[]   கலிங்கராணி அறிஞர் அண்ணா   அட்டைப்படம் : எம்.ரிஷான் ஷெரீப் - mrishansha@gmail.com  மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியிடு : FreeTamilEbooks.com    உரிமை : Public Domain – CC0  உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.        பொருளடக்கம் பகுதி - 1 4  பகுதி - 2 21  பகுதி - 3 29  பகுதி - 4 36  பகுதி - 5 43  பகுதி - 6 49  பகுதி - 7 55  பகுதி - 8 63  பகுதி - 9 69  பகுதி - 10 75  பகுதி - 11 81  பகுதி - 12 87  பகுதி - 13 93  பகுதி - 14 99  பகுதி - 15 104  பகுதி - 16 110  பகுதி - 17 116  பகுதி - 18 122        பகுதி - 1   ‘வேங்கையைக் கண்டால் பயமிருக்காதோ?’ “வேலிருக்கும் போது!” “சிறத்தை சீறுமாமே?” “ஆமாம்; சிரித்துக்கொண்டே அதைத் துரத்திப் பிடிப்பேன்!” “கண்ணாளா! காட்டிலே நாட்டிலுள்ளோருக்கு என்ன வேலை? ஏன் இந்த வேட்டை? மன்னன் மனமகிழ மதுர கீதம் கேட்கலாம், நடனம் காணலாம்; மிருக வேட்டையாடி ஆபத்தை அணைத்துக் கொள்வதிலே ஓர் ஆனந்தமா?” “வீரருக்கு வேட்டை வெண்ணிலாச் சோறு! வெஞ்சமரே விருந்து! தோட்டத்துப்பூவைத் தொட்டுப் பறித்துக் கொண்டையில் செருகும் கோதையர் களிப்பதுபோல், வேலால் வேங்கையைக் குத்திக் கொன்று, அதன் தோலையும் நகத்தையும் எடுத்து வரும்போது எமக்குக் களிப்பு. “ஆபத்தான விளையாட்டு.” “அஞ்சாதே அஞ்சுகமே! வீரரின் ஆரம்பப்பள்ளி அதுதான்.” “எனக்கென்னமோ, நீங்கள் எவ்வளவு சொன்ன போதிலும் நெஞ்சிலே துடிப்பு இருக்கிறது.” “சிற்றிடையே! சோகிக்காதே, சுந்தர முகத்தின் சோபிதம் சிதைகிறது, உன் புன்னகையை எனக்குத் தா, நான் புறப்பட வேண்டும்.” “புன்னகை போதுமா?” “வள்ளல்கள், கேட்டதற்கு மேலும் தருவர், தேவீ! நீ உன் பக்தனுக்கு வரந்தர மறுப்பாயா?” “எவ்வளவு சமர்த்தான பேச்சு! சரசத்தில் நீரே முதல் பரிசு பெறுவீர்.” “உண்மை! உன்னைப் பெறும் என்னை, ஊரார் அங்ஙனமே கருதுகின்றனர். “பூங்காவில் இவ்விதம் பேசி மகிழ்வதை விட்டுப், ‘புறப்படுகிறேன் புலிவேட்டைக்கு’ என்று கூறுகிறீரே! நெஞ்சிலிரக்க மற்றவரே! கொஞ்சுவதை விடும்.” “வஞ்சி! வதைக்காதே, நேரமாகிறது. நினைப்பிலே ஏதேதோ ஊறுகிறது.” “ஊறும், ஊறும். ஊஹும், அது முடியாது, நடவாது, கூடாது, என்ன துணிச்சல்! என்ன சை! எவ்வளவு ஆனந்தம்!” “அணுச் சஞ்சலமேனும் இல்லாத இடம்!” “கீதாமா?” “யாழின் நரம்புகள் தடவப்பட்டபின், இசை விழாதோ!” “அரச அவையிலே புலவராக அமரலாம் நீர்!” “வேண்டாமம்மா! புலவர்கள் தொழில்கெட்டே விட்டது. முன்பு நம் நாட்டுப் புலவர்கள், ஓடும் அருவி, பாடும் குயில், ஆடுகின்ற மயில், துள்ளும் மான், மலர்ச்சோலை, மாது உள்ளம் முதலியன பற்றிப் பாடி மகிழ்வித்தனர். இப்போதோ, மச்சாவதாரமாம், மாபலி காதையாம், ஏதேதோ கதைகளையன்றோ கூறி வாழ்கின்றனர்; அந்த வேலை எனக்கு ஏன்?” “நாதா! நீர் என்ன, அவைகளை நம்பவில்லையா. நமது மன்னர்கள், அந்தக் காதைகளைக் கடவுள் அருள் பெறக் கேட்கின்றனரே! நாடு முழுதும் நம்புகிறதே, உமக்கு அது பிடிக்கவில்லையோ?” “காதுக்கு இனிய கற்பனை என்று, புரட்டரின் பொன்மொழிகளுக்கு நம் நாடு இடந்தந்துவிட்டது. குயிலி! அதை எண்ணுகையில் நெஞ்சங் குமுறுகிறது. நாட்டவரின் நாட்டம் இப்போது மண்ணில் இல்லையே, விண்ணிலன்றோ சென்றுளது.” “உண்மை! அங்குதானே, தேவர் வாழ்கின்றனர்; மூவர் உறைகின்றனர்!” “தேவரும், மூவரும் தேன் பூசிய நஞ்சு! விண், வெளி! ஆங்கு உலகம் கற்பிப்பவன் ஓர் சூதுக்காரன். அதை நம்புகிறவன் ஏமாளி!” “எது எப்படியோ கிடக்கட்டும் என் துரையே! எனக்குத் தேவரும் மூவரும் நீயே! “வானமுதம் நீ!” “பார்த்தீர்களா! நீரே இப்போது தேவாமிருதம் என்று, அந்தக் கதையை நம்பித்தான் கூறுகிறீர்?” “நம்பிக்கையல்ல! என் நரம்பிலும் அந்த வினை மெல்ல மெல்லப் பரவி வருகிறது. அதினின்று நம்மவரில் தப்பினோர் மிகச் சிலரே. இனி வருங்காலத்திலே இந்த நஞ்சு, நந்தமிழ்நாட்டை என்ன பாடுபடுத்துமோ அறியேன். அன்று நம்மவர் வாழ்ந்ததற்கும் இன்று நாம் இருப்பதற்கும் வித்தியாசம் அதிகமாகத்தான் இருக்கிறது. எங்கிருந்தோ இங்கு குடிபுகுந்து போரிடவோ, பாடுபடவோ இசையாமல் பொய்யுரையை மெய்யென்றுரைத்து வாழும் ஆரியருக்கு, அரச அவையிலே இடங் கிடைத்துவிட்டது. மன்னன் எவ்வழியோ அவ்வழியே மக்களும்!” “பாவம்! ஆரியர்கள் என்ன செய்கிறார்கள்? ஏதோ வேள்வி என்றும் வேதமென்றும் கூறிக் கொண்டுள்ளனர். பசுபோல் இருக்கின்றனர். படை எனில் பயந்தோடுகின்றனர். நாம் இடும் பிச்சையை இச்சையுடன் ஏற்று, கொச்சைத் தமிழ் பேசி ஊரிலே ஓர் புறத்தில் ஒதுங்கி வாழ்கின்றனர். எங்கோ உள்ள தமது தேவனைத் தொழுது, உடல் இளைத்து உழல்கின்றனர். நம்மை என்ன செய்கின்றனர்?” “நம்மை ஒன்றும் செய்ய முடியவில்லை! மனமிருக்கிறது மார்க்கம் இன்னமும் கிடைக்கவில்லை. நாட்டிலே வீரருக்கே இன்னமும் இடமிருக்கிறது. நாட்கள் பல போயினபின், நம்மவர் நிலை யாதாமோ அறியேன். புலி எலியாகுமோ? தமிழர் தாசராவரோ என்றும் நான் அஞ்சுகிறேன். “வீண் பீதி! ஆரியர் ஏதும் செய்யார், நாதா! பலருக்குத் தூதுவராக இருந்து, இருதய கீதத்தை ஒலிவிக்கச் செய்கின்றனர். அவர்கள்மீது ஏனோ உமக்கு வீணான ஓர் வெறுப்பு!” “கண்ணே! கவலை தரும் பேச்சை விடுவோம். காலம் கடுகிச் செல்கிறது. நான் போகுமுன் கனி ரசம் பருகினால், என் களைப்பு தீராதோ! ஏதோ, இப்படி துடியிடை துவளத் துள்ளாதே மானே! விட மாட்டேன்! இந்த மானைப் பிடிக்காவிட்டால், மதம் பிடித்த யானையையும், மடுவிலே மறையும் புலியையும் வேட்டையாட முடியுமோ? நில்! ஓடாதே!!” “அதோ, காலடிச் சத்தம். ஆமாம்! அரசிளங்குமரிதான். சுந்தரிதேவியின் சதங்கை ஒலிதான் அது. போய்வாரும் கண்ணாளா! ஜாக்கிரதையாக வேட்டையாடும். மான் வேட்டையல்ல, மங்கையர் வேட்டையுமல்ல, புலி, கரடி, காட்டுப்பன்றி முதலிய துஷ்ட மிருகங்கள் உலவும் காடு.” “இளைய ராணியாரின் குரலா கேட்கிறது?” “ஆமாம்! அரசிளங்குமரி அம்மங்கையின் குரல்தான்!” “பூங்காவிலே நம்மைக் கண்டுவிட்டால்?” “நாம் இதுவரை அரசிளங்குமரியின் கண்களில் படவில்லை, ஆனால் காதுக்கு விஷயம் எட்டித்தான் இருக்கிறது!” “யார் சொல்லிவிட்டார்கள்?” “சொல்வானேன்? என் கண்களின் மொழியை அவள் அறியாது போக முடியுமா? அம்மங்கையும் ஒரு பெண்தானே! அதோ கூப்பிடுகிறார்கள். என்னைத்தான். பூக்குடலை எங்கே? கொடுங்கள் இரு இதோ வந்தேனம்மா! வந்துவிட்டேன்! இது இருபத்திஏழாவது முத்தம்! போதும் காலடிச் சத்தம் கனமாகிவிட்டது விடும், புறப்படுகிறேன். “மற்றதைப் பிறகு மறவாதே, நான் வருகிறேன். தஞ்சமடைந்தவனைத் தள்ளமாட்டாய் என்று என் நெஞ்சு உரைக்கிறது. “சரி! சரி! வேட்டை முடிந்ததும் விரைந்து வாரீர்; மாலை தொடுத்து வைப்பேன்.” “மதியே! மறவாதே, நான் வருகிறேன்.” “குலோத்துங்கச் சோழன் அரண்மனைப் பூங்காவிலே நடந்த காதற்காட்சி, நாம் மேலே தீட்டியது. அந்தப்புரத்திலே, அரசிளங்குமரி அம்மங்கைத் தேவியின் ஆருயிர் போன்றிருந்த தோழி, தன் காதலனைக் காண, பூங்கா புகுந்தாள். அவளுக்காக மாமரத்தடியிலே காத்துக் கிடந்த வீரன், தென்றல் கண்டவன் போல், தாவிக் குதித்தெழுந்து தையலை ஆரத் தழுவினான். கையிலிருந்த பூக்குடலை தரையில் விழ, கூந்தல் சரிய, கோதை குதூகலமாகத் தன் காதலனைக் கட்டித் தழுவிக் கொண்டாள். அவர்கள் கிளப்பிய ‘இச்’சொலி கேட்ட பறவைகள், மரக்கிளைவிட்டு மற்றோர் கிளைக்குத் தாவின. “வானம் துல்லிய நிறத்தோடு விளங்கிற்று. கதிரோன் ஒளிப்பிழம்பாக மட்டுமே இருந்தான், வெப்பத்தை வீசும் வேளை பிறக்கவில்லை. காலை மலர்ந்தது, மாந்தர் கண் மலர்ந்த நேரம். மாலை மலரும் காதல் அரும்பாகி இருந்தது எனினும், என்று அவனுக்குக் காலையிலேயே மலர்ந்து மாலையில் அவன் வீடு திரும்ப நெடுநேரம் பிடிக்கும். வேட்டைக்குச் செல்கிறான் அன்று! வேட்டைக்குப் புறப்படுமுன், வேல்விழியாளைக் கண்டு, விருந்துண்டு போக மனம் தூண்டியது. கால்கள் வேலிகளையும் முட்புதரையும் தாண்டின. கள்ளத்தனமாக உள்ளே நுழைந்தான். காவலன் காணவில்லை என்பது அவன் நினைப்பு. காவலனுக்குக் கண்ணுமுண்டு, கருத்துமுண்டு! எனவே காதலர் கூடிப் பேசுவதைக் கண்டுங்காணாதவன் போல், பலமுறை இருந்ததுபோல் அன்றும் இருந்தான். மேலும், அந்த வஞ்சி அரசிளங்குமரியின் ஆருயிர்த்தோழி குணவதி. கோல மயில் சாயலும், கிளி மொழியும், கனக நிறமும், கருணை உள்ளமும் பெற்ற பண்பினள். அவளது காதலன் வீரர்க்கோர் திலகம். மன்னன் குலோத்துங்கனின் குதிரைப் படைத்தலைவருள் ஒருவன். வீரத்தாலேயே, இளம்பருவத்திலேயே அந்த உயர் நிலை பெற முடிந்தது. தொண்டைமானிடமிருந்து ‘தோடா’ பரிசு பெற்றவருள் அவன் ஒருவன். எனவே இவ்விருவரும் சந்தித்துப் பேச, மன்னனின் பூங்காவை மன்றலாக்கிக் கொண்டது கண்டு காவற்காரன் களித்தானேயன்றிக் கோபித்தானில்லை. அவர்கள் சந்திக்கும்போது, அவன் உலகமே காதல்மயமாக இருப்பதை எண்ணுவான்! குக்குக்கூவெனக் குயில் கூவி, காதற்கீதத்தை அள்ளி அள்ளி வீசுவதை நினைப்பான். நெடு நாட்களுக்கு முன்பு, நீர் மொள்ள அருவிக்கு வரும் நீலநிறச் சேலைக்காரி வேலாயியைத் தான் கண்டதும், கனைத்ததும், அவள் முதலில் மிரண்டதும், பிறகு இணங்கியதும் ஆகிய பழைய காதல் நிகழ்ச்சியை எண்ணுவான். “நரைத்தேன் இன்று. ஆனால் நானும் முன்னம் நாடினேன், பாடினேன், ஆடினேன் அணங்குக்காக” என்று மனதில் எண்ணிக் கொள்வான். தோட்டத்து வாசலிலே நின்று, யாரும் உள்ளே நுழையாதபடி பார்த்துக்கொள்ளும் தொழிலைவிட்டு, காதலரைக் காண யாரும் புகாதபடி காவலிருப்பான். இதனைக் காதலர் அறியார். அவர் தம்மையன்றி வேறெதைத்தான் அதுகாலை அறிதல் முடியும்! அரசிளங்குமரியின் குரல் கேட்டு, அரைகுறையாயிற்று அன்று காதலர் விருந்து. விரைந்தோடி வந்த தோழியைக் கண்ட அம்மங்கை, கோபித்துக் கொண்டு, “காலமும் அறியாய், இடமும் தெரியாய் கடமையையும் மறந்தாய்” என்று கடிந்துரைத்தாள். தோழி தலைகுனிந்து நின்றாள். பூக்குடலை காலியாகவே இருந்ததைக் கண்ட மற்றத் தோழியர், “மனம் பறிக்கும் வேலையிலே மலர் பறிக்க மறந்தாள்” என்று கூற அதுவரை கோபித்தது போல் பாவனை செய்த அரசிளங்குமரி, கலீர் எனச் சிரித்து, தோழியின் கன்னத்தைக் கிள்ளி, ‘கதிரோன் வராவிட்டால் தாமரை மலராது என்பார்களே, அதுபோல் உன் அன்பன் வராவிட்டால், உன் முகம் மலருமோ!’ என்று கேலி செய்தாள். தோழி அப்போதுதான் பயந்தொளிந்தாள். பயம் போனதும் நாணம் ‘நான் உன்னை விடுவேனா?’ என்றுரைத்துக் கொண்டே அவளைப் பிடித்துக் கொண்டது. “வேட்டையாடக் காட்டுக்குப் போகக் கிளம்பியவன் இங்கே வந்தது ஏனடி?” என்று அரசிளங்குமரி ஒரு தோழியைக் கேட்க, அவள் “இவளைக் கண்டு மானென்று மயங்கி வந்தான் போலும்!” என்று சொல்லிச் சிரித்தாள். “வேட்டைக்குக் கணைகள் வேண்டும்; இங்கும் கணைவிடு காட்சிதான் நடந்தது.” என்று கிண்டல் செய்தாள் அரசகுமாரி. “ஆமாம் தேவி! காதலுக்குச் செலுத்தும் கணைகள் காட்டிலே! காதலுக்குக் கணைகள் காட்டில் அல்லவே!” என்றாள் குறும்புக்காரத் தோழி. “ஆமாம்! காட்டில் அல்ல! நம் வீட்டுத் தோட்டத்தில்” என்று கூறிக்கொண்டே, அம்மங்கை காதற்குற்றவாளியைக் கைப்பிடித்திழுத்துக் கரகரவெனச் சுற்றி ஆடினாள், களித்தாள். அம்மங்கையும் அதன் வயப்பட்டாளோ, என்று மற்றத் தோழியர் சந்தேகித்தனர்.” யார் கண்டார்! யார் காணவல்லார்! காதற் கணைகள் அம்மங்கையை மட்டும் விட்டுவிடுமோ! அதன் சக்தியின் முன்பு, பட்டத்தரசியாக வேண்டியவரும் தட்டுக்கெட்டுத் தடுமாறித்தானே தீருவர்! கண்டவர் அஞ்சிடக் கடும் போரில் தன்னிகரற்ற குலோத்துங்கனின் குமரியானாலும், குமரன் தோன்றிக் குறுநகை புரியின் குளிரும் விழியுடன் கொடியெனத் துவண்டு சாயத்தானே வேண்டும்! “நடனராணி! கூச்சம் இப்போதிருந்து பயன் என்ன? வா, பந்தாடுவோம்” என்று அரசிளங்குமரி கூறினாள். நடனராணி என்ற பெயரே நாம் குறிப்பிட்ட தோழியுடையது. நடனத்திலே மிக்கக் கீர்த்தி வாய்ந்தவள். நாட்டினர் அதுபற்றியே, நடனராணி என்று அவளை அழைத்தனர். பந்தாடினர் பாவையர். நடனராணியை விட்டுப் பிரிந்த அவள் காதலன் வீரமணியின் மனம் படும்பாடு, அவர்களாடும் பந்து படாது என்னலாம். கிளியைக் கண்டால் அவள் மொழி நினைவு! குயிலைக் கண்டால் அவள் கீதக் கவனம்! மயிலைக் கண்டால் அவளது நடன நேர்த்தியின் கவனம் அவன் நெஞ்சில் ஊறும். பொல்லாத பறவைகள், சும்மாவும் இல்லை. ஜோடி ஜோடியாகப் பறப்பதும், பாடுவதும், உண்பதுமாக உல்லாசமாகவே இருந்தன. ஊராள்வோன் உல்லாசத்துக்காக வேட்டைக்குக் கிளம்ப, வீரமணியும் உடன் சென்றான்! வேட்டைக்காரர் கிளப்பிய பறையொலியும், ஊதுகுழலொலியும், குதிரைக் குளம்பொலியும், வீரர் முழக்கொலியும் கேட்டு, பேடைக் குயிலும், மாடப் புறாவும், கோல மயிலும், கொக்கும், வக்காவும் பயந்து அலறிப் பறந்தோடின! புதர்களிலே சலசலவெனச் சத்தம் கிளம்பிற்று. தொலைவிலே காட்டு மிருகங்கள் உறுமுவது கேட்டது. மோப்பம் பிடித்துச் செல்லும் நாய்கள், வாலை மடக்கி தலøயைக் குனிந்து தரையை முகர்ந்தன! இடையிடையே புலி சென்ற அடையாளம் காணப்பட்டது. வீரர்கள் இன்று நல்ல வேட்டைதான் என்று களித்தனர். மன்னன் குலோத்துங்கனும் வீரமணியும் மட்டுமே விசாரத்திலாழ்ந்திருந்தனர். வீரமணியின் விசாரம், காதலியிடம் சரசச் சமர் புரிவதை விட்டு, சத்தற்ற வேட்டைக்கு வந்தோமே என்பதனால்! குலோத்துங்கனோ, பகை வேந்தர்களை வேட்டையாட சமயம் கிடைக்கவில்லையே, பயந்தோடும் மிருகங்களைத் தானே வேட்டையாட வேண்டி இருக்கிறது என்று கவலை கொண்டான். குலோத்துங்கச் சோழனின் வீரப்பிரதாபத்தை, வெஞ்சமர் பல நிரூபித்துவிட்டதால் வேந்தர் பலரும் விழியில் வேதனை தோன்றிட வாழ்ந்தனர். பறைஒலிகேட்டு அன்று மிருகங்கள் பயந்தோடியும், பதுங்கிக் கொண்டதும் போலவே, பல மன்னர்கள் குலோத்துங்கனின் படை ஒலி கேட்டஞ்சிப் பயந்துப் பதுங்கினர். மன்னனின் படைத்தலைவன், மாவீரன் கருணாகரத் தொண்டைமான் “கண்டதுண்டமாக்கிக் கழுகுக்கிடுவேன், காயும் எதிரிகள் களத்திலே நிற்பின்” என்று முழங்கினான். எவரே எதிர்ப்படுவர்! உயிரிழக்க, அரசிழக்க, எவரும் ஒருப்படாரன்றோ! எனவே குறுநில மன்னரும் குலோத்துங்கனுக்கு அடங்கியே வாழ்ந்தனர்! தோள் தினவெடுத்தன, வேட்டை ஒரு சிறு பொழுதுபோக்காகுமென்றே மன்னன் புகுந்தான் காட்டிலே. தினவெடுக்கும் உள்ளத்தைத் திருத்தும் நிலைகாணா வீரமணி, மன்னன் பின் சென்றான், மனதை மங்கை பால் விட்டே வந்தான், வழி நடந்தான். இயற்கை எழில் செயற்கைப் பூச்சின்றி பூரித்துக் கிடக்கும் காட்டினுள்ளே, மன்னன் குலோத்துங்கன் தன் பரிவாரங்களுடன் வேட்டைக்காகப் புகுந்த காட்சியும், குதிரை மீதமர்ந்து பாய்ந்து சென்ற வீரர்களின் வருகை கண்ட துஷ்ட மிருகங்கள் மிரண்டோடினதும் கண்ட வீரமணிக்கு, குலோத்துங்கன், இளவரசாக இருந்தபோது, வடநாடு சென்ற காலையில், சோழநாட்டிலே சதிகாரர் கூடிக்கொண்டு, குலோத்துங்கனுக்கென்று கங்கை கொண்ட சோழன் குறித்திருந்த மணிமுடியை, கங்கைகொண்ட சோழனுடைய மகன் அதிராசேந்திரனுக்குச் சூட்டியதும், அதுபோது சோழமண்டலமே காட்டுநிலை அடைந்ததும், பிறகு, வாகைசூடி வடநாட்டிலிருந்து குலோத்துங்கன் திரும்பியதும் சதிகாரர் பதுங்கிக் கொண்டதுமான சம்பவமும், சமரும், காட்சியும் நினைவிற்கு வரவே புதர்களிலே மறையும் புலிக்குட்டிகளையும், மரப்பொந்துகளில் ஓடி ஒளியும் மந்திகளையும், வீறிட்டு அலறி ஓடும் வேங்கையையும், உறுமிக்கொண்டே ஓடும் காட்டுப்பன்றியையும், மிரண்டோடும் மான் கூட்டத்தையும் கண்டு களித்தான். காட்டிலே கணைகள் சரமாரியாய்க் கிளம்பின. ஆரவாரமும், ஆர்ப்பரிப்பும் பறை ஒலியும் பலவுமாகக் கலந்து காட்டிலே கலக்கத்தை உண்டாக்கிற்று. வேட்டை விருந்தை மன்னருக்குத் தந்த காடு, வனப்பு வாய்ந்தது. வேங்கை, குறிஞ்சி, தேக்கு, கமுகம், புன்னாகம், முதலிய மரங்கள் நிறைந்து காணப்பட்டன. உலர்ந்து காணப்பட்ட ஓமை மரங்களும், புகைந்து கிடந்த வீரை மரங்களும், காரைச் செடியும், சூரைச் செடியும் காண்போருக்கு இயற்கையின் விசித்திரத்தை விளக்கின. சந்தன மரங்கள் ஓர் புறம், அதன்மீது தமது உடலை மோதி யானைகள் தேய்த்ததால் உண்டான மணம் ‘கம்’மென்று கிளம்பிற்று. இண்டங்கொடிகள் இங்குமங்குமாகச் சுருண்டு கிடந்தன. மரத்தின் வேரோடு வேர்போல் மலைப்பாம்புகள் உண்ட அலுப்பு தீரப் புரண்டுகிடந்தன. வாகையும் கூகையும், மூங்கிலும் பிறவுமான பல விருட்சங்கள் விண்முட்டுவோம் என்றுரைப்பதுபோல் வளர்ந்துகிடந்தன. சிற்சில இடங்களிலே குலைகுலுங்கும்வரை வாழையும் காணப்பட்டன. வீரர்கள் தமது கணைகளை விடவே, கரிக்குருவியும் கானாங்கோழியும், காடையும், கிள்ளையும், மயிலும், மாடப்புறாவும், உள்ளான், சிட்டு, கம்புள், குருகு, நாரை, குயில் முதலிய பறவைகள், பயந்து கூவி, பல்வேறு திசைகளிலே பறந்தன. பறக்கும்போது பலவித ஒலி கிளம்பியது, புதியதோர் பண் போன்றிருந்தது. கானாறு ஒருபுறம், காட்டெருமைக் கூட்டம் மற்றோர்புறம், யானை ஒரு புறம், புலி கரடி வேறோர்புறம், வீறுகொண்ட மரங்களிலிருந்து கிலிகொண்டு சிறகை விரித்துப் பறந்தன பெரும் பறவைகள்! குரங்குக் கூட்டம் கீச்செனச் கூவி, கிளை விட்டுக் கிளை தாவி, வீரரின் வாள் வேல் ஒலியால் கிலி கொண்டு குதித்தோடின. வால் சுழற்றின வேங்கைகள், குள்ளநரிகள் ஊளையிட்டன. முட்புதர்களைத் தாண்டிக்கொண்டு சிறுத்தைகள் சினந்தோடின. கருங்கற்களிலே, பிலங்கள் தேடின பாம்புகள், இத்தகைய காட்சிகளைக் கண்டு களித்து வில் வளைத்து, கணைகள் தொடுத்து, விரைந்தோடி வாள்கொண்டு தாக்கி, வேல் எறிந்து வேங்கையையும் வேழத்தையும் வீழ்த்தி, வீர விளையாட்டிலே ஒரு நாள் பூராவும் கழித்தனர். மன்னரும் அவர் தம் பரிவாரமும், வேட்டையிலே கிடைத்த பொருள்களைச் சேகரித்து வீடு திரும்ப மன்னன் கட்டளை பிறக்குமென்று எண்ணிய வீரமணி பொழுது சாய்வதற்குள் ஊர் சென்றால் மீண்டுமோர்முறை பூங்காவிலே நடனராணியைக் கண்டு களிக்கலாம், காட்டிலே கண்ட காட்சிகளை, வேட்டையாடிய செய்திகளைக் கூறிடலாம் என்று கருதினான். மேலும் அவன் பக்குவமாக ஓர் பஞ்சவர்ணக் கிளியைப் பிடித்து வைத்திருந்தான், அதனை நடனராணிக்குத் தர விரும்பினான். ஆனால் அவன் எண்ணியது ஈடேறவில்லை. மன்னன் புதியதோர் கட்டளை பிறப்பித்தான். ‘புறப்படுக காஞ்சிக்கு’ என்று கூறிவிட்டான். புரவிகள் காவிரிக் கரைக் காட்டைக் கடந்து கச்சி செல்ல விரைந்தன. அன்று மாலை. அரசிளங்குமரி அம்மங்கையும், நடனராணியும், மற்றும் சில தோழியரும், வழக்கம் போல் களித்தாடிக் கொண்டிருந்தனர். நடனராணியின் உள்ளம், காட்டிலே; கணைவிடும் காதலன்மீதே இருந்தது. பலவகை விளையாட்டு பாவையர் ஈடுபட்டனர். பரிவாரங்களுடன் காட்டுக் காட்சிகளையும், இடையே உள்ள நாட்டுமாட்சியையும் கண்டுகளித்து கச்சிபோய்ச் சேருமுன்னம், மன்னன் வருகையை முன்கூட்டிக் கச்சிக் காவலனுக்குக் கூறிட, வீரமணியை விரைந்து முன்னாற் செல்லுமாறு மன்னன் கட்டளையிட்டான். மன்னன் மொழிக்கு மாற்றுமொழி கூறல் எங்ஙனம் இயலும்? பஞ்சவர்ணக் கிளியை, தோழனொருவனிடம் தந்து, அதனைத் தன் காதலியிடம் தந்து. தான் கச்சி நகருக்குக் கடுகிச் செல்லுவதைக் கூறுமாறு வேண்டிக்கொண்டான். செவி மந்தமுள்ள அத்தோழன், யாரிடம் கிளியைத் தருவது என்பதைச் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை. “நான் மணம் செய்துகொள்ள இருக்கும் அம் மங்கையை நீ அறியாயோ?” என்று வீரமணி அவசரத்துடன் கேட்க, தோழன் “அம்மங்கையை அறியேனா!” என்று கூறிக் கொண்டே கிளியைப் பெற்றுக் கொண்டான். அவன் மன்னன் குமரி அம்மங்கைத் தேவியையே, வீரமணி குறிப்பிடுவதாகக் கருதினான். அவனையே மன்னன் அழைத்து, “ஏ! மருதா! விரைந்து நம் நகர் சென்று, ஏழிசை வல்லியாரைச் சேடியருடன் கச்சி வரச்சொல்லு; நாம் அங்குச் சின்னாட்கள் தங்க எண்ணியுள்ளோம்” என்று கூறிட, மருதன் தலைநகர் புறப்பட்டான். பஞ்சவர்ணக் கிளியோடு மருதன் உறையூர் நோக்கியும், கவலையுடன் வீரமணி கச்சி நோக்கியும் விரைகின்ற வேளையிலே, மன்னன் குமரி அம்மங்கை தோழியருடன் பூங்காவிலே விளையாடிக் கொண்டிருந்தாள். பொழுது சாய்கிறது; போனவர் திரும்பக் காணோமே என்று நடனராணி ஏக்கத்துடனேயே விளையாட்டில் விழியும், வீரமணியிடம் மனமும் செலுத்திக் கிடந்தாள். நடனராணி, பதுமா என்ற பரத்தையின் வளர்ப்புப்பெண். வனப்பும், வளம்பெற்ற மனமும், இசைத்திறனும், நாட்டியக் கலைத்திறனும் ஒருங்கே பெற்றவள். மன்னன் மனமகிழவும், மற்றோர் கொண்டாடவும் ‘மாதவியோ’ என்று கலைவல்லோர் போற்றவும் வாழ்ந்து வந்தாள். அவளது அரிய குணம், அந்தப்புரத்துக்கு எட்டி, அம்மங்கையின் கருணைக்கண்கள் நடனராணிமீது செல்லும்படிச் செய்தன. நடனராணி அம்மங்கையின் ஆரூயிர்த் தோழியானாள். பதுமா தன் வளர்ப்புப் பெண்ணின் மனப்பாங்கு, பரத்தையராக இருக்க இடந்தராததையும், பல கலை கற்று வாழவே பாவை விரும்புவதையும் அம்மங்கையிடம் கூற, “அதுவே முறை! இனி நடனராணியின் உறைவிடம் நமது அரண்மனையே” என்று கூறி, அவளைத் தன்னுடன் இருக்கச் செய்தாள். நடனராணியை வீரமணி நெடுநாட்களாகவே நேசித்து வந்தான். அவள் அரண்மனைக்கு வந்து சேர்ந்த பிறகு, அடிக்கடிச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. கண்கள் பேசின; கனிந்தது காதல். கண் கண்டவர் “சரியே” என்றனர். கேட்டவர் “முறையே” என்றனர். நடனராணியின் நற்குணம் நாடெங்கும் தெரியும். வீரமணியின் திறமும் வேந்தரும் மாந்தரும் அறிவர். “ஆற்றலும் அழகும் ஆரத்தழுவலே முறை” என்று ஆன்றோர் கூறினர். வீரமணியின் தாய் மட்டுமே “பரத்தையரிலேதானே என்பாலனுக்குப் பாவை கிடைத்தாள்? குன்றெடுக்கும் தோளான் என் மகன், குறுநில மன்னன் மகள் அவனுக்குக் கிடைக்காளோ?” என்று கவலையுற்றாள். ஆனால், வீரமணி, நடனராணியிடம் கண்ட கவர்ச்சியை அவனன்றோ அறிவான்! இருண்டு சுருண்ட கூந்தல், பிறைநுதல், சிலைப் புருவம், நெஞ்சைச் சூறையாடும் சுழற்கண்கள், அரும்பு போன்ற இதழ்கள், முத்துப் பற்கள், பிடிஇடை இவை கண்டு, கரும்பு ரசமெனும் அவள் மொழிச்சுவை உண்டு, கண்படைத்தோருக்குக் காட்சியென விளங்கும் நடனநேர்த்தியைக் கண்டு, மையல் கொண்ட வீரமணி நடனராணியிடம் நெருங்கிப் பழகியதும், சித்திரம் சீரிய குணத்தின் பெட்டகமாகவும் இருப்பதையும், கருத்து ஒருமித்தருப்பதையும் கண்டு, களிகொண்டு, “அவளையன்றிப் பிறிதோர் மாதைக் கனவிலுங் கருதேன்” என்று கூறிவிட்டான். மணவினையை முடித்துக்கொள்ளாததற்குக் காரணம், தாய் காட்டிய தயக்கமல்ல! தாய் தனயனுக்குக் குறுநில மன்னனின் மகள் தேடிட எண்ணினாள். தனயனோ, கோமளவல்லிக்கு மணவினைப் பரிசாக வழங்க குறுநிலம் தேடினான். அதற்காகக் கொற்றவனிடம் தான் கற்ற வித்தையத்தனையும் காட்டிச் சேவை புரிந்துவந்தான். நடனராணியின் வாழ்க்கை நல்வழியிலே அமைய இருப்பதுகண்டு, களித்து, பதுமா நிம்மதியாகவே நீங்கத் துயிலுற்றாள். பூங்காவிலே நடனராணி புதிதாகச் சேடியாக அமர்ந்த ஓர் ஆரியக் கன்னியிடம், தமிழர் சிறப்புப் பற்றி எடுத்துக் கூறிக் கொண்டிருந்தாள். கங்கைக் கரையிலே தனது இனத்தவர் கனல்மூட்ட ஓமத்தீ மூட்டுவதை ஆரியக்கன்னி உரைத்திட, நடனமணி “எம்மவரின் ஓமம் எதிரியின் படை வீட்டைக் கொளுத்துகையில் கிளம்பும்” என்றுரைத்து மகிழ்ந்தாள். “சகல கலை வல்லவளே! பேச்சு போதும், பந்தாடுவோம் இனி” என்று அம்மங்கை கூறிட, பாவையர் பந்தாடலாயினர். உற்சாகமற்றிருந்த நடனராணியின் உள்ளத்தையும் பந்தாட்டம் குளிரச் செய்தது. கைவளைகள் ‘கலீல் கலீல்’ என ஒலிக்க, காற்சிலம்புகள் கீதமிட, கூந்தல் சரிய, சூடிய பூ உதிர, மகரக்குழை மானாட்டமாட, இடை திண்டாட, ‘மன முந்தியதோ, விழி முந்தியதோ’. கரம் முந்தியதோ’ என்று காண்போர் அதிசயிக்கும் விதமாக, பாவையர் பந்தடித்துக் களித்தனர். பூங்கொடிகள் துவளத் தொடங்கின. வியர்வை அரும்பினது கண்ட மன்னன் மகள் “பந்தாடினது போதுமடி, இனி வேறோர் விளையாட்டுக் கூறுங்கள். ஓடாமல் அலுக்காமலிருக்க வேண்டும்” என்றுரைத்திட, நடனராணி “பண் அமைப்போமா?” என்று கூற, ஆரிய மங்கை “பதம் அமைப்போம்” என்று கூற ‘சரி’ என இசைந்தனர். ஒருவர் ஒரு பதத்தைக் கூற அதன் ஓசைக்கேற்பவும் தொடர்பு இருக்கவுமான பதத்தை மற்றவர் இசையுடன் உடனே அமைத்திட வேண்டுமென்பது அவ்விளையாட்டு. சிந்தனைக்கே வேலை. சேயிழையார் சுனையில் துள்ளும் மீன்போல், சோலையில் தாவும் புள்ளிமான் போல் தாவாமல் குதிக்காமல் விளையாட வழி இதுவே. அம்மங்கை துவக்கினாள், பதம் அமைக்கும் விளையாட்டினை. நடனராணியும் ஆரிய மங்கை கங்காபாலாவும் அதிலே கலந்துகொண்டனர். மற்றையத் தோழியர் வியந்தனர். அம்மங்கை: நாட்டி நடனராணி: இணைவிழி காட்டி கங்கா: இளையரை வாட்டி அம்மங்கை: மனமயல் மூட்டி நடனராணி: இசை கூட்டி கங்கா: விரகமூட்டி இதைக் கேட்டதும் நடனராணி ‘விரகமூட்டி’ என்றதற்குப் பதில் ‘இன்பமூட்டி’ என்று கூறுவதே சாலச் சிறந்தது என்றாள். “விரகம் விசாரம்” அது வேண்டாமடி கங்கா. அது நடனாவுக்கு நோயூட்டும்; ‘வேறு கூறு’ என்று அம்மங்கை கேலி செய்தாள். “எனக்கொன்றுமில்லயைம்மா, ஆகட்டும் கங்கா, நீ துவங்கிடு இப்போது” என்றாள் நடனம். கங்கா: சரசமொழி பேசி அம்மங்கை: வளை அணி கை வீசி நடனம்: வந்தாள் மகராசி! என்று கூறி, கங்காபாலாவைச் சுட்டிக் காட்டிச் சிரித்தாள். “நீங்கள் இருவருமே பதம் அமையுங்கள். நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். பார்க்கலாம் உங்கள் சமர்த்தை!” என்று அம்மங்கை கூறினதால், ஆரிய மங்கையும் ஆடலழகியும் பதமமைக்கலாயினர். நடனம்: மாலையிலே கங்கை: மலர்ச்சோலையிலே நடனம்: மாங்குயில் கூவிடும்போதினிலே கங்கை: மதிநிறை வதனி! நடனம்: இதழ்தரு பதனி கங்கா: பருகிடவரு குமரன் நடனம்: குறுநகையலங்காரன் கங்கா: குண்டல மசைந்தாட நடனம்: கோமளம் விரைந்தோட கங்கா: மயில்கள் ஆட நடனம்: மகிழ்ந்த நாடா “சரியான மொழி! நடனத்தின் நிலை இதுதான் இப்போது” என்று அரசகுமாரி கேலி செய்தாள். “கடைசியில் என்னைக் கேலி செய்யத்தானா தேவி இந்த விளையாட்டு?” என்றாள் நடனராணி. “கேலியல்லவே இது” என்று கூறிக் கன்னத்தைக் கிள்ளி காவலன் குமரி “மற்றொன்று ஆரம்பி பாலா” என்று பணிந்தாள். கங்கா: பூங்காவில் பார் அரும்பு நடனம்: பூவையருக்கே அது கரும்பு கங்கா: மனமில்லையேல் வேம்பு என்று கூறினாள். தன்னை மீண்டும் கேலி செய்வதைத் தெரிந்துகொண்ட நடனம், “பாய்ந்து வருகுதே பாம்பு” என்று கூறினாள். பாம்பு என்றதும் கங்காபாலா, பயந்து ‘எங்கே? எங்கே?’ என்று அலறினாள். நடனம் சிரித்துக்கொண்டே, “பதத்திலே பாம்பு, நிசத்தில் அல்ல” என்று கூறிக் கேலி செய்தாள். எல்லோரும் கைகொட்டி நகைத்தனர். கங்காபாலா வெட்கிக் தலைகுனிந்தாள். அதே சமயம் ‘கணீர் கணீர்’ என்று அந்தப்புரத்து மணி அடிக்கப்பட்டது. ‘ஏன்? என்ன விசேஷம்? மணி அடித்த காரணம் என்ன?’ என்று கூறிக்கொண்டே பாவையர் அந்தப்புரத்தை நோக்கி ஓடினர்.‘வேங்கையைக் கண்டால் பயமிருக்காதோ?’ “வேலிருக்கும் போது!” “சிறத்தை சீறுமாமே?” “ஆமாம்; சிரித்துக்கொண்டே அதைத் துரத்திப் பிடிப்பேன்!” “கண்ணாளா! காட்டிலே நாட்டிலுள்ளோருக்கு என்ன வேலை? ஏன் இந்த வேட்டை? மன்னன் மனமகிழ மதுர கீதம் கேட்கலாம், நடனம் காணலாம்; மிருக வேட்டையாடி ஆபத்தை அணைத்துக் கொள்வதிலே ஓர் ஆனந்தமா?” “வீரருக்கு வேட்டை வெண்ணிலாச் சோறு! வெஞ்சமரே விருந்து! தோட்டத்துப்பூவைத் தொட்டுப் பறித்துக் கொண்டையில் செருகும் கோதையர் களிப்பதுபோல், வேலால் வேங்கையைக் குத்திக் கொன்று, அதன் தோலையும் நகத்தையும் எடுத்து வரும்போது எமக்குக் களிப்பு. “ஆபத்தான விளையாட்டு.” “அஞ்சாதே அஞ்சுகமே! வீரரின் ஆரம்பப்பள்ளி அதுதான்.” “எனக்கென்னமோ, நீங்கள் எவ்வளவு சொன்ன போதிலும் நெஞ்சிலே துடிப்பு இருக்கிறது.” “சிற்றிடையே! சோகிக்காதே, சுந்தர முகத்தின் சோபிதம் சிதைகிறது, உன் புன்னகையை எனக்குத் தா, நான் புறப்பட வேண்டும்.” “புன்னகை போதுமா?” “வள்ளல்கள், கேட்டதற்கு மேலும் தருவர், தேவீ! நீ உன் பக்தனுக்கு வரந்தர மறுப்பாயா?” “எவ்வளவு சமர்த்தான பேச்சு! சரசத்தில் நீரே முதல் பரிசு பெறுவீர்.” “உண்மை! உன்னைப் பெறும் என்னை, ஊரார் அங்ஙனமே கருதுகின்றனர். “பூங்காவில் இவ்விதம் பேசி மகிழ்வதை விட்டுப், ‘புறப்படுகிறேன் புலிவேட்டைக்கு’ என்று கூறுகிறீரே! நெஞ்சிலிரக்க மற்றவரே! கொஞ்சுவதை விடும்.” “வஞ்சி! வதைக்காதே, நேரமாகிறது. நினைப்பிலே ஏதேதோ ஊறுகிறது.” “ஊறும், ஊறும். ஊஹும், அது முடியாது, நடவாது, கூடாது, என்ன துணிச்சல்! என்ன சை! எவ்வளவு ஆனந்தம்!” “அணுச் சஞ்சலமேனும் இல்லாத இடம்!” “கீதாமா?” “யாழின் நரம்புகள் தடவப்பட்டபின், இசை விழாதோ!” “அரச அவையிலே புலவராக அமரலாம் நீர்!” “வேண்டாமம்மா! புலவர்கள் தொழில்கெட்டே விட்டது. முன்பு நம் நாட்டுப் புலவர்கள், ஓடும் அருவி, பாடும் குயில், ஆடுகின்ற மயில், துள்ளும் மான், மலர்ச்சோலை, மாது உள்ளம் முதலியன பற்றிப் பாடி மகிழ்வித்தனர். இப்போதோ, மச்சாவதாரமாம், மாபலி காதையாம், ஏதேதோ கதைகளையன்றோ கூறி வாழ்கின்றனர்; அந்த வேலை எனக்கு ஏன்?” “நாதா! நீர் என்ன, அவைகளை நம்பவில்லையா. நமது மன்னர்கள், அந்தக் காதைகளைக் கடவுள் அருள் பெறக் கேட்கின்றனரே! நாடு முழுதும் நம்புகிறதே, உமக்கு அது பிடிக்கவில்லையோ?” “காதுக்கு இனிய கற்பனை என்று, புரட்டரின் பொன்மொழிகளுக்கு நம் நாடு இடந்தந்துவிட்டது. குயிலி! அதை எண்ணுகையில் நெஞ்சங் குமுறுகிறது. நாட்டவரின் நாட்டம் இப்போது மண்ணில் இல்லையே, விண்ணிலன்றோ சென்றுளது.” “உண்மை! அங்குதானே, தேவர் வாழ்கின்றனர்; மூவர் உறைகின்றனர்!” “தேவரும், மூவரும் தேன் பூசிய நஞ்சு! விண், வெளி! ஆங்கு உலகம் கற்பிப்பவன் ஓர் சூதுக்காரன். அதை நம்புகிறவன் ஏமாளி!” “எது எப்படியோ கிடக்கட்டும் என் துரையே! எனக்குத் தேவரும் மூவரும் நீயே! “வானமுதம் நீ!” “பார்த்தீர்களா! நீரே இப்போது தேவாமிருதம் என்று, அந்தக் கதையை நம்பித்தான் கூறுகிறீர்?” “நம்பிக்கையல்ல! என் நரம்பிலும் அந்த வினை மெல்ல மெல்லப் பரவி வருகிறது. அதினின்று நம்மவரில் தப்பினோர் மிகச் சிலரே. இனி வருங்காலத்திலே இந்த நஞ்சு, நந்தமிழ்நாட்டை என்ன பாடுபடுத்துமோ அறியேன். அன்று நம்மவர் வாழ்ந்ததற்கும் இன்று நாம் இருப்பதற்கும் வித்தியாசம் அதிகமாகத்தான் இருக்கிறது. எங்கிருந்தோ இங்கு குடிபுகுந்து போரிடவோ, பாடுபடவோ இசையாமல் பொய்யுரையை மெய்யென்றுரைத்து வாழும் ஆரியருக்கு, அரச அவையிலே இடங் கிடைத்துவிட்டது. மன்னன் எவ்வழியோ அவ்வழியே மக்களும்!” “பாவம்! ஆரியர்கள் என்ன செய்கிறார்கள்? ஏதோ வேள்வி என்றும் வேதமென்றும் கூறிக் கொண்டுள்ளனர். பசுபோல் இருக்கின்றனர். படை எனில் பயந்தோடுகின்றனர். நாம் இடும் பிச்சையை இச்சையுடன் ஏற்று, கொச்சைத் தமிழ் பேசி ஊரிலே ஓர் புறத்தில் ஒதுங்கி வாழ்கின்றனர். எங்கோ உள்ள தமது தேவனைத் தொழுது, உடல் இளைத்து உழல்கின்றனர். நம்மை என்ன செய்கின்றனர்?” “நம்மை ஒன்றும் செய்ய முடியவில்லை! மனமிருக்கிறது மார்க்கம் இன்னமும் கிடைக்கவில்லை. நாட்டிலே வீரருக்கே இன்னமும் இடமிருக்கிறது. நாட்கள் பல போயினபின், நம்மவர் நிலை யாதாமோ அறியேன். புலி எலியாகுமோ? தமிழர் தாசராவரோ என்றும் நான் அஞ்சுகிறேன். “வீண் பீதி! ஆரியர் ஏதும் செய்யார், நாதா! பலருக்குத் தூதுவராக இருந்து, இருதய கீதத்தை ஒலிவிக்கச் செய்கின்றனர். அவர்கள்மீது ஏனோ உமக்கு வீணான ஓர் வெறுப்பு!” “கண்ணே! கவலை தரும் பேச்சை விடுவோம். காலம் கடுகிச் செல்கிறது. நான் போகுமுன் கனி ரசம் பருகினால், என் களைப்பு தீராதோ! ஏதோ, இப்படி துடியிடை துவளத் துள்ளாதே மானே! விட மாட்டேன்! இந்த மானைப் பிடிக்காவிட்டால், மதம் பிடித்த யானையையும், மடுவிலே மறையும் புலியையும் வேட்டையாட முடியுமோ? நில்! ஓடாதே!!” “அதோ, காலடிச் சத்தம். ஆமாம்! அரசிளங்குமரிதான். சுந்தரிதேவியின் சதங்கை ஒலிதான் அது. போய்வாரும் கண்ணாளா! ஜாக்கிரதையாக வேட்டையாடும். மான் வேட்டையல்ல, மங்கையர் வேட்டையுமல்ல, புலி, கரடி, காட்டுப்பன்றி முதலிய துஷ்ட மிருகங்கள் உலவும் காடு.” “இளைய ராணியாரின் குரலா கேட்கிறது?” “ஆமாம்! அரசிளங்குமரி அம்மங்கையின் குரல்தான்!” “பூங்காவிலே நம்மைக் கண்டுவிட்டால்?” “நாம் இதுவரை அரசிளங்குமரியின் கண்களில் படவில்லை, ஆனால் காதுக்கு விஷயம் எட்டித்தான் இருக்கிறது!” “யார் சொல்லிவிட்டார்கள்?” “சொல்வானேன்? என் கண்களின் மொழியை அவள் அறியாது போக முடியுமா? அம்மங்கையும் ஒரு பெண்தானே! அதோ கூப்பிடுகிறார்கள். என்னைத்தான். பூக்குடலை எங்கே? கொடுங்கள் இரு இதோ வந்தேனம்மா! வந்துவிட்டேன்! இது இருபத்திஏழாவது முத்தம்! போதும் காலடிச் சத்தம் கனமாகிவிட்டது விடும், புறப்படுகிறேன். “மற்றதைப் பிறகு மறவாதே, நான் வருகிறேன். தஞ்சமடைந்தவனைத் தள்ளமாட்டாய் என்று என் நெஞ்சு உரைக்கிறது. “சரி! சரி! வேட்டை முடிந்ததும் விரைந்து வாரீர்; மாலை தொடுத்து வைப்பேன்.” “மதியே! மறவாதே, நான் வருகிறேன்.” “குலோத்துங்கச் சோழன் அரண்மனைப் பூங்காவிலே நடந்த காதற்காட்சி, நாம் மேலே தீட்டியது. அந்தப்புரத்திலே, அரசிளங்குமரி அம்மங்கைத் தேவியின் ஆருயிர் போன்றிருந்த தோழி, தன் காதலனைக் காண, பூங்கா புகுந்தாள். அவளுக்காக மாமரத்தடியிலே காத்துக் கிடந்த வீரன், தென்றல் கண்டவன் போல், தாவிக் குதித்தெழுந்து தையலை ஆரத் தழுவினான். கையிலிருந்த பூக்குடலை தரையில் விழ, கூந்தல் சரிய, கோதை குதூகலமாகத் தன் காதலனைக் கட்டித் தழுவிக் கொண்டாள். அவர்கள் கிளப்பிய ‘இச்’சொலி கேட்ட பறவைகள், மரக்கிளைவிட்டு மற்றோர் கிளைக்குத் தாவின. “வானம் துல்லிய நிறத்தோடு விளங்கிற்று. கதிரோன் ஒளிப்பிழம்பாக மட்டுமே இருந்தான், வெப்பத்தை வீசும் வேளை பிறக்கவில்லை. காலை மலர்ந்தது, மாந்தர் கண் மலர்ந்த நேரம். மாலை மலரும் காதல் அரும்பாகி இருந்தது எனினும், என்று அவனுக்குக் காலையிலேயே மலர்ந்து மாலையில் அவன் வீடு திரும்ப நெடுநேரம் பிடிக்கும். வேட்டைக்குச் செல்கிறான் அன்று! வேட்டைக்குப் புறப்படுமுன், வேல்விழியாளைக் கண்டு, விருந்துண்டு போக மனம் தூண்டியது. கால்கள் வேலிகளையும் முட்புதரையும் தாண்டின. கள்ளத்தனமாக உள்ளே நுழைந்தான். காவலன் காணவில்லை என்பது அவன் நினைப்பு. காவலனுக்குக் கண்ணுமுண்டு, கருத்துமுண்டு! எனவே காதலர் கூடிப் பேசுவதைக் கண்டுங்காணாதவன் போல், பலமுறை இருந்ததுபோல் அன்றும் இருந்தான். மேலும், அந்த வஞ்சி அரசிளங்குமரியின் ஆருயிர்த்தோழி குணவதி. கோல மயில் சாயலும், கிளி மொழியும், கனக நிறமும், கருணை உள்ளமும் பெற்ற பண்பினள். அவளது காதலன் வீரர்க்கோர் திலகம். மன்னன் குலோத்துங்கனின் குதிரைப் படைத்தலைவருள் ஒருவன். வீரத்தாலேயே, இளம்பருவத்திலேயே அந்த உயர் நிலை பெற முடிந்தது. தொண்டைமானிடமிருந்து ‘தோடா’ பரிசு பெற்றவருள் அவன் ஒருவன். எனவே இவ்விருவரும் சந்தித்துப் பேச, மன்னனின் பூங்காவை மன்றலாக்கிக் கொண்டது கண்டு காவற்காரன் களித்தானேயன்றிக் கோபித்தானில்லை. அவர்கள் சந்திக்கும்போது, அவன் உலகமே காதல்மயமாக இருப்பதை எண்ணுவான்! குக்குக்கூவெனக் குயில் கூவி, காதற்கீதத்தை அள்ளி அள்ளி வீசுவதை நினைப்பான். நெடு நாட்களுக்கு முன்பு, நீர் மொள்ள அருவிக்கு வரும் நீலநிறச் சேலைக்காரி வேலாயியைத் தான் கண்டதும், கனைத்ததும், அவள் முதலில் மிரண்டதும், பிறகு இணங்கியதும் ஆகிய பழைய காதல் நிகழ்ச்சியை எண்ணுவான். “நரைத்தேன் இன்று. ஆனால் நானும் முன்னம் நாடினேன், பாடினேன், ஆடினேன் அணங்குக்காக” என்று மனதில் எண்ணிக் கொள்வான். தோட்டத்து வாசலிலே நின்று, யாரும் உள்ளே நுழையாதபடி பார்த்துக்கொள்ளும் தொழிலைவிட்டு, காதலரைக் காண யாரும் புகாதபடி காவலிருப்பான். இதனைக் காதலர் அறியார். அவர் தம்மையன்றி வேறெதைத்தான் அதுகாலை அறிதல் முடியும்! அரசிளங்குமரியின் குரல் கேட்டு, அரைகுறையாயிற்று அன்று காதலர் விருந்து. விரைந்தோடி வந்த தோழியைக் கண்ட அம்மங்கை, கோபித்துக் கொண்டு, “காலமும் அறியாய், இடமும் தெரியாய் கடமையையும் மறந்தாய்” என்று கடிந்துரைத்தாள். தோழி தலைகுனிந்து நின்றாள். பூக்குடலை காலியாகவே இருந்ததைக் கண்ட மற்றத் தோழியர், “மனம் பறிக்கும் வேலையிலே மலர் பறிக்க மறந்தாள்” என்று கூற அதுவரை கோபித்தது போல் பாவனை செய்த அரசிளங்குமரி, கலீர் எனச் சிரித்து, தோழியின் கன்னத்தைக் கிள்ளி, ‘கதிரோன் வராவிட்டால் தாமரை மலராது என்பார்களே, அதுபோல் உன் அன்பன் வராவிட்டால், உன் முகம் மலருமோ!’ என்று கேலி செய்தாள். தோழி அப்போதுதான் பயந்தொளிந்தாள். பயம் போனதும் நாணம் ‘நான் உன்னை விடுவேனா?’ என்றுரைத்துக் கொண்டே அவளைப் பிடித்துக் கொண்டது. “வேட்டையாடக் காட்டுக்குப் போகக் கிளம்பியவன் இங்கே வந்தது ஏனடி?” என்று அரசிளங்குமரி ஒரு தோழியைக் கேட்க, அவள் “இவளைக் கண்டு மானென்று மயங்கி வந்தான் போலும்!” என்று சொல்லிச் சிரித்தாள். “வேட்டைக்குக் கணைகள் வேண்டும்; இங்கும் கணைவிடு காட்சிதான் நடந்தது.” என்று கிண்டல் செய்தாள் அரசகுமாரி. “ஆமாம் தேவி! காதலுக்குச் செலுத்தும் கணைகள் காட்டிலே! காதலுக்குக் கணைகள் காட்டில் அல்லவே!” என்றாள் குறும்புக்காரத் தோழி. “ஆமாம்! காட்டில் அல்ல! நம் வீட்டுத் தோட்டத்தில்” என்று கூறிக்கொண்டே, அம்மங்கை காதற்குற்றவாளியைக் கைப்பிடித்திழுத்துக் கரகரவெனச் சுற்றி ஆடினாள், களித்தாள். அம்மங்கையும் அதன் வயப்பட்டாளோ, என்று மற்றத் தோழியர் சந்தேகித்தனர்.” யார் கண்டார்! யார் காணவல்லார்! காதற் கணைகள் அம்மங்கையை மட்டும் விட்டுவிடுமோ! அதன் சக்தியின் முன்பு, பட்டத்தரசியாக வேண்டியவரும் தட்டுக்கெட்டுத் தடுமாறித்தானே தீருவர்! கண்டவர் அஞ்சிடக் கடும் போரில் தன்னிகரற்ற குலோத்துங்கனின் குமரியானாலும், குமரன் தோன்றிக் குறுநகை புரியின் குளிரும் விழியுடன் கொடியெனத் துவண்டு சாயத்தானே வேண்டும்! “நடனராணி! கூச்சம் இப்போதிருந்து பயன் என்ன? வா, பந்தாடுவோம்” என்று அரசிளங்குமரி கூறினாள். நடனராணி என்ற பெயரே நாம் குறிப்பிட்ட தோழியுடையது. நடனத்திலே மிக்கக் கீர்த்தி வாய்ந்தவள். நாட்டினர் அதுபற்றியே, நடனராணி என்று அவளை அழைத்தனர். பந்தாடினர் பாவையர். நடனராணியை விட்டுப் பிரிந்த அவள் காதலன் வீரமணியின் மனம் படும்பாடு, அவர்களாடும் பந்து படாது என்னலாம். கிளியைக் கண்டால் அவள் மொழி நினைவு! குயிலைக் கண்டால் அவள் கீதக் கவனம்! மயிலைக் கண்டால் அவளது நடன நேர்த்தியின் கவனம் அவன் நெஞ்சில் ஊறும். பொல்லாத பறவைகள், சும்மாவும் இல்லை. ஜோடி ஜோடியாகப் பறப்பதும், பாடுவதும், உண்பதுமாக உல்லாசமாகவே இருந்தன. ஊராள்வோன் உல்லாசத்துக்காக வேட்டைக்குக் கிளம்ப, வீரமணியும் உடன் சென்றான்! வேட்டைக்காரர் கிளப்பிய பறையொலியும், ஊதுகுழலொலியும், குதிரைக் குளம்பொலியும், வீரர் முழக்கொலியும் கேட்டு, பேடைக் குயிலும், மாடப் புறாவும், கோல மயிலும், கொக்கும், வக்காவும் பயந்து அலறிப் பறந்தோடின! புதர்களிலே சலசலவெனச் சத்தம் கிளம்பிற்று. தொலைவிலே காட்டு மிருகங்கள் உறுமுவது கேட்டது. மோப்பம் பிடித்துச் செல்லும் நாய்கள், வாலை மடக்கி தலøயைக் குனிந்து தரையை முகர்ந்தன! இடையிடையே புலி சென்ற அடையாளம் காணப்பட்டது. வீரர்கள் இன்று நல்ல வேட்டைதான் என்று களித்தனர். மன்னன் குலோத்துங்கனும் வீரமணியும் மட்டுமே விசாரத்திலாழ்ந்திருந்தனர். வீரமணியின் விசாரம், காதலியிடம் சரசச் சமர் புரிவதை விட்டு, சத்தற்ற வேட்டைக்கு வந்தோமே என்பதனால்! குலோத்துங்கனோ, பகை வேந்தர்களை வேட்டையாட சமயம் கிடைக்கவில்லையே, பயந்தோடும் மிருகங்களைத் தானே வேட்டையாட வேண்டி இருக்கிறது என்று கவலை கொண்டான். குலோத்துங்கச் சோழனின் வீரப்பிரதாபத்தை, வெஞ்சமர் பல நிரூபித்துவிட்டதால் வேந்தர் பலரும் விழியில் வேதனை தோன்றிட வாழ்ந்தனர். பறைஒலிகேட்டு அன்று மிருகங்கள் பயந்தோடியும், பதுங்கிக் கொண்டதும் போலவே, பல மன்னர்கள் குலோத்துங்கனின் படை ஒலி கேட்டஞ்சிப் பயந்துப் பதுங்கினர். மன்னனின் படைத்தலைவன், மாவீரன் கருணாகரத் தொண்டைமான் “கண்டதுண்டமாக்கிக் கழுகுக்கிடுவேன், காயும் எதிரிகள் களத்திலே நிற்பின்” என்று முழங்கினான். எவரே எதிர்ப்படுவர்! உயிரிழக்க, அரசிழக்க, எவரும் ஒருப்படாரன்றோ! எனவே குறுநில மன்னரும் குலோத்துங்கனுக்கு அடங்கியே வாழ்ந்தனர்! தோள் தினவெடுத்தன, வேட்டை ஒரு சிறு பொழுதுபோக்காகுமென்றே மன்னன் புகுந்தான் காட்டிலே. தினவெடுக்கும் உள்ளத்தைத் திருத்தும் நிலைகாணா வீரமணி, மன்னன் பின் சென்றான், மனதை மங்கை பால் விட்டே வந்தான், வழி நடந்தான். இயற்கை எழில் செயற்கைப் பூச்சின்றி பூரித்துக் கிடக்கும் காட்டினுள்ளே, மன்னன் குலோத்துங்கன் தன் பரிவாரங்களுடன் வேட்டைக்காகப் புகுந்த காட்சியும், குதிரை மீதமர்ந்து பாய்ந்து சென்ற வீரர்களின் வருகை கண்ட துஷ்ட மிருகங்கள் மிரண்டோடினதும் கண்ட வீரமணிக்கு, குலோத்துங்கன், இளவரசாக இருந்தபோது, வடநாடு சென்ற காலையில், சோழநாட்டிலே சதிகாரர் கூடிக்கொண்டு, குலோத்துங்கனுக்கென்று கங்கை கொண்ட சோழன் குறித்திருந்த மணிமுடியை, கங்கைகொண்ட சோழனுடைய மகன் அதிராசேந்திரனுக்குச் சூட்டியதும், அதுபோது சோழமண்டலமே காட்டுநிலை அடைந்ததும், பிறகு, வாகைசூடி வடநாட்டிலிருந்து குலோத்துங்கன் திரும்பியதும் சதிகாரர் பதுங்கிக் கொண்டதுமான சம்பவமும், சமரும், காட்சியும் நினைவிற்கு வரவே புதர்களிலே மறையும் புலிக்குட்டிகளையும், மரப்பொந்துகளில் ஓடி ஒளியும் மந்திகளையும், வீறிட்டு அலறி ஓடும் வேங்கையையும், உறுமிக்கொண்டே ஓடும் காட்டுப்பன்றியையும், மிரண்டோடும் மான் கூட்டத்தையும் கண்டு களித்தான். காட்டிலே கணைகள் சரமாரியாய்க் கிளம்பின. ஆரவாரமும், ஆர்ப்பரிப்பும் பறை ஒலியும் பலவுமாகக் கலந்து காட்டிலே கலக்கத்தை உண்டாக்கிற்று. வேட்டை விருந்தை மன்னருக்குத் தந்த காடு, வனப்பு வாய்ந்தது. வேங்கை, குறிஞ்சி, தேக்கு, கமுகம், புன்னாகம், முதலிய மரங்கள் நிறைந்து காணப்பட்டன. உலர்ந்து காணப்பட்ட ஓமை மரங்களும், புகைந்து கிடந்த வீரை மரங்களும், காரைச் செடியும், சூரைச் செடியும் காண்போருக்கு இயற்கையின் விசித்திரத்தை விளக்கின. சந்தன மரங்கள் ஓர் புறம், அதன்மீது தமது உடலை மோதி யானைகள் தேய்த்ததால் உண்டான மணம் ‘கம்’மென்று கிளம்பிற்று. இண்டங்கொடிகள் இங்குமங்குமாகச் சுருண்டு கிடந்தன. மரத்தின் வேரோடு வேர்போல் மலைப்பாம்புகள் உண்ட அலுப்பு தீரப் புரண்டுகிடந்தன. வாகையும் கூகையும், மூங்கிலும் பிறவுமான பல விருட்சங்கள் விண்முட்டுவோம் என்றுரைப்பதுபோல் வளர்ந்துகிடந்தன. சிற்சில இடங்களிலே குலைகுலுங்கும்வரை வாழையும் காணப்பட்டன. வீரர்கள் தமது கணைகளை விடவே, கரிக்குருவியும் கானாங்கோழியும், காடையும், கிள்ளையும், மயிலும், மாடப்புறாவும், உள்ளான், சிட்டு, கம்புள், குருகு, நாரை, குயில் முதலிய பறவைகள், பயந்து கூவி, பல்வேறு திசைகளிலே பறந்தன. பறக்கும்போது பலவித ஒலி கிளம்பியது, புதியதோர் பண் போன்றிருந்தது. கானாறு ஒருபுறம், காட்டெருமைக் கூட்டம் மற்றோர்புறம், யானை ஒரு புறம், புலி கரடி வேறோர்புறம், வீறுகொண்ட மரங்களிலிருந்து கிலிகொண்டு சிறகை விரித்துப் பறந்தன பெரும் பறவைகள்! குரங்குக் கூட்டம் கீச்செனச் கூவி, கிளை விட்டுக் கிளை தாவி, வீரரின் வாள் வேல் ஒலியால் கிலி கொண்டு குதித்தோடின. வால் சுழற்றின வேங்கைகள், குள்ளநரிகள் ஊளையிட்டன. முட்புதர்களைத் தாண்டிக்கொண்டு சிறுத்தைகள் சினந்தோடின. கருங்கற்களிலே, பிலங்கள் தேடின பாம்புகள், இத்தகைய காட்சிகளைக் கண்டு களித்து வில் வளைத்து, கணைகள் தொடுத்து, விரைந்தோடி வாள்கொண்டு தாக்கி, வேல் எறிந்து வேங்கையையும் வேழத்தையும் வீழ்த்தி, வீர விளையாட்டிலே ஒரு நாள் பூராவும் கழித்தனர். மன்னரும் அவர் தம் பரிவாரமும், வேட்டையிலே கிடைத்த பொருள்களைச் சேகரித்து வீடு திரும்ப மன்னன் கட்டளை பிறக்குமென்று எண்ணிய வீரமணி பொழுது சாய்வதற்குள் ஊர் சென்றால் மீண்டுமோர்முறை பூங்காவிலே நடனராணியைக் கண்டு களிக்கலாம், காட்டிலே கண்ட காட்சிகளை, வேட்டையாடிய செய்திகளைக் கூறிடலாம் என்று கருதினான். மேலும் அவன் பக்குவமாக ஓர் பஞ்சவர்ணக் கிளியைப் பிடித்து வைத்திருந்தான், அதனை நடனராணிக்குத் தர விரும்பினான். ஆனால் அவன் எண்ணியது ஈடேறவில்லை. மன்னன் புதியதோர் கட்டளை பிறப்பித்தான். ‘புறப்படுக காஞ்சிக்கு’ என்று கூறிவிட்டான். புரவிகள் காவிரிக் கரைக் காட்டைக் கடந்து கச்சி செல்ல விரைந்தன. அன்று மாலை. அரசிளங்குமரி அம்மங்கையும், நடனராணியும், மற்றும் சில தோழியரும், வழக்கம் போல் களித்தாடிக் கொண்டிருந்தனர். நடனராணியின் உள்ளம், காட்டிலே; கணைவிடும் காதலன்மீதே இருந்தது. பலவகை விளையாட்டு பாவையர் ஈடுபட்டனர். பரிவாரங்களுடன் காட்டுக் காட்சிகளையும், இடையே உள்ள நாட்டுமாட்சியையும் கண்டுகளித்து கச்சிபோய்ச் சேருமுன்னம், மன்னன் வருகையை முன்கூட்டிக் கச்சிக் காவலனுக்குக் கூறிட, வீரமணியை விரைந்து முன்னாற் செல்லுமாறு மன்னன் கட்டளையிட்டான். மன்னன் மொழிக்கு மாற்றுமொழி கூறல் எங்ஙனம் இயலும்? பஞ்சவர்ணக் கிளியை, தோழனொருவனிடம் தந்து, அதனைத் தன் காதலியிடம் தந்து. தான் கச்சி நகருக்குக் கடுகிச் செல்லுவதைக் கூறுமாறு வேண்டிக்கொண்டான். செவி மந்தமுள்ள அத்தோழன், யாரிடம் கிளியைத் தருவது என்பதைச் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை. “நான் மணம் செய்துகொள்ள இருக்கும் அம் மங்கையை நீ அறியாயோ?” என்று வீரமணி அவசரத்துடன் கேட்க, தோழன் “அம்மங்கையை அறியேனா!” என்று கூறிக் கொண்டே கிளியைப் பெற்றுக் கொண்டான். அவன் மன்னன் குமரி அம்மங்கைத் தேவியையே, வீரமணி குறிப்பிடுவதாகக் கருதினான். அவனையே மன்னன் அழைத்து, “ஏ! மருதா! விரைந்து நம் நகர் சென்று, ஏழிசை வல்லியாரைச் சேடியருடன் கச்சி வரச்சொல்லு; நாம் அங்குச் சின்னாட்கள் தங்க எண்ணியுள்ளோம்” என்று கூறிட, மருதன் தலைநகர் புறப்பட்டான். பஞ்சவர்ணக் கிளியோடு மருதன் உறையூர் நோக்கியும், கவலையுடன் வீரமணி கச்சி நோக்கியும் விரைகின்ற வேளையிலே, மன்னன் குமரி அம்மங்கை தோழியருடன் பூங்காவிலே விளையாடிக் கொண்டிருந்தாள். பொழுது சாய்கிறது; போனவர் திரும்பக் காணோமே என்று நடனராணி ஏக்கத்துடனேயே விளையாட்டில் விழியும், வீரமணியிடம் மனமும் செலுத்திக் கிடந்தாள். நடனராணி, பதுமா என்ற பரத்தையின் வளர்ப்புப்பெண். வனப்பும், வளம்பெற்ற மனமும், இசைத்திறனும், நாட்டியக் கலைத்திறனும் ஒருங்கே பெற்றவள். மன்னன் மனமகிழவும், மற்றோர் கொண்டாடவும் ‘மாதவியோ’ என்று கலைவல்லோர் போற்றவும் வாழ்ந்து வந்தாள். அவளது அரிய குணம், அந்தப்புரத்துக்கு எட்டி, அம்மங்கையின் கருணைக்கண்கள் நடனராணிமீது செல்லும்படிச் செய்தன. நடனராணி அம்மங்கையின் ஆரூயிர்த் தோழியானாள். பதுமா தன் வளர்ப்புப் பெண்ணின் மனப்பாங்கு, பரத்தையராக இருக்க இடந்தராததையும், பல கலை கற்று வாழவே பாவை விரும்புவதையும் அம்மங்கையிடம் கூற, “அதுவே முறை! இனி நடனராணியின் உறைவிடம் நமது அரண்மனையே” என்று கூறி, அவளைத் தன்னுடன் இருக்கச் செய்தாள். நடனராணியை வீரமணி நெடுநாட்களாகவே நேசித்து வந்தான். அவள் அரண்மனைக்கு வந்து சேர்ந்த பிறகு, அடிக்கடிச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. கண்கள் பேசின; கனிந்தது காதல். கண் கண்டவர் “சரியே” என்றனர். கேட்டவர் “முறையே” என்றனர். நடனராணியின் நற்குணம் நாடெங்கும் தெரியும். வீரமணியின் திறமும் வேந்தரும் மாந்தரும் அறிவர். “ஆற்றலும் அழகும் ஆரத்தழுவலே முறை” என்று ஆன்றோர் கூறினர். வீரமணியின் தாய் மட்டுமே “பரத்தையரிலேதானே என்பாலனுக்குப் பாவை கிடைத்தாள்? குன்றெடுக்கும் தோளான் என் மகன், குறுநில மன்னன் மகள் அவனுக்குக் கிடைக்காளோ?” என்று கவலையுற்றாள். ஆனால், வீரமணி, நடனராணியிடம் கண்ட கவர்ச்சியை அவனன்றோ அறிவான்! இருண்டு சுருண்ட கூந்தல், பிறைநுதல், சிலைப் புருவம், நெஞ்சைச் சூறையாடும் சுழற்கண்கள், அரும்பு போன்ற இதழ்கள், முத்துப் பற்கள், பிடிஇடை இவை கண்டு, கரும்பு ரசமெனும் அவள் மொழிச்சுவை உண்டு, கண்படைத்தோருக்குக் காட்சியென விளங்கும் நடனநேர்த்தியைக் கண்டு, மையல் கொண்ட வீரமணி நடனராணியிடம் நெருங்கிப் பழகியதும், சித்திரம் சீரிய குணத்தின் பெட்டகமாகவும் இருப்பதையும், கருத்து ஒருமித்தருப்பதையும் கண்டு, களிகொண்டு, “அவளையன்றிப் பிறிதோர் மாதைக் கனவிலுங் கருதேன்” என்று கூறிவிட்டான். மணவினையை முடித்துக்கொள்ளாததற்குக் காரணம், தாய் காட்டிய தயக்கமல்ல! தாய் தனயனுக்குக் குறுநில மன்னனின் மகள் தேடிட எண்ணினாள். தனயனோ, கோமளவல்லிக்கு மணவினைப் பரிசாக வழங்க குறுநிலம் தேடினான். அதற்காகக் கொற்றவனிடம் தான் கற்ற வித்தையத்தனையும் காட்டிச் சேவை புரிந்துவந்தான். நடனராணியின் வாழ்க்கை நல்வழியிலே அமைய இருப்பதுகண்டு, களித்து, பதுமா நிம்மதியாகவே நீங்கத் துயிலுற்றாள். பூங்காவிலே நடனராணி புதிதாகச் சேடியாக அமர்ந்த ஓர் ஆரியக் கன்னியிடம், தமிழர் சிறப்புப் பற்றி எடுத்துக் கூறிக் கொண்டிருந்தாள். கங்கைக் கரையிலே தனது இனத்தவர் கனல்மூட்ட ஓமத்தீ மூட்டுவதை ஆரியக்கன்னி உரைத்திட, நடனமணி “எம்மவரின் ஓமம் எதிரியின் படை வீட்டைக் கொளுத்துகையில் கிளம்பும்” என்றுரைத்து மகிழ்ந்தாள். “சகல கலை வல்லவளே! பேச்சு போதும், பந்தாடுவோம் இனி” என்று அம்மங்கை கூறிட, பாவையர் பந்தாடலாயினர். உற்சாகமற்றிருந்த நடனராணியின் உள்ளத்தையும் பந்தாட்டம் குளிரச் செய்தது. கைவளைகள் ‘கலீல் கலீல்’ என ஒலிக்க, காற்சிலம்புகள் கீதமிட, கூந்தல் சரிய, சூடிய பூ உதிர, மகரக்குழை மானாட்டமாட, இடை திண்டாட, ‘மன முந்தியதோ, விழி முந்தியதோ’. கரம் முந்தியதோ’ என்று காண்போர் அதிசயிக்கும் விதமாக, பாவையர் பந்தடித்துக் களித்தனர். பூங்கொடிகள் துவளத் தொடங்கின. வியர்வை அரும்பினது கண்ட மன்னன் மகள் “பந்தாடினது போதுமடி, இனி வேறோர் விளையாட்டுக் கூறுங்கள். ஓடாமல் அலுக்காமலிருக்க வேண்டும்” என்றுரைத்திட, நடனராணி “பண் அமைப்போமா?” என்று கூற, ஆரிய மங்கை “பதம் அமைப்போம்” என்று கூற ‘சரி’ என இசைந்தனர். ஒருவர் ஒரு பதத்தைக் கூற அதன் ஓசைக்கேற்பவும் தொடர்பு இருக்கவுமான பதத்தை மற்றவர் இசையுடன் உடனே அமைத்திட வேண்டுமென்பது அவ்விளையாட்டு. சிந்தனைக்கே வேலை. சேயிழையார் சுனையில் துள்ளும் மீன்போல், சோலையில் தாவும் புள்ளிமான் போல் தாவாமல் குதிக்காமல் விளையாட வழி இதுவே. அம்மங்கை துவக்கினாள், பதம் அமைக்கும் விளையாட்டினை. நடனராணியும் ஆரிய மங்கை கங்காபாலாவும் அதிலே கலந்துகொண்டனர். மற்றையத் தோழியர் வியந்தனர். அம்மங்கை: நாட்டி நடனராணி: இணைவிழி காட்டி கங்கா: இளையரை வாட்டி அம்மங்கை: மனமயல் மூட்டி நடனராணி: இசை கூட்டி கங்கா: விரகமூட்டி இதைக் கேட்டதும் நடனராணி ‘விரகமூட்டி’ என்றதற்குப் பதில் ‘இன்பமூட்டி’ என்று கூறுவதே சாலச் சிறந்தது என்றாள். “விரகம் விசாரம்” அது வேண்டாமடி கங்கா. அது நடனாவுக்கு நோயூட்டும்; ‘வேறு கூறு’ என்று அம்மங்கை கேலி செய்தாள். “எனக்கொன்றுமில்லயைம்மா, ஆகட்டும் கங்கா, நீ துவங்கிடு இப்போது” என்றாள் நடனம். கங்கா: சரசமொழி பேசி அம்மங்கை: வளை அணி கை வீசி நடனம்: வந்தாள் மகராசி! என்று கூறி, கங்காபாலாவைச் சுட்டிக் காட்டிச் சிரித்தாள். “நீங்கள் இருவருமே பதம் அமையுங்கள். நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். பார்க்கலாம் உங்கள் சமர்த்தை!” என்று அம்மங்கை கூறினதால், ஆரிய மங்கையும் ஆடலழகியும் பதமமைக்கலாயினர். நடனம்: மாலையிலே கங்கை: மலர்ச்சோலையிலே நடனம்: மாங்குயில் கூவிடும்போதினிலே கங்கை: மதிநிறை வதனி! நடனம்: இதழ்தரு பதனி கங்கா: பருகிடவரு குமரன் நடனம்: குறுநகையலங்காரன் கங்கா: குண்டல மசைந்தாட நடனம்: கோமளம் விரைந்தோட கங்கா: மயில்கள் ஆட நடனம்: மகிழ்ந்த நாடா “சரியான மொழி! நடனத்தின் நிலை இதுதான் இப்போது” என்று அரசகுமாரி கேலி செய்தாள். “கடைசியில் என்னைக் கேலி செய்யத்தானா தேவி இந்த விளையாட்டு?” என்றாள் நடனராணி. “கேலியல்லவே இது” என்று கூறிக் கன்னத்தைக் கிள்ளி காவலன் குமரி “மற்றொன்று ஆரம்பி பாலா” என்று பணிந்தாள். கங்கா: பூங்காவில் பார் அரும்பு நடனம்: பூவையருக்கே அது கரும்பு கங்கா: மனமில்லையேல் வேம்பு என்று கூறினாள். தன்னை மீண்டும் கேலி செய்வதைத் தெரிந்துகொண்ட நடனம், “பாய்ந்து வருகுதே பாம்பு” என்று கூறினாள். பாம்பு என்றதும் கங்காபாலா, பயந்து ‘எங்கே? எங்கே?’ என்று அலறினாள். நடனம் சிரித்துக்கொண்டே, “பதத்திலே பாம்பு, நிசத்தில் அல்ல” என்று கூறிக் கேலி செய்தாள். எல்லோரும் கைகொட்டி நகைத்தனர். கங்காபாலா வெட்கிக் தலைகுனிந்தாள். அதே சமயம் ‘கணீர் கணீர்’ என்று அந்தப்புரத்து மணி அடிக்கப்பட்டது. ‘ஏன்? என்ன விசேஷம்? மணி அடித்த காரணம் என்ன?’ என்று கூறிக்கொண்டே பாவையர் அந்தப்புரத்தை நோக்கி ஓடினர்.    