் அவர் ஏற்கவில்லை. ஜனநாயக குடிமகனுக்கு தன் திறமை மீதான சுயாட்சி மீதான allegianceதான் அவசியம் legitimation of state என்பதில் இல்லை. அவரைப்பொறுத்தவரை நல்ல சமூகம் அமைவது அதன் உறுப்பினர்களை சார்ந்த விஷயமே தவிர அரசாங்கம் சார்ந்த ஒன்றல்ல. உண்மையை அனைவரும் பின்பற்றத் துவங்கிவிட்டால் கிடைப்பது சுயராஜ்யம் என்றார். காந்திக்கு பணிவதற்கு தகுந்த நியாயங்கள் வேண்டும். ஒத்துழைப்பதற்கு அதிக நியாயங்கள் வேண்டும். அரசின் சட்டங்களை மதிப்பதுதான் morally safe என்பதில்லை. மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் இருக்கும் சட்டங்களை பின்பற்றலாம். சட்டங்கள் உண்மைக்கு அப்பாற்பட்டதாக இருக்குமெனில் அதற்கு ஒத்துழைக்காமல் இருப்பது கடமை என்றவர் காந்தி. காந்திவகைப்பட்ட ஜனநாயகம் விவாத முறையிலான (dialogical process) அரசியல் சமூகத்திற்கானது. அது creative dynamic force- questioning open வகைப்பட்டது. எந்தவொரு இயக்கமும் 5 கட்டங்களை கடக்கவேண்டியிருக்கும் என வகைப்படுத்துவார் காந்தி. முதலில் அலட்சியம், அடுத்து கேலிக்குள்ளாதல், மூன்றாவதாக தவறாக பேசப்படுதல், நான்காவது ஒடுக்குமுறைக்கு உள்ளாதல், அய்ந்தாவது மரியாதை பெறுதல். இதில் 4ஆம் கட்டத்தில் தாக்குப்பிடித்து தாங்காத இயக்கம் மரியாதை பெறுவதில்லை . காந்தியின் ஒத்துழையாமை அநியாயத்தின் முன்னர் அடுத்தவர் துன்பம் உணரும் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலானது. அவர் The duty of disloyalty என்கிற கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். நாம் நிறுவனங்களுக்கு தான் விசுவாசமாக அல்லது விசுவாசமற்றவராக இருக்கிறோம். எனவே விசுவாசமற்ற நிலையில் நாம் தனிநபரையல்ல, நிறுவனங்களையே அழிக்கிறோம் என தெரிவித்திருந்தார். காந்திஜிக்கு விவாதங்கள் உரையாடல் வழியே பகிர்வுத்தன்மையில் பெறப்படும் அரசியல் மதிப்பே உண்மையாகிறது. அவருக்கு சுயராஜ்யம் என்பது நியாயமற்றவைகளை தடுப்பது என்பதை கடமையாக கொண்டதாகும். விழிப்புகொண்ட சுய ஆட்சி, உள்ளொழுங்கு, மனதை ஆள்தல் (Enlightened self rule, disciplined rule from within, one’s rule over one’s mind) என்பதிருந்தால்தான் self rule என்கிற autonomy தன் விழிப்புணர்வை, மனசாட்சியை உருவாக்கி மற்றவர்களுக்கும் அரசியல் கடமைகளை கொணரும். நம்மை ஆளத்தெரிந்துகொண்டால் அதுதான் சுயராஜ்யம் என்றார் காந்தி (When we learn to rule ourselves, it is swaraj). அசமத்துவம், நீதியின்மை, அறியாமை உள்ள நாட்டில் சுயாட்சி / தன்னாட்சி சாத்தியமாகுமா. காந்தியின் சுயராஜ்யத்தில் பொறுப்பற்ற சுதந்திரம் என ஏதுமில்லை. ஒருவர் தன்னை திடமாக உருவாக்கிக்கொள்கிறார். பெரும் பொறுப்புடன் நடந்துகொள்வார். நியாயமற்ற சட்டங்களை கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் நாம் மற்றவரின் சுதந்திரத்திற்கான இடத்தை விசாலப்படுத்துகிறோம் . எந்த ஒத்துழையாமையும் தவறின் அடிப்படையில் அமையக்கூடாது. செயல்படாத சிந்தனையற்ற அரசியல் என்பதற்கு பதில் ஒத்துழையாமை அரசியல் என்பது சிறந்த செயலாகும். காந்தியின் அரசியல் உண்மைக்கான ஊழியம். அதன் சாரம் அதிகார அமர்வு உத்தி என்பதில் இல்லை. எல்லோரும் ஒரே மாதிரி எண்ணுவதில்லை. சத்தியத்தின் கொஞ்சம் பகுதியையே பார்வையின் பல கோணங்களிலிருந்து பார்க்கிறோம். ஆகையால் பரஸ்பர சகிப்புத்தன்மையே நடத்தைக்கான தங்கமான விதி என்றவர் காந்தி (The Golden rule of conduct is mutual toleration seeing that they will never all think alike and we shall see truth in fragments and from different angles of vision. Conscience is not the same thing for all). காந்திக்கு உண்மையும் அகிம்சையும் நாணயத்தின் இருபக்கங்கள். அவர் நெறிமிகு தலைவர். அரசியல் என்பது அவருக்கு கோட்பாடல்ல, நன்னெறியாகும். அவரின் இறைகோட்பாடோ, கருத்துகோட்பாடோ மிக வரையறைக்கு உட்பட்டது. பொதுவெளியை நன்னெறிபடுத்திடவே அரசியல் செயல்பாடு எனக் கருதி செயல்பட்டவர் காந்தி. விரிவடைந்த பன்மைத்துவம் என்பதற்குரிய நிறுவனங்கள், நடைமுறைகள் தேவைப்படுகின்றன. சம்பாதித்யம் , சொத்து உருவாக்கம் என்பதிலிருந்து உண்மை, நேர்மையின் பக்கம் நவீன அரசியல் தன் மையத்தை நகர்த்திக்கொள்ளவேண்டும். அவரின் காரணகாரிய அறிவு குறித்த சோதனை என்பது கலாச்சாரம் மற்றும் மத அம்சங்களில் விமர்சனபூர்வ அணுகுமுறைக்குரியது. அது தன்போல் பிறரை பார்க்கும் தன்மைகொண்டது (Gandhi’s acid test of reason a critical approach to cultural and religious values in order to see how we are able to consider empathically the otherness of other). அவர் வறட்டு மதவாதியல்ல- கலாச்சார மறுமலர்ச்சியாளருமல்ல முற்ற முழுதான காரணம் என்பதற்காக நின்றவரும் அல்லர். அவருக்கு விமர்சனபூர்வபூர்வமாக சிந்திப்பதும் தீவிரமாக வாழ்வதும் ஒன்றே. For him thinking critically and living radically became one. அவர் வித்தியாசமாக சிந்தித்தார்- சாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்தார். பாரபட்சமில்லாமல், மெத்தனமில்லாமல், சராசரித்தனமின்றி அனைவருடனும் வாழவே முயற்சித்தார். பிடிவாதக்காரராக, வளையாதவராக, யாரும் நுழைய இடம்தராதவராக தனியே போய் நிற்கவில்லை. தன்னை உணரச்செய்திடும், தன்னை பிரதிபலிக்கும் , தன்னை மாற்றத்திற்குள்ளாக்கும் தொடர் நிகழ்வாக அவர் அரசியலை உணர்ந்தார். சுயத்தை தேடும் மனிதன் ஒருவரின் நன்னெறியின் வெளிப்பாடாக அரசியலை அவர் புரிந்துகொண்டார் . Gandhi emphasized revolution of values than values of revoulution .Ethical revolution were necessary. Search for truth is possible only thro non attachment to power. If we all discharge our duties, rights will not far to seek. புரட்சியின் மதிப்பைவிட மதிப்புகளின் புரட்சியை அவர் வலியுறுத்தினார். நன்னெறிக்கான புரட்சி அவசியம். உண்மையைத் தேடல் என்பது அதிகார ஆசையில்லாத நிலையில்தான் சாத்தியமாகும். கடமையை அனைவரும் செய்வோமானால் உரிமைகள் வசப்படும். YOU TUBE link : https://www.youtube.com/watch?v=m78KmSuDBGY ஆகஸ்ட் 1947- கவலை தோய்ந்த காந்தி பிரிவினையுடன் விடுதலை என்பது காந்தியை வாட்டி வதைக்கும் விஷயமாக இருந்தது. இந்த முடிவிற்காகவா நமது வாழ்நாள் போராட்டத்தை புனிதமானது என உரிமைப் பாராட்டிக்கொண்டோம், O Lord Lead us from darkness into light என்றே அவர் தெரிவிக்கலானார். வேறொரு நேரத்தில் கடிதம் ஒன்றில் ஆகஸ்ட் 15 குறித்து என் பார்வையில் ஒரு மதிப்பும் இல்லை- எவரிடத்தும் உற்சாகமில்லை என வழக்கம்போல் துணிவான கருத்தை வெளிப்படுத்தினார். ஆகஸ்ட் 15 நெருங்கும் தருணத்தில் பாகிஸ்தான் என பிரிந்துபோகும் பகுதியிலிருந்து முஸ்லீம் அல்லாத நண்பர் ஒருவர் காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார். உங்களைப்போன்றவர் ஆகஸ்ட் 15- சுதந்திரம் என கொண்டாட்டங்களில் இருக்கிறீர்கள். எங்கள் நிலையை நினைத்துப் பார்த்தீர்களா? என்ன மகிழ்ச்சி எங்களிடம் இருக்கும்? இந்த அச்ச உணர்விற்கு ’பதில் என்ன’ என்கிற கேள்வி அதில் இருந்தது. அதே நேரத்தில் இந்திய யூனியன் என அறியப்படும் பகுதிகளில் வகுப்புக்கலவரம் என்பதும் காந்தியை கவலையுற செய்தன. பாகிஸ்தான் பகுதியில் ஏதாவது நேர்ந்தால் ஆகஸ்ட் 15க்கு பின்னர் அதன் விளைவுகளை இந்தியாவில் சந்திக்க நேரும் என காங்கிரஸ் மாகாண தலைவர்கள் பேசினர். இதை கேள்வியுற்ற காந்தி காங்கிரஸ் தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டுவிட்டதா - அமைப்பு விதிகள் நான் அறியாமல் மாறிவிட்டனவா எனகிற கேள்விகளை எழுப்பினார். மக்கள் பைத்தியக்காரத்தனமாக நடந்துகொள்ளத் துவங்கினால் யாரால் கட்டுப்படுத்த இயலும் என்றார். ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகை சார்ந்த ஆர்தர் மூர் காந்தியிடம் நீங்கள்தான் பெரும் சக்தி எனச் சொன்னபோது I am a spent Bullet . பாகிஸ்தான் வருவது உறுதியாகிவிட்டது. நட்பு வருமா எனத் தெரியவில்லை என்றார். மற்றொரு கடிதம் ஒன்றில் பாகிஸ்தான் என்கிற முடிவு தவறான ஒன்று. ஆனால் நான் யாரை எதிர்த்து எந்த முடிவிற்காக போராடுவது என காந்தி எழுதியிருந்தார். புவிப்பிரிவினையும் சொத்துப்பிரிவினையும் மனங்களின் பிரிவினையாக தொடரவேண்டுமா என்கிற கேள்வியை அவர் முன்வைத்துக்கொண்டிருந்தார். முஸ்லீம் லீகிலும் சிலர் Hanske liya hai pakistan, Larke lenge Hindustan ( we got pakistan in fun; we will take Hindustan by force ) என முழங்கி வந்தனர். ஆசப் அலிக்கு அவர் எழுதிய கடிதத்தில் சுதந்திரம் கிடைத்துவிட்டது- ஆனால் நான் உரைந்து போயுள்ளேன். நான் வழக்கொழிந்தவன் ஆகியுள்ளேன் (Freedom has come but it leaves me cold.. so far as I can see, I am a back number). நம்மிடம் அகிம்சை என்பது மேலெழுந்தவாரியாகவே இருந்துள்ளது. இதயத்தில் வன்முறை நிறைந்துள்ளது என தெரிவித்திருந்தார். வேறு கடிதம் ஒன்றில் பிரிட்டிஷார் போகின்றனர்- இதில் உற்சாகம் கொள்ள என்ன இருக்கிறது என எழுதியிருந்தார். மருமகளுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் நாட்டில் அதிகார மாற்றம் -பாகிஸ்தான் உருவாக்கம் எனக்கு அதிக strain தந்துள்ளது. நீண்டநாட்கள் வாழ்வேனா என்பதில் நம்பிக்கை இழப்பு வந்துவிட்டது என எழுதினார் . I almost despair of seeing peace in my life time என நொந்து பேசினார். அமைதி விரும்பும் மனிதனுக்கு தீங்கு நிறைந்த உலகில் இடமில்லாமல் போகலாம். ஆனாலும் அவன் அங்குதானே வாழவேண்டும் என தன்னை அவர் சமாதானம் செய்துகொண்டு வந்தார். கண்முன் நிகழும் அனைத்து தவறுகளையும் சரிசெய்யமுடியாது. அதே நேரத்தில் எனக்கு அதில் பொறுப்பில்லை என சொல்லவும் முடியாது. எனது ஆன்மா ஓர் பக்கம் நகர்கிறது. உடம்போ வேறுபக்கம் இழுக்கிறது. சிலுவையில் அறைந்து கொள்ளும் போராட்டம்தான் தீர்வு போல் தெரிகிறது என அவர் பேசிக்கொண்டிருந்தார். ஜூலை 1947ன் இறுதியில் அவர் படேலுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். நடந்துகொண்டிருப்பவை எனக்கு உவப்பாக இல்லை. நீங்கள் யாரும் உங்களை மாற்றிக்கொள்ளவேண்டும் என சொல்லவில்லை. ஆகஸ்ட் 15க்கு முன் நான் பீகார் நவகாளிக்கு செல்ல விழைகிறேன். ஹரிஜன் பத்திரிகையைக் கூட நிறுத்திவிடவேண்டும் என கருதுகிறேன். அதில் நான் வேறுபட்ட வழிகாட்டலை தருவதாக அமைந்துவிடக்கூடாது என எழுதினார். காந்தியின் தோழர்களோ அரசாங்க பொறுப்பேற்று நிர்வாகிகளாக செயல்படவேண்டும். அவர்கள் பொதுமக்கள் கருத்தை தெரிந்து செயல்படவேண்டிய நிலையில் இருந்தனர். சீர்திருத்தக்காரர் எதையும் துணிச்சலாக சோதித்துவிடமுடியும். நிர்வாகிகளால் அவ்வாறு முடியுமா? முதல் கவர்னர் ஜெனரல் மெளண்ட்பாட்டன் என தனது தோழர்கள் எடுத்த முடிவை காந்தி பாராட்டினார். முன்னால் எதிரி என அறியப்பட்ட நிர்வாகம் ஒன்றை சார்ந்தவரை நம்பி ஏற்றது துணிச்சலான செயல் என்றார். யூனியன் ஜாக் கொடி தொடர்ந்து பறக்கும் என்ற செய்தி பரவியபோது உணர்ச்சிவசப்படவேண்டாம் என்றே காந்தி கருத்து தெரிவித்தார். அது வதந்திதான் என தெரியவந்தபோது பலரும் குதித்து மகிழ்ந்தனர். அதையும் அவர் நிதானப்படுத்தவே செய்தார். திராவிடஸ்தான் என்கிற முழக்கம் எழுந்தபோது அவர் அதை ஏற்கவில்லை. பாகிஸ்தான் கொடி குறித்து பார்வை எவ்வாறு இருக்கவேண்டும் என அவரிடம் கேள்வி வந்தபோது If the Pakistan flag represents all the inhabitants equally, irrespective of religion, it will command my salute as it should yours என்கிற கருத்தை அவர் தந்தார். இந்தியா ஒட்டிஇணைந்து செயலாற்ற வேண்டும் எனில் அது தனது நெறி சார்ந்தவற்றில் பிறழ்வுகள் இல்லாமல் இருக்க வேண்டும். காங்கிரஸ் தனது நெறிமேன்மையை முன்வைத்து கட்டப்பட்ட இயக்கம் எனில் அரசியல் விடுதலைக்குப் பின்னர் அதை விட்டுவிடவேண்டும் என்பதில்லையே என அவர் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தார். காங்கிரஸ் சக்தி வாய்ந்த அமைப்பாக தொடரவேண்டும் எனில் ஆக்கபூர்வ செயல்பாடுடையவர்களின் அசோசியேஷன் ஆக அது இருக்கவேண்டும் என்றார். சர்க்கா போட்ட மூவர்ண கொடிக்கு பதிலாக அசோக சக்கரம் ஏற்கப்பட்டு புதிய துணிக்கொடிகள் காதி கடைகளுக்கு வந்ததால் பழைய கொடிகள் ரூ 2 லட்சம் மதிப்பில் விற்கப்படமுடியாமல் போன செய்தி அவர் செவிக்கு எட்டியது. ஏழைகளின் ஸ்தாபனம் பாதிக்கப்படக்கூடாது என அவர் அறிவுறுத்தினார்- பழைய கொடியை விற்காமல் புதுக்கொடிகளை விற்காதீர் என காந்தி தன் கருத்தை தெரிவித்தார். இந்தி தேவநாகரி எனும் பிரச்சனை அவரிடம் வந்தபோது இந்தியா இந்துக்கள்- முஸ்லீம்கள் என அனவருக்குமான நாடு. எனவே எளிய இந்தி- எளிய உருது கலந்த இந்துஸ்தானிதான் மொழியாக இருக்கவேண்டும். அது தேவநாகரி மற்றும் உருது ஸ்கிரிப்டில் இருக்கவேண்டும் என்றார். விடுதலைக்கு பின்னர் பெரும் விஷயங்களில் மட்டுமே கவனம் குவிந்துவிடும்- சிறு விஷயங்கள் (little things ) உதாசீனமாக்கப்பட்டுவிடும் என்கிற கவலை அவருக்கு இருந்தது.. ஆனால் நமது கிராமங்கள் சிறு விஷயங்களை நம்பியே இருக்கின்றன என அவர் கருதினார்.. II ஜூன் 11, 1947 அன்று திவான் சர் சி பி ராமசாமி அய்யர் ஆகஸ்ட் 15 அன்று திருவாங்கூர் சுதந்திர நாடாக அறிவிக்கப்படும் என்றார். உடன் ஹைதராபாத் நிசாமும் அறிவித்தார். பிரிட்டிஷ் இருக்கிறவரை அதன் அதிகாரத்தில் திருப்தியுற்ற திவான் தற்போது இவ்வாறு பேசுவது சரியாகாது என காந்தி பதில் தந்தார். திருவாங்கூருக்கு சொன்னதுதான் ஹைதராபாதிற்கும் என்றானது. படேலின் பெரும் முயற்சியால் பல சமஸ்தான பிரதிநிதிகள் அரசியல் அசெம்பிளிக்கு வர இசைந்தனர். காஷ்மீர் பெரும் பிரச்சனையாக இருந்தது. நேரு, படேல் , மெளண்ட்பாட்டன், காந்தி என பலதரப்பிலிருந்தும் முயற்சி தேவைப்பட்டது. ஆகஸ்ட் 1947 முதல்வாரத்தில் அவர் காஷ்மீர், ராவல்பிண்டி சென்றார். காஷ்மீரில் மகாராஜா, மற்றும் அப்துல்லா ஆகியோர்களை சந்தித்து பேசினார். ராவல்பிண்டியில் உடல் உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு அகதிகளாக இருந்த ஆயிரக்கணக்கானவர்களை சந்தித்தார். என்ன மிருகத்தனம்- கொடூரம் என வார்த்தைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டன.. சாவு