[] 1. Cover 2. Table of contents கபோதிபுரத்துக் காதல் கபோதிபுரத்துக் காதல்   அறிஞர் அண்ணா     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/kapothipurathu_kadhal மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/malai_naatu_dhivyadesa_yathirai This Book was produced using LaTeX + Pandoc Acknowledgements: Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work. This etext has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998-2020. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website https://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. 1 ஜல் ஜல் ஜல்! ஜல் ஜல் ஜல ஜல!! “உம்! கொஞ்சம் வேகமா நட. வேகற வெயில் வர்றதுக்குள்ளே ஊர் போவோம்…” ஜல் ஜல், ஜல ஜல. ஜல் ஜல், ஜலஜல. “சும்மா போகமாட்டாயே, நீ. உன் வாடிக்கையே அதுதானே, சவுக்கடி கொடுத்தால்தானே போவே உம்…” “வேண்டாமப்பா, பாவம், வாயில்லாத பிராணி, வெயில் வேளை. போகட்டும் மெதுவா. அடிக்காதே” என்று வேதவல்லி சொன்னாள், மாட்டைச் சவுக்கால் சுரீல் என அடித்து வாலைப்பிடித்து ஒடித்து வண்டியை ஓட்டியவனைப் பார்த்து. மணி காலை பதினொன்று ஆகிறது. ஒரு சாலை ஓரமாக வண்டி போகிறது. வண்டியிலே இரு மாதர், தாயும் மகளும். தலைக்குட்டையும், சந்தனப் பொட்டும், பொடிமட்டையுடன் ஓர் ஆடவர், வேதவல்லியின் புருஷர், வீராசாமிபிள்ளை, ஆக மூவரும் செல்லுகின்றனர். வண்டிமாடு செவிலி நிறம் ஓட்டுகிற ஆளும் சிவப்பு. மீசை கருக்குவிட்டுக் கொண்டிருக்கிற பருவம். “என்னமோம்மா, நீங்க பாவ புண்ணியத்தைப் பாக்கறீங்க மாட்டை அடிச்சு ஓட்டாதேன்னு சொல்றீங்க. சில பேரே பார்க்கணுமே, என்னடா, மாடு நகருது, அடிச்சு ஓட்டேன். கொடுக்கிறது காசா, மண்ணா என்று கோபிப்பார்கள்” என்றான் வண்டிக்காரன். “செலபேரு அப்படித்தான். ஓட்டமும் நடையுமா போனாகூட, பன்னிரெண்டு மணிக்குள்ளே போயிடலாமே மாரிக்குப்பத்துக்கு. உச்சி வேளை பூஜைக்குப் போய்ச் சேர்ந்துடலாமே” என்று வேதவல்லி கூறினாள். “அதுக்குள்ளே பேஷா போகலாம். அடிச்சி ஓட்டினா அரை மணியிலே போகலாம். எதுவும் அப்படித்தான். அடிச்சி ஓட்டாத மாடும், படிச்சி வழிக்கு வராத பிள்ளையும் எதுக்கு உதவப் போவுது. என் சேதியைக் கேட்டா சிரிசிரின்னு சிரிப்பீங்கோ, நான் படிச்சதும் பிழைச்சதும் அப்படி” என்றான் வண்டி ஓட்டி. “நீ படிக்கவேயில்லையாப்பா” என்று கேட்டாள் வேதவல்லி. படிச்சேன், ஆறாவது வரையிலே. அதுக்கு மேலே, ஆட்டமெல்லாம் ஆடினேன். இப்போ மாட்டுவண்டி ஓட்டற வேலைதான் கிடைச்சுது. அதுவும் நம்ம சிநேகிதர் ஒருவர் காட்டினார் இந்தப் பிழைப்பையாவாது. உம்! எல்லாம் இப்படித்தான். அந்தச் சினிமாவிலேகூட பாடறாங்களே, ‘நாடகமே உலகம், நாளை…’ என்று மெல்லிய குரலிலே, பாடலைப் பாடினான் பரந்தாமன் – அதுதான் அவன் பெயர். நாடகமே உலகத்திலிருந்து… “மாயப்பிரபஞ்சத்துக்கு” வந்தான். அதிலிருந்து “ராதே உனக்குக் கோபம் ஆகாதடி” ஆரம்பித்தான். வீராசாமிபிள்ளை கணைத்தார். “தம்பி பாட்டு பிறகு நடக்கட்டும். ஓட்டு வண்டியை” என்றார். வேதவல்லி, “சாரதா! என்னம்மா மயக்கமா இருக்கா” என்று தன் மகளைக் கேட்டாள். கொஞ்ச நேரம் சென்றதும் வண்டிக்குள்ளே நோக்கினான். சாரதா, வேதவல்லியின் தோள்மீது சோர்ந்து படுத்துக்கொண்டிருந்தாள். ஒருமுறை அவளைக் கண்டான், ஓராயிரந் தடவை ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதடி’ என்று பாடலாமா என்று தோன்றிற்று. பரந்தாமன் உள்ளத்தை அந்தப் பாவை கொள்ளை கொண்டாள். கண்கள் மூடித்தான் இருந்தன; ஆனாலும் அதிலும் ஒரு வசீகரம் இருந்தது. காற்றினால் சீவி விடப்பட்டிருந்த கூந்தல் சற்றுக் கலைந்து நெற்றியில் அங்குமிங்குமாக அலைந்தது. கறுப்புப் பொட்டு அந்தச் சிவப்புச் சிங்காரியின் நெற்றியிலே வியர்வையில் குழைந்து ஒருபுறம் ஒழுகிவிட்டது. ஆனால், அதுவும் ஒரு தனி அழகாகத்தான் இருந்தது. “மாதே உனக்குச் சோகம் ஆகாதடி” என்று பாட எண்ணினான். சோகித்துச் சாய்ந்திருந்த அந்தச் சொர்ண ரூபியை நோக்கி, ஆஹா! நான் வண்டியை ஓட்டுபவனாகவன்றோ இருக்கிறேன். எனக்கு இவள் கிட்டுவாளா? என்று எண்ணினான். ஏங்கினான். மாடு தள்ளாடி நடந்தது. பரந்தாமனுக்கு அதைத் தட்டி ஓட்ட முடியவில்லை. இஷ்டங்கூட இல்லை. அந்த ரமணி எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக வண்டியில் இருக்கிறாளோ, அவ்வளவு ஆனந்தம். வண்டியோட்டுகிற வேளையிலும் இப்படிப்பட்ட சம்பவம் இருக்கிறதல்லவா, என்றுகூட எண்ணினான். இரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஆறாவது மைலில் மாரிக்குப்பம். அங்கு ஆடி வெள்ளிக்கிழமையிலே குறி சொல்வதும் பிசாசு ஓட்டுவதும் குளிச்சம் கட்டுவதும் முழுக்கு போடுவதும் வழக்கம். சுற்றுப் பக்கத்து ஊரிலிருந்து திரளான கூட்டம் வரும். மாரிக்குப்பம் கோவில் பூசாரி மாடி வீடு கட்டியதும் அவன் மகன் மதராசிலே மளிகைக் கடை வைத்ததும் அந்த மகமாயி தயவாலேதான். எத்தனையோ ஆயிரம் குளிச்சம் கட்டியிருப்பான் பூசாரி. அவனைத் தேடி எத்தனையோ ஆயிரம் பேர் வந்திருப்பார்கள். எவ்வளவோ பேரைப் பார்த்தவன். எத்தனையோ பிசாசை ஓட்டினவன். அந்தப் பேர்வழியைக் காணவும் சாரதாவுக்கு அடிக்கடி வருகிற சோகம், ஏதாவது “காத்து சேஷ்டையாக” இருக்கலாம். அதுபோக ஒரு குளிச்சம் வாங்கிப் போகலாமென்றும்தான் ஐம்பது, அறுபது மைல் தாண்டி அழகாபுரியைவிட்டு வீராசாமிபிள்ளை மனைவியையும் மகளையும் அழைத்துக்கொண்டு வந்தார். ஆவணியிலே சாரதாவுக்குக் கலியாணம் நிச்சயமாகிவிட்டது. நல்ல பெரிய இடத்திலே ஏற்பாடு. நூறு வேலிக்கு நிலம். ஆடும் மாடும் ஆளும் அம்பும் வண்டியும் அதிகம். அந்த அழகாபுரிக்கே அவர்தான் ஜமீன்தார்போல. வயது கொஞ்சம் அதிகந்தான். அறுபது என்று சொல்லுவார்கள். ஆனால் அவர் நினைப்பு முப்பத்தைந்திலிருந்து நாற்பதுக்குள்தான். ஆள் நல்ல உயரம், பருமன், மீசை மயில்ராவணனுக்குப் படத்திலே இருப்பதுபோல ஆசாமி பேசினால் இடிஇடித்த மாதிரிதான். அழகாபுரியிலே மாரியப்பபிள்ளை என்றால் போதும். கிடுகிடுவென நடுங்குவார்கள். அவருக்கு மூன்றாந்தாரமாக, சாரதா ஏற்படாகிவிட்டது. சாரதாவுக்கு வயது பதினாறுகூட நிரம்பவில்லை. அவள் அழகு, அழகாபுரிக்கே அழகு செய்தது. நல்ல பஞ்சவர்ணக்கிளி என்றாலும் சோலையில் பறக்க விடுகிறார்களா? தங்கக் கூண்டிலே போட்டுத்தானே அத்துடன் கொஞ்சுவார்கள். அதைப்போலத்தான் சாரதாவுக்கு, மாரியப்பபிள்ளை கூண்டு. அவருடைய பணம் பேசுமே தவிர வயதா பேசும்? அதிலும் வீரசாமிபிள்ளை வறட்சிக்கார ஆசாமி. கடன் பட்டுப்பட்டுக் கெட்டவர். இந்தச் சம்பந்தத்தினால்தான் ஏதாவது கொஞ்சம் தலையெடுக்க முடியும். வேதவல்லிக்குக் கொஞ்சம் கசப்புதான். இருந்தாலும் என்ன செய்வது? சாரதாவுக்குத் தெரியும் தனக்குப் பெற்றோர்கள் செய்கிற விபரீத ஏற்பாடு. அதனை எண்ணியெண்ணி ஏங்கினாள், வாடினாள், மாரியப்பபிள்ளையை மனத்தாலே நினைத்தாலே பயமாக இருந்தது அவளுக்கு. எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணியதால் உடல் இளைக்கலாயிற்று. ‘ஐயோ! அந்த ஆர்ப்பாட்டக்காரக் கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டு நான் எக்கதியாவது?’ என்று எண்ணி நடுங்கினாள் அந்தப் பெண். தனது குடும்பத்திலுள்ள கஷ்டமும், அந்தக் கஷ்டத்தைப் போக்கிக் கொள்ளவே, தன்னை – கிளியை வளர்த்து பூனையிடம் தருவதுபோல, மாரியப்பபிள்ளைக்கு மணம் செய்து கொடுக்கத் துணிந்ததும் அவளுக்குத் தெரியும். தனது குடும்ப கஷ்டத்தைப் போக்க வேண்டுமென்பதிலே சாரதாவுக்குத் திருப்திதான். ஆனால். கிழவனுக்குப் பெண்டாக வேண்டுமே என்றெண்ணும்போது, குடும்பமாவது பாழாவது. எங்கேனும் ஒரு குளத்தில் விழுந்து சாகலாமே என்று தோன்றும். இது இயற்கையல்லவா! இப்படிப்பட்ட பொருத்தமில்லாத ஜோடிகளைச் சேர்ப்பதற்காக யார் என்ன செய்கிறார்? ஊரார் கேலியாகப் பேசிக்கொள்வார்களே யெழிய, இவ்விதமான வகையற்ற காரியம் நடக்கவொட்டாது தடுக்கவா போகிறார்கள். கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருஷன் என்று பழமொழி இருக்க, கல்லோ புல்லோ அல்லாத மாரியப்பபிள்ளைகள் சாரதாவை மணமுடித்துக் கொடுக்க இருப்பார்களோ! அதிலும் மாரியப்ப பிள்ளை ஓர் ஏழையாக இருந்தால் “கிழவனுக்கு எவ்வளவு கிறுக்கு பார்தீர்களா! காடு வாவா என்கிறது. வீடு போபோ என்கிறது, கிழவன் சரியான சிறுகுட்டி வேண்டுமென்று அலைகிறானே. காலம் கலிகாலமல்லவா” என்று கேலி செய்வார்கள். மாரியப்பபிள்ளையோ பணக்காரர். எனவே அந்த ரமணி, சாரதா, சமூகத்தில் வளர்த்துவிடப்பட்ட பழக்கத்துக்குத் தனது அழகையும் இளமையையும் பலிகொடுக்கப் போகிறார். இவ்விதம் அழிந்த ‘அழகுகள்’ எவ்வளவு! தேய்ந்த இளமை எத்துணை!! சாரதாவுக்குப் பிசாசு பிடித்துக்கொண்டது என்று அவளின் பெற்றோர் எண்ணினார்கள். அவளுக்கா பிசாசு பிடித்தது? அல்ல! அல்ல! மாரியப்பபிள்ளை பிடித்துக்கொள்ளப் போகிறாரே என்ற பயம் பிடித்துக்கொண்டது. பாவை அதனாலேயே பாகாய் உருகினாள். அதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். அவள் புரட்சிப் பெண்ணல்ல! புத்துலக மங்கையல்ல! மாரிகோவிலுக்கு மாட்டுவண்டி வந்து சேர்ந்தது. அம்மன் தரிசனமாயிற்று. அந்தப் பூசாரி, ஏதோ மந்திரம் செய்தான். மடித்துக் கொடுத்தான் மாரி பிரசாதத்தை. வாரத்திற்கொருமுறை முழுக்கு, ஒரு வேளை உணவு, ஒரு நாளைக்கு ஒன்பது முறை அரசமரம் சுற்றுவது என்று ஏதேதோ ‘நிபந்தனை’ போட்டான். கோவிலில் விற்ற ‘சோற்றை’த் தின்றார்கள். மிச்சம் கொஞ்சம் இருந்தது. “பாபம்! வண்டிக்காரப் பிள்ளையாண்டானுக்குப் போடலாமே” என்றாள் வேதவல்லி. “ஆமாம், பாபம்” என்றாள் சாரதா. ஒவ்வோர் உருண்டையாக உருட்டி வண்டியோட்டும் பிள்ளையாண்டான் கையிலே சாரதா கொடுத்தாள். அந்த நேரத்திலே அவள் தந்தை வெகுசுவாரசியமாகப் பூசாரியுடன் பேசிக்கொண்டிருந்ததால், அதுவும் நடக்க முடிந்தது. அவர் மட்டும் அதைப் பார்த்திருந்தால், ஒரு முறைப்பு. ஒரே கனைப்பு. உடனே சாரதா நடுநடுங்கிப் போயிருப்பாள். சாரதா, வண்டியோட்டிக்குச் சோறு போட்டதாக அவன் கருதவில்லை. அமிருதம் கொடுத்தாள் என்றே கருதினான். அந்த மங்கையின் கையால் கிடைத்த உணவு, அவனுக்கு அவ்வளவு இன்பமாக இருந்தது. அவளும் அவனுக்கு வெறும் சாதத்தைப் போடவில்லை ஒவ்வொரு பிடியிலும் தனது காதல் ரசத்தைக் கலந்து பிசைந்து தந்தாள். இவரைப் போன்றன்றோ என் புருஷன் இருக்கவேண்டும் என்று எண்ணினாள். அந்த எண்ணம் திடீரெனத் தோன்றியதால் துணிவும் ஏற்பட்டது அந்தத் தையலுக்கு. எனவே, அவனுக்குச் சாதம் போட்டுக்கொண்டே புன்சிரிப்பாக அவனைப் பார்த்துச் சிரித்தாள். பூந்தோட்டத்தின் வாடை போல அந்தப் புன்சிரிப்பு பரவிற்று. வாலிபன் நாடி அத்தனையிலும் அது புகுந்தது. இந்தக் காதல் காட்சியைக் கடைக்கண்ணால் கண்டாள் வேதவல்லி. பெருமூச்சுவிட்டாள். மாரி பிரசாதம் பெற்றாள் சாரதா. இனி நோய் நீங்குமென வீராசாமிபிள்ளை எண்ணினார். சாரதா முன்போல் முகத்தைச் சுளித்துக்கொள்ளாமல், சற்றுச் சிரித்தமுகமாக இருப்பதைக் கண்டு, வீராசாமிபிள்ளை தம் மனைவி வேதவல்லியை அருகேயழைத்து, “வேதம்! பார்த்தாயா பெண்ணை. பூசாரி போட்ட மந்திரம் வேலை செய்கிறது. முகத்திலே தெளிவு வந்துவிட்டது பார்” என்று கூறினார். வேதவல்லிக்குத் தெரியும், சாரதாவின் களிப்புக்குக் காரணம் பூசாரியுமல்ல, அவன் மந்திரமுமல்ல, ஆனால் புதிதாகத் தோன்றிய பரந்தாமனும் அவன் ஊட்டிய காதலும் பெண்ணின் உள்ளத்திலே ஆனந்தத்தைக் கிளப்பிவிட்டதென்பது. மறுபடி அவர்கள், அதே வண்டியிலேறி இரயிலடிக்கு வந்தனர். வண்டியோட்டியிடம் கூறிவிட்டு, இரயிலேறும் சமயம், வேதவல்லி, பரந்தாமனைப் பார்த்து, “ஏன் தம்பீ. எங்க ஊருக்கு வாயேன் ஒரு தடவை” என்று அழைத்தாள், சாரதா வாயால் அழைக்கவில்லை. கண்ணால் கூப்பிட்டாள். வேதவல்லி வாயால் கூப்பிட்டது, பரந்தாமன் செவியில் விழவில்லை. சாரதாவின் கண்மொழி, அவனுடைய நரம்பு அத்தனையிலும் புகுந்து குடைந்தது. “மாடாவது வண்டியாவது, மாரிக்குப்பமாவது, பேசாமல் சாரதாவைப் பின்தொடர்ந்து போகவேண்டியதுதான்” என்று நினைத்தான். “எனைக்கணம் பிரிய மனம் வந்ததோ, நீ எங்குச் சென்றாலும் உன்னை விடுவேனோ, ராதே” என்ற பாட்டை எண்ணினான். மணி அடித்து விட்டார்கள்! வீராசாமிபிள்ளை களைத்து விட்டார். வேதவல்லி உட்கார்ந்தாகிவிட்டது. சாரதாவின் கண்கள், பரந்தாமனைவிட்டு அகலவில்லை. பரந்தாமன் பதுமைபோல நின்றான். வண்டி அசைந்தது. சாரதாவின் தலையும் கொஞ்சம் அசைந்தது. அவளுடைய செந்நிற அதரங்கள் சற்று அசைந்தன. அலங்காரப் பற்கள் சற்று வெளிவந்தன அவளையும் அறியாமல். புருவம் வளைந்தது. கண் பார்வையிலே ஒருவிதமான புது ஒளி காணப்பட்டது. வண்டி சற்று ஓட ஆரம்பித்தது. பரந்தாமனின் கண்களில் நீர் ததும்பிற்று. வண்டி இரயிலடியைவிட்டுச் சென்றுவிட்டது. பரந்தாமன் கன்னத்தில் இரு துளி கண்ணீர் புரண்டு வந்தது. நேரே வண்டிக்குச் சென்றான். வைக்கோல் மெத்தைமீது படுத்தான், புரண்டான். சாரதாவை நான் ஏன் கண்டேன்? என்று கலங்குவது ஏன், என்று மனத்தைத் தேற்றினான். “சாரதா, நீ ஏன் அவ்வளவு அழகாக இருக்கிறாய்! என் கண்களை ஏன் கவர்ந்துவிட்டாய்; அழகி, என் மனத்தைக் கொள்ளை கொண்டாயே, என்னைப் பார்த்ததோடு விட்டாயா? எனக்கு ‘அமிர்தம்’ அளித்தாயே. இரயில் புறப்படும்போது என்னைக் கண்டு சிரித்தாயே. போய்வருகிறேன் என்று தலையை அசைத்து ஜாடை செய்தாயே. நீ யார்? ஏன் இங்கு வந்தாய்? வண்டியோட்டும் எனக்கு ஏன் நீ எதை எதையோ எண்ணும்படிச் செய்துவிட்டாய். சாரதா உன்னை நான் அடையத்தான் முடியுமா? எண்ணத்தான் படுமோ?” என்று எண்ணினான். இரண்டு நாட்கள் பரந்தாமனுக்கு வேறு கவனமே இருப்பதில்லை. எங்கும் சாரதா! எல்லாம் சாரதா! எந்தச் சமயத்திலும் சாரதாவின் நினைப்புதான்! இளைஞன் படாதபாடுபட்டான். பஞ்சில் நெருப்பெனக் காதல் மனத்தில் புகுந்து, அவனை வாட்ட ஆரம்பித்துவிட்டது. அதிலும் கைகூடும் காதலா? வண்டியோட்டும் பரந்தாமன், அழகாபுரி முதலாளி மாரியப்பபிள்ளைக்கு வாழ்க்கைப்பட இருக்கும் சாரதாவை அடைய முடியுமா! அழகாபுரி வந்து சேர்ந்த அழகிக்கு, பரந்தாமன் நினைப்புதான்! பரந்தாமனின் வாட்டம் சாரதாவுக்கு வராமற் போகவில்லை. சாரதாவின் கவலை பரந்தாமனைவிட அதிகம். பரந்தாமனுக்கேனும் சாரதா கிடைக்கவில்லையே இன்பம் வராதே – என்ற கவலை மட்டுமேயுண்டு, சாரதாவுக்கு இரு கவலை. பரந்தாமனைப் பெறமுடியாதே – இன்ப வாழ்வு இல்லையே என்பது ஒன்று. மற்றொன்று மாரியப்பபிள்ளையை மணக்க வேண்டுமே துன்பத்துக்கு அடிமைப்பட வேண்டுமேயென்பது. எனவே, சாரதாவின் ‘சோகம்’ குறையவில்லை அதிகரித்தது. 