பகுதி - 2   அம்மங்கையும், நடனராணியும் அரண்மனைக்குள் சென்றனர். குலோத்துங்கச் சோழனின் தேவி, தியாகவல்லி அவர்களை எதிர்கொண்டழைத்து, “மங்கா! மன்னர் காஞ்சீபுரம் போகிறாராம். என்னையும் வரச் சொன்னார். காலையில் புறப்படுகிறேன். நீயும் வருகிறாயோ?” என்று கேட்க, “நான் வரவில்லை அம்மா” என்று அம்மங்கை கூறிவிட்டாள். செய்தி கொண்டுவந்த மருதன், அம்மங்கையை வணங்கிவிட்டு, “தேவீ! இதோ இந்தப் பஞ்சவர்ணக்கிளியை வீரமணி தங்களிடம் தரச் சொன்னார்” என்று கூறிக் கிளியைத் தர, அம்மங்கை ஆச்சரியப்பட்டு, நடனராணியை நோக்கியபடி, “கேட்டாயோ நடனம், வீரமணி கிளியை எனக்குத் தரச் சொன்னானாமே” என்று கூறிட, நடனம் “நாட்டிலேயும் காட்டிலேயும் கிடைக்கும் எந்த உயர்தரப் பொருளும் தங்களுக்குக் குடிபடைகள் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள்” என்று கூறினாள். ஆனால், நடனராணிக்குக் கொஞ்சம் மனக்கஷ்டந்தான். இதைத் தெரிந்துகொண்டாள் ஆரியப்பெண் கங்காபாலா! ஆகவே, இருவரிடையேயும் விரோதத்தை மூட்டிவிட வழி கிடைத்துவிட்டது என்று எண்ணிக் களித்தாள். நடனராணி இருக்கும்வரை, அரண்மனையிலே தனக்குச் சரியான செல்வாக்குக் கிடைக்காது என்று கங்காபாலா கருதினாள். அம்மங்கையிடம் தனக்குச் செல்வாக்கு ஏற்பட்டுவிட்டால், ஆரிய குலத்துக்கே சோழ மண்டலத்திலே உத்தியோகம் உயர்ஸ்தானம் கிடைக்கும்படி செய்யமுடியுமல்லவா! பஞ்சவர்ணக்கிளியுடன், அம்மங்கை படுக்கையறை சென்று, தங்கக் கூண்டிலே கிளியை விட்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில், நடன ராணியிடம், பாலா “நடனம்! என்னடி பரிசு வேறு யாருக்கோ விழுந்துவிட்டது போலிருக்கிறதே. உனக்கல்லவா கிளியை அவர் அனுப்பியிருக்க வேண்டும். எதற்காக அரசகுமாரிக்கு அனுப்பினார்?” என்று கேட்டாள். அவள் பேச்சு, கோபத்தையும் ரோஷத்தையும் நடனத்திடம் மூட்ட வேண்டுமென்று இருந்தது. இந்தச் சூதை ஒருவாறு தெரிந்துகொண்ட நடனராணி, பாலாவின் நாவை அடக்கினாள். மந்தச் செவியன் மருதன் செய்த இந்தச் சங்கடத்தை ஏதுமறியாத வீரமணி, நடனத்தை எண்ணியபடி கச்சி சென்று, மன்னன் வருகிறார் என்ற செய்தியை, கச்சிநகர்க் காவலனிடம் கூறிவிட்டு, மன்னனை வரவேற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதிலே ஈடுபட்டிருந்தான். மன்னன் தன் பரிவாரங்களுடன், காட்டைக் கடந்து, கச்சி நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தான். உறையூரிலிருந்து தியாகவல்லி தன் சேடியருடன், மன்னன் கட்டளைக்கிணங்கக் கச்சிநகர் செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தாள். அம்மங்கை சென்றால், தானும் உடன் செல்லலாம், சென்றால் வீரமணியைக் காணலாம், என்று நடனம் எண்ணினாள். இதற்குள், யானைப்பாகர் யானையைக் கட்டுத்தறியினின்றும் நீக்கி அலங்கார அணிகள் பூட்டி, பிடரியின்மீது பொன் பூ வேலைப்பாடமைந்த மெத்தை வைத்துத் தைத்த அம்பாரியை அமைத்து, மலர்மாலைகளைச் சூட்டி யானையை அரண்மனை வாயிலிலே கொண்டு வந்து நிறுத்தினர். குதிரைப்படையினர் சிலரும், காலாட் படையில் ஒரு சிலரும், இரண்டோர் தேரும் அணி வகுத்து நிறுத்தப்பட்டன. தியாகவல்லி, இந்தப் பரிவாரம் புடைசூழ, நகர இராசவீதி வழியே சென்று உறையூரைக் கடந்து கச்சிநகர் போகலானார். மன்னனும் பரிவார சகிதம் கச்சிநகர் புகுந்த அன்று, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. காஞ்சிபுரத்திலே குதூகலம் சொல்லி முடியாது. வீதிகளிலே புது மணல் பரப்பி, நகர மாந்தர் தோரணங்கள் அமைத்து ஊரை அலங்கரித்தனர். மாளிகைகளுக்குப் புதுச்சுண்ணம் பூசினர். வாழை கமுகு கட்டினர். மகர தோரணமமைத்தனர். ஒவ்வொருவரும் தத்தமது மனையிலே மணவினை நடத்தல் போலவும் விழா நடப்பது போன்றும் கருதி மகிழ்ந்து, புத்தாடை அணிந்து புன்முறுவலுடன் மன்னன் வருகையை எதிர்நோக்கி நின்றனர். குலோத்துங்கனின் கீர்த்தி, மக்களின் மனத்தைக் கவர்ந்திருந்தது. மூவேந்தருள் சிறந்தும், முடிமன்னர்கள் பலரைத் தனக்குக் கப்பம் செலுத்துவோராகப் பெற்றும், வடநாட்டவர் அஞ்சிட வாழ்ந்த வல்லமை மிக்க மன்னன் ஆட்சியிலே இருப்பதை ஓர் பெருமை எனக் கருதிய மக்கள் மன்னனைக் காணவும், கண்டு களிப்படையவும், போற்றவும், வாழ்த்தவும், சமயம் வாய்த்ததைக் கண்டு மகிழ்வுற்றனர். கவிவாணர்கள் இனி நம்மை வறுமைவிட்டது என்று எண்ணினர். சிற்பிகள் நமது திறனைக்காட்டி மன்னன் மகிழ்ச்சியைப் பரிசாகப் பெறுவோம் என்று கருதிக் களித்தனர். இசை வல்லோர் புதுப் பண்கள் அமைத்தனர். ஆடலழகியரும் சதங்கைக்கு மெருகிட்டனர். வீரர்கள் தத்தமது ஆயுதங்களைச் சரிபார்த்துக் கொண்டனர். சிலம்பக் கூடங்களிலே சிரிப்பு! மாடமாளிகைகளிலே மகிழ்ச்சி! ஊரெங்கும் குதூகலம். கச்சிநகரே புத்துருப் பெற்றதோ என்று வியக்கும் வண்ணம் நகர மாந்தர், நானாவிதமான முறைகளிலே ஊரை அலங்கரித்துவிட்டனர். ஊர்ப்புறத்தே கச்சிக் காவலன், படைகளுடன், காத்திருந்தான். அரச பவனிக்காக யானை, குதிரை, தேர்கள் அணி வகுத்து நிறுத்தி வைக்கப்பட்டன. மன்னன் ஊர்ப்புறத்தே வந்ததும், முரசு முழங்கிற்று. முரசொலி கேட்டதும், “வந்துவிட்டார் மன்னர், மன்னர் வருகிறார்!” என்று ஊரே உற்சாகத்துடன் ஒலித்தது. பவனி நடந்தது. தோற்கருவி, துளைக் கருவி, கஞ்சக் கருவி, நரம்புக் கருவி ஆகிய பல்வேறு இசைக் கருவிகள் ஒலித்தன! வாழ்த்தொலி கடலொலி போல் கிளம்பிற்று. “மன்னர் மன்னவா! வருக! எம்மை வாழ்விக்கும் இறையே வருக! மூவேந்தருக்கு முதல்வா வருக! முத்தமிழ் வளர்க்கும் வித்தகா வருக!” என்று பராக்குக் கூறினர் பாணர். “வையகம் போற்றும் மன்னர் வாழ்க! வாகை சூடிய வேந்தர் வாழ்க! சோழ குல ஜோதி வாழ்க!” என்று மக்கள் ஆனந்த ஆரவாரம் செய்தனர். வீதிகளிலெல்லாம் மக்கள் திரள் திரளாக நின்று மன்னனை வாழ்த்தி வரவேற்றனர். மாடங்கள் மீது மங்கையர் நின்று மன்னன் மீது மலர் தூவினர். சிறு பிள்ளைகள் யானை, குதிரை, சேனையைக் கண்டு வியந்தனர். ஆடம்பர ஊர்வலத்துக்குப் பிறகு மன்னன் சித்திர மண்டபம் சென்று தங்கினான். சித்திர மண்டபம், முத்தமிழ் மண்டபமாயிற்று. விழாக்காண வெளியூரிலிருந்தும் பலர் வந்திருந்தனர். விருந்தும் வேடிக்கையும். அமோகம். மன்னன் சின்னாட்கள் அங்குத் தங்கினான். இதற்குள் ஏழிசை வல்லியாரும் வந்து சேர்ந்தனர். ஒவ்வொரு நாளும் அறிஞர்கள் உரையும், ஆடலழகிகளின் நடனமும், இசை விருந்தும் நடைபெற்றன. பல புலவர்கள் நமது நூற்களை அரங்கேற்றினர்! புதுப்பண்களைப் பாடிக் காட்டி இசைவாணர்கள் பரிசுகள் பெற்றனர். ஓவியக்காரரும், தத்தமது திறனை மன்னன்முன் காட்டி மகிழ்வித்தனர். மன்னன் பரிசுகள் பல வழங்கி அவர்களை மகிழ்வித்தான். ஆனந்தமாகச் சில நாட்கள் கழிந்த பிறகு, மன்னன் அரச காரியங்களைக் கவனிக்கலானான். காட்டைத் திருத்தத் திட்டங்கள், கானாறுகளை நீர்ப்பாசனத்துக்குப் பயன்படுத்தத் திட்டங்கள், உழவுமுறைப் பற்றிப் புது ஏற்பாடுகள், பாலங்கள் அமைக்கும் திட்டங்கள் போன்றவற்றைப் பற்றி நிபுணர்களுடன் மன்னன் கலந்து பேசினான். மக்களின் வாழ்க்கையிலே குறைபாடுகள் உள்ளனவோ என்று விசாரித்தான். அது சமயம் பருத்த உடலும், நரைத்த தலையும் படைத்த கிழவரொருவர், மன்னனிடம் வந்து நின்று, “மன்னவா! உன் ஆட்சி கண்டு ஆனந்திக்காதவர் இல்லை. தமிழகத்தின் தனிச்சிறப்பை நீ விளக்குகிறாய், ஆனால்...” என்று இழுத்தாற்போல பேசிடவே, மன்னன். “முதியோரே! ஆனால்... என்றீர்; முடித்தீரில்லையே! நான் மன்னன், ஆனால் உம்போன்ற பெரியோர்களின் மொழிதான் எனக்குச் சட்டம். உமது மனதிலே குறையுளதேல் தயங்காது கூறுக” என்று கேட்க, அம்முதியோர். “எனக்கொன்றும் குறை இல்லை கொற்றவனே! ஆனால், காலப்போக்கு என் நெஞ்சை வருத்துகிறது” என்றார். “என்ன காலப்போக்கிலே உள்ள குறை தெளியக் கூறுமின்” என்று மன்னன் அன்போடு வினவினான். முதியோர், “அரசே! இரண்டோர் நாட்களுக்கு முன்பு இங்கோர் ஆரியப் பண்டிதன் தனது கலை பற்றிப் பேசிடக் கேட்டீர். அவன் போன்றோர் செய்து வைத்த பிரசாரம், காலப்போக்கைக் கெடுத்துவிட்டது, என்பதே என் போன்றவர்களின் அபிப்பிராயம். தமிழகத்திற்கு ஆரியம் புதியதோர் ஆபத்தோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். அவ்வளவே என் குறை” என்றுரைத்தார். மன்னன் சற்றுநேரம் யோசித்து விட்டு, “பெரியவரே! அஞ்சாதீர்! அவர்களின் கலை, நீர்மேல் எண்ணெய்போல் தமிழகத்திலே மிதப்பதை நானும் கண்டேன். நாளாவட்டத்தில் அதை நீக்குவோம், இது உறுதி. ஆரியர், தமிழகத்திலே தமது ஆதிக்கத்தைப் புகுத்தார்; புகுத்த முயன்றால், கனக விசயர் கண்ட கதியே காண்பர்” என்று உறுதி கூறித் தேற்றினான். “மன்னர் மன்னவ! சிற்றரசர்கள் கப்பம் அனுப்பியுள்ளனர். கொலு மண்டபத்திற்கு அவர்களை அனுப்பவோ?” என்று வீரமணி, மன்னனைக் கேட்க மன்னன் “ஆம்” என்றுரைத்துவிட்டுக் கொலுமண்டபம் சென்றமர்ந்தான். குலோத்துங்க மன்னருக்கு திறையனுப்பிய மன்னர்கள் பலப்பலர். கன்னடர், பல்லவர், கைதவர், காடவர், துறும்பர், வங்கர், மராடர், விராடர், கொங்கணர் முதலிய பல்வேறு வட்டார மன்னர்கள். பொன்னும், மணியும், வேழமும், புரவியும், ஆரமும் புறவுமாக, பலவகை திறைப்பொருளை மன்னன் முன் குவித்துக் கும்பிட்டு ஒருபுறமொதுங்கி நின்றனர். கருணாகரத் தொண்டைமான், தூதுவர்கள் கப்பம் செலுத்திக் கொண்டிருக்கும்போதே, சற்றுச் சீற்றத்துடன் காணப்பட்டார். வீரமணியும் மற்றும் சில படைத்தலைவர்களும், மெல்ல ஏதோ பேசிக்கொண்ட மன்னனையும், தொண்டைமானையும். மாறி மாறிப் பார்த்தனர். மன்னன், கப்பம் செலுத்தியோரை ஒருபுறம் நிறுத்தி, அவரவர் ஊர் வளம் விசாரித்து,‘நம்மால் உமது மன்னனுக்கு ஏதேனும் உதவி தேவை எனில் கூசாது கூறுமின்’ என்று கேட்டு உபசரித்தான். ‘அரசர்க்கரசே! உமது ஆணையே எமது அரசுகளை எல்லாம் அரண்போல் காத்து நிற்கிறது, குறை வேதுமில்லை’ என்றனர், திறை கொணர்ந்தோர். “கவிதைகள், காவியம், உயர்கலைகள், சிற்பம் முதலிய விசேடங்கள் நமது நாடுகளிலே உள்ளனவோ? நாமறியக் கூறுமின்” என்று மன்னன் கேட்க, அவரவர்கள் தத்தம் நாட்டிலே உள்ள நயங்கள் உரைத்து நின்றனர். இவை ஒன்றையும் தொண்டைமான் கவனிக்கவில்லை. அதுசமயம் தொண்டைமான், சோழ மன்னனின் படைபலக் கணக்கிலே கவனம் செலுத்தியிருந்தான், காரணத்தோடு! மன்னன் திடீரென்று, தொண்டைமானை நோக்கி, “திறை செலுத்தத் தவறியவர் எவரேனுமுண்டோ?” என்று கேட்டான். கொலுமண்டபம் நிசப்தமாய்விட்டது. கோபக்குரலுடன், “வேந்தே! கலிங்கநாட்டு மன்னன் அனந்தவன் மட்டுமே கப்பம் செலுத்தவில்லை” என்று திருமந்திர ஓலை நாயகன் கூறினான். குலோத்துங்கன் முகத்திலே குறுநகை பிறந்தது! அதன் பொருள் என்ன என்பதை அங்கிருந்தோர் அறிவர். சபை கலைக்கப்பட்டது. தொண்டைமானின் விழியும் விஷயத்தை வெளிப்படுத்திவிட்டது! மன்னனின் புன்முறுவல். இட்ட கட்டளை, “தூக்குவீர் கத்தியை!” என்பதே! உறைகளிலிருந்து வாளை உருவிட இலட்சக்கணக்கான வீரர்கள் ‘தயார்! தயார்!’ என்றனர். கலிங்க நாட்டு மன்னன், கெடுமதி இருந்தவாறென்னே! தமிழக முழுவதும் தலைவணங்கி நிற்கும் தன்மையினனான நம் மன்னர் மன்னனின் மாண்புகளை அறியாது போயினன். மடத்தனமிக்க மமதை கொண்டான். மண்ணில் அவன் குருதி கொட்டுமென்பதுறுதி! குலோத்துங்கனை எதிர்த்து நின்ற எவரேனும் தோற்காதிருந்ததுண்டோ. வேங்கை சீறிடின் மான் கூட்டம் பிழைக்குமோ? மூண்டுவிடும் பெரும் நெருப்பிலே பஞ்சு பிழைப்பதுண்டோ? கலிங்கக் காவலனின் ஆணவமெனும் வெண்ணை நமது அரசனின் சினமெனும் கனல்பட்டு உருகிவிடாதோ! ஒரு வேந்தனின் ஆணவத்தின் பயனாக, பாபம், அந்தக் கலிங்க மக்கள் சொல்லொணாக் கஷ்டமனுபவிக்கப் போகிறார்கள். அவர்களின் நகரங்கள் நாசமாக்கப்படும்! வயல்கள்வெளிகளாகும்! மாளிகைகள் மண்மேடுகளாகும்! இந்தக் கலிங்க மன்னன் எவ்வளவு பித்தன்! ஏனோ! வம்பை விலைகொடுத்து வாங்குகிறான். குலோத்துங்கக் கொற்றவனின் தோள்வலியை அறியாதவன்போல், அகத்தைக்கொண்டு, தான் ரட்சிக்க வேண்டிய மக்களை இம்சைக்கு உள்ளாக்கத் துணிகிறான் என்று காஞ்சியில் மன்னனுடன் வந்திருந்த படையினரிற் சிலர் பேச, மற்றவர் “போர் வந்தேவிட்டதுபோல் பேசுகிறீரே! மன்னனின் ஓலை போனதும், கலிங்கன் குளிரும் காய்ச்சலும் கொண்டு, திறையுடன் இவண்போந்து “திக்கெட்டும் புகழ் பரப்பிய தீரனே! தமிழகத்தின் ஒளியே! மன்னர் மன்னவா! என்னை மன்னித்தருள்க” என்று வணங்கிவிட்டாலோ!” - என்று வினவினர். நான் கலிங்க நாட்டைக் கண்டிருக்கிறேன். மன்னனின் குணத்தை மக்கள் கூறக் கேட்டுமிருக்கிறேன். மமதையே அந்த மன்னனுக்குத் தோழன், எனவே அவன் மன்னிப்புக் கோரான்! போருக்கே எழுவான்” என்று நரைத் தலையும் வடு நிரம்பிய உடலமும் கொண்ட ஒரு வயோதிக வீரர் கூறக்கேட்ட மற்றவர் அங்ஙனமாயின் நமக்குப் பெருவிருந்துதான், சந்தேகமில்லை” என்று கூறி, ஆரவாரித்து ஆயுதங்களைத் தூக்கிச் சுழற்றி ஆடினர். மன்னன் குலோத்துங்கன், படைத்தலைவன் தொண்டைமானுடன், தனியறையிலே உரையாடிக் கொண்டிருந்தான். கவலை கொண்ட முகத்தினனாக வீரமணி, அந்த அறையின் வாயிற்படியிலே காவல்புரிந்து நின்றான். “மன்னவா! இந்தப் போருக்காகத் தாங்கள் நேராகக் களம் புக வேண்டுமா? நான் செல்வேன் சேனைகளுடன், வெல்வேன் கலிங்கவேந்தனை, உமது கட்டளை எனும் வில்லுக்கு நான் அம்பு! என்னை எய்தால் போதாதோ?” என்று தொண்டைமான் கூறிடக் கேட்டு புன்முறுவல் பூத்த மன்னன் அங்ஙனமே யாகுக! அஞ்சா நெஞ்சரே, அன்பரே, தேவையான படைபலத்தோடு சென்று வென்று வாரும். கலிங்கனின் காதுகளில் கங்கைக்கரைக்காரரின் கூச்சலே கேட்கிறது. அதனாலேயே அவன், புயலில் குதிக்கத் துணிந்துவிட்டான். அன்றோர்நாள், ஆரிய மன்னர்களைச் சேரன் செங்குட்டுவன் வென்று, சிரமீதில் கல்லேற்றி வந்த சேதியை கலிங்கன் மறந்தான்போலும்!” என்று மன்னன் கூறினான். “உறையூருக்கு ஓலை அனுப்பிவிடுகிறேன். வீரமணி குதிரைப் படைக்குத் தலைமை தாங்குவான். எனது தமையனாரிடம் கரிப்படையின் பொறுப்பிருக்கும். தரைப்படைக்குத் தலைமை நானே கொள்கிறேன்” என்று தொண்டைமான் போர் முறையை விவரிக்க, மன்னன் உலவியபடி, “சேனைத் தலைவரே! உமது யுசிதம்போல் செய்யும். ஆனால் ஒன்று! கலிங்க நாடு மலையரண் கொண்டது. கலிங்க மன்னனின் மமதைக்குக் காரணமும் அதுவேதான்! எனவே மலையரணைத் தூளாக்க, யானைப் படையைச் சற்று அதிகமாகவே கொண்டு செல்லும். மேலும், கலிங்கநாட்டின் மீது, நமது படைகள் தரை மார்க்கமாகப் பாய்வதோடு கடல் மார்க்கமாகவும் நமது சேனைகள் சென்று முற்றுகையிட வேண்டுமாகையால், நமது கப்பற்படையும் தரைப்படை கிளம்பும்போது கிளம்பட்டும். கலிங்கம் அழியட்டும்.” என்று கூறினான். “தங்கள் ஆணையை நிறைவேற்றுவேன்” என்று கூறிப் பணிந்து நின்றான் தொண்டைமான். இரு வீரரின் முகங்களும், கோபத்தால் சிவந்திருந்தன. முத்துப்போல் அரும்பிய வியர்வையைத் துடைக்கவும் மனமின்றி மன்னன் நமது படைகளை வெளியே கூட்டு, நான் சில கூறல் வேண்டும்” என்றான். சித்திர மண்டபத்தை அடுத்த வெளியே படைகள் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. தொண்டைமான் வீரமணியை உடன் அழைத்துக்கொண்டு குதிரை மீதேறி, அணிவகுப்பை ஒழுங்கு பார்த்தான், படை முழுவதிலும் ஜொலிக்கும் முகங்களும், அவற்றுடன் போட்டியிடும் ஒளிவீசும் ஆயுதங்களுமாக இருந்தன! “இந்த வடு இன்ன களத்திலே உண்டாயிற்று. இன்ன போரிலே இன்ன விதமான வெற்றி நான் கண்டேன்” என்று பழங்கதை பேசி நின்றனர் படைவீரர்கள். வீரமணியின் வாழ்க்கையில் புதியதோர் நிலைமை, அதாவது குதிரைப் படைக்குத் தலைமை தாங்கும் பேறு கிடைத்ததால், அவன் மிக்க மகிழ்வுடனே விளங்கினான். காதலியைப் பிரிந்திருக்க வேண்டுமே என்ற கவலையையும் மறந்தான்! புதுத் தலைவரைப் பெற்ற குதிரைப் படைவீரர்கள் களித்தனர். குதிரைகள் களம் புகும் காலம் இதுவெனக் கண்டுகொண்டு கால்களைத் தட்டி நின்றன! ‘கலிங்க வீரர்களின் மார்புகளிலே இந்தக் குளம்புகள் தாண்டவமாடும்’ எனக் கூறிக் குதிரையை வீரர்கள் தட்டிக் கொடுத்தனர். குன்றுகள் பல, வரிசையாக அடுக்கியது போன்று காட்சி தந்தன கரி வரிசை! அவைகளின் ஆரவாரம் கடலொலி போன்றிருந்தது. பேரிகை ஒலித்தது; பேச்சு நின்றது! மன்னவன் ஓர் யானை மீதமர்ந்து, படைவரிசை நடுவே வந்து நின்றான்; புன்னகை பூத்தான்! வீரர்களின் முகமெலாம் மலர்ந்தன! “மன்னர் மன்னவன் வாழ்க! தமிழ் மாநிலம் வாழ்க!” என்று வீரர்கள் முழக்கம் செய்தனர்! “தமிழ் மாநிலம் வாழ்க! உண்மை உரை அது; வீரர்காள்! தமிழ் மாநிலம் வாழ, அதன் கீர்த்தி பரவ, உங்கள் குருதியைப் பாய்ச்ச வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளவே இன்று இங்கு உம்மை அழைத்தேன். மண், பெண், பொன் எனும் மூன்றுக்கும் மாநிலத்திலே போர் மூளுவதுண்டு. நாம், மண் வேண்டியோ, பெண் வேண்டியோ, பொன் கோரியோ கலிங்கநாட்டின் மீது போர் தொடுக்கவில்லை. சோழவளநாடு சோறுடைத்து! நமது மணிமாடங்களிலே தேனிடையூறியச் செம்பவள இதழ்ச் சேயிழையார் தத்தமது காதலருடன் தென்றலையும் திங்களையும்வென்று வாழ்கின்றனர். மண், பெண், பொன் எனும் மூன்றிற்கல்ல இப்போர்; மானத்திற்கு! ஆம்! தமிழகத்தின் எல்லையிலே உள்ள ஓர் கொல்லை கலிங்கம்! புன்னகைப் பூந்தோட்டமல்ல! செந்தமிழ் செழிக்கும் சோலையுமல்ல! ஆனால், கலிங்கன் கப்பம் தர மறுக்கிறான்! உன் உயிர் போகாமுன்னம், உமது குருதியில் வீரம் குதித்தாடுவது நிற்காமுன்னம், தமிழகத்தின் கீர்த்தி குறையாமுன்னம், கலிங்கனோ. கடம்பனோ, வங்கனோ, எவனோ திரை தர மறுக்கிறான் எனில், நமது மானத்தை மாய்க்க நினைக்கிறான் என்றே பொருள். மூவேந்தரிலே மற்றையோர் என்ன என்னுவர்! மேலே, கங்கைக் கரையிலே உலவும் ஆரியர்கள் எவ்வளவு கேலி செய்வர்! குலோத் துங்கனின் நாட்கள் குறுகிவிட்டன என்று கொக்கரிப்பர். சோழமண்டலத்திலே, போர்வீரர்கள் கூட்டம் கூனிவிட்டது என்று கூவுவர், உண்மை நிலை அதுவா! ஒதிய மரமே நாம்! போர்த்திறம் இழந்தோமா? தோள்வலியும் மனவலியும் இழந்தோமா? முன்னோரின் புகழுக்கு நாம் மாசுகளா? முதுமொழிகளுக்குக் கரையான்களா? ஆண்மையற்ற கூட்டமா? அஞ்சி வாழும் ஆமைகளா? நயவஞ்சக நரிகளா? நாம் ஏறுகள்! நாம் தமிழர்! கொலைவாளைத் தூக்குவோம், கொடுமை களை வோம்! மாற்றானின் ஆயுதங்களை நமது மார்பெனும் மதிலிலே வீசச்செய்து மகிழ்வோம். வீரப்போரிலே, வெற்றி காண்போம், வீழ்ந்தாலோ, புகழ் தழுவும்பேறு பெறுவோம். மறத்தமிழரோ, கலிங்க நாட்டு மன்னன் மீது போர் தொடுத்தாகிவிட்டது. உமது குருதியைக் கொட்ட, உடலைக் களத்திலே வீழ்த்த அச்சாரம் வாங்கிவிட்டேன். ஆண்மையாளரே! சின்னாட்கள், சிங்காரத் தமிழகத்தை உங்கள் செல்வக் குடும்பத்தை, காதலை, கவிதையை, காட்சியை, மறந்து பிரிந்திருங்கள். வானமே கூடாரம்; தரையே பஞ்சணை; ஆயுதங்களே தோழர்கள்; கானாறே காதலி; போரே சரசம்; இதுவே உங்கள் வாழ்க்கையாகக் கொள்ளுங்கள். போரிடத் துணிவு பிறவாதவரே, ஒதுங்கி நில்லுங்கள் எவரேனுமிருப்பின். அவர்கள் மீது நான் காயேன். உறையூர் போகச் செலவு தருவேன். கோழைகள் வீரர்கள் கூட்டத்திலே இருத்தல் கூடாது. பதரும் மணியும் கலத்தல் வேண்டாம்! வீரர்களே, இன்றே துணிந்து கூறுங்கள், போருக்குத் தயாரா!” என்று மன்னன் உருக்கமாகப் பேசிக் கேட்டான். “தயார்! தயார்! தயார்!” என்று வீரர்கள் முழக்கம் செய்தனர். மன்னவன் சிரித்தான். “மகிழ்ந்தேன்! வீரர்களே, உம்மை வாழ்த்துகிறேன். கலிங்கம் சென்று, வென்று, வாகைசூடி வருமளவும், நான் காஞ்சியிலேயே தங்கி இருக்க முடிவு செய்துள்ளேன். உங்களை விட்டுப் பிரிந்துள்ள காதலிகளின் கண்கள் கக்கும் கனலினின்றும் தப்பவே, நான் உறையூர் போகாது, இங்கிருக்க எண்ணுகிறேன்” என்று மன்னனுரைத்திட, வீரர்கள் மகிழ்ந்தனர். வீரமணி, மன்னனை வணங்கி, “மன்னரே, மங்கையரின் விழிகளிலே கனல் கக்குமென்றீர்கள், உண்மையே, ஆனால் காதலில் கட்டுண்டோ, கிலியால் தாக்குண்டோ, வீரர்கள் களம் புகாது, கட்டிலறை நோக்கி நடந்திடின், தமிழ் அணங்குகள், “இத்தகைய கோழையையா நான் பெற்றேன் மணாளனாக” என்று கூறிக் கண்களில் புனல் சோர நிற்பர்” என்றான். மன்னன், “வீரமணி மாதர் விழி பற்றிய ஆராய்ச்சியை மெத்த நுணுக்கமாகக் கண்டுள்ளானே,” என்று கூறிட, வீரமணி வெட்கித் தலை குனிந்தான். அதே வேளையில், நடனராணியும், வெட்கித் தலைகுனிந்து இருந்தாள், அரண்மனையிலே! “அடி கங்கா! உங்கள் நாட்டுக் கதை ஏதாகிலும் சொல்லேன் கேட்போம்” என்று அம்மங்கை கேட்க, ஆரியப் பெண், “ஆயிரக்கணக்கிலே உண்டு கதைகள்; அவைகளிலே உமக்குப் பிடித்தமானது எதுவாக இருக்குமென்றே யோசிக்கிறேன்” என்று உரைத்தாள். நடனராணி “எதையாவது ஒன்று சொல்லு கேட்போம்” என்றாள். அரசிளங்குமரி “வீரக் கதைகள் கூறு” என்று கூற, நடனராணி சிரித்துக்கொண்டே, “அது கிடையாது” என்றுரைத்தாள். “ஏனில்லை ராணி? பத்துத் தலையும் இருபது கரங்களும் கொண்டு, அஷ்ட திக்குபாலகர்களை வென்று, மாயாஜாலம் மகேந்திர ஜாலம் கற்று மாவீரனெனப் பெயரெடுத்த இராவணனை எங்கள் இராமபிரான் சம்ஹாரம் செய்ததும், இலங்கையை நிர்மூலப்படுத்தியதும் வீரமில்லையோ? எங்கள் இனத்தினிடமே இந்த நடனாவுக்குத் துவேஷம். நாங்களும் வீரமான இனந்தான்” என்று கங்கா கோபித்துக் கூறினாள். நடனம் சாந்தமாகவே பதிலுரைத்தாள். “அடி பாலா! நீ சொன்ன கதை மனிதனுடையதல்லவே, மகா விஷ்ணுவின் அவதாரக் கதையென்று தானே உங்கள் புராணம் கூறுகிறது. அரசியார் கேட்டது, சாதாரண மக்களிலே வீரராக இருப்பவரின் கதையைத்தானே; கடவுளின் கதையல்லவே. கடவுளின் வீரம், தீரம், பராக்கிரமங்கள் பற்றிக் கதை வேண்டுமோ? கடவுள் என்றால் எல்லாவற்றையும் கடந்தவர் என்றுதானே பொருள். இராமரின் வீரத்தைவிட அந்தப் புராண மூலம் வாயுவாஸ்திரம், வருணாஸ்திரம், அக்னியாஸ்திரமாகியவைகளின் வேடிக்கைகள்தான் அதிகமாக விளக்கப்படுகின்றன. அரசியார் அதைக் கேட்கவில்லை; உங்கள் நாட்டு வீரர் கதை ஏதேனும் கூறச் சொன்னார்கள்;சொல்லு இருந்தால்” என்று நடனம் விளக்கினாள். கங்கா “எனக்கொன்றும் கவனமில்லை” என்று கூறி முகத்தைச் சுளித்துக் கொள்ளவே அரசிளங்குமரி “இதென்ன வம்பாகிவிட்டது. வீரக் கதை கிடக்கட்டும் மாதரைப் பற்றி கூறு” என்றாள். கங்கா மௌனம் சாதித்தாள். “நீ கூறு நடனா! பாலாவுக்குக் கோபம் அடங்கட்டும்” என்று அம்மங்கை கூறிட, நடனம் கதை சொல்லத் தொடங்கினாள். “தேவீ! இது நம் நாட்டுக்கதையல்ல, கங்கைக் கரையோரத்துக் காதல் கதை என்று ஆரம்பிக்கும்போதே, கங்கா “தேவீ! வேண்டுமென்றே நடனம் என்னை அவமானப்படுத்தப் போகிறாள், அதற்காகவே கதை சொல்ல முன் வந்தாள். நான் பூத்தொடுக்கப் போக உத்திரவு கொடுங்கள்” என்று வேண்டிக்கொண்டாள். “அம்மங்கை சரி! சரி! உங்கள் சண்டையும் வேண்டாம். கதையும் வேண்டாம்” என்று கூறிவிட்டாள். நடனராணிக்கும் அம்மங்கைக்கும் விரோத மூட்டிவிட வேண்டுமென்பதே பாலாவின் திட்டம். ஏற்கனவே அம்மங்கை தன்னிடம் பிரியமாக நடக்கும்படியான வழியை உண்டாக்கிக் கொண்டாள். ஆனால், தன்னை நடத்துவதைப் பார்க்கிலும் அம்மங்கை நடனராணியையே அதிக மரியாதையாக நடத்துவது கங்காவுக்குப் பிடிக்கவில்லை. எப்படியேனும் நடனத்தை அவளிருந்த பீடத்தினின்றும் கீழே இறக்கிவிட வேண்டுமென்று துணிவு கொண்டாள். நடனத்துக்கு அரண்மனையிலே வளர்ந்துள்ள செல்வாக்கு வீரமணியின் உயர்வுக்கும் பயன்படும். வீரமணியின் உயர்வு தமிழரின் நிலையை உயர்த்தும். தமிழர் நிலை உயருமானால் ஆரியருக்கு அந்நாட்டிலே வேலையில்லை. ஆரிய குலத்தில் பிறந்து இன உயர்வுக்குப் பாடுபடாது இருப்பதோ! எதற்கு இந்த ஜென்மம்? என்று எண்ணி ஏங்கினாள் பாலா. தன்மீது கங்கா காய்ச்சல் கொண்டிருப்பதை ஒருவாரு நடனம் உணர்ந்தாளேயொழிய, தன்னைக் கவிழ்க்கவும் சதி செய்வாள் என்று கருதவில்லை. ‘நாம் அவளுக்கு ஒரு தீங்கும் செய்தோமில்லை; நம்மை அவள் என்ன செய்ய முடியும்?’ என்று கருதினாள். அம்மங்கையின் செவியிலே ஆரியப் பெண்ணின் கலகம் புகாது என்று நம்பினாள். இந்நிலையில் கலிங்க நாட்டின்மீது மன்னன் போர் தொடுத்த செய்தியைச் சேவகன் கொண்டு வந்தான். நடனம் திகைத்தாள். காதலன் வருவான் என்று எதிர்பார்த்திருந்தவளுக்குக் கலிங்கக் களம் புகுந்தான் என்றால் கஷ்டம் விளையாதோ? அவளுடைய நிலையை உணர்ந்த அம்மங்கை “நடனம்! உன் காதலனுக்குக் குதிரைப் படைத்தலைவன் பதவியைத் தந்தாராம் மன்னர். அதற்குச் சன்மானம் உண்டு, என்ன தெரியுமோ? களத்திலிருந்து வீரமணி திரும்பியதும் திருமணம். திருமணம் நடக்கும்போது பரிசாக அழகிய கிராமம் ஒன்று தரப்படும் மன்னரால். நான் ஓர் முத்துமாலை தருவேன் பரிசாக” என்று கூறினாள். நடனராணி வேதனையை மறந்து வெட்கித் தலைகுனிந்து “தங்கள் அருள் இருப்பின் போதும் அம்மையே” என்று சொன்னாள். பெருமூச்சை கங்கா அடக்கியபடி “எப்படியோ நடனமாடி, கண்ணையும் கையையும் காட்டி மயக்கிவிட்டாய், சரியான ஆள் சிக்கிவிட்டார், உனக்கு யோகந்தானடி நடனம். ஆனால் கலிங்கப் போரிலிருந்து உன் காதலன் திரும்பி வரவேண்டும்; கௌரி பூஜை செய்” என்று கேலி செய்ய, நடனம் வெடுக்கென்று, “கௌரி பூஜை நான் செய்துப்பயன் என்ன? அவருடைய கண் ஒளியும் வாள் ஒளியும் கூர்மையாக இருக்கும்வரை வெற்றி ஒலி கேட்டுத்தானே தீரும். அவர் சாமான்யமானவரா?” என்று பூரிப்புடன் பேசிட, இதுதான் சமயம் என்றுணர்ந்த பாலா “தொண்டைமானிடம் இவன் என்ன செய்யமுடியும்?” என்று கேட்டு நடனத்தின் வாயிலிருந்து ஏதேனும் வம்பு வெளிவராதா என்று எதிர்பார்த்தாள். “தொண்டைமான் தீரர், என் காதலரும் வீரரே! மாற்றுக்குறைந்தவரல்லர்” என்று நடனம் பதிலுரைத்தாள். கங்கா கலகலவெனச் சிரித்துக்கொண்டே “அவர் மாற்றுக் குறையாதவர்தான் ஆனால்...” என்று இழுத்தாள். “நான் மாற்றுக்குறைந்தவள் என்று கூறுகிறாயா?” என்று நடனம் கோபக்குறியுடன் கேட்கவே, அம்மங்கை மீண்டும் அமளி வந்துவிடப் போகிறதென்று அஞ்சி “கங்கை என்ன இருந்தாலும் உனக்கு வாய்த்துடுக்குத்தான்” என்று கடிந்துரைத்துப் பாலாவின் வாயை அடக்கினாள். “ஆமாம், நான் ஒரு நாட்டியக்காரிதான். பரத்தையின் வளர்ப்புப் பெண். இதைத்தானே நீ குறிப்பிட்டாய். இதுதானே என் மாற்றுக் குறைவு! பேஷ்! கங்கா! என் பிறப்புக்காக நான் வெட்கப்படவில்லை, என் நடனத்திற்காக நான் வெட்கப்படத் தேவையில்லை, என் நிலைக்கா நான் நாணிடவும் வேண்டியதில்லை. என்னை நான் நன்கு தெரிந்து கொண்டிருக்கிறேன், நீ உன்னை யார் என்று தெரிந்துகொள்” என்று அதிகக் கோபத்துடன் பேசிவிட்டு “தேவீ! இன்று முதல் நான் வெளியே விடுதி ஏற்படுத்திக்கொண்டு வாழ விரும்புகிறேன். உத்திரவு தர வேண்டும்” என்று அம்மங்கையைப் பணிவோடு கேட்க, அம்மங்கை திகைத்து நிற்கையிலே, “ஆமாம், தனி ஜாகை அவசியந்தான் உனக்கு. சதிகாரர்கள் கூடிட இரகசிய இடம் வேண்டாமோ?” என்று பாலா கூறினாள். “என்னடி உளறுகிறாய்” என்று அம்மங்கை அதட்டினாள். பயந்தவள் போல் பாலா பாசாங்கு செய்துகொண்டு “மன்னிக்க வேண்டும். கோபத்தால் ஏதோ கூறிவிட்டேன். நான் அதைக் கூறியிருக்கக் கூடாது; என் மனதிலேயே போட்டு வைத்திருக்க வேண்டியதைக் கொட்டிவிட்டேன். அதைத் தயவுசெய்து மறந்துவிடுங்கள்.” என்று கூறினாள். அம்மங்கை ஒன்றும் புரியாமல் பாலாவின் கரத்தைப் பிடித்திழுத்துக் கடுங்கோபத்துடன் “விளையாடாதே! உண்மையை ஒளிக்காதே! சதிகாரர் என்று யாரைக் கூறினாய்? நடனாவுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? இப்போதே கூறு; இல்லையேல் நான் உன்னைத் தண்டிக்க ஏற்பாடு செய்வேன்” என்று மிரட்டினாள். “ஐய்யய்யோ! இதென்ன எனக்கொன்றும் புரியவில்லையே” என்று கைபிசைந்து நின்றாள் நடனம். கங்கா, “தேவீ! என்னை என்னவேண்டுமானாலும் செய்யுங்கள்; நான் மட்டும் அதனைக் கூறவே மாட்டேன். அதனால் பலருக்குக் கேடு வரும். அந்த பாபம் எனக்கு வேண்டாம். என்னை வேண்டுமானாலும் வேலையைவிட்டு நீக்கி விடுங்கள்” என்று பிடிவாதமாகப் பேசவே, மேலும் கோபமுற்ற அம்மங்கை “உண்மையைக் கூறு” என்று உரத்துக் கூவினாள். “எப்படிச் சொல்வேன் தேவீ! என்னை மன்னிக்க வேண்டுகிறேன். நடனாவும் வீரமணியும் தங்கள் அன்புக்குப் பாத்திரமானவர்கள். நான் கூறுவதைக் கேட்டாலோ அவர்கள் இருவரையும் தூக்குமேடைக்குத் தாங்கள் அனுப்புவீர்கள்” என்றாள் பாலா. அம்மங்கை மிரண்ட பார்வையுடன் நடனத்தை நோக்க, நடனம் நீர் வழியுங் கண்களுடன் “பாலா! என்ன பழியையடி சுமத்தப் பார்க்கிறாய் கள்ளீ! காதகீ!” என்று கூக்குரலிட்டு நின்றாள். “நானா கள்ளி! உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் நீ உத்தமி, உன் கபடத்தை வெளிப்படுத்தப் போகும் நான் கள்ளியா? கேள் தேவீ! வீரமணியும் நடனமும் பேசிக் கொண்டிருந்ததை, நான் மறைந்திருந்து கேட்டேன். குலோத்துங்கச் சோழன் பட்டத்துக்குரியவரல்லவாம், அவரைக் கவிழ்த்துவிட்டு பழைய மன்னரின் வாரிசாக உள்ள வேறு யாருக்கோ பட்டம் சூட்டப்போகிறார்களாம். மணி இதற்காகவே படையிலே சேர்ந்து பக்குவமாக நடக்கிறாராம். இவள் அரண்மனையிலே இருப்பதும் இதற்குத்தானாம். இவர்களுக்கு உதவியாக ஊரிலே யாராரோ இருக்கிறார்களாம்” என்று பெரியதோர் பழியைப் பாலா சுமத்தினாள். “பேயே! நான் இதனைத் துளியும் நம்ப மாட்டேன்” என்றாள் அரசிளங்குமரி. “அதனை நானறிவேன் அம்மையே! நடனத்தின் நடிப்பு உங்களை ஏமாற்றி இருப்பதை நான் நன்கு அறிவேன். என் பேச்சை நம்ப வேண்டாம், தயவுசெய்து வீரமணி தந்தனுப்பினானே கிளி அதைப் போய்க் கேளுங்கள்” என்றுரைத்தாள் பாலா. “பித்தமா இவளுக்கு? சதி என்கிறாள்; கிளி என்றுரைக்கிறாள். என்னடி சொல்லும் கிளி?சொன்னதைச் சொல்லும்” என்றாள் அம்மங்கை. “ஆமாம்! சொன்னதைத்தான் சொல்கிறது. வீரமணி சொல்லிக் கொடுத்ததைச் சொல்கிறது. அதைப் போய்க் கேளுங்கள் யார் என் மனைவி?” என்று, உடனே அம்மங்கை என் மனைவி என்று கூறும். நடனாவின் உதவியைக் கொண்டு, வீரமணி சதி செய்து, அரசைக் கைப்பற்றித் தங்களையும் கைப்பற்றிவிடக் கனவு காண்கிறான். தனிமையில் கிளியுடன் பேசியிருக்கிறான் போல் தோன்றுகிறது. நான் அகஸ்மாத்தாய் இதைக் கண்டுபிடித்தேன்; கிளியை எடுத்துவரச் சொல்லுங்கள்” என்றாள். “விந்தையான பேச்சு! போடி கிளியை எடுத்துவா இப்படி” என்று ஒரு சேடிக்கு அம்மங்கை கட்டளையிட்டாள். ஓடிச் சென்ற தோழி, கிளியின் உடலைத்தான் எடுத்து வந்தாள். கிளி செத்துக் கிடந்தது.                                                பகுதி - 3   “சரி! ஆரம்பமாய் விட்டது சதி! தேவீ! நடனம் இதைக் கொன்றுவிட்டிருக்க வேண்டும். விஷயத்தை மறைக்கவே கிளியைக் கொன்றுவிட்டாள்” என்றாள் பாலா. அம்மங்கை, ஓங்கிக் கங்காவின் கன்னத்தில் அறைந்து என் முன் நில்லாதே! ஓடு!! என் அருமைத் தோழியின் மீது வீணான விபரீதத்தைச் சாட்டினாய், கிளியை நீதான் கொன்றிருக்க வேண்டும். கிளியையும் கொன்று கட்டுக்கதையையும் புனைந்து பேசுகிறாய். உங்கள் புராணத்திலே நடப்பது போலவே நீ நடந்துகொண்டாய். பொல்லாங்குக்காரி! நீ ஒரு பெண்; ஆகவே உன்னைத் தூக்கிலிடச் செய்ய என் மனம் வரவில்லை போய்விடு அரண்மனையைவிட்டு” என்று கூறிவிட்டுத் தேம்பி நின்ற நடனத்தை அணைத்துக் கொண்டு, “சீ முட்டாளே! எவளோ ஒருவள் ஏதோ சொன்னால் நான் நம்புவேனோ! அவள் உறவே இனி நமக்கு வேண்டாம்; வா, நாம் போவோம்” என்று கூறி நடனத்தை அழைத்துக் கொண்டு அந்தப்புரம் போய்விட்டாள். கங்கா அழவில்லை! சிரித்தாள். விதை தூவி விட்டோம்; அறுவடைக்குக் காலம் இருக்கிறது என்று மனத்திற்குள் கூறிக்கொண்டு அரண்மனையை விட்டு வெளி ஏறி வெளியே நடந்தாள். கலிங்க நாட்டிலே கலக்கம் உண்டாகிவிட்டது. போர் தொடுக்கச் சோழன் கிளம்பினான் என்ற செய்தி கெட்டதும், ஒற்றர் ஓடோடி வந்து நடந்த வரலாற்றினைக் கூறிவிட்டனர். தூதுவரும் போர்தொடுத்தாகிவிட்டதென்று ஓலை கொண்டுவந்து கொடுத்துவிட்டனர். தமது மன்னன் வீணான விரோதத்தை வளர்த்துக் கொண்டதால், நாட்டிலே வேதனையே தாண்டவமாடப் போகிறதென்றுணர்ந்த மக்கள், கைபிசைந்து கொண்டனர். கண்களிலே மிரட்சி ஏற்பட்டுவிட்டது. போருக்குச் சித்தமாகப் படை பல இருந்தன. காட்டரண், கடலரண், மலையரண் ஆகியவைகளும் இருந்தன. ஆனால் மக்களின் மன அரண் இல்லை! மன்னனின் மமதை எனும் அரண் கிடந்தது. மதிகேடர்கள் கட்டிக் கொடுத்த மனக்கோட்டையிலே உலவிக் கொண்டிருந்தான் மன்னன். குலோத்துங்கனுக்கு உள் நாட்டிலேயே எதிர்ப்பு என்றும், பழைய மன்னரின் மகன் கட்சி ஒன்று இரகசியமாக வேலை செய்து வருவதாகவும், அதனால் குலோத்துங்கனிடம் குடிபடைகளுக்கு வெறுப்பு வளர்ந்திருப்பதாகவும், வெளிநாட்டின் மீது போர் தொடுக்கவோ, தொடுத்தாலும் வெற்றி பெறவோ முடியாத நிலைமையிலே சோழ மன்னன் இருப்பதாகவும், சோழ மண்டலத்து ஆரியர்கள் கூறினர் என் கலிங்க நாட்டு ஆரியர் மன்னனிடம் கூறினர். மந்த மதியினன் அதனை நம்பினான்; வம்பை, வரவேற்றான். போருக்குத் தானும் தயார் என்று பதில் ஓலை விடுத்தான். போரிட ஆயத்தமானான், சபை கூட்டினான். “மந்திரிமார்களே! பிரதானியரே! படைத்தலைவர்களே! குலோத்துங்கன் இந்தக் குவலயமே தனக்குச் சொந்தமெனக் கூறுகிறான். பிறர்மீது பகை கொண்டு போரிடத் துணிகிறான். சோழன் சூரன்; நாம் கோழைகளல்ல! அவன் வீரன்; ஆனால் நாம் மண் பொம்மைகளல்ல! அவனிடம் படைகள் உள்ளனவாம்; ஆனால் நம்மிடம் உள்ளவை பதுமைகள் என்றெண்ணுவதோ! கரியும் பரியும் அதிகமாம்; அதற்காகக் கர்வமும் பேதமையும் மிகுவதோ! கலிங்கத்தின்மீது குலோத்துங்கன் போர் தொடுத்துவிட்டான். நான் களம்புகச் சித்தமாகிவிட்டேன். உம்மைக் கலந்து ஆலோசிக்கவே இன்று சபை கூட்டினேன் என்று அனந்த வன்மன் கோபக்கனல் எழப் பேசித் தன் மீசையை முறுக்கினான். சபையிலே நிசப்தமாக இருந்தது. முதியவரான எங்கராயன் எனும் மந்திரியார் எழுந்து நின்று “மன்னவா! விந்தையான பேச்சு நிகழ்த்தினீர்! எம்மைக் கலந்தாலோசிக்கச் சபை கூட்டினீர் என்றீர்; ஆனால் களம்புக முடிவு செய்துவிட்டேனென்கிறீர். முடிவு கட்டிய பிறகு கலந்தாலோசித்தல் முறையோ? ஏற்றுக்கு அது? என்ன பயன்? முடிவு செய்யும் அதிகாரம் முடிதரித்த உமக்குண்டு. ஆனால் கோடிக்கணக்கான மக்களுடைய வாழ்வைத் தாங்கள் பிடி சாம்பலாகக் கருதினீர். எனவேதான் போரிட முடிவு செய்துவிட்டீர். பொதுமக்களிடை ஏதேனும் புகல இன்று சபை கூட்டுகிறீர் நன்று, நன்று உமது நியாயம்” என்றுரைத்தனர். மன்னன்: “ஓய் மந்திரியாரே! வயோதிகம் உமது உடலை மட்டுமே வளைத்துவிட்டதென்று எண்ணினேன்; உமது மதியும் வளைந்துவிட்டதென்று விளக்குகிறீர். சோழனின் சொல்லம்பு என்னைத் துளைத்தது. இனி போர் எனும் கவசம் பூண்டாலொழிய நான் வாழ்வதெங்ஙனம்? அவன் போர் என்றதும் நான் பொறு என்பதா? அவன் ‘வாள்’ என்றதும், நான் கேள் தேவனே என்று முறையிட்டு மண்டியிடவா? என்னை நீர் மன்னனெனக் கருதாதது ராஜத்துவேஷம் அதை நான் மன்னிப்பேன். என்னைப் போரிடக் கூடாது என்றுரைப்பது என்னை மானமற்றவனெனக் கூறுவதாகும். அது என் ஆண்மையைப் பழிக்குங் குற்றமாகும். அதை நான் மன்னிக்க மாட்டேன். உமது உயிர் தித்திப்பானால் வீட்டிலே இரும்; வெள்ளாட்டியருடன் விளையாடும். வீரர் ஒருவர் இருவர் உடன் வரட்டும்; களம் புகுவேன் நான்” என்று மன்னன் கடிந்துரைக்கவே, மந்திரி சோகித்து, “அரசே! ஆத்திரத்திற்குச் சாத்திரமில்லை. பிஞ்சில் பழுத்தது வெம்பிற்று என்பர். வீரம் வேறு; வீம்பு வேறு. அரசு எனும் சகடத்திலுள்ள நுகத்தடியை ஒரு பக்கம் மன்னன் மற்றோர் பக்கம் மந்திரிகள் தாங்கி இழுத்தல் வேண்டும் என்று ஆன்றோர் கூறுவர். மன்னா! காய்வதிலே கடுகத்தனையும் பயன் காண்பதற்கு இல்லை. கிழட்டுக் கோழையாக இதோ என்னைத் தாங்கள் கூறிவிட்டீர்கள். பதட்டமிக்க பாலகனே! என்று தங்களை நான் கூற முடியாது தாங்கள் மன்னர் என்ற காரணத்தால். ஒன்று கூறுவேன் அரசு எனும் எந்திரத்திற்கு மந்திரிகளே கண்கள்; மக்களே தாள்கள்; தோழரே தோள்கள்; ஒற்றரே செவிகள் என்று மேலோர் கூறுவர்” என்று சாந்தமாகவே கூறினார். “ஆம்! அந்தக் கண்களிலே சில மங்கிவிட்டன, அரசே, போர் புரியச் சித்தமான உமது வீரத்தைச் சபை வரவேற்கிறது! கலிங்கம் வரவேற்கிறது. வீரர் வரவேற்கின்றனர்!” என்று கூறிக்கொண்டே திசைமுகன் எனும் மந்திரி எழுந்து நின்றான். மலர்ந்த முகத்துடன் மன்னன் அவனை நோக்கி “சபாஷ்! நன்று! இஃதன்றோ நான் கேட்க விரும்பியது” என்று புகழ்ந்துரைத்தான். “குலோத்துங்கனின் படைகள் பூங்காவுக்குள் புகுவதுபோல் இங்கு வந்து சேருமோ! இடையே பாலாறு, குசைத்தலை, முகரி, கொல்லி, பெண்ணை, வயலாறு, மண்ணாறு, பேராறு, கோதாவரி, கம்பை, கோதமை ஆகிய பல நதிகளைக் கடக்க வேண்டும். கலிங்கத்தின் மீது பாயுமுன் அந்தப் படைகள் களைத்துப்போகும். ஆகவே, அவைகளை முறியடித்தல் எளிது என்பேன். மேலும் சோழ மண்டலம் சுபீட்சமாக இருக்கிறது என்பதைப் பற்றிப் பெருமையாகப் பேசப்படுகிறது. அரசே! அந்தச் சுபீட்சமே போர்த்திறனை மாய்த்துவிட்டிருக்கும், மங்கச் செய்தாவதிருக்கும். எனவே சோழனின் சூரப்புலிகளுக்குக் கலிங்கம் அஞ்சத் தேவையில்லை. அஞ்சுவோருக்கு நாம் வளைகள் பரிசு தருவோம்! வாளேந்தும் கரங்களுக்குக் கலிங்கத்தில் பஞ்சமில்லை” என்று திசைமுகன் பேசினான். துடுக்குத்தனமான அவனது பேச்சுக்குச் சபையிலே பலர் சபாஷ் கூறினர். போர் கூடாது என்று வாதிட்ட எங்கராயன் எனும் மந்திரியாரின் மதிவழி செல மன்னன் மறுத்துவிட்டான். மதங்கொண்ட யானை போல் ஆர்ப்பரித்தான். நெருப்புப்பொறி எத்துணைச் சிறிதாயினும் அது தங்க இடங் கிடைத்துவிட்டால், தங்குமிடத்தை அழித்தொழிக்கும் வகைபோல் கலிங்க மன்ன னின் கெடுமதி எனும் சிறு தீப்பொறி தங்க இடமளித்ததால், கலிங்கமே அழியும் நிலையைப் பெற வேண்டியதாயிற்று. “குலோத்துங்க மன்னனுக்கு நான் எளியவனாக இருக்கலாம், திசைமுகா! அவன் ஏவும் படைகளுக்குமா எளியனானேன்?” என்று கலிங்க மன்னன் கடுப்புடன் கேட்டான். “மன்னவ! மாற்றாருக்கு நமது வலிமையைக் காட்டச் சந்தர்ப்பமின்றி வாடினேன்.வெற்றி மாலையைத் தங்கட்கு விரைவில் தருவேன். ஏன்? சோழனின் சுந்தரகுமாரி அம்மங்கையின் கரத்தையும் தர இயலும்; சோகம் விடுக! உறுதியுடன் நமது படைகள் போரிடும். புதுப்புது ஆயுதங்கள் குவித்துள்ளேன். ஆயுத ஒளியே புதுப்புது ஆயுதங்கள் குவித்துள்ளேன். ஆயுத ஒளியே சோழனின் படைவீரரின் கண்களைக் கூச வைக்கும்” என்று தைரியம் கூறினான் திசைமுகன். சாந்தம் போதித்த எங்கராயன், “ஏனப்பா திசைமுகா! நீ புது ஆயுதங்களைப் பற்றிப் பூரிப்புடன் பேசுகிறாய். உன் பேதமையை என்னென்பேன்! சோழ நாட்டிலே படைக்கலங்கள் மிகப் பழையன! புதியனன்று! ஒளி இழந்தன, வளைந்தன. இன்று அவைகளை உலைக்கூடங்களிலே காய்ச்சியும் தட்டியும், நீட்டியும், மடக்கியும் சரி செய்துகொண்டிருப்பார்கள். புது படைக்கலன்கள் உன்னிடம் போரறியாக் காரணத்தால், பழைய ஆயுதம், அங்கு போரிட்டுப் போரிட்டும் பழகியதால்! உன் ஆயுதம் ஒளி உள்ளன; உறையிட்டுக் கிடந்தால். அவர்களின் ஆயுதங்கள் எதிரியின் உடலைக் கீறி இரத்தத்தில் இறங்கி, கரியைத் துண்டித்துப் பரியைச் சிதைத்து, ஒளி இழந்தும் வளைந்தும் போயினவை. பளபளப்பான ஆயுதம் உள்ளவனே! வளைந்த ஆயுதக்காரன் வலிமைமிக்கான், போரிலே புரண்டெழுந்தவன் என்பதையன்றோ அவனது படைக்கலங்கள் காட்டுகின்றன. உனக்கு ஆயுதம் பளபளப்பு! குலோத்துங்கனுக்கோ கீர்த்தி ஒளிவிட்டு வீசுகிறது! வீரன் உடலில் பல வடுக்கள் உள்ளன! வீம்புக்காரனுக்கு வடு இராது, முன்னவன் போர்க்களம் புகுந்தவன் என்பதன் அத்தாட்சி அந்த வடுக்கள், பின்னவன் போகப்புரட்டன் என்பதற்கு அத்தாட்சி. வடுவற்ற வடிவமாக அவனிருத்தல். கலிங்கத்தின் நிலையை உன் கர்வம் எனும் அளவுகோல் கொண்டு அளக்கிறாய்” என்று கண்டித்தார். மன்னன் வெகுண்டு, “நீர் கலிங்கநாட்டு மந்திரியா? சோழனின் ஒற்றரா? என்று கேட்டுக் கொதித்தான். ஆனால் அந்தச் சமயத்தில் அவன் சிந்தையை மருட்டிடும் சம்பவம் நடந்தது. ஓடோடி வந்த வேலையாள் ஒருவன், “அரசே! வீரமணி என்ற குதிரைப் படைத்தலைவன் நதிகளைக் கடந்துவிட்டான். கலிங்கத்தின் எல்லையிலே அவனது குதிரைப்படை புகுந்துவிட்டது” என்ற செய்தியைக் கூறினான். மன்னன் திசைமுகனைப் பார்த்தான்; திசைமுகன் திக்கெட்டும் மாறி மாறி நோக்கியபடி நின்றான். “மலைக்காதே மன்னா! வீரமணி குதிரைப்படையுடன் வரட்டும்; ரமணிபோல், அவன் ரணகளத்தை விட்டு ஓடும்படி செய்ய நமது படைகளை ஏவுகிறேன். சளைக்காதே; சமரிலே சங்கடங்கள் நேரிடுவது சகஜந்தான்; ஆனால், சோழனின் சைன்யத்தை நமது வீரமெனும் சண்டமாருதத்தால் அழித்தொழிப்போம். இளிக்காதே எங்கராயா! திசைமுகனின் தீர்மானம், இலேசென்று எண்ணாதே. நிற்காதே காவற்காரனே! ஓடிச்சென்று, என் உத்திரவை படைத்தலைவர்களிடம் கூறு, முரசு கொட்டு, தோள் தட்டு, வாள்வீசு! வாகைதேடு!” என்று வெறி பிடித்தவன்போல் திசைமுகன், மன்னனைப் பார்த்து ஓர் மொழியும், மதியுரைத்த மந்திரியைப் பார்த்து ஓர் மொழியும், வேலையாட்களைப் பார்த்து வேறோர் மொழியுமாகப் பேசினான். “போர்! போர்! கடும் போர்! சோழனின் படைகளுடன் போர்! என்ற கூக்குரலும், “எல்லை”யிலே எதிரிப்படை வந்துவிட்டதாம், குதிரைப்படை கிளப்பிய தூசி கலிங்கத்தை நோக்கி கடுகி வருகிறதாம்! வீரமணியாம், தொண்டைமானின் ‘அம்பு’ போன்றவனாம், துரிதமாகப் பாய்ந்திடும் பரிப்படையினனாம்; போர் புரிவதிலே ஆர்வமிக்கவனாம், அவன் புகழ், விரிந்த மலரின் மணமென எங்கும் வீசுகிறதாம்!” என்று வீதிகளிலே பேசிக் கொண்டனர். பல வீடுகளிலே விம்முங் குரலும், வியர்க்கும் முகமும், நீர்வீழ்ச்சியன்ன கண்களும், வெடவெடக்கும் உடலும் கொண்ட வனிதையர் வாடிக் கிடந்தனர். கலிங்கனின் படைகள் அவசர அவசரமாக அணி வகுக்கப்பட்டன. வீரமணியின் குதிரைப்படையினைத் தாக்க கலிங்கத்தின் பரிப்படையினர், கிளம்பினர். கிளம்புங்காலை, மன்னன் கண்முன் பிணமானாலும் ஆகலாமேயன்றிப் பேடியாகலாமோ என்றெண்ணினர். எனவே சீறினர். செந்தூள் பறக்கக் குதிரைகள் பாய்ந்தன. எல்லையை அணுகும்போதே எதிரி அணி வகுத்து நின்ற சோழனின் குதிரைப் படை மீது கணைகளைக் கடுவேகமாக விடுத்தனர். அம்புகள் பாய்ந்து வருவதால் குதிரைகளின் உடலமும், வீரர்களின் உடலமும் தைக்கப்பட்டு படைவரிசை கலைக்கப்பட்டு விட்டதால் கலைந்துபோன படையினுள்ளே புகுந்து வாட்போரிட்டு, வதைத்துவிட வேண்டும் என்பது கலிங்கக் குதிரைப் படைத்தலைவனின் கருத்து. வீரமணி, வீரமும் யுக்தியும் அறிந்தவன். படை வரிசை கலைவது தனக்குப் பாதகமாகவும், எதிரிக்குச் சாதகமாகவுமே இருக்கும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டான். தந்திரமாக, எதிரியின் படையை நெருங்கி வருமாறு செய்து, போரிட வேண்டும் என்பது வீரமணியின் திட்டம். எனவே கேடயங்களால், தங்களை அம்புமாரியினின்றும் தடுத்துக்கொள்ளப் போர்வீரர்கள் பயிற்சி பெற்றிருப்பினும், யுக்தியாகப் போரிட வேண்டித் தன் படையைத் திருப்பிப் பின்நோக்கிப் போகும்படியும், ஆனால், வேகமாகச் சென்றபோதிலும் விநாடியிலே திரும்பி எதிர்நோக்கிப் பாயும் நோக்கத்தை மறக்கலாகாதென்றும் கூறி, உத்தரவிட்டான். சோழனின் குதிரைப் படைகள் பின்வாங்கி ஓடுகின்றன என்று நம்பிய கலிங்கக் குதிரைப் படைத்தலைவன் கைகொட்டி நகைத்து, “வீரர்காள்! விடாதீர் அந்த வீம்புக்காரரை” என்று கூறினான். கலிங்கப்படை களிப்புடன் பாய்ந்து சென்றது. வேகமாகப் பாய்ந்து வரும் வேளையிலே வீரமணி தனது குதிரைப் படையின் வரிசையை இரண்டாகத் துண்டித்து இடையே கலிங்கப்படை புகுவதற்கு வழி தோன்றிடச் செய்தான். முறையாகச் செய்யப்பட்ட இதனை உணராது, முறியடித்துவிடுவார்கள் என்று கிலிகொண்டு, சோழனின் படை பிளந்துவிட்டது என்று கலிங்கப்படையினர் கருதி, படை வரிசை இடையே ஏற்பட்ட பிளவுக்குள் பாய்ந்தனர், பாய்ந்துதான் தாமதம், வீரமணி, “தூக்குவீர் கத்தியை! தாக்குவீர் எதிரியை!!” என்று கர்ஜனை புரிந்தான். உடைவாள் உருவினர் சோழ வீரர், இடையே வந்த கலிங்கக் குதிரைகளின் கால்களைத் துண்டிக்கலாயினர்! ஒரு வெட்டு குதிரையின் காலில்! குதிரை குப்புற வீழ்ந்ததும், கலிங்க நாட்டானின் கழுத்துக்கு மற்றோர் வெட்டு! அவன் குதிரையுடன் பிணமாவான்! இத்தகைய முறையினால், கலிங்கக் குதிரைப் படையிலே பலத்த சேதத்தை உண்டாக்கி விடவே, மிகுந்திருந்த படை ஊருக்குள் ஓடிவிட்டது. கோட்டை வாயிற்கதவைத் தாளிட்டுக் கொண்டது. கோல் கொண்டோன் கோபக்கனல் உமிழும் கண்களுடன் அவர்களை நோக்கிக் “கோழைகளே! நானே நேரில் களம் வருகிறேன். நால்வகைப் படையும் நம் முன் கொண்டு வருக” என்று நவின்றான். படையும் பலமாகக் குவிந்தது; கலிங்க மன்னனின் கோபம் காட்டுத் தீ போல் காணப்பட்டது. நறநறவெனப் பற்களைக் கடித்தான். அவனுடைய முகம் சிவந்துவிட்டது. கையிலே உருவிய வாளேந்தி நின்றான். அன்று அவன் இருந்தது போன்ற வீர உருவத்துடன் அதற்குமுன் கலிங்கம் அவனைக் கண்டதேயில்லை. உறுதி கொண்டான். ஊர் அழியினும் சரியே; படைமுழுதும் பாழாயினும் சரியே; உடலில் உயிர் உள்ளமட்டும் போரிடுவேன். என்று சூள் உரைத்தான். சூரனெனக் கிளம்பினான் களம் நோக்கி. “கரடுமுரடான பாதை! காட்டாறும் கடுவெளியும் கொண்டது. காலிடறினால் குழியில் விழ வேண்டும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை இராது. நீரோடை காதத்திற் கொன்றுமிராது. உதடுலர்ந்து, உளம் உலர்ந்து, உயிர் உலரும் நிலை! அத்தகைய கொடிய இடம்! மான்கள் தாகவிடாய் கொண்டு தத்தளித்து ஓடும். வேடுவரின் அம்புகள் வேறு பறந்து வரும். மிக்க பயங்கரமான பிரதேசம். ஆகவேதான், உன்னை அழைத்துச் செல்ல என் மனம் இடந்தரவில்லை” என்று காதலன் கூறிட “தலைவரே! முன்பு உம்மை விட்டுத்தனியே எங்ஙனம் பிரிந்திருப்பது என்ற ஒரே எண்ணத்தால் மட்டுமே உம்முடன் வருகிறேன் என்றுரைத்தேன். நான் வரலாகாதென் பதற்காக நீர் போகும் வழிகள் பற்றிய வர்ணனையைக் கூறக் கேட்டபின், உம்முடன் வந்தே தீருவது என்று உறுதிகொண்டுவிட்டேன். என் ஆருயிரே! பயந்தேன் மிகவும்; நீர் போக இருக்கும் இடத்தின் கொடுமை என்னைக் கலங்க வைத்துவிட்டது. எவ்வளவு இன்னல்! எவ்வளவு இடுக்கண்! இத்தனையையும் நீர் சகிக்க வேண்டுமோ! நினைக்கும்போதே நெஞ்சம் திடுக்கிடுகிறது. ஆனால், அத்தகைய பிரயாணத்தைத் தாங்கள் செய்கையில் பாவியேனாகிய நான் இங்குச் சுகமாக இருப்பதா! நீர் நீருக்குத் திண்டாடுவது இங்கு எனக்குப் பானகமா! நீர் கரடுமுரடான பாதையிலே கால்கடுக்கச் செல்வது, இங்கு நான் சோலையில் சொகுசாக இருப்பதா! பசியின் கொடுமையை நீர் அனுபவிக்கப் பாதகி நான் இங்கு ருசியுள்ள உண்டி தின்று உடலைக் கொழுக்க வைப்பதா! பாறையிலே நீர் படுக்கப் பஞ்சணையா இந்த உடலுக்கு? வேண்டாம்! கூடாது! ஒருபேதும் சம்மதியேன். உமக்கு வரும் கஷ்டத்தை நான் சரி பாதி பங்கிட்டுக் கொள்வேன். உம்மை விடேன்; பிரியேன்” என்று காதலி கூறிவிட்டாளாம். வழியின் கேட்டை எடுத்துரைத்தால் வனிதை வர அஞ்சித் தன்னைத் தனியே போகவிடுவாள் என்று கருதிய காதலன் ஏதுங்கூற இயலாது நின்றானாம். நடனராணி பழந்தமிழ்ப் பெண்களின் தன்மை கொண்டவள். எனவே, போர் இப்படி இருக்கும், இன்னின்ன ஆபத்துக்கள் உண்டு என்று பிறர் கூறிடக் கேட்டு, அத்தகைய ஆபத்தான வேலையிலே தன் அன்பன் ஈடுபட்டிருக்கும் வேளையிலே, அரண்மனையிலே தான் இருப்பதை எண்ணி ஏங்கினாள்! எவ்வளவு கஷ்டமோ! என்னென்ன ஆபத்தோ! எத்தனை அம்புகள் அவர்மீது சீறிப் பாய்ந்து வருமோ! எவனெவன் வாளை வீசுவானோ! வேல், வேழம், வெஞ்சின வீரர்கள், வாள், வீரரின் தோள், பலப்பல படைக்கலம், பாய்ந்தோடி வரும் பரிகள், இத்தனையையுங் கண்டு, வீரமணி களத்திலே இருக்கும் வேளையிலே, அரண்மனை வாழ்வா நமக்கு என்று எண்ணி நடனராணி நொந்தாள். வீரமணியுடன் கொஞ்சி விளையாடிய காட்சிகள், பலப்பல மனக்கண்முன் தோன்றித் தோன்றி அவளை வாட்டின. புன்னை மரநிழலும், முல்லைப் புதரும் அல்லி நிறைந்த ஓடையும், அரண்மனை மருங்கும் அவள்முன் தோன்றித் தோன்றிப் பரிகசிக்கத் தொடங்கின. ‘இங்கு உன்னைப் பிடித்திழுத்து இதழ் சுவைத்தானே, அந்த இன்ப விளையாட்டல்ல நடனம்; இப்போது மரணம் ஒருபுறம் நின்று கொண்டிருக்கும், அவனுடைய உயிரைப் பிடித்திழுத்து என்னை அணைத்துகொள்ள வா! என்று ஆர்ப்பரிக்கும்! அதன் அணைப்பிலே அவன் அகப்படக்கூடாது. ஆமாம்! அல்லியும், முல்லயும், அல்ல, அவனெதிரிலே! யானையுஞ்சேனையும்! குயில் கூவாது கோரமான கூக்குரல் கேட்கும். “அவன் களத்திலே நிற்கிறான்” என்று நடனராணியின் காதருகே யாரோ சதா கூறுவதுபோல் எண்ணிக்கொண்டு ஏங்கினாள். தனது காதலன் வீரன் என்பதும், வெஞ்சமர் பல புரிந்து, வீரக்கழல் அணிந்தவன் என்பதும் அறிவாள். அறிந்துமென்ன? ஆபத்து ஆபத்துத்தானே! “போர்! போர்!! என்று ஏன் அடிக்கடி இத்தகைய பொல்லாங்கு ஏற்படுகிறது?” என்றுத் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். கண்ணிலே வேல் பாய்ந்தாலும், களத்தைவிட்டு ஓடாதவன் என்ற, புகழ்மொழிக்காகப் புண்பட்டுக் கிடப்பதா! ஏன் போர் என்ற பேச்சுக்கே இடமில்லாதபடி ஓர் புதுமுறை அமைக்கக்கூடாது என்றும், குருதியிலே குளித்து, பிணத்தின் மேல் நடந்து, புகழ் தேடுவதைவிட வேறு வழியில்லையா, இந்த ஆடவர்களுக்கு! கலை, சிற்பம், காவியம் முதலியன போதாதா புகழ் தேட என்றும், ஏதேதோ எண்ணினாள் நடனராணி. அந்தப் போரின்போது அவளுக்குப் போரின் பயங்கரம் மனத்திலே புகுந்ததுபோல், வேறெப்போதும் இருந்ததில்லை, பார்க்குமிடமெங்கும் போர்க்களமாகவே தென்பட் டது! எந்தச் சத்தமும், சண்டையிலே கிளம்பும் ஒலியெனச் செவிக்கு இருந்தது. யார் எதைப் பேசினாலும், போர்க்களப் பேச்சாகவே தோன்றலாயிற்று. இள நங்கையின் இருதயம் அனலிடுமெழுகாயிற்று. அரசிளங்குமரி நடனாவின் மனநிலை உணர்ந்தாள்; பரிதாபங் கொண்டாள். போர் மிக்கப் பொல்லாங்கானது என்று பேசி நடனாவின் நொந்த உள்ளத்திற்குச் சற்றே ஆறுதல் வரட்டும் என்று அம்மங்கை பேசலானாள். கலிங்கப்படைகளை நம் வீரர்கள் கண்டதுண்டமாக்குவர். அதிலே எனக்குத் துளியும் சந்தேகங் கிடையாது. ஆனால், போர் என்றால் கஷ்டம், கலக்கம் இருந்துதான் தீரும், இது சகஜம். அரைக்காத சந்தனம் மணப்பதேது! ஆயினும், எனக்கென்னமோ நடனம் போர் என்ற போக்கே பிடிக்கவில்லை. புகழ் வருகிறது என்ற போதிலும், புண் வந்த பிறகல்லவா புகழ்! “ஆமம்மா! ஆபத்து முதலில். அதைக் கடந்த பின் அழியாப் புகழ், ஆன்றோர் அதைத்தானே அகமகிழ்ந்து வரவேற்றனர்” “என்றாலும், உலகின் எழில் பாழ்பட்டு, மக்கள் வாழ்வு சிதைந்து, பல குடும்பங்களில் கண் கசிந்து புகழைத் தேடுவது உசிதமா என்று நான் கேட்கிறேன்.” “போர்க்குறிக் காயமே புகழின் காயம்!” “போடி! போரின்றி மக்கள் வாழ்ந்தால், புகழே இராதோ! புலவரின் கவிதை, புகழ் தேடித்தரவில்லையோ!” “தருகிறது! ஆனால், புலவரும், ‘புகழ் களம் புகுந்தோர்க்கே’ என்று கூறினரே.” “ஏதோ புகன்றனர்! எவரோ மொழிந்தனர்! எத்தனை உள்ளம் பதைக்கிறது, ஒருமுறை போர் என்றதும். இதோ வீரமணி, களம்புகுந்தது முதல் நீ விம்முறாத விநாடி உண்டா?” “என்னை மன்னிக்க வேண்டும், தேவி! நான் கலங்குவது உண்மையே! அந்த வீரனுக்கேற்றவளல்ல நான்; கோழைத்தனம் என் உள்ளத்திலே கூத்தாடுகின்றது.” “இயற்கைதான் தோழி! எனினும் அஞ்சாதே! வீரமணி வெற்றி மாலையுடன் வருவான். உனக்கு மாலையிடுவான். நம் படைபலம் நீ அறியாததா? இதே நேரத்தில் கலிங்கத்தில் நடக்கும் கடும் போரிலே எதிரிகள் தோற்று ஓடுவர், நமது படை முன், எந்த மன்னனின் படை நிற்க முடியும்?” அரண்மனையிலே இந்தப் பேச்சு! காஞ்சியிலே மன்னன், கோபங்குறையாது வீற்றிருந்தான். களத்திலே கடும்போர் நடந்து கொண்டிருந்தது. இரு நாட்டுப் படைகளும் கடலைக் கடல் எதிர்ப்பதுபோல், ஒன்றை ஒன்று எதிர்த்தன. உக்கிரமான போர்! உருண்டன தலைகள்! மிரண்டன கரிகள்! பதைத்தன பரிகள்! பாரகம் செங்குருதி மயமாயிற்று! பகல் இரவு போலாயிற்று. பட்டினமும் புறமும் காட்டொலி! பயங்கரமாகப் போர் நடந்தது. கடலிலே அலைகள் பாய்ந்து வருவதுபோல குதிரைப் படைகள் ஒன்றின்மீதொன்று, நுழை கொழிக்கும் வாயுடன் பாய்ந்தன. மலைகளை மலைகள் தாக்குவது போலிருந்தது, மதங்கொண்ட யானைகள் ஒன்றை ஒன்று தாக்குவது, தேர்களை தேர்கள் தாக்கின, மேகங்கள் ஒன்றோடொன்று மோதுவதுபோல். மின்னல் ஒளிபோல் வாள்வீச்சு வேல் வீச்சும்! புயற் காற்றிலே சிக்கிய மரங்கள் கீழே சாய்வதுபோல், வில் வீரர்கள் விடும் கணைகள் வீரர்களை வீழ்த்தின. வெட்டி வீழ்த்தப்பட்ட யானைகளின் உடல்களைக் கரையாகக் கொண்டு வீழ்ந்துப்போன வீரர்களின் குருதி ஆறென ஓடி அதிலே புதுவெள்ளம் அடித்து வரும் பலபொருள் போல், தலையறுபட்ட உடலம், கைகால் துண்டிக்கப்பட்ட உடலம், சிரங்கள், கைகள், கால்கள், குடல்கள், யானையின் துதிக்கைகள், குதிரையின் உடல் முதலியன மிதந்தன. இருகையிழந்தவாறு எதிரிலே மிரண்டு ஓடிவரும் யானையின் காலடியிலே சிக்கிக் கூழாக்கப்படுவர். குதிரை ஓடும்; கணை பாயும்; கழுத்தறுந்து ஒருபுறம் வீழும் உடலம் குதிரை மீது சாய்ந்து, கீழே இரத்தத்தைச் சொரியும்! கணைகளால் கண்ணிழந்த யானைகள், காலிடறி இரத்தச் சேற்றிலே வீழும். கையறுபட்டவர்கள். கண் இருப்பதால் களத்தின் கோரத்தைக் கண்டும், ஏதுஞ்செய்ய இயலாதால், ஐயோ!” என்று ஓர் முறை கூவுவதும், எதிரிகளைக் கண்டால், கையிழந்ததைக் கருதாது, ‘விடாதே! பிடி! வெட்டு! வீழ்த்து!’ என்று கூவுவதுமாகச் சபையிலே, மகிழ்ந்தோர் அளித்த மாலையுடன் விளங்கும் புலவர்கள்போல், எதிரியின் யானை தன் துதிக்கையால் வீரனைத் தூக்கிச் சுழற்றி கழுத்தை நெறிக்க, அந்த நேரத்திலும் நெஞ்சுறுதியுடன், வாள்கொண்டு அவன் துதிக்கையைத் துண்டிக்க, அறுபட்ட துதிக்கை மாலை போல் அவன் கழுத்திலே இருக்க, வீரன் கீழே வீழ்ந்திட, யானையின் கால் அவனை நசுக்க, இறந்து கிடக்கும் வீரர்கள் பலர்! “மன்னவன் மிக்க வல்லமைசாலி! அவன் படைத் தலைவன் மிக்க திறமைசாலி! மிக்க வீரமுடையன சோழனின் படைகள். களத்திலே வெற்றி உண்டு. கலிங்கப் போரிலே வெல்வான். ஆனால்...” என்று ஓர் தவசி காஞ்சியில், ஒரு வீதி ஓரத்தில் நின்றுகொண்டு, எதிரே கூடியிருந்த மக்களிடைப் பேசலானான். போர்ச்செய்திகள் கேட்கக் கூடினர் மக்கள். தவசி ஏதோ கூறுவது கேட்க, மனம் தாளவில்லை. “ஆனால்... என்று இழுப்பானேன்” என்றான் கூட்டத்திலே ஒருவன். “ஆனால்! ஆம், புறப்பகைவர்களை வெல்கிறான் மன்னன்; அகப்பகைவர்களை அழிக்கும் வகை தெரியான்” என்றார் தவசி. “வேதாந்தம் பேசுகிறீரோ? வேலெடுக்க வகையறியாதார், நூல் கொண்டு, ஏதோ பிழைப்பர் என்பது தெரியும் எமக்கு. உமது சாத்திரத்தை இங்குக் காட்டாதீர்” என்றனர் கூட்டத்தில் பலர். தவசி சிரித்துக்கொண்டு, “வேற்படையாளரே! இந்த வேதாந்தி பேசுவது வீண் என எண்ணாதீர். நாங்கள் வளர்க்கும் ஓமத்தீயைவிட, நாட்டுப்பற்று உள்ளவர் மனத்திலே எழும் கோபத்தீயே தேவருக்கும் மூவருக்கும் ஏற்றமுடையது. நான் வீரத்தைக் குறைகூறினேனா! வெற்றி சோழனுக்கில்லை என்றுரைத்தேனா! இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்? நான், சோழன் வெளிநாடுகளிலே வெற்றி பெற்றுப் பயன் என்ன, சோழமண்டலத்திலேயே பகைவர்கள் உண்டு; அவர்களை ஒழிக்கவில்லையே, என்றுதான் கூறுகிறேன்” என்றார். “விந்தை! எமது மன்னனுக்கு, உள் நாட்டில் பகைவரா! ஓய்! யோகியே! ஊரார்முன் உளறுகிறீர்” என்றனர் மக்கள். “உண்மையை உரைத்தேன். அது உளறுவதாக உமக்குத் தோன்றுகிறது. ஊர் அழிய அழிய, உமது மன்னனின் புகழ் வளர்கிறது. நீர் களிக்கிறீர்; உமக்குக் களிப்புப் பிறக்க அங்கே, போர்க்களத்திலே கண்ணீரும் இரத்தமும் கலந்தோடுகிறது ஆறுபோல். இங்கு நீங்கள் வெற்றி விழா கொண்டாடப் போகிறீர்கள், அங்குப் பேய்கள், உமது தோழர்களின் உடலை விருந்தாக உண்டுக் கூவும்” என்றான் முனிவன். “பேயும் பூதமும்! பிதற்றுகிறான்” என்று நகையாடினர் மக்கள். “தானென்ற உலகத்தில் சிறிதுபேர்கள், சடைபுலித்தோல் காஷாயம் தாவடம் பூண்டு ஊனென்ற சிவபூசை தீட்சை என்பார் திருமாலைக் கண்ணாலே கண்டோ மென்பார்-, கானென்ற காட்டுக்குள் அலைவார் கோடி காரணத்தை யறியாமல் கதறுவாரே!” என்றுரைக்கும் மனப்பான்மை கொண்டு, வீரத்தையும் மானத்தையும், உழைப்பையும் மதித்து வாழ்ந்து வந்தத் தமிழர்கள், வஞ்சகக் கருத்துக்களையும், கோழைக் குணத்தையும் வரவேற்பரோ! மானிடம் என்பதே வாள்! அதை வசமாகக் கொண்டிட இரு தோள்! மானிடம் என்பது குன்று; அதன்மீது தமிழர் நின்று வாழ்ந்த காலம் அது. அவர்கள் அக்குன்றின்மீது நின்றிருந்த கோலம், மாற்றாரின் கண்களை உறுத்திற்று. காய்ந்து கருகிய வெளியையும், கற்பாறையையும், கடுஞ்சுனையையும், கண்டு கவலையை உண்டு, கால்நடைகளை மேய்த்துக் கொண்டு வாழ்ந்து வந்த ஆரியரின் தேய்ந்த வாழ்வைக் கங்கைக்கரையின் பசும்புற்றரையும் மணி கொழிக்கும் வயலும், வயல் மருங்கே அமைந்திருந்த தோட்டங்களும் துலக்கிற்று. பச்சை கண்டு இச்சை கொண்ட நச்சு நினைப்பினர், கச்சையை வரிந்து கட்டிக் கட்கமெடுத்துப் போரிட்டு வாழும் தமிழரைப் பின்னர் கண்டனர். தங்கக் கோட்டைகளிலே வைரமணிகள்போல் ஒளி விட்டு வீசி வந்த தமிழரிடை, போரிடுவதோ இயலாது. ஆனால் என்ன? வீழ்த்த வீரம் இல்லையெனினும், வஞ்சமெங்கே போயிற்று! வல்லவனுக்குப் புல்லும் ஆயுதமாம். ஆரியருக்குக் காய்ந்த புல் - தர்ப்பையே - தமிழரை, தந்திரத்தால் வீழ்த்த ஆயுதமாயிற்று. “நாங்கள் இருக்கும் விதங்கண்டு நகைப்பீர் தமிழரே! எமது தேவர்கள் மகா பராக்கிரமசாலிகள்! மழை பெய்வது எமது வருணதேவனால்! நெருப்புக்கு எமது அக்கினி பகவானே கர்த்தா! காற்றுக்குக் காவலன் எமது வாயு!” என்று கட்டுக்கதைகளை விட்டனர். தமிழரிலே, தெளிவைத் துறந்தோர் நம்பினர். சந்து கண்டதும் நுழையுஞ் சர்ப்பம்போல், மூடமதி இதுதான் தக்க சமயமெனக் கண்டு, தமிழரின் உள்ளத்திலே புகலாயிற்று. அந்த நிலை வந்ததாலேயே தமிழரிடம், ஆரியமுனி, ஆண்மையை இகழ்ந்து பேசிட, அரசனைப் பழித்திட, அந்த லோகம் இந்தலோகம் என்று பிரித்துப் பேசிடத் துணிந்தான். அன்று தமிழ்ச் சமுதாயம் தலை குனிந்திருக்கவில்லை! சமுதாயத்திலே சிலரே சாய்ந்திருந்தனர். எனவே ஆரிய முனிக்குப் பேசிடல் மட்டுமே எளிதாயிற்று; நம்ப வைத்தல் முடியாது போயிற்று. எனினும் விதை தூவிவிட்டு, வானத்தை நோக்கிடும், வறண்ட நிலத்துக்காரன்போல், ஆரியன் தனது சரக்கை அவிழ்த்தான்.           