[] [cover image] கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் என்.வி.கலைமணி FreeTamilEbooks.com Public Domain - CC0 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் 1. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் 2. இவர்தான் வ.உ.சி. அவர் எண்ணங்கள் சில 3. வாழையடிவாழையென வ.உ.சி. வக்கீலானார்! 4. வ.உ.சி. புலமை வல்லமை இராஜாஜி குறள் கற்க ஆசை! 5. வந்தால் கப்பலுடன் வருவேன் இல்லையானால் கடலிலே சாவேன்! 6. சுதந்திரப் புரட்சியில் சிதம்பரனார், சிவா முழக்கம்! 7. சிதம்பரம் ஆணையிட்டால்…அனலை விழுங்குவர் மக்கள்! 8. மூன்று குற்றங்கள் மீது சிதம்பரனார், சிவா கைது 9. வ.உ.சி. பேச்சும், பாரதி பாட்டும் பிணத்தை உயிரூட்டிப் பேசவிடும்! 10. கட்டைத் தாலி கழுத்துடன் செக்கிழுத்தார் சிதம்பரம்! 11. வ.உ.சி. தண்டனைக்குப் பழி வாஞ்சி ஆஷ்துரையைச் சுட்டார்! 12. வ.உ.சி. விடுதலையானார் ஒரே ஒரு தமிழன் வரவேற்றார் 13. கல்கத்தாவில் காந்தி திட்டம் : வ.உ.சி.மறுப்பும் - எதிர்ப்பும்! 14. அரசியல் கவரிமா வ.உ.சி. மக்கள் கண்ணில் மறைந்தார்! 15. சிதம்பரம் என்ற கப்பலை இராஜாஜி மிதக்கவிட்டார் 16. பெரும்புலவர் சிதம்பரனார் தமிழ்த் தொண்டு வாழ்க! கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்   என்.வி.கலைமணி   தமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : Public Domain - CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - சுமதி - sumathig000@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/kappalotiya_tamizhan_voc} இவர்தான் வ.உ.சி. அவர் எண்ணங்கள் சில வீரம் விளைந்த பாண்டிய நாட்டின் வித்தகர்களில் ஒருவராக விளங்கியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. புறநானூற்று வீரம் போற்றும் வீரச் சிங்கமாகப் பிறந்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற தொண்டு ஞானத்துக்குத் தொண்டராகத் தோன்றியவர் மாவீரர் வ.உ.சி! வடநாட்டுத் தேசிய செருகளத்துப் போர் முனைக்கு ஒரு திலகர் வாய்த்தாரென்றால், தென்னாட்டுத் தேசியத்துக்கு சுதந்திர உணர்ச்சியை ஊட்டி வளர்த்த தந்தையாக நடமாடிய தன்மான வீரர் வ.உ.சி இல்லையென்றால், “எங்கள் மன்னன் திலகர் உயிருடன் இருந்திருந்தால், இந்தப் பேடித்தனமான ஒத்துழையாமைத் திட்டத் தீர்மானத்தைக் கொண்டு வர இந்தக் காந்தி துணிவாரா?” என்று, கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்தியத் தேசியக் காங்கிரஸ் மகா சிறப்புச் சபையில் காந்தி பெருமானை நேருக்கு நேராகக் கேட்ட அஞ்சா நெஞ்சராக சிதம்பரம் இருந்திருப்பாரா? வ.உசிதம்பரத்தின் இந்த உட்கட்சிப் போர் முழக்கம் கேட்ட காங்கிரஸ் மாநாடே திணறியது! இதை விட வேறு சான்று என்ன வேண்டும், ஒரு மாவீரனின் அரசியல் ஆண்மைக்கு? அரசியல் அறப்போரோ, அல்லது மறப்போரோ, அவை எதுவானாலும் சரி, சாம, பேத தான, தண்டம் என்ற நான்கு யூகங்களையும் சமயத்துக்கேற்றவாறு வியூகங்களாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, சத்தியம், சாந்தம் என்கின்ற வைதீக மனப்பான்மைகள், விடுதலைப் போர்க்களத்திலே நல்ல, அமைதியான, வெற்றிகளைத் தேடிக் கொடுக்காது. என்ற மராட்டியச் சிங்கமான திலகரின் கொள்கைகளுக்குத் தமிழ் நாட்டின் வாரிசாக வாய்த்தவர் வ.உ.சிதம்பரனார்! நாட்டு விடுதலைக்கு இந்திய மண்ணிலே, தியாகத்தை விதைகளாகத் தெளித்துப் பயிரிட்ட அறிவியல் வித்தகர் வ.உ.சி. இவரைப் போல வேறு யாராவது நாற்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற - அதாவது இரண்டு ஆயுள் தண்டனைகளைப் பெற்ற வீர நாயகன் யாருமே இந்திய வரலாற்றிலே இல்லை. இன்று வரை உலக சுதந்திர வரலாற்றிலே நெல்சன் மண்டேலா ஒருவரைத் தவிர வ.உசியுடன் ஒப்பிட வேறு எவருமில்லை! தனிப்பட்ட தனது நண்பர்கள் இடையேயும் சரி, அல்லது அரசியல் அரங்குகளானாலும் சரி, அங்கே, தனது சூது வாதுகளற்ற உள்ளத்து உணர்வுகளால் தனது பெருமைகளைக் குறைத்துக் கொண்டும், மதிவன்மைகளைத் தாழ்த்திக் கொண்டும் பேசி, மற்றவர்களையும், உண்மைத் தேச பக்தர்களின் ஆற்றல்களையும் உயர்த்திப் பேசியவர். வ.உ.சிதம்பரனார், காந்தி பெருமானிடம் தளராத பற்றும், நம்பிக்கையும், பாசமும் – பண்பும் கொண்டவர்தான் என்றாலும் கூட, காந்தீயத்தால் இந்திய நாட்டிற்கு ஏராளமான தீமைகளே ஏற்படும் என்று, வைராக்கியமாக, விடாப்பிடியாக, ஓய்வு ஒழிச்சலின்றிப் பிரச்சாரம் செய்து வந்தார்: அதனால்தான் தனது இறுதிக் காலத்தில் அரசியல் தொண்டிலே தனக்குத் தானே வீழ்ச்சியை விளைவித்துக் கொண்ட பிடிவாதக் குணக்குன்றாக சிதம்பரனார் நின்றார். யாராக இருந்தாலும் சரி, தனது கொள்கைகளுக்கு உடன் படாதவர்களது உண்மைத் தன்மைகளை, வ.உசியார் உளமார உவந்து அவர்களை வரவேற்று; ‘நம்பியவர்களுக்குத் துரோகம் செய்யாதே’, என்ற உயர்வான நோக்கத்தை அவரவர்களுக்குப் போதித்தார் என்பதை நோக்கும் போது - அவரது பண்பாடு பாராட்டக் கூடியதாக உள்ளது. பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தின் அதிகார, ஆணவக் கோட்டையைத் தகர்த்தெறியப் புறப்பட்டு விட்ட ஒரு பெரும் படையின் சக்திக்கு; தென்னகத்தின் தளபதியைப் போல, தமிழன் சிதம்பரம் பிள்ளை, வெறியுடனும், மனக் களிப்புடனும் தேச விடுதலைக் களவீரராக காட்சியளித்தார்! ஆங்கிலேயர் ஆட்சியை இந்திய நாட்டை விட்டே விரட்டுவதில் முரட்டுத்தனம் காட்டியவர். ஆனால், இளகிய மனமும் இனிய குணமும் உடையவர். அதே நேரத்தில் தன்னைச் சூழ்ந்த தொண்டர்களிடத்திலும், தன்னை நம்பிப் பின்பற்றி வரும் பொதுமக்களிடத்திலும், நலமாகவும் நாகரிகமாகவும், அவர் நடந்து கொண்டவரே அல்லாமல், எவரிடத்திலும், எங்கும், அற்பத்தனமான மரியாதைகளையோ, வாக்குவாதங்களையோ செய்தவர் அல்லர் வ.உ.சி! தமிழ் நாட்டின் ஒழுக்கங்களிலும், தமிழ்மொழி இலக்கியங்களிலும், நமது முன்னோர்கள் எந்தெந்த நோக்கங்களைச் சிறந்தனவென்று பின்பற்றி வாழ்ந்து வந்தனரோ, அந்தக் குணச் சிறப்புகள் எல்லாம் குறைவறக் கொண்டவராவார். சங்க இலக்கிய நூல்களிலும், தமிழர் தம் பண்பாடுகளிலும் அவர் ஆழ்ந்த ஈடுபாடுடையவர். தமிழனுடைய லட்சியப் பண்புகளான ஆன்மீக வழிபாடுகள், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கடவுட் கொள்கைகளும் கொண்டவர். ஒருவரிடம் இந்தப் பண்புகளில் ஒன்றிரண்டு சற்று அதிகமாக அல்லது குறைவாக அவரவர்களுடைய இயல்புகளுக்கு ஏற்றவாறு இருக்கலாம். ஆனால், இந்த நான்கில் ஒன்று குறைந்தாலும் அவன் தமிழன் இல்லை என்பது வ.உ.சி.யின் கருத்தாகும். நாட்டுக்காக வாழ்ந்த இந்த தேசபக்தனை நினைத்து நாமும் அவனைப் போல நாட்டுப் பற்றை வளர்த்து நாட்டுக்காக வாழ்ந்து காட்டுவோம்! வாழையடிவாழையென வ.உ.சி. வக்கீலானார்! பண்டைக் காலத்தில் தமிழகத்தின் மதுரை, நெல்லை மாவட்டப் பகுதிகள் எல்லாம் பாண்டிய மன்னன் செங்கோலில் செழுமையாக இருந்து வந்தன. அறநெறி பிறழாத அரசர்களும், போர்முனையில் புறங்காட்டி ஓடாத வீரர்களும், நாணயம் தவறாத வணிகர் பெருமக்களும், வாய்மையே உயிரென வாழ்ந்த, புலவர் பெருமக்களும், “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்று நம்பி வாழ்ந்த நெறி பிறழாத மக்களும் வாழ்ந்த நாடு. மூவேந்தர் வாழ்ந்த தமிழ்நாடு! அந்நாடுகளுள் ஒன்று பாண்டியர் நாடு! இத்தகைய புகழ் பெற்ற மண்ணான நெல்லை மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் என்ற சிற்றறூரில்தான் “வரியா? வெள்ளையனுக்கா? தரமாட்டேன்” என்று மறுத்து வீறு கொண்டெழுந்த கட்டபொம்மன் பிறந்தான்! இதே மண்ணில்தான் ‘ஆற்காட்டு நவாப்பா? உனக்கேன் வரி? எதற்காக நான் கொடுக்க வேண்டும்’ என்று ஏறுபோல முழக்கமிட்ட பூலித்தேவன் என்ற மாவீரன் பிறந்தான். ஒட்டப்பிடாரத்திற்கு வடக்கே உள்ள எட்டையபுரம் என்ற ஊரிலேதான், மக்கள் கவிஞன் பாரதி தோன்றினார். நாவலர் எஸ்.எஸ். சோமசுந்தர பாரதி பிறந்தார். இத்தகைய பெருமைகளுக்கும், புகழுக்கும் சிகரமாக விளங்கிய சிற்றூரான ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் உலகநாதன் பிள்ளைக்கும், பரமாயி அம்மையாருக்கும் மகனாக, வ.உ.சிதம்பரனார் 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் வியாழக்கிழமை அன்று பிறந்தார். அவருடன் நான்கு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் பிறந்தார்கள். சிறுவன் வ.உ.சிதம்பரம், திண்ணைப் பள்ளிக் கூடத்தில், வீரப்பெருமாள் அண்ணாவி என்ற வாத்தியாரிடத்திலே ஆரம்பக் கல்வியைக் கற்றார். ஆசான் அண்ணாவி விதைத்த தமிழ் வித்து அருகம்புல்போல வேரோடி ஆல் போல விழுது விட ஆரம்பித்தது. ஆங்கில மொழியை வழக்குரைஞர் உலகநாதன் பிள்ளை சிதம்பரம் பிள்ளைக்குப் போதிக்கலானார்! ஏனென்றால், அக்காலத்திலே ஆங்கிலம் கற்பிக்கும் கல்விக்கூடம் ஒட்டப்பிடாரத்திலும் சரி, சுற்றும் முற்றும் உள்ள முக்கிய ஊர்களிலும் சரி இல்லை என்றே கூறலாம். அதனால் ஆங்கிலம் போதிக்கும் பள்ளியை உலகநாதன் பிள்ளை தனது சொந்த செலவிலேயே ஆரம்பித்தார். தனது மகன் சிதம்பரத்துக்காகத் துவங்கப்பட்ட அப்பள்ளியில் அவர் மகன் ஒருவர் மட்டுமே படித்தார். பிறகு நாளடைவில் அவ்வூர் பிள்ளைகளும் ஆங்கில மொழியைக் கற்க ஆரம்பித்தார்கள். அந்தப் பள்ளிப் படிப்பை படித்து முடித்தவுடன் சிதம்பரம், தூத்துக்குடி செயிண்ட்பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் சேர்ந்து படித்த பின்பு, கால்டுவெல் கல்லூரியில் மெட்ரிகுலேஷன் கல்வியை முடித்தார். இவ்வாறு சிதம்பரம் ஆங்கிலத்திலும் தமிழறிவிலும் சிறந்து விளங்கினார். சிறுவயதில் துடுக்குத்தனம் செய்பவராக சிதம்பரம் இருந்ததால், அவரது தந்தை அடிக்கடி அடித்து விடுவார். அதனால், வீட்டைவிட்டு சிதம்பரம் ஓடி விடுவார். ஒரு சமயம் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடி, தலையை மொட்டையடித்துக் கொண்டு பட்டினத்து அடிகளைப் போல துறவியாகி விட்டார். கட்டிய கோவணத்துடன் அவர் ஊர் ஊராகச் சுற்றி வந்தார். வெளியூரிலே இருந்து சிதம்பரம் தனது நண்பர் ஒருவருக்கு எழுதிய ஒரு கடிதம் உலகநாதன்பிள்ளையின் கைக்குக் கிடைத்ததும், அவர் மதுரை மாநகரிலே திரியும் தனது மகனைச் சென்று பார்த்து வீட்டிற்கு அழைத்து வந்தார். சிதம்பரத்தின் குறும்புத் தனங்களை எப்படியும் குறைத்து அவரை நல்வழிப்படுத்த எண்ணிய உலகநாதன் பிள்ளை, ஒட்டப்பிடாரம் ஊரிலே உள்ள ஒரு வட்டாட்சி அலுவலகத்தில் தனது மகனைக் குமாஸ்தா பணியிலே சேர்த்தார். ஆனால், அந்த வேலையில் அவர் சில மாதங்களே பணியாற்றினார். பிறகு, வழக்குரைஞர் படிப்புப் படிக்க அவருக்கு ஆர்வம் மேலிட்டது. அதனால், தனது மகன் சிதம்பரத்தை அவர் தந்தை, திருச்சியிலே அவரது சட்டத்துறை நண்பர்களான கணபதி ஐயர், ஹரிஹர ஐயர் என்பவர்களது கண்காணிப்பிலே சட்டப்படிப்பைக் கற்க வைத்தார். கி.பி.1890- ஆம் ஆண்டில் சிதம்பரம் சட்டப்படிப்பில் தேர்வாகி, வக்கீல் பட்டம் பெற்று, வழக்குரைஞரானார். மீண்டும் அவர் தனது சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்துக்கு வழக்கறிஞராகத் திரும்பி வந்தார். சிதம்பரம், சிவில் கிரிமினல் இரண்டின் வழக்குகளையும் ஏற்று நீதிமன்றத்திலே புகழ் பெற்றார். ஆனால், அவருக்கு கிரிமினல் துறையிலேதான் அதிக வழக்குகள் வாதாட வந்து கொண்டிருந்ததால், அவரது முழுக் கவனமெல்லாம் கிரிமினல் துறையிலேயே பதிந்தது. நாளடைவில் அவர் புகழ் பெற்ற கிரிமினல் வக்கீலாகப் பெயரெடுத்தார். வருமானமும் நாளுக்கு நாள் பெருகியது. அவர் எடுத்துக் கொண்ட கிரிமினல் வழக்குகளில் எல்லாம் வெற்றிமேல் வெற்றி பெற்று வந்தார். அப்பகுதியிலே அவருக்கு கிரிமினல் வக்கீல் என்ற புகழ் பெருகி வரலாயிற்று. சில வழக்குகள் வெற்றி பெறாது என்று அவர் உணர்ந்தால், அப்படிப்பட்ட வழக்குகளில் வாதாடி அவரது நேரத்தை வீணாக்காமல், பெயரையும் கெடுத்துக் கொள்ளாமல்; அந்த வழக்குகளைச் சமரசம் செய்து வைத்துத் தனது கட்சிக்காரர்களைத் திருப்திப் படுத்துவார். இது, அவரது நுட்பமான வாதாடும் புத்திக்கு வெற்றிப் படியாக அமைந்தது. வழக்குக்காக வரும் கட்சிக்காரர்களிடம் ஏற்றத் தாழ்வு காட்டாமல், எல்லாரிடமும் அன்புடன் பேசி, எடுத்துக் கொண்ட வழக்குகள் தோல்வியுறாமல் வழக்குகளை நடத்தும் அவரது திறமைகளை உணர்ந்த அப்பகுதி மக்கள், அவரிடம் தனியொரு மதிப்பும், மரியாதையும் காட்டி மகிழ்ச்சியடைந்தார்கள். ஏழை மக்கள் மீது போலீசார் பொய் வழக்குகளைத் தொடுத்துள்ளார்கள் என்பதை அவர் நெஞ்சார உணர்ந்தால் - அந்த ஏழைகளிடம் பணமே பெறாமல் வழக்குகளை அவர் ஏற்று வாதாடி வெற்றி தேடித் தருவார். இதனால், போலீஸ்துறை அவருக்கு விரோதமாகி விடுமே என்று அவர் அச்சப்பட்டதே இல்லை. இந்தப் பழக்கம்தான் அவருக்கு எதிர்காலத்திலே வெள்ளையர் ஆட்சியை வேரறுக்கும் அஞ்சாமை உணர்வை உருவாக்கியது எனலாம். ஆனால், போலீஸ் துறையானது அவருக்கு அன்று முதலே பகையானது. வ.உ.சி. போலீசாரிடையே எப்போது வகையாகச் சிக்குவார் என்று சமயத்தை காவலர்கள் எதிர்நோக்கியே இருந்தார்கள். அதற்கேற்றவாறு, போலீஸ் அதிகாரிகள், தலைமை போலீஸ்காரர்கள் ஆகியோர், சுப்பிரமணியம் என்பவரைக் கொலை செய்ததாக வந்த ஒரு வழக்கில் வ.உ.சி.யையும் சேர்த்துக் குற்றவாளியாக்கி வழக்குப் பதிவு செய்தார்கள். சுப்பிரமணியம் கொலை செய்யப்பட்டதாக வந்த அந்த வழக்கில், வ.உ.சியை நீதிமன்றத்தில் வாதாட விடக்கூடாது என்ற அச்சத்தாலேயே அவரையும் சேர்த்துக் குற்றவாளியாகப் போலீசார் வழக்கைப் பதிவு செய்தார்கள். இந்த நுட்பத்தை அறிந்த வ.உ.சி., அந்த வழக்கிலே தான் வாதாடவில்லை என்று போலீசாருக்கு எழுதிக் கொடுத்துவிட்டு, அவ்வழக்கிலே இருந்து அவர் தன்னை விடுவித்துக் கொண்டார். ஆனால், அந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, எதிரிகளுக்காகத் திறமையோடு வாதாடி, அந்த வழக்கிலே வெற்றியையும் அவர் பெற்று விட்டதால், போலீசாரின் ஆத்திரம் என்ற நெருப்புக்கு - வழக்கு தீர்ப்பு என்ற நெய்யை ஊற்றியது போல ஆனது. அதனால், போலீசார் வ.உ.சி. மீதே வேறு ஒரு வழக்கைத் தொடர்ந்தார்கள். வ.உ.சி. மீது தொடுக்கப்பட்ட வழக்கை மாஜிஸ்திரேட் விசாரித்து, அது பொய் வழக்கு, ஜோடனை வழக்கு என்று காரணம் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டார். இந்த வழக்கை நடத்த சிதம்பரத்துக்கு ஆன செலவுகளையும் நஷ்ட ஈடாகத் தருமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். எந்த போலீஸ் அதிகாரி பொய் வழக்கை வ.உ.சி. மீது தொடுத்தானோ அவனுடைய வேலையையும் அவன் இழந்து விட்டான். தன் மீது போலீசார் தொடுத்த வழக்கில், நீதித்துறை லஞ்சம் பெற்றுக் கொண்டு பணியாற்றியதை நன்குணர்ந்த சிதம்பரம், ‘நீதித் துறையும் லஞ்சம் வாங்குவதா?’ என்ற கோபத்தில், லஞ்சம் வாங்கிய சப்-மாஜிஸ்திரேட் ஏகாம்பரம் என்பவர் மீது வழக்குத் தொடுத்து, அவருக்கும் தண்டனையைப் பெற்றுத் தந்தார் வ.உ.சி.! மற்ற இரு அதிகாரிகளும் லஞ்சம் பெற்றுள்ளதை சாட்சிகளுடன் நிரூபித்து, அவர்களுக்கும் கடும் தண்டனைகளைப் பெற்றுத் தந்தார் சிதம்பரம். தன்மீது அதிகாரிகள் லஞ்சம் பெற்று வழக்குப் போட்டதை நிரூபித்து வ.உ.சி. அவர்களுக்குத் தண்டனைப் பெற்றுத் தந்த சம்பவம், அவரது தந்தை உலகநாதப் பிள்ளைக்கு ஒருவித அச்சத்தை உண்டாக்கியது. ஏனென்றால், போலீஸ்துறை, நீதித்துறை அதிகாரிகளை தனது மகன் பகைத்துக் கொள்வது அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால், தந்தையின் சொற்படி வ.உ.சி. ஒட்டப்பிடாரம் நீதிமன்றத்திலே இருந்து துத்துக்குடி நீதிமன்றத்துக்கு 1900 ஆம் ஆண்டு சென்று பணியாற்றலானார். வ.உ.சி. புலமை வல்லமை இராஜாஜி குறள் கற்க ஆசை! வயது 23 சிதம்பரத்துக்கு! தந்தை உலகநாதன் பிள்ளை மகனுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பி, திருச்செந்தூர் சென்று சுப்பிரமணிய பிள்ளை என்பாரின் மகள் வள்ளியம்மை என்பவரைப் பார்த்து மணம் செய்து வைத்தார் தமிழ் படித்த பெண் வள்ளியம்மை. தமிழ் இலக்கிய வகைகளை நன்கு கற்றுத் தேர்ந்த கன்னிகை. இந்த மாதரசி, திருக்குறள் போன்ற தமிழ்மறை நூல்களை தேவாரம், திருவாசகம் ஆகிய நூல்களை வைகறையில் எழுந்து அதனதன் பொருளுடன் ஓதி கற்றுணர்ந்த தமிழ்க் கன்னியாக இருந்தார். அந்தப் பெண் சிதம்பரனாருடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறு துன்பம் வந்த காலத்து இன்பமளிக்கும் ஊன்றுகோலாகவும், அறுசுவை உணவளிப்பதில் அன்னை போலவும், ‘நன்றும் தீதும் பிறர் தர வாரா’ என்பதைப் படித்துணர்ந்த பாவையாதலால் வ.உ.சி. பெயருக்கும், புகழுக்கும் ஏணியாக விளங்கி இல்லற வாழ்வை நல்லறமாக நடத்தி வந்தார். சிதம்பரனார், தனது குடும்பத்துக்குத் துணையாக, ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த ராமைய தேசிகர் என்பவருக்கு தம் இல்லத்தில் இடமளித்துக் காப்பாற்றி வந்தார். அவர் கண்களின் ஒளி இழந்தவர்; ஆனால், அந்த ஞானி அகக்கண்களை இழக்காத ஆன்மிகவாதியாக இருந்தார். அத்தகைய கண்பார்வை இழந்தவருக்கு சிதம்பரனார் இல்லத்தரசி அன்புடன், மனிதாபிமான நேயத்துடன் அவருக்குரிய பணிவிடைகளை முகம் சுளிக்காமல் நாள்தோறும் செய்து வருவார்! உறவினர்களும் - அக்கம் பக்கத்தவர்களும் இதைக் கண்டு ஊமையாக இருப்பார்களா? இழிகுலத்தானை வீட்டில் வைத்துள்ளார்கள் என்று துற்றி வந்தார்கள். சிதம்பரம் தனது மனைவியிடம் கூறினார். அதற்கு அந்த மாதரசி, ‘துறவிக்குக் குலம் ஏது? உயிர்தேன்றும் இறைவன் உறைந்திருக்கிறான் என்று எனக்குக் கூறியது தாங்கள்தானே! தூற்றுவார் தூற்றட்டும். அவர்கள் ஒரு நாள் போற்றும் காலம் வரும். பொறுத்திருப்போம், நல்வழி நடப்போம்’ என்று பதிலளித்தார். இத்தகைய ஓர் அபூர்வ மங்கை திடீரென ஏற்பட்ட நோய் காரணமாக உயிர் நீத்தார்! எப்படி இருக்கும் சிதம்பரனாருக்கு? கவலையே உருவான கடலாக வாழ்க்கையோடு அலைமோதி சிதம்பரம் வாழ்ந்தார் இருப்பினும் காலம் அவர் மனத்தை மாற்றியது. அந்த வள்ளியம்மையாரின் குடும்பத்திலேயே அவரது தந்தையார் வேறோர் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார். அந்த அம்மையார் பெயர் மீனாட்சி. இருவரும் இல்லறவாழ்வில் இணைபிரியா மனமுடன் வாழ்ந்து வந்தார்கள். வள்ளியம்மை, ‘துறவிக்கு சாதி ஏது?’ என்று எவ்வாறு கேட்டாரோ அதே பண்புடன் மீனாட்சியும், சிதம்பரமும், மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு என்ற சாதி மனப்பான்மையை வெறுத்து, கடவுள் படைப்பிலே எல்லாரும் சமமே, ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற தமிழ்த் தத்துவ நெறிக்கேற்றவாறு வாழ்ந்து வந்தார்கள். சிதம்பரம் சில மாதங்கள் சென்னை மாநகரில் வசிக்கும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டு விட்டது. அப்போது சென்னையில் ரிப்பன் அச்சுக்கூடம் என்ற ஓர் அச்சகம் புகழ் வாய்ந்த பெயருடன் இருந்தது. அங்கே, தமிழ் சம்பந்தப்பட்ட பல அறிவாளர்களும், அரசியல் தொடர்புடைய சிலரும் அடிக்கடி வந்து போகும் அச்சகம் அது. ஒரு நாள் அந்த அச்சகத்துக்கு சிதம்பரனார் சென்றார். அங்கே சகஜானந்தர் என்ற ஒருவர் இருந்தார், வ.