வருவதற்கு முன்னர் செத்துவிடக்கூடாது. அஞ்சாமல் நிலைமைதனை சமாளிக்க பார்ப்போம் என்றார். ஆகஸ்ட் 15 பற்றி பாட்னாவில் கேட்டபோது prayer, fasting, spinning மூலம் கொண்டாடுங்கள் என்றார். நவகாளி- கல்கத்தா கலவரம் நிற்க வேண்டும். அங்கு அமைதி தழைக்க செய்வதற்கு நேரே செல்லவேண்டும் என முடிவெடுத்தார் காந்தி. மனதிற்கு உகந்த செயல் என அவர் நினைத்துவிட்டால் அதற்காக அனைத்து துனபங்களையும் ஏற்க சித்தமாக இருப்பது அவரது இயல்பு. கல்கத்தாவில் சுக்ரவார்தியுடன் முஸ்லீம் பகுதியில் ஒரே வீட்டில் தங்குவது என்பதை அவரது ஒப்புதலுடன் காந்தி அறிவித்தார். ஆகஸ்ட் 13 1947ல் இதை படேலுக்கு கடிதம் மூலம் தெரிவித்தார். உடனடியாக படேல் பதிலளித்தார். மிகமோசமான பகுதியில் பொருத்தமில்லா கம்பெனியுடன் தங்கி ஆபத்தை மேற்கொள்கிறீர்கள் . நான் அஞ்சுகிறேன் என்றார் படேல். சரியாக அன்று மதியம் 2.30க்கு யாரும் குடியிருக்காத பாழடைந்த பெலியகட்டா ஹைதாரி மான்சனுக்கு காந்தி சென்றார். ஜன்னல், கதவுகள் உடைந்து கிடந்தன. ஒரு கழிப்பறை மட்டுமே இருந்தது. அதற்கு முன்னர் நூற்றுக்கணக்கானவர்கள் பயன்படுத்தியிருந்த நிலையில் அக்கழிப்பறை இருந்தது. பெய்த மழையால் களிமண் சேறும் சகதியுமாக இருந்தது. அதன் மீது பிளீச்சிங் பவுடர் தூவியிருந்ததால் தலை கிறுகிறுக்க செய்ததாக பியாரிலால் பதிவு சொல்கிறது. காந்திக்கு ஓர் அறை. அலுவலகம் செயல்பட வேறு ஓர் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. கூட்டமாக வந்ததவர்கள் காந்தியிடம் ஏன் இங்கு வந்தீர்கள்- இந்துக்கள் நாங்கள் கஷ்டப்பட்டபோது எங்கே போனீர்கள் என்றனர். காந்தி அறையில் அமர்ந்திருந்தார். கற்கள் வீசப்பட்டன. நவகாளியில் உங்கள் சகோதரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1946க்காக 1947ல் பழிவாங்குவது என்ன நியாயம் இருக்கமுடியும் என காந்தி வினவினார். இங்கிருந்து நான் சேவை செய்ய விழைகிறேன் என்றார். என் வாழ்கையின் இறுதி கட்டத்தில் இருக்கிறேன். என்னை உங்களிடம் ஒப்படைக்கிறேன். நீங்கள் எனக்கு எதிராக நடந்துகொள்ள விரும்பினால் அவ்வாறே செய்யலாம் எனவும் தெரிவித்தார். நவகாளியில் அமைதி கொணர சுக்ரவர்தி பெரும்பாடுபடுவார் என்பதை உணருங்கள் என்றார். உங்கள் அகிம்சா உபதேசத்தை நிறுத்துங்கள். இஸ்லாமியரை இங்கு வாழவிடமாட்டோம். வெளியேறுங்கள் என்றது கூட்டம். எனக்கு உங்களைவிட வரலாறு தெரியும். இந்து இளைஞன் இஸ்லாமியரை மாமா என உரிமையுடன் அழைக்கும் பழக்கம்பற்றி நீங்கள் அறியவேண்டும். விழாக்களில் இணைந்து கொண்டாடும் வழக்கம் இருக்கிறது. நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். போலீசை அழைக்கமாட்டேன். நான் எவ்வாறு இந்துக்களுக்கு விரோதியாக இருப்பேன் என காந்தி எடுத்துரைத்தார். சுக்ரவார்தியை வரச்சொல் என்றது கூட்டம். அவர் வந்தபோது கொலைகளுக்கு நீரே காரணம் என்றனர். ஆமாம் நான்தான் பொறுப்பு என்றார் அவர். கல்கத்தாவில் 20 லட்சம் இந்து முஸ்லீம்கள் மோதிக்கொண்டிருந்தால் நான் நவகாளியில் எந்த முகத்துடன் செல்வது என்றார் காந்தி. பதட்டம் சற்று தணிய இரவு 11 மணிக்கு பின்னர் உணவு ஏதுமின்றி காந்தி படுக்கைக்கு சென்றார். இதே கோபப்பட்ட இளைஞர்களில் சிலர் அவர் தங்கியிருந்த இல்லத்திற்கு செக்யூரிட்டி போல் நின்றனர். ஆகஸ்ட் 14 அன்று இன்று இரவு இந்தியா துண்டாடப்படுகிறது. நாளை முதல் விடுதலை - சுதந்திரநாடு என்கிற கொண்டாட்டம் இருக்கும். கூடவே துயரமும் இருக்கிறதே என்றார் காந்தி. இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஆயிரக்கணக்கில் ஒன்றாக ஊர்வலம் செல்கிறார்கள். தேசியக்கொடி ஏற்றப்போகிறார்கள் என்ற செய்தியும் வந்தது. இரவு 10 மணிவரை ஏரிப்பகுதியில் சுக்ரவர்தியுடன் காந்தி நடைப்பயிற்சி மேற்கொண்டார். நேரமாகிவிட்டது. நான் காலை 3.30க்கு எழுபவன் எனச்சொல்லி அவர் 11 மணிக்கு படுக்கச் சென்றார். எங்கும் விடுதலை கொண்டாட்டங்கள் கொடிகள் தோரணங்கள். இஸ்லாமிய சகோதரர்கள் காந்தி தங்கியிருந்த அந்த இல்லத்தில் தோரணம் விளக்குகளை அலங்கரித்தனர். ஆகஸ்ட் 15 1947 அன்று காந்தி வழக்கத்திற்கு மாறாக விடியற்காலை 2 மணிக்கே எழுந்தார். மகாதேவ தேசாய் நினைவுநாளை அனுசரித்தார். சிலபெண்கள் ரவீந்திரநாத் தாகூரின் விடுதலை கீதங்களை பாடிக்கொண்டே வந்து காந்தியை தரிசித்தனர். அதே போல் மற்றொரு குழுவில் பெண்கள் பாடிக்கொண்டே வந்தனர். காந்தி காலை நடைப்பயிற்சிக்கு சென்றார். அவரை பார்ப்பதற்காக ஏராள மக்கள் கூடினர். அரைமணிக்கு ஒருமுறை அவர் மக்கள் பார்வைக்கு தன்னை வைத்துக்கொண்டார். மேற்கு வங்க அமைச்சர்கள் வந்தனர். முட்கிரீடம் சூடியுள்ளீர்கள். எளிமையாக இருங்கள். உண்மை அகிம்சையை போற்றுங்கள். ’அதிகாரம் எச்சரிக்கை’ - ஏழை எளியவர்களுக்கு தொண்டாற்றுங்கள் என்றார். அன்று மாலையில் 30000 மக்கள் கூடினர். எல்லோருக்கும் வாழ்த்துக்கள் என்றார். அய்ரோப்பியர் இங்கு தங்கினால் அவர்களையும் கண்ணியத்துடன் நடத்துங்கள் என்றார். அன்று இரவு சுக்ரவர்தி கார் ஓட்ட கல்கத்தா நகரை சுற்றிவந்தார் காந்தி. பல இடங்களில் இஸ்லாமியர் சூழ்ந்துகொண்டு மகாத்மா காந்தி ஜிந்தாபாத் முழக்கமிட்டனர். தலைவர்கள் இருவரும் ஒருசேர ஜெய்ஹிந்த் என்றனர். ராஜ்குமாரி அம்ரித் கெளருக்கு கடிதம் எழுதினார் காந்தி. கடிதத்தில் எனக்கு எல்லா உதவிகளும் முஸ்லீம் நண்பர்களே செய்கின்றனர். தென்னாப்பிரிக்கா, கிலாபத் நாட்கள் நினைவிற்கு வருகின்றன. இத்தருணத்தில் நான் பகைவன் ஆக எவருக்கும் இல்லை. சுக்ரவர்தி மாறியிருக்கிறார். அப்படித்தான் தெரிகிறது என குறிப்பிட்டிருந்தார். காந்தியை பார்க்க வந்த பலர் கால் ஷூக்களுடன் நுழைந்தபோது ராஜாஜி மட்டும் மரியாதையுடன் தனது காலணியை வெளியே விட்டுவிட்டு சற்று தூரம் நடந்துவந்து காந்தியைப்பார்த்தார். இருவர் முகங்களும் மலர்ந்தன. அவர்கள் சிரித்து வேடிக்கை பேச்சுக்களில் ஒரு மணிநேரம் ஈடுபட்டனர். ஆகஸ்ட் 16 அன்று பிரார்த்தனை கூட்டத்தில் 50ஆயிரம் மக்கள் பங்கேற்றனர். காந்தி தனது செய்தியில் திருட்டு குறித்து பேசினார். பண்டைய நமது முன்னோர்கள் காலத்தில் வீடுகளை எவரும் தாளிடாத பழக்கம் இருந்துள்ளது. மக்களிடம் நாணயம் இருந்தது. திருட்டு இல்லாமல் இருந்தது. ஆனால் விடுதலை தினத்தில் அரசாங்க அலுவலகத்தில் கூட்டம் புகுந்து இருக்கைகளை நாசப்படுத்தி சிலவற்றை தூக்கி சென்றுள்ளனர். இராணுவம் வந்து அனைவரையும் வெளியேற்ற வேண்டியுள்ளதை நினைத்துப் பார்த்தால் அவமானகரமாக இருக்கிறது. எவர் எதை எடுத்து சென்றாரோ அதை அவர்களே அரசாங்க அலுவலகத்தில் வைத்துவிட்டனர் என்ற செய்தி வந்தால் நல்லது என்றார். சுக்ரவர்தி ஆகஸ்ட் 18 ஈத் நிகழ்வுகளுக்கு இஸ்லாமியர் இந்துக்களை அழைத்துள்ளதாக தெரிவித்தார். ஈத் அன்று ஏராளமானவர்கள் காந்தியை பார்க்க பழங்களுடன் வந்தனர். மசூதி தொழுகையின் போது இந்துக்கள் பாடல்களை போடாமல் இருக்க காந்தி வேண்டுகோள் விடுத்தார். மாலை 5 லட்சம்பேர் பங்கேற்ற பிரார்த்தனை கூட்டம் முகம்மதன் ஸ்போர்ட்டிங் கிளப்பில் நடந்தது. விடுதலையை காத்திட அளப்பரிய தியாகம் செய்யத்தயார் என இஸ்லாமிய தலைவர்கள் பேசினர். காந்திஜி