[] 1. Cover 2. Table of contents கம்யூனிஸ்ட் இயக்கமும் கலை இலக்கிய உலகமும் கம்யூனிஸ்ட் இயக்கமும் கலை இலக்கிய உலகமும்   தீக்கதிர்     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/communist_movement_and_the_world_of_art_and_literature மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation மகாகவியும், புரட்சிக் கவியும்… -எஸ்.ஏ.பெருமாள் பிப்ரவரி 10, 2020 […] இந்திய விடுதலைப் போரிலும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றிலும் கலை இலக்கியவாதிகளின் பங்கு மகத்தானது. காங்கிரஸ், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என அடுத்தடுத்த வளர்ச்சிக் கட்டத்தில் கம்யூனிச இயக்கத்தை வளர்த்தெடுப்பதில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என கலை இலக்கியத் துறையினர் ஆற்றிய பணிகள் என்றென்றும் நினைவுகூரத்தக்கவை. நாடு முழுவதும் எண்ணற்ற கலை இலக்கியவாதிகள் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். அவர்களில் முதன்மையானவர் மகாகவி பாரதி. ரஷ்யப் புரட்சி நடந்தவுடனே அதை போற்றிப் புகழ்ந்து உலகுக்கு அறிவித்த மகத்தான கவிஞர் அவர். பாரதியைப் பின்பற்றி தமிழ் மண்ணில் ஒரு பெரும்படையே புரட்சிக்கு கட்டியம் கூறி வந்தது. கம்யூனிச இயக்கத்தில் இணைந்து பாட்டாளி மக்களோடு நின்றது. தமிழ் மண்ணைப் போலவே நாடு முழுவதும் முற்போக்கு எழுத்தாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் பால் தங்களது கவனத்தைச் செலுத்தினர். கம்யூனிஸ்ட் கட்சியோடு இரண்டறக் கலந்தனர். முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இப்டா என முழுவீச்சில் கலை இலக்கிய உலகம் கம்யூனிசத்தைப் பரப்பிய காலமாக அது மலர்ந்தது. இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் ஒரு பொன்னோவியமாக கலை இலக்கிய வாதிகளின் பங்களிப்பு எனும் அத்தியாயம் திகழ்கிறது. அந்த மாபெரும் அத்தியாயத்தின் சில பகுதிகளை இங்கு தருகிறார், தமிழக கலை இலக்கிய உலகின் முன்னத்தி ஏர்களில் ஒருவரும் மார்க்சிய, இலக்கிய ஆளுமைகளில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான எஸ்.ஏ.பெருமாள். எட்டைய புரத்தில் பிறந்த சுப்பிரமணிய பாரதி ஒரு ஆன்மீகவாதியாய் வளர்ந்து தேச பக்தராய் மாறி விடுதலைப் போர் பாடல்களை வடித்தவர். சாதி, மதங்களுக்கெதிராகவும், பெண் விடுதலைக்காகவும், முதல் குரல் கொடுத்தவர். புரட்சி, பொதுவுடைமை போன்ற வார்த்தைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். ரஷ்யப் புரட்சியை பாராட்டி பாமாலை சூட்டியவர். ரஷ்யாவில் பிப்ரவரி புரட்சி தோல்வியடைந்ததும், பாரதி “நமது ருஷ்யத் தோழர்களின் உன்னதமான முயற்சிகளுக்கு ஈசன் திருவருள் புரிவானாகுக” என்று எழுதினார். பின்பு அக்டோபர் புரட்சி வெற்றியடைந்ததும், “மாகாளி பராசக்தி உருசியநாட் டினிற்கடைக்கண் வைத்தாள் அங்கே ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி கொடுங் கோலன் அலறி வீழ்ந்தான் இரணியன் போல் அரசாண்டான் கொடுங்கோலன் ஜாரெனும்பேர் இசைந்த பாவி அடிமைக்குத் தளையில்லை, யாருமிப்போது அடிமையில்லை, அறிக! என்றார் இடிபட்ட சுவர்போல கலிவிழுந்தான் கிருதயுகம் எழுக மாதோ!” ரஷ்யப் புரட்சியை வரவேற்றது மட்டுமல்ல, பொதுவுடைமையை வரவேற்றும், இந்தியாவிலும், அத்தகு நிலைமை வரவேண்டுமென்றும் விரும்பிய பாரதி…. “முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை ஒப்பில்லாத சமுதாயம் உலகத்துக் கோர்புதுமை” -என்று பாடினார். அவரது பாடல்களும், உரைநடையும் சுதந்திரப் போரில் பங்கேற்குமாறு மக்களை அறைகூவி அழைத்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கெதிராக போராடி நாம் ரத்த வெள்ளத்தில் மடிந்தாலும், பன்முறை தோற்கும் நிலை வந்தாலும், இறுதியில் வெற்றி பெற்றே தீருவோம் என்றார் பாரதி. சுதந்திரம் வருவதற்கு முன்பே….. “ஆடுவோமே- பள்ளுப் பாடுவோமே ஆனந்த ஸ்வதந்திரம் அடைந்துவிட்டோமென்று, பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே - பிச்சை ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை ஏய்ப்போருக்கு ஏவல்செய்யும் காலமும் போச்சே எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு” - என்று பாடினார். *********************************** மகாகவி பாரதியோடு பத்தாண்டு காலம் இணைந்து அவரிடமிருந்து ஞானம் பெற்றவர். அதனால் கனக சுப்புரத்தினம் என்ற தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார். 1891ல் புதுச்சேரியில் பிறந்த இவர், பாரதியைப் போலவே தேச பக்தி, மூட நம்பிக்கை எதிர்ப்பு, பகுத்தறிவு, சாதிமத எதிர்ப்பு, பெண் விடுதலை என்று 103 நூல்களை எழுதி குவித்தவர். இந்திய சுதந்திரத்தை நேசித்தவர். பாரதியைப் போலவே பாரதிதாசனும் பொதுவுடைமை கொள்கையை வலியுறுத்தினார். “புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் (புதிய) பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம் புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம்” - என்று பாடினார். தொழிலாளிகள், விவசாயிகள் பற்றியும், ஏழை, எளிய மக்களைப் பற்றியும் கவிஞர் மிகவும் கவலையோடு பாடியுள்ளார். அவர்களைப் பார்த்து இந்த உலகம் உங்களுடையது என்று கூறினார். “சித்திரச் சோலைகளே! உமை நன்கு திருத்த இப்பாரினிலே - முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தன ரோ! உங்கள் வேரினிலே!” முன்பு நஞ்சை, புஞ்சையெல்லாம் பொதுவில் இருந்தது. ஆனால் அதை மன்னர்கள் கைப்பற்றி பிராமணர்களுக்கும், வேளாளர்களுக்கும் வழங்கினர். இதனால் விவசாயிகள் கூலிகளாகினர். அவர்களைச் சுரண்டி நிலப் பிரபுக்கள் கொழுத்தனர். அம்மக்களுக்கு பகுத்தறிவு ஊட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றவும், ஏழை, பணக்காரர் இல்லாத உலகத்தை உருவாக்கவும் விரும்பினார். “ஆடுகின்றாய் உலகப்பா! யோசித்துப் பார்! ஆர்ப்பாட்டக் காரர் இதை ஒப்பாரப்பா! தேடப்பா ஒருவழியை என்று சொன்னேன் செகத்தப்பன் யோசித்துச் சித்தம் சோர்ந்தான் ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர் உதையப்ப ராகிவிட்டால், ஓர்நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பாநீ!” - என்று வலியுறுத்தினார். அடங்கி ஒடுங்கி குனிந்து தரையை கவ்விக் கிடக்காதே. பொட்டுப்பூச்சியாய், புன்மைத் தேரையாய் ஆமையைப் போல அடங்கி ஒடுங்கி கிடக்காதே. தோளை உயர்த்து, சுடர்முகம் தூக்கு, மீசையை முறுக்கி மேலே ஏற்று என்று ஏழைகளுக்கு அறிவுறுத்தினார். பாரதி தாசனை புரட்சிக்கவியாக மாற்றியது பாரதியின் தொடர்பு, புதுச்சேரி வாழ்வு, பெரியார் ஈவேராவின் சுயமரியாதை இயக்கம் இம்மூன்றுமே ஆகும். பாரதி சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்ப்பட்டவர். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மூன்றும் பிரெஞ்சு புரட்சி உலகிற்கு வழங்கிய உயர்ந்த கோட்பாடுகள். இவற்றாலும் பெரியாரின் தலையாயக் கொள்கையாம் மூடத்தன எதிர்ப்பு - இந்தத் தாக்கங்களால்தான் புரட்சிக்கவிஞராக மாறினார். “இருட்டறையில் உள்ளதடா உலகம், சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின் றானே!” - என்றும் பகுத்தறிவு சிந்தனைகளை குழந்தைகளுக்கு கூட தாலாட்டு மூலம் எடுத்துக்கூறினார். “சாணிக்கு பொட்டிட்டு சாமி என்று கும்பிடுவார் - நாணி கண்ணுறங்கு நகைத்து நீ கண்ணுறங்கு” என்று பாடுகிறார். கணவன் இறந்துபோனால் பெண்ணை கைம்பெண் எனக்கூறி வதைப்பது இங்கு வழக்கமானது. இந்த கைம்பெண்களை மறுமணம் செய்ய ஏற்பாடு செய்து வாழ்வளிக்க வேண்டும் என்றார். நம்வீட்டு பெண்களுடைய இதயத்தையே வாள் கொண்டு சமூகம் சிதைக்கிறது. “கைம்மை எனக்கூறி - அப்பெரும் கையினிற் கூர்வேலால் நம்மினப் பெண்குலத்தின் - இதய நடுவிற் பாய்ச்சுகின்றோம் செம்மை நிலையறியோம் - பெண்களின் சிந்தயை வாட்டுகின்றோம் இம்மை இன்பம் வேண்டல் - உயிரின் இயற்கை என்றறியோம்.” - என்று பெண் விடுதலை, பெண் உரிமைகளுக்காக ஏராளமாக எழுதியுள்ளார். ஏராளமான கவிதைகளையும் எழுதியோடு, சில திரைப்படங்களுக்கும் கதை, வசனம், பாடல்கள் எழுதியுள்ளார். பெரியாரோடும், பகுத்தறிவோடும் இரண்டற கலந்து நின்றார். திராவிட இயக்கத்தில் சிலர் அவரிடம் பாரதி பிறப்பால் பிராமணர்; ஆனால் நீங்கள் சனாதனத்தை எதிர்க்கும் இயக்கத்தில் புரட்சிக் கவிஞர் ‘பிராமணனுக்கு தாசன் என்ற பொருளில் பாரதி தாசன் என்ற பெயர் வைத்தது தவறு என்று சிலர் குறைகூறினர். இதைக் கேட்டு பாரதிதாசன் வெகுண்டெழுந்தார். பாரதியைக் காட்டிலும் சாதி அமைப்பை சனாதனத்தை ஒழிக்க பாடியவன் வேறு யார் என்று அவர்களை திருப்பிக் கேட்டார். அவர் கடைசி வரை பாரதிக்கு தாசனாகவே வாழ்ந்தார். நல்லவர் நாட்டினை வல்லவர் தாழ்த்திடும் நச்சு மனப்பான்மை ஒழிக்கப்பட வேண்டும். செல்வமெல்லாம் பொதுவாக வேண்டும் என்றும் புதிய உலகு செய்வோம் என்றும் கவிஞர் பாடிய பாரதிதாசன்.. பாரதிக்கு பிறகு தமிழகத்தில் உழைப்பாளி மக்களின் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கிறார். இலக்கிய மேதை தோழர் ப.ஜீவானந்தம் - எஸ்.ஏ.பெருமாள் பிப்ரவரி 11, 2020 […] கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 2 தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கம், கலை இலக்கிய வாதிகளில் மன்றம் இவற்றை கட்டி வளர்த்த தலைவர் தோழர் ஜீவானந்தம். அவர் கவிஞர், நாவன்மை படைத்த பேச்சாளர், போராளி, எளிமையின் சின்னமாய் திகழ்ந்தவர். உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்களிடையே பேசி அவர்களை மார்க்சியத்தின்பால் ஈர்த்தவர். அவர் பேச்சைக் கேட்பதற்கு ஆன்மீகவாதிகள் உள்பட அனைத்து அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் வந்து கூடுவார்கள். அவரது பேச்சில் பாதி இலக்கியமும், பாதி அரசியலும் மிளிரும். விளையும் பயிர் முலையிலே தெரியும் என்பதுபோல் அவரது பிறந்த ஊரான பூதப்பாண்டியில் சுயம்புலிங்க சுவாமி கோவிலில் சுண்டலை பகிர்ந்தளித்து சமத்துவத்தை நிலைநாட்டியவர். சாதி மற்றும் தீண்டாமை கொள்கைகளுக்கெதிராக போராடியவர். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே கவிதை, நாடகம், நாவல் எழுதத் துவங்கினார். மேல் சாதியினர் வசிக்கும் வீதியில் ஒரு அரிஜன சிறுவனை அழைத்துக் கொண்டு போய் புரட்சி செய்தார். அதனால் அந்த ஊரார் ஜீவாவை விலக்கிவைத்தனர். இதனால் தாய், தந்தையருடன் பகைமை ஏற்பட்டு, படிப்பை நிறுத்தி விட்டு வீட்டை விட்டு வெளியேறி தீண்டாமைக்கெதிராக ஆலயப் பிரவேசங்களை நடத்தினார். சேரன்மாதேவியில் வ.வே.சு.ஐயர் நடத்தி வந்த பரத்வாஜ் ஆசிரமத்தில் பிராமண மாணவர்களுக்கு மட்டும் தனி இடத்தில் உணவு பரிமாறும் வழக்கத்தை எதிர்த்து பெரியார் நடத்திய போராட்டத்தில் தோழர் ஜீவா கலந்து கொண்டார். காரைக்குடி அருகில் சிராவயல் என்ற கிராமத்தில் காந்தி ஆசிரமத்தை தோற்றுவித்தார். சாதி வேறுபாடின்றி ஆண்களும் பெண்களும் சமத்துவமாக அங்கு கல்வி கற்றனர். அங்கு வந்த வ.உ.சிதம்பரம் பிள்ளை பெண்களின் வீரம் பற்றி ஜீவா பேசியதைக் கேட்டு மிகவும் பாராட்டினார். “அஞ்சுபவர்களும், கெஞ்சுபவர்களும் சுதந்திரத்தைப் பெற முடியாது. ஜீவானந்தம் போன்ற சிலர் இருந்தாலே போதும்” என்று வ.உ.சி. புகழ்ந்து கூறினார். மகாத்மா காந்தியின் தலைமையில் 1922ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தின் போதுதான் ஜீவா அரசியலில் நுழைந்தார். ஜீவாவின் காந்தி ஆசிரமத்திற்கு மகாத்மா காந்தி வந்தார். காந்தி ஆசிரமத்தை பார்த்துவிட்டு ஜீவாவிடம் உங்களுக்கு என்ன சொத்து இருக்கிறது? என்று கேட்டார். அதற்கு ஜீவா, இந்தியா தான் எனது சொத்து என்று பதிலளித்தார். மகாத்மா “இல்லை, இல்லை நீங்கள்தான் இந்தியாவின் சொத்து” என்று கூறினார். பெரியாரின் சுய மரியாதை இயக்கத்தில் சேர்ந்து அவருடன் சேர்ந்து செயல்பட்டார். அச்சமயத்தில் சுயமரியாதை இயக்கத் தலைவர் பெரியார், ரஷ்ய நாட்டிற்குச் சென்று திரும்பி எங்கும் சமதர்மப் பிரச்சாரம் செய்து வந்தார். இந்தியப் பொதுவுடைமை இயக்க வரலாற்றில் மிக முக்கிய இடம்பெற்ற தலைவர் சிங்காரவேலர் எனும் சிந்தனைச் செம்மலின் தொடர்பால் ஜீவாவிற்கு தத்துவ அடிப்படையில் சில தெளிவுகள் ஏற்பட்டன. “நான் நாத்திகன் ஏன்?” என்ற பகத்சிங்கின் புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்த குற்றத்திற்காக ஜீவாவையும், வெளியிட்டதற்காக பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியையும் வெள்ளையர் அரசு கைது செய்தது. கம்யூனிஸ்ட் தலைவர் சிங்காரவேலர் பெரியாருடன் இணைந்து செயல்பட்டார். அவர் மூலம் ஜீவாவுக்கு மார்க்சியம் அறிமுகமானது. ஜீவா பெரியாரிடமிருந்து பிரிந்து 1935ல் சுய மரியாதை சமதர்மக் கட்சியை துவங்கினார். இதில் தோழர் எஸ்.ஏ.டாங்கே கலந்து கொண்டு இந்தக் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இணையுமாறு வலியுறுத்தினார். 1936ல் தமிழ்நாடு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி மாநாட்டில் அதன் பொதுச் செயலாளராக ஜீவா தேர்வு செய்யப்பட்டார். பம்பாயிலிருந்து தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க எஸ்.வி.காட்டே வந்தார். அமீர் ஹைதர்கான், சுந்தரய்யா, ஏ.எஸ்.கே, பி.சீனிவாசராவ், பி.ராமமூர்த்தி ஆகியோருடன் இணைந்து ஜீவா செயல்பட துவங்கினார். 1936 முதல் தமிழகம் முழுவதும் நடந்த தொழிலாளர் போராட்டங்களில் பங்கேற்று பலமுறை கைதானார். அது பஞ்சாலைத் தொழிலாளர் முதல் ரயில்வேத் தொழிலாளர் வரை அவர் பங்கேற்காத போராட்டங்களே இல்லை. தனது உணர்ச்சிமிக்க உரைகளால் போராடுவதற்கு தொழிலாளர் நெஞ்சில் கனல் மூட்டினார். பாரதிக்குப் பின், பாரதி வழியில் நின்று தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியத்திற்கும், தமிழகத்திற்கும் பாடுபட்ட தனிப்பெரும் தலைவர் ஜீவாவே. மண்டபங்களுக்குள்ளும், மாநாட்டுப் பந்தலுக்குள்ளும் மற்றவர்கள் பாரதி புகழ் பாடிக் கொண்டிருந்த காலத்தில் பாரதியை, பாரதியின் குரலை பாமரர்களிடத்தும், தொழிலாளர்களிடத்தும், பண்டித மகாசபைகளிலும் ஜீவா முழங்கினார். அரசியல் சொற்பொழிவானாலும், தொழிலாளர் போராட்ட உரையானாலும் பாரதியின் வாசகங்களை இணைத்துப் பரப்பிய பெருமை ஜீவாவிற்கே தனி உரிமையாகும். கம்பன், இளங்கோ, திருவள்ளுவர் போன்ற தமிழ்ப் பெரும் படைப்பாளிகளின் படைப்புகளுக்குள் மூழ்கி முத்தெடுத்து அதைப் பல்வேறு கோணங்களில் தமிழ் மக்களுக்குப் படம் பிடித்துக் காட்டினார். தானும் ஒரு சிறந்த தமிழ்க் கவிஞராகத் திகழ்ந்து கவிதைகளை எழுதி வெளியிட்டார். 1937ஆம் ஆண்டு ஜனசக்தி பத்திரிகையை துவக்கினார். ஜீவாவுடன் பி.ராமமூர்த்தி, ஏ.எஸ்.கே, முருகேசன் ஆகிய தோழர்கள் அவருக்கு உதவினர். கலைஞர்கள் டி.கே.சண்முகம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.வி.சரஸ்ரநாமம், எம்.ஆர்.ராதா மற்றும் பல கலைஞர்களுடன் மிகுந்த நட்புடன் இருந்தார். அவர்களும் கட்சிக்கு பல வழிகளில் உதவினர். தமிழகத்தில் கலை இலக்கிய பெருமன்றத்தை உருவாக்கினார். 1952 தேர்தலில் வடசென்னை தொகுதியில் நின்று வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். சட்டமன்றத்தில் தமிழில் முதலில் பேசியவர் இவரே. 16.1.1963ல் திடீர் உடல்நலக் குறைவினால் ஜீவா காலமானார். அவரது பேச்சைக் கேட்டவர்களின் காதுகளில் இன்னும் அந்த சிம்மக்குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இலக்கியத் தடம் பதித்த தொ.மு.சி.ரகுநாதன் - எஸ்.ஏ.பெருமாள் பிப்ரவரி 12, 2020 […] கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 3 எழுத்தா ளர் புதுமைபித்தனால் தனது வாரிசு என்று அறிவிக்கப்பட்ட தோழர் தொ.மு.சி.ரகுநாதன் சுமார் 60 ஆண்டுகள் இடைவிடாமல் இடதுசாரி இலக்கிய பணியாற்றியவர். கதை, கவிதை, நாவல், நாடகம், விமர்சனம், வரலாறு, மதிப்பீடுகள் என்று 22 பெரிய நூல்களை எழுதியவர். போராடும் தொழிலாளிகளை நாவலின் மையத்திற்கு கொண்டு வந்த சாதனையாளர். பாரதி பற்றி மிகச் சிறந்த ஆய்வுகளை செய்தவர். இலக்கியத்தை சமுதாய நோக்கில் ஆய்வு செய்தவர். இலக்கியத்தில் சில ஆதிக்கப் போக்குகளை எதிர்த்து இன்றைய தமிழ் விமர்சனத்தின் தரத்தை மேம்படுத்தியவர். தோழர் ரகுநாதன் 20.10.1923ல் திருநெல்வேலியில் பிறந்தார். இந்துக் கல்லூரியில் இன்டர்மீடியட் வரை படித்தார். தனது சகதோழரான ராஜரத்தினத்துடன் இணைந்து மார்க்சிஸ்ட் மாணவர் இயக்கம் என்ற பெயரில் மார்க்சியக் கருத்துக்களை ‘சைக்ளோ’ செய்து ஜவகர் வாலிபர் சங்கம் மூலம் விநியோகித்துப் பரப்பி வந்தார். 1942ல் வெள்ளையனே வெளியேறு எனும் இயக்கம் நாடு முழுவதும் தீவிரமடைந்தது. நெல்லையில் கல்லூரி மாணவர்களும், உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தின் மீது போலீஸ் கடுமையான தடியடி நடத்தியது. தொ.மு.சி உட்பட பலரும் காயமடைந்தனர். சில நாள் கழித்து ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக அவரைக் கைது செய்து இரண்டு மாதம் சிறையிலடைத்தனர். அத்தோடு அவர் படிப்பை நிறுத்த வேண்டியதாயிற்று. இதே காலத்தில் நெல்லை மாவட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பாளராக வந்த வி.பி.சிந்தன் தொ.மு.சியுடன் தொடர்பு கொண்டார். தொ.மு.சியின் ஈடுபாடு இலக்கியத்திலேயே அதிகமாக இருந்தது. எனவே 1942 முதலே எழுத்துத் துறையில் இறங்கினார். 1944 - 45ல் தினமணி ஆசிரியர் குழுவிலும் 1946 - 47ல் முல்லை பத்திரிகையின் ஆசிரியராகவும், 1948 - 52ல் சக்தி பத்திரிகையின் துணை ஆசிரியராகவும், 1954 - 56ல் சாந்தி பத்திரிகையின் ஆசிரியராகவும் 1967 - 88 வரை சோவியத் நாடு பத்திரிகையில் மூத்த ஆசிரியராகவும் பணியாற்றினார். 1953ல் வெளிவந்த பஞ்சம் பசியும் நாவல். அந்தக் காலத்தில் பொதுவுடமை இயக்கத்தை நோக்கி ஈர்க்கப்பட்ட இளைஞர்களின் கரங்களிலெல்லாம் தவழ்ந்தது. வதைபடும் கை நெசவாளர்களைப் புரட்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் அதன் கதாநாயகர்களான சங்கர், ராஜா ஆகியோரை தொ.மு.சி. படைத்தார். அந்தக் காலத்தில் விவசாயத்திற்கு அடுத்த பெரிய தொழிலாகக் கைநெசவுத் தொழில் இருந்தது. மத்திய, மாநில அரசுகளின் ஜவுளிக் கொள்கையால் அந்தத் தொழில் கடந்த அரை நூற்றாண்டில் பெருமளவு அழிந்துவிட்டது. மானத்தை மறைக்க ஆடை நெய்யும் நெசவாளர்கள் தங்கள் மானத்தை இழந்து பிச்சையெடுப்பதையும், தற்கொலை செய்வதையும் இந்நாவலில் வெளிப்படுத்தியுள்ளார். இதற்குக் காரணமானவர்களையும் அவர் முழுக்க அம்பலப்படுத்தியுள்ளார். “இந்த நாடு உருப்பட வேண்டுமானால், இங்கு ஒரு பெரும் அறிவுப் புரட்சி ஏற்பட வேண்டும். மக்களின் மூட நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் போக வேண்டுமென்றால் அவர்கள் நெஞ்சில் அறிவு சுடர் விட வேண்டும்,” “அறிவு வேண்டும், அந்த அறிவின் கொள்கை வெற்றி பெறப் போராட்டம் வேண்டும். இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது. பிரச்சாரம் உணர்வைத்தான் ஊட்டமுடியும். நடைமுறை இயக்கம்தான் உணர்வின் வெற்றியை உருவாக்க முடியும். கொள்கையும், நடைமுறையும், சிந்தையும், செயலும் ஒன்றுபட்டால்தான் விமோசனம் உண்டு” என்று தொ.மு.