உ.சி. அவரை அணுகி ‘நீர் என்ன சாதியோ? என்றார். உடனே அந்த சகஜானந்தர், ’ஐயா நான் நந்தனார் வகுப்புப் பிள்ளை’ என்றார். உடனே சிதம்பரனார் அவரது இரு கைகளையும் இறுகப் பற்றி, நீர் உண்மையை ஒளிக்காமல் கூறியதால், ‘நீர் தான் உண்மையான அந்தணர்’ என்று மகிழ்ந்து அவரை அனைத்துக் கொண்டு ஆரவாரம் செய்தார். சகஜானந்தரைத் தனது ஊருக்கு உடன் அழைத்து வந்தார். மனைவியை உணவளிக்குமாறு கூறி, அவரின் விவரத்தை மனையாளுக்குத் தெரிவித்தார். நாள்தோறும் சகஜானந்தருக்கு சிதம்பரனார் திருக்குறள் போன்ற சிறந்த நூல்களை எல்லாம் கற்பித்தார் அப்போதெல்லாம் தூத்துக்குடியிலே உள்ளவர்களில் சில தமிழார்வம் கொண்டவர்கள், தினந்தோறும் அவரது வீட்டுக்கு வந்து தமிழ் நூற்களை இலக்கண இலக்கிய உணர்வுகளோடு கற்று வந்தார்கள். இதுபோல தமிழ்ப் பாடங்களைப் பலர் சிதம்பரனாரிடம் படித்தார்கள். தமிழ்க் கல்வியைச் சிதம்பரனார் பிறருக்குப் போதிக்கும் போது ஒரு நிபந்தனையை விதிப்பார் விதிப்பார் என்றால் அது உதட்டளவில் அல்ல; உணர்வளவில் செயலளவில் கடைப்பிடிக்க வேண்டும் என்பார். என்ன அந்த விதி என்கிறீர்களா? வேறொன்றுமில்லை. முதல் நாள் கற்க வந்தவர்களுக்கு என்ன பாடத்தைச் சிதம்பரனார் கற்றுத் தருவாரோ, அதை அப்படியே பொருள் புரிந்து, மறுநாள் எழுத்துத் தவறாமல் ஒப்புவிக்க வேண்டும். அவ்வாறு, மனனம் செய்யாதவர்களுக்கு மறுநாள் வேறுபாடத்தை நடத்தவே மாட்டார். இதுதான், சிதம்பரனாரின் கல்விச் சித்தாந்தம். இதனை அறிந்த ராஜாஜி, சிதம்பரனாரிடம் திருக்குறள் பாடம் பெற வேண்டும் என்று விரும்பினார். சிதம்பரனார் சென்னை வந்து சில மாதங்கள் தங்கும் வாய்ப்புப் பெற்றிருந்த போது, இராஜாஜி வ.உ.சி.யிடம் சென்று தனக்குத் திருக்குறள் பாடம் பயிற்சித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தனது கல்விச் சித்தாந்தத்தின் விதியை சிதம்பரனார் விளக்கிக் கூறினார். ராஜாஜி அதைச் சரியென ஏற்றார். ஆனால், சிதம்பரனார் சித்தாந்தத்தின் படி நடக்க ராஜாஜிக்குப் போதிய கால வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதனால் வேறு பாடம் பயிற்சித் தர அவர் மறுத்து விட்டார். இதைக் கண்ட ராஜாஜி, ஐயா சிதம்பரம், எனக்குப் பாடம் சொல்லித் தரும் பொறுமை உமக்கும் இல்லை தங்களிடம் பாடம் கேட்கும் பொறுமை எனக்கும் இல்லை என்று கூறி, அன்று முதல் பாடம் கேட்கும் பேற்றை இழந்தார் ராஜாஜி! சென்னை மாநகரிலே இருந்த சிதம்பரனார் மீண்டும் ஒட்டப்பிடாரம் சென்றார். உடன் சகஜானந்தரையும் மீண்டும் அழைத்துச் சென்றார். எல்லா விழாக்களுக்கும் சகஜானந்தரை எங்கு போனாலும் அழைத்துச் செல்வார்! செலவாயிற்றே என்பதை அவர் பொருட்படுத்தமாட்டார். எவராவது தன்னுடன் இருக்கும் சகஜானந்தரை நெருங்கி அவரது சாதியைப் பற்றி விசாரித்தால். அவர் துறவி! யோகிகளிடம் சாதியை விசாரிப்பது தவறு என்று சிதம்பரம் கூறுவார்! ஒரு முறை சகஜானந்தரிடம் சிதம்பரனாரின் வழக்குரைஞர் நண்பர்கள் கேட்டபோது, “என்னைச் சிதம்பரனார் தனது பிள்ளையைப் போல பாசத்துடனும், நேசத்துடனும் வளர்த்த பெருந்தகை வள்ளல்” என்றார். வந்தால் கப்பலுடன் வருவேன் இல்லையானால் கடலிலே சாவேன்! கப்பலோட்டிய ஒரு தனிமனிதனைப் பார்க்கிறோம், வரலாற்றிலே படிக்கின்றோம்! இந்தத் தமிழன் ஏன் கப்பலோட்டினார்? எதற்காகக் கப்பலோட்டினார்? என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டியவர்களாக நாம் உள்ளோம். ‘திரை கடலோடி திரவியம் தேடு’ என்பதற்கு எடுத்துக்காட்டாக, கப்பலோட்டும் கலை தமிழர்களுக்கே உரிய ஒர் பாரம்பரியம் மிக்கது என்பதற்குச் சான்றாக, மூவேந்தர்களில் ஒரு பிரிவினரான சோழ சாம்ராச்சிய மன்னர்கள் பலம் வாய்ந்த தங்களது கப்பற்படைகளால், கடாரம், சாவகம், இலட்சத் தீவுகள், சிங்களம் போன்ற நாடுகளை வென்றார்கள் என்ற வரலாறுகளுக்கும் சான்றாக, தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமத்திலே பிறந்த சிதம்பரம் பிள்ளை தன்னந்தனி மனிதனாக நின்று கப்பலோட்டினார். வெள்ளைக்காரன் தமிழர்களுடைய செல்வத்தைச் சுரண்டுவது கண்டு நெஞ்சு பொறுக்காத சிதம்பரம் பிள்ளை வெள்ளைக் கொள்ளையனை எதிர்த்துக் கப்பலோட்டினார்! அவர் கப்பலோட்டியதற்கு அது மட்டுமே காரணமன்று. தமிழர்களது முன்னோர்களாகிய பண்டைத் தமிழர்கள் கப்பலோட்டிச் செல்வத்தைப் பெருக்கிக் கலைகளை வளர்த்து நல்லரசு நடத்தி வல்லரசுகளாக வாழ்ந்தார்கள் என்ற வரலாற்றை மீண்டும், நமக்கெலாம் நினைவுபடுத்திக் காட்டவும் கப்பலோட்டினார் நமது சிதம்பரம் பிள்ளை. வெள்ளையரை எப்போது விரட்டியடிக்கலாம் என்று சமயத்தை எதிர்பார்த்திருந்தார் வ.உ.சி. இந்நிலையில், ஆங்கிலேயரது ஆட்சி வங்காள மாநிலத்தை இரண்டாக வெட்டி துண்டு போட்டு ஒன்றை முஸ்லீம் வங்காளம், மற்றொன்றை இந்து வங்காளம் என்று பிரித்துப் பெயரிட்டது. மண்ணைத் துண்டு போடும் இந்த மாநிலப் பிரிவைச் செய்தவன் லார்டு கர்சான் என்ற வங்கக் கவர்னர். ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்த இந்து முஸ்லீம்களைப் பிரித்து வேற்றுமையை உருவாக்கவே கர்சான் இவ்வாறு செய்தான். ஆனால், வங்க மக்கள் ஆங்கிலேயரின் இந்த ஆட்சிச் சூதினை, வஞ்சகத்தைப் புரிந்து கொண்டார்கள். அதனால், பிரிவினையை எதிர்த்து இந்திய மக்கள் போராடத் துவங்கிவிட்டார்கள். இந்த வங்கப் பிரிவினைப் போராட்டம் இந்தியா முழுவதும் பரவியது. அந்நிய துணிமணிகளைப் பகிஷ்காரம் செய்தார்கள். மக்கள் மலைமலையாக அவரவர் ஆடைகளையும் கொண்டு வந்து குவித்து நெருப்பு வைத்து எரித்தார்கள். இந்தத் தீ “முன்னையிட்ட தீ முப்புரத்திலே பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே, யானுமிட்ட தீ மூள்க மூள்கவே” என்று பட்டினத்தடிகள் பாடியதற்கேற்ப ஆவேசத் தீ போல, அந்நிய ஆடைகளுக்கு இந்தியர் இட்ட தீ ஆங்கிலேயர் ஆட்சியின் ஆதிக்கத்திற்கே வைத்த தீயாக மாறி கொழுந்து விட்டெரிந்து கொண்டே இருந்தது. சிதம்பரனார் இதை சரியான நேரமாகக் கண்டார். வழக்குரைஞர் தொழிலைத் தூக்கி எறிந்தார். தேச விடுதலைப் போரில் குதித்தார். அதன் அறிகுறியாக தன்னிடம் இருந்த அன்னிய துணிமணிகள் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தி எரித்தார். இனி பிற நாட்டான் பொருள் எதையும் வாங்குவதில்லை என்று சபதமெடுத்தார். அந்நியத் துணி எவன் அணிந்திருந்தாலும், அவனை விரோதியாகவே பாவிக்கும் எண்ணம் அவருக்கு உதித்தது அந்நியனான ஆங்கிலேயனை எதிர்த்து இந்திய மக்கள் வங்கத்தில் போர்க்களம் கண்டு போராடுவதைக் கேட்டு மகிழ்ந்தார். அதே நேரத்தில் ஒவ்வொரு தமிழ் மகனையும் இந்தப் போராட்டக் களத்தில் குதிக்க வைக்க வேண்டுமென்று திட்டமிட்டு அதை ஒரு கடமையாகவும் கருதினார். வெள்ளைக்காரர்கள் நம் நாட்டுச் செல்வத்தைக் கொள்ளையடிப்பதை சிதம்பரனார் உணர்ந்த காரணத்தால், அதே செல்வத்தைக் கொள்ளையடிக்கும் வெள்ளை வணிகர் கூட்டத்தினர் மீது தனது முதல் தாக்குதலைத் துவங்கினார். தூத்துக்குடி நகருக்கும் சிங்கள நாட்டுக்கும் இடையே ஆங்கிலேயர்களது பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நாவிகேஷன் என்ற வணிக நிறுவனத்தின் கப்பல்களே வியாபாரம் செய்து வந்தன. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஒர் ஆங்கிலேயர். இவர் இந்தியா சுதந்திரமடையக் கூடாது; வெள்ளையர்களின் வியாபார வேட்டைக் காடாகவே என்றென்றும் இருக்க வேண்டுமென எண்ணிக் கொண்டிருப்பவர். ஆனால், இந்த வெள்ளை முதலாளியின் எஜமான மனப்பான்மையை வேரறுக்க எண்ணிய சிதம்பரனார், 1906-ஆம் ஆண்டு சுதேசிக் கப்பல் நிறுவனம் ஒன்றைத் தோற்றுவித்தார். இந்த வியாபார நிறுவனத்துக்கு உதவியாகச் சில சிறு வியாபாரிகள் தங்களாலான உதவிகளைச் செய்தார்கள். தமிழர்களிலேயே சிலர் வெள்ளையனை எதிர்க்க முடியுமா என்று சிதம்பரனாரைக் கேலி செய்தார்கள். மலையை மடுவு எதிர்க்க இயலுமா? முயலுக்கேன் வீண் வேலை முள்ளம் பன்றியுடன் மோத என்று எகத்தாளமிட்டார்கள். வேறு சிலர், சிறு உளிதான் மலையைப் பிளக்கும் ஆயுதம்! சிதம்பரம் அஞ்சாதே துணிந்து செய். எம்மாலான உதவிகளை இயன்றவரைச் செய்கிறோம் என்று அவரது மனதுக்கு உரம் போட்டார்கள். எவர் என்ன பேசினாலும் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட சிதம்பரம், முன் வைத்த காலைப் பின் வைப்பதில்லை என்ற மனதிடத்தோடு கப்பல் நிறுவனத்தை நிறுவிட அரும்பாடுபட்டார். 1906-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பதினாறாம் தேதியன்று சிதம்பரனாரின் சுதேசிக் கப்பல் கம்பெனி பதிவு செய்யப்பட்டது. கப்பல் கம்பெனியின் தலைவர் பொறுப்பை மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவரும், சேதுபதி சமஸ்தானத்தைச் சேர்ந்தவருமான பாண்டித்துரைத் தேவர் ஏற்றார். சிதம்பரனார் அந்த நிறுவனத்தின் செயலாளர் ஆனார். கப்பல் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 25 ரூபாய் என்றும், நாற்பதாயிரம் பங்குகளை விற்று பத்து லட்சம் ரூபாய் சேர்ப்பது என்றும் அந்த நிறுவனம் முடிவெடுத்துப் பணியாற்றியது. பங்குதாரர்கள் மளமளவென்று சேர்ந்தார்கள். ஜனாப் ஹாஜி முகமது பக்கீர் சேட் என்பவர் இரண்டு லட்சம் ரூபாய்க்குரிய பங்குகளை வாங்கினார். சுதேசிக் கப்பல் நிறுவனம் தமிழர்களுக்கு மட்டுமே உழைக்கும் நிறுவனமன்று ஆசியா கண்டத்திலுள்ள அனைவருக்கும் பேதமேதும் இல்லாமல் உழைக்கும் நிறுவனமாக இருந்தது. சுதேசிக் கப்பல் நிறுவனத்துக்கென்று சொந்தக் கப்பல் ஏதுமில்லை. வாங்கவும் இயலவில்லை அதனால் ஷாலைன் ஸ்டீமர்ஸ் என்ற கம்பெனியிடமிருந்து கப்பல்களைச் சுதேசிக் கம்பெனியார் குத்தகைக்கு வாங்கி ஒட்டினார்கள். ஆங்கிலேயர்களுடைய கம்பெனியை எதிர்த்து, போட்டி வியாபாரமாக, சுதேசிக் கப்பல்கள் ஓடுவதைக் கண்ட பிரிட்டிஷ் நிறுவனத்தாருக்குப் போட்டியும் பொறாமையும் ஏற்பட்டது. அதனால், இந்தியக் கப்பல் நிறுவனத்தை இயங்காமல் செய்வதற்குரிய முட்டுக் கட்டைகள் என்னென்னவோ அவற்றையெல்லாம் முடிந்த வரை வெள்ளை நிறுவனம் செய்து கொண்டே இருந்தது. ஷாலைன் ஸ்டீமர்ஸ் கம்பெனியின் உரிமையாளர் எஸ்ஸாஜி பாஜ்பாய் என்பவர். அவரைப் பிரிட்டிஷ் நிறுவனம் மிரட்டியதால் சுதேசிக் கம்பெனிக்கு குத்தகைக்காகக் கொடுக்கப்பட்டிருந்த கப்பல்களை ஷாலைன் நிறுவனத்தார் திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார்கள். நடுக்கடலில் தத்தளிக்கும் ஓட்டைக் கப்பலைப் போல சுதேசிக் கப்பல் நிறுவனம் வணிகரிடையே சிக்கித் தவித்தது. அதே நேரத்தில் சுதேசிகளை நம்பி வெள்ளை நிறுவனத்தைப் பகைத்துக் கொண்ட வணிகர்கள் திகைத்தார்கள். இவ்வளவு இன்னல்களுக்கு இடையிலும் சிதம்பரனார் உள்ளம் கலங்கவில்லை. உடனே அவர் இலங்கைத் தலைநகரான கொழும்பு நகருக்குச் சென்றார். அங்கே உள்ள கப்பல் கம்பெனி ஒன்றில், கப்பலைக் குத்தகைக்குப் பேசி தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தார். இதனைக் கண்ட தமிழ் வியாபாரிகள் சிதம்பரனார் சாதனையைப் பாராட்டி மகிழ்ந்தார்கள். சொந்தமாகக் கப்பல் இல்லாமல் வெள்ளையர்கள் கப்பல் நிறுவனத்தை எதிர்த்து வாணிகம் நடத்திட முடியாது என்பதைச் சிதம்பரனார் உணர்ந்தார். அதனால், புதிய கப்பல்களை வாங்கிட அவர் பணம் திரட்டினார். துத்துக்குடி வணிகர்கள் முடிந்த அளவுக்கு சுதேசிக்கப்பல் கம்பெனிக்குப் பண உதவிதளைச் செய்தார்கள். ஆனால், அந்த நிதியுதவி கப்பல் வாங்கப் போதுமானதாக இருக்கவில்லை. பம்பாய், கல்கத்தா போன்ற மிகப் பெரிய நகரங்களுக்குச் சென்று எப்படியெல்லாம் யார் யாரைப் பிடித்துப் பணம் திரட்ட முடியுமோ அப்படியெல்லாம் சிதம்பரனார் பணம் சேகரித்தார். சுதேசிக் கப்பல் கம்பெனிக்கு பல வட நாட்டு வணிகர்கள் பங்குதாரர்கள் ஆனார்கள். சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கம்பெனிக்குப் பணம் திரட்டிடச் சென்ற போது, “மீண்டும் தமிழகம் திரும்பினால் கப்பலுடன் தான் வருவேன். இல்லையென்றால் அங்கேயே கடலில் விழுந்து உயிர் விடுவேன்” என்று சபதம் செய்து விட்டு வடநாடு புறப்பட்டுச் சென்றார். வ.உ.சி. பம்பாய் சென்றபோது, அவரது ஒரே மகன் உலகநாதன் நோய்வாய்பட்டு இருந்தான். மனைவி மினாட்சி கர்ப்பிணியாக இருந்தார். சிதம்பரனார் நண்பர்கள் அவரை இப்போது போக வேண்டாம் என்று தடுத்தார்கள். ஆனால் அவர் எனது மகனையும் - மனைவியையும் இறைவன் காப்பாற்றுவான் என்று கூறிவிட்டு பம்பாய் சென்றார். குடும்ப நலத்தை விட தேச சேவைதான் பெரியது என்ற எண்ணத்தோடு அவர் பம்பாய் போனார். எடுத்த காரியத்தில் மிகக் கண்ணும் கருத்துமாக இருந்து அரும்பாடு பட்டு சில மாதங்களுக்குப் பின்னர் அவர் ஒரு கப்பலுடன் துத்துக்குடி துறைமுகத்துக்குத் திரும்பி வந்தார். கப்பலின் பெயர் ‘காலிபா’ என்பதாகும். கப்பலுடன் திரும்பி வந்த சிதம்பரனாரின் சாதனைத் திறனைக் கண்டு மக்களும், தமிழ் வணிகர்களும் பெரிதும் மகிழ்ந்தார்கள். அதே நேரத்தில் வேத மூர்த்தி என்ற அவரது நண்பர் பிரான்சு நாட்டுக்குச் சென்று ‘லாவோ’ என்றொரு கப்பலை வாங்கி வந்தார். அத்துடன் இரண்டு இயந்திரப் படகுகளும் சேர்த்து வாங்கப்பட்டன. ஒரே நேரத்தில் இரண்டு பெரிய கப்பல்களை வாங்கிய சிதம்பரனாரின் செயல் திறன் சாதனையைக் கண்டு இந்திய, தமிழ் நாட்டுப் பத்திரிகைகள் எல்லாம் அவரைப் பாராட்டின. மக்கள் கவி பாரதியார் தான் நடத்தி வந்த ‘இந்தியா’ என்ற வாரப் பத்திரிகையில், வெகு காலமாகப் புத்திரப் பேறின்றி அருந்தவம் செய்து வந்த பெண்ணொருத்தி, ஒரே நேரத்தில் இரண்டு பிள்ளைகளைப் பெற்றால் எவ்வளவு பெரிய மகிழ்ச்சி பெறுவாளோ - அது போல, அளவற்ற ஆனந்தத்தை நமது பொது மாதாவாகிய பாராதத்தாயும் - இந்த இரு பெரும் கப்பல்களைப் பெற்றமைக்காக மகிழ்ச்சி பெறுவாள் என்பது உறுதி" என்று அவர் எழுதி, சிதம்பரனாரின் சாதனைகளை பாராட்டினார். சுதேசி கப்பலிலேயே இலங்கைக்குப் போகும் பொருள்களை ஏற்றி அனுப்புவதென மக்கள் முடிவு கட்டினர். அதன்படி பொருள்களைக் கப்பலிலேயே ஏற்றுமதி செய்து அனுப்பி வைத்தார்கள். அதே நேரத்தில் பிரிட்டிஷ் கம்பெனி கப்பல்களில் இலங்கை போகும் பயணிகளும் ஏறவில்லை. கட்டுப்பாடாக எல்லாரும் தமிழர்களின் சுதேசிக் கப்பலிலேயே பயணம் செய்தார்கள். வெள்ளைக்காரர்களுடைய கப்பல் கம்பெனி நிர்வாகத்தினர் தங்களது கப்பல்களுக்குரிய பயணக் கட்டணங்களையும் குறைத்துக் கொண்டு, தரகர்களை நியமித்து பயணிகளை அழைத்துப் பார்த்தார்கள். சுதேசிக் கம்பெனி மீது சில இல்லாத பொல்லாத பொய்ப் பிரச்சாரங்களையும் செய்தார்கள். ஆனால், சுதேசிக் கம்பெனியார் வெள்ளையர்களின் பித்தலாட்டப் பிரச்சாரங்களை மறுத்துத் தவிடு பொடியாக்கினர். தமிழர்களும் மற்ற பிரயாணிகளும் சுதேசிக் கப்பல்களுக்கே பேராதரவைத் தந்து அவற்றை முன்னேற்றுவித்தார்கள். மக்கள் ஆதரவு இல்லாததைக் கண்ட ஆங்கிலேய கப்பல் நிர்வாகம் தனது கட்டணத்தைக் குறைத்தது. அதற்குப் பிறகும் கூட யாரும் கப்பல் பயணம் செய்ய முன் வரவில்லை. ‘கட்டணமே இல்லாமல் இலவசப் பிரயாணம் செய்ய வாருங்கள்’ என்று பயணிகளை அழைத்துப் பார்த்தார்கள். அப்போதும் கூட மக்கள் ஆதரவு வெள்ளையர் கப்பல் வாணிகத்துக்கு இல்லை. இதற்கு மேலும், என்ன செய்யலாம் என்று யோசித்த பிரிட்டிஷ் நிர்வாகம், சிதம்பரனாரைச் சந்தித்து, ‘சுதேசிக் கப்பல் நிர்வாகத்தை விட்டு விட்டு வாருங்கள். லட்சம் ரூபாய் கொடுக்கின்றோம்’ என்றும் கேட்டார்கள். ‘இலஞ்சமா? எனக்கா? நான் துவங்கிய சுதேசிக் கம்பெனிக்கு என்னையே துரோகம் செய்யச் சொல்கிறீர்களா? முடியாது. ஊர் மக்களும், மனச் சான்றுடையாரும் இழித்துப் பழித்துப் பேசும் லஞ்ச ஈனச் செயலுக்கு நான் உடன்பட மாட்டேன்! போ, வெளியே’ என்று தூது வந்த ஆங்கிலேயத் தரகனைச் சிதம்பரனார் துரத்தியடித்தார். பொருளுக்காக தேச பக்தியை அடகு வைக்கும் மானமற்ற பணியைச் செய்ய தூது வந்த கதையைச் சிதம்பரனார் பொது மக்களிடம் அம்பலப்படுத்தினார். இதற்குப் பிறகு, கப்பல் வாணிகத்தோடும், கைத் தொழில், விவசாய வளர்ச்சி போன்றவற்றிலே கவனம் செலுத்தி, தொழில் துறையில் அனுபவமுள்ள பலரின் உதவியுடன் சென்னை விவசாய கைத் தொழிற்சங்கம் லிமிடெட் என்ற ஒரு சங்கத்தை சிதம்பரனார் தொடங்கி வைத்தார். இந்த சங்கத்துக்குரிய பங்கு ஒன்றுக்குப் பத்து ரூபாய் வீதம் பத்தாயிரம் ரூபாய் சேர்ப்பது என்ற முடிவோடு அவர் பணியாற்றினார். ஏழைத் தொழிலாளர்களும், உழவர் பெருமக்களும் அந்த சங்கத்தில் உறுப்பினர் ஆனார்கள். இதற்கடுத்து, “தரும சங்க நெசவு சாலை”, “தேசிய பண்டக சாலை” என்ற இரு துணை நிறுவனங்களையும் சிதம்பரனார் துவங்கினார். இதே நேரத்தில் வங்காளத்தை இரு பிரிவாகப் பிரித்த ஆங்கிலேயரது ஆட்சியை எதிர்த்து நாடெங்கும் பலத்த மக்கள் எதிர்ப்பு பலமாக உருவானது. இதைச் சமாளிக்க ஆட்சி எல்லா அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விட்ட பிறகும் கூட நாட்டில் ஆங்கிலேயர் எதிர்ப்பு அதிகமாகவே உருவானது. இந்த நேரத்தில்தான் சிதம்பரனார் ஆங்கிலேயரின் வாணிபச்சுரண்டல் மீதான் எதிர்ப்பை மக்கள் இடையே மிகப் பலமாக உருவாக்கிக் கொண்டிருந்தார். ஆனால், வெள்ளையர்களது ஆட்சி எங்கே பலவீனமாகி விடுமோ என்று பயந்த ஆங்கிலேயருடன், பிரிட்டிஷ் கம்பெனி முதலாளிகளும், ஆங்கிலேய அரசு அதிகாரிகளும் ஒன்று சேர்ந்து, சிதம்பரனாரின் சுதேசிக் கப்பல் நிறுவனத்தை அழிக்க மூர்க்கத்தனமான முயற்சிகளை மேற்கொண்டார்கள். வாலர் என்ற ஓர் ஆங்கிலேய சப்மாஜிஸ்திரேட் என்பவர், இந்திய அதிகாரிகள் எவரும் சுதேசிக் கப்பலில் பிரயாணம் செய்யக் கூடாது என்ற ஓர் இரகசிய சுற்றறிக்கையை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைத்தார். இதன் எதிரொலியின் முதல் பிரச்சனையாக, ஆங்கிலேய அதிகாரிகள் இந்தியப் பயணிகளை மிரட்டினார்கள். சுதேசிக் கப்பல்களில் பயணம் செய்யக் கூடாது என்று அதிகார வர்க்கத்தினர் கெடுபிடிகளைச் செய்தார்கள். அதே நேரத்தில் இந்திய அதிகாரிகள் சுதேசிக் கப்பலின் வளர்ச்சிக்கு உதவக் கூடாது என்று பகிரங்கமாகவே வெள்ளையர்கள் செயல்பட்டார்கள். இந்த அதட்டலையும் மிரட்டலையும் கண்டு அச்சப்பட்ட இந்திய அதிகாரிகளில் பலர், பொய்க் காரணங்களைக் கூறி பணியிலே இருந்து தாமாகவே ஒய்வு பெற்றார்கள். பலர் வெளி மாவட்டங்களுக்கு மாறுதல்களைப் பெற்றுச் சென்றார்கள். இந்த