2 மாரியப் பிள்ளைக்கு ஆத்திரம் அதிகமாகிவிட்டது. ஆச்சு! ஆவணி பிறக்கப்போகிறது! இந்தப் பெண் ‘சோகம்’, ‘சோகம்’ என்று படுத்தபடி இருக்கிறாள். “இவள் சோகம் எப்போது போவது? என் மோகம் எப்போ தணிவது” என்று கோபித்துக்கொண்டார். “அழகான பெண்ணாக இருக்கிறாளே என்று பார்த்தால் இப்படி ‘சீக்’ பேர்வழியாக இருக்கிறாள். உடல்கட்டை மட்டும் கவனித்தால், உருட்டி எடுத்த கிழங்குகள்போல் இருக்கின்றன” என்று கவலைப்பட்டார். சாரதாவுக்கு வைத்தியத்தின்மேல் வைத்தியம். ஒரு மந்திரவாதி உபயோகமில்லை என்று தெரிந்ததும், மற்றொரு மந்திரவாதி என்று சிகிச்சை நடந்து வந்தது. ஆனால் அவளுடைய மனநோய் மாறினால்தானே சுகப்படும். வீராசாமிப் பிள்ளைக்கு விசாரம்! வேதவல்லிக்கு விஷயம் வெளியே சொல்ல முடியாது. ஒருநாள் மெதுவாக சாரதாவிடம் மாரியப்பபிள்ளையை மணந்துகொண்டால் படிப்படியாக நோய் குறைந்துவிடும் என்று கூறினாள். “யார் நோய் குறையுமம்மா! அப்பாவுக்குள்ள பணநோய் குறையும் அந்தக் கிழவனுக்கு ஆத்திரம் குறையும்” என்று அலறிச் சொன்னாள் சாரதா. பிறகு அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது தனக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்தது என்று. நோய் தானாகப் போகும் கலியாணத்துக்கு நாள் குறிப்பிட வேண்டியதுதான் என்று மாரியப்பபிள்ளை கூறிவிட்டார். நாள் வைத்துவிட்டார்கள். கலியாண நோட்டீசுகள் அச்சடிக்கப்பட்டு, உறவினருக்கும் தெரிந்தவர்களுக்கும் அனுப்பப்பட்டன. இரண்டே நாட்கள்தான் இருக்கின்றன கலியாணத்துக்கு. அந்த நேரத்தில்தான் மாரியப்பபிள்ளைக்கு, தனது பேரனுக்கு அழைப்பு அனுப்புவதா, வேண்டாமா என்ற யோசனை வந்தது. ஆகவே, தமது காரியஸ்தர் கருப்பையாவை அழைத்துக் கேட்டார். “ஏ! கருப்பையா! அந்தப் பயலுக்குக் கலியாணப் பத்திரிகை அனுப்பலாமா, வேண்டாமா?” “யாருக்கு எஜமான்?” என்றான் கருப்பையா. “அதாண்டா அந்தத் தறுதலை, பரந்தாமனுக்கு” என்றார் மாரியப்பிள்ளை. “ஒண்ணு அனுப்பித்தான் வைக்கிறது. வரட்டுமே” என்று யோசனை சொன்னான் காரியஸ்தன். இந்தச் சம்பாஷணைகளைக் கேட்டுக் கொண்டிருந்த வீராசாமிபிள்ளை, மேற்கொண்டு விசாரிக்கலானார். அப்போது சொன்னார் மாரியப்பபிள்ளை தனது பூர்வோத்திரத்தை. “எனக்கு 15 வயதிலேயே, கலியாணம் ஆகிவிட்டது. மறு வருஷமே ஒரு பெண் பிறந்தது. ஐந்து, ஆறு வருஷத்துக்கெல்லாம் என்முதல் தாரம் என்னிடம் சண்டை போட்டுவிட்டு குழந்தையுடன் தாய்வீடு போனாள். நான் வேறே கலியாணம் செய்துகொண்டேன். என் பெண் பெரியவளானாள். அவளுக்கு 12 வயதிலேயே கலியாணமாயிற்று. நான் அதற்குப் போகவேயில்லை. அவர்களும் அழைக்கவில்லை. அந்தப் பெண் மறுவருஷமே ஒரு பிள்ளையைப் பெற்று ஜன்னி கண்டு செத்தாள். அந்தப் பயல் எப்படியோ வளர்ந்தான். அவளும் செத்தாள். கோர்ட்டில் ஜீவனாம்சம் போட்டார்கள். அவர்களால் வழக்காட முடியுமா? என்னிடம் நடக்குமா? ஏதோ கொஞ்சம் பணம் கொடுத்து விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கிவிட்டேன். இப்போது, அவன், அந்த ஊரிலே ஏதோ கடை வைத்துக் கொண்டிருக்கிறான் என்று கேள்வி” என்று கூறிவிட்டு மாரியப்பபிள்ளை “கருப்பையா பையனுக்கு இப்போ என்ன வயதிருக்கும்” என்று கேட்டார். “ஏறக்குறைய இருபதாவது இருக்கும்” என்று வீராசாமிப்பிள்ளை பதில் கூறினார். “உங்களுக்கெப்படித் தெரியும்?” என்றார் மாரியப்பபிள்ளை. “அந்தப் பிள்ளையாண்டான் மாரிக்குப்பத்துக்கு நாங்கள் போனபோது வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தான்” என்றார் வீராசாமிப்பிள்ளை. பிறகு வேறு விஷயங்களைப் பேசிவிட்டு, வீராசாமிபிள்ளை வீடு வந்தார். வேதவல்லியைத் தனியே அழைத்து விஷயத்தைச் சொன்னார். “சாரதா காதில் விழுந்தால் அவள் ஒரே பிடிவாதம் செய்வாள் கல்யாணத்துக்கு ஒப்பவேமாட்டாள்; சொல்லவேண்டாம்.’ என்று வேதவல்லி யோசனை கூறினாள். எனவே சாரதாவுக்கு தான் மணக்கப்போவது தன் காதலனின் தாத்தா என்பது தெரியாது. விசாரத்துடன் மாரிகுப்பத்துக்கும் இரயில்வே ஸ்டேஷனுக்கும் இடையே வண்டியோட்டிக்கொண்டு வாழ்ந்து வந்த பரந்தாமனுக்கும் தெரியாது, தன் காதலி சாரதா தனக்குப் பாட்டி ஆகப்போகிறாள் என்பது! காதலியே தனக்குப் பாட்டி ஆனாள் என்பது தெரிந்தால் அவன் மனம் என்ன பாடுபடும்! 3 “என்னடா பரந்தாமா ரொம்ப குஷியாக இருக்கிறாய். சம்பாத்தியம் ரொம்ப ஜாஸ்தியா?” என்று மற்ற வண்டிக்காரர்கள் பரந்தாமனைக் கேட்டனர். “நான் அழகாபுரிக்குப் போகப்போகிறேன். அங்கே ஒரு கலியாணம். டேய், யாரும் சிரிக்கக்கூடாது. எங்க தாத்தவுக்குக் கலியாணம். கார்டு வந்தது வரச்சொல்லி” என்றான் பரந்தாமன். “பலே! பேஷ்! சரியான பேச்சு பேசினானப்பா பரந்தாமன், தாத்தாவுக்குக் கலியாணமாம், பேரன் போகிறானாம்!” என்று சொல்லிச் சிரித்து கேலி செய்தார்கள். பரந்தாமனும், கூடவே சிரித்தான். அவனுக்கு உள்ளபடி மாரியப்பபிள்ளைக்கு அறுபதாம் கலியாணம் நடக்கவேண்டி இருக்க, நிஜமான கலியாணமே செய்துகொள்ளப் போவதாகவும், அதற்கு வரும்படியும், காரியஸ்தன் கருப்பையா கார்டு போட்டதைக் கண்டதிலிருந்து சிரிப்புதான்! அழகாபுரியிலேதானே அந்தச் சாரதா இருக்கிறாள்; கலியாண சாக்கிலே. அவளைக் காணலாமே என்று எண்ணித்தான், தன் தாத்தா கலியாணத்துக்குப் போக முடிவு செய்தான். விஷயத்தைச் சொன்னாலே, எல்லோரும் சிரிக்கிறார்கள். எவ்வளவோ சொன்னான். விழுந்துவிழுந்து சிரித்தார்களே தவிர, ஒருவர்கூட நம்பவில்லை. கடைசியில், மடியில் வைத்திருந்த கார்டை எடுத்து வேறு ஆளிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னான். பிறகுதான், பரந்தாமன் சொல்வது உண்மை எனத் தெரிந்தது. உடனே சிரிப்பு போய்விட்டது. ஒவ்வொருவரும், கண்டபடி பேசலாயினர். ‘என்னா கிறாக்குடா கிழவனுக்கு? கல்லு புள்ளையார் போல பேரன் இருக்கச்சே மூணாம் தாரம் செய்கிறானாமே” என்று ஒருவனும், “இதாண்டாப்பா கலிகாலம்” என்று மற்றொருவனும், “சே! என்னா இருந்தாலும் இந்த மாதிரி அநியாயம் கூடாது” என்று பிறிதொருவனும் கூறி, எல்லோருமாக, “நீ போகாதேடா அந்தக் கலியாணத்துக்கு” என்று சொன்னார்கள். “நான் போறது அந்தக் காலியாணத்துக்காக மாத்திரமில்லை. வேறு சொந்த வேலை கொஞ்சம் இருக்கிறது” என்று பரந்தாமன் சொன்னான். 4 தூக்கம் தெளியாத நேரம்! முகூர்த்தம் அந்த வேளையில்தான் வைக்கப்பட்டிருந்தது! கோழி கூவிற்று. கூடவே வாத்தியம் முழங்கிற்று! சாரதா கண்களிலே வந்த நீரை அடக்கிக் கொண்டு “கலியாண சேடிகளிடம் தலையைக் கொடுத்தாள்! அவர்கள் தைலம் பூசினார்கள்! சீவி முடித்தார்கள்! ரோஜாவும் மல்லியும் சூட்டினார்கள்! புத்தாடை தந்தார்கள்! பொன் ஆபரணம் பூட்டினார்கள்! முகத்தை அலம்பச் செய்தார்கள். பொட்டு இட்டார்கள்! புறப்படு என்றார்கள்! மாரியப்பபிள்ளைக்கு மாப்பிள்ளை வேடத்தைக் காரியஸ்தர் கருப்பையா செய்து முடித்தார்! மேளம் கொட்டினார்கள், மணப்பந்தலுக்கு சாரதா வந்தாள். பரந்தாமன் அங்கொரு பக்கம் உட்கார்ந்திருப்பதைக் கண்டாள் அவள் கால்கள் பின்னிக்கொண்டன. கண் மங்கிவிட்டது. எல்லோரும் என்ன? என்ன? என்று கேட்டுக்கொண்டு ஓடினார்கள் சாரதா அருகில். பரந்தாமன் உட்கார்ந்தவன் உட்கார்ந்தவன்தான் அவனால் அசையக்கூட முடியவில்லை. அவ்வளவு திகைப்பு! என் சாரதா மணப்பெண்! என் காதலியா, இந்தக் கிழவனுக்கு! பாட்டியாகிறாளே என் பாவை! இந்தக் கோலத்தையா நான் காணவேண்டும் என்று எண்ணினான். அவனால் ஏதும் செய்ய முடியாது தவித்தான். யாரிடம் பேசுவான்! என்ன பேசுவது; யார் இவன் பேச்சைக் கேட்பார்கள்! எப்படி இவனால் தடுக்க முடியும்; மெல்ல எழுந்து சாரதா படுத்திருந்த பக்கமாகச் சென்றான். வேதவல்லி கண்களை பிசைந்துகொண்டே, “தம்பி, போய் ஒரு விசிறி கொண்டுவா!” என்றாள், விசிறி எடுத்துக் கொண்டுவந்தான். “வீசு” என்றாள் வேதவல்லி. வீசினான். சில நிமிடங்களில் சாரதா கண்களைத் திறந்தாள். வீசுவதை நிறுத்திவிட்டான். இருவர் கண்களும் சந்தித்தன. பேசவேண்டியவை யாவும் தீர்ந்துவிட்டன! மெல்ல எழுந்தாள் மங்கை. தூர நின்றான் பரந்தாமன். வாத்தியங்கள் மறுபடி கோஷித்தன. புரோகிதர், கதறலானார்; கருப்பையா வந்தவர்களை உபசரித்தபடி இருந்தார். “பலபலமாக மேளம்” என்றனர். பக்கத்தில் அமர்ந்திருந்த பதுமை போன்ற சாரதாவுக்கு, பரந்தாமனின் பாட்டன், அவன் கண் முன்பாகவே, தாலி கட்டினான். எல்லோரும் ‘அட்சதை’ மணமக்கள்மீது போட்டனர்! பரந்தாமனும் போட்டான். போடும்போது பார்த்தான் சாரதாவை! அவள் கண்களில் நீர் ததும்பியபடி இருந்தது. “புரோகிதர் போட்ட ‘புகை’ கண்களைக் கலக்கிவிட்டது” என்றாள் வேதவல்லி. “அல்ல! அல்ல! பாழும் சமூகக் கொடுமை, அந்தக் கோமளத்தின் கண்களைக் கலக்கிவிட்டது” என்று எண்ணினான் பரந்தாமன். ஆம்! சாரதாவை அவன் காதலித்தான். அவளும் விரும்பினாள். அவளே, அவன் பாட்டியுமானாள். என் செய்வான், ஏங்கும் இளைஞன்? சாரதாவின் சோகம், பரந்தாமனின் நெஞ்சம் பதறியது. வேதவல்லியின் வாட்டம், இவற்றைப்பற்றி மாரியப்பபிள்ளைக்குக் கவலை ஏன் இருக்கப் போகிறது. வீட்டிலுள்ள கஷ்டத்தினால் கழுத்தில் அணியும் நகையை விற்றுவிட்டால், வாங்குகிறவர்கள், விற்றவர்களின் வாட்டத்தை எதற்காகக் கவனிக்கப் போகிறார்கள். அந்த நகையைத் தாங்கள் அணிந்துகொண்டால் அழகாக இருக்கும் என்ற எண்ணம் மட்டுந்தானோ இருக்கும். அதைப்போலவே மங்கை மனமாவட்டம்கொண்டாலும் தனக்கு மனைவியானாளல்லவா அதுதான் மாரியப்பபிள்ளைக்கு வந்த எண்ணம். தன் இரண்டாம் மனைவி இறந்தபோது காரியஸ்தன் கருப்பையா தேறுதல் கூறும்போது, “எல்லாம் நல்லதுக்குத்தான் வருத்தப்படாதீர்கள்” என்று கூறினான். அன்றலர்ந்த ரோஜாவின் அழகு பொருந்திய சாரதாவை அடையத்தான் போலும், அந்த விபத்து நேரிட்டது என்று கூட எண்ணினார் மாரியப்பபிள்ளை. கலியாணம் முடிந்து, விருந்து முடிந்து, மாலையில் நடக்க வேண்டிய காரியங்கள் முடிந்து ஒருநாள் ‘இன்பம்’ பூர்த்தியாயிற்று. அன்றிரவு வேதவல்லி, விம்மிவிம்மி அழும் சாரதாவுக்கு, என்ன சொல்லி அடக்குவது என்று தெரியாது விழித்தாள். பரந்தாமன் பதைபதைத்த உள்ளத்தினானனாய் படுத்துப் புரண்டான். 5 மறுதினம், சாரதாவுக்கு, காய்ச்சல் வந்துவிட்டது. இரவு முழுதும் அழுது அழுது கண்கள் சிவந்துவிட்டன. இருமலும் சளியும் குளிரும் காய்ச்சலுமாக வந்துவிட்டது. மறுநாள் நடக்கவேண்டிய சடங்குகள் முடிந்து, உறவினர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றுக் கொண்டு போயினர். பரந்தாமனுக்கும் போக எண்ணந்தான். ஆனால், சாரதாவுக்குக் காய்ச்சல் விட்டபிறகு போகலாம். காய்ச்சலாக இருக்கும்போதே ஊருக்கு போய் விட்டால் எப்படி இருக்கிறதோ, என்ன ஆயிற்றோ என்று கவலைப்படத்தானே வேண்டும் என்று எண்ணியதால் அவன் அங்கேயே தங்கிவிட்டான். மாரியப்பபிள்ளை மகிழ்ச்சியின் மேலீட்டால் பரந்தாமனை, “டேய் பயலே. அங்குப் போய்த்தான் என்ன செய்யப்போகிறாய். இங்கேயே இருப்பதுதானே. பத்துப் பேரோடு பதினொன்றாக இரு. இங்கே கிடைக்கிற கூழோ, தண்ணியோ குடித்துவிட்டு காலத்தைத் தள்ளு. ஏதோ வயல் வேலையைப் பார்த்துக்கொள்ள வண்டி பூட்ட, ஓட்ட ஆள் வைத்திருக்கிறேன். அவனையும் ஒழுங்காக வேலை வாங்கு. இரு இங்கேயே” என்று கூறினார். காரியஸ்தன் கருப்பையாவும் இந்த யோசனையை ஆதரித்தான். வேதவல்லியும் இது நல்ல யோசனை என்றாள். பரந்தாமன், “சரி பார்ப்போம்” என்று கூறினான். அவனுக்கு தான் காதலித்த சாரதா, ஒரு கிழவனின் மனைவியாக இருப்பதைக் கண்ணாலே பார்த்துக்கொண்டிருக்க இஷ்டமில்லை. சாரதாவுக்கு உடம்பு சரியாகும் மட்டும் இருந்துவிட்டு, ஊர் போய்ச் சேருவது என்று முடிவு செய்தான். சாரதாவுக்கு ஒரு நாட்டு வைத்தியர் மருந்து கொடுத்து வந்தார். ஜூரம் குறையவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் ஜூரம் விட்டது. ஆனால் களைப்பும் இருமலும் அதிகமாக இருந்தன. அன்று மருந்து வாங்கிக்கொண்டு வர பரந்தாமனையே அனுப்பினார்கள். வைத்தியர், வீட்டை விசாரித்துக்கொண்டு வந்து சேர்ந்தான். வைத்தியர், சற்று வெறியில் இருந்தார். அவர் கொஞ்சம் ‘தண்ணீர்’ சாப்பிடும் பேர்வழி. எனவே, அவர் கிண்டலாகப் பேசினார். இது பரந்தாமனுக்குப் பிடிக்கவில்லை. “வாய்யா, வா! என்ன மருந்துக்கு வந்தாயா! யாருக்கு? சாரதாபாய்க்குத்தானே” என்று ஆரம்பத்திலேயே கிண்டலாகப் பேசினான். “ஆமாம் வைத்தியரே, பாவம் கலியாணமானதும் காய்ச்சல் இப்படி வந்துவிட்டது சாரதாவுக்கு” என்றான் பரந்தாமன். “ஏனப்பா வராது. ஏன் வராது சொல்லு? பெண்ணோ பதுமைபோல ஜிலுஜிலுன்னு இருக்கிறாள். பருவமோ ஜோரான பருவம். புருஷனாக வந்த ஆளோ ஒரு கிழம். இதைக்கண்ட பெண்ணுக்கு வருத்தம் இருக்காதா?” என்றான் வைத்தியன். “இதெல்லாம் நமக்கேன் வைத்தியரே. எல்லாம் ஆண்டவன் எழுதி வைத்தபடிதானே நடக்கும்” என்றான் பரந்தாமன். “ஆண்டவனை ஏனப்பா இந்த வேலைக்கு அழைக்கிறே. அவர் தன் வரைக்கும் சரியாகத்தான் செய்து வைத்துக்கொண்டார். பார்வதி பரமசிவன் ஜோடிக்கு என்ன குறை! லட்சுமி – விஷ்ணு இந்த ஜோடிதான் என்ன இலேசானதா, சாமிகளெல்லாம் பலே ஆசாமிகளப்பா, அவர்கள் பேரைச் சொல்லிக்கொண்டு நாம்தான் இப்படி இருக்கிறோம்” என்று வைத்தியன் சொன்னான். பரந்தாமனுக்கு இந்த வேடிக்கைப் பேச்சு சிரிப்பை உண்டாக்கியது. பரந்தாமன் சிரித்ததும், வைத்தியருக்கும் மேலே பேச்சு பொங்கிற்று. உள்ளேயும் ‘அது’ பொங்கிற்று! “கேளப்பா கேளு, இந்த மாதிரி ‘ஜோடி’ சேர்ந்தால் காரியம் ஒழுங்காக நடக்காது. என்னமோ, மாரியப்பபிள்ளைக்குப் பணம் இருக்கிறதே என்று ஆசைப்பட்டு, அந்த வேதவல்லி இந்த மாதிரி முடிச்சு போட்டுவிட்டாள். பணமா பெரிசு! நல்ல ஒய்யாரமான குட்டி சாரதா. அவளை ஓர் ஒடிந்து விழுந்து போகிற கிழவனுக்குப் பெண்டாக்கினால் அந்தக் குடும்பம் எப்படியாவது? உனக்குத் தெரியாது விஷயம். மாரியப்பபிள்ளை, ஆள் ரொம்ப முடுக்காகத்தான் இருப்பாரு. ஆனால், இந்த ‘பொம்பளை’ விஷயமென்றால் நாக்கிலே தண்ணி சொட்டும் அந்த ஆளுக்கு. ரொம்ப சபலம், ரொம்ப சபலம். எப்படியோ பார்த்து போட்டுட்டான் சரியான பெண்ணை, தன் வலையிலே” என்றான் வைத்தியன். பரந்தாமன் பார்த்தான் மேலே பேச்சு வளர ஆரம்பிக்கிறது. வைத்தியர் ரொம்ப வாயாடி என்பது தெரிந்துவிட்டது. “நேரமாயிற்று மருந்துகொடு வைத்தியரே, போகிறேன்” என்று கேட்டான். “மருந்து கொடுக்கிறேன். ஆனால் மருந்து மட்டும் வேலை செய்தா போதாது. அந்தப் பெண்ணுக்கு மனோவியாகூலம் இருக்கக்கூடாதே. அதுக்காக என்ன மருந்து தரமுடியும். நான் ஜூரம் தீர மருந்து தருவேன். குளிர்போக குளிகை கொடுப்பேன். காய்ச்சல் போக கஷாயம் தருவேன். ஆனால், சாரதாவின் மன வியாதியைப் போக்க நான் எந்த மருந்தைக் கொடுப்பது. தம்பீ, சரியான ஜோடி நீதான். சாரதாவுக்கு மருந்தும் நீயே” என்றான் வைத்தியன். ‘தன் சாரதாவைப் பற்றி இவ்வளவு கிண்டலாக ஒரு வைத்தியன் பேசுவதா – அதிலும் தன் எதிரிலே பேசுவதா’ என்று கோபம் வந்துவிட்டது பரந்தாமனுக்கு. ஓங்கி அறைந்தான் வைத்தியனை. “படவா மருந்து கேட்க வந்தால் வம்புதும்புமா பேசுகிறாய். யார் என்று என்னை நினைத்தாய்” என்று திட்டினான். வைத்தியன், வெறி தெளிந்து “அடே தம்பி நான் வேடிக்கை பேசினேன் கோபிக்காதே. இந்தா மருந்து” என்று சொல்லிவிட்டு மருந்து கொடுக்கச் சென்றான். வைத்தியனை, கோபத்திலே, பரந்தாமன் அடித்துவிட்டானே தவிர அவனுக்கு நன்றாகத் தெரியும் வைத்தியன் சொன்னதிலே துளிகூட தவறு இல்லை என்று. சாரதாவின் நோய் மன வியாதிதான் என்பதிலே சந்தேகமில்லை. அது அவனுக்குத் தெரிந்ததுதான். பிறர் சொல்லும்போதுதான் கோபம் வருகிறது. அதிலும் சாரதாவைக் கிண்டல் செய்வதுபோலக் காணப்படவேதான் கோபம் மிக அதிகமாகிவிட்டது ஆழ்ந்து யோசிக்கும்போது, அந்த வைத்தியர் மட்டுமல்ல, ஊரில் யாரும் அப்படித்தானே பேசுவார்கள். நேரில் பேச பயந்துகொண்டு இருந்துவிட்டாலும் மறைவில் பேசும்போது இதைப்பற்றிக் கேலியாகவும், கிண்டலாகவும்தானே பேசுவார்கள் என்று