[] [cover image] கள்ளிப்பாலுக்கு அப்பால் முனைவர்.க.மோகன் FreeTamilEbooks.com CC-BY-NC-SA கள்ளிப்பாலுக்கு அப்பால் 1. கள்ளிப்பாலுக்கு அப்பால் 1. நூல் விபரம் 2. அணிந்துரை 3. வாழ்த்துரை 4. என்னுரை 2. சிக்னல் (சமிக்ஞை ) 3. புகைப்படங்கள் 4. காக்கை 5. புத்தன் 6. தொலைக்காட்சிப் பெட்டி 7. குடம் 8. சுற்றுப்புறச் சூழல் 9. மனநோயாளிகள் 10. அம்மாவும் நானும் 11. தன்னம்பிக்கை 12. ஆயுள் காப்பீடு 13. மவுனத்தின் உச்சரிப்பு 14. அன்னை தெரசா 15. மலர் கண்காட்சி 16. நான் யார்? 17. மாய தேகம் 18. வரம் வேண்டும் 19. மாற்றம் 20. டிசம்பர் ஆறு 21. ஸ்கேன் 22. மனைவி 23. கரு 24. நான் 25. ஆகஸ்டு 15 26. தேர்தல் திருவிழா 27. புதிய கலாச்சாரம் 28. படிப்பு 29. அரசு ஊழியன் 30. கணக்கு வாத்தியார் 31. தோழிக்கு ……. 32. கள்ளிப்பாலுக்கு அப்பால்… 33. நூலகம் 34. ஆடைகளும் அம்மணங்களும் 35. மணிமேகலை 36. மலரட்டும் மனிதநேயம் கள்ளிப்பாலுக்கு அப்பால் கள்ளிப்பாலுக்கு அப்பால்   முனைவர்.க.மோகன்   தமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-NC-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/kallippalukkappaal} நூல் விபரம் தலைப்பு : கள்ளிப்பாலுக்கு அப்பால் உரிமை : க.மோகன் வெளியீடு : நிதிஷ்பிரபா பதிப்பகம், நிதிஷ்பிரபா வெளியீடு, இலக்கம் 848, முதல் தெரு, நேரு நகர், காரைக்குடி - 630006, முதற்பதிப்பு : நவம்பர் 2007 அணிந்துரை திருமிகு மா.சிதம்பரம் விரிவுரையாளார், தமிழ்த்துறை, அழகப்பா அரசு கலைக் கல்லூரி, காரைக்குடி-630 003. சமூகம் மனித நேயம் மறந்து, உணர்ச்சியற்று, மரத்துப்போய் கெட்டி தட்டிப் போன காலமெல்லாம், பொறுப்பற்றச் சமூகத்தின் மீது கல்லெறியும் கலகக்காரர்களாய் படைப்பாளர்கள் இருந்துள்ளனர். சமூக நீரோட்டத்தின் மீது அவர்கள் ஏற்படுத்திய சலனம்தான், சமூகத்தை இன்னும் உயிர்ப்புள்ளதாய் அடைகாத்து வருகின்றது. பாரதியும், பாரதியின் பாசறையில் பயின்றவர்களும், பாரதியின் பெயர்கூறி படைத்த, படித்த ஏகலைவர்களும் இவர்களுள் முன் நிற்பவர்கள். அந்நிலையில் புதுக்கவிதையின் ராஜபாட்டையில் நடை பயின்ற கவிஞர்களுள் ஒருவர் கவிஞர் க.மோகன். புதுக்கவிதை சொற்களுக்குள் கடலையும் சுருக்கிவிடும் சூத்திரம் கற்ற அகத்தியக் கமண்டலம். அக்கமண்டலத்தினை கவிஞர் நன்கு கையாண்டிருக்கிறார் என்பது இந்நூலின் மூலம் அறியலாகிறது. இவரின் கவிதைகள் தென்றலாய் சிலசமயம் தலை கோதுகின்றன. புயலாய் சிலசமயம் முரசறைகின்றன. இவர் கவிதை வரிகளின் கணம் சிலசயமம் நம் நெஞ்சில் ஏறித் தூக்கம் கெடுக்கின்றது. ‘கள்ளிப்பாலுக்கு அப்பால்’ நூலின் தலைப்பு ‘கவிதையின் கவிதை.’ சமூகத்தின் முரண்பாட்டினை முன்னிறுத்தும் அழகான கவிதையொன்றின் தலைப்பு, கவிதை நூலுக்கே தலைப்பாய் வடிவெடுத்திருக்கிறது. பென் சிருஷ்டியின் மையம். பிரபஞ்சத்தின் ரகசியம். அன்னையாய் அகிலம் காக்கவும், அக்கிரமம் அழிக்க காளியாய் அவதாரமெடுக்கவும் தெரிந்தவள். எனினும் சமூகத்தில் அவளின் நிலையான இடத்திற்கு இன்னும் போராடத்தான் வேண்டியிருக்கிறது. இதன் ரணம் சொல்கிறது இக்கவிதை. ‘கள்ளிப்பாலுக்கு அப்பால்’ கருவில் உயிர்தெழும் பெண் பெரும்பாலும் பணக்கார வீடுகளின் வேலைக்காரி ஆகின்றாள். அவர்கள் சந்தோஷங்களுக்காய் இவள் சிலுவை சுமக்கிறாள். ஏசுவின் தலையில் ஏறிய முட்கிரிடம் இவளின் உடல் முழுவதும் ஆதிக்கம் செய்கிறது. ‘இவள் நனைந்து குடை பிடிக்க அவர்களோ மழையை ரசித்தார்கள்’ என்ற கவிஞரின் வரிகள் சமூக அவலத்தின் வெளிப்பாடு எனலாம். சகமனிதர்களைப் பார்த்து புன்னகைப்பது கூட மறந்து போன அவசர வாழ்க்கையில், தன்னைக் கடந்து போகும் நிஜங்களின் நிகழ்வுகளிலும் கவிஞர் கவனம் செலுத்தியிருப்பது கவிதையில் தெரிகின்றது. சிக்னலில் கையேந்தும் பிச்சைக்காரிக்குச் சில்லரை தருவதைவிடுத்து, அவள் மேனி மேல் ஆசை கொள்ளும் அற்ப மனிதர்களை அடையாளம் காட்டும் இவரின் கவிதையில், பிச்சைக்காரியின் கையிலிருக்கும் சில்லரை, சில அற்ப மனிதர்களின் செயல்களில் இடம் மாறி இருப்பது சிந்தையில் உரைக்கிறது. வேர்களின் விலாசம் கேட்காமல் நீர் ஊற்றிப் போகும் மேகத்தைப் போல, அன்பிற்கு ஏங்கிய இந்திய அனாதைகளின் அடையாளம் கேட்காமல் அன்னையாகிப் போனவள் தெரசா. அன்பினை மறந்து போன மனித மனச் சகாராக்களில் நீர் ஊற்றிப் போனவர். இவளின் தரிசனம் இவரின் கவிதைகளில், ‘அந்நிய தேசத்து அமுதசுரபி-இருந்தும் இந்திய தேசத்து இன்னொரு காந்தி’ என்பதில் விரிகிறது. இயற்கை - கவிஞனின் அட்சய பாத்திரம் - கவிதைகளின் பிரசவ மேடை. வாழ்க்கைப் பாதையில் ஓடிக்களைத்த மனக்குதிரை ஓய்வெடுக்கும் பாலைவனச்சோலை, ஆனால் மனித மனத்தின் ஆசைகள் இயற்கையினை, அடுத்தத் தலைமுறைக்கு அடையாளம் தெரியாமல் அழித்துவிடும் போலிருக்கிறது. அருங்காட்சியகப் பொருளாய் இயற்கை மாறிப் போனாலும் ஆச்சரியமில்லை, வாழ்கின்ற நீரிலே கொதித்தழியும் மீனைப் போல மனிதன் தன் ஆசைகளிலே அழிந்து கொண்டிருக்கின்றான். இயற்கையின் அழிவு, மனித இன அழிவின் முதல் அறிகுறி என்பதை அறியாதவனாய் அலைந்து கொண்டிருக்கிறான். மனிதன் மறந்து போன, இம்மர்மத்தினை, ‘காட்டை அழித்து இவனுக்கு சவப்பெட்டி செய்து கொண்டிருக்கிறான்.’ என்ற கவிதை வரிகள் அடையாளப் படுத்துகின்றன. இப்படி இவரின் கவிதைகளில் உரக்கச் சொல்ல வேண்டியவை அதிகம். உரத்த சிந்தனை உள்ளவை அதிகம். கவிதைக் கடலில் மூச்சடக்கி முத்தெடுக்கும் வித்தையில் இவர் வெற்றி பெற்றுள்ளார் எனலாம். நான் கவிஞனைப் பற்றி கூறியதைவிட, கவிதையைப் பற்றியே அதிகம் அறிமுகம் செய்திருக்கிறேன். ஏனெனில் படைப்பாளன் படைப்புகளுக்குள்ளே உயிர் வாழ்கின்றான். கவிஞரின் முயற்சிகள் தொடரட்டும். வாழ்த்துக்கள். என்றென்றும் அன்புடன் மா. சிதம்பரம் வாழ்த்துரை திருமிகு க.சிவசாமி, M.A.,B.L., மேலாளர், மனிதவள மேம்பாடு, பாரத மிகுமின் நிறுவனம், சென்னை -600 035. தொ.பே.எண்.044-24330253, செல் 9444118722 கவிஞர் திரு.க.