[] கதை கதையாம், காரணமாம்! ராமாயணம் கீதா சாம்பசிவம் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை கதை கதையாம், காரணமாம்! ராமாயணம் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. This book was produced using PressBooks.com. Contents - முன்னுரை - 1. கதை கதையாம், காரணமாம்! ராமாயணம் பகுதி 1 - 2. கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 2 - 3. கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 3 - 4. கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 4 - 5. கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 5 - 6. கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 6 - 7. கதை கதையாம் காரணமாம் ராமாயணம் - பகுதி 7 - 8. கதை கதையாம் காரணமாம் - இராமாயணம் -பகுதி 8 - 9. கதை கதையாம் காரணமாம் ராமாயணம் - பகுதி 9 - 10. கதை கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 10 - 11. கதை கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 11 - 12. கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 12 - 13. கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 13 - 14. கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 14 - 15. கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 15 - 16. கதை கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 16 - 17. கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 17 - 18. கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 18 - 19. கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 19 - 20. கதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் - பகுதி 20 - 21. கதை கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 21 - 22. கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 22 - 23. கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 23 - 24. கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 24 - 25. கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 25 - 26. கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 26 - 27. கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 27 - 28. கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 28 - 29. கதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் பகுதி 29 - 30. கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி -30 - 31. கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 31 - 32. கதை, கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 32 - 33. கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 33 - 34. கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 34 - 35. கதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 35 - 36. கதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 36 - 37. கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 37 - 38. கதை, கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 38 - 39. கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 39 - 40. கதை, கதையாம், காரணமாம் ராமாயணம் -பகுதி 40 - 41. கதை கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 41 - 42. கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 42 - 43. கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 43 - 44. கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 44 - 45. கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 45 - 46. கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 46 - 47. கதை, கதையாம், காரணமாம், ராமாயணம் பகுதி 47 - 48. கதை, கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 48 - 49. கதை, கதையாம், காரணமாம், ராமாயணம் - பகுதி 49 - 50. கதை, கதையாம், காரணமாம், ராமாயணம் பகுதி 50 - 51. கதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 51 - யுத்த காண்டம் - 52. கதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 52 (விபிஷண சரணாகதி) - யுத்த காண்டம் - 53. கதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 53 - யுத்த காண்டம் - 54. கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம்- பகுதி 54 யுத்த காண்டம் - 55. கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 55 - 56. கதை, கதையாம், காரணமாம், ராமாயணம் பகுதி 56 - 57. கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி- 57 - 58. கதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் - பகுதி 58 - 59. கதை, கதையாம், காரணமாம், ராமாயணம் - பகுதி 59 - 60. கதை, கதையாம், காரணமாம் ராமாயணம் பகுதி 60 - 61. கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 61 - 62. கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 62 - 63. கதை,கதையாம் காரணமாம், ராமாயணம் -யுத்த காண்டம் பகுதி 63 - 64. கதை,கதையாம் காரணமாம் ராமாயணம் - பகுதி 64 - 65. கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 65 - 66. கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் - பகுதி 66 - 67. கதை,கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 67 - 68. கதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் பகுதி 68 - 69. கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 69 - 70. கதை, கதையாம் காரணமாம் -ராமாயணம் பகுதி 70 - 71. கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 71 - 72. கதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் - பகுதி 72 - 73. கதை, கதையாம் காரணமாம்,ராமாயணம் பகுதி 73 - 74. கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 74 - 75. கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி – 75 - 76. கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி- 76 - 77. கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 77 - 78. கதை, கதையாம் , காரணமாம் - ராமாயணம் பகுதி 78 - 79. கதை, கதையாம் காரணமாம் ராமாயணம் - பகுதி 79 - 80. கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 80 - 81. கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 81 - 82. கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 82 - 83. கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 83 - 84. கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 84 - 85. கதை,கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 85 - 86. கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம்- பகுதி 86 - 87. கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 87 - எங்களைப் பற்றி - Free Tamil Ebooks 1 முன்னுரை [14105244840_bdd98de33e_o] ராமாயணம் எத்தனையோ பேர் எவ்வளவோ விதங்களில் எழுதி இருந்தாலும் எல்லாவற்றிலும் (வால்மீகியைத் தவிர) ஶ்ரீராமனை ஒரு அவதாரமாகவும், கடவுளாகவும், அனைத்தும் அறிந்தவனாகவுமே காட்டப்படுகிறது. நம் இந்தியக் குழந்தைகளுக்கு இரவு நேரப் படுக்கைக்குச் செல்லும் முன்னர் பாட்டிமார்களால் சொல்லப்பட்டதால் அவற்றில் ஆஞ்சநேய ப்ரபாவம் அதிகமாகவும், விந்தைகளும், அற்புதங்களும் நிறைந்ததாகவும் சொல்லப்பட்டு வந்தது; ஆனால் ஶ்ரீராமன் அவன் வாழ்ந்த காலம் முழுமைக்கும் ஒரு சாதாரண மனிதனாகவே அனைத்து மக்களும் துன்பப் படுவது போல் துன்பங்களை அடைந்து சகித்துக் கொண்டு, மனைவியைப் பிரிந்து, பின்னர் அவளை மனமார சந்தேகங்கள் ஏதுமில்லாமல் ஏற்றுக்கொண்டும் அவளோடு வாழ முடியாமல், வாழ்நாள் முழுவதும் அவள் நினைவிலேயே கழித்து என்று இருந்து வந்திருக்கிறான். ராமன் நினைத்திருந்தால் அவனுடைய அரச அதிகாரங்களைப் பயன்படுத்தி சீதையைத் தன்னோடு வாழ அனுமதித்துக் கொண்டு அவளுடன் சந்தோஷமாகவும், இன்னும் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டும் இருந்திருக்கலாம். அவன் நினைத்திருந்தால் சீதையை விடுத்து இன்னொரு பெண்ணைத் தேடி மணந்திருக்கலாம். அல்லது சீதையை ராவணன் பிடியிலிருந்து விடுவித்த உடனேயே அவளை வெளியேற்றி இருக்கலாம். ஆனால் அப்படி எல்லாம்செய்யாமல் அவளோடு வாழத்தான் நினைத்தான். அது அவனுடைய சொந்தக் குடிமக்களிடையே தோற்றுவித்த சலசலப்புத் தான் சீதையை அவன் பிரியக் காரணம்.பலரும் சீதையின் மனம் இதை நினைத்து வருந்தி இருக்குமே; ராமனின் அராஜகத்தைப் பொறுத்துக் கொண்டாளே என்றெல்லாம் கேட்பதோடு அவளை அக்னிப் பிரவேசத்துக்கு உட்படுத்தியதும் ராமனே என்னும் தவறான எண்ணத்திலேயே இருந்து வருகின்றனர். ஆனால் மூல ராமாயணமான வால்மீகி எழுதியபடி ஶ்ரீராமன் அவளைத் தீக்குளிக்கச் சொல்லவே இல்லை. சீதை தான் தானாக முன் வந்து தீக்குளிக்கிறாள். இதை எழுதியபோது எனக்குப் பல கண்டனங்கள் வந்தன. ஏனெனில் அனைவருமே இப்போதைய 21 ஆம் நூற்றாண்டோடு சீதை இருந்த காலத்தை ஒத்துப் பார்ப்பதே காரணம். இதில் பலருக்கும் ராமாயணம் என்பது ஒரு கதை தான் என்றும் இட்டுக்கட்டின கதை என்றுமே கருத்து. அப்படிக் கருத்துள்ளவர்கள் தான் இந்தக் கேள்வியைக் கேட்கின்றனர். இட்டுக்கட்டின கதையில் இப்படி எல்லாம் வரக் கூடாதா? இதை விடக் கொடுமைகள் எல்லாம் தற்காலத்தில் நாகரிகம் முற்றிய இந்த 21 ஆம் நூற்றாண்டில் நடந்து வருகின்றன. அப்படி இருக்கையில் ராமர் வாழ்ந்த காலத்தில் இப்படி நடந்திருக்கலாம் என்பதில் ஆச்சரியம் என்ன? சீதை தன் கணவனின் ராஜரிக தர்மத்தைப் புரிந்து கொண்டதாலேயே விலகி வாழச் சம்மதிக்கிறாள். தற்கால நடைமுறைப்படி mutual separation. ஆகவே படிப்பவர்கள் வால்மீகி காலத்தை மனதில் கொண்டு படிக்க வேண்டும் என்பதோடு அதில் உள்ள நீதிகள், அரச தர்மங்கள், அரசனுக்குரிய கடமைகள், நீதி பரிபாலனங்கள் ஆகியவை தற்காலத்துக்கும் பொருந்தும்படியாக இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். சாரத்தை விட்டு விட்டுச் சக்கையை எடுத்துச் சாப்பிட வேண்டாம். மேலும் நான் எழுதி இருப்பது முழுக்க முழுக்க வால்மீகி ராமாயணமே. ராம பட்டாபிஷேஹம் வரையிலும் கம்பன், துளசி, அருணகிரிநாதர் ஆகியோரின் ஒப்பீடுகள் இருக்கும். நான் முன்மாதிரியாகக் கொண்டது அர்ஷியா சத்தார் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ராமாயணப் புத்தகம். அந்தப் புத்தகமும் நான் எழுதுகையில் என்னிடம் இல்லை. படித்தவற்றைக் குறிப்புகள் எடுத்து வைத்துக் கொண்டு விரிவாக்கம் செய்தவையே. அவ்வப்போது இணையத்தில் கிடைத்த வால்மீகி ராமாயணம் தளம் பேருதவி செய்தது. இதைத் தவிரவும் கம்பராமாயணம் இணையத்திலிருந்தும், திருப்புகழ் கெளமாரம் தளத்திலிருந்தும் பேருதவியாகப் பயன்பட்டன. சீதையின் அக்னிப்ரவேசம் குறித்த விளக்கக் கட்டுரையைக் கொடுத்து உதவியது சிங்கை குமார் என்னும் சகோதரர். அதற்குத் தேவையான ஒதெல்லோ நாடகப் பகுதியைத் தேடி எடுத்துக் கொடுத்தது (கடலூர்) திரு திருமூர்த்தி வாசுதேவன். இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. மற்றும் திருப்புகழைத் தேடி எடுத்து உதவிய (கரோலினா, ராலே) டாக்டர் சங்கர்குமாருக்கும், திரு புஷ்பாராகவனுக்கும் (தற்சமயம் மும்பையில் உள்ளார்) என் நன்றி. தெரியாத இடங்களில் பொருள் சொல்லி உதவிய திரு சிவசிவா என்னும் சகோதரர் சுப்ரமணியன், (நியூ ஜெர்சி) அவர்களுக்கும் என் நன்றி. கீதா சாம்பசிவம். மின்னஞ்சல்: geethasmbsvm6@gmail.com அட்டைப் படம் – ஜெகதீஸ்வரன் நடராஜன் – sagotharan.jagadeeswaran@gmail.com அட்டைப்பட மூலம் – fridolinfroehlich.deviantart.com/art/Sita-Rama-and-Laksman-Hanuman-209345201 மின்னூலாக்கம் – ப்ரியா – priyacst@gmail.com [pressbooks.com] 1 கதை கதையாம், காரணமாம்! ராமாயணம் பகுதி 1 விநாயகப் பெருமான் அருளால் இப்போது தொடங்கும் இந்த நூல் எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் தொடரப் பிரார்த்தனைகள் . இது பல நாட்களாய் உருப்போட்டு வைத்த ஒரு விஷயம் . எழுதலாமா வேண்டாமா என யோசனை . ஏனெனில் ராமாயணம் அனைவரும் அறிந்த ஒன்றே , என்றாலும் , இது நான் படித்த ஒரு ஆங்கில மொழி பெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டே பெரும்பாலும் எழுதப் போகிறேன் . அந்தப் புத்தகமும் இப்போ கைவசம் இங்கே இல்லை . ஒரு வருஷம் முன்னால் எழுதி வைத்த குறிப்புக்களின் அடிப்படையிலேயே எழுதப் போகிறேன் . எழுதப் போவது ராமாயணத் தொடர் . வால்மீகி ராமாயணம் தான் , ஆனால் ஆர்ஷியா சத்தார் என்னும் பெண்மணி இந்தத் தொடரை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்திருக்கிறார் . கிட்டத் தட்டப் பத்து வருடங்கள் இதற்காக உழைத்துவிட்டுப் பின்னரே இதில் இறங்கி இருக்கிறார் . மொழி பெயர்ப்புக்கும் , மொழி மாற்றத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது என்றே நினைக்கிறேன் . ஆகவே என்னைப் பொறுத்த அளவில் வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட மொழி மாற்றமே இது . ஆர்ஷியா சத்தார் பற்றிய ஒரு குறிப்பு இப்போது காணலாம் . 1960- ம் வருஷம் பிறந்த இவர் தெற்காசிய மொழிகளிலும் , நாகரீகத்திலும் ஆராய்ச்சி செய்து அதற்கான முனைவர் பட்டம் ஷிகாகோ பல்கலைக் கழகத்தில் 1990- ம் ஆண்டில் பெற்றிருக்கிறார் . வடமொழி எனப்படும் சம்ஸ்கிருதத்தில் உள்ள “ கதாசரிதசாகரா ” மற்றும் வால்மீகி ராமாயணத்தை இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உள்ளது குறிப்பிடத் தக்கது . பெங்குவின் பதிப்பகத்தால் வெளியிடப்ப்பட்ட இவரின் இந்த மொழிபெயர்ப்பு நூல்கள் டைம்ஸ் ஆப் இந்தியா , இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி போன்ற பத்திரிகைகளால் விமரிசிக்கப் பட்டுள்ளது . இதற்காக இவர் உழைத்திருக்கும் உழைப்புக் குறைத்து மதிப்பிடக் கூடிய ஒன்றல்ல . பழங்கால மொழியின் பேச்சு வழக்குத் தெரிந்து கொள்ள வேண்டும் . நாகரீகங்கள் , பழக்க வழக்கங்கள் தெரிய வேண்டும் . அப்போது தான் அந்தக் குறிப்பிட்ட நூலின் உண்மையான உள் அர்த்தங்களைப் புரிந்து கொள்ள முடியும் . வால்மீகி ராமாயணத்தின் மூலத்தைத் தேடி அலைந்த இவருக்குக் குஜராத்தின் எம் . எஸ் . பல்கலைக்கழகத்தில் அதன் பிரதி ஒன்று கிடைத்தது . தான் கேட்டு அறிந்த ராமாயணக்கதைக்கும் இந்த வால்மீகி ராமாயண மூலப்பிரதியிலும் பல வேற்றுமைகள் இருப்பதை அறிந்து கொண்டார் ஆர்ஷியா சத்தார் அவர்கள் . ஆகவே மேலும் பல பிரதிகளைத் தேடி அலைந்து ஸ்ரீஹரிப்ரசாத் சாஸ்திரியின் மொழி பெயர்ப்பு , என் . ரகுநாதன் அவர்களின் ராமாயணம் , ராபர்ட் கோல்ட்மேன் மற்றும் அவரின் மற்ற நண்பர்களால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது , சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் “ சக்கரவர்த்தித் திருமகன் “, ஆர் . கே , நாராயணனின் ராமாயணக் கதை , பி . லால் , கமலா சுப்ரமணியன் , வில்லியம் பக் போன்றவர்களின் புத்தகம் போன்ற பல புத்தகங்களையும் ஆராய்ந்தார் . பின்னர் வால்மீகியின் ராமாயண மூலப் பிரதியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் . ஒரே புத்தகமாய் வந்துள்ள இது கிட்டத் தட்ட 1000 பக்கங்களுக்கு மேல் உள்ளது . சரளமான மொழிபெயர்ப்பு . கதையின் மையக் கருத்தை நன்கு உள்வாங்கிக் கொண்டு கடைசியில் கதையைப் பற்றிய தன் கருத்தையும் சொல்லி இருக்கிறார் . அது கடைசியில் வரும் . இப்போது வால்மீகி பற்றிய சிறு குறிப்பு . பின்னர் ராமாயணம் , வழக்கம்போல் உத்தரகாண்டத்தில் லவ , குசர்கள் சொல்லுவது போலவே தொடங்கும் . வால்மீகி முனிவர் நாரதரால் ஆசீர்வதிக்கப் படும் முன்னர் ஒரு கொள்ளைக்காரனாய்த் திகழ்ந்தார் என அனைவருமே அறிந்திருக்கலாம் . காட்டில் செல்லும் வழிப்போக்கர்களைக் கொள்ளை அடித்தும் , கொன்றும் அவர்களின் பொருட்களைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த இவரை , நாரதர் ஒரு முறை சந்திக்க நேர்ந்தது . நாரதர் அவரிடம் அவர் செய்யும் கொலை , கொள்ளை போன்றவற்றைச் செய்யக் கூடாது எனப் போதிக்க இவரோ , என் பெரிய குடும்பத்தைக் காப்பாற்றவே நான் இம்மாதிரியான காரியங்களில் இறங்குகிறேன் எனச் சொல்கின்றார் . நாரதர் அவரிடம் அப்போது “ வலியா , நீ செய்யும் இந்த துஷ்கிருத்தியங்களின் பலனை நீ மட்டுமே அனுபவிக்க நேரிடும் . எங்கே , இப்போது உன் குடும்பத்தினரிடம் சென்று இதன் துர்ப்பலன்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளுவார்களா எனக் கேட்டு வா !” என்று சொல்லி அனுப்ப , வலியனாக இருந்த வால்மீகியும் தன் குடும்பத்து உறுப்பினர்கள் ஒவ்வொருவராய்ச் சென்று , “ என் பாவத்தை ஏற்றுக் கொள் ,” என வேண்டிக் கேட்க , குடும்பத்துக் கடைசி உறுப்பினர் வரை யாருமே அவர் பாவத்தை ஏற்க மறுக்கவே , மனம் வருந்திய வலியன் திரும்ப நாரதரிடம் வருகிறான் . நாரதர் மூலம் அவனுக்கு வித்யை கற்றுக் கொள்ள நேர்ந்ததுடன் , ஒரு முனிவராகவும் உருவெடுக்கிறான் . ஒருநாள் அவருக்கு , “ மனிதர்களில் சர்வ உத்தமனாகவும் , யாராலும் போற்றப் படக் கூடியவனாகவும் யாரும் இருக்கிறார்களா ? இருந்தால் அவன் யார் ?” என்ற கேள்வி தோன்றியது . உடனேயே நாரதரிடம் சென்று தன் இந்தச் சந்தேகத்தைக் கேட்கிறார் . நாரதரும் அவருக்கு ஸ்ரீராமரின் கதையைச் சொல்லி , இவர் தான் மனிதர்களிலேயே உத்தமரும் , யாவரும் போற்றத் தக்கவரும் ஆவார் .” எனச் சொல்கின்றார் . பின்னர் தன் மாலைக் கடன்களில் மூழ்கிய வால்மீகி கண்களில் ஒரு வேடன் இரு கிரெளஞ்சப் பட்சிகளைத் துரத்தும் காட்சியும் , வேடனால் ஒரு கிரெளஞ்சப் பட்சி அடித்து வீழ்த்தப் பட்டதையும் , தப்பிய மற்றதின் அழுகுரலும் படுகிறது . இணையைப் பிரிந்த கிரெளஞ்ச பக்ஷியைக் கண்டு வேதனையுடன் வேடனைக் குறித்து அவர் கூறிய சொற்கள் ஒரு இனிமையான அதே சமயம் சோகம் ததும்பிய சந்தத்தோடு கூடிய பாடலாக அமைந்தது . திகைத்துப் போன வால்மீகி செய்வதறியாது திகைக்க அப்போது அங்கே வந்த நாரதரும் , பிரம்மாவும் வால்மீகிக்கு ஆசி கூறி இந்தப் பாடலை முதலாக வைத்து ராமனின் கதையை பாடச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கின்றனர் . இது ஒரு இதிகாசமாக இருக்கும் எனவும் சொல்லப் படுகிறது . இதிகாசம் என்றால் அதை எழுதுபவர்களும் அந்தக் குறிப்பிட்ட இதிகாசக் கதையில் ஒரு பாத்திரமாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது . இந்த ராமாயணக் கதையில் வால்மீகியும் ஒரு பாத்திரமே ! அதே போல் மஹாபாரதத்தில் வேத வியாசரும் ஒரு கதா பாத்திரமே ! இனி நாளை வால்மீகி ஆசிரமம் செல்வோமா ?   . 2 கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 2 இடம் வால்மீகி ஆசிரமம் . சிந்தனையில் இருந்த வால்மீகிக்கு ராமன் இன்னும் அரசாண்டு கொண்டிருப்பதும் , அவனுடைய நல்லாட்சி பற்றியும் நாரதர் எடுத்து உரைத்தது நினைவில் இருந்தது . இப்படிப் பட்ட ஒரு உயர்ந்த மனிதனின் சரித்திரத்தைத்தான் சாட்சியாகவும் இருந்து கொண்டு எழுத நேர்ந்தது பற்றி அவர் மனமகிழ்ச்சி அடைந்தார் . காவியம் இயற்றத் தீர்மானம் செய்த வால்மீகிக்கு அதுவரை நடந்த நிகழ்வுகளும் , பேசப் பட்ட சொற்களும் , அழுத அழுகைகளும் , செய்த சபதங்களும் , வாங்கிய வரங்களும் , நிறைவேற்றப் பட்ட பிரதிக்ஞைகளும் , நடந்த நடையும் , செய்த பிரயாணங்களும் மனதில் வந்து அலைகடலில் , மோதும் அலைகள் போல மோத ஆரம்பித்தன . அதே சமயம் இனி என்ன நடக்கப் போகிறது , என்ற உள்ளுணர்வாலேயும் உந்தப் பட்டார் . எழும்பியது ஒரு அமர காவியம் ! சூரிய , சந்திரர் உள்ளவரையும் , நட்சத்திரங்கள் ஜொலிக்கும் வரையும் , கடல் மணல் உள்ளவரையும் , இப்பூவுலகில் மக்கள் வசிக்கும் வரையும் பேசப் படப் போகும் , அனைவராலும் விவாதிக்கப் படப் போகும் ஒரு மகத்தான எழுத்தாக்கம் எழும்பி நின்றது . ஆறு காண்டங்களில் , 500 சர்க்கங்கள் எனப்படும் அத்தியாயங்களில் , 24,000 ஸ்லோகங்கள் எழுதப் பட்டதாய்ச் சொல்லப் படுகிறது . இனி நடக்கப் போவதை உத்தரகாண்டமாக இயற்றினார் . எல்லாம் முடிந்தது . இனி மக்களுக்கு இதை எடுத்துச் சொல்லும் பேறு பெற்றவர் யார் ? தகுதியான நபர்கள் யார் ? சிந்தித்த வால்மீகியை வந்து வணங்கினார்கள் இரு இளைஞர்கள் . லவன் , குசன் , என்ற பெயர் பெற்ற இரு இளைஞர்களும் வால்மீகியின் சிஷ்யர்கள் தான் . என்றாலும் இந்த மகத்தான காவியத்தின் முக்கிய கதாபாத்திரங்களும் அவர்களே , ஆனாலும் அவர்கள் அதை அச்சமயம் அறியமாட்டார்கள் . தங்கள் குருவை வணங்கிய இரு இளைஞர்களுக்கும் , இந்த ஒப்பற்ற காவியம் கற்பிக்கப் பட்டது . பிறவியிலேயே இனிமையான குரல்வளம் பெற்றிருந்த இரு இளைஞர்களும் அந்தக் காவியத்தை தங்கள் இனிமையான குரலில் இசைக்க ஆரம்பித்தனர் . ரிஷிகளும் , முனிவர்களும் , நல்லோரும் கூடி இருக்கும் இடங்களில் அந்தக் காவியத்தைப் பாடலாகப் பாடிக் கொண்டு இரு இளைஞர்களும் சென்ற வழியில் , ஶ்ரீராமனின் அஸ்வமேத யாகம் நடக்கும் இடம் வரவே இருவரும் அங்கே சென்றனர் . யாகம் நடக்கும்போது ஏற்படும் சிறு இடைவேளைகளில் இச்சிறுவர்கள் பாடும் ராமாயணப் பாடல்களைக் கேட்டறிந்த ரிஷிகள் , முனிவர்களோடு , பொது மக்களும் அந்தச் சிறுவர்களை வாழ்த்திப் பரிசுகளை அளிக்கின்றனர் . செய்தி பரவி , நகரத் தெருக்களில் இருந்து , மெல்ல , மெல்ல அரண்மனையைச் சென்றடைந்தது . ஸ்ரீராமரின் செவிகளில் இந்தச் செய்தி விழுந்ததும் , இளைஞர்களை அரண்மனைக்கு வரவழைக்கின்றார் . இளைஞர்கள் பாட ஆரம்பித்ததும் , கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வயம் இழந்த ஸ்ரீராமர் சிம்மாசனத்தில் இருந்து கீழே இறங்கி மற்ற சபையோர்களுடன் சேர்ந்து அமர்ந்து அந்தக் காவியத்தைக் கேட்கலானார் . இந்த இடத்தில் துளசி ராமாயணம் , மற்றச் சில ஹிந்தியில் எழுதப் பட்டிருக்கும் ராமாயணக் கதையில் லவ , குசர்கள் , ஸ்ரீராமரின் அசுவமேதக் குதிரையைப் பிடித்துக் கட்டி விட்டு , அதை விடுவிக்க வந்த ராம பரிவாரங்களைத் தோற்கடித்ததாயும் , பின்னர் சீதை வந்து நேரில் பார்த்துவிட்டுத் தன் பதியின் சகோதரர்களே என அறிந்து கொண்டு , லவ , குசர்களிடம் அதைத் தெரிவித்ததாயும் , ஸ்ரீராமருடனேயும் , லவ , குசர்கள் சண்டை போடத் தயாராக இருந்ததாயும் வரும் . அதற்குப் பின்னரே அவர்கள் அசுவமேத யாகத்தில் கலந்து கொண்டு ராமாயணம் பாடச் செல்லுவார்கள் . ஆனால் வால்மீகி ராமாயணத்தில் ராமரின் கடைசித் தம்பியான சத்ருக்கனன் மட்டுமே லவ , குசர்கள் பிறந்த சமயத்திலும் , அதற்குப் பனிரெண்டு வருடங்கள் பின்னால் அவர்கள் ராமாயணத்தை வால்மீகி மூலம் கற்றுப் பாடிப் பயிற்சி செய்து கொண்டிருந்த போதும் வால்மீகி ஆசிரமத்தில் தற்செயலாகத் தங்குகிறான் . அவன் ஒருவனுக்கு மட்டுமே ஸ்ரீராமருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்த விபரம் தெரிய வருகிறது , என்றாலும் அவன் கடைசி வரை அது பற்றிப் பேசுவதில்லை . வால்மீகியும் ராமனை ஒரு அவதார புருஷன் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை , என்பதும் கவனிக்கத் தக்கது . ஆனால் வால்மீகி ராமனை ஒரு சாதாரண , ஆசா பாசங்கள் நிறைந்த மனிதனாய்க் காணவில்லை . கட்டுப்பாடுகள் நிறைந்த ஒழுக்க சீலன் என்றும் எண்ணவில்லை . மாறாக “ மனிதருள் மாணிக்கம் ” என்றும் கிடைத்தற்கரிய அரிய மனிதன் என்றும் சொல்கின்றார் . ஒரு முன்மாதிரியான மகன் , சகோதரன் , நண்பன் , கணவன் , இவை எல்லாவற்றுக்கும் மேல் குடிமக்களைத் தன் மக்கள் போல் எண்ணும் ஒரு ஒப்பற்ற அரசன் . தன் கடமையைச் செய்வதற்காகவும் , தன் குடிமக்களைத் திருப்தி செய்வதற்காகவும் எந்த விதமான ஒப்பற்ற தியாகத்தையும் செய்யத் தயாராய் இருந்தவன் , தன் அன்பு மனைவியைக் கூட . அதை நாளை காண்போமா ? பி . கு : முதன் முதல் நாரதர் வால்மீகிக்குச் சொன்ன “ சந்க்ஷேப்த ராமாயணம் ” தவிர , வால்மீகி எழுதிய ராமாயணத்தின் மூலம் தவிர , நாம் அறிந்தவை , கம்ப ராமாயணம் தமிழில் என்றாலும் இது தவிர , துளசி ராமாயணம் , ஆனந்த ராமாயணம் , அத்யாத்ம ராமாயணம் , அத்புத ராமாயணம் , அமல ராமாயணம் , ரகு வம்சம் உட்பட பல ராமாயணங்கள் இருக்கின்றன . சங்க காலத்திலும் பழைய ராமாயணம் ஒன்று இருந்திருக்கிறது . இது தவிர , தமிழ்க்காப்பியங்கள் ஆன சிலப்பதிகாரம் , மணிமேகலையும் ராமாயணம் பற்றிக் குறிப்பிடுகிறது . அருணகிரிநாதரும் தன் பங்குக்கு ஒரு ராமாயணம் எழுதி இருக்கிறார் . முடிந்த வரை சில வரிகள் கம்ப ராமாயணத்தில் இருந்தும் , அருணகிரிநாதரின் ராமாயணத்தில் இருந்தும் குறிப்பிடப் படும் . ஆனால் கம்பரும் சரி , அருணகிரியாரும் சரி ராமரை ஒரு அவதாரமாகவே வர்ணிக்கிறார்கள் . படிப்பவர்கள் அனைவரும் உங்கள் கருத்துப் படி எடுத்துக் கொள்ளலாம் . கதை கதையாம் காரணமாம் என்ற தலைப்புக் கொடுத்ததுக்கும் காரணம் இருக்கிறது . காரணம் இல்லையேல் காரியம் இல்லை என்பதை நிரூபிக்கும் ராமாயணக் கதை அதை எடுத்துச் சொல்லும் என நம்புகிறேன் . 