உண்மையில் மகாத்மாதான் எனப் பேசினார் சுக்ரவர்தி. III மகாராஜா ஒருவருக்கு அவர் அனுப்பிய லட்சம் ரூபாய்க்கு ரசீது அனுப்பி நன்றிக் கடிதமும் காந்தி எழுதினார். நவகாளி நிவாரணத்திற்கு 1 1/2 லட்சம் ரூபாய் இருக்கிறது. தற்போதைக்கு இது போதும் என நினைக்கிறேன்- கல்கத்தா, சிட்டகாங், பீகார் பகுதி இந்து முஸ்லீம்களுக்கும் தங்கள் பணத்திலிருந்து நிதி ஒதுக்க தங்கள் அனுமதியை கோருகிறேன் என எழுதினார். தான் அனுப்பும் நிதி எதற்கு செலவிடப்படுகிறது என்பதை அவர் அறியச் செய்யவேண்டும் என்கிற பொறுப்பு நிதி பெற்றுக்கொள்பவர்க்கு இருக்கிறது என்கிற பேருண்மையை காந்தி இதன் மூலம் புலப்படுத்தினார். மெளண்ட்பாட்டன் One Man Boundary Force என காந்தியைப்புகழ்ந்து கடிதம் எழுதினார். ஆகஸ்ட் 15 அன்று தங்கள் பெயரைகேட்டவுடன் அரசியல்நிர்ணயசபை உற்சாகத்துடன் மெய்சிலிர்த்து தங்களை நினைத்துக்கொண்டது என்பதையும் அவர் எழுதியிருந்தார். ஆகஸ்ட் 17 அன்று காந்திஜிக்கு தந்தி ஒன்று வந்தது. ராவல்பிண்டியில் நடந்ததைவிட அதிகமாக லாகூர் நகரில் இந்துக்கள் படுகொலைகள் நடைபெற்றுள்ளது. வர்த்தகப் பகுதி தீக்கிரையாகியுள்ளது. சிலர் உயிருடன் எரிக்கப்பட்டுள்ளனர். தப்பிக்க நினைத்தவர்களை போலீசாரும் இராணுவமுமே சுட்டுள்ளது. எனவே லாகூருக்கு வாருங்கள் என்பது தந்தி மூலம் தரப்பட்ட செய்தி. படேலுக்கு அதை அனுப்பி உண்மை கண்டறிய காந்தி வேண்டினார். உண்மையாக இருந்தால் கொடுமையானது என்றார். ஆகஸ்ட் 21 அன்று தன்னை சந்தித்த பெண்கள் மத்தியில் இஸ்லாமிய சகோதரிகளிடம் செல்லுங்கள்- நட்பு பாராட்டுங்கள் என காந்தி தெரிவித்தார். பஞ்சாப் சென்று பார்த்து வந்த நேரு ஆகஸ்ட் 21 அன்று காந்திக்கு அவரின் பஞ்சாப் வருகை அவசியம் என்கிற தந்தியை அனுப்பியிருந்தார். நவகாளியில் தேவைப்படுகிறேன். பீகாரில் சில நாட்கள் தேவைப்படலாம். இச்சூழலில் நான் எவ்வாறு வருவது என நேரு வழிகாட்டவேண்டும் என காந்தி பதில் அனுப்பினார். உடனடியாக தங்களை போகச்சொல்லவில்லை- நாங்கள் கவனம் செலுத்திவருகிறோம். திரும்ப நான் சொல்கிறேன் என நேரு பதில் அனுப்பினார். பஞ்சாபியர் சிலர் காந்தியை சந்தித்து பெண்கள் கடத்தப்படுவது குறித்தும், நடைபெறும் கொலைகள் பற்றிய செய்தியையும் தெரிவித்தனர். அவசியமெனில் உடன் செல்கிறேன் என செய்தியை நேருவிற்கு காந்தி அனுப்பினார். நேரு ஆகஸ்ட் 25ல் தான் மறுமுறை பஞ்சாப் போய்வந்து அறிந்த செய்திகளை பகிர்ந்துகொண்டார். அமிர்தசரஸ் பகுதியில் 50000 இஸ்லாமியர் அழிக்கப்பட்டனர் என சொல்வது கூடுதலாக இருக்கலாம். ஆனால் 10000க்கும் குறைவாக இருக்க வாய்ப்பில்லை. இரு பக்கங்களிலும் ஏராள கொலைகள்- இழப்புகள் தெரிகின்றன. அகாலியினர் கொலைகளில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் இருதரப்பிலும் மானபங்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்- மாஸ்டர் தாராசிங் அமைதிக்கு முயற்சித்து வருகிறார். சில இடங்களில் அகாலிகளுடன் ஆர் எஸ் எஸ் சேர்ந்துள்ளனர்- மவுண்ட்பாட்டனும் காந்தி பஞ்சாப் செல்வது தேவை என கருதுகிறார் என நேரு தெரிவித்திருந்தார். சுசிலா நாயார் ராவல்பிண்டி அருகாமையில் இஸ்லாம் அல்லாதவர் முகாம்களுக்கு ஆறுதலாக இருந்து நம்பிக்கை உருவாக்கிட சென்றார். அரசாங்கத்திற்கு கிடைத்த விவரங்களையடுத்து படேல் ஆகஸ்ட் 24 அன்று லியாகத் அலிகானுக்கு கடிதம் எழுதினார். முகாமில் உள்ளவர்க்கு சாப்பாட்டுவசதி, இதர வசதிகளை செய்துகொடுத்து நம்பிக்கை உண்டாக்க வேண்டும். இயலவில்லையெனில் கிழக்கு பஞ்சாபிற்கு முகாமை மாற்றுமாறு வேண்டினார். மேற்கு பஞ்சாப் நிர்வாகம் முழு நடவடிக்கைகள் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக லியாகத் பதில் அனுப்பினார். சுசிலாவை அங்கு அனுப்பியுள்ளது பற்றி காந்திக்கு படேல் எழுதினார். காய்கறிகளை வெட்டுவது போன்று மனிதர்கள் நறுக்கப்படுகின்றனர் என படேல் காந்திக்கு தனக்கு கிடைத்த தகவலை பரிமாறிக்கொண்டார். ஆகஸ்ட் 26 அன்று படேலுக்கு பதில் எழுதினார் காந்தி. சாவின் வாயிலுக்கு சுசிலாவை அனுப்பியுள்ளேன். ஆனால் முகாமில் இருப்பவர் பாதுகாப்பை நன்மைகளை அறிந்த பிறகே சுசிலா வர இயலும் என தெரிவித்தார். ஆகஸ்ட் 27 அன்று படேல் காந்திக்கு திரும்ப எழுதினார். லேடி மெளண்ட்பாட்டனும் ராஜ்குமாரியும் சுசீலாவை பார்த்துள்ளனர். சுசிலா செல்லக்கூடாது என முகாம் மக்கள் அழுகின்றனர். எனவே அவர் அங்கு தொடர்ந்து நீடிக்கிறார். மற்றவை கடவுளின் விருப்பமென அதில் படேல் தெரிவித்திருந்தார். ஆகஸ்ட் 24 ஹரிஜன் இதழில் ஒரே வீட்டில் சுக்ரவர்தியுடன் தங்கியிருப்பது- முஸ்லீம் நண்பர்கள் உதவி பற்றி எழுதினார். நாங்கள் இருவரும் இறைவனின் விருப்பத்திற்கேற்ப நடனமாடுபவர்கள். இறைவன் எங்களை கருவியாக்கிக்கொண்டுள்ளார் என குறிப்பிட்டார். ஆகஸ்ட் 26 அன்று நள்ளிரவிலேயே விழித்த காந்திஜி தேங்கிக் கிடந்த வேலைகளில் கவனம் செலுத்தினார். இரவு 1 1/2 மணிக்கு படுத்து அரைமணி ஓய்வெடுத்தார். மீண்டும் 2 மணியிலிருந்து வேலையைத்துவங்கினார். காலை பிரார்த்தனைவரை வேலை செய்துகொண்டிருந்தார். கவலையுடன் அமைதியின்றி இருப்பதாக தெரிவித்தார். ஏன் நம்பிக்கை இழந்துள்ளேன் என வினவினார். ஆகஸ்ட் 27 அன்று கிட்டெர்பூர் துறைமுக பகுதியில் தொழிலாளர்களிடம் உரையாற்றினார். மத நல்லிணக்கத்தின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். முஸ்லீமிடமா இந்துவிடமா எவரிடம் வேலைபார்க்கிறோம் என பார்க்காது ஒற்றுமையாக இருக்க வலியுறுத்தினார். அடுத்தநாள் ’யுனிவர்சிட்டி சயின்ஸ்’ கல்லூரியில் மாணவர்களுடன் பிரார்த்தனை கூட்டம் இருந்தது. சுக்ரவர்தி குறித்து தவறாக சொல்லப்பட்டபோது நம்மிடம் வந்த எந்த விருந்தாளியின் மனதையும் நோகச் செய்வது நல்ல மரபல்ல என்றார் காந்தி. சுய கட்டுப்பாடு, அடக்கம் என்கிற பண்புகளை மாணவர்கள் கற்கவேண்டும் என்றார். மீராபென்னுக்கு எழுதிய கடிதத்தில் நான் அடுத்தக்கணம் எங்கு இருப்பேன் எனத்தெரியவில்ல. சிட்டுக்குருவிகள் அப்படித்தானே வாழ்கின்றன. கணத்திற்கு கணம் வாழ்வோம் ( Let us literally live from moment to moment) என தெரிவித்திருந்தார். ராஜ்குமாரி அம்ரித் கெளருக்கு மானுடத்தின் மீது நம்பிக்கை இழப்பு வேண்டாம். சில துளிகள் அழுக்காக இருப்பதால் சமுத்திரம் அழுக்காகிவிடுவதில்லை என்பதை புரிந்துகொள்வோம். ஜவஹர் டெல்லிக்கு வரச்சொல்கிறார் என கடிதம் எழுதினார். ஆகஸ்ட் 29 அன்று காந்தி மீண்டும் நேருவிற்கு தந்தி அனுப்பினார். சர்தார் அஜித் சிங் என்னை பஞ்சாபிற்கு வர வற்புறுத்துகிறார். என்ன செய்வது. உயிர்களும் உடைமைகளும் போன பின்னர் போவது கேலிக்குரிய விஷயமல்லவா என காந்தி கேட்டிருந்தார். நேரு தன் பதிலில் தாங்கள் டெல்லிக்கு வருவது அவசியம் என தெரிவித்தார். மேலும் நேருவும் லியாகத்தும் இணைந்து பஞ்சாப் சுற்றுப்பயணம் செல்கின்றனர். அமைதி திரும்பலாம். மற்றவை கடவுளின் கிருபையில் இருக்கிறது என பஞ்சாபிலிருந்து செய்தி காந்திக்கு கிடைத்தது. ஆகஸ்ட் 30 1947ல் நேருவிற்கு காந்தி எழுதினார். படேல் மற்றும் தங்கள் விருப்பம் இல்லாமல் நான் பஞ்சாப் செல்லமாட்டேன். டெல்லியில் வந்து