மோகன் அவர்களின் கள்ளிப்பாலுக்கு அப்பால் எனும் கவிதைத் தொகுப்பு படிப்பவர்கள் எல்லோருடைய நெஞ்சத்தையும் நெகிழச் செய்யும் ஓர் உன்னதமான அரிய படைப்பு. சமீப காலமாக வெளிவந்த கவிதை நூல்களுள் சமூகச் சிந்தனையுடன் தாக்குதல்கள், நெருடல்கள் ஏற்படுத்தும் சிறந்த கவிதை நூலாக இக்கவிதைத் தொகுப்பைக் காண்கிறேன். ‘மங்கையராய்ப் பிறப்பதற்கே நல் மாதவம் செய்திட வேண்டுமம்மா’ எனப் பாரதி பாடியதை அறிவோம். நம் உயிர் மூச்சான கிராமங்களில் காலம் காலமாய்க் கடைப்பிடித்துவரும் மூட நம்பிக்கைகள், மனதிற்கொவ்வா பழக்க வழக்கங்கள் போன்றவை உலகம் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ள இந்த காலகட்டத்தில்கூட இன்னும் நம்மை விட்டகழ்ந்தபாடில்லையே! அதனால் தான் இன்னும் பெண் பிஞ்சுகளுக்குக் கள்ளிப்பாலைக் கொடுத்து உயிர்வதை செய்யும் அவலம் தொடர்கிறது. கவிஞர் தமது ‘சமிக்ஞை’ என்ற கவிதையில், ‘அழுக்கு அழகை இரசித்தவர்கள் ஏராளம், அள்ளிக் கொடுக்கத்தான் யாருக்குமில்லை மனம் தாராளம்’ என்று ஆதங்கப்படுகிறார். இத்தகைய நிலை அன்றாட நிகழ்வுகளாய் சாலைகளில் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. பிச்சைக்காரிகளைக்கூட விட்டு வைக்காத எச்சில்காரர்களை எத்தனைச் சுட்டெரிக்கும் வார்த்தைகள் வீசினாலும் திருந்தாத தேசம். ‘அம்மாவும் நானும்’ என்ற கவிதையில், ஒரு அபலைப் பெண் தன் தாைைய நினைந்து, தன்னை அடகு வைத்து எனக்குத் தாவணி வாங்கியவளை எப்படி மறப்பேன் என்கிறாள். கயமைக்கு ஏழ்மை பலியாவதை வாழ்க்கையின் நிதர்சனமாகக் காட்டுகிறார். ‘புதிய கலாச்சாரம்’ என்ற கவிதையில், நுகர்வோர் கலாச்சாரம், மந்தைக் கலாச்சாரம், சந்தைக் கலாச்சாரம் எனக் கூறும் கவிஞர், சீர்மிகுப் பெண்ணினம் சீர்செனத்தி என்ற பெயரால் சீரழிவதைக் காட்டுகிறார். கல்விக்கூட ஆசிரியரின் பார்வையில் மாணவிகள் மனைவிகளாவதையும், படித்த பெண்கள் ஊதித்தள்ளி விடுவார்கள் படிப்பை அடுப்பறையில் என்பதையும் எடுத்துக் காட்டியிருப்பது கவிஞருக்குள்ள சமூக அக்கறையை உணர முடிகிறது. இன்றைய பெண்கள் படும் இன்னல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் அளவே இல்லை. அவர்கள் இன்னும் அடிமைச் சிறையிலிருந்து விடுபடவில்லை என்பதை நாசூக்காக எடுத்துக் காட்டுகிறார் கவிஞர், மனநோயாளி பற்றி ஒரு கவிதை, மனித விலங்குகளாய் இவர்கள், இவர்களின் துயரம் துடைக்கத் தீ எழுதிய தீர்ப்பில் இவர்களுக்கு விடுதலை என்ற போது கண்கள் பனிக்கின்றன. இதயம் சுட்டெரிக்கப்படுகிறது. ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்று பாரதி கூறுவதைப் போல கவிஞர், உலகின் முதல் வாடகைத் தாய், என் கூடு என்ன குயில்களின் பிரசவ அறையா? என்று கூறி காக்கைக்கு வக்காலத்து வாங்குகிறார். பிரசவம் தாய்மைக்கு ஓர் அங்கிகாரம். குழலையும் யாரையும் இனிது என்பவர்கள் தம்முடைய குழந்தைகளின் மழலைச் சொல் கேளாதவர் என்பர். அறிவியல் தொழில்நுட்பத்தை உலகிற்குச் சொன்ன உயிரினங்களில் காக்கையையும் கவிஞர் இடம்பெறச் செய்துவிட்டார். வளர்ந்து வரும் கவிஞர்களில் க.மோகன் ஒரு புதிய சகாப்பதம் என்றால் மிகையில்லை . இதுபோன்ற சமூக விழிப்புணர்வு ஊட்டும் கவிதைகளைப் படைக்க நம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். க.