3 கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 3 தான் பெற்ற மகன்களே தன் முன்னால் வந்து தன் கதையையே சொல்லுவதை ராமர் அறிந்திருக்கவில்லை , என்பதே வால்மீகி ராமாயணத்தின் மூலம் நாம் காண்பது . கம்ப ராமாயணத்தில் கம்பர் ராமாயணம் எழுதும்போது அவரை ஒரு அவதார புருஷனாகவே நினைத்துக் கடவுளருக்குச் சமமாக மட்டுமில்லாமல் கடவுளாகவே நினைத்தும் வந்ததால் அவர் அவ்வாறு எழுதவில்லை . கம்பர் உத்தர காண்டமே எழுதவும் இல்லை . ஒட்டக்கூத்தர் எழுதியதாகச் சொல்லப்படுகிறது . ஆகவே வால்மீகி ராமாயண ராமர் ஒரு சாதாரணமனிதன் போலவே தன் மனைவியிடம் கோபம் கொள்ளுவதையும் , சந்தேகம் கொள்ளுவதையும் , பின் நாட்டு மக்களுக்காக மனைவியைத் தியாகம் செய்வதையும் செய்ய முடிகின்றது . ஏன் தியாகம் செய்ய வேண்டும் ? எல்லாரும் நினைப்பது போல் வண்ணானும் , வண்ணான் மனைவியும் பேசிக் கொண்டார்கள் என்பதாலா ? இல்லை , அம்மாதிரி எங்கேயும் வால்மீகி ராமாயணத்தில் காணவே முடியாது . பின் என்ன தான் நடந்தது ? ராம , ராவண யுத்தம் முடிந்து ராமர் அயோத்திக்குத் திரும்பிப் பட்டாபிஷேகம் முடிந்து நல்லாட்சி புரிந்து கொண்டிருக்கும் வேளையில் சில வருடங்களில் சீதை கருவுருகிறாள் . கருவுற்றிருக்கும் மனைவியை மனமகிழ்விக்க ராமர் பலவிதங்களிலும் முயலுகின்றார் . அப்போது சீதை ராமரிடம் , தான் மீண்டும் காட்டுக்குப் போய்ச் சில தினங்கள் ரிஷி , முனிவர்களுடைய ஆசிரமத்தில் இருந்து வரவேண்டும் என்ற ஆசையைத் தெரிவிக்கின்றாள் . மனைவியின் ஆசையைப் பூர்த்தி செய்வதாய்ச் சொல்லுகின்றார் ராமர் . அப்போது நாட்டின் பல திசைகளுக்கு அவர் அனுப்பி இருந்த தூதுவர்கள் வந்திருப்பதாய்ச் செய்தி வரவும் , ராமரும் அவர்களைச் சந்திக்கப் போகின்றார் . அவர்களில் ஒருவன் , “ பத்ரன் ” என்ற பெயர் கொண்டவன் , மிகவும் தயக்கத்துடனும் , வணக்கத்துடனும் ராமரைப் பார்த்து , “ அரசே , மக்கள் உங்கள் நல்லாட்சியால் மனம் மகிழ்ந்திருந்தாலும் , அரசர் , மனைவியின் அழகிலும் , அவளுடன் வாழ்வதிலும் உள்ள பெரிய ஆசையால் , பல மாதங்கள் ராவணனிடம் சிறை இருந்த மனைவியைத் திரும்பச் சேர்த்துக் கொண்டு விட்டாரே ? ராவணனைக் கடல் கடந்து சென்று கொன்று வீழ்த்திய அவரின் சாதனை , இந்தச் செயலால் மாசு பட்டுவிட்டதே ? சிறை இருந்த ஒரு பெண்ணை எப்படி அவர் திரும்பச் சேர்த்துக் கொண்டு வாழலாம் ? நாளை நம் மனைவிகளுக்கும் இம்மாதிரியாக நேர்ந்தால் , நாமும் அவ்விதமே செய்யவேண்டும் , ஏனெனில் அரசன் எவ்வழி , அவ்வழி குடிமக்கள் ” எனப் பேசிக் கொள்வதாயும் , மற்ற விஷயங்களில் மக்கள் பெருமளவு திருப்தியாகவே இருப்பதாயும் தெரிவிக்கிறான் . மனம் நொந்த ராமர் , மற்றவர்களையும் பார்த்து இது நிச்சயம் தானா எனக் கேட்க , அவர்களும் அவர்கள் சென்ற இடங்களிலும் இம்மாதிரியான பேச்சே இருப்பதாய்ச் சொல்லுகின்றனர் . செய்வது அறியாமல் திகைத்த ராமர் , தன் சகோதரர்களிடம் கலந்து ஆலோசிக்கின்றார் . சீதை அக்னிப் பிரவேசம் செய்ததையும் , அவள் மாசற்றவள் என்றே தாம் நம்புவதாயும் தெரிவித்த அவர் , ஆனால் இவ்வாறு ஒரு அவப் பெயர் ஏற்பட்டுவிட்டதே , எனவும் மனம் நொந்தார் . ஒரு அரசனுடைய அரசாட்சியில் இவ்வாறு அவப் பெயர் யாரால் ஏற்பட்டாலும் அவன் அவர்களைத் துறக்கவேண்டியதே நியாயம் . உங்களால் ஏற்பட்டிருந்தாலும் உங்களையும் நான் துறக்கவேண்டியதே ! இப்போது சீதையை நான் துறக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் பட்டிருக்கின்றேன் . லக்ஷ்மணா , நீ நாளைக் காலை அரண்மனைத் தேரைத் தயார் செய்து சீதையைக் கங்கைக் கரையில் உள்ள ரிஷிகளின் ஏதாவதொரு ஆசிரமத்துக்கருகில் விட்டு விட்டு வா . என்னுடைய இந்த முடிவுக்கு மாறாக ஒருவரும் பேச வேண்டாம் . அது நீங்கள் எனக்கு இழைக்கும் தீங்கு . மேலும் சீதையும் காட்டில் வாழவேண்டும் என ஆசையும் பட்டாள் ” என்று ஆணையிட்டுவிட்டு , கண்ணில் பெருகும் கண்ணீரை நிறுத்த வழியில்லாமல் தனிமையை நாடிச் சென்றார் . இனி தனக்கு வாழ்நாள் முழுதும் சீதை கிடைக்க மாட்டாளே என்று உணர்ந்தவர் போல் . மறுநாள் சீதையை லட்சுமணன் கூட்டிச் செல்கின்றான் . வழக்கம்போல் சுமந்திரர் தேரை ஓட்டுகின்றார் . யாருக்கும் முகத்தில் மகிழ்ச்சி இல்லை . இதை அறியாத சீதை தன் கணவன் இவ்வளவு சீக்கிரம் தன் ஆவலைப் பூர்த்தி செய்வதை அறிந்து தான் மகிழ்ச்சி அடைவதாயும் , அங்கே உள்ள ரிஷிபத்தினிகளுக்கும் , ரிஷி குமாரிகளுக்கும் தான் அளிக்கப் போகும் பரிசுகள் பற்றியும் சொல்லிக் கொண்டு வருகின்றாள் . கங்கைக் கரையும் வந்தது . லட்சுமணன் “ ஓ “ வெனக் கதறுகின்றான் . சீதை சொல்கின்றாள் :” லட்சுமணா , பிரிந்து இருப்பதை நினைத்தா அழுகின்றாய் ? எனக்கும் ஸ்ரீராமரைப் பிரிந்து இருப்பது வருத்தமாய்த் தான் இருக்கப் போகின்றது . ஆனால் எல்லாம் கொஞ்ச நாட்கள் தானே ? ஒன்று செய்யலாம் , நதியைக் கடந்து அக்கரைக்குச் சென்று , ரிஷிகளின் ஆசிரமத்தை அடைந்து அவர்களுக்குப் பரிசுகள் கொடுத்துவிட்டு ஆசிகளைப் பெற்றுக் கொண்டு உடனடியாக நான் திரும்பி விடுகின்றேன் . அது வரை பொறுத்துக் கொள் !” என்று சொல்லி நதியைக் கடக்க ஏற்பாடுகள் செய்யச் சொல்கின்றாள் . நதியைக் கடந்து சென்றார்கள் . ராமர் இல்லாத தன் வாழ்க்கைப் பயணத்தைக் கடக்கப் போவதை அறியாத பேதை சீதையும் சந்தோஷமாய் நதியைக் கடந்தாலும் , மனதில் உறுத்தலும் சில துர்ச்சகுனங்களும் அவளையும் வேதனைப் படுத்தின . லட்சுமணன் மறுகரையை அடைந்ததும் சீதையை வணங்கி , ராமர் தனக்கு இட்ட வேலையைச் சொல்கின்றான் . இது எனக்கு மட்டுமில்லாமல் மற்ற தம்பிமார் , மற்றும் அரண்மனையில் யாருக்கும் , இன்னும் சொன்னால் ராமருக்குமே விருப்பம் இல்லாத ஒன்று என்றும் வேறு வழியில்லாமல் அரச தர்மத்த்தைக் காப்பாற்றவே இவ்வாறு செய்ய நேர்ந்தது எனவும் சொல்கின்றான் . அவ்வளவில் அங்கேயே சீதையை விட்டுவிட்டு லட்சுமணன் திரும்பும்போது சீதை அவனிடம் தான் பூர்ண கர்ப்பவதியாகவே இங்கே வந்திருப்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்று தன் கர்ப்ப வயிற்றை அழுகையுடனேயே லட்சுமணனுக்குக் காட்டிச் சொல்கின்றாள் . லட்சுமணன் வேதனையுடனேயே திரும்ப சீதை சத்தம் போட்டு அழுகின்றாள் . அவள் அழுகுரல் கேட்டு அங்கே வரும் ரிஷிகுமாரர்களும் , மற்றவர்களும் வால்மீகியிடம் போய்ச் சொல்ல அவரும் தன் மனக்கண்களால் பார்க்கக் கூடிய திறமை பெற்றவராய் இருந்தமையால் , நடந்ததை ஊகித்துச் சீதையைத் தன் ஆசிரமத்தில் வைத்துப் பாதுக்காக்கின்றார் . உரிய நேரத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்க அவர்கள் இருவருக்கும் வால்மீகியே லவன் , என்றும் குசன் என்று பெயர் இடுகின்றார் . தன் கையில் இருந்த தர்பையை இரண்டாய்க் கிழித்து மேல்பாகத்தால் சுத்தம் செய்யப் பட்டவனைக் “ குசன் ” என்றும் , தர்பையின் கீழ்பாகத்தால் சுத்தப் படுத்தப் பட்டவனை “ லவன் ” என்றும் அழைக்குமாறு கூறினார் . பின்னர் அந்தப் பிள்ளைகளுக்கு அவரே குருவாக இருந்து அனைத்து வித்தைகளையும் கற்பித்தார் . அந்த பிள்ளைகள் தான் தன் தகப்பனுக்கு எதிரேயே அமர்ந்து தன் , தாயின் , தகப்பனின் சோகக் கதையைத் தன் தகப்பனிடமே பாடிக் கொண்டிருந்தார்கள் . மேலே நாம் காணும் ஆசிரமத்தில் தான் சீதை வந்து தங்கியதாய்ச் சொல்லப் படுகின்றது . கதாசிரியையின் கருத்துப் படி , வால்மீகி ராமரை ஒரு சாதாரணமான கட்டுப்பாடுகளும் , ஒழுங்கும் நிறைந்த மனிதனாக மட்டுமில்லாமல் “ மனிதருள் மாணிக்கம் ” ஆகவே நினைக்கின்றார் . ஶ்ரீராமன் தன் நாட்டுக்காகவும் , நாட்டு மக்களுக்காகவும் தன் காதல் மனைவியையே தியாகம் செய்கின்றான் . அம்மாதிரியான சூழ்நிலைக்கு அவன் தள்ளப் படுகின்றான் . முதலில் தந்தை சொல்லைக் காப்பாற்றிய ஒரு முன்மாதிரியான மகன் , பின்னர் சகோதரனுக்காக நாட்டை விட்டுக் கொடுத்தவன் , தன் சிறிய தாயாரின் ஆசைக்காகக் காட்டுக்கும் சென்றவன் , அப்போதும் தன் மனைவியை விட்டுப் பிரியாத அன்பான கணவன் , என்று இம்மாதிரியான ஒரு தேர்ந்தெடுக்கப் பட்ட முன்னுதாரணம் ஆன ஒருவன் பின்னாட்களில் அருமையான அரசாட்சியும் செய்து வந்த அரசனின் நேர்மைக்கும் , திறமைக்கும் பின்னே அவனின் தனிப்பட்ட வாழ்க்கையின் உறவுகளின் அர்த்தங்கள் தான் என்ன ? அதை விவரிக்கும் ஒரு கோணத்திலேயே சில காட்சிகளை வால்மீகி சித்திரித்திருப்பதாய்ச் சொல்கின்றார் . இனி , நாம் காணப் போகும் பாலகாண்டத்தில் இருந்து ராமரின் குணாதிசயங்கள் மட்டுமில்லாமல் , மற்றவர்களின் மேல் அவருக்கு உள்ள உறவின் வெளிப்பாடுகளையும் அதன் தாக்கத்தையும் காண்போம் . ராமர் தன் மனைவியைப் பிரிந்ததற்குக் காரணமே அவரின் ஊழ்வினையும் , விஷ்ணுவின் அவதாரமாகவே அறியப் பட்ட அவர் ஒரு கடவுளாக இருந்தாலும் , தவறு செய்தால் சாபத்துக்குக் கட்டுப் பட்டவரே என்பதையுமே நாளை காணப் போகின்றோம் . ஒழுக்கமும் , நேர்மையும் , சொன்ன சொல் தவறாமையும் உள்ள ஒரு மனிதன் தன் வாழ்நாளில் கண்ட பேரிழப்புக்களயும் அவற்றை அவன் மனத்திண்மையுடனேயே தாங்கிக் கொண்டதுமே ராமாயணத்தின் மையக் கருத்தாக அவர் சொல்கின்றார் . 4 கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 4 பிருகு முனிவரின் ஆசிரமம் . அவர் மனைவி க்யாதி தட்சனின் மகள் . ஆகவே இயல்பாகவே அவளுக்கு அசுரர்களிடம் பாசம் மிகுதியாக இருந்து வந்தது . தேவர்களிடம் தோற்றுப் போன அசுரர்களை அவள் தன் கணவரின் ஆசிரமத்தில் மறைத்து வைத்துப் பாதுகாத்து வந்தாள் . அப்போது இதை அறிந்த மகாவிஷ்ணு , ஏமாற்றிப் பிழைத்து வந்த அசுரர்கள் , இங்கே பயம் இல்லாமல் வாழ்வதற்கு பிருகு முனிவரின் மனைவியே காரணம் என்பதைத் தெரிந்து கொண்டு , தன் சக்ராயுதத்தை ஏவ , அவள் தலை துண்டிக்கப் படுகின்றது . தன் மனைவி இறந்ததைக் கண்ட பிருகு முனிவர் கடும் கோபத்துடன் , தன் மனைவியைக் கொன்றவன் மகா விஷ்ணுவே என்று அறிந்திருந்தாலும் , அவரைப் பார்த்துச் “ சற்றும் நியாயமே இல்லாமல் குற்றமற்ற என் மனைவியைக் கொன்ற நீர் மனிதப் பிறவி எடுத்து , மனைவியைத் துறந்து அதன் பின்னரும் நீண்ட காலம் தனிமையில் வாழக் கடவது !” என்று சபிக்கின்றார் . மகாவிஷ்ணுவும் , தான் ராவண சம்ஹாரத்துக்காக மனிதப் பிறவி எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொண்டவராய் , அந்தச் சாபத்தை ஏற்றுக் கொண்டார் . அவர் தான் இந்தப்பிறவியில் ராமராக அவதரித்துள்ளார் . இந்த விஷயம் துர்வாச முனிவரால் தசரதனுக்கு , வசிஷ்டரின் முன்னிலையில் சொல்லப் பட்டதாயும் , ஆகவே இது இவ்வாறுதான் நடக்கும் எனத் தான் முன்பே அறிந்திருந்ததாயும் , என்றாலும் இது பற்றிப் பேசக்கூடாது என்று தான் பணிக்கப் பட்டிருந்ததாயும் சுமந்திரர் வாய் மூலமாக லட்சுமணன் சீதையை வால்மீகி ஆசிரமத்தில் தன்னந்தனியே விட்டு விட்டு வரும் வழியில் அறிந்து கொள்கின்றான் . யாராக இருந்தாலும் “ விதி வலியது ” என்பதும் , முன்பிறவியின் பாவங்களுக்கு ஏற்ற தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும் என்பதையும் புரிந்து கொண்டான் . என்றாலும் அவன் மனம் அமைதி அடையவில்லை . நாட்டுக்குத் திரும்பி ராமரிடம் நடந்த விபரங்களைத் தெரிவிக்கின்றான் . ராமர் மன அமைதியின்றித் தவிக்கின்றார் . அவர் தான் அஸ்வமேத யாகம் செய்ய நிச்சயித்துச் செய்யும் வேளையில் லவ , குசர்களால் பாடப் பட்ட ராமாயண காவியத்தை மக்களோடு மக்களாய்ச் சேர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றார் . கோசல நாட்டு மன்னன் ஆன தசரதன் அயோத்தி என்னும் மாநகரைத் தலைநகராய்க் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான் . அவனுக்குக் குழந்தைகள் இல்லை . பல விதங்களிலும் சிறப்பு வாய்ந்த மன்னனுக்கு மூன்று மனைவியர் இருந்தனர் . என்றாலும் மூவருக்கும் குழந்தைகள் இல்லை . நீதி தவறாத மன்னன் ஆன தசரதனின் அவையின் மந்திரிகள் நன்னடத்தை வாய்ந்தவர்களாய் இருந்ததிலும் , குடிமக்கள் தெய்வ பக்தி நிரம்பி இருந்ததையும் கண்டு ஆச்சரியம் ஏதும் இல்லை அல்லவா ? தன் மந்திரிகளைக் கலந்து ஆலோசித்த மன்னன் அஸ்வமேத யாகம் செய்தால் குழந்தை பிறக்கும் எனத் தெரிந்து கொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் வேளையில் , தன் மந்திரியும் , தேரோட்டியும் ஆன சுமந்திரர் மூலம் விபாண்டகரின் மகன் ஆன ரிஷ்யசிருங்கர் பற்றியும் , பிறந்தது முதல் பெண்களையே அறியாத அவர் அங்க தேசத்து வறட்சியைப் போக்க அந்த தேசத்து மன்னனால் வரவழைக்கப் பட்டதையும் சொல்கின்றார் . பின்னர் ரிஷ்யசிருங்கர் நாட்டுக்குள் நுழைந்ததுமே அங்க தேசம் வறட்சி நீங்கிப் பசுமை பெற்று மழை பொழியத் துவங்கினதையும் , மனம் மகிழ்ந்த அங்க தேச மன்னன் தன் மகள் ஆன சாந்தையை ரிஷ்யசிருங்கருக்குத் திருமணம் செய்வித்துத் தன்னுடனேயே வைத்திருப்பதையும் சொல்கின்றார் . அந்த ரிஷ்ய சிருங்கர் இங்கே வந்தால் உங்கள் கவலையைப் போக்கிக் குழந்தை வரம் பெற யோசனையும் சொல்லுவார் என்று சுமந்திரர் சொல்கின்றார் . அதன் படியே ரிஷ்ய சிருங்கரை மன்னன் தசரதன் வரவழைக்கின்றார் . ரிஷ்ய சிருங்கரும் அஸ்வமேத யாகம் முடிந்ததும் தசரதரைப் புத்ர காமேஷ்டி யாகம் செய்யும்படிப் பணிக்கவே , தசரதர் புத்ரகாமேஷ்டி யாகம் ரிஷ்ய சிருங்கரின் தலைமையில் செய்கின்றார் . யாகக் குண்டத்தில் இருந்து தேவ தூதன் போன்ற ஒருவர் எழுந்து வந்து தன் கையில் வைத்திருந்த ஒரு தங்கப் பாத்திரத்தை தசரதரிடம் கொடுத்து , “ மன்னா ! இதில் உள்ள பாயசத்தை உன் மனைவிமார் அருந்தச் செய் ! யாகம் செய்ததின் பலனைப் பெறுவாய் !” என்று கூறி மறைகின்றான் . தசரதரும் அதை வாங்கிக் கொண்டு , முதல் மனைவியான கெளசலைக்குப் பாயசத்தில் பாதியைக் கொடுக்கின்றார் . மிச்சம் இருந்த பாதியில் பாதி பாகத்தை சுமத்திரைக்கும் , மிச்சம் இருந்த பாதியைக் கைகேயிக்கும் கொடுத்த பின்னரும் கொஞ்சம் மிச்சம் இருக்கவே அதை மீண்டும் சுமத்திரைக்கே கொடுக்கின்றார் . கொஞ்ச நாட்களில் மூன்று மனைவியருமே கர்ப்பம் தரிக்கின்றார்கள் . தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவிகள் என்ற ஒரு வழக்கு உண்டு . ஆனால் வால்மீகியின் ராமாயணத்தில் தசரதனுக்கு இந்த மூன்று மனைவியர் தவிர வேறு மனைவியர் இருப்பதாய் எங்குமே குறிப்பிடவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது . தசரதனின் அந்தப் புரத்தில் நூற்றுக் கணக்கான பெண்கள் இருந்து வந்தார்கள் என்று சொல்லப் பட்டாலும் , அவர்கள் எல்லாருமே மனைவியர் என்று எங்குமே குறிப்பிடப் படவில்லை . அந்தப் புரத்தின் வேலைகளைக் கவனிக்கும் பெண்கள் , அந்தரங்கத் தாதிமார் , மற்றும் தசரதனின் உறவின் முறைப் பெண்கள் என்ற அளவில் மட்டுமே குறிப்பிடப் பட்டிருக்கின்றது . மற்றபடி கம்பராமாயணத்தில் இருக்கிறதானும் பார்த்தேன் , எனக்குத் தெரிந்த வரையில் அதிலும் அவ்வாறு குறிப்பிடப் படவில்லை . மேலும் ரிஷ்யசிருங்கரின் மனைவியான சாந்தை என்பவள் அங்க தேச மன்னன் ஆன ரோமபாதனின் மகள் ஆக இருக்கச் சிலர் அவளை தசரதனின் மகள் என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர் . அதுவும் தவறு . இனி நாளை , தேவருலகில் என்ன நடந்தது என்றும் பார்க்கலாம் , நாளை ஸ்ரீராமர் பிறக்கப் போகின்றார் . காத்திருங்கள் . 5 கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 5 ரிஷ்யசிருங்கரால் புத்ரகாமேஷ்டி யாகம் நடந்து கொண்டிருந்த வேளையில் தேவர்களும் , சித்தர்களும் , முனிவர்களும் , ரிஷிகளும் பிரம்மாவை அணுகி , “ உங்களால் ஆசீர்வதிக்கப் பட்ட ராவணன் என்னும் ராட்சசனின் தொல்லைகள் தாங்க முடியவில்லை . யாராலும் அவனை வெல்ல முடியாத வரம் வேறே பெற்றிருக்கின்றான் . அவனைக் கண்டால் சூரியனும் மேகங்களுக்கிடையில் மறைந்து கொள்கின்றான் . வருணனும் தன் பொழிவை மட்டுப் படுத்திக் கொள்கின்றான் . வாயுவும் அடக்கியே வீசுகின்றான் . சமுத்திர ராஜன் ஆன அலைகடலும் தன் அலைகளை அடக்கியே வைத்துக் கொள்ள வேண்டி உள்ளது . இதற்கு என்ன வழி ?” எனக் கேட்கின்றார்கள் . பிரம்மாவும் , “ ஆம் , நாம் இதனை அறிவோம் , இந்த ராவணன் , தன் மமதையால் தேவர்கள் , யக்ஷர்கள் , அசுரர்கள் , ராக்ஷசர்கள் எனக் கேட்டுக் கொண்டானே ஒழிய , மனிதர்களைத் தூசி மாத்திரம் நினைத்து அவர்களை அலட்சியம் செய்து விட்டான் . ஆகவே அவன் பிறப்பு மனிதப் பிறவியாலேயே ஏற்படவேண்டும் . இதற்கு ஸ்ரீமந்நாராயணனே அருள் புரிய வேண்டும் !” என்று சொல்ல , அப்போது முனிவர்களும் , தேவர்களும் நாராயணனைத் துதிக்க , அவரும் அவர்களின் வேண்டுகோளை ஏற்றுத் தான் மானுடனாய்த் தோன்றி , ராவணனை வதம் செய்வதாய் உறுதி அளிக்கின்றார் . தன்னுடைய அம்சத்தை நான்கு பாகங்களாய்ப் பிரித்துக் கொண்டு , அப்போது புத்ர காமேஷ்டி யாகம் செய்யும் தசரதனுக்கு மகன்களாய்ப் பிறக்கத் தீர்மானித்துக் கொண்டார் மகாவிஷ்ணு . உடனேயே பிரம்மாவும் தேவர்களுக்கும் , யட்சர்களுக்கும் மானுடனாய்ப் பிறந்து ராவண வதம் செய்யப் போகும் விஷ்ணுவுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுக்க , மாயவித்தைகள் அறிந்தவர்களாயும் , வீரம் செறிந்தவர்களாயும் , தர்மமும் , நீதியும் அறிந்தவர்களாயும் , அறிவாளிகளாகவும் , வானர உருவம் படைத்தவர்களாயும் உள்ள பல சந்ததிகளை அவர்கள் உருவாக்கினார்கள் . இந்திரன் தன் சக்தியால் வாலியை உருவாக்க , சூரியனால் சுக்ரீவன் உருவாக்கப் பட்டான் . பிரம்மாவோ ஏற்கெனவேயே ஜாம்பவானைப் படைத்திருந்தார் . நளனை விஸ்வகர்மா படைக்க , ராமதூதனாகவும் , அன்றும் , இன்றும் , என்றும் ராமசேவையில் ஈடுபட்டிருப்பவனாகவும் , எங்கெல்லாம் ராம கதை சொல்லப் படுகிறதோ , அங்கெல்லாம் மானசீகமாய் அந்தக் கதையைக் கேட்டு உருகவேண்டும் என்பதற்காகவே , தனக்கு அளிக்கப் பட்ட வைகுந்தப் பதவியைக் கூட மறுத்தவனும் ஆன அனுமனை வாயு படைத்தான் . இப்படி வானரத் தலைவர்களும் , வீரர்களும் உருவாக்கப் பட்டு வாழ ஆரம்பித்தனர் . இவர்களுக்கு வேண்டிய உருவத்தை எடுத்துக் கொள்ளும் வல்லமையும் , கடல் , மலை போன்றவற்றைத் தாண்டக் கூடிய பலமும் , மரங்களை வேரோடு பிடுங்கும் வீரமும் வாய்ந்தவர்களாக உருவாக்கப் பட்டார்கள் . இவர்களை வாலி அரசனாய் இருந்து ஆண்டு வந்தான் . இனி அயோத்தியில் என்ன நடந்தது ? உரிய காலத்தில் அரசியர் மூவருக்கும் குழந்தைகள் பிறந்தன . சித்திரை மாதம் , சுக்கிலபட்ச நவமி திதியில் , புனர்வஸு நட்சத்திரத்தில் ஐந்து கிரகங்கள் உச்ச நிலையில் இருந்த சமயம் ஸ்ரீராமர் , கோசலைக்கும் , புஷ்ய நட்சத்திரத்தில் கைகேயிக்கு பரதனும் , ஆயில்ய நட்சத்திரத்தில் சுமித்திரைக்கு லட்சுமணனும் , சத்ருக்கனனும் பிறந்தனர் . நாடே கோலாகலத்தில் ஆழ்ந்தது . தேவர்கள் கோலாகலத்தில் ஆழ்ந்தார்கள் . யக்ஷர்களும் , கின்னரர்களும் பூமாரி பொழிந்தனர் . கந்தர்வர்கள் தன் இனிமையான குரலினால் இனிமையான கீதம் இசைத்தார்கள் . குலகுருவான வசிஷ்டர் , கெளசலையின் மகனுக்கு ராமன் , என்றும் , கைகேயியின் மகனுக்கு பரதன் எனவும் , சுமித்திரையின் மகன்களுக்கு முறையே லட்சுமணன் , சத்ருக்கனன் என்றும் பெயரிட்டார் . குழந்தைகள் பிறந்து வளர்ந்து வருகின்றன . சகல வித்தைகளையும் கற்றுக் கொண்டு வளர்ந்தார்கள் அரசகுமாரர்கள் நால்வரும் . முறையாக அனைத்துச் சடங்குகளும் செய்விக்கப் பட்டு , அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி பெற்ற அரசகுமாரர்களுக்குத் திருமணப் பருவம் வந்து விட்டதை உணர்ந்த மன்னன் , தன் மந்திரி , பிரதானிகளிடம் அது பற்றி ஆலோசிக்க ஆரம்பித்தான் . அப்போது அரசவைக்கு வருகை தந்தார் விசுவாமித்திர முனிவர் . ஸ்ரீராமரின் இந்தக் குழந்தைப் பருவத்தை அருணகிரிநாதர் தமது வருகைப் பருவப் பாடல்களில் பத்து முறை வருக என அழைத்துப் பாடி இருப்பதாய்க் கேள்விப் படுகிறோம் . பிள்ளைப் பருவங்கள் பத்து என்று வைத்துப் பிள்ளைத் தமிழ் பாடுவதுண்டு , அந்தக் கணக்கிலேயும் , திருமாலின் அவதாரங்கள் பத்தையும் கணக்கில் கொண்டும் இவ்வாறு பாடி இருக்கலாம் என்று ஆன்றோர் வாக்கு . அருணகிரிநாதரின் கூற்றுப் படி சூரியன் - சுக்ரீவன் , இந்திரன் - வாலி , அக்னி - நீலன் , ருத்திரன் - அனுமன் , என்பதோடு மட்டுமன்றி , பிரம்மா தான் ஜாம்பவான் என்றும் சொல்கின்றார் . சிவ அம்சமாகவே அனுமன் தோன்றியதாய்த் தம் திருப்புகழிலும் சொல்லி இருக்கிறதாயும் கேள்விப் பட்டிருக்கிறேன் . இந்த வானரர்கள் பற்றி அனைவருக்குமே எழும் சில சாதாரண சந்தேகங்கள் இந்த ராமாயணத்தை எழுதியவருக்கும் ஏற்பட்டிருக்கின்றது . அவர் கண்ட தீர்வு இது தான் : இந்தக் கதை நடந்த காலத்தில் இந்தப் பிரபஞ்சத்தில் கடவுளர் , வானவர் , அசுரர்கள் , ராட்சசர்கள் அவர்கள் பெற்ற வரங்கள் , செய்த தவங்கள் , சாபங்கள் , மந்திர , தந்திரப் பிரயோகங்கள் , அவற்றினால் ஏற்பட்ட நல் விளைவுகள் மட்டுமின்றி துர் விளைவுகள் , பறக்கும் ரதங்கள் , சக்தி வாய்ந்த ரிஷி முனிவர்கள் , அதிசயமான வடிவம் கொண்ட பேசும் மிருகங்கள் , பேசும் பறவைகள் , வீரம் செறிந்த மனிதனைப் போல் பேசும் , வாழ்க்கை நடத்தும் குரங்குகள் , இவற்றுக்கு நடுவில் ஒரு ஒழுக்கம் செறிந்த , சற்றும் கண்ணியம் தவறாத , அரச நீதியை மீறாத சொன்ன சொல் தவறாத ஒரு மனிதனின் வாழ்க்கைப் போராட்டமாகக் காணுகின்றார் . கடைசி வரையிலும் தான் ஒரு அவதார புருஷன் என்பது தெரிந்து கொள்ளாத ஒரு சாதாரண மனிதனாகவே ராமன் வால்மீகியால் படைக்கப் பட்டிருக்கின்றான் . அதனாலேயே பின்னர் வரும் சில தவறுகளுக்கும் அவன் காரணம் ஆகின்றான் . ஒரு தேவதைக் கதையில் உள்ள அனைத்துச் சம்பவங்களுக்கும் இதில் குறை இல்லை . அதே சமயம் மனிதன் எவ்வாறு வாழவேண்டும் என்று உணர்த்தவும் செய்கின்றது . முழுக்க முழுக்க வால்மீகி ராமாயணத்தையே எழுதப் போவதாய் இருந்தாலும் சில சமயங்களில் வேறு ராமாயணங்களும் குறிப்பிடப் படும் .   6 கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 6 டாக்டர் சங்கர்குமார் அவர்களால் அளிக்கப்பட்ட அருணகிரிநாதரின் வருகைத் திருப்புகழ் : பத்து விதமாக ராமனை கோசலை அழைத்ததை அருணையார் விளக்கிப் பாடிய பாடல் ! ஸ்ரீராமனுக்கு ஒரு அணில் செய்த மாதிரியான உதவின்னு நினைச்சுக்கங்க என்று சொல்லி அளித்துள்ளார் . அவருக்கு நம் நன்றி . அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் .. “ தொந்தி சரிய “ “ ஆவி பிரியுங்கால் மயில் மீது வந்து எனையாள் !” தந்த தனன தனனா தனனதன தந்த தனன தனனா தனனதன தந்த தனன தனனா தனனதன – தனதான தொந்திசரிய மயிரே வெளிற நிரை தந்தமசைய முதுகே வளைய இதழ் தொங்கவொருகை தடிமேல்வர மகளிர் – நகையாடி தொண்டுகிழவ னிவனாரென இருமல் கிண்கிணெனமு னுரையே குழறவிழி துஞ்சுகுருடு படவே செவிடுபடு – செவியாகி வந்தபிணியு மதிலே மிடையுமொரு பண்டிதனுமெ யுறுவே தனையுமிள மைந்தருடைமை கடனே தெனமுடுகு – துயர்மேவி மங்கை யழுது விழவே யமபடர்கள் நின்றிசருவ மலமே யொழுகவுயிர் மங்குபொழுது கடிதே மயிலின்மிசை – வரவேணும் எந்தைவருக ரகுநா யகவருக மைந்தவருக மகனே யினிவருக என் கண்வருக எனதா ருயிர்வருக – அபிராம இங்குவருக அரசே வருகமுலை யுண்கவருக மலர்சூ டிடவருக என்றுபரிவி னொடுகோ சலைபுகல – வருமாயன் சிந்தைமகிழு மருகா குறவரிள வஞ்சிமருவு மழகா அமரர்சிறை சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய – அதிதீரா திங்களரவு நதிசூ டியபரமர் தந்தகுமர அலையே கரைபொருத செந்தி னகரி லினிதே மருவிவளர் – பெருமாளே . சைவம் , வைணவம் இவற்றில் பேதம் ஒன்றுமில்லை எனப் பகரும் அற்புதக் கவிதை இது ! ……….. பொருள் …………….. [ வழக்கம் போல் பின் பார்த்து முன் பார்க்கலாம் !] “ எந்தை வருக ரகுநாயக வருக மைந்த வருக மகனே இனி வருக என்கண் வருக எனது ஆருயிர் வருக அபிராம இங்கு வருக அரசே வருக முலைஉண்க வருக மலர் சூடிட வருக என்று பரிவினோடு கோசலை புகல வருமாயன்சிந்தை மகிழு மருகா “ பலவாறு தவம் செய்துவேண்டியதின் விளைவாய் மன்னு புகழ் கோசலை தன்மணிவயிறு வாய்த்த ரகுகுலம் தழைக்க வந்த எந்தையே வருக !’ மைந்த வருக ‘ வென அழைத்ததற்கோர் காரணமும் இங்குண்டு ! தனக்குரிய வயது வந்தும் தன் கையை நம்பாமல் தந்தையின் வருவாய் அறியாமலும் , அவர் அணைப்பில் இருக்கிறவன் ‘ பாலன் ‘. வயதான தந்தையங்கு வருவாயைக் கொண்டுவர , தானதற்கு உதவிடாமல்தான் தோன்றியாய் இருப்பவன் ‘ பிள்ளை ‘. தந்தைக்கே ஞானம் உரைக்கும் அறிவு பெற்றவன் ‘ குமாரன் ‘. தந்தை தாயின் நலம் பேணி அவர்க்குக் கருமம் செய்தங்கே நற்கதிக்கு அனுப்புபவன் ‘ புத்திரன் ‘. இருக்கும் காலத்தில் பெற்றவர் நலம் பேணி நற்செயல்கள் புரிபவன் ‘ புதல்வன் ‘. தன் குடும்ப நலன் பேணி தந்தையவன் கடனேற்று ஆலமரம் போல் காப்பவனே ‘ மகன் ‘. தன் குடும்பம் , தன் தாய் தந்தையர் குடும்பம் குருவின் குடும்பம் மற்றும் தம் நண்பரின் குடும்பம் இவையனைத்தும் தன் குடும்பம் போல் காப்பவனோ ‘ மைந்தன் ‘! இராமனோ தன் குடும்பம் மட்டுமின்றி குகன் , சுக்ரீவன் , விபீடணன் குடும்பமனைத்தையும் காத்திடுவான் நாளை என அறிந்து ‘ மைந்த வருக ‘ வென வழைத்து , பின் , தன் குடும்ப மானமும் காப்பவனும் இவனெனத் தெளிந்து ‘ இனி மகனே வருக ‘ வெனவும் அழைத்திட்டாள் மாதரசி கோசலை ! எனது கண்ணின் மணியே வருவாய் ! என் ஆருயிர்க்கு நிகரானவனே வருவாய் ! அழகிற் சிறந்தவனே வருவாய் ! இம்மாநிலத்தின் அரசனே வருவாய் ! தான் அந்தக் குண நலன்கள் தன்னங்கே கொண்டதனால் , தாயின் முலைப்பாலைக் குடிக்கின்ற அவனுக்கும் அந்நலங்கள் வரட்டுமென ‘ முலையுண்க வருக ‘ வெனவும் அழைக்கின்றாள் ! மணக்கும் இந்த நறுமலரைச் சூடிடவே வருவாய் ! என அன்னையாம் கோசலையும் மகிழ்ந்து கொண்டாடிமனம் குளிர அழைக்கின்ற மாயவனாம் இராமனெனும் அவதாரமாய் வந்த அந்த நாராயணனும் , தானங்கு மாயத்தால் கோசலையின் அன்பிற்குக் கட்டுண்டு கிடந்த நிலை போலே இங்கிந்த சரவணனும் கார்த்திகைப் பெண்டிர் அழைத்திடவே அறுமுலையுண்ணும் காட்சியினைக் கண்டே மனம் மகிழும் படி திருவிளையாடும் முருகா ! “ குறவர் இளவஞ்சி மருவும் அழகா “ அழகன் இவனே எனத் தெளிந்து உனை அணைக்க வருகின்ற குறவள்ளியின் மணாளனே ! “ அமரர் சிறை சிந்த , அசுரர் கிளை வேரொடு மடிய அதிதீரா “ பல யுகமாய் சிறையில் உழன்று நெடுந்துயர் அடைந்திட்டதேவரெனும் நற்குணங்கள் அசதி , சோம்பல் எனும் தாமச குணம் என்னும் அசுரரால் வருந்தி நிற்க அயர்வை அகற்றி , நல்லுணர்வை அளிக்க , அசுரரை வாட்டி , தேவரை சிறை மீட்டபெருவீரம் படைத்த முருகா ! “ திங்கள் அரவு நதி சூடிய பரமர் தந்த குமர “ நீயே சரணமெனத் தனை நாடி வந்த சந்திரனையும் , உனைக் கொல்வேன் எனச் சபதம் செய்து ஓடி வந்த பாம்பினையும் , ஒரு சேர அன்பு கொண்டு அபயமளித்து , பாய்ந்து வந்த கங்கையின் சீற்றமடக்கிக் கருணையினால் , தன் தலையில் இன்பமுடன் சூடிக்கொண்ட சிவனாரின் திருக்குமரா ! “ அலையே கரை பொருத செந்தில் நகரில் இனிதே மருவி வளர் பெருமாளே “ பல்வகையாம் எண்ணமெனும் பெருஅலைகள் ஓடிவந்து தன்னடியில் கலந்தங்கே தாம் அமைதி எய்துமாறு செந்திலம்பதியினிலே உறைகின்ற பெரிய கடவுளே ! “ தொந்தி சரிய , மயிரே வெளிற , நிரை தந்தம் அசைய , முதுகே வளைய , இதழ் தொங்க , ஒரு கை தடி மேல் வர மகளிர் நகையாடி தொண்டு கிழவன் இவன் ஆர் என “ என் வயது ஏறிடும் காலத்தே வயிறங்கே பெருத்து முன்னே தொந்தியெனச் சரியவும் , கருநிறமாய் நான் காத்த முடியங்கு வெளுத்துப் போய் நரைமுடியாய் ஆகிடவும் , உறுதியாய் நான் தேய்த்து நிதம் வளர்த்த பற்களும் அங்கங்கே அசைந்திடவும் , வீரமாய் நிமிர்ந்தங்கு காட்டிய முதுகும் பல்லக்கு போலின்று வளைந்திடவும் , பவழம் போல் விரிந்திருந்த உதடதுவும் தொங்கிடவும் , இருகரம் வீசி நடந்த நான் இன்று ஒருகரத்தில் தடி ஒன்றை ஊன்றி நடக்கவே நேர்ந்திடவும் , அதைக்கண்டு இளவயது மங்கையரெலாம் ‘ யார் இந்தத்தொண்டு கிழவன் இங்கே ‘ என நகைத்திடவும் , “ இருமல் கிண்கிணென முன் உரையே குழற விழி துஞ்சு குருடு படவே செவிடுபடு செவியாகி வந்த பிணியும் அதிலே மிடையும் ஒரு பண்டிதனும் மெய் உறு வேதனையும் ” இருமல் எனும் கொடும்பாவி ‘ கிண் கிண் ‘ எனஓசையுடன் வெளிக்கிளம்பி , இதுகாறும் திருத்தமாய்ப் பேசிய பேச்சுகளும் குழறிப்போய் , ஒளியுடன் விளங்கிய கண்பார்வை இன்று தூங்குதல் போலே மங்கிடவும் , துல்லியமாய் இதுவரையில் கேட்டுவந்த காதுகளும்இன்று பஞ்சடைத்து செவிடாகவும் , மிடுக்கென வாழ்ந்த தேகம் இன்று நொடிக்கொரு நோயென ஆட்பட்டு , அதனாலதை அகற்றவே ஒரு வைத்தியனும் நிதம் எந்தன் வீடு தேடி வந்திடலும் , நோயின் துயரால் என் மேனி வாடுதலும் , “ இள மைந்தர் உடைமை கடன் ஏதென , முடுகு – துயர்மேவி , மங்கை அழுது விழவே , யமபடர்கள் நின்று சருவ , மலமே யொழுக , உயிர் மங்குபொழுது , கடிதே மயிலின் மிசை வரவேணும் .” என்னுயிர் போதல் நிச்சயமெனத் தெளிந்து , தன் தந்தை ‘ இன்னுமென்ன கடன் விட்டுச் செல்கிறானோ ‘ என என் இளவயது மக்களும் கணக்கிட்டு நின்றிடவும் , வாய் பேச வழியின்றி , இதனை நான் கேட்டே மனது துயர் பெருகி மயங்கிடவும் , என் மனையாள் ஓவெனக் கதறி என்மீது விழுந்து அழுதிடவும் , எமதூதர் வந்தங்கு என்னுயிர் பற்றிடவே எதிர்பார்ப்பாய் வந்திடவும் , என் மலம் அங்கு நீர் போல் ஒழுகிடவும் , என் உயிர் சற்றே எனை விட்டுப் போகின்ற நேரமதில் முருகா நீ அழகான மயில் மீதேறி எனை வந்து காத்திட வேண்டுகிறேன் ! அருஞ்சொற்பொருள் : தந்தம் = பல் துஞ்சு = தூங்குதல் மிடையும் = நெருங்கும் முடுகு = இதனால் ஆகிய கடிதே = விரைவாக அபிராம = அழகிற் சிறந்தவன் வேலும் மயிலும் துணை ! முருகனருள் முன்னிற்கும் ! அருணகிரிநாதர் தாள் வாழ்க ! டாக்டர் சங்கர் குமாருக்கு என் மனமார்ந்த நன்றிகள் . 