அறிவுரை சொல்லிக்கொண்டிருப்பது என்பது பொருத்தமானதல்ல. My advice has value only when I am actually working at a particular thing. வெறும் கன்சல்டண்ட் எனும் வகையில் நான் உருவாகவில்லையே என அதில் குறிப்பிட்டிருந்தார். தான் பார்க்காத அறியாத செயல்படமுடியாத ஒன்றின்மீது கருத்து சொல்வது என்பது அவர் இயல்பிற்கு மாறானது. வெற்று விவாதங்களில் அவருக்கு ஒருபோதும் நம்பிக்கையில்லை. இறங்கி காரியமாற்றினால்தான் தீர்வு என்பதில் அவர் உறுதியாக இருந்தவர். ஆகஸ்ட் 31 அன்று இரவு ரெளடி கும்பல் ஒன்று காந்தி இருந்த இடத்திற்கு வந்து கலவரம் செய்தது. ’சுக்ரவர்தி ராஸ்கல் எங்கே’ எனக்கேட்டது அக்கும்பல். தாக்க வேண்டும் எனில் என்னை தாக்குங்கள் என்றார் காந்தி. போலீசார் அவர்களை தாக்கி அப்புறப்படுத்தவேண்டாம் என்றார். விவரம் அறிந்து முதலமைச்சர் டாக்டர் பிரபுல்லா கோஷ் வந்தார். இந்துமகாசபா தலைவர்களை கைது செய்யட்டுமா என்றார். காந்தி வேண்டாம். அமைதி நிலவ அவர்களிடம் பொறுப்பை கொடுக்கப் பாருங்கள் - அவர்களிடம் ஒத்துழைப்பு வாங்கப் பாருங்கள் என்றார். இரவு 12.30க்குத்தான் அன்று காந்தி படுக்கைக்கு சென்றார். போலீசார் கண்ணீர்புகை மூலம்தான் கூட்டத்தை விடியற்காலை கலைக்க முடிந்தது. இதுதான் ஆகஸ்ட் 15 நமக்கு தருகிறதா என காந்தி கவலையுடன் வினவினார். நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்த டாக்டர் சியாமாபிரசாத் முகர்ஜி கல்கத்தாவில் அமைதிக்கான வேண்டுகோளைவிட சம்மதித்தார். காந்தியும் முகர்ஜிக்கு கடிதம் எழுதினார். காந்தியின் நம்பிக்கையில் முஸ்லீம்கள் சிலர் டிரக் வண்டியில் தங்கள் இல்லங்களுக்கு திருப்பியபோது அவர்கள் மீது கையெறிகுண்டு வீசப்பட்டு இருவர் கொல்லப்பட்டனர். செய்தி அறிந்து காந்தி விரைந்தார். கொடுமையான நிகழ்வைப் பார்த்தார். காந்தியிடம் என்ன செய்யவேண்டும் எனக் கேட்டு வந்தவர்களிடம் வேறுவழியில்லை. எரியும் நெருப்பின் மத்தியில் போய் நின்று அமைதிப்படுத்தவேண்டும். அவசியமெனில் நாம் அதில் உயிர் துறக்கவும் சித்தமாகவேண்டும் என்றார். அன்று மதியம் கொடுக்கப்பட்ட பழத்தை வேண்டாம் என மறுத்துவிட்டார். அவரின் உடல் உபாதைக்கு உள்ளானது. வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவருக்கு நீர் குளுகோஸ் கொடுத்தனர். ராஜாஜி வந்தார். குண்டர்களுக்கு எதிராக பட்டினி என்பது செல்லுபடியாகுமா எனக் கேட்டார். அவர்கள் இதயத்தை தொடுகிறதோ இல்லையோ சமுகம் அவர்களை ஏற்கவில்லை என்பதாவது நடக்குமே என்றார் காந்தி. ராஜாஜி தாங்கள் இறக்க நேரிட்டால் பெருந்தீ உருவாகும்- மோசமாகும் என்றார் (suppose you die, the conflagration would be worse) . அதை நான் பார்க்க இருக்க மாட்டேன் அல்லவா- கடமையை செய்தவனாவேன் (Atleast I won’t be a living witness of it. I shall have done my duty) என்றார் காந்தி. காந்தி உண்ணா நோன்பு இருக்கப்போகிறார் என்ற பத்திரிகை செய்தி ராஜாஜிக்கு காட்டப்பட்டது. பின்னர் பத்திரிகைகளுக்கு இரவு 11 மணியளவில் தரப்பட்டது. பாடுபட்ட சுதந்திரம் காக்கப்படவேண்டும் எனில் அனைவரும் கும்பல் தாக்குதல்- கொலை என்பதை விட்டு மறக்கவேண்டும். சட்டத்தை கும்பல் கையில் எடுக்கக் கூடாது என்பது விதியாக மாறவேண்டும் (must completely forget lynch law….The recognition of the golden rule of never taking the law into one’s own hands has no exceptions.).. என் உண்ணாநோன்பு கருவி பொய்த்ததில்லை. சிலநேரம் என் வார்த்தைகள் செய்யமுடியாததை என் பட்டினி செய்துவிடுகிறது (what my word in person cannot do, my fast may) என்கிற தன் நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார். காந்திஜி அறிவித்தபடியே செப்டம்பர் 1 1947 இரவு 8.15க்கு உண்ணாநோன்பை துவங்கினார். நிலைமைகள் சீராகும்வரை பட்டினிதான் என்றார். நேருவிற்கு தெரிவித்த கடிதத்தில் கோபம் கொள்ளவேண்டாம் - கல்கத்தாவில் நிலைமைகள் சீராகும்வரை இச்செயல் தவிர்க்கமுடியாதது என எழுதினார். Ref: Mahatma Gandhi The Last Phase Part 2 Pyarelal மகாத்மா காந்திஜியின் இறுதிநாள் (ஜனவரி 30 1948) வழக்கம்போல்தான் அன்றும் விடிந்தது. அந்த நாளில் இந்தியாவை ஏன் உலகையே குலுக்கும் சம்பவம் நடைபெறும் என எவரும் கணித்திருக்கவில்லை. விடியற்காலை 3.30க்கு வழிபாட்டிற்கு அனைவரும் எழுந்தனர். காந்தி 1947 செப்டம்பர் 9 முதல் பிர்லா வீட்டில் அவருக்கு என எளியவகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் தங்கியிருந்தார். எப்போதும்போல் அன்றைய ஜனவரி 30 நாளும் காந்திக்கு நிகழ்ச்சிகளும் சந்திப்புகளும் நிறைந்த தினமாகவே இருந்தது.. காந்தி ஆபாவை எழுப்பினார். பல்குச்சியால் வழக்கம்போல் வாயை சுத்தம் செய்துவிட்டு காலைக்கடன்களை முடித்துவிட்டு காந்திஜி வந்து அமர்கிறார். காலையின் திறப்பாகவும் மாலையின் நடை சாத்தலாகவும் அவர் பிரேயரை பார்ப்பார். சமய புனித புத்தகங்களின் மேற்கோள்கள் குறிப்பாக இந்து இஸ்லாம் மேற்கோள்கள் இருக்கும். ஆபா துயில் எழவில்லை, அவர் இல்லாமலேயே பிரார்த்தனை 3.45க்கு துவங்கியது. மனு பகவத்கீதையிலிருந்து படித்தார். முதல் மற்றும் இரண்டாம் பாடலை படித்தனர். ஆபா வராததில் காந்திஜிக்கு சங்கடம் இருந்தது. இப்படி காட்சிகளை காண விரும்பவில்லை என்றார். மனு அடுத்து என்ன பாடல் எனக் கேட்க குஜராத்தி பாடலை சொல்கிறார் காந்திஜி. மனிதா கவலையோ இல்லையோ நிற்காதே தாமதிக்காதே தனித்த போராட்டமாக இருந்தாலும் தொடர்ந்து செல் என்கிற பொருள்தரும் பாட்டாக அது இருந்தது. ForGive, O Merciful and loving God of Gods, all my sins,of hand or foot, body or speech, eye or ear, of commission or omission..I ask neither for a Kingdom nor for Heaven nor for liberation but only for an end to pain of the suffering ones என்கிற பாடலையும் அவர்கள் பாடினர். பிரேயர் முடிந்தவுடன் சற்று கதகதப்பிற்காக காந்திஜியின் கால்களை கம்பளி போட்டு போர்த்துகிறார் மனு. பிரார்த்தனை முடிந்தவுடன் மனு காந்திஜிக்கு குடிப்பதற்கு தேன் எலுமிச்சை சாறு கலந்த சுடுநீரை தந்தார். குஜராத்தியில் ஆபா பிரார்த்தனைக்கு வராததை குறிப்பிட்டு காந்திஜி சொன்னார். மனத்தூய்மைக்குரியது பிரார்த்தனை. அது குறைகிறதா என்றார். உனக்கு தைரியம் இருந்தால் என் அதிருப்தியை ஆபாவிடம் தெரிவித்துவிடு என்கிறார். அவருக்கு விருப்பமில்லை எனில் அவர் என்னை விட்டு விலகிப்போய்விடலாம் எனவும் தெரிவித்தார். ஆபா எழுந்து தன்வேலைகளை பார்க்கத் துவங்கினார். ஏனோ காந்திஜி நேரிடையாக அவரிடம் தன் மனதை தெரிவிக்கவில்லை என்பது கல்யாண சுந்தரம் பதிவு. அப்பதிவில் அந்த இறுதி நாளின் துவக்கம் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வார்தா சேவா கிராம் சென்று பிப்ரவரி 2 முதல் 10 நாட்கள் இருப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு என்னிடம் தெரிவிக்கிறார். இந்திய தேசிய காங்கிரஸ் கலைக்கப்பட்டு அது சேவைக்கான அமைப்பாக மாறவேண்டும் என்பது குறித்த அமைப்புவிதிகளை தட்டச்சு செய்திட