சிவசாமி என்னுரை சாதாரண வாசகனாய் இருந்த என்னை இலக்கிய உலகுக்குள் தள்ளிய பெருமையில் காரைக்குடி தன் தோள் தட்டிக் கொள்ளும். நான் கட்டாந்தரை பூமி யென்று புலம்பியவர்களுக்கு மத்தியில் எனக்குள்ளும் இலக்கிய ஊற்றுண்டு என்று உணர்ந்தவர்களுக்கு என் முதல் மரியாதை. தாறுமாறாகக் கிடந்த என் சிந்தனைகள் கவிதைகளாய் மாறியதற்கு என் காதல்களும் காரணமாகும். நடந்த போதும், ஓடியபோதும் என்னைக் கடந்த நிகழ்வுகள் கூடுவிட்டு கூடு பாய்ந்து கவிதையாய் உயிர் பெற்றது எனக்குள்ளே. யார் எவ் வகை யில் பாராட்டினாலும் அச்சமும் வெட்க மும் என்னுள் படர்வதை உணர்கிறேன். நீ யாமாய் ஏற் படக் கூடிய மகிழ்ச்சிகூட வீழ்த்தப்பட்டுவிடுகிறது. இலைகள் உதிரும் அதற்கா இந்த பூமி அதிரும். விழுவது என்பது வேறு; வீழ்வது என்பது வேறு. நான் விழும் போதெல்லாம் இந்த பூமியிலிருந்து எதையாவது எடுத்துக் கொண்டுதான் வருகிறேன். மீண்டும் விழுகிறேன்… அன்புடன் க.மோகன் சிக்னல் (சமிக்ஞை ) மானத்தை மடிக்குள்ளும் மகளை கைப்பிடிக்குள்ளும் வைத்தே பழக்கப்பட்டவள் …! சிவப்பு சிக்னலில்தான் இவளுக்கு சில்லைரையே கிடைக்கும்! முந்திச் சென்று இவள் நீட்டுவது கையைத்தான் ஆனால் …. முந்தி விலக்கிப் பார்க்கச் சொல்லும் இவள் மெய்யைத்தான்…..! இந்த அழுக்கு அழகை ரசித்தவர்கள் ஏராளம்… அள்ளிக் கொடுக்கத்தான் யாருக்குமில்லை மனம் தாராளம் …. ! தூரமாய் இருந்தாலும் கிட்ட அழைக்கவே காசை நீட்டினார்கள்…! இந்த சிவப்பு சிக்னல்காரிக்கு மஞ்சள் தராமல் யாரோ பச்சை சிக்னல் தந்ததால் சில்லரையாய் ஒருநாள் சிதறிப்போனாள் …. ! புகைப்படங்கள் நிழலோடு கொஞ்சம் பேசிப்பார்த்தேன் அது கவிதை சொன்னது மனதை கவர்ந்து சென்றது ….! என்னை ஆச்சரியக்குறியாய் நிறுத்தி வைத்தது புகைப்படங்கள் அந்தியும் அழகுதான் மந்தியும் அழகுதான் புகைப்படத்தில் கருப்பு வெள்ளையாய் தாத்தாவும் பாட்டியும் எங்கள் முற்றத்தில் இன்னும் இளமையோடு….! நேற்றைய உலகத்தை பார்க்க வைத்த அறிவியல் கண்ணாடி….! இருட்டில் கழுவப்படும் வெளிச்சங்கள் புகைப்படங்கள் ….! காக்கை உலகின் முதல் வாடகைத் தாய்….! என் கூடு என்ன குயில்களின் பிரசவ அறையா? என் கூட்டில் குயில்களின் கருப்பை தானம்….! என் கூட்டைக் கண்டுபிடித்த முதல் குயில் கொலம்பஸ் யார்? என் கூட்டில் பிறந்ததால்தான் குயில்கள் கருப்பாய் போனதாம் அவைகளின் குரல் மட்டும் என்ன இரவல் மொழியா? நான் மட்டுமே மனிதர்களால் உபசரிக்கப்படும் வனப்பறவை …. ! பறவைகளில் நான் மட்டுமே விரும்பிக் குளிப்பேன் சில மனிதர்களைப் போல …. ! அழையாதார் வாசல் வருவதுமில்லை அழைத்தவர் வாசல் வரத் தவறுவதுமில்லை …. ! நான் பகுத்துண்ணும் பறவை பறித்துண்ணும் பிறவியல்ல …..! எந்த மனிதனையாவது பிடித்து நான் காரியம் சாதித்ததுண்டா ? உறவில் ஒன்று உயிர் துறந்தாலும் பிரிவின் துயரில் கரைந்தழுவோம்… யார் சொன்னது எங்களுக்கு ஐந்தறிவென்று? புத்தன் இவனின் எல்லா பக்கங்களையும் திறந்தவர்கள் முதல் பக்கத்தை மட்டும் மூடியே வைத்துவிட்டார்கள் ….! முதல் பக்கத்தின் கடைசி வரி துரோகம் ….! கட்டிய மனைவியை விட்டுப் பிரிந்த முதல் துரோகக் கணவன் …. ! இந்த மழலைச் சொல் கேளாதவனின் போதனை ராகம் சோகமே …. ! ஆசை உள்ளவரை அனுபவித்துவிட்டு ஆசையை அடக்க எனக்கு போதித்தவன் …. ! போதி மரம் ஞானம் தருவதற்கு முன் இவனுக்கு துரோகம் செய்ய போதித்தவன் யார்? தொலைக்காட்சிப் பெட்டி விழிக்கும் செவிக்கும் விருந்து கொடுக்கும்! விடியும் வரைக்கும் மயக்கம் இருக்கும்! மனிதர்களை ……….. இருட்டில் வைத்து