எண்ணிய பரந்தாமன், ஆஹா! இந்த அழகி சாரதாவுக்கு இப்படிப்பட்ட கதி வந்ததே, ஊர் முழுவதும் இனி இவளைப் பற்றித்தானே பேசுவார்கள். என்னிடம் வைத்தியன் கிண்டலாகப் பேசியதே எனக்குக் கஷ்டமாக இருந்ததே. சாரதாவின் காதில், இப்படிப்பட்ட கேலி வார்த்தைகள் விழுந்தால், மனம் என்ன பாடுபடுமோ. பாவம், எங்கெங்கு இதே வேளையில் கிழவனை மணந்தாள் என்று கேலி செய்யப்படுகிறதோ. எத்தனை கணவன்மார்கள், தமது மனைவியிடம், “நான் என்ன, மாரியப்பபிள்ளையா?” என்று கிண்டலாகப் பேசுகிறார்களோ! எத்தனை உணர்ச்சியுள்ள, பெண்கள், “நான் குளத்தில், குட்டையில் விழுந்தாலும் விழுவேன், இப்படிப்பட்ட கிழவனைக் கலியாணம் செய்துகொள்ள மாட்டேன்” என்று பேசுகின்றனரோ, சேச்சே! எவ்வளவு கேலி பிறக்கும், கிண்டல் நடக்கும். இவ்வளவையும் என் பஞ்சவர்ணக்கிளி எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும். நான் அவள் கருத்தைப் போக்க என்ன செய்ய முடியும். எனக்கோ, அவள் பாட்டி! என்று எண்ணிப் பரந்தாமன் வாட்டத்துடன் வீடுவந்து, வேதவல்லியிடம் மருந்தைக் கொடுத்தான். “தம்பி! நீயே, இந்த வேளை, உன் கையாலேயே மருந்தைக் கொடு. நீ கொடுக்கிற வேளையாவது அவளுக்கு உடம்பு குணமாகட்டும்” என்று கூற, மருந்து கொடுக்க பரந்தாமன், சாரதா படுத்துக்கொண்டிருந்த அறைக்குச் சென்றான். நல்ல அழகான பட்டுமெத்தை! அதன்மீது சாரதா ஒரு புறமாகச் சாய்ந்துகொண்டு படுத்திருந்தாள். அவள் படுத்துக்கொண்டிருந்த பக்கமாக. தலையணை, சிறிதளவு நனைந்து கிடந்தது, கண்ணீரால்! “சாரதா! கண்ணே இதோ இப்படித் திரும்பு. இதோ பார், பரந்தாமன், மருந்து எடுத்து வந்திருக்கிறார்” என்று வேதவல்லி கூறிக்கொண்டே, சாரதாவை எழுப்பினாள். சாரதா, தாயின் குரலைக்கேட்டு திரும்பினாள். கண்களைத் திறந்தாள். பரந்தாமன் மருந்துடன் எதிரில் நிற்பதைக் கண்டாள். அந்த ஒரு விநாடிப் பார்வை சாரதாவின் உள்ளத்தில் புரண்டுகொண்டிருந்த கருத்துக்கள் அத்தனையையும் காட்டிவிட்டது. கைநடுக்கத்துடன் மருந்துக் கோப்பையைப் பிடித்துக்கொண்டு பரந்தாமன் நின்றான். “வேதம்! வேதம்” என்று வெளியே வேதவல்லியின் புருஷர் கூப்பிடும் சத்தம் கேட்டது. வேதவல்லி, “இதே வந்தேன்” என்று கூறிக்கொண்டே வெளியே போனாள். காதல் நோயால் கட்டில்மீது படுத்துள்ள மங்கையும் அவளைக் காதலித்துக் கிடைக்கப் பெறாது வாடிய பரந்தாமன், கையில் மருந்துடனும் இருவருமே அங்கு இருந்தனர். 6 அந்த அறை ஒரு தனி உலகம்! அங்கு இன்பத்திற்குத் தடை இல்லை! கட்டு இல்லை! காவல் இல்லை! பெண்டுகொண்டேன் என அதிகாரம் செலுத்த மாரியப்பபிள்ளை இல்லை. மகளே, என்னை வேலை செய்கிறாய் என்று மிரட்ட வேதவல்லி இல்லை. கனைத்து மிரட்ட சாரதாவின் தகப்பன் இல்லை. காவலற்ற, கட்டற்ற உலகம்! காதலர் இருவர் மட்டுமே இருந்த உலகம். “மருந்தைக் குடி, சாரதா!”என்றான் பரந்தாமன். சாரதா வாயைக் கொஞ்சமாகத் திறந்தாள். மருந்து நெடியினால் முகத்தைச் சுளித்தாள். கட்டில் ஓரத்தில் உட்கார்ந்தான் பரந்தாமன். “சாரதா! திற வாயை. இதோ மருந்து, குடித்துவிடு” என்று மருந்தை ஊற்றிவிட்டு, வாயைத் துடைத்தான். அந்தத் ‘தீண்டுதல்’ சாரதா அதுவரை கண்டறியாத இன்பத்தை அவளுக்குத் தந்தது. முகத்திலே ஒருவித ஜொலிப்பு. கண்டுகொண்டான் பரந்தாமன். குனிந்து அவளுடைய கொஞ்சும் உதடுகளில் ஒரு முத்தம் கொடுத்தான். “ஆஹா! என்ன வேலை செய்தாயடி கள்ளி! என்ன வேலையடா செய்தாய் மடையா” என்று கர்ஜித்தார் மாரியப்பபிள்ளை வாயிற்படியில் நின்றுகொண்டு. ‘மடையா!’ என்ற சொல் காதில் விழுந்த உடனே, பரந்தாமன், காதல் உலகை விட்டுச் சரேலெனக் கிளம்பி, சாதாரண உலகுக்கு வந்தான். மணமான சாரதாவை, கணவன் காணும்படி, முத்தமிட்டதும் பேரன் செய்த செயலைப் பாட்டன் கண்டதும் அவள் நினைவிற்கு வந்தது. அவனோ, சாரதாவோ, மேற்கொண்டு எண்ணவோ, எழவோ நேரமில்லை! “மடையா!” என்று கர்ஜித்துக்கொண்டே மாரியப்பபிள்ளை, எருது கோபத்தில் பாய்வதுபோல, பரந்தாமனின் மீது பாய்ந்தார். அவன் கழுத்தைப் பிடித்தார். அவன் கண்கள் சிவந்தன. மீசை துடித்தது. கைகால்கள் வெடவெடத்தன. மாரியப்பபிள்ளையின் பிடியினால் பரந்தாமனின் கண்கள் பிதுங்கி வெளிவந்துவிடுவது போலாகிவிட்டது. பரபரவெனப் பரந்தாமனை இழுத்து எச்சரித்தார். மாரியப்பபிள்ளையின் கரத்துக்குப் பரந்தாமன் எம்மாத்திரம்! அடியறுத்த மரம்போல, சுருண்டு சுவரில் மோதிக்கொண்டான் பரந்தாமன், குபீரென மண்டையிலிருந்து இரத்தம் பெருகிற்று. “ஐயோ!” என்று ஈனக்குரலில் அலறினாள் சாரதா! “என்ன! என்ன!” என்று பரபரப்புடன் கேட்டுக்கொண்டே வேதவல்லியும் அவள் புருஷனும் கருப்பையாவும் வந்தனர். பரந்தாமன் இரத்தம் ஒழுக நிற்பதையும் சாரதா, கண்ணீர் பெருக நடுங்குவதையும் கோபத்தின் உருவமென மாரியப்பபிள்ளை உருமிக்கொண்டிருப்பதையும் கண்டவுடன் வந்தவர்களுக்கு விஷயம் ஒருவாறு விளங்கிற்று. “நடடா! நட! உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் பாதகா! நட. இங்கு நிற்காதே” என்று மாரியப்பபிள்ளை கூறிக்கொண்டே பரந்தாமனின் தலைமயிரைப் பிடித்து இழுத்து அறையைவிட்டு வெளியேகொண்டு வந்தார். “எஜமானருக்குத்தான் சொல்கிறேன். இவ்வளவு உரக்கக் கூவாதீர்கள். அண்டை அயலார் காதில் கேட்கப் போகிறது” என்று கருப்பையா கூறினான். “கேட்பதென்ன, செய்வதென்ன, என் போறாத வேளை. ஒரு வெட்கங்கெட்ட சிறுக்கியைத் தேடிப்பிடித்துக் கட்டிக்கொண்டேன். என் சோறு தின்றுவிட்டு சோரம் செய்கிறாள் இந்தக் கள்ளி. இன்று இருவரும் கொலை! ஆமாம்! விடமாட்டேன்! எடுத்துவா, அரிவாளை இரண்டு துண்டாக இந்தப் பயலையும் துண்டுத் துண்டாக அந்தக் கள்ளியையும் வெட்டிப் போடுகிறேன். விடு, கருப்பையா கையைவிடு. டே கிழ ராஸ்கல்! நல்ல பெண்டுடா! என் தலைக்குத் தீம்பாகக்கொண்டு வந்தாய். நிற்காதே என் எதிரே யாரும் நிற்க வேண்டாம் யார் நின்றாலும் உதை, குத்து, வெட்டு, கொலை ஆமாம்! விடமாட்டேன்” என்று மாரியப்பபிள்ளை இடி முழக்கம் போலக் கத்தினார். அவர் ஆயுளில், அதைப்போல, அவர் கத்தியதில்லை. காரியஸ்தன் கருப்பையா விடவில்லை அவர் கரங்களை. “எஜமான்! எஜமான் சற்று என் பேச்சைக் கேளுங்கள். ஊர், நாடு தெரிந்தால் நமக்குத்தானே இழிவு. டே, பரந்தாமா போய்விடுடா வெளியே. வேதம்மா நீங்களும் போங்கோ” என்று மிகச் சாமர்த்தியமாகக் கூறிக்கொண்டே துடித்துக்கொண்டு கொலைக்கும் தயாராக நின்றுகொண்டிருந்த மாரியப்பபிள்ளையை மெதுவாகத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டார். மாரியப்பபிள்ளை போன உடனே வேதத்தின் புருஷர், பரந்தாமனை நையப் புடைத்து, “பாவி! ஒரு குடும்பத்தின் வாயிலே மண் போட்டாயே!” என்று அழுதார். “புறப்படடி! போக்கிரிச் சிரிக்கி, போதும் உன்னாலே எனக்கு வந்த பவிசு” என்று சாரதாவைக் கட்டிலிலிருந்து பிடித்து இழுத்து மூவருமாகத் தமது வீடு போய்ச் சேர்ந்தனர். 7 பரந்தாமன், இன்னது செய்வதென்று தோன்றாது ஊர்க்கோடியில் இருந்த பாழடைந்த மண்டபத்தில் புகுந்துகொண்டான் அன்றிரவு. ஊரில் லேசாக வதந்தி பரவிற்று. “சாரதா வீட்டாருக்கும் அவள் கணவனுக்கும் பெருத்த தகராறாம். சாரதாவைக் கணவன் வீட்டைவிட்டு துரத்திவிட்டார்களாம்” என்று பேசிக்கொண்டனர். வீடு சென்ற சாரதா, நடந்த காட்சிகளால் நாடி தளர்ந்து சோர்ந்து படுத்துவிட்டாள். ஜூரம் அதிகரித்துவிட்டது. மருந்து கிடையாது. பக்கத்தில் உதவிக்கு யாரும் கிடையாது. அவள் பக்கம் போனால் உன் பற்கள் உதிர்ந்துவிடும் இடுப்பு நொறுங்கிவிடும் என்று வேதத்துக்கு அவள் கணவன் உத்திரவு. எனவே தாலிகட்டிய புருஷன் தோட்டத்தில் தவிக்க, காதலித்த கட்டழகன் மண்டை உடைபட்டு, பாழ்மண்டபத்தில் பதுங்கிக் கிடக்க, பாவை சாரதா படுக்கையில் ஸமரணையற்றுக் கிடந்தாள். 8 இரவு 12 மணிக்குமேல், மெல்ல மெல்ல, நாலைந்து பேர், பரந்தாமன் படுத்திருந்த மண்டபத்தில் வந்து பதுங்கினர். அவர்களின் நடை உடை பாவனைகள் பரந்தாமனுக்கு சந்தேகத்தைக் கொடுத்தது. வந்தவர்களிலே ஒருவன், மெதுவாக பரந்தாமன் அருகே வந்து தீக்குச்சியைக் கொளுத்தி முகத்தைப் பார்த்தான். பரந்தாமன் கண்களை இறுக மூடிக்கொண்டிருந்தான். “எதுவோ, பரதேசி கட்டைபோலிருக்கு” என்று சோதித்த பேர்வழி மற்றவர்களுக்குக் கூற, வந்தவர்கள் மூலையில் உட்கார்ந்கொண்டு கஞ்சா பிடித்துக்கொண்டிருந்தனர். அந்த நெடி தாங்கமாட்டாது பரந்தாமன் இருமினான். வந்தவர்கள் குசுகுசுவெனப் பேசினார். அதே நேரத்தில், “டார்ச் லைட்” தெரிந்தது. “ஆஹா! மோசம் போனோமடா முத்தா. சின்ன மூட்டையை மடியிலே வைத்துக்கொள். பெரிசை அந்தப் பயல் பக்கத்திலே போட்டுடு, புறப்படு பின்பக்கமாக” என்று கூறிக்கொண்டே ஒருவன், மற்றவர்களை அழைத்துக்கொண்டு, இடித்திருந்த சுவரை ஏறிக்குதித்து ஓடினான். பரந்தாமன் பாடு பெருத்த பயமாகிவிட்டது. ஓடினவர்கள் கள்ளர்கள் என்பதும் சற்றுத் தொலைவிலே டார்ச் லைட் தெரிவதும் போலீசாரின் ஊதுகுழல் சத்தமும் கேட்டதும் ‘புலியிடமிருந்து தப்பிப் பூதத்திடம் சிக்கி விட்டோம்’ என்று பயந்து என்ன செய்வதெனத் தெரியாது திகைத்தான். கள்ளர்களோ ஒரு மூட்டையைத் தன் பக்கத்திலே போட்டுவிட்டுப் போயினர். அது என்ன என்றுகூட பார்க்க நேரமில்லை. டார்ச் லைட் வர வர கிட்டே நெருங்கிக்கொண்டே வரவே வேறு மார்க்கமின்றித் திருடர்கள் சுவரேறிக் குதித்ததைப் போலவே தானும் குதித்து ஓடினான். கள்ளர்கள் தனக்கு முன்னால் ஓடுவதைக் கண்டான். அவர்கள் சொல்லும் பாதை வழியே சென்றான். அது ஓர் அடர்ந்த சவுக்கு மரத்தோப்பில் போய் முடிந்தது. கள்ளர்கள் எப்படியோ புகுந்து போய்விட்டனர். பரந்தாமன் சவுக்குத் தோப்பில் சிக்கிக்கொண்டு விழித்தான். அதுவரையில் போலீசாரிடம் சிக்காது தப்பினதே போதுமென்று திருப்தி கொண்டான். தன் நிலைமையைப் பற்றிச் சிறிதளவு எண்ணினான். அவனையும் அறியாமல் அவனுக்குச் சிரிப்பு வந்தது. “என் பாட்டிக்கு ஜுரம். நான் அவளுக்கு மருந்து கொடுப்பதைவிட்டு முத்தம் கொடுப்பது. பாட்டன் என் மண்டையை உடைப்பது, அவருக்குப் பயந்து, பாழும் மண்டபத்துக்கு வந்தால் கள்ளர்கள் சேருவது, அவர்கள் கிடக்கட்டும் என்று இருந்தால் போலீசார் துரத்துவது, அதனைக் கண்டு அலறி ஓடிவந்தால் சவுக்குத் தோப்பில் சிக்கிக்கொள்வது, நரி ஊளைவிடுவதைக் கேட்க நல்ல பிழைப்பு என் பிழைப்பு!” என்று எண்ணினான். சவுக்கு மரத்திலிருந்து ஒரு சிறு கிளையை எடுத்துத் தயாராக வைத்துக்கொண்டான் கையில். ஏனெனில், தூரத்தில் நரிகள் ஊளையிடுவது கேட்டது அவை வந்துவிட்டால் என்ன செய்வது என்றுதான். சவுக்கு மலார் வைத்துக்கொண்டு உட்கார்ந்தபடி இருந்தான். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவன் கண்கள் தானாக மூடிக்கொண்டன. அவன் தூங்கிவிட்டான் அலுத்து. 9 அதே நேரத்தில் கணவனுக்குத் தெரியாமல், வேதவல்லி மெதுவாக எழுந்து சாரதா படுத்திருந்த அறைக்குச் சென்றாள். சாரதாவின் நெற்றியிலும், கழுத்திலும் வியர்வை முத்து முத்தாகச் சொட்டிக்கொண்டிருந்தது. ஜாக்கெட் பூராவும் வியர்வையில் நனைந்துவிட்டது. ஜுரம் அடித்த வேகம் குறைந்து வியர்வை பொழிய ஆரம்பித்திருப்பதைக் கண்ட வேதம், தன் மகளின் பரிதாபத்தை எண்ணி கண்ணீர் பெருகிக்கொண்டே தன் முந்தானையால் சாரதாவின் முகத்தையும் கழுத்தையும் துடைத்தாள். சாரதா கண்களைத் திறந்தாள். பேச நாவெடுத்தாள். முடியவில்லை. நெஞ்சு உலர்ந்து போயிருந்தது. உதடு கருகிவிட்டிருந்தது ஓடோடிச் சென்று கொஞ்சம் வெந்நீர் எடுத்து வந்தாள். அந்நேரத்தில் அதுதான் கிடைத்தது. அதை ஒரு முழுங்கு சாரதாவுக்குக் குடிப்பாட்டினாள். சாரதாவுக்குப் பாதி உயிர் வந்தது. தன்னால் வந்த வினை இதுவெனத் தெரியும் சாரதாவுக்கு. ஆகவே, அவள் தாயிடம் ஏதும் பேசவில்லை. தாயும் ஒன்றும் கேட்கவில்லை. வேறு இரவிக்கையைப் போட்டுக்கொண்டாள். ‘என் பொன்னே! உன் பொல்லாத வேளை இப்படிப் புத்திகொடுத்ததடி கண்ணே’ என்று அழுதாள் வேதம். சாரதா படுக்கையில் சாய்ந்துவிட்டாள். தாயின் கரத்தைப் பற்றிக்கொண்டு, “அம்மா! நான் என்ன செய்வேன் நான் எதை அறிவேன், என் நிலை உனக்கு என்ன தெரியும்” என்று மெல்லிய குரலில் கூறினாள். தாய் தன் மகளைத் தொட்டுப் பார்த்துவிட்டு, “காலையில் ஜுரம் விட்டுவிடும், இப்போதே வியர்வை பிடிக்க ஆரம்பித்து விட்டது” என்று கூறினாள். “என் ஜுரம் என்னைக் கொல்லாதா! பாவி நானேன் இனியும் உயிருடன் இருக்கவேண்டும். ஊரார் பழிக்க உற்றார் நகைக்க, கொண்டவர் கோபிக்க, பெற்றவர் கைவிட நான் ஏன் இன்னமும் இருக்கவேண்டும், ஐயோ! அம்மா! நான் மாரி கோவிலில் கண்ட நாள்முதல் அவரை மறக்கவில்லையே. எனக்கு அவர்தானே மணவாளான் என நான் என் மனத்தில் கொண்டேன். என்னை அவருக்கே நான் அன்றே அர்ப்பணம் செய்துவிட்டேனே. அவருக்குச் சொந்தமான உதட்டை நீங்கள் வேறொருவருக்கு விற்கத் துணிந்தீர்கள். அவர் கேட்டார் அவர் பொருளை. நான் தந்தேன். அவ்வளவுதான். உலகம் இதை உணராது. உலகம் பழிக்கத்தான் பழிக்கும். என்னைப் பெற்றதால் நீங்கள் என் இப்பாடுபடவேண்டும் அந்தோ மாரிமாயி, மகேஸ்வரி, நீ சக்தி வாய்ந்தவளாக இருந்தால் என்னை அழைத்துக்கொள். நான் உயிருடன் இரேன், இரேன், இரேன்” என்று கூறி அழுதாள். 