சி கூறியுள்ளார். அவரது பாரதியும் ஷெல்லியும் என்ற ஒப்பீட்டு இலக்கியம் மிகுந்த வீரியமிக்க நூலாகும். பாரதி : காலமும், கருத்தும் என்பது அவரது ஆற்றல்மிக்க ஆய்வுகளை கொண்ட பெருநூலாகும். இந்நூலுக்கு 1984ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. கார்க்கியின் தாய் நாவலை தமிழாக்கியதற்காக சோவியத் நாடு நேரு பரிசு வழங்கப்பட்டது. பஞ்சம் பசியும் நாவலும், ரகுநாதன் சிறுகதைகளும் பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. பஞ்சம் பசியும் செக் மொழியில் ஐம்பதாயிரம் பிரதிகள் முதல் பதிப்பிலேயே விற்பனையானது. அவர் புதுமைப்பித்தனை மிகவும் நேசித்தார். அவரைப் பற்றியும் அவரது படைப்புகளைப் பற்றியும் எழுதி புதுமைப்பித்தனை ஒரு இலக்கிய இயக்கமாக்கினார். எதையும் ஆய்வு செய்து ஆதாரங்களைப் பொறுமையாய்த் தேடிச் சேகரித்த பின்பே எழுதும் பழக்கம் அவருக்கு இருந்தது. அவரது ‘இளங்கோவடிகள் யார்?’ என்ற ஆய்வு நூல் நாற்பதாண்டுகள் ஆய்வு செய்து எழுதப்பட்டது. ஏனோ அந்நூல் தமிழுலகில் அதிகம் பேசப்படவில்லை. “மனிதனுக்குக் காதல் ஒன்றுதானா வாழ்க்கை? காதல் வாழ்க்கையின் ஒரு அம்சம். அதற்குப் பங்கம் நேர்ந்தால், வாழ்க்கையே அத்தோடு முடிந்துவிட்டது என்று அர்த்தமா? மனிதனுக்கு வாழ்க்கைதான் லட்சியம்.” “தற்கொலை செய்து கொள்வது ஒன்றும் துணிச்சலான காரியமல்ல. வாழ்க்கையில் விரக்தியடைந்த எந்தப் பைத்தியக்காரனும் லகுவாகச் செய்து கொள்ளக்கூடிய காரியம் அது. தற்கொலை என்பது கோழையின் கண்ணில்படும் முதல் புகலிடம். வாழ்க்கையின் சிரமங்களை எதிர்த்துப் போராடத் துணிச்சலற்றுத் தன்னைத் தானே ஒருவன் அழித்துக் கொள்வதா?” என்று கடுமையாய் எச்சரிக்கிறார். தொ.மு.சி இறுதிவரை தனது சுயத்தை இழக்காமல் கம்பீரமாகவே வாழ்ந்தார். கம்யூனிஸ்ட் கட்சி என்ற அமைப்புக்கும் தன்னை உட்படுத்திக் கொண்டார். இது ஒரு அபூர்வமாகும். அவரது ஆயிரக்கணக்கான நூல்களை எட்டயபுரம் பாரதி நூலகத்திற்குத் தானமாய் வழங்கினார். அதைப் பாதுகாத்து இயக்குவதில் தமிழ் ஆய்வாளர்களும், இலக்கிய ஆர்வலர்களும் கவனம் செலுத்த வேண்டும். தொ.மு.சி.யின் வாழ்வில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான சமரசமுமில்லை. வீழ்வதற்கான சறுக்கலுமில்லை. அவரது இறுதி நாட்களில் நெல்லையில் தனது நெருங்கிய சகாவான தோழர் தி.க.சி.யோடும், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கலை இலக்கியப் பெருமன்றத் தோழர்களோடும் நெருங்கிய நட்புக் கொண்டு, இலக்கிய வாழ்வைத் தொடர்ந்தார். 30.12.2001ல் அவர் மறைந்தாலும் அவரது படைப்புகள் தொடர்ந்து நமக்கு வழிகாட்டும். நிலைத்து நிற்கும். தொ.மு.சி.ரகுநாதன் எனும் மாமனிதரின் பெயர் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும். சுதந்திரப் போரில் கலை ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகள் கவிஞர் தமிழ் ஒளி - எஸ்.ஏ.பெருமாள் பிப்ரவரி 13, 2020 […] புரட்சி கவிதைகளை அக்னிச் சிதறல்களாய் ஆர்ப்பரிக்க எழுதிய நெருப்புக் கவிஞர் தமிழ் ஒளி. திராவிட இயக்கத்தின் மடியில் வளர்ந்து, பின்பு தன்னை செங்கொடி இயக்கத்தில் நிலை நிறுத்தியவர். “கத்தி முனைதனிலே பயங் காட்டும் உலகினிலே சத்திய பேரிகையை நான் தட்டி முழக்கிடுவேன்; ஊரை எழுப்பிடவே துயர் ஒன்றை நொறுக்கிடவே தாரை முழக்கிடுவேன் தமிழ் சாதி விழித்திடவே” என்று புதியதோர் பிரகடனம் செய்தவர் தமிழ் ஒளி. புதுவை மண்ணில் பிறந்து வளர்ந்து பாரதி, பாரதிதாசன் அடியொற்றித் தனது கவிதைப் பயணத்தைத் துவங்கிய பின்பு தனக்கென ஒரு தன்னேரிலாப் பாதையில் முன்னேறிச் சென்றவர். குறுகிய காலமே வாழ்ந்தாலும் தனது கவிதைக் கொடியினை வானளாவப் பறக்கவிட்டவர். வெறும் கனவுலகைப் பாடாமல் நனவுலகு பற்றி மட்டும் பாடியவர். ஏழை, எளிய உழைப்பாளி மக்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த அவர் தனது கவிதைகளையும் அந்த மக்களுக்காகவே படைத்தார். வாழ்வின் புதிர்கள் பற்றிப் புரியாத மனிதர்களுக்குத் தனது கவிதைகள் மூலம் புத்தொளி பாய்ச்சி அடையாளம் காட்டியவர். ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி போல இங்கும் ஒரு புரட்சி எழ வேண்டும்; எளியவர்கள் துயரம் என்றென்றும் அகல வேண்டும்; இங்குள்ள முதலாளிகள், நிலப்பிரபுக்களின் சுரண்டலுக்கு முடிவு கட்டிப் புதியதோர் சமுதாயம் காண வேண்டும் என்று போராடினார். இதற்கு வாள் முனையை விடப் பேனா முனை வலிமை வாய்ந்தது என்பதைத் தனது செஞ்சொற் கவிதைகளால் நிரூபித்தவர் தமிழ் ஒளி. உலகப் பாட்டாளிகளின் விடியல் தினமான மே தினம் பற்றி இன்று வரை யாரும் எழுதாத ஒப்பற்ற கவிதையினை கவிஞர் தந்துள்ளார். “தொழிலாளர் சாதனையைத் தூக்கிக் கொடிபிடித்து வாராய் மணி விளக்கே வந்திடுவாய் மேதினமே! யுத்தஒலி கேட்கிறது, ஊர் மிரட்ட எண்ணுபவர் பித்தம் அணுகுண்டாய் பேயாய் அலைகிறது; ரத்தவெறி பிடித்த லாப அரக்கர்களின் கத்தி, மனிதர் கழுத்தறுக்க நீள்கிறது! நீல நெடுந்திரையாய் நீள்கின்ற கைகளினால் ஞாலத் தொழிலாளர் நல்லரசைத் தோற்றுவிப்போம்” என்று பாடினார். இன்றைக்கும் உலகை மிரட்டி வரும், ஒவ்வொரு நாட்டையும் குண்டு வீசி அடக்கி வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். நியூயார்க் நகரின் வால்தெருவிலுள்ள ஆயுத உற்பத்தி செய்யும் முதலாளிகள் பதினான்கு பேர் தங்கள் லாபத்திற்காகப் போர்களைத் தூண்டி வருகிறார்கள். அந்த மரண வியாபாரிகளைக் கண்டித்து, “நாசக் கிருமிகளாய் ஞாலப் பெருநோயாய் வாசம் புரிகின்ற வால்தெருவின் மூடருக்குக் ‘காலத் திறுதியாகக் காண்’ என்று செங்கொடியை ஞாலத்தெரு முனையில் நாட்டுகின்றாய் வானுயர!” என்று கவிதை ஆரவாரம் செய்கிறார். தொழிலாளரும், உழைக்கின்ற இதர பகுதியினரும் தங்களது உரிமைகளுக்காகவும், கோரிக்கைகளுக்காகவு போராடும் போது பொதுமக்கள் ஒதுங்கி நிற்கிறார்கள். சிலரோ முதலாளித்துவப் பிரச்சாரங்களுக்குப் பலியாகிப் போராட்டங்களை எள்ளி நகையாடுகிறார்கள். சிலர் புரியாமல் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். இவர்களைப் பார்த்துக் கவிஞர், “தொழிலாளர்களின் துயர வாழ்க்கையை நீக்கிடப் பெரிய நீண்ட போராட்டம் தொடங்கிடச் சங்கம் துணிந்திடும் போதில் ஏ, செந்தமிழா! என்னுடைச் சோதா! நீ, யார் பக்கம்? நின்றிட வேண்டும்! கொள்ளையடித்திடும் கொடியவர் பக்கமா? துன்பமுற்றிடும் தொழிலாளர் பக்கமா? நீ யார் பக்கம் என்று கோபமாய் வினாத் தொடுக்கிறார், மேலும் போராட்டத்தை ஆதரிக்காமல் ஒதுங்கி நிற்போரைப் பார்த்து, “ஒதுங்கி நிற்பவர் ஊமையர், பேடியர் பேதையர் ஆவர்! பிறப்பினில் நீயோ ஊனமிலாத உயர்வலியுடையோன் என்னுடைக் கடமையை உதறித்தள்ள எண்ணிட வேண்டாம! இப்பொழுதே நீ எவர் பக்கம்? என்றியம்பிடுவாயே!” என்று அறைகூவல் விடுக்கிறார். கவிஞர், கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்தவர். 1948ல் தொடங்கிய அடக்குமுறைக் காலத்தில் கட்சிப் பத்திரிகைகளின் ஆசிரியராக, எழுத்தாளராக இருந்தவர். தனது எழுத்துக்களால் அந்தக் காலத்தின் போராளிகளுக்கு உத்வேகமும், உற்சாகமும் ஊட்டியவர். காளியை வணங்கித் தெருவோரம் கழைக்கூத்தாடிப் பிழைக்கும் ஒரு ஏழை, வயிறு வளர்க்கப் பாலகனாம் தன் மகனைத் தென்னைமர உயரக் கம்பத்தில் சுழல வைத்து வேடிக்கை காட்டுகிறாள். சிறுவன் தவறிக் கீழே விழுந்து சாகிறான். அதிர்ச்சியில் தகப்பனும் சாகிறான். நமது கவிஞர் மனங்குமுறுகிறார். காளியும் கூளியும் காக்கவில்லை மூடக் கட்டுக்கதைகளை நம்பியதால்! தேளையும் பாம்பையும் கும்பிடுவார் இவர் தீமை அடைந்துமே செத்திடுவார்! கவிஞர் தமிழ் ஒளி 40 வயது வரை தான் வாழ்ந்தார். கொடும் நோய்க்கு பலியாகி உயிர் நீத்தவர். கம்யூனிஸ்ட் கவிஞர்களில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களுக்கு அடுத்தபடியாக அதிகமாக பாடல்களை எழுதி குவித்தவர் தமிழ் ஒளி. ஆரியர் கொணர்ந்த இந்து மதம் இந்தியாவில் நால்வருண பேதத்தை உருவாக்கியது. பிறப்பால் மனிதனைத் தீண்டத்தகாதவன் என்று ஒதுக்கியது. மக்களை மாக்களாய் நடத்தும் இக்கொடுமைகளை உருவாக்கியவர்களைப் பற்றித் தாழ்த்தப்பட்டோர் நெடுங்காலம் அடையாளங் காணவில்லை. தலைவிதி என்றும், ஆண்டவன் படைப்பு என்றும் நொந்து கொண்டனர். இந்தியாவில் தோன்றிய லோகாயதத்தையும், புத்தம், சமணம் போன்ற மதங்களையும், மக்கள் பின்பற்றிய காலத்தில் இந்தத் தீண்டாமைக் கொடுமைகள் முளைக்கவில்லை. இம்மதங்களை அழித்து இந்து மதம் கோலோச்ச வந்தது. இந்து மதவெறிதான் தீண்டாமையின் ஊற்றுக்கண் என்று கவிஞர் துல்லியமாய்க் காட்டுகிறார். தமிழர்களுக்கு உலகின் புரட்சிகர காட்சிகளையெல்லாம் எடுத்துக்கூறி அதேபோல் இங்கேயும் உருவாக்க வேண்டுமென்றார். சீன மக்கள் செய்த புரட்சியையும், தெலுங்கானா விவசாயிகளின் வீரகாதைகளையும் எடுத்துக் கூறுகிறார். ஏழை மக்கள் உலகை ஆள வந்தோம், அடிபணியோம் என்று மார் தட்டுகிறார். நமது வருங்காலப் பயணம் அதைநோக்கியே… சுதந்திரப் போரில் கலை ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகள் கலைஞர் வெ.நா.திருமூர்த்தி - எஸ்.ஏ.பெருமாள் பிப்ரவரி 14, 2020 […] கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 5 காலில் சலங்கை கட்டி கையில் சப்ளாக் கட்டையுடன் மேலாடையின்றி தெருவிலே நின்று தனியாளாய் தாளம் போட்டு ஆடிபாடி, கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரத்தில் ஈடுபட்டவர். சமூகத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமையை கடுமையாக எதிர்த்து பாடியவர். தீண்டாமையை தர்மநெறி என்று கூறிய பூரி சங்கராச்சார்யாரை சிறையில் தள்ள வேண்டுமென்று பாடியவர். தோழர் திருமூர்த்தி 1904ஆம் ஆண்டில் ஈரோடு அருகில் வெள்ளோட்டம் பரப்பு என்ற கிராமத்தில் நாராயண நாயுடு, வெங்கடம்மா தம்பதியின் மகனாய் பிறந்தார். நான்காம் வகுப்பு வரை படித்துவிட்டு ஆடு மேய்த்து, கடை ஊழியர், லாடம் கட்டும் தொழிலாளி, நெசவாளி என்று வறுமையில் வாடியவர். 1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் போராட்டத்தில் கலந்து கொண்டு உறையூரில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார். தனது சுயமுயற்சியில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை பயின்றவர். தமிழில் ஆழ்ந்த புலமை உடையவர். அவராகவே தெருவில் நின்று ஆடிப், பாடி கூட்டம் சேர்த்து தனியாளாகப் நின்று பிரச்சாரம் செய்வார். தலித் மக்கள் வறுமையில் வாடுவதைப் பார்த்து “மாடி வீடு உங்களுக்கு- சிறு மட்ட குடிசை எங்களுக்கு காடு தோட்டம் உங்களுக்கு - கொஞ்சம் மேடும் தரிசும் எங்களுக்கு பாலும் பழமும் உங்களுக்கு - நஞ்ச பழைய சோறும் எங்களுக்கு பட்டும் பணமும் உங்களுக்கு- தினம் பழைய கந்தல் எங்களுக்கு உடமையெல்லாம் உங்களுக்கு- இங்கு உழைப்பும் மட்டும் எங்களுக்கு உலகமெல்லாம் உங்களுக்கு - இங்கு ஒன்றுமில்லை எங்களுக்கு” - என்று அவர் பாடும் போது கேட்போர் மத்தியில் ஆத்திரம் கொப்பளிக்கும். கிராமங்களில் விவசாயிகள் படும் துயரங்கள் கடனிலும் வட்டியிலும் சிக்கி நிலம், வீடு, வாசலை விட்டுவிட்டு நகரங்களுக்குப் போய் கூலிக்காரர்களாய் குடியேறுகிறார்கள். ஒண்டுவதற்கு ஓர் ஓலைக் குடிசை கூட இல்லாத ஏழை மக்களைப்பற்றி - “நண்டுக்குச் சொந்தமா பொந்து இருக்குது நரிக்குச் சொந்தமாய் புதர் இருக்குது பாம்புக்கும் ஒரு புத்து இருக்குது பாம்புக்கும் ஒரு பொந்திருக்குது பறவைகளுக்கும் கூடு இருக்குது மனிதவர்க்கத்தில் எத்தனை பேர்கள் வாழ்க்கை நடத்திட இடமில்லாமல் மரத்தடியிலும் தெருத்திண்ணையிலும் மழையில் குளிரில் பிள்ளை குட்டியுடன் வாழ்க்கை நடத்துறார் அடிமை வாழ்வில் அவதிப்படுவதோ அதிகார வர்க்கம் - இங்கு அடக்கியாள இனியும் விடுவதோ” - என்று பாடுகிறார். அவர் குதித்து ஆடியபடி இந்த பாடலைப் பாடும் போது கூட்டமும் சேர்ந்து ஆடும். அவர் சிறந்த கவிஞராகத் திகழ்ந்தார். தமிழ் கவிதாமரபில் வீரியமிக்க இசைக் கவிதைகளை எழுதினார். ஆனால் அவை எளிய மக்களுக்காக எளிய முறையில் பாடியவை. உதாரணமாக, “மண்ணுக்காய் பாரதத்தின் சண்டையென்றும் பெண்ணுக்காய் ராமாயணச் சண்டையென்றும் பேர்போன பழங்கதைகள் பலர் சொல்லக் கேட்டிருப்பீர்- இப்போ கண்ணுக்கு முன்னாடி நம்ம வீட்டில் கஞ்சிக்கும் ஒருமுழக் கந்தைக்கும் பெரிய சண்டை” இன்றைய அரசுகள் மக்கள் பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படாமல் சாதி, மத, இன, முரண்பாடுகளை வளர்த்து குளிர்காய்கின்றனர். ஆட்சியாளர்களால் நாட்டின் செல்வம் சூறையாடப்படுகிறது. லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடுகிறது. மக்கள் இதை சகித்துக் கொள்ள வேண்டியுள்ளது. “உலகம் போற போக்கிலே ஒன்னும் நமக்கு புரியலே உண்மை,நீதி, தர்மம் எங்கே ஒழிஞ்சு போச்சோ தெரியலே அடுக்கடுக்காய் பிரச்சனைகள் அட்டாலி மேல் தூங்குது ஆரு வந்தும் தீரலையின்னு ஏழை மனசு ஏங்குது” “உலகம் போற போக்கிலே ஒன்னும் நமக்கு புரியலே உண்மை,நீதி, தர்மம் எங்கே ஒழிஞ்சு போச்சோ தெரியலே அடுக்கடுக்காய் பிரச்சனைகள் அட்டாலி மேல் தூங்குது ஆரு வந்தும் தீரலையின்னு ஏழை மனசு ஏங்குது” “உழைப்பாளர் உலகை ஆளவே உரிமைகள் யாவும் மீளவே தொழிலாளர் ஆட்சி ஓங்கவே சுரண்டல் முற்றிலும் நீங்கவே எழுவீர் இடது சாரிகளே இன்ப உலகை உண்டாக்குவோம் இடரே புரியும் கொடியோர் செயலை அழியோடு ஒழிப்போம் அனுமதியோம்” - என்று முடிக்கிறார். ஏழை, பணக்காரன் என்ற பிரிவினை கிராமங்களிலும், நகரங்களிலும், அவர்களது குடியிருப்புகளிலே தெரிந்து விடுகிறது. மாடமாளிகைகள் ஒருபுறம், கூரைக் குடிசைகள் மறுபுறமுமாய் வாழ்க்கை முரண்பட்டு கிடக்கிறது. அதை ஆழ்ந்த புலமையோடு பாடுகிறார், “விண் முட்டும் மாளிகை மெல்லியர் கேளிக்கை பொன்வைரம் மேனியில் நிழலாடும்; கண்கொள்ளாப் பகட்டுகள் களிப்பூட்டும் லீலைகள் காசுள்ளோர்அருகினில் விளையாடும்; கோட்டான்கள் கூவலும் கொல்பசித் தேம்பலும் மூட்டாத அடுப்போரம் அலைபாயும்; வாட்டிடும் துன்பங்கள் வறுமையின் சின்னங்கள் பாட்டாளி வாழ்வோடு உறவாடும்” - இப்படி கவிதை அழகோடு மக்களிடையே உள்ள முரண்பாடுகளை பாடிய மகா கலைஞர் அவர். மக்களின் விடுதலைக்கு கம்யூனிஸ்ட் கட்சி செங்கொடிப் பாதையே, இடதுசாரிப் பாதையே சிறந்த வழி. அதைப் பின்பற்ற வாருங்கள் என்ற அறைகூவலோடு அவர் நிகழ்ச்சியை நிறைவு செய்வார். அவர் மறைந்து விட்டாலும் கட்சியின் வரலாற்றில் மறக்க முடியாத கலைஞர் திருமூர்த்தி. சுதந்திரப் போரில் கலை ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகள் பாவலர் வரதராசன் - எஸ்.ஏ.பெருமாள் பிப்ரவரி 15, 2020 […] கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 6 தமிழகத்தில் கம்யூனிஸ்ட் மேடைகளில் தலைசிறந்த கலைஞராக நீண்ட காலம் உலா வந்தவர் தோழர் பாவலர் வரதராசன். சொந்தமாக பாடல் எழுதுவதிலும், மெட்டு போடுவதிலும், கிராமிய இசையை கலப்பதிலும், திரையிசை பாடல் மெட்டுகளை பயன்படுத்துவதிலும் ஆற்றல்மிக்க கலைஞர். இன்றைய தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் பிறந்த இந்த மகா கலைஞனின் தம்பிகள் தான் பாஸ்கர், இராஜையா (இளையராஜா), அமர்சிங் (கங்கை அமரன்) ஆகியோர். இந்த நான்கு சகோதரர்களும் தமிழகமெங்கும் பட்டிதொட்டிகளில் எல்லாம் பாடியவர்கள். பாவலரின் பாடல்களில் தமிழ் கவிதாமரபுப்படி இசை, இலக்கணம் மிளிரும். எதுகையும், மோனையும், ஓசையும், சந்தமும், அசைகளும், சீர்களும் கொஞ்சி விளையாடும். அவரது பாடல்களில் உருவமும், உள்ளடக்கமும், பொருத்தமாய் இணைந்தே இருக்கும். அதனால்தான் அவரது பாடல்களுக்கு வெற்றி கிடைத்தது. அவரது நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே பாடும் பாடல்- “தாய்நாட்டுக்காக தன் உடல் பொருள் ஆவியை தந்த தியாகிகளுக்கு வணக்கம் தாலி அறுத்த பெண்ணை மறுமணம் செய்திட்ட வாலிபர்க்கெல்லாம் வணக்கம்” -என்று துவங்கி கடவுள் மறுப்பு செய்திகளையும் கிண்டலாகக் கூறுவார். “பாலைக் குடம்குடமாய் சாமி தலையில் கொட்டி, பாழ்படுத்தாதவர்க்கும் வணக்கம்” என்று அவர் பாடும்போது கூட்டத்தில் பலத்த கைத்தட்டல் எழும். மக்கள் மீது அரசாங்கத்தினுடைய தாக்குதல்கள், தடியடிகள், படுகொலைகள் எல்லாவற்றையும் பற்றி பாடல் எழுதுவார். அவரிடம் பெரிய இசைக் கருவிகள் கிடையாது. ஒரு பழைய ஆர்மோனியம், தபோலா, ஜால்ரா மற்றும் அவரது தம்பிகள் மட்டும்தான். அவரது கச்சேரியை கேட்பதற்கு அனைத்துக் கட்சியினரும் வந்து கூடுவார்கள். பாராட்டுவார்கள். நிலப்பிரபுக்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை எப்படி அமுக்கினார்கள் என்பதைப் பற்றி கவிஞர் திருமூர்த்தி ஒரு பாடலை எழுதினார். அந்தப் பாடலை கோபத்தோடும், எக்காளத்தோடும் பாடும்போது கூட்டம் ஆவேசமடையும். “ஆண்டவனே சர்வே போட்டு அளந்துவிட்டானா- இல்லை அவனவனே நிலத்தையெல்லாம் அமுக்கிக்கிட்டானா” என்று பாடிவிட்டு எந்தெந்த நிலப்பிரபு எத்தனை ஆயிரம் ஏக்கரை அமுக்கினார் என்ற பட்டியலையும் பாடுவார். அவரது தம்பிகளும் இணைந்து பாடுவார்கள். 1957 தேர்தலின்போது கேரளத்தில் பிரச்சாரம் செய்ய தோழர் ஐ.மாயாண்டி பாரதியுடன் பாவலர் குழு சென்றது. அந்த தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரசை கிண்டல் செய்து ‘‘ஒத்த ரூபா தாரேன், நான் உப்புமா காப்பியும் தாரேன் காளை மாட்டைப்பார்த்து நீ கணக்காக குத்து” - என்ற பாடலை பாடினார்கள். 1965ஆம் ஆண்டு தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் கடுமையாக நடந்தது. மாணவர்கள் மீது அன்றைய காங்கிரஸ் அரசு தடியடியும் துப்பாக்கிச் சூடும் நடத்தியது. பலர் செத்து மடிந்தனர். அதைக் கண்டித்து “ரத்தவெறி கொண்டவரே நாடாள வந்தவரே பெற்றவர் வயிற்றையெல்லாம் பற்றி வேகவிட்டவரே எத்தனை உயிரை இன்னும் சுட்டு வெறி தீர்ப்பீரோ பள்ளியில் படிக்க வைக்க பட்டகடன் தீரவில்லை கொள்ளி வைக்கும் பிள்ளைக்குத் தாய் கொள்ளி வைக்க வைத்துவிட்டீர் - ஐயகோ!” இப்பாடலைப் பாவலர் பாடிக் கொண்டிருக்கும் போதே கூட்டத்திலிருந்து அழுகையும் கேவலும் வரும். அதுவே கலையின் வெற்றியாகும். அரசியல் எதிரிகளை நையாண்டி செய்வதில் பாவலர் மிகுந்த சமர்த்தர். அவரது நையாண்டி மக்களை விலா நோகச் சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கும். உதாரணமாக, 1969ஆம் ஆண்டில் தமிழகத்தில் குடும்பக் கட்டுப்பாடுத்திட்டம் மிகக் கொடூரமான முறையில் அமல்படுத்தப்பட்டது. குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சைக்கு ஆசிரியர்கள் ஆள்பிடித்து வரவேண்டுமென்று கட்டாயப்படுத்தப்பட்டனர். அக்காலத்தில் ஆராதனா என்ற இந்திப் பாடல் மிகவும் பிரபலமானது. இந்தப் பாட்டின் மெட்டில் கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை கண்டித்து பாவலர் எழுதிப் பாடிய பாடல் முதலில் விருதுநகர் மேடையில் அரங்கேறியது. “லூப்புத் தரான் சரிதானா மாட்டலன்னா உடுறானா நாளைய வாரிசு வீணாப் போகுதே” பாவலர் இதைப் பாடும் போது கூட்டமே கொல்லென்று சிரிக்கும். பாடலை முடிக்கும் போது, “கருவோடு தானே விளையாடுகின்ற கொலைகாரராட்சி இனிமேலும் வேண்டாம் ஆயிரமாயிரம் பேரை அறுத்தானே- ஏ ஏ” என்று பாடும் போது கூட்டம் உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்துவிடும். மெய்யான மக்கள் கலைஞர் அவர். பாட்டாளி வர்க்கப் புரட்சி நாட்டில் உருவாக வேண்டுமென்ற உணர்வோடு தனது கலைப்பயணத்தைத் தொடர்ந்தவர். வறுமையைப் துச்சமாக எண்ணியவர். மனித வாழ்வின் சகல அம்சங்களையும் மார்க்சியக் கண்ணோட்டத்தில் ஊடுருவிப் பார்த்தவர். இதை அவரது ஒவ்வொரு பாடலிலும் காண முடியும். பாவலரின் கலை நிகழ்ச்சியின் கடைசிக் காட்சிதான் உச்சகட்டமாகும். தியாகி சிவராமனின் வீரகாதையை தனியே அரைமணி நேரம் பாடுவார். கதையைத் துவக்கும்போதே, “அண்ணே சேதியொண்ணு சொல்லப் போறேன் - உங்க செவியக் கொஞ்சம் சாச்சிடுங்க - நான் ஆதி முதல் சொல்லப் போறேன் - நீங்க அமைதியாகக் கேட்டிடுங்க நின்னுருக்கும் அண்ணமாரே - கொஞ்சம் நேரம் வரையில் உட்காருங்க, கூடீருக்கும் தம்பியரே - கொஞ்சம் கூச்சமின்றி உட்காருங்க” இதைப் பாடியதும் அவர் பேசத் துவங்குவார். இது கதையோ, கற்பனையோ, நாடகமோ, கதாகாலட்சேபமோ இல்லை- நடந்த சம்பவம் என்பார். கூட்டமே கேவி அழும். அந்தக் கலை ஆற்றலே அவரது சிறப்பு. சுதந்திரப் போரில் கலை ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகள் - எஸ்.