நேரத்தில், பிரிட்டிஷ் கப்பல் மீது வேண்டுமென்றே சுதேசிக் கப்பல் மோதியதாக, துறைமுக அதிகாரிகளிடம் ஆங்கிலேய நிர்வாகத்தினர் புகார் செய்தார்கள். இந்தப் புகாருக்குப் பிறகு வெள்ளையர் நிர்வாகக் கப்பல் புறப்பட்ட பின்புதான் சுதேசிக் கப்பல் துறைமுகத்தை விட்டுப் புறப்பட வேண்டும் என்று சப் மாஜிஸ்திரேட் வாலர் உத்தரவிட்டார். ஏன், இந்த சூழ்ச்சியான உத்தரவை அவர் பிறப்பித்தார்? பிரிட்டிஷ் கப்பலுக்குரிய பிரயாணிகளை முதலில் நிரப்பிக் கொண்டால், அடுத்துப் புறப்பட இருக்கும் சுதேசிக் கப்பலுக்குத் தேவையான பிரயாணிகள் இருக்க மாட்டார்கள் அல்லவா? அதனால், சிதம்பரனார் நிர்வாகத்துக்கு நஷ்டம் மேல் நஷ்டம் ஏற்பட்டு நிர்வாகச் சீர்கேடுகள் உருவாகி, கம்பெனியை மூடி விடும் நிலையும் ஏற்பட்டு விடும் என்று எண்ணியே அந்த மாஜிஸ்திரேட் இப்படிப்பட்ட சூழ்ச்சியான உத்தரவைப் பிறப்பித்தார் என்று துத்துக்குடிப் பொதுமக்களும், பிரயாணிகளும் பரவலாகப் பேசலானார்கள். இந்த சூது நிறைந்த உத்தரவை எதிர்த்து சுதேசிக் கம்பெனியார் மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் மேல் முறையீடு வழக்குப் போட்டார்கள். அதே நேரத்தில், ‘சுதேசிக் கப்பல் - பிரிட்டிஷார் கப்பல் மீது மோதவில்லை, அது பொய் புகார்’ என்பதையும் சுதேசி நிறுவனம் நீதி முன்பு நிரூபித்துக் காட்டியது. இந்த உண்மைகளை உணர்ந்த மாவட்ட மாஜிஸ்திரேட், ‘சுதேசிக்கப்பல் எந்த நேரத்திலும் புறப்படலாம், அந்த உரிமை அதற்கு உண்டு’ என்று தீர்ப்பளித்தார்! இந்த தீர்ப்பு பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்துக்கு இடி விழுந்தாற்போன்ற அபாய நிலையை உருவாக்கி விட்டது. சுதேசிக் கப்பல் நிறுவனத்துக்கும், பிரயாணிகளுக்கும் உண்மையான நீதி கிடைத்தது என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனாலும், கடற்சுங்க அதிகாரிகள், சுகாதார முறைகளை மேற்கொள்ளும் டாக்டர்கள், துறைமுக அதிகாரிகள் அனைவரும் - ஒட்டு மொத்தமாகவும், தனித்தனியாகவும் சுதேசிக் கப்பலில் பயணம் செய்யும் பிரயாணிகளுக்கு பல வழிகளில் தொல்லைகளைக் கொடுத்து, அவர்களது பயணத்துக்கு வெறுப்புணர்வைத் தொடர்ந்து உருவாக்கி வந்தார்கள். சுதந்திரப் புரட்சியில் சிதம்பரனார், சிவா முழக்கம்! ‘பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு’ என்ற பாரதியார் பாடல் அப்போது பத்திரிகைகளிலும், அரசியல் மேடைகளிலும் பிரபலமாக எதிரொலித்துக் கொண்டிருந்த நேரம். பழமையும் - பெருமையும் வாய்ந்த இந்த நாடு, முந்நூறு ஆண்டுகளாக ஆங்கிலேயரின் அடிமைத் தனத்திலே சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்த அவலத்தை சிதம்பரனார் சிந்தித்தார் ஒவ்வொரு துறையிலும் வெள்ளையர்களது பொருளாதாரச் சுரண்டல்களினால் இந்தியா அல்லல்படுவதையும், அந்த தொல்லை மிகு அல்லல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் சிதம்பரம் கண்டார். . இந்திய மக்கள் எல்லாத் துறைகளிலும் பின் தங்கி வாழ்வது மட்டுமன்று, பஞ்சமும், வறுமையும், அவர்களைப் பாழ்படுத்தி, தமது முன்னோர்களின் பெருமைகளையும், புகழையும் மறந்தவராய் நலிந்து கிடப்பதைக் கண்ட சிதம்பரனார், இந்த அடிமைத் தளைகளை உடைத்தெறிய வீறிட்டெழுந்த அரசியல்வாதியாய் அரசியல் துறையிலே ஈடுபடக் கொதித்தெழுந்தார். இந்தியா சுதந்திரம் பெற வேண்டும், அந்நிய ஆட்சி அறுத்தெறியப்பட வேண்டும், பல்துறைகளிலும் பாரதம் முன்னேற வேண்டும், மக்கள் வாழ்க்கைத் தரம் வளம் பெற வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் மகா சபையிலே சேர்ந்தார் சிதம்பரனார்! இந்திய விடுதலைக்காக தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் நாட்டுக்கும், நாட்டு மக்களது வாழ்வுக்கும் தியாகம் செய்வது ஒன்றே தனது பிறப்பின் கடமை என்ற வாதப் பிரதிவாதத் தேச பக்தர் போர்க் கோலத்தோடு திருநெல்வேலி மாவட்டம் முழுவதுமாக வலம் வந்தார். ஒவ்வொரு மேடையிலும் முழக்கமிட்டார். ஆங்கிலேயரின் ஆணவ ஆர்ப்பாட்ட ஆட்சி நமக்குத் தேவையா? என்று கேட்டார் மக்கள் சொற்படி நடக்கும் ஒரு மக்களாட்சிதான் நமக்குத் தேவை என்பதற்கான காரண காரியங்களை மக்களிடையே விளக்கிப் பேசினார். அகில இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபையிலே சேர்ந்த அவர், ஆண்டுதோறும் வடநாட்டில் நடைபெறும் மகா சபை மாநாடுகளுக்குச் சென்று, வடநாட்டில் என்ன நடக்கின்றது? தென்னாட்டில் எப்படி அவை நடக்க வேண்டும்? என்ற திட்டங்களோடு அவர் திரும்பி ஊர் வருவார் வடநாட்டின் மகா சபைக் கூட்டங்களிலே வழக்குரைஞர்களே அதிகமாகக் கலந்து கொண்டு, அவர்கள் பணக்காரர்களாக இருந்தாலும் தேச பக்தியோடு செயலாற்றுவதைப் பார்த்து, சிதம்பரனாருக்குள்ளும் அந்த பரபரப்பு உணர்ச்சி ஊடுருவி விட தீவிரவாதியாக உருவெடுத்தார் - அரசியலில்! வடநாட்டின் காங்கிரஸ் மகா சபையில் மிதவாதிகளும், தீவிரவாதிகளும் இணைந்து பணியாற்றுவதில், அவர்களுக்குள்ளே சுதந்திரம், நாட்டு விடுதலை ஒன்றே உயிர் மூச்சாக இருந்தது. இந்த நேரத்தில் 1907 - ஆம் ஆண்டு சூரத் நகரில் தேசிய மகாசபை கூட்டம் கூடியது. அந்த மகா சபைக் கூட்டத்திற்கு சிதம்பரனாரும் சென்று கலந்து கொண்டார். காங்கிரஸ் மகாசபை பிரதிநிதிகள் தங்கியிருந்த விடுதியில், லாலா லஜபதிராய், அரவிந்தர், லோகமான்ய பாலகங்காரதர திலகர், விபின் சந்திரர், கோபால கிருஷ்ண கோகலே, பண்டித மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ், ராஷ் பிகாரி கோஷ் போன்ற வேறு பலரும் தங்கியிருந்தார்கள். அப்போது அரவிந்தர் மற்றவர்களைப் பார்த்து, ‘என் பிள்ளையவர்கள் எங்கே?’ என்று குரல் கொடுத்தார்! அங்கே கூடியிருந்த வடநாட்டுத் தலைவர்கள் எல்லாம் திகைத்து உட்கார்ந்திருந்தார்கள். உடனே அரவிந்தர் எழுந்து “அவர் தாம் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற தேசபக்தர் தூத்துக்குடி வக்கீல் சிதம்பரம் பிள்ளை” என்றார். அதே நேரத்தில் சிதம்பரம் பிள்ளை எதிர்பாராமல் திடீரென மகா சபைக்குள் நுழைந்த போது, அரவிந்தர் விர்ரென்று எழுந்து போய் சிதம்பரம் பிள்ளையை அன்போடு மார்போடு மார்பாக அனைத்துக் கொண்டு. ‘இவர் தான் சிதம்பரம் பிள்ளை’ என்று கூடியிருந்த எல்லோருக்கும் அடையாளம் காட்டினார். சூரத் காங்கிரஸ் மகா சபையில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் ஏற்பட்டக் குழப்பத்தால் - நாற்காலிகள் பறந்தன. பின்னர், திலகர் தலைமையில் தீவிரவாதிகள் ஒன்று கூடி, தங்களது முற்போக்குக் கொள்கைகளை நாடெங்கும் பரப்பத் திட்டமிட்டனர். அதன் மூலமாக மக்களைச் சுதந்திரப் போருக்குத் தயார் செய்வது என்று தீர்மானித்தார்கள். தமிழ்நாட்டில் தீவிரவாத கொள்கைக்கு மக்கள் ஆதரவு திரட்டிடும் பொறுப்பை சிதம்பரம் பிள்ளையிடம் திலகர் ஒப்படைத்தார். “தென்னாட்டிலேயே சிறந்த வீரர் சிதம்பரம்பிள்ளை ஒருவர் தாம்” என்றார் திலகர். தமிழ்நாடு திரும்பிய சிதம்பரம் பிள்ளை, ஆங்கிலேயர் ஆட்சியினால் இந்திய மக்கள் அனுபவிக்கும் தீமைகளைப் பொதுக் கூட்டங்களைக் கூட்டி விளக்கினார். அதனால், தமிழ் மக்கள் சுதந்திரப் போருக்குத் தயாராக வேண்டும் என்று உரையாற்றினார்! 1908-ஆம் ஆண்டில், மக்களைத் தேசாபிமானிகளாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ‘தேசாபிமானி சங்கம்’ என்ற ஒரு சங்கத்தை உருவாக்கி, பல இளைஞர்களை உறுப்பினர்களாக்கினார். இந்த வாலிபர்களைக் கொண்டு நெல்லை மாவட்டப் பட்டி தொட்டிகளிலே எல்லாம் அடிக்கடி பொதுக் கூட்டங்களைக் கூட்டி பிரிட்டிஷ் ஆட்சியின் கேடுகளைப் பொதுமக்கள் உணர்ந்து வீறிட்டெழும் வகையில் பேசி வந்தார்! திருநெல்வேலி மாவட்டம் மட்டுமன்று. அடுத்தடுத்துள்ள மாவட்டச் சிற்றுர், பேரூர்களிலே எல்லாம் தேசாபிமானி சங்கங்கள் தோன்றலாயின. சுதந்திரம் தேவை என்பதின் அருமை பெருமைகளை எல்லாம் மக்கள் புரியத் தொடங்கி, தேசாபிமானிகள் நடத்தும் பொதுக் கூட்டங்களுக்கு மக்கள் பெருவாரியாகத் திரள ஆரம்பித்தார்கள். அவ்வாறு திரண்ட மக்கள் இடையே சிதம்பரனார், சுதேசிப் பற்று, வெளிநாட்டுச் சாமான்கள் விலக்கு, தேசியக் கல்வி, மனித உரிமைகள், விடுதலையின் விளக்கங்கள், அடிமை ஒழிப்புகள் என்பன பற்றியவைகளை எல்லாம் பேசி உணர்ச்சிகளின் போர்வாட்களாக மக்களை மாற்றிக் கொண்டே இருந்தார் சிதம்பரம் பிள்ளை. அக்காலத்தில் ஆங்கிலத்தில் பேசுவதைத்தான் சிலர் பெருமையாக மதிப்பார்கள். தமிழிலே பேசுவதை சிறுமையாகக் கருதும் காலம் அது. ஏழை மக்கள் காங்கிரசில் சேராத நேரம். அப்படிப்பட்ட காலத்தில் ஏழை மக்களைக் காங்கிரசில் சேர்த்து, அவர்களிடையே சுதந்திரம் ஏன் தேவை என்ற கருத்துக்களை எடுத்துரைத்து அவர்களை நாட்டின் விடுதலைப் போருக்குத் தயார்படுத்தி வந்தார் சிதம்பரம் பிள்ளை. இத்தகைய சுதந்திரக் கருத்துக்களின் பரிமாற்றத்தினால், ஏழைகளும், நடுத்தர மக்களும், காங்கிரசில் சேர்ந்தது மட்டுமல்ல; தேசாபிமானி சங்கங்களும் பரவலாகத் தோன்றிக் கொண்டே இருந்தன. இந்த சக்தியை தமிழ்நாட்டில் வளர்த்த பெருமை சிதம்பரம் பிள்ளையின் இடையறாத உழைப்பின் வெற்றியையே சாரும். இந்த நேரத்தில் சுப்பிரமணிய சிவா என்ற 23 வயது வாலிபர் சிதம்பரனாருடன் இணைந்தார். சிவா ஒரு தேசாபிமான வெறியர். மதுரை மாவட்டம் வத்தலக்குண்டு என்ற கிராம முன்சீப் மகன் அவர்! அருமையான கனல் பறக்கும் பேச்சாளர். புழுவைக் கூட புலியாக்கும் அவரது பேச்சு. குடும்ப வாழ்வை வெறுத்த ஒரு துறவி. ஆழ்ந்த தமிழ் இலக்கிய நூலறிவும், ஆங்கில ஞானமும் பெற்ற நாவலன். நாட்டில் வளர்ந்துவரும் பாரதத் தாயின் விடுதலை உணர்ச்சி இயக்கம் அவரை ஒரு சுதந்திர வெறியராக்கிவிட்டது எனலாம். நினைத்ததை நினைத்தவாறு செய்து முடிக்கும் வல்லமை பெற்றவர். மதுரை மாவட்டத்தில் அவர் காலடி படாத கிராமங்கள், நகரங்கள் இல்லை எனலாம். ஒவ்வொரு ஊருக்கும் சென்று தேசிய பிரச்சாரம் என்ற நெருப்பை மூட்டி விட்டு வருவார். அதுதான் அவரது விடுதலைப் பணி. சிலரது நெஞ்சங்களிலே அத்தீ சூடேற்றிக் கொண்டே இருக்கும். 1907-ஆம் ஆண்டு இவர் திருநெல்வேலிக்குச் சென்றார். தேசாபிமானிகள் சங்கத்தார் அவரை வரவேற்றார்கள். சிதம்பரம் பிள்ளை சிவாவைச் சந்தித்தார். ஒருவருக்கு ஒருவர் கனன்று கொண்டும் விசிறிக் கொண்டும் ஆங்கில எதிர்ப்பு என்ற கனலைக் கக்கினார்கள். இவ்விருவரது சொற்பொழிவைக் கேட்க மாவட்டம் முழுவதுமுள்ள தேசியவாதிகள் திரண்டார்கள். சிவா, தூத்துக்குடி சென்று அங்கும் பிரசாரம் செய்தார். சுதேசிக் கப்பல் நிறுவனப் பணிகளை முடித்துக் கொண்டு நாள்தோறும், சிவா எங்கு பேசினாலும் சரி, அங்கே சென்று அவர் சொற்பொழிவுகளைக் கேட்டு உணர்ச்சி பெறுவார் சிதம்பரனார். சிவாவின் துடிதுடிப்பான பேச்சும் கணிர் கணிரென்ற குரல் வளமும், தீ போன்று சிதறி விழும் சொற்பிரயோகங்களும் சிதம்பரனாருக்கு மிகவும் பிடிக்கும்! எனவே, சிவாவின் பேச்சைக் கேட்க சிதம்பரனார் ஒருநாளும் தவறமாட்டார். அதுபோலவே இருவரும் பிரியா நண்பர்களாகவும் மாறினர். சிதம்பரனாரும் சிவாவும் இணைந்து பொதுக் கூட்டங்களில் பேசவேண்டும் என்று பொதுமக்கள் வற்புறுத்துவார்கள். அதனால் இருவரும் இணைந்து பேசும் கூட்டம் என்றாலே ஆயிரக்கணக்கானோர் அக்காலத்திலே கூடிக் கேட்பார்கள். காரணம், சிவா பேச்சு எரி நெருப்பாகக் கனல் வீசும். சிதம்பரம் பேச்சோ அந்த நெருப்பை ஊதிவிடும் சூறைக் காற்றாகச் சுழன்று வரும். அதனாலே தேசபக்தர்கள் அவர்களது கூட்டங்களுக்குப் பெருந்திரளாக வந்து கூடுவார்கள். தூத்துக்குடி நகரிலே தற்போது ஹார்வி பஞ்சாலை என்று அழைக்கப்படும் பஞ்சாலைக்கு அப்போது கோரல்மில் என்று பெயர். அதில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களுக்கு கூலியை உயர்த்தவேண்டும் என்று வெள்ளை முதலாளிகளிடம் வேண்டினார்கள். அதற்கு அந்த முதலாளிகள் ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டார்கள். இதைக் கண்டு மனங்கொதித்த ஊழியர்கள் அனைவரும் ஒற்றுமையாகக் கட்டுப்பாட்டுடன் வேலைநிறுத்தம் செய்தார்கள். அதனால், அவர்களது குடும்பங்கள் பல பட்டினியாகக் கிடந்தன. சிதம்பரனார் வெள்ளையர்களின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து, சில வழக்குரைஞர்களின் உதவியால் பணம் திரட்டி, பட்டினி கிடக்கும் தொழிலாளர் குடும்பத்துக்குப் பேருதவி புரிந்தார். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட இரண்டாயிரம் தொழிலாளர்களில் ஓராயிரம் பேருக்கு துத்துக்குடி மக்களிடம் வேண்டி கேட்டு வேலைகளைப் பெற்றுத் தந்தார். வேலை நிறுத்தம் நடந்த எல்லா நாட்களிலும், தூத்துக்குடி நகரில் வெள்ளையர்களது தொழிலாளர்கள் துரோகத்தைக் கண்டித்துப் பொதுக் கூட்டங்கள் நடைபெறும். அக்கூட்டங்களில் சிதம்பரம் பிள்ளை புயல்போல சுழன்று சுழன்று வெள்ளையர்களது மனித நேயமற்ற தன்மைகளைச் சாடுவார். தொழிலாளர்களது கோரிக்கைகளைப் பெறும் வரை முதலாளிகளுக்குப் பணியக் கூடாது என்பார். சிதம்பரம் பேச்சு தொழிலாளர்களின் ஊக்கத்தையும் உறுதியையும் அதிகப்படுத்துவனவாக அமைந்தன! கோரல் மில் வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெற்றது. அதனால் மில் முதலாளிகள் சிதம்பரம் பிள்ளை மீது தீராக் கோபமடைந்தார்கள். வேலை நிறுத்தம் செய்வதற்குத் தூண்டி விட்டவர் சிதம்பரம் பிள்ளைதான் என்று அவர் மீது வழக்குத் தொடுத்தார்கள். பொதுக் கூட்டங்களில் அவர் பேசினால் ஊரில் கலகம் ஏற்படும். அமைதி நாசமாகும். எனவே பொதுக் கூட்டத்தில் பேசக் கூடாது என்று மாஜிஸ்திரேட் சிதம்பரம் பிள்ளையை நேரிடையாகவே அழைத்து எச்சரித்தார். மாஜிஸ்திரேட் எச்சரிக்கை சிதம்பரம் பிள்ளைக்கு செவிடன் காதிலே ஊதிய சங்கு போல ஆனது. மதிக்கவில்லை அவர். தொடர்ந்து அவர் தொழிலாளர்களது கூட்டங்களில் பேசியே வந்தார். கோரல் மில் தொழிலாளர்களது வேலை நிறுத்தம் மதுரையில் உள்ள பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கும் தெரிந்தது. மதுரைத் தொழிலாளர்களும் தூத்துக்குடித் தொழிலாளர்களுக்கு அனுதாபம் காட்டும் எண்ணத்தில் வேலைக்குப் போக மறுத்துவிட்டார்கள். அதனால் தூத்துக்குடி வேலை நிறுத்தம் ஏழு நாட்கள் நீடித்தது. மில் முதலாளிகளான வெள்ளையர்கள் தொழிலாளர்களுக்குப் பணிந்தார்கள். கூலியை அரைப் பங்கு உயர்த்தித் தர முதலாளிகள் ஒப்புக் கொண்டார்கள். பிறகுதான் ஊழியர்கள் வேலைக்குச் சென்றார்கள். சிதம்பரம் பிள்ளையின் பேச்சும், தேசிய ஊழியமும் மக்கள் மனதில் நாட்டுப் பற்றைப் பொங்கச் செய்தது. இதைக் கண்டு ஆங்கிலேயர்களது அடிவயிற்றில் நெருப்பைக் கக்கியது. அதிகாரிகள் பயந்தார்கள். தூத்துக்குடியில் எந்தக் கலகமும் ஏற்படாதிருக்க போலீஸ்படை குவிந்தது. பெரும்பாலோர் இதை எதிர்த்தார்கள். ஆனால், வழக்குரைஞர் அரங்கசாமி என்பவர் மட்டும் போலீஸ் குவிப்பை ஆதரித்தார். அவரது மனோபாவத்தை ஊரார் வெறுத்தார்கள். ஒருநாள் அரங்கசாமி என்ற அந்த வக்கீல் முக சவரம் செய்து கொள்வதற்காக முடிதிருத்தும் தொழிலாளி ஒருவரை அழைத்தார். சவரம் செய்ய வந்த தொழிலாளி வக்கீலைப் பார்த்து, “நீங்கள் மட்டும் அதிகப் போலீஸ் படை வேண்டும் என்றீர்களாமே” என்று கேட்டார். “அதுபற்றி உனக்கென்ன? அது உன் வேலையல்ல” என்றார் வக்கீல். அப்படியானால் உமக்குச் சவரம் செய்வதும் என் வேலையல்ல என்று கூறி, அரைகுறையாகச் செய்த முக சவரத்தோடு அப்படியே நிறுத்திவிட்டு, அந்தத் தொழிலாளி விர்ரென்று சென்றுவிட்டார். அதுபோலவே வேறு தொழிலாளிகளும் அவருக்கு சவரம் செய்ய மறுத்து விட்டார்கள். அதற்கு பிறகு, வக்கீல் ரயில் ஏறி திருநெல்வேலி சென்று மீதியுள்ள அரைகுறை முகசவரத்தைச் செய்து கொண்டு வந்தார். பொதுமக்களுக்கு சிதம்பரம் பிள்ளை மீதும், அவரது லட்சிய முடிவுகள் மீதும் அவ்வளவு ஆழமான பற்றுதலும், மதிப்பும் மரியாதையும் இருந்தது. சிதம்பரம் பிள்ளை மேடை ஏறிவிட்டால், ஏன் நாம் சுதேசித் தொழில்களை ஆதரிக்க வேண்டும் என்பதைப் பற்றி ஒரு கிராமத்தான் கூடப் புரிந்து கொள்ளுமளவிற்குப் பேசுவார்! அந்தப் பேச்சு மக்கள் இடையே அத்தகைய பெருமையைத் தேடித் தரும். ‘சுதேசிப் பொருள்களை வாங்குவதானால் விலைகள் அதிகமாகிறதே’ என்று மக்கள் சிதம்பரனாரைத் திருப்பிக் கேட்ட போது. ‘நீங்கள் கொடுப்பது உங்களுடைய சகோதரர்களுக்குத் தானே’ என்பார். தூத்துக்குடியில், சுதேசிக் கிளர்ச்சி அரசியல் புரட்சியாக மாறியது. அதை அறிந்த அதிகாரிகள், எவரும் ஆயுதங்களையோ, தடி, கம்பு, கொம்புகளையோ எடுத்துச் செல்லக் கூடாது என்று தடை விதித்தார்கள். சிதம்பரனார் இதைக் கேள்விப்பட்டு, பெருங் கோபமடைந்து, ‘வேல் பிடித்த வீரத் தமிழர்கள்.இப்போது கோல்கள் கூட பிடிக்க உரிமை இல்லையா?’ என்று ஆத்திரப்பட்ட அவர் ஆட்சி ஆணையை மீறுமாறு கட்டளையிட்டார். அடிமைத் தனத்தால் மக்கள் படும் அவதிகளைக் கண்டு வருந்தினார். “ஆளப் பிறந்த நம்மை ஆறாயிரம் மைலுக்கப்பாலிருந்து வந்த ஆங்கிலேயன் ஆள்வதா?” என்று கேட்டார். இதுவே, பின்னாளில் திருநெல்வேலிப் புரட்சிக்குக் காரணமானது. சிதம்பரனார் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் படை திரட்டினார். மக்களும் அவரைப் பின்பற்றினார்கள். சிதம்பரம் ஆணையிட்டால்…அனலை விழுங்குவர் மக்கள்! விபின் சந்திரபால், இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபையின் முக்கிய தலைவர்களுள் ஒருவர். சிறந்த நாவன்மை படைத்த அஞ்சா நெஞ்சர். வங்க நாட்டின் தலைவர். எல்லாராலும் பாராட்டத்தக்க சிறந்த பண்பாளர்! அரவிந்த கோஷ் என்ற தீவிரவாதக் கட்சித் தலைவர் மீது வெள்யைர் ஆட்சி அப்போது ஒரு சதி வழக்கைத் தொடுத்திருந்தது. அந்த வழக்கில் அரசு சார்பாக சாட்சி கூற விபின் சந்திர பால் வன்மையாக மறுத்து விட்டார். சான்று கூற அவர் மறுத்தது நீதிமன்ற அவமதிப்பு என்று காரணம் கூறி சந்திரபாலருக்கு ஆறுமாதம் தண்டனையை நீதிமன்றம் வழங்கியது. தண்டனையை அனுபவித்து விட்டு, 1908-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9-ம் தேதி விபின் சந்திரபால் விடுதலை பெற்று சிறை மீண்டார். அந்த நாளை திருநெல்வேலி மக்கள் விழாவாக் கொண்டாட முடிவு செய்தார்கள். வடநாட்டிலும் அந்நாள் விபின் சந்திரபால் வெற்றி விழாவாகக் கொண்டாடப்பட்டது. திருநெல்வேலி மக்களது விழாவை அறிந்த ஆங்கிலேய அதிகாரிகள் கவலை மிகவும் கொண்டு, தூத்துக்குடி நகரில் 9-ம் தேதியன்று ஊர்வலமோ, பொதுக் கூட்டமோ நடத்தக் கூடாது என்று தடைவிதித்து விட்டார்கள். மாஜிஸ்திரேட் சிதம்பரம்பிள்ளையை வரவழைத்து, விபின் சந்திரபால் விடுதலை விழாக் கொண்டாட்டத்தில் நீர் கலந்து கொள்ளவோ, பொதுக் கூட்டத்தில் பேசவோ கூடாது என்று நேரிலேயே எச்சரித்தார். உடனே சிதம்பரம் பிள்ளை மாஜிஸ்திரேட்டைப் பார்த்து, ‘நீங்கள் என்ன சொன்னீர்களோ அதை அப்படியே எழுதிக் கொடுக்குமாறு கேட்டார். ஆனால், மாஜிஸ்திரேட் அதற்கு முடியாது’ என்று மறுத்தார். சுதேசி கப்பல் நிறுவனத்தாருக்கும், சிதம்பரம் பிள்ளையின் தீவிரவாத அரசியல் போக்கு அறவே பிடிக்கவில்லை. ஆங்கில அதிகாரிகள் அடக்குமுறையைக் கண்டு தினம் தினம் பயந்து கொண்டே பொழுதைப் போக்கி வந்தனர். அதனால் சுதேசி நிர்வாகத்தினரின் அவசர செயற்குழுக் கூட்டம் திடீரெனக் கூடியது. நிறுவனத்தின் வளர்ச்சி, லாபம் கருதி, சிதம்பரம் பிள்ளை தீவிரவாத அரசியலில் ஈடுபடக் கூடாது என்று நிர்வாகம் தீர்மானம் செய்தது. இந்த முடிவு கண்டு சிதம்பரனார் மனம் கலங்கினார். சுதேசி நிறுவனத்தார்களும், பங்குதாரர்களும் கம்பெனியின் லாப நோக்குதான் முக்கியம் என்று பகிரங்கமாகவே செயற்குழுவில் பேசினார்கள். “நாடாவது காடாவது அதன்று பிரச்சனை. நாடு என்ன துன்பப்பட்டாலும் எங்களுக்குக் கவலையில்லை. எங்களுக்கு மட்டுமன்று, யார் யார் சுதேசி கப்பல் கம்பெனியின் பங்குதாரர்களோ அவர்கள் எல்லாம் லாபத்துக்காகத்தான் கம்பெனியின் உறுப்பினர்களானார்கள். அவர்கள் இல்லையானால் இயங்குமா கப்பல் நிறுவனம்? சிதம்பரம் பிள்ளைக்கு வேண்டுமானால் தேச சேவை, மக்கள் சேவை என்ற நோக்கங்கள் இருக்கலாம். தவறென்று நாங்கள் அதைக் கூறமாட்டோம். ஆனால், கம்பெனி நிர்வாகிகளுக்கு பொருளாசை உண்டு, அதே நேரத்தில் புகழாசையும் கூட உண்டுதான். எனவேதான் கூறுகிறோம் தயவு செய்து சிதம்பரம் பிள்ளை வெள்ளையரைப் பகைக்கும் அரசியலில் தீவிரம் காட்ட வேண்டாம்” என்று செயற் குழுவினர் சிதம்பரனார் முகத்துக்கு எதிராகவே பேசினார்கள். எல்லாவற்றையும் கேட்டு பிள்ளை அலைமோதினார். நாட்டுப் பற்றா? அல்லது நாணயக் குவியலா? என்று செயற்குழுவில் அவர்பேசி பதில் கூறும் போது, இந்தியாவில் சுரண்டிக் கொண்டிருக்கும் வெள்ளையரை வாணிபத் துறையிலே இருந்து விரட்டுவது ஒன்றே எனது நோக்கம். அந்த லட்சியத்தோடுதான் சுதேசிக்கப்பல் நிறுவனத்தை உருவாக்கினேன். எனக்குப் பொருளோ, புகழோ அல்ல பெரிது. மக்கள் சேவை, நாட்டின் விடுதலை, மனிதச் சுதந்திரம் தான் முக்கியம். எனவே, செயற்குழுவினர் பேசிய கருத்துக்கள் எனக்கு ஒவ்வாதவை. அதனால், கம்பெனி நிர்வாகிகள் தீர்மானப்படி என்னால் நடக்க முடியாது என்று சிதம்பரம் மறுத்து விட்டார். ‘சுதேசியத்தை வளர்ப்போம்! அது போதும் நமக்கு அந்நிய பொருட்கள் பகிஷ்கரிப்பை வேறு யாராவது செய்யட்டுமே’ எனக் கெஞ்சிப் பார்த்தார்கள்! “இந்திய நாட்டின் விடுதலைப் போருக்குரிய துணைக் கருவியாகப் பயன்படுத்தவே கப்பல் கம்பெனியை நான் படாதபாடுபட்டு நாடெங்கும் அலைந்து ஆரம்பித்தேன். இதை உங்களைவிட வெள்ளையர்கள் நன்றாகவே உணர்ந்து விட்டார்கள். அதனால்தான் அவர்கள் கப்பல் நிறுவனத்தை அழிக்கப் பலசதித் திட்டங்களைத் தீட்டினார்கள். ஆனால், இந்த மண்ணின் மைந்தர்களான நீங்களோ எங்களுக்குப் பணம்தான் முக்கியம்! லாபம்தான் நோக்கம் என்று என்னையே திசை திருப்புகின்றீர்கள்! எனக்கு இந்த ஈனச் செயல்கள் எல்லாம் பிடிக்காது. நான் கலெக்டர் எச்சரிக்கையினையே புறக்கணித்தேன் - தேச பக்திக்காக! கப்பல் நிர்வாகத்தினர் கட்டளையினையும் கம்பெனியைக் கலைப்போம் என்பதையும் புறக்கணிக்கின்றேன். நாட்டின் சுதந்திர உணர்ச்சிக்காக” என்று கூறிவிட்டு செயற்குழுவை விட்டு விர்ரென்றுப் புறப்பட்டு விட்டார். ஏற்கனவே செய்து வைத்திருந்த ஏற்பாடுகளின்படி மார்ச் 9-ம் தேதியன்று விபின் சந்திர பாலின் சிறை மீண்ட விடுதலைத் திருநாள் நெல்லையில் மிக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் முன் எச்சரிக்கையோடு எல்லா திட்டங்களையும் ஒழுங்கான முன்னேற்பாடாகவே செய்து வைத்திருந்தார்கள். சிதம்பரம் பிள்ளையும், சுப்பிரமணிய சிவாவும் போலீசார் தடையுத்தரவை மீறி, விழா ஊர்வலத்திலே பவனி வந்து கொண்டிருந்தார்கள். அதே போல, பொதுக் கூட்ட மேடையிலே நெருப்புக் கனற்துண்டுகளை சொற்பிரயோகங்கள் மூலமாக வெள்ளையனை எதிர்த்து சிவா தகித்துக் கொண்டிருந்தார். பிறகு பேசிய சிதம்பரம் தனது சூறைக் காற்று வேகத்தால் வெள்ளையன் எதிர்ப்புக்கு விசிறிக் கொண்டிருந்தார். அந்த உணர்ச்சிகளிலே வார்த்த எஃகு ஆயுதங்களைப் போல மக்கள் சூடேறிக் கொண்டிருக்கும் போது, வந்தே மாதரம்! பாரத்மாதா வாழ்க! வந்தே மாதரம்! என்ற முழக்கங்களை விண் அதிர, மண்ணதிர மக்கள் முழக்கமிட்டவாறே கலைந்து சென்றனர். திருநெல்வேலி மாவட்டம் முழுவதுமே சிதம்பரனார் இட்டதே சட்டமாயிற்று. அவர் சொல்லுக்கு மறுசொல் கிடையாது. சிதம்பரனார் ஓர் ஆணை பிறப்பித்தால், மக்கள் அனலையே விழுங்கிடத் தயாராக இருந்தனர்! அவ்வளவு செல்வாக்கும் சொல்வாக்கும் அவருக்கு மக்களிடையே அப்போது இருந்தது. மூன்று குற்றங்கள் மீது சிதம்பரனார், சிவா கைது சிதம்பரனார், சிவா என்ற இருபெரும் தேசபக்தர்களின் செல்வாக்கும் மக்கள் இடையே நாளுக்கு நாள் அதிகமாகப் பரவி, ஆங்கிலேயர் ஆட்சிக்கு ஆபத்தை உருவாக்குகிறது என்ற அச்சத்தால் அவர்களை எப்படியும் கைது செய்வது என்ற முடிவுக்கு பிரிட்டிஷ் அரசு வந்தது. இந்த இருவரையும் தூத்துக்குடி நகரத்தில் கைது செய்தால், கலவரமும் கலகமும் அங்கே பரவிவிடும்; அதனால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு மக்கள் இடையே தேசிய புரட்சிக்கு பலம் உருவாகிவிடும் என்று வெள்ளையர்கள் பயந்தார்கள். அதனால், சிதம்பரனாரையும், சிவாவையும் திருநெல்வேலிக்கு வருமாறு மாவட்டக் கலெக்டர் விஞ்ச் உத்தரவிட்டார். திருநெல்வேலிக்கு சிதம்பரனார் புறப்பட்டபோது அவரது நண்பர்கள் போக வேண்டாம் என்று அவரைத் தடுத்தார்கள். ஏனென்றால், கலெக்டர் விஞ்ச் எப்படியும் சிதம்பரனாரைக் கைது செய்து விடுவார் என்று அவர்கள் நம்பினார்கள். இதனை சிதம்பரம் பிள்ளையும் அறிவார். இருந்தாலும், கலெக்டர் அழைத்த பின்பு உடனடியாகச் செல்லாவிட்டால், பின் விளைவுகளும், மேலும் தொல்லைகளும் அதிகமாக ஆகிவிடுமே. அதற்கு ஏன் இடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சிதம்பரம், சிவாவுடன் திருநெல்வேலி வந்தார். மார்ச் 12- ஆம் தேதி சிதம்பரமும் - சிவாவும் விஞ்ச் துரையைப் பேட்டி கண்டனர். இருவரையும் நேரில் கண்ட கலெக்டர், சிதம்பரம் நீங்கள் கப்பலோட்டியது முதல் குற்றம்; அனுமதி இல்லாமல் கூட்டம் கூட்டியது இரண்டாவது குற்றம்; பாமர மக்களை ‘வந்தே மாதரம்’ என்று கோஷம் போடுமாறு தூண்டிவிட்டது மூன்றாவது குற்றம் என்று இருவர் மீதும் இந்த மூன்று குற்றங்களையும் கலெக்டர் விஞ்ச் சுமத்தினார். எங்களது நாட்டில் பொதுமக்களோடு நாங்கள் கூடிப் பேசியது குற்றமா? அதற்கு உங்களுடைய அனுமதி எங்களுக்கா வேண்டும்? எங்களது தாய்நாடு இந்தியா. அது நாங்கள் பிறந்த மண்! அந்த பூமியை வாழ்க என்று நாங்கள் கோஷிப்பது எப்படி குற்றமாகும்? எங்களது வாணிபம் வளர, எங்களுடைய பொருளாதாரத்தைக் கொள்ளையடிப்பவர்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, நாங்கள் சொந்தமாக, எங்களுடைய பணத்தில் கப்பல்கள் வாங்கி வளம் பல பெருக கப்பல் ஒட்டுவது எப்படிக் குற்றமாகும்? எங்களுடைய சதைகளைத் துண்டு துண்டாக வெட்டி எடுத்து வேதனைப்படுத்தினாலும், நாங்கள் எங்கள் மக்களுக்காகப் பணியாற்றுவதை ஒரு போதும் விட்டுக் கொடுக்கமாட்டோம். எங்களது இதயத்திலே இருந்து பொங்கி எழும் சுதந்திர உணர்ச்சியை எவராலும் தடுக்க முடியாது. இது உறுதி! என்று விஞ்ச் துரை புகார்களுக்கு சிதம்பரம் பதில் கூறினார். பதிலைக் கேட்ட கலெக்டர், ‘அப்படியானால், நீர் திருநெல்வேலி நகரை விட்டு உடனே வெளியேற வேண்டும்’ என்று உத்தரவிட்டார். அரசியல் கிளர்ச்சிகளில் இனிமேல் ஈடுபடமாட்டேன் என்று நன்னடத்தை ஜாமீன் தர வேண்டும் என்றும் அவர் கோபாவேசமாக எச்சரித்தார். ‘திருநெல்வேலி மாவட்டம் நான் பிறந்த மண், ஒருபோதும் அதைவிட்டு வெளியேற மாட்டேன். வேண்டுமானால் என்னைக் கைது செய்து கொள்க’ என்று சிதம்பரனாரும் கோபமுடன் பதிலளித்தார். உடனே, அந்த இடத்திலேயே, சிதம்பரனாரையும், சிவாவையும் கலெக்டர் உத்தரவால் கைது செய்தார்கள். சிதம்பரனார் வீட்டைச் சோதனை போடுமாறு போலீசாருக்கு கலெக்டர் ஆணையிட்டார். மாவீரன் சிதம்பரனாரும், சிவாவும் கைதான செய்தி மாவட்டம் முழுவதும் காட்டுத் தீ போலப் பரவியது. வர்த்தகர்கள் கடைகளை அடைத்தார்கள். மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல மறுத்தார்கள். தேசாபிமானிகளும் பொதுமக்களும் கலெக்டர் பங்களாவைச் சுற்றி வளைத்துக் கொண்டு எதிர்ப்புக் கோஷமிட்டார்கள். பொதுக் கூட்டங்களைக் கூட்டி கலெக்டரின் ஆணவப் போக்கை எதிர்த்துக் கண்டனம் செய்து முழக்கமிட்டார்கள். நெல்லை நகர் முழுவதும் ஒரே கலவரமும் - குழப்பமுமாகக் கொந்தளித்துக் கொண்டிருந்தது. நகரிலே அமைதியை ஏற்படுத்த போலீஸ்படை குவிக்கப்பட்டது. தொழிலாளர்கள் நகர் பகுதி முழுவதிலும் கூடி சிதம்பரனாரையும், சிவாவையும் விடுதலை செய், வெள்ளையர் ஆட்சி ஒழிக. என்ற முழக்கங்களை வீராவேசமாக எழுப்பிக் கொண்டு ஊர்வலம் வந்தார்கள். நெல்லை நகராட்சி மண்ணெண்ணெய் கிடங்குக்கு தீ வைத்தார்கள். அந்த கிடங்குகள் பெருநெருப்பிலே எரிந்து ஜூவாலைகளை எழுப்பின. ஆங்கிலேயர் அலுவலகங்கள் எல்லாம் தீக்கிரை ஆயின. பொதுமக்கள் நெல்லை நகராட்சி அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த மேசைகள் நாற்காலிகள், மற்ற பொருட்களை எல்லாம் தவிடு பொடியாக்கினார்கள். அவைகட்குத் தீயிட்டார்கள். சர்ச் மிஷன் என்ற கல்லூரியிலே புகுந்து அங்கே இருந்த பொருட்களை எல்லாம் உடைத்து வீதியிலே தூக்கி எறிந்தார்கள். அந்தக் கல்லூரியும் தீக்கு இரையானது. போலீஸ் ஸ்டேஷன் உள்ளே புகுந்த பொது மக்கள் அங்கிருந்த துப்பாக்கிகள், லட்டிகள், வேறு சாமான்களை எல்லாம் நெருப்பு வைத்துக் கொளுத்தினார்கள். போலீஸ் ஸ்டேஷனும் தீயிலே எரிந்தது. பொதுமக்களின் இந்தக் கோபாவேஷ அழிப்புச் சக்திகளைக் கேள்விப்பட்டக் கலெக்டர் விஞ்சும், போலீஸ் சூப்பிரண்டுகளும், போலீசாரும் அங்கங்கே ஓடிக் கலகத்தை அடக்க முயன்றார்கள். போலீசார் பொதுமக்களை விரட்டுவதும், பொதுமக்கள் போலீசாரைத் துரத்தி துரத்தி அடிப்பதும் பெரும் கலவர பூமியாக நெல்லை நகர் காணப்படுவதும் கண்டு ஊர் மக்கள் கோஷங்களை எழுப்பிக் கொண்டு வீதிகள் தோறும் ஆரவாரமிட்டபடியே இருந்தார்கள். இக்காட்சிகளை நேரில் கண்ட டிப்டிக் கலெக்டர் ஆஷ் துரை, தனது கைத் துப்பாக்கியால் பொதுமக்களைச் சுட்டார். இதனால் நான்கு பேர் நடுரோட்டிலேயே பிணமானார்கள். மூன்று பேர் படுகாயம் அடைந்தார்கள். இவர்களுள் மூன்று பேர் இந்துக்கள் ஒரு முஸ்லீம் மற்றவர் ஆதி திராவிடர். இறந்தவர்களது பிணங்கள் அவரவர் உறவினர் வரும் வரை ரோட்டிலேயே கிடந்தன. துப்பாக்கியில் குண்டுள்ள வரை சுட்ட ஆஷ் துரை, குண்டுகள் தீர்ந்ததும் அங்கிருந்து தனது காரிலே ஏறி ஓடினார். அவரைப் பொதுமக்கள் விடாமல் பின்னாலேயே துரத்திக் கொண்டே ஓடினார்கள். ஆஷ்துரை நல்லகாலமாகத் தப்பித்து ஓடிவிட்டார். பொதுமக்களும், தேசாபிமானிகளும் போலீஸ்கார்கள் மீது சரமாரியாகக் கற்களை எறிந்து வெள்ளை அதிகாரிகளை விரட்டியபடியே இருந்தார்கள். அதனால், ஓர் இன்ஸ்பெக்டருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. கலெக்டர் விஞ்ச் ரத்தம் சொட்டச் சொட்டப் பலத்த காயமடைந்தார். இந்தக் கலவரம் அன்று ஒரு நாளல்ல, மூன்று நாட்களாகத் தொடர்ந்து இரவு பகலென்று பாராமல் நடந்து கொண்டே இருந்ததைக் கண்ட விஞ்ச், நெல்லை நகர சாதாரண போலீசாரால் அதை அடக்க முடியாது என்பதை உணர்ந்து, சென்னையிலே உள்ள பெரிய போலீஸ் அதிகாரிகளுக்கு செய்தியைத் தெரிவித்தார்! உடனே சென்னையிலே உள்ள ஆங்கிலேயே அதிகாரிகள் ஆயுதம் தாங்கிய போலீஸ் படைகளைத் திருநெல்வேலிக்கும், தூத்துக்குடிக்கும், தச்சநல்லூருக்கும் அனுப்பி வைத்தார்கள். திடீர் திடீரென்று தூத்துக்குடி நகரமும் தீயிலே எரிவதைக் கண்ட போலீஸ் படைகள், அங்கேயும் விரைந்து சென்று கலகத்தை அடக்க முயன்றார்கள். இவ்வளவு போலீஸ் படைகளைக் கலவர இடங்களுக்கு அனுப்பி வைத்த வெள்ளையராட்சி, அதற்கான எல்லா செலவுகளையும் பொதுமக்களிடமே வசூலிக்குமாறு உத்தரவிட்டார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கெங்கு வெள்ளையர்கள் குடியிருந்தார்களோ, அங்கே எல்லாம் போலீஸ் படைகளும், ராணுவப் படைகளும் இரவு பகலாகக் காவல்கள் இருந்தார்கள். ஆங்கிலேயரின் இந்த அராஜகங்களைக் கண்ட குருசாமி ஐயரும், மற்றும் இரண்டு பிரமுகர்களும் சென்னை சென்று, ஆயுதங்களை ஏந்தி அலையும் ராணுவப் படைகளையும், போலீஸ் படைகளையும் உடனே திரும்பப் பெற வேண்டினார்கள். ஆனால், அவர்களது வேண்டுகோளை வெள்ளையராட்சி நிராகரித்து விட்டது. இந்தக் கலவரத்தில் ஈடுபட்டதாக, நெல்லை நகரப் போலீசார், திருநெல்வேலி, தூத்துக்குடி, தச்சநல்லூர் ஆகிய பகுதிகளிலே உள்ள பொதுமக்கள் 80 பேர்களைக் கைது செய்தனர். அவர்களுள் ஒரே ஒருவர்தான் விடுதலையானார். மற்ற 79 பேர்களும் பலவிதப் பொய் வழக்குகளால் பாதிக்கப்பட்டு, பலவித தண்டனைகள் வழங்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். வ.உ.சி. பேச்சும், பாரதி பாட்டும் பிணத்தை உயிரூட்டிப் பேசவிடும்! கலெக்டர் விஞ்ச் துரையால் கைது செய்யப்பட்ட சிதம்பரம் பிள்ளையும், சுப்பிரமணிய சிவாவும் சிறையில் அடைக்கப் பட்ட பின்பு, அவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு, திருநெல்வேலி மாவட்ட துணை மாஜிஸ்திரேட் ஈ.எச்.வாலேஸ் என்ற வெள்ளைக்காரர் நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வந்தது. சிதம்பரம் பிள்ளைக்காக, தஞ்சாவூரைச் சேர்ந்த வழக்குரைஞர் என்.கே.ராமசாமி நீதிமன்றத்தில் வாதாடினார். சிதம்பரனார் வக்கீலிடம் மாஜிஸ்திரேட் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. அதனால் அவர் எதிர் வழக்காட மறுத்து விட்டார். வாலேஸ், வழக்கை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றி விட்டார். இந்த நீதிமன்றத்தில் சிதம்பரம்பிள்ளை வழக்கு இரண்டு மாதம் நடந்தது. வழக்குரைஞர்களான சடகோபாச்சாரியார், நரசிம்மாச்சாரியார், வேங்கடாச்சாரியார் மூவரும் சிதம்பரனாருக்காக வாதாடினார்கள். ஆங்கிலேயர் அரசுக்காக, பாரிஸ்டர் பவல், ரிச்மண்ட் என்பவர்கள் வாதாடினார்கள். கவியரசர் பாரதியார், சிதம்பரனாருக்காக சாட்சி கூறினார். அவர் மட்டுமன்று மேலும் பலரும் சிதம்பரனாருக்காக சான்று கூறினார்கள். சிலர், சிதம்பரனாருக்காக விரோதமாகவும் சாட்சி சொன்னார்கள்! யார் அவர்கள் தெரியுமா? போலீஸ் அதிகாரிகளும், வெள்ளைக்காரர் கப்பல் நிறுவன ஆதிகாரிகளுமே அவர்கள். வழக்குத் தீர்ப்பு ஜூலை மாதம் 7-ஆம் தேதியன்று கூறப்பட்டது என்ன தீர்ப்பு தெரியுமா? சிதம்பரனாருக்கு நாற்பது ஆண்டுகள் தீவாந்தரத் தண்டனை! அரசுக்கு விரோதமாக நடந்து கொண்டதற்காக இருபது வருடம் சுப்பிரமணிய சிவாவுக்கு உடந்தையாக இருந்தார் என்பதற்காக இருபது ஆண்டு தண்டனையாம் சுப்பிரமணிய சிவா அரசு விரோதி என்று பத்தாண்டுகள் தீவாந்தரத் தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்புக் கூறியவர் வெள்ளைக்கார நீதிபதியான பின்ஹே என்பவராவார். “சிதம்பரம் பிள்ளை பெரிய ராஜத்துரோகி. அவர் எலும்புக் கூடும் ராஜ விசுவாசத்திற்கு விரோதமானது. சுப்பிரமணிய சிவா, சிதம்பரம் பிள்ளையின் கையிலகப்பட்ட ஒரு கோல். திருநெல்வேலி கலவரத்திற்குக் காரணம் இந்த இரண்டு பேர்கள்தான். பிள்ளையின் மேடைச் சொற்பொழிவு முழக்கத்தையும்,பாரதியாரின் பாட்டையும் கேட்டால், செத்த பிணம் கூட உயிர் பெற்று எழும், புரட்சி ஓங்கும்” என்று பின்ஹே தீர்ப்பு அளித்தார். கொடுமையான இந்தத் தீர்ப்பைக் கேட்ட தேசபக்த சிங்கங்களான சிதம்பரனாரும், சிவாவும் அமைதியும், அடக்கமும் கொண்ட சிங்கங்களைப் போல இருந்தார்களே ஒழிய சிலிர்த்தெழவில்லை. மனித நேயத்துடனும், தேசாபிமானத்துடனும் நெல்லைச் சீமையிலே சுதந்திர போர்ப் பரணிபாடிய சிதம்பரனார், கொலையும் - கொள்ளையும் செய்து பழக்கப்பட்ட கொடியோர்களுடன் தண்டனையை அந்தமான் தீவிலே அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து விட்டார் நீதிபதி பின்ஹே. சிதம்பரனாருக்கு அப்போது வயது முப்பத்தைந்து; சிவாவுக்கு இருபத்தைந்து வயது. சிதம்பரனார், தனது தாய் தந்தையரையும், மனைவியையும், இரண்டு மகன்களையும் பிரிந்து சிறைத் தண்டனை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டது கண்டு அவரது குடும்பமே கவலையடைந்தது. சிதம்பரனாரின் சகோதரரான மீனாட்சி சுந்தரம் தனது தமையனுக்கு வழங்கப்பட்ட கொடுமையான தீர்ப்பைக் கேட்டு மூளை குழம்பியவரானார். அந்த சகோதரன் தனது வாழ்நாள் முழுவதும் பைத்தியம் பிடித்தவராகவே மாறி, 1943-ஆம் ஆண்டு இறந்து போனார். விடுதலைப் பித்தர் சிதம்பரம் பிள்ளை தனக்கு வழங்கப்பட்ட கொடுமையான தண்டனையைக் கேட்டு கவலைப்படவில்லை. சிறைக்கு அவரை அழைத்துச் சென்ற போது, கவலை தோய்ந்த முகத்துடன் நின்று கொண்டிருந்த அவரது நண்பர் மாசிலாமணியின் முகத்தைப் பார்த்து, தம்பி மாசிலாமணி வருந்தாதே. இருக்கிறது உயர்நீதி மன்றம், அங்கே வழக்கை அடித்துத் தள்ளிவிட்டு வந்து விடுகிறேன் என்று ஆறுதல் கூறியபடியே சிறைக்குச் சென்றார் சிதம்பரம். சிதம்பரனார் சிறைத் தண்டனை பெற்ற அதே வாரத்தில், வடநாட்டில் திலகர் ‘கேசரி’ என்ற பத்திரிகையில் ஆங்கிலேயரது ஆட்சியை எதிர்த்து எழுதினார் என்பதற்காக, குற்றம் சாட்டப்பட்டு ஆறு ஆண்டுகள் தீவாந்தரத் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுச் சிறை சென்றார். தென்னாட்டு திலகரும், வடநாட்டு வ.உ.சி.யும் ஒரேசமயத்தில், தேச விடுதலைப் போராட்டத்துக்காகச் சிறை சென்ற சம்பவம் அப்போது இந்தியாவையே சிலிர்க்க வைத்தது எனலாம். சிதம்பரனார் சிறையில் அடைபட்டு விட்ட கோபத்தால் கொந்தளித்த பாரதி, நெல்லை நீதிமன்றம் சென்று சிதம்பரனார் சார்பாக நாம் சாட்சியம் கூறியும், வழக்குத் தீர்ப்பு இவ்வளவு கடுமையாக வந்து விட்டதே என்று கவலையடைந்தார். இருந்தும், அந்த சினத்தைத் தணித்துக் கொண்டு வ.உ.சி.க்காக ஒரு வாழ்த்துப்பாடலைப் பாடியபடியே திருவல்லிக்கேணி வீதியில் பாரதியார் வலம் வந்தாராம். அப்பாடல் இது வ.உ.சி.