7 கதை கதையாம் காரணமாம் ராமாயணம் - பகுதி 7 தசரத மன்னனின் சபை . மன்னனின் மந்திரி பிரதானிகள் வீற்றிருக்கின்றனர் . அரச குமாரர்களின் திருமணம் பற்றியப் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளை . அப்போது வாயிலில் வந்தார் விசுவாமித்திர முனிவர் . இவரும் ஒரு அரசனாக வாழ்ந்து விட்டுப் பின்னர் முனிவராக மாறியவரே . வசிஷ்டருடன் ஏற்பட்ட சொந்தப் பகையால் தாமும் ஒரு ரிஷியாக மாற உத்தேசித்துக் கடுந்தவங்கள் செய்து பின்னர் முதலில் ராஜரிஷி , பின்னர் பிரம்ம ரிஷி என்ற பதவியை அடைந்தவர் . அவர் வாயிலில் காத்திருக்கும் செய்தி கேட்ட தசரத மன்னன் உடனேயே வாயிலுக்குச் சென்று அவரை எதிர்கொண்டு அழைத்து வந்தான் . மன்னனிடம் விசுவாமித்திரர் ஏதோ கேட்க வந்திருப்பதை உணர்ந்த தசரதன் அவர் கேட்பதை உடனே தருவதாயும் வாக்களிக்கின்றான் . முனிவர் தாம் யாகம் செய்வதாகவும் அதற்கு இடையூறாக மாரீசன் , சுபாஹூ என்னும் இரு ராட்சதர்கள் பெரும் இடையூறு செய்வதாயும் , மாமிசத்தையும் , ரத்தத்தையும் யாககுண்டத்தில் போடுவதாயும் , அவர்களைச் சபிப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை , ஆனால் அதனால் நான் செய்ய முனைந்திருக்கும் யாகத்தின் பலன் கிட்டாது . கோபம் சிறிதும் காட்டாமல் செய்யவேண்டிய யாகம் அது . ஆகவே உன்னுடைய மூத்த மகன் ஆன ராமனை என்னோடு அனுப்பி வைப்பாயாக , அவன் வந்து என் துயரத்தைத் தீர்ப்பான் என்று மிகுந்த நம்பிக்கையுடனேயே சொல்கின்றார் . மன்னன் மனம் குலைந்து போக , அவன் துயரத்தைக் கண்ட முனிவர் , “ மன்னா , இதனால் உன் மகனுக்குத் தீங்கு நேராது என உறுதி அளிக்கின்றேன் . மூவுலகும் போற்றும்படியான புகழை அவன் அடைவான் . அந்த ராட்சதர்களுக்கு ராமன் கையில் தான் மரணம் என்பது உறுதி . அவன் ஒரு மாமனிதன் என்பதை அறிவாயாக ! வசிஷ்டரும் இதனை அறிவார் . பிரிவினால் கலங்காதே ! ஜெயம் உண்டாகட்டும் !” என்று கூறியும் மன அமைதி அடையாத மன்னன் தன்னால் ராமனைப் பிரிந்து ஒரு கணம் கூட இருக்க முடியாது , என்று கதறுகின்றான் . அப்படிப் பட்ட கொடிய ராட்சதர்கள் யார் எனக் கேட்கும் மன்னனிடம் விசுவாமித்திரர் , புலஸ்திய ரிஷியின் வம்சத்தில் உதித்தவன் ராவணன் என்னும் ராட்சசன் , இலங்கையை தன் சகோதரன் ஆகிய குபேரனிடமிருந்து பிடுங்கிக் கொண்டு ஆண்டு வருவதோடு தன் தவ வலிமையாலும் , தேக வலிமையாலும் அனைவருக்கும் துன்பங்கள் கொடுக்கின்றான் . ரிஷி , முனிவர்களின் தவத்துக்கு இடையூறு விளைவிப்பதே அவனுக்குத் தொழில் . நேரடியாக முடியாத நேரங்களில் அவனால் ஏவப்படும் இந்த மாரீசனும் சுபாஹூவும் வேலையைச் செய்து முடிப்பார்கள் . இருவரும் மிக்க வலிமை பொருந்தியதோடு அல்லாமல் வேண்டிய உருவையும் எடுப்பவர்கள் எனச் சொல்கின்றார் . “ என்ன , ராவணனா ? என்னால் கூட ஜெயிக்க முடியாதவனாயிற்றே ? அவனை எதிர்த்து நிற்கும் சக்தி எனக்கே இல்லை , அப்படி இருக்க சிறுவனாகிய ராமனால் என்ன செய்ய முடியும் ? அவனை விட்டு விடுங்கள் !” என்று கெஞ்சுகின்றான் . முனிவர் கோபம் கொண்டு சொன்ன சொல்லை மீறும் உனக்கு இதனால் திருப்தி ஆனால் சரி , நான் செல்கின்றேன் , எனக் கோபத்துடன் திரும்ப ஆரம்பிக்கவே அண்டசராசரமும் அவர் கோபத்தால் நடுங்கியது . வசிஷ்டர் மன்னனுக்கு அறிவுரைகள் சொல்லி மனதை மாற்றி , ராம , லக்ஷ்மணரை விசுவாமித்திரருடன் அனுப்பி வைக்கின்றார் . அனைவராலும் ஆசீர்வதிக்கப் பட்டு வசிஷ்டரால் காப்பு மந்திரங்கள் ஓதப்பட்டு விசுவாமித்திரருடன் காட்டுக்குச் செல்லும் ராமனை லட்சுமணனும் பின் தொடருகின்றான் . லட்சுமணனை விசுவாமித்திரர் கூப்பிடவில்லை எனினும் , வால்மீகி சொல்வது லட்சுமணனுடன் சேர்ந்து ராமன் செல்கின்றான் என்பதே ! இருவரும் விசுவாமித்திரரைப் பின் தொடர்ந்து செல்வதை வால்மீகி ஈசனைப் பின் தொடரும் கந்தன் போலவும் , பிரம்மனைப் பின் தொடரும் அஸ்வினி தேவர்கள் போலவும் என வர்ணிக்கின்றார் . சரயூ நதியின் தென்கரைக்கு வந்த விசுவாமித்திரர் ராமருக்குத் தன் தவத்தினால் பெறப்பட்ட பசி , தாகத்தைப் போக்கும் மந்திரங்கள் ஆன “ பலை , அதிபலை ” போன்றவற்றை உபதேசிக்கின்றார் . பின்னர் காலை எழுந்திருக்கும் ராமனை “ கெளசல்யா சுப்ரஜா ராமா ! பூர்வாஸந்த்யா ப்ரவர்த்ததே !” என்று ஆரம்பிக்கும் ஸ்லோகத்தால் எழுப்புகின்றார் . ( தற்சமயம் வேங்கடேச சுப்ரபாதத்தின் முதல் ஸ்லோகமாக இது விளங்குகின்றது ) பின்னர் அங்கிருந்து கிளம்பி ஸரயு நதியும் , த்ரிபதகை நதியும் கலக்கும் இடத்தில் அமைந்திருந்த விசுவாமித்திரரின் ஆசிரமத்துக்குச் சென்று மற்ற முனிவர்களைச் சந்திக்கின்றார்கள் . ஆசி பெற்றுக் கொள்கின்றனர் . முனிவர்களுக்கு இரு அரசகுமாரர்களும் தாங்கள் செய்யவேண்டிய முறையான மரியாதைகளையும் செய்கின்றனர் . பின்னர் மறுநாள் காலை , தாடகை என்னும் அரக்கி வசிக்கும் காட்டிற்குக் கூட்டிச் செல்கின்றார் . சுந்தன் என்னும் ராட்சசனைக் கணவனாய்க் கொண்ட இவள் மகனே மாரீசன் என்றும் , இந்த வனம் செழிப்போடும் வளத்தோடும் இருந்து வந்ததாயும் இப்போது அதைத் தாடகியும் அவள் மக்களும் நாசம் செய்வதாயும் சொன்னார் . இவள் பூர்வாசிரமத்தில் யக்ஷப் பெண்ணாகவே இருந்ததாயும் அகஸ்தியரின் சாபத்தால் ராட்சசியாக மாறியதாகவும் தெரிவிக்கின்றார் . அந்தத் தாடகையை ஒரு பெண் என்று தயங்காமல் வதம் செய்யவேண்டும் எனவும் சொல்கின்றார் . தாடகை வருவதைக் கம்பர் எப்படி வர்ணிக்கின்றார் என்று பார்த்தோமானல் அவளைப் பற்றிப் புரியும் . “ சிலம்புகள் சிலம்பிடை செறித்த கழலோடும் நிலம் புக மிதித்தனள் நெளித்த குழிவேலைச் சலம் புக அனல் தறுகண் அந்தகனும் அஞ்சிப் பிலம் புக நிலக்கிரிகள் பின் தொடர வந்தாள் ” ( கம்பராமாயணம் பால காண்டம் 369- ம் பாடல் ) “ இறைக்கடை துடித்த புருவத்தள் எயிறு என்னும் பிறைக்கடை பிறக்கிட மடித்த பில வாயள் மறைக்கடை அரக்கி வடவைக் கனல் இரண்டு ஆய் நிறைக்கடல் முளைத்தென நெருப்பு எழ விழித்தாள் “( கம்ப ராமாயணம் பால காண்டம் 370- ம் பாடல் ) மலைகளை உள்ளே இருக்கும் பரல்களால் ஆன சிலம்புகளை அணிந்த கால்களினால் பூமியை அதிரும்படியாய் மிதித்துக் கொண்டு , அதனால் பூமியில் ஏற்படும் குழிகளில் நீர் பாயவும் , எமனும் நடுங்கும்படியாகவும் , எதற்கும் அசையாதிருக்கும் மலைகளும் , அவள் வரும் வேகத்தால் இடம் பெயரும்படியாகவும் அங்கு வருகின்றாளாம் தாடகை . மேலும் நல்வழிகள் பற்றிய சிந்தனைகளே அற்றவளாயும் , கோபத்தால் துடிக்கின்ற புருவங்களுடனும் , இரு கோரப் பற்கள் வாயில் வெளியே பிறைச் சந்திரர் போல் தெரிகின்றதாயும் , வாயைத் திறந்தால் எங்கே போய் முடியும் எனத் தெரியாத சுரங்கம் போலவும் , கடலில் தோன்றித் தெரியும் வடவாமுகாக்கினி போன்ற நெருப்பு விழிகளையும் கொண்டு வருகின்றாளாம் தாடகை . இப்படிப் பட்ட தாடகையைத் தான் மிக்க தயக்கத்துடனேயே ராமர் தன் பாணங்களால் அவளுடன் பெருத்த யுத்தம் செய்த பின்னர் ஒரே பாணத்தினால் வதம் செய்தார் . பின்னர் விசுவாமித்திரரும் தன் யாகத்தை முறைப்படி ஆரம்பிக்கும் விரதம் மேற்கொண்டார் . மன்னனும் பெரும் வீரனும் ஆன தசரதன் பல நற்குணங்கள் பெற்றிருந்தும் அவன் ஆசை , பாசம் , காதல் , கோபம் , காமம் , அதனால் விளையும் துக்கம் போன்றவை நிரம்பியவனாகவே காணப்படுகின்றான் . தன் மூத்த மகனை அவன் பிரிய மறுத்ததுக்கும் , விசுவாமித்திரருடன் அனுப்ப மறுத்ததுக்கும் காரணம் உண்டு . இளைஞனாய் இருந்த காலத்தில் தசரதன் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த சமயம் மாலை நேரமாகி விடுகின்றது . அப்போது இருட்டில் ஒரு நீர்த்துறைக்கு அருகே காட்டு மிருகம் என நினைத்துக் குறி தவறாமல் அம்பெய்யும் தன் திறமையால் அம்பெய்ய , அம்பு பட்டதோ ஒரு மனிதன் மீது . பதறிப்போன தசரதன் அங்கேபோய்ப் பார்க்க அம்பினால் வீழ்ந்து கிடப்பதோ ஒரு முனிகுமாரன் . “ ஸ்ரவணகுமாரன் “ என்னும் பெயர் உள்ள அந்தப் பையன் , கண் தெரியாத , வயதான தன் பெற்றோர்களைக் காப்பாற்றி வந்தான் . அவர்களின் தாகம் தீர்க்கவே தண்ணீர்த் துறைக்கு அவ்வேளையில் நீர் எடுக்க வந்ததாயும் , தசரதனின் அம்பால் வீழ்ந்து விட்டதையும் தெரிவித்துத் தன் பெற்றோர் தாகத்துடன் இருப்பார்கள் எனவும் போய் அவர்களின் தாகத்தைத் தீர்த்து விடு எனவும் சொல்லிவிட்டு இறக்கின்றான் . அவன் பெற்றோர்களை மிகுந்த தயக்கத்துடனும் , பயத்துடனும் சென்று சந்திக்கும் தசரதனைத் தன் மகன் இல்லை எனவும் , தன் மகனைக் கொன்றவன் அவனே எனவும் அறிந்து கொள்ளும் அந்தத் தம்பதிகள் தசரதனும் அவ்வாறே புத்ர சோகத்தால் இறக்கவேண்டும் எனச் சாபம் கொடுத்துவிட்டு இறந்து விடுகின்றனர் . அதை நினைத்தே இப்போது விசுவாமித்திரரிடம் தன் மகனை அனுப்பத் தசரதன் தயங்கினாலும் , பின்னால் ஒரு நாள் அது நடந்தே தீருகின்றது . இது தான் விதி , என்றும் காரண காரியம் இல்லாமல் எதுவும் நடக்காது என்பதையும் புரிய வைக்கின்றது . ஏற்கெனவே தீர்மானிக்கப் பட்ட ஒன்று , அதனதன் காலத்தில் சற்றும் வழுவாமல் அப்படியே நடக்கின்றது . அதற்குச் சாட்சி அந்தக் காலம் என்ற ஒன்றே ஆகும் . 8 கதை கதையாம் காரணமாம் - இராமாயணம் -பகுதி 8 பஞ்ச இந்திரியங்களையும் அடக்கிக் கொண்டு யாகத்துக்குத் தயாரானார் விசுவாமித்திரர் . அப்போது ராம , லட்சுமணர்களை விசுவாமித்திரரின் சீடர்கள் அழைத்துத் தங்கள் குருவின் கட்டளையைச் சொன்னார்கள் . இன்று முதல் குருவானவர் மெளன விரதம் அனுஷ்டிப்பதால் , நீங்கள் இருவரும் இன்று முதல் ஆறு இரவுகள் எச்சரிக்கையாக இருந்து இந்த யாகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருப்பதாய்ச் சொன்னார்கள் . அது போலவே ராம , லட்சுமணர்கள் விழித்திருந்து இரவு , பகலாக யாகத்தைப் பாதுகாத்துக் கொண்டு எச்சரிக்கையுடன் இருந்தார்கள் . அப்போது ஆறாம் நாள் வேள்வித் தீ கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த வேளையில் இடி போன்ற சப்தத்துடன் சுபாஹூவும் , மாரீசனும் யாகத்தைத் தடுக்க மழை போல ரத்தத்தைப் பொழிந்தனர் . கோபம் கொண்ட ராமர் தன் மானவ அஸ்திரத்தை மாரீசன் மேல் ஏவ அந்த அஸ்திரம் அவனைக் கொல்லாமல் வெகு தூரத்துக்கு அப்பால் கொண்டு போய்த் தள்ளியது . பின்னர் ஆக்னேய அஸ்திரத்தை சுபாஹுவின் மேல் ஏவ அது அவனைக் கீழே தள்ளி மாய்த்தது . இவ்விதம் மாரீசனுக்கும் , சுபாஹுவிற்கும் உதவியாக வந்த ராட்சதர்களும் , இவ்விரு இளைஞர்களாலும் கொல்லப் பட்டனர் . வேள்வியும் சுபமாக முடிந்தது . இரு இளைஞர்களையும் விசுவாமித்திரர் மட்டுமில்லாமல் , வந்திருந்த அனைத்து ரிஷி , முனிவர்களும் பாராட்டினார்கள் . மேலும் அந்த ரிஷி , முனிவர்கள் விசுவாமித்திரரிடம் அவர்கள் அனைவரும் அப்போது மிதிலை நகரத்து மன்னனாகிய ஜனக மஹாராஜன் நடத்தப் போகும் யாகத்துக்குச் செல்லப் போவதாய்த் தெரிவித்து விட்டு விசுவாமித்திரரையும் அதற்கு அழைத்தனர் . மேலும் அவர்கள் சொன்னதாவது , ஜனகர் வசம் ஒரு அற்புதமான தனுசு இருக்கிறதென்றும் , அதை யாராலும் எடுத்து நாணேற்ற முடியவில்லை என்றும் , அந்த வில்லில் நாணேற்ற தேவர்கள் , கந்தர்வர்கள் , யக்ஷர்கள் என அனைவரும் முயன்றும் ஒருவராலும் முடியவில்லை எனவும் , ராமனை அழைத்து வந்தால் அந்த வில்லையும் , கூடவே ஜனகரின் யாகத்திலும் பங்கேற்கலாம் என அழைக்கின்றனர் . விசுவாமித்திரரும் சம்மதிக்கவே அனைவரும் மிதிலை நோக்கிப் பிரயாணப் படுகின்றார்கள் . செல்லும் வழியில் விசுவாமித்திரன் தன்னுடைய வம்சத்தின் கதையையும் , ஸ்கந்தன் என்னும் கார்த்திகேயன் எவ்வாறு சிவ , பார்வதியின் மகனாய்ப் பிறந்தான் என்பதையும் ராம , லட்சுமணர்களுக்குச் சொன்னார் . பின்னர் பகீரதன் பெரும்பிரயத்தனத்துடனேயே பூமிக்குக் கொண்டு வந்த கங்கையைப் பற்றியும் , பாற்கடல் அமிர்தத்துக்குக் கடையப் பட்டது பற்றியும் சொன்னார் . ( இந்த விபரங்கள் கம்பராமாயணத்தில் இல்லை .) அதன் பின்னர் அவர்கள் ஒரு அழகான ஊரான மிதிலையை அடையும் வழியில் , மிக மிக ரம்மியமாகவும் , நேர்த்தியான முறையில் அலங்கரிக்கப் பட்டதுமான ஒரு ஆசிரமத்தைக் கண்டனர் . ஆனால் அந்த ஆசிரமம் மனித நடமாட்டமே இல்லாமல் இருந்ததைக் கண்டார் ஸ்ரீராமன் . அந்த ஆசிரமம் அவ்வாறு மனித நடமாட்டமே இல்லாமல் இருப்பதற்கு என்ன காரணம் என விசுவாமித்திரரைக் கேட்கின்றார் . விசுவாமித்திரர் கடுமையானதொரு சாபம் முன்னொரு காலத்தில் விளைந்ததன் காரணமாய் இவ்விடம் இவ்வாறு உள்ளது என்று கூறிவிட்டுப் பின்னர் கெளதம மகரிஷியின் வரலாற்றைக் கூறினார் . பிரம்மா படைத்த அற்புத அழகு வாய்ந்த அகலிகையை மணக்க தேவாதி தேவர்களும் போட்டி இட்டதையும் , போட்டியில் ஜெயிக்க பிரம்மா அகலிகையை மணக்க விரும்புவோர் மும்முறை உலகைச் சுற்றி வரவேண்டும் என நிபந்தனை விதித்ததையும் , இந்திரன் அவ்வாறு செல்லும் முன்னர் , நாரதர் பிரம்மாவிடம் கெளதம ரிஷியே அகலிகை கரம் பற்றும் தகுதி வாய்ந்தவர் என எடுத்துச் சொன்னதையும் , அதற்குக் காரணம் தன் ஆசிரமத்தில் கன்று போடும் தருவாயில் இருந்த பசுமாட்டைத் தரிசனம் செய்து வலம் வந்ததையும் தெரிவித்து விட்டுப் பின்னர் அவருக்கு அகலிகையை மணமுடிக்க ஏற்பாடு செய்து திருமணமும் முடிந்து விடுகின்றது . என்றாலும் தேவேந்திரனின் ஆசை தணியவில்லை . எவ்வாறேனும் அகலிகையை அடையவேண்டும் என்பதே அவன் ஆசை . ஆசிரமத்தில் ஒரு நாள் கெளதமர் இல்லாத வேளையில் அவருடைய உருவத்தை எடுத்துக் கொண்டு வந்து , அவளை அடைய முற்பட்டான் . அகலிகை பார்த்த மாத்திரத்திலேயே இவன் தன் கணவன் அல்ல எனப் புரிந்து கொண்டாலும் தன் அழகின் மீது இருந்த கர்வத்தால் , அவனுக்கு உடன்படுகின்றாள் . வெளியே சென்றிருந்த கெளதமர் திரும்பி வருவதற்குள் அங்கிருந்து மறைய முற்பட்ட இந்திரன் முன்னர் நெற்றிக்கண்ணைத் திறந்து கொண்டு வந்த ஈசனைப் போல் தோன்றிய கெளதமர் இந்திரனுக்கும் , அகலிகைக்கும் சாபம் கொடுக்கின்றார் . இந்திரன் தன் ஆண்மையை இழக்குமாறும் , அகலிகை உண்ண உணவின்றி , காற்றையே உணவாய்க் கொண்டு , புழுதியில் புரண்டு , எவர் கண்களுக்கும் தெரியாததோர் பிறவியாகத் தூசியிலும் தூசியாக ஒரு அணுவாக இங்கேயே நெடுங்காலம் கிடந்த பின்னர் , தூயவனும் , நன்னடத்தையின் நாயகனும் ஆன ராமன் இங்கே வருவான் . அப்போது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்று சொல்லிச் செல்வார் . அந்த அகலிகைதான் இப்போது உன் பாதம் இந்த ஆசிரமத்தில் படக் காத்திருக்கின்றாள் . என்று விசுவாமித்திரர் கூறுகின்றார் . ராமனும் அந்த ஆசிரமத்தின் உள்ளே பிரவேசித்ததும் , அஹல்யை தன் பழைய உருவை அடைந்தாள் . ராமரை வணங்கி நின்ற அவளை அப்போது தன் மனோவலிமையால் அங்கே வந்து சேர்ந்த கெளதமரும் மன மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கின்றார் . ராமனும் , லட்சுமணனும் விசுவாமித்திரருடன் மிதிலை நோக்கிச் செல்கின்றனர் . 9 கதை கதையாம் காரணமாம் ராமாயணம் - பகுதி 9 அஹல்யை செய்தது என்னமோ மாபெரும் தவறு . ஆனால் அதற்கு ராமர் மன்னித்து அருள் புரிவதும் , அவளைத் திரும்ப கெளதமர் ஏற்றுக் கொண்டதும் , சரியா என்ற தர்ம சங்கடமான கேள்வி எழும் . அஹல்யை தவறுதான் செய்தாள் . துளசி ராமாயணத்தில் இந்த விஷயமே வரலைனு நினைக்கிறேன் . கம்பர் இவளை ஒரு கல்லாக மாறினாள் என்று சொல்கின்றார் . ஆனால் வால்மீகி ராமாயணப் படி இந்தக் கல் எல்லாம் ஒன்றும் கிடையாது . யார் கண்ணிலும் படாமல் , உணவே இல்லாமல் , தூசியைப் போல் மறைந்து இருக்கத் தான் சாபமே . அந்தத் தண்டனையும் பல நூற்றாண்டுகளுக்கு நீடிப்பதாய்த் தெரிகின்றது . ஆகையால் இது அவளுக்கு இன்னொரு பிறவியே அல்லவா ? அந்தக் காரணம் தொட்டும் , மன்னிப்பது தேவர் குணம் என்பதாலும் ஸ்ரீராமனின் அருள் கிட்டியதாலும் அவளுக்குப் பெரும் பேறு கிட்டுகின்றது . மேலும் கம்பர் , கெளதமர் இந்திரனுக்குக் கொடுத்ததாய்ச் சொல்லும் சாபமே வேறு , அகலிகையும் கல்லாக மாறியதாய்ச் சொல்கின்றார் . மனிதர்களாய்ப் பிறந்த அனைவருமே ஒரு சமயம் செய்யும் தவறுகளையும் , என்றாலும் அவற்றுக்கும் விமோசனம் இருப்பதையுமே இது சுட்டிக் காட்டுவதோடு தவறு செய்த பெண்ணை மன்னித்து ஏற்றுக் கொள்ளவும் வைக்கின்றது . இனி மிதிலையில் என்ன நடக்கின்றது ? மிதிலையை வந்தடைந்த ராம , லட்சுமணர்கள் விசுவாமித்திரருடன் யாக சாலையை அடைகின்றார்கள் . ஜனக மகாராஜா அவர்கள் அனைவரையும் வரவேற்று , உபசரித்து விட்டுப் பின்னர் இந்த இரு இளைஞர்களின் வரலாறு என்ன என விசுவாமித்திரரைக் கேட்க அவரும் , ராம , லட்சுமணர்களின் வம்சத்தைப் பற்றியும் , தான் உதவிக்கு அழைத்து வந்ததையும் , அவர்கள் செய்த உதவியையும் , வரும் வழியில் அகலிகைக்கு அவர்கள் செய்த உதவியையும் கூறினார் . உடனேயே அங்கிருந்த சதானந்தர் என்னும் அகலிகை - கெளதமரின் புத்திரன் மனமகிழ்ந்து விசுவாமித்திரரின் வரலாற்றை ராம , லட்சுமணர்கள் மற்றும் மற்ற சபையோர் அறியும் படி எடுத்து உரைத்தார் . கெளசிக தேசத்து மன்னனாகிய விசுவாமித்திரர் , வசிஷ்டரின் ஆசிரமத்திற்கு வந்த வேளையில் வசிஷ்டரின் பசுவாகிய சபலை வந்த அரச பரிவாரத்தை உபசரித்ததைப் பார்த்து , விஸ்வாமித்திரர் அந்தப் பசுவைக் கேட்டதையும் , வசிஷ்டர் மறுக்கவே , கோபத்துடன் போர் புரிந்ததையும் அனைத்துப் போர் முறைகளையும் அந்தப் பசுவின் துணை கொண்டே வசிஷ்டர் முறியடித்ததையும் , அதைக் கண்டு அரச பதவியைத் துறந்து கடும் தவங்கள் பல செய்து , தேவர்களின் சூழ்ச்சியினால் பல முறை தவ வலிமை இழந்தும் மீண்டும் , மீண்டும் விடாமல் தவம் செய்து வசிஷ்டர் வாயாலேயே பிரம்ம ரிஷி பட்டம் வாங்கினதையும் எடுத்துச் சொல்கின்றார் . பின்னர் மறுநாள் விசுவாமித்திரர் ஜனகரிடம் சிவ தனுசுவைக் காட்டச் சொல்கின்றார் . அதற்கு முன்னர் அதன் வரலாற்றைக் கூறுகின்றார் ஜனகர் . தட்ச யாகத்தின் போது சிவனுக்கு நேர்ந்த அவமதிப்பைக் கண்டு பொறுக்காத சதியானவள் நெருப்பில் வீழ்ந்ததும் கோபம் கொண்ட ஈசன் தன் வில்லினால் அந்த யாகத்துக்குச் சென்ற தேவர்கள் அனைவரையும் கொல்ல யத்தனித்த வேளையில் தேவர்கள் மனம் உருகிச் சிவனை வேண்டிக் கொள்ள , மனம் மாறிய பரமேசன் அந்த வில்லைத் தேவர்களிடமே கொடுத்து விடுகின்றார் . தேவர்கள் அந்த வில்லை ஜனகரின் மூதாதையரில் ஒருவரான தேவராதன் என்பவருக்கு அளிக்கின்றனர் . அதிலிருந்து அந்த வில் ஜனகரின் குடும்பத்திலேயே இருந்து வருகின்றது . இது இவ்வாறிருக்க ஜனகர் மேலும் தொடர்கின்றார் :“ முன்பொரு முறை யாகம் செய்வதற்காக நிலத்தை நான் உழுது கொண்டிருந்த சமயம் அந்த நிலத்தில் இருந்து ஒரு பெண் தோன்றினாள் . எந்தக் கர்ப்பத்திலும் வசிக்காமலேயே பிறந்த அந்தப் பெண்ணை என் பெண்ணாக நான் ஏற்றுக் கொண்டேன் அவளுக்குத் திருமணப் பருவம் வந்து விட்டது . ஆகவே இந்த சிவ தனுசை எவர் கையில் எடுத்து நாணேற்றுகின்றார்களோ அவர்களுக்கே என் பெண்ணாகிய இந்தச் சீதையை மணமுடித்துத் தரப் போவதாய் அறிவித்துள்ளேன் . இந்த ராமர் , இந்த வில்லை எடுத்து நாணேற்றுகின்றாரா எனப் பார்க்கலாம் . இதுவரையிலும் பல தேசத்து மன்னர்களும் , தேவாதி தேவர்களும் , வந்து இந்த வில்லை நாணேற்ற முயன்று பார்த்து விட்டார்கள் . எவராலும் முடியவில்லை . மனித சக்திக்கு அப்பாற்பட்டதான இந்த வில்லில் நாணேற்றுவது ராமனால் முடியுமா என்பது சந்தேகமே , ராஜகுமாரர்கள் இந்த வில்லைப் பார்க்கட்டும்” என்று சொல்லவே நூற்றுக் கணக்கான வீரர்கள் வில் வைக்கப் பட்டிருந்த பெட்டியை இழுத்துக் கொண்டு வந்து சேர்த்தனர் . விசுவாமித்திரரும் , ஜனகரும் சம்மதம் தெரிவிக்க மிகச் சாதாரணமாக ஒரு விளையாட்டுப் போல் அந்த வில்லைக் கையில் எடுத்த ராமர் அதன் நாணை ஏற்றும் போது வில் பலத்த சத்தத்துடன் முறிந்து விழுந்தது . எட்டுத் திசைகளும் , மலைகளும் , நெருப்பைக் கக்கும் எரிமலைகளும் , ஆறுகளும் , சமுத்திரங்களும் ஒரு க்ஷணம் தங்கள் போக்கை நிறுத்திக் கொண்டதாய்த் தோன்றியது . பின்னர் சுதாரித்துக் கொண்ட ஜனகர் மிகுந்த சந்தோஷத்துடன் ராமருக்குத் தன் பெண்ணாகிய சீதைத் தர இசைகின்றார் . உடனேயே ஜனகரின் மந்திரி பிரதானிகளால் அயோத்திக்குச் செய்தி சொல்ல ஆட்கள் தயார் செய்யப் பட்டனர் . அயோத்திக்குச் சென்ற அவர்கள் தசரதனிடம் விஷயத்தைச் சொல்ல தசரதனும் மனம் மகிழ்ச்சியுடனேயே அதை ஏற்றுக் கொண்டு அயோத்தியில் இருந்து தன் பரிவாரங்கள் புடை சூழ மிதிலை புறப்படுகின்றான் . ஜனகரைக் கண்டு பேசுகின்றான் . தன் குல குருவான வசிஷ்டரை முன்னிறுத்திக் கொண்டு தசரதன் பேசும் போது ஜனகரும் தன்னுடன் தன் பரிவாரங்கள் மட்டுமின்றித் தன் தம்பியான குசத்வஜனையும் உடன் அழைத்துக் கொள்கின்றார் . பின்னர் தசரதனிடம் ராமனுக்கு , சீதையையும் , லட்சுமணனுக்குத் தன் வயிற்றில் பிறந்த பெண்ணான ஊர்மிளையையும் திருமணம் செய்து தருவதாய்ச் சொல்கின்றார் . இதைக் கேட்ட விசுவாமித்திரர் உடனேயே ஜனகரிடம் உன் தம்பியின் மகள்களான மாண்டவியையும் , ச்ருதகீர்த்தியையும் முறையே பரதனுக்கும் , சத்ருக்கனனுக்கும் திருமணம் செய்விக்கும்படிச் சொல்லத் தன் தம்பியையும் கலந்து ஆலோசித்த ஜனகர் அதற்குச் சம்மதம் தெரிவிக்கின்றார் . பின்னர் நான்கு திருமணங்கள் இந்த ஏற்பாட்டின்படி நடக்கின்றது . திருமணம் நடைபெறும் வரை ராமனோ , சீதையோ ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவே இல்லை என்பதே வால்மீகி சொல்வது . ஆனால் கம்பரோ என்றால் “மிதிலைக் காட்சிப் படலம்” 519- ஆம் செய்யுளில் இவ்வாறு கூறுகின்றார் . கம்பர் கூற்றுப் படி ராமன் கன்னிமாடத்தில் இருக்கும் சீதையைக் கண்டு அவள் யாரெனத் தெரியாமலேயே காதல் கொள்ளுகின்றான் . சீதையும் அவ்வாறே காதல் கொள்கின்றாள் . “எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் . நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன வீக்கிய கனை கழல் வீரன் செங்கணும் தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே !” மனதால் எண்ணிப் பார்க்கவும் முடியாத பேரழகே பெண்ணாய் உருவெடுத்த சீதையைக் கன்னிமாடத்தில் நிற்கும்போது கண்ட ராமனின் விழிகளோடு சீதையின் விழிகளும் மோத , இருவரும் ஒருவரை ஒருவர் விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டதோடல்லாமல் இருவரது அறிவும் ஒரு நிலையிலும் இல்லை . கூர்மையான வேல் போன்ற கண்களை உடைய சீதையின் பார்வையானது ராமனின் தோள்களில் தைக்கின்றது . மிக மிக ஆழமாய்த் தைத்தது . அதே போல் ராமனின் பார்வையும் சீதையின் மார்பில் பட்டுப் பதிந்தது . சீதை வால்மீகி ராமாயணத்திலும் சரி , மற்ற ராமாயணங்களிலும் சரி , ராமனைத் தவிர மற்றவரை நினைத்தது கூட இல்லை . ஒரு பெண் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாகாவே சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றாள் , அதற்காகத் தான் எந்தவிதத் தியாகமும் செய்யத் தயாராகவே இருப்பதாயும் தெரிவிக்கின்றாள் . தியாகமும் செய்கின்றாள் . முதலில் கணவனுக்கு வந்த ராஜ்ய பதவியைத் துறந்து காட்டுக்குச் செல்லும்போது அவனுடனேயெ செல்கின்ற போதும் சரி , பின்னர் வந்த நாட்களில் கணவனின் அடி ஒற்றி நடந்த போதும் சரி , ராவணனால் பலாத்காரமாய்த் தூக்கிச் செல்லப் பட்ட போதும் சரி , பின்னர் அங்கே ராமஸ்மரணையோடே இருந்த போதும் சரி , பின்னர் ராமனால் ராவணன் வதம் செய்து வந்தபின்னர் , ராமனால் அக்னிப்ரவேசம் செய்யும்படிப் பணிக்கப் பட்டபோதும் பின்னர் ராமன் அவளைத் துறந்த போதும் ஒரு கணமும் அவள் தன் கணவனைக் குறை கூறவில்லை . தூற்றவில்லை . கணவன் சொல்வதைச் செய்வதே தன்னுடைய தர்மம் , என்றும் அதுவே கணவனுக்குச் செய்யும் உதவி எனவும் எண்ணினாள் . ஆனால் சீதையும் ராமனை எதிர்த்து வாதாடியும் இருக்கின்றாளே ? கொஞ்சம் பொறுத்தால் தெரியும் . 10 கதை கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 10 கம்பர் மிக நிதானமாய்த் திருமணக் காட்சிகளை வர்ணிக்கின்றார் . மிக மிக நிதானமாய் ஒவ்வொரு காட்சியாக வர்ணித்து விட்டுப் பின்னர் திருமணத்திற்கு வருகின்றார் . அந்த மாதிரியாகவே வால்மீகியும் திருமண வைபவங்களை விவரிக்கின்றார் . இன்னும் சொல்லப் போனால் குலம் , கோத்திரம் போன்ற வர்ணனைகள் நிறையவே வருகின்றன . பெரும்பாலான இந்துத் திருமணங்களில் சொல்லப் படும் பாட்டன் , முப்பாட்டன் வரிசையும் சொல்லப் படுகின்றது . “ கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால் , எடுத்தது கண்டனர் , இற்றது கேட்டார் ” என்று கம்பர் சுருக்கமாய் முடித்து விட்டார் என நினைத்தோ என்னமோ அருணகிரிநாதர் தன் திருப்புகழில் வில் முறியும் காட்சியைக் கொஞ்சம் விஸ்தாரமாய் வர்ணிக்கின்றார் . வில் உடையும் ஓசையைக் கூட வர்ணிக்கின்றார் . “ சிலை “ மொளுக் “ கென முறிபட ” என்ற வார்த்தை மட்டும் நினைவில் இருக்கிறது . கம்பர் “ ஆர்த்தன பேரிகள் ஆர்த்தன சங்கம் ஆர்த்தன நான்மறை ஆர்த்தனர் வானோர் ஆர்த்தன பல்கலை ஆர்த்தன பல்லாண்டு ஆர்த்தன வண்டு இனம் ஆர்த்தன வேலை “ ( பால காண்டம் 1199) என மங்கல ஆரவாரம் செய்வதோடல்லாமல் , கைகேயி முதலிய மூவரையும் ராமரும் , சீதையும் வணங்குவதாயும் தெரிவிக்கின்றார் . “ கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம் தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கி ஆய தன் அன்னை அடித் துணை சூடி தூய சுமித்திரை தாள் தொழலோடும் ” என்று கூறுகின்றார் பால காண்டம் 1200 பாடலில் கம்பர் . வால்மீகி ராமாயணத்திலோ தசரதனின் மூன்று மனைவிகளும் திருமணத்திற்கு வருவதே இல்லை . இன்றும் சில வட இந்தியத் திருமணங்களில் பெரும்பாலும் மணமகனின் தாய் , தன் மகன் திருமணத்துக்குச் செல்லுவது இல்லை , என்பதைக் கட்டாயமாய்க் கடைப்பிடிக்கின்றனர் . திருமணங்கள் முடிந்ததும் மணமக்கள் அனைவரும் அயோத்திக்குத் திரும்புகின்றனர் . செல்லும் வழியில் சகுனங்கள் சரியில்லாமல் அபசகுனங்களாய்த் தெரிய தசரதனின் மனம் கலங்குகின்றது . வரப்போவதை நினைத்தோ ? என்ன காரணம் என வசிஷ்டரை மன்னன் வினவ , வசிஷ்டரோ பரசுராமர் வருகை புரிவதாய்த் தெரிவிக்க மன்னன் அஞ்சுகிறான் என்ன நேருமோ என ! பரசுராமரும் வருகின்றார் . எப்படி ? பூமி தேவியே அதிரும்போன்றதொரு சத்தத்துடன் , வானத்தில் சூரியன் கூட அஞ்சி மறையும் வண்ணம் , திசைகள் தடுமாறும் வண்ணம் தோன்றினார் எதிரே ஒரு முனிவர் . அவர் தோற்றத்தில் அச்சத்தை உண்டாக்கும் விதத்திலும் , நெருப்பைப் போல் யாராலும் அணுகமுடியாத தன்மையுடனும் , தோளில் கோடரியைச் சுமந்து கொண்டும் இருந்தார் . முப்புரத்தையும் எரித்த சிவனின் வடிவமோ என்னும் எண்ணத்தைத் தோற்றுவித்த அவர் தான் பரசுராமர் என்னும் முனிவர் . ப்ருகு முனிவரின் வம்சத்தில் தோன்றிய ஜமதக்னியின் புத்திரன் ஆன அவர் தன் தகப்பனைக் கொன்ற கார்த்த வீர்யாச்சுனனைப் பழி வாங்க ஆரம்பித்து அதில் இருந்து ஆரம்பித்து 21 தலைமுறை க்ஷத்திரியர்களைத் தொடர்ந்து அழித்து வரவும் , க்ஷத்திரியர்கள் இல்லாமல் பூமியில் சமானத் தன்மை ஏற்படாது , என்பதை நன்கு உணர்ந்த காசியபர் பரசுராமர் வென்ற பூமி முழுதையும் , தான் தானமாய்ப் பெற்று , இந்தப் பூமியில் நல்லாட்சி புரிந்து வருமாறு கூறி எஞ்சிய சில க்ஷத்திரியர்களுக்குக் காசியபர் பூமியை அளிக்கின்றார் . என்றாலும் பரசுராமரின் கோபம் அடங்காமலேயே அவர் மீண்டும் மகேந்திரமலையை அடைந்து தவம் செய்து வந்த போது , ஸ்ரீராமர் சிவ தனுசுவை உடைத்த விபரம் தெரிந்து கொண்டு ராமரிடம் வந்து , தன்னிடம் இருக்கும் இன்னொரு வில்லைக் காட்டுகின்றார் . அது விஷ்ணு தனுசு . விஸ்வகர்மாவால் செய்யப் பட்ட அதி அற்புத விற்கள் இரண்டில் ஒன்று சிவனிடமும் , மற்றது விஷ்ணுவிடமும் இருந்தது . சிவன் தன் வில்லை மிதிலை அரசனுக்கு அளிக்க விஷ்ணுவோ ப்ருகு வம்சத்து ரிசீகருக்கு அளிக்க அவரிடமிருந்து ஜமதக்னி முனிவர் பெற்றுப் பின்னர் பரசுராமரை வந்தடைகின்றது . ஸ்ரீராமரைப் பார்த்துப் பரசுராமர் நீ முறித்த வில்லுக்குச் சமானம் ஆன இந்த வில்லையும் நீ நாண் ஏற்றிக் காட்டுவாயாக ! இல்லை எனில் என்னுடன் நீ யுத்தம் செய்யவேண்டும் !” என்று கூற ஸ்ரீராமரும் உடனேயே குழந்தை தன் விளையாட்டுப் பொருளை அசிரத்தையாக