ஏ.பெருமாள் பிப்ரவரி 16, 2020 […] கவிஞர் கன்னிவாடி பச்சை நிலா திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் வாழ்ந்த கவிஞர் பச்சை நிலா ஒரு அற்புதமான கவிஞர். அவரது இயற்பெயர் துரைராஜ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகவே கடைசி வரை வாழ்ந்து மறைந்தார். அவர் ஏராளமான பாடல்களை எழுதினார். யார் யாரோ அவரிடம் பாடல்களை வாங்கிப் போய் பயன்படுத்துவார்கள். ஆனால் அவர் பெயர் மட்டும் வெளிவராது. குடத்திலிட்ட விளக்காகவே அவர் வாழ்ந்து மறைந்தார். பச்சை நிலா, அடிப்படையில் ஒரு விவசாயி, விவசாயிகளின் வாழ்க்கைத் துயரங்களைத் தனது பாடல்களில் வெளிப்படுத்தினார். கடலை சாகுபடி செய்யும் போது கம்பளிப் பூச்சி தாக்கினால் பெருத்த சேதமேற்படும். அதன் விளைவாக விவசாயியின் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களை ஒரு பாடலாக்கினார். “கடலச் செடியத் தின்னு புடுச்சு கம்பளிப் பூச்சியெல்லாம்- மக்களை (நம்மள) கடனுக்குள்ள மூழ்கடிக்குது சுரண்டும் கூட்டமெல்லாம் வெதக் கடலை வாங்குன வெலைக்கு வௌஞ்ச கடலை வெல கொறஞ்சது - நம்ம வீட்டுக்கு விருந்தாளி வந்தா வேப்பங் காயாக் கசக்குது சதை எலும்புக்கும் இருந்த சொந்தம் சன்னஞ் சன்னமாக் குறையுது சாமியக் கும்பிட்டா தொல்லை தீருமுன்னு சனங்களெல்லாம் நெனச்சிருக்குது (கடலைச் செடி)” பெரும்பாலும் மானாவாரி நிலங்களில் பாடுபடும் விவசாயிகளுக்குப் பாசன வசதி கிடைப்பதில்லை. நூறு அடி ஆழம் வரை கிணறு தோண்டினால் தான் தண்ணீர் கிடைக்கும். அதுவும் பாசனத்திற்குப் போதாது. விளைச்சல் பாதித்துவிட்டால் விவசாயி பாடு அதோகதிதான். கண்ணீர் கதைதான். அந்த விவசாயியின் துயரத்தை இந்தப் பாடலைவிட வேறெதுவும் கூறிட முடியாது. கவிஞர் பச்சை நிலா என்று பெயரிட்டுக் கொண்டாலும் அவர் உண்மையில் சிவப்பு நிலாதான். “முக்கா மொழம் நெல்லுப்பயிறு முப்பது கெசம் தண்ணிக்கிணறு நிக்கா மத்தான் தண்ணி எறச்சேன் நெல்லுப் பயிரும் கருகிப் போச்சு” கவிஞர் பச்சை நிலா கிராமப்புற விவசாயிகள் படும் துயரங்கள், அதை மாற்றுவதற்கான வழிமுறைகள் பற்றித்தான் அதிகம் எழுதினார். வாழ்க்கையை நேரடியாக அனுபவித்து அந்த அனுபவங்களை வெளிப்படுத்தினார். தனது சக மனிதர்களின் வாழ்வை ஊடுருவிப் பார்த்தும் பாடல் எழுதினார். ஏழை மக்களின் வறுமை, துயரங்களை கேட்போர்க்கு கண்ணீர் வரும் வகையில் அவர் பாடல்களை எழுதினார். இந்த பாடல் ஒரு தாயும், மகளும் பாடுவது போல எழுதப்பட்டதாகும். வாழ்க்கை இந்த கிராமத்து அனாதரவான மனுஷிகளை என்னவாய் அலைக்கழிக்கிறது. பள்ளி மாணவியான அந்தச் சிறுமி கிழிந்த பாவாடை சட்டைக்குப் பதில் புதிது கேட்கிறாள். பள்ளியில் சகதோழிகள் அவளது கிழிந்த ஆடைகளைப் பார்த்துக் கேலி பேசுவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியாமல் பரிதாபத்துக்குரிய தனது தாயிடம் கோரிக்கை வைக்கிறாள். தாய் தனது துயரம் தோய்ந்த வாழ்க்கையை மகளுக்கு எடுத்துச் சொல்கிறாள். உடுமாற்றுச் சேலை கூட இல்லாமல் ஒட்டுப்போட்ட சேலையோடு அவள் வாழ்க்கையுடன் போராடுகிறாள். படித்தபின் வேலை கிடைக்காத துயரத்தில் தனது ஒரே மகன் தற்கொலை செய்ததையும், அவனைத் தொடர்ந்து தனது கணவனும் மரித்த கதையையும் கூறுகிறாள், சமூகச் சூழலையும் எடுத்துக்கூறி தனது மகளான அந்தச் சிறுமிக்கு வாழ்க்கை இதுதான் என்று கூறித் தனது கையறு நிலையைத் தெரிவிக்கிறார். இதோ அந்தப் பாடல்: “அம்மா பாவாடை சட்டை கிழிஞ்சு போச்சுதே -என்னை பள்ளிக்கூட பிள்ளையெல்லாம் கேலி பேசுதே” இந்த பாடலை கேட்போர் கூட்டத்திலிருந்து அழுகையும் கேவல் சத்தமும் வரும். பச்சை நிலா ஆளும் வர்க்கங்களைப் புலியாகவும், வாழ்வு சூறையாடப்பட்ட விவசாயியை எருது மாடாகவும் கூறி புலியை எதிர்த்துப் போராட வேண்டுமென அறைகூவல் விடுக்கிறார். இதோ அந்தப் பாடல் “ஒத்தமாடு செத்துப் போச்சு ஒத்தமாடு வாங்கிவர பத்துப் பேர கேட்டுப் பாத்தேன் பணங் கிடைக்கலையே - இப்போ நெல்லுநாத்து வாங்கி நட பணங் கிடைக்கலையே (ஒத்த மாடு) பொழுது விடிஞ்சா தேடுன ஆளுக புத்தி சொல்ல வாராங்க பொருளக் காட்டி பணமுங் கேட்டா பொரணி பேசி போறாங்க” புலி வாழ வேண்டுமானால் மானைவிட வேகமாக ஓடியாக வேண்டும். மான் உயிர் வாழ வேண்டுமானால் புலியை விட வேகமாக ஓடியாக வேண்டும். வாழ்க்கைப் போராட்டம் இப்படியே தொடர்கிறது. புலிகள் வாழும் வரை காட்டில் மான்கள் அமைதியாய் வாழ முடியாது. சுரண்டல் தொடரும் வரை நாட்டில் மக்கள் இன்ப வாழ்க்கையை எட்டிக்கூடப் பார்க்க முடியாது. இதைக் கலைநயத்தோடு மக்களுக்கு எடுத்துச் சொன்னவர் கவிஞர் பச்சை நிலா. தனது பாடல்களை கலைஞர்கள் பாடும் போது, மிகவும் உன்னிப்பாக அதை காது கொடுத்து கேட்பார். தான் எழுதியது மக்களுக்கு புரிகிறதா என்பதற்காக கூட்டத்திலிருப்போரையும் கவனிப்பார். என் போன்ற தோழர்கள் அவரோடு பேசுகிற போது சொல்லுகிற ஆலோசனையை புறம் தள்ள மாட்டார். உதாரணமாக, “உங்கள் பாடல்களில் வாழ்க்கை துயரங்களையும், வறுமையையும் திறம்பட எடுத்துச் சொல்கிறீர்கள். ஆனால் அதை மாற்றுவதற்கு வழி சொல்லாமல் செல்கிறீர்கள்” என்ற போது எந்தப் பாட்டச் சொல்ற என்று கேட்டார். உதாரணமாக கடலச் செடி பாடல் வரிகள் அற்புதமாக அமைந்துள்ளது. ஆனால் அதன் முடிவில் நம்முடைய கட்சி என்ன வழிகாட்டுகிறது என்று இருக்க வேண்டாமா என்று சொல்கிற போது அவர் உடனே எழுதிக்கோ என்று கூறிவிட்டு, “செங்கொடி தான் சீக்கிரத்தில ஜெகமெல்லாமும் பறக்கனும்- தில்லி செங்கோட்டையில் நம்முடைய ஜெண்டாதானே பறக்கனும் எழுபத்தைந்து குடும்பங்களின் கொட்டம் அடக்கனும்- அவங்க எடுபிடிகள் கூட்டத்தையெல்லாம் சிறையில் தள்ளி அடைக்கனும்” -என்று சொல்லி முடித்தார். அவர் நிறைய பாடல்களை எழுதினார். கன்னிவாடியில் அவர் வீட்டுக்கு பல சினிமாக்காரர்கள் வந்து பாடலை பெற்று செல்வதாகச் சொல்வார். அவற்றை யார் பயன்படுத்தினார்கள் என்பதும் அவருக்கு நினைவில் இல்லை. அந்த மகத்தான கவிஞர் மறைந்துவிட்டார். அவரது பாடல்கள் தொகுக்கப்படாமலேயே உள்ளன. தலைசிறந்த கிராமப்புற கம்யூனிஸ்ட் கவிஞர் பச்சை நிலா. சுதந்திரப் போரில் கலை ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகள் பன்மொழி வித்தகர் ராகுல் சாங்கிருத்யாயன் - எஸ்.ஏ.பெருமாள் பிப்ரவரி 17, 2020 […] தத்துவங்கள், வரலாறு, நாவல்கள், சிறுகதைகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள், பயண நூல்கள், மதங்கள், அகராதிகள், நாட்டார் பாடல்கள், மொழி பெயர்ப்பு நூல்கள் என 60 ஆயிரம் பக்கங்கள் எழுதி குவித்தவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க உறுப்பினராக, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவராக வாழ்ந்து மறைந்த மகா பண்டிதர் ராகுல் சாங்கிருத்யாயன். அவர் 34 மொழிகள் கற்றவர். 1893ல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அஜம்கார் மாவட்டத்தில் பாந்தகா என்னும் கிராமத்தில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர். அவரது பூர்வீகப் பெயர் கேதார்நாத் பாண்டே. அவர் காசியில் சமஸ்கிருதம், அரபு, பெர்சிய மொழிகளில் கற்றார். இதர 30 மொழிகளையும் தானாகவே கற்றுக் கொண்டார். சிறுவனாக இருந்த பொழுதே வேலையையும், அறிவையும் தேடி அவர் வீட்டை விட்டு ஓடிப் போனார். சனாதன இந்து மத நம்பிக்கையை விடுத்து ஆரிய சமாஜத்தில் சேர்ந்தார். ஆரிய சமாஜத்தின் வேதக் கொள்கை பிடிக்காமல் மஞ்சள் ஆடை தரித்து புத்த பிக்கு ஆனார். இதற்கென நேபாளத்திலும், ஸ்ரீலங்காவிலும் சுற்றி புத்தமத நூல்களைப் படித்தார். பாலி, சிங்களம், திபெத் மொழிகளைக் கற்று புத்தமத புனித நூல்களை வாசித்தார். புத்த பிக்குவாக அவர் ஐரோப்பாவுக்கு பயணம் போனார். அங்கு இந்திய இயல் அறிஞர்களை சந்தித்தார். அவர்கள் அங்கேயே தங்கும்படி ராகுலை வேண்டினர். அமெரிக்காவுக்கும் புத்தமத பிரச்சாரத்திற்கு அழைக்கப்பட்டார். இரண்டையும் நிராகரித்தார். இந்தக் கட்டத்தில் மார்க்சியம் அவரை வெகுவாக கவர்ந்தது. 1935ல் முதன் முறையாக சோவியத் ரஷ்யா சென்று வந்ததும் அவர் தீவிர கம்யூனிஸ்ட் அரசியல் வாதியானார். 1948 ஜனவரியில் பம்பாயில் சாகித்ய சம்மேளன மாநாட்டில் அவர் தலைமையுரை நிகழ்த்தினார். அவர் சதா அறிவின் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஒரு வகையான நம்பிக்கையிலிருந்து இன்னொரு வகைக்கென்று சஞ்சாரம் செய்து வந்தார். மனிதகுலத்தை துன்ப துயரங்களிலிருந்து மீட்கும் வழியை தேடி திரியும் அமைதியற்ற மனிதராகவே அவர் இருந்தார். 11 ஆண்டுகள் அவர் இந்தியா முழுவதும் சுற்றினார். இமய மலைக்கு, திபெத்துக்கு தொலைதூரப் பகுதிகளுக்கும் சென்றார். தென்னிந்தியாவில் திருப்பதி, விஜயநகரம், காஞ்சிபுரம், மதுரை, இராமேஸ்வரம் எல்லாம் சுற்றினார். அவர் தமிழையும் படித்து காஞ்சிபுரத்தில் ஏழுமாதக் காலம் தங்கி அங்கிருந்த பௌத்த சுவடிகளை ஆய்வு செய்தார். அவர் ஸ்ரீலங்காவுக்கு சென்றபோது, தனது பெயரை ராகுல் சாங்கிருத்யாயன் என்று மாற்றிக் கொண்டார். அதுவே கடைசி வரை நிலைத்து விட்டது. 1932ல் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி மக்களின் வாழ்வை நேரில் கண்டு ஆய்வு செய்தார். சிறிது காலம் சோவியத் ரஷ்யாவில் லெனின் கிராடு பல்கலைக்கழகத்தில் பேராசிரியாக இருந்தார். மத்திய ஆசியாவை பற்றி ஒரு விசேஷ ஆய்வு நடத்தி பெரிய நூலை இயற்றினார். அந்நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. ஜப்பான், கொரியா, ஈரான், சீனா போன்ற நாடுகளிலும் அவர் புத்தமத ஆய்வுகளை நடத்தினார். சிறு வயதில் அவர் படித்த ஒரு உருது கதையில் வரும் வாசகங்கள் பெரிதும் கவர்ந்தன. “ஓ அறிவிலிகான், சோம்பேறிகளே புறப்படுங்கள், பரந்த உலகம் முழுவதும் சுற்றி வாருங்கள், இதற்காக உங்களுக்கு இன்னொரு வாழ்வு கிடைக்கப்போவதில்லை நீங்கள் நெடுநாள் வாழ்ந்தாலும் கூட.” இந்த இளமை உங்களுக்கு மீண்டும் வரப்போவதில்லை…. “எதுவும் நிலையானது அல்ல; அனைத்தும அநித்தியமானதே ‘ஸப்பம் காணிகம்’ என்று புத்தர் சொல்லியிருக்கிறார், ‘எதுவும் முடிவானது இல்லை’ என்று லெனினும் கூறியுள்ளார். எந்த மனிதனும் பூரணமாக இருப்பான் என்று நான் நம்பவில்லை. மனிதனும் பூரணமாக இருப்பான் என்று நான் நம்பவில்லை. என்னிலானவை நான் செய்கிறேன். வரும் தலைமுறையினர் என்னைவிட முன்னேறிச் செயல் புரியட்டும்…” என்பதே அவரது தாரக மந்திரமாக இருந்தது. ராகுல் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக பேசினார். அவர் கைது செய்யப்பட்டு ஆறு மாதம் சிறை வைக்கப்பட்டார். சிறையில் அவர் பாடல்கள், நாடகம் எழுதுவதிலும் குரானை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்ப்பதிலும் செயல்பட்டார். பின்பு காந்தியிடமிருந்து விலகி ராகுல் கம்யூனிசத்திலும் புரட்சிக் கொள்கையின் பக்கம் வந்தார். அவரிடமிருந்த மதப்பற்று, கடவுள் நம்பிக்கை எல்லாம் போய் நாத்திகராக மாறினார். விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று இரண்டாண்டுகள் பங்கிப்பூர், ஹசாரிபார்க் ஆகிய சிறைகளில் இரண்டு ஆண்டுகள் தனிக் கொட்டடியில் கடுங் காவல் தண்டனையை அனுபவித்தார். சிறையில் நான்கு ஆங்கில நாவல்களையும், பிரெஞ்சு கதைகளையும் இந்தியில் மொழி பெயர்த்தார். நலந்தா, விக்கிரமஷிலா பல்கலைக்கழகங்கள் அழிக்கப்பட்டபோது புத்தபிக்குகள் அங்கிருந்த ஓலைச்சுவடிகளை எடுத்துக் கொண்டு நேபாளம், அசாம், திபெத் ஆகிய இடங்களுக்கு தப்பி ஓடினர். அநேக நூல் நிலையங்களும், மடங்களும் அழிக்கப்பட்டு தீயிடப்பட்டன. எனவே பண்டைய நூல்கள் அதிகமாக திபெத்திற்கு போய்ச் சேர்ந்தன. அவைகளை தேடி ராகுல் நான்கு முறை திபெத் சென்று வந்தார். பல நூல்களை பிரதி எடுத்தும் கொண்டு வந்தார். அவர் ஏராளமாக படித்ததினால் நிறைய எழுதினார். வரலாற்று ஆதாரங்களுடன் கற்பனை படைப்புகளாக 13 புத்தகங்களை எழுதினார். வால்காவிலிருந்து கங்கை வரை சிந்து முதல் கங்கை வரை ராஜஸ்தானத்து அந்தப்புரங்களில் பொதுவுடைமைதான் என்ன? போன்ற நூல்கள் தமிழிலும் வெளி வந்துள்ளன. தோழர் ஏ.ஜி.எத்திராஜூலு ராகுலின் நூல்கள் சிலவற்றை தமிழில் அளித்துள்ளார். சுதந்திரப் போரில் கலை ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகள் பன்மொழி வித்தகர் ராகுல் சாங்கிருத்யாயன் - எஸ்.ஏ.பெருமாள் பிப்ரவரி 18, 2020 கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 8 திபெத்திய நூலகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலி, சமஸ்கிருத நூல்கள் இருந்தன. அவற்றில் பல முக்கிய நூல்களை ராகுல் பிரதி எடுத்து கொண்டு வந்து பாட்னா மியூசியத்திற்கு வழங்கினார். தாந்ரீக மற்றும் சூத்திர கிரந்தங்களின் பட்டியல் நூல்கள் ஜப்பானில் வெளியிடப்பட்டன. பௌத்த தர்க்க ஞானிகள் நாகார்ஜூனரின் மாத்தியாமிகம், அசங்காவின் யோகாச்சாரம், பத்மசம்பவா, புசிதான், தாராநாத் ஆகியோர் எழுதிய கிரியா, தந்திரா, சார்யா தந்திரா, யோக தந்திரா நூல்களை ராகுல் எடுத்து வந்தார். ராகுல் அரசியலில் தீவிரப் பங்கேற்றார். 1939ல் பீகாரில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் அவர் பூரணமாக ஈடுபட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையின் மோசமான நிலைமைகளை எதிர்த்து இரண்டு தடவை உண்ணாவிரதம் இருந்தார். ஒருமுறை 10 நாட்களும், மறுமுறை 17 நாட்களும். சில மாதங்களுக்கு பின் விடுதலை பெற்றார். 1940-42ல் 29 மாதங்கள் ஹஜாரிபாக், தேவாலி சிறைகளில் இருந்தார். ராகுல், தர்ஷன்- திக்- தர்ஷன் (847 பக்கங்கள்) போன்ற மகத்தான நூல்களை எழுதுவதில் இத் தண்டனை காலத்தைச் செலவிட்டார். கிரேக்க, இஸ்லாமிய, ஐரோப்பிய, இந்திய தத்துவ முறைகளை விமர்சன ரீதியில் ஆய்வு செய்து, மார்க்சியக் கண்ணோட்டத்தில் விளக்கவுரை தரும் இம்முயற்சியை அவர் முதல் முறையாக இந்தியில் எழுதினார். மூவாயிரம் வருடத்திய தத்துவ சிந்தனைகளை, ஒரு புதிய பகுத்தறிவுவாத - மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் ஆராயும் மிகப் பெரிய படைப்பு ஆகும் அது. அவர் எழுதிய நவ இந்தியாவின் புதிய தலைவர்கள் பற்றிய நயே பாரத் கே நயே நேதா இரண்டு பாகங்கள் ஆகும். காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லா, தோழர்கள் யூசுப், பரத்வாஜ், எஸ்.ஜி.சர்தேசாய், சுவாமி சகஜானந்த், எஸ்.ஏ. டாங்கே, கல்பனா தத்- ஜோஷி, பங்கிம் முகர்ஜி, பி.சுந்தரய்யா, கே.கேரளீயன், ஆர்.பி.மூர், டாக்டர் ஜி.அதிகாரி, டாக்டர் கே.எம்.அஷ்ரப், பி.சி.ஜோஷி, எஸ்.எஸ்.பாட்லிவாலா, முகம்மத் ஷாகித், சையத் ஜமாலுதின் புகாரி, பஸ்ல் இலாஷி குர்பான், முபாரக் சாகர், டாக்டர் இஸட். ஏ.அகமத், மகமது ஜப்பார், ‘நிராலா’, பந்த் மற்றும்பலரின் வாழ்க்கைக் குறிப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன. இப்புத்தகத்திற்காக ராகுல் ஒவ்வொருவரையும் பேட்டி கண்டு, அவரவருடைய குடும்ப வரலாறு, பிள்ளைப் பருவம், வாழ்வுத் தொழில், சமூக- அரசியல் போராட்டங்கள் மற்றும் செயல்கள் பற்றிய விவரங்களை சேகரித்தார். இந்தியாவின் சோசலிஸ்ட் சிந்தனை இயக்கத்தின் வரலாறு சம்பந்தமாக ஆய்வு செய்கிறவர்களுக்கு இது மதிப்புமிகுந்த ஆதார நூலாகப் பயன்படும். துரதிர்ஷ்டவசமாக, இந்தப்புத்தகம் இப்போது கிடைப்பதில்லை. பல வருடங்களாக இதன் மறு பதிப்பு அச்சிடப்படவேயில்லை. மனிதகுல வரலாறு பற்றி அவர் கூறும்போது, “பல கோடி வருடங்களாக மனிதன் பூமி மீது வசித்துவந்த போதிலும், அவனது அறிவு முன்னேற்றத்தின் மிக உயர்வான மகிமை பொருந்திய காலம் கி.மு.5000 முதல் கி.மு.3000 க்கு உட்பட்டதேயாகும். மனித சமுதாயத்தின் தோற்ற அமைப்பை மாற்றிய விவசாயம், பாசனமுறை, ஞாயிறு பஞ்சாங்கம் மற்றும் இவை போன்ற முக்கியமான கண்டுபிடிப்புகளையும் அப்போது தான் அவன் செய்தான். பின்பு கி.பி.1760க்குப் பின்னர் தான் மீண்டும் இத்தகைய அறிவார்ந்த வேகத்தை நாம் காண்கிறோம். நவீன கண்டுபிடிப்புகள் தொடர் சங்கிலியாகத் தொடங்குகின்றன. அப்போது முதல் காலகட்டத்தில் தத்துவம் இருந்ததில்லை. இரண்டாவது கட்டத்திலோ, தத்துவம் தனது வயது எல்லையையும் மீறி உயிரோடிருக்கிற ஒரு கிழவன் போல் தோன்றுகிறது. அவன் அவனுடைய வயதுக்காக மதிக்கப்படுகிறான்; ஆனால், அவன் அறிவியலை- சோதனைரீதியாக உண்மைப்படுத்தப்பட்ட சிந்தனையை, தனக்குத்துணை கொள்கிறபோது தான் அவனுடைய வார்த்தைகள் மக்களின் கவனத்தைக் கவர்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார். வால்காவிலிருந்து கங்கை வரை ராகுலின் மகத்தான கற்பனை படைப்பாகும். இந்தி முற்போக்கு இலக்கியத்தில் அது ஒருமைல் கல் என்று அநேக வருடங்களாகப் பேசப்படுகிறது. இந்திய வரலாற்றின் உண்மைகளைத் தன்னிச்சையாகத் திருத்தி மாற்றி எழுதியிருப்பதை மறை பொருள் வாத மற்றும் புதுப்பிக்கும் போக்குகளைச் சேர்ந்த விமர்சகர்கள் எதிர்த்திருக்கிறார்கள். வரலாற்று மற்றும் இயங்கியல் பொருள் முதல் வாதத்தை ஆதாரமாகக் கொண்டு மறுவிளக்கம் செய்யப்பட்டுள்ள சித்திரம் என்று மார்க்சியவாதிகள் அதைக் கூறுகிறார்கள். இந்தப் படைப்பைப் பற்றிய ஒரு விளக்கமான விவரிப்பை இங்கு தருவது பொருத்தமாக இருக்கும். உண்மையில், அது கற்பனை வடிவத்தில் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் படைப்பேயாகும். “ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்திருக்கக்கூடிய இந்திய சமுதாயத்தின் சரியான சித்திரங்களைத் தருவதற்கு நான் முயன்றிருக்கிறேன். ஆனால் இந்தவித முதல் முயற்சிகளில் தவறுகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் எப்போதும் உண்டு. இதை விடச் சரியான திட்டவட்டமான சித்தரிப்பை வருங்கால எழுத்தாளர்கள் தருவதற்கு நான் உதவியாக இருப்பேன். ஆனால் அதை எனது பெரும் பேறு ஆகவும் சாதனையாகவும் மதிப்பேன் என்று ராகுல் கூறினார். சிறுவனாய் இருந்தபோது அவரது சொந்தக் கிராமத்தில் பால்ய விவாகம் செய்து வைக்கப்பட்டார். பெயருக்கு இருந்த அந்த மனைவியை 34 வருடங்களுக்கு பிறகு இவரது கிராமத்திற்கு போனபோது முதல் மனைவி அவரை சந்திக்க வந்தார். அது பெரும் துயரம் தந்ததாக ராகுல் வருந்தினார். ராகுல் 1944- 47 ரஷ்யாவில் லெலின்கிராடு பல்கலைக்கழகத்தில் நான்காண்டுகள் பேராசிரியாக பணியாற்றினார். ரஷ்யாவில் பணியாற்றிய போது ஒரு ரஷ்ய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஜெயா என்ற மகளும், ஜேடா என்ற மகனும் பிறந்தனர். 1959-61 வரை ஸ்ரீலங்காவில் தத்துவ பேராசிரியராக மூன்றாண்டுகள் பணியாற்றினார். 1961 இறுதியில் ராகுல் தனது நினைவாற்றலை இழந்தார். 