க்கு வாழ்த்து “வேளாளன் சிறை புகுந்தான். தமிழகத்தார் மன்னனென மீண்டான் என்றே கேளாத கதை விரைவிற் கேட்பாய் நீ வருந்தலைஎன் கேண்மைக் கோவே! தாளாண்மை சிறிதுகொலோ யாம்புரிவேம் நீ இறைக்குத் தவங்கள் ஆற்றி, வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே வாழ்த்துதிநீவாழ்தி வாழ்தி!” – என்று பாடினார் பாரதி. அதே வாரத்தில் ஆறாண்டு தீவாந்தர தண்டனை பெற்று சிறை சென்ற திலகர் பெருமானைப் பற்றிக் கண்ணீர் விடுத்து பாரதியார் பாடிய வேறோர் வாழ்த்துப் பாடல் வருமாறு : “நாம் கட்குப் பெருந்தொண் டியற்றிப்பல் நாட்டி னோர்தம் கலையிலும் அவ்வவர் தாம கத்து வியப்பப் பயின்றொரு சாத்தி ரக்கட லென்ன விளங்குவோன்; மாம கட்குப் பிறப்பிட மாகமுன் வாழ்ந்திந் நாளில் வறண்டயர் பாரதப் பூம கட்கு மனந்துடித் தேயிவன் புன்மை போக்குவல் என்ற விரதமே நெஞ்ச கத்தோர் கணத்திலும் நீங்கிலான் நீத மேயோர் உருவெனத் தோன்றினோன் வஞ்ச கத்தைப் பகையெனக் கொண்டதே மாய்க்கு மாறு மனத்திற் கொதிக்கின்றோன் துஞ்சு மட்டுமிப் பாரத நாட்டிற்கே தொண்டிழைக்கத் துணிந்தவர் யாவரும் அஞ்செ ழுத்தினைச் சைவர் மொழிதல்போல் அன்பொ டோதும் பெயருடை யாரியன் வீர மிக்க மராட்டியர் ஆதரம் மேவிப் பாரத தேவி திருநுதல் ஆர வைத்த திலக மெனத் திகழ் ஐயன் நல்லிசைப் பாலகங் காதரன் சேர வர்க்கு நினைக்கவுந் தீயென நின்ற எங்கள் திலக முனிவர்கோன் சீர டிக்கம லத்தினை வாழ்த்து வேன் சிந்தை தூய்மை பெறுகெனச் சிந்தித்தே” – என்று பாரதியார் திலகர் பெருமான் மீதும், வ.உசிதம்பரம் பிள்ளைமேலும் மனமுருகப் பாடி, தனது தேசி பக்தியையும், அவர்களது தியாகப் பெருமைகளையும் தேசியத் தொண்டர்கள் மனமுருகிப் பாடி வாழ்த்துமாறு பாடிப் பெருமைப்படுத்தியுள்ளார். சிதம்பரனாருக்கு வெள்ளை நீதிபதியால் வழங்கப்பட்ட கொடுமையான சிறைத் தண்டனையைக் கேட்டு இந்தியா முழுவதும் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்தியப் பத்திரிகைகள் நீதிபதி பின்ஹேயின் தீர்ப்பைக் கடுமையாக விமரிசனம் செய்து தாக்குதல்களைத் தொடுத்தன. தலையங்கங்கள் எழுதிக் கண்டனம் செய்தன. ‘வங்காளி’ என்ற ஒரு ஏடு, ‘நீதிபதி பின்ஹேயின் தீர்ப்பு இந்த நாட்டில் அமுலுக்கு வரும் நாள் இந்திய மக்களது உரிமைகளுக்குரிய கொடுமையான துன்பநாள்’ என்று எழுதித் தனது கவலையை வெளியிட்டது. ‘அமிர்தபஜார்’ என்ற வேறொரு வடநாட்டுப் பத்திரிகை, ‘பின்ஹேயின் அநீதித் தீர்ப்பு, சிதம்பரம்பிள்ளை ஒருவரைத் தவிர வேறு எவருக்கும் நேர்ந்ததில்லை. அந்த வீரப் பெருமகனுக்குத் தலை வணங்குகிறோம்’ என்று வருந்தி எழுதியது. ‘சுதேசமித்திரன்’ என்ற தமிழ்நாட்டு நாளேடு, ‘இக்கொடுந்தண்டனையால் பிரிட்டிஷ் நீதித்துறைக்கே அவமானம் என்று எழுதிக் கண்டித்தது. தூத்துக்குடி சிதம்பரம் பிள்ளைக்கு நேர்ந்துள்ள துன்பத்தைக் கேட்டு இந்தியாவே துக்கத்தில் ஆழ்ந்துவிட்டது. நினைக்கும்போதே உடல் சிலிர்க்கின்றது. மயிர் கூச்செரிகிறது. எழுதக் கை கூசுகின்றது. இந்ததுக்கத்தைத் தென்னிந்திய மக்கள் எப்படிச்சகிப்பார்கள்? இவ்வளவு பெரிய கொடுந்தண்டனை விதிக்கப்படும் என்று எவருமே கனவிலும் எண்ணவில்லை’ என்று அதே ‘சுதேசமித்திரன்’ ஏடு எழுதியது. சிதம்பரம் பிள்ளைக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து வெள்ளையர் பத்திரிகைகளும் வெறுத்து எழுதின. எடுத்துக்காட்டாக, ‘ஸ்டேட்ஸ்மன்’ என்ற ஆங்கில ஏடு, ‘தேச பக்தர் சிதம்பரனாருக்கு அளிக்கப்பட்ட தண்டனை நியாயத்திற்கும், சட்டத்திற்கும் விரோதமானது. சிதம்பரம் பிள்ளையின் தியாகம் மிகப் பெரிய சக்தி வாய்ந்தது’ என்றது. ‘ஸ்டாண்டர்டு’ என்ற மற்றொரு ஏடு, நீதிபதி பின்ஹேயையே கடுமையாகத் தாக்கியது. தேசபக்தர் சிதம்பரம் பிள்ளைக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையைக் கேட்ட ஆந்திர தேசபக்தர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். ஆங்காங்கே ஆந்திரப் பகுதிகளில் கண்டனக் கூட்டங்களையும், ஊர்வலங்களையும் கணக்கின்றி நடத்திக் கண்டித்தனர் அப்போது பெஜவாடா என்றும், இப்போது விஜயவாடா என்றும் அழைக்கப்படும் பெரும் நகரிலே இருந்து வெளிவரும் ‘சுயராஜ்யா’ என்ற தெலுங்கு வாரப் பத்திரிக்கை; பின்ஹேயின் சிறுமைத் தீர்ப்பைக் கண்டித்து மிகக் காரசாரமாகத் தலையங்கம் எழுதியது. அந்தத் தலையங்கம், மக்களிடையே பலாத்காரத்தைத் தூண்டி விடுவதாக உள்ளது என்ற காரணத்தைக் காட்டி பத்திரிக்கை அலுவலகத்தையே பூட்டி சீல் வைத்துவிட்டார்கள் வெள்ளையர் போலீஸ் அதிகாரிகள். அந்த தலையங்கத்தை எழுதிய ஆசிரியருக்குக் கடுமையான தண்டனையை வெள்ளையர் அரசு அளித்தது. மகாகவி பாரதியார் ஆசிரியராக இருந்த ‘இந்தியா’ என்ற தமிழ் வார இதழுக்கும் அதே நிலை ஏற்பட்டது. ஏன், அவ்வாறு வெள்ளையர் ‘இந்தியா’ பத்திரிகை மீது நடவடிக்கை எடுத்தார்கள் என்றால், நீதிபதி பின்ஹேயை அந்த இதழ் கண்டனம் செய்து எழுதியதாம். அத்துடனில்லாமல், சிதம்பரம் பிள்ளை எதற்காகத் தண்டனை பெற்றாரோ அதனையே பொதுமக்களும் பின்பற்ற வேண்டும் என்று எழுதியதாம். பாரதியாரின் ‘இந்தியா’ பத்திரிகையினை வெளியிடுபவராக, சீறிநிவாசய்யங்கார் என்பவர் இருந்தார். ஐயங்காரையும் தண்டித்தது பிரிட்டிஷ் ஆட்சி. அதற்குப் பிறகு தான் ‘இந்தியா’ வார ஏட்டின் அலுவலகம் பிரெஞ்சு ஆட்சியிலே உள்ள புதுச்சேரி என்ற நகருக்கு மாற்றப்பட்டது. இந்திய மந்திரியாக அப்போது இருந்த மார்லி என்ற வெள்ளைப் பெருமகனுக்கு, சிதம்பரம் பிள்ளைக்கு 40 ஆண்டுகள் தந்துள்ள தீவாந்தரச் சிறை தண்டனையின் கொடுமைத் தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை. அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் ராஜப்பிரதிநிதியாகப் பணியாற்றிய லார்டு மிண்டோவிற்கு, “சிதம்பரனாருக்கும், சிவாவுக்கும் விதிக்கப்பட்டுள்ள தண்டனையைத் தன்னால் ஆதரிக்க முடியாது என்று பகிரங்கமாகக் கண்டித்து எழுதினார். அந்தக் கொடுமையான தண்டனைகள் நிலைக்காது” என்றும் எழுதினார். இவர் இப்படி எழுதியதை முன்னிட்டு மிண்டோ துரை நீதிபதி பின்ஹேயை வேறோர் மாகாணத்திற்கு மாற்றிவிட்டார். தனக்கு விதிக்கப்பட்ட 40 ஆண்டுகள் தீவாந்தரத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்துக்கு சிதம்பரம் மேல் முறையீடு செய்தார். தலைமை நீதிபதியான ஆர்னால் ரைட், நீதிபதி மன்றோ ஆகியோர் அவரது வழக்கை விசாரணை செய்தார்கள். ஆட்சி சார்பாக, பாரிஸ்டர் ரிச்மாண்ட் வாதாடினார். சிதம்பரம் பிள்ளைக்கு பின்ஹே அளித்த தண்டனையைக் குறைக்கக் கூடாது என்று ரிச்மாண்ட் வன்மையாகவே வாதாடினார். 1908-ஆம் ஆண்டு நவம்பர் 4-ம் நாள் தீர்ப்புக் கூறும் போது, “ராஜத் துரோகத் தண்டனை”க்காக விதிக்கப்பட்ட 20 ஆண்டு தண்டனையை நான்கு ஆண்டுகள் என்றும், அதே போன்று சிவாவுடன் உடந்தையாக சிதம்பரனார் இருந்தார் என்பதற்காக விதிக்கப்பட்ட20 ஆண்டுத் தண்டனையை ஆறு ஆண்டுகளாகவும் குறைக்கப்பட்டது. அதாவது, சிதம்பரம் பிள்ளைக்கு பின்ஹேயால் விதிக்கப்பட்ட 40 ஆண்டு தண்டனையில் 30 ஆண்டுகளைக் குறைத்து 10 ஆண்டுகள் தண்டனை என்று உயர்நீதி மன்றம் விதித்தது. சிதம்பரனார் நண்பர்களது அரிய முயற்சியால், உயர்நீதி மன்றம் அளித்த 10 ஆண்டுகள் தண்டனையை எதிர்த்து லண்டன் பிரிவிகெளன்சில் நீதிமன்றத்துக்கு மீண்டும் மேல் முறையீடு செய்யப்பட்ட போது, அங்கு அந்தமான் சிறைவாசத் தண்டனை ஆறு வருடம் கடுங்காவல் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. கட்டைத் தாலி கழுத்துடன் செக்கிழுத்தார் சிதம்பரம்! சிதம்பரனாருக்குரிய ஆறாண்டுக் கடுங்காவல் தண்டனையை, அவர் கோயம்புத்துர், கண்ணனூர் சிறைகளில் கோரமாக அனுபவித்தார். அப்போதெல்லாம் தமிழ்நாட்டுச் சிறைகளில் தேசபக்தர்கள் அதிகமாக தண்டனை அனுபவிப்பது கிடையாது. அதனால் சிதம்பரம், சிவா போன்றவர்கள் சிறைகளில் தன்னந்தனியாகவே அவரவர் தண்டனைக் காலங்களைக் கழித்து வந்தார்கள். சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளுக்கு எந்தவிதமான வசதிகளும் செய்து தரும் வழக்கம் இல்லை. திருடன், கொலைகாரன், கொள்ளைக்காரன்களைப் போன்ற சமூக விரோதிகளுடனே சரி சமமாகச் சேர்ந்தே அவரவர் தண்டனைகளை அனுபவிப்பது என்பது வழக்கமாக இருந்தது. இத்தகைய சமூக விரோதிகள் சிறையுள்ளே என்னென்ன துன்பங்களை, கொடுமைகளை, சித்ரவதைகளை அனுபவிக்கின்றார்களோ அவற்றையெல்லாமே அரசியல் கைதிகளும் சேர்ந்தே அனுபவிக்கும் கொடுமை அரசியல் கைதிகளுக்கும் இருந்தது. அதனால், சிதம்பரம் பிள்ளையும் சிறைச்சாலையில் அளவிலா துன்பங்களை அனுபவித்ததுடன் இல்லாமல், சமூக விரோதக் கைதிகள் தன்னைப் போலவேதான் அரசியல் கைதிகளும் என்றெண்ணி சிதம்பரனார், சிவா போன்றவர்களை அவமரியாதையாக நடத்திடவும், கேவலமாக அவர்களை மதிக்கவும் செய்தார்கள். நல்ல உணவுகளை வீட்டில் உண்டு வந்த சிதம்பரனார் போன்றவர்களுக்கு சிறை உணவான கேழ்வரகு, கூழ், களி போன்ற உணவுகள் உடலுக்கு ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், அவரது உடல் நாளுக்கு நாள் உருக்குலைந்து வரலாயிற்று. ஆறே மாதங்களில் 27 பவுண்டுகள் உடல் எடை குறைந்தது என்றால், அவர் ஆறாண்டுக் காவலை எப்படிக் கழித்திருப்பார் என்பது எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றல்லவா? இவ்வாறு உடல் மெலிந்த சிதம்பரனாரை சிறை டாக்டர் சோதனை செய்த பின்பு, சிறை அதிகாரிகளை அவர் எச்சரித்துப் புகார் கூறியதனால்தான், சிதம்பரனாருக்கு அரிசி உணவு வழங்கப்பட்டது. சிறையில் அவரது கால்களுககு பெரும் இரும்பு விலங்குகள் பூட்டப்பட்டன. முரட்டுத் துணிகளாலான மேல்சட்டை, மொட்டை அடிக்கப்பட்ட தலை, என்று அவருக்கு விடுதலை என்பதைக் குறிக்கும் கட்டையைத் தாலி போல கழுத்தில் தொங்கவிடப்பட்டது. உடல் உருக்குலைந்த ஒரு வக்கீலை, சிறையதிகாரிகள் கடுமையாக வேலை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வேலை வாங்கினார்கள். வழக்குரைஞர் பணி அவரது பரம்பரைக்கு வாழையடி வாழையாக வந்த பணி. அப்படிப்பட்டவரை வெள்ளைக்கார சிறையதிகாரிகள் மாடுபோல எண்ணும்படி செக்கின் நுகத்தடியைச் சங்கிலியாலே பிணைத்து, அந்தச் சங்கிலியை இடுப்பிலே இறுகக்கட்டி, அதைக் கைகளிலே பூட்டி அவரை இழுக்க வைத்து வேதனைப்படுத்தி, கொடுமையின் சிகரத்திலே அவரை நிற்க வைத்துத் தினந்தோறும் வேலை வாங்கி வந்தார்கள். சிதம்பரம் பிள்ளையைச் செக்கை இழுக்கும் மாடுபோல மாற்றிவிட்டது சிறையதிகாரம் அதனால், ஒருநாள் செக்கை மாடு போல இழுக்க முடியாமல், களைப்பு ஏற்பட்டு மயங்கிக் கீழே சுருண்டு விழுந்து விட்டாராம்! பிறகு, மனித நேயமுடைய கைதியில் ஓரிருவர் அவரைத் தூக்கி நிற்க வைத்து, குடிக்கத் தண்ணீர் கொடுத்த பின்பு, திடீரென அங்கே வந்த அதிகாரிகள் மீண்டும் சிதம்பரனாரைச் சங்கிலியோடு சேர்த்துப் பிணைத்து மாடுபோல செக்கை இழுக்குமாறு சாட்டையைக் காட்டி மிரட்டினார்களாம். சிதம்பரம் செக்கை இழுக்கும் போது, அவருக்கு செக்கை இழுப்பது போன்ற நினைவே இருக்காதாம். சுதந்திர தேவியின் திருக்கோயிலைச் சுற்றி வலம் வருவது போலவே அவர் எண்ணிக் கொள்வாராம்! சிறையிலேதான் இந்த சித்ரவதைகள் என்றால், சிறைக்கு வெளியேயும் இருந்து அவருக்குத் துன்பங்கள் தொடர்ந்து வந்தவாறே இருந்தன. என்ன அந்தத் துயரங்கள்? சிதம்பரனார் சிறை புகுந்ததும், அவர் அரும்பாடுபட்டு ஆரம்பித்த சுதேசிக் கப்பல் கம்பெனியின் நிர்வாகமும் மூடப்பட்டுவிட்டது. பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி சிதம்பரனாரின் கப்பல் நிறுவனத்தை எப்படியும் அழிப்பது என்றே கங்கணம் கட்டி அலைந்ததல்லவா? அதற்கேற்றவாறு, சுதேசி கப்பல் கம்பெனியால் பிரிட்டிஷ் போட்டி வாணிகத்தைச் சமாளிக்க முடியவில்லை. அதே நேரத்தில் சிதம்பரனாருக்கு 40 வருடங்கள் தீவாந்தர தண்டனை விதிக்கப்பட்ட உடனே, சுதேசி நிறுவன நிர்வாகிகளுக்குப் பயம் ஏற்பட்டு விட்டது. அதனால் வ.உ.சி. துவங்கிய கப்பல் கம்பெனியைக் கலைத்து விட்டார்கள். கலைத்தது மட்டுமன்று, என்ன பாடுபட்டு இரண்டு கப்பல்களை சிதம்பரனார் வாங்கினாரோ, அந்தக் கப்பல்களை சிதம்பரனாரைக் கேட்காமலேயே வெள்ளைக்காரக் கப்பல் கம்பெனிக்கே விற்று விட்டார்கள் என்ற கொடுமையான செய்திகளைக் கேட்ட சிதம்பரனார், அனுபவிக்கும் சிறைக் கொடுமைகளைவிடக் கோரமான, கொடுமையான வேதனைகளை அவர் சிறையிலே அனுபவித்தார். எவ்வளவு கஷ்டப்பட்டு காலிபா கப்பலை வாங்கி வந்தோம். அதை அழிக்க நினைத்த வெள்ளையனுக்கே அதை விற்று விட்டார்களே மாபாவிகள் என்று எண்ணி உணவின்றியும் உறக்கமின்றியும் வேதனைகளோடே அவர் உள்ளம் நைந்தார். சிறையிலே சித்ரவதைகளை நாள்தோறும் ஏற்றுக் கொண்டிருந்த சிதம்பரம் பிள்ளைக்கு, மேலும் பல துன்பச் செய்திகள் தினந்தோறும் வெளியே இருந்து வந்து துன்புறுத்தின. அதாவது, சுதேசிக் கப்பல் நிறுவனம் மூடப்பட்டதற்கு சிதம்பரனாரின் தீவிரவாத அரசியல் கொள்கையே காரணமாதலால் நிர்வாகிகள் இழந்த பொருள்களுக்குரிய நஷ்ட ஈட்டை சிதம்பரனார்தான் கொடுக்க வேண்டும் என்று சுதேசிக் கப்பல் கம்பெனி நிர்வாகிகள் கேட்டு அவர் பெற்றோரை நெருக்கினார்கள் சிறையிலே உள்ள சிதம்பரனார் என்ன செய்வார்? இந்த நெருக்கடிக்குக் காரணமறிந்த சிதம்பரம் பிள்ளை, சுதேசிக் கம்பெனியின் சட்ட ஆலோசகரான சேலம் சி.விஜயராகவாச்சாரியாருக்குக் கடிதம் மூலமாகக் குறிப்பிடும் போது, கம்பெனிக்கு ஏற்பட்ட நஷ்டத்தைப் பங்குதாரர்கள் ஏற்பதே நியாயம். அவர்கள் மறுப்பார்களானால், நானே கடன்களைக் கொடுத்து விடுகிறேன் என்று தெரிவித்தார் இந்தத் துன்பங்கள் அவரை நெருக்கி வேதனைப்படுத்தினாலும் அதற்காக அவர் வருந்தவில்லை. ஒவ்வொரு நாளும் சிதம்பரனார் சிறையில் அதிகாரிகளுடன் தனது சுயமரியாதைக்காகப் போராட வேண்டிய நிலை இருந்தது. ஜெயில் அதிகாரி ஒரு நாள் சிறையைப் பார்வையிட்டுக் கொண்டே வந்தார். அப்போது சிதம்பரனார் திடீரென்று சிரித்து விட்டார் அதைக் கண்ட அதிகாரி ஏன், சிரிக்கிறாய்? என்று சிதம்பரம் பிள்ளையைக் கேட்டார். அதற்கு அவர், சிரிக்காமல் என்ன செய்ய சொல்கிறீர்? அழுவதா? என்று கேட்டுவிட்டார் கோபம் கொண்ட அதிகாரி இந்த விவகாரத்தை ஜெயில் சூப்ரெண்டிடம் புகார் செய்தார். சிரித்த குற்றத்திற்காக மேலும் 2 வாரம் சிறை தண்டனையை சிதம்பரம் பெற்றார். வேறோர் நாள் சிறை அதிகாரி, சிதம்பரம் பிள்ளையைத் தோட்டி வேலை செய்யுமாறு பலாத்காரமாக வற்புறுத்தினார். உயிரே போனாலும் அந்த வேலையைச் செய்யமாட்டேன் என்று கண்டிப்பாக அவர் மறுத்துவிட்டார் சிதம்பரத்தின் பிடிவாதமான மன உரத்தைக் கண்ட அதிகாரி மேற்கொண்டு அவரை வற்புறுத்தாமல் விட்டுவிட்டார். இராமன் என்ற ஒரு காண்விக்ட் வார்டர், சிதம்பரம் பிள்ளையின் பெருமையை உணர்ந்து அவரைக் கை கூப்பி வணக்கம் என்று சொல்லுவதை ஒரு ஜெயிலர் பார்த்து விட்டார். “இனிமேல் சிதம்பரத்தை வணங்கினால் உன்னைச் செருப்பால் அடிப்பேன்” என்று வணங்கிய ராமனைக் கடுமையான வார்த்தைகளால் கண்டித்தான் அந்த ஜெயிலர் கோயம்புத்தூர் சிறையிலே, திருநெல்வேலி கலவரத்தில் தண்டிக்கப்பட்ட சிலர் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். சிதம்பரனாருக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை அந்தக் கைதிகளும் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தார்கள். அதே நேரத்தில் ராமன் சிதம்பரத்தை வணங்கியபோது ஜெயிலர் பேசிய கடுமையான வார்த்தைகளையும், சிதம்பரத்தின் பெருமை, புகழ், மரியாதை, மதிப்பு தெரியாத அந்த அதிகாரியின் செயலைக் கண்டும் அவர்கள் ஆத்திரம் அடைந்தார்கள் ஒருநாள் அதிருப்தியாளர்கள் எல்லாம் வேறொரு வார்டில் கூடி, நமது தலைவரை அவமதித்த அந்த ஜெயிலரைக் கொன்று விடுவது என்று திட்டமிட்டார்கள் திடீரென்று ஒரு நாள் அந்த ஜெயிலரின் அலுவலகம் தாக்கப்பட்டது. அன்று ஞாயிற்று கிழமை. விடுமுறை நாளாதலால் காவலாளிகளில் பலர் வரமாட்டார்கள் விடுமுறையில் இருந்தார்கள் இதனையெல்லாம் தாண்டி அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல், இரண்டு மணி நேரமாக ஜெயிலிலேயே பெரிய கலவரத்தையும், அடிதடிசண்டைகளையும் உருவாக்கி, சிறையையே கலவரக் கூடமாக்கி விட்டார்கள். உடனே சிறையினுள்ளே இருந்த அபாயமணி ஒலித்தது. இடைவிடாமலும், விட்டு விட்டும் மணி அலறிக் கொண்டே இருந்தது. கைதிகளில் பலர் பூட்டுக்களை உடைத்துக் கொண்டு சிறைக்கு வெளியே ஓடினார்கள். அந்த நேரத்தில் ஏராளமான ரிசர்வ் போலீசார் கார்களில் வந்து குவிந்தார்கள். சுட்டார்கள் கைதிகளை ஒரு கைதி பிணமானார். ஆனால், அந்த ஜெயில் அதிகாரி, அதாவது சிதம்பரம் பிள்ளையை அவமரியாதையாக எண்ணி ராமன் என்ற கன்விக்ட் கைதியைச் செருப்பாலடிப்பேன் என்று கூறிய ஜெயிலரை கைதிகள் பயங்கரமாகத் தாக்கி, பலத்த காயப்படுத்தி விட்டார்கள் அந்த ஜெயிலர் உடல் தேறிட சில மாதங்களாயின. இந்த கலவரத்திற்கு யார் காரணம்? என்று கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சிதம்பரனார் கைதிகள் பக்கமே நியாயம் இருப்பதாக சாட்சி கூறினார். ஜெயில் அதிகாரி செய்த கொடுமைகளும், நடத்திய அவமரியாதைச் செயல்களும், கைதிகளிடம் அவர் காட்டிண ஆணவ அகம்பாவ ஏற்றத்தாழ்வு மனப்பான்மைகளுமே காரணம் என்று சிதம்பரனார் சாட்சியமளித்தார். இந்த சான்றளிப்புக்குப் பிறகு சிதம்பரம் பிள்ளையைக் கண்ணனூர் சிறைக்கு மாற்றிவிட்டது வெள்ளையர் அரசு. வ.உ.