பகுதி - 4   “உமது மன்னன், கலிங்கப் போரிலே வெல்வான்; கலகப் போரிலே என் செய்வான்? நான் துறவி; எனக்கு மன்னர் கூட்டமே துரும்பு. எனவே நான் துணிந்தே கூறுகிறேன். பட்டத்துக்கு வாரிசுப்படி வரவேண்டிய மன்னன் வந்திருப்பின் இத்தகைய அமளிகள் ஏற்பட்டிரா. தானுண்டு, தன் அரசுண்டு என்று இருந்திருப்பான். இவனோ, எடுவாளை! வீசு தலையை!! என்று கூறின வண்ணமிருக்கிறான். கொலை! படுகொலை! கோரம்! உயிர்வதை! நடந்தபடி இருக்கிறது. யாவும் இவனொருவனின் புகழ் வளர! இதற்கு எவ்வளவு கொலை! பாப மூட்டையைச் சுமந்து கொண்டிருக்கிறான் பார்த்திபன்!” என்றான் யோகி! கொலையா! கொலை என்றால், கொல்லுவது என்பதுதானே பொருள்! இதிலே பாபமும் புண்ணியமும் என்ன தொக்கிவிட்டது. தொந்தி சுமக்கும் தந்திரவாதியே! உலகிலே, போர்க்களம் ஒன்றில்தான் “கொலை” நடக்கிறதோ! இவ்வளவு காருண்யம் பேசி கண்ணீர் வடிக்கிறீரே, உமது காலடியிலே சிக்கி சிதைந்துபோன சிற்றெறும்பு, புழு, பூச்சி எவ்வளவு. அவை கொலையல்லவா? பாபமல்லவா? போர்க்களந்தானா கொலைக்களம்! உலகமே அதுதானே!! சாவது, சாகடிக்கப்படுவது என்பவை உலகிலே விநாடி தோறும் நடைபெறும் நிகழ்ச்சிகளல்லவா! காட்டிலும், நாட்டிலும், குருவிக் கூட்டிலும், குகையிலும், புற்றிலும், கடலிலும், விண்ணிலும், மண்ணெங்கும், கொலை நடந்து கொண்டே இருக்கிறது. பாபம், புண்ணியம், என்ற மொழிபேசி, மன்னனை ஏசிடத் துணிந்தீரே, கொலை நடவாத இடம் எது? யோகிகளின் பர்ணசாலைகளிலே, பக்குவமாக வாட்டித் தேனில் தொட்டு தின்னப்படும் மானிறைச்சி, புண்ணியத்துண்டுகளா! பசுங்கன்றின் இறைச்சியைப் பதம் பார்க்கும் முனி சிரேஷ்டர்கள் பாப பாயசத்தைப் பருகினவர் களன்றோ. எமக்குத் தெரியும் எது முறை என்று! உமது கற்பனை உலகில் நாங்கள் குடி ஏறிடோம். கட்டும் உமது கடையை. இல்லையேல் நடவும் மன்னரிடம். முடியுடன் விளையாடு கிறீர்; தெரிந்தால் பிடி சாம்பலாக்கப்படுவீர்! கெடுமதி கொண்டு, கலிங்கனின் கைக்கூலியைத் தின்று, கலக புத்தியைப் புகுத்தவந்தீர், போர்க்குண மக்களிடம் பூனைப் பேச்சு பேசுகிறீர்.” என்று கூட்டத்திலே ஒருவன் கொதித்துக் கூறினான். ஆரியன், “ஆத்திரம் விடுக! சந்தேகம் கொள்ளாதீர். நான் சாத்திரத்தை ஓதினேன். வேறில்லை. களத்திலே நடப்பதை நீங்கள் ஆதரிப்பதானால், நான் குறுக்கிடப் போவதில்லை.” என்று கூறினான் விபரீதம் விளையாதபடி இருக்க. மக்கள், “வந்தான் வழிக்கு” என்று கூறிக் கைகொட்டி நகைத்தனர். பின்னர் “ஓய் ஏதோ பேய் என்று சொன்னீரே, அதை உடனே களத்துக்கு அனுப்பும், நல்ல விருந்து கிடைக்கும்” என்று கேலி செய்தனர். களத்திலே, சோழனின் படைவீரர்கள், விழியினின்று கனலையும், உடலிலிருந்து குருதியையும் சொரிந்து, வெடுவெடென வீரச்சிரிப்புச் சிரித்துத் தமது நகை, நடை, இடி, பிடியால், கரிகள் திகைக்கும்படி காட்சியளித்தனர். மீனவர் மிரண்டதும், சேரர் மருண்டதும், விழிஞர் விரண்டதும், வந்தவர் செத்ததும் எம்மாலாயிற்றே என்று, முன்பு தாங்கள் முறியடித்த கூட்டத்தினரின் வரிசையைக் கூறி, வாளை வீசிப் போரிட்டனர், குலோத்துங்கனின் வீரர்கள். வாளோடு வாள் கலகலவெனப் பேச, கடகடவெனத் தேர்கள் உருண்டோட, யானைகள் மிரள, குதிரைகள் கதற, கோரமாகப் போர் நடந்தது. நெருப்போடு நெருப்பு, மலையோடு மலை, கடலோடு கடல் என்பதுபோல், படையுடன் படை உக்கிரமாக மோதிக் கொண்டன. யானையின் துதிக்கையை எதிரி யானையின் துதிக்கை பற்றி, முறுக்கி ஒருபுறம் இழுத்ததும், தந்தத்தால், மண்டையைக் குத்த, காலால், குத்திடும் கரியைக் குப்புறக் கவிழ்க்கக் குத்துண்ட யானை முயல்வதும், எதிர்ப்பட்ட போர் வீரர்களை, ஒருபுறம், யானைகள் கரகரவென இழுத்து, எலும்புகளை மளமளவென முறித்துக் கீழே வீழ்த்திக் காலால் தேய்ப்பதும் ஆகிய காட்சிகள், தமிழரையன்றி மற்றவரைக் கலங்க வைக்கும் தன்மையினதாக இருந்தன. நெருப்பைப் பரவச் செய்யும் காற்றென, குதிரைப்படை களத்திலே, அங்கும், இங்கும், எங்கும் சுழன்று, சுழன்று சுற்றிச் சண்டமாருதம் மரங்களைச் சாய்ப்பதுபோல், எதிரிகளைச் சாய்த்து அழித்தது. வீரமணியின் திறனை வியக்காதார் இல்லை. “அதோ வருகிறான்! இதோ பாய்கிறான்!” என்று எதிரிகள் மிரண்டு கூறினர். கலிங்கப் படையிலே பெரும் பகுதி அழிந்தது! மற்றது மிரண்டது! மண்டியிட்டாலன்றி மீள மார்க்கமில்லை! மார்தட்டிய மன்னன், களத்திலே இல்லை! கற்கோட்டையை நாடிச் சென்றான். மீசையை முறுக்கிய மந்திரி கேட்பாரற்று கிடந்தான். வேழங்கள் பிணமாயின! குதிரைகள் குடலறுபட்டுக் குவிந்து கிடந்தன! இரதங்கள் தூளாயின! படை வரிசை பாழாயிற்று! வாளேந்திய கரங்கள் குறைந்தன! வேதனைக்குரல் அதிகரித்தது! வெற்றி சோழனுக்கு! தொண்டமானின் தோள்கள் பூரித்தன! வீரமணியின் முகத்திலே ஒளி வீசிற்று! வென்றோம்! வென்றோம்! என்று சோழனின் சோர்விலாச் சூரர்கள் முரசு கொட்டினர். கலிங்கர், களத்தை விட்டோடலாயினர்! மான் வேட்டையாடும் வேங்கைகளாயினர் தமிழர்! கலிங்கப்போர் சோழனின் கிரீடத்துக்கு மற்றோர் வெற்றிமணி தந்தது! ஆரியமுனி குறிப்பிட்ட பேய்கள், களத்துக்கு வரக் கூடுமானால், வயிறு புடைக்க உண்டிடப் பிணங்கள் குவிந்து கிடந்தன. இறந்துகிடந்த யானையின் தந்தத்தைக் கொண்டு பேய்கள் பல்விளக்கிக் கொண்டு, யானையின் எலும்பால் நாக்கை வழித்துக் கொண்டு, ஓடும் இரத்த ஆற்றிலே வாய் கழுவிக்கொண்டு, இஷ்டமான பிணத்தை வயிறுபுடைக்கத் தின்னலாம்! வெறும் பிணம் தின்ன விருப்பமில்லையேல், அறுசுவை உண்டியே அங்குச் சமைக்கலாம்; அத்தனையும் அடுக்காக இருந்தன. பிணமான கலிங்கரின் வெண்பற்களைக் குவித்திடின், அரிசி! அதைக் குத்திட உரல் வேண்டுமோ! இதோ, கலிங்கரிடமிருந்து, தோல் கிழிந்து தரையில் உருண்ட முரசுகள். அவைகளிலே கொட்டி, யானைத் தந்தத்தாலே குத்திடலாம்! சமைத்திடச் சாமான் ஏராளம்! சாப்பிடவோ, சகலம் தயார்! விருந்து தீர்ந்ததும் வெற்றிலைப்பாக்கு வேண்டுமா! குதிரையின் குளம்புகள், பாக்கு! யானைக் காதுகள் வெற்றிலை! போட்டு மெல்லட்டும் பேய்கள்!! ஓஹோ! வெண்சுண்ணம் வேண்டுமே! அதுவும் உண்டு. கலிங்கரின் கண்களின் வெள்ளைக்கு மட்டும் குறைவா!! பேய்கள் பெருவிருந்து பெறலாம் என்று கூறும் விதமாகக் கிடந்தது களம்! அத்தகைய போருக்குப் பிறகே, கலிங்க மன்னன், தலைதப்பினால் போதும் என்றோடிவிட்டான். அவனைப் பிடித்துவர ஒரு படை சென்றது. ஓடி ஒளிபவரையும், செத்தவர் போல் படுத்திருப்போரையும் பிடித்திழுத்துக் கைது செய்ய ஒருபடை வேலை செய்தது. களத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே வீரமணி வருகையில், இறந்துகிடந்த யானைக்குப் பக்கத்திலே உருண்டு கிடந்த ஒரு கலிங்கத்தானின், ஈனக்குரல் கேட்டது. குற்றுயிராகக் கிடந்தவனைக்கண்ட வீரமணி, குதிரையை விட்டுக் கீழே குதித்து, “கலிங்கப்படை தோற்றது, மன்னன் மருண்டோடி விட்டான். நீர் ஏன் கைதியானீர்” என்று கூறிவிட்டு, வாளை உறையினின்றும் தயாராக எடுத்து உருவினான். சாய்ந்து கிடந்த கலிங்கத்தான், அணையுமுன் ஒளிவிடும் விளக்குபோல், ஒருமுறை சிரித்துவிட்டு, “பிணத்தோடு பிணக்கு ஏன்? உயிரை இழக்கப் போகும் என் முன் உருவி உடைவாள் ஏன்? என்னைக் களத்தைவிட்டு அழைத்துச்செல். உன் கூடாரத்துக்கல்ல. இங்கிருந்த சிலகாத தூரத்திலே ஒரு குகை இருக்கிறது, வழி, நான் காட்டுகிறேன். அங்குப் போனபின், நான் சாகப்போகும் நான் - வயது முதிர்ந்த நான், கடைசி வரை களத்திலே தீரமாக நின்று போரிட்ட நான் - இரகசியம் ஒன்றுரைக்க வேண்டும்” என்றான். “கபடம்! நான் கேளேன்” என்றான் வீரமணி. “வீரனே! சாகப்போகும் என்னிடம் விளையாடதே! வஞ்சகமல்ல நான் பேசுவது! நான் நிம்மதியாக இறக்க, என் மனத்தில் உள்ள பளுவைக் கீழே தள்ள வேண்டும்” என்றான் கலிங்க வீரன். கலீர் எனச் சிரித்து விட்டு வீரமணி, “பளுவைத் தாங்க நான் சுமைதாங்கி என்று எண்ணுகிறாயோ” என்று கேட்டான். “ஆம்! ஒரு சுந்தரியின் வாழ்வைத் தாங்கும் சுமைதாங்கியாக்கப் போகிறேன். இந்த அபாக்கியவானின் ஆசையின் விளைவு, வேதனை உலகிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும். என் மகளைப் பற்றிய மர்மம் உன்னிடம் உரைக்கப் போகிறேன். யோசித்துக் கொண்டிராதே. உன் குதிரை மீது என்னைத் தூக்கி வைத்துக்கொள். என் இருகால்களும் துண்டிக்கப்பட்டு விட்டன உயிர் துண்டிக்கப்படுமுன், உன்னிடம் நான் உள்ளத்தில் உள்ளதை உரைத்திட வேண்டும். தூக்கு!” என்றான் கலிங்கன். வீரமணிக்குப் பரிதாபம் பிறந்தது. கலிங்க வீரனோவயோதிகன், களத்திலே படுகாயத்துடன், குற்றுயிராகக் கிடக்கும் நேரத்திலே தன்னைக் கெஞ்சுவது கண்டு மனம் இளகினான். வீரமுள்ள நெஞ்சினருக்கு ஈரமும் உண்டன்றோ! கலிங்க வீரனைத் தூக்கித், தன் குதிரை மீது சாய்த்து தனது மேலங்கியால் மறைத்துவிட்டான். குதிரை மீது தாவி உட்கார்ந்தான். “தெற்குப் பக்கமாகக் குதிரையைத் துரத்து; வேகமாகப்போ! வழியிலே, யார் நிறுத்தினாலும் நிற்காதே; என்னைக் காட்டிக் கொடுக்காதே; கோடி புண்ணியம் உண்டு” என்று வயோதிகன் திணறிக் கொண்டே கூறினான். குதிரை கடுவேகமாக ஓடிற்று. வீரமணி செல்வதைக் கண்டு, அவனுடனிருப்போர், துணைக்காகக் கூடச் செல்லலாயினர். வீரமணி, உரத்த குரலில், அவர்களை நோக்கி, “தோழர்களே! நீங்கள் களத்துக்கடுத்த கூடாரத்திலேயே தங்குங்கள். நான் ஒரு அவசர வேலையாகச் செல்கிறேன். விரைவில் வருகிறேன்” என்று கூறி அனுப்பிவிட்டான். “நல்ல காரியம் செய்தாய், ஏது! நீ ஒரு தலைவன்போல் தெரிகிறதே” என்றான் வயோதிகன். வீரமணி சிரித்தான். தெற்கு திசையிலே இரண்டு மைலுக்குமேல் சென்ற பிறகு, கிழக்குப் பக்கமாகத் திரும்பினர், கிழக்கே ஒரு மைல் சென்ற பிறகு, சிறு குன்றுகள் தென்பட்டன. அங்குக் குதிரை நிறுத்தப்பட்டது. மூன்றாவது குன்றிலே போ, என்னைத் தூக்கிக்கொண்டு தான் போக வேண்டும்” என்றான் வயோதிகன். வீரமணி வயோதிகனை தோள்மீது அமர்த்திக்கொண்டு, அன்புடன் அணைத்துக் கொண்டான். குன்றின்மீது கொஞ்ச தூர சென்றதும் ஒரு பெரிய கற்பாறை இருந்தது. அதைத் தள்ளின பிறகு குகை தென்பட்டது. இருள் சூழ்ந்திருந்தது. கிழவன் ஒரு மூலையிலே விளக்கிருக்கும் கொளுத்து என்றான். இருள் நீங்கியதும், குகை, மிக சுத்தமாக ஒருவரிருவர் வசிக்கக் கூடிய விதமாக அமைந்திருப்பதைக் கண்டான். வீரமணி, கிழக்குப்புறமாகத் திரும்பினதும், ஒரு கட்டில் கிடந்தது; அதன்மீது கலிங்கவீரன் படுக்க வைக்கப் பட்டான். வீரமணி அருகே உட்கார்ந்து கொண்டு, “ரொம்ப களைப்பாக இருக்கிறதோ? ஏதாவது பானம் பருகினால்...” என்று விசாரித்தான். “பானமா! எனக்கேனப்பா! ஒன்பது சோழ வீரர்களின் உயிரைக் குடித்தேன். எனக்கொன்றும் தாகவிடாய் இல்லை.” என்றான் வயோதிகன். வீரமணி, புன்னகையுடன், “ஒன்பது சோழ வீரரின் உயிரைக் குடித்தீர்; ஆனால், உள்ளே போன வீரரின் உயிர்கள் உமது உயிரைக் குடிக்கின்றன’ என்றான் வீரமணி.  “என் உயிரை இழக்க நான் அஞ்சவில்லை. என் மனம் உன் உதவியால் சாந்தியானால், போதும். எனக்கு வாழ்ந்து தீரவேண்டுமென்ற அவசியமில்லை. எனக்கு எல்லாம் உண்டு; எதுவும் இல்லை! பொக்கிஷம் ஏராளமாக உண்டு. இதோ இந்தப் பக்கமாக உள்ள பேழைகளிலே உள்ள பூஷணங்கள், கலிங்க நாட்டை விலைக்கு வாங்கி விடலாம், அவ்வளவு இருக்கிறது. ஆனால் இவ்வளவு பொக்கிஷமுள்ள எனக்குப் போகம் இல்லை. மனைவி உண்டு, ஆனால் மகிழ்ச்சி இல்லை, மனைவி என்னுடன் இல்லை. மகள் உண்டு. மணிபோல்! ஆனால் அந்த மணி உள்ள இடமோ எனக்குத் தெரியாது. அவளைக் கண்டு பிடித்து, என் மகளிடம், என் வரலாற்றைக் கூறி, பெற்றேனே தவிர வளர்த்தேனில்லை என் மகளை, அதற்காக என்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டு, என் முயற்சியால் ஈட்டிய இந்தச் செல்வத்தை, என் காதலில் கனிந்த செல்வத்திடம் தர வேண்டும். உனது உழைப்புக்காக நீ இதிலே பாதி எடுத்துக்கொள். என் மகளை ஒரு முறை நான் கண்ணால் கண்டால், களிப்புக் கடலிலே மூழ்குவேன். கையிலே தூக்கி வைத்தேன், சிறு குழந்தையாக இருந்தபோது; இன்றுவரை கண்டேனில்லை. எங்கு இருக்கிறாளோ! என்ன கதியோ! ஏழ்மையோ! நோயோ!” என்று கூறி அழுதான். வீரமணிக்கு ஒன்றும் விளங்கவில்லை. வயோதிகன் மிக்க சோகத்துடன் பழங்கால நினைவினால் நெஞ்சு நெகிழ்ந்து பேசுவதை இடைமறித்துத் துன்புறுத்தவும் இஷ்டப்படவில்லை; அதிகமாகப் பேசிக் கொண்டே இருந்தால் என்ன ஆகுமோ என்றும் கவலைப்பட்டான். “தாயிருக்க மகளுக்கென்ன குறை!” என்று கேட்டான். “தாய்! அவளைப் பெற்ற தாய் என்னை மகிழ்வித்த அம் மாது மகளுடன் இல்லை. தாய்வேறு, மகள்வேறு; தந்தைவேறு; ஒருவரோடு ஒருவர் இல்லை. துயரக் குழம்பப்பா என் சேதி” என்று கதறினான் கிழவன். “பரிதாபம்! இவ்வளவு துக்ககரமான வாழ்க்கையிலே நீர் இருப்பது கேட்டு நான் மிகவும் வருந்துகிறேன். பெரியவரே! உமக்கு உதவிசெய்தே தீருவேன். உமது மகளை மூன்று மண்டலங்களிலே எங்கு இருந்தாலும் கண்டுபிடிப்பேன்; இது உறுதி. வடநாடுகளிலே வதியினும் கண்டுபிடித்தே தீருவேன். அவளை என் தங்கையாகப் பாவிப்பேன்” என்றான் வீரமணி. “தங்கையாக இருக்கட்டும், அவள் எவனையேனும் மணந்துகொண்டிருப்பின்; இல்லையேல் அந்த நங்கைக்கேற்ற நாயகனும் நீயே. வீரமும் விவேகமும் கருணையுங்கொண்ட உள்ளமுடைய உத்தமனே! இந்தப் பாவியினிடம் எவ்வளவு பரிவு காட்டுகிறாய்; என் வாழ்க்கையிலே நான் எத்தனையோவித மகிழ்ச்சி கண்டேன், எவ்வளவோ துயரிலும் வாடினேன்; போர் பல புரிந்திருக்கிறேன். புகழும் அடைந்தேன், பொற்கொடி போன்றவளைப் பூசித்தேன், அவள் தந்த வரம், என் மகள்; அவளை இழந்தேன், இன்று அவள் என் அருகே இருந்து, “அப்பா!” என்று ஒருமுறை அன்போடு அழைத்தால், இந்தப் பாவியின் உயிர் நிம்மதியாகப் பிரியும். ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு இல்லை என் செய்வது. என் மகன்போல் இன்று நீ இருக்கிறாய் நீயே இனி என் வரலாற்றுக்கு வாரிசு!” என்று கூறி விட்டு வயோதிகன் களைத்துச் சாய்ந்து விட்டான். குளிர்ந்த நீரை முகத்திலே தெளித்து, மேலங்கியால் மெதுவாக வீசினான் வீரமணி. இரண்டொரு நிமிடங்களில், வயோதிகன் கண்களைத் திறந்தான். அணையப் போகும் தீபத்தின் நிலையிலிருந்தன அவன் கண்கள். வீரமணி விசனித்தான். “தாய்! அவளைத் தேடுவானேன்! அவள் நிம்மதியாக ஆண்டுகொண்டு இருக்கிறாள். வீரனே! என் மகளின் தாய், ஒரு அரசி” என்றான் வயோதிகன். வீரமணி ஆச்சரியப்பட்டான். “அரசியா! எங்கே? யார்? நீர் ஓர் மன்னரா!” என்று பரபரப்புடன் கேட்டான். “நான் மன்னனல்ல! ஆனால் என் மனதைக் கொள்ளை கொண்டவள், எனக்குக் காதல் மதுரத்தை ஊட்டியவள், மகளை ஈந்தவள் சாதாரணக் குடியல்ல, என்போல் சாமானியமானவளுமல்ல, ஆம்! அவள் ஒரு அரசி! அன்பினால் நாங்கள் பிணைக்கப்பட்டோம், வஞ்சகத்தால் வெட்டப்பட்டது எமது அன்புச் சங்கிலி! எங்கள் காதலின் கனியும் எம்மை விட்டுப் பிரிக்கப்பட்டது. என் வரலாறு மிகமிகச் சோகமுடையது” என்றான் வயோதிகன். “எந்த நாட்டு அரசியைப் பற்றி நீர் பேசுகிறீர்” என்று வீரமணி கேட்டான். “சோழமண்டலத்துக்கும் ஆந்திர மண்டலத்துக்கும் இடையே உள்ள மலர்புரி எனும் சிற்றரசு உனக்குத் தெரியுமோ! சோழனிடமே மலர்புரி கப்பம் கட்டுவது” என்று துவக்கினான் வயோதிகன். “ஆமாம்! மலர்புரிக்கு விதவை மருதவல்லி அம்மையார் அரசி!” என்றான் வீரமணி. “உண்மை! அந்த மருதமே, என் மனதை மகிழ்வித்தவள். அவளுடைய விதவைக்கோலம் வெளி உலகுக்கு எனக்கு அல்ல! வீரனே! மலர்புரி அரசிக்கு நான் ஆசைநாயகனாக இருந்தேன்! வஞ்சனைக்கல்ல, அதிகாரம்பெற அல்ல! அன்பால் நாங்கள் இருவரும் சேர்க்கப்பட்டோம். ஆடிப்பாடிக் களித்தோம். அரண்மனை என்பதை மறந்தோம். சோலையிலும் சாலையிலும் சுந்தரமாகச் சரசமாடினோம். அந்த நாளை எண்ணிக் கொண்டால் என் மனம் கரையும். நான் கலிங்கநாட்டிலிருந்து கிளம்பி, பல மண்டலங்களைக் கண்டு மகிழ்ந்து ஒருநாள் மலர்புரி வந்தேன். மலர்புரி மருங்கேயுள்ள ஒரு சோலையிலே உலவிக்கொண்டு இருக்கையில், கம்பீரமான உருவுடன் ஒரு ஆரியன், என்னை அணுகினான்! அவனுடைய நடையும் உடையும் என் மனதைக் கவர்ந்தது. அவன் என்னை அன்போடு ஏற இறங்கப் பார்த்தான். நான் ஆச்சரியத்துடன் அவனெதிர் நின்றிருந்தேன். “பொருத்தமான பாத்திரம்! அரண்மனைக்கேற்ற பண்டம்! என் யோகத்திற்கு ஏற்ற தண்டம்!” என்று மெல்லச் சொன்னான். “நான் ஆரியரே!” ஏதேதோ கூறுகிறீர், என்னை ஏற இறங்கப் பார்க்கிறீர், என்ன விஷயம்? என்று கேட்டேன். “குரலிலே ஒரு குளிர்ச்சியுமிருக்கிறது. குமரி பாடு கொண்டாட்டந்தான் எனக்குமட்டுமென்ன?” என்று தன்னை மறந்து பேசினான். எனக்கு கோபமும் வந்தது! அவனுடைய தோளைப் பிடித்து குலுக்கினேன். மரத்தைப் பிடித்தாட்டினால் கனி உதிர்வதுபோல அவன் கலகலவெனச் சிரித்துவிட்டு, “குழந்தாய்! உன்னை அதிர்ஷ்ட தேவி அணைத்துக்கொள்ள வருகிறாள். உனக்கு யோகம் பிறக்கிறது” என்று கூறினான், என்னை உற்று நோக்கியபடியே. “அதிர்ஷ்டதேவியாவது அணைத்துக் கொள்வதாவது!” என்று நான் கூறினேன். ஆரியன், என் இரு கரங்களையும் பற்றிக்கொண்டு, “வாலிபனே! உன்னை அழகும் இளமையும் ததும்பும் ஒரு அரசகுமாரிக்கு விருந்தாக அளிக்கப் போகிறேன்” என்றான். நான் பல மண்டலங்களிலே சுற்றி வந்தபோது, பல சுந்தராங்கிகளைக் கண்டு சொக்கியதுண்டு. சிலர் கிடைக்காததால் கருத்து கெட்டதுண்டு. என்றாலும், தானாக எனக்கு இந்த வாய்ப்பு வருவதென்றால், எவ்வளவுதான் குதூகலம் பிறக்கும். அவள் எப்படி இருப்பாளோ! எவளோ எக்குணங்கொண்டவளோ, மதிமுகவதியோ மந்திமுகவதியோ, மலர்க்கொடியோ மாமிசப்பிண்டமோ, சரசக்காரியோ விரசவதியோ, என்று ஒரு விநாடியிலே என் மனதிலே எண்ண அலைகள் எழும்பின. என் முகத்திலே பொலிவு பிறந்திடக் கண்ட ஆரியன் புன்னகையுடன், “கன்னி பற்றிய பேச்சே கனிருசியாக இருக்கிறதே! கன்னியைக் கட்டித் தழுவும்போது, ஆஹா! வாலிபனே! எந்த நிலையில் இருப்பாயோ? என்னை நினைப்பாயோ மறப் பாயோ! என்று கேலி செய்தான். “என்ன பேச்சய்யா பேசுகிறீர்! தோட்டம் தெரியாமுன்னம், தொடுத்திடு மாலையை என்று கூறுகிறீர். யார் அம்மங்கை? அவ்வளவு மலிவாகக் கிடைக்கக் காரணம் என்ன? என்னைக் கண்டதும் உமக்கு இக்கருத்து ஏன் உதித்தது?” என்று அடுக்கடுக்காக நான் கேள்விக்கணைகளை விடுத்தேன். ஆரியன் சொன்னான், “வீரா! நீ அறியாயோ, நாங்கள் காலநிலை உரைப்பதுடன் காமநிலையும் உரைப்போர் என்பதை. காதற்கணைகளை எடுத்துச் செல்ல எம்மிலும் மிக்காரும் தக்காரும் உண்டோ? பொருத்தமுரைக்க அறிவோம்! பொன்னுக்கு மெருகு வேண்டுவது போல், உங்களின் வாழ்வு இனிக்க வேண்டுமானாலும், எமது “முலாம்” பூசப்பட வேண்டும் குழந்தாய்! நான் உன்னை இந்த மலர்புரி அரசி மருதவல்லி என்ற மங்கையின் மணாளனாக்கப் போகிறேன்” என்றான். “மலர்புரி அரசிக்கு மணவினை இன்னம் நடக்கவில்லையோ?” என்று நான் கேட்டேன். “நடந்தது, நலிந்தது, அவள் நாயகனை இழந்தாள் நரம்பு தன் முறுக்கை இழக்கவில்லை, நேத்திரத்திலே ஒளி குன்றவில்லை, நுதலிலே மதி தவழ்கிறது, இதழோ கொவ்வை! இடைகொடிதான்! குணமோ, தங்கம்! குயிலோ என்பாய், குரல் கேட்டால். கொஞ்சிடும் பருவம், கோலமயில் சாயல்” என்று ஆரியன் வர்ணித்தான். “என்னை மயக்குகிறீர்” என்று நான் கூறினேன் அடி மூச்சுக்குரலால். ஆரியன், பின்னர் மெல்லச் சொன்னான், “மருதம், விதவை! அவளுக்கு உன்னைப் பரிசளிக்க நான் தீர்மானித்ததற்குக் காரணம், ஆண்டவனின் பிம்பமே அவளை ஆரத்தழுவி ஆனந்தமூட்டும் என்று நான் பலநாட்களாகக் கூறி வந்தேன், நோன்பிருக்க வைத்தேன், பூசைகளுக்கும் குறைவில்லை. பேதை, அவள் ஆண்டவன் ஆரத் தழுவ முடியாது என்பதை அறியாள். ஆண்டவனை, உருவமாக, உன்னைத்தான் நான் செய்யப் போகிறேன். பட்டத்தரசி நித்தமும் பூஜிக்கும் பாகீரதி கோயிலின் பூசாரி நான்! மலர்புரியை அவள் ஆள்கிறாள், அவள் மனதை நான் ஆள்கிறேன், அவளை உனக்கு அளிக்கிறேன், ஆனால் ஒரே ஒரு நிபந்தனை நீ மானிடன் என்று கூறக்கூடாது; ஆண்டவனின் பிம்பம், என் தபோவலிவால் தருவிக்கப்பட்டவர் என்றே கூற வேண்டும். அவளிடம் ஆடிப்பாடிக் களிக்கலாம், ஜோடிப்புறாபோல் வாழலாம், ஆனால், எக்காரணத்தை முன்னிட்டும், உனது உண்மை வரலாற்றை நீ உரைத்திடக் கூடாது. உனது இச்சைப்படி மற்றவற்றிலே நடக்கலாம்’, என்றான். என் ஆச்சரியத்துடன், சற்று ஆத்திரமும் புகுந்தது. “ஓஹோ! உணர்ந்தேன் உமது கபடநாடகத்தை! அரசியின் விதவைக் கோலத்தைக் கண்டீர், வைதீக வஞ்சனையால் வென்றீர், என்னை இரவல் தந்து, அரசியின் உயிரைவிட மேலான மானத்தை உமது உள்ளங்கையிலே வைத்துக்கொண்டு, அரசியை மிரட்டி வாழச் சூது செய்கிறீர். இதற்கு நான் ஒரு கூலியா! என்னை என்னவென்று மதித்தீர்?” என்று கேட்டேன். ஆரியன், சினங்கொண்டானில்லை, “சகஜமான எண்ணங்களே, உனக்குத் தோன்றின. ஆனால் அவை அத்தனையும் தவறு. அவளை நான் இப்போதும், “பாகீரதியின் அருளால்” என் கைப்பாவையாகத் தான் கொண்டிருக்கிறேன். உன்னை நான் உபயோகிக்க வேண்டுமென்ற அவசியமே இல்லை, உலகிலே ஆணழகன் நீ ஒருவன்தானோ!” என்று கேட்டுவிட்டு, “அவளுடைய வாலிபத்துக்கு விருந்திடவே இந்த யோசனை, வேறெதற்குமல்ல! பரிதாபம்! அவளுக்கு எல்லாம் இருக்கிறது. அரசு, அந்தஸ்து, அழகு, இளமை, செல்வம் யாவும் இருக்கிறது; பயன் என்ன? அவளை அணைத்துக் கொண்டு, “அன்பே! ஆருயிரே! இன்பமே!” என்று கொஞ்சிக் குலவிட ஒருவன் இல்லை. அது அவள் குற்றமுமல்ல! ஆடவரைக் காணும்போது தன் அரசு என்ற கடிவாளத்தைப் பூட்டியே இச்சை எனும் குதிரையை இழுத்துப் பிடிக்கிறாள். ஆனால் அந்தப் பொல்லாத குதிரை, சும்மாவா இருக்கிறது! அவளைப் படாதபாடுபடுத்துகிறது. அவளை அந்தச் சிறையிலிருந்து மீட்கவே, நான் உன்னை அழைக்கிறேன்.” என்றான். என் இளமை, ஆரியன் கூறுவதை ஏற்றுக்கொள் என்று தூண்டிற்று, என் ரோஷ உணர்ச்சி, சீ! வேண்டாம் என்று சொல்லிற்று. தலைகுனிந்து நின்றோன், தரையிலே, நீர் தளும்பும் கண்களுடன், அழகு ததும்பும் அந்த அணங்கின் உருவம் தெரிவது போலிருந்தது, பெரு மூச்செறிந்தேன். என் வாலிபத்துக்கு விருந்தளிக்க, அழகும், இளமையும், அந்தஸ்தும் படைத்தவளைத் தர ஆரியன் முன் வந்தது என் நெஞ்சிலே நினைப்புச் சூழலைக் கிளப்பிவிட்டது. நான் அதனிடம் சிக்கிவிட்டேன். இன்று, நடை தளர்ந்து, தேகமொடுக்கிய பிறகு, எவ்வுளவு வெறிபிடித்து அலைந்தோம் இளம்பிராயத்திலே என்று எண்ணவேண்டி இருக்கிறது. அப்போது அப்படியா! நல்ல மலர், சுவையுள்ள கனி, இன்பகரமான இசை, இவை யாவும் ஓருருக் கொண்டுலவும் மங்கை என்றால், நரம்புகள் நர்த்தனமாடின, நெஞ்சு அலைந்தது, நேத்திரம் சுழன்றது! வாலிபனே! நீ அறியாததா! பாவம்! இப்போது நீயும் அந்த நிலையில்தான் இருப்பாய் என்று எண்ணுகிறேன். எவள் உன் நினைப்பால் சோழ மண்டலத்திலே சோர்ந்து கிடக்கிறாளோ யார் கண்டார்கள்! புன்னகை புரிகிறாய், போர் வீரா! ஆரியன் அன்று என்னை அழைத்ததுபோல் உன்னை அழைத்தால், உதாசீனம் செய்வாயோ! உல்லாசத்துடன் உலவ ஊராரிலே யார் விரும்பார்கள்! நான் இசைந்தேன். ஆரியன் தலை அசைத்தான்; பின்னர் சொன்னான்; “மலர்புரி அரசியின் மனோரதம் இனி நீயே! மருதவல்லிக்கு இனி நீயே மதி, நிதி, கதி. விதவைக் கோலத்திலுள்ள அந்தக் கெண்டை விழிக்கிளிக்கு இனி நீயே வாழ்க்கைச் செண்டு, பாடிடும் வண்டு! காதல், பூத்திடச் செய்வதே என்போன்றோரின் தொண்டு. காதல், என்றால் சாமான்யமா? காதலுக்கும் கடவுளுக்கும் பேதமொன்றில்லை. கால வேறுபாடு அதை அழிப்பதில்லை. கவிகள் அதினின்றும் தப்புவதில்லை. கலைக்கு அதுதான் பிறப்பிடம். உலக வாலிபர்களின் ஊஞ்சல், அந்த உத்தியான வனத்திலே இனி நீ உலவலாம். மருதம் இனி உன் மனோஹரி. ஆனால், நான் சொன்னதை மறவாதே! நீ ஆண்டவனின் பிம்பம், தேவஜோதி, கடவுட் கனி; ஆமாம், மானிடனல்லன். மானிட உருவந் தாங்கி வந்து மருதத்தை மகிழ்விக்கப் போகும் மகேஸ்வரன்!” என்று ஆரியன் கூறிடுகையில், கோமளவல்லியுடன் கொஞ்சிடப் போகிறோமே என்று குதூகலம் ஒரு புறம் என்னை இழுப்பினும், ஆரியக் கடவுட் தன்மை பற்றிய சந்தேகம் மற்றோர் புறம் என்னை இழுத்தது. நான் தாமிரபரணி, வைகை, காவேரி, பாலாறு ஆகிய அழகிய நதிகளை மாலையாகக் கொண்டுள்ள தமிழகத்தில் இது பற்றிய தர்க்கங்களைக் கேட்டிருக்கிறேன், தத்துவார்த்த உரைகளைப் பலர் பேசிடக் கேட்டதுண்டு. எனவே, ஆண்டவன், மானிட உருக்கொண்டு, மங்கையருடன் மந்தகாசமாக இருப்பது முறை என்று ஆரியன் பேசிடக் கேட்டதால், எனக்கு,எவ்வளவு இழிந்த கொள்கையை இந்த ஆரியர்கள் சுமந்து திரிகிறார்கள் என்று எண்ணவும், வெறுப்படையவும் ஏற்பட்டது. ஆனால் என் செய்வது! ‘தேன் பருக வாராய்’ என்று அவன் அழைக்கும்போது உமது தேவனின் சேதி எப்படி? என்று கேட்பதா? “சரி! உமது இஷ்டப்படியே நடக்கிறேன்” என்று சுருக்கமாகக் கூறிவிட்டேன். “விவேகமுள்ளவனே! கேள்; நாளை இரவு எட்டு மணிக்கு, நீ பாகீரதி கோயிலுக்கு வா! அரசி, இரவு 10 மணிக்கு மேல், ஆடை அணி புனைந்து, பரிமள கந்தம் பூசி, தங்கத்தட்டில் பழ வகைகளும், தங்கக் கோப்பையில் பாலும் எடுத்துக்கொண்டு வருவாள் - ஒவ்வோர் நாளும் இதுபோல் வழக்கம். நாளையத் தினந்தான் அரசியின் ஆசை பூர்த்தியாகப் போகிறது. எட்டு மணிக்கு நீ அங்கு வந்ததும், உனக்குச் சில விசேஷ அலங்காரங்கள் செய்ய வேண்டும், தேவ வடிவத்துக்குத் தேவையான “முலாம்” பூசப்பட வேண்டாமா! பிறகு உன்னைப் பாகீரதி சிலைக்குள் போயிருக்கச் செய்வேன் - திடுக்கிடாதே அதற்கு வழி இருக்கிறது - சிலையினுள் நீ இருந்துகொண்டிருக்கும்போது, அரசி சிலையும் உருகும்படி வேண்டிக் கொள்வாள்; ஆராதிப்பாள், அர்ச்சிப்பாள். நான் கணகணவென மணியை அடித்து, “அம்மே! பாகீரதி! அடியவரை இன்னமும் சோதிக்காதே. அரசியரின் மனதை வதைக்காதே! உன் ஜோதியை ஆண் உருவில் வெளியே அனுப்பு! இகபர சுகத்தை இன்றே மருதவல்லியார் அடையும் மார்க்கத்தை அருள்!” என்று கூறுவேன். “மைந்தா! மெச்சினேன் உனது பூஜா விசேஷத்தை! குமாரி! கண்களை மூடிக்கொள்!” என்று கெம்பீரமான குரலிலே கூறு. அரசியின் கண்கள் மூடுமுன்னம், சிலையினுள்ளே இருக்கும் விசையைத் திருப்பு, பாகீரதி இரு கூறு ஆவாள். உடனே வெளியே வா! பாகீரதி பழைய நிலை பெறுவாள்! ஆச்சரியத்தாலும் ஆனந்தத்தாலும் தாக்கப்பட்டு, மருதம் மயக்கத்துடன் குழந்தை குரலிலே, “தேவா!” என்று கூறுவாள்! மார்போடு அணைத்துக்கொள்! பார் அப்போது அவள் மார்பு படபடவென அடித்துக் கொள்ளப் போவதை! பிறகு, நான் கோயில் திருவிளக்குகளைக் குளிர வைத்து விடுவேன். மூலஸ்தானத்தை மூடித் தாளிட்டுவிட்டு வெளியே செல்வேன். விடியுமுன் வருவேன். அதற்குள் உனது மதனவித்தையைக் காட்டு” என்றான். ஆம்! மறு தினம், “தேவா!” என்று குழைந்து கூறி, மலர்புரி அரசி என் மீது சாய்ந்தபோது அவளை மார்புறத்தழுவி, நெற்றியிலே முத்துமுத்தாக வடிந்த வியர்வையைத் துடைத்து கன்னங்களைத் தடவி, இதழைச் சுவைத்து “இன்பமே இன்னுயிரே!” என்று நான் அழைத்தபோது “இகபர சுகங் கண்டேன்! என் பூஜாபலனை உண்டேன். இந்த ஜென்மத்திலேயே தனியளானேன்” என்று மருதம் வணங்கி, என்னை வாழ்த்தினாள். ஆஹா! சிவந்த ரோஜா போன்ற உடலமைந்த அவளுக்குத்தான் மனம் எவ்வளவு வெள்ளை! கடல் போல் இருந்தன கண்கள். கபடத்தைக் கண்டாளில்லை. அவளுடைய மிருதுவான கன்னங்களை என் கன்னத்துடன் ஒத்தியபோது, அப்போது அலர்ந்த மலரை எடுத்து ஒத்திக்கொள்வது போன்று இருந்தது. அவளுடைய அணைப்பிலே நான் சில நிமிடம், என் அணைப்பிலே அவள் சில நிமிடம். என் இதழ் முத்தம் விளைவித்தது சில நிமிடம், அவள் இதழ் அதனைச் செய்தது சில நிமிடம், பொழுது விடியுமாமே! இத்தகைய இன்பபுரியிலே இரவு போய் பகல் வருவானேன்!!!                       பகுதி - 5   அந்த மறையாத வானவில், மங்காத மணம், என் வாழ்விலே, நான் கண்டறியாத களிப்பைத் தந்திடவே, நான் ஆரியனின் அடிபணிந்தேன்; திறம் வியந்தேன். அவனது இனத்தைப் புகழ்ந்தேன். ‘எனக்கு இன்ப உலக வாழ்வு தந்த ஏந்தலே’ என்று தொழுதேன். அவன் என் நிலையையும், என்னிடம் இழைந்து கிடந்த மருதத்தின் மனதையும் நன்கு தெரிந்துகொண்டு, நாகரிகமான நாட்டியப் பொம்மைகள் என்று எம்மை மனதிலே தீர்மானித்துக் கொண்டான். அவன் எதன் பொருட்டு இவைகளைச் செய்கிறான் என்று எண்ணிப் பார்க்கும் நிலையை நான் கடந்துவிட்டேன். அந்த நிலா முகவழகியின், நேர்த்தியான நேசத்திலே நான் நெஞ்சையும் நினைப்பையும் இழப்பேன். தேவஜோதியே என்று கூறி என்னைத் தஞ்சமென்றடைந்த அந்த வஞ்சியோ, கொஞ்சியும் குலவியும், வாலிபக் கோலத்தைக் காட்டியும், என்னை மகிழ்வித்தாள். பாவம் என்னுடன் சரசமாடுவதை அவள், பக்தியில் ஓர் பாகம் என்று கருதினாள். “ராதையும் ருக்மணியும், கோபிகையரும் பிறரும் பெற்ற பேறு, இந்தச் சாமான்யளுக்குக் கிடைத்ததே! எவ்வளவு பூர்வ புண்ணியமிருந்தால் இது கிடைக்கும் ஐயனே!” செந்தாமரைக் கையனே. என்று என்னிடம் கூறினாள். தேவனிடம் சரசமாடுவது பக்திப்பாசுரம் என்று எண்ணினாள். ஆரியன் சொற்படி கேட்ட என் சொல்லை நம்பினாள். ரோஜாவிலே முள் இருந்து பறிக்கும் நேரத்திலே கையை குத்துவதுபோல், அவளது சரசத்திலே பக்தி சாயல் இருப்பதுகாண, என் மனம் சற்று வேதனைப்பட்டது. சாமானிய மானிடன்! கலிங்கத்திலே பிறந்து, கட்கத்தை நம்பி வாழும் களத்துக் கூளம்! என்பது தெரிந்தால், அவள் என்னைத் தீண்டுவாளோ! சந்தேகமே! பருவம் அவளுக்கு அந்த நினைப்பைக் கொடுப்பினும், அரசி என்ற நிலை அவளைத் தடுத்துவிட்டிருக்கும். நானும் “தேவஜோதி” என்ற “தில்லு”க்கு உடன்பட்டிராவிட்டால் வான வீதியிலே உலவும் மதி கண்டு மகிழ்வதுபோல் மருதம், உப்பரிகை மீது உலாவுவதைக் கண்டு மகிழ்வதோடு தீர்ந்துவிட்டிருக்கும். கண்களுக்கு விருந்து கருத்துக்கு நோய் என்று இருக்கும்! பிரதி இரவும், நறுமணம் வீசும் தைலம் பூசிய கூந்தலில் முல்லை சூடி, முருவலுடன், மருதம், கோயில் வருவாள். நான் தேவ வடிவும், வாலிபத் துடிப்பும் கொண்டு அவளை வரவேற்பேன். அவள் தொழுவாள், நான் தழுவிக் கொள்வேன். “தேவா” என்று அடிமூச்சுக் குரலாலே என்னை அழைப்பாள். அணைப்பைத் தளர்த்தாமல் ‘அன்பே!’ என்று நான் கூறுவேன். இதழ்கள் பிறகு இணைபிரியா, சில நிமிடங்கள்! இந்த இன்பம், பல நாள், பல வாரம், பல மாதம், அவள் “தாய்” ஆகும் நிலை பெறும்வரை! திருக்கோயிலிலே, தேவ பூசாரியின் திருவருளால், நடந்த திருவிளையாடல், இந்த அளவு வரை சென்றது. பகவத் பிரசாதத்தைத் தாங்கும் புண்ணியம் பெற்றேன், என்று பூரித்தாள் அந்தப் பூவை. தேவன் என்ற பாவனையையும் மறந்து, தந்தை என்ற நிலையிலே, “ஊர் அறிந்தால்?” என்று கேட்டேன் மருதத்தை கள்ளமற்ற அவள் மெல்லச் சொன்னாள், “தேவா! உமது லீலா விநோதத்தை நான் என்ன கண்டேன்? தங்கள் சித்தம்போல் நான் நடப்பேன்” எனக்கு, தேவப் போர்வையைக் கழற்றி எறிந்துவிட எண்ணம் பிறந்து “மருதம்! என் கண்ணே! உன்னை நான் ஏமாற்றிவிட்டேன்” என்று துவக்கினேன், உண்மையைக் கூறிட. ஆரியனின் புனைந்துரையை நம்பியே அவளோ, புன்னகையுடன், “என்னை ஏமாற்றுவது உமது திருவிளையாடலிலே ஒன்று போலும்!” என்று கூறி, முத்தமிட்டாள். என் சித்தம் தடுமாறிற்று. பொன்விலங்கு எனக்கும் அவளுக்கும்! அதன் திறவுகோல், அந்தப் பூசாரியிடம். சாலையிலும் சோலையிலும், சிற்சில சமயங்களிலே அரண்மனையிலும் யாருங்காணாத சமயத்திலே நாங்கள் சரசமாடினோம். என் சுமையை இறக்கச் சமயமட்டும் கிடைக்கவில்லை. நான் தேவனாகவே இருந்தேன் - திருக்கோயிலிலேயே, என் மகள் பிறந்தாள் - பாகீரதியின் மாலையை உதிர்த்து, தூவினான் ஆரியன். ‘தங்கள் வரப்பிரசாதம்’ என்று குழைந்து கூறினாள் மருதம், தலைகுனிந்து நின்றேன் ஒரு விநாடி. பிறகு அந்தக் குழந்தையைக் கண்டேன். வாரி அணைத்தேன், முத்தமிட்டேன், கண்களில் நீர் கசிந்திட நின்றேன். பாவனையையும், பாசாங்கையும் வென்றேன். கபடத்தைக் கொன்றேன். திட மனதுடன் “மருதம்! நமது குழந்தை மீது ஆணையிட்டு இதைக் கூறுகிறேன், என்னை நம்பு, நான் தேவனுமல்ல, ஜோதியுமல்ல, உன் போல் மானிடப் பிறவிதான், நான் கலிங்க நாடு, தொழில், போர் புரிவது; நான் இந்தப் பக்கம் வந்தபோது, ஆரியன். என்னை தேவ சொரூபம் என்றுரைத்து உனக்குத் தந்தான். நீ எனக்கு உல்லாசந் தந்தாய்! அதன் விளைவு, இதோ விளையாடுகிறது. இனி இந்த மானிடனை நீ ஏற்றுக் கொள்வதும், தள்ளுவதும் உன் இஷ்டம். இனி இந்தத் தேவபாவனையை நான் தாங்கேன்” என்று கூறினேன், என் தேவ கிரீடத்தை வீசி எறிந்தேன், மலர் மாலைகளை பிய்த்து எறிந்தேன், அணிகளைக் கழற்றி வீசினேன், அவள், “தேவா! தேவா!” என்று கூறித் தேம்பினாள். நான் மயக்கமுற்றேன். பிறகு என்ன நடந்ததென்பது எனக்குத் தெரியாது. பல நாட்களுக்குப் பிறகு, நான் கலிங்கத்தில் என் வீட்டிலே காய்ச்சலுடன் இருக்கக் கண்டேன். யாரோ பல்லக்கில் கொண்டுவந்து என்னை விட்டுப் போயினர், என்று கூறினர். மீண்டும் மலர்புரி போகத் துணிவு பிறக்கவில்லை. சேதியை வெளியே சொல்லவும் பயமாக இருந்தது! கவலையைப் போக்க, கட்கமெடுத்து, கங்கைக்கு மேலேயும், காமரூப நாட்டிலுமாகப் பத்து ஆண்டுகள் திரிந்தேன். மருதம் என்ன ஆனால், குழந்தை என்ன ஆயிற்று, கோயில் பூசாரி என்ன ஆனான், என்று கொந்தளிப்பு உண்டாகவே, மாறுவேடம் புனைந்து மலர்புரி சென்று பாகீரதி கோயிலில் தங்கினேன். வந்தான் பூசாரி! சற்று வயோதிகனாகக் காணப்பட்டான்; அவனை விசாரித்தேன். ஆரியன் ஆயாசப்படாது பேசினான். “ஆம்! பத்து ஆண்டுகள் பறந்துவிட்டன! பாலப்பருவம் மாறிவிட்டது. மருதத்தின் பக்தி சிரத்தையும் குறைந்துவிட்டது. அவள் இன்னமும் உன்னை தேவனென்றே கருதுகிறாள்! திருவிளையாடல் தீர்ந்துவிட்டது, தேவன் மறைந்தான் என்று தினமும் கூறுகிறாள். அன்று நீ பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டாய். உனக்கு காய்ச்சலை வருவித்து, அவள் கண்படாமல் மறைத்துக் கலிங்கத்துக்கு அனுப்பினேன். காளை, நீ மீண்டும் இங்கு வந்தால் என் செய்வதென்று கலங்கினேன். வந்தால், வாளுக்குத்தான் பாவம், இறையாகி இருப்பாய். நீ புத்திசாலித்தனமாக பத்தாண்டுகளாக இப்பக்கமே தலைகாட்டவில்லை” என்று பேசினான். என் மனம் கொதித்தது! எவ்வளவு துணிவு இவனுக்கு என்று கோபம் பிறந்தது; என் செய்வது! “ஆரியரே! நான் மருதத்தை மீண்டும்...” என்று கேட்டேன். “முடியாது! முடியாது! அந்தப் படலம் முடிந்துவிட்டது” என்று தீர்மானமாகக் கூறிவிட்டான் தீயன். “என் குழந்தை எங்கே?” என்று கேட்டேன். அவன் புன்னகையுடன், தேவப் பிறவி, தேவரடியாளாக இருக்கிறாள்! என்று திமிராகப் பேசினான். “எங்கே இருக்கிறது குழந்தை?” என்று கெஞ்சினேன். “தெரியும்! கூற முடியாது. அவள் வாழ்கிறாள், வசீகரமிக்க வனிதையாவாள், உனக்கேன் கவலை! மருதம் உன் சொப்பனத்திலே கண்ட சுந்தரி என்று எண்ணிக்கொள். குழந்தையும் கனவிலே ஓர் கனி! மீண்டும் அவர்களுக்கும் உனக்கும் தொடர்பு இல்லை - ஏற்படாது - ஏற்படுத்த முடியாது” என்று கூறிவிட்டான். மலர்புரியில் அந்தச் சமயம் அவனுக்கு இருந்த அதிகாரம், அரசிக்கே அவன் விரும்பினால் ஆபத்தைத் தரக் கூடியதாம்! எனவே நான் அவனை எதிர்க்க அஞ்சி, “ஆரியரே, எனக்குக் குழந்தை மீதே கவனமாக இருக்கிறது” என்று மீண்டும் கெஞ்சினேன். ஆரியன் ஓர் நீள மணியை என்னிடம் தந்து, இது, உன் பெண்ணின் காதிலே தொங்கிய அணி. இதை ஞாபகப் பொருளாக வைத்துக் கொள். அவள் சுகமாக இருக்கிறாள். நீ உடனே ஊரைவிட்டுச் செல்” என்று கட்டளையிட்டான். “சோழ வீரனே இதோ பார், என் கழுத்தில் தங்கச் சங்கிலியில் கோர்த்துக் கட்டப்பட்டுள்ள இந்த நீலமணி. இதுதான் என் கண்மணியை எனக்கு கவனமூட்டுகிறது. இந்த நீலமணியைக் காதிலே அணிந்திருந்த பெண்ணைத்தான் நீ தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறி, கலிங்க வீரன் தன் கதையை முடித்தான். நீலமணியைக் கையிலே எடுத்ததும், வீரமணிக்கு, கலிங்கக் கிழவன் கூறியது மறந்துவிட்டது, “இந்த நீலமணி, நமது நடனத்தின் செவியிலே இருப்பின், மிகமிகச் சிங்காரமாக இருக்குமே” என்ற நினைப்பு தோன்றிற்று. எப்படி என் கதை? நவரசமும் ததும்புகிறது, பார்த்தாயா? இவ்வளவு பாரத்தைச் சுமந்து கொண்டு நான் இப்படி இறக்க முடியும்? வீரனே! உன்னிடம் நான் என் மனத்தில் இருந்ததைக் கூறிவிட்டேன்; என் நிதிக்கு உன்னைக் காவலனாக்கினேன்; என் மகளைக் கண்டுபிடி; அவள் மண்வீட்டிலிருந்தால், மாளிகைக்கு அழைத்துச் செல்; வாழ்க்கையில் வதைந்து கிடந்தால், பணமெனும் மருந்தூட்டி, அவள் நோயைப் போக்கு; நான் உலவிய மலர்பரியை ஒரு முறை போய் பார்; கலிங்கரும் தமிழரும், ஆந்திரரும் தமிழரும், சேரரும் சோழரும் களத்திலே மோதிக்கொண்டு, சிதைகின்ற கோரம் நீங்க வழி கண்டுபிடி! செந்தமிழ் நாட்டை அரிக்கும் செல், எமது நாட்டை மட்டும் சும்மாவிட்டுவிடவில்லை. கங்கையிலே உலவினர்; காவிரிக்கும் வந்தனர். அந்த ஆரியத்தை அழிக்க ஆயுதம் உதவாது; அறிவு வேண்டும். சாகப்போகும் நான் சாந்தோப தேசம் புரிகிறேன் என்று எண்ணி எள்ளி நகையாடாதே என்று, கலிங்க வயோதிகன், கூறிக் கொண்டே களைத்துக் கண்களை மூடிக் கொண்டான். அவன் கூறிக்கொண்டதை வீரமணி சரியாகக் கேட்கவில்லை. அவனது செவியிலே, தூரத்திலே குதிரைகள் வேகமாக வரும் சத்தம் கேட்டது. வரவர, சத்தம் அதிகரித்தது. வயோதிகனை நோக்கினான். மயக்கமாகிக் கிடக்கக் கண்டான். மேலே ஒரு கம்பளத்தை எடுத்துப் போர்த்திவிட்டுக் குகை வாயிற்படி வந்து நின்றான். கருணாகரனின் உதவி அதிகாரி சில வீரர்களுடன், குகையை நோக்கித் தன் குதிரையின் காலடிகளை அடையாளம் கண்டுபிடித்து வரக் கண்டான். திகைத்தான். தான் சவாரி செய்து வந்தி ருந்த குதிரையை அவர்கள் கண்டதும், சந்தோஷத்தால் ஆரவாரித்து, “வீரமணியின் குதிரை! இங்கேதான் எங்காவது இருப்பான்” என்று கூவினர். தனக்குப் பகைவரால் ஏதோ ஆபத்து வந்துவிட்டதோ எனப் பயந்தே தன்னை அவர்கள் தேடிக்கொண்டு வருவது வீரமணிக்குப் புரிந்துவிட்டது. ஆனால், குகையிலே, அவர்கள் நுழைந்தால், கிழவனைக் கைது செய்வார்கள். நிதியைக் கைப்பற்றுவார்கள்; தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாத நிலைமை தனக்கு உண்டாகும் என்று வீரமணி அஞ்சினான். என்ன செய்வது என்று யோசித்தான். அவனது மனதிலே யோசனைகள் தோன்றும் வேகத்தைவிட அதிக வேகமாக குதிரைகள் ஓடி வந்தன. அதோ குகை! என்று கூச்சல். குகைக்கருகே வந்தேவிட்டனர். மூவர். வீரமணி குகை வாயற்படியண்டை நின்றுகொண்டு அவர்களை உள்ளே விடாமல் தடுக்கத் தீர்மானித்துவிட்டான். வந்தவர்களோ வீரமணியைக் கண்டதும் சந்தோஷத்துடன், “இதோ வீரமணி! நல்ல வேளை. ஒரு ஆபத்தும் இல்லை.” என்று கூறிக்கொண்டே, குதிரைகளைவிட்டு கீழே இறங்கி, குகையை நோக்கி நடந்தனர். சாதாரண காலத்திலே, தனக்கு மேலதிகாரி வரக்கண்டால் வீரமணி காட்டும் மரியாதையைக் காட்டாமலும், தோழர்களைக் கண்டதும் வரவேற்கும் வழக்கத்துக்கு மாறாகவும், உருவிய வாளுடன், கடுகடுத்த முகத்துடன் வீரமணி நிற்கக் கண்ட, மூவரும் சற்றுக் கோபமும் வெறுப்பும் கொண்டனர். அவர்கள் அவனருகே செல்லச் செல்ல அவன், அவர்களைப் பகைவர்கள்போல் கருதுவது தெரியலாயிற்று. ஆகவே, அவர்கள் சற்றுப் பயந்தனர்.  “வீரமணி! இஃதென்ன விசித்திரமான நிலை! எங்களைக் கண்டு முறைப்பது ஏன்? நாங்கள், நீ கலிங்கரிடம் சிக்கிவிட்டாய் என்று கலங்கியன்றோ உன்னைத் தேடிக்கொண்டு வந்தோம். நீ எங்களை நோக்குவது வேதனை தருவதாகவன்றோ இருக்கிறது” என்று கூறினர். வீரமணி, கண்டுபிடித்துவிட்டீர்களல்லவா? இனி ஏன் இங்கு வருகிறீர்கள். நான் சுகமாகத்தான் இருக்கிறேன். எந்தச் சூரனும் என்னைத் தூக்கிக்கொண்டு போய்விடவில்லை. இனி நீங்கள் போகலாம்” என்றுரைத்தான். மூவரும் பொறுமையையிழந்தனர். “களத்திலே கண்ட கோரக்காட்சிகளைக் கண்டு, மூளை குழம்பிவிட்டதோ” என்று கேட்டான் மூவரின் தலைவன். வீரமணி மௌனமாக இருந்தான். மூவரும், குகை வாயிற்படியை நெருங்கினர். உடைவாளை நீட்டினான் வீரமணி. “இதைத் தாண்டித்தான், குகைக்குள்ளே நுழைய வேண்டும்” என்று கர்ச்சனை புரிந்தான். மூன்று உடைவாள்கள் வெளிவந்தன. போர் மூண்டுவிட்டது முதல் வெட்டிலேயே, மூவரின் ஒருவனின் கை துண்டிக்கப்பட்டுவிட்டது. போர் மும்முரமாக நடக்கையிலே, உள்ளே, கிழவன், “ஓ” என்று அலறினான். வீரமணியின் மனம் குகைக்குள்ளேயும், விழி வெளியேயும் என்ற நிலையாகிவிட்டது. நெருக்கடியை மறந்தான். வாளைக் கீழே போட்டுவிட்டு, உள்ளே ஓடினான். மற்றவர்கள் பின் தொடர்ந்தனர். ஒரு கூச்சலுடன், கிழவன் சாய்ந்துவிட்டான். தீபம் அணைந்துவிட்டது. வீரமணி அவனைப் பார்த்துக் கண்ணீர் உகுத்தான். வந்தவர்கள். “இதென்ன கோலம்” என்று கேட்டனர். வீரமணி இவனோர் கலிங்க வீரன். “இவனைக் காப்பாற்றவே, நான் இங்கு வந்தேன்” என்றான். “துரோகி!” என்றான் வந்த தலைவன், “பாதகன்! பசுத்தோல் போர்த்திய புலி! பாலைக் குடித்து விஷத்தைக் கக்கும் பாம்பு!” என்று பதட்டமாகப் பேசிக்கொண்டே, வந்தவர்கள் குகையை ஆராய்ந்தனர். பேழையிலே பொக்கிஷம் இருக்கக் கண்டனர். “ஓஹோ! கலிங்கத்தானிடம் கைக்கூலி பெற்றுக்கொண்டுதான், கங்காணி வேலைக்கு வந்தான்” என்று இடி முழக்கமெனக் கூவினான் வந்தவரில் தலைவன். “வாயை மூடு! உளறாதே! உன் நீச நாக்கைத் துண்டித்து நரிக்கு விருந்திடுவேன்.” என்று வீரமணி கோபத்துடன் கூறினான். வந்த தலைவன், வீரமணி சாய்ந்து கிடந்த கிழவனைப் பார்த்துக் கொண்டே இருக்கையில், பாய்ந்து பிடித்துக் கொண்டான். மற்றவர்கள் உடனே கைகால்களைக் கட்டிக் கீழே உருட்டினர். மிக விசித்திரமான காட்சி! சீறிடும் புலிகள் மூன்று சிரித்தன! ஒரு கிழச்சிங்கம் செத்துக் கிடந்தது; ஒரு ஏறு, கைகால் கட்டுண்டு கீழே உருண்டு கிடந்தது! ஏராளமான பொக்கிஷம்! “போ, புலிகேசா! போய் எனது படையைக் கூட்டிவா!” என்று தலைவன் உத்தரவிட்டான். அவனும் உத்தரவிற்கிணங்க, விரைந்து சென்று, படையுடன் வந்து சேர்ந்தான். “பிணம் இங்கே கிடக்கட்டும்! பொக்கிஷத்தை மூட்டைகளாக்கிக் குதிரைகள் மீது போடுங்கள், இந்தத் துரோகியின் கைகால்களில் இரும்புத்தளைகள் போட்டுக் குதிரை மீது இறுக்கிக் கட்டுங்கள். குலோத்துங்கனின் உப்பைத் தின்று, அவனுக்கே துரோகம் செய்ய எண்ணிய நீசனுக்குத் தக்க தண்டனையைத் தொண்டைமான் தருவார்” என்று தலைவன் உறுமினான். வீரமணி வாய் திறக்கவில்லை. ஆனால், அவன் உடல் பயத்தால் உதறிற்று. வீரமணியை இழுத்துக்கொண்டு போய், படைத் தலைவன் முன் நிறுத்தினர். தொண்டைமானின் துயரம் சொல்லுந்தரத்தன்று. வீரமணி துரோகியானான் என்பது, ஆயிரம் வேல்கொண்டு இருதயத்தைத் தாக்குவது போலிருந்தது. வீரன்! இவனா துரோகியாவது? என்ன கொடுமை! எங்கிருந்து பிறந்தது இம்மடமை! கேவலம் பணத்துக்காக நாட்டை, மன்னனை, மானத்தைக் காட்டிக் கொடுத்து விடவா துணிவது. தமிழகத்திலே இத்தகைய கள்ளி முளைத்தால், பூந்தோட்டம் காடாகுமே! பஞ்சவர்ணக் கிளிகளுக்குப் பூனைபோல் புள்ளிமான்களுக்குப் புலிபோல், வீரத்தை அரிக்கத் துரோகி கிளம்பினானே. அரண்மனையிலே இவனுக்கு எவ்வளவு மதிப்பு மன்னனுக்கு இவனிடம் எவ்வளவு அக்கரை. எனக்கு இவனிடம் என்ன அன்பு! இவன் செயல் என்னை வேதனைக்குள்ளாக்குகிறதே என்று எண்ணி ஏங்கினான். வீரமணியோ, தொண்டைமானின் எதிரில் தலை குனிந்து நின்றான். திகைப்புடன் படைத்தலைவர்கள் சுற்றிலும் நின்றனர். உருவிய வாளுடன் பாதுகாப்புப் படை நின்றது. “வீரமணி! உண்மையைக் கூறு” தொண்டைமானின் குரல், துக்கத்தையே காட்டிற்று. வீரமணி மௌனமாகவே இருந்தான். “குகையிலே இருந்தவன் கலிங்கத்தானா?” “ஆமாம்” “அவனைக் காப்பாற்றவே நீ துணிந்தாயா?” “ஆம்” “துரோகி! அங்குப் பொக்கிஷமிருந்தது உனக்குத் தெரியுமல்லவா?” “தெரியும்” “உன்னை அழைக்க வந்த உன் தோழர்களை எதிர்த்தாயன்றோ?” “எதிர்த்தேன்” “என்ன துணிவடா உனக்கு? ஏன் இந்தத் துரோகம் செய்தாய்?” “துரோகமில்லை, தலைவா!” “தூர்த்தா! என்னைத் தலைவனென்று மறுமுறை கூறாதே. உன் போன்ற உலுத்தர்களுக்கா நான் தலைவன்! துரோகமின்றி, வேறு என்னடா அதற்குப் பெயர்? கட்டித் தழுவிடும் காமுகன், உடல் அளவு பார்த்தேனேயன்றி, கூடிடும் நோக்கமில்லை என்று கூறுவது போலிருக்கிறது உன் பேச்சு. நீசா, எந்தக் கண்கள் எதிரியின் பணத்தைக் கண்டு பூரித்தனவோ, அவை புண்ணாகட்டும். எந்தக் காதுகளிலே, துரோகப் பேச்சுக்கு இடங்கொடுத்தாயோ, அவைகளைக் குடைந்தெடுக்கிறேன். துரோகி! சோழ மண்டலத்திலேயா, இத்தகைய சொரணை கெட்ட ஜென்மம் ஜனித்தது. வஞ்சக நரியே, வல்லமையுள்ள புலிபோல் வேடமிட்டு நடித்தாயே. என் எதிரே நிற்கிறாய் துணிவாக. உன் தலை இன்னும் பூமியிலே உருளவில்லை. கண்களிலே நீரா? நீலிக்கண்ணீர்!” “என்னை வெட்டிவிட உத்தரவிடுங்கள், வீணாகத் திட்ட வேண்டாம்.” “என்ன வேதாந்தம்! வஞ்சகா! வெட்டுவதா உன்னை? கைகால்களிலே விலங்கிட்டு, எந்தக் குதிரைமீது கெம்பீரமாகவும், பூரிப்பாகவும் ஏறிக்கொண்டு சென்றாயோ, அதே குதிரையின் வாலிலே கட்டி, எந்த நடனத்தின் கண்களுக்கு விருந்தாக உலவி வந்தாயோ, அவள் கண்களுக்கு வேதனை உருவாக, காரியுமிழும் பொருளாக்கி, மூன்று மண்டலங்களிலும் உன்னை மொட்டையடித்தத் தலையுடன் இழுத்துச் சென்று, பிறகன்றோ உயிரைப் போக்க வேண்டும்” “விஷயமறியாது வேதனைப்படுகிறீர். இருளிலிருந்து நீங்கிய பிறகு எதுவும் தெரியும்.” “என்னடா இருள்? உன் மன இருள் தவிர வேறு என்ன?” “நீர் நம்ப வேண்டுமென்று ஏதும் கூறவில்லை. பிறகோர் நாள் உதவவே, இதனைக் கூறுகிறேன். குகையிலே கலிங்கத்தானுடன் இவர்கள் என்னைக் கண்டதும் உண்மை; அங்குப் பொக்கிஷம் இருந்ததும் உண்மை; அதை நான் எடுத்துவர எண்ணினதும் உண்மை. இவர்களை எதிர்த்தேன்; இல்லை என்றுரைக்கவில்லை. ஆனால், துரோக சிந்தனை எனக்கு இல்லை. கலிங்க வீரனுக்குத் தந்த வாக்கின்படி நான் நடக்க வேண்டும். அந்த இரகசியத்தை வெளியே உரைப்பதற்கில்லை. நீர் என்னவென்று தீர்மானித்து, என்னை எப்பாடுபடுத்தினாலும், நான் தலை குனியத்தான் வேண்டும். எனக்குச் சோழனே மன்னன், சோழநாடே என் பூமி, நான் துரோகிய்ல, துரோகியல்ல! என்னை நம்பும்” “உன்னையா? நம்புவதா? ஓஹோ! உத்தமனே, உன்னைச் சோழநாட்டின் ஜோதி ஸ்வரூபனாக்க வேண்டும். ஏடா! மூடர்களே, இவர் பேச்சைக் கேட்டும், சும்மா இருக்கிறீர்கள்? கோயில் கட்டுங்கள், கொட்டு முழக்கு நடக்கட்டும்.” “கொலை, இந்தக் கேலியைவிட கொடுமையாக இராது.” இந்தப் பேச்சுக்குப் பிறகு, தொண்டைமான் கோபத்துடன், ஓங்கி ஒரு அறை கொடுத்தான் வீரமணியின் கன்னத்தில். பிறகு உரத்த குரலிலே கூறினான். “இவனது கைக்கட்டுகளை அவிழ்த்து விடுங்கள். இனி இவன் சோழ மண்டலத்துக்குள் நுழையக் கூடாது” என்று தண்டனை உத்திரவைக் கூறிவிட்டு, கூடாரத்துக்குள் சென்றுவிட்டான். வெற்றி ‘ஊர்வலமும், விழாவும், கொண்டாட்டமும், களிப்புமாக’ காஞ்சியிலும், தலைநகரிலும் குதூகலமாக இருந்தன. ‘கலிங்க மன்னன் கர்வப்பட்டுக் குதித்தான்; பிடரியில் கால்பட ஓடினான்’ என்று கேலி செய்வோரும், ‘சோழச் சூரர்கள் சூறாவளிபோல் கிளம்பிய பின்னர்க் கலிங்கக் கூளம் நிற்குமோ?’ என்று நையாண்டி செய்பவரும், ‘தொண்டைமானின் தீரத்திற்குக் கலிங்கத்தார் துவளாது என் செய்வர்? என்று ஏளனம் செய்வோருமாக மக்கள் மகிழ்ந்தனர். மகனின் புகழ் கேட்டு முதுமையை மறந்து கூத்தாடும் தாயும், ‘என் மகனின் நெஞ்சம் எஃகு; ஏறு போலும் நடையுடையான்’ என்று பெருமையுடன் கூறிப் ‘புலியின் வயிற்றிலே பூனையா பிறக்கும்?’ என்றெண்ணிப் பூரிக்கும் தந்தையும் களத்திலே கீர்த்தி பெற்ற காதலனைக் கட்டித் தழுவி முத்தமிட உடலும் உள்ளமும் ஊறலெடுக்க, ஓடி ஆடி மகிழ்ந்திருந்த மங்கையரும், ‘போர் முடிந்தது! பகைவன் தோற்றோடினான்! வீரர்கள் வீடு திரும்புகின்றனர்!’ என்று ஆனந்த கீதம் பாடியும், நடனமாடியும் களித்தனர். “உன் அப்பா வருகிறாரடா குழந்தாய்! வந்ததும் கேள், ‘என்னை விட்டு இத்தனை நாள் எங்கே போயிருந்தாய்?’ என்று; பேசமாட்டேன் போ என்று சொல்லு” என்று மகனுக்குத் தலை சீவிப் பூச்சூட்டிப் பொன்னணி பூட்டிப், பரிமளநீர் தெளித்து, முத்தமிட்டுக் கட்டித் தழுவிக் கொஞ்சினர் குமரிகள். “களத்திலே, இரத்தத்தைக் கண்டு, பிணத்தைத் துவைத்து, ஊண் உறக்கமிழந்தவர் வருகிறார், இனி அவருடைய மனமகிழ்ச்சிக்கு என்னென்ன செய்வது? ஆமாம்! அந்தப் பச்சைநிறச் சேலையைத்தான் கட்டிக் கொள்ள வேண்டும். அன்றோர் நாள் அதைக் கட்டிக் கொண்டிருக்கும் போதுதானே, சோலையிலே உலவும் கோல மயிலே! என்று என்னிடம் கொஞ்சி... உம்! என்னென்னமோ செய்தார். இன்று அந்தச் சேலையைத்தான் அணிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் கதை சொல்லுவார் அவர். அவர் எவ்வளவு மெலிந்திருக்கிறாரோ? எத்தனை காயங்களோ உடலில்? என்ன நிலையோ? எப்போது வருவாறோ? என்னைக் கண்டதும் சிரித்துச் சல்லாபிப்பாரோ; அலுத்து மௌனமாவாரோ?” என்று ஏதேதோ எண்ணி ஏந்திழையார்கள் மேகத்தைக் கண்டு மயில் ஆடுவது போலக், கதிரோனைக் கண்டு மலரும் தாமரைபோல, ஆடை அணி புனைந்து, மாடங்களில் உலவினர்.                                         