1962ல் சிகிச்சைக்காக சோவியத் ரஷ்யாவில் ஏழுமாதக் காலம் தங்கியிருந்தார். சிகிச்சை பலனிக்காமல் 14- 4- 1963ல் ராகுல் டார்ஜிலிங்கில் காலமானார். அவர் எழுதியவற்றில் 12 ஆயிரம் பக்கங்கள் அச்சு ஏறாமலே உள்ளன என்றும் இந்தியில் எழுதப்பட்ட அவருடைய ஆயிரக்கணக்கான பக்கங்கள் வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்படாமலே உள்ளன என்றும் கூறப்படும் செய்தி நமக்கு வருத்தம் அளிக்கிறது. பேராசிரியர் நா.வானமாமலை - எஸ்.ஏ.பெருமாள் பிப்ரவரி 19, 2020 […] கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 9 ஒரு காலத்தில் உ.வே.சாமிநாதய்யர் பண்டைய இலக்கியங்களைத் தேடிக் கண்டுபிடித்து நூல்களாக்கி வெளியிட்டுத் தமிழுக்குப் பெருமை சேர்த்தார். அதேபோல் நாட்டார் வழக்காற்றியலுக்கு பெருமைசேர்த்தவர் பேரா.நா.வானமாமலை ஆவார். தமிழகமெங்கும் அலைந்து திரிந்து நாட்டார் பாடல்களை சேகரித்து பிரசுரித்தார். இக்கதைப் பாடல்களை அவர் தொகுக்கும்போது அவற்றின் குறைகளையும் கொச்சையான சொற்களையும் நீக்கினார். பாடல்கள் உலவும் ஊர்கள், பாடல்களை சேகரித்துத் தந்தவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டார். பாடல்களுக்கான விளக்கக் குறிப்புகளையும் இணைத்துத் தந்தார். பேராசிரியரின் பெரு முயற்சி இல்லாவிட்டால் அவை நமக்குக் கிடைத்திராது. முத்துப்பட்டன் கதை, வீணாதி வீணன் கதை, ஐவர் ராசாக்கள் கதை, மாலையம்மன் கதை, தாலாட்டு, வீரபாண்டியக் கட்டபொம்மு கதை, கண்ணடியன் படை போர், மூன்றுலகு கொண்ட அம்மன் கதை, ராமப்பையன் அம்மானை, வெட்டும் பெருமான் கதை, ரவிக்குட்டி பிள்ளை போர், சிவகங்கை அம்மானை, சிவகங்கைக் கும்மி, பூலித்தேவன் சிந்து, காத்தவராயன் கதை, கான்சாகிப் சண்டை ஆகியவை நா.வா.தொகுத்தவற்றில் முக்கியமானவையாகும். இப்பாடல்களின் முதல் தொகுப்பு 1960ல் “தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்” என்ற பெயரில் வெளியானது. உ.வே.சா.வின் தேடல்காலத்தில் அவருக்கு ஏற்பட்ட சுவாரசியங்களைப் போலவே நா.வா.வுக்கும் பல நேர்வுகள் ஏற்பட்டன. உதாரணமாக தோழர் ஆர்.நல்லகண்ணு யாரிடமோ கண்டுபிடித்து ஐவர் ராசாக்கள் கதை என்ற ஏட்டுப் பிரதியை நா.வா.விடம் கொடுத்தார். சுமார் எண்பதுஏடுகளில் கரையான், பூச்சிகள் அரித்த துவாரங்களோடு அவை இருந்தன. அதில் குலசேகர பாண்டியனின் பிறப்பு வளர்ப்பு மட்டுமே வில்லுப்பாட்டு வடிவில் இருந்தது. அதேபோல் 1828ல் வெளியிடப்பட்ட நூல்கள் சிலவும் கிடைத்தன. அவற்றில் காணாமல் போன பல பக்கங்களைத் தேடிக்கண்டுபிடித்தார் நாவா. இத்துறையில் பிரிட்டிஷ் அறிஞர்கள் எட்கார் தர்ஸ்டன் போன்ற சிலர் ஆய்வு செய்து நூல்களை வெளியிட்டுள்ளனர். அதன்பின் தமிழில் பண்டித நடேச சாஸ்திரிகள் இதில் அக்கறை காட்டினார். கி.வா.ஜெகநாதன், பெ.தூரன், மு.அருணாசலம் போன்றோரும் தேடலில் ஈடுபட்டனர். ஆயினும் நா.வா.வின் உழைப்பும் அதனால் கிடைத்த பலன்களும் அதிகம். அக்காலத்தில் அவரை நடமாடும் பல்கலைக்கழகம் என்று அழைத்தோம். நா.வா. 17.12.1917ல் நான்குநேரியில் பிறந்தார். தனது கல்வியை நான்குநேரியிலும் ஏர்வாடியிலும் துவக்கி நெல்லையில் இண்டர் மீடியட்டும் பின்பு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பும் படித்தார். அத்தை மகள் சீதையம்மாளை திருமணம் செய்து கொண்டார். நான்குநேரி, கோவில்பட்டி, தென்காசி, மதுராந்தகம் ஆகிய ஊர்களில் ஆசிரியராய் பணியாற்றினார். இக்காலத்தில் சீதையம்மாள் காலமானதால் பத்மாவதியம்மாளை திருமணம் செய்து கொண்டார். நா.வா. தனது கல்லூரிக் காலத்திலேயே கம்யூனிஸ்ட் ஆனார். தினசரி பல மணி நேரம் நூல்களை வாசிக்கும் அவர் மார்க்சிய-லெனினிய நூல்களையும், கம்யூனிசக் கோட்பாடுகளையும் கற்றுத் தேர்ந்தார். தனது சொந்த ஊரில் இளைஞர் சங்கம், விவசாயிகள் சங்கம், கட்சிக் கிளையை தோற்றுவித்தார். தோழர்கள் ஆர்.நல்லகண்ணு, ப.மாணிக்கம், வி.எஸ்.காந்தி, என்.டி.வானமாமலை, சு.பாலவிநாயகம் ஆகியோர் இவரது சகதோழர்களாக இருந்தனர். மார்க்சிய வகுப்புகள் நடத்த பல ஊர்களுக்கும் சென்று எளிய முறையில் போதித்து வந்தார். இவரது வகுப்புகளைக் கேட்டவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகினர். நா.வா.ஒரு பதிப்பகத்தை துவக்கி நூல்களை வெளியிட்டார். தோழர்கள் தொ.மு.சி.ரகுநாதன், தி.க.சிவசங்கரன் இவருடன் நெருக்கமாக இருந்தனர். பதிப்பகத்தோடு டுடோரியல் காலேஜ் துவக்கி பரீட்சைகளில் தோல்வியடைந்த மாணவர்களைத் தேற்றி வெற்றி பெறச் செய்தார். சில ஊர்களில் கிளைகளையும் ஆரம்பித்தார். 1948ல் கம்யூனிஸ்ட்டுகள் மீது அடக்குமுறைக் காலத்தில் நெல்லை சதிவழக்கில் நா.வா.குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். கைது செய்து சிறையிலடைக்கப்பட்டவர் போதுமான சாட்சியம் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டார். “ஆராய்ச்சி” என்ற நா.வா.வின் மாத ஏடு பிரபலமானதாகும். பலரை அறிவுஜீவிகளாக மாற்றிய பத்திரிகை இது. என் போன்ற பலரும் வளர ஆராய்ச்சி உதவியது. இதில் வந்த பல ஆய்வுகள் வரலாற்றியல் - இயங்கியல் - தர்க்கவியல் கோட்பாடுகளை உள்ளடக்கியதாகும். அதனால் வாசகர்களின் அறிவை மேம்படுத்தியது. அவர் விட்டுச் சென்ற பணிகளை தோழர்கள் ஆ.சிவசுப்பிரமணியம், தோதாத்ரி, முத்துமோகன் போன்றவர்கள் தொடர்ந்து வருகிறார்கள். புதிய தலைமுறைகள் நா.வா.விட்டுச் சென்ற ஆய்வுப் பணிகளைத் தொடர வேண்டியுள்ளது. 2.2.1980ல் அவரது மூத்தமகன் கிருஷ்ணமூர்த்தி இல்லத்தில் மூளையில் ரத்தக்குழாய் வெடித்ததால் நா.வா.காலமானார். சேர்ந்திசை மேதை எம்.பி.சீனிவாசன் - எஸ்.ஏ.பெருமாள் பிப்ரவரி 20, 2020 […] கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 10 “மக்கள் அனை வருக்குமே பாடத்தெரியும். ஆனால் பாட்டுத்தான் தெரியாது. ஆனால் ஆணும் பெண்ணுமாகப் பலர் சேர்ந்து பாடும் போது மக்களும் வாயசைப்பார்கள். பாடல்கள் பாடும் போது சேர்ந்திசை மக்களுக்கு உணர்வூட்டி உணர்ச்சி உண்டாகும்” என்பார் தோழர் எம்.பி.சீனிவாசன். அவர் கர்நாடக சங்கீதத்தையும் மேற்கத்திய இசையையும் நன்கு பயின்றவர். கம்யூனிஸ்ட் கட்சிக்கே, உழைப்பாளி மக்களுக்கே தனது வாழ்வை அர்ப்பணித்தவர். எம்.பி.எஸ். மறைந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமனின் தம்பி மகன் எம்.ஆர்.வி.யின் தம்பி எம்.ஆர்.பாலகிருஷ்ணன். அவர் தூர கிழக்கு நாடுகளில் தூதராய் பணியாற்றியவர். இவரது மகன் சீனிவாசன் 19.9.1925ல் பிறந்தார். மாணவப் பருவத்திலேயே சென்னை மாணவர் சங்கத்திலும், தமிழக மாணவர் சம்மேளனத்திலும் தீவிரமாய் செயல்பட்டார். தேச விடுதலையும் உழைப்பாளி மக்கள் சுரண்டலிலிருந்து விடுதலை பெறுவதையும் லட்சியமாய் கொண்டார். எம்.பி.எஸ்.மாணவர் இயக்கப் பணிகளுக்காக நாடு முழுவதும் பள்ளிகள் கல்லூரிகளுக்குப் பயணித்தார். வசதிமிக்க குடும்பத்தில் பிறந்தாலும் அவற்றையெல்லாம் உதறிவிட்டு பொதுவாழ்வுக்கு வந்தார். அவரைப் போன்றே அதே லட்சியத்துடன் கலைத்துறையில் பணியாற்றி வந்த சஹீதா மீது காதல் பிறந்தது. சஹீதா பிரபல காங்கிரஸ் தலைவர் டாக்டர் சைபுதீன் கிச்சுலுவின் மகளாவார். இந்து முஸ்லிம் வேறுபாடின்றி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் ஒரே லட்சியத்தை நோக்கி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக வீரநடை போட்டனர். மதுரைத் தியாகி மணவாளன் எழுதிய “விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே தோழர்” என்று அவர் இசையமைத்துப் பாடிய பாடல் இன்று வரை பாடப்படுகிறது. வங்கப் பஞ்சத்தின் போது எம்.பி.எஸ்., கார்டூனிஸ்ட் ராகி, ரமணிபாயுடன் தமிழகமெங்கும் கட்சிப் பொதுக் கூட்ட மேடைகளில் பஞ்சத்தின் கொடுமைகளை விவரித்துப் பாடினர். இப்பாடல்களைக் கேட்டு மக்கள் உளம் நெகிழ்ந்து பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்தனர். வங்கம், கேரளத்தில் கம்யூனிஸ்ட்டுகள் பல புதிய சினிமாக்களைக் கொண்டு வந்தனர். அதேபோல் தமிழிலும் சினிமா கொண்டுவர எம்.பி.எஸ். முயற்சித்தார். அப்போது உருவான குமரி பிலிம்ஸ் எடுத்த படம்தான் ‘பாதை தெரியுது பார் ஆகும். இதன் இசை அமைப்பாளர் எம்.பி.எஸ். அன்றைய மக்களின் வளர்ச்சியற்ற தன்மையால் படம் தோல்வியைத் தழுவியது. இந்தப் பின்னணியில்தான் தோழர் ஜீவா 1961ல் கலை இலக்கியப் பெருமன்றத்தை துவக்கினார். எம்.பி.எஸ். அதன் மத்தியக்குழு உறுப்பினராகி இசைத் துணைக்குழுவின் கன்வீனராகவும் தேர்வு செய்யப்பட்டார். தமிழ் திரையுலகில் அவர் உதாசீனப்படுத்தப்பட்டார். ஆனால் அவருக்கு கேரளம் கைகொடுத்தது. 1972ல் சுயம்வரம் என்ற படத்திற்கு இசையமைத்தார். படம் ஜனாதிபதி பரிசு பெற்றது. சிறந்த இசையமைப்பாளர் விருதை கேரள அரசு வழங்கியது. அதைத் தொடர்ந்து பல படங்களுக்கு அவர் இசையமைத்தார். ‘சித்திரைத் திருநாள்’ என்ற படத்தில் ஒரு சங்கீத சாம்ராஜ்யத்தையே நடத்திக் காட்டினார். தமிழில் அவர் இசையமைத்த “தென்னங்கீற்று ஊஞ்சலிலே - தென்றலில் நீந்திடும் ஓலையிலே - சிட்டுக்குருவி பாடுது - தன் பெட்டைத் துணையைத் தேடுது சின்னச் சின்ன மூக்குத்தியாம் - சிவப்புக் கல்லு மூக்குத்தியாம். துளி துளி மழைத்துளி, சித்திரப்பூஞ்சோலையடி சிரித்தமுகம் போன்ற பாடல்களை இன்று கேட்டாலும் இனிக்கிறது. கட்சிக்கென்று கம்யூனிஸ்ட்டுக் கட்சி ஒரு இசைத் தட்டை உருவாக்கியது. 1964ல் எம்.பி.எஸ். இசையமைத்து வெளிவர இருந்தது. அக்காலத்தில் இசைத்தட்டு தயாரிக்கும் ஒரே நிறுவனம் மெய்யப்பச் செட்டியாருக்குச் சொந்தமான சரஸ்வதி ஸ்டோர்ஸ் ஆகும். அவர்கள் கம்யூனிஸ்ட் வாடையே ஆகாது என்று மறுத்துவிட்டனர். எம்.பி.சீனிவாசனும், ஒளிப்பதிவாளர் இயக்குநர் நிமாய் கோஷும் இணைந்து திரைப்படத்தொழிலில் இருந்த அனைவரையும் ஒன்றுபடுத்தி சங்கமாக்கினர். தென்னிந்திய இயக்குநர்கள் சங்கம், இசைக்கலைஞர்கள் சங்கம், திரைப்படத் தொழிலாளர் சங்கம் போன்ற பத்து தனித்தனி சங்கங்களை உருவாக்கினர். பின்பு அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தையும் உருவாக்கினர். அதன் பின் அகில இந்திய சம்மேளனத்தையும் இருவரும் இணைந்து உருவாக்கினர். தமிழகத்தில் திரைப்படத்தொழிலாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் உரிமைகளுக்காக வேலைநிறுத்தம் நடந்தது. முதலாளிகள் தோழர் எம்.பி.எஸ்.ஐக் கொலை செய்ய முயற்சித்து தோற்றனர். பின்பு கருங்காலிகள் சங்கங்களை நிறுவினர். காலப்போக்கில் அவையனைத்தும் காணாமல் போய்விட்டன. 1976ஆம் ஆண்டு சென்னை வானொலியில் 300 பாடகர்களை வைத்து சுதந்திரத் தினத்தன்று பாரதியாரின் பாடல்களை சேர்ந்திசையாகப் பாடினார். அதைகேட்டு பாரதியின் பேத்தி லலிதா பாரதி எம்.பி.எஸ்.ஐ மிகவும் பாராட்டினார். மும்பையிலும் கல்கத்தாவிலும் உள்ளது போல சென்னையில் சேர்ந்திசைக் குழுவை உருவாக்கினார். 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க கலைஞர்களுக்கு பொள்ளாச்சியில் மூன்று நாட்கள் சேர்ந்திசைப் பயிற்சியளித்தார். பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு தனது மாணவி திருமதி ராஜேஸ்வரி மூலம் பாடல் பயிற்சியளித்தார். தன்வாழ்வின் இறுதிவரை மார்க்சியத்தையும் கம்யூனிஸ்ட் கட்சி மீதும் நம்பிக்கை வைத்து செயலாற்றினார். சேர்ந்திசைப் பயிற்சியளிக்க லட்சத்தீவுகளுக்கு எம்பிஎஸ் சென்றிருந்தார். 9.3.1988ல் அங்கேயே காலமானார். சேர்ந்திசை இருக்கும் வரை, இசை உள்ள வரை அவரது புகழ் நிலைத்திருக்கும். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை உருவான வரலாறு - என்.ராமகிருஷ்ணன் பிப்ரவரி 21, 2020 […] தத்துவ அறிஞர்களான காரல் மார்க்சும், பிரெடரிக் ஏங்கெல்சும் 1844ஆம் ஆண்டில் முதன் முறையாக பாரீஸ் நகரில் சந்தித்தனர், இருவரும் ஜெர்மனி நாட்டின் பிரஷ்ய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் மன்னராட்சி ஒழிப்பு, நிலப்பிரபுத்துவ ஒழிப்பு மற்றும் முதலாளித்துவ ஒழிப்பு என்பதில் தீவிரம் கொண்டவர்கள். தொழிலாளி வர்க்கம் மற்றும் உழைப்பாளி மக்களிடம் பரிவு கொண்டவர்கள். இப்பொழுது இவ்விருவரும் பாரீஸ் நகரில் ஒன்றாகத் தங்கியிருந்து 10 நாட்கள் ஐரோப்பிய தத்துவம், அரசியல் பொருளாதாரம் மற்றும் அச்சமயத்தில் பிரான்ஸ் நாட்டில் ஆர்வத்துடன் பேசப்பட்ட கற்பனா சோசலிசக் கருத்துக்கள் குறித்து விவாதித்தனர். தங்கள் இருவர் கண்ணோட்டமும் ஒரே மாதிரியாக இருந்ததை உணர்ந்து கூட்டாகச் செயல்படுவதென்றும், தொழிலாளி வர்க்கத்திற்காக ஒரு புரட்சிகர தத்துவத்தை உருவாக்கி ஒரு புரட்சிகர அமைப்பை உருவாக்குவதென்றும் முடிவு செய்தனர். அதன்படி ஓராண்டு காலத்திற்குள் தங்கள் கருத்தை விளக்கி ஜெர்மன் தத்துவம் என்ற நூலை எழுதினர். ஆனால் அந்நூலை ஐரோப்பாவில் யாரும் வெளியிட முன்வரவில்லை. ஆனால் மார்க்சும், ஏங்கெல்சும் அதைப் பற்றி கவலைப்படவில்லை. ‘எங்களுக்குத் தேவையான சுய தெளிவு கிடைத்துவிட்டது. அது போதும்’ என்று கூறிவிட்டனர். இதையடுத்து, இந்தத் தத்துவத்தை எந்த மக்கள் பகுதியினரைக் கொண்டு அமலாக்குவது என்று அவர்களிருவரும் விவாதித்தனர். முதலாளித்துவ சமுதாயத்தை மாற்றி சோசலிச சமுதாயத்திற்கான போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்த தகுதி வாய்ந்தது. நவீன ஆலைத் தொழிலாளி வர்க்கமே என்ற முடிவுக்கு மார்க்சும், ஏங்கெல்சும் வந்தனர். இச்சமயத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றது. மார்க்ஸ் ஆபத்தான புரட்சிக்காரர் என்று கருதி பிரெஞ்சு அரசாங்கம் அவரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது. எனவே மார்க்ஸ் தன் மனைவி ஜென்னியையும், கைக்குழந்தையான மகளையும் அழைத்துக் கொண்டு அண்டை நாடான பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் நகருக்குச் சென்றார். மார்க்ஸைக் குறித்து அறிந்திருந்த பெல்ஜியம் அரசாங்கம் ‘அவர் எந்த அரசியல் வேலையிலும் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையை விதித்து அவர் குடும்பம் அங்கே தங்க அனுமதியளித்தது. ஏங்கெல்ஸ் பாரீசிலேயே தங்கி தொழிலாளிகளிடையே அவர்கள் உருவாக்கிய தத்துவத்தை பிரச்சாரம் செய்வதென்று முடிவு செய்யப்பட்டது. இப்பொழுது மார்க்ஸ் முன்பு ஒரு பிரச்சனை எழுந்தது. தொழிலாளி வர்க்கத்திற்கான நல்லதொரு தத்துவம் உருவாக்கப்பட்டு, அதற்கு தலைமை தாங்கி நிறைவேற்றும் சக்தியையும் கண்டுபிடித்தாகிவிட்டது. ஆனால் அதைச் செய்ய ஒரு தொழிலாளி வர்க்க அமைப்பு வேண்டுமே, அதற்கென்ன செய்வது என்ற சிந்தனையில் அவர் இருந்த பொழுது ஒரு சம்பவம் நிகழ்ந்தது. லண்டனிலிருந்து செயல்பட்டு வந்த ‘நீதியாளர் கழகம்’ (League of Justice) என்ற அமைப்பைச் சேர்ந்த ஜோசப் மோல் என்பவர் மார்க்ஸ் இல்லத்திற்கு வந்து அவரைச் சந்தித்தார். அந்த அமைப்பில் 400 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஜெர்மானியர்கள். மார்க்ஸ், ஏங்கெல்சின் சொந்த மாநிலமான பிரஷ்யாவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் கணிசமானோர் பிரஷ்ய மன்னனுக்கெதிராக பிரச்சாரம் செய்ததற்காக அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்கள். மீதிப் பேர் அரசியல் காரணங்களுக்காக தாங்களாகவே வெளியேறியவர்கள். கற்பனாவாத சோசலிசம் என்பதுதான் அந்த அமைப்பின் கருத்து. அத்துடன் சதிச் செயலில் ஈடுபடுவது என்ற போக்கும் இருந்தது. இவர்கள் அனைவரும் கைவினைஞர்கள் ஆவர். இவர்களில் முக்கியமானவர்கள் செருப்பு தயாரிப்பாளர் ஹீன்ரிச் பாயர், கடிகாரம் தயாரிப்பாளர் ஜோசப் மோல் மற்றும் காரல் ஷாப்பர் போன்றவர்கள். மார்க்ஸ், ஏங்கெல்சைப் பற்றி கேள்விப்பட்ட இந்தத் தலைவர்கள் அவர்கள் இருவரையும் சந்தித்து தங்கள் அமைப்புக்கு வழிகாட்ட வேண்டுமென்று கேட்டுக் கொள்ள முடிவு செய்தனர். அதன் பொருட்டு ஜோசப் மோலை தங்கள் சங்கப் பிரதிநிதியாக மார்க்சை சந்திக்க அனுப்பினார். மார்க்ஸ் ஏற்கெனவேயே இந்த அமைப்பு குறித்து நன்கறிவார். இப்பொழுது ஜோசப் மோலைச் சந்தித்தார். மோல் பேசும் பொழுது தங்கள் அமைப்பில் மார்க்சும், ஏங்கெல்சும் சேர்ந்து தங்களுக்கு வழிகாட்ட வேண்டுமென்றும், சதிச் செயல்புரிவது போன்றவற்றை தாங்கள் கைவிட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த மார்க்ஸ், மோல் நேராக பாரீசுக்குப் போய் ஏங்கெல்சை சந்தித்துப் பேசும்படி கூறினார். மோலும் அவ்வாறே செய்தார். ஏங்கெல்சும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் மார்க்சும், ஏங்கெல்சும் உடனே அதில் சேரவில்லை. சிறிது காலம் கழித்து நீதியாளர் கழகத் தலைவர்கள் பிரஸல்சுக்கு வந்து மார்க்ஸ்- ஏங்கெல்சைச் சந்தித்து மீண்டும் வலியுறுத்தினர். மார்க்ஸ் ஒன்றை அவர்களுக்குச் சுட்டிக் காட்டினார். ‘அனைத்து மனிதர்களும் சகோதரர்களே!’ என்ற நீதியாளர் கழக பிரகடனத்தைச் சுட்டிக்காட்டி இது தவறானது. முதலாளிகளும், தொழிலாளிகளும் எதிரெதிர் வர்க்கங்கள், வேறு வேறு நலன்கள் கொண்டவர்கள், முதலாளிக்கு தன் உழைப்புச் சக்தியை கூலிக்கு விற்கும் தொழிலாளி அந்த முதலாளிக்கு சகோதரன் ஆக முடியுமா என்ற கேள்வியை எழுப்பினார். அதைக் கேட்ட நீதியாளர் அமைப்புத் தலைவர்கள் மார்க்ஸ் கூறுவது சரியானதென்று ஏற்றுக்கொண்டு தங்களுக்கு ஒரு புதிய பிரகடனம் உருவாக்கித் தரும்படி அவரைக் கேட்டுக் கொண்டனர். அவர் எழுதிக் கொடுத்த புதிய பிரகடனம் “உலகத் தொழிலாளிகளே ஒன்று சேருங்கள்.” நீதியாளர் கழகத் தலைவர்கள் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். மார்க்சும், ஏங்கெல்சும் நீதியாளர் கழகத்தின் உறுப்பினர் ஆனார்கள். அந்த தலைவர்கள் மீண்டும் ஒரு கோரிக்கை வைத்தனர். தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு அரசியல் கல்வி புகட்டுவதற்காக தொழிலாளி வர்க்கம், வர்க்கப் போராட்டம் குறித்து சிறு சிறு குறிப்புகள் எழுதித் தரும்படி கேட்டுக் கொண்டனர். அந்தப் பணியை ஏங்கெல்ஸ் ஏற்றுக் கொண்டார். முதலில் தனித்தனி குறிப்புகளாக எழுதினார். பின்னர் அவை அனைத்தையும் கொண்ட ஒரு சிறு நூலாக ‘கம்யூனிஸ்ட் நம்பிக்கை வாக்கு மூல நகல்’ என்ற பெயரில் நீதியாளர் கழக மாநாட்டில் வெளியிடப்பட்டது. பின்னர் இது நீதியாளர் கழகத்தாரால் விவாதிக்கப்பட்டு அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற மாநாட்டில் இறுதியாக்கப்பட்டு “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்’’ என்ற பெயரில் வெளிவந்தது. இந்த மாநாட்டில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். அதில் ‘கம்யூனிஸ்ட் என்பதின் நோக்கம் என்ன?” ‘அந்த நோக்கத்தை எவ்வாறு அடைவது’, ‘பாட்டாளி என்றால் யார்?’, ‘பாட்டாளி எப்பொழுதும் இருந்ததில்லையா?’, ‘பாட்டாளிக்கும் அடிமைக்கும் என்ன வித்தியாசம்’, ‘பாட்டாளிக்கும் பண்ணை அடிமைக்கும் என்ன வித்தியாசம்?’, ‘பாட்டாளிக்கும் கைவினைஞருக்கும் என்ன வித்தியாசம்?’, ‘நாட்டிலுள்ள மதங்களை கம்யூனிஸ்ட்டுகள் நிராகரிக்கிறார்களா?’ போன்ற ஏராளமான கேள்விகளை ஏங்கெல்ஸ் எழுப்பி அவரே அதற்கும் பதிலளித்தார். மார்க்சும், ஏங்கெல்சும் மற்றொரு கருத்தைத் தெரிவித்தனர். அதாவது நீதியாளர் கழகம் என்ற பெயரை மாற்றி ‘கம்யூனிஸ்ட் கழகம்’ (Communist League) என்ற பெயரை வைக்கும்படி கூறினார். அதை அவர்கள் ஏற்று தங்கள் அமைப்பின் பெயரை ‘கம்யூனிஸ்ட் லீக்’ என்று மாற்றினர். இந்த மாநாடு மார்க்சும், ஏங்கெல்சும் ஒரு பிரகடன வடிவில் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு (கம்யூனிஸ்ட் லீக்) ஒரு திட்டத்தை எழுதித் தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டது. அவர்களும் அதை ஏற்று ஒரு நீண்ட பிரகடனத்தை எழுதிக் கொடுத்தனர். அதுதான் உலகப் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. இதன்பின் தங்கள் அமைப்பிற்கு ஒரு ‘அமைப்புச் சட்டம்’ உருவாக்கித் தர வேண்டுமென அதன் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். அதை ஏற்று மார்க்ஸ், அமைப்புச் சட்டத்தை எழுதிக் கொடுத்தார். ஜனநாயக மத்தியத்துவம் என்ற கோட்பாட்டை மையமாகக் கொண்ட அந்த கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புச் சட்டம் இன்று உலகம் முழுவதுமுள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கு வழிகாட்டும் அமைப்புச் சட்டமாக உள்ளது. 400 உறுப்பினர்களைக் கொண்ட கம்யூனிஸ்ட் கழகம்’என்ற கட்சிதான் உலகின் முதல் கம்யூனிஸ்ட் கட்சி. இது இன்று ஏழரை கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகளாக உருவெடுத்துள்ளன. மற்றொரு பெருமைக்குரிய செய்தி என்னவென்றால் உலகின் அனைத்துப் பிரதான மொழிகளில் வந்துள்ள மூன்று நூல்களில் ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. மற்ற இரண்டு நூல்கள் பைபிள் மற்றும் திருக்குரான் ஆகும். அடக்குமுறை காலத்தில் உதவிய நடிகவேள் எம்.ஆர்.ராதா - எஸ்.ஏ.பெருமாள் பிப்ரவரி 22, 2020 […] கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 11 தமிழ்நா டக உலகிலும், சினிமா உலகிலும் கடந்த இருபதாம் நூற்றாண்டில் கதாநாயகன், வில்லன், காமெடியன் என பல வேடங்களில் நடித்துப் புகழ்பெற்றவர். பெரியாரின் கொள்கை வழிநின்று நாடகங்கள் மூலம் மக்களுக்கு மூட நம்பிக்கைகள், மூடவழக்கங்களை எதிர்த்து முற்போக்குக் கருத்துக்களை விதைத்தவர் எம்.ஆர்.ராதா, ஜீவா போன்ற கம்யூனிஸ்ட்டுத் தலைவர்களோடும் நெருக்கமாக இருந்தார். ராதாவின் நாடக அரங்கத் திரைச்சீலையில் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்ற முழக்கம் எழுதப்பட்டிருக்கும். 1950ல் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் ராதா திருச்சியில் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார். அங்கு வந்த காவல்துறை அதிகாரி உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற திரை முழக்கத்தைப் படித்துவிட்டு ராதாவிடம் “நீங்கள் என்ன கம்யூனிஸ்டா?” என்று கேட்டார். அதற்கு ராதா “பசியால் வாடும் உழைப்பாளிகளை ஆதரித்துப் பேசினால் அவன் கம்யூனிஸ்டா” என்று திருப்பிக் கேட்டார். திரையைக் கழற்ற முடியாது என்று கூறிவிட்டார். இதற்கிடையில் ரசிகர்கள் கூச்சலிட்டதால் அதிகாரி போய்விட்டார். ராதா 1907ஆம் ஆண்டு சென்னையில் ராஜகோபால் நாயுடு என்பவரின் மகனாய் பிறந்தார். மெட்ராஸ் ராஜகோபால் நாயுடு ராதாதான் எம்.ஆர்.ராதா, அவர் தந்தையார் முதல் உலகப் போரில் பங்கேற்ற ராணுவ வீரர். போரில் மரணமெய்தினார். ராதா சிறுவனாக இருந்த போதே வீட்டில் கோபித்துக் கொண்டு ஓடிப்போனார். எழும்பூர் ஜங்சனில் பெட்டி தூக்கி சுமைப்பணியாளராய் சொந்த வாழ்வைத் துவங்கினார். அங்கிருந்து ஆலந்தூர் - டப்பி ரெங்கசாமி நாயுடு நாடகக் கம்பெனியில் சேர்ந்து பாலபார்ட் வேடங்களில் நடித்தார். பல கம்பெனிகளைச் சுற்றிவிட்டு சென்னை ஜெகநாதய்யர் கம்பெனியில் சேர்ந்தார். அங்கு சி.எஸ்.ஜெயராமன், யதார்த்தம் பொன்னுச்சாமி பிள்ளை, நவாப் ராஜமாணிக்கம், பி.டி.சம்பந்தம், கே.சாரங்கபாணி ஆகியோர் இருந்தனர். ராதா இக்கம்பெனியில் நடிகர், கார் டிரைவர், மெக்கானிக் மற்றும் எலெக்ட்ரீசியனாக பல வேலைகள் செய்தார். ஆரம்பத்தில் ராதா தேசிய இயக்கத்தில் தொண்டராக இருந்தார். காந்திஜி மாயவரம் (இன்றைய மயிலாடுதுறை) வந்த போது அங்குதான் நாடகம் நடந்து கொண்டிருந்தது. அங்கு அந்நியத் துணி பகிஷ்காரம் பற்றிய காந்தியின் பேச்சைக் கேட்டதும் தான் உடுத்திய வேட்டி சட்டையைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டு ராதா கோவணத்துடன் கம்பெனிக்கு வந்து சேர்ந்தார். ராதாவுக்கு மாவீரன் பகத்சிங்கை மிகவும் பிடிக்கும். அவர் தூக்கிலிடப்பட்டதும் பல நாட்கள் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தார். ராதா தனது ஒரு மகளுக்கு ரஷ்யா என்று பெயரிட்டது சோவியத் நாடு மீதான ஈர்ப்பால் தான். அதுபோல் மற்றொரு மகளுக்கு பெரியாரின் அண்ணன் மகனும் காங்கிரஸ் தலைவருமாக இருந்த சம்பத் மீதான மரியாதையால் சம்பத்ராணி என்று பெயரிட்டார். இவர்கள் இருவருக்கும் பெரியார் தான் திருமணம் செய்து வைத்தார். கம்யூனிஸ்ட் கட்சி மீதான அடக்குமுறைக் காலத்தில் கட்சித் தலைவர்களுக்கு பல உதவிகள் புரிந்தார். ஜீவா ராதாவின் வீட்டில்தான் தலைமறைவாக இருந்தார். ராதாவின் நண்பர் ஒருவர் அவர் வீட்டுக்கு வந்த போது அங்கிருந்த சாமியார் ஒருவரைப் பார்த்து “உங்களிடம் சாமியார் எப்படி?” என்று கேட்டார். ராதா பதிலளிக்கவில்லை. ஜீவாதான் சாமியார் வேடத்தில் இருந்தார். தொடர்ந்து ஜனசக்தி பத்திரிகைக்கு நிதி தேவைப்பட்டதால் ராதாவை ஜீவா அணுகினார். ராதா ஜனசக்திக்காக பத்து நாடகங்களை நடத்தி நிதி வசூலித்துக் கொடுத்து உதவினார். அந்தக் காலத்தில் ஒரே நாடகம் ஒரு ஊரில் 100 நாள், 150 நாள் நடக்கும். திருமால் நாடகத்தில் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் காட்சியில் அவரின் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் சுற்றும்படி செய்திருந்தார். எலெக்ட்ரீசியன் ராதா, அதைப் பார்த்துவிட்டு பிரபல தொழிலதிபர் சேஷசாயி “இதை எப்படிச் செய்தே?” என்று கேட்டுவிட்டு ராதாவின் பரமரசிகராகிவிட்டார். மதுரையில் நாடகம் நடந்த போது டி.வி.சுந்தரம்.அய்யங்கார் ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்திருந்தார். அங்கு ஸ்பேர் பார்ட்ஸ் வாங்க ராதா போவார். இதனால் டி.வி.எஸ்.அய்யங்காருக்கும் ராதாவுக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. பின்பு ராதா சிறையிலிருந்த போது டி.வி.எஸ்.சின் மகன், அப்பாவின் நண்பர் என்ற முறையில் சிறையில் சென்று பார்த்துள்ளார். கோவை ஜி.டி.நாயுடு ராதாவை மிகவும் நேசித்து அவரது நிரந்தர ரசிகரானார். திராவிட இயக்கத் தலைவர் பட்டுக்கோட்டை அழகிரிதான் ராதாவுக்கு நடிகவேள் என்ற பட்டத்தை சூட்டினார். ராதா முதன் முதலாக “ராஜசேகரன்” என்ற படத்தில் நடித்தார். பின்பு ”சந்தனத் தேவன்” படம் வெற்றிபெற்றது. ராதாவின் ரத்தக் கண்ணீர் நாடகம் தொடர்ந்து வெற்றி பெற்றதால் அதை பெருமாள் முதலியார் படமாக்கினார். திருவாரூர் தங்கராசு கதை வசனம். அப்படத்தில் நடிக்க உயர்ந்த தொகையாய் ஒன்றே கால் லட்சம் வாங்கினார். ஏனென்றால் அப்போது ராதா எம்ஜிஆரை சுட்ட வழக்கில் சிறையில் இருந்தார். எம்.ஜி.ஆருடன் தகராறு - துப்பாக்கிச்சூடு - ஐந்தாண்டு சிறை வாசம் ஆகியவற்றால் ராதாவின் திரை வாழ்வில் தொய்வு ஏற்பட்டது. தோழர் வி.பி.சிந்தன் கத்திக்குத்துக்காளாகி அரசு மருத்துவமனையில் இருந்த போது பதைப்புடன் வந்து அவரைப் பார்த்து ஆறுதல் கூறிச் சென்ற ஒரே நடிகர் எம்.ஆர்.ராதா தான். ராதாவின் வீட்டில் லெனின்-ஸ்டாலின் சேர்ந்திருக்கும் பெரியளவு படம் இடம்பெற்றிருக்கும். அந்த வீட்டில் தான் அவரது மகன் ராதாரவி குடியிருக்கிறார். ஆனால் அவர் ராதாவின் கோட்பாடுகளுக்கு எதிரான மதவெறி அமைப்பான பாஜகவில் சேர்ந்துள்ளார். பசி கோவிந்தம் படைத்த எழுத்தாளர் விந்தன் - எஸ்.ஏ.பெருமாள் பிப்ரவரி 23, 2020 […] கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 12 விந்தன் கடந்த நூற்றாண்டில் சமூக அவலங்களைச் சாடியும், ஏழை, எளிய வறுமையின் கோரப் பிடியில் சிக்கியுள்ள அனாதைகளைப் பற்றியும் எழுதிக் குவித்தவர். விந்தன் எழுத்துக்களைப் பார்த்து ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களே வியந்து போற்றினார்கள். பின்பற்றினார்கள் என்றால் அது மிகையாகாது. மனித வாழ்வின் துயரங்களுக்கு அவர் வடிவம் தந்து வாசகரின் நெஞ்சை உலுக்கினார். அமரர் கல்கியால் ஊக்குவிக்கப்பட்டு வளர்ந்தார். பலரது எதிர்ப்புகள் வந்தபோதும் கல்கி ஆதரவளித்தார். 22-9-1916ல் செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் கோவிந்தன் பிறந்தார். சென்னைக்கு குடி வந்து சூளைப் பகுதியில் வாழ்ந்தனர். ஆரம்பக் கல்விக்குப்பின் குடும்ப வறுமையால் தந்தையுடன் சிறுவனாய் கருமான் வேலைக்குப் போனார். இரவுப் பள்ளியில் கொஞ்ச காலம் படித்தார். பின்பு அச்சுக் கோர்க்கும் தொழில் படித்து தமிழரசு அச்சகத்தில் வேலை செய்தார். பின்பு ஆனந்த போதினி, தாருல் இஸ்லாம் பத்திரிகைகளில் வேலை செய்து விட்டு ஆனந்த விகடனில் சேர்ந்தார். பின்பு 1941ல் கல்கி வார இதழில் அச்சுக் கோர்க்கும் வேலையில் சேர்ந்தார். விந்தன் கதை எழுதும் திறன் கொண்டவர் என்பதை அறிந்த கல்கி ஒரு கதை எழுதி வரச் சொன்னார். இவர் கதை எழுதிக் கொண்டு போனதும் அதைப் படித்து விட்டு உடனே பிரசுரம் செய்தார். இவருக்கு விந்தன் என்று பெயர் சூட்டி கல்கி பத்திரிகையின் துணை ஆசிரியர் பொறுப்புக்கு உயர்த்தினார். 1946ல் “முல்லை கொடியாள்” என்ற தலைப்பில் சிறுகதைத் தொகுப்பு வந்தது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் இந்த தொகுப்புக்கு முதல் பரிசு வழங்கியது. 1947 இல் ‘கண்திறக்குமா?’ என்ற கதையை நக்கீரன் எனும் பெயரில் எழுதினார். கல்கியில் அவர் எழுதிய ”பாலும் பாவையும்” தொடர் நாவல் புகழ் பெற்றதாகும். ஒரு காலத்தில் பிராமண எழுத்தாளர்களால் பிராமணச் சூழல்களில் மட்டுமே வந்து கொண்டிருந்த சிறுகதைகளுக்கு மாற்று வடிவம் கொடுத்து உழைப்பாளி வர்க்கத்தின் கதைகளை ஏற்றுவித்தார். விந்தன் கொஞ்ச காலம் சினிமா உலகில் பிரவேசித்து படம் ஒன்றை ஆரம்பித்து நஷ்டமானார். “மனிதன்” என்ற பத்திரிகையை ஆரம்பித்து நஷ்டமடைந்தார். பின்பு தினமணி கதிர் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். பின்பு ஏராளமாக எழுதினார். மீண்டும் திரையுலகில் நுழைந்து “வாழப் பிறந்தவள் - அன்பு- கூண்டுக்கிளி- மணமாலை- பார்த்திபன் கனவு - போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார். குலேபகாவலி படத்தில் இவர் எழுதிய “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ- இனிக்கும் இன்ப இரவே நீ வா வா” என்ற பாடல் புகழ்பெற்றது. ராஜாஜி “பஜ கோவிந்தம்” என்ற நூலை வெளியிட்டார். அதற்கு பதிலளித்து விந்தன் “பசி கோவிந்தம்” என்ற நூலை எழுதினார். எம்.கே.தியாகராஜ பாகவதர் கதை, எம்.ஆர்.ராதாவின், சிறை அனுபவம் என்று அவர்களுடன் கலந்து பேசி நூல்களாய் கொண்டு வந்தார். தீண்டாமைக் கொடுமைகளைச் சாடி சிறுகதைகள் எழுதியுள்ளார். ஒரே உரிமை, ஓ மனிதா, மனிதன் மாறவில்லை, விந்தன் குட்டிக் கதைகள், வேலைநிறுத்தம் ஏன்? போன்றவை அவரது படைப்புகளில் சில. இடதுசாரிக் கண்ணோட்டத்துடன் கதைகள், நாவல்களைப் படைத்த விந்தன் 30-6-1975ல் காலமானார். பலதுறையினரும் சேர்ந்து அவருக்கு மணிவிழா ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது மரணம் நேரிட்டது. அவரது மறைவுக்குப் பின் அவருடைய நூல் தமிழக அரசால் 2008- 09 இல் நாட்டுடைமையாக்கப்பட்டன. முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உதயம் - எஸ்.ஏ.பெருமாள் பிப்ரவரி 25, 2020 […] கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 13 இந்திய விடுதலைப் போரில் கலை இலக்கியவாதிகளின் பங்கு மகத்தானது. காங்கிரஸ், பின்பு காங்கிரஸ் சோசலிஸ்ட், பின்பு கம்யூனிஸ்ட் எழுத்தாளர்களாக மாறியபின் ‘முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ 1936-ல் உதயமானது. பிரிட்டிஷ் இந்தியாவில் இன்றைய இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருந்த படைப்பாளிகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு, இடதுசாரி அரசியலைக் கொண்டு எழுதிவந்தனர். எந்த வேறுபாடுகளும் இல்லாத மனிதத்துவம்; சமூக அநீதிகள், சமூகத்தின் பிற்போக்குத்தனத்திற்கு எதிராக உருது, இந்திமொழிகளில் எழுதி மக்களை ஆவேசப்படுத்தி ஈர்த்தனர். இந்த முற்போக்கு எழுத்தாளர்கள் நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகளை எழுதிக் குவித்தனர். இவர்கள் நகரங்களில் சிறுசிறு குழுக்களாக இயங்கி வந்தனர். 1932-ல் “அங்கரே” (எரிதழல்) என்ற பத்திரிகை துவங்கப்பட்டது. இதில் சிறுகதைகள், ஓரங்க நாடகங்கள் வெளிவந்தன. முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்திற்கான முதல்விதை 1933 ஏப்ரலில் அலகாபாத்தில் ஊன்றப்பட்டது. அகமத்அலி, மமுதுஸ் ஜாபர் தலைமையில் இது தொடங்கப்பட்டது. சஜ்ஜத் ஜாகீர், ரஷீத் ஜெஹன் முக்கிய உறுப்பினர்கள். இவர்களில் பெரும்பாலோர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள். இந்தப் படைப்பாளிகளுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் பி.சி.ஜோஷி நெருக்கமான உறவில் இருந்தார். 1935-ல் லண்டனில் எழுத்தாளர்கள் கூடி இந்திய முற்போக்கு எழுத்தாளர் இயக்கம் துவங்க முடிவு செய்தனர். பின்பு கல்கத்தாவிலும் கூடிதிட்டமிட்டார். தோழர் பி.சி.ஜோஷியின் முன்முயற்சியால் லக்னோ நகரில் 10.4.1936 -ல் முற்போக்கு எழுத்தாளர் மாநாடு நடைபெற்றது. ஹமீத் அக்தர், பைஸ் அகமதுபைஸ், அக்மத் நதீம், சதத் ஹாசன் மன்ட்டோ, இஸ்மத் சவுக்தாய் போன்ற அன்றைய பிரபல எழுத்தாளர்கள் இந்த அமைப்பை ஆதரித்து இணைந்தனர். லண்டனில் நடந்த கூட்டத்திலேயே இந்த அமைப்பிற்கு உருது மொழியில் “அஞ்சுமான் தரக்கி பசந்த் முசான்னிபின்” என்ற பெயர் சூட்டப்பட்டது. டாக்டர் முல்க்ராஜ் ஆனந்த், டாக்டர் ஜோஷி பர்ஷத், பிரமோத் ரஞ்சன்குப்தா, டாக்டர் தஸீர், சஜ்ஜத் ஜாகீர் ஆகியோர் மாநாட்டுக்கான முயற்சிகளில் இறங்கினர். ‘முற்போக்கு’ என்ற சொல் 19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில், ஒதுக்கப்பட்டவர்கள் முன்னேற வேண்டும்; சமூக வளர்ச்சிக்குத் தேவையான அறிவியல், தொழில் நுட்பம் வளர வேண்டும் என்ற போர்க்குரல் எழுந்தது. பழைய பாதையிலிருந்து மாறி அனைத்துத் துறைகளிலும் பிரிட்டிஷ் சமூகம் மாறவேண்டும் என்ற குரலாகவே “PROGRESS and PROGRESSIVE” என்ற சொற்கள் முன்னுக்கு வந்தன. பிரிட்டனில் மாற்றம், வளர்ச்சி நோக்கிய போர்க்குரலாகவே “முற்போக்கு” என்ற சொல் தோன்றியது. அது விடுதலைக்காகவும், ஜனநாயகத்திற்கும் உருவான சொல்லாகும். எனவே அதே கண்ணோட்டத்தில் இந்திய எழுத்தாளர்களும் ‘முற்போக்கு’ என்ற சொல்லையே ஏற்றுக்கொண்டனர். லக்னோ நகரில் 1936-ல் நடந்த மாநாட்டுக்கு உருது மற்றும் இந்தி இலக்கியத்தின் முன்னோடியான முன்ஷி பிரேம்சந்த் தலைமையேற்றார். ரவீந்திர நாத் தாகூர், சரோஜினிநாயுடு, மௌல்வி அப்துல் ஹக், சிராக் ஹசன் ஹஸ்ரத், அப்துல் மஜீத் சாலிக், மௌலானா ஹஸ்ரத் மொஹானி, ஜோஷ் மல்லிகாபதி, பேராசிரியர் அகமது அலி, டாக்டர் அக்தர் உசேன் ராய்பூரி, பைஸ் அகமது பைஸ், பேரா.மஜ்னுன் கோரக்பூரி, டாக்டர் ரஷீத் ஜஹான், மகமூத் டஸ் ஜாபர், பேரா.மன்சூர் உசேன், டாக்டர் அப்துல் அலீம் ஆகிய பிரபல எழுத்தாளர்கள், முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்திற்கு ஆக்கமும், ஊக்கமும் தந்து மாநாட்டிலும் பங்கேற்றனர். ஏகாதிபத்திய அடிமைத்தளையிலிருந்து விடுதலை, நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்துவது, சாமானிய மக்களின் ஆட்சியைக் கொண்டு வருவது ஆகிய லட்சியங்கள் மாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்டன. துயரங்களில் ஆழ்ந்து கிடக்கும் மக்களுக்கு சரியான பாதை காட்டும் கலை இலக்கியங்களைப் பிரசவிக்குமாறு படைப்பாளிகளுக்கு அறைகூவல் விடப்பட்டது. எத்தனையெத்தனை எழுத்தாளர்கள்! மாநாட்டில் முன்ஷி பிரேம்சந்த் தலைவராகவும் சஜ்ஜத் ஜாகீர் பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டு முடிவுகளின் படி இயக்க உறுப்பினர்கள் தங்கள் படைப்புகளை நாவல், சிறுகதை, நாடகங்கள், கவிதைகளாக வெளியிட்டனர். அவர்களில் கிஷன் சந்தர், இஸ்மத் சுக்தாய், மன்ட்டோ, அகமது நதீம் குவாஸ்மி, அலிசர்தார் ஜாப்ரி, சிப்தே ஹாசன், எதிஷாம் உசேன், மும்தாஜ் உசேன், சாஹிர் லுதியான்வி, கைஃபி ஆஸ்மி, அலி அப்பாஸ் ஹூசைனி, மக்தூம் மொகியுதீன், பாரிக் புகாரி, காதிர் காஸ்னவி, ரசாஹம்தானி, இப்ராகிம் ஜோயோ, சோப்போ கியான் சந்தானி, ஷேக் அயாஸ், ராஜிந்தர்சிங் பேடி, அம்ரிதா பிரிதம், அலி சிக்கந்தர், ஜோ அன்சாரி, மஜாஸ் லக்னவி ஆகியோர் வலிமைமிக்க படைப்புகளை அளித்தனர். உருது, இந்தி மொழிகளில் வெளியான இவர்களது படைப்புகள் பல மொழி மாற்றம் செய்யப்பட்டு மக்களைச் சென்றடைந்தன. தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தின் கிளைகளை உருவாக்குவதில் தீவிரமாய் இயங்கினர். மாநிலங்களில் கம்யூனிஸ்ட்த் தலைவர்களும் இப்பணியில் இறங்கினர். மத்திய இந்தியாவில் இந்தி எழுத்தாளர்களும்; வங்கம், கேரளா எழுத்தாளர்களும் உடனடியாக அமைப்புகளை உருவாக்கினர். லக்னோ நகரில் எழுத்தாளர் மாநாடு காங்கிரஸ் நகரில் இந்தியன் நேஷனல் காங்கிரஸின் மாநாட்டுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக தியேட்டரில் தான் நடைபெற்றது. அந்த காங்கிரஸ் நகரும் மேடையும் தனியாக உருவாக்கப்பட்டதாகும். பண்டித நேரு தலைமை தாங்கிய மாநாட்டில் தான் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி உருவாகிப் பிரிந்தது. தலைமறைவு மற்றும் ஒடுக்குமுறைச் சூழலில் இருந்த கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் சோஷலிஸ்டுக் கட்சியில் இருந்து செயல்படத் தீர்மானித்தனர். அதே நகரில் அகில இந்திய விவசாய சங்கத்தின் அமைப்பு மாநாடும் நடைபெற்றது. இவ்வாறு மூன்று முக்கிய மாநாடுகள் ஒரே காலத்தில் வெவ்வேறு நாட்களில் ஒரே இடத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது. பிரேம்சந்தின் முன்மொழிவுகள் - எஸ்.ஏ.