சி. தண்டனைக்குப் பழி வாஞ்சி ஆஷ்துரையைச் சுட்டார்! திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த விஞ்ச் என்ற வெள்ளைக்காரருக்கு உதவிக் கலெக்டராக இருந்தவர் ஆஷ்துரை உதவிக் கலெக்டராக இவர் இருந்த போது காங்கிரஸ் தேச பக்தர்களுக்கு சொல்லொணாக் கொடுமைகளைச் செய்தவர் மாவட்டம் முழுவதும் உள்ள பணக்காரர்கள் பண்ணையார்கள், கல்விமான்கள் கல்லார்கள் புகழ்மிக்க பெரும் செல்வாக்கு பெற்றவர்கள் அனைவரிடமும் கெட்ட பெயரும் பழி பாவங்களும் ஏற்றிட்ட ஓர் அதிகாரியாக விளங்கியவர் ஆஷ்துரை: சுதேசிக் கப்பல் கிளர்ச்சி அறவழியில் நடந்ததை மறவழியில் மாற்றியதே வெள்ளைக்காரர்களான விஞ்ச் துரையும் ஆஷ் துரையும் தான் அந்த அளவுக்கு அந்த இரு துரைமார்களின் ஆணவம் ஆதிக்கம் இனவெறி ஆட்சி ஆதிக்கம் ஆகியவை இருந்தன. அதே நேரத்தில் இந்த இரு துரைகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு போலீசார் செய்த கொடுமைகளை பிண வீழ்ச்சிகளை படுகாயப் படலங்களைப், பொதுமக்களும் மறக்காமலே இருந்தார்கள் என்பதும் வேறோர் காரணமாகும். அறவழி வெற்றியைத் தராது; மறவழிதான் அதாவது ஆயுதம் ஏந்தும் போராட்டம்தான் வெற்றி தரும், வெள்ளையர் கொடுமைகளைப் பொறுக்க முடியாது என்று நம்பிய பொதுமக்கள் ஒரு சிலரின் தவறான எண்ணமும் இன்னொரு காரணமாகும். ஆனால், சிதம்பரனார் இத்தகையோர் போக்கை என்றுமே ஆதரித்ததில்லை சுதந்திரம் பெறுவதில் தீவிரவாதம் காட்டுவாரே தவிர அதற்காக வன்முறைகளை என்றுமே அவர் பிரயோகித்ததே இல்லை. ஏனென்றால் வடநாட்டிலே இந்த ஆயுதப் புரட்சியை திருநெல்வேலிக்கு முன்னமேயே புரட்சிவாதிகள் ஒத்திகை பார்த்துவிட்டனர். அதாவது கிங்ஸ்ஃபோர்டு என்ற நீதிபதியைக் கொலை புரியும் முயற்சியில் குறிதவறி கென்னடி என்ற ஒரு வெள்ளைக்காரப் பெண்ணையும் அவருடைய மகளையும் குண்டுவீசிக் கொன்றுவிட்டனர். இந்த துயர நிகழ்ச்சி 1908-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாளன்று பீகார் மாநிலத்திலே உள்ள முஜபர்பூரில் நடந்தது. இக்கொலைக்குக் காரணம், குதிராம்போஸ் என்ற ஓர் இளைஞன் அவன் தூக்கிலிடப்பட்டான்! திருநெல்வேலி மாவட்டத்தில் ‘தேசாபிமானிகள் சங்கம்’ என்ற ஒரு சங்கத்தை சிதம்பரம் பிள்ளை தோற்றுவித்ததைப் போல பாண்டிய நாட்டில் வீர இளைஞர்கள் ஒன்று கூடி, அபிநவ பாரத சங்கம் என்ற ஓர் ரகசியமான சங்கம் அமைக்கப்பட்டது. இவர்கள் இந்திய விடுதலைக்காக தமது உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் அர்ப்பணிக்க சபதம் ஏற்றுக் கொண்டனர் ஒவ்வொருவரும் சங்க உறுப்பினராகும்போது, ரத்தக் கையெழுத்திட்டுள்ளனர் அவர்களிடம் பரங்கி ஒழிப்பு என்ற அச்சகம் இருந்ததால், அடிக்கடி துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டுத் தங்களது நடவடிக்கையை மக்களுக்குத் தெரிவிப்பது வழக்கம் ஆங்கிலேய அரசு அந்த தேசபக்த இளைஞர்களைத் தண்டிக்கத் தொடங்கியது. நூற்றுக்கணக்கான வாலிபர்கள் கடும் தண்டனை பெற்றார்கள். புரட்சிக்காரர்கள் பலர் பிரெஞ்சுகாரர்கள் ஆட்சியிலே உள்ள புதுச்சேரி நகருக்குள் தஞ்சமடைந்தார்கள். புதுவையிலிருந்த புரட்சிக்காரர்கள், லண்டன், பாரிஸ் போன்ற இடங்களிலே இருந்த புரட்சித் தீவிரவாதிகளோடு சம்பந்தமும், நட்பும் கொண்டிருந்தனர். விநாயக தாமோதர சவர்க்கார் புரட்சிக்காரர்களின் தலைவராக இருந்தார். லண்டனில் இந்தியா மாளிகை புரட்சிக்காரர்களின் பாசறையாக இருந்தது. இந்த புரட்சிவாதிகளுடன் தான் தமிழ்நாட்டு புரட்சிவாதிகளும் தொடர்பு வைத்திருந்தார்கள். புரட்சியாளர்கள் புதுவையிலிருந்து பாரிஸ் வழியாக இந்தியா மாளிகைக்குச் சென்றார்கள். 1910-ஆம் ஆண்டிற்குள் புரட்சிக்கு திட்டம் உருவானது. வ.வெ.சு.ஐயர், சியாம்ஜி, கிருஷ்ண வர்மா ஆகியோர் பாரிஸ் வழியாகப் புதுச்சேரிக்கு வந்தார்கள். இதுபோன்று புரட்சிக்குத் திட்டங்கள் வகுத்துக் கொண்டிருந்த வேளையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உதவி கலெக்டராக இருந்த ஆஷ்துரை பதவி உயர்வால் கலெக்டரானார். ஆஷ் துணை ஆட்சியராகப் பதவியிலிருந்த காலத்தில் தேசியவாதிகளையும் தொண்டர்களையும் கொடுமைப்படுத்தியதற்கெல்லாம் பழிக்குப் பழிவாங்க வேண்டும் என்று மக்களிலே சிலர் அதற்கான சந்தர்ப்பம் எப்போது வாய்க்குமோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். 1911-ஆம் ஆண்டு ஜூலை மாதம், 17 ஆம் தேதியன்று கலெக்டர் ஆஷ்துரை கொடைக்கானல் என்ற குளுகுளு நகருக்குச் சென்றார். அப்போது, வாஞ்சிநாதன் என்ற வாலிபர் மணியாச்சி ரயில்வே நிலையத்தில் ஆஷ்துரையைத் தனது துப்பாக்கியால் கட்டுக் கொன்றார் தன்னை யாராவது அடையாளம் கண்டு கொண்டால் அது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பெரும் ஆபத்தாகி விடுமே என்றஞ்சி, அந்த வாலிபர் தனது வாய்க்குள்ளே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதால் தலை சுக்கல் சுக்கலாகச் சிதறி மாண்டார். ஆஷ் துரையைக் கொன்றவர் யார் என்ற புலன் விசாரணையின் போது, செங்கோட்டையைச் சேர்ந்த ஒரு வழிப்போக்கர். ஆஷ் கொலையாளி செங்கோட்டையைச் சேர்ந்தவர் என்றும், அவர் தந்தையின் பெயர் ரகுபதி ஐயர். அவர் வனத்துறை அதிகாரிகளில் ஒருவர் என்றும் கூறிவிட்டார். அதே நேரத்தில் கலவரமாகிவிட்ட நெல்லை போலீஸ் துறையினர் இறந்து விட்ட வாஞ்சிநாதன் சட்டைப் பையிலே இருந்த கடிதங்களைச் சோதனையிட்டுப் பார்த்தார்கள். அக்கடிதங்களுள் ஒன்றில், “கப்பலோட்டிய தமிழன் வ.உசிதம்பரம் பிள்ளை கடுந்தண்டனை பெறக் காரணமாக இருந்தவர்களுள் ஆஷ்துரை தான் முக்கியமானவர். ஆகையால், அவரைச் சுட்டுவிட்டேன்” என்று எழுதியிருந்தார். ஆஷ் கொலைக்கு பிறகும் நடைபெற வேண்டிய புரட்சிகளைப் பற்றிய கடிதங்களும் அவரிடம் இருந்தன. ஆஷ்துரை கொல்லப்பட்டதைக் கேட்டு சிதம்பரனார் திடுக்கிட்டார். அதிர்ச்சியடைந்தார். எதிர்காலத்தில் இந்த நாட்டை ஆள்வதற்குத் தகுதியுள்ளவர்கள் இளைஞர்கள். அவர்கள், தங்கள் வாழ்வை இவ்வாறு பலியிட்டுக் கொள்வதை சிதம்பரம் பிள்ளை விரும்பவில்லை. பழிக்குப் பழி, வன்முறை, ஆயுதப் போராட்டம் போன்ற செயல்களால் மட்டுமே வெள்ளையர்களை நமது நாட்டை விட்டு விரட்டி விட முடியாது. வீணாக நமது இளைஞர்கள் இன்னுயிரை இழக்கின்றார்களே என்று சிதம்பரனார் மிகவும் வருத்தப்பட்டார். ஆஷ் சுடப்பட்ட படுகொலைக்குப் பிறகு, போலீசார் ஒவ்வொரு மாகாணத்திலும் புலன் விசாரணை செய்தார்கள். கல்கத்தா நகரில் இந்தக் கொலை சம்பந்தமாக 14 பேர்கள் கைது செய்யப்பட்டார்கள். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நீலகண்ட பிரம்மச்சாரி ஒருவர். மற்றொருவர் தென்காசியைச் சேர்ந்த டி.என். சிதம்பரம் பிள்ளை என்பவராவார். இவர்கள் ‘அபிநவ பாரத சங்கம்’ போன்ற இரகசிய சங்கங்களைத் தோற்றுவித்து, புரட்சியை உருவாக்கச் சதி செய்கிறார்கள் என்று போலீசார் அவர்கள் மீது குற்றம் சாட்டினார்கள். உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு இந்த வழக்கு சென்றது. விசாரணையில் ஒன்பது பேர் தண்டனை பெற்றார்கள். ஐவர் விடுதலை ஆனார்கள். இவ்வாறாகப் புரட்சி மனப்பான்மை வாலிபர்கள் ஒவ்வொரு மாகாணத்திலும் வெள்ளையராட்சியை எதிர்த்து இரகசியமாக சுதந்திரப் பணியைச் செய்து வரும் சூழ்நிலை உருவானது. வ.உ.சி. விடுதலையானார் ஒரே ஒரு தமிழன் வரவேற்றார் சிதம்பரனார் வெள்ளையரது வாணிபத்தை எதிர்த்துக் கப்பலோட்டியது ஒரு குற்றம் அனுமதியின்றிப் பொதுக்கூட்டம் நடத்தியது இரண்டாவது குற்றம்: பாமர மக்களை ‘வந்தே மாதரம்’ என்று முழக்கங்களை எழுப்ப வைத்தது மூன்றாவது குற்றம் என்ற மூன்று குற்றங்களைச் செய்தார் என்ற காரணங்களைக் காட்டி வெள்ளையராட்சி அவருக்கு நாற்பது ஆண்டுகள் தீவாந்தர தண்டனையை விதித்து, அந்த தண்டனையை அந்தமான் தீவுக்குச் சென்று அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. சுப்பிரமணிய சிவா சிதம்பரம் பிள்ளையுடன் சேர்ந்து ராஜத்துரோகக் குற்றம் செய்தார் என்று அவருக்கும் பத்தாண்டு தீவாந்தரம் தண்டனை அளித்தது ஆங்கிலேயர் ஆட்சியின் நீதிமன்றம். சிதம்பரனார் நண்பர்கள், வெள்ளையர் தீர்ப்பை எதிர்த்து லண்டனிலுள்ள பிரீவிகெளன்சில் நீதிமன்றம் வரை சென்று, இறுதியாக அந்த தண்டனை ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. இந்த சிறைத் தண்டனையை சிதம்பரம் பிள்ளை கோயம்புத்துர், கண்ணனூர் சிறைகளில் கடுமையாக அனுபவித்து விட்டு, 1912-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலையடைந்தார். சிறையிலே இருந்து விடுதலையான சிதம்பரம் பிள்ளையை வரவேற்றிட எந்த ஒரு தமிழனும் சிறை வாயிலுக்கு வரவில்லை. தமிழ்நாடு அவரது தியாகத்தை நன்றி கெட்டத்தனமாக அப்போது மறந்துவிட்டது. சிறையிலே இருந்து வெளிவந்த சிதம்பரனாரை சிறை வாயிலே வரவேற்ற ஒரே நண்பர் சுப்பிரமணிய சிவா மட்டும்தான். ஆறு வருடங்கள் சிறையிலே பல கொடுமைகளைக் கடுமையாக அனுபவித்தவர் வ.உ.சி. அதுமட்டுமல்ல, வழக்குரைஞராகப் பணியாற்றி வானளாவும் பெரும் புகழைப் பொது மக்களிடம் பெற்று வளமாக வாழ்ந்த பெருமகன் சிதம்பரனார். தன்னந்தனி மனிதனாக அரும்பாடுபட்டு உழைத்துப் பல கஷ்டங்களை ஏற்று, வெள்ளையர்கள் தமிழர்களைக் கொள்ளையடித்த பொருளாதாரச் சுரண்டலை எதிர்த்துக் கப்பலோட்டிய முதல் தமிழ் மகன் சிதம்பரனார். வடநாட்டுப் பத்திரிக்கைகளும், தென்னாட்டுப் பத்திரிக்கைகளும் ஒன்று சேர்ந்து சிதம்பரனார் பெற்ற 40 வருட தீவாந்தரத் தண்டனையை எதிர்த்து எழுதிடும் அளவுக்கு இந்தியா முழுவதும் செல்வாக்குப் பெற்ற ஓர் அரசியல் பெருந்தலைவராகத் திகழ்ந்தவர் சிதம்பரனார். அப்படிப்பட்ட செயற்கரிய செயல்கள் செய்து சிறையில் செக்கிழுத்த செம்மலை சிறைவாயிலிலே வரவேற்றிட காங்கிரஸ் மகா சபை மக்களுள் ஒருவரும் வராததால், அரசியலும் பொதுவாழ்வும் அப்போது மகா பெரிய நன்றி கெட்டத்தனமாக நடந்து கொண்டன என்பது தான் சிதம்பரனார் வரலாறாகக் காட்சியளித்தது. ஆனால், ஒரே ஒரு தமிழ் மகன், அவரும் சிதம்பரனாருடன் பெற்ற கடுந்தண்டனையை முன்கூட்டியே அனுபவித்து விட்டு, விடுதலையாகி வெளியே வந்திருந்த காரணத்தினால், நட்பினருமை தெரிந்த நன்றியுணர்ச்சியின் துடிதுடிப்பால், சிறையிலே அனுபவித்த கொடுமைகளின் காரணமாக குஷ்ட நோய் ஏற்பட்டு, அந்த நோய் உடலெல்லாம் பரவி, கால் கை விரல்கள் எல்லாம் மடிந்து வீங்கி வழியும் புண்களின் சீழ் ரத்தக் கோரமையோடு ஊன்று கோல் ஒன்றை ஊன்றிக் கொண்டு சிறைவாயில் முன்னே சிதம்பரனாரை வரவேற்றிட வந்திருந்தார் பாவம்! அந்தக் குஷ்ட நோய் பெருமகனைக் கண்ட தியாக மூர்த்தி சிதம்பரம் பிள்ளை, கண்ணீர் விட்டுக் கதறி, குஷ்டநோயாளர் என்றும் பாராமல் அவரைக் கட்டித் தழுவி “அப்பா சுப்பிரமணிய சிவா, நீயாவது வந்தாயே!” என்று ஆரத் தழுவிக் கொண்டே கண்ணீர் சிந்தினார். சிதம்பரனார் வாழ்க்கையிலே அவர் அடைந்த துன்பங்களைக் கண்டு மனமுருகி வருந்தி வேதனைப்பட்டவர்கள் தமிழ் நாட்டிலே இரண்டே இரண்டு தியாக உள்ளங்கள்தான். ஒருவர் சுப்பிரமணிய சிவா. மற்றவர். கவியரசர் பாரதிப் பெருமகன் ஆவார். சிறை மீண்ட சிதம்பரனார் சென்னை மாநகரிலேயே சில ஆண்டுகளைக் கழித்தார். ராஜத்துரோகம் என்ற பெயரில் சிதம்பரனார் தண்டனை பெற்றவர் என்பதால், அவரது வழக்குரைஞர் சின்னமான ‘வக்கீல் சன்னத்து’ உரிமையை வெள்ளையராட்சி பறிமுதல் செய்துவிட்டது. அதனால் என்ன செய்வது என்று அறியாது திகைத்தார். தொழிலும் அவரால் நடத்த முடியவில்லை. வருமானத்துக்கும் வேறு வழியில்லை. மக்கள் வறுமையிலே வாடக் கூடாது என்பதற்காகப் போர்க்கொடி தூக்கி வெள்ளையராட்சியோடு போராடிய அஞ்சா நெஞ்சர் சிதம்பரனார் தனது வறுமையைக் கண்டு நொந்தே போனார்: துத்துக்குடி கோரல் மில்லின் இரண்டாயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து பட்டினியும் பசியுமாக அவர்கள் குடும்பங்கள் வாடியபோது, அந்தக் குடும்பங்களுக்காக நிதி திரட்டிக் கொடுத்து உணவளித்தவர்; வேலைகளைத் தேடித் தந்து அவர்களுக்கு வாழ்வளித்த சிதம்பரம் பிள்ளையின் அன்றைய கதி வறுமை; வாட்டம்; சோர்வு தளர்ச்சி; திகைப்பு. சிதம்பரம் பிள்ளை இயற்கையாகவே இரக்க உள்ளம் கொண்டவர். பிறர் படும் வாழ்க்கைத் துன்பங்கள் அவர் நெஞ்சிலே நெருஞ்சி முள்ளாகத் தைக்கும் போதெல்லாம் இல்லையென்று சொல்லாமல் இருப்பதைக் கொடுத்து உதவும் ஈரமுள்ளவர். எடுத்துக்காட்டாக… ஒரு சமயம் ஒருவர் தனது பெண்ணுக்குரிய திருமண நாளைக் குறித்துவிட்டு சிதம்பரனாரிடம் வந்து, ‘எனது பெண் திருமணத்துக்கு நாள் வைத்து விட்டேன். கையிலே பணமில்லை. ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கல்யாணத்தைச் செய்து விடுவேன்’ என்று மனமிளகிக் கேட்டபோது அவர் கேட்ட ரூபாய் ஆயிரத்தையும் உடனே வழங்கிய நெஞ்சர் அவர். அத்தகைய ஒரு பெருமகன் இன்று நாட்டுக்காக, சுதந்திரத்துக்காக, வெள்ளையரை எதிர்த்ததால் கைப் பொருளை இழந்தார். வருவாய் வரும் வக்கீல் சன்னத்தையும் இழந்து வருவாய்க்கு வழியற்ற வறுமையாளரானார். சிதம்பரம் பிள்ளை மறுபடியும் எப்படியாவது பறிமுதல் செய்யப்பட்ட தனது வக்கீல் சன்னத்தைத் திரும்பப் பெற முயன்றார். அப்போது அவருக்கு இ.எச்.வாலஸ் என்ற வெள்ளைக்கார நீதிபதி உதவி செய்தார். வெள்ளை மனிதர்களிலும் சில கண்ணியவான்கள் இருக்கிறார்கள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், அந்த நீதிபதியின் பேருதவியால் சிதம்பரம் பிள்ளைக்கு மீண்டும் வக்கீல் சன்னத்து கிடைத்தது. நன்றியின் திலகமாக நடமாடிய சிதம்பரம், தனது மகன் ஒருவருக்கு அந்த நீதிபதியின் பெயரான வாலஸ் என்பதின் அடையாளமாக, வாலீஸ்வரன் என்ற பெயரை வைத்துப் போற்றினார். அதுபோலவே, அடிக்கடி பொருள் உதவி செய்த தூத்துக்குடி, ஆறுமுகம் பிள்ளையின் பெயரை மற்றொருமகனுக்கு ஆறுமுகம் என்று பெயரிட்டு நன்றி மறவா நாயகரானார். சிதம்பரம் பிள்ளை சென்னையில் இருக்கும்போது வறுமை நெருப்போடு வாழும் நிலையிலே நாட்களை நகர்த்தினார். அப்போதும், இவ்வளவு கஷ்ட நிலையிலும், அவர் பொது வாழ்க்கைப் பணி மீது வெறுப்புக் கொள்ளவில்லை. சென்னை பெரம்பூர் ரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுத் தீவிரமாகப் பணி புரிந்தார். இந்தப் பதவியிலும் தனது தீவிரத்தைக் காட்டி பல ஆண்டுகள் உழைத்தார். வாலஸ் பெருமகன் செய்த உதவியால், சிதம்பரம் பிள்ளை வக்கீல் சன்னத்து சற்றுத் தாமதமாகவே கிடைத்தது. அதைப் பெற்ற சிதம்பரனார் நேரே தனது ஊரருகே உள்ள நகரமான கோயில்பட்டிக்குச் சென்றார். அங்கே மீண்டும் வக்கீலானார்! மறுபடியும் துத்துக்குடி நகருக்கே சென்றார். கல்கத்தாவில் காந்தி திட்டம் : வ.உ.சி.மறுப்பும் - எதிர்ப்பும்! மாண்டேகு - செம்ஸ்ஃபோர்டு கொண்டு வந்த அரசியல் சீர்திருத்தம் என்ற திட்டத்தை எதிர்த்திட காந்தியடிகள் கொண்டு வந்த ஒத்துழையாமை என்ற தீர்மானத்தைப் பரிசீலனை செய்வதற்காக 1919-ஆம் ஆண்டில் கல்கத்தா நகரில் ஒரு காங்கிரஸ் சிறப்புக் கூட்டம் நடந்தது - மாநாடல்ல! மகா சபையுமன்று! அந்தக் கூட்டத்தில், சாத்வீகத்தையும் சத்தியத்தையும் அடிப்படையாகக் கொண்டு சட்டசபைகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள் ஆகியவற்றைப் பகிஷ்காரம் செய்வது என்ற பிரச்சனைகளைப் பற்றி முடிவெடுப்பதற்காக இந்தியத் தலைவர்கள் ஒன்று கூடினார்கள். இந்தக் கல்கத்தா விசேஷ காங்கிரசுக்குச் சென்னையிலே இருந்து ஏராளமான பிரதிநிதிகள் சென்றார்கள். தென்னாட்டுத் திலகரான சிதம்பரம் பிள்ளையும், நாமக்கல் நாகராஜ ஐயர், ஜனாப்பீர் பாட்சா சாஹிப், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, வரதராஜ முதலியார், ராஜாஜி, டி.எஸ்.எஸ்.ராஜன், சேலம் விசயராகவாச்சாரியார், ஜார்ஜ் ஜோசப் போன்ற பலர் அந்த சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஸ்பெஷல் ரயிலில் பயணமானார்கள். சென்னையிலிருந்து கல்கத்தா சேருகின்ற வரையில் ரயில் வண்டியிலும், கல்கத்தா சென்ற பின்பு பிரதிநிதிகள் தங்கியிருந்த இடங்களிலும், காங்கிரசில் காந்தியடிகளின் ஒத்துழையாமை தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்ட நிமிஷம் வரையிலும் சிதம்பரம் பிள்ளை ஓயாமல் அந்தத் தீர்மானத்துக்கு விரோதமாக வாக்களிக்க வேண்டும் என்று, ஒவ்வொரு சென்னை மாகாணப் பிரதிநிதியையும் தனித்தனியே சந்தித்து வேண்டிக் கொண்டார். இரயில் வண்டித் தொடரிலுள்ள ஒவ்வொரு பெட்டியாகச் சென்று காந்தியடிகளின் ஒத்துழையாமை தீர்மானத்தை சிதம்பரனார் எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். இவ்வாறு அவர் செய்து வந்தபோது நாமக்கல் கவிஞர் இருந்த இடத்துக்கு வந்தார். ஆனால், அவர்தான் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்று சிதம்பரம் பிள்ளைக்குத் தெரியாது. அதனால், அவரருகே இருந்த நண்பர் ஒருவர் இவர்தான் நாமக்கல் கவிஞர் என்று அறிமுகம் செய்து வைத்தார். அறிமுகம் செய்து வைத்தவர், திலகர் இறந்த போது நாமக்கல்லார் பாடியிருந்த ஒரு பாடல், பத்திரிக்கையில் வெளியாகி இருந்ததை சிதம்பரம் பிள்ளையிடம் கொடுத்தார். அதைப் பெற்ற பிள்ளை அப்பாடலைப் படித்து விட்டு நாமக்கல் கவிஞரைப் பாராட்டிய பின்பு, காந்தியடிகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்குமாறு மீண்டும் அங்குள்ள நாமக்கல் ஊர் பிரதிநிதிகளை கேட்டார். யாரும் அப்போது பிள்ளை முன்பு வாய் திறந்து பதில் பேசவில்லை. ஆனால், வரதராஜ முதலியார் என்ற நாமக்கல் பிரதிநிதி, ஏன் காந்தியடிகளை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்கிறீர்கள்? என்ன துரோகம் செய்தார் மகாத்மா உங்களுக்கு?" என்று கோபமாகவே கேட்டார். கோபப்படாதீர் முதலியாரே ஒரு தீர்மானத்தின் மீது ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் வாக்கு சேகரிக்கும் உரிமை உமக்கு உண்டு என்பதை மறந்து விடாதீர் என்று கூறிவிட்டு அவரும், உடன் வந்த நண்பர்களும் அடுத்த ரயில்வே நிலையத்தில் இறங்கி வேறொரு பெட்டிக்குப் போய் விட்டார்கள். அடுத்த பெட்டியில் ராஜாஜி, டாக்டர் ராஜன், ஜியார்ஜ் ஜோசப் முதலியவர்களுடன் சிதம்பரம் பிள்ளையும் பேசிக் கொண்டிருந்தார். தான் ஒரு தலைவன். பிரபல கிரிமினல் வக்கீல். வெள்ளையனை எதிர்த்துக் கப்பல் ஓட்டியவன், கடும் சிறைத் தண்டனைகளை அனுபவித்துவிட்டு சிறை மீண்ட முதல் பெருந்தியாகி, தேசத்திற்காகப் பல கஷ்ட நஷ்ட தியாகங்களைச் செய்த முதல் தியாகமூர்த்தி. அங்கே பேசிக் கொண்டிருந்த காங்கிரஸ் பிரதிநிதிகளை விட பல சிறப்புகளைப் பெற்றவன் என்ற மனக்கர்வமோ, அரசியல் தியாகப் பகட்டோ, பந்தாவோ, அகந்தையோ, ஆணவமோ எள்ளளவும் இல்லாத சாதாரண எளிய ஒரு குழந்தையைப் போல அனைவரிடமும் குழைந்து பேசிக் கொண்டிருந்ததை அந்த பெட்டியிலே வந்து ஏறிய நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார்! ‘வாரும் பிள்ளைவாள்’ என்று சிதம்பரம் பிள்ளை நெடுநாள் பழகினவர் போல நாமக்கல்லாரை அழைத்துப் பேசியதை கண்ட ராஜாஜி, “ராமலிங்கம் பிள்ளையை உமக்குத் தெரியுமா?” என்று சிதம்பரம் பிள்ளையைக் கேட்டார். “ஓ! நன்றாகத் தெரியும், இதோ பாருங்கள் அவர் எழுதிய கவிதையை” என்று தன்னிடமிருந்த பத்திரிகையைப் பிரித்துக் காட்டினார். அதைக் கண்ட ராஜாஜி! “ஒ இதுவா? உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று தானே” என்றார்: “நானும்தான் திலகர் இறந்தபோது இரங்கற் பாடல்களைப் பாடினேன், அவை பிள்ளை பாடலைப் போல அமையவில்லை. உண்மையான கவித்திறம் எல்லோருக்குமா வரும்?” என்று ராஜாஜியைப் பார்த்து சிதம்பரனார் கூறியதைக் கேட்ட ராமலிங்கம் பிள்ளை மெய்மறந்து போனார் உடல் புல்லரித்தாராம்! ஒரு சிறந்த தேசபக்தர், தியாக மூர்த்தி, திலகர் பிரானுடைய தலையாய சிஷ்யர்களிலே சிறப்புற்ற தென்னாட்டுத் திலகர், பாரத தேவியின் விடுதலைக்காகப் பல கொடுமைகள் நிறைந்த சிறைவாசத்தைச் செய்து அருந்தவமாற்றிய அண்ணல், ஆழ்ந்த தமிழ் ஆராய்ச்சி பெற்ற அறிஞர். நம்மை எவ்வளவு பெருமையாக உயர்வாக ராஜாஜியிடம் பாராட்டியுள்ளாரே என்ற உணர்ச்சி என்னைப் புல்லரிப்பு படச் செய்துவிட்டது என்று நாமக்கல் கவிஞர் தனது நூலில் ஒன்றான ‘தேச பக்தர் மூவர்’ என்ற நூலிலே எழுதியுள்ளார். ராஜாஜி இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த போது இந்த சம்பவத்தைச் சென்னை செயிண்ட் மேரிஸ் மண்டபத்திலே நடந்த வ.உ.சி.