[] [cover image] கன்னித்தமிழ் (கட்டுரைகள்) கி.வா.ஜகந்நாதன் FreeTamilEbooks.com CC0 கன்னித்தமிழ் (கட்டுரைகள்) 1. கன்னித்தமிழ் (கட்டுரைகள்) 1. கன்னித்தமிழ் (கட்டுரைகள்) 2. Acknowledgements: 2. முன்னுரை 3. தமிழ் இலக்கியச் சாலை 4. பெயர் வைத்தவர் யார்? 5. அகத்தியர் தொடங்கிய சங்கம். 6. தலைச் சங்கம் 7. கபாடபுரம் 8. கடைச் சங்கம் 9. அகத்தியம் 10. கன்னித் தமிழ் 11. தொல்காப்பியம் உருவான கதை 12. அழகின் வகை 13. இலக்கணமும் சரித்திரமும் 14. பழந் தமிழர் ஓவியம் 15. ஓவிய வித்தகர். 16. கலை இன்பம் 17. கலையும் கலைஞனும் 18. வாத்தியார் ஐயா 19. பொழுதும் போதும் 20. எப்படி அளப்பது? 21. ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை 22. மழை வேண்டாம்! 23. மோதிய கண் 24. புன்னையின் கதை 25. செவிலி கண்ட காட்சி 26. கம்பர் முகந்தது 27. ஔவையார் என்னும் பண்புருவம் 28. எங்கள் பாவம்! 29. உழவர் மொழி கன்னித்தமிழ் (கட்டுரைகள்) கன்னித்தமிழ் (கட்டுரைகள்)   கி.வா.ஜகந்நாதன்   தமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/Kannit_Tamiz} கன்னித்தமிழ் (கட்டுரைகள்) கி. வா. ஜகந்நாதன் kannit tamiz (literary essays) ki. vA. jekannAtan In tamil script, unicode/utf~8 format Acknowledgements: Our Sincere thanks go to the Digital Library of India for providing scanned images version of this work. This etext has been prepared via Distributed Proof~reading implementation of Project Madurai. We thank the following volunteers for their assistance in the preparation of this etext: V Devarajan, Sathikumaran, Nagendran, S. Karthikeyan, Nalini Karthikeyan, Subramanian Karthik, Mithra, M. Jeyadharman, R. Navaneethakrishnan, Sankarasadasivan, Sri Ganesh, Thamizhagazhvan and S Subathra Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998~2012. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. கன்னித்தமிழ் (கட்டுரைகள்) கி. வா. ஜகந்நாதன் Source: கன்னித்தமிழ் (கட்டுரைகள்) அமுத நிலையம் லிமிடெட் தேனாம்பேட்டை சென்னை~18 முதற் பதிப்பு: நவம்பர், 1954 அமுதம்~8 உரிமை பதிவு விலை ரூ.2₁₂0 நாஷனல் ஆர்ட் பிரஸ் தேனாம்பேட்டை, சென்னை~18 ஏ.பி.நாகராஜன் முன்னுரை தமிழ் மிக மிகப் பழமையானது. எத்தனையோ பழந்தமிழ் நூல்கள் இப்போது நமக்குக் கிடைக்காவிட்டாலும், கிடைக்கும் நூல்களைக் கொண்டு தமிழின் பழமையை ஒருவாறு உணர முடிகிறது. வரையறையாகக் காலத்தைத் தெரிந்து சொல்ல உறுதியான ஆதாரங்கள் தெளிவாக இல்லை. அதனால் பழைய தமிழ் நூல்களின் காலம் இன்னதுதான் என்று திட்டமாகச் சொல்ல முடியவில்லை. கிடைக்கும் பழைய நூல்களுள் தொல்காப்பியம் மிகப் பழையதென்று பலரும் கருதுகிறார்கள். அது தோற்றிய காலம் இன்னதென்று நிறுவும் வகை தெரியாமல் ஆராய்ச்சிக்காரர்கள் திண்டாடுகிறார்கள். குத்து மதிப்பாக மூவாயிர வருஷங்களுக்கு முந்தியது, ஐயாயிரம் வருஷங்களுக்கு முந்தியது என்று சிலர் கூறுகிறார்கள். இன்னும் சிலர் சில சொற்களை வைத்துக்கொண்டு தொல்காப்பியர் அவ்வளவு பழமையானவரல்ல என்று சொல்கிறார்கள். தொல்காப்பியத்தின் பண்ணமைந்த கட்டுக் கோப்பையும் அதன்பால் உள்ள செய்திகளையும் பார்த்தால் அதற்கு முன் பல நூல்கள் தமிழில் இருந்திருக்கவேண்டும் என்று நிச்சயமாகக் கூறலாம். பல நூல்கள் ~ இலக்கியங்களும் இலக்கணங்களும் ~ வெளிவந்த பிறகே அத்தகைய அமைப்பையுடைய இலக்கணம் பிறக்க முடியும். அகத்தியம், மாபுராணம், பூத புராணம் முதலிய நூல்கள் இருந்தனவாகத் தெரிகின்றன. ஆனால் அவற்றின் தன்மையைத் தெளிவாக அறிவதற்குரிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. கடைச் சங்க நூல்கள் என்று சொல்லும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்பன, தொல்காப்பியத்துக்கு அடுத்தபடியாகப் பழமையை உடையவை. அவற்றில் சங்கம் என்ற ஒன்று இருந்த செய்தியை விளக்கமாகச் சொல்லும் பாடல் ஒன்றும் இல்லை. ஆகவே சங்கம் இருந்தது என்ற செய்தியே வெறும் கற்பனை என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். சங்க காலத்து நூல்களில் உள்ள பாடல்கள் யாவுமே ஒரே காலத்தில் பாடப்பெற்றவை அல்ல, வெவ்வேறு காலத்தில் இருந்த புலவர்கள் பாடியவை. ஆதலால் சங்கம் பல ஆண்டுகள் இருந்து விளங்கியிருக்க வேண்டும். அந்தக் காலம் எது? சிலப்பதிகாரத்தில் வரும் கயவாகுவின் காலத்தைக் கொண்டு சங்கத்தின் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரையில் என்று பெரும்பாலோர் தீர்மானித்திருக்கின்றனர். அந்த முடிவையும் தவறு என்று சொல்லி ஐந்தாம் நூற்றாண்டு என்று காலத்தைப் பின் தள்ளிக் காட்டுபவர்களும் இருக்கிறார் இந்தப் புதிய ஆராய்ச்சிகள் தோன்றுவதற்கு முன்னே சங்கம் முதலியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள உதவியாக இருந்தவை சில உரை நூல்கள், முக்கியமாக இறையனாரகப் பொருள் உரையில்தான் ஒருவாறு தொடர்ச்சியாகச் சங்கங்களைப் பற்றிய செய்திகள் வருகின்றன. சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் சில செய்திகளைச் சொல்கிறார். நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில் அந்த நூலைப் பற்ரி அவர் காலத்து வழங்கிய சில செய்திகளை எடுத்துச் சொல்கிறார். அவற்றைக் கொண்டே மூன்று சங்கங்கள் இருந்தன என்பதைத் தெரிந்து கொண்டிருக்கிறோம். கர்ண பரம்பரையாக வந்த செய்திகளை வைத்தே அந்த உரைகாரர்கள் அவற்றை எழுதினார்கள். அவற்றை அப்படியே நம்பக்கூடாது. ஆனால் அவற்றில் இம்மியும் உண்மை இல்லை என்று சொல்வதும் தவறு. உரைகளின் மூலம் கிடைக்கும் செய்திகளையெல்லாம் தொகுத்து ஒட்டிப் பார்த்தால் தமிழின் பழமை ஒருவாறு தெரியும். நெடுந்தூரத்தில் புகையின் நடுவே ஒரு மாளிகை தெரிவது போல அது புலப்படும். பல இடங்களில் கண்ட இந்தச் செய்திகளைத் தொகுத்து வகைப்படுத்திச் சில கட்டுரைகளைத் தினமணியில் எழுதி வந்தேன். அதன்பின் தொல்காப்பியத்தைப் பற்றிப் பல கட்டுரைகளை எழுதினேன். தோற்றுவாயாக முதலில் எழுதிய பதினொரு கட்டுரைகள் இந்தப் புத்தகத்தின் முதலில் இருக்கின்றன. இந்தக் கட்டுரைகள் நுணுக்கமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் அல்ல. கால் இல்லாத கட்டுக் கதைகளும் அல்ல. சொல்வதைத் தெளிவாகச் சொல்லவேண்டும் என்ற ஆசையில்னாலே எழுதியவை இவை. பின்னே உள்ள கட்டுரைகள் அவ்வப்போது பல பத்திரிகைகளூக்கு எழுதியவை. கலையைப் பற்றியனவும், வெவ்வேறு நூல்களில் கண்ட செய்திகளை ஒப்பு நோக்கும் வகையில் அமைந்தனவும், பழஞ் செய்யுட்களின் விளக்கமாக இருப்பனவும் ஆகப் பின்னால் உள்ள கட்டுரைகளும் இருப்பதைக் காணலாம். பொதுவாக எல்லாக் கட்டுரைகளுமே இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டவை. கன்னித் தமிழின் நலங்களிற் சிலவற்றை எடுத்துக் கூறுபவை. கன்னித் தமிழ் என்ற பெயர் கொண்ட கட்டுரை ஒன்றும் இதில் இருக்கிறது. அந்தப் பெயரையே இந்தத் தொகுப்பு நூலுக்கு வைத்தேன். நுணுகி நுணுகி ஆராய்ந்து செல்லும் ஆராய்ச்சிகள் நமக்கு இன்றியமையாதவை; அவை உண்மையைக் காண முயல்பவை. அவற்றோடு இலக்கியத்தை நுகரச் செய்யும் கட்டுரைகளும் நமக்கு வேண்டும். இலக்கியம் சுவை உணர அமைந்தது. ஒரு நூலைப் படித்து இன்புறுகிறவன் அதன் உள்ளே சென்று ஆழ்ந்து நிற்கிறான். ஆராய்ச்சி செய்கிறவன் அதனூடே கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டுவந்து குறிப்புகளையும் தொகுத்து இரண்டையும் ஒப்பு நோக்கி முடிவு கட்ட முயல்கிறான். முன்னவன் உணர்ச்சியைத் தலைமையாகக் கொண்டு நூலைப் படிக்கிறான். பின்னவன் அறிவைத் தலைமையாகக் கொண்டு படிக்கிறான். இருவரும் நூலைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இரண்டு முறையும் நமக்கு வேண்டியவையே. இதில் உள்ள கட்டுரைகள் அநுபவிக்கும் துறையில் அமைந்தவை. ஆதலின் காலவரையறை முதலிய ஆராய்ச்சிக் கண் கொண்டு பார்க்கிறவர்களுக்கு இதில் பாராட்டத்தக்க பகுதி ஏதும் காண இயலாது. இலக்கியத்தை நுகர்பவர்களுக்கு இவற்றில் சில கட்டுரைகளாவது இன்பத்தை அளிக்கும் என்று நம்புகிறேன். அத்தகைய நம்பிக்கைதானே எழுத்தாளனுடைய பேனாவை மேலும் மேலும் வேகமாக ஓட்டும் தூண்டுகோலாக உதவுகிறது? தமிழ் இலக்கியச் சாலை “அவனைப் பார்: தானே எல்லாம் சம்பாதித்து இவ்வளவு உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறான். ஒரு பத்து வருஷ காலத்துக்குள்ளே வீடென்ன, நில மென்ன, சொத்தென்ன, சுதந்தரமென்ன ~ எல்லாம் சம்பாதித்துக் கொண்டான். எனக்கு நன்றாகத் தெரியும்: எங்கள் அப்பாவிடம் ஐந்து ரூபாய் வேண்டு மென்று கெஞ்சிக் கேட்டு நின்றது. எல்லாம் அதிருஷ்டம் ஐயா! அதிருஷ்டம்!” “அதிருஷ்டத்தை நான் நம்பமாட்டேன். அவ னுக்குப் பிழைக்கிற வழி தெரியும். பணம் சம்பாதித்துச் சேர்க்க வழி தெரியும். ஒவ்வொரு கணமும் எடுத்த காரியத்தைச் சாதிக்க என்ன செய்ய வேண்டும் என்ற யோசனையிலே அவன் மூழ்கியிருந்தான். இடை விடாமல் உழைத்தான். அந்த உழைப்பினுடைய பலனை இப்போது அநுபவிக்கிறான்.” இந்த மாதிரியாகப் புதுப் பணம் படைத்த செல்வனைப்பற்றிப் பொது ஜனங்கள் விமரிசனம் செய்வது நம் காதில் எத்தனையோ தடவை விழுந்திருக்கின்றது வேறு ஒருவகை மனிதனைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்கிறோம். மேலே சொன்ன பணக்காரனுக்கு நேர்விரோதமான நிலை படைத்தவன் அவன். “அந்தக் காலத்தில் எங்கள் தாத்தா வீட்டில் இருபது எருமை கறக்கும். முப்பது பசுமாடு பால் வெள்ளம் பொழியும். தேனாறு பாலாறு என்று பேச் சுக்குச் சொல்கிறோமே; உண்மையாக அப்படித்தான் இருந்ததாம். அந்த ஜமீந்தாருக்குத் திடீரென்று ஆயிரம் இரண்டாயிரம் வேண்டுமென்றால், இரண்டாம் பேருக்குத் தெரியாமல் எங்கள் தாத்தாவிடம் வருவார். கணீரென்று சப்திக்கும் வெள்ளி ரூபாய் ஆயிரம் வாங்கிக் கொண்டு போவார். ஒரு சீட்டு நாட்டு வேண்டுமே. ஒன்றும் இல்லை. வேளைக்கு நூறு இலை விழுமாம். எங்கள் வீட்டுச் சமையலறையைப் பார்த்தாலே அவர் காலத்து அன்னதானச் சிறப்புத் தெரிய வருமே! கொடியடுப்பு எங்கள் வீட்டில் இல்லை; எல்லாம் கோட்டை யடுப்புத்தான் !” “அப்படி இருந்த குடும்பமா இப்படி ஆயிற்று? உங்களுக்கு இப்போது நாலு குழந்தைகளை வைத்துக் கொண்டு காப்பாற்றும் சக்தி இல்லையே!” “அதற்கு என்ன செய்கிறது? நான் பண்ணின பாவம். இன்று கோடீசுவரனாக இருக்கிறானே. அவன் எங்கள் வீட்டுக் காரியக்காரனாக இருந்தவனுடைய பேரன்; தெரியுமா?” புதிய பணக்காரன், பழைய பணக்காரக் குடும்பத்திலே பிறந்தவன் என்று இரண்டு வகையினர்களையே அதிகமாக உலகத்தில் பார்க்கிறோம். எங்கோ சில பேர் மாத்திரம் பரம்பரையாகப் பொருளைப் போற்றிப் பணக்காரன் மகன் பணக்காரனாக வந்து கொண்டிருக்கிறார்கள். புதுப் பணக்காரனைவிடப் பழம் பணக்காரக் குடும்பத்திலே பிறந்தவனை யாராவது கவனிப்பார்களா? மாட்டார்கள். புதுப்பணக்காரனுடைய ஊக்கமும் உழைப்பும் உலகத்தில் பாராட்டப்படுகின்றன. பழம் பணக்காரனோ, தன் தாத்தா காலத்துக் கதையைப் பேசிக் கொண்டு காலங்கழிக்கிறான். புதிய செல்வம் சேர்ப்பதிலோ, பழைய செல்வமோ பூமியோ தனக்குத் தெரியாமல் மறைந்திருந்தால் அவற்றைக் கண்டெடுப் பதிலோ நாட்டம் செல்வதில்லை. அவனால் யாருக்கு என்ன பிரயோசனம்? மேல் நாட்டாருடைய இலக்கியச் செல்வத்தையும் நம் நாட்டு இலக்கியச் செல்வத்தையும் நோக்கும் பொழுது இந்த இருவகை மனிதர் நிலைகளும் ஞாபகத்துக்கு வருகின்றன. சில நூறு ஆண்டுகளுக் குள்ளே அவர்கள் பெரு முயற்சியினால் பலபல துறைகளில் முன்னேறி விட்டார்கள். கலைச் செல்வத்தைக் குவித்து விட்டார்கள். நாமோ பழம் பெருமை பேசிக் கொண்டு,மேல்நாட்டினர் மரத்திலே தொத்திக் கொண்டுதொங்கிய காலத்தில் நாம் மாளிகையிலே மெத்தை போட்டுப் படுத்துக் கொண்டிருந்தோம் என்று பெருமிதம் அடைகிறோம். இன்று கட்டாந் தரையில் கல்லும் முள்ளும் உறுத்தப் புரளுவதை அப்போதைக்கு மறந்து விடுகிறோம். செல்வம் பழையதானாலும் புதியதானாலும் செல்வந்தான். மேல் நாட்டினர் குவித்த கலைச் செல்வத்துக்கு உலகமே பெருமதிப்பை அளிக்கிறது. நாமும் அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். பிறர் செல்வத்தைக் குறை கூறுவது தவறு; அவர்கள் செல்வத்தைக் கண்டு மகிழ்வதோடு நின்று, நம் செல்வத்தை அடியோடு மறப்பது அதைவிடத் தவறு. “நமக்குச் செல்வம் இருந்தது. இப்போதும் புதையலாக இருக்கிறது” என்று சொல்லும் நிலையில் தான் நாம் இருக்கிறோம். அந்தப் புதையல்களை அகழ்ந் தெடுத்துக் கொணர்ந்து, “இதோ பாருங்கள் தங்கக் கட்டி; இதோ பாருங்கள் நவ மணிகள்” என்று எடுத்துக்காட்டும் ஆண்மையும் ஆர்வமும் நமக்கு வேண்டும். மனிதனுடைய சரித்திரத்தை ஆராயும் ஆராய்ச்சிக்காரர்கள் உலகத்தில் முதல் மனிதன் இன்ன இடத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும் என்று ஊகித்துக் கூறுகிறார்கள். எல்லோரும் ஒரே இடத்தைக் கூறவில்லை. ஒருவர் மத்திய ஆசியாவில்தான் முதல் மனிதன் வாழ்ந்தான் என்றால், மற்றொருவர் வேறோரிடத்தைக் குறிக்கிறார். இப்படித் தீர்மானித்துள்ள இடங்களில் தமிழ் நாடும் ஒன்று. சில அறிஞர்களுக்குப் பழங்கால மனிதன் தமிழ்நாட்டில்தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்று படுகிறது. எல்லோரும் ஒப்புக் கொள்ளும்படியாக ஒரு முடிவு. ஆராய்ச்சியில் இலேசிலே வராது. ஆகவே, தமிழ் நாட்டில் முதல் மனிதன் வாழ்ந்தான் என்பது சந்தேகமில்லாமல் நிச்சயமாகவில்லை என்று வைத்துக்கொண்டாலும், முதல் மனிதன் வாழ்க்கையைக் குறிக்கும் பழைய சின்னங்கள் இங்கே உள்ளன என்ற உண்மைய ஒப்புக் கொள்ளலாம். தமிழ் நாட்டில் மிகப் பழங்கால முதலே மனிதர் வாழ்ந்து வருகின்றனர் என்ற செய்தி இந்த ஆராய்ச்சியினால் வெளியாகிறது. இலக்கியம் மனிதனுடைய சிருஷ்டி. அறிவின் எல்லை ஓரளவு உயரத்தை எட்டினால், தினந்தோறும் வாழ்க்கைக்கு உதவுகிற வெறும் பேச்சாக நின்ற பாஷையில் இலக்கியம் மலர்கிறது. சரித்திரத்துக்கு எட்டாத காலம் முதல் மனிதன் வாழ்ந்து வநத தமிழ் நாட்டில், அவனது வாழ்க்கை பேச்சு நிலையினும் உயர்ந்து, இலக்கியச் செல்வத்தைச் சேமிக்கும் நிலைக்கு வந்த காலமும் மிகப் பழங்காலமாகத்தான் இருக்க வேண்டும். அக்கால முதல் இலக்கியம் தோன்றி வளரந்து வருகிறது. அந்த இலக்கியச் செல்வங்களில் பல அழிந்தும் விடுகின்றன. இப்போது நமக்குக் கியைக்கும் சாட்சிகளை வைத்துக்கொண்டு பார்த்தாலே தமிழன் எத்தனையோ பெரிய காரியங்களைச் சாதித்திருக்கிறான் என்று தெரிய வரும். தமிழ்ச் சமுதாயப் பிரயாணத்தில் அவன் வகுத்துக்கொண்டே வரும் இலக்கியப் பெருவழியை நாம் கவனித்தோமானால் எத்தனையோ வகையாக அது படர்ந்து வருவதைக் காணலாம். முதற்சங்கம், இடைச் சங்கம் என்ற பகுதிகளில் இலக்கியச் சாலை நம் கண்ணுக்குத் தென்படவில்லை. ஏதோ ஓர் அழகிய செல்வ மாளிகை மாத்திரம் புலனா கிறது. அதற்குத் தொல்காப்பியம் எந்று பெயர். அப்பால் கடைச் சங்கம் என்ற பகுதியில் தமிழ் இலக்கியப் பாதையின் இருமருங்கும் இயற்கை யெழில் தவழும் சோலைகளைப் பார்க்கின்றோம். ஆணும் பெண்ணும் காதல் புரிவதைக் காண்கின்றோம். பிரிவில்லாமல் மக்கள் வாழும் ஒற்றுமைக் காட்சிகள் தெரிகின்றன. வீர இளைஞர்கள் அறத்தைக் காக்கப் போர் செய்வதைக் காண்கிறோம். அந்தப் பகுதியின் இறுதியிலே சில காவியமாளிகைகள் வானை நோக்கி நிமிர்ந்து நிற்கின்றன. பிறகு கோயிலகளைக் காண்கிறோம். திருமாலும் சிவபெருமானும் அன்பும் அறிவுமுடையவர்களுடைய தோத்திரங்களில் மகிழ்ந்து ஈடுபட்டிருக்கிறார்கள். ஜைன பௌத்தப் புலவர்கள் கட்டிய மாளிகைகளும் கண்ணில் படுகின்றன. சில சில காவியங்களாகிய மாளிகைகளில் ஒருசார் கோயிலும் இணைந்து காணப் படுகின்றன. கம்பன் கட்டிய பெருமாளிகை அதோ இன்றும் மாசுமறுவின்றி ஐம்புலனுக்கும் விருந்தளித்துக் கொண்டு நிற்கிறது. சிறு சிறு கட்டிடங்கள், இடிந் தும், புகையடைந்தும் நிற்கின்றன. பிற மதத்தினரை அடித்த ஆயுதங்களை உள்ளே மறைத்து வைத்திருக் கும் சில கட்டிடங்கள், புராணங்கள் என்ற பெயரோடு விளங்குகின்றன. இதற்குமேல் பாதை கரடுமுரடாக இருக்கிறது. சில இடங்களில் குழிகள் யமகமென்றும் திரிபென்றும் பச்சைச் சிங்காரமென்றும் பணக்காரன் புகழென்றும் பேர் படைத்த கல்லும் முள்ளும் காலை உறுத்துகின்றன. எப்படியோ பொறுமையோடு இந்தப்பகுதியைக் கடந்து வந்து விட்டோம். இதோ பாரதி மண்டபம் கண்ணைக் குளிர்விக்கிறது. வெறிச்சென்று கண்ணைத் துன்புறுத்திக் காலைப் புண்ணாக்கும் இடத்தைத் தாண்டி வந்த நமக்கு இந்த மண்டபம் எவ்வளவு ஆறுதல் அளிக்கிறது. இதில் உட்கார்ந்து பார்ப்போம். இப்போதுதான் கடந்து வந்தோமே, அந்தப் பகுதிதான் நமக்குத் தென்படுகிறது. முதலிலிருந்தே பிரயாணம் செய்தவர்களுக்கு இந்த இடைவெளிக்குப் பின்னாலே கலை மாளிகைகளும் தென்றல் வீசும் பொழில்களும் இருப்பது தெரியும். திடீரென்று இந்த மண்டபத்தில் அமர்ந்து பார்க்கிறவர்களுக்கு முன்பாதை முழுவதும் கல்லும் முள்ளுமாகவே தோற்றும். அந்தக் கல்லு முள்ளுப் பாதைக்கு முன்னால் நல்ல வழி, அழகிய வழி இருக்கிறதென்று சொன்னால்கூட அவர்கள் நம்புவதில்லை. “அதெல்லாம் பழங்கதை!” என்று அடித்துப் பேசுகிறார்கள்.அவர்களுக்குப் பொறுமையும் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தால் தமிழ் இலக்கியச் சாலையின் அடிமுதல் எத்தனை வளங்கள் குலுங்குகின்றன என்பதை அறிய முடியும். தமிழன் சரித்திரம் எவ்வளவுக்கு எவ்வளவு பழமை யென்று தெரிகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவனது இலக்கியச் செல்வமும் சிறந்ததென்பது தெரியவரும். பெயர் வைத்தவர் யார்? ஒரு வீட்டில் ஒரு குழந்தை பிறக்கிறது. அதைப் பாராட்டிப் போற்றி வளர்க்கும் உரிமையும் ஆவலும் உடைய தாய்தகப்பன்மார் குழந்தைக்குப் பெயர் வைக்கிறார்கள். அந்தப் பெயர் சம்பிரதாயத் துக்காக வைத்த நீண்ட பெயராக இருந்தால், குறுகலான பெயர் ஒன்றை வைத்துத் தாயோ, பாட்டியோ அழைக்கிறாள்.அந்தப் பெயரே ஊரெல்லாம் பரவிப் போகிறது. சுப்பிரமணியன் என்று பெயர் வைத்தாலும், வழக்கத்தில் மணி யென்றும் சுப்பு என்றும் அது குறுகிப் போவதைப் பார்க்கிறோம். எனவே, குழந்தைக்கு வீட்டில் என்ன பெயர் வழங்குகிறதோ அதுவே நாட்டிலும் வழங்கும். இது தான் இயற்கை. இதை விட்டுவிட்டு, “ஊரில் உள்ளவர்கள் இவனுக்கு ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். அதைத்தான் வீட்டில் வழங்குகிறார்கள்” என்று சொன்னால் அது அவ்வளவு பொருத்தமாகத் தோன்ற வில்லை. “தமிழென்னும் குழந்தைக்குப் பெயர் வைத்தவர்கள் யார்?” என்றால், “தமிழர்கள்” என்றுதானே சொல்லவேண்டும்? “இல்லை இல்லை, வெளியார்கள் வைத்த பேர் மாறி அப்படி ஆகிவிட்டது” என்று சில ஆராய்ச்சிக்காரர்கள் சொல்கிறார்கள். திராவிடம் என்ற பேரே மாறித் தமிழ் என்று ஆயிற்றாம்! வடமொழி நூல்களிலும் வேறுமொழி நூல்களிலும் தமிழைத் திராவிடமென்று குறித்திருக்கிறார்கள். அதைக் கொண்டு ஆராய்ச்சிக்காரர்கள் யோசித்தார்கள். இந்த ஆராய்ச்சியிலே முதலில் ஈடுபட்டவர்கள் வெள்ளைக்காரர்கள். அநேகமாக இத்தகைய ஆராய்ச்சியில், மரபு தெரியாமல் அவர்கள் சொல்லி வைத்த சில விஷயங்களைக் குரங்குப் பிடியாகப் பிடித்துக்கொண்டு அதன்மேல் கட்டிடங்களைக் கட்டி நிலைநிறுத்தப் பார்ப்பவர்கள் பலர். திராவிடமென்னும் சொல்தான் தமிழ் என்று ஆகியிருக்க வேண்டுமென்று முன்னால் தீர்மானித்துக் கொண்டார்கள். வடமொழி யில் சில இடங்க்ளில் ள என்ற எழுத்தும் ட என்ற எழுத்தும் ஒன்றுக்குப் பதில் ஒன்று வரும். த்ராவிடம் என்பது த்ராவிள்ம் என்று மாறிற்றாம். வ என்பது ம ஆக மாறுவதும் உண்டு. த்ராவிளம் த்ரவிளம் ஆகிப் பிறகு த்ரமிளம் ஆகி, அதன் பிறகு தமிளம் ஆகிவிட்டது. அது பிறகு தமிள் என்றும், அப்பால் தமிழ் என்றும் மாறி வந்து விட்டதாம்! இங்கிலீஷ்காரன் ‘ஒற்றைக் கல் மன்று’ என்ற பெயர் வாயில் நுழையாமல் ‘ஊட்டக்கமந்த்’ என்று பேசினான். அப்படியே வழங்கினான். அது பின்னும் மாறி ‘உதகமண்டலம்’ ஆகிவிட்டது. இது எப்படி வந்தது என்று வெறும் வார்த்தையைக் கொண்டு ஆராய்ச்சி செய்யப் புகுந்தார் ஒருவர். “மேகங்க்ள் தவழ்ந்து நீர் நிறைந்த பரப்பு ஆகையால் உதகமண்டலம் என்ற பெயர் வந்தது” என்று முடிவு கட்டினார். இதற்கும் ஒற்றைக்கல் மன்றுக்கும் சம்பந்தம் இல்லை என்பது உண்மையுணர்ந்தோருக்குத் தெரியும். இதுமாதிரித்தான் இருக்கிறது தமிழென்னும் பெயராராய்ச்சியும். “அப்படியானால் தமிழின் பெயரை அப்படியே சொல்லாமல் ஏன் மற்றவர்கள் மாற்றிச் சொன்னார்கள்?” என்று கேட்கலாம். மாற்றவேண்டிய அவசியம் வந்துவிட்டது. தமிழிலன்றி மற்றப் பாஷைகளில் ழகரம் இல்லை. அதனால் மாற்றிக்கொண்டார்கள். பழங்காலத்தில் தமிழுக்குத் திராவிடமென்ற பெயர் இயற்கையாக வழங்கியிருந்தால், அந்தச் சொல்லைப் பழைய தமிழர்கள் எங்கேனும் சொல்லியிருக்கவேண்டும். தொல்காப்பியத்திலோ அதன்பின் வந்த சங்க நூல்களிலோ திராவிடம் என்ற சொல் இல்லை. தமிழ் என்ற சொல்லே வழங்குகிறது. தமிழ் நாட்டார் தாங்கள் வழங்கும் மொழிக்குரிய பெயரைப் பிறரிடமிருந்து கடன்வாங்கினார் என்பது கேலிக் கூத்து. தமிழ் என்ற பெயர் முதல் முதலில் தமிழ் நாட் டுக்கு வழங்கி யிருக்க வேண்டு மென்று தோன்றுகிறது. பிறகு அங்கே வழங்கும் மொழிக்கும் ஆயிற்று. முதலில் நாட்டுக்குப்பெயர் வைத்து அதைக்கொண்டு மொழிக்கும் பெயர் வைக்கும் மரபை மற்ற நாடுகளில் காண்கிறோம்.மூன்று லிங்கங்களைத் தன்பாற் கொண்டமையால் ஆந்திரதேசத்தைத் திரிலிங்க மென்றார்கள். அது பிறகு தெலுங்கம் ஆயிற்று. அதிலிருந்து அந்நாட்டில் வழங்கும் பாஷைக்குத் தெலுங்கு என்ற பெயர் வந்தது. தமிழ் என்ற சொல்லுக்கே தமிழ் நாடு என்ற பொருள் உண்டு. பழைய நூல்களில் அந்தப் பொருளில் புலவர்கள் வழங்கியிருக்கிறார்கள எப்படி ஆனாலும், தமிழ் என்னும் பெயரைத் தமிழ் நாட்டினரே வைத்து வழங்கி யிருக்கவேண்டுமே யன்றிப் பிறர் சொல்ல, அதையே தமிழர் வழங்கினரென்று சொல்வது முறையன்று. தமிழ் என்ற சொல்லைத் தமிழர்கள் ஆண்டு வந்தார்கள். தமிழ் மொழியில் அவர்களுக்கிருந்த அன்பு அளவற்றது. தங்கள் மொழி இனியது என்று எண் ணிப் பாராட்டி இன்புற்றார்கள். நாளடைவில் தமிழ் என்ற சொல்லுக்கே இனிமை என்ற பொருள் உண்டாயிற்று. “இனிமையும் நீர்மையும் தமிழ்எனல் ஆகும்” என்று பிங்கல நிகண்டில் வருகிறது. இனிமை, ஒழுங்கான இயல்பு இரண்டையும் தமிழ் என்ற சொல் லால் குறிக்கும் வழக்கம் ஏற்பட்டது. பெண்களின் வருணனை வரும் ஓர் இடத்தில் சீவக சிந்தாமணியின் ஆசிரியர், “தமிழ் தழீஇய சாயலவர்” என்று சொல்லுகிறார்.“இனிமை பொருந்திய சாயலையுடைய மகளிர்” என்பது அதன்பொருள். கம்பரும் இனிமையென்னும் பொருளில் தமிழ் என்னும் சொல்லை வழங்கியிருக்கிறார். இப்படி அருமையாகப் போற்றும் அந்தச் சொல் தமிழர் வைத்த பெயர்தான். தமிழ் என்ற சொல்லில் வரும் ழகரம் மற்றவர்களுக்கு உச்சரிக்க வருவதில்லை. ஆகவே தமிழ் தமிளாகி, த்ரமிளம், த்ரவிடம் என்று பல அவதாரங்களை எடுத்தது என்று சொல்வதுதான் பொருத்தம். கமுகு என்ற தமிழ்ச் சொல் வட மொழியில் ரகரம் பெற்று ‘க்ரமுகம்’ என்று வழங்கு கிறது. மீனை மீனம் என்றும், தாமரையைத் தாமரஸ மென்றும் வழங்குவதுபோல அம் என்ற பகுதியைப் பின்னே சேர்த்துக் கொண்டார்கள். முன்னும் பின்னும் கூட்டிய இந்த அலங்காரங்களோடு தமிழ், த்ரமிளம் ஆனது வியப்பல்ல. தொல்காப்பியப் பாயிரத்தில் அதன் ஆசிரியர் தமிழ் நாட்டை, “தமிழ் கூறும் நல்லுலகம்” என்று சொல்கிறார். அப்படிப் பாடியவர் தொல்காப்பியருடைய தோழராகிய பனம்பாரனார் என்பவர். மேலும், “செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்” என்றும் சொல்லுகிறார். தொல்காப்பியத்தில் ஒரு வார்த்தையும் மற்றொரு வார்த்தையும் சேர்ந்தால் என்ன என்ன மாறுபாடுகள் உண்டாகும் என்ற செய்தி எழுத்ததிகாரத்தில் வருகிறது. தமிழ் என்னும் சொல்லோடு வேறு சொற்கள் வந்து சேர்ந்தால் எவ்வாறு நிற்கும் என்பதைப் பற்றி ஒரு சூத்திரம் சொல்கிறது. “தமிழ் என் கிளவியும் அதனோ ரற்றே” என்பது அந்தச் சூத்திரம். தமிழ் என்ற சொல்லுக்குப் பிறகு கூத்து என்ற சொல் வந்தால் தமிழ்க் கூத்து என்று ஆகும். இதற்குரிய விதி இந்தச் சூத்திரம். தமிழர்கள் பேச்சிலும் நூலிலும் வழங்கும் பாஷைக்கு இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர். தமிழ் என்ற சொல் மற்ற வார்த்தையோடு சேர்ந்து வழங்கும்போது இப்படி ஆகும் என்று சொல்வதனால், அப்படி ஒரு சொல் அவர் காலத்திலே வழங்கியது என்று நிச்சயமாகச் சொல்லலாம். தொல்காப்பியத்தில் சொல்லைப் பற்றி ஆராயும் பகுதிக்குச் சொல்லதிகாரம் என்று பெயர். இயற்கையாக யாவருக்கும் விளங்கும்படி உள்ள சொற்களை இயற்சொல் என்று அங்கே பிரிக்கிறார். ‘இயல்பாகவே விளங்கும் சொல்’ என்று சொன்னால், ‘யாருக்கு விளங்குவது?’ என்ற கேள்வி வரும் அல்லவா? தமிழ் நாட்டில் தமிழ் வழங்கினாலும் எல்லாப் பகுதிகளிலும் ஒரே மாதிரி தமிழ் வழங்குவதில்லை. சென்னைப் பக்கத்துத் தமிழுக்கும் திருநெல்வேலித் தமிழுக்கும் வித்தியாசம் உண்டு. யாழ்ப்பாணத் தமிழுக்கும் மதுரைத் தமிழுக்கும் வேறுபாடு உண்டு. சில சொற்கள் யாழ்ப்பாணத்தாருக்கு எளிதில் விளங்கும்; மற்ற நாட்டாருக்கு விளங்கா. ‘தெண்டித்தல்’ என்ற சொல்லை யாழ்ப்பாணத்துப் பேச்சில் சர்வ சாதாரண மாக வழங்குகிறார்கள். தமிழ் நாட்டில் உள்ளவர்கள் அதற்குத் ‘தண்டனை தருதல்’ என்ற அர்த்தத்தையே கொள்வார்கள். ‘முயலுதல்’ என்ற பொருளில் அதை யாழ்ப்பாணத்தார் வழங்குகிறார்கள். ஆகையால், எளிய சொல் என்பது இடத்தைப் பொறுத்தது என்று தெரியவரும். இதைத் தொல்காப்பியர் உணர்ந்தவர். இயல்பாக விளங்கும் சொல்லாகிய இயற்சொல் இன்னதென்று சொல்ல வருபவர், இன்ன பகுதியில் இயல்பாக வழங்கும் சொல் என்று குறிப்பிடுகிறார். ‘இயற் சொற்கள் என்பன, செந்தமிழ் நிலத்தார் வழங்கும் வழக்கத்துக்குப் பொருந்தித் தம் பொருளிலிருந்து மாறாமல் நடப்பவை’ என்று சொல்லுகிறார். அங்கே தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகிய செந்தமிழ் நிலத்தைக் குறிக்கிறார். மதுரையை நடுவாகக் கொண்ட பாண்டி நாட்டுப் பகுதியைச் செந்தமிழ் நாடென்று முன்பு வழங்கி வந்தனர். “செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி” என்று வருகிறது சூத்திரம். அங்கே தமிழ் என்ற வார்த்தையை ஆண்டிருக்கிறார். தொல்காப்பியருக்குப் பின் எழுந்த நூல்களில் தமிழ் என்ற பெயர் வந்ததற்குக் கணக்கே இல்லை. இப்படி நூல்களில் தமிழ் என்ற சொல்லாட்சி பல விடங்களில் வரும்போது “தமிழுக்குப் பெயர் வைத்தவர் தமிழரே” என்று சொல்வதுதானே நியாயம்? அகத்தியர் தொடங்கிய சங்கம். “பெருமானே, நான் தென்னாடு போக வேண்டுமாயின், அங்கே நாலு பேரோடு பேசிப் பழக வேண்டாமா? சிறப்பான நிலையில் இருக்க வேண்டாமா? அங்கே வழங்கும் தமிழ் மொழியில் எனக்குப் பழக்கம் இல்லையே!” என்று அகத்திய முனிவர் சிவபெருமானிடம் விண்ணப்பித்துக் கொண்டார். தேவரும் மக்களும் கூடியதால் கைலாசம் என்றும் இல்லாத பெருஞ்சிறப்போடு விளங்கியது. உலக முழுவதுமே காலியாகிவிட்டதோ என்று கூடத் தோன்றி யது. தென்னாட்டிலிருந்து பார்வதி கல்யாணத்தைத் தரிசிக்கும் பொருட்டு ஜனங்களெல்லாம் வடக்கே வந்துவிட்டார்கள். வந்தவர்களை மறுபடியும் போய்த் தென்னாட்டில் வாழ்க்கை நடத்தும்படி சொல்ல முடியவில்லை. தென்னாட்டில் அரக்கர்கள் தங்கள் ஆட்சியை விரித்து, மலைகளிலும் ஆற்றங்கரைகளிலும் வாழ்ந்து வந்த நல்லோரை நலிவு செய்தார்கள். ஆதலின், அந்த நாட்டில் நல்லோர் வாழ்வு அமைதியாக இருக்கவில்லை; சிவபெருமானுடைய கல்யாணத்தை வியாஜமாக வைத்துக்கொண்டு அறிவும் தவமும் மிக்க பல பெரியோர்கள் கைலாசத்துக்கே வந்து விட்டார்கள். தென்னாட்டில் அரக்கர் கொடுங்கோன்மை பரவுமானால், அங்கே வாழும் குடிமக்கள் என்னாவது! பெரிய வர்களே அஞ்சி ஓடி வந்துவிட்டால், தென்னாடு முழுவதும் அரக்கருக்கு அடங்கி, தெய்வநினைவின்றிக் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் ஆகிவிடுமே! என் செய்வது? இவற்றையெல்லாம் சிவபெருமான் திருவுள்ளத்தில் நினைத்துப்பார்த்தார். யாரேனும் வலியவர் ஒரு வரையோ, சிலரையோ தமிழ் நாட்டில் நிறுவினாலன்றி, இத்தீமை போகாது என்று எண்ணினார். திருமண நிகழ்ச்சியைக் காட்டிலும் தமிழ்நாடு வாழ வேண்டு மென்ற நினைவு பெருமானுக்குப் பெரிதாயிற்று. தவத் திறமையும் அறிவுப் பெருமையும் உடையவராக ஒரு வரைத் தலைவராகக்கொண்ட ஒரு கூட்டத்தைத் தென் னாட்டுக்கு அனுப்பத் தீர்மானித்தார் சிவபெருமான். அகத்தியரே அவரது திருவுள்ளத்துக்கு உவப் பானவராகத் தோற்றினார். உடனே அவரை அழைத்து, “நீ தென்னாட்டுக்குச் சென்று அங்கேயே தங்கி நல்லோரைப் பாதுகாத்து அற நெறியைப் பரப்பவேண்டும்” என்று கட்டளையிட்டார். அப்பொழுதுதான் அகத்தியர், ஒரு நாட்டுக்குச் சென்று வாழவேண்டுமானால் அந்நாட்டு மொழியில் தக்க திறமை வேண்டுமே எந்ற கருத்தை வெளியிட் டார். உண்மைதானே? உடனே சிவபெருமான் அகத்திய முனிவருக்குத் தமிழ் இலக்கணத்தை உபதேசித் தருளினார். கூரிய மதிபடைத்த முனிவர் தமிழ் நெறியை உணர்ந்து கொண்டார். திருவருளும் தவ மும் துணையாகத் தென்னாட்டுக்கு வந்தார். வரும் வழியில் அவருக்கு எத்தனையோ இடையூறுகள் நேர்ந்தன. எல்லாவற்றையும் வென்று நேரே தென்னாட்டுக்கு வந்து சேர்ந்தார். அந்த நாடு காடு அடர்ந்து, மலைவளம் கெழுமி இயற்கையெழில் பொங்கும் நாடாக இருந்தது. முன்பு அங்கங்கே முனிவர்கள் தங்கியிருந்தார்கள்.இப்போது எல்லாம் சூன்யமாக இருந்தன. நேரே தென்றமிழ் நாட்டில் ஒரு மலைச்சாரலை வந்து அடைந்தார். அக் காலத்தில் அந்தப் பகுதிகளை இராவணன் ஆண்டுவந்தான். அவனுடைய உறவினர்களும் ஏவலர்களும் ஆகிய பல அரக்கர்கள் அங்கங்கே இருந்து சுகபோக வாழ்க்கை நடத்தி வந்தனர். யாவருக்கும் தலைவனாகிய இராவணனை அவ்விடத்திலிருந்து முதலில் போகச்செய்தால் அப்பால் ஏனையவர்களைப் போக்குவது அரிதன்று. தவமுனிவராகிய அகத்தியர் சில மாணாக்கரோடு வந்தார். அவருக்குப் படைப்பலம் இல்லை. இராவணனோ பலவகையிலும் பலசாலி. அவனை எப்படி ஓட்டுவது? அகத்தியருக்கு ஒரு தந்திரம் தோன்றியது. இராவணன் யாழ் வாசிப்பதில் வல்லவன். சிவபெருமானையே யாழிசையால் குழைவித்து வரம் பெற்றவன். அகத்தியரும் யாழ் வாசிப்பதில் வல்லவர். படைத்திறமை இல்லாத அகத்தியர் இந்த யாழ்த்திறமையில்பொருது இராவணனை வெல்லலா மென்று எண்ணினார். இராவணனுக்கு ஆள்போக்கி, யாழிசைப் போருக்கு அழைத்தார். போருக்கு ஆளின்றித் தினவு கொண்ட தோளோடு, யாழிசையிலே ஒன்றியிருந்த இராவணன அகத்தியருடைய அழைப்பை ஏற்றுக்கொண்டான். அகத்தியர் தென்னாட்டில் வந்து குடி புகுந்ததை விரும்பாதவன் அவன். அவரை மீட்டும் வந்த வழியே அனுப்பிவிடவேண்டுமென்னும் உள்ளக் கருத்துடையவன். அதற்கு இந்த யாழிசைப்போர் துணை செய்யும் என்ற எண்ணத்தால். அவன் இதனை ஆவலுடன் ஏற்றுக்கொண்டான். தனக்கு மிஞ்சி யாழ் வாசிப்பவர் இல்லையென்பது அவன் உறுதியான நினைப்பு. அகத்தியரும், இராவணனும் யாழிசைப்போர் செய்வதென்று தீர்மானமாயிற்று. இந்த வாதத்தில் நடு நின்று கவனித்து, இன்னாரே வென்றார் என்று சொல்ல ஒருவர் வேண்டுமே! இராவணனது கொடுமைக்கு அஞ்சி யாரும் வரவில்லை. அகத்தியர் ஒரு யோசனை சொன்னார்; “சிறந்த சங்கீதத்தின் அலை மோதினால் கல் உருகும் என்று சாஸ்திரம் சொல்கிறது. நாம் இருவரும் யாழ் வாசிப்போம். இந்த மலையை நமக்கு நடுநின்று கவனிக்கும் மத்தியஸ்தராக இருக்கட்டும். யாருடைய பாட்டுக்கு மலை உருகிறதோ அவரே வெற்றிக்கு உரியவர்” என்றார். இராவணன் உடன்பட்டான் தோல்வியுறுபவர் அந்த நாட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையை இருவரும் ஒப்புக்கொண்டனர். இராவணன் நிச்சயமாக அகத்தியரை வடக்கே அனுப்பி விடலாமென்று நம்பினான். யாழிசைப் போர் ஆரம்பமாயிற்று. முதலில் அகத்தியர் தம் யாழால் இசை பரப்பத் தொடங்கினார். திருவருட் பலமும் தவத் திறமையும் அவர் கரங்களுக்கு ஆற்றலைக் கொடுத்தன. விலங்கினங்களும் மெய்ம்மறந்து கேட்கும்படி யாழை இயக்கினர். இராவணனே தன்னை மறந்து நின்றான். மற்றவர்களைப் பற்றிச் சொல்லவேண்டுமா? அகத்தியர் மேலும் மேலும் வாசித்துக் கொண்டுபோனார். மரங்கள் அசைதலை ஒழிந்தன. காற்றுக் கூட வீசாமல் நின்றது. வேறு ஒலி ஏதும் இல்லை. அந்த அகண்ட மெளனப் பரப்பிலே குருமுனிவராகிய அகத்தியர் தம்முடைய யாழை மீட்டிக் கொண்டிருந் தார். அதிலிருந்து பிறந்த இன்னிசை அலை அலை யாகப் பரந்து சென்று பிரபஞ்ச முழுவதுமே கான மயமாக்கி விட்டது. நிற்பனவும் அசைவனவுமாகிய பொருள்கள் யாவும் தம்முடைய இயற்கையை மறந்தன. இத்தகைய பரவச நிலையில் அருகில் நின்ற மலை யும் நெகிழ்ச்சி பெற்றது; உருகத் தொடங்கியது. இனி மேலே வாசித்தால் உலகு கொள்ளாது என்று கருதி முனிவர் தம் இசையை நிறுத்தினார். மெய்ம்மறந்து நின்ற இராவணன் தன் நினைவு பெற்றான். சிவபெருமானது கருணைத் திருவுள்ளத் தைத்தன் யாழிசையால் உருக்கிய அந்தஅரக்கனுக்கே பிரமிப்புத் தட்டியது. ‘மலையாவது உருகுவதாவது!’ என்று எண்ணிய எண்ணம் நெகிழ்சியுற்றது. அகத்தி யர் இசை அவன் உள்ளத்தையே கரையச் செய்தது. அவர் காலில் விழுந்து வணங்க வேண்டுமென்று தோன்றியது. ஆனால் மானம் என்ற ஒன்று இருக் கிறதே, அது தடுத்தது. முதலில் பேசியபடியே இப்போது இராவணன் தன் திறமையைக்காட்ட ஆரம்பித்தான். கைலாசத்தின் கீழே நசுங்கினபோது அவன் உண்மையிலேயே மனங்குழைந்து பாடி யாழ் வாசிதான். இப்போது அந்தக் குழைவு இல்லை. கர்வமும் கலக்கமுமே அவன் உள்ளத்தில் மீதுர்ந்து நின்றன. கலை தோன்ற நெகிழ்ச்சியான உள்ளமல்லவா வேண்டும்? அது அவனிடத்தில் அப்போது இல்லை, அவனுடைய விரல்கள் விளையாடின; வீணை நரம்புகள் பேசின; பாட்டு எழும்பியது. காதுக்கு இனிதாக இருந்தது; கருத்திலும் இனிமையைப் புகுத்தியது. ஆனல், கருத்தை ஓடாமல் தடைப்படுத்தி உடம்பை மறக்கச் செய்யவில்லை. அவன் தன்னை மறந்து, ஆணவம் கழன்று, இசை மயமாக நின்று வாசித்திருந்தால் ஒரு கால் அந்த இசை வென்றிருக்கலாம். ‘நாம் தோல்வி யுறக் கூடாதே’ என்ற நினைவுதான் அவன் உள்ளத்தில் தாளம் போட்டுக் கொண்டிருந்தது. அவன் வேறு, இசை வேறாக நின்றான். ஆதலின் இசையில் இனிமை இருந்தது; சமற்காரம் இருந்தது. அஆனல் மயக்கும் மாயம் இல்லை; அசைவின்றிச் செய்யும் அற்புதம் இல்லை. இருபது கைகளாலும் மாறி மாறி வாசித்தான். அவன் பேரரக்கன். அவனக்கு ஏற்ற ராட்சச வீணை அது. அதனுடைய நரம்புக் கட்டுகள் அவன் இருபது கைகளாலும் வாசிப்பதற்காகவே அமைக்கப்பட்டன. இவ்வளவு இருந்தும் யாழிசை புறத்தில்தான் தவழ்ந்தது. அகத்தே சென்று உருக்கவில்லை. எவ்வளவு நாழிகை அதனேடு மன்றாட முடியும்? ஒரு கலைஞனுக்குத் தோற்றி நிற்பது அவமானமாகாது என்ற இராவணன் சமாதானம் செய்து கொண்டான் தான் தோற்றதாக ஒப்புக்கொண்டான். செய்து கொண்ட நிபந்தனைப்படியே தென்னாட்டு ஆட்சியைக் கைவிட்டு இலங்கைக்குச் சென்று வாழலானான். அகத்திய முனிவர் வெற்றி பெற்றார். அவர் செய்யவேண்டிய காரியம் ஒரு பகுதி ஆயிற்று. தென் னாட்டைத் தமதாக ஆக்கிக்கொண்டார். இனி, அதை வளம்படுத்தி அறிஞர் கூட்டங்களை அங்கங்கே அமைக்க வேண்டும். வடக்கே சென்றவர்களை மீண்டும் தமிழ் நாட்டுக்கு வரும்படி செய்ய வேண்டும். ஓரிடத்தில் நிலையாக இருந்துகொண்டு இந்த ஆக்க வேலைகளைச் செய்ய நினைத்தார். தமக்கு இசைப் போரில் வெற்றியைக் கொடுத்த அந்த மலையையே தம்முடைய இருப்பிடமாகக் கொள்ள எண்ணினார். அவ்வாறே அங்கே ஆசிரமம் அமைத்துக்கொண்டார். தமிழ் நாட்டு மக்களை அழைத்துக் கூட்டி அவர்களோடு பழக வேண்டுமென்று விரும்பினார். அங்கங்கே சில அரசர்கள் இருந்தனர். அவருள் பாண்டியன் பெரியவனாக இருந்தான். அவனையும் பிறரையும் வருவிக்க ஆசிரமத்தில் ஏதேனும் ஒரு காரியத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லவா? தமிழ்மொழி யாராய்ச்சி செய்வதைக் கருத்தாகக் கொண்டு அந்த மலையில் யாவரையும் கூட்ட முயன்றார். அவர் முயற்சி பயன் பெற்றது. அடிக்கடி பாண்டிய மன்னனும் பிறரும் வந்து வந்து முனிவரோடு பேசிச் சென்றனர். தமிழ் மொழியைப் பற்றிய ஆராய்ச்சியும் நடைபெற்றது. முனிவரும் தமிழ்நாட்டில் உள்ள இடங்களுக்குச் சென்று மக்கள் வழங்கும் பேச்சையும், பெரியோர் வழங்கும் மரபையும், வேறு நூல்களையும் உணர்ந்தார். வேதத்திலும் வட மொழியிலும் வன்மை பெற்றுப் பேரறிவுடையவராக விளங்கிய அகத்தியர் விரைவிலே தமிழில் தமக்கு இணையில்லாத பெரும்புலவராகி விட் டார். சிவபெருமான் உபதேசித்த இலக்கணமும், தமிழ் நாட்டில் பிரயாணம் செய்து தெரிந்து கொண்ட வழக்கும் அவருடைய அறிவை வளப்படுத்தின. அவர் இருந்த மலையில் அடிக்கடி புலவர்கள் கூடலானார்கள். அனைவரும் கூடும் பொதுவான இடமாக ஆயிற்று அம்மலை. அதனால் அந்த மலைக்கே பொது இடம் அல்லது சபை என்ற பொருளையுடைய பெயர் ஏற்பட்டது. பொது இல் என்று முதலில் வழங்கி, அப்பால் பொதியில் என்று வழங்கலாயிற்று. பொதிய மலை, பொதியில், பொதியம், பொதிகை என்றெல்லாம் உச்சரிப்பு வேறுபாடுகளால் அந்தப் பெயரே வெவ்வேறு உருவத்தை எடுத்தது. பொதியில் என்ற தமிழ்ச் சொல்லுக்குப் பலரும் கூடும் சபை என்ற பொருள் இருக்கிறது. புலவர்கள் கூடும் சபைக்கும் பொதியில் என்று பெயர். சபை கூடும் சிறப்பான நிகழ்ச்சி அடிக்கடி நடந்த காரணத்தினால் அந்த மலைக்குப் பொதியில் என்றே பெயர் வழங்கத் தொடங்கியது. தமிழ்ச் சபை அல்லது சங்கம் அகத்தியருடைய தலைமையில் பொதியில் மலையில் நடந்து வந்த செய்தி தமிழ்நாடு முழுவதும் பரவியது. வரவர அந்தச் சங்கத்தின் பெருமை அதிகமாயிற்று. அகத்தியருடன் எப்போதும் இருந்து தமிழ்ப் பாடம் கேட்கும் மாணாக் கர்கள் சிலர் ஏற்பட்டனர். பாண்டிய மன்னனும் அவரிடம் தமிழிலக்கணம் கற்றுக்கொண்டான். அகத்தியர் நிறுவிய சங்கம் மேலும் மேலும் வளர்ந்து வந்தது. தலைச் சங்கம் அகத்திய முனிவர் பொதியில் மலையிலே வளர்த்து வந்த சங்கம் தமிழ் நாட்டுக்குச் சிறப்பை உண்டாக்கியது. தமிழ்ச் சான்றோர் அச்சங்கத்தில் கலந்து கொண்டனர். இயல், இசை, நாடகம் என்று மூன்று வகையாகப் பிரித்துத் தமிழை ஆராய்ச்சி செய்தார்கள். இலக்கண இலக்கியங்களை இயலென்று பிரித்தார்கள். பண்ணையும் பாட்டையும் இசையென்று வகுத்தனர்; அபிநயம், ஆடல் என்பவற்றை நாடகமாக அமைத்தனர். இந்த மூன்று திறத்திலும் ஆராய்ச்சி விரிவடைந்தது. தமிழ் நாட்டில் இயல் தமிழாகிய இலக்கண இலக்கியங்களில் வல்ல புலவர்கள் அங்கங்கே இருந்தனர். இசைத்தமிழாகிய பண்ணிலும் பாட்டிலும் இசைக் கருவிகளிலும் வல்ல பாணரும் பொருநரும் விறலியரும் வாழ்ந்து வந்தனர். கூத்தில் வல்ல கூத்தரும் அங்கங்கே சிதறுண்டு கிடந்தனர். அவர்களுடைய கலைத் திறத்தைப் பாதுகாக்கும் முயற்சியை அகத்தியரைத் தலைவராகக் கொண்ட சங்கத்தினர் செய்யலாயினர். நாட்டில் அமைதி இருந்தால்தான் கலைகள் ஓங்கும். அமைதியின்றி ஆட்சி வழுவி அறம் மாறிக் கொடுங்கோன்மை மலிந்தால் அந்த நாட்டிலே பேரறிவாளர் இருந்தாலும் அவர்களுடைய முயற்சிக்குப் பாதுகாப்பு இராது. நாளடைவில் அவர்கள் மங்கி மறைவார்கள். தமிழ் நாட்டில் தமிழ் வழங்கத் தொடங்கிய காலம் இன்னதென்று வரையறுப்பது மிகவும் கடினமான செயல். தமிழுக்கு ஜாதகம் எழுதும் சோதிடர் யாரும் இல்லை. பிறந்த நாள் தெரியாமல் வளர்ந்த சோடும் தெரியாமல், இன்னும் தெய்வத் திருவருள் விலாசத் தோடு விளங்குவதனால் பராசக்தியைக் கன்னி என்று ஓதுவர் பெரியோர். தமிழும் அத்தகைய இயல் புடையதே. ஆதலின் இதனைக் கன்னித் தமிழ் என்று சான்றோர் வழங்கினர். தமிழரிடையே தமிழ் நெடுங்காலமாக வழங்கியது. அவர்கள் வாழ்வு சிறக்கச் சிறக்க அவர்கள் பேசும் மொழியும் சிறப்பு அடைந்தது. ஒரு மொழிக்குச் சிறப்பு, அதில் உள்ள நூல்களால் அமையும். தமிழில் பல நூல்கள் உண்டாயின. ஆனால் தமிழர் வாழ்வில் அமைதியில்லாமற் போகவே, தமிழ் நூல்கள் ஆதரிப்பா ரற்று மங்கலாயின. புலவருடைய புலமையைப் போற்று வார் இல்லை. இத்தகைய காலத்தில் அகத்தியர் தென்னாட்டுக்கு வந்து அறநெறியை நிமிர்த்தினார். ***மீட்டும் தமிழ்நாடு வளம் பெறலாயிற்று. தமிழரசர் வலி பெற்றனர். தமிழ் தழைக்கத் தொடங்கியது. மூலை முடுக்கில் அடங்கி ஒடுங்கியிருந்த புலமை வெளியாகியது. அகத்திய முனிவர் நிறுவிய தமிழ்ச் சங்கம் பல புலவர் கள் சேரும் பெருங் கூட்டமாயிற்று. ‘இந்த நாட்டுமொழி எவ்வளவு அழகாக இருக்கிறது! அறிவு சிறந்த இயலும், இன்பம் மலிந்த இசையும், அறிவும் இன்பமும் ஒருங்கே செறிந்த கூத்தும் நிலவும் இந்த நாடு இறைவனுக்கு உகந்தது. இந்த மொழியில் மீட்டும் நல்ல இலக்கண நூல்கள் எழ வேண்டும்’ என்று விரும்பினார் தவமுனிவர் அகத்தியர். இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழ் நூல் களையும் ஆராய்ந்தார். அவற்றில் வல்ல புலவர் களோடு பழகி மரபு வகைகளைத் தெரிந்து கொண்டார். பேரறிவு படைத்தவராகையால் அந்த மூன்று தமிழுக்கும் உரிய பெரிய இலக்கண நூல் ஒன்றை இயற்றத் தொடங்கினார். எந்த வகையிலும் குறைவில்லாத அத் தவ முனிவர் மிக எளிதில் இலக்கண நூலை இயற்றி நிறை வேற்றினார். அகத்தியரால் இயற்றப் பெற்றதாதலின் அதற்கு அகத்தியம் என்ற பெயர் உண்டாயிற்று. பொதியிற் சங்கத்துப் புலவர்கள் அதைக் கண்டு பெரிதும் போற்றினர். பாண்டிய மன்னன் பெருமிதம் அடைந்தான். அக்காலத்தில் தமிழ்நாடு மிக விரிவாக இருந்தது. இப்போது தமிழ் நாட்டின் தெற்கெல்லையாக உள்ள குமரி முனைக்கும் தெற்கே பல மைல் தூரம் தமிழ் நாடு பரவியிருந்தது. அங்கே நாற்பத்தொன்பது பகுதிகள் தமிழ் நாட்டைச் சார்ந்திருந்தன என்று புலவர்கள் தெரிவிக்கிறார்கள். குமரிமலை யென்று ஒன்று இருந்ததாம். குமரியாறு என்று ஒரு நதி அந்த நிலப்பரப்பிலே ஓடியதாம். பஃறுளியாறு என்ற ஆறு ஒன்று மிகத் தெற்கே இருந்தது. அவற்றை யெல்லாம் பிற்காலத்தில் கடல் விழுங்கி விட்டது. பூகம்பம் ஒன்று நேர்ந்து அவை மறைந்தன. முன் இருந்த நிலப் பரப்பில் மிகத் தெற்கே மதுரை என்ற