பெருமாள் பிப்ரவரி 26, 2020 […] கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 13 பிரேம்சந்த் மாநாட்டில் தலைமையுரை நிகழ்த்தினர்: “இதுவரை உருது, இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே படைத்தருக்கிறோம். இவை ஆரம்ப நிலையில் தமது கடமையை - பெருமைக்குரிய பணிகளைச் செய்துள்ளன. கலாச்சாரத்தையும் அரசியலையும் பிரிக்க முடியாது. மொழியில் நாம் இன்றும் தேர்ச்சியோடும் அர்த்தமுள்ளதாகவும் எழுதவேண்டும். மாற்றத்தை நோக்கி நாம் பயணம் தொடர்வோம். வாழ்வின் எதார்த்தங்களை இறுகப்பற்றி நிற்போம். காதல் தோல்விகளைப் பற்றி அல்லது நமது மனதிற்கு அதிசயமாய் தெரிவதை சுயதிருப்திக்காக எழுதக்கூடாது. வாழ்க்கைப் பிரச்சனைகள், சமூக மதிப்புகள், நமது சமூக விமர்சனம் படைப்புகளில் வேண்டும். இவை இல்லாமல் அது இலக்கியமாகாது. கீழ்நிலையிலுள்ள ஒடுக்கப்பட்ட, சுரண்டப்படும் மக்களுக்காக நாம் வாதாட வேண்டும். மனித இயல்பு, மனநிலை பற்றிச் சித்தரித்தால் அதில் மாற்றத்திற்கு வழிகூற வேண்டும். உண்மையான மனிதர்களைப்பற்றி எழுத வேண்டுமே தவிர கற்பனை மனிதர்களை சிருஷ்டிக்கக் கூடாது. எலும்பும் சதையுமான மனிதனையே தேட வேண்டும். தாய் நாட்டின் மீதான தேசபக்தியுடன் சர்வதேச மனிதத்துவமும் இணையவேண்டும். நமது பூமி செழிப்பானது. வளமான விதைகள் நம்மிடமுள்ளது. மாக்சிம் கார்க்கி, ரோமெய்ன் ரோலந்த், ஹென்றி பார்புஸ்ஸி போன்ற மகத்தான எழுத்தாளர்கள் தங்கள் விதைகளை உலகம் முழுவதும் தூவிச் சென்றிருக்கிறார்கள். நமது இந்திய எழுத்தாளர்கள் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். பிற்போக்கு சக்திகள் நமது பாரம்பரியமான மூடநம்பிக்கைகளை விதைத்து வருகின்றன. அவற்றையே சமூகத்தில் நிலை பெறச்செய்ய முயற்சிக்கின்றன. வாழ்வின் நடைமுறை எதார்த்தங்களை அவை நிராகரிக்கின்றன. அடிப்படையற்ற கற்பனைகளை விதைக்கின்றன. இதனால் மனித உடல் ரத்தசோகையால், மனமும் சிந்தனையும் முடமாகி வக்கிரத் தத்துவத்தில் ஊறிக்கிடக்கிறது. எனவே இந்திய எழுத்தாளர்கள் இதில் முறிப்பை ஏற்படுத்த வேண்டும். இந்திய சமூகத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களைப் புரிந்து அறிவியல் கண்ணோட்டத்தில் தங்கள் படைப்புகளை உருவாக்க வேண்டும். இலக்கிய விமர்சனங்களையும் எழுதவேண்டும். அது பொதுவான பிற்போக்கு மற்றும் திரிபுவாதப் போக்குகளை பலவீனப்படுத்தி குடும்பம், மதம், பாலுறவு, யுத்தம், சமூகம் பற்றிய புதிய கருத்துக்களை, வெளிக்கொணர வேண்டும். அவை வகுப்புவாதம், நிறவெறி, மனிதனை மனிதன் சுரண்டுவதை எதிர்ப்பதாக இருக்கவேண்டும். பிற்போக்கான வர்க்கங்கள் சமூகத்தைப் பின்னோக்கி இழுப்பதைத் தடுத்து கலைகளை மக்களுக்குத் தேவையான முறையில் எதார்த்த வாழ்வைப் புரியவைத்து எதிர்காலத்துக்கான பாதையை மக்களுக்கு நாம் விரும்பும் முறையில் போதிக்கவேண்டும். இந்திய நாகரீகத்தின் சிறந்த பாரம்பரியங்களை நமது விமர்சனத்திற்கு உட்படுத்தி, அது நமது நாட்டில் ஏற்படுத்திய விளைவுகளை அம்பலப்படுத்தும் படைப்புகளை உருவாக்க வேண்டும். அவை பிற்போக்கில் உழன்று கிடக்கும் மக்களைப் புதிய இந்திய இலக்கியத்தின் பக்கம் திருப்பவேண்டும். அது மக்களை அறியாமையிலிருந்தும், அரசியல் சூன்யத்திலிருந்தும் மீட்க வேண்டும். காரணமின்றி செயலற்ற தன்மையால் முடங்கிக்கிடக்கும் மக்களை பிற்போக்காளரிடமிருந்து மீட்க வேண்டும். நமது விமர்சன உணர்வு, பிற்போக்கு இயக்கங்களையும் அவர்களது சடங்குகளையும் பார்த்தால் நமக்கு இயங்கத் தோன்றும். இவற்றுக்கெதிரான மாற்றங்களை நாம் உருவாக்கினால் நாம் முற்போக்காளர்களாக ஏற்கப்படுவோம்”. நமது இயக்கத்தின் குறிக்கோள் 1. பல்வேறு மொழிகளில் எழுதும் எழுத்தாளர்களை - அந்தந்த பிராந்தியங்களை ஒருங்கிணைத்து மாநாடுகளை நடத்தவேண்டும். அவற்றில் புதிய இலக்கிய வெளியீடுகளை வெளியிடவேண்டும். அமைப்பின் பொதுவான அடிப்படைக் கண்ணோட்டத்துடன் அகில இந்திய இணைப்பை ஏற்படுத்த வேண்டும். இதன் லட்சியங்களை முரண்படாமல் அந்த பிராந்தியங்களில் இயங்கவேண்டும். 2. முதலில் இந்திய நகரங்களில் அமைப்பை நிறுவிடவேண்டும். 3. முதலில் படைப்பிலக்கியங்களை உருவாக்குவதோடு, உலகின் முற்போக்கு இலக்கியங்களைத் தங்கள் மொழியில் பெயர்க்கவேண்டும். கலாச்சாரப் பிற்போக்குத் தனங்களை எதிர்க்கவும், இந்திய சுதந்திரம் சமூகப் புத்துருவாக்கம் செய்யவும் இது பயன்படும். 4. முற்போக்கு எழுத்தாளர்களின் முயற்சிகளைப் பாதுகாக்க வேண்டும். 5. நமது எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திர உரிமைக்காகப் போராட வேண்டும். - பிரேம் சந்தின் இந்த முன்மொழிவுகளை அரசியல் வேறுபாடுள்ள எழுத்தாளர்களும் முழுமனதாக ஏற்றுக்கொண்டனர். மேலும் இரண்டாம் உலகப்போர் பாசிச சர்வாதிகாரிகளால் தூண்டப்படுவது குறித்தும் மாநாடு எச்சரித்தது. அப்போது இத்தாலியின் சர்வாதிகாரி, அபிசீனியா மீது போர் தொடுத்து அந்நாட்டைக் கைப்பற்றினார். “ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே போட்டியும் பூசலும் உருவாகியுள்ளது. இது உலக மக்களின் இதயங்களில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. நாம் போரை வெறுக்கிறோம். அமைதி நிலவ விரும்புகிறோம். இந்த ஏகாதிபத்தியப் போரில் இந்தியா பங்கேற்கக் கூடாதென்றும் வலியுறுத்துகிறோம்” என்றும் மாநாட்டில் கூறப்பட்டது. “தாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் எனும் கருத்தோட்டமுள்ள எழுத்தாளர்களும் உள்ளனர். ஆனால் உணர்வுள்ள எழுத்தாளர்கள் அவன் அல்லது அவனைச்சுற்றி நடந்த, நடக்கிற, நடக்கப் போகிறவை பற்றிய அறிவுடன் திகழவேண்டும். இந்தியாவில் அந்நியராட்சியிலிருந்து விடுதலை, கடந்த காலத்திய கேடுகளைக்களைந்து வாழ்வு, கலாச்சாரத்தை, சிந்தனையை நவீனப்படுத்தல் அவசியமாகும். அதே சமயம் அழகியல், சுவைபட எழுதும் ஆற்றல் எழுத்தாளர் கலைஞர்களுக்கு அவசியம்” என்றும் மாநாடு அழைப்பு விடுத்தது. உலகில் பாசிசம், யுத்தம் என்பது நமது தலைக்குமேல் கத்தியாய் தொங்குகிறது. மனித சமூகத்தின் கழுத்தை அறுக்கத் துணிகிறது. நமது மாநாட்டின் முடிவுகளை சர்வதேச எழுத்தாளர் காங்கிரசும் ஏற்றுக் கொண்டது. அதனை ஏற்று ரவீந்திர நாத் தாகூர், சரத் சந்திர சாட்டர்ஜி, பி.சி.ராய், ஜவகர்லால் நேரு, பிரமாத சவுத்ரி, ராமானந்த சாட்டர்ஜி, நந்தலால் போஸ் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டது. 1943-ல் முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தின் 4வது மாநாடு மும்பையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் சஜ்ஜத் ஜாகீர் தனது அறிக்கையில் “அரசியல் களம் போலவே நாட்டில் எழுத்தாளர் இயக்கமும் தேக்கமடைந்துள்ளது. இலக்கியத் தேக்கத்தை உடைத்தெறிய வேண்டும்” என்று கூறினார். ஆனால் வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கம் பிளவை ஏற்படுத்தியது. சிலர் அமைப்புக்கு எதிரிகளாகவே மாறினர். இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலமது. சர்வதேச, தேசிய அரசியலிலும் மாற்றம் ஏற்பட்டது. இத்தகைய சூழலிலும் அமைப்பின் ஒற்றுமையை ஜாகீர் வலியுறுத்தினார். இரண்டாம் உலகப் போருக்கும் பின்பு 1947-ல் அதிகாரம் வெள்ளையக் கரங்களிலிருந்து இந்தியர் கைக்கு மாறியது. இதைத் தொடர்ந்து வேறுபட்ட, முரண்பட்ட கருத்தோட்டங்கள் எழுத்தாளர்களிடையே அதிகரித்தது. எனவே மார்க்சிஸ்ட்டுகள் மட்டும் இயங்கும் கலாச்சார அமைப்பாக மாறியது. ஐம்பதாண்டகளுக்குப் பின்பு அது ‘சஹமத்’ என்ற அமைப்பாக உருவாகியுள்ளது. இந்திய மக்கள் நாடக இயக்கம் (இப்டா) - எஸ்.ஏ.பெருமாள் பிப்ரவரி 27, 2020 […] கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 14 இந்தியன் பீப்பிள்ஸ் தியேட்டர் அசோசியேசன் 1941ல் வெள்ளையனே வெளியேறு இயக்கக் காலத்தில் அமைக்கப்பட்டது. 1943-44 காலங்களில் இந்த அமைப்பு துரிதமாய் செயல்பட்டது. சமூகப் பொறுப்புணர்வு, தேசிய ஒருமைப்பாடு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் சவாலை அது எதிர்கொண்டது. இப்டா இந்தியா முழுவதும் சோசலிச, தேசிய உணர்வை ஊட்டியது. இந்தியாவில் மிக மூத்த கலைக்குழு இப்டாதான். இந்திய சினிமா, நாடகம், இசை, தற்கால டெலிவிசன் வரைக்கும் இப்டா கலைஞர்கள் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர். கே.ஏ.அப்பாஸ், டாக்டர் ஹோமி பாபா, அனில் டி சில்வா, அலி சர்தார் ஜாப்ரி, தாதா ஷர்மிங்கர் ஆகியோர்தான் இப்டாவின் ஆரம்ப கர்த்தாக்கள். இதிலிருந்துதான் தொடர்ந்து பிரபலமான கலைஞர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், நடனமணிகள், பாடகர்கள் உருவாயினர். பிருதிவிராஜ் கபூர், அமர் ஷேக், ஷம்பு மித்ரா, ஹோமி பாபா, கிஷன் சந்தர், கைபிஆஷ்மி, மஜ்ரூ சுல்தான்புரி, சாகிர் லுதியான்வி, பால்ராஜ் சஹானி, மோகன் செகாவ், முல்க்ராஜ் ஆனந்த், ரொமேஷ்தாப்பர், ஹிமாதேவி, அன்னாபாவு சாத்தே, ஷைலேந்திரா, பிரேம்தாவன், இஸ்மத்சுக்தாய், கலுகோஷ், சேத்தன் ஆனந்த், தினாபதக், பண்டிட் ரவிசங்கர், சச்சின் சங்கர், பகதூர் கான், ஏ.கே.தங்கல், ஹபீப் தன்பீர், அப்ரர் அல்வி, ஹேமந்த்குமார், ஆதிமர்ஸ்பான், சலீஸ் சவுத்ரி, தர்லா மேத்தா, கய்யாம், பானி மஜும்தார், தேவ் ஆனந்த், சாந்தி பரதன், சித்தோ பிரசாத், ஹரீந்திரநாத் சட்டோபாத்தியாயா, பி.பி.சாத்தே, துர்கா கோட்டே, கேசவராவ் தத்தே, உத்பர்தத், ரித்விக் கட்டக், சத்யன் காப்பு, சஞ்சீவ்குமார், சூல் வெவ்வானி, ஷெகத் கைபி, மன்மோகன் கிருஷ்ணா, பாசுபட்டாச்சார்யா, அபித் ரஜ்வி, எம்.எஸ்.சாத்யு, குல்தீப் சிங், ரமேஷ் சுல்வார், சுனுபா ஆர்யா, ஷபினா ஆஸ்மி, பரூக்ஷேக், காதர்கான், யூனுஸ் பர்வேஸ், மக்மோகன், ஜாவித் சித்திக், சுதிர் பாண்டே, ஆஞ்சன் ஸ்ரீவத்சவா, பரத்கபூர், ராஜேஷ் வேடி என இன்னும் பலர். இவர்கள் அனைவரும் நாடகம், சினிமாவில் புகழ்பெற்ற நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள் ஆவர். அறுபதாண்டுகளாக முதலிடம் கடந்த அறுபதாண்டுகளாக அரங்க இயக்கத்தில் நாட்டில் இப்டாதான் முதலிடம் வகித்து வருகிறது. மும்பை இப்டா சார்பில் இதுவரை நூறு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்தி, மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, ஆங்கிலத்திலும் இந்த நாடகங்கள் நடைபெறுகின்றன. 1984ல் இப்டாவில் பாலர் பிரிவு துவங்கப்பட்டு குழந்தைகள் நாடக அரங்கும் நாடகங்களை நடத்தி வருகிறது. 1972ல் மறைந்த பிருதிவி ராஜ் கபூர் நினைவுப் போட்டிகளை கல்லூரிகளுக்கிடையே இப்டா நடத்தியது. இந்த நாடகப் போட்டியில் சிறந்த நாடகங்கள் மும்பையில் அரங்கேற்றப்பட்டன. இதன்மூலம் பலர் கலைஞர்களாக வெளிவந்தனர். இப்டாவின் சேவையைப் பாராட்டி 1994ம் ஆண்டு மத்திய அரசு சிறப்புத் தபால் தலையை வெளியிட்டது. பீப்பிள்ஸ் தியேட்டர் என்ற பெயரை பிரபல விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கீர் பாபா தான் தேர்வு செய்தார். அவர் ரோமெய்ன் ரோலந்தின் புத்தகத்திலிருந்து மக்கள் நாடக இயக்கம் என்ற பெயரை கண்டெடுத்தார். அரங்குகளில் மட்டுமின்றி மக்கள் கூடும் தெருக்களிலும், மைதானங்களிலும் நிகழ்ச்சிகளை நடத்துமாறு இப்டா வழிகாட்டியது. இப்டாவைத் துவக்கவும் நடத்தவும் தூண்டு கோலாக இருந்தவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பி.சி.ஜோஷியும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சஜ்ஜத் ஜாகீரும்தான். இரண்டாம் உலகப் போர், வங்காளப் பஞ்சம், சோவியத் யூனியன் மீது பாசிஸ்ட் படையெடுப்பு, கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்த “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தின் மீது பிரிட்டிஷ் அரசின் தாக்குதல்கள் போன்றவற்றின் பின்புலத்தில் இப்டா தோன்றியது. 1943ல் மும்பையில் கூடிய மாநாடு ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்கியது. மக்களின் உரிமைகளையும் கடமைகளையும் அவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் நாடகங்கள், கலைநிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கலாச்சாரப் படையாக இந்தியா முழுவதும் கிளைகள் அமைக்க மாநாடு முடிவெடுத்தது. வங்கப் பஞ்சம் 1943ல் வங்காளப் பஞ்சம் குறித்த ‘நபன்னா’ (அறுவடை) என்ற நாடகம் புகழ்பெற்றது. நபன்னா என்பது வங்காள மக்கள் அறுவடைக் காலத்தில் கொண்டாடும் நாட்டுப்புற விழாவாகும். இது வங்கப் பஞ்சத்தையும், பட்டினிச்சாவுகளையும் கூறி பிரிட்டிஷ் அரசைச் சாடியது. இதை பிஜோன் பட்டாச்சார்யா எழுதி சோம்புமித்ரா இயக்கினார்: “நவ ஜிபோனர் கான்(புது வாழ்வின் பாடல்) எனும் நாடகம் ஜோதிந்திரநாத் மொய்த்ராவால் தயாரிக்கப்பட்டது. கே.ஏ.அப்பாஸ் தயாரித்த “தர்த்தி கி லால் (பூமியின் குழந்தைகள்) என்ற திரைப்படம் வெளிவந்தது. அது நபன்னாவைத் தொடர்ந்து மக்களின் தேவைகளை வலியுறுத்திய சினிமாவாகும். இவை மக்கள் படும் துன்பதுயரங்களை எடுத்துக் காட்டின. மராத்தியில் “தேச சதி” என்ற படம் நாஜி ஜெர்மனியால் சோவியத் யூனியன் தாக்கப்பட்டது குறித்து வெளியானது. தெலுங்கில் “பிராரம்பம், ஜாபேதா ஆகிய படங்கள் மாங்ராஜ் சஹானியால் இயக்கப்பட்டு வெளிவந்தன. இது ஒரு மலபார் பெண்ணைப் பற்றிய கதையாகும். மணிகுண்டலசென் என்ற இடதுசாரி அரசியல் வீரியமுள்ள கோபால் ஹால்தர் நடித்ததாகும். பிற்காலத்தில் அவர் கல்வியாளராய் மலர்ந்தார். 1947ல் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த காங்கிரஸ் அரசு, இப்டா மீது அடக்குமுறைகளையும் போலீஸ் வன்முறையையும் ஏவியது. எனினும் இப்டாவின் பிரதான உறுப்பினர்கள் தங்கள் பாதையை விட்டு விலகாமல் பணிகளைத் தொடர்ந்தனர். பல குழுக்களாக மாறி இயங்கினர். அஹிந்திர சவுத்ரி, சோம்பு மித்ரா, திருப்தி மித்ரா ஆகியோர் தனிகுழு அமைத்து ரக்த சுரபி, தஹார் நசீம் திரஞ்சனா, சார் அத்யாய் (ரவீந்திர நாத் தாகூர் எழுதியது) ஆகிய படங்களை வெளியிட்டனர். உத்பஸ்தத் தலைமையில் தனிக்குழு “டைனர் தலோவார், கஸ்லோவ்” என்ற காவியங்களைப் படைத்தளித்தார். மும்பையில் இருந்த குழு (இப்டா என்ற பெயரிலேயே) பல நாடகங்களை தொடர்ந்து நடத்தி வந்தது. இன்று வரை அறுபதாண்டுகளாக அது தொடர்கிறது.கல்கத்தாவில் நந்திகார், ஸ்பாண்டன் ஆகியோர் தொடர்ந்து நாடகங்களை இயக்கினர். நாடு முழுவதும்… தில்லியில் 1973ல் இப்டா தோழர்கள் “ஜனநாட்டிய மஞ்ச்” என்ற தெரு நாடக இயக்கத்தை துவக்கினர். ரித்விக் கட்டக் “கோமல் காந்தார்” எனும் திரைப்படத்தை வெளியிட்டார். ஆந்திராவில் “பிரஜா நாட்டிய மண்டலி”, கர்நாடகாவில் “சமுதாயா”, தமிழகத்தில் “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்” ஆகியவை பிரபலமாய் செயல்பட்டு வருகின்றன. மேற்குவங்கத்தில் இப்டாவில் 7000 கலைஞர்கள் உறுப்பினராக உள்ளனர். ஹிரண்மாய் தோஷல் தலைவராகவும் கோரா கோஷ் செயலாளராகவும், அசிம் பந்தியோபாத்யாய் துணைச் செயலாளராகவும் உள்ளனர். வெகுஜனப் பாடகரான கங்கர் பட்டாச்சார்ஜி, சங்கர் முகர்ஜி போன்ற பிரபலமான கலைஞர்கள் 1967 முதல் நூற்றுக்கணக்கான நாடகங்களை நடத்தியுள்ளனர். இவற்றில் தெரு நாடகங்களும் உண்டு. இங்கு இப்டா 19 மாவட்டங்களில் இயங்கி வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை பட்டறைகள் நடத்தி இளைஞர்களையும் குழந்தைகளையும் இப்டா பயிற்சியளிக்கிறது. இன்றைய சத்தீஸ்கரின் தலைநகர் ராய்பூரில் இப்டா 1982 முதல் தீவிரமாய் செயல்பட்டு வருகிறது. ஆண்டில் ஐந்து நாட்கள் தேசிய நாடக விழாவை நடத்தி வருகிறது. பட்டறைகள் நடத்தி அனைத்துக் கலைகளிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. 1995 முதல் சிறந்த கலைஞர்களான அருண் பாண்டே, சஞ்சய் உபாத்யாய், சுமன்குமார், கௌதம் மஜும்தார், தேவேந்திரராஜ் அங்குர், ரஞ்சித் கபூர், அகிலேஷ் கன்னா, நீரஜ்வாகல், பிரவீன்குன்ஜன், அஞ்சனாபூரி ஆகியோர் பயிற்சி அளிக்கிறார்கள். பல்வேறு மாநிலங்களுக்கும் இக்குழுக்கள் சென்று நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. குழந்தைகளுக்கான இரு திரைப்படங்களை எடுத்து தேசிய விருது பெற்றுள்ளனர். பஞ்சாபில் இப்டா சமூக மாற்றத்திற்கான கலை அரங்குகள் நடத்தி வருகிறது. அங்கு ஷீலா பாட்டியா, பால்ராஜ் சஹானி, பல்வந்த் கார்கி, நிரஞ்சன் சிங், மான் தெராசிங், ஜோகிந்தர் பார்யா, பண்டிட் கலீலி, பிரகாஷ் கவுர், சுரிந்தர் கவுர், அமர்ஜித் குர்தாஸ்பூரி போன்றவர்கள் புகழ்பெற்ற கலைஞர்கள். பஞ்சாபின் நாட்டுப்புறக் கலைகளுக்கும், பாடல்களுக்கும் புத்துயிர் அளித்தனர். அசாமில் 1947 முதல் இப்டா இயங்கி வருகிறது. ஹிமாங்கோ பிஸ்வாஸ் அமைப்பாளராய் இருந்து அசாமின் புகழ்பெற்ற கலைஞர்களை உறுப்பினர்களாக்கினார். ஜோதிர் பிரசாத் அகர்வாலா, விஷ்ணு பிரசாத் ராபா, டாக்டர் பூபன் ஹசாரிகா போன்றவர்கள் இப்டாவில் இணைந்தனர். 1952 முதல் 1962 வரை இப்டா மக்களிடம் முத்திரை பதித்தது. 1955ல் அசாமிய மூன்றாவது மாநாடு நடைபெற்றது. அதில் சினிமாவில் புகழ்பெற்ற பால்ராஜ் சஹானி, சலீல் சவுத்ரி, ஹேமந்த் முகர்ஜி கலந்து சிறப்பித்தனர். சத்கதி, துர்தேஷர் கதா, கியோ, அர்ஜுன், தோலிர் துமுகர், லால்அர்ணி, காபிஹவுஸ் போன்ற நாடகங்கள் புகழ்பெற்றவை. ‘நாவல்களின் பேரரசர்’ முன்ஷி பிரேம்சந்த் - எஸ்.ஏ.பெருமாள் பிப்ரவரி 28, 2020 […] கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 15 31.7.1880 - 8.10.1936 புகழ்மிக்க இந்தி - உருது எழுத்தாளரான முன்ஷி பிரேம்சந்த்தின் இயற்பெயர் தன்பத்ராய் ஸ்ரீவத்சவா. தனது பெயரை எழுத்துலகில் முன்ஷி பிரேம் சந்த் என்று மாற்றிக் கொண்டார். இவர் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த இந்திய எழுத்தாளர் என்று போற்றப்பட்டார். இவர் நாவல், சிறுகதை நாடகங்களை எழுதிக் குவித்தார். (உபன்யாஸ் சாம்ராட்) நாவல்களின் பேரரசர் என்று எழுத்தாளர்களால் புகழப்பட்டார். 14 நாவல்கள், 300 சிறுகதைகள், பலகட்டுரைகள், மேலை நாட்டு இலக்கியங்களை இந்தியில் மொழியாக்கம் என எழுதியவர். இவர் காசி அருகே லமிகி என்ற கிராமத்தில் பிறந்தார். எழுவதையே தொழிலாய் கொண்டார். இவரது மனைவி சிவராணி தேவி, மகன் அம்ரித்ராய். இவரது புகழ்பெற்ற படைப்புகள் கோதான், பஜார் இகுஸின், கர்மபூமி, சத்ரஞ்ச் சிகில்வாடி, காபான், மாஸை ரோவர், இட்கா ஆகியவை. ஏழு வயதில் மதரசா பள்ளியில் சேர்ந்து உருது, பாரசீக மொழிகள் கற்றார். எட்டுவயதில் தாயார் இறந்தபின் தந்தை மறுமணம் செய்தார். அக்காவும் திருமணம் செய்து போனதால் அனாதையாகி பாட்டியிடம் வளர்ந்தார். ஓய்வு நேரத்தில் ஒரு புத்தகக் கடையில் வேலை செய்தபோது ஏராளமாக பாரசீக இலக்கியங்களைப் படித்தார். உயர்நிலைக் கல்வி இங்கிலீஷ் மிஷனரி பள்ளியில் படித்தார். அவர் படித்த முதல் ஆங்கில நூல் எட்டு வால்யூம் கொண்ட “லண்டன் நீதிமன்ற ரகசியங்கள்” என்ற நூலாகும். அவர் முதலில் சிறுகதை எழுதினார். ஒரு மேல்சாதி இளைஞன் கீழ்சாதிப் பெண்ணை காதலிக்கும் கதை. ஆனால் அது பிரசுரமாகவில்லை. ஒன்பது படிக்கும் போதே அவரது தாய்வழிப்பாட்டனார். 15 வயதிலேயே வயதில் மூத்த வசதியான வீட்டுப் பெண்ணை திருமணம் செய்து வைத்தார். பிரேம் சந்த் தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு மத்திய இந்துக் கல்லூரியில் படித்தார். கணக்கு பாடத்தில் பெயிலானதால் ஒரு வக்கீல் குமாஸ்தாவாக மாதம் ஐந்து ரூபாய் ஊதியத்தில் வேலை செய்தார். பின்பு மாதம் 18 ரூபாய் ஊதியத்தில் ஆசிரியப் பணியில் சேர்ந்தார். அப்போது கடவுளின் ரகசியங்கள் என்ற குறுநாவலை எழுதினார். அது ஒரு வாரப்பத்திரிகையில் தொடராக வந்தது. பின்பு கான்பூரில் ஜமானா என்ற உருதுப் பத்திரிகையின் ஆசிரியரானார். தேச பக்தியூட்டும் பல சிறுகதைக ள் எழுதினார். தேசவிடுதலைக்காக கடைசிச் சொட்டு ரத்தத்தையும் சிந்தத் தயாராக வேண்டும் என்பதே அவரது அறைகூவலாக இருந்தது. ஆசிரியப் பணியிலிருந்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரியாக 1909 -ல் பதவி உயர்வு பெற்றார். அவரது நூல்களில் பிரிட்டிஷ் எதிர்ப்பு இருப்பதாய் அதிகாரிகளுக்குப் புகார்கள் சென்றது. எனவே பிரிட்டிஷ் கலெக்டர், பிரேம்சந்த் வீட்டை சோதனை போட உத்தரவிட்டார். போலீஸ் சோதனையிட்டு அவரது நூல்களின் 500 பிரதிகளை தீயிட்டுக் கொளுத்தியது. இதற்கெல்லாம் அவர் அஞ்சவில்லை. உருது மொழியில் எழுதப்பட்ட தனது நான்கு நாவல்களை இந்தியில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். அவரது மனைவி சிவராணி ஒரு விதவை. விதவையை திருமணம் செய்ததற்காகவே அவரது உற்றமும் சுற்றமும் அவரை ஒதுக்கியதால் தனது கிராமத்தை விட்டே வெளியேறினார். பின்பு தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு காசியில் 1921-ல் குடியேறி எழுத்தை நம்பியே வாழ்ந்தார். இதனால் வறுமை, நோய்மையால் தாக்குண்டார். 1923-ல் சரஸ்வதி பிரஸ் என்ற அச்சகத்தை நிறுவினார். 