[] கலியுகம்     M விக்னேஷ்                                 நூல் :  கலியுகம் ஆசிரியர் : M விக்னேஷ் மின்னஞ்சல் : vykkyvrisa@gmail.com   உரிமை :Creative Commons Attribution-Non-commercial-No Derivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   நூல் குறிப்பு   “கலியுகம் " கஷ்டங்களிலும் கவலைகளிலும் எதார்த்தமாக பயன்படுத்தும் சொல். ஒரு மனிதன் அனுபவிக்கும் தனிப்பட்ட நல்லது, கெட்டதை விதி என்கிறோம் .அதுபோல் ,ஒரு சமூகத்தில் வாழும் மக்களுக்கு நடக்கும் நல்லது கெட்டதுகளை யுகம் என்கிறோம். இக்கதையில் ,நாம் தினம் வாழும் கிரகத்தின் கலியுக நிகழ்வுகளை ,குற்றங்களை மனித மனப்பான்மை முதலியவற்றை கற்பனையோடு வரிசைப்படுத்துகிறேன் . மேலும் எதிர்காலத்தில் இதே குற்றங்கள் அதிகரித்து உலகம் அழியும் .அந்நொடி எவ்வாறிருக்கும் என்ற கற்பனையை நான் அறிந்த தமிழ் வழி கவிதையாய் வடித்துள்ளேன் . கலியுகம் உங்களின் அன்றாட வாழ்க்கையை ஒருநொடியாவது கடத்தும் என நம்புகிறேன் ...!!!   (குறிப்பு: இக்கவிதையில் வரும் நிகழ்வுகள் யாவும் கற்பனையே மேலும் இணையத்தின் வாயிலால் எடுத்த குறிப்புகளை வைத்து கற்பனையால் திரித்து எழுதப்பட்டது)   References:   1) https://prsamy.wordpress.com/2009/09/22/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5/   2) https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D     3) https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D     4) https://www.youtube.com/watch?v=su2Wn9H8Xlc   5) https://www.youtube.com/watch?v=JeU_-Hc_AwQ     முன்னுரை     கண்ணபிரான் கண்மூட ,காசுபடைத்தவன் கடவுளாக, அதர்மத்தாய் வலி இல்லாமல் பெற்றெடுக்கிறது கலியுக பிள்ளை. நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் வளரும் குற்றங்கள், தீமைகளின் தவத்தின் பலனோ என என்னும் களியாட்டங்கள்.கடவுளும் கல்லானான்,காப்பவன் அவனோ மௌனமானான் .பிறப்பால் மனிதராகிறோம் ;இச்சையின் பிணைப்பால் மிருகமாகிறோம் .படைத்த உலகை மெல்ல அழித்து பலலட்ச வருடம் கடக்கிறோம்;சாதி ,மத ,சமயம் வழி தொடர்ந்து சங்கடங்களில் மூழ்கி திளைக்கிறோம்.கலியுகம் முடிந்தது ; உலகமும் அழிந்தது. கலங்கிய நெஞ்சோடு ,கடைசி மனிதனை கடந்து செல்கிறது கல்கி அவதாரம்.   "தர்மம் என்பது கேலிப்பொருளானால் ,சுயநல மனிதர்கள் என்பதே காட்சிப்பொருளாகும்...! " என்ற ஒற்றைவரியின் கற்பனை தொகுப்புகளே,   " கலியுகம் "                                                                                       துவாபரயுகம்   முடிவு         [Image] துயிலுண்ட துவாரகா மனம் கவர்ந்த மாயோனே , நிற அங்கம் நீல தூயவனே. அறம் காக்க ரதம் தாங்கினாய், நல்லறம் காக்க போர்முனையில் கீதை போதினாய். உன் மதி கொண்டு உருவானதோ பாரதம், மதிகெடும் போதெல்லாம் மனம் தேற்றும் மஹாபாரதம். போர்வென்று நீ சென்றாய் துவாரகா, அனைத்தும் இழந்து நீ நின்ற இடமும் துவாரகா, காந்தாரி சாபம் மனமார ஏற்கிறாய், மலர் பாதம் புண்பட இவ்வுலகை நீட்கிறாய். கடவுளும் மனிதனாய் பிறந்தால் மரணம் உண்டு, நான் மட்டும் என்ன விதிவிலக்கா என்கிறாய் விட்டுச்சென்று. துயிலாட செல்கிறாய் துவாரகை மைந்தனே , உன் துயிலில் தொடங்குகிறது ஒரு யுகமே கலியுகமே ...!             கலியுகம்   ஆரம்பம்   [Image] பிரிவினை அண்டம் படைத்து, அழகு பார்த்து , சிறு சிறு பிண்டங்கள் பிறப்பில் அழகு சேர்த்து, வான்வெளி படைத்து, வீசிய இவ்வுலகம் , படைத்தவனையே தூற்றி விசும்பும் பொல்லா உலகம் ! மனம் படைத்து ,பெயர் வைத்தேன் மனித இனம், தலைவன் ,தொண்டன் இனப்பாகுபாடில் வளர்கிறது பிரிவினை குணம் . அதிகார போதை தலைவனை ஆட்கொள்கிறது , தொண்டனையே ,அடிமையாக்கி அழகுபார்க்கிறது நான் ,என்ற மமதை தலைவனை ஆட்டுவிக்கிறது அதிகாரம் தக்கவைக்க சாதி மதம் அவதரிக்கிறது நூற்றாண்டுகள் கடந்து காண்கிறோம்; திசைக்கு ஒரு கட்சிகள் மனித பிரிவினை என்பதே அவர்களின் மறைமுக கொள்கைகள் அனைத்தும் செய்து விட்டு கூறுகிறோம் ;எல்லாம் கடவுளின் ஆட்டம் ! யவர் அறிவாரோ ? இவை நம்மை இயக்கி ஆடும் கலியுக ஆட்டம் ...!   [Image] ஏற்றத்தாழ்வுகள் மனம் போல் ,வாழ்க்கை வாழ்வதே இன்பம் மதிப்பில்லா காகிதம் படைத்து, அடைகிறோம் துன்பம் ஒழித்து கட்டுகிறோம், பண்டமாற்று முறைகள் ஒளித்து வைத்து சேர்க்கிறோம் ;பணமெனும் வெற்றுக்காகிதங்கள் மனம் போன போக்கில் பணம் தேடி, பணம் வழி பொருள் நாடி, ஈட்டிய பொருள் கொண்டு ,உலகை ஆள்கிறோம் ; பொருள் வழி ,மெல்ல மெல்ல ஏற்றத் தாழ்வுகள் வளர்க்கிறோம் ; பேராசை பட்டை தீட்டி உருமாற்றுகிறோம் ;உயிர் கொல்லும் ஆயுதம் பணம் என்னும் கைப்பிடி ,இணைத்து வலு சேர்க்கிறோம் வறுமை எனும் கூர்முனை, பதம் பார்க்கிறது வழியும் குருதியில் மட்டுமே , சமத்துவம் ஒளிர்கிறது கலியுகம் கால்தடம் ,ஆழ பதிகிறது நாளைய மனித சுழற்சிக்கு புதிய அடித்தளமும் விதிக்கிறது ...!!   [Image] பொறாமை வாழ்க்கை வரைபடத்தின் நையாண்டி சித்திரம் , பொறாமை இல்லா மனிதர்கள் காண்பது சரித்திரம் ஏற்றத்தாழ்வின் வழி , இரு துருவங்களாய் பிரிகிறோம் பொறாமை கல் பட்டு , தூள் தூளாய் சிதறுகிறோம் இருப்பவனுக்கோ தீரா ஆசை , இல்லாதவனுக்கோ ,இயலாமையின் ஓசை இருப்பதை கொண்டு வாழ நினைக்கும் நொடி , இருப்பதையும் பிடுங்கிக்கொள்கிறது அதன் பெயர் விதி ! மித மிஞ்சி வாழ்பவனின் வாழ்க்கை , ஏனோ இல்லாதவன் அதை அடைவதில் பெரும் வேட்கை முயற்சிகள் கொட்டி முன்னேறுகிறான் முடிவிலா பகையை முடிவில் பெறுகிறான் ஏற்றங்கள் பொறுக்கா எதார்த்த உலகிது எதிர்ப்புகளை சுமப்பவன் தினம் செத்து வாழும் களமிது ...!!!   [Image] சுயநலம் தன்னிலை கருதா ,பார் நிலம் சுமக்கிறது ,பொதுநலமில்லா சுயநலம் மனித சுழற்சியில் ,மட்டற்ற மாற்றங்கள் மனித மனங்களில், வேரூன்றும் சுயநல மாற்றங்கள் பசித்தவன் சோற்றை பதுக்கிவைத்து , தன் பரம்பரையையே அதில் உண்ண வைத்து , பகிர்ந்து வாழும் நற்பண்பை மறக்கிறோம் பகிர்தல் அறியா ,புது தலைமுறையை வளர்க்கிறோம் கண்முன் நடக்கும் குற்றங்கள் கண்டும் காணாமல் கடப்பதன் பெயரே எதார்த்தங்கள் உதிரனுக்கே உதவா , உதிரங்கள் காண்கிறோம் ஊருக்கா நீ உதவுவாய்?? என எண்ணி நகைக்கிறோம் சுயநல வாழ்க்கையில் காண்போம் சுகம் நூறு இடுகாடு உணர்த்தும் உனை தூக்கிச்செல்லும் எண்கள் வேறு ...!!!   [Image] செல்வம் சிறுக சிறுக சேர்த்துவைத்து , பிறர் கண்படா பூட்டிவைத்து , பிறருக்கு உதவா ,பொருள் சேர்க்கிறோம் தானும் அனுபவிக்காமல் ,மேலும் பொருள் ஈட்டுகிறோம் தன் தேவைக்காக சேமிக்கும் , காலம் போனது தான் தேவை என , பிறர் நினைக்க வேண்டியே சேமிப்பானது ஆடம்பர வாழ்க்கை காண ,லஞ்சம் வழிநாடுகிறோம் ஆஸ்திகள் அதிகரிக்க ,அயல்நாட்டு முதலீடு மேற்கொள்கிறோம் சொந்தங்கள் ,எடைபோடும் சொத்துப்பத்திரங்கள் புது நண்பர்களை உருவாக்கும் ,எதிர்கால திட்டங்கள் காதலும் கைகூட ,பாஸ்புக் பிரிண்டெட் பக்கங்கள் மனிதனின் நிகழ்கால நிலை தீர்மானிக்கும்,பணமெனும் கலர் காகிதங்கள் இல்லாதவனுக்கு ,இருப்பவன் உதவுவதே இவ்வுலக மாண்படா, இதையென்று தான் உணர்வாயோ கலியுக மானிடா???...!!!   [Image] அதிகாரம் மக்களை அடிமையாக்கி , மக்களுள் ஒருவனை மஹாத்மாவாக்கி , ஓட்டுப்போட்டு ,அதிகாரம் தருகிறோம் சொந்த செலவில் நமக்கு நாமே வேட்டும் வைத்துக்கொள்கிறோம் அதிகாரம் பிம்பமாய் வெள்ளை வேட்டி சட்டை சில நேரங்களில் உரித்தெடுக்கும் மக்களின் உரிமை சட்டை அதிகாரம் படைத்தவன் அரசனாகிறான் , அதிகாரம் கொடுத்தவன் ,அடிமையாகிறான் பொம்மலாட்ட பொம்மையாய் ,பணம்படைத்தவன் ஆட்ட நூல் அருந்த காத்தாடியாய் ,உயர பறக்கும் விலைவாசிகள் சாமானியனை அடிமையாக்கி குடிமகன் என்ற போர்வையில் ஆண்டியும் ஆக்கி, மக்களை திணித்து ஆளும் அதிகாரம் கலியுகம் நடத்திக்காட்டும் சர்வாதிகாரம் ...!!!   [Image] பொய்மை எலும்பில்லா நாக்கு -ஏமாற்றி மகிழ்வதே அதன் பொழுதுபோக்கு கலியுகம் கண்ட சந்தர்ப்பவாதி தான் வாழ, பிறரை வாட்டும் சுயநலவாதி உண்மையுரைப்பவன் ,ஒரு நாள் ஊமையாகிறான் பொய்யுரைப்பவன் ,பாரெங்கிலும் போற்றப்படுகிறான் பொய் சொன்ன வாய்க்கு ,போஜனம் கிட்டா காலம்போனது பொய்சொல்லி ,பொழப்பு ஓட்டும் காலம் இன்றானது அரிச்சந்திரன் உண்மை அரிச்சுவடி ஆனது அவனை பின்பற்றுபவன் பெயரோ, பிழைக்கத்தெரியாதவன் என்றானது பொய் சொன்னால் ,கண்ணை குத்தும் சாமிகள் ஒருபக்கம் உண்மை சொன்னால் ,பிழைப்பில் குத்தும் ஆசாமிகள் மறுபக்கம் நாவிலே நஞ்சுண்ட நயவஞ்சக உலகிது பொய்மையே மெய்யாய் எண்ணி வாழும் மூடர்கூடமிது ...!!!!   [Image] சட்டவரையறை அனைவருக்கும் சமமென ,வகுத்த அம்பேத்கார் சட்டம் சாமானியனுக்கு மட்டும், சட்டத்தால் ஏனோ பெரும் நட்டம் அளவிலா குற்றங்களுக்கு, நாடுகிறோம் நீதிமன்றங்கள் ஆயுள் முழுதும் கரைந்தும் ,தீராத வாய்தாக்கள் சாட்சிகளே, இங்கு பிரதானம் மனுதாரரோ ,கற்றுக்கொள்கிறார் நிதானம் ஆண்டி முன் அசையாத சட்டம் ஆடி கார் வைத்தவன் முன் வளைகிறது தீர்க்க முடியா கோடி வழக்குகள் வழக்கு முடியும் முன் ,வாழ்க்கை முடிக்கும் குற்றவாளிகள் நகரத்தில் தொடுத்த வழக்குக்கு நரகத்து தண்டனைகள் வாசிக்கும் தீர்ப்பில் முற்றுப்பெறுகிறது தீர்ப்பும், மனுதாரர் ஆயுளும் . - கலியுக சட்டவரையறை ...!!!   [Image] தனிமனித ஒழுக்கம் அதர்மங்கள் அரவணைக்க , அநியாய அக்கிரமங்கள் அவதரிக்க , தனிமனித ஒழுக்கம் ,கேள்விக்குறியானது சுய ஒழுக்கமோ, விடுகதை ஆகுது முழுவேக வளர்ச்சியில் நாகரீக உலகம் அதீத வளர்ச்சில் மனித நாகரீகம் திருமண பந்தம் கசந்தது -திருமணமாகாமலே , ஒன்றாய் வாழும் எண்ணம் மலர்ந்தது கவர்ச்சியின் பிடியில் சிறுசுகள், குடிபோதையின் மயக்கத்தில் இளசுகள் , பெண் சுதந்திரம் பேசும் ,கவர்ச்சி ஆடைகள் சமூக மாற்றம் என ,பின்பற்றும் மேற்கத்திய கலாச்சாரங்கள் தட்டுத்தடுமாறி தொலைக்கிறோம், கலாச்சாரங்கள் பட்டுப்புரிந்து கொள்கிறோம் தனிமனித ஒழுக்கங்கள் ...!!!   [Image] கலியுக இறை தரிசனம் கல்லில் கடவுள் வடித்து , கடவுளைக்காண டோக்கன் அடித்து , கோயில்களிலும் வருமானம் ஈட்டுகிறோம் கடவுளையும் காட்சிப்பொருளாக்குகிறோம் விபூதி அளவை அளவிடும் ,அர்ச்சனைத்தட்டுச் சில்லறைகள் உடுத்தும் துணி மதிப்பில் கிடைக்கும் கூடுதல் பிரசாதங்கள் பாவங்களின் தண்டனையை தள்ளிப்போடும் பரிகாரங்கள் பண்ணப்போகும் பாவங்களுக்கு பிராயச்சித்தமாகும் யாகங்கள் பலன்கள் எதிர்பார்த்து மேற்கொள்கிறோம் தான தர்மம் ஒருவேளை சமையல் மிச்சம் என்று நாடுகிறோம் அன்னதானக் கூடம் தீர்த்தங்கள் மேலே பட கலந்துகொள்கிறோம் கும்பாபிஷேகங்கள் வேலையின் அவசர கதியில் கடவுளுக்கே தருகிறோம் ப்ளையிங் கிஸ்கள் கலியுகத்தில் கடவுள் நேரில் வராது என்று எண்ணி அனைத்தும் செய்கிறோம் தெய்வம் நின்று தான் கொல்லும் என்பதை அனுபவித்து உணர்கிறோம். -இறை தரிசனம் ....!!!   [Image] இடம்பெயர்வு குற்றத்திற்காக, நாடுகடத்தியது அன்று வாழ்வாதாரம் காக்க, நம்மை நாமே நாடுகடத்துகிறோம் இன்று படித்த படிப்பு ,மதிப்பில்லாமல் போக அடிமையாய் இடம்மாறுகிறோம் அயல்நாட்டில் வாழ காதலித்தவளை கரம் பிடிக்க, வாங்குகிறோம் விசா கடல் தாண்டி பயணித்து, சந்தித்து மீள்கிறோம் மிசா படாத கஷ்டங்கள் பட்டு பணம் மீட்டுகிறோம் படும் கஷ்டங்கள் வெளிச்சொல்லாது பணம் நீட்டுகிறோம் ஊர் வாய் அடைக்க ,கனவுகள் துறந்து பறக்கிறோம் மெல்லவும் துப்பவும் முடியாமல், வெளிநாட்டில் வேலை என மார்தட்டுகிறோம் புறப்படுகிறோம் ஆறுமாத இடைவேளைக்கு பின்,விடுமுறைக்கு பணக்கார அகதியாய் ,ஒருமுறை வந்து செல்கிறோம் தாய்நாட்டிற்கு தங்கச்சங்கிலியும், வங்கி கணக்குமே வெளிநாட்டின் மிச்சம் அனைத்தும் இருந்தும் ,தந்தை பாசம் அறியா மகன் /மகள்களே உள்நாட்டில் மிஞ்சும் ...!!!   [Image] வரிவசூல் பசித்த வயிற்றுக்கும் வரிபோட்டு service tax என பெயர்போட்டு இருப்பதை எல்லாம் பிடுங்கிக்கொள்கிறோம் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் பெற்றது என மெச்சிக்கொள்கிறோம் சம்பாரிப்பதோ மாதச்சம்பளம் ஏனோ கொண்டு செல்கிறோம் பாதிச்சம்பளம் சிந்தனையில் புரட்டுகிறேன் ,கட்டபொம்மன் புத்தகம் பொங்கி எழுந்து உருமாறுகிறேன் வரிகொள்ளை கொல்லும் ஆயுதம் பொங்கிய சூடு தணிந்தது காரணம், கட்டபொம்மன் புத்தகமே GST வரியில் தான் வாங்கியது அத்தியாவசிய பொருட்கள் யாவற்றிர்க்கும் வரிபோட்டோம் இல்லாதவனிடம் பிடுங்கியே வல்லரசுக்கு அடித்தளம் போட்டோம் அடுத்தவன் வயிற்று பிழைப்பில் அடித்துப்பிடுங்கும் மாந்தர்களே , ஆறடி நிலம் தான் நம் சொந்தம் என்று, நீங்கள் உணர்வீர்களே??   [Image] TRP அவசர வாழ்க்கைக்கு ஆறுதல் சொல்லும் தொலைக்காட்சி வரும் காலங்களில் அவை ஆயின தொல்லைக்காட்சி இடைவிடாத விளம்பரங்கள் இடைவெளியே இல்லா ,நெடுந்தொடர்கள் அணையாமல் புகையும் TRP யுத்தம் ஓயாமல் ஒழிக்கும் breaking news சத்தம் பார்வையாளர்களைக் கவரும் கவர்ச்சி contestant கள் பார்ப்பவர்களை பரபரப்பாக்கும் செயற்கைச் சண்டைகள் எதிர்பார்ப்புகளை எகிற செய்யும் promo கள் episode களின் அளவை குறைக்கும் ad கள் நொடி விளம்பரங்களுக்கு புரளும் கோடிகள் சிந்தும் கண்ணீரையும் காசாய் மாற்றும் கேடிகள் கருணையும் கரன்சியாய் மாற்றும் களமிது கலியுகம் ரசித்து ஆடும் காலமிது ...!!!   [Image] சினிமா அரசியல் முகம் முழுக்க அரிதாரம் மக்களை மகிழ்விக்க மேடையில் பல அவதாரம் காலம் கடந்தது; காசு பார்க்கும் தொழிலாய் சினிமா ஒளிர்ந்தது மேடைகள் தொலைந்தன; சினிமா திரை யரங்குகளாய் பல இடங்கள் நிறைந்தன பலகோடி செலவில் திரைப்படங்கள் பக்கம் பக்கமாய் காது வலிக்கும் வசனங்கள் சிலப்படங்களிலேயே பகட்டான வாழ்க்கை படும் கஷ்டம் புரியாமல், நாம் பொறாமை கொள்ளும் சினிமாக்காரன் வாழ்க்கை கதைக்காக உணர்ச்சி பொங்க பேசும் சமுதாய பஞ்ச்கள் படம் ஓடியதும் ஆயத்தமாகும் கதாநாயகனின் புது கட்சிகள் அளவிட முடியா பெயர், பணம், புகழ் ஆடி அடங்கும் வயதில் உதயமாகும் சமூக அக்கறைகள் படித்தவனை நம்பி போடா ஓட்டுகள் திரையில் நடித்தவர்களை நம்பி போடும் ஓட்டுகள் -எதிர்கால வேட்டுகள் ....!!!   [Image] சினிமா பொழுதுபோக்கு மண்தரையில் படுத்து படம் பார்த்த ஞாபகம் தொடுதிரையில் புதுப்படம் பார்க்கும் இன்றைய சமூகம் படம் பார்ப்பவர்களை பதறவைக்கும் popcorn கட்டணம் படம்பார்த்த டிக்கெட் மிச்சத்தை பிடுங்கும் பார்க்கிங் கட்டணம் பேய்களே அலுத்துப்போய் பேட்டிதரும் பேய்ப்படங்கள் ஆடிக்கொன்று அமாவாசைக்கு ஒன்றாய் வெளிவரும் நல்லபடங்கள் கூட்டமில்லா தியேட்டர்களில் நடக்கும் சில்மிஷங்கள் வந்தபடம் வேறு ,பார்த்த படம் வேறு என்று புன்முறுவல்கள் கல்லா கட்ட முன்னணி நடிகையின் கவர்ச்சி ஆட்டம் நல்லகதை நாடும் சினிமா ரசிகனுக்கோ திண்டாட்டம் வாரம் வெளிவரும் பத்து படங்கள் ,வெளியான மாலையே கொண்டாடுகிறார்கள் success மீட்கள் தேடிப்பார்க்கிறோம் கருத்துள்ள கதைகள் விமர்சனங்கள் தவிர்த்து விரும்பிச் செல்கிறோம் காலை ராசியில் போட்ட விரயம் சரிதான் என்பதை புரிந்துகொள்கிறோம் ...!!!   [Image] கலியுக காதல் கண் கொண்டு, நாணம் கொண்டு வளர்த்த காதல் அன்று DATING சென்று, வெளிஅழகின் கவர்ச்சியில் வளரும் காதல் இன்று பக்குவம் இல்லா வயதில் வரும் INFATUATION கள் விவரம் இல்லாமல் எண்ணிக்கொள்கிறோம் இதுதான் ஆத்மார்த்தமான காதல்கள் காதலை மையப்படுத்தி எடுக்கும் திரைப்படங்கள் காதலின் ஆழத்தை உணர்ந்ததாக எண்ணும் இக்காலத் தலைமுறைகள் ஆதாம் ஏவாள் ஆப்பிளில் பிரிந்த காதல் கண்டோம் அதீத அன்பின் பிழையில் பிரியும் காதலைக் காண்கிறோம் கல்லூரிக்குப்பின் கைகூடாமல் போகும் காதல்கள் அடுத்தவன் காதலியையும் மனமார ஏற்றுக்கொள்ளும் தியாகிகள் ஆடம்பர வாழ்க்கை கண்டு இணைகிறோம் திருமண பந்தம் அன்பில்லா வாழ்க்கை கண்டு தேடுகிறோம் புதுச்சொந்தம் இருபது வயதிற்குள் அனைத்தும் அனுபவிக்கும் எண்ணமிது கலிகாலம் முற்றி மரமாகும் பொன்னான நேரமிது ...!!!   [Image] மும்முனை தாக்குதல் மூச்சடைக்கும் விலைவாசி ஒருபக்கம் மூச்சு திணறும் விவசாய நிலம் கையடக்கம் மறுபக்கம் மூச்சையே நிறுத்தும் அதிகாரம் இன்னொருபக்கம் மும்முனை தாக்குதல்கள் எதிர்கொள்கிறோம் வெடிக்கும் துப்பாக்கிசூட்டிற்கு இரையாகுகிறோம் விவசாய விளைச்சல் பார்த்த கண்களோ விரைவுவழி சாலை காணப்போகிறது தேனும் தினையும் வழிந்த மலைகளில் இன்று மீத்தேனும் zinc கனிமங்கள் அள்ளும் கம்பெனிகளால் வழிகிறது ஓட்டியவயிற்றுக்கு ஒருவேளை தான் உணவு அதையும் பிடுங்கும் GST செலவு அதிகாரம் ஆட்டுவிக்க ,சாமானியன் கைகள் சிறைப்படுகிறது அதிகார வர்க்கத்தின் அறமறியா ஆட்டமிது கலியுகம் ஆட்டுவிக்கும் ஆட்டமிது …!!!   [Image] செய்தித்தாள் தினசரி நிகழ்வுகள் அடங்கிய தொகுப்புகள் பக்கத்துக்கு பக்கம் கொலைக் குற்றங்கள் சாதிக்கமுடியா சாதனைகளுக்கு சின்னதொரு சதுர பெட்டியில் சாதாரண விளம்பரங்களுக்கு முதல் பக்க பெட்டியில் முக்கிய செய்திகள் இல்லா நாட்களில் ,வெளிவரும் இலவச இணைப்புகள் அதிக பிரதிகள் விற்று தீர, பரிசுப்போட்டிகள் சமூக அக்கறையோடு ஆரம்பித்த செய்தித்தாள்கள் விரல்விட்டு சொல்ல அதிகாரம் தாளாது அடங்கிப்போகுது அவை மெல்ல மெல்ல உண்மையை எழுதிய பேனாக்கள் உடைக்கப்படுகிறது உரிமையை அச்சிடும் பக்கங்கள் கசக்கப்படுகிறது சமூக நடைமுறைக்கு செவிசாய்த்து சினிமா கிசு கிசுகளே பிரதானமாய்த்து எப்பொருளும் மெய்ப்பொருளென நம்பும் உலகமிது அப்பொருள்தான் மெய்ப்பொருளென நம்ப செய்யும் கலிகாலமிது ...!!!   [Image] கலியுக கடவுள் விடாமல் வாட்டிவதைக்கும் கலியுகம் -மனிதர்களின் தவறுகளை வேடிக்கை பார்ப்பதே கடவுளின் குணம் தூணிலும் துரும்பிலும் இருப்பவன் துன்பங்களில் ஒளிந்து கொண்டு நம்மை கண்காணிப்பவன் அதர்மங்களை கண்டு பொங்காத அசாத்திய பொறுமைசாலி அக்கிரமங்களின் ஆணிவேரை கருவறுக்கும் தைரியசாலி கெடுப்பவனை எல்லாம் விட்டு விட்டு கொடுப்பவனை சோதிப்பான் ஆடுபவனை எல்லாம் ஆட விட்டு ஒருநாள் ஆட்டியும் வைப்பான் கொடுக்க மனமில்லாதவரிடம் குறைவில்லா செல்வம் நீட்டினாய் அளவிலா செல்வம் கொண்டே அழிவுக்கு வழி காட்டினாய் உன்னை குளிர்விக்கும் என செய்கிறோம் அபிஷேகங்கள் நீ கேட்பதோ நல்லறம் வழி தான தர்மங்கள் விதிக்கு கட்டுப்பட்டு வினைகளை வேடிக்கை பார்க்கும் கருப்பொருளே விதி முடியும் கடைசி காட்சியில் காட்டுகிறாய் யாம் தான் பரம்பொருளே ...!!!   [Image] ஆசாமிகள் அரசமரத்தடி ஆசாமிகள் காலம் போனது ஆஷ்ரமங்கள் கிளை அமைக்கும் ஆசாமிகள் காலமானது மனம் மயக்கும் சொற்பொழிவுகள் பணம் பிடுங்கும் பகல் கொள்ளைகள் வாழும் காலத்திலேயே மோட்சம் தருகிறார்கள் அத்தனைக்கும் ஆசைப்படவும் சொல்லித்தருகிறார்கள் எதையுமே துறக்கா துறவும் கொள்கிறோம் இயற்கையை அழித்து இறைவழிபாடு கொள்கிறோம் Income tax கட்டாமலே வருமானமும் ஈட்டுகிறோம் எல்லாம் மாயை என சொல்லியே பலகோடிகள் சம்பாரிக்கிறோம் கடலென ஓடிய கங்கையை குட்டி கமலண்டங்களில் அடைத்து பாட்டில் 500 க்கு காசி தீர்த்தமும் விற்று பிரச்சனைகள் தீர தேடுகிறோம் யார் யாரையோ கடவுள் என்று தான் நாமும் உணர்வோமோ ?கடவு(உ )ள் ....!!!   [Image] கலியுக கல்வி கொள்ளை தரிசு நிலங்களில் கட்டடங்கள் கட்டி கல்வி சோலை என பெயர் சூட்டி மாணவர் சேர்க்கை மேற்கொள்கிறோம் நவீன வழி கொள்ளை அரங்கேற்றுகிறோம் மூன்றாம் வகுப்பு முடியும் முன் முழுதாய் கரையும் மூன்று லட்சம் பள்ளி படிப்பு முடிக்கும் முன் மொத்தமாய் கரையும் முப்பது லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் என செலவிடுகிறோம் வருமானம் ஈட்டும் ஒரு தொழிலாய் கல்வியை உருமாற்றுகிறோம் ஆங்கில மொழி கற்றலுக்கு additional charge தமிழ் மொழியில் பேசியதற்கோ fine charge ரத்தம் உறிஞ்சும் அட்டையாய் மாறி போகும் நிர்வாகம் பெற்றோர்களுக்கு கோவணம் கூட மிஞ்சாமல் பிடிங்கிக்கொள்ளும் பரிதாபம் கல்வியை காசாய் மாற்றும் கலிகாலமே நல்ல கல்வியில்லா தலைமுறையை நீயும் சந்திப்பாய் எதிர்காலமே …!!!   [Image] கலிகால கல்லூரிகள் கலர் கலர் பட்டாம்பூச்சியை சிறகு விரிக்கும் வயது குடும்பச்சுமை தெரியாமல் கழிக்கிறோம் தினம் ஒருபொழுது காதலி சொல்லே வேதவாக்கு Arrears வைத்து படிப்பதே வழக்கமாயிற்று ஆடி பாடியே முடிக்கிறோம் நான்கு வருட பட்டம் படிப்பு முடித்து ஏற்கிறோம் VIP பட்டம் ஊர் வாய் மூட தேடுகிறோம் பத்தாயிரம் சம்பளம் நன்றாக படித்தவனும் வாங்குகிறான் அதே சம்பளம் காதலித்த காதலிக்கோ முடிகிறது நிச்சயதார்த்தம் காதலை மறந்து ஏற்கிறாள் புதுவாழ்க்கை கேட்டால் இதுவே எதார்த்தம் அனைத்தும் இழந்து பூண்டுகிறோம் ஆண்டிக்கோலம் சொந்த வீட்டிலேயே மரியாதை இல்லாமல் வாழ்கிறோம் அகதி கோலம் படிக்காதவனை பணக்காரனாகும் காலமிது படித்தவனுக்கு பரதேசிகோலம் கொடுக்கும் கலிகாலமிது ...!!!   [Image] பேச்சுரிமை பேசி பேசியே ஆட்சியை பிடித்து யாரையும் பேசவிடாமல் அதிகாரம் வளர்த்து மக்கள் பேச்சுக்கு பூட்டு போடுகிறோம் வாழ்க கோஷம் தவிர்த்து வேறுவார்த்தை வெளியேறாமல் பார்த்துக்கொள்கிறோம் வில்லாய் இருந்த சட்டத்தை அம்பாய் வளைத்து கருத்து சுதந்திரத்துக்கு தடைபோடுகிறோம் கருத்து கூறுபவர்களை கைது செய்ய புது சட்டம் போடுகிறோம் மாட்டுக்கு குரல் கொடுத்து ஆகிறோம் இந்தியன் மனித உரிமைக்கு குரல் கொடுத்து ஆகுகிறோம் Anti -இந்தியன் அதிகார வர்க்கம் மக்களை ஆட்டிப்படைக்க பணக்கார வர்க்கம் அதிகாரத்தை ஆட்டுவிக்க அடிமைத்தனம் மேலோங்கி விடுகிறது பேச்சுரிமையும் ஒருநாள் எங்கோ தொலைகிறது இக்காலம் எண்ணி கலியுகம் கைகொட்டி சிரிக்கிறது மக்கள் இதழ்களில் மௌனங்கள் குடிகொள்கிறது ...!!!   [Image] கலியுக போராட்டம் கருத்து சுதந்திரம் பறிபோக comments சுதந்திரம் உலகை ஆழ மின்னணு வழி போராட்டம் புரிகிறோம் உயிர் துளைக்கும் தோட்டாக்களுக்கு ஓய்வு தருகிறோம் போராட்டமோ போராய் மாற போராடப் போனால் திரும்பி வருவோமா என்பது கேள்விக்குறி ஆக கண்ணீரும் செந்நீரும் சிந்தி அலுத்துவிட்டது Hashtag (#) போராட்டமே பாதுகாப்பானது என புரிந்துவிட்டது பலகைகள் ஏந்திய கைகளில் பிடிக்கிறோம் ,மீம்ஸ் template கள் கொடிகள் ஏந்திய கைகளோ ,இன்று வைக்கிறோம் news feed களில் ஓயாத share கள் முடிவிலா விவாதங்கள் முற்றுப்பெறா ஒரு பிரச்சனைக்கு முற்றுப்பெற காத்திருக்கிறோம் கலி முற்றி இவுலகின் அழிவை காணவிருக்கிறோம் ...!!!   [Image] விவசாயம் அரூபம் இல்லா அன்னபூரணி அவதாரம் நாட்டின் முதுகெலும்பாய் வீற்றுக்கும் விவசாயம் ஏனோ இங்கு உழுது உண்டவனே உருப்படாமல் போகிறான் விதைத்த நெற்பயிருக்கு எவன் எவனோ விலை நிர்ணயிக்கிறான் பருவ மழை பொய்த்து வாடிப்போகும் நிலங்கள் வாடிய நிலமொடு ஏறி போகும் பேங்க் வட்டி கடன்கள் உழவனுக்கே உருவாகிறது உணவு பஞ்சம் தின்று தீர்த்த எலிகாரியால் நாட்டில் எலிகளுக்கும் பஞ்சம் ஒட்டிய வயிறும் கட்டிய கோவணமும் ஆயின விவசாயி சொத்துக்கள் அடமானம் வைத்து மீட்ட முடியா நிலங்களை ஆக்கிரமிக்கும் கார்ப்பரேட்கள் நிலத்தடி நீரையும் உபரி நீரையும் உறிஞ்சும் கோலா கம்பெனி கள் நீர் சுவை அலுத்து விவசாயின் ரத்தம் உரிஞ்சும் பணக்கார முதலாளிகள் விவசாயம் அழித்து வைட்டமின் டானிக்குகள் பருகுவோம் வருங்காலம் உணவை அழித்து விட்டு மாத்திரைகள் உண்ண இனி நாமும் பழகுவோம் - கலிகாலம்   [Image] கலிகால உறவுகள் அறியா வயதில் அனைவரும் உறவுகள் பணம் அறிந்த பின்னே ,உறவுகளோ தண்ட செலவுகள் திருமணம் திருவிழாக்களில் ஒன்று கூடிக்கொண்டோம் கஷ்டம் என்பதை கண்டவுடன் நைசாக நழுவிக்கொண்டோம் பணம் வந்தவுடன் போடுகிறோம் போட்டா போட்டிகள் கவுரவத்துக்காக மட்டுமே அணிகிறோம் costly வேட்டிகள் முகம் தெரியாதவர்களே அதிகம் உதவுகிறார்கள் உடன் பிறந்தவர்களோ நமக்கு முடிவுரை எழுதுகிறார்கள் ஒரே குடும்பத்தினுள்ளே பல ஏற்றத்தாழ்வுகள் ஒரே உதிரத்துக்குள்ளே பணக்கார ஏழை பாகுபாடுகள் செய்யும் உதவிகளை அவ்வப்போது சொல்லிக்காட்டுகிறோம் தொப்புள்கொடி பந்தத்தை காசெனும் காகிதத்தாலே அறுக்கிறோம் யாரும் இல்லாதவன் அறிவான் சொந்தங்களின் மகிமையடா பண மயக்கத்தில் சொந்தங்கள் துறப்பாயோ கலியுக மானிடா ?...!   [Image] கலியுக அடிமை இணையமே இதயமாக கலிகால மனிதர் யாவரும் இணையத்தில் அடிமையாக ஆறறிவு உயிரென மறக்கிறோம் ஐந்தறிவு உயிராய் நம்மை நாமே சித்தரிக்கிறோம் தொடுதிரையில் இமைத்திரை முழுதும் பதித்து இளம்வயதிலேயே நிம்மதி தொலைத்து ஓடிஆடும் வயதில் ஒரே இடத்தில அமர்கிறோம் ஸ்மார்ட் அகதியாய் தினம் இவ்வுலகில் உலாவுகிறோம் இணையம் வழி இளமை அரட்டைகள் ஹார்மோன்கள் தூண்டலில் பங்குகொள்ளும் Tinder செயலிகள் நிகழ்கால வாழ்க்கை தொலைத்து தேடுகிறோம் சொகுசுவாழ்க்கை google search களிலே சிதறிப்போகிறது பாதி வாழ்க்கை கற்பனை சிந்தனை யாவையும் புதைக்கிறோம் - இறுதியில் கலியுக தொழில்நுட்பங்களின் காலில் விழுகிறோம் - கலியுக அடிமை ...!!!   [Image] இயற்கை பேரழிவு அரை அடி குழிதோண்டி மரம் நட்டோம் ஐயாயிரம் அடி கனிமங்கள் தேடி இயற்கை அழித்தோம் நிலத்து மண் சுரண்டவே நீர்ச் சண்டை வளர்த்தோம் மீத்தேன் எடுக்கவே விளைநிலங்களை கருவறுத்தோம் மரங்கள் ஏற்றுமதிக்காக சாலைகள் விரிவுபடுத்தினோம் சாமானியர்களை சமாதானப் படுத்தவே மரக்கன்று நாடகமாடினோம் சாமியாரின் தேவைக்கு காடழித்தோம் கடவுளுக்கு சிலைவைத்து காசு வசூலித்தோம் ஏரிகள் மூடி அபார்ட்மெண்ட்கள் கட்டிக்காட்டினோம் வெள்ளநீர் வீட்டுக்குள் புக ஹெலிகாப்டர் உதவி நாடினோம் பாய்ந்தோடிய தண்ணீர் கடலில் கலப்பதை ரசித்தோம் வறட்சியில் காலங்களில் கேன் தண்ணீர் ரூபாய் ஐம்பதுக்கு வாங்கிக் குடித்தோம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் இயற்கை கொலையிது வருங்காலம் நரகமாகும் கலிகாலத்தின் செயலிது - இயற்கை பேரழிவு ...!!!   [Image] கலிகால அரசியல் நன்றாய் படித்தவன் சம்பாதிக்கிறான் கால்சென்டரில் பள்ளிக்கூட பக்கம்ஒதுங்காதவனோ சம்பாதிக்கிறான் கரைவேஷ்டி சட்டையில் ஐந்து வருட contract கள் ஐந்து தலைமுறைக்கு சேர்த்திவைக்கும் அளவுக்கு ச(கி )ம்பளங்கள் கொள்ளை அடித்து சேர்த்ததல்ல கொள்கைகள் வைத்து சேர்க்காதது எதுவும் அல்ல மக்களுக்கான அரசாங்கம் -ஆகின மக்களை தவிர்த்து அனைவருக்குமான அரசாங்கம் நல்ல தலைமை அமையாதா என ஏங்குகிறோம் சமூக அக்கறையை வசனமாய் பேசும் நடிகர்களை நாடுகிறோம் மக்களைக் கவரவே கண்டுபிடிக்கப்பட்ட இலவசங்கள் இலவசங்கள் வேலை செய்யவில்லையென்றால் , ஏவிவிடுவோம் சாதி சமயங்கள் அரசியல் நகர்வில் மனிதர்களை கொல்ல அதிகாரம் பிறக்கிறது அதர்மம் வென்று கலிமுற்றி வருங்காலத்தை அழிக்கிறது ...!!!             கலி முற்றல்   [Image] ஊழல் தனிமனித சேமிப்பு திட்டம் தன் நாட்டையே அழித்து சேமிக்கும் திட்டம் ஆறுமாதத்துக்கு ஒரு முறை கூட்டத்தொடர்கள் காது குளிர்விக்கும் அறிவிப்புகள் அறிவிப்புகள் செயல்படுமா என ,வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறோம் நிதிப்பற்றா குறை என்ற ஒற்றை வரியில் கிடப்பில் போடுகிறோம் திட்டங்கள் செயல்படதேவை கமிஷன் மாட்டிக்கொண்டபின் சந்திக்கிறோம் விசாரணை கமிஷன் அரசியில இதெல்லாம் சாதாரணமப்பா என தூசு தட்டுகிறோம் நம்பி ஓட்டுப்போட்ட ஒவ்வொருவரையும் ,தூசாய் தட்டுகிறோம் பெரும்தொகையோ கைக்கு கை மாறுகிறது ஒருவழியாய் திட்டங்கள் தரமில்லாமல் செயல்படத்தொடங்குகிறது எல்லாம் கலிகாலம் தலைவிதி என கூப்பாடு போடுகிறோம் ரூபாய் ஐநூறுக்கு ஓட்டுகள் விற்றதை மறந்து விட்டு பிதற்றுகிறோம்...!!!   [Image] பெண்ணுரிமை பூமியில் விதைக்கப்படும் தேவதைகள் -பெண்மை வளர்ந்த பிறகு வெட்டப்படும் தேவதையின் சிறகுகள் அறிவால் ஆண் இனத்தை வென்றுவிட்டோம் இருந்தும் சமபங்கு இடஒதுக்கீட்டில் பின்தங்கிவிட்டோம் பெண்ணோ குழந்தை பருவம் வரை செல்வமகள் வளர்ந்து ஆளான பின்போ செலவின் மகள் கல்லூரிவரை வலம் வருகிறோம் முதல் மதிப்பெண்கள் ஏனோ கல்லூரி முடித்ததும் ஆகிறோம் திருமண பெண்கள் சாதிக்கும் கனவுகளை மஞ்சள் கயிற்றில் மூட்டை கட்டுகிறோம் சாதி மதம் என்ற பெயரில் காதலையும் மூட்டை கட்டுகிறோம் வாழ்க்கை சக்கரமோ மெல்ல சுருங்குகிறது கணவன் குழந்தையே தன் வாழ்க்கை என்றானது பேச்சால் மட்டுமே வளர்ந்து ,தூங்கிக்கிடக்கும் பெண்ணுரிமை கொஞ்சம் தட்டி எழுப்புங்கள் -தேவதைகளுக்கு சிறகுகள் தர ...!!!   [Image] விளம்பரத் திணிப்பு புவியீர்ப்பில் சுழன்ற பூமி கண்டோம் விளம்பர ஈர்ப்பில் சுழலும் பூமி காண்கிறோம் தேவை இல்லா பொருட்களை தலையில் கட்டும் யுக்தி அதற்க்கு பெயரோ மார்க்கெட்டிங் strategy கடை முதலாளிகளே மாடல்களாய் மாற கூவி கூவி பொருள்விற்ற நிலையை உருமாற்றுகிறோம் பளபளப்பான நடிகையோடு கைகோர்த்து நடனமாடி பொருள்விற்கிறோம் மார்க்கெட்டிங் யுக்தியில் மரபு வழக்கத்தை பொய் என்கிறோம் நிலக்கடலை கொழுப்பென எனச் சொல்லி அயல்நாட்ற்க்கு விற்கிறோம் அயல்நாட்டு சாக்லேட் என வாங்கி அதே கடலையை சுவைக்கிறோம் கனம் தாங்கா ,தார் சாலைக்கு இறக்குமதி ஆகும் ரேஸ் பைக்குகள் பெட்ரோல் விலைவாசிக்கேற்ப உற்பத்தியாகும் கம்மி mileage கள் பைக்குகள் தேவையற்ற பொருள்களுக்கு நோய்களோ இலவச இணைப்புகள் விலைவாசி கண்ணைக்கட்டும்போது எரியும் நெருப்பில் எண்ணையாய் விளம்பர திணிப்புகள் ...!!!   [Image] கல்வி கொடுமை கள்ளுக்கடையை நாட்டுடைமையாக்கி கல்விக்கழகங்களை தனியார்மயமாக்கி வருடம் மூன்று முறை பொதுத்தேர்வு எழுதுகிறோம் படித்த மார்க்குகளும் பயனில்லை என்று உணர்கிறோம் பிறப்பிக்கிறார்கள் மாணவர்களை அடிக்கக்கூடாது என்ற விதி குச்சியை விட்டுவிட்டு லத்தியில் அடிவாங்க வேண்டும் என்பது அவன் தலை விதி தமிழ் ஆங்கிலம் தவிர்த்து expensiveவாய் பிறக்கிறது cbse பாடத்திட்டம் எந்த cbse இல் படித்து அப்துல்கலாம் சகாப்தமானார் என்று, திருப்பிக்கேள்விகேட்கமுடியா பாடத்திட்டம் தரமில்லா கல்விமுறை எதிர்கொள்ளும் வேலையில் உதயமாகும் NEET தேர்வுமுறை விபத்துகள் தவிர்த்து உயிர்பலி வாங்கும் புதுமுறை கனவுகள் யாவையும் கனவாகவே கலைக்கிறோம் திறமைகள் என்பதை குழிதோண்டப் புதைக்கிறோம் மெத்தன படித்தவன் உலகை ஆளும் காலமிது மொத்தம் படித்தவன் உலகால் அழும் கலிகாலமிது ...!!!   [Image] குற்றங்கள் போதாத தேவைகள் வேண்டுகிறோம் ஆடம்பர வாழ்க்கைகள் மது ,மாது, சூது தேடுகிறோம் அனைத்தும் அனுபவிக்க பணம் நாடுகிறோம் உழைத்து ,என்று முன்னேறுவது ?என்று பிறர் உழைப்பை திருடத்தொடங்கினோம் உழைக்க கஷ்டப்பட்டு கூலிப்படையாய் மாறினோம் மதி கெடும் வரை மது மயக்கம் மது மயக்கும் நிலையில் தொடங்கியது மாது மயக்கம் இச்சைகள் தீரும் வரை மயக்க நிலை என்றோ ஒருநாள் அணையப்போகும் விளக்கின் இன்றைய நிலை இந்தச்சந்தோஷம் நிலைக்க தினம் ஒரு கொலைகள் மேலும் மேலும் உச்சம் தொடும் பாவங்கள் அனைத்தும் அலுத்து போதுமென நிறுத்துகிறோம் ஆட்டம் அந்நொடி தொடங்குகிறது கடவுளின் ஆட்டம் ...!!!   [Image] வன்புணர்வு எதிர்பாலினத்தின் மோகம் அடைந்தே தீர்வது என்பதே ஒரே நோக்கம் ஆறறிவு பெற்றவரெல்லாம் மனிதரல்ல அக அழுக்காள் ஆகிறோம் மிருகமாய் மெல்ல உடுத்தும் உடையை மாடர்ன் என்னும் சமூகம் இல்லாத ஆசையெல்லாம் தூண்டிவிடும் பொல்லாத சமூகம் அங்கங்கள் வெளிக்காட்டும் அரைகுறை ஆடைகள் கண்களில் தொடங்குகிறது முதல் வன்புணர்வு கொடுமைகள் வயது வித்தியாசம் பார்க்காமல் வரும் இச்சைகள் அங்கங்கள் தொட சிறு சிறு சீண்டல்கள் பெண்மையின் புரிதல் இல்லா மிருகங்கள் பச்சிளங்குழந்தையையும் விட்டு வைக்கா மனித மிருகங்கள் பக்கத்துக்கு பக்கம் வன்புணர்வு செய்திகள் தன்னை பெற்றவளும் பெண்தான் என்பதை உணரா செயல்கள் -கலிகால கொடுமைகள் ...!!!   [Image] திருமண பந்தம் பொருத்தமில்லா மனங்களுக்கு பத்துப்பொருத்தம் பார்த்து ஊரே ஒன்றுகூடி திருமணபந்தத்தில் சேர்த்து பெற்ற கடனை பெண்வீட்டார் முடிக்க புது கடனை மணமகன் சுமக்க ஆரம்பமாகிறது இல்(ILL)வாழ்க்கை ஆரம்பத்தில் வாங்கிய புதுமொபைல் போல இணைபிரியாமல் இருக்கிறோம் காலப்போக்கில் பழசாகி ஒருவரை ஒருவர் வெறுக்கிறோம் காப்புரிமை பெற்ற திருமணம் பந்தம் முறிந்தது பிடித்தவர்களோடு ஒன்றாய் வாழும் வாழ்க்கை தொடங்கியது அன்புக்காக ஏங்கி தொடங்கும் கள்ளக்காதல்கள் பெற்ற குழந்தையே , கொல்லத் துணிந்த தெய்வீகக்காதல்கள் உடல் இச்சையே பிரதானமாகி ஊடல் கூடல் காதல்கள் வினாவாகி மனித உறவுகள் முற்றிலும் குலைகிறோம் கலியுகம் அழிவின் வேலையை நாமே எளிதில் முடிக்கிறோம் ...!!!   [Image] செய்வினை உழைத்து முன்னேறுகிறவனை ,உருக்குலைக்கும் ஆயுதம் வஞ்சம் வைத்து பழகி ,நயவஞ்சகமாக தீர்த்து கட்டும் மறைமுக ஆயுதம் திடகாத்திரமான உடலில் ,திடீரென்று முளைக்கும் புதுப்புது வியாதிகள் எல்லாம் normal என்றுரைக்க வைத்து ,உயிர்போகும் வியாதிகள் குல தெய்வங்களை கட்டிவைத்து ,தினம் வணங்கும் தெய்வங்களை விலக்கிவைத்து தொட்டதெல்லாம் மண்ணாக்குகிறோம் செல்வமெல்லாம் கரைத்து கடன்காரனாக்குகிறோம் உயிர் பயம் காட்ட ஏவப்படும் எட்சினிகள் உடலையே உருத்தெரியாமலாக்கும் உருவபொம்மைகள் எல்லாம் விதியென்று எண்ணி, உடல் வெந்து போகிறோம் எல்லாம் சதியென்று உணராது காடு சேருகிறோம் பண்ணிய பாவங்களுக்கு பிராயச்சித்தமாக வெட்டுகிறோம் கிடா சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்கிறோமடா எல்லா வினைக்கும் உண்டு ஓர் எதிர்வினை -உன் வினைக்கு நீ தேடிக்கண்ட வினை செய்வினை…!!!   [Image] கலியுக சமூகம் மதுக்கடை வருமானம் வைத்து ,கஜானா நிரப்பி அநியாய வரிகளை ,மக்கள் தலைக்கு மேல் உயர்த்தி படாத பாடுபடுத்துகிறோம் எதிர்க்கேள்வி கேட்போருக்கு பொடா சட்டம் போடுகிறோம் பிரியாணிக்கும், தலைக்கு இருநூறுக்கும் கூடும் கூட்டங்கள் அடிமட்ட தொண்டனை கண்டும்காணாமல் இருக்கும் கட்சிகள் போராட்டங்களை திசை திருப்பும் ஜிமிக்கி கம்மல்கள் உரிமைக்காக வாய்திறப்போர் யாவருமே ஆயினர் பயங்கரவாதிகள் மீம்ஸ் வழி கருத்துகள் கூறி சிக்காமல் தப்பிக்கிறோம் படித்த படிப்புக்கு you tube subscriber ஆய் வாழ்க்கையை பயணிக்கிறோம் ஒன்றுக்கொன்று சலிக்காத கட்சிகள், மக்களுக்கோ தேவை மாற்றங்கள் படித்தவன் அரசியலில் பாதம் பதிக்கிறான் பாலிடிக்ஸ் என்பதை உணராது காலையே இழக்கிறான் கலிகால கண்களில் களிப்புகள் மின்னியது நம் வேலையை நாடே செய்த திருப்தி நிரம்பியது ...!!!   [Image] உணவு முறை பழையது தின்று உழைத்து ஆயுள் வளர்த்தோம் fast food உண்டு இருக்கும் ஆயுள் தீர்த்தோம் நாவிற்கு ருசி சேர்க்கும் மசாலாக்கள் வயிற்றுக்கும் குடலுக்கும் விடுகிறோம் தினம் ஒரு சவால்கள் மூன்றாம் வகுப்பு தாண்டாத சிறுவனுக்கு மூக்குக்கண்ணாடி கல்லூரி மூன்றாம் ஆண்டு தொடங்கும் முன்பே நரைமுடி கனிகளும் காய்கறிகளும் ஒதுக்கிவைத்து விட்டோம் கலர் ஜூஸ் களில் நா ருசி கண்டுவிட்டோம் மென்று தின்ன பத்துநிமிடங்கள் உணவு செய்ய இரண்டு நிமிடங்கள் இளம் வயதிலேயே சந்திக்கிறோம் நீரழிவு நோய்கள் பசித்த வயிற்றுக்கு உண்ண மறந்தோம் போட்டோ எடுக்கவே பகட்டான உணவு உண்டோம் உணவே மருந்தென உணரா மானிடமிது மாத்திரையே உணவாய் உண்ணும் hifi கலிகாலமானது ...!!!   [Image] நோய்கள் மட்டற்ற மாசுகள் பரவ தரமில்லா காற்றுகள் நுகர நோய்களின் வசம் அடைக்கலம் ஆகிறோம் நம் வாழ்நாள் ஆயுளை நாமே மெல்லக் குறைக்கிறோம் புழுக்களுக்கு பயந்து வேப்பமரம் வெட்டுவோம் புழுக்கத்திற்காக குளிரூட்டி மாட்டுவோம் சூரிய ஒளிப்படா sun creams கள் தடவுவோம் இயற்கையை அண்டவிடா எந்திரன் ஆகுவோம் எதிர்ப்புச் சக்திகள் எளிதில் குறையும் உணவுகள் உண்போம் கேட்டால் எடைகூடக்கூடாத diet என்போம் நோய்வாய்ப் பட்ட தலைமுறை காண்போம் நோய்கள் மறைக்க பரம்பரை வியாதி என்போம் மக்கள் தொகை குறைக்க வழியிது மனித அழிவின் கடைசி அத்தியாயம் இது ...!!!   [Image] எந்திரக்காலம் அழிவின் பிடியில் அண்டம் அசுர வளர்ச்சியில் தொழில்நுட்பம் வான்வெளி எங்கிலும் செயற்கைக்கோள் குப்பை பூமி எங்கிலும் பிளாஸ்டிக் குப்பை மனித தேவைகள் குறைந்தன automation வழி எந்திர வாழ்க்கை நகர்ந்தன விளைநிலங்களில் solar தகடுகள் மக்கள் முதுகில் oxygen சிலிண்டர்கள் மரங்கள் யாவும் வெட்டிவிட்டோம் vfx தொழில்நுட்பம் வழி இயற்கைக்காட்சிகள் வரைந்துவிட்டோம் மடிக்கணினியும் ஸ்மார்ட் phoneஉம் ஆனது உலகம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து பேசியதாக என்றோ ஒரு ஞாபகம் அறிவியல் மாற்றம் ஆகாயம் தொட்டது கல்கி அவதரிக்க பிள்ளையார் சுழி போடப்பட்டது ...!!!   [Image] இயற்கை சீற்றம் கொடுத்ததை எல்லாம் கெடுத்துவிட்டோம் உலகின் அழிவுக்கு நாமே வழிவகுத்துவிட்டோம் நிலத்து மணல் தோண்டிய குற்றத்திற்கு பூமாதேவியோ ,ரெண்டாய் பிளக்க ஆற்று தண்ணீர் திருடி விற்ற பாவத்திற்கு அலைவெள்ளமாய் நீரோ ஊருக்குள்ள புக மதிநுட்பம் கொண்ட மனிதனும் இயற்கை முன் மண்டியிடுகிறான் ஆறறிவு ஆணவத்தை அங்கு முடிக்கிறான் சுற்று சூழல் பாதுகாப்பை மறந்தோம் அண்டார்டிகா ஐஸ் கட்டிகளால் அண்டம் நிறைத்தோம் இயற்கையோடு மனிதனும் மெல்லச்சாவதைக் கண்டோம் மனித தவறால் மிருக அழிவும் காண்கிறோம் விதி எழுதத் துவங்கியது இறுதி அத்தியாயம் கலிகாலம் அடியெடுத்துவைக்கும் இறுதி அத்தியாயம் ...!!!   [Image] கலியுக கடைசி ஆட்டம் முற்று பெற ஆயத்தமாகும் கலியுகம் ஆடுகிறது கடைசி ஆட்டம் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை அழிவுற்ற நிலங்கள் சூழ்ச்சியும் பொறாமையும் நிரம்பி வழியும் மனித எண்ணங்கள் ஒழுக்கமற்ற உறவுகளில் நடக்கும் வாழ்க்கை மது மாதுவோடு கூட்டுக்குடும்ப வாழ்க்கை தேக சுகத்துக்கு நடக்கும் கொலைகள் தினம் ஒரு கூட்டு வன்புணர்வுகள் பணத்தை அடைய பல தவறுகள் எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் லஞ்சம் ஊழல்கள் கண்ணீரும் கதறலுமாக வறுமையில் மரண ஓலங்கள் கடவுளையும் கடத்தி காசு பார்க்கும் அவலங்கள் பொறுக்க முடியா பூமிமாதா கண்ணீர்விட விழும் கண்ணீர்த்துளிகளில் கர்ப்பம் தரித்து அவதரிக்கிறது கல்கி அவதாரம் ...!!!   [Image] கல்கி கலிகாலம் அழிக்க , காலம் பெற்றெடுக்கிறது ஸ்ரீமந்நாராயணனின் தசாவதாரம் -கும்பலக்கினத்தில் அவதரிக்கிறது அமைதியும் அறிவும் ஒருசேர வளர பண்ணிய பாவங்களுக்கு இன்று பதில் கிடைக்கிறது புண்ணிய நதிகள் வறண்டுபோயின கிரகங்கள் யாவும் மாறி அமர்ந்தன கொடியவரின் கணக்கை தீர்க்க மேகங்களில் குறிப்பாய் காட்டும் வெண்குதிரை போர்க்கலைகள் யாவும் கற்று புத்திக்கூர்மைக்கு வலுசேர்க்கிறான் மனிதனே மனிதனை கொல்லும் நிலைக்கு முடிவு கட்டுகிறான் அநீதிகளை வேடிக்கை பார்த்தபடி இருந்த சமூகத்திற்க்கு இனி விழும் சம்மட்டி அடி இயற்கையும் ஏந்திக்கொண்டது ஆயுதம் கல்கி எழுத தொடங்கும் கலியுக முடிவுரை அத்தியாயம் ...!!!   [Image] கொடுங்கோல் முடிவு அதீத அதிகாரங்களில் நடைபெற்ற வந்த கொடுங்கோல் ஆட்சி அதிகார ஆணவம் உரைக்கும் என் பாவங்களுக்கு ஏது சாட்சி அவதரித்ததன் முதல் நோக்கம் நிறைவேறுகிறது மண்ணோடு மண்ணை கொடுங்கோல் மன்னனை புதைக்கிறது போரில் தொலைகிறது பாதிக்கு மேல் மக்கள் தொகை புது உலகம் படைக்கவே இத்தனை கொலை எல்லாம் அறிந்தவனின் உதடுகளில் புன்முறுவல்கள் வந்தநோக்கம் நிறைவேறும் காலமோ மிக அருகில் வெண்குதிரையை கிளப்புகிறான் போர் பூமியை பார்வையிடுகிறான் குருதியும் சாம்பலும் சிதறிக்கிடந்தன மதங்களும் சாதிகளும் ஒன்றென கலந்து மடிந்தன அவதார நோக்கம் நோக்கி பயணிக்கிறான் கலியுகத்தின் கதையை எழுதி முடிக்கிறான் ...!!!   [Image] விடைபெறும் இயற்கை வானெங்கும் அனல் துகள்கள் எல்லாம் மனித லீலைகள் தன்னை அழித்தவர்களை பழிவாங்க வரம்பெறுகிறது இவ்வுலகை விட்டு விடைபெற இயற்கை தயாராகிறது பொங்கி எழுகிறது ஆழ்கடல் ,அடித்துச்செல்கிறது மக்கள் கடல் மலைப் பாதை அமைக்க, கொன்று எரித்த மிருகங்களின் சாபம் வெடித்துச் சிதறும் எரிமலை குழம்புகளில் எரிகிறது மனிததேகம் வெட்டிய மரங்கள் வஞ்சம் தீர்க்கிறது மூச்சுத் திணறவைத்தே சாகடிக்கிறது இறுதியாய் பிளந்து காட்டுகிறது நிலம் பாவ பிண்டங்களை வாரி எடுத்து அரைக்கிறது ஐம்பூதங்களின் வஞ்சம் தீர்ந்தது கல்கியின் பாதிவேலையும் தீர்ந்தது பிரியா விடைபெறுகிறது இயற்கை நாம் கொடுத்ததை நமக்கே திருப்பி கொடுத்துவிட்டு ...!!!   [Image] கலிகாலம் முற்றும் கொடுங்கோல் சாம்ராஜ்யம் வீழ முடிவுக்குவருகிறது கலிகாலம் அவதார நோக்கம் நிறைவேறிய மகிழ்ச்சி பாவங்களால் யாவும் ஒழித்துக்கட்டிய மகிழ்ச்சி தரைமட்டமான கட்டிடங்கள் மண்ணாகிப்போன தேசங்கள் பல்லாயிர கோடி உயிர் பலிகள் குவிந்து கிடக்கும் பிணக்குவியல்களுள் ஓய்வெடுக்கும் மதங்களும் இனங்களும் பூமாதேவி மென்று துப்பிய நிர்வாண உடல்கள் சொல்கிறது ஏது மனிதருக்குள் ஏழை பணக்காரர்கள் ஆறறிவு ஆணவக் கதை ,இனி சொல்லுமா? தலை இல்லா முண்டங்கள் நான் என்ற ஆணவம்,இனி தலைதூக்குமா?தரையோடு நசுங்கிய உடல்கள் சுற்றியெங்கிலும் மயான அமைதி நாலரை லட்ச வருடங்களுக்கு பின் கண்ட ஒரு அமைதி ....!!!   [Image] கல்கியின் கண்ணீர்த்துளிகள் அறம் செய்ய போதித்தேன் செவிசாய்க்க மறந்துவிட்டீர் நல்மனமோடு, நட்பாய் வாழ ஆசிர்வதித்தேன் நஞ்சாய் ,நயவஞ்சகமாய் வாழ்ந்து கிடந்தீர் புண்ணியங்கள் சேர்க்க சொல்லிவைத்தேன் எவன் கேட்பான் என்று பாவங்கள் செய்துவைத்தீர் பிறர்மனைநோக்காமல் வாழ ,வள்ளுவன் ஏட்டில் எழுதி வைத்தேன் கலிகாலம் என்ற மிதப்பிலே, பெரும் துரோகங்கள் மிச்சம் வைத்தீர் ஆறடி குழி தான் சொந்தம் என்றேன் உலகை அடக்கி ஆல நினைத்தீர் கடவுள் ஒருவன் இருக்கிறான் என்றேன் தூணிலும் துரும்பிலும் தேடி திரிந்தீர் கருணையோடு மன்னிக்க அவதரித்தேன் என் கண்ணீர் துளிகளை மட்டுமே மிச்சம் வைத்தீர் ...!!!   [Image] கல்கியும் கடைசி மனிதனும் உடலைவிட்டுப் பிரியும் உயிர் ஒன்று , காண்கிறது கல்கியின் இமைத்துளிகளில் ஒன்று தாளாத குரலில் ஒலிக்கும் தடித்த வார்த்தைகள் ஆறுதல் அளித்து முடிக்கும் கலியுக வார்த்தைகள் விதியென்று எல்லாம் செய்தோம் தவறென்று புரிந்த்தும் விவாதம் செய்தோம் கடவுளை நேரில் கண்டதில்லை ஒருநாளும் அதனால்தான் என்னவோ , பாவங்கள் செய்தோம் எந்நாளும் நீ தந்த கஷ்டங்கள் யாவுமே ,நல்வாழ்க்கை வாழ அனுபவங்கள் ஏனோ அதை உணர மனம் மறுத்துவிட்டது ,மொத்த வாழ்க்கையையும் கெடுத்துவிட்டது வாழும் வரை ஒரு தர்மமும் செய்ததில்லை இறக்கும் தருவாயில் செய்ய எதுவுமில்லை மறுபிறவி என்பதில் நம்பிக்கை இல்லை மறுபிறவி இருப்பின் தர்மப் பாதைக்கு வழிகாட்டுவாய் திருந்திய உயிர் பிரிந்தது சத்யுகம் வாயில் திறந்தது ...!!!                                       ஆசிரியர் குறிப்பு   என் பெயர் விக்னேஷ் .M , கவிதை படைப்புகளில் இது என் ஐந்தாவதுபுத்தகம்.தமிழ் மேல் கொண்ட பற்றை , பயின்ற கணிப்பொறியியல் வழி மேம்படுத்தும் நோக்கத்தோடு,மின்னணு புத்தகங்கள் எழுதத் தொடங்கி, இன்று என் ஐந்தாவதுபுத்தகத்தை வெளியிடுகிறேன் .மேலும்தமிழ்மொழிவளர்ச்சிக்காகவும் ,சுயஎழுத்தாளர்களின் படைப்புக்களை மின்னணு மாற்றமாக பதிப்பிட வழிவகை செய்யவும், “மின்கவி”(https://www.minekavi.com )என்ற வலைத்தளத்தை உருவாக்கி நிறுவியுள்ளேன் . தனிமனித அடையாளம் உருவாக்கும் நோக்கத்தோடும், இக்காலத்திற்கேற்ப எளிய வரிகள் கொண்ட கவிதைகள் படைக்கும் நோக்கத்தோடும் மின்னணு புத்தகங்களை Amazon Kindle Direct Publishing வழி படைத்து வருகிறேன் . மேலும் என் படைப்புகளை freetamilebooks.com தளத்திலும் பதிவிட்டு வருகிறேன் .               “வாசகர்களாகிய தங்களின் மேலான ஆதரவும் மற்றும் புத்தகம் தொடர்பான கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன “.   தொடர்புகொள்ள:     புத்தகம் மற்றும் நூல் ஆசிரியர் தொடர்பான கருத்துக்களை பதிவிட   https://mvigneshportfolio.wordpress.com/     Ph.no: 9444452564