எடுப்பது போல் , அந்த வில்லை எடுத்து நாண் ஏற்றிவிட்டு , “ அடுத்து என்ன செய்யவேண்டும் ” என்று பரசுராமரைக் கேட்கின்றார் . பரசுராமரோ மனம் மகிழ்ந்து ,,” ஏ ராமா ! செயற்கரிய செயலைச் செய்த நீ அந்த சாட்சாத் விஷ்ணுவே தான் ! நான் காச்யபருக்குத் தானமாய் அளித்த இந்தப் பூமியில் ஓரிடத்தில் தங்காது நிலையில்லாது சுற்றிக் கொண்டே இருப்பதாய் வாக்களித்திருக்கின்றேன் . இப்போது நான் மீண்டும் மகேந்திர மலைப்பகுதிக்கே செல்கின்றேன் . இந்த வில் இனி உன்னுடையது !” என்று சொல்லிச் செல்கின்றார் . அதன் பின்னர் அனைவரும் அயோத்தியை வந்தடைய மணமக்களுக்கு அயோத்தி மக்கள் ஆரவார வரவேற்பு அளித்ததும் கழிகின்றது பனிரண்டு வருடங்கள் நிம்மதியாக . இங்கே பால காண்டத்தைச் சுருக்கமாய் முடித்துவிட்டு அயோத்யா காண்டத்துக்குச் சென்று விடுகின்றார் அருணகிரிநாதர் . ஜானகியான சீதையின் அன்பிலும் , பொறுமையில் ஒன்றாய்க் கலந்த ராமன் என அவர் வர்ணிப்பதாய் அறிகின்றோம் . சந்தேக விளக்கங்கள் மட்டும் ! சில சந்தேகங்களுக்கான பதில் : முதலில் அகலிகையின் வாழ்க்கையில் அகலிகையின் நிலையைக் கொஞ்சமும் மாற்றாமலேயே வர்ணிக்கின்றார் வால்மீகி . அவள் தவறு செய்வதையும் , பின்னர் மனம் வருந்துவதையும் அதனால் கிடைக்கும் சாபத்தையும் , சாபத்தின் பலனால் அன்ன , ஆகாரமின்றிக் காற்றையே உணவாய்க் கொண்டு , எவர் கண்ணிலும் படாமல் நூற்றாண்டுகளுக்கு மேல் காத்திருக்கின்றாள் , ஸ்ரீராமனின் வருகைக்காக . தவம் கடுமையாகச் செய்கின்றாள் , ராமனை நினைத்து . அவளுடைய மன்னிக்க முடியாத தவறுக்குத் தண்டனையும் கிடைத்து விட்டது . அதை முழுதும் அனுபவித்தும் விடுகின்றாள் . பின்னர் அவள் எடுப்பதோ புதுப் பிறவி ! அந்த மாசடைந்த பிறவி மறைந்து போய் , மனதினாலும் , உடலினாலும் முற்றிலும் தூயவளாய் மாறுகின்றாள் . ஸ்ரீராமனின் கருணையினால் . ஆகவே தான் கெளதமரும் அவளை ஏற்கின்றார் . தவறு செய்தால் கடுமையான தண்டனை கிடைக்கும் , அதை நாம் அனுபவித்தே தீரவேண்டும் , அப்படியும் , நாம் மாறாத பக்தியோடு இருந்தோமானால் நமக்கு நல்வழி கிட்டும் என்பதே அகலிகையின் வாழ்வில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது . தொலைக்காட்சியில் வந்த ராமாயணத் தொடரில் அகலிகை கல்லாக மாறுவது போலவே காட்டப் பட்டதாய்த் தெரிவிக்கின்றனர் . அது ராமானந்த சாகரின் ராமாயணம் தொடர் என்றே நினைக்கின்றேன் . நான் அவ்வளவு தொடர்ந்து அந்தத் தொடரைப் பார்க்கவில்லை எனினும் , அந்தத் தொடர் எடுக்க அவர் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட புத்தகங்களில் கம்ப ராமாயணமும் இடம் பெற்றுள்ளது . டைட்டிலில் , முன்னாலேயே புத்தகங்கள் லிஸ்டில் கம்பராமாயணமும் வந்து விடும் என்றும் நினைக்கின்றேன் . ஆகவே தற்காலத்துச் சாதாரண மனிதர்களால் இந்த தூசியைப் போல் அகலிகை இருந்தாள் என்பதை ஜீரணிக்க முடியாது என்பதால் இம்மாதிரி எடுத்திருக்கலாம் . கம்பர் தான் அகலிகை கல்லாய் மாறினாள் என்று சொல்கின்றார் , துளசிதாசர் ராமாயணத்தில் அகலிகை விபரங்களுக்கு அத்தனை முக்கியத்துவம் இல்லை என்றே நினைக்கிறேன் . வால்மீகியே எழுதினாரா ? இல்லை எழுதப் பட்டதா ? இப்போ படிக்கிற சிலருக்குச் சந்தேகங்கள் வருகிறது . வால்மீகி காலத்திலேயே ராமாயணம் எழுதப் பட்டுவிட்டதா ? அல்லது வால்மீகி சொல்லி , வேறு யாரேனும் எழுதினார்களா அல்லது வெறும் பாடலாகவே கற்பிக்கப் பட்டதா என ! அயோத்யா காண்டம் ஆரம்பிக்கும் வேளையில் என்ன இதுனு நினைப்பவர்கள் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் . முக்கியமான சிலர் இந்தக் கேள்வியை இன்று எழுப்புகின்றனர் . வேறு சிலருக்கும் இருக்கலாம் என்பதாலேயே இந்த விளக்கம் கொடுத்துவிட்டுப் பின்னர் ஆரம்பிக்கிறேன் . ராமரின் சரித்திரம் இந்த ராமாயணம் இயற்றிய வால்மீகியால் மட்டுமில்லாமல் பலராலும் , அந்த ராமாயணப் பாத்திரங்களாலேயே பல சந்தர்ப்பங்களிலும் சொல்லப் படுகிறது . வால்மீகியும் ஒரு பாத்திரம் தான் , ஆனால் முதலில் அவரும் அதை அறியவில்லை என்றே சொல்லலாம் . சீதை கானகத்துக்கு வரும் முன்னரே அவர் அவள் அங்கே வரப் போவதை அறிந்திருந்தார் . ராமரின் வாழ்க்கைச் சரித்திரம் அவ்வளவில் அவருக்குத் தெரிய வந்திருந்தது . சீதை வால்மீகி ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்து , ராமாயணமும் வால்மீகியால் இயற்றப் பட்டுப் பின்னர் அதை வால்மீகி ராமரின் பிள்ளைகளுக்கே சொல்லியும் கொடுக்கின்றார் வாய்மொழியாகவே . எழுதப் படவில்லை . முதன் முதலில் ராமாயணம் அரங்கேற்றம் செய்தவர்கள் லவ , குசர்கள் தான் . வாய்மொழியாகவே பாடப் பட்டது . “ குசிலவா ” என்றால் வடமொழியில் பாட்டுப் பாடிக்கொண்டே ஊர் ஊராய்ப் போகின்றவர்கள் என அர்த்தம் வரும் . நம் தமிழ் நாட்டில் உள்ள பாணன் , பாடினிகளைப் போல் என்றும் வைத்துக் கொள்ளலாம் . வால்மீகியின் காலம் கி . மு . 750 முதல் 500 வரையிலும் இருக்கலாம் என்று நம்பப் படுகிறது . அதை வைத்துப் பார்க்கும்போது ராமாயணம் சுவடிகளில் எழுதப் பட்ட காலம் கிட்டத் தட்ட 11- ம் நூற்றாண்டாக இருக்கலாம் . பரோடாவின் எம் . எஸ் . பல்கலைக் கழகத்தில் கிடைக்கும் ராமாயண ஓலைச் சுவடிகள் தான் இந்தியாவிலேயே மிக மிகப் பழமையான சுவடிகள் எனவும் சொல்லப் படுகிறது . வேதங்களை “ எழுதாக்கிளவி ” என்று சொல்லுவதுண்டு . வேதங்கள் எவ்வாறு வாய்மொழியாகக் கற்பிக்கப் பட்டதோ அவ்வாறே , ராமாயணமும் வாய்மொழியாகவே சொல்லப் பட்டு வந்தது . ஏனெனில் வடமொழியின் உச்சரிப்புக்குச் சப்தம் தேவை . சப்தம் சரியாக இருக்க வேண்டும் , உச்சரிப்பு முறையாக இருக்கவேண்டும் , மாறுபட்ட ஒரு உச்சரிப்புக் கூட அர்த்தத்தை மாற்றிவிடும் , ஆகவே முறையான உச்சரிப்புக்காகவே இவை முதலில் வாய்மொழியாகச் சொல்லப் பட்டுப் பின்னர் வந்த சம்ஸ்கிருத பண்டிதர்களால் எழுதப் பட்டது என ஆசிரியை கூறுகின்றார் . அதுவும் ராமாயணம் எழுதப் பட்டு , அதாவது வால்மீகியால் சொல்லப்பட்ட பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரே எழுதப் பட்டது . கிட்டத் தட்ட கி . பி 8- ம் நூற்றாண்டில் இருந்து 12- ம் நூற்றாண்டுகளுக்குள் எழுதப் பட்டிருக்கவேண்டும் என்பதாய்ச் சொல்கின்றார் . அதனால் கூடச் சில வார்த்தைகள் அந்தக் கால நாகரீகத்துக்கும் , சொல் வழக்குக்கும் ஏற்ப மாற்றப் பட்டிருக்கலாம் என்பதும் அவர் கூற்று . என்றாலும் பலரும் சொல்லுவதைப் போல் உத்தர காண்டம் வால்மீகியால் பாடப் படவில்லை என்பதை ஆசிரியை ஏற்கவில்லை . ஏனெனில் முதன் முதல் ராமாயணப் பாடல்கள் ஆரம்பிக்கும்போதே உத்தரகாண்டத்தில் ஆரம்பிப்பதோடு அல்லாமல் , லவ , குசர்கள் தங்கள் தாயான சீதை ராமரால் மூன்றாம் முறையாகவும் நிராகரிக்கப் பட்டுப் பின்னர் பூமியில் மறைந்து போவதையும் , பார்த்துக் கொண்டே , அதைப் பற்றியும் பாடுகின்றனர் , மேலும் லட்சுமணனை ராமர் பிரிதல் , ராமரின் மறைவு என அதுவரையிலும் பாடி முடிக்கின்றனர் . முழுக்க முழுக்கப் பின்னோக்கியே சொல்லப் பட்ட இந்தக் காவியமானது அதன் போக்கில் நிகழ்காலம் , இறந்த காலம் ஆவதையும் , எதிர்காலத்தைப் பற்றி நிகழ்காலத்தில் சொல்லப் படுவதையும் , பார்க்கும்போது காலம் பற்றிய குழப்பம் நேரிடும் அனைவருக்குமே . அதனாலும் விளையும் சந்தேகமே இது . ஆனால் ராமாயணக் கதா பாத்திரங்களில் சிலருக்குப் பின்னால் நடக்கப் போவதை முன்கூட்டியே அறியும் ஆற்றல் இருந்ததை உணர்ந்து கொண்டால் குழப்பம் தீரும் . தங்கள் தந்தை எதிரே பாடுகின்றோம் என்ற உணர்ச்சியே இல்லாமல் , இன்னும் சொல்லப் போனால் அது பற்றிய எந்த விபரமும் தெரியாமலேயே குசனும் , லவனும் பாடுகின்றனர் . அதுவும் எப்படி ? சீதையைப் பிரிந்த ராமரின் சோகத்தைப் பிழிந்து எடுக்கின்றனர் , தங்கள் இனிமையான குரல்வளத்தினால் , பின்னர் தங்கத்தால் ஆன சீதையை வைத்துக் கொண்டு ராமர் அசுவமேத யாகம் செய்யப் போவதையும் பாடுகின்றனர் . இங்கே நிகழ்காலம் ஆன குச , லவர்கள் , இறந்த காலம் ஆகப் போகின்ற ராமனின் உணர்வுகளோடு மோதுகின்றனர் . ராமாயணம் பாட ஆரம்பித்த வால்மீகிக்கு எவ்வாறு நடந்ததும் , நடக்கப் போவதும் , நடந்து கொண்டிருப்பதும் தெரிய வருகிறதோ அவ்வாறே , நாமும் அனைத்தும் தெரிந்து கொண்டே இந்தக் கதையைக் கேட்கின்றோம் . இன்னும் சொல்லப் போனால் ராமாயண காலத்துக்கே போய் ராமருடன் கதை கேட்கும் அயோத்தி மாந்தர்களில் ஒருவராகவே உணருகின்றோம் . அதுவும் எப்படி , இன்னும் நமக்குத் திறக்கப்படாத , சரிவரத் தெரியாத ராமரின் எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகளுடனேயே . வால்மீகியின் கவிதைத் திறனுக்கு வெற்றி மட்டுமில்லாமல் , முடிவு தெரிந்த ஒரு கதையைத் திரும்பத் திரும்பக் கேட்கும் நாமும் உணருகின்றோம் , இப்படி ஒரு காவிய நாயகன் நிஜத்தில் நம்மிடையே இருந்தான் என்பதை . அவன் இல்லை எனவும் , இந்தக் கதை ஒரு கற்பனை என்பதும் நாம் வால்மீகி என்னும் மகாகவிக்குச் செய்யும் ஒரு துரோகம் என மொழி பெயர்த்த ஆசிரியை ஆர்ஷியா சத்தாரின் கூற்று . இனி அயோத்தியா காண்டத்துக்குப் போகலாமா ? 11 கதை கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 11 அருணகிரிநாதரின் ராமாயணத்தில் வில் முறிந்தது பற்றிய பாடல் கீழே தந்திருக்கிறேன் . திரு புஷ்பா ராகவன் அவர்கள் தான் கண்டுபிடித்துக் கொடுத்தார் . அவருக்கு என் மனமார்ந்த நன்றி . திருவிடைக்கழி , திருப்புகழில் 799- ம் பாடல் இது . // அரன ரிப்பிர மர்கள்முதல் வழிப டப்பிரி யமும்வர அவர வர்க்கொரு பொருள்புகல் …… பெரியோனே சிலைமொ ளுக்கென முறிபட மிதிலை யிற்சந கமனருள் திருவி னைப்புண ரரிதிரு …… மருகோனே // பாலகாண்டத்தின் இறுதியில் அயோத்தியை வந்தடைந்து தத்தம் மனைவிமாருடன் இன்பமாய் வாழ்ந்து வந்தனர் சகோதரர்கள் நால்வரும் . அப்போது கேகய நாட்டு அரசன் ஆன கைகேயியின் தந்தை , தன் மகனை அயோத்திக்கு அனுப்பித் தன் பேரனும் கைகேயியின் மகனும் ஆன பரதனைக் கேகய நாட்டுக்கு அழைத்து வருமாறு கூறி இருக்கவே , அதன்படி கைகேயியின் சகோதரனும் , பரதனும் மாமனும் ஆன யுதாஜித் , பரதனைச் சகல மரியாதைகளுடனும் கேகயநாட்டுக்கு அழைத்துச் செல்கின்றான் . கூடவே பரதனை விட்டுப் பிரியாத சத்ருக்கனனும் செல்கின்றான் . அங்கே கேகய நாட்டில் இளவரசர்கள் இருவரும் ராஜ உபசாரங்களில் மகிழ்ந்திருக்கும் வேளையில் இங்கே அயோத்தியில் மன்னன் தசரதன் ஶ்ரீராமனுக்குப் பட்டம் கட்ட உரிய காலம் வந்துவிட்டதாயும் , இளவரசுப் பட்டம் கட்டி நாட்டை அவனிடம் ஒப்புவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாய் நினைத்தான் . நான்கு மகன்களிலும் ஸ்ரீராமனிடம் தனிப் பிரியம் கொண்ட மன்னன் , இவ்வாறு நினைத்ததில் தவறும் இல்லை . தாய்மார் மூவருக்குமே மிகப் பிரியமானவனாக இருந்து வந்தான் . ஆகவே யாரும் எதிர்க்கப் போவதில்லை . மன்னன் மன மகிழ்ச்சியுடனேயே தன் மந்திரி , பிரதானிகளுடன் கலந்து ஆலோசிக்கின்றான் . வால்மீகி எழுதி இருப்பது இளவரசுப் பட்டம் என்றே . ஆனால் கம்பரோ மன்னன் ஆகவே முடிசூட்ட எண்ணியதாய்த் தெரிவிக்கின்றார் . அருணகிரிநாதரோ என்றால் அதை வெகு சுலபமாய் நாலே வரிகளில் முடிக்கின்றார் : இவ்வாறு : “ திண்சிலை முறியாவொண் ஜானகி தனங்கலந்த பின் ஊரில் மகுடங்கடந்தொருதாயர் வசனம் சிறந்தவன் ” எனக் காட்டுக்கு உடனடியாக அனுப்புகின்றார் . அற்புத அழகு மட்டுமின்றி , அன்பு , இரக்கம் , பொறுமை என்னும் செல்வங்களும் வாய்க்கப் பெற்றவள் ஜானகி என்பதையே “ ஜானகி தனங்கலந்தபின் ” எனக் கூறுகின்றார் . ஜானகியிடம் இருந்த தனங்கள் , அதாவது செல்வங்கள் ஆகியவ மேற்கூறும் நற்குணங்கள் . கம்பரோ என்றால் நிதானமாய் வர்ணிக்கின்றார் . முடிசூடப் போகும் ராமனுக்கு அதன் முக்கியத்துவம் பற்றியும் , ராமன் இருக்கவேண்டிய நியதிகள் , அனுசரிக்க வேண்டிய கடமைகள் , மற்றும் செய்யவேண்டிய கடமைகள் , இருக்கவேண்டிய உபவாசங்கள் போன்றவற்றைப் பற்றி தசரதன் எடுத்துக் கூறியதாய் வால்மீகியும் , தசரதன் கட்டளையின் பேரில் வசிஷ்டர் கூறுவதாய்க் கம்பனும் கூறுகின்றார்கள் . மேலும் கம்பன் கூற்றுப் படி தசரதன் ராமனுக்குப் பட்டம் சூட்டிவிட்டுக் காட்டில் வாசம் செய்யப் போவதாய்க் கூறுகின்றது , இவ்வாறு : “ ஆதலால் இராமனுக்கு அரசை நல்கி , இப் பேதமைத்தாய் வரும் பிறப்பை நீக்குறு மா தவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன் : யாது நும் கருத்து ? என இனைய கூறினான் “ என்று தசரதன் ஆலோசனை கேட்டதாய்க் கம்பர் கூறுகின்றார் . சுமந்திரரைக் கூப்பிட்டு ராமரை அழைத்து வரும்படிக் கூறிப் பின்னர் சபைக்கு வந்த ராமருக்குத் தசரதன் தானே நேரில் தன் விருப்பத்தை ராமனிடம் தெரிவித்துப் பின்னர் ராமர் ஒரு யுவராஜாவாகக் கடைப்பிடிக்க வேண்டிய தர்மத்தை உபதேசித்ததாய் வால்மீகி கூறுகின்றார் . அவ்வளவில் மறுநாளே ராமனுக்குப் பட்டம் கட்டவேண்டிய நன்னாள் இருப்பதாயும் கூறும் தசரதர் , மற்ற அரசவை மந்திரி , பிரதானிகள் , குலகுரு வசிஷ்டர் ஆகியோரிடம் விடைபெற்றுச் சென்ற ராமனைத் திரும்பவும் அழைத்து வருமாறு சுமந்திரரைப் பணிக்கின்றான் தசரதன் . வந்த ராமனிடம் , தான் கண்டு வரும் கெட்ட கனவுகளையும் , காணும் துர்ச்சகுனங்கள் பற்றியும் எடுத்து உரைக்கும் தசரதன் ,” ராமா , என் உயிர் உடலை விட்டுப் பிரிவதற்கு முன்னர் நான் செய்ய வேண்டிய கடமை உன்னுடைய பட்டாபிஷேகம் மட்டுமே ! ஆகையால் நீ உன் மனைவியுடன் இன்றிரவு உபவாசம் மேற்கொள்வாயாக ! தர்ப்பைப் படுக்கையில் படுத்து , செய்யவேண்டிய தானங்களை முறைப்படி செய்து , தெய்வ சிந்தனையில் மனத்தை ஒருமைப் படுத்துவாயாக !” என்று கூற ராமனும் அவ்வாறே ஒப்புக்கொண்டு தன் மாளிகைக்குத் திரும்ப , மன்னன் தசரதன் அடுத்து நேரப் போவதைக் கற்பனை கூடச் செய்யாமல் மிக்க மன மகிழ்ச்சியுடனேயே கைகேயியின் அந்தப் புரம் நாடிச் சென்றான் . தசரதன் வேண்டுகோள் படி வசிஷ்டர் கூறுவதாய்க் கம்பர் சொல்வது : “ யாரொடும்பகை கொள்ளல னென்றபின் போரொடுங்கும் புகழொடுங்குங் காதுதன் தாரோடுங்கல்செல்லாதது தந்தபின் வேரொடுங்கெடல் வேண்டல் உண்டாகுமோ “ கம்பர் சீதையும் உடன் உபவாசம் இருந்ததாய்க் கூறவில்லை . இது இவ்வாறிருக்கக் கைகேயியின் அந்தப் புரத்திலே மந்தரை என்பவள் கைகேயியின் தகப்பனால் அவளுக்கு அனுப்பப் பட்டிருந்த அந்தரங்கப் பணிப்பெண் , இதற்கு மேல் வால்மீகியில் எதுவும் அவளைப் பற்றிச் சொல்லவில்ல . ஆனால் கம்பரோ சிறுவயதில் ராமரின் விளையாட்டால் மந்தரை கோபமுற்றதாய்ச் சொல்லுகின்றார் . 12 கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 12 மன்னன் தசரதன் , தன் மகனாகிய ராமனுக்கு முடிசூட்டும் எண்ணத்தை நகரெங்கும் பறையறிவிக்கச் செய்ததாய்க் கம்பர் கூறுகின்றார் . வள்ளுவன் பறையறிவித்ததைக் கேட்ட நகர மாந்தர் அனைவரும் : “ ஆர்த்தனர் களித்தனர் ஆடிப் பாடினர் வேர்த்தனர் தடித்தனர் சிலிர்த்து மெய்ம்மயிர் போர்த்தனர் மன்னனைப்புகழ்ந்து வாழ்த்தினர் தூர்த்தனர் நீள் நிதி சொல்லினார்க்கு எல்லாம் “ என்று இவ்விதம் நகரமாந்தர் ஆடிப் பாடியதோடு மட்டுமில்லாமல் , மன்னன் தசரதனையும் வாழ்த்திப் பாடிய வண்ணம் ஒருவருக்கு ஒருவர் பரிசில்களையும் அளித்து மகிழ்ந்திருந்த வேளையில் , மந்தரை ஆகிய கூனி வெளியே வந்து அரண்மனைப் பணிப்பெண்ணினால் விஷயம் அறிந்து கொண்டு மிக்க கோபம் அடைந்ததாய் வால்மீகி தெரிவிக்கின்றார் . ஆனால் கம்பரோ , கூனிக்கும் , ஸ்ரீராமனுக்கும் ஏற்கெனவேயே முன்னால் இருந்த பகையை முன்னிறுத்திக்கூனி இப்போது பழி தீர்க்க முற்பட்டதாய்ச் சொல்கின்றார் . “ தொண்டைவாய்க் கேகயன் தோகை கோயில் மேல் மண்டினாள் வெகுளியின் மடித்த வாயினாள் பண்டைநாள் இராகவன் பாணி வில் உமிழ் உண்டை உண்டதனைத் தன் உள்ளத்தே உள்ளுவாள் ” என ஸ்ரீராமனின் குழந்தைப் பருவத்தில் ராமனின் கைவில்லில் இருந்து வெளிப்பட்ட களிமண் உருண்டையால் தான் அடி வாங்கிக் கொண்ட பழைய சம்பவத்தை மனதில் இறுத்தி இன்னும் அதிகக் கோபத்துடனேயே கைகேயியின் அந்தப்புரத்தை வந்தடைந்தாள் . பஞ்சணையில் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கைகேயியை எழுப்பி ஸ்ரீராமனின் பட்டாபிஷேக வைபவம் பற்றிக் கூனி சொல்லவும் உள்ளம் உண்மையிலே மகிழ்ச்சியில் ஆழ , கைகேயி கூனிக்கு ஆபரணம் பரிசளித்ததாய் வால்மீகியும் , கம்பரும் கூறுகின்றனர் . ராமனையும் தன் சொந்தப் பிள்ளை போலவே கைகேயி எண்ணிக் கொண்டிருந்ததால் அவளுக்குக் கிஞ்சித்தும் வருத்தமே எழவில்லை . சந்தோஷமே அடைந்தாள் . ஆனால் வெகுண்ட கூனியோ அம்மாலையைத் தூக்கி எறிந்துவிட்டுக் கைகேயிக்குப் போதிக்க ஆரம்பிக்கின்றாள் . அவள் இவ்வாறு ராமனுக்கு விரோதம் காட்டுவதில் காரணம் இல்லை எனவும் , அவள் சுபாவமாகவே தீமை செய்யும் இயல்பினாள் என்றும் வால்மீகி கூறும் வேளையில் , கம்பரோ பழைய பகைமையை நிலை நிறுத்துகின்றார் . ராமன் அரசாள ஆரம்பித்தால் அதனால் கெளசலையின் கை ஓங்கும் , கைகேயியின் நிலை தாழ்ந்து விடும் எனவும் , அவள் மகன் பரதன் ஒரு வேலைக்காரனைப் போல் நடத்தப் படுவான் எனவும் சொல்கின்றாள் . ஆனால் முதலில் அவற்றை மறுத்த கைகேயி , கூனி திரும்பத் திரும்பக் கத்தவும் அவள் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறத் தொடங்குகிறது . அதைப் புரிந்து கொண்ட கூனியும் , உடனேயே ,” கைகேயி , உன் மகன் பரதனை உடனே வரவழை ! மன்னன் வந்தால் அவனிடம் பேசாதே ! உன் மகன் பரதனுக்குத் தான் பட்டம் என்ற வாக்குறுதியைப் பெற்றுக் கொள் . உன்னிடம் மிக்க பிரியம் வைத்திருக்கும் மன்னன் கட்டாயம் ஒப்புக் கொள்வான் . அதே சமயம் ராமனைப் பக்கத்தில் இருக்கவும் விடாதே ! யானையைச் சிங்கம் எவ்வாறு அழிக்க நினைக்குமோ , அவ்வாறே உன் மகனை ராமன் அழித்துவிடுவான் . நீ முன்னொரு காலத்தில் உனக்கும் , மன்னனுக்கும் நிகழ்ந்த அந்தரங்கச் சம்பவம் ஒன்று பற்றி என்னிடம் கூறி இருக்கின்றாய் அல்லவா ? உன் நினைவில் இருக்கின்றதா ?” என்று கேட்கவும் கைகேயி அவளைப் பார்த்து ,” நீயே கூறு !” எனப் பணிக்கின்றாள் . கம்பர் இதைத் “ தீய மந்தரை இவ்வுரை செப்பலும் தேவி தூய சிந்தையும் திரிந்தது சூழ்ச்சியின் இமையோர் மாயையும் அவர் பெற்ற நல்வரம் உண்மையாலும் ஆய அந்தணர் இயற்றிய அருந்தவத்தாலும் “ “ அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும் துரக்க நல் அருள் துறந்தனள் தூ மொழி மடமான் இரக்கம் இன்மை அன்றோ இன்று இவ் உலகங்கள் இராமன் பரக்கும் தொல் புகழ் அமுதினைப் பருகுகின்றதுவே !” கைகேயி செய்த இந்தக் கொடுஞ்செயல் கூட ஸ்ரீராமனுக்கு நன்மையாகவும் , ராமனது புகழை இன்றளவும் உலகெங்கும் பேசவும் காரணமாக அமைந்தது எனவும் சொல்கின்றார் கம்பர் . இந்நிலையில் மந்தரை அவளிடம் முன்னொரு காலம் தசரதன் தேவாசுர யுத்தத்தின் போது தேவர்களுக்கு உதவி செய்யச் சென்ற வேளையில் கைகேயியும் உடன் சென்றதை நினைவு படுத்துகின்றாள் . அப்போது மன்னன் போரில் ஒரு கட்டத்தில் மூர்ச்சை அடைய , உடன் சென்ற கைகேயி மிக்கத் துணிவுடன் மன்னனைப் போர்க்களத்தில் இருந்து அப்புறப்படுத்திக் காப்பாற்றி , மூர்ச்சை தெளிவிக்கின்றாள் . மூர்ச்சை தெளிந்த மன்னன் மனம் மகிழ்ந்து கைகேயியிடம் இருவரங்கள் தருவதாயும் என்ன வேண்டுமோ கேள் அளிக்கிறேன் எனக் கூறக் கைகேயி அச்சமயம் எதுவும் தேவை இல்லை எனவும் தேவைப் படும்போது கேட்டு வாங்கிக் கொள்ளுவதாயும் சொல்கின்றாள் . இதை நினைவு படுத்திய மந்தரை கைகேயியிடம் இந்த இரு வரங்களையும் , பயன் படுத்திக் கொள்ளுமாறு கூறுகின்றாள் . ராமனுக்குப் பட்டாபிஷேகத்துக்குப் பதிலாகப் பதினான்கு வருடம் வனவாசம் , பரதனுக்குப் பட்டாபிஷேகம் என்ற இரு வரங்களைக் கேட்கச் சொல்கின்றாள் . பரதனுக்குப் பட்டம் என்றால் , ராமன் ஏன் காட்டுக்குப் போகவேண்டும் என்றதற்கு அவள் நாட்டு மக்கள் அனைவரும் ராமனிடம் மிக்க பிரியம் உள்ளவர்கள் , அவன் இங்கே இருக்கும் வரையில் பரதனுக்குப் பட்டம் கட்ட முடியாது . மேலும் ராமன் பதினான்கு வருடம் காட்டில் இருந்து திரும்புவதற்குள் , பரதன் ஆட்சியில் நிலைபெற்றுவிடுவான் , பின்னர் உன் மகனே அரசன் , ராமன் அவனுக்குக் கீழ் அடங்கி நிற்க வேண்டியவனே எனக் கூனி சொல்கின்றாள் . கைகேயியின் மனம் மகிழ்வதைக் கம்பர் இவ்வாறு சொல்கின்றார் : “ உரைத்த கூனியை உவந்தனள் உயிர் உறத் தழுவி நிரைத்த மாமணி ஆரமும் நிதியமும் நீட்டி இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு மகற்கு ஈந்தாய் தரைக்கு நாயகன் தாய் இனி நீ எனத் தணியா ” என் ஒரே மகனுக்குக் கடல் சூழ்ந்த இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தைப் பெற்றுத் தந்த நீயே அவன் தாய் என்று சொல்கின்றாளாம் கைகேயி . பின்னர் கூனியின் யோசனைப் படி அவள் கிழிந்த ஆடையை உடுத்திக் கொண்டு , தலையை விரித்துப் போட்டுக் கொண்டு , தன் ஆபரணங்களை எல்லாம் தரையில் வாரி வீசிவிட்டுத் தரையில் படுக்கின்றாள் மிக்க கோபத்தோடு பெருமூச்சு விட்டுக் கொண்டு . மன்னன் தசரதன் இது எதுவும் அறியாதவனாய் , முதலில் கெளசலையின் மாளிகைக்குச் சென்று விஷயத்தைத் தெரிவித்து விட்டுப் பின்னர் சுமித்திரைக்கும் சொல்லிவிட்டுக் கடைசியாக மிகுந்த ஆவலுடனும் , மனம் நிறைந்த மகிழ்ச்சியுடனும் , கைகேயியின் மாளிகையை அடைகின்றான் . அவனுக்கு வாயிலிலேயே அரசி மிக்க கோபத்துடன் இருக்கும் நிலைமை தெரிவிக்கப் படுகின்றது . மனம் பதட்டம் அடைந்த தசரதன் அந்தப் புரத்துக்கு வருகிறான் . ராமன் ஒரு சாதாரண மனிதனாக இருந்தாலும் அவன் இளவரசன் . என்றாலும் அவனுடைய நேர்மையும் , உறுதியும் , வீரமும் எவ்வாறு போற்றப் படுகின்றதோ அதற்குச் சற்றும் குறைவில்லாத வீரமும் , உறுதியும் , நேர்மையும் படைத்தவனாகவே தசரதச் சக்கரவர்த்தியும் இருந்தான் எனினும் பெண்ணாசை அவனை ஆட்டிப் படைக்கின்றது . பொதுவாகவே அரச குலத்தினர் முதலில் திருமணம் செய்து கொள்ளும் பட்ட மகிஷிக்குக் குழந்தை பிறக்கவில்லை எனில் இரண்டாம் திருமணம் செய்து கொள்வது இயல்பே . என்றாலும் தசரதன் மூன்று முறை திருமணம் செய்து கொள்வதோடு அல்லாமல் இளைய மனைவியான கைகேயியிடம் மிக்க அன்பு காட்டுகின்றான் . தன் எல்லைகளை உணர்ந்தவனாகவும் , தர்மத்தை மீறாதவனாகவும் , ஒரு உதாரண புருஷனாகவும் , ராமன் விளங்க , அவன் தகப்பனோ என்றால் ஆசை , கோபம் , காமம் அதனால் விளையும் துக்கம் இவற்றால் பீடிக்கப் பட்டுத் தன் உயிரையும் இழக்கும் நிலைக்கு வந்து விடுகின்றான் . மகன் ஆன ராமனோ இவை அனைத்தையும் வென்று தனக்கு நிகரில்லை எனத் தலை நிமிர்ந்து நிற்கின்றான் . ஆனால் அவனும் சாதாரண மனிதனாய்ச் செய்யும் தவறுகள் ? இருக்கின்றன . இரண்டு மாபெரும் தவறுகள் . ஏன் செய்தான் ? அது நியாயமா ? தர்மம் என்பது இது தானா ? 13 கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 13 தசரதர் செய்த பாபம் என்றால் சிரவணகுமாரனை யாரெனெத் தெரியாத நிலையில் கொன்றது ஒன்றே . பாபம் என்பதை அறியாமல் செய்த அவருடைய அந்தத் தவற்றின் பலனை அவர் இனி அனுபவிக்கப் போகின்றார் . மேன்மை வாய்ந்த மன்னன் ஆனாலும் சரி , கடவுளே , மனிதராய் அவதரித்தாலும் சரி , அவரவர்களின் கர்மவினையை அவரவர்கள் அனுபவித்தே தீரவேண்டும் என்பது இறைவனின் தீர்ப்பு மட்டுமின்றிக் காலதேவனின் நியாயமும் கூட . அந்தப் புரத்துக்குள் செல்லும்போது மிகுந்த மனக்கவலையுடனேயே சென்ற தசரதர் , புயல் காற்றில் அறுந்து விழுந்த பூங்கொடி போல் கீழே படுத்துக் கிடந்த கைகேயியைப் பார்த்து மனம் பதறுகின்றார் . அவள் அருகே அமர்ந்து மெல்ல அவளைத் தூக்கிச் சமாதானம் செய்ய முயலுகின்றார் . ஆனால் கைகேயியோ துள்ளி எழுந்து ஒதுங்கி நிற்கின்றாள் . மனம் வருந்திய மன்னன் அவள் துயரத்தின் காரணம் கேட்க , அவளோ , “ மன்னா , நீங்கள் எனக்கு அளிப்பதாய்ச் சொல்லி இருந்த இரு வரங்களையும் இப்போதே தரவேண்டும் ! தருவதாய் வாக்குக் கொடுத்தால் அவை என்ன எனச் சொல்லுவேன் ” எனக் கேட்கின்றாள் . மன்னனோ , “ தேவி , ராமன் மீது ஆணை ! எது வேண்டுமோ கேள் , என் மகன்களில் நான் அதிகப் பிரியம் வைத்திருப்பவன் ராமன் என்பது உனக்கும் தெரியுமே ? அவன் மீது ஆணை !” என ஆணை இடுகின்றான் , நடக்கப் போவதை அறியாமலேயே . இதைக் கம்பர் , வால்மீகி இருவருமே ஒரே மாதிரியாகச் சொல்கின்றனர் . கம்பர் இவ்வாறு கூறுகின்றார் : “ கள் அவிழ் கோதை கருத்து உணராத மன்னன் வெள்ள நெடுஞ்சுடர் மின்னின் மின்ன நக்கான் உள்ளம் உவந்துள செய்வேன் ஒன்றும் லோபேன் வள்ளல் ராமன் உன் மைந்தன் ஆணை என்றான் .” இவ்விதம் ராமனின் மேல் கைகேயி நிறைந்த அன்பு வைத்திருந்ததையும் வெளிப்படுத்துகின்றார் கம்பர் . பின்னர் கைகேயி தேவாசுர யுத்தத்தில் மன்னனைத் தான் காப்பாற்றிய நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுவிட்டு , அப்போது மன்னன் தருவதாய்ச் சொன்ன இரு வரங்களையும் இப்போது தரவேண்டும் எனக் கேட்கின்றாள் . அவள் சூழ்ச்சி அறியாத மன்னனோ உடனே ஒத்துக் கொள்கின்றான் . உடனேயே கைகேயி , “ இப்போது ராமன் பட்டாபிஷேகத்துக்குச் செய்யப் பட்டிருக்கும் பொருட்களைக் கொண்டே என் மகன் பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்யவேண்டும் . இது முதல் வரம் . இரண்டாம் வரம் என்னவெனில் ராமன் மரவுரி தரித்துப் பதினான்கு வருஷம் காட்டில் வாசம் செய்யவேண்டும் .” எனக் கூறுகின்றாள் . மன்னன் மனம் கலங்கியது . மூர்ச்சித்துக் கீழே விழுந்தான் . அதைக் கம்பர் எவ்வாறு பதிவு செய்கின்றார் எனில் : “ நாகம் எனும் கொடியாள் தன் நாவின் ஈந்த சோக விடம் தொடர துணுக்கம் எய்தா ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து அராவின் வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான் ” நாகப் பாம்பின் நஞ்சைத் தன் நாவிலே வைத்திருக்கும் கைகேயியின் சொற்களைக் கேட்ட மன்னன் , அந்த விஷம் உடம்பில் பரவியதால் விஷம் உண்ட யானையைப் போலத் தரையில் வீழ்ந்தான் என்கின்றார் கம்பர் . மேலும் : “ உலர்ந்தது நா உயிர் ஓடலுற்றது உள்ளம் புலர்ந்தது கண்கள் பொடித்த பொங்கு சோரி சலம் தலைமிக்கது தக்கது என்கொல் என்று என்று அலைந்து அலையுற்ற அரும்புலன்கள் ஐந்தும் !” நாக்கு வரள , உயிர் போகும் நிலையில் , கண்கள் இரத்தக் கண்ணீர் வடிக்க ஒளியிழந்து போய் , தன் ஐம்புலன்களும் அடங்க , இவை செய்யத் தக்க தொழில்கள் என்ன என எண்ணி மனம் சோர்ந்தான் மன்னன் தசரதன் . கைகேயியின் காலில் விழுந்து அவளிடம் கெஞ்சுகின்றான் , ராமனுக்குப் பட்டம் வேணுமானால் கட்டவில்லை , ஆனால் அவன் காட்டுக்குப் போகவேண்டாம் , அவன் என்னைப் பிரிந்தால் அடுத்த கணமே என் ஆவியும் பிரிந்து விடும் என்றெல்லாம் சொல்லிப் பார்க்கின்றான் . கெடுமதியால் மனம் நிறைந்திருந்த கைகேயி இது எதையும் கேட்கவே இல்லை . ஒரே பிடிவாதமாகத் தன் காரியத்தில் உறுதிபட நிற்கின்றாள் . வால்மீகி ராமாயணத்தில் கடைசி வரையிலும் ராமன் காட்டுக்குச் செல்வதை தசரதன் ஒப்புக் கொள்ளவே இல்லை . ஆனால் கம்பரோ எனில் தசரதன் அந்த வரத்தையும் அளித்ததாகவே சொல்கின்றார் : “ நின் மகன் ஆள்வான் , நீ , இனிது ஆள்வாய் , நிலம் எல்லாம் உன் வயம் ஆமே , ஆளுதி தந்தேன் உரை குன்றேன் என் மகன் , என் கண் என் உயிர் எல்லா உயிர்கட்கும் நன்மகன் இந்த நாடு இறவாமை நய என்றான் .” சொன்ன சொல் தவறாமல் பரதனுக்கேப் பட்டம் கட்டுவதாயும் , அனைவருக்கும் பிரியன் ஆன ராமனைக் காட்டுக்கு அனுப்பவேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளும் தசரதனைக் கைகேயி பல விதங்களிலும் ஏசப் பின்வருமாறு சொல்வதாய்ச் சொல்கின்றார் கம்பர் : “ வீய்ந்தாளே இவ் வெய்யவள் என்னா மிடல் வேந்தன் ஈந்தேன் ஈந்தேனிவ்வரம் என் சேய் வனம் ஆள மாய்ந்தே நான் போய் வான் உலகு ஆள்வேன் வசை வெள்ளம் நீந்தாய் நீந்தாய் எஇன் மகனொடும் நெடிது என்றான் .” என் அன்பு மகன் ராமன் காட்டுக்குச் செல்லட்டும் , உனக்கு அந்த வரத்தையும் ஈந்தேன் , பின்னர் நான் மாண்டு போய் விடுவேன் , நீ நீண்ட காலம் உன் மகனோடு சேர்ந்து இந்த நாட்டையும் , உலகையும் , மக்களின் ஏச்சுக்களுக்கிடையே ஆண்டு வருவாயாக ! எனச் சொல்கின்றானாம் தசரத மன்னன் . இது இவ்வாறிருக்க பொழுதும் விடியத் தொடங்க , வசிஷ்டர் , பட்டாபிஷேகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியவராய் தசரதன் மாளிகையை நெருங்க , மன்னனின் அந்தரங்க மந்திரியும் , மெய்க்காப்பாளனும் ஆன சுமந்திரர் வசிஷ்டரை நோக்கிவருகின்றார் . அவரிடம் வசிஷ்டர் மன்னனைப் பட்டாபிஷேகத்துக்குத் தயார் ஆகும்படி சொல்லச் சொல்கின்றார் . சுமந்திரரும் கைகேயியின் அந்தப்புரம் நோக்கிச் சென்று , தசரதரை நோக்கி வசிஷ்டர் சொன்னதைச் சொல்லி விட்டு ஒதுங்கி நிற்க , மனம் நொந்த மன்னன் , சுமந்திரரிடம் உன் வார்த்தைகள் எனக்கு மிக்க துன்பம் அளிக்கின்றது என்று கூறுகின்றான் . அப்போது கைகேயி சுமந்திரரைப் பார்த்து ராமனை உடனேயே மன்னன் பார்க்கவேண்டும் எனச் சொல்லி அழைத்து வரும்படி பணிக்கின்றாள் . ராமாயணம் ஒரு சமுத்திரம் . மூழ்கிக் கொண்டிருக்கிறேன் . முத்தெடுத்துக் கொண்டு வரவேண்டும் . அனைவரின் நல்லாசிகளோடும் , வாழ்த்துகளோடும் . 