பகுதி - 6   களத்திலே கணவர் இறந்த செய்தி கேட்டுச் சித்தம் சோர்ந்திருந்த சேயிழையார்கள், விழா நடப்பதுகண்டு விம்மினர்; மறைந்த மணியை நினைத்து அழுதனர்; உண்ணவும் மனமின்றிச் சுருண்டுகிடந்தனர். மனோஹரமான மாளிகை நெடுநாட்கள் பூட்டப்பட்டு, கலனாகிப் புழுதி படிந்து கிடக்கும் கோலம்போல, அம்மாதர், திலகமின்றித், திருவிழிகளில் ஒளியின்றி, மேனியில் பளபளப்பின்றி, ஆடை திருத்தமின்றி, சீவாது, சிரிக்க முடியாது, சிவந்த கண்களுடன், சோக பிம்பங்களாகிக் கிடந்தனர். போர் என்ற சொல்லைக் கேட்டதும் புண்பட்ட மனம் கொப்பளித்தது. “நாட்டின் நலன், மன்னனின் கீர்த்தி, இவைகளுக்காக என் வாழ்விலே இக்கதி! கூரான வாளோ, வேலோ அவர் மார்பிலே பாய்ந்தபோது எப்படி அலறினாரோ? என்ன துடித்தாரோ? என்ன எண்ணி அழுதாரோ? என்ன கோரம்? எவ்வளவு கொடுமை? ஏன், சண்டை எனும் ஓர் சுழல், வாழ்க்கைப் பூங்காவைப் பாழாக்குகிறது? மலர் வனத்திலே ஏன் இக்கள்ளி?” என்று கூறிக் கதறினர். நிலவிலே கறைபோல் மகிழ்ச்சியிலே மூழ்கிய சோழ மண்டலத்திலே, இக்காட்சியும் இருக்கத்தான் செய்தது? போர் விளையாட்டா! நடனராணியின் நிலையோ, விசித்திரமான வேதனை! காதலன் களத்திலே காட்டிய தீரத்தை, அவனது போர்த்திறன் கண்டு பகைவர்கள் மருண்டோடியதை, அவனது அஞ்சாத செயலைக் கூறிப் பின்னர், அத்தகைய வீரன் அயர்வறியாத் தீரன், சோழ மண்டலச் சூரன், கடைசியில் கலிங்க நாட்டானிடம் கைக்கூலி பெற்றான், மன்னனைக் காட்டிக் கொடுக்கத் துணிந்தான். துரோகியானான். தொண்டைமான் அவனை நாட்டை விட்டே துரத்திவிட்டார், என்று கூறக்கேட்ட நடனராணி, மூர்ச்சித்து கீழே சாய்ந்து, “என் காதலனா துரோகி! நன்னெறியன்றி வேறறியா வீரனா துரோகி! சோழ நாட்டுக்காக தன் உயிரையும் தரும் தூய்மையான உள்ளம் படைத்த உத்தமனா துரோகி! நான் நம்பேன்! என் அருமைக் காதலனை நானறிவேன் நன்கு. அவருக்குக் குள்ளநரிச் செயல் தெரியாது. குலப் பெருமைக்கே குவலயத்தில் வாழ்கிறோம் என்றே கூறும் கண்ணியரல்லவோ? நாட்டைக் காட்டிக் கொடுக்கவா களம் புகுந்தார்! கடும்போர் புரிந்தார்! எதிரிகளைத் கண்டதுண்டமாக்கினார்! இல்லை! இல்லை! இதில் ஏதோ சூது இருக்கும்; என் சுந்தரரூபன் மீது யாரோ சதி செய்திருக்கின்றனர்” என்று அழுது கூறினாள். அம்மங்கையோ திகைத்தாள்; தலை அசைத்தாள்; தேம்பும் நடனாவைக் கண்டாள்; என்ன செய்வதென்றறியாது விழித்தாள். நடனா அம்மங்கையின் அடியினைப் பற்றிக் கொண்டு, நீர் பெருகும் நேத்திரங்களால் அவளை நோக்கி, “தேவி! உமக்கே தெரியும். இந்த உயிரை நான் எவர் பொருட்டு வளர்த்து வருகிறேன் என்று. அவரைப் பிரிந்து நான் வாழ்வேனா? அவர் மதிப்புக்குப் பங்கம் வந்த பிறகு, எனக்குத் தங்கக் கோட்டை கிடைப்பினும் சகிப்பேனா? அவரையும் என்னையும் அரசனின் ஆக்கினை பிரிக்கிறது; மலரையும் மணத்தையும் வேறாக்குவதோ? கண்ணிலிருந்து ஒளியை நீக்கிடுவதோ? என் மணாளரை இழந்திடநான் சம்மதியேன். அவர் ஒரு குற்றமும் செய்திருக்க முடியாது; செய்யும் வகையுமறியார். செந்தமிழ்நாட்டுச் சிங்கம், சூது வாது அறியாதார். அவரை மீட்டுத்தர வேண்டுகிறேன். என் உயிரை எனக்குத் தானம் தரக் கோருகிறேன், நாடெங்கும் விழா நடக்கிறது; வீதிகளிலே பூச்சூடி மங்களம் பாடிக் காதலரைத் தேடிக் காரிகையர் நடமாடுகின்றனர். பூங்காவிலே, மரநிழலிலே, களத்திலே காட்டிய வீரத்தைக் கூறி, காதலியின் கன்னத்தைக் கீறி, நெஞ்சிலே காதல் ஊறிட உரையாடி, உல்லாசமாகப் பல்லாயிரவர் இருக்க, வீரத்திலே எவருக்கும் இளைக்காத என் வேந்தர், வேற்றூரிலோ, காட்டிலோ, மேட்டிலோ, கடும் குளிரிலோ, சுடும் வெயி லிலோ, நாடோடியாகச் சுற்றவும் நான் இங்குக் கதறவுமான நிலை வரவா கலிங்கப்போர் மூண்டது! கலிங்கப் போர், வீரர் பலரின் உயிரைக் குடித்ததோடு திருப்பதியடையக் கூடாதா! போரின் பசி தீரவில்லையா! என் மனதைப் புண்ணாக்கி, என்னைச் சித்திரவதை செய்யவும் வேண்டுமா! என்னைப் பாரும் அம்மையே! என் வாழ்வு என்ன கதியாவது! சோழ மண்டலத்திலேயிருந்து துரத்தப்பட்ட பிறகு. தமிழனை, மற்ற இரு மற வேந்தரும் மதிப்பரோ? இடந்தருவரோ? என் மன்னனின் வாழ்வு இதுபோலவா ஆகவேண்டும்?” என்று கூறினாள். அம்மங்கை ஏதும் கூறாதவளாய், அரசனைக் கண்டு பேசுவோம் என்று எண்ணிக்கொண்டு, நடனராணியைத் தேற்றும்படி தோழியருக்குக் கூறி விட்டுத் தனது அந்தப்புரம் சென்று சோகத்துடன், தன் அறைக்குள் நுழைந்தாள்; திடுக்கிட்டாள். ஏனெனில், அங்கு, ஆரியமாது கங்காபாலா புன்னகையுடன் நிற்கக் கண்டாள். புருவத்தை நெறித்தபடி, “புன்னகைக்காரி! ஏது இங்கு வந்தது?” என்று பாலாவை அம்மங்கை கேட்டிட, கங்காபாலா, “தேவி! இன்றாவது உமது கண்கள் திறந்திருக்கும், கபட நாடகத்தைக் கண்டுகொண்டிருப்பீர்கள் என்று தான் வந்தேன்” என்று கூறினாள். “கபடமும், நாடகமும்! மீண்டும் உளறல்” என்றாள் அம்மங்கை மஞ்சத்தின் மீது படுத்துக்கொண்டு, கங்காபாலா விசிறிக்கொண்டு, உபசாரத்துக்கு வீசிக் கொண்டே “என் கன்னத்தில் அறைந்தீரே! களத்திலே நடந்தது கேட்டபிறகு தெரிந்ததா உண்மை? கபட வேடக்காரனின் கதை வெட்ட வெளிச்சமாகிவிட்டது பார்த்தீர்களா? ஊர் கொதிக்கிறது தாயே! கலிங்கனுக்கு நாட்டைக் காட்டிக் கொடுத்தவனைக் கழுகுக்கு இரையாக்க வேண்டியதை விட்டுக் கருணாகரர் சாதாரணத் தண்டனை தந்தாரே என்று மக்கள் கோபிக்கின்றனர். அம்மே! அதுமட்டுமல்ல! நடனாவின் மீதும் மக்களின் கோபம் திரும்பி இருக்கிறது. பாபம் அவள் சூதுவாதறியாத சுந்தரி! கொஞ்சம் பேராசை! சபலபுத்தி! அவனிடம் மயங்கினாள்; அவனை அவள் ஒரு சாதாரண போர்வீரன் என்றே நினைப்ப தில்லை, புவியாளப் பிறந்தவன் என்றே கருதி வந்தாள். அவன் அப்படிச் செய்து வைத்தான்” என்று மெல்ல மெல்ல விஷ வாடையை வீசினாள். “மன்னன், என் வேந்தன். என்று நடனா அவனைக் கூறினாள். காதல் மயக்கமாகத்தான் இருக்குமென்று நினைத்தேன்” என்று அம்மங்கை கூறிட, அதுதான் சமயம் எனக்கண்டு, கங்காபாலா, “காதல் மயக்கமல்ல, கிரீடத்தின் மீது கொண்ட மேக மயக்கம் அம்மணி! வீரமணி வேந்தன், நடனராணி அவனுக்கு ராணி! இதுவே அவர்களின் அந்தரங்கத் திட்டம். அன்று குகையிலே நடந்த சதி. வெறும் பொக்கிஷத்துக்கு என்றா எண்ணுகிறீர்கள்? தூ! வீரமணி பணத்துக்காகவல்ல அந்தப் பாதகம் செய்யத் துணிந்தது; முடிதரிக்கவே சதி செய்தான்” என்றாள் கங்காபாலா. “போடி பொல்லாங்குக்காரி” என்று அம்மங்கை கங்காபாலாவைத் திட்டினாளே யொழிய மனதிலே, “இருக்குமோ! நடந்திருந்தால்தான் நாம் என்ன கண்டோம். வீரமணி மீது கருணாகரர் வீணாகவா தமது அதிகாரத்தைச் செலுத்தியிருப்பார் இருக்கும்; அரண்மனைகளிலே இது நடப்பதுதானே. வீர மணிக்கு இந்த விபரீதபுத்தி இருந்திருக்கக்கூடும். யார் கண்டார்கள்? பாம்பு என்ன பார்வைக்குக் கேவலமாகவா இருக்கிறது! சிறுத்தைதான் என்ன சிரித்துக் குலுங்கி நடக்கும் சிங்காரியின் மேலாடை போன்ற போர்வையில்தான் இருக்கிறது. வீரமணியின் வெளித் தோற்றந்தானே, நடனாவுக்குத் தெரியும். அவன் துரோகிதான்! நாட்டுக்கு, நமக்கு, நடனாவுக்கு, தமிழகத்துக்கே துரோகிதான் சந்தேகமில்லை” என்று முடிவு செய்துகொண்டாள். ஒரு படி மேலேறிவிட்டோம் என்றுணர்ந்த கங்காபாலா, “தேவி! ஊரிலே கூடிக் கூடிப் பேசிக் கொள்கிறார்கள். அந்தத் துரோகியின் துணையாக இருந்து வந்தவளையும் நாட்டை விட்டுத் துரத்த வேண்டுமென்று” என்று ஆரம்பித்தாள். அம்மங்கை சீறி எழுந்து “சீ! இதென்னடி கொடுமை. அவன் துரோகம் செய்தால், அவள் என்ன செய்வாள்? அவனைத் தண்டித்தது முறை; அரச நீதி. அவள் என்ன குற்றம் செய்தாள்? அதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். அவள் என் சேடி; தோழி. அந்தக் கொடியிடையாளின் கண்களிரண்டும் குளமாகிவிட்டன; பாபம்! அவளது அழுகுரலைக் கேட்கச் சகியாமலே நான் இங்கு வந்துவிட்டேன். அவள்மீது, கரம் வைக்க எவர் துணிவர்? கண்டதும் பரிதாபம் கொள்வர். மக்கள் ஏதோ மருண்டு, ஆத்திரத்திலே பேசுகின்றனர்” என்றாள். “மக்களின் ஆத்திரம், மணிமுடிகளைக் கூட அகற்றியிருக்கிறதே தேவி!” என்று கங்கா கிளறினாள். “சதி புரியும் கூட்டமல்லடி தமிழர்” என்றாள் அம்மங்கை. “நானறியேன் அம்மையே! எமது நாட்டிலே மக்களுக்கு அடங்கியே மன்னர்கள் வாழ்வர்” என்றாள் கங்கா, சாதுபோல். “உன் நாடு! அது எது? ஓ! உன் மூதாதையர், முதன் முதல் சஞ்சரித்த நாடு என்று பொருளா? எனக்குத் தெரியும் அந்நாட்டு அதி ஆச்சரியப் பழக்க வழக்கங்கள். ஏனடி கங்கா! அவரில்லாவிட்டால் என்ன; அவர் கால் ஜோடு ஆளட்டும் என்று கூறின மக்கள், அயோத்தி நாட்டினர்தானே?” என்று கேட்டுவிட்டு, கைகொட்டி நகைத்தாள் அரசகுமாரி. கோபத்தை அடக்கிக் கொண்ட கங்காபாலா, “அது தேவ கதையன்றோ?” என்று விடை கூறினாள். “உங்கள் தேவ கதை கிடக்கட்டும், நீ போய் தேம்பிக் கிடக்கும் நடனாவுக்குத் தேறுதல் கூறு, போ” என்று கூறிக் கங்காவை அனுப்பிவிட்டுக் கவலையுடன், மஞ்சத்திலே மன்னனின் மகள் படுத்துக் கிடந்தாள். வீரமணி, நடனாவை எண்ணி ஏங்கினான். அவள் மனம் என்ன பாடுபடுமோ என்று நினைத்து நொந்தான். கலிங்கக் காட்டிலும், மேட்டிலும் சுற்றினான். பணிந்த கலிங்கரும் தன்னைக் கண்டால், கொடுமை புரிவர் என்பது அவனுக்குத் தெரியும். எனவே, ஒருவர் கண்ணிலும்படாமல் ஒளிந்து வாழலாயினான். வேடர்களுடன் வேடனானான். கல் வெட்டுவோருடன் கலந்தால் கல் வெட்டுவான். மண் சுமப்போருடன் சேர்ந்தால், மண் சுமப்பான். உலவினான். என்ன செய்வது என்று தெரியாமல். நடனாவுக்கு அரண்மனையிலே அபாரமான செல்வாக்கு இருப்பதால், எப்படியாவது அரசகுமாரி மூலமாக மன்னனின் மனத்தை மாற்றி, தன்னை மீட்பாள் என்று கருதி னான். எவ்வளவுதான் வெளிப்படையாக, குகையிலே நடந்த விஷயத்தைக் கூறினாலும், மன்னன் நம்ப மாட்டானே என்று பயந்தான். மேலும், விஷயமோ, ஓர் ராணியுடைய வாழ்வைப் பாதிக்கக் கூடியது. ஒரு நீலமணிதான் இருந்த ஆதாரம்! அது ஒளிவிட்டதே யொழியப் பேசுமா! யார் சொல்வார்கள் தனது தூய்மையைப் பற்றி, என எண்ணி மனம் புண்ணானான். நடனாவின் இன்பக் கனவைக் கெடுத்தேன்; மன்னனின் மகிழ்ச்சியைக் குலைத்தேன்; வீரர்கள் கூட்டத்திற்கோர் கேலிக் கூத்தானேன் என்று நினைத்தான். இங்கு வீரமணி இவ்விதமிருக்க, நடனாவோ நறுமலர்த் தோட்டத்திலே உலவினாள்; மலர் பறித்தாள்; மானெனத் துள்ளி விளையாடினாள்; மடியிலே தலையைச் சாய்த்துக் கொண்டு மதுரமான மொழி பேசும் மணாளனின் நெற்றியைத் தடவினாள். இந்த இன்ப விளையாட்டிலே இருந்தவள் திடீரென அந்தகாரம் கண்டாள்; ஐயோ என்று அலறினாள்; பாம்பு! என்று பதைத்தாள்; பாரேன் உன் முகத்தை என்று கடிந்துரைத்தாள்; காலிலே முள் தைத்ததே என்று கதறினாள்; காடு மலை வனம் சுற்றினாள்; கழுகு கொத்துகிறதே என்று கூறினாள்; கலிங்கம் அழியட்டும் என்றும், காதலரே வருக என்றும், மணாளனே எனக்கு மன்னன் என்றும் குளறினாள். இவ்வளவும் படுக்கையில் ஜூர வேகத்தில்; மயக்கத்தில்!! அரசிளங்குமரியின் சொற்படி, சென்ற கங்கா பாலா, நடனா மயக்கமுற்றுக் கீழே சாய்ந்திருக்கக் கண்டாள். அன்று முதல் பத்து நாட்கள் வரை, நடனாவுக்கு மயக்கமும் ஜுரமும் அடக்க முடியாத அளவு ஏற்பட்டது. அந்த மயக்கத்திலேதான் நடனா, தனது காதல் விளையாட்டைப் பற்றி எண்ணியும், தனக்கு வந்த கஷ்டத்தை எண்ணிக் கலங்கியும், ஜுர வேகத்தால் குளறியும், தனது படுக்கையில் புரண்டு கிடந்தாள். அரண்மனை வைத்தியர் அற்புதானந்தர், தமது மற்ற அலுவல்களை மறந்து நடனாவுக்கு அருமையான மூலிகைகளால் முறைப்படி செய்த மருந்து வகைகளை அன்புடன் கொடுத்து, “எப்படியும் அவளை உயிர்ப்பிப்பேன், நான் கைபிடித்த பிறகு, மரணம் அவளை அணுகுமா?” என்று சூள் உரைத்து, இரவு பகல் தூங்காது, நடனாவுக்கு அருகே அமர்ந்திருந்து, உபசாரம் செய்யலானார். அடிக்கடி அரசிளங்குமரியும் நடனாவைப் பார்த்துவிட்டுப் போவாள். வைத்தியரை, “மிக்க ஜாக்கிரதையாகக் கவனிக்க வேண்டும், கலை, இளமை, அழகு, தூய்மை யாவும் உம்முடைய மருந்தினால்தான் பிழைக்க வேண்டும்” என்று கூறுவாள். வைத்தியர், இளித்துக் கொண்டே, “அரசகுமாரி! அடியேனுடைய திறமையை அறியாதார் சொற்பம், ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால், அருந்தமிழர் கற்ற அரிய முறைகளை நான் அறிவேன்; மூலிகைகளின் இடமும் இயல்பும் தெரிந்தவன்; நோய் மூலங் கண்டறிவேன்; நொடியிலே தீர்ப்பேன் எப்பிணியும். நடனாவுக்கு. மனம் குழம்பி இருக்கிறது; மயக்கம் மேலிட்டுக் கிடக்கிறது; பயத்தினால் பாவை பதறியிருக்கிறாள். ஆகவே ஜுரம். இது இப்போது குறைந்து விடும்” என்று கூறி, நடனாவின் நெற்றியைத் தொட்டுப் பார்த்துக்கொண்டே, “கொஞ்சம் இருக்கிறது போய் விடும் நோய்” என்று கூறுவான். அந்த நேரத்தில் மட்டும், வேறோர் வைத்தியர், அற்புதானந்தரின் நாடியைப் பிடித்துப் பார்த்தாலன்றோ தெரியும். காம நாடி கடு வேகமாக அவருக்கு அடித்துக் கொண்டிருப்பது! நடனாவின் நோய் குறையக் குறைய வைத்தியரின் நோய் வளர்ந்து கொண்டே இருந்தது. அவ்வளவு வசீகரமான மங்கையின் அருகேயிருந்து, உபசாரம் செய்தவரல்லர் வைத்தியர். அதுவரையில் மணமாகாதவர்; மன்னரின் ஆதரவு பெற்றவர். மயக்கமுற்ற நடனாவுக்கு மருந்து தர வரவழைக்கப்பட்டார்; அவளழகைக் கண்டு மயங்கினார்; அவள் மயக்கத்தைப் போக்க மலையுச்சியிலிருந்து மூலிகைகள் எடுத்து வரச் செய்தார். ஆனால், பாபம், அவருடைய மன மயக்கத்தைப் போக்கும் மூலிகை, அருகேதான் இருந்தது; எதிரே, மஞ்சத்தில்! பத்து நாட்களுக்குப் பிறகு நடனராணிக்கு நோய் குறைந்தது; மயக்கம் தீர்ந்தது; ஜுரம் நின்றது. வைத்தியர் பூரித்தார். அரசகுமாரி ஆனந்தங் கொண்டாள்; “நோய் போனாலும், படுக்கையிலேயே இருக்க வேண்டும்; பாலும் பழரசமும், தேனும் உணவாக இரண்டோர் மாதமிருக்க வேண்டும்; தேகத்திலே ஏற்பட்டுள்ள திடீர் அதிர்ச்சி போக ஓய்வு வேண்டும்; மூன்று வேளைச் சூரணம் முறைப்படி சாப்பிட்டாக வேண்டும்; நான் கூடவே, இருந்து உபசாரம் செய்து, குறியறிந்து குணம் செய்ய வேண்டும்” என்று குழைந்து கூறினார் வைத்தியர். அவருக்கு, அவளருகே இருக்க, அவளுக்கு உபசாரம் செய்ய, நாடி பார்க்க, நெற்றியிலே அரும்பும் வியர்வையைத் துடைக்க, அவள் அயர்ந்து தூங்கும்போது பக்கத்திலே உட்கார்ந்து கொண்டு அவளழகைக் கண்டு பெருமூச்செறிய இரண்டோர் மாதங்களல்ல, இரண்டோர் ஆண்டுகள் சந்தர்ப்பம் கிடைத்தாலும் சலிக்காது! அவ்வளவு இன்பமளித்தது, அவளருகே இருப்பது! ஆகவே, அவர் அரசகுமாரியிடம் கூறி, அந்தப்புரத்திலே, தனி ஜாகையிலே நடனராணி தங்கி இருந்திட வேண்டும்; பலரும் வந்து பேசிடுதல் கூடாது; தன் பார்வையிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். தனிமையில் இருந்தால், வீரனை எண்ணி விம்முவாள்; உடனே ஓடிப்போன காய்ச்சல் வந்தேனென்று கூறும். பலரும் பேசினாலோ, பதைத்துப் பேசுவாள்; உடல் உரம் கெடும். எனவே, அவளை இங்கேயே தனிமையாக இருக்கச் செய்ய வேண்டும். என் சிகிச்சை முறைப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஏற்பாடு செய்து கொண்டான். ஒரு பெரிய கோட்டையை முற்றுகையிடும் படை போல, வைத்தியன் நடனாவை முற்றுகையிடுகிறான்; மோப்பம் பிடிக்கிறான் என்பதை அரசகுமாரி அறிந்துகொள்ளவில்லை. அவனது வைத்தியத் திறமையைப் பலரும் வியந்தனரேயன்றி, அவனது வயோதிகம் திடீரென வாலிப உணர்ச்சி பெற்றுவிட்டதை அவர்கள் அறியவில்லை. நடனாவுக்கோ, வைத்தியரின் விபரீத யோசனை தெரியாது. நோய்க் குறையக் குறைய, அவளுக்கு எப்படி அரண்மனையை விட்டு வெளியே போவது? எங்கெங்கு சுற்றினால் வீரமணி கிடைப்பார்? என்ற எண்ணமே மேலிட்டது. யாரும் தனக்கு உதவி செய்ய மாட்டார்கள் என்பதையும் அவள் தெரிந்து கொண்டாள். வீரமணி போனாலென்ன! சோழ மண்டலம் ஆண் ஏறுகள் இல்லாத இடமா! என்று கூறுவரேயொழிய, தன் மனநிலையைத் தெரிந்து நடக்கும் தோழியர் இல்லை என்பதைக் தெரிந்துக் கொண்டாள். நன்றாக எழுந்து நடமாடும் சக்தி பெற்றதும், கள்ளத்தனமாக ஓடிவிட வேண்டியதுதான் என்ற தீர்மானத்துக்கு வந்தாள். அதைப் பற்றி நினைக்கவும், வெளியே போய் இதைச் செய்யலாம் அதைச் செய்யலாம் என்று யோசனைகள் செய்யவும், நடனாவுக்கு நேரமிருந்ததேயொழிய, வைத்தியரின் நிலைமையைத் தெரிந்து கொள்ள நேரமில்லை. வைத்தியர், வெளியே போய்வரும் வழக்கத்தைக் கூட விட்டுவிட்டார். தோட்டத்துக்குச் செல்வார். மலர் தேடி நடனாவிற்குத்தர! அந்தப்புரச் சமையற்கூடம் போவார், பழம் பால் தேன் கொண்டுவர, நடனாவுக்காகவே! மற்ற நேரத்திலே, அவள் மஞ்சத்திலே, இவர் பக்கத்தில் ஒரு ஆசனத்தில் இந்த நித்யவிருந்து அவருக்கு எவ்வளவோ ருசி தந்தது. ஆனால், கனியைக் கண்டால் பறித்துத் தின்ன வேண்டுமென்ற நினைப்பு அதிகரிக்க அதிகரிக்க, வேலி முள் பாராது; தோட்டக் காவலாளி வருவானோ என்ற பயத்தையும் கவனியாது; பறிக்கத் தூண்டுமல்லவா! எவ்வளவு நாட்கள் தான் அவர் “தவங்” கிடப்பார். கடைசியில் வரங்கேட்டே தீருவது என்ற முடிவுக்கு வந்தார். வீரமணியை மறந்துவிட வேண்டும், வாழ்க்கைக்கு அவன் சரியான வழிகாட்டியல்ல, என்று துவக்கினார். அவளுடைய சலிப்பும் சங்கடமும் அவருக்கு என்ன தெரியும்! மேலும் மேலும், அதே விஷயமாகப் பேசலானார். மெல்ல மெல்ல, அவர் மனநிலையை வெளியிட்டார். நடனா மிரண்டாள்! இது ஓர் புது விபத்து, இதினின்றும் எப்படித் தப்புவேன் என்று திகைத்தாள். நிதானமாகவும், தன் உறுதியைக் காட்டும் விதத்திலும், வைத்தியருக்குக் கூறினான், முடியாது என்பதை. வீரமணியிடம் கட்டுண்டு கிடக்கும் அந்தத் கொடியிடையாளை, வைத்தியர் தமது வாக்குச் சாதுர்யம் வென்று விடும் என்று எண்ணித் தமது வேலையை மும்முரமாகச் செய்து வந்தார். ஓர் நாள் விவகாரம் முற்றிவிட்டது. வைத்தியரின் குரலில் வேதனை பிறந்தது, நடனாவுக்கு நடுக்கம் ஏற்பட்டது. வைத்தியர், சிறு குழந்தைக்குப் பெரியவர்கள் புத்திமதி கூறும் பாவனையிலே பேசினார். “அவன் ஒரு கொலைகாரன்; நான் இரட்சகன்! அவன் இரத்தம் குடிப்பவன்; நான் ஆபத்பாந்தவன். அவனால் எத்தனையோ குடும்பங்கள் கோவெனக் கதறின; ஆறுதலும் புன்சிரிப்பும், மகிழ்ச்சியும், நான் அளித்துள்ளேன் பல குடும்பங்களுக்கு. எத்தனையோ மாதர்கள் வயிறெரிந்து அவனைச் சபித்தனர்; எத்தனையோ தாய்மார்கள் என்னைக் கையெடுத்துக் கும்பிட்டு வாழ்த்தி இருக்கிறார்கள் தெரியுமா! எத்தனையோ இளைஞர்களின் வாழ்க்கையை அவன் பாழாக்கினான்; எத்தனையோ குடும்பங்களில் அணைய இருந்த விளக்குகளை நான் அணையாமற் செய்திருக்கிறேன். அவனுடைய கீர்த்தி, எவ்வளவோ, பேர்களைக் கல்லறைக்கு அனுப்பிற்று. அதனை யோசித்துப் பார். இவ்வளவும் நடனா, அவன் ஓர் துரோகி என்பதை மறந்து பேசுவது. அந்தச் செயலையும் கவனித்தால், அவனைக் காண்பதும் தீது என்றே கற்றோர் கூறுவர். கனியே! என்மீது கருணை காட்டு.” வைத்தியர் பேசினார், அந்த வஞ்சிக்கொடி வேதனையுடன் புரண்டாள். விட்டானா? மேலும் தாக்கினான் வெறிகொண்ட வைத்தியன். “கொஞ்சும் கிளியைத் தள்ளிவிட்டு, கொத்தும் வல்லூறை வளர்ப்பார்களா! சேவை புரியும் என்னை உதாசீனம் செய்து விட்டுச் சாவைத்தரும் அவனை நேசிக்கிறாய். எட்டியை, இனிப்பென்று எண்ணுகிறாய். வேண்டாம் இந்தப் பிடிவாதம். வினயமாகக் கூறுகிறேன், உன் ஏவலுக்கு எதிர்நோக்கி நிற்பேன். உன் விழி எதைக் கூறுமோ அவ்வழி நடப்பேன். நான் மாதரிடம் மையல் கொண்டு அலைந்து திரிபவனல்லன். அந்தப் பருவமும் கடந்தவன். பெண்ணே! நீ மட்டும் என்னை அடிமை கொண்டால் போதும், உன் சேவையே, என் சிந்தனையாகக் கொண்டு வாழ்வேன்.” வைத்தியரின் மொழிகேட்டு, நடனா மன மிக நொந்தாள். அகலத் திறந்திருந்த அவளது கண்களிலிருந்து பெருகிய நீர்த்துளிகள், அவனைக் கண்டு பயந்தோடுவன போலக் கன்னத்திலே புரண்டன. வேதனையைப் பொறுத்துக் கொண்டு அந்த விவேக சிந்தாமணி வெகுண்டுரைக்காமல் சாந்தமாகவே, “வைத்தியரே! நல்ல மருந்துகள் இருக்கலாம்; ஆனால் நாடிப் பரீட்சை தெரிய வேண்டியது முக்கியமல்லவா? இல்லையேல், எந்த மூலிகை கிடைத்தும் என்ன பயன்? எந்த முறை தெரிந்தும் என்ன பிரயோசனம்? என் மனம் நாடுவது யாரை என்பதைக் கண்டறியாமல். உமது மனம்போன போக்கின்படி மொழிக்கு வழி விடுகிறீரே, அதுசரியா! நான் முழு மனதுடன் காதலிக்கும் அன்பரின் வீரத்தைக் கேலி செய்கிறீர். உமது பேச்சைக் கேட்ட பிறகு நீர் தந்த பச்சிலைப் பாகின் கசப்பு எனக்கு இனிப்பாகத் தோன்றுகிறது! ஈட்டிக்கும், வாளுக்கும், வேலுக்கும், சூலுக்கும் கணைக்கும், கழிக்கும் இடையே நின்று, போரிட்டு வெற்றி பல கண்ட வீரரை, நீர் கொலைகாரர் என்று கடிந்துரைக்கிறீர். தணலிலே வெந்து வெளியே வந்த தங்கமல்லவா அவர். அவருடைய உயிர் குடிக்க எத்தனை கூரிய வாட்கள் துடித்தன. எவ்வளவு அம்புகள் அவர் உடலைத் தைத்தன. உடலிலே எத்தனை வடுக்கள்! தேர்ச்சக்கரம், யானையின் துதிக்கை, குதிரையின் காற்குளம்பு, கோபங் கொண்ட வீரர்களின் ஆயுதம் இவைகட்குத் தப்பி வீரமாக வெற்றிக்கொடி நாட்டியவரையா நீர் தூற்றுவது, உமது பொறாமையும், துவேஷமும், போக உணர்வும் போக்க ஏதேனும் மருந்து கிடைக்கவில்லையா? என்று கூறினாள். வைத்தியரின் முகங் கோணிற்று; அகமோ ஆத்திரக் கூடாயிற்று. உடல் பதைக்க நின்றான் அவள் எதிரில். “ஒன்று கேளும் வைத்தியரே! உமது கீர்த்தி என் செவியில் வீழ்ந்தது” என்று பேச்சைத் துவக்கினாள் பாவை. அவன் முகத்திலே புன்னகை தவழ்ந்தது. “என் கீர்த்தியைக் கேட்டுமா என்னை நிராகரிக்கிறாய்” என்று கேட்டது அப்புன்னகை. “பிறகே உம்மை நான் கண்டேன்” என்றாள் நங்கை. உடனே, வைத்தியரின் முகத்தில் கவலை குடி கொண்டது. பருவ முதிர்ச்சி, உடல் தளர்ச்சி ஆகியவைகளை அவள் பார்த்தாள்; ஆகவே நம்மை ஏற்காள் என்ற எண்ணம் உண்டானதால், “மகிழ்ந்தேன்! போற்றினேன்” என்று மேலுமுரைத்தாள் அம்மயிலாள். வைத்தியனுக்குச் சந்தோஷம் மீண்டும் உதயமாயிற்று. நாம் உட்கொண்ட மூலிகை நமது முதுமையை மாற்றாமலா போய்விடும்; வயது அதிகமானாலென்ன? நமது கெம்பீரம் கெட்டாவிட்டது? அதைக் கண்டே அவள் மகிழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணினான் அந்த ஏமாளி. அவள் மேலும் கூறினாள், “இன்றும் உமது திறமையை நான் பாராட்டுகிறேன். நான் உயிரோடு உங்கள் முன் நிற்பதே உமது அபூர்வ மருந்தின் சக்தியினால் தான் என்பதை உணருகிறேன். உமது உதவியை நான் மறக்க மாட்டேன்.” கிழவன், குமரியின் முகத்தை உற்று நோக்கினான். அந்தப் பார்வை, “உதவி செய்த என்னை உல்லாசப்படுத்து; உன்னை எனக்குத் தந்திடு.” என்று கேட்டது. அவனது நோக்கு, நினைப்பு, யாவும் நொடியிலே தூளாகும்படி, நடனா கூறினாள். “ஆனால், உம்மைக் காதலிப்பது முடியாத காரியம்; என் நெஞ்சை அவரிடம் நான் தந்து நெடுநாளாகிவிட்டன.” வைத்தியருக்கு வலி அதிகரித்தது. விழியிலே கோபம் குதித்தெழும்பிற்று. “அவன் பிரமாதமான வீரன் என்று எண்ணுகிறாய். நடனா! அவன் போல் ஆட்கொல்லிகள் அனந்தம்; என் போல் இதமளிப்போர் இலட்சத்தில் ஒருவர் கூடக் கிடையாது” என்று கூறினார்.   பகுதி - 7   “அரச மன்றத்திலே என்றேனும் ஓர் நாள் உமது அருமையான வாதத்திறமையைக் காட்டுமய்யா; எனக்குத் தெரியாது வாதம்புரிய” என்றாள் மங்கை. “பேதைமை மாதர்க்கு அணிகலமாம்!” என்றார் வைத்தியர். “மருந்துக்காக நீர் பல சுவடிகளைப் படித்திருப்பீர்; அது ஏட்டுச்சுரை. எனக்கேன் வைத்தியரே அவை! கேளும்; ‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்பதுபோல, நீர் என்னை நாடி வருவதற்கு முன்பு, உமது கீர்த்தி என் காதைத் தேடி வந்தது. அவர் விஷயம் அப்படியல்ல! அவரை நான் முதலிலே கண்டேன்! அவருடைய கீர்த்தி என்னவென்று அப்போது நானறியேன். உமது கீர்த்தியைக் கேட்டு எங்ஙனம் பாராட்டுகிறேனோ அது போல், அவரைக் கண்டு என் நெஞ்சமெனும் கோயிலில் அவரை இருக்கச் செய்துவிட்டேன். மற்றவர்கள் இந்தச் சோழ மண்டலத்திலே, வாள் வீச்சு, ஈட்டி எறிதல், குதிரைச் சவாரி ஆகிய வீரவிளையாட்டிலே வீரமணிக்கு நிகர் யாருமில்லை என்று புகழக் கேட்டேன், அவர் நெஞ்சிலே புகுந்த பின்னர். அவரது திறமையை நான் கண்டதுமில்லை, காண வேண்டுமென்று கருதினதுமில்லை. என்னை அவருடைய வாள் வீச்சு வீழ்த்தவில்லை. அவரிடம் நான் நெஞ்சைத் தந்த பிறகே, என் நேத்திரானந்த பூபதி, நிகரற்ற ஓர் போர் வீரர் என்பதை அறிந்தேன். எம்மைப் பிரிக்கும் மருந்து உம்மிடம் இல்லை. வீணே சிரமப்பட வேண்டாம். உண்மையிலே உமது திறமை கண்டு நான் வியக்கிறேன். ஆனால் வியப்பது வேறு. விரும்புவது என்பது வேறு” என்றுரைத்தாள் நடனா. “என் திறமறிந்தும் என்னிடம் உனக்கு அன்பு உண்டாகவில்லையா?” என்று கேட்டார் வைத்தியர். “திறமையைக் கண்டு வியந்ததும், ஒரு பெண், அந்த ஆடவனைக் காதலிப்பது என்று இருந்தால், வைத்தியரே! பெண்கள் எத்தனை எத்தனை ஆடவரை, நித்தம் நித்தம் காதலிக்க வேண்டி நேரிடும் தெரியுமா! கழைக் கூத்தன் பனை உயரத்தில் நின்று பம்பரம்போற் சுழன்றாடுவான்; பார்க்க மிக்க ஆச்சரியமாக இருக்கிறது! பாணனின் பாடல் பரமானந்தமூட்டுகிறது. கவியின் கற்பனை உள்ளத்தை உருக்குகிறது. ஓவியக்காரரின் சித்திரம் சித்தமதைக் களிப்புக் கடலிற் செலுத்துகிறது. அலைகடலை அடக்கி மரக்கலம் செலுத்துவோன், புலியையும் பிறவையும் வேட்டையாடிப் பிடிப்பவன், மல்யுத்தம் செய்து மார்நிமிர்த்தும் மறவன், போரில் வெற்றி பெற்றுக் கழலணிந்தோன், ஆகியவருடைய செயல் திறமையாக இல்லையா? எந்தத் திறமையைக் கண்டு வியப்படையாமல் இருக்கிறோம். ஏன்? அரண்மனையின் விகட கவியின் திறமை கண்டு வயிறு வெடிக்கச் சிரிக்கிறோம்! இவ்வளவு பேருடைய திறமையைக் கண்டு சந்தோஷித்தால் அவர்களைக் காதலிப்பது என்று பொருள் இருப்பின். வைத்தியரே! உலகம் ஓர் விபரீதபுரியாகி விடுமே! இதையேனும் உணரக்கூடாதா?” என்றுரைத்தாள் நடனராணி. “பெண்ணே! உன் பேச்சிலே அலங்காரம் இருக்கிறது; அறிவு காணப்படவில்லை.” “தங்கள் மனக்கண் குருடாகிவிட்டது, அதற்கு மருந்திடுங்கள் முதலில்” “மமதை, மகா கொடிய வியாதி” “வியாதியின் கொடுமை தெரிந்தும் அதை ஏன் வளர்த்துக் கொள்கிறீர்? உமது பேச்சு அதைத்தான் காட்டுகிறது.” “இரக்கமற்ற உனக்கு இயற்கை இவ்வளவு அழகைத் தருவானேன்! குற்றுயிராக நீ மஞ்சத்திலே படுத்துக் கிடந்தபோது, எத்தனை இரவுகள் உனக்காக இந்தக் கண்களை மூடாமல் காத்திருந்தேன்? எவ்வளவு கவலை கொண்டேன்? ஜீவசக்தி உன் உடலில் மீண்டும் வருவதற்காக எவ்வளவு பாடுபட்டேன்? வேறு வேலைகளை விடுத்தேன்; நீ பிழைத்தெழுந்தால் போதுமென்றிருந்தேன். உன்னைச் சாவுக் கிடங்கிலே தள்ளிவிட்டிருப்பார்கள்; நான் உன்னை உலகிலே உலவ வைத்தேன். நன்றிகெட்ட நங்கையே! நொந்த உள்ளத்தை நீ மேலும் வாட்டுகிறாய். நான் உன் பொருட்டுப்பட்ட கஷ்டம் எவ்வளவு என்பது உனக்குத் தெரியுமா?” “பேஷாகத் தெரியும்! என்னை ஈன்றபோது என் தாய் பட்ட கஷ்டத்தைவிடத் தாங்கள் அதிகம்பட்டிருக்க முடியாது. என் தாயே தடுத்தாலும் நான் அவரை நெஞ்சிலிருந்து வெளியே தள்ள முடியாது. என் இருதய சித்திரத்தை அழிக்க முடியாது.” “நீ அழிந்தால்...” என்று கேட்டுவிட்டு வைத்தியர், மிகக் கோபமாக நடனாவின் அறையை விட்டு வெளியே சென்றார். “நீர் என்ன துர்வாசரா, விஸ்வாமித்திரரா அவளைச் சபிக்க!” என்று கேலி செய்துவிட்டுச் சிரித்தாள் கங்காபாலா. அவள், வைத்தியர் நடனாவிடம் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் மறைந்திருந்து. வைத்தியர் வெளியே கோபமாக வந்ததும், வழி மறித்துக் கேட்டாள். “எங்கள் பேச்சு...” என்று இழுத்தார் அற்புதானந்தர். “கனி கொடுக்க வந்தேன், காதிலே விழுந்தது” என்று பாலா முடித்தாள். “இதை வெளியே சொல்லாதே பாலா! உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்” என்று வைத்தியர் வேண்டினார். பாலா “இரகசியத்தைக் காப்பாற்றுகிறேன்; பரிசு உண்டோ...” என்று பேரம் பேசினாள். “வா! வெளியே போய் பேசுவோம். ஏன்? என் வீட்டுக்கே வா, அங்கு...” என்று பேசிக் கொண்டே நடந்தார் வைத்தியர். “அங்கு, என்னையும் கண்ணே கனியே, என்று சரசமொழி பேசி, இசையாவிட்டால் சபிப்பீரோ, என்று திகில் வருகிறதே!” என்று மேலும் கேலி செய்தபடி, பின் தொடர்ந்தாள் பாலா. “கங்கா! நான் என்ன காமுகனா” என்றார் வைத்தியர். “கண் இருக்கிறதே உமக்கு. கண்ணுக்கு உருவாக எது தெரிந்தாலும், கருத்துச் சுழலுமாம். இதோ பாரும், தேவேந்திரன் நித்தநித்தம் ஜோதி ஸ்வரூபங்களான அரம்பை, ஊர்வசி, திலோத்தமை ஆகியவர்களைக் கண்டு களிப்பவன். பாருங்களேன், ஒரு நாள், எங்கோ பர்ணசாலையிலே இருந்த ஒரு ரிஷிபத்தினியைக் கண்டான்; காதல் கொண்டான். ஆண்களின் சுபாவம் அதுதானே” என்று ஆரியக்கன்னி கேட்டபோது, வைத்தியரின் மனதிலே, “ஆமாம்! இவள் சுந்தரியாகத்தான் இருக்கிறாள். அந்த மண்டைக் கர்வங் கொண்டவளிடம் மண்டியிட்டதை விட இவளிடம் கொஞ்சம் ஜாடைகாட்டி இருந்தாலும் போதுமே! இசைவாளே!” என்று தோன்றிற்று. மனதிலே நடனாவின் சித்திரம்; பக்கத்திலே பாலா. இருவரையும் ஒப்பிட்டான். இருவரும் இளமை எழில் உள்ளவர்களே. ஆனாலும், அந்த நடனாவின் வசீகரம் இவளிடமில்லையே! என்று ஏங்கினான். இருவருமாக வைத்தியரின் வீடு போய்ச் சேர்ந்தனர். நேரத்தை வீணாக்காமல் பாலா, பேச்சைத் துவக்கினாள். “வைத்தியரே! வேட்டையாடிய புலி வலையில் வீழ்ந்தது போன்ற நிலை, ஆண்கள், தாங்கள் விரும்பும் கன்னி இசைய மறுத்தால் பெறுவராம். உமக்குள்ள நிலை அதுதான். நான் தெரிந்து கொண்டேன். ஆனால் வெறும் ஆத்திரம் பயன் தராது. சபித்து விடவும் முடியாது” என்றாள். விசாரத்திலாழ்ந்த வைத்தியர், “பாலா! அப்படியானால், நான் அவளை மறக்கத்தான் வேண்டுமா? அந்த ஒளி வீசும் கண்களை, துடிக்கும் அதரத்தை, கொடி இடையை...” என்று பெருமூச்சுடன் பேசலானார். “சரி! சரி! அவளை நீர் வர்ணித்துக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருக்க நான் வரவில்லை. அவள் அதிரூபவதியா இல்லையா என்பது பற்றி எனக்கொன்றும் கவலை இல்லை. அவளைப் பிச்சை கேட்டீர்; அவள் காறித் துப்பினாள். நீர் இப்போது என்ன செய்யப் போகிறீர். அதுதான் கேள்வி” என்றுரைத்தாள். ‘என்ன செய்வது? ஏங்கிச் சாவது” என்றார் வைத்தியர். “அவளுக்காகவா?” என்று கேட்டாள் பாலா. வைத்தியரின் பெருமூச்சுதான் பதில் கூறிற்று. “நீர் இறந்துவிட்டால், அவளை அடைந்ததாக அர்த்தமா?” என்று கேட்டாள் பாலா. “வெந்த புண்ணிலே, வேலைக் குத்துகிறாய்! என்னை என்ன செய்யச் சொல்கிறாய்” “வஞ்சந் தீர்த்துக் கொள்.” “கற்பழிப்பதா?” “சீ! அவளை அழிப்பது. ஏன், உன்னிடம் வகை வகையான விஷமில்லையா! ஏதாவதொன்றை மருந்துடனோ, உணவுடனோ, கலந்து தந்தால் ஒழிகிறாள். உனக்கு இணங்க மறுத்த அவள், பிறகு எவனாவது ஒரு வீரனுடன் கூடி ஆடிக் கிடப்பதைக் கண்டால், நீ புழுப் போல் துடிக்க மாட்டாயா?” “துடிப்பேன். ஆனால், அதற்காக அவளைக் கொல்வதா! சீச்சீ! கூடாது அக்கொடுஞ்செயல்” “ஓஹோ! காவியணிய உத்தேசமா?” “அதுவுமில்லை” “வைத்தியரே! உடலிலே, நோயூட்டும் கிருமிகள் இருந்தால், கிருமிகளை அழிக்க நீர் மருந்திடுவதில்லையா? கிருமிகள் சாகுமே என்று பரிதாபப்பட்டால், கிருமி, ஆளைக் கொல்லாதா? நடனா, உமது வாழ்வை வதைக்கும் கிருமி. நீர் அந்தக் கிருமியை அழிக்காவிட்டால், உம்மைக் கிருமி அழித்துவிடும்.” “ஆமாம்!” “எதற்கெடுத்தாலும் ஆமாம், ஆமாம், என்று கூறுகிறீர். துணிவாக எதையேனும் செய்யச் சொன்னால், ஐயோ, ஆகாது, என்கிறீர். சுத்தப் பித்துக்கொள்ளியாக இருக்கிறீர்.” “பாலா! நீ பேசுவதைக் கேட்கவே எனக்குப் பயமாக இருக்கிறது.” “கோழைத்தனம். உமக்கு ரோஷம் இல்லை. அரண்மனையிலே ஒரு பணிப்பெண் அவள். அவள் உம்மைக் காறித் துப்பினாள், உமக்கு உணர்ச்சி இல்லை. நான் ஆணாக இருந்து, எனக்கு அக்கதி நேரிட்டிருந்தால் நடனா இவ்வளவு நேரம் உயிரோடு இருக்க முடியுமா? மானத்தை இழக்க உமக்கு மனமிருக்கிறது. உமது இஷ்டப்படி செய்யும். எனக்கென்ன. அரண்மனையிலே, இனி, உம்மைப் பற்றித்தான் ஓயாது கேலி செய்வார்கள். நீர் தலை காட்டினால் போதும்; இதோ பாரடி, மருந்து கொடுக்க வந்த கிழவன், நடனாவை இழுத்தானாம்; அவள் உதைத்தாளாம் என்று கேலி செய்வார்கள்.” “உண்மைதான். ஊர் பூராவும் கேலி செய்யும்.” “பிறகு உமது மதிப்புப் போகும்” “போய்விடும். ஆ-மா-ம்” “அரண்மனை வைத்தியமும் போகும்” “ஆமாம்” “இவ்வளவு ஆபத்தும் அந்த ஒரு சிறுக்கியினால்” “என் வாழ்வுக்கே பெரிய ஆபத்து” “புத்தி இருந்தால், அதை நீக்கிக் கொள்ளலாம்” “பொற்கொடி போன்றவளை விஷமிட்டுக் கொல்வதா?” “வேண்டாம், வேண்டாம்! அவள், வேறோர் புருஷனிடம் கொஞ்சி விளையாடும்போது, நீர் அங்கே போய், அவனுக்கு அடைப்பந்தாங்கும்.” “பாலா! பதட்டமாகப் பேசாதே” “பேசினால் என்ன? பெண்ணுக்குப் பயப்படுபவர் நீர். என்னை மிரட்டுகிறீரே” இந்தச் சம்பாஷணைக்குப் பிறகு, அவசர அவசரமாக வைத்தியர், தமது மருந்துப் பெட்டிகளைத் தேடினார். ஒரு சிறு கருநிற மாத்திரையை எடுத்தார். கண்களிலே மிரட்சியுடன், அதைப் பாலாவிடம் கொடுத்தார். “இதை அவள் உட்கொண்டால் ஒழிந்தாள். விஷம் பருகிச் செத்தாளென்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு அபூர்வமானது இது. இயற்கையான மரணமாகவே தோன்றும். பாலா! இனி என்னெதிரில் இராதே. என் மனம் மாறிவிடும் போ! போ! நடனா ஒழியட்டும்” என்று கூவினார். பாலா, ஆவலுடன் அந்த மாத்திரையைப் பெற்றுக் கொண்டு, “இது ஆண் மகனின் தீரம். வைத்தியரே! உமது வாக்குப் பலிக்கும். விரைவிலே நீர் நடனாவின் மரணச்செய்தியைக் கேட்பீர்” என்று கூறிவிட்டு, விடை பெற்றுக் கொண்டாள். அவள் வாயிற்படியைத் தாண்டும் முன்னம், வைத்தியர், மீண்டும் அழைத்தார். “ஏன்? மனம் மாறிவிட்டதா?” என்று பாலா கேட்டாள். “இல்லை! ஆனால், உனக்கு நடனா மீது இவ்வளவு விரோதம் ஏன்?” என்று கேட்டார். “உமக்கேன் அவளிடம் அவ்வளவு பிரேமை உண்டாயிற்று.” என்று கேட்டாள் பாலா. “யாருக்குத்தான் உண்டாகாது” என்று பெரு மூச்செறிந்தார் வைத்தியர். “நீர் அவள் அழகிலே சொக்கினீர்; நான் அவளுடைய நிலை கண்டு, நினைப்புக் கண்டு அவளை வெறுக்கிறேன். அவள் எனக்கும் நஞ்சு; உமக்குந்தான்! அவள் ஒழியத்தான் வேண்டும்” என்றாள். “என்ன இருந்தாலும், பாலா! நடனாவுக்கு விஷங்கொடுக்க எனக்கு மனம் இடந்தரவில்லையே” என்றார் வைத்தியர். “அது சரி! கிடைத்த மாத்திரையை இழக்க நான் இசைவேனா? வைத்தியரே, நீர் நமது சம்பாஷணையை, முற்றிலும் மறந்துவிடும். நீர் ஏவிய மரணம், அவளைத் தழுவக் காண்பீர் விரைவில்” என்றாள் பாலா. “என் பின்னோடு வா. ஊர்ப்புறமாக உள்ள சத்திரத்துக்கு” என்று ஒரு குரல் கேட்டது. கங்கா திடுக்கிட்டாள். உருவம் முகத்தைக் காட்டினதும், “நீயா? என்ன விசேஷம்?” என்று கேட்டாள். “அங்கே சொல்கிறேன், நட” என்று அதிகார தோரணையிலே அந்த உருவம் கூறிக் கொண்டே நடந்தது, பாலா அதனைப் பின் தொடர்ந்தாள். உருவம் சரியாக வெளியே தெரியாதபடி மேலே ஓர் போர்வையுடன் காணப்பட்டது. இருவரும் ஊர்க்கோடியிலிருந்த சத்திரத்தை அடைந்தனர். கூற்றுமுற்றும் பார்த்து விட்டு, வந்தவன் பாலாவைப் பார்த்து, “பாலா! நீ சுத்த மக்கு! ஒரு காரியமும் நடப்பதில்லை. அரண்மனையிலே ஒரு துளி கூடக் கலகம் ஏற்படவில்லை; மாதா மாதா பணம் பெறுவது மட்டுமே வேலை என்று எண்ணுகிறாய். நமது நோக்கம் ஈடேற ஒரு வழியும் செய்யக் காணோம்” என்று கடிந்துரைத்தான். பாலாவின் முகத்திலே கோபமும் சலிப்பும் கலந்து வீசிற்று. ஏதோ பேச வாயெடுத்தாள், வந்தவன், அதைத் தடுத்துவிட்டு, மேலும் பேசினான்: “பாலா! உனக்கு மட்டுந்தான் இந்த அர்ச்சனை என்று எண்ணாதே; எனக்குந்தான். இன்று வந்த ஓலையிலே, எனக்கும் ஒரு முழு நீளமுள்ள அர்ச்சனை நடந்திருக்கிறது. கலிங்கப்போர் நடந்தபோது சோழ மண்டலத்திலே கலகம் நடக்கும்படி ஏன் தூண்டவில்லை? எதற்கு நீ ஜெனனமெடுத்தாய்? குல முன்னேற்றத்தைக் கவனியாத நீ பிறந்து பயன் என்ன? என்றெல்லாம் எனக்கும் வசவு கிடைத்திருக்கிறது. நான் எவ்வளவோ கரடியாகத்தான் கத்தினேன், போரை ஆதரிக்க வேண்டாமென்று; பலிக்கவில்லை. நான் என்ன செய்வேன்? பாலா! நமக்கு அவர் கட்டளைகள் பிறப்பிக்கிறாரேயொழிய நமக்கிருக்கும் கஷ்டங்கள் தெரிகிறதோ? சோழமண்டலம் என்ன மலர்புரியா? அங்குத் தான் ஒரு ஸ்திரீ கிடைத்தாள்; அவர் ஆட்டி வைக்கிறார். இங்கு முடியுமோ? பாலா எனக்கு இருக்கும் கஷ்டந்தானே உனக்குமிருக்கும். இருந்தாலும், அவர் சொல்லியனுப்பியதை உனக்குக் கூறினேன். என் மீது கோபங் கொள்ளாதே” என்றுரைத்தான். “பதஞ்சலி! உன் மீது கோபித்து என்ன பயன்? நானும் என்னாலானதைச் செய்து தான் பார்க்கிறேன். ஒன்றும் சரியாக முடிவதில்லை. இப்போதும் ஒரு அருமையான ஏற்பாடு என் மனதிலே இருக்கிறது. எனக்கு அந்தப்புரத்திலே ஒரு தடையாக இருக்கும் நடனா என்கிற நாட்டியக்காரியைக் கொன்றுவிடத் தீர்மானித்துவிட்டேன். அருமையான விஷம் கிடைத்திருக்கிறது ஒரு வைத்தியனிடமிருந்து. அவளிடம் காதல் வேண்டினான்; அவள் மறுத்தாள். இடையிலே நுழைந்தேன்; இதைப் பெற்றேன்” என்று கூறி, மாத்திரையைப் பாலா காட்டினாள். “விஷமிடுவதா?” என்று கேட்டாள் பதஞ்சலி. “ஏன்? பாபம் சூழ்ந்து கொள்ளுமோ?” என்று கேலியாகக் கேட்டாள் பாலா. “பாவமும் புண்ணியமும்! அந்தப் பயல்களை ஒழிக்கத்தானே அதைக் கூறினோம். நான் யோசிப்பது அதற்கல்ல பாலா! கொலை கடைசி வேலையாக இருக்க வேண்டும். கேவலம் ஒரு பணிப்பெண்ணின் செல்வாக்கைப் போக்கவா, கொலையில் ஈடுபட வேண்டும். பாலா! ஒரு கொலை செய்வதன் மூலம் ஒரு ராஜ்யமாவது கிடைக்க வேண்டாமா? அல்லது நமது ஆரியத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் பெரிய வீரனாவது ஒழிய வேண்டும். நீ, கேவலம் ஒரு வேலைக்காரிக்காக, இதைச் செய்வதா?” என்று பாலாவை கேட்டுவிட்டு, பாலாவை உற்றுப் பார்த்தான். அவனது பார்வை மனதிலுள்ளதெதுவென்பதைக் காட்டிற்று. பாலா பதறினாள். “பதஞ்சலி! ஆபத்தாக முடியும். இதை மன்னனுக்கோ, அவன் மகளுக்கோ தந்தால். நீ அதைத்தான் யோசிக்கிறாய் என்பது தெரிகிறது. ஆனால் நான் அவ்வளவுக்குத் துணிய மாட்டேன்” என்று பாலா கூறினாள். “இப்போது வேண்டாம்! சமயம் கிடைக்கும். நடனாவைப் பற்றி நீ கவலைப்படாதே. அவள் அதிக நாட்களுக்கு இங்கு இருக்க முடியாது. ஊரிலே, அவள் மீது பல வதந்திகளைப் பரப்பும் வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன். நடனா ஒழிவாள் ஊரைவிட்டு. பிறகு, பதுங்கியிருந்து பாயும் புலிபோல், இந்த மாத்திரையைக் கொண்டு நீ காரியத்தைச் செய்யலாம். நான் அவருக்கு உன் விஷயமாகத் தெரிவிக்கிறேன்” என்று கூறிவிட்டு, செலவுக்குப் பொருள் தந்தாள். பின்னர் இருவரும் பிரிந்து போயினர். வேதனைப்பட்ட வைத்தியருக்கு, விஷ மாத்திரையைக் கொடுத்துவிட்ட பிறகு, கிலி அதிகமாகிவிட்டது. நடனா மீது இருந்த கோபங்கூட அதனால் குறையலாயிற்று. அவள் அழகை யும், எண்ணினார். அவளைக் கொல்வதா என்று பதறினார். பாலா, துவேஷத்தினால், நடனாவைக் கொன்றே விடுவாளே! என்ன செய்வது என்று ஏங்கினார். காதல் முறிவு, கோபம், ஆத்திரம் ஆகிய பல நோய்களால் தாக்கப்பட்ட வைத்தியருக்கு, இந்த வேதனையும் சேரவே, அவருடைய மனமே குழம்பிவிட்டது. தலைவலிக்கு மருந்து கேட்போருக்கு மார்வலி போக்கும் மருந்து; காய்ச்சலுக்கு மருந்து கோருவோருக்கு காசநோய் மருந்து; குமட்டல் போக்கும் மருந்து என்று கேட்போருக்குக் குஷ்ட நிவாரணி என்று கொடுத்து வரலானார். ஊரெங்கும் வைத்தியருக்கு வந்துற்ற மனக்குழப்பமே பேச்சாகிவிட்டது. வைத்தியரின் நோயைப் போக்க வேறோர் வைத்தியரை, அரசர் அனுப்பி வைத்தார். பதஞ்சலி கூறினபடி, ஊரிலே, நடனாவைப் பற்றிய வதந்திகள் பரவலாயின. கழனி, மேடு, சாவடி, தோட்டம், கடைவீதி, எங்கும், “துரோகம் புரிந்த வீரமணிக்கு அவள் காதலிதானே! அவள் இங்கு இருக்கலாமா? பாம்புக்குப் பாலூற்றுவதா? நெருப்புக்கு முத்தமிடுவதா? அவளும் ஒழியத்தான் வேண்டும். அவளையும் ஊரைவிட்டு ஓட்டித்தான் தீர வேண்டும். அவள் ஏதோ ஆடியும் பாடியும் நமது அரசிளங்குமரியை மயக்கிவிட்டாள். மன்னர் இனி ஒரு விநாடி அந்தப் பணிப்பெண்ணை அரண்மனையிலே இருக்க விடக்கூடாது” என்று கூவினர் மக்கள். அரண்மனைக்கும் செய்தி எட்டிற்று. மன்னரிடம் பலர் மெல்ல மெல்லச் சேதியைக் கூறினர். “மக்களின் மனம் கோபக்குழம்பாகிவிட்டது, இந்த நேரத்திலே ஏதேனும் செய்யாவிட்டால், ஆத்திரப்பட்ட மக்கள் ஏதேனும் செய்வர்” என்று மந்திரிகள் கூறினர். அந்தப்புரத்திலே, சேடியர் கைபிசைந்து கொண்டனர். அரசிளங்குமரி, “இதென்னடி பாலா! இந்த மக்கள் ஏதேதோ கூவுகிறார்களாம். அவன் துஷ்டன். துரோகி. நடனா மீது என்ன குற்றம் சுமத்த முடியும்” என்று கேட்டாள். “எனக்கென்ன தெரியும்? உங்கள் மக்கள் எதையும் நிதானித்துப் பார்த்து, உரை போட்டுப் பேசுவர் என்று கூறிக் கொண்டிருப்பீரே” என்று பாலா கேலி செய்தாள். இத்தகைய சுழலுக்கிடையே இருந்த சுந்தராங்கி, இதைக் குறித்துக் கவலைப்படவில்லை. அவளுடைய நினைப்பெல்லாம், யாருமறியாதபடி எப்படி வெளியே போவது என்பதிலேயே இருந்தது. கங்காபாலாவுக்குச் சிக்கலான பிரச்சினையாகிவிட்டது. விஷமூட்டிக் கொல்வதா? ஆத்திரப்படும் மக்களைக் கொண்டே நடனாவை விரட்டி விடுவதா? பிறகு, விஷத்தை யாருக்கு உபயோகிப்பது? என்று யோசிக்கலானாள். அன்றிரவு, ஓர் தோழி நடனாவிடம், தனியாக வந்து, மக்களின் மனம் மது உண்ட குரங்காக இருப்பதையும், அரண்மனை வாயிலுக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக வதந்தி இருப்பதையும் கூறி, அரசிளங்குமரி சில காவலருடன், நடனாவைக் காஞ்சிக்கு அனுப்பி வைத்தல் உசிதமென்று எண்ணுவதாகவுங் கூறி, நடனாவின் இஷ்டமென்னவென்று கேட்டாள். தப்பியோட இதுவே சரியான சந்தர்ப்பம் என்று எண்ணிய நடனா, பயந்தவள்போல் நடித்து, “அரசிளங்குமரி கூறுவதே சரியான யோசனை. அதிகமாக ஆட்கள் கூடாது. ஒரே ஒரு காவலாளி மட்டும் வரட்டும். நான் இப்போதே மாறுவேடமணிந்து கொண்டு புறப்படுகிறேன். அரசகுமாரியிடம் போய்ச் சொல்” என்றுரைத்துவிட்டு, மகிழ்ச்சியோடு ஆணுடை அணிந்து கொண்டாள். அரசகுமாரி ஒரு காவலுடன் அங்கு வந்து நடனாவுக்குத் தைரியங்கூறி, மக்களைச் சில நாட்களிலே சமாதானப்படுத்தி விடுவார் மன்னர். பிறகு நீ மறுபடியும் வந்து சேரலாம். நடனா! உனக்கு இப்படி இடிமேல் இடி வருவது கண்டு என் மனம் பற்றி எரிகிறது. என்ன செய்வதடி! மன்னனாக இருந்தாலும், மக்களின் மனப்போக்கைக் கவனித்துத் தானே நடந்தாக வேண்டும். மக்களுக்காகத்தானே மன்னன். ஆகவே நீ மனதைக் குழப்பிக் கொள்ளாதே. உன்னை நான் கைவிட்டு விடுவதாக எண்ணாதே. உன்னைப் பிரிந்திருக்கவும் மனம் இசையவில்லை. அதிலும் நீ நோய்வாய்ப்பட்டு இப்போது தான் கொஞ்சம் தேறியிருக்கிறாய். இந்நிலையிலே உன் மனம் நோக வைக்கின்றனர் மக்கள். சில நாட்கள் காஞ்சியில் இரு. பிறகு நாம் பழையபடி இங்கே மகிழ்ந்திருப்போம்” என்று அன்புமொழி பேசி ஆரத்தழுவிக் கன்னத்தை முத்தமிடுகையில், கண்ணீர் பெருகுவது கண்டு, “கண்ணே நடனா! காஞ்சிக்குப் போய்ச் சில தினங்கள் இருக்கத்தானே சொன்னேன். இதற்கு அழுவதா?” என்று தேற்றினாள். நடனாவின் அழுகையின் காரணம் அரசகுமாரிக்குத் தெரியுமோ! செல்வமாக வாழ்ந்து மன்னர் குடும்பத்தின் ஆதரவு பெற்று வந்த இடத்தைவிட்டு, பாய்மரமற்ற கப்பல் போல் இனி உலகிலே சுற்றப் போகிறோமே என்ற துக்கத்தால் அவள் அழுதாள். சில நிமிடங்கள் சோகத்திலாழ்ந்திருந்தனர் இருவரும். பிறகு, தோட்டத்தைக் கடந்து, அரண்மனைப் பின்புற வாயிலை அடைந்து, அங்குத் தயாராக இருந்த குதிரைகளிலே, நடனாவும், காவலாளியும் ஏறிக்கொண்டு, அரசகுமாரியிடம் விடை பெற்றுக் கொண்டனர். குதிரைகள் கடுவேகமாக ஓடலாயின. அதே நேரத்திலே, வைத்தியரின் மனம் மிக அதிகமாகக் குழம்பிவிட்டதால், அவர் படுக்கையை விட்டெழுந்து வீட்டெதிரில் வந்து நின்று கொண்டு, “அடி நடனா! நீ எத்தனை காலம் இனி உயிரோடு வாழ முடியும்? அதிலே சேர்க்கப்பட்டுள்ள மூலிகை என்ன தெரியுமோ!” என்றும், “பாலா! கொடுத்துவிட்டாயா விஷத்தை? முடித்துவிட்டாயா காரியத்தை? பாலில் கலந்து கொடுத்தாயா, பழத்திலே சேர்த்தாயா?” என்றும், பிதற்றிக் கொண்டு நிற்பதும் வழியிலே போவோர் வருவோரைப் பார்த்து, நான் அரண்மனை வைத்தியன் ஏராளமான சொத்து இருக்கிறது. எனக்கு என்னடா குறை? என்னைக் கலியாணம் செய்து கொள்ள அந்த நடனா மறுத்தாளே அவளைச் சும்மா விடுவேனோ? ஒரே ஒரு மாத்திரையைக் கொடுத்தேன், அவ்வளவுதான்! தூங்கி விட்டாள். இனி ஊர் ஜனங்கள் கூடி ஓவென்று அலறினாலும், ஓடிப் போன வீரமணி ஓலமிட்டழுதாலும், அவள் எழுந்திருக்கவே முடியாது” என்று கூறுவதும், இங்குமங்கும் ஓடுவதுமாக இருக்கக் கண்டு மக்கள் வைத்தியரின் புத்தி கெட்டுவிட்டது பாவம் என்று பரிதாபப் பட்டனர். வைத்தியன் அரண்மனை வாயிலை அடைந்தான். வாயிற்காப்போன், வைத்தியருக்கு மரியாதையாக வழிவிட்டு, “இந்த நேரத்தில் எங்கேயோ?” என்று வினயமாகக் கேட்டான். “ஏன்? நடனாவைப் பார்க்கப் போகிறேன். உனக்கென்ன?” என்று கோபமாகப் பதில் கூறினார் வைத்தியர். “நடனாவைக் காண இந்த நேரத்திலா? என்ன விசேஷம்?” என்று வேலையாள் கேட்க, வைத்தியர் வேலையாளின் முதுகைத் தட்டிக் கொடுத்து, “அது பரம இரகசியம். யாரிடமும் கூறாதே. நடனா செத்துவிட்டாளா? இருக்கிறாளா? என்று பார்க்கவே போகிறேன்” என்று கூறினார். வேலையாள் வைத்தியரின் பேச்சையும் முகத்தையுங் கண்டு, சந்தேகங்கொண்டு, வைத்தியர் பித்தன் போல் பிதற்றுகிறார் என்று தெரிந்து, இந்த நிலையிலே இவரை உள்ளே போகவிடக் கூடாதெனத் தீர்மானித்து, மெல்ல அவரை வழிமறித்து நின்று, “வைத்தியரே! காலையிலே போய்ப் பார்க்கலாம். இப்போது உள்ளே போக வேண்டாம்” என்று தடுத்தான். உடனே வைத்தியருக்குக் கோபம் பீறிட்டெழுந்தது. அடே! அற்பகுணம் படைத்தவனே, அயோக்யா! என்னை யாரென்று எண்ணினாய்? நான் அரண்மனை வைத்தியன்; யாசகம் கேட்க வருபவனா? போக்கிரி! போன மாதந்தானேடா உனக்குப் பூரண சந்திரச் சூரணம் கொடுத்து, உனக்கு வந்த முடக்குவாதத்தைப் போக்கினேன். உன் தாய்க்கு வந்த குளிர் காய்ச்சலுக்குக் குளிகை கொடுத்தேன். என்னை இப்போது உள்ளே விட நீ மறுக்கிறாயே மடையா! என்று கூவினார். வேலையாள் ஆத்திரமடையாது, பக்குவமாகவே அவரைப் பிடித்துக் கொண்டு, “பதறாதீர்! வைத்தியரே உரக்கக் கூவாதீர்” என்று சாந்தமாகப் பேசிக் கொண்டு, வேறு வேலையாட்களை அழைத்து, வைத்தியரை, மரியாதையாக அழைத்துக் கொண்டு மன்னரிடம் கொண்டு போய்விடுங்கள்” என்று கூறினான். “சரி! டே! ஒருவன் முன்னால் நட, மற்றவன் பின்னாவே வா!” என்று வைத்தியர் உத்தரவிட்டு விட்டு, கெம்பீரமாக நடக்கலானார். அதே நேரத்தில் அரசகுமாரி முன்னால் ஆரியப்பெண் கங்காபாலா நடந்து சென்று கொண்டிருந்தாள். அவள் கையிலே பால் நிரம்பிய தங்கக் கிண்ணத்தை ஏந்திக் கொண்டிருந்தாள். பாலாவின் முகத்திலே வெற்றிக்குறி தென்பட்டது. பாலிலே, மாத்திரை கரைத்துவிட்டிருந்தாள்! “வைத்தியர் என்றால், வக்காவென்றோ கொக்கு என்றோ எண்ணிக் கொண்டாள் அந்தத் துஷ்டச்சிறுக்கி. அந்த மாத்திரை வேலை செய்யும்போதுதானே, அவளுக்கு என் திறமை தெரியப் போகிறது” என்று கோபமாகக் கூறிய வைத்தியரை, வேலையாட்கள் “எந்த மாத்திரை? எந்தப் பெண்?” என்று கேட்டனர். “அது அரண்மனை ரகசியம். வெளியே தெரியக் கூடாது. ஆனால், நீங்கள் யோக்யர்கள். உங்களிடம் சொன்னால் பரவாயில்லை. அந்த நடனாவுக்கு விஷங்கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டேன்” என்று பூரிப்போடு வைத்தியர் சொன்னார். திடுக்கிட்ட வேலையாட்கள், “நிஜமாகவா?” என்று கேட்க வைத்தியர் சீறி விழுந்து, நான் புளுகுவேனா? போய்க் கேளுங்கள் பாலாவை கருப்பு மாத்திரை கொடுத்தேனா இல்லையா என்று. முட்டாள்களே! தீட்டிய சித்திரம் சரியாக இல்லாவிட்டால் கலைத்து விடுவது, கட்டிய வீடு கலனாகிவிட்டால் இடித்துத் தள்ளுவது, பழம் அழுகினால் குப்பையிலே வீசுவது - இதுதானே முறை. அவள் சாகக் கிடந்தாள். இந்த அற்புதானந்தர் அவளுக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தார். ஆனால் அவளோ! அடேயப்பா உங்களிடம் சொல்வதற்கென்ன. என்னைக் கொல்லத் துணிந்தாள்” என்று கூறிச் சோகித்தார். “ஒருவருக்கும் தீங்கு செய்யாத நடனாவா, உம்மைக் கொல்லத் துணிந்தாள். எப்படி? எதனால்? ஏன்?” என்று வேலையாட்கள் படபடத்துக் கேட்டனர். “ஏன் என்பது எனக்குத் தெரியாது. எதனால் என்பது தெரியும்” என்று கூறிவிட்டு வைத்தியர் மௌனமாக இருந்தார். வேலையாட்கள், எதனால்? எதனால்? என்று கேட்டனர். கத்தியாலா? வைத்தியர் இல்லை என்று தலை அசைத்தார்.                                               பகுதி - 8   ஈட்டிக் கொண்டு குத்த வந்தாளா? வைத்தியர், “எனக்கு வைத்தியத்துடன் போரிடவுந் தெரியும்” என்று கூறிவிட்டு, அவள் என்னைத் தன் அழகால் கொல்ல முனைந்தாள். அந்த இரு கண்கள் நஞ்சைப் பொழிந்தன. அவள் பேச்சு, ஈட்டிபோல் குத்திவிட்டது. ஆனால், அவள் தனது அழகால் என்னைக் கொல்லப் பார்த்தாள்; நானோ என் அறிவினால் அவளைக் கொன்றுவிட ஏற்பாடு செய்துவிட்டேன்” என்று வைத்தியர் கூறினதும், வேலையாட்களில் ஒருவன், மிரண்டோடினான் மன்னனிடம். கும்பிட்டுக் கை கட்டி, துக்கம் நெஞ்சை அடைக்க, “மன்னர் மன்னவா! நமது வைத்தியர், மனங்குழம்பியதால், நடனாவுக்கு விஷமிட்டுக் கொல்ல ஏற்பாடு செய்துவிட்டாராம்” என்று கூறிட மன்னரும் மருண்டு, அம்மங்கையின் அறைக்கு விரைந்தோடி, “கண்ணே! மங்கா! நடனா எங்கே? அந்த நாச நினைப்புக்காரன், நடனாவுக்கு விஷமிட ஏற்பாடு செய்தானாமே.” என்று கேட்டான். மன்னன் மகள், தந்தையே! நடனாவுக்கு ஆபத்தொன்றும் நேரிடாத இடத்திலே இருக்கிறாள், ஊரிலே ஜனங்கள் ஏதோ ஆத்திரமாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன். நடனாவை காஞ்சிக்கு அனுப்பிவிட்டேன்.” என்றாள். மன்னனும் அவன் குமாரியும் பேசிக் கொண்டிருக்கையிலே கங்காபாலாவின் முகம் பயத்தால் வெளுக்கத் தொடங்கிற்று; உடல் பதறலாயிற்று; கையிலிருந்த பால்சொம்பு கீழே நழுவி வீழ்ந்துவிட்டது. பால் தரையில் ஓடிற்று. அரசகுமாரி, கங்காவைப் பிடித்துக்கொண்டு, “என்னடி பாலா! என்ன உடம்புக்கு? ஏன் இப்படித் துடிக்கிறாய்!” என்று கேட்டுக் கொண்டிருக்கையில், வைத்தியர் தலைவிரி கோலமாக உள்ளே புகுந்து, பாலாவைப் பார்த்து “முடிந்துவிட்டதா காரியம்? ஒழிந்தாளா? விஷம் எப்படி?” என்று கேட்டான். “பாலா மூலமாகத்தான் இந்தப் பாதகத்தைச் செய்யச் சொன்னாயா?” என்று மன்னன் மிரட்டினான். வைத்தியர், “பாதகமா? இதுவா பாதகம். பேஷ்! மகா நீதிமான் நீர்.” என்று கூவினான். பாலா, மிரள மிரள விழித்தாள், கூவினதால் களைத்த வைத்தியன், பால்செம்பை எடுத்து மிச்சமிருந்த பாலை மளமளவெனப் பருகினான். பாலா, “வேண்டாம் பாலைச் சாப்பிடாதீர். அதிலேதான் விஷ மருந்தை கரைத்தேன்!” என்று கூச்சலிட்டாள். “ஆ! என் விஷம் எனக்கேயா” என்று வைத்தியனும், “அடி கள்ளி! என் மகளுக்கா விஷமிடத் துணிந்தாய்” என்று மன்னரும், “துரோகி! அன்போடு பணிவிடை செய்வதாகப் பாசாங்கு செய்தாயேடி” என்று அரசகுமாரியும் ஆத்திரத்துடன் கூவினர். வைத்தியர் சாயத் தொடங்கினார். பாலா, மெல்ல நழுவ யத்தனித்தாள், வேலையாட்கள் பிடித்துக் கொண்டனர். “தள்ளுங்கள் இந்தச் துரோகியைச் சிறையிலே” என்று மன்னன் கட்டளையிட்டு விட்டு, வைத்தியரைக் கவனிக்கலானான். வைத்தியரோ, சிகிச்சையே தேவையில்லாப் பேறு பெற்றார். “விடுகிறேனா பார் உன்னை” என்று வைத்தியர் பிணமானார். “மரணம் கொடிதா? மனக்குழப்பத்தோடு கூடிய வாழ்க்கை கொடிதா?” என்று காஞ்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்த நடனா, காவலாளியைக் கேட்டாள். பொழுது போக்குக்காக ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். இடையே இக்கேள்வி பிறந்தது. காவலன், “மனக்குழப்பத்தோடு கூடிய வாழ்வுதான் மிகவும் கொடியது” என்று பதில் கூறிவிட்டு, ஆனால் மனக்குழப்பம் நீங்கும் மார்க்கம் ஏற்பட்டுவிட்டால், வாழ்வு துலங்குமல்லவா? அதற்காகத்தான் சற்றுப் பொறுத்துக் கொண்டால், பிறகு நிம்மதி ஏற்பட்டதும், வாழ்வின் பயனைப் பெற முடியும். கஷ்டம் ஏற்பட்டதும் கலங்கி உயிரைப் போக்கிக் கொண்டால், பெரிய நஷ்டமாகுமல்லவா?” என்று கூறினான். “உண்மைதான்! உத்தமன் என்ற உன் பெயருக்கேற்றபடியே, உன் எண்ணமும் இருக்கிறது. ஆனால், ஒருவர் இறந்து போனால், வருத்தப்படும் ஆட்கள் இருந்தால், அந்த மரணத்தால் கஷ்டமும் விளையும்; நஷ்டமும் உண்டு. ஆனால் என்னைப் போல ஒரு அபலை; திக்கற்றவள்; கஷ்டமனுபவித்துக் கொண்டு காலந்தள்ளுவதைவிட இறந்து போவதால் நஷ்டமொன்றுமில்லையல்லவா?” என்று கேட்டாள் நடனா. காவலாளி, “உமது கேள்வி எனக்கு வருத்தமூட்டுகிறது. உமது மரணத்தால் யாரும் வருத்தமடைய மாட்டார்கள் என்று நீர் எண்ணுவது, உமது நண்பர்களுக்கு நீர் துரோகம் செய்வது போன்றதாகும். ஏதோ பொழுது போகப் பேசுகிறீர் என்று எண்ணினேன். உண்மையிலேயே நீர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எண்ண வேண்டியிருக்கிறது உமது விபரீதமான பேச்சைக் கேட்டபின். தயவு செய்து தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். தற்கொலை கோழைத்தனம்; துரோகம்” என்று படபடத்துக் கூறினான் காவலாளி. சில நிமிடங்கள் இருவரும் மௌனமாகவே சென்று கொண்டிருந்தனர். காவலாள் மீண்டும் பேச்சைத் துவக்கினான். “தங்களின் துயரம் நான் அறியாததல்ல; வீரமணி எனக்கு நண்பர்” என்றான். “நண்பர்! உன் நண்பருக்காக என்ன பிரயாசை எடுத்துக் கொண்டாய்? நட்பின் இலட்சணம் என்ன? அவர்மீது அபாண்டம் சுமத்தப்பட்ட போது ஏன் வாய் பொத்திக் கிடந்தீர்கள்? ஒரு பேச்சுப் பேசினீர்களா? இப்போது அவர் எங்கு இருக்கிறாரோ? என்ன கதியோ? யார், அவர் விஷயமாக அக்கரை காட்டினார்கள்? உத்தமா! உன் மீது கோபிப்பதாக எண்ணாதே. என் மனக்கொதிப்பு என்னை இவ்வாறு பேசச் செய்தது. என் நிலையை நீ அறிந்து கொண்டதாகச் சொன்னாய். எனக்கு உதவி செய்வாயா? அவரன்றி நான் வாழ முடியாது. காஞ்சியிலே போய் தங்கிவிட நான் புறப்படவில்லை. இதே பிரயாணம், அவரைத் தேடுவதற்காக என்று மாறிவிட வேண்டும், என்னை உன் தங்கையாகப் பாவித்து என்னுடன் நீயும் வா. இருவருமாகப் பல நாடுகளைச் சுற்றிப் பார்த்து அவரைக் கண்டுபிடிக்கலாம்.” என்று நடனா கெஞ்சினாள். உத்தமன், அந்த யோசனையை மறுத்து எவ்வளவோ பேசிப் பார்த்தான். ஆனால் அவனுடைய வாதங்களெல்லாம், நடனாவின் விழியிலே புரண்டோடிய கண்ணீரால் கரைந்து போயின. அவனும், வீரமணியைத் தேடும் காரியத்திலே ஈடுபட இசைந்தான். ஆனந்தத்தால் நடனா, குதிரையின் முதுகைத் தட்டிக் கொடுத்தாள். “பலே! பேஷ்! சரியான சமர்த்தனடா நீ” என்று, மலர்புரியிலே, அரண்மனைக் குருவாகவும் அரசியை ஆட்டிப் படைப்பவனாகவும் இருந்து வந்த சூத்ரதாரி, தன் முன், குத்துச்சண்டை, ஈட்டி எறிதல், வேல் விடுதல், அம்பு எய்தல் முதலிய விர விளையாட்டைச் செய்து காட்டிய, வீரனைத் தட்டிக் கொடுத்தார். அந்த வீரன், முகமலர்ச்சியின்றிக் கைகளிலே படிந்திருந்த புழுதியைத் தட்டிக் கொண்டே நின்றான். இத்தகைய புகழ்ச்சியினால், பரிசுகளால், பூரிப்பு அடைய, அவன் என்ன, ஊர் சுற்றும் வஸ்தாதா? படைக்குத் தலைவன்; பரம்பரை வீரன்; எதிரிகள் கண்டு வியக்கும் ஏறு; மன்னர் மன்றத்தில் மதிப்புடன் திகழ்ந்த மணியாயிற்றே அவன். மலர்புரி எனும் சிற்றரசுக்குச் செல்லாக இருந்த ஒரு ஆரியனின், பரிசுக்கும் புகழ்ச்சியுரைக்கும் மகிழ்வானா? வீரமணியே மாறுவேடத்தில், மல்யுத்தக்காரனாக மலர்புரியில் வந்திருந்தான். அவனுடைய வீர விளையாட்டைக் கண்டு வியந்த ஆரியன், அவனைத் தனக்குப் பாதுகாவலனாக அமர்த்திக் கொள்ளத் தீர்மானித்துப் பேரம் பேசினான். “மல்லனே! இப்படி நீ ஊரூருக்குச் சுற்றிக் கிடப்பதைவிட, இந்த அரசில் ஊதியம் பெற்றுச் சமஸ்தான சேவகம் செய்யலாமே. சம்மதமா உனக்கு? “சந்தோஷம். தங்கள் சித்தம்போல் நடக்கிறேன்” “ஊதியம் என்ன வேண்டும், கேள்” “இதுவரை ஒருவரிடம் ஊதியம் பெற்ற வழக்கமேயில்லை. ஆனால் ஊர் உழைப்பதைத் தின்று வாழ்ந்ததுமில்லை.” “அதுதான் யோக்கியனின் செயல். ஆனால் இங்கு, சமஸ்தான சேவகம்,- இழிவானதல்ல.” “தங்களிடம் சேவை செய்வது தேவசேவைக்குச் சமானமன்றோ” “மெச்சினேன் உன் அறிவையும் ஆற்றலையும். இன்று முதல் நீ நம்மிடம் வேலைக்கமர்ந்துவிடு. தனி விடுதியும் ஆட்களும் தருகிறேன். செலவு பற்றிக் கவலைப்படாதே. உன் திறமையைக் கொண்டு, ஒரு சிறுபடை தயாரிக்க வேண்டும், தேவி சேனை என்ற பெயருடன்.” தேவிசேனை! தேவிக்குச் சேனை வேண்டுமாம்! தேவிக்கா, இந்தத் திருப்பிரம்மத்துக்கா? தேவி! சகலலோக ரட்சகி, ஜெகன்மாதா என்று கூறுகிறான்; அவள் கையிலேந்தியுள்ள சூலம், எத்தனையோ கொடியரின் உயிரைக் குடித்து இரத்தக்கறை படிந்தது என்று பூஜிக்கிறான். தேவியின் திருவிழியிலே தீப்பொறி கிளம்பினால் திக்கெட்டும் தீக்கிரையாகும் என்று சிந்துபாடுகிறான். என்னைச் சேனை தயாரித்துக் கொடு - தேவி சேனை - என்று கேட்கிறான். இந்த ஆரியனின் அந்தரங்க நோக்கத்தை, அரசியோ, மக்களோ அறிவதாகக் காணோம். எவ்வளவு செல்வாக்கு! மதயானைகளை அடக்கும் வீரர்கள் இவன் முன் மண்டியிடுகின்றனர். உடலில் தைத்த அம்பு ஒடிந்தாலும், எதிரியின் யானையின் தந்தத்தை ஒடிக்கும் வீரமிக்க போர் மரபினர் இவன்முன் ஆமைகளாகின்றனர். அம்பிக்கே! என்று கூவுகின்றான், ஆயிரக்கணக்கான மக்கள் இவனடி வீழ்கின்றனர். வீரத்தைப் போற்றியது கண்டுள்ளேன்; புலவரைப் புகழ்வது கேட்டுள்ளேன்;அழகைப் பூஜித்தது அறிவேன்; அரசனை அடுத்ததும் அறிந்ததே; ஆரியனை ஏன், எக்காரணம் பற்றி நமது தமிழ் மக்கள் வாழ்த்தி வணங்குகின்றனர்; பொய்யுரை கேட்டுப் பூரிக்கின்றனர்; இப்புலியோ பசுத்தோல் போர்த்துக் கிடக்கிறது. யோகம் புரிவதாகக் கூறும் அவன் மனத்திலே, எவ்வளவு சூது கொழுந்து விட்டெரிகிறது! மேலுலகைக் கண்டதாகக் கூறும் அவன் விழிகளிலே, பேராசை கூத்தாடுகிறது. ஆண்டவனிடம் அளவளாவுவதாகக் கூறும் அவன் நடை ராஜநடையாகவன்றோ மாறுகிறது. கலிங்கக்கிழவன் குகையிற் கூறியது நடந்ததில் ஆச்சரியமில்லையே. மனிதனைத் தேவனென்று கூறி அரசியை மயக்கினான்; இது ஆச்சரியமா! இல்லாத, காணாத, ஈரேழு பதினாலு லோகத்தை மக்கள் நம்பும்படிச் செய்துவிட்டானே! இனித் தன் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியோ, அல்லது அரசியை அடியோடு நீக்கிவிட்டு முடிதரிக்கவோ சூது செய்கிறான். அதற்கே தேவி சேனை திரட்டுகிறான். நன்று, நன்று, சேனை திரட்டுவேன், ஆனால் அது தேவி சேனையா அல்லது அரசியின் சேனையா என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். நடனா! உன் நினைவுக்காக என் நெஞ்சம் குமுறுகிறதேயன்றி, இந்த ஆரியனின் சூதுக்கு நான் அஞ்சவில்லை என்று வீரமணி மலர்புரியில் எண்ணிக்கொண்டு தேவிசேனைக்குத் தக்க ஆட்களைத் திரட்டிப் பயிற்சி தந்து வந்தான். நாளுக்கு நாள், இச்சேனை வளருவதையும், விதவிதமான போர்ப்பயிற்சி பெற்று வருவதையுங் கண்டு ஆரியன் களித்தான். அவனுடைய கபடத்தை நன்கறிந்த வீரமணி, மிக நன்றாக நடித்தான். மெல்ல மெல்ல, ஆரியனின் முழுநம்பிக்கைக்குப் பாத்திரமானான். அடிக்கடி அவன், மணியிடம் ஆலோசனை கேட்கவுந் தொடங்கினான். ஆனால், ஆரியனுக்குக் கடைசிச் செயலில் இறங்கத் துணிவு பிறக்கவில்லை. மரத்தின் உச்சி ஏறி, மதுரமான கனியைத் தொட்டுப் பறிக்கும் நேரத்தில், வேலியருகே சந்தடி கேட்டுத், தோட்டக்காரன் வந்து விட்டானோவென்று திடுக்கிடும் திருட்டுப்பயலின் மனோநிலையிலே ஆரியன் இருந்தான். அரசன் - மலர்புரி மன்னன் - என்ற பெயர் ஒன்றுதான் இல்லையேயொழியச் சகல அதிகாரமும் அவனிடமே இருந்தது. ஆனால், அந்தப் பெயர் மீது பேராவல் பிறந்தது. எவ்வளவு அதிகாரம் இருந்து என்ன பிரயோசனம்? அரசு, என் சொற்படி ஆடுகிறது என்றாலும் என்ன பலன்? முடி ஓர் முண்டையிடம் இருக்கிறது. ஜடைதானே எனக்கு முடி! இந்தக் காவியைக் களைந்துவிட்டு, அரச உடையுடன் நான் காட்சி தந்தால், என் இனத்தவருக்கு எவ்வளவு மதிப்புப் பிறக்கும்? ஆநிரைகள் மேய்த்துக் கொண்டு வந்த ஆரியன் மனிதரை மேய்த்திடும் மன்னனானான் என்று பெருமை பிறக்குமே! கரடுமுரடான நிலத்திலே, காயும் வெளியிலே, குன்றுகளின் இடையிலே, தத்தளித்த நமது கூட்டம், குளிர்ந்த கங்கையில் மூழ்கி, வாழ்வு வளம் பெற்றுவிட்டனர். பல மண்டலங்களிலும் இன்று புகுந்து சிறிது சிறிது செல்வாக்கும் கண்டனர். ஆனால்! அரசு என்றால், அது அலாதியான ஆனந்தமே தரும். இனத்தின் எதிர்காலத்தைச் சிறப்புடையதாக்கலாம். இந்த மலர்புரிக்கு நான் மன்னனாகிவிட்டால், எந்த மண்டலத்திலும் நம் இனத்தவருக்கு இடம் கிடைக்கும். ஏன்! சில காலம் சென்ற பிறகு இந்த இடமே ஆரிய நாடாகியும் விடலாம். ஆலய அதிகாரி அரசின் அதிகாரம் பெறுவது ஆகாத காரியமா! வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். ஓர் நல்ல சந்தர்ப்பத்தைப் பார்த்து அரசியை ஒழித்துவிட வேண்டும். முடி பிறகு நம் காலடியில் கிடக்கும். வேளை - சரியான வேளை வர வேண்டும். மணி வீரன், திறமைசாலி. ஆனால் அவனுக்குப் ‘பக்தி’ ஏற்படவில்லை. என் கட்டளைகளை நிறைவேற்றுகிறானேயன்றி அவன் கண்களிலே, அந்தத் தாசத்தன்மை தோன்றவில்லை. அது ஏற்படாதவரை, அவனை எப்படி நம்ப முடியும்? என்று ஆரியன் எண்ணினான். மலர்புரி அரசியோ, “தேவிசேனை’க்காகச் செலவுக்குப் பணந்தருவதை திருப்பணி என்றெண்ணி மகிழ்வதும், மீண்டும் தேவதரிசனம் சரசமும் கிடைக்குமா என்று ஆரியனைக் கேட்பதுமாக இருந்தாளேயன்றி, சேனை தன்னை ஒழிக்கவே தயாரிக்கப்பட்டிருப்பதை அறியாள். ஆரியனின் மதவேடம் அரசியைப் பரிபூரணமாக ஏமாற்றிவிட்டது. வேடம் எப்படி? மிகத் திறமையாக இருக்கிறது! என் பெயர், இனி என்ன தெரியுமா? குணாளன் என்று அழைக்கட்டுமா? அது அவருக்குப் பொருத்தமான பெயர். எனக்கு அது பொருந்துமா! என்னை இனித் தொண்டன் என்று அழைக்க வேண்டும். நாக்கெழாதே. இல்லையானால் நமது காரியம் நடக்காதே உத்தமா! சரி தங்கள் இஷ்டம்போல்.... பார்த்தாயா! ஆரம்பத்திலேயே தவறு. “தங்கள்” “திங்கள்” என்று பேசக்கூடாது. நண்பா! தோழா! தொண்டா! என்று அழைக்க வேண்டும். சரி தோழா! உத்தமனென்றால், உத்தமனேதான். இச்சம்பாஷனைக்குப் பிறகு, நடன ராணி ஆணுடையுடன், உத்தமனுடன் ஊரூராய்ச் சென்று தன் காதலனைக் கண்டுபிடிக்கும் பிரயாணத்தைத் துவக்கினாள். பல இடங்களிலே சுற்றியும் துப்பொன்றும் கிடைக்காது துயருற்றுக் காட்டுவழிகளிலே செல்கையில் ஓர் நாள், வணிகர் கூட்டமொன்று வழியில் செல்லக் கண்டு, அவர்கள் சென்று வந்த