அது வேடிக்கைக் காட்டும் விடியல் காட்ட கிழக்கையும் காட்டும் விடியாதிருக்கக் கதவையும் பூட்டும் …. ! விளம்பர முட்டையிடும் மலட்டுப் பறவை அது வீட்டுக்குள்ளே வந்து முறிக்கும் குடும்ப உறவை …. ! அது பொதி சுமக்கும் பிருதிவிராஜன் குதிரை ……. ! அது மூலிகைப் பெட்டி உள்ளே தொழுநோயாளிகள் …. ! குடம் ஏய் குழாயே சீக்கிரம் தண்ணீர் விடு பக்கத்து வீட்டு வம்புக்காரி வந்துவிட போகிறாள்…! மூச்சுக் காற்றில் மவுனம் சம்மதம்…! கொஞ்ச நேரம் என் கதை கேளு சொல்லப் போனா யாருமில்ல - இங்க பெரியாளு…! குடம் குடமாய்க் கொட்டப்போறேன் குடத்தோட சங்கதிய குடும்பத்தோடு நீ யிருந்தா தெரிஞ்சிருப்ப என் கதைய. பொன்னாலும் மண்ணாலும் இருந்திருக்கேன் இருந்தாலும் பெண்ணோடு சேர்ந்தே வாழ்ந்திருக்கேன். நான் மந்திரக்காரி உடைத்தவர்களினால் பொன்னாகவும் மண்ணாகவும் மாறுவேன் …! தானியத்தை என்னுள்ளே சேர்த்து வைத்தார்கள் தாழி செய்து மனிதனோடு புதைத்து வைத்தார்கள். ஜனனத்திலும் மரணத்திலும் நானே…! குடம் உடைந்தே ஜனனம் குடம் உடைத்தே மரணம் சீர்வரிசையில் முதல் வரிசை குட வரிசை தலைகட்டுக் காரருக்கு கும்ப மரியாதை…! சுற்றுப்புறச் சூழல் காற்றைக் காணோம் கொஞ்சம் சுவாசித்துவர வெளியே சென்றிருக்கிறது…! வாங்கும் பொருளில் இனி காற்றும் ஒன்று கடற்கரையில் மட்டுமல்ல…! மலர்களுக்கு கொஞ்சம் மருத்துவம் செய்யுங்கள் காற்றுப்பட்டே கருகிவிடப்போகிறது…! காட்டை அழித்து இவனுக்கு சவப்பெட்டி செய்துகொண்டிருக்கிறான்…! உரமிட்டான் பயிர் வளர்ந்தது இவன் கருகிவிட்டான்…! பருவம் தவறி மழை பூப்பெய்தும் மகரந்தம் மலடாகும் சூல்களுக்குள் …! கண்ணீரில் கரைந்து போகாத சப்தங்கள் ஒலிக்கும் ஒலியால் செவிக்கும் வலிக்கும்…! மூச்சுப் பயிற்சி நகரப் பேருந்துக்குள்…! மனநோயாளிகள் இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த திசை ஏர்வாடி…! தாய்மையால் கூட தள்ளி வைக்கப்பட்ட தூய்மைகள் அழுக்குகளாய்…! இறைவன் எழுதிய கவிதையின் அச்சுப் பிழைகள்…! கல்லெறியப்படும் வீதியின் மரங்கள்…! கை விலங்கு கால் விலங்கு பூட்டப்பட்ட இவர்கள் மனித விலங்கு…! இவர்கள் தேசத்தில் யாருமில்லை பைத்தியங்கள்…! உலகின் கையில் இவர்கள் உடைந்த கண்ணாடிகள்…! ஏர்வாடியில் யாரோ உயிர்களை களவாடியதால் இந்தியாவின் இதயங்கள் வாடியது…! மொத்தமாய் எழுதிய தீயின் தீர்ப்பில் இருபத்தெட்டு உயிர்களுக்கு மட்டும் விடுதலை …! அம்மாவும் நானும் எப்போதாவது வரும் அப்பா …. எப்போதும் வரும் மாமா …. பாவம் அம்மா! தன்னை அடகு வைத்து எனக்கு தாவணி வாங்கியவளை எப்படி மறப்பேன்…! இன்றுதான் அம்மா குளிர்ச்சியாய் அந்நிய வியர்வையை விலக்கி வைத்து…! வயிற்றுக்காக வாழ்க்கையை விற்றவளாம் யாருக்குத் தெரியும் எங்கள் பசி…! ஊருக்குள் இவளொரு இனிப்புப் பொட்டலம் இன்று எறும்புகளின் கையில்…! நேற்றுவரை ஈக்களாய் மனிதர்கள்…! நாவின் உமிழ்நீராய் விழுங்கியவர்கள் இன்று உமிழ்ந்து போகிறார்கள்…! ரொம்ப துாரத்தில் வேலை சொல்லிய சித்தப்பா….. நாமயிருக்கிற நிலையில இதுவேறயா …. சின்ன அத்தை வாலாட்டியபடி மாமா…! தொட்ட கையைக் கூட துடைக்காமல் தாத்தா…! கூட்டம் கலைந்தது துக்கத்தை மட்டும் துணையாக