[]                           கர்வமும் காலணியும் (கட்டுரைகள்)  நிர்மலா ராகவன்     அட்டைப்படம் : எம்.ரிஷான் ஷெரீப் - mrishansha@gmail.com  மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியிடு : FreeTamilEbooks.com    உரிமை : Public Domain – CC0  உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.      பொருளடக்கம் முன்னுரை 4  1. கர்வமும் காலணியும் 5  2. அப்பா, அம்மா, அடி 8  3. ஊனம் யாருக்கு? 10  4. அப்பாவுக்கு நன்றி 12  5. எனக்கு தாய்ப்பாசம் கிடையாது! 14  6. காதல் வந்துவிட்டதே! 16  7. அக்கரைப் பச்சை 19  8. யாருக்கு மருமகள்? 22  9. பிறராக ஆவது 24  10. காதலாவது, கத்தரிக்காயாவது! 26  11. மனதை மயக்கும் மருந்துகள் 28  12. நீங்கள் கர்வியா, கோழையா? 30  13. பரீட்சைப் பயம் 33  14. பிள்ளைகள் காட்சிப்பொருட்களல்ல 36  15. உணவின்மூலம் அன்பா? 38  16. உற்று உற்றுப் பார்க்கிறார்களே! 40  17. எனக்கென்ன, பயமா! 42  18. என்றும் சோகமா! 44  19. பொறுத்துப்போக வேண்டுமா, ஏன்? 46  20. வெண்ணையும் சுண்ணாம்பும் 49  21. பயந்தவன்தான் பயமுறுத்துகிறான் 51  22. வீட்டில் போராட்டம், வெளியில் நற்பெயர் 53  23. போட்டி பொறாமை ஏன்? 56  24. முதியோரும் சந்ததியினரும் 59  25. பெண்ணியம் என்பது 61      முன்னுரை   பதினைந்து வயதிலிருந்தே உளவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை நான் ஓயாமல் படித்ததுண்டு. `இதெல்லாம் படிக்காதே! பைத்தியம் பிடித்துவிடும்,’ என்று என் தாய் கெஞ்சினார். பல வருடங்கள் கழித்து ஒருவர் என்னிடம் கேட்டார்: `இந்தமாதிரி மனோதத்துவ புத்தகங்களே எப்பவும் படிச்சா பைத்தியம் பிடிச்சுடும்னு சொல்றாங்களே!’ `என்னைப் பாத்தா பைத்தியம் மாதிரியா இருக்கு?’ என்று கேட்டேன், லேசான சிரிப்புடன். எத்தருணத்திலும் என்னையும், பிறரையும் புரிந்துகொள்ள முடிந்தது என்பதுதான் நடந்தது. (பல்கலைக்கழகத்தில் நான் விரும்பிப் படித்த பிற பாடங்கள் சமூக இயல் மற்றும் மனித வள மேம்பாடு). ஆசிரியையாகப் பணியாற்றியபோது, மாணவ மாணவிகளின் பிரச்னைகளைத் தீர்க்கும் கவுன்சிலராக ஆனேன். மலேசியாவின் ஆங்கில தினசரியான The New Straits Times-ல் குழந்தை வளர்ப்பு, கல்வி, இல்லறம் மற்றும் பல பொருட்களில் என் 350 கட்டுரைகள் வந்திருக்கின்றன. `ஆங்கிலத்தால் எழுதுவதுபோல் சர்ச்சைக்கு உரியதாக தமிழிலும் எழுதுங்களேன்!’ என்று ஒரு  பத்திரிகை ஆசிரியர் கேட்டுக்கொண்டார். இன்னொரு பத்திரிகையில் கேள்வி-பதில் பகுதி. அதில் எல்லா வயதினருக்கும் இருக்கக்கூடிய பிரச்னைகளை அலச முடிந்தது. தெரியாதவற்றைப்பற்றி ஆராய்ச்சி செய்தேன். சில புத்தகங்களில் கிடைத்தன. வேறு சில தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோரையும் தொந்தரவு செய்து பெற்றது. எனது எல்லா அனுபவங்களையும் தாங்கி வருகிறது இத்தொகுப்பு. இதிலுள்ள கட்டுரைகள் யாவும் வல்லமை.காம் இணையதளத்தில் வெளிவந்தவை. அதன் ஆசிரியை திருமதி பவள சங்கரிக்கு மனமார்ந்த நன்றி, என்னை எழுதும்படி தூண்டியதற்கு. `நன்றாக இருக்குமோ, என்னவோ!’ என்று சந்தேகப்படாது இதைப் படிக்க ஆரம்பித்திருக்கும் வாசகர்களாகிய உங்களுக்கும் நன்றி. நிர்மலா ராகவன், மலேசியா                     1. கர்வமும் காலணியும்   கேள்வி: குள்ளமான ஒருவர் குதிகால் மிக உயரமாக அமைந்த காலணியை அணிந்தால் என்ன ஆகும்? பதில்: எல்லாரையும்விட உயர்ந்திருக்கிறோம் என்ற பெருமை எழும். ஆனால் அது நிலைக்காது. அவர் சீக்கிரமே விழக்கூடும். அந்தக் காலணியைப்போல்தான் கர்வமும். பதவியால் வரும் கர்வம் தாழ்மையான நிலைமையில் இருந்த ஒருவருக்கு எப்படியாவது பிறர் தன்னை மதிக்கச் செய்யவேண்டும் என்ற ஆத்திரம். எப்படியோ ஒரு சங்கத்தின் தலைமைப் பதவியைப் பிடித்தார். எல்லாரும் `தலைவரே’ என்றுதான் அவரை அழைக்கவேண்டும் என்ற நிபந்தனை வேறு! `சாதித்துவிட்டோம்!’ என்ற அகந்தை அவர் கண்ணை மறைக்க, தன்னுடன் பழகியவர்கள் எல்லாருமே தன்னைவிடத் தாழ்ந்தவர்கள்தாம் என்பதுபோல் நடக்கத் தொடங்கினார். அச்சத்தாலோ, அல்லது தலைவரைவிட நாம் தாழ்ந்தவர்கள்தாமே என்ற மனப்பான்மையாலோ வாய்திறவாது பின்தொடர்ந்தவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டது. அபூர்வமாக, தன்னம்பிக்கையுடன் எதிர்த்தவரை பேச்சாலும் செய்கையாலும் வீழ்த்தினார். இப்படியே சில காலம் சென்றது. அவரது போக்கைச் சகிக்க முடியாது, ஒவ்வொருவராக விலக, சற்று பயம் ஏற்பட்டது. தன் போக்கை சிறிதே மாற்றிக்கொண்டு, அவர்களை அழைத்து மிக மிக இனிமையாகப் பேசினார்.   எல்லா மனிதர்களும் எப்போதுமே முட்டாள்களா, என்ன! ஒரு முறை அவரால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை எக்காலத்திலும் நம்பத் தயாராக இல்லை. மிதப்பாக இருந்தவர் சுருங்கிப்போனார். பதவி பறிபோக, யாரும் அவரை மதிக்கவில்லை. ஓங்காரக் குரல் மெலிந்தது, உருவத்தைப்போல. நிறைய வாழ்த்து அட்டைகள்! `நான் அரச பரம்பரையில் வந்தவள்!’ என்று பெருமையுடன் சொல்லிக்கொண்ட ஆசிரியை ஒருத்தி எங்கள் தலைமை ஆசிரியையாக நியமிக்கப்பட்டாள், ஒரு மலேசிய இடைநிலைப் பள்ளியில். பள்ளி மாணவர்கள் எல்லாரும் கூடும்போது, ஓரங்குல பருமனான(!) நீண்ட கழியை எடுத்துக்கொண்டு குறுக்கேயும் நெடுக்கேயும் நடப்பாள். அதிகாரம் செலுத்துகிறாளாம்! `Walking Tall!’ என்று கேலியாக ஆசிரியைகள் சிரித்தது அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.   பண்டிகையின்போது, “எனக்கு இந்த வருடம் எவ்வளவு வாழ்த்து அட்டைகள் வந்திருக்கிறது, தெரியுமா!’ என்று என்னிடம் பெருமை பேசினாள். நான் சும்மா தலையாட்டி வைத்தேன். `நீ பதவி விட்டு விலகினால், எத்தனை வரும் என்று யோசிக்க மறந்துவிட்டாயே!’ என்று நினைத்துக்கொண்டேன். இம்மாதிரி குறுகிய காலம் பதவி வகிப்பவர்கள் பிறரை அவமரியாதையாக நடத்திவிட்டு, அதன்பின் அவர்கள் தங்களை மதிப்பதில்லையே என்று அவமானமோ, ஆத்திரமோ அடைவது என்ன நியாயம்? செல்லத்தால் கர்வம் பதவி என்றுதான் இல்லை, ஒரே குடும்பத்தில் மிக அதிகமாகச் செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைக்கும் கர்வம் எழுகிறது. மூன்று ஆண்குழந்தைகளுக்குப்பின், பல வருடங்கள் கழித்துப் பிறந்தவள் ரூபா. பெற்றோர் மட்டுமின்றி, மூத்த அண்ணனுக்கும் செல்லக் குழந்தை ஆனாள். ஒருமுறை,  அண்ணன் நடந்துவரும் வழியில் வேண்டுமென்றே காலை நீட்ட, அவன் தடுக்கி விழப்போனான். “ரூபா!” என்று அவன் இரைய, “நீ பார்த்து நடந்திருக்கவேண்டும்!” என்று தந்தை அருமை மகளுக்குப் பரிந்ததோடு நில்லாமல், அவனைத் திட்டினார். என்ன தவறு செய்தாலும் யாரும் கண்டிக்காததால், `தனக்கு நிகர் யாருமில்லை!’ என்ற கர்வம் ரூபாவிற்கு மேலோங்கியது. அருமை அண்ணனுக்கும் அவளைப் பிடிக்காமல் போயிற்று. பெரியவர்களையும் எதிர்த்துப் பேசும்போது, தாய் மெல்ல விழித்துக்கொண்டாள். அடுத்த முறை அவள் பெரியவர்களை மரியாதைக்குறைவாகப் பேசியபோது, கன்னத்தில் அறை விழுந்தது. பத்து வயதான அச்சிறுமி தந்தையைப் பார்த்தாள் -- தனக்கு ஆதரவாக ஏதாவது சொல்வாரென்று எதிர்பார்த்து. அவரோ முகத்தைத் திருப்பிக்கொண்டார், `நடந்தது எதையும் நான் காணவில்லை,’ என்பதுபோல். அவளுடைய நடத்தை அவருக்கும் அதிருப்தியை விளைவித்திருந்தது. தான் இப்படியே இருந்தால் அனைவருக்கும் தன்னைப் பிடிக்காமல் போய்விடும் என்று புரிந்துகொண்டாள் ரூபா. `ஏன் இப்படி ஆனோம்?’ என்று ஆராயத் தெரியாவிட்டாலும், இது தவறு என்றவரை புரிந்தது. சிறு வயதானதால் குணம் மாறியது. வித்யா கர்வம் ஒரு சங்கீத வித்வான் தன்னுடன் வயலின் வாசித்தவரின் வாசிப்பு திருப்திகரமாக இல்லையென்று தன் வாத்தியத்தாலேயே அவரது தலையில் ஓங்கி அடித்தாராம்! அதைப் பார்த்திருந்த  என் தாயார் அங்கலாய்ப்புடன் கூறினார்: “அதற்குப்பின் எந்த ஆணும் அவருடன் ஒரே மேடையில் உட்காரச் சம்மதிக்கவில்லை!” ஒருவர் தான் மேதை என்று அதே துறையிலிருக்கும் பிறரை அவமரியாதையாக நடத்தினால், நாளடைவில் மற்ற கலைஞர்கள் மட்டுமின்றி, கலையும் அவரை விட்டுப்போய்விடும். அடக்கம் அமரருள் உய்க்குமோ, என்னவோ, நாம் அடக்கமாக இல்லாவிட்டால், வாழ்க்கை நம்மை அடக்கிவிடும். அடக்கம் என்பது நம் சுயமரியாதையை விட்டுக்கொடுப்பது என்பதாகாது. பொறாமை கொண்டு, பிறர் நம்மைத் தாக்க முயல்கையில், அவர்களை எதிர்ப்பதற்காக நம்மைப்பற்றிச் சற்றுப் பெருமையாகப் பேசிக் காட்டலாம். ஏனெனில், அவர்களுக்கு அம்மொழிதான் புரியும். எப்படி போதிப்பது? உங்கள் குடும்பத்தில் ஒரு குழந்தை பல கலைகளிலும் சிறப்பாக இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் முன்னிலையில் அவனைப்பற்றிப் பிறரிடம் பெருமையாகப் பேசுவது வீண் அகம்பாவத்தைத்தான் வளர்க்கும். புகழ் நிரந்தரம் என்று நம்பி வீழ்ந்தவர்கள் பலர். மாறாக, தனிமையில், `நீ கெட்டிக்காரன். சுறுசுறுப்பானவன். உனக்கே தெரியும். உன் திறமைகளை யாராவது புகழ்ந்தால், `நன்றி!’ என்று சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இரு. அதைப்பற்றி அதிகம் யோசிக்காதே. அப்புறம் சிந்திக்கும் திறன், விவேகம் எல்லாம் குறைந்துவிடும். தலைக்கனம் வந்துவிடும்,’ என்று சொல்லி வளருங்கள். தன்னம்பிக்கை அதிகரிக்க, மேலும் பலவற்றில் பிரகாசிப்பான். கனவே சுகம் சிலர் ஒரு காரியத்தைச் செய்யும்போதே அதைப்பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள். இவர்கள் கனவிலேயே இன்பம் காண்பவர்கள். சாதிப்பது அப்படி ஒன்றும் பெரிதாக இருக்காது. காரியத்தைச் செவ்வனே செய்து முடிப்பதற்குள் அதைப்பற்றிப் பிறருடன் பேசினால், அது நல்லபடியாக முடிவது ஏது! சிறப்பான வெற்றி அடைவேன்! ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் `சிறுகதைப்போட்டி’ என்று அறிவித்திருந்தார்கள். பரிசுகள் தங்கத்தாலான கைக்கடிகாரங்கள். எனக்கு இரண்டாவதாக இருந்ததைப் பிடித்தது. `நான் இதைப் பெறப்போகிறேன்!’ என்று நிச்சயித்துக்கொண்டேன்.   அதற்கு முந்திய வருடம் அப்போட்டியில் கலந்துகொண்டிருந்தேன். பிரசுரத்துக்கு ஏற்றதாகக்கூட என் கதை தேர்வு செய்யப்படவில்லை. அயராமல், `அடுத்த வருடம் நிச்சயம் பரிசு பெறுவேன்!’ என்றேன் என் குடும்பத்தினரிடம். கர்வமோ, அசட்டுத் தைரியமோ இல்லை. உறுதியாக ஒன்று கிடைக்குமென்று நம்பினால், அந்த நம்பிக்கையே நம்மை வழிநடத்தும். வாரத்தில் நான்கு நாட்களாவது அமெரிக்க வாசகசாலைக்குச் சென்று, கதைகளை எழுதும் விதங்களை விரிவாக விளக்கும் பத்திரிகைகளைப் படித்தேன். போட்டிக்காக அரைமணி நேரத்தில் ஒரு கதை எழுதி, அதை அப்படியே விட்டுவிட்டு, சில நாட்கள் கழித்து பல முறை திருத்தி அனுப்பினேன். நான் விரும்பிய கடிகாரமே கிடைத்தது. விரும்பியதை அணியும் ஆசை இருக்கவில்லை. பிறரது பாராட்டோ, பத்திரிகை செய்தியோ பெரிதாகப் படவில்லை. ஆங்கிலத்திலும் நிறைய எழுத வேண்டும், எழுத முடியும் என்ற நம்பிக்கையே பெருமகிழ்ச்சி ஊட்டுவதாக இருந்தது. நமக்குப் பிடித்ததை நம்மால் இயன்றவாறு முனைப்புடன் செய்தால் வெற்றி கிடைப்பதை யாரால் தடுக்க முடியும்? ஆனால், `சாதித்துவிட்டேன்!’ என்று கர்வப்பட்டால் அத்துடனேயே திருப்தி அடைந்துவிடுகிறோம். அதற்குமேல் பெரிய வெற்றி எதுவும் கிடைக்காது. ஒரு மலை ஏறிவிட்டீர்களா? அடுத்து எந்த மலை என்று யோசியுங்கள்.               2. அப்பா, அம்மா, அடி   `எங்கப்பா என்னைத் தினமும் அடிக்கிறார்! எதற்கென்றே புரியவில்லை!’ `எங்கப்பா மட்டும்? நான் எவ்வளவு நல்லது செய்யப் பார்த்தாலும், என்னை ஓயாமல் திட்டுகிறார்!’ பத்து வயதுப் பையன்கள் இருவரின் உரையாடல் இது. தந்தைக்கு ஏன் தன்னைப் பிடிக்கவில்லை என்ற பரிதவிப்பு இருவருக்கும். இதே ஏக்கத்தை நாற்பது வயதான ஒரு சகஆசிரியரும் என்னிடம் பகிர்ந்துகொண்டார்: `நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டேன். என் அப்பாவின் அன்பைப் பெற முடியவில்லை!’ `அவருக்கு உங்கள் தங்கைமேல்தான் பாசமோ?’ என்று ஊகித்தேன். ஒரு தாய் மகன்மேல் பாசம் வைப்பதும், தந்தை மகள்மேல் அன்பைப் பொழிவதும் இயற்கை. அதற்காக, தான் பெற்ற பிற பிள்ளைகளை வெறுப்பதுபோல் அடக்கி ஆள்வது என்ன நியாயம்? காரணமின்றி அடித்தும், பயமுறுத்தியும் வளர்க்கப்பட்டிருந்த தந்தைக்குப் பிறந்தது இரண்டும் பெண்களாக இருந்துவிட்டால், தன்னைப்போல் இருக்கின்ற மகளின்மேல் வன்முறை செலுத்துவார். இந்த தந்தைமார்கள் சிறு வயதில் அடி வாங்கியிருப்பார்கள். `அடி வாங்கியதனால்தான் நான் உருப்பட்டேன்!’ என்று நியாயம் கற்பித்துக்கொள்வார்கள். அடி வாங்காது, செய்த தவறுகளுக்குக் கனிவுடன்  திருத்தப்பட்டிருந்தால் இன்னும்கூட முன்னேறி இருக்கலாமோ என்று இவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. தம்மைப் பாதுகாக்க வேண்டிய பெரியவர்கள் -- என்னதான் காரணங்களை விளக்கினாலும் -- அடிப்பதால் சிறுவர்களுக்குக் குழப்பம்தான் உண்டாகிறது. அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள்: அவமானம், தாழ்மை உணர்ச்சி, மனத்துடன் உடல் நலமும் கெடல். சிறு வயதில் இந்த அப்பாக்களும் இதே உணர்ச்சிகளுக்கு ஆளாகியிருப்பார்கள். ஆனால் தம்மிடமிருந்தே அதை மறைத்துக்கொண்டு விட்டதுதான் பரிதாபம். `என் மகன் பிசாசு மாதிரி பேரனை அடிக்கிறான்!’ என்று என்னிடம் வருந்திக் கூறினார் எங்கள் குடும்ப நண்பர் ஒருவர். தொண்ணூறு வயதை எட்டிக்கொண்டிருந்த  அவருக்கு நான் என்ன ஆறுதல் சொல்வது! `சிறு வயதில் உங்கள் பிள்ளையை ரொம்ப அடித்து வளர்த்தீர்களா?’ என்றேன் மெள்ள. பதிலாக, அவருடைய உடலும், முகமும் இறுகின. `எவ்வளவு அடித்தாலும், உருப்படுவதில்லை! ஊர் சுற்றுகிறான், எதிர்த்துப் பேசுகிறான்!’ என்று தம் மகனைப்பற்றி பிரலாபிப்பவர்களுக்கு ஒன்று புரிவதேயில்லை. ஓயாமல் குறை கண்டுபிடித்து, அடி வாங்கினால், எதிர்ப்புக்குணம்தான் வரும். பெற்றோர் எதிர்பார்ப்பதற்கு நேர் எதிராக ஒரு காரியம் செய்துவிட்டு, அதன் விளைவாக அவர்கள் கொள்ளும் ஆத்திரமே பிள்ளைகளது நொந்த மனதிற்கு உற்ற மருந்தாகிறது.   `உங்கள் அப்பா உங்களுக்குச் செய்ததையே நீங்கள் உங்கள் மகனுக்குச் செய்கிறீர்களே! பெரியவன் ஆனதும், அவன் உங்களை மதிப்பானா?’ என்று ஒருவரைக் கேட்டேன். அந்த மனிதர் வயது முதிர்ந்த தந்தையுடன் பேசுவதையே விட்டு விட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். `என்னை மதிக்காவிட்டால் போகிறது! அவன் முன்னுக்கு வந்தால் போதும்!’ என்று விட்டேற்றியாக பதில் வந்தது. இங்குதான் குழப்பமே. பிள்ளைகளை முன்னுக்குக் கொண்டுவர வேறு வழி தெரியவில்லை அவரைப் போன்றவர்களுக்கு. வெகு சிலர், `என் மகனும் நான் சிறு வயதில் அடிபட்டு நொந்தமாதிரி ஆகிவிடக்கூடாது!’ என்று, மகன் என்ன தவறு செய்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். இப்படி வளர்க்கப்பட்ட பிள்ளை உருப்படுவானா என்பதும் சந்தேகம்தான். தவறு செய்தால் அதைச் சுட்டிக்காட்ட வேண்டாமா? நகைச்சுவையால் குழந்தைகளின் மனம் நோகாமல்  கண்டிக்க முடியும். நான் என் குழந்தைகளுக்கும், பேரக்குழந்தைகளுக்கும் சிறு வயதில் கூறியது: `நான் சொல்ற நல்லதையெல்லாம் கேட்டுடாதீங்கோ! அப்புறம் உருப்பட்டுட்டா என்ன பண்றது?’ சிரிப்பார்கள். ஆனால் அறிவுரை மனதில் பதிந்திருக்கும். சில தாய்மார்களும் மகளை அடிக்கிறார்கள். வசுமதி ஒரு பதின்ம வயதுப் பெண். அவளுடைய தலையின் வடிவம் கோணல்மாணலாக உருமாற ஆரம்பித்தபோது எனக்கு  அவளுடைய அவல நிலை புரிந்தது. அவளிடம் கேட்டபோது, வருத்தத்துடன் ஒப்புக்கொண்டாள். அவள் தாயைச் சந்தித்து, `உங்கள் பெண்ணை சும்மாச் சும்மா அடிக்காதீர்கள்!’ என்று கூறினேன். ஆச்சரியத்துடன், `அடிக்கக் கூடாதா?’ என்று திருப்பிக் கேட்டாள், நாற்பது வயது நிரம்பாத அப்பெண்மணி. `எதுக்கு அடிக்கறது?’ என்றேன், பொறுமையிழந்து. `வீட்டிலே ராங்கி பண்ணுது!’ மேலும் விசாரித்தபோது, புத்திசாலியான, முன்னுக்கு வரத் துடிக்கும் மகளுக்கு அம்மாவின் அடக்குமுறை சரியெனப் படாததால் எதிர்த்திருக்கிறாள் என்று புரிந்தது. மகளைத் தனியாக அழைத்து, அவளுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள் கிடைக்க தாய் கொடுத்து வைக்கவில்லை என்று சுட்டிக்காட்டினேன். `உன் அம்மா உலக அனுபவம் இல்லாதவள். அப்பா அடிப்பதை எதிர்ப்புக் காட்டாமல் ஏற்று, `எல்லாப் பெண்களுமே அப்படித்தான் இருக்க வேண்டும்போல இருக்கிறது,’ என்று நினைத்துவிட்டாள். நீ வித்தியாசமாக இருக்கிறாய். அது தவறென்று அம்மாவுக்குப் படுகிறது,’ என்று மேலும் விளக்கினேன். நிலவரம் புரிந்தபோது, தாய்மீது பரிதாபம்தான் எழுந்தது வசுமதிக்கு. தாய் மகளுக்குள் நல்லுறவும் உண்டாகியது.                     3. ஊனம் யாருக்கு?   என் உறவினரான நளினி முதன்முறையாகக் கருவுற்றிருந்தபோது, `இரட்டைக் குழந்தைகள்!’ என்று மருத்துவர் கூற அவள் பெரிதும் மகிழ்ந்தாள். எட்டாம் மாதத்தில், குழந்தைகள் முன்போல் வயிற்றில் உருளவில்லையே என்று சந்தேகப்பட்டு தாயிடம் தெரிவிக்க, அடித்துப் பிடித்துக்கொண்டு பரிசோதனைக்குப் அழைத்துச் செல்லப்பட்டாள். ஒரு குழந்தை வயிற்றிலேயே இறந்து மூன்று நாட்களாகி இருந்தன. இன்னொன்றை வயிற்றைக் கீறி எடுத்தார்கள். இது அந்தக் குழந்தை லல்லியின் கதை. பிற குழந்தைகளைப்போல் லல்லி குப்புறப் படுக்கவில்லை, தவழவில்லை, உட்காரவில்லை. அண்ணன் அதைச் சுட்டியபோது, நளினி ஆத்திரத்துடன், `எல்லாக் குழந்தைகளும் ஒரேமாதிரி இருக்குமா?’ என்று அவர்கள் வாயை அடைத்துவிட்டாள். அவளுக்கும் உள்ளூர பயம் இருந்திருக்க வேண்டும், ஏதாவது அசம்பாவிதமாக ஆகிவிடப்போகிறதே என்று. ஒரு வயதுக்குமேல் ஆயிற்று. அப்போதும் லல்லி எழுந்து நிற்கவோ, நடக்கவோ இல்லை. ஒரே இடத்தில் சாய்ந்து உட்கார்ந்திருப்பாள். வேறு வழியின்றி மருத்துவர்களை நாட, `அவளுடன் இருந்த கரு இறந்தபோது, லல்லியின் மூளைக்குப் பிராணவாயு செல்லாததால் சேதம் உண்டாகிவிட்டது. இனி அவளால் சுயமாக நடக்க முடியாது!’ என்றுவிட்டார்கள். சிறு குழந்தையாக இருந்தபோது, அவளைத் தூக்கிக்கொண்டுபோய் குளிக்கவைப்பது, பள்ளிக்கூடத்தில் விடுவதெல்லாம் எளிதாக இருந்தது.  ஆனால், எத்தனை காலம்தான் இப்படியே விடுவது! ஓரளவு நடந்தால்கூட போதுமே என்று ஐந்து வயதில் லல்லியை மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் சென்றார்கள் -- மருத்துவ உதவி நாடி. அடிக்கடி போய் அறுவைச் சிகிச்சை செய்ததில் இப்போது ஏதோ நடக்கிறாள். உட்காருவதும், எழுந்திருப்பதும் சிரமம்தான். தனிமையிலேயே உட்கார்ந்திருக்க நேரிட்டதால், ஓயாது படிக்கும் நற்பழக்கம் ஏற்பட்டது.  ஆங்கிலத்தில் அவள் உரையாடுவதைக் கேட்டால் பிரமிப்பாக இருக்கும். அத்துணை புலமை! ஒரு முறை நானும் என் மகளும் லல்லியைப் பேரங்காடி ஒன்றிற்கு அழைத்துப் போயிருந்தோம். `கால் வலிக்கிறது!’ என்று தரையில் உட்கார்ந்துவிட்டாள். அதன்பிறகு எழுந்திருக்க அவள் பட்டபாட்டைப் பிறர் வேடிக்கை பார்த்துக்கொண்டே போனார்கள். `எல்லாரும் என்னையே பார்க்கிறார்கள்!’ என்று வருத்தமாக லல்லி சொன்னபோது, நாளிதழ் ஒன்றில், `நாங்களும் மனிதர்கள்தானே! எங்களை ஏன் அப்படி உற்றுப் பார்க்கிறீர்கள்?’ என்று ஊனமடைந்தவர் ஒருவர் மனம் வருந்தி கோரிக்கை எழுப்பி இருந்தது நினைவில் எழுந்தது. `நாமும்தான் மற்றவர்களைப் பார்க்கிறோம், யார் என்ன ஆடையணி அணிந்து வந்திருக்கிறார்கள் என்று! அதற்காகத்தானே எல்லாரும் வெளியே வருகிறார்கள்!’ என்று ஏதோ சொல்லி அவளைச் சமாதானப்படுத்தினேன். லல்லிக்குப் பதினாறு வயதானபோது, சகமாணவன் ஒருவன், `எனக்கு உன்னை ரொம்பப் பிடித்திருக்கிறது. ஒரே காதல்!’ என்றானாம். அவன் கேலியாக அப்படிக் கூறினானா என்றெல்லாம் இவள் யோசிக்கவில்லை. சற்றும் அயராது, `சரி. பள்ளி முதல்வர் அறைக்குச் செல்வோம். நீ என்னிடம் சொன்னதை அவரெதிரே சொல்லு. உன்னை பள்ளியைவிட்டே துரத்துவார்! எனக்குப் படிப்புதான் முக்கியம்!’ என்றிருக்கிறாள். பிறந்ததிலிருந்தே அனுபவித்த இயலாமை ஒருவரது துணிச்சலை அதிகரிக்கவும் செய்யும், இழக்கவும் செய்யும். அந்த விதத்தில் லல்லி அதிர்ஷ்டசாலிதான். லல்லிக்கு இப்போது பதினெட்டு வயது. கல்லூரியில் படிக்கிறாள்.   ` ‘என்னுடன் படிப்பவர்கள், `உனக்கு கார் ஓட்டத் தெரியுமா?’ என்று கேட்கிறார்கள்!’ என்று அவள் பேச்சுவாக்கில் சொன்னபோது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. லல்லி அதை வேடிக்கையாக எடுத்துக்கொண்டிருக்கிறாள். `நான் போன வருடமே லைசன்ஸ் வாங்கிவிட்டேன். மைவி (MYVI, மலேசியத் தயாரிப்பான சிறிய கார்) வீட்டில் இருக்கிறது என்று பொய் சொன்னேன்!’ என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தாள். அவள் சிரிப்பில் வருத்தம் சிறிதுமில்லை. `என்னாலும் பிறரைச் சமாளிக்க முடியும்!’ என்ற மனஉறுதிதான் காணப்பட்டது. எனக்குப் பொறுக்கவில்லை.  முழங்கைகளுக்குக்கீழ் ஒரு வளையத்தில் கைவிட்டபடி, இருபுறமும் ஊன்றுகோல் வைத்து நடக்கவேண்டிய நிலையிலிருந்த பெண்ணிடம் துளிக்கூட இரக்கமில்லாது இப்படியா பேசுவார்கள்! `நானாக இருந்தால், `என்னை ராணிமாதிரி அழைத்துப்போக பிறர் இருக்கும்போது, நான் எதற்கு கண்ணைக் கெடுத்துக்கொண்டு கார் ஓட்டவேண்டும்?’ என்றிருப்பேன்!’ என்றேன் நான். அவளை மேலும் ஆதரிக்கும் நோக்கத்துடன், `இப்போது தானே இயங்கும் கார்கள்கூட வந்துவிட்டன! நாம் வழி சொன்னால் போதும்,’ என்றேன். `GO RIGHT, GO LEFT!” என்று சிரித்துவிட்டுத் தன்பாட்டில் பேசிக்கொண்டு போனாள். `உனக்குக் காதலன் யாருமில்லை?’ அவள் மனத்தைப் புண்படுத்தவென கேட்கப்பட்ட மற்றொரு கேள்வி. `அதற்கு நான் என்ன சொன்னேன், தெரியுமா? `எனக்குப் புத்தகங்கள்மேல்தான் காதல்!’ என்று அவர்கள் வாயை அடைத்தேன்!’ மீண்டும் பெரிய சிரிப்பு. (என் பேரனுக்குப் பதினாறு வயதாகியிருந்தபோது, அவனுடைய நண்பர்கள் அவனைக் கலந்தாலோசித்தார்கள்: `நாம் இப்போது girlfriend  வைத்துக்கொள்ள வேண்டுமா?’ அந்த அதிமுக்கியமான கேள்விக்குப் பதிலாக, `நாம் அவர்களை சினிமாவுக்கு அழைத்துப்போக வேண்டும், சாப்பிட வாங்கிக் கொடுக்க வேண்டும். தண்டச்செலவு! போதாக்குறைக்கு, பெண்கள் வாய் ஓயாமல் பேசுவார்கள். அதைவேறு சகித்துக் கொண்டிருக்க வேண்டும்!’ என்றானாம் அந்த தீர்க்கதரிசி! ) அந்த நிகழ்வை லல்லியிடம் நினைவுகூர்ந்தேன். `அதானே! படிக்கும் வயதில் எதற்கு காதல்?’ என்றாள் வயதுக்கு மீறிய அறிவுக்கூர்மையுடன். இப்பெண்ணுக்கோ சில அவயவங்களில்தான் கோளாறு. ஆனால் உடல் முழுமையாக இருந்தும், சிலர்..! என்ன சொல்வது, போங்கள்!                       4. அப்பாவுக்கு நன்றி   இளவரசி எங்கள் பள்ளியில் இறுதியாண்டை முடித்துவிட்டு, பரிசோதனைக்கூடத்தில் உதவியாளாக வேலை பார்த்தாள். இரண்டு ஆண்டுகளாக அவள் ஒருவனைக் காதலித்து வந்தது எனக்குத் தெரியும். ஒரு நாள் ரொம்பக் கோபமாக இருந்தாள். `என்ன ஆச்சு, ஈலா?’ என்று விசாரித்தேன். (இளவரசி என்ற பெயர் வாயில் நுழையாததால், அவள் சீன ஆசிரியைகளுக்கு `ராசி’. பிறருக்கு ஈலா). `எப்போ பார்த்தாலும், நாம்ப கல்யாணத்துக்குப்புறம், ஒன் சம்பளத்திலே  வீடு வாங்கலாம், காடி வாங்கலாம்னு அதே பேச்சுத்தான்!’ `அவனுக்கு ஒன்னைவிட ஒன் சம்பாத்தியத்திலேதான் கண். வேலையை விடப்போறேன்னு சும்மா மிரட்டிப்பாரு. ஒன்னை விட்டுடுவான்!’ என்று சிரித்தேன். அவள் யோசித்தபடி போனாள். சில தினங்களுக்குப்பின், `நேத்து நாங்க மீட் செஞ்சப்போ, `ஸாரி. நான் ஒன்னைக் கல்யாணம் செய்துக்க முடியாது’ன்னு அவனை விரட்டிட்டேன்,’ என்று கூறினாள். அப்படியும் அவள் ஆத்திரம் அடங்கவில்லை. `இவன் ஆடம்பரமா வாழ நான் சம்பாதிச்சுப்போடணுமா?’ என்று உறுமினாள். இளவரசி குள்ளமாக, குண்டாக, களையான முகத்துடன் இருப்பாள். அவளுடைய உருவத்தைவிட, அவளால் ஈர்க்கப்பட்ட ஆண்கள் அவளுடைய அரசாங்க உத்தியோகத்தில் கண்ணாக இருந்தவர்கள்தாம். அவள் காலம் முடியும்வரை அளிக்கப்படும் ஓய்வூதியம் அதற்குப் பின்னர் கணவன் உயிரோடு இருந்தால், அவனுக்குக் கிடைக்கும். இது போதாதா, குறுகிய காலத்தில் வெற்றிப்படியில் ஏறத் துடிப்பவர்களைக் கவர! `சண்டை போட்டானா?’ கவலையுடன் விசாரித்தேன். `அதெல்லாம் இல்லே. வருத்தமா, தலையைக் குனிஞ்சுக்கிட்டு போயிட்டான்’. இளவரசியின் தந்தை துப்புரவுத் தொழிலாளியாக வேலை பார்த்தவர். மகளை நல்லவிதமாக வளர்த்திருக்கிறார். அதனால், சுயநலத்துடன் அவளைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த காதலனை உதறும் துணிச்சல் இருந்தது. பொதுவாக, நல்லவரோ,கெட்டவரோ, பெற்ற தந்தையைப்போல் இருப்பவர்களையே பெண்கள் தம்மையுமறியாமல் வரிக்கிறார்கள். அவளுக்குத் தன் தந்தையின் அருமை நன்றாகப் புரிய இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது. இன்னொரு நாள், `என் அப்பா எவ்வளவோ கஷ்டத்தோட என்னைப் படிக்க வெச்சு, ஒரு நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்திருக்காரு. அவருக்கு எப்படி தாங்க்ஸ் சொல்றதுன்னு தெரியல. ஏதாவது செய்யணும்போல இருக்கு. ஆனா என்னான்னு புரியல,’ என்று என்னிடம் வந்தாள். மாஜி காதலனுடன் ஒப்பிடும்போது, தந்தை அவளுக்குத் தெய்வமாகவே தெரிந்திருக்க வேண்டும். எப்படி தன் தேவைகளைச் சுருக்கிக்கொண்டு, சக்திக்கு மீறி செலவு செய்து அவளைப் படிக்க வைத்திருக்கிறார்! `அவருக்குச் சாப்பாட்டில பிரியமா?’ என்று விசாரித்துவிட்டு, ஒரு சமையல் குறிப்பை எழுதிக்கொடுத்து, விளக்கினேன். இரண்டு நாட்கள் பொறுத்து, வாயெல்லாம் பல்லாக வந்தாள். `இந்தமாதிரி அம்பாங் தெரு ஐயர் கடை ரவா தோசை சுட எங்கே கத்துக்கிட்டே’ன்னு அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டாரு! நிறையச் சாப்பிட்டாரு!’ (அவர் குறிப்பிட்ட கடை கோலாலம்பூரின் பிரதான தெருவில் இன்றும் இருக்கிறது. பல கைகள் மாறிவிட்டன. எங்கள் குடும்ப நண்பர் -- ஒரு இஸ்லாமியர் -- அதை நடத்தியபோதும், அதன் பெயர் என்னவோ ஐயர் கடைதான்! சைவ உணவு மட்டும்தான் அங்கு கிடைக்கும் என்பதாலோ, இல்லை, பழக்க தோஷத்தாலோ!) அவளுடைய பூரிப்பு என்னையும் தொத்திக்கொண்டது. பெற்றோருக்கு நன்றி வாயால் சொல்ல வேண்டுவதில்லை. அவர்களுக்குப் பிடித்தமானவற்றை -- வெளியில் அழைத்துப்போவதோ, எதிரில் உட்கார்ந்து நம் அன்றாட வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்வதோ -- செய்தாலே போதுமே! அப்போது அவர்கள் அடையும் ஆனந்தம், `நாம் பிள்ளைகளை நல்லவிதமாகத்தான் வளர்த்திருக்கிறோம்!’ என்ற நிறைவுதானே இறுதிக்காலத்தில் ஒவ்வொரு பெற்றோரும் வேண்டுவது!                                                     5. எனக்கு தாய்ப்பாசம் கிடையாது!   அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்ள, பெண்களுக்கு வயது வித்தியாசம் ஒரு பொருட்டேயில்லை. `எனக்கு என் கணவரைப் பிடிக்காது. அதனால், அவரால் வந்த குழந்தைகளையும் பிடிக்காது!’ தான் செய்தது தன்னைப் பொறுத்தவரையில் சரிதான் என்று தலையை நிமிர்த்திக்கொண்டு என்னிடம் கூறிய பெண்மணி என்னைவிட மூத்தவர். பெயர் -- காமாட்சி என்று வைத்துக்கொள்வோமா? திருமணமானதும், கணவர் ஏகாம்பரத்துடன் இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு வந்தவர் காமாட்சி. விவரம் தெரியாத வயது. அரைகுறையான கல்வி. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, உறவினர்களின் ஆதரவில் வளர்ந்தவர். `புருஷன், மாமியார், நாத்தனார் இவர்களோட மனசு கோணாமல் நடந்துக்கணும்!’ என்று அவர்கள் அளித்த அறிவுரையை மந்திரமாகக் கடைப்பிடித்தார். புக்ககத்தினர் எப்படி நடத்தினாலும், எதிர்ப்பு தெரிவிக்காது, மௌனமாக ஏற்றுக்கொண்டார். தாய்க்கு ஒரே மகன் ஏகாம்பரம். `என்னுடன் என் அருமை மகனைப் பங்கு போட்டுக்கொள்ள இவள் வந்துவிட்டாளே!’ என்று முதியவள் ஆத்திரப்பட்டிருக்க வேண்டும். தாய் சொல்லைத் தட்டாத செல்லத் தனயன் அம்மா சொல்லும்போதெல்லாம் மனைவியை அடித்தாராம். `எதற்கு அடித்தார்?’ என்று காமாட்சி அம்மாளை விசாரித்தேன். ஒரு முறை, பிள்ளைக்குப் பாலூட்டிக்கொண்டிருந்ததால், மாமியாருக்குச் சோறு போட சற்று தாமதமாக, `என்னைப் பட்டினி போட்டு, கொல்லப் பாக்கறாடா!’ என்று அழுதிருக்கிறாள். பொதுவாக, எந்தவிதமான வதைக்கு ஆளாகிறவர்களும் பொறுமையுடனோ, அச்சத்துடனோ அதை ஏற்கும்போதும் வதைப்பவருக்குத் தன் பலம் கூடிவிட்டதுபோல் ஓர் உணர்வு ஏற்படும். இதுவும் ஒருவித போதைதான். போகப் போக, வதையின் கொடுமை அதிகரிக்கும். தினமுமே தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து, சுவற்றில் இடிப்பாரென்று கேட்டபோது, `ஐயோ, மூளை என்ன கதி!’ என்று என் மனம் அதிர்ந்தது. கூடியவரையில் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாது, மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். மனைவியின் அருமை புரியாது, அவளுடன் தன் குழந்தைகளையும் `அம்போ’ என்று விட்டுவிட்டு, ஓர் இளைய மனைவியுடன் உல்லாசமாக வேறிடத்தில் காலத்தைக் கழித்திருந்தார் கணவர் ஏகாம்பரம். முதுமை வந்ததும், இளையவளை நிர்க்கதியாக விட்டுவிட்டு, மூத்த மனைவியிடம் வந்துவிட்டார். அவர் எதிர்பார்த்த நிம்மதி என்னவோ குடும்பத்தில் கிடைக்கவில்லை.   சிறு வயதில் அவர்களுக்குத் தேவையானபோது அருகில் இருந்து பக்கபலம் அளிக்கவில்லை ஏகாம்பரம். அவர்கள் பெற்றிருந்ததைத்தானே திருப்பி அளிக்க முடியும்! `இப்போது நீங்கள் எங்களுக்கு வேண்டாம்!’ என்பதுபோல் விட்டேற்றியாக நடந்துகொண்டார்கள். `பிள்ளைகளெல்லாம் அம்மா சொல்கிறதைத்தான் கேட்கிறார்கள்!’ என்று புலம்பத்தான் அவரால் முடிந்தது. பொதுவாக, கணவன் அன்பாக, உண்மையாக இருக்கும்வரைதான் அவர்கள் இணைந்து பெற்ற குழந்தைகளிடம் தாய்க்கும் அன்பிருக்கும். வளர்ந்ததும், காமாட்சி பெற்ற பையன்கள் அப்பாவைப்போல ஆனார்கள். பெண்கள் அம்மாவைப்போல், கணவர் என்ன செய்தாலும் சிரித்த முகத்துடன் ஏற்கத் தயாரானார்கள். அந்த தாய்க்கோ, தன் பிள்ளைகளைப் பார்க்கும்போதெல்லாம், கணவரின் நினைவுதான் வந்தது. இப்போது முதல் வாக்கியத்தைப் படியுங்கள். ஏகாம்பரத்தின் இறுதி யாத்திரையின்போது காமாட்சி அம்மாள் கதறின கதறலைப் பார்த்தவர்கள், `ஒரு பெண்ணால் இப்படிக்கூட கொண்டவனிடம் அன்பு வைக்க முடியுமா!’ என்று வியந்திருப்பார்கள். என்னால் பொறுமையாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை. வயதில் பெரியவராக இருக்கலாம். ஆனால், என்னிடம் தன் கடங்காலத் துயரைப் பகிர்ந்துகொண்டவர் ஆயிற்றே! காமாட்சி அம்மாளின் அருகே போய், `அவரோட நீங்க சந்தோஷமா குடித்தனம் நடத்தினது என்ன தட்டுகெட்டுப்போச்சு? ஒடம்பைக் கெடுத்துக்கொண்டு இப்போ எதுக்கு அழுகிறீர்கள்?’ என்று உரிமையுடன் அதட்டினேன். `அவர் இருக்கிறவரையில்தானே சமூகத்திலே எனக்கு மதிப்பு?’ என்று மெல்லிய குரலில் பதில் கேள்வி கேட்டாலும், அழுகை என்னவோ அடியோடு நின்றது. அடுத்த சில ஆண்டுகளுக்குள் காமாட்சி அம்மாளின் முடிவும் வந்தது. அவரது உயிரற்ற உடலில் நெற்றியில் ஒரு நரம்பு புடைத்துக்கொண்டிருந்தது என் கண்களுக்குத் தப்பவில்லை. உயிர் போனபிறகும், மன இறுக்கமா! அருகில் போய் உட்கார்ந்துகொண்டு, `இனிமே உங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது. இப்போதாவது அமைதியாக இருங்கள்!’ என்று திரும்ப திரும்பச் சொன்னேன். பிள்ளைகள் பெரிய குரலெடுத்து அழுதுகொண்டிருந்ததில், என்னை யாரும் கவனிக்கவில்லை. சில நிமிடங்கள் கழித்து, அவர் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாது, ஒருவித `சவக் களை’ வந்ததைப் பார்த்தபோதுதான் எனக்கு நிம்மதி ஏற்பட்டது. ஏன் இப்படி ஓர் அவல வாழ்க்கை என்று என் யோசனை போயிற்று. புக்ககத்தார் என்ன சொன்னாலும், செய்தாலும் ஒரு பெண் பொறுமையாக அதை ஏற்க வேண்டும் என்று காமாட்சிக்கு அளிக்கப்பட்ட போதனையாலா? தன் கடமைகளை எப்படிச் சரிவர ஆற்றுவது என்று யோசித்து நடக்காது, தாய் சொன்னதற்கெல்லாம் தலையாட்டி, சுயநலத்தைப் பெரிதாக நினைத்து நடந்த  கணவராலா? மருமகளையே போட்டியாக நினைத்து, கொடுமைகள் பல செய்த சிறுபிள்ளைத்தனமான மாமியாராலா? குடும்பத் தலைவர் தன் கடமையிலிருந்து வழுவினால், குடும்பம் எப்படியெல்லாம் சீரழியும் என்பதற்குச் சான்று காமாட்சி அம்மாளின் கதை.                         6. காதல் வந்துவிட்டதே!   பலர் என்மீது ஒருதலைப் பட்சமாக காதல் கொண்டிருந்தார்கள். எனக்கு அதனால் பெருமையோ, படபடப்போ எழவில்லை. மாறாக, சிரிப்புதான் வந்தது --  அவர்கள் நான் பெற்ற குழந்தைகளைவிட இளையவர்கள் என்பதால். ஆம், என்னிடம் படித்த மாணவர்களைத்தான் குறிப்பிடுகிறேன். `டீச்சர்! ஒங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா?’ என்ற சீன இளைஞரை ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒன்றில் சந்தித்தேன். `எங்கள் பள்ளியில் நான் கவுன்சிலர். நான் மாணவிகளுக்கு அறிவுரையோ, நல்லதொரு வழிகாட்டலோ வழங்கினால், உடனே காதல் கடிதம் எழுதிவிடுகிறார்கள். என்ன செய்வது?'   `இது தவிர்க்க முடியாதது!’ என்றேன், பதிலுக்கு. எந்த ஆணை வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். பதினான்கு வயதில் ஏதாவது ஓர் ஆசிரியைமீது காதல் கொண்டிருப்பார்கள். ஆனால் இந்தக் காதல் வித்தியாசமானது. இதில் காமக்கலப்பு கிடையாது. `இந்தமாதிரி ஒரு பெண்ணைத்தான் நான் மணக்க வேண்டும்!’ என்ற ஆசைதான் தோன்றுமாம். (நான் சில ஆண்களைக்கேட்டு அறிந்த ஞானம்!). அவர்கள் குடும்பத்திலுள்ள அம்மா, அக்கா முதலிய பெண்களிலிருந்து ஏதோ ஒரு விதத்தில் இந்த ஆசிரியை வேறுபட்டிருப்பார். கதை மார்க் என்ற பையன் விஞ்ஞானப் பரிசோதனைக் கூடத்தில் எதைச் செய்யவும் அஞ்சுவான். `ஐயே! உடம்புதான் பெரிசு! பயந்தாங்கொள்ளி!’ என்று வகுப்பில் பெருவாரியாக இருந்த மலாய் மாணவர்கள் அந்த இந்தியப் பையனைக் கேலி செய்வார்கள். ஏன் அப்படி இருக்கிறான் என்று அவனைத் தனியாக அழைத்து விசாரித்தேன். அவனுடைய தந்தை ஒரு விபத்தில் இறந்துவிட்டார் என்றும், அம்மா ஒரே மகனான அவனைப் பொத்திப் பாதுகாக்கிறார்கள் என்றும் அவன் கூறியதிலிருந்து புலப்பட்டது. அடுத்த முறை, `நீ இந்தப் பரிசோதனையைப் பண்ணு. நான் பக்கத்திலேயே நிற்கிறேன். ஒன்றும் ஆகாது!’ என்று தைரியம் அளித்துப்பார்த்தேன். `உயிருக்கு ஒன்றும் ஆகாதே?’ என்று சந்தேகப்பட்டான். `அப்படி ஆனால், நான்தான் போலீஸில் மாட்டிக்கொள்வேன்!’ என்று நான் சிரிப்புடன் கூற, சற்றுத் துணிந்தான். நாளடைவில், அவனுடைய தைரியம் பெருகியது. சற்று அபாயகரமாகவே நடக்க முனைய, நான் கண்டித்தேன். ஆனால், அவன் நல்லவிதமாக மாறிவிட்டான் என்ற பெருமிதமும் எழாமலில்லை. தானும் பிறரைப்போல தைரியசாலிதான் என்ற நம்பிக்கையும், அதனால்  மகிழ்ச்சியும் எழ, அந்தக் குணம் வெளிப்படக் காரணமாக இருந்த ஆசிரியைமேல் ஈர்ப்பு வந்தது அந்தப் பையனுக்கு. ஒரு நாளைக்குப் பலமுறை என்னைத் தற்செயலாகப் பார்ப்பதுபோல் சந்தித்து, `இன்று உங்களுக்கு ஐந்து முறை குட்மார்னிங் சொல்லிவிட்டேன்!’ என்று பெருமிதப்படுவான். `எங்கள் வகுப்புக்கு வாங்களேன்!’ என்று, நான் இன்னொரு வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது உள்ளே நுழைந்து கெஞ்சுவான். ஒரு நாள் பள்ளி ஆரம்பிக்குமுன் என் அறைக்கு வந்து, `டீச்சர்! உங்கள் கணவர் எங்கு உத்தியோகம் பார்க்கிறார்?’ என்று விசாரிக்க, நான் சற்று கோபத்துடன், `நான் என் குடும்ப விவகாரங்களை மாணவர்களுடன் விவாதிப்பதில்லை,’ என்றேன். மார்க் மனந்தளராது, `எங்கம்மாவுக்கு அவரைத் தெரியுமாம்,’ என்றான். நாங்கள் இருவரும் ஏதோ விதத்தில் நெருங்கிவிட்டதைப்போல ஒரு பூரிப்பு அவனிடம். அந்த ஆண்டின் இறுதியில் மார்க்கின் போக்கில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. பிறரும் அவனை முன்போல் கேலி செய்யாமல் ஏற்றுக்கொண்டார்கள். அதற்கடுத்த வருடம் நான் அவன் வகுப்பில் பாடம் நடத்தவில்லை. ஆனால், என் வருகைக்காகக் காத்திருப்பவன்போல் பள்ளிக்கூட வாசலில் இருந்த சிமெண்டு பெஞ்சில் உட்கார்ந்திருப்பான். முகம் வேறு பக்கம் திரும்பியிருக்கும். உடலில் படபடப்பு தெரியும். கைகள் இறுகியிருக்கும். ஒருவழியாக, `குட்மார்னிங், டீச்சர்!’ என்று திக்கித் திணறிச் சொல்வான். சற்று வளர்ந்திருந்ததால், தன் போக்கில் அவனுக்கு வெட்கம் உண்டாகியிருந்தது. நான் வேறு பள்ளிக்கூடத்திற்கு மாற்றிப் போனபின், ஒரு நாள் மார்க்கை ஒரு பேரங்காடியில் பார்த்தேன். பெரியவனாக வளர்ந்திருந்தான். `ஹலோ,  மிஸஸ். ராகவன்,’ என்றபடி, முகத்தைச் சட்டென திருப்பிக்கொண்டு, உடலை விறைத்தபடி  நகர்ந்தான். அவன் பின்னாலேயே வந்துகொண்டிருந்த அம்மாவும், அக்காளும் பெரிதாகச் சிரித்தபோதுதான் எனக்கு விஷயம் விளங்கியது. என்னைப்பற்றி எப்போதும் வீட்டில் பேசிக்கொண்டிருப்பான் போலும்! அந்தந்த வயதில் ஏற்படும் உணர்வுகள் ஒருவருக்கு உண்மையாகத்தான் இருக்கும். அதைக் கேலி செய்யாது ஏற்கவேண்டும். ஒரு குழந்தை இடியோசை கேட்டு அஞ்சுவதுபோல்தான் இதுவும். இதையெல்லாம் சீன நண்பரிடம் கூறினேன். அவர் சமாதானம் அடையாமல், `இதை எப்படித் தவிர்ப்பது?’ என்று துளைத்தார். கதை நீச்சல் குளத்தில் வேலையாக இருந்த ஜூல்கிஃப்லி என்ற ஒரு மலாய் இளைஞன் வேறு மாநிலத்திலிருந்து வந்திருந்தான். கோலாலம்பூரில் எல்லாமே அவனைப் பயப்படுத்தியது. நான் `குட்மார்னிங்¸ ஜூல்!’ என்று கூற, உற்சாகமாக என்னிடம் பேச்சுக்கொடுப்பான். பிற பெண்கள் ஜூல்கிஃப்லியை வேலைக்காரன்போல் நடத்தியதைப்போல் இல்லாது, ஒரு நண்பனிடம் பழகுவதுபோல் அவனிடம் பேசினேன். அவன் வயதில் மகள், மாப்பிள்ளை எல்லாரும் வீட்டில் இருக்கிறாள், ஆனால் நான் அதிகாலையில் நீந்த வந்துவிடுவேன் என்று கேட்டு அவனுக்கு ஒரே ஆச்சரியம்: `எல்லாரும் காலை உணவுக்கு என்ன செய்வார்கள்?’ `அது அவர்கள் பாடு!’ என்றேன், அலட்சியமாக. அவன் அதிர்ந்து போனான். திடீரென்று ஒருநாள் உடலை நெளித்துக்கொண்டு, `எனக்கு எப்போது ட்ரிங்க்ஸ் வாங்கிக் கொடுக்கப்போகிறீர்கள்?’ என்று கொஞ்சலாகக் கேட்டானே, பார்க்க வேண்டும்! இப்போது நான்தான் அதிர்ந்தேன். திசை தெரியாது தவித்த ஒருவனுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று நினைத்து நான் பேசப்போக, இப்படி ஒரு திருப்பமா! அவன் முதுகில் பளாரென்று அறைவிட்டு, `ரொம்பப் பேசாதே! போய் வேலையைக் கவனி!’ என்று மிரட்டினேன். அதன்பின் ஜூல்கிஃப்லி என்னிடம் வாலாட்டவில்லை. ` சே! இவளும் நம் அம்மாபோல் இருக்கிறாளே!’ என்ற கசப்பான உண்மை புரிந்திருக்கும்.   சீன நண்பரிடம் கூறினேன், `மாணவிகளை நீங்கள் அடிக்க முடியாது. ஆனால், நீங்கள் சிடுசிடுத்தாலே போதுமே! உங்கள்மீதுள்ள மோகம் போய்விடும்!’ அவர் பெருமூச்சு விட்டார். பிறர் மனதிலுள்ள குழப்பங்களை தீர்க்கப்போய், தானே மாட்டிக்கொண்டுவிட்டோமே என்று.                                                           7. அக்கரைப் பச்சை   யாத்தி (YATI) என்ற இந்தோனீசிய பணிப்பெண் வாரத்திற்கு ஒருமுறை எங்கள் வீட்டைச் சுத்தப்படுத்த  வருவாள். கண்ணாடி ஜன்னல்களை ஈரத்துணியால் துடைத்து, அதன்பின் தினசரித் தாளைக் கசக்கி மீண்டும் அழுந்தத் துடைத்துப் பளபளப்பாக்கி.. இப்படி உயிரை விட்டுக்கொண்டு வேலை செய்வாள். அப்போது அவளுக்கு முப்பது வயதிருக்கும். “உனக்கு நாங்கள் கொடுக்கும் பணத்தை என்ன செய்கிறாய்?” என்று கேட்டேன். “அப்படியே என் கணவரிடம் கொடுத்துவிடுவேன்!” யாத்தியை பதின்மூன்று வயதிலேயே கல்யாணம் செய்து கொடுத்திருந்தார்கள்.  