பல்வேறு நாட்டு வளப்பங்களைக் கூறக் கேட்டு அவர்களின் வாய்மொழியாலும், வீரமணி பற்றிய சேதி ஒன்றும் தெரியப் பெறாது, உத்தமனைக் கண்ணீர் தளும்பும் கண்களுடன் நடனா பார்த்துக் பெருமூச்செறிந்தாள். ஓரிரவு, சற்று அடர்ந்த கானகத்தைக் காலையில் கடக்கலாம் எனக் கருதி, வணிகக் கூட்டம், காட்டோரத்தில் தங்கினர். நடனாவும் உத்தமனும், அவர்களுடன் தங்கியிருக்கச் செய்தனர். மலர்புரியின் எல்லைக்காடு அது. காட்டைக் கடந்தால் மலர்புரி. காதலருக்கு இடையே அந்த அடர்ந்த காடும் ஓரிரவும் குறுக்கிட்டன. மலர்புரியிலே மல்லனாக இருந்த மணிக்கு, காட்டை அடுத்த கூடாரத்திலே தன் இருதய ஜோதிமணி இருப்பது ‘தெரிந்தால்’ காட்டு மிருகங்கள் கிலி கொண்டோடும் விதத்திலே, பாய்ந்து சென்று, “கண்ணே நடனா! கண்டேனே உன்னை மீண்டும்” என்று கூவியிருப்பான். நடனாவுக்கும், தன்நாதன், காட்டை அடுத்த மலர்புரியிலே இருப்பது தெரிந்தால், இரவு, கொடிய மிருகம், இவை அவளைத் தடுத்திருக்குமா! காட்டிலே, விதவிதமான கூச்சல், ஆனால் அவைகளில் ஒன்றாவது கலங்கும் காதலருக்குத் தூது கூறவில்லை. ஆனால் கதிரோன் ஒளிகண்டு, கூடாரத்தைச் சுருட்டிக் கொண்டு பிரயாணத்தைத் துவக்கினால், காடு தடுக்கவா போகிறது, காதலரின் சந்திப்பை! காதலருக்கிடையே இருந்த கடுங்கானகத்திலே, இரவு, எத்தனையோ விதவிதமான காதல் விளையாட்டுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. நிலவொளியினால், குதூகலமடைந்த மிருகங்கள், சில நேரம் இரைதேடுவதும் காதற்களியாட்டமாடுவதுமாக இருந்தன. மடுவில் இறங்கி நீர் பருகும் பெண் சிங்கத்தைக் கனிவுடன் நோக்கியபடி, மடுவின் கரையிலே நிற்கும் ஆண் சிங்கம், நிலக்கண்ணாடி முன் நின்று டை திருத்திக் கொள்ளும் அழகு மனைவியை, மாளிகைக் கூடத்திலே கெம்பீரமாக நின்றுக்கொண்டு பார்த்துப் பூரிக்கும் சீமான் போல் காட்சி தந்தது. மந்தியும் குரங்கும், மானினத்தின் ஜோடியும், மற்றவையும் மந்தகாசமாக விளையாடிய அவ்வேளையில், நடனராணி, ஆண் உடையில், தனது காதலனைப் பற்றிக் கவலையுடன் கண்ணுறங்காது புரண்டு கொண்டிருந்தாள். உத்தமன் சற்று அயர்ந்து தூங்கினான். தூங்கிக் கொண்டிருந்த வணிகர்களின் முகத்திலே, வியாபார இலாபத்தால் விளைந்த களை தாண்டவமாடிற்று. நடுநிசிக்கு மேலிருக்கும். தொலைவிலே குதிரைக் காலடிச் சத்தம் கேட்ட நடனா திடுக்கிட்டாள். நிமிடத்திற்கு நிமிடம் சத்தம் வளர்ந்தது. குதிரைக் காலடிச் சத்தத்துடன், பலர் ஒன்றாகக் கூடிப் பாடுகிற சத்தமும் கேட்டது. உத்தமனை எழுப்பினாள். அவன் உற்றுக் கேட்டான். பல வணிகரும் விழித்துக் கொண்டனர். சத்தத்தைக் கேட்டுத் திகைத்தனர். காட்டிலே வசிக்கும் ஏதோ ஓர் கொள்ளைக் கூட்டத்தார் வருகின்றனர் என்பது விளங்கிற்று. வணிகர் திகில் கொண்டனர். வாளை எடுத்தான் உத்தமன், வணிகரை அழைத்தான். வயது சென்றவர்கள், பொன் மூட்டைகளுடன், இப்போதே புறப்படுங்கள், வந்த வழியாக உங்களுக்கு என் நண்பன் உதவி செய்வான். நாங்கள் இங்கு நின்று கொள்ளையருடன் போரிட்டு வருகிறோம். நாங்கள் அவர்களைத் தடுத்து நிற்கும் நேரத்தில் நீங்கள், பக்கத்து ஊரைப் போய்ச் சேரலாம். பிறகு நாங்களும் வந்துவிடுகிறோம் மேலும் யோசிக்க நேரமில்லை. இந்த நேரத்திலே செய்யக் கூடியது அதுதான். சத்தம் பலமாகக் கேட்கிறது. தாமதிக்க வேண்டாம் என்று உத்தமன் அவசரப்படுத்தி, குதிரைகளைத் தயார் செய்து நிறுத்தி, நால்வரை, நடனராணியுடன் சேர்த்து வந்த வழியே வேகமாகச் செல்லுமாறு அனுப்பிவிட்டு, மற்ற வணிகர்களை புதர்களிலே பதுங்கிக் கொள்ளச் செய்து, உருவிய வாளுடன், ஓர் பெரிய மரக்கிளை மீது அமர்ந்து கொண்டு சத்தம் வரும் திக்கை நோக்கினான். வெளிச்சமும் தெரிய ஆரம்பித்தது. நூறு பேருக்கு மேல் கையில் தீவர்த்திகளுடன் குதிரைகள் மீது அமர்ந்து, “தேவிக்கு ஜே! தேவிதாசுக்கு ஜே!” என்று கோஷமிட்டுக் கொண்டு வந்தனர். முகமூடி போட்ட ஒருவன் அப்படைக்குத் தலைமை வகித்து நடத்தி வந்தான். புதர்களிலிருந்து வணிகர்கள் இக்காட்சியைக் கண்டு பயந்தனர். உத்தமன் மரக்கிளையிலேயே இருந்து கொண்டு, யோசித்தான், என்ன செய்வதென்று. வணிகர்கள் கூடாரத்தருகே வந்து சேர்ந்ததும், கொள்ளைக்கூட்டம், உள்ளே நுழைந்து பார்த்து, “பட்சிகள் பறந்துவிட்டன” என்று பதைத்துக் கூவின. முகமூடிக்காரன், “இந்த வேளையிலே எங்கே பறக்க முடியும். இங்கும் அங்கும் தேடிப் பாருங்கள்” என்று உத்தரவிட்டான். அங்ஙனம் தேடுகையிலே, வணிகர் சிலர் சிக்கினர், வாளோடு வாள் சந்தித்தது. உத்தமன் மரத்திலிருந்து குதித்து; வீரமாகப் போரிட்டான். ஆனால் வந்தவர்கள் அதிக எண்ணிக்கை யானதால், போர் முடிவு அவர்களுக்கே சாதகமாகிவிட்டது. சில வணிகர் கொல்லப்பட்டனர், சிலர் கைது செய்யப்பட்டனர். உத்தமனுக்கு உடலெங்கும் காயம். “வணிகரின் பிணம் கிடைத்துப் பயன் என்ன? பணம் எங்கே?” என்று பதைத்தக் கேட்டான், முகமூடித் தலைவன். ஒருவரும் பதில் உரைக்கவில்லை. கூடாரத்தைக் கிழித்தான், குற்றுயிராக இருந்தவர்களைக் காலால் மிதித்தான், கொடுமை பல புரிந்தான். ஆனால், ஒரு வணிகரும், வாய் திறக்கவில்லை. முகமூடித் தலைவன், “பிணங்களைக் கழுகு கொத்தட்டும், பிடிபட்டவர்களை இழுத்துக் கொண்டு புறப்படுங்கள்” என்று உத்திரவிட்டான். குதிரைப்படை மலர்புரிக்கு, கதிரோன் ஒளி கிளம்புமுன் சென்றது. தேவிகோயில் தோட்டத்திலே, வணிகர்கள் கைதிகளாக்கி நிறுத்தி வைக்கப்பட்டனர். மலர்புரியைக் கொள்ளை யிட வந்த கூட்டத்தை ஆரியன், தேவிசேனையின் ஓர் சிறு பகுதியால் எதிர்த்து, கொள்ளைக்காரரைக் கொன்றும் சிறைபிடித்தும், மலர்புரி மக்களுக்கு மகத்தான சேவை செய்தார் என்று பிரகடனம் அரசியாரால் வெளியிடப்பட்டது. ஊர்மக்கள் கொள்ளைக்காரரைக் காணத் தேவி கோயிலில் குழுமினர். கள்ளன், வணிகரையே கொள்ளைக்கூட்டம் என்று கூறி மக்களை ஏய்த்தான். தேவிசேனையிலே, கோயில் பாதுகாவலுக்கு என்று அமைக்கப்பட்டிருந்த ஒரு பிரிவினரை, ஆரியன் வீரமணியைக் கேட்காமலே அழைத்துச் சென்று, வணிகர் கூட்டத்தைத் தாக்கியதுடன், வணிகரையே கொள்ளைக் கூட்டத்தினர் என்று வாய் கூசாது கூறியது கேட்ட வீரமணி வெகுண்டான். தேவிசேனை இந்தத் திருவிளையாடலுக்குத்தானா என்று தன்னிடம் பயிற்சி பெற்ற வீரரைக் கேட்டான். தங்கள் கட்டளை என்றே ஆரியர் கூறினர், என்று அவர்கள் கூறினர். ஆரியனிடம் நேரடியாக வம்பு வளர்த்துக் கொள்ள அது சமயமல்ல என்பதறிந்த வீரமணி, தன் போகத்தை அடக்கிக் கொண்டு, ஆரியன் அபார வீரத்துடன், போரிட்டுக் கொள்ளைக் கூட்டத்தை அடக்கினதைப் பாராட்டிப் பேசினான். அரசியார் கைது செய்யப்பட்ட கொள்ளைக்கூட்டத்தைப் பார்வையிட வந்தபோது வீரமணியும் உடனிருந்தான். ஆரியன் மேடைமீது நின்றுக் கொண்டிருந்தான். எதிரிலே வரிசையாகக் கைதிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அரசி, வீரமணியுடன், அவர்களைப் பார்வையிட்டுக் கொண்டு வருகையில் உத்தமன், வீரமணியைக் கண்டான், ஆச்சரியத்தால், வாய் பிளந்து நின்றான். வீரமணிக்கும் அதேநிலை. இருவரும் முகமும் ஓர் விநாடியில் மாறிவிட்டது. அரசி இதைக் கண்டு ஆச்சரியப் பட்டு, “மணி வீரரே! ஏன், இக்கொள்ளை கூட்டத்தாரிலே யாரோ உமக்குத் தெரிந்திருக்கிறதுபோல் தோன்றுகிறதே. இவனைக் கண்டதும் உமது முகம் மாறிவிட்டது. அவன் முகமும் மாறிற்றே. இதென்ன விந்தை?” என்று கேட்கவே, வீரமணி சமர்த்தாக, “தேவி! உண்மையில் இவனைக் கண்டதும், ஒருவனுடைய முகம் என் நினைவிற்கு வந்தது. என் தாய், விதவையாக இருக்கையிலே, ஓர் விபத்து நேரிட்டது. விசித்திரமான அந்நிகழ்ச்சி இந்த விநாடி என் மனதிலே அலைபோல் மோதிற்று. அது ஒரு பெருங்கதை” என்று கூறி பெருமூச்செறிந்தான். அரசி, அவ்விடத்தை விட்டு நடந்துகொண்டே, “கதை பெரிதானால் என்ன? சுருக்கமாகக் கூறு” என்று கட்டளையிட, வீரமணி, “என் தாய், தேவப் பிரசாதத்தால் விதவைக் கோலத்திலேயே ஓர் குழந்தையை ஈன்றாள்” என்றான். அரசியின் முகம் மாறிவிட்டது. பேச்சிலே நடுக்க மேற்பட்டது. வீரமணி அதனைத் தெரிந்து கொண்டு மேலும் ஆரம்பித்தான்; “அழகான ஓர் ஆண் குழந்தை, ஆனால், பிறந்ததும் அதனை ஊருக்கஞ்சி வேறு யாரிடமோ கொடுத்துவிட்டார்கள். அந்த மகனின் முகக்குறிகளை, என்னிடம் கூறினார்கள். இன்று நான் கண்ட அக்கொள்ளைக்காரனின் முகம், என் தாய் சொன்ன குறிகளுடன் இருக்கக்கண்டே திகைத்தேன்” என்று கூறி முடித்தான். அரசியால் அதற்குமேல் தன் துக்கத்தை அடக்க முடியவில்லை என்பதை வீரமணி உணர்ந்தான். “தான் பெற்ற குழந்தையைத் தத்தளிக்க விட்டு, தாய் தர்பார் நடத்த முடியுமா தேவி” என்று சொன்னான். “யாரைக் கேட்கிறாய் அக்கேள்வி” என்று அரசிக் கேட்டாள். தங்களையும் கேட்கிறேன், தங்கள் மகளின்...” என்று மெல்லக் கூறினான். அரசி முகத்தைக் கைகளால் மூடினாள். “அழவேண்டாம் அரசியாரே! நான் தங்கள் வரலாறு தெரிந்தவன். அவர் மூலமாகவே கேள்விப்பட்டேன், இங்கு நான் வேலைக்கு அமர்ந்ததோ, தங்களின் இழந்த செல்வத்தைக் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன்தான்” என்று ஆறுதல் கூறினான். அரசியும் வீரமணியும் பேசிக் கொண்டே தேவியின் கோவிலுக்குள் போனதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆரியன் அவசர அவசரமாகக் கைதிகளைச் சிறைச்சாலைக்கு அனுப்ப உத்திரவு பிறப்பித்துவிட்டு, கோயிலுக்குள் புகுந்தான். அவன் வருவதை அறிந்த வீரமணி ‘ஆரியன்’ என்று மெல்லச் சொன்னான். அரசியும் சரேலென்று எழுந்து, கோயில் மூலக்கிரஹம் சென்று, தேவியைக் கும்பிட்டு நின்றாள். முத்து முத்தாக நீர் கண்களிலிருந்து வெளிப்பட்டது. “என்ன உருக்கம்! எவ்வளவு பக்தி” என்று வீரமணி, ஆரியனிடம் கூறி வியந்தான். “எல்லாம் அவள் சக்தி” என்று கூறிக்கொண்டே தேவி சிலையைக் காட்டினான் ஆரியன். மலர்புரியைக் கொள்ளையிட வந்த கூட்டத்தினரிலே பெரும்பாலோர் பிடிபட்டனர். சிலர் தப்பிச் சென்றனர். அவர்களைத் தேடிப்பிடித்து தூக்கிலிட வேண்டும் என்று மலர்புரி அரசியார் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஆரியன் கூறினான். அரசி ஓலை தயாரித்தால் ஒரு நொடியில் கையொப்பமிடுகிறேன் என்று பதில் உரைத்திட, உளம் மகிழ்ந்த ஆரியன், வீரமணியை உடனழைத்துக் கொண்டு தேவி கோயிலைவிட்டு வெளியே சென்றான். மலர்புரி அரசின் உத்தரவு அண்டை அயல்நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, அங்குள்ள அரசியலாரும், எச்சரிக்கையாக இருக்குமாறு ஆரியன் தூண்டிவிட்டான்.          பகுதி - 9   இருந்த ஓர் வாலிப வணிகனும் என்னவானார்கள் என்று கேட்டான். ஆரியன் சிரித்துக்கொண்டே ‘எனது உத்தரவு அவர்களைத் தேடி அங்கும் சென்றதால், அவர்கள் அங்கும் தங்காது எங்கோ சென்றுவிட்டனர்’ என்று கூறினான். உத்தமன் சோகித்தான். “சோகியாதே! சிறையிலே உழல வேண்டிய உன்னை என் மாளிகையிலே உபசரிக்கிறேன். காரணம் என்ன தெரியுமா? உன் முகத்தைக் கண்டதும் எனக்கு உன்னிடம் பிரேமை ஏற்பட்டு விட்டது. உன் முகக்குறியிலிருந்து நீ வெகுவிரைவில், உன்னதமான உயரிய பதவியில் அமரப் போகிறாய் என்று தெரிகிறது. அதற்காகவே நான் உன்னிடம் அக்கறை கொண்டேன்” என்று ஆரியன் தனது காரியவாதிப் பேச்சை துவக்கினான். வணிகரைக் கொள்ளையர் என்று பழி சுமத்திய பாதகன், சிறையிலிருந்த தன்னைக் கொண்டு வந்து வெளியே விருந்தளித்து, வினயமாகவும் அன்புடனும் பேசுவது சூதன்றி வேறு யாதாக இருக்க முடியுமென்று உத்தமன் தெரிந்து கொள்ளாமலில்லை. ஆனால் பசப்பும் பாதகனின் அந்தரங்க நோக்கந்தான் என்னவென்பதைக் கண்டறிய வேண்டுமென்று, ஆரியன்மீது எழும்பிய கோபத்தை அடக்கிக் கொண்டு “ஐயா! என்மீது கருணை காட்டுவது கண்டு என் மனம் குளிர்கிறது. என்னால் ஏதேனும் ஆக வேண்டுமென்றால் கூறும்” என்றான். “பலசாலி மட்டுமல்ல நீ யுக்திசாலியுங்கூட! இப்படிப்பட்டவர்களுக்கே யோக ஜாதகம் இருக்கிறதென்று மேலோர் கூறுவர். என் இஷ்டப்படி நடப்பவர்களை நான் எத்தனை பெரிய அந்தஸ்திலும் வைப்பது வழக்கம். நாடோடியாக என்னை வந்து அடுத்த மணிவீரன், இன்று பெரும் படைத்தலைவனானான்” என்று ஆரியன் தன் பெருந்தன்மைக்கு ஆதாரம் காட்டினான். வீரமணியைப் பற்றிய விஷயத்தைத் தெரிந்துகொள்ள விரும்பிய உத்தமன் “மணிவீரன் யார்? எங்கிருந்து இங்கு வந்தான்” என்று கேட்க, ஆரியன் “அவனுடைய பூர்வோத்திரம் நானறியேன், மல்லனாக இங்கு வந்தான், என்னிடம் வேலைக்கமர்ந்தான், இன்று மேனிலையில் இருக்கிறான். அதுபோவே நீயும் என் சொற்கேட்டால் சுகம் பெறுவாய்” என்றான். “உத்தமன் தடை இல்லை! தயாநிதியாகக் காணப்படும் உம்மிடம் நான் சேவை செய்வதே யுக்தம்; கூறும் கேட்கிறேன்” என்றான். உத்தமா ஊருக்கு அரசி உண்டு. மகா பொல்லாதவள்; காமாந்தகாரம் மிக்கவள்; கர்வம் பிடித்தவள்; வணிகரான உங்களைக்கூடக் கொள்ளையர் என்று கூறுமாறு என்னைப் பணித்தவளும் அப்பாதகியே. பரம்பரையாக அவள் குலம் இந்நாட்டை ஆண்டு வந்த காரணத்துக்காக அவள் ஆள்கிறாள் என்று கூறிப் பெருமூச்செறிந்தான். உத்தமன் சினத்தை உள்ளடக்கிக் கொண்டு, “அவ்வளவு கொடியவளை ஏன் மக்கள் இன்னமும் அரசியாகக் கொண்டிருக்கின்றனர். விரட்டக் கூடாதோ வெளியே” என்று கேட்டான். ‘வீரமிக்கவனே! உன் போல் ஆட்கள் இங்கு இல்லை. ஒருவேளைச் சோற்றுக்காக, எதையும் செய்வர், இங்குள்ள ஊமைகள். நம் போன்றவர்கள் ஏதேனும் செய்தால்தான் பயன் உண்டு. நானும், ஏதேதோ யோசித்துக் கடைசியில் ஓர் முடிவுக்கு வந்தேன், அரசி கொல்லப்பட வேண்டும். அதுவும் உன்னால்!’ என்றான். உத்தமன் திடுக்கிட்டான். அதைப் பார்த்த ஆரியன், பதறாதே! பக்குவமான திட்டம் இருக்கிறது. அரசி, தேவி பூஜைக்காகக் கோயில் வருவாள். தேவியின் சிலைக்குள் உன்னைப் புகுத்தி வைக்கிறேன். நான், “தேவி, உன்பக்தையை உன் பாதத்தில் சேர்த்துக்கொள்” என்று கூறுவேன். உடனே நீ சிலையின் கரத்தில் உன் கரத்தை நுழைத்து ஓங்கி அவள் மண்டையில் அடிக்க வேண்டும்” என்று கூறினான். ஓர் நாட்டை ஆள்பவளைக் கோயிலிலே கொல்வதற்கு இவ்வளவு சூதான திட்டமிட்டு, அதைக் கூசாது குளறாது கூறியது கேட்ட உத்தமன், திடுக்கிட்டான். ஆனால் இச்செயலை நாம் செய்ய மறுத்தால், வேறு யாரையாவது கொண்டு செய்துவிடுவான். எனவே, நாமே இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து, ஆரியனை, நோக்கி, “சரி” என்று கூறினான். “சபாஷ்!” என்று கூறிக்கொண்டே, ஆரியன் உத்தமனின் முதுகைத் தட்டிக் கொடுத்தான். “தேவியின் திருக்கூத்தை என்னென்பது; நேற்றிரவு, என் சொப்பனத்திலே தேவி பிரசன்னமாகி, சில கட்டளைகள் பிறப்பித்தாள்” என்று ஆரியன், படைத்தலைவன் கரிமுகனிடம் கூறினான். கரிமுகன், மலர்புரிப் படைகளுக்குத் தலைவன். அரசி ஆரியன் சொற்கேட்டு ஆடுவது கண்டு மனம் புழுங்கி, அரச காரியத்தை வெறுத்துக் கிடந்தான். மலர்புரிப் படைகளுக்கோ, கரிமுகனிடம் அபாரமான அன்பு. கரிமுகனிடம் கட்டளைகளைப் படையினர் மிகக் களிப்போடு செய்வது வழக்கம். கரிமுகன் மலர்புரி அரச குடும்பத்திடம் விசேஷ அக்கரை கொண்டவன். மலர்புரியின் நிலைமையை மேன்மையுறச் செய்ய வேண்டும் என்பதிலே கரிமுகனுக்கு அளவுகடந்த பிரியம். சுற்றுப்புறங்களிலே இருக்கும் காடுகளை நாடுகளாக்க வேண்டும். மலை ஜாதியினரை அடக்கி, அந்த மண்டிலங்களை மலர்புரியில் இணைக்க வேண்டும், மூவேந்தரின் மண்டிலங்கள் போல் மலர்புரியும் திகழ வேண்டும் என்பது அவனுடைய எண்ணம். அரசியோ ஆரியனின் மொழிகேட்டுக் கெட்டதால், மலர்புரியின் முன்னேற்றத்திலே அக்கறைகொண்ட கரிமுகனின் திட்டங்களெதையும் ஆதரிக்கவில்லை. கரிமுகன், படையைப் பார்ப்பதும், பெருமூச்செறிவதும், பாசறை செல்வதும், தோள் துடைத்துக் கொள்வதுமாக இருந்து வந்தான். கரிமுகனை அடக்கி வைத்துவிட்டோம். இனி அவனுடைய சக்தி சரிந்துவிடும் என்று ஆரியன் தீர்மானித்துவிட்டான். கரிமுகன், செல்வாக்குடனிருந்தால், ஆரியனுக்கு எப்போதும் ஆபத்துதான். படைத்தலைவன் கரிமுகன் அடக்கப்பட்டாலும், அவனிடம் அன்பு பூண்ட படை எந்த நேரத்திலும், கரிமுகன் சொற்கேட்டு தன்மேல் பாயும் என்று அஞ்சிய ஆரியன், வீரமணி கிடைத்ததும், தேவிசேனை தயாரித்துக் கொண்டான். சமயம் நேரிட்டால் “தேவிசேனை”யைக் கொண்டு கரிமுகனின் படையை ஒழிக்க வேண்டுமென்று கருதினான். ஆரியனின் ஆவல் அவனை ஏக காலத்தில் பல திட்டங்களைத் தயாரிக்கச் செய்தது. கரிமுகனை அடக்க வீரமணி வீரமணிக்குத் தெரியாமலே, அரசியைக் கொல்ல உத்தமன்; உத்தமனுக்குத் தெரியாமல்தான், கரிமுகனிடமே ஆரியன் சென்றான். மற்றோர் சதிச்செயல் புரிய. மலர்புரி அரசி மாண்டால் மக்கள் கரிமுகனிடம் பற்றுக்கொண்டு அவனை மன்னனாக்கிட எண்ணினால், என்ன செய்வது என்று யோசித்த ஆரியன், அரசி இருக்கும்போதே, கரிமுகன் அரசாளப் பேராசை கொண்டு சூது செய்யத் துணிந்தான் என்ற நிலையை உண்டாக்கி விட்டால், அரசி கொல்லப்பட்ட பிறகு, தனக்கு ஒரு எதிரியும் இல்லாது செய்துவிடலாம் என்று ஆரியன் திட்டமிட்டான். இந்தச் சூதான எண்ணத்துடன், ஆரியன் வந்ததைக் கரிமுகன் தெரிந்துக்கொள்ளாது, இத்தனை நாட்களாகத் தன்னை உதாசீனம் செய்து கொண்டிருந்த ஆரியன், தானாகத் தன்னைத் தேடிக் கொண்டு வந்திருப்பதால் பூரித்தான். அந்திவேளை! ஆற்றோரம்! அரச மரத்தடியிலே, இருவரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். செவ்வானத்தின் அழகு போலக் கரிமுகன் முகத்திலே சந்தோஷம் தவழ்ந்தது. வர இருக்கும் இருள்போல, ஆரியனின் நெஞ்சிலே, சூது கப்பிக் கொண்டிருந்தது. “தேவியின் கட்டளை என்றால் விளங்கவில்லையே” என்று கரிமுகன் ஆரியனைக் கேட்டான். “கரிமுகா! உனக்கு என்னிடம் பிரியம் கிடையாது. எனக்கும் உன்னிடம் அப்படித்தான், என்மொழி கேட்டு அரசி நடப்பது உனக்குப் பிடிக்கவில்லை. என் மொழி வழி செல்ல நீ இசையாததால், எனக்கு உன்னிடம் பற்றுக்கிடையாது. ஆகவே இப்போது நான் உன்னிடம் வந்தேன் என்றால், அது என் இஷ்டத்தினால் அல்ல என்பதைத் தெரிந்துகொள். தேவி கட்டளையிட்டதால் நான் இங்கு வந்தேன்” என்று ஆரியன் உரைத்திடக் கரிமுகன், திடுக்கிட்டுப் போய், தேவியின் கட்டளையா? தேவிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? தேவி, உன் ஆயுதம்! மலர்புரிப் படைத்தலைவனை மடக்கி வைத்த இயந்திரம். ஆண்மையை மலர்புரி இழந்திடச் செய்த பொறி என்று ஆத்திரமாகக் கூறினான். ஆரியன் புன்னகையுடன், “உன் எண்ணம் இது என்பது எனக்குத் தெரியும். தேவியும் அறிந்திருப்பாள் என்பதை நான் கூற வேண்டுமா? அவள் சர்வலோக ரட்சகி. எவனொருவன் தன்னை நிந்திக்கிறானோ, எவன் தன்னை அலட்சியப்படுத்துகிறானோ அவனையே அணைத்து ஆதரித்து, பின்னர் தன் பெருமையை அவனும் உணரும்படி செய்யும் பெரு நோக்கமுடையாள். தன்னைக் கடிக்கும் குழந்தையின் கன்னத்தை முத்தமிட்டுக் கொஞ்சும் தாய்போல், அவளை அவமதித்து வரும் உன்னைத் தேவி ஆதரிக்க முன்வந்தாள். அவள் பெருமையை அறியாத நீயும் இனி அவள் பெருமையை உணரப் போகிறாய், அவளடி தொழப் போகிறாய், தேவி பக்தனாகப் போகிறாய் என்பது சத்தியம்” என்று ஆவேசங் கொண்டவன்போல் ஆரியன் பேசினான். கரிமுகன் ஆச்சரியப்பட்டான். “நான் நிந்திக்கும் ஆள் என்பதற்காக என்னை அந்தத் தேவி ஆதரிக்கிறாள் என்று கூறுகிறீரே, இது விந்தையல்லவா!” என்று கேட்டான். “அன்னையின் போக்கை நீ என்ன அறிவாய்? அவள் சட்டம், ஊனக்கண் படைத்த உனக்கு என்ன தெரியும்! அதை உணர, ஞானக்கண் வேண்டும். கரிமுகா! நமது சுகதுக்கங்கள் அவளுடைய லீலைகள். இதோ தெரியும் செவ்வானம் அவளுடைய ஆடை! சூரிய சந்திரர் அவளுடைய விழிகள்! அண்டசராசரம் அவள் உடல்! அவனியிலுள்ள உயிர்களெல்லாம், அன்னையின் மூச்சு. அவளைக் கட்டுப்படுத்த அரச ஆக்கினை பயன்படுமா? உங்கள் உடுக்கை ஒலியின் முன் உன் படைஒலி, சிங்கக் கர்ஜனைமுன், நரியின் ஊளை போலாகும். பொன்னால் செய்யப்பட்ட சிங்காதனமேறும் மன்னர்களையே நீ அறிவாய். அவர்கள் முன் மண்டியிட்டுப் பழக்கப்பட்டவன் நீ. மாகாளியின் ஆசனம், எது தெரியுமோ! மக்களின் மனம், அவள் ஆசனம். அவள் சினம், அரண்மனைகளைச் சுடுகாடாக்கும்; சுடுகாடுகளையும் என் அம்மை விரும்பினால் சொர்ணபுரியாக்கிக் காட்டுவாள். அவள் பெருமை சொல்லுந்தரத்தல்ல” என்று மேலும் பேசினான் ஆரியமுனி. கரிமுகன், “போதுமய்யா உமது போதனை. உன் தேவியின் திருக்கலியான குணங்கிடக்கட்டும். இப்போது என்னிடம் வந்த காரணம் யாது, அதைக்கூறு. உன் பூஜாரிப் புலம்பலை ஆலயத்திலே நடத்து” என்று கூறினான்.  ஆரியன் கோபங்கொள்ளாது, “விடியுமுன் இருட்டு அதிகரிக்கும், அதுபோலவே அன்னையின் அருள் ஒளியைக் காணப்போகும் நீ இப்போது அஞ்ஞான அந்தகாரத்திலே கிடக்கிறாய். ஆனால் நீ பாக்யசாலி. இப்பிறவியிலே நீ இத்தகைய தேவநிந்தனை செய்கிறாயே தவிர, முற்பிறப்பிலே புண்யவானாக இருந்ததால், இப்போது உனக்குத் தேவிப் பிரசாதம் கிடைக்கிறது” என்று ஆரியன் கூறினான். “பிரசாதமா? என்ன அது? தேன் கலந்த பழமா?” “அதைவிடச் சுவையுள்ளது. மரத்தில் குலுங்காத கனி, கூண்டில் தங்காத தேனில் கலக்கப்பட்டு அன்னையின் உள்ளங்கை எனும் குவளையிலிடப்பட்டு, உனக்கு அன்புடன் ஊட்டப்படுகிறது.” “அழகான பேச்சு, ஆனால் பொருளில்லை” “புரியாதது, பொருளின் குற்றமல்ல” “போதும் பூஜாரியே! காரியம் கூறும், தேவி உம்மை என்னிடம் அனுப்பிய காரணம் என்ன?” “கரிமுகனே! கேள்! தேவி, உன்னை மலர்புரி மன்னனாகும்படி கட்டளையிடுகிறாள். அதைக் கூறுமாறு என்னை இங்கு அனுப்பினாள்.” இப்போது கேட்ட கரிமுகன், ஆச்சரியத்தால் வாய் பிளந்து நின்றான். அவனது அந்நிலையை பயன்படுத்திக் கொள்ள ஆரியன், ஆவேசமாக மேலும் சில மொழி புகன்றான். ஆரியனின் பேச்சுக் கெட்டு, கரிமுகன் தன்னை மறந்து நின்றான். செவ்வானம், மாறி இருள் சூழ்ந்த கொண்டது. ஆரியனின் முகத்திலே வெற்றி தாண்டவமாடுவது கரிமுகனுக்குத் தெரியவில்லை. “தேவி! உன்னை மன்னனாகும்படி கட்டளையிட்டு விட்டாள். நீ உன் படையுடன், அரண்மனையை முற்றுகையிட வேண்டும், அரசியிடம், தேவியின் கட்டளையைக் கூற வேண்டும். அரசி முடிதுறக்க இசைவாள், ஆலயத்திலே போய்ச் சேருவாள். நீ மன்னனாக வேண்டும். இதை நீ மறுத்தால், மாபாதகம் உன்னைத் தீண்டும். நான் ஏதோ கூறினேன் என்று எண்ணாதே. நீ அரசனானவுடன், நான் ஆரண்யம் சென்றுவிட வேண்டுமாம், தேவியின் உத்திரவு அது” என்று ஆரியன் கூறியது கேட்டு என்னால், நம்ப முடியவில்லை, எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே என்று தழுதழுத்த குரலில் கரிமுகன் கேட்டான், ஆனால் அவன் மனதிலேயோ ஆசை படமெடுத் தாட தொடங்கிற்று. படைகள் அரண்மனைச் சூழ்ந்து கொண்டு ஆர்ப்பரிப்பதும், அரசி, முடியை எடுத்தெறிவதும், பிறகு தர்பார் கூடித் தனக்கு முடிசூட்டுவதுமான காட்சிகள் அவன் மனக்கண் முன் தோன்றின. கரிமுகன், ஆசை கொண்டானென்றால், அரச போகத்திலே புரள வேண்டும் என்ற சுயநலத்தால் அல்ல. தான் ஆளத் தொடங்கினால், படைபலத்தைக் கொண்டு, மலர்புரியின் கீர்த்தியை மேலோங்கச் செய்யலாம் என்ற நோக்கத்தாலேயே, அவனுக்கு அரச பீடத்தின் மீது ஆவல் உதித்தது. “தேவி கட்டளையிட்டாளோ இல்லையோ, அது ஒருபுறம் கிடக்கட்டும், ஆரியனிடம் சிக்கி நாட்டை முடமாக்கிய மலர்புரி அரசியிடமிருந்து நாட்டை மீட்டிட நாம் ஏன் நமது சக்தியை பயன்படுத்தக் கூடாது?” என்று கரிமுகன் யோசித்தான். விநாடியிலே காட்டுத்தீ போல அவனுடைய ஆவல் மூண்டுவிட்டது. ஆரியனை நோக்கினான்: “சரி! நான் படைகளுடன் அரண்மனையை முற்றுகையிட்டால், நீ புதியதாகச் சிருஷ்டித்துள்ள தேவிசேனை என் படையுடன் போரிடுமா?” என்று கேட்டான். “தேவியின் கட்டளையை நிறைவேற்றவே தேவிசேனை” என்று மறுமொழி புகன்றான் ஆரியன். “மக்கள் புரட்சி செய்தால்...” என்று கரிமுகன் இழுத்தான். “ஆம்! அது படைகளின் வலிமையைவிட ஆபத்து. பெரும் புயல் அல்லவா மக்களின் கோபம்? அதற்காகத்தான் தேவி முதலிலே உன்னைத் திருக்கோயிலை வலம்வந்து, திருநீறணிந்து, அவளுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பட்டுப் பீதாம்பரங்களை நீ அணிந்து, பிறகே அரண்மனைக்குச் செல்ல வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறாள். நீ தேவியிடம் அருள் பெற்று இக்காரியத்தைச் செய்கிறாய் என்பது தெரிந்தால்தான் மக்கள் புரட்சி செய்யாதிருப்பர். உனக்குத் தேவியிடம் பக்தி பிறக்கும்போது பிறக்கட்டும், கனியக் காலம் பிறக்கும். இப்போது யுக்திக்காகக் கவனித்தாலும், நான் கூறினதே சரி என்று உனக்குத் தோன்றும்” என்று ஆரியன் மொழிந்தான். “உண்மைதான்! ஊர்மக்கள், என் உண்மையான நோக்கத்தைத் தெரிந்துகொள்ளாமல் உறுமி, எதிர்த்து என் முயற்சியைக் கெடுக்கவும் முற்படுவர். ஆரிய முனியே! உன் யோசனையே சரி! அதன்படியே செய்வேன். ஆனால் ஒன்று, இக்காரியம் நடைபெறுவதற்கு மணிவீரன் தடையாக இருப்பான்! அவனை எங்காவது அனுப்பினால் நல்லது” என்று கரிமுகன் கூறினான். வீரமணி இன்றிரவு தேவி சேனையுடன் மலர்புரிக்குத் தெற்கே உள்ள மலைக்காட்டிலே சந்தனக்கட்டைகளைச் சேமித்து வைத்துள்ள மலைவகுப்பினரை அடக்கி, சந்தனக்கட்டையைத் தேவிக்குக் கொண்டு வரப் புறப்படுகிறான். இங்கு அவன் வரும்போது சந்தன மணத்துடன் நுழைவான். நீ அரச மணத்துடன் அவனை வரவேற்று உபசரிப்பாய், இதுவும் தேவி கட்டளைதான்!” என்றான் ஆரியன். “நல்ல தேவி! அரசியல் தந்திரங்கள் அவ்வளவும் அறிந்து தேவி திட்டமிடுகிறாளே” என்று கரிமுகன் கேலி செய்தான். “அன்னையின் தந்திரத்தை நீ என்ன அறிவாய்!” என்று ஆரியன் பதிலுரைத்தான். அப்போது அவன் மனதிலே, “மடையன்! ஆரிய ஆதிக்கத்தை அடக்கி அரசாள வேண்டுமென்று எண்ணுகிறான். அதற்கு ஆரியனொருவன் கூறும் யோசனையைத் தழுவிக் கொள்கிறான். சிலந்திக் கூண்டை நெருங்கும் பூச்சி இவன்” என்று எண்ணினான். அந்த எண்ணம் அவன் முகத்திலே ஓர் ஜொலிப்பைத் தந்தது. கரிமுகன் புரட்சி முதலிலும், பிறகே அரசியின் கொலையும் நடத்தப்பட வேண்டுமென்று ஆரியன் திட்டமிட்டு, உத்தமனிடம், “தக்க சமயம் வந்ததும் தெரிவிக்கிறேன், பொறுத்திரு” என்று கூறிவிட்டுக் கரிமுகனை உடனே அரசிக்கு எதிரிடையாகப் புரட்சி செய்யும்படி தூண்டினான். எந்த அரசில் சேவகம் செய்து உணவும், உடையும், விடுதியும், புகழும், செல்வாக்கும் பெற்றோமோ, அதே அரசுக்கே ஊனம் விளைவிப்பது அறமாகுமா, என்று கரிமுகனின் மனம் கலங்கிற்று. “அரசாள வேண்டுமென்ற பேராசை பிடித்தலைந்தே கரிமுகன் இக்காரியம் செய்கிறான்” என்று அரசி எண்ணிடின் என்ன செய்வது! மக்களும் அதுபோலக் கருதினால், ஆபத்தாகவன்றோ முடியும் என்றும் அஞ்சினான். மக்களை மயக்க, தேவி பக்தனாக வேடம் போடுவதே சிறந்த வழி என்று அவனுக்குத் தோன்றிற்று. ஆனால், புரட்சி செய்வது சரியா, தவறா என்ற சந்தேகம் மட்டும் அவன் மனத்தைக் குடைந்தபடி இருந்தது. அதிலும் முன் அறிவிப்பின்றி, திடீரெனப் பாய்ந்து தாக்குவதும், எந்தப் படை தனக்குப் பாதுகாப்பளிக்கும் என்று அரசி கருதியிருந்து வருகிறாளோ, அதே படையையே துரோகச் செயலுக்கு உபயோகித்துக் கொள்வதும் ஒழுங்காகுமா, தமிழகம் ஒப்புமா என்பது வேறு அவன் மனத்தைக் குடைந்தது. கரிமுகனுக்கு உண்மையில் அரச போகத்திலே மோகம் இருப்பின் ஆரியன் கூறினதும் “ஆம்” என்றுரைத்து, அரசிமீது பாய்ந்திருப்பான். ஆனால் அவன் உள்ளத்தில் அத்தகைய கள்ளச் சிந்தை இல்லை. அரசியின் கள்ளங்கபடமற்ற முகமும், கருணை ததும்பும் கண்களும் கரிமுகனின் நினைவிற்கு வரவே அவனது மனம் பதறிற்று. மனத்திற்குச் சாந்தியும் உறுதியும் பிறந்தாலன்றித் தன்னால் ஏதும் செய்ய முடியாதென்று தோன்றவே, தனக்கு ஆசானாக இருந்த பெரியார் ஒருவரிடம் சென்று, விஷயத்தை வெளிப்படையாகக் கூறாமல், மறைமுகமாகப் பேசலானான். “மலர்புரி அரசு நிலைமை தங்கட்குத் திருப்தி தருகிறதா? தமிழ் வீரமும், நெறியும், அறமும் மலர்புரியிலே மணக்கிறதா?” “நல்ல கேள்வி கேட்டாயப்பா கரிமுகா! பாலில் விஷங் கலந்த பிறகு, தங்கக் கோப்பையிலே உள்ள தீஞ்சுவைப் பால் எப்படி இருக்கும் என்று தர்க்கித்துக் கொண்டு இருப்பார்களா! ஆரியனிடம் பிடியைக் கொடுத்துவிட்ட பிறகு மலர்புரியிலே தமிழ் அரசு ஏது?” “நம்மை ஆள்வது தமிழ் மங்கை தானே! ஆரியன் ஏவலனாகத்தானே இருக்கிறான்” “ஏவலன், காவலர் மகளைக் கேவலம் பதுமை போல ஆட்டி வைக்கிறானே தம்பீ! ஏதுமறியாதான் போல் பேசுகிறாயே. ஆள்வது தமிழ் மங்கை என்றாள். சிங்கத்தின் முதுகில் சிறுநரி சவாரி செய்வதுபோல, மலர்புரி அரசின் முதுகில், முனிவன் அமர்ந்திருக்கிறான். ஆரியனே ஆண்டால் நான் அஞ்சமாட்டேன். அந்த ஓர் காட்சியே தமிழர் கண்களைத் திறந்துவிடும். அரசனாக அவன் அதிக நாட்கள் நிலைக்க முடியாது. இப்போது அரசி என்று ஓர் தமிழ் மங்கை இருப்பது, ஆரியனின் காரியத்துக்குத் தக்க திரையாகவன்றோ இருக்கிறது” “நோய் தீர வழி இல்லையா?” “யார் முயன்றார்கள் இதுவரையில்? என் முதுமை என்னைத் தடுக்கிறது. மணிவீரனின் வறுமை அவனுக்குக் குறுக்கே நிற்கிறது. உன் பதவி உன்னை மடக்குகிறது. ஊர் மக்களோ உண்மையை உணரவில்லை. ஆரியக் கற்பனை அவர்களின் உணர்ச்சியின் ஊற்றைக் கெடுக்கிறது.” “உண்மை! ஆனால், இந்த நிலையை மாற்ற நாம் என்ன செய்ய முடியும்? அரசியோ யார் கூற்றையும் கேட்பதில்லை. அரசிக்கு எதிராகக் காரியம் செய்வதோ கொடிய குற்றமாகும்.” “எந்த நீதிப்படி குற்றம்?” “ஏன்? அரச நீதிப்படி குற்றந்தானே?” “மனிதநீதி, அரசநீதியை விடப் பெரிது. அதுதான் அரசநீதிகளை அவ்வப்போது மாற்றியும் திருத்தியும் வருவது” “வெளிப்படையாக எனக்கு உத்தரவு இடுங்கள். நான் வேதனைப்பட்டு இங்கு வந்தேன்.” “கரிமுகா! உனக்கு உத்தரவு தர உன் உள்ளம் ஒன்றே உரிமை பெற்றது. நான், உன் சிந்தனைக்கு வேண்டுமானால் சில தருவேன். உத்தரவு கிடையாது.” “என்ன கூறப் போகிறீர்கள்?” “சங்க நூற்களைப் படித்துக் காட்டப் போகிறேன். நீயும் பாடங்கேட்டுப் பல நாட்களாகிவிட்டன.” “நாட்டு நிலையை எண்ணி நொந்திடும் நேரத்திலே ஏட்டின் கவியைக் காட்டினால்...” “பாடமும் உண்டு, பலனும் உண்டு.” கரிமுகனும், அவன் ஆசானும் இதுபோல் உரையாடிய பிறகு, முதியவர் சங்க நூற்சுவடிகளைக் கொண்டு வந்து படித்துப் பொருள் கூறலானார். தமிழரின் வீரர், போர்த்திறம், மக்கள் மாண்பு ஆகியவைகளை விளக்கும் கவிதைகளைக் கனிரசம் எனத்தகும் பொருள் அழகுடன் எடுத்துக் கூறினார். கரிமுகன் சங்கக் கவிகளின் சுவையை ரசித்தான் என்றபோதிலும், அவன் உள்ளக் கொதிப்பு அடங்கவில்லை.                                          பகுதி - 10   முதியவர் புன்னகையுடன், “நமது புலவர் பெருமக்களின் சொல், நமக்கு வரும் இடையூறுகளைப் போக்கும். கேள் கரிமுகா, கலித்தொகையிலே ஓரிடத்திலே, தலைவனைப் பிரிந்த தலைவி, தனியாக இருக்கிறாள்; முகத்திலே வாட்டம் கப்பிக் கொண்டிருக்கிறது. தலைவனோ, பொருள் ஈட்டச் சென்றவன் வந்தபாடில்லை. தலைவியோ பிரிவினால் பெருந்துயர் உறுகிறாள். அதனை அவள் பேசிக் கொண்டா இருந்தாள்? பேசுவானேன், அவள் முகமே அகத்திலே ஆழ்ந்து பதிந்திருந்த கவலையை எடுத்துக்காட்டிற்று. நல்ல சித்திரம், சிதைந்தால் என்னென்போம்? பாழ்பட்டது என்று கூறோமா! அந்தத் தலைவியின் முகத்தைக் கவி, “பாழ்பட்ட முகம்” என்றுதான் கூறுகிறார். தலைவனுடன் கூடி வாழ்வதே வாழ்வு, தலைவியின் முகம், அந்த வாழ்க்கை இன்பம் இருந்தால் மட்டுமே பொலிவுற்று விளங்கும். காதுவரை வளர்ந்த மான்விழி கொண்ட மங்கையாக இருக்கலாம்; சுருண்டு அடர்ந்த கூந்தல் கரிய மேகமோ என்று கூறும்விதமாக இருக்கலாம்; முல்லைப் பற்களிருக்கலாம் ஆனால், இவை இருப்பதால் முகத்திலே பொலிவு உண்டாகி விடாது. அந்த விழிகள், காதல் கனிந்தொழுகும் இரு வேறு விழிகளோடு சந்திக்க வேண்டும், அப்போதுதான் முகத்திலே “பொலிவு” தவழும். மயிலுக்குத் தோகை உண்டு, ஆனால் விரித்து ஆடினால்தானே தோகையின் அழகு தெரியும்! மாதரின் முகப்பொலிவு, காதலரின் பிரிவினால் மங்கி மறைகிறது, மயில்தோகையை அடக்கி மடக்கிக்கொண்டு இருப்பது போலாகி விடுகிறது. அந்த நிலையைத்தானே “பாழ்பட்ட முகத்தோடு பைதல்கொண்ட மை வாளோ,” என்று அழகாகக் கூறினார். “இது கலித்தொகை கரிமுகா!” என்றார் ஆசான். “மன்னிக்க வேண்டும் பெரியவரே! நான் காதற் கவிதைகளைக் கேட்டு இன்புற வந்தேனில்லையே. தலைவனைப் பிரிந்த அத்தலைவியின் முகம் பாழ்பட்ட கதை கிடக்கட்டும், என் முகத்தைப் பாரும் சற்று” என்று சலித்துக் கூறினான். சிரித்து விட்டு, பெரியவர், “கவி, அதை மறந்தாரென்றா எண்ணினாய்? பித்தா! கேள் இதை. தலைவியின் முகம் பாழ்பட்டது என்று கூறிய÷õடு திருப்தி பெறவில்லை. தலைவியின் முகநிலை எப்படி இருந்தது என்பதைத் தெளிவாக்க, கவி கூறினார்: “ஆள்பவர் கலக்குற உலைபெற்ற நாடுபோற் பாழ்பட்ட முகத்தோடு பைதல்கொண்ட மைவாளோ” ஆட்சி சரியில்லை, மக்களின் மாட்சிமையும் சரியிராதல்லவா? கோல் நேர்வழி நில்லாது அலைகிறது, மக்களின் கண்களிலே அதனால் நீர் அலைகிறது. மக்கள் பொலிவு குன்றிவிடுகிறது. தீய ஆட்சியினால் மக்களின் முகம் கவலையின் இருப்பிடமாகி விடுகிறதே, அதுபோல இருந்தது தலைவனைப் பிரிந்த தலைவியின் முகம் - இதுவன்றோ கவியுள்ளம். கரிமுகா! புரிந்ததா ஏடு படிக்கும் நோக்கம்?” என்று முதியவர் கேட்டார். “நன்றாய்ப் புரிந்தது. மதிமிக உடையோய், தங்கள் மனநிலை தெரிந்தேன், மகிழ்ந்தேன். இன்பம் தர வேண்டிய தலைவன் இல்லை, தலைவியின் முகத்தில் பொலிவு இல்லை, நீதி தரவேண்டிய அரசநெறி இல்லையானால் மக்கள் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. உண்மை, உண்மை. மீண்டும் பொலிவு பெற...?” என்று கேட்டான் கரிமுகன். “என்ன செய்வது? இதுபோல் ஏடு படிப்பதுதான் வழி” என்றார் முதியவர். “மீண்டும் விளையாட்டா? இவ்வேளையிலா?” என்று முணுமுணுத்தான் கரிமுகன். “கரிமுகா, கேள்! “ஒல்குபு நிழல் சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி வெல் புகழுலகேத்த விருந்து நாட்டுறைபவர்” மன்னரின் மாண்பு விளக்கமப்பா இது! கடும் வெயிலில் நடந்து செல்கிறாய், களைக்கிறாய், பாதையிலே ஓர் மரம் கண்டாய், அதன் நிழலில் ஒதுங்கினாய்! குளிர்ச்சி கண்டாய். உடனே அந்த மரம் “ஓ, நீ போக வேண்டிய பாதை அது. அங்கு வெயில் என்று இங்கேன் வந்தாய் என்றா கூறும்! அதுபோல், நாம் இருக்கும் நாட்டிலே நல்லாட்சி இல்லையானால், நல்லாட்சி உள்ள இடத்துக்குப் போய் வாழலாம். ஆனால் அது நமக்கு மட்டுமே தானே நலன் பயக்கும். நம் நாட்டவர் அனைவரும் நலிய நாம் மட்டும் மகிழ்ந்திருப்பது நல்லதல்லவே. பாதையிலே நமக்கோர் நிழல்தரும் மரம் கிடைத்தது, அது நம்முடன் வந்தவண்ணம் இருக்குமோ? ஆகவே நல்லாட்சி இல்லாவிடத்து, நல்லாட்சி ஏற்படுத்த, அண்டை அயலிலிருக்கும் அரசர் படை எடுத்து வருதலும், தீய ஆட்சியை வீழ்த்தலும், நல்லாட்சி அமைத்தலும், மன்னர் மாண்புகளில் ஒன்று என்று தமிழ் கூறுகிறது. இன்னமும் தயக்கம் ஏன்?” என்று உணர்ச்சியுடன் கேட்டார். “அயல்நாட்டு மன்னரே வேண்டுமா? அன்றி...” என்று கரிமுகன் இழுத்தாப்போல் பேசினான். உடனே முதியவர், “அம்பு எதுவானால் என்ன? விலங்கு சாக வேண்டும்” என்றார். “தெளிந்தேன். உம்மை வணங்குகிறேன். மலர்புரி மக்களை இனி நான் விடுவிக்க முனைவேன்” என்று கூறிவிட்டுக் கரிமுகன் விடை பெற்றுச் சென்றான். அரசைக் கைப்பற்ற ஆரியன் அநேகவிதமான சூதுகள் செய்வது வீரமணிக்குத் தெரிந்தாலுங்கூட, அவைகளை முறியடிக்குமளவு போதுமான ஆதரவு கிடைக்காததால் பாய முடியாது திகைத்தான். அரசியுடன் அந்தரங்கமாகப் பேசினதில், காணாமற் போன பெண் விஷயமாக அரசி கசிந்துருகுவது தெரிந்தது. மறுபடியும் சந்தித்து முழு விவரமும் கேட்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. உத்தமனைக் கண்டு பேசவும் முடியவில்லை. இந்நிலையில் ஆரியன், தன்னைத் தேவிசேனையுடன் சந்தனக்காடு சென்று மலை வகுப்பினரை அடக்கும்படி கட்டளையிட்டதறிந்து கலங்கினான். தான் ஊரிலில்லாச் சமயத்திலே ஆரியன் யாருக்கு என்ன கேடு செய்து விடுவானோ என்று அஞ்சினான். ஆனால் மறுத்துரைக்கவோ கூடாது. தேவி சேனையுடன் வீரமணி தத்தளிக்கும் மனத்தினனாய்ச் சென்றான். ஆரியன் அப்படை ஊர் எல்லையைக் கடந்ததும் தொலைந்தது ஓர் பீடை என்று எண்ணினான். கரிமுகன் ஆசிரியர் மொழிகேட்டு, ஆயாசம் நீங்கி, உறுதி பெற்றுத் தன்படையின் முக்கியஸ்தர்களைக் கலந்தாலோசித்தான். கரிமுகனே மலர்புரி காவலனாக வேண்டுமென்று அவர்கள் கூறினார். புரட்சிக்கோர் நாள் குறித்துவிட்டான். புத்தாடை பூண்டு, பூமாலை சூடி, தேவி கோயில் சென்று வழிபாடு புரிந்தான். வாய் பிளந்து நின்ற மக்களிடம் “நான் இதுவரையில் தேவியை நம்பாதிருந்தேன். இப்போது தேவியின் பெருமையை உணர்ந்தேன். தேவாலயம் புகுந்தேன்” என்று கூறி, ஊர்வலம் வந்தான். கள்ளச் சிந்தனைக்கார ஆரியனின் உள்ளம் களிப்புடன் கூத்தாடிற்று. கரிமுகனின் காலம் முடிந்துவிட்டது என்று கருதினான். யுக்தியே யோகம், தந்திரம், தவம் என்று கூறிப் பூரித்தான். தேவிசேனை வேறாகவும், கரிமுகன் தலைமையிலிருந்த மலர்புரிப் படை வேறாகவும் இருந்தாலும், இரண்டுக்கும் தொடர்பு அறவே இல்லாமற் போகவில்லை. குதிரைகளின் தேய்ப்பு மேய்ப்புகளுக்கு ஒரே கூட்டத்தினர் அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்கள் தேவிசேனை சந்தனக் காட்டுச் சமருக்குப் புறப்படுகையில் உடன் வரவில்லை, ஒருவரிருவரே வந்தனர். இதனை வீரமணி ஊர் எல்லைபோனதும் தெரிந்து, ஆச்சரியப்பட்டு அவர்களிலொருவனை அழைத்து, “ஏன் மற்றவர்கள் வரவில்லை” என்று கேட்டான். “ஆரியர் உத்தரவு” என்றான் அவன். “ஏன்? படை கிளம்பும்போது உடன் வராதிருக்கலாமோ?” என்று வீரமணி கேட்க அவன், “கரிமுகனின் குதிரைப்படைக்கு அவர்கள் தேவையாம், அதற்காகவே, மலர்புரியில் தங்கிவிட்டனர். குதிரைகளைத் தேய்த்து மேய்த்து சரியான நிலைமையில் இருக்கச் செய்யும்படி ஆரியன் உத்தரவு பிறப்பித்தார். கடுமையான வேலைக்குச் சித்தமாகக் குதிரைப்படை இருக்க வேண்டுமாம்” என்றான். “வீரமணியின் முகம் கோபத்தால் சிவந்துவிட்டது. கரிமுகனின் படையைக் கொண்டு ஆரியன் ஏதோ காரியத்தை நிறைவேற்றிக் கொள்கிறேன்; அதற்கு நாம் குறுக்கே நிற்போம் என்று அஞ்சியே சந்தனக்காட்டுக்கு நம்மை அனுப்புகிறான் என்று தெரிந்துவிட்டது. தேவிசேனையுடன் திரும்பி மலர்புரி சென்றாக வேண்டும் என்று எண்ணினான். உள்ளே தேவிசேனை நுழைந்ததும், ஆரியன் கோபித்துத் தன்னை கைது செய்து காரியத்தைக் கெடுத்துவிடுவானோ என்று அஞ்சினான். அவசரப்பட்டு, இதில் எதுவும் செய்வதற்கில்லையே என்று ஆயாசப்பட்டு மேலே படைகளை செல்லவொட்டாது நிறுத்தி அந்த இரவு கூடாரமடித்துத் தங்கும்படி ஏற்பாடு செய்துவிட்டு யோசிக்கலானான். தேவிசேனையை, கூடாரத்திலே இருக்கச் செய்தவிட்டுத் தான்மட்டும் தனியே மலர்புரி சென்று வருவதென தீர்மானித்தான். தன் பரி ஏறி, மலர்புரி சென்றான். எவருமறியா வண்ணம் தேவி கோயிலுக்குள் நுழைந்தான். ஆரியன் சிலருடன் மிக மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருக்கக் கண்டு, அங்கோர் இடத்திலே பதுங்கிக் கொண்டான். கோயில் விளக்கை ஆரியன் தூண்டினான். அந்த வெளிச்சம், அவனுடன் கரிமுகன் நிற்பதைக் காட்டிற்று. வீரமணியின் உடல் நடுங்கிற்று. பலவான் சூதுகாரனுக்குத் துணை நிற்கிறானே என்று சோர்ந்தான். “தேவீ! உன் பக்தனை இனி நீதான் இரட்சிக்க வேண்டும்” என்று ஆரியன் சற்று உரத்த குரலிலே கூறினான். கரிமுகன் சிரித்துக் கொண்டே “தேவியை ஏன் அடிக்கடி இழுக்கிறீர். நான் நடையுடன் அரசியின் மாளிகையை முற்றுகையிடும்போது தேவியா எனக்குக் கத்தி கேடயம்? என்று கேட்டான். ஆரியன் அதற்கென்ன பதில் சொன்னான் என்பதைக் கேட்கவும் வீரமணி அங்கு தங்கவில்லை. பூனைபோல் மெல்ல அடியெடுத்து வைத்தான், கோயிற்சுவரைத் தாண்டினான், போர்வையை இழுத்து முகத்தை மறைத்துக் கொண்டான். வெளியே நடந்தான். விரைவிலே ஊர்க்கோடி சென்று, அங்கோர் தோட்டத்திலே கட்டி வைத்திருந்த குதிரையை அவிழ்த்து, ஏறிக் கொண்டு கூடாரத்தை நோக்கிக் கடுவேகமாகச் சென்றான். கோயிலைவிட்டு வெளியேறினான் கரிமுகன். குழல் ஊதினான். மக்கள் “என்ன? என்ன?” என்று கேட்கலாயினர். கரிமுகனின் படை “கரிமுகன் வாழ்க! எமது தலைவர் கரிமுகன் வாழ்க!” என்று கூவிக்கொண்டு கிளம்பின. மக்கள் தீவர்த்தி ஏந்திக்கொண்டு கரிமுகனின் படை அரண்மனையை நோக்கிக் செல்வது கண்டு மருண்டனர். மூலைக்கு மூலை சிறுசிறு சச்சரவுகள். படையினரோ ஆயுதபாணிகள். மக்கள் ஏதுஞ்செய்ய முடியவில்லை. ஊர் அல்லோலகல்லோலப் பட்டது. “ஓடு! ஓடு! அகழிப் பாலத்தைத் தூக்கிவிட்டு இப்புறத்திலே காவல் புரியுங்கள்” என்று படையில் ஓர் பிரிவுக்குக் கரிமுகன் உத்தரவிட்டான். மலர்புரியைச் சுற்றி அகழி! அதைக் கடக்க ஓர் அருமையான வேலைப்பாடுள்ள பாலம். அதனை யுத்த காலங்களிலே அகற்றி வைக்கும் பொறி உண்டு. அது தெரிந்த கரிமுகன், அரசிக்கு ஆதரவாகச் சுற்றுபுறத்துக் கூட்டம் வராமலிருக்க வேண்டும் என்பதற்காக, உடனே அப்பாலத்தை அகற்றும்படி உத்தரவிட்டான். கரிமுகனின் படையில் ஓர் பிரிவு சென்று அக்காரியத்தைச் செய்துவிட்டு, அகழின் இப்பக்கம் காவலிருந்தனர். எதிர் பக்கத்திலே சற்று தொலைவில் தீவர்த்திகள் தெரியக் கண்டு-, “சரியான நேரத்திலே சரியானது செய்தோம்” என்று எண்ணிச் சந்தோஷித்தனர். வீதியின் முனைகளிலே ஆயுத வீரர்கள் பாரா நின்றனர், மக்களைத் தடுத்துக் கொண்டு, படையின் பெரும் பிரிவு இறைச்சலிட்டுக் கொண்டு அரண்மனையைச் சுற்றி வளைத்துக் கொண்டது. அரண்மனைக் காவலாளிகள் கொல்லப்பட்டும், சிறைப்பட்டும் போயினர். சேடியர் முகத்திலறைந்து கொண்டு அழலாயினர். அரசி, அரண்மனை மாடி மண்டபச் சாளரத்தைத் திறந்து, நிலைமையைக் கண்டு மனநிலை குலையாது தோழியரை அழைத்து, ‘மாடத்து விளக்குகளைத் தூண்டுங்கள்! பிரகாசமாக இருக்கட்டும்! இரண்டு பீடங்களை இங்கே போட்டுவிட்டு, நீங்கள் போய்ப் படுத்துறங்குங்கள். இப்புயல் அடங்கிவிடும்” என்று கூறினாள். சேடியர் ஆபத்து பெரு நெருப்பெனச் சூழ்ந்து வருவது கண்டு அரசியார், கலக்கமின்றிப் பேசுவது கேட்டுத் திகைத்தனர். “அரண்மனைக் கதவுகளைத் தாளிட்டு விடலாமே” என்றுக் குளறிக் கூவினர். மலர்புரி அரசி, “பேதைகளே! புயல் வீசும்போது மரங்கள் போர்வை தேடுகின்றனவா! கடல் குமுறும்போது கப்பலுக்குக் கஷாயமா காய்ச்சுவர்! அரண்மனைக் கதவுகளைப் பெயர்த்தெடுக்கவா, இந்த அமளி! அரசுக்காக! அதை இழக்க நான் உயிரோடு இருக்கும்வரை இசையேன். போரிடும் ஆண்மகனைக் கண்டு பெண் பதுங்குவது தமிழ்க்குலப் பண்பல்ல! இனிச் சில விநாடிகளிலே கரிமுகன் இங்கே வருவான். நான் தனித்திருந்து அவனிடம் பேச வேண்டும், நீங்கள் போய்விடுங்கள், பயம் வேண்டாம்” என்றுரைத்தாள். கதவுகள் பிளக்கப்பட்டுக் கத்திகள் வீசப்பட்டு, அரண்மனை களமாகிவிட்டது! சேடியர் கதறிக் கொண்டோடி அறைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டனர். பதின்மர் மாடி மண்டபம் புகுந்தனர். கரிமுகன், உருவிய வாளுடன், தலைவிரி கோலமாய் நின்றான். அரசி புன்னகையுடன் மண்டபத்தின் மறுகோடியிலே நிற்கக் கண்டான். விளக்கொளி கண்டான், அரசியின் உடல் வெடவெடுத்துப் போகவில்லையே என்று வியந்தான். தன்னுடன் வந்தவர்களைக் கீழே கொலுமண்டபத்துக்குச் சென்றிருக்கச் சொல்லிவிட்டு, வாளை உறையிலிடாமலே, அரசியை நோக்கி நடந்தான். திடீரெனச் சதிச்செயல் புரிந்த கரிமுகனின் உண்மை ஊழியத்தை அரசி அறிவாளாகையால், ஏதோ ஆத்திரப்பட்டே இக்காரியம் செய்கிறான் என்பதை உணர்ந்து, தந்திரத்தால் அவனைத் தடுத்திட முடியும் என்று தீர்மானித்து மனத்திலே திட்டம் தயாரித்துவிட்டாள். இதற்குள்ளாகவே ஆரியன் ஏதேனும் சூட்சமம் கண்டுபிடிப்பான். தேவியின் உதவியைத் தேடுவான் என்று எண்ணி கோபத்தோடு வருபவனை அந்த நேரத்தில் தடுத்துவிட்டால் போதும் என்று கருதி அதற்கேற்றபடி நடக்கலானாள். உருவிய வாளுடன் தன் முன்வரும் கரிமுகனைக் கண்டு புன்சிரிப்புடன் அரசி நின்றாள். சுற்றிலும் பல போர்வீரர்கள் நின்றாலும் கலங்காத கரிமுகன் அரசி துளியும் பயமின்றி நிற்பது கண்டுக் கலங்கினான். அரசியா! அரசி போன்ற சிலையா! என்று சந்தேகிக்க வேண்டியும் இருந்தது. “என்ன கம்பீரமான நடை! வருக! வருக!” என்று அரசி வரவேற்றது கேட்ட கரிமுகனின் கால்கள் ஸ்தம்பித்துவிட்டன. திகைத்து நின்று அரசியை ஏற இறங்கப் பார்த்தான். “முகத்திலே ஏன் கோபம் கூத்தாடுகிறது?” என்று கேட்டாள் அரசி. அவன் “கோபமா? களிப்பா?” என்று அலட்சியமாகக் கேட்டான். “களிப்பு இப்படி இருக்குமா? கரிமுகா! களிப்பிருந்தால் முகம் சுளிக்காதே” “அரசியே! விஷயத்தை வளர்த்துவானேன். அதோ சத்தம் கேட்கிறதா?” “கேட்கிறது. எனக்குக் கேளாக் காதென்றா எண்ணினாய்? ‘அரசியே! அரசியே!’ என்று அனவரதமும் நீ துதி செய்ததால், செவி கெட்டாவிட்டது? சத்தம் நன்றாக கேட்கிறது, உன் கை துடிப்பதால் கட்கம் ஆடுகிறதே, அது உண்டாக்கும் சத்தமும் கேட்கிறது. வெளியே பெருங்கூச்சல் நடப்பதும் கேட்கிறது.” “என் படைகளின் சப்தம் அது.” “ஆமாம்! உன் படைகள் எப்போதுமே அப்படித்தான்; ஓநாய்கள் போலக் கூவுகின்றன. உன்னிடம் பயமில்லை அவைகளுக்கு!” “நான் உன்னை கைதியாக்க வந்திருக்கிறேன்.” “இனிமேலா கைதியாக்கப் போகிறாய்?” “இதே கணத்தில்! அரண்மனையைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான போர்வீரர்கள் நிற்கின்றனர். இந்த நிமிடமுதல் நீ என் கைதி!” “விஷயம் சரி! ஆனால் கணக்கு தவறு. நான் உன் கைதியாகி, 5 ஆண்டு 6 மாதம் 21 நாட்களாகின்றன. அரண்மனையிலல்ல நான் கைதியானது. குன்றின் மீது! பகல் வேலையிலுமல்ல, இது போன்ற பாதி இராத்திரி நேரத்திலுமல்ல; செவ்வானம் தோன்றிய நேரத்தில். உன் படைகளின் மிரட்டலால் அல்ல, உனது அழகால் கரிமுகா! என்னை நீ இன்று கைது செய்ததாகக் கூறுகிறாய், அது தவறு. நான் உன் கைதியாகி ஐந்தாண்டுகளுக்கு மேலாகின்றன.” “என்னிடமா இதைப் பேசுகிறாய்” “இல்லை! கரிமுகனிடம், என் கண்களில் உலகைக் கண்ட கரிமுகனிடம் பேசுகிறேன். என் குரலில் கீதங்கேட்ட கரிமுகனிடம்; என் அருகிலிருப்பதே அஷ்ட ஐஸ்வரியம் என்று பூரித்த கரிமுகனிடம். பஞ்சணையில் என்னிடம் கொஞ்சிடத் தவங்கிடந்த கரிமுகனிடம் பேசுகிறேன். என் கிரீடத்தின் மீது மோகங் கொண்ட உன்னிடமல்ல, என் சிங்காதனத்தின் மீது பிரமை கொண்ட பேயனிடமல்ல!” “போதும் நிறுத்து! திகிலால் உன் மனம் குழம்பி ஏதேதோ பிதற்றுகிறாய்! கரிமுகனிடம் பேசுகிறேன் என்றும் சொல்லுகிறாய். என்னிடம் பேசவில்லை என்றும் கூறுகிறாய், குன்றும் காதலும் என்று குளறுகிறாய்.” “கரிமுகா! உன் நெஞ்சை நீ ஏமாற்றாதே, ஐந்தாண்டுகட்கு முன்பு ஓர் நாள், அதோ அக்குன்றின் மீது, நாமிருவரும் பேசிக் கொண்டிருந்தபோது நீ என்னைக் காதலிக்கவில்லையா?” “வெறும் புளுகு! பெரும் பொய்! உன்னை நான் எப்போது காதலித்தேன்?” “சீ துஷ்டனே! இந்த ராஜ்யத்தை எடுத்துக் கொள். ஆனால், என் மீது காதல் கொண்டிருந்ததை மட்டும் மறைக்காதே. ஒரு பெண் எதையும் இழக்கத் துணிவாள், காதலை மட்டும் இழக்கச் சம்மதியாள். நான் அரசி, ஆனால் ஓர் பெண் என்பதை மறவாதே. அன்று அக்குன்றின்மீது நாம் அமர்ந்துகொண்டு பேசினபோது, நீ என்னை எவ்வளவு அன்பு கலந்த பார்வையுடன் நோக்கினாய், பெரு மூச்செறிந்தாய்? இன்று அதை மறுக்கிறாய். அன்றே நான், என்னை உனக்கு அர்ப்பணம் செய்துவிட்டேன். உன்னை மணம்புரிந்து கொள்ள ஓர் நாள் வேண்டியே தேவியைத் துதித்து வந்தேன். ‘ஏழாண்டுகள் கழியட்டும், இஷ்டப் பூர்த்தி உண்டாகும்’ என்று தேவி வரமளிக்கவே, நான் இந்நாள்வரை எவரிடமும் கூறாத என் காதலை மூடி வைத்திருந்தேன். நீ என்னை இன்று ஈட்டியால் குத்திக் கொன்றாலும் இவ்வளவு வேதனையிராது, என்னைக் காதலித்து இன்று கைவிடுகிறாய். பாதகா துரோகி!” “எனக்கு ஒன்றுமே புரியவில்லையே. நான் உன்னிடம் காதல் மொழி பேசினதே கிடையாதே.” “பேச வேண்டுமா! உன் நடவடிக்கை அதை எனக்கு உணர்த்தவில்லையென்றா எண்ணினாய்? சரி. நான் பழங்கதை அவ்வளவையும் கூறித்தான் உன்னைத் தெளிய வைக்க வேண்டும் போலிருக்கிறது. இந்த இரைச்சலிலே நாம் நிம்மதியாக எப்படிப் பேச முடியும்?” இந்தப் பேச்சினால் கரிமுகன், வலையிலே வீழ்ந்தான்; சாளரத்தருகே சென்றான். வெளியே தலை நீட்டினான். படையினர், அவனைக் கண்டு ஆர்ப்பரித்தனர்! கையை அமர்த்தினான். சத்தம் அடங்கிற்று. “நண்பர்களே! நள்ளிரவிலே நாம் வந்த காரியம் முடிந்துவிட்டது. பாசறை சென்று படுத்திருங்கள். பகலிலே, நாட்டின் எதிர்கால அமைப்பு ஏற்பாடாகும். அரசியார் பணிந்துவிட்டார்கள்! முழு விவரம் கொலு மண்டபத்திலே கூறுகிறேன்” என்று கூறினான். படையின் சந்தோஷ ஆரவாரம் அதிகரித்தது. ஜெயகோஷம் கடலொலி போலாகிவிட்டது. படை, பிரிவு பிரிவாகப் பாசறை சென்றன. அரசியோ, அதையுங் கவனியாமல் பீடத்திலே கரிமுகனை இருக்கக்கூறி, பலப்பல காதற் சம்பவங்களைக் கூறிக் கொண்டே வந்தாள். “புதிய மலர்த் தோட்டத்திலே உலவும்போது என் மேனி பொன்னிறமானது என்று கூறவில்லையா?” “கவனமிருக்கிறது! சொன்னேன். ஆனால் அது காதலுக்காகக் கூறவில்லையே. ஆரியன் அன்று, அவன் பூஜிக்கும் தேவியின் சிலை பொன்னால் செய்ய வேண்டுமென்று கூறினான். ‘பொன் சிலையைப் பூஜிப்பானேன், பொன்நிற மேனி கொண்ட எமது அரசியாரே எமக்குத் தேவி!’ என்று சொன்னதுண்டு. காதலித்தேன் என்றா கருதினீர்.” “அது மட்டுந்தானா? ஒரு மண்டலத்தைத் தங்கள் காலடியிலே கொண்டு வந்து காணிக்கை செலுத்துவேன்” என்று ஓர் நாள் சொல்லவில்லையா? அதன் பொருள் என்ன? “படை பலத்தைக் காட்டவே அது கூறினேன். காதலுக்காக அல்லவே” “இரவு பகல் எந்த நேரம் தங்களைப் பற்றியே எண்ணி எண்ணி ஏங்குகிறேன் என்று சொன்னதுண்டா இல்லையா? அதுவும் காதல்மொழியல்லவா?” “சொன்னதுண்டு! தாங்கள் அரச காரியத்தைக் கவனிக்கவில்லை, மலர்புரியின் கீர்த்தியைப் பரப்ப முயலவில்லை என்று ஏங்கியே அதைக் கூறினேன். மாலை சூட்ட அல்லவே” “நான் எதை எதைக் காதற்பேச்சு என்று நம்பினேனோ அவைகளை எல்லாம் நீ மறுத்துப் பேசுகிறாயே, கரிமுகா! என் மீது பிறந்த காதலை, தொல்லை நிரம்பிய அரசுக்காக, அநியாயமாகக் கொன்றுவிடாதே” என்று மலர்புரி அரசி கூறினது கேட்டு கரிமுகனின் மனம் மருண்டு விட்டது. ‘நாம் எண்ணியது ஒன்று, நடப்பது நேர்மாறாக இருக்கிறதே. இதென்ன விபரீதம்’ என்று எண்ணித் திகைத்தான். அரசி எதிர்ப்பாள், இல்லையேல் கதறுவாள் என்று எதிர்பார்த்தானேயொழிய காதல்மொழி பேசுவாள் என்று கனவுகூடக் கண்டதில்லை. மாதரிடம் நெருங்கிப் பழகியுமறியாதவன் கரிமுகன். அதிலும் அரசியிடம், அவன் ஒரு நாளும் இதை எதிர்பார்த்தவனல்லன். எனவே கரிமுகன் ஒன்றுந்தோன்றாது விழித்தான். அவன் திகைப்பது தெரிந்த அரசி, மேலும் மேலும் காதலே பேசலானாள். கர்ண கடூரமாகிவிட்டது கரிமுகனுக்கு. அகழிக்கு வெளியே, வீரமணியின் படை ஆர்ப்பரிப்பதறிந்து, கரிமுகனாட்களிற் சிலர் அரண்மனைக்கு வந்தனர். மாடி மீது நின்றபடியே கரிமுகன், “என்ன விஷயம்” என்று கேட்டான். “மணியின் படைகள் அகழிக்கு வெளியே இருக்கின்றன” என்றுரைத்தனர். கரிமுகன் பதில் கூறுமுன் அரசி அவனிடம் “கரிமுகா! வீணாக நமது ஆட்கள் ஒருவரையொருவர் வெட்டி வீழ்த்திக் கொள்ள வேண்டாம். மணியின் படை தேவிக்குச் சொந்தம், அதை எதிர்ப்பது பாவம்” என்றுரைத்தாள். “தேவியும் அவள் திருவடி தாங்கியான ஆரியனும், அவனுக்குத் துணையாக உள்ள மணியின் படையும் என்ன யோக்யதை கொண்டனவென்பதை நானறிவேன். நீர் குறுக்கிட வேண்டாம். கொஞ்சு மொழி பேசி என் கோபத்தைத் தணிக்க முடியாது. நிச்சயமாகக் கூறுகிறேன், நான் உன்னைக் காதலித்ததுமில்லை; இனிக் காதலிக்கப் போவதுமில்லை. அரசு ஆளுந்திறனை நீ இழந்துவிட்டாய். ஆகவே முடி துறந்துவிடத்தான் வேண்டும். இதுவே என் முடிவான பேச்சு” என்று கூறிவிட்டு “மணியின் படைகள் மீது இப்பக்கமிருந்தே எரிஅம்புகளைச் சொரியுங்கள். அகழ் சுற்றுக் காவலரைச் சுறுசுறுப்பாக இருக்கச் செய்யுங்கள்” என்று படைவீரருக்கு உத்தரவிட்டான்.  