10 நாட்கள் பல கடந்தன. வாரங்கள் உருண்டன. மாதங்களும் சென்றன. சாரதாவின் ஜுரம் போய்விட்டது. ஆனால் மனோ வியாதி நீங்கவில்லை. அவளைக் கணவன் வீட்டுக்கு அழைத்துக் கொள்ளவில்லை. பரந்தாமன் மனம் உடைந்து தொழிலைவிட்டு பரதேசியாகி ஊரூராகச் சுற்றினான். சாரதாவின் தாயார், தனது மருமகப்பிள்ளையைச் சரிப்படுத்த எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. இந்நிலையிலே, சாரதாவைப்பற்றி ஊரிலே, பழித்தும் இழித்தும் பேசத் தொடங்கினார்கள். இதுவும் அவள் காதில் விழுந்தது. அவள் கவலை அதிகமாகி விட்டது. கடைசியில், காரியஸ்தன் கருப்பையாதான் கைகொடுத்து உதவினான். மெல்ல மெல்ல, மந்திரம் ஜெபிப்பதுபோல ஜெபித்து, “ஏதோ சிறுபிள்ளைத்தனத்தில் துடுக்குத்தனத்தில் நடந்துவிட்டது. இனி ஒன்றும் நடவாது. சாரதாவை அவள் வீட்டிலேயே விட்டு வைத்தால் ஊரார் ஒரு மாதிரியாகப் பேசுகிறார்கள்” என்று மெதுவாக சாரதாவின் புருஷனிடம் கூறினான். சாரதாவின் கணவன் உள்ளபடி வருந்தினான். வருத்தம்போக மருந்து தேடினான். அவனுக்கு அபின் தின்னும் பழக்கம் கற்றுக் கொடுக்கப்பட்டுவிட்டது! மாலையில் அபினைத் தின்றுவிட்டு, மயங்கி விழுந்துவிடுவான். இரவுக் காலத்தில் கவலையற்றுக் கிடக்க, அபினே அவனுக்கு உதவிற்று. கருப்பையாவின் முயற்சி கொஞ்சம் கொஞ்சமாகப் பலிக்க ஆரம்பித்தது. ஊரில் திருவிழா வந்தது. திருவிழாக் காலத்தில் உறவினர்கள் வருவார்கள். அந்த நேரத்தில் சாரதா வீட்டில் இல்லாவிட்டால், கேலியாகப் பேசுவார்கள் என்று கூறினான். “ஆனால் நீயே போய் அவளை அழைத்து வா” என்று கூறினான். காரியஸ்தன் கருப்பையா, சாரதாவை அழைத்து வந்து வீட்டில் சேர்த்தான். சாரதாவும் மிக அடக்க ஒடுக்கமாகப் பணிவிடைகள் செய்துகொண்டு வந்தாள். புருஷனுக்கு மனைவி செய்ய வேண்டிய முறையில் துளியும் வழுவாது நடந்தாள். சாரதா வீடு புகுந்ததும் வீட்டிற்கே ஒரு புது ஜோதி வந்துவிட்டது. சமையல் வேலையிலே ஒரு புது ரகம். வீடு வெகுசுத்தம். தோட்டம் மிக அலங்காரமாக இருந்தது. மாடு கன்றுகள் நன்கு பராமரிக்கப்பட்டன. பண்டங்களைப் பாழாக்குவதோ, வீட்டு வேலையாட்களிடம் வீண் வம்பு வளர்ப்பதோ சாரதாவின் சுபாவத்திலேயே கிடையாது. சாரதாவின் நடவடிக்கையைக் கண்ட அவள் புருஷன், ‘இவ்வளவு நல்ல சுபாவமுள்ள பெண், அன்று ஏன் அவ்விதமான துடுக்குத்தனம் செய்தாள்? எவ்வளவு அடக்கம், எவ்வளவு பணிவு, நான் நின்றால் உட்காரமாட்டேனென்கிறாள். ஒரு குரல் கூப்பிட்டதும், ஓடோடி வருகிறாள். வீட்டுக் காரியமோ, மிக மிக ஒழுங்காகச் செய்கிறாள். இப்படிப்பட்டவள் அந்தப் பாவியின் துடுக்குத்தனத்தால் கெட்டாளே தவிர, இவள் சுபாவத்தில் நல்லவள்தான்’ என்று எண்ணினான். ஆனால் சாரதா வெறும் யந்திரமாகத்தான் இருந்தாள். வேலையை ஒழுங்காகச் செய்தாள். ஆனால் பற்றோ, பாசமோ இன்றி வாழ்ந்தாள். வாழ்க்கையில் அவளுக்கு இன்பம் என்பதே தோன்றவில்லை. புருஷனுக்கு அடங்கி நடப்பதுதான் மனைவியின் கடமை என்பதை உணர்ந்து அவ்விதம் நடந்தாளே தவிர, புருஷனிடம் அவளுக்கு அன்பு எழவில்லை. பயம் இருந்தது! மதிப்பு இருந்தது! கடமையில் கவலை இருந்தது! காதல் மட்டும் இல்லை! காதலைத்தான் அந்தக் கள்ளன் பரந்தாமன் கொள்ளைகொண்டு போய்விட்டானே! அவள் தனது இருதயத்தை ஒரு முத்தத்துக்காக அவனுக்குத் தத்தம் செய்துவிட்டாள். சிரித்து விளையாடி சிங்காரமாக வாழ்ந்த சாரதா போய்விட்டாள். இந்த சாரதா வேறு பயந்து வாழும் பாவை. இவள் உள்ளத்திலே காதல் இல்லை. எனவே வாழ்க்கையில் ரசம் இல்லை. இதை இவள் கணவன் உணரவில்லை. எவ்வளவுக்கெவ்வளவு அடக்கமாக இருக்கிறாளோ அவ்வளவு அன்பு என்று எண்ணிக்கொண்டான். உலகில் இதுதானே பெரும்பாலும் பெண்கள் கடமை என்றும் புருஷனுக்கும் பெண்டுக்கும் இருக்க வேண்டிய அன்புமுறை என்றும் கருதப்பட்டு வருகிறது. “பெண் மகா நல்லவள் உத்தமி. நாலுபேர் எதிரே வரமாட்டாள். நாத்தி மாமி எதிரே சிரிக்கமாட்டாள். சமையற்கட்டைவிட்டு வெளிவரமாட்டாள். புருஷனைக் கண்டால் அடக்கம். உள்ளே போய்விடுவாள். கண்டபடி பேசிக்கொண்டிருக்க மாட்டாள்” என்று பெண்ணின் பெருமையைப் பற்றி பேசப்படுவதுண்டு. அந்தப் பேதைகள், வாழ்க்கையில் ரசமற்ற சக்கைகளாக இருப்பதை உணருவதில்லை. வெறும் இதயந்திரங்களாக, குறிப்பிட்ட வேலைகளை, குறித்தபடி செய்து முடிக்கும், குடும்ப இயந்திரம் அந்தப் பெண்கள், ஆனால் காதல் வாழ்க்கைக்கு அதுவல்ல மார்க்கம். செடியில் மலர் சிங்காரமாக இருக்கிறது. அதனைப் பறித்துக் கசக்கினால் கெடும். வண்டு ஆனந்தமாக ரீங்காரம் செய்கிறது! அதனைப் பிடித்துப் பேழையிலிட்டால் கீதம் கிளம்பாது. கிளி கூண்டிலிருக்கும்போது, கொஞ்சுவதாகக் கூறுதல் நமது மயக்கமே தவிர வேறில்லை. கிள்ளை கொஞ்ச வேண்டுமானால் கோவைக் கனியுள்ள தோப்பிலே போய்க் காணவேண்டும். மழலைச் சொல் இன்பத்தை மற்றதில் காணமுடியாது. அதுபோன்ற இயற்கையாக எழும் காதல், தடைப்படுத்தப்படாமல், அதற்குச் சுவர் போடப்படாமல், அது தாண்டவமாடும்போது கண்டால் அதன் பெருமையைக் காண முடியுமே தவிர வேறுவிதத்தில் காண முடியாது. நமது குடும்பப் பெண்களில் எவ்வளவோ பேர் தங்கள் மனவிகாரத்தை மாற்ற, முகத்தில் மஞ்சள் பூசி குங்குமமிட்டு வாழுகின்றனர். எத்தனை பெண்கள், வாழ்க்கையின் இன்பம் என்றால் சமையற்கட்டில் அதிகாரம் செலுத்துவதும் கட்டியலறையில் விளக்கேற்றுவதும் கலர் புடவை, கல்கத்தா வளையல், மங்களூர் குங்குமம், மயில் கழுத்து ஜாக்கெட் ஆகியவற்றைப் பற்றிப் புருஷனிடம் பேசுவதும் தொட்டிலாட்டுவதும்தான் என்று கருதிக்கொண்டு வாழுகின்றனர். ரசமில்லாத வாழ்க்கை, பாவம்! அப்படிப்பட்ட வாழ்க்கைதான் சாரதாவுக்கு. புருஷனோ அபின் தின்று ஆனந்தமாக இருந்தான். இந்நிலையில்தான் காரியஸ்தான் கருப்பையாவுக்கு சாரதாவின்மீது கண் பாய்ந்தது. சாரதாவின் தற்கால வாழ்வுக்கு, தானே காரணமென்பது அவனுக்குத் தெரியும். அதுமட்டுமல்ல! சாரதாவைத் தன் வலையில் போடுவதும் சுலபமென எண்ணினான். நாளாவட்டத்தில், பேச்சிலும் நடத்தையிலும் தன் எண்ணத்தை சாரதாவுக்கு உணர்த்த ஆரம்பித்தான். தாகமில்லாத நேரத்திலும் ஒரு தம்ளர் தண்ணீர் வேண்டும் என்பான். ஓய்வு கிடைக்கும் நேரத்தில் வலியச் சென்று பேசுவான். விதவிதமான சேலை வகைகளைப் பற்றிப் பேசுவான். சாரதாவின் அழகை அவர்கள் புகழ்ந்தார்கள், இவர்கள் புகழ்ந்தார்கள் என்று கூறுவான். “உன் அழகைக்காண இரு கண்கள் போதாதோ” என்று பாடுவான். சாரதாவைக் கண்டதும் ஒரு புன்சிரிப்பு. இவனுடைய சேட்டைகள் எதுவும், சாரதாவின் புருஷனுக்குத் தெரியாது. சாரதா உணர்ந்து கொள்வதற்கே, சில நாட்கள் பிடித்தன. உணர்ந்த பிறகு திகைத்தாள். விஷயத்தை வெளியில் சொல்லவோ பயமாக இருந்தது. ‘மகா யோக்கியஸ்திதான் போடி! கலியாணமான உடனே, எவனையோ கட்டி முத்தமிட்டாய். பாவம் அந்தக் காரியஸ்தன் உனக்காக எவ்வளவோ பாடுபட்டு கணவனுடன் சேர்த்து வைத்தான். இப்போது அவன்மீது பழி போடுகிறாய்” என்று தன்னையே தூற்றுவார்கள் என்று சாரதா எண்ணினாள். அதுமட்டுமா! காரியஸ்தனைக் கோபித்துக்கொண்டால், தன் கணவனிடம் ஏதாவது கூறி, அவர் மனத்தைக் கெடுத்துவிடுவான் என்று பயந்தாள். இந்தப் பயத்தை சாரதாவின் தாய் அதிகமாக வளர்த்துவிட்டாள். எனவே, கருப்பையாவின் சேட்டையை முளையிலேயே கிள்ளிவிட சாரதாவால் முடியவில்லை. கருப்பையா பாடு கொண்டாட்டமாகிவிட்டது. சரி! சரியான குட்டி கிடைத்துவிட்டாள் என்று அவன் தீர்மானித்துவிட்டான். அவனுடைய வெறி விநாடிக்கு விநாடி வளர்ந்தது. “சாரதா நம்மைக் கவனிக்க மாட்டாயே, தயவு இல்லையே” என்று கேட்பான், சிரித்துக்கொண்டே. “என்ன வேண்டும் கருப்பையா சொல்லேன்” என்பாள் சாரதா. கருப்பையா பெருமூச்சுவிடுவான். “கொஞ்சம் தாகந்தீர, உன் கையால் தண்ணீர் கொடம்மா” என்பான். சாரதா விசாரத்துடன் நீர் தருவாள். “ஏனம்மா முகம் வாட்டமாக இருக்கிறது” என்பான். “ஒன்றுமில்லையே” என்று கூறுவாள் சாரதா. “அம்மா! நீ முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டால், என் மனம் படாதபாடு படுகிறது” என்று தன் அக்கறையைக் காட்டுவான் காரியஸ்தன். “உன்னுடைய சிவப்பு மேனிக்கு அந்த நீலப்புடவை கட்டிக்கொண்டு, வெள்ளை ஜாக்கெட் போட்டுக்கொண்டு, ஜவ்வாது பொட்டு வைத்து நிற்கும்போது, அசல் ரவிவர்மா ஓவியம் போல இருக்கிறது என் கண்களுக்கு” என்பான். இவ்விதமாக, கருப்பையா, மிக விரைவில் முன்னேறிக்கொண்டே போனான். ஆனால் ஜாடை செய்து, சாரதாவைப் பிடிக்க அதிக நாட்களாகும் என்பதைத் தெரிந்துகொண்டு, வாய் திறந்து கேட்டுவிடுவதே மேல் என எண்ணினான் அதற்கும் ஒரு சமயம் வாய்த்தது. 11 முதலாளி பக்கத்து ஊருக்குப் போனார். ஒரு பாகப் பிரிவினை மத்தியஸ்த்துக்காக, வர இரண்டு நாட்கள் பிடிக்கும்; அந்த இரண்டு நாட்களில் காரியத்தை எப்படியாவது முடித்துவிடத் தீர்மானித்துவிட்டான், கருப்பையா. மாலை நேரம். தோட்டத்திலே சாரதா பூப்பறித்துக்கொண்டிருந்த சமயத்தில் கருப்பையா அங்குப் போனான். சாரதாவுடன் பேச ஆரம்பித்தான். சற்றுத் தைரியமாகவே, “சாரதா நீ நல்ல சாமர்த்தியசாலி.” “நானா! உம்! என்ன சாமர்த்தியம் கருப்பையா என் சாமர்த்தியம் தெரியாதா, எட்டு மாதம் சீந்துவாரற்றுக் கிடந்தவள் தானே.” “சீந்துவாரற்றா! அப்படிச் சொல்லாதே, உன் அழகைக் கண்டால் அண்ட சராசரத்தில் யார்தான் சொக்கிவிட மாட்டார்கள்.” “போ; கருப்பையா, உனக்கு எப்போதும் கேலிதான்” “கேலியா இது? நீ கண்ணாடி எடுத்து உன் முகத்தைக் கண்டதில்லையா?” “சரி! சரி! நாடகம்போல் நடக்கிறதே” “ஆமாம்! நாடகந்தான். காதல் நாடகம்.” “இது என்ன விபரீதப் பேச்சு கருப்பையா, யார் காதிலாவது விழப்போகிறது.” “நான் சற்று முன்ஜாக்கிரதை உள்ளவன். தோட்டக்கார முனியனை, நாலு மணிக்கே அனுப்பிவிட்டேன் கடைக்கு.” “நீ ஏதோ தப்பு எண்ணம் கொண்டிருக்கிறாய், கருப்பையா தயவுசெய்து அதனை விட்டுவிடு. நான் அப்படிப்பட்டவளல்ல” “சாரதா! நான் இனி மறைக்கப் போவதில்லை உன்னை எப்படியாவது கூடவேண்டுமென நான் தவங்கிடந்து வந்தேன். இன்றுதான் தக்க சமயம்.” என்று கூறிக்கொண்டே சாரதாவின் கரத்தைப் பிடித்துக் கொண்டான். சாரதா திமிறினாள். பூக்கூடை கீழே விழுந்தது. மலர்கள் மண்மீது சிதறின. சாரதாவின் கண்களிலே நீர் பெருகிற்று, கருப்பையாவின் கரங்கள் அவள் உடலைக் கட்டிப் பிடித்துக்கொண்டன. அவனுடைய உதடுகள், அவள் கன்னத்தில் பதிந்தன. அந்த முத்தங்களின் ஓசை கேட்டு, பறவைகள் பறந்தன. சாரதா, கருப்பையாவிடம் சிக்கி விட்டாள். “சாரதா, ஜென்மம் இப்போதுதான் சாபல்யமாயிற்று. அடி பைத்தியமே; ஏன் இவ்வளவு நடுங்குகிறாய், பயப்படாதே. இந்தக் கருப்பையாவைச் சாமான்யமாக எண்ணாதே. நான், இந்த இன்பத்துக்காக எவ்வளவு பாடுபட்டேன். எத்தனை நாள் காத்துக்கொண்டிருந்தேன் தெரியுமா? தேனே நான் இதற்காகத்தானே உன்னை தாய் வீட்டிலிருந்து இங்கு வரும்படிச் செய்தேன்” என்று களிப்பாய், கருப்பையா கூறினான். சாரதாவின் ஆடையைப்பற்றி இழுத்தான். கன்னங்களைக் கிள்ளினான். “ஒரே ஒரு முத்தம் இன்னும் ஒன்று– ஆம்? இப்படி, பலே பேஷ்” என்று கொஞ்சினான். சாரதா மயக்கத்தில் ஈடுபட்டவள்போல, அவன் இஷ்டப்படி நடந்தாள். அன்று தோட்டத்தில் சாரதா தனது மூன்றாவது பிறப்பு பெற்றாள். அவளுடைய கன்னிப்பருவம் காதலைக் கண்டது! அது கருவிலேயே மாண்டது, அவளுடைய இரண்டாம் பிறப்பு கணவனுக்கு மனைவியாக வாழ்க்கையில் ரசமின்றி இயந்திரம் போல இருந்தது. அன்று தோட்டத்தில் சாகசக்கார கருப்பையாவிடம் சிக்கியதால் அவள் மூன்றாம் பிறப்பு வெளிக்குக் கற்புக்கரசியாகவும் மறைவில் பிறருக்குப் பெண்டாகவும் இருக்கும் வாழ்வைப் பெற்றாள். 12 கணவனுக்கும் அவளுக்கும் மணமாயிற்று என்பதைத் தவிர வேறு பிணைப்பு இல்லை. அவன், அவள் கழுத்தில் தாலியைக் கடடினானே தவிர மனத்திலே அன்பு என்ற முத்திரையைப் பதியவைக்கவில்லை. எனவே, அவள் கணவனிடம் கலந்து வாழ்வதைத் தனது கடமை, உலகம் ஏற்படுத்திய கட்டு எனக்கொண்டாளே தவிர, அதுவே தன் இன்பம் என்று கொள்ளவில்லை. பரந்தாமனை மணந்திருந்தால், அவளைப் பதைக்கப்பதைக்க வெட்டினாலும் பாழும்கிணற்றில் தள்ளினாலும் பயப்பட மாட்டாள். பிறனுடைய மிரட்டலுக்குக் காலடியில் கோடிகோடியாகப் பணத்தைக் குவித்தாலும் நிமிர்ந்து நோக்கியிருக்க மாட்டாள் மற்றொருவனை. அவள் காதற்செல்வத்தைப் பெறவில்லை. இவள் இன்பக்கேணியில் புகவில்லை. எனவே அவள் வாழ்க்கையில் இவனிடம் எளிதில் வழுக்கி விழுந்தாள். உலகம் தன் குற்றத்தைத் தெரிந்துகொள்ளாதிருக்கும் மட்டும் கவலை இல்லை என்று எண்ணினாள். ‘இனி, இந்த உலகில், ஜோராக வாழவேண்டும். சொகுசாக உடுத்தி, நல்ல நல்ல நகைகள் போட்டுக்கொண்டு, கணவர் கொண்டாட ஆனந்தமாக வாழவேண்டும். அதற்கு காரியஸ்தன் தயவிருந்தால் கணவனைச் சரிப்படுத்த முடியும். காரியஸ்தனோ தன் காலடியில் கிடக்கிறான். இனி தனக்கென்ன குறை!’ என்று எண்ணினாள் சாரதா. சாரதா புது உருவெடுத்தாள் உடையிலே. தேடித்தேடி அணிந்தாள். நகைகள் புதிதாகப் போட்டாள். ஒரு நாளைக்குப் பத்துமுறை முகத்தை அலம்புவாள், நிமிடத்திற்கொருமுறை கண்ணாடி முன் நிற்பாள். வலியச்சென்று புருஷனிடம் கொஞ்சுவாள். அவள் சரசம்புரியத் தொடங்கினாள். கிழக்கணவன் அவள் வலையில் வீழ்ந்தான். கேட்டதைத் தந்தான். சாரதாவே கண்கண்ட தெய்வம் என்றான். ஆனால் அவன் அறியான் பாபம், அவள் கற்பை இழந்த சிறுக்கியானாள் என்பதை. மயிலும் மாதரும் தமது அழகைப் பிறர் காணவேண்டுமென்ற எண்ணத்துடன் இருப்பதாகக் கவிகள் கூறுவர். மயிலின் தோகை அவ்வளவு வனப்புடன் இருக்கும்போது அது பிறர் கண்களுக்குத் தெரியாமல் மறைந்து கிடப்பின் பயன் என்ன? கண்டோர் மனத்தில் களிப்பை உண்டாக்கும் ஒப்பற்ற பணியை அழகு செய்கிறது. அந்த அழகு, அன்றலர்ந்த பூவிலுண்டு! அந்தி வானத்திலுண்டு. அதரத்தில் தவழும் அலங்காரப் புன்சிரிப்பிலுண்டு, கிளியின் கொஞ்சுதலில், குயிலின் கூவுதலில், மயிலின் நடனத்தில், மாதரின் சாயலில் உண்டு! சிற்பத்தில் உண்டு. ஆனால் அதன் சிறப்பை முழுதும் காணவல்லார் மிகச்சிலரே. ஆனால் மாதரின் எழில் அத்தகையதன்று. அது கண்டவரை உடனே களிக்கவைக்கும் தன்மையது. காற்று வீசும்போது குளிர்ச்சி தருகிறேன் பாரீர் எனக் கூவுமா! அதன் செயல் நமக்கு அந்த இயற்கையான எண்ணத்தை உண்டாக்கும். அதுபோலவே, எந்த மாதும், ‘என் அழகைக் கண்டாயோ!’ எனக் கேளார், ஆனால் தம் அழகைப் பிறர் கண்டனர், களித்தனர் என்பது அவர்களுக்குத் தெரியும். அதிலே பூரிப்பும் பெருமையும் அடையாத பெண்கள் மிகமிகச் சொற்பம். ஆனால், அழகு, களிப்பதற்கு எங்ஙனம் உதவுகிறதோ அதைப்போலவே பிறரை அழிக்கவும் செய்கிறது. எனவேதான், புலவர்கள், மாதர்களின் விழியிலே அமிர்தமும் உண்டு. நஞ்சும் உண்டு என்றனர். இசைந்த உள்ளத்தை எடுத்துக்காட்டும் விழி, அமிர்தத்தை அள்ளி அள்ளி ஊட்டும்! இல்லை, ‘போடா! மூடா! எட்ட நில்!’ – என்ற இருதயத்துக்கு ஈட்டி போன்ற பதிலைத் தரும் விழிகள் நஞ்சுதரும்! ஆம்! அமிர்தம் உண்டு ஆனந்தப்பட்டவர்களுமுண்டு; நஞ்சு கண்டு நலிந்தவர்களுமுண்டு! ஒரே பொருள் இருவகையான செயலுக்குப் பயன்படுகிறது! ஆனால் சாரதாவின் கண்கள் அமிர்தத்தையும் ஊட்டவில்லை, நஞ்சையும் தரவில்லை! இயற்கையாக எழும் எண்ணத்தை அடக்கி, மடக்கி, மாற்றிக்காட்ட அவளது கண்கள் கற்றுக்கொண்டன! உண்மையான அன்பு கனிந்திருந்தால், அக்காரிகை தன்னைக் காதலன் நோக்கும்போது தலைகுனிந்து நிற்பாள். பளிங்குப் பேழையின் மூடியை மெதுவாகத் திறப்பாள். கண் சரேலெனப் பாயும் காதலன்மீது! நொடியில் மூடிக்கொள்ளும்! இடையே ஒரு புன்சிரிப்பு, மின்னலெனத் தோன்றி மறையும்! காதலற்று, வேறு எதனாலேனும், பொருள் காரணமாகவோ, வேறு போக்கு இல்லை என்ற காரணத்தாலோ, கட்டுப்பட்ட காரிகை, தன்னுடன் பிணைக்கப்பட்டுள்ளவன் தன்னைக் காணும்போது, உள்ளத்தில் களிப்பு இருப்பினும் இல்லாது போயினும், பற்களை வெளியே காட்டியும் அவன் அப்புறம் சென்றதும் முகத்தில் மெருகற்றுச் சோர்வதும் உண்டு! தானாக மலர்ந்த மலருக்கும் அரும்பை எடுத்து அகல விரித்ததற்கும் உள்ள வித்தியாசம் இங்கும் உண்டு! சாரதா மலராத மலர்! அரும்பு! முள்வேலியில் கிடந்தது. கருப்பையா அதனை அகல விரித்தான்! அவன் ஆனந்தமடைந்தான். சாரதா ஆனந்தமடைந்ததாக நடித்தாள்! அந்நடிப்பே அவனுக்கு நல்லதொரு விருந்தாயிற்று! நடிப்பும் ஒரு கலைதானே! கருப்பையாவுக்கும் சாரதாவுக்கும் கள்ள நட்பு பெருகி வருவதைக் கணவனறியான். நல்ல தோட்டம், அழகான மாடு, கன்று இருப்பது கண்டும் பெட்டியைத் திறந்ததும் பணம் நிரம்பி இருப்பதைப் பார்த்தும் பெருமை அடைவதைப்போலவே தன் அழகிய மனைவி சாரதாவைக் கண்டு பெருமையடைந்தான். “என் சாரதா குளித்துவிட்டு, கூந்தலைக் கோதி முடிக்காது கொண்டையாக்கி, குங்குமப் பொட்டிட்டு, கோவில் போகும்போது லட்சுமியோ, பார்வதியோ என்று தோன்றுகிறது. பூஜா பலன் இல்லாமலா எனக்கு சாரதா கிடைத்தாள்” என்று அவள் கணவன் எண்ணினான். அந்த லட்சுமி தனது செல்வத்தை, இன்பத்தை, கருப்பையாவுக்குத் தருவதை அவன் அறியான். அறியவொட்டாது அபின் தடுத்தது. நாளுக்கு நாள் அபினின் அளவும் அதிகரித்தது. கள்ள நட்பும் பெருகிவந்தது. இவ்வளவு சேதியும் பரந்தாமன் செவி புகவில்லை. அவன் செவியில், “காயமே இது பொய்யடா நல்ல காற்றடைத்த பையடா” என, கருணானந்த யோகீசுரர் செய்துவந்த கானமே புகுந்தது. பரந்தாமன் ஒரு பாலசந்நியாசியாகக் காலந்தள்ளி வந்தான். காதலைப் பெறமுடியவில்லை. கருத்திலிருந்து சாரதாவை அகற்ற முடியவில்லை. அன்று மருண்டு, ஊரை விட்டோடி, பாழும் சத்திரத்தில் படுத்துப் புரண்டு, கள்ளரைக் கண்டு கலங்கி, கடுக நடந்து தோப்புக்குள் புகுந்து துயின்ற நாள் தொட்டு பரந்தாமன் ஊர் ஊராக அலைந்தான்! காவிகட்டியவர்களை எல்லாம் அடுத்தான்! “சாந்தி வேண்டும் சுவாமிகளே! உலக மாயையினின்றும் நான் விடுபட அருளும் என் ஐயனே! உண்மை நெறி எதுவெனக் கூறும் யோகியே!” என்று கேட்டான் பலரிடம். கருணானந்த யோகீசுரர், தமது சீடராக இருப்பின், “சின்னாட்களில் கைலை வாழ் ஐயனின் காட்சியும் காட்டுவோம்” எனக் கூறினார். பரந்தாமன், சிகை வளர்த்தான். சிவந்த ஆடை அணிந்தான். திருவோட்டைக் கையிலெடுத்தான். “சங்கர சங்கர சம்போ, சிவ சங்கர, சங்கர சம்போ” என்று கீதம் பாடியபடி கிராமங்கிராமமாக யோகீசுரருடன் சென்றான். 