அதனால் கணவனைத் தவிர வேறு உலகம் கிடையாது என்ற நினைப்பு. கல்வியறிவு அறவே இல்லாததால், சுயமாகச் சிந்திக்கும் திறனும் கிடையாது. அவளே தொடர்ந்து, பெருமையுடன் கூறினாள்: “அவர் வாராவாரம் முப்பது வெள்ளிக்கு (அன்றைக்கு சுமார் 500 இந்திய ரூபாய்) லாட்டரிச் சீட்டு வாங்குகிறார்!” ஒரு வெள்ளி (மலேசிய ரிங்கிட்)  சீட்டு வாங்கினாலே அதிர்ஷ்டம் இருந்தால் கிடைக்குமே என்ற எண்ணத்துடன், “எதற்கு இப்படிக் காசை வீணாக்குகிறீர்கள்?” என்றேன். நிறையக் காசு கொடுத்து வாங்கினால், ஒன்றாவது வெற்றி பெறும் என்று கணவன் சொல்லி வைத்திருக்கிறான்! கணவர் செய்வதை இன்னொருவர் குறை சொல்வதாவது! “உங்களுக்குப் புரியாது. நீங்கள் பணக்காரர்கள்!” என்றாள், உதட்டைச் சுழித்தபடி. ஆனால், அவளிடம் சொன்னபடி, கணவன் எந்தச் சீட்டும் வாங்கவில்லை, மனைவி உடலயரச் சம்பாதித்துக் கொடுக்கும் பணத்தைக்கொண்டு இன்னொரு பெண்ணை பரிசுப்பொருட்களுடன் மயக்கி, அவளையே மணமும் புரிந்துகொண்டுவிட்டான் என்று அறிந்ததும் யாத்தியின் மனநிலை மாறிப்போயிற்று. ஆத்திரமும் அழுகையுமாக ஆனாள். அவளுக்குப் பிறகு, கமாரியா (KAMARIA) என்ற நாற்பத்தைந்து வயதுப் பெண்மணி வேலைக்கு வந்தாள். நிறைய தங்க நகை போட்டுக்கொண்டு, வாயெல்லாம் சிரிப்பாக, பல வருடங்கள் வேலை பார்த்தாள். அவளுடைய கணவர், பிற இந்தோனீசிய ஆண்களைப்போல, கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவளுடைய தளதளப்பான உடலுக்கு எதிரான சோனியான உருவம். “நான் மற்றவர்களைப்போல குடி, சூதாட்டம் என்றெல்லாம் பொழுதைக் கழிப்பதில்லை. என்னுடைய ஒரே பொழுதுபோக்கு கமாரியாதான்!” என்று எங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது சொல்ல, கமாரியா பெரிதாகச் சிரித்தபடி தன் கைவேலையை அப்படியே போட்டுவிட்டு வந்தாள். முகத்தில் அப்படி ஒரு பெருமை! அந்த மகிழ்ச்சியும் நீடிக்கவில்லை. “மேம்! என் வீட்டுக்காரர் வீட்டுக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன,”  என்று கவலை தோய்ந்த முகத்துடன் அவள் தெரிவிக்க, “வேலை பார்த்த இடத்தில் விபத்தோ?” என்று சந்தேகம் தெரிவித்தேன். அவள் கணவர் சற்று தூரத்தில் வேலை பார்த்ததால், அங்கேயே தங்கிவிட்டிருந்தார். சில நாட்கள் பொறுத்து, அந்த மனிதன் இன்னொரு பெண்ணை மணந்துகொண்டதாக அவளுக்குத் தகவல் கிடைக்க, இடிந்துபோனாள். அறையைச் சுத்தம் செய்தபடி இருக்க, வாய்விட்டு அழுவாள். சில மாதங்கள் கழித்து எங்கள் வீட்டுக்கு வந்தவனை (மரியாதையைக் குறைத்துவிட்டேன்!)  என் கணவர், “கமாரியா எவ்வளவு நல்லவள்! அவளை விட்டு, எதற்காக இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொண்டாய்?” என்று கேட்க, “எங்கள் மதத்தில் இது சரிதான் என்று சொல்லி இருக்கிறதே!” என்றான், என்னமோ பெரிய ஆன்மிகவாதிபோல்! “இனி அவனுக்குப் பணம் கொடுக்காதே!” என்று நான் அவளை எச்சரித்து வைத்தேன். கேட்டும் கொடுக்கவில்லை என்று அவன்  கோபித்துக்கொண்டு போய்விட்டதாகச் சொன்னாள். சில மாதங்களிலேயே, அவள் உடல்நிலை சீர்கெட்டது. தன்னை மிகவும் நேசிப்பதாகச் சொன்னவன் இளமையான மற்றொரு பெண்ணை நாடிப் போய்விட்டானே! `நீ இந்தோனீசியாவுக்கே போய்ச்சேர்! அங்காவது உற்றவர்கள் இருப்பார்கள்!’ என்று அனுப்பிவைத்தோம். அவள் வந்த புதிதில், ஒவ்வொரு குழந்தையும் என்ன விஷமம் செய்தது, எப்படியெல்லாம் சண்டை போட்டது என்றெல்லாம் லயித்தபடி கூறிவிட்டு, எங்களைப் பிரிய மனமில்லாமல் போனாள் கமாரியா. அடுத்து வந்த ஆரிஸிடம் (40 வயது) நான் முதலிலேயே கண்டித்துக் கூறினேன்: “நீ சம்பாதிப்பதை உன் புருஷனுக்குக் கொடுக்காதே!  உன்னை அந்தரத்தில் விட்டுவிட்டு, இன்னொருத்தியைக் கல்யாணம் பண்ணிக் கொள்வான்!” அவள் சலிப்புடன், “எல்லா இந்தோன்களும் அப்படித்தான்!” என்றாள். ஆனால், புத்திசாலித்தனமாக நடந்துகொண்டாள். தன் கிராமத்தில் நிலம் வாங்கிப்போட்டு, நான்கு அறைகள் கொண்ட தனி வீட்டை எழுப்பியிருக்கிறாள். பெருமையுடன் அந்த புகைப்படத்தை என்னிடம் காட்டினாள். “என் வீட்டுக்காரரும், அவருடைய அண்ணன் தம்பிகளும் சேர்ந்து கட்டினார்கள்!” அவளுக்கும் ஒரு பிரச்னை ஏற்பட்டது. அவள் அனுப்பிய பணத்தை பள்ளிக்கூடத்திற்காகச் செலவழிக்காது, தகுந்த கண்காணிப்பின்றி ஊர்சுற்றும் ஊதாரியாகிவிட்டான் பதின்ம வயதான மூத்த மகன். பரிதாபமாக இருந்தது எனக்கு. “நீ எப்படி பிறர் வீட்டு கழிப்பறையைச் சுத்தம் செய்து, ஒவ்வொரு நாளும் மூன்று வீடுகளில் இடுப்பொடிய, கால் வீங்க, வேலை செய்து சம்பாதிக்கிறாய் என்று அவனிடம் சொல்லு!” “அவனுக்குத் தெரியும்!” “இருந்தாலும், தினமும் சொல்லு. உங்கள் நாட்டில் படிப்பிற்கோ, உழைப்பிற்கோ ஏற்ற ஊதியம் கிடையாது என்கிறாயே! அவனாவது உன்னைப்போல் கஷ்டப்படாது, படித்து முன்னுக்கு வரவேண்டும் என்பதற்காக நீயும், அவனுடைய அப்பாவும் வேறு நாட்டில் கஷ்டப்படுவதை எடுத்துச்சொல். அவன் திருந்தும்வரை சொல்லிக்கொண்டே இரு!” இப்போது இந்தியாவிலிருந்து அயல்நாட்டிற்கு வேலை நிமித்தம் செல்லும் தமிழர் ஒருவரின் கதையைப் பார்ப்போமா? காயாம்பு மலேசியாவுக்கு வந்து தான் சம்பாதித்ததை அவ்வப்போது தன் தாய்க்கு அனுப்பிக்கொண்டிருந்தார். அப்பணத்தில் வீடு வாங்கும்படி முதலிலேயே சொல்லிவிட்டு வந்திருந்தாராம். நாடு திரும்பியபோது, வீடு என்னவோ வாங்கப்பட்டிருந்தது. ஆனால், தம்பியின் பெயரில்! அவன் அவருக்கு அதைக் கொடுக்க மறுத்துவிட்டதாகவும், தன் உழைப்பெல்லாம் விரயமாகிவிட்டது என்றும் என்னிடம் சொல்லி மிகவும் வருந்தினார். தாய்நாட்டை விட்டு வெளியேறி, இன்னொரு நாட்டில் கடுமையாக உழைத்து, கைநிறையப் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசைக்கனவுடன் வருகிறவர்களுக்கு, அதனால் வேறு பல இடர்கள் தொடரும் என்பது புரியும்போது, காலம் கடந்து விடுகிறது. போதாத குறைக்கு, திரைப்படங்கள் வேறு நனவாக முடியாத கனவுகளைக் காட்டிவிடுகிறது. ஒரு சாப்பாட்டுக்கடையில் வேலை பார்ப்பவர், `நான் நாடு திரும்பியதும், ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்று திறக்கப்போகிறேன்!’ என்று கூறியதைத் தொலைகாட்சியில் பார்த்தபோது,  அவருடைய அறியாமையைக் கண்டு பரிதாபப்படத்தான் என்னால் முடிந்தது.                                                           8. யாருக்கு மருமகள்?   அந்த இளம்பெண் தன் சின்ன மாமியாரின் வீட்டு விசேஷத்திற்கு நான்கு நாட்கள் முன்னதாகவே வந்திருந்தாள். காலையில் எல்லாருக்கும் முன்னர் எழுந்து, வாசல் தெளித்து கோலம் போட்டு.. இப்படி ஓயாது வேலை செய்து கொண்டிருந்தவளுக்கு, அடிக்கடி சமையலறையிலிருந்து அழைப்பு வந்தது. “சீதா! ஒரு கோலத்தைப் போட எத்தனை நேரம்! இன்னும் எவ்வளவு வேலை பாக்கி இருக்கு! வந்து கீரையை ஆய்ந்து நறுக்கிக் குடு! சீக்கிரம்! அப்புறம்..!” எதையும் நேர்த்தியாகச் செய்யும் அப்பெண் தன் திறமையை எல்லாம் காட்டி கோலத்தைப் போட்டுக்கொண்டிருந்தாள். சிறிதும் ஆயாசப்படாமல், “இதோ வரேன்!” என்று எழுந்தவளைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “நீ ஒரு நல்ல மாட்டுப்பொண்ணா?” என்று கேட்டேன், கொஞ்சம் கேலியும், உண்மையாகவும். “ஆமாம்!” என்று பெருமையுடன் சிரித்தபடி ஓடினாள். எனக்கு வியப்பளித்தது என்னவென்றால், அவள் வயதையொத்த பல பெண்கள் அங்கு இருந்தார்கள். அவர்களது தேவைகளையும் இவளே கவனிக்க வேண்டியிருந்தது. ஏனென்றால், இவள் மட்டும்தான்  வேறு வீட்டிலிருந்து புகுந்த பெண். அவள் ஏழைப் பெண்ணில்லை, முதுகலைப் பட்டம் பெற்றவள் என்றறிந்து என் ஆச்சரியம் இன்னும் அதிகமாயிற்று. `எந்த வேலையாக இருந்தாலும், அதை நன்றாக செய்யக்கூடியவள்!’ என்று அவர்கள் புகழ்ந்தபோது, இவள் அதைப் பெருமையாக எடுத்துக்கொண்டது தப்பாகப் போயிற்று. மாமியார் வீட்டில் மட்டுமின்றி, அவளுடைய உறவினர்கள் எவர் வீட்டுக்குப் போனாலும், இவள்தான் வேலை செய்ய வேண்டும். பத்து ஆண்டுகள் கழிந்தன. அதே வீட்டில் இன்னொரு கல்யாணம். முதல் வாரமே இருபது பேருக்குமேல் கூடி இருந்தார்கள். துணிகளைத் துவைத்துப்போட இயந்திரம் இருந்தாலும், மொட்டை மாடியில் உலர்த்த வேண்டுமே! மருமகள் எதற்கு இருக்கிறாள்! நானும் அவள் பின்னாலேயே போனேன். அங்கே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு பதின்ம வயதுச் சிறுவனிடம், “நீயும் கொஞ்சம் உதவி பண்ணேன்,” என்றேன். அவன் சற்று அதிர்ந்துவிட்டு, கீழ்ப்படிந்தான். நடந்ததைச் சொன்னால், பெற்றோருக்குக் கோபம் வரும் என்று அவனுக்குத் தெரியும். அவர்களுக்கு அவ்வளவு அருமையான ஒரே மகன்! அவனை வேலை செய்யச் சொல்லி யாரோ ஏவுவதாவது! “எங்க துணியெல்லாம் காய்ந்திருக்கும். கொஞ்சம் எடுத்துக்கொண்டு வந்து விடுகிறீர்களா?” என்று நாத்தனார் கெஞ்சுவதுபோல் கேட்டாள். அவள்  அந்தப் பையனின் தாய். தன் மகனை வேலை வாங்கியதற்குத் தண்டனையோ! நானிருந்த சிறு அறைக்கு வந்து, “எல்லா வேலையையும் என்னையே செய்யச் சொல்றா!” என்று ரகசியக் குரலில் முறையிட்டாள் சீதா. “காதிலேயே வாங்கிக்காதே!” என்று அறிவுரை கூறினேன். நாத்தனாரின் கணவர் அந்த வீட்டு மாப்பிள்ளை இல்லையா? அவர் ஒரே இடத்தில் அசையாது அமர்ந்து, தன் மாப்பிள்ளை முறுக்கை வெளிக்காட்டிக் கொண்டிருந்தார். ஒரு பெண் கல்யாணமாகிப் புக்ககத்திற்குப் போனால் வேலை செய்ய வேண்டும். ஆனால், ஆணுக்குதான் அதிகாரம் செய்யும் உரிமை. யார் வகுத்த நியாயம் இது? குனிந்து நிமிர்ந்து, பந்தியில் பரிமாறுவதும் சீதாவின் வேலையாகிப் போயிற்று. அந்த மாப்பிள்ளை சாப்பிடும்போது, கேட்ட பதார்த்தத்தையே  திரும்பத் திரும்பக் கேட்க, பிறருக்கு இருக்காது என்ற நிலை வந்தது. நான் அப்போது சமையலறையில் மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தேன். “ஒருத்தருக்கே எல்லாத்தையும் போட்டுட்டா எப்படி?” என்று சீதா பொரும, நான் மறுபடியும், “காதிலேயே வாங்கிக்காதே!” என்றேன். நல்ல மருமகள் என்றாலும் இப்படியா சொல்லிவைத்தாற்போல் எல்லாரும் படுத்துவார்கள்! வீட்டுப் பெண்களும் அவர்கள் குடும்பமும் ஒரே இடத்தில் உட்கார்ந்து அதிகாரம் செய்யலாமா? நான் சொன்னதிலிருந்த நியாயத்தை சீதா புரிந்துகொண்டாள். பெண்டிர், `சீதா முன்னே மாதிரி இல்லே.  சொல்ற வேலையைச் செய்யறதில்லே!” என்று அவள் வெளியில் போயிருக்கும் சமயம் பார்த்து, அவள் மண்டையைப் பல விதமாக உருட்டிக்  கொண்டிருந்தார்கள். என்னால் பொறுக்க முடியவில்லை. “ஏன், பாவம், அந்தப் பெண்ணை இப்படிக் காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சறேள்?” என்று கேட்டுவிட்டேன், ஒரு சிறு சிரிப்புடன். என்னையும் தாக்குவார்களோ? அப்படி எதுவும் நடக்கவில்லை. “நீங்களே சொல்லுங்கோ,” என்று என்னிடம் நியாயம் கேட்டார்கள். “நன்னா வேலை செய்யக்கூடிய பொண்ணு! இப்போ எது சொன்னாலும் காதிலேயே வாங்கிக்க மாட்டேங்கிறா!” சொல்லிக் கொடுத்ததே நான்தான் என்று தெரிந்தால் என்ன ஆகியிருக்குமோ! அவளுடைய நாத்தனார் எந்த வேலையும் செய்வதில்லை என்பதைச் சுட்டிக் காட்டினேன்.   “அவளோட வீட்டிலே அவதான் எல்லா வேலையும் செய்யறா!” என்று வக்காலத்து வாங்கினார்கள். சீதாவும் அவள் வீட்டில் ஓயாமல் வேலை செய்வாள். ஆனால் அது கணக்கில் வராது. என்ன இருந்தாலும், அவள் இன்னொருத்தர் வீட்டுப் பெண்தானே! உருப்படியாக வேறு எந்த வேலையும் இல்லாது, அவர்கள்பாட்டில் மத்தியானம் பூராவும், “இப்பல்லாம் சீதா சோம்பேறியா போயிட்டா!” என்று புலம்பிக் கொண்டிருந்தார்கள். சோம்பல் இல்லை, தன் மதிப்பு பிறருக்கு நாயாக உழைப்பதில் இல்லை; அப்படி உழைத்தால் தன்னை ஏமாந்தவளாகத்தான் பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டுவிட்டாள் என்று நினைத்துக்கொண்டேன். வெளியில் சொல்லவா முடியும்!                   9. பிறராக ஆவது   கமலஹாசன் மிக நல்ல நடிகர் என்கிறோமே, ஏன்? நடிகை ராதிகா ஒரு மேடையில், `இவர் காதல் காட்சிகளில் நடிக்கும்போது, ஒவ்வொரு நடிகைக்கும், `இவருக்குத்தான் நம்மேல் எவ்வளவு காதல்!’ என்கிற பெருமிதம் ஏற்படும். ஆனால், `இப்போதுதான் புரிகிறது. ஓர் எருமையை இவர்முன் நிறுத்தினாலும், அப்படித்தான் பார்ப்பார்!’ என்றாரே, பார்க்க வேண்டும்! நடிகருக்கே சிரிப்பு வந்துவிட்டது. உணர்ச்சிகளை மாறிமாறிக் காட்டினால், நடிப்போ, நாட்டியமோ, பாத்திரங்களின் நுட்பமான உணர்வுகள் பார்ப்பவர்களைப் போய்ச்சேரும். வட நாட்டு நடிகைகள் தமிழ் திரைப்படங்களில் நடிக்கும்போது, மொழியின் ஆழத்தை உணர்வதில்லை. அதனால் எந்த தருணத்தில் என்ன பாவம் காட்டவேண்டும் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. அர்த்தத்தையெல்லாம் எதற்குப் புரிந்துகொள்ள வேண்டும், நம் (பருமனான) உடலழகே போதாதா என்று மெத்தனமாக அவர்கள் இருப்பதுபோல்தான் தோன்றுகிறது. சமயாசந்தர்ப்பம் புரியாது சிரித்து வைக்கிறார்கள். (கஷ்டம்!) இயக்குனர் `சிரி’ என்கிற போதெல்லாம் சிரித்துவைத்தால் மட்டும் போதுமா? சிரிப்பில்தான் எவ்வளவு விதங்கள்! ஒரு குழந்தையைப் பார்த்து கண்களில் கனிவுடன் சிரிப்பது, கேலிச்சிரிப்பு, பிறர் நம்மை புகழும்போது வரும் பூரிப்புடன் கூடிய புன்னகை -- இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மொழியோ, கதையில் குறிப்பிட்ட சந்தர்ப்பமோ புரியாதவர்கள் ஒரே மாதிரி சிரித்து வைப்பார்கள். இதனால்தான் இவர்களது நடிப்பு எடுபடுவதில்லை. சில வருடங்களிலேயே காணாமல் போய்விடுகிறார்கள். மொழி தெரியாவிட்டாலும், சில நடிகர்களும் நடிகையர்களும் ஒரு காட்சியின் ஆழத்தைப் பிறர் விளக்கப் புரிந்துகொண்டு, தம் தனித்துவத்திற்கேற்ப தேவையான உணர்ச்சிகளை தம் உடலாலும் முகத்தாலும் காட்டுவதும் உண்டு. (அப்பாடா!) எதிர்நீச்சல் படத்தில் வரும் கதாநாயகியின் தந்தை ஷரத் லோஹிதாஷ்வா, கபாலி படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்த ராதிகா ஆப்தே இருவரும் மராத்தி மொழியினராம்.  சொந்தக் குரலில் பேசாவிட்டாலும்,  தம் உணர்ச்சிகளைக் காட்ட மொழி அவர்களுக்கு ஒரு தடையாக இருக்கவில்லை என்பது பாராட்டுக்குரியது. பரதநாட்டியம் என்ற வார்த்தையின் முதல் எழுத்திலேயே `பாவம்’ என்றிருக்கிறது. பார்ப்பவரைப் பரவசப்படுத்த பாடல் வரிகளுக்கேற்ற உடலசைவு மட்டும் போதாது. என்ன ஆடுகிறோம் என்று புரிந்துகொண்டதற்கு அடையாளமாக நவரஸங்களையும் கொட்டும் முகபாவங்கள், அங்க அசைவுகள் ஆகியவை நாட்டியத்திற்கும் இன்றியமையாதவை. தமிழ் தாய்மொழியாக இருந்தாலும், அல்லது அதில் நன்கு உரையாடத் தெரிந்திருந்தாலும், எல்லாருமே தாம் ஆடும் பாடலைப் புரிந்துகொண்டு, முகபாவங்கள் காட்டுவர் என்று கூற முடியாது. சிறு பெண்கள் நடனமாடும்போது, முதல் சில வருடங்கள் சற்று பயந்தாற்போல் இருப்பார்கள். அடிக்கடி தாயின் பக்கம் கண்கள் அலையும். அவர்கள் ஆடி முடிந்ததும், `சிரிச்சபடி ஆடணும்!’ என்று ஆசிரியையும், அம்மாவும் கூறுவார்கள். கோரிக்கை மிரட்டலாகவோ, கொஞ்சலாகவோ வரக்கூடும். `சரிதான்,’ என்று அவர்களும் சிரித்த முகத்துடன் ஆட சில வருடங்கள் பிடிக்கும். ஆனால் அது போதாது. ஏன், அதுதான் பிறர் சொல்வதைக் கேட்டு, சிரித்தபடி ஆடுகிறார்களே என்கிறீர்களா? பாடல் முழுவதும் முகம் விகசித்தபடி இருக்கும். இப்படி ஆடிய ஒரு பெண்ணிடம் நான் கேட்டேன், `ஏம்மா? `புலித்தோலை அணிந்த சிவன்’ என்னும் இடத்தில், நீ சிரித்தாயே! புலி சிரித்து பார்த்திருக்கிறாயா?’ துர்கை அம்மனுக்கு அப்பெயர் வரக் காரணமாக இருந்த கதை: துர்க்காமா என்ற அசுரன் பல காலம் தவம் இருந்து, பிரம்மா அவன்முன் தோன்றியதும், `ஒரு வரம் வேண்டும்!’ என்று கேட்கிறான். எப்படிக் கேட்பான்? ஒருவரை நாம் ஏதாவது வேண்டும்போது, மரியாதையாகக் கேட்போம். இல்லையா? சுயமரியாதையின்றி, குறுகிய காலத்தில் எதையும் சாதிக்க விரும்பும் காரியவாதிகள் கூனிக் குறுகுவார்கள். கூழைக் கும்பிடு போடுவார்கள். பல்லிளிப்பார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியும், நினைத்தது நடந்துவிட்டால், அதற்குப்பின் எதிரிலிருப்பவரை மறந்துவிடுவோம், அலட்சியமாகப் பார்ப்போம் என்று. அந்த பொய்மை கண் சட்டென ஒரு பக்கம் அலைவதில் தெரியும். நினைத்தது கிடைத்தவுடன், உடல் நிமிர்ந்து, அதிலிருந்து ஒரு அலட்சியம் வெளிப்படும். இரண்டு வரிகள் திரும்பத் திரும்பப் பாடப்படும்போது,  இவ்வளவையும் காட்டினால் பார்ப்பவரையும் அந்த உணர்ச்சி தொற்றிக்கொள்ளும். துர்க்காமா பெற்ற வரத்தால் அகிலமே அவன் கைக்குள் வர, கொடுமைகள் பல புரிகிறான். நீர் வற்றிப்போய், மக்கள் அம்மனிடம் முறையிடுகிறார்கள். தண்ணீர் கிடைக்காது வாடும் உயிரினங்களின் துயரம் அவர்கள் முகத்தில். `எங்களுக்கு வேறு வழியே இல்லை!’ என்ற கெஞ்சல். `ஏதாவது செய்யேன்!’ என்ற ஏக்கம். அம்மனுக்கோ முதலில் ஆத்திரம், கேடுகெட்டவனுக்கெல்லாம் அதிகாரத்தைக் கொடுத்தால் இப்படித்தான் என்பதுபோல். மக்களின் பரிதவிப்பைக் கண்டு இரக்கம், கருணை முகத்தில். அவள் நீரைச் சொரியும்போது, தான் பெற்ற மகவிற்கு அமுதூட்டும் அன்னையைப்போல அன்பு. இறுதியில், துர்க்காமாவிடமிருந்து வேதங்களை மீட்டு, அவனையும் அழித்ததால் துர்கா என்ற பெயர் பெறுகிறாள். இது கதை. எவ்வளவு வித பாவங்களைக் காட்ட முடிகிறது! நடிகர்கள் நடனமணிகள் மட்டுமின்றி, எழுத்தாளர்களும்  தாம் சித்தரிக்கும் கதாபாத்திரங்களாகவே மாறிவிட வேண்டும். இதைத்தான் GETTING  INTO THE SKIN OF OTHERS என்கிறார்கள். இம்முறையால் அவர்கள் உலவவிடும் பாத்திரங்களுக்கு உயிர் கொடுக்க முடியும். பாலித் தீவில் தியானத்தால் இதைச் சாதிக்கிறார்கள். ஒரு நடனத்தில், (தேங்காய் உருமட்டையால்) கொழுந்து விட்டு எறியும் தீயை குதிரையாக மாறி, வெறுங்காலாலேயே அணைக்கிறார்கள். மயிர்க்கூச்செறிய வைக்கும் இடம் அது. இன்னொரு நடனத்தில் இருபது நிமிடங்கள் போர்வீரர்கள் `இறந்து’ விடுவார்கள். எந்தவித அசைவும் கிடையாது. மூச்சுவிடுவதற்கு அடையாளமாக அவர்கள் மார்பும் ஏறி இறங்கவில்லை. பார்த்தவர்கள் பயந்தேவிட்டோம். பிறகு, எதுவுமே நடவாததுபோல் அவர்கள் எழுந்தபோதுதான் எங்களுக்கு மூச்சு வந்தது. நிகழ்ச்சி முடிந்ததும், அவர்களின் தலைவரிடம் அணுகி விசாரித்தேன். அப்போதுதான் சொன்னார், `நாங்கள் தியானத்தால் எந்த மிருகமாகவும், மூச்சற்றவர்கள்போலும் மாறமுடியும்,’ என்று. இதையெல்லாம் புரிந்துகொள்ள அதிக வயது ஆகியிருக்க வேண்டும் என்பதில்லை. தியானம் மட்டுமின்றி, நிறையக் கதைகள் படித்து, கதாபாத்திரங்களுடன் நம்மைப் பொருத்திக்கொள்ள முயல வேண்டும். பேசுவதைக் குறைத்து, பிறரைக் கூர்ந்து கவனித்தால், பல்வேறு குணாதிசயங்கள் புலப்படும். உற்று உற்றுப் பாருங்கள், அவர்கள் தர்ம சங்கடத்துடன் நெளியும்வரை. மனிதர்களின் மனப்போக்கு, வக்கிரங்கள் புரியும். அதன்பின், பிறர் தாமே வலிய வந்து தம் கதைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். கருவிற்காக நாம் அலைய வேண்டியதில்லை.   10. காதலாவது, கத்தரிக்காயாவது!   தந்தையை இழந்திருந்த கமலியின் தாய் `அன்பு’ என்பதையே அறியாது, யார் வீட்டிலோ வளர்ந்திருந்தாள். அவள் வளர்ந்த விதத்திலேயே மகளையும் வளர்த்தாள். நான்கு மாதக் குழந்தையையே அடித்து நொறுக்குவாள்.   பள்ளிக்கூடத்துக்குச் சென்று வந்தாலும், பத்து வயதில்கூட கமலிக்கு எழுதப் படிக்க வரவில்லை. யார் எது பேசினாலும், முதுகில் அடி வைத்தால்தான் அவளுக்குப் புரியும் என்ற நிலை வந்தவுடன்தான் விழித்துக்கொண்டார் அவளுடைய தந்தை. விடுமுறை நாட்களில் எங்கள் வீட்டில் கொண்டு விட்டுவிட்டுப் போய்விடுவார். தன் பொருளாதார முன்னேற்றத்தையே பெரிதாக நினைத்துக் கொண்டிருந்தவருக்கு குழந்தைகள் எப்படி வளர்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்தத் தோன்றவில்லை. நான் சாதாரணமாகப் பேசினாலே நடுங்கினாள் அச்சிறுமி. சற்றே பெரியவளாக இருந்த என் மகள் பொறுப்பில் அவளை விட்டுவிட்டு தான் ஒதுங்கிக்கொண்டேன். மணிக்கணக்காக ஒரே இடத்தில் உட்கார்ந்து சமையலுக்கு உதவியாக இருப்பாளா, ஒரு சிறு பெண்! (நாங்களெல்லாம் அந்த வயதில் எப்படியெல்லாம் தப்பித்து ஓடப்பார்த்தோம்!) அவளைப் பார்த்துப் பரிதாபப்படத்தான் முடிந்தது என்னால்.   