பகுதி - 11   தனது தந்திரப்பேச்சு, கரிமுகனைப் பதட்டமாக ஏதும் செய்ய வொட்டாது தடுத்திடப் பயன்பட்டதேயன்றி, அவனுடைய மூலநோக்கத்தை மாற்றாதது கண்டு அரசி சற்று அஞ்சினாள். மணி வீரனின் படைகளும், தனக்கு உதவி செய்ய முடியாத நிலைமையிலிருப்பதையும், ஆரியன் ஏதும் செய்யாதிருப்பதையும் எண்ணி ஏங்கினாள். விடியமட்டும் பேசினாலும், கரிமுகன் தன் தீர்மானத்தை மாற்றிக் கொள்ள மாட்டான் என்பது தெரிந்து திகைப்புற்று நின்றாள். “அரசியாராக நீர் இருத்தல் கூடாதென்று மட்டும் கூறுகின்றேனேயன்றி, உமக்கு வாழ்க்கை வசதியைத் தரவோ, மதிப்புத் தரவோ, நான் மறுக்கவில்லை. மலர்புரியின் நிலைமையை உத்தேசித்து, மலர்புரியின் புகழ் மங்கி வருவதைக் போக்க வேண்டுமென்பதற்காகவே நான் இக்காரியத்தைச் செய்யத் துணிந்தேன்” என்று கரிமுகன் தன் நோக்கத்தை விளக்கியுரைத்தான். சொல்லம்புகள் இங்கு பறந்து கொண்டிருந்தபோது, அகழ் வாயிலில் எரிஅம்புகள் பறந்து கொண்டிருந்தன. வீரமணி அகழைக் கடக்கப் பல வித முயற்சிகள் செய்து பார்த்தான்; முடியவில்லை. கரிமுகனின் படை உள்ளே என்னென்ன காரியம் செய்கிறதோ, அரசியைக் காவலிலே வைத்துவிட்டதோ, அரசியின் உயிருக்கே ஏதேனும் ஆபத்து நேரிட்டதோ என்றெல்லாம் வீரமணி எண்ணி ஏங்கினான். ஆரியன் தேவி கோயிலிலே கொலு மண்டபத்திலே கோலாகலமாக வீற்றிருந்தான். அவனுடைய சூது பலித்து வருவது கண்டு சந்தோஷித்தான். கரிமுகனைக் கொண்டு அரசியின் கர்வத்தை அடக்கி விட்டோம், கரிமுகனின் செயலைக் கண்டு வெறுப்படைந்துள்ள மக்களைக் கொண்டு இனிக் கரிமுகனை அடக்க வேண்டும் என்று தீர்மானித்து, பொழுது விடியட்டும் என்று எண்ணினான். அரசியைக் கரிமுகன் அரண்மனையிலே காலங் கடத்தவிடவில்லை. அரசிக்கு வேறோர் வழி தோன்றிற்று. “சரி! என் முடியைத் துறப்பதானால், அதை அரச வம்சத்தாருக்கே தர வேண்டும். நீ படைத்தலைவன், ஆகவே, தேவி சன்னதியிலே என் கிரீடத்தை வைத்துவிடுகிறேன். நீ உன் அரசிக்கு கேடு செய்ததுபோல, தேவி கோயிலிலும் உன் துடுக்குத்தனத்தைக் காட்டி, முடியை எடுத்து அணிந்து கொண்டு, மலர்புரியை நாலாவதரசாக்கு” என்று வெறுத்துக் கூறுபவள்போல் பேசினாள். கரிமுகன் அதற்கு இசைந்தான். இருவரும் தேவி கோயிலுக்குச் சென்றனர். ஆனந்தமாக உள்ளே அமர்ந்திருந்த ஆரியன், இந்த எதிர்பாராத சம்பவத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டான். ஏதுமறியாதவன் போலக் கரிமுகனை நோக்கி, “அரசியைக் கைதியாக்கியா இங்கு கொண்டு வந்தாய்? உன் அக்ரமம் அரண்மனையோடு நிற்கட்டும், ஆலயத்திலுமா நுழைந்தாய்? உன் பேச்சைக் கேட்டுப் படை நடக்கவும், பயந்த மக்கள் பதுங்கிக் கொள்ளவும், நீ கொக்கரிக்கவும், அரசி துயருறுதலுமான காலம் வந்ததே, இதற்கென்ன செய்வது?” என்று கூறினான். ஆரியனின் மொழிகேட்டு, அரசியின் மனம் உருகிற்று. என்ன “வாஞ்சை இவருக்கு! ஒரு ராஜ்யத்தை அபகரிக்கும் அக்ரமக்காரனிடம் அச்சமின்றிப் பேசுகிறார் எதிர்த்து! தேவியின் அருள் பெற்றவரிடம் இவன் என்ன செய்ய முடியும்? என்று எண்ணி, துக்கத்தையும் மறந்து புன்சிரிப்புடன் ஆரியனின் பாதத்தில் வீழ்ந்து வணங்கி, “ஆலய அரசே! கரிமுகனின் படைபலம் என் பட்டத்தைத் தட்டிப் பறிக்க வேண்டுமென்பது தேவியின் திரு உள்ளமாக இருப்பின் அதை நான் மாற்ற முடியுமா? அவள் ஆணைப்படி நடக்கட்டும்” என்று கூறிவிட்டுக் கைகூப்பி நின்றாள். கரிமுகன், ஆரியனை நோக்கி, “கூறுமய்யா கோயிற்காவலரே! தேவியின் கட்டளையைக் கூறும்” என்று பேசினான். ஆரியன் சற்றுத் திகைத்தான். தன் ஏற்பாட்டின்படியே கரிமுகன் இப்புரட்சியை நடத்தினானென்ற போதிலும், கரிமுகனின் கரம் வலுத்துள்ள அந்த நேரத்தில் அவன் என்ன முடிவுடன் ஆலயம் வந்துள்ளானோ என்று அச்சமாகத்தான் இருந்தது. கரிமுகனைத் ‘துரோகி, புரட்சிக்காரன்’ என்று மக்கள் கருத வேண்டிய அளவுதான் புரட்சி இருக்க வேண்டுமென்று ஆரியன் நினைத்தான். ஆனால் மக்கள் ஒரே அடியாக அடங்கி விடுவர் என்று ஆரியன் கருதவில்லை. பெருத்த அமளி நடக்கும் ஊர் மக்களின் எதிர்ப்பு, கரிமுகனின் படைபலத்தை ஒடுக்கிவிடும் என்றே எண்ணியிருந்தான். கரிமுகனின் கரம் மிக அதிகமாக ஓங்கிவிட்டதே என்று கலங்கினான். இந்தச் சமயத்திலே தேவி சேனையை வெளியே அனுப்பியதும் தவறு என்று எண்ணி வருந்தினான். ஆலயத்துக்குள் இந்த நிலையில் இருக்கையில், தீ! தீ! தீ! என்று பெருங்கூச்சல் கேட்டது. மலர்புரி வீதியிலே, பல இடங்களில், நெருப்புப் பிடித்துக் கொண்டுவிட்டது. தீ பரவியபடி இருந்தது. ஊர்மக்கள் ஓவெனக் கூவிக்கொண்டு அல்லோலகல்லோப் பட்டனர். பாசறைகளிலே ஆயுதங்களைப் போட்டுவிட்டு படைவீரர்கள், தீயணைக்க வந்தனர். கரிமுகனின் புரட்சியை அடக்கத் தம்மிடம் போதுமான ஆயுதபலம் இல்லையே என்று எண்ணி ஏங்கிய மக்கள் சிலர் கூடிப் பேசித் தத்தம் வீடுகளுக்குத் தீயிட்டுக் கொள்வதென்றும், தீ பரவினால், ஊரிலே படையிடம் உண்டான அச்சமும் பறந்து போகும் அளவு, குழப்பம் ஏற்படும்; அச்சமயத்திலே, படைவீரர்களும் ஏமாறுவர்; அதே நேரத்தில் பாசறை புகுந்து ஆயுதங்களை எடுத்துக் கொள்வதென்றும், தந்திரத் திட்டம் வகுத்து, அதன்படியே, சில தன்னலமற்ற தியாக புருஷர்கள், எத்தகைய கஷ்ட நஷ்டமேற்கவும் துணிவுகொண்டு, தத்தமது மாளிகைகளிலே தீ மூட்டிவிட்டனர். தீயணைக்கப் பலர் கூடுமுன், தீ பரவலாயிற்று. அவர்கள் எண்ணியபடியே ஊர்மக்கள், புரட்சியையும் கரிமுகன் படையையும் மறந்து தீ! தீ! எனக் கூவிக் கொண்டு, பெண்டு பிள்ளைகளைக் காப்பாற்றவும், பேழைகளைத் தேடவுமாயினர். தமது வீட்டு மக்களைக் காப்பாற்றும் நினைப்புமின்றி, அந்தத் தியாகப் புருஷர்கள், ஓடோடிச் சென்று, பாசறை புகுந்து, ஆயுதங்களை வாரி வாரி எடுத்துத் தமது தோழர்களுக்குக் கொடுத்தனர். ஆயுதங்கள் கிடைத்ததும், மக்கள் சந்தோஷ ஆரவாரம் புரிந்து, “தீர்ந்தான் கரிமுகன்!” என்று கூவிக் கொண்டு ஆயுதங்களைச் சுழற்றினர். இதற்குள், தீயணைப்பு வேலையும் ஒருவாறு முடிந்தது. கோயிலுக்குள்ளே குமுறிக் கிடந்தவர்கள் ஒரு பக்கம் தீ அணைக்கப்படுவதையும், மற்றோர் புறம் ஆயுத ஒலி எழும்புவதையும் கேட்டு, விஷயம் விளங்காது திகைத்தனர். இதனிடையில் அகழிவாயில் அமளியைக் கண்ட ஆயுதம் தாங்கிய அறப்போர் வீரர்கள், கரிமுகனின் கட்டளையால் போரிட்ட கூட்டத்தைத் தாக்கி, அகழிப் பாலத்தைப் பழையபடி பொருந்தினர். மணிவீரனின் படைகள் வீராவேசத்துடனும் களிப்புடனும், நகருக்குள் பிரவேசித்தன. ஆயுதமிழந்த கரிமுகன் ஆட்கள், ஒருபுறம் ஆயுதந்தாங்கிய மக்களின் எதிர்ப்பும், மற்றோர்புறம் மணிவீரனின் படை தரும் உதையும்பட்டு, மூலைக்கு மூலை ஓடவும், பதுங்கவும், மண்டை நொறுங்கிச் சாகவும் ஆயினர். வெற்றி தன் காலடியிலே கிடப்பதாக எண்ணிக் களித்திருந்த கரிமுகன், எதிர்பாராத விதமாகத் தீயும், தெருச்சண்டையும், பாசறைச் சூறையாடலும், படையின் திணறலும், மணிவீரனின் பிரவேசமும் நடந்திடக் கண்டு, மனம் மருண்டு, கோயிலை விட்டு வெளியே ஓடினான். ஆத்திரமடைந்த மக்களின் ஆயுதங்கள் பல, அவன் அங்கங்களைச் சிதைத்தன. கோபங்கொண்ட கூட்டத்தால் மிதிபட்டு, மாண்டான். அரசி வாழ்க! வாழ்க மணிவீரன்! வாழ்க தீ! தீ மூட்டிய வீரர் வாழ்க! என்ற உற்சாகக் கூச்சலுடன் மக்கள் மணிவீரன் தலைமையில் ஊர்வலமாகக் கோவில் சென்றனர். எதிர்பாராது இத்தனை சம்பவங்கள் நடந்ததால், மலர்புரி அரசியின் மனம் குழம்பி, மயங்கி, பிரக்ஞையின்றிக் கீழே கிடக்க, ஆரியன், அரசியின் முகத்தில் நீர் தெளித்துக் கொண்டிருப்பதை வீரமணி கண்டு, வாளை உருவினான், இவ்வளவு அமளிக்கும் அக்கிரமத்துக்கும் காரணமாக இருந்த ஆரியனை வெட்டி வீழ்த்துவது என்ற முடிவுடன். வீரமணி ஓங்கியவாள், மட்டும், ஆரியனின் கழுத்திலே விழுந்திருந்தால், மலர்புரியைப் பிடித்திருந்த பீடை தொலைந்திருக்கும். - தமிழகத்தை அரிக்கும் புழும் செத்திருக்கும். கூரிய அந்தவாள், ஆரியனனின் சிரத்தைச் துண்டிக்கத் துடித்தது. உறையைவிட்டு வெளிவந்த அவ்வாள், புற்றிலிருந்து சீறி வெளிக்கிளம்பிய நாகம்போலவும், குகையை விட்டுக் கூச்சலுடன் பாய்ந்தோடி வந்த புலிபோலும் இருந்தது. ஆனால்! வீரமணியின் கரத்திலிருந்த வாள், திடீரென வீரமணியின் கரத்திலிருந்து, தடுகக் முடியாத சக்தியினால், பிடுங்கப்பட்டு, சரேலென மேலுக்குக் கிளம்பி, கோவில்கூடச் சுவர்நடுவே போய் ஒட்டிக்கொண்டு நின்றது. வீரமணி ஆச்சரியத்தால் இஃதென்ன! என்று கூவினான். ஆரியன் சிரித்துவிட்டு, “அவள் ஆணையடா தம்பீ! தீபத்தை அணைக்க உன்னால் முடியுமா? தேவியின் புதல்வனை உன் வாள் என்ன செய்யும்? அதோ பார், அது தொங்குவதை! ஏன் உன் உடல் பதறுகிறது? முட்டாளே! என்னைக் கொல்ல உன்னால் முடியுமா? உன் வீரம் எங்கே? வாள் எங்கே?” என்று கம்பீரமாகப் பேசினான். வீரமணி ஆச்சரியத்தால் திக்பிரமை அடைந்திருந்ததால், பதிலுரைக்க நா எழவில்லை. உருவியவாள், உயரப் பறந்து சென்று கூரையிலே தொங்குவதைக் கண்டு, அவன் ஏதும் புரியாது திகைத்தான். கரத்தைவிட்டு கட்கத்தை ஓர் சக்தி இழுத்ததும், அதைத் தடுக்கத் தனக்குச் சக்தி இல்லாமற் போனதும், அவனுக்கு ஆச்சரியத்தை மட்டுமல்ல, மிரட்சியையே கொடுத்தது. ஒருவேளை, “தேவி”க்கு இத்தகைய சக்தி இருக்கிறதோ என்று சந்தேகித்துத் திகைத்தான். ஆரியனுக்கு ஆபத்து வருவது அறிந்தே “தேவி” தன் கரத்திலிருந்த கட்கத்தைப் பிடுங்கி விட்டாளோ, என்று எண்ணினான். ஆரியப் புரட்டை அவன் அறிவான். ஆனால், கத்தி எப்படித் தன் கரத்தை விட்டு உயரத்தாவிச் சென்று விட்டது என்பது விளங்காததால், அவன் மனம் மருண்டது. வீரமணி ஆச்சரியத்தால் தாக்குண்டு நின்ற சமயம், அரசியின் கண்கள் திறந்தன; கைகூப்பினாள். ஆரியன் ஆசீர்வதித்து, “அரசியே! அன்னை பராசக்தியின் அருளால், நீ காப்பாற்றப்பட்டாய், அவள் மலரடி வணங்கு. இதோ பார்,மேலே தொங்கும் கத்தியை இது என் கழுத்தைத் தேடி வந்தது, தேவி அதனை மேலுக்கு அழைத்துக் கொண்டாள். இதனை, என்மீது வீசினான், வீராதி வீரன், தலைகுனிந்து நிற்கிறானே, இந்த மணி! கேள் அவனை! பார் அவன் முகத்தை! வீசிய கத்தியின் சக்தி எங்கே? வீரா, உன் கத்திவீச்சு, தேவியின் கண்வீச்சின்முன் எம்மாத்திரம்” என்று ஆரியன் கேலிச்சிரிப்புடன் கூறினான். வீரமணியை அரசி கோபத்தோடு நோக்கி “என்ன துணிவு உனக்கு? மணிவீரா! நீயுமா கரிமுகன்போல் கெடுமதி கொண்டாய்? அவன் என் அரசைக் கவிழ்க்கப் பார்த்தான், நீ ஆரிய முனியைக் கொல்லத் துணிந்தாயே. ஏன், இவ்ளவு பாதக எண்ணங்கள் பிறந்தன” என்று கோபமும் சோகமும் ததும்பக் கேட்டாள். வீரமணியின் செவியிலே இவை ஏதும் படவில்லை. வெடுக்கென்று வாளை இழுத்தது எது? அந்தச் சக்தியின் மர்மம் என்னவென்று எண்ணுவதிலேயே அவனுடைய சிந்தனை புதைந்துவிட்டது. ஆரியன் அரசியிடம், ‘அம்மே! இவன் அணவத்தைத் தேவி அழித்தாள். நான் வாழவேண்டும் என்பது அவள் சித்தமாக இருக்கும்போது, இந்தப் பித்தன் என்னைக் கொல்லத் துணிந்தால் நடக்குமா? நெருப்பைக் கறையான் எரிக்குமா?” என்று கூறினான். “தேவியின் அருளால் தாங்கள் தப்பினீர்கள். உத்தரவிடும், இவனை என்ன செய்வது?” என்று அரசி கேட்க, ஆரியன், “காராக்கிரமே இவனுக்குச் சரியான தண்டனை” என்று கூறிட, வீரமணியøச் சூழ்ந்து கொண்டனர் சில வீரர்கள். வீரமணிக்கு வீரர்கள் தன்னைச் சூழ்ந்துகொண்டபோதுதான், தன் நிலை தெரிந்தது. ‘அரசியே இது பெரும்பழி! என்னை வீணாகச் சந்தேகிக்க வேண்டாம், ஆரியனே, கரிமுகனைத் தூண்டினவன்” என்று கூவினான். அரசியோ போர்வீரர்களை அழைத்து, “உம்! இழுத்துச் செல்லுங்கள் இவனை” என்று உத்தரவிட்டாள். மணிவீரனின் ஆட்களுக்கு, மனம் சஞ்சலமாக இருந்தது என்றபோதிலும், அரசியின் உத்தரவுக்கு அஞ்சி, வீரமணியைக் கைது செய்தனர். மேலும் கத்தி கூரைக்குச் சென்ற சம்பவம் அவர்களுக்கு ஆச்சரியத்துடன், பயத்தைக் கிளப்பிவிட்டது. எனவே வீரமணியைக் கைது செய்யாவிட்டால், தங்களுக்கு ஆபத்து வருமே என்று பயந்தனர்.  வீரமணியைச் சிறைக்கூடத்திற்கு இழுத்துச் சென்றபோது ஊர் மக்கள் பதறினர். கோவிலிலே நடைபெற்ற ஆச்சரியமான சம்பவத்தைக் கேட்டு மக்கள் ஏதும் கூற இயலாது திகைத்தனர். வெற்றியின் ஆனந்தம், ஆரியனின் முகத்திலே புதியதோர் ஜொலிப்பைத் தந்தது. கரிமுகன் செத்தான்; கர்வமிக்க மணிவீரன் சிறை புகுந்தான்; ஊரிலே நமது மகிமை பற்றிய பேச்சாக இருக்கிறது; இனி நமது எண்ணம் சுலபத்திலே ஈடேறும் என்று எண்ணிக் களித்தான். உத்தமன் மட்டுமே, ஆரியனை ஒழிக்க மிச்சமாக இருந்தவன். பெரும்பாலானவர் ஆரியனிடம் தேவசக்தி இருக்கிறது என்று நம்பி நடுங்கினர். அரசி, ஆரியனின் அடிபணிந்துவிட்டு, ஆசிபெற்று, அரண்மனை சென்றாள். அன்று முதல் ஓர் கிழமை வரையில், தேவி சக்தியால், கூரைக்குப் பறந்து சென்றவாள் தரிசனமும், அதற்கான பூசையும் நடைபெற்றது. ஊர் மக்கள், திரள் திரளாகக்கூடி வாளை வணங்கினர். சகலரும் தேவி சக்தியே, இந்த ஆச்சரியத்துக்குக் காரணம் என்று கருதினர். ஆரியப்புரட்டுகள் பற்றி அடிக்கடி போதித்து வந்த கரிமுகனின் ஆசிரியரிடம் சிலர் சென்று, இது பற்றிக் கேட்டனர். அவரும் ஆலயம் சென்று வாளைக் கண்டார்; நெடுநேரம் யோசித்தார், வீடு திடும்பினார். ஏடுகளைப் புரட்டினார்; சிரித்தார். அவருக்கு விஷயம் விளங்கிவிட்டது. ஆரியன் மிக்க விகேத்துடன் அற்புத நிகழ்ச்சி ஏற்படச் செய்யத் துணிந்தது கண்டு ஆயாசமடைந்தார். தான் அறிந்த உண்மையை ஊராருக்கு உரைத்திட கருதினார். சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்தார். ஊரெங்கும் ஆரியனின் மகிமையைப் பற்றிய பேச்சாகவே இருக்கக் கண்டு ஏங்கினார். ஆலயமென்பது ஆரியக்கோட்டை என்பதும், தந்திர யந்திரம் என்பதும், பாமரருக்குப் பலிபீடம் என்பதும், சிந்தனைச் சுதந்திரத்தை இழந்தவர் சிக்கிச் சிதையும் சிலந்திக்கூடமென்பதும், அவருக்குத் தெரியும். அதனைத் தெரிந்திருந்த தமிழரோ, அதனை மறந்தனர். சூதுகளைச் சூத்திரங்கள் என்று நம்பியும், மமதையாளரின் போக்கை மகிமை என்று எண்ணவுமான நிலைபெற்றது கண்டு வாடினர். வீரமணியின் வாள் உறையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டதும், அது அவன் கரத்திலிருந்தும் மேலுக்கு இழுக்கப்பட்டது தேவி சக்தியினாலும் அல்ல; மந்திரத்தினாலுமல்ல; சாதாரண காந்த சக்தயினாலேதான் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், அவர் கூறும் மொழிகேட்க ஆட்கள் இல்லை. ருஜு கேட்பர்; நீ செய்து காட்டு என்று அறைகூவுவர் என்பது ஆசிரியருக்குத்தெரியும். தமிழர்கள் அறிவுத் திறனால், இயற்கையின் கூறுகளை, உண்மைகளைக் கண்டறிந்து, இயற்கையின் சக்தியை, மனிதனின் தேவைக்கு உபயோகித்ததை அவர் நன்கு அறிந்தவர். போர் முறைகளில் தமிழர் எவ்வளவு அபூர்வமான முறைகளைக் கையாண்டனர் என்பது அவருக்குத் தெரியும். உறையினின்றும் எடுக்கப்பட்ட வாள் மேலுக்கு எழும்பியது போன்ற அற்புதங்கள் பலவற்றைத் தமிழர் தமது வாழ்க்கையிலே நடைமுறையிலே காட்டி வந்தது, ஏட்டினால் அவருக்குத் தெரிந்தது. அத்தகைய ஏடுகளைத் தமிழர் மறந்து ஆரியக் கற்பனைகள் மலிந்து, சூதுகள் நெளிந்து கிடக்கும் ஆரிய ஏடுகளைக் கேட்டும் படித்தும் மதிகெட்டு வருவது அவருக்கு மிக்க வருத்தமூட்டிற்று. வாள் சம்பவத்தின் உண்மையை ஊர் மக்கள் உணரும்படிச் செய்யாவிட்டால், ஆரியன் எது சொன்னாலும் கேட்டு நம்பவும் எதைச் செய்தாலும் சரி என்று கூறித் தலை அசைத்துத் தாசராகவும் தமிழர் தயங்கமாட்டார்கள் என்பது தெரிந்து அவர் திகில்கொண்டார். அரசியின் கண்கள் ஆரிய நோயினால், கெட்டுக் கிடப்பது, தமிழகத்தையே கெடுத்துவிடும் என்று துக்கித்தார். சுவடிகளைப் புரட்டும் தமிழ்ப் புலவர், இனி சுலோகங் கூறுபவருக்கு அடைப்பம் தாங்கும் நிலை வருமோ என்று அஞ்சி, அறிவுத்றையிலே ஆற்றலுள்ளவர்களாக இருந்து, அழியாப் புகழ்பெற்ற அருந்தமிழ்ப் புலவர்கள் அளித்த அரிய கருத்துகள் தேய்ந்து வருவதை எண்ணி மனம் புழுங்கினார். அதுவரை மூலையில் கிடந்தவரும், முத்தமிழில் முழுத் திறமையற்றவருமாக இருந்து, வெறும் ஏடுதாங்கிகளாக இருந்த சில தமிழ்ப் பண்டிதர்கள், வாள் சம்பவத்தால் ஆரியனுக்கு ஏற்பட்ட மகிமையைக் கண்டு, அவன் புகழ்பாடி, பல்லிளித்து நிற்கப் புறப்பட்டது கண்டு கடுங்கோபங் கொண்டார். சில்லறை அறிவும், சுயநல வேட்கையும், பொருளாசையும் கொண்ட சில புலவர்கள் “மணிவீரன் வீழ்ச்சி” – “தேவி திருவருள்” – “வாள் விடு தூது” என்று பாக்களமைத்து, ஆரிய பாதந்தாங்கிகளாகி அவற்றைப் படித்துப் பொருள் ஈட்டவும் ஆரியனின் ஆதரவைப் பெறவும் கிளம்பினர். தமது கவித்திறமையைக் கபடனுக்குக் காணிக்கையாகத் தந்து, பொன் பெற்று வாழ வழி செய்து கொண்டனர். இவ்விதம், தமிழும், தமிழ் அறிவும், கலையும், கலைவாணரும், ஆரியத்துக்கு அரணாக அமைக்கப்படுவது தன்மானத் தமிழ்ப் புலவருக்குத் தாங்கொணாத் துயர் கொடுத்தது. என்ன நேரிட்டாலும் சரி; உண்மையை உரைத்திடுவது என்று தீர்மானித்தார் புலவர். அரசிக்கு ஓர் ஓலை விடுத்தார். அதிலே ஆரியன் கூறியபடி, தேவி சக்தியினால், வாள் கூரையில் தொங்கவில்லை என்றும், இயற்கையான ஓர் பொருளின் சக்தியினாலேயே, இது நிகழ்ந்ததென்றும், இதனை விளக்கிடத் தயாராகத் தாம் இருப்பதாகவும், சபை கூட்டினால் அதுபற்றிச் சகலமும் செப்ப முடியுமென்றும் புலவர் எழுதியிருந்ததுடன், இவ்விதமான மடல் விடுத்திருக்கும் செய்தியை நாற்சந்திகளிலே நின்று கூறிடவுமானார். ஊருக்கு இஃதோர் புதிய ஆச்சரியமாக இருந்தது. இவன் ஓர் புதிய பித்தன் என்று அரசி எண்ணினாள். நமது கீர்த்தியைக் கண்டு பொறாமைப்பட்டே, இக்கிழவன் இது போலப் பேசுகிறான் என்று ஆரிய தாசராகிவிட்ட புலவர்கள் எண்ணினர். ஆரியனோ, ஓர் எதிர்ப்பு மடிந்தால் மற்றொன்று பிறக்கிறதே, என்ன செய்வது என்று ஏங்கினான். சபை கூட அரசி ஏற்பாடு செய்துவிட்டாள். ஊர் திரண்டது. போலிப் புலவர்கள், ‘ஆரியனுக்குப் பரிவாரகமாக நின்றனர். அஞ்சா நெஞ்சினராகப் புலவர் சபை புகுந்தார்; அரசியை வணங்கினார். ஆரியன் அவரை அலட்சியமாகப் பார்த்தான்.  “ஆரிய! கேளாய், கெண்டை வீசி வராலிழுத்திடும் வகைபோல், ஆரியக் காரியம் நடைபெறுகிறது. தேவி திருவருள் என்று பேசி, நீ மக்களுக்கு மனமருள் உண்டாக்கினாய். என்று நான் உன்மீது குற்றம் சாட்டுகிறேன்” என்றுகூறினார். ஆசனத்திலமர்ந்தபடியே ஆரியன் பேசினான், புலவனிடமல்ல அரசியிடம்! “தேவி திலகமே! இந்தப் புலவனை, இந்தக் காரியமாற்றத் தாங்கள் நியமித்து எவ்வளவு நாட்களாயின” என்று கேலி மொழி பேசிய ஆரியன், நடுங்கும்படி புலவன் புகன்றார், “ஏ! பூசாரி! கெடுமதி எனும் உட்கோட்டை இடிய நாட்கள் வரும்; உன் மமதை ஒழியும்; வாள் சம்பவத்தைத் தேவியின் வரப்பிரசாதம் என்று கூறி, ஊரை ஏய்த்தாய். இது முழுப்பொய். வெறும் தந்திரம். மணிவீரனின் வாள், கூரையிலே தொங்குவதுபோல எத்தனை வாளை வேண்டுமானாலும் தொங்கும்படி நான் செய்யவல்லேன். வாள் மட்டுமல்ல! நீ வணங்கும் அந்தத் தேவியையே தொங்கும்படி செய்வேன்” ஆரியன், “புலவனே! கவியாகாதே! வாள் நொறுக்கப்பட்டுவிடும். என்னைத் தூஷித்து விடு. நான் கவலை கொள்ளேன். என் அன்னையை மட்டும் ஏளனம் செய்யாதே, பாழாக்காதே? தேவியை நீ அறியாய்! அவளுடைய அருளாலேயே என் உப்பைத் தின்று வளர்ந்த அந்த மணிவீரன், என்மீது வீசிய வாள் அவன் கரத்தை விட்டு இழுத்தெறியப்பட்டது. தேவியின் சக்தியே அதற்குக் காரணம்” என்று கூறினான். ஆரியனின் கோபத்தைக் கிளறிக் கிழக்கவி என்ன கஷ்டத்திற்கு ஆளாவானோ என்று மக்கள் பயந்தனர். புலவனோ, துளியும் பயங்கொள்ளவில்லை. சீற்றத்தால் முகம் சிவக்க நின்றான். “ஆரியனே! உன் மொழியால் என்னைத் தவறான வழியிலே செல்லும்படி செய்ய உன்னால் முடியாது. உன் மிரட்டலை நான் துரும்பெனவும் மதியேன். உன் சூது தெரியாதவர்களிடம் உன் சொரூபத்தைக் காட்டு. தமிழன் என்ற உணர்ச்சியை இழக்காதிருக்கும் என்னிடம் காட்டாதே உன் இறுமாப்பை. நான் பொன்னனுக்காகப் புளுகுரைக்கும் புலவனல்லன்; பாமரருக்குச் சாமரம் வீசிச் சொகுசாக வாழச் சொர்ணம் தேடும் சோற்றுத் துருத்தியுமல்ல. உண்மைக்கு ஊழியன். ஊர் முழுதும் உன்னை நம்புகிறது. ஆனால் நான் உன்னை மதிக்க மறுக்கிறேன்” என்று தைரியமாகக் கூறிய புலவரை நோக்கி, அரசி, “புலவரே! பொங்காதீர்; பொறுமையை இழக்காதீர்; பெரியவரைப் பழிக்காதீர். வாள் சம்பவம், தேவி சக்தி இல்லை என்று கூறுகிறீர், காரணம் கூறும், அது என்ன சக்தி என்பதை எடுத்துக்காட்டும். வீணாகத் தூற்றுவது விவேகமாகாது. மணிவீரன் கரத்திலிருந்த வாள் எப்படி அவன் கரத்தைவிட்டுப் பறந்து, மேலே சென்று தொங்கிற்று, அதற்குக் காரணங் கூறு” என்று கண்டிப்பாகக் கூறினாள். சபையோர் கைகொட்டினர். புலவர், அரசியாரே! “மணிவீரனின் வாள், கோவில் மாடத்திலே தொங்குவது தேவி சக்திதான் என்று ஆரியன் எப்படி ருசுப்படுத்த முடியும்?” என்று கேட்டார், “அவர் சொல்கிறார், நான் நம்புகிறேன். நீர் மறுக்க வந்தீர், நீரே காரணம் காட்டவேண்டும்” என்றாள் அரசி. “அரசியாரே! மேகத்தைக் கண்டு மயில் ஆடுவது ஏன் தெரியுமோ தங்களுக்கு” என்று புலவன். கேட்டான். ஆரியன், “அபாரமான அறிவு இவருக்கு” என்று கேலி செய்தான். அரசியாரும் சிரித்திடக்கண்ட செந்தமிழ்ப் புலவன், “அரசியரே! சபையினரே! மேகத்தைக் கண்ட மயில் ஆடக்காரணம், அந்த மேகத்திடம், மயிலுக்கு மகிழ்ச்சியூட்டி, மயிலைத் தன்வசம் இழுக்கும் ஓர் காந்தசக்தி இருப்பதுதான். அதுபோலவே தேனில் உள்ள காந்தசக்தியே, வண்டுகளை ரீங்கார மிடச் செய்கிறது. அழகில்உள்ள காந்தசக்தியே, ஒருவர் மனதை மற்றொருவருடைய மனதுடன் பிணைக்கிறது. இயற்கைப் பொருள்களுக்குள்ள காந்த சக்தியின் தன்மையை அறிந்தோர், மணிவீரனின், வாள் காந்த சக்தியினாலேயே இழுக்கப் பட்டது என்பதை அறிவர். கோயில்மாடிக் கூரையிலே, ஓரிடத்திலே, ஆரியன், காந்தக் கல்லை அமைத்திருக்கிறான். அந்தக் கல்லின் காந்த சக்தியே, மணிவீரனின் உருவிய வாளை தன்னிடம் இழுத்துக்கொண்டது. சந்தேகமிருப்பின், கூரையிலே, நான் குறிப்பிடும் அக்கல்லைப் பெயர்த்தெடுத்துவிட்டுப், பிறகு, வாளையோ, வேறு எதையோ, மேலே போகச்செய்ய உத்திரவிட்டுப் பாருங்கள். உரத்த குரலிலே, தேவி! தேவி! என்று ஆயிரந் தடவை ஆரியன் அர்ச்சித்துப் பார்க்கட்டும், அசைகிறதா தேவி என்று பார்க்கிறேன்” என்று கோபத்துடன் கூறினான். சபையினர், புலவனின் பேச்சு, ஆரியனின் முகத்திலே, ஓர் விதமான மாறுதலை உண்டாக்கியது கண்டு, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அரசியோ, ஆரியனோ, புலவரின் அறைகூவலுக்குப் பதில் கூறுமுன், சேவகர் சிலர் ஓடிவந்து, “மணி வீரன், சிறைச்சாலையினின்று தப்பித்துக் கொண்டு ஓடுகிறான், அவனைப் பிடிக்க ஆட்கள் கிளம்பிவிட்டனர்” என்று கூறிடவே, சபையிலே விசேஷ பரபரப்பு ஏற்பட்டது.                                                                பகுதி - 12   “இதுவும் உன் தேவியின் திருவருள் போலும்” என்று புலவர் சிரித்துக்கொண்டே கேட்டார். சபையிலே இது சிரிப்பை உண்டாக்கவில்லை. மணிவீரன் ஓடிவிட்டான் - சிறைக் கூடத்தைவிட்டுத் தப்பித்துக் கொண்டான்” என்ற சத்தம் பலமாகிவிட்டது. குழப்பத்தை உத்தேசித்துச் சபையை அரசி கலைத்து விட்டனர். சிறையிலே தள்ளப்பட்ட வீரமணி அங்குக் காற்றும் சரியான உணவுமின்றிக் காவலாளிகளின் கடுங்கோபத்தால் தாக்கப்பட்டு, வருந்தவேண்டுமே என்பதைப் பொருட்படுத்த வில்லை. என்றையதினம் நடனராணியைப் பிரிய நேரிட்டதோ, அன்றே உலகமே அவனுக்குக் கொடுஞ் சிறையாகிவிட்டது. கலிங்கப் போர் முடிந்ததும், அக்கட்டழகியை மணம் புரிந்து கொண்டு, காதல் சுவையை உண்டு களித்து வாழலாம் என்று எண்ணி இறுமாந்திருந்தவனுக்கு, நேரிட்ட விபத்து, அவன் மனத்தை மிக வாட்டி விட்டதால், நடனாவைக் கண்டு அவளுடன் பேசி மகிழும்வரை, அவன் தன்னை ஒர் சிறையிலே காலந்தள்ளும் ஓர் கைதி என்றே கருதிக்கொண்டிருந்தான். அவள் இல்லா வாழ்வு, நிலவில்லா வானமாக இருந்தது. உலகு, தனது வழக்கமான வசீகரத்தைக் காட்டிய படிதான் இருந்தது. காலைக்கதிரோன் உதயமும், அதுகண்டு கூடுகளிலிருந்து கிளம்பிக் கீதம் இசைத்த வண்ணம் சிறகை விரித்துச் செல்லும் பறவைகளும், கறவைப்பசு தன் கன்றுகளின் முதுகை நாவினால் அன்புடன் தடவிக் கொடுப்பதுமாகிய காட்சிகள் எப்போதும் போல நடந்துவந்தன. குயில்கூவ மறக்கவில்லை! மயில் நர்த்தனத்தை நிறுத்தவில்லை, தென்றல் வீசாமலில்லை, இயற்கை தன் எழிலைக்குறைத்துக் கொள்ளவில்லை. ஆனால், இவைகள் முன்பு இன்பமூட்டியது போல வீரமணிக்கு இன்பந் தரவில்லை. அவன் மனம், நெய்குறைந்த தீபமாயிற்று. காதலற்ற வாழ்வு அவனுக்குக் கடுஞ்சிறையாகவே இருந்தது. எனவே, மலர்புரி அரசி, ஆரியனின் மாயமொழி கேட்டுத் தன்னைச் சிறைப்படுத்தியதால், அவன் சோதிக்கவில்லை. ஆனால், வந்த காரியம் முடியவில்லையே என்று வருந்தினான். கலிங்கக் கிழவன் கூறிய குமரியைக்கண்டுபிடிக்கவில்லை. மலர்புரி அரசியின் கள்ளக்காதலின் கனி அக்கன்னி, என்பதுமட்டுமே அரசியுடன் பேசியதிலிருந்துதெரிந்தது. உத்தமன் திடீரென்று அங்குவந்து சேர்ந்த மர்மம் என்ன? என்பது தெரியுமுன், ஆரியனின் சதிநாடகம் நடக்கவே, காரியம் வேறுவிதமாகிவிட்டது. இவைகளைத் தீரவிசாரித்துத்தக்க பரிகாரங்கள் தேடிக், கலிங்க கிழவனுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டுப் பிறகு நடனாவைச் சோழமண்டலத்திலிருந்து வெளிஏறச் செய்து, எங்கேனும் ஓரிடத்தில் வாழவேண்டும் என்பது வீரமணியின் எண்ணம். இது ஈடேற முடியாதபடி சிறைவாசம் ஏற்பட்டதே. என்றே கருதிக்கலங்கினான். சிறைக்கூடத்திலே ஆரிய முனிவனின் ஆதிக்கம் கூடாதென்று ஆரம்பத்திலேயே, எதிர்த்துப் போராடிச் சிறைப்பட்ட பலரைக் கண்டான். அவர்களிற்சிலர், மனம் உடைந்துகிடந்தனர். அவர்களைத் தேற்றி, “இரவு எவ்வளவு இருண்டுகிடப்பினும், விடிந்தே தீர வேண்டுமல்லவா! அதுபோலவே, ஆரியம் மலர் புரியை எவ்வளவு கப்பிக் கொண்டிருப்பினும், தமிழ் உணர்ச்சி ஓர் நாள் உதிக்கப்போவது உறுதி, நீங்கள் சிந்திய இரத்தமும், வடித்த கண்ணீரும், வீண்போகாது. வெண்ணெய்திரண்டுவரும் சமயத் திலே, தாழி உடைந்த கதைபோல, ஆரியனின் சதிச்செயலை அரசியார் உணரும்படி செய்யச் சரியான சமயம் கிடைத்தது என்று எண்ணிய நேரத்திலே, அவன் ஏதோ ஓர் மாயவித்தை செய்து, என் ஏற்பாட்டைக் கெடுத்துவிட்டான். அதனாலே அவன் தலைதப்பிற்று, நான் சிறைப்பட்டேன்” என்று வீரமணி கூறினான். “அப்படி என்ன மாயவித்தை செய்தான்” என்று ஒருவன் கேட்டான். “அது உண்மையிலேயே, மாயந்தான். தேவி கோயிலிலே, நான், ஆரியனின் சிரத்தை வெட்டக் கத்தியை ஓங்கினேன். ஆனால், ஏதோ ஓர் சக்தி, என்கையிலிருந்த கத்தியை மேலுக்கு இழுத்துக் கொண்டது. வாள், கோயிற்கூரையிலே போய்த் தொங்கிற்று,” என்று வீரமணி விளக்கினான்.  “அப்படியா? ஆச்சரியந்தான் அது” என்று பலர் வியந்து கூறினர். இப்பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஓர் கைதி, கேலிச் சிரிப்புடன் பேசலானான். “மகா பெரிய ஆச்சரியந்தான்! தேவிகோயில் கூரைமீது மாகாளி உட்கார்ந்துகொண்டு, இவன் வீசியவாளை மேலுக்கு இழுத்துக்கொண்டது. இது தானே உங்கள் எண்ணம். ஆச்சரியமாம் ஆச்சரியம். பாருங்கள் என் இருகரங்களை, இவை செய்த ஆச்சரியம் அது. ஆமாம்; இப்போது எலும்புந்தோலுமாகிக் கிடக்கும் இக்கரங்கள் செய்துதந்த ஆச்சரியந்தான், உங்களுக்குத் திகைப்பை உண்டாக்கிவிட்டது. ஏன், என்னை விறைத்துப் பார்க்கிறீர்கள். கிழவனுக்குக் குழம்பிவிட்டது என்று நினைக்கிறீர்களா! நான் புத்தி சுவாதீனத்துடனேயே பேசுகிறேன். என் திறமையே, என்னைச் சிறையிலே தள்ளிற்று. அந்தத் திறமையே ஆரியனின் தலையைத் தப்பவைத்தது, அத்திறமையே, இவளைச் சிறைக்கு அனுப்பிவைத்தது” என்று அக்கிழக்கைதி பேசினான். வீரமணி அவனை அன்புடன் உபசரித்து, ‘பெரியவரே! நாங்கள் அனுபவமில்லாதவர்கள், ஆகையினால் தங்களின் அற உரையின் பொருள் எமக்கு விளங்கவில்லை. தயவு செய்து, எமக்கு அந்த வாள் மேலேறிய விந்தையை விளக்குங்கள்” என்று வேண்டிக் கொண்டான். கிழவர், “அப்படிக் கேள்! தம்பீ! உன்னைவிட, அதிக வினயமாகத்தான், ஆரியன் என்னிடம் பேசினான். ஊராளும் அரசியையே தன் உள்ளங்கையில் அடக்கிவைத்துள்ள ஆரியன், என்னிடம் அன்போடும் மரியாதையுடனும் பேசக்கேட்டு நான் சற்றுக் கர்வமடைந்தேன். நமது பெருமையை உணர்ந்து, நம்மிடம் அடக்க ஒடுக்கமாய் ஆரியன் நடந்துகொள்கிறான், அவன் மற்றவர்களை அடிமை போல் நடத்தினால் நமக்கென்ன? நம்வரையில் அவன் மதிப்பு தருகிறான் என்று என் சுயநலத்தை மட்டுமே பெரிதென்று எண்ணினேன். நமது தமிழரிற்பலர், இத்தகைய நினைப்பினாலேயே நாசமாகின்றனர்.” “என்னிடம் ஆரியன் சரியாக நடக்கிறான். எனக்கோர் கேடும் செய்யவில்லை. என்னிடம் ஆணவமாக நடந்துக் கொள்வதில்லை, மற்றவர்களை அவன் எப்படி நடத்தினால் எனக்கென்ன” என்று எண்ணுவது, ஆரியம் வளர மறைமுகமாக ஆக்கந்தருவதாகும். இதனை நான் அன்று உணராமல், ஆரியன் அடக்கமாகப் பேசுகிறான்; அன்புடன் பேசுகிறான் என்று எண்ணி அகமகிழ்ந்தேன். அதன் விளைவுதான்,இச்சிறைவாசம், என்று பேசிக்கொண்டே, வியர்வையைத் துடைத்துக் கொள்ளலானான். அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்குக் கிழவன் சுற்றிவளைத்துப் பேசிக்கொண்டிருக்கிறாரே, விஷயத்துக்கு வரக் காணோமே என்று சலிப்பு ஏற்பட்டது. அதையும் கிழவன் யூகித்தறிந்துகொண்டு “கிழவன் வம்பளக் கிறான் என்று எண்ணுகிறீர்களா! கேளுங்கள் என் துயர்மிக்க கதையை. நான் ஓர் சிற்பி, கட்டட வேலையில் கைதேர்ந்தவன். எத்தனையோ மன்னர்கள் நான் கட்டிய மண்டபத்திலே தர்பார் செய்திருக் கின்றனர், எவ்வளவோ அரசகுமாரிகளுக்கு நான் அழகான உப்பரிகைகள் அமைத்துக்கொடுத்திருக்கிறேன். கோட்டை அமைப்பதும், சுரங்க வழிகள் அமைத்திடுவதும், பொறிகள் அமைப்பதும், எனக்குப் பிரியமான வேலைகள். என் திறமையைத் தெரிந்துகொண்டு ஆரியன் ஓரிரவு, என் வீடு வந்தான். அரசியை ஆட்டிவைக்கும் ஆரியன், என் வீடு தேடி வந்ததும் நான் மலைத்துப்போனேன். புன்னகையுடன் அவனை வரவேற்று, ஆசனத்திலமர்த்தி அருகினிலமர்ந்து, “என்ன விசேஷம்? இவ்வளவு சிரமப்பட்டு, என்னை நாடி வந்த காரியம் என்ன?” என்று வினயமாகப் பேசினேன்.  “மலையிலிருக்கும் மூலிகை வேண்டுபவன், மலையிருக் குமிடம் செல்லத்தானேவேண்டும். திறமை மிக்கவனே! உன்னை நான் தேடிவந்ததிலே வியப்பென்ன இருக்கமுடியும்? உன் திறமைக்கு, மூவேந்தருமன்றோ உன் வீட்டு வாயற் படியிலே காத்துக் கிடக்கவேண்டும்” என்று ஆரியன் என்னைப் புகழ்ந்தான். அவன் ஏதோ சுயநலத்துக்காகவே என்னை முகஸ்துதி செய்கிறான் என்று தெரிந்தது. ஆனாலும், அவன் புகழ்ந்தது எனக்கு ஆனந்தமாகத் தான் இருந்தது. ஊரெல்லாம் இவனைப் புகழ்கிறார்கள், இவன் நம்மைப் புகழ்கிறான், என்ற நினைப்பு என் நெஞ்சிலே தவழ்ந்தது. நான் ஆரியனின் வலையில் வீழ்ந்தேன். “அப்படியொன்றும் நான் திறமையுடையவனல்லவே, நானோர் சாதாரண சிற்பி?” என்று பேசினேன். “சிற்பி, என்றால் சாதாரண விஷயமா? சிருஷ்டிகர்த்தா அல்லவா நீ! கரடுமுரடான கற்களை நீ, கண்கவரும் உருவங்களாக் குகிறாய்; உணர்ச்சி யூட்டும் உருவங்களாகச் செய்கிறாய், அது இலேசான காரியமா! சிற்பத் திறமை சாமான்யமான தல்லவே. ஜெகத்திலே உள்ள அருங்கலைகளிலே அது சிறந்த தன்றோ! எங்ஙனம் ஓர் தாய், பத்து மாதம் சுமந்து, வலியைப் பொறுத்துக்கொண்டு, குழந்தையைப் பெற்றெடுத்ததும், அவள் களிப்பெனும் கடலில் மூழ்கி, இதோ பாரீர் என் சிருஷ்டியை! நான் ஈன்ற இச்சேய் இருக்கும் சுந்தரத்தைக் காணீர் என்று பெருமையுடன் கூறிக்கொள்வாளோ அது போல நீயும், கருங்கற் களிலே உன் கருத்தின் திறனையும் கைத்திறமையையும் காட்டிக் கலையின் இருப்பிடமாக்கி, உருவமாக்கியதும் உள்ளப் பூரிப்போடு உலகுக்கு உரைக்கலாம், உனக்கு அந்த உரிமை இருக்கிறது. ஆகவே சிற்பியே உன் சமர்த்தை நான் ஆண்டவனின் சமர்த்துக்கு ஈடானதாகவே மதிப்பிடுவேன். ஆண்டவன் கோயிலுக்கும், சிற்பியின் கூடத்துக்கும் வித்தியாசம் காண்கிலேன்” என்று ஆரியன் பேசினான். நான் அவன் வயப்பட்டு, “என்னால் ஏதேனும் தங்கட்குக் காரியம் ஆக வேண்டுமா? கூறுங்கள்; செய்து தருகிறேன்” என்று உரைத்தேன். அப்போது அவன் தேவி கோயிலுக்குப் புது மாதிரியான அமைப்புகள் செய்து தரச் சொன்னான். நான் என் திறமையைக் காட்ட, கோயில் மண்டபத்திலே மூன்று இடங்களிலே காந்தக் கற்களை அமைத்துத் தந்தேன், அந்தக்கற்கள் இருக்குமிடத்தினருகே இரும்பாலான எந்தப் பொருளைக் காட்டினாலும், காந்தக் கல்லின் சக்தியால் அப்பொருள் மேலுக்கு எழும்பிவிடும். நான் அமைத்துத் தந்த இந்த அற்புதக் கட்டட வேலை முடிந்ததும். அந்தக் கபட வேடதாரி, என்மீது பழி பல சுமத்தி இச்சிறையிலே தள்ளிவிட்டான். நான் வெளியே இருந்தால், காந்தக் கல்லின் சக்தியை அவன் தேவி திருவிளையாடலென்று உரைத்திட முடியாது. சூது பலிக்காது. ஆகவே தான் என்னை இங்கே அநியாயமாகத் தள்ளிவிட்டான்” என்று கிழவன் கூறி அழுதிட, வீரமணி அவனைத் தேற்றிவிட்டு, கத்தி மேலுக்கு எழும்பிய தன் காரணம் விளங்கிவிட்டதால், மனக் குழப்பம் நீக்கப்பட்டு, இனிச் சிறையைவிட்டு எங்ஙனம் வெளி ஏறுவது என்று யோசனையில் இறங்கினான். பலப் பலயோசனைகளுக்குப் பிறகு வழி தோன்றிற்று. உணவு கொண்டுவருபவனைப் பிடித்து கட்டி உருட்டி விட்டு, அவன் உடைகளைத் தான் அணிந்து கொண்டு வெளியே தப்பி ஓடிய கைதிகளின் கதை வீரமணிக்குத் தெரியும், ஆனால், அவ்விதமாகப் பலர், தப்பித்துக் கொண்டதால், காவலாளிகள், சற்று எச்சரிக்கையுடனேயே நடந்து கொண்டனர். எனவே, அந்த வழி சரியானதாக வீரமணிக்குப் பயன்படவில்லை. சிற்பியுடன் கலந்து பேசியதாலேயே, வீரமணிக்குச் சரியான வழி தோன்றிற்று. “நான் இச்சிறையி லிருந்து தப்பித்துக்கொண்டு போக வேண்டுமென்று நினைத்திருந்தால், நெடுநாட்களுக்கு முன்பே, போயிருப்பேன். ஆனால் நான் வெளியே போனால், பலன் இல்லை என்றே உள்ளே தங்கிவிட்டேன். இதனையே என் மாளிகை என்று கருதிவிட்டேன். நீ தப்பிப்போனால், ஏதேனும் பலன் ஏற்படக்கூடும். நீயோ வாலிபன்; வீரன், உன்போன்றவர்களாலேயே ஆரிய ஆதிக்கத்தை ஒழிக்க முடியும், இந்த வயோதிகனால் முடியாது. நீ தப்பிப்போக நான் ஓர் மார்க்கம் காட்டுகிறேன்”, என்று கிழவன் உருக்கமாகக் கூறினான். வீரமணி பெரியவரே! உமது தியாக உணர்ச்சி தமிழ்ப்பண்பு இன்னமும் பட்டுப்போகவில்லை என்பதைக் காட்டுகிறது. நான் தப்பினால், உம்மை போன்ற உத்தமர்களைச் சிறையிலிட்ட அக்கொடியவனின் ஆதிக்கத்தை ஒழீக்க நிச்சயமாக வேலைசெய்வேன், இனி மலர்புரியிலிருந்து கொண்டு, அக்காரியம் செய்யமுடியாது. நான்வேறு மண்டலம் சென்று, இக்காரியத்துக்கான வீரரைத் திரட்டிப் படை எடுத்துவரவே எண்ணுகிறேன் என்று உறுதிமொழி கூறினான். கிழவன், களிப்புடன், வீரமணியைக் கட்டித் தழுவிக் கொண்டு, “நீ நிச்சயமாக வெற்றி அடைவாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று பாராட்டிப்பேசினான். ஒருவார காலத்தில், சிற்பி, சிறைச்சாலையிலே கிடைக்க கூடிய பொருள்களைக் கொண்டே கருவிகள் தயாரித்துக்கொண்டு, வீர மணிக்கு என ஏற்பட்டிருந்த அறைக்குவரும் தாழ்வாரத்திலே, சில கற்களைப் பெயர்த்தெடுத்துவிட்டுப் பள்ளம் உண்டாக்கி விட்டான். அதன்மீது கருப்புக் கம்பளியைக் கற்பாறை போலத் தெரியும்படி மூடி வைத்தான். இந்தச்சூது தெரியாத, சிறைக் காவலன் அன்றிரவு, வீரமணியையும் மற்றக் கைதிகளையும் அறைகளுக்குப் போகச்சொல்லிவிட்டுத், தாழ்வாரத்தின் வழியாகச் சென்றான்; பள்ளத்திலே வீழ்ந்தான். இதனை எதிர்பார்த்துக் கொண்டிருந்த வீரமணி, ஒரே அடியாகப்பாயந்து, காவலாளியின் குரல்வளையைப் பிடித்தழுத்திக் கட்டிப் போட்டு விட்டு அவன் உடைகளைத் தான் அணிந்துகொண்டு, மற்றக்காவலாளிகளை ஏய்த்துவிட்டு வெளி ஏறிவிட்டான். நடுச்சாமக் காவலாளி, கைதிகள் சிரித்துக் கொண்டும் கேலி பேசிக்கொண்டும் இருக்கக்கேட்டு, விளக்குகளைத் தூண்டிவிட்டு, இடத்தைச் சோதிக்கத் தாழ்வாரத்திலே பள்ளம் இருக்கக்கண்டு, ஆச்சரியப்பட்டு, அறைகளைச்சோதிக்க, வீரமணியின் அறையிலே ஓர் உருவம் குப்புறக்கிடக்கக்கண்டு அருகேசென்று பார்க்க, வீரமணிக்குப் பதில், காவலாளி, கைகால் கட்டப்பட்டு உருண்டு கிடக்கக் கண்டு, வீரமணி தப்பி ஓடிவிட்டான் என்பதைத் தெரிந்து கூவினான். காவலாளிகள் வெளியே சென்று தேடவும், அரசிக்குச்சொல்லி அனுப்பவுமாயினர். கூக்குரல் அடங்குமுன், வீரமணி ஊர் புறம் அடைந்தான். காவலாளி வேடத்தைக் கலைத்துவிட்டு, ஓடலானான். குதிரை மீதேறிக் கொண்டு சிலர் தன்னைத் தேடிக் கொண்டுவரக். கண்டு, வீரமணி, ஊருக்கடுத்திருந்த கானகத்துக்குள் நுழைந்து, அடர்ந்த பகுதிக்குப்போய், அங்குக் காணப்பட்ட ஒரு குகையில் புகுந்தான். குகையிலே வீரமணி உள்ளே நுழைந்து, குகையைக் கூர்ந்து நோக்குகையில், இரு நெருப்புப்பொறிகள் தெரிந்தன. பொறிகள் வரவர பெரிதாகிக் கொண்டே வரத்தொடங்கிற்று. காலடிச்சத்தம் கேட்டது. வீரமணி திடுக்கிட்டான். தன்னை நோக்கி ஓர் புலி வருகிறதென்பது தெரிந்தது. என்ன செய்வதென்று தீர்மானிக்கு முன்பு, புலி சீறிக்கொண்டே வீரமணியை நெருங்கிவிட்டது. புலிக்கு இறையாவதினின்றும் தப்பித்துக் கொள்ள ஓர் வழியும் இல்லையே. வெளியாக இருந்தாலாவது, புலியுடன் கட்டிப்புரண்டு போரிட்டாவது; மாளலாம். ஓடிச் சண்டை செய்யமுடியாத குகையிலல்லவா சிக்கிக்கொண்டோம்; எப்படித் தப்பமுடியும் என்று திகைத்த வீரமணியின் மனக் கண்முன், கேலிச் சிரிப்புடன் ஆரியன் நிற்பது போலவும், அவன் அடி வருடிக்கொண்டு மலர்புரி அரசி இருப்பதுபோலவும், நீர்புரளும் கண்களுடன் நடனராணி நிற்பதுபோலவும் தோன்றிற்று. சாவுக்கும் தனக்கும் இடையே, சிலஅடி இடம் மட்டுமே இருப்பதை எண்ணினான்; மயக்கம் உண்டாயிற்று; கண்கள் மூடின; காது குடையும்படியான பெருங்கூச்சல் கேட்டு, மூடின விழியைத் திறந்தான். எதிரே இருந்த புலி மரணாவஸ்தைப் படுவதைக் கண்டான். வீரமணிமீது பாயப்புலி தயாராக இருந்தபோது, குகையின் கூரைச்சுவரின் பிலத்திலிருந்து மலைப்பாம்பு, சீறிப், புலியின் வயிற்றைத் தன் உடலால் அணைத்து அழுத்திக் கொல்ல முனைந்தது. திடீரென, மலைப் பாம்பு, தன்னைச்சுற்றி வளைக்க ஆரம்பிக்கவே புலி பெருங்கூச் சலிட்டுச் சுவரிலே மோதியும், தரையில் புரண்டும், கால் நகங் களால் பாம்பின் உடலைக் கீறியும், மலைப்பாம்பின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளப் போரிட்டது. மலைப்பாம்போ, பிலத்திலே பாதிஉடலை வைத்கொண்டு, மற்ற பாதியால், புலியின் வயிற்றை இறுக்கிற்று. விநாடிக்கு விநாடி, புலியின் வேதனை வளர்ந்தது. பாம்பின் பிடி தளரவில்லை. புலியின் வாயிலே நுரைத்தள்ளலாயிற்று. விழி வெளிவந்து விடும் போலாகிவிட்டது. மலைப்பாம்பின் பிணைப்பை நீக்கமுடியாது புலிதவித்தது. இக்காட்சிளைக் கண்ட வீரமணி களித்து, இதுதான் சமயமென்பது தெரிந்து, குகையை விட்டு வெளியே வந்துவிட்டான். புலியின் சத்தம் வரவர அடங்கலாயிற்று. சரி, மலைப்பாம்பு வெற்றிபெற்று விட்டது போலும், என்று எண்ணியபடியே, வீரமணி, கானகத்திலே மேலும் சென்றான். ஒவ்வோர் புதருக்கருகிலும் சலசலப்பு கேட்கும் போதெல்லாம், புலியோ, சிறுத்தையோ, என்று பயப்படவேண்டி இருந்தது. காட்டைக்கடக்க முடியுமா? வழியிலேயே பிணமாக வேண்டியதுதானா, என்று சந்தேகிக்க வேண்டி இருந்தது. எதிர்பாராத ஆபத்துகள் இமை கொட்டு வதற்குள் ஏற்படக்கூடிய அந்த அடவியைக் கடந்தாகவேண்டும். ஆரியம்போலவே அடவியும் உயிர்குடிக்கும் விஷவிலங்களின் விடுதிதானே? என்று நினைத்து வீரமணி தனக்குள் நகைத்துக் கொண்டான். ஓரிடத்திலே, கனி குலுங்கும் மாமரம் கண்டு, பழத்தைப் பறித்து உண்ணலானான். அவனது ஆயாசம் சற்றுத் தீர்ந்தது; பசித்தொல்லை குறைந்தது; ஆனால் புதியதோர் ஆபத்து வந்து சேர்ந்தது. வீரமணி, இரண்டோர் கனிகளைக் கையிலெடுத்துக்கொண்டு, போகப்புறப்பட்டான். போகாதே! நில்! என்று ஓர்குரல் கேட்டுத்திடுக் கிட்டான். ஆள் நடமாட்டமே இருக்கமுடியாத அந்த அடவியில். பேச்சுக் குரல் கேட்டால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். சுற்றுமுற்றும் பார்த்தான், யாரும் தென்படவில்லை. மனப்பிராந்தி போலும் என்று எண்ணிக்கொண்டு, இரண்டடி எடுத்து வைத்தான், மறுபடியும் அக்குரல் கேட்டது போகாதே! நில்! வீரமணிக்கு ஆச்சரியமாகத்தானே இருக்கும். சுற்றுமுற்றும் பார்த்தான், யாரும் தென்படவில்லை. மனப்பிராந்தி போலும் என்று எண்ணிக்கொண்டு, இரண்டடி எடுத்து வைத்தான், மறுபடியும் அக்குரல் கேட்டது போகாதே! நில்! வீரமணிக்கு ஆச்சரியம் போய், அச்சம் பிறந்து விட்டது. யார் என்னைத்தடுப்பவன்? என்று கூவிக் கேட்டான். பதில் இல்லை. மறுபடி போகத் தொடங்கினான்; போகாதே! நில்! என்று மறுபடியும் குரல் கிளம்பிற்று. மறுபடியும் வீரமணி, குரல் எப்பக்கமிருந்து வருகிறதென்று கவனித்தான். மரத்துக்கிளையிலே ஓர் கிளியும், வேறோர் பக்கத்திலே குரங்கும் தவிர அவன் கண்களிலே ஆள்யாரும் தென்படவில்லை. “இதோ பெரிய தொல்லை” என்று சலித்துக் கூறிக்கொண்டே மறுபடி நடக்கலானான். போகாதே! நில்! என்று கூவிக்கொண்டே, மரக்கிளையிலிருந்து கிளி பறக்கக் கண்டு. வீரமணி வாய்விட்டுச் சிரித்து, “அட, பேசும் கிளியே! நீயோ, என்னைப் பயப்படவைத்தாய்” என்று கூறிக்கொண்டே கிளியை நோக்க, அது. வேகமாகப் பறந்து சென்றிடக்கண்டு, “இவ்வளு அருமையாக இக்கிளிக்கு யார் பேசுவதற்குப் பழக்கப்படுத்தினார்கள்? பேசும் கிளி இங்கு காணப்பட்டதால் பக்கத்திலே யாரோ வசிக்கிறார்கள், என்ற எண்ணம் ஏற்படுகிறதே. இங்கே, காட்டிலே யார் வசிக்கிறார்கள்? என்று யோசித்தபடியே நடக்கலானான். சிறிது தூரம் நடந்ததும், போகாதே! நில்! போகாதே! நில்! என்று உரத்த குரலொலி கேட்டது. கிளியா இப்படிக் கூவிற்று என்று திரும்பிப் பார்க்கத் தன்னை நோக்கி நாலைந்து வேடர்கள் ஓடிவரக் கண்டான்; நின்றான். அவர்கள் இளைக்க இளைக்க ஓடிவந்து, வீரமணியின் எதிரே நின்றனர். அவர்களுடன், முன்பு வீரமணிகண்ட குரங்கும் இருக்கக்கண்டு, இக்குரங்கு ஜாடை காட்டியே இவர்களை அழைத்து வந்ததுபோலும் என்று எண்ணி, “வேடர்களே! நான் வேற்றூர் போகக்கருதி இக்காட்டிலே புகுந்தேன், போகாதே நில்! என்று கூவிடும் கிளியும். ஆள் நடமாட்டம் கண்டால் உங்கட்குச் சேதிகூற ஜாடை செய்யும் இக்குரங்கும், சற்றுத் தொலைவிலே இருக்கக் கண்டேன்; என்னைத் தடுப்பானேன்?” என்று வீரமணி வேடர்களைக் கேட்டான். அவர்களுள் தலைவன்போல் காணப்பட்ட ஓர் இளைஞன், “கிளியும் குரங்கும், எம்முடையனவே. நீர் யார்? ஏன் இங்குவந்தீர்? கையிலே இருப்பது மாங்கனிதானே! ஏன் பறித்தீர்?” என்று கேட்க, வீரமணி, “நான் யாரென்பது கூறினால், உங்களுக்குத் தெரியாது? நீங்கள் இக்காட்டு வேடர்கள் என்பது எனக்குத் தெரிகிறது. இக்காடு இன்னம் எவ்வளவு தூரமிருக்கிறது? எவ்வளவு நேரம் பிடிக்கும் இதனைக் கடக்க” என்று வேடுவத்தலைவனைக் கேட்டான். வேடுவத் தலைவன் சிரித்தபடி,“அரை மணிநேரத்திலே, இந்த அடவியைக்கடந்து அடுத்த ஊர் போகலாம், நாங்கள் அனுமதித்தால்” என்றான்.  வீரமணி,“நீங்கள் அனுமதிப்பதா? காட்டிலே நான் நடப்பதற்கு உங்கள் அனுமதி ஏன்” என்று கேட்டான்.  நாட்டிலே நடமாட, அரசரின் அனுமதி வேண்டுமல்லவா?” என்று வேடுவத் தலைவன் கேட்டான். ஆம், என்று வீரமணி பதிலிறுத்தான். “அதே சட்டம் காட்டிலேயும் உண்டு. இங்கு அரசு எங்களுடையது; ஆகவே எங்கள் அனுமதி இன்றி யாரும் இக்காட்டிலே நடமாட முடியாது” என்று வேடுவத் தலைவன் கெம்பீரமாகப் பேசினான். வீரமணி, “ஓஹோ! காட்டரசன் கூட்டமா நீங்கள்; சரி என்னை அனுமதிக்க ஏதேனும் நிபந்தனை உண்டோ” என்று கேட்டான். “நீர் எடுத்துச் செல்லும் பொருளைத் தந்துவிட வேண்டும்; அதுதான் இங்கு சட்டம்” என்று கூறிக்கொண்டே ஒரு வேடுவன் களிப்புடன் கூத்தாடினான். மற்றவர்களும் எடு! எடு! என்று கூவிக்கொண்டு தாளமிட்டனர். வீரமணி தலைவனை நோக்கி, “கொள்ளை அடிக்கும் கொடியவர்கள்தானா நீங்கள். சரி! என்னிடம் ஒரு பொருளும் இல்லை” என்று கூறினான். “கொள்ளை, என்று நீ கூறுகிறாய், காணிக்கை என்று நாங்கள் அதைச் சொல்லுகிறோம். சரி, உன்னிடம், பொருள் இல்லை என்று நீ சொன்னது முழுப்பொய். உன்னிடமிருக்கும் பொருளை நான் அறிவேன், நீ அதை மறைக்க முடியாது.” என்று வேடுவத்தலைவன் பேசினான். அப்பேச்சிலே, அதிகாரத்தைவிட அதிகமாக அன்பு தொனித்திடக் கண்ட வீரமணி ஆச்சரியப்பட்டு “உண்மையிலேயே என்னிடம் ஒரு பொருளும் இல்லை” என்று மீண்டும் கூறினான். “இதுவரை, எப்போதாவது, நம்மிடம் சிக்கியவர்கள் நாம் கேட்டதும், பொருள் இருப்பதாகக் கூறினதுண்டோ? மயில்கூட இறகுபோடு என்று கேட்டாலா போடுகிறது” என்று மற்றத் தலைவர்களிடம் கூறினர். இதற்குள் மற்றும்பல வேடுவர் அங்கு வந்தனர். வீரமணிக்கு, இவர்களிடமிருந்து தப்பமுடியாது என்பது விளங்கி விட்டது.  “நிச்சயமாகச் சொல்கிறேன். என்னிடம் பொருள் இல்லை - என்னைச் சோதித்துக் கொள்ளலாம், கையிலே ஒன்றுமில்லை, மடியிலேயுமில்லை” என்று கூறிக்கொண்டிருக்கையிலேயே வேடுவர்கள் வீரமணியைப் பிடித்துக்கொண்டு இழுத்துச் செல்லலாயினர். வீரமணி வேடுவத் தலைவனை நோக்கி, “ஐயா! இது அநீதி! நான் ஒருவன், நீங்கள் இவ்வளவு பேராகச் சூழ்ந்து கொண்டு, என்னைத் துன்புறுத்துவது பேடிச்செயல். என்னை வதைத்தாலும் பலன் இல்லை. என்னிடம் பொருள் இல்லை. நான் பராரி” என்று கூறினான்.                                                    பகுதி - 13   “மாதாட, மனமாட, மன்னன் பரிவாரமாட, மதனனும் நின்றாட, மகிழ்வாட, மலராட மார்பினிலே... ... ...” “பேஷ்! பேஷ் ரகுவீரரே! பதிகம் அருமையாக இருக்கிறதே. மகேஸ்வரனைத் துதித்துப்பாடும் பக்தரும் இவ்வளவு உருக்கமாகப் பாடினதில்லை’ பாடிய ரகுவீரன், பாண்டியனின் கொலுமண்டபத்திலே, முன்னிரவு, நடனமாடிய சுந்தரியிடம் சொக்கியதால், அவளைக் குறித்து எண்ணி எண்ணி ஏங்கிப் பிறகு பண் இசைத்தான். பாடுகையில் தன்னை மறந்தான், தன் நண்பனும் படையிலே தன்னைப்போலவே ஓர் தலைவனுமாகிய, கருங் கண்ணன் வந்ததையும் கவனிக்கவில்லை. ரகுவீரனின் பாடலைக்கேட்டு, கருங்கண்ணன் கேலி செய்யவே, ரகுவீரன், “கண்ணா! மகேஸ்வரனைக் கண்டவர் யார்? நான் கண்கண்ட கடவுளுக்கே கானம் இயற்றினேன்” என்றுரைத்தான். பிறகு இருவருக்கும் உரையாடல் நடக்கலாயிற்று. கருங் கண்ணன் துவக்கினான். “தேவனா? தேவியா?” “தேவியே திவ்ய தரிசனந்தந்தாள்; நடன மேடையில் நின்றாள்; கண்களை எய்தாள்; என்னை வென்றாள்.” “ரணகள சூரராகிய உம்மையா?” “ஆமாம் கருங்கண்ணா! இரண்டு வேல்கள் என் இருதயத்திலே பாய்ந்தன. அவள் அன்று நடன மேடையிலே ஆடினாள் என்றே அரசரும் பிறரும் எண்ணினர்; அவள் என் இருதயத்திலே நின்று ஆடினாள்” “மகிழ்தேன் நண்பரே! கட்க மேந்த முடியாத காலம் வந்தால் நீர் எப்படிப் பிழைப்பீர்! மகனும் இல்லையே காப்பாற்ற என்று எண்ணி நான் உம்மைப்பற்றிக் கவலைப்பட்ட துண்டு, இனி அக்கவலை இல்லை. கட்க மெடுக்காமல் வாழ உனக்கு வழியிருக்கிறது. கவி பாடிப் பிழைக்கலாம்.”  “விளையாடாதே!” “ஆமாம்! மாற்றார் நமது மண்டலத்தின் மீது போர் தொடுக்கும் வேளை; மகா பயங்கரமான காய்ச்சல் பரவி மக்களைச் சூரையாடும் சமயம்; பஞ்சமும் பரவுகிறது. நண்பா! மதனலீலைக்கு இது சமயமல்ல” “நீ இந்த வேதாந்தத்தைக் காமனிடம் கூறு. என்னிடம் காரியசித்திக்கு வழி சொல்லு” “வீதியிலே மக்கள் வேதனையுடன் பேசும் மொழி கேட்டிரா” “வீணரின் பேச்சை விடு” கண்ணா! “சாண்வயிற்றுக்காக அவர்கள்... ... ...” “சாகட்டும். நான் பிழைக்க வழி சொல்லு” “அவர்கள் செத்து, நீ பிழைப்பதா?” “அரசநீதி பேசவல்ல, உம்மை அழைத்தது. கருங்கண்ணா! புண்ணின்மீது பூ விழுந்தாலும் வேதனையே தரும் நண்பா! உன் குறும்பு என்னைக் குத்துகிறது.” “நாடகக்காரி என்று அவளை நினைத்து நெருங்குகிறாய். அவள் நெருப்பு!” “மணி முடிமங்கையோ?” “அதற்கும் மேலே!” “அடக்கும் உமது பேச்சை. அரண்மனைகள் கூட என் ஆவலைத் தடுத்ததில்லை” “உண்மை. ஆனால் சில சமயம் பணிப்பெண்கள் கூடப்பணிய மறுப்பதுண்டு.” “நடனசுந்தரிக்கு நான் எதையும் தருவேன். அவள் வேண்டுவது நிம்மதியான வாழ்வுதான். என்னால் அதைத்தர முடியும்.” “உமது சரசம் அவளுக்குச் சஞ்சலத்தைத் தான் தரும்.” “சரி உபதேசத்தை நிறுத்தும். நடனசுந்தரியை நான் எப்படியும் அடைந்தே தீர வேண்டும், இந்த நரை, ஊரார் நகைப்பு, பிறரின் பகை, ஆகிய எதையும் தடையாக எடுத்துக் காட்டாதே. கண்ணா! நான் என் மனதை எடுத்துக்காட்ட முடியாது. ஆனால் இதோ, நெற்றியைத் தொட்டுப்பார். தணலாகி விட்டது; தாங்கமுடியாத தாபம்.” “ஐயோ, பாபம்!” ரகுவீரன் பேச்சை நிறுத்திவிட்டான். கருங் கண்ணனின் தோளைப்பிடித்துக் குலுக்கினான், தாளைப்பிடிக்கத் தயாராக இருப்பதைக் காட்டினான். மொழிகூற வேண்டியதற்குமேல் அவன் விழி கூறிடவே, கண்ணன், வேறு முறையைக்கையாள்வோம் என்று கருதி, ‘அவள் என்ன அழகு? கன்னங்கரேலென்று கிடக்கிறாள். நடனமாடும் நேரம் தவிர மற்றச் சமயத்திலே, அவள் முகம் சோகபிம்பமாக இருக்கிறது. பேசுவதில்லை; சிரிப்பதில்லை; ஊரில் நடமாடுவதில்லை. அவளிடம் நீ என்ன இன்பம் பெற முடியும்” என்று கூறிட, ரகுவீரன் “அவள் சிரித்தால், நானும் சிரித்து விடுவேன்; பேசினால் நானும் பேசுவேன்; ஆனால், அவளுடைய மௌனம் என்னைக் கொல்கிறது. அவளுடைய சோகம் என்னைச் சோகத்திலாழ்த்துகிறது. அவளைப் பெற்று அணைத்துக்கொண்டு. என் கண்ணே! முகத்தைச் சுளித்தபடி இருக்கிறாய் என்று நான் கெஞ்சிக் கேட்பேன். பஞ்சணைக்குப் பக்கத்திலே அக்கொடி சாய்ந்தபடி, ஒன்றுமில்லை நாதா! என்று கூறிப் புன்முறுவல் செய்வாள், அந்த மலர்ச்சி, என்வாழ்வையே மலர வைக்கும். உப்பரிகை மீதுள்ள உல்லாசியை உற்று நோக்கும்போது, பலகணியைச் சாத்திவிடுவது போல, அவளை நான் பார்க்கத் தொடங்குகையில் அப்பாவை, பூவிழியை மூடி என் மனதைப் புண்ணாக்கி விடுகிறாள். சரசக்காரிகளைக் கண்டுள்ளேன். ஆனால் இவள் போல், சரசத்திற்கே இலாயக்கான ஓர் சிங்காரி வேண்டுமென்றே சோகமாக இருந்ததைக் கண்டதில்லை. அவளுடைய சொகுசு அச்சோகத்தால் கெடவில்லை. அதுவும் ஓர்விதமான சொகுசாகவே இருக்கிறது. தங்கச்சிலைக்குமேல் மஸ்லீன் மூடி போட்டு வைத்திருப்பது போன்றிருக்கிறது” என்று கூறிக் கவலைப்பட்டான். அவன் பேசிக் கொண்டிருக்கையிலேயே, கருங்கண்ணன் ஓலை ஒன்று எழுதியபடி இருந்தான். அதைக்கண்ட ரகுவீரன் வெகுண்டு, ஓலையைப்பிடுங்கி எறியப் போகையில்,“படித்துப்பார், பதைக்காமல்” என்று கண்ணன் கூற ரகுவீரன் படித்தான், சந்தோஷத்தால் குதித்தபின் சரியான யுக்தி! பேஷான யோசனை என்று பூரித்தான். “நாளைக்குப் பௌர்ணமி விருந்தொன்று நடத்த உத்தேசம், அதில் தாங்கள் கலந்துகொண்டு, தங்கள் நடனத்தால், விருந்தினரை மகிழ்விக்க வேண்டுகிறேன். மறுக்காமல் பதிலிறுக்க வேண்டுகிறேன். ரகுவீரன். “இந்த ஓலையைக் கண்டே உளம் மகிழ்ந்தான் ரகுவீரன். ஒரு விநாடியில் மீண்டும் சோகத்திலாழ்ந்தான். “நண்பா! விருந்திலே, நமது பிரமுகர்கள் கலந்து கொண்டால், கருத்தை நிறைவேற்றச் சமயம் கிடைக்காதே” என்றான். “பிரமுகர்கள் வந்தால்தானே தடை! பிரமுகர்போல் வேட மணிந்த சிலரை வரவழைப்போம். மது அருந்தி அவர்கள் மயங்குவர். பிறகு நடனம்; நடனத்திலே நான் இலயிப்பேன்; நீர் நடத்தும் பிறகு உமது நடனத்தை. மதுவை மங்கைக்கும் தந்து விடவேண்டும். அது தரும் ஆனந்தத்திலே அவளுடைய சோகம் பறந்தே போகும்” என்று யோசனை கூறிவிட்டு, ஓலையைத் தந்தனுப்பச் செய்தான். “தேனிலே தோய்த்துச் சாப்பிட மா, பலா, வாழை! தினை மாவு தேவையான அளவு எடுத்துக் கொள். மான் இறைச்சி, மிருதுவாக இருக்கும் சுவை அதிகம். மதுக்குடங்கள் இதோ உள்ளன. எமது மன்னன், உமக்கு ஒரு துளியும் மனக்குறை வராமல் பார்த்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார். உன்னைப்போல் அவரிடம் சிக்கிய சிலர் பட்டபாடு கொஞ்சமல்ல, நீ எப்படியோ அவரை மயக்கி விட்டாய். உன்னை அவர் தன் குடும்பத்தினராகக் கருதிவிட்டார்.” என்று உபசாரமொழி பேசி, வீரமணிக்கு விதவிதமான உணவு வகைகளை தந்தனர், காட்டுக் கூட்டத்தினர். வீரமணி, வேதனையை எதிர்பார்த்தான். விருந்து கிடைக்கக் கண்டான். காட்டுக்காவலனின் இப்போக்கு, வீர மணிக்கு விளங்கவில்லை. உபசாரம் செய்து நின்ற ஏவலர்களும் “ஏதுமறியோம், எமது மன்னனின் கட்டளை இது. உமக்கு ராஜோபசாரம் செய்யுமாறு உத்தரவு. அவருடைய எண்ணம் யாதோ எமக்குத் தெரியாது” என்று கூறினர். மதம் பிடித்தோடி வரும் காட்டானை, எதிர்ப்பட்டவரைக் காலால் மிதித்துக் கொல்லுமேயொழிய, கரும்பு பறித்துத் தருமா! சீறிடும் நாகம் பல்லைக் கொண்டு கடித்துக் கொல்லுமே தவிர, படமெடுத் தாடியும், பக்கத்தில் உலாவியும், உடலிலே உரசியும் சும்மா கிடக்குமோ! காட்டரசன் தன் தலையை வெட்டி வீசுவான் என்று நினைத்த வீரமணிக்குக் காட்டரசன் கோட்டையிலே விருந்தும், உபசாரமும், பலமாக நடக்கக் கண்டு, ஒன்றும் புரியாது திகைத்தான். சற்றே சாய்ந்தால், வேலையாட்கள் மயில் விசிறி கொண்டு வீசவருகிறார்கள். இரண்டடி எடுத்து வைத்தால், என்ன தேவை என்று அடக்க ஒடுக்கமாக வேலையாட்கள் கேட்கின்றனர். தேன்குடத்தைத் திரும்பிப் பார்த்தால் ஒரு வேலையாள், வட்டிலிலே தேன் பெய்து, இப்படியே பருகுகிறீரா? தினைமாவு கலக்கட்டுமா? என்று கேட்கிறான்! வீரமணியால் ஆச்சரியத்தை அடக்கமுடியவில்லை. இந்த மர்மம் என்னவெனச் தெரிந்து கொள்ள எண்ணிய வீரமணி, தூங்குவது போல் பாசாங்கு செய்தான், அந்தச் சமயத்திலே வேலையாட்கள் ஏதாகிலும் பேசுவர், அதிலிருந்து விஷயத்தை ஒருவாறு தெரிந்துகொள்ளலாம் என்று நினைத்தான். உண்மையாகவே வீரமணி உறங்கியதாகவே கருதிய காவல் புரிவோர், வீரமணி எதிர்பார்த்திருந்தபடியே பேசலாயினர். ஆனால், அவர்களின் பேச்சு, பயமூட்டக்கூடியதாக இருந்ததேயொழிய, மர்மத்தை விளக்கக்கூடியதாக இல்லை. “ஏடா, வேங்கை! எனக்கு இந்தப் போக்கே தெரியவில்லை.எதற்காக நமது மன்னன் இந்த வழிப்போக்கனுக்கு இவ்வளவு உபசாரம் செய்கிறார். காரணமின்றி ஒரு காரியமும் செய்யமாட்டாரே, இதற்கென்ன காரணமென்று தெரிந்து கொள்ள முடியவில்லை.” “போடா, கட்டாரி, இது தெரியவில்லையா? மலை மாதாவுக்கு மாடு வெட்டுவோமே, அதற்கு முன்பு, எருதுக்கு எவ்வளவு அலங்காரம் செய்வோம், கவனமிருக்கிறதா?” “அதற்கும் இதற்கும் என்னடா, சம்பந்தம்? மலைமாதாவுக்கு மனிதனைப் பலிகொடுக்கும் வழக்கம் கிடையாதேடா, டே! வேங்கை, எனக்குக் கொஞ்சம் பயமாகக்கூட இருக்குதடா” “கட்டாரி, நீ ஓங்கி வளர்ந்திருக்கிறாயேயொழிய சுத்தக் கோழையாக இருக்கிறாயே. பயமாம் பயம்! இதிலென்னடா பயமிருக்கிறது?” “ராஜா இவ்வளவு உபசாரம் செய்வதைப் பார்த்தால், இவன் ஒருவேளை பெரிய மந்திரவாதியாக இருப்பானோ என்று திகில் பிறக்கிறது.” “மந்திரமாவது தந்திரமாவது! மந்திரம் தெரிந்தவனாக இருந்தால்நம்மிடம் சிக்குவானா? சிக்கினாலும் கூட, நம்மை ஓரேயடியாகக் கொன்றுவிட்டிருக்க மாட்டானா? அப்படி யொன்றுமில்லை. எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. ஆனால் வெளியே சொன்னால் தலைபோகும்.” “என்னடா அது, சொல்லு சீக்கிரம்” “குழி வெட்டித் தழைபோட்டு மூடி வைத்து, யானையை அதிலே விழச்செய்வோமல்லவா, அதைப் போலத் தந்திரமாக இவனை நமது மன்னன் வீழ்த்தவே, விருந்தூட்டுகிறான் போலிருக்கிறது” “நமது வேலும் வாளும் இவனை வீழ்த்தாது, தந்திரத்தால் தான் இவனை வீழ்த்த முடியுமோ! அப்படிப்பட்ட ஆற்றல் என்ன இருக்கிறது இவனிடம்” வேலையாட்கள் பேசிக்கொண்ட இந்த உரையாடலைக் கேட்டு வியப்பு அதிகரித்ததே யொழிய, விளக்கம் கிடைக்க வில்லை. விளக்கமும், விலாநோகச் சிரிப்பும் வீரமணிக்கு மறுதினம் கிடைத்தது. கையிலே பழத்தட்டும், நடையிலே நாட்டியமும் கொண்ட நரை மூதாட்டி யொருத்தி வீரமணியைத் தேடி வந்தாள். அவளைக் கண்டதும், காவலாளிகள், பயந்து ஒதுங்கினர். அவள் அவர்களை சட்டை செய்யாது. வீரமணியருகே வந்து அமர்ந்தாள். வீரமணி, “அம்மே! நீ யார்? இங்கு வரக் காரணம் என்ன?” என்று கேட்டான். நரைமூதாட்டி, நகைத்தாள். நாலாறு பற்களிழந்திருந்தாள், அவளுடைய சிரிப்பு ஆபாசமாக இருந்தது. வீரமணியால் அந்தக் கோரத்தைக் கண்டு சகிக்க முடியவில்லை. சிரித்த பிறகு அக்கிழவி, “எத்தனை நாள் காத்துக்கிடந்தேன். உன்னை அடைய! ஏன் வெட்கப்படுகிறாய்! நான் உன்னை விழுங்கிவிடமாட்டேன் பயப்படாதே” என்று சரசமாடலானான். “அட பாவி! ஈட்டியாலே குத்திக் கொன்று விட்டிருக்கலாமே, இந்த ஈளை கட்டிய கிழத்தை இங்கே அனுப்பி இவ்விதம் மானத்தைப் பறிப்பது அழகா?” என்று வீரமணி எண்ணி நொந்துகொண்டான். அவனுடைய மௌனத்தைக் கண்ட கிழவி “பல இரவுகள் கனவு கண்டேன். இன்றுதான் என் கனவு பலித்தது. அழகா! என்னை காட்டான் ஏமாற்றிக்கொண்டே வருகிறான் என்று எண்ணிக் கோபித்துக் கொண்டேன்; சலிப்புமடைந்தேன். இப்போதுதான் தெரிகிறது, அவனுடைய சாமர்த்தியம். என் மனதுக்கு இசைந்தவன் கிடைக்க வேண்டுமென்று அவன் எவ்வளவு அலைந்து திரிந்து கொண்டிருந்தான் என்று தெரிகிறது. என் மனங்குளிரவேண்டும் என்று வெகு பிரயாசை எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஏன் கண்ணா! வாய் மூடிக்கொண்டிருக்கிறாய்? ஊமையா? என்று கிழவி கொஞ்சினான். நஞ்சையேனும் பருகி விடலாம்; இந்த நரைத்த நாரியின் மொழியைக் கேட்கவும் முடியவில்லையே. இது என்ன கொடுமையான தண்டனை” என்று வீரமணி எண்ணி வியாகூலமடைந்தான்.  “நான் காட்டானின் மாற்றாந்தாய். என்னை உனக்கு மணமுடிக்க, காட்டான் எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டான், மலைமாதா கோயிலுக்கு அலங்காரம் செய்துவிட்டார்கள். குடிபடைகளின் கூத்துக்காகக் குடங்குடமாகக்கள் இறக்கிவிட்டார்கள். நாளை இரவு, நமக்குத் திருமணம் நடக்கப் போகிறது. இன்றே நாம், ஆனந்தமாக இருக்கலாம், யோசியாதே எழுந்திரு. நான் அரச குடும்பம்; நீயோ ஓர் வழிப்போக்கனாம், இருந்தாலும் கவலையில்லை. உன்னை நான் அடைய, ஒரு தங்கச் சுரங்கத்தையே, காட்டானுக்குத் தந்தேன். அதன் இருப்பிடம் இதுவரை எனக்குமட்டுமே தெரியும் காட்டானின் தந்தைக்கு நான் இரண்டாந்தாரம் அவர் இறந்தபிறகு, வேறொரு வனைக் கல்யாணம் செய்துகொண்டு தங்கச் சுரங்கத்தை அவனுக்கு அளித்து ஆனந்தமாக வாழலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், நெடுநாள் காத்திருந்தும், சரியா ஆள் கிடைக்கவில்லை. தங்கச்சுரங்கம் இருப்பது தெரிந்த காட்டான் “உனக்கு அழகும் இளமையுங்கொண்ட ஒருவனைக் கணவனாக்கி வைக்கிறேன்; நீ அந்தத் தங்கச்சுரங்கத்தின் இருப் பிடத்தை எனக்குக் காட்டு” என்று கேட்டான். நான் இசைந்தேன், இன்று உன்னை அடைந்தேன்; அவனுக்குச் சுரங்கத்தைக் காட்டிவிட்டே. ஆகவே இனி நம்மைத்தடுப்பார் இல்லை. இந்தக் கானகத்திலே காட்டானுக்கு, எவ்வளவு அதிகாரமுண்டோ அந்த அளவு எனக்கும் உண்டு, அதுமட்டுந்தானா? நமக்கு ஓர் ஆண் மகன் பிறந்தால், காட்டானை நீக்கிவிட்டு, அவனை அரசனாக்கிக் கொள்ள இந்த ஆரண்யவாசிகள் சம்மதிப்பர், ஏனெனில் நான் சாதாரணமானவளல்ல, என் தந்தை மாயா ஜாலக்காரன்; எனவே என் சொல்லைமீற இந்த வனவாசிகளால் முடியாது” என்று கிழவி தன் பிரதாபத்தைக்கூறினாள். வீரமணி தனக்கு நடந்து வந்த உபசாரம் எதன்பொருட்டு என்பதைத் தெரிந்துகொண்டான். கிழவியின் காமச்சேட்டையைக் கண்டு, விலா நோகச் சிரித்துவிட்டு, “அதிரூபவதியான உனக்கு நான் ஏற்றவனல்லவே!” என்று கூறினான். கிழவி அவன் கேலிசெய்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ளவில்லை. “என் கண்களுக்கு நீ மகா சுந்தரபுருஷனாகத் தோன்றுகிறாய். உன்னை நான் என்றுமே பிரியமாட்டேன்” என்று கூறினாள். “சீ, காட்டெருமையே! காமக்கூத்தாடும் கிழப்பிணமே! எழுந்து ஓடு, இவ்விடத்தைவிட்டு. இந்த வயதிலே காதலாம்; திருமணமாம். திமிரா; புத்திக் கோளாறா” என்று வீரமணி சீற்றத்தோடு கூவிக் கொண்டே, அங்கு கிடந்த ஓர் கைத்தடியை எடுத்து, கிழவியின் முதுகிலே பலமாகவே அடித்தான். கிழவி கோவெனக் கதறிக்கொண்டு, காட்டரசனைத் தேடிக்கொண்டு ஓடினாள். ஃ ஃ ஃ நடனராணி காமச்சேட்டையைக் கண்டு கலங்கி ஓடும் கட்டம், பாண்டிய நாட்டிலே நடந்துகொண்டிருந்தது. காட்டரசன் கோட்டையிலே காமப்பித்தங் கொண்ட கிழவியை வீரமணி விரட்டினான், பாண்டிய நாட்டிலேயோ, நடனராணி காமப்பித்தர்களின் பிடியிலே சிக்காது, ஓடினாள். “மலர்புரி காட்டை விட்டேகிய நடனா, வணிகக் கூட்டத் துடன் சேர்ந்து பல இடங்கள் சுற்றியும், வீரமணி கிடைக்காததால் வெந்துயருற்றுத், தற்கொலை செய்து கொண்டாரோ? காட்டிலே ஏதேனும் மிருகத்திடம் சிக்கி மாண்டாரோ என்று எண்ணி மனங் குழம்பினாள். வணிகர் கூட்டம் பாண்டிய நாடு சென்றபோது, நடனாவும், உடன் சென்றாள். வாழ்க்கை எதற்கென்று சலித்து ஓர் நாள், நடனா ஆண் உடையை அகற்றிவிட்டுத் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று தீர்மானித்து, மதுரை நகரின் மருங்கேயுள்ள சாலையிலே நடுநிசியிலே, மரக்கிளையிலே, தூக்கிட்டுக் கொள்ளச் சென்றாள். அதுசமயம், மதுரையிலிருந்த ஓர் நடனமாது, தன்மகளை இழந்த வருத்தத்தால் மன முடைந்து, தளர்ந்த வயதிலே தன்னைக் காப்பாற்றுவார் இல்லையே என்று ஏங்கித், தூக்கிட்டுச் சாவதேமேல் எனத் துணிந்து, அதே நேரத்திலே அதே சாலையிலே வந்திருந்தாள். கிழவி போகட்டும் பிறகு நமது வேலையை முடித்து விடுவோம் என்று நடனா எண்ணினாள். இவள் யாரோ, தன் காதலனுக்காக இங்கு காத்துக் கிடக்கிறாள் போலிருக்கிறது; அவன் வந்ததும் தொலைந்து போவாள்; பிறகு நாம் உயிரைப் போக்கிக் கொள்ளலாம் என்று கிழவி எண்ணிக்கொண்டாள். ஒருவரை ஒருவர், பேச்சால் ஏய்க்கப் பார்த்தனர். “வாலிபப் பருவமாக இருக்கிறாயே; நடுநிசியிலே இங்கு என்னவேலை. வீடு போய்ப்படு, குழந்தாய் நீ யாருக்காக காத்துக் கொண்டிருக்கிறாயோ பாவம்; அவன்இந்த வேளையில் உன்னை வஞ்சித்து விட்டு எவளுடனோ கொஞ்சிக் கிடக்கிறான் போலிருக்கிறது. காலையிலே வருவான்; கடுகடுப்பாக இரு, காலைப்பிடிப்பான்; கன்னத்தைத் தடவுவான்; கண்ணே, மணியே என்று கொஞ்சுவான். அப்போது அவனுடைய கள்ளத் தனத்தை மெல்ல மெல்லக் கேட்டுத் தெரிந்துக்கொள். நேரமா கிறது; போய் வீடு சேர்” என்று கிழவி நடனாவுக்குப் புத்தி கூறினாள். “தாயே! தள்ளாத வயதிலே, தாங்கள் ஏன் இங்கே உலவு கிறீர்கள். இங்கு வீசும் காற்றும் உமது உடலுக்கு ஆகாதே. காலையிலே மாலையிலே உலவலாம், நடுநிசியிலே நடமாடு வது ஆபத்தாயிற்றே எனக்குத் தூக்கம் வரவில்லை; அதற்காகச் சற்றுநேரம் இங்கு உலவிப்போக வந்தேன். என் வீடு அருகாமையிலே இருக்கிறது” என்று நடனாகூறி, கிழவியைப் போய்விடச் செய்ய முயன்றாள். “உன் வீடு அருகாமையில்தானே இருக்கிறதென்றாய்; சரி, புறப்படு குழந்தாய், நான் துணைக்கு வருகிறேன். நீயும் வீட்டிலே படுத்துறங்கலாம். எனக்கும் படுத்துக்கொள்ள இடம் கொடு; வா, போவோம்” என்று கிழவி நடனாவை அழைத்தாள், நடனாவுக்கு வீடு ஏது! கிழவி ஓர் ஏமாந்த பேர்வழி போலிருக் கிறது, நாம் கூறியதை அப்படியே நம்பி விட்டாளே, என்றெண்ணி நடனா நகைத்தாள். “நட போகலாம்” என்று கிழவி நடனாவைத் தூண்டினாள். “தாயே! உன்னிடம் நான் பொய் பேசினேன். என்வீடு அருகாமையில் இல்லை. மதுரையே எனக்குப் புதிய ஊர். நான் ஓர் அபலை. என் வாழ்க்கை வேதனை நிரம்பியது, அதனை முடித்துக் கொள்ளவே இங்கு வந்தேன்” என்று நடனா உண்மையை உரைத்திடவே, கிழவி சோகித்து, “பச்சைக்கிளியே! இந்த வயதிலே உனக்கேன் இந்த விபரீத யோசனை. நீ யார்? எந்த ஊர்? யாருடைய மகள்? மன முடைந்து பேசக் காரணமென்ன? என்று கேட்டு, நடனாவின் கரங்களைப் பற்றிக் கொண்டாள், துக்கத்தை அடக்கிக் கொண்டு நடனா, “என் எதை மிகப் பெரிது. நான் சோழமண்டலம், என் நாதனை இழந்தேன், இதுவரை அவரை மீண்டும் பெறலாம் என்று எண்ணி எங்கெங்கோ தேடி அலைந்தேன்; காணவில்லை. எனவே இறந்துவிட முடிவு செய்து இங்கு வந்தேன்” என்று கூறினாள். “என்ன பேச்சடி பேசுகிறாய் சொர்ண பிம்பமே! நீ தற்கொலை செய்து கொள்வதா? எத்தனை அரண்மனைகள் உள்ளன உன்னை வரவேற்க? மாளிகைகளிலே மணி விளக்கா யிருக்க வேண்டிய நீ, மரக்கிளையிலே தொங்குவதா? என்ன பேதைமை! உன் தாய் தந்தையர் என்ன வேதனைப்படுவர்” என்று கூறிக்கொண்டே, நடனாவைத் தழுவி, முகந்துடைத்து, அன்புடன், “அன்னமே என்னைப்பார். நான் வாழ்க்கையின் கடைசிப் படிக்கட்டிலே நிற்கிறேன். அதுவும் கண்ணீருடன். என் ஆசை மகள் இறந்தாள் சில தினங்களுக்கு முன்பு. நான் நடைப்பிணமானேன். அவள் உலவியவீடு சுடுகாடுபோலாகி விட்டது. நான் இன்று தற்கொலை செய்துகொள்ளவே இங்கு வந்தேன். நீயோ, வாழ்க்கையின் வாயற்படியிலும் நுழையவில்லை. இதற்குள் மனம் உடைந்து இறப்பதா? வேண்டாமடி தங்கம்! உன் வேதனை முழுதும் என்னிடம் கூறுநான் உதவி செய்கிறேன். மகளே! என்னை உன் தாயாக ஏற்றுக்கொள். நான் பாண்டிய மன்னனிடம் பணியாற்றுபவள், என் மகள் அற்புதமான நடனமாடுபவள். இப்போது என்னைத் தவிக்கச் செய்து விட்டு அவள் இறந்து விட்டாள். எனக்காகவாவது நீ வாழ வேண்டும், என்னுடன் வா! உன் வரலாற்றைக்கூறு. அதைக் கூற இஷ்டமில்லையானால், சொல்லவுந் தேவையில்லை. இறந்த என் மகள் பிழைத்தெழுந்து வந்து விட்டாள் என்று எண்ணிமகிழ்வேன். நீ இதற்கு இசையாவிட்டால், முதலிலே நான் தூக்கிட்டுக் கொண்டு இறப்பேன்; நீ மரக்கிளையிலே தொங்குவதை நான் கண்டு சகிக்க முடியாது. என்னைச் சாகவொட்டாது தடுக்கவேண்டுமானால் நீ உயிரோடு இருக்க இசைய வேண்டும். நடுநிசியிலே, நாசத்தை நாடி நாமிருவரும் இங்கு வந்தோம். நாம் நேசமாகி விட்டால் இருவரும் வாழலாம், ஒருவருக்கொருவர் துணையாக. உன் நாதன் கிடைக்காமற் போகமாட்டான். என்னை நம்பு கண்ணே” என்று கிழவி கொஞ்சினாள். நடனா, மரணத்தை அழைத்தால், மற்றோர் வாழ்வன்றோ நம்மை அழைக்கிறது என்று கூறி, “தாயே நான் அவருக்காகவே இதுவரை உயிரோடு இருந்தேன். இனி உன்பொருட்டு வாழ இசைகிறேன், அவர் கிடைக்காததால், இனியாருக்காக வாழவேண்டும் என்று சலித்தே சாகத் துணிந்தேன். இப்போது நான் வாழ்வதால், உனது வயோதிகப் பருவம், வேதனை நீங்கப் பெற்றிருக்கு மெனத் தெரிகிறது. எனவே நான் வாழ்வதனால் பலன் இருக்கும் என்று ஏற்படுகிறது. நான் உன்மகளாக இருக்கச் சம்மதிக்கிறேன், ஒரே ஒரு கடுமையான நிபந்தனை” என்று சொன்னாள்.        பகுதி - 14   “நிபந்தனை நூறு கூறு. எதற்கும் நான் கட்டுப் படுவேன்” என்று கிழவி கூறினாள். “நான் கன்னியாக காலந்தள்ளுவதை நீ தடுக்கக்கூடாது” என்றாள் நடனா. கிழவி, “உன் இஷ்டம்போல் நான் நடக்கிறேன்” என்று வாக்களித்தாள். நடனா, புதிய வாழ்க்கையைத் தொடங்கினாள். “என் தங்கை மகள் என்னோடு இருக்கிறாள்” என்று கிழவி கூறினதால், மன்னன் ஓர் நாள் அரண்மனைக்கு அழைத்துவரச் சொன்னார். நடனாவின் அரிய நடனத்தைக் கண்டு பாராட்டினார். பிறகு நடனா, அரண்மனைப் பிரதம நடனமாதாக நியமிக்கப்பட்டாள். தனது பழைய உருவம் தெரியாதிருக்க, நடனா முகத்தைக் கருநிறமாக்கிக் காட்டும், மூலிகைத் தைலத்தை உபயோகித்து வந்தாள். ஆனால் பாண்டிய மன்னனின் பிரதானியரில் ஒருவரான ரகுவீரனோ, நடனத்தைப் பெற்றே தீரவேண்டும் என்று பித்தங்கொண்டான். அவனுடைய நண்பன், நடனத்தை ரகுவீரன் தோட்டத்துக்கு நடனத்துக்காக வரவழைத்தான். கள்ளத்தனத்தைத் தெரிந்துகொள்ளாத அக்கன்னியைத் காமப்பித்தங்கொண்ட ரகுவீரன் சரசமாட அழைத்தான், பளீரென்றோர் அறையே கன்னத்தில் பெற்றான். ஆடலழகி ஓடி ஒளிந்தாள். “கண்ணுக்குக் காட்சிதான்! ஆனால் கருத்துக்கு மிரட்சியாகவன்றோ இருந்தது. அடே! வலிய வணைந்த சுகம் தெரியாத இந்த வாலிபப்பயலை உடனே விரட்டு; இவனது முரட்டு தனத்தை என்னால் சகிக்க முடியாது. நான் இனி வேறு வழி கண்டுபிடிக்கப் போகிறேன். என் தாய்வீடுபோய், அங்கு, நமது குலத்திலே பிறந்த ஒருவனை மணம் புரிவேன். எவனுமின்றிக் கிடப்போம் என்றாலோ, நான் சிறுமியாக இருந்தபோது மந்திரவாதி சொன்னானே அது என்னை மிரட்டுகிறது. நான் இரண்டாவது கணவனைத்தேடிக் கொள்ளாவிட்டால் என் தலையிலே இடி விழுமாம். ஆகவே நான் எனக்கேற்றவனை மணப்பேன். இந்தப்பயலை விரட்டிவிடு. அவன் இங்கு இருந்தால் என் வேதனை வளரும்.” என்று கிழவி, காட்டரசனிடம், தன்னை வெறுத்து விரட்டிய வீரமணி விஷயமாகக் கூறினாள். அவள் விருப்பப்படி, வேறொருவனை அவள் மணஞ் செய்துகொள்ள இசைந்தால், ஆபத்து தனக்கு வரும் எனக் காட்டரசன் கருதினான். கிழவியை மணஞ்செய்து கொள்வோன், காடாள வேண்டும் என்று கிளம்புவான், கிழவிக்குக் காட்டுமக்களிலே ஒரு கூட்டம் பக்கபலமாகச் சேரும், போர்மூளும், என்பதே காட்டரசனின் அச்சம். ஆகவே அவன் “சில தினத்திலே அவனைச் சரிப்படுத்துகிறேன் - சினமுற வேண்டாம்” என்று கிழவியைத் தேற்றிவிட்டு, வீரமணியை இணங்கச் செய்யும் வழி யாது என்று யோசித்தான். அதே விதமாகவே ரகுவீரன், நடனா தந்த அறையினால் திடுக்கிட்டுப்போய், தன் திட்டம் பலிக்காதது கண்டு திகைத்து, வேறுஎன்ன செய்து நடனாவைச் சரிப்படுத்துவது என்று யோசிக்கலானான். “நமது திட்டம் சரியானதல்ல நண்பா! விருந்து வைபவத்திலே நடனமாட வரவேண்டும் என்று அவளை அழைத்திருக்கக் கூடாது, விஷயத்தை வெளிப்படையாகக் கூறியே அழைத்திருக்க வேண்டும். நடனமாட அழைத்துவந்து இங்கே சரச மாடவே, அவள் கோபித்து என்னை அடித்தாள்.” என்று ரகுவீரன், தன் நண்பனிடம் கூறினான். “தவறு, திட்டத்திலே இல்லை. நீ பக்குவமாக நடந்து கொள்ள வில்லை.” என்று நண்பன் குறை கூறினான். “விருந்திலே நடனம் என்று அழைத்தான்; விபசாரத்துக்கு இழுத்தான். தாயே! போதும் எனக்கு இவ்வாழ்வு. நோயுற்றிருந் தேன்ட அப்போது மருந்திட வந்தவன், மண அறைக்கு வாடி என்றான். இங்கே ரகுவீரன், விருந்தென்றான்; பிறகு கூடிட வாடி கோகிலமே என்று அழைத்தான். நான் கேவலம் நடனமாது தானே, என்றுகூறினேன். அவன், ஆண்டவனே நடன சொரூபி என்று காமப்பேச்சாடினான். என் நடனம் உமது கண்களுக்கு விருந்தாக இருக்கட்டும். என் சேர்க்கை விஷமாகக் கருதப்படும். நீர் பெரிய படைத்தலைவர் என்று கூறினேன்; அவனோ, நீ கலையின் சிகரமல்லவா கண்ணே, என்று காலில் வீழ்ந்தான். இத்தகைக் காமாந்தகாரர்களின் பிடியிலிருந்து தப்பிப்பிழைப் பதன்றி வேறு வேலையே எனக்குக் காணோம். நான், பழையபடி நாடோடியாக வேண்டியது தான்” என்று நடனா சோகித்துக்கூற, அவளை மகளாக ஏற்றுக்கொண்டிருந்த மூதாட்டி, அவளைத் தேற்றி, “அஞ்சாதே தங்கமே! அரசனிடமே இதை நான் கூறுகிறேன்” என்று கூறினாள். நடனா, கோபச் சிரிப்புடன், “அவர்களை நான் நன்கு அறிவேன் அன்னையே!” என்று கூறிவிட்டு யோசனையிலாழ்ந்தாள். காட்டிலே வீரமணியும், பாண்டி நாட்டிலே நடனராணியும் இங்ஙனம் கலங்கிக்கிடந்த நாட்களில், மலர்புரியிலே, ஆரியரின் அட்டகாசமும், அரசியின் அடிமைத்தனமும், உத்தமனின் சோகமும் வளர்ந்து கொண்டிருந்தது. தேவிகோயில் பூஜை நேரத்திலே, அரசியைக் கொன்றுவிடத் தீர்மானித்த ஆரியமுனி, உத்தமனை ஓரிரவு சிலைக்குள் இருக்கக் கட்டளை யிட்டு, அரசியை அழைத்தான். நடுநிசி! சிலைக்கு விசேஷ அலங்காரங்கள்! விக்ரகக் கிரஹந்தவிர மற்று இடங்களிலே, இருள்! மூல ஸ்தானத்திலே மட்டும், விதவிதமான விளக்குகள் பிரகாசமாக விளங்கின. ஆரியன் அன்று தன் மனோபீஷ்டம் நிறைவேறப் போவதாகக் கருதிக் கர்வத்தோடு இருந்தான். உத்தமனின் உள்ளம் இதுவென உலுத்தன் உணரமுடியவில்லை. அவ்வளவு சமார்த்தியமாக உத்தமன் தலையாட்டிக் கிடந்தான்.  நடு நிசிப் பூஜைக்குப்பிறகு, தேவியின் திரு அருளால், காதலன், மகள் ஆகிய இருவரையுங் காணப்பெறுவாய் என்று அரசிக்கு, ஆரியன் கூறியிருந்தான். பேதை அதை நம்பியே, பித்தமேலிட்டவள் போல, ஆலயம் புகுந்தாள்; சேடியரை அரண்மனைக்குத் திருப்பி அனுப்பிவிட்டாள். அந்தகாரம் கவிந்திருந்த பிரகாரங்களைத்தாண்டி, ஜோதிமயமாக விளங்கிய மூலக்கிரஹம் புகுந்து, தேவியைத் தொழுதாள், ஆரியன் சிலைக் குப்பக்கம், சிரித்தபடி நின்றான். சில விநாடிகள், கண்களை மூடிக்கொண்டிருந்த அரசி, கண்களைத் திறந்தபோது, ஆரியன், தீபங்களை ஒவ்வொன்றாக அணைத்துக் கொண்டிருக்கக் கண்டு, பயந்தாள். “ஆரியரே! விளக்குகளை ஏன் அணைத்து விடுகிறீர்.’ “அவள் ஒளி முன், இவ்வற்ப ஒளிகள் எம்மாத்திரம்? மலர்புரி அரசியே! மாதாவின் ஜோதியைப்பார், இந்தத் தீபங்கள் நிலையற்றன, அவள் நிரந்தரஜோதி; அணையா விளக்கு.” “உண்மை. ஆனால், இருள் சூழச்சூழ எனக்குத் திகிலாக இருக்கிறதே.” “தேவி! உன் குழந்தையின் திகிலைப் போக்கு, ஓஹோ! ஜீவன் உள்ள வரையில் திகில் இருக்கத் தானே செய்யும் என்று கூறுகிறாயா? சரி, அப்படியானால், இவளை உன் பாதத்திலே சேர்த்துக் கொள்” “ஆரியரே, ஏதேதோ அச்சமூட்டும் பேச்சன்றோ பேசுகிறீர்.” “நச்சுப் பொய்கையிலிருந்து இன்று உன்னை நம் தேவி கரையேற்றப் போகிறாள், நடுங்காதே, நளினி, உன்னை, ஒருமுறை தழுவிக்கொண்டு இன்புற... ... ...” “சீ! தூர்த்தா! என்னிடமா நீ இந்த வார்த்தை பேசுகிறாய்?” “அரசியே! அவசரப் படுகிறீர், நான் தழுவ ஆசைப்படு வதாகவா நினைத்தீர்? பேதாய், தேவி உன்னைத் தழுவப் போகிறாள், நானா? உன்னைத் தழுவிக்கொண்டால், உன் அரசைத் தழுவிக் கொள்ள முடியாதே.” “என் அரசை நீ தழுவிக்கொள்வதா? என்னைத்தேவி தழுவிக்கொள்வதா? இதென்ன இன்று விந்தையாகப் பேசுகிறீர், எனக்கொன்றும் விளங்கவில்லையே” “விளங்கிவிடும்! சில விநாடிகளிலே விளங்கி விடும்! மலர்புரி அரசியே என் மாதவம் ஈடேறும் நாள் இது. கோயில் பூஜாரி இப்போது நான். நாளையோ, நான் கொலுமண்டபத்து அதிகாரி. உன் வாழ்நாள் முடிந்தது? “ஐயோ! இதிலேதோ சூதிருக்கிறது. நான் போகிறேன்.” “கோயிற் கதவுகள் தாளிடப்பட்டு விட்டன. எவ்வளவு கூவினாலும் குரல் வெளியே கேட்காது. இந்த ஓர் இரவுக்காக, நான் எத்தனை இரவுகள் தூங்காது இருந்தேன் தெரியுமா?” “பாதகா! படுமோசக்காரா! என்னைக் கொல்லவா, இங்கு அழைத்தாய்? தேவிகோயிலிலே இந்தத் தீயசெயலா? மனம் கல்லா? நான் உன்னைப் பக்தியோடு தொழுதுவந்ததன் பலன் இதுதானா? இந்த ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்ற மாட்டாயா? “தேவி உன்னைக் காப்பாற்ற மாட்டாள்”  “ஏன்?” “ஏனா? அவள் என்னுடைய தேவி என் சிருஷ்டி, என் ஆயுதம், என்கருவி! நீயே கூறு, அடிதேவி, நானல்லவா உனக்கு மகிமை கற்பித்தேன். என்னால்தானே உனக்கு இந்த அபிஷேகம், ஆராதனை, அலங்காரம்.” “என்ன பேச்சு இது” “உண்மைப் பேச்சு. தேவி, வா. உன் சிருஷ்டிகர்த்தவாகிய நான் அழைக்கிறேன் உன்னை. உனக்கு இதுவரை நான் அடிமையாக இருந்தேன். எதற்காக? இவள்போன்ற எண்ணற்றவர்களை உனக்கு அடிமையாக்க! தேவியாம் தேவி; சக்தியாம் பராசக்தி, என் இஷ்டத்தை நிறைவேற்றி வைக்கும் அடிமை இது. வீசு, உன்வாளை; உருளட்டும் இவள் தலை” அரசிக்கும் பூஜாரிக்கும் நடைபெற்ற இவ்உரையாடலால், அரசியின் அங்கம் பயத்தால் நடுங்கிற்று; கூவினாள், அப்போது சிலைக்குள் இருந்த உத்தமன், “அரசியே, ஆரியனுக்கு அடிமைதான் நான்; அவன் கட்டளையை நிறைவேற்றிவைப்பதே என்வேலை; அவனே என் சிருஷ்டிகர்த்தா; இதை அறிந்துகொள்” என்றுரைத்தான். ஆரியன் வெற்றிச்சிரிப்புடன், “கேட்டாயா, தேவியின் திருவாக்கை” என்று கூவினான். “நான் பேசி முடிக்கவில்லையே. சில சமயம், அடிமையே எஜமானுக்குத் துரோகியாவதுண்டு. ஆரிய முனியே! நீ அரசிக்குத் துரோகியானாய். நான் இதோ உனக்குத் துரோகியாகிறேன்” என்று உத்தமன் கூவினான். சிலை அசையக்கண்டு, சிலையின் கரங்கள், ஆரியனின் கழுத்தைப் பிடித்திழுத்து நெரிக்கக்கண்டு, அரசி, மருட்சியும், மகிழ்ச்சியும் கொண்டு உடலாட நின்றாள். “கோயிற்கதவுகள் பூட்டப்பட்டன; கூவினால் சத்தம் வெளியே கேட்காது” என்று கூறிக்கொண்டே உத்தமன், ஆரியனைக்கொன்றான். தேவியின் சக்தியே சக்தி, என்று அழுது கொண்டே கூறி, அரசி, சிலையின் பாதங்களைப் பற்றிக்கொள்ள, உள்ளே இருந்த உத்தமன், ‘தேவியுமில்லைத் தேவனுமில்லை. நான் ஓர் தமிழன்’ என்று கூறிக்கொண்டே சிலையை விட்டு வெளியே வந்து நின்று, அரசியிடம் தன் வரலாற்றைக்கூறி, ஆரியனின் சூது தெரியச்செய்தான். மலர்புரி அரசி, தன்மதியீனத்தால் வந்த அவமானத்தையும், ஆபத்தையும், எண்ணி வாடி உத்தமன் துணை கொண்டு, அரண்மனை சென்றாள். உத்தமனுடைய யோசனையின்படி, மறுதினம் ஆரியனைத் தேவி தன் திருப்பாதங்களில் சேர்த்துக் கொண்டாள் என்று ஊராருக்கு அறிவிக்கப்பட்டது. இறந்த பிறகு, தன் உடலைக் கழுகுக்கு இரையாக்கும்படி ஆரியன் விரும்பியிருந்தான் என்று மக்களுக்கு அறிவிக்கப்பட்டு, ஆரியப் பிணத்தைக் கழுகுகள் கொத்திடச் செய்யப்பட்டது. ஆரியனின் சூழ்ச்சியால் சிறைப் பட்டிருந்த தமிழர் விடுவிக்கப் பட்டனர். ஆலய வீணர்கள் விரட்டப்பட்டனர். தமிழ் மணம் மெல்ல மெல்லக் கமழத் தொடங்கிற்று. உத்தமன், நடனராணியையும் வீரமணியையும் தேடிக்கண்டுபிடிக்க வேண்டுமென்று கூறியபோது, மலர்புரி அரசி, தனது கள்ளக்காதலில் கனிந்த மகளையும் கண்டுபிடிக்க வேண்டுமென்று கூறி, ஒரு நீலமணியை அவனிடம் தந்து, இது என் மகளின் காதணி. ஒன்று என்னிடமும், மற்றொன்று அவள் தந்தையிடமும் இருந்தது. வீரமணி என் காதலரைக் கலிங்கத்திலே கண்டாராம், மேற்கொண்டு தகவல்களை வீரமணி கூறு முன்பு,நான் ஆரியனின் அடிமையாக இருந்ததால், பலவகையான இடையூறுகள் நேரிட்டது. என்னால் முழு விவரமும் தெரிந்துகொள்ள முடியவில்லை. நீ வீரமணியைக் கண்டதும், இந்த நீலமணியைத்தந்து, என் மகள் விஷயமாகக் கேள், என்று கூறினாள். மலர்புரி தமிழ்புரியானதைக் கண்டுகளித்து, உத்தமன் வீரமணியைத் தேடலானான். காட்டரசனும், அச்சமயம், வீரமணியைத் தேடும் வேலையில் ஈபட்டிருந்தான், கிழவியை மணக்க மறுத்த வீரமணியை ஏதோ மூலிகை கொடுத்து, மனதை மாற்றி விடுவதாகக், காட்டரசரின் குடும்பவைத்தியன் கூறி, மருந்து கொடுத்தான். ஆனால் மருந்து, வீரமணிக்குக் கிழவியின் மீது மோகம் பிறக்கச் செய்வதற்குப் பதில், மூளைக்கோளாறு உண்டாகி விட்டது. வீரமணிக்குப் பழய நினைவு மறைந்து போய், எதிர்ப்பட்டோரை அடிப்பது, கிடைப்பதைக் தின்பது, ஓரிடத்திலே தங்காது ஓடுவது, போன்ற செயல் புரியும் பித்தனாக்கி விட்டது. வேறு மருந்துகள் தந்துவந்தனர் ஆனால், ஓரிரவு, கட்டுகளை அறுத்துக் கொண்டு. காவலரை ஏய்த்து விட்டு, பித்தம் பிடித்த வீரமணி, எங்கோ ஓடிவிட்டான், அவனைத் தேடிப்பார்க்க, நாலாபக்கங்களிலும். காட்டரசன் தன் ஆட்களை ஏவினான். “நண்பா! நான் எவ்வளவோ முயன்றுதான் பார்க்கிறேன்; ஆனால், அந்த ஆடலழகியின் நினைவு என்னைச் சித்திரவதை செய்கிறது. அரண்மனையின் கொலுப்பொம்மையா நான்? எனக்குத் தெரியாதா? பெண்பித்தங் கூடாது; அது பேராபத்து விளைவிக்குமென்று, எல்லாம் தெரிந்து தான் இருக்கிறது. என்றாலும், என்னால் அவளை மறக்கவும் முடியவில்லை. புயலில் சிக்கிய கலம்போல் மனம் தத்தளிக்கிறது. மனச்சாந்திக்கு மதுவருந்தினால், அந்த மதனசுந்தரியின் இதழ் சுவைத்தால், இதனினும் இனிக்குமே என்று ஏக்கம் பிறக்கிறது. கீதம் கேட்க மனக்கொதிப்பைப் போக்கிக் கொள்வோம் என்று பார்த்தாலோ, கீதம் எனக்கு அவள் பேச்சை நினைவிற்குக் கொண்டு வருகிறது.” என்றுமோகமேலீட்டால் ரகுவீரன், தன் நண்பனிடம் கூறித் தன் துயரைத் துடைத்துக்கொள்ள முயன்றான். ஆனால் கிளறிவிட்டதும் நெருப்பு மேலும் ஒளியுடன் எரிவதுபோல, ஆசைத் தீ அவன் உள்ளத்தை பற்றிக் கொண்டது, நடனராணிக்கோ ரகுவீரனின் சேட்டையைக் கண்டதால் ஆடவரின் மனநிலை, அதிகாரவர்க்கத்தின் ஆணவம், சீமான்களின் சேட்டை, காமவிகாரங் கொண்டவர்களின் கபடம், ஆகியவற்றைப் பற்றிய எண்ணம், ஈட்டிபோல் குத்திக் குடைந்தது. இந்நிலைவரக் காரணம், என் அன்பனை இழந்ததாலன்றோ, வீர மணியின் சரசத்தை விரும்பிய எனக்கு இந்தக் கோரணி செயல்புரிவோனா சிக்கவேண்டும். தேன் குடத்தைத்தேடப்போய் தேள் கொட்டியதுபோலாயிற்றே என்நிலை; இன்னும் எத்தனை நாட்கள் இதனைச் சகிப்பது என்ற ஏக்கத்திலே நடனராணி ஆழ்ந்தாள். பலபாகங்களில் தேடி அலுத்துக் காட்டரசனின் வேலையாட்கள். வீரமணி கிடைக்கவில்லை என்ற சேதியைக் கூறிவிட்டுத் தமது கால் வீக்கத்திற்கு மூலிகை தேடினர். உத்தமனும் ஊர்பல சுற்றி அலைந்து, வீரமணியைக்காணாது விசனமடைந்தான். வீரமணியோ பித்தங்கொண்டதால், அடவியில் ஓடியும் குன்றுகளிலே கூத்தாடியும், அருவிகளில் நீந்தியும், அட்டகாசஞ ்செய்து கொண்டும், தனது பழைய நிலைபற்றிய கருத்தின்றித் திரிந்துகொண்டிருந்தான். அவனுக்கும், பழைய நிலைக்கும், அவனிடம் மிச்சமாக இருந்த ஒரே தொடர்பு, கலிங்கக்கிழவன் தந்த நீலமணி ஒன்றுதான். பித்தசித்தத்திலும், அந்த நீலமணியிடம் மட்டும், அவனுக்கு ஓர் பிரேமை. அதை இழக்காமல் பாதுகாத்துக்கொள்வதில் ஓர் அக்கறை இருந்தது. நீலமணியைப் பார்ப்பது நகைப்பது, பிறகு அதை கையிலே வைத்துக்கொண்டு கெம்பீரமாக நடப்பது, மடியிலே பத்திரப்படுத்திவிட்டு உறங்குவது, இது வீரமணியின் நிலைமையாக இருந்தது. நீலமணியை உற்றுநோக்கும்போது ஏதோ கொஞ்சம் பழைய நினைவு வருவதுபோல் தோன்றும்; மறுவிநாடியே அந்த நினைவு மறைந்துவிடும். இங்ஙனம் வீரமணி, பல இடங்களில் சுற்றித்திரிந்து கொண்டே பாண்டிய நாடுபுகுந்தான். சிற்றூர் ஒன்றையடுத்த சிறுகாட்டிலே சிரித்துக் கூத்தாடிக்கொண்டு வீரமணி சென்றபோது, வாட்போர் நடக்கும் சத்தம் கேட்டது. விழி அகன்றது; வீரம் ததும்பிற்று; மடமடவெனச் சத்தம்வரும் பக்கம் சென்றான். அங்கு இருவீரர்கள் வாட்போர் புரிந்துகொண்டு இருக்கக் கண்ட, அருகே கிடந்த பாறைமீதமர்ந்து கொண்டு, “சபாஷ்! அப்படித்தான் இப்பக்கம் வீசு!” என்று கூவினான். வாட்போர் புரிந்த இருவரும் இவன் எங்கிருந்து வந்தான் ஓர் பித்தன் என்று வெகுண்டனர். பித்தனின் சேட்டையைக் கண்டு எங்கே குறிதவறிவிடுகிறதோ என்று அஞ்சினர் இருவரும். எனவே, கத்தி வீச்சையும் நிறுத்திக் கொண்டு, “யாரடா பைத்தியக்காரா! போடா, இங்கென்னவேலை” என்று கூவினர். “எனக்கா என்னவேலை என்று கேட்கிறீர்கள். அவ்வளவு திமிரா பிடித்துவிட்டது. நான் கற்றுக் கொடுத்த பாடத்தின்படி, போர் செய்கிறீர்களா என்று நான் ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொண்டு இருக்கிறேன். உங்கள் குருவிடமே குறும்புசெய்கிறீர்களா?” என்று வீரமணி கோபமாகப் பேசினான். போரிட்டுக் கொண்டிருந்த இருவரும் தன் சீடர்கள்; தானோர் வாட்போர் ஆசிரியன் என்ற நினைப்பு வீரமணிக்கு! சண்டையையும் மறந்துவிட்டு, இருவரும் சிரித்துவிட்டுச், “சரியான பைத்யமாக வந்து சேர்ந்தது” என்று பேசிக்கொண்டே, வீரமணியின் எதிரே சென்று கும்பிட்டு ‘குருவே நீங்கள் எதிரே நின்றால், எங்களுக்குப் போரிடக் கூச்சமாக இருக்கிறது. ஆகையால் தாங்கள் தயைசெய்து வீடு போய்விடுங்கள், நாங்கள் சண்டையை முடித்துக்கொண்டு சீக்கிரமாக வருகிறோம்” என்று கேலிபேசினர். வீரமணி அதற்கிசைய முடியாது என்று கண்டிப்பாகக்கூறிவிட்டு, “இந்த ஆரம்பப்பாடத்துக்கே இத்தனைநாளா? சுத்த முட்டாள்கள்! உம், ஆகட்டும், நேரமாகிறது. ஆரம்பியுங்கள் சண்டையை. சொல்லிக்கொடுத்த பாடத்தை நன்றாக நினைவிலே நிறுத்திச், சுத்தமாக சண்டைபுரிய வேண்டும். கத்தியைப் பிடித்திருப்பதே சரியாக இல்லை, கால் எப்போது நிமிர்ந்திருக்க வேண்டும். எப்போது வளைந்திருக்கவேண்டும் என்பதுகூடத் தெரியவில்லை. உங்கள் மண்டையிலே களிமண்ணோ! எத்தனை நாளடா இந்தப் பாடத்தைச் சொல்லிக் கொடுப்பது” என்று கோபமாகப் பேசினான். வயிறு குலுங்க நகைத்துவிட்டு வீரர்கள். “போடா போ! போகிறாயா, உதைவாங்கிக் கொள்கிறாயா” என்று மிரட்டினர். “இதோபாருங்கள் ஒருவிநாடியிலே உங்கள் விழிகள் பிதுங்கி வெளிவரச்செய்கிறேன். என்னிடமா, வாலாட்டுகிறீர்கள்?” என்று வீரமணி கூறிக்கொண்டே, தன்னிடமிருந்த நீலமணியை எடுத்து அவர்களிடம் காட்டிகொண்டு மந்திரவாதி போல் முணுமுணுத்தான். ஒளிவிட்டுப் பிரகாசிக்கும், விலையுயர்ந்த அந்த நீலமணியைக் கண்டதும், இருவீரரும், ஆச்சரியப்பட்டுப் பித்தனிடம் இத்தகைய மணி எவ்விதம் கிடைத்தது என்று யோசித்து, இவனைத் தந்திரமாகத் தம்வசப்படுத்தி நீலமணியைப் பெற்று மன்னனிடம் தர வேண்டும், என்று தீர்மானித்து நீலமணியின் மாயா சக்தியால் மதி மயங்கியவர்போல் பாசாங்கு செய்து வீரமணியை வணங்கி நின்றனர். “அடங்கினீர்களா துடை நடுங்கிகளே!” என்று, சிரித்துக் கொண்டே பேசினான் வீரமணி. “குருவே! மன்னிக்க வேண்டும், பிழை பொறுத்துக்கொள்ள வேண்டும்.” என்று இருவரும் கூறி, வீரமணியின் தாளை வணங்குவதுபோல நடித்து, காலைவாரி விட்டனர்; வீரமணி குப்புறக்கீழே விழுந்ததும், தலைப்பாகைத் துணியினால் கைகால்களைப் பிணைத்துக், குதிரைமீது, மூட்டைபோலப் போட்டுக் கொண்டு, வீரமணி போட்ட கூக்குரலைப் பொருட்படுத்தாமல், பாண்டிய மன்னனின் அரண்மனைக்கு வெகு வேகமாகச் சொல்லலாயினர். கொஞ்சநேரம் கூவிய பிறகு, வீரமணி அலுத்து, மயக்க மேலிட்டு, அசைவற்றுப் போனான். அந்த நிலையிலே மன்னனிடம், வீரமணியைக் கொண்டுபோய்ச் சேர்த்தனர். மன்னன் அரண்மனைத் தோட்டத்திலே உலவிக் கொண்டிருந்தான். எதிரே கொண்டுவந்து கீழே உருட்டப்பட்ட வீரமணியை, முதலில் மூர்ச்சை தெளியச் செய்து, அவனைப்பிடித்து வந்தவர்களைப் பார்த்து, “யார் இவன்? செய்த குற்றம் என்ன? என்று வினவினான். “மன்னவனே! இவன் யாரென்று தெரியவில்லை. காட்டிலே கண்டோம் தற்செயலாக. இவனிடம் இது இருந்தது.” என்று கூறி நீலமணியை மன்னனிடம் தந்தனர். அதைக் கண்டதும், பாண்டியன் பதைத்து, “ஆ! நீலமணி! நமது அருமை மணி! இது இவனிடம் எப்படி வந்தது? இவன் யார்?” என்று ஆச்சரியத்தோடு கேட்டான். வீரமணிக்கோ, பித்தம் தெளிய வில்லையாகையால், மன்னவனை ஏறஇறங்கப் பார்த்து, “நீயார்? காட்டானா? இல்லையே! அவன் உன்னைவிட வயதிற் சிறியவனாயிற்றே! கலிங்கத்தானா? இருக்காதே, அவன் கண் இப்படி பிரகாசிக்காதே. முடி தரித்திருக்கிறாய், அரசனா? இது சோழ மண்டலமா? ஐயோ! நான் நுழையக் கூடாதே!!” என்று உளறியபடி இருந்தான்.  பகுதி - 15   “இவனுக்கு மூளைக்கோளாறு இருக்கிறது. நமது சிகிச்சைச் சாலைக்கு அனுப்புங்கள். புத்தி சுவாதீனத்திற்கு வந்ததும் விசாரிப்போம். “ஆ! அண்ணா! உன்னைக்காணாது வாடும் எனக்கு, நீல மணியைக்காணும் பேறாவது கிடைத்ததே. முடிதரித்து, வீற்றிருக்கவேண்டிய நீ, இந்தப் பாழும் நீலமணியினால், முடி இழந்தாய்; குடும்பத்தைத் துறந்தாய்; என்ன கதியானாயோ? நீல மணியே! உனக்கு வாயேது, பேச! பேசும் வாயுடையவனோ, பித்தனாக இருக்கிறான். என் மனம், எதையோ எண்ணி ஏங்கு கிறதே. எங்கள் குடும்பத்தைக் கெடுத்த கோரமணியே! உன் அழகு, இவ்வளவு அவதியைத் தந்தது. உன் மர்மத்தை நான் யாரிடம் கூறுவேன்.” என்று பாண்டியன் பலப்பல கூறிப் பிரலாபித்தது கண்ட, அவ்விரு வீரரும், “இந்தப் பொல்லாத நீலமணியைத் தொட்டவருக்குப் பித்தம் பிடிக்கும் போலும், இதைக்கண்டு, மன்னர் கண் கசிந்து, ஏதேதோ பேசுகிறாரே” என்று எண்ணினர். வேலையாட்கள், வீரமணியை, அரண்மனை சிகிச்சைச் சாலைக்கு அழைத்துச்சென்றனர். வீரர்கள் வேந்தனிடம் விடை பெற்றுக்கொண்டு போயினர். மன்னனோ, ஓர் மேடை மீது அமர்ந்து நீலமணியை உற்று நோக்கியபடி இருந்தான். முத்து முத்தாக அவன் கண்களிலே நீர் வெளிப்பட்டது! நீலமணி எடுத்துவந்த வீரனொருவன், சித்தங் கெட்டுக் கிடக்கிறான், சிகிச்சைபெற்று வருகிறான் என்ற விஷயம் ஊரிலே, பரவி, நடனாவின் செவிபுகுந்தது. ஆனால், பித்தர்கள் பலரிருக்க, இவன் ஒருவன் தானோ கிடைத்தான் சிகிச்சைக்கு என்று அவள் கூறினாள், அழகிகளின் அணைப்புக்காக மனதை அலையவிடும் பித்தர்கள், ஆடம்பரவாழ்வுக்காக, அதிகாரத்துக்காக, எதையுஞ் செய்யத் துணியும் பித்தர்கள் உண்டல்லவா என்றுரைத்தாள். மருந்திடவந்தவன் மையல் கொண்டலைந் தான், ஒரு பித்தன் எமது மண்டலத்திலே. இங்கொருவன் நடனமாட வாடி என்றழைத்துப் பஞ்சணைக்குப் போடி என்று பணித்தான்! எத்தனையோ பித்தர்களைக் கண்டாயிற்று, இவன் அதுபோல் ஒருவன், என்று அலட்சியமாக நடனா கூறினாள். “இவன் சாமான்யனல்லன் வாட்போர்வீரன், பேசுவது பூராவும் போர்பற்றியே, சோழமண்டலத்தைப்பற்றியும் மன்னனைப் பற்றியும், பேசுகிறான் பெருமையுடன். கலிங்கப் போர் பற்றி சிலாகித்துக்கூறுகிறான்” என்று அரண்மனைச் சேடியர் கூறினர். “அங்ஙனமாயின் நான் காணவேண்டும்” ஏன்றாள் நடனா. அரசாணை பெற்று நடனா, அந்தச் சிகிச்சைச் சாலை சென்றாள். வீரமணியைக் கண்டாள்; கண்ணா என்று அரண்மனை அதிரக் கூவினாள். நடனா என்றோர் எதிரொலி கிளம்பிற்று; இரு உருவமும் ஒன்றாகப்பிணைந்து விட்டன, இருதயத்திலேகிடந்த எண்ணங்களை எடுத்துரைக்க முடியாத நிலை. இதழ்கள் ஒன்றையொன்று பற்றின; பிரிய மறுத்தன. காவலர் ஓடோடி மன்னனுக்குரைத்தனர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து “நீதானா? நினைவு தானா? நிஜமா?” என்று கேட்டுக் கேட்டுக்களித்தனர், எப்படி இங்கு வந்தாய்? எங்கெங்கே இருந்தாய்? ஐயோ, என்னென்ன கஷ்டமோ? ஏன், இப்படி மெலிந்திருக்கிறாய்? என் அன்பே! இன்றேநான் வாழ்வைப் பெற்றேன். என் இன்பமே! எத்தனை காலம் பிரிந்திருந்தாய்? என்னை எங்கெங்குதேடி அலுத்தாயோ? என்னால் உனக்கு இவ்வளவு இடையூறா? என்ற கேள்விகள், யார் முதலில் கேட்டனர், யார் பிறகு கேட்டனர் என்பது தெரியமுடியாத வண்ணம், ஏககாலத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர். இருவரும் பதில்கூற வாய்திறந்தாரில்லை. சில கேள்விகளுக்குப்பதில் முத்தம்; சில கேள்விகளுக்குக் காதலின் பிணைப்பு! சில கேள்விகளுக்குப் பதில் கண்ணீரைத்துடைப்பது! என்ற முறையிலிருந்ததே தவிர, ஒருவர் வரலாற்றை ஒருவர் கேட்கமுடியவில்லை. நடுக்கடலில் நாவாய் கெட, அலையுடன் போரிட்டுத் திமிங்கிலத்திடமிருந்து தப்பித், தத்தளித்தவனுக்குத் திடீரென ஓர்கலம் கிடைத்தால், யாருடையது? எங்கே செல்கிறது? எங்கிருந்து இங்கே வந்தது?” என்று அந்த மரக்கலத்தின் வரலாறுவிசாரிக்கவா மனமிருக்கும்! ஆ! மரக்கலம், இனி நான் அதனிடம் அடைக்கலம்! உயிர்தப்பினோம் என்று உவகைக் கூத்தாடிடுவானன்றோ! அதுபோலப், பலப்பல தொல்லைகட்கு ஆளாகிப் பல்வேறு நாடுகளில் சுற்றி அலைந்த காதலர், ஒருவரை ஒருவர் கண்டதும், கேள்விகள் மனதிலே கிளம்பி, நாவிலே நர்த்தனமாடினவே தவிர பதில்கூறவோ, கேட்கவோ முடியாதபடி அவர்கள் நிலைமை இருந்தது. அன்பே! உயிரே! இன்பமே! என்று யார், யாரை அழைத் தனர் என்று தெளிவு இல்லை. அன்பே, உயிரே என்ற சத்தம் கேட்டது. ஒரு ஆண்; ஒரு பெண் குரல். இருகுரலிலும் காதல் கனிவு தோய்ந்து கிடந்தது. மன்னனும் அவன் சேவகரும் வந்தனர். காதலர் மண்டியிட்டனர்; “நோயறியாது மருந்திட எண்ணினேன்,” இவ்வீரனின் வியாதிபோக்க இவ்வேல் விழியாளே மருந்தானாள்” என்று மகிழ்வோடு மன்னன்கூறி, மாளிகையிலே இருவரும் இருக்கட்டும்; ஏவலர் அவர் விரும்பும்போது வேண்டுவதைத் தரட்டும்; நாளைதான் அவர்கள் நமது உலகுவருவர்; அப்போதுதான், அவர்கள் இருவர் வரலாறும் நாம் கேட்டறிதல் கூடும்; நாம் அவர்கள் நிலைமையை ஒருவாறு அறிவோம்; தேனைமொண்டுண்ணும் தேனீயைக் கலைத்தலோ, கீதத்தின் ரசத்திலே மூழ்கி இருக்கும் இசைவாணனிடம் பேசுவதோ, இயற்கையின் எழிலில் இலயித்திருக்கும் ஓவியக் காரனிடம் சென்றுஓவெனக் கூவுவதோ கூடாதன்றோ. வாழ்க இக்காதலர்! வளம் பெறுக இவர் வாழ்வு!!” என்று கூறிவிட்டுப் பணியாளர் சிலரை அமர்த்திவிட்டுச் சென்று விட்டான். “மன்னன் சென்றுவிட்டான் கண்ணாளா!” என்று மதுரம் பொழிந்தாள் நடனா. “எந்த மன்னன்? என்று வீரமணி கேட்டானில்லை. “ஆயின், மடிமீது உட்காரு” என்று கூறினான். “கண்ணே! நாம் எங்கிருக்கிறோம்.” “என் பக்கம் நீர்! உம் பக்கம் நான்!” “ஆமாம்! இது எந்த மண்டலமாக இருந்தால் தான் நமக் கென்ன? நீ இங்கே, உன் பக்கம் நான்! இது ஆனந்தபுரி, ஆமாம், நான் இன்றுவரை தேடித் தேடித் வாடினேன், இதோ ஆனந்தபுரி.” “பேசாதிரும் பிரியரே! உமது முகத்தைக் கண்டு எவ்வளவு காலமாகிவிட்டது. வாய் திறவாதீர் நான் ஆசை முகத்தைச் சரியாகப் பார்க்க வேண்டும். அந்த மோகனப் புன்னகை, கெம்பீரத் தோற்றம், ஆண்மையை அறிவிக்கும் கண்ணொளி, இவைகளை நான் உண்ணத்தலைப்படும் நேரத்திலே ஒரு பேச்சும் பேசாதீர்.” “தங்கமே! செல்வமே! மணியே.” உரத்தக் குரல் மங்கிற்று; தழுதழுத்த பேச்சுத் தொடங்கிற்று, பின்னர் உதடுகள் மட்டுமே அசைந்தன. பிறகு அதுவும் இல்லை. இரண்டு உருவங்கள் ஒன்றையொன்று பின்னிக்கொண்டிருக்கும் அறபுதமான சிலையைக் கைத்தேர்ந்த சித்திரக்காரன் செய்து வைத்ததுபோன்ற காட்சி. உயிர் ஓவியம் என்பதற்கு ஒரே அத்தாட்சி. அவர்களின் கண்களிலே புரண்ட நீர், இடைஇடையே கேட்ட “இச்” சொலி! காதல் உலகிலே அவர்கள் குடியேறினார்கள். சுற்றும் முற்றும் பார்க்க அவர்களுக்கு வேலையில்லை. பேசவுங்கூடவில்லை. ஆம்! சோழ மண்டலத்திலே பிரிந்து பாண்டிய நாட்டிலே சந்திப்பு. அவர்களின் நிலைமையை உணர்ந்தோர், அப்பக்கம் அணுகவும் தயங்கினர். உணவு வேண்டுமா என்று கேட்கவும் பயந்தனர். இவ்வளவு காதல் கொண்ட இருவர், எப்படித்தான் பிரிந்திருந்தார்களோ? என்னென்ன கஷ்டமோ? எங்கெங்கு தேடினார்களோ? என்று காவலர்கள் பேசிக் கொண்டனர். நடனாவும் வீரமணியும், அக்காவலருக்குத் தத்தமது முன்னாள் காதற் சம்பவங்களை நினைவிற்குக் கொண்டுவரும் தூண்டுகோளாயினர். நடனாவைக் கண்டு மணியின் முகம் மலர்ந்தது; மணியைத் தழுவிய நடனாவின் நயனம் மலர்ந்தது. இருவரின் ஆனந்தத்தைக் கண்ட, அரண்மனை பூராவும், களிப்புக் கூத்தாடிற்று. அரண்மனையின் ஆனந்தம், நகருக்குள்ளேயும் நடமாடத் தொடங்கிற்று. கீதம், எழும் இடத்தில் மட்டுமா இன்பமூட்டும்! நந்தவனத்து நறுமணம், நாலு பக்கமும் வீசாதா! இன்ப அருவியிலே நீந்திய இளங் காதலரின் களிப்பின் படபடப்பு, எங்கும் நிறைநாதமாயிற்று!  பிரிந்துகூடிய காதலரின் களியாட்டச் செய்தியைக் கேட்டுத் தெரிந்த பாண்டியன் புன்முறுவல் பூத்து, சித்திரமன்ன அச்சிற்றிடையாள் சிந்திடும் சிரிப்பை உண்டு, சிந்தையில் கள் கொண்ட குமரனின் குதூகலத்தை எவ்விதத்தேனும் குலைத் திடல் அடாத செயலாகும் என்றுகூறி, மண்டலங்களை மறந்திடச் செய்வதும், கடமையைக்கூடத் துச்சமாகக் கருதிடச் செய்வதும், பாம்பைப் பழுதையென்றெண்ணிடச் செய்வதும், பாவையரின் பாகுமொழி தரும் சுகபோதையன்றோ! தம்மை மறந்து கவிவாணர் பாடிடுவதும் காரிகையின் கோலாகலக் கூத்தில் மூழ்குவதாலன்றோ என்று எண்ணினான். மேலும், நயனங்களில் நீர்ததும்பியபடி நின்ற நங்கைக்கு, ஏற்ற இந்நம்பி, நெடுநாள் பிரிந்திருந்து இன்று வந்து சேர்ந்தான்; அவள் இழந்த இன்பத்தை மீண்டும் பெற்று உண்ணத்தலைப்படும் நேரத் திலே, ஊறு விளைவித்தல் கூடாது என்றன்றோ ஆன்றோர் கூறுவர். என்று கருதினான். ஆனால், அந்த அணங்கு யார்? அவளுடைய அணைப்பிலே சொக்கிடும் காளை எந்நாட்டவன்? நீலமணி, அந்த நீண்டகன்ற கண்ணாளிடம் எங்ஙனம் சிக்கிற்று? என்பதனைத் தெரிந்துகொள்ள மன்னன் துடித்தான். மதுரமான பழவகைகளையும், மணம் வீசும் புஷ்பக் கொத்துகளையும், கலவைச் சந்தனத்தையும், பணியாட்கள்மூலம் அனுப்பிவைத்தான். சந்தனம் உலருகிறது; பூங்கொத்துகள் புழுதிபடிந்துள்ளன; கனிகள் கசங்கிக் கிடக்கின்றன; காதலரோ பேசிக் கிடக்கின்றனர் என்று பின்னர் வந்துரைத்தனர் பணியாட்கள். பார்த்திபன், பூங்கொடிபோன்ற அவள் ஆலிங்கனமே அவனுக்கு மதுரம்; கனியும் கலவைச் சந்தனமும், முல்லை மல்லிகை முதலியன அவனுக்கு இதுபோது தேவையில்லைத் தான் என்றுகூறி, சரி, அவர்கள் பாண்டிநாட்டு அரண்மனையில் இருப்பதும், அவர்களின் வரலாற்றினை அறிந்திடத்துடிக்கும் அரசனொருவன் காத்துக்கிடக்கிறான் என்ற நினைவும் பெறட்டும், பிறகு நாம் அவர்களைக் கண்டு பேசுவோம் என்று தீர்மானித்துக்கொண்டான். நாடாளும் மன்னனுக்கு, வீடாளும் வனிதையரின் விசாலமான கண்களில் விரகம் வீசும்போது, காதலரன்றி வேறெதுவும் ஒரு பொருளாகத் தோற்றாது என்பது தெரியும். காடுகளிலே கடுவேகத்துடன் ஓடிடும் மானினங்களும், சுனை நீரருகே பெண்மான் சென்றதும், நீரருந்த நாயகி செல்லட்டும் நான் நிமிர்ந்துநின்று காவல் புரிவேன் என்று கூறுவது போலக் கொற்றவனென நின்றிடும் நேர்த்தியை மன்னன் கண்டதில்லையா! கோணல் சேட்டையால் குவலயத்தைச் சிரிக்கச் செய்யும் குரங்கும், தன் காதற்கிழத்திக்குக் கனிவுடன் கனியூட்டும் காட்சியைக் கண்ட தில்லையார் என்ன அதிசயம் கண்டானோ இவன்? ஏன் இப்படி அந்த மடந்தை சென்ற திக்கையே இமைகொட்டாது பார்த்துக் கிடக்கிறான்? என்று கேலி செய்திடும் நண்பர்களைப் பொருட்படுத்தாது, காதலால் பிணைப்புண்டகுமரன், ஆயிரம் கேள்விகளுக்கும் ஒரே பெரு மூச்சினைப் பதிலாகத்தருவதைப் பார்த்திபன் தன் வாலிபப் பருத்திலே கண்டதில்லையா! தொழுவத்திலே முரட்டுக் காளைகள்; முற்றத்திலே வேட்டை நாய்கள்; இங்கு மங்கும் காவலர்; இவற்றினைச் சட்டை செய்யாது எழிலிடையாள் ஒருத்திக்காக, மைஇருட்டில் மதில்தாவி, மனைநுழையும் மறவரின், காதல் திருவிளையாட்டுகளை அவன் கேட்டதுண்டு. எனவே நடனராணியும், வீரமணியும், உலகையேமறந்து, உவகையில் மூழ்கிக்கிடந்தது கேட்டு ஆச்சரியப்படவுமில்லை. ஆயாசமடையவுமில்லை, இது சகஜம் என்று இருந்தான். “இன்னுயிரே! உன்னை இதுநாள்வரை காணாது கலங்கினேன்; கதி கெட்டேனோ என்று கதறினேன்.” “ஊசலாடிக்கிடந்த உயிர், விநாடிக்கு விநாடி விடைபெற்றுக்கொள்ள எண்ணியபோதெல்லாம், என் மன்னனை ஒரே ஒருமுறை கண்டுவிட்டால் போதும், கவலையில்லை நீ போகலாம் என்றன்றோ உயிருக்கு உரைத்தேன். உத்தமனே, ஊண் உண்டா, உறக்கம் உண்டா!” “எழிலுடை நடனா! மலர்புரியாளின் ஆரிய போதை, ஆரியனின் மமதை, காட்டானின் கடு நெஞ்சு, அங்கோர் தூர்த்தையின் காமக்கூத்து, பின்னர் சித்தக்குழப்பம், புலியால் ஆபத்து, பிலத்திலே பாம்பு, மலைகளிலே ஓட்டம், காடுகளிலே உறக்கம், மண்மேடுகளிலே உபவாசம், எனப் பலப்பல தொல்லைகள் அடைந்தேன்; ஆனால், உன்னைக் கண்டேன்; அவ்வளவையும் மறந்தேன்; இனிப்பயமே இல்லை” “கண்ணாளா! முதலிலிருந்து முறையாகக் கூறும். கலிங்கப்போரிலே, நீர் நம் காவலருக்கு என்ன குற்றம் இழைத்தீர்?” “குற்றம் இழைப்பவன் நானா? கோமளமே, நீ இப்படிக் கேட்கலாமா?” காதலரின் இவ்வுரை தடைப்படும்படி, பாண்டியனின் பெருநகை கிளம்பிற்று, பக்கத்திலே அவன் நின்றதைக் கண்டு கொள்ளாது, காதலர் பேசிக் கொண்டிருந்தனர். “நீயா, குற்றம் இழைக்கவில்லை! எவ்வளவு கொடியவன் நீ? இந்தக் கொடியிடை துவளும்படி விட்டு வைத்ததைவிடக் கடுங் குற்றம் ஏதுளது” என்று, மன்னன் கேட்டான். வணங்கிய படி, வீரமணி, “வழக்குரைப்பேன் வேந்தே! தண்டனை தரும் உரிமை உமக்குண்டு. நான் சுற்றாத இடமில்லை; தேடாத மண்டலமில்லை. இவளே, மின்னல்போல் மறைந்து என் மனதைக் குழப்பினாள். தண்டனைக்குரியவள் இவளே” என்று வீரமணி கூறிட, வெகுண்டவள்போல நடித்து நடனா, “வேந்தே! ஆடிக்கிடந்த என்னைத் தேடிப் பிடித்திழுத்தான் இக்கள்ளன்; பின்னர் தேம்பித்தவித்திட விட்டுச் சென்றான்” என்று நடனா வழக்குரைத்தாள். “இவ்வித விசித்திர வழக்கை விசாரித்துப் பழக்கம் நமக்கில்லை என்றபோதிலும், மண்டலத்து வழக்கனைத்தும் மன்னன் விசாரித்திடுதல் முறையாதல் பற்றி, உமது வழக்கினை விசாரித்திடுவோம்; ஆனால் வழக்குரைக்கு முன்னம் வாதாடலாமோ! கட்சிக்காரான நீவிர் இருவரும், உமது ஊர் பேர் விவரம் கூறிடாமுன்பு, வழக்கை விசாரிக்க முடியுமா? காதற் குற்றவாளிகளுக்கும், காலதேச வர்த்தமானம் கேளாது, தீர்ப்பளிப்பது எங்ஙனம்.” என்று பாண்டியன் கேட்டிட, முத்துப் பற்கள் வெளியே தெரிய, பவழ இதழ்விரிய, பசும் பொன் பதுமையன்ன நடனா வீரமணியைச் சுட்டிக்காட்டி, “இவர் என் காதலர்” என்றாள். விளங்கிய விஷயமன்றோ இது. ஊர், பேர், விவரம் உரை, என்று மன்னன் கேட்டிட, நடனா சோழ மண்டலத்திலே, வீரருக்கு மணியாக விளங்கிய வரலாறும், கலிங்கப் போர் மூண்ட காதையும், வெற்றிச் செய்தியுடன் வீரமணி நாடு கடத்தப் பட்டான் என்ற வேதனைச் செய்தியைக் கேட்ட கூற்றும், விம்மிய விழியுடன் கிடந்த சோகமும், மருத்துவன் கொண்ட காமநோயும், மாற்றாரின் சதியினால் சோழமண்டலத்திலே ஆபத்துவர இருந்ததும், அரசியாரின் உதவியால் உத்தமனுடன் தான் சோழநாட்டைவிட்டு வெளியேறியதும், இடையே உத்தமன் பிரிய நேரிட்டதுமாகிய வரலாற்றினை நடனராணி விவரமாகக் கூறினாள். மன்னன் முன் இந்த வரலாறு கூறப்பட்டதால், மங்கையின் இதழ் தப்பிற்று. இல்லையேல், அவள் தன் வரலாற்றினைக் கூறிக் கொண்டிருக்கையில், மனம் நெகிழ்ந்த வீரமணி, நடனாவைப்பற்றித் தழுவி முத்தமிட எண்ணியது, ஒருமுறை இரு முறையல்ல! வீரமணியும் பிறகு, தனது முழு வரலாற்றினையும் கூறினான். காட்டானின் சிற்றன்னையின் காமக் கூத்துப் படலத்தை வீரமணி கூறினபோது வேந்தன் விலா நோகச் சிரித்தான். இருவர் வரலாற்றினையும் கேட்டறிந்த பாண்டியன், “சோழனிடம், நீ மாசற்றவன் என்பதை நாமே கூறிடுவோம்; சோழமண்டலத்திலே நீர் மீண்டும் வசித்திடும் உரிமையை வாங்கித் தருவோம்; மலர்புரியில், ஆரியம் மலர்ந்திருப்பதால் தமிழகமே கெட்ட வாடையால் வாடிடும். எனவே, அத்தத்தீய செடியினை வேரோடு களைந்தெறிவோம்” என்று மன்னன் அன்புடன் கூறிவிட்டு, “நீலமணியினை உனக்குக் கிழவனொருவன், கலிங்கப்போர் முடிவின்போது, குகையிலே தந்தான் என்றுரைத்தாயே, அவன் எப்படி இருந்தான், அவன் உருவத்தைச் சற்று விவரமாகக் கூறமாட்டாயோ” என்று வீரமணியை மன்னன் கேட்டான். வீரமணி தனதுநினைவிற்குத் தெரிந்த வரையில் கலிங்கக் கிழவனைப்பற்றி வர்ணித்தான். ஆனால் கலிங்கக் கிழவன், மலர்புரி அரசியின் காதற்கூத்தனாக இருந்தவனானதால், மலர்புரி அரசியிடம் முழுவிவரம் தெரிந்துகொள்ள முடியும் என்று யோசனை கூறினான். “இறந்தவனைப்பற்றி இவ்வளவு கவலையா! ஏதோ ஓர் நீலமணிக்கு இத்தனை விவாதமா” என்று சலித்துக் கேட்டாள் நடனா. “பெண்ணே! உனக்குத் தெரியாது இந்த நீலமணியின் நீண்டகதை” என்று மன்னன் சோகத்துடன் கூறிக் கொண்டே, மடியிலிருந்து நீலமணியை எடுத்தான்; அதனைக் கண்டதும், நடனராணி, பதைபதைத்து, அதனை வாங்கிப் பார்த்து, “இதுவா நீங்கள் பேசிய நீலமணி; இது, என் காதணியன்றோ! சோழமன்னனின் வனபோஜன விழாவுக்கு நடனமாட நான் சென்றபோது, யாரோ, என் காதணியைக் கவர்ந்து சென்றனர். அது தான் இது; இதன் ஜதை எங்கே?” என்று கேட்டாள். மன்னனும் வீரமணியும் ஒரே சமயத்தில் நடனாவை நோக்கி,“இந்த நீலமணி, உன் காதணியா?” என்று கேட்டனர். “ஆமாம், சந்தேகமேயில்லை” என்றாள் நடனா. “என்ன ஆச்சரியம். நடனா! நீ யார் தெரியுமா” என்று பாண்டியன் பாசத்தோடு கேட்டான். பாண்டியன் பாசத்தோடு அப்பாவையைப் பார்த்து, “நடனா! நீ யார் தெரியுமா?” என்று கேட்டபோது நடனாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. “ஏன்? நான் சோழமண்டல அரண்மனைத் தாசியின் வளர்ப்புப் பெண்” என்றாள், தழுதழுத்த குரலில். “மகளே!” என்று பாண்டியன் கூறிக் கொண்டே, நடனாவின் கரத்தைப் பிடித்திழுத்து, அணைத்துக் கொண்டு, முகத்தில் தோன்றிய வியர்வையைத் துடைத்தபடி, “என் மகளே! நீ யார் என்பது தெரியாமல் இத்தனை காலம் வளர்ந்து வந்தாய். உன் தாயையும் அறியாய், உன் தந்தையையும் தெரியாய் நடனா! நீ என் சகோதரனின் மகள்! மலர்புரி அரசியின் மகள்!” என்றான். இச்சொல் கேட்ட நடனா வீரமணி இருவரும் திடுக்கிட்டனர். “மலர்புரி அரசியின் வரலாற்றினை நான் அறிவேன், கூறினேனே தங்களிடம்” என்று மணி கூறினான். “கூறினாய் குமர! ஆனால் கூறாதது இதுதான்; தெரியாத காரணத்தால். மலர்புரி அரசியின் மனதைக் கவர்ந்த கள்ளனே கலிங்கக் கிழவன்; அது நீ அறிந்ததே, கலிங்கக் கிழவனே என் அண்ணன், நீண்ட கதை அது. நெஞ்சு நோகும். சுருக்கமாகச் சொல்வேன்; சோலைக்குச் செல்வோம் வாரீர்” என்று சொல்லி நடனாவையும் வீரமணியையும் பாண்டியன் அரண்மனைப் பூங்காவுக்கு அழைத்துச் சென்றான். மனத்திலே பல நாளைய சம்பவங்கள் ததும்பினதால், மன்னவன் வழியில் ஏதும் பேசவில்லை. பாண்டியன் நாட்டுப் பாவையா? மலர்புரி மங்கையா? அரச பரம்பரையா? மலர்புரி மங்கையா? அரச பரம்பபரையா இந்த ஆடலழகி? என்று எண்ணி ஆச்சரியப்பட்டான் மணி. விசித்திர மாகவன்றோ இருக்கிறது. பாண்டியநாடு தகப்பன் பிறந்த இடம், மலர்புரியோ தாயின் இருப்பிடம்; வளர்ந்ததோ சோழ மண்டலம், அரச குடும்பத்தில் பிறந்து நாட்டியத்தைப் பிழைப்பாகக் கொண்டோம்; இது என்ன விந்தை என்றெல்லாம் நடனா எண்ணி எண்ணி, பூராவிஷயமும் தெரிந்துகொள்ள ஆவல் கொண்டாள். நடனா கைக்கு எட்டாக் கனியோ என்றோர் கவலை வீரமணிக்கு உதித்தது. மன்னன் அவன் மனக்குறையை மாற்றுபவன் போல் வீரமணியின் முதுகைத் தட்டிக்கொடுத்து, “சரியான வீரனப்பா நீ. இந்த நங்கை அவளுடைய சிறிய தகப்பனிடம் வந்து சேரும்படி நீயன்றோ செய்வித்தாய். ஆனாலும் நீர் ஓர் கள்ளன். நடனாவைப் பறித்துக்கொண்டு போகத்தான் காத்திருக்கிறாய்” என்று கூறிவிட்டு, “நடனா! அதோ பார், ஓர் பளிங்கு மண்டபம், அருமையான சித்திர வேலைகள் அமைக்கப் பெற்றது. அதன் அழகைப் புகழாதார் கிடையாது. ஆனால் அதன் அருகே, நாங்கள் யாரும் செல்வதே இல்லை. ஏன் தெரியுமா? அந்தப் பளிங்கு மண்டபத்திலேதான், என் அண்ணன் தனது அரசுரிமையைத் துறந்தான், ஆண்டியாகியல்ல, அரசபோகத்தையே அல்பமெனக் கருதும் விதத்திலே அவனுக்கு மையல் ஊட்டிய ஓர் மலர் விழியாளின் சுகபோகத்தை வேண்டி! அதோ, அந்தப் பளிங்கு மண்டபப் படிக்கட்டுகளிலே என் தந்தை மண்டியிட்டுக் கேட்டார் “மகனே என் சொல்லை மீறாதே” என்று. நானும் “அண்ணா! அண்ணா!” என்று கூறி அழுதேன். என் அண்ணன், அன்று அங்கு நின்றதும், தந்தையின் பேச்சை கேட்கமறுத்ததும், இப்போதுதான் என் கண் முன்பாகவே நடப்பதுபோல் தோன்றுகின்றன” என்று பாண்டியன் கூறிக் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தான். ஆச்சரியம் மேலுக்குமேல் வளருகிறதேயொழிய, விளங்கக் காணோமே என்று வீர மணியும் நடனாவும் எண்ணினர். சில வினாடிகளுக்குப் பிறகு, அரசன் அங்குக் கிடந்த ஆசனமொன்றிலே அமர்ந்தான். எதிரே பசும் புற்றரையில் நடனா உட்கார்ந்தாள். வீரமணி, நின்று கொண்டிருந்தான். “நடனா! நீ, என் அண்ணன் மகள்; ஆகவே உனக்குப் பூரா விஷயமும் தெரிந்தாக வேண்டும். கேள், உன் தகப்பனின் வரலாற்றினை” என்று பீடிகையிட்டுப் பாண்டியன், பழைய கதையைக் கூறத் தொடங்கினான்.                                                    பகுதி - 16   “அன்று நல்ல நிலவு! நான், இதே சோலையில் வேறோர் பக்கத்திலே உலவிக் கொண்டிருந்தேன். இளவரசர், அதாவது என் தமயன், அச்சமயத்திலே தலைநகரில் தங்குவார், நான் வெளியூர்கள் சென்று, போர் வீரர் விடுதிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால், ஆறேழு திங்கள் அரண்மனையில் இல்லை. அன்றுதான் ஊர் வந்தேன். இரவு, சோலையில் உலவிக்கொண்டிருந்தேன், நிலவின் அழகொளியோ, அந்த ஒளியினால் அலங்கரிக்கப்பட்டு அபரிமிதமான அழகுடன் விளங்கிய சோலையின் சொகுசோ என் மனதினை அதிகமாக இழுக்கவில்லை. எனக்குக் கோட்டை கொத்தளம், அரண் அகழி, படை வீடு முதலியனவற்றிலேயே அதிக அக்கரை. நான், மன்னனின் இரண்டாம் மைந்தன்; பட்டத்துக்குரியவர் என் அண்ணன்; என் அண்ணன் ஆட்சிக்கு நாடு வந்ததும். நான், படைத்தலைவனாக வேண்டுமென்பது என் தந்தையின் விருப்பம். ஆகவே, எனக்குப் பெரும்பாலும், படை வீடே உறைவிடமாகக் கிடந்தது. நானும் பல்வேறு நகர்களில் பாசறைகள் அமைத்துப் பூரிப்பதும், கடலோரக் கண்காணிப்பு, மலையோரக் காவல் முதலிய பாதுகாப்பு முறைகளில், புதுப்புது ஏற்பாடுகள் உண்டாக்கிக் களிப்பதுமாக இருந்தேன். மன்னனின் இருமைந்தரும், நமது மண்டலத்துக்கு இரு கண்கள்; மூத்தவன் முடிதரித்து ஆள்வான்; இளையவன், இமைகொட்டாது நின்று எதிரிகள் நுழையாதபடிக் காவல் புரிவான் என்று மக்கள் பேசிடக்கேட்டு நான் மகிழ்வதுண்டு. மூத்தவன் தூங்கா விளக்கு, இளையவன், சுழல் விளக்கு என்றுங் கூறுவர்.” “அன்றிரவு என்ன நடந்தது?” என்று நடனா குறுக்கிட்டுக் கேட்டாள். மன்னன் பாலிய பருவத்தைப் பற்றியே விரிவுரை யாற்றத் தொடங்கியதும். மன்னனும், நீண்ட கதையைச் சுருக்கமாகக் கூறுவதாகச் சொல்லிவிட்டு வளர்த்தக் கூடாது என்று கருதி, “ஆமாம்! நடனா! அன்றிரவு நடந்ததைக் கூறுகிறேன்; கேள். நான் நிலவொளியில் சோலையில் உலாவிக் கொண்டிருந்தபோது, யாழின் ஒலி கேட்டது பளிங்கு மண்டபத்தின் பக்கமாக. இசை இனிமையாக இருந்தது! இனிமை என்றால் சாதாரணமான இனிமையல்ல; போர்முறைப் பற்றிய புதுத் திட்டங்களை மனதிலே சித்தரித்துக் கொண்டிருந்த என்னையே இழுத்தது அந்த இனிமை. யாழின் இனிமையால், நான் சமர்பற்றிய சிந்தனையை மறந்தேன்; இசையில் இலயித்தேன். பாம்பையும் புலியையுங்கூட வசியப்படுத்தக் கூடியதும், புண்பட்ட நெஞ்சுக்கு மருந்திடவல்லதும், புயல் கொண்ட மனதுக்கும் சாந்தி தரக்கூடியதுமான இசையின் இனிமையில் நான் சில விநாடி, கோட்டை கொத்தளங்களை மறந்தேன்; குளிர்ந்தமனதுடன் உலவினேன். யாழும், சூழும், என் அண்ணனுக்குத் தோழர்கள். நான் கட்கத்தை எவ்வளவு நேசித்தேனோ அவ்வளவு நேசம், கலையிடம் என் அண்ணனுக்கு. நான் புதுக்கோட்டைகள் கட்டி மகிழ்வதுபோல, என் சகோதரன், இசைவாணரின் புதிய புதிய பண்கேட்டு இன்புறுவான். அகழியின் ஆழத்துக்கும் அகலத்துக்கும் இருக்க வேண்டிய அளவமைப்புப் பற்றிய ஆராய்ச்சி எனக்கு! என் அண்ணனுக்கோ மூன்று நரம்பு யாழுக்கும் 9 நரம்பு யாழுக்கும் உள்ள இசை வித்தியாச நுணுக்கத்திலே பிரேமை. எந்தப் படை கொண்டு எதிரியை முதலிலே தாக்குவது, வேழப்படை கொண்டா, குதிரைப் படை கொண்டா, என் பதிலே நான் சிந்தனையைச் செலவிடுவேன்; அவரோ, குழல் கேட்டபின் யாழ் கேட்பதா, யாழுக்குப் பிறகு குழல் கேட்பதா, எது அதிக இனிமை பயக்கும், இரண்டினையும் ஏககாலத்திலே கேட்டு இன்புறுவதா என்பதிலே யோசனையை வழங்குவார். அன்று நான் யாழைக் கேட்டதும். “சரி! வழக்கமான விருந்துண்டு, அவர் களிக்கிறார்; பழக்கப்படி நாம் பட்டாளத்து விஷயமாக எண்ணிக் கிடக்கிறோம்” என்று எண்ணிக்கொண்டு, உலவினேன்; ஆனால் யாழின் இசையுடன் கலந்து கிளம்பிய ஓர் குரல் என்னைப் பளிங்கு மாளிகைக்கு நடந்திடச் செய்தது. ஓர் மங்கையின் மதுரமான கீதம், மயக்க மூட்டக்கூடிய தனிவிதமான இனிமை அக்குரலிலே தோய்ந்திருந்தது. சுவை பயக்கும் குரலுடன், சோகமும் இழைத்து, கேட்பவரின் சித்தத்தை உருக்கிவிடக் கூடிய அலாதியானதாக அக்குரல் இருந்தது. என்னை “வா! வா! வந்து கேள்! வீணான விஷயத்திலே மூழக்கிக் கிடக்கிறாயே, இதோ இனிமையுடன் இரண்டறக் கலந்துகொள்” என்று அந்த இசை கூவி அழைத்தது. மெல்ல மெல்ல அங்கு சென்று, முல்லைப் புதரருகே பதுங்கிக் கொண்டேன், அந்த மங்கையுடன் என் அண்ணன் நிச்சயம் இருப்பாராதலால் நான் அவர் கண்களில் படாது இருக்க வேண்டுமென்று. சோகம் ததும்பிற்று; சோபிதம் வழிந்தது அந்த மங்கையின் சுவைமிகு பாடலில். “வாயால் சொல்ல முடியாதபடி தேனிலந்த இனிப்பேதடி” என்று அந்த மங்கை பாடினபோது, நான் பெற்ற இன்பம், வாயால் சொல்ல முடியாததுதான். தேனில் நிச்சயம் அந்த இனிப்பைகாண முடியாதுதான் என்று தோன்றிற்று. அம்மங்கை, இசைப் பயிற்சி மிகுதியும் பெற்றதனால் மட்டும் அவ்வளவு நேர்த்தியாக அந்தக் கீதத்தைப் பாடவில்லை. பாடல், அவளுடைய இருதயகீதம். கரும்பை ஆலையிலிட்டதும், ரசம் பொழிவதுபோல, வாழ்க்கை நிலையால், அவள் அடைந்த வாட்டம், அந்தக் கீதத்தை அவளுக்குத் தந்தது. தலைவி, தோழியிடம், தலைவனின் திருக்குணத்தைக்கூறிச் சோகிக்கும் பாணியிலே அமைந்திருந்தது. அப்பண் நீ என்னடி கண்டாய் அந்த மன்னவன் தரும் இன்பம்! வாயாற்சொல்ல முடியாதடி தேனிலந்த இனிப்பேதடி (நீ என்னடி) தமிழ்ப்பேசுதல் கேளாச்செவி இருந்திடுவது வீணே, அமைவாய் எனை மாதே கன அன்புடன் தழுவிடுவானே, (நீ என்னடி) ஆஹா! நடனா! நான் அதற்கு முன்பும் அதற்குப் பிறகும், கேட்டதில்லை, அவ்விதமான பண். தேனிலந்த இனிப்பேதடி என்று பாடும் போது,தேன் குழைந்துவந்து செவியில் புகுந்தது. எந்த மன்னவனோ! அவன் எவ்வண்ணம் தழுவினானோ? அவளன்றி யாருக்குக்கூற முடியும்! அவளோ, அந்த இன்பத்தை வாயாற்சொல்ல முடியாதபடி என்று பாடிவிட்டாள். நான் பரவசமானேன். மேலும் பாடினாள் அந்த வனிதை விசித்திரமான அமைப்புடன் கூடிய அப்பாடலை. “இரவே பகல் நாளே கலை நல்விருந்துயர் காதல் உருவே விழி, வாழ்வே மணம் இன்ப அருவி அதன் மீதிலே (நீ என்னடி) இன்ப அருவியாம்! அதன் மீதிலே நடமாடும் நங்கை கண்ட இன்பத்தை நாம் எப்படிக் காண முடியும்! அந்தப் பாடல் முடிந்தது, என் குரலும் “சபாஷ்! அருமை!” என்று கூறிற்று. நான் என்னையும் மறந்து பளிங்கு மண்டபம் புகுந்தேன்; பயந்து ஓர் வனிதை நின்றாள் என் எதிரில், பக்கத்திலே என் முன்னவர் இல்லை. நான் பதறினேன். ஏன் தெரியுமா? பாடி என்னைப் பரவசமாக்கிய அந்தப் பாவை, பளிங்கு மண்டபத்தில் பாதி ராத்திரிவேளையில் பாகுமொழி கீதத்தால் தனது தாபத்தைக் காட்டும் நிலையிலுள்ளவள் என்று நான் கனவிலுங் கருதியதில்லை. அது மட்டுமா! என் எதிரில் நின்ற அந்தச் சமயமும், அவள் அணிந்திருந்த கோலம் எப்படிப்பட்டது தெரியுமோ? மெல்லிய காவி உடை! தைலம் அதிகங் கண்டிராததும் மலர்ச்சுமை இல்லாததுமான கூந்தல்! மை இல்லாத கண்கள்! சதங்கை இல்லாத தாள்! வளையணியாக் கரங்கள்! அவளுடைய மார்பில் முத்து வடமோ இரத்தின கண்டியோ கிடையாது. செவியிலே செம்பொன்நிறமான புஷ்பம். நெற்றியிலே சந்தனத்தால் பிறை வடிவில் ஓர் குறி. தவக்கோலத்தில் இருந்தாள் அத்தையல்! தவக்கோலந்தான்; ஆனால் தாபத்தின் வேகத்தை அவளுடைய கீதம் நன்கு காட்டிற்று. என்னைக்கண்டதும் அவளுக்கு விழியில் நீர் துடித்தது; எனக்குப் பொறி பறந்தது. தவச்சிரேஷ்டரென்று தந்தையாரால் பூஜிக்கப்படுபவரும், குலகுரு என்று கொண்டாடப்படுபவரும், கோயில் கட்டிப் பிரதிஷ்டை செய்து. பாண்டியநாடு பல்வளங்களோடு திகழவேண்டுமென்று பல்வகை யாகங்கள் செய்தவரும், என் தந்தைக்கு நிழல்போல் இருந்து வந்தவரும், ஆஸ்ரமவாசியுமான, சத்யப்பிரகாசரின், ஏகபுத்ரிதான் அவள்! என் அண்ணன் ஏகாந்தமாகத் தங்க ஏற்பட்ட பளிங்குமண்டபத்திலே தங்கி, யாழ்மீட்டி, ‘இன்ப அருவி அதன் மீதிலே’ அவள்கண்ட இன்பம், தேனிலும் கிடையாது என்று பாடினாள். அவளுடைய மலரடியையும், என்பிதா பணிந்ததுண்டு, நானுந்தான்! சத்யப் பிரகாசர், அவள் அம்பிகையின் அவதாரமென்று கூறிஇருந்தார். அவள் பூஜைக்காகத் தனியான பணிப்பெண்கள்! அவளுடைய பாதபூஜையிலே பலருக்குப்பிரியம். அவ்விதமானயோகி அன்றிரவு, தாபத்தைத் தாங்காது, தனியே பாடிக்கிடந்தாள். அக்காட்சியைக் கண்டதும் எனக்குப் கோபம் கட்டுக்கடங்க வில்லை. என் பார்வை அவளுக்குப் பயத்தைக் கிளறிவிட்டது. அவள் உடல் நடுங்கிற்று; ஏதோ பேச வாயெடுத்தாள்; என் கேலிச்சிரிப்பு அவள் பேச்சை நிறுத்திவிட்டது. கூப்பிய கரத்துடன் என் எதிரில் நின்றாள். ஆம்! அவளை நான் தேவியின் திரு அவதாரமென்று பலமுறை கும்பிட்டதுண்டு. அவள் அன்றிரவு, என்னைக் கும்பிட்டு நின்றாள். அவள் கேட்கும் வரம் என்ன? வெளியே கூறி என் மானத்தை பறித்திடாதே என்பது தான்! நானா விடுவேன் அந்தக் கள்ளியை! “காவி உடை; காமச்சேட்டை! தூ!” என்று கூறி அதட்டினேன். “காதலி!” என்றோர் குரல் கேட்டுத் திடுக்கிட்டேன். அது என் அண்ணனின் குரல்! அவளும் திரும்பினாள். நானும் சத்தம் வரும் திக்கில் திரும்பினேன். “ஒழிந்தான் உன்னை ஆட்டிப் படைத்த தூர்த்தன். இதோ அவனுடைய இரத்தம் ஒழுகுவது கண்டுகளி. உன் கோபத்தையும் சோகத்தையும் இந்தச் செந்நீரால் கழுவிக்கொள்” என்று கூறிக்கொண்டே என் சகோதரர் அங்கு வந்தார். நானும் அவளும் ஏககாலத்தில், ஆ! என்று அலறினோம். என் அண்ணனின் கரத்திலே, குலகுருவின் தலைதொங்கிற்று உடலற்று! இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. போர்க்களங்களிலே, தலை வேறு உடல்வேறாக அறுபட்டதையும், இரத்தம் ஆறென ஓடினதையும், குருதி தோய்ந்த கரத்துடன், வீரர்கள் நிற்பதையும் நான் கண்டதுண்டு, கலங்கியதில்லை. ஆனால் நடுநிசியில், அரண்மனைப் பூங்காவில், அரசகுமாரன், குலகுருவின் தலையை வெட்டி, இரத்தம் ஒழுக ஒழுகப் பிடித்துக் கொண்டு நிற்பதை யார்தான் கண்டு கலங்காதிருக்க முடியும்! கலை இன்பத்திலே திளைத்திருக்கிறார் அண்ணன் என்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு அவர் கொலைத்தொழிலும் செய்வது காணக்கூசிற்று. அந்த இரவு, நிலவொளியிலே நான் கண்டகாட்சியை நினைத்தால் இப்போதும் நடுக்கம் பிறக்கிறது. “நீ ஏன் இங்கு வந்தாய்?” என்று அவர் என்னைக் கேட்டார். பயத்தால் மெய்மறந்து நின்றேன். என்னை இக்கேள்வி கேட்டு விட்டு அவர், தலையைக்கீழே போட்டார். அந்தச்சத்தம், எனக்கு என் நிலைமையைக் கவனத்திற்குக் கொண்டுவந்தது. “நான் உலவிக் கொண்டிருந்தேன். இசை கேட்டது. இங்கு வந்தேன், இதைக்கண்டேன்” என்று நான் படபடத்துக் கூறினேன். அவர், மேலங்கியால் முகத்தைத் துடைத்துக் கொண்டார். அவளோ, பதுமை போலாகிவிட்டாள். அசைவற்று நின்று கொண்டிருந்தாள், கண்களிலே நீர் மட்டும் வழிந்து கொண்டிருந்தது. “தவக்கோலத்திலே உள்ள இக்காரிகை என் காதலுக்கு உரித்தானவள். இவளுடைய உடைக்கு இவள் பொறுப்பல்ல. காவியால் மூடி இவளுடைய கருத்தைத் தூங்கவைக்கலாம் என்று, இக்காதகன் கருதினான். இவனுடைய கபடத்தைத் தெரிந்து நான் இக்காரியம் செய்தேன்” என்று அண்ணன் கூறினார். எனக்கு அவருடைய விளக்கம் திருப்தியை உண்டாக்க வில்லை. மனச்சாந்தி ஏற்படாததால், நான், கீழே உருண்டுகிடந்த தலையையும், உக்கிரத்துடன் என் எதிரே நின்ற சகோதரனையும், நீர் புரளும் கண்களுடன் நின்ற அந்த நங்கையையும் மாறி மாறி நோக்கினேன். மருட்சியால் மயக்கம் வந்து விடும்போலிருந்தது எனக்கு. வேடிக்கையைக் கேள் நடனா! நான் இப்படித் தவித்துக் கொண்டிருந்தேனே, அதை ஒரு துளியும் பொருட்படுத்தாது, என் அண்ணன் அந்த அணங்கை அருகே இழுத்து அணைத்துக்கொண்டு, கண்களைத் துடைத்து, “அஞ்சாதே! உன் அழகை ஆயுதமாகக் கொண்டு அக்ரமச்செயல் புரிந்துவந்தவன் அழிந்தான். இனி உன் வாழ்வு மலரும், மனம் மருளாதே” என்று கூறித் தேற்றினான். நான் ஒருவன் நிற்பதை யும் அண்ணன் மறந்து விட்டார். காலடியிலே உருண்டு கிடந்த குரு தலையேகூட அவருக்குத் தெரியவில்லை. இந்நிலையிலே என் தகப்பனார், மன்னர், திடீரெனச் சில காவலாட்களுடன் அங்குவரக் கண்டேன்.  “அண்ணா! அரசர்!” என்று கூறினேன் அச்சத்துடன். அந்த மங்கை, என் அண்ணனின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, அவ்விடத்தைவிட்டு ஓடிவிடப் பார்த்தாள். புன்சிரிப்புடன் என் அண்ணன், அவள் கரத்தைப் பிடித்திழுத்து நிற்கவைத்து, “நில், ஏன் ஓடுகிறாய்?” என்று கேட்டார். இதற்குள் மன்னன் அங்குவந்து சேர்ந்துவிட்டார். அவர் பேசுமுன்னம், எனக்குப் பயத்தால் பாதி உயிர் போய்விட்டது. “தவமணீ! நீ இங்குதானா இருக்கிறாய், உன் தாளினை வணங்குகிறேன். குருத்துரோகம் செய்த இக்கொலை பாதகனை, நொடியிலே நான் வீழ்த்துகிறேன். நீ பிழை பொறுத்துப் பாண்டிய மண்டலத்தின்மீது பகை காட்டாது விடு, அம்மையே” என்று கூறிக்கொண்டே என்பிதா, காவி உடைக்காரியின் காலில் விழலானார். அவள் அதைத்தடுத்து அவரைத் தூக்கி நிறுத்தினாள். இதற்குள் காவலர், உருண்டு கிடந்த தலையை எடுத்து ஓர் பீதாம்பரத்தில் மூடிப் பிடித்துக் கொண்டனர். இரு காவலர் உருவிய வாளுடன் என் அண்ணனின் இரு மருங்கிலும் நின்று கொண்டனர். அவர்களின் நடவடிக்கைகளைக் கவனித்ததில், என் தந்தை, என் அண்ணனைக் கைது செய்யத் தீர்மானித்து விட்டார் என்பது விளங்கிற்று. “குருதேவனைக் கொலைசெய்து விட்டார் உமது மூத்த குமாரன்” என்று யாரோ சீடர் கூறிடக் கேட்டுக் கொதித்தெழுந்த என் தந்தை, என் அண்ணனைத் தேடிப்பார்த்து, தோட்டம் வந்தார். அங்கு, குருவின் தலை உருண்டுகிடந்ததைக் கண்டார். குருவின் புத்திரி, தவமணி அங்கு இருக்கக்கண்டு, அவளுடைய தபோபலத்தால் மண்டலத்தையே நிர்மூலமாக்கி விடுவாள் என்று பயந்து, அவளைப் பணிந்து, மன்னிப்புக்கோரி நின்றார். தவமணியின் கோலம் ஒன்று, செயல் வேறு; அது எனக்குக் கோபமூட்டிற்று; என் பிதாவோ, அவளுடைய கோலத்தைக் கண்டு மதிமயங்கி மண்டியிடுகிறார். என் அண்ணனோ அவளுடைய அழகிலே சொக்கிக் கொலையும் புரிந்துள்ளார். இவ்வளவு நிகழ்ச்சிகளையும் நினைப்பையும் கிளரிவிட்ட அந்த நங்கை, என் பிதாவை நோக்கி, மிருதுவான குரலில் சில சொல் புகன்றாள். “அரசே! என்பிழை பொறுத்தருள வேண்டும். நான் தவசியுமல்ல, யோகசித்திகள் பெற்றவளுமல்ல. எவனுடைய தலை கீழே உருண்டு கிடப்பதற்காகக் கோபங்கொண்டு தாங்கள், தங்களின் மூத்த புதல்வர்மீது பாய்ந்திட வந்திருக்கிறீரோ, அந்த கபட சன்யாசிக்கு நான் மகளுமல்ல! அவனுடைய கருவியாக இருந்துவந்தேன். எங்கோ மரத்தடியிலேகிடந்த ஓர் குழந்தை, பார்க்க ரம்மியமாக இருப்பதுகண்டு, தவவேடம் புனைந்து தந்திரத்தால் வாழ்ந்துவந்த சத்யபிரகாசர் எடுத்து வளர்த்து வந்தார்; அந்தக்குழந்தையின் எழில் வளர, வளர, அவனுடைய புகழும் செல்வாக்கும் வளரலாயிற்று. பல இடங்களில் சுற்றித்திரிந்துவிட்டு, இங்கு வந்து சேர்ந்தோம். ஆம்! நான்தான், அவன் கண்டெடுத்த குழவி இங்கு அவன், தங்களை எப்படி எப்படியோ மயக்கினான், என்னையும் பெரிய யோகி என்றுகூறித் தங்களை நம்பிடச் செய்தான். இளமையும் எழிலும் இருந்தும், தவவேடமும் கபடத்துக்கு உடந்தையுமாக நான் காலங்கழித்து வருகையிலே, உமது புதல்வரின் கண்கள், என் காவி உடையைக் கிழித்தெறிந்து, என் இருதயத்திலே, இயற்கையான எண்ணங்கள் தவழுவதையும், பர்ணசாலையிலே பாழகிக்கிடக்கும் வாழ்வை நான் வெறுக்கிறேன் என்பதையும் தெரிந்து கொண்டான். ஆமாம்! கடலிற்குளித்து முத்து எடுக்கும் பணியாளே எங்கு குளித்தால் முத்து கிடைக்கும் என்பதை அறிவான். அதுபோலத்தான் அவர் என் அகத்தை மறைத்துக் கொண்டிருந்த புறக்கோலத்தால் மயங்காது, என்னைக் கண்டறிந்தார். என் மனம் அவரை நாடிற்று. என்னைப் பூஜிக்கப் பலர் வந்ததுபோலவே அவரும் வந்தார். ஆனால் என் தவவேடத்தைப் பூஜிக்காமல், என் அன்பை வேண்டினார்; நான் அளித்தேன் அகமகிழ்ச்சியுடன். தவக்கோலத்திலேயே, நான் அவருக்குப் பிரியையானேன். சத்யப்பிரகாசர் இதனை எப்படியோ தெரிந்து கொண்டார். தெரிந்து கொண்டால் என்ன? என்னை என் வழிப்படி விட்டுவிடலாம். இல்லையேல், இங்கிருந்தால்தானே, இது நடக்கும், இனி வேறு இடம் செல்வோம் என்றாவது இங்கிருந்து கிளம்பிவிட்டிருக்கலாம்; இல்லையேல், என் அன்பரை அழைத்து, அறிவுரை புகன்று தடுத்திருக்கலாம். அதுவும் இஷ்டமில்லையேல், என்னைக் கொன்று விட்டிருக்கலாம். இவை எதையுஞ் செய்யாது, என்ன செய்தார் தெரியுமோ! எந்த மடியிலே, நான் சிறுகுழந்தையாகப் படுத்துக் கொண்டு, தூங்கினேனோ, அதே மடியிலே, சாய்ந்து கொண்டு, மையல் ஊட்டவேண்டுமென்று கட்டளையிட்டான். மகளாக இத்தனை காலம் இருந்தது போதும், இனி எனக்கு மனையாளாகிவிடு என்று கூறினான். என்னைக் கேட்டானா இதுபோல். இல்லை, சொல்லைச் செலவிடவில்லை. ஓரிரவு பக்தகோடிகள் போய்விட்டபிறகு, நான் படுத்துக்கொண்டிருந்த அறையிலே மினுக்கிக் கொண்டிருந்த தீபம் அணைந்தது; அணைக்கப்பட்டது. ஓர் உருவம் என் மஞ்சத்தருகே நின்றது பெருமூச்சுடன். நான் “அப்பா!” என்று அலறினேன். அந்த உருவம் கலகலவெனச் சிரித்திடக் கேட்டுச் சித்தம் மருண்டது. சத்யபிரகாசரே அங்கு வந்து நின்றவர். என்னை வளர்த்த தந்தையே விளக்கை அணைத்துவிட்டு அங்கு நின்றார், என்பது தெரிந்தது, என் திகில் கொஞ்சம் நீங்கிற்று, நான் மஞ்சத்திலே எழுந்து உட்கார்ந்துகொண்டு, “என்னப்பா இது? இப்படி மிரட்டிவிட்டீர்” என்று கேட்டேன். அவர், என் பக்கத்திலே வந்து உட்கார்ந்தார். நான் வழக்கமாக அவரிடம் நெருங்குவது போல் நெருங்கினேன். அவரோ என்னை என்றும் அணைத்திராத விதமாக அணைத்தார், “அப்பா!” என்று அழைத்தேன். அவரோ ‘மகளே’ என்று அழைக்காமல், தவமணி என்று அழைத்தார். குரலிலே ஓர் மாதிரியான தழுதழுப்புத் தென்பட்டது. அவருடைய முகத்தைச் சரியாகப் பார்க்கவிரும்பி, அணைப்பிலிருந்து விடுபட முயன்றேன், அவரோ என்னை இறுகக் பிடித்துக் கொண்டார். எனக்குத் திகில் பிறந்தது. அவருடைய வலிமைக்கு நான் ஈடா? மஞ்சத்திலே நான் சாய்க் கப்பட்டேன். கூவிய என் வாயை, அவர் தமது வாயால் மூடி விட்டார். என் கன்னங்கள் அவருடைய கோரப்பற்களுக்கு இரையாயின. என் இதழ் துடித்தது, என் உடல் பதறிற்று, என்உயிர் போய்விடும் போலாகிவிட்டது. மகளே என்று அழைத்து வந்த அந்த காதகன், அன்றிரவு என்னைத் தன் காமத்துக்குப் பலியாக்கி விட்டான் அழுது அழுது என் கண்கள் சிவந்து விட்டன. அவனோ சிரித்துச் சிரித்து என்னைச் சித்திரவதை செய்தான். தான் பயிரிட்டசெடி, மரமாகிக் கனி தந்தால், அதனைச்சுவைக்க வேறுயாருக்கு உரிமை உண்டு? என்று கேட்டான். என் நிலைமையை நினைத்தாலே நடுக்கம் பிறந்தது. வெளியே சென்று யாரிடம் முறையிடுவேன்? எவரையும், என் மொழியைக் கேளாவண்ணம் அவன் தடுத்து விடுவான்! என் பிரியபதியாக யாரைக் கொள்ள வேண்டுமென்று நான் நிச்சயித்திருந்தேனோ, அவர் முகத்தில் எங்ஙனம் விழிப்பேன் என்று திகைத்தேன். பகலிலே தவமணி! மாலையிலே உமது மூத்த மகனின் காதற்கனி! இரவிலே, அந்த காமக்கள்ளனின் போகமாது! இந்நிலையிலே எத்தனைகாலம் நான் தள்ளமுடியும். என்னால் சகிக்க முடியவில்லை. எனவே இவரிடம் உண்மையைக் கூறினேன். இவன் தலை கீழே உருண்டது. என் நெஞ்சிலே இருந்துவந்த பாரம் குறைந்தது” என்று தவமணி என்ற அந்தத் தையல் தன்வரலாற்றினை உரைத்தாள். நான் திக்பிரமை அடைந்தது போலவே, என் தந்தையும் திக்பிரமை அடைந்தார். “தவவேடமிட்டுத் தகாத செயல் புரிந்துவந்த இந்தத் தூர்த்தன் ஒழிந்தது முறையே! மகளையே மஞ்சத்துக்கு இழுத்த மாபாவி ஒழிந்தது சரியே இவன் தலை கீழே உருண்டது கண்டு மருண்டு. என் மகனையேயன்றோ ஏதேதோ செய்திட எண்ணினேன்,” என்று மன்னர் கூறினார். சரி ஒருவாறு தொல்லை தீர்ந்தது, என்று நான் நினைத்தேன். ஆனால் நடந்தது விபரீதமாயிற்று. என் அண்ணன், மன்னரை நோக்கி” தந்தையே! நான் தவமணியை மணம் புரிந்துகொள்ளத் தாங்கள் அனுமதி தர வேண்டும்” என்று வேண்டினார். இச்சொல்கேட்ட என் தந்தை, தீ மிதித்தவர்போல் குதித்தார். “பாண்டிய நாட்டுப் பார்த்திபனாக வரவேண்டியவனடா நீ! படுமோசச் செயலைப் புரியலாகாது” “படுமோசம் நான்புரியவில்லை இப்பாவையை மணக்க விரும்புகிறேன். சிங்காதனம் இச்சிங்காரியுடன் நான் வீற்றிருக்க இடமளித்தால் சரி, இல்லையேல், அது வேண்டாம் எனக்கு” “தவமணி, யோகி வேடந்தாங்கியிருந்த காமிக்குப் போகப்பொருளாக இருந்தாள், அவளை நீ உன் அன்புக்கு இருப்பிடமாக்கினாய். ஆனால் உன் குடும்பவிளக்காக அவள் இருக்க முடியுமா?” “அன்பு இல்லாதவிடத்து, மணம் இல்லை” “நாடாளப் பிறந்தவன் நீ, வெறும் ஏட்டாளனாக இராதே. தவமணி இங்குத் தங்கட்டும். அவளுடைய இல்லம் உனக்கு இன்ப மாளிகையாகயிருக்கட்டும்; ஆனால், அரசமாளிகைக்கு வேறு ஒருவள் இருந்தே தீரவேண்டும். அதுதான் முறை” “தந்தையே! உமது வார்த்தையை மீறுதவற்காக மன்னிக்க வேண்டுகிறேன். அவள் ஓர் காமுகனின் சேட்டையால் சிதைந்தாள், அது அன்னவள் குற்றமல்ல. என்றையத்தினம் நான் அவளை உண்மையாகக் காதலிக்கத் தொடங்கினேனோ, அன்றே நான் அவளை ஆஸ்ரமத்திலிருந்து அழைத்துக் கொண்டு வந்திருக்கவேண்டும். தவமணியை நான் அங்கு விட்டதனால் தான், தகப்பனாக நடித்த அந்தத் தறுதலை தகாத செயல்புரிந்தான். அவனுக்குத் தண்டனை தந்தாய்விட்டது. இவள் செய்த குற்றமென்ன? ஏன் இவளை என்னிடமிருந்து பிரிக்கவேண்டும்?” “நீ அரசனின் மகன், மூத்த புதல்வன்; இளைய அரசன், நாளை அரசாள வேண்டியவன். அது கவனமிருக்கட்டும்!” “இவளோடு, பாண்டியநாடு என்னை ஏற்றுக் கொண்டால் நானிங்கு இருப்பேன், இல்லையேல், அரசும் வேண்டேன்.” இந்த உறுதியான பேச்சைக்கேட்ட என் தந்தை கோபமேலிட்டு, “பாண்டியநாடே பெரிது; உன் பிடிவாதமல்ல! என் ஆணையே பெரிது; உன் ஆசையல்ல. பலகோடிமக்களின் பாதுகாவலனாக இருக்கும் பணியே சிறந்தது; ஒரு பாவையுடன் புரண்டுகிடக்கும் போகமல்ல. அரசன் நீதியின் அடையாளம்; பொறுப்பின் சிகரம்; போகத்தின் தூதனல்ல. காரியமும் வீரியமும் மிளிர அவன் விளங்கவேண்டும்; காதலுக்காகக் கண்ணீரும் கம்பலையுமாக நிற்கலாகாது. பாண்டி நாட்டுப் பார்த்திபனின் மகன் இப்படி, பழுதுபட்ட ஓர் பாவைக்காகத் தனது பரம்பரைப் பண்பு, பாராளும் உரிமை தந்தையின் வேண்டுகோள் எனும் இவற்றைத் தட்டத்துணிவது மடைமை, கொடுமை, இதை நான் அனுமதியேன். நாடு அனுமதிக்காது; வேண்டாம் பிடிவாதம். எப்படியோ இந்த மங்கைக்கும் உனக்கும் சம்பந்தம் உண்டாகிவிட்டது. அதற்காக வேண்டி. நீ மக்களுக்குச் செய்யவேண்டிய தொண்டு என்ன என்பதையும் அந்தத் தொண்டு புரிய எது தகுதியான முறை என்பதையும் மறவாதே. தந்தை தனயனிடம் தர்க்கிக்க வேண்டிய விஷயமுமல்ல இது. நீ உனது நிலைமையை உணர்ந்து நட” என்று மன்னர் கூறினார்.                              பகுதி - 17   “தந்தையே காதல் என்பது தர்க்கத்துக்குக் கட்டுப்படாது. அதனை அளக்கும் கோல் கிடையாது, நிறுத்திடும் துலாக்கோலும் இல்லை. இதுப்பற்றி அதிகம் பேசிடவோ எனக்கு மனம் இல்லை. ஒன்றுமட்டும் உரைப்பேன். உத்தமோத்திமராகிய தாங்கள் அறியாததல்ல நான் கூறப்போவது. அரும்பு மலர, முகூர்த்தம் குறிப்பாரில்லை. யார் எவ்வளவு முயன்றாலும் அரும்பை அவரிஷ்டத்துக்கு இணங்கவைத்து மலராகும்படிச் செய்யமுடியாது. பகலோனைக் கண்டதும், மலர்ந்திடும் பங்கஜத்தைப் பட்டத்தரசனுங்கூட சட்டமிட்டுத் தடுத்திட முடியாது. முடிவேந்தனானாலும், ஓர் மயிலை ஆடு என்று கட்டளையிட்டுத் தோகையை விரித்தாடச் செய்யவும் முடியாது. தானாகக் களிகொண்டு ஆடிடும் மயிலையும் “நிறுத்து உன் நடனத்தை” என்று கூறிடமுடியாது. அதுபோலவே, தர்க்கமும், தடை உத்திரவும், தண்டனையும் நிந்தனையும், வம்பும் வல்லடியும் வாலிப உள்ளத்திலே மலரும் அந்தக் காதல் எனும் உணர்ச்சியைப் பறித்துவிட முடியாதல்லவா? தந்தாய்! தவமணியின், காவியே என்னைத் தடுக்க முடியவில்லை. ஆஸ்ரமமாயிற்றே அங்கு ஆத்மாவுக்கும் ஆண்டவனுக்கும் பரஸ்பரம் ஏற்படவேண்டுமே ஒழிய, ஆணுக்கும் பெண்ணுக்கும், ஆலிங்கனம் உண்டாவது முறையா என்று தர்க்கிக்க என்மனம் இசையவில்லை. காரணம், காலம், விளைவு, முதலிய எதனையும் பொருட்படுத்தாது திடீரெனக் கிளம்பும் ஜோதியன்றோ காதல்” என்று என் அண்ணன் கூறினர். “அது ஜோதியோ, அல்லவோ, எனக்குத் தெரியாது. இவள் இந்த மண்டலத்துக்கே பெருந்தீயானாள். தந்தைக்கும் மகனுக்குமிடையே, சண்டை மூட்டுகிறாள். பாண்டிய குடும்பத்தின் மணியை மாசாக்குகிறாள். பாண்டிய நாட்டுக்கு ஓர் பழிச்சொல் ஏற்படச்செய்து விட்டாள், வன்னஞ்சக்காரி! வளர்த்த தகப்பனின் காமக்கூத்துக்கு இடமளித்த வேசி!” என்று என் தந்தை தவமணி எனும் பெண்ணைக் கடிந்துரைத்தார். என் அண்ணன், அச்சொல்கேட்டு வெகுண்டு, “தந்தையே! அரச நீதியின்படியும், பாண்டிய பரம்பரை முறைப்படியும், இவள், பட்டத்தரசியாகும் உரிமை இழந்தவளாகலாமே தவிர, பழிச்சொல் கேட்டுத் தீரவேண்டுமென்று நியதி இல்லை. அவளை நான் மனமார என் பிரிய நாயகியாகக் கொண்டு விட்டேன். எனவே இனி யார் அவளைப் பற்றி இழிவாகப் பேசத் துணிந்தாலும், நான் சகியேன்” என்று கூறினார். பிறகு அங்கு நடைபெற்ற சோகரசமான சம்பவங்களை நான் சுருக்கமாகவே கூறுகிறேன். நடனா! என் தந்தை கெஞ்சியது மட்டுமல்ல, தவமணியும் எவ்வளவோ இதமாக என் அண்ணனுக்குப் புத்தி சொன்னாள். நானும் என்னால் கூடுமான மட்டும் அவரைத் திருப்ப முயன்றேன். அவர் பிடிவாதம் குறைவதாகத் தெரியவில்லை. பிறகு என் தந்தை ஓர் பயங்கரமான முடிவுக்கு வந்தார். தலைமீது கரங்களால் மோதிக்கொண்டார், தடதடவென ஓடினார், மடமடவென ஏதேதோ பேசினார். பிறகு “கடைசி முறை. என் சொல்லைக் கேள்” என்று கூறினார். என் அண்ணன், முடியாது என்பதைத் தெரிவிக்கத் தன் தலையை அசைத்தார் கம்பீரமாக. அந்தக் கம்பீரம், என்னைத் தூக்கிவாரிப் போட்டது. ஓர் அரசனின் கோபம், ஒரு தந்தையின் ஆத்திரம், அதுமட்டுமா, அரசபோகம் பறிமுதலாகும் என்ற நிலை எதுவும், துச்சமெனக் கருதிய அவருடைய துணிவுக்குக் காரணம், ஒரு துடி இடையாள்! காவலாளிகளில் ஒருவனை அழைத்து, அரசர் ஏதோ கூறினார். அவன் விரைந்துசென்றான். கொஞ்ச நேரத்துக்கெல்லாம், மன்னரின் மெய்ப்பாதுகாவலர் அங்குவந்துசேர்ந்தனர். மன்னர், “ஆணவம்பிடித்த இவனையும், சாசகமிகுந்த இவளையும் சிறையில் தள்ளுங்கள்; தனித்தனி சிறையில் கடுங்காவலுடன் அரண்மனைக்குள்ளாக இருக்கும் பிரத்தியேகச் சிறையில்” என்று உத்தரவிட்டார். இருவரும் மெய்ப்பாதுகாவலரால் இழுத்துச் செல்லப்பட்டனர். மன்னரும் மற்றக் காவலாளிகளும் அரண்மனைக்குச் சென்றுவிட்டனர். நான் மட்டுமே, நெடுநேரம் சிந்தாகூலனாக உலவிக் கொண்டிருந்தேன். யாருடைய நிலைமை எப்படி இருந்தால்தான் என்ன, அந்த நிலவு வழக்கம்போல் பிரகாசித்துக் கொண்டிருந்தது. சிறையிலே, என் அண்ணன் அவருடைய மனத்தை விழியாலும் மொழியாலும் மருட்டிய தவமணியும் அடைபட்ட செய்தி, மெல்ல மெல்ல நகருக்குள் பரவலாயிற்று. ஊரிலே இதுபற்றி விபரீதமான வதந்திகள் பரவாதிருக்க வேண்டுமென்று கருதிய என் தந்தை, வம்பளப்போருக்குக் கடுந்தண்டனை தரப்படும் என்று முரசறைவித்தார். நடந்ததைச் சுருக்கமாக மக்களுக்கு அறிவிக்குமாறு பிறகு மந்திரிக்குக் கட்டளையிட்டார். “ஆஸ்ரமத்திலே இருந்த அந்தப் பெண் ஒரு ஜாலக்காரியாம். இளவரசருக்கு அவள் ஏதோ மருந்திட்டு மயக்கினாளாம், அவளும் இளவரசருமாகச் சேர்ந்து சதிசெய்து, மன்னரைக் கொல்ல முயன்றனராம்” என்று மக்கள், பேசலாயினர். மன்னரின் கோபம் தணிந்தபாடில்லை. பிரதானியர்களிலே சிலர் சிறுமைக் குணம் கொண்டவர்கள். அவர்கள், என்னாலேயே, இளவரசருக்கு இந்த இடுக்கண் நேரிட்டதென்று பேசிடக் கேட்டேன். என் மனம் பதைத்தது. என் அண்ணனுக்குச் சொந்தமான அரச உரிமையை நான் அபகரிக்கச் செய்தேன் என்று கூறும் கயவரின் நாவைத் துண்டித்திட எண்ணினேன். அவ்வளவு ஆத்திரம் எனக்கு. மோசம் செய்யும் உலுத்தனா நான்? எவ்வளவு இழிகுணம் இவர்களுக்கு என்று கூறினேன் – சோகித்தேன். இளவரசர் சிறையிலே தள்ளப்பட்டதும், மந்திரிகளும், பிரதானியரும், என்னைக் கண்டதும், விசேஷ மரியாதைகள் செய்யலாயினர். அது எனக்குப் புண்ணிலே புளித்தகாடியை ஊற்றுவது போலிருந்தது. என்மீது வீண் சந்தேகம் கொண்ட அவர்களையும், அவர்கள் பெரிது எனப்பேசும், அரச பதவியையும் தூசு எனக் கூறிவிட்டுத் துறவு பூண்டுவிட வேண்டும் என்றுகூட நினைத்தேன். இந்தத் தீர்மானத்தைத் தந்தையிடம் கூற அவரிடம் சென்றேன். ஆனால் அவருடைய விழி சிவந்திருந்ததையும், அவருடைய மொழியிலே. சோகம் தோய்ந்திருந்ததையும் கண்டதும் என்னால் ஏதும் பேச முடியவில்லை. “கடைசி முறையாக, நீ போய்க் கேள் அவனை. என்னைச் சாகடிக்கத்தான் அவன் பிறந்தானா என்று கேள். குலை தள்ளியதும் வாழையை வெட்டி வீழ்த்துவதையும், விழுதுவிட்டால் ஆல் நிலைத்து நிற்பதையும் அவனுக்குக் கூறு. பாண்டியனைப் படுகளத்திலே கொல்ல முடியாதுபோன பகைவர்களின் பங்காளியா, பட்டத்தரசன் பரிவைப் பெரிதென எண்ணும் புதல்வனா அவன் என்பதைக் கேட்டுப்பார்” என்று என்னிடம் கூறினார். புயலைப் போய் அடக்கு என்று கட்டளையிடுவதுபோல, இருந்தது, என் தந்தையின் சொல். நான் என் செய்வேன்! சரி என்றுகூற எப்படித் தைரியம் வரும் – முடியாது என்றும்கூற முடியுமோ! தலை அசைத்தேன். தந்தை தலையைக் கவிழ்த்துக் கொண்டார். துக்கம் அவரைத் துளைத்தது. என் செய்வார் அவர்? சிறைச் சென்றேன். காவல் புரிவோரை வெளியே போகச் சொல்லிவிட்டு, என் அண்ணன் இருந்த அறைக்குள் நுழைந்தேன், அவர் புன்சிரிப்போடு என்னைப் பார்த்து, “தெரியும் எனக்கு, தந்தை எப்படியும் சம்மதிப்பார் என்று. அவர் சம்மதத்தைக் கூறத்தானே நீ வந்தாய்?” என்று கேட்டார். எனக்கு அவர் மொழியைக் கேட்ட பிறகு, நடுக்கமும் பிறந்தது. இவ்வளவு நம்பிக்கையும் ஆவலும் கொண்டுள்ளவருடன், என்ன பேசி, மன்னர் வழிக்கு அவரைத் திருப்புவது? நடக்கக்கூடியகாரியமா? என்ற எண்ணம் என்னைக் கோழையாக்கிவிட்டது. நான் இந்த முயற்சியைச் செய்யாதிருப்பின் முடிபெற வேண்டியே நான் சும்மா இருந்துவிட்டேன் என்ற பழிவந்து சேரும். இரு நெருப்புக்கிடையே சிக்கிய நான் எவ்வளவு தவித்தேன் தெரியுமோ! என் நிலையை ஒருவாறு யூகித்துக் கொண்டார் அண்ணன். அவருடைய புன்னகை மறைந்துவிட்டது. பொலிவு குறைந்தது. பெருமூச்சுடன் “தந்தை இசைய மறுக்கிறாரா?” என்று கேட்டார். “ஆம்” என்று நான் மெதுவாகக் கூறினேன். “சரி!” என்று கோபமாகக் கூறிவிட்டு, அவர் அங்கிருந்த மஞ்சத்திலே படுத்துக்கொண்டார். என் நெஞ்சு உலர்ந்துபோய் இருந்தது. நெஞ்சை நனைத்துக் கொள்ள, அங்கிருந்த நீர்க்குவளையை எடுத்தேன். என் அண்ணன் “வேண்டாம்! அந்த நீரைப் பருகாதே” என்று கூறினார். நான் பயந்துவிட்டேன். ஒரு சமயம், தற்கொலை செய்துகொள்ளச் நீரிலே, ஏதேனும் விஷம் கலந்து தயாராக வைத்திருக்கிறாரோ, என்று திகில் பிறந்தது. அண்ணா! என்று கூவினேன். “தம்பி! பயப்படாதே! அதிலே விஷமில்லை, ஆனால் அந்தக் குவளை நீரிலே, என் கண்ணீர்த்துளிகள் சிந்தின. நீர்பருக அங்குச் சென்றேன்; என் நிலையை நினைத்தேன்; கண்ணீர்ப் பெருகிக் குவளையிலே சிந்திற்று; நீர் கெட்டுவிட்டது” என்று அவர் கூறினார். அதைக்கேட்ட நான், எவ்வளவு பதறினேன் தெரியுமா! நடனா! நெடுநேரத்திற்குப் பிறகே, நான் அவருடன் பேச முடிந்தது. பேச்சினால் என்ன பயன் விளைய வேண்டுமோ, அது ஏற்படவில்லை. அதற்கு மாறாக, என் அண்ணன் காதலையே கலையாகக் கொண்டிருப்பவர் என்று நான் கண்டு கொண்டேன். ஒரு பெரும் புலவர் பேசுவது போலிருந்ததே தவிர அவருடைய பேச்சு, மைவிழியாளுக்காக வீண் பிடிவாதம் செய்யும் வீணுரையாக எனக்குத் தோன்றவில்லை. அவருடைய வாதங்களும், மனோதத்துவ மொழியும், அவருடைய வாதங்களும், மனோதத்துவ மொழியும், மிக அழகாக இருந்தன. தந்தையின் துக்கத்தை நான் அவருக்கு எடுத்துரைத்தேன். ஒரு பெண்ணுக்காகக் குடும்பம் அழிவதாக என்று கேட்டேன். நான் கற்றிருந்த திறமையைத் தனையையும் காட்டித்தான் நான் பேசிப் பார்த்தேன். அவ்வளவையும் அவர் சிதறடித்தார். அவர் அன்று கூறிய சில வாசகங்கள் பிறகு பல இரவுகள் என் சிந்தனைக்கு வேலை தந்தன. அவர் அன்று கிளப்பிய பல பிரச்சினைகளுக்கு, எனக்கு இன்றளவும் விடை கிடைக்கவில்லை. “தம்பீ! அரசனின் கடமை, அரச பதவியின் பொறுப்பு, நிலைமைக்கேற்ற நடவடிக்கை, என்று பல கூறினார் தந்தை. நீயுந்தான் கூறுகிறாய். அரசனாக ஒருவன் இருப்பதனால் ஒரு சாதாரண மனிதனுக்குள்ள மிகச் சாதாரணமான மனிதனுக்குள்ள மிகச் சாதாரணமான உரிமையையும் அரசனென்ற நிலைமைக்காக, பதவிக்காக இழந்து விடவேண்டுமா? அறிவுடைமையா அது? அரசபோகத்துக்காக, குடும்ப இன்பத்தைப் பறிகொடுக்க வேண்டுமா? அது சரியா” என்று என்னை அவர் கேட்டார். இன்றுவரை நான் அதுபற்றிச் சிந்தித்துப் பார்க்கிறேன், சரியான பதில் கிடைக்கவில்லை. “தம்பி! பாண்டிய நாடு பெரிது, உன் பரிவுக்கேற்ற மங்கையல்ல! என்று தந்தை கோபத்தோடு கூறினார். கோபம் அவருடைய சிந்தனா சக்தியைக் கெடுத்துவிட்டது. நீ யோசித்துப் பார்! ஒரு மங்கைக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாது அவளைப்பெற ஆண்மையில்லாது, பேடியாகித் துரோகியாகி, நான் இந்த மண்டலத்தை ஆண்டு என்ன பயன்? தந்தையின் கோபத்துக்குப் பயந்து ஒரு தையலின் மானத்தை நசுக்க நான் துணிந்து விட்டால் நாளைக்கு ஒரு மண்டலத்து மக்களின் மானத்தைக் காப்பாற்றும் மகத்தான பொறுப்பை நான் நிறைவேற்ற முடியுமா! நீ கூறு. ஏழை எளியவர், அபலை அனாதிகள், எனும் எவரிடமும் பரிவு காட்டி, அவருடைய சுகத்திற்காகப் பணியாற்றுவது அரசபதவியின் மேன்மை என்று அறவுரை புகல்கிறார்களே, அந்தப் பதவிக்கு நான் இலாயக்குள்ளவனாவதற்கு ஒரு மங்கையரின் மனத்தைப் புண்ணாக்கி. வாழ்வைப் பாழாக்குவது பயிற்சி முறையா கூறு? அவள் கண்ணீர்ப் பெருகப் பெருக, நான் பனிநீரால் குளிப்பாட்டப்பட்டு பட்டத்தரசனாவதா? அவள் கரங்களைப் பிசைந்துகொண்டு ஓர் இடத்திலே அழுதுகொண்டிருப்பது,வேறோர் இடத்திலே நான் கரத்திலே செங்கோலேந்தி அரசாள்வதா! ஒரு புறத்திலே, நான் நீதியின் சின்னமாக கொலுவீற்றிருப்பது, மற்றோர் இடத்திலே ஓர் மங்கை என்னை அநீதியின் இருப்பிடமே என்று கடிந்துரைப்பதா! பாண்டியன் நாட்டுக்கு, ஒரு பாவையின் வாழ்வைக் கெடுத்த பாதகனா அரசனாவது? ஒரு பெண்ணை நிர்க்கதியாக்கும் நீசனுக்கா மக்கள் நெடுந்தண்டமிடுவது? யோசித்துப்பார்” என்று அவர் அன்று சொன்னார். இதுவரை பல பெரியவர்கள் இதற்குப் பலபடப் பதில் கூறினர், எனக்குத் திருப்தியாகவில்லை. நடனா! அவர் எவ்வளவு கருத்துடன் பல நூற்களைப் படித்திருந்தார் என்பது, அன்று அவர் பேசியதால் நன்கு விளங்கிற்று. காதலால் தாக்குண்டவர்களின் நிலைமயைப் பற்றி அவர் கூறியவற்றிலே ஒன்றைக்கூற என் மனம் என்னைத் தூண்டுகிறது. காதலால் தாக்குண்டு காடுமேடு சுற்றிய உனக்கும் வீரமணிக்கும் அது நன்மை பயக்கும், என்றுங் கருதுகிறேன். ஒரு தமிழ் அணங்கின், காதலன், பொருள் தேட, வேற்றூர் சென்றானாம், அதுபோது, அந்தப் பெண்மணி, தன் முற்றத்திலே, முறுவலின்றி முடங்கிக் கிடந்தாள். நெடுவழி சென்றவனை நினைத்தாள். அவன் சென்ற இடமோ, நீரும் குளிர்ச்சியும் வளமையும் வசீகரமும் இல்லாத இடமாம். மழைகாணா மண்டிலத்துக்காகத் தன் மணாளன் சென்றிருப்பது தெரிந்து, வெப்பம் அவனை வாட்டுமே என்று அவள் வருந்தினாளாம். வருத்தத்தோடு, அந்த வனிதை வானை நோக்கினாள். வெண்மேகக் கூட்டத்தைக் கண்டாள். மேகங்களே! என் மணாளன் சென்றுள்ள மண்டிலத்துக்கு விரைந்து சென்று, மழை பொழியலாகாதா என்று கேட்டாளாம், அந்தக் காரிகை, கேட்டபின்னர், அவளே யோசித்தாள் வெண்மேகம், மழைபொழியும் ஆற்றலற்றதல்லவா? நீர் இல்லையே, அவற்றிடம்! அவை எங்ஙனம் மழைதரும், என்று யோசித்தாள். அயர்தாளோ? இல்லை. நீர் மொண்டு உண்டு வெண்ணிறம் மாற்றி கருமேகமாகுமின். காதலன் சென்றுள்ள இடம் சென்று மழைபொழியச் செய்து அவன் வெப்பத்தால் வாடுவதைப் போக்குமின் என்று வேண்டினாள் வெண்மேகங்களை! எவ்வளவு அன்பு அவளுக்கு? காதலன் பிரிந்ததால் தனக்குற்ற கஷ்டம் மட்டுமே பெரிது என்று அவள் எண்ணவில்லை. வெப்பமிக்க இடத்திலே அவர் வருந்துவாரே என்ற நினைப்பே அவளுக்கு அதிக வருத்தமுண்டாக்கி விட்டது. விரைந்துவா! என் வேதனையைப் போக்கு! என்று மட்டுமே காதலனை வேண்டினாள் என்று கூறினால், அவளுக்குத் தனியே இருந்து தவிக்க மனமில்லை, மணாளனுடன் இன்பமாக வாழ மனம் நாடுகிறது என்ற அளவே, அவளுக்கு இருந்த அன்பு என்று ஏற்படும். எந்த மங்கைக்கும் இது இயல்புதானே! சுகமாகச் சந்தோஷமாக வாழத்தானே எவரும் எண்ணுவர். அதுபோல் இவளும் எண்ணினாள். ஆனால் இந்த மங்கை தன் சுகத்தையும் சந்தோஷத்தையும் இரண்டாவதாக்கினாள். வேற்றூர் சென்றுள்ள காதலனுக்கு இரண்டு கஷ்டம்; தனக்கு ஒரு கஷ்டம் என்பதனை உணர்ந்தாள்; அவனின்றித்தான் வாடுவதுபோல, அவளின்றி அவனும் வாடித்தானே கிடப்பான். ஒத்த காதல்தானே தமிழ் மரபு. எனவே பிரிவால் வரும் துயரம் இருவருக்கும் உண்டு. அதே கஷ்டத்தால் காரிகையும் வாடுகிறாள். காளையும் வாடுகிறான். ஆனால் காரிகை சொந்த நாட்டில் குளிர்ச்சியுள்ள இடத்திலே இருக்கிறாள்; அவனோ அவளைப் பிரிந்திருக்கும் கஷ்டத்தோடு,வேறோர் கஷ்டமும் அனுபவிக்கிறான். அவன் சென்று நடமாடும் இடம் வெப்பமிக்க வெளி, ஆகவே, அவனுக்குள்ள கஷ்டம் இருவகைப்படும். இதனைத் தெரிந்ததாலேயே, அவள் மேகங்கள்! அவர் அங்கு அவதிப்படுகிறாரே, வெப்பத்தைப் போக்க மழை தாருங்கள் என்று வேண்டுகிறாள். அன்பு மட்டுமா! அறிவும் ததும்புகிறது அவள் மொழியிலே! வானமண்டலத்திலே எவனோ தேவன் உட்கார்ந்துகொண்டு மழையைப் பொழியச் செய்கிறான் என்று வறட்டுப் பேச்சல்ல அவள் உரைத்தது. நிலத்திலே உள்ள நிரை உண்டு கருமேகம், பின்னர் மழையாகப் பொழிவிக்கும் என்ற அறிவு மொழி பேசுகிறாள் அந்த மங்கை. “கடைக்குப் போய் கனி ஒரு ரூபாய்க்கும், கற்கண்டு இரண்டு ரூபாய்க்கும், சந்தனம் ஒரு வீசையும், மல்லிகைச் செண்டு ஒரு கூடையும், வாங்கிக் கொண்டு வா” என்று பணியாளுக்குக் கூறிவிட்டால் மட்டும் போதுமா? இவற்றை அவன் கடையிலே பெறக் காசு அவனுக்குத் தந்தனுப்பினால்தானே, பழமும் பிறவும் அவன் பெற்றுவருவான்! காசு தராவிட்டால், வெறுங்கையன் என்ன கொண்டு வர முடியும்? அதுபோலவே வெண்மேகங்களே! நீரை மொண்டு உண்டு, கருமேகமாகி, மழை பொழிமின் என்று கூறிவிட்டால் போதுமா, நீர்நிலையங்களைக் காட்டவேண்டாமோ அந்த மங்கை, நீர்நிலையங்கள் மட்டுமல்ல, நீர்வீழ்ச்சிகளையே வெண்மேகங்களுக்குக் காட்டுகிறாள். எங்கேயோ எவருக்கோ சொந்தமானவை அல்ல அவள் காட்டும் நீர்வீழ்ச்சிகள். அவளுடைய சொந்தச் சொத்து! “வெண்மேகங்களே! இதோ பாருமின் அவர் இல்லாததால் வருந்திடும் நான், அழுதபடி யிருக்கிறேன். என் கண்களிலே பொழியும் நீரைமொண்டு, உண்டு, வெண்ணிறம் மாறி, கருமேகமாகிப், பின்னர் வெப்பமிக்க இடத்திலே சென்றுள்ள என் மணாளன் மகிழ, அங்கு மழை பொழிமின், என்று, அந்த மங்கை வேண்டிக்கொண்டாளாம். அவளுடைய அன்பு எவ்வளவு அழகு! தம்பி! தமிழகம் இதுபோன்ற காதலகமாக இருந்தது என்று அன்று என் அண்ணன் உரைத்தார். பல நாட்களக்குப் பிறகு, புலவரொருவர் ஏதோ ஓர் ஏட்டுச் சுருணையிலிருந்து ஏழெட்டடி பாடிக் காட்டினார். இக்கருத்துப்பட, ஒரு பாடலை. நடனா, மற்றும் பல காதற் சித்திரங்களை அவர் தீட்டினார் அன்று; என்ன அருமை தெரியுமா? காதற் சித்திரங்களைத் தீட்டிக் கொண்டே, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், இருக்க என் அண்ணன் தயாராக இருந்தாரே தவிர, தவமணியைக் கைவிட ஒரு துளியும் சம்மதிக்க வில்லை. நான் குனிந்த தலையுடன், என் தந்தையிடம் சென்றேன். விஷயத்தை உணர்ந்து கொண்ட என் தந்தை “தெரிகிறது, அந்தத் தூர்த்தன் உன் சொல் கேட்க மறுத்துவிட்டான். ஆம்! போதை குறையாது அவனுக்கு. கள், உண்டவனையே கெடுக்கும்; காமம், அதினினும், கொடியது. அவன் அப்பேய் வயத்தனாகிவிட்டான், எனவே இனிப்பிறர் சொற்கேட்கும் பெருங்குணம் அவனிடமிராது. பாம்பும் அவனுக்கு இனிப்பழுதையாகத் தோற்றும். படுபாதாளத்திலே அவன் விழ இருப்பதைத் தடுக்க நான் எடுத்துக்கொண்ட முயற்சி பலிக்கவில்லை. என் செய்வது? ஒரு காரிகையின் கருவிழிக்காக அவன் தன் பரம்பரை வழியையும் இழக்கத் துணித்துவிட்டான். அவன் ஒரு புன்சிரிப்புக்குப் பலியானான்! நான் அவனுடைய கண்களிலே புரளும் நீருக்குப் பலியாவதா? பாண்டிய மன்னனின் நீதி, மக்கட்கு ஒருவிதமாகவும் மகனுக்கு வேறாகவும் இருந்தது என்ற பழிச்சொல் எனக்கு வரக்கூடாது. தலைமுறை தலைமுறையாக ஒளிவீசும், பாண்டியப் பண்பு, பாகுமொழிக்குப் பலியான ஒரு காளையைக் காப்பாற்றுவதற்காகக் கெட விடுவதா! இல்லை! அவன் என் மகனல்லன்! என் சட்டத்தை மீறிய சாதாரணக் குடிகமனே! கட்டுக்கு அடங்க மறுக்கும் அவன் மீது பகிரங்கமான குற்றச்சாட்டுத் தயாரித்து, அடுத்த வெள்ளியன்று, விசாரணை நடத்தியே தீருவேன். இதற்கான காரியங்களைச் செய்யுமாறு, மந்திரிக்குக் கூறு. இதோ பார்! இன்று முதல், நீ இளவரசர் மாளிகையை உனது இருப்பிடமாக்கிக்கொள். அம்மனைப் பணியாட்களிடம் பட்சமாக நட, இளவரசப் பதவிக்கேற்ற பண்புடன் வாழவேண்டும்” என்று கூறினார். இனி, என் அண்ணன் தப்பமுடியாது என்பது நிச்சயமாகிவிட்டதால், என்மனம் மிக அதிகமாக வேதனைப்பட்டது. அவர் உலவிய திருமனையிலே நான் எப்படி உலவுவேன்? அவருடைய பணியாட்களிடம் நான் எப்படிப் பேசுவேன்? அவருடைய உரிமையைப் பறித்துக்கொண்டு நான் எப்படி மக்களிடை உலவுவேன் என்றெல்லாம் எண்ணி ஏங்கினேன் ஊரார் எப்படியும் என்னைப் பழிப்பார்கள் என்று பயந்தேன். நான் ஏன் பாண்டிய மன்னனுக்கு மகனாப் பிறந்தேன்? பழிச்சொல் ஏற்கவா? என்று துக்கித்தேன். என் அண்ணனுக்கு என்ன தண்டனை தருவார்களோ என்று திகிலடைந்தேன்? அனால், என் அண்ணனோ கவலையின்றி, இச்செய்தியைக் கேட்டுக்கொண்டார். “காலதாமதின்றி விசாரணை நடத்தி, என்னை நாடு கடத்தட்டும், அவளையும் உடனழைத்துச் செல்ல மட்டும் அனுமதி தரவேண்டும். அவளைச் சிறையிலே அடைத்து வைத்துக்கொண்டு என்னை வெளியே துரத்தினால், நான் சும்மா இரேன். பிறகு, பாண்டிய நாடு என் பகைவர் நாடுதான்! எந்தக் கோட்டையிலே அந்தத் தவமணியைக் கொண்டுபோய் வைத்திருப்பினும், எத்தனைப் பட்டாளத்தைக் காவலுக்கு வைத்தாலும், நான் நுழைந்தே தீருவேன்; இது நிச்சயம்” என்றுரைத்தாராம் காவலாட்களிடம். திங்கள் போய் செவ்வாய்; பிறகு புதனும் வியாழனும் விடிந்தது. என் வேதனையும் கட்டுக்கடங்க மறுத்துக் கண்ணீராக வெளிவந்தது. வெள்ளியன்று விசாரணை நடந்தது. ஆனால் என் அண்ணன் செய்த குற்றத்தைப் பற்றிய விசாரணையல்ல. தவமணியின் பிரேத விசாரணை நடந்தது! நடனா! உனக்கு இது கேட்டதும் தூக்கிவாரிப்போட்டது போலத்தான், வெள்ளி விடிந்ததும் வேலையாட்கள் ஓடோடி வந்து, தவமணி தற்கொலை செய்து கொண்டாள் என்று செய்தி கூறியதும் நான் துடித்தேன். தன்னால் தந்தைக்கும் தனயனுக்கும் தகராறு விளைவதையும், அரச குடும்பத்திலே அமளி மூள்வதையும் கண்டு சகிக்க முடியவில்லை தவமணியால்! ஒரு பெண்ணின் பொருட்டு இளவரசர் இத்தனை இன்னலை அனுபவிப்பதா! அரசு இழந்து, சுற்றமிழந்து தவிப்பதா? இதற்கு நாம் இடந்தருவதா? என்று யோசித்தாள். காதலெனும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த என் அண்ணனை விடுவிக்கத் தன் உயிரையே தியாகம் செய்யத் துணிந்தாள். “விசாரணையா? இளவரசரையா, விசாரிக்கப் போகிறார்கள்! வீணர்கள்; அவர்கள் விவேகமில்லாத ஆணவக்காரர்கள்; இருதயத்தின் துடிப்பை உணராத மூடர்கள்! என்ன செய்தாராம், என் பதி! உள்ளம் உரைக்கும் வழிப்படியேதான் நடப்பேன்; ஊராள்வோன் குறுக்கிட்டாலும் கவலைகொள்ளேன் என்று கூறினார். இது குற்றமா? பட்டவர்த்தனப் பேச்சு; சொல்லுக்கேற்ற செயல், பாண்டிய மண்டிலத்திலே குற்றங்கள் போலும். காதல் என்ற உணர்ச்சி, அரண்மனைகளிலே நுழையாதபடி, மன்னர் சட்டதிட்டமிடுவது, முடியுமா? நடக்குமா? ஆகுமா? மன்னராம் மன்னர்! நீதியாம் நீதி! இதற்கு ஒரு விசாரணையாம்! விசாரணை நடத்தட்டும் நாளைக்கு! விசாரணைக்குக் கூடிடும் விவேகிகளை நான் கேட்கிறேன் சில கேள்விகள். பதில் கூறட்டுமே பார்ப்போம் அந்தக் கண்ணியர்கள்” என்று வியாழனன்று இரவு, தவமணி, தான் அடைபட்டிருந்த சிறையிலே கூவிக்கொண்டிருந்தாளாம். எப்போதும் அடக்கமாக இருக்கும் தவமணி அன்று ஆர்ப்பரித்தது கண்ட காவலாளிகள் கூடக் கொஞ்சம் கடிந்து தவமணியைக் கள்ளி என்றும்காமச்சேட்டைக்காரி என்றும் திட்டினராம். “தூ! கூலிக்கு வேலை செய்யும் கூளங்களே! வாயை மூடுங்கள்! என்ன தெரியும் உங்களுக்கு நியாயம்! மந்தையிலே வாழும் உங்கட்கு மனத்தின் சுதந்திரம் என்ன தெரியும்? மன்னன் மொழிக்கு மறுமொழி இல்லையென்று கூறி, மண்டியிட்டு வாழ்ந்து, வயிறு கழுவுங்கள். அது உங்கள் நிலை. எனக்கென்ன? இந்த அரசன், எனக்கு ஒரு துரும்பு! இந்த உலகம் எனக்குப் பிடிமண்! சட்டம் எனக்குச் சாக்கடைச் சேறு! என்னை யார் என்று தெரிந்துகொள்ள முடியாது உங்களால் – இன்று! நாளைக்குக் காணுங்கள் என்னை!! நான், யார் என்பது விளங்கும்!” என்று தவமணி ஆத்திரமொழி பேசினாளாம். அவள் உரைத்ததன் பொருள், வெள்ளி விடிந்ததும் விளங்கிவிட்டது. கார்மேகம் போல இருண்டு, மினுமினுப்புடன் விளங்கி, நீண்டு அடர்ந்து இருந்த, கூந்தலே அவளுக்குக் கூர்வாளாகிவிட்டது. அதனைக்கொண்டே, சங்கு போன்ற கழுத்திலே சுருக்கிட்டுக் கொண்டு, சிறை அறையிலேயே, பிணமானாள் அப்பெண்! நோயின்றி, நலிவின்றி இருந்தவள் திடீரென்று இறந்ததால், உடல் ஒரு துளியும் வாடவில்லை.                                                             பகுதி - 18   சுருக்கிட்டுக் கொண்டிருந்ததால், விழி சற்று வெளியே வந்துவிட்டது. மற்றப்படி அலங்கோலம் இல்லை. பொன்னாற் செய்த பதுமைபோலக் காணப்பட்டாள். தவமணியின் தற்கொலை, ஊரைக் கலக்கிவிட்டது, என் தந்தையின் மனத்தைக் கரைத்துவிட்டது, என்னை குழப்பம் செய்துவிட்டது, இனி, என் அண்ணன் நிலைமையைக் கூறவும் வேண்டுமோ? ஆ! ஐயோ! தவமணி! தியாகவல்லி! கண்மணீ! உன்னை இழந்தேனோ! என்று அவர் கதறியது கேட்ட, அரண்மனைவாசிகள், வேதனைப் படும் வேங்கை பேசவும் ஆரம்பித்தால் இப்படித்தான் இருக்கும் என்று கூறினார். என் அண்ணனுடைய குரலிலே, துக்கமும் கோபமும் கலந்திருந்தது. தவமணியின் பிரேத விசாரணை நடந்தேறியது. இளமையும் எழிலும், கொண்ட நான் உலவ, இந்த அரண்மனை இடந்தரவில்லை, இது முறையா, என்னினும் எழிலுடைய மங்கை உண்டா, என்னைப் பார்த்துவிட்டுப் பதில் கூறுங்கள், என்று தவமணி கேட்பது போலிருந்தது. சட்டமும் பட்டாளமும், அசரனின் கோபமும் ஆள்வோரின் ஆர்ப்பரிப்பும், சிறையும் பிறவும், என்னை என்ன செய்ய முடியும் என்று கேட்டுச் சிரிப்பது போலவே இருந்தது அந்தப் பிணத்தின் கோலம்! பார்த்தவர்கள் பிரலாபிக்காமலில்லை! மனத்திற்குள் மன்னனைத் தூஷிக்காமலில்லை. அன்று அரண்மனை முழுவதும் அலங்கோலமாகத்தான் இருந்தது. அந்தத் துக்கம் ஆற, ஒரு வாரமாயிற்று. இதற்கிடையே, என் அண்ணன் கொதிக்கும் எண்ணெய் நிரம்பிய கொப்பரையிலே வீழ்ந்தவரானார்! கோவெனக் கதறுவார்; சோறு உண்ணார்; சோகமே உருவானார் தவமணி இறந்தாளே தவிர, என் அண்ணன் மனத்திலே மூண்ட காதற்தீ அணையவில்லை. அவள் இறந்தாள்; தந்தையும் தனயனும் ஒற்றுமைப்படுவர் என்று கூற முடியாத நிலை உண்டாகிவிட்டது. சிறையிலிருந்து விடுவித்தல், முதல் வேலை, என் காதலி தற்கொலை செய்துகொள்ள வேண்டிய நிலையை உண்டாக்கிய காதகனின் கழுத்தை முறிப்பதுதான்! என்று என் அண்ணன் கூறினார். வெறுங்கோபத்தோடு மாத்திரமல்ல, அசைக்க முடியாத உறுதியுடன், கேட்பவர் அச்சங்கொள்ளும் விதத்திலே! சிறைக்கதவுகளைத் தூளாக்குவேன்; கம்பிகளைப் பெயர்த்தெடுப்பேன்; சுவரினைப் பிளப்பேன் என்று இடிமுழக்க மிடலானார். காவலாளிகள் பாய்ந்தனர்! துணை தேடினர். மன்னர் மிரண்டார். தவமணி இறந்ததுடன் ஆபத்தும் நெருக்கடியும் ஒழிந்தது என்று கருதினேன்; புதிய ஆபத்து புறப்பட்டுவிட்டதே! வேதனை இவனுக்கு வெறியூட்டி விட்டதே! இதற்கென்ன செய்வேன் என்று கதறினார். மீண்டும் நான் தூதனுப்பப்பட்டேன் அண்ணனிடம். என்னைக் கண்டதும் அவர் கோவெனக் கதறி, இப்போதாவது திருப்தி உண்டாயிற்றா அதிகார ஆணவம் பிடித்தலையும் உன் தந்தைக்கு? என் கண்ணைத் தோண்டி எடுத்துவிட்டார்; காரிருள் மயமே இனி எனக்கு இவ் உலகம் என்று கூறினார். நெடு நேரத்திற்குப் பிறகே, அவருக்கு ஓரளவு ஆறுதல் பிறந்தது. பிறகு நான், மன்னர் மிரண்டிருப்பதைக் கூறினேன். மகனுக்குத் தந்தை பயந்து வாழும் நிலைமை கூடாது என்று வாதிட்டேன். மன்னரின் உயிர் பிரியின் தவமணி மீண்டும் வாராளே என்றுரைத்தேன். மிகப் பக்குவமாயப் பேசித் தந்தையைக் கொன்றுவிடத் துணிந்த என் அண்ணனின் எண்ணத்தைக் கொன்றொழித்தேன் பிறகு, அவருடைய எதிர்காலத்தைப் பற்றிய பேச்சு எழுந்தது. வாழ்க்கையிலே எழும்பிய புயல் அடங்கிவிட்டது, இனி பழைய நிலையை அடைந்துதான் தீரவேண்டும் என்றும் நான் உவமான உவமேயங்களுடன் பேசினேன். அவரோ தீயினாற் சுட்டபுண் ஆறும்; ஆனால் நாவினால் சுட்ட வடு ஆறாது. நோய் தீரும்; ஆனால் உள்ளம் ஒடிந்தால், ஓட்டுவித்தை நடக்காது என்று உரைத்து விட்டார். “இனி உனக்கு இங்கு வேலை கிடையாது. என் வேலை இனி, உலகைச் சுற்றுவது, கானாறும் காடும், குன்றும் குடிசையும், மணல்வெளியும் முட்புதரும், எனக்கு இனி தோழர்கள். உங்கள் அரண்மணையிலே அழகிகள் ஆடுவர், பாடுவர்; இனிக் காடுகளிலே, தோப்புகளிலே பறவைகள் பாடிடக் கேட்டு இன்புறுவேன் பனிநீரில் குளித்துப் பட்டாடை பூண்டு, பட்டத்தரசனாகும் வேலை எனக்கு வேண்டாம். என்னை இனிப் பாண்டிய நாடு, உயிரோடு பாராது! இன்றே இப்போதே, பட்டத்து உரிமை, அரண்மனையின் வாழ்வு, பாண்டிய நாட்டு வாசம் எல்லாம் துறந்தேன். இன்றிரவு ஊரடங்கியதும், எனக்கு நாடு கடக்க உத்தரவும், ஒரு வாள் ஒரு புரவி, பட்டத்துக்கு அரசியாகும் பேறு பெறுபவள் அணிவதற்கென நமது பொக்கிஷத்திலே உள்ள நீலமணி. ஆகியவற்றினைத் தரவேண்டும். நான் ஏற வேண்டிய பீடத்திலே நீ வீற்றிருக்கலாம். ஆனால் என் தவமணி அணிந்திருக்க வேண்டிய நீலமணியை, பாண்டிய நாட்டு ராணியாரும் அணியக் கூடாது. இந்த என் வேண்டுகோளை நிராகரித்தால், நாளைக் காலை என் பிரேத விசாரணையைப் பாண்டிய மன்னர் நடத்தட்டும்! அவருக்குத்தான் பிண விசாரணையிலே பழக்கமிருக்கிறதே!!” என்று அண்ணன் கூறினார். வாழ்க்கையை அவர் எவ்வளவு வெறுத்துவிட்டார் என்பது அவருடைய பேச்சிலே தோய்ந்து கிடந்தது. நடனா! “கடைசி முறையாகக் காணவேண்டும்; நான் வயோதிகன்; அவன் மீண்டும் இங்கு வருவதானால்கூட, நான் உயிரோடு இருக்கமாட்டேனே! இன்றிரவு ஒரே முறை அவனைக் கண்டு அணைத்துக் கொண்டால்தான் என் மனம் கொஞ்சம் நிம்மதி அடையும்” என்று மன்னர் கெஞ்சினார். “என்னை அவர் பார்க்கக் கூடாது! தவமணியின் மரணத்துக்குக் காரணமாக இருந்த அவரைக் கண்டதும், என் கரங்கள் அவருடைய கழுத்தை நெறித்து விடும்” என்று அண்ணன் கூறிவிட்டார். அன்றிரவு நடுநிசியில் நீலமணியை நான் எடுத்துச் சென்று அவரிடம் தந்தேன்; கண்களிலே நீர் புரள நின்றேன்; காலிலே வீழ்ந்து பணிந்தேன். ஒரு விநாடி அவருக்கு என்னிடம் கனிவு எழும்பிற்று; கட்டித் தழுவினார், மறு விநாடிப் பழையபடி நின்றார். குதிரை ஏறினார்; பறந்தார் அரண்மனைத் தோட்டத்தைவிட்டு. அன்று கண்டதுதான் அவரை நடனா! பிறகு, இதோ நீலமணியைக் கண்டதும், அவரைக் காண்கிறேன்” என்று பாண்டியன் தன் அண்ணன் வரலாற்றினைக் கூறி முடித்தார். பாண்டிய மண்டலத்தைத் துறந்தவர், பல்வேறு நாடுகள் சென்று, கலிங்கத்திலே தங்கினார். அக்காலத்திலேதான், மலர்புரியை மயக்கிய ஆரிய முனவனின் தந்திரத்தால், மலர்புரி ராணியின் மனோஹரனாக இருந்தார்; நடனா பிறந்தாள்! முதற்காதலைப் போலவே, மலர்புரி காதலும், சரிந்தது. பின்னர் கலிங்கப் போரிலே மாண்டார், காதலுக்காகப் பட்டத்தைத் துறந்த உன் தந்தை! மலர்புரிராணியே! நீ சோழ மண்டல ஆடலழகியாக இருந்தபோது, வனபோஜன விழாவிலே கண்டு, நீலமணியை எடுத்துக்கொண்டு வந்தாள், உன்னைக் காண்பதற்குப் பதிலாக நீலமணியையாகிலும் காண்போம், என்று போலும்! இவ்விதமாகத்தான் விஷயம் இருந்திருக்க வேண்டும் என்று யூகிக்கிறேன். ஆனால் ஒரு விஷயம் புலனாகவில்லை. அவரிடமிருந்த நீலமணி, உன்னிடம் எப்படி வந்தது, என்பது தெரியவில்லை. இந்நீலமணியினை உனக்குத் தந்தது யார்? என்று பாண்டிய மன்னன் நடனாவைக் கேட்டார். ‘இது என் வளர்ப்புத் தாய் தந்தது. அவள் அரண்மனைப் பாதகி” என்று நடனா கூறினாள். பாண்டிய மன்னர், சிரித்துக்கொண்டே, தவமணியை இழந்து மலர்புரி அரசியைப் பெறுமுன், இடையே, அந்தப் பாதகிக்குக் காதலனாக இருந்திருப்பார்! சரி, எப்படியோ ஒன்று, நீலமணி உனக்குத் தானே சொந்தம், தந்தையின் சொத்து, மகளுக்குத்தானே! என்று கூறினார் மன்னர். சின்னாட்களிலே, மன்னர், மாறுவேடத்திலே, மலர்புரி சென்று, நடன ராணியின் வரலாற்றினை அரசிக்கு எடுத்துரைத்தார். “என் வாழ்க்கை முழுவதும் விசாரமே குடிகொண்டிருந்தது. இந்தச் செய்தி எனக்கு. இனி புத்துயிர் தரும். அன்று சோழருடைய வனபோஜன விழாவுக்கு நான் மாறுவேடத்திலே சென்றபோது, நடனா, வெளியிலிருந்து வரவழைக்கப்பட்டாள் என்றும், சோழ மண்டலத்திலே நிரந்தரமாகத் தங்குபவள் அல்லவென்றும் ஆரியன் கூறினான். அதனாலேயே நான், நடனாவை மீண்டும் காண முடியாமற்போய் விட்டது. நடனாவின் காதலனை நான் கொடுமைக்கு ஆளாக்கினேன். என் செய்வது? ஆரியத்திடம் சிக்கிய நான் அறிவிழந்தேன், மன்னரே! மாறுவேடத்துடன் இங்கு வந்து, என் வாழ்வு துலங்கும் வாசகம் உரைத்தீர். இனி ஒரு காரியம் உம்மால் ஆக வேண்டும். எப்படியும், நடனாவும் வீரமணியும், மலர்புரியை ஆள வழிசெய்ய வேண்டும். ஆனால், நடனா, என் விபசாரத்தில் பூத்த மலர் என்பது மட்டும் தெரியக்கூடாது. உலகம் என்னை நிந்தனை செய்யுமே என்பதல்ல என் கவலை! நடனாவுக்குப் பழிச்சொல் பிறக்குமே என்றே நான் கவலை கொள்கிறேன், அவளை – என் மகளை – அருகே அழைத்து, அணைத்து முத்தமிட்டு, வாழ, என் மனம் தூண்டுகிறது;மானம் குறுக்கே நின்று தடுக்கிறது. “மலர்புரி மக்களே! இதோ முழுமதிபோல் முகமும், பூங்கொடிபோல் உடலும், பொன்குணமும் கொண்ட என் மகளைக்காணீர்! அவளுடைய கணவனைப்பாரீர்! எதிரியைக் கதிகலங்கச் செய்யும் தோள் வலியுடையான், என் மகளின் மனக்கோவிலின் தேவன்; என் மருகன், வீரமணியைப் பாரீர்! இனி இவர்களே உங்களின் அரசன், அரசி” என்று மக்களிடம் கூறிக் குதூகலிக்க என் உள்ளம் ஊறுகிறது. ஆனால், நடனா என் விதவைக் கோலத்து விருந்தின் விளைவு என்பது வெளிப்படுமே, என்ற எண்ணம், வேதனையை ஊட்டுகிறது. நான் என் செய்வேன்! புதையலின் மீது புலி படுத்துக் கிடக்கிறது; வீணையின் நரம்பைச் சுற்றிக் கொண்டு விஷப்பாம்பு இருக்கிறது. இதற்கென்ன செய்வேன்? பேதமையினால் கெட்ட எனக்கு, என் சொந்த மகளிடம் ஊரறியப் பேசவும் முடியவில்லையே! என் கரத்தினால் மணிமுடியை அவளுக்குச் சூட்டி மகிழக் கருத்து எழுகிறதே; கரம் அதற்குப் பயன்பட முடியாத நிலையிலன்றோ இருக்கிறது. மலர்புரி ராணிவிபசாரியாக இருந்தாளாம் என்ற சொல் மட்டுமா? மலர்புரியின் ராணி நடனா, விபசாரியின் மகள், என்று வீணர்கள் உரைப்பரே! வேற்று நாட்டவர் இழித்துப் பழித்துப் பேசுவரே! அவளுக்கு உரிமையுள்ள, இந்த மண்டிலத்தை அவள் அடையமுடியாத படி, என் நிலைமையன்றோ குறுக்கிடுகிறது” என்று மலர்புரி அரசி சோகித்தாள். “தந்தையின் நிலையேதான் போலும் மகளுக்கும்! அவர் ஆளவேண்டிய பாண்டியநாடு, அப்பேறு பெற முடியாது போயிற்றல்லவா?” என்று மன்னர் பெருமூச்செறிந்தார். மலர்புரி அரசி, “நான் மறந்தேவிட்டேன். அவர் பாண்டிய குமாரர் என்பதைத் தாங்கள் கூறினீர்களே! என் மகளின் நினைப்பு எனக்கு, அந்த அதிசயத்தைச் சாதாரணமானதாக்கிவிட்டது. அவர் ஒரு மறத்தமிழர் என்றுதான் நான் எண்ணியிருந்தேன். இப்போது உமது மொழியே எனக்கு அவர் அரச குடும்பத்தில் உதித்தவர் என்பதை உணர்த்திற்று” என்றாள். “அது சரி! ஆனால், தாங்கள்தான், ‘தேவன்’ என்று அவரைக் கருதினீரே, மனிதராகவே எண்ணவில்லையே!” என்றார் மன்னர், வேடிக்கையாக. “உண்மைதான்! எனக்கு அவர் தேவன். அதில் சந்தேகமில்லை” என்று அரசியார் கூறிவிட்டு, “முக்கியமான விஷயத்திற்கு என்ன பதில் கூறுகிறீர். நடனா, மலர்புரியை ஆளவேண்டும்; அவள் என் மகள் என்பதும் தெரியக்கூடாது! இந்தச் சிக்கலைத் தீர்த்து வைக்க வேண்டுமே! என்று கேட்டிட, மன்னன் சிரித்துக்கொண்டே, “தாங்கள் கூறிக் கொண்டிருக்கும்போதே, நான் ஓர் வழி கண்டுபிடித்துவிட்டேன்” என்று சொன்னான். ‘மார்க்கமிருக்கிறதா, மன்னரே!’ என்று மலர்புரி அரசி கேட்டாள். விதவைக் கோலத்திலே பெற்ற காதல் விருந்தின் விளைவான நடனா நாடாள, வழி இருக்கிறது; அதே சமயத்தில், ஊர் நிந்தனை பிறவாதபடி தடுக்கவும் வழி இருக்கிறது என்று பாண்டிய மன்னர் கூறிடக் கேட்ட மலர்புரி அரசி மகிழ்ந்து, “என்ன வழி? எனக்குக் கூறுங்கள் விரைவாக” என்று ஆவலுடன் கேட்டாள். “அரசியாரே! என் திட்டம் சுலபமானதுதான். ஆனால் அதற்குச் சோழனுடைய ஆதரவு வேண்டும்” என்று பாண்டியன் கூறிடக் கேட்ட மலர்புரி அரசி, “சோழ மன்னருக்கு உமது திட்டம் பிடிக்காமல் போனால் என் செய்வேன்” என்று கேட்டாள் ஏக்கத்துடன். “அரசியாரே, அஞ்சாதீர் மலர்புரிக்கு மாறுவேடத்தில் வந்ததுபோலவே, சோழ மண்டலம் செல்கிறேன். வரலாறு முழுவதையும் மன்னருக்கு உரைப்பேன். வீரமணியின் மீது சோழ மன்னர் கொண்டுள்ள கொதிப்பை மாற்றுவேன். உண்மை தெரிந்தபிறகு அவரே வீரமணியை வரவேற்பார். தவற்றை வேண்டுமென்றே செய்யும் மன்னர்களும் தமிழ்த்தரணியில் உண்டா! என் திட்டத்தையும், அது எந்நோக்குடன் செய்யப்படுகிறது என்பதையும் சோழருக்குக் கூறுவேன். அவரும் இசைவார் என்றே நம்புகிறேன்” என்று பாண்டியன் கூறினார். அரசியார்‘ ஒருவாறு மனந்தேறினாள். ஆனால் மறுகணமே, திகிலுடன் “அது சரி, பாண்டிய பூபதி! தங்கள் திட்டம் என்ன? அதைக் கூறவில்லையே” என்று கேட்டாள். பாண்டியன் புன்னகை பூத்த முகத்துடனே, “மலர்புரிமீது, வீரமணி படை எடுத்து வருவான். போர் மூளாமுன்னம் தூதுவிடுவான், மலர்புரி அரசி, முடிதுறக்க இசைவார்; மக்கள் வீரமணியை மன்னராகத் தேர்ந்தெடுப்பர். ஆரியத்துக்கு அடிபணிந்ததற்குக் கழுவாய் தேடிட, அரசி, தன் பதவியைத் துறந்தது முறையே என்று சோழனும், பாண்டியனும் கூறுவர். இதுதான் என் திட்டம்” என்றான். “போர் மூண்டுவிட்டால். வீணாகப் பலர் மடியவேண்டுமே” என்று கவலைப்பட்ட அரசியாருக்குப் பாண்டியன் “அந்தப் பயமேவேண்டாம்” என்று கூறித் தேற்றினான். மலர்புரி அரசியிடம் விடைபெற்றுக்கொண்டு சோழநாடு சென்று பாண்டியன் திரும்பு முன்னம், மலர்புரி அரசி. மந்திரிப் பிரதானியாரிடமும், ஊர்ப்பெரியவர்களிடமும், “ஆரியத்துக்கு அடிமைப்பட்டுக் கிடந்த நான், இனியும் நாடாளுவது முறையாகாது, வேறு தகுதியானவரை மன்னராக்கிக் கொள்ளுங்கள்” என்று கூறி வைத்தாள். ஆனால் ஒருவராவது, மலர்புரி அரசி மீது மனத்தாங்கல் கொள்ளவில்லை. ஆரிய நச்சரவுதான் அழிந்தொழிந்ததே; இனியும் ஏன் அரசியார் அஞ்சவேண்டும், என்று கூறினர். பாண்டியன் சோழனிடம் சவிஸ்தாரமாக, வீரமணி நடன ராணி வரலாற்றினைக் கூறினான். சோழன் தமிழ் வீரனாம் வீரமணி துரோகியல்ல; துயருற்ற ஒருவருக்குத் துணை நின்றதன்றி வேறு தீங்கிழைக்கவில்லை என்பது தெரிந்து, வீணாக வீரமணியை நாடு கடத்தி விட்டோமே என்று வருந்தி, நெடுநாட்கள் பலவகையான துன்பங்களை வீரமணி அனுபவித்ததும், கொடியிடைக் கோமளம் நடனம், பல பாடுபட்டதும், தனது துலாக்கோல் சாய்ந்ததால்தான் என்பதை உணர்ந்து வருந்தி, வீரமணியிடம் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்பினார். அன்றே அரச சபையிலே, வீரமணி மீது முன்னர் படிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்ததுடன், சோழன், பாண்டிய மன்னரும் மலர்புரி ராணியும் தயாரித்த திட்டத்தைத் தகர்க்கக் கூடியதான வேறோர் அறிக்கையும் விடுத்தார். மாறு வேடத்துடன் அரச சபையிலே இருந்த பாண்டியன் திடுக் கிட்டுப் போனார். ஆனால் முகமோ புன்னகை மேடையாயிற்று. “தமிழர்களே! நாம், கலிங்கத்தின்மீது போர்த்தொடுத்து, அந்நாட்டரண்களைப் பிளந்தெறிந்து, மன்னனை முறியடித்து, அந்த மண்டலத்தை நமது ஆட்சியின் மேற்பார்வைக்குட்படுத்தினோம். கலிங்க மன்னன், வாரிசு இன்றி இறந்து போனான். கலிங்கத்திலே நாம் பெற்ற வெற்றிக்கு முக்கிய துணையாக இருந்த நமது மறத்தமிழன் வீரமணி. மாசிலாமணி என்பது விளங்கிவிட்டதால், இன்று நாம் நமது வளர்ப்புப் பெண் நடனராணியை வீரமணிக்குத் திருமணம் முடிக்கவும், நடனராணிக்கு நமது நன்கொடையாக கலிங்கத்தைத் தரவும், தீர்மானித்துள்ளோம். வீரமணியும் நடனராணியும் இதுபோது பாண்டிய நாட்டிலே உள்ளனர். அவர்கள் ஒரு திங்களில் இங்கு வருவர். நமது தலைநகரிலே திருமணம் நடைபெறும். மறுகணம் நடனராணி, கலிங்கராணி என்று பிரகடனம் வெளியிடப்படும். அந்தச் சந்தோஷச் செய்தி கேட்டுத் தமிழகம் மகிழும் என்பதில் ஐயமில்லை. கலிங்கராணி வாழ்க!” என்று மன்னர் அறிக்கை படித்து முடித்தார். கரகோஷமும் ஆனந்த ஆரவாரமும் அடங்கிய பிறகு. பாண்டியன், சோழ மன்னரைத் தனியே அழைத்து, “மலர்புரி அரசியின் மனக்கோட்டையை இடித்துவிட்டீரே” என்றான். “இடிக்கவில்லை, மலர்புரிக்குக் கலிங்கம் வெளி அரணாக இருக்கும். நடனாவும் வீரமணியும் கலிங்கத்தை ஆள்வர். சில காலமானதும், மலர்புரி. பாதுகாப்புக்காகக் கலிங்கத்துடன் இணைக்கப்பட்டு, இருநாடுகளும் நடன–வீரக்கோட்டமாகத் திகழும். காலம் இதைச் செய்யட்டும். தாயையும் மகளையும் ஒன்றுசேர்க்க, தலையுருட்டும் சண்டை வேண்டாமென்று எண்ணியே நான், உமது திட்டத்துக்குப் பதிலாக வேறு திட்டமிட்டேன். மேலும், பாண்டியரே! ஆரியரின் ஆதிக்கம் பரவாது இருக்க வேண்டுமானால், நாம், தனித்தனி அரசுகளாக இருப்பதைவிட ஓர் கூட்டாட்சி அமைப்பதே நலன் என்று நான் கருதுகிறேன். கலிங்கமும் மலர்புரியும் மட்டுமல்ல; சேர சோழ பாண்டிய நாடுகளும், எல்லைப் புறமாக உள்ள வடுகர் நாடும் விந்தியம் முதல் குமரி வரை, திராவிடம். இங்கு ஆரியம் புகாதபடி பாதுகாக்க, இங்குள்ளவர்கள், ஓர் கூட்டாட்சி அமைக்க வேண்டும். மறத்தமிழரின் தோள்வலி குன்றவில்லை; ஆனால் மனவலி குன்றுகிறது. அதைக்காண எனக்குக் கவலையாக இருக்கிறது. ஓர் பலமான கூட்டாட்சி அமைத்துவிட்டால், ஆரியத்தைத் தடுக்க வசதியாக இருக்கும். இதுபற்றிப் பிறகு யோசிப்போம். இனி பாண்டிய மண்டலத்திலே உள்ள, உனது அண்ணன் மகள், மலர்புரி அரசியின் குமாரி, என் வளர்ப்புப் பெண், நடனாவையும் அவளுடைய நாயகனையும் வரவழைப்போம்; மலர்புரிக்கும் ஓலைவிடுப்போம்” என்றுரைத்தான். மலர்புரி திரும்பிய பாண்டியன் கூறிய மொழி கேட்ட அரசிக்கு, ஓர் விதத்திலே சந்தோஷமும் மற்றோர் விதத்திலே சோகமுமாக இருந்தது. “என் செய்வது, என் செயல் அப்படி இருந்தது” என்று கூறினாள். மறுதிங்களிலே, தமிழக மன்னர்கள் முன்னிலையில், நடனா – வீரமணி திருமணம் விமரிசையாக நிறைவேறியது. நெடுநாட்களுக்குப் பிறகு சோழ நாடு வந்த வீரமணிக்குச் சொல்லொணாச் சந்தோஷம். நடனாவுக்கு, அரண்மனையிலே அமோகமான வரவேற்பு. சோழரின் குமாரி, தங்கை நடனாவைக் கண்டு பூரித்தாள். திருமணத்தைவிட அதிக விமரிசையாக நடனாவின் முடிசூட்டு வைபவம் இருந்தது. போரால் இளைத்துப் போன கலிங்கம்; இனிவளம் பெறும் என்று பலரும் வாழ்த்தினர். முடிசூட்டு விழா முடிந்தது. இசைவிருந்து நின்ற பிறகு இரவு நெடுநேரத்திற்குப் பிறகு, கலிங்கராணியும், கலிங்கத்தை வென்ற வீரமணியும், அரண்மனை நந்தவனத்திலே ஆடிப்பாடிக் கொண்டிருக்கையிலே, “உனக்கென்னம்மா உல்லாசத்துக்குக் குறை! பாண்டிய நாடு தகப்பன் தரணி, மலர்புரி தாய்நாடு, சோழநாடு வளர்ப்புத் தந்தையூர்; கலிங்கமோ, உனக்கே சொந்தம்” என்று வீரமணி கேலி பேசினான். “போம், கண்ணாளா! வீரம் உம்முடையது, விருது எனக்குக் கிடைத்தது. ஆனால் அன்று. நான் முதன் முதலாக என் தாயை, மலர்புரி அரசியைத் சந்தித்தேனே, நமது திருமணத்திற்கு முன்னாள், அன்று இருவரும் அழுத கண்களின் சிகப்பு என்றுமே மாறாது உலகுக்கு நாங்கள் வேறு வேறுதானே! இதுபோல எங்கு உண்டு? தாயை மகள் அறியாமல் எத்தனை காலம் தவித்தாள்; அறிந்தும் பிரிந்தே வாழ்ந்தாள் என்று உலகம் கூறாதோ, என்ன வாழ்வு இது! அன்று என் அன்னை என்னை அணைத்து உச்சிமோந்து முத்தமிட்டபோது, எனக்கு இரு கண்களிலிலும் நீரருவி கிளம்பிற்று. இன்னும் அதனை எண்ணினால் என்னால் துக்கத்தை அடக்க முடியவில்லை” என்று நடனா சோகத்துடன் கூறினாள். “கலிங்கராணியாரே! சோகத்தைப் போக்க மருந்துண்டு தெரியுமோ” என்று வீரமணி வேடிக்கையாகக் கேட்டான். கேட்டுவிட்டு, கண்களை மூடிக்கொள். என்று கெஞ்சினான். கலிங்கராணியின் கண்களும் மூடின. துடித்துக் கொண்டிருந்த வீரமணியின் இதழும் நடனாவின் கனியிதழைக் கவ்வின!      முற்றும்