13 “சாரதா! ஒரு விசேஷம்!” “என்ன விசேஷம்?” “நம் வீட்டுக்கு விருந்தாளிகள் வருகின்றனர் நாளைக்கு!” “யார் வருகிறார்கள்!” “சென்னையிலிருந்து எனது உறவினர் ஒருவர் வருகிறார். சிங்காரவேலர் என்பது அவர் பெயர். அவருடன் கோகிலம் என்ற அவர் தங்கை வருகிறாள். அவர்கள் மகாநாசுக்கான பேர் வழிகள். பெரிய ஜமீன் குடும்பம்!” “வரட்டுமே, எனக்கும் பொழுது போக்காக இருக்கும்” “கோகிலத்தை நீ கண்டால் உடனே உன் சிநேகிதியாக்கிக் கொள்வாய். நன்றாகப் படித்தவள் கோகிலம்.” “படித்தவர்களா! சரி சரி! எனக்கு அல்லியரசானிமாலை தவிர வேறு என்ன தெரியும்? என்னைப் பார்த்ததும் அந்தம்மாள், நான் ஒரு பட்டிக்காட்டுப் பெண் என்று கூறிவிடுவார்கள்.” “கட்டிக் கரும்பே நீயா, பட்டிக்காட்டுப் பெண்–” என்று கூறிக்கொண்டே சாரதாவின் ரம்மியமான கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினான் கணவன். “இதுதானே உங்கள் வழக்கம்! இது என்ன தவடையா ரப்பர் பந்தா, இப்படிப் பிடித்துக் கிள்ளுவதற்கு. வரட்டும் அம்மா, சொல்லுகிறேன், நீங்கள் செய்த வேலையை….” என்று கொஞ்சினாள் சாரதா. “அடடா! பாபம் கன்னம் சிவந்துவிட்டதே! சாரதா, கிள்ளினதற்கே இப்படிச் சிவந்துவிட்டதே…” “போதும் நிறுத்துங்கள் விளையாட்டை. நான் பூப்பறிக்கப்போக வேண்டும்” என்று கூறிவிட்டு, சாரதா, தன் கணவன் தன்னிடம் வசியப்பட்டு இருப்பதை எண்ணிப் பெருமை அடைந்தபடியே தோட்டத்துக்குச் சென்றாள். அங்குக் கருப்பையா காத்துக்கொண்டிருந்தான். “ஏது ரொம்ப குஷிதான் போலிருக்கு!” என்று கூறிக்கொண்டே, சாரதாவின் கரங்களைப் பிடித்து இழுத்தான். “இது என்ன வம்பு! விடு கருப்பையா, அவர் வந்துவிட்டால் என்ன செய்வது?” என்று கூறிக் கையை இழுத்துக்கொண்டாள், அந்த வேகத்தில் வளையல் உடைந்து கீறிக்கொண்டதால், பொன்னிற மேனியில் செந்நிற இரத்தத் துளியும் வந்தது. “பார்! நீ செய்த வேலையை” என்று கரத்தைக் காட்டினாள். “சூ! மந்திரக்காளி! ஓடிப்போ!” என்று கூறிக்கொண்டே, கருப்பையா, அந்தக் கரத்திற்கு முத்தமிட்டான். அவன் அறிந்த மந்திரம் அது! “ஒரு சங்கதி கருப்பையா! நாளைக்கு விருந்தாளிகள் வருகிறார்கள். நாம் சற்று ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். யாரோ ஜமீன்தாராம்; அவர் தங்கையாம். இருவரும் வருகிறார்களாம்” என்று எச்சரித்தாள். அன்றிரவு சாரதாவுக்கு நாளைக்கு எந்தக் கலர் புடவை உடுத்திக்கொண்டால் அழகாக இருக்கும், கார்டு கலர்ச் சேலையா, ரிப்பர் பார்டர் சேலையா, மயில் கழுத்து கலரா, மாதுளம் பழநிறச் சேலையா. ஜவ்வாது இருக்கிறதா, தீர்ந்து விட்டதா என்ற யோசனைதான். மாதுளம்பழ நிறச்சேலை கட்டிக்கொண்டால்தான் நன்றாக இருக்கும் என முடிவு செய்தாள். உடனே முகம் மாறிற்று. ஆம்! முதன்முதலில் பரந்தாமனைக் காணும்போது மாதுளம்பழ நிறச்சேலைதான் கட்டிக்கொண்டிருந்தாள் சாரதா! பழைய நினைவுகள், தோணி ஓட்டையில் நீர் புகுவதுபோல விரைவில் புகுந்தன. தோணி கடலில் அமிழ்வதைப்போல அவள் துக்கத்தில் ஆழ்ந்தாள். தலையணையில் நீர் கண்கள் குளமாயின! அவளது வாசனை திரவியப் பூச்சுவேலை சேறாகிவிட்டது. சாரதா தனது உண்மைக் காதலை நினைத்து உள்ளம் கசிந்தாள். உறக்கமற்றாள்! மறுநாள் காலை முகவாட்டத்துடன் விருந்தாளிகளை வரவேற்றாள்! சிங்காரவேலுக்கு, அந்த முகவாட்டமே ஒரு புது மோஸ்தர் அழகாகத் தெரிந்தது. கோகிலம், கத்தரிப் பூக்கலர்ச் சேலைதான் சாரதாவுக்கு ஏற்றது என்று யோசனை கூறினாள். விருந்தாளிகள் வந்த ஒருமணி நேரத்திற்குள் சாரதாவிடம் வருஷக்கணக்கில் பழகினவர்கள்போல நடந்துகொண்டனர். ஒரே பேச்சு! சிரிப்பு!! கோகிலத்தின் குட்டிக் கதைகளும் சிங்காரவேலின் ஹாஸ்யமும் சாரதாவுக்குப் புதிது! அவை அவளுக்குப் புதியதோர் உலகைக் காட்டிற்று. அதிலும் அந்த மங்கை புகுந்தாள்! ஒருமுறை வழிதவறிவிடின் பிறகு எவ்வளவோ வளைவுகளில் புகுந்தாகத்தானே வேண்டும். அத்தகைய ஒரு வளைவு! சிங்காரவேலர் – கோகிலா பிரவேசம்! கோகிலா அழகியல்ல! சாரதா அதைத் தெரிந்துகொண்டாள். என்றாலும், கோகிலத்தின் நடை, உடை, பேச்சில் ஒரு தனி வசீகரம் கண்டாள். கோகிலத்தின் கண்கள் சிலமணி நேரங்களில் சாரதா, கருப்பையா நட்பைக் கண்டுவிட்டன. அவள் வாய், ஒரு நொடியில் விஷயத்தைச் சிங்காரவேலருக்குக் கூறிவிட்டது. அவரது மூளை உடனே சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. சிங்காரவேலரும் கோகிலமும் செல்வக்குடி பிறந்தோர். செல்வத்தை வீண் ஆட்டத்தில் செலவிட்டுப் பிறகு, உல்லாசக் கள்ளராயினர்! கோகிலம் தம் கணவன் வீட்டுக்கு வரவே கூடாது எனக் கண்டிப்பாக உத்தரவிட்டுவிட்டவள், சிங்காரவேலர் முதல் மனைவி பிரிந்த துக்கத்தை மறக்கமுடியுமா என்பவர், தாரமிழந்தவர். இருவருமாகப் பழைய ஜமீன் பெருமையைக் கூறி, ஊரை ஏய்ப்பதும் உலவுவதுமாகவே இருந்தனர். சாரதா, கருப்பையா உறவு நல்லதொரு தங்கச்சுரங்கம் என்று சிங்காரவேலன் எண்ணினான். அவனுடைய சிந்தனையில் சூதுவலை உடனே வளர்ந்தது. கோகிலத்திடம் கலந்தான். “பேஷான யோசனை அண்ணா! சரியான யோசனை!” “நம் யோசனை எது சரியானதாக இராமல்போய்விட்டது கோகிலம்” “இந்த ‘விடுமுறை’ வியாபார தோரணையில் நமக்கு மிகச்சிறந்தது.” “ஆமாம்! நாம் போடப்போகும் ‘முதல்தொகை’ மிகச் சொற்பம், கோடாக் நாதனின் கருணையால், நமக்குக் குறைவே ஏற்படாது” என்றான் சிங்காரவேலன். கோகிலம் அண்ணனின் சமர்த்தை எண்ணிச் சிரித்தாள். அண்ணனும் தங்கையுமாகச் சிரிக்கும் நேரத்திலே, சாரதா, அங்கு வந்தாள். ‘சிரிக்கும் காரணம் என்னவோ?’ என்று கேட்டாள். “நாங்களா சிரிப்பதா! ஏன் அண்ணா நாம் எதற்காகச் சிரித்தோம்” – என்று கோகிலம் கேட்டாள். அவள் கேட்ட கேள்வியும், பேசியவிதமும், சாரதாவுக்கும் சிரிப்பை உண்டாக்கிவிட்டது. மூவருமாக, விழுந்து விழுந்து சிரித்தனர்! “பேதைப்பெண்ணே சிக்கினாயா” என்று சிங்காரவேலன் எண்ணினான்!! “குட்டி மகாகெட்டிக்காரியாக இருக்கிறாள். எங்கே நமது கண்களுக்கு விஷயம் தெரிந்துவிடுகிறதோவென்று மிக ஜாக்கிரதையாக நடந்துகொள்கிறாள். அவனாவது பரவாயில்லையென்று எண்ணிக்கொண்டு சில சமயங்களில் அவளை நோக்கி சிரிக்கிறான். கொஞ்சுகிறான். இருவரும் கைப்பிடியாகக் கிடைக்கவேண்டும். அது போட்டோ எடுக்கப்படவேண்டும். அதுதான் என் பிளான். சமயம் வாய்க்கவில்லையே” என்றான் சிங்காரவேலன், கோகிலத்திடம். “அண்ணா பெண்கள் எப்போதும் நிறைகுடம் போன்றவர்கள். உணர்ச்சியைத் ததும்பவிடமாட்டார்கள் ஆண்கள் அப்படியல்லவே. நிழலசைந்தாலும், அவள் அசைந்தாள் என்று எண்ணிக்கொண்டு அவதிப்படுவார்கள். இது இயற்கைதானே” என்றான் கோகிலம். “அது எப்படியாவது தொலையட்டும். நமக்கு வேண்டியது நடக்க வேண்டுமே” என்றான் வேலன். “இது ஒரு பிரமாதமா! நாளை மாலை சாரதா, கருப்பையாவின் தோளைப் பிடித்திழுத்து முத்தமிடும் காட்சியை நீங்கள் போட்டோ எடுக்கலாம். அந்தக் காட்சியை நான் டைரக்டு செய்கிறேன்” என்றாள் கோகிலம். சிங்காரவேலன் முகம் சற்று சுளித்தது. கோகிலம் சிரித்துக்கொண்டே, “ஏன் அண்ணா, உமக்கும் சாரதா மீது…” என்று கேலி செய்தாள். “தூ! தூ! நான் பெண்கள்மீது ஆசை வைப்பதைவிட்டு வருஷங்களாகிவிட்டன” என்றான் வேலன். “சரி! நான் நமது சினிமா காட்சிக்கு வேண்டிய ஏற்பாடு செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு கோகிலம் கருப்பையாவைத் தேடிக்கொண்டு தோட்டத்துக்குச் சென்றாள். 13 “கருப்பையா! நாளைக்கு நாங்கள் ஊருக்குப் போகிறோம்” என்று சம்பாஷணையைத் துவக்கினாள். “ஏனம்மா எங்கள் ஊர் பிடிக்கவில்லையோ?” என்று கருப்பையா கேட்டான். “பிடிக்கவில்லையா சரிதான் ரொம்ப அதிகமாகப் பிடித்துவிட்டது. இன்னும் கொஞ்சம் போனால் என் அண்ணனுக்குப் பித்தம் பிடித்துவிடும்போல் இருக்கிறது” என்றாள் கோகிலம். “நீங்கள் சொல்வது எனக்கொன்றும் விளங்கவில்லையே” என்றான் கருப்பையா. “கருப்பையா, நீ எங்கும் வெளியே சொல்லக்கூடாது, மிகஇரகசியம். வெளியே தெரிந்தால் தலை போய்விடும்” என்றாள் கோகிலம். “என்ன இரகசியம்?” என்று கேட்டான் கருப்பையா. கோகிலம், அவன் காதில் ‘குசுகுசு’வென ஏதோ கூறினாள். கருப்பையாவின் கண்களில் தீப்பொறி பறந்தது. “அதனால்தான் கருப்பையா, வம்பு வளருவதற்குள் நாங்கள் போய்விடுகிறோம். அவளோ பாவம், கிழவனின் மனைவி. என் அண்ணனோ, மகா ஷோக் பேர்வழி. பஞ்சு அருகே நெருப்பை வைத்துவிட்டு, ‘பற்றி எரிகிறதே’ என்று பிறகு நொந்துகொள்வதில் என்ன பயன்” என்று வேதாந்தம் பேசிவிட்டு, விஷயத்தை எங்கும் மூச்சுவிடக்கூடாது என்று கோகிலம் கேட்டுக்கொண்டாள். கருப்பையாவுக்குக் கவலை அதிகரித்துவிட்டது. “அடடா! மோசம் வந்துவிடும் போலிருக்கிறதே, என்று கலங்கினான். சாரதா மீது அளவு கடந்த கோபம் அவனுக்கு. சும்மா விடக்கூடாது, கேட்டுத் தீர வேண்டும். சிறுக்கி இவ்வளவு தூரம் கெட்டுவிட்டாளா!” என்று எண்ணி ஏங்கினான். கோகிலத்துக்கு, தான் மூட்டிவிட்ட கலகம் வேலை செய்யுமென்று தெரிந்துவிட்டது. தன் சாகசப்பேச்சில் கருப்பையா போன்ற காட்டான்கள் ஏமாறுவது சுலபந்தானே என எண்ணி, அண்ணனிடம் தன் வெற்றியைக் கூறவும் சாரதாவும் கருப்பையாவும் தனியாகச் சந்திக்கும் நேரத்தில், இரசமான காட்சி நடந்தே தீருமெனச் சொல்லவும் சென்றாள். செல்வம் ஒருவருக்கு இருந்து மற்றொருவருக்கு இல்லாது போவது அவ்வளவு அதிகமான பொறாமையைக் கிளப்புவதில்லை. அது ‘கொடுத்து வைத்தவன்’, ‘ஆண்டவன் அருள்’, ‘பூர்வ ஜென்ம புண்ய பலன்’ என்ற சமாதானங்களால் சாந்தியாகிவிடும். ஆனால் காதல் செல்வத்தின் விஷயம் அங்ஙனம் அன்று. “உருகி, உடல் உள்ளீரல் பற்றி”விடும் காதல். சம்மதக் கண்ணொளியால் தணிக்கப்பட்டு, காதல் விளையாட்டுகளால் சாந்தியாக்கப்பட்டு இன்பவெள்ளத்தில் மூழ்கி இருக்கும் ஒருவருக்குத் தன் காதலில் பிறனொருவன் புகுவதாகவோ, கெடுக்கவோ கண்டால் கோபமும் கொதிப்பும் உள்ளத்தின் அடிவாரத்திலிருந்து கிளம்பும். பசியினால் களைத்துப் படுத்துத் துயிலும் புலியின் வாலை வேண்டுமானாலும் வளைத்து ஒடிக்கலாம். ஆனால் காதல் நோயில் சிக்கிக்கொண்டவனைத் தொந்தரவு செய்தால், அவன் புலியினும் சீறுவான், எதுவுஞ் செய்வான், எவர்க்கும் அஞ்சான் எதையுங் கருதான். ஆம்! இன்னமும் மனிதன் மாடமாளிகை கூடகோபுரத்தைவிட, மங்கையின் அன்பையே பெரிதென எண்ணுகிறான். பொன்மணி பொருளைவிட தனது பிரியையின் புன்சிரிப்பே பெரிதெனக் கருதுகிறான். எதையும் இழப்பான், காதலை இழக்கத் துணியான். எது இல்லாமற் போய்விடினும், “இதுதான் நம் நிலை; என் செய்வது” எனத் தன்னைத்தானே தேற்றிக்கொள்வான். ஆனால் மனத்தில் குளிர்ச்சி ஊட்டும் மனோகரி ஒருத்தி இல்லையெனில் அவன் செத்த வாழ்வு வாழ்வதாகவே கருதுவான். பருவமும், பழக்க மிகுதியால் வரும் சலிப்பும் ஒரு சிறிது இக்குணத்தைக் குறைக்கலாம். அடியோடு மாற்றுவதென்பதோ, அந்தக் குணமே வரவொட்டாது தடுத்துவிடுவதென்பதோ முடியாத செயல் ஆகும். கிடைக்காவிட்டால் கிலேசப்படும் உள்ளம், கிடைத்ததைக் கெடுக்க யாரேனும் முற்பட்டால், அவர்களைக் காலடியில் போட்டு மிதித்துத் துவைத்துவிடவே எண்ணும். கருப்பையா அந்நிலையில்தான் இருந்தான். அவன் கொண்ட நட்பு, கள்ளத்தனமானதுதான்; துரோகத்தின் மீது தோற்றுவிக்கப்பட்டதுதான்; மருண்ட இளமனத்தை மிரட்டிப் பெற்றதுதான் என்றாலும், “தான் பெற்ற இன்பம் பிறனுக்குச் செல்வதென்றால்” அவமானம் பொறுக்கவில்லை. சிங்காரவேலனுக்கும் சாரதாவுக்கும் ஏதோ நடக்கும்போலத் தோன்றுகிறது எனக் கோகிலம் கயிறு திரித்தாள். அது கருப்பையாவின் மனத்தைக் கலக்கிவிட்டது. மறுநாள் மாலை, தோட்டத்தில் கோகிலம் குறிப்பிட்டபடியே ஊடல் காட்சி ஆரம்பமாயிற்று. கருப்பையா கறுத்து, வியர்க்கும் முகத்துடன் பெருமூச்சுவிட்டுக்கொண்டு, வேலியைச் சரிப்படுத்திக்கொண்டிருந்த நேரத்தில் சாரதா வந்தாள். அவள், கோகிலம் செய்துவிட்டுப்போன குட்டிக் கலகத்தையும் அறியாள்; கோடியில் மரமறைவில் ‘கோடாக்’குடன் ஒளிந்துகொண்டு சிங்காரவேலன் இருப்பதையும் அறியாள். அன்றெல்லாம் கருப்பையா முகத்தைக் கோணலாக்கிக்கொண்டும், சிடுசிடுவெனப் பேசிக்கொண்டும் இருந்தது கண்டு ஒன்றும் புரியாது தத்தளித்தாள். அதனை விசாரிக்கவே அங்கு வந்தாள். “கருப்பையா…” பதில் இல்லை. “கருப்பையா…” “கந்தன் ஒரு வேலையும் சரியாகச் செய்யமாட்டேனென்கிறான். ஆமாம் அவனுக்கு நிலைமை மாறிவிட்டது. புது கிராக்கி” என்று தோட்டக்காரக் கந்தனைச் சாக்காக வைத்துக்கொண்டு கருப்பையா பேசினான். சாரதாவுக்கு அப்போதுதான் கருப்பையா ஏதோ தன்மீது சந்தேகங்கொண்டிருக்கிறான் என்பது தெரிந்தது. உடனே கோபமும் வந்தது. இருவரும் கோபித்துக்கொண்டே இருந்தால் என்ன செய்யமுடியும்! அதிலும் அவள் ஒரு பெண்! வழிதவறி நடந்த பெண்!! எனவே, பணிந்துபோக வேண்டியவள் தானே என எண்ணினாள். அந்த ஒரு விநாடியில் அவள் மனக்கண் முன்பு, தனது முன்னாள் நிலை யாவும், படமெடுத்ததுபோல் தோன்றிற்று. ஒருமுறை தவறினாள் – பெற்றோர்கள் தவறவிட்டார்கள் – அதுமுதல், சருக்கு மரத்தில் செல்வதுபோல, நழுவி நழுவி, வழுக்கி வழுக்கி கீழுக்கு வந்து, கடைசியில் திருட்டுத்தனமாகப் பெற்ற ஒரு முரட்டு ஆளுடன் கொஞ்சவேண்டிய நிலையும் வந்ததல்லவா, காரணமின்றி அவன் கொண்ட கோபத்துக்கும் சமாதானம் கூற வேண்டி வந்ததல்லவா – என்று எண்ணியதும் சாரதாவின் கண்கள் தானாகக் கலங்கின. மெல்ல நடந்து கருப்பையாவை அணுகினாள். அவன் அங்கு மரமென நின்றான். “சொல்லு கருப்பையா என் மீது ஏன் உனக்குக் கோபம். நான் என்ன செய்தேன்” என்று வீட்டு எஜமானி சாரதா காரியஸ்தன் கருப்பையாவைக் கேட்டாள் – காதலால் கட்டுப்பட்டு அல்ல, அவனிடம் கண்மூடித்தனத்தால் கட்டுண்ட காரணத்தால். “எனக்கென்னம்மா உங்கள் மீது கோபம். நீங்கள் வீட்டு எஜமானியம்மா நான் கணக்கு எழுதிக் காலந்தள்ளுபவன்” என்று எரிகிற நெருப்பை ஏறத் தள்ளினான் கருப்பையா. “இதோ, இப்படிப்பார். விஷயத்தைச் சொல்லு, வீணாக என் மனத்தைப் புண்ணாக்காதே” என்றாள் சாரதா, கருப்பையாவின் தோளைப்பிடித்து இழுத்துக்கொண்டே. கோடியில் இருந்த சிங்காரவேலன், பதுங்கியபடி சற்று அருகிலிருந்த மரத்தின் பின்புறம் நின்றுகொண்டு, கோடாக்கைச் சரிப்படுத்திக்கொண்டான். “மனம் புண்ணாகுமா! மகராஜி நீ. நான் இங்கு மாதச் சம்பளத்துக்கு இருப்பவன். என் கோபம் உன் மனத்தைப் புண்ணாக்குமா” என்றான் கருப்பையா. “விஷயத்தைச் சொல்லுகிறாயா நான் விழுவதற்குக் குளம் குட்டை தேடட்டுமா” என்று உறுதியுடன் கேட்டாள் சாரதா. “ஐயோ! அம்மா! அப்படி ஒன்றும் செய்துவிடாதே