என்னிடம் முதல்நாள் சொல்லப்பட்ட வேலையை முடித்து அதை காந்திஜியிடம் காட்டினேன். அதில் பதில்சொல்ல ஆர்வம் காட்டவில்லை என கல்யாணசுந்தரம் சொல்கிறார். இதில் மற்றவர்கள் பதிவு வேறுமாதிரி சொல்கிறது. பியாரிலாலை அழைத்து கவனமாக பரிசிலீத்து திருத்தம் ஏதேனும் தேவைபட்டால் செய்யுமாறு பணித்தார். முதல்நாள் எழுதப்பட்ட காங்கிரஸ் கலைப்பு அறிக்கைதனை காந்திஜி சரிபார்க்கிறார். அது அவரின் கடைசி விருப்பம் உயில் எனவும் ( last will and Testament) சொல்லப்படுகிறது . உண்ணாநோன்பு ஏற்படுத்திய பலவீனம் இருக்கும் நிலையில் அவர் அரைமணிநேரம் மட்டுமே நடைபயிற்சி மேற்கொண்டார். வந்தவுடன் கடிதபோக்குவரத்து கோப்புகளை பார்த்தார். முதல்நாள் கிஷோரிலால் மஷ்ருவாலாவிற்கு சேவாகிராம் விஜயம் பற்றி எழுதிய கடிதம் போஸ்ட் ஆகாமல் இருந்தது. பிப்ரவரி 2 சேவாகிராம் செல்வது பற்றியும்- மஷ்ருவாலாவை பார்க்கலாம் என்பது பற்றியும் மனு கேட்கிறார். காந்தி எதிர்காலம் பற்றி என்ன சொல்லமுடியும். மாலை பிரேயரில் முடிவானால் அறிவிக்கலாம். அது ரேடியோ செய்தியாக போகும் என்கிறார். அவருக்கு கடுமையான இருமல் இருந்தது. ஏலக்காய் பொடி தேவை. அது தீர்ந்து இருந்ததைப் பார்த்த மனு அதை தயார் செய்துவிட்டு வருகிறேன் என்றார். என்ன நடக்கும் என யார் அறிவார். தேவையெனில் இரவு பொடி செய்து கொள்ளலாம் என்றார் காந்திஜி. அலோபதி தொண்டை மாத்திரையை மனு எடுத்து வந்தபோது என்னைப்பற்றி தெரியாதா என்றார் காந்திஜி. அன்று காலை 6 மணிக்கு திருமதி ஆர். கே நேரு வந்தார் (7 மணிக்கு என்கிற பதிவும் இருக்கிறது). அவர் அன்று மதியம் அமெரிக்கப் பயணம் மேற்கொள்ளவேண்டும். ஏழையர் நாட்டை சார்ந்தவர் என்கிற வகையில் நீ எளிய சிக்கன வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும் என எழுதி கையெழுத்து இட்டார் காந்திஜி. பியாரிலாலிடம் மிகவும் மனக்கஷ்டத்துடன் காங்கிரஸ் கலைப்பு அறிக்கையை தயாரித்துள்ளதாக காந்திஜி கூறினார். பிரிஜ் கிருஷ்ணா காந்திஜிக்கு அரைமணி மசாஜ் செய்துவிடுகிறார். பியாரிலாலை அழைத்து அறிக்கையை சரி பார்த்தாகிவிட்டதா எனக் கேட்கிறார். அந்த புதிய அமைப்புவிதியின் நகலில் இந்திய தேசிய காங்கிரஸிற்கு பிரச்சாரம், நாடாளுமன்ற அரசியல் என்கிற கட்டம் முடிவிற்கு வருகிறது. தனது 700 ஆயிரம் கிராமங்களின் வழியே சமூக, பொருளாதார, மாரல் நெறிசார்ந்த விடுதலையை இந்தியா பெறவேண்டும். வகுப்புவாத அமைப்புகளிலிருந்தும் பிற அரசியல் கட்சிகளுடன் போட்டியிலிருந்தும் காங்கிரஸ் விலகி நிற்கவேண்டும். எனவே அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி தன்னைக் கலைத்துக்கொள்வது என தீர்மானிக்கிறது. லோக்சேவக் சங் என்கிற மாற்றம் கொள்கிறது. விவசாயம், கைத்தறி மூலம் சுயசார்பு பெற்ற கிராமங்களை உருவாக்க லோக்சேவக் பாடுபடும்- கல்வி படிப்பறிவின்மை, தீண்டாமை, வேலையின்மை, மதவெறுப்பு போன்றவைகளின் தீர்விற்காக நிற்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. காந்திஜி கடிதங்களுக்கான விஷயங்களை சொல்லச்சொல்ல மனு எழுதிக்கொண்டிருந்தார். பியாரிலால் சரி செய்து கொணர்ந்த புதிய அமைப்புவிதி நகலை பார்த்து மீண்டும் சரி செய்கிறார். திருத்தப்பட்ட பக்கங்கள் ஆச்சார்யா ஜிகல் கிஷோரிடம் தரப்படுகிறது. நவகாளி யாத்திரை அனுபவத்தில் மதராஸ் அரிசி பிரச்சனையை தீர்க்கமுடியும் என்கிற நம்பிக்கையை அவர் பியாரிலாலிடம் வெளிப்படுத்துகிறார். மதராஸிசில் உணவு நெருக்கடிப்பற்றி உணவு அமைச்சகம் பயந்து நடுங்குகிறது. மதராஸ் மாகாணம் போன்ற ஒன்றில் இயற்கையாகவே தென்னை, பனை, கடலை, வாழை விளைச்சல் அமோகமாக இருக்கும்போது பட்டினி என்பதற்கான அவசியம் இல்லை. மக்களுக்கு தங்களிடம் உள்ள ஆதாரங்களை எவ்வாறு கையாள்வது எனத்தெரிந்தால் போதும் என்றார். அடுத்துவரும் ஹரிஜன் இதழுக்கான விஷயங்களும் பேசப்பட்டது. மனு காந்திஜி குளிப்பதற்கு உதவுகிறார். உனக்கான கை உடல்பயிற்சியை செய்தாயா என காந்திஜி வினவுகிறார். மனு தனக்கு அப்பயிற்சியில் விருப்பமில்லை என சொன்னதால் காந்திஜி கடிந்துகொள்கிறார். பின் அவர் எடை பார்க்கப்பட்டு உண்ணாவிரதத்திற்கு பின்னர் 21/2 பவுண்டு கூடியிருப்பதாக மனு தெரிவித்தார். பைரவ் வீடு நைஹாத்தியில் இருக்கிறது. ஷீலா முதல் பெண். இன்று ஷீலாவிற்கு கைலாஷ் உடன் திருமணம் நடந்தது என்பதை பெங்காலிமொழிப் பயிற்சிக்காக அவர் எழுதிப் பார்த்தார். காலை 9.30க்கு வேகவைத்த காய்கறி, 12 அவுன்ஸ் ஆட்டுப்பால், 4 தக்காளி, 4 ஆரஞ்சு, காரட் ஜூஸ், இஞ்சி எலுமிச்சை சாறு எடுத்துக்கொண்டார். பியாரிலால் இந்துமகாசபா தலைவர் டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியுடன் நடந்த பேச்சுவார்த்தைக் குறித்து தெரிவித்தார் . முகர்ஜியிடம் இந்துமகாசபா தொண்டர் காங்கிரஸ் தலைவர்களை கொல்லவேண்டும் என பேசியதை சுட்டிக்காட்டி முகர்ஜியியால் இப்படிப்பட்டவைகளை தடுக்கமுடியாதா என காந்திஜி வினவியிருந்தார். முகர்ஜியின் பதில் திருப்தியாக இருக்கவில்லை என பியாரிலால் தெரிவித்தார். நவகாளி கொதிநிலை குறித்து பியாரிலாலுடன் காந்தி விவாதித்தார். தான் சேவாகிராம் போய்வந்தவுடன் பியாரிலால் நவகாளி செல்லவேண்டும் என காந்திஜி விழைந்தார். நவகாளி உடன் கிளம்பவேண்டுமா எனக் கேட்டதற்கு இல்லை நான் வார்தா சென்ற பின்னர் என்கிறார். அது வழக்கத்திற்கு மாறாக இருந்தது. எதையும் தள்ளிப்போடாமல் உடன் செய்ய விரும்புவர் அவர் என பியாரிலால் பதிவு செல்கிறது. பாகிஸ்தான் செல்லவேண்டும் என்கிற விருப்பத்தையும் அவர் அன்று தெரிவிக்கிறார். நவகாளி குறித்து பேசிக்கொண்டிருந்தபோது கிழக்கு பாகிஸ்தானிலிருந்து சிறுபான்மையினர் வெளிவரவேண்டியதுதான் நல்லது எனச் சொல்லப்பட்டபோது கூடாது என மறுத்தார் காந்திஜி. தனது செய் செத்துமடியை சொல்லி வாழ்வா சாவா போராட்டத்தை நின்று நடத்தவேண்டும் என்றார். பலவீனத்திலிருந்து பலத்தைப் பெற்றாகவேண்டும்- சாவுகுறித்த அச்சத்தைப் போக்கிக்கொள்ளவேண்டும் என்றார். தென்னாப்பிரிக்கா காலத்து நண்பர் ருஸ்டம் சொராப்ஜி குடும்பத்துடன் காந்திஜியை பார்க்க வந்தார். காலை 10.30க்கு காந்தி சிறிது நேரம் தூங்கச் செல்கிறார். அவரின் பாதங்களை நெய்விட்டு துடைக்கிறார்கள். எழுந்தவுடன் சுடுநீரில் தேன் கலந்து குடிக்கிறார். பின் தனியாக எவர் பிடிமான துணையின்றி ’பாத்ரூம்’ செல்கிறார். மனு பதறிப்போய் என்ன பாபுஜி என்கிறார். தனித்து செல் தனித்து செல் என்ன அற்புதம் என தாகூரின் வரிகளை காந்தி பதிலாக சொல்கிறார். பிறகு வந்திருந்த கிழக்கு பஞ்சாப் ஜாட் தலைவர்களிடம் அங்கு தலித்களின் நிலைமைப்பற்றிக் கேட்டறிகிறார். மதியம் 12.30க்கு டாக்டர் ஒருவர் மருத்துவமனை மற்றும் அநாதை இல்லம் கட்டுவதற்கு ஏற்றுக்கொண்ட ’பிளான்’ குறித்து விவாதிக்கிறார். அடுத்து தினம் வருகின்ற இஸ்லாமிய தலைவர்களின் குழுவை சந்திக்கிறார். டெல்லி முஸ்லீம் தலைவர்கள் ஹிப்ஸர் ரஹ்மான், அகமது சேட் போன்றவர்கள் சந்திக்கின்றனர். வார்தா பிப்ரவரி 2 அன்று போனால் பிப்ரவரி 14 தான் வரமுடியும் என அவர்களிடம் காந்தி சொல்கிறார். கடவுள் விட்ட வழி என்கிறார். காந்திஜி சென்று வரலாம் டெல்லியில் அமைதியிருக்கும் என்கிற