நகரம் இருந்தது. இப்போதுள்ள மதுரை வடக்கே இருப்பதால் இதற்கு வட மதுரை என்ற பெயர் வழங்கியது. தமிழ் நாட்டில் இரண்டு மதுரைகள் இருந்தமையால் ஒன்று தென் மதுரை யெனவும், மற்றொன்று உத்தர மதுரை யெனவும் வழங்கின. பழைய மதுரையில் பாண்டிய மன்னன் அரசு புரிந்து வந்தான். அகத்தியர் பொதியிற் சங்கத்தை வளர்த்து வந்த காலத்தில் அந்த மதுரைதான் பாண்டிய நாட்டுத் தலை நகராக விளங்கியது. அடிக்கடி அகத்திய முனிவருடைய தரிசனத்தைப் பெற்றுப் பொதியிற் சங்கத்தில் ஒரு புலவனாக இருந்து தமிழ் இன்பம் நுகர்ந்த பாண்டியன், தன் நகரத்தில் சங்கம் வைக்கவேண்டு மென்று விரும் பினான். புலவர்கள் யாவரும் சேர்ந்து வாழ்வதற்கு உரிய இடம் தலை நகராதலின், அங்கே தமிழ்ச் சங்கம் வைத்து நடத்துவது எளிதாக இருக்கும் என்று அவன் கருதினான். இராசதானி நகரத்துக்குத் தமிழ்ச் சங்கம் பெரும் சிறப்பை உண்டாக்கு மென்பதும் அவன் எண்ணம். அகத்தியர் அவன் விருப்பத்தைத் தெரிந்து மகிழ்ந்தார். வரவரப் பெருகிக் கொண்டிருக்கும் புலவர் கூட்டத்தை அரசனால் பாதுகாக்க முடியுமே யன்றி, ஆசிரமவாசியாகிய முனிவரால் முடியுமா? ஆகவே பாண்டியனது விருப்பத்துக்கு முனிவர் இணங்கினார். அகத்திய முனிவருடைய ஆசிபெற்று மதுரையில் தமிழிச்சங்கம் தோன்றியது. புலவர்கள் வண்டுகளைப் போல் வந்து மொய்த்தார்கள். அகத்தியர் பொதியில் மலையில் வாழ்ந்தாலும் பாண்டியனுடைய வேண்டுகோ ளுக்கு இணங்கி அவ்வப்போது தமிழ்ச்சங்கத்துக்கு வந்துபோவது வழக்கம். அவரோடு பொதியிலில் அவர் பால் பயிலும் மாணாக்கர் சிலர் வாழ்ந்து வந்தனர். சங்கம் வரவரப் புலவர் பெருகிவாழும் இடமாக வளர்ந்தது. தமிழாராய்ச்சி பெருகியது. பாண்டிய னுடைய பாதுகாப்பிலே புலவர் யாவரும் சொர்க்க லோக போகத்தை நுகர்ந்து பழந்தமிழ் நூல்களை ஆராய்ந்தும், புதிய நூல்களை இயற்றியும் இன் புற்றனர். நிரந்தரமாக மதுரையிலே இருந்து வநதவர் பலர். தமிழ் நாட்டிலுள்ள பல ஊர்களிலிருந்து அவ்வப்போது வநது சென்ற புலவர் பலர். அகத்தியர் இயற்றிய அகத்தியமே அந்தச் சங்கப் புலவர்களுக்கு இலக்கணமாயிற்று. முதல் முதலாக ஏற்படுத்திய சங்கம் ஆகையால் அதனைத் தலைச்சங்கம் என்று பிற்காலத்தார் சொல்வது வழக்கம். தமிழ்நாட்டில் உள்ள புலவர்கள் நூல் செய்தால், தமிழ்ச்சங்கத்துக்கு வந்து அரங்கேற்று வார்கள். சங்கத்துச் சான்றோர் அவற்றை ஆய்ந்து, பிழையிருந்தால் திருத்தச் செய்து மகிழ்வார்கள். தமிழ் நாட்டினரும் சங்கப்பபுலவரின் மதிப்பைப் பெறாத நூலை நூலாகவே போற்றாத நிலை வந்தது. அதனால் தமிழ்நூலென்றால் சங்கத்தாருடைய உடம்பாட்டைப் பெறவேண்டும் என்ற நியதி, சட்டத்தால் வரையறுக்கப் படாமல், சம்பிரதாயத்தால் நிலை பெற்றது. இறையனார் அகப்பொருள் என்ற நூலின் உரையில் இந்தச் சங்கத்தின் வரலாறு வருகிறது. அதில் உள்ள பல செய்திகள் புராணத்தைப்போலத் தோன்றும். ஆனாலும் அதனூடே உண்மையும் உண்டு. தலைச் சங்கத்தில் அகத்தியனாரும், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்றம் எறிந்த முருகவேளும், முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும், பிறரும் புலவர்களாக இருந்தார்களாம். ஐந்நூற்று நாற்பத் தொன்பதுபேர் தலைச்சங்கத்தில் புலவர்களாக வினங்கினார்களாம். சிவபிரானும், முருகவேளும், குபேரனும் தமிழ்ப்புலவர்களாக இருந்தரென்பதை, அவர்களே வந்து புலவர்களோடு புலவர்களாய் இருந்து பேசினார்கள் என்று கொள்ளவேண்டிய அவ சியம் இல்லை. தெய்வ பக்தியிலே சிறந்த தமிழ் நாட்டார் சங்கத்தில் அவர்களுக்கென்று ஆசனங்களை இட்டு அவர்களை நினைப்பிக்கும் அடையாளங்களை வைத்து வழிபட்டார்களென்று கொள்ளலாம், பிற் காலத்தில் இத்தகைய வழக்கம் தமிழர் வாழ்க்கையில் பலதுறையில் இருந்து வந்ததுண்டு. தெய்வங்களை நினைத்து வைத்த ஆசனங்கள் இருந்தாலும் முதலாசனம் அகத்தியனாருக்கே அளித்தனர். தமிழாராயும் இடத்தில் தமிழ்ப்புலவருக்கே முதலிடம் என்ற கொள்கையை இச்செய்தி தெரிவிக்கிறது. தலைச் சங்கத்தாருடைய மதிப்பைப் பெற்றுப் பாடிய புலவர்கள் 4449 பேர். அவர்கள் பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை என்ற பெயர்களையுடைய பழைய பாடல்களைப் பாடினார்கள். இந்தப்பெயர்களில் பரிபாடல் என்ற ஒன்றுதான் நமக்குத்தெரியும். இசைப்பாட்டு வகையில் ஒன்று பரிபாடல். அது போலவே மற்றவையும் பாடல்களின் வகையென்று கொள்ளவேண்டும். இந்தத் தலைச் சங்கத்தைப் பாதுகாத்த பாண்டியர்கள் 89 பேர் என்று கூறுவர். காய்சின வழுதி முதல் கடுங்கோன் வரைக்கும் உள்ள எண்பத்தொன்பது பாண்டியர்களில் புலவர்களாக இருந்தவர்கள் ஏழுபேராம். இந்தச்சங்கம் நெடுங்காலம் தமிழ் நாட்டில் இருந்து வந்தது. மக்கள் பெரும்பாலும் நூறாண்டு வாழ்ந்து வந்த அந்த நாளில் 89 பாண்டியர்களின் காவலில் வளர்ந்த சங்கம் 4440 வருஷம் நடைபெற்றது என்று எழுதியிருக்கிறார்கள். கிட்டத் தட்ட ஒரு பாண்டியனது ஆட்சிக்காலம் ஐம்பது வருஷங்களாகிறது. இது பொருத்தமாகவே தோன்றுகிறது. ஆனாலும் இந்ததக் கணக்குக்கு வேறு ஆதாரம் இல்லாமையால், குறிப்பிட்ட காலத்தை ஆராய்ச்சிக்காரர் நம்புவதில்லை. எப்படியானாலும் அகத்திய ருடைய ஆசிபெற்றுத் தோன்றிய தலைச்சங்கம் பல நூறு வருஷங்கள் சிறந்து விளங்கி வந்தது என்ற செய்தியை உண்மையாகக் கொள்ளலாம். கபாடபுரம் தெற்கே இருந்த மதுரையில் இருந்து பாண்டிய மன்னர் ஆண்டு வந்த காலத்தில், அதற்கு வடக்கே கடற்கறையில் கபாடபுரம் என்ற பட்டினம் ஒன்று இருந்தது. அவ்விடத்தில் முத்துக் குளித்து அருமை யான முத்துக்களை எடுத்தார்கள். வேறு நாட்டி லிருந்து வந்த வாணிகர்கள் அந்த முத்தின் அருமை யைப் பாராட்டித் தம் நாட்டுப் பண்டங்களைக் கொண்டு வந்து கொடுத்து முத்துக்களை வாங்கிச்சென்றனர். பாண்டிநாடு முத்துக்குப் பேர்போனது என்ற பெருமை உலகெங்கும் பரந்தது. அதற்குக் காரணம் கபாடபுரமேயாகும். பாண்டிநாட்டு வளப்பத்தையறிந்து பிறநாட்டார் பாண்டிய மன்னனோடு தொடர்பு வைத்துக் கொண்டார்கள். யவனர் முதலிய பல சாதியினர் பாண்டி நாட் டுக்குவந்து அங்குள்ள வளத்தை அறிந்து சிலகாலம் தங்கினர். தம் நாட்டுப் பொருளைக் கொடுத்தும் பாண்டி நாட்டுப் பொருளைப் பெற்றும் சென்றனர். இவ்வாறு வெளி நாட்டிலிருந்து மக்கள் கடல் வழியாக வந்து கபாடபுரத்தில் இறங்கி மதுரை முதலிய இடங் களுக்குச் சென்றார்கள். வேற்று நாட்டு வாணிகருக் குப் பாண்டி நாட்டிற்புகும் வாயில் போல இருந்தமையால் அந்தப் பட்டினத்திற்குக் கபாடபுரமென்ற பெயர் வந்தது. கபாடமென்பது கதவுக்குப்பெயர். நாளடைவில் மதுரையில் வாழ்ந்த பாண்டியன் உள்ளத்தில் கடற்கரைப் பட்டினத்திற்கு வந்து அதனையே இராசதானி நகரம் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. சேர சோழர்கள் கடற்கரை நகரங்களாகிய வஞ்சியையும் புகாரையும் தலை நகரங்களாகப் பெற்றிருந்தனர். அப்படியே தாமும் கபாடபுரத்தையே இராசதானியாக வைத்துக் கொள்ளலாமென்று தீர்மானித்தனர். மதுரையிலிருந்து பாண்டியர் தலைநகரம் கபாட புரத்திற்கு மாறிற்று. மதுரையில் நிகழ்ந்து வநத தமிழ்ச் தங்கமும் கபாடபுரத்துக்கு வந்தது. கபாடபுரத் துக்கு வந்தது முதல் அந்தச் சங்கத்தைப் பிற்காலத் தார் இடைச்சங்கம் என்ற பெயரால் குறிப்பிடுவர். வால்மீகி ராமாயணத்தில் இந்தக் கபாடபுரத்தைப் பற்றிய செய்தி வருகிறது. சீதாபிராட்டியைத் தேடும் பொருட்டு வானர வீரர்கள் புறப்பட்டபொழுது அவர் களைப்பாத்துச் சுக்கிரீவன் இப்படி இப்படிப் போக வேண்டுமென்றும், இன்ன இன்ன இடத்தைத் தாண்டிச் செல்ல வேண்டுமென்றும் சொல்லி அனுப்பு கிறான். அங்கே தாமிரபர்ணி யாற்றைக் கடந்து செல்லுங்கள். ஒரு மட மங்கை தன் கணவனகத்தை ஆவலுடன் அடைவது போல அந்த ஆறு கடலொடு கலக்கும். பின்பு கவாடத்தைப் பார்ப்பீர்கள். பொன் வளம் நிறைந்து அழகு மிக்கதாய் முத்துக்களாலும், மணிகளாலும் அணிபெற்றது அந்நகரம். பாண்டிய மன்னருக்கு உரியது" என்று சொல்லுகிறான். தாமிர வர்ணியின் சங்கமத் துறைக்கு அருகே கபாடபுரம் இருந்த தென்று இதனால் தெரிய வருகிறது. அந்த நகரம் சுவர்ணமயமாக இருந்ததென்று சுக்கிரீவன் சொல்வதாக வால்மீகி குறிப்பிடுகிறார். அந் நகரத்தின் செல்வ மிகுதியைக் குறிப்பது அது. இராசதானி நகர மாதலின் அழகு மிகப் பெற்றிருப்பது இயல்பே. முத்தும் மணியும் நிரம்பியிருப்பது என்பது அத்துறையில் முத்துக் குளித்துத் தொகுத்தன ரென்பதைக் குறிக்கும். கௌடில்யர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் கபாட புரத்து முத்தை ஓரிடத்திலே குறிப்பிடுகிறார். முத்தின் வகைகளைச் சொல்லும்போது ‘பாண்ட்ய கவாடகம்’ என்ற ஒன்றைக் குறிப்பிடுகிறார். பாண்டியருக்குரிய கபாட புரத்திலே எடுப்பது என்ற செய்தியை அப் பெயர் தெரிவிக்கிறது. பாரதத்திலும் கபாடபுரத்தைப் பற்றிய பிரஸ்தாபம் வருகிறது. துரோண பர்வத்தில் ஓரிடத்தில், ‘பாண்டியன் இறந்தனன். அவனது நகரமாகிய கபாட புரமும் அழிந்தது.’ என்று கூறப்படுகிறது. இவற்றால் கபாடபுரத்தில் பாண்டியர்கள் இருந்து அரசு புரிந்து வந்த செய்தி தெரியவரும். தமிழ்ச் சங்கங்களைப்பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு முதல் ஆதாரமாக இருப்பது இறையனாரகப்பொருள் என்ற இலக்கணத்தின் உரை. அதில் மூன்று சங்கங்களைப் பற்றிய விவரங்களும் வருகின்றன. இடைச் சங்க மாகிய இரண்டாவது சங்கம் கபாடபுரத்தில் இருந்த தென்று அவ்வுரை சொல்லுகிறது. வெண்டேர்ச் செழியன் என்ற பாண்டியனே கபாடபுரத்திற்கு வந்த மன்னன். ஆகவே, அவனே இடைச் சங்கத்தைப் போற்றிப் பாதுகாத்த பாண்டியர்களில் முதல்வன். அவன் முதலாக ஐம்பத்தொன்பது பாண்டியர்கள் கபாடபுரத்தில் இருந்து அரசாண்டு வந்தார்கள். அந்நகரத்தில் கடைசியாக ஆண்ட பாண்டியன் முடத்திருமாறன் என்பவன். இந்த ஐம்பத்தொன்பது பாண்டியர்களுக்குள் கவிஞர்களாக விளங்கியவர்கள் ஐந்து பேர். மொத்தம் ஐம்பத் தொன்பது புலவர்கள் இடைச் சங்கத்தில் இருந்தார்கள். பல புலவர்கள் கவிதைகளை இயற்றி இடைச் சங்கத்தின் அங்கீகாரத்தைப் பெற்றார்கள். அப்படிப் பெற்றவர்கள் 3700 பேர். “இடைச் சங்கம் இருந்தார் அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் இருந்தையூர்க் கருங்கோழியும் மோசியும் வெள்ளூர்க்காப்பியனும் சிறு பாண்டரங்கனும் திரையன் மாறனும் துவரைக்கோனும் கீரந்தையுமென இத் தொடக்கத்தார் ஐம்பத்தொன்ப தின்மர் என்ப” என்று இறையனாரகப் பொருள் உரை காரர் சொல்கிறார். முதற் சங்கத்தில் சிவபெருமானும் முருகனும் குபேரனும் ஆகிய தெய்வங்களைப் புலவர் கூட்டத்திலே சேர்த்து எண்ணினார்கள். இடைச் சங்கத்தில் இருந்த துவரைக் கோன் கண்ணபிரான் என்று கூறுவர் சிலர். முதற் சங்கத்தைத் தொடங்கிப் பாண்டியனுக்கு அறிவுரை பகர்ந்த அகத்தியமுனிவர் இடைச் சங்கத் திலும் இருந்தார். அவருடைய மாணாக்கர்களில் தலை சிறந்த தொல்காப்பியரும் இடைச் சங்கப் புலவர்களில் ஒருவர். இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழுக்கும் இலக்கணமாக அகத்தியம் என்ற நூலை அகத்தியர் முன்பு இயற்றினார். தலைச் சங்கத்தில் இலக்கணமாக இருந்த அதுவே இடைச் சங்கத்திற்கும் இலக்கண மாக இருந்தது. ஆனால் இலக்கணம் அதோடு நிற்க வில்லை. மொழி வளர வளர இலக்கியங்கள் வளரும். பெரும் புலவர்கள் தம்முடைய புலமைத் திறத்தால் புதிய புதிய நூல்களை இயற்றுவார்கள். அந்த நூல் களில் அமைந்த அமைதியை ஆராய்ந்து அறிந்து சொல்வதே இலக்கணம். அகத்தியம் எழுந்தபின்னர், தமிழில் எத்தனையோ நூல்கள் எழுந்தன. தமிழ்ச்சங்கம் தோன்றிய பின்னர்த் தமிழ்ப் புலவர்களுக்குப் பெரு மதிப்பு உண்டாயிற்று. மன்னர்களால் மதிப்பும் ஊக்கமும் உண்டாயின. அதனால் அவர்கள் பல பல நூல்களை இயற்றத் தொடங்கினர். மொழியின் அழகு பலபல வகையிலே விரிந்தது. அவற்றைக்கண்டு இலக்கணமாக அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்தது. இயல் முதலிய தமிழ் மூன்றில் ஒவ்வொன்றும் பலபல கிளைகளாக விரிந்தது. அவற்றையெல்லாம் ஆராய்ந்து இலக்கணம் வகுப்பது ஒருவரால் முடியாத காரியம். எனவே இயல் தமிழைத் தனியே ஆராய்ந் தனர் சிலர். மற்றவற்றையும் இப்படியே புலவர்கள் ஆராய்ச்சி செய்தார்கள். தொல்காப்பியர் இயல் தமிழுக்கு இலக்கணம் வகுக்கத் தொடங்கினார். தொல்காப்பியம் என்ற இலக் கணத்தை இயற்றினார். இன்னும் சில புலவர்கள் இயற்றமிழாராய்ச்சியில் இறங்கினர். தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். மாபுராணம், பூதபுராணம் என்று இரண்டு பெரிய இலக்கண நூல்கள் எழுந்தன. ஒரு புலவர் இசையின் நுணுக்கங்களை ஆராய்ந்து இலக்கணம் இயற்றினார். அதற்கு இசை நுணுக்கம் என்ற பெயர் ஏர்பட்டது. எல்லாவற்றையும் இடைச் சங்கத்தார் தங்களுக்குரிய இலக்கண நூல்களாகக் கொண்டார்கள். பழைய இலக்கணமாகிய அகத்திய மும் புதிய இலக்கணங்களாகிய தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம், இசை நுணுக்கம் என்பவையும் அவர்களுக்குச் சட்ட நூல்களாயின. இடைச் சங்க காலத்தில் எழுந்த இலக்கியங்கள் பல. 3700 பேர் பாடினார்கள் என்றால் ஆளுக்கு ஒரு பாட்டுப் பாடியிருந்தாலும் 3700 பாட்டு ஆகியிருக்குமே! இவ்வளவு புலவர்களில் நூலாகச் செய்தவர்கள் ஆயிரம் பேரேனும் இருக்கமாட்டார்களா? ஆயிர நூல்கள் இருந்தனவென்று சொல்லலாமே! கலி குருகு, வெண்டாளி, வியாழமாலை யகவல் என்பன அவர்களாற் பாடப்பட்டவை என்று இறையனாராக பொருளுரை கூறுகின்றது. இடைச் சங்க நூல் களில் தமிழருடைய அதிருஷ்டத்தினால் இன்றுவரை உயிருடன் இருப்பது தொல்காப்பியம் ஒன்றுதான். இடைச் சங்கம் 3700 வருஷங்கள் நடந்துவந்தது என்று சொல்வார்கள். முடத்திருமாறன் என்ற மன்னன் காலத்தில் பாண்டி நாட்டைக் கடல் கொண்ட தாம். பூகம்பம் வந்து நாட்டிந் பல பகுதிகள் மறைந் தன.பழைய மதுரையும் கபாடபுரமும் குமரி நதி, பஃறுளியாறு என்பவையும் வேறு பல பிரதேசங்களும் கடலில் மறைந்து போயின. பாண்டிய மன்னன் முடத்திருமாறன் இந்தக் கடல் கோளில் தப்பிப் பிழைத்து வந்தான். வேறு தலைநகரத்தை ஆராய்ந்து தேடினான். கடைசியில் இப்போதுள்ள மதுரை பாண்டியர்களின் மூன்றாவது தலை நகரமாயிற்று. கடைச் சங்கம் பாண்டிய மன்னர்கள் தம் ஆணையைப் பரப்புவதைக் காட்டிலும் தமிழைப் பரப்புவதில் பேரார்வம் கொண்டவர்கள். எங்கே இருந்தாலும் தமிழ்ப்புலவர்களுடைய உறவையும் பாதுகாப்பையும் தலைமையான செயலாகக் கருதுபவர்கள். அதனால் தமிழ் நாடு என்று சொன்னால் பாண்டிநாடு என்று அர்த்தம் செய்யும் சிறப்பு உண்டாயிற்று. பாண்டியனுக்குச் செந்தமிழ் நாடன் என்ற பெயர் ஏற்பட்டது. சோழ நாட்டுக்கு நீர் நாடு என்று வேறு ஒரு பெயர் உண்டு. சோழ அரசனால் ஆளப்பெறுதலின் சோழ நாடு ஆயிற்று. இயற்கையில் நீர் வளம் மிக்கிருத்தலினால் நீர் நாடு என்ற பெயர் வந்தது. சேரர் அரசாண்டதனால் சேரநாடு என்ற பெயர் பெற்ற நாட்டில் மலைகள் மிகுதியாக இருப்பதனால் மலைநாடு என்ற பெயரும் அமைந்தது. அப்படியே அரசனை நினைந்து அமைந்த பெயரையுடைய பாண்டி நாடு தமிழைத் தனி உரிமையாகப் பெற்றமையின் தமிழ் நாடு என்று செய்யுளில் வழங்கும். இடைச் சங்கம் கபாட புரத்தில் நிகழ்ந்துகொண் டிருந்த காலத்தில் கடல் கோள் நிகழ்ந்தது என்பதற்குத் தமிழ் நூல்களில் ஆதாரம் இருக்கின்றன. இறையனாராகப்பொருள் உரையில், ‘அவர் சங்கம் இருந்து தமிழ் ஆராய்ந்தது கபாடபுரத்து என்ப. அக்காலத்துப் போலும் பாண்டியன் நாட்டைக் கடல் கொண்டது’ என்று இடைச் சங்கத்தின் வரலாறு வருகிறது. கடைச்சங்கத் தைப் பற்றிய செய்தியில், ‘அவர்களைச் சங்கம் இரீ இயினார் கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திரு மாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி யீறாக நாற்பத்தொன்பதின்மர் என்ப’ என்ற பகுதி இருக்கிறது. இவற்றால் கடல் பொங்கிப் பாண்டி நாட்டின் ஒரு பகுதியை அழித்த காலத்தில் இடைச் சங்கம் நிகழ்ந்ததென்றும், அந்த பூகம்பத்தில் தப்பிவந்த முடத்திருமாறன் என்ற பாண்டியன் கடைச் சங்கத்தைத் தொடங்கி நடத்தி வந்தான் என்றும் தெரியவருகிறது. இப்படிக் கடல் பொங்கி அழித்த பகுதியை அடியார்க்கு நல்லார் என்ற உரையாசிரியர் சிலப்பதிகார உரையில் குறித்திருக்கிறார். ‘தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரி என்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத ஆறும் இவற்றின் நீர்மலிவான் என மலிந்த ஏழ் தெங்க நாடும், ஏழ் மதுரை நாடும், ஏழ் முன்பாலை நாடும், ஏழ் பின்பாலை நாடும், ஏழ் குன்ற நாடும், ஏழ் குணகாரை நாடும், ஏழ் குறும்பணை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின்காறும் கடல் கொண்டது’ என் பது அவர் தெரிவிக்கும் செய்தி. முடத்திருமாறன் இப்போது உள்ள மதுரையைத் தலைநகராக்கி ஆளத் தொடங்கினான். மதுரைப் புரா ணம், பாரதம் முதலிய நூல்களிலிருந்து இந்த நகரம் புதிதாகப் பாண்டியனால் அமைக்கப்பட்ட தென்று தெரியவருகிறது. மதுரை இராசதானியாவதற்குமுன் மணலூர் என்ற நகரமே பாண்டியருக்குத் தலைநக ராயிற்று. கடல் கோளில் வருந்திய பாண்டியன், ‘இனிக் கடற்கரைக்கு அடுத்து வாழ்ந்தால் மீட்டும் நகரம் கடலுக்கு இரையாகுமோ!’ என்று எண்ணி உள் நாட்டில் ஒரு தலை நகரத்தை அமைக்கத் தீர்மானித்தான். பாண்டி நாட்டின் நடுவில் அவ்வாறே ஒரு நகரத்தை அமைத்து மிகப் பழங்காலத்தில் பாண்டியர் தலை நகராகத் தெற்கே இருந்து விளங்கிய மதுரை என்ற பெயரையே அதற்கு வைத்தான். மதுரை தலைநகரான பிறகு பாண்டியன் செய்த முதல் காரியம் புலவர்களை வருவித்துச் சங்கம் அமைத்ததுவே. பாண்டி நாட்டு வளப்பத்துக்கு அரச நீதி முதலியன காரணமாக இருந்தாலும், தமிழ் வளர்ச்சியே மிகச் சிறந்த காரணம் என்பதை உணர்ந்த பாண்டியன் சங்கத்தை மீட்டும் நிறுவினான். பல திசையினின் றும் சிறந்த புலவர்கள் வந்து சேர்ந்தனர். இந்த மூன்றாவது சங்கத்தைக் கடைச் சங்கம் என்று பிற்காலத்தார் வழங்குவர். கடைச் சங்கத்தில் இருந்த புலவர்களுள் தலைமை பெற்றவர்கள் 49 பேர். ‘இனிக் கடைச் சங்கம் இருந்து தமிழாராய்ந்தார் சிறு மேதாவியாரும், சேந்தம் பூதனா ரும், அறிவுடையரனாரும், பெருங்குன்றூர்கிழாரும், இளந்திருமாறனும், மதுரை ஆசிரியர் நல்லந்துவனா ரும், மருதன் இளநாகனாரும், கணக்காயனார் மகனார் நக்கீரனாரும் என இத்தொடக்கத்தார் நாற்பத்தொன் பதின்மர் என்ப’ என்று இறையனாரகப் பொருள் உரையில் வருகிறது. இந்தக் கடைச் சங்கத்தில் தம்முடைய பாட்டை அரங்கேற்றினவர்கல் 449 புலவர்கள் என்று கூறுவர். அவர்களுக்கு அகத்தியமும் தொல்காப்பியமும் இலக் கண நூல்களாக இருந்தன. முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி வரையில் 49 பாண்டியர்கள் 1850 ஆண்டு கடைச் சங்கத்தை நடத்தி வந்தார்களாம். இந்த 49 மன்னர்களுள் மூன்று பேர் சங்கப் புலவர் களாகவே விளங்கினார்கள். அக்காலத்தில் சங்கத்தில் அரங்கேற்றம் பெற்ற நூல்கள் பல. பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்ற முப்பத்தாறு நூல்கள் கடைச் சங்க நூல்கள். கூத்து நூல் சிலவும் வரிப் பாட்டும் சிற்றிசை, பேரிசை என்ற இசைப் பாடல் களும் அக்காலத்தில் எழுந்தன. இராமாயணம் கடைச் சங்க காலத்தில் தமிழில் இருந்தது. பெருந் தேவனார் என்ற புலவர் பாரதத்தைத் தமிழில் பாடினார். தகடூர் யாத்திரை என்ற போர்க்காவியம் ஒன்றைப் பல புலவர்கள் சேர்ந்து பாடினர். ஆசிரிய மாலை, மார்க்கண்டேயனார் காஞ்சி முதலிய நூல்களும் கடைச் சங்க காலத்தில் உண்டாயின. இத்தனை நூல்களுள் இப்போது கிடைப்பன பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க் கணக்கு என்ற முப்பத்தாறு நூல்களே. இராமாயணம், பாரதம், தகடூர் யாத்திரை, ஆசிரிய மாலை என்னும் நூல்களிலிருந்து சில பாடல்கள் உரைகளினிடையே மேற்கோளாக வருகின்றன. புலவர்கள் ஒன்றுபட்டு வாழ்ந்திருந்த சங்கம் தமிழ் மக்களின் மதிப்புக்கு உரியதாயிற்று. அரசர்களை யும் அடக்கும் ஆணைதாங்கிப் புலவர்கள் தமிழை வளம் படுத்தினர். சாதி, சமயம், நாடு, தொழில் என்ற வேறு பாடுகளை நினையாமல் ஒன்றுபட்டு வாழ்ந்த புலவர்கள் நாட்டில் ஒற்றுமையை நிலை நிறுத்தும் விஷயத்தில் ஈடுபட்டார்கள். தமிழ் மரபைப் பாதுகாத்துப் புதிய புலவர்களுக்கு ஊக்கம் உண்டாக்கினர். புதிய புதிய துறைகளில் நூல் செய்பவர்களுக்கு ஆதரவு அளித் தனர். இதனால் தமிழ் மேன்மேலும் வளர்ந்து வந்தது. இயல் தமிழைப் புலவர்கள் ஆராய்ச்சி செய்தது போலவே இசைத் தமிழையும் நாடகத் தமிழையும் தனித் தனிச் சங்கம் அமைத்துப் புலவர்கள் ஆராய்ந் தனர். வரவர அவை விரிந்து வந்ததனால்தான் இப் படித் தனியே இசைச் சங்கமும் நாடகச் சங்கமும் நிறுவவேண்டி நேர்ந்தது. ஆரம்பத்தில் அகத்தியம் ஒன்றையே மூன்று தமிழுக்கும் இலக்கணமாகக் கொண்டிருந்தனர். அப்பால் நாளடைவில் ஒவ்வொரு துறையிலும் தனித் தனியே ஈடுபட்டுத் தனித்தனி இலக்கணத்தைப் புலவர்கள் வகுத்தனர். அதனால் ஒவ்வொரு தமிழையும் தனியே ஆராய்ச்சி செய்வதற்கு வாய்ப்பு உண்டாயிற்று. மேலும் மேலும் தமிழ் விரிந் தது. நூல்கள் மலிந்தன. மூன்று தமிழுக்கும் தனித் தனியே இலக்கணம் அமைந்ததோடு நில்லாமல் ஒவ் வொரு தமிழிலும் ஒவ்வொரு பகுதிக்குத் தனித்தனியே இலக்கணங்கள் எழுந்தன. புலவர்களின் ஒற்றுமையையும் அவர்கள் கூடிச் சங்கத்தில் தமிழாராய்ந்தசிறப்பையும் நூல்கள் பல படியாகப் பாராட்டுகின்றன. தமிழ்ச்சங்கத்தைத் தன்பாற் கொண்ட மதுரைமா நகரத்தை ஒரு புலவர், “தமிழ் நிலைபெற்ற தாங்கரு மரபின், மகிழ்நனை மரபின் மதுரை” என்று கூறுகிறார். புலவர்கள் அறிவு மாத்திரம் நிரம்பியிருந்தால் அவர்களுக்கு பெருமதிப்பு வராது. கல்வி, அறிவு, ஒழுக்கம் என்ற மூன்றிலும் சிறந்திருந்தமையால் அவர்களைக்கண்டு அரசர்களும் வணங்கினர். எல்லாக் குணங்களும் நிறையப் பெற்றவர்களைச் சான்றோர் என்று வழங்குவது தமிழ்மரபு. சங்கத்துப் புலவர்களை நல்லிசைச் சான்றோர் என்றும், சான்றோர் என்றும் குறிப்பது புலவர் இயல்பு. ஒழுக்கம் நிரம்பியவர்கள் என்பதை இந்த வழக்குத் தெளிவிக்கின்றது. புலவர்கள் தமிழாட்சி நடத்தினார்கள். அவர்கள் செலுத்தும் அதிகாரம் எந்த நாட்டிலும் செல்லும். அந்த அதிகாரம் ஒருவர் கொடுத்து வந்ததன்று.மிகப் பழங்காலந் தொடங்கியே அந்த ஆணை புலவர்பால் இருந்து வருகிறது. அதனைத் ‘தொல்லாணை’ என்று குறிப்பார்கள். ஒரு புலவர் பாண்டியன் ஒருவனைச் சிறப்பிக்கின்றார். அவன் இத்தகைய சங்கத்துச் சான்றோர்களோடு சேர்ந்து தமிழின்பத்தைக் கூட்டுண்ணும் சிறப்பை உடையவனாம். ‘பழைய காலந் தொடங்கி மாறாமல் வருகின்ற ஆணையைப் படைத்த நல்ல ஆசிரியர்களாகிய புலவர்கள் மனம் ஒன்றிச் சேரும் சங்கத்தில் கலந்து கூடி அவரோடு தமிழின்பத்தை நுகர்ந்த புகழ் நிரம்பிய சிறப்பை உடையவன்’ என்று புலவர் பாராட்டுகிறார். தொல்ஆணை நல்ஆசிரியர் புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின் நிலந்தரு திருவின் நெடியோன். இது மதுரைக்காஞ்சியில் வருகிறது. இவ்வாறு வாழ்ந்த புலவர்கள் தமிழ் நாட்டுக்கே கல்வியையும் ஒழுக்கத்தையும் உபதேசிக்கும் உபகாரிகளாக வாழ்ந்தார்கள். அவர்களுடைய கூட்டந்தான் சங்கம். அவர்களுடைய ஆராய்ச்சியிலே புகுந்து சாணையிடப் பெற்றுவந்த நூல்களையே தமிழ் நாட்டார் ஏற்றுக் கொண்டனர். சங்கத்தில் ஏறிய தமிழ் தான் தமிழ் என்று தமிழர் கொண்டனர். அதனால் தான் சங்கத்தமிழ், சங்கமலி தமிழ் என்ற சிறப்பு இந்தத் தென்மொழிக்கு உண்டாயிற்று. அகத்தியம் அகத்தியர் இயற்றிய அகத்தியம் என்னும் இலக்கணம் மிக விரிவாக அமைந்தது. அந்த நூல் நமக்குக் கிடைக்காவிட்டாலும் அதைப் பற்றிய செய்திகளைப் பழைய உரையாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள்.சில இடங்களில் அகத்தியத்திலிருந்து சூத்திரங்களை எடுத்து மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழுக்கும் தனித்தனிப் பிரிவாக இலக்கணங்கள் அகத்தியத்தில் இருந்தன. எழுத்து, சொல், பொருள் என்றவற்றைப் பற்றிய இலக்கணங்களை இயல் தமிழ்ப் பிரிவில் அமைத்தார். பண்கள், அவற்றின் இனங்களாகிய திறங்கள், பாடல் வகை, நரம்புகளின் வகை, வாத்தியங்களின் அமைப்பு முதலிய செய்திகள் இசையிலக்கணத்தில் வந்தன. கூத்தன் இலக்கணம், அபிநயம், பாவம் முதலியவற்றைப் பற்றிய செய்திகளை நாடகத்தமிழ் இலக்கணத்தில் வைத்துச் சொன்னார். இப்போது கிடைக்கும் சில சூத்திரங்களிலிருந்து அகத்திய மென்னும் கடலின் ஒரு துளியை அறிந்து கொள்ளலாம்; அவ்வளவுதான். தமிழில் உள்ள சொற்களை ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு வகையாகப் பிரிப்பார்கள். சொல்லில் உள்ள எழுத்துக்களையும் பொருளையும் பற்றிய பிரிவுகள் இருக்கின்றன. அர்த்தத்தை எண்ணிப் பிரித்த சொற் பிரிவு நான்கு. பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்று நான்காகச் சொல்வர். இடைச்சொல், உரிச்சொல் என்ற பாகுபாட்டை இலக்கண அறிவு வந்தவர்களே அறிவார்கள். ஆனால் பெயர்ச்சொல், வினைச்சொல் என்ற பாகுபாட்டைப் பொதுவாக யாவருமே அறியக்கூடும். அந்த இரண்டுமே முக்கியமானவை என்பது இலக்கண ஆசிரியர் கொள்கை. ஒரு பொருளின் பெயரைச் சொல்வது பெயர்ச்சொல். அதன் தொழிலைச் சொல்வது வினைச்சொல். இந்த இரண்டுமே தலைமையானவையென்று அகத்தியர் சொல்லுகிறார். “ஒரு மொழியின் மூலங்களைப் பகுத்துப் பார்த்தால் அதில் உள்ள சொற்களெல்லாம் பெயரிலும் வினையிலும் அடங்கிவிடும்” என்பது அவர் கூறும் இலக்கணம். “பெயரினும் வினையினும் மொழிமுதல் அடங்கும்” எழுத்துக்கள் சேர்ந்து சொல் ஆகின்றன. சொல் ஒரு பொருளை உணர்த்துவது. அர்த்தமில்லாத வார்த்தை இல்லை. அப்படி இருந்தால் அதற்குச் சொல் என்ற பெயர் இல்லை. அது வெறும் ஒலியாகவே இருக்கும். ஒருவன் முக்கி முனகுகிறான்; அந்த ஒலி காதில் விழுகிறது. அது சொல்லாகாது. ஒருவன் சீட்டி அடிக்கிறான். அது வெறும் ஒலியே ஒழியச் சொல்லாகாது. சொல்லும் ஒலிதான். அந்த ஒலிக்கு ஓர் உருவம் உண்டு. முதலில் நாம் அந்த ஒலியைத்தான் கேட்கிறோம். அந்த ஒலியைக் காது கேட்டவுடன் அறிவு அதன் பொருளை ஆராய்கிறது. இன்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்கிறோம். சொல்லின் ஒலி காதில் விழுந்த மறுகணமே அதன் அர்த்தம் நமக்குத் தெரிகிறது. அதிகப் பழக்கத்தினால் சொல்லின் ஒலியும் பொருளும் ஒரே சமயத்தில் தோன்றுவதாகத் தெரிகிறது. உண்மையில் ஒலிதான் முதலில் தெளிவாகிறது. பிறகுதான் அதைப் பொருளோடு சேர்த்துப் பார்க்கிறோம். இந்த விஷயத்தை நமக்குத் தெரிந்த மொழி மூலம் அறிவது கடினம். நமக்குத் தெரியாத மொழிமூலம் இந்த அமைப்பை உணரலாம். யாரோ ஒருவன் பஞ்சாபியில் பேசுகிறான். அவன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் நம் காதில் விழுகின்றன.ஆனால் அவை காதளவிலேயே நின்று விடுகின்றன. மூளையில் ஏறுவதில்லை. அது முதல் வாசலிலேயே நின்று போகிறது. ஆனால் பஞ்சாபி தெரிந்த ஒருவருக்கு அது வெகு வேகமாக இரண்டாவது கட்டத்துக்குப் போய் விடுகிறது. அந்த ஒலியின் பொருள் அவருக்குப் புலப்படுகிறது. இந்த இரண்டும் வெகு வேகமாக நடப்பதனால் சப்தத்தைக் கேட்பது அவ்வளவாகக் கவனத்துக்கு வருவதில்லை. ஏதாவது பாட்டில் புரியாத வார்த்தை ஒன்று வந்து அதற்கு வாத்தியார் அர்த்தம் கேட்டுவிட்டால் பையன் தலையைச் சொறிந்து கொண்டு நிற்பதைப் பார்த்திருக்கிறீர்களா? அப்போது அவனுக்கு அந்தச் சொல்லின் ஒலி மாத்திரம் தெரிகிறது. மேலே மூளைக்கு அது ஏறாமல் போகிறது. ஆகவே ஒரு சொல் முதலில் தன் உருவமாகிய ஒலியைப் புலப்படுத்துகிறது. அதன் பிறகே பொருளைத் தெரிவிக்கிறது. “சொல்லானது தன்னை யும் தன் பொருளையும் உணர்த்தும் இயல்பை உடையது” என்று இலக்கணக்காரர் சொல்வர். அகத்தியர் இதற்கு உவமைகள் கூறி விஷயத்தை விளக்குகிறார். வயிரம் வயிரத்தை அறுக்கும் என்று சொல்வார் கள். வயிர ஊசி கண்ணாடி முதலிய பொருள்களை அறுத்த உபயோகப்படும் கருவி. அது வயிரத்தையும் அறுக்க உபயோகப்படும். அப்படியே இரும்பாலான அரம் மற்ற உலோகங்களை அராவுவதற்கு உபயோகமாவதோடு இரும்பையும் அராவப் பயன்படுகிறது. பொன்னை உரைத்துப் பார்க்கும் உரையாணியும் இந்த இனத்தைச் சார்ந்ததே. இவை மற்றவற்றைச் சோதிக்கும் விஷயத்தில் கருவியாக நிற்பதோடு தம் மைச் சோதிக்கும் கருவியாகவும் நிற்கின்றன. சொல்லும் அத்தகையதுதான். பிற பொருளைச் சுட்டுவ தோடு தன்னையே, தன் உருவத்தையே, சுட்டுவதற்கும் அது உதவுகிறது. அகத்தியர் இந்தச் செய்திகளைச் சூத்திரமாகச் சொல்லியிருக்கிறார். வயிர ஊசியும் மயன்வினை இரும்பும் செயிரறு பொன்னைச் செம்மைசெய் ஆணியும் தமக்கமை கருவியும் தாமாம் அவைபோல் உரைத்திறம் உணர்த்தலும் உரையது தொழிலே. இந்தச் சூத்திரத்திலிருந்து மொழியின் இலக் கணத்தைத் தெரிந்து கொள்வது ஒன்று. அதைக் காட்டிலும் சுவாரசியமான விஷயம் ஒன்று உண்டு. இலக்கண நூல் கூடச் சரித்திர ஆராய்ச்சியாளருக்குப் பயன்படும் என்ற உண்மையை இதனால் தெரிந்து கொள்ளலாம். அதைப்பற்றிக் கொஞ்சம் கவனிப்போம். ‘தமிழ்ச்சொல் தன் ஒலி உருவத்தைப் புலப்படுத்துவதோடு அதனாலே சுட்டப்படும் பொருளையும் தெரிவிக்கும்’ என்பது இந்தச்சூத்திரத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளும் மொழி இலக்கணம். இந்தச் செய்திக்கு உபமானமாக அகத்தியர் மூன்று கருவிகளை எடுத்துக் காட்டுகிறார். வயிர ஊசி, மயன்வினை யிரும்பாகிய அரம், உரை யாணி என்ற மூன்று கருவிகளை இந்தச் சூத்திரம் சொல்கிறது. அந்த மூன்றையும் உபமானமாகச் சொன்னால் சொல்ல வந்த விஷயம் தமிழர்களுக்கு நன்றாக விளங்குமென்பது முனிவர் கருத்து. ஆகவே, இந்த மூன்று கருவிகளும் இவற்றால் நடைபெறும் காரியங்களும் அகத்தியர் காலத்துத் தமிழர்களுக்குத் தெரிந்தவை என்று சொல்லலாம் அல்லவா? இது தான் சரித்திரம். இலக்கணத்திலிருந்து கூடச் சரித்திரத்தைக் காட்டலாம் என்று சொல்வதில் ஏதாவது பிழை உண்டா? வயிரம், இரும்பு, பொன் என்பவற்றைத் தமிழர் தம் வாழ்க்கையிலே பயன்படுத்திக் கொண்டனர். வயிரத்தால் ஊசி செய்து வேறு மணிகளை அறுத்ததோடு, வயிரத்தையும் அதனாலே சாணையிட்டு வந்தனர். இரும்பை அராவி இருப்புக் கலங்களை இயற்றினர். பொன்னின் மாற்றை உரையாணியால் அறிந்தனர். அகத்தியர் காலத்தில் வயிரமும், பொன்னும், இரும்பும் தமிழர் வாழ்க்கையில் வந்துவிட்டன. அவற்றைத் தக்க வண்ணம் பயன்படுத்திக் கொண்டனர். அவர்களுடைய நாகரிகம் உயர்ந்ததென்று இதனால் தெரிகிறது. - ஒன்று, பல என்ற வித்தியாசத்தைப் பற்றிய ஆராய்ச்சி ஓரிடத்தில் வருகிறது. ஒரே பொருள் ஒரு வகையிலே பலவாகவும் ஒரு வகையிலே ஒன்றாகவும் இருக்கும். மாலையில் பல மலர்கள் இருக்கின்றன. பல பொருள்கள் கூடி அமைந்த பொருள் அது. ஆயினும் அப்படிக் கூடிய தொகுதியாக நிற்கும்போது அத்தொகுதிப்பொருளை ஒன்றாகக் குறிக்கிறோம்; மாலை யென்ற ஒன்றாக வழங்குகிறோம். மாலையாகப் பார்க்கும் போது அது ஒன்று; மலர்களாகப் பார்க்கும்போது பல. இப்படியே ஒரு பெரும்படை இருக்கிறது. பல ஒன்றுகள் சேர்ந்த ஒன்று அது. பல வீரர்கள் சேர்ந்த படை. வீரர்களாகப் பார்க்கையில் பன்மை தோன்று கிறது. படையாகப் பார்க்கையில் ஒருமை தோன்றுகிறது. இப்படியே சோறு, கறி, பச்சடி என்ற பல பண்டங்கள் சேர்ந்து உணவு என்ற ஒன்று ஆகின் றன. பல ஏடுகள் சேர்ந்து ஒரு புத்தகம் ஆகின்றன. பல பலகைகளும் ஆணியும் சேர்வதனால் ஒரு கதவு அமைகிறது. பலநூல்கள் கூடி ஒரு கம்பலத்தை உண் டாக்குகின்றன. மலராகிய ஒன்றுக்கும் மாலையாகிய ஒன்றுக்கும் வித்தியாசம் உண்டு. மலர் தனியான ஒன்று. மாலையென்பது பலபொருள்கள் சேர்ந்த ஒன்று. அதைப் பலவின் இயைந்த ஒன்று என்று அகத்தியர் சொல்கிறார். பலவின் இயைந்தவும் ஒன்றெனப் படுமே அடிசில் புத்தகம் சேனை அமைந்த கதவம் மாலை கம்பலம் அனைய என்பது அவர் கூறும் சூத்திரம். பல பொருளும் சுவையும் கலந்த உணவை உண்டு பல ஏடுகளைச் சேர்ந்த சுவடிகளைப் பயின்று, பல வீரர்கள் சேர்ந்த படைகொண்டு போர் செய்த னர் தமிழர். பல பலகைகளை இணைத்த கதவை மனை யில் அமைத்தனர். மலர் மாலை சூடினர். கம்பலத்தைப் பயன்படுத்தினர். இந்தச் சரித்திரச் செய்தி களையும் சூத்திரம் தெரிவிக்கின்றது. அன்றியும் புத்தகம், சேனை, கம்பலம் என்ற வடசொற்கள் அகத்தியர் காலத்திலே தமிழாகிவிட்டன என்ற செய்தியும் தெரிய வருகிறது.* - இந்தச் சூத்திரங்கள் பழைய அகத்தியர் சூத்திரங்கள் அல்ல என்பது சில ஆராய்ச்சியாளர் கொள்கை. இவ்வாறு அகத்தியத்தில் இப்போது கிடைக்கும் சூத்திரங்களைக் கொண்டு ஆராய்ந்தால் தமிழர் வாழ்க்கையைக் குறித்த சில செய்திகள் தெரியவரும். அகத்தியர் காலத்தில் வடமொழி வியாகரணம் ஒன்று எட்டாம் வேற்றுமையை முதல் வேற்றுமையில் அடக்கிக் கூறியது. இந்திரன் இயற்றிய வியாகரணம் ஒன்று வழக்கில் இருந்தது. ஒரே சொல்லைப் பொருள் சிறந்து நிற்பதற்காக இரண்டு தடவையும் மூன்று தடவையும் நான்கு தடவையும் சொல்வதுண்டு. இவை சில சூத்திரங்களால் தெரியவரும் செய்திகள். அகத்தியர் செய்யுள் சம்பந்தமாகச் சொல்லியிருக்கும் சில சூத்திரங்களும் கிடைக்கின்றன. இசைத் தமிழ் சம்பந்தமாக அவர் இயற்றிய சூத்திரம் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆயினும் “அகத்தியனார் இப்படிச் சொன்னார்” என்று தெரிவிக்கும் சூத்திரங்கள் சில உண்டு. அவற்றால் இசை நாடகங்களுக்கும் அவர் இலக்கணம் வகுத்தார் என்பது தெரிய வரும். பாலையென்பது ஒரு பண். பண்ணிலிருந்து பிறக்கும் இனங்களைத் திறம் என்று கூறுவர். ஒவ்வொரு பண்ணுக்கும் திறங்கள் உண்டு. பாலைப்பண்ணுக்கு ஐந்து திறங்கள் உண்டு. ஜனக ராகம், ஜன்ய ராகம் என்று கர்நாடக சங்கீதத்தில் இரண்டு வகை இருக் கின்றன. ஜனக ராகத்தை மேளகர்த்தா என்றும் சொல்வர். அதைப்போன்றதுதான் பண். அதிலிருந்து பிறப்பது திறம். பாலைப்பண் ஒரு மேளகர்த்தாவைப் போன்றது. அதிலிருந்து பிறக்கும் திறங்கள் தக்க ராகம், நேர்திறம், காந்தாரபஞ்சமம், சோமராகம், காந் தாரம் என்ற ஐந்துமாகும். இப்படி அகத்தியனார் சொன்னதாக வேறொரு புலவர் எடுத்துக் காட்டுகிறார். ….. என்றைந்தும் பாலைத்திறம் என்றார் பூந்தார் அகத்தியனார் போந்து அகத்தியத்தில் பண்களையும் திறங்களையும் பற்றிய இலக்கணங்கள் இருந்தன என்பதற்கு இது சாட்சி யாக நிற்கிறது. அவைதாம் சாந்திக் கூத்தும் விநோதக் கூத்தும்என்று ஆய்ந்துற வகுத்தனன் அகத்தியன் றானே என்பது போன்ற சூத்திரங்களிலிருந்து கூத்திலக் கணத்தையும் அகத்தியர் இயற்றினரென்று தெரிய வருகிறது. தமிழர் அவர் காலத்தில் பண்ணும் திறமும் பயின்ற இசையிலே வல்லவராகி பல்வகைக்கூத்தும் ஆடி, அவற்றுக்கு இலக்கணமும் வகுத்துக் கொண்ட னர் என்ற செய்தியையும் அறிகிறோம். கன்னித் தமிழ் மனிதராகப் பிறந்தவர் யாவரும் பேசுகின்றனர். அதாவது தம்முடைய உள்ளக் கருத்தை வேறு ஒரு வருக்கு வாயினால் ஒலிக்கும் ஒலிக்கூட்டத்தினால் புலப் படுத்துகின்றனர். அந்த ஒலிக்கூட்டத்துக்கு மொழி அல்லது பாஷையென்று பெயர். எல்லா மனிதர்களும் வாயினால் ஒலி செய்கின்றனர். ஆனால் சிலர் வாயிலிருந்து வரும் ஒலி மொழி ஆவதில்லை. எல்லோருடைய வாயிலிருந்தும் வரும் ஒலி எப்போதும் மொழி ஆவதில்லை. நாம் வாயை அசைத்து நாக்கைப் புரட்டிப் பேசுகிறோம். அதைப் பார்த்து ஊமையும் தன் நாக்கைப் புரட்டி முழங்குகிறான். ஆனால் பாவம்! அவன் செய்யும் ஒலி மொழி ஆகாது. அப்படியே சின்னஞ் சிறு குழந்தை இனிய மழலை பேசுகிறது. அன்பினால் அதைக் குழலினும் யாழினும் இனிதென்று கொள் கின்றோமே ஒழிய அகராதியைக் கொண்டு அந்த ஒலிக்குப் பொருள் தேட முடியாது. இந்த இரண்டு வகையான ஒலியும் மொழி ஆகாததற்குக் காரணம் எனன? மக்கள் வாயொலி மூலமாகத் தங்கள் கருத்தைப் புலப்படுத்தும்போது ஒரு வரையறையோடு அதைச்செய்கிறார்கள். அந்த வரையறை இப்படித்தான் பேச வேண்டும் என்று ஒருவர் கட்டுப்படுதாமல் உணவு உண்ணவும் ஆடை உடுத்தவும் எப்படிப் பழக்கம் ஏற்படுகிறதோ அப்படித் தானே ஏற்படுகிறது. பழக்கத்தினால் வருவதுதான் என்றாலும் அந்தப் பழக்கத்தில் உள்ள ஒரு வகைக் கட்டுப்பாட்டைக் கட்டுப்பாடாகவே நாம் நினைப்பதில்லை. இடுப்பில் நம்முடைய நாட்டுக்குத் தக்கபடி ஆடை உடுத்துக்கொள்கிறோம். இந்த நாட்டுக்கு ஏற்றபடி குழம்பைச் சோற்றில் ஊற்றிப் பிசைந்து சாப்பிடுகிறோம். இத்தகைய பழக்கங்கள் பிறவியோடு வரவில்லை. தாயோ தந்தையோ பிறரோ செய்வதைக் கண்டு தெரிந்து கொள்கிறோம். மொழியும் அப்படித் தான். ஊர்முழுவதும் பேசும் பேச்சுக்கிடையே வாழ் வதனால் நம்மை அறியாமல் அது நமக்குப் பழக்கமா கிறது. குழந்தைப்பிராயத்திலே இயற்கையாக வரும் ஒலி மாறி அதற்கு ஒரு வரையறை ஏற்பட்டு நாமும் தமிழில் பேசுகிறோம். எந்த நாட்டுக் குழந்தையானாலும் அவை இயற்கையாகப் பேசும் மொழி ஒன்றுதான். அதற்கு அகராதி இல்லை. ஆனாலும் எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரி மழலை பேசுவதில்லை. ஆகையால் அவை ஒலிக்கும் ஒலியிடையே ஒரு பொதுமையைக் கண்டு பிடித்து அதைக் குழந்தைப் பாஷையாக வைத்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு குழந்தையும் தனக்கென்று உடம்பும் உயிரும் அமைந்தது போலத் தனக்கென்று ஒரு குரலாகிய மொழியையும் பெற்றுத்தான் பிறக்கிறது.அந்த மொழியைக் கடவுள் ஒருவரே புரிந்துகொள்ளமுடியும். மாதக் கணக்கில் வளர்ந்த குழந்தை அழுகை யொலியும்,‘ங்கு’ சப்தமும் மாறி வளர்ந்து மழலை பிதற்றத் தொடங்கும்போது அதன் தாய் தந்தையர் பழக்கத்தால் அந்தக் குழந்தையின் பேச்சுக்குப் பொருள் தெரிந்து கொள்கிறார்கள். அந்தப் பருவத் தில் ஒவ்வொரு குழந்தையின் பேச்சும் அந்த அந்தக் குழந்தையின் பெற்றோருக்குத்தான் அர்த்தமாகும். சேக்கிழார் என்ற புலவர் இதை ஓரிடத்திற் சொல்லுகிறார். பெரிய புராணத்தில் அவையடக்கத்தில் இந்தக் கருத்தைத் தெரிவிக்கிறார். “என் மனசுக்குள் சிவபக்தர்களுடைய பெருமையைச் சொல்ல வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அதனால் இந்த நூலைப் பாடினேன். என் கருத்து முழுவதையும் இந்த நூல் வெளியிடாமல் இருக்கலாம். ஆனாலும் என் கருத்து இன்னதென்று உணர்ந்த பெரியவர்கள் அந்தக் கருத்துக்கு ஏற்ற சொற்களும் அமைப்பும் இதில் இல்லாவிட்டாலும் அவை இருப்பதாகவே பாவிக்க வேண்டும்; தாமே அவற்றை நிரப்பிக் கொள்ள வேண்டும்” என்று அவையடக்கம் சொல்ல வந்தவர் அதற்கு உபமானம் ஒன்று காட்டுகிறார். “குழந்தை பேசும்போது அது ஏதோ ஒன்றைக் கருதித்தான் பேசுகிறது. அந்தக் கருத்தைத் தன் மழலைச் சொல்லில் தெரிவித்து விடலாம் என்ற ஆசையோடு பேசுகிறது.ஆனால் யாவருக்கும் அது விளங்குகிறதா? இல்லை. அந்தக் குழந்தையின் கருத்தை யாருமே உணர்வதில்லையா? சிலர் உணர்ந்து கொள்கிறார்கள். அந்தக் குழந்தையினிடம் அன்பு வைத்துப் பழகுபவர்கள் அது இன்னது வேண்டுமென்று கேட்கிறது என்ற கருத்தைத் தெரிந்து கொண்டு, அந்தக் கருத்தை வெளிப்படையாகச் சொன்னதாகவே கொள்கிறார்கள். ‘போக்கிரி, பால் வேண்டுமென்று கேட்கிறான்!’ என்று அயல் வீட்டுக் காரருக்கும் அந்த மொழியின் பொருளை விளக்குகிறார்கள். அவர்கள் எப்படித் தம் குழந்தையின் கருத்தை உணர்ந்துகொண்டு அதற்கு ஏற்ற வாக்கியங்களைத் தாங்களே பெய்து கொள்ளுகிறார்களோ அப்படி என் திறத்தில் பெரியவர்கள் செய்ய வேண்டும்” என்று பொருள் விரியும்படியாகாச் சேக்கிழார் பாடி யிருக்கிறார். செப்பல் உற்ற பொருளின் கருத்தினால் அப்பொருட்குரை யாவரும் கொள்வரால் {பொருள்~குழந்தை. அப் பொருட்கு உரை~ அந்த அர்த்தத்துக்கு ஏற்ற மொழியை} குழந்தை பிறகு மொழியைத் தெரிந்து கொள்கிறது. ஆனால் ஊமை எப்போதும் தெரிந்து கொள்வதில்லை.காரணம் பிறர் பேசும் ஒலியைக் கேட்டு அந்த மாதிரிப் பேச அவனுக்குச் செவி இல்லை. உதட்டையும் நாக்கையும் பார்த்து ஏதோசிரமப்பட்டு உளறுகிறான். பாஷை அந்த முயற்சிக்குள்ளே அடங்கினது அல்லவே! தமிழ் நாட்டில் தமிழை ஒவ்வொரு வீட்டிலும் பேசுகிறார்கள். அந்த வீட்டுப் பேச்சிலே கூட ஒரு தனிமை உண்டு. அதை முதலில் குழந்தை தெரிந்து கொள்கிறது. பிறகு ஊராரோடு பழகி அது தன் பேச்சை விருத்தி செய்து கொள்கிறது. இந்தப் பழக்கம் நடை கற்பதுபோல இயற்கையாகவே வருகிறது. அயல் வீட்டில் வாழ்பவர்கள் நெருங்கிப் பழகுபவர்களாக இருந்து, அவர்கள் வேறு மொழி பேசினால், அதையும் குழந்தை எளிதில் பழகிக் கொள்கிறது. வீட்டில் ஒரு மொழியும் வெளியில் வேறு மொழியும் வழங்கும் இடங்களில் வளரும் குழந்தை களுக்கு அந்த இரண்டும் மிக எளிதில் வந்து விடுகின்றன. இதனால் அந்த இரண்டு மொழிகளும் மிகவும் சுலபமாக எல்லோருக்கும் வந்து விடும் என்று சொல்லலாமா? மொழிக்கு சில வரையறைகள் இருக்கின் றன. மொழி வழங்கும் சமுதாயத்துக்குப் புறம்பே இருந்து அந்த மொழியைக் கற்றுக் கொள்கிறவர்களுக்கு அதன் வரையறைகள் தனியே தோற்றும்; கஷ்டமாகவும் இருக்கும். அந்தச் சமுதாயத்திலே பிறந்து வளரும் மக்களுக்கோ அநேகமாக அந்த வரையறையைத் தனியே கவனிக்கும் சந்தர்ப்பம் இருப்பதில்லை. அவர்கள் கவனிக்காவிட்டாலும், வரையறையான அமைப்பை உடைமையினால்தான் ஒரு மொழி, மொழி நிலையை அடைகிறது என்ற உண்மை எப்போதும் உண்மையாகவே நிற்கும். தமிழ் மொழி தமிழுலகம் என்னும் இடத்தில் வழங்குவது. அதற்கு இட வரம்பு உண்டு. இன்ன கருத்தை இப்படிச் சொல்ல வேண்டும் என்ற முறை உண்டு. அந்த முறையைத் தனியே புலவர்கள் கவனித்தார்கள். கவனித்து ஆராய்ந்ததைத் தனியே எழுதினார்கள். அதுதான் இலக்கணம். ஒரு பொருள் இருந்தால் அதற்குக் குணம் உண்டு. அந்தக் குணத்தை அதிலிருந்து வேறு பிரிக்க முடியாது. ஆனாலும் அதைப் பற்றிப் பேசும் போதும் ஆராய்ச்சி பண்ணும் போதும் குணத்தைத் தனியே எடுத் துச்சொல்லி விவகரிக்கிறோம். ரோஜாப் பூவிலே செம்மை இருக்கிறது. செம்மையை ரோஜாப் பூவி லிருந்து பிரிக்கமுடியாது. ஆனாலும் ரோஜாப்பூவில் செம்மை நிறம் இருக்கிறது எந்று பேச்சில் வழங்கு கிறோம். அதுபோலவே மொழியில் ஒரு வரம்பு இருக்கிறது என்று சொல்கிறோம். இந்த வரம்புக்கு இலக்கணம் என்ற பெயரைப் பெரியோர்கள் கொடுத்திருக்கிறார்கள். தமிழாகிய ரோஜாப்பூவின் குணம் இலக்கணம். அந்த இலக்கணத்தைத் தனியே பிரிக்க முடியாது. ஆனால் தனியே பார்க்கலாம்; தனியே விவகரிக்கலாம். ரோஜாப்பூவுக்குச் செம்மை இயற்கையாகவே அமைந்துபோல மொழிக்கும் வரையறை அது பிறந்தபோதே அமைந்துவிட்டது. ஆனாலும் சீதோஷ்ண நிலையினாலும் தாவர நூலாருடைய முயற்சியாலும் ரோஜாப்பூவின் நிறத்தில் வேறுபாடுகள் அமைவது போலத் தமிழின் வரையறைகள் மாற லாம். அந்த மாற்றம் நினைத்த பொழுது நினைத்தவர் கள் நினைத்தபடி அமைவது அல்ல. அது மாற்றப்படுவது அன்று; தானே மாறுவது. அந்த மாற்றத்தை உணர்ந்து இன்னபடி மாறியிருக்கிற தென்று ஒரு புலவன் சொன்னால் அது புதிய இலக்கணம் ஆகும். அந்தப் புதிய இலக்கணத்துக்காக மொழி மாறுவதில்லை மொழியின் அமைப்பு மாறி வருவதனால் இலக்கணமும் மாறுகிறது. தமிழ்மொழி பல காலமாகத் தமிழருடைய கருத்தைப் புலப்படுத்தும் கருவியாக இருந்தது. பிறகு கலைத் திறமை பெற்றுப் பல பல நூல்களாகவும் உருப் பெற்றது. மனிதர்கள் பேசும் மொழி தினந்தோறும் உண்ணும் உணவைப் போன்றது. அவருள்ளே புலவர் இயற்றிய நூல்கள் வசதியுள்ளவர்கள் அமைத்த விருந்தைப் போன்றவை. தமிழில் இந்த இரண்டுக்கும் பஞ்சமே இல்லை. பேச்சு வழக்கு மாயாமல் நூல் சிருஷ்டியும் மங்காமல் மேலும் மேலும் வளர்ந்துவரும் ஒரு மொழியில் அவ்வப்போது புதிய புதிய துறைகள் அமைவது இயற்கை. புதிய புதிய அழகு பொலிவதும் இயல்பே. தமிழில் இப்படி உண்டான மாற்றத்தைப் பார்த்தால் மிக அதிகமென்று சொல்ல முடியாது. புதிதாக உண் டான மொழியில் தான் புதிது புதிதாக வளர்ச்சி உண் டாகும். ஒரு மரம் செடியாக இருக்கும் போது மாதத் துக்கு மாதம் அதன் வளர்ச்சி நன்றாகத் தென்படும். ஆனால் அது மரமாக வளர்ந்து சேகேறி வானளாவிப் படர்ந்து நிற்கும் போது அதில் உண்டாகும் வளர்ச்ச்சி அவ்வளவாகத் தென்படாது. தன்பால் உண்டான வயிரத்தைப் பாதுகாத்துக் கொண்டு அது நிற்கும். அவசியமான வளர்ச்சி யெல்லாம் அமைந்து விட்ட படியால் புதிய புதிய மலரையும் குழையையும் தோற்று விக்கும் அளவோடு அது தன் புதுமையைக் காட்டும். தமிழ் இப்படி வளர்ந்து சேகேறிப்போன மொழி. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் உண்டான தொல்காப்பியத்தைக் கொண்டு அக்காலத்தில் வழங்கிய வழக்கைத் தெரிந்து கொள்கிறோம். இன்னும் பெரும் பாலும் அந்த வழக்கை யொட்டியே தமிழ் நிற்கிற தென்று தெரிகிறது. முன்னரே பண்பட்ட மொழி யாக இருப்பதால் தமிழ் திடீர் திடீரென்று மாறவில்லை. அன்று தொல்காப்பியர் காட்டிய இலக்கணங்களிற் பெரும் பகுதி இக்காலத்துத் தமிழுக்கும் பொருத்தமாக இருக்கிறது. இதனால், தமிழ் வளரவில்லை யென்பது கருத்தல்ல. புதிய மலரும் புதிய தளிரும் பொதுளித் தமிழ் புதுமையோடு விளங்குகிறது. அடி மரம் சேகேறிக் காலத்தால் அலைக்கப்படாமல் நிற்கிறது. அதனால் தான் இதனைக் கன்னித் தமிழ் என்று புலவர்கள் பாராட்டுகிறார்கள். இந்தக் கன்னி மிகப் பழையவள்; ஆனா லும் மிகப் புதியவள். இவளுடைய இலக்கணத்தைச் சொல்லும் தொல்காப்பியம் பழைய நூல்; ஆனால் புதிய காலத்திற்கும் பொருத்தமானது. தொல்காப்பியம் உருவான கதை படை பதைக்கும் வெயில்; அந்த வெயிலில் ஒரு சோலைக்குள்ளே போகிறோம். நெடுந்தூரத்தில் வரும் பொழுதே சோலையின் பசுமைக்காட்சி நம் கண்ணைக் குளிர்விக்கிறது. “தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு” என்பது பழமொழி அல்லவா? மெல்ல மெல்ல நடந்து சோலைக்குளே நுழைகிறோம். நுழைவதற்கு முன் சோலை ஒரேபிழம்பாக, பச்சைப் பரப்பாகத் தோற்று கிறது. அதற்குள் நுழைந்தபிறகு சோலை பிழம்பாகத் தோற்றுவதுபோய் அந்தப் பிழம்பாகிய முழுத் தோற் றத்தைத் தந்த மரங்களைப்பார்க்கிறோம். மரங்கள் இல்லாமல் சோலை என்று தனியே ஒன்று இல்லை. நெடுந்தூரத்திலிருந்து பார்க்கையில் சோலை யென் னும் முழுப்பொருள்தான் கண்ணுக்குத் தெரிகிறது. அதற்குள் நுழைந்துவிட்டால் அந்த முழுப் பொருளை ஆக்கும் மூலம் இன்னதென்று தெரிகிறது. இப்போது சோலை என்ற பொது உருவத்தை விட்டு, மரங்கள் செடிகள் என்ற அந்த உருவத்தை உண்டாக்கும் பகுதிகளைக் காண்கிறோம். இதோ மாமரம், இதோ தென்ன மரம், இதோ பலா மரம் என்று பார்த்துப் பார்த்து இன்புறுகிறோம். பூமரமும் பழமரமும் நிழல் மரமும் தனித்தனி கண்ணிலே படுகின்றன. வெயில் வேகம் மறந்து போயிற்று. மெல்ல ஒரு மரத்தடியிலே சென்று அமர்கிறோம். அதன் பரந்த நிழலிலே மேல் துண்டை விரித்துப் படுத்துக் கொள்கிறோம். இப்போது நமக்கு மாமரம் ஒன்றுதான் தெரிகிறது. மற்ற மரங்களைப் பார்ப்பதில்லை. மெல்ல மரத்தின் ஒரு கிளையில் கண்ணைத் திருப்புகிறோம். அந்தக் கிளையில் பல வளார்கள் இருக்கின்றன. ஒரு வளாரைப் பற்றுகிறோம். அதிலிருந்து சிறு கொம்புகள்; அந்தக் கொம்புகளில் ஒன்றின் நுனியில் அழகான பூங்கொத்து. அடுத்த கொம்புக்குத் தாவுகிறோம் அங்கே இப்போதுதான் பிஞ்சுவிட்ட மாவடுக் கொத்து. அடுத்த கொம்பில் முற்றின மாங்காய். அதோ வேறொரு கிளையில் வேறொரு வளாரில் ஒரு கொம்பின் நுனியில் மாம்பழம் தொங்குகிறது. அதைப் பார்த்தவுடன் நம் நாக்கில் நீர் சுரக்கிறது. சாலையிலிருந்து சோலையைப் பார்த்தபோது அதைப்பற்றி இத்தனை விஷயங்கள் தெரிந்தனவா? இல்லை. அதற்குள்ளே புகுந்தபோது மரங்களும், செடி களும், கொடிகளும் தெரிந்தன. மரத்தில் உள்ள கிளைகளும் வளார்களும் கொம்புகளும் தெரிந்தன. பூவும் பிஞ்சும் காயும் கனியும் தெரிந்தன. வாழ்க்கை யென்னும் பிரயாணத்தில் ஆரம்ப காலத்தில் மனிதர்கள் மொழியென்னும் பூஞ்சோலைக்குப் புறத்தேதான் நடமாடினார்கள். கருத்தைத் தெரிவிக்கும் ஒலிக் கூட்டமாக அது அவர்களுக்குத் தோன் றியதே தவிர அதில் உள்ள உறுப்புக்கள் என்ன வென்று அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. நாளடை வில் மொழியாகிய சோலைக்குள்ளே அறிஞர்கள் புகுந்து பார்த்தார்கள். அந்தக் காலத்துக்குள் சோலையும் வரவர வளம் பெற்றது. மரம் முதலியவற்றைக் கண்டு, இந்தச் சோலையின் அழகுக்குக் காரணம் இன்னதென்று தெரிந்து, பிறரும் தெரிந்து கொள்ளும் படி வெளிப்படுத்தினார்கள். அப்படி வெளியிட்டது தான் இலக்கணம். தமிழ்ப் பூஞ்சோலைக்குள்ளே நுழைந்தால் மரங் களும் அதற்கு உறுப்பாகிய கிளைகளும் இலை பூ காய் கனியாகியவைகளும் தோற்றம் அளிக்கும். பேசும் மொழியில் ஒலியும் பொருளும் சேர்ந்து வருகின்றன. அந்த ஒலியையும் பொருளையும் தனித் தனியே காணும் நிலை முதலில் வந்தது. பிறகு ஒலியைப் பிரித்துப் பார்க்கத் தொடங்கினார்கள். பொருளையும் ஆராய்ச்சி பண்ணினார்கள். சொற்கள் பல சேர்ந்து கருத்தை விளக்க உதவுகின்றன என்று தெரிந்து கொண்டார்கள். அந்தச் சொல்லும் எழுத் துக்கள் பல சேர்ந்த ஒன்று என்று தெரிந்து கொண் டார்கள். தமிழ்ப் பூஞ்சோலைக்கு உள்ளே புகுந்து ஆராய்ந்த அறிஞர்கள் எழுத்து, எழுத்துக்களாலான சொல், சொற் கோவைகளால் புலப்படும் பொருள் என்றவற்றைத் தெரிந்து கொண்டார்கள். இந்த மூன்று பகுதிகளையும் பற்றி விரிவான ஆராய்ச்சி நடந்துகொண்டே வந்தது; இன்னும் நடந்து வரு கிறது. தமிழானது இயல் இசை நாடகம் என்று மூன்று பிரிவாக அநுபவிக்கும் நிலையில் உள்ளது. இயல் தமிழின் இலக்கணமும் மூன்று பிரிவாக அமைந்தது. எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக் கணம் என்ற மூன்றாகப் பழங்காலத்தில் புலவர்கள் பிரித்தார்கள். அகத்திய முனிவர் தாம் இயற்றிய இலக்கணத்தில் இயற்றமிழ்ப்பகுதியில் இந்த மூன்றை யும் பற்றிச் சொல்லியிருந்தார். இயல் தமிழுக்குத் தனியே இலக்கணம் இயற்றிய தொல்காப்பியர் அகத் தியர் கூறிய இலக்கணங்களையும் தமிழ் நாட்டுப் பேச்சு வழக்கையும் அக்காலத்தில் வழங்கிய இலக்கியங்களையும் நன்றாக ஆராய்ந்து, எழுத்து முதலிய மூன்று பிரிவையும் விரிவாகத் தம் இலக்கணத்தில் அமைத்தார். ************ அவர் தொல்காப்பியத்தைத் திடீரென்று ஒரு நாள் நினைத்துக்கொண்டு இயற்ற உட்காரவில்லை. தம்முடைய ஆசிரியாராகிய அகத்தியர் இயற்றிய இலக் கணம் இருந்தாலும், பல செய்திகளுக்கு அதில் தெளிவு காணப்படவில்லை. எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றையும் தனித்தனியே வரையறுத்து ஒன்றன் இலக்கணம் ஒன்றோடு கலவாமல் அதில் சொல்லப்படவில்லை. இவற்றை நினைந்து, “விரிவாக ஓர் இலக்கணம் இயற்ற வேண்டும்” என்று தீர்மானம் செய்தார். தமிழுக்கு இலக்கணம் இயற்றப் புகுந்தால், ‘அது எழுதுகிற மொழிக்காகவா? பேசுகிற மொழிக்காகவா?’ என்று இப்போது கேட்கிறவர்கள் இருக்கிறார்கள். தமிழ் என்பது பேசுகிறதும் எழுதுகிறதும் ஆகிய இரண்டுந்தான். தினந்தோறும் பழகுகிற பித்தளைப் பாத்திரங்களும், விசேஷ காலங்களில் பழகுகிற வெள்ளிப் பாத்திரங்களும் பாத்திரங்கள் என்ற வகையில் ஒரு சாதியே. ஆகையால் தமிழுக்கு இலக்கணம் செய்யும்போது பேச்சுத் தமிழை விட்டு விட்டால் அந்த இலக்கணம் ‘மெஜாரிடி’ யின் சார்பைப் பெறாது: சிறுபான்மைக் கட்சியின் சட்டமாகத்தான் இருக்கும். தொல்காப்பியர் எப்படி இலக்கணத்தை இயற்றினார் என்பதை யாரும் கட்டுரையாக எழுதிவைக்க வில்லை அதற்காக அவர் எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை அறிய அவர் ‘டைரி’ யும் எழுதவில்லை. ஆனால் பழைய கால வழக்கப்படி, தொல்காப்பியத்துக்கு ஒரு வர் மதிப்புரை எழுதியிருக்கிறார். மதிப்புரை என்று சொல்வதைவிட முகவுரை யென்று சொல்வது பொருத்தமாக இருக்கும். அந்த முகவுரையை எழுதினவர் தொல்காப்பியரோடு சேர்ந்து படித்த பனம்பாரனார் என்பவர். அவருடைய தோழர் ஆகையால் அவர் பட்ட சிரமங்களையும் செய்த ஆராய்ச்சியையும் அறிய முடியும் அல்லவா? ஒருவாறு பனம்பாரனார் தம்முடைய சிறப்புப் பாயிரத்தில் அந்தச் செய்திகளைக் குறிப்பாகச் சொல்லியிருக்கிறார். தொல்காப்பியர் தமிழ் நாட்டில் வழங்கும் மொழியை ஆராய்ந்தாராம். ஏதோ ஒரு மூலையில் மக்கள் பேசும் பாஷையை மட்டும் ஆராய்ந்தால் போதாது. ரெயிலும் மோட்டாரும் ஆகாய விமான மும் மாகாண வேறுபாட்டை மறக்கச் செய்யும் இந்தக் காலத்திலே திருநெல்வேலியிலிருந்து வரும் நண்பர் நம்மைப் பாளையங்கோட்டையில் வைத்துப் பார்த்ததாகச் சொல்லித் தம் தமிழின் தனிச் சிறப்பைக் காட்டுகிறார். திண்டுக்கல் நண்பரோ எந்த லெக்கில் கண்டோ மென்று ஞாபகமில்லாதவராக இருக்கிறார். சேலம் ஜல்லாக்காரரோ சிக்கிக்கொண்டதாகச் சொல்கிறார். நடுவில் தஞ்சாவூர் ஜில்லாக்காரரோ, “உடம்பாமே?” என்று நம் அசௌக்கியத்தைப் பற்றி விசாரிக்க, செட்டி நாட்டு நண்பர் ‘ரெண்டு மாசமாக முடியவில்லை’ என்று நமக்காக பதில் சொல்கிறார். இவர்களுக் கிடையே ‘நித்துண்டு’ செங்கற்பட்டு ஜில்லாக்காரர் அருகில் உள்ள ரிக் ஷா வை* இஸ்த்துகினு வா’ என்று ரிக் ஷாக்காரனைக் கூப்பிடுகிறார். (*Space between க் AND ஷா has been left deliberately to avoid the letter becoming க்ஷா while typing.) பழைய காலத்தில் இத்தகைய வேறுபாடுகள் அதிகமாக இருந்திருக்கும். எனவே தமிழை ஆராய வேண்டுமானால் தமிழ்நாட்டில் வெவ்வேறு இடங் களில் வழங்கும் மொழியைக் கவனிக்க வேண்டும். தொல்காப்பியர் கவனித்தாராம். “வடக்கே திருவேங்கட மும் தெற்கே குமரி யாறுமாகிய எல்லைகளுக்கிடையே தமிழ் கூறும் நல்ல உலகத்தில் வழங்கும் பேச்சு வழக்கையும் செய்யுளையும் ஆராய்ந்தார். அவற்றில் உள்ள எழுத்து சொல் பொருள் என்பவற்றை நாடினார்” என்று பனம்பாரனார் தொடங்குகிறார். வடவேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல் லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி. இலக்கணம் செய்ய வருபவர் இலக்கியத்தை ஆராய வேண்டும். தமிழ்மொழி வழக்கிலும் புலவர்கள் இயற்றிய கவிதையிலும் உள்ளது. ஆகையால் அந்த இரண்டையும் ஆராய்ந்தாராம். முதலில் பேச்சு வழக்கைத்தான் ஆராய்ந்தார். அவற்றுக்குள்ளே புகுந்து எழுத்து முதலிய மூன்று பகுதிகளையும் ஆராய்ச்சி செய்தார். தமிழ் நாட்டைத் தொல்காப்பியர் ஒரு சுற்றுச் சுற்றி வந்திருக்க வேண்டும். அங்கங்கே மக்கள் பேசும் பேச்சுவழக்கைக் கவனித்தார். புலவர்களோடு பழகி அவர்களிடம் உள்ள பழைய நூல்களையும் புதிய நூல்களையும் வாங்கிப் படித்தார். இப்போது பெரும்பான்மையோருடைய தமிழாகிய வழக்குத் தமிழையும், சிறுபான்மையோர் தமிழாகிய செய்யுள் தமிழையும் கரை கண்டவராகிவிட்டார் தொல்காப்பியர். இலக்கணம் இயற்றுவதென்றால் சுலபமான காரியமா? இந்த ஆராய்ச்சியோடு தொல்காப்பியர் நிற்கவில்லை. அவர் காலத்துக்கு முன்னே இலக்கணங்கள் சில இருந்தன; அவற்றையும் தேடித் தொகுத்தார். அவற்றை ஆராய்ந்தார். இப்போது ஒருவகையாகத் தமிழின் சொரூபம் அவர் உள்ளத்தில் வந்துவிட்டது. வழக்கு, செய்யுள், பழைய இலக்கணம் ஆகிய மூன்று வழியிலும் உணர்ந்தவற்றை உள்ளத்தில் சேர்த்துக் குவித்தார். ஆறுதலாக அமர்ந்து சிந்திக்கத் தொடங்கினார். எழுத்துச் சம்பந்தமான செய்திகள் இவை, சொல்லோடு தொடர்புடைய இலக்கணங்கள் இவை, பொருளைப்பற்றியவை இவை என்று பிரித்துக் கொண்டார். இந்தக் காலத்தில் ‘சாஸ்திரீய ஆராய்ச்சி’ என்று அடிக்கடி ஒரு தொடர் நம் காதில் விழுகிறது. ஒன்றைப்பற்றி ஆராய வேண்டுமானால் அது சம்பந்தமாக உள்ளவற்றை யெல்லாம் தொகுக்க வேண்டும். பின்பு அவற்றை ஒழுங்குபடுத்தி இன்ன இன்ன பகுதியிலே இவை அடங்கும் என்று வகுத்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு வகையிலும் புகுந்து அறிவுக்குப் பொருந்தும் வகையில் ஆராய வேண்டும். இப்படி ஒழுங்காக, குழப்பம் இன்றி ஆராய்வதைச் சாஸ்திரீய ஆராய்ச்சி (Scientific Research) என்று வழங்குகிறார்கள். தொல் காப்பியர் அத்தகைய ஆராய்ச்சியைத்தான் செய்திருக்க வேண்டும். தொகுத்த செய்திகளை வகுத்து முறைப்பட எண்ணி நூலை இயற்றத் தொடங்கினார். ஒன்றனோடு ஒன்று கலவாமல் வேறு பிரித்து இலக்கணங்களைச் சொன்னார். ஐந்திர வியாகரணத்தில் அவருக்கிருந்த புலமை, இலக்கண நூலை எப்படி அமைக்க வேண்டும் என்பதற்கு வழி காட்டியது. சிரமப்பட்டுத் தொகுத்த செய்திகளை அறிவினால் வகைப்படுத்தினார். ஆற அமர இருந்து நூலை இயற்றினார். இன்று அவர் படித்த இலக்கணங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. அவர் காலத்தில் வழங்கிய இலக்கியங்களும் மறைந்தன. “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பி யன்” என்று அவரைப் பாராட்டுகிறார் பனம்பாரனார். அந்த ஐந்திரங்கூட இல்லாமற் போயிற்று. ஆனால் அவற்றை நன்கு ஆராய்ந்து அறிவுத் திறத்தாலும் தவச் சிறப்பாலும் நூல் செய்த தொல்காப்பியருடைய தொல்காப்பியம் மட்டும் இன்றும் நிலவுகிறது. அவர் பட்ட சிரமம் வீண்போகவில்லை. அவர் தவத்திறமும் அறிவாற்றலும் அவருடைய நூலை மலைபோல நிற்கச் செய்திருக்கின்றன. அவர் பெற்ற புகழ் மிகப் பெரிது. பனம்பாரனார் அதைத்தான் தம் சிறப்புப் பாயிரத்தின் இறுதியிற் சொல்கிறார். மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமை யோனே. [நிறுத்த ~ நிலைபெறச் செய்த, படிமை யோன் ~ தவஒழுக்கம் உடையவன்.] அழகின் வகை இந்தக் காலத்தில் தமிழ் நாட்டில் அதிகமாகக் கதைகளைப் படிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இரு பது வருஷங்களுக்கு முன்பு இவ்வளவு மிகுதியாகச் சிறு கதைகள் தமிழ் நாட்டில் வெளியாகவில்லை. உல கத்திலேயே சிறு கதை புதிய இலக்கிய வகையாக விளங்குகிறது. இப்பொழுது தமிழ் நாட்டில் சிறு கதை எழுதாத எழுத்தாளர் அரியர். சிறு கதை வராத பத்திரிகையும் இல்லை. நாலு வாக்கியங்களை எழுதக் கற்றுக்கொண்ட இளைஞர்கள் சிறு கதை எழுத உட்கார்ந்து விடுகின்ற னர். ஏதாவது ஒரு பத்திரிகைக்கு அனுப்புகின்ற னர். அது திரும்பி வந்தால் வேறொரு பத்திரிகைக்கு அனுப்பிப் பார்க்கிறார்கள். “யார் யார் கதைகளையோ போடுகிறார்கள். நம் கதையைப்போடமாட்டோம் என் கிறார்கள். எல்லாம் தயவு தாக்ஷிண்யத்தில் நடக்கிற வேலையே ஒழிய மதிப்பறிந்து பத்திரிகை போடுவ தாகத் தோன்றவில்லை.” என்று தமக்கு உண்டான சலிப்பில் முடிவு கட்டி விடுகிறார்கள். அந்த இளைஞர்கள் சற்றுக் கதைகள் எழுதிப் பழகிய எழுத்தாளர் ஒருவரைச் சந்தித்துத் தம் கதையைக் காட்டினால் அதில் உள்ள குறையை உணர்ந்து கொள்ளலாம். சிறு கதை சிறு கதையாவதற்கு ஏதோ ஒரு ‘டெக்னிக்’ வேண்டுமென்று எழுத்தாளர் சொல்வதைக் கேட்பார்கள். சிறு கதையின் இலக்கணத்தைத்தான் ‘டெக்னிக்’ என்று சொல்லுகிறார்கள். ‘உத்தி’ என்று தமிழில் அதை இப்போது வழங்குகிறார்கள். “சிறு கதை நன்றாக இருக்கிறது” என்று ரசிக்கும்போது அதனுடைய உத்தியை அவ்வளவாக நினைப்பது இல்லை. அது நன்றாக இல்லை என்ற அபிப்பிராயம் வரும்போது தான் “ஏன்?” என்ற கேள்வி எழுகின்றது. அதன் பிறகு, “உத்தி இல்லை” என்ற சமாதானம் தோன்று கிறது. இப்படியே இலக்கிய வகைகளில் அறிவினால் அநுபவிப்பதற்குரிய ஒவ்வொன்றிலும் அந்த அநு பவத்துக்குக் காரணமான உத்தி அமைந்திருக்கிறது. காவியமாக இருந்தால் அதன் உத்தியை எடுத்துச் சொல்வதை ‘காவிய விமரிசனம்’ அல்லது “அலங்கார சாஸ்திரம்” என்று சொல்கிறோம். செய்யுளாக இருந் தால் “யாப்பிலக்கணம்” என்று சொல்கிறோம். பொருள் ஒன்று இருந்தால் அதனைப் பிற பொருள்களினின்றும் வேறு பிரித்து அறிவதற்குரிய சில பண்புகள் அதற்கு இருக்கும். அந்தப் பண்மைக் குணம் என்றும் பண்பையுடைய பொருளைக் குணி என் றும் வட மொழியில் கூறுவர். மொழி என்னும் பொருளுக்குக் குணம் உண்டு. அந்தக் குணத்துக்குத் தான் இலக்கணம் என்று பெயர். குணியும் குணமும் தனித்தனியே பிரிந்து இருப் பதில்லை. ஆனாலும் பேச்சு நிலையில் குணி இது என்றும், குணம் இதுவென்றும் சொல்கிறோம். ஆராய்ச்சி யில் வேறு பிரிக்கிறோமே யல்லது பொருள் வேறு பண்பு வேறாக வெட்டுவதில்லை. ஒரு அழகியிருக்கிறாள். “தாமரைமலர் போன்ற முகத்தில் முல்லை யரும்பு போன்ற நகை முகிழ்க்கை யில் தோன்றும் எழில் வெள்ளத்திற்குக் கரை போடு வார் யார்!” என்று ஒருவர் சொல்கிறார். அந்தப் பெண் ணின் அழகிலே அவர் ஈடுபட்டவர் என்பதை அவர் பேச்சே வெளியிடுகிறது. அவர் தாம் அநுபவித்த காட்சியை வார்த்தைகளால் சொல்லும்போது முகத்தை யும், நகையையும், எழிலையும் வேறு வேறாக்கிச் சொல் கிறார். அப்படிச் சொல்வதனால் அவற்றை அந்த லாவண்ய உருவத்திலிருந்து பிய்த்தெடுத்துக் காட்ட வில்லை. பொருளை அப்படியே முழுமையில் அநுபவித் ததில் ஓரளவுதான் இன்பம் உண்டு. தனித் தனியே விரிந்த நிலையில் அழகுப் பகுதிகளை ஆராயும்போது அவருடைய ரசாநுபவம் விரிகிறது. அதைத் தனித் தனியே பிரித்துச் சொல்கிறார். அழகியின் அழகைப் பல பகுதிகளாக்கிச் சொல்கிறார். அவர் அவளுடைய லட் சணத்தைப்பற்றியே சொல்கிறார். அவளைப்பற்றிச் சொல்லவில்லை. ‘அவள் என் மனைவி; இன்னார் மகள்; அவள் பெயர் இன்னது’ என்று சொல்லவில்லை. பொருளாகிய அழகியின் இலக்கணமாகிய அழகைப் பற்றி அவர் சொல்கிறார். அவர் சொல்லும் இலக் கணம் நமக்கு இனிமையாகத்தான் தோன்றுகிறது. தமிழ் மகளின் அழகை இலக்கண நூலாசிரியர் கள் சொல்லுகிறார்கள். ‘அழகு’ என்ற பொருளை யுடைய ‘லட்சணம்’ என்னும் சொல்லே, ‘இலக்கணம்’ என வழங்குகிறது. பழைய காலத்தில் இலக்கணம் என்று சொல்வதில்லை. இயல் என்றும் மரபு என்றும் சொல்லி வந்தார்கள். இயல் என்பது இயல்பு; பண்பு என்னும் அர்த்தத்தைக் கொண்டது. மரபு என்பது சம்பிரதாயம் என்ற பொருளை உடையது. தமிழ் மகளின் இயல்பாகிய அழகைப் பழைய காலமுதல் புலவர்கள் எவ்வாறு கண்டு ரசித்தனர் என்பதையே இலக்கணம் சொல்கின்றது. அழகைப்பற்றிக் கூறும் நூல் இலக்கணம் என் னும்போது நண்பர்கள் சிரிக்கிறார்கள். ‘இலக்கணமா அழகைப்பற்றிய நூல்? வெகு அழகுதான்!’ என்று ஏளனம் செய்கிறார்கள். ‘அழகையுடைய அழகியினிடம் எனக்குக் காதல் உண்டு. ஆனால் அவளுடைய அழ கைப்பற்றி எனக்குக் கவலை இல்லை’ என்று சொல்கிறார் கள். உண்மையில் அவர்களுக்கு அந்த அழகியிடம் காதல் இருந்தால் அவள் அழகைப்பற்றிய செய்தி யிலும் விருப்பம் இருக்கும். ஒன்று, அவர்களுடைய காதல் போலிக் காதலாக இருக்க வேண்டும். அல்லது அழகைப்பற்றிய அந்த விவரணம் போலியாக இருக்க வேண்டும். எது போலி என்பதை நான் சொல்ல வேண்டுமா என்ன? இப்போது ஆங்கிலக் கல்வியின் பயனாக இலக்கிய விமரிசனம், கவிதை ஆராய்ச்சி என்ற துறைகள் வந் திருக்கின்றன. அவற்றிலே தமிழ் அன்பர்கள் ஈடுபடு கிறார்கள். கம்ப ராமாயணத்தை நேரே படிக்க அஞ்சு கிறார்கள்.ஆனால் கம்ப ராமாயணத்தைப் பற்றிய விமரிசனங்களை ரசிக்கிறார்கள். இந்த விஷயத்தில் பொருளைவிடப் பொருளின் பண்பைச் சிந்திப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. அந்த விமரிசனம் என்பது என்ன? அதுவும் இலக்கணந்தான். எழுத்திலக்கணம் முதலியவை மிகவும் நுணுகி நுணுகிச் சொல்லும் விமரிசனமாக இருப்பதனால், அதற்கு முன் கடக்கவேண்டிய பல படிகளைத் தாண் டாமல் அங்கே வந்தால் கஷ்டமாக இருக்கிறது. இக்காலத்தில் இலக்கணம் என்றால் அருவருப்பு உண்டாவதற்கு அதுவே காரணம். மரத்தைக் காண்பதற்கே யோசிக்கிறோம். மரத்தை அதன் அழகிய தோற்றத்தினால் ஒரு விதமாகப் பார்த் தாலும், மேலே கிளையாராய்ச்சியும், கொம்பு ஆராய்ச்சி யும் நிகழ்த்தப் பொறுமை இருப்பதில்லை. மொழியின் இலக்கணத்தை ஆராயும் விஞ்ஞானிகளாகிய புலவர் கள் கொம்புக்கும் போயிருக்கிறார்கள். அதற்கு மேலும் இலை நரம்பு முதலிய பகுதிகளையும் ஆராய்ந்திருக்கிறார்கள். பெரும்பாலும் இலக்கணம் என்றால் எழுத்தையும் சொல்லையும் ஆராய்வதோடு நின்று விடும். இது பிற பாஷைகளில் வழக்கம். தமிழில் பொருள் ஆராய்ச்சி யையும் மொழியிலக்கண வரம்புக்குள் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். எழுத்து, சொல் என்ற சப்த உறுப்புகளோடு நின்று விடுவனால் வியாகரணத் துக்கு வடமொழியில் சப்த சாஸ்திரம் என்ற பெயர் வழங்குகிறது. அந்தப்பெயர் தமிழ் இலக்கணத்துக் குப் பொருந்தாது. சப்தத்தைப் பற்றிய ஆராய்ச்சி யோடு சப்தத்தாற் குறிக்கப் பெறும் அர்த்தமாகிய பொருளைப்பற்றியும் தமிழ் இலக்கணம் ஆராய்கிறது. மொழி விஞ்ஞானத்தில் தேர்ச்சி பெற்ற தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றுக்கும் இலக்கணம் சொல்லியிருக்கிறார். அந்த மூன்று பகுதிகளிலும் பல கிளைகள் உண்டு. அவற்ரின் அமைதியும் பெயர்களும் மிகப் பழங்காலந் தொட்டே தமிழில் வழங்கி வருகின்றன. தொல்காப்பியர் புதிய பெயர்களை அமைக்க வில்லை. ஆனாலும் அவற்றை வகுத்துச் சொல்லும் முறைவைப்பிலும் விரிவாகச் சொல்ல வேண்டிய செய்திகளிலுமே அவர் தம் சொந்த அறிவைப் பயன்படுத்தினார் பழைய காலந் தொடங்கி இலக்கண மரபுகள் இருந்தன என்பதற்கு அவர் தம் நூலில் அங்கங்கே, “என்று புலவர்கள் சொல்வார்கள்” என்னும் பொருள் பட ‘என்ப’ ‘என்மனார்’ என்னும் சொற்களை வழங்குவதே தக்க சாட்சியாகும். தொல்காப்பியத்தில் ஆரம்பச் சூத்திரத்திலே இந்த “என்ப” வருகின்றது. எழுத்தெனப் படும் அகரம் முதல னகர இறுவாய் முப்பஃது என்ப என்பது முதல் சூத்திரம். இது எழுத்திலக்கணத்தைச் சொல்லும் எழுத்ததிகாரத்தின் முதலில் வருவது. அடுத்தபடியாகச் சொல்லின் இலக்கணத்தைச் சொல்வது சொல்லதிகாரம். அங்கும் முதலில், ’பழம் புலவர்கள் இவ்வாறு கூறுவார்கள்" என்று ஆரம்பிக்கிறார். உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே என்பது ஆரம்பச் சூத்திரம். பொருளிலக்கணத்தை விரிப்பது பொருள் அதி காரம். அங்கும் ‘பண்டையோர் நெறி இது’ என்பதை மறவாமல் சொல்லுகிறார். கைக்கிளை முதலாம் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப என்பது பொருளதிகாரத்தின் முதற் சூத்திரம். இவையன்றி அங்கங்கே, “புலவர்கள் இவ்வாறு சொல்வார்கள்” என்று குறிக்கும் சூத்திரங்கள் பல இத்தனையும், தொல்காப்பியர் தான்தோன்றித் தம்பிரானாக நூல் இயற்றியவர் அல்ல என்பதையும், பழைய மரபையும் நூல்களையும் ஆராய்ந்தவர் என்பதையும் தெளிவாக்கும். தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற மூன்று பிரிவுகளை உடையது. ஒவ்வோர் அதிகாரத்திலும் ஒன்பது ஒன்பது சிறு பிரிவுகள் இருக்கின்றன. அவற்றை இயல் என்று சொல்வர். ‘இலக்கணச் செய்திகள் இப்படி ஒன்பது இயல் என்ற கட்டுப்பாட்டில் அடங்குமா?’ என்ற கேள்வி எழலாம். இலக்கணச் சூத்திரங்கள், மனனம் செய்வதற்குரியன என்பது அக்காலத்தார் கொள்கை. ஒரு வரையறை இருந்தால் எளிதில் மனனம் செய்யலாமென்பது கருதியே ஒன்பது ஒன்பது இயல்களாக வகுத்திருக்க வேண்டும் என்று தோன்றுகி மொத்தம் 1610 சூத்திரங்கள் அடங்கிய நூல் தொல்காப்பியம்; 27 இயல்களும் மூன்று அதிகாரங் களும் அமைந்தது. - இந்த அரிய பெரிய இலக்கண நூலுக்கு அவ்வக் காலத்தில் இருந்த புலவர்கள் உரை எழுதினார்கள். பழைய உரை இருந்தாலும் தம்முடைய காலத்துக்கு விளக்கம் போதாதென்று கருதிப் பின்னே வந்த புலவர்கள் புதிய உரைகளை எழுதினார்கள். மிகப் பழங்காலத்தில் வழங்கிய உரைகளைப்பற்றிய செய்தி கள் நமக்குக் கிடைக்கவில்லை. இப்போது கிடைக்கும் உரைகளுள் பழையது இளம்பூரணர் உரை. அவர் மூன்று அதிகாரத்துக்கும் உரை எழுதியிருக்கிறார். அவருக்குப்பின் பேராசிரியர் என்பவர் நூல் முழுவதுக்கும் உரை வகுத்தார். அது முழுவதும் இப் போது கிடைக்கவில்லை. சில சில பகுதிகளே கிடைத் திருக்கின்றன. அவருக்குப்பின் நச்சினார்க்கினியர் தொல் காப்பியம் முழுவதற்கும் உரை எழுதினார். அவர் உரையிலும் பொருளதிகாரத்தின் பெரும் பகுதிக்கு உரியது இப்போது கிடைக்கவில்லை. சொல்லதிகாரத்துக்கு மாத்திரம் தனியே சில புலவர்கள் உரை எழுதியிருக்கின்றனர், சேனாவரையர் என்பவர் எழுதிய உரை புலவர்களால் விரும்பிப் படிக்கப்பெறுவது. கல்லாடர், தெய்வச்சிலையார் என்ற இருவருடைய உரைகளும் உண்டு. இவற்றையன்றி வேறு சில உரைகளும் வழங்கி வந்திருக்க வேண்டு மென்று தெரிகிறது. தொல்காப்பியப் பாயிரத்துக்கும் முதற் சூத்திரத் துக்கும் சிவஞான முனிவர் மிக விரிவாக உரையெழுதி யிருக்கிறார். எழுத்ததிகாரத்திற் சில சூத்திரங்களுக்குப் பல வருஷங்களுக்கு முன் இருந்த அரசஞ்சண்முகனார் என்ற புலவர் உரை எழுதியிருக்கிறார். ------------------------------------------------------------------------ மொழியைப்பற்றிய தத்துவங்களைப் பிறமொழி களோடு ஒப்பிட்டு ஆராயும் மொழிநூல் (பிலாலஜி) என்பது நம் நாட்டில் இல்லை. ஆங்கில அறிவினால் வந்த நன்மைகளுள் மொழி நூலாராய்ச்சி ஒன்று. இலக்கண நூல்களை இயற்றினவர்கள் பரம்பரையாக வந்த மரபை வைத்துக்கொண்டு காலத்துக்கு ஏற்ற சில மாற்றங்களைப் புகுத்தி நூல் செய்தார்கள். அந்த இலக்கணங்களில் சமாதானம் காணமுடியாத சில பகுதிகள் உண்டு. அவற்றை அப்படியப்படியே கொள் வதையன்றி வேறு வழி இல்லாமல் இருந்தது. ஆனால் மொழி நூலாராய்ச்சியைக் கொண்டு பார்த்தால் அப்படி விளங்காத பகுதிகளுக்கும் விளக்கம் காணலாம். இப்போது மொழி நூலறிவு வாய்ந்த சில அறி ஞர்கள் தொல்காப்பியத்துக்கு உரை எழுதி வருகிறார் கள். தமிழிலக்கியத்தில் தேர்ந்த பயிற்சி. தமிழிலக் கணங்களில் ஆழ்ந்த அறிவு. தமிழ் நாட்டு வழக்கில் நல்ல அநுபவம் பிற பாஷைகளில் வேண்டிய அள வுக்குப் பயிற்சி, மொழி நூலில் நுணுகிய ஆராய்ச்சி இத்தனையும் படைத்தவர்கள் தொல்காப்பியத்துக்குப் புத்துரை வகுக்கப் புகுந்தால், ‘கண்டறியாதன கண் டோம்’ என்று வியப்பதற்குறிய நிலை உண்டாகும். இலக்கணமும் சரித்திரமும் தமிழருடைய சரித்திரத்தைத் தெரிந்துகொள்வதற் குரிய சாதனங்கள் பல. சமீபகாலச் சரித்திரத்தைத் தெரிந்து கொள்ளப் பல கருவிகள் உதவுகின்றன. எந்தக கருவியும் கிடைக்காமல் வெறும் ஊகத்தினால், “தமிழர் இப்படித்தான் வாழ்ந்திருக்க வேண்டும்” என்று எண்ணும் காலத்தைச் சரித்திர காலத்துக்கு முற்பட்டது என்று இன்றைய ஆராய்ச்சியாளர்கள் சொல்வது வழக்கம். சரித்திர காலத்துக்கு முற்பட்ட வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் சில கருவிகள் உண்டு. வாழ்க்கையைப்பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ஓரளவு தெரிந்துகொள்ள அக்கருவிகள் உதவும். அத்தகைய கருவிகளுள் நூல் ஒன்று. மணிமேகலை என்ற நூலைக் கடைச் சங்கம் ஓய்ந்து போன காலத்தில் எழுந்ததென்று சொல்வார்கள். கி.பி. இரண்டாவது நூற்றாண்டு என்று ஒரு சாராரும், கி.பி. ஐந்தாவது நூற்றாண்டென்று வேறொரு சாரா ரும் கூறுவர். அது எப்படியானாலும் மணிமேகலை உண்டான காலத்துத் தமிழர் வாழ்க்கையை ஓரளவு அந்த நூலிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். அந்தக் காவியத்தில் ஓரிடத்தில், மணிமேகலை ஒரு கண்ணாடி அறைக்குள் புகுந்து கொண்டாள் என்றும், அவள் இயங்குவது வெளியில் தெரிந்ததேயன்றி அவள் பேசிய பேச்சுப் புறத்தே கேட்கவில்லை யென்றும் புல வர் பாடியிருக்கிறார். கண்ணாடியினூடே ஒளி செல்லும், ஒலி செல்லாது என்ற உண்மையை அக்காலத்தில் தமிழர் உணர்ந்திருந்தனர் என்பதற்கு இந்தச் செய்தி ஆதாரம். இப்படிக் கதைக்குப் புறம்பாகத் தமிழர் வாழ்க்கைப் பகுதிகளைத் தெரிந்து கொள்ளப் பழந் தமிழ் நூல்கள் உதவுகின்றன. தொல்காப்பியம் தமிழ் மொழிக்கு உரிய இலக்க ணத்தை வகுப்பது அதைப் படிப்பவர்கள் இலக்கணத் தைத் தெரிந்து கொள்வதற்காகவே படிக்கிறார்கள். ஆனால், அதை வேறு ஒரு பயன் கருதியும் படிக்கலாம். தமிழர் வாழ்க்கையைப் பற்றி என்ன என்ன செய்தி களைத் தொல்காப்பியர் இடையிடையே தெரிவிக்கிறார் என்ற ஆராய்ச்சியை நடத்தலாம். தொல்காப்பியம் எவ்வளவுக்கு எவ்வளவு பழையதோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்த ஆராய்ச்சிக்கு மதிப்பு உண்டு. ஒரு கால் தொல்காப்பியத்திலுள்ள இலக்கணச் செய்திகள் அவ்வளவும் மாறி அந்நூல் இலக்கண நூல் என்ற வகையில் பயனின்றிப் போய்விட்டதாக வைத்துக் கொள்வோம். அப்போது கூடத் தமிழர் சரித்திரப் பகுதிகளை உணரும் கருவியாக அது இருக்கும். எழுத்தின் இயல்பு, எழுத்துக்களின் வகை, எழுத் துக்கள் ஒன்றோடு ஒன்று சேரும் புணர்ச்சி முதலிய வற்றைத் தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தில் சொல் கிறார். ஒலி எப்படிப் பிறக்கிறது, வெவ்வேறு ஒலியாக எப்படி அமைகிறது முதலிய தத்துவங்களைச் சொல்கிறார். வார்த்தையும் வார்த்தையும் நெருங்கும்போது முன்னுள்ள சொல்லின் கடைசி எழுத்தும், பின்னுள்ள தன் முதலெழுத்தும் சேரும். அதைப் புணர்ச்சி என்பார்கள். இப்படிச் சேரும் பொழுது இடையே சில மாறுபாடுகள் உண்டாகும். அவற்றை மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள்.நிற்கிற எழுத்து வேறொன்றாக மாறும்; அது மறைந்து போவதும் உண்டு;அல்லது புதிய எழுத்துத் தோன்றும். இந்த மாறுபாட்டைத் திரிபுஎன்றும், விகாரம் என்றும் இலக்கணக்காரர் சொல்வர். இந்த விகாரம், நிற்கிற சொல்லையும், வரும் சொல்லையும் பொறுத்த ஒன்று. இன்ன சொல்லுக்கு முன்னால் இன்ன சொல் வந்தால் இத்தகைய விகாரம் உண்டாகும் என்று தொல்காப்பியர் இலக்கணம் வகுக்கிறார். அத்தகைய இடங்களில் பல சொற்களை அவர் எடுத்துச் சொல்கிறார். அவர் சொல்லும் விகாரத்தைப் பற்றிய செய்தி இலக்கணம். ஆனால் அவர் எடுத்துக் காட்டும் சொல்லோ நம்முடைய ஆராய்ச்சிக்கு உதவுவது. “தாழ் என்ற சொல்லும் கோல் என்ற சொல்லும் ஒன்று சேர்ந்தால் தாழக்கோல் என்று வரும்” என்று ஒரு சூத்திரம் இருக்கிறது. இந்தச் சூத்திரத்தின் மூலம் தொல்காப்பியர் ‘அ’ என்ற எழுத்து இடையே புதிதாக வருவதைச் சொல்கிறார். அது தமிழ் இலக்க ணம் படிப்பவரகளுக்கு உபயோகமான செய்தி. தமிழர் சரித்திரம் படிப்பவர்களுக்கு இந்தச் சூத்திரத்தில் ஓர் அரிய செய்தி உண்டு. தொல்காப்பியர் காலத்தில் ‘தாழக்கோல்’ என்ற கருவி இருந்தது என்ற செய்தி யை இந்தச் சூத்திரத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாமே! அது மட்டுமா? தாழ் என்ற பொருள் ஒன்றும், அதைத் திறக்கும் கோல் என்பது ஒன்றும் உண்டு என்றும் தெரிந்து கொள்ளலாம். வீட்டுக்குக் கதவும் அந்தக் கதவுக்குத் தாழும் இருந்தன. வெளி யிலே செல்கிறவர்கள் ஒரு கோலினால் உள்ளே உள்ள தாழைத் திருப்பி விடுவார்கள்; திறப்பார்கள். தாழைத் திறப்பதனால் தாழக்கோல் என்ற பெயர் வந்தது. வெளியிலே நாதாங்கியில் பூட்டை மாட்டிப் பூட்டுவது பழந் தமிழருக்குத் தெரியாது என்று மேலும் அந்த ஆராய்ச்சியை விரித்துக்கொண்டுபோக இடம் உண்டு. இந்த முறையில் தொல்காப்பியத்திலிருந்து தெரிந்துகொள்ளக் கூடிய துப்புக்கள் இன்னவென்று சற்றே கவனிக்கலாம். முதலில் எழுத்ததிகாரத்தின் ஆரம்பத்தில் நூல் மரபு என்ற அத்தியாயம் இருக்கிறது. அதில் எழுத் துக்களின் பெயர்கள், அவற்றின் பிரிவுகள், அவற்றின் ஓசை முதலிய செய்திகள் வருகின்றன. பிறகு மொழிமரபு என்ற அத்தியாயம் வருகிறது. அதில், எழுத்துக்கள் சேர்ந்து சொல்லாவகையும், அப் பொழுது சில எழுத்துக்களுக்கு உண்டாகும் விசித்திர மான மாறுபாடுகளையும் சொல்கிறார். அடுத்த அத்தி யாயமாகிய பிறப்பியலில் எழுத்தை உச்சரிக்கும்போது எந்த எந்த உறுப்புகள் எப்படி எப்படி வேலை செய் கின்றன என்பதைச் சொல்கிறார். அதற்குப்பின் வரும் ஆறு அத்தியாயங்களில் புணர்ச்சியைப் பற்றிய செய்தி கள் வருகின்றன. இந்தக் காலத்தில் நாம் மெய்யெழுத்துக்களுக்கு மாத்திரம் புள்ளி வைக்கிறோம். பழங்காலத்தில் வேறு சில எழுத்துக்களுக்கும் மேலே புள்ளி வைத்தார்கள் என்று தெரிகிறது. இப்போது ‘ஏ,ஓ’ என்று எழுதும் எழுத்துக்களின் உருவம் புதியது. முன்பெல்லாம் ‘எ’ என்று எழுதினால் ஏ என்றுதான் வாசிப்பார்கள். ஒ என்பது ஓகாரத்தையும் கொ என்பது கோ என்பதை யும் குறித்தன. எ என்ற எழுத்தின்மேலே ஒரு புள்ளி வைத்தால் அப்போதுதான் அதை எகரமாகப் படிப் பார்கள். வீரமாமுனிவர் என்ற மேல் நாட்டுப்புலவர் இந்த நாட்டுக்கு வந்து தமிழ் பயின்றார்; நூல்களை இயற்றினார். அவரே எ என்ற எழுத்துக்குக் கீழே ஒரு சிறிய கோடு இழுத்து ஏ ஆக்கினார். ஒகரத்தின் கீழ்ப் பாகத்தைச் சுழித்து ஓ என்ற எழுத்தை அமைத் தார். கெ என்பதன் கொம்பையும் கொ என்பதன் கொம்பையும் மாற்றி, கே என்றும் கோ என்றும் ஆக்கி னார். இப்படி உருவம் மாறியது முதல் எகர ஒகரங் களுக்குப் புள்ளி வைக்கும் வழக்கம் நின்று போயிற்று. இப்படியே குற்றியலுகரம் குற்றியலிகரம் என்ற இருவகை யெழுத்துக்களுக்கும் முற்காலத்தில் புள்ளி போட்டார்கள். ஓசை குறைந்த ‘ம்’ என்ற எழுத்துக்கு உள்ளே ஒரு புள்ளியை வைத்தார்கள். அதற்கு மகரக் குறுக்கம் என்று பெயர். உலக வாழ்க்கையில் எல்லப் பிராணிகளும் உயி ரோடும் உடலோடும் கூடி இயங்குகின்றன. எழுத்தி லும் உயிர் உண்டு; உடலுண்டு. உயிர் உடலோடு சேர்ந்து இயங்கும்; தானே தனியாகவும் இயங்கும். மெய் உயிரோடு சேராமல் இயங்காது.உயிர் எழுத்து, மெய் எழுத்து என்று எழுத்துக்களில் இரண்டு வகை இருக்கின்றன. உயிரெழுத்தின் தொடர்பே இல்லாமல் மெய்யை உச்சரிக்க முடியாது. சொல்லாக்கவும் முடியாது. உயிர் தனியாக நிற்கும். உயிரெழுத்துக்களில் குறில் என்றும் நெடிலென்றும் பிரித்திருக்கிறார்கள். ஓசையின் அளவைக்கொண்டு பிரித்த பிரிவு இது. மெய் எழுத்திலும் வல்லினம் மெல்லினம் இடையினம் என்ற பிரிவு இருக்கிறது. ஓசையின் இயல்பைக்கொண்டு பிரித்த பிரிவு இது. எழுத்து, வாயிலிருந்து வெளியாகும்போது அதன் ஒலி காதுக்குக் கேட்கிறது. அந்த ஒலி வாயிலிருந்து எழுவதற்கு முன்னாலே பல பல காரியங்கள் உடம்பிலே நிகழ்கின்றன. நம்முடைய நாபியில் உதானன் என்ற காற்று அடங்கி யிருக்கிறது. நாம் பேசத்தொடங்கும்போது முதலில் உந்தியில் வேலை ஆரம்பமாகிறது. உதானன் என்ற வாயு எழும்பி மேல் நோக்கிப் புறப்படுகிறது. நேரே செல்லும் அந்த வாயு ஒரே மாதிரி வெளியாவதில்லை. நாம் ஒலிக்கின்ற எழுத்தின் அமைப்புக்கு ஏற்ப வேறு வேறு முறையில் வெளியாகிறது. அதற்கு முக்கியமாக மூன்று திருப்பங்கள் இருக்கின்றன. தலை ஒரு திருப்பம்; கழுத்து ஒன்று மார்பு ஒன்று. தலைக்கு வந்த வாயு அங்கிருந்து வாய் வழியாகப் புறப்படும்போது பல், இதழ், நாக்கு, மூக்கு என்ற கருவிகளால் வெவ்வேறு ஓசையை உண்டாக்குகிறது. மூக்கு வழியாக வந்தால் ங,ஞ,ண,ந,ம,ன, என்ற மெல்லின ஒலியை உண்டாக்குகிறது. இப்படியே மற்ற எழுத்துக்கள் வெவ்வேறு வகையான முயற்சிகளால் ஒலி வேறுபாட்டை அடைகின்றன. இவற்றை விரிவாகத் தொல்காப்பியர் சொல்லி யிருக்கிறார். இதை அவராகச் சொல்லவில்லை. அவருக்கு முன்பே புலவர்கள் எழுத்தின் ஒலி எப்படி உண் டாகிறது என்பதை ஆராய்ந்து வைத்திருக்கிறார்கள். தொல்காப்பியர் கூறும் இலக்கணங்கள் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்னும் இரண்டுக்கும் உரி யனவே. சில இடங்களில் உலக வழக்கில் இப்படி வரும் என்று வேறு பிரித்தும், செய்யுளில் இப்படி வரும் என்று தனியாகவும் சொல்கிறார். தமிழ் நாட்டில் வியாபாரம் நன்கு நடைபெற்ற காலம் அது. பண்டங்களை அளந்தும் எண்ணியும் நிறுத்தும் முகந்தும் வியாபாரம் செய்தார்கள். அதற் குரிய அளவுப் பெயர்களை எழுத்ததிகாரத்தில் காண லாம். பல மரங்களின் பெயர்களும் வருகின்றள. இயற்கை வளம் மிகுந்த இடத்தில் வாழ்ந்த தமிழருக்கு அந்த இயற்கையிலே அமைந்த மரங்கள் பலபல திறத் தில் பயன்பட்டன. அவர்களுடைய வாழ்க்கையில் பயன்பட்ட மரங்களைப்பற்றி அவர்கள் அடிக்கடி பேசிக் கொண்டார்கள். பேச்சு வழக்கிலே வரும்போது சொற்களின் உருவத்திலே சில வேறுபாடுகள் தோன் றின. அவற்றைத் தொல்காப்பியர் கவனித்தார் இலக்கணம் செய்தார். மாடு என்ற பொருளும் அதைக் குறிக்கும் சொல் லும் இருக்கின்றன. கால் என்ற அவயவமும் அதைக் குறிக்கும் அச்சொல்லும் இருக்கின்றன. மாடு என்ற சொல்லோடு கால் என்பது சேருமானால், அவை அப்படியப்படியே சேர்ந்து நிற்பதில்லை. மாடு கால் என்றால் ஒட்டியதாகவே தெரியவில்லை. மாட்டுக்கால் என்று சொன்னால்தான் மாடும் காலும் இணைந்தவை என்று தெரியவரும். மாடு, கால் என்பவற்றைப் பேச்சு வழக்கிலும் மாட்டுக்கால் என்றே இணைத்துப் பேசு கிறோம்.புதிதாகத் தோன்றிய ட், க் என்ற எழுத்துக் கள் இலக்கணம் படித்தவர்கள் பேச்சில் மாத்திரம் வந்தால் இது இலக்கணத்தைக் கற்றுப் பேசுகிறது என்று சொல்லாம், தமிழர் யாரானாலும் மாட்டுக்கால் என்றே சொல்வார்கள். மாடு, கால் என்ற இரண்டும் சேர்ந்து வழங்கும்போது, ட் என்ற எழுத்தும் க் என்ற எழுத்தும் தோற்றும் என்று இலக்கணக்காரர் சொன்னது, முன்பே இருப்பதைச் சுட்டிக் காட்டியதே யன்றி,புதிதாக இனி இப்படி இருக்கவேண்டும் என்று விதித்தது அல்ல. “கடல் நீல நிறம் உடையது” என்று ஒருவன் சொன்னால், கடலில் நீல நிறத்தை அவன் புதிதாக உண்டாக்கி விடவில்லை. கடலில் நீல நிறம் இருப்பதைத் தனியே சிந்திக்காமல் இருந்த வருக்கு முன்பே உள்ள ஒன்றைச் சொல்கிறான். அவ் வளவுதான். எழுத்ததிகாரத்தைப் போலவே சொல்லதிகாரத்திலும் பொருளதிகாரத்திலும் உள்ள சூத்திரங்களும் இலக்கணச் செய்திகளை நன்றாகச் சொல்கின்றன. அவற்றில் தமிழ் வாழ்க்கை முறையைத் தெரிந்து கொள்ளும் சரித்திரத் துணுக்குகளும் இருக்கின்றன. தொல்காப்பியர் வீட்டிலும், நாட்டிலும், கடையி லும்,சபையிலும், வயலிலும், வாசலிலும் வழங்கிய தமிழைக் கண்டார். அதில் ஏற்படும் விசித்திரங்களை, “இதோ பாருங்கள்” என்று சுட்டிக் காட்டுகிறார். அப் படி அவர் காட்டுவனற்றில் சில நமக்கு விளங்கவில்லை. சில இப்போது மாறிவிட்டன. காரணம் வாழ்க்கையில் உண்டான மாறுபாடுதான். பழந் தமிழர் ஓவியம் வாழ்வுக்கு இன்றியமையாத முதல் தேவை களாகிய உணவு உடை உறையுள் என்பவற்றை வேண்டிய அளவுக்குப் பெற்றுக்கொண்டால், மனிதன் அவற்றோடு நிற்பதில்லை. ஒவ்வொன்றிலும் பலவகை களை அமைத்துக்கொள்கிறான். இந்த மூன்றோடு சம்பந்தப்பட்ட பல அங்கங்களைப் பெருக்கிக் கொள் கிறான். நாகரிகம் ஓங்க ஓங்கத் தொழில்கள் பல்கு கின்றன.அந்தத் தொழில்கள் ஓங்க ஓங்கக் கலைகள் விரிகின்றன. கலைகளிலும் சித்திரம் சங்கீதம் முதலிய நுண்கலைகள்(Fine arts) நாகரிகத்தின் உச்சியை அடைந்த நாடுகளிலே மிகுதியாக வளர்ந்து வருவ தைக் காணலாம். உணவுக்கும் உடைக்கும் உறைவிடத்துக்கும் பஞ்சம் இல்லாமல் இருந்த பண்டைத் தமிழ்நாட்டிலே இத்தகைய நுண்கலைகள் மிகச் சிறப்பாக மேலோங்கி வளர்ந்தன, இன்றும் உலகம் புகழும் சிற்பச் செல் வங்களை அகத்தே உடைய திருக்கோயில்கள் பலவற் றைத் தமிழ்நாட்டிலேதான் காண்கிறோம். பெரும் போரின்றி மக்கள் அமைதியாக வாழ்ந்திருந்ததனால் கலைவளர்ச்சிகுத் தடை ஒன்றும் நேரவில்லை. தமிழன் அலங்காரப்பிரியன். சந்தனம் திமிர்ந்து பூச்சூடி அறுசுவை உண்டி நுகர்பவன் . அவனுடைய வீட்டிலும் அவன் உபயோகிகும் பண்டங்களிலும் சித்திரங்களைப் பொறித்தான். “மாடங்களுக்கு அழகு தருவன சித்திரங்கள்” என்பது தமிழன் அறிந்த செய்தி. பழங்காலத்தில் நடனமாடும் மகளிர் பல கலைகளில் வல்லவராக இருந்தனர். அந்தக் கலைகளுள் ஒன்று சித்திரக்கலை. கோவலனுடைய காதலியாகிய மாதவி நுண்கலைத்தேர்ச்சி வாய்ந்தவள். கோவலன் இறந்தபிறகு அவள் தவ நிலையை மேற்கொண்டாள் அதைக்கண்டு வசந்தமாலையென்ற அவளுடைய தோழி மிகவும் வருத்தம் அடைந்தாள். மாதவியிடம் சென்று, “எல்லாவகையான கலைகளிலும் சிறந்த நீ இந்த உலகத்து மக்களை யெல்லாம் அக்கலைகளால் இன்புறுத்தாமல். இப்படித் தவத்தை மேற்கொண்டாயே!” என்று சொல்கிறாள். நடனம், பாட்டு, வீணை வாசித்தல் முதலிய பல கலைகளில் அவள் வன்மை யுடையவள் என்கிறாள். எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, " நடனம் செய்யும் மகளிருக்கு அவசியம் இருக்க வேண்டுமென்று நன்றாக வகுக்கப்பெற்ற ஓவிய நூற்பொருள்களை யெல்லாம் கற்றுத்தேர்ந்த நங்கையாகிய நீ தவம்புரிவது நாணுவதற்குரிய தென்று ஊராரெல்லாம் சொல்கிறார்களே" என்று அங்கலாய்க்கிறாள் நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த ஓவியர் செந்நூல் உரைநூற் கிடக்கையும் கற்றுத் துறையாகிய பொற்றொடி நங்கை நற்றவம் புரிந்தது நாணுடைத்து. (மணிமேகலை. 2:30~33) “ஓவியச்செந்நூல்”என்று குறித்தது சித்திரக் கலைக்குரிய இலக்கணநூலை. தமிழ்நாட்டில் அத்த கைய நூல்கள் பழங்காலத்தில் இருந்தன வென்றும் அழகுணர்ச்சியுடையவர்கள் அவற்றில் நல்ல பயிற்சி யைப் பெற்றிருந்தார்களென்றும்இதனால் விளங்கு கின்றது. சிலப்பதிகாரத்தில் ஓரிடத்தில் மாதவி யாழ் வாசிப் பதை அதன் ஆசிரியராகிய இளங்கோவடிகள் வருணிக்கிறார். பத்மாசனத்தில் இருந்து யாழைக் கையிலே வைத்துக் கொண்டு வாசிக்கும் அவள் கோலத்தைச் சொல்லப் புகுகையில், ஒன்பான விருத்தியுள் தலைக்கண் விருத்தி தன்பால் அமைந்த இருக்கையள் ஆகி என்று சொல்கிறார். ஒன்பது விருத்திகளுள் முதல் விருத்தி அமைந்த அமைப்பில் இருப்பாளாகி’ என்பது இதன் பொருள். விருத்தி என்பது பரிபாஷை. உட்கார்ந்திருக்கும் முறையை ஓவிய நூலிலும் நாடக நூலிலும் அவ்வாறு வழங்குவார்கள் என்று தெரிகிறது. இந்தப் பகுதிக்கு உரை எழுத வந்த அடியார்க்கு நல்லார், ‘இதனுள் விருத்தியென்பது இருப்பு. ஓவிய நூலுள், நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குத லென்னும் இவற்றின் விகற்பங்கள் பல உள.’ என்று எழுதுகிறார். அதனோடு உட்காரும் முறை களாகிய விருத்தி ஒன்பது என்பதற்கு ஆதாரமாக ஒரு சூத்திரத்தை மேற்கோளாகக் காட்டுகிறார். அந்தச் சூத்திரம் பழைய தமிழ் ஓவிய நூல் ஒன்றில் இருப்ப தென்று தோற்றுகிறது. வீடுகளில் சுவர்களிலும் நிலைகளிலும் மேற் கட்டுகளிலும் சித்திரங்களை அமைத்தனர். படுக்கை விரிப்புகளிலும் ஆடைகளிலும் அழகிய ஓவியங்களைப் பொறித்தனர். கண்ணுக்கு இனிமை தரும் முறையில் அந்தச் சித்திரங்கள் அமைந்திருந்தன. அதனால் ஏதேனும் அழகான இடத்தைப் பாராட்ட வேண்டுமானால்," இந்த இடம் சித்திரத்தைப் போல அழகாக இருக்கிறது" என்று புலவர்கள் பாடியிருக்கிறார்கள். மதுரை மாநகரத்தில் இருவகை அங்காடி வீதிகள் இருந்தன. அங்கே கடைகளெல்லாம் ஒழுங்காகவும் அழகாகவும் இருந்தன,. பண்டங்களை அடுக்கி வைத்திருக்கும் அமைப்பும், கடைகளின் தோற்றமும் சித்தி ரத்திலே அழகாக எழுதி வைத்தவற்றைப் போல இருந்தனவாம். ஓவுக் கண் டன்ன இருபெரு நியமித்து என்று சங்ககாலத்தில் வாழ்ந்த புலவர் அந்தக் கடை வீதிகளைப் பாராட்டுகிறார். இப்படியே, ஓவத் தன்ன இடனுமை வரைப்பில் என்று புறநானூற்றில் ஒரு வீட்டை ஒரு புலவர் சிறப்பிக்கிறார். அழகு மிக்க இடங்களுக்குச் சித்திரத்தை உவமானமாகப் பல புலவர்கள் இவ்வாறு எடுத்துச் சொல்லி யிருக்கிறார்கள். மணீமேகலையில் காவிரிப்பூம்வ் பட்டினத்தில் இருந்த உபவனத்தைப் புலவர் வருணிகிறார். அடர்ந்த மரங்களில் பலநிற மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பார்க்கிறபோது “யாரோ மகா மேதாவியாகிய சித்திரக்கலை வல்லவன் எழுதிய வண்ணப் படாத்தை இங்கே போர்த்து வைத்திருக்கிறார்களோ!” என்று தோன்றுகிறதாம். குரவமும் மரவமும் குருத்தும் கொன்றையும் திலகமும் வருளமும் செங்கால் வெட்சியும் நரந்தமும் நாகமும் பரந்தலர் புன்னையும் பிரவமும் தளவமும் முடமுள் தாழையும் குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும் செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும் எரிமலர் இலவமும் விரிமலர்பரப்பி வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுவே ஒப்பத் தோன்றிய உவவனம். காவிரிப்பூம்பட்டினத்தில் பெரிய மாளிகைகள் இருகின்றன. அந்த மாளிகைகளில் வெவ்வேறு வகையான வண்ண ஓவியங்களைச் சித்தரித்திருக் கிறார்கள். வண்ணத்தாலும் பிறவகையினாலும் வெவ்வேறு விதமான எழிலோடு அவை விளங்குகின்றன. பட்டினப்பாலை என்ற சங்கநூல் வேறுபட்ட வினையோவந்து வெண்கோயில் என்று அந்த மாளிகைகளை வருணிக்கின்றது. மாளிகைகளின் புறத்தே இப்படிச் சித்திரங்களை அமைப்பதோடு உள்ளே சுவரில் ஓவியங்களைத் தீட்டு வதும் உண்டு. தெய்வத் திருக் கோயில்களில் இத்தகைய சித்திரங்கள் இருந்தன. சிற்றன்ன வாசல் கைலாசநாதர் கோயில் தஞ்சைப் பிருகதீசுவரர் கோயில் என்னும் இடங்களில் சுவர்களில் அருமையான வண்ண ஓவியங்கள் இருந்தன. அவற்றின் குறைப்பகுதிகள் இன்றும் ஓவியக்கலைஞருடைய உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் காணப் படுகின்றன. பழங்காலத்திலும் கோயில்களில் சித்திரங்களைச் சுவரில் எழுதி வந்தார்கள் . திருப்பரங்குன்றம் முருக வேள் கோயில் கொண்டுள்ள தலம். மிகப் பழங்காலந் தொடங்கியே முருகனுடைய தலமாக அது போற்றப் பெற்று வருகிறது. அகடவுளுகுரிய ஆறு படை வீடுகளுள் முதலாவதென்ற சிறப்பு அதற்கு உண்டு. நக்கீரர் தாம் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் அதனை முதலில் வைத்துப் பாராட்டி யிருக்கிறார்.பரி பாடல் என்ற நூலில் அம்மலைக் கோயிலில் நிகழும் விழாவும் மதுரைமா நகரத்துள்ளார் கூட்டங்கூட்ட மாகச் சென்று முருகனை வழிபடும் காட்சிகளும் அழ காக வருணிக்கப்பட்டுள்ளன. மகளிரும் ஆடவரும் கூடி ஒன்றுபட்டு அங்குள்ள இயற்கைக்காட்சிகளையும் செயற்கைக்காட்சிகளையும் கண்டு மகிழ்ந்து தம் முள்ளே பேசிக்கொள்ளும் பேச்சையும் அந்நூற் பாடல்கள் தெரிவிகின்றன. திருப்பரங்குன்றத்தில் மூங்கில்கள் ஒரு பால் அடர்ந்துள்ளன. பாரைகள் பரந்துள்ளன. அந்தப் பாறைகளுகிடையே ஓவியச்சாலை அமைந்திருக் கிறது. அந்தக் கோயிலுக்கே அந்தச் சித்திரமண்ட பம் சோபனத்தை அளிக்கிறது. காதல் மிக்க மடந்தை யரும் ஆடவரும் வந்து வந்து அந்தச் சித்திரச்சாலை யிலுள்ள சித்திரங்களைக் கண்டு இன்புறுகிறார்கள். எழுத்து நிலை மண்டபம்,எழுதெழில் அம்பலம் என்ற பெயரால் அந்தச் சித்திரச்சாலை வழங்குகிறது. சித்திரசாலையில் ஒருமருங்கு துருவ சக்கரத்தை எழுதியிருக்கிறார்கள். சூரியனையும் வேறு கிரகங்களையும் எழுதியிருக்கிறார்கள். இருபத்தேழு நட்சத்திரங்களை யும், பிற விண்மீன்களையும் ஓவியமாகத் தீட்டியிருக் கிறார்கள். அவற்றையெல்லாம் பார்த்துப் பலர் மகிழ் கின்றனர். இதோ ஒரு மங்கை சித்திரசாலையில் வேறு ஒரு பகுதியிலே நிற்கிறாள். அவள் முன்னே அழகெலாந் திரண்ட பெண் உருவம் ஓவியமாக நிற்கிறது. “இவள் யார்?” என்று கேட்கிறாள் அவள். அருகே நின்ற கட்டிளங்காளையைத்தான் கேட்கிறாள். “இவளா! இவள்தான் ரதி” என்று விடை அளிக்கிறான். அப் படிக் கூறும் விடையில் அன்பு கொஞ்சுகிறது. அந்த உருவத்தை அடுத்துக் கையில் கரும்பு வில்லும் மலரம் பும் ஏந்திய அழகன் ஒருவனது சித்திரம் நிற்கிறது. “இவன் யார்?”என்று கேட்கிறாள் காதலி. காதலன் உடனே, " இந்த ரதிக்கு ஏற்ற மன்மதன்" என்று புன்னகையோடு சொல்கிறான். பிரியாமல் இணைந்து நிற்கும் அவ்விருவரையும் ஒருங்கு நோக்கிய அவ்விரு காதலரும் தம்மையும் பார்த்துக் கொள்கின்றனர். " இப்படியே பிரியாமல் இன்ப சாம்ராஜ்யத்து ராஜா வாகவும் ராணியாகவும் நாம் இருக்கவேண்டும்" என்று அந்த இரண்டு உள்ளங்களினூடே ஓர் எண்ணம் ஓடுகிறது. இதோ மற்றொருபுறம் புராணக் கதைகளைச் சித் திரமாக எழுதியிருக்கிறார்கள். அகலிகையின் கதை ஓவியமாகத் தீட்டப் பெற்றிருக்கிறது. " இவனைப்பார்; இவன்தான் இந்திரன்." “இதோ, இந்திரன் பூனையாக ஓடுகிறான்.” “இந்த மங்கையைப்பார்; இவள்தான் அகலிகை.” “கண்ணிலே கோபம் சுடர நிற்கிறானே, இவன் கௌதம முனிவன்.” “அவனுடைய கோபத்தால் கல்லாகிக் கிடக்கிற அகலியைப் பார்.” இவ்வாறு ஓவியங்களை ஒன்றன்பின் ஒன்றாகக் காட்டிப் பேசிக்கொள்கின்றனர் மக்கள். இபமபடிப் பல பல ஓவியங்கள் அந்த எழுத்து நிலை மண்டபத்தில் இருந்தனவாம். என்றூழ் உறவரும் இருசுடர் தேமி ஒன்றிய சுடர்நிலை உள்படு வோரும் என்பது துருவச்சக்கரத்தைப் பார்த்து மகிழ்பவரைப் பற்றிச் சொல்லும் பகுதி. ‘சூரியன் நடுவிலே உற அதனோடு பொருந்தவரும் பெரிய ஜோதிஸ் சக்கர மான துருவ சக்கரத்தோடு பொருந்திய பலவகைச் சுடர்களின் அமைப்பு முறையைக் கண்டு ஈடுபடுபவர் களும்’ என்பது இதன் பொருள். இரதி காமன் இவள் இவன் எனா அ விரகியர் வினவ வினாஇறுப் போரும் என்பது இணைந்த காதலர்கள் ரதியையும் காமனையும் கண்டு களிப்பதைக் கூறும் பகுதி. இந்திரன், பூசை, இவள்அக லிகை, இவன் சென்ற கவுதமன், சினனுறக் கல்உரு ஒன்றிய படிஇதென் றுரைசெய் வோரும். இது அகலிகையின் கதையை ஓவியத்திலே காண்போரைப் பற்றியது. ‘இப்படி வந்தவர்கள் சுட்டிக் காட்டிக் கேட்கவும், தெரிந்தவர்கள் ஓவியத்தின் கருத்தைச் சொல்லவும் உயர்ந்த மலையில் விரிந்த பாறைகளில் விசாலமான இடத்தில் எழுந்து நிலை மண்டபத்தை அமைத்தமை யால், பரங்குன்றத்தில் முருகன் திருக்கோயிற் பக்கம் சோபன நிலையை உடையதாக இருக்கிறது’ என்று புலவர் கூறுகிறார். இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் கட்டறி வுறுத்தவும் தேர்வரை விரியறை வியலிடத்து இழைக்கச் சோபனநிலையது, துணிபரங் குன்றத்து மாஅல் மருகன் மாட மருங்கு. பரிபாடலில் வரும் இந்தப்பாடலைப் பாடினவர் நப்பண்ணனார் என்னும் புலவர். இவை யாவும் பழங்காலத்தில் ஓவியக் கலை எவ் வளவு சிறப்பான நிலையில் இருந்தது என்பதைத் தெரிவிக்கின்றன. ஓவிய வித்தகர். தமிழ் நாட்டில் அறுபத்து நான்கு கலைகளும் நன்றாக நிலைகொண்டு வளர்ந்தன என்பதை நூல் களின் வாயிலாக உணர்கிறோம். கலைகளுள் நுண் கலைகள் (Fine arts) என்று சிலவற்றைப் பிரித்து உரைப்பது மேல்நாட்டார் வழக்கம். அந்த நுண்கலை களுள் ஒன்று ஓவியக்கலை எந்த நாட்டில் வாழ்க்கை வளம் பெற்று, நாகரிக நலம் உயர்ந்து சிறக்கின்றதோ அந்த நாட்டில் கலைவளம் சிறந்து நிற்கும். கலைகள் பலவற்றுள்ளும் காவியமும் ஓவியமும் சிறப்பாகப் பயிலும் நாடு மிக உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். தமிழ் நாட்டில் காவியப் புலவர்கள் பலர் இருந் தார்கள் அவ்வாறே ஓவியப்புலவர்களும் இருந்தார் கள். கவிதைச் சுவையை நுகரும் ஆற்றல் படைத்த தமிழர் ஓவியச் சுவையையும் அறிந்து இன்புற்றார்கள். வாழ்க்கையிலே பொழுது போக்குக்காகப் கலைகளைப் பயில்வதும் அநுபவிப்பதும் பல நாட்டினர் வழக்கம். இந்த நாட்டில் வாழ்க்கையிலேயே கலைகள் இணைந்து நிற்கும். ஆதலின் பழந்தமிழரிற் பெரும்பாலோர் கலைகளி்ல் ஓரளவு பயிற்சி பெற்றிருந்தனர். வீட்டில் உள்ள மகளிருக்குப் பாடத் தெரியும்; சித்திரம் எழுதத்தெரியும். கடவுளை நாள்தோறும் இசை பாடித் துதித்தார்கள். அந்தத் தோத்திரம் தினசரிக் கடமைகளில் ஒன்று. விழாக் காலங்களில் பெண்கள் ஒன்றுகூடி, “வளைக்கரங்கள் தாம் ஒலிக்கக் கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டு” வேறு உண்டு. மாடமாளிகைகளில் வாழும் மக்கள் மாத்திரம் இப்படி இருந்தார்கள் என்று நினைக்கக் கூடாது; தொழில் செய்து பிழைப்பாரும் தங்கள் வாழ்க்கையிலே பாட்டுப் பாடி வாழ்ந்தார்கள். ஓவியக்கலையும் பொது மக்களின் உள்ளத்தைக் கவர்ந்தது. வீட்டுப் பெண்கள் தினந்தோறும் வாச லிலே இடும் கோலம் அவர்களிடத்திலும் ஓவியக்கலை யின் முளை உண்டென்பதைப் புலப்படுத்தும். குடிசை யிலும் குச்சியிலும் வாழும் தொழிலாளர் கூடக் கூடையும் முறமும் விசிறியும் பின்னுவார்கள்; பாய் முடைவார் கள். அவற்றிலே சித்திரச் செய்கையைக் காணலாம். சின்னஞ் சிறு குழந்தைகளுக்குக் காசு போட்டுச் சித் திரப் பொம்மை வாங்கிக் கொடுக்கும் வழக்கம் நம் முடைய காலத்தது. பழங்காலத்தில் வாழ்க்கைத் தரத்துக்குத் தக்கபடி குழந்தைகளுக்கு விளையாட்டுப் பண்டம் கிடைக்கும். ஏழைப்பெண் ஒருத்தி அழுகின்ற தன் குழந் தைக்கு அஞ்சு நிமிஷத்திலெ கிலுகிலுப்பை பண்ணிக் கொடுத்து விடுகிறாள் பனை ஓலையைக் கிழித்துச் சிறிய கற்களை உள்ளே வைத்து அந்தக் கற்களைக் கொள் ளும் புட்டிலும் அதற்கு மேலே கையிலே பற்றிக் கொள்ளப் பிடியும் அமைத்து அற்புதமாகக் கிலுகிலுப் பையைப் பண்ணி விடுகிறாள். இன்னும் வசதி உள்ள வளாக இருந்தால் சாயம் பூசிய ஓலையில் விதவிதமான கிலுகிலுப்பைகளைப் பண்ணித் தருகிறாள். இன்றும் செட்டி நாட்டுப் பெண்டிர் முடையும் ஓலைப் பெட்டிகளின் அழகைக் கண்டவர்களுக்குத் தெரியும் அவற்றின் அருமை. கையிலே தென்னை ஓலை கிடைத்தால் பாம்பும், தாமரைப் பூவும், கிளியும், கிலு கிலுப்பையும் மிக விரைவிலே செய்து கொடுக்கும் வித்தை இன்றைய கிராமத்தாருக்குக்கூட சுலபமான காரியம். தையல் வேலைகளிலே வீட்டுப் பெண்கள் கலைத் திறம் காட்டிய காலம் முன்பு. இப்போது யந்திரத்தை நம்பி வாழ வேண்டி வந்துவிட்டது. பொது மக்களே ஓரளவு கலைத்திறம் படைத்தவர் களானால் அவர்களுக்குள்ளே சிறந்த புலவர்கள் எவ் வளவு வல்லவர்களாக இருக்க வேண்டும்! சில பெண்கள் வீட்டுச் சுவர்களில் விதவிதமாகச் சித்தி ரத்தை எழுதுவார்கள். சுண்ணாம்பும், செம்மண்ணும், கரியும், மஞ்சளும், இலைச்சாறுமே அவர்களுடைய வண்ணப் பொருள்கள். அவற்றைக்கொண்டு நாகப் பின்னல்களும், கோட்டை கொத்தளங்களும் எழுதி விடுவார்கள். கிழிந்த துணிகளைக் கொண்டு கிளியும் குருவியும் செய்து குழந்தைகளின் தொட்டிலுக்கு மேலே தொங்க விடுவார்கள். இவ்வாறு ஓவியக்கலை பல்வேறு வகையில் வாழ்க் கையிலே கலந்து பொதுமக்களின் கையிலே பழகி விளங்கியது. அவர்களுக்கு மேலாக, கலையையே தங் கள் வாழ்க்கையின் தலைமைத் தொழிலாகக் கொண்ட வர்களைப் புலவர்கள் என்று போற்றினார்கள். தங்கள் தங்கள் வீட்டிலே பெண்கள் சமைத்துக் கொண்டால் அது வாழ்க்கை; பல பேருக்கு ஒருவர் உணவு சமைத்தால் அது உத்தியோகம். தங்கள் வீட்டில் நடக்கும் கல்யாணத்திலே பாடினாலும், கடவுளை வணங்கும் போது பாடினாலும் அவை வாழ்க்கைப் பகுதியாகி விடுகின்றன. பல்லோர் கூடும் சபையிலே பாடினால் தொழிலாகிறது. முன்னது பொதுமக்கள் வேலை; பின்னது கலைஞர் வேலை. அந்த முறையில் தமக்கென்று பயன்பட ஓரளவு ஓவிய வகையில் பயிற்சி பெற்று வாழ்ந்தவர் தமிழர். பலருக்குப் பயன் படும்படியாக வாழ்க்கைத் தொழிலாக ஓவியக்கலையைக் கொண்டவர் ஓவியப் புலவர். ஓவியப் புலவரில் பல வகையினர் உண்டு. சுவரி லும் கிழியிலும் வண்ணங்கொண்டு ஓவியம் வரையும் ஓவியர் ஒருவகை. சுண்ணம் கொண்டும், வண்ணம் கொண்டும் பாவை அமைப்பார் ஓரினம். கல்லிலும் மரத்திலும் நெட்டியிலும் உருவம் அமைப்பார் ஒரு குழுவினர். உலோகத்தால் அமைந்த பாத்திரங் களிலும், பொன்னணிகளிலும் சித்திரம் பொறிப்பார் ஒருவகையினர். இவர்களை யெல்லாம் வித்தகர் என்ற சொல்லால் பழந் தமிழ் நூல்கள் குறிக்கின்றன. ஓவியர், சித்திரகாரிகள், கண்ணுள் வினைஞர், கண்ணுளார் என்று ஓவியப் புலவர்களுக்குப் பெயர்கள் வழங்கும். வித்தகக் கலையாகிய ஓவியத்தில் வல்லுநர்களாக இருந்தமையின் வித்தகர் என்ற பெயர் வந்தது. வித்தகர் இயற்றிய கண்கவர் ஓவியம் என்று மணிமேகலையிலும், வித்தகர் இயற்றிய விளங்கிய கோலம் என்று சிலப்பதிகாரத்திலும், வித்தக வினைஞர் மத்தியிற் குயிற்றிய சித்திர சாலை என்று பெருங்கதையிலும் இப்பெயர் வருகிறது. மெய்ஞ்ஞானம் படைத்தவர்களை வித்தகர் என்பது இந்த நாட்டு மரபு. சிந்தனாசக்தி படைத்தவர்களை வித்தகர் என்று சொல்வது பொருந்தும். ஓவியப் புலவர்கள் வெறும் தொழிலாளர்கள் அல்ல. கண்ணும் கையும் படைத்தவர்களெல்லாம் சித்திரம் வரைந்துவிட முடியாது. கருத்திலே நினைந்து நினைந்து நிறை வெய்திய கற்பனையை உருவாக்குபவனே கலைஞன். சிந்தனாசக்தி இல்லாதவன் கலைஞன் ஆகமுடியாது. ஓவியக் கலைஞனும் சிந்தனாசக்தியும், கற்பனை வளமும் பொருந்தியவன்; ஆகையால் மெய்ஞ்ஞானியருக்குரிய வித்தகன் என்ற பெயர் அவனுக்கு ஏற்புடையதாயிற்று. மணிமேகலை ஒரு பளிங்கறைக்குள்ளே இருந் தாள். அசையாமல் அவள் நின்றபோது உதயகுமாரன் என்ற அரச குமாரன் அங்கே வந்தான். கண்ணாடி அறைக்குள்ளே மணிமேகலை நிற்கிறாளென்பதை முதலில் அவன் உணர வில்லை. சுற்றிலும் ’சித்திரக் கைவினை திசைதொறும் செறிந்தன’வாக இருந்தமை யால், அந்தச் சித்திரக் கூடத்துள் அமைத்து வைத்த பாவை என்று முதலில் எண்ணினான். மற்றப் பெண் களைப்போலச் சிறந்த அலங்காரம் ஒன்றும் இல்லாமல், தனியாக அழகே உருவெடுத்து வந்தாற் போன்று நின்றாள் மணிமேகலை. அந்த உருவம் வழக்கமாக அலங்காரங்களோடு ஓவியர் வனையும் உருவமாகத் தோற்றவில்லை. “இப்படி ஒரு உருவத்தை ஓவியன் கற்பனை செய்தானே, அவன் கருத்து என்ன?” என்று சிறிது நேரம் உதயகுமாரன் யோசித்து நின்றானாம். ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன் என்று மணிமேகலை ஆசிரியர் சொல்கிறார். ஓவியன் உள்ளத்தே நன்றாகச் சிந்தித்துத் தன் கலைத்திறமையைக் காட்ட வேண்டுமென்ற உண்மையை இந்த அடி தெரிவிக்கின்றது. வண்ணமும் கிண்ணமும் தூரிகையும் கிழியும் கையும் கண்ணும் மாத்திரம் இருந்தால் ஓவியம் வந்து விடாது. சிந்தனாசக்தி மிகவும் அவசியம்.இதனைக் கம்பர் அழகாகச் சொல்கிறார். சீதா பிராட்டியின் அழகைச் சொல்ல வருகிறார் அப்பெரும் புலவர். அவளுடைய திருமேனி அழகு நாவினால் வருணிக்க ஒண்ணாதது. அந்தப் பேரழகி யைப் பார்த்தபோது மன்மதனுக்கு அப்பெருமாட்டி யின் திருவுருவத்தை எழுத வேண்டுமென்று ஆர்வம் உண்டயிற்றாம். இந்த ஆதரம் எழவே. சித்திரம் எழுதுவதற்கு வேண்டிய கருவிகளை சேகரிக்கத் தொடங்கினான். சாமானிய மாதர்களைப் போன்றவளா சீதை? அவளை எழுதுவதற்கு உலகத்திலே கிடைக்கும் வண்ணங்கள் பயன்படா. ஆகவே அமிழ்தத் தினாலே வண்ணக் கலவைகளை உண்டாக்கிச் சீதை யின் சித்திரத்தைத் தீட்ட வேண்டுமென்று எண்ணி னான். அமுதத்தைக் கிண்ணங்களிலே நிரப் பிக்கொண்டான்; வண்ணங்களையும் வைத்துக் கொண்டான். நல்ல எழுது கோலாகத் தேர்ந் தெடுத்தான். கையிலே கோல்பிடித்து அமுதத்திலே தோய்த்தான். இந்தப் புறக்கருவிகள் இருந்தாலே போதும் என்று மன்மதன் நினைத்து விட்டான். சாதாரணமாக ஒரு சித்திரம் வரைய வேண்டுமென்றாலே, முதலில் சிந்தனையை எழுப்பிக் கற்பனையிலே படரவிட வேண்டும். யார்க்கும் எல்லை காணரிய பேரழகியைச் சித்திரிக்க வேண்டுமானால் எவ்வளவு காலம் சிந்திக்க வேண்டும்? அவளுடைய புறஎழில் மாத்திரம் கண் ணுக்குத் தெரிந்த அளவிலே அமைத்தால் போதுமா? வேறு ஓர் அழகியின் உருவத்தை அமைத்துவிடலாம். ஆனால் உள்ளும் புறமும் பேரழகு படைத்த அப் பெருமாட்டியைச் சித்திரத்திலே தீட்ட வேண்டுமானால் அகமும் புறமும் ஆராயும் சிந்தனையும் கண்ணும் உடையாரே செய்யத் துணிய வேண்டும். காமன் அழகுலத்தின் தெய்வம் என்ற அகங்கா ரத்தினால், யாருக்கும் கிடைக்காத அமுதத்தையே வண்ணக் குழம்பாகப் பெற்ற செருக்கினால், சீதையை எழுத உட்கார்ந்தால் வருமா? ஒவ்வோர் அவயவ மாகச் சித்திரிக்கலாமென்றால் அந்த அவயவத்தோடு பொருந்திய நிகழ்ச்சிகள், அந்நிகழ்ச்சியூடே வெளிப் படும் சீதையின் தனிச்சிறப்பு முதலியவற்றைச் சிந்திக்க வேண்டாமா? முதலில் மிக்க பக்தியுடன் உள்ளமாகிய கிழியைத் தூயதாக்கிக்கொண்டு அங்கே சிந்தனையாலே உருவெழுதிக் கற்பனையாலே வண்ணந் தீட்டிப் பிறகல்லவா கிழியிலே அமைக்க முந்த் வேண்டும்? அப்போதுதானே அது கலை ஆகும்? காமன் வெறும் தொழிளாளியைப் போல ஆரம்பித்தான். கோடரியைக் கொண்டு விறகு பிளப்பவன் தொழிலாளி; அவன் சிந்தனை வேலை செய்யவில்லை. அவன் தூங்கிக்கொண்டே மரம் பிளக்கலாம். சேகேறிய மரத்திலே உருவம் செதுக்கும் சிற்பக்கலைஞனோ சிந்தனை செய்கிறான். உளியை இயக்குவதற்கு முன் உள்ளத்தை இயக்குகிறான். மன்மதன் விறகு பிளக்கிற தொழிலாளியைப்போல வெறும் கருவிகளின் பலத்தினாலே இந்தக் காரியத்தைச் சாதித்துவிடலாம் என்று முந்துகிறான். அது நடக்கிற காரியமா? கோலை அமுதிலே தோய்த்து எழுதப் போனால் ஓடவில்லை. உள்ளத்தே ஒளி உண்டானால் அது புறத்தே சுடரும். இவன்தான் உள்ளக் கதவைச் சாத்திவிட்டானே! அங்கே இருள்தான் படியும். மயக்கந்தான் உண்டாகும்; திகைப்புத்தான் ஏற்படும். அமுதத்தையும் கோலையும் கொண்டு சீதையை எழுதப்புகுந்த மன்மதன் எப்படி எழுதுவது என்று திகைகிறானாம், ஆதரித்து அமுதில் கோல்தோய்த்து அவயவம் அமைக்கும் செய்கை யாதெனத் திகைக்கும் அல்லால் மதனற்கும் எழுத ஒண்ணாச் சீதை என்பது கம்பர் பாட்டு. மன்மதன் வித்தகனாக இருந்தால் சீதையின் சித்திரத்தைத் தீட்டிவிடலாம் சிந்தனை செய்யும் வித்தகர்க்கே உரியது ஓவியக்கலை. கம்பர் பின்னும் ஓரிடத்தில் ஓவிய வித்தகன் சிந்தனையாளனாக இருக்க வேண்டுமென்று சொல் கிறார். கண்ணாலே பொருளை நன்கு பார்த்து அப்பால் அதை உள்ளத்திலே வடித்து அதன்மேல் கற்பனை யாலே மெருகேற்றும் கலைஞன்தான் சிறந்த ஓவியங் களை எழுதமுடியும். வெறும் கையும் தூரிகையும் இருந்தால் போதா என்று சொல்கிறார். கருத்துஇலான் கண் இலான் ஒருவன் கைகொடு திருத்துவான் சித்திரம் அனைய செப்புவாய என்பது கும்பகர்ணன் வதைப் படலத்தில் வரும் பாட்டு. சிந்திக்கும் கருத்து இல்லாதவன் ஓவியனாக முடியாது. அந்தக் கருத்திலே பதியும் வண்ணம் பார்க்கும் கண் இல்லாதவன் சித்திரம் எழுத முடியாது. ஓவிய வித்தகன் நன்றாகப் பார்த்துப் படம் பிடிக்கும் கண்ணை யுடையவனாய், அதனைச் சிந்தித்துச் சிந்தித்துப் பதியவைக்கும் கருத்துடையவனாய், கலைப் பண்பு துளும்ப ஓவியத்தை அமைக்கும் கற் பனைத் திறம் உடையவனாய் இருக்கவேண்டும். இதைப் பண்டைப் புலவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள். கலை இன்பம் ஒருவர் வீட்டில் நன்றாக வைரம் ஏறிய கருங்காலிக் கட்டை ஒன்றை ஒரு நண்பர் கொண்டு வந்து போட் டிருந்தார். நல்ல பெரிய கட்டை. ஒரு பாட்டி அங்கே வந்தாள்; அந்தக் கட்டையைப் பார்த்தாள். “எவ்வளவு பெரிய கட்டையாக இருக்கிறது! அதுவும் சேகு ஏறிய கட்டை போல் இருக்கிறது. இதைப் பிளந்தால் ஒரு மாதத்துக்கு வெந்நீர் போடலாமே!” என்றாள். அடுத்த படியாக அங்கே ஒரு தச்சன் வந்தான். மரத்தைத் தட்டிப் பார்த்தான். “நல்ல கருங்காலிக் கட்டையாக இருக்கிறதே! மேஜை, நாற்காலி, அல மாரி எல்லாம் செய்யலாமே!” என்றான். இன்னும் சிறிது நேரம் கழித்து மற்றோர் ஆசாரி யார் வந்தார். அவர் மரச் சிற்பி. கடைசல் வேலை செய்கிறவர். இந்தக் கட்டை கண்ணிலே பட்டவுடன், “ஹா ஹா!” என்று ஆச்சரியப்பட்டுப்போனார். கட் டைக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு தட்டிப் பார்த்தார்; மோந்து பார்த்தார்; “மிகவும் அருமையான மரம். சேகு ஏறின மரம். ஒரே சீராக இருக்கிறது. இந்தமாதிரி மரம் கிடைக்கிறது மிகவும் அருமை. ராமாயணத்தில் வரும் பாத்திரங்களையெல்லாம் ஒரே மரத்தில் பொம்மையாகப் பண்ணவேண்டும் என்று நினைத்திருந்தேன். அதற்கு வாகான கட்டை இது” என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். கட்டை உங்களுடையதாக இருந்தால் யாருக்குக் கொடுப்பீர்கள்? நிச்சயமாகச் சிற்பிக்குத்தான் தருவீர் கள். ஏன்? அவர் அதை மிகச் சிறந்த முறையில் பயன் படுத்திக் கொள்வார் என்று நமக்குத் தோன்றுகிறது. விறகாக எரிப்பதைக் காட்டிலும், மேஜை, நாற்காலியாகப் பண்ணுவது சிறந்தது; அதைவிடப் பொம்மைகளாகப் பண்ணுவது மிகமிகச் சிறந்தது என்று நாம் எண்ணுகிறோம். மூன்றுக்கும் உள்ள வேறுபாடு என்ன? அதைச் சற்று ஆராய்வோம். பாட்டி அந்தக் கட்டையைப் பொசுக்கிச் சாம்ப லாக்கி விடுவதிலே நோக்கமுடையவளாக இருந்தால். கண்ணாலேயே அதைப் பொசுக்கி விட்டாள் என்றே சொல்லவேண்டும். அவள் அழிவு வேலைக்காரி. அவ ளைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. மற்ற இரண்டு பேரும் அதை உண்மையாகவே பயன்படுத்திக் கொள்ள எண்ணினவர்கள். அவர்களுக்குள்ளே வேறு பாடு இருக்கிறது. மேஜை நாற்காலி செய்கிறவன் ஒரு மாதம் முயன்று அந்தக் கட்டையிலிருந்து அவற் றைச் செய்துவிடுவான். ஆனால் ராமாயணப் பொம்மை செய்கிறவர் அவ்வளவு விரைவிலே செய்ய மாட்டார். பல மாதங்கள் வேலைசெய்து கடைசல் பிடித்து நுட்ப மாகச் செதுக்கிச் செய்யவேண்டி யிருக்கும். இதனால் மேஜை நாற்காலி செய்து விற்கும் தச்சனைக் காட்டி லும் சிற்ப உருவங்களாகச் செய்து விற்கும் சிற்பிக்கு அதிகப் பணம் கிடைக்கும். இந்த வேற்றுமைக்கு அடிப்படையான காரணம் தச்சன் செய்வது தொழில், சிற்பியின் வேலையோ கலை யென்பதுதான். தொழிலாளியின் படைப்பைக்காட்டிலும் கலைஞனின் படைப்பு மிக மிக உயர்ந்தது. தொழிலாளி கருவிகளையும் கையையும் அதிகமாகவும் அறிவைக் குறைவாகவும் உபயோகப்படுத்திப் பண்டங்களை உண்டாக்குகிறான். கலைஞன் கையையும் கருவிகளையும் விட அதிகமாக அறிவையும் கற்பனையையும் பயன் படுத்துகிறான். அதனால்தான் கலைப்பொருளுக்கு மதிப்பு அதிகமாக இருக்கின்றது. கருவியும் கையும் எல்லோரிடமும் இருக்கின்றன. கருத்தும் கற்பனையும் அருமையாகவே இருக்கின்றன. மேஜை நாற்காலிகளைவிடச் சிற்ப உருவங்களுக்கு என்ன உயர்வு வந்துவிட்டது? இரண்டு வகைப் பொருள்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? மேஜை நாற்காலிகள் கருவிகளாகப் பயன்படுகின்றன. கருவியைப் பயன்படுத்த மக்கள் இல்லாதபோது அவற்றை யாரும் மதிக்கமாட்டார்கள். மேஜை ஒரு காரியத்துக்குப் பயன்படும் கருவியாக இருகிறது. ஆனால் சிற்ப உருவங்களைக் கருவியாகக் கொண்டு வேறு ஒன்றைச் செய்வதில்லை அவற்றையே பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம். மேஜையைப் பார்த்து மகிழ்வதைக்காட்டிலும் அதை உபயோகப் படுத்தி மகிழ்வதுதான் பெரிதாக இருக்கிறது. சிற்ப உருவங்களை வேறு ஒரு காரியத்துக்குப் பயன்படும் கருவிகளாக உதவுமென்பதற்காக அன்றி அவற்றைக் கண்ட அளவிலே ஆனந்தமடைகிறோம். அப்படி ஆனந்தம் அடைவதற்குக் காரணம் நுட்பமானது. ராமாயண உருவங்களை அந்தச் சிற்பி அமைத்து விட்டான் என்றே வைத்துக் கொள்வோம். நவராத்திரிக் கொலுவில் அத்தனை பொம்மைகளையும் வைக்கிறார்கள். நாம் பார்க்கிறோம். அதைப் பார்ப்ப தனால் மாத்திரம் நமக்கு இன்பம் வராது. அந்தப் பார்வையினால் நம்முடைய உள்ளத்திலே சில எண் ணங்கள் கிளர்ந்து எழுகின்றன. ராமனையும் ராவண னையும் அநுமாரையும் சீதையையும் போல அமைத்த திருவுருவங்களைக் காணும்போது நாம் படித்த ராமா யணக் கதை நம் அகக்கண்முன் வந்து நிற்கிறது. ராமனுடைய குணங்களும் மற்றவர்களுடைய இயல்பு களும் நினைவுக்கு வருகின்றன. ராமாயணத்தில் அதிக மாக ஈடுபட்டவராக இருந்தால் இந்த உருவங்களைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சியை அடைவார். முன்பே ராமனையும் மற்றவர்களையும் எண்ணி இன்புற்ற உள்ளத்துக்கு அந்த இன்ப உலகத்தைத் திறந்து காட்டும் திறவுகோல் போல இந்தப் பொம்மைக் காட்சி உதவுகிறது. அவற்றைக் கண்டவுடன் நாம் வேறு உலகத்துக்குப் போய்விடுகிறோம். இப்போது நிற்கும் காலத்தையும் இடத்தையும் மறந்து வேறு காலத்துக்கு, வேறு இடத்துக்குப் போய் நிற்கிறோம். காசு கொடுத்து வண்டியில் ஏறினால் வேறு இடத் துக்குப் போக இயலுமென்பது நாம் அறிந்தது. வான விமானத்தில் ஏறினால் நெடுந்தூரத்தில் உள்ள இடத்துக்கு விரைவில் போய்விடலாம். ஆனால் எந்த விதமான வாகனமும் நம்மை வேறு காலத்துக்குக் கொண்டுபோக முடியாது. கலைப் பொருள்கள் நம்மை வேறு இடத்துக்கு வேறு காலத்துக்குக் கொண்டுபோய் விடுகின்றன. உடம்பால் பிரயாணம் செய்வதில்லை என்பது உண்மை; ஆனால் உள்ளத்தால் பிரயாணம் செய்கிறோம். அந்தப் பிரயாண மார்க்கத்தைக் கலைப் பொருள் திறந்து காட்டுகிறது. நம்மை மறக்கச் செய்கிறது. சதா வழவழ என்று பேசிக்கொண்டிருக்கும் ஒரு பெண்மணி தன்னுடைய கணவனுக்கு எப்போதும் தலைவலியைக் கொடுத்து வந்தாளாம். அந்தப் பெண் மணி ஆக்ராவிலுள்ள தாஜ்மகலுக்கு வந்தாள். ஏதா வது புதிய பொருளைக் கண்டால் அவள் பேச்சுத் தொடங்கிவிடும். அப்புறம் கடவுள்தான் அவள்வாயை அடக்கவேண்டும். அவர் அப்படி அடக்குவதாகத் தெரியவில்லை. தாஜ்மகலைப் பார்த்தாள். அந்தக் கலைப் படைப்பின் அழகிலே அவள் தன்னை மறந்துபோனாள். அவள் வாயடைத்து மௌனமாகி நின்றாள். அவளைப் பார்த்து, அவளுடன் வந்த ஒருவர், இறந்தவர் பிழைத்து விட்டால் எப்படிப் பிரமிப்பாரோ, அப்படிப் பிரமித்தார். உடனே அந்த அம்மாளின் கணவருக்குத் தந்தியடித்தாராம். “உங்கள் மனைவி மௌனமாகி விட்டாள்” என்றுதான். கலையிலே தன்னை இழப்பதற்கு இதைக் காட்டிலும் வேறு உதாரணம் தேவை இல்லை. சிற்பம், சித்திரம், இசை, கவிதை எல்லாமே நுட்பமான கலைகளின் வகை. எல்லாம் நம்மை வேறு உலகத்துக்கு அழைத் துச் சென்று நம்மையே மறக்கச் செய்கின்றன. பழைய சங்க காலத்து நூல் ஒன்றில் ஒரு செய்தி வருகிறது. இசையிலே புலமையுடைய பாணர்கள் நாடெங்கும் சென்று ரசிகர்களிடமும் செல்வர்களிடமும் தங்கள் இசைத்திறமையைக் காட்டிப் பரிசு பெறுவார்கள். இன்னிசை யாழை வாசித்து மக்களை மகிழ்விப்பார்கள். அவர்கள் ஊர் ஊராகப் போய்கொண்டிருக்கிறார்கள். யாரோ ஒரு வள்ளலைக் காண்பதற்காகப் போகும்போது வழியிலே ஒரு பாலை நிலம் இருக்கிறது பயிர் பச்சை ஒன்றும் இல்லாமல் எங்கே பார்த்தாலும் வெறிச்சோடிக் கிடக்கும் இடம் அது. அங்கே சிலர் வசிக்கிறர்கள். அவர்கள் எப்படி ஜீவனம் செய்வது? வழிப் பிரயாணிகளைக் கொள்ளை அடித்து, அதனால் கிடைத்ததைக்கொண்டு பிழைத்து வருகிறார்கள். இந்த வழிப்பறிக்காரர்களை ‘ஆறலை கள்வர்’ என்று சொல்வார்கள். மேலே சொன்ன பாணர்கள் நாலைந்து பேராகச் சேர்ந்து பாலை நிலத்தின் வழியே வருகிறார்கள். அவர்களுடன் பாட்டுப் பாடும் பெண்மணிகளும் வருகிறார்கள் வெப்பமான அந்தப் பிரதேசத்தில் நடந்து வருகிறார்கள். நெடுந்தூரத்தில் அவர்கள் வரும்போதே பேச்சரவம் கேட்கிறது. அது கேட்ட ஆறலை கள்வர்கள், " இன்று நமக்குப் பெரிய வேட்டை கிடைக்கப்போகிறது " என்று மகிழ்ச்சி அடைகிறார்கள் பாணர்கள் நெருங்கி வருகிறார்கள். அருகில் வந்தவுடன் கள்வர்கள் திடீரென்று அவர்களை மடக்கிக் கையில் இருப்பதைக் கீழே வைக்கச் சொல்லுகிறார்கள். பெண்கள் நடுங்குகிறார்கள். பாணர்களில் சிலர், “எங்களிடத்தில் ஒன்றும் இல்லை ஐயா! நாங்கள் பாட்டுப் பாடிப் பிச்சை எடுக்கிறவர்கள்” என்று சொல்கிறார்கள். “பாட்டா? எப்படிப் பாடுவீர்கள்?” என்று கள்வர் பரிகாசமாகக் கேட்கிறார்கள். ஒரு பாணன் தன் யாழைச் சுருதி கூட்டிப் பாடத் தொடங்குகிறான். இன்ன காலத்தில் இன்ன ராகத்தைப் பாட வேண்டும் என்ற வரையறை உண்டு. பாலை நிலத் தில் எரிக்கும் வெயிலில் பாலைப் பண்ணைப் பாடத் தொடங்குகிறான் பாணன். அவன் பாடப் பாடப் பாலை வன நினைவு அந்தப் பாணனுக்கே மறந்து போகிறது. கையில் ஆயுதங்களுடன் வந்த ஆறலை கள்வர்களின் காதுவழியாக அந்தச் சங்கீதம் சென்று அவர்கள் கருத் தைக் கவர்கிறது. அவர்களும் மெல்ல மெல்லத் தங் களை மறக்கிறார்கள். அவர்கள் கையிலே வைத்திருந்த ஆயுதங்கள் தாமே நழுவிக் கீழே விழுந்துவிடுகின் றன. கள்வர்களும் இருதயம் உள்ளவர்களே அல்லவா? அவர்களிடத்தில் அன்பு மறைந்து நின் றது. மனிதப் பண்பு மங்கி மறைந்திருந்தது. இசை அவற்றை வெளிப்படுத்தியது. கொடிய இயல்பை மறந்து கேட்டார்கள். அவர்களிடத்தே இருந்த கொடிய குணத்தையும் அப்போதைக்கு நழுவும்படி செய்து விட்டது அந்தப் பாலைப் பண். பாணன் பாட்டை நிறுத்தினான். கள்வர்கள் தம் நினைவு பெற்றார்கள். பாணர்களிடம் கொள்ளையடிக்க வந்தவர்கள் அவர்கள். இப்போது இசையிலேயே மனத்தைப் பறிகொடுத்துத் தங்கள் கையில் கொஞ்ச நஞ்சம் இருந்த உணவுப் பொருள்களைக் கொடுத்து, ‘ஜாக்கிரதையாகப் போய் வாருங்கள்’ என்று வழியனுப்பினார்கள். இந்தக்காட்சியை மிகச் சுருக்கமாக அந்தச் சங்கப்புலவர்சொல்கிறார். ஆறலை கள்வர் படைவிட, அருளின் மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை என்று பாடுகிறார். ‘வழிப்பறிக்காரர் தம் கையிலே உள்ள ஆயுதங்களை நழுவ விடும்படியாக, அவர்களி டத்தே உள்ள அருளுக்கு மாறுபட்டதாகிய கொடுமையை மாற்றும், அநுபவிப்பதற்கு இனிய பாலைப் பண்ணைப் பாடும் யாழ்’ என்று இதற்குப் பொருள். கலை தன்னை மறக்கச்செய்யும் என்பதை இந்தப் பாடலும் தெரிவிக்கிறது. தன்னை மறப்பது இன்பம். தன்னை மறந்து இறைவனை நினைப்பது பேரின்பம். ஞான நெறி இதைக் காட்டுகிறது. தன்னை மறக்கும் இன்பத்தைத் தருவது கலையின் பொது இலக்கணம். எல்லா நாட்டுக்கலைக்கும் பொது இது. ஆனால் இந்திய நாட்டுக் கலையோ தன்னை மறந்து தலைவனாகிய கடவுளை நினைக்கச் செய்கிறது. ஞானியும் கலைஞனும் ஒரே காரியத்தைச் செய்கிறார்கள். ஞானி தன்னை மறந்து கடவுளை நினைந்து ஒன்றுகிறான். கலைஞன் ஒருபடி மேலே போகிறான். தன்னை மறந்து கடவுளோடு தான் ஒன்றுவதை யன்றி மற்றவர்களையும் தம்மை மறந்து இறைவனோடு ஒன்றச் செய்துவிடுகிறான். இந்த நாட்டுச் சிற்பிகள் ஞானியர் கூட்டத்தைச் சேர்ந்தவர்களே. ஞானசம்பந்தர் முதலியவர்களும் ஆழ்வார்களும் கவிக் கலைஞர்கள்; அதோடு ஞானிகளாகவும் விளங்கினார்கள். இந்த நாட்டுக் கலைகள் யாவும் கடவுளைச் சார்ந்தே விளங்குகின்றன. சிற்பமானாலும் ஓவியமானாலும் இசையானாலும் கவிதையானாலும் கடவுளைச் சுற்றியே படர்கின்றன. இந்தக்கலையின் தத்துவம் விளங்கினவர்களுக்கு கோயிலையும், விக்கிரகங்களையும், தேவாரத்தையும், திவ்விய பிரபந்தத்தையும், சித்தர் பாடலையும் நன்றாக அநுபவிக்க முடியும்; தம்மை மறந்து இறைவன் உணர்வில் ஒன்ற முடியும். கலையும் கலைஞனும் பிரம தேவன் படைப்புத் தொழிலைத் தொடங்கினான். அழகான பெண்களைப் படைத்தான். அவர்களுள் கலைமகளைப் படைத்தவுடன் அவளுடைய பேரழகிலே சொக்கிப் போனான். " நீ என் மனைவியாக இரு!" என்று வேண்டினான். அன்று முதல் கலைமகள் பிரமதேவனுடைய மனைவியாகி விட்டாள். இந்தப் புராணக் கதையை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? நம்முடைய நண்பர்கள் சிலருக்கு இந்தக் கதையைக் கேட்கவே பிடிப்பதில்லை. “என்ன பைத்தியக்காரத் தனம்! பிரமா கலைமகளை உற்பத்தி செய்தார்; ஆகவே அவர் அவளுக்குத் தந்தை முறை ஆகவேண்டும். தந்தை தம் சொந்த மகளை மணந்துகொள்வது நியாயமா” அதை நாகரிகம் மிக்க ஒரு நாட்டினர் ஒப்புக் கொள்ளலாமா?" என்று ஏசத் தொடங்குகிறார்கள். இது புராணக் கதை என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். அதாவது உண்மையில் நிகழ்ந்த வரலாறு அல்ல. ஏதோ கருத்தைப் புதைத்து வைத்திருக்கும் கற்பனை அது என்பதை நாம் உணரவேண்டும். இல்லையானால் கலைமகள் பிரமதேவன் நாவில் உறைகிறாள் என்பதை அப்படியே நம்பலாமா? நான்முகன் வாய்க்குள் கலைமகள் உருவோடு வாழ பிரமதேவன் கலைஞர்களிலே பெரிய கலைஞன்; ‘மலரினில் நீலவானில் மாதரார் முகத்தில் எல்லாம் இலகிய அழகை’ இயற்றிய ஈசன் அவன். தொழிலாளி ஒருமுறை செய்ததையே திருப்பிச் செய்து கொண்டிருப்பான். கலைஞனோ ஒவ்வொரு கணமும் தன் படைப்பில் புதுமையைக் காட்டுவான். பிரமன் படைத்த மனிதர்கள் கோடி கோடி ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். அந்தப் படைப்பிலே தான் எத்தனை புதுமை! ஒருவன் முகம் போல மற்றொருவனுக்கு முகம் இல்லையே! அத்தனை திறம்படக் கலா சிருஷ்டி செய்யும் பிரமதேவனைக் கலைஞர் சிகாமணி என்று தானே சொல்ல வேண்டும்? கலைஞன் படைப்பே தனி வகை. கலைஞன் படைக்கும்போது மற்றவர்களைவிட வேறான நிலையில் இருப்பவன்.ஆனால் அந்தப் படைப்பை நுகரும்போது அவனே முதலில் நிற்பான். அருமையான இசைக் கச்சேரி நிகழ்கிறது. இசைக் கலையில் மகா மேதாவியான ஒருவர் பாடுகிறார். அவர் பாட்டு மிகமிக உயர்ந்து விளங்குகிறது. இதைச் சபையில் உள்ளவர்கள் சொல்லவேண்டும் என்பது இல்லை. அந்த இசைக் கலைஞர் உள்ளத்துக்கே தெரியும். தாமே அநுபவித்துப் பாடினால் தான் மற்றவரையும் அநுபவிக்கச் செய்ய முடியும். ஆதலின் அவருடைய சங்கீதத்தை முதலில் அநுபவித்தவர் அவரே என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சிற்பி அற்புதமான விக்கிரகம் ஒன்றைச் செதுக்குகிறான். எங்கிருந்தோ கல்லைக் கொண்டு வந்து போட்டு உளியால் அதனை உருவாக்க முயல்கிறான். அதன்மேல் கால் வைத்துக் கொத்துகிறான். உட்கார்ந்து பொளிகிறான். வெறுங் கல்லாக இருந்தது மெல்ல மெல்ல உருவாகி வருகிறது. சிற்பி தன் உள்ளத்திலே செதுக்கிக்கொண்ட திருஉருவத்தைக் கல்லிலே செதுக்கிவருகிறான். முதலில் கரடு முரடான உருவம் அமைகிறது. பிறகு ஒவ்வோர் அங்கமாக நகாசு செய்யத் தொடங்குகிறான். நாளாக ஆக அது கல்லின் நிலைமையிலிருந்து மாறிக் கடவுளின் நிலைமை அடைகிறது. எல்லாம் நிறைவு பெற்றுக் கண் திறந்து விடுகிறான். அது வரையில் அது கல்லாகிச் சிலையாகி உருவமாகி இப்போது கடவுளாகி விட்டது. சிற்பியின் குடிசையிலிருந்து கோவிலுக்குப் போகிறது. அதற்கு முன்னாலே அது தெய்வமாகி விடுகிறது. அதை முத லிலே கும்பிடுகிறவன் அந்தச் சிற்பிதான். தன் கால் பட்ட கல் என்றா அதை அவன் நினைக்கிறான்? இல்லை; இல்லை. அது கடவுள் என்றே கும்பிடுகிறான். கோயி லுக்குப் போய்ப் பிரதிஷ்டை ஆன பிறகு தன் பெண்டு பிள்ளைகளுடன் போய் அர்ச்சனை செய்கிறான். அவன் படைத்த பொருளானாலும் அதனால் வரும் பயனை அநுபவிப்பதில் அவனே முந்தி நிற்கிறான். பிரமதேவனாகிய கலைஞன் ஓர் அழகுப் பிழம்பைப் படைத்தான். அதன் இன்பத்தை நுகர்ந்தான். சங்கீத வித்துவான் தன் சங்கீதத்தைத் தானே அநுப விப்பதுபோலவும், சிற்பி தான் படைத்த உருவத்தைத் தானே வணங்குவது போலவும் நுகர்ந்தான். வேறு விதமாகச் சொல்லிப் பார்க்கலாம். சங்கீதம் மற்றவர் களுக்கு இன்பம் தருவதற்குக் காரணம், சங்கீத வித்து வானுக்கே அது இன்பம் தந்தது தான். விக்கிரகம் மற்றவர்களால் வணங்கப் பெறுவது, அதைப் படைத்த சிற்பியே முதலில் வணங்கினதால்தான். பிரமதேவன் தான் படைத்த கலைப் பிழம்பைத் தானே மதித்துச் சிறந்த இடத்தில் வைத்துப் பயன் கொண்டான்; உலகம் பிறகே பயன் கொள்ளுகிறது. கலைமகள் பிரமாவின் மனைவி. ஒரு பெண், ஓர் ஆடவனுக்கு மனைவி என்று சொல்லுகிற வகையில், அவர்களி டையே உள்ள உறவு உடம்பைக்கொண்டு அளப்பது அன்று. அங்கே உடம்பே இல்லை. நான்முகன் என்ற ஒருவன் உடம்பு படைத்து உப்புக்கும் அரிசிக்கும் கேடாக வாழவில்லை. அவன் ஒரு தத்து வம்; கலைஞன் பண்பைக் குறிக்கும் தத்துவம். அப் படியே கலைமகளும் அங்கம் படைத்த பெண் அல்ல. இன்று பிறந்து நாளைக்குப் பக்குவமாகி அதற்கு அடுத்த நாள் கிழவியாகி மறுநாள் செத்துப்போகும் மனித உடல் படைத்தவள் அல்ல. நித்திய யௌ வனம் உடையவளாய், நித்திய சுந்தரியாகித் தன்னை அடைந்தார் யாவருக்கும் உடலுக்கு அப்பாற்பட்ட தூய இன்பத்தை உதவுபவளாக இருப்பவள். அவள் பலருக்கு இன்பத்தைத் தருபவள். ஆனால் கன்னி. அவள் பலருடைய நாவில் இருப்பவள். ஆனால் சிறிதும் குறைவுபடாதவள். எதைப் படைத்தாலும் அவள் அருள் வேண்டும். கலைத்திறமை இல்லாத படைப்பில் புதுமை இல்லை; இன்பம் இல்லை; கலைமகள் என்னும் கற்பனை இத்தனை தத்துவத்தையும் உள் ளடக்கிக் கொண்டு நிற்கிறது. கலைத்திறமையைத் தெய்வீகப் பண்பாய்ப் போற்று வது இந்த நாட்டு வழக்கம். கலைஞர்களைத் தெய்வத்துக்குச் சமானமாக வைத்து வணங்குவது பாரத சமுதாயத்தின் சம்பிரதாயம். அந்தச் சம்பிரதாயத் தையும் கருத்தையும் உணர்ந்தால்தான், பிரமன் கலை மகளைப் படைத்து மணந்துகொண்டான் என்பதனுள் ஆழ்ந்து நிற்கும் கலையிலக்கணமும், கலைஞன் இலக் கணமும் புலப்படும் வாத்தியார் ஐயா 1 “ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி; அதற்கும் இளைத்தவன் பள்ளிக்கூடத்து வாத்தியார்” என்ற பழமொழி இக்காலத்தில் எங்கும் வழங்குகிறது. இந்தப் பழமொழி ஏதோ நடுவில் வந்த புதுமொழி என்றுதான் தெரிகிறது. ஏனென்றால் நம்முடைய தேசத்தில் கோவில் பூசகர்களையும் உபாத் தியாயர்களையும் இழிவாக நினைக்கும் வழக்கம் பழங் காலத்தில் இல்லை. கோவில் ஒவ்வோர் ஊருக்கும் அவசியம் என்று பழந்தமிழர்கள் நினைத்தார்கள். “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது ஒரு பழமொழி. “திருக்கோயில் இல்லாத திருவில் ஊர்” என்று அப்பர் சுவாமிகள் சொல்கிறார். கோயில் இல்லாத ஊரில் திருமகளின் விலாசம் இராதாம். அதை மூதேவி பிடித்த ஊர் என்றே சொல்ல வேண்டுமாம். இந்த மாதிரியே வாத்தியார் இல்லாத ஊரும் பிரயோசனம் அற்றது என்று சொல்லியிருக்கிறார்கள். கணக்காயர் இல்லாத ஊரும்……. நன்மை பயத்தல் இல என்று ஒரு பழைய நூல் சொல்கிறது. உபாத்தியாயருக்கு அந்தக்காலத்தில் கணக்காயர் என்ற பெயர் வழங்கி வந்தது. கணக்கு என்பது நூலுக்குப் பெயர். அதைக் கற்பிக்கிற தலைவர் கணக்காயர். நக்கீரர் என்ற புகழ்பெற்ற சங்கப்புலவருடைய தகப்பனார் மதுரையில் வாழ்ந்த ஒரு சிறந்த உபாத்தியாயர். இப் போதும் மரியாதையாக ஒரு கிராமத்தில் உள்ள உபாத்தியாயரைப் பேர் சொல்லாமல் “வாத்தியார் ஐயா” என்று சொல்வதில்லையா? அதுபோல அவரை எல்லோரும் ‘கணக்காயர்’ என்ற அழைத்து வந்தார் கள். அதனால் நாளடைவில் அவர் பெயர் மறந்து போகவே ‘மதுரைக் கணக்காயனார்’ என்ற பெயர் நிலைத்து விட்டது. பழைய புத்தகங்களில் நக்கீரர் பேர் வரும் இடங்களிலும் எல்லாம் ‘மதுரைக் கணக்காய னார் மகனார் நக்கீரனார்’ என்று எழுதியிருப்பதைக் காணலாம். இந்தக் காலத்தில் வாத்தியார் ஐயா இளப்பமான பேர்வழி ஆகிவிட்டார். போதாக்குறைக்கு அவரைப் பற்றி எத்தனையோ கதைகள் கட்டி அவற்றின் மூல மாகவும் அவரைச் சேர்ந்தவர்களுக்குப் பெயர் வைத் திருக்கிறார்கள். “டானாக் கூட்டம்” என்றும், அண்ணாவி கள் என்றும் சமுதாயத்தின் ஒதுக்குப்புற வாசிகளாக அவர்கள் இருக்கிறார்கள். சமூகத்தில் அவர்களுக்கு மதிப்புக் கொடுப்பதில்லை என்பது ஒரு பக்கம் இருக் கட்டும். அவர்களே ஒருவருக்கு ஒருவர் மதிப்பு வழங்குவதில்லை. வேறு ஒரு வேலையும் கிடைக்கா விட்டால்தான் படித்தவர்கள் வாத்தியார் வேலைக்கு வருகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் உற்சாகம் இல்லாமல் இருக்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்களுடைய சம்பளந்தான். மற்ற உத்தியோகஸ்தர் களெல்லாம் தொப்பியும் நிஜாரும் அணிந்து கொண்டு டாக் டீக்கென்று உலவும் உலகத்தில் மூலைக்கச்சத்தை யும் அங்கவஸ்திரத்தையும் ஈசல் சிறகை விரித்துப் பறப்பதுபோலப் பறக்கவிட்டுக்கொண்டு செல்லும் வாத்தியார் ஐயா நிலை பரிதாபகரமானதுதான். பழைய காலத்தில் வாத்தியார் ஐயா இப்படி இருக்கவில்லை. அவர் ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர் கூட்டத்துக்குத் தலைவர்; எதிர்கால சந்ததி களுக்கு அவரே கடவுள். “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்” என்று அதிவீர ராம பாண்டிய மன்னர் சொல்லுகிறார். இறைவன் போன்றவன் என்று சொல்லாமல் இறை வனே ஆவான் என்று சொல்லிவிட்டார். அகக் கண்ணைத் திறந்து வைக்கும் தெய்வம் அவன்தானே? தெய்வம் என்று சாமான்ய மனிதனைக் கண்டால் நமக்கு மதிக்கத் தோன்றுகிறதா? ஊரார் எல்லோரும் ஒருமனிதனை அப்படி மதிக்க வேண்டுமானால் அதற்கு ஏற்ற காரணம் இருக்கவேண்டும். அந்த மனித னிடத்தில் அதற்கு ஏற்ற குணங்களும் ஆற்றலும் இருந்தால்தான் ஜனங்களுடைய மதிப்பு நிரந்தரமாக இருக்கும். இல்லாவிட்டால் வெறும் சம்பிரதாயத் துக்காக உபாத்தியாயருக்குப் பூசை செய்யும் நிலை தான் வரும். வாத்தியார் ஐயா எப்படி இருந்தார்? எப்படி இருந்தால் வாத்தியார் ஐயா என்ற பட்டம் கொடுக் கலாம்? அவர் குணம், பழக்கவழக்கங்கள், கல்வி, சொல்லிக் கொடுக்கும் முறை முதலியவைகளின் இயல்பு என்ன?~ இந்த விஷயங்களைத் தமிழர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். அநேகமாக இலக்கண நூல் ஒவ்வொன்றிலும் ஆரம்பத்தில் இந்த விஷயங்களைத் தெரிவித்திருக்கிறார்கள். இலக்கணத்தில் பொதுப் பாயிரம் என்று ஒரு பகுதி வருகிறது. அங்கே புத்தகம் எப்படி இருக்க வேண்டும், அதைச் சொல்லிக் கொடுக்கும் வாத்தியார் ஐயா எப்படி இருக்க வேண்டும், அவர் எப்படிப் பாடம் சொல்ல வேண்டும் மாணாக்கன் எப்படி இருக்க வேண்டும், எப்படிப் படிக்க வேண்டும் என்ற விஷயங்கள் வருகின்றன. இவற் றைப் பற்றிய விரிவான இலக்கணங்களைச் சொல்லும் சூத்திரங்களைப் பழைய நூல்களிலிருந்து உரையாசிரி யர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். அவற்றைக் கொண்டு,வாத்தியார் ஐயாவைப்பற்றித் தெரிந்து கொள்ளக்கூடிய விஷயங்களை இனிப் பார்க்கலாம். வாத்தியார் முதலில் நல்ல மனிதராக இருக்க வேண்டும். நற்குண நற்செய்கைகள் உடையவராக இருந்தால்தான் பொது ஜனங்களுடைய மதிப்புக்குப் பாத்திரராக முடியும். “நான் சொல்வதை மாத்திரம் கேள் நான் செய்வதை கவனிக்காதே” என்றால் வாத்தியார் ஐயாவை ஒரு வாரத்தில் ஊரார் அவமா னப்படுத்தி அனுப்பிவிடுவார்கள். நல்ல ஒழுக்கமும் நல்ல பழக்கங்களும் இருப்பதற்கு, அவர் நல்ல மனிதர் களுடைய குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும்; இல்லா விட்டால் நல்ல குருவினுடைய பழக்கத்தை உடையவராக இருக்க வேண்டும். இவ்வளவும் சேர்ந்த ஒரு தகுதியை ‘குலன்’ என்று ஆசிரியர்கள் குறிக்கிறார்கள். ஆசிரியரைத் தெய்வமாகக் கருதவேண்டுமென்று சொன்னார்களே, அதற்கு ஏற்றவாறு ஆசிரியருக்கும் தெய்வத்தின் குணம் இருக்கவேண்டும் அல்லவா? தெய்வத்துக்கு என்ன என்னவோ விசேஷ குணங்கள் இருப்பதாக வேத சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. பக்தர்களுக்கு அவற்றைப்பற்றிக் கவலை இல்லை. கடவுள் நம்முடைய பிரார்த்தனைக்கு அருள் புரிய வேண்டுமென்ற ஒன்றுதான் அவர்களுடைய நோக்கம். அருள் என்னும் குணம் இருப்பதனால் தான் தெய்வத்தை நாம் கொண்டாடுகிறோம்; சிற்று யிர்க்கு இரங்கும் பேரருளாளன் என்று பாராட்டு கிறோம். குருவுக்குத் தெய்வத்தைப்போன்ற மதிப்பு வேண்டுமானால் அவரிடமும் அருள் இருக்க வேண்டும். பிறருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்ற நினைவு அருளிலிருந்து பிறப்பதே.அறியாமை நிரம்பிய உலகத்தில் உள்ளவர்கள் பால் இரக்கம் பூண்டு, அறிவு ஊட்டும் சிறந்த தொண்டை ஆசிரியர் மேற் கொள்ளவேண்டும். அறியாமையால் செய்யும் பிழை களைப் பொறுக்கும் இயல்புக்கும் அவ்வருளே காரணமாக நிற்கும். குலனும் அருளும் ஒருங்கு இயைந்த குருவுக்குத் தெய்வ பக்தியும் அவசியமானது. கல்வியின் பயனே கடவுளை அறிதல் என்ற கொள்கையில் ஊறிய இந் நாட்டில் கடவுளை நினைத்தே கல்வியைத் தொடங்கு கிறார்கள். மாணாக்கர்களுக்குக் கல்வி புகட்டி அவர் களுடைய வாழ்நாள் நற்பயன் பெறும்படி செய்யும், வழியை உபதேசிக்கும் ஆசிரியர் தெய்வ நம்பிக்கை உடையவராக இருந்தால்தான் மாணாக்கர்களிடத்தி லும் அது வளரும். குரு பெருந்தன்மை உடையவராக இருக்க வேண்டும். சிறிய விஷயத்தைப் பெரிதாக்கி வீண் சச்சரவுகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது. வாழ்க்கை முழுவதும் பயன்படும் சாதனைகளை மாணாக்கர்களுக்குப் பயிற்றும் மாபெருந் தொண்டில் ஈடுபட்டவர் உபாத்தி யாயர். அவர் சில்லறை விஷயங்களில் கவனத்தைச் செலுத்தினால் அவருடைய குறிக்கோள் சிதறிவிடும்; திண்மை கலங்கும். இந்தப் பெருந்தன்மையை “மேன்மை” என்று இலக்கணக்காரர்கள் குறிக்கிறார்கள். குலமும், அருளும், தெய்வங் கொள்கையும், மேன்மையும் ஆகிய உயர் குணங்கள் ஆசிரியர்பால் இருக்கவேண்டுமென்று சொல்வதன் மூலமாக இலக் கண நூல்கள், அவர் மனிதருட் சிறந்தவராக இருக்க வேண்டும் என்பதையே வற்புறுத்துகின்றன. 3 வாத்தியார் ஐயா மனிதருட் சிறந்தவராக இருக் கிறார். போதுமா? அவர் நன்றாகப் படித்திருக்க வேண்டும். பல நூல்களை வெறுமனே கணக்குப் பண்ணிப் படித்திருந்தால் மட்டும் போதாது. படித்த தைத் தெளிவாகத் தெரிந்து கொண்டிருக்கவேண்டும். தெளிவு இல்லாமல் அவருக்கே சந்தேகம் இருந்தால் அவரிடம் படிக்கும் மாணாக்கர்கள் உருப்படுவது எப்படி? ஆகவே அவர் கலைகள் பயின்றிருக்க வேண்டும். பரீக்ஷை கொடுத்துப் பட்டம் பெற்றிருந்தால் இந்தக் காலத்துக்குப் போதுமானது. அந்தக் காலத்தில் இதெல்லாம் பலிக்காது; படித்ததைச் சந்தேக விபரீதமின்றிப் படித்திருக்க வேண்டும். நன்றாகப் படித்தவரெல்லாம் வாத்தியாராக முடியுமா? எவ்வளவோ படித்தவர்களைப் பார்க்கிறோம். புத்தகத்தில் பிள்ளையார்சுழி முதல் முற்றிற்று வரையில் படித்துத் தெரிந்து கொண்டிருப்பார்கள். ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துச் சொல்லுமையா என்றால் ஒரே குழப்பம் வந்துவிடும். முன்னுக்குப்பின் பொருத்த மில்லாமல் உழப்புவார். சொல்கிற விஷயம் இன்ன தென்றே விளங்காது. கொஞ்சம் விளங்கினாலும் அழுத்தமாகப் பதியாது. உலக அநுபவமும் கல்விப் பழக்கமும் உடைய நமக்கே புரியாதபடி இருந்தால் குழந்தைகளுக்கு அவர் எதைச் சொல்லித் தரப் போகிறார்? படிப்பு வேறு; படித்ததைக் கற்றுத் தரும் சக்தி வேறு. இரண்டும் யாரிடம் பொருந்தியிருக் கின்றனவோ அவரே உபாத்தியாயர் வேலைக்குத் தகுதியானவர். கலைபயில் தெளிவு வாத்தியாருக்கு வேண்டுமென்று நிறுத்திவிடாமல் மேலே “கட்டுரை வன்மை” வேண்டு மென்று சொல்கிறது இலக்கணம். ஒரு விஷயத்தை, கேட்பவர் உள்ளத்தில் பதியும்படி சொல்லும் திறமை தான் அது. கட்டுரை என்பது ஒரு கலை. அதில் நல்ல வன்மை இருக்கவேண்டும். சும்மா ‘என்னைத் தெய்வம் என்று கொண்டாடுங்கள்’ என்று வாத்தியார் ஐயா சொன்னால் ஜனங்கள் கொண்டாடி விடுவார்களா, என்ன? உரைகல்லில் உரைத்துப் பார்த்து, ‘ஐயா நல்ல மனுஷர்; நன்றாகப் படித்திருக்கிறார்; சாமர்த்தியமாகச் சொல்லித் தருகிறார்’ என்று தேர்ந்தால்தான் கிராமத்து ஜனங்கள், “வாத்தியாரையா, நமஸ்காரம்” என்று கும்பிடு போடுவார்கள். இல்லாவிட்டால், “அழுகற்பழம் அண்ணவிக்கு” என்ற பழமொழியைச் சொல்லிக் குப்பைத் தொட்டியில் போடும் பதார்த்தத் தைத்தான் நிவேதனம் செய்வார்கள். இவ்வளவும் சொன்னது போதாதென்று வாத்தி யாரை வடிகட்டிப் பார்க்கும் இலக்கணக்காரர்கள், வாத்தியார் இன்ன இன்ன பொருளைப்போல இருக்க வேண்டும் என்று வேறு சொல்லியிருக்கிறார்கள். மிகவும் விரிவாகவும் நுணுக்கமாகவும் சொல்ல வேண் டியதைச் சுருக்கமாகச் சொல்வதற்கு, உபமானம் ஒரு நல்ல வழி. உபமானத்தை மனம்போன மட்டும் விரித்துப் பார்த்துக் கொள்ளலாம். வேதாந்தத்தில் வரும் உபமானங்களுக்குக் கணக்கு வழக்கு உண்டா? இந்தத் தந்திரத்தை வேத காலத்து ரிஷிகளும் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்; ஏசு கிறிஸ்துவும் தெரிந்திருக்கிறார்; ராம கிருஷ்ண பரம ஹம்ஸரோ உபமானக் கதைகள் சொல்லி, விளங்காதவற்றை யெல்லாம் விளங்க வைத்து விடுகிறார். வாத்தியார் ஐயாவை எந்த எந்தப் பொருளுக்குச் சமமாகச் சொல்லுகிறார்கள் என்பதை இனிமேல் கவனிப்போம். 4 “வாத்தியார் ஐயா பூமி தேவியைப் போல் இருக்க வேண்டும்; மலையைப் போல் இருக்க வேண்டும்; தரா சைப் போலவும் மலரைப் போலவும் இருக்க வேண்டும்” என்று பழைய தமிழர்கள் சொல்லியிருக் கிறார்கள். பூமி தேவியை உபமானம் சொல்லும்போது நமக்கு ஒரு விஷயம் நிச்சயமாக ஞாபகத்துக்கு வந்து விடுகிறது. பொறுமைக்குப் பூமி தேவியைச் சொல்லிச் சொல்லி அலுத்துப் போயிருக்கிறோமே! படிக்கும் பிள்ளைகள் அறிவு பெறுவதற்காக ஆசிரியரை அணுகுகிறார்கள். பிழை செய்வது அவர் களுக்கு இயல்பு. அதை மாற்றித் திருத்தமாக இருப்பதையே இயல்பாகப் பண்ணும் பொறுப்பைத்தான் வாத்தியார் ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஆகையால் மாணாக்கர்களிடம் சிடு சிடுவென்று விழுந்தால் அவர்கள் ‘வாத்தியார் என்றால் காட்டு மிருகம்’ என்று நினைத்து விடுவார்கள். தமிழ் நாட்டில் வாத்தியாருடைய பேரைப் பூச்சாண்டியாகச் சொல்லி பயமுறுத்தி வந்த காலமும் உண்டென்பது நமக்குத் தெரியுமே! பயப்படுவதற்குரிய பொருளாக ஆசிரியர் இருக்கக்கூடாது. நிலத்தைப் பொறுமைக்கு உபமானமாகச் சொல் வதோடு பெருமைக்கும் திண்மைக்குங்கூட உவமை யாக எடுத்தாளுவார்கள். " நிலத்தினும் பெரிதே" என்று பெருமைக்கு அதைச் சொல்வதை இலக்கியங்களிலே காணலாம். ஆசிரியர் பெருமையில் நிலத்தைப் போல இருக்க வேண்டும். பெருமை என்பது அவருடைய குணப் பெருமையையும் கல்விப் பெருமை யையும் குறிக்கும். அடுத்தபடி நிலத்திற்குரிய சிறப்பியல்பு திண்மை. “மண்கடின மாய்த்தரிக்கும்” என்று சாஸ்திரம் சொல்கின்றது.மனத்திண்மை ஆசிரியரிடம் இருக்க வேண்டும். எந்த விஷயத்தையும் சந்தேகமின்றி உறுதியாகத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். எத்தகைய கேள்வி வந்தாலும் மாறாத திண்மை இருந் தால்தான் எக்காலத்தும் மாணாக்கர்களுடைய அறிவை வளர்க்க உபயோகமாக இருப்பார். நிலமானது பருவத்துக்கு ஏற்றபடியும் வேளாளர் கள் எவ்வளவுக்கு எவ்வளவு உழுது எருவிட்டுச் சிரமப் பட்டுப் பயிரிடுகிறார்களோ அதற்கு ஏற்றபடியும் பயன் கொடுக்கும். கையைக்கட்டிக்கொண்டு வீட்டில் உட்கார்ந்திருந்தால் நிலம் வளம் சுரக்காது. நினைத்த பொழுதெல்லாம் விளைச்சலையும் தராது. பயிர் விளையப் பருவம் உண்டு; முயற்சியும் அவசியம். வாத்தியார் ஐயா நிலம்; மாணாக்கன் உழவன். மாணாக்கனுடைய பருவத்துக்கு ஏற்றபடி வாத்தியார் ஐயா சொல்லித்தரவேண்டும். தமக்குத் தெரிந்த சமாசாரங்களை யெல்லாம் பையனுடைய மூளையில் ஏற்றிவிடவேண்டுமென்ற பெருங்கருணை வியர்த்த மாகிவிடும். யார் யார் எந்த எந்தப் படியில் இருக்கி றார்கள் என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டு அவர்க ளுடைய பக்குவத்துக்கு ஏற்ற விஷயங்களைக் கற்பிக்க வேண்டும்.எழுவாய், பயனிலை,செயப்படு பொருள் இன்னவென்று தெரியாத மாணாக்கனுக்குத் தொல் காப்பியச் சூத்திரங்களைச் சொல்லித்தந்தால் அவனுக் குத் தலைவலி உண்டாவது தான் லாபம். வாத்தியார் ஐயா தம்முடைய சக்தியை வீணாகச் செலவிடுகிறவரா கிறார். “என்னடா இது, பேரிழவாக இருக்கிறதே!‘எந்று மாணாக்கன் தொல்காப்பியச் சூத்திரத்தையும் தொல்காப்பியரையும் சேர்த்துத் திட்ட ஆரம்பிப்பான். ஆசிரியருக்குத் தொல்காப்பியரிடத்தில் பக்தி இருக் கலாம்; தொல்காப்பியத்தில் நல்ல பயிற்சி இருக் கலாம்; ’பாத்திரமில்லாத இடத்தில் பிச்சை இட்ட’ வாத்தியார் குற்றத்துக்காகத் தொல்காப்பியர் நிந்த னைக்கு ஆளாகிறார். மாணாக்கனுடைய முயற்சிக்கு ஏற்ற அளவில் போதிக்க வேண்டும். சிறு முயற்சி செய்பவனுக்குப் பெரிய பொருளைப் போதித்தால் அந்தப் பொருளி னிடத்தில் மாணாக்கனுக்குக் கௌரவ புத்தி ஏற்படாது. இலவசமாக இறைபடும் பண்டமென்று எண்ணிக் கொள்வான். ‘வாத்தியாருடைய பெருங் கருணையைப் பாராட்டக் கூடாதோ?’ என்று நீங்கள் கேட்கலாம். அதெல்லாம் அறிவு நிரம்பின பெரியவர்கள் கடமை யல்லவா? மாணாக்கன் அவ்வளவு உயர்ந்த பண்புடைய வனாக இருந்தால் ஆசிரியனிடம் எதற்காக வருகிறான்? எந்தத் தொழிலிலும் உலக இயல்பு தெரிந்து நடக்க வேண்டும். பொருளைச் சிக்கனமாகச் செலவு செய்யவேண்டும் என்று சொல்கிறோம். அறிவுச் செல் வத்தையும் சிக்கனமாகத்தானே வழங்க வேண்டும்? முயற்சி செய்யச் செய்ய வஞ்சமின்றி வாரி வழங்கினால் வாங்கிக் கொள்பவனுக்கும் மகிழ்ச்சி, கொடுப்பவனுக்கும் திருப்தி உண்டாகும். ஆகவே பருவம், முயற்சி என்பவற்றின் அளவறிந்து வாத்தியார் ஐயா தம் தொழிலை நடத்தி வரவேண்டும். இலக்கண நூல், ஆசிரியருக்குப் பூமியை உவமையாகச் சொல்லும் போது, இந்த மாதிரி இயல்புகளையே குறிக்கின்றது. தெரிவரும் பெருமையும் திண்மையும் பொறையும் பருவம் முயற்சி அளவிற் பயத்தலும் மருவிய நன்னில மாண்பா ரும்மே, (பொறை ~ பொறுமை. பயத்தல்~ பயன்படுதல். மாண்பு ~ இயல்பு.) மலை என்ற மாத்திரத்திலே அதனுடைய உன்னதமான சிகரங்களும் பரப்பும் நம் ஞாபகத்துக்கு வரு கின்றன. மலை அளப்பதற்கு அரியது.எத்தனையோ உபயோகமான பொருள்கள் அதன்கண் விளைகின் றன. அவற்றிற்கும் ஓர் எல்லை இல்லை. பெரிய மனிதர்களை மலைக்கு ஒப்பிட்டுப்பேசுவது நம்மவர் வழக்கம். மலையைப் போன்ற சரீரம் உடையவராக இருப்பவரையா அப்படிச் சொல்கிறார்கள்? இல்லை, இல்லை. நிலப்பரப்பில் மேடும் பள்ளமும்,ஆறும் குளமும், வயலும் பொழிலும் இருந்தாலும் மலைதான் எல்லோருடைய கண்களிலும் முதலில் படுகிறது. அதுபோல ஒரு நாட்டிலோ, ஓர் ஊரிலோ யார் வந்தாலும் அவர்கள் காதில் யாருடைய புகழ் முதலில் விழுகிறதோ அவரே பெரிய மனிதர். அந்த ஊருக்கு வராமலே அந்தப் பெரிய மனிதருடைய புகழைப் பலர் அறிந்துகொண் டிருப்பார்கள். வாத்தியார் பெரிய மனிதராக இருக்கவேண்டும். ‘அளக்கலாகா அளவு’ உடைய மலையைப்போல விளங்க வேண்டும். மலையில் அளக்கலாகாத பொருள்கள் விளைகின் றன. ஆசிரியரிடத்தில் உள்ள பொருள்களும் அப் படியே இருக்க வேண்டும். ‘இவரிடம் உள்ள சரக்கு இவ்வளவுதான்’ என்று அறுதியிடும் நினைவு யாருக்கும் வரக்கூடாது. ‘எந்த விஷயத்தைக் கேட்டாலும் இவர் சொல்கிறாரே. இவருக்கு இன்னது தெரியும், இன்னது தெரியாது என்ற வரையறையே இல்லை போலும்!’ என்று மக்கள் வியக்கும்படி ஆசிரியர் இருந்தால் அவரை மலை என்றும் சொல்லலாம்; கற்பகமென்றும் சொல்லலாம். மலைக்கு அசலம் என்பது வடமொழியில் வழங்கும் பெயர்களில் ஒன்று. ‘அசையாதது’ என்பது அதன் பொருள். வாத்தியார் சுக துக்கங்களுக்கும், ஐயந்திரிபுகளுக்கும் எதிர் நின்று அசையாமல் இருக்க வேண்டும். கல்வியென்பது உலகத்தில் பணம் படைக் கவும், புகழ் படைக்கவும் மாத்திரம் ஏற்பட்டதன்று. உயிருக்கு உறுதி பயக்கும் முயற்சியில் தலைப்படவும், இறைவனை உணரவும், இறுதியில்லாத இன்ப வீட்டை அடையவும் அது சாதனமாக உதவுவது. ஆகவே, கல்வியென்பது ஒருவகையான சாதனை. மனத்தைப் பண்படுத்தும் சாதனை என்றே சொல்ல வேண்டும். “வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்” என்று ஒளவைப் பாட்டி சொல்கிறாள். அந்தப் பழக்கம் முறுக முறுக மனிதனுக்குத் தெளிவும் திருப்தியும் உண்டாகும். நெஞ்சார நல்ல நெறியில் நடக்கும் திறமை ஏற்படும். “நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமை யால், கல்வி அழகே அழகு” என்று நாலடியாரில் வரு கிறது. கல்வியினால் உள்ளத்தைப் பண்படுத்தியவன் பிறருடைய மதிப்பினால்தான் நல்லவனென்ற பெயரை அடையவேண்டும் என்பது இல்லை. அவனே தன்னை நடு நிலையில் நின்று சோதித்துக் கொள்வான். அவனுடைய பயிற்சி மிகுதியாக ஆக, ’நாம் நல்ல மனிதர்களோடு சேரத் தகுதியுடையோம்" என்ற நம் பிக்கை உதயமாகும். இத்தகைய உள்ளப் பயிற்சியையே கல்வி முறை யாக முன்னோர் போற்றினார்கள். இதை மாணாக்கர் களுக்குக் கற்பித்துத் தரும் ஆசிரியர் நடுங்கும் உள்ளத்தோடு இருக்கலாமா? அசையாத உறுதியும் நிலையான இயல்பும் அவர் உள்ளத்தில் நிலவ வேண்டும் அல்லவா? ஆதலால் ஆசிரியர் அசலத் தைப் போலத் ‘துளக்க லாகா நிலை’ யை உடையவ ராவதும் அவசியம். ஆசிரியர் பிறருடைய கவனத்தை ஈர்க்கும் தோற் றம் படைத்தவராக இருக்க வேண்டும். தோற்றம் என்பது உடலின் தோற்றம் அன்று; அவருடைய இயல்பு. வார்த்தைகள் எல்லாம் சேர்ந்த ஓர் உருவம் (Personality). அகத்திய முனிவர் உருவத்தால் சிறியவர்; ஆனாலும் அவருடைய தோற்றம் பெரிது. எவ்வளவு மக்கள் கூடியிருந்தாலும் அவரைத் தனியே கண்டுபிடித்து விடலாம். உருவச் சிறுமையாலன்று. அந்தப் பெரிய கூட்டத்தில் அவரைச் சூழ மக்கள் பணிவோடு நிற்பார்கள். எல்லோருடைய கண்ணும் கருத்தும் அவரிடமே செல்லும். ஆசிரியர் இத்தகைய தோற்றம் இருக்க வேண்டும். வேகமாகக் காற்று அடிக்கிறது. மேகங் கள் கலைந்து ஓடுகின்றன. உன்னதமான மலை ஒன்று இருந்தால் மேகங்கள் தடைப்பட்டு நின்று விடுகின் றன. மலையின் தோற்றம் எல்லாப் பொருள்களையும் தன்னிடத்தில் நிற்கும்படி செய்கிறது. வெகு வேக மாக ஒரு காரியத்தைச் செய்ய ஒரு மனிதன் ஓடுகிறான். இடையே வாத்தியார் ஐயாவைச் சந்திக்க நேர்ந்தால் அவன் வேகம் குறைந்து சட்டென்று நின்று ஒரு கும்பிடு போடுகிறான். அவர் பேச ஆரம்பித்தால் பொறுமையோடு கேட்கிறான். சில சமயங்களில் அவருடைய நல்லுரைகளில் ஈடுபட்டுத் தன் வேலை யையே மறந்து போனாலும் போய்விடுவான். இப்படி ஒரு தோற்றம் ஆசிரியருக்கு இருக்க வேண்டுமென்றால் அவரை ஊராரெல்லாம் பாராட்டித் தொழுவதில் ஆச்சரியம் என்ன? பஞ்சம் வந்நு விட்டது; அப்போது மற்ற இடங் களிலெல்லாம் விளைவு குறைந்து விடும். மலையுள்ள இடங்களில் பஞ்சத்தின் கொடுமை உடனே தாக்காது. மரங்களும் அருவிகளும் நிரம்பிய மலை பஞ்ச காலத்தில் மக்களுக்கு ஒரு சேம நிதிபோலப் பயன்படும். ஆசிரி யர் ‘வறப்பினும் வளந்தரும் வண்மை’ உடையவராக இருக்க வேண்டுமென்று இலக்கணம் சொல்லுகிறது. பொருட் பஞ்சம் ஏற்பட்டாலும் அறிவுப் பஞ்சம் வராமல் பாதுகாப்பது அவர் கடமை. இவ்வளவு விஷயங்களையும் சேர்த்து இலக்கணம் ஒரு சூத்திரத் தில் சொல்கிறது. அளக்கல் ஆகா அளவும் பொருளும் துளக்கல் ஆகா நிலையும் தோற்றமும் வறப்பினும் வளம்தரும் வண்மையும் மலைக்கே. (துளக்கல் ~ அசைத்தல். வறப்பினும்~ பஞ்சம் வந்தாலும்.) கலைபயின்ற தெளிவுடைய ஆசிரியர் துலாக் கோலைப்போல ஐயமின்றிப் பொருளின் மதிப்பைத் தெரிவிக்க வேண்டும். ஒரு பண்டத்தை நிறுக்கிறோம். தராசு முள் நடுநிலையில் நின்றால்தான் பொருளின் உண்மைக் கனம் தெளிவாகும். ஒரு பொருளையும் நிறுக்காமல் தராசை முதலில் தூக்கிப் பார்த்து, முள் நடுநிலையில் நிற்கிறதா என்று தெரிந்து கொண்ட பிறகே நிறுப்பது வழக்கம். முள் ஒரு பக்கமாகச் சாய்ந்தால் நியாயமான வியாபாரி அதைக் கையால் கூடத் தொடமாட்டான். ஆசிரியர் நூற்பொருளை நிறுத்து உணர்ந்து கொள்ள வேண்டும். தம்முடைய விருப்பு வெறுப்பினால் நூலில் உள்ள கருத்தைக் கூட்டியோ குறைத்தோ சொல்லக் கூடாது. சாதி, சமயம். கொள்கைகளால் வேறுபட்ட புலவர் ஒருவர் இயற்றிய நூல் ஒன்றைப் பாடம் சொல்லும்போது, தம் கொள்கைக்கு மாறுபட்டது என்ற காரணத்தால் அதைக் குறைத்துக் கூறக்கூடாது. நூல்களைத் தாம் ஆராய்ந்தாலும், கற்பித்தாலும் நடுநிலையில் நின்று, நூற்பொருளில் தம் கருத்தை நுழைக்காமல் இருப்ப வரே சிறந்த ஆசிரியர். ஐயம் தீரப் பொருளை உணர்ந்தாலும் மெய்ந்நடு நிலையும் மிகும்நிறை கோற்கே என்று இலக்கணம் கூறுகிறது. சமூகமாகிய மரத்தில் வாத்தியார் ஐயா மலரைப் போல விளங்குகிறார். மலர் அழகிய பொருள்; மங்கலமான பொருள். வாத்தியார் ஐயா இருந்து விட்டால் சமுதாயம் சோபையை அடைகிறது.சமுதா யத்துக்கு இன்றியமையாத பொருள் அவர். ஊரில் எந் தப் பொதுக் காரியமானாலும் வாத்தியார் ஐயாவுக்கு முதல் அழைப்பு. யாராக இருந்தாலும் அவரை வர வேற்று உபசரிப்பார்கள். அவர் யாவருக்கும் இனியவர். இதமான வார்த்தைகளைச் சொல்பவர்; மென்மயான இயல்புடையவர். ‘மலர் மங்கலமானது; நல்ல காரியங் களுக்கு இன்றியமையாதது; யாவரும் மகிழ்ந்து கொள் வதற்குரியது; மெல்லியது’ என்று புகழ்கிறோம். அந்தப் புகழை அப்படியே வாத்தியார் ஐயாவுக்கும் சொல்லும்படி அவர் இருக்க வேண்டுமாம். மலருக்குப் போது என்று ஒரு பெயர் உண்டு. தக்க பொழுதில் தவறாமல் மலர்வதனால் அதற்கு அப்பெயர் வந்ததாம். இயற்கையிலே அமைந்த கடிகாரம் அது. ஆசிரியர் அதைப்போலக் காலந் தவறாமல் மாணாக்கர்களுக்கு முகமலர்ச்சியோடு பாடம் சொல்லித் தரவேண்டும். காலக் கணக்கைக் கவனிப்பதில்லை என்ற குறைபாடு நம்மவர்களுக்கு இருப்பது உலகம் அறிந்தது. வாத்தியார் ஐயா அந்த அபவாதத்துக்கு உட்படக்கூடாது.பொழுதறிந்து கடமையைப் புரியும் இயல்பு அவரிடம் இருக்கவேண்டும். மங்கலம் ஆகி இன்றியமையாது யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கிப் பொழுதின் முகமலர் வுடையது பூவே. என்று மலரின் இயல்பைச் சொல்லும் வாயிலாக வாத்தியார் ஐயாவின் இயல்பையும் குறிப்பாக இலக்கண ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள். இவ்வளவு உபமானங்களால் உபாத்தியாயருடைய தகுதியை அளவிட்டு விட்டு, “உலகியல் அறிவும் இவைபோன்றவேறு சிறந்த குணங்களூம் உடையவன் ஆசிரியன்” என்று தமிழிலக்கணக்காரர் சொல்லுகிறார். எவ்வளவுதான் படித்தாலும், நல்ல குணம் உடையவராக இருந்தாலும் உலகம் தெரியா விட்டால் என்ன பிரயோசனம்? காலத்துக்கு ஏற்றபடி போதனா முறைகள் மாறும்;உதாரணங்கள் மாறும்: கொள்கைகள் மாறும்; இலக்கணமே மாறும். இவற்றை யெல்லாம் உணர்வதற்குப் பழைய நூலறிவு மாத்திரம் போதாது. உலகமே ஒரு பெரிய புத்தகம். அதை உணராவிட்டால் வாத்தியார் படித்த புத்தகங்கள் அவ்வளவும் பயன்படாமற் போய்விடும். ஆகையால் எல்லாவற்றையும் சொல்லிவிட்டுக் கடைசியில் உலகிய லறிவு வேண்டுமென்று விதிக்கிறார்கள். வாத்தியார் ஐயா எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சுருக்கமாக ஞாபகப்படுத்திக் கொள்ள இதோ இலக்கணச் சூத்திரம் இருக்கிறது. குலன், அருள், தெய்வம், கொள்கை, மேன்மை, கலைபயில் தெளிவு, கட்டுரை வன்மை~ நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும், உலகியல் அறிவோடு உயர்குணம் இனையவும் அமைபவன் நூல்உரை ஆசிரி யன்னே. [நிறைகோல்_(தராசு,மாட்சி)பெருமை. இனைய~ இத்தகையவை.] 5. வாத்தியார் ஐயா எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லுவதோடு நில்லாமல் இலக்கணம் எழுதினவர்கள்,“எப்படி இருக்கக்கூடாது?” என் றும் கூறுகிறார்கள். அப்படிச் சொல்லும்பொழுதும் கெட்ட வாத்தியாரின் குணங்களையும் தொழில்களையும் சொல்லிவிட்டு, உபமானங்களின் மூலமாகவும் பொல் லாத வாத்தியார்கள் இப்படி இருப்பார்கள் என்று தெரிவிக்கிறார்கள். நல்ல குணங்கள் இல்லாமல் இருந்தால் பிள்ளை களுக்கு அவரிடத்தில் வேலை இல்லை; வெறும் படிப்பை மாத்திரம் கற்றுக் கொள்வது என்பது பழைய தமிழ் நாட்டில் இல்லை. நடை, உடை , பாவனை எல்லா வற்றிலும் நல்லவைகளைப் பிள்ளைகள் ஆசிரியரிடத்தில் கற்றுக்கொள்வார்கள். தாம் கற்ற கல்வியை ரூபா, அணா, பைசாவாக மாற்றுவது அக்காலத்தவர்கள் நோக்கம் அல்ல.கல்வியை வாழ்க்கையாக மாற்று வார்கள். கற்றவற்றைச் சோதனையிடுவதையே வாழ்க்கையாக எண்ணுவார்கள்.வாழ்க்கை முழுவதும் பயன்படும் கல்வியைச் சிறந்த குணங்களைப் பெற்ற ஆசிரியர்களிடம் கற்கவேண்டுமே யொழியச் சாதாரண மனிதர்களிடம் கற்பதில் சிறப்பு ஒன்றும் இல்லை. சிறந்த குணங்கள் இல்லாவிட்டாலும், குற்ற மில்லையென்று வாத்தியார் ஐயா ஒருவரிடம் குழந்தை களை ஒப்பிக்கிறோம்.‘லட்சிய வாழ்க்கைக்குரிய வழியை கற்றுத் தரவேண்டாம்; சாமான்ய வாழ்க்கைக் குப் போதியவற்றைக் கற்பித்தால் போதும்’ என்று எண்ணுகிறோம். அந்த வாத்தியார் கெட்ட குணம் உடையவராக இருந்தால் பையனுக்கு முதலில் அது தானே படியும்? இளம் பருவத்தில் நல்லது ஏறா விட்டாலும் கெட்ட பழக்கங்கள் மிக விரைவாக ஏறி விடும். ஆகையால், ‘வாத்தியார் ஐயா ஒரு மகாத்மா வாக இல்லாமற் போனாலும் குற்றம் இல்லை;போக்கிரி யாக இருக்கக்கூடாது’.என்று நாம் நினைக்கிறோம். அதையே இலக்கணக்காரர்களும் சொல்கிறார்கள். வாத்தியார் மற்றவர்களுடைய நலத்தைக் கண்டு பொறாமை கொள்ளும் பேர்வழியாக இருக்கக்கூடாது. பையனே ஆசிரியரைவிடச் சில சமயங்களில் அறிவுத் திறன் உடையவனாக இருக்கும்படி நேர்ந்துவிட்டால் பொறாமைக் குணமுள்ள ஆசிரியர் சும்மா இருப்பாரா? ஆபத்து வந்துவிடும். அதுமட்டும் அல்ல. உலகத்தில் எத்தனையோ ஆசிரியர்கள் இருக்கிறார்கள். எல்லோ ரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. ஏற்றத் தாழ்வு இருப்பது இயல்பு. தம்மைவிடக் கல்வி யறிவிலோ, பொருள் நிலையிலோ உயர்வையுடைய ஆசிரியர் ஒருவர் பக்கத்தில் வாழ்பவராகவோ, அடுத்த வீட்டுப் பையனுக்குச் சொல்லிக் கொடுப்பவராகவோ இருந்து விட்டால் பொறாமைக்கார வாத்தியார் ஐயா என்ன செய்வார், தெரியுமா? தினந்தோறும் அவரைப் பற்றிக் குறை கூறுவார்; பாடம் பாதி நேரம் நடந் தால், ‘அவனுக்கு என்ன தெரியும்? சுத்த முட்டாள். அவனிடம் வாசிக்கிறவன் உருப்பட்டாற் போலத் தான்!’ என்ற பாடம் பாதி நேரத்தைக் கபளீகரித்து விடும். பையன் படிப்புக் கெட்டுப் போவதோடுகூட, வாத்தியார் ஐயா சொன்ன சமாசாரங்களைப் பலர் காதில் விழும்படி செய்யும் ஊக்கம் அவனுக்கு உண் டாகிவிடும். அதன் பயன் வீண் கலகமும் மனஸ் தாபமுமே. வாத்தியாருக்குப் பேராசை கூடாது. மாணாக்கன் பெரிய செல்வனாக இருக்கலாம். அவன் வாத்தியார் ஐயாவிடம் தானாக மதிப்பு வைத்து எது வேண்டு மானாலும் தரலாம். அவன் கொடுப்பதைப் பெறுவது தான் நல்லது. அவன் சொத்திலே தமக்கும் ஒரு பங்கு உண்டென்று உரிமை பாராட்டுபவரைப் போலச் சில ஆசிரியர்கள் பேசுவார்கள். ‘எனக்கு நூறு ரூபாய் தரக் கூடாதோ? இவனுக்குப் பணமா இல்லை? கொடுத்தால் குறைந்து விடுமா? நான் வாங்கிக் கொள்ளத் தகாதவனா?" என்று கேட்பார்கள். அவன் பணக்காரனாக இருப்பதற்கு வாத்தியார் ஐயாவா காரணம்? அவருடைய பாடத்திற்கும் அவ னுடைய பணத்திற்கும் என்ன சம்பந்தம்? ஆகவே, அவாவை உடையவரை ஆசிரியர் பதவியில் வைத் திருக்கக் கூடாதென்று தமிழர்கள் சொல்லியிருக்கிறார் கள். ’கொடுக்க வில்லையே!’ என்ற குறை வாத்தியார் ஐயா உள்ளத்திலே தோன்றிவிட்டால், பிறகு அவர் எப்படி நன்றாகக் கல்வியைக் கற்பிக்க முடியும்? அடுத்தபடியாக வாத்தியார் ஐயாவுக்கு விரோதி வஞ்சகம். ஆசிரியர் உண்மையான ஞானம் வாய்ந் தவராக இருக்கவேண்டும். ஆசிரியர் கூட்டத்தில் அடிப்படையில் இருப்பவர் போதகாசிரியர்; மேற்படியில் இருப்பவர் ஞானாசிரியர். அவர்கள் ஒரே சாதியினர். ஆகையால் உள்ளத்தால் பொய்யாது ஒழுகவேண்டி யது அவர்கள் கடமை. நேர்மைக் குணம் அவர் களுக்கு இன்றியமையாதது. தெரிந்ததை மறைத்து வைப்பதும், மாணாக்கனை வஞ்சிப்பதும் ஆசிரியரைப் பாவிகளாக்கிவிடும். மெய்யன்பு உடையவர்களிடம் வஞ்சகம் இராது. மாணாக்கர்களைச் சொந்தப்பிள்ளை களைப் போலப் பாதுகாக்கக் கங்கணம் கட்டிக் கொண்ட வாத்தியார் ஐயா அந்த மாணாக்கர்களிடத் தில் அன்பில்லாமல் பழகுவது நியாயமன்று. ஆகவே, வஞ்சகம் அவரிடத்தில் எள்ளளவும் தலைகாட்டக் கூடாது. மெத்தென்று விஷயங்களைக் கற்பிக்காமல் மாணாக்கர்களைப் பயமுறுத்திக் கற்பித்தல் கூடாது. வாத்தியார் ஐயாவின் குரலைக்கேட்டால் மாணாக்கர்கள் நடுங்கி விடுவார்களென்று சொல்வது அவருடைய பெருமைக்குக் காரணமாகாது. இனிமையாகப் பேசத் தெரியாதவன் வாத்தியார் வேலைக்கே வரக்கூடாது. வாத்தியார் வேலை முழுவதும் நாவில் இருக்கிறது; அந்த நாக்கு எவ்வளவு மிருதுவாக இருக்கிறது! பின்னும் அதில் இனிமை சேரவேண்டும். கடுமை யான பேச்சினால் அச்சத்தை உண்டாக்கும் வாத்தியார் ஐயா, தம்முடைய பலவீனத்தைத்தான் வெளிப்படுத்தினவர் ஆகிறார். அறிவுப் பலமும், ஒழுக்க உயர்வும் உடையவர்கள் அச்சம் உண்டாகும்படி வார்த்தையாட மாட்டார்கள். 6 முன் நல்ல ஆசிரியர்களுக்கு வேண்டுமென்று மொழிந்த குணங்கள் இல்லாமையும், இழிந்த குணத் தோடு கூடிய இயல்பும், பொறாமையும், பேராசையும், அச்சமுண்டாகப் பேசுவதும் கெட்ட வாத்தியாருடைய லட்சணமென்று சொன்ன இலக்கண நூலாசிரியர் கள், மேலும் அவரைக் கழற்குடம், மடற்பனை, பருத்திக்குண்டிகை, முடத்தெங்கு என்று வைகிறார் கள். “நாயே, பேயே, கழுதையே” என்று ஒருவனை அவன் குணங்களுக்கு ஏற்ற உபமானங்களால் நாம் அழைக்கும்போது, “ஆகா, என்ன அழகான உவமை!” என்றா கேட்பவர்கள் நினைக்கிறார்கள்? அதை வசவென்று உலக சம்பிரதாயத்தில் சொல் கிறோம். அந்த மாதிரியே உபமான மென்ற உருவத் தில் மேலே சொன்ன கழற்குடம் முதலிய வார்த்தை களால் கெட்ட வாத்தியாரைப் பெரியவர்கள் சொல்கிறார்கள். வசவென்று சொன்னாலும் ஒன்றுதான்; உபமானம் என்று சொன்னாலும் ஒன்றுதான். ஏன் அப்படிச் சொன்னார்கல் என்பதைக் கவனிக்கலாம். பழைய காலத்தில் எந்தப் பொருள்களையேனும் கணக்குப் பண்ண வேண்டுமானால் கழற்சிக்காயை வைத்துக்கொண்டு எண்ணுவது ஒரு வழக்கம். ஒவ் வொன்றாக எண்ணும்போது ஒவ்வொரு கழற்சிக் காயை ஒரு குடத்திற்குள் போடுவார்கள். இப்படிப் போட்ட கழற்சிக்காயகளை கடைசியில் எடுத்து எண்ணுவார்கள். கழற்சிக்காய்களில் எல்லாம் ஒரே அளவாக இருப்பதில்லை. சின்னதும் இருக்கும், பெரியதும் இருக்கும். நல்ல உருண்டையாகச் சில இருக்கும்; சில ஒழுங்கற்ற உருவத்தோடு இருக்கும். முதலில் குடத்திலே போடும்போது எந்த முறையில் காய்கள் விழுகின்றனவோ அதே வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக மீட்டும் எடுக்கும்போது வருவது இல்லை. ஒரேயடியாகச் சேர்ந்து விழுந்துவிடும். போடும்போது விழுந்த முறைப்படியே எடுக்கும்போதும் வரவேண்டு மென்றால் கழற்குடத்தில் நடக்காது. செங்கல்லாக இருந்தால் ஒன்றன் மேல் ஒன்றை அடுக்கி மீட்டும் அப்படியே எடுக்கலாம். கழற்சிக்காய் ஒன்றனோடு ஒன்று ஒட்டாது; போட்டஇடத்தில் இராது. ஆகவே எடுக்கும்போது முறைமாறி வருவதிலும் பல சேர்ந்து விழுவதிலும் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. கழற்சிக்காய் பெய்த குடத்தில் காணப்படும் இந்த முறைமாற்றம் போலி வாத்தியார் ஐயாவிடம் இருக் கும். அவர் வாசித்த காலத்தில் இன்னதன் பின் இது என்ற முறைப்படியே ஒழுங்காகக் கற்றுக் கொண் டிருப்பார். சொல்லிக் கொடுக்கும்போதோ, அந்த முறையெல்லாம் மறந்து போய்விடும். தெரிந்த வற்றைத்தான் சொல்லிக் கொடுப்பார். ஆனால் முறைமாறிப் போய்விடும். ஒவ்வொன்றாகச் சொல்லு வதை விட்டு ஒரேயடியாகப் பல விஷயங்களைத் திணித்துவிடுவார். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்று முறையாகச் சொல்லிக் கொடுக்காமல் வகுத்தலிலிருந்து ஆரம்பித்தால் பையனுக்கு ஒன்றுமே வராது. இலக்கிய இலக்கணத்திலும் இப்படி முறை உண்டு. அந்த முறை பிறழ்ந்தால் மாணாக்கனுக்கு வீண் சந்தேகங்கள் கிளம்பும். முறை மாறிச் சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரைக் கழற் குடத்தோடு ஒப்பிட்டுப் பேசுவதில் பிழை என்ன? பெய்த முறை அன்றிப் பிறழ உடன் தரும் செய்தி சுழற்பெய் குடத்தின் சீரே. [பெய்தல் ~ இடுதல், பிறழ ~ மாறும்படி. உடன் தரும் ~ ஒருங்கே கொடுக்கும். செய்தி ~ இயல்பு.] இன்னும் சில வாத்தியார்கள் உண்டு. நன்றாகப் படித்திருப்பார்கள். ஆனால் அவரிடம் உள்ள கல்வியை எளிதில் நாம் பெற முடியாது. அவர்களிடன் நடையாய் நடந்து அவர்களுடைய கோபதாபங்களுக்கு உட்பட் டுக் கற்றுக் கொள்ளவேண்டும். அவர்களாக மனம் வந்து சொல்லிக் கொடுத்தால் ஏதாவது தெரிந்து கொள்ளலாம். மாணாக்கன் சொந்த முயற்சியினாலும் பக்தியினாலும் அவர்கள் உள்ளத்தைக் கனிவிக்க இயலாது. இந்த இனத்தாரை இலக்கணக்காரர்கள் பனைமரம் என்று சொல்கிறார்கள். மடல் அடர்ந்து நிற்கும் பனை மரத்தில் பன நுங்கோ பழமோ இருக்கிறது. விடுவிடுவென்று ஏறினோம், பறித்தோம், தின்றோம் என்பதற்கு இல்லையே! எவ்வளவு கஷ்டப்பட்டு உடம்பிலே காயத்தை ஏற்றுக்கொண்டு காயைப் பறிக்க வேண்டும்! இல்லாவிட்டால் பனம்பழம் தானே விழும்வரையில் காத்திருக்க வேண்டியதுதான். பனைமர வாத்தியாரால் மாணாக்கர்களுக்கு என்ன பிரயோசனம் இருக்கப் போகிறது? தானே தரக்கொளின் அல்லது தன்பால் மேவிக் கொளக்கொடா இடந்தது மடற்பனை. பருத்திக் குடுக்கை வாத்தியாரென்று ஒர் சாதியை இலக்கண நூலில் காணலாம். பழைய காலத்தில் சிக்கிமுக்கிக் கல்லால் நெருப்பு உண்டாக்கி வந்தார்கள். சிக்கிமுக்கிக் கல்லை உராயும்போது நெருப்புப் பொறி உண்டாகும். அதைப் பருத்தியிலே பற்றச் செய்து அதிலிருந்து தேங்காய் நார், உமி முதலியவைகளில் பற்ற வைப்பது வழக்கம். இந்தக் காரியத்துக்காக ஒரு குடுக்கையில் பருத்தியை அடைத்து வைத்திருப்பார்கள். அதிலிருந்து கொஞ் சங் கொஞ்சமாக அவ்வப்போது பஞ்சை எடுத்து உபயோகிப்பார்கள். பருத்திக் குடுக்கையில் பஞ்சை அடைப்பதும் கஷ்டம்; அதிலிருந்து எடுப்பதும் கஷ்டம். கொஞ்சங் கொஞ்சமாகத்தான் அடைக்க வேண்டும்; அப்படியே சிறிது சிறிதாகவே எடுக்கவேண்டும். பருத்திக் குடுக்கை வாத்தியாரிடத்தில் உள்ள படிப்பும் அந்தப் பஞ்சைப் போன்றதே அவர் மூளை கொஞ்சங் கொஞ்சமாகவே கல்வியை ஏற்றுக் கொண்டிருக்கும். பாடம் சொல்லித் தரும்போதும் சிறிது சிறிதாகவே சொல்லிக் கொடுப்பார். மாணாக்கனுக்கு எவ்வளவு ஆர்வம் இருந்தாலும் சரி, அவருடைய ஆமை நடை மாறாது. பழங்காலத்தில் இப்படிச் சில தமிழாசிரியர் கள் இருந்தார்கள். ஏதாவது ஒரு நூலைச் சிரமப் பட்டுக் கொஞ்சங் கொஞ்சமாகப் படித்துத் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். அவர்களிடம் யாரேனும் போய்ப் பத்துப் பாடல்களை ஒருங்கே கேட்க வேண்டுமென்று ஆசைப்பட்டால், “தமிழ் கிள்ளுக் கீரையா? சுலபமாக வாரி இறைக்கக் கடலைச் சுண்டலா? நான் எவ்வளவு கஷ்டப்பட்டுக் கற்றுக் கொண்டேன், தெரியுமா?” என்று சொல்வார்கள். அவர்கள் கஷ்டப்பட்டதற்கு மாணாக்கன் எப்படிப் பிணையாவான்? பருத்திக் குடுக்கையின் இயல்பைச் சொல்லும் சூத்திரம் பின் வருமாறு: அரிதிற் பெயக்கொண்டு அப்பொருள் தான்பிறர்க்கு எளிதீ வில்லது பருத்திக் குண்டிகை. [அரிதின் ~ கஷ்டத்தோடு, பெய~செலுத்த, எளிது ஈவு இல்லது ~ எளிதிலே கொடுக்கும் இயல்பு இல்லாதது.] முடத்தெங்கு வாத்தியார் ஒருவகை. கண்ண பிரானைப்பற்றி ஒரு கதை கேட்டிருக்கிறோம். சத்திய பாமைக்காக அப்பெருமான் பாரிசாத மரம் கொணர்ந்து அத்தேவி வீட்டில் நட்டானாம். அது வளைந்து வளர்ந்து ருக்மணியின் வீட்டில் பூவை உதிர்த்ததாம். முடத்தெங்கு என்பதற்கு வளைந்த தென்னமரம் என்று பொருள். வேர் படர்ந்த இடம் ஒன்றானால் தேங்காய் விழும் இடம் வேறாக இருக்கும். ஒருவன் தன் வீட்டுப் புறக்கடையில் மரத்தை வைத்துத் தண்ணீர் ஊற்றிக் காப்பாற்றினால் முடத்தெங்கு அடுத்த வீட்டுப் புறக்கடையில் தலையை நீட்டும். அதிலிருந்து விழும் மட்டையோ தேங் காயோ அடுத்த வீட்டுச் சொத்தாகப் போய்விடும். எவ்வளவோ பயபக்தியோடு வந்து வழிபடும் மாணாக்கனைப் புறக்கணித்து விட்டு, வருவார் போவோ ருக்கெல்லாம் உபதேசம் செய்யும் வாத்தியார் ஐயாவை முடத்தெங்கென்று சொல்கிறார்கள். பல்வகை உதவி வழிபடு பண்பின் அல்லோர்க்கு அளிக்கும் அதுமுடத் தெங்கே. வழிபடும் மாணாக்கன் அறிவுப் பசியோடு ஏமாந்து நிற்கச் செய்வது பாவம் அல்லவா? போலி வாத்தியாரின் இலக்கணங்களைத் தொகுத்து இலக்கண நூல் சொல்வதைப் பாருங்கள்: மொழி குணம் இன்மையும் இழி குண இயல்பும் அழுக்காறு அவாவஞ்சம் அச்சம் ஆடலும் கழற்றும் மடற்பனை பருத்திக் குண்டிகை முடத்தெங்கு ஒப்பென முரண்கொள் சிந்தையும் உடையோர் இலர் ஆ சிரியர்ஆ குதலே. [அச்சம் ஆடல் ~ பயம் உண்டாகப் பேசுதல்.] ‘இந்தக் குணங்கள் கெட்ட வாத்தியார்களுக்கு உரியன’ என்று சொல்லவில்லை; இந்த லட்சணங்களை உடையவர்கள், ஆசிரியர் ஆகலாம் என்ற சிந்தனைக்கே உட்படாதவர்களாம். ஆசிரியர் ஆகுதல் அவர்பால் இல்லையென்று சாதுரியமாகச் சொல்கிறது சூத்திரம். எல்லாவற்றையும் பார்க்கும்போது ‘வாத்தியார் ஐயா’ என்ற பட்டம் சுலபமாகக் கிடைக்கக் கூடிய தென்று தெரியவில்லை. வாத்தியார் ஐயா தொழிலாளி அல்ல. தமிழர் கொள்கைப்படி அவர் ஒரு தாதா; வள்ளல். மாணாக் கர்கள் இரவலர். திருவள்ளுவர், “பணக்காரருக்கு முன்னால் நின்று யாசிக்கும் இரவலரைப்போல் ஆசிரி யரிடம் கல்வியை யாசித்து ஏங்கி நின்று கற்றவர் மேன்மை அடைவார்; அப்படிக் கல்லாதவர் கடைப் பட்டவர்” என்று சொல்கிறார். பாடம் சொல்லிக் கொடுப்பது ஒரு தொழில் அல்ல; கலை. அது ஒரு தியாகம். அழியும் பொருட் செல்வத்தை வழங்கும் வள்ளலைக் காட்டிலும் அழியாத கல்விச் செல்வத்தை வழங்கும் வள்ளல் பெரியவர்; சமுதாயத்தின் கொழுந்து அவர். அவர் பாடம் சொல்வதை “ஈதல்” என்றே இலக்கணக்காரர் சொல்கிறார். “கல்விக் கொடை எப்படி நிகழவேண்டும்?” என்பதை இலக்கணக்காரர்கள் வகுத்திருக்கிறார்கள். வாத்தியார் ஐயா பாடம் சொல்லிக் கொடுக்கும் முறைதான் அது. பாடம் சொல்லும் காலம் ஏற்றதாக இருக்க வேண்டும். மூளையைப் பொறுத்த விஷயம் ஆகையால் இயற்கையின் சார்பினால் சோர்வோ, துன்பமோ இல்லாத காலம் நன்மை பயக்கும். சந்தையிரைச்ச லுள்ள இடத்திற்கு நடுவே பள்ளிக்கூடம் இருக்க லாமா? கல்விக்கு மன ஒருமைப்பாடு அவசியம். கடவுளைக் கும்பிடும் கோயில் நல்ல இடத்தில் அமைந் திருப்பதைப்போலக் கல்விச் சாலையும் நல்ல இடத்தில் இருக்க வேண்டும். நல்ல இடத்தைத் தேர்ந்தெடுப் பது அந்தக் காலத்தில் வாத்தியார் கடமை. பழங்காலத்து வாத்தியார் ஐயா பாடம் சொல்லத் தொடங்குகிறார். நல்ல ஆசனத்தில் அமர்கிறார். கடவுளுக்கு முத லில் ஆசனத்தைச் சமர்ப்பிக்கிறோம் அல்லவா? பிறகு அவர் தெய்வத்தைத் தியானித்துக் கொள்கிறார். தமக்கும் பிறர்க்கும் நல்ல பயனை உண்டாக்கும் ஒரு கைங்கரியத்தைத் தொடங்குபவர் கிரமமாகத் தெய்வ வணக்கத்தோடு ஆரம்பிப்பதுதானே நல்லது? பாடம் சொல்லும்போது எந்த விஷயத்தைப் பற்றிச் சொல்லப்போகிறோம், எப்படிச் சொல்ல வேண்டும் என்று வாத்தியார் ஐயா திட்டம் பண்ணிக் கொள்வார். சொல்லுகிற விஷயம், முறை இந்த இரண்டையும் இக்காலத்தில் கூட வாத்தியார்கள் மேலதிகாரிக்குக் காட்டுவதற்காக எழுதிவைத்துக் கொள்கிறார்கள். உரைக்கவேண்டிய பொருளை உள்ளத்தில் அமைத்துக்கொண்டு பாடம் சொல்ல ஆரம்பிப்பார். அவருக்கு அதில் சந்தேகம் இராது; அதனால் விடுவிடுவென்று சொல்லிக்கொண்டு போக லாம். அப்படிச் செய்தால் மாணாக்கர்களுக்குப் புரிவது கஷ்டம். ஆகையால் விரையாமல் பாடம் சொல்வார். மாணாக்கர்களெல்லாம் ஒரே மாதிரியான அறிவு படைத்தவர்களாக இருக்கமாட்டார்கள். சிலர் தீவிரமான அறிவுடையவர்களாக இருக்கக் கூடும்; சிலர் சற்று மந்தமாக இருக்கலாம். பாடம் சொன்ன வுடன் கிரகிக்கவில்லையே என்று வாத்தியார் ஐயா கோபித்துக் கொள்ள மாட்டார். பாடம் சொல்வதிலே அவருக்கு ஓர் இன்பம் உண்டு. ஆகையால் விருப்பத் தோடு சொல்வார். மலரைப் போன்ற பண்புடைய அவர் பாடம் சொல்லுகையில் முகம் மலர்ச்சியாக இருக்கும். பாடம் கேட்கிறவன் எப்படி விஷயத்தை ஏற்றுக் கொள்கிறான் என்பதை ஆசிரியர் நன்றாகக் கவனிப்பார். அவன் தகுதிக்கு ஏற்றபடி, அவனுக்கு எப்படிச் சொன்னால் விளங்கும் என்பதை யோசித்துப் பாடஞ் சொல்வார். அவன் சக்திக்கு எவ்வளவு சொல் லித் தந்தால் போதுமோ அந்த அளவையும் தெரிந்து, அவன் உள்ளம் கொள்ளும்படி சொல்வார். சொல் லும்போது மனம் கோணாமல் நடுநிலையில் நின்று வித்தியா தானமாகிய தொண்டைச் செய்து வாழ்வார். இவற்றையெல்லாம் சேர்த்து ஒரு சூத்திரம் சொல்லுகிறது. ஈதல் இயல்பே இயம்புங் காலைக் காலமும் இடனும் வாலிதின் நோக்கிச் சிறந்துழி இருந்துதன் தெய்வம் வாழ்த்தி உரைக்கப் படும்பொருள் உள்ளத்து அமைத்து விரையான் வெகுளான் விரும்பி முகம்மலர்ந்து கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளங்கொளக் கோட்டமில் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப. (ஈதல்~பாடம் சொல்லுதல். வாலிதின்~ நன்றாக. சிறந்துழி~சிறந்த இடத்தில். கொள்வோன்~மாணாக்கன். கோட்டம்~பட்சபாதம். மனத்தின்~மனத்தோடு. கொடுத்தல்~கொடுக்க; சொல்லித்தரவேண்டும்,என்ப~ என்று பெரியவர்கள் சொல்வார்கள்.] இந்த மாதிரியான வாத்தியார் ஐயா இன்று தமிழ் நாட்டில் இருந்தால், ~ அதைப்பற்றி இப்போது நினைத்து என்ன பிரயோசனம்? பழைய காலத்தில் தான் இப்படி இருந்தார்கள் என்பது என்ன நிச்சயம்? இருந்தார்களோ, இல்லையோ, வாத்தியார் ஐயா இன்னபடி இருக்கவேணடும் என்று ஒரு திட்டம் வகுத்திருக்கிறார்கள்; அவ்வாறு நடக்க முயன்றும் இருப்பாரகள். அந்தத் திட்டத்தின் உயர்வையும் அதை அமைத்துக் கொண்டவர்களின் வாழ்க்கை லட்சி யத்தையும் நாம் போற்றிப் பாராட்ட வேண்டும். நல்லதை நல்லதென்று சொல்வதில் லோபத்தனம் எதற்கு? பொழுதும் போதும் தமிழர், காலத்தைச் சிறுபொழுது பெரும் பொழுது என்று இரண்டு பிரிவாகப் பிரித்தனர். அவற்றுள் சிறுபொழுது ஆறு; பெரும்பொழுது ஆறு. சிறுபொழுது ஐந்தென்பது ஒரு சாரார் கொள்கை. வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்னும் ஆறும் சிறுபொழுதுகளாம். இவை ஒவ்வொன்றும் பப்பத்து நாழிகைகளை உடை யன. பெரும்பொழுதை இருதுவென்று கூறுவர் வட நூலார். அவை கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்பன. இவை முறையே ஆவணி முதலாக இரண்டு இரண்டு மாதங்களை உடையன. தமிழ் அகப்பொருள் இலக்கணத்தில் இந்தப் பொழுதுகளுள் இன்ன இன்னவை, இன்ன இன்ன திணையைச் சார்ந்தன என்ற வரையறை சொல்லப் பெறும். முதல், கரு, உரி என்னும் மூவகைப் பொருள்களில் இவை முதற்பொருளைச் சாரும். பொழுதை அளந்தறிவதற்குப் பண்டைத் தமிழர்கள் ‘கன்னல்’ என்ற ஒரு கருவியைத் துணையாகக் கொண்டனர். நீர் நிறைந்த பாத்திரத்தின் அடியிலே சிறு துவாரமிட்டு அதன் வழியே ஒரு பெற்றிப் படத் துளிக்கும் நீரைக்கொண்டு நாழிகையை அறிந்தனர்; சிறுசிறு துளியாக வரும் அமைப்பை உடையதாதலின் அந்த இயந்திரம் குறுநீர்க் கன்னல் என்றும் கூறப்படும், நாழிகை வட்டில் என்னும் பெயரும் அதற்கு உண்டு. இக் கருவியைக் கொண்டு நாழிகையை அறிந்து கூறுவதற்கென்று அரசர்களூடைய அரண்மனையில் நாழிகைக் கணக்கர் என்னும் ஒருவகை ஊழியர் இருந்து வந்தனர், பொழுதளந்து அறியும் பொய்யா மாக்கன் தொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்நின் குறுநீர்க் கன்னல் இனைத்தென்று இசைப்ப (முல்லைப் பாட்டு) என்பதைக் காண்க. நீர்க்கன்னலைப் போல மணல் இட்டு வைத்த வட்டிலாலும் காலத்தை அறியும் வழக்கம் இருந்தது. இவற்றை யன்றி வேறு வகையான நுண்ணிய கருவிகளும் அக் காலத்தில் இருந்தன என்று தெரியவருகின்றது. பெருங்கதையில் காலேந்திரம் , கடிகையாரம் என்னும் இரண்டு கருவிகள் சொல்லப் படுகின்றன. அவற்றுள் பின்னதாகிய கடிகையாரம் இக் காலத்துக் கடிகாரத்தைப் போன்றதொரு கருவியாக இருத்தலும் கூடும். - பொழுது அளந்து அறியும் பொய் பேசாத வேலைக்காரர்கள் அரசனைத் தொழுது காணும் கையை உடையவர்களாய் வெளிப்படையாக வாழ்த்தி, அலை வீசுகின்ற நீரை எல்லையாக உடைய உலகத்தை வெல்லும் பொருட்டுச் செல்லும் மன்னர்பிரானே, நீ செல்வதற்கு ஏற்றதென்று குறு நீர்க் கன்னல் சொல்லும் காலம் இன்ன அளவுடையது (இத்தனை நாழிகை ) என்று கூற. மேலே கூறியவை யாவும் செயற்கைக் கருவிகள், காலத்தை அறிவதற்கு இயற்கையிலேயே பல கருவிகள் அமைந்துள்ளன. யாமந்தோறும் பொழுதை அறிவிக்கும் யாமக் கோழியும், விடியற் காலத்திற் கரையும் காக்கையும் ஒரு வகையாகப் பொழுதைப் புலப்படுத்துகின்றன. இவை யாவற்றினும் சிறந் தவை மலர்கள். மலர்கள் தத்தமக்கு ஏற்ற போதிலே மலர்தலையும் குவிதலையும் உடையன: அதனாலன்றோ, ‘பொழுதின் முகமலர் வுடையது பூவே’ என்ற சூத்திரம் எழுந்தது? இயற்கைப் பூம்பொழில் எப்பொழுதும் மலர்ச் சியை உடையது. பகலிலே சில மலர்கள் மலர் கின்றன; இரவில் அவை குவிந்து விட்டால், வேறு பல மலர்கள் மலர்ந்து தம் மணத்தைப் பரப்புகின்றன. இவற்றால் எப்பொழுதும் நிலமகள் பூமகளாகவே விளங்குகின்றனள். மரநூல் வல்ல கலைஞர் மலர்கள் தத்தமக்கென வரையறையுள்ள ஒரு காலத்தில் மலர்வதிலும் அவ் வாறே குவிவதிலும் தவறுவது இல்லை யென்று கூறு கின்றனர்; ஒரு நாளில் இன்ன இன்ன போதில் இன்ன இன்ன மலர் மலருமென்ற கணக்கையும் அறிந்திருக்கின்றனர். இங்ஙனம் அறிந்த பல மலர் களின் தொகுதியைக் கொண்டு மேல்நாட்டுத் தாவர சாஸ்திர வல்லுநராகிய ‘லின்னாய்ஸ்’(Linnaeus) என் பவர் ஒரு மலர்க் கடிகாரத்தை அறிவித்திருக்கிறார். அக்கடிகாரம் ஒவ்வொரு மணியிலும் மலரும் ஒவ் வொரு மலரை உடையது. இத்துறையில் ஆராய்ந்த வேறோர் அறிஞர் பாரத நாட்டில் மலரும் மலர்களுள் ஒவ்வொரு மணியிலும் மலர்கின்ற பல மலர்களின் பெயர்களைத் தொகுத்து ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் பல ஆண்டுகளுக்கு முன் எழுதியுள்ளார். அவர் குறித்த மலர்களுள் நாம் அறிந்த சில மலர்களும் அவற்றிற்குரிய காலமும் வருமாறு: (Parijatha or Nectanthis Tristis) மலர் மலரும் நேரம் 1. தாமரை சூரிய உதய காலம் 2. சண்பகம் காலை 6~7 மணிக்கு இடையில் 3. வாழைப்பூ மாலை 5~6 மணிக்கு இடையில் 4. பவழமல்லிகை மாலை 6~7 மணிக்கு இடையில் 5. மல்லிகை இரவு 7~8 மணிக்கு இடையில். மேலே கண்ட உண்மையைத் தமிழர் பண்டைக் காலத்தில் மிக நுணுகி ஆராய்ந்து அறிந்திருந்தனர். தமிழ் நூல்களை ஆராய்ந்தால் மலர்களால் மக்கல் போதை அறிந்து கொண்டமைக்குச் சான்றாகப் பல செய்திகளைக் காணலாம். சிறு பொழுதுக்குரிய மலர் களைப் போலவே பெரும் பொழுதுக்கு உரிய மலர்கள் இன்னவை யென்ற வரையரையும் உண்டு. இப்படிப் போதை அறிவதற்கு உரியதாக இருப்பதனால்தான் மலரும் பருவத்துள்ள பேரரும்பைப் போது என்று வழங்கினார்கள்; பெரும் பொழுதை அறிவிக்கும் காரணத்தால் மலருக்கு நாள் என்ற ஒரு பெயரும் உண்டாயிற்று. கதிரவனும் திங்களும் மேகம் முதலிய வற்றால் மறைந்த காலத்திலும், நாழிகைக் கணக்கர் அயர்ந்த காலத்திலும் இப் போதுகள் போதைத் தம் மலர்ச்சியினால் அறிவிப்பதினின்றும் பிறழ்வதில்லை. - See ‘The Floral Clock’ by S.N.K in the Benares Central Hindu College Magazine Decembe, 1908 ஐப்பசி கார்த்திகை மாதமாகிய கூதிர்ப் பருவத்தில் மழையும் குளிரும் மனிதனை வெளியிலே புறப்பட வொட்டாமற் செய்கின்றன; வானம் முழுதும் மேகப் படலங்கள் நிறைந்துள்ளன; சூரியனுடைய தரிசனம் கிடைப்பது மிக அரிதாக இருக்கிறது. வீட்டிலே உள்ள மகளிர் மாலைக் காலத்தில் விளக்கேற்றுதல் வழக்கம். திருமகள் விலாசத்தைத் தருவதற் கேற்ற அக் கடமையை அவர்கள் குறைவின்றிச் செய்வார் கள். மாலைக் காலம் வந்ததும் வராததும் அவர்களுக்கு எப்படித் தெரியும்? கடிகாரமா வீடு தோறும் இருக் கிறது? சிறிது நேரத்துக்கு முன் அவர்கள் தம் வீட்டிற்கு அயலிலுள்ள பிச்சியின் அரும்புகளைப் பறித்துப் பூந்தட்டிலே இட்டு வைத்திருக்கிறார்கள். அவை திடீரென்று மலர்ந்து மணங் கமழ்கின்றன! அது கண்ட மகளிர், ‘ஆ! மாலைக்காலம் வந்து விட்டது!’ என்ற மகிழ்ச்சியுடன் திருவிளக்கேற்றித் தெய்வம் தொழுகின்றனர். இந்தக் காட்சியையே நெடுநல்வாடை, மடவரல் மகளிர் பிடகைப் பெய்த செவ்வி அரும்பின் பைங்காற் பித்திகத்து அவ்விதழ் அவிழ்பதம் கமழப் பொழுதறிந்து இரும்புசெய் விளக்கின் ஈர்த்திரிக் கொளீஇ நெல்லும் மலரும் தூஉய்க்கை தொழுது மல்லல் ஆவணம் மாலை அயர* *மென்மையை உடைய பெண்கள் பூத்தட்டிலே வைத்த, பக்கு வத்தை உடைய அரும்பையுடைய பசிய காம்பை உடைய பிச்சியின் அழகிய இதழ்கள் மலரும் பருவத்திலே மணம் வீச, அதனால் பொழுதை உணர்ந்து, இரும்பினால் செய்த விளக்கில் எண்ணெயால் ஈரமான திரி யைக் கொளுத்தி, நெல்லும் மலரும் தூவிக் கைதொழுது வணங்கி, வளப்பம் மிக்க மடைவீதி மாலைப் பொழுதைக் கொண்டாட, என்ற பகுதியால் நமக்குக் காட்டுகின்றது. பிச்சிப் போது மாலைப் போதை அறிவிக்கும் கடிகாரமாக உதவுதலை இந்த நிகழ்ச்சியால் அறிகின்றோம். போது தெரி யாமையிற் குமுதமொடு சதவிதழ்ப் போதுமே இருபோதையும் தெரிக்கும் தடம்பனை உடுத்ததமிழ் வேளூர் (முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்) என்பதில் போது போதைத் தெரிவிக்குந் தன்மை எவ்வளவு அழகாகக் கூறப்படுகின்றது! தமிழ் நூல்களில் கண்ட மலர்க் கடிகாரத்தை ஆராய்கையில் தாமரை மலர் தன் நாயகனாகிய கதிரவன் எழும்போது தன் இதழ்க் கதவம் திறப்பதைக் காண்கிறோம். நெய்தற்பூ வைகறையிலே மலர்கின்றது.“வைகறை கட்கமழ் நெய்தல் ஊதி” என்பது திருமுருகாற்றுப்படை. கதிரவன் செல்லும் திசையையே நோக்கி நிற்கும் சூரிய காந்தியை நாம் அறிவோம்; அதைப் போன்ற மற்றொரு சிறு மலரும் இருப்பதைத் தமிழ் இலக்கியங்களிற் காணலாம். பலர் தினந்தோறும் நெருஞ்சி மலரைப் பார்க்கின்றனர்; காலால் மிதித்தும் செல்கின்றனர்; ஆனால் அது கதிரவன் உள்ள திசையை நோக்கியே தன் இதழ்களை விரித்து நிற்குமென்பதை அறிபவர் அரியர்; நெருஞ்சிப்பாலை வான்பூ ஏர்தரு சுடரி னெதிர்தந் தாங்கு (புறநானூறு) சுடரொடு திரிதரும் நெருஞ்சி (அகநானூறு) என்பவை இவ்வுண்மையை நமக்குத் தெரிவிக்கின்றன. பகற்போது இவை, இராப்போது இவையென் னும் வரையறையைத் தமிழ்ப் புலவர் நன்கறிந்து கூறியுள்ளனர். அந்திக்காலத்தில் மலரும் ஒருவகை மலர் அக்காரணம் பற்றியே அந்திமந்தாரை என்ற பெயர் பெற்றிருக்கிறது; நள்ளிரவில் மலர்ந்து மணக்கும் இருவாட்சிப் பூ(இருள் வாசி) நள்ளிருள் நாறி யென்னும் பெயர் பெற்றுள்ளது. கதிரவன் மறையும் பொழுதுக்கு முன்னதாகிய ஏற்பாட்டில் அந்திமந் தாரை மலர்வதை, வெந்தாறு பொன்னின் அந்திப் பூப்ப என்று அகநானூறு கூறுகின்றது. மாலைப் பொழுதென்பது சூரியன் மறைந்த பின் னர்இரவின் நடு யாமத்திற்கு முன்னர் உள்ள சிறு பொழுது.அந்தப் பொழுதை வருணிகும் புலவர்கள் அக்காலத்தில் மலரும் மலர்களையும் வருணித்திருக்கின்றனர். முல்லை மலரும் மாலை (குறுந்தொகை) என்னும் அடி, மாலைப் போதை முல்லைப்போதின் அடையாளத்தாற் குறிக்கின்றது. அம்முல்லையோடு செங்காந்தளும் மாலையில் மலர்தலை ஒரு நல்லிசைப் புலவர், பல்கதிர் மண்டிலம் பகல்செய்து ஆற்றிச் சேயுயர் பெருவரைச் சென்றவண் மறையப் பறவை பார்ப்புவயின் அடைய முல்லை முகைவாய் திறப்பப் பல்வயிற் றோன்றி* தொன்றுபு புதல்விளக் குறாஅ ………………………………. ஐதுவந் திசைக்கும் அருளில் மாலை. (நற்றிணை) *தோன்றி~செங்காந்தள் என வெளியிடுகின்றனர். இவற்றையன்றி ஆம்பல், குருக்கத்தி, தளவம் (செம்முல்லை) பிடவு புன்னை முதலியன மாலைப்போதைக் காட்டும் போதுகளாம். மாலைக்காலத்தில் தாமரை , நெய்தல் முதலிய மலர்கள் குவியும் . நள்ளிருளில் நொச்சிப்பூ உதிரும். பகற் பொழுதிலே பெரும்பாலும் விளக்கமான பலவகை நிறமுள்ள மலர்கள் மலருமென்பதும், இரவில் நல்ல மணமுள்ள போதுகள் மலருமென்பதும், மரநூலார் கண்டறிந்த உண்மை. மரவினத்தின் வளர்ச் சிக்கு வண்டுகள் தாதூதுதல் இன்றியமையாதது. அவை ஊதி ஒரு மலரிலுள்ள தாதை மற்றொரு மல ருக்குக் கொண்டுசென்று வைத்தால் அம்மலர் கரு வுற்றுக் காய்த்து கனிகின்றது. அதனால் மரவினங் கள் பல்குகின்றன. மலர்களின் நிறமும் மணமும் வண்டுகளைக் கவரும்பொருட்டுக் கடவுளால் அமைக் கப்பட்டவை. வண்டுகள் மலரை நிறத்தாற் கண்டு அடை யும் பொருட்டுப் பகற்போதுகள் பல நிறங்களை உடையனவாக உள்ளன; நிறத்தைக் காண இயலாத இரவில்மலர்களின் மணம் வண்டுகளை அழைக்கின்றது; அதனாலேதான் இரவில் மலரும் மலர்களிற் பெரும் பாலன வெண்ணிறமுடையனவாக இருக்கும்; அவை பலவகை நிறத்தைப் பெறுவதனால் ஒரு பயனும் இல்லையல்லவா? இவ்வரிய உண்மையை, இராப் பொழுதை வருணிக்கும் வாயிலாகக் கம்பர் தம் இராமாயணத்திலே, விரிந்தன தரந்தமுதல் வெண்மலர் (ஊர்தேடு படலம், 163) என்று புலப்படுத்துதல் பெருவியப்பை உண்டாக்குகின்றது. ** குறுந்தொகை 138. சிறுபொழுதுக்குரிய மலர்களைப்போலப் பெரும் பொழுதுகளுள் ஒவ்வொன்றற்கும் உரிய மலர்கள் இன்னவை என்று ஆராய்வதானால் அவ்வாராய்ச்சி மிக விரியும். அகப்பொருட் பனுவல்களிலே பருவங் களைப் பற்றிக் கூறப்படும் இடங்களிலுள்ள செய்தி களால் இதனை அறிந்து கொள்ளலாம். கார்காலத்தில் முல்லை, கொன்றை, கடம்பு, பிடவு, பிச்சி, குருந்து, தெறுழம்பூ முதலியன மலரும். கூதிர்ப் பருவத்தில் முசுண்டையும் பீர்க்கும் மலர்வதாக நெடுநல் வாடை உணர்த்துகின்றது. முன்பனிக்காலத்தில் அவரை ஈங்கை, கருவிளை முதலியன மலரும்; பனிக் காலத்தில் பகன்றை மலரும். இளவேனிற் பொழுதில் அசோகு, கோங்கு, மா, பாதிரி முதலியனவும், இரு வகை வேனிலிலும் இருப்பை, அதிரல் முதலியனவும் மலரும். இம்மலர்களில் சிலவற்றை அவை மலரும் காலத்தைப் பலப்படுத்தும் அடையோடு சேர்த்து வழங்குவதும் சான்றோர் மரபு. கார்நறும் கடம்பு (நற்றிணை) கார்நறுங் கொன்றை (புறநானூறு) வேனிற் பாதிரி (குறுந்தொகை) வேனில் அதிரல் (அகநானூறு) முருக்கின் வகையைச் சேர்ந்த பலாசம் பங்குனியில் மலருமென்பர் கம்பர்; பங்குனி மலர்ந்தொளிர் பலாசவன மொப்பார். (ஊர்தேடுபடலம், 70) மலைகளில் வாழும் குறவர் வேங்கை மலர் மலர்வதைக் கண்டு தாம் மணம் செய்தற்குரிய இளவேனிற் பருவம் வந்ததென்று அறிந்து மணம் புரிவர்; மண நாளைப் புலப்படுத்தும் கணியின் (சோதிடனின்) தன்மை அவ்வேங்கை மரத்தினிடம் இருப்பதால் அதனைக் கணிவேங்கை யென்று வழங்குவர். மலர்களைக் கொண்டு காலத்தை அறியும் இம்மரபு நீலகிரியில் வாழும் தொதுவரிடத்திலும் உண்டு. மலையிலே வளரும் குறிஞ்சியின் மலர் பன்னிரண்டு ஆண்டு களுக்கு ஒரு முறை மலருமென்றும், அங்ஙனம் மலரும் காலத்தை அளவாகக் கொண்டு அத்தொதுவர் தம் ஆயுளைக் கணக்கிட்டுக் கொள்வரென்றும் கூறுவர். இங்ஙனம், மலர்கள் போதையும் நாளையும் காட்டும் திறத்தைத் தமிழ் நூல்களின் வாயிலாக ஆராய ஆராய, பல அரிய செய்திகளும் அவற்றை நமக்கு வழங்கும் புலவர் பெருமக்களின் நுண்ணறி வும் மேன்மேலும் புலனாகி இன்பத்தையும் வியப்பையும் விளைவிக்கின்றன. எப்படி அளப்பது? சேலம் ஜில்லாவில் சிறிதளவு தூரம் காவிரி ஓடு கிறது. மிகவும் அகலமான காவிரி. அதன் இரு மருங்கும் உள்ள நிலம் பொன் கொழிக்கும். தமிழ் நாட்டில் உள்ள பிற இடங்களைக் காட்டிலும் அந்த இடத்தில் உள்ள நிலத்துக்கு விலை அதிகம். அந்தப் பக்கத்தில் உள்ளவர்கள் தங்கள் நிலத்தைப்பற்றி மிகவும் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள். “இப்போதெல்லாம் எங்கள் ஊரில் ஓர் ஏகரா நிலம் எவ்வளவு விற்கிறது தெரியுமா?” என்று கேட் பார் ஒருவர். மற்றவர் செங்கற்பட்டு ஜில்லாக்காரராக இருப்பார். “என்ன, அதிகமாகப் போனால் ஆயிர ரூபாய் இருக்குமா?” என்பார் அவர். “ஹ ஹ ஹ! நன்றாய்ச் சொன்னீர்கள். உங்க ளுக்கு நிலத்தைப்பற்றிய விவகாரமே தெரியாதுபோல் இருக்கிறது. யுத்தத்துக்கு முன்னாலேயே ஏகரா நாலா யிரம் ஐயாயிரம் என்று விற்ற இடமாக்கும்.” “என்ன ஐயா, புரளி பண்ணுகிறீர்? நிலமா இல்லை, வேறு ஏதாவதா?” என்று நண்பர் கேட்பார். “என்ன, ஐயாயிரம் என்று கேட்கிறபோதே வாயைப் பிளக்கிறீர்களே! இப்போது விற்கிற விலை யைக் கேட்டால் உங்களுக்கு மயக்கம் போட்டுவிடும் போல் இருக்கிறதே!” “குற்றம் இல்லை. சொல்லுங்கள் கேட்கிறேன். வேண்டுமானால் கொஞ்சம் குளிர்ந்த தண்ணீர் கொண்டுவந்து வைத்துக்கொள்கிறேன்; மயக்கம் வந்தால் தெளித்து எழுப்பிவிடுங்கள்” என்று வேடிக்கையாகச் சொல்வார் செங்கற்பட்டுக்காரர். “பன்னிரண்டாயிரம் முதல் பதினையாயிரம் வரையில் ஏகர் விலைபோகிறது. மகா மட்டமான நில மாக இருந்தாலும் எண்ணாயிரத்துக்குக் குறைவில்லை.” இத்தகைய பேச்சினிடையே நிலத்தின் பெரு மையை அளக்கிற விதம் எப்படி இருக்கிறது? எல் லாம் ரூபா அணா பைசாதான். நிலத்தை விளை நிலமாக எண்ணாமல் விலை நில மாக எண்ணும் மோசமான நிலை இந்த நாட்டுக்கு வந்துவிட்டது. நாணயம் என்ற பேய், மனிதன் மன சிலே புகுந்து பொருள்களின் மதிப்பை மாற்றி விடு கிறது. ஏறிய விலைக்கு விற்கிறதென்று எண்ணி, தலை முறை தலைமுறையாக வந்த நிலங்களைச் சிலர் விற்று விட்டார்கள். காரணம் என்ன? அவர்கள் தங்கள் நிலத் தைப் பணத்தால் அளக்கிறார்கள். முன்பு அங்கிருந்த நிலம், இப்போது அளவில் விரிந்திருப்பதுபோல வும், இனி மறுபடியும் சுருங்கிவிடுமென்றும் எண்ணு கிறார்கள்; சூட்டோடு சூடாக விற்றுவிடத் துணிகிறார்கள். நெல் விளையும் பூமியைவிடப் புகையிலை விளையும் பூமி உயர்ந்ததாகிவிட்டது. நெல்லைக் காட்டிலும் புகை யிலை உயர்ந்ததா? அல்ல, அல்ல. நெல்லால் வரும் பணத்தைக் காட்டிலும் புகையிலையால் வரும் பணம் அதிகம் அல்லவா? அப்படியானால் ஒன்றுமே விளையாமல் பத்துச் செண்டு நிலம் மூவாயிரம் நாலாயிரம் என்று விலை போகிறது சென்னையில்; அந்த நிலங்கள் உயர்ந்தவைகளா? பணத்தைக் கொண்டு அளந் தால் அவைகளே சிறந்த நிலங்கள். அந்த நிலங்களை வளமுடைய நிலங்கள் என்று சொல்ல முடியுமா? முடியாது. பணமுடைய நிலங்கள் என்று வேண்டு மானால் சொல்லலாம். நிலத்தின் பெருமையை அளக்க, அது என்ன விலைக்குப் போகும் என்ற ஆராய்ச்சி பயன்படாது. அதில் என்ன விளையும் என்று ஆராய வேண்டும். விலை நிலத்தைக் காட் டிலும் விளை நிலத்துக்குத்தான் எக் காலத்திலும் மதிப்பு உண்டு. 2 தமிழ் நாட்டில் நிலத்தின் மதிப்பை அதன் விளைச் சலைக் கொண்டே அளந்தார்கள். நில வளப்பத்தை எடுத்துச் சொல்லும்போது, இத்தனை ரூபாய் விலைக் குப் போகும் என்ற சிந்தனையே அவர்களுக்கு இல்லை. நிலத்தின் பெருமையை எப்படி அளந்து சொன்னார்கள் பழந் தமிழர்கள் என்பதற்குச் சில உதாரணங்களைப் பார்க்கலாம். கரிகால் சோழனைப்பற்றி மிக விரிவாக முடத் தாமக் கண்ணியார் என்ற புலவர் பாடியிருக்கிறார். பொருநராற்றுப்படை என்பது அந்தப் பாட்டின் பெயர். காவிரி சோழ நாட்டை வளப்படுத்திப் பாது காக்கிறது. சோழ நாட்டில் உள்ள நிலவளத்தை அழகாக வருணிக்கிறார் புலவர். கடைசியில் பாட்டை முடிக்கும்போது, ஆயிரம் விளையுட் டாகக் காவிரி புரக்கும் நாடுகிழ வோனே என்று புலவர் பாடுகிறார். ‘ஒரு வேலி நிலத்தில் ஆயிரம் கலம் நெல் விளையும்படியாகச் காவிரி பாது காக்கும் சோழநாட்டுக்கு உரியவனே’ என்பது இதன் பொருள். வேலி என்பது நிலப்பரப்பின் அளவு. நிலத் தின் பரப்பைக் கொண்டா அதற்குப் பெருமை ஏற் படுகிறது? இல்லை. அதனால் உண்டாகும் பயனைக் கொண்டுதான் அதற்குப் பெருமை. அதைத்தான் புலவர் சொல்கிறார். “வேலிக்கு ஆயிரம் கல நெல் விளையும் எங்கள் சோழநாட்டுப் பூமியில்!” என்று சொல்வதில் சிறப்பிருக்கிறதா? “ஏகரா பதினையாயிரம் ரூபாய் விலைக்குப் போகும்” என்று சொல்வதில் சிறப் பிருக்கிறதா? முன்னது விளைநிலத்தின் பெருமையை உணர்ந்த வேளாண் செல்வர் பேசுவது; பின்னது விலைநிலத்தின் விற்பனையை நினைத்து வியாபார நோக்கமுடையவர் சொல்வது. 3 மற்றொரு புலவர் சோழநாட்டு நிலத்தை அளக் கிறார். ஆவூர் மூலங்கிழார் என்ற பெயருடையவர் அவர். கிள்ளி வளவன் என்ற சோழ மன்னனைப் பாடு கிறார். அப்போது சோழநாட்டின் நிலவளத்தை அளந்து சொல்கிறார். அவர் அளக்கிற முறை அழகாக இருக்கிறது. மனிதன் அரிசிச் சோறு சாப்பிடுகிறான். அந்தக் காலத்தில் சாமானிய மனிதன் ஒரு நாளைக்குச் சின்னப் படியில் ஒரு படி அரிசிச் சோறு சாப்பிடுவானாம். “உண்பது நாழி” என்று ஔவைப்பாட்டி பாடி யிருக்கிறாள். மனிதன் உண்ணும் அளவையே அளவாக நிலத்தை அளப்பது ஒரு முறை. இப் போதுகூட நாம் சிலரைப்பற்றிப் பேசும்போது, “அவனுக்கு ஆறுமாதச் சாப்பாட்டிற்கு இருக்கிறது” என்று சொல்வது உண்டல்லவா? அதைப்போல ஆவூர் மூலங்கிழார் சொல்ல வருகிறார். அவர் மனிதனுடைய வயிற்றை அளவாகக் கொள்ளவில்லை. பெரிய அளவு கருவியைக் கொண்டு அளக்கிறார். மனிதன் நாழி அரிசி உண்டால் யானை எவ்வளவு உண்ணும்? “யானை யைக் கட்டித் தீனி போடுவதா?” என்று பழமொழியே இருக்கிறதே! யானைக்குத் தீனிபோட்டுக் கட்டாது. அந்த யானையின் உணவையே தம் அளவு கருவியாக் கிக் கொள்கிறார் புலவர். பெண்யானை ஒன்று அயர்ச்சியினால் படுத்துக் கொண்டிருக்கிறது. அது எத்தனை பரப்புடையதாக இருக்கும்? அந்தப் பரப்பையுடைய நிலத்தில் சோழ நாட்டில் உண்டாகும் விளைச்சலுக்குக் கணக்குச் சொல்கிறார். ஒருபிடி படியும் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடு. ஒரு பெண்யானை படுத்துக் கொள்ளும் சிறிய இடத்தைக்கொண்டு ஏழு ஆண்யானைகளைப் பாது காக்கலாமாம். அவ்வளவு சின்ன இடத்திலே விளையும் நெல்லைக் கொண்டு ஏழு களிறுகளை எப்போதும் கவ ளம் இட்டுக் காப்பாற்றலாம். நிலப்பரப்பையும் யானை யைக் கொண்டு அளவிட்டார்; நிலத்தின் விளைச்சலையும் அதைக்கொண்டே அளவிட்டு விட்டார். ஏழு யானைக்குத் தீனிபோடும் நிலம் என்று. சாதாரணமா கச் சொன்னால் ஏகராக் கணக்கில் இருக்குமென்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் சோழநாட்டு நிலம் உயர்தரமானதாயிற்றே; ஒரு யானை படுக்கும் இடத் தில் ஏழு யானையை வளர்க்கும் விளைச்சல் விளைகிறது. புலவர் நிலத்தை அளப்பது எப்படி இருக்கிறது? 4 மற்றொரு புலவர் சோழநாட்டு நிலவளத்தைப் பொதுப்படையாகச் சொல்கிறார். மற்ற நாட்டின் நில வளப்பத்தோடு ஒப்பிட்டுச் சொல்கிறார். சோழநாடு காவிரியினால் வளத்தைப் பெறுகிறது. ஆற்றுப் பாய்ச்சல் இல்லாத பிற நாடுகளில் ஏரிகள் உள்ளன; கொங்கு நாடு போன்ற இடங்களில் கிணறு கள் தோண்டி ஏற்றம் இறைத்து நீர் பாய்ச்சுகிறார்கள். ஆற்றுக்கால் பாய்ச்சல், ஏரிப் பாய்ச்சல், இறைவைப் பாய்ச்சல் என்ற இந்த மூன்று வகையில் ஆற்றுக்கால் பாய்ச்சலே சிறந்தது. அதுவும் காவிரியாற்றுப் பாய்ச் சல் மிக மிகச் சிறந்தது. ஏரியினால் விளையும் நாட்டினரும், ஏற்றத்தால் விளையும் நாட்டினரும் தங்கள் நாடுகளில் விளையும் நெல்லைக் கணக்கெடுக்கிறார்கள். எல்லாக் கணக்கையும் கூட்டிப் பார்க்கிறார்கள். அந்தக் கணக்கு அவர்களுக்குப் பிரமாதமாக இருக்கும். சோழநாட்டுக்காரன் அந்தக் கணக்கைப் பார்க்கிறான் என்று வைத்துக்கொள் வோம். “மகா பிரமாதம்!” என்று சப்புக் கொட்டுவான். அவனுடைய நாட்டிலே விளையும் நெல் எங்கே? இந்த விளைவு எங்கே? அஜகஜாந்தரமாகவல்லவா இருக்கும்? புலவர் கரிகாலனுக்குச் சொந்தமான சோழ நாட்டை, காவிரி சூழ்நாட்டைப் பாராட்டுகிறார். “மற்ற நாடுகளில் நீர்ப்பாசனம் ஏரியினாலும் ஏற்றத்தாலும் நடைபெறுகிறது. அதனால் நெல் விளைகிறது. அப்படி உண்டாகும் நெல்லை எல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தால், எங்கள் சோழநாட்டில் அறுவடைக் காலத் தில் அரியும்போது கீழே உதிர்கிறதே அந்த நெல் லுக்கு ஒருகால் சமானமாக இருக்கலாம்” என்று சொல் கிறார். அரிகாலின் கீழே சிதறும் நெல்லைச் சோழ நாட்டில் நிலத்துக்கு உடையவர்கள் பொறுக்கமாட்டார் கள். அறுவடையான பிறகு, கீழே சிந்திய நெல்லை ஏழைகள் பொறுக்கிக்கொள்வார்கள். அவர்களாலும் பொறுக்க முடியாமல் கிடக்கும் நெல்லை வாத்துக்கள் கொத்தித் தின்னும். அப்படி அரிகாலின் கீழே உக்க நெல்லைத் தொகுத்துப் பார்த்துக் கணக்கெடுத்தால், ஏரியினாலும் ஏற்றத்தினாலும் விளையும் பிற நாட்டு நெல்விளைச்சல் அத்தனைக்கும் சமானமாக இருக்கு மாம். புலவர் சோழநாட்டு நிலத்தின் தரத்தை அளக் கும் முறை இது. ஏரியும் ஏற்றத்தி னானும் பிறநாட்டு வாரி சுரக்கும் வளன் எல்லாம் ~ தேரின் அரிகாலின் கீழ் கூடும் அந்நெல்லே சாலும் கரிகாலன் காவிரிசூழ் நாடு. இப்படி அளந்து பெருமைப்பட்டால் உண்மை யான விளைநிலத்தின் மதிப்பை உணரலாம். ரூபாயைக் கொண்டு அளந்தா நிலத்தை மதிப்பிடுவது? ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை நான் சிறு பையனாக இருந்த காலம். விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பூரானைக்கண்டேன். அதன் மேல் ஒரு கல்லை எறிய போனேன். அதை என் பாட்டி கண்டுவிட்டாள். “அடே! அதைக் கொல் லாதே! ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையடா!” என்று கத் தினாள். அவளுக்குத் தெரியாத பழங்கதை இல்லை; சம்பிரதாயம் இல்லை. நான் கல்லைக் கீழே எறிந்து விட்டு, “பாட்டி, பாட்டி, ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை என்றாயே; அது என்ன?” என்று கேட்டேன். அவள் கதை சொல்லத் தொடங்கினாள். “ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பூரான்களே நெளிந்து கொண்டிருந்தன. கால் வைத்த இடமெல் லாம் பூரான். எல்லோரையும் பூரான்கள் கடித்துத் துன்புறுத்தின. ஜனங்கள் பகவானிடம் முறையிட்டுக் கொண்டார்கள். பகவான் பூரானுக்கு ஒரு சாபம் கொடுத்தார். ‘நீ குட்டியைப் பெறப் பெற எல்லா வற்றையும் தின்றுவிடுவாயாக!’ என்று சாபம் இட் டார். பூரான், ‘அப்படியானால் என் வம்சம் எப்படி விருத்தியாகும்?’ என்று அழுதுகொண்டே கேட்டது. ‘நீ ஒரு பிள்ளையை மட்டும் மிச்சம் வைத்து மற்றவற் றைத் தின்பாய். அந்த ஒரு பிள்ளையால் உன் வம்சம் விருத்தியாகும்’ என்று பகவான் மறுசாபம் கொடுத்தார். அது முதல் பூரான்கள் ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையாகவே இருந்து வருகின்றன. ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை யென்றால் அந்தப் பிள்ளைக்கு ஒரு கெடுதலும் செய்யக்கூடாது ,அது பாவம்! என்று கதையைமுடித்தாள். ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையென்று பூரானிடத் திலேயே இரக்கம் காட்டவேண்டுமானால் மனித சாதி யின் திறத்தில் எத்தனை பரிவு உண்டாகவேண்டும்! உண்மையில் ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை என்றாலே நமக்கு இரக்கம் உண்டாகத்தான் உண்டாகிறது. பிறர் தம்மிடம் இரக்கம் காட்டவேண்டுமென்று எதிர்பார்க்கிறவர்கள், " ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை ஐயா!" என்று சொல்லி அந்த இரக்கத்தைப் பெறு கிறார்கள். இதை உலக வாழ்க்கையில் பார்ப்பதோடு இலக்கியங்களிலும் காணலாம். ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையென்றால் , அது ஆண் பிள்ளையானாலும் சரி, பெண்பிள்ளையானாலும் சரி, பெற்றவர்களுக்கு அருமைப் பிள்ளைதானே? ஒரு தலைவன் சில காலம் தன்னுடைய மனை வியைப் பிரிந்து வேறு ஒருத்தியோடு தங்கினான். அப்படித் தங்கிவிட்டு மறுபடியும் தன் மனைவியிடம் வந்தான். அவன் மனைவிக்குத் தோழி ஒருத்தி இருந் தாள். அவள் அவனுடைய தவறான செயலை எடுத் துச்சொன்னாள். அவன் தான் தவறே செய்யவில்லை என்று சொல்லித் திருப்பரங்குன்றத்தின்மேல் ஆணையிட்டான். அந்த ஆணையினால் பொய்யனாகிய அவ னுக்கு ஏதேனும் துன்பம் வந்தால் அவன் மனைவி உயிர் விடுவாள். ஆதலால் அவளை நினைத்தாவது அவன் ஆணையிடுவதைத் தடுக்க எண்ணினாள் தோழி. அவளுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘பெரியவர்களுக் குப் பிறந்த அயோக்கியனே! நீ ஆணையிடாதே, அத னால் இவளுக்குத் துன்பம் உண்டாகும். இவள் ஒரு தாய்க்கு ஒரு பெண்பிள்ளை’ என்று கூறுகிறாள். சான்றாளர் ஈன்ற தகாத அத் தகாஅமகான், ஈன்றாட்கு ஒருபெண் இவள். “சான்றாண்மையுடையோர் பெற்ற, மிகத்தகுதி இல் லாத மகனே! இவளைப் பெற்றவளுக்கு இவள் ஒரு பெண்” என்பது இதன் பொருள். இது பரிபாடல் என்ற சங்க நூலில் வரும் காட்சி. தோழி தலைவனு டைய உள்ளத்தில் இரக்கம் தோன்றும்படி செய்ய, ‘ஈன்றாட்கு ஒருபெண் இவள்’ என்று சொல்கிறாள். கட்டிளங்காளை ஒருவனும் அழகி ஒருத்தியும் ஒருவரை ஒருவர் காதலித்து அளவளாவினர். அவர் களுடைய காதல் யாருக்கும் புலப்படாமல் இருந்தது. காதலன் காதலியை மணம் செய்து கொள்ள விரும்பி னான். ஆனால் அதற்குக் காதலியைப் பெற்றவர்கள் இணக்கமாக இருப்பார்கள் என்று தோன்றவில்லை. ‘இனி இவளை இங்கே விட்டு வைக்கக் கூடாது’ என்று தீர்மானித்த காதலன் அவளை யாரும் அறியாத படி அழைத்துக் கொண்டு தன் ஊருக்குச் சென்று விட்டான். அவர்கள்போன பிறகு அவர்களுக்குத் துணையாக இருந்த தோழி உண்மையை வெளியிட்டாள். அதனைத் தெரிந்துகொண்ட தாய்,“ஐயோ! இது முன்பே தெரிந்திருந்தால் அவனுக்கே அவளை மணம் செய்து கொடுத்திருப்பேனே!” என்று வருந்தினாள். தன் மகளை நினைக்கும் போதெல் லாம் அவளுக்குத் துயரம் பொங்குகிறது. மகளைக் கண் மணியைப்போல் வைத்துப் பாதுகாத்து வந்தவள் அவளுடைய வருத்தத்தைக் கண்ட பெரியோர், “ஏண் அம்மா வருத்தப்படுகிறாய்? பெண் என்று பிறந் தால் வேறு ஒருவனுக்கு உரியவளாகி அவனுடன் சென்று வாழ்வதுதானே உலக இயல்? இதற்காக வருந்தலாமா? வருந்தாதே!” என்று சொன்னார்கள் அவளுக்கு அந்த வார்த்தைகள் ஆறுதலை உண்டாக வில்லை, ஆத்திரந்தான் வந்தது. “வருத்தப்படாதே என்று சொன்னீர்களே! எனக்கு நாலைந்து பேர்களா இருக்கிறார்கள்? ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு’என்று பொத்தி பொத்திக் காப்பாற்றினேன்.அவள் நேற்று ஒரு காளையோடு, கடத்தற்கரிய பாலைவனத்தைக் கடந்து போய்விட்டாள். அதை நினைத்தாலே என் நெஞ்சு வேகிறது. என் கண்மணியைப்போல வாழ்ந்தாளே! விசுக்கு விசுக்கென்று அவள் நடக்கும்போது நான் பார்த்து மகிழ்ந்து போவேனே! சின்னஞ்சிறு பெண். இதோ இந்த நொச்சி மரத்தடியிலேதான் விளையாடிக் கொண்டிருப்பாள். இந்தத் திண்ணையில்தான் செப் பையும் பொம்மைகளையும் வைத்து விளையாடுவாள். நொச்சி மரத்தைப் பார்த்தால் எனக்கு அழுகையாக வருகிறது. அவள் இல்லாமல் இந்தத் திண்ணை வெறிச்சோடிக் கிடக்கிறதே! அதைப் பார்த்துவிட்டுச் சும்மா இருக்க முடியுமா? ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை அல்லவா அவள்?” இவ்வாறு தாய் தன் வருத்தத்தைக் கொட்டுகிறாள். ஒருமகள் உடையேன் மன்னே அவளும் செருமிகு மொய்ம்பிற் கூர்வேற் காளையொடு பெருமலை அருஞ்சுரம் தெருதற் சென்றனள்; இனியே, தாங்குதின் அவலம் என்றிர், அதுமற்று யாங்ஙனம் ஒல்லுமோ? அறிவுடை யீரே’ உள்ளின் உள்ளம் வேமே; உன்கண் மணிவாழ் பாவை நடை கற் றன்னஎன் அணிஇயற் குறுமகள் ஆடிய மணியேர் நொச்சியும் நெற்றியும் கண்டே. “ஐயோ! ஒரு மகளை உடையவளாக இருந்தேன். அவளும் போரில் மிகுகின்ற வலிமையையும் கூரிய வேலையுமுடய காளையோடு, பெரிய மலையைச் சார்ந்த கடத்தற்கரிய பாலை நிலத்தின் வழியே நேற்றுப் போய்விட்டாள்; இப்போது ‘உன் வருத் தத்தைப் பொறுத்துக்கொள்’ என்று சொல்கிறீர் கள். அறிவுடையவர்களே! அவள் பிரிவை நினைந் தாலே மனம் வேகுமே. மையுண்ட கண்ணிலுள்ள கருமணியில் வாழும் பாவை நடைகற்றாற் போன்ற அருமைப்பாடும் அழகுமுடைய என் அழகிய இயல் பையுடைய சிறு மகள் விளையாடிய, நீலமணி போன்ற மலரையுடைய நொச்சியையும் திண்ணையையும் கண்டு வருந்தாமல் இருப்பது எவ்வாறு முடியும்?” என்பது இதன் பொருள். அவள் இரங்குவதற்கும் அவள்பால் மற்றவர்கள் இரக்கம் காட்டுவதற்கும் உரிய தலைமையான காரணம், பிரிந்து சென்ற பெண் ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை என்பது. அதைத் தாய் முதலிலேயே, “ஒரு மகள் உடையேன் மன்னே!” என்று சொல்லி அறிவுடை யோர் நெஞ்சில் கருணை ததும்பச் செய்கிறாள். இது நற்றிணையில் வரும் பாட்டு. பெரியாழ்வார் கண்ணபிரானைப் பற்றிப் பாடிய பாடலில் ஓரிடம் வருகிறது. தாய் தன் பெண்ணைப் பிரிந்து வருந்துகிறாள். செங்கண்மால் அவளை அழைத்துச் சென்றுவிட்டான். “அவளைத் திருமகளைப் போல வளர்த்தேன். உலகமெல்லாம் அவள் அழ கையும் குணத்தையும் பார்த்துப் புகழ்ந்தது. அவளைச் செங்கண்மால் கொண்டுபோனான். யசோதை தன் மருமகளாகிய இவளைக் கண்டு மனமகிழ்ந்து இவளுக்கு வேண்டிய சிறப்புகளையெல்லாம் செய்வாளோ! அவ ளும் பெரிய குடும்பத்தில் வாழ்ந்து, பெரிய பிள்ளை யைப் பெற்றவள் ஆயிற்றே!” என்று தாய் வருந்து கிறாள். இப்படி வருந்தும்போது அவள் முதலில் சொல் வது என்ன தெரியுமா? “எனக்கு நாலைந்து பெண் களா இருக்கிறார்கள்? ஒருபெண்தான். அவளைத் திரு மால் கொண்டுபோனான்” என்று புலம்புகிறாள். ஒருமகள் தன்னை உடையேன்; உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன்; செங்கண்மால் தான்கொண்டு போனான்; பெருமகள் ஆய்குடி வாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை மருமகளைக்கண் டுகந்து மணாட்டுப் புரஞ்செய்யுங்கோலோ! அவளுடைய துக்கத்தைச் சொல்லும் இந்தப் பாட்டின் பல்லவிபோல நிற்பது, “ஒரு மகள் தன்னை உடையேன்” என்ற தொடர்தான். 2 பெண்ணைப்பற்றிச் சொல்லும் தாய்மார்களின் பரிவை மேலே சொன்ன பாடல்கள் தெரிவிக்கின்றன. ஆண்பில்லையை உயர்வாகக் கருதினர் பழங்கால மக்கள். ஆதலின் ஒரு தாய்க்கு ஓர் ஆண்பிள்ளையானால் அவனிடம் தாய்க்கு எத்தனை அன்பும் பிடிப்பும் இருக்கும்! இலக்கியங்களில் இந்த அன்பைப் பற்றிய செய்திகளைச் சொல்லும் இடங்களும் உண்டு. பழங்காலத்து வீரக்குடி ஒன்று. போர் என்று சொன்னால் அடுப்பங்கரையில் ஒளிக்கும் கோழைகள் அல்ல, அந்த வீட்டு ஆடவர்கள். பரம்பரை பரம்பரையாக அந்த இல்லிலே பிறந்தவர்கள் யாவருமே போரில் தம் வீரத்தைக் காட்டினவர்கள். ஒருவராவது நோய் வந்து செத்தார் என்பது இல்லை. எல்லாருமே போர்க்களத்தில் உயிரைக் கொடுத்துப் புகழை வாங்கிக்கொண்டவர்கள். இது பழந்தலைமுறைக் கதை. இந்தத் தலைமுறை எப்படி? இந்த வீட்டில் இப்போது ஒரு பெண் இருக்கிறாள். ஒரு சின்னக் குழந்தை இருக்கிறான். ஆண் என்று சொல்வதற்கு அவன் ஒருவன்தான் உண்டு. அந்த வீட்டில் ஆணே இல்லையா? இப்போது இல்லை. முன்பு இருந்தார்கள். இவளுக்கு அண்ணன் இருந்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு அவன் ஒரு போரில் படை வீரனாகச் சென்றான். அங்கே தன் உயிரைக் கொடுத்தான். சமீபத்தில் நடைபெற்ற போரில் இவள் கணவன் உயிர் துறந்தான். இப்போதும் போர் மூளும் போல இருக்கிறது. போர் மூண்டால் ஆடவர் தினவுகொண்ட தோள் துடிப்பது பெரிது அன்று. பெண்களுக்கே வீர உணர்ச்சி உண்டாகிவிடும். வீட்டில் உள்ள ஆடவர்களைப் போருக்கு அனுப்புவதில் முனைவார்கள். “என் தமையன் போர்வீரன்” என்று சொல்லிக் கொள்வதில் அவர்களுக்கு அளவற்ற பெருமை. இதோ போர்ப்பறை கேட்கிறது. இவள் தன்னுடைய ஒரே மகனைப் பார்க்கிறாள். அவனை அழைத்து முதலில் அவன் கையில் வேலைக் கொடுக்கிறாள். “போ சண்டைக்கு” என்கிறாள். பிறகுதான் அவனைப் பார்க்கிறாள். தலை மயிர் பறக்கிறது. இடுப்பில் நல்ல வேட்டியில்லை. அவசர அவசரமாகத் தலையில் எண்ணெயைத் தடவி வாருகிறாள்; வெள்ளை வேட்டியை விரித்து உடுத்துகிறாள். “போர்க்களத்துக்குப் போய் வெற்றியோடு வா” என்று அனுப்புகிறாள். இவளுடைய துணிவுதான் என்ன? இத்தகைய வீரப் பெண்டிரை முதல் மகளிர் என்று பழம் புலவர்கள் சொல்வார்கள். “இவளுடைய துணிவை நெஞ்சம் நினைக்கப் பயப்படுகிறதே! கெடுக இந்தச் சிந்தை எவ்வளவு கடுமையான துணிவு இவளுக்கு! இவள் வீரக்குடியில் உதித்தவள் என்பது தகும் தகும். அன்று ஒரு நாள் எழுந்த போரில் இவள் தமையன் யானையை வெட்டி வீழ்த்திப் போர்க்களத்தில் இறந்தான். நேற்று உண்டாயிற்று ஒரு சண்டை; அதில் இவள் கணவன் பெரிய பசுக்கூட்டத்தைப் பகைவர் கொண்டு போகாமல் தடுத்தான். அங்கேயே உயிரை நீத்தான். இன்றைக்கோ, போர்ப்பறை காதில் பட்டதுதான் தாமதம். அந்த ஒலி கேட்டதிலே ஒரு மகிழ்ச்சி. ஆனால் அடுத்த கணத்தில் ‘அடடா, யாரை அனுப்புவது?’ என்ற மயக்கம். அதுவும் மறு கணத்திலேயே போய்விட்டது. ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை. அவனை அழைத்தாள்; வேலைக் கையிலே கொடுத் தாள்; வெள்ளை வேட்டியை விரித்து உடுத்தாள்; பரட்டைத் தலையிலே எண்ணெயைத் தடவி வாரினாள்; போர்க்களத்தைப் பார்த்துப் போ! என்று அனுப்புகிறாளே!” என்று கண்டவர் ஆச்சரியப் படுவதாகப் புலவர் பாடுகிறார். கெடுக சிந்தை!கடி துஇவள் துணிவே! மூதில் மகளிர் ஆதல் தகுமே. மேனாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை யானை எறிந்து களத்துஒழிந் தனனே; நெருநல் உற்ற செரிவிற்கு இவள்கொழுநன் பெருநிரை விலங்கி ஆண்டுப்பட்டவனே; இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப் பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி ஒருமகன் அல்லது இல்லோள் செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே. [மூதில் மகளிர்~முதிய வீரக்குடியில் பிறந்த பெண்டிர். செரு~போர். தன்னை~தமையன். எறிந்து~ கொன்று. களத்து~போர்க்களத்தில். நெருநல்~நேற்று. நிரை~பசுக்கூட்டம். விலங்கி~தடுத்து. பட்டனன் ~ இறந்தான். செருப்பறை_(போர்முரசு.வெளிது)வெள்ளை வேட்டி. உடீஇ~உடுத்து. பாறு மயிர் ~ விரிந்த மயிர். செருமுகம்~போர்க்களம்.] “ஒரு மகன் அல்லது இல்லோள்” என்பது அந்த மறமகளுடைய சிந்தைத் துணிவை எடுத்துக் காட்டுகிறது. திருவாரூரில் வாழ்ந்து அரசு செலுத்திய மனு நீதிச்சோழன் வரலாறு தமிழ்நாடு நன்கு அறிந்தது. ஒரு கன்றுக்குட்டியின் மேல் தேரை விட்டு அது இறக்கும்படி செய்ததற்காகத் தன் மகனையே தேர்க்காலில் இட்டு அந்தக் குற்றத்துக்குத் தண்டனை விதிக்க எண்ணிய செம்மையாளன் அவன்.அந்த மன்னன் தன் மகனைக் கீழே கிடத்தி அவன்மேல் தேரை ஊர்ந்த அருமைச் செயலைப்பாடுகிறார் சேக்கிழார். நெடுங்காலமாக இடையறாது வரும் சோழர் குலத்திற் பிறந்த பிள்ளை அவன். மனுநீதிச் சோழனுக்கு ஒரே பிள்ளை.இதனைச் சிறிதும் கவனியாமல் அறம் திறம்பக்கூடாது என்ற ஒரே கருத்தைக் கொண்டு மனு வேந்தன் தன் மைந்தனுடைய மார்பின்மேல் தேரை ஓட்டினான்.அவனுடைய அர சாட்சியின் அருமைதான் என்னே!’ என்று பொருள் படப் பாடுகிறார். ஒருமைந்தன் தன்குலத்துக்கு உள்ளான்என் பதும்உணரான்; தருமம்தன் வழிச்செல்கை கடன்என்று தன்மைந்தன் மருமந்தன் தேர்ஆழி உறஊர்ந்தான்;மனுவேந்தன் அருமந்த அரசாட்சி அசிதோமற்று எளிதோதான்? அவன் ஒரு பிள்ளை என்பதை எடுத்தவுடனே சொல்கிறார். அப்படியிருந்தும் அதனை ஓராமல் அவன்மேல் மனுவேந்தன் தன் தேரை விட்டான் என்று சொல்லுவதில் அவ்வேந்தனுடைய நீதி முறையின் சிறப்புப் புலப்படுகிறது. அவன் அரு மந்த மைந்தன் தான், ஒரே பிள்ளையாகையால்;ஆனால் அவனைக்காட்டிலும் அருமையானது தருமம்.தன் மகனை அழிக்கலாம்; தருமத்தை அழிக்கக்கூடாது. அவன் தேர்க்காலில் ஊர்ந்தவன் சொந்தப் பிள்ளை என்று சொன்னால் போதாது;அவன் அவனுக்கு ஒரே பிள்ளை என்று சொன்னால் போதாது; அந் தக் குலத்துக்கே ஒரு பிள்ளை என்று சொல்லி, அவனையும் தியாகம் செய்யத் துணிந்தான் மனு வேந்தன் என்று புலப்படுத்துகிறார் சேக்கிழார். திருவிளையாடற் புராணத்திலும் ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை ஒருத்தன் வருகிறான்.சோமசுந்தரக் கடவுள் செய்த அறுபத்து நான்கு திருவிளையாடல் களில் மாமனாக வந்து வழக்குரைத்தது ஒன்று.தன பதி என்ற வணிகர் தலைவன் தன் தங்கையின் மகனைத் தன் பிள்ளையாகக் கொண்டு வளர்த்து வந்தான். பிறது தன் சொத்தையெல்லாம் அவனுக்குக் கொடுத்துவிட்டுத் தவம் புரியப் போய்விட்டான். அவன் போனவுடன் அவனுடைய தாயாதிகள் அந்தச் சொத்தையெல்லாம் வௌவிக்கொண்டு அந்த இளங்குழந்தையைப் பரிதவிக்க விட்டு விட்டார்கள். அந்தக் குழந்தையின் தாயும்,தனபதியின் தங்கையுமாகிய மாது சோமசுந்தரக் கடவுளிடம் முறையிட்டுக் கொண்டாள். இறைவர் கட்டளைப்படி நியாய சபையில் தன் வழக்கை எடுத்துச்சொன்னாள். அப்போது சோமசுந்தரக்கடவுள் தனபதியைப் போன்ற உருவம் தாங்கி வந்து, நீதிபதிகளின் முன்பு வழக்குரைத்து மீட்டும் அந்தக் குழந்தைக்குச் சொத்துக்களை வாங்கித் தந்தார். இதுவே அந்தத் திருவிளையாடல். பையனுடைய தாய் சோமசுந்தரக் கடவுளிடம் சென்று முறையிடுகிறாள். “அருட்பெருங்கடலே; எங்கும் இருப்பவனாகிய நீ உண்மையை அறிய மாட்டாயா? எனக்கு யார் பற்றுக் கோடு? நானோ பெண்பால். என் மகன் அறிவு நிரம்பாதவன்” என்றெல்லாம் சொல்லிப்புலம்புகிறாள். அப்படிச்சொல்வதற்கு முன் எடுத்த எடுப்பில், “நான் ஒருத்தி. ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை இவன்” என்று தொடங்குகிறாள். ஒருத்தி நான்; ஒருத்திக்கு இந்த ஒருமகன்; இவனும் தேறும் கருத்திலாச் சிறியன்;வேறு களைகணும் காணேன் ஐய! அருத்திசால் அறவோர் தேறும் அருட்பெருங் கடலே, எங்கும் இருத்தி நீ அறியாய் கொல்லோ? என்றுபார் படிய வீழ்ந்தாள். அவளுக்கு எத்தனை துக்கம், பாவம்! சுந்தரேசப் பெருமானிடம் அவள் மனமுருகிச்சொல்கிறாள்; ‘ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை ஐயா! நீதான் காப்பாற்ற வேண்டும்’ என்று சொல்கிறாள். அந்த வேண்டுகோள் பயன்பட்டது. மதுரைப் பெருமான் அவளுக்குத் துணையாக வந்தார். இவ்வாறு ’ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை’யின் அருமையை இலக்கியங்கள் சொல்கின்றன. மழை வேண்டாம்! “மழை வேண்டாம்!” என்று அவர்கள் சொன் னார்கள்.‘இப்படியும் சொல்வார் உண்டோ?’ என்று நமக்குத்தோன்றுகிறது.எத்தனையோ காலமாக மழையைக் காணாமல் பஞ்சத்தில் அடிபட்ட நமக்கு, “வருமா, வருமா” என்ற ஏக்கம் இருப்பதுதான் இயற்கை. ஆனால், நமக்கு வேண்டிய மழை பெய்து, அதற்கு மேலும் மழை கொட்டு கொட்டென்று கொட்டி ஆற்றில் வெள்ளம், ஏரியில் உடைப்பு,குளங்களில் கரைகள் உடைந்து எங்கும் வெள்ளம் என்ற நிலை ஏற்பட்டால், “மழையே!மழையே!வா,வா!” என்றா பாடுவோம்? “கடவுளே! இப்போதைக்கு மழை வேண்டாம்” என்றுதான் சொல்வோம். மழை பெய்யாமலும் கெடுக்கும்; பெய்தும் கெடுக்கும்.அளவுக்கு மிஞ்சிப்போகும் எதனாலும் துன்பம் விளைவுதான் இயற்கை. குறைந்த மழையை அநாவிருஷ்டி என்றும், மிகு பெயலை அதிவிருஷ்டி என்றும் சொல்வார்கள்.இரண்டினாலும் துன்பம் உண்டாகும். மழை இல்லாமையால்,“மழை வேண்டும்” என்று கடவுளுக்குப் பூசை போட்டார்கள்; பழனியைச் சார்ந்த இடங்களில் வாழ்ந்த குறிஞ்சி நிலமக்களாகிய குறவர்கள் ஆவினன்குடி முருகனுக்குப் பூசை போட்டார்கள். முருகன் திருவருள் செய்தான்.மழை பெய்தது. ஆனால் அது அளவுக்கு மிஞ்சிவிட்டது. ஆகவே, “கடவுளே! எங்களுக்கு மழை போதும். இந்த மேகங்கள் கீழே வந்து மழை பெய்தது போதும். இனி மேலே போகட்டும்” என்று மறுபடியும் முருகனுக்குப் பூசை போட்டார்கள். மழை நின்றது. அவர்களுக்கு ஆனந்தம் தாங்கவில்லை. தாங்கள் விளைத்த தினையைச் சமைத்துப் பொங்கலிட்டு விருந்துண்டு களிக் கூத்தாடினார்கள். இதைப் புறநானூறு என்ற நூலில் கபிலர் என்ற பெரும்புலவர் ஒரு பாட்டில் சொல்கிறார். மலைவான் கொள்கென உயர்பலி தூஉய், மாரி ஆன்று மழைமெக்கு உயர்கெனங் கடவுட் பேணிய குறவர் மாக்கள் பெயல்கண் மாறிய உவகையர், சாரற் புனத்தினை அயிலும் நாட. ‘மலையில் மேகங்கள் வந்து சூழட்டும் என்று கடவுளுக்கு உயர்ந்த பூசனைப் பொருளைத் தூவி (வழி பட்டார்கள்). அப்பால்(மழை மிகுதியாகப் பொழிந்தமையால்) மழை நின்று மேகம் மேலே போகட்டும் என்று கடவுளை வழிபட்ட குறவர்கள், மழை மாறி விட்டதனால் மகிழ்ச்சி அடைந்து மலைச்சாரலிலே உள்ள புனத்தில் விளைந்த தினைச்சோற்றை உண்ணும் நாடனே’ என்பது இதன் பொருள். இதே மாதிர் வேறு ஒரு நிகழ்ச்சியைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்தில் பாடுகிறார். சோழ நாட்டில் திருப்புன்கூர் என்பது ஒரு தலம். நாடு முழுவதும் மழையில்லாமல் மக்கள் வாடினர். அப்போது திருப்புன்கூரிலுள்ள அன்பர்கள் ஆலயத் துக்குச் சென்று சிவபிரானிடம் ஒரு பிரார்த்தனை செய்துகொண்டார்கள். “கடவுளே!உலக முழுவதும் மழை மறந்து நீரற்றுப் போயிற்று.வயலில் நீரில்லை. அதனால் மக்கள் துன்பப்படுகின்றனர் மழைபெய்யச் செய்து நாங்கள் உய்யும்படி திருவருள் பாலிக்க வேண்டும்.தேவரீருக்குப் பன்னிரு வேலி நிலத்தை எழுதி வைக்கிறோம்” என்று வேண்டிக் கொண்டார்கள். இறைவன் அருளால் மழை பெய்யத்தொடங் கியது.ஊரார் சிவபிரானுக்குப் பன்னிரு வேலியை எழுதி வைத்தார்கள். மழை விடாமற் பெய்தது.எங்கும் வெள்ளம் பரந்தது.அளவுக்கு மிஞ்சி மழை பெய்தது.‘இனிப் பெய்தால் நாடு முழுவதும் நாசமாகும்’ என்று அஞ்சி அன்பர்கள் மறுபடியும் இறைவனிடம் வந்தார்கள். ‘திருப்புன்கூர்ப் பெருமானே! உன்னுடைய திருவரு ளால் மழை பெய்தது போதும்.இனிமேல் மழை வேண்டாம்.மழை நின்றால் மறுபடியும் பன்னிரு வேலி தேவரீருக்குத் தருகிறோம்’ என்று பிரார்த்தனை செய்து கொண்டார்கள். மழை நின்றது. ஊரார் மறுபடியும் பன்னிரண்டு வேலியை ஆலயத்துக்கு எழுதி வைத்தார்கள்.இந்த நிகழ்ச்சியைப் பின்வரும் தேவாரத் திருப்பாட்டினால் உணரலாம். வையகம் முற்றும் மாமழை மறந்து வயலில் நீர்இலை மாநிலம் தருகோம் உய்யக் கொள்கமற் றெங்கனை என்ன ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந்தெங்கும் பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப் பெயர்த்தும் பன்னிரு வேலிகொண்டருளும் செய்கை கண்டுநின் திருவடி அடைந்தேன் செழும்பொழில்திரும்புன்கூர் உளானே! “திருப்புன்கூரில் உள்ள சிவபெருமானே! உலக முழுவதும் பெரிய மழை மறந்து வயலில் நீர் இல்லை. உனக்குப் பெரிய நிலத்தைத் தருவோம்.எங்களை உய்யும்படி செய்யவேண்டும்’ என்று வேண்ட ஒளியையுடைய வெள்ளை முகிலாகப் பரந்து(கறுத்துப்) பெய்த பெரு மழையால் உண்டான பெரிய வெள்ளத்தை மாற்றி, மறுபடியும் பன்னிரண்டு வேலி நிலம் கொண்டருளிய அருட் செய்கையைக்கண்டு, (நீ வேண்டுவார் வேண்டிய வண்ணம் அருளும் பெருந்தகை என்பதை உணர்ந்து) நின் திருவடியைப் புகலாக அடைந்தேன்” என்பது பொருள். முன்னே சொன்னது கொங்கு நாட்டுக்கதை; அதைப்பாடியவர் கபிலர்.பின்னே சொன்னது சோழநாட்டுக்கதை; அதைப் பாடியவர் சுந்தரமூர்த்தி நாயனார். மோதிய கண் ஆண்மையும் அற நினைவும் ஊக்கமும் அன்பும் உடைய பெருமகன் அவன். அழகும் கற்பும் காதலும் உடைய மடமகள் அவள். இருவரும் மணம் புரிந்து இல்லற வாழ்க்கையில் இன்புற்றிருந்தார்கள். இவ் வாழ்க்கையில் செய்ய வேண்டியவற்றைச் செய்வதற்கும், நுகர வேண்டியவற்றை நுகர்வதற்கும் பொருள் இன்றியமையாதது. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை அல்லவா? அவன் வறுமையில் உழல்பவன் அல்ல. ஆயினும் பொருள் வளம் மிகுதியாக இருந்தால் அறத்தைப் பின்னும் சிறப்பாக வளர்க்கலாம்; அவனும் அவளும் நுகரும் இன்பத்துக்குரிய கருவிகளை மிகுதியாகப் பெற்று நிரப்பலாம். இத்தகைய எண்ணம் அந்த ஆண் மகனுக்கு உண்டாயிற்று. அது அவன் நெஞ்சிலே முளைத்து இலைவிட்டுக் கொடியோடிப் பரந்தது. தன்னைக் காட்டிலும் அதிக வசதிகள் பெற்று வாழ்வாரைக் கண்டபோது அவனுக்கு அந்த எண்ணம் முறுகி வளர்ந்தது. பொருள் ஈட்டுவதற்குத் தக்க ஆற்றலும் பருவமும் அவனிடம் இருந்தன. பொருளால் வரும் விரிவான இன்ப வகைகளையும், செய்வதற்குரிய அறச் செயல்களையும் நினைத்துப் பார்க்கப் பார்க்க அவனுக்கு இன்னும் நிதியைப் பெருக்க வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. எண்ணம் அவாவாக வளர்ந்தவுடன் அதற்குரிய ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான். பொருளை ஈட்டுவதற்கு வேறு ஊர்களுக்குச் செல்லவேண்டும்.வேற்று நாட்டுக்கும் செல்ல வேண்டியிருக்க்கும்.சில மாதங்கள் தன் காதலியைப் பிரிந்து வாழவேண்டி நேரும். ஒரு கணமேனும் பிரியாமல் வாழ்பவர்கள் அவர்கள்; உடலும் உயிரும் போல ஒன்றி இன்ப வாழ்விலே ஈடுபட்டவர்கள். பிரிவுத் துன்பத்தை அவர்கள் இன்னும் உணரவில்லை. காதலியைப் பிரிந்து சென்றால் அந்தப் பிரிவை அவள் தாங்குவாளா? அவன் தான் தாங்குவானா? அவள் நினைவு அவனுக்கு இனிமையைத் தரும். போன இடங்களில் அவளை நினைந்து மகிழலாம். ஆனாலும் நேருக்கு நேரே காண்பது போல ஆகுமா? அவளுடைய பேரழகு அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டது. அந்த அழகைப் பார்த்து மகிழாத நாளும் ஒரு நாளா? மீண்டும் பொருளின் நினைவு அவனுக்கு வந்தது. பொருள் இருந்தால் போகமும் உடன் வரும். தன் உயிர்க் காதலிக்கு வேண்டிய அணிவகைகளையும் ஆடை வகைகளையும் வாங்கிப் புனையலாம். மாளிகை கட்டலாம். வாகனம் பெறலாம். அறம் செய்து புகழ் பெறலாம். ஆதலின் பொருள் அவசியந்தான். இவ்வாறு ஒன்றுக்கொன்று மாறுபட்ட எண்ணங்கள் அவன் உள்ளத்திலே போரடிக் கொண்டிருந்தன. பொருள் வேண்டுமென்றால் காதலியோடு இணைந்து வாழும் வாழ்வு இடையிலே இல்லையாகும். இடையீடில்லாமல் அவளோடு வாழ்ந்திருந்தால் அவசியமான போது பொருள் கிடைக்காது. அவளுடன் இணைந்திருப்பது, பொருளுக்காகப் பிரிந்து செல்வது என்ற இரண்டும் ஒன்றற்கு ஒன்று எதிராக அவன் உள்ளமென்னும் களத்தில் நின்று போர் செய்தன. இரண்டு எண்ணங்களும் ஒன்றுக்கு ஒன்று இளைக்கவில்லை. இப்படி உள்ளக் கடலில் மோதும் எண்ண அலைகளினூடே அலைப்புண்டு அவன் தத்தளித்தபோது அவன் காதலி வந்தாள். அவன் எதையோ சிந்தித்துக்கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். புன்னகை பூத்தபடியே “எந்தக் கோட்டையைப் பிடிக்கத் திட்டம் போடுகிறீர்கள்?” என்று கேட்டாள். அந்தப் புன்னகையின் அழகும் அவளுடைய இன்னுரையின் ஓசையும் அவனுடைய எண்ணங்களை நிறுத்தின. அந்த இரண்டுக்கும் மேலே வேறு ஒன்று அவனுடைய போராட்டத்தைப் போக்கியது. அது என்ன? அவள் புன்னகை மலரப் பேசிய போதே அவள் தன் மோகனப் பார்வையை அவன் மீது வீசினாள். விழிகள் ஒரு முறை கடைக்கண் அளவும் சென்று மீண்டன. பார்வை ஒரு வெட்டு வெட்டி அவன் உள்ளத்தைச் சுண்டி இழுத்தது. அந்த அளவில் அந்த ஆண்மகன் தன் ஆற்றல் அழிந்து எண்ணச் சிதறல்களைத் திரட்டித் தூற்றிவிட்டான். இப்போது அவன் உள்ளம் ஒரு நிலைக்கு வந்துவிட்டது. அவள் பார்த்த பார்வையில் எத்தனை கவர்ச்சி காதில் கனமான பொற்குழையை அணிந்திருந்தாள் வடிந்த காதில் அது ஊசலாடிக் கொண்டிருந்தது. அவன் மனம்கூட அப்படித்தான் ஊசலாடியது. ஆனால் அவள் விழிகள் அந்தக்குழையை மோதின. ஓர் ஓரத்திலிருந்து கடைக்கண் அளவும் சென்றன. அந்தக் கண்கள்தாம் காதளவும் நீண்டிருக்கின் றனவே!ஆகவே பார்வை ஒருமுறை வெட்டி இழுக் கையில் விழி கனங் குழையோடு மோதியது போலவே இருந்தது.சிவந்த அரிபடர்ந்த கண்ணை அவன் பார்த்தான்.அந்தக் கண்ணிலேதான் எத்தனை குளர்ச்சி! மழைக்கண்கள் அவை;சேயரி படர்ந்த மழைக்கண்கள்! அவை கனங்குழையோடு அமர் செய்தன.அப்படி அமர்த்த கண்கள் குழையை மாத்திரம் மோதவில்லை; அவன் உள்ளத்தையும் மோதின.அவள் நோக்கின நோக்கத்தில் இனிமை இருந்தது. விருப்பத்துடன் இனிமை பொங்க நோக்கின நோக்கந்தான்.ஆயினும் அது அவன் நெஞ்சைச் செகுத்தது.மெல்லப்பாயும் தண்ணிய நீர் மணற்குவியலைக் கரைத்து விடுவதில்லையா? அவன் மனத்தில் எழுந்த போராட்டமும் அப்படித்தான் கரைந்து போயிற்று.அவள் தன் கனங்குழையோடு அமர்த்த சேயரி மழைக்கண்ணால்.அமர்ந்து இனிது நோக்கிய நோக்கம் அவனைச் செகுத்தது.ஒரு தடவை மட்டுமா பார்த்தாள்? பலபல கோணத்திலே பார்த் தாள்.அத்தனை பார்வைகளும் சேர்ந்து அவனைச் செகுத்தன.பொருள் வேண்டுமென்று எண்ணிய அவன் எண்ணத்தைக் குலைத்தன. “பொருள் எவ்வளவு வகைகளாக, பெரிதாக இருந்தாலும் இருக்கட்டும், எனக்கு வேண்டியதில்லை.எனக்கு இவளோடு பிரிவில்லாமல் வாழும் வாழ்க்கைதான் வேண்டும்” என்ற உறுதியான முடிவுக்கு வந்துவிட்டான். அந்த முடிவுக்கு வந்த பிறகு இப்போது நிதான மாக நினைத்துப் பார்க்கிறான். முன்னாலே ஒன்றை யொன்று எதிர்த்து நின்ற இரண்டுவகை எண்ணங் களையும் நிறுத்துப் பார்க்கிறான். ’என்னுடைய ஆருயிர்க் காதலியோடு இடை விடாது இணைந்து வாழ்ந்தால், பொருள் நமக்குக் கிடைக்காது. இவளோடு நாம் புணரின் பொருள் நம்மோடு புணராது. இதை நினைந்து பொருளைத் தேடிக்கொண்டு இவளைப் பிரிந்து சென்றாலோ இவளுடன் இணையும் இன்பம் அந்தக் காலத்திற் கிட்டாது; பொருள் வயிற் பிரியின் இவளோடு புணர்வு புணராது. இந்த இரண்டுக்கும் நடுவிலே, நெஞ்சமே நீ மிகவும் அல்லற்பட்டாய்!" தன் நெஞ்சைத் தனியாகப் பிரித்து வைத்துப் பேசுகிறவன் போல அவன் சொல்லிக் கொள்கிறான். ‘என் நெஞ்சே, வாழி! அந்த இரண்டு மாறுபட்ட எண்ணங்களிடையே சிக்கிய நீ பொருள் தேடச் சென்றாலும் சரி. செல்லாவிட்டாலும் சரி; நல்லதாகிய ஒன்றை அடைய வேண்டிய உரிமை உனக்கு உண்டு. நல்லதற்கு உரியை நீ செல்வது நல்லதா? செல்லாமல் நிற்பது நல்லதா? சற்றுச் சிந்திக்கவேண்டும். பொருளைத் தேடிச் சென்றால் இவள் கூட்டுறவு இல்லை. அப்படி இவளை விட்டுப் பிரிந்து சென்று ஈட்டும் பொருள் நல்லதா?’ அவன் இப்போது வாதத்தில் வெற்றியடைய நிச்சயித்துவிட்டாள். பிரியாமல் இருப்பதே நல்லது என்று சாதிக்கும் உறுதி அவனிடம் வந்திருக்கிறது. ஆதலின் பொருள் நல்லதன்று என்று காட்ட முற்படுகிறான். ‘பொருளை ஈட்டி வருகிறோம். அது எவ்வளவு காலத்துக்கு நிற்கும்? பொருள் ஒருவரிடத்திலும் நிலையாமல் ஓடிக்கொண்டே இருக்கும் என்று சொல் வார்கள். சென்ற சுவடே தெரியாமல் அது கைமாறு கிறதை உலகில் பார்த்துக் கொண்டேதான் இருக் கிறோம்!’ பொருள் நிலையாது என்ற நினைவு வந்தவுடன் அவனுக்கு ஓர் உபமானம் மனசிலே தோற்றுகிறது. எப்போது பார்த்தாலும் பூ நிரம்ப இருக்கும் பொய்கை ஒன்று அவன் வீட்டுக்கு அருகில் இருந்தது. காலை யிலே தாமரை மலரும்; மாலையில் குமுதம் மலரும். தண்ணீர் நிறைந்து விளங்கியது அந்தப் பூம் பொய்கை. வாடாப் பூவையுடைய பொய்கை அது. எந்தக் காலத்திலும் பூ இருந்து கொண்டே இருக்கும். அதன் நடுவிலே எத்தனையோ மீன்கள் வாழ்கின்றன. அவை ஓடி ஓடி விளையாடுகின்றன. நிலத்தின்மேல் யாராவது ஓடினால் அவன் அடிச்சுவடுகளைக் கொண்டு எந்த வழியே ஓடினான் என்று கண்டு பிடிக்க முடியும். பொய்கை. நாப்பண் மீன் ஓடும்போது அதன் அடிச் சுவட்டையும் அது சென்ற வழியையும் தெரிந்து கொள்ள முடியுமா? நீரில் எழுதின எழுத்து என்று நிலையாமைக்கு உபமானம் சொல்வார்கள். அதுவாவது எழுதுபவனுடைய நினைப்பிலே இன்ன எழுத்து என்று இருக்கும். மீன் ஓடினால் நம்மிடம் சொல்லிக் கொண்டு ஓடுகிறதா? இந்த வழியாக ஓடவேண்டும் என்று நினைத்துத் திட்டம் போட்டு ஓடுகிறதா? ஒன்றும் இல்லை. அது ஓட ஓட அதன் வழி அடுத்த கணத்தில் மறைந்து கொண்டே வருகிறது இந்தக் காட்சி தலைவனுக்கு நினைவு வந்தது. ‘பொருள், வாடாத பூவையுடையபொய்கையின் நடுவில் ஓடும் மீன் செல்லும் வழியைப் போல விரைவில் அழிந்து போவதுதானே? எந்தப் பொரு ளாக இருந்தாலும் எல்லாம் நிலையாமற் போய்விடு பவைகளே. அந்தப் பொருளுக்காகவா இவளை விட்டுப்பிரிவது!’ அவள் அமர்ந்து இனிது நோக்கிய நோக்கம் அவன் உள்ளத்தில் தண்மையைப் புகுத்தியது. ‘நான் சென்று ஈட்டிவரும் செல்வம் சிறிய அளவுடையதாகத்தான் இருக்கும், அது கிடக்கட்டும். “கடல் சூழ்ந்த இந்த உலகத்தையே மரக் காலாக வைத்து அப்படி ஏழு தடவை அளந்து உனக்குத் தருவேன் நீ உன் காதலியைப் பிரிந்து வா” என்று கடவுளே வந்து சொன்னாலும் நான் இவளைப் பிரிய மாட்டேன். விழு நீர் சூழ்ந்த வியலகமாகிய உலகமே தூணியாக வைத்து ஏழு தடவை அளக்கும் விழு நிதி பெறினும், இவளுடைய கனங் குழையோடு அமர்த்த சேயரி மழைக் கண்ணினால் அமர்ந்து இனிது நோக்கும் நோக்கத்தால் செகுக்கப் பட்டவனாதலால், அந்தப் பொருள் எத்தனை வகையாக இருந்தாலும் சரி; அது வாழட்டும்; எனக்கு வேண்டாம். இன்று என் கைப்பட்ட பெரிய நிதி இவள். இவளைப் பிரிதலைவிட வறுமையும் பிணியும் துயரமும் வேறு இல்லை. ஆகவே என் நெஞ்சே, நீ வீணாகச் சபலம் கொள்ளவேண்டாம். நீ வாழ்க! நினைத்த பொருளும் வாழ்க! நான் இவளோடு இன்புற்று வாழும் இணையற்ற வாழ்வு மாறாமல் இருக்கட்டும்.’ இப்போது அவன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். இந்த கருத்தை நற்றிணையில் வரும் அழகிய பாட்டு ஒன்று வெளியிடுகிறது. காதலன் தன் நெஞ்சை நோக்கிக் கூறுவதாக அமைந்திருக்கிறது, அந்தப் பாட்டு. புணரிற் புணராது பொருளே, பொருள்வயிற் பிரியிற் புணராது புணர்வே; ஆயிடைச் செல்லினும் செல்லா யாயினும், நல்லதற்கு உரியை வாழிஎன் நெஞ்சே! பொருளே, வாடாப்பூவின் பொய்கை நாப்பண் ஓடுமின் வழியிற் கெடுவ; யானே. விழுநீர் வியலகம் துணி ஆக எழுமாண் அளக்கும் விழுநெதி பெறினும், கனங்குழைக்கு அமர்த்த செய்அரி மழைக்கண் அமர்ந்து இனிது தொக்கமொடு செருத்தனள்; எனைய ஆகுக, வாழிய பொருளே! [நான் இவளோடு சேர்ந்திருந்தால் பொருள் எனக்குக் கிடைக்காது. பொருளைத் தேடி இவளைப் பிரிந்தால் இவளுடன் இணையும் இன்பம் கிடக்காது. இந்த இரண்டுக்கு மிடையே, பிரிந்து போனாலும் போகாவிட்டாலும், நல்லதாகிய ஒன்றைப் பெறுவதற்கு உரியாய் நீ; என் நெஞ்சமே, வாழி! பொருள், வாடாத பூவையுடைய பொய்கையின் நடுவிலே ஓடுகிற மீனின் வழி உடனே கெடுவது போல, விரைவில் அழிந்துவிடும். நான் உயர்ந்த கடல் சூழ்ந்த பரந்த நிலவுலகமே அளவு கருவியாக ஏழு தடவை அளக்கும் உயர்ந்த நிதியைப் பெற்றாலும் கனமான பொற்குழையோடு போராடி மோதும் சிவந்த அரிகளையும் குளிர்ச்சியையும் உடைய கண்களால் விரும்பி இனிது பார்க்கும் காதலியின் பார்வையினால் மோதப் பேற்றேனாதலின், பொருள் எத்தனை வகைகளாக இருந்தாலும் இருக்கட்டும், வாழ்க, நான் பிரிந்து வரமாட்டேன். ஆயிடை~அவற்றினிடையில், நாப்பண்~ நடுவில் கெடுவ~ கெடுபவை யாகும். விழுநீர்~விழுப்பமான நீரை யுடைய கடல். வியல் அகம்~பரந்த உலகம். தூணி~முகத்தலளவைக்குரிய கருவி. எழுமாண்~ஏழுதடவை. விழுநெதி~உயர்ந்த நிதி. மழை~குளிர்ச்சி. அமர்ந்து~ விரும்பி. செருத்தனன்~மோதப்பட்டேன். எனைய~ எத்தனை அளவுடையவை] இந்தப் பாட்டைப் பாடின புலவர் சிறைக்குடி ஆந்தையார் என்பவர். புன்னையின் கதை ஆழமும் அகலமும் காணமுடியாத கடலின் கரையிலே புன்னை மரங்கள் அடர்ந்து வளர்ந்திருக்கின்றன. ஆழம் காணமுடியாத காதலையுடைய அவ்விருவரும் அந்தப் புன்னைப் பூம்பொழிலில் சந்தித்து அளவளாவி இன்புற்றனர். இன்னும் அவர்களுக்கு மணம் ஆகவில்லை. களவிலே சந்தித்துக் காதலை வளர்த்தனர். காதலியின் தோழி ஒருத்தி அவர்களுடைய காதற்கொடி படர்வதற்குக் கொம்பு நட்டுப் பந்தரிட்டுப் பாதுகாத்தாள். காதலன் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் வந்து தன் காதலியைச் சந்திப்பான். அவன் வேறு இடத்திலிருந்து வருகிறவன். அவனும் கடற்கரையில் உள்ள ஓர் ஊருக்குத் தலைவன்; செல்வமும் அழகும் வலிமையும் பெற்றவன். காதலியின் ஊரும் கடற்கரையைச் சார்ந்தே இருந்தது. அதன் அருகில் உள்ள புன்னைப் பொழிலில்தான் அவ்விருவரும் கண்டு அளவளாவினர். அவர்களுடைய உறவு தொடங்கிச் சிறிது காலமே ஆயிற்று. ஆயினும் பல ஆண்டுகள் பழகினவர்களைப் போல ஆகிவிட்டனர். அவர்களுடைய உயிர்கள் ஒன்றனை ஒன்று பல பிறவிகளாக அறிந்து கொண்டவை போலும்; இவ்வுலகத்தில் இப்பிறவியில் இதுகாறும் ஒருவரை ஒருவர் அறியாமல் சில ஆண்டுகள் வாழ்ந்தார்களே. அதுதான் அதிசயம். அவர்கள் பிரிவின்றி வாழப் பிறந்தவர்கள். காதலன் காதலியைச் சந்தித்துப் பிரித்து செல்வான். அவனோடு அளவளாவிய போதெல்லாம் இன்பம் கண்ட காதலி. அவன் பிரிந்தபோது எல்லையில்லாத துன்பத்துக்கு ஆளானாள். அவனைப் பிரிந்திருக்கும் நேரமெல்லாம் அவளுக்குத் தீயின்மேல் இருப்பதுபோல் இருந்தது. ஆம், அவள் பிரிவுத்தீயிலே வெதும்பினாள். இது அவளுடைய ஆருயிர்த் தோழிக்குத் தெரிந்தது. காதலனைக் களவிலே சந்திக்கும் நேரம் சிறிது; அவனைப் பிரிந்து வாழும் நேரம் பெரிது. ஆகவே, காதலிக்குப் பிரிவினால் வரும் துன்பமே பெரிதாக இருந்தது. காதலன் காதலியைப் பிரியாமல் எப்போதும் உடன் உறைந்தால் அவளுக்குத் துன்பம் இராது. களவுக் காதல் புரிந்துவரும் அவர்கள் எப்போதும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? ஆனால்….ஆனால்… தோழி சிந்தனையில் ஆழ்ந்தாள். அந்தக் கட்டிளங்காளை தன் தலைவியை ஊரார் அறியத் திருமணம் செய்து கொண்டால் என்றும் பிரியாமல் வாழலாம். அவனுடைய வீட்டுக்கே சென்று உலகறியக் கணவன் மனைவியராக வாழ்ந்து இல்லறம் நடத்தலாம். இந்த எண்ணம் தோன்றியவுடன் தோழிக்கு ஆறுதல் பிறந்தது. அந்த இரண்டு காதலர்களையும் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்த வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டாள். காதலனாகிய அந்த ஆடவன் எல்லா வகையிலும் உயர்ந்தவன். அவனிடம் தோழி, “நீ எங்கள் தலைவியை மணம் செய்துகொள்ள வேண்டும்” என்று வெளிப்படையாகச் சொல்வது மரியாதை அன்று. அவனே,‘நாம் இனி இவளை மணப்பதுதான் சரி’ என்று எண்ணி, அதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவனோ களவிலே பெற்ற இன்பப் போதையினால் தலைவிக்குத் தன்னைப் பிரியும் காலத்தில் துன்பம் உண்டாகும் என்பதையே நினையாமல் இருக்கிறான். அவன் தன் காதலியைப் பிரிந்திருக்கும் போதிலெல்லாம் பல வேலைகளில் ஈடுபடும் வாய்ப்புள்ளவனாதலின் அவனுக்கு அத்தகைய துன்பம் மிகுதியாக இல்லை. அவனுக்குத் தன் காதலியை மணம் செய்து கொள்ளும் எண்ணம் தோன்றும்படி செய்யவேண்டும். அதற்கு வழி என்ன என்பதைத் தோழி உன்னினாள். இப்போது அவனும் அவளும் பிறர் அறியாமல் ஒன்று படுகிறார்களே, இது எளிதில் நிகழ்வதன்று; இதற்ககுப் பல இடையூறுகள் உண்டு என்பதை அவன் உணர்ந்தானானால், அந்த இடையூறுகள் இல்லாமல் அவளைச் சந்திக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றி, அதற்குத் திருமணம் செய்து கொண்டு வாழ்வதே ஏற்றதென்று தெரிந்து கொள்வான். ஆதலின் களவுப் புணர்ச்சியில் இடையூறுகள் உண்டு என்பதை அவன் தெரிந்து கொள்ளும்படி செய்யவேண்டும். வழி தெரிந்தவுடன் முயற்சி பலமடைகிறது. தோழி தலைவனுக்குக் குறிப்பாக களவுப் புணர்ச்சியில் உள்ள இடையூறுகளை உணர்ந்த முற்படுகிறாள். நாள் தோறும் சந்திக்கும் இடத்தை மாற்றுகிறாள் காலத்தையும் இடத்தையும் அமைத்துக் கொடுத்து அவர்கள் உறவுக்கு உரமிடுகிறவள் அவள்தானே? இவ்வாறு மாற்றி அமைப்பதைக் குறி பெயர்த்திடுதல் என்று தமிழ்ப் புலவர்கள் சொல்வார்கள். இடத்தை மாற்றும் எண்ணமுடைய தோழி அதற்கு ஒரு காரணத்தையும் கண்டுகொண்டாள். காதலனும் காதலியும் ஒரு குறிப்பிட்ட புன்னை மரத்தின் நிழலில் சந்தித்தார்கள். ஒருநால் காதலன் வந்து அளவளாவி விட்டு விடைபெற்றுச் செல்லத் தொடங்கினான். அப்போது தோழி அவனைக் கண்டு தன் கருத்தை நிறைவேற்ற முயன்றாள். “நாளை முதல் இந்தப் புன்னை மரத்தடிக்கு வர வேண்டாம்” என்றாள் அவள். “ஏன்?” என்று கேட்டான் தலைவன். “இப்போதுதான் இந்தப் புன்னை மரத்தைப் பற்றி எங்கள் அன்னை சொன்ன செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது. அதை நினைந்தால் இதன் அடியில் நீங்கள் சந்திப்பது தகாது என்று தோன்றுகிறது.” “என்ன செய்தி அது?” “ஒருநாள் எங்கள் தாயும் நானும் நின் காதலியும் இந்தப் பக்கமாக வந்தோம். அப்போது இந்த மரத்தைக் கண்டவுடன் எங்கள் தாய் சற்று நின்றாள். அவள் முகத்தில் ஒரு விதமான மலர்ச்சி ஏற்பட்டது. ‘ஏனம்மா நிற்கிறாய்?’ என்று கேட்டோம். அப்போது இந்தப் புன்னை மரத்தின் கதையைச் சொன்னாள்” இப்படிக் கூறித் தலைவியின் தாய் சொன்னதைத் தோழி எடுத்துச் சொன்னாள். - தாய் இளம் பெண்ணாக இருந்த காலம் அது. வேறு இளம் பெண்களோடு அந்தக் கடற்கரையில் விளையாடுவது அவள் வழக்கம். புன்னைக் காய்களைக் கொண்டு வந்து வைத்துக் கொண்டு விளையாடுவார்கள்.ஒருநாள் அப்படி விளையாடியபோது ஒரு புன்னைக் காயை மணலுக்குள்ளே புதைத்து வைளையாடினார்கள். பிறகு விளையாட்டுப்போக்கில் அதை மறந்து வீட்டுக்குப் போய்விட்டார்கள். இரண்டு மூன்று நாள் கழித்த பிறகு ஒருநாள் அந்த இடத்தில் புன்னைக்கொட்டை முளை விட்டிருப்பதை அவள்~ தலைவியின் தாய்~ கண்டாள். ‘அடே! நாம் அன்று புதைத்து மறந்துவிட்டுப் போய்விட்டோம். அது முளைத்திருக்கிறதே!’ என்று ஆச்சரியப் பட்டாள். அவளுக்கும் அவளுடைய தோழிகளுக்கும் அதனிடம் தனியே ஓர் அபிமானம் தோன்றிவிட்டது; தம் கையால் நட்ட வித்திலிருந்து தோன்றிய முளை என்ற அபிமானம். அது முளைக்கவேண்டும் என்று எண்ணி அவர்கள் புதைக்கவில்லை. ஆனாலும் அது முளைத்துவிட்டது. எதிர்பாராமல் தோன்றியமையால் அவர்களுக்கு வியப்பு; தாங்கள் புதைத்தது என்பதனால் ஆனந்தம். இனி அதை நன்றாக வளர்க்கவேண்டும் என்ற பற்று உண்டாகிவிட்டது,. இளங் குழந்தைகளின் நெஞ்சிலேதான் எத்தனை ஆசை! அதற்கு நீர் வார்த்து வளர்ப்பதா! சின்னஞ்சிறு குழந்தையைப் போலப் பாலூட்டி யல்லவா வளர்க்கவேண்டும்? அவர்கள் தம் வீட்டில் நெய்யும் பாலும் உண்டு வளர்கிறவர்கள். அவர்களூடைய குழந்தையாகிய அந்தப் புன்னையும் நெய்யும் பாலும் உண்டு வளரவேண்டும். தினந்தோறும் பாலும் நெய்யும் கொண்டு வந்து விட்டு வளர்த்தார்கள். பாலிலும் தண்ணீர் இருக்கிறது. வானிலிருந்து பெய்யும் மழைநீர் இருக்கிறது. இவற்றால் அந்தப் புன்னை முளை இலைவிட்டுச் செடியாயிற்று. “அந்தச் செடி வளர்ந்து மரமாகி விட்டது. அது தான் இது. நெய்யும் பாலும் ஊட்டி உங்களை வளர்ப்பதற்கு முன்னே இந்தப் புன்னைக்கு நெய்யும் பாலும் ஊட்டி இதனை வளர்த்தேன். இதுதான் என் முதற் குழந்தை. அந்த முறைப்படி பார்த்தால் இந்தப் புன்னை உங்களுக்கு அக்காளாக வேண்டும்” என்று தாய் சொன்னாள். இதைத் தோழி இப்போது தலைவனிடம் கூறினாள். “உங்களைக்காட்டிலும் சிறந்தது இது. உங்களுக்குக் தமக்கையாகும்” என்று அன்னை சொன்னாள். இந்தப்புன்னை யக்காளுக்குப் பக்கத்தில் களவிலே சந்திப்பதற்கு எங்களுக்கு செட்கமாயிராதா? இந்தக் கடற்கரையில் மரத்துக்குப் பஞ்சம் இல்லை. இன்னும் பல மரங்கள் இருக்கின்றன" என்று கூறினாள். மரத்தைக் குழந்தை போலப் பாதுகாக்கும் உயர்ந்த பண்பை அவனும் அறிவான். தம்முடைய தமக்கையாகப் பாவித்து ஒழுகும் பெண்களின் நுட்பமான உணர்ச்சியும் அவனுக்கு விளங்கியது. அவன் குணத்திற் சிறந்த தலைவன். கடற்கரை ஊருக்குத் தலைவன். வலம்புரிச் சங்கங்கள் முழங்கும் கடல் துறையை உடையவன். பாணர்கள் தம் யாழில் விளரிப்பண்ணை வாசித்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கும் வலம்புரிச்சங்குகளின் முழக்கம். அத்தகைய உயர்நிலையில் உள்ள இந்தக் கட்டழகன் அறிவும் உணர்ச்சியும் உடையவன். அதனால் தோழியின் கூற்றை நன்றாகத் தெரிந்து கொண்டான். அதனூடே மறைந்திருக்கும் குறிப்பை அறிந்தான். ‘இந்த இடத்தை விட்டுவிட்டால் இனி இங்கே வேறு இடம் பார்ப்பது ஏன்? வலம்புரிமுழங்கும் நம்முடைய கடற்கரை ஊருக்கே இவளைக் கொண்டுபோய்விடலாம். களவாக அல்ல, கல்யாணம் செய்து கொண்டு, இவளுக்கு நான் கணவன் என்ற உரிமையோடு என் காதலியை அழைத்துச் செல்லலாம்’ என்ற எண்ணம் அவனுக்கு உண்டாகிவிட்டது. அதைத்தானே தோழி விரும்பினாள்? தோழி தலைவனிடம் புன்னையக்காளைப் பற்றிச் சொன்னதை நற்றிணை என்ற சங்க நூலில் உள்ள பாட்டு ஒன்று நமக்குத் தெரிவிக்கிறது. “விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி மறந்தனம் துறந்த காழ்முனை அகைய நெய்பெய் தீம்பால் பெய்துஇனிது வளர்ப்ப, நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்” என்று அன்னை கூறினள், புன்னையது சிறப்பே. அம்ம! நாணுதும், நும்மொடு நகையே விருந்திற் பாணர் விளரிஇசை கடுப்ப வலம்புரி வான்கொடு நாலும் இலங்குதிர்த் துறைகெழு கொண்க! நீ நல்கின் நிறைபடு நீழல் பிறவுமார் உளவே. [“விளையாடுகின்ற பெண்களின் கூட்டத்தோடு வெள்ளையான மணலில் அழுத்தி மறந்து விட்டுச் சென்ற கொட்டையானது முளைவிட்டுத் தளிர்க்க, நெய்யோடு இனிய பாலைப் பெய்து இனிமையாக நாங்கள் வளர்த்துவர, உம்மைவிடச் சிறந்ததாயிற்று; அதனால் உங்கள் தமக்கை ஆகும்” என்று இந்தப் புன்னையின் சிறப்பை அன்னை கூறினாள். ஆதலால் உம்மோடு இங்கே மகிழ்ந்திருப்பதற்கு நாணுகின்றோம். புதுமையான பாணர்கள் பாடும் விளரிப் பண்ணைப்போல வெள்ளிய வலம்புரிச் சங்கு முழங்குவதும், விலங்கும் நீரை யுடையதுமாகிய கடல் துறையையுடைய தலைவனே! நீ நின் காதலிக்கு மகிழ்ச்சியை வழங்குவதானால்,அதற்கு ஏற்றபடி நிறைந்திருக்கின்ற மரநிழல் பிறவும் இருக்கின்றன. ஆயம்~மகளிர் கூட்டம். காழ்~கொட்டை. அகைய~ தழைக்க. நுவ்வை~நும் தவ்வை; உங்கள் அக்காள். நாணுதும்~நாணம் அடைகிறோம். நகை~மகிழ்ச்சி. விருந்து~புதுமை, கடுப்பு~ஒப்ப. வான்கோடு~வெள்ளைச் சங்கு.நரலும்~முழங்கும். கொண்க~தலைவ. நல்கின்~ வழங்கினால், பிறவுமார்; மார்; அசை நிலை.] செவிலி கண்ட காட்சி முயற்சியும் ஆற்றலும் அறிவும் கல்வியும் உடைய தமிழ் மகன் அவன். காதல் உள்ளம் சிறக்கும் காதலி ஒருத்தியைக் கண்டு மனம் ஒன்றிப் பின்பு உலகறிய மணம் செய்து கொண்டான். அழகும், அறிவும், காதலனது வருவாய்க்கு ஏற்ப இல்வாழ்க்கையை நடத்தும் திறமையும் உடையவள் அவள். சில காலம் பொருள் தேடும் பொருட்டுப் பிரிந்து செல்வான் தலைவன். முன்னோர் ஈட்டிவைத்த செல்வத்தைக் கொண்டு வாழ்வதை வாழ்வாக எண்ணாதவன் அவன். தானே முயன்று பெற்ற பொருளைக் கொண்டு அறம் செய்து இன்பம் துய்க்க வேண்டுமென்ற கொள்கையை உடையவன். இதுதான் பழங்காலத்தில் தமிழ்நாட்டு ஆடவனது கொள்கையாக இருந்தது. ஆகவே அவன் காட்டைத் தாண்டியும் நாட்டைத் தாண்டியும் தன்மொழி பயிலாத பிறமொழி பயிலும் இடங்களுக்குச் சென்றும் பொருள் ஈட்டி வந்தான். சில சமயங்களில் திரைகடல் ஓடியும் திரவியம் கொணர்ந்தான். ஆள்வினையாகிய முயற்சி இல்லாதவனை ஆடவனென்று சொல்வது தக்கதன்று. இல்வாழ்வுக்கு இன்றியமையாதது பொருள், அந்தப் பொருள் முயற்சியினாலே பெறப்படுவது. முயற்சியில்லாதவர் பொருளை இழப்பரே அன்றி ஈட்டுதல் முடியாது. தன் காதலன் ஆள்வினையிற் சிறந்து பொருள் ஈட்டி வருவது காதலிக்குப் பெருமிதத்தை உண்டாக்கியது. அப்படி முயற்சியின்மேற் செல்லும் காலத்தில் அவனைப் பிரிந்து வாழவேண்டியிருப்பினும், அந்தப் பிரிவுத் துன்பத்தை ஒருவாறு ஆற்றியிருந்தாள். பிரிவின் முடிவில் பெரிய இன்பம் இருப்பதை நினைந்து அவள் ஆறுதல் பெற்றாள். கண்ணுக்கும் கருத்துக்கும் இனிய கணவனாகிய அவன் இல்வாழ்வுக்கு ஏற்ற வகையில் ஊரவர் புகழ ஊதியம்பெற்று வரும்போது அவளுக்கு உண்டாகும் மகிழ்ச்சிக்கு எல்லை உண்டா? மணம் செய்துகொள்வதற்கு முன்பு இன்பம் ஒன்றையே லட்சியமாகக் கருதி அவர்கள் பழகி வந்தார்கள். உலகியலையும் பிற கட்டுப்பாடுகளையும் மறந்து சுதந்தரமாக இன்பம் துய்த்தனர். மணம் செய்து கொண்ட பின்போ, இன்பம் துய்க்கும் பகுதி இருப்பினும், அறம் செய்தல் தலைமை நோக்கமாயிற்று. அதற்குப் பொருளீட்டுவது இன்றியமையாததாகி விட்டது. பொருள் நிரம்பினால் அறம் செய்து இன்பம் துய்த்து வீட்டு நெறியிலே படரும் முயற்சிகளையும் செய்யலாம். வாழ்வின் பயன் இந்த நான்கு உறுதிப் பொருளையும் அடைவதுதான் என்பது பாரத நாடு முழுவதும் ஊறிப்போன கொள்கை. தலைவன் பொருள் ஈட்டி வந்தால் இல்வாழ்க்கை செவ்விதாக நிறைவேறிவிடுமா? ஈட்டி வந்த பொருளைத் தக்கவண்ணம் பாதுகாத்துச் செலவு செய்யவேண்டும். வரவுக்கு ஏற்றவகையில் செலவை அமைத்துக் கொள்ளவேண்டும். இந்தக் கடமையை மேற்கொள்கிறாள் காதலி. மனைத் தலைவியாகிய அவளுடைய கையிலே இருக்கிறது இன்ப வாழ்வு. தன்னைக்கொண்டவனது செல்வ வருவாய்க்குத் தக்க வகையில் இல்வாழ்க்கையை நடத்தும் ஆற்றலை அவள் பெற்றிருக்கிறாள். ஏர் பிடித்த ஆடவன் எத்தனை ஈட்டினாலும் பானை பிடித்தவள் பங்கிட்டுச் செலவு செய்தால் ஒழிய, இல்லறத்தில் இன்பம் காண வகையில்லை. இதை நன்குணர்ந்த காதலி தலைவன் பெற்று வந்த பொருளை அருமை யறிந்து பேணுகிறாள்; செவ்வியறிந்து செலவு செய்கிறாள். இன்பம் நிரம்பியது; பொருளும் பொலிந்தது; அறமும் அமைந்தது. அந்தத் தமிழ் மனையின் குறை வேறு என்ன? குறை ஒன்றுமே இல்லையே!~ இலையென்று சொல்வதற்கு இல்லை. வாழ்வின் மங்கலமான மனையாட்டியைப் பெற்றான் அந்தத் தமிழ் மகன். ஆனால் அதற்கு நன்கலமாக ஒரு புதல்வனைப் பெறவில்லை. அந்தக் குறை குறைதானே? இறைவன் அருளால் அந்தக் குறையும் நிரம்பி விட்டது. அழகுப் புதல்வன் மனைக்கு ஆபரணமாகப் பிறந்துவிட்டான். இனி அவர்கள் வாழ்வு இன்ப வாழ்வுதான். இந்த இன்ப வாழ்வுக் காட்சியைப் பலவிதமாகப் பழம் புலவர்கள் பாராட்டியிருக்கிறார்கள். பேயனார் என்ற புலவர் ஐங்குறுநூறு என்ற சங்கநூலில் தமிழ் மகன் நடத்திய இன்பவாழ்வைப் பல பாடல்களிலே சித்தரித்திருக்கிறார். அதில் ஒன்றைச் சிறிது பார்க்கலாம். தலைவியைப் பார்ப்பதற்காக அவள் பிறந்தகத்திலிருந்து ஒருத்தி வந்திருக்கிறாள். ‘ஒருவருக்கும் தெரியாமல் கள்ளக் காதல் செய்து இந்தக் காளையோடு பழகினாள். கல்யாணம் செய்துகொண்டு இப்போது குடித்தனம் செய்கிறார்களே; பழைய அன்பு அப்படியே இருகிறதா?’ என்று பார்த்துப் போவதற்காக வந்திருக்கிறாள். அவள் வேறு யாரும் அல்ல. இப்போது மனைத் தலைவியாக விளங்கும் பெண்ணைக் குழந்தைப் பருவம் முதல் கண்மணியைப் போலப் பாதுகாத்து வந்த செவிலித் தாய்தான். பெற்ற தாயை நற்றாயென்றும், வளர்த்த தாயைச் செவிலித்தாயென்றும் சொல்வது தமிழர் வழக்கம். செவிலி வந்து பார்க்கிறாள். வீட்டின் அழகைப் பார்த்து மகிழ்ந்து போகிறாள். மிகவும் வசதியான வீடு. அழகான முற்றம் இருக்கிறது. மற்ற இடங்களும் இருக்கின்றன. வீட்டுக்குத் தலைவன் , தன் மகளுடைய காதலன், பகல் நேரத்தில் தன் கடமையை ஆற்றச் செல்கிறான். ஆனால் கதிரவன் மறைவதற்கு முன்னே வந்துவிடுகிறான். வீட்டில் பண்டங்களுக்குக் குறைவில்லை. கருவிகளுக்குக் குறைவில்லை. எல்லாம் நிரம்பியிருக்கின்றன. குழந்தையை எடுத்துக் கொஞ்சுகிறாள். தன் மகளைப் பார்த்து, “சந்தோஷமாக இருக்கிறாயா?” என்று கேட்கவெண்டிய அவசியமே இல்லை. முயற்சியுள்ள கணவனும் கடமை யறிந்த மனைவியும் சேர்ந்து நடத்தும் இல்வாழ்வு இப்படித்தான் இருக்கும் என்று எடுத்துக் காட்டுவதற்கு ஏற்றபடி இருந்தது அவர்கள் வாழ்க்கை. முன்னிரவு நேரம் காதலனும் காதலியும் உணவு கொண்டனர். பாணன் ஒருவன் வந்தான். அவனுக்கும் உணவு அளித்தனர். குழந்தைக்கும் பாலூட்டினர். வானத்தில் சந்திரன் நிலாவைப் பால்போலச் சொரிந்து கொண்டிருந்தான். “பாணனாரை ஒரு பாட்டுப் பாடச் சொல்லட்டுமா?” என்று கேட்டான் தலைவன். தலைவி, “நல்லது” என்றாள். நிலா எறிக்கும் முற்றத்தில் சித்திர வேலைப்பாடு அமைந்த குறுகிய கால்களையுடைய கட்டிலைப் போட்டார்கள். காதல் தலைவன் அதில் அமர்ந்தான். தனித்து அமர்ந்தால் சுருதி இல்லாத சங்கீதம் போலல்லவா இருக்கும்? அவனுடைய மனைவி துணையாக வந்து அமர்ந்தாள். போதுமா? சுருதி இருந்தும் தாளம் வேண்டாமா? லயம் இல்லாத பாட்டுப் பூரணமான பாட்டு ஆகாதே. அவள் தனியே வரவில்லை. குழந்தையை எடுத்து வந்தாள். தலைவன் வாங்கிக் கொண்டான். கட்டி அணைத்தான். மடியின் மேல் அமர்த்திக்கொண்டான். பாணன் தன்னுடைய யாழை அவிழ்த்து இன்னிசையைஎழுப்பினான். இன்ப நிலவு, இனிமைத் தென்றல், அன்புக் காதலர், அருமைக் குழந்தை, இசையமுதம் எல்லாம் சேர்ந்து அவ்விடத்தைத் தேவலோகம் ஆகிவிட்டன. பாணன் இனிய முல்லைப் பண்ணை வாசிக்கிறான். குழந்தை மார்பிலே பற்றித் தவழத் தலைவன் பாட்டிலே ஆழ்கிறான். தலைவியும் ஆழ்கிறாள். இசை வெள்ளமும் நிலா வெள்ளமும் அவர்களைத் தம்மையே மறந்துபோகச் செய்கின்றன. இதைக் காட்டிலும் இன்பம் நிறைந்த வாழ்வை வேறு எங்கே காணமுடியும்? உள்ளே இருந்தபடியே இந்தக் காட்சியை ஊரிலிருந்து வந்திருக்கும் செவிலித்தாய் பார்க்கிறாள். அவள் காது உணர்ச்சி பெறவில்லை. யாழிசையிலே அவள் உள்ளம் ஈடுபடவில்லை. கண்தான் கூர்ந்து நோக்கியது. அங்கே இருந்த காட்சி அவள் உள்ளத்தில் நன்றாகப் பதிந்தது. அந்த முன்னிரவு நேரமாகிய மாலையைக் கண்டாள்; முற்றத்தைக்கண்டாள். அதன் நடுவிலே குறுங்காற் கட்டிலை அவள் கண்கள் கண்டன. தன் அருமை மகள் அந்தக் கட்டிலில் வீற்றிருத்தலைப் பார்த்தாள். சிங்காதனத்திலே அரசனோடு வீற்றிருக்கும் அரசியைப் போல அந்த மனையரசி அங்கே வீற்றிருந்தாள். அப்போது அவள் முகப் பொலிவைக் கண்டு கண்ணால் முகந்து பருகினாள். அருகில் அவள் காதலனையும் பார்த்தாள். ஊன்றிக் கவனிக்கவில்லை; நாணம் தமிழ்ப் பெண்கள் இயல்பு. ஆனால் அத் தலைவன் மார்பைப் பற்றிக்கொண்டு தவழும் குழந்தையைப்பார்த்தாள். அந்த நேரத்துக்கு ஏற்ற காட்சி அது. அந்த இன்பப் பொழுதுக்கு ஏற்றபடி யாழ் இசை அமைந்திருந்தது. எல்லாவற்றையும் கண்ணினால் அளவிட்ட பிறகு, காது கொடுத்துக் கேட்டாள். பாணன் சரியான பாட்டைத்தான் பாடினான். முல்லைப்பண் அமைந்த ஒரு பாட்டு; இன்ப வாழ்வைப் பாடும் பாட்டு. அவள் உள்ளத்தைக்கூட அந்தப் பாட்டு மெல்ல மெல்லப் பிணித்தது. நின்றபடியே கேட்டாள். செவிலி மீட்டும் தன் ஊருக்குப் போனாள். நற்றாய், போய் வந்த செய்தியை அறிய ஆவலோடிருந்தாள், செவிலி ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்ல **** அவர்கள் வாழ்க்கை பொருளால் நிரம்பியிருக்கிறதென்று தனியே சொல்லவில்லை. அவர்கள் அன்பு சிறந்து நிற்கிறதென்று பிரித்துப் பேசவில்லை. அவர்கள் கலையின்பத்தில் இன்பங் காண்கின்றார்கள் என்று தனியே உரைக்கவில்லை. மாலையிலே தான் கண்ட காட்சியைத் தான் கண்டவாறே சொன்னாள். போதாதா? இன்ப வாழ்வின் அழகிய படந்தானே அந்தக் காட்சி? மாலை முன்றிற் குறுங்காற் கட்டில் மனையோள் துணைவி யாகப் புதல்வன் மார்பின் ஊரும் மகிழ்நகை இன்பப் பொழுதிற்கு ஒத்தன்று மன்னே மென்பிணித் தம்ம பாணனது யாழே. [ஐங்குறு நூறு,410} [மாலை வேளையில் வீட்டு முற்றத்தில் குட்டையான காலையுடைய கட்டிலில் தன் மனைவி அருகே இருக்க, புதல்வன் தன் மார்பில் ஊரும் மிக்க மகிழ்ச்சியோடுள்ள பொழுதுக்கு ஏற்றபடி மெல்ல உள்ளத்தைப் பிணிக்கும் பாணனது யாழ் இருக்கின்றது. மகிழ்நகை~மிக்க மகிழ்ச்சி. ஒத்தன்று~பொருத்தமாக இருந்தது. மென்பிணித்து~மெல்லப் பிணிக்கின்ற தன்மையை உடையது] கம்பர் முகந்தது தமிழ்த்தாயின் அணிகலங்களுள் காப்பியச் சுவை பல நிரம்பி விளங்கும் சிந்தாமணி, கற்றவர் உள்ளங்களைக் களிக்கச் செய்யும் சிறந்த நூல். பெரும் புலவர்கள் இந்தக் காப்பியக் கடலுள் துளைந்து விளையாடி இன்புற்றார்கள். பிற்காலத்தில் தமிழில் காப்பியங்களை இயற்றிய கவிஞர் அனைவரும், சிந்தாமணியை நன்றாக ஆராய்ந்து, அதன் சொல்லையும் பொருளையும் தம்முடைய நூல்களில் எடுத்து ஆண்டிருக்கின்றனர். தமிழில் சுவைப் பிழம்பாய் விளங்கும் இராமாயணத்தைப் பாடிய கவிச் சக்ரவர்த்தியாகிய கம்பர், சிந்தாமணியின் அமைப்பை நன்றாகக் கண்டு ஈடுபட்டார். சொல், பொருள், யாப்பு, அணி என்ற வகைகளில் சிந்தாமணியிலே கண்டவற்றை அவர் பொன்னே போலப் போற்றிப் பொதிந்து கொண்டார். சிந்தாமணியைப் புதையலெடுத்தாற் போல எடுத்து அணி செய்து தமிழ் உலகில் உலவவிட்ட தமிழ்ப் பேராசிரியப்பிரானாகிய ‘மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள்’, சிந்தாமணியின் மூன்றாம் பதிப்பு முகவுரையிலே ஒரு செய்தியைத் தெரிவித்திருக்கிறார்கள்: ‘…..இராமாயணத்தைக் கம்பர் அரங்கேற்றுகையில்,’அள்ளிமீ துலகை வீசும்’ (விபீடணன் அடைக்கலப் படலம். 133) என்னும் பாடலில் உள்ள, ‘வெள்ளிவெண் கடலின்’ என்ற பகுதியைக் கேட்ட புலவர் ஒருவர், ‘இது சிந்தாமணிப் பிரயோகமாய் இருக்கிறது’ என்று சொல்லியபோது கம்பர், ‘சிந்தாமணியிலிருந்து ஓர் அகப்பை முகந்து கொண்டேன்’ என்று விடை பகர்ந்தனர் என்பது பழைய பிரதி ஒன்றில் எழுதிய குறிப்பால் தெரிய வருகிறது என்பதே அச்செய்தி. இதனால், கம்பர் சிந்தாமணியாற் பெற்ற பயன் இன்னதென்பது நன்கு தெரியவரும். ஒருவர், “உலகமே சுவைக்கவில்லை!” என்று சொல்கிறார்; “எந்தப் பொருள் எப்படிப் போனால் என்ன? சூரியன் எங்கே உதயமானால் என்ன?” என்று பேசுகிறார்; “உலக வாழ்க்கையில் இன்பம் காணும் முயற்சியே இனி வேண்டாம்” என்றும் சொல்கிறார். அவர் இலக்கியத்தில் இன்பங் கண்டவர். இப்போது அதுகூட வேண்டாம் என்கிறார். நல்ல தமிழ்க் காப்பியங்களை ஆவலுடன் வாசித்தவர், அவர் அப்புலவர் அருமையாக எடுத்துக் கூறும் காவியங்கள் மூன்று; திருக்குறள் ஒன்று. திருத்தக்க மாமுனிசிந் தாமணி கம்பர் விருத்தக் கவித்திறனும் வேண்டேம் ~ உருத்தக்க கொங்குவேள் மாக்கதையைக்* கூறேம் குறள்அணுகேம் எங்கெழிலென் ஞாயி றெமக்கு? ~ *கொங்குவேள் மாக்கதை ~ கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதை. என்பது அந்த இலக்கிய ரசிகர் கூற்று. என்ன காரணத்தாலோ ஒரு சமயத்தில் மனம் நைந்து இப்படிக் கூறினாலும் அவர் கூற்றிலிருந்தே அவருக்குத் தமிழ் நூல்களில் எத்தனை ஆர்வம் இருக்கிறதென்பது தெளிவாகும். ’நல்ல தமிழ் நூல்களே வேண்டாம் என்ற நிலை வந்த பிறகு சூரியன் உதயமாவதைப் பற்றி நமக்கு என்ன கவலை?" என்றல்லவா அவர் சொல்கிறார்? இங்கே அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நூல்களுள், சிந்தாமணி முதலில் நிற்கிறது. அதனை அடுத்துக் கம்பராமயணம் வருகிறது. இரண்டும் காப்பியச் சுவையிலே சமானமாய் நிற்பவை என்று அவர் எண்ணினார் போலும்! கம்பரையும் திருவள்ளுவரையும் ‘தமிழுக்குக் கதி’ என்று சொல்வது ஒரு வழக்கு. தமிழ்க் காவிய உலகத்தில் கம்பரும் திருத்தக்கதேவரும் கதி என்று புதிய வழக்கு ஒன்றை நாம் புக விட்டால், அது உண்மைக்கு மாறு ஆகாது. கம்பர் சிந்தாமணியிலிருந்து பல சொற்களையும் சொற்றொடர்களையும் முகந்துகொண்டிருக்கிறார்; பொருளமைதியையும் காவிய மரபையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்; இன்ன வகையான செய்திகளை இன்ன வகையான செய்யுளில் சொல்லவேண்டு மென்பதையும் தெரிந்து அமைத்திருக்கிறார். பலபல உவமைகளை மொண்டு கொண்டிருக்கிறார். அவர் முகந்துகொண்டது ஓர் அகப்பையே என்றாலும், அது மிகமிகப் பெரிய அகப்பை! அவர் தம்முடைய அகமாகிய பையையே அகப்பையாகக் கொண்டு முகந்திருக்க வேண்டும்! அவர் முகந்து கொண்டவற்றை நூல்பிடித்துப் பார்த்து வரையறுப்பது எளிய காரியம் அன்று. ஆனாலும் சிலசில உதாரணங்களால் கம்பருக்குச் சிந்தாமணி எவ்வாறு உதவியாய் விளங்கியது என்பதைப் புலப்படுத்தலாம். முதலில் சொல்லைக் கவனிக்கலாம். ஐயரவர்கள் முகவுரைக் குறிப்பில் ‘வெள்ளிவெண்’ என்ற பிரயோகத்தைச் சிந்தாமணிப் பிரயோகம் என்று ஒரு புலவர் கூறியதாகக் காட்டியிருக்கிறார்கள். ‘வெள்ளி’ என்றோ ‘வெண்மை’ என்றோ சொல்லாமல், இரண்டையும் சேர்த்துச் சொல்லியவர் திருத்தக்க தேவர். ‘மழைத் தாரைகள் வெள்ளை வெளேரென்று வெள்ளிக் கோலைத் தொங்கவிட்டாற்போல் இருந்தன’ என்பது தேவர் கூறும் வருணனை. அங்கே, .. … … … வெள்ளிவெண் கொல்தி ரைத்தன பொற்கொழுந் தாரைகள் என்கிறார். நாற்றிசையிலும் அருவி விழுகிறது. அதன் நீர் ஒழுக்கு வெள்ளிக் கம்பிகளைப் போல இருக்கிறதாம். வெள்ளி வெண் திரள் விசித்து* என்று வருகிறது பாட்டு. இந்த ‘வெள்ளி வெண்’ என்ற தொடரையே கம்பர் எடுத்து ஆண்டார். ‘இராமன் கடற்கரையில் குரங்குக் கூட்டத்திற்கு மத்தியில் இருந்தான். பாற்கடலில் பள்ளிகொண்டிருந்தவன் தேவர்கள் வேண்டத் துயிலெழுந்து அமர்ந்திருந்தவன் போல இருந்தது அந்தக் காட்சி’ என்று கம்பர் கூறுகிறார். வெள்ளிவெண் கடலின் மேனாள் விண்ணவர் தொழுது வேண்டப் பள்ளிதீர்ந் திருந்தான் என்னப் பொலிதரும் பண்பி னானை என்பது பாட்டு. ‘நமர்’ என்பதற்கு ‘நம்மவர்’ என்பது பொருள். நமர்களை அழைப்பதாயின், ‘நமர்களே’ ‘நமர்காள்’ என்று அழைப்பது இயல்பு. சிந்தாமணியில் முதல் முதலாக, ‘நமரங்காள்’ என்ற விளியைத் திருத்தக்க தேவர் அமைத்தார். நம்குடித் தெய்வம் கண்டீர் நமரங்காள்! அறிமின் (547) செல்வம் நமரங்காள்! நினையன்மின்; செய்தவமே நினைமின் கண்டீர் (2623) நம்பன்மின் செல்வம் நமரங்காள்! நல்லறமே நினைமின் கண்டீர் (2624) என அச்சொல்லைச் சிந்தாமணியிலே கண்டார் கம்பர்; நாகக் குன்றின் நின்றன காண்மின் நமரங்காள்! நளினக் காடே ஒப்பன காண்மின் நமரங்காள்! நாவாய் மானச் செல்வன காண்மின் நமரங்காள்! நடக்கால் காட்டும் கண்ணுளர் ஒக்கும் நமரங்காள்! நழுவிச் செல்லும் இயல்பின காண்மின் நமரங்காள்! நாளின் முற்றா வெண்பிறை போலும் நமரங்காள்! நகரம் நோக்கிச் செல்வன காண்மின் நமரங்காள்! என்று களங்காண் படலத்தில் பல இடங்களில் அச்சொல்லைப் பெய்து கொண்டார். அப்பால் வந்தவராகிய குமர குருபரரும் இச் சொல்லை எடுத்தாண்ட கற்பனை நயம் பெறச் செய்திகளைச் சொல்வதில் தேவரும் கம்பரும் வல்லவர். சில கற்பனைகளைத் தேவரிடமிருந்து கம்பர் பெற்றுத் தமது காவிய மாளிகையிலே பொருத்தியிருக்கிறார். உழவர் வயல்களில் வேலை செய்கின்றனர். சிலர் களை பறிக்கின்றனர். மற்றக் களையெல்லாம் களைந்தவர்கள், குவளையையும் தாமரையையும் தொடவில்லையாம். அவை தம் காதலிமார் கண்ணைப் போலவும் முகத்தைப் போலவும் இருந்தமையால் அவற்றைக் களையாமல் விட்டார்களாம். கண்ணெனக் குவளையுங் கட்டல் ஓம்பினார்; வண்ணவாண் முகமென மரையின் உள்புகார்; பண்எழுத் தியல்படப் பரப்பி யிட்டனர்; தண்வயல் உழவர்தம் தன்மை இன்னதே! (கட்டல்~களையெடுத்தல். ஓம்பினார்~நீக்கினார். மரை~தாமரை) குவளை களைதலை நீங்கினார், அவை காதலிமார் கண்களைப் போன்று இருந்தமையால் தாமரையின் பக்கத்திலே கூடப் போகவில்லை; அவை தம் காதலிமார் வண்ணவாள் முகமெனத் தோன்றினமையால் குவளையையும் தாமரையையும் கண்டபோது அவைகளைகள் என்ற நினைவையே மறந்து, தம் காதலிமார் அழகை நினைந்தனர். அந்த நினைப்பிலே அவர்கள் உள்ளத்தில் இன்பம் கொந்தளித்தது. பாடல்களை அந்த உற்சாகத்திலே பாடத் தொடங்கினார்கள்; மெல்லப் பாடினார்கள். இந்தக் காலத்துப் பாடகர்கள்கூட, வார்த்தைகளை விழுங்கிவிட்டு ராகத்தால் பூசி மெழுகுகிறார்களே; அப்படிப் பாடவில்லை. எழுத்தின் இயல் நன்றாக வெளிப்படும்படியாக, அட்சர சுத்தமாக, பண்களைப் பாடிப் பரப்பினார்கள். குளிர்ந்த வயலில் உள்ள உழவர்களின் இயல்பு இப்படிப்பட்டது. மலர்க் காட்சியும் மங்கையர் நினைப்பும் இனிய பாடலும் ஒன்றுபடும் இடமாக அந்தத் தண்வயல் விளங்குகிறது. கம்பர் இந்தப் பாட்டைப் பார்த்தார். அவர் நாட்டுப் படலத்தில் மள்ளர்களைக் காட்டுகிறார். இந்தப் பாட்டின் கருத்தைப் பின்னும் கம்பர் விரிவாக்கினார். கோசல நாட்டு மள்ளர்கள் களை பறித்தலையே விட்டுவிட்டு நின்றார்களாம். அதற்கு இரண்டு காரணம்: ஒன்று, வயல் முழுவதும் குவளையும் தாமரையும் ஆம்பலுமாகவே நிற்கின்றன; அவை கடைசியருடைய கண்ணையும் கையையும் காலையும் முகத்தையும் வாயையும் நினைப்பூட்டுகின்றன. இரண்டு, அவர்கள் காமத்தால் மயங்கி நின்றார்கள். அதோடு கள் மயக்கமும் சேர்ந்து கொண்டது. அதனால், எடுத்துக்கொண்ட காரியத்தை நிறைவேற்ற மாட்டாமல் மனம் மயங்கி நிற்கிறார்கள். சின்னப்புத்தி படைத்தவர்கள் காமத்தின் வயப்பட்டால் கடமையைச் செய்ய முடியுமா, என்ன? அவர்கள் எங்கே அதிலிருந்து பிழைக்கப் போகிறார்கள்! கம்பர் இவ்வாறு வருணித்துக் ‘காமத்தைப் பெற்ற சிறியோர் உய்யமாட்டார்’ என்ற நீதியையும் இங்கே இணைத்து விட்டார். பண்கள்வாய் மிழற்றும் இன்சொற் கடைசியர் பரந்து நீண்ட கண்கைகால் முகம்வாய் ஒக்கும் களையலால் களையிலாமை உண்கள்வார் கடைவாய் மன்னர் களைகலா துலவி நிற்பார்; பெண்கள்பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியர் பெற்றால்? [கடைசியர்~மள்ளருடைய மனைவிமார். இலாமை~ இல்லாமல். உண்கள்வார் கடைவாய்~ தாம் உண்ட கள் ஒழுக்ன்ற கடைவாயை உடைய. மள்ளர்~ உழவர்.களைகலாது~ களையாமல்] பதுமை என்பவள் தூங்கிக்கொண்டிருந்தபோது சீவகன் அவளைப் பிரிந்து போய்விடுகிரான். கண் விழித்த பதுமை,தன் அரும்பெறற் காதலனைக் காணாமல் வருந்துகிறாள்; கண்ட கண்ட பொருள்களையெல்லாம் பார்த்துப் புலம்புகிறாள்; கிளியையும் பூவையும் அன்னத்தையும் மயிலையும் விளக்கையும் மாடத்தையும் விளித்து என்ன என்னவோ சொல்கிறாள். மயிலைக்கண்டாள். அதன் தோகையிலேதான் எத்தனை கண்கள்! அவள் கயற் கண்ணினாள்; அந்தக் கண்ணை மூடித் தூங்க்ப்போனாள். அப்போது சீவகன் பிரிந்து மறைந்தான். மயிலினுடைய கண், மூடாத கண் அல்லவா? அத்தனை கண்களில் ஒன்றாவது அவனைப் பார்த்திராதா? அவன் எந்த வழியாகப் போனான் என்று தெரிந்து கொண்டிராதா?~ பாவம்! பதுமை பிரிவு பொறாமல் இப்படியெல்லாம் நினைக்கிறாள். ‘மையில்லாத கண், மயிற்கண்; தூங்காத கண். மெய்யெல்லாம் அப்படிப் பல கண்களைப் படைத்தது மயில். அவற்றைக் கொண்டு உண்மையைக் கண்டிருக்குமே! ஐயன் சென்ற இடத்தை அறிந்திருக்குமே!’ ஆம் அதைக் கேட்டுக்கொண்டே ஒரு கும்பிடு போட்டாள் பதுமை. மையில் வாள்நெடுங் கண்வள ராதன மெய்யெ லாம்உடை யாய் மெய்ம்மை காண்டிநீ ஐயன் செந்றுழிக் கூறுகென் றாய்மயில் கையி னால்தொழு தான்கயற் கண்ணினாள். [மை இல்~மை இல்லாத. வான்~ஒளி. வளராதன~ தூங்காதனவாகிய. காண்டி~பார்ப்பாய். சென்றுழி~ சென்றவிடத்தை. ஆய்மயில்~ அழகையுடைய மயில்.] ‘மயில் அத்தனை கண்களாலும் பார்த்திருக்கக் கூடுமே!’ என்று பிரிவினால் மயங்கிய ஒருத்தி கூறும் இதைக் கம்பர் கண்டார்; நல்ல இடத்தில் இதைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டு மென்று நினைத்தார். அவருடைய காவியத்திலேதான் இராமனும் சீதையும் பிரிந்து வாடும் கட்டங்கள் இருக்கின்றனவே! வேறு ஒரு கவிஞராயிருந்தால், சீதை வருந்துவதாக வரும் இடத்தில் இந்தப் பாட்டை அப்படியே தூக்கி வைத்து விடுவார். கம்பர் சாமர்த்தியசாலி; எதையும் புதுமெரு கேற்றிப் பொலிவூட்டுபவர். இராமன் சீதையைப் பிரிந்து வருந்துமிடத்தில் பல கண்களையுடைய மயிலைக் கொண்டு வந்தார். இராமன் அதைப் பார்க்கிறான். அது ஆயிரம் கண்களையுடையது; நிச்சயம் சீதை போகுமிடத்தைப் பார்த்தே இருக்கும். கம்பர், ‘நீ பார்த்தாயா? சொல்’ என்று இராமன் சொன்னதாக அமைக்கவில்லை. அப்படி அமைத்தால்’ பதுமைக்குப் பதில் இராமன் சொல்வதாக இருப்பதை யன்றி மற்ற எல்லாம் ஒன்றாகவே இருக்குமே! ‘ஆடவன் சொல்வதிலே பின்னும் நயம் காட்டலாம்’ என்று எண்ணினார். மயில் ஆடுகிறது; சீதை சென்றதை ஆயிரங் கண்களால் பார்த்தும் அது இப்படிச் சிந்தை உவந்து ஆடுவதற்குக் காரணம் என்ன? சீதைக்கும் மயிலுக்கும் பகை உண்டு. ஆம்! னுன்பெல்லாம் சீதையைக் கண்டால் மயில் முன்னே நிற்காமல் ஓடும்; அவளுடைய சாயலைக்கண்டு, ‘இந்தச்சாயல் நமக்கு இல்லையே!’ என்று அழுக்காறு அடைந்து ஒதுங்கி மனம் வெதும்பிப் பகைவரைப் போலே திரியும். இப்போது சிந்தை உவந்து ஆடுகின்றது. இராமன் தன் உயிர் போன்ற சீதையைத் தேடிக்கொண்டிருக்கிறான். மயில் நினைத்தால் உண்மையைச் சொல்லலாம். ஏனென்றால், அது நிச்சயமாக அவளைக் கண்டிருக்கிறது. ஆயிரங் கண்ணுடைய அதற்குத் தெரியாமல் ஒளிந்து போகமுடியுமா? இராமன் கூற்றாக வைத்து, இத்தனை எண்ணங்களையும் அவன் வெளிப்படுத்துவதாகக் கம்பர் பம்பைப் படலத்தில் பாடுகிறார்: ஓடா நின்ற களிமயிலே! சாயற்கு ஒதுங்கி உள்ளழி*ந்து கூடா தாரின் திரிகின்ற நீயும் ஆகம் குளிர்ந்தாயோ? தேடா நின்ற என்னுயிரைத் தெரியக் கண்டாய் சிந்தை உவந்து ஆடாநின்றாய் ஆயிரங்கண் உடையாய்க்கு ஒளிக்கு மாறுண்டோ? [ஓடாநின்ற~முன்பெல்லாம் ஓடுகின்ற. அழிந்து~வருந்தி கூடாதாரின் ~பகைவரைப் போல உடை யாய்க்கு ~உடைய உனக்கு] - - காவியங்களில் முதலில் மழையைப் பற்றிக் கூறி மழை பெய்ய நீர்மல்கி அருவி பாய்ந்து ஆறாகி, ஆற்று வெள்ளம் பாய்ந்து வயல் வளம் பெறுவதாக அமைப்பது மரபு. இந்த மரபுக்கு வழி காட்டியவர் திருத்தக்க தேவர். கம்பர் அதனை விரிவாக அமைத்தார். அப்படியே திணை வருணனையும் திணை மயக்கமும் காவியத்தில் அமைவதைச் சிந்தாமணியில் முதலிற் காணலாம். காப்பிய நாயகனுக்கும் நாயகிக்கும் உணர்ச்சி ஒத்திருத்தலைச் சிந்தாமணி பல இடங்களில் காட்டும்; கம்பரும் காட்டுகிறார். உயர் நிலையில் வாழும் தலைவிமார்களுக்கு வினைவல பாங்கினராகக் கூன் , குறள், சிந்து என்ற விகார உருவத்தினர் இருப்பதாகப் பழைய நூல்கள் கூறும். பெருங்கதையாசிரியர் அதை அமைத்திருக்கிறார். சிந்தாமணியிலும் வருகிறது; கம்பரும் சொல்கிறார். ஆனால் சிந்தாமணியிலும் இராமாயணத்திலும் தலைவி புறப்படுகையில் இந்தக் கூட்டத்தினர் உடன் வருகின்றனர். காந்தருவ தத்தை அழகாக அலங்காரஞ் செய்து கொண்டு புறப்படுகிறாள். அவளுடன் குறளும் சிந்தும் வந்தனவாம். குறள், மிகக் குட்டையான வடிவம்; அதைவிடச் சிறிது உயர்ந்தது சிந்து. அவை கையை வீசி நடப்பது தேரை நடப்பது போல இருந்ததாம். ஆரம் துயல்வர அந்துகில் சோர்தர வீரம் பட க்கையை மெய்வழி வீசித் தேரை நடப்பன போற்குறள் சிந்தினொ டோரும் நடந்தன ஒண்டொடி முன்னே. [ஆரம் துயல்வர ~ முத்து மாலை அசைய துகில் = ஆடை. ஓரும் ~ அசை. ஒண்டொடி ~ காந்தருவதத்தை.] இராமாயணத்தில் சீதை திருமண மண்டபத்துக்கு வருகிறாள். தோழிமார் புனைந்த அணிகளும் மணிகளும் ஆடையும் அழகு செய்ய நடந்து வருகிறாள். அப்போது சிந்து குறள் கூன் ஆகிய கூட்டங்கள் வந்து பணிகின்றன; அவளுடன் வருகின்றன. சிந்தொடு குறளும் கூனும் சிலதியர் குழாமும் தெற்றி வந்தடி வணங்கிச் சுற்ற மணியணி விதான நிழல் இந்துவின் கொழுந்து விண்மின் இனத்தொடும் வருவ தென்ன நந்தலில் விளக்க மன்ன நங்கையும் நடக்கலுற்றாள். (கோலங்காண். 23.) [சிலதியர்= *** மகளிர். குழாம் ~ கூட்டம். தெற்றி ~ நெருங்கி. இந்து சந்திரன். விண்மீன் ~ நட்சத்திரம். நந்தல் இல் விளக்கம் ~ அவியாத விளக்கு.] இராமன் நகர் நீங்கிய பிறகு அயோத்தி நகரம் ஜீவனற்றுக் கிடந்ததைக் கம்பர் சோகச் சுவை சொட்டச் சொட்டப் பாடுகிறார். சிந்தாமணியில் முத்தியிலம் பகத்தில் சீவகன் துறவை மேற்கொண்டபோது நகரம் பொலிவழிந்திருந்ததைத் தேவர் வருணிக்கிறார். இரண்டிலும் பல கருத்துக்கள் ஒத்து நடப்பதைக் காணலாம். - - இன்ன சுவையுள்ள பகுதிக்கு இன்ன வகையான செய்யுள் பொருத்தமாக இருக்கும் என்று ஆய்ந்து அமைப்பது பெருங் கவிஞருக்கு இயல்பு. அந்த வகையிலும் சிந்தாமணியைக் கண்டு கம்பர் அமைத்த இடம் சில உண்டு. கம்பர் பின்னும் நுணுக்கமாக அமைத்தவற்றைப் பிற்காலக் கவிஞர்கள் கடன் கொண்டு அமைத்திருக்கிறார்கள். சீவகனைப் பிரிந்த பதுமை, அருகிலுள்ள பொருள்களை யெல்லம் பார்த்துப் புலம்புகிறாள். நிரைவி ழருவிந் நிமிர்பொன் சொரியும் வரையே! புனலே! வழையே! தழையே! விரையார் பொழிலே! விரிவெண் ணிலவே! உரையீர் உயிர்கா வலனுள் வழியே * என்பது போன்ற கலி விருத்தங்களைத் திருத்தக்கதேவர் அங்கே அமைக்கிறார் கவிச் சக்கரவர்த்தி கம்பரும். சீதை இராவணனால் சிறையெடுக்கப் பெற்றுச் செல்லும்போது இந்தச் சந்தத்தில் அமைந்த கலி விருத்தங்களையே ஆளுகிறார். - வரிசையாக விழும் அருவியானது ஒளி ஓங்கும் பொன்னைச் சொரிவதற்கு இடமான மலையே, நீரே, சுரபுன்னையே, மரங்களின் தழையே, வாசனை கொண்ட சோலையே, விரிந்த வெள்ளியே,நிலவே, என் உயிருக்குக் காவலனாகிய சீவகன் இருக்கும் இடத்தைச் சொல்வீராக. மலையே! மரனே! மயிலே! குயிலே! கலையே! பிணையே! களிறே! பிடியே! நிலையா உயிரேன் நிலைதே றினிர்போய் உலையா வலியா ருழைநீர் உரையீர் * (சடாயு உயிர் நீத்த. 77) என்பது போன்ற பாடல்களைப் படிக்கும்போது மேலே சொன்ன சிந்தாமணிப் பாடல்களைப் படித்த நினைவு வருவது இயல்பே. பின்னும் சுந்தர காண்டத்தில், அசோக வனத்தில் தனியிருந்து புலம்பும் சீதையின் வாக்கை இதே சந்தத்தில் கம்பர் காட்டுகிறார். தழல்வி சக(?)லாய் வருவா டைத ழீஇ அழல்வீர்! எனதா வியறிந் திலிரோ? நிழல்வி ரையனார் உடன்நீர் நெடுநாள் உழல்வீர் கொடியீர் உரையா டிலிரோ? + (உருக்கட்டு 6) என்ற இடத்தைக் காண்க. கவிக்குச் சுவைதரும் அலங்காரங்கள் பலவற்றுள் தலைமை பெற்றது உவமை. பெருங்கவிஞர்கள் இடத்துக்கு ஏற்றபடியும் பொருளுக்கு ஏற்றபடியும் பாத்திரங்களுக்கு ஏற்றபடியும் உவமைகளை அமைப்பார்கள். திருத்தக்க தேவர் பல புதிய புதிய உவமைகளைக் கூறுகிறார். கம்பரும் உவமை கூறுவதில் சளைத்தவர் அல்லர்; சில சில உவமைகளைச் சிந்தாமணியினின்றும் எடுத்துச் சிறிது மாற்றியும் கூட்டியும் போற்றி வைக்கிறார். - மலையே, மரமே, மயிலே, குயிலே, ஆண் மானே,பெண்மானே, ஆண்யானையே, பெண்யானையே, நிலைநில்லாத உயிரையுடைய எனது நிலையைத் தெரிந்துகொண்டு போய்த் தளராத வலிமையை யுடைய என் காதலரிடம் சென்று நீர் உரைப்பீர்களாக. - கொடியீர், (கொடிகளே என்றும், கொடியவர்களே என்றும் இருபொருள் படும்படி இச்சொல் அமைந்தது.) நெருப்பின் வெம்மை வீச உலாவி வரும் வாடைக் காற்றைத் தழுவிக்கொண்டு என் உயிர் எரியும்படி செய்கிறவர்களே, இதனை நீங்கள் அறியவில்லையோ? நிழல் காட்டும் கடல் போன்ற திருமேனியை உடைய என் காதலருடன் நெடுநாள் பழகி அலைந்தவர்களே, அவருக்கு என்னைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையோ? மழைத் தாரைக்கு வெள்ளி வெண் கோலைத் தேவர் உவமை கூறினார். கம்பர் வெள்ளி விழுதைக் கூறினார்: …. …. ….. வெள்ளிவெண் கோல்நி ரைத்தன போற்கொழுத் தாரைகள் வான்நி ரைத்து மணத்து சொரிந்தவே (சிந்தாமணி 33) (நிரைத்தனபோல் ~ வரிசையாக வைத்தவற்றைப் போல. நிரைத்து ~ வரிசையாக நின்று.) வெள்ளி வீழிடை வீழ்த்தெனத் தாரைகள் … …… வழங்கின மேகமே. (கம்பராமாயணம்) (வீழ் ~ விழுது. வீழ்த்தென ~ வீழச்செய்ததுபோல. தாரைகள் ~ மழைத்தாரைகளை.) இராசமாபுரத்தின் வீதிகளில் பல நாட்டு மக்களும் வந்து குழுமுகிறார்கள். பதினெட்டுப் பாஷையைப் பேசுகிறவர்களும் கூடித் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். அந்தப் பேச்சின் ஒலிக்குத் திருத்தக்க தேவர் ஓர் உவமை கூறுகிறார். ஆல மரத்தில் பட்சிக் கூட்டங்கள் சேர்ந்து பல பல விதமான ஓசையை எழுப்புமே, அப்படி இருந்ததாம்: இட்டஎள் நிலப்படா வகையின் ஈண்டிய முட்டிலா மூவறு பாடை மாக்களால் புட்பயில் பழுமரப் பொலிவிற் றாகிய மட்டிலா வளநகர் வண்ணம் இன்னதே. [எள்போட்டால் எள் நிலத்தில் விழாதபடி கூடியிருந்த குறைவில்லாத பதினெட்டுப் பாஷைகளைப் பேசும் மக்களால், பல வகைப் பறவைகள் பழகுகிற ஆலமரத்தைப் போன்ற சிறப்பைப் பெற்றதும் எல்லையற்ற வளத்தை உடையதுமாகிய நகரத்தின் இயல்பு இத்தகையது.] இந்த உவமையைக் கம்பர் எடுத்துக் கொண்டார். ஆனால், இதைத் திருப்பி உபமானத்தை உபமேயமாக்கினார். அதாவது, பதினெட்டுப் பாஷைக்காரர் பேச்சுக்குப் பறவைகளின் ஒலியைத் தேவர் உவமை குறினார்; கம்பர் பறவைகளின் ஒலிக்குப் பதினெட்டுப் பாஷைக்காரர் பேச்சை உவமை கூறினார். பம்பைப் பொய்கையில் இன்னவென்று காண முடியாத பல ஒலிகளைச் சோர்வில்லாமல் ஒலிக்கின்றன பல புட்கள். ஆரியம் முதலிய பதினெண் மொழிபேசும் சாமானிய மக்கள் ஓரிடத்தில் கூடினால் எப்படிச் சளசளவென்று பேசுவார்களோ அப்படி இருந்தது அந்த இரைச்சல். ஆரியம் முதலிய பதினெண் பாடையிற் பூரியர் ஒருவழிப் புகுந்த போன்றவ, ஓர்கில கிளவிகள் ஒன்றொ டொப்பில சோர்வில் விளம்புபுள் துவன்று கின்றது. [பூரியர் ~ பாமர மக்கள். துவன்றுகின்றது ~ நெருங்கியுள்ளது.] நாலு பேர் கூடும் இடத்தில் தங்கள் தங்கள் பேச்சைச் சளசளவென்று பேசிக் கொள்பவர்கள் பாமர மக்களாகத்தான் இருக்கக்கூடும். ஆதலின், ‘அறிவற்றவர்’ என்னும் பொருள்பட, ‘மாக்கள்’ என்று தேவர் கூறினார். கம்பர் அதைப் பின்னும் விளக்குபவர் போல, ‘பூரியர்’ என்றே கூறிவிட்டார். அதோடு இரண்டு ஒலிகளுக்கும் பொதுவான லட்சணங்களையும் விரித்திருக்கிறார். கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாதவை, ஒன்று போல ஒன்று அமையாதவை. சோர்வில்லாமல் சதா கேட்பவை~பாமரர் பேச்சுக்கள். அதுவும் பதினெட்டுப் பாஷைகள் பேசும் பெருங்கூட்டத்துப் பேச்சுக்கள் இப்படித்தானே இருக்கும்? பறவைகளின் ஒலியும் இப்படித்தான் இருக்கும் என்பதையும் நாம் அறிவோம். போர் நடக்கிறது. குதிரை இங்கும் அங்கும் சென்று சுழன்று வருகிறது. கூட்டுற முறுக்கி விட்ட குயமகன் திகிரி போல வான்திறல் தேவ தத்தன் கலினமா … … … … … திரியும் அன்றே (786) என்று குலாலனது சக்கரத்தை உவமை கூறினார் தேவர். மிதிலையிலே வரும் கலினப் பாய் மாவும் (கடிவாளத்தையுடைய குதிரை) குலாலன் முடுக்கிவிட்ட மட்கலத் திகிரி போலவே வந்தன என்கிறார் கம்பர். கொட்புறு கலினப் பாய்மா குலால்மகன் முடுக்கி விட்ட மட்கலத் திகிரி போல … … … வருவ என்பது கம்பர் வாக்கு. ‘முடுக்கி விட்ட’ என்ற பாடம் வழங்கினாலும்,‘முறுக்கிவிட்ட’ என்ற பாடம் ஒன்று இருக்க வேண்டுமென்பது சிந்தாமணிப் பாட்டைக் கொண்டு பார்த்தால் தெரியவில்லையா? சந்திரோதயம் ஆகின்றது. இருட்டிலே கைவிளக் கெடுத்தாற் போலச் சந்திரன் தோன்றுகிறதாம். ஏறனாற் கிருளை திங்கக் கைவிளக் கேத்தி யாங்கு வீறுயர் மதியந் தோன்ற (1542) என்பது சிந்தாமணி. …. ….. ….. வானம் கைவிளக் கெடுத்த தென்ன வந்தது கடவுட் டிங்கள் (தைலமாட்டு 49) என்பது இராமாயணம். செல்வம் நிலையாமையைத் திருத்தக்க தேவர் கூற வருகிறார்; அதற்கு விளக்கை உவமை கூறுகிறார். அதே உவமையைக் கம்பர் வாழ்க்கை நிலையாமைக்குக் காட்டுகிறார். புரிமுத்த மாலைப் பொற்கோல் விளக்கினுட் பெய்த நெய்யும் திரியுஞ்சென் றற்ற போழ்தே திருச்சுடர் தேம்பி னல்லால் எரிமொய்த்துப் பெருக லுண்டோ? இருவினை சென்று தேய்ந்தால் பரிவுற்றுக் கெடாமற் செல்வம் பற்றியார் அதனை வைப்பார்? (2316) என்பது திருத்தக்க தேவர் வாக்கு. புண்ணிய நறுநெயிற் பொருவில் காலமாம் திண்ணிய திரிவினில் விதியென் தீயினில் எண்ணிய விளக்கு, அவை இரண்டும் எஞ்சினால் அண்ணலே! அவிவதற் கையம் யாவதோ? என்பது கம்பர் வாக்கு. இரண்டிலும் நெய்யும் திரியும் ஆகிவிட்டால், அவிக்கின்ற விளக்கைக் காண்கிறோம். புண்ணிய பாவம் என்ற இரண்டை நெய்யும் திரியுமாகச் சொன்னார் தேவர். கம்பரோ, புண்ணியத்தையும் காலத்தையும் நெய்யாகவும் திரியாகவும் சொன்னார். அங்கே அவிகின்ற விளக்கு, செல்வம்; இங்கே அவிகின்ற விளக்கு வாழ்க்கை. இரண்டிடத்திலும் திருச்சுடர் தேம்புகிறது. விளக்கு அவிகிறது. இந்த உவமையினிடையே தேவர் வாக்கைக் கம்பர் அறிந்து பயன்படுத்திக் கொண்டார் என்ற செய்தி அவியாது விளக்க முறுகிறது. தேவர் படைத்த சிந்தாமணி விருந்துப் பானையில் கம்பர் இவ்வாறு மொண்டு கொண்டவை பல. இவை சில உதாரணங்கள். இவற்றைப் பார்த்தாலே கம்பர் முகந்து கொண்ட அகப்பை மிகப் பெரிது என்பது தோன்றவில்லையா? ஔவையார் என்னும் பண்புருவம் அன்பு காரணமாகப் பெண்களை அம்மா என்றும், ஆண்களை அப்பா என்றும் அழைக்கும் வழக்கம் நெடுங்காலமாக இந்நாட்டில் இருந்து வருகிறது. அப்படியே மாமன், மாமி என்றும் அழைக்கும் வழக்கமும் உண்டு. தன்னை விட இளையவனைத் தம்பி என்றும், பெரியவனை அண்ணன் என்றும் அழைப்பார்கள். தங்கச்சி, அக்கா என்று பிற பெண்களை அழைக்கும் வழக்கத்தையும் இங்கே பார்க்கலாம். இப்படி உறவுப் பெயராக வழங்குபவற்றையே தம்முடைய சொந்தப் பெயராகக் கொண்டவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இந்த உறவுப் பெயர்களோடு சில அடை மொழிகளைச் சேர்த்துப் பெயராக வைத்துக் கொள்வார்கள். நல்லண்ணன், பெரியண்ணன், நல்லதம்பி, சின்னத் தம்பி, பெரிய தம்பி, நல்ல தங்காள் என்பன போன்ற பெயர்களைத் தம்முடைய சொந்தப் பெயர்களாக வைத்துக் கொண்டவர்களை நாம் காண்கிறோம். இந்த வழக்கம் தமிழ்நாட்டில் மிகப் பழங் காலத்திலும் இருந்து வந்ததென்பதை இலக்கியங்களைக் கொண்டு உணரலாம். சங்க காலப் பெண் புலவர்களுள் ஒருவர் நச்செள்ளையார் என்பவர். செள்ளை என்பது தங்கை என்னும் பொருளை உடையது. அதுவே இக்காலத்தில் தெலுங்கில் ‘செல்லலு’ என்று வழங்குகிறது. ‘ந’ என்பது சிறப்பைக் குறிக்கும் ஓர் இடைச்சொல். நச்செள்ளையார் என்ற பெயர் நல்லதங்காள் என்பதைப் போன்றதே. திருமாலின் தேவியருள் ஒருத்தியாகிய நீளாதேவியை நப்பின்னை என்று தமிழ் நூல்கள் கூறும். பின்னை என்பது தங்கை என்ற பொருளை உடையது. நச்செள்ளை என்பது போன்றதே நப்பின்னை என்ற பெயரும். ஔவை என்ற சொல்லுக்குத் தமக்கை என்று பொருள். அதுவே தவ்வை என்றும் வரும். உங்கள் தமக்கை என்ற அர்த்தத்தில் நுவ்வை என்று வரும். நும் ஔவை என்னும் தொடரே அவ்வாறு ஆயிற்று. தம் ஔவை என்பது தவ்வை என்று வந்தது. பிராயத்தில் மூத்தவர்களை அக்காள் என்று வழங்கும் வழக்கம் உண்டு. தமிழுலகம் அறிந்த மூதாட்டியாராகிய ஔவைக்கு இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை. ஆண்டிலும் அறிவிலும் முதிர்ந்து விளங்கிய அம் மூதாட்டியாரின் சொந்தப் பெயரை மக்கள் வழங்கவில்லை. பெரியவர்கள் சொந்தப் பெயரை வெளிப்படையாகச் சொல்வது மரியாதை அன்று என்று இந்த நாட்டினர் நினைப்பார்கள். பல பெரியோர்களுக்குச் சொந்தப் பெயர் இன்னதென்று இப்போது தெரிவதில்லை. அதற்குக் காரணம் மேலே சொன்னபடி, மக்களுக்கு அவர்களிடம் இருந்த பெருமதிப்பேயாகும். கம்பர் என்பது சாதிப் பெயர். கவிச்சக்ரவர்த்தியாகிய அவருடைய சொந்தப் பெயர் இன்னதென்று தெரியவில்லை. ஔவையார் தமிழ்நாட்டின் பரப்பெல்லாம் சென்று பரவிய புகழை உடையவர். அவருடையபுலமையைக் கண்டு யாவரும் அவரிடம் அளவற்ற அன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தனர். முடியுடை மன்னரும் தலைவணங்கும் தகுதி அவருக்கு இருந்தது. பிற்காலத்தில் சிறந்த புலமையும் ஒழுக்கமும் தெய்வபக்தியும் உடைய பெண் பெரியார் ஒருவர் இருந்தார். அவருக்கும் ஔவையார் என்ற பெயர் ஏற்பட்டது. நாடோடியாக வழங்கும் கதைகளில் “ஓர் ஊரில் ஓர் ஔவையார்ப் பாட்டி இருந்தாள்” என்று வரும் கதைகள் பல. “ஔவை வாக்கு, செவ்வை வாக்கு” என்ற பழமொழியும் தமிழ்நாட்டில் வழங்கத் தொடங்கியது. இவற்றை யெல்லாம் ஒன்று படுத்திச் சிந்தித்தால் ஔவை என்ற மாத்திரத்தில் தமிழ் மக்களின் அகக் கண்ணில் ஓர் உருவம் புலனாவது தெரியவரும். ஔவையார் முதுமையை உடையவர் என்பது முதல் அடையாளம். அவர் பெருந்தமிழ்ப் புலமை உடையவர் என்பது அடுத்து நினைவுக்கு வருவது; பக்தியுடையவர் என்பது பிறகு நினைவிலே தோன்றுகிறது; சிறந்த ஒழுக்கம், எல்லோரிடத்திலும் இளகிய மனம், கூழுக்கும் பாடும் எளிமை, மன்னர்களையும் பணிய வைக்கும் வாக்கு வன்மை, எப்போதும் தமிழ்நாட்டில் ஊர் ஊராய்ச் சென்று மக்களுக்கு அறிவுரை பகரும் உயர்வு ஆகிய பண்புகளெல்லாம் திரண்ட உருவம் ஔவையார் என்பதும் உள்ளத்தே தோன்றும். ------------------------------------------------------------------------ சங்க காலத்தில் வாழ்ந்திருந்த பழைய ஔவையார் அதிகமான் என்ற மன்னனிடம் பேரன்பு உடையவராக இருந்தார். புறநானூற்றில் அதிகமானை ஔவையார் பாடிய பாடல்கள் இருக்கின்றன. சேர குலத்தில் பிறந்து தகடூரில் சிற்றரசனாக இருந்து ஆட்சி நடத்தியவன் அதிகமான் நெடுமான் அஞ்சி. அவனை எழு வள்ளல்களில் ஒருவனாக வைத்து எண்ணுவர் புலவர். அவன் புலவருக்கு வேண்டிய பொருளும் இரவலருக்கு வேண்டிய உணவு முதலியனவும் தந்ததனால் மாத்திரம் பெருவள்ளல் என்ற பெயரைப் பெறவில்லை. ஔவையாருக்கு ஒரு நெல்லிக்கனியைத் தந்தமையால்தான் ஏழு வள்ளல்களில் ஒருவன் ஆனான். ஔவையார் நெடுநாள் வாழ்ந்தமைக்குக் காரணம் நெல்லிக்கனியை உண்டது என்ற கருத்தை அடிக்கடி தமிழ் நாட்டினர் நினைவில் இருத்திக்கொண்டே வந்தனர். அதே ஔவையார் பல ஆண்டுகள் வாழாவிட்டாலும், ஔவையார் என்ற பெயரும் தத்துவமும் பல நூற்றாண்டுகளாக மறையாமல் ஒளிவிட்டுக் கொண்டே வருகின்றன. நயமாகப் பிறரது அறியாமையை எடுத்துரைக்கும் ஆற்றல் ஔவையாருக்கு இருந்தது. ஒருமுறை அதிகமானிடத்திலிருந்து தொண்டைமானிடம் சென்றார் ஔவையார். அவன் தன் ஆயுத சாலையைக் காட்டினான். போரிற் புகுந்து வெற்றி காணும் திறத்தை அறியாத தொண்டைமானுடைய படைக்கலங்கள் புதுமெருகு அழியாமல் இருந்தன. அவற்றைப் பார்த்த ஔவையார் புகழ்வது போலப் பழிக்கும் வகையில் சொல்லத் தொடங்கினார். “அடடா! இந்தப் படைக்கலங்கள் தாம் எவ்வளவு அழகாக இருக்கின்றன. மயிற்பீலியும் மாலையும் அணிந்திருக்கின்றன. நெய்பூசிப் பாதுகாப்பாக வைக்கப் பெற்றிருக்கின்றன. ஆனால் அதிகமானுடைய ஆயுதங்களோ பகைவர்களைக் குத்தி முனை மழுங்கிவிட்டன. அவை இப்போது கொல்லன் பட்டறையிலே கிடக்கின்றன” என்று பாடினார். இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக் கண்திரள் நோன்காழ் திருத்திநெய் அணிந்து கடியுரை வியன்க ரவ்வே; அவ்வே பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து கொல் துறைக் குற்றில மாதோ என்றும் உண்டாயிற் பதங்கொடுத்து இல்லாயின் உடன் உண்ணும் இல்லோர் ஒக்கல் தலைவன் அண்ணல்எம் கோமான் வைந் துதி வேலே.’ ஔவையார் இவ்வாறு கிண்டலாகப் பேசும் ஆற்றல் உடையவர் என்பதைப் பிற்காலத்தவரும் மறக்கவில்லை. அக்காலத்தில் வாழ்ந்த ஔவையாரும் இவ்வாறு குறிப்பாகப் பிறர் அறியாமையைக் காட்டியிருக்கிறார். எப்போதும் வருவாருக்கு விருந்து அளிக்கும் இயல்புடைய மருத்தன் என்பவனைக் கண்டு, அவன் வீட்டில் உணவு கொண்டுவிட்டுத் திருத்தங்கி என்பவன் வீட்டுக்கு வந்தார் ஔவையார். பிறருக்கு இம்மியும் ஈயாப் பெருந்தகை அவன். அவன் வீட்டு வாழை மரம் தளதள வென்றிருந்தது. “என்னைப் பாட வேண்டும்” என்று கேட்டான் திருத்தங்கி, தமிழ் மூதாட்டியார் பாட ஆரம்பித்தார். திருத்தங்கி தன்வாழை தேம்பழுத்து நிற்கும்; மருத்தன் திருக் குடந்தை வாழை ~ குருத்தும் இலையும் இலை, பூவும் இலை, காயும் இலை, என்றும் உலகில் வருவிருந்தோர் உண்டு. என்பது அவர் பாட்டு. ’இவ்வே~இவையே. கண்~மூட்டுவாய் நோன் காழ் ~ வலிய கோல். கடி ~ காவல். நகர் ~ அரண்மனை. அவ்வே ~ அவையே. கோடு நுதி ~ வளைந்த நுனி. கொல் துறைக் குற்றில ~ கொல்லனுடைய களத்தில் பட்டறையிலே இருக்கின்றன. பதம் ~ உணவு. ஒக்கல் ~ உறவினன். வை ~ கூர்மையான. **** மக்களை ஒன்றியிருந்து வாழும்படி செய்யும் தொண்டை ஔவையார் செய்து வந்தார். ஒற்றுமையாக வாழ்வாருக்கு ஊக்கம் ஊட்டினார். தமிழ்நாட்டில் சேர சோழ பாண்டியர்களாகிய முடிமன்னர் மூவர் ஆட்சி புரிந்து வந்தனர். அவர்கள் மூவரும் ஒன்று சேர்வதே இல்லை. யாரேனும் ஒருவரை எதிர்க்கவேண்டுமானால் மற்ற இருவரும் ஒருங்கே கூடியிருப்பதைக் காணமுடியாது. ஒரு சமயம் இம்மூவரும் ஒன்று கூடினார்கள். அந்த அருமையான காட்சியை ஔவையார் கண்டார். சேரமான் மாரிவெண்கோ என்பவனும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வெட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கே இருந்தார்கள். ஔவையார் அந்த ஒற்றுமையைக் கண்டு மகிழ்ந்து, “இப்படியே நீங்கள் ஒன்றுபட்டு வாழவேண்டும்” என்று வாழ்த்தினார்.“அந்தணர்கள் வளர்க்கும் மூன்று அக்கினிகளைப் போல எல்லோரும் மதிக்கும்படி நன்மை புரிந்து வாழ்வீராக!” என்று பாடினார். ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் முத்திப் புரையக் காண்டக் இருந்த கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்! யான் அறி அளவையோ இதுவே, வானத்து வயங்கித் தோன்றும் மீனினும் இம்மென இயங்கு மாமழி உறையினும் உயர்ந்துமெந் தோன்றிப் பெறுகலும் நாளே! ’இறைவனைத் தியானித்தலாகிய ஒன்றைச் செய்து புலன் அடக்கம் பெற்ற அந்தணர் ஓம்பும் மூன்று அக்கினிகளைப் போல, காண்பதற்கு அழகாக ஒன்றுபட்டு இருந்த வெற்றிக் குடையையும் கொடியை உடைய தேரையும் பெற்ற வேந்தர்களே! நான் அறிந்த அளவை வைத்துச் சொல்கிறேன்.அது இதுதான். வானத்திலே விட்டு விளங்கித் தோன்றும் நட்சத்திரங்களைக் காட்டிலும், இம்மென்று பொழியும் பெரிய மழைத்துளியைக் காட்டிலும் அதிகமாக உயர்ந்து உங்கள் வாழ்நாட்கள் பலவாகி விளங்குவனவாகுக!" என்பது இதன் பொருள். பிற்காலத்தில் வாழ்ந்த ஔவையாரும் முடியுடை மூவேந்தரையும் ஒருங்கே கண்ட காட்சி ஒன்று உண்டு. அங்கே ஔவையாரே அவர்களை அழைத்து ஒன்றுபடச் செய்தார். அங்கவை சங்கவை என்ற இரண்டு பெண்களையும் தெய்வீகன் என்னும் சிற்றரசனுக்கு மணம் புரிவித்தார். அந்தக் கல்யாணத்துக்கு சேர சோழ பாண்டியர்களை வருவித்து உபசாரம் செய்தார். திங்கட் குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும் மங்கைக் கறுகிட வந்துநின் றார்மணம் பந்தலிலே என்று ஔவையார் பாடியிருக்கிறார். இன்னும், ஔவையார் என்ற அளவிலே உள்ளத்தே தோன்றும் பண்புகள் பலவாகும். பெயராலும் உருவத்தாலும் மக்கள் ஆவதில்லை. பண்பினால்தான் மக்கள் மக்களாகிறார்கள். பண்புடைய பலரினும் மிக மிக சிறந்த பண்புகளைத் தமக்கே உரியனவாகப் பெற்ற பெரியோர்கள் வானத்தில் தோன்றும் சுடர்களைப் போல விளங்குகின்றனர்.ஔவையாரும் அத்தகைய சுடர்களில் ஒன்று. காலந்தோறும் ஔவையார் என்ற பண்புருவத்தைத் தமிழ் மக்கள் நினைவூட்டிக் கொண்டு வருகின்றனர். இலக்கியம், உபதேசம், யோகம், பக்தி நெறி, ஒழுக்கம், பெரு மதிப்பு ஆகியவற்றோடு இணைந்து நிற்கும் திருவுருவம் ஔவையார். எங்கள் பாவம்! சிவஞானமுனிவர் சிவஞான போதத்துக்குப் பேருரை எழுதி மாபாடிய கர்த்தர் என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றவர். நன்னூலுக்குப் புத்தம் புத்துரை வகுத்தவர். சில கண்டன நூல்களையும் அவர் எழுதியுள்ளார். அவற்றையெல்லாம் படித்தவர்களுக்குச் சிவஞான முனிவரின் அறிவும் மிடுக்கு நடையும் புலப்படும். ஆனால் அவர் கவியுள்ளமும் படைத்தவர். இலக்கியப் படைப்புக்கு ஏற்ற உணர்ச்சிச் செல்வம் அவரிடத்தில் நிறைந்திருந்தது. காஞ்சிப் புராணத்தைப் படித்தவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். அவர் திருவாவடுதுறை மடாலயத்துத் தம்பிரான் திருக்கூட்டத்தில் ஒருவர். இளமையிலேயே அந்த ஆதீனத்தைச் சார்ந்து துறவு பூண்டவர். ஆதீனத் தில் உள்ள தம்பிரான்களில் சிலருக்குச் சில வேலைகளை அளித்திருப்பார்கள். பல காலம் மடத்துப் பழக வழக்கங்களைத் தெரிந்து கொண்டவர்களூக்குக் காறுபாறு, ஒடுக்கம், பூசை முதலிய பதவிகள் கிடைக்கும். மடத்தில் பண்டார சந்நிதிகள் உணவு கொள்ளும்போது திருக் கூட்டத்துத் தம்பிரான்களும் வெள்ளை வேட்டிக்காரர்களாகிய சைவர்களும் அந்தப் பந்தியில் அமர்ந்து உண்ணும் பேறு பெறுவார்கள் . ஒரே பந்தியில் அமர்ந்தாலும் உணவு வகையிலும் உபசார வகையிலும் தம்பிரான்களுக்குள் வேறுபாடு இருக்கும். முதலில் அமர்ந்திருக்கும் பழைய தம்பிரான்களுக்கு நல்ல உணவுகள் கிடைக்கும். புதிய குட்டித் தம்பிரான்களுக்கு அதைவிடத் தாழ்ந்த உணவே கிடைக்கும். புதிய தம்பிரான்கள் நாச்சுவையை வளர்க்கவொட்டாமல் செய்ய வேண்டும் என்ற நோக்கம், இதற்குக் காரணமாக இருக்கலாம். சிவஞான முனிவர் புதிய தம்பிரான் வரிசையில் இருந்தார். தமிழ் அறிந்த உள்ளம் ஆதலின் வீண் பொழுது போக்காமல் தம்மோடு பழகும் வேறு சில குட்டித் தம்பிரான்களுக்குத் தமிழ் நூல்களைக் கற்பித்தார். யாப்பிலக்கணங்கூட அவர்களுக்குச் சொல்லித் தந்தார். ஒரு நாள் பந்தி நடந்து கொண்டிருந்தது.பந்தியின் கடைசியில் சிவஞானமுனிவரும் அவருடைய நண்பர்களாகிய தம்பிரான்களும் அமர்ந்திருந்தனர். இலை போட்டு உணவு படைத்தார்கள். சோற்றில் கல்லும் மண்ணும் இருந்தன. குழிபோட்ட சம்பா நெல்லாக இருந்தாலும் நன்றாக வடிக்காமையால் சோறு பதம் கெட்டிருந்தது. அதைப் பார்த்தாலே அருவருப்பாக இருந்தது. பந்தியில் யாவரும் உண்ணத் தொடங்கிவிட்டார்கள். இந்தக் குட்டித் தம்பிரான்களோ சோற்றைக் கையில் எடுக்க மனம் வராமல் இருந்தனர். அப்போது அவர்களில் ஒரு தம்பிரான் என்னவோ சொல்லத் தொடங்கினார். தங்களுக்குள்ளே பேசுபவரைப் போலவே மெல்லச் சொன்னார். அவர் பேசவில்லை; அந்த நிலையைப் பற்றிச் செய்யுள் ஒன்றை யோசித்துச் சொல்ல ஆரம்பித்தார். முழுச் செய்யுள்கூட அன்று; ஒரு செய்யுளின் முதலடியை மாத்திரம் சொன்னார்.‘’அட, அரிசி எவ்வளவு நல்ல அரிசி! குழி போட்ட சம்பா அரிசி! இதைச் சமைக்கத் தெரியாமல் எவனோ ஒருவன் குட்டிச் சுவராக்கி விட்டானே! இதச் சாப்பிடும் தலை விதி நமக்கு வந்திருக்கிறதே!’ என்று சிந்தித்த அவர்,அதன் விளைவாக அந்தச் செய்யுள் அடியைச் சொன்னார். கொங்கன் வந்து பொங்கினான் குழியரிசிச் சோற்றினால் என்று பாடினார். மற்றத் தம்பிரான்களும் அவரைப் போலவே சோற்றைக் கண்டு வயிறு எரிய உட்கார்ந்தவர்கள். ஆகவே அவர்களுக்கும் தங்கள் வெறுப்பைப் பாட்டாக்கிச் சொல்ல வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. இரண்டாவது தம்பிரான் மேலே சொன்ன பாட்டின் இரண்டாவது அடியைச் சொன்னார். சங்கமங்கள் கூடியே சாப்பிடத் தொடங்கினார் என்று அவர் பாடினார்.‘இதையும் தலையெழுத்தே என்று இங்குள்ள தம்பிரான்கள் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள் நாம் சும்மா உட்கார்ந்து என்ன பயன்?’ என்று நினைத்து அவர் அப்படிப் பாடினார். பாட்டு இப்போது இரண்டடி நிரம்பி பாதிப் பாட்டாக நின்றது. கொங்கன்வந்து பொங்கினான் குழியரிசிச் சோற்றினால் சங்கமங்கள் கூடியே சாப்பிடத் தொடங்கினார். மூன்றாவது தம்பிரான் பார்த்தார். பாட்டின் இரண்டடிகளையும் கேட்டார். ‘நாம் எப்படியும் இதைச் சாப்பிட்டுத்தான் தீரவேண்டும். எல்லோரும் சாப்பிடும் போது நாம் நம் கண்ணை அங்கும் இங்கும் ஓட்டிக் கொண்டிருந்தால் ஒரு லாபமும் இல்லை. அமுதிலே கண் வைக்க வேண்டும்’ என்ற கருத்து அவருக்கு எழுந்தது. மூன்றாவது அடியை பாடினார்: அங்கும் இங்கும் பார்க்கிறீர் அமுதினிற் கண் இல்லையே! என்று அவர் அந்த அடியைச் சொன்னார். பாட்டை முடிப்பதற்காக மூன்று பேரும் முயன்றுகொண்டிருந்தார்கள். அடுத்த அடி எளிதில் வரவில்லை. எதுகையைப் பார்த்தார்கள்; மோனையைப் பார்த்தார்கள்; சொல்லைத் தேடினார்கள்; வரவில்லை. நல்ல சோறாகக் கிடைக்கவில்லையே என்ற தவிப்பைக் காட்டிலும் பாட்டை நிரப்ப நான்காவது அடி கிடைக்கவில்லையே என்ற தவிப்பு அவர்களுக்கு அதிகமாக இருந்தது. அவர்களுடன் உட்கார்ந்திருந்த சிவஞான முனிவர் அவர்கள் சங்கடத்தைப் போகினார். எங்கள் பாவம் எங்கள் பாவம் எங்கள்பாவம் ஈசனே! என்று கூறிப் பாட்டை நிறைவேற்றினார். இப்பொழுது பாட்டு நாலடிகளையும் உடைய முழுப் பாட்டாகி விட்டது. கொங்கன்வந்து பொங்கினான் குழியரிசிச் சோற்றினால்; சங்கமங்கள் கூடியே சாப்பிடத்தொடங்கினார்; அங்கும் இங்கும் பார்க்கிறீர் அமுதினிற் கண் இல்லையே; எங்கள் பாவம் எங்கள்பாவம் எங்கள்பாவம் ஈசனே! இந்தப் பாட்டின் நான்கு அடிகளும் ஒரே மாதிரி இருக்கவில்லை. நாலாவது அடியைக் கேட்கும்போது அது மற்ற மூன்று அடிகளைவிட மிகவும் நன்றாக இருப்பதாகத் தோன்றுகிறது அதில் ஏதோ ஒரு தனிச் சிறப்பு இருப்பதாகத் தெரிகிறது. முதல் மூன்று அடிகளையும் கேட்கும்போது அந்தப் பாட்டு எழுந்த நிலைக்களம் நன்றாகத் தெரிகிறது. அவற்றை நினைக்க அவை உதவுகின்றன. நான்காவது அடியைக்கேட்கும்போது’ஹா!’ என்று நம்மை அறியாமலே நாம் சொல்கிறோம்.அந்த அடியில் ஏதோ ஒன்று நம் உள்ளத்தைத் தொடுகிறது.அது மற்ற மூன்று அடிகளிலும் இருப்பதாகத் தெரியவில்லை. அது என்ன? பாட்டில் உள்ள சொல்லும் சொற்களால் குறிக்கப்பெறும் பொருளும் எப்படி அமைந்திருக்கின்றன? முதல் மூன்று அடிகளிலும் அதிகச் செய்திகள் இருக்கின்றன. கொங்கன் சோற்றைப் பொங்கியதையும், சங்கமங்கள் கூடிச் சாப்பிடுவதையும், பாட்டுப் பாடிய தம்பிரான்கள் அங்கும் இங்கும் பார்த்து விழிப்பதையும் அந்த அடிகள் சொல்கின்றன. நான்காவது அடியில் அந்த விவரம் ஒன்றும் இல்லை. எங்கள் பாவம் என்ர தொடரே மூன்று முறை வருகிறது. ரசம் தெரியாதவர்கள், " மூன்று முறை திருப்பித் திருப்பித் சொன்னதில் என்ன சுவை இருகிரது? கூறியது கூறல் என்ற குற்றந்தான் இருக்கிறது" என்று கூடச் சொல்லக் கூடும். " ‘குற்றம? அந்த அடியில் குற்றம் இருக்கிறது என்பவன் சுவையறியாதவனாக இருக்க வேண்டும்’ என்று நாம் சொல்லுவோம். அந்த மனிதனுக்கு என்ன பட்டம் சூட்டலாம் என்று எண்ணி முட்டாள் , மடையன் என்பன போன்ற வார்த்தைகளைத்தேடத் தொடங்கி விடுவோம். அது கிடக்கட்டும். நான்காவது அடியில்தான் ஏதோ ஜீவன் இருக்கிறது போலப் படுகிறதே, அதைச் சற்று விண்டு பார்க்கலாம். பாட்டு வந்ததற்குக் காரணம் தம்பிரான்கள் அந்தச் சோற்றைக் கண்டு பட்ட வேதனைதான். அந்த வேதனையை, வயிற்றெரிச்சலை, வசனமாகச் சொல்லாமல் பாட்டாகச் சொல்லவேண்டும் என்று ஆரம்பித்தார்கள். மூன்றுபேரும் பாடிய அடிகளில் வயிற்றெரிச்சலுக்குக் காரணமான பொருள்கள் வந்தன. ஆனால் வயிற்றெரிச்சலாகிய உணர்ச்சி வெளிவரவில்லை. எதுகை மோனை, சொற்கள் எல்லாம் இருந்தன. ஆனால் இவ்வளவையும் கொண்டு எதைச் சொல்ல வந்தார்களோ அந்த உணர்ச்சியை நான்காவது அடிதான் சொல்கிறது. “அட தலைவிதியே!” என்று தலையில் அடித்துக் கொள்வதுபோல அந்த அடி நிற்கிறது. ‘எங்கள் பாவம் எங்கள் பாவம் எங்கள் பாவம் ஈசனே!" என்று மூன்று முறை சொல்லிவிட்டு ஈசனைக் கூப்பிட்டதில் உணர்ச்சி விஞ்சி நிற்கிறது. முதல் மூன்று அடிகளீல் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் அதற்குரிய பொருள் உண்டு. அத்தனையும் செய்திகள். நான்காவது அடியில் உள்ள சொற்களுக்கு பொருள் உண்டு; ஆனால் அந்தப் பொருளோடே நிற்கவில்லை; அதற்கு மேல் உணர்ச்சியை எட்டி நிற்கிறது அடி. அப்போது சொற்களின் பொருளைகூட நாம் இழந்துவிடுகிறோம். மணியை அடிக்கிறபோது மணியும் அடிக்கும் நாக்கும் வேலை செய்வதை ஒழிந்து நின்றுவிட்டாலும்,அவற்றைக் கடந்து மணியின் ஒலி நீண்டு நிற்பதுபோல, சொல் பொருளைக் காட்ட, பொருள் பாவத்தைக் காட்ட, நாம் சொல்லையும் அதற்கு உள்ள நேரான பொருளையும் மறந்து உணர்ச்சியிலே ஒன்றுபடுகிறோம். என்ன பாவம்’ என்ற தொடர் , ‘நாம் இந்தத் துன்பத்தை அடைய என்ன பாவம் செய்தோம்?’ என்ற பொருளைக் குறிக்கிறது. ‘முன்பு என்ன பாவம் செய்து இந்தத் துன்ப விளைவு உண்டாயிற்று?’ என்ற ஆராய்ச்சியிலே இறங்கினாரா, சிவஞானமுனிவர்? இல்லை, இல்லை. அப்படி இருந்தால் அந்தத் தொடரை அவ்வளவு வேகமாக மூன்று முறை சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ‘எங்கள் பாவம்’ என்ற தொடர் உணர்ச்சியை வெளியிடும் வாய்பாடாக நிற்கிறது; அவ்வளவுதான். “பாவம்! அந்தக் குழந்தையைக் கவனிப்பாரே இல்லை” என்று நாம் சொல்லுகிறோம். திக்கற்ற குழந்தையைக் கண்டபோது நம் உள்ளத்தே சுரக்கும் இரக்கத்துகு அடையாளமாக அந்தப் ‘பாவம்’ என்ற சொல் வருகிறது. அதற்குரிய பொருளை அது சுட்டுவதாக இருந்தால், பாவம் செய்தவர் யார்?‘என்ற விசாரணை எழும்.’ குழந்தை போன ஜன்மத்தில் பாவம் செய்தது; அதனால் இந்த ஜன்மத்தில் திண்டாடுகிறது’ என்று பொருள் விரிப்பதாக இருந்தால், அங்கே இரக்கம் தோன்ற இடமே இல்லை.இரக்கப்படக் கூடாது என்பதற்குரிய காரணமாக, இழிப்புக்குரிய காரணமாக, அல்லவா அது ஆகிவிடும்? ஆகவே ,அங்குள்ள பாவம் என்ற சொல் தனக்குரிய பொருளைக் குறித்து நிற்காமல், அதையும் கடந்து இரக்க உணர்ச்சியைக் குறிப்பிடும் அடையாளமாக நிற்கிறது. ‘அந்தக் குழந்தையைக் கவனிப்பாரே இல்லை’ என்றால் ஒரு செய்தியை வெளியிடும் வாக்கியம் என்ற அளவில் நிற்கிறது. " பாவம்! அந்தக் குழந்தையைக் கவனிப்பாரே இல்லை" என்றால்தான் இதைச் சொல்பவன் செய்தியைச் சொல்லும் அளவோடு நிற்பவன் அல்ல, உள்ளம் இரங்குபவன் என்று தெரியவருகிறது. அவன் உள்ளம் இரங்குவதை, நாம் உணரும்படி செய்வது ‘பாவம்’ என்ற ஒரு சொல்! எத்தனை சமயங்களில் நாம் நினைந்தபடி ஒன்று நடக்காவிட்டாலும் நம் மனத்துக்குப் பொருந்தாத ஒன்றைக் கண்டாலும், ஏமாற்றம் உண்டானாலும் ‘அட கடவுளே!’ என்று சொல்லுகிறோம்! அப்படிச் சொல்வதும் மனத்தில் உள்ள உணர்ச்சியைக் காட்ட எழுவதே. சிவஞான முனிவர் இந்த இரண்டு உணர்ச்சி அடையாளங்களையும் சேர்த்துப் பாட்டோடு இணைத்து விட்டார். உணர்ச்சியின் வேகத்தைக் காட்ட மூன்று முறை ‘எங்கள் பாவம்’ என்பதைச் சொல்லிக் கடைசியில் முத்தாய்ப்பு வைப்பது போல ஈசனே!’ என்று முடித்தார். இந்தப் பாட்டைப் பாடுவதற்குக் காரணம், அவர்களுக்குக் கிடைத்த உணவின்மேல் உண்டான அருவருப்பு உணர்ச்சி. அந்த உணர்ச்சி நான்கு தம்பிரான்களுக்கும் இருந்தன. ஆனால் அதை வெளியிட மூன்று பேரால் முடியவில்லை. எதற்காகப் பாட்டைப் பாட வந்தார்களோ அது நிறைவேறவில்லை. சிவஞானமுனிவர், அவர்களால் முடியாத அதைச் செய்துவிட்டார். அவருக்குக் கிடைத்தது ஒரே அடிதான். ஆனால் அந்த அடியில் உணர்ச்சி பொங்கி வழியப் பாடிவிட்டார். முன்னைய மூன்றும் சொல்லையும் பொருளையும் தெரிவிக்க நாலாவது அடி உணர்ச்சியை நாமும் உணரும்படி செய்கிறது. அந்த உணர்ச்சி ஏற்படக் காரணமாக இருந்த பொருள்கள் இல்லாத இடத்திலும், நமக்கு அதன் விளைவாகிய உணர்ச்சி புலனாகிறது. அதனால் நாமும் அவர் பெற்ற உணர்ச்சியை உணர்கிறோம். அதனால்தான் அந்த அடி அதிசயமாகச் சுவை தருகிறது. உண்மையில் அந்த அடிதான் கவியாக நிற்கிறது. கொங்கன்வந்து பொங்கினான் குழியரிசிச் சோற்றினால் சங்கமங்கள் கூடியே சாப்பிடத் தொடங்கினார் அங்கும் இங்கும் பார்க்கிறீர் அமுதினிற் கண் இல்லையே எங்கள் பாவம் எங்கள் பாவம் எங்கள்பாவம் ஈசனே! என்ற முழுப்பட்டையும் சொல்லும்போது மணியடித்த பிறகு அதன் ஒலி நெடுநேரம் நம் காதில் ஒலிப்பது போலப் பாட்டின் ஜீவனாகிய உணர்ச்சி பாட்டைச் சொல்லி முடித்த பிறகும் உள்ளத்திலே நிற்கிறது. உழவர் மொழி ரெயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். அங்கே ஒருவரைச் சிநேகம் பிடித்தேன். யாரோ கிராமவாசி. ஆனாலும் நாகரிகம் தெரிந்தவராக இருந்தார். கலகலப்பாகப் பேசினார். அவருடன் பேச்சுக் கொடுத்தேன். அவர் ஒரு வேளாளர் என்று அறிந்தேன். திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த ஊரில் அவருக்கு நாலு ஏகரா நன்செய் இருக்கிறதாம். பேசிக்கொண்டே வந்தேன். அவரும் ரஸமாகப் பேசினார். யாரோ ஒருவர் தம் பையன் சரியாகப் படிக் காமையால் பரீட்சையில் தோல்வியுற்ற கதையைச் சொன்னார். " காலேஜில் அவனுக்கு இடம் தேட வேண்டிய அவசியம் இல்லை" என்று சொல்லி முடித்தார். அதைக்கேட்ட என் நண்பராகிய அந்த விவசாயி, “உழவுக் காலத்தில் ஊரைவிட்டே போய்விட்டால் அறுப்புக் காலத்தில் ஆள் தேட வேண்டாம்” என்று ஒரு பழமொழியை வீசினார். “உங்கள் தொழிலுக்கு ஏற்ற பழமொழியைச் சொல்கிறீர்கள்” என்றேன். “ஆமாம்; என் தொழில் என்ன? இந்தியாவுக்கே அதுதானே தொழில்? அதை விட்டு விட்டுத்தான் இப்போது ஆலாய்ப் பறக்கிறார்கள். நிலம் படைத்தவர் எல்லாம் பட்டணத்திலே போய் உட்கார்ந்து கொண்டால் நிலத்தில் என்ன விளையும்? குத்தகைக்கு விட்டு விட்டுக் குத்தகைக்காரன் தருவதை வாங்கிச் செலவு செய்தால் என்ன லாபம்? நிலந்தான் உருப்படுமா? உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?” உத்தியோகம் பண்ணிப் பண்ணி என்ன கண்டார்கள்? ‘உழவோர் உழைப்பால்தான் உலகோர் பிழைப்பார்’ என்ற வசனத்தைக் கேட்டதில்லையா?" உத்தியோகத்தில் எத்தனை பேர் உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள்?" அங்கொருவர் இங்கொருவராக இருந்தால் போதுமா? ஆயிரம் சொல்லுங்கள். தன் நிலத்தைத் தானெ உழுது பயிர் செய்கிறவனுக்குச் சமானம் யாருமில்லை. ’ உழவு அற உழுதவன் ஊரில் பெரியவன்" நான் நடுவே குறுக்கிட்டேன். ’ உழுகிறவன் கணக்குப் பார்த்தால் உழவுகோலும் மிஞ்சாது என்று சொல்லுகிறார்களே! அப்படி இருக்க உழவினால் எப்படி முன்னுக்கு வருகிறது? " அதுவா? அந்தப் பழமொழிக்குத் தப்பாக அர்த்தம் செய்துகொண்டு பேசுகிறார்கள் ஜனங்கள்; வியாபாரிதான் ஒவ்வொன்றுக்கும் கணக்குப் பார்த்துச் செட்டாக வியாபாரம் பண்ணவேண்டும். வேளாளன் செட்டாக இருந்தால் ஒன்றும் பயன் இல்லை. அவன் கணக்குப் பார்க்க ஆரம்பித்துக் கூலிக்கு அஞ்சி உழவைக் குறைத்தாலும், பணத்துக்கு அஞ்சி உரத்தைக் குறைத்தாலும் விளைவு மோசமாகிவிடும். அதனால் தான் ‘செட்டிக்கு வேளாண்மை சென்மப் பகை’ என்று சொல்லுவார்கள்“. கும்பகோணத்தித் தாண்டி விட்டோம். அங்கே வாழைத் தோட்டங்கள் இருந்தன. அவற்றில் இலையை அறுத்திருந்தார்கள். அதைப் பார்த்த என் நண்பர்." இலை தின்னி காய் அறியான்" என்றார். தினமும் சாப்பிடுவதே கஷ்டமாக இருக்கும் ஏழைக்குக் குப்பையில் முளைத்த கீரைதான் கறி அவன் இலையைத் தின்னுகிறவன். அவனுக்குக் காய் வாங்க பணம் ஏது? இதுதான் அந்தப் பழமொழொயின் பொருள் என்று நினைத்தேன். ஆனால் என் நண்பர் அதை இப்போது கூறுவதற்குக் காரணம் என்ன? “வாழைக்கும் அந்தப் பழமொழிக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டேன். “வாழையை வைத்தால் இலை நறுக்கக்கூடாது. இலையை நறுக்கிவிட்டால் காய் சிறுத்துவிடும். இலையை நறுக்கிப் போட்டுச் சோறு தின்றால் காய் உதவாமற் போய்விடும்” என்று அவர் விளக்கினார். “வீட்டுக் கொல்லையிலே வாழை போட்டால் இலைக்குத்தானெ உதவுகிறது?” “வாழையடி வாழையாக வரணுமே ஒழிய வாழையோடு வாழையாக வளரவிட்டால் காய் நன்றாக இருக்காது. எட்டு அடி வாழையும் பத்து அடி பனையும் என்று சொல்லுவார்களே; கேட்டதில்லையா? இடம் விட்டு நட்டால்தான் நல்ல வளர்ச்சி ஏற்படும்” அவர் எங்கே வாழையைப்பற்றி ஒரு பிரசங்கமே செய்துவிடப் போகிறாரோ என்று பயந்து போய் என் பேச்சை மாற்றத் தொடங்கினேன். “உங்கள் ஊரில் கமுகந் தோட்டம் இல்லையா?” “அதெல்லாம் மலையாளத்தில்தான். அதிகம் கமுகை வைத்து வளர்ப்பது மிகவும் கஷ்டம். கை காய்த்தால்தான் கமுகு காய்க்கும்” என்றார். “கை காய்ப்பதாவது!” ஆச்சரியத்துடன் கேட்டேன். “அதற்குத் தண்ணீர் விட்டு தண்ணீர் விட்டுக் கையில் காய்ப்பு ஏற்படவேண்டும். அவ்வளவு பாடு பட்டால்தான் கமுகைக் காப்பாற்றலாம்.” “அவர் தம் பிள்ளையைப் பற்றிச் சொன்னார். அதற்கு நீங்கள் ஒரு பழமொழி சொன்னீர்கள். அதிலிருந்து எத்தனையோ பழமொழிகளைக் கொட்டி விட்டீர்கள்” என்று நான் சொன்னேன். “பிள்ளைகளை வளர்க்கிறது எவ்வளவு அருமை! விளையும் பயிர் முளையிலே தெரியும். இந்தக் காலத்துப் பிள்ளைகள் எல்லாம் பிஞ்சிலே பழுக்கிற பேர்வழிகள். விழலுக்கு இறைத்த நீர்போலத் தங்கள் இளமைக் காலத்தை வீண் ஆக்குகிறார்கள்.” “பெரியவர்கள் பிள்ளைகளைக் கவனித்து வந்தால் அவர்கள் சரியாக இருப்பார்கள்.” “வேலியே பயிரை மேய்கிறது போல வயசானவர்களுக்கே ஒன்றும் தெரிகிறதில்லை. நல்ல முறையில் அவர்கள் வாழ்ந்தால் பிள்ளைகளும் நன்றாக இருப்பார்கள். ‘பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்’ என்பது பொய்யாகவா போகும்? ‘ஆச்சா விதைத்தால் ஆமணக்கு முளைக்குமா?’ தாம் மனம் போனபடி நடந்தால் அவர் பிள்ளைகள் அதற்கு மேல் நடக்கிறார்கள். ‘பாவி பாவம் பதராய் விளைந்தது’ என்று சொல்கிறது மெய்யான பேச்சு.” அவர் விவசாயத்தில் ஊறினவர். அவர் பேச்சிலெல்லாம் விவசாயப் பழமொழிகள் துள்ளின. “விவசாயத்தைப்பற்றி நீங்கள் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். நம்முடைய நாடு விவசாய நாடு. ஆனால் எல்லோரும் விவசாயம் செய்ய முடியுமா? நிலம் வேண்டாமா?” என்று நான் கேட்டேன். “நிலமா? காந்தி சொன்னாரே; ஒரு சின்ன டப்பாவில் தக்காளிச் செடியையாவது பயிரிடுங்கள் என்று சொன்னாரே; அது நினைவு இருக்கிறதா? அவரவர்கள் வீட்டுக் கொல்லையில் ஏதாவது செடி நடலாம். ‘அவரைக்கு ஒரு செடி. ஆதீனத்துக்கு ஒரு பிள்ளை’ என்று சொல்வதைக் கேட்டதில்லையா? குழியிற் பயிரைக் கூரைமேல் ஏறவிட்டாற் போயிற்று; ‘ஆடிமாதம் அவரை போட்டால் கார்த்திகை மாதம் காய் காய்க்கும்.’ இப்படித்தான் நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள். அவர்களுடைய அநுபவமே இன்று பழமொழிகளாக வழங்குகிறது.” நான் இறங்குகிற இடம் வந்து விட்டது. அதனால் அவரிடம் விடை பெற்றுக்கொண்டேன். “‘வேல மரத்துக்கு நிழல் இல்லை; வெள்ளாளருக்கு உறவு இல்லை’ என்று சொல்லுவார்கள். நான் அப்படி இல்லை. என்னை நினைவு வைத்துக் கொள்ளுங்கள். எங்கள் ஊர்ப்பக்கம் எப்போதாவது சௌகரியப்பட்டால் வாருங்கள்” என்று அவர் விடையளித்த போதும் ஒரு பழமொழியைச் சொந்னார். அவர் இந்தக் குறுகிய காலத்துக்குள்ளே சொன்னவையே இத்தனை என்றால் இன்னும் எத்தனை பழமொழிகள் அவரிடம் இருக்கின்றனவோ! This file was last updated on 20 April 2012. Feel free to send corrections to the webmaster.