அந்தக் கமலி காதல் கல்யாணம் புரிந்துகொண்டாள் -- பதினெட்டு வயதிலேயே. உயரமாக, மூக்கும் முழியுமாக, சிவந்த நிறம் கொண்டவள் அவள். காதலனுடன் அதிகம் பழகியதில்லை. ஆனால், தாயின் சுடுசொற்களும், அடியும் மட்டுமே சிறுவயதிலிருந்து அறிந்திருந்தவளுக்கு இளைஞன் ஒருவன் தன்னை விரும்புகிறான் என்பதே பேரின்பத்திற்கு ஆளாக்கியது. கமலியின் தந்தை அந்தஸ்தில் அவனைவிட சற்று உயர்ந்தவர். `என் குழந்தைகளுக்கு எல்லாவிதத்திலும் சுதந்திரம் கொடுத்திருக்கிறேன்!’ என்று பெருமைப்பட்டுக் கொண்டவருக்கு, மகள் தானே ஒரு துணையைத் தேடிக்கொண்டதில் நிம்மதிதான். `இவளை மணந்தால், என் நிலையும் உயர்ந்துவிடும்!’ என்று திட்டம் போட்டிருந்தான் தினகரன். அது நடக்கவில்லை. மகளையே கவனிக்காதவர் மருமகனையா முன்னுக்குக் கொண்டுவரப்போகிறார்! `ஏமாந்து விட்டோமே!’ என்ற வன்முறையில் இறங்கினான். `ஏனோ என்னைப் பார்த்தால், எல்லாருக்கும் அடிக்கத்தான் தோன்றுகிறது!’ என்று வாய்திறவாமல் எல்லா அடி, உதையையும் பொறுத்துப்போனாள் கமலி. இரண்டு குழந்தைகளைப் பெற்றபின், அதற்கு மேலும் பொறுக்க முடியாது, அப்பாவை நாடிப்போனாள் கமலி. அவர் அதிர்ந்தார். `விவாகரத்து!’ என்றார். கமலி ஒப்பவில்லை. திரும்பவும் அம்மாவிடம் வந்து இடிபட வேண்டுமா! மனைவியை வதைக்கும் பொதுவான கணவர்களைப்போல், தினகரன் அவளைத் தேடி வந்தான். தன் தவற்றுக்கு வருந்தி அழுதான். மனமிளகி, அவனுடன் திரும்பப் போனாள் கமலி. அவனுடைய மனமாற்றமும், அன்பும் சொற்ப தினங்களே நீடித்தன. மீண்டும் அடிதான் -- இம்முறை சற்று மோசமாகவே. `என்னைவிட்டுப் போகும் அளவுக்கு உனக்குத்  துணிச்சலா?’ என்று கத்தினான். சில தினங்கள் பொறுத்துப் பார்த்துவிட்டு, மீண்டும் தாய் வீட்டுக்குப் போனாள் கமலி. அம்முறை என்னிடம் அவளை அழைத்து வந்தார் அவளுடைய தந்தை. “Can’t you live without a man? (உன்னால ஒரு ஆண் துணை இல்லாம வாழ முடியாது?)” என்று அவளைக் கேட்டேன், எரிச்சலுடன். அவளுடைய குழந்தைகளும் உணர்வுபூர்வமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதையும் பார்த்திருந்தேன்.  “முடியும்?” என்றாள், சவால் விடுவதுபோல். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே கணவனை நாடிப்போனாள். தந்தையோ இடிந்துபோனார். சராசரி ஐந்து முறை இம்மாதிரி நடக்கும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். திடீரென கிடைக்கும் சுதந்திரமான வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்று பெண்களுக்கு உண்டாகும் கலக்கமே காரணம். உடலிச்சையை எப்படி சமாளிப்பது என்ற குழப்பமும் ஒரு மனைவி தன்னை வதைக்கும் கணவனுடன் சேர்ந்து வாழ்ந்து, அனுதினமும் செத்துப் பிழைக்க காரணமாக அமைகிறது. (பல காலம் பொறுத்திருந்து விவாகரத்து பெற்ற ஒரு பெண்மணி என்னைத் தேடிப்பிடித்து அழைத்துத் தெரிவித்தது). ஒருவாறாக, விவாகரத்துக்குச் சம்மதித்தாள் கமலி. `அவன் குழந்தைகள் எனக்கு வேண்டாம்!’ என்றுவிட்டாள். இப்போது, தனியாக ஓரிடத்தில் தங்கிக்கொண்டு, வாடகைக்கார் ஓட்டும் தொழில் செய்கிறாள். ஒருவழியாகக் கிடைத்த சுதந்திரத்தை அனுபவிக்கிறாள். அவள்கீழ் சில ஆண்கள் வேலை செய்கிறார்கள். பேச்சுத்திறனில் கெட்டிக்காரியாகிவிட்டாள். `காதலாவது, கத்தரிக்காயாவது! அதெல்லாம் சினிமாவுக்குத்தான் சரிப்படும்!’ என்ற மனப்போக்கு ஏற்பட்டுவிட்டது. உண்மைதான். தன்னைவிட உயர்ந்த நிலையில் இருக்கிற ஒரு பெண்ணை `காதல்’ என்ற பெயரில் மயக்கி மணந்துகொண்டு, அதன்பிறகு இருவரும் ஒருவரையொருவர் வெறுக்கும் நிலைக்குப் போய்விட்டால், அது எப்படி காதலாகும்?                                         11. மனதை மயக்கும் மருந்துகள்   கடந்த இரண்டு மாதங்களில் நான் சந்தித்துப் பேசிய மூன்று பெண்மணிகள் குறுகிய காலத்தில் மிகப் பருமனாக ஆகியிருந்தார்கள். `எனக்கு ஐம்பது வயதாகிவிட்டதே! மெனோபாஸ்! ஓயாமல் தலைவலி. இழுப்புவேறு! அதனால் ஏதோ மருந்து சாப்பிடுகிறேன்’. முப்பது வயதே ஆகிய இசை ஆசிரியையான சீதாவின் பிரலாபம்: `அடிக்கடி சளியும் இருமலும் வருகின்றன. இப்படியே இருந்தால், நான் எப்படி பாட்டு வகுப்புகள் நடத்துவது?’ மலேசிய நாடு தழுவிய நாட்டியப் போட்டி ஒன்றில் முதல் பரிசு வாங்கி, அத்துறையில் பட்டம் பெற்றவள் லதா. ஐந்தாண்டுகள் கழித்து அவளைப் பார்த்தபோது, `காலில் தாங்க முடியாத வலி. ஒரு வருடம் ஆடக் கூடாது என்கிறார் டாக்டர். மருந்து சாப்பிட்டால்தான் ஆடவே முடிகிறது!’ என்றாள். இவர்களிடையே இருந்த ஒற்றுமை: மூவருக்குமே வெவ்வேறு மருத்துவர்கள் ஸ்டீராய்டு (Steroid) மருந்துகளைப் பரிந்துரைத்திருந்ததுதான். அது என்ன அது, ஸ்டீராய்டு? நம் உடலில் இயல்பாகச் சுரக்கும் ஹார்மோன் அது. உடலில் உள்ள உறுப்புகள், திசு, உயிரணுக்கள் ஆகியவை தம் வேலையைச் சரிவரச் செய்ய வேண்டாமா? அதற்குத்தான் இவை உபயோகப்படுகின்றன. இந்த ஹார்மோன்  சரியாகச் சுரக்காதபோது, பல உபாதைகள் ஏற்படும். அவைகளைப் போக்கவென மனிதனால் தயாரிக்கப்பட்ட மருந்தாக (வேதியப் பொருள் கலக்கப்பட்ட) அதையே உட்கொள்ளும்போது, மந்திரம் போட்டதுபோல உடல் தொல்லை காணாமல் போய்விடும். அடுத்த முறை அதே உடல் உபாதைக்கு ஆளாகும்போது, ஒருவரை வலியப்போய் அதையே நாடும்படி செய்துவிடுகிறது. சுருங்கச் சொன்னால், ஸ்டீராய்டு ஒரு போதைப்பொருள். கஞ்சா, ஹெரோயின் மற்றும் மது வகைகள் உடனுக்குடனே ஒருவரின் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்த, போதை உண்டாகும் என்பது தெரிந்த சமாசாரம். ஒருவர் குடித்தவுடன் தன் வருத்தம், கவலை, ஏமாற்றம் எல்லாவற்றையும் மறந்துவிட்டதுபோல் சில கணங்கள் இருப்பார். ஆனால், அவைகளின் அளவை அதிகரித்துக்கொண்டே போனால்தான் அவர் தான் நாடும் மனக்கிறக்கத்தை அடைய முடியும். ஸ்டீராய்டு அப்படியல்ல. மனப்போக்கில் ஒரு மாற்றமும் இருக்காது. கிறக்கமும் கிடையாது -- சில காலம்வரை. சில ஆண்டுகளுக்குப்பின் மெதுவாகத் தன் வேலையைக் காட்ட ஆரம்பிக்கும். கதை 1: விக்னேஸ்வரி பதின்ம வயதிலிருந்தே ஆஸ்துமாவால் அவதிப்பட்டவள். சுமார் முப்பது வயதானபோது மருத்துவர் ஸ்டீராய்டு கொடுத்ததில், இதுவரை பாடாய்படுத்திய வியாதி குணமானது போலிருந்தது. `சரியாகப் போகும்வரை இம்மருந்தை உட்கொண்டுவிட்டு, பிறகு விட்டுவிடலாமே!’ என்றுதான் நினைத்திருந்தாள். அது முடியவில்லை. இப்பழக்கம்தான் ஒருவரைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுமே! அடுத்த முறை தானே அதைத் தேடிப் போகையில் சற்று அதிகமான அளவு தேவைப்பட்டது. ஆரம்ப காலத்தில், விக்னேஸ்வரிக்கு அசுர பலம் வந்ததுபோல் இருந்தது. `SUPER HUMAN!” என்று பெருமிதமாக இருந்தது. எல்லாரும் தன்னைப்போல் இல்லாமல் இருக்கிறார்களே என்ற ஏளனம் எழுந்தது. பிறரை மரியாதைக்குறைவாக நடத்த ஆரம்பித்தாள். சிடுசிடுப்பு, அநாவசிய சந்தேகம் என்று பல பக்கவிளைவுகள் ஏற்பட்டதில் குடும்ப அமைதி கெட்டது. கை கால்களில் வீக்கம். மொத்தத்தில் உடல் பூராவும் பருத்தது. `இப்பழக்கத்தை விடு!’ என்று யார் சொன்னாலும் கேட்கும் நிலையில் அவள் இருக்கவில்லை. இருபது ஆண்டுகள் கழிந்ததும், இரண்டு கை முட்டிகளும் மூடியபடி இருந்தன. திறக்க முடியவில்லை. `இனி இப்பழக்கத்தை விட்டால், உங்கள் உயிர் போய்விடும். அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள்!’ என்றார்கள் மருத்துவர்கள். சுமார் ஓராண்டுகாலம் படுத்த படுக்கையாக இருக்க நேரிட்டது. அந்தச் சமயம் பார்த்து, `நம்மை இவள் எப்படியெல்லாம் அவமானப்படுத்தினாள்!’ என்று பிறர் இவளிடம் சொல்லிக்காட்ட, `கதறிக் கதறி’ அழுததாகப் பிறர் தெரிவித்தார்கள்.   இப்போது விக்னேஸ்வரியால் அதிகம் நிற்கவோ, நடக்கவோ முடிவதில்லை. பேனா பிடித்து எழுதக்கூட முடியாது. காலம் கடந்து வருந்துகிறாள். நான் முதலில் குறிப்பிட்ட மூன்று பெண்களிடமும் இக்கதையைச் சொல்லி, `வேண்டாம் இந்தப் பழக்கம்!’ என்று மன்றாடினேன். முதலில் சற்று பயந்தாலும், எல்லாரும் ஒரே பதிலைத்தான் கூறினார்கள்: `உடல்நிலை உடனே சீராகி விடுகிறதே!’ கதை 2: எனக்கு ஐம்பது வயதானபோது, H.R.T (Hormone replacement therapy) என்று நான் கேளாமலேயே ஒரு மருத்துவர் என்னை அதைச் சாப்பிடும்படி பல முறை வற்புறுத்தினார். `இருதய நோய் வராது!’ என்றார். நான் கொஞ்ச காலம் சாப்பிட்டேன். முகத்தில் முடி வளர ஆரம்பித்தது. சில மாதங்களுக்குப்பின் அமெரிக்கா செல்ல நேரிட்டது. அங்குள்ள மருந்துக்கடையில் மருந்துச் சீட்டைக் காட்டியபோது, `இது தடை செய்யப்பட்ட மருந்து!’ என்றார்கள். எனக்கு ஒரே அதிர்ச்சியும், கோபமும். ஏனெனில், அங்கு தயார் செய்த மருந்தைத்தான் பிற நாடுகளுக்கு அனுப்புகிறார்கள்! அது நல்லதல்ல என்று தயாரிப்பாளர்களுக்குத் தெரியாமலில்லை. நம் நாட்டில்தான் சட்டம் நமக்கு அனுகூலமாக இல்லை, பிற நாட்டு மக்கள் எப்படிப் போனால் நமக்கென்ன என்ற மெத்தனம்! பெருமளவில் தயாரித்த மருந்துகள் வீணாகிவிட்டால், நஷ்டமாகிவிடுமே என்ற கவலை அவர்களுக்கு. நாடு திரும்பியதும், என்னை எச்சரிக்கை செய்யவே வெளியிட்டதுபோல, `ஸ்டீராய்டு நீண்ட காலம் கழித்து தசைகளை பலகீனமாக்கிவிடும்,’ என்று தினசரி ஒன்றில் படித்தேன். முதல் வேலையாக மிச்சமிருந்த மாத்திரைகளைத் தூக்கிக் குப்பையில் எறிந்தேன். நோய்வாய்ப்பட்டவர்களோ, வயது முதிர்ந்தவர்களோதான் இப்பழக்கத்திற்கு ஆளாகிறார்கள் என்பதில்லை. குழந்தை நடிகர்கள் வளர்ந்துவிட்டால் வாய்ப்பு போய்விடுமே என்று அவர்களுக்கு ஸ்டீராய்டு கொடுக்க பெற்றோரே வழிசெய்வதாகப் படித்திருக்கிறேன். எத்தனை காலம்தான் குழந்தை நட்சத்திரங்களாக ஜொலிக்க முடியும்! முகத்தில் முதுமை தெரிவதை மறைக்க முடியுமா? பதின்ம வயதினர் இப்பழக்கத்துக்கு ஆளானால் என்றுமே உயரமாக வளர முடியாது. உடல் வளர்ச்சி குன்றிவிடும். மிகக் குறுகிய காலத்தில் புஜங்கள் திரண்டு, ஆணழகனாக ஆக வேண்டும் என்று `ஜிம்’மிற்குப் போகும் ஆண்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஸ்டீராய்டு மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்திக்கொள்கிறார்கள். `என் தசைகளைப் பார்!’ என்று அவர்கள் முதலில் பெருமிதம் கொள்ளலாம். ஆனால், நாளடைவில் கல்லீரல், இருதயம் போன்ற அவயவங்களில் நோய் வருகிறது. போதாக்குறைக்கு, விந்து குறைதல், ஆணுறுப்பு சிறுத்துப்போவது, தலையில் வழுக்கை, கை நடுக்கம், பெண்களைப்போன்ற மார்பகம் வளர்வது என்று பல பக்க விளைவுகள். எதையுமே தவிர்க்க முடியாதபோது, `என்னை யார் மிஞ்ச முடியும்!’ என்ற களிப்பு மறையும். மிஞ்சுவது, `நான் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன்!’ என்ற சுயவெறுப்பும், கசப்பும்தான்.   12. நீங்கள் கர்வியா, கோழையா?   தானே தன்னைப்பற்றிக் குறைவாக ஏதாவது கூறினால், அது  அடக்கத்தின் அறிகுறி என்று பலரும் நினைக்கிறார்கள். “நான் ஒரு பயந்தாங்கொள்ளி!” என்று என் சக ஆசிரியை ஒருத்தி எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பாள். இதில் என்ன விபரீதம் என்றால், நாளடைவில், நாம் சொல்வதை நாமே நம்பிவிடுகிறோம். நம் உள்மனம் நாம் சொல்வதை ஆராயச் சக்தி இல்லாது, அப்படியே ஏற்று விடுவதால் வருவது இந்த அபாயம். குறை தம்மேல்தான் என்று உணராது, தம்மைப்போல் இல்லாது, வெற்றிப்பாதையில் பீடு நடைபோடும் பிறரைப் பார்த்து வயிற்றெரிச்சல் கொள்வதால் என்ன பலன்? எடுத்த எந்தக் காரியத்திலும் வெற்றி பெறும் துணிவு சிலருக்கு மட்டும் எப்படிப் பிறக்கிறது என்று ஆராய்வோமா? இயற்கையாக அமையாவிட்டாலும், இது அமைத்துக்கொள்ள முடிவதுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். என் மாணவி ஒருத்தி பெரிய பரீட்சை எழுதி, சுமாராகத் தேர்ச்சி பெற்றதும், “Well, I tried my best!” என்று தோள்களைக் குலுக்கிக்கொண்டாள். எனக்கு வேடிக்கையாக இருந்தது. அவள் படிப்பில் போதிய அக்கறை செலுத்தாது இருந்தது எனக்குத் தெரியும். அவளுடைய best என்னவென்று அவள் முயற்சிகூட செய்து பார்க்கவில்லை, பாவம்! என் சீன மாணவிகள் என்னிடம் கேட்பார்கள், “இரவில் எத்தனை நேரம் தொலைகாட்சியில் திரைப்படங்கள் பார்த்தாலும் சலிப்பதில்லை. கண்விழித்துப் பார்க்க முடிகிறது. ஆனால், பாட புத்தகங்களை எடுத்தால் மட்டும் உடனே தூக்கம் வருகிறதே! ஏன், டீச்சர்?” என்று. தெரியாமலா, தொலைகாட்சிக்கு `முட்டாள்களின் பெட்டி’ (IDIOT BOX) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்? பார்ப்பவர்களுக்கு எது பிடிக்கும், எது நல்லது என்று யாரோ முடிவு செய்கிறார்கள். நாமும் அதிகம் யோசியாது, சோம்பேறித்தனமாக உட்கார்ந்து பார்க்கிறோம். பார்ப்பது எல்லாவற்றையும் புரிந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. பரீட்சையா எழுதப்போகிறோம்! மூளைக்கு அதிக வேலை கொடுக்காததால், ரசிக்கும்படி இருக்கிறது என்றெல்லாம்தான் தோன்றிப்போகிறது ரசிகர்களுக்கு. பாட புத்தகங்களானால், அதில் ரசிக்கும்படியாக எதுவும் இருக்காது. மூளைக்கு வேலை கொடுப்பதென்றாலே சிரமம்தான். உடனடியாக என்ன ஆதாயம் கிடைக்கிறது என்றும் யோசனை போகும்.     ஒரு காரியத்தைச் செய்தால் உடனடியாக ஏதாவது நன்மையோ, இன்பமோ கிடைக்க வேண்டும் என்ற மனப்பான்மை இருந்தால் முன்னுக்கு வரமுடியாது. குழந்தைகளுக்கு இது புரியாததால்தான் முதல் சில வருடங்கள் பள்ளிக்கூடத்திற்குப் போக அடம் பிடிக்கிறார்கள். விளையாட்டில்தான் அவர்கள் மனம் போகும். ஆனால் எப்போதுமே அப்படி இருக்க முடியுமா? எந்தத் துறையாக இருந்தாலும், பணமோ, புகழோ கிடைக்க பொறுமையும் நம்பிக்கையுமாகக் காத்திருக்கும் மனப்பான்மை அவசியம். கதை எழுதுவதை எடுத்துக்கொள்ளுங்கள். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் ஒரு மொழியின் இலக்கணத்தைக் கற்றுக்கொடுத்தால் மட்டும் நன்றாக எழுதிவிட முடியாது. அம்மொழியில் பல ரகப் புத்தகங்களையும் படித்தால்தானே எழுதுவது செம்மையாக இருக்கும்? அதுபோல், நிறைய உபயோகமான விஷயங்களையும், நற்பெயர் வாங்கிய கதாசிரியர்களின் படைப்புகளையும் பிரயத்தனப்பட்டு படித்தால் தரம் உயர வாய்ப்பிருக்கிறது. எழுதியதைப் பலமுறை திருத்தவும் தயாராக இருக்கவேண்டும். `ஐயோ! இவ்வளவு மட்டமாக எழுதிவிட்டேனே!’ என்று மனம் தளரக்கூடாது. நம் மனதில் தோன்றுவதையெல்லாம் எழுத்து வடிவில் கொண்டுவருவதற்குப் நீண்ட கால அனுபவம் தேவை. என் சொந்தக் கதை (பொறுத்தருள்க!): எட்டு வயதில் ஒரு கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதிலிருந்தே எழுத்தாளராக வேண்டும் என்ற பேராவல் எழுந்தது எனக்குள். பத்து வயதிலிருந்து எழுத ஆரம்பித்தேன். ஆனால், எனக்கே புரிந்தது நான் எழுதியது அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லை, எந்தப் பத்திரிகையும் ஏற்காது என்று. `நன்றாக இல்லை என்றால் ஏன் எழுதுகிறாய்?’ என்று என் தாய் கேட்டார். `யோசிக்கிறபோது நன்றாக இருக்கிறது. எழுதியவுடன் ஏனோ அப்படி இல்லை!’ என்றேன் குழப்பத்துடன். இருந்தபோதும், மனம் தளராமல் எழுதினேன், `வேலையற்ற வேலை! இந்த எழுத்தா நாளைக்கு உனக்கு சோறு போடப் போகிறது?’ என்ற பிறரின் கேலியை அலட்சியம் செய்து. யார் என்ன எதிர்ப்பு தெரிவித்தாலும் நாம் எடுத்துக்கொண்ட காரியத்தை முனைந்து செய்தால் வெற்றி கிடைப்பது உறுதி. சில எழுத்தாளர்களுக்கு நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர்கூட அங்கீகாரம் கிடைக்கலாம். அது அவர்களது விடாமுயற்சிக்குக் கிடைத்த பரிசு. ஒரு பெரிய பெட்டி நிறைய நான் எழுதியவைகள் நிறைந்தன. `குப்பை’ என்று பிறர் கருதினார்கள். அது நான் அடைந்த பயிற்சி என்று பின்பு புரிந்தது. பல வருடங்கள் கழித்து என் கதை ஒன்று பிரசுரமாகியது. அதன்பின், ஆங்கில நாவல்கள் நிறையப் படித்தேன். இன்னும் படிக்கிறேன். (`பெரியவர்கள் கதையைப் படிக்கக்கூடாது!’ என்று அம்மா கண்டித்துச் சொன்னதிலிருந்தே தமிழில் நிறையப் படிக்க ஆரம்பித்திருந்தேன்). ஐந்தாண்டுகள் கழிந்ததும், சிறுகதை, நாடகப் போட்டிகளில் பரிசு! நாற்பது வயதில், `ஆங்கிலத்திலும் எழுதிப் பார்க்கலாமே!’ என்ற யோசனை வந்தது. ஆனால் எழுதியது எனக்கே திருப்தி அளிக்கவில்லை. அடுத்த மூன்று ஆண்டுகள் இடைவிடாமல் ஆராய்ச்சி செய்தேன். பிறரது கதைகளில் வர்ணனையைப் படிக்க பொறுமையில்லாது, உரையாடலுக்கு தாவுகிறவள் நான். என் பாணி கரு, நாடகம் (PLOT AND DRAMA) என்று முடிவு செய்துகொண்டேன். எழுத முடிந்தது. நான் ஆங்கிலச் சிறுகதைப் போட்டிகளிலும் பரிசு பெற்றது கண்டு என் பெற்றோருக்குக் கொள்ளைப் பெருமை. `நீ! ஆங்கிலத்தில் எழுதுகிறாயா! என்னால் நம்பவே முடியவில்லை. I CAN’T GET OVER IT!’ என்று பலமுறை கூறிய என் வயதொத்த உறவினர்களையும், உடன் வேலை பார்த்த ஆங்கில ஆசிரியைகளையும் அலட்சியம் செய்தேன். `எழுதுவதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது?’ `நீங்கள் மத்திம வர்க்கத்தினரைப்பற்றியே நிறைய எழுதுகிறீர்கள். படிப்பவர்களுக்கு போரடித்துவிடும்!’ `ஒரு வேளை, நாம் எழுதுவதெல்லாம் குப்பைதானோ?’ என்ற சந்தேகத்தை என்னுள் புகுத்தப் பார்த்தவர்கள் பலர். என்னைப் பாதித்தவற்றை, தெரிந்தவற்றை எனக்குப் பிடித்தவகையில் எழுதுகிறேன். அதை ஏற்று, பிரசுரம் செய்கிறார்கள். இது போதாதா என்று இப்படியெல்லாம் பேசுகிறவர்களை அலட்சியம் செய்துவிட்டேன். நாம் எழுதுவது எந்த வகையிலாவது பிறரைத் தாக்கினால், அதுவே நாம் அடையும் வெற்றிதான்.   நாம் எந்தக் காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும்போதும், அதில் ஓரளவு வெற்றி பெற்றபின்னும், `என்ன கிழித்துவிட்டாள்!’ என்று புறம் பேசுகிறவர்கள் பொறாமையால் பேசுகிறவர்களாக  இருப்பார்கள். அவர்களைப் போன்றவர்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்தால் தோல்வி அடைவது என்னவோ நாம்தான். நம்மைக் கவிழ்க்கப் பார்க்கிறவர்களை `நண்பர்கள்’ என்று கருதி ஏமாறாமல் இருப்பதுதான் நமக்கு நாமே செய்துகொள்ளும் நன்மை. `நம்மை இவள் அலட்சியப்படுத்துகிறாளே!’ என்ற ஆத்திரத்தில், `கர்வி’ என்று பிறரிடம் அவதூறு பேசுவார்கள். பேசிவிட்டுப் போகட்டுமே, நமக்கென்ன நஷ்டம்!                                                 13. பரீட்சைப் பயம்   `இது சாதாரண பள்ளிக்கூடப் பரீட்சைன்னு அலட்சியமா இருக்காதீங்க! இப்போ வாங்கற மார்க்கைத்தான் பப்ளிக் எக்ஸாமிலும் வாங்குவீங்க!’ பல மாணவர்களும் கேட்டு நடுங்கிய எச்சரிக்கை. இப்படியெல்லாம் பயமுறுத்தினால்தான் மாணவர்கள் ஒழுங்காகப் படித்து, நல்ல மதிப்பெண்கள் வாங்குவார்கள், நமக்கும் மரியாதையோ, பதவி உயர்வோ கிடைக்கும் என்றெண்ணி பல ஆசிரியைகள் இம்முறையைக் கையாளுவார்கள். `படிப்பு’ என்றாலே பயம் உண்டாகும் என்பதுதான் உண்மை. ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் நான் புத்தகங்கள் படிப்பது கண்டு, `எப்படித்தான் உனக்குப் படிக்கப் பிடிக்கிறதோ!’ என்பார்கள் என்னுடன் வேலை பார்த்த சில ஆசிரியைகள். வேண்டுமென்றே வரவழைத்துக்கொண்ட அலட்சியமும், சிறிது பொறாமையும் அவர்கள் குரலில் ஒலிக்கும். `நாங்கள் பரீட்சைகளில் பாஸ் பண்ண மட்டும்தான் புத்தகங்களைத் தொடுவோம்!’ என்று பெருமை பேசுவார்கள். `ஆசிரியர்’ என்றாலே கண்டிப்பு மிக்கவர், அவரை நினைத்தாலே அச்சம் ஏற்பட வேண்டும் என்று எழுதப்படாத விதி ஒன்றைப் பலரும் கடைப்பிடிக்கின்றனர். பள்ளிப் படிப்புதான் என்றில்லை, இசையோ, நடனமோ கற்பிக்கும் ஆசிரியர்களும் இப்படி நடந்தால்தான் மாணவர்கள் விரைவில் கற்றுத் தேர்வார்கள் என்றே எண்ணுகிறார்கள். மலேசியாவில் எனக்கு அலெக்சாண்ட்ரா என்ற ஒரு சிநேகிதி இருந்தாள். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவள். அவளுடைய ஆறு வயதுப் பெண்ணுக்கு இந்திய முறைப்படி நாட்டியம் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யலாம் என்று ஓர் ஆசிரியையிடம் அழைத்துப் போனாளாம். அங்கு அந்த ஆசிரியை தன் மாணவியின் கன்னத்தில் அடித்துச் சொல்லிக் கொடுத்ததைப் பார்த்து, பெண், `I don’t know how to handle this!’ என்று கற்க மறுத்துவிட்டதாகச் சொன்னாள். “அடி வாங்கிய சிறுமியின் தாய் அருகிலேயே இருந்தாள். ஆனால், ஒன்றுமே நடக்காததுபோல் வாளாவிருந்து விட்டாளே!” என்று அதிசயப்பட்டாள் அலெக்சாண்ட்ரா. அவர்கள் நாட்டில் குழந்தைகளைப் பெற்றோர் அடிப்பதுகூட சட்டவிரோதம். `ஆசிரியை அடித்தால் எனக்குச் சமாளிக்கத் தெரியாதே!’ என்று பெண் பயந்ததில் என்ன அதிசயம்? நம் நடன ஆசிரியைகள் தாம் இப்படிப் பயில்விக்கப்பட்டதால்தான் இன்று உயர்ந்திருக்கிறோம் என்று அதே முறையைக் கையாள்கிறார்கள். தாம் மிரட்டியோ, பயமுறுத்தியோ செய்தால்தான் மாணவர்கள் எதையும் செவ்வனே செய்வார்கள் என்று ஆசிரியர்கள் நினைக்கலாம். ஆனால், பாட்டு ஆசிரியை பயமுறுத்தினால் மேடையிலோ, பிறர் எதிரிலோ பாட ஆரம்பிக்கும்போது, தொண்டையை அடைத்துக்கொள்வதுபோல் இருக்கும். நாட்டியம் ஆடும் பெண்களோ, சற்றே விறைத்தாற்போல் இருப்பார்கள். கண்கள் அலையும் -- தப்பாக ஏதாவது ஆடிவிட்டால், பிறகு ஆசிரியை எப்படித் திட்டுவாரோ என்ற பயத்தில். இதற்கெல்லாம் `STAGE FEAR!’  என்று சப்பைக்கட்டு கட்டிவிடுகிறோம். அதற்குக் காரணமான ஆசிரியைக்கு யார் எடுத்துச் சொல்வது! எந்தப் போட்டியில் பார்த்தாலும், ஆரம்பத்தில் நன்றாகப் பாடுகிறவர்களோ, ஆடுகிறவர்களோ இறுதிச் சுற்றில் வெற்றி பெறுவதில்லை. அமைதியாக இருப்பவர்களோ, சிறுகச் சிறுக முன்னேறிக்கொண்டே வந்து, வெற்றிக்கோப்பையைப் பிடித்துவிடுவார்கள். இவர்களால் இவ்வளவு பெரிய சமாசாரத்தை எப்படிச் சாதாரணமாக ஏற்றுக்கொண்டு, படபடப்பில்லாமல் இயங்க முடிகிறது என்று பார்த்தால், அவர்களுடைய ஆசிரியைகள் சிரிப்பும், விளையாட்டுமாகச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். தவறிழைத்தால், கேலியோ, திட்டோ கிடையாது. பிற ஆசிரியர்களைப்பற்றி அவதூறாகப் பேசவும் மாட்டார்கள். இம்மாதிரி வகுப்புகளுக்கு குழந்தைகள் ஆர்வமாக வருவார்கள். கற்பது முதலில் மெதுவாகத்தான் இருக்கும். ஆனால், பந்தயத்தில் ஓடும் குதிரைபோல், விரைவிலேயே பல மடங்காக உயர்ந்து, பிறரைப் பின்தள்ளி விடுவார்கள். போட்டி, பொறாமையின்றி பிறருக்கு உதவவும் செய்வார்கள். குழந்தைகளுக்கு இயல்பாகவே எந்தக் காரியத்திலும் நீண்ட காலம் கவனம் செலுத்திக்கொண்டு இருக்க முடியாது. இது புரியாது, அவர்களைத் திட்டி, அடித்தால் அது கொடுமைதான். `ஆறு வயதுக் குழந்தைகளை மேடையில் ஆடப் பழக்கும்போது,  தலையை அப்படியும் இப்படியும் திருப்புகிறார்களே!’ என்று அயரும் நடன ஆசிரியைகளுக்கு ஓர் ஆலோசனை: வீட்டில் சிறுமி ஆடும்போது, அவளுக்குப் பிடித்த பொம்மை ஒன்றைத் தாயின் கையில் கொடுத்து, `பொம்மையைப் பார்த்துக்கொண்டு ஆடு!’ என்று பழக்க வேண்டும். தாய் பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தாலும், பொம்மையிலேயே கருத்தாக இருக்கும் சிறுமி தலையைத் திருப்ப மாட்டாள். எவ்வளவு பெரிய மண்டபமாக இருந்தாலும், பார்வை என்னவோ முன்னோக்கியே இருக்கும். நான் ஆரம்பப் பள்ளியில் படித்தபோது, குடுமி வைத்த ஆசிரியர்கள் மட்டும்தான். எல்லாரும் வகுப்பிலிருந்த பையன்களை அடிப்பார்கள் -- கேள்விக்கு உடனடியாகப் பதில் சொல்லத் தெரியாத குற்றத்துக்காக. இல்லையேல், தோப்புக்கரணம் போடச் சொல்வார்கள். வாடிக்கையாக, ஆசிரியர் சொல்லிக்கொடுப்பதில் கவனமின்றி எங்கோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பெண்களை நாற்காலியின்மேல் நிற்கச் சொல்வார் ஓர் ஆசிரியர். அவ்வளவுதான். அடி கிடையாது. (எங்கள் வகுப்பில் நான் ஒருத்திதான் அப்படி நின்றதாக நினைவு). எனக்கு இம்முறை நன்றாகப் பழகிப்போய், என் பெயரை ஆசிரியர் அழைக்க வேண்டியதுதான், நானே நாற்காலியின்மேல் ஏறி நின்றுவிடுவேன் -- அவர் வேறு எதற்காகக் கூப்பிட்டிருந்தாலும். எல்லாரையும்விட உயரமாக இருக்கிறோமே என்று பெருமையாக இருக்கும். அதோடு, இனி ஆசிரியர் நடத்தும் பாடத்தைக் கவனிக்க வேண்டாமே! சும்மா நிற்க முடியுமா? என் கண்கள் அங்கும் இங்குமாக அலையும். என்னைப்போல் `உருப்படாத,’ குழந்தைகளுக்காக மேலே பார்க்கும் இடங்களில் எல்லாம் கூட்டல், பெருக்கல் கணக்கு, பழமொழி எல்லாம் எழுதி வைத்திருப்பார்கள். அதனால்தானோ, என்னவோ, தமிழ், கணக்கு இரண்டும் எனக்கு மிகவும் கைவந்த பாடங்களாக ஆயின!   சிறு வயதாக இருந்தால் அப்படித்தான் எல்லாரும் திட்டுவார்கள் போலிருக்கிறது என்றெண்ணியதால், இம்மாதிரியான தண்டனை எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. வயது சற்று கூடியதும், முன்னேற வேண்டும் என்ற துடிப்பில் கட்டொழுங்கு தானே வந்தது. அப்போது நான் என் இடைநிலைப்பள்ளி ஆசிரியைகளைப் போய் பார்த்தபோது, என்னை `ஒழுங்கீனம் பிடிச்ச பிள்ளை’ என்று ஓயாமல் நிந்தித்த ஆசிரியைகள் இருவர், `நீ நல்லா முன்னுக்கு வருவேன்னு அப்பவே தெரியும்,’ என்றார்கள்! பாடங்களை மறந்த குற்றத்துக்காக தோப்புக்கரணம் போட்ட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நன்மைதான் செய்திருக்கிறார்கள். அந்த `தண்டனை’ மூளையிலுள்ள நரம்புகளை வலுப்படுத்துவதால், இப்போது மேல் நாடுகளில் ஒரு வித யோகா என்று சொல்லிக்கொடுக்கப்படுகிறதே! அடி வாங்கிய மாணவர்கள்தாம், பாவம், பரீட்சை சமயத்தில் படித்ததையெல்லாம் மறந்து விடுவார்கள். அதற்காக இன்னும் அடி. (கடந்ததை மறக்க முடியாது, கல்லூரி நாட்களில்கூட, `பரீட்சை’ என்றாலே வயிற்றுப்போக்கு ஏற்பட்டுத் துடித்த சிலரை நான் அறிவேன்). பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் அளிக்கும் தண்டனையைவிடக் கொடுமையானது, `படி, படி’ என்று உயிரை வாங்கும் பெற்றோரைப் பெற்றிருப்பது. ஒரு தாய் `பெரிய பரீட்சை’ என்று நடுங்கி, இளைத்துப்போன மகளைப் பார்த்துப் பரிதாபப்பட்டுக்  கேட்டாள்: `படிக்காமலிருந்தால் என்ன ஆகும்?’ `பரீட்சையில் தேர்ச்சி பெற முடியாது’. `படித்தால்?’ `பாஸ் பண்ணலாம்!’ `அது போதுமே!’ இப்படி வளர்க்கப்பட்ட குழந்தை இயல்பாகவே கடினமாக உழைக்கும் -- படபடப்பு இல்லாது. எத்தனை வயதானாலும் படிப்பதிலுள்ள ஆர்வமும் குன்றாது.                                                             14. பிள்ளைகள் காட்சிப்பொருட்களல்ல   எங்கள் உறவினர் பெண் ஒருத்தி தன் குழந்தையின் புத்திசாலித்தனத்தைப் பார்த்துப் பூரித்துப்போனாள். அருகில் இருப்பவர்களிடமெல்லாம், `இவளைப்  பாருங்களேன்!’ என்று கூவுவாள். தாய் ஓயாமல் பார்ப்பதையெல்லாம் விளக்க, மகளின் அறிவு வயதுக்கு மீறி வளர்ந்திருந்தது என்னவோ உண்மை. ஆம், முதல் குழந்தைதான். இரண்டு வயது. பிறருக்கு அவளுடைய `நிர்ப்பந்தம்’ அலுப்பாகிவிட்டது. என்னிடம் குறைப்பட்டுக்கொண்டார்கள்: `எப்பவும் அந்தக் குழந்தையையே நாம்ப பார்த்துக் கொண்டிருக்கணும்!’ `எத்தனையோ குழந்தையைப் பாத்தாச்சு!’ ஒரு முதிய பெண்மணியின் அலுப்பு. அடுத்த முறை அந்த இளம் தாய் என்னுடன் தொடர்பு கொண்டபோது, `உன் குழந்தை எப்படி இருக்கிறாள்? Don’t show her off!’ என்று அறிவுரை கூறினேன். (கண்டனம் தெரிவிப்பது ஆங்கிலத்தில் எவ்வளவு எளிதாக இருக்கிறது!). `இப்போதெல்லாம் நான் அப்படிச் செய்வதில்லை. அவளுடைய அப்பாவை அப்படித்தான் செய்தார்களாம். அதனால், `ஓயாமல் பெண்ணைப்பற்றி பெருமையாகப் பேசாதே!’ என்றுவிட்டார்,’ என்று தெரிவித்தாள். அந்த மனிதர் சிறு வயதில் கர்னாடக இசையில் கேள்வி ஞானத்திலேயே சிறந்து, பல போட்டிகளில் வென்றிருக்கிறார். வருகிறவர் போகிறவர்களிடமெல்லாம் அச்சிறுவன் பாடுவதைக் கேட்க வைப்பார்கள் அவனுடைய பெற்றோர். அவனைப் பாடச்சொல்லி, காசெட் வேறு எடுத்துக் கொடுப்பார்கள். பெரியவனானதும், `எனக்கு கர்னாடக சங்கீதம் என்றாலே வெறுப்பாகிவிட்டது!’ என்கிறார் அந்த தந்தை. பெற்றோரை எதிர்க்க முடியாது, அவர்கள் விருப்பப்படியெல்லாம் ஆடியது இப்போது நினைத்தாலும் கசப்பாக இருக்கிறது, பாவம்! மிக நெருங்கியவர்களிடம் சொல்லி வருந்துவதுதான் அவரால் செய்ய முடிந்தது. நம் குழந்தை சிறந்திருந்தால் நமக்குத்தான் பெருமை. இதுவும் ஒருவித தற்பெருமைதானே! தவிர்க்கலாம். `வயதில் மூத்தவர்களை திருப்திப்படுத்த மட்டும்தான் தன் வாழ்கிறோம்,’ என்ற நினைப்பு எந்தக் குழந்தைக்கும் கசப்பாகத்தான் இருக்கும். அதனுடைய தனித்தன்மையை வெளிக்கொணர்வதுதான் பெற்றோர் செய்யக்கூடிய உபகாரம். தான் பெறாத திறமையை தான் பெற்ற குழந்தை (ஆணோ, பெண்ணோ) பெற்றுவிட்டான் என்ற பெருமிதத்தில் பார்ப்பவர்களிடம் எல்லாம் அவனைப்பற்றி பெருமையாகப் பேசும் தாய்மார்கள் சகஜம். நம் குழந்தையால் நமக்குத்தான் பெருமை. மற்றவர்களுக்கு என்ன வந்தது! என் சுயக்கதை: இசையும், நடனமும் மிகச் சிறு வயதிலேயே எனக்குப் பிடிக்கும். நான் நாட்டியம் கற்றுக்கொண்டது பரதநாட்டியம் என்பது ஒரு குறிப்பிட்ட சாராருக்குத்தான் என்றிருந்த காலத்தில். எங்கள் வீட்டுக்கு வருகை புரியும் முதிய பெண்மணிகள், `என்னமோ டான்ஸ், டான்ஸ் என்கிறாளே! அது எப்படீடி இருக்கும்?’ என்று என் அம்மாவைக் கேட்பார்கள். விசேட காலங்களில் கோயில்களில் சில பெண்கள் நாட்டியம் ஆடும்போது, அதைப் பார்ப்பதுகூட தம் கௌரவத்திற்கு இழுக்கு என்பது போலிருந்தது இவர்களது மனப்போக்கு. அதனால் நாட்டியம் என்பதே இவர்களுக்கு அந்நியமாகப் போய்விட்டது. அடுத்தது நான் வேண்டாவெறுப்புடன் எதிர்பார்த்ததுதான். ‘நிர்மலா ஆடுவாளே!’ என்று என் தாய் என்னை அழைப்பார்கள். என் திருப்திக்காக நான் எப்போதும் ஆடிக் கொண்டிருப்பேன். ஆனால், கண்காட்சிப் பொருளாகத் தான் அமைவதை எந்தக் குழந்தைதான் விரும்பும்? `எதுக்கும்மா?’ என்று கொஞ்சம் முனகிவிட்டு, அம்மாவின் முறைப்பைத் தாங்கமுடியாது ஆடுவேன். எப்படித் தெரியுமா? கன்னங்கள் ஒட்டியிருக்கும்படி வாய்க்குள் இடுக்கிக்கொண்டு, இல்லையேல், வாயை இறுக மூடி, மேல் உதடு மூக்கில் படும்படி பொருத்திக்கொண்டு! (முயன்று பாருங்கள்!) கோரமாக இருந்தால், `இன்னொரு பாட்டுக்கு ஆடு!’ என்று கேட்க மாட்டார்களே! என் அதிருப்தியை பின் எப்படித்தான் வெளிக்காட்டுவது! அடுத்த முறை, `சிரிச்சுண்டு ஆடு!’ என்று அம்மா தாஜா பண்ணுவாள். சிரிப்பு என்னவோ வராது. ஒரு முறை, வேற்றூரிலிருந்த ஒரு சிநேகிதியின் வீட்டுக்குப் போயிருந்தேன். அவள் கணவர் பெருமையுடன், `எங்கள் மகள் அற்புதமாக ஆங்கிலத்தில் கவிதை எழுதுவாள்,’ என்று கூறியபடி, மகளைக் கூவி அழைத்தார். முகத்தைத் தூக்கிக்கொண்டு வந்தாள், அந்த பதினேழு வயதுப் பெண். `I know! It is a set-up!’ என்று பெற்றோரைக் குற்றம் சாட்டினாள். என் இளமைக்காலம் நினைவில் வந்தது. அவளுடைய வேண்டாவெறுப்பு புரிந்து, நான் அவளுடைய பயத்தைப் போக்கினேன். `அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. உங்கள் வீட்டு அலங்காரப் பொருட்களைப் பார்ப்பதற்காகத்தான் என்னை அழைத்து வந்தார்கள். உனக்கு விருப்பமில்லாவிட்டால் காட்ட வேண்டாம்!’ என்றுவிட்டேன். அவள் உள்ளே போனாள், பெற்றோரின் அதிருப்தியைச் சட்டைசெய்யாது. `இன்னொரு முறை வந்தால், எங்கள் வீட்டு சாமிக்கும் நீங்கள் பாட வேண்டும்,’ என்று வேண்டுகோள் விடுத்தார் அந்த நண்பர். (அதற்கு முன்னால் கோயிலில் நான் பாடியதைக் கேட்டிருந்தார்). `இப்போதே பாடுகிறேனே,’ என்று உடனே தரையில் உட்கார்ந்தேன். இது தற்பெருமையோ, கர்வமோ அல்ல. (`யாராவது உன்னை பாடச் சொன்னால், உடனே பாட வேண்டும். பிகு பண்ணிக்கொள்ளக் கூடாது! அது தவறு,’ என்று என் குரு  போதித்திருந்தார்). நான் பாடி முடித்ததும், அப்பெண் தான் எழுதிய கவிதைகளை வலியக் கொண்டுவந்து காட்டினாள்! இளைஞர்களை எக்காரியத்தைச் செய்ய வைப்பதற்கும் வற்புறுத்தாது, `நீயே முடிவு செய்துகொள்!’ என்று விட்டால், நாம் வெற்றி பெறலாம்.                   15. உணவின்மூலம் அன்பா?   `இன்னும் நிறையச் சாப்பிடுங்கள்!’ கல்யாண வீட்டில் பந்தி உபசாரம். நம் வயிறு கொள்ளும்வரை சாப்பிட்டிருப்போம். இருந்தாலும், உபசாரம் செய்வார்கள். எனக்குத் தெரிந்த ஓர் இசைக்கலைஞர் நான் ஒவ்வொரு ஆண்டு பார்க்கும்போதும் பல கிலோ எடை கூடியிருப்பார். முப்பத்தைந்து வயதுதான். அவர் மனைவி என்னிடம் முறையிட்டார். “என்ன, இப்படி குண்டாகிக்கொண்டே போகிறீர்களே! இனிப்பு வியாதி வந்துவைக்கப்போகிறது!” என்று கவலைப்பட்டேன். “என்ன செய்யறது, மாமி! அடிக்கடி கல்யாணக் கச்சேரி. அப்போதெல்லாம், ஒரேயடியாக உபசாரம் செய்து சாப்பிட வைக்கிறார்கள்!” என்றார், பரிதாபமாக. இப்படிப் பிறர் நம்மை உபசாரம் செய்வது  உபகாரமில்லை. உபத்திரவம்தான். மறுநாள் நம் வயிறு கெட்டால், அவர்களிடம் போய் சண்டை போட முடியுமா? ஏதாவது வியாதி வந்தாலும், `நான்தான் சொன்னேன் என்றால், உனக்கெங்கே போயிற்று புத்தி?’ என்று திருப்பிக் கேட்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சசயம்? `ஏழைகள் என்றால்  சோனியாக இருப்பார்கள். ஏனெனில் அவர்கள் சாப்பாட்டுக்குத் திண்டாடுபவர்கள். நமக்குத்தான் பணப்பிரச்னை இல்லையே!’ என்பதுபோன்ற எண்ணப்போக்குடன் தேவைக்கு அதிகமாகப் பலரும் சாப்பிடுகிறார்களோ? சற்று வசதியாக இருப்பவர்களைப் பார்த்தால் அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. நான் மருத்துவரிடம் போகும்போதெல்லாம், `உங்களுக்கு என்ன வயது?’ என்று கேட்டுவிட்டு, `எடையைக் குறைக்கலாம்!’ என்று ஆலோசனை வழங்குவார்கள். என் அனுபவத்தில், நாற்பது வயதில் சாப்பிட்ட அளவு உணவையே நாற்பத்து ஐந்து வயதிலும் சாப்பிட்டாலும், கடினமான வேலை செய்யாவிட்டால் எடை அதிகரித்து விடுகிறது. (சமையல், வீட்டில் சிறிது வேலை செய்வது இதெல்லாம் கணக்கில்லை). இப்படியே ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளிலும் எடை கூடுவதால், சாப்பாட்டின் அளவைக் குறைத்தால்தான் எடை ஒரே சீராக இருக்கிறது. `நான் உயிர் வாழ்வதே சாப்பிடுவதற்குத்தான். அப்படியாவது என்ன அழகு வேண்டிக் கிடக்கிறது?’ என்பவர்களுக்கு: எடை அதிகரித்தால் முழங்கால் வலி, மூச்சிரைப்பு, அசதி என்று என்னென்னவோ உபாதைகள்! கூடவே, சோம்பல் அல்லது சிடுசிடுப்பு மற்றும் விரக்தி வேறு. ஆனால், விருந்தையே மருந்தாக எண்ணி அளவோடு உண்டால், சுறுசுறுப்பாக உணரமுடியும். `இளமையாக இருக்கிறீர்கள்!’ என்று யாராவது பாராட்டினால், அது போனஸ்தான். கதை: சாருமதி கணவனிடம், `வேலை முடிந்து வரும்போது, இளநீர் வாங்கி வாருங்கள்!’ என்றாள். புது மனைவி ஆயிற்றே! கணவனோ, இரண்டு இளநீர் வாங்கி வந்தான். முலாம்பழம், மாதுளை என்று சாருமதி எது கேட்டாலும், இரண்டாக வாங்கி வந்தான். அவளும் உடனுக்குடனே சாப்பிட்டுத் தீர்த்தாள்.   விளைவு: அந்தக் கர்ப்பிணியின் உடல் வெகுவாகப் பருத்தது. “இப்படி இவள் சாப்பிட்டால், பேறு காலம் விரைவாக வந்துவிடும். அப்புறம் வயிற்றைக் கீறித்தான் குழந்தையை எடுக்கவேண்டி வரும்,” என்று அந்த இளைஞனின் தாயிடம் எச்சரிக்கை செய்தேன். “அவளிடம் சொல்லி விடாதீர்கள்! பாவம், சின்னப்பெண்! என் மகனும் ஆசையாக வாங்கி வருகிறான்!” என்று பரிந்தாள். சில மாதங்கள் கழித்து முகம் சிறுக்க, “நீங்கள் சொன்னபடியேதான் ஆயிற்று!” என்று ஒத்துக்கொண்டாள். ஏழு மாதத்திலேயே சிஸேரியன் அறுவைச் சிகிச்சையால் குழந்தை பிறக்க, சாருமதியால் உடற்பயிற்சி எதுவும் செய்ய முடியவில்லை. வயிறு பருத்த நிலையிலேயே இருந்தது. அதற்காக அவள் கவலைப்படவுமில்லை. கணவன் தன்மீது காட்டிய அன்பைத் திருப்பியளிக்க ஆரம்பித்தாள் சாருமதி. அவனுக்குப் பிடித்ததாக சமைத்து, `இன்னும் கொஞ்சம், ப்ளீஸ்!’ என்று உபசாரம் செய்ததில், இப்போது அவனுக்கு இனிப்பு நோய். The shortest way to a man’s heart is through his stomach (ஒரு மனிதனின் இதயத்தில் இடம் பிடிக்க மிகக் குறுகிய வழி வயிற்றின்மூலம்தான்) என்பது உண்மையோ, என்னவோ!  சாப்பாட்டின் அளவுதான் அன்பின் அளவுகோல் என்பதுபோல் நடப்பது வேண்டாத விளைவுகளில் கொண்டுவிடும். ஒருவர்மீது நமக்கு அன்பு என்றால், அவருக்கு நிறைய உணவு அளிப்பதுதான் என்று தம்பதிகள் மட்டுமல்ல, தாய்மார்களும் எண்ணுகிறார்கள். அதுவும் ஒரே குழந்தையாக இருந்தால் போயிற்று! ஒரே மகனது உடல் பருமனுக்குத் தான்தான் காரணம் என்று எந்தத் தாயும் ஒத்துக்கொள்ள விரும்புவதில்லை. `என் மகன் எப்பவும் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். ஏனோ ஓடியாடி விளையாட முடியவில்லை,’ என்று காலங்கடந்து மருத்துவர்களிடம் அழைத்துப்போய் குறை கூறி என்ன பயன்?                                           16. உற்று உற்றுப் பார்க்கிறார்களே!   “ஏன் சில ஆண்கள் எங்களை உற்று உற்றுப் பார்க்கிறார்கள்?” என்று என் மலாய் மாணவி ஒருத்தி என்னிடம் சந்தேகம் கேட்டாள். “ஆனால் சீனர்கள் அப்படிப் பார்ப்பதில்லை,” என்றபோது, சிறிது மகிழ்ச்சி அந்த பதின்ம வயதுப் பெண்ணின் முகத்தில். பதிலளிக்க ஒரு சீன மாணவியை அழைத்தேன். “It is silly!” (அசட்டுத்தனம்!) என்று முகத்தைச் சுளித்தாள். இன்னொரு பெண் சேர்ந்துகொண்டாள்: “இவர்களுக்குப் பயந்து உடலைக் குறுக்கிக்கொண்டு நடப்பதில், இடுப்பு வலிக்கிறது, டீச்சர்!” மலேசியாவில் குட்டையான ஜட்டி போன்ற ஆடையை அணியும் சீனப்பெண்களை எங்கும் சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். குளிர் நாட்டிலிருந்து வந்ததால் அவர்களுக்கு பூமத்திய ரேகை அருகிலிருக்கும் இந்நாட்டின் வெப்பத்தைத் தாங்கமுடியாது. `வீட்டுக்குள் நுழைந்ததும், முதல் வேலையாக நான் செய்வது ஷார்ட்ஸ் அணவதுதான்!’ என்று என் சக ஆசிரியைகள் பேசிக்கொள்வார்கள். வேலைக்கு கவுன், குட்டைப் பாவாடை என்று அணிவார்கள். மலாய்க்காரப் பெண்களோ குதிகால்வரை தொங்கும் ஆடை, தலைமுடியை மறைக்க ஒன்று என்று அணிவார்கள். என்கூட வேலை பார்த்த ஒரு பெண்மணி மதத்தைப் போதித்தவள். “உன்னிடம் ஒரு விஷயம் கூறுகிறேன், நிர்மலா,” என்று ஆரம்பித்தாள். “ஒரு பெண்ணின் மணிக்கட்டையும், குதிகாலையும் ஆண்கள் பார்த்துவிட்டால், அவளுடைய உடலிச்சையை அவர்களால் உணர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றாள். அவள் எப்போதும் காலுறை, கையுறை அணிந்திருப்பாள். எனது புடவை பிளவுஸின்கீழ் வெளிப்பட்டுக் கொண்டிருந்த இரண்டு, மூன்று அங்குல முதுகுப் பகுதியைப் பார்த்துவிட்டு, “அது எப்படி நீங்கள் உடலின் நடுப்பாகத்தைக் காட்டுகிறீர்கள்?” என்று அதிசயப்பட்டுக் கேட்டாள் இன்னொருத்தி. “அது அப்படித்தான்!” என்றேன் அலட்சியமாக. ஒரு சீனத்தோழி என் முதுகில் கிள்ளிப்பார்த்தாள். எனக்கு உறைக்கவில்லை என்பதில் அவளுக்கு ஆச்சரியம். ஐரோப்பாவில் சில நாடுகளில் குறிப்பிட்ட பகுதிகளில் நிர்வாணமாக இருக்க அனுமதி உண்டு. ஸ்வீடனில் NUDIST CAMP என்ற பகுதியைப்பற்றி IRVING WALLACE என்ற ஆசிரியர் எழுதியிருந்த  ஒரு ஆங்கில நாவல் படித்திருந்தேன். அதில், கதாநாயகனின் குறிப்புப்படி, எந்தவித காம இச்சையும் தோன்றவில்லையாம். ஆனால், குறிப்பிட்ட நேரம் முடிந்து, அவர்கள் ஒவ்வோர் ஆடையாக அணியும்போதுதான் மனதில் கிளர்ச்சி ஏற்பட்டதாம். பெண்கள் தம் உடலை மூடி மறைக்க வேண்டும் என்று விதித்தவர்கள் ஆண்களாகத்தான் இருக்க வேண்டும். `இதெல்லாம் இயற்கைதான்!’ என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ளாததால், ‘நம் மனம் இப்படி அலைபாய்கிறதே!’ என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி, அந்தக் `கேவலமான’ இச்சையைத் தோற்றுவித்த பெண்களின்மேல் ஆத்திரம் கொண்டு, அவர்களைக் கட்டுப்படுத்தக் கையாளும் உபாயம் என்றே தோன்றுகிறது. கதை: ஒருவர் தாம் பெற்ற மகள்களின் உடை விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்தார். சற்று மெல்லிய துணியை பதினெட்டு வயதான அவர்கள் வாங்கி வந்தபோது, `இதுவா!’ என்று அவர் முகத்தைச் சுளித்தாராம். உடனே அவர்கள் கடைக்குத் திரும்பப் போய், மிகக் கனமான துணியை வாங்கினர், புடவைக்கு ஏற்ற பிளவுஸ் தைக்க. அந்தப் பெண்கள் மகிழ்ச்சியுடன் என்னிடம் தெரிவித்த செய்தி இது. தந்தை நம் பாதுகாப்பில் இவ்வளவு கண்டிப்பாக இருக்கிறாரே என்ற பெருமையில் விளைந்த மகிழ்ச்சி அது. இந்த மனிதர் மகள் வயதை ஒத்த பெண்களுடன் தகாத முறையில் பழகுவார் என்பது குறிப்பிடத்தக்கது. வட, தென்னிந்தியக் கோயில்களில் பெண்களின் மார்புச்சேலை சற்று முன்னேபின்னே இருந்தாலும், முதுகில் (MIDRIFF) ஓரடி தெரிந்தாலும், எந்த ஆணும் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை என்பதை மகிழ்ச்சியுடன் கவனித்திருக்கிறேன். கோயிலுக்கு வருவது கடவுளைக் கும்பிட்டுச் செல்ல; பிறரைக் கவனித்து, வம்பு பேச அல்ல என்று புரிந்திருப்பவர்கள். இப்போதெல்லாம் மலேசிய நகர்ப்புறங்களில், ஹிந்தி திரைப்படங்களில் கதாநாயகி அணிவதுபோல் பாதி அல்லது முழுமையான முதுகை வெளிக்காட்டும் பிளவுஸ் அணிவது இளம்பெண்களிடம் நாகரிகமாக ஆகிவருகிறது. `இது அசிங்கம்!’ என்று ஆர்ப்பரிப்பவர்கள் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தத் தெரியாதவர்களா, அல்லது `அவரவர் செய்வது அவரவருக்குச் சரி’ என்ற பெருந்தன்மை இல்லாதவர்களா? ஒருவேளை, எப்போதும், எதற்கும் பிறரைப்பற்றி எதிர்மறையாகவே பேசி, தம் உயர்வையும் அதிகாரத்தையும் நிலைநாட்டிக்கொள்ள நினைப்பவர்களோ?                                           17. எனக்கென்ன, பயமா!   ‘கோலாலம்பூரா! தலைநகரம் அல்லவா? சின்ன விஷயத்திற்கெல்லாம் அங்கே எல்லாரும் சண்டை பிடிப்பார்களே! நீ எப்படித்தான் தாக்குப்பிடிக்கப் போகிறாயோ, பாவம்!’ சிற்றூரிலிருந்து நாட்டின் தலைநகரத்திற்குப் போனால் கலாசார அதிர்ச்சி ஏற்படும் என்று பலரும் பயமுறுத்தி இருந்தார்கள் மே லின் என்ற அந்த இளம் ஆசிரியையை. செல்வச்செழிப்போ, பெற்றோரின் பிரத்தியேக கவனிப்போ இல்லாத பெரிய குடும்பத்தில் பிறந்திருந்தவளுக்குப் பயம் பிடித்துக்கொண்டது. இந்த இருபத்து ஐந்து வருடங்களாக தான் யாரை நம்பி வாழ்ந்தோம், இனியும் அப்படித்தான் வருகிற எதையும் எதிர்கொள்ள வேண்டும் என்ற உறுதியுடன் எங்கள் பள்ளிக்கூடத்தை வந்தடைந்தாள் மே லின். வந்த சில மாதங்களுக்குள்ளாகவே, பல ஆண்டுகள் அனுபவம் பெற்றிருந்த ஆசிரியைகளுடன் வலுச்சண்டை போட ஆரம்பித்தாள். காரணம் இல்லாவிட்டாலும், எதற்காகவாவது விவாதமும், சண்டையும் தொடரும். எங்களுக்கெல்லாம் அலுத்துவிட்டது. வேலைப்பளு ஒரு பக்கமிருக்க,  அநாவசியமாக ஒருத்தி வம்புக்கு இழுத்தால்? பலரும் அவளைக் கண்டால் ஒதுங்க ஆரம்பித்தோம். தான் பிறரைப் பார்த்துப் பயப்படுவதற்குப் பதில், அவர்களே தன்னைப் பார்த்துப் பயந்து விலகுகிறார்கள்! பெருமையில், அவளுடைய அதிகாரம் இன்னும் அதிகரித்தது. நாங்கள் அனைவரும் இனபேதம் இல்லாது நட்புடன் பழகிவந்தோம். இவள்மட்டும் எதனால் இப்படி இருக்கிறாள் (`What is wrong with her?’) என்று கலந்து பேசினோம். ஒரு முறை, “இங்கே சண்டை போட்டால்தான் பிழைக்க முடியுமாமே! எனக்கென்ன, பயமா!” என்று மே லின் ஏதேதோ பேச, அவளுடைய போக்கிற்கான அர்த்தம் சற்றுப் புரிகிறமாதிரி இருந்தது. ஒரு முன்னிரவு காலத்தில், நான் தெருவில் நடந்து போகும்போது, சிறிய நாய் ஒன்று வெறி பிடித்தமாதிரி குரைத்தபடி, எதிர்த்திசையிலிருந்து  என்னை நோக்கி வெகு வேகமாக வந்தது. முதலில் பயமாக இருந்தாலும், `பயந்தவர்தான் பிறரை பயமுறுத்துகிறார்’ என்ற உண்மை நினைவுக்கு வந்தது. `நான் உன்னை ஒன்றும் செய்யப் போவதில்லையே! என்னைப் பார்த்து எதற்குப் பயப்படுகிறாய்?’ என்று மானசீகமாக அந்த நாயுடன் தொடர்பு கொண்டேன். உடனே, அது பிரேக் போட்டாற்போல் உட்கார்ந்தது. அதைத் தாண்டிப் போகையில், அதன் தலை குனிந்திருந்தது. மே லின்னின் போக்கிற்கும் அதற்கும் என்ன வித்தியாசம்? பிறர் தன்னை ஏற்பார்களோ, மாட்டார்களோ என்ற ஏக்கம் - அச்சம் - அவளுக்கு. அந்த பயத்தில் அவர்கள் தன்னை ஏற்காதிருக்கும்படி நடந்துகொள்கிறாள்! நான் அந்தப் பள்ளியைவிட்டு மாற்றலாகிப் போனபோது, அவளுடைய வயதும் என் அனுபவமும் ஒன்றுதான் என்ற நிலை அளித்த உரிமையுடன், மே லின்னிடம் தனிமையில் புத்தி கூறினேன்: “Take it easy! உன்னை யாரும் எதுவும் செய்துவிடப் போவதில்லை”. “என்ன சொல்கிறீர்கள்? எனக்குப் புரியவில்லை,” என்றாள் பரிதாபமாக. “நீ எதற்கெடுத்தாலும் சண்டை போடுகிறாய் என்று ஒரு பேச்சு நிலவுகிறது,” என்று நான் ஆரம்பிக்க, அவள் முகத்தில் ஒரே அதிர்ச்சி. “நீ நட்புடன் பிறருக்கு உதவி செய்தாலும், மரியாதையாக நடந்துகொண்டாலுமே போதுமே! எல்லாரும் உன்னை ஏற்பர். அதை விட்டு, ஏன் இப்படி இருக்கிறாய்?” என்றுவிட்டு, அப்பால் நகர்ந்தேன். குரலடைக்க, “நீங்கள் என்னிடம் சொன்னதற்கு ரொம்ப நன்றி,” என்றாள், திரும்பத் திரும்ப. அழுதுவிடுவாள் போலிருந்தது. எந்த ஒரு உத்தியோகத்திலும் நாம் புதிதாகச் சேரும்போது, வந்த அன்றே நம்மைப்பற்றித் துருவித் துருவிக் கேட்பவர்களும், நம்முடன் ஒட்டிக்கொள்ள விரும்புகிறவர்கள்போல் நடிப்பவர்களும் நட்புடன் பழகுகிறார்கள் என்றெண்ணி மகிழ்ந்து, ஏமாந்துவிடக் கூடாது. இவர்களை நம்ப முடியாது. சந்தர்ப்பம் கிடைத்தால், இந்த இரண்டு ரகமுமே முதுகில் கத்தி பாய்ச்சும். புதிதாக வந்திருப்பவர் நம்மை மிஞ்சிவிடக்கூடாதே என்ற பதைப்பிலிருப்பார்கள் சிலர். இவர்கள் தன்னம்பிக்கை குன்றியவர்கள். நான் ஒரு பள்ளிக்குச் சில காலம் அனுப்பப்பட்டிருந்தேன், மேற்பயிற்சிக்காக. அங்கே இருந்த ஓரிரு இந்திய ஆசிரியைகள் ஆசிரியர்களின் பொது அறையில் அதிகம் பேசாமல் இருந்ததைக் கண்டேன். மிக எளிமையான புடவைகளை உடுத்தியிருந்தார்கள். என்னுடன் மட்டும் பேசினார்கள், மகிழ்ச்சியுடன். ஆங்கில-சீன (Eurasian) மாது ஒருத்தி என்னிடம், “நீ தினமும் இப்படி பட்டுப்புடவையே கட்டிக்கொண்டு வருகிறாயே! இங்குள்ள மர நாற்காலிகளில் நூல் இழுபட்டு, வீணாகிவிடும்,” என்றாள். அவள் குரலில் கிஞ்சித்தும் கரிசனம் இல்லை என்பது புரிந்து, நான் கண்களைச் சுருக்கிக்கொண்டு, மிக இனிமையாக, “பரவாயில்லை. புடவை போனால் என்ன! நானே ஒரு நாள் சாகத்தானே போகிறேன்!” என்றேன். குரலில் அலட்சியம். அப்போது அவள் முகத்தைப் பார்க்க வேண்டுமே! இன்னொரு நாள், “நீ ஆங்கிலத்தில் எழுதுவாய், தெரியும். தமிழிலும் எழுதுவாயா?” என்று ஆச்சரியம் தெரிவித்துவிட்டு, “Linguist!” என்று பழிப்பதுபோல் கூறினாள். அவள் எதிர்பார்த்தபடி, நான் ஏதோ தவறான காரியம் செய்துவிட்டு, மன்னிப்பு வேண்டுவதுபோல் அசட்டுச் சிரிப்பு சிரிக்கவில்லை. எந்த உணர்ச்சியும் காட்டாது, அவளையே பார்த்தேன். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவள் மாறிவிட்டாள். என்னை ஒரு தலைவியாக ஏற்றதுபோல், தன் குறைகளைச் சொல்லிச் சொல்லி என் தீர்வை நாடினாள்! (நாற்காலிகள் எல்லாம் வழுவழுப்பாக இருந்தன, என் புடவை எதுவும் நாசமாகவில்லை என்பது வேறு விஷயம்). அங்கிருந்த தமிழ் ஆசிரியை ஒருவரிடம், “இப்படி காமாசோமாவென்று அலட்சியமாக உடுத்திக்கொண்டு வராதீர்கள். மதிக்க மாட்டார்கள். உங்களிடம் நல்ல புடவையே இல்லையா?” என்று போலியாக மிரட்டினேன். (ஆசிரியர்களின் நகைச்சுவையான போக்கும், உடைகளும் பிடித்திருந்தால், மாணவ மாணவிகளுக்கு அவர்கள் கற்பிக்கும் பாடத்தில் தனி அக்கறை பிறக்கும். உடன் உத்தியோகம் பார்ப்பவர்களும் முதலில் வேண்டாவெறுப்பாக மரியாதை செலுத்துவார்கள். நாளடைவில் நம்மையும் சரிசமமாக ஏற்பார்கள்). சிரித்துவிட்டு, மறுநாளிலிருந்து அவரும் விதவிதமான புடவை அணிந்துகொண்டு வந்தார். அவரைப் பார்த்தவுடன், பிற ஆசிரியைகளின் விழிகள் விரிந்தன -- பயத்தால்! ஒரு புதிய இடத்தில் நுழைந்து, ஆரம்பத்திலேயே அதிகம் பேசினால், நம் பலம், பலவீனங்களைப் பிறர் புரிந்துகொள்ள வழிவகுத்து விடுகிறோம். நம் பலத்தையே நமக்கு எதிராக வளைத்து, தமக்கு ஆதாயம் தேடிக்கொள்பவர்களும் உண்டு. ஆகவே, முகத்தில்கூட அதிக உணர்ச்சிகள் காட்டாது, மௌனமாக இருப்பது நலம். அமைதியுடன் பிறரைக் கவனித்தால், அவர்களுடைய குணம் புரியும். இந்தச் சூழ்நிலையில் நாம் எப்படி நடந்துகொள்வது என்ற தெளிவும் பிறக்கும்.     18. என்றும் சோகமா!   `உங்கள் மகள் இப்படி இருக்கிறாள்! நீங்கள் என்ன, சிரித்துக்கொண்டே இருக்கிறீர்கள்?’ என்று பல பெண்கள் தன்னைக் கேட்பதாகச் சொன்ன கௌரியின் முகத்தில் ஆழ்ந்த சோகம். உறவில் மணமுடித்ததாலோ, இல்லை, வேறு எந்த காரணத்தினாலோ, அவள் பெற்ற இரு பெண் குழந்தைகளுமே உடலளவில் சரியில்லை. சந்திராவின் வலது கையும், இரு கால்களும் செயலிழந்து இருந்தன. தவழ்ந்துதான் நகருவாள். அதிக கனமில்லாமல் இருந்ததால், சிறு குழந்தையைப்போல் அவளைத் தூக்கிக்கொண்டுதான் வெளியிடங்களுக்குப் போவார்கள். இதே போன்றதொரு குறையுடன் பிறந்த அவளுடைய அக்காள் இறந்துவிட்டாள்.    இருபத்தைந்து வயதான சந்திரா நெருங்கிய குடும்ப நண்பர் ஒருவர் வீட்டுக் கல்யாணத்துக்கு வந்திருந்தாள். எனக்கு அவளையும், தாய் கௌரியையும் பல வருடங்களாகத் தெரியும். எல்லாரும் பந்தியில் சாப்பிட உட்கார்ந்தபோது, கௌரி ஒரு தட்டில் சாதம் பிசைந்துகொண்டு வந்து, மகளுக்கு தேக்கரண்டியால் ஊட்டத் தொடங்கினாள். என்னால் சும்மா இருக்க முடியவில்லை. `ஐயோ, அந்தச் சிறு பெண்ணின் தன்னம்பிக்கை என்ன ஆவது!’ என்று மனம் பதைத்தது. `அவளுக்கு இடது கையால் சாப்பிட முடியாது?’ என்று கௌரியைக் கேட்டேன். `முடியும்!’ `அப்படிச் சாப்பிட்டால் யாராவது ஏதாவது சொல்வார்களா?’ சற்று கோபத்துடன் வந்தது என் கேள்வி. சாந்தமாகப் பதிலளித்தாள்: `யாரும் ஒண்ணும் சொல்லமாட்டார்கள்’. `பின்னே என்ன? அவளைத் தானே சாப்பிட விடுங்கள்,’ என்று இரைந்தேன். `இவள் யார் நம்மை மிரட்டுவதற்கு!’ என்று கௌரி ஆத்திரப்படவில்லை. மாறாக, அவள் முகம் மலர்ந்தது. தேக்கரண்டியை சந்திராவின் கையில் (இடதுதான்) கொடுத்தபடி, `இந்த மாமிகிட்டே ஒன்னை ஒரு மாசம் விடணும்!’ என்றாள், சிலாகித்து. வேறொரு சமயம், கௌரி என்னருகே வந்து, மெல்லிய குரலில், ``உங்கள் மகள் இப்படி இருக்கிறாள்! நீங்கள் என்ன, சிரித்துக்கொண்டே இருக்கிறீர்கள்?’ என்று எல்லாரும் என்னைக் கேட்கிறார்கள்!’ என்றாள், வருத்தமாக. `விடுங்கள்! நீங்க இப்போ இருக்கிறதுதான் சரி,’ என்றேன் அழுத்தமாக. ஒருவர் அழுதால், அவரைத் தனியாக விட்டுவிட்டு வேடிக்கை பார்க்க நினைக்கும் இவ்வுலகம். பிறரது வாழ்க்கையில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், `நல்லவேளை, நமக்கு இப்படி நடக்கவில்லையே!’ என்ற திருப்தியுடன், `நாங்கள்தான் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்! நாங்கள் உன்னைமாதிரியா!’ என்பதுபோல் தலைநிமிர்த்தி நடப்பவர்கள் என்னைப் பொறுத்தவரையில், அல்பங்கள். அவர்களுக்கு ஒரு சிறு துன்பம் வந்தால்கூடத் தாங்கமாட்டார்கள். என் நினைவு பின்னோக்கிப் போயிற்று. என் ஒரே மகன் இறந்து ஈராண்டுகளுக்குப்பின் நான் சென்னை போயிருந்தேன். சிறு வயதில் நான் வளர்ந்த வீடு! ஆகையால், அந்தப் பருவமே வந்துவிட்டதுபோல் இருந்தது. எல்லா உறவினர்களையும் பார்த்த சந்தோஷத்தில் நிறையப் பேசினேன், சிரித்தேன். `பிள்ளையைப் பறிகுடுத்துட்டு, கொஞ்சம்கூட வருத்தமில்லாம, இவ என்ன இப்படி சிரிச்சுண்டே இருக்கா!’ என்று ஐம்பது வயதான ஒருவர் (ஆணில்லை, பெண்கள்தாம் இப்படிப் பேசுவார்கள்) நீட்டி முழக்கினார். நான் அதை அலட்சியம் செய்தேன். அன்றிரவு என் பெரியம்மா என் பக்கத்தில் படுத்துக்கொண்டு, என் நெற்றியைத் தடவியபடி இருந்தார். `ஒங்க பெரியப்பா சண்டையிலே போனார், ஒரு பெண்ணையும் பறிகுடுத்தேன். ஆனா, நான் இன்னிக்கும் சிரிச்சுண்டுதான் இருக்கேன். அப்படித்தான் இருக்கணும். நம்ப துக்கத்தை உள்ளுக்குள்ளேயே வெச்சுக்கணும். நீயும் அப்படித்தான் இருக்கே!’ என்றபோது, ஒருவராவது என்னைப் புரிந்துகொண்டாரே என்று என் கண்ணீர் பெருகியது. துடைத்துக்கொள்ளத் தோன்றவில்லை. நாங்கள் இருவரும் வழக்கத்துக்கு விரோதமாக இரவு பூராவும் ஏதோ பேசினோமே என்று இன்றளவும் சிலர் ஆச்சரியப்படுகிறார்கள். (`அப்படி என்னடி பேசினேள் ரெண்டுபேரும்?’) என்ன பேசினோம் என்று நினைவில்லை. அது முக்கியமுமில்லை. பெற்ற குழந்தையைப் பறிகொடுத்த இரு தாய்மார்கள் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்த பொன்னான தருணம் அது.                                               19. பொறுத்துப்போக வேண்டுமா, ஏன்?   சீனாவில் ஒரு நாளைக்கு இருநூறு பேர், `எங்கள் தாம்பத்தியம் தொடர்ந்து நடக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்களேன்!’ என்று ஷி என்கிற கவுன்சிலரிடம் வந்தவண்ணம் இருக்கிறார்களாம். இவர்களில் எழுபது சதவிகிதம் படித்து, உத்தியோகம் பார்க்கும் பெண்கள். ஐந்து வருடங்களுக்குள் திருமணம் புரிந்தவர்கள். கணவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருக்கிறான் என்பதுடன், ஒருவரை ஒருவர் எப்படிப் பொறுத்துப்போவது என்பதில்தான் குழப்பம். புக்கக்கத்தினருடன் ஒத்துப்போக முடிவதில்லை என்பதும் ஒரு காரணமாம். (ஆதாரம்: THE STAR, 21-9-16). இப்போது தமிழ்ப்பெண்களுக்கு வருவோம். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குமுன் தாம் இலக்கியத்தில் படித்ததையும், வீட்டில் முதிய பெண்டிர் சொல்லி வந்ததையும் கடைப்பிடித்தவர்கள் நாம். அதுதான், `பெய்யெனப் பெய்யும் மழை,’ வீட்டில் நடப்பது நான்கு சுவர்களுக்குள் இருக்க வேண்டும், பத்தினி ஒருத்தி கல்லால் ஆன நெல்லிக்காயை வேகவைத்தது, -- இப்படி எவ்வளவோ மறைமுகமான அறிவுரைகளும் கதைகளும் இருக்கின்றனவே! சுருங்கச் சொன்னால், கணவன் கடவுளைப்போல் இல்லாவிட்டாலும், பொறுமையின் பூஷணமாகத் திகழ்ந்தார்கள். நிம்மதியும், மகிழ்ச்சியும் இருந்ததோ, என்னவோ, `நான் ஒரு நல்ல மனைவி!’ என்று பெருமிதம் கொண்டார்கள் பெண்கள். ஒரு முதிய மாது, `நான் பாட்டுக் கச்சேரிக்குப் போயிட்டு, லேட்டா வந்தேனா! `முண்டை’ என்று அவர் திட்டினார்டி!’ என்று பிற பெண்களிடம் பெருமையுடன் சொல்லிக்கொண்டதைக் கேட்டிருக்கிறேன். (`கணவரை இழந்தவள்’ என்ற பொருள்பட கணவரே திட்டிவிட்டால் சரியாகப் போயிற்றா?) `அது ஏன், பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில், முதலில் கணவனின் கை ஓங்கியிருக்கிறது, ஆனால் வயதானபின், சுதந்திரம் அற்றவன்போல் அவன் எல்லாவற்றிற்கும் மனைவியை நாடுகிறான்?’ நாற்பது வயதான ஒரு சீன மாது என்னிடம் கேட்ட கேள்வி இது. ‘என் பெற்றோரும் அப்படித்தான். ஆனால், இந்தத் தலைமுறையில்  நாங்கள் எல்லோரும் காதல் கல்யாணம்தான்! நானும் என் கணவரும் மிகுந்த நட்புடனும், மரியாதையுடனும் ஒருவரை ஒருவரை ஒருவர் நடத்துவோம்,’ என்று தெரிவித்தாள். அவள் சொன்னதுபோல், வயதான காலத்தில் கணவர் தன்னை நாடுவார் என்று பிறரைப் பார்த்துத்தான் நம்பிக்கையோடு பல பெண்கள் பொறுமைசாலிகளாக இருந்தனரோ? ஆனால் எல்லாப் பெண்களுமா  இப்படி இருக்கிறார்கள்! கணவன் செய்வது எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடித்து, ஏளனம் செய்து, நான்கு பேர் முன்னிலையில் கண்டபடி பேசும் பெண்களும் நம்மிடையே இல்லாமலில்லை. ஏன் இப்படி நடக்கிறார்கள் என்று பார்த்தால், சில காரணங்கள் தட்டுப்படுகின்றன. அவர்கள் பெருமையாகப் பேசிக்கொள்ளும்படி கணவன் எதுவும் சாதித்துவிடவில்லை; ஏதாவது கெட்ட பழக்கத்தில் ஈடுபட்டு, சேமிப்பைத் தொலைத்துவிடுகிறான்; அல்லது என்ன காரணத்தாலோ ஆண்வர்க்கத்தின்மீதே அவர்கள் கொண்ட வெறுப்பு, அவநம்பிக்கை, இன்னும் பல. சுகன்யாவின் தாய் இப்படித்தான். கதை தந்தையோ குடும்பத்தில் எதற்கு வீண் குழப்பமென்று மனைவி எவர் முன்னாலும், என்ன ஏசிப் பேசினாலும் வாயைத் திறக்காது இருந்துவிட்டார். அவரைக் கண்டு நொந்துபோய், `எனக்குக் கல்யாணம் ஆனால், நான் அம்மாவைப்போல் இல்லாது, அருமையான மனைவியாக இருப்பேன்,’ என்று தீர்மானம் செய்து கொண்டதுபோல் பரமசாதுவாக வளர்ந்தாள் சுகன்யா. வாய்த்தவன் எவ்வளவு கொடுமை செய்தாலும், தந்தையைப்போல்  பொறுத்துப்போனாள். இருபது, இருபத்தைந்து வருடங்கள் இப்படி துன்பத்தை அனுபவித்துவிட்டு, பிறகு சற்றுத் தெளிந்து,  `அவர் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். நான் என் வாழ்க்கையை என் விருப்பப்படி அமைத்துக்கொள்கிறேன்!’ என்பதுபோல், சுதந்திர உணர்ச்சியோடு வாழ்கிறாள். காலம் மாறிவிட்டது. படித்து, பொருளாதார சுதந்திரம் கொண்ட பெண்கள், `பெண் என்றால் விட்டுக்கொடுத்துக்கொண்டேதான் இருக்க வேண்டுமா?’என்று வாதம் செய்கிறார்கள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த மூன்று பேரை நான் இந்த விவகாரத்திற்கென பேட்டி கண்டேன். எல்லாருமே முப்பது வயதைத் தாண்டியவர்கள். `தன்னையே கிறக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் பெண்ணையே ஆண்கள் விரும்புகிறார்கள்!’ என்றாள் ஒருத்தி, கசப்புடன். `நான் என்னைவிட குறைந்த படிப்பும், சம்பளமும் உள்ள ஒருவனையே மணப்பேன். அப்போதுதான் என் கை ஓங்கியிருக்கும்!’ என்றார்கள், ஒருமித்து. `ஒருக்கால், தாழ்மை உணர்ச்சியால் பாதிக்கப்பட்டு, அவன் உங்களை முதலில் மட்டமாக நடத்த ஆரம்பித்துவிட்டால்?’ என்று எதிர் கேள்வி கேட்டேன். ‘முதலில் பழகிப்பார்த்துவிட்டுத்தானே மணப்போம்!’ என்று பதில் வந்தது. இவர்களில் ஒருத்தி குழந்தையே வேண்டாம் என்றிருக்கிறாள். இன்னொரு பெண்ணோ, குழந்தைகளைச் சரிவர கவனிக்காது, தன் முன்னேற்றம், தன் சம்பாத்தியம் என்று சுயநலத்துடன் வாழ்கிறாள். மூன்றாமவளின் திருமணம் ஒரு குழந்தைக்குப்பின் விவாகரத்தில் முடிந்தது. வேறொரு பெண் கல்யாணமான நாற்பத்தைந்தாவது நிமிடத்தில்(!), `நான் இவனுடன் வாழ முடியாது!’ என்று விவாகரத்து கோரினாளாம். காரணம்: திருமணம் முடிந்து எந்தக் காரில் வீடு செல்வது என்பதில் இருவரது கருத்தும் வேறுபட்டதாம்!   உலகில் எட்டு சதவிகிதத்தினர், `அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது? எங்கு தங்குவது?’ என்ற கலக்கம் இல்லாது வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை எளிதுதான். ஏனோ பலரும் தாமே அதைக் கடினமாக்கிக் கொள்கிறார்கள். எதுதான் நல்ல தாம்பத்தியம்? மகிழ்ச்சியாகப் பல வருடங்கள் சேர்ந்திருக்கும் தம்பதிகளைப் பார்த்தால் ஒன்று புரிகிறது. குடும்பங்களில் யாரும் யாரையும் பொறுத்துப் போகவேண்டியது போன்ற நிலைமை இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்தாமல், தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டு, நல்ல ஆலோசனையாக இருந்தால், `உன்னை யார் கேட்டது?’ என்று அலட்சியப்படுத்தாது ஏற்று, `பெண்ணின் வேலை’, `ஆணின் வேலை’ என்ற பாகுபாடு இன்றி எல்லாவற்றிலும் பங்கு போட்டுக்கொள்வது, ஒருவர் ஆத்திரப்படும்போது, மற்றவரும் சேர்ந்து கத்தாமல் விலகிப்போவது, கணினியைப்போல் என்றோ மனதில் பதிந்த வேண்டாத சம்பவங்களை நினைவுக்குக் கொண்டு வராமல் இருப்பது போன்ற தன்மைகள் தம்பதியரின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும். அவர்களுக்குள் சண்டையே வராது என்பதில்லை. ஆனால், அதிலிருந்து மீண்டுவரத் தெரிந்தவர்கள் இவர்கள். இருவரில் ஒருவராவது, `நான் இப்படிச் செய்தால், அடுத்தவரின் உணர்ச்சிகள் பாதிப்படையுமோ?’ என்று யோசித்து நடந்தால், தானே மற்றவரும் அதேபோல் நடக்கத் தலைப்படுவார். பிறரது உணர்ச்சிகளை மதிக்கத் தெரிந்தவரால்தான் சுயநலமின்றி தானும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்விக்க முடியும்.                                                               