நம்பிக்கையை அவர்கள் தருகின்றனர். அடுத்து அவர் சுதிர் கோஷை சந்திக்கிறார் . பிரிட்டிஷ் பத்திரிகைகள் நேரு படேல் உரசலை எழுதியிருப்பதாக சுதிர் சொல்கிறார். சுதிர் லண்டன் டைம்ஸ் பத்திரிகையில் படேலை கம்யூனலிஸ்ட் எனவும் நேருவை புகழ்வது போல் வெளியிட்ட செய்திகளை காட்டுகிறார். முதலில் படேலிடம் விவாதித்தி விட்டு பின்னர் இரவு 7 மணிக்கு நேரு மெளலானாவுடனும் விவாதிக்க இருப்பதாக காந்திஜி தெரிவிக்கிறார். மதிய சூரிய ஒளியில் நவகாளியில் பெற்ற விவசாயினுடைய மூங்கில் தொப்பியை முகத்தில் மறைத்துக்கொண்டு வயிற்றில் ’mudpack’ வைத்துக்கொண்டு படுத்துக்கொள்கிறார். கானு- ஆபா இருவரும் காலை பிடித்து விடுகின்றனர். காந்தி சேவாகிராம் பிப்ரவரி 1 அன்று செல்கிறாரா என நிருபர் ஒருவர் கேட்டார். யார் சொன்னது என காந்தி மறு கேள்வி கேட்கிறார். பத்திரிகை செய்தி என நிருபர் கூற அது எந்த காந்தி எனத் தெரியவில்லை என காந்திஜி பதில் தருகிறார். மதியம் மணி 1 அளவில் சாந்தகுமார் மொரார்ஜி எனும் தயாளர் காந்தியை பார்க்கவந்தார். மகாதேவ தேசாயின் வாழ்க்கை வரலாறு ஒன்று வெளியாகவேண்டும்- அவரது டைரிக்குறிப்புகள் எடிட் செய்யப்படவேண்டும் என்றார் காந்திஜி. அதற்கான நிதிச்சுமை பற்றி விவாதித்தபோது அச்செலவை தான் ஏற்பதாக சாந்தகுமார் மொரார்ஜி சொல்கிறார். மகாதேவ தேசாயின் நெடுநாளைய நண்பர் நரகரி பரிக் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆசிரம நண்பர் சந்திரசேகர் சுக்லா இவ்வேலைகளை செய்யலாம் என காந்திஜி சொல்கிறார். சந்திர சங்கர் சுக்லாவுடன் மஷ்ருவாலாவையும் இவ்வேலையில் சேர்த்துக்கொள்ளலாம் என சொல்லப்படுகிறது. மதியம் 1.30க்கு பிரிஜ் கிருஷ்ணா மாஸ்டர் தாராசிங் கோபமான அறிக்கையை படித்துக்காட்டுகிறார். காந்திஜி அனைத்திலிருந்தும் விலகி இமயமலை சென்று ஓய்வெடுக்கட்டும் என அதில் காட்டமாக சொல்லப்பட்டிருந்தது . பிறகு கொஞ்சம் காரட் எலுமிச்சை ஜூஸ் தரப்படுகிறது. அகதிகள் சிலர் சந்திக்கின்றனர். பிரிஜ் கிருஷ்ணாவிடம் அவர்களின் தேவைகளை கேட்டறியுமாறு சொல்கிறார். அடுத்து அலகாபாத் கலவரம் குறித்த அறிக்கை காந்திஜிக்கு படித்துக்காட்டப்படுகிறது. மதியம் 2 மணிக்கு நண்பர் ஒருவரை பார்த்துவிட்டு பிரேயருக்குள் வருவதாக ஆபாவும் மனுவும் சொல்லி செல்கின்றனர் மாலை உணவை கல்யாணசுந்தரம் தந்ததாக சொல்கிறார். வழக்கமாக காந்திஜியின் பேட்டிகள் மதியம் 2.15க்கு நடக்கும். புகழ்வாய்ந்த புகைப்படைகலைஞர் மார்கரெட் போர்க் ஒயிட் லைப் பத்திரிகைக்காக காந்திஜிடம் பேட்டி கண்டார். அப்பெண்மணி 125 வயது வாழ விருப்பம் என்பீர்களே எந்த நம்பிக்கையில் என்றார். நம்பிக்கை இப்போது இல்லை என ஆச்சரியப்படுத்தும்படி பதிலை தந்தார் காந்திஜி. உலகில் நடக்கும் கொடுமைகள் காரணமாக, இருளில் வாழ நான் விரும்பவில்லை என்றார். அடுத்து பேராசிரியர் என் ஆர் மல்கானி வந்தார். அவர் பாகிஸ்தானின் சிந்து பகுதியில் இந்துக்களின் துயரை எடுத்துரைத்தார். நான் சொல்வதைக் கேட்டிருந்தால் இவை தவிர்க்கப்பட்டிருக்கும். நான் பேசுவது இப்போது எவரிடமும் போவதில்லையே. ஆனாலும் நான் உண்மை என நினைப்பதை சொல்லியே வருகிறேன் என்றார் காந்திஜி. நான் வழக்கொழிந்தவனாக ( back number) இருக்கிறேன் என்றார். பிரேயருக்கு முன்னர் பாப் ஸ்டிம் சன் பி பி சி சார்பில் சில கேள்விகளை கொடுத்திருந்தார். வரலாற்று ஆசிரியர் ராதாகுமார் முகர்ஜி வந்து தான் எழுதிய புத்தகம் ஒன்றை தருகிறார். பைசனிடம் சொல்லி பயணத்திற்கு பேரா முகர்ஜியின் புத்தகத்தை வைக்கச்சொல்கிறார் காந்திஜி. டாக்டர் டி சில்வா சிலோன் பிரதிநிதி தனது மகளுடன் வருகிறார். தங்களின் பிப்ரவரி 4க்கான சுதந்திரம் குறித்து செய்தி ஒன்றை கேட்டார். அவரின் மகளுக்கு காந்தி ஆட்டோகிராப் போட்டார். அதுதான் அவரின் கடைசி ஆட்டோகிராப் ஆக அமைந்தது என ஸ்டீபன் பதிவு செய்கிறார். இரண்டு பஞ்சாபியர்கள் ஹரிஜன்களின் அவதி குறித்து காந்தியிடம் எடுத்து சொன்னார்கள். மதியம் 3 மணிக்கு வந்த பேராசிரியர் ஒருவர் நீங்கள் போதிப்பதைத்தான் புத்தர் போதித்துள்ளார் என்றார். 3.15க்கு பிரஞ்சு புகைப்படகலைஞர் ஆல்பம் ஒன்றை தந்தார்.. அடுத்து சீக்கியர்கள் சிலர் வந்து பிப்ரவரி 15 அன்று மாநாட்டிற்கு தலைவர் ஒருவரைத்தர வேண்டினர். ராஜேந்திர பிரசாத் அவர்களை அழைத்துக்கொள்ளுங்கள் என்கிறார் காந்திஜி. படேல் வருவார் எனச்சொல்லி மாலை 4 மணியுடன் பேட்டியை முடித்துக்கொள்கிறார். படேல் வந்தபோது பாத்ரூமில் இருந்தார் காந்திஜி. மறுநாள் சனிக்கிழமை வார்தா செல்ல பயண ஏற்பாடு செய்திட மீண்டும் என்பதை பிரிஜ் கிருஷ்ணாவிடம் நினைவூட்டுகிறார். வார்தா வருவது குறித்து தந்தி அனுப்பட்டுமா எனக்கேட்டதற்கு எதற்கு வீண் செலவு. பிரேயருக்கு பின்னர் அறிவித்தால் வானொலி செய்தியாக அது போய்விடும் என்கிறார். காந்திஜி படேலுடன் உரையாடத் துவங்கிவிட்டார். படேலோ நேருவோ அமைச்சரவையிலிருந்து விலகிகொள்ளவேண்டும் என நினைத்தேன். மெளண்ட்பேட்டன் இருவரும் அவசியமானவர்கள் என்றார். பிரச்சனை இருக்கும் என்றால் வார்தா போவதை தள்ளிக்கூட போடலாம், பிரேயரில் இது குறித்து சொல்லவிரும்புகிறேன் என படேலிடம் தெரிவித்தார். கத்தியவார் தலைவர்கள் வந்து காந்திஜியை பார்க்கவேண்டும் எனக் கோருகிறார்கள். காந்தியிடம் மனு தெரிவிக்கிறார். நான் உயிருடன் இருந்தால் பிரேயருக்கு பின்னர் பார்க்கலாம் என காந்திஜி சொல்லி அனுப்புகிறார். காந்திஜிக்கு அப்போது ஆட்டுப்பால், காய்கறி சூப், ஆரஞ்சு, காரட் ஜூஸ் எனத் தருகின்றனர். காந்திஜி தனது ராட்டையைக் கேட்கிறார். அது அவரின் கடைசி ராட்டை சுற்றலாக அமைகிறது எனவும் ஸ்டீபன் தெரிவிக்கிறார். யுஎன் தேபர், ரசிகலால் பரேக், வின்செண்ட் ஷீன் ஆகியோர் பின்னர் வந்ததால் அன்று காந்திஜியை பார்க்கமுடியாமல் ஏமாந்தனர். கோட்சே தனது பழையடெல்லி ரயில்நிலைய ஓய்வு அறை 6ல் தங்கியிருந்தார். இணை சதிகாரர்கள் ஆப்தே விஷ்ணு கர்கரே ஆகியவர்களுடன் அவர் சேர்ந்துகொண்டார். காந்திஜி பிரேயர் மேடைக்கு வரும்போது 35 அடி தூரத்திலிருந்து சுடமுடியும் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. கோட்சே சுடவேண்டும். எவரும் அதை தடுக்காவண்ணம் மற்ற இருவரும் பாதுகாக்கவேண்டும் என்பது திட்டம். மதியம் கிளம்பி மூவரும் பிர்லா மந்திர் செல்கின்றனர். மாலை 4.30க்கு புதிய காக்கி உடையை கோட்சே அணிந்துகொள்கிறார்.. காக்கி வெர்ச்ஸ் காதி போல் நிகழ்வு இருந்தது என ஸ்டீபன் இதை வெளிப்படுத்துகிறார். ஜகதிஸ் பிரசாத் என்பவரிடம் கோட்சேவும் ஆப்தேவும் பிஸ்டலை ரூ 500க்கு குவாலியரில் பெற்று டெல்லி வந்ததாக பியாரிலால் தெரிவிக்கிறார்.. பட்டேலுடன் காந்திஜி உரையாடிக்கொண்டிருந்தபோது ஆபாவும் மனுவும் திரும்பினர். அவர்கள் பிரேயருக்கு நேரமானதை மனிபென்னிடம் சுட்டிக்காட்டினர். காந்திஜி பாத்ரூமிற்கு சென்று நேரடியாக பிரேயர் மைதானத்திற்கு கிளம்பினார். சுமார் 250 எண்ணிக்கையில் மக்கள் கூடியிருந்தனர் என்பது கல்யாணசுந்தரம் தரும் தகவல். பிரேயர் நிகழும் பிர்லா மாளிகை மைதானத்தில் அன்று ஆயிரம்பேர் திரண்டு இருந்ததாக