[] காதல் பிரசாரம் என். சொக்கன் முன்னேர் பதிப்பகம் [Creative Commons Licence] This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. This book was produced using PressBooks.com. Contents - முன்னுரை - 1. தாமரை - 2. கை - 3. இரட்டை இலை - 4. உதய சூரியன் - 5. முரசு - 6. மாம்பழம் - 7. பம்பரம் - 8. கதிர் அரிவாள் - 9. சுத்தியல் - 10. துடைப்பம் - நன்றி 1 கவிஞர் கந்தசாமிக்குக் கவிதை என்றால் ரொம்பப் பிரியம். ஆனால் அவருக்கு வாய்த்தது, ஒரு செய்தித் தாளில் நிருபர் உத்தியோகம். தேர்தல் நேரத்தில் ஊரெல்லாம் சுற்றித் திரிந்து பிரசாரக் கூட்டங்களில் செய்தி சேகரித்தவர், மாலையில் வீடு திரும்பும் வழியில் காதலியைச் சந்திக்கிறார். அதே ஞாபகத்தில் வெண்பாக்களைப் பொழிகிறார். எலக்‌ஷன் ரிசல்ட் வருவதற்குள், அவருடைய காதலுக்குப் பச்சைக் கொடி காட்டப்படவேண்டும் என்று நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள்! என்றும் அன்புடன், என். சொக்கன், பெங்களூரு. [pressbooks.com] 1 தாமரை தாமரைப்பூ போன்ற தளிர்முகத்தைப் பார்த்ததனால் மாமனிவன் கொஞ்சம் மரைகழன்றான், பூமகளே, புன்சிரிப்பால் நெஞ்சில் புயல்மூட்டும் பேரழகே, என்னவளே, பக்கம் இரு! 2 கை கையழகைக் கண்டே கவிஞனாய் ஆகிவிட்டேன், ஐயமென்மேல் வேண்டாமென் ஆரணங்கே, பையவந்து என்கரத்தைப் பற்றிக்கொள், எங்கெங்கோ இட்டுச்செல் சின்னவள்நீ என்வாழ்க்கைச் சீர் 3 இரட்டை இலை இரட்டை இலைபோல் எழில்புருவ வில்லால் மிரளவைக்கும் மான்விழியே, மீனே, வரம்கொடுப்பாய், உன்னோடு நூறாண்டு ஒன்றாக வாழ்ந்திடவே, பொன்னே, கருணை புரி! 4 உதய சூரியன் உதிக்கின்ற சூரியன்போல் ஒவ்வொரு நாளும் கதியென்(று) உனைநினைப்பேன் கண்ணே, கொதிக்கின்ற நெஞ்சைத் தணியவைப்பாய் நேரிழையே, வானவில்லே, அஞ்சுகமே, என்னை அணை 5 முரசு முரசுகொட்டி ஊரை முழுதும் அழைத்துக் கரம்பிடிப்பேன் உன்னைக் கனியே, சரம்சரமாய் முத்தங்கள் தந்தபடி மூழ்கியே காதலினில் முத்தெடுப்போம் இன்பத்தேன் மொண்டு 6 மாம்பழம் மாம்பழக் கன்னத்தில் மச்சானென் முத்திரையைப் பூம்பாவாய், ஏற்றுக்கொள் புன்சிரித்து, நாம்வாழும் இல்லறத்தின் அச்சாரம், இச்சென்னும் இம்முத்தம், நல்லழகீ, நாலுமுத்தம் நல்கு 7 பம்பரம் பம்பரம்போல் உன்னால் பதறிமனம் சுற்றுதடி உம்மென்(று) இருந்தால் உனக்கழகா? செம்பருத்திப் பூப்போல் சிவந்தவளே, பொல்லாத மௌனம்ஏன்? காப்பாற்று, நீயே கதி! 8 கதிர் அரிவாள் கதிர்அரிவாள் கொண்டென் களைகளை நீக்கி மதிமிகுந்தோன் ஆக்கினாய் மானே, சுதிவிலகா நல்லிசைபோல் என்றென்றும் நாம்வாழ்வோம் கண்மணியே இல்லையொரு துன்பம் இனி 9 சுத்தியல் சுத்தியல்போல் உன்னுடைய சுட்டுவிழித் தாக்குதலால் அத்திமரப் பூவே அயர்கின்றேன், சத்தியமாய் நான்பிழைக்க நீவேண்டும், நல்லவளே இங்குவந்து தேன்குரலால் என்னுயிரைத் தேற்று! 10 துடைப்பம் துடைப்பம் எடுக்காதே, தூயதுஎன் அன்பு, உடை,உடல்மேல் காமமில்லை, உண்மை! அடைமழைபோல் உள்பொங்கும் நேசத்தால் உன்முன்னே நான்வந்தேன் கள்ளமில்லாக் காதலிது காண் 1 நன்றி இந்நூலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் படங்களுக்காக, இவ்வலைப்பக்கங்கள், படைப்பாளிகளுக்கு நன்றி: 1. laobc (https://openclipart.org/detail/62707/love-shield-by-laobc) 2. Sivarajd (https://openclipart.org/detail/179379/lotus-bjp-symbol-by-sivarajd-179379) 3. Sivarajd (https://openclipart.org/detail/179380/hand-congress-symbol-by-sivarajd-179380) 4. http://www.electadmk.com/OurParty.aspx 5. http://www.dmk.in/e2014/index.htm 6. https://openclipart.org/detail/26172/african-drum-2-by-anonymous-26172 7. netalloy (https://openclipart.org/detail/131485/mango-fruit-by-netalloy) 8. http://mdmk.org.in/ 9. worker (https://openclipart.org/detail/150649/hammer-sickle-star-wreath-by-worker) 10. worker (https://openclipart.org/detail/103033/hammer-and-sickle-by-worker-103033) 11. http://www.aamaadmiparty.org/