1924ல் ரங்கபூமி என்ற நாவலை வெளியிட்டார். அது சுர்தாஸ் என்ற கண்தெரியாத பிச்சைக்காரனின் அவல வாழ்வு பற்றியது. அது பெரும் பாராட்டைப் பெற்றது. அடுத்து அவரது நிர்மலா நாவல் வரதட்சணைக் கொடுமைபற்றியது. பெரும் புகழ் பெற்றது. விதவைத் திருமணத்தை வலியுறுத்தும் பிரதிக்யா நாவலும் பாராட்டப்பட்டது. 1931-ல் கான்பூரில் ஒரு கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அது மார்வாரிகளால் நடத்தப்பட்ட கல்லூரி. அவர்களோடு கருத்து வேறுபாட்டால் அதை ராஜினாமா செய்துவிட்டு காசிக்கே திரும்பிவந்து “கர்மபூமி” நாவலை வெளியிட்டார். கொஞ்சகாலம் காசி வித்யாபீட பள்ளித் தலைமையாசிரியரானார். அப்பள்ளி மூடப்படவே லக்னோ சென்று மாதுரி என்ற பத்திரிகையின் ஆசிரியராய் பணியாற்றினார். 1934-ல் மும்பையில் சினிமா கதாசிரியராக சேர்ந்தார். அஜந்தா சினிமாஸ் நிறுவனம் ரூ. 8000 ஆண்டு ஊதியம் தர ஏற்றது. மஸ்தூர் (தொழிலாளி) என்ற படம் வெளியானது. சில நாட்களிலேயே படம் தடைசெய்யப்பட்டு நிறுவனம் நட்டமடைந்தது. அவர் மும்பையை விட்டு அலகாபாத் சென்றார். அங்கு பயிலும் தனது மகன்களைப் பார்த்து விட்டு காசி திரும்பினார். அவர் மிகவும் உடல் நலிவுற்றிருந்தார். லக்னோவில் நடந்த மாநாட்டில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவரானார். அடுத்த சில மாதங்களிலேயே 8.10.1936-ல் தனது 56வது வயதில் காலமானார். பிரேம்சந்தின் கோதான் உபன்யாஸ் (ஒரு பசுவின் பரிசு) உலகின் பல மொழிகளில் வெளியிடப்பட்டது. அவர் கடைசியாக எழுதிய கதை “கிரிக்கெட் மேட்சிங்” ஆகும். அவரது படைப்புகள் ஏழை, நடுத்தர மக்கள் பற்றியதாகவே இருந்தது. மக்களிடம் விழிப்புணர்வையும், எழுச்சியும் ஏற்படுத்தவே எழுதினார். ஊழல்கள், குழந்தை விதவைகள்,விபச்சாரம், நிலப்பிரபுத்துவ அக்ரமங்கள், வறுமை, அந்நிய ஆட்சிக்கெதிரான விடுதலை வேள்வி பற்றியே அதிகம் எழுதினார். அரசியலில் அவர் முதலில் கோகலேயையும், பின்பு திலகரையும், அதன்பின் காந்தியையும் ஆதரித்தார். ஜாமீன் எதிர்ப்பு, அரசியல் ஒடுக்குமுறை,விவசாயி, தொழிலாளிகளின் அவல வாழ்வுக்கெதிராக எழுதிக்குவித்தார். அவரது அனைத்து நூல்களும் ஆங்கிலத்திலும், ரஷ்யனிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. சர்கதி, சதுரங்க கில்லாடி திரைப்படங்களாய் வந்து வெற்றிபெற்றன. சேவாஸ்தானம் (சேவை இல்லம்) எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்து படம் வெற்றியடைந்தது. அவரது ஒரு கிராமத்தின் கதை நாவலை மிருணாள் சென் தெலுங்கில் ஒக ஊரி கதா என்று இயக்கி பரிசு பெற்றது. காபான் திரைப்படமாக சுனில்தத் - சாதனா நடித்து நன்கு ஓடியது. சமூகத்தில் நிலவும் யதார்த்த வாழ்வையே யதார்த்தமாக சித்தரிக்க வேண்டும் என்பதில் கடைசிவரை உறுதியோடு நின்றார். மற்ற படைப்பாளிகளுக்கும் இதையே வழிகாட்டினார். பி.சி.ஜோஷியால் ஈர்க்கப்பட்ட முற்போக்கு எழுத்தாளர் சஜ்ஜத் ஜாஹீர் - எஸ்.ஏ.பெருமாள் பிப்ரவரி 29, 2020 […] கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 16 புகழ்மிக்க புரட்சி எழுத்தாளர் சஜ்ஜத் ஜாஹீர் லக்னோ நகரில் 5.11.1899-ல் பிறந்தார். மார்க்சிய தத்துவவாதியாகவும், உருது எழுத்தாளராகவும், கவிஞராகவும் திகழ்ந்தவர். இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கி அதன் பொதுச் செயலாளராய் பொறுப்பேற்று வழிநடத்தியவர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர். இந்தியப் பிரிவினைக்குப்பின் பாகிஸ்தானில் குடியேறி அங்கு பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவர். 1932-ல் அங்காரே (நீரு பூத்த நெருப்பு) என்ற சிறுகதைத் தொகுப்பை முதன் முதலில் வெளியிட்டார். அதில் அகமது அலி, ரஷீத் ஜகான், மகமுத் ஜாபர் ஆகியோரின் கதைகளும் இருந்தன. 1933-ல் பிரிட்டிஷ் அரசு ‘அங்காரே’ மதநம்பிக்கைகளைப் புண்படுத்துவதாகக் கூறி தொகுப்பு நூலைத் தடை செய்தது. இது பலருக்கும் நேர்ந்ததால் எழுத்தாளர்களுக்கு ஒரு சங்கம் அமைக்க வேண்டுமென்று சஜ்ஜத் முடிவுசெய்தார். தோழர் பி.சி. ஜோஷியுடன் கலந்து ஆலோசித்தபின் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை துவக்கினார். சஜ்ஜத்தும், அகமது அலியும் இந்த அமைப்பின் முன்னோடிகளாவர். இதில் மாபெரும் எழுத்தாளர் முன்ஷி பிரேம்சந்தை தலைமையேற்கச் செய்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் பி.சி.ஜோஷி அனைத்து உதவிகளையும் செய்தனர். உருது, இந்தி, வங்கம், பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி மொழிகளின் படைப்பாளர்களை பிரிட்டிஷ் ஆட்சிக் கெதிராக சஜ்ஜத் ஒன்றுதிரட்டினார். அமைப்புகளையும் உருவாக்கினார். அவர் நாவல், சிறுகதை, கட்டுரைகள், கவிதைகளைப் படைத்தனர். அவரது கஜல் பாடல்கள் இன்று வரை மேடைகளில் பாடப்படுகின்றன. அவரது நாடகங்களும் புகழ்பெற்றவை. அவரது நாவல் லண்டன் கி ஏஜ் ராத் அதிகம் விற்பனையானது. ரோஷ்ன் என்ற அவரது கட்டுரைத் தொகுப்பில் முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் அதன் நோக்கங்கள் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார். பாரசீக மகா கவி ஹபெஸ்ஸின் கவிதைகள் பற்றி ஒரு ஆய்வு நூலை எழுதினார். ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோவையும், கேண்டைடையும் உருதுவில் மொழியாக்கம் செய்தார். கலீல் ஜிப்ரானின் மதகுரு, தாகூரின் கோரா என்ற நாவலையும் மொழியாக்கம் செய்தார். அவரது கடைசி கவிதைத் தொகுப்பு பிகியா நிலம் ஆகும். சஜ்ஜத் ஜாஹீரின் மனைவி ரஜியா. நான்கு மகள்கள். ஒரு மகள் நாதிரா பாப்பர், நடிகை. நசீம் பாட்டியா பேராசிரியை. சஜ்ஜத் ஜாஹீர் சோவியத் யூனியன் சென்றிருந்த போது கஜகஸ்தானில் 11.9.1973 -ல் காலமானார். அவரது படைப்புகள் நிரந்தரமாய் வாழ்கின்றன. ‘சஹமத்’ அமைப்பை உருவாக்கிய பிஷம் சஹானி மார்ச் 2, 2020 […] பிஷம் சஹானி இந்தி எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் என்ற பன்முகக் கலைஞர். பத்மபூஷன் உள்ளிட்ட பெருமைகள் பெற்றவர். நடிகர் பால்ராஜ் சஹனியின் உடன் பிறந்த தம்பி. பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 8.8.1915ல் பிறந்த இவர் ஆங்கில இலக்கியத்தில் புலமை பெற்றவர். இளம் வயதிலேயே காங்கிரசின் சேர்ந்து விடுதலைப் போரில் பங்கேற்றார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட கலவர சேதங்களில் நிவாரண வேலைகளில் பங்கேற்று சேவை செய்தார். 1947க்குப் பின் காங்கிரசிலிருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். இப்டாவில் சேர்ந்து அதன் பணிகளில் பங்கேற்றார். அமிர்தசரசில் கங்சா கல்லூரியில் பேராசிரியர் பணியில் சேர்ந்தார். முதன்முதலாக நாட்டின் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தை துவக்கியது பிஷம் தான் என்ற பெருமை பெற்றவர். 1956 முதல் 1964 வரை ஏழாண்டுகள் மாஸ்கோவில் அயல்மொழிப் பதிப்பகத்தில் ரஷ்ய இலக்கியங்களை இந்தியில் மொழியாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டார். லியோ டால்ஸ்டாய் முதல் மாக்சிம் கார்க்கி வரை இந்தியில் ரஷ்ய இலக்கியங்களைக் கொண்டு வந்தார். பின்பு நாடு திரும்பி டில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். 1965 முதல் 1967 வரை நை கஹானியன் என்ற இலக்கிய இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார். பஞ்சாபி, ஆங்கிலம், உருது, சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளில் மிகவும் தேர்ச்சி பெற்றவர். பிஷம் சஹானி பல்கலை இலக்கிய அமைப்புகளோடு இணைந்து செயலாற்றினார். 1975 முதல் 1995 வரை பத்தாண்டுகள் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். கலாச்சார, கலை இலக்கியப் பிரச்சார அமைப்பாக “சஹமத்” என்ற அமைப்பை தோற்றுவித்தார். சப்தர் ஹஷ்மி படுகொலையைத் தொடர்ந்து இந்த அமைப்பு அவர் நினைவாக உருவாக்கப்பட்டது. பிஷமின் புகழ்மிக்க படைப்பு “தமஸ் (அறியாமை இருள்). இது இந்தியப் பிரிவினையின் போது ராயல்பிண்டியில் அவர் நேர்கண்ட காட்சிகளை கருவாக வைத்து எழுதப்பட்டது. மூளையற்ற மதவெறி பயங்கரம், வன்முறை, அழிவு, தமிழகம், மரணங்கள் என நடந்தேறிய கொடூரங்களை தமஸ் வர்ணிக்கிறது. இந்த நாவல் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், ஜப்பான் மற்றும் பல இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியானது. தமிழ், மலையாளம், காஷ்மீரி, மணிபுரி மொழிகளில் இந்த நாவல் அதிகம் விற்பனையானது. தமசுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. 1987ல் தமசை பிரபல இயக்குனர் கோவிந் நிஹானி டெலி பிலிமாக தயாரித்து வெளியிட்டார். இந்தியப் பிரிவினை குறித்த ‘பாலி’, ‘அமிர்தசரஸ் ஆஜா ஹை’ இரண்டும் புகழ்மிக்க சிறுகதைகளாகும். அவரது இந்தி நாவல்களான ஜாரோசி, கடியன், பசந்தி, மய்யாதாஸ் கிமாடி, குன்ட்டோ, நீலு, நீலிமா, நிலோபர் ஆகியவை சிறப்பானவை. அவரது பத்து சிறுகதைத் தொகுப்புகள் பாக்யரேகா, பாலபதா, பாதந்தி ராக், பாட்ரியன், வாங் சு, சோபயாத்ரா, நிஷாச்சார், பாலி, தாயான் ஆகியவையாகும். அவரது ஐந்து நாடகங்கள் ஹனுஷ், கபீரா கதா பஜார் மெய்ன், மாதவி, முபாப்சே, ஆஸம்கீர் பலமுறை மேடையேற்றப்பட்டன. குமார் சஹானி தயாரித்த “கஸ்பா” என்ற திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதினார். பஞ்சாபில் கல்சா ராஜ்யம் நடந்த போது இருந்த நல்வாழ்வு பிரிட்டிஷ் ஆட்சி வந்த பின் அனைத்தும் தலைகீழானது. மாறிப் போனதைப் பற்றி அவர் எழுதிய ‘மய்யாதாசின் கோட்டை’ என்ற வரலாற்று நாவலை பஞ்சாபி மக்கள் கொண்டாடினார்கள். எழுத்தாளர்களில் அன்டன் செகாவை அவருக்கு மிகவும் பிடிக்கும். பிஷம் சஹானி தனது படைப்புகளில் மனிதம், மனிதாபிமானம், அடக்குமுறை எதிர்ப்பு, மனிதநேயம் நல்லிணக்கத்தையே வலியுறுத்தினார். அவரது எழுத்துக்களில் தேவையற்ற விசயங்களோ, ஆபாசமோ துளியும் இருக்காது. அவரது நகைச்சுவை கூட மென்மையாக இருக்கும். ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையில் ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வை ஊடுருவிப் பார்த்த தனது படைப்புகளின் மூலம் வழிகாட்டினார். அவரது கதைகளில் எளிய, குடும்ப மனிதர்களையே படைத்தார். இவர்கள் வாழ்வை அறிந்து கொள்வதற்காக கிராமங்களுக்கு இப்டா கலைக்குழுக்களோடு சென்று அனுபவங்களைப் பெற்றார். இறுதி வரை அவரது வாழ்வும், இலக்கியமும் எளிமையாகவே இருந்தது. பிரேம்சந்த், ஹரிசங்கர் பர்சாய் இருவருக்குப் பின் கதை நாவல்களில் மூன்றாவது இடத்தில் பிஷம் இடம்பிடித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தனது 87வது வயதில் 11.7.2003ல் டில்லியில் காலமானார். இந்திய இடதுசாரி இலக்கியத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது. கலை உலகத்திலும், கள இயக்கத்திலும் பிரகாசித்த பால்ராஜ் சஹானி - எஸ்.ஏ.பெருமாள் மார்ச் 3, 2020 […] கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 19 பால்ராஜ் சஹானி நடிகராகவும் எழுத்தாளராகவும் வாழ்ந்தவர். 1.5.1913ல் ராவல்பிண்டியில் பிறந்தவர். லாகூரில் அரசுக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ.பட்டம் பெற்றார். தமயந்தி சஹானியை திருமணம் செய்தார். 1930ல் தனது மனைவியுடன் ஆசிரியப் பணிக்காக கல்கத்தாவுக்கு சென்று தாகூரின் சாந்திநிகேதன் விஸ்வபாரதி யுனிவர்சிடியில் சேர்ந்தார். அங்கு ஆங்கிலம், இந்தி கற்பித்தார். 1938ல் பால்ராஜ் மகாத்மா காந்தியுடன் ஓராண்டு தொண்டராக இருந்தார். பின்பு காந்தியின் ஆசியோடு லண்டன் பி.பி.சி.யில் இந்தி செய்தி வாசிப்பாளர் பணியில் சேர்ந்தார். 1943ல் நாடு திரும்பினார். இப்டாவின் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். அவரது மனைவி தமயந்தி ஏற்கெனவே அதில் நடிகையாக இருந்தார். பின்பு சினிமா வாய்ப்புக்காக மும்பை சென்றனர். அங்கு கே.ஏ.அப்பாஸ் இயக்கத்தில் “இன்சாப்”, தர்த்தி கி லால் ” ஆகிய படங்கள் 1946ல் வெளியானது. பெயரும் புகழும் கிடைத்தது. அவரது மனைவி தமயந்தியும் ”தூர் சஸியே இன்““ மற்றும் சில படங்களில் நடித்தார். 1953ல் பிமல்ராயின்”தோ பிகா ஜமீன்” வெற்றிப்படமாகி கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் பரிசு பெற்றது. தொடர்ந்து அவர் நடித்த தாகூரின் “காபூலி வாலா“ பெரும் வெற்றிபெற்றது. தமயந்தி சினிமாவில் கதாநாயகியாகவே நடித்தார். 1947ல் அவர் நடித்த ‘குடியா“ படம் வெற்றிபெற்றது. அதே ஆண்டு இறுதியில் கொஞ்ச வயதிலேயே காலமானார். இரண்டாண்டு கழித்து பால்ராஜ் தமயந்தியின் தங்கை சந்தோஷ் சந்தோக்கை திருமணம் செய்துகொண்டார். சந்தோசும் டெலிவிசன் நாடகங்களை எழுதினார். புகழ்பெற்ற நடிகைகள் பத்மினி, நாட்டன், மீனாகுமாரி, வைஜயந்திமாலா, நர்கீஸ் போன்றவர்களுடன் பால்ராஜ் கதாநாயகனாக நடித்தார். பிந்தியா, சீமி, சோனி சி சிடியா, சுட்டா பஜார், பாபிசி சுடியான், கத்புட்ஸி, லஜ்வந்தி, கர்சன்சார், நீல்கமல்,கர்கர்கஹானி, தோராஸ்தே, ஏப்பூல் தோமாலி போன்ற அவரது படங்கள் வெற்றியும் பாராட்டும் பெற்றன. ‘வக்த்“ என்ற படத்தில் அவரது பாடல் “ஆயிமெரிஜோரா ஜபீன்“ என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் படைக்கப்பட்டது. அசலா சச் தேவ் இதில் கதாநாயகியாக நடித்தார். 1946 முதல் 1970 வரை பால்ராஜ் சினிமா நடிகராய் பிரகாசித்தார். பஞ்சாபி மொழியிலும் இரு படங்கள் நடித்தார். அவர் கடைசியாக நடித்த படம் ‘கரம் ஹவா“ இது இந்தியா - பாக் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்குச் செல்ல மறுக்கும் ஒரு முஸ்லிம் பற்றிய கதையாகும். படம் முடித்து டப்பிங்கும் பேசி முடித்த பின் அவர் காலமானார். அத்திரைப்படத்திற்கு சோவியத் நாடு நேரு பரிசு பெற்றது. அப்படத்தில் கடைசியாக கூறிய வாசகம் “ஒரு மனிதன் எவ்வளவு காலம் தனிமையில் வாழ்வது?” என்பதாகும். அவர் சிறந்த ஆங்கில எழுத்தாளர். பின்பு தனது தாய்மொழி பஞ்சாபில் சிறந்த இலக்கியங்களை உருவாக்கினார். 1960ல் பாகிஸ்தான் சென்று வந்தார். “எனது பாகிஸ்தான்” என்ற நூலை எழுதினார். 1969ல் ரஷ்யா சென்று வந்து அந்த நினைவுகளை எழுதினார். அவர் பல கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதிக் குவித்தார். எனது சினிமா அனுபவங்கள் என்ற நூலும் எழுதியுள்ளார். நல்ல வாசிப்புத் திறனும் படைப்புத் திறனும், இடதுசாரி அரசியலும் கொண்டவராக வாழ்ந்து மறைந்தார். பால்ராஜ் சஹானியும் பி.கே.வாசுதேவன் நாயரும் இணைந்து அகில இந்திய இளைஞர் அமைப்பை உருவாக்கினார். தில்லியில் சிறந்த கம்யூனிஸ்ட் தலைவரான குரு ராதாகிருஷ்ணன் முன் நின்று வாலிபர் மாநாட்டை நடத்திக் கொடுத்தார். இம்மாநாட்டில் 250 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். வாலிபர் சங்கத்தின் முதல் அகில இந்தியத் தலைவராக பால்ராஜ் சஹானி தேர்வு செய்யப்பட்டார். இது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பாகும். இதை பொதுவான அரசியல் தலைவர்களும், கம்யூனிஸ்ட் தலைவர்களும் நாடு முழுவதும் வரவேற்றனர். 1951ல் பால்ராஜ் “பாஜி” என்ற படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதினார். இப்படத்தை குருதத் இயக்க தேவ் ஆனந்த் நடித்தார். 1969ல் பால்ராஜ் சஹானிக்கு பத்ம ஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது. தில்லியில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் ஒரு நூலகம் அமைத்து, வாசகர் வட்டத்தையும் பால்ராஜ் உருவாக்கினார். அவர் எளிமையாக வாழ்ந்தார். ஆடம்பரமின்றி எளிமையாகவே நடித்தார். சினிமாவில் அவர் தேவையற்ற சிக்கல் எதிலும் சிக்கவில்லை. சினிமாவில் ஒரு ரோல் மாடலாய் திகழ்ந்தார். தோ பிகா ஜமீன் படம் மூலம் நவயதார்த்த சினிமா என்றால் என்ன என்பதைக் காட்டினார். பால்ராஜ் குடும்பமே தோழர் பி.சி.ஜோஷியின் ஆணைப்படி கட்சிக் குடும்பமானது. அவர் கட்சி ஊழியரானார். அவரது மனைவி தமயந்தி கதாநாயகியாக நடித்ததில் கிடைத்த பணத்தை கட்சிக்குக் கொடுத்தார். இப்டாவில் உறுப்பினராக இருந்த பிருதிவிராஜ் கபூர், அமியா சக்ரவர்த்தி, புகழ்பெற்ற இசையமைப்பாளரும், நாட்டுப் புறப்பாடல்களைப் பரப்பியவருமான எஸ்.டி. பர்மன் ஆகியோர் அடிக்கடி சந்தித்து இப்டாவை செழுமைப்படுத்தினர். இப்டாவின் மத்தியக்குழு தமது கலாச்சார வாழ்வில் தனித்தன்மையுடன் திகழுகிறது என்று பாராட்டப்பட்டது. 1948ல் தோழர் பி.டி.ரணதிவே செயலாளரான காலத்தில் கட்சி தடைசெய்யப்பட்டதால் அப்போது இப்டா கலைக்கப்படும் நிலை ஏற்பட்டது. எனினும் பால்ராஜ், தமயந்தி போன்ற கலைஞர்கள் உறுதியாக நின்று இப்டாவின் பாரம்பரியத்தை நிலைநாட்டினர். பால்ராஜ், தமயந்தி இருவரும் சினிமாவில் சம்பாதித்த பணத்தை கட்சிக்கும், நலிந்த கலைஞர்களுக்கும் அளித்து உதவினர். ஜோஷியும் இதில் இணைந்து நாடகங்களில் நடித்தார். அவரது மகள் ஷப்னம் மறைவும், பின்பு அவரது மனைவியின் மரணமும் பால்ராஜை உலுக்கிவிட்டது. ஜோஷி எவ்வளவோ பேசியும் அவரது சோகத்தை தேற்ற முடியவில்லை. எனினும் ஜோஷியின் வேண்டுகோளுக்கிணங்க 1972ல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசினர். ஆர்எஸ்எஸ் மாணவர்கள் தெரிவித்த எதிர்ப்பை மீறி மதவெறியால் நாடு அடைந்த இன்னல்களை தொகுத்துப் பேசினர். மாணவர்கள் அவரது பேச்சை வரவேற்று ஆரவாரம் செய்தனர். லண்டனில் அவர் அறிவாற்றலின் வெளிச்சத்தை தேடிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் விஞ்ஞான சோசலிசத்திற்கு வந்து தோழர் பிராட்லி மூலம் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார். இறுதிவரை மக்கள் சேவை, அவர்களுக்கு அறிவுவெளிச்சம் தந்து மக்களை செயல்படுமாறு தூண்டினார். சோசலிச தீபத்தை அவர் உயர்த்திப்பிடித்தார். சினிமா உலகிலும் அவர் சமரசம் செய்து கொள்ளாமல் நல்லதே செய்தார். தனது இறுதிநாட்களில் பசுமை தவழும் தனது பஞ்சாபிலேயே கழிக்க விரும்பினார். அறுபதாவது பிறந்த நாளைக் கொண்டாட இருந்தபோது பால்ராஜ் திடீர் மாரடைப்பால் 13.4.1973ல் காலமானார். ஆண்டுதோறும் அவர் பெயரால் சிறந்த திரைப்படங்களுக்கு மும்பையில் 1973 முதல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இப்டாவின் புரட்சி எழுத்தாளர் யஷ்பால் - எஸ்.ஏ.பெருமாள் மார்ச் 4, 2020 […] கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 20 இவர் பகத்சிங்கின் தோழர் கம்யூனிஸ்ட் கட்சியிலும், இப்டாவிலும் முக்கியத் தோழராக, பிரேம் சந்த்தைப் பின்பற்றி சிறந்த படைப்பாளியாக புரட்சி எழுத்தாளர் என்ற பட்டத்தோடு இயங்கியவர் யஷ்பால். இவர் 11 நாவல்களும், 5 சிறுகதைத் தொகுப்புகளும், நாடகங்கள்,2 பயணக்குறிப்புகள், தன்வரலாறு நூல்களை எழுதியவர்.பத்மபூசன், சாகித்ய அகாடமிவிருதுகள் பெற்றவர். பஞ்சாபில்கங்கரா ஹில்ஸில் 3.12.1903-ல்ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். அவரது தாயார் ஆரிய சமாஜத்தில் நம்பிக்கையுள்ளவர். தனது மகனை ஆரிய சமாஜப் பள்ளியில் சேர்த்தார். ஆரிய இந்தியர்கள் தான் நாட்டை ஆள வேண்டும். பிரிட்டிஷார் தங்கள் பிரிட்டனைத்தான் ஆள வேண்டும் என்ற கோட்பாட்டையே அக்காலத்தில் ஆரியசமாஜப்பள்ளிகளில் போதித்தனர். ஆனால் யஷ்பால் இளவயதிலேயே காந்தியின்பால் ஈர்க்கப்பட்டார். பின்பு லாகூரில் படிக்கும் போது காந்தியத்தைப் பின்பற்றி பள்ளி, கல்லூரி மாணவப்பருவத்திலேயே கிராமங்களில் சென்று பிரச்சாரம் செய்தார். ஆரிய சமாஜியும் காங்கிரஸ்காரருமான லாலாலஜபதிராயைப் பின்பற்றி சமூக சேவையில் ஈடுபட்டார். நேஷனல் காலேஜில் படித்தபோது பகத்சிங், சுகதேவ் தாப்பரையும் சந்தித்தார். இருவரும் பஞ்சாபில் ஆயுதப் புரட்சி பற்றி யஷ்பாலிடம் பேசினர். மேலும் வரலாற்றுப் பேராசிரியர் ஜெய்சந்திரவித்யாதர் கதார் புரட்சியாளர்களுக்கு மாணவர்களிடம் ஆதரவு திரட்டி வந்தார். 1928-ல் பகத்சிங்கும் அவரது தோழர்களும் இந்துஸ்தான் குடியரசுக் கழகத்தை துவக்கினர். பின்பு அதை இந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசு படை என்று மாற்றினர். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் அவ நம்பிக்கை ஏற்பட்டதால் யஷ்பால் பகத்சிங்கின் அமைப்பில் சேர்ந்து பணியாற்றத் துவங்கினார். இடையில் யஷ்பாலுக்கு ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் கிளார்க் வேலை கிடைத்தது. குடும்ப வறுமையால் வழியின்றி அதில் சேர்ந்தாரே தவிர அவருக்கு பகத்சிங் படைமீதே நினைவாக இருந்தது. 1929-ல் பணியிலிருந்து வெளியேறி லாகூரில் தங்கி படையில் சேர்ந்தார். அங்கு இந்துஸ்தான் படைக்கான வெடிகுண்டு செய்யும் இடத்தில் போலீஸ் புகுந்தது. பகத்சிங்கும் சுகதேவும் கைது செய்யப்பட்டனர். யஷ்பால் உள்ளிட்ட மற்றவர்கள் தலைமறைவானார்கள். தொடர்ந்து சகரனாபூரில் ஒரு வெடிகுண்டு ஆலையும் பிடிபட்டது. இக்காலத்தில் பிரிட்டிஷாரை எதிர்த்த இயக்கத்துடன் பல்வேறு அமைப்புகளை சேர்க்க யஷ்பால் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரிட்டிஷ் வைஸ்ராய் இர்வினைத் கொலை செய்ய ரயிலில் குண்டு வைத்ததில்பங்கு பெற்றார். ஆனால் இர்வின் தப்பிவிட்டார். தன்னுடன் படையில் பணியாற்றிய பிரகாஷவதியை யஷ்பால் திருமணம் செய்து கொண்டார். போட்டி பொறாமையில் சிலர் யஷ்பாலை போலீஸ் உளவாளி என்று புளுகினர். ஆனால் தலைவர் சந்திரசேகர ஆசாத் சந்தேகங்களைப் போக்கி யஷ்பாலைத் தன்னுடன் வைத்துக் கொண்டார். 1931 பிப்ரவரியில் ஆசாத் கொல்லப்படும் வரை யஷ்பால் அவருடனேயே இருந்தார். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், ஆசாத் மறைவுக்குப் பிறகு யஷ்பால் இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ஆர்மியை புனரமைப்பதில் இறங்கினார். ரஷ்யாவுக்குப் போய் புரட்சியை எப்படி நடத்துவது என்பதைப் பயின்று வர விரும்பினார். ஆனால் அது சாத்தியமாகவில்லை. ஆசாத் மறைவுக்குப் பிறகு இவரே படையின் கமாண்டர் ஆனார். 1932-ல் அலகாபாத்தில் யஷ்பால் கைது செய்யப்பட்டு 14 ஆண்டு கடுங்காவல் தண்டனை பெற்றார். நேரு குடும்பத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷியாம் குமாரி நேரு யஷ்பாலை பாதுகாக்க வந்தார். ஜவகர்லால் நேருவும் தலையிட்டார். ஆறுஆண்டு சிறையிலிருந்தபின் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் மூலம் 1938-ல் விடுதலையானார். அதன்பின்அவர் எழுதத் துவங்கினார். மார்க்சியக் கண்ணோட்டத்தில் இந்திய சமூக வாழ்வை அவரது படைப்புகள் எடுத்துக் கூறின. இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுப்படையின் தொடர்ச்சியாகவே அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். பின்பு இப்டாவின் அமைப்பாளர்களில் ஒருவரானார். 1939-ல் தனது “குகையிலிருந்து பறந்தது” என்ற நாவலை எழுதினார். கர்மயோகி என்ற இந்திப் பத்திரிகையில் சிறப்புக் கட்டுரைகள் எழுதினார். அதைத் தொடர்ந்து “புரட்சி” என்ற நாவலை எழுதினார். அதை வெளியிட தடைகள் வந்தன. அதனால் “புரட்சி காரியாலயா”(விப்லவ் காரியாலயா) என்ற பதிப்பகத்தை துவக்கினார். தொடர்ந்து “காம்ரேட்”, “துரோகி” என்ற நாவல்கள் கம்யூனிஸ்டுகளை ஆதாரமாய் கொண்டு வெளிவந்தன. அவரது சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் அவரை மாபெரும் போராளியாக, புரட்சியாளராக மக்களிடம் கொண்டு சேர்த்தது. மூன்று தொகுதிகளைக் கொண்ட அவரது வாழ்க்கை வரலாற்றை “ஒரு சிங்கத்தின் கண்ணோட்டம்” என்ற தலைப்பில் எழுதினார். அதில் விடுதலைப் போரில் ஆயுதமேந்திய போராட்டங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். பகத்சிங், ஆசாத் இருவரையும் மிகவும் மதித்து நேசித்தார். யஷ்பாலின் நூல்களை மதிப்பீடு செய்தவர்கள் அனைவருமே அவரை “மார்க்சிஸ்ட் நாவலிஸ்ட்” என்றே வர்ணித்துள்ளனர். ஆண்பெண் சமத்துவம் போன்ற விசயங்களில் கம்யூனிசக் கோட்பாடுகளில் உறுதியாக நின்றார். இவரது “ஜாத்தா சச்” என்ற பெரிய நாவல் இந்தியா - பாக் பிரிவினை பற்றியது. அதை டால்ஸ்டாயின் “போரும் அமைதியும்” நாவலுக்கு இணையானது என்று விமர்சகர்கள் எழுதினர். அவரது கடைசி நாட்களில் கண் பார்வை மங்கி விட்டதால் ஒரு தோழரை அழைத்து போரும் அமைதியும் நாவலை வாசிக்கச் சொல்லி கேட்டார். அதை மகத்தான நாவல் என்று பாராட்டினார். இறுதி வரை புரட்சியாளராகவே வாழ்ந்த யஷ்பால் 26.12.1976-ல் காலமானார். இப்டாவின் பெருமைக்குரிய படைப்பாளி கே.ஏ.அப்பாஸ் - எஸ்.ஏ.பெருமாள் மார்ச் 5, 2020 […] கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 20 இந்திய முற்போக்கு நாடக சங்கம் (IPTA) - இப்டாவில் அங்கம் வகித்து அதன் பெருமையை உலகம் முழுவதும் நிலைநாட்டியவர் குவாஜா அகமது அப்பாஸ் - கே.ஏ.அப்பாஸ். நாவல்கள், சிறுகதைகள், சினிமா திரைக்கதை வசனம், திரை இயக்குநர், பத்திரிகையாளர், தனிப்பத்திகள் எழுத்தாளர் என பன்முகப் பரிமாணம் பெற்றவர் அப்பாஸ். தனது தோழர்களோடும் இப்டா உறுப்பினர் திரைப்படத் தயாரிப்பாளர் பிருதிவிராஜ் கபூரோடும் நெருக்கமாக இருந்தார். அப்பாஸ் எழுதியவை 73 நூல்களாகும். அவரைப் பற்றி மற்றவர்கள் 9 நூல்களை வெளியிட்டுள்ளனர். அப்பாஸ் முதன் முதலாக வங்கப் பஞ்சம் குறித்து இப்டா நடத்தி வந்த ‘தர்த்தி கி லால்” நாடகத்தை திரைப்படமாக இயக்கினார். இந்தியாவில் அதுதான் சமூக யதார்த்த சினிமாவின் துவக்கமாகத் திகழ்ந்தது. நீச்சா நகர், நயாசன்சார், ஜக்தே ரஹோ, சாத் இந்துஸ்தானி போன்ற இவரது படங்கள் தேசிய, சர்வதேசப் பரிசுகளைப் பெற்றன. ரஷ்யா இவரைக் கொண்டாடியது. பிருதிவி ராஜ்கபூரின் மகனான ராஜ்கபூரின் ஆவாரா, ஸ் ரீமான் 420, மேரா நாம் ஜோக்கர், பாபி, ஹென்னா போன்ற படங்களை இயக்கினார். அவரது படங்கள் அனைத்தும் வெற்றிபெற்றன. பத்திரிகைகளில் சிறப்பு பத்திகள் வெளியிடுவதை முதன்முதலில் அப்பாஸ் தான் ‘பாம்பே கிரானிக்கல்’லில் துவக்கி வைத்தார். பிளிட்ஸ் வார ஏட்டிலும் எழுதினார். இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையைக் கொண்டு வந்த போது அதை எதிர்த்து பிளிட்ஸ் பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து வந்தார். அவர் “நான்கு நகரங்கள்” என்று ஒரு டாக்குமென்டரி படம் எடுத்தார். அதில் தில்லி, பம்பாய், கல்கத்தா, சென்னை ஆகிய நான்கு நகரங்களில் உழைப்பாளி மக்களின் வறுமைப்பட்ட வாழ்வு, மேட்டுக்குடியினரின் ஆடம்பர வாழ்வு பற்றி தோலுரித்துக் காட்டியிருந்தார். சென்சார் போர்டு அப்படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட் வழங்கியது. ‘யு’ சர்டிபிகேட் கோரி அப்பாஸ் உச்சநீதிமன்றம் வரை சென்றார். ஆனால் கிடைக்கவில்லை. விடுதலைப் போராட்ட காலக்கட்டத்தில் உருது இலக்கியமே மேலோங்கியிருந்தது. பிரேம்சந்த் போன்றவர்கள் கூட உருதுமொழியில்தான் எழுதினர். இந்திய - பாக். பிரிவினைக்குப் பிறகே இந்தி இலக்கியம் தலைதூக்கியது. உருது மொழியில் எழுதிக் கொண்டிருந்தவர்கள் இந்தியில் எழுதத் துவங்கினர். அப்பாஸ் எழுதிய “இன்குலாப்” என்ற நாவல் மதவிரோத குரோதங்களையும், அதனால் விளையும் வன்முறைகளையும் அம்பலப்படுத்தியது. இந்த நாவல் இந்தியமொழிகளிலும் ரஷ்யன், ஜெர்மன், இங்கிலீஷ், பிரெஞ்சு, அரபி மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அப்பாஸ் தனது திரைப்படங்களுக்கான கதைகளை இப்டா தலைவர்களான பிரேம்சந்த் முதல் முல்க்ராஜ் ஆனந்த் வரையிலான எழுத்தாளர்களிடமிருந்து பெற்றார். உழைப்பாளி மக்களின் துயரங்கள் முதல் காதல் வரை அருமையான படங்கள் எடுத்தார். தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் ‘சாத் இந்துஸ்தானி’ படத்தில் அமிதாப் பச்சனை அறிமுகப்படுத்தினார். அமிதாப்பின் தந்தை இப்டா தலைவர்களில் ஒருவராக இருந்தவர். இப்படம் விருதுபெற்றதாகும். அப்பாஸ் இலக்கியம், இலக்கியமல்லாத வசனங்கள் பற்றி பல பெரிய மனிதர்களைப் பேட்டி கண்டு அவற்றை வெளியிட்டார். ரஷ்யப் பிரதமர் குருச்சேவ், அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், சார்லி சாப்ளின், சீனத் தலைவர், மாசேதுங், விண்வெளி வீரர் யூரி ககாரின் போன்றவர்களைப் பேட்டி எடுத்துள்ளார். இவரது ‘நக்சலைட்டுகள்’ என்ற படத்திற்கு 1980ல் தங்க மயில் பரிசு கிடைத்தது. ரஷ்யாவிலிருந்தும்,சாகித்ய அகாடமியிலிருந்தும் பல விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன. இப்டாவுக்கு வெளியில் இருந்தவர்களுக்கும் அப்பாஸ் திரைக்கதை வசனம் எழுதிக் கொடுத்தார். கொரியப் போர்க்காலத்தில் சீனா சென்ற டாக்டர் கோட்னீஸ் கதையை அப்பாஸ் எழுதினார். பிரபல இயக்குநர் சேத்தன் ஆனந்த்துக்கு நீச்சாநகர் படக்கதையை எழுதினார். அப்பாஸ் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞர் பட்டம் பெற்றவர். சென்சார் போர்டு கேசில் உச்சநீதிமன்றத்தில் அவரே வாதாடினார். அரியானா மாநிலம் பானிபட் நகரில் 7-6-1914ல் பிறந்த குவாஜா அகமது அப்பாஸ் 1-6-1987ல் பம்பாயில் காலமானார். அவரது படைப்புகளில் இன்குலாப், தண்ணீர் என்ற இரு நாவல்கள் முன்பு தமிழில் வந்திருந்தன. புகழ்மிக்க படைப்பாளியான அப்பாஸ் இந்தியர்களின் இதயங்களில் நீங்காமல் நிறைந்திருப்பார். பிரிவினையை எதிர்த்து பேனா பிடித்த எழுத்தாளர் கிருஷ்ண சந்தர் - எஸ்.ஏ.பெருமாள் மார்ச் 6, 2020 […] கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 21 சந்தர் தனது படைப்புகளில் சாதி, மதவெறிகளைக் கடுமையாகச் சாடினார்.இனக்கலவரங்கள், வன்முறைகள், பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டுமென்றார். மிகச்சிறந்த மனிதாபி மானியாகவும், சர்வதேசிய வாதி யாகவும் வாழ்ந்தார் கிருஷ்ண சந்தர், உருது, இந்தி, ஆங்கில மொழிகளில் நாவல்கள், சிறுகதைகள், சினிமா, திரைக்கதைகள் என எழுதிக் குவித்தவர். இருபது நாவல்கள், முப்பது சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ரேடியோ நாடகங்களும் எழுதி ஒலிபரப்பாகின. இந்திய - பாக். பிரிவினைக்குப் பின் இந்தியில் மட்டுமே எழுதினார். இவரது எழுத்துக்கள் அனைத்தும் அங்கதச் சுவையுள்ளவையாதலால் பலரும் விரும்பி வாசித்தனர். திரைக்கதை வசனம் எழுதி தனது வறுமையைப் போக்கினார். ஒரு கழுதையின் சுயசரிதை என்ற இவரது நாவல் தமிழ், ஆங்கிலம் உட்பட பதினாறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியானது. கிருஷ்ண சந்தரின் “அன்னதாதா” (தானிய தானம்) புகழ்பெற்றது. நிலப் பிரபுக்களுக்காக உழைத்து தானியங்களை விளைவித்த விவசாயக் கூலி அடிமைகளின் வறுமை வாழ்வு பற்றியது கதை. இது 1946ல் “தர்த்தி - கி- லால்” என்று இந்தித் திரைப்படமாக வெளியாகி வெற்றிபெற்றது. தொடர்ந்து இவரது “மம்தா (1966), “ஷராபத்” (1970) திரைப்படங்கள் வந்து புகழ்பெற்றன. தனது திரைக்கதைகளை இவர் உருதுமொழியில் தான் எழுதிக் கொடுத்தார். கிருஷ்ண சந்தர் 23-11-1914ல் ராஜஸ்தானில் பரத்பூரில் ஒரு டாக்டரின் மகனாய் பிறந்தார். ஆனால் அவர்களது பூர்வீகம் பஞ்சாப் மாநிலமாகும். பின்பு இவரது தந்தை காஷ்மீரில் பூஞ்ச்சில் மகாராஜாவின் டாக்டராய் சேர்ந்தார். சந்தரின் முதல் நாவலான “முறியடிப்பு” காஷ்மீரில் பிரிவினை குறித்ததாகும். புகழ்பெற்ற இவரது படைப்பான “மிட்டி கா சனம்” காஷ்மீரச் சிறுவன் ஒருவனின் கதையாகும். இது சிறுவனின் நினைவுகளாக எழுதப்பட்டது. அடுத்து சந்தர் எழுதிய புகழ்பெற்ற நாவல் “கத்தார்” (துரோகி) இந்தியா - பாக் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டதாகும். அதற்போது மக்கள் அடைந்த அளவு கடந்த துன்பதுயரங்களைப் பற்றியும், அதில் ஒரு இளைஞனின் துரோகச் செயல்கள் பற்றியும் எழுதினார். காஷ்மீரத்து கிராமங்களின் வாழ்வு குறித்தும், நகரங்களில் குடியேறிய மக்களின் வாழ்க்கைச் சீரழிவுகளையும் சிறுகதைகளாக எழுதினார். அவற்றில் அந்த வட்டார வழக்குச் சொற்களையே பயன்படுத்தினார். 1930ல் சந்தர் பார்மன் கிறிஸ்டியன் கல்லூரியில் சேர்ந்து படித்தார். ஆங்கில இலக்கிய நூல்களை அளவிலா ஆர்வத்துடன் படித்தார். உருது இலக்கியங்களையும் கரைத்துக் குடித்தார். 1932ல் தனது முதல் சிறுகதையான “சாது” வை வெளியிட்டார். இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்திய முற்போக்கு நாடக சங்கம் - ஆகியவற்றில் முக்கியத் தலைவராகவும், கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகவும் இருந்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பி.சி.ஜோஷி, சஜ்ஜத் ஜாகீர், பிரேம்சந்த், பால்ராஜ் சஹானி ஆகியோரின் நெருங்கிய தோழராகவும் சந்தர் திகழ்ந்தார். சந்தர் தனது படைப்புகளில் சாதி, மதவெறிகளைக் கடுமையாகச்சாடினார். இனக்கலவரங்கள், வன்முறைகள், பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டுமென்றார். மிகச்சிறந்த மனிதாபிமானியாகவும், சர்வதேசியவாதியாகவும் வாழ்ந்தார். கிருஷ்ண சந்தர், சல்மா சித்திக் என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். அவரது மரணத்திற்குப் பின் வித்யாவதி சோப்ராவை மணந்து கொண்டார். அவருக்கு இருமகள்களும், ஒரு மகனும் பிறந்தனர். அவர் தனது வாழ்நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். 8-3-1977ல் மும்பையிலுள்ள தனது வீட்டில் சிறுவர்களுக்கான ஒரு நாவல் எழுதுவதில் ஈடுபட்டிருந்தார். “ஒரு வாத்தின் இலக்கியம்” என்று பெயரிட்டு முதல்வாக்கியத்தை எழுதிக் கொண்டிருந்த போதே திடீர் மாரடைப்பால் காலமானார். ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் நகரில் கிருஷ்ண சந்தர் பெயரால் ஒரு பெரிய பூங்காவும், அதன் நடுவில் அவரது சிலையும் நிறுவப்பட்டுள்ளது. ஏகாதிபத்திய எதிர்ப்பு, பிரிவினை எதிர்ப்பு, சாதிமதவெறிகளை எதிர்த்தும், கிராமப்புற விவசாயிகளின் துயரங்கள், சிறுவர் சிறுமிகளின் அவலம் பற்றி அமர இலக்கியங்கள் படைத்துள்ளார். மகத்தான கலைஞன் சப்தர் ஹஸ்மி - எஸ்.ஏ.பெருமாள் மார்ச் 7, 2020 […] சப்தர் ஹஸ்மி ஒரு கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் ) நாடக எழுத்தாளர், இயக்குநர், தெரு நாடகங்களை இயக்கி அரசியல் கருத்துக்களை மக்களின் நெஞ்சங்களில் பதியம் போடுபவர், நடிகர், பாடலாசிரியர், பாடகர், தத்துவவாதி எனப் பல்துறை வித்தகர். 12-4-1954ல் டில்லியில் பிறந்த இவர் இந்திய மாணவர் சங்கத்தில் செயல் வீரராய் திகழ்ந்தவர். டில்லியிலும் அலிகாரிலும் அவரது தந்தை ஹனீப், தாய் கமர் ஆசாத் ஹஸ்மி இருவரும் மார்க்சியர்கள். எனவே மார்க்சிஸ்ட் சூழலிலேயே வளர்ந்தார். சப்தர் தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் எம்.ஏ. படித்தார். அப்போது இந்திய மாணவர் சங்கத்தில் முன்னணியில் செயல்பட்டார். கட்சி உறுப்பினராகி இந்திய மக்கள் நாடக மன்றம் -இப்டாவில் செயல்படத் துவங்கினார். அநேக தெரு நாடகங்களை நடத்தினார். பின்பு ஜனநாட்டிய மன்ச் என்ற மக்கள் நாடக முன்னணியை உருவாக்கினார். அதன் 1973ல் ஜனம் என்ற அமைப்பை துவக்கினார். அது இப்டாவுக்கு வெளியே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு இணைந்து இயங்கியது. இந்திரா காந்தி அவசரநிலையைக் கொண்டு வந்த போது, பதவி நாற்காலியை தக்க வைப்பதற்கு செய்யும் அக்கிரமத்தை சப்தர் கண்டித்து “குர்சி குர்சி குர்சி” (நாற்காலி) என்ற தெரு நாடகத்தை ஒரு வார காலம் போட் கிளப் மைதானத்தில் நடத்தினார். இந்த நாடகத்தில் ஒரு ராஜா தனது சிம்மாசனத்தை தன்னோடு தூக்கிக் கொண்டே அலைவார். நாற்காலியை தேர்வு செய்யப்பட்ட ஜனநாயகப் பிரதிநிதியிடம் ராஜா தர மறுப்பார். இந்தத் தெரு நாடகம் சக்கைப் போடு போட்டது. இது ஜனம் அமைப்புக்கு ஒரு திருப்புமுனையானது. ஆனால் அவசரநிலை காலத்தில் பின்பு நாடகங்கள் தடை செய்யப்பட்டன. எனவே அந்த 19 மாதங்களும் ஆங்கிலப் பேராட்சியராய் காஷ்மீர், டில்லி, கார்வால் பல்கலைக்கழகங்களில் பணியாற்றினார். அவசரநிலை முடிந்தபின் ஜனம் நாடகப் பணிக்குத் திரும்பிய சப்தர் ஹஸ்மி “மிசின்” (எந்திரம்) என்ற நாடகத்தை தெருக்களில் இரண்டு லட்சம் தொழிலாளர்களிடையே நடத்தினர். விவசாயிகள் பிரச்சனை குறித்தும், பாசிசம் குறித்தும், பெண்கள் மீதான வன்முறைகள் குறித்தும், வேலையின்மை, பணவீக்கம் போன்ற தலைப்புகளில் நாடகங்களை நடத்தினார். தூர்தர்ஷனுக்கு “மலரும் பூக்கள்” போன்ற சிறுவர் தொடர்களை டி.வி.சீரியல்களாக்கித் தந்தார். கட்சி உறுப்பினரும் சகதோழருமான மொலாய் ஸ்ரீயை திருமணம் செய்து கொண்டார். பிடிஐ செய்தி நிறுவனத்திலும், எகனாமிக் டைம்ஸ், பத்திரிகையிலும் செய்தியாளராக பணியாற்றினார். மேற்குவங்க அரசின் செய்தித் தொடர்பு அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார். பின்னர் அதிலிருந்து விலகி முழுநேர அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டார். மாக்சிம் கார்க்கியின் “பகைவர்கள், ஹபீப் தன்வீரின் “மோரதரம் கா சத்யாகிரகா” ஆகிய இரு நாடகங்களும் அவருக்கு புகழ் சேர்த்தன. 1-1-1989(ஜனவரி 1)ல் காசியாபாத் முனிசிபல் தேர்தல் நடந்தது. அப்போது ஜனம் “ஹல்லா போல்” (உரத்துப் பேசு) என்ற தெரு நாடகத்தை தில்லி அருகில் உள்ள ஜந்தாபூர் கிராமத்தின் சாகிபாபாத் என்னுமிடத்தில் நடத்தியது. அங்கு காங்கிரஸ் குண்டர்கள் நாடகக் குழு மீது தாக்குதல் நடத்தியதில் சப்தர் ஹஸ்மி கொல்லப்பட்டார். அவர் இறந்து இரு தினங்களுக்குப் பின் அவரது மனைவி மொலாய் ஸ்ரீ அதே இடத்தில் அதே நாடகத்தை நடத்திக் காட்டினார். சப்தர் ஹஸ்மியைக் கொலை செய்த காங்கிரஸ் தலைவர் முகேஷ் சர்மா உள்ளிட்ட பத்துப் பேருக்கு காஜியாபாத் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. சப்தர் தனது நடிப்புக் காலத்தில் 24 நாடகங்களை 4000 முறைகள் வரை நடத்தியுள்ளார். அவர் கொல்லப்பட்ட ஜந்தாபூர் கிராமத்தில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் நாடகங்களை ஜனம் நடத்தி வருகிறது. சப்தர் ஹஸ்மியின் பணியைத் தொடரும் வகையில் எழுத்தாளர் பீஷம் சஹானி மற்றும் பல கலைஞர்களின் முயற்சியால் சப்தர் ஹஸ்மி நினைவு அறக்கட்டளை சஹமத் 1989 பிப்ரவரி மாதத்தில் உருவாக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கேரளத்தில் கோழிக்கோட்டில் அவர் பெயரால் சப்தர் ஹஸ்மி நாட்டிய சங்கம் அமைத்து ஏழை மாணவர்களுக்கு இலவச பயிற்சியளிக்கப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் நடித்து இயக்குநர் சுந்தர் சி இயக்கிய “அன்பே சிவம்”, இந்தி இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷி இயக்கிய “ஹல்லாபோல்” திரைப்படங்கள் அவரது நினைவின் உந்துதலால் எடுக்கப்பட்டவை. ஓவியர் எம்.எப்.உசேன் “ஹஸ்மிக்கு அஞ்சலி” என்றொரு ஓவியம் தீட்டி அதை ஏலம்விட்டார். ரூபாய் பத்து லட்சத்திற்கு அது ஏலம் போனது. அதை அவர் ஜனத்துக்கே வழங்கினார். லக்னோவில் மனித உரிமைகளுக்கான அமைப்பு ஆண்டுதோறும அவர் பெயரால் சிறந்த படைப்புகளுக்குப் பரிசுகள் வழங்கி வருகிறது. நாடு முழுவதும் சப்தர் ஹஸ்மி பெயரால் நாடகக் குழுக்களும், கலை இலக்கிய இயக்கங்களும் தொடங்கி நடந்து வருகின்றன. சப்தர் நம்மோடும் தெருக்களின் எளிய மக்களோடும் நிரந்தரமாய் வாழ்கிறார். FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.