விழாவிலே பேசினார். அத்தகைய ஒரு பேரறிவாளன் காந்தி பெருமானை எதிர்த்து வாக்கு கேட்கவில்லை. அவரது ஒத்துழையாமை என்ற திட்டம், சரியான முறையல்ல என்பதை உணர்த்தி, காந்தியடிகளது தீர்மானத்தைத் தோற்கடிக்கவே பகிரங்கமாக ரயில் வண்டி பெட்டி ஒவ்வொன்றிலும் ஏறி இறங்கி வாக்கு சேகரித்தார். கவிஞர் பிள்ளையை இவ்வளவு உயர்வாகப் பாராட்டி விட்டு, என்ன புலவரே உமது ஓட்டு எனக்குக் கிடைக்கும் அல்லவா? என்று நெருக்கினார் சிதம்பரம் - ராமலிங்கம் ஆனால், ராமலிங்கம் பிள்ளை ஏதும் பேசாமல் ஊமை போல இருந்ததைக் கண்ட சிதம்பரம் பிள்ளை, என்னுடைய கருத்தில் உமக்கு உடன்பாடு இல்லையா? என்று மீண்டும் கேட்டார். ரயில் வண்டி ஓடும் ஓசைதான் கேட்டதே தவிர, நாமக்கல் பிள்ளை ஓசை ஏதும் எழுப்பாமலே மெளனமாக இருந்தார். நான் சொல்வதில் உங்களுக்கு விருப்பம் இல்லையானால், கூசாமல் கூறுங்கள். உங்களைக் கசக்க வேண்டும் என்று நான் எண்ணமாட்டேன் என்று சிதம்பனார் மீண்டும் நாமக்கல்லாரைக் கேட்டபோது, ‘நான் காந்தியடிகள் தீர்மானத்தை ஆதரிப்பதாகக் கூறி ஏற்கனவே வாக்களித்து விட்டேன்’ என்றார். ‘சபாஷ் புலவரே! உங்கள் உண்மைத் தன்மையை நான் மிகவும் போற்றுகின்றேன். மனமார வாழ்த்துகிறேன். நீங்கள் யாருக்கு வாக்களித்து விட்டீர்களோ, அவர்களுக்குத் துரோகம் செய்யக் கூடாது என்பது மிகவும் உயர்வான நோக்கம். அது தான் சரி. நான் உங்களைத் தொந்தரவு செய்யமாட்டேன்’ என்று சிதம்பரம் பிள்ளை அடுத்த பெட்டிக்குச் சென்றுவிட்டார். இந்த நிகழ்ச்சி கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் பிள்ளையின் நேர்மையான குணச்சிறப்பை படிப்பவர் நெஞ்சில் பதியவைக்கும் பண்பாக உள்ளது அல்லவா? இத்தகைய மனித நேயம் கொண்டவரின் போர் முறைப் பண்புக்கு ஒரு நிகழ்ச்சி வாய்த்ததாக, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை தனது தேசபக்தர் மூவர் என்ற நூலிலே குறிப்பிட்டுள்ளார். அதன் சுருக்க விவரம் வருமாறு : “நாங்கள் கிலாபத் ஸ்பெஷல் ரயிலில் கல்கத்தா பயணம் செய்து கொண்டிருந்த போது, கல்கத்தாவுக்கு முன்னால் கரக்பூர் என்ற ஒரு பெரிய ரயில் நிலையம். அங்கே நாங்கள் சென்ற வண்டி நின்றது. சுமார் மூன்று மணி நேரமாகியும் வண்டி புறப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்று பயணிகள் கேட்டார்கள். கல்கத்தா மெயில் வண்டி பின்னால் வந்து கொண்டிருப்பதாகவும், அந்த மெயில் இந்த ரயில் நிலையத்துக்கு வந்து எங்கள் ஸ்பெஷலுக்கு முன்பு புறப்படும் என்றும், அது புறப்பட்டு போன பின்பு அரை மணி நேரத்துக்குப் பிறகு தான் ஸ்பெஷல் வண்டி புறப்படும் என்றும் ஸ்டேஷன் மாஸ்டர் கூறினார். இதைக் கேட்டதும் ஸ்பெஷல் வண்டியிலே உள்ள தேசபக்தர்களுக்கு கோபம் வந்து விட்டது. ‘என்ன அந்த மெயில் வண்டிக்கு ஆறு மணி நேரத்துக்கு முன்னால் புறப்பட்ட எங்களை அனாவசியமாக இங்கே மூன்று மணிக்கு மேல் காக்கப்போட்டு, எங்கள் வண்டிக்கு முன்னால் மெயிலைப் போக விடுவது என்றால், இதை விட எங்களுக்கு அவமதிப்பு இன்னும் என்ன இருக்கிறது?’ என்று. அந்த ஸ்டேஷன் மாஸ்டரோடு ஒரே போராட்டம் ஏற்பட்டு விட்டது. இந்தக் கூச்சல், குழப்பம் கப்பலோட்டிய தமிழன் காதில் விழுந்தது. வண்டியை விட்டு அவர் இறங்கி வந்தார். வெகு வேகமாக ஓடி ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்று விசாரித்தார். விவரம் விளங்கியவுடன் போராட்டப் பிரிவுக்கு அவரே தளபதியானார். இரயிலில் இருந்தவர்களை எல்லாம் கையமர்த்தி விட்டு சிதம்பரம் பிள்ளையே அந்த வழக்கை வாதித்து, “எங்கள் வண்டிக்கு முன்னால் மெயில் வண்டியைப் போக விட மாட்டோம். எங்கள் வண்டிக்கு அரைமணி நேரத்துக்குப் பின்னால்தான் மெயிலை விட வேண்டும். எங்கே, அந்த மெயில் வண்டி எங்களுக்கு முன்னால் எப்படிப் போய்விடும் என்பதைப் பார்த்து விடுகிறோம்” என்று சிதம்பரனார் ஸ்டேஷன் மாஸ்டரிடம் சவால் விட்டார். ‘எனக்கு அதெல்லாம் தெரியாது. நான் என்ன செய்வேன். எனக்குக் கிடைத்துள்ள உத்தரவுப்படி தான் நான் என். கடமைகளைச் செய்ய வேண்டும். மெயில் வண்டி முன்னால் போக வேண்டும் என்று உத்தரவு செய்தது நானல்ல’ என்று ஸ்டேஷன் மாஸ்டர் கூறினார். “மெயில் வண்டி முன்னாலே போகட்டும், பின்னாலே போகட்டும். அதைப் பற்றி அக்கரையில்லை. எங்களை எதற்காக இங்கே அனாவசியமாக மூன்று மணிநேரம் காக்கப் போட்டீர்கள்? இந்த மூன்று மணி நேரமும் வண்டி ஓடியிருந்தால் இன்னேரம் நாங்கள் கல்கத்தா சென்று சேர்ந்திருப்போம் அல்லவா? என்று சிதம்பரனார் ஸ்டேஷன் மாஸ்டரைத் திரும்பக் கேட்டார். ‘உண்மைதான்; இது சரியான கேள்விதான். ஆனால், உங்கள் வண்டியை இங்கே மூன்று மணி நேரம் காக்கப்போட வேண்டுமென்பது ஏற்பாடல்ல. அது எதிர்பாராமல் ஏற்பட்டுவிட்டது. இந்த ஸ்டேஷனில்தான் மெயில்வண்டி உங்கள் வண்டியைத் தாண்டி முன்னால்போக வேண்டும் என்பது ’டிராபிக் மானேஜருடைய உத்தரவு. மெயில் வண்டி இன்றைக்கு சுமார் மூன்று மணி நேரம் லேட்’. அதனால், இந்த சங்கடம் ஏற்பட்டுவிட்டது. என்ன செய்யலாம்? என்றார். ’என்ன செய்யலாம்? என்றா கேட்கிறீர்கள். எங்கள் வண்டியை உடனே விடலாம் என்கிறேன்! மூன்று மணி நேரம் லேட் ஆன மெயில்வண்டி இன்னும் கொஞ்சம் லேட் ஆகிவிட்டால் என்ன முழுகிப்போகும்? எங்கள் வண்டியை விடச்சொல்லுங்கள் என்று கர்ஜித்தார் சிதம்பரம் பிள்ளை. அப்படிச்செய்ய எனக்கு அதிகாரம் இல்லை என்றார் ரயில் நிலைய அதிகாரி, அப்படிச் செய்ய உங்களுக்கு அதிகாரம் இல்லையென்றால், எப்படிச் செய்வது சரியென்று எங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறோம் என்று சொல்லிக் கொண்டே சிதம்பரனார் வண்டியை நோக்கி வந்தார். இதற்குள் வண்டியில் இருந்த எல்லா இளைஞர்களும் இறங்கி வந்து சிதம்பரம் பிள்ளையைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்களைப் பார்த்து சிதம்பரம் பிள்ளை ஒரு சொற்பொழிவு செய்து அந்த மெயில் வண்டி நம்முடைய வண்டிக்கு முன்னால்போகக் கூடாதென்று நாமெல்லாரும் மெயிலுக்கு முன்னால் தண்டவாளத்தில் உட்கார்ந்து கொண்டு சத்யாக்கிரகம் செய்வோம். மெயில் எப்படி முன்னால் போய்விடும் பார்ப்போம் என்றார். உடனே சிதம்பரம் பிள்ளையினுடைய கட்சிக்கு ஏராளமான ஆட்கள் சேர்ந்து விட்டார்கள். எனக்குத் தெரிந்த யாரார் அதில் சேர்ந்தார்கள், யாரார் சேரவில்லை என்பது இப்போது நினைவில் இல்லை. ஆனால், ராஜாஜியும் வேறு சிலரும் சேர்ந்து மெயிலை அப்படிச் செய்வது சரியல்ல என்றார்கள். ஆனால், சிதம்பரம் பிள்ளையுடன் காந்தியடிகளுக்காக வாதாடி ஆதரவு தந்து கொண்டிருந்த வரதராஜ முதலியாரும் அவரது நண்பர்களும் சிதம்பரனாருடன் தண்டவாளத்தில் படுத்துக்கொள்ளத் தயாராகிவிட்டார்கள். காந்தியடிகளுக்கு ஆதரவாக ‘ஓட்டு’ போடுவதற்கென்றே வந்த வேறு சிலரும் சிதம்பரம் தலைமையில் சேர்ந்து கொண்டார்கள். எங்கள் ரயில் வண்டி மெயில் வண்டிக்கு முன்னால் போக வேண்டும் என்பதற்காக, அப்போது சிதம்பரனார் அணி எழுப்பிய கோஷங்களையும், கோபதாபப் பேச்சுக்களையும் இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது. அவ்வளவு வீராவேசமாகச் செயல்பட்டார் அன்று சிதம்பரம்பிள்ளை. வெள்ளைக்காரனுடைய அதிகாரக் கோட்டையைத் தகர்த்தெறியும் படைக்குரிய தளபதி போல அன்று கப்பலோட்டிய தமிழன் வெகு களிப்புடன் போராடினார். சிதம்பரம் படை தயார்! மெயில் வண்டிக்கான கைகாட்டி இறங்கிவிட்டது. வேகத்தில் மெயில் வந்து கொண்டிருக்கிறது. சிதம்பரம் பிள்ளையும் அவருடன் சேர்ந்த வீரர்களும் இஞ்சினுக்கு முன் தண்டவாளத்தில் குதித்து விட துடித்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் வண்டியைச் சேர்ந்த சிலர், சிதம்பரம் பிள்ளையிடம் சென்று இந்த முரட்டு முயற்சியை விட்டு விடுமாறு கெஞ்சிக் கேட்டார்கள். பலிக்கவில்லை. சேலம் விசயராகவாச்சாரி திலகரைப் பின்பற்றும் ஒரு தீவிரவாத தேசபக்தர். சிதம்பரமும் திலகர் பக்தர், அதனால் விஜயராகவாச்சாரி சொன்னால் அவர் கேட்பார், போராட்டத்தைக் கைவிடுவார் என்று ராஜாஜி நாகராஜ ஐயரிடம் கூறியதைக் கேட்ட சிலர், வ.உ.சி.யை விஜயராகவாச்சாரியார் அழைப்பதாகக் கூறி அவரை அழைத்து வந்தோம். உடனே ராஜாஜி வலிய விசயராகவாச்சாரியாரிடம் மிகவும் விநயமாகப் பேசியதன் விளைவாக, சிதம்பரம் பிள்ளையிடம் விஜயராகவாச்சாரியார் சாதுர்யமாகப் பேசினார். பிள்ளையும் மதித்தார். அதனால், மெயில் முன்னால் போயிற்று. நாங்கள் பின்னால் போனோம். இந்த சம்பவத்தில் சிதம்பரம் பிள்ளையினுடைய ஆண்மையையும், வெகுவிரைவில் கட்சி சேர்த்துவிடக் கூடிய ஆற்றலையும், எதிர்ப்புகளுக்கு அஞ்சாத அவரது துணிச்சலையும், தலைவனுக்கு உடனே தலை வணங்கும் தளபதியின் தன்மையையும் நான் கண்ணாரக் கண்டேன். எல்லாரும் கல்கத்தா போய்ச் சேர்ந்த பின்பு, நாங்கள் தங்கியிருந்த இடத்தில் சிதம்பரம் பிள்ளை ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் காந்தியடிகளது தீர்மானத்திற்கு விரோதமாக ஓட்டு சேகரித்தார். அவர் காந்தியடிகள் முன்பு விசேஷ சபையில் தீர்மானத்தை எதிர்த்துப் பேசும் போது, “காந்தியடிகளின் ஒத்துழையாமைத் தீர்மானத்தை நான் மட்டும் எதிர்க்கவில்லை. விசேஷ மகா சபையிலே கூடியுள்ள திலகரைப் பின்பற்றும் அவரது வாரிசுகள் என்போர் எல்லாருமே தீவிரமாக எதிர்க்கின்றார்கள். அந்த எதிர்ப்புக்கு காரணம் பட்டம் பதவிகளை விட்டு விட வேண்டுமே என்பதோ, சட்டத்தை எதிர்த்துக் கஷ்டப்பட வேண்டுமே என்பதோ அல்ல. அரசியல் சதுரங்கத்தில் சண்டையில் சத்தியத்தையும், அகிம்சையையும் கட்டாயமாக்கக் கூடாது” என்பதே. சத்தியத்தையும் சாத்வீகத்தையும் அப்படிக் கட்டாயப்படுத்தி மேற்கொள்ளச் செய்தால், தேசத்தில் ஆண்மையும் தைரியமும் அடியோடு அழிந்தே போகும் என்றே அப்போது தலைவர்கள் நினைத்தார்கள். அதல்லாமல் போராட்டங்களில், அது அரசியல் போராட்டமானாலும் சரி அல்லது அன்னியப் போராட்டமானாலும் சரி - ‘சாம, பேத, தான, தண்டம்’ என்று சொல்லப்படுகிற நான்கு வித உபாயங்களையும் சமயத்துக் கேற்றபடி பயன்படுத்த வேண்டுமே அல்லாமல், வெறும் சத்தியம் சாந்தம் என்ற வைதீக மனப்பான்மை உதவாது என்பது திலகரைப் பின்பற்றுவோர்களுடைய எண்ணமாகும். சாம பேத, தான, தண்டம் என்ற சதுர்வித உபாயங்களைப் பற்றிக் கேட்டுக் கேட்டுச் சொல்லிச் சொல்லிப் பரம்பரையாகப் பழகிவிட்ட பலருக்கும் இந்த வாதம் மிகவும் சரியானதாகத் தோன்றியதால் அந்த எதிர்ப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது. ’எங்கள் மன்னன் திலகர் இறந்து விட்டார் என்பதால், அவரது கொள்கைக்கு எதிராக இந்த ஒத்துழையாமை தீர்மானத் திட்டத்தைக் காந்தியடிகள் கொண்டு வந்துள்ளார். எங்கள் அரசியல் குரு திலகர் இருந்திருந்தால் இந்தப் பேடித்தனமான தீர்மானத்தைக் கொண்டு வர நமது காந்தி துணிவாரா? திலகர் பெருமான் தேசத் தொண்டாற்றியதில் உண்மையிலே நம்பிக்கை வைத்திருப்பவர்கள், தீவிரவாதத் தேசத் தொண்டுதான் நமது பாரத பூமிக்குரிய சுதந்திரத்தை வெற்றிக்கரமாகத் தேடித் தரும் என்ற சத்திய உணர்வுடையோர், ஒத்துழையாமைத் தீர்மானத்தை நிறைவேற்ற ஓட்டளிக்கக் கூடாது என்பதே எனது வேண்டுகோள் என்று கர்ஜனையிட்ட சிதம்பரம் பிள்ளை அமர்ந்துவிட்டார். மதிக்கத் தகுந்த காங்கிரஸ் தலைவர்களுள் மிகப்பெரும் பகுதியினரும் தீர்மானத்தை எதிர்த்தார்கள் என்றாலும், ஏராளமான ஓட்டுகளால் காந்தியடிகளுடைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனித சுபாவத்துக்கு மாறானது என்றும், நடைமுறைக்கு ஒத்துவராதது என்றும், இன்று நாம் அனுபவத்தில் காண்கின்ற அந்த அஹிம்சை தீர்மானம், சிதம்பரம் பிள்ளை போன்ற அறவாணர்களால் எதிர்க்கப்பட்ட பிறகும் கூட, காந்தியடிகளது ஒத்துழையாமை தீர்மானம் அதிகப்படியான வாக்குகளால் அந்த சிறப்புக் கூட்ட ஆலோசனை அரங்கில் நிறைவேறிய ரகசியம் என்ன என்பதை ‘தேசபக்தர்கள் மூவர்’ என்ற கட்டுரையில் இதோ நாமக்கல் கவிஞர் விளக்குகிறார். படியுங்கள். “மனித சுபாவத்தில் மறைந்து கிடக்கிற ஆன்ம உணர்ச்சி எப்போதும் அகிம்சையைத்தான் நாடுகின்றது. ஆனால், மனிதனுடைய நித்ய அனுஷ்டானத்தில் ஒவ்வொரு நிமிஷமும் முன்னணியில் நிற்கிற சரீர உணர்ச்சிகள் அவ்வளவும் ஹிம்சையையே பிரதிபலிக்கின்றன. பெரும்பாலும், மக்களுக்குள் அவை மறைந்தும் இருந்து கொண்டிருக்கிறது. ஆன்ம உணர்ச்சி ஒரு சிறிதும் தலைதூக்க முடியாதபடிதான் மனித சமூகத்தின் சமுதாய வாழ்க்கை நடந்தும், நடத்தப்பட்டும் வருகிறது. எனினும், இந்த ஆன்ம உணர்ச்சி என்பது ஒவ்வொரு மனிதனிடத்திலும் மறைவாகவேனும் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பது உண்மையிலும் உண்மை. அற்புதப் பிறவியான மகாத்மா காந்தியவர்களின் அருந்தவங்களால் அவருக்குண்டான அதிசயிக்கத்தக்க ஆன்ம சக்தியின் வேகத்தால் எல்லா மனிதரிடத்திலும் இருந்து கொண்டே இருக்கிற ஆன்ம உணர்ச்சியானது அந்த கல்கத்தா காங்கிரசில் மேலோங்கி நிமிர்ந்து நின்றது. அதனால், தங்களுடைய தினசரி வாழ்க்கையில் அஹிம்சைக் கொள்கைகளைக் கடைப்பிடித்தறியாத, கடைப்பிடிக்கவே முடியாத, முழுதும் முரட்டுப் பேர்வழிகளும் கூட, காந்தியடிகளின் அகிம்சை தீர்மானத்தை ஆவேசத்தோடு ஆதரித்தார்கள். அடிக்கடி அப்படி மேலோங்கி வருகின்ற ஆன்ம உணர்ச்சியின் உச்சாடன வேகம் குறைந்து போனதால்தான், இன்றைக்கு அந்த அகிம்சை மார்க்கத்துக்கு அடிப்படையாக இருந்த காங்கிரஸ்காரர்களிடத்திலும் கலவரங்களைக் காண்கிறோம். கலகங்களும், கலவரங்களும் எவ்வளவு ஏற்பட்டாலும், அந்த ஆன்ம உணர்ச்சி அஹிம்சையைத்தான் பிரதிபலிக்கும். அந்த ஆன்ம உணர்ச்சி சமுதாய வாழ்க்கையில் அற்றுப் போகாமல் இருக்கச் செய்வதுதான் மகாத்மாக்களின் வேலை. அந்த வேலையினால்தான் மனித சமூகம் மிருக வாழ்க்கைக்கு மாறுபட்டதாக இன்னும் இருந்து வருகிறது. கல்கத்தாவில் காந்தியடிகளின் ஒத்துழையாமைத் திட்டத்திற்கு வ.உ.சி. மறுப்புத் தெரிவித்ததோடு நில்லாமல், திலகர் மேலுள்ள தீவிரவாதப் பற்றால் அதை எதிர்க்கவும் செய்தார். ஆனாலும், திட்டம் நிறைவேறியதைக் கண்ட சிதம்பரம் பிள்ளையின் அரசியல் வாழ்க்கை அடங்கிவிட்டது. காந்தியடிகளை இனிமேல் எதிர்க்க முடியாது என்றெண்ணி அவர் அரசியலை விட்டே ஒதுங்கிவிட்டார். அரசியல் கவரிமா வ.உ.சி. மக்கள் கண்ணில் மறைந்தார்! காந்தியடிகளின் ஒத்துழையாமைக் கொள்கையைப் பகிரங்கமாக, வட இந்திய எல்லாப் பிரபலத் தலைவர்களது முகத்துக்கு நேராக, சவால் விட்டு மறுத்தும், எதிர்த்தும் தோற்கடிக்க அரும்பாடுபட்டார் சிதம்பரம்பிள்ளை. ஆனால், காந்தியடிகள் இதை நன்றாகப் புரிந்து கொண்ட பிறகும் கூட கப்பலோட்டிய வீரசிங்கத்தை அவர் பதிலுக்குப் பதிலாக எதிர்த்தவரும் அல்லர், வெறுத்தவருமல்லர். சிதம்பரம் பிள்ளையின் தியாகங்களை காந்தியடிகள் மதித்தவர் போற்றிப் புகழ்ந்து மனமார அவரது அஞ்சாமைப் பண்பை அவர் வாழ்த்தியவர். தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் இந்தியர் உரிமைகளுக்குப் போராடியபோது திலகர் பெருமானின் வீரத் திலகமாகத் திகழ்ந்த சிதம்பரனார், கடிதங்கள் எழுதி காந்தியடிகளைப் பாராட்டிப் பரவசப்பட்டவர்! ஆங்கிலேயர்களின் இந்தியப் பொருளாதாரச் சுரண்டலை அகிம்சை வழியாகப் பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நாவிகேஷனின் ஆணிவேரின் ஆழத்தை அசைத்துப் பறித்துக் கொண்டிருந்த எதிர்ப்பாற்றலின் எதிரொலியாக கப்பலையே ஓட்டிக் காட்டிய வீரப் பெருமகன் சிதம்பரத்தின் நெஞ்சுரத் தியாகத்தைக் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலே இருந்த போதே பாராட்டிப் போற்றினார்! அதனால், காந்தியடிகளுக்கும் சிதம்பரனாருக்கும் தென்னாப்பிரிக்கக் கடிதப் பரிமாற்றங்களே அவர்களது தொடர்புகளுக்கு சான்றுகளாக இருந்தன! அத்தகைய ஓர் அரசியல் சால்பாளர் சென்னை திரும்பிய பிறகும் கூட, ஒத்துழையாமைத் திட்டத்தால் விடுதலைப் போர் வெற்றி பெறாது என்றே அறிக்கை வெளியிட்டார். எனவே, அடிகளாருக்கும் சிதம்பரனாருக்கும் தனிமனித விரோதம் ஏதுமில்லை. கொள்கைக் கோமான்களின் களபலிப் போராட்டம் தான் நடைபெற்றது என்பதை பண்புடையார் அறிவர்! அப்போது பிராமணரல்லாதார்கள் முன்னேற்றத்துக்காக சென்னையில் நீதிக் கட்சி ஆரம்பமானது. அதனை உருவாக்கியோர்கள் சீமான்கள், குறுநிலக் கோமான்கள், மிட்டா மிராசுகள், பண்ணையார்கள் என்பதால், கப்பலோட்டிய தமிழனின் அஞ்சாநெஞ்ச ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ள வ.உ.சி.க்கு அழைப்பு விடுத்தார்கள். அவர்கள் பல வழிகளில் அவரை நீதிக் கட்சியிலே சேர்க்க குறுக்கு வழியினை கையாண்டு பார்த்தும் கூட சிதம்பரம் என்ற அந்தப் பெருமகன் அக்கட்சியிலே சேர மறுத்துவிட்டார். அதே நேரத்தில், ஒரே சமயத்தில் ஒத்துழைத்தலும், ஒத்துழையாமையும் அரசியலில் நிகழ வேண்டும் என்று விரும்பினார். ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரிப்பவர்களின் செயலை வயோதிகப் பருவத்தின் வாலாட்டம் என்றார். அழுகின்ற குழந்தைகள் தின்பண்டத்தின் சிறுபகுதியை ஏற்காமல், எல்லாவற்றையும் முழுவதுமாகக் கொடு என்று தாய் தந்தையிடம் கோபித்துக் கொள்ளும். இதே பண்புடையதே ஒத்துழையாமை என்றார். பிறகு அரசியலில் மானம் தேவை ஒரு கொள்கையை நிலைநாட்ட தொண்டர்கள் மானிகளாக இருக்க வேண்டும். அப்போதுதான் அரசியலும் மானஸ்தர்களின் அரண்மனை வாசலாக இருக்கும் என்று கூறிய சிதம்பரனார், காந்தியின் அகிம்சைக் கொள்கையின் எதிர்ப்பு என்ற மானஸ்தனாகவே காங்கிரஸ் மகா சபையை விட்டு மன விரக்தியோடு விலகி வெளியேறிவிட்டார். ஆனாலும், காங்கிரஸ் தேசியத்தின் சுதந்திரத்திற்காகவே தனியே, வெளியே நின்று பாடுபட்டார் 1927-ஆம் ஆண்டு சேலத்தில் காங்கிரஸ் மகா சபை மூன்றாவது அரசியல் மாநாடு நடந்தபோது சிதம்பரம் பிள்ளை மீண்டும் தான் வளர்த்த காங்கிரசிலேயே சேர்ந்து தொண்டாற்றினார். மாநாட்டின் தலைமையுரையில் பேசும் போதுகூட, அதாவது ஏழாண்டு இடைவெளி விட்டுக் காங்கிரசிலே இணைந்தும் கூட, “ஒத்துழையாமை இயக்கம் எனது கொள்கைக்கு மாறுபட்டது. அந்த இயக்கம் இப்போது முடிந்துவிட்டது. அதனால் ஏழாண்டுகள் அரசியலிலே விலகியிருந்த என்னை, நண்பர்கள் மீண்டும் அழைத்துவந்து தலைமை ஏற்கப் பணித்தார்கள். தேசாபிமான ஒளி நாளுக்கு நாள் வளருமே தவிரக் குறையாது” என்ற வீரத் தமிழ்ப் பெருமகன் தனது கொள்கைப் பற்றின் வைர உறுதியை மக்களுக்கு விளக்கிக் காட்டினார். ஆனால், அந்த மாநாடு முடிந்த பின்பு மீண்டும் காங்கிரஸ் மகா சபையின் கோஷ்டிக் கொந்தளிப்பைக் கண்டு தானே மனமுடைந்து மீண்டும் விலகி விட்டார். அதாவது காங்கிரசுடன் எக்காரணத்தைக் கொண்டும் தொடர்புறாமலே இருந்துவிட்டார். சிதம்பரம் அரசியலிலே மட்டும் மாவீரராக இருக்கவில்லை. தமிழ்த் தொண்டிலும் அவர் மாவீரராகவே பணியாற்றினார். அரசியலில் ஈடுபடாமல், தானுண்டு - தமிழ் உண்டு என்ற நிலையில், அற்புதமாக ஓர் ஆராய்ச்சிப் பெரும்புலவராகவே விளங்கினார். மேடையேறி சிதம்பரம் பேசுகிறார் என்றால் சிங்கம் ஒன்று வெண்கலக் குரலெடுத்து கர்ஜனை செய்தது போல விளங்கி, மக்களை மெய்சிலிர்க்க வைப்பவரானார். சிதம்பரனார் சிறந்த கவிஞர் பெருமானாகவும் திகழ்ந்தார். அவர் எழுதிய கடிதங்கள், சிறை வாழ்க்கைக் குறிப்புக் கவிதைகள் யாவுமே சொற்சுவை, பொருட்சுவை உடையவை. இங்கிலீஷூம், தமிழ் மொழியும் தெரிந்த இரட்டை மொழிப் புலவராக இருந்தார். அவர் எழுத்துக்களது அனுபவம் ஒவ்வொன்றும் படிப்போரின் மனதை மயக்குபவை மட்டுமன்று, உருக்குபவையும் கூட. 1935-ஆம் ஆண்டில், பீகார் காந்தி என்று அழைக்கப்பட்ட பாபு ராஜேந்திரப் பிரசாத் தூத்துக்குடிக்கு வந்தபோது, நேராக அவர் கப்பலோட்டிய தமிழன் சிதம்பரனார் வீட்டுக்குச் சென்றார். அன்று மாலை தூத்துக்குடி நகரிலே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், “கப்பலோட்டிய தமிழன் வ.