ராமமூர்த்தி அவர்களின் பதிவில் சொல்லப்பட்டுள்ளது. காந்திஜி வந்துவிட்டார் என குரல்கள் எழத்துவங்கின. இரு பெண்களின் தோள்களை துணையாகக் கொண்டு காந்தி சுறுசுறுப்பாக நடந்து வந்தார். அவருக்கு இடப்பக்கத்தில் தாம் வந்ததாக கல்யாணசுந்தரம் சொல்கிறார். ஏன் நேரமானதை சொல்லவில்லை என அப்பெண்களை காந்தி கடிந்துகொண்டே நடந்தார்.. காந்திஜியிடம் பிரேயருக்கு நேரம் கடந்து வருவதை சுட்டும் வண்ணம் தங்கள் இடுப்பில் ஆடும் கடிகாரம் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது என்றார் ஆபா. காந்திஜி அதை நான் ஏன் பார்க்கவேண்டும். இரண்டு டைம்கீப்பர்கள் ஏன் இருக்கிறீர்கள் என வினவினார். லேட் ஆகிவிட்டது. இப்படித்தான் காரியங்களை செய்கிறேன் என காந்திஜி சொன்னார்.. மிகமுக்கியமான விவாதத்தில் குறுக்கிட்டு சொல்லமுடியவில்லை என மனுகாந்தி பதில் சொன்னார். கடவுளே வந்து தடுத்தாலும் சரியான நேரத்தில் தாதி மருந்து தரவில்லையெனில் நோயாளி இறந்துவிடுவார் என்றார். ஒருநிமிடம் தாமதமாக பிரேயருக்கு வந்தாலும் சங்கடமாக உணர்கிறேன் என்றார் காந்திஜி. இது அவரது இறுதி சம்பாஷனையாக இருந்தது என ராமமூர்த்தி சொல்கிறார். காந்திஜி சில அடிகள் நடந்திருப்பார். நாதுராம் கோட்சே தனது திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ளவே முன்வருகிறார் என எவரும் அறிந்திருக்கவில்லை. காலில் குனிந்து வணங்க கோட்சே முயற்சிக்கிறார். காலதாமதமாக செல்கிறோமே என்கிற பதைபதைப்பில் ஆபா வழியை சரிசெய்ய முயன்றார். அம்மனிதன் முரட்டுத்தனமாக ஆபாவை தள்ளிவிட்டார். கையில் இருந்த எச்சிற்படிகம், ஜெபமாலை(spittoon, rosary) கீழே விழுந்தன. கையில் எடுத்துக்கொண்ட பிஸ்டலால் கோட்சே சுடுகிறார். இரண்டு குண்டுகள் காந்திஜி மார்பின் வலப்புறத்திலும் , ஒரு குண்டு வயிற்றின் வலப்புறத்திலும் பாய்ந்தன. அவருக்கு வரலாறு வித்தியாசமான ’நமஸ்காரை’ நாதுராம் கோட்சேவிடமிருந்து செய்தது என்கிறார் ராமமூர்த்தி. காந்திஜியின் கண்ணாடியும் காலணியும் கீழே விழுந்தன.. நேரு அலுவலகத்திற்கு தான் தொலைபேசியில் அழைத்து செய்தியை சொன்னதாகவும், கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு காரில் ஏறி பட்டேல் வீட்டிற்கு சென்று செய்தி சொன்னதாகவும் கல்யாணசுந்தரம் தெரிவிக்கிறார். காந்திஜி வீழ்ந்த இடத்தின் மண்ணை புனிதமாக மக்கள் எடுத்து செல்லத்துவங்கினர். அந்த இடம் பள்ளமாகிவிட்டது. ஹே ராம் என அவர் கூறி சாயவில்லை எனவும் கல்யாணசுந்தரம் தெரிவிக்கிறார். பியாரிலால் பதிவில் இரண்டாவது மூன்றாவது குண்டை தாங்கும்வரை அவர் கால்கள் வீழவில்லை. அவர் ராமா ராமா என வீழ்ந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்மோகன் காந்தியும் ’ராம் ராம்’ என்றே முனகினார் என்கிற பதிவைத்தருகிறார். மக்களுக்கு ’நமஸ்தே’ செய்ய உயர்த்தியபடி ஒரு கரமும் மற்றொன்று ஆபா தோள்மீதும் வீழ்ந்தது. சந்த்வாணி டாக்டருக்கு போன் செய்யுங்கள் என ஓடிவந்தார். காந்திஜிக்கு பின்னால் வந்துகொண்டிருந்த ஹார்டிங்கே மெடிக்கல் கல்லூரி டாக்டர் தன் மடியில் வீழும் காந்தியின் உடலை தாங்கி தலையை மெதுவாக கீழே வைத்தார். அவர் அமரும் மெத்தையில் அவரை மெதுவாக தூக்கி வந்தனர். சுடுநீரும் தேனும் கொடுக்க முயற்சித்தனர். விழுங்கவில்லை. உடனடி சாவாக அது இருந்தது. டாக்டர் பார்கவாவும் சோதித்துவிட்டு 10 நிமிடம் ஆகிவியிருக்கும் என்றார். ஆபாவும் மனுவும் அலறி அழுதனர். ராம நாமம் உச்சரித்தனர். சர்வ மதங்களின் பாடல்களை வந்த சீக்கியர், இஸ்லாமியர் மற்றவர் பாடினர். சர்தார் வந்தார். பின் நேரு வந்து தேம்பி அழுதார் படேல் அவரை சமாதானப்படுத்தினார். தேவதாஸ் அழுதுகொண்டே வந்தார். காந்தியின் கரங்களைப் பற்றிக்கொண்டு அழுதார். மெளலானா, ஜெய்ராம்தாஸ், ராஜ்குமாரி அமிரித், கிருபளானி, முன்ஷி வந்தனர். மெளண்ட்பேட்டன் மெட்ராஸிலிருந்து விமானம் மூலம் திரும்பினார். மெளண்ட்பாட்டன் நுழைந்தபோது முஸ்லீம் ஒருவன் கொன்றுவிட்டான் என எவனோ ஒருவன் சொல்லக்கேட்டு ’முட்டாள் கொன்றது இந்து’ என அனைவருக்கும் தெரியும் என சொல்லிக்கொண்டே உள்ளே வந்தார். நேரு படேல் இருவரையும் மெளண்ட்பாட்டன் அழைத்து நீங்கள் ஒன்றாக செயல்படவேண்டும் என்பது காந்திஜியின் கடைசிவிருப்பமாக இருந்தது என்றார். இருவரும் அவரின் வேண்டுகோள் ஏற்று வானொலியில் உரையாற்றினர். அவரது உடலை பதப்படுத்திவைக்கலாமா என்ற பேச்சு வந்தபோது காந்திஜி அதைவிரும்பமாட்டார் - எரியூட்டப்படுவதையே விரும்பினார் என அறிந்த மெளண்ட்பாட்டன் அவரது விருப்பத்தை மதிப்போம் என்றார். அவுரங்கசேப்-துக்ளக் சாலை சந்திப்பில் கோட்சே வைக்கப்பட்டிருந்தார். சிலர் அவரை தாக்கியிருந்ததால் இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. அவருக்கு கைவிலங்கு இடப்பட்டிருந்தது. தனக்கு காந்திஜியை கொலை செய்ததில் எந்த வருத்தமும் இல்லை, மற்றவற்றை நீதிமன்றத்தில் தெரிவிப்பேன் என பத்திரிகையாளரிடம் கோட்சே சொல்லிக்கொண்டிருந்தார். போலீசார் அவரிடம் யாரும் செல்லவேண்டாம் என தடுத்தனர். கோட்சேவிடம் Beretta automatic பிஸ்டலும் ரூ 400 பணமும் இருந்தன என போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது என்கிற பதிவை ராமச்சந்திர குஹா செய்துள்ளார். காந்திஜி கதர்துணியில் படுக்கவைக்கப்பட்டிருந்தார். எங்கும் மின்வெளிச்சம் பாய்ச்சப்பட்டிருந்தது. மகாத்மா காந்திக்கு ஜே என்கிற முழக்கமும் அழுகையும் கேட்டுக்கொண்டிருந்தது.. விடியற்காலை 2 மணிக்கு அவரின் உடலை குளிப்பாட்ட எடுத்து சென்றனர். 1919 முதலே காந்திஜியுடன் பழக்கத்தில் இருந்த பிரிஜ் கிருஷ்ணா தான் குளிப்பாட்டினார். ஜனவரி மாதம் உறைகுளிரில் விடியற்காலை 2 மணிக்கு ஒருநாளும் காந்திக்கு செய்யாத குளிர்நீரில் குளிப்பாட்டிவிடுகிறோமே எனச் சொல்லி அழுதார். இரத்தம் தோய்ந்த அவரது ஆடையை மேல் கம்பளியை தேவதாசிடம் தந்தார். அவை பொத்தல்களுடன் இருந்தன. வழக்கமான அரைஆடை உடுத்தப்பட்டது. அவரது ராமநாம ஜபமாலை, மாலைகள் அணிவிக்கப்பட்டன. திலகம் இடப்பட்டது. சாவிற்கு அஞ்சாது அவர் உறங்குவது போலவே இருந்தது. Ref: 1. The Last Phase vol 2 Pyarelal 2. The Last Hours Of Mahatma Gandhi By Stephen Murphy 3. From The Pages of Hindu Mahatma Gandhi The Last 200 days V Ramamurthy Rtd IAS 4. Gandhi The Years That Changed The World 1914-48 Ramachandra Guha 5. Mohandas A True Story of A Man, His People and an Empire Rajmohan Gandhi 6. The Last Day Of Mahatma Gandhi V Kalyanam ஆசிரியரின் பிற நூல்கள் 1. மார்க்சிய தடங்கள் 2. ரோசாலக்ஸம்பர்க் 3. போராளிகளின் குரல் 4. பகவத்கீதை பன்முகக் குரல்கள் 5. Trade Justice in Telecom 6. Selected Ides of O.P Gupta 7. ஹெகல் துவங்கி.. 8. கார்க்கியின் அரசியல்வெளி 9. நவீன சிந்தனையின் இந்தியப் பன்முகங்கள் www.pattabiwrites.in Ph 9443865366 FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com  2. www.badriseshadri.in  3. http://maattru.com  4. kaniyam.com  5. blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.