சிங்காரவேலருக்கு யார் சமாதானம் கூறுவது” என்று கிண்டல் செய்தான் கருப்பையா. சாரதாவுக்கு விஷயம் விளங்கிவிட்டது. தனக்கும் சிங்காரவேலுவுக்கும் ஏதோ தொடர்பு ஏற்பட்டதாக எண்ணிக்கொண்டுதான் கருப்பையா கோபித்தான் என்பது தெரிந்து விட்டது. அவளையும் அறியாமலேயே சிரிப்பு வந்தது. “கருப்பையா விஷயம் தெரிந்துகொண்டேன். நீ நினைப்பது தவறு. ஆண்டவனறிய கூறுகிறேன், சிங்காரவேலுவுக்கும் எனக்கும் துளியும் நேசம் கிடையாது. நீ இதனை நம்பு, வீண் சந்தேகம் வேண்டாம்” என்றாள் சாரதா உறுதியுடன். துளியும் தட்டுத்தடங்கலின்றி நிதானமாக சாரதா கூறியதைக் கேட்ட கருப்பையாவுக்குப் பாதி சந்தேகம் போய்விட்டது. “கோகிலம் சொன்னாளே…” என்று ஆரம்பித்தான். “கோகிலம் குறும்புக்குச் சொல்லி இருப்பாள்” என்று கூறிக்கொண்டே, சாரதா, கருப்பையாவின் இரு தோள்பட்டைகளையும் பிடித்துக்கொண்டே அவன் முகத்தை நோக்கியபடி, “கருப்பையா, நான் ஏதோ இப்படிக் கெட்டுவிட்டேனே தவிர, நான் சுபாவத்தில் கெட்டவளல்ல” என்றாள். கருப்பையாவின் மனம் இளகிற்று, சாரதாவின் தலையைத் தடவினான். “சாரதா, கண்ணே, உன்னை நான் இழக்கமாட்டேன், உயர் எனக்கு நீதான்” என்று கொஞ்சினான். சாரதா சிரித்தாள். கருப்பையா அவளை அருகிலிழுத்து முத்தமிட்டான். “கடக்” என்ற சப்தமும், “சபாஷ்” என்ற பேச்சும் கேட்டு இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தனர். கையில் காமிராவுடன் சிரித்தபடி சிங்காரவேலன் நிற்கக் கண்டனர். “ஆ! ஐயோ,” “என்ன! நீயா!” “பதறவேண்டாம்” பெருமூச்சுடன் கருப்பையா நின்றான். உடல் துடிக்க சாரதா நின்றாள். சிரித்துக்கொண்டே சிங்காரவேலன் நின்றான். “நான் உல்லாசப் பிரயாணம் செய்வதே, இவ்விதமான அழகு ததும்பும் காட்சிகளைப் போட்டோ எடுப்பதற்குத்தான். இயற்கையின் அழகுகள் எனக்கு மெத்தப் பிரியம். அதனைவிட உணர்ச்சி தரும் உல்லாசக் காட்சிகள் என்றால் நான் விடவே மாட்டேன். மலர் அழகுதான்! போட்டோ எடுத்தாலும் அழகாகத்தான் இருக்கும். ஆனால், அந்த மலரிடம் வண்டு பறந்து சென்று தேன் உண்டு களிக்கும் காட்சி இருக்கிறதே, ஆஹா! நான் என்ன சொல்வேன் அதன் ரம்மியத்தை…” என்று வேலன் பிரசங்கம் செய்ய ஆரம்பித்தான். சிவபூசையில் கரடி புகுந்ததுடன், கவிவேறு பாடினால் எப்படி இருக்கும்! சாரதா, இந்த ஒரு தோட்டக்காட்சிக்கு மட்டும், நியூ தியேட்டர்சார், பத்தாயிரம் கொடுப்பார்கள். கதாநாயகனைத்தான் மாற்ற வேண்டும். காட்சியில் குற்றமில்லை, நீ மிக அழகுபட நடித்துமுள்ளாய், திகைக்க வேண்டாம். கருப்பையா, முட்டாளுக்கு முத்து கிடைத்ததைப்போல உனக்கு இந்த மங்கை கிடைத்தாள். நீ அதிருஷ்டசாலிதான். ஆனால், நான் உன்னைவிட அதிர்ஷ்டசாலி. உறுமாதே, ஊரார் அறியும்படி இந்தப் படத்தை வெளியிட்டால் உன் கதி என்னாகும். இந்த உல்லாசியின் நிலைமை என்னாகும்!! “கப்சிப்!! இங்கே நிற்கவேண்டாம். அதோ யாரோ வரும் காலடிச் சத்தம் கேட்கிறது. இன்று இரவு 12 மணிக்கு சாரதா, நீ என் அறைக்கு வரவேண்டும். வேண்டாம் வேண்டாம், நீ வரவேண்டாம் உன்னை நான் தனியாகச் சந்திக்கமாட்டேன். கருப்பையா, நீ வா, சில நிபந்தனைகள் கூறுகிறேன். அதன்படி நீங்கள் நடக்கவேண்டும்” என்று கண்டிப்பாகக் கூறிவிட்டு சிங்கரவேலன் போய்விடடான். சாரதாவும் கருப்பையாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர். “விதியே! தலைவிதியே” என்று சாரதா விம்மினாள். சாரதா யாரோ வருகிறார்கள். கவலைப்படாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறினான் கருப்பையா. “என்னடி மெத்த தளுக்குக் காட்டுகிறாய்” என்று இனிய குரலில் இசைத்துக்கொண்டே கோகிலம் அங்கு வந்து சேர்ந்தாள். 14 இரவு கருப்பையா, சிங்காரவேலன் அறைக்குச் சென்றான், மடியில் கூரான ஈட்டியுடன். சாரதாவின் மானத்தையும் தன் மரியாதையையும் வாழ்வையும் அழிக்கக்கூடிய அந்த வேலனின் உயிரைப் போக்கிவிடுவது என்ற முடிவுடன். ஒரு கொலை செய்வதற்கு வேண்டிய அளவு உறுதி அவன் முகஜாடையில் காணப்பட்டது. வேலன், “வா கருப்பையா, சொன்னபடி வந்துவிட்டாயே” எனத் துளியும் தடுமாற்றமின்றிப் பேசினான். கருப்பையாவின் கரம், மடியில் சொருகி வைக்கப்பட்டிருந்த ஈட்டி மீது சென்றது. வேலனின் சூரிய பார்வை, ஏதோ ஆபத்து இருக்கிறது என்பதை உணர்த்திற்று. ஆனால், அவன் துளியும் அசையவில்லை. படுக்கைமீது உட்கார்ந்தபடியே ஒரு முடிவுக்கு வந்தான். சாமர்த்தியமாகக் கருப்பையாவை ஏமாற்ற வேண்டும். “ஓ! கோகிலா, வாயேன் உள்ளே” என்று கூறினான். கோகிலம் வருவதைப் போல பாசாங்கு செய்துகொண்டே. முரட்டுக் கருப்பையா சரெலெனத் திரும்பினான். கதவுப்பக்கம். வேலன் புலிபோல அவன்மீது பாய்ந்து மடியில் இருந்த ஈட்டியைப் பிடுங்கிக்கொண்டான். சட்டை கிழிந்துவிட்டது. கருப்பையாவுக்கு. தான் முட்டாள்தனமாக நடந்துகொண்டதை எண்ணினான். வேலன் இளித்தான். “கருப்பையா நான் சொல்வதைக் கேள். என்னிடம் உன் முரட்டுத்தனம் பலிக்காது. மூடு கதவை. இப்படி உட்கார்” என்று கட்டளையிட்டான். பெட்டியிலிட்ட பாம்பென அடங்கிய கருப்பையா மிகப் பரிதாபத்துடன், “ஐயா என்னைப் பற்றிக்கூட கவலையில்லை. அந்தப் பெண்ணின் மானம் அதைக் காப்பாற்றும். அவசரப்பட்டு எதுவும் செய்யவேண்டாம்” என்று கெஞ்சினான். “கருப்பையா, நான் அவசரப்படுகிற வழக்கமே கிடையாது. தோட்டத்தில் உங்கள் சல்லாபத்தைக் காண எவ்வளவு நேரம் பொறுமையாக இருந்தேன் தெரியுமா, இன்றுந்தான் என்ன, ஈட்டிமுனைக்கு எதிரில்கூட நான் அவசரப்படவில்லை” என்றான் வேலன். “அந்தப் போட்டோ, அதனைக் கொடுத்துவிடு. உனக்குக் கோடி புண்ணியம் உண்டு. உன் பிள்ளை குட்டிகளுக்கும் புண்ணியம். ஒரு குடும்பத்தைக் கெடுக்காதே” என்று கருப்பையா வேண்டினான். “உளராதே கருப்பையா குடும்பத்தை நானா கெடுத்தேன்” என்று கோபித்தான் வேலன். கருப்பையா, வேலன் காலில் விழுந்தான். வேலன், “சரி சரி சர்வமங்களம் உண்டாகட்டும். எழுந்திரு. நான் சொல்வதைக் கேள். முடியாது என்று சொல்லக் கூடாது. நாளை காலைக்குள் எனக்கு ஆயிரம் ரூபாய் வேண்டும். கொடுத்தால் நாங்கள் போய் விடுகிறோம். இல்லையேல் நீயும் சாரதாவும் போகவேண்டிய இடத்துக்குப் போகத்தான் வேண்டும் என்றான் வேலன். “ஆயிரம் ரூபாயா… என்னிடம் இருப்பதே கொஞ்சந்தானே” என்றான் கருப்பையா. “கிடைத்தற்கரிய செல்வத்தைப் பெற்ற நீயா ஓர் ஆயிரம் ரூபாய்க்கு அஞ்சுவது?” என்றான் வேலன். ‘சரி’ என ஒப்புக்கொண்டான் கருப்பையா. “நான் வெளியே போவதற்கு, படத்தை நான் வெளியிடாதிருப்பதற்கு, மாதா மாதம் 200 ரூபாய், தவறாமல் என் சென்னை விலாசத்துக்கு அனுப்பிக்கொண்டு வரவேண்டும். நான் கண்டிப்பான பேர்வழி. ஒரு முறை பணம் வருவது தவறினாலும் படம் வெளியாகும். படம் வெளிவந்தால் என்ன ஆகும் என்பது உனக்கே தெரியும். சாரதா கர்ப்பவதியல்லவா! அவள் பிள்ளை தெருவில் அலைய வேண்டித்தான் வரும்” என்று வேலன் “கண்டிஷன்கள்” போட்டான். “ஐயா உனக்குக் கருணை இல்லையா?” என்று கெஞ்சினான் கருப்பையா. “கருணை இருந்தது சில வருஷங்களுக்கு முன்பு. இப்போது கருணை இல்லை. இப்போது உலகமும் உல்லாசமும் எதிரே இருக்கிறது” என்றான் அந்த உல்லாசக் கள்ளன். வேறு வழியின்றிக் கருப்பையா ஒப்புக்கொண்டான். மறுதினம் ஆயிரம் ரூபாய், (பாங்கியில் அவன் போட்டு வைத்திருந்த பணம் அதுதான்) கொடுத்தான். உல்லாசக் கள்ளர்கள், வீட்டில் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு, ஊருக்குப் பிரயாணமாயினர். வேலனோ, கோகிலமோ, பேச்சிலோ, நடவடிக்கையிலோ, சாரதா - கருப்பையா மர்மக்காதலைப் பற்றிக் கண்டுகொண்டதாக, சாரதாவின் புருடனுக்குக் காட்டிக் கொள்ளவேயில்லை. “கண்ணே சாரதா, போய் வரட்டுமா, ஆண் குழந்தை பிறந்தால் பிரபாகரன் என்று பெயரிடு, பெண் பிறந்தா, கவனமிருக்குமா” என்று கொஞ்சினாள் கோகிலம் சாரதாவிடம். சாரதாவின் புருடன், விருந்தாளிகளை மிக மரியாதையுடன் அனுப்பி வைத்தார். அபின் உலகில் அலையும் அவருக்கு மர்ம சம்பவங்கள் என்ன தெரியும் பாவம்! 15 கருப்பையாவுக்கும் சாரதாவுக்கும் மாதா மாதாம் 200 ரூபாய் சேகரிப்பது தவிர வேறு வேலை கிடையாது. கருப்பையா ஓய்ந்த வேளையில் எல்லாம், எந்தக் கணக்கை எப்படி மாற்றுவது எப்படிச் சூது செய்வது என்ற யோசனையிலேயே இருந்தான். வீட்டில் தன் புருஷனின் பரம்பரைச் சொத்துகளைக் கொஞ்சங் கொஞ்சமாகக் கணவனுக்குத் தெரியாமல் திருடித் திருடிக் கருப்பையாவிடம் தந்து வந்தாள் சாரதா. செக்கு இழுத்து இழுத்து மாடு கெட, எண்ணெயைத் தடவித் தடவிப் பிறர் மினுக்குவதைப் போல சாரதாவும் கருப்பையாவும் பாடுபட்டு, திருடி, சூது, சூழ்ச்சி செய்து பணம் சேர்த்துச் சேர்த்து அனுப்ப அதனை வைத்துக்கொண்டு ஆனந்தமாக விஸ்கியும் பிராந்தியும் வாங்கிக் குடித்துச் சிரித்தான் சிங்காரவேலன். “இப்படியும் எனக்குத் தொல்லை வருமா, நீ செய்த வேலைதானே. பாவி உன்னால்தானே நான் இப்பாடுபடுகிறேன். திருடுகிறேன். அவர் என்றைக்கேனும் கண்டுவிட்டால், ‘எங்கே பச்சைக்கல் பதக்கம்?’ என்று கேட்க ஆரம்பித்தால் நான் என்ன செய்வேன்” என்று சிந்தை நொந்து கருப்பையாவைக் கேட்பாள். அவன் பலமுறை சாதகமாகவே பதில் கூறினான். சஞ்சலமும் சலிப்பும் அவனுக்கும் ஆத்திரத்தை மூட்டிவிடுமல்லவா? “சரி! என்னைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். அவன் படத்தைக் காட்டிவிடட்டும். நான் ஒன்றும் சந்நியாசி அல்ல! உனக்குத்தான் ஆபத்து. ஓட வேண்டியதுதான் நீ வீட்டை விட்டு” என்று மிரட்டினான். “படுபாவி! என்னைக் கெடுத்ததுமின்றி, மிரட்டியுமா பார்க்கிறாய். நீ நாசமாய்ப் போக, உன் குடிமுழுக” என்று சாரதா தூற்றினாள். ஆனால், மாதம் முடிகிறது என்றதும், இருவரும் தகராறுகளை விட்டுவிட்டு, பணத்தைச் சேர்த்து அனுப்புவதிலே அக்கறையாக இருப்பார்கள். ஏன்! வயிற்றுலுள்ள குழந்தை வாழ்க்கையில் இழிசொல்லோடு இருக்கக் கூடாதே! அதற்குத்தான்! “பாவி, படத்தைக் காட்டி, என் முரட்டுக் கணவன் என்னைத் துரத்திவிட்டால், என் குழந்தையின் கதி என்னவாகும்? கண்டவர் ஏசுவார்களே, அதோ அந்தப் பிள்ளை, வீட்டை விட்டு ஓடிவிட்டாளே சாரதா, அவள் பிள்ளை” என்றுதானே தூற்றுவார்கள். நான் செய்த குற்றம், என் குழந்தையின் வாழ்க்கையைக் கெடுக்குமே என்று எண்ணும்போது சாரதாவின் நெஞ்சு ‘பகீர்’ என்றாகும். மாதங்கள் ஆறு பறந்தன. மாதம் தவறாது பணம் போய்ச் சேர்ந்தது. ஓர் ஆண் குழந்தையும் சாரதாவுக்குப் பிறந்தது. கருப்பையாவின் கணக்குப் புரட்டுகளும் சாரதாவின் திருட்டுகளும் அதிகரித்தன. இருவருக்கும் இடையே சச்சரவும் அதிகரித்தது. இவர்களின் நல்ல காலத்திற்கு அடையாளமாக, சாரதா புருஷனின் அபின் தின்னும் வழக்கமும் அதிகமாகிக்கொண்டே வந்தது. 16 இதே நேரத்தில் கருணானந்த யோகீசுரருக்கும், பரந்தாமனுக்கும் சச்சரவு வளர்ந்தது. மனச்சோகத்தை மாற்ற காவியணிந்த யோகியின் சேவையை நாடிய பரந்தாமன். காவி பூண்ட கருணானந்தன், காசாசை பிடித்த கயவன் என்பதை உணர்ந்தான். அவனுக்குத் தன் நிலைமையில் வெறுப்பு ஏற்பட்டது. யோகியைக் கண்டிக்கத் தொடங்கினான். ‘ஊரை ஏய்க்க உருத்திராட்சமா? கண்டவரை மயக்க காவியா? விபூதி பூசிக்கொண்டு விபரீதச் செயல் புரிவதா?’ என்று கேட்க ஆரம்பித்தான். யோகி ஒரு திருட்டு போகி என்பது பரந்தாமனுக்குத் தெரிந்ததும் “இப்படிப்பட்டவனிடம் சிக்கி வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே, வீணுக்கு உழைத்தோமே” என்று வருந்தினான். “நான் என் நிலைமையைப்பற்றி மட்டுமே கவனித்தேன், என் சுகம், என் மன ஆறுதல் என் அமைதியைப் பற்றி அக்கறை கொண்டனேயன்றி, என்னிடம் காதல்கொண்டு கட்டுகளில் சிக்கிக் கலங்கிய காரிகையின் கஷ்டத்தைப் போக்க நான் என்ன செய்தேன். அவள் எக்கதியானாள்? அவள் பக்கத்தில் அல்லவா நான் நின்று பாதுகாத்திருக்கவேண்டும் அதுதானே வீரனுக்கு அழகு. நான் ஒரு கோழை. எனவேதான், கோணல் வழி புகுந்தேன்” என்று மனங்கசிந்தான். நாளாகவாக, பரந்தாமனுக்குக் கருணானந்த யோகியிடம் வெறுப்பும் கோபமும் வளர்ந்தது. உலகின் முன் அவனை இழுத்து நிறுத்திவிட வேண்டுமென்று எண்ணினான். இந்நிலையில் சென்னை வந்து சேர்ந்தார் கருணானந்தர் தமக்கெனப் புதிதாகத் தயாரிக்கப்பட்டிருந்த மடத்தில் தங்கினார். சென்னை நாகரித்திலும் படிப்பிலும் மிக முன்னேறிய நகரமாயிற்றே, இங்கே யோகியின் தந்திரம் பலிக்காது என்று பரந்தாமன் எண்ணினான். ஆனால், சென்னையைப்போல கருணானந்தருக்கு ஆதரவு தந்த ஊரே இல்லையெனலாம். அவ்வளவு ஆதரவு தந்துவிட்டது சென்னை. சீமான்களெல்லாம் சீடர்களாயினர். மேனாட்டுப் படிப்பில் தேறியவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், பத்திரிகைகாரர்கள் யாவரும் சீடர்களாயினர். கருணானந்தரின் தோழரொருவர், ஒரு பிரபல பத்திரிகையில் இருந்தார். அவர் யோகியின் குணாதியசங்களைப் பற்றி கட்டுரைகள் வெளியிட்டார். அவருடைய ‘தத்துவமே’ உலகில் இனி ஓங்கி வளருமென்றார். அவர் சர்வமத சமாஜத்தை உண்டாக்குவார் என்று கூறினார்கள் பலர். அவருடைய கொள்கைக்கும் அரவிந்தர் கொள்கைக்கும் அதிக வித்தியாசமில்லை என்று வேறொருவர் கூறினார். மடத்தின் வாயிலில் மணி தவறாது மோட்டார்கள் வரும். விதவிதமான ‘சீமான்கள்’ அவருடைய பக்தி மார்க்கத்தைக் கேட்டு ஆனந்திப்பர். பரந்தாமன் திடுக்கிட்டுப் போனான். சென்னையின் நாகரிகம் அதன் கட்டடங்களிலும், மக்கள் உணவிலும் உல்லாச வாழ்விலும் காணப்பட்டதேயன்றி, உள்ளத்திலே மிகமிகக் குருட்டுக் கொள்கைகளே இருப்பதைக் கண்டான். உலகை ஏமாற்றும் ஒரு வஞ்சகனிடம் ‘வரம்’ கேட்க பலர் வருவது கண்டு, சிந்தை மிக வெந்தான். “ஆஹா! பகட்டு வேஷத்துக்குப் பாழும் உலகம் இப்படிப் பலியாகிச் சீரழிகிறதே” என்று வாடினான். இனி இந்த வஞ்சக நாடகத்தில் தான் பங்குகொள்ளக் கூடாது என்று தீர்மானித்தான். நாள் முழுவதும் அத்தீர்மானம் வளர்ந்து வலுப்பட்டது. ஒருநாள் நடுநிசியில் பரந்தாமனின் உள்ளம் பதைபதைத்தது. நேரே யோகியின் அறைக்குச் சென்று, எச்சரித்துவிட்டு மடத்தைவிட்டு விலகி விடுவது என்று முடிவு செய்துகொண்டான். கோபத்துடன் எழுந்தான். கொத்துச்சாவியை எடுத்தான். பெட்டியைத் திறந்தான். இரண்டு வெள்ளை வேட்டிகளை எடுத்துக்கொண்டான். காவியைக் களைந்து வீசினான். வெள்ளை வேட்டிகளைக் கட்டிக்கொண்டான், உருத்திராட்ச மாலைகளை எடுத்தெறிந்தான். நேரே யோகி படுத்துறங்கும் அறைக்குச் சென்றான். கதவு சாத்தப்பட்டிருந்தது, ஆனால் கதவிடுக்கில் வெளிச்சம் தெரிந்தது. அடிமேல் அடி எடுத்து வைத்து, கதவருகே சென்று உள்ளே நடப்பதை நோக்கினான். ‘யோகி’, மங்கையொருத்தியுடன் சல்லாபித்துக்கொண்டிருப்பதைக் கண்டான். “கோகிலா! நீ என்னை உதவாக்கரை என்று ஒதுக்கித் தள்ளினாயே. பார் இப்போது!” என்று யோகி கூறிட, “இவ்வளவு சமர்த்து உமக்கு இருப்பதைக் காணவே நான் உம்மை முன்னம் வெறுத்தேன்” என்று கோகிலம் என்று அழைக்கப்பட்ட பெண் கூறினாள். பரந்தாமனுக்கு ஆத்திரம் பொங்கிற்று. கதவைக் காலால் உதைத்து உள்ளே சென்று யோகியின் கன்னத்தில் அறையலாமா என்று தோன்றிற்று. பொறு மனமே பொறு என்று நின்றான். “அழகாபுரி உமக்குத் தெரியுமோ” என்றாள் கோகிலம். “அங்கே என்ன அதிசயம்” என்றார் யோகி. “அங்கே சாரதா என்றொரு பெண்….” என்று கோகிலம் கூறலானாள். தன் காதலி சாரதாவின் பெயர் உச்சரிக்கப்பட்டவுடன் பரந்தாமன் ஜாக்கிரதையாக உள்ளே என்ன பேசுகிறார்கள் என்பதை உற்றுக் கேட்கத் தொடங்கினான். யோகியின் மடி மீது சாய்ந்தபடியே, அவள் சாரதாவின் ரசமுள்ள கதையைக் கூறலானாள். கோகிலம், சாரதாவின் சேதி பூராவையும் ஒன்று விடாது கூறினாள். ஒரு ‘போட்டோ’ மூலம் தன் அண்ணன், அவளை மிரட்டுவதைக் கூறியபோது, “இது ஒரு பிரமாதமா? இருப்பதைக் காட்டி உன் அண்ணன் மிரட்டுகிறான். யாரவள், சாரதாவா, அவள் மிரளுகிறாள். இந்தக் கருணானந்தன் செய்வது உனக்கென்ன தெரியுமடி, கட்டழகி” என்று கொஞ்சினான், யோகி வேடம் பூண்ட போகி. “உன் சமர்த்தை உரைக்க ஒரு நாக்கும் போதாதே” என்று இசைந்தாள் கோகிலம் கிண்டலாக. “கேள் கோகிலா, இருப்பது கண்டு மிரள்வது, இயல்பு. இல்லாதது கண்டு மிரள்வதை என்னென்பேன் பேதை மக்களிடம். “பிடிப்பான், அடிப்பான், கடிப்பான், உதைப்பான் பேசினாயா நமச்சிவாயா என்பான் சிவனையோ திருநீறு எனக்கேட்பான்” என்று கேட்டு, பற்களை நறநறவெனக் கடித்து, மீசைகள் படபடவெனத் துடிக்க, அந்த நரகலோகத் தூதர்கள், சிவபக்தி அற்றவனின் சிரத்தில் குட்டி, கரத்தில் வெட்டி, எரிகிற கொப்பரையில் எறிந்து, சுடுகின்ற மணலில் உருட்டி, செந்தேள் கருந்தேள் விட்டுக் கொட்டவைத்து சித்திரவதை செய்வார். எனவே மெய்யன்பர்களே. “மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு” என்ற மணிமொழிப்படி, விபூதி ருத்திராட்சமணிந்த வில்வாபிஷேகனை, வேண்டிட வேண்டும்” என நான் நரகலோகக் காட்சி பற்றி பிரசங்கிக்கும்போது அடடா, இந்த மக்கள்தான் எவ்வளவு நம்புகிறார்கள். எத்தனை பயம், இதைவிட சாரதாவின் பயத்தை நான் கண்டு ஆச்சரியப்பட்டேன்” – என்றான் யோகி. “அதுவுஞ்சரிதான்” என்றாள் கோகிலம். “ஆகவே நீ என்னை அணைத்திட வாடி - அணைத்திட வாடி - ஆனந்தத் தோடி பாடி” என்று யோகி ஜாவளி பாடினான், சரசமாடினான், ஜடையைப் பிடித்திழுத்தான். அவள் இவன் ருத்திராட்ச மாலையைப் பிடித்திழுத்தாள். பொட்டைக் கலைத்தான் இவன். அவள் திருநீறைத் துடைத்தழித்தாள். கிள்ளினான்! கிள்ளினாள். நெருக்கினான்! நில் என்றாள். சிரித்தான்! சீறுவதுபோல் நடித்தாள். எழுந்தான்! அவள் படுத்தாள். எட்டி உதைத்தான் கதவைப் பரந்தாமன், ஆத்திரம் தாளமாட்டாது!! ‘மட்டி! மடையா!’ எனத் திட்டினான். மாது கோகிலம் மருண்டாள். “மானத்தைப் பறித்திடுவேன், உன் சூது மார்க்கத்தை அழித்திடுவேன், ஊரை இதோ எழுப்பிடுவேன், உன் சேதி உரைத்திடுவேன்” என்று கோபத்துடன் கூறினான் பரந்தாமன். ““பரந்தாமா! பொறு! பொறு! பதறாதே! ஏதோ நடந்தது நடந்துவிட்டது. இவள் என் சொந்த மனைவி கோகிலம், கூறடி உள்ளதை, நான் குடும்பம் நடத்த முடியாது திகைத்தேன். பாடுபட முயன்றேன். உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே இவ்வேடம் பூண்டேன். என் மானத்தைக் காப்பாற்று. உன் காலடி விழுவேன்” என்று கருணானந்தன் அழுதான். மடத்துக்கென வரும் காணிக்கையை எண்ணினான், ஐயோ, அது வராவண்ணம் இப்பாவிப் பரந்தாமன் செய்திடுவானே, என் செய்வது என்று பயந்தான். “மோசக்கார வேடதாரியே கேள்! இனி உன் முடிவு காலம் கிட்டிவிட்டது. நீ பிழைக்க வேண்டுமானால், அந்த சாரதா போட்டோவை என்னிடம் தந்துவிட ஏற்பாடு செய். இல்லையேல் உன்னை கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதை மீது ஏற்றி ஊர்வலம் வரும்படிச் செய்வேன். உஷார்” என்றான் பரந்தாமன். “சாரதாவின் போட்டோவிலே என்ன ரசம் கண்டீர்” எனச் சாகசமாகக் கேட்டாள் கோகிலம். “அதிரசம்” என்று அலட்சியமாகப் பதிலளித்தான் பரந்தாமன். யோகி, மங்கையின் மலரடி தொழுதான். அவள் முதலில் மறுத்தாள். பிறகு திகைத்தாள். கடைசியில் அண்ணனிடமிருந்து அப்படத்தைத் திருடிக்கொண்டு வருவதாகக் கூறினாள். “புறப்படு” என்றான் பரந்தாமன். “போவோம்” என்றாள் கோகிலம். நள்ளிரவில், கோகிலமும் பரந்தாமனும் மெல்ல சிங்காரவேலன் ஜாகை சென்றனர். கோகிலம், படத்தை அதன் ‘நெகட்டிவ்’ உள்பட, திருட்டுத்தனமாக எடுத்து, பரந்தாமனிடம் கொடுத்துவிட்டு, “நீ மிரட்டினதற்காக நான் இதனைத் தருவதாக எண்ணாதே. முன்னாளில் நீ சாரதாவிடம் கொண்ட காதல் இவ்வளவு காலத்துக்குப் பிறகும் அணையாதிருப்பது கண்டு, மகிழ்ந்தே இதனைத் தருகிறேன். நான் அறிவேன் உன் சேதி யாவும், அன்றொரு நாள் தோட்டத்தில் அவள் எல்லாம் என்னிடம் கூறினாள். ஆனால் நான், நீ காதல் இழந்ததுடன், வேறு வாழ்வில் புகுந்திருப்பாய் என்றே எண்ணினேன். இன்றுதான் கண்டேன், அன்று அவள் தீட்டிய சித்திரம் இன்னமும் இருப்பதை” என்று மிகுந்த வாஞ்சையுடன் கூறினாள். பரந்தாமனின் கண்களில் பல துளி நீர் சரேலென வந்தது. 17 “ஐயோ! புளிய மரத்தைப் பாருடா பொன்னா” என்று அலறினான் பொம்மன். “பிணம் தொங்குதேடா பிடிடா ஓட்டம் தலையாரி வீட்டுக்கு” என்று கூறினான் பொன்னன். ‘கரியா, வரதா, காத்தா, முத்து’ எனக் கூக்குரல் கிளம்பிற்று. ‘அமிர்தம், கமலம், ஆச்சி அகிலாண்டம்’ என்ற படைகள் வந்தன. மரத்திலே தொங்கிய பிணம், காற்றிலே ஊசலாடிற்று. அதைக் கண்டவர்களின் குடல் பயத்தால் நடுங்கிற்று. “கூவாதே! கிட்டே போகாதே!” என்றனர் சிலர். “அடி ஆறுமாதம் கர்ப்பக்காரி. அகிலாண்டம் இதைப் பார்க்கக் கூடாது” என்று புத்தி புகட்டினாள் ஒரு மாது. “ஐய்யய்யோ இது என் அக்கா புருஷனாச்சே” என்று அலறினாள் வேறொரு வீரி. “ஆமாம்! ஆமாம்! கருப்பையாதாண்டோ! அடடா? இது என்னடா அநியாயம்” என்றான் பொம்மன். தலையாரி வந்தான். ஊர் கூடிற்று. கருப்பையாவின் மனைவியும் மக்களும், மார்பிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கூடிவிட்டனர். கருப்பையா புளியமரத்துக் கிளையில் பிணமாகத் தொங்குவது கேட்ட சாரதாவின் முகம் வெளுத்துவிட்டது. அவள் புருஷன் அழுதே விட்டான். ஊர் முழுவதும் ஒரே அர்க்களம்தான். ஏன் கருப்பையா தற்கொலை செய்துகொண்டான் என்பதை ஊர் அறியாது. வருட முடிவில், வீட்டுக் கணக்குப் பார்ப்பார். அதிலே ஆயிரத்துக்கு மேலே துண்டு விழுந்துவிட்டது. தன் மோசம் வெளிக்கு வரும். தன்பாடு பிறகு நாசந்தான். இந்நிலையில் மாதக் கர்ப்பம் தவறிவிட்டது. மருட்டி உருட்டிக் கடிதம் வந்தது. சாரதா கைக்கு எப்பொருளும் சிக்கவில்லை. இருவருக்கும் சண்டையோ நிற்கவில்லை. சாரதா, சற்று கடுமையாகப் பேசிவிட்டாள். கருப்பையாவின் சித்தம் கலங்கிவிட்டது. “ஒரு முழம் கயிறுக்குப் பஞ்சமா, ஊரில் ஒரு மரமும் எனக்கில்லையா” என சாரதாவிடம் வெறுத்துக் கூறினான். அப்படியே செய்தும்விட்டான். பிணமானான்! இரண்டொரு மாதத்தில் புளியமரத்துப் பிசாசுமாவான். 18 சாரதாவின் நிலைதான் என்ன? சிங்காரவேலனின் மிரட்டல் கடிதம் அவளைச் சிதைக்கத் தொடங்கிற்று. ஊர்க்கோடியில் ஒரு மாந்தோப்பு. அதில் உள்ள கிணறு ஆழமுள்ளது. அதுதான் தனக்குத் துணை என முடிவு செய்தாள் சாரதா. அந்த முடிவு செய்தது முதற்கொண்டு அவள் முகத்தில் வேதனை தாண்டவமாடிற்று. விதி என்னை இப்படியும் வாட்டுமோ என்றெண்ணுவாள் வேதனைக்கோ நான் பெண்ணாய்ப் பிறந்தேனோ என்பாள். கணவன் தன் மனைவியின் கலக்கத்தை அறியான், அவள் உடல் இளைப்பது கண்டு, மருந்து கொடுத்தான். 19 பரந்தாமன் போட்டோவை எடுத்துக்கொண்டு அழகாபுரிக்குப் புறப்பட்டான். இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்தான். இடியும் மழையும் இணைபிரியாது அழகாபுரியில் அவதி தந்தது. குளம், குட்டை நிரம்பி வழிந்து ஓடிற்று. பெருங்காற்று அடித்தது, சாலை சோலையை அழித்தது. மரங்கள் வேரற்று வீழ்ந்தன. மண்சுவர்கள் இடிந்தன. மாடு கன்றுகள் மடிந்தன. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிற்று. ஊர் தத்தளித்தது. வந்துள்ள வெள்ளம், தன்னைக் கொள்ளைகொண்டு போகவேண்டும் எனச் சாரதா மாரியை வேண்டினாள். இருட்டும்வரை ஊர்ப்புறத்தே ஒளிந்திருந்து பிறகு மெல்ல நடந்து சாரதாவின் தாய் வீட்டை அடைந்தான் பரந்தாமன். நரைத்து நடை தளர்ந்துபோன அம்மாது விதவைக் கோலத்துடன் இருந்தாள். “கருத்து, மிரட்டும் கடுமழையில் எங்கிருந்து தம்பி நீ வந்தாய்” என்றாள். “வந்தேன் ஒரு முக்கியமான வேலையாக. நான் சாரதாவைப் பார்க்கவேண்டும்” என்றான் பரந்தாமன். “சாரதாவையா? நீ பழைய சாரதாவென எண்ணாதேயப்பா. அவள் என் மகள்தான். ஆனாலும் பெரிய பாவியானாள். அவள் முகத்தில் நான் விழிப்பதே இல்லை. ஊர் சிரித்துவிட்டது” என்று சலிப்புடன் தாய் கூறினாள். “சாரதா என்ன செய்தாள்?” என்றான் பரந்தாமன். “என்ன செய்தாளா? நல்ல கேள்விதான்!” என்று வெறுத்துக் கூறினாள் தாய். “இதோ, இதைப்பார். இதைத்தானே நீ கூறுகிறாய்” என்று கூறிக்கொண்டே, போட்டோவைக் காட்டினான் தாயிடம். “ஆ! படமும் எடுத்தார்களா!” என்று திகைத்தாள் தாய். “பயப்படாதே அம்மா, இதனைக் காட்டத்தான், நான் சாரதாவைப் பார்க்கவேண்டும்” என்றான் பரந்தாமன். “அநியாயம்! நீயாவது இந்தப் படத்தையாவது அவளிடம் காட்டுவதாவது வெட்கக்கேடு” என்றாள் தாய். “அம்மா! நீ விஷயமேதும் அறியாய். இந்தப் படத்தை ஒரு போக்கிரி வைத்துக்கொண்டு, சாரதாவை மிரட்டிக்கொண்டிருந்தான். பாவம் நம் சாரதா, எவ்வளவு பயந்தாளோ, பதைத்தாளோ, அழுதாளோ நமக்கென்ன தெரியும், என்னிடம் இது தற்செயலாகச் சிக்கிற்று. இதனை சாரதாவிடமே கொடுத்துவிட்டால் அவள் மனம் நிம்மதியாகும்!” என்றான் பரந்தாமன். “தம்பீ, பரந்தாமா, உனக்குத்தான் அவள் மீது எவ்வளவு ஆசை. உம்! உன்னைக் கட்டிக்கொண்டிருந்தால் அவளுக்குப் பாடும் இல்லை, பழியும் இல்லை” என்றாள் தாய். “ஆமாம்! எனக்கு சாரதா கிட்டாது போனதால்தான் வாழ்வுமில்லை. வகையுமில்லை” என்று அழுதான் பரந்தாமன். “நாளை காலையில் நான் சேதிவிடுத்து, அவளை இங்கு வரவழைக்கிறேன். நீ உடையைக் களைந்துவிட்டு, வேறுதுண்டு உடுத்திக்கொண்டு படுத்துறங்கு” என்று வேதவல்லியம்மை கூறினாள். ‘ஆகட்டும்’ என்றான். ஆனால் அழுத கண்களுடனும் நனைந்த ஆடையுடனும் படுத்துப் புரண்டான். அலைச்சலாலும், அடைமழையில் நனைந்ததாலும், மனம் மிக நொந்ததாலும், பரந்தாமனுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. கண் திறக்கவும் முடியாதபடி காய்ச்சல். ஊரில் மழையும் நிற்கவில்லை. உடலில் சுரமும் நிற்கவில்லை. ஆறுகள் பாலங்களை உடைத்துக்கொண்டு ஓடின! வயல்கள் குளமாயின. செயல் மறந்து படுத்திருந்தான் பரந்தாமன். ஜூரம் முற்றிற்று. உடலும் திடீரெனச் சிவந்தது. வேதவல்லி தனக்குத் தெரிந்த சில்லறை வைத்தியமெல்லாம் செய்து பார்த்தாள். ஒன்றுக்கும் ஜூரம் கேட்கவில்லை. பரந்தாமன் அலற ஆரம்பித்தான். வேதம் அழுதுகொண்டிருந்தாள். சாரதாவுக்குச் சொல்லி அனுப்பிப் பயனில்லை. “எப்படி நான் அவர் முகத்தைப் பார்ப்பேன்” என்று இடிந்து போனால் சாரதா. பரந்தாமனுக்கு ஜூரம் குறைந்ததுபோல் காணப்பட்டது. ஆனால் அம்மை வார்த்துவிட்டது. சிவந்த அவன் மேனியில் சிவப்புச் சித்திரங்கள் பல நூறு ஆயிரம் திடீர் திடீரெனத் தோன்றின. மயக்கமும், மருட்சியும் அதிகரித்தன. குளறலும் குடைச்சலும் ஆரம்பமாயிற்று. புரண்டு புரண்டு படுத்ததால் அம்மை குழைந்துவிட்டது. பார்க்கவே பயங்கரமாக இருந்தது பரந்தாமனை. வேதவல்லி வேப்பிலையும் கையுமாக அவன் பக்கத்தில் வீற்றிருந்தாள். அம்மையின் வேகம் அதிகரிக்க, பரந்தாமனின் நிலை மோசமாகிக்கொண்டே வந்தது. வேதவல்லி வேப்பிலை கொண்டு வீசி, உபசாரம் செய்தாள். மாரியோ கேட்கவில்லை. பரந்தாமனின் மேனியில் துளி இடங்கூடப் பாக்கி இல்லை. எங்கும் சிவப்புப் பொட்டுகள் பூரித்துக்கொண்டிருந்தன. பரந்தாமனின் உடல் எரிச்சல் சொல்லுந்தரமன்று, அவன் அம்மைத் தழும்புகளைத் தேய்த்துவிடுவான், தழும்புகள் குழைந்துவிடும். வேதவல்லி, “ஐயோ, அபசாரம், அபசாரம் மாரி, கோபிக்காதே மகன்மீது சீறாதே மாவிளக்கு ஏற்றுகிறேன்” என்று வேண்டுவாள். மாரிக்கு என்ன கவலை. 20 இரவு பத்து மணிக்கு, ஓர் உண்டை அபினெடுத்தாள் சாரதா, பாலில் கலக்கினாள். நேரே படுக்கையறை சென்றாள். பாதி மயக்கத்தில் படுத்திருந்த அவள் கணவன் “சாரதா, எனக்கேண்டி கண்ணே இவ்வளவு பால்! நீ கொஞ்சம் சாப்பிட்டால்தான்” என்று கூறினான், கெஞ்சினான். “வேணாமுங்கோ, சொல்றதைக் கேளுங்கோ, நான் இப்போதுதான், பெரிய டம்ளர் நிறைய பால் சாப்பிட்டேன்” என்று சாக்குக் கூறினாள் சாரதா. அந்த நேரத்திலே அவனுக்கு ஏதோ குஷி! விளையாட வேண்டுமென்று தோன்றிவிட்டது. “நீ குடித்தால்தான் நான் குடிப்பேன்” என்று கூறிவிட்டான். “பால் ஆறிப்போய் விடுகிறதே!” “ஆறட்டுமே யாருக்கென்ன?” “விளையாட இதுதானா சமயம்” “சரசத்துக்குச் சமயம் வேண்டுமோ” “சின்ன பிள்ளைபோல விளையாட வேண்டாம்; எனக்கு தூக்கம் வருகிறது. நீங்கள் பால் குடித்துவிட்டால் படுத்துத் தூங்கலாம்” “தூங்க வேண்டுமா! ஏன் நான் ஆராரோ ஆரிரரோ பாடட்டுமா தொட்டிலிலே படுக்க வைக்கட்டுமா” என்று கூறிக்கொண்டே சாரதாவைத் தூக்க ஆரம்பித்துவிட்டான், கணவன். சாரதாவுக்குத் தன்னையும் அறியாமல் ஒரு சிரிப்பு வந்துவிட்டது. “ஐயய்யோ! இதேது இவ்வளவு சரசம். என்ன சங்கதி! பால்யம் திரும்பிவிட்டதோ” என்று கேட்டுக்கொண்டே, “இதோ பாருங்கள் இப்படி, என்மீது உமக்கு ஆசைதானே” என்றாள். தலையை வேகமாகக் கிழவன் அசைத்தான். “சத்தியமாக, ஆசைதானே” என்று கேட்டாள் சாரதா. “சாமுண்டி சாட்சியாக நிஜம்” என்றான் கிழவன். “அப்படியானால் நான் சொல்வதைக் கேட்க வேண்டும். பாலைக் குடித்துவிட்டுப் பிறகு பேசுங்கள்” என்றாள் சாரதா. “ஹுஹும் நான் மாட்டேன். நீ கொஞ்சமாவது குடிக்க வேண்டும்” என்றான் கிழவன். சொல்லிக்கொண்டே பால் செம்பை, சாரதாவின் வாயில் வைத்து அழுத்திக்கொண்டே விளையாடினான். கொஞ்சம் பால் உள்ளேயும் கொஞ்சம் அவள் மேலாடையிலும் விழுந்தது. “இப்போ சரி! உன் உதடுபட்ட உடனே, இந்தப் பால் அமிர்தமாகிவிட்டது. இனி ஒரு சொட்டுப் பால்கூட விடமாட்டேன்” என்று கிழவன் கொஞ்சுமொழி கூறிக்கொண்டே பாலைக் குடித்தான். பக்கத்தில் படுத்த சாரதாவை நோக்கிச் சிரித்தான். “ஆலமர முறங்கக் குட்டி அடிமரத்தில் வண்டுறங்க, உன் மடிமேலே நானுறங்க, குட்டி என்ன வரம் பெற்றேனோடி” என்று பாடத் தொடங்கினான். சாரதா, அவள் பாசாங்கு செய்வதைக் கண்டுகொண்டான். அவளுடைய காதில் சிறிய துரும்பை நுழைத்தான். அவள் சிரித்துக்கொண்டே எழுந்து விட்டாள்! “என்னை ஏமாற்ற முடியுமோடி குட்டி, என்னிடம் சாயுமோடி” என்று பாடினான். இரண்டொரு விநாடியில் குறட்டை விட்டான் பாசாங்கு அல்ல! நிஜம். பாலில் கலந்திருந்த அபின் வேலை செய்யத் தொடங்கிவிட்டது. சாரதா, கணவனைப் புரட்டிப் பார்த்தாள், எழுந்திருக்கவில்லை. பிறகு, அவள் படுக்கையைவிட்டு எழுந்து, பெரிய பச்சை சால்வையொன்றை எடுத்துப் போர்த்திக்கொண்டு புறக்கடை கதவைத் திறந்துகொண்டு, கழனிப் பக்கம் நடந்தாள். இருட்டு. தவளையின் கூச்சல் காதைத் துளைத்தது. சேறும் நீரும் கலந்த வழி. தொலைதூரத்தில் நரியின் ஊளை. ஆங்காங்கு, வீட்டுப் புறக்கடைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகள் அசைவதால் உண்டாகும் மணி ஓசை, மர உச்சியில் தங்கி ஆந்தை கூச்சலிட்டது. சாரதா பயத்தையும் மறந்து நடந்தாள். கணவனின் பிடிவாதத்தால் பாலைக் கொஞ்சம் பருகியதால், அபின் அவளுக்கு மயக்கத்தைத் தந்தது. அதையும் அவள் உணர்ந்தாள். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நடந்தாள்? எங்கே? தன் தாய் வீட்டுக்கு. ஏனெனில் பரந்தாமன் பிழைப்பதே கஷ்டம், அவன் உயிர் போகும் முன்னம் சாரதா வந்து பார்த்துவிட்டுப் போனால்தான் போகிற பிராணனாவது சற்று நிம்மதியாகப் போகும் என சாரதாவுக்கு அவள் தாய் சேதி விடுத்திருந்தாள். எனவேதான் சாரதா பதைத்து, கணவனுக்கு அபின் கலந்த பால் கொடுத்துவிட்டுப் பறந்தாள், தன் காதலனைக் காண. 21 “சாரதா வரவில்லையே, சாரதாவுக்கு என்மீது கோபமா? ஆம்! நான் அவள் வாழ்விற்கே ஒரு சகுனத்தடைபோல வந்தேன். சாரதா என் மனத்தைக் கொள்ளைகொண்ட சாரதா” என்று பரந்தாமன் அலறிக்கொண்டிருந்தான். கண் இரப்பை மீதும் அம்மை இருந்ததால் பரந்தாமனுக்கு கண்களைத் திறப்பதென்றாலும் கஷ்டம். திறந்ததும் வலிக்கும். வலித்ததும் மூடுவான். ‘வந்தாளா சாரதா’ என்று கேட்பான். “தம்பீ, வருவாள் பொறு, சற்றுத் தூங்கு” என்பாள் சாரதாவின் தாய். “தூக்கம்! எனக்கா! அம்மணி நான் செல்கிறேன் சாரதா இங்கு வரமாட்டாள். நானே அங்குச் செல்கிறேன். போனால் என்ன? அவள் கணவன் என்னைக் கொல்வானா! கொல்லட்டுமே? நான் செத்துதான் பல வருஷங்களாயிற்றே. எனக்கு இல்லாத சொந்தம் அவனுக்கா? தாலி கட்டியவன் அவன்தான்! ஆனால் அவளுடைய கழுத்தின் கயிறுதானே அது! நான் அவள் இருதயத்தில் என் அன்பைப் பொறித்துவிட்டேன். எனக்கே அவள் சொந்தம். ஓஹோ! ஊரைக்கேள், சாரதா யார் என்று என்பானோ! ஊரைக் கேட்டால், ஊராருக்கு என்ன தெரியும? உள்ளத்தைக் கேட்டுப் பார்க்கட்டுமே. ஏதோ இங்கே வா அம்மா இப்படி. நீயே சொல். சாரதா உன் மகள்தான். நீ சொல், சாரதா எனக்குச் சொந்தமா, அந்தக் கிழவனுக்கா! யாருக்கம்மா சொந்தம்! கொண்டுவா சாரதாவை! இனி ஒரு க்ஷணம் விட்டு வைக்கமாட்டேன். என் சாரதா, என்னிடம் வந்தே தீரவேண்டும்” என்று பரந்தாமன் அலறினான். கப்பல் முழுகுவதற்கு முன்பு, கடல் நீர் அதிகமாக உள்ளே புகும். அதுபோல, பரந்தாமன் இறக்கப் போகிறான். ஆகவேதான் அவன் எண்ணங்களும் மிக வேகமாக எழுகின்றன என வேதவல்லி எண்ணி விசனித்தாள். சாரதாவைப் பெற்றவள் அவள். அவளே சாரதாவைக் கிழவனுக்குக் கலியாணம் செய்து கொடுத்தாள். பரந்தாமனோ சாரதா யாருக்குச் சொந்தம் கூறு எனத் தன்னையே கேட்கிறான். வேதவல்லி என்ன பதில் சொல்வாள். “கதவைத் தட்டுவது யார்?” “அம்மா! நான்தான் சாரதா!” “வந்தாயா, கண்ணே வா, வந்து பாரடி அம்மா பரந்தாமனின் நிலையை…” என்று கூறி, சாரதாவை வேதவல்லி அழைத்து வந்தாள். பரந்தாமனைக் கண்டாள் சாரதா. அவள் கண்களில் நீர் பெருகிற்று. உள்ளம், ஒரு கோடி ஈட்டியால் ஏககாலத்தில் குத்தப்பட்டதுபோல் துடித்தது. குனிந்து அவனை நோக்கினாள். அந்த நேரத்தில் பரந்தாமனின் எண்ணம், அன்றொரு நாள் ஜூரமாக இருந்தபோது சாரதாவுக்கு முத்தமிட்ட காட்சியில் சென்றிருந்தது. அதனை எண்ணிப் புன்சிரிப்புடன் அவன் மீண்டும் உளறினான். “சாரதா நான் உன்னைக் காதலிக்க, நீ என் பாட்டனுக்குப் பெண்டானாயே, உன்னை விடுவேனோ! ஒரு கயிறு உன்னை என்னிடமிருந்து பிரித்துவிடுமா! என்னைவிட அக்கயிறு என்ன பிரமாதமா! வா! சாரதா! வந்துவிடு!” என்று உளறினான். “தம்பி பரந்தாமா, இதோ இப்படிப் பார், சாரதா வந்திருக்கிறாள்” என்று வேதவல்லி கூறினதும், பரந்தாமன், “யார் ராதவா, இங்கேயா” என்று கேட்டுக்கொண்டே கண்களைத் திறந்தான், சாரதாவைக் கண்டான். படுக்கையிலிருந்து தாவி, தன் கரங்களால் சாரதாவை இழுத்தான். சாரதா தழுதழுத்த குரலுடன் கண்களில் நீர் ததும்ப, “வேண்டாம் வேண்டாம் என்னைத் தொடதீர்கள்” என்றாள். பரந்தாமனின் விசனம் அதிகமாகிவிட்டது. கரங்களை இழுத்துக்கொண்டான். “மறந்துவிட்டேன் சாரதா அம்மை தொத்து நோய் என்பதை மறந்துவிட்டேன். என் பிரேமையின் பித்தத்தில், எனக்கு எதுதான் கவனத்துக்கு வருகிறது” என்று சலிப்புடன் கூறினான். சாரதா பதைபதைத்து “பரந்தாமா! தப்பாக எண்ணாதே. தான் என்னைத்தொட்டால் அம்மை நோய் வந்துவிடுமென்பதற்காகக் கூறவில்லை. நீ தொடும் அளவு பாக்கியம் எனக்கில்லை. நான் ஒரு பாவி” என்றாள். புன்னகையுடன் பரந்தாமன் “நீயா பாவி, தப்பு தப்பு. சாரதா நான் பாவி, நான் கோழை, என்னால்தான் நீ துயரில் மூழ்கினாய்” என்று கூறிக்கொண்டே சிங்காரவேலனிடமிருந்து வாங்கிக்கொண்டு வந்த ‘போட்டோவை’ சாரதாவிடம் கொடுத்தான். சாரதா சிறிதளவு திடுக்கிட்டுப்போனாள். பரந்தாமனைப் பார்த்து “இந்தப் படத்தைக் கண்ட பிறகுமா, என்மீது உனக்கு இவ்வளவு அன்பு. நான் சோரம் போனதைக் காட்டும் சித்திரங்கூட உன் காதலை மாற்றவில்லையா” என்று கேட்டாள். “சாரதா, கல்லில் பெயர் பொறித்துவிட்டால், காற்று அதனை எடுத்து வீசி எறிந்துவிடுமா!” என்றான் பரந்தாமன். அவனுடைய இருதயபூர்வமான அன்புகண்ட சாரதாவால் அழுகையை அடக்கமுடியவில்லை. இவ்வளவு அன்பு கனியும் பரந்தாமனிடம் வாழாது வாழ்க்கையைப் பாழாக்கிக்கொண்டு வழுக்கி விழுந்ததை எண்ணினாள். ஆனால் அவன் என் செய்வான்! சமுதாயத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உருக்கி ஊற்றப்பட்டிருக்கும் பழக்க வழக்கம் சமூகத்தை ஒரு சருக்கு மரமாக்கிவிட்டது, அதில் தம்மிஷ்டப்படி செல்ல விரும்பி சருக்கி விழுந்து சாய்ந்தவர், கோடி கோடி, அதில் சாரதா ஒருத்தி. “சாரதா ஒரே ஒரு கேள்வி. என்மீது கோபிப்பதில்லை யானால் கேட்கிறேன்” என்றான் பரந்தாமன். “குணசீலா, உன்மீது எனக்குக் கோபமா வரும்? கேள், ஆயிரம் கேள்விகள்” என்றாள். “அந்தப் படத்திலுள்ள கருப்பையாவுடன் நீ காதல் கொண்டிருந்தாயா!” என்று சற்று வருத்தத்துடன் கேட்டான் பரந்தாமன். “கருப்பையாவிடம் காதலா! வலை வீசும் வேடன்மீது புள்ளிமான் ஆசைகொண்டா வலையில் விழுகிறது” என்றாள் சாரதா. “தெரிந்துகொண்டேன். ஆம்! நான் எண்ணியபடிதான் இருக்கிறது. நீ அவன் மீது காதல் கொள்ளவில்லை. அவன் உன் நிலைகண்டு உன்னைக் கெடுத்தான். நீ என்ன செய்வாய் பருவத்தில் சிறியவள்” என்று பரந்தாமன் கூறிக்கொண்டே சாரதாவின் கரத்தைப் பிடித்துத் தன் மார்பின் மீது வைத்துக்கொண்டு, “சாரதா! நீ இதனுள்ளே எப்போதும் இருந்து வந்தாய். அன்று உன்னை முந்திரிச்சோலையில் கண்டபோது உன் முத்திரை என் இருதயத்தில் ஆழப்பதிந்தது. அதனைப் பின்னர் அழிக்க யாராலும் முடியவில்லை. நாளொன்றுக்கு ஆயிரம் தடவை ‘அரகரா சிவசிவா அம்பலவாணா’ என்று சொல்லிப் பார்த்தேன். உன் கவனம் மாறவில்லை. தில்லை, திருவானைக்காவல், காஞ்சி எனும் தலங்களெல்லாம் சென்றேன். என் ‘காதல்’ கரையவில்லை. எப்படிக் கரையும்! ‘உமை ஒரு பாகன்’, ‘இலட்சுமி நாராயணன்’, ‘வள்ளி மணாளன் முருகன்’, ‘வல்லபைலோலன்’ என்றுதான் எங்கும் கண்டேன். நான் தேடிய உமை நீ தானே!” என்று பரந்தாமன் பேசிக்கொண்டே இருந்தான். கேட்கக் கேட்க சாரதாவின் உள்ளம் தேன் உண்டது. ஆனாலும், கடுமையான அம்மையின்போது பேசி உடம்புக்கு ஆயாசம் வருவித்துக் கொள்ளக்கூடாதே என்று அஞ்சி, “பரந்தாமா போதும் பிறகு பேசுவோம், உன் உடம்பு இருக்கும் நிலைமை தெரியாது பேசிக்கொண்டிருக்கிறாயே” என்று கூறி சாரதா அவன் வாயை மூடினாள். “உடம்பு ஒன்றும் போய்விடாது. போனாலும் என்ன? உன்னைக் கண்டாகிவிட்டது. உனக்கு இருந்துவந்த ஆபத்தைப் போக்கியுமாகிவிட்டது. இனி நான் நிம்மதியாக…” என்று கூறி முடிப்பதற்குள் சாரதா மீண்டும் அவன் வாயை மூடி, “அப்படிப்பட்ட பேச்சு பேசக்கூடாது. நான் சாகலாம், ஆனால் உங்களுக்கு ஒரு கெடுதியும் சம்பவிக்கலாகாது” என்று கூறினாள். சாரதாவைக் கண்ட ஆனந்தம் அவளிடம் பேசியதால் ஏற்பட்ட களிப்பு பரந்தாமனின் மனத்தில் புகுந்தது. அயர்வு குறைந்தது. பேசிக்கொண்டே கண்களை மூடினான். அப்படியே தூங்கிவிட்டான். அவன் நன்றாகத் தூங்கும் வரை பக்கத்தில் உட்கார்ந்துகொண்டிருந்தாள் சாரதா. மெல்ல குறட்டை விட்டான் பரந்தாமன், சாரதா மெதுவாக எழுந்தாள். தாயை அழைத்தாள். இருவரும் சமையலறை சென்றனர். அடுப்பில் நெருப்பை மூட்டினர். பரந்தாமன் தந்த போட்டோவை எரியும் நெருப்பில் போட்டு கொளுத்திவிட்டனர். பின்னர் சாரதா மெல்ல நடந்து வீடு சென்றாள். 22 படுத்துறங்கும் கணவன் பக்கத்தில் படுத்தாள் பூனை போல. சில நிமிடங்கள் வரை சாரதாவின் கவனம் முழுவதும் பரந்தாமன் மீதே இருந்தது. திடீரென அவள் திடுக்கிட்டாள். ஏன்? தன் கணவன் குறட்டைவிடும் சத்தமே கேட்கவில்லை. என்றுமில்லாத அதிசயமாக இருக்கிறதே என்று எண்ணி, மெதுவாகக் கணவன் மீது கையை வைத்தாள். பனிக்கட்டி போல ஜில்லென இருந்தது. அலறிக்கொண்டே, அவர் உடலைப்பிடித்து அசைத்தாள். பிணம் அசைந்தது. அபின் அதிகம், மரணம். சாரதா விதவையானாள். குங்குமம் இழந்தாள். கூடின பந்துக்கள் தமது அனுதாபத்தைத் தெரிவித்தனர். வேதவல்லி தன்னைப் போலவே சாரதாவும் ஆனது கண்டாள்; மனம் நொந்தாள். சாரதா விதவையானாள், பரந்தாமன் குருடனானான். அம்மையிலிருந்து அவன் தப்பித்துக்கொண்டான்; ஆனால் அவனது கண்கள் தப்பவில்லை. பார்வையை இழந்தான் பரந்தாமன். சாரதாவுக்கு நேரிட்ட விபத்தைக் கேட்டான். மனம் நொந்தான். ஏன்? சாரதாவுக்கு இதனால் மனக்கஷ்டம் வருமே என்பதனால். அம்மை போயிற்றே தவிர, எழுந்து நடமாடும் பலம் பரந்தாமனுக்கு வருவதற்கு ஒரு மாதத்துக்கு மேல் பிடித்தது. ஒரு மாதத்துக்குப் பிறகு, பரந்தாமன் சாரதாவைக் காணச் சென்றான். கண் இழந்தவன் கபோதி எனினும் அவளைக் காணமுடியும் அவனால். கண் இழந்தான், கருத்தை இழக்கவில்லையல்லவா! சாரதா தாலியை இழந்தாள்; பிறரால் பிணைக்கப்பட்ட கணவனை இழந்தாள்; தன் வாழ்க்கையில் அதனை ஒரு விபத்து எனக்கொண்டாள். ஆனால் அதனாலேயே தன் வாழ்க்கையில் இருந்து வந்த இன்ப ஊற்று உலர்ந்துவிட்டதாகக் கருத முடியவில்லை. துக்கம் விசாரிக்க வந்தவர்களெல்லாம் தனக்கும் மாண்டு போன தன் கணவருக்கும் இருந்த பொருத்தம், ஒற்றுமை, நேசம் முதலியவற்றைப் பற்றிப் பேசினர். அது வாடிக்கையான பேச்சுதானே! யாருக்குத் தெரியும். தன் காதலனைக் காணப் போகவேண்டும் என்பதற்காகக் கணவனுக்கு அபின் ஊட்ட, அது அளவுக்கு மீறிப் போனதால் அவன் இறந்தான் என்ற உண்மை. தன் கணவனைத் தானே கொன்றதை எண்ணும்போது சாரதாவுக்கு இருதயத்தில் ஈட்டிபாய்வது போலத்தான் இருந்தது. “நான் அவர் சற்று தூங்கவேண்டும் என்று அபின் கொடுத்தேனேயொழிய அவர் இறக்கவேண்டும் என்றா கொடுத்தேன். இல்லை! இல்லை! நான் எதைச் செய்தாலும் இப்படித்தானே ‘வம்பாக’ வந்து முடிகிறது. என் தலை எழுத்துப் போலும்” என்று கூறித் தன்னைத்தானே தேற்றிக்கெண்டாள். தன் வீட்டின் கடனைத் தீர்க்கத்தான், சாரதாவின் தகப்பன் பணக்காரனுக்குத் தன் பெண்ணை மணம் செய்து கொடுத்தார். வேதவல்லியும் தன் மகள் நல்ல நகை நட்டுடன் நாலுபேர் கண்களுக்கு அழகாக வாழவேண்டும் என்ற விருப்பத்துக்காகத்தான் சாரதாவை மணம் செய்ய ஒப்பினாள். ஆனால் அந்த மணம் மரணத்தைத்தான் சாரதாவுக்குத் தந்தது. என் செய்வது? ஓட்டைப் படகேறினால் கரையேறு முன்னம் கவிழ்ந்தாக வேண்டுமல்லவா! சாரதாவுக்கு அவள் பெற்றோர்கள் அமைத்துக் கொடுத்த வாழ்க்கைப்படகு ஓட்டையுள்ளது. அதில் எத்தனை நாளைக்குச் செல்லமுடியும். அந்த ஓட்டைப் படகுக்குக் கருப்பையா ஒட்டுப்பலகை! ஆனால் ஒட்டுப் பலகைதான் எத்தனை நளைக்குத் தாங்கும். அதுவும் பிய்த்துக் கொண்டு போய்விட்டது ஒருநாள். பிறகு படகே கவிழ்ந்துவிட்டது. கணவனே மாண்டான் இனி சாரதா கரை சேருவது எப்படி முடியும்? 23 “முடியுமா? முடியாதா?” “நான் என்ன பதில் கூறுவேன்” “உன் உள்ளத்தில் தோன்றுவதை, உண்மையைக் கூறு.” “ஊரார்…” “ஊரார். பாழாய்ப்போன ஊராருக்குப் பயந்து பயந்துதானே நாம் இக்கதிக்கு வந்தோம். அறுபட்ட தாலி, பொட்டையான கண், மரத்தில் தொங்கிய பிணம் இவை ‘ஊரார் ஊரார்’ என வீண் கிலிகொண்டதால் வந்த விளைவுகள் என்பது ஊராருக்குத் தெரியுமா? உன் காரியத்துக்கு, ஊரார் ஒருவரையும் பாதிக்க முடியாதா? உன் காரியத்தை நீ செய்து கொள். உன் உள்ளம், உனக்கு அதிகாரியா, ஊராரா? ஊராருக்கென்ன சாரதா? ‘இது ஆகுமா அடுக்குமா? தாலி அறுந்த முண்டைக்குக் கண் இழந்த கபோதியா?’ என்றுதான் கூறுவர். ஏளனம் செய்வர். எதிர்ப்பர். நீ ஏழைப் பெண்ணாக இருந்தால், உன்னைச் சமூக பகிஷ்காரம் செய்வர். ஆனால், அதனைப் பற்றி நீ ஏன் கவலைகொள்ள வேண்டும். சாரதா, கேள் நான் சொல்வதை! நான் கண்ணிழந்தவன். ஆனாலும், உனக்குப் பார்வை தெரிந்த காலத்தில் நான் கண்ட காட்சிகள் இந்தச் சமுதாயத்தின் சித்திரங்கள், எனக்குப் புகட்டும் பாடம் இதுதான்; சமூகம், திடமுடன் யார் என்பதைச் செய்யினும் பொறுத்துக் கொள்ளும், தாங்கி, பதுங்கினால் அவர்கள்மீது பாய்ந்து அவர்களைப் பதைக்க வைக்கும். சாரதா, கழுதையின் பின்புறம் நின்றால் உதைக்கும், முன்னால் செல் ஓடிவிடும். பழக்கவழக்கமெனும் கொடுமையை, தீவிரமாக எதிர்த்தால்தான் முடியும்” எனப் பரந்தாமன் சாரதாவிடம் வாதாடினான், தன்னை மறுமணம் செய்து கொள்ளும்படி. சாரதாவுக்கு, மறுமணம் – தான் தேடிய பரந்தாமனை நாயகனாகப் பெறுவது என்ற எண்ணமே எதிர்கால இன்பச் சித்திரங்கள் அடுக்கடுக்காகத் தோன்றின. அவனுடைய அன்பு தன்னைச் சூழ்ந்து தூக்கிவாரி இன்ப உலகில் தன்னை இறக்குவதைக் கண்டாள். அவனுடைய கருவிழந்த கண்களில் காதல் ஒளி வெளிவரக் கண்டாள். சிங்காரத் தோட்டத்தில் அவன் கைப்பிடித்து நடக்க, காலடிச் சத்தம் கேட்டு மரக்கிளைகளில் அமர்ந்திருந்த கிளி, கொஞ்சுமொழி புகன்று, பறக்கக் கண்டாள். அவள் ஏதேதோ கூறவும் அவை, எண்ணத்தில் இன்பவாடையைக் கிளப்பவும் கண்டான். அவன் அணைப்பு, அவன் முத்தம், அவன் கொஞ்சுதல், அவன் கூடி வாழ்தல் அவனுடன் குடும்பம் நடத்துதல் இவை யாவும் அவள் மனக்கண்முன்பு தோன்றின. “சாரதா, இதோ உன் உலகம், நீ தேடிக்கொண்டிருந்த தேன் ஓடும் தேசம். நீ நடந்து சென்று வழி தவறி, சேர முடியாது தத்தளித்தாயே, அதே நாடு. காதல் வாழ்க்கை, பரந்தாமனுடன் இணைந்து வாழும் இன்பபுரி, போ, அவ்வழி. வாழு, அந்த நாட்டில், ஒருமுறைதான் தவறிவிட்டாய். அதற்குக் காரணம் என் தந்தை. இம்முறை தவறவிடாதே. முன்பு நீ பேதைப் பெண். உன்னை அடக்க மடக்க பெற்றோரால் முடிந்தது. இப்போது நீ உலகைக் கண்டவள். இம்முறை உணர்ச்சியை அடக்காதே. நட இன்பபுரிக்கு. சம்மதங் கொடு பரந்தாமனுக்கு. அவன் உனக்குப் புத்துலக இன்பத்தை ஊட்டுவான். அவனுக்கு நீ தேவை. உனக்கு அவன். நீங்கள் இருவரும் தனி உலகில் வாழுங்கள். சாதாரண உலகைப் பற்றி கவலை ஏன்! பழிக்கும் சுற்றத்தார் இழித்துப் பேசும் பழைய பித்தர்கள், கேலி செய்யும் குண்டர்கள், கேவலமாக மதிக்கும் மற்றையோர், என்ன சொல்வாரோ என்பதைப் பற்றி நீ கவலைப்படாதே. அவன் கபோதிதான்! ஆனால் அவனுக்குத்தான் தெரியும் உன்னை இன்பபுரிக்கு அழைத்துச் செல்ல. பிடித்துக் கொள் அவன் கரத்தை. அவன் குருடன்! எனவே உலகின் காட்சிகள் எதுவும் அவனுக்கு இனி தெரியாது. ஆனால் உன்னை மட்டும் அவன் அறிவான். பிறவற்றைப் பார்க்கவொட்டாதபடி தடுக்கவே பார்வை அவனை விட்டுச் சென்றும்விட்டது” – என சாரதாவுக்கு விநாடிக்கு விநாடி காணும் காட்சிகள் யாவும் உணர்த்துவித்தன. விதவை சாரதாவுக்கும் விதியிழந்த பரந்தாமனுக்கும் மணம் நடந்தேறியது. வீதி மூலைகளில் வீணர்கள் வம்பு பேசினர். சமையற்கட்டுகளில் பெண்டுகள் சகலமும் தெரிந்தவர்கள்போலக் கேலி செய்தனர். வைதீகர்கள் வந்தது விபரீதம் எனக் கைகளைப் பிசைந்தனர். உற்றார் உறுமினர். ஆனால், கபோதிபுரக் காதலை, இனி யாராலும் தடுக்கமுடியாது. அவர்கள் இன்பபுரி சென்று இன்பத்துடன் வாழ்ந்து வரலாயினர். FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.