உசிதம்பரம் பிள்ளை வாழ்கின்ற தூத்துக்குடிக்கு வரும் பேறு எனக்கு கிடைத்தது. அந்த வீரப் பெருமகன் சிறை சென்றது கண்டு மனம் உருகியவன் நான். எனது நாட்டாபிமானம் மேலும் அதிகமாக, ஆழமாக வளர்வதற்கு தேசபக்தர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் தியாகமும் ஒரு காரணமாகும்” என்று பெருமிதத்துடன் குறிப்பிடும் போது கையொலி கடலலை போல ஒலித்தது. செக்கிழுத்த செம்மல் சிதம்பரனாரை தமிழ்நாட்டாரை விட அதிகம் புரிந்தவர்கள் வடநாட்டவர்கள் தான்! இந்திய சுதந்திரப் போராட்ட உணர்ச்சிகளாலே அவர் பெற்ற பரிசுகள் இரண்டு! வறுமை ஒன்று மற்றொன்று நோய் வகைகள். இந்த இரண்டாலும் அதிகமாகப் பாதிக்கப்பட்ட அந்தத் தியாக மன்னன் 1936-ஆம் ஆண்டின் போது நோய் முற்றிப் படுத்த படுக்கையாகிவிட்டார் ஏறக்குறைய நாற்பது நாட்களுக்கு மேலே படுக்கையே கதி என்று கிடந்தார் எந்தத் தமிழ் மகனும் அவரை வந்து கண்டு ஆறுதல் கூறியவனல்ல. எல்லாம், அவனவன் பெண்டு, பிள்ளை, வீடு, உணவு என்றே வாழ்ந்தான். மாசிலாமணிப் பிள்ளை என்ற தூத்துக்குடிக்காரர் சிதம்பரம் பிள்ளையைக் கண்ட போது, என்று வரும் நமக்கு சுதந்திரம், என்று தணியும் நமது விடுதலை தாகம் என்று சொல்லிக் கொண்டே அழுதார். உயிர் விடுபவர்கள் சைவ சமயிகளாக இருந்தால் சுற்றத்தார் தேவாரம், திருவாசகம் படிப்பார்கள்! இறப்பவர்கள் வைணவிகளாக இருந்தால் உறவு முறையினர் நாலாயிர திவ்வியப் பிரபந்த வகை நூல்களைப் படித்து ஆன்ம பேறு பெற வைப்பர். சிதம்பரம் பிள்ளை திருக்குறளையே, தமிழ் வேதமாகக் கொண்டவர். சுதந்திர உணர்வு கொண்டவர், நாடு விடுதலை பெற்றிட அயராது பாடுபட்டவராதலால், கவிமன்னன் பாரதியார் பாடல்களைக் கேட்க விரும்பினார். “என்று தணியுமெங்கள் சுதந்திர தாகம்” என்ற கவிதையை வ.உ.சி. எப்போதும் விரும்பிக் கேட்பார். “உலகப்போர் வர இருக்கிறது. அப்போது தேர்தலில் வெற்றி பெறும் ஆங்கிலக் கட்சியினர் நிச்சயமாக இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுப்பார்கள் என்று அவர் மரணப்படுக்கையின் போது கூறினார். சிதம்பரனார் கூறியபடியே நடந்தது. சொல்லொணா வேதனைகளையும், துன்பங்களையும அனுபவித்த சிதம்பரனாருக்கு உடல் பிணிகளின் உள்தாக்குதல்கள் அதிகம் காணப்பட்டதால், மருத்துவர்கள் அவர் நோயை இன்னது என்று அறிய முடியாமல் அவரைக் கைவிட்டு விட்டார்கள். தன்நிலை இன்னது எனது அறியா நிலையில் வீரப் பெருமகன் விழிகளிலே இருந்து நீர்த்துளிகள் சிதறி வீழ்ந்த வண்ணம் இருந்தன. ‘எந்த சுதந்திரத்தைக் காண வேண்டும் என்று எனது ஆயுளைச் செலவழித்தேனோ, அந்த சுதந்திரத்தைக் காண முடியாமல் கண்மூடுகிறேனே’ என்று சிதம்பரனார் சாவதற்கு முன்பு ‘நா’ தடுமாறிக் குழறினார். கவியரசர் பாடிய தேசியப் பாடல்களைப் பாடுமாறு அவர் கேட்ட போது அருகே உள்ளவர்கள் பாடினார்கள். அந்தப் பாடல்களைப் பாடிக் கொண்டே இருக்கும்போது 1936-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாளன்று நள்ளிரவில் கப்பலோட்டிய வீரத் திருமகன் சிதம்பரம் பிள்ளை மறைந்தார். பாரதமாதாவின் சுதந்தரத்துக்காக சிதம்பரனாருடன் இணைந்து அரும்பாடுபட்ட அவரது தேசிய நண்பர்களை கைகூப்பி வணங்கி விடைபெற்றுக் காலத்தோடு மறைந்தார். கப்பலோட்டிய தமிழ் மகன் சிதம்பரனார் இறந்துவிட்ட செய்தி திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயில்பட்டி, ஒட்டப்பிடாரம் போன்ற இடங்களிலும், ஏன் தமிழ்நாடு முழுவதுமே பரவியது. மக்கள் கூட்டம் கூட்டமாய் திரண்டு வந்து தங்களுடைய கண்ணீரஞ்சலியைச் செலுத்தினார்கள். தமிழ்நாடே தனது தனிப்பெருந்தலைவருக்கு மரியாதை காட்டி இறுதி வணக்கத்துடன் அஞ்சலி செய்தது. சிதம்பரம் என்ற கப்பலை இராஜாஜி மிதக்கவிட்டார் கப்பலோட்டிய தமிழன் வ.உசிதம்பரம் பிள்ளை தனது கடைசிக் காலத்தில் அரசியலிலே இருந்து விலகி விட்டார். அதனால், தமிழ் மக்கள் அவரை மறந்து போனார்கள். அவர் இறந்த பின்பு மூன்றாண்டுகள் அவர் நினைவு நாளை விழாவாகக் கொண்டாட தமிழ்நாட்டில் எவரும் முன்வரவில்லை. 1939-ஆம் ஆண்டில் சென்னை இராயப்பேட்டைக் காங்கிரஸ் மண்டபத்தில், நன்றி மறவாத சில தமிழர்கள் சிதம்பரம் பிள்ளையின் உருவச் சிலையை அமைத்து விழா எடுத்தார்கள். அந்த விழாவுக்கு நாவலர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். திருச்சி டி.எஸ்.எஸ்.ராஜன் அவர் சிலையைத் திறந்து வைத்துப் பேசும் போது, தூய தமிழர் சிதம்பரனார் என்னுடைய முதல் அரசியல் குரு என்றார். சிதம்பரனார் சிலை திறப்பு விழாவில் அவரது நெருங்கிய நண்பரும், தூத்துக்குடி சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் சட்ட ஆலோசகருமான சேலம் சி.விஜயராகவாச்சாரியார் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில், ’சிதம்பரம் பிள்ளை மாசுமறுவற்ற ஒரு தேசபக்தர். கள்ளம் கபடமற்ற நெஞ்சினர். தமிழ் நாட்டார் சிலை எடுத்துப் போற்றுவதற்குத் தகுதியுடையவராவார் என்று குறிப்பிட்டிருந்தார். சிதம்பரனாரது இந்த சிலை எடுப்பு விழாவிற்கு அவரது அரசியல் நண்பர்கள் அனைவரும் வந்து சிறப்பித்து அவரைப் பாராட்டிப் பேசினார்கள். இந்தியர் சுதந்திரம் பெற்ற பின்பு ‘ஜலப்பிரபா’ என்ற ஒரு கப்பலை மிதக்கவிட்டார்கள். அந்த விழாவில் பேசிய சர்தார் வல்லபாய் பட்டேல் சிதம்பரனாரின் தியாகங்களையும், ஆங்கிலேயர் ஆட்சியை அவர் எதிர்த்துப் போராடிய விந்தைமிகு வீர தீரச் செயல்களையும் போற்றிப் புகழ் உரையாற்றினார். தென்பாண்டி வணிகர்கள் தூத்துக்குடி நகருக்கும் சிங்கள நாட்டிற்கும் இடையே போக்குவரத்திற்காக ஒரு கப்பலை வாங்கினார்கள். அந்தக் கப்பலுக்கு வி.ஓ.சிதம்பரம் என்று பெயரிட்டார்கள். தென்பாண்டி வியாபாரிகள் கப்பல் ஓட்டிய சிதம்பரம் பிள்ளையை, அவரது அரிய உழைப்பை, வீரத்தை மறக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த மாவட்டத்திலே இருந்து திரண்டு அப்பகுதி வணிகர்கள் எடுத்த கப்பலோட்டும் விழாவிலே கூடினார்கள். அப்போது இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் என்ற பதவியை வகித்திருந்த, சிதம்பரம் பிள்ளையின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான ராஜாஜி அவர்கள் அந்த விழாவிலே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடையே, உணர்ச்சி பொங்க “வீரர் வ.உசிதம்பரம் வாழ்க” என்று கோஷமிட்ட போது, திரண்டிருந்த பொது ஜன வெள்ளமும் வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க என்று பல தடவைகள் கோஷம் செய்தார்கள். அந்த வீரப் பெரும் முழக்கங்களின் ஆரவார ஓசைகளுக்கு இடையே கவர்னர் ஜெனரல் ‘சிதம்பரம்’ என்ற அந்தக் கப்பலை ஓட்டினார். அப்போது நடைபெற்ற அக்கப்பலோட்டும் விழாவிலே அவர் வாயாரப் புகழ் மாலைகளைச் சிதம்பரத்துக்குச் சூட்டினார். சிதம்பரம் பிள்ளை தனது தாய்நாடான இந்தியாவுக்காக நடத்திய சுதந்திரப் போர் வெற்றி பெற்றதை மக்கள் கண்ணாரக் கண்டு களித்து மீண்டும் மீண்டும் சிதம்பரம் பிள்ளை தொண்டுகள் வாழ்க என்று போற்றி மகிழ்ந்து கலைந்தார்கள். ஆனால், அந்தப் பேரின்ப விழாவைக் கண்டு மகிழ வீரப் பெருமகன் வ.உ.சிதம்பரம் பிள்ளையும், கவியரசர் பாரதி பெருமகனும் இல்லையே? அவர்களது உடல்கள் மறைந்தாலும் உணர்வலைகள் அந்த விழாவிலே மிதந்து கடலலைகள் மூலமாக எதிரொலித்துக் கொண்டே இருந்தன. பெரும்புலவர் சிதம்பரனார் தமிழ்த் தொண்டு வாழ்க! இந்திய சுதந்திரப் போரிலே வெள்ளையராட்சியை எதிர்த்து தமிழர்களைக் கொள்ளையடிக்கும் பொருளாதாரச் சுரண்டலைத் தடுத்து நிறுத்திட இந்தியா முழுவதற்கும் சார்பாகக் கப்பலோட்டிய முதல் வீரத் திருமகன் தமிழ்ப் பெருமகன் வ.உ.சிதம்பரம் பிள்ளைதான் என்று இன்றும் உலக வரலாறு வரம்பிட்டு வாழ்த்திக் கொண்டு இருக்கின்றது. இந்த செயற்கரிய செயலைச்செய்த சிதம்பரம் பிள்ளையின் கடைசி நாட்கள் வறுமையிலே வாடினபோது, எந்தத் தமிழ் மகனும் அவரது வாழ்வுக்கு உதவியாகக் கை கொடுத்து உதவாமல் இருந்துவிட்டது மாபெரும் குறையாகவே இருந்தது. அந்த தேசிய மாவீரன் சிறை மீண்டு வெளியே வந்த போது தமிழ்நாடு அவரை ‘வருக வீரனே வருக’ என்று வரவேற்று ஆதரிக்கவும் தவறிவிட்டது. அவரது செல்வாக்கும் சொல்வாக்கும் அறிந்தவர்கள் கூட அவரைக் கவனிக்காமல் பராமுகமாய் விட்டு விட்ட சம்பவம், மனிதகுல வீர வரலாற்றுக்கே பரிதாபமான களங்கமாக இருந்ததைக் கண்டு தமிழர் கண்ணீர் சிந்த வேண்டிய நிலைதான் திகழ்ந்தது. கவியரசர் சுப்பிரமணிய பாரதியார் தனது சுதந்திரப் பணிகளை வாடிய பயிரைப் போல வதங்கிக் கொண்டே பாடியபடி மறைந்தார்! மாவீரன் சுப்பிரமணிய சிவா, சிறையேகிய தேசத் தொண்டால் உடல் முழுவதும் குஷ்ட நோய் பரவியவாறே, ஊர் ஊராகச் சென்று பிச்சைக்காரனாகப் பிழைத்து பாப்பாரப்பட்டி என்ற ஊரிலே மாண்டார். தமிழ்நாட்டுத் தியாக மூர்த்திகளின் தலைமகனான வ.உ.சிதம்பரம் பிள்ளையும் சிறு கடை வைத்து சொக்கலால் ராம்சேட் பீடிகளையும், கிருஷ்ணாயில் டப்பாவின் எண்ணெயையும் சிறு சிறு உழக்குகளால் அளந்து ஊற்றிப் பிழைக்கும் வறுமையிலே வாடியும், இல்லாமல் தனது கடைசி நாட்களைக் கஷ்டங்களோடு போராடிக் கழித்து மறைந்தார்! ஆனால், தேசத் தொண்டாற்றிய இந்த மாவீரர்கள் தமது தாய்மொழியான தமிழுக்கு அருந்தொண்டுகளைச் செய்ததால், தமிழ் உலகம் இன்றும் அவர்களை மறக்காமல் வாழ்த்திக் கொண்டே இருக்கிறது. பாரதியார் கவிப்பேரரசர் அவர் பாடிய பாடல்கள் இன்றும் அவரது திருப்பெயரை வாழ்த்திக் கொண்டே இருக்கின்றன. மாவீரர் சிவா, நாடகங்கள், மொழிபெயர்ப்பு. ஆய்வு நூல்கள் எழுதிய தமிழ் வெறியர். நீதிமன்ற வாதாட்டங்களிலே கூட திருக்குறளைச் சான்றுக்காக ஓதி வழிபட்டவர்! அவரும் தமிழ்த் தொண்டராக வாழ்ந்து மறைந்தார்: முத்தமிழ் வித்தகராக விளங்கிய சிதம்பரம் பிள்ளை மதுரை மாநகர் தமிழ்ச்சங்கப் புலவராகத் திகழ்ந்தவர். தமிழ் இலக்கிய இலக்கண வித்தகர்; அவர், ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்குமொழிகளிலே புலமை பெற்றவர். சிதம்பரனார் நாட்டுத் தொண்டு, மொழித் தொண்டு என்ற இரண்டையும் கண்களைப் போல காப்பாற்றிய கலை இயல் வளர் நிபுணராக இருந்தார். அதனால்தான் அவரால் ஒரு நூலாசிரியராகவும், உரையாசிரியராகவும், பதிப்பாசிரியராகவும், மொழிபெயர்ப்பாசிரியராகவும், தத்துவஞான ஆசானாகவும் பணியாற்றும் திறனாளராக இருக்க முடிந்தது. சிதம்பரம், ‘மெய்யறம், மெய்யறிவு, வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம்,’ தனது முதல் மனைவி நினைவாக ‘வள்ளியம்மை சரித்திரம்’ என்ற நூல்களை எழுதினார்: மனித குலத்தை மேம்படுத்தும் எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கண்ட புத்தகங்களில் தத்துவங்களைப் பொழிந்த நல்ல ஞானியாக நடமாடினார்! கண்ணனூர் சிறையிலே அவர் சிறைத் தண்டனைகளை அனுபவித்துக் கொண்டே ‘மெய்யறிவு’ என்ற தத்துவ நூலைச் செய்தவர் சிதம்பரனார் திருவள்ளுவரின் திருக்குறளை அமுதமாக உண்டவர். திருக்குறள் கூறும் அறங்களை எல்லாம் தொகுத்து அறத்துக்கென ஒரு வடிவ நூலாக ‘மெய்யறம்’ வடித்தவர் இந்த நூலில் திருவள்ளுவரால் கூறப்படாத பல புதிய அறங்களைக் கூறி வழி நூலாக வழிகாட்டினார்! எடுத்தக்காட்டாக, துணையிழந்தாரை மணப்பது புண்ணியம் என்று விதவை வாழ்வைப் போற்றி அறம் கூறியவர் அவர். மங்கையர் மற்ற ஆண்களை மறந்தும் நாடக் கூடாது என்பதற்கேற்றவாறு, ஆண்களும் மற்றப் பெண்களை மறந்தும் நாடுவது பெரும் பாதகம் என்று கூறிய நெறியாளர் சிதம்பரம் பிள்ளை. இவையெல்லாம் ‘மெய்யறம்’ நூலிலே படித்துச் சிந்திக்கலாம். சமயப் பழக்கவழக்கங்களிலே சில சந்தர்ப்பவாத ஆன்மிகர்களால் புகுத்தப்பட்ட ஆன்மிகக் கோட்பாடுகளையும் அவர் சாடி தனது புரட்சி மனப்பான்மையைக் காட்டியுள்ளார். திருக்குறள் என்ற வாழ்வியல் மறைக்குப் பரிமேலழகர் சில குறட்பாக்களுக்கு நேர் பொருள் கொள்ளாமல், மாறுபட்ட உரைகளைக் கண்டுள்ளார் என்று எண்ணிய சிதம்பரம் பிள்ளை, மற்றோர் திருக்குறள் உரையாசிரியரான மணக்குடவரை மனமாரப் பாராட்டி, வள்ளுவர் உள்ளத்தை உணர்ந்தவர் மணக்குடவரே என்று போற்றி, மணக்குடவர் உரையைத் திருத்தமாக வெளியிட்டவர் சிதம்பரம் பிள்ளை. திருக்குறள் நூல் அறிஞர்களுக்காக மட்டுமே எழுதிய வேத நூலல்ல. எல்லா வகையினரும் எளிதாக உணர்ந்து கொள்ள வேண்டிய வாழ்வியல் புதையல் நூல் என்றுணர்ந்து, எளிய விளக்க உரை ஒன்றைத் திருக்குறளுக்கு எழுதிய தமிழ்த் தொண்டர் சிதம்பரம் பிள்ளை. திருவள்ளுவரின் திருக்குறள், சிவஞான போதம், கைவல்ய நவநீதம் என்ற நீதி நூல்களிலும், சித்தாந்த நூல்களிலும், வேதாந்த நூல்களிலும் ஒப்புயர்வற்ற ஒரு சிறந்த மேன்மையான நூல் என்று அவர் எழுதிய தனது சிவஞான போதம் என்ற நூலின் முன்னுரையில் கூறியுள்ளார். தமிழ்மொழியின் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியம் என்ற நூலிலே, இளம்பூரணர் இயற்றிய உரை மிக எளிமையாக இருப்பதால், அதனைப் பல சுவடிகளோடு ஒப்பிட்டுப் பார்த்து, ‘இளம்பூரணம்’ என்ற நூலை வெளியிட்டவர் சிதம்பரம்பிள்ளை. இதற்கு ஒத்துழைத்த பேரறிவாளர் வையாபுரி பிள்ளை போன்றவர்களைப் பயன்படுத்திக் கொண்டார். தொல்காப்பிய பொருளதிகாரம் பகுதிக்கும் அதே போல ஒரு திருத்தமான பதிப்பையும் சிதம்பரம் வெளியிட்டார். அதன் எஞ்சிய பகுதிகளையும் சுவடிகள் பலவற்றோடு ஒப்பு நோக்கி, வையாபுரி பிள்ளை போன்ற அறிஞர்களின் ஆய்வறிவோடும் சிதம்பரம் பிள்ளை தனது பெயரோடு வையாபுரியார் பெயரையும் இணைத்து ஒரு பதிப்பாக தொல்காப்பியத்தை வெளியிட்டார். பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான நன்னிலை என்ற நூலுக்கும் சிதம்பரனார் எளிய உரை எழுதினார் சைவ சித்தாந்தத்தில் பழுத்த ஞானமுடைய சிதம்பரம் பிள்ளை ‘சிவஞான போதம்’ என்ற சைவ தத்துவ நூலுக்கு நயமான, எளிமையான உரை ஒன்று எழுதினார். ஆங்கில மொழியிலே எழுதிய ஜேம்ஸ் ஆலன் என்ற ஆங்கிலப் பேராசிரியரது வாழ்வியல் ஒழுக்க ஞான நூலை தமிழில் மொழியாக்கம் செய்து ‘மனம் போல வாழ்வு’, ‘அகமே புறம்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். நமது நாட்டின் சமய அறிவையும், நெறிகளையும் மக்கள் சரியாகப் பின்பற்றவில்லை. அவர்களது அரைகுறையான சமய ஞானத்தால் நமது நாடு வீழ்ச்சி அடைந்தது. எல்லாம் விதியின் வழியே நடக்கும் என்ற கொள்கைக்குத் தவறான பொருள் கொண்டுவிட்டார்கள். அதனால் மக்கள் செயலற்றுச் சோம்பினார்கள். விதி விதி என்று ஆழ்கின்றார் வீணாகத் துன்பில், விதிவிதிக்கத் தம்மையன்றி வேறு - பதி ஒருவன் உண்டென்று நம்பிய ஒரு சிலர், இங்கு அன்னாரின், கண்டறியேன் - பேதையரைக் காண் என்று சிதம்பரம் பிள்ளை தனது மெய்யறிவு நூலில் கூறுகின்றார். அறநெறிகளைப் போற்றாத, கடைப்பிடிக்காத மக்கள் என்றும் உயர்வு பெற முடியாது என்பது பிள்ளையின் சித்தம். இதை அவர், ‘அகமே புறம்’ என்ற நூலில்,       “அறத்தை அறிய அறிவே மறமாம்;       அறத்தைப் பிழைத்த அறிவே மிருகம்;       அறத்தைப் புரியும் அறிவே மனிதன்;       அறத்தைக் காக்கும் அறிவே கடவுள்” – என்று, சிதம்பரம் பிள்ளை அறம் என்ற தத்துவத்தின் மூலமாக, மிருகத்தன்மை, வீரத்தன்மை, மனிதத்தன்மை தெய்வத்தன்மை ஆகியவற்றை அவர் அற்புதமாக தெளிவுபடுத்தியுள்ளார். படித்து உணர்க! இவ்வளவு அரிய ஆற்றல்கள் சிதம்பரம் பிள்ளையிடம் ஆமை போல் அடங்கி, அரசியல் புரட்சி மட்டுமே தலை தூக்கி மக்களை உணர்ச்சியின் உருவங்களாக, எஃகு உள்ளங்களாக மாற்றிடும் திறமையின் எழுச்சியும் அவரிடம் அமைந்திருந்ததால்தான் பாரதியார் அவரைத் ‘தமிழகத்தார் மன்னன்’ என்று தனது கவிதையிலே ஏற்றிப் போற்றிப் பாடினார்: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சிதம்பரம் பிள்ளையை ‘ஒப்பே கூற முடியாத செந்தமிழ் அறிவுச் செல்வன்’ என்றார். ஆனால், தேசியத்தைக் கவிதையிலே எளிமையும் அற்புதமுமாகப் பாடிய தாக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, ‘சிதம்பரனாரிடம் வேதாந்த சித்தாந்த மணமே வீசும்’ என்று அவரை ஒரு தத்துவஞானத் தலைவன் என்று நாட்டுக்கு அடையாளம் காட்டினார்! எல்லாவற்றுக்கும் மேலாக, சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் என்ற தமிழ்ஞானத்தின் தவத்தால், கர்நாடகத்தைச் சேர்ந்த பண்பாளர் பி.ஆர். பந்துலு என்ற ஆசான் ஒருவரின் துணை கொண்டு, உலக நடிப்புக் கலைக்கு அகராதியாக விளங்கிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனை கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் பிள்ளை என்ற நடிப்புச் சிற்பனாக்கி, தேசியக் கவிக்குல வைரமான அமரகவி பாரதியாரின் அற்புத தேசியப் பாடல்களால் தமிழ் மக்களை மட்டுமன்று, படம் பார்க்கும் உலகச் சுவைஞர்களை உருக வைக்கும் ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற திரைக் காவிய அருள் மணத்தை சிலம்புச் செல்வர் தனது தவஞானச் சிலம்பொலியால் ஒலித்துக் காட்டி மறைந்தார். இந்த நன்றி காட்டும் பண்பை திரையுலக விஞ்ஞானம் இருக்கும் வரை சிதம்பரம் பிள்ளையின் விடுதலை வீரம் வாழையடி வாழையென கன்றுகளாகும், பலன் வழங்கும் என்பது உறுதி வாழ்க சிதம்பரனாரின் முத்தமிழ் அதிவீரம்! செயலறம்! □ ⁠ □ ⁠ □ குறிப்புகளுக்காக: இந்த மின்னூலைப் பற்றி உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது[1]. இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம். மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )[2][3] இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: ------------------------------------------------------------------------ 1. ↑ http://ta.wikisource.org 2. ↑ http://creativecommons.org/licenses/by-sa/3.0/ 3. ↑ http://www.gnu.org/copyleft/fdl.html