20. வெண்ணையும் சுண்ணாம்பும்   மூத்த மகன் அரசாங்கப் பள்ளிக்கு அனுப்பப்பட, இளையவன் தனியார் பள்ளிக்குப் போனான். ஏனெனில், மூத்தவன் கறுப்பு. தம் செல்வச் செழிப்பு, உயர் கல்வி இதிலெல்லாம் அடைந்த பெருமையைவிட, பெற்றோர் இருவருக்கும் தாம் கறுப்பாக இருக்கிறோமே என்பதுதான் பெரிய குறையாக இருந்தது. அதைப் போக்கவேபோல் இரண்டவதாகப் பிறந்த  `வெள்ளையனை’ (அவனுடைய செல்லப்பெயர்) தெய்வமாகவே மதித்து நடத்தினார்கள். வெள்ளையன் கேட்பதற்கு முன்னாலேயே அவனுக்கு எல்லாம் கிடைத்துவிடும். பெரியவன் `கருப்பையா’வுக்கோ தந்தையிடமிருந்து அடிதான் கிடைத்தது. `நான் எந்த தப்புமே பண்ணலியே! அப்பா ஏம்மா என்னை அடிக்கிறார்?’ என்று தாயிடம் முறையிட்டான் மகன். “அப்பாதானே! பரவாயில்லே. வாங்கிக்கோ,’ என்றாளாம் தாய்! (அவள் என்னிடம் கூறியது). மகனும் பொறுத்துப்போனான். எலும்பும் தோலுமாக அவன் ஆனபின்னர்தான் தாய் விழித்துக்கொண்டாள். மகனை இன்னமும் அடித்தால், தான் அவனை அழைத்துக்கொண்டு தனியாகச் சென்றுவிடுவதாக கணவனை எச்சரிக்க, அவர் தன் போக்கை மாற்றிக்கொண்டார். அடிக்குப் பதில் ஓயாத வசவு. “அவன் ரொம்ப ஒடுங்கி இருக்கிறான். ஏதாவது செய்யுங்களேன்!’ என்று எனக்குக் கோரிக்கை விடுத்தாள் தாய். நான் தனிமையில் அவனுடன் பேசினேன். “இந்த அப்பாக்களுக்கே ஒரு குழந்தை உயர்த்தி. இன்னொன்றைக் காரணமின்றி அடிப்பார்கள், இல்லை திட்டுவார்கள்,’ என்று பொதுவாக ஆரம்பித்து, “ஒங்கப்பாவும் இப்படித்தானா?” என்று கேட்டேன். “இல்லை!” கேள்வி முடியுமுன், மறுப்பு வந்தது. பதில் வந்த வேகத்திலிருந்தே அவன் சொல்வது உண்மையல்ல என்று தெரிந்துவிட்டது. நான் விடாப்பிடியாக, எனக்குத் தெரிந்த சிலரைப்பற்றிக் கூற, அவன் தன்னையுமறியாது, “எங்கப்பாவும் அப்படித்தான். எதுக்கு திட்டறாருன்னே புரியாது!” என்று ஒப்புக்கொண்டான். அப்போது அவன் கல்லூரி மாணவன். மகா புத்திசாலி. “உன் பாடத்தில் அப்பாவிடம் ஏதாவது சந்தேகம் கேளேன்!” என்றேன். தன்னை மகன் நாடுகிறானே என்று சிறிது பெருமை எழுந்தால், அவனுடன் நெருக்கமாக உணர்வாரோ என்று நினைத்தேன். “சந்தேகமே கிடையாதே!” என்றான், பட்டென்று. அவன் பெரியவனாக ஆனபிறகும்,  முகத்தில் சிரிப்பே கிடையாது. காதல் மனைவியும் அவனை மதிப்பதில்லை. குடும்பம்’ என்றாலே இப்படித்தான் இருக்கும்போலிருக்கிறது என்று நினைத்தவன்போல், வேலையிலேயே மூழ்கி, தன்னை மறக்கிறான். அதனால் உத்தியோகத்தில் பெரிய பதவி. வேலை முடிந்து திரும்பியவனிடம் ஒரு முறை, “இன்று உன் தினம் எப்படிப் போயிற்று?” என்று கேட்டேன். சுவாரசியமாக விவரித்தான். ஏதோ மீட்டிங். வழக்கம்போல், எல்லாரும் உணர்ச்சிவசப்பட, நாற்காலிகள் காற்றில் பறந்தன என்று அவன் கூற, இருவரும் சேர்ந்து சிரித்தோம். “நீயுமா?” பெருமையுடன், “ம்!” என்று ஆமோதித்தான். பல காலமாக அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தைப் பின் எப்படித்தான் வெளிப்படுத்துவது! அப்பா அவருடைய சிறு வயதில் நிறைய அடி வாங்கியிருக்கலாம். அப்போது தன் தந்தையை எதிர்க்க முடியாத நிலையில் இருந்ததால், அந்த ஆத்திரம் மகனிடம் திரும்பியிருக்கிறது. (வதைக்கும் பெற்றோர் தன்னைப்போல் இருக்கும் குழந்தையிடம்தான் வன்முறையைப் பிரயோகிப்பார்கள்). இது புரிந்து, `கருப்பையா’ மகனிடம் மிகக் கனிவுடன் நடந்துகொள்கிறான். அவனுடைய தாய் என்னிடம், “அது எப்படி மூன்று, நான்கு வயதுவரை கொஞ்சி வளர்த்த மூத்த பையன், இரண்டாவதாக ஒரு குழந்தை பிறந்ததும் வேண்டாதவனாக ஆகிவிடுகிறான் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது!” என்கிறாள். யாருக்குப் புரிகிறது இந்த மனிதர்களின் சுபாவம்!                                                 21. பயந்தவன்தான் பயமுறுத்துகிறான்   கேள்வி: என் பிள்ளை என்னை வேலைசெய்ய விடாமல் படுத்துகிறான். அவனை என்ன செய்து திருத்துவது? பதில் கேள்வி: உங்கள் பிள்ளைக்கு மூன்று வயதுதானே? எது ஒன்றும் ஒரு ஒழுங்கு முறையுடன் அடுக்கி வைத்திருப்பதைக் காணவே பொறுக்காது சிறு குழந்தைகளுக்கு. டப்பாவில் இருக்கும் பருப்பைக் கீழே கொட்டிவிட்டு, அல்லது அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் துணிமணிகளைக் கலைத்துப் போட்டுவிட்டு, பெருமையுடன் தாயின் கையைப் பிடித்துகொண்டு அழைத்துப்போய் காட்டுவார்கள்! அதிர்ச்சியடைந்த தாய், திட்டினாலும், மிரட்டினாலும், மறுநாளும் அதே தொடரும். ஆனால், தண்டனையால் பெற்ற பய உணர்வு மட்டும் நிலைத்திருக்கும். தம்மைச் சுற்றிலும் இருப்பவற்றை அறியும் நோக்கத்துடன்தான் குழந்தைகள் அவர்கள் வீட்டிலுள்ள சாமான்களிடம் தம் `கைத்திறமையை’க் காட்டுகிறார்கள் என்று நமக்குப் புரிந்தால், ஆத்திரமடைவதற்குப் பதில் சிரிப்போம். மூன்று வயதுக்குப்பின், ஒரு பொருளை வேண்டுமென்றே நாசமாக்கினால் (உடையும் என்று தெரிந்தே, கண்ணாடியாலான பூச்சாடியைக் கீழே போடுதல்), கண்டிப்பது சரி. ஆனால், `நீ எப்பவுமே இப்படித்தான்!’ என்று பழித்தலாகாது. நாம் அளிக்கும் எந்த தண்டனையும் குழந்தை செய்த காரியத்திற்கு ஏற்ப இருக்கவேண்டும். இல்லாவிட்டால், `ஏதாவது செய்தால்தானே அடி விழுகிறது! ஒன்றுமே செய்யாமல் இருந்துவிடலாமே!’ என்று தோன்றிப்போகிறது அவர்களுக்கு. நீங்கள் தெரியாத்தனமாக குழந்தையின் காலை மிதித்துவிட்டால், `ஏன் வழியிலே ஒக்காந்திருக்கே?’ என்று பழியைத் திருப்பாமல், `ஸாரி,’ என்று உங்கள் தவற்றை ஒத்துக்கொண்டு பாருங்கள். நல்லது, கெட்டது எதையும் தன்னையும் அறியாது கிரகித்துக்கொள்ளும் குழந்தை, தான் பாலைக் கொட்டிவிட்டால், `ஸாரி,’ என்று மன்னிப்பு கேட்கும், சுமார் மூன்று வயதில். `நான் சொல்வதை அப்படியே செய். இல்லையேல், அடி!’ குழந்தைகளின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்வதால் மட்டும் பெற்றோர் தம் விருப்பத்திற்கேற்றமாதிரி அவர்களை ஆட்டிப் படைக்கக் கூடாது. அடி, உதைக்குப் பயந்து குழந்தைகள் அப்போதைக்குப் பணிந்தாலும், இத்தகைய பெற்றோரிடம் அவர்களுக்கு மதிப்போ, பாசமோ ஏற்படாது. எப்போதும் பயமுறுத்தப்படும் சில குழந்தைகள் நாளடைவில் பயங்கொள்ளியாக ஆகிறார்கள். எதிலும் பயமும், ஆர்வமின்மையும் கொண்டால், வாழ்வில் முன்னேறுவது ஏது! வீட்டிலேயே அவர்களுடைய ஆர்வம், உணர்வுகள் எல்லாம் ஒடுக்கப்பட்டுவிடும்போது, கல்வி நிலையங்களிலும் இவர்களுக்கு எதிலும் ஆர்வம் உண்டாகாது. ஆசிரியர்களின் கோபத்துக்கு ஆளாகி, மேலும் தண்டனை அடைய நேரிடும்போது, பெரியவர்கள் அனைவர்மேலேயும் கசப்பும், அவமரியாதையும் ஏற்பட்டு விடுகிறது. தம்மையொத்த பிறர் செழிப்பாக வாழ்வதைக் காணும்போது, காலங்கடந்து இவர்களுக்கு பெற்றோர்மீது ஆத்திரம்தான் வருகிறது. `பயந்தவன்தான் பிறரை பயமுறுத்துவான்!’ என்பது மனோவியல் கூறு. ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் கதை படித்திருப்பீர்கள். ஐந்து வயதாக இருந்தபோது, ஏதோ விஷமம் செய்தான் என்று, அவன் தந்தை சிறைச்சாலை அதிகாரியாக இருந்த தனது நண்பரிடம் சொல்லி, ஓரிரவு முழுவதும் பாலகனை அதில் அடைத்துவைக்கச் செய்திருக்கிறார். தான் அப்போது அடைந்த பயத்தை ஆக்ககரமான வழியில், சைகோபோன்ற திரைப்படங்களை எடுத்து, பிறரையும் திகிலடையச் செய்தார் அந்த இயக்குனர். வேறு சில குழந்தைகள், தம் பயத்தை மறைத்துக்கொண்டு, பிறரை அதிகாரமாக நடத்துகிறவர்களாக வளர்கின்றனர். வன்முறையில் ஈடுபட்டிருப்பவர்களின் பால்யப் பருவத்தை ஆராய்ந்தோமாகில், சிலர் கருவிலிருக்கையிலேயே வன்முறையை அனுபவித்து இருப்பது தெரியவரும். குண்டுச் சத்தம், அவல ஓலம் போன்றவற்றை, போர்க்காலங்களில் பிறந்த சிசு தாயின் வயிற்றிலிருந்தே கேட்டிருக்கும். என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் அறிவும், தெளிவும் இல்லாத நிலையில், இடைவிடாத ஊசிப்பட்டாசு சத்தம் கேட்டாலோ, தொலைகாட்சியில் ஏதாவது பயங்கரமான நிகழ்ச்சியைப் பார்த்தாலோகூட பயந்து உருளும். இம்மாதிரியான சூழ்நிலையைத் தவிர்ப்பதுடன், `பயப்படாதே. இதுக்கும், நமக்கும் சம்பந்தமில்லை!’ என்று கருவிடம் எண்ண அலைகள் மூலம் தெரிவிக்க வேண்டும் என்கிறார்கள் இத்துறை ஆராய்ச்சியாளர்கள். `நீ தைரியசாலி!’ என்று ஒவ்வொரு நாளும் தட்டிக் கொடுக்கப்பட்டு வளருபவர்களுக்கு எப்போதாவது பயம் எழலாம். அது இயற்கை. ஆனால்,  புதிய செயல்களில் ஈடுபடும்போது முதலில் சறுக்கினாலும், துணிந்து அதில் முனைப்புக் காட்டுவார்கள். தோல்வியினால் இவர்களுக்குப் பயமோ, வெட்கமோ கிடையாது. செய்த பிழையிலிருந்து கற்று, வெற்றிக்கு மேல் வெற்றி பெறும் இவர்களைப் பார்த்து, பிறர்தான் அஞ்சுவார்கள்!                                       22. வீட்டில் போராட்டம், வெளியில் நற்பெயர்   `கணவன்மார்கள் மனைவிக்குப் போதிய சுதந்திரம் கொடுக்காததால்தான் பெண்கள் இல்லற வாழ்வில் சலிப்படைகிறார்கள், விவாகரத்து நடைபெறுவதும் இதனால்தான் என்கிறீர்களே! எல்லா சுதந்திரமும் கொடுத்தும், சில பெண்கள் கணவரை நல்லபடி நடத்துவதில்லையே?’ என்று கேட்டார் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார் நண்பர் சிவராமன். அவர் குரலில் ஏதோ ஏக்கம் தொனித்தது. அவர் மனைவியைப் பிரிந்து வாழ்கிறவர் என்பது மட்டும் எனக்குத் தெரியும். உடன் வந்திருந்தவர் அதீதமாகத் தலையைக் குனிந்துகொண்டதிலிருந்து, ஏதோ அந்தரங்கமான சமாசாரம் என்று நான் மேலே எதுவும் கேட்காமல் விட்டுவிட்டேன். `நான் என்னைப்பற்றி சிலரிடம் பேசிப்பார்த்தேன். `அப்படியா?’ன்னுட்டுப் போயிடுவாங்க. நீங்க அப்படியில்லே!’ என்றார் சிவராமன். அவர் முன்பொருமுறை வேறு குழப்பத்தை என்னுடன் பகிர்ந்துகொண்டபோது, நான் அதை அலசி, ஆறுதலாக ஏதோ கூறியது  `மண்டையில் பல காலமாக இருந்த பெரிய பாரத்தை கல்லால் நகர்த்தியது போலிருந்தது!’ என்று சொன்னார். நான் ஏதாவது பேசும்போது, சிவராமன் ஒரு மாணவனைப்போல் மரியாதையாகக் கைகளைக் கட்டிக்கொண்டு, என் கண்களையே உற்றுப் பார்ப்பார். என்னைவிட பத்துவயது இளையவர். ஆனால், பார்வை என்னவோ ஒரு குழந்தை தாயைப் பார்ப்பதுபோல் அன்பாக இருக்கும்.   விடை பெறும்போது அவரே, `உங்களிடம் இன்னொரு ஆலோசனை கேட்க வேண்டும். நாளை அழைக்கலாமா?’ என்று கெஞ்சுவதைப்போல் கேட்டார். `எப்போ?’ `காலை ஆறு மணிக்கு?’ `ஐயோ!’ `ஏழு?’ மறுநாள் வானொலி நேரம்போல சரியாக ஏழு மணிக்கு தொலைபேசி மணி அடித்தது. `ஹலோ!’ என்ற சிவராமன் அதற்குமேல் பேச முடியாது திணற, அவருடைய சிரமத்தை ஒருவாறாகப் புரிந்துகொண்டேன். `நான் ஒரு கதை எழுதிக்கொண்டிருக்கிறேன்,’ என்று உண்மையாக ஆரம்பித்தேன்: தட்டிக்கேட்க யாருமில்லாத நிலையில், தான் கண்ட பெண்களோடு சகவாசம் வைத்திருந்ததை புது மனைவியிடம் கூறுகிறான் ஒருவன். அதுவரைதான் எழுதியிருந்தேன். நான் மேலே எதுவும் சொல்வதற்குள், அவர் தொடர்ந்தார்: அதற்குப்பின் அவர்மேல் உள்ள நம்பிக்கை அவளுக்கு அறவே போய்விட்டது. தொழில் நிமித்தம் அவர் இரவில் நேரம் கழித்து வந்தாலும், `எவளோட இருந்துட்டு வந்திருக்கீங்க?’ என்று சுடுசொற்களை வீசுவாள், `நான் கல்யாணம் செய்துகொண்டேனே, அந்தப் பெண்!’ (அடுத்த ஒரு மணி நேரமும் இப்படித்தான் மனைவியைக் குறிப்பிட்டார்). அவளுக்குப் பிடித்த துறையில் முன்னேற இவருடைய உதவி தேவைப்பட்டது. இருவரும் திருமணத்துக்கு முன்பே காதல்வசப்பட்டு, சில ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தார்களாம். அவள் பெரிய பணக்காரி என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. படிப்பிலும், அந்தஸ்திலும் மிகப் பெரிய நிலையில் இருந்தவள் தன்னை விரும்புகிறாள் என்ற உணர்வு, `என்னைவிட பாக்கியசாலி இந்த உலகில் யாருமில்லை!’ என்று அவரை நினைத்துப் பூரிக்கவைத்தது. அதைத் திரும்பத் திரும்பச் சொன்னார். `’நமக்குள் எந்த ரகசியமும் இருக்கக்கூடாது,’ என்று சொல்லிக்கொண்டோம். அப்போது தெரியவில்லை, அது எங்கே கொண்டு விடும்னு! வாசலிலேயே நிக்க வெச்சு கன்னா பின்னான்னு கத்துவா!’ விட்டு விட்டுப் பேசினார், அந்த நிகழ்ச்சியை நினைவுகூர்வதே சகிக்க முடியாமல் இருந்ததுபோல். திருணமானபிறகு மனைவியில் குத்தல் பேச்சு ஆரம்பித்தது.   ‘நான் கல்யாணம் செய்துகொண்டேனே, அந்தப் பெண்ணை நான் கட்டுப்படுத்தியதே இல்லை. ஆனால், அவளுக்கு என்மேல் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது!’ பொறுக்க முடியாமல் போக, விவாகரத்திற்கு மனு செய்தார். அவளுக்கு ஒரே ஆத்திரம். பணமும், புகழுமாய் தானிருக்க, தன்னை ஒதுக்கிவைத்துவிட ஒருவர் துணிவதாவது! அவர்கள் மகனுக்கு அப்போது மூன்று வயது. மாதம் ஒரு முறை தந்தை மகனுடன் நேரத்தைக் கழிக்கலாம் என்று சட்டம் பெரியமனம் பண்ணிற்று.       ஆனால், சிவராமன் எண்ணியபடி, விவாகரத்து அவருக்கு நிம்மதியான வாழ்வைக் கொடுக்கவில்லை. மனைவியை அறவே உதறமுடியாது போயிற்று. அவர் மகனை அழைத்துக்கொண்டு கிளம்பும்போது, அவளும் வலுக்கட்டாயமாக தொற்றிக்கொள்வாளாம். `இப்போதும் பழையபடி குத்தல் பேச்சுதான்! எதுவும் மாறவில்லை. நான் கல்யாணம் செய்துகொண்டேனே, அந்தப் பெண் சொல்கிற இடத்துக்குத்தான் போகவேண்டும். சாப்பிட நான் ஏதாவது வாங்கிக் கொடுத்தால், அதை அனுமதிப்பதில்லை. இப்போது பத்து வயதாகிறது என் மகனுக்கு. அவனுடன் நான் அதிகம் பேசக்கூட விடுவதில்லை!’ என்று அழுகைக்குரலில் என்னிடம் கூறியவருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. `நீங்கள் என்றாவது.. அவள் சொன்னதுபோல..,’ என்று இழுத்தேன். `வேறு பெண்ணைத் திரும்பிக்கூடப் பார்த்தது கிடையாது! என் உலகமே குடும்பம்தான் என்றிருந்தேன்’. `அவளுக்குக் காதலன் யாராவது இருக்கிறார்கள்?’ என்று விசாரித்தேன். `அப்படி இருந்து தொலைச்சாதான் தேவலியே!’ என்று பொருமினார். ` ஐம்பது, அறுபதுன்னு என் வயசு கூடிட்டே போய், இப்படியே என் காலம் முடிஞ்சுடப்போகுது! இதை நினைக்கிறப்போவே பயமா இருக்கு!’ `எப்படிச் சமாளிக்கிறீர்கள்? குடியா?’ என்று விசாரித்தேன், சர்வசாதாரணமாக. அதில் கேலியில்லை என்று அவரும் உணர்ந்திருக்க வேண்டும். `அதேதான்!’ என்று ஒத்துக்கொண்டார். அவளுக்கு இவரை எப்பவுமே நிம்மதியாக விட விருப்பமில்லையோ? தானிருந்த இடத்தில் இன்னொரு பெண்ணைக் கொண்டுவந்துவிடப் போகிறாரே என்ற கலக்கமோ? உலகம் அவள் பக்கம்தான் சாய்ந்திருந்தது. சிவராமனுடன் வேலைபார்த்த என் சிநேகிதி ஒருத்தி தானாகவே கூறியிருந்தாள்: `இவனோட யார் குடித்தனம் நடத்த முடியும்! எப்பவும் குடி! பாவம், அவ!’ `நான் கல்யாணம் செய்துகொண்டேனே, அந்தப் பெண்!’ என்று அடிக்கடி அவர் குறிப்பிட்டவளுடைய விஷம் தோய்ந்த வார்த்தைகளைப் பொறுக்க முடியாததால்தால் அவர் குடிக்கிறார்; தன் வாழ்க்கையின் அவலத்தை தாற்காலிகமாவது மறக்க நினைக்கிறார் என்பது யாருக்கும் புரிவதில்லை. எப்போதோ படித்திருந்தது ஞாபகத்துக்கு வந்தது: `வாழ்க்கையில் தோல்வி அடைகிறோமே என்று ஒருவன் குடிக்கிறான். குடிப்பதால் இன்னும் அதிகமாகத் தோல்வி அடைகிறான்!’ `இன்னொரு கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்களேன்! எதுக்காக இப்படி உங்களையே வருத்திக்கணும்?’ `ஐயோ, வேண்டாம்பா!’ என்று நடுங்கினார். `மகன் முகத்தைப் பார்ப்பதற்காகவே மாதம் முழுவதும் காத்துக்கொண்டிருப்பதாகச் சொல்கிறீர்கள்! அடுத்த முறை, `நீ வரவேண்டாம்!’ என்று அவளிடம் கண்டித்துச் சொல்லிவிட்டு, மகனை மட்டும் வெளியே அழைத்துக்கொண்டு போங்கள். அவனுக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுங்கள்!’ என்றோர் உபாயத்தைக் கூறினேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. `மகனைத் தனியாக அழைத்துப் போய்விட்டு, மறுநாள் என்னைக் கூப்பிட்டுச் சொல்லுங்கள். காத்துக்கொண்டிருப்பேன்,’ என்று எங்கள் உரையாடலை முடித்தேன். அடுத்த வாரம் அவர் அழைக்கவில்லை. ஆர்வத்தைத் தாங்கமுடியாது நானே கூப்பிட்டு, `என்ன நடந்தது?’ என்று விசாரித்தேன். `வழக்கம்போலத்தான்!’ மிகுந்த நிராசை அவர் குரலில். `ஐயோ, ஏன்? நீ வராதேன்னு சொல்லலே?’   `என்னால் கடுமையாகப் பேச முடிவதில்லை! இப்போ எனக்கு ஒரே ஆசைதான்-- என் மகன் பெரியவன் ஆனதும், அவனிடம் நடந்த எல்லாவற்றையும் சொல்லணும்!’ ’ இதில் சம்பந்தப்பட்ட மூவருக்குமே மகிழ்ச்சியோ, நிம்மதியோ கிடையாது. அந்தப் பெண் செய்ததுபோல், வீட்டுக்கு வெளியே நற்பெயர் சம்பாதித்து, வீட்டுக்குள் சந்தேகமும் சண்டையுமாக இருந்தால் மகிழ்ச்சி கிடைக்குமா? `வேண்டாம்’ என்று விட்டுப்போன வாழ்க்கைத்துணையை விடாப்பிடியாகப் பிடித்து வைத்துக்கொள்ளாமல் இருப்பதுதான் விவேகம். Learn to let go.                             23. போட்டி பொறாமை ஏன்?   `வகுப்பில் முதலாவதாக வரவேண்டும்! உன்னை யாரும் முந்த விடாதே!’ பள்ளிக்கூட நாட்களில் அனேக குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர் அளிக்கும் அறிவுரை. அதற்கு முன்னரே, குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், `உன் தம்பி பார், எவ்வளவு சமர்த்தாக இருக்கிறான்! நீயும் இருக்கிறாயே, அசடு!’ என்றெல்லாம் பேசி, அந்த அறியாப் பருவத்திலேயே போட்டி மனப்பான்மையை விதைத்து விடுகிறார்கள். `நானும் ஏன் தம்பிமாதிரி இல்லை?’ என்ற ஏக்கமானது தான் ஏதோ விதத்தில் மட்டமானவன் என்ற எண்ணத்தை நிலைக்கச் செய்துவிடுகிறது. தன்னைவிட அம்மாவின் மதிப்பில் உயர்ந்திருக்கும் தம்பிமேல் பொறாமை வருகிறது. அவனுடன் போட்டி போட்டு எப்படியாவது அவனை வீழ்த்த நினக்கிறான். தெரியாத்தனமாக விதைக்கப்பட்ட இக்குணம் ஒருவனுடன் சேர்ந்து வளர்கிறது. கதை: தம்பி வேண்டாம் இடைநிலைப்பள்ளியில் என்னுடன் படித்த ஒரு பெண் தன்னை யாரும் எந்த விதத்திலும் மிஞ்சிவிடக்கூடாது,  எல்லாப் பரீட்சைகளிலும் தான்தான் வகுப்பில் முதலாக வரவேண்டும் என்ற துடிப்பு மிக்கவளாக இருந்தாள். தப்பித் தவறி நான் முதலாவதாக வந்துவிட்டால், ஒரு மாதம் என்னுடன் பேசமாட்டாள்! சிறு வயதிலேயே அப்பெண்ணை பாட்டி வீட்டில் விட்டுவிட்டு, அவளுடைய தம்பியைத் தம்முடன் வைத்துக்கொண்டார்கள் பெற்றோர். தந்தைக்கு அடிக்கடி வேலை மாற்றம், அதனால்தான் இந்த ஏற்பாடு என்பதை அவளுக்குப் புரியவைக்கவில்லை. பெற்றோருக்கு உகந்த பிள்ளையாய் பிறந்துவிட்ட தம்பிமேல் பொறாமை கிளர்ந்தது. இக்குணம் வெறியாகவே மாறி, அவள் அமைதியாகவோ, மகிழ்ச்சியாகவோ இருக்க முடியாதபடி செய்துவிட்டது. `தோல்வி’ என்றாலே பயம் என்ற நிலையில், படிப்பில், குடும்ப வாழ்க்கையில், உத்தியோகத்தில், பிறரை வென்றால்தான் மகிழ்ச்சி என்று பழகிக்கொண்டுவிட்டாள். `நான் எல்லோரையும்விடச் சிறப்பாக இருக்கிறேன், பார்த்தீர்களா?’ என்ற  தற்பெருமை கூடியது. அவள் பெரிய படிப்புப் படித்து, பெரிய உத்தியோகத்திலும் அமர்ந்தாள். அதன்பின்னரும்,  கணவருடன் ஒத்துப்போகாமல், பிரிந்து வாழ, `இவளுக்கு யாருடனும் ஒத்துப்போக முடியவில்லை. ஏன்தான் இப்படி எல்லாருடனும் சண்டை போடுகிறாளோ!’ என்று  அவளுடைய தாய் வருத்தத்துடன் என் தாயிடம் தெரிவித்தாள்.   பிறருடைய ஒத்துழைப்பு ஒருவர் முன்னுக்கு வருவதற்கு அவசியம் தேவை. இது புரியாது, அல்லது ஒப்பாது, போட்டி மனப்பான்மைக்கு முக்கியத்துவம் அளிப்பவர்களுக்குத் தனிமைதான் நிலையானது. பிறரிடம் அனுசரணையாக நடந்துகொள்ள வேண்டுமென்றால் அவர்கள் எக்காலத்திலும் தம்மை மிஞ்ச மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும் இவர்களுக்கு. மற்ற எல்லோரிடமும் காட்டம்தான். எவ்வளவு பட்டங்கள் வாங்கினால்தான் என்ன! உண்மையான கல்வி என்பது போட்டி மனப்பான்மை நீங்கியபின்தான் என்கிறார் ஒரு தத்துவஞானி. ஒருவர் நல்லவிதமாக வளர்வதற்கு முதலில் பெற்றோரின் அன்பும் வழிகாட்டலும் தேவை. பிறகு, ஆசிரியர்களின் கனிவு. `எனக்குத் தெரிந்ததை எல்லாம் உனக்குச் சொல்லித்தர மாட்டேன்!’ என்றிருக்கும் ஆசிரியர்கள் மாணவர்களுடன் போட்டிபோடும் அற்பங்கள் என்பேன். சிலரது போட்டி மனப்பான்மை தம்மைவிடச் சிறப்பாக இருக்கும் பிறர்மேல் பொறாமையாக வெளிப்படும். கதை: மகனால் தாய்க்கு வந்த சோதனை ஆசிரியர்களின் பொது அறையில் ஓய்வாக இருக்கும்போது நாங்கள் எங்கள் குடும்ப விவகாரங்களை அலசிக்கொண்டிருப்போம். என்னுடைய சக ஆசிரியை மிஸஸ் ஃபூ நான் சாதாரணமாக ஏதாவது என் குழந்தைகளைப்பற்றிப் பேசினால்கூட பொறாமையுடன் வெறித்தது எனக்குக் குழப்பத்தை விளைவித்தது. நாலைந்து வருடங்களுக்குப்பின், தானே என்னிடம் அவளுடைய மகனுக்கு ஆடிசம் என்ற நோய் என்று தெரிவித்தாள். `முன்பெல்லாம் எங்கள் வீட்டுக்கு யாராவது வந்தால், அவர்களைப்போல் அப்படியே நடித்துக் காட்டுவான்,’ என்று சற்று பெருமையுடன் கூற ஆரம்பித்தவள், `இப்போது அதுவும் மறந்துவிட்டது!’ என்றாள் சோகமாக. பிறருடைய கண்களைப் பார்த்துப் பேசாது, தானே ஏதேதோ பேசிக்கொண்டு, `நெருப்பு சுடும்’ என்று பலமுறை கூறினாலும் புரிந்துகொள்ள முடியாத தன் மகனைப்பற்றி தானும்  எதுவும் பேசமுடியவில்லையே என்ற வருத்தம் அவளுக்கு என்று புரிந்துகொண்டேன். `எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆயிற்று?’ என்று கேட்டாள் என்னை. `எல்லாருடைய வாழ்க்கையிலும் ஏதோ இருக்கத்தான் செய்கிறது. உன் மகன் அவனைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறான்? நாம் எந்த ஜன்மத்திலோ செய்த பாபச் சுமையை இப்படி ஒரு பிறவி எடுத்துக் கழிக்கிறோம்,’ என்றுவிட்டு, நம் புத்திசாலித்தனத்தை வெளிக்காட்டிக் கொள்கிறோமோ என்று வெட்கி, `இது நான் எங்கோ படித்தது,’ என்று சப்பைக்கட்டு கட்டினேன். `ஓ! இது எனக்கான தண்டனை! அப்படித்தானே?’ என்றாள், சற்றுத் தெளிவுடன். அதன்பின் என்னுடன் போட்டி கிடையாது. உற்ற தோழிகளானோம். கதை: பேச்சில் போட்டி கடந்த ஆண்டு கோலாலம்பூரிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நான் உரையாற்றியபோது,  என் எழுத்துலக அனுபவங்களை நகைச்சுவையுடன் பகிர்ந்துகொண்டிருந்தேன். அதுதான் தலைப்பு: என் எழுத்துலக அனுபவங்கள்.   முடிந்ததும், `எவ்வளவு உற்சாகமாகப்  பேசினாங்க! இன்னொரு கைதட்டல் குடுங்க,’ என்று அவையிலிருந்த ஒரு பெண்மணி கூற,  அனைவரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். சற்றுப்பொறுத்து நான் சிலருடன் உணவருந்திக் கொண்டிருந்தபோது, உரையாற்றிய இன்னொரு பெண்மணி என்னைத் தேடி வந்தாள். “என்ன, நிர்மலா! சும்மா சிரிச்சுச் சிரிச்சுப் பேசிட்டீங்களே! FACTS இல்லே!” என்றாள். இவள் பல வருடங்களாக எதற்காகவாவது என்னைத் தாக்கி வருபவள். அழகிலோ, அறிவிலோ, தைரியத்திலோ, அல்லது செல்வத்திலோ, பொதுவாக ஏதாவது ஒரு விதத்தில் பிறரைவிடக் குறைந்திருக்கிறோமே என்றெண்ணி மறுகுபவர்கள் அந்த விஷயத்தில் தம்மைவிட உயர்ந்திருக்கிறார்கள் என்று நினைப்பவர்கள்மேல் பொறாமை கொள்கிறார்கள். அவர்களுடன் போட்டி போடும் அளவுக்குத் திறமையோ,  தைரியமோ இல்லாவிட்டாலும், அவர்களைச் சற்றேனும் கீழே இறக்க முயற்சிக்கிறார்கள். இது புரிந்திருந்ததால், “உங்களிடம், `எத்தனை தன்னம்பிக்கை உங்களுக்கு!’ என்று யாராவது பாராட்டினார்களா? ஆட்டோகிராஃப் கேட்டார்களா? `எங்களுடன் போட்டோ எடுத்துக்கறீங்களா?’ என்று வந்து, வந்து கேட்டார்களா? இதெல்லாம் எனக்கு நடந்தது!” என்றேன், அமைதியான குரலில். அத்தாக்குதலைச் சற்றும் எதிர்பாராது, `நேரமாயிடுச்சு!’ என்று ஓடியேவிட்டாள்! என் திறமையில் நானே சந்தேகம் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் பேசியது புரிந்ததால்தான் பதிலடி கொடுத்தேன். இது திமிரில்லை. தற்காப்பு. தன்னம்பிக்கை என்பது.. ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ திறமை ஒளிந்திருக்கிறது. அதைப் புரிந்துகொண்டு, அதையே பலமாக்கிக்கொண்டால் பிறருடன் போட்டி போடத் தோன்றாது. பிறர் தன்னைப்பற்றிக் குற்றமாகப் பேசுவதையும் அலட்சியம் செய்ய முடியும். இத்தன்மை ஒருவரது உடல் மொழியிலேயே தெரியும். முதுகெலும்பும் தலையும் நிமிர்ந்திருக்கும். `அவனுக்கு முதுகெலும்பே கிடையாது!’ என்று கோழைகளை வர்ணிப்பது இதனால்தான். பலவீனமே பலமாய் தன்னம்பிக்கை என்பது கர்வப்படுவதிலோ, பெருமை பேசுதலிலோ இல்லை. தன் பலத்தைப் புரிந்து, பலவீனத்தையும் தனக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்ளுதல். உதாரணம்: மாணவர்கள் அடங்காது, வகுப்பில் இரைச்சல் போட்டால் ஆசிரியை தானும் அவர்களுக்கு ஏற்றாற்போல் இரைந்து பாடம் நடத்தாது, குரலை இன்னும் அடக்கிக்கொள்கிறாள். `கேட்கவில்லை!’ என்று அலறுபவர்களிடம், `உங்களுக்குப் பாடம் கற்க வேண்டுமென்றால் கவனியுங்கள்!’ என்று கூறினால் பலனிருக்கும். அடிவாங்கியவர்கள்போல் மௌனமாகிவிடுவார்கள். இது என் அனுபவத்தில் கண்ட உண்மை.                                                 24. முதியோரும் சந்ததியினரும்   `என் பெற்றோர் முதியோர் இல்லத்தில் இருக்கிறார்கள்!’ என்பவர்களைக் கொடுமைக்காரர்களாகச் சித்தரிக்கின்றன கதைகள். அவர்கள் இப்படிச் சொல்வது, `நானும் என் குடும்பத்தினரும் சுதந்திரமாக, அவர்கள் தொணதொணப்பில்லாமல் நிம்மதியாக இருக்கிறோம்!’ என்று பிறர் அர்த்தம் புரிந்துகொள்ள வழிவகுக்கிறது. மாறும் காலம் நூற்றிருபது ஆண்டுகளுக்குமுன் மனிதனின் சராசரி வயதே நாற்பதுதானாமே! அப்போது இந்த பிரச்னைகள் இருந்திருக்காது. இக்காலத்திலோ, வயதானவர்களுக்குப் பொருளாதார சுதந்திரம் இருந்தாலும், இளமையிலிருந்த உடல் வலு, ஆரோக்கியம், ஞாபகசக்தி போன்றவை கணிசமாகக் குறைந்துவிடுகின்றன. அப்போது அவர்களுக்குப் பெருமையளித்தவைகளை இழந்துவிட, அதிர்ச்சியடைகிறார்கள். பிறர் தங்களைக் குறைவாக எடைபோட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் தம் அதிகாரத்தை அதிகரித்துக்கொள்கிறார்கள். காலம் மாறிக்கொண்டிருக்கிறது, நம்மால் மாற முடிகிறதோ, இல்லையோ, நம் சந்ததியினர் அதற்கேற்ப நடந்துகொண்டால்தான் அவர்கள் வயதையொத்த பிறருடன் இணைய முடியும் என்பதை முதியோர் புரிந்துகொண்டால் பிரச்னையே எழாது. எது முக்கியம்? இன்றைய இளைய தலைமுறைக்கு உறவுகளைவிட நண்பர்கள் முக்கியமாகிவிட்டது. உள்ளூரில் மட்டுமின்றி, வெளிநாட்டிலிருக்கும், முகம் அறியாதவர்களுடனும் CHAT செய்வதில் (அரட்டை அடிப்பதில்) ஓர் ஆனந்தம். `இதே ஊரிலிலிருக்கும் பெரியம்மா வீட்டுக்கு வருஷத்துக்கு ஒரு முறைகூடப் போகாமல், அப்படி என்னதான் கம்யூட்டரோ, ராத்திரி பகலா!’ என்று ஒரு பாட்டி அலுத்துக்கொள்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். உறவினர் தாம் செய்வது எல்லாவற்றிலும் குறை காண்கிறார்கள். நண்பர்கள் என்றால், தாம் எது செய்தாலும் ஆதரித்து, பாராட்டுபவர்கள் என்று தோன்றிப்போகும் இளவயதினருக்கு. நண்பர்களும் இந்த மனப்பான்மைக்குத் தூபம் போடுவார்கள். (`எங்க வீட்டிலேயும் இப்படித்தான்! இந்த வயசானவங்களுக்கே MANNERS கிடையாது. MISBEHAVE பண்ணுவாங்க!’). `நல்லது’ என்று எண்ணி ஏதாவது சொல்வது ஒருவருக்குக் கெட்ட பெயர்தான் வாங்கிக்கொடுக்கும். குடும்பத்தில் பிறர் செய்வதில் குறுக்கிடாமல் இருக்கும்வரைதான்  எவருக்கும் மரியாதை நிலைக்கும். என் அனுபவம் `எங்கள் காலத்தில், அந்தந்த வாரப் பாடத்தை சனி ஞாயிறுகளில் படிப்போம்,’ என்று ஒரு முறை நான் என் வகுப்பில் சொல்லப்போக, ஒரு மாணவி, `உங்கள் காலத்தில் டி.வி கிடையாது. இப்போது அப்படியா?’ என்று எதிர்க்கேள்வி கேட்டாள். படிப்பதைவிட, படித்து முன்னுக்கு வருவதைவிட, பொழுதுபோக்கு முக்கியம் என்று ஆகிவிட்டது. அறிவுரையை `தொணதொணப்பு’ என்று எண்ணி எதிர்த்துப் பேசுபவர்களை, `எப்படியோ தொலையுங்கள்!’ என்று விட வேண்டியதுதான். கூட்டுக்குடும்பமா? ஒருவர் வாழ்வில் இன்னொருவர் குறுக்கிடுவது கசப்பை விளைவிக்கும். அவரவர் வயதுக்கும் அனுபவத்திற்கும் ஏற்றபடி நடக்கும் சுதந்திரம் இருந்தால்தான், குடும்பத்தில் அமைதி நிலவும். கதை   போன தலைமுறையைச் சேர்ந்த ஒரு பெண்மணி பெரிய நகரங்களில் வாழ்ந்து, மெத்தப் படித்தவள். கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டாள். மாமியார் வீட்டுக்குப் போகும்போதெல்லாம் அவர்களது கெடுபிடியால் அதிர்ந்துபோனாள். இருப்பினும், `பெரியவர்கள் பேச்சைக் கேட்டு நடந்துகொள். அப்போதுதான் பிறந்த வீட்டுக்குப் பெருமை!’ என்ற தாய் சொல்லைத் தட்டாது வாழ்ந்தாள். அவளே மாமியாராக ஆனபின், அதே மரியாதையை தன் மகன்களின் மனைவிகளிடமிருந்து எதிர்பார்த்தாள். அவர்கள் மறைமுகமாகவோ, நேரிடையாகவோ அவளை எதிர்க்க ஆரம்பித்தார்கள். அவர்கள் தனிக்குடித்தனம் போனபின்னரும், `அறிவுரை கூறாமல் எப்படி!’ என்று விடாப்பிடியாக அவர்கள் செய்வதில் குறுக்கிட ஆரம்பித்தாள். அவர்கள் மாறுவதாக இல்லை. அவளுக்குத்தான் கெட்ட பெயர், ஓயாது அதிகாரம் செய்கிறவள் என்று. தன் இளமைக் காலத்தில் பொறுக்க முடியாததை எல்லாம் பொறுத்துப்போனோமே, இப்போது ஏன் இளவயதினர் அப்படி இல்லை என்ற குழப்பம்தான் மிச்சம். வயதேற ஏற சிறு வயதில் பாட்டி தாத்தாவின்மேல் பேரக்குழந்தைகள் பாசம் வைத்திருக்கலாம். ஆனாலும், பதின்ம வயதில் அவர்களுடைய `நச்சரிப்பை’ ஏற்க முடியாது, எதிர்க்க ஆரம்பிக்கிறார்கள். இதைத் தவிர்க்க, பேரன் பேத்திகளின் அன்றாட நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டலாம் -- அளவோடு. முதியவர்கள் தமது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைச் சுவாரசியமாக, கதைபோல் சொல்வது நல்லது. உதாரணம்: என் மூத்த மாமாவின் மனைவிக்குக் கல்யாணத்தின்போது ஐந்து வயது! இது நடந்து நூறு வருடங்கள் ஆனபோதும், இன்று கேட்பதற்கு வியப்பாக இருக்கிறதல்லவா? (இதற்குத்தான் அந்தக் காலத்தில் உணவருந்தும்போதும், உறங்க வைக்கும்போதும் கதை சொல்லும் வழக்கம் வைத்திருந்தார்களோ?). கதை கேட்ட சுவாரசியத்தில், தம்மையுமறியாமல், தம்மைப் பாதித்தவற்றைப் பகிர்ந்துகொள்வார்கள் சிறுவர்கள். மௌனமாகக் கேட்டுக்கொண்டால், அவர்களது மனநிலையைப் புரிந்துகொள்ள முடியும். எப்போதாவது அறிவுரையை நாடும் அளவுக்கு நட்புணர்வு மிகும். நமக்கென ஒரு பொழுதுபோக்கு படிப்பது, இசையை ரசித்துக் கேட்பது, நண்பர்களுடன் உரையாடுவது, கணினி, தொலைகாட்சி -- இப்படி எதையாவது தேர்ந்தெடுத்துக்கொண்டால், தினமும் நம் பொழுது இனிமையாகக் கழியும். பிறரது போக்கில் குற்றம் கண்டுபிடிக்க அவகாசமோ, அவசியமோ இராது. ஆனால், மற்றவர் மெச்ச வேண்டும் என்ற எதிர்பார்ப்பைத் தவிர்ப்பது நல்லது. நமக்குப் பிடித்ததைச் செய்தால்தானே நிறைவு கிட்டும்?                25. பெண்ணியம் என்பது   `பெண்ணியம் என்றால் என்ன?’ என்று தமிழ்நாட்டிலுள்ள ஒரு கல்லூரி மாணவன் கேட்டான். `அது என்ன இல்லை என்பதைச் சொல்கிறேன்,’ என்றுவிட்டு, `ஆண்கள் ப்ரா அணிகிறார்களா? நாங்கள் மட்டும் எதற்கு அணியவேண்டும் என்று உள்ளாடையைக் கொளுத்துவது பெண்ணியம் இல்லை!’ என்று நான் கூறியதும், அந்த `கெட்ட’ வார்த்தையைக் கேட்டோ, என்னவோ, அரங்கத்திலிருந்த எல்லா இளவயதினரும் உரக்கச் சிரித்தார்கள். ஆண்களும் பெண்களும் சமூகத்தில், கல்வியில், பொருளாதாரத்தில் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் பெண்ணியம். பெண்ணியவாதியான ஒரு பெண், ஒரு குறிப்பிட்ட எல்லையை வகுத்துக்கொண்டு வாழ்பவள்,  ஆண்களை வெறுக்கிறாள் என்று அர்த்தமில்லை. தன்னை மதித்து நடக்கும் ஆண்களிடம் நட்பாகப் பழகுவாள். தானும் ஒரு பொருட்டுதான் என்று எண்ணி, பிறர் தன்னை நடத்தவேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். அவ்வளவுதான். `நாங்கள் பெண்ணியவாதிகள். ஆண்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்களில்லை!’ என்ற மமதையுடன் சிகரெட் புகைப்பதும், விஸ்கி குடிப்பதும், பலருடன் உடலுறவு வைத்துக்கொள்வதும்தான் சுதந்திரம் என்று முதலில் நினைப்பவர்கள்கூட  முப்பத்தைந்து வயதைத் தாண்டிவிட்டால், ஒரு வெறுமையை உணர்கிறார்கள். `ஆண்கள் இல்லாமலே நாங்கள் வாழ்ந்து காட்ட முடியும்!’ என்ற சவால் அர்த்தமற்றது. ஏதோ காரணத்திற்காகத்தானே இருபாலரும் இவ்வுலகில் பிறந்திருக்கிறார்கள்? நாற்பத்தைந்து வயதுக்குட்பட்ட பல பெண்கள், “சிறு வயதில், ஆசிரியை அடித்தார், `நன்றாகப் படி!’ என்று. குறைந்த மதிப்பெண்கள் வாங்கினால் அப்பா கோபித்தார். படிப்பு, போட்டிகள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றால் அம்மா மகிழ்ந்தாள். ஆனால், அவர்கள் சொற்படியெல்லாம் கேட்டு, மிக நன்றாகப் படித்து, ஆண்களுக்குச் சரிசமமாக  பெரிய உத்தியோகம் அமைந்தாலும், சுதந்திரமாக இருந்தால் பழிச்சொல் வருகிறதே!” என்று என்னிடம் அரற்றியிருக்கிறார்கள். சுதந்திரத்திற்கும் ஒரு எல்லை உண்டே! கதை: ஒரு பெண்ணியவாதியுடன் நெடுநேரம்   என்னுடன் பள்ளியில் படித்த கஸ்தூரி மேற்கூறியபடி -- மனம் போனபடியெல்லாம் -- நடந்தபோது, நெருங்கிய உறவினர்கள்கூட அவளைத் தம் வீட்டுக்கு வரக்கூடாது என்று தடை விதித்தார்கள். தந்தையோ, அவளுடன் பேசுவதையே விட்டார். அவருடைய உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. தாய் மட்டும் அன்பாக இருந்தாள். எனக்குத் திருமணமானபின் அவளைச் சந்தித்து நெடுநேரம் அவள் வாழ்க்கைமுறையைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். ஆரம்பப்பள்ளியிலிருந்தே இருவருக்கும் பழக்கம். அவள் சொல்வதையெல்லாம் புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, `என்றாவது உன் கதையை எழுதுவேன்!’ என்றதும், பலக்கச் சிரித்தாள். `உன்னிடம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று தோன்றுகிறது!’ என்றவளிடம், `உன் அம்மாவுக்கு உன் நடத்தையால் எவ்வளவு வருத்தமாக இருக்கும் என்பதை யோசித்தாயா?’ என்று கேட்டேன். `வாய்ப்பு இருந்திருந்தால், அம்மாவும் இப்படித்தான் நடந்திருப்பார்கள்!’ என்றாள் கஸ்தூரி, அலட்சியமாக. உயர்கல்வி மற்றும் உத்தியோக நிமித்தம் தனித்து வாழும் வாய்ப்பு கிடைத்தால் யார் குறுக்கீடும் இல்லாமல், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்றெண்ணும் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று கூறிவிட முடியாது. சமூகத்தின் எதிர்ப்பு அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. `எனக்கு ஒன்றுதான் புரியவில்லை. என்னுடன் நெருக்கமாகப் பழகியிருந்த ஆண்கள் கல்யாணமாகி, தம் மனைவியுடன் எங்காவது செல்லும்போது நான் எதிர்ப்பட்டால், தெரியாதமாதிரி நடப்பார்கள். அது ஏன்?’ என்று கேட்டாள் கஸ்தூரி. நான் ஒன்றும் பேசவில்லை. அவர்கள் ஆண். சற்று முன்னேபின்னே நடக்க அவர்களுக்குச் சமூக அங்கீகாரம் இருக்கிறது. ஆனால், `சுதந்திரம்’ என்ற மயக்கத்துடன் ஒரு பெண் தான்தோன்றித்தனமாக நடக்கத் துணிந்தால், அவளுக்குத்தான் அவப்பெயர். ஒரு பெண் எப்படி நடக்கவேண்டும் என்று யார் யார் தீர்மானிக்கிறார்கள்? பதில்: சமூகத்தை ஒட்டி நடக்கும் குடும்பத்துப் பெரியவர்கள், இலக்கியம் மற்றும் திரைப்படங்கள். பெரும்பாலான தமிழ்ப்படங்களில் அப்பா என்பவர் மகனைக் கரித்துக் கொண்டிருப்பார். அம்மா பின்னால் சோகமாக நின்று, அவனுக்குப் பரிவாள். ஏனெனில் அவன் ஆண்மகன். அவனைப் பெற்றெடுத்ததால் சமூகத்தில் அவளுடைய மதிப்பும் உயர்ந்துவிட்டது என எண்ணுகிறாள். அந்த மகனுக்குக் கல்யாண வயது வரும்போது, தனக்கு வாய்ப்பவளும் தன் தாய்போல் தன்னை எந்த நிலையிலும் ஆதரிப்பவளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுகிறது. அதற்கு அவனுக்கு அடங்கியவளாக இருக்கவேண்டும். பெண்களை மதியுங்கள் பொதுவாக, ஆண்கள் எப்படி நடக்கவேண்டும் என்று அவர்களுக்கு இன்னொரு விதமாகவும் கற்பிக்கப்படுகிறது. `பொம்பளைமாதிரி அழாதே!’ என்று ஒரு சிறுவனைக் கண்டிக்கும்போது, பெண்களைவிட தான் உயர்த்தி என்று அவன் எண்ண வழிகோலுகிறோம். அதனாலேயே தங்களைவிட அதிகமான தன்னம்பிக்கையோ, அறிவுத்திறனோ ஒரு பெண்ணுக்கு இருந்தால், `இனிமே நாங்கதான் புடவை கட்டிக்கணும்!’ என்று அயர்வார்கள் சில ஆண்கள். அது அவர்களை அச்சவைக்கும், குறுகவைக்கும், தன்மையா? கதை: தேவை --_கல்யாணம்  வினுதா கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்தவள். அவளுடைய படிப்பைவிட உயர்ந்த கல்வி கற்றிருந்த மணமகன் அமைவது கடினமாகப்போக, தனக்கும் திருமணம் என்று ஒன்று  நடக்குமா!’ என்ற ஏக்கம் பிறந்திருக்க வேண்டும். இறுதியில் ஒருவர் அமைந்தார் -- அவள் தன் உத்தியோகத்தை விட்டுவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன். பெண் என்றால் இல்லற வாழ்க்கை, குழந்தைகள், சமையல் என்று தன் தாயைப் பார்த்துக் கற்றிருந்தவளுக்கு அது ஒரு பெரிய விஷயமாகப் படவில்லை. மகிழ்ச்சியுடன் உடன்பட்டாள். `நான் சம்பாதிச்சு ஒண்ணும் ஆகப்போறதில்லே. அவரே கைநிறையச் சம்பாதிக்கிறார்!’ என்று பெருமை பேசிக்கொண்டாள். செக்கு மாடு திருமணமானபின்னரும் நான் வேலைக்குப் போகிறேன் என்று நான் சொல்லக் கேட்ட ஒரு முதியவள், `ஆக, ஒன் ஆத்துக்காரர் சம்பாதிச்சு ஒனக்கு சாப்பாடு போடலே?’ என்று கேட்டாள், கேலியாக. இவர்களைப் போன்றவர்களுக்கு, எந்த ஒரு தேவைக்கும் ஆணின் கையை எதிர்பார்ப்பது பெருமை;  அதனாலேயே உயர்கல்வி பெண்களுக்குக் கூடாத ஒன்று. ஏனெனில் சுயமாகச் சிந்திக்க ஆரம்பித்து, `உரிமை’ என்று ஏடாகூடமாக கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்புறம் சமூகத்தில் இதுவரை கடைப்பிடித்தது எல்லாவற்றிற்கும் அர்த்தம் இல்லாது போய்விடுமே! பெண்கள் வீட்டிலேயே இருந்த காலத்தில், தங்கள் எல்லாத் தேவைகளுக்கும் கணவனை எதிர்பார்த்திருந்ததால், முடிந்ததோ, இல்லையோ, எல்லா வேலைகளையும் தாமே செய்தார்கள். அவர்களிலும் சிந்திக்க அஞ்சாத ஓரிருவர், `இது என்ன வாழ்க்கை! எல்லா நாட்களும் ஒரேபோல!’ என்று அலுத்துக்கொள்வதைக் கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், `இப்படித்தான் நடக்க வேண்டும்,’ என்ற கட்டாயம் இருந்ததால், சுயவிருப்பம் என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் போயிற்று. தனித்துவம் என்ற வார்த்தைக்கே அவர்கள் அகராதியில் இடமில்லை. புதுமையாகச் சிந்தித்தால் பழி வருமோ என்ற அச்சம் வேறு. அப்படி நடந்துவந்த ஒரு பெண்மணி கூறினார், `நாங்க செக்கு மாடு மாதிரி ஒரே இடத்திலே சுத்திச் சுத்தி வரோம்!’ பெண்ணிய ஆண்கள்   `நாள்பூராவும் வேலை செய்துவிட்டு வந்து எனக்கு அசதியா இருக்கு,’ என்று மனைவி கூற, அன்றையிலிருந்து துவைக்கும் இயந்திரத்தில் துணிகளைப் போடுவதைத் தன் வழக்கமாக ஏற்றார் கணவர். குழந்தை வளர்ப்பிலும் மகிழ்ச்சி கொண்டார். `பெண்டாட்டி தாசன்!’ என்று பிறர் கேலி செய்தார்கள். அவர்கள் புரியாதவர்கள். எப்போதும் பெண்களைவிட உயர்ந்த நிலையிலேயே இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஆண்களின் நிம்மதியைத்தான் பறித்துவிடாதா? இருவரும் உயர்வோம் வாழ்க்கை என்னும் தராசில், ஆணோ, பெண்ணோ கீழேயே இருக்க நேர்ந்தால், அவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? இல்லை, `நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா?’ என்று ஆராயும் துணிவுதான் அவர்களிடம் இருக்க முடியுமா? `நான் சந்தோஷமாக இருக்கிறேன். இல்லை?’ என்று அடிக்கடி பிறரிடம் கேட்பார்கள் இவர்கள். `நீயும் மேலே வா!’ என்று ஒரு பெண்ணை, அவள் மனைவியோ, மகளோ, முன்னுக்கு வர வழிவகுக்கும்போது உடன் இருக்கும் ஆணும் உயர்கிறான். இதிலும் ஒரு சங்கடம் இருக்கத்தான் செய்கிறது. அவனிடமிருந்து மாறுபட்டிருக்கும் பிறர், `பெண்களுக்கு ரொம்ப இடம் கொடுத்தால், தலைக்குமேல் ஏறுவார்கள்!’ என்று பயமுறுத்துவார்கள். யோசித்தால், இதுவும் உண்மைதான் என்றே தோன்றுகிறது. அபூர்வமாகத் தனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகளால், பிற பெண்களிலிருந்து அவள் வித்தியாசப்பட்டிருப்பதால்,  அவளுடைய சுயமதிப்பு கூடிவிட, எல்லோர்மேலும் அதிகாரம் செலுத்த ஆரம்பிக்கிறாள். ஆனால், அவ்வப்போது அப்பெண்கள் செய்வது ஏதாவது ஏன் சரியில்லை என்று சொன்னால், சிந்தித்து, தம் தவற்றைத் திருத்திக்கொள்வார்கள்.