14 கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 14 ஆர்ஷியா சத்தாரின் ராமாயணத்தை மறந்துட்டேனோன்னு சிலர் நினைக்கலாம் . அப்படி எல்லாம் இல்லை , கடைசியில் அவரின் கருத்துக்களைக் கூடியவரை சொல்லிக் கொண்டே வருகின்றேன் . அவர் எழுதி இருக்கும் கருத்தை ஒட்டிய என் குறிப்புக்கள் மட்டுமே ஒரு 50 பதிவுகளுக்கு வரும் என்பதால் அதிகமாய் எழுதவில்லை . ராமாயணம் எழுதும் நோக்கம் மாறிவிடும் . இந்த அலசல் பற்றிப் பின்னர் நேரம் கிடைக்கும்போது தனியாக எழுதுகின்றேன் . அதோடு ஆரம்பத்தில் இருந்தே ஒப்புவமை செய்ய ஆரம்பிச்சுட்டேன் , நிறுத்த முடியலை , தவிர , வால்மீகி ராமாயண ஸ்லோகம் போடணும் , அதையும் போட்டால் ரொம்பப் பெரிசாப் போகும் , படிக்கிறதுக்குக் கஷ்டமாப் போயிடுமோனு போடலை ! :))))))) உண்மையில் எழுத ஆரம்பிச்சால் நிறுத்தக் கட்டுப்படுத்திக்க வேண்டி இருக்கிறது . மற்றபடி வால்மீகி ராமாயணம் தான் அடிப்படை ! மயங்கிக் கிடக்கும் மன்னனைக் கண்டு மனம் கலங்கிய சுமந்திரரைக் கைகேயி , ராமன் நினைவினால் அவர் தன்னை மறந்த நிலையில் இருப்பதாயும் , அவர் உடனே சென்று ராமனை அழைத்து வருமாறும் கூறுகின்றாள் . கம்பரும் அவ்வாறே கூறுகின்றார் . சுமந்திரரும் ராமனின் அரண்மனைக்குச் சென்று சீதையுடன் உரையாடிக் கொண்டிருந்த ராமரிடம் , கைகேயியின் மாளிகையில் இருக்கும் தசரத மன்னன் அழைத்துவரச் சொன்னதாய்க் கூறுகின்றார் . பட்டாபிஷேகம் தொடர்பாய்ப் பேச அழைத்துவரச் சொல்லி இருப்பதாயும் , தான் சென்று வருவதாயும் , அனைத்தும் நல்ல செய்தியே என்றும் சீதையிடம் தெரிவிக்கும் ராமர் , உடனேயே வெளியே சென்று தசரதனைக் காணக் கிளம்புகிறார் . லட்சுமணன் பின் தொடர்கின்றான் . தெருவில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது . பட்டாபிஷேகத்துக்காக அலங்கரிக்கப் பட்டிருந்த வீதிகளையும் , அலங்காரங்களுடன் வந்த பொதுமக்களைப் பார்த்துக் கொண்டே கைகேயியின் மாளிகைக்குச் சென்றார் ராமர் . ஆனால் கம்பரோ முதலில் தசரதன் மாளிகைக்கு ராமன் சென்றதாயும் , அங்கே மன்னன் இல்லை எனக் கண்டு பின்னர் கைகேயியின் மாளிகையை அடைந்ததாயும் தெரிவிக்கின்றார் . “ ஆண்டு இனையராய் இனைய கூற அடல் வீரன் தூண்டு புரவிப் பொரு இல் சுந்தர மணித் தேர் நீண்ட கொடி மாட நிரை வீதி நிறையப் போய் பூண்ட புகழ் மன்னன் உறை கோயில் புகலோடும் .” அங்கே ஒரு பீடத்தில் அரசன் அமர்ந்திருப்பதையும் , முக வாட்டத்துடன் இருப்பதையும் கவனித்துக் கொண்டார் , ராமர் . தந்தையை வணங்கி நிமிர்ந்தார் . “ ராமா !” என்ற ஒற்றைச் சொல்லுடன் அமைதியானான் மன்னன் தசரதன் . தந்தையின் முகவாட்டத்தைக் கண்டு தன் சிறிய தாயான கைகேயியை ராமன் கேட்டதாய் வால்மீகி கூறுவது : ” தாயே ! நான் அறியாமல் கூட எந்தத் தவறும் செய்யவில்லை என நினைக்கின்றேன் . தந்தை என்னைக் கண்டதும் , முகம் வாடியவராய் ஒரு சொல் கூடப் பேசாமல் இருக்கும் காரணம் என்ன ? தந்தையின் துயரைப் போக்க நான் என்ன செய்யவேண்டும் ?” என்று கேட்பதாய் வால்மீகி கூறக் கம்பரோ எனில் கைகேயி ராமன் வந்த உடனேயே தன் காரியத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்ததாய்க் கூறுகின்றார் . “ நின்றவன் தன்னை நோக்கி இரும்பினால் இயன்ற நெஞ்சின் கொன்று உழல் கூற்றம் என்னும் பெயர் இன்றிக் கொடுமை பூண்டாள் இன்று எனக்கு உணர்த்துதல் ஆவது ஏயதே என்னின் ஆகும் ஒன்று எனக்கு உந்தை மைந்த உரைப்பது ஓர் உரை உண்டு என்றாள் ” ஆனால் அருணகிரிநாதர் இவ்வாறு பூசி மெழுகாமல் உடைத்துச் சொல்கின்றார் , கைகேயியே கூறுவதாய் . மன்னன் சொல்வதாய்க் கம்பரும் , ராமன் என்னவெனக் கேட்பதாய் வால்மீகியும் கூற அருணகிரிநாதரோ , “ எனது மொழி வழுவாமல் நீயேகு கான்மீதில் ” எனக் கைகேயி கூறுவதாய்ச் சொல்லி முடித்துவிடுகின்றார் . வால்மீகியின் கைகேயியோ , ராமனிடம் தசரதன் தனக்குக் கொடுத்த வாக்குறுதிகளைப் பற்றியும் அதை நிறைவேற்ற வேண்டிய வேளை நெருங்கிவிட்டதையும் கூறுவதோடு , தான் அந்த வாக்குறுதி என்ன என்பதைச் சொல்ல வேண்டுமானால் , ராமனிடம் அதை விவரிப்பதால் பயன் இல்லை என்ற அவலம் தோன்றாமல் பார்த்துக் கொள்ளுவதாய் ராமனை உறுதி மொழி கேட்கின்றாள் . சத்திய நெறியைக் கடைப்பிடிக்கும் ராமரோ , தான் அந்த வாக்கைக் கொடுப்பதாயும் , மன்னனின் துக்கம் மாற தீயில் புகவோ , விஷம் அருந்தவோ , கடலில் மூழ்கவோ எதுவானாலும் தயார் எனவும் , சொன்ன சொல்லை மாற்ற மாட்டேன் எனவும் உறுதி கொடுக்கின்றார் . பின்னர் கைகேயி தான் வரம் வாங்கிக் கொள்ள நேர்ந்த சந்தர்ப்பங்களை விவரித்து விட்டு , அந்த இருவரங்களைத் தான் இப்போது மன்னனிடம் கேட்டதாயும் கூறுகின்றாள் . மேலும் ராமனைப் பார்த்து அவள் கூறுவதாவது : ராமா ! உனக்குப் பதிலாக என் மகன் பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்யவேண்டும் எனவும் , நீ காட்டுக்குச் சென்று பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்யவேண்டும் எனவும் மன்னனிடம் நான் இரு வரங்கள் கோரி உள்ளேன் . அந்த வரங்கள் பூர்த்தி அடைவது உன் கையில் தான் உள்ளது . நீ மரவுரி தரித்து , சடை முடி தாங்கிக் காட்டில் வாழவேண்டும் , இதை எவ்வாறு சொல்வது என்றே உன் தந்தை தயங்குகின்றார் . அவர் சத்தியத்தில் இருந்து தவறாமல் இருக்கும்படி அவர் மூத்த மகனாகிய நீதான் பார்த்துக் கொள்ளவேண்டும் . தசரத மன்னன் கொடுத்த வரங்களைக் காப்பாற்றுவான் என்ற பெயர் அவருக்கு நிலைக்குமாறு நீதான் செய்யவேண்டும் !” என்று சொல்ல , மன்னன் தசரதன் “ ஓ “ வெனப் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிக்கின்றான் . மன்னனின் துக்கம் பெருகுகின்றது . ஆனால் ராமனோ இதைக் கேட்டுச் சற்றும் கவலையின்றி , “ தாயே ! நீங்கள் கூறியவையே நடக்கும் . பரதனுக்காக நான் எதையும் விட்டுக் கொடுப்பேன் . ஆனால் தந்தை என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருக்கின்றாரே , அது தான் துக்கமாய் உள்ளது . மன்னர் உத்தரவின் படியே நான் நடப்பேன் . பரதனை அழைத்து வரத் தூதர்களை அனுப்பச் சொல்லுங்கள் . நான் வனம் செல்கின்றேன் .” என்று கூறியதும் கைகேயி உடனேயே காரியம் நிறைவேற வேண்டும் எனக் கவலை அடைந்தாள் . “ இப்பொழுது எம்மனோரால் இயம்புதற்கு எளிதே யாரும் செப்ப அருங்குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின் ஒப்பதே முன்பு பின்பு அவ்வாசகம் உணரக் கேட்ட அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா .” என்று ராமனின் முகம் அன்றலர்ந்த செந்தாமரையை ஒத்திருந்ததாய்க் கம்பர் இந்தக் காட்சியை வர்ணிக்கின்றார் . பரதன் வரும் வரையில் தாமதிக்க வேண்டாம் எனவும் , உடனேயே புறப்படுமாறும் கைகேயி அவசரப் படுத்துகின்றாள் என வால்மீகி ராமாயணத்தில் வால்மீகி சொல்கின்றார் . தந்தை தன்னிடம் நேரில் சொல்லவில்லையே என மனம் நொந்த ராமர் , கைகேயியிடம் என்னிடம் நல்ல குணம் உண்டு என நீங்கள் மனதில் கொள்ளவில்லையா ? நீங்களே நேரில் எனக்குக் கட்டளை இட்டாலும் நான் செய்ய வேண்டியவனே அல்லவா ? இவ்விஷயத்தில் மன்னரை வேண்டி நிற்றல் தகுமோ ? பரவாயில்லை !” என்று சொல்லிவிட்டு , இருவரையும் வலம் வந்து வணங்கிவிட்டுப் பின்னர் புறப்படும்போது பெரும் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நிற்கும் லட்சுமணனைக் கண்டார் . பல இந்தியக் குழந்தைகளுக்கும் படுக்கை நேரக் கதையான இந்த ராமாயணக் கதையின் கதாபாத்திரங்களை வடித்திருக்கும் நேர்த்திக் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய விதத்தில் உள்ளது . ஒரு பேரரசனுக்கு மகனாய்ப் பிறந்தும் , பட்டத்து இளவரசனாய் இருந்தும் , ஒரு பேரழகியை மணந்தும் இருக்கும் கதாநாயகன் ஆன ஸ்ரீராமன் ஒரு சாதாரண மனிதனாகவே தன்னை எண்ணிக் கொள்வதோடு அல்லாமல் அப்படியே நடந்தும் கொள்கின்றான் . ஆனால் எவ்வாறு ? மிக்கக் கட்டுப்பாடுகள் நிறைந்த ஒருவனாய் , ஒழுக்கத்தில் சிறந்தவனாய் , கோபம் என்பதே இல்லாதவனாய் , பெரியோர்களிடத்தில் மரியாதை நிறைந்தவனாய் , பெற்றோரை மதிப்பவனாய் , மனைவியை உயிராய்க் கொள்பவனாய் , சகோதரர்களிடத்தில் பாசம் மிகுந்தவனாய் , நாட்டு மக்களைத் தன் மக்களாய் நினைப்பவனாய் இவ்வாறாகப் பூரணமான நற்குணங்கள் அனைத்தும் நிரம்பப் பெற்றவனாய் , ஒரு முன் மாதிரியான மகனாய் , சகோதரனாய் , கணவனாய் , எல்லாவற்றுக்கும் மேலே ஒரு அரச குமாரனாய் , அரச நீதியைப் போற்றுபவனாயும் , காப்பாற்றுபவனாயும் உள்ளான் , இதனுள் ஒளிந்திருக்கும் அவன் வாழ்க்கையின் தனிப்பட்ட சோகங்கள் தான் எத்தனை ? எத்தனை ? அவன் சந்திக்கப் போகும் மனிதர்களின் வாழ்விலும் எத்தனை விதங்கள் ? ஒரு தகப்பன் - மகன் , சகோதரர்களின் உறவின் முறையில் வித்தியாசங்கள் , நட்பின் வட்டத்தில் மாற்றம் , நட்பின் ஆழம் , கணவன் , மனைவியின் உறவின் ஆழம் , பிரிவின் துக்கம் , தன்மதிப்பின் விளைவுகள் , தனிப்பட்ட வாக்குறுதிகளின் விளைவுகள் , இனக்கவர்ச்சி , ஏமாற்றுதல் , ஒரு தலைக்காதல் , அதன் விளைவால் ஏற்பட்ட பழிகள் , சுமந்த பாவங்கள் , பேரிழப்புகள் , அரசனின் கடமை , நேர்மை , குணநலன்கள் , என்று அனைத்தையும் பற்றியும் , அதன் வித்தியாசங்களையும் இந்தக் கதையின் பாத்திரங்களிடையே நாம் பார்த்தாலும் கடைசில் நாம் காணப் போவது , ஒரு தனிமனிதனின் நல் ஒழுக்கத்தினால் வெளிப்படும் / ஏற்படும் அவன் உறவுகளின் தனிப்பட்ட சோகங்களே . 15 கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 15 கைகேயியிடம் இருந்து விடைபெற்றதுமே ஸ்ரீராமர் தன் பரிவாரங்களையும் , தன் தேரையும் , தன் அரச மரியாதைக்குரிய சின்னங்களையும் துறந்து , அம்மாளிகையில் இருந்து கால்நடையாகவே தன் பெற்ற தாயான கோசலையின் மாளிகைக்குச் சென்றார் . கூடவே கண்ணீருடன் லட்சுமணன் பின் தொடர்கின்றான் . இங்கே கைகேயியின் மாளிகைப் பெண்டிரிடையே பெரும் கலக்கம் ஏற்பட்டிருந்தது . ராமர் கோசலையின் மாளிகையை அடைந்து அந்தப் புரம் வந்து சேர்ந்து தாயை வணங்கினார் . பெற்ற மகனின் பட்டாபிஷேகத்துக்காக விரதம் இருந்த கோசலை தன் மகனை ஆசீர்வதித்தாள் . உடனே ராமர் தாயிடம் கைகேயியின் மூலம் தனக்கு இடப்பட்ட கட்டளையைக் கூறித் தான் தண்டகாரண்யம் செல்லத் தயார் செய்யப் போவதாய்க் கூறவும் , கோசலை மூர்ச்சை அடைந்து விட்டாள் . மூர்ச்சை தெளிந்த அவளைச் சமாதானப் படுத்துகின்றார் ராமர் . அதைக் கண்டு லட்சுமணன் கதறி அழுகின்றான் . தசரதரைப் பற்றிப் பெண்ணாசையில் மனம் மயங்கியவர் என்றெல்லாம் சொல்கின்றான் . ராமனை உடனேயே போர் தொடுக்குமாறு கூறுகின்றான் . அயோத்தி மக்களே எதிர்த்தால் கூடத் தான் தனி ஒருவனாய்ப் போரிட்டு பரதனைத் தன் அம்புக்கு இரையாக்குவதாய்க் கூறுகின்றான் , இளையவன் ஆன லட்சுமணன் . பாரபட்சம் காட்டுபவன் ஆச்சார்யனாகவே இருந்தாலும் , தவறான பாதையில் செல்பவனும் ஆச்சார்யனாகவே இருந்தாலும் , தந்தையாகவே இருந்தாலும் எதிர்க்கத் தக்கவர்களே , அவர்களை அடக்கலாம் என்றே சாத்திரங்கள் சொல்லுவதாய்க் கூறுகின்றான் . தசரதரைக் கொன்று ராமனை நாடாள வைப்பதாய்ச் சபதம் செய்கின்றான் , கோசலையிடம் . இதைக் கம்பர் எவ்வாறு கூறுகின்றார் என்று பார்க்கலாமா ? ராமன் தன் மாளிகைக்குத் தன்னந்தனியே வரும்போதே கோசலை அறிந்ததாய்க் கம்பர் கூறுகின்றார் : “ குழைக்கின்ற கவரி இன்றி கொற்ற வெண்குடையும் இன்றி இழைக்கின்ற விதி முன் செல்ல தருமம் பின் இரங்கி ஏக மழைக்குன்றம் அனையான் மெளலி கவித்தனன் வரும் என்று என்று தழைக்கின்ற உள்ளத்து அண்ணாள் முன் ஒரு தமியன் சென்றான் .” “ புனைந்திலன் மெளலி குஞ்சி மஞ்சனப் புனித நீரால் நனைந்திலன் என் கொல் என்னும் ஐயத்தாள் நளின பாதம் வனைந்த பொன் கழற்கால் வீரன் வணங்கலும் குழைந்து வாழ்த்தி நினைந்தது என் இடையூறு உண்டோ நெடு முடி புனைதற்கு என்றாள் ” ராமன் தன்னந்தனியே வருவதைப் பார்த்துவிட்டுக் கோசலை சந்தேகத்துடன் ராமனைக் கேட்பதாய்ச் சொல்லும் கம்பர் , கூடவே “ தருமம் பின் இரங்கி ஏக ” என்றும் சொல்லுவதில் இருந்து இது தர்மத்தை மீறிய ஒரு செயல் என்றும் சுட்டிக் காட்டுகின்றார் . என்றாலும் ராமனின் தர்மம் அவனைக் கைவிடாமல் அவன் பின்னாலேயே வருகின்றதாம் . இவ்வாறு பலவிதங்களில் அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம் . தவிர , ராமன் பரதனின் பட்டாபிஷேகம் நடக்கவேண்டும் எனக் கைகேயி கேட்டதைச் சொன்னதும் கோசலை ராமனிடம் , “ நீ மூத்த மகனாய் இருந்தாலும் பரதன் உன்னைக் காட்டிலும் , பல மடங்கு உத்தம குணங்கள் நிரம்பியவன் ” என்று சொல்வதாயும் கூறுகின்றார் . “ முறைமை அன்று என்பது ஒன்று உண்டு மும்மையின் நிறை குணத்தவன் நின்னினும் நல்லனால் குறைவு இலன் எனக் கூறினள் நால்வர்க்கும் மறு இல் அன்பினில் வேற்றுமை மாற்றினாள் ” அத்தோடு நில்லாமல் மன்னனின் கட்டளை அதுவானால் மகனே அதை நிறைவேற்றுவது உன் கடமை எனவும் சொல்கின்றாளாம் . “ என்று பின்னரும் மன்னவன் ஏவியது அன்று என்னாமை மகனே உனக்கு அறன் நன்று நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து ஒன்றி வாழுதி ஊழி பல என்றாள் .” கம்பர் மட்டுமே பெருந்தன்மையோடு இல்லாமல் அவர் தம் பாத்திரங்களும் போட்டி போட்டுக் கொண்டு பெருந்தன்மையாகவே நடக்கின்றார்கள் . இது தமிழின் அழகா ? காவியத்தின் அழகா ? ஆனால் வால்மீகியோ ராமன் இல்லாமல் தான் வாழப் போகும் வாழ்க்கை பற்றியும் இளையாள் ஆன கைகேயி தன்னை எவ்வாறு நடத்துவாளோ எனக் கலங்கியதாகவும் , லட்சுமணனின் உதவியால் ராமன் காட்டுக்குச் செல்லாமல் , இங்கேயே காட்டு வாழ்க்கைக்கு உரிய நெறிமுறைகளோடு வாழலாம் எனவும் , காட்டுக்கு ராமன் செல்ல தான் அனுமதிக்க முடியாது எனவும் தன் பேச்சை ராமன் கேட்கவில்லை எனில் தான் உயிரை விட்டு விடுவதாயும் அந்தப் பாவம் ராமனை வந்து சேரும் எனவும் ஒரு சாதாரணத் தாயானவள் தன் மைந்தனிடம் எவ்வாறு கூறுவாளோ அவ்வாறே சொல்கின்றார் . கடும் முயற்சிக்குப் பின்னரே ராமர் தன் தாய் , தன் சகோதரன் லட்சுமணன் இருவரையும் சமாதானம் செய்கின்றார் . அப்படியும் கோபம் அடங்காத லட்சுமணன் திரும்பத் திரும்ப வாதாடுகின்றான் , ராமனிடம் . கோசலைக்கும் அவள் பத்தினி தர்மத்தை ராமர் எடுத்துச் சொல்கின்றார் . கணவனை விட்டுப் பிரியாத பெண்ணே நல்ல மனைவி என்றும் , தன் கணவனுக்குப் பணிவிடை செய்து வாழவில்லை எனில் அவள் மிகுந்த பாவியாகக் கருதப் படுவாள் எனவும் சொல்லி அவளைத் தேற்றப் பின்னர் அரை மனதுடனேயே கோசலை இணங்குகின்றாள் எனினும் துக்கம் அவளை வாட்டுகின்றது . தன்னைப் பிரிந்து பதினான்கு வருஷம் காட்டிலே வாழப் போகும் மகனுக்கு வேறு வழியில்லாமல் ஆசிகளும் , வாழ்த்தும் சொல்லுகின்றாள் . அவ்வளவில் ராமர் தன் மனைவியிடம் விடைபெற்று வரச் செல்லுகின்றார் . அங்கே சீதையோ எனில் ராமன் வரவுக்குக் காத்திருந்தாள் . ராமரைக் கண்டதுமே அவளுக்கு ஏதோ விபரீதம் எனப் புரிகின்றது . பின்னர் ராமர் அனைத்தையும் அவளுக்கு எடுத்துச் சொல்லித் தன் தாய் கோசலை , தசரதனின் மற்ற மனைவிமார் , தசரதன் , மற்றும் தன் தம்பிமார் அனைவரையும் சீதை நன்கு பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் , பரதனுக்கு மன வருத்தம் ஏற்படுமாறு நடந்து கொள்ள வேண்டாம் எனவும் சொல்லி அவளைப் பிரிந்து தான் மட்டும் காடு செல்ல ஆயத்தம் ஆகும் வேளையில் சீதை ராமரைப் பார்த்துச் சொல்கின்றாள் : “ நீங்கள் காட்டுக்குச் செல்ல நான் மட்டும் இங்கே இருப்பது என்ன வகையில் நியாயம் ? உங்கள் தாய்க்கு நீங்கள் சொன்ன விதிமுறைகள் எனக்கும் பொருந்துமல்லவா ? மேலும் என் ஜாதகத்தைப் பார்த்த சிலர் எனக்குக் காட்டு வாழ்க்கை உண்டு எனவும் கூறி இருக்கின்றார்கள் . ஆகவே நானும் வருவேன் .” எனக் கேட்க ராமர் மறுக்கின்றார் . இப்போது சீதைக்கு வேறு வழியில்லாமல் ராமரைக் குத்திக் காட்டிப் பேசும் நிலை ஏற்படுகின்றது . அவள் வாதத்தைக் கேட்டு ராமரும் வேறு வழியின்றிச் சம்மதிக்கவே , லட்சுமணனும் ராமர் , சீதையுடன் வனவாசத்திற்குத் தயார் ஆகின்றான் . ஆதி காவியம் என அழைக்கப் படும் இந்தக் காவியத்தின் விதியின் அரங்கேற்றம் ஆரம்பம் ஆகும் நேரமிது . இதை ராமர் ஒரு அவதார புருஷர் என்றால் ஏன் தடுக்கவில்லை ? சாமானிய மக்களால் இன்றும் கேட்கப் படும் ஒரு கேள்வி . ஏனெனில் ராமர் தன்னைக் கடைசிவரையிலும் ஒரு அவதார புருஷனாகவே உணரவில்லை . அவன் சொல்லால் , செயலால் , நினைப்பால் , தன் நடத்தையால் தான் ஒரு சாமானிய மனிதன் என்றே நினைத்துக் கொண்டிருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது வால்மீகி ராமாயணமெங்கும் . அவனுடைய பிறப்பின் நோக்கமே இராவண வதம் என்றாலும் அதற்கும் ஒரு காரணத்தையும் , காரியத்தையும் கற்பிக்காமல் சும்மா வெறுமே ராம , ராவண யுத்தம் நடைபெறுவதில்லை . இதற்கு அனுகூலமாகக் கதையில் அங்கங்கே வரும் கடவுளரும் , முனிவர்களும் , அவர்கள் கொடுக்கும் வரங்களும் , பெறப்படும் சாபங்களும் , அவற்றின் பலன்களும் துணை போகின்றன . எந்தக் காரியமும் ஒரு தகுந்த காரணமில்லாமல் நடக்கக் கூடாது என்பதில் விதி மட்டுமின்றி ராமாயணக் கதா பாத்திரங்களும் , அந்தக் காரணங்களையும் , காரியங்களையும் நோக்கியே மெதுவாக நகர்த்தப் படுகின்றனர் . ஆனாலும் கதைப் படி அவர்கள் அதை உணரவில்லை . எனில் உணர்ந்திருந்தால் ? ராமன் தான் ஒரு அவதார புருஷன் எனத் தெரிந்து கொண்டிருந்தால் ? கதையின் போக்கே மாறி இருக்காது ? தன் மனசாட்சியை மறைத்துத் தான் ஒரு அவதாரம் என்பதைக் கடைசி வரை உணராத ஒரு நேர்மையான அரசனின் வாழ்வில் நேர்ந்த துயரங்கள் நடைபெறாமால் போயிருக்கும் சாத்தியங்கள் உண்டல்லவா ? ஒரு பேருண்மைக்குள்ளே தன் காவியத் திறனைப் பொதிந்து வைத்துக் கவி காவியத்தினுள் மறைந்திருக்கும் ஸ்ரீராமனின் தெய்வீகத் தன்மையை அவனுக்கே உணர்த்த முயலுகின்றாரோ ? 16 கதை கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 16 “ பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது ஒருவுகின்றனை ஊழி அருக்கனும் எரியும் என்பது யாண்டையது ஈண்டு நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு என்றாள் .” கணவன் பிரிவினை விடக் காடு சுடுமோ எனக் கேட்ட சீதை உடனேயே உள்ளே சென்று மரவுரியை அணிந்து கொண்டு ராமனுக்கு முன்பே தயார் ஆகிவிட்டதாய்க் கம்பர் கூறும் இந்தக் காட்சி வால்மீகியில் இருந்து முற்றிலும் வேறுபடுகின்றது . வால்மீகி சொல்வதைப் பார்ப்போம் . கணவனின் துன்பத்தை அவனுடன் பகிர்ந்து கொள்வதே தனக்கும் இன்பம் எனச் சொன்ன சீதையைப் பார்த்து இராமன் , உன் பிறந்த குலத்துக்கும் , புகுந்த குலத்துக்கும் ஏற்ற முடிவையே எடுத்திருப்பதாய் அவளிடம் சொல்லிவிட்டு , அவள் பொருட்கள் , ஆடை , ஆபரணங்கள் , மற்ற செல்வங்கள் அனைத்தையும் தானம் செய்துவிட்டுத் தயாராக இருக்கும்படி கூறுகின்றார் . இருவர் பேச்சையும் கேட்டு விம்மி அழுத லட்சுமணனைச் சமாதானம் செய்துவிட்டு அவனைத் தாய்மார்களைப் பத்திரமாய்ப் பார்த்துக் கொள்ளும்படிச் சொல்ல , அவனோ மறுக்கின்றான் . பரதன் நன்கு பார்த்துக் கொள்வான் என்றும் அப்படி இல்லை எனில் தான் அவனை அழித்து விடுவேன் என்றும் சொல்லும் லட்சுமணன் , தான் ராமனுடன் காட்டுக்கு வந்து , அவனுக்கு முன்னால் சென்று , அவனும் சீதையும் செல்லும் காட்டுப் பாதையைச் சீரமைத்துத் தருவதாயும் , அவர்களுக்குக் காவல் இருப்பதாயும் , உண்ணத் தகுந்த பொருட்களைத் தேடித் தருவதாயும் ஆகையால் தானும் கட்டாயம் வரப் போவதாயும் சொல்ல , ராமன் மனம் நெகிழ்ந்து இசைகின்றார் . அவனிடம் ராமன் ஜனகரிடம் வருணன் ஒப்படைத்த இரு தெய்வீக விற்கள் , மற்றும் துளைக்க முடியாத இரு கேடயங்கள் , தீர்ந்து போகாத அம்புகள் தாங்கும் இரு அம்புராத் தூணிகள் , ஒளி வீசும் இரு கத்திகள் ஆகியவற்றைக் குருவான வசிஷ்டரிடம் இருந்து பெற்று வருமாறு கூறுகின்றார் . பின்னர் ராமரும் தன் செல்வங்களை எல்லாம் தானம் செய்யத் தொடங்கினார் . பின்னர் ராமர் , தன்னுடன் லட்சுமணனையும் , சீதையையும் அழைத்துக் கொண்டு மன்னன் தசரதனிடம் விடைபெறச் சென்றார் . நாட்டு மக்களுக்குத் துயரம் பொங்கியது . தெருவில் மக்கள் கூட்டமாய்க் கூடி நின்று கைகேயியைத் தூஷிக்கின்றனர் . அனைவரும் ராமனையும் , லட்சுமணனையும் நாமும் பின் தொடர்ந்து காட்டுக்கே சென்றோமானால் பிழைத்தோம் . இல்லை எனில் கொடுங்கோல் அரசியான கைகேயியின் ஆட்சியில் நம்மால் வாழ முடியாது . காட்டில் நாம் ஸ்ரீராமனுடன் சந்தோஷமாய் வாழ்வோம் . என்று பேசிக் கொள்கின்றனர் . கைகேயியின் மாளிகைக்குச் சென்ற ராமர் சுமந்திரரிடம் தசரத மன்னனைத் தான் காண வந்திருப்பதாய்த் தெரிவிக்குமாறு சொல்ல , மன்னனால் அழைக்கப் பட்டு மூவரும் செல்கின்றனர் . ராமனைக் கண்டதும் ஓடிச் சென்று தன்னிரு கைகளால் அணைக்க முயன்ற மன்னன் துக்கம் தாளாமல் கீழே விழ , சுமந்திரரால் எழுப்பி அமர்த்தப் பட்டான் . விடை பெறும் வகையில் பேசிய ராமனைக் கண்ட மன்னன் , “ ராமா ! நீ என்னைச் சிறை எடு ! இந்த ராஜ்யம் உன்னுடையது ! மன்னனாக முடி சூட்டிக் கொள் !” என்று கதறக் கைகேயியோ மீண்டும் மீண்டும் தன் கோரிக்கையை வற்புறுத்துகின்றாள் . சுமந்திரர் கைகேயியை மனமாரத் திட்ட ஆரம்பித்தார் . கேகய மன்னன் ஆன கைகேயியின் தந்தை பிராணிகள் பேசுவதைப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவர் என்றும் , ஒருமுறை எறும்பு பேசுவதைக் கேட்டு அவர் சிரிக்கவும் , கைகேயியின் தாயானவள் , என்ன விஷயம் என்று கேட்க , அது ரகசியம் எனவும் , அதை வெளியே சொன்னால் என் உயிர் போய்விடும் என்றும் கேகய மன்னன் சொல்ல , உன் உயிர் போனாலும் பரவாயில்லை , எனக்கு அந்த ரகசியம் சொல்லவேண்டும் எனக் கைகேயியின் தாய் வற்புறுத்தியதாகவும் , கேகய மன்னனோ , வரம் தந்த குருவை ,” மனைவி கேட்கிறாளே , என்ன செய்யலாம் ?” எனக் கேட்க , குருவானவர் , “ உன் மனைவி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் , உன் வாக்கைக் காப்பாற்றுவாய் ! ரகசியத்தை வெளியே சொல்லாதே !” எனக் கூறியதும் , கேகய மன்னன் தன் மனைவியைக் கைவிட்டதாயும் , அந்தத் தாயின் குணமே கைகேயியிடம் இருப்பதாயும் சொல்லிக் கடுமையான வார்த்தைகளால் சாடுகின்றார் . எனினும் கைகேயி மனம் மாறவே இல்லை . ராமன் காட்டில் வாழச் சகல வசதிகளும் செய்து தரவேண்டும் எனத் தசரதர் கூறக் கோபம் கொண்ட கைகேயி , செல்வங்கள் இல்லாத ராஜ்யம் என் மகனுக்கு எதற்கு என்று கொடுமையாகக் கூற , சித்தார்த்தர் என்னும் மூத்த அமைச்சரும் கைகேயியைக் கடுமையாகக் கண்டனம் செய்கின்றார் . அவர்களை சமாதானப் படுத்திய ராமர் மண்வெட்டி , கூடை , மரவுரி ஆகியவை இருந்தால் போதுமெனக் கூறவும் உடனேயே கைகேயி சற்றும் தாமதிக்காமல் சென்று அனைத்தையும் தயாராகக் கொண்டுவர , ராமனும் , லட்சுமணனும் மரவுரியை அணிந்து கொள்கின்றனர் . பழக்கமில்லாத சீதை தடுமாற ராமர் தாமே அவளுக்கு அணிவிக்கின்றார் . அந்தக் காட்சியைப் பார்த்து தசரதன் முதலான அனைவரும் கதறி அழ , குலகுருவான வசிஷ்டர் கோபம் மிகுந்தவராய்க் கைகேயியிடம் , ” ஏ , கெடுமதியால் நிறைந்த கைகேயியே ! சீதை தான் நாட்டை ஆளப் போகின்றாள் . கணவன் வெளிநாடோ , அல்லது போர் முதலான முக்கிய காரியங்களில் ஈடுபட்டிருந்தாலோ பட்ட மகிஷி பொறுப்பைச் சுமப்பாள் . அவ்வாறு சீதை நாட்டை ஆள்வாள் . அவள் காட்டுக்குச் செல்ல மாட்டாள் . நீ பரதனையோ , சத்ருக்கனனையோ அறியவில்லை . இவர்கள் காட்டுக்குச் சென்றதை அறிந்தால் அவர்களும் அங்கேயே சென்றுவிடுவார்கள் . இந்த அயோத்தி மாநகரே சென்று விடும் . நீ ராமனைத் தானே காட்டுக்குப் போகச் சொன்னாய் , சீதையைச் சொல்லவில்லையே ?” என்று பலவாறாக எடுத்துச் சொல்லியும் வாய் திறவாமல் மெளனம் சாதிக்கின்றாள் கைகேயி . ராமரோ சற்றும் கலங்காமல் தன் தகப்பன் ஆன மன்னன் தசரதனிடம் தன் பிரிவால் மனம் நொந்து போயிருக்கும் தன் தாய் கோசலையைக் கைவிடாமல் பார்த்துக் கொள்ளும்படி வேண்ட , மன்னன் தசரதன் பொக்கிஷத்தில் இருந்து விலை உயர்ந்த ஆடை , ஆபரணங்களை எடுத்து வந்து சீதைக்கு அளிக்கும்படி சுமந்திரரிடம் கட்டளை இட , அவ்வாறே சுமந்திரரும் அளிக்கின்றார் . பின்னர் , பெரியோர்கள் அனைவரும் தனக்குச் சொன்ன புத்திமதிகளைக் கேட்டுக் கொண்ட சீதை தான் அவ்வாறே நடந்து கொள்வதாய் உறுதி அளித்ததும் சுமந்திரர் , “ பதினான்கு வருடம் இந்த நிமிடத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது . கிளம்பலாம் .” என உத்தரவிட , மன்னன் ஆணையின் பேரில் தயாராக வைக்கப் பட்டிருந்த ரதம் அங்கே வர , சுமந்திரர் தேரோட்டியின் ஸ்தானத்தில் அமர்ந்தார் . ராமன் , சீதையுடனும் , லட்சுமணனுடனும் தேரில் ஏறி அமர , அயோத்தியின் மக்களின் கூக்குரல்களுக்கு இடையில் தேர் கிளம்பியது . மக்கள் வழியில் தேரை நிறுத்தி ராமனைப் பார்த்துப் புலம்புகின்றார்கள் . ஒரு பெருங்கூட்டம் தேரைப் பின் தொடர்ந்தது . சுமந்திரர் கைகேயியைக் கடிந்ததாய்க் கம்பர் சொல்லவில்லை எனினும் வசிஷ்டர் கடிந்து கொண்டதாய் அவரும் சொல்கின்றார் . ஆனால் சற்று முன்பின்னாக வருகின்றது இது . தாயிடம் விடைபெற்று ராமன் சென்றதுமேயே கோசலை கைகேயியின் மாளிகையை அடைந்ததாயும் அவள் அழுகுரல் கேட்டு அங்கே வந்த வசிஷ்டர் விஷயங்களைத் தெரிந்து கொண்டு கைகேயியை இவ்வாறு கடிந்து கொண்டதாயும் கம்பர் கூறுகின்றார் . அதன் பின்னர் பல பாடல்களுக்குப் பின்னரே ராமர் , சீதை வனவாசம் புகுதல் நடைபெறுகின்றது . கம்பர் கூறுவது : “ கொழுநன் துஞ்சும் எனவும் கொள்ளாது உலகம் எனவும் பழி நின்று உயரும் எனவும் பாவம் உளது ஆம் எனவும் ஒழிகின்றிலை அன்றியும் ஒன்று உணர்கின்றிலை யான் இனிமேல் மொழிகின்றன என் என்னா முனியும் முறை அன்று என்பான் .” ‘கணவன் நிலையை எண்ணாமலும், உலகமக்கள் சொல்லும் பழிச்சொல்லை எண்ணாமலும், பிறர் சொல்லும் நல்லுரையைக் கேட்காமலும் இருக்கும் கைகேயியே! உனக்கு இனி எதைச் சொல்வது!” எனக் கேட்கும் வசிஷ்டர் மேலும்: “ கண்ணோடாதே கணவன் உயிர் ஓடு இடர் காணாதே புண்ணூடு ஓடும் கனலோ ? விடமோ என்னப் புகல்வாய் பெண்ணோ ? தீயோ ? மாயாப் பேயோ கொடியாய் நீ ; இம் மண்ணோடு உன்னோடு என் ஆம் ? வசையோ வலிதே !” என்றான் .” உன் கணவன் இறக்கப் போவதைக் கூட எண்ணாமல் , புண்ணுக்குள் புகும் நெருப்பைப் போல் , நஞ்சைப் போல் , தாட்சண்யம் இல்லாமல் பேசும் நீ ஒரு பெண்ணா ? இல்லை பேயா ? ஊழிக் காலத் தீயா ? கொடியவளே ? நீ இவ்வுலகில் வாழத் தகுதி அற்றவளே !” என்று கடும் சொற்களைச் சொல்லுகின்றார் . சிலரின் சந்தேகங்களை நிவர்த்தி செய்துவிட்டு அடுத்த பகுதிக்குப் போவோம் , முதலில் ஸ்கந்த புராணம் பற்றியது ! வால்மீகி ராமாயணத்தில் அதன் குறிப்புக்கள் இருக்கின்றதா என்று கேட்கின்றனர் . அது பற்றி பால காண்டத்தில் வருகின்றது . விசுவாமித்திரர் ராமனையும் , லட்சுமணனையும் அழைத்துச் செல்கின்றார் . அப்போது , தாடகையின் வதமும் , சுபாஹூ , மாரீசனை வெற்றி கொண்டதற்கும் பின்னர் மிதிலையில் ஜனகரின் யாகத்தில் கலந்து கொள்ளச் செல்லும் முன்னர் , ராம , லட்சுமணர்களுக்கு விசுவாமித்திரர் சில சம்பவங்களையும் , அதை ஒட்டிய வரலாற்றையும் கூறுவதாய் வருகின்றது . அப்போது அவர் தன் குலத்தைப் பற்றியும் தன் சகோதரியான கெளசிகியைப் பற்றியும் , அவள் இப்போது நதியாக ஓடுவது பற்றியும் , கூறிவிட்டு , சோன் நதியைக் கடந்து கங்கையை அடையும்போது கங்கையின் வரலாற்றையும் கூறுகின்றார் . கங்கை மூன்று வழியாகப் பாயத் தொடங்கியது பற்றிக் கூறும்போது அவர் , பரமேஸ்வரனின் அதோமுகத்தில் இருந்து தோன்றிய நெருப்புப் பொறிகளின் வீரியம் தாங்கமுடியாமல் அக்னி அதைக் கங்கையிடம் ஒப்புவிக்க , கங்கையானவள் அதைத் தாங்கிச் சென்று தன் தகப்பன் ஆன இமவானின் அடிவாரத்தில் விட , அதில் இருந்து உருவாகும் தெய்வமகனே “ ஸ்கந்தன் ” என அழைக்கப் பட்டதாயும் , அவனை வளர்க்கும் பொறுப்பை கிருத்திகை நட்சத்திரத்துத் தேவதைகளிடம் கொடுத்ததால் “ கார்த்திகேயன் ” எனவும் பெயர் பெற்றான் என்றும் கூறுகின்றார் . விழுந்தவன் என்ற அர்த்தத்தைக் கொடுக்கக் கூடிய “ ஸ்கந்தன் “ என்று பெயர் பெற்ற அவனே பின்னாளில் அசுரர்களை வென்று தேவ சேனாபதியாக ஆனான் எனவும் , ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்ததாலும் , இறைவனின் நேரடி அம்சம் என்பதாலும் ஆறு முகங்களைப் பெற்றான் என்றும் அந்தச் சுப்ரமணியனின் உற்பத்திக்குக் “ குமார சம்பவம் ” என்றும் பெயர் எனவும் கூறுகின்றார் . இந்தக் கார்த்திகேயனின் வாழ்க்கைச் சரிதம் பாவங்களில் இருந்து விடுதலை அளிக்க வல்லது என்றும் கூறுகின்றார் . அடுத்த சந்தேகம் “சீதை என்ன குத்திப் பேசினாள் ராமரிடம் !” என்றே ! கம்பர் வெகு சுலபமாய் ஒரே பாடலுடன் இதைத் தாண்டி விடுகின்றார் . ஏனெனில் அவர் நோக்கில் சீதையும் ஒரு அவதாரமே . அந்த ஸ்ரீ என்னப் படும் மகாலட்சுமியே அவதாரம் செய்திருக்கையில் கம்பர் அவளை இகழ்ந்து ஒரு சொல் சொல்வாரா என்ன ? “ கொற்றவள் அது கூறலும் கோகிலம் செற்றது அன்ன குதலையாள் சீறுவாள் உற்று நின்ற துயரம் இது ஒன்றுமே என் துறந்தபின் இன்பம் கொலாம் என்றாள் “ உன்னை அடைந்து உன்னோடு இருக்கும் துன்பம் நான் வருகின்றது என்றால் நான் இல்லை என்றால் , என்னைப்பிரிந்து சென்றால் எல்லாம் இன்பம் ஆகுமோ ?” என்று கேட்கின்றாள் சீதை . ஆனால் வால்மீகியோ இன்னும் ஒருபடி மேலும் போய் , சீதை ராமனைப் பார்த்து , ராமர் காட்டுக்கு வரவேண்டாம் எனக் காரண , காரியங்களையும் , கடமைகளையும் சுட்டிக் காட்டி மறுத்த பின்னர் , “ ஏ , ராமா ! நீர் சுத்த வீரன் என்றெண்ணி அல்லவோ என் தந்தையான ஜனகர் என்னை உமக்குத் திருமணம் செய்து கொடுத்தார் ? நீர் என்ன ஆண் வடிவை ஏற்ற ஒரு பெண்ணா ? என்னை இங்கே விட்டுச் செல்வதன் மூலம் உம் வீரத்துக்கு இழுக்கு நேரிடும் என்பதை மறந்தீரோ ? உமக்குத் தைரியம் இல்லை என அயோத்தி மாநகர் பூராவும் பேச நேரிடுமே ? உம்மையே நம்பி வந்திருக்கும் என்னை விட்டுச் செல்ல என்ன காரணம் குறித்து உமக்கு அச்சம் நேரிடுகின்றது ? மனதினால் கூடப் பிறரை நினையாத நான் உம்மை விட்டுப் பிரிந்து எவ்வாறு உயிர் வாழ்வேன் ? நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் . அதோடு குலத்திற்குக் களங்கம் நேரிடும் வகையில் நான் நடக்க மாட்டேன் . காட்டிலே கிடைக்கும் கிழங்குகளோ , கனிகளோ அவையே எனக்கு அமிர்தம் ! நீர் என்னை இங்கே விட்டுச் சென்றீரானால் நான் உடனே விஷம் குடித்து இறப்பேன் ! அதன் பின்னரும் உயிர் வாழமாட்டேன் !” என்று கடுமையாகச் சொல்வதாய் வால்மீகி கூறுகின்றார் . நம் அன்றாட வாழ்வில் நடக்கும் கணவன் , மனைவி உரையாடல் போன்ற ஒன்றையே வால்மீகி சுட்டிக் காட்டுகின்றார் . ஏனெனில் அவரளவில் ராமன் ஒரு அவதாரம் இல்லை , அவதாரம் என்பதை அவன் உணரவும் இல்லை . ஆகவே வாதப் பிரதிவாதங்களும் , நிகழ்வுகளும் ஒவ்வொரு அரச குடும்பத்திலும் நடைபெறும் தன்மையாகவே காட்டுகின்றார் . 17 கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 17 கோசலை பெரிதும் விம்மி அழ , சுமித்திரை அனைவரையும் தேற்ற , தசரத மன்னனோ தேரைத் தொடர்ந்து , “ ராமா , லட்சுமணா , சீதா !” எனக் கதறியபடி பின் தொடர சுமந்திரர் தேரை ஓட்டினார் . ராமர் தேரை வேகமாய் ஓட்டுமாறு சுமந்திரரிடம் சொல்ல தேரும் வேகமாய் ஓட ஆரம்பித்தது . பின் தொடர்ந்த தசரதரைத் தடுத்த மந்திரிமார் , “ ராமன் வனவாசம் முடிந்து சுகமாய்த் திரும்ப வேண்டுமானால் , நெடும்பயணம் மேற்கொண்டிருக்கும் அவனைத் தொடர்ந்து தாங்கள் செல்வது சாஸ்திர விரோதம் !” எனக் கூறித் தடுக்கின்றார் . துளசி ராமாயணத்தில் இந்நிகழ்ச்சிகள் பெரும்பாலும் சுருக்கமாகவே சொல்லப் பட்டிருப்பதாய்த் தெரிகின்றது , மேலும் முதன் முதலில் காசிக்குச் சென்ற குமரகுருபரர் மூலமே கம்பனின் ராமாயணம் பற்றி அறிய வந்த துளசிதாசர் அதன் பின்னரே தாமும் “ ராம சரித மானச ” என்னும் காவியத்தை எழுதியதாகவும் , ஆகவே அவர் பாடல்களில் பெரும்பாலும் ராமனும் , சீதையும் தெய்வங்களாகவே காட்டப்பட்டிருப்பதாயும் அறிகின்றோம் . தேரோடு ஓடிய தசரத மன்னன் தன் மந்திரிகளால் தடுக்கப் பட்டவன் , அரண்மனைக்குத் திரும்பும் வழியில் கீழே விழுந்து விட கோசலையும் , கைகேயியும் சேர்ந்து அவரைத் தூக்க முயல தசரதர் , கைகேயியைத் தடுக்கின்றார் . “ நீ என் மனைவியே அல்ல ! உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை ! பரதன் ஒருவேளை இந்நாட்டை ஏற்றானாகில் , நான் இறந்தபின்னர் அவன் எனக்கு அளிக்கும் கடன்கள் என்னை வந்து அடையாமல் போகட்டும் ! ஒரு விதவையாக நீ இந்நாட்டை அனுபவித்துக் கொண்டு வாழ்வாயாக !” என்கின்றார் . தேர் அயோத்தியின் எல்லையைக் கடந்து விட்டது என்ற செய்தி மன்னனுக்கு வந்து சேர , கதறி அழுத மன்னன் , “ கோசலை , எங்கே இருக்கின்றாய் ? எனக்குத் திடீரெனக் கண் தெரியாமல் போய்விட்டதே ? என்னை உன் இருப்பிடம் கொண்டு செல் !” எனக் கூறக் கோசலையின் மாளிகை வந்து சேருகின்றார்கள் அனைவரும் . அப்போது அறிவிற் சிறந்த , மிக்க ஞானம் உடையவள் ஆன சுமித்திரை தன் தெளிவான பேச்சால் அனைவரையும் தேற்றுகின்றாள் : “ ராமன் காட்டுக்குச் செல்வது குறித்து வருந்த வேண்டாம் , இதனால் அவனுக்குப் பெருமையே , காடும் அவனுக்கு நாடாக மாறும் , காற்றும் தென்றலாய் வீசும் , சூரிய , சந்திரர்கள் அவனுக்கு மகிழ்வையே தருவார்கள் . அவனுக்குத் துரதிர்ஷ்டம் என்பதே இல்லை . கோசலை நீ அனைவருக்கும் ஆறுதல் சொல்வதிருக்க இவ்வாறு துக்கத்தில் ஆழலாமா ?” என்றெல்லாம் சொல்கின்றாள் . இது இங்கே நிற்கட்டும் . காட்டுக்குச் சென்று கொண்டிருந்த ராமர் தன்னைப் பின் தொடர்ந்த மக்களைப் பார்த்து நாட்டுக்குத் திரும்புமாறு கேட்க மக்கள் மறுத்து ராமரைப் பின் தொடர்கின்றனர் . தமஸா நதிக்கரையை அடைந்த ராமரின் தேர் அன்றிரவு அங்கே ஓய்வெடுக்க வேண்டி நிற்கிறது . அப்போது சுமந்திரரிடம் ராமன் , மக்கள் நன்கு அயர்ந்து தூங்கும்போது நதியைக் கடந்துவிடவேண்டும் எனவும் , மக்களுக்குத் தெரியவேண்டாம் எனவும் , தேரை அயோத்தி நோக்கிச் சற்று தூரம் ஓட்டிவிட்டுப் பின்னர் வேறுவழியாக வந்து அழைத்துச் செல்லுமாறும் கூறுகின்றார் . அம்மாதிரியே சுமந்திரரும் செய்ய கோசல நாட்டையும் , அதன் கிராமங்கள் , நகரங்கள் , நதிகளையும் கடந்து கங்கைப் பிரதேசத்துக்குத் தேர் வந்து சேர்கின்றது . ராமர் அங்கே சுமந்திரரைப் பிரிய எண்ணுகின்றார் . ஆனால் கம்பரோ முதன் முதல் தேர் நிற்கும் இடத்திலேயே சுமந்திரர் பிரிந்ததாய்க் கூறுகின்றார் . அதன் பின்னர் ராமன் , தன் இளவல் லக்குவனோடும் , சீதையோடும் காட்டுவழியில் இரண்டு யோசனைகள் இரவில் வழி நடந்ததாய்க் கூறுகின்றார் . “ தையல் தன் கற்பும் தன் தகவும் தம்பியும் மை அறு கருணையும் உணர்வும் வாய்மையும் செய்ய தன் வில்லுமே சேமமாகக் கொண்டு ஐயனும் போயினான் அல்லின் நாப்பணே !” இவ்விதம் காட்டு வழியில் சென்றவர்கள் உதயத்தில் இரண்டு யோசனை தூரம் கடந்ததாய்த் தெரிவிக்கும் கம்பன் இவ்வாறு கூறுகின்றார் : “ பரிதி வானவனும் கீழ்பால் பருவரை பற்றாமுன்னம் திருவின் நாயகனும் தென்பால் யோசனை இரண்டு போனான் அருவி பாய் கண்ணும் புண்ணாய் அழிகின்ற மனமும் தானும் துரித மான் தேரில் போனான் செய்தது சொல்லலுற்றாம் .” என்று சொல்லிவிட்டுப் பின் சுமந்திரரைப் பின் தொடர்கின்றார் கம்பர் . நாம் வால்மீகியின் கருத்துப் படி ராமன் என்ன செய்தான் என்று பார்ப்போம் . கங்கைக் கரையை வந்தடைந்தனர் ராம , லட்சுமணர்கள் சீதையோடு , அங்கே அப்போது ஸ்ருங்கவேரபுரம் என்னும் இடத்தில் தங்க முடிவு செய்கின்றனர் . அந்த இடத்தின் அரசன் ராமனின் நீண்ட நாள் நண்பன் என்றே வால்மீகி கூறுகின்றார் . நிஷாதார்கள் என்னும் அந்த வம்சத்தைச் சேர்ந்த மன்னன் ஆன குகன் என்பவன் ராமன் வந்திருப்பதை அறிந்து தன் மந்திரி , பரிவாரங்களுடன் கால்நடையாகவே ராமனை நோக்கி வந்தானாம் . அதைப் பார்த்த ராமன் தன் நண்பனைக் காணத் தம்பியோடு வேகமாய் எழுந்து ஓடிச் சென்று கட்டித் தழுவிக் கொண்டாராம் . ராமரை வரவேற்ற குகன் ஏராளமான தின்பண்டங்களையும் , காய் , கனிகளையும் அளிக்கின்றானாம் . ஆனால் ராமன் தாம் விரதம் மேற்கொண்டதைச் சொல்லி அதை மறுத்துவிட்டுத் தண்ணீர் மட்டுமே அருந்திவிட்டு ஓய்வெடுக்க , குகன் காவல் புரிகின்றானாம் . கூடவே காவல் இருந்த லட்சுமணனைக் குகன் படுக்கச் சொல்லியும் படுக்காமல் குகனிடம் தங்கள் குடும்ப நிலவரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றானாம் லட்சுமணன் . பொழுது விடிந்தது . கங்கையைக் கடக்க வேண்டும் . குகனின் உதவியால் படகு ஒன்று கொண்டு வரப்படுகின்றது . அனைவருக்கும் அதாவது , சுமந்திரர் , குகன் மற்றும் அவன் பரிவாரங்கள் அனைவருக்கும் தசரதனுக்குப் பின் நாடாளப் போகும் பரதனுக்குக் கீழ்ப்படியுமாறு சொல்லிவிட்டுத் தன்னை அங்கேயே தங்கச் சொல்லும் குகனின் வேண்டுகோளை மறுக்கின்றார் . மேலும் ஆலமரத்தின் பாலைக் குகனை விட்டுக் கொண்டுவரச் சொல்லி , அதை முடியில் தடவி , லட்சுமணனும் , ராமனும் சடை முடி தரித்துக் கொண்டனராம் . பின்னர் குகனின் ஆட்கள் படகைச் செலுத்த கங்கையைக் கடக்கின்றனர் . கடந்து அக்கரையை அடைந்து லட்சுமணனை முன் போகச் சொல்லி , சீதையை நடுவில் விட்டு ராமர் பின் தொடரப் பயணம் தொடர்கின்றது . காட்டில் ஒரு மரத்தடியில் இரவைக் கழிக்கத் தீர்மானிக்கின்றனர் . 18 கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 18 குகனைப் பொறுத்த மட்டில் அவன் ஒரு சிற்றரசன் என்றும் ராமனின் நெடுநாள் நண்பன் எனவும் வால்மீகி கூறக் கம்பரோ ஆயிரக்கணக்கான ஓடங்களை உடைய ஒரு ஓடக் கூட்டத்தின் தலைவன் என வர்ணிக்கின்றார் , மேலும் வால்மீகி தராத ஒரு சிறப்பையும் அவர் குகனுக்குத் தருகின்றார் . ராமனைக் குகன் அப்போதே அறிவதாய்க் கூறும் கம்பர் மேலும் குகனே ஓடத்தை ஓட்டிக் கங்கையைக் கடக்க உதவுவதாய்ச் சொல்லும் கம்பர் , மேலும் ஒரு படி போய் , அவனிடம் தான் ராமன் சித்திரகூடம் செல்லும் வழியைக் கேட்டதாய்க் கூறும் கம்பர் , இவை அனைத்துக்கும் மேலாய் அவனை ஸ்ரீராமன் ஒரு சகோதரனாய் வரித்ததாயும் கூறுகின்றார் இவ்வாறு : “ துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது ? அது அன்றிப் பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல் முன்பு உளெம் ஒரு நால்வெம் முடிவு உளது என உன்னா அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம் ” என்று ராமன் குகனைப் பார்த்து , நாங்கள் நால்வர் சகோதரர்களாய் இருந்தோம் உன்னைப் பார்க்கும் முன்னர் . ஆனால் இப்போது உன்னோடு சேர்ந்து நாம் ஐவர் என்றாராம் . இதற்கு முன்னாலேயே தசரதன் உயிர் நீங்குவது பற்றிக் குறிப்பிடுகின்றார் கம்பர் . ஆனால் வால்மீகி நடந்ததை நடந்தபடியே கூறுகின்றார் . கம்பருக்கு ராமன் ஒரு அவதார புருஷன் , வால்மீகிக்கு அவர் காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதன் , அவ்வளவே ! காட்டில் தங்கிய ராமர் தன் தாயையும் , தகப்பனையும் பிரிந்து இருப்பதைப் பற்றியும் தன் தாயையும் , தகப்பனையும் கூடக் கைகேயி துன்புறுத்துவாளோ என்றும் அஞ்சிப் புலம்ப ஆரம்பித்தார் என்று சொல்கின்றார் வால்மீகி . பெண்மாயையால் தகப்பன் மனம் மாறியதைக் குறிப்பிட்டுக் கூறும் ராமர் , லட்சுமணனை உடனே அயோத்தி திரும்பித் தாய்மாரையும் , தந்தையையும் பார்த்துக்கொள்ளச் சொல்லி வேண்டுகின்றார் . லட்சுமணன் ராமரைப் பிரிய மறுக்க இவ்வாறு பேசிக் கொண்டே இரவு கழிகின்றது என்கின்றார் வால்மீகி . இதைப் பார்க்கும்போது , ராமாயண யுகத்திற்குப் பின்னர் , மற்றொரு யுகம் கழிந்தும் பல நூற்றாண்டுகள் ஆகிய பின்னர் , ஸ்ரீராமனை ஒரு தெய்வமாகவே போற்றி வாழும் நமக்குக் கொஞ்சம் ஆச்சரியம் மட்டுமின்றி , ஜீரணிக்கவும் முடியாது தான் . ஆனால் ஒரு மனிதனாய் வாழ்ந்து வந்தார் ராமர் என்ற நோக்கிலே பார்க்கவேண்டும் . மனிதனுக்கே உரிய குணாதிசயங்கள் அவரிடமும் நிரம்பி இருந்தது என்பதே உண்மை ! ராமன் என்ற தெய்வமா இப்படிச் செய்தது என்ற குழப்பத்தைக் கொண்டு வராமல் , நாமாக இருந்தாலும் இப்படித் தானே நடப்போம் என நினைத்தால் குழம்பவே மாட்டோம் . கதையின் போக்கிற்கும் , பின்னால் வரக்கூடிய வாலி வதம் , சீதையின் அக்னிப்ரவேசம் போன்ற இடங்களில் ராமனின் போக்கைப் புரிந்து கொள்ள இது உதவும் என்பதாலேயே இந்தக் குறிப்பு இங்கே தரப் படுகின்றது . குறைகள் இல்லாத மனிதனைப் படைக்கவே இல்லை , நம் இதிகாசங்களோ , புராணங்களோ . அந்தக் குறைகளை வென்று முன்னேறுவது பற்றித் தான் அவை சொல்கின்றன . இதையும் நினைவில் கொள்ளவேண்டும் . தன் பேச்சில் , குணத்தில் , செய்கைகளில் அங்கங்கே சாதாரண மனிதன் போல் குறைகள் கொண்டிருந்த ஸ்ரீராமன் சுய தர்மத்தைச் சற்றும் வழுவாமல் , சொன்ன சொல் தவறாமல் , நேர்மையின் வடிவமாய்த் திகழ்ந்ததாலேயே அவனுக்குப் பெருமை ! இது அவனுக்கு ஒரு சிறுமை அல்ல . பின்னர் அங்கிருந்து கங்கை , யமுனை சேருமிடம் அது , அதன் அருகில் உள்ள பிரயாகையில் தான் பரத்வாஜர் ஆசிரமம் உள்ளது எனத் தெரிந்து கொண்டு ராம , லட்சுமணர்கள் அங்கே சென்று பரத்வாஜரைப் பணிந்து வணங்கி , ஆசி பெற்றுவிட்டு , அவர்கள் வசிக்கத் தகுந்த இடம் சொல்லுமாறு கூற பரத்வாஜரோ அங்கே தங்கும்படி வேண்டுகின்றார் . அயோத்திக்கு இவ்வளவு அருகாமையில் தான் வசிக்க விரும்பவில்லை என ராமர் கூற பின் அவரும் அங்கிருந்து சித்ரகூடம் என்னும் இடத்துக்குச் செல்லும் வழியைக் கூறுகின்றார் . இரவுப் பொழுதை பரத்வாஜரின் ஆசிரமத்தில் கழித்துவிட்டுப் பின்னர் யமுனையை ஒரு கட்டுமரத்தின் உதவியால் கடந்து மூவரும் சித்ரகூடம் செல்கின்றனர் . அங்கே உள்ள வால்மீகியின் ஆசிரமத்தை அடைந்து அவரிடம் ஆசி பெற்றுவிட்டுப் பின்னர் தங்குமிடம் தேர்ந்தெடுத்து மால்யவதி நதிக்கரையில் இறைவனை முறைப்படி பூஜித்து ஒரு பர்ணசாலையை லட்சுமணன் நியமிக்க , அதிலும் முறைப்படியான வழிபாடுகளை நடத்திவிட்டு அதில் தங்க ஆரம்பிக்கின்றனர் , மூவரும் . இங்கே கங்கைக் கரையில் ராமனிடம் இருந்து விடைபெற்ற குகன் தன் இருப்பிடம் திரும்புகின்றான் . அவன் ஆட்கள் , ராம , லட்சுமணர்கள் பரத்வாஜ முனிவரின் ஆசிரமம் அடைந்து , அங்கிருந்து சித்ரகூடம் சென்றதை அவனிடம் தெரிவிக்க அவனும் சுமந்திரருக்குச் செய்தியைக் கொடுக்க அதைப் பெற்ற சுமந்திரரும் நாடு திரும்ப ஆயத்தம் ஆகின்றார் . ராமன் இன்றி அயோத்தி திரும்பிய சுமந்திரரை மக்கள் வெள்ளம் சூழ்ந்து கொள்ள , அதை சமாளித்துக் கொண்டு அரண்மனை சென்ற அவரிடம் கோசலை தன் மகனைப் பற்றி விசாரிக்கின்றாள் . சுமந்திரரைப் பார்த்ததுமே தசரதன் மயக்கமுற்றுத் தரையில் விழ , கோசலையோ , “ கைகேயி ஏதும் நினைத்துக் கொள்வாளோ என்ற எண்ணத்தால் பேசாமல் இருக்கின்றீர்களோ ?” எனக் கடுமையாகக் கேட்கின்றாள் . ராமனும் , சீதையும் பெரியோரை வணங்கிப் பேசிய பேச்சையும் , லட்சுமணனின் அடங்காக் கோபத்தையும் எடுத்து உரைத்த சுமந்திரர் , மக்களும் மிகுந்த துயரத்தை அடைந்திருப்பதாய்த் தெரிவிக்கின்றார் . அதை ஏற்றுக் கொள்ளும் தசரதர் மிக்க வேதனையுடனேயே பேசுகின்றார் . ராமனிடமும் , சீதையிடமும் தன்னை அழைத்துச் செல்லச் சொல்கின்றார் . முதலில் கடுமையாகப் பேசிய கோசலையோ இப்போது அவரைத் தேற்ற ஆரம்பிக்கின்றாள் . என்றாலும் அவளுக்கு மீண்டும் மகன் பிரிவு என்னும் துயர் வாட்ட , “ நீரும் ஒரு அரசனா ? அரச லட்சணங்கள் உம்மிடம் உள்ளதா ? ராமனை இவ்வாறு நாடு கடத்தியதன் மூலம் நீர் என்னையும் அழித்ததோடு அல்லாமல் இந்தக் கோசல நாட்டையும் அழித்துவிட்டீர் !” என்றெல்லாம் சொல்கின்றாள் . பின்னர் தசரதரும் அவளிடம் மன்னிப்புக் கேட்க அவளும் மன்னிப்புக் கேட்க இப்படியே பொழுது அஸ்தமிக்கின்றது , கொடும் இரவும் வருகின்றது . ராமன் காடு சென்ற ஆறாம் நாள் இரவில் தசரதனுக்குத் தாம் செய்த அந்தக் கொடுஞ்செயல் , முனிகுமாரனை , யானை என நினைத்துத் தான் அம்பு எய்தியதும் , அதனால் வீழ்ந்த முனிகுமாரன் இறந்ததும் , அவன் பெற்றோரிடம் சென்று தான் உண்மையை உரைத்ததும் , அதனால் அவர்களின் சாபம் தனக்குக் கிட்டவில்லை எனவும் , இல்லை எனில் இந்த ரகுவம்சமே அழிந்து பட்டிருக்கும் , என் தலை ஆயிரம் சுக்கல் ஆகி இருக்கும் , ஆனால் என் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் தப்பினேன் என்றும் நினைவு கூருகின்றான் . மேலும் அந்த முனிகுமாரனின் பெற்றோர் தங்கள் ஒரே மகன் இறந்து உயிர் வாழ விரும்பாமல் தசரதனையே அவர்களையும் கொல்லுமாறு கூறியதையும் பின்னர் பிரிவு தாங்காமல் மகனுக்காகச் சிதை வளர்த்து அதில் இருவரும் விழுந்து உயிர் விட்டதையும் உயிர் விடுமுன்னர் தனக்கு அளித்த சாபத்தையும் நினைவு கூருகின்றார் . முனிவர் சாபம் ஆனது :” மகனைப் பிரிந்து நாங்கள் படும் துன்பம் போல் உனக்கும் நேரும் . நீயும் உன் மகனைப் பிரிந்து அந்தப் பிரிவின் காரணமாய் உயிர் விடுவாயாக . எவ்வாறு உன் நற்காரியங்களின் பலனை நீ அனுபவிக்கின்றாயோ , அவ்வாறே உன் தவறுகளின் விளைவுகளையும் ஏற்றுத் தான் தீரவேண்டும் .” என்று கூறியதை நினைவு கூர்ந்தான் . இவ்வாறு இரவு பூராவும் புலம்பிய மன்னன் பின்னர் இறந்தான் . வால்மீகியில் ராமன் காட்டுக்குச் சென்ற ஆறாம் நாள் தசரதன் இறந்ததாய்ச் சொல்லப் படுகின்றது . ஆனால் கம்பர் ராமன் , சீதையுடன் தேரில் ஏறிச் சுமந்திரருடன் புறப்பட்ட அன்றே இறந்துவிட்டதாய்த் தெரிவிக்கின்றார் . மேலும் முனிவர் சாபம் கொடுக்கும்போது வால்மீகியின் கூற்றுப் படி தசரதன் திருமணமே ஆகாத ஒரு இளைஞன் , ஆனால் கம்பர் சொல்வதோ , மகனைப் பிரிந்து அந்தச் சோகத்தினால் இறப்பாய் என முனிவர் சாபம் இட்டதால் தனக்கு ஒரு மகன் நிச்சயம் உண்டு என்ற ஆனந்தம் வந்ததாய்த் தெரிவிக்கின்றார் இவ்வாறு : நகர் நீங்கு படலம் : பாடல் எண் 378& 379: “ தாவாது ஒளிரும் குடையாய் தவறு இங்கு இது நின் சரணம் காவாய் என்றாய் அதனால் கூடிய சாபம் கருதேம் ஏவா மகவைப் பிரிந்து இன்று எம்போல் இடர் உற்றவை நீ போவாய் அகல் வான் என்னாபொன் நாட்டிடை போயினரால் .” மன்னனே தன் தவறை ஒத்துக் கொண்டதால் சாபம் கடுமையாகக் கொடுக்க விரும்பாத முனி தம்பதிகள் , நீ ஏவல் சொல்லாமலேயே குறிப்பறிந்து பணிபுரியும் ஒரு மகனைப் பெற்று அவனைப் பிரிந்து நாங்கள் இப்போது துன்புறுவது போலவே நீயும் துன்புற்று மடிவாய் !” என்று கூறிவிட்டு இருவரும் இறந்ததாய்ச் சொல்கின்றான் . பின்னர் : “ சிந்த தளர்வுற்று அயர்தல் சிறிதும் இலெனாய் இன்சொல் மைந்தன் உளன் என்றதனால் மகிழ்வோடு இவண் வந்தனெனால் அந்த முனி சொற்றமையின் அண்ணல் வனம் ஏகுதலும் எம்தம் உயிர் வீகுதலும் இறையும் தவறா என்றான் “ நானோ அச்சாபத்தால் மனம் தளராமல் அப்போது நமக்கு ஒரு அரிய நற்குணங்களுடன் கூடிய மகன் பிறப்பான் என்று எண்ணம் வந்ததால் மன மகிழ்வோடேயே அயோத்தி திரும்பினேன் . இப்போது ராமன் காட்டுக்குப் போவதும் உறுதி , அவனைப் பிரிந்து நான் இறப்பதும் உறுதி என்று சொல்கின்றான் . இவ்விதம் பெண்ணாசையால் மதி இழந்த மன்னன் தசரதன் தன் மைந்தர் நால்வரில் ஒருவர் கூட அருகிருந்து பணிவிடை செய்ய முடியாமல் இறந்தான் . அவன் உடல் பாதுகாக்கப் பட்டு பரதனின் வரவுக்குக் காத்திருந்தது . ஏற்கெனவேயே துக்கத்தில் ஆழ்ந்த அயோத்தி மக்கள் மேலும் துக்கத்தில் ஆழ்ந்தனர் . 19 கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 19 ராமன் காட்டுக்குச் சென்ற ஆறு நாட்கள் கழிந்த பின்னரே தசரதன் இறந்ததாய் வால்மீகி குறிப்பிடக் கம்பரோ சுமந்திரர் திரும்பி வந்து , தன்னுடன் ராமன் வரவில்லை எனக் கூறியதுமே உயிர் பிரிந்ததாய்க் கூறுகின்றார் . சுமந்திரர் திரும்பியதுமே வசிஷ்டர் முகத்தைப் பார்த்ததுமே மன்னன் இவ்வாறு நினைத்தானாம் : தைலமாட்டு படலம் : பாடல் : 582, 583 “ இல்லை என்று உரைக்கலாற்றான் ஏங்கினன் முனிவன் நின்றான் வல்லவன் முகமே நம்பி வந்திலன் என்னும் மாற்றம் சொல்லலும் அரசன் சோர்ந்தான் துயர் உறு முனிவன் நான் இவ் அல்லல் காண்கில்லேன் என்னா ஆங்கு நின்று அகலப் போனான் .” என வசிஷ்டர் பதில் ஏதும் கூறாமல் மெளனமாய் இருந்ததை வைத்தே ராமன் வரவில்லை என அறிந்த தசரதனின் உயிரானது அக்கணமே பிரிந்தததாம் : “ நாயகன் பின்னும் தன் தேர்ப்பாகனை நோக்கி நம்பி சேயனோ அணியனோ என்று உரைத்தலும் தேர் வலானும் வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும் போயினன் என்றான் என்ற போழ்தத்தே ஆவி போனான் ” ராமனும் , லட்சுமணனும் சீதையுடனேயே மூங்கில்கள் ஓங்கி வளர்ந்த காட்டுக்குள்ளே சென்று மறைந்தனர் என்று சுமந்திரன் கூறியதைக் கேட்ட உடனேயே தசரதன் உயிர் பிரிந்ததாம் . உடனேயே மன்னனின் உயிரற்ற உடல் பாதுகாக்கப் பட்டது . வசிஷ்ட முனிவரின் தலைமையில் அமைச்சர்களும் , மந்திரி பிரதானிகளும் , மற்ற முனிவர்களும் ஒன்று கூடி அடுத்து நடக்க வேண்டிய காரியத்தைப் பற்றி ஆலோசித்து , வசிஷ்டரின் யோசனையின் பேரில் பரதனுக்கு உடனே அயோத்தி திரும்பி வருமாறு தூதர்களை அனுப்ப முடிவு செய்தார்கள் . இங்கே நடந்த விபரங்களைச் சொல்லாமலேயே உடனே திரும்புமாறு உத்தரவிட்டால் போதும் எனவும் தெரிவிக்கப் பட்டது . அவ்வாறே தூதர்கள் கேகய நாடு கிளம்பிச் சென்றார்கள் . அங்கே கேகய நாட்டிலோ பரதன் இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவித்துக் கொண்டிருந்தான் . முதல்நாள் இரவு முடியும் சமயம் அவன் கண்ட கனவு அவனை அவ்வாறு தவிக்க வைத்துக் கொண்டிருந்தது . தன் தந்தையான தசரத மாமன்னர் கழுதை பூட்டிய ரதத்தில் இரும்பு ஆசனத்தில் அமர்ந்து தென் திசை நோக்கிச் சென்று கொண்டிருந்ததைக் கண்டதாகவும் , மலை உச்சியில் இருந்து கீழே விழுவது போலவும் கனவு கண்டதாகவும் சொல்லி வருந்திக் கொண்டிருந்தான் . அப்போது அங்கே வந்த சிலர் அவனிடம் அயோத்தியில் இருந்து தூதுவர்கள் வந்திருப்பதாய்க் கூற அவனும் அவர்களைச் சந்திக்கின்றான் . அவர்கள் அவனை உடனே நாடு திரும்புமாறு மந்திரி , பிரதானிமார் வேண்டுகோள் , குல குருவான வசிஷ்டரும் அவ்வாறே சொல்லி அனுப்பி இருப்பதாய்த் தெரிவிக்க , பரதனோ தன் தாயான கைகேயியைச் சுயநலம் பிடித்தவள் எனக் கூறி அவள் நலமா என விசாரிக்கின்றானாம் . சித்திரகூடத்தில் ராம , லட்சுமணர்கள் , சீதையுடன் சுகமாய் வாழ்வதாய்த் தெரிவித்த பின்னரே , கம்பர் பரதனுக்கு வருகின்றார் . கேகய நாட்டில் இருந்து அவன் அயோத்தி வந்து சேர ஒரு வாரம் ஆகின்றதாம் , கம்பர் , வால்மீகி இருவரின் கூற்றுப் படி ! வால்மீகியும் , சில நதிகள் , சில , பல கிராமங்கள் , பல நந்தவனங்கள் ஆகியவற்றைக் கடந்து பரதன் வந்ததாய்த் தெரிவிக்கின்றார் . உள்ளே வரும்போதே பல துர்ச் சகுனங்கள் தென்படுகின்றதாம் பரதனுக்கு . சந்தேகத்தோடு தந்தையைக் காணக் கைகேயியின் மாளிகையை அடைகின்றான் பரதன் . பரதனைக் கண்ட கைகேயி , தன் பிறந்த வீட்டையும் , அங்கு உள்ள உறவினர்களையும் பற்றி விசாரிக்க , பரதனோ , தந்தை எங்கே , என்றும் , அவரைத் தான் உடனே வணங்க வேண்டும் எனவும் கூற , தந்தை இறந்தார் என மிகச் சாதாரணமாகத் தெரிவிக்கின்றாள் கைகேயி . பரதன் அதிர்ச்சியோடு துக்கமும் அடைந்து , கடைசியில் ,” தந்தை என்ன கூறினார் ?” என வேண்ட கைகேயியும் ,” ராமா , சீதா , லட்சுமணா !” எனக் கூவிக்கொண்டே உயிரை விட்டார் உன் தந்தை ,” என மகிழ்வுடன் கூறிக் கொண்டே , ராமனும் , சீதையும் , லட்சுமணனும் மரவுரி தரித்துக் காட்டுக்குச் செல்ல நேர்ந்த நிகழ்ச்சிகளை பரதனுக்கும் சந்தோஷம் தரும் என நினைத்துச் சொல்கின்றாள் . ராமன் காட்டுக்கு அனுப்பப் பட்ட காரணம் கேட்ட பரதனிடம் கைகேயி தன் இரு வரங்களைத் தான் மன்னனிடம் யாசித்தது பற்றிச் சொல்லவும் , கோபம் கொண்ட பரதன் கைகேயியைப் பலவாறு நிந்தித்துப் பேசலானான் . தன் தாயைப்பார்த்து பரதன் , “ பாம்பினும் கொடியவளே ! உன்னாலன்றோ தந்தை இறந்தார் ? தமையன் காட்டிற்குச் சென்றான் . அவனுக்கு நான் மனதில் எத்தகைய இடம் கொடுத்திருக்கிறேன் என்பதை நீ அறிந்திருந்தாயானால் இவ்விதம் செய்திருப்பாயா ? முன்னோர்களின் ராஜ்யம் மூத்தவனுக்கே உரியது என்பது இக்ஷ்வாகு குலத்தில் உள்ள மாறுபடாத ஒரு வழக்கம் . அதை மாற்ற நீ யார் ? ராஜ மரபை மதிக்காத நீயும் ஒரு ராணியா ? புண்ணியவான்களை முன்னோர்களாய்க் கொண்ட குடும்பத்தில் பிறந்த நீயா இம்மாதிரியான காரியம் செய்தாய் ? ஆஹா , மகனைப் பிரிந்து மன்னர் எவ்வளவு வேதனையில் துடி துடித்து இறந்திருப்பார் ? கோசலை தேவியும் , அன்னை சுமித்திரையும் தத்தம் மகன்களைப் பிரிந்து எவ்வாறு துக்கத்தில் மூழ்கி இருப்பார்கள் ? கன்றைப் பிரிந்த பசுப் போல் கோசலை துடிப்பாரே ? அவர் எவ்விதம் இனி உயிர் வாழ்வார் ? இக்கேடு கெட்ட செயலுக்கு நான் காரணம் என்றல்லவோ ஆகிவிட்டது ? நான் இனி எவ்விதம் என் தாயார்கள் முகத்தையோ , சகோதரர்கள் முகத்தையோ , தேவி சீதையையோ பார்ப்பேன் ? அடி , பாவி , அழியாத பழியை என் மீது சுமத்தி விட்டாயே ? நீ இந்த ராஜ்யத்தை விட்டுப் போனால் தான் அனைவருக்கும் நிம்மதி !” என்றெல்லாம் கோபமாய்ப் பேசிவிட்டுத் தன் மூத்த இரு தாயார்கள் ஆன சுமித்திரையையும் , கோசலையையும் காணப் புறப்படுகின்றான் , சத்ருக்கனனுடன் . அப்போது கோசலையே அங்கே பரதனின் கோபக் குரல் கேட்டு வருகின்றாளாம் , நடக்கக் கூட முடியாமல் . என்றாலும் கோசலை அவ்வளவு துக்கத்திலும் பரதனிடம் கடும் மொழிகளையே பேசுகின்றாளாம் . துடி துடிக்கும் பரதன் அவள் காலடியில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்கின்றான் . தன் தாயின் விருப்பம் தன்னுடையதில்ல எனச் சொல்லும் அவன் ஒரு பாவப் பட்டியல் ஒன்றைக் கோசலையிடம் சொல்லி ராமரைக் காட்டுக்கு அனுப்பியவர்கள் அத்தகைய பாவங்களைச் செய்தவர்கள் ஆவார்கள் என்று சொல்லி அழுது புலம்புகின்றான் . பின்னர் வசிஷ்டர் பரதனைத் தேற்றி , ஆகவேண்டிய காரியங்களை மன்னனுக்குச் செய்யச் சொல்லி நீத்தார் கடன்களை முடித்து வைக்கின்றார் . அப்போது அங்கே வரும் மந்தரையைக் கண்டு சத்ருக்கனன் கோபத்துடன் அவளைத் தண்டிக்க முயலக் கைகேயியால் அவள் காப்பாற்றப் படுவதாய் வால்மீகி கூறுகின்றார் . பின்னர் பரதன் தான் நேரில் காட்டுக்குச் சென்று ராமனைச் சந்தித்து நாட்டுக்குத் திரும்பி வந்து பட்டாபிஷேகம் செய்து கொண்டு அரசாளவேண்டும் எனக் கேட்கப் போவதாயும் , அதற்கான ஆயத்தங்களைச் செய்யுமாறும் வேண்டிக் கொள்கின்றான் . அனைவரும் மனம் மகிழ , பரதன் அயோத்தி மக்கள் புடை சூழப் பெரும்படையோடு கிளம்புகின்றான் . கங்கைக் கரையில் குகனின் ஆட்சிக்குட்பட்ட பகுதிக்கு வந்து சேர்ந்த சைன்னியத்தைப் பார்த்தும் , அதன் விபரங்களைக் கேட்டும் குகன் சந்தேகத்தில் ஆழ்ந்தான் ! கவலை சூழ்கின்றது அவனுக்கு ! வால்மீகி ராமாயணத்தில் தசரதரின் இறுதிச் சடங்குகளை பரதனே செய்கின்றான் என்றே வருகின்றது . தசரதன் பரதன் நாட்டை ஏற்றுக் கொண்டானானால் அவன் என் மகன் இல்லை என்றே கூறுகின்றார் . பரதனோ நாட்டை ஏற்கவே இல்லை என்பதோடு ராமனையும் திரும்ப வரவழைக்க வேண்டும் என்றே கூறுகின்றான் . ஆகவே தசரதரின் சாபம் அவனைத் தாக்கவில்லை என்றே வால்மீகியின் கூற்று . துளசியும் அவ்வாறே எழுதி இருக்கின்றார் என்று தெரிய வருகின்றது . ஆனால் கம்பரோ சத்ருக்கனன் இறுதிச் சடங்குகள் செய்தான் என்று கூறுகின்றார் . கோசலை பரதனைப் பார்த்து இவ்வாறு கூறுவதாயும் : பள்ளியடைப் படலம் : பாடல் : 903 “ மறு இல் மைந்தனே வள்ளல் உந்தையார் இறுதி எய்தி நாள் ஏழ் இரண்டின சிறுவர் செய் கடன் செய்து தீர்த்தி என்று உறுவல் மேயினாள் உரையின் மேயினாள் . எனக் கோசலை தந்தை இறந்து ஏழு நாட்கள் ஆகிவிட்டதாயும் உடனே ஈமக் கடன்களை நிறைவேற்றவும் கூறுகின்றாள் . ஈமக் கடன்கள் செய்ய ஏற்பாடுகளும் செய்து பரதன் சடங்குகள் செய்யப் போகும் வேளையில் வசிஷ்டர் சொல்வதாய்க் கம்பர் கூறுகின்றார் : பாடல் : 912 “ என்னும் வேலையில் எழுந்த வீரனை அன்னை தீமையால் அரசன் நின்னையும் துன்னு துன்பத்தால் துறந்து போயினான் முன்னரே என முனிவன் கூறினான் .” என உன் அன்னை செய்த கொடுஞ்செயலால் உன்னையும் உன் தகப்பன் துறந்துவிட்டான் என வசிஷ்டர் கூறியதாய்க் கூறுகின்றார் . அதன் பின்னர் சத்ருக்கனனைக் கொண்டு ஈமச் சடங்குகள் செய்வித்ததாய்க் கூறுகின்றார் கம்பர் : பாடல் எண் 920 “ என்று கூறி நொந்து இடரின் மூழ்கும் அத் துன்று தாரவற்கு இளைய தோன்றலால் அன்று நேர்கடன் அமைவது ஆக்கினான் நின்று நான்மறை நெறி செய் நீர்மையான் “ என சத்ருக்கனனைக் கொண்டு ஈமச் சடங்குகளைச் செய்வித்ததாய்க் கூறுகின்றார் கம்பர் . பல தரப் பட்ட குணாதிசயங்களும் ராமாயணத்தில் பேசப் படுகின்றன . தசரத மன்னன் பல விதங்களில் புகழ் பெற்றிருந்தாலும் பெண்ணாசை என்ற ஒன்றால் வீழ்த்தப் பட்டான் , சொந்த மனைவியாலேயே . அவன் மகன்கள் நால்வருமோ , ஒருவரை ஒருவர் விஞ்சும்படியான குணாதிசயங்களைக் கொண்டிருந்ததோடு மட்டுமில்லாமல் , நால்வருக்கும் மன ஒற்றுமையும் இருந்து வந்தது . மூத்தவன் என்ற காரணத்தினால் ராமன் மற்றச் சகோதரர்களால் மிகவும் மதிக்கப் பட்டதோடு அல்லாமல் , தானும் அதுக்குத் தக்க பாத்திரமாகவே வாழ்ந்தும் காட்டினான் . தன் இளைய சகோதரனுக்காகத் தனக்கு உரிமையுள்ள அரசாட்சியைத் துறக்கின்றான் . சகோதர பாசத்தில் ஒருவரை மிஞ்சினர் இவர்கள் நால்வரும் , என்றால் , இன்னும் நாம் பார்க்கப் போகும் சகோதரர்கள் , வாலி , சுக்ரீவன் , தம்பியான சுக்ரீவனை நாட்டை விட்டே விரட்டினான் வாலி ! ராவணன் , கும்பகர்ணன் , விபீஷணன் , அவர்களிடையே ஒற்றுமை உண்டா ? இல்லை எனில் ஏன் இல்லை ? சகோதர உறவின் மேம்பாட்டை ராமன் - பரதனிடையே கண்டோமானால் , அதன் வேறொரு நிலைப்பாட்டை இனி நாம் ராவணன் - விபீஷணனிடம் காணப் போகின்றோம் . இரு வேறு துருவங்களான மனிதர்கள் இப்போதும் இருக்கின்றார்கள் . ஒரு தாயின் வயிற்றிலேயே நல்லவனும் , பிறக்கின்றான் , கெட்டவனும் பிறக்கின்றான் . வெவ்வேறு தாய்மார்களின் வயிற்றில் பிறந்த ராம , லட்சுமண , பரத , சத்ருக்கனர்கள் சகோதர உறவு என்றால் எவ்விதம் இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே விளங்கினார்கள் என்று சொல்வது சற்றும் மிகை இல்லை ! 