வைத்துவிட்டு…! யாரது … ? ஓ பழைய மாமாவா இப்போது. . . அம்மாவின் சேலைக்குள் நான்…! தன்னம்பிக்கை எப்போதோ தொலைந்து போனவளை இடுப்புக் குழந்தையோடு பார்த்த போது நெஞ்சம் கனத்துப்போனது…! பார்வைகள் மோதி பழைய காயங்களுக்கு மருந்து போட்டன…! பணத்துக்குள் அவள் பணயம் வைக்கப்பட்ட போது. இதயத்தைக் கழற்றி வைத்திருக்க வேண்டும் …! கல்யாணத்திற்காகக் காதலைக் கப்பம் கட்டிவிட்டாள்…! அவள் மட்டும் மணவறையில் நான் மட்டும் என்ன பிணவறையிலா? சீதை எறிந்த வில்லால் இராமனுக்குக் காயம் …! எங்கிருந்தாலும் வாழ்ந்து காட்டுவேன் …! ஆயுள் காப்பீடு எல்.ஐ.சி இது ஒரு அரசு தொட்டில் இங்கே சேமிப்பைப் போடுங்கள் உங்கள் தள்ளாத வயதிலும் தாலாட்டுப் பாடும் கூடுதல் போனஸாக …! இங்கே விதையுங்கள் விழுதுகளாய்த் தாங்கும்…! பூ கொடுங்கள் இங்கே மாலை கட்டித்தருவார்கள்…! எல்.ஐ.சி இந்தியாவின் இயக்கம் இல்லை …… முதுகெலும்பு…! வரவும் செலவும் வாழ்க்கையின் கணிதம் வரவில்லாமல் செலவுகளிருப்பின் வாழ்க்கையே கடினம்…! மவுனத்தின் உச்சரிப்பு வார்த்தைகளைச் சிறை செய்த மவுனத்தின் இதழ்களின் துடிப்பு உனக்குத் தெரியாதா? உன் செவிகளுக்குக் கேட்காத ஒலிகளை ஒளித்து வைத்த பெட்டகமாய் என் மனது…! பேசி சிரித்து பிரிவைச் சகிக்காமல் என் உணர்வுகள் கண்ணீ ராய்…! காலணி அணிந்த பாதங்களுக்குப் புல்லின் மென்மை தெரியவா போகிறது? உன் காலணி அணியாத நேரங்களில் பாதங்களை வருடும் காற்றிடம் கேள் என் மனத்தின் வெற்றிடத்தை…! எனது தூங்காத நாட்களைக் கிழித்தெறிந்த உன் நினைவுகளைச் சுமந்த போது கண்ணீரும் கனமானது…! உன் மூச்சுக் காற்றில் கரைந்து போகும் என் கற்பூர மனது…! உடல்கள் உல்லாச விடுதி…. உணர்வுகள் உரசிக் கொள்ளமுடியாது…! என் வீட்டுச் சிறைக்கு முன் சிரித்துச் செல்லும் நீ …… என்னைச் சிதைக்கும் நீ என் சிதைக்கும் வா…! அன்னை தெரசா அன்னை தெரசாவே எங்கள் அன்பின் ரோசாவே…! அமைதி சமாதியானது இந்தியாவில் மட்டுமே…! ஏழையின் மருந்து இறந்து போனது…! ஒரு பூ மரம் பூமிக்கடியில்…! அந்நிய தேசத்து அமுதசுரபி இருந்தும்….. இந்திய தேசத்து இன்னொரு காந்தி…! இருபதாம் நூற்றாண்டின் இதயமுள்ள தாய்…. நீ வாழ்வது எங்கள் இதயங்களில் வரலாறாய்…! மலர் கண்காட்சி பூக்களுக்கு இன்று பூப்புனித நீராட்டு விழா..! பூப்பெய்திய வண்டுகளும் மூப்பெய்திய வண்டுகளும் புடவை பார்க்க வந்த நாள்..! வண்ண வண்ணமாய் பூக்களின் மாநாடு வண்டுகள் வந்துபோகும் பூ நாடு…! மெல்லமாய் பூ இதழ் விரிக்கும் அதில் செல்லமாய் வண்டு செய்தி படிக்கும்..! நான் யார்? போதிமரத்தை விறகாக்கிய புத்தன்..! சிலுவையை ஆட்டுக்குட்டியின் மேல் சுமத்திய யேசு..! சுதந்திரத்தாயைக் கொன்ற மஹாத்மா..! தினம் திருட்டு வேள்வியில் தீக்குளிக்கும் சீதை..! மனிதனாய் மாறுவேடம் போட்ட விலங்கு ..! நடித்துப் பேசி நயமாய் வாழும் நாகரிக வேசி..! மாய தேகம் அறியாத சிறுபிள்ளை நானின்று இங்குத் தெரியாமல் செய்கின்ற பிழையொன்று உண்டு கரியாகி மறைகின்ற உடலையே பூசித்துச் சரியாக வாழாத பாவி எனைச் சுட்டெரிக்கும் எரியாக வந்தெனைச் சேரும் தீயே அணைவாய்..! உளுத்துப் போகும் உடலையே நினைத்து நினைத்து அழுத்துப் போகும் சுகத்தை அனுபவித்து - சடுதியில் வெளுத்துப் போகும் சாயும் உடலை ஒதுக்கி இழுத்து மூடிய மனக் கதவின் - இடிக்கின் வழி நுழைந்த துன்பம் தீர்வாய்..! வெந்த புண்ணில் வேல்வீசி வழிமறித்துக் கொன்ற அந்தப்புர நாயகியின் காமக் கண்ணால் சொந்தமண் துறந்த துறவி துடிக்கும் நிலை வந்த பின்னே வந்த துன்பம் துடைத்தெறிய நின் கருணை வேண்டுகின்றேன்..! வரம் வேண்டும் தையல்கள் பார்க்கும் போது மட்டும் என் கிழிசல்கள் மறைய வேண்டும்..! மாற்றம் பைசா நகரில் சில்லறைத் தட்டுப்பாடு…! டிசம்பர் ஆறு தமிழன்னையே உன் ‘கோவை’ இதழில் மட்டும் இரத்தம் வடிவதேன்..! ஸ்கேன் இதுவரையில் இல்லாத புதுமுறையில் . . . . கருவறைகள் படப்பிடிப்பு அது முடிந்து சுமை தூக்கும் கல்லறைகள்..! மனைவி பூவின் மடலுக்குள் பொத்தி வைப்பவள் தாயின் மடியினையே தத்து எடுப்பவள்..! கரு ஆயிரம் அணுக்களின் போராட்டித்தில் வெற்றிப் பெற்ற ஓர் அணுவின் ஆரம்பப் பள்ளி..! நான் அகந்தையின் தாய் குறுகத் தறித்த குண்டு நாண் பூட்டாத மனைவி! ஆகஸ்டு 15 அடிமைகளின் நினைவு நாள்! தாயின் மணிக்கொடி துணிக் கொடியாய் போனதே! கொடித்துணி இழைகளால் நெய்யப்பட்டதல்ல உயிர்களால் நெய்யப்பட்டது.! மதத்தாயின் மார்பைக் கடித்துக் கொண்டிருக்கிறது சாதிக் குழந்தையின் விஷப்பல்! சட்ட இருட்டறைக்குள் ஆசிரமத்துப் பள்ளியறைகள்! தேர்தல் திருவிழா நாளெல்லாம் போர்க்காலம் உண்மைக்கெங்கே ஊர்கோலம் ஊர்கோல நாடகத்தில் பொய்மையின் வேசம் பொய்மையின் வேசத்தில் பழுதடைந்த தேசம் தேசத்தின் சுவரெல்லாம் தேர்தலின் அலங்காரம் அலங்கார அணிவகுப்பில் அடிமைகளின் நடமாட்டம் நடமாடும் மக்களுக்கு அரசியல் அரங்கேற்றம் அரங்கேற்ற விழாவுக்கு அடிதடிகளே அர்ச்சனைகள் அர்ச்சனையின் பிரசாதம் சாதிகளின் வாக்குகளே! புதிய கலாச்சாரம் ஒரு மலர் கிடைத்தது திறந்து பார்த்தேன் ஈரமிருந்தது அதற்குள்ளும் இதயமிருந்தது! பூத்தபோது விலையில்லாமல் நுகரப்பட்டேன் அவன் நகர்ந்த போது காதல் என்றான் ஓ….. இது நுகர்வோர் கலாச்சாரம்! வரதட்சணை நாரில் கட்டப்படாத உதிரிப்பூக்களில் நானும் ஒன்று! பஞ்சணைக்கு ஆசைப்பட்டுச் சிலர் பாதங்களில் குனிந்தேன் இன்னும் நான் …. நிமிரவேயில்லை இது… சந்தைக் கலாச்சாரம்! எத்தனை நாளைக்குத்தான் கதவுக்குப் பின்னால் கரைந்து போகும் என் கற்பூர மனது! என் பிறந்த வீட்டை இருட்டில் வைத்துவிட்டு யார்வீட்டுக்கோ விளக்கேற்ற நானா? இவன் முத்துக்குளிக்க நான் மூச்சுத்திணறவா? இது. …… மந்தைக் கலாச்சாரம்! இரண்டாவது அலைவரிசையாய் என் தங்கை …. இப்போத யார் வீட்டுக்கு வந்தாலும் இவள் வெளியேற்றப்படுகிறாள்! நீ மீட்ட நினைக்கிற வீணைக்கு நரம்பு என் உடலிலிருந்தா எடுக்கப்பட வேண்டும்? சுயம்வரம் தேடி நானே புறப்பட்டுவிட்டேன் இது. … புதிய கலாச்சாரம்! திரும்பிப் பார்த்தேன் என்னைக் கடந்து என் காதலி ! படிப்பு படித்த பெண்கள் ஊதித் தள்ளிவிடுவார்கள் படிப்பை அடுப்பறையில் ! அரசு ஊழியன் சென்ற ஞாயிறு தேசியத் தலைவர் இறந்துவிட்டார் இன்னும் துக்கமாயிருக்கிறது ஒரு விடுமுறை வீணாகிவிட்டதே என்று ! கணக்கு வாத்தியார் கணக்கு வாத்தியார்… கடன் வாங்கிக் கழித்தார் கணக்கை அல்ல … வாழ்க்கையை! தோழிக்கு ……. தோழி … உன் மடியெனக்குத் தூலி என்றும் நீ வாழி ! நட்பு நதியில் நீந்தி இரு கரையாய் பிரிந்தோம் இனி …. ஒற்றை வயிற்றில் பிறந்து ஓருயிராய் வருவோம் ! கண்ணீரும் கதை சொல்லும் நாம் கதைத்திருந்த நாட்களையே உன் நினைவு மறந்திருந்தால் நான் அணிந்திருப்பேன் முட்களையே ! ஓடி விளையாண்ட கதை சொல்லவா இல்லை நீ ஊட்டி விட வாய்திறந்து நான் உண்ட கதை சொல்லவா ! தோழி. …. என்னை முத்தமிட்டு ஏங்க வைப்பாய தோளில் என்னை சாய விட்டு தூங்க வைப்பாயே ! காலில் எனக்கு முள்ளுபட கலங்கி நிற்பாயே காலம் நம்மைப் பிரித்தெடுக்க நீ கவலை கொள்வாயோ? உறவை நினைத்து பிரிவை மறந்தோம் பிரிவின் வரவை வரைந்தவர் யாரோ? கள்ளிப்பாலுக்கு அப்பால்… பழையன கழிதல் அவர்களுக்கு அது …. புதியனவாய் புகும் இவளுக்கு ! அவர்கள் சோறு போட்டதைவிட சூடு போட்டதே அதிகம்! அவர்கள் குழந்தை பாடம் படிக்க இவள் பள்ளிக்கூடம் போவாள் புத்தகப் பைத்தூக்கி! இவள் நனைந்து குடை பிடிக்க அவர்களோ மழையை ரசித்தார்கள்! ஆயிரம் கனவுகளோடு ….. இவள் ஐநூறுக்கு விற்கப்பட்டாள்! கருவறை தாண்டி கள்ளிப்பாலுக்கு அப்பால் இன்னும் இன்னும் எத்தனை எத்தனை… நூலகம் புத்தகங்களின் சிறைச்சாலை கைதிகளாய் புத்தகங்கள்! இங்கு ஜாமினில் விடப்படும்! பார்வையாளர்களுக்கும் அனுமதியுண்டு! கைதிகளுக்கு எண்களும் உண்டு கண்களும் உண்டு! சீருடையில் சில ……. உள்(ள) ஆடைகள் உருவப்பட்டும் சில…….. புதிய கைதிகளுக்கே அதிக பார்வையாளர்கள்! புதியன புகுதலும் பழையன கழிதலும் உண்டு! இங்கு …. அமைதி வழிவிட களவு அரங்கேறும்! களவுக்கும் கற்புக்கும் காகித பரிமாற்றம்! பொழுது போகாவிடில் வாருங்கள்……. இங்கு உங்கள் பழுது நீக்கப்படும்! ஆடைகளும் அம்மணங்களும் ஆடைகள் தயாரிக்கும் அம்மணங்கள்! மேலாடை கிழிசலோடு உள்ளாடைகள் தயாரிப்பு! பிஞ்சில் நூலெடுக்க வேண்டியவர்கள் பஞ்சில் நூலெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ! மணிமேகலை காவி உடுத்திய காவியம்! போதிமரத்தடி வேதம் ஓதிய மெல்லிய தேகம்! பூத்தலை நிறுத்திப் பூப்பாடும் மதுரையில் சீத்தலைச் சாத்தனுக்கு நீ…. பாண்டியன் பரிசு! கண்களுக்கு நீ தீட்டியதோ அஞ்சனம் உன் தாயின் தாயோ பூஞ்சனம்! துக்கச் செய்தி உன்னை துரத்திய போது விம்மி விழியழுது புலம்பிப் புரண்டாயே வெம்பி விழியழகை வருத்தி அழுதாயே! சொல்லி அழ சோகம் கிடந்தாயே கல்லில் அடிபட்ட கனியாய் இருந்தாயே! மனமின்றி வனம் வந்தாய் வலம் வந்து முகம் தந்தாய் உதயனுக்கு! கொடியிவளை விரட்டிய கொடியவன்! புலியென வந்த இளவலை நினைத்துப் பார்க்கவில்லை அவன் தழுவலை! கயலென இருந்தவையும் புயலென மாறுமோ? முறத்தால் துரத்திய வழியாள் - நீ முகத்தால் துரத்த ஓடினான் வலியால்! மலர் பறிக்க வந்த உன்னிடம் மனம் பறிக்க நினைத்தானோ ! சவத்துடன் வாழ சகிக்காத நீ தவத்துடன் வாழ சமைத்ததோ பணி! மலரட்டும் மனிதநேயம் காசு கேட்கும் கல்விக் கூடங்களில் மலரட்டும் மனிதநேயம்…! வரதட்சணை கேட்கும் மாப்பிள்ளையின் உள்ளத்திலே மலரட்டும் மனிதநேயம்…! மாணவியை மனைவியாகப் பார்க்கும் ஆசிரியர் மனதிலே மலரட்டும் மனிதநேயம்…! குழந்தையின் உழைப்பை கூலியாக்கும் பெற்றவர் மனதிலே மலரட்டும் மனிதநேயம்…!