20 கதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் - பகுதி 20 “ மூன்று உலகினுக்கும் ஓர் முதல்வன் ஆய் முதல் தோன்றினன் இருக்க யான் மகுடம் சூடுதல் சான்றவர் உரைசெயத் தருமம் ஆதலால் ஈன்றவள் செய்கையில் இழுக்கு உண்டாகுமோ ” : ஆறு செல் படலம் : பாடல் எண் 939 என்று வசிஷ்டர் தன்னை முடிசூடச் சொன்னபோது , பரதன் வசிஷ்டனைப் பார்த்துப் பழித்துச் சொன்னதாய்க் கூறுகின்றார் கம்பர் . மூத்த மகனுக்கே உரியதான அரசுரிமையைப் பறித்து எனக்குக் கொடுத்த என் தாயின் செயல் நீதியானதும் , தர்மத்துக்கு உரியதும் என்றாகிவிடுமே எனக் கேட்கின்றான் . பின்னர் அனைவரும் ராமனை அழைத்துவரப் புறப்பட்டுக் கங்கைக் கரையை வந்தடைய , அவர்களையும் , பெரும்படையையும் முதலில் பார்த்த குகனின் மனதில் சந்தேகம் வருகின்றது . ராமனுக்குத் தீங்கு செய்யும் எண்ணத்துடன் பரதன் இவ்வளவு பெரிய சேனையைத் திரட்டிக் கொண்டு வந்திருக்கின்றானோ என்ற எண்ணத்துடனேயே அவனைச் சென்று சந்தித்து , உபசாரங்கள் பலவும் செய்து , பின்னர் அவன் வந்த காரியம் யாது என வினவுகின்றான் . பாரத்வாஜ ஆசிரமம் செல்லும் வழி எது என பரதன் கேட்க , “ நானே கங்கையைக் கடந்து கொண்டு விடுகின்றேன் , ஆனால் தாங்கள் ராமனுக்குத் தீங்கு செய்யும் எண்ணத்தோடு வந்திருக்கின்றீர்களோ ?” எனக் குகன் வினவுகின்றானாம் . “ ராமனுக்குத் தீங்கா ? ஒருகாலும் இல்லை . என் தந்தை இறந்ததுமே என் மூத்த சகோதரன் ஆன ராமன் எனக்குத் தந்தை ஆகிவிட்டான் . அவனுக்குத் தீங்கு இழைக்க நான் எவ்விதம் துணிவேன் ?” என்று பரதன் சொல்ல குகன் மனம் மகிழ்ந்தான் . இங்கே கம்பர் சொல்வது என்னவென்றால் பரதன் வருவது தெரிந்ததுமே , கோபம் கொண்ட குகனைத் தேடி பரதன் போவதாயும் , அவனைக் கண்டதுமே குகன் திகைத்ததாயும் தெரிவிக்கின்றார் . ஏன் திகைக்கின்றான் குகன் என்றால் அயோத்தியில் இருந்து ராமனைத் தேடி வரும்போதே பரதனும் , சத்ருக்கனனும் மரவுரி தரித்தே வந்தார்களாம் . அதைக் கண்டதுமே பரதனின் நல்ல உள்ளம் குகனுக்குப் புரிந்து விட்டதாம் . ஆனால் வால்மீகியில் பரதன் மரவுரி தரிப்பது இனிமேல் தான் வரும் . இதைக் கம்பர் இவ்வாறு கூறுகின்றார் . “ அஞ்சன வண்ணன் என் ஆர் உயிர் நாயகன் ஆளாமே வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரே செஞ்சரம் என்பன தீ உமிழ்கின்றன செல்லாவோ உஞ்சு இவர் போய்விடின் நாய்க்குகன் என்று எனை ஓதாரோ “ கங்கை காண் படலம் : பாடல் : 998 எனக் குகன் ராமனை நாடாளவிடாமல் செய்த பரதன் வந்துவிட்டானே எனப் பதறுகின்றானாம் . குகனைக் கண்ட சுமந்திரர் பரதனிடம் அவன் ராமனின் நண்பன் என உரைக்க பரதன் தானே அவனைக் காண்போம் எனக் கிளம்புகின்றான் என்று கம்பர் இவ்வாறு கூறுகின்றார் : “ தன் முன்னே அவன் தன்மை தந்தை துணை முந்து உரைத்த சொல் முன்னே உவக்கின்ற துரிசு இலாத் திரு மனத்தான் மன் முன்னே தழீ இக் கொண்ட மனக்கு இனிய துணைவனேல் என் முன்னே அவற் காண்பென் யானே சென்று” என எழுந்தான் !” கங்கை காண் படலம் : பாடல் 1011. என்று பரதன் கிளம்பிக் குகனைக் காண அவனைக் கண்ட குகன் இவ்வாறு சொல்கின்றான் : பாடல் 1014 “ நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான் அயல் நின்றான் தம்பியையும் ஒக்கின்றான் தவ வேடம் தலை நின்றான் துன்பம் ஒரு முடிவில்லை திசை நோக்கித் தொழுகின்றான் எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு என்றான் .” என ராமனைப் போலவே ஆடவரிற் சிறந்தவனாய் விளங்கும் இந்தப் பரதனும் , அவன் அருகே நிற்கும் சத்ருக்கனனும் , ராமனைப் போலவே தவ வேடம் பூண்டு , அவன் இருக்கும் தென் திசை நோக்கித் தொழுத வண்ணம் துன்புற்ற மனதோடு இருக்கின்றனரே ? இவர்கள் ஸ்ரீராமனின் தம்பியர் தவறேதும் செய்வார்களோ ?” என எண்ணிக் கொண்டானாம் . மேலும் குகன் சொல்கின்றான் பரதனைப் பார்த்து : பாடல் 1019 “ தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை தீவினை என்ன நீத்து சிந்தனை முகத்தில் தேக்கி போயினை என்றபோழ்து புகழினோய் தன்மை கண்டால் ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா .” என்று ஆயிரம் ராமர் கூட உனக்கு இணையாக மாட்டார்கள் , அப்படி நீ , உன் தாயின் கொடுஞ்செயலால் உனக்குக் கிடைத்த ராஜ்யம் வேண்டாம் என உதறிவிட்டு , துயரத்தோடு ராமனைத் தேடி வந்துள்ளாயே என்று போற்றுகின்றான் . மேலும் குகன் சொல்வதாவது : பாடல் எண் 1020 “ என் புகழ்கின்றது ஏழை எயினனேன் ? இரவி என்பான் தன் புகழ்க் கற்றை மற்றை ஒளிகளைத் தவிர்க்குமாபோல் மன் புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம் உன் புகழ் ஆக்கிக் கொண்டாய் உயர் குணத்து உரவுத் தோளாய் !” எவ்வாறு சூரியன் தன் ஒளியால் சந்திரனையும் மற்றவற்றையும் மறைத்து விடுகின்றதோ , அவ்வாறே உன் குலப்புகழ் கூட நீ இப்போது செய்யும் இந்தக் காரியத்தினால் மறைந்து போய் உன் புகழே மேம்பட்டு விளங்குகின்றது என்று கூறினானாம் குகன் . பின்னர் குகனின் உதவியோடு பரத , சத்ருக்கனர் கங்கையைக் கடக்கின்றனர் . பரத்வாஜ ஆசிரமத்தை அடைந்ததும் , பரதனின் விருப்பத்தை அறிந்து மகிழ்ந்த பரத்வாஜர் பரதனுக்கும் , அவனுடன் வந்த சேனைகள் , பரிவாரங்களுக்கு விருந்து அளித்துக் கெளரவிக்கின்றார் . பரதனுடன் அவனுடைய தாய்மார்கள் மூவரும் சென்றதாய்க் கம்பரும் கூறுகின்றார் . வால்மீகியும் அவ்வாறே கூறி இருக்கின்றார் . தன் தாய்மார்களை பாரத்வாஜ முனிவருக்கு அறிமுகம் செய்த பின்னர் சித்திர கூடம் செல்கின்றார்கள் பரதனும் படை வீரர்களும் . சித்திரகூடத்தில் ராமரும் , சீதையும் அதன் அழகைப் பற்றிப் பேசி மகிழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் காட்டு மிருகங்கள் நாலாபக்கமும் பதறி ஓட , பெரும் புழுதி எழுந்து வானை மறைக்கக்கண்டார் ராமர் . உடனேயே லட்சுமணன் ஒரு உயரமான மரத்தின் மேல் ஏறிக் கொண்டு பார்க்க , தூரத்தே ஒரு பெரிய சேனை வருவது தெரிகின்றது . முன்னே வரும் நாட்டுக் கொடியில் அயோத்தியின் சின்னம் ஆன அத்திக் கொடி தெரியக்கோபம் கொண்ட லட்சுமணன் , பரதன் பெரும்படையோடு வந்து நம்மைக் கொல்லப் பார்க்கின்றான் என்றே எண்ணுகின்றான் . அதை ராமனிடம் சொல்ல அவரோ நம்ப மறுக்கின்றார் . பரதன் அப்படிப் பட்டவனே இல்லை என உறுதியாக மறுக்கின்றார் . ஒருவேளை தந்தையே நேரில் வருகின்றாரோ என லட்சுமணன் நினைக்க இல்லை வெண்கொற்றக் குடை இல்லையே என ராமர் கலங்க பரதன் வந்து சேருகின்றான் . அண்ணனை , நாடாள வேண்டியவனை , ஒரு மரத்தடியில் மரவுரி தரித்த கோலத்தில் அமர்ந்திருக்கக் கண்ட பரதன் நெஞ்சம் பதறுகின்றது . ஓடி வந்து அண்ணன் காலடியில் விழுகின்றான் . சத்ருக்கனனும் உடன் வந்து வணங்க , தாய்மார் , தந்தையை விட்டு விட்டு வந்ததன் காரணம் என்ன ? தந்தையைப் பார்த்துக் கொள்வார் யார் என ராமர் பரதனைப் பார்த்து வினவுகின்றார் . பரதன் அவரைத் திரும்ப நாடாள வரவேண்டும் என வேண்ட , ராமர் அதை மறுத்துத் தர்ம , நியாயங்களை எடுத்துச் சொல்கின்றார் . அப்போது பரதன் தந்தை இறந்தார் எனச் சொல்ல திகைத்த ராமர் துக்கம் தாங்க முடியாமல் விம்மி , அழுகின்றார் . ராமர் அழும் சத்தம் கேட்டுக் கூட வந்த மற்றவர்கள் பரதன் ராமனைக் கண்டு பேசிவிட்டான் எனத் தெரிந்து கொண்டு அவர்கள் இருக்கும் இடம் நோக்கி வருகின்றார்கள் . தாய்மார் மூவரையும் பார்த்துக் கண்ணீர் சிந்தும் ராமரைப் பார்த்து அவர்களும் கதறி அழ , ராமர் பரதனைப் பார்த்து வந்த காரணம் என்ன என மீண்டும் வினவ , ராமன் வந்து நாடாள ஒப்புக் கொள்ளுமாறு வற்புறுத்துகின்றான் பரதன் . சகோதரர்களுக்குள் விவாதம் தொடங்குகின்றது . 21 கதை கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 21 அனைவருக்கும் , கம்ப ராமாயணம் , வால்மீகி ராமாயணம் இரண்டின் ஒப்பீட்டையும் ஏற்றுக் கொள்ள முடியாது . சிலர் அதிகம் கம்பனே வருவதாயும் , இன்னும் சிலர் இந்த ஒப்பீடு தேவை இல்லை எனவும் சொல்லலாம் . ஆகவே கூடியவரையில் வால்மீகியை மட்டுமே குறிப்பிடலாம் என நினைக்கின்றேன் . வால்மீகியைப் படிச்ச அளவுக்குக் கம்பனைப் படிக்கவில்லை , கம்பனின் பாடல்களின் அழகு மனதை ஈர்க்கின்றது மட்டுமில்லாமல் , ஒருமித்த தெய்வீக எண்ணங்களின் கோர்வையும் மனதைக் கவருகின்றது என்பதாலோ என்னமோ சில சமயங்களில் இந்த ஒப்பீடு என்னால் தவிர்க்க முடியலை . இனி , பாதுகா பட்டாபிஷேகம் தொடரும் . முந்தாநாள் கதையில் விவாதம் ஆரம்பிக்கும் முன்னரே படம் போட்டாச்சா என்று திவா கேட்டிருந்தார் . தன்னை நாட்டை ஆளுமாறு கேட்டுக் கொண்ட பரதனைப் பார்த்து ஸ்ரீராமர் , “ நீ உன் தர்ம நெறியை விட்டு விலகிப் பேசக் கூடாது . நமது தந்தையின் கட்டளையின் பேரிலேயே நான் காட்டிற்கு வந்துள்ளேன் . அவருடைய வார்த்தையை நான் மீற முடியாது . நீயும் மீறக் கூடாது . அவர் கூறியபடியே நீயே உன் கடமையை ஏற்றுக் கொள் .” என்று சொல்கின்றார் . மறுநாள் தந்தைக்கு ஆற்ற வேண்டிய ஈமக் கடன்களைச் செய்துவிட்டு . ராமர் மீண்டும் , பரதனுக்குத் தர்ம நியாயத்தை எடுத்துக் கூற ஆரம்பிக்க , பரதன் மறுக்கின்றான் . தன் தாயாருக்குத் தசரத மன்னர் அளித்த இந்த ராஜ்யம் தற்சமயம் தனக்குச் சொந்தமானது என்றும் , அதைத் தான் தன் இஷ்டப்படி யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்க முடியும் என்றும் , அதைத் தான் ஸ்ரீராமருக்கு அளிப்பதாயும் , அவர் உடனே வந்து ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் , கேட்டுக் கொள்கின்றான் . ஆனால் மறுத்த ஸ்ரீராமர் , மீண்டும் தந்தையின் கட்டளையை மீற முடியாது எனக் கூறிவிட்டு , அயோத்தி உன் ராஜ்யம் , இந்தக் காடும் , மிருகங்களும் என் ராஜ்யம் , தந்தை எனக்களித்த பொறுப்பு இது , இதை நிறைவேற்றுவது நம் இருவரின் கடமை என்கின்றார் . ஆனால் பரதனோ , “ என் தாயின் கோபத்தினாலோ , அல்லது அவளுடைய சாகசத்தினாலோ நம் தந்தை எனக்களித்த இந்த ராஜ்யம் என்னும் பொறுப்பு எனக்கு உகந்தது அல்ல . நான் இதை வெறுக்கின்றேன் . நம் தந்தை பல புண்ணிய காரியங்களைச் செய்தும் , சிறப்பான யாகங்களைச் செய்தும் , குடிமக்களை பல விதங்களில் மகிழ்வித்தும் நல்லாட்சியே புரிந்து வந்தார் . அவரைப் பழித்து நான் கூறுவதாய் நினைக்கவேண்டாம் . இப்படிப் பட்ட ஒரு தர்ம நெறிமுறைகளை அறிந்த மனிதன் , பெண்ணாசையில் மூழ்கி , ஒரு பெண்ணின் திருப்திக்காக அடாத ஒரு பாவச் செயலைச் செய்வானா ? “ வினாச காலே விபரீத புத்தி !” என்னும் பழமொழிக்கு இணங்க , அழியக் கூடிய காலம் வந்ததால் அன்றோ அவர் புத்தி தடுமாற்றம் ஏற்பட்டது ? ஒரு மனிதனுக்கு பிரம்மச்சரியம் , இல்லறம் , வானப்ரஸ்தம் , சந்நியாசம் இவை நான்கிலும் இல்லறமே உகந்தது எனப் பெரியோர்கள் பலரும் கூறி இருக்கத் தாங்கள் இவ்வாறு அதை உதறித் தள்ளலாமா ? மன்னன் மரவுரியை ஏற்கலாமா ? குடிமக்களைக் காப்பாற்றுவதும் , அவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதும் ஒரு க்ஷத்திரியனின் கடமை அல்லவா ?” என்றெல்லாம் கேட்கின்றான் . அப்போது பரதனோடு சேர்ந்து அனைவரும் ஸ்ரீராமனை நாடு திரும்ப வற்புறுத்துகின்றனர் . அப்போது ஸ்ரீராமர் அது வரை யாரும் கூறாத ஒரு செய்தியைக் கூறுவதாய் வால்மீகி கூறுகின்றார் . அதாவது , கேகய மன்னன் ஆகிய பரதனின் பாட்டனாரிடம் , தசரதன் , கைகேயிக்குப் பிறக்கும் பிள்ளைக்கே ராஜ்யம் ஆளும் உரிமையைத் தான் அளிப்பதாய்க் கூறியதாய்க் கூறுகின்றார் . இது பற்றி வேறு தெளிவான கருத்து வேறு யார் மூலமும் இல்லை . வசிஷ்டரோ , அல்லது தசரத மன்னனிடம் வரம் கேட்கும் கைகேயியோ , அவளைத் தூண்டும் மந்தரையோ , அல்லது கேகய மன்னனே கூடவோ , யாரும் இது பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசியதாய்க் கூறவில்லை வால்மீகி . ஆகவே ஒரு வேளை பரதன் ஸ்ரீராமன் இவ்வாறு கூறினால் மனம் மாறி நாட்டை ஏற்றுக் கொள்ளலாம் என்ற காரணத்தால் , ஒரு சாதாரண மனிதனாகவே வால்மீகியால் குறிப்பிடப் படும் ஸ்ரீராமன் இவ்வாறு கூறி இருக்கலாம் என்ற கருத்துக்கே வரும்படியாய் இருக்கின்றது . அப்போது அங்கே அயோத்தியில் இருந்து வந்திருந்த பல முனிவர்களில் ஒருவரான ஜாபாலி என்பவர் ராமரைப் பார்த்துக் கூறுகின்றார் . ஜாபாலி பேசுவது நாத்திக வாதம் . முன் காலத்தில் நாத்திகமே இல்லை , என்றும் , வேதங்களில் கூடச் சொல்லப் படவில்லை என்றும் பலரும் நினைக்கலாம் . இறைவன் என்ற தத்துவம் ஏற்பட்ட நாளில் இருந்தே நாத்திகம் என்ற தத்துவமும் இருந்தே வருகின்றது . எவ்வாறு இறை ஏற்பு இருக்கின்றதோ , அவ்வாறே இறை மறுப்பும் இருந்தே வந்திருக்கின்றது . இன்று புதியதாய் எதுவும் வரவில்லை . ஜாபாலி ஸ்ரீராமனிடம் சொல்கின்றார் : “ ஏ , ராமா , நீ என்ன பாமரத் தனமாய்ப் பேசுகின்றாய் ? சிந்திக்கின்றாய் ? யார் யாருக்கு உறவு ? ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு என்ன செய்ய முடியும் ? அனைவருமே தனித்தனியாய்த் தானே பிறக்கின்றார்கள் . பயணம் செய்யும் மனிதன் ஒரு நாள் ஒரு ஊரைக் கடப்பது போலவும் , இரவு தங்குவது போலவும் உள்ள இந்த வாழ்க்கையில் யார் தந்தை ? யார் மகன் ? தசரதன் உனக்குத் தந்தை என்பதற்கு அவன் ஒரு கருவி மட்டுமே ! நீ கற்பனையாக உணர்வுகளை வளர்த்துக் கொண்டு வீணில் வருந்தாதே ! நீ இப்போது உன் தந்தைக்குச் செய்த ஈமக் கடன்களினால் என்ன பயன் ? உன் தந்தையோ இறந்துவிட்டான் . அவனால் எதை உண்ண முடியும் ? இந்த உணவை இப்போது நீ இங்கே படைத்தது வெறும் வீணே ! பயணம் செய்யும் நமக்குக் கையில் தானே உணவு எடுத்துச் செல்கின்றோம் ? அப்படி இருக்க இறந்தவனுக்கு இங்கே உணவு படைத்தால் அது அவனுக்குப் போய்ச் சேருமா என்ன ? இவை எல்லாம் தான , தர்மங்களை எதிர்பார்ப்பவர்களால் சாமர்த்தியமாக விதிக்கப் பட்ட வழிமுறைகள் . நீ இப்போது ராஜ்யத்தைத் துறப்பது என்பதும் உன் குலத்தில் யாரும் செய்யாத ஒரு காரியம் . ராஜ்யத்தை ஏற்று அதனுடன் கூடி வரும் சுகங்களை அனுபவிப்பாயாக !” என்று கூறவே உள்ளார்ந்த கோபத்துடன் ராமர் கூறுகின்றார் . “ராஜ்யத்தை நான் ஏற்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத் தாங்கள் இவ்வாறு பேசுவது முறையன்று. ஒரு அரசனுக்கு உண்மை தான் முக்கியம். சத்திய பரிபாலனம் செய்வதே அவன் கடமை. உலகின் ஆதாரமும் சத்தியமே ஆகும். அந்தச் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு என் தந்தை என்னைக் காட்டுக்குப் போகச் சொல்ல, அவருக்கு நானும் சத்தியம் செய்து கொடுத்திருக்கின்றேன். என்னால் அதை மீற முடியாது. எனக்கு முற்றிலும் கேடு விளைவிக்கக் கூடிய ஒன்றை நீங்கள் சொல்கின்றீர்களே? என் தந்தை உங்களை எப்படி ஏற்றார் என்று எனக்கு ஆச்சரியமாய் உள்ளது. நாத்திக வாதம் பேசும் நீங்கள் இந்த முனிவர்கள் கூட்டத்தில் எப்படி இருக்க முடிகின்றது?” என்று கூறவும், வசிஷ்டர் ராமனிடம் ஜாபாலி அவ்வாறு பேசியது தர்ம, நியாயத்தை அறிந்தே தான் என்றும், அவருக்கு ஏற்கெனவேயே இதன் முடிவு தெரியும் என்றும், அவர் பேசிய வார்த்தைகளினால் அவரைப் பற்றிய தவறான முடிவுக்கு வரவேண்டாம் எனவும் கூறிவிட்டு ராமனிடம் அயோத்தி திரும்பும் யோசனையை வற்புறுத்துகின்றார். ராமர் மீண்டும் பரதனுக்கு அறிவுரைகள் பலவும் சொல்லி, அயோத்தி சென்று நாடாளச் சொல்ல, பரதன் கண்ணெதிரில், ரிஷிகளும் கந்தர்வர்களும் தோன்றி ராமரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும்படி சொல்ல, திடுக்கிட்ட பரதன் ராமன் காலில் விழுந்து கதறுகின்றான். அவனைச் சமாதானப் படுத்திய ராமரிடம் பரதன் ராமரின் காலணிகளைக் கேட்டு வாங்கினான். ஆட்சியின் மாட்சிமை ராமனின் காலணிகளுக்கே உரியவை என்றும், ராமர் வரும்வரை தானும் மரவுரி தரித்து, காய், கிழங்குகளையே உண்டு, நகருக்கு வெளியே வாழப் போவதாயும் நிர்வாகத்தை மட்டும் தான் கவனிப்பதாயும், பதினான்கு ஆண்டுகள் முடிந்த மறுநாள் ராமன் அயோத்தி திரும்பவில்லை எனில் தான் தீயில் இறங்குவதாயும் சபதம் எடுத்துக் கொண்டு, ராமனின் காலணிகளைப் பெற்றுக் கொண்டு அயோத்தி திரும்புகின்றான். அங்கே ராமனின் காலணிகளைச் சிம்மாசனத்தில் வைத்துவிட்டுத் தான் நந்திகிராமம் என்னும் பக்கத்து ஊருக்குச் சென்று அங்கிருந்து அரசின் காரியங்களை ராமரின் பாதுகைகளை முன்னிறுத்த நடத்த ஆரம்பிக்கின்றான் பரதன். இரண்டே இரண்டு பாடல் மட்டும் “விம்மினன் பரதனும் வேரு செய்வது ஒன்று இ ன்மையின் அரிது என எண்ணி ஏங்குவான் செம்மையின் திருவடித் தலம் தந்தீக என எம்மையும் தருவன இரண்டும் நல்கினான் . அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான் முடித்தலம் இவை என முறையின் சூடினான் படித்தலத்து இறைஞ்சினான் பரதன் போயினான் பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான் .” 22 கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 22 இங்கே சித்திரகூடத்தில் , ரிஷி , முனிவர்கள் அனைவரும் ஏதோ மனக்கலக்கத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்ட ராமர் அவர்களிடம் என்னவென விசாரிக்க , ராட்சசர்கள் துன்புறுத்துவதாயும் , அதிலும் கரன் என்பவன் ராவணனின் சகோதரன் என்றும் அவன் ஸ்ரீராமன் மீது பெரும்பகை கொண்டு அதன் காரணமாய் ரிஷி , முனிவர்களை ராமன் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றான் என்று கோபம் கொண்டு யாகங்களைக் கொடுப்பதாயும் வேறு இடம் நாடி அவர்கள் போகப் போவதாயும் சொல்கின்றார்கள் . தன் தாய்மார்கள் , தம்பிமார்கள் , குடிமக்கள் வந்து சென்றதில் இருந்து அதே நினைவாக இருந்து வந்த ஸ்ரீராமரும் தாங்களும் வேறு இடம் நாடிச் செல்லலாம் என யோசித்து , லட்சுமணனோடும் , சீதையோடும் அங்கிருந்து கிளம்பி சித்ரகூடத்தில் இருந்து அத்ரி முனிவரின் ஆசிரமத்தை வந்தடைகின்றார் . அத்ரி முனிவரும் , அவர் மனைவி அனசூயாவும் தவ நெறிகளில் சிறந்து விளங்குபவர்கள் . அதிலும் அனசூயை தன் தவ வலிமையால் மும்மூர்த்திகளையுமே குழந்தைகள் ஆக்கிப் பிள்ளைகளாக மாற்றியவள் . தன் தவ வலிமையால் கங்கையைப் பாலையில் ஓடச் செய்தவள் . பெரும் விவேகி . அதனால் கொண்ட பெரும் உள்ளம் படைத்தவள் . அவள் சீதையைத் தன் மகள் போலவே எண்ணி மிக்க பரிவுடன் அவளை வரவேற்றுப் பின்னர் சீதையின் திருமணக் கதையை அவள் வாயிலாகவே கேட்டறிகின்றாள் . பின்னர் தனக்குக் கிடைத்த புனித மாலை , தன்னிடமிருக்கும் நகைகள் போன்றவற்றைச் சீதைக்கு மனம் உவந்து அளித்து மகிழ்கின்றாள் . பின்னர் அந்த ஆபரணங்களைச் சீதைக்கு அணிவித்து அழகு பார்த்துவிட்டுப் பின்னர் ராமரோடு மீண்டும் காட்டு வழியில் சீதையை லட்சுமணன் பின் தொடர அனுப்புகின்றாள் . இத்தோடு அயோத்தியா காண்டம் முடிகின்றது . இனி ஆரண்ய காண்டம் ஆரம்பம் . ஆரண்ய காண்டம் : தண்டகாரண்யத்திற்குள் பிரவேசித்த ராமரும் , லட்சுமணனும் , சீதையும் அங்கிருந்த முனிபுங்கவர்களை வணங்கிப் பிரார்த்தித்துக் கொண்டு பின்னர் காட்டினுள் மீண்டும் வெகு தூரம் செல்கின்றார்கள் . அப்போது அங்கே கண்ணெதிரே தோன்றினான் ஒரு அரக்கன் . விராதன் என்னும் பெயர் கொண்ட அந்த அரக்கன் சீதையைத் தூக்கிக் கொண்டு , நீங்கள் இருவரும் பார்க்க ரிஷிகளைப் போல் இருக்கின்றீர்கள் . உங்களுக்கு எதற்கு ஒரு பெண் கூடவே ? உண்மையிலேயே துறவிகள் ஆனால் பெண்ணைக் கூட வைத்திருப்பது எவ்வாறு ? உங்கள் இருவரையும் கொன்றுவிட்டு , இவளை நான் மனைவியாக்கிக் கொள்கின்றேன் , எனச் சொல்லிவிட்டு சீதையைத் தூக்க , ராமர் கோபம் கொண்டு , தன் தாயான கைகேயியின் நோக்கமும் இதுவோ என ஒரு கணம் மயங்க , அவரைத் தேற்றிய லட்சுமணன் அந்த அரக்கனோடு போரிட ஆயத்தம் ஆகின்றான் . போரில் அவனைக் கொல்ல முடியவில்லையே என யோசிக்கும்போது ராமருக்குத் திடீரென ஒரு யோசனை தோன்றியது . இவன் தவத்தின் காரணமாய் வெல்ல முடியாத தன்மையைப் பெற்றிருக்க வேண்டும் . ஒரு பெரிய குழி தோண்டி இவன் உடலைக் குழிக்குள் புதைப்பது ஒன்றே வழி எனக் கூறவும் , மனம் மகிழ்ந்த அந்த அரக்கனோ , ராமனைப் பார்த்து , “ இந்திரனுக்குச் சமம் ஆனவன் நீ . உன்னை நான் முதலில் புரிந்து கொள்ளவில்லை . நீ யார் என நான் இப்போது உணர்கின்றேன் .” என்று கூறிவிட்டுத் தான் தும்புரு என்ற பெயர் கொண்ட ஒரு கந்தர்வனாய் இருந்ததாகவும் , குபேரனின் சாபத்தால் அரக்கத் தன்மை பெற்றதாயும் அப்போது குபேரன் தசரதனின் மகன் ஆன ஸ்ரீராமனால் சாப விமோசனம் கிடைத்துத் திரும்ப கந்தர்வ உலகை அடைவாய் எனவும் கூறியதாகவும் , இப்போது ராமர் தன்னை குழிக்குள் தள்ளி மூடிவிட்டால் தான் விடுதலை பெற முடியும் எனக் கூறிப் பணிவோடு வணங்க , ராமரும் அவ்வாறே செய்து அவனை விடுவிக்கின்றார் . பின்னர் மூவரும் சரபங்க முனிவரின் ஆசிரமம் சென்று அவரை வணங்குகின்றார்கள் . முனிவரை தேவ லோகம் அழைத்துச் செல்ல வந்திருந்த தேவேந்திரன் , ராவண வதம் முடியும் முன்னர் ராமனைக் காணவிரும்பவில்லை என முனிவரிடம் சொல்லிவிட்டு அங்கே இருந்து ராமன் வருமுன்னரே விடை பெற்றுச் செல்ல , பின் சரபங்க முனிவர் தான் தீ வளர்த்து ஹோமம் செய்து சரீரத்தை விட்டுவிடப் போவதாயும் , சுதீஷ்ண மகரிஷியைச் சென்று பார்க்கும்படியும் ராமரிடம் கூறிவிட்டு அவ்வாறே தீ வளர்த்து ஹோமத்தில் புகுந்து மறைந்து போகின்றார் . சுதீஷ்ணரிடம் சென்று , பின்னர் அங்கிருந்து முன்னேறிச் செல்லும் வழியில் சீதை ராமரிடம் அரக்கர்கள் நமக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை என்பதால் அவர்களை அழிக்க வேண்டாம் . முனிவர்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற தண்டகாரண்யத்தில் முன்னேறி அரக்கர் இடம் தேடிப் போகவேண்டாம் என்றும் , ஆயுதங்களின் நட்பு ஒரு துறவியைக் கூடக் கொடியவனாய் மாற்றும் சக்தி படைத்தது எனவும் கூறுகின்றாள் . ராமர் அவளை மறுத்து , தாம் , முனிவர்களுக்கும் , ரிஷிகளுக்கு வாக்குக் கொடுத்திருப்பதாயும் , ரிஷிகளும் , முனிவர்களும் தங்கள் தவ வலிமையாலேயே அரக்கர்களையும் , ராட்சதர்களையும் அழிக்கும் வல்லமை உள்ளவர்களே என்றாலும் அவர்களை அழிப்பதும் , ரிஷி , முனிவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதும் தன் கடமை என்றும் , அவர்கள் கேட்கவில்லை என்றாலும் தாம் இதைச் செய்வதே தமது தர்மம் என்றும் கூறிச் சீதையை சமாதானம் செய்கின்றார் . பின்னர் பல முனிவர்களின் ஆசிரமங்களுக்கும் சென்றுவிட்டு அங்கெல்லாம் அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்துக் கொண்டு , ஒவ்வொரு இடமாய்ச் செல்கின்றனர் , மூவரும் . பத்து வருடங்கள் சென்றபின்னர் மீண்டும் , ராமரும் , லட்சுமணரும் , சீதையோடு சுதீஷ்ணரின் ஆசிரமத்துக்கு மீண்டும் வருகின்றார்கள் . அவரிடம் அகஸ்திய முனிவர் இந்தக் காட்டில் வாழ்வதாயும் , அவர் இருக்குமிடம் எது எனவும் வினவ சுதீஷ்ணரும் அகத்தியரின் ஆசிரமம் செல்லும் வழியைக் கூறுகின்றார் . ராமர் தன் தம்பியோடும் , மனைவியோடும் அகத்திய முனிவரின் ஆசிரமத்தை அடைந்தார் . 23 கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 23 அகத்திய முனிவரின் ஆசிரமத்தை நோக்கிச் சென்ற ராம , லட்சுமணர்கள் முதலில் அவரின் சகோதரரைக் கண்டு விட்டுப் பின்னர் பயணத்தைத் தொடர்ந்தனர் , சீதையுடன் . அப்போது ஸ்ரீராமன் லட்சுமணனுக்கு அகத்தியர் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கின்றார் . வாதாபி , இல்வலன் என்ற இரண்டு அரக்கர்களும் , அந்தணர்களை ஏமாற்றி விருந்துக்கு அழைத்து , வாதாபியை வெட்டிக் கண்ட துண்டம் ஆக்கி அவனைச் சமைத்துப் பரிமாறியதையும் அவன் பின்னர் விருந்துண்ட அந்தணரின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்து விடுவதையும் , இதன் மூலம் பல அந்தணர்களையும் , முனிவர்களையும் கொன்று கொண்டிருந்ததையும் , அகத்தியரையும் அவ்வாறே விருந்து வைத்துப் பின்னர் , கொல்ல முயன்ற வேளையில் அகத்தியர் வாதாபியை ஜீரணம் செய்து எமனுலகம் அனுப்பி இல்வலனையும் வீழ்த்தியதையும் தெரிவிக்கின்றார் . பின்னர் அகத்தியரின் ஆசிரமத்தை அடைந்து அவரிடம் அனுமதி வேண்டிக் காத்திருக்கின்றனர் . அகத்தியரோ எனில் இவர்கள் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார் . அவர்களை வரவேற்ற அகத்தியர் முறைப்படி முதலில் அக்னிக்கு உணவு படைத்துவிட்டுப் பின்னர் வந்த அதிதிகளுக்கும் உணவு படைக்கின்றார் . அதன் பின் ராமனிடம் ஒரு வில் , அம்புகள் , ஒரு கத்தி ஆகியவற்றைக் கொடுத்துவிட்டுச் சொல்கின்றார் : விச்வகர்மாவினால் செய்யப் பட்ட இந்த வில் மகாவிஷ்ணுவுடையது . இந்த இரு அம்பறாத் தூணிகள் இந்திரனால் கொடுக்கப் பட்டவை . தீக்கு நிகரான பாணங்கள் நிரம்பிய இது எடுக்க எடுக்க வந்து கொண்டே இருக்கும் தன்மை உள்ளது . மற்றொரு அம்புறாத் தூணியின் அம்பு சூரியனுக்கு நிகரானது . இந்தக் கத்தி தெய்வத் தன்மை வாய்ந்தது . இவற்றை நீ என்னிடமிருந்து இப்போது பெற்றுக் கொள் என வருங்காலம் அறிந்தவராய்ச் சொல்லுகின்றார் . பின்னர் அந்த இடத்தில் இருந்து இரண்டு யோசனை தூரத்தில் உள்ள பஞ்சவடி என்னும் இடத்திற்குச் சென்று அங்கே ஆசிரமம் அமைத்துக் கொண்டு தங்குமாறும் கூறுகின்றார் . ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டு ராமன் , சீதையுடனும் , லட்சுமணனுடனும் பஞ்சவடி செல்லும் வழியில் ஜடாயு என்னும் பெரிய கழுகைக் கண்டார்கள் . முதல் பார்வையில் அந்தக் கழுகரசனை ஓர் அரக்கன் என நினைத்தனர் மூவரும் . பின்னர் அந்தக் கழுகரசனின் வரலாற்றைக் கேட்டறிந்து கொள்கின்றனர் . தன் வரலாற்றைக் கூறிய அந்தக் கழுகு தன் வம்சாவளியைக் கூறி இறுதியில் அருணன் என்பவனுக்குத் தான் பிறந்ததாயும் , தன் தமையன் பெயர் சம்பாதி எனவும் , தன் பெயர் ஜடாயு எனவும் கூறுகின்றது . இந்தப் பஞ்சவடியிலேயே அவர்களைத் தங்குமாறு கூறிவிட்டுப் பின்னர் சீதைக்குத் தான் பாதுகாப்பாய் இருப்பதாயும் உறுதி அளிக்கின்றது . தசரத மன்னன் தனக்கு நண்பன் எனவும் சொல்கின்றது அந்தக் கழுகு . பின்னர் பஞ்சவடியை அடைந்த ராம , லட்சுமணர்கள் அங்கே ஒரு பர்ணசாலையை எழுப்பி , கோதாவரி நதியில் நீராடி , சாத்திர முறைப்படி பர்ண சாலையில் வழிபாடுகள் நடத்தி அங்கே வாழ்க்கையைத் துவக்குகின்றார்கள் . அப்போது பருவம் மாறிக் குளிர்காலம் வந்துவிட லட்சுமணன் அங்கே உள்ள குளிரைப் பற்றிச் சொல்லிவிட்டுப் பரதனை நினைக்கின்றான் . பரதனின் நற்குணத்தையும் , ராமனின் பால் அவன் கொண்டுள்ள அன்பையும் பற்றிப் பேசிய லட்சுமணன் , பரதன் இந்தக் குளிரிலும் ராமன் மீதுள்ள அன்பால் பரதனும் தரையில் படுத்துக் காட்டு வாழ்க்கையை மேற்கொண்டானே என மனம் வருந்திக் கைகேயியை நிந்தித்துப் பேச , ராமர் அவனைத் தடுக்கின்றார் . இப்படியே ஒரு சமயம் இல்லாமல் பல சமயங்களிலும் இவர்கள் பழங்கதைகளையும் , மேலே நடக்கவேண்டியதும் பற்றிப் பேசிக் கொண்டிருந்த ஒரு நாளில் வந்தாள் சூர்ப்பனகை ! இவளைக் கம்பர் எவ்வாறு வர்ணிக்கின்றார் என்று மட்டும் ஒரே ஒரு அருமையான பாடல் : பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க செஞ்செவிய கஞ்சம் நிகர் சீறடியள் ஆகி அம் சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும் வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள் ” எவ்வளவு அழகான வர்ணனை ? அன்னம் என மின்னினாளாம் அந்த வஞ்ச மகள் . அவளின் மற்ற காரியங்கள் பற்றி நாளை பார்க்கலாமா ? இந்த சூர்ப்பனகை ஏன் ராமனையும் , சீதையையும் பழி வாங்க வேண்டும் ? சீதையின் மேல் கொண்ட பொறாமை ஒரு பக்கம் என்றாலும் , அவளின் முக்கிய நோக்கம் , ராவணனைப் பழி வாங்குவதே என்றும் ஒரு கூற்று . இதைத் திருத்தணித் திருப்புகழில் அருணகிரிநாதர் கூறி உள்ளது , பின்னர் பார்க்கலாம் . மகாராஷ்டிராவின் நாசிக் நகரின் வெளியே ஒரு 20 கி . மீ தூரத்தில் உள்ளது இந்தப் பஞ்சவடி . ஆனால் இதன் உண்மையான பெயர் பத்மபுரம் என்றே அங்குள்ளோர் சொல்கின்றனர் . ஐந்து பெரிய ஆலமரங்கள் சூழ்ந்த அந்த இடம் ஆலமரத்தை வடமொழியில் “ வடி ” எனச் சொல்வதால் ஐந்து ஆலமரங்கள் சூழ்ந்த இடம் என்ற பெயரால் “ பஞ்சவடி ” என அழைக்கப் பட்டதாய்க் கூறுகின்றார்கள் . சில வருடங்கள் பஞ்சவடிக்குச் சென்று , தரிசனம் செய்யும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது . நாங்கள் சென்ற போது மதியம் 11-00 மணி அளவில் இருக்கலாம் . சுமார் 500 பேர் உள்ள எங்கள் சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் எங்களுக்கு வந்த வழிகாட்டி , அந்த வெயிலில் , ( அப்படி ஒண்ணும் அதிகம் வெயில் இல்லை , சொல்லப் போனால் குளிர் போகாமல் தான் இருந்தது ) நடந்தே பஞ்சவடி போகலாம் , ராமன் தண்டகாரண்யத்தில் இருந்து நடந்து வந்திருக்கின்றான் , நாம் என்ன இந்த மூன்று கி . மீ . நடக்கக் கூடாதா எனக் கேட்க மொத்தக் கூட்டமும் நடந்தே சென்றோம் . போக்குவரத்து ஸ்தம்பிக்க நாங்கள் சென்றோம் . ஐந்து ஆலமரங்கள் , அங்கே ராணி அகல்யாவால் ஏற்படுத்தப் பட்ட ராமர் கோவில் அனைத்தையும் தரிசித்தோம் . ராமர் , லட்சுமணர் வெளியே சென்றிருக்கும் வேளையில் சீதை தங்கி இருந்த குகையும் அங்கே உள்ளது . ஆனால் குகைக்குள் செல்லும் வழி மிக மிகக் குறுகியது . கொஞ்சம் குனிந்து , கொஞ்சம் தவழ்ந்து , கொஞ்சம் ஊர்ந்து சென்று தரிசித்துவிட்டுப் பின்னர் அதே மாதிரியில் வேறு வழியாக வெளியே வர வேண்டும் . ஆனால் எனக்கு மூச்சுத் திணறல் இருப்பதால் அனுமதி மறுக்கப் பட்டது . என் கணவரும் அதிக உயரம் காரணமாய் உள்ளே செல்ல முடியாமல் அவரும் செல்ல முடியவில்லை . என்றாலும் சென்றவர்கள் கூறியதைக் கொண்டு உள்ளே விக்ரகங்கள் இருப்பதாயும் , வழி மிகக் குறுகல் எனவும் அறிந்தோம் . சில வருடங்கள் முன்னர் கூடக் காடாக இருந்த அந்த இடம் தற்சமயம் கட்டிடங்களால் நிரம்பி இயற்கைச் சூழல் மாறிவிட்டது எனவும் சொல்லிக் கொண்டனர் . சீதைக்காக லட்சுமணன் எழுப்பிய கோதாவரி நதியின் குளம் ஒன்றும் , ராம தீர்த்தம் என்ற பெயரில் அங்கே உள்ளது . கோதாவரி அங்கே தான் ஆரம்பிக்கின்றது . 24 கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 24 ராமனின் அழகைக் கண்டு வியந்த சூர்ப்பனகையானவள் , அவரிடம் , துறவிக் கோலத்தில் , ஆனால் , வில்லும் , அம்பும் வைத்துக் கொண்டு , கூடவே மனைவியையும் வைத்திருக்கும் நீ யார் என வினவ , தான் ராஜா தசரதனின் குமாரன் ராமன் எனவும் , இவள் தன் மனைவி சீதை எனவும் , லட்சுமணன் இளைய சகோதரன் எனவும் கூறிவிட்டு , தந்தையின் கட்டளையைச் சிரமேற்கொண்டு வனவாசம் செய்ய வந்திருப்பதாய்க் கூறுகின்றார் . பின்னர் சூர்ப்பனகையை யார் என ராமன் கேட்க அவளும் தன் கதையைச் சொல்கின்றாள் . விஸ்ரவஸ் என்ற முனிவருக்கும் , கைகசி என்ற ராட்சதப் பெண்ணிற்கும் பிறந்த ராவணன் என்பவன் தன் மூத்த தமையன் எனவும் , அவன் சகோதரனும் பெரும் தூக்கம் கொள்பவனும் ஆகிய கும்பகர்ணனும் , பக்திமான் ஆனவனும் , ராட்சதர்களின் நடத்தை சிறிதும் இல்லாதவனும் ஆன விபீஷணன் , மற்றும் அங்கிருந்து சற்றுத் தூரத்தில் உள்ள ஜனஸ்தானத்தில் வசிக்கும் கர , தூஷணர்கள் போன்றவர்கள் அனைவருமே தன் சகோதரர்கள் எனவும் சொல்கின்றாள் . ராமா , நாங்கள் அனைவருமே உன்னை மிஞ்சுபவர்கள் . உன்னைப் பார்த்த கணத்தில் இருந்தே உன்னை என் கணவனாய் வரித்து விட்டேன் . என்னை ஏற்றுக் கொண்டு , விகார உருவத்துடன் இருக்கும் இந்த உன் மனைவியை விட்டு விடுவாயாக என வேண்டுகின்றாள் . சாதாரணமாய் எந்த மனிதருமே ஒரு பெண் , அதிலும் கோர உருவம் படைத்த அரக்கி இவ்விதம் கேட்கும்போது எவ்வாறு பரிகசித்து விளையாடுவார்களோ , அவ்விதமே ராமனும் பரிகசித்து விளையாடுகின்றான் சூர்ப்பனகையுடன் . அவளைப் பார்த்து அவன் சொல்கின்றான் : “ ஏ , பெண்ணே ! நான் மணமாகி என் மனைவியுடனே வசிக்கின்றேன் . இதோ நிற்கும் என் தம்பி , என்னை விட அழகும் , தைரியமும் நிரம்பியவன் . அவன் மனைவியுடன் இல்லை . தனியே இருக்கின்றான் . ஆகவே அவனை உன் கணவனாய் ஏற்றுக் கொள்வாயாக !” என்று லட்சுமணன் பக்கம் கையைக் காட்ட அண்ணனின் நோக்கைப் புரிந்து கொண்ட லட்சுமணனும் சிரிப்புடனேயே , “ பெண்ணே , அண்ணனே உனக்குப் பொருந்துவார் , அதை விடுத்து என்னிடம் வராதே ! உன்னைப் போன்ற அழகி கிடைத்தால் அண்ணன் இந்தப் பெண்ணை விட்டுவிடுவார் !” என்று பரிகாசத்தை அதிகரிக்க , இது புரியாத சூர்ப்பனகை , இந்த சீதை இருந்தால் தானே ராமன் தன்னை ஏற்க மறுக்கின்றார் என நினைத்தவளாய் , சீதையை அழிக்க நினைத்து , அவளை நெருங்க , உடனேயே விஷயம் முற்றுகிறதை உணர்ந்த ராமர் , லட்சுமணனிடம் ,” இவள் கொடியவள் என்பதை அறியாமல் நாம் பரிகாசம் செய்து விட்டோமே ! இவளைத் தண்டித்து சீதையைக் காப்பாற்று !” என்று சொல்ல கோபம் கொண்ட லட்சுமணனும் , அவளின் , காது , மூக்கு போன்றவற்றை அறுத்துத் தள்ளுகின்றான் . சூர்ப்பனகை கதறிக் கொண்டே ஜனஸ்தானத்தில் உள்ள தன் தம்பியர் ஆன கர , தூஷணர்களிடம் போய் விழுந்தாள் . தங்கள் தமக்கையின் அலங்கோலத்தைக் கண்டு ஆத்திரம் அடைந்த கர , தூஷணர்கள் அவளிடம் நடந்ததைக் கேட்க , அவளும் ராம , லட்சுமணர்களின் அழகையும் , வீரத்தையும் , கம்பீரத்தையும் , அவர்களுடன் இருக்கும் பேரழகியான சீதையைப் பற்றியும் கூறிவிட்டு அவர்களைக் கொன்று தான் அவர்கள் ரத்தத்தைக் குடிக்க வேண்டும் எனச் சொல்லவே , முதலில் பல்லாயிரம் வீரர்களை அனுப்பிய கர , தூஷணர்கள் ராமன் ஒருவனே தனியாக அவர்களை அழித்தது கண்டு மிரண்டு போய் நிற்க , சூர்ப்பனகை வாயில் வந்தபடி இருவரையும் திட்டுகின்றாள் . அவள் சமாதானம் அடைய வேண்டி , இருவரும் தங்களுடன் திரிசிரஸ் என்ற மூன்று தலையுடைய அசுரனுடனும் பல்லாயிரக் கணக்கான வீரர்களுடனும் சென்று ராமனுடன் போர் தொடுக்கச் செல்கின்றான் . ராமன் லட்சுமணனிடம் தான் தனியாகவே இந்தப் போரைச் சமாளிப்பதாயும் லட்சுமணன் , சீதையை அழைத்துக் கொண்டு குகையினுள் அவளை வைத்துவிட்டுக் காவல் காக்கும்படியும் சொல்லவே , அவ்வாறே லட்சுமணனும் சீதையுடனே குகைக்குள் செல்கின்றான் . ராமர் கடும்போரிட்டுக் கர , தூஷணர்களை அழிக்கின்றார் . விண்ணில் இருந்து வானவர்களும் , மண்ணிலிருந்து ரிஷிகளும் பூமாரி பொழிந்து ராமனைப் பாராட்ட , குகையிலிருந்து லட்சுமணனும் சீதையுடனே வெளிப்பட அனைவரும் மகிழ்வுடனேயே திரும்பவும் ஆசிரமம் நோக்கிச் சென்றார்கள் . ஜனஸ்தானத்தில் இருந்து தப்பிய அகம்பனன் என்னும் அரக்கன் ராவணனை அடைந்து ஜனஸ்தானத்தில் நடந்த நிகழ்ச்சிகளை விவரிக்க ராவணன் கோபம் அடைகின்றான் . சகோதர ஒற்றுமை இங்கேயும் சொல்லப் பட்டாலும் அவை நற்காரியத்துக்கும் , தர்மத்தை நிலை நாட்டவும் அல்லாமல் , பழி வாங்கவே பயன்படுத்தப் படுகின்றது . கர , தூஷணர்களைச் சூர்ப்பனகை நாடுவதும் சரி , பின்னர் ராவணனிடம் சென்று அவனை சீதையை அபகரிக்கும்படி சொல்வதும் சரி , ஒரு விதத்தில் ராமனைப் பழிவாங்க வென்று தோன்றினாலும் உண்மையில் சூர்ப்பனகைக்கு ராவணனிடமும் கோபம் இருந்ததாயும் தெரியவருகின்றது . அது தவிர லட்சுமணனும் அவள் கோபத்தை அதிகரிக்கும் வகையில் அவள் பிள்ளையைத் தெரியாமல் கொன்று விடுகின்றான் . இங்கு சகோதர ஒற்றுமை என்பது அழிக்கவே பயன்படுத்தப் படுகின்றது . கடைசியில் குலம் அழியவும் காரணம் ஆகின்றது . ராவணனுக்கு சீதையை அபகரிக்கும் எண்ணத்தை முதலில் ஏற்படுத்தியது அகம்பனன் என்றாலும் , மாரீசன் உதவியை நாடிய ராவணன் , அவனால் நற்போதனைகள் போதிக்கப் பட்டுத் திரும்பிவிடுகின்றான் என்றாலும் , பின்னர் சூர்ப்பனகையால் தூண்டப் படுகின்றான் . சூர்ப்பனகை உண்மையில் ராவணனுக்கு சீதை மனைவியாக வேண்டும் என விரும்பினாளா ? அப்படி என்றால் இதன் பின்னர் அவள் ஏன் இந்தக் கதையில் வரவில்லை ? வஞ்சனை நிறைந்த சூர்ப்பனகையின் நோக்கம் ஒருவேளை ராவணனையும் அடியோடு அழிப்பதாயும் இருக்குமல்லவா ? நாளை காண்போம் ! 25 கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 25 ஜனஸ்தானத்தில் நடந்த சண்டையில் , கர , தூஷணர்கள் கொல்லப் பட்டபின்னர் , அவர்களில் தப்பித்த , அகம்பனன் என்பவன் , ராவணனிடம் சென்று , அரக்கர்களை ராமன் தனி ஒருவனாய் அழித்த விவரத்தைக் கூறுகின்றான் . அதைக் கேட்டுக் கோபம் அடைந்த ராவணன் , சூரியனையே அழிக்கும் வல்லமை படைத்த என்னை விரோதித்துக் கொண்டு , ஜனஸ்தானத்தையே அழிக்கத் துணிந்த வல்லமை கொண்ட அவன் யார் என வினவுகின்றான் . முதலில் பெரிதும் தயங்கிய அகம்பனன் , பின்னர் ராவணன் அவன் உயிருக்குத் தான் பாதுகாப்புக் கொடுப்பதாய் அளித்த உத்தரவாதத்தின் பேரில் , தசரத குமாரன் ராமனைப் பற்றியும் , அவன் தம்பி லட்சுமணன் பற்றியும் , பேரழகியான ராமன் மனைவி சீதை பற்றியும் கூறுகின்றான் . அவன் தான் கர , தூஷணர்களைக் கொன்று ஜனஸ்தானத்தையும் அழித்தான் என்ற தகவலைக் கேட்ட ராவணன் , அவனுக்கு உதவியவர்கள் யார் எனக் கேட்க , ராமன் தனி ஒருவனாகவே ஜனஸ்தானத்தில் அழிவை ஏற்படுத்தியதாகவும் , அவன் கோபம் கொண்டால் அதை அடக்க முடியாதது என்றும் , எங்கு திரும்பினாலும் ராமன் ஒருவனே கண்ணில் தெரியும்படியான வேகத்துடனும் , வீரத்துடனும் சண்டை இடுகின்றான் எனவும் தெரிவித்தான் . மேலும் அகம்பனன் சொன்னதாவது : “ இந்த ராமனைப் போரில் வீழ்த்த முடியாது . ஆனால் அவனுக்கு மரணத்தை ஏற்படுத்த ஒரே வழி அவன் மனைவியான பேரழகி சீதையை நீ அகற்றிவிட்டுப் பலாத்காரமாய் அவளைத் தூக்கி வருவது ஒன்றேதான் இருக்க முடியும் . அவளுக்கு ஈடு , இணை யாரும் இருப்பதாய்த் தெரியவில்லை . எப்படியாவது ராமனுக்குத் தெரியாமல் நீ அவளைத் தூக்கி வந்துவிடு . அவள் பிரிவு தாங்காமல் ராமன் உயிரை விட்டு விடுவான் ” என்று கூறுகின்றான் . ராவணனும் ஒத்துக் கொண்டு , மாரீசனைக் கண்டு உதவி கேட்கலாம் என அவன் தற்சமயம் இருக்கும் ஆசிரமம் நோக்கிச் செல்லுகின்றான் . பால காண்டத்தில் தாடகை வதத்துக்கு முன்னர் அவள் மகன் ஆன மாரீசன் முதலில் ராம , லட்சுமணரோடு போரிட்டதும் , ராம பாணத்தால் மாரீசன் வெகு தூரத்துக்குத் தூக்கி எறியப் பட்டதும் , நினைவிருக்கலாம் . அந்த மாரீசன் தான் அதன் பின்னர் ஜடாமுடி தரித்து , மரவுரி அணிந்து திருந்தியவனாய் ஆசிரமத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான் . அவனைக் காணவே இப்போது ராவணன் சென்றான் . ( இந்த மாரீசன் ஒரு விஷ்ணு பக்தன் எனவும் , வைகுண்டத்தின் காவல்காரன் ஆன அவன் நடத்தையில் கோபம் கொண்டு , விஷ்ணு கொடுத்த சாபத்தின் காரணமாய் அரக்க குலத்தில் பிறந்ததாயும் , விஷ்ணு தானே அவனைத் தன் கையாலேயே கொன்று முக்தி கொடுப்பதாய் வாக்குக்கொடுத்ததாயும் ஒரு கதை உண்டு .) எப்படி இருந்தாலும் சாபத்தின் காரணமாய் அரக்கி ஆன தாடகையின் மகன் ஆன மாரீசன் தற்சமயம் நல்வாழ்க்கையே வாழ்ந்து வருகின்றான் . இந்தச் சமயத்தில் அவனை உதவி கேட்கச் சென்றான் ராவணன் . மாரீசனிடம் , தான் வந்த காரியத்தைச் சொல்லி , சீதையை அபகரிக்கப் போவதாயும் , மாரீசனை அதற்கு உதவுமாறும் கேட்க , மாரீசனோ அவனைக் கடிந்து கொள்கின்றான் . “ ஏ , ராவணா , உன் ராஜ்யத்தில் ஒரு குறையும் இல்லை , யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை , அப்படி இருக்கையில் இம்மாதிரி ஒரு யோசனையை உனக்குக் கூறியவர் யார் ? நிச்சயம் உன்னுடைய விரோதியாகவே இருக்கவேண்டும் . ராமனைப் பற்றி நீ நன்கு அறிய மாட்டாய் என நினைக்கின்றேன் . ஆழம் காண முடியாத சமுத்திரம் ஆன அவன் கையில் இருக்கும் வில் , முதலைகளுக்குச் சமானம் என்றால் , அந்த வில்லில் இருந்து எழும் அம்புகள் , பேரழிவை ஏற்படுத்தும் பேரலைகளுக்குச் சமானம் ஆகும் . அவனுடைய தோள் வலிமை தெரியாமல் அதில் போய் நீ சிக்கிக் கொண்டாயானால் முற்றிலும் அழிந்து போவாய் . நீ உன் நகரத்துக்குப் போய் மனைவிமாரோடு சுகமாய் இருப்பாயாக , ராமன் அவன் மனைவியோடு சுகமாய் இருக்கட்டும் , அவன் வழிக்கு நீ போகாதே !” என அறிவுரை கூற , அதை ஏற்று ராவணனும் இலங்கை திரும்புகின்றான் . ஆனால் சகல விதமான செளகரியங்களும் , சம்பத்துக்களும் நிறைந்த ராவணனுக்கு அழிவு காலம் எற்பட்டு விட்டதை யாரால் தடுக்க முடியும் ? இதை நிரூபிப்பதே போல் இலங்கைக்குப் பெரும் கோபத்தோடு , ஆத்திரத்தோடும் , அழுகையோடும் வஞ்சனை நிறைந்தவளாயும் வந்து சேர்ந்தாள் சூர்ப்பனகை ! கம்ப ராமாயணம் அகம்பனன் பற்றிக் கூறவில்லை . ஆனால் சூர்ப்பனகையின் வஞ்சனை பற்றி அருணகிரிநாதர் தன் திருப்புகழில் கூறி இருப்பது இது வரை யாரும் சொல்லாத ஒன்றாகும் . சூர்ப்பனகையின் கணவன் வித்யுத்ஜிஹ்வா என்னும் அரக்கன் . ராவணன் அளவு கடந்த போர் வெறியில் ஒரு சமயம் தங்கை கணவன் என்று கூடப் பார்க்காமல் அவனைக் கொன்றுவிடுகின்றான் . சூர்ப்பனகை மனதில் துக்கமும் , ராவணன் மேல் கோபமும் பெருக்கெடுத்து ஓடுகின்றதாம் . ஆனாலும் காலம் வரவேண்டும் எனக் காத்திருக்கின்றாள் சூர்ப்பனகை . ஜனஸ்தானத்தில் வந்து தங்கி இருக்கின்றாள் . அப்போது அவள் குமாரன் பெரும் உயரமாய் வளர்ந்து இருந்த தர்ப்பைப் புற்களுக்கிடையே தவம் செய்து கொண்டிருந்தான் . தர்ப்பை புற்களை அறுக்க வந்த லட்சுமணன் , அவன் தவம் செய்து கொண்டிருப்பதை அறியாமல் அவன் தலையையும் சேர்த்து அறுத்து விடுகின்றான் . கொண்ட கணவனும் போய் , உற்ற மகனும் போய்த் தவித்தாள் சூர்ப்பனகை . துயரக்கடலில் ஆழ்ந்த சூர்ப்பனகை , ராம , லட்சுமணர்களையும் வஞ்சம் தீர்க்கவேண்டும் , தமையன் ஆன ராவணனையும் பழி தீர்க்க வேண்டும் . ஆகவே இவர்கள் இருவருக்கும் சண்டை மூட்டி விட்டால் ஒருவருக்கொருவர் சண்டை போட்டு அழிந்துவிடுவார்கள் என எண்ணினாளாம் . அதற்கு அவளுக்குக் கர , தூஷணர்களின் முடிவு உதவி செய்தது . மேலும் அருணகிரிநாதர் சொல்வது என்னவெனில் : // மூக்கறை மட்டைம காபல காரணி சூர்ப்பந கைப்படு மூளியு தாசனி மூர்க்க குலத்திவி பீஷணர் சோதரி …… முழுமோடி மூத்தவ ரக்கனி ராவண னோடியல் பேற்றிவி டக்கம லாலய சீதையை மோட்டன் வளைத்தொரு தேர்மிசை யேகொடு …… முகிலேபோய் மாக்கன சித்திர கோபுர நீள்படை வீட்டிலி ருத்திய நாளவன் வேரற மார்க்கமு டித்தவி லாளிகள் நாயகன் …… மருகோனே // ( திருத்தணி திருப்புகழ் பாடல் எண் 272) விளக்கம் நாளை பார்க்கலாம் . 26 கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 26 அறிமுகம் நமக்கு இங்கே தான் முதன்முதலாய்க் கிடைக்கின்றது . அதுவும் முதலில் அகம்பனன் மூலமும் , பின்னர் சூர்ப்பனகை மூலமும் . இருவருமே சீதையை அபகரித்து வருவதின் மூலம் ராமனைத் துன்புறுத்தலாம் என்றே சொல்லிக் கொடுக்கின்றனர் . ஆனால் அதில் ராவணைன் அழிவும் இருக்கின்றது என்பதை உணராமல் இருந்திருப்பார்களா என்ன ? இதைக் காட்டவே கம்பர் , “ நீல மாமணி நிற நிருதர் வேந்தனை மூல நாசம் பெற முடிக்கும் மொய்ம்பினாள் ” என்று சூர்ப்பனகை , ராவணனை அடியோடு அழிக்கும் திறன் பெற்றவள் எனக் கூறுகின்றார் . சூர்ப்பனகையின் கணவன் ராவணனால் கொன்றது பற்றியும் , அவள் மகனை லட்சுமணன் கொன்றது பற்றியும் நேற்றுக் கண்டோம் . அந்த லட்சுமணால் மூக்கறுபட்டவள் என்பதைத் தான் அருணகிரியார் ,” மூக்கறை மட்டை மகாபல காரணி ” எனச் சொல்கின்றார் . மேலும் சூர்ப்பநகையைப் படு மூளி , உதாசனி , வஞ்சகி என்றெல்லாம் சொல்பவர் “ விபீஷணன் சோதரி ” என்று குறிப்பிடுவதின் நோக்கம் முற்பிறவியில் நடந்த ஒரு சம்பவம் . காரண , காரியத்தோடு தான் ராமாயண கதா பாத்திரங்களின் தோற்றம் என்பதே கதையின் நோக்கம் என்பதால் இதை இங்கே குறிப்பிடுகின்றேன் . ஒரு தாய் வயிற்றில் பிறந்தும் , ராட்சத குலச் சகோதரர்களில் விபீஷணன் மட்டும் ஏன் நல்லவனாய் இருந்தான் என்பதும் , தெரியவரும் . // சத்யவிரதன் என்னும் மன்னன் மகன் சங்கசூடன் என்பவன் ஆதிசேஷனின் பக்தன் . நாள் தோறும் தவறாமல் ஆதிசேஷனை வழிபட்டு வந்தான் அவன் . அவனுடைய குருநாதரின் மகள் சுமுகி என்பவள் . அவள் சங்க சூடன் மேல் மாறாக் காதல் கொண்டாள் . அவனிடம் தன்னை மணக்கும்படி வேண்ட , சங்க சூடனோ , “ குரு என்பவர் தந்தைக்குச் சமானம் ! அவ்வகையில் நீ என் சகோதரி ! ஒரு சகோதரியைச் சகோதரன் திருமணம் செய்ய நினைப்பது எத்தகைய கொடிய பாவம் ! அத்தகைய பாவத்தைச் செய்து குருத் துரோகம் நான் செய்ய மாட்டேன் !” என்று கூறுகின்றான் . அவள் திரும்பத் திரும்ப அவனிடம் வேண்ட , “ நீ அடுத்த பிறவியிலும் எனக்குச் சகோதரி தான் , போ ! உன்மேல் எனக்குக் கடுகளவும் , விருப்பம் என்பதே இல்லை !” என்று சொல்ல , கோபம் கொண்ட சுமுகி அரசனிடம் முறையிடுகின்றாள் . அதுவும் எப்படி ? “ மன்னா , ஒழுக்கத்தில் சிறந்தவன் என்று நீ நினைக்கும் உன் மகன் குரு புத்திரியான என்னிடம் தவறாய் நடந்து கொள்கின்றான் ! நீதி தவறாத உன் ஆட்சியிலும் இவ்வாறான கதியா எனக்கு ?” என்று அழுது , புலம்ப நீதி தவறாத மன்னனும் , தீர விசாரிக்காமல் , மன்னன் மகனே ஆயினும் , தண்டனைக்கு உட்பட்டவனே எனக் கூறி , இளவரசனை மாறு கால் , மாறு கை வாங்குமாறு தண்டனை விதிக்கின்றான் . இளவரசனுக்குத் தண்டனை நிறைவேற்றப் படுகின்றது . ஒரு பாவமும் செய்யாத தனக்கு ஏன் இந்தக் கதி என்று ஆதிசேஷனிடம் முறையிட்ட சங்க சூடன்முன்னால் தோன்றினார் ஆதிசேஷன் . “ என்ன தான் உயர்ந்த குலத்தில் பிறந்தாலும் சிலரின் குணத்தை மாற்ற முடியாது . நீ சொன்னபடியே உன் வாக்கை நிறைவேற்ற என்னால் முடியும் . அடுத்த பிறவியிலும் அவள் உனக்குச் சகோதரியாகவே பிறப்பாள் . அப்போது , நானே வந்து அவளுக்குத் தண்டனை கொடுக்கின்றேன் . அது வரை பொறுத்திருக்கத் தான் வேண்டும் !” எனச் சொல்லி மறைகின்றார் . அதன்படி இந்தப் பிறவியில் விபீஷணன் சகோதரியாக வந்து பிறந்த சுமுகி ஆன சூர்ப்பநகைக்கு , ஆதி சேஷனின் அவதாரம் எனச் சொல்லப் படும் லட்சுமணனால் தண்டனை விதிக்கப் படுவதாய்ச் சொல்கின்றார் அருணகிரியார் . இனி கதைக்குச் செல்வோமா ? பெருங்கூச்சலுடனும் , கத்தலுடனும் ராவணன் சபைக்கு வந்த சூர்ப்பனகை ராவணனைப் பார்த்துக் கத்த ஆரம்பிக்கின்றாள் . “ பெண்களோடு கூடி நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கின்ற நீயும் ஒரு அரசனா ? உன் ராஜ்யத்தில் நடப்பது என்னவென நீ அறிவாயா ? உன் மனிதர்கள் ஆயிரக் கணக்கில் ஜனஸ்தானத்தில் கொல்லப் பட்டதையும் , அந்த இடமே அழிக்கப் பட்டதையும் நீ அறிவாயா ? ராமன் என்ற ஒரு தனி மனிதன் இதைச் செய்ததாவது உனக்குத் தெரியுமா ? அவன் மேற்பார்வையில் , தண்டக வனத்தை ரிஷிகளின் தவங்களுக்கு ஏற்றவகையில் பாதுகாப்புச் செய்து கொடுப்பதை நீ அறிவாயா ? இத்தனையும் அவன் செய்து முடிக்க , நீயோ அகங்காரத்துடன் எனக்கு நிகரில்லை என வீற்றிருக்கின்றாய் ! நாட்டு நடப்பை அறியாத அரசன் ஆன நீ கிழிந்த துணிக்குச் சமானம் , தூக்கி எறியப் பட்ட வாடிய பூவுக்குச் சமம் . ” என வாயில் வந்தபடி ராவணனை இழித்துப் பேச ஆரம்பித்தாள் . அவள் பேச்சால் கோபம் அடைந்த ராவணன் , “ யார் அந்த ராமன் ? எங்கிருந்து வந்தான் ? என்ன ஆயுதங்கள் வைத்துள்ளான் ? எத்தன்மையானவன் ?” என வினவுகின்றான் . சூர்ப்பனகை ராமனின் வீரத்தை விவரிக்கின்றாள் :” ஒரு பெண் என்பதால் என்னைக் கொல்லாமல் அங்கஹீனம் செய்து விரட்டி விட்டான் அவன் தம்பி லட்சுமணன் என்பவன் . அண்ணனிடம் பெரும் அன்பும் , அதற்கு மேல் மரியாதையும் பூண்டவன் என்பது அவனைப் பார்த்தாலே தெரிகின்றது . அவர்களுடன் இருக்கின்றாள் பேரழகியான ஒரு பெண் . அவள் பெயர் சீதை . ராமனின் மனைவியாம் அவள் . எப்பேர்ப்பட்ட பேரழகி தெரியுமா அவள் ? அவள் இருக்க வேண்டிய இடம் உன் அந்தப்புரம் . திருவான அந்த மகாலட்சுமியே அவதாரம் எடுத்து பூமிக்கு வந்தது போன்ற அற்புதத் தோற்றம் நிறைந்த அந்தப் பெண் உனக்கு மனைவியாக இருப்பதற்கே அருகதை படைத்தவள் . அவளுக்கேற்ற கணவன் நீதான் ராவணா ! நான் அவளை உனக்கு மனைவியாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடேயே அவளை நெருங்கினேன் . அப்போது தான் அந்த லட்சுமணன் என் அங்கங்களை வெட்டி விட்டுத் துரத்தி விட்டான் . பார் ராவணா , உனக்காக நான் இந்த அவமானத்தைப் பொறுத்துக் கொண்டதோடு அல்லாமல் , உன்னிடம் சொல்லி எப்படியாவது அந்த சீதையை நீ தூக்கி வந்தாவது மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்ளவே வந்தேன் .” என்று சொல்கின்றாள் . அவள் வார்த்தையைக் கேட்ட ராவணன் , தன் சபையில் வீற்றிருந்த மந்திரிமார்களை அனுப்பி விட்டுப் பெரும் யோசனையில் ஆழ்ந்தான் . நடந்த நிகழ்ச்சிகளை ஆராய்ந்து , சிந்தித்துப் பார்த்து , பின்னர் ஒரு தீர்மானத்திற்கு வந்தவனாய்த் தன் தேர் இருக்குமிடம் சென்று தேரோட்டியிடம் மாரீசன் இருக்குமிடம் போகச் சொல்கின்றான் . தேரும் சென்றது . மாரீசன் இருக்குமிடமும் வந்தது . 27 கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 27 பிரம்மாவின் மானச புத்திரர்களில் ஒருவர் ஆன புலஸ்தியர் என்பவர் , ஒரு ஆசிரமம் அமைத்துத் தவ வாழ்வு மேற்கொண்டிருந்தார் . அந்த ஆசிரமத்தில் பெண்கள் நுழையக் கூடாது எனக் கட்டுப்பாடும் விதிக்கப் பட்டிருந்தது . மீறி நுழையும் பெண்கள் , புலஸ்தியரின் சாபத்தின் படி அவருடன் திருமணம் ஆகும் முன்னரே கர்ப்பம் தரிப்பார்கள் எனச் சொல்லப் பட்டிருந்தது . ஆனால் ஒருமுறை த்ருணபிந்து என்னும் ரிஷி குமாரி , தவறுதலாய் அனுமதி இல்லாமல் புலஸ்தியரின் ஆசிரமத்தில் நுழைந்துவிட , சாபத்தின் பலனாய்க் கர்ப்பம் தரிக்கின்றாள் . அழுது , புலம்பிய தன் மகளுக்காக த்ருணபிந்து , புலஸ்தியரை வேண்ட , அவரும் அவளை மனைவியாக வரிக்கின்றார் . இவர்களுக்குப் பிறக்கும் மகன் விஸ்ரவஸ் என்ற பெயருடன் வளர்ந்து , பாரத்வாஜ முனிவரின் மகள் தேவ வர்ணனியை மணக்கின்றார் . இவர்கள் இருவருக்கும் பிறக்கின்றான் ஒரு குமாரன் , அவனுக்கு வைஸ்ரவணன் என்ற பெயர் வைத்து வளர்ந்து வருகின்றான் . பெரும் தவங்களைச் செய்கின்றான் அவன் . தேவர்களுக்கு எவ்விதத்திலும் உதவ வேண்டும் என்ற உள்ளத்துடனும் , உலகத்து நாயகர்களாய் இருக்க வேண்டும் என்ற ஆவலுடனும் இருக்கின்றான் அவன் . பிரம்மாவை நோக்கித் தவம் இருந்த அவன் முன்னர் பிரம்மா தோன்றி , “ எமன் , இந்திரன் , வருணன் ஆகிய மூவரோடு நான்காவது உலக நாயகனைத் தேர்ந்தெடுக்க நினைத்த என் வேலையை நீ தீர்த்துவிட்டாய் . அந்தப் பொறுப்பை உனக்கு அளிக்கின்றேன் . இதோ ! இந்தப் புஷ்பக விமானம் , நினைத்த போது நினைத்த இடத்திற்குச் செல்லும் தன்மை வாய்ந்தது . இதைப் பெற்றுக் கொண்டு நீ பெரும் செல்வத்திற்கு அதிபதியாகின்றாய் !” என்று சொல்லி வைஸ்ரவணனுக்குக் குபேர பதவியை அளிக்கின்றார் . தன் தந்தையிடம் சென்று , தான் வசிக்கத் தக்க இடத்தைத் தேர்ந்தெடுத்துத் தருமாறு கேட்க , அவரும் தென் கடலுக்கு அப்பால் , திரிகூட மலையை ஒட்டி , இலங்கை என்னும் பெயருடைய ஒரு அழகான நகரம் இருக்கின்றது . தேவதச்சன் விஸ்வகர்மாவால் , ராட்சதர்களின் ஆணைக்கு உட்பட்டு நிர்மாணிக்கப் பட்ட அந்த நகரம் தற்சமயம் அரசனும் இல்லாமல் , பிரஜைகளும் இல்லாமல் காலியாக இருக்கின்றது . ராட்சதர்கள் அனைவரும் விஷ்ணுவிற்குப் பயந்து ஓடிச் சென்று விட்டார்கள் . அந்த நகரை நீ எடுத்துக் கொண்டு உலகிற்கு நன்மை செய்வாயாக !” என்று சொல்லி அனுப்புகின்றார் . குபேரன் அனைவரும் பாராட்ட இலங்கையை அடைந்து அரசாட்சி புரிந்து வருகின்றான் . அப்போது , மிஞ்சி இருந்த ராட்சதர்களில் முக்கியமானவன் ஆன சுமாலி , பாதாளத்தில் ஒளிந்திருந்தவன் , இந்தச் செய்தியைக் கேட்டு மனம் வெதும்பினான் . அவனுக்கு அழகே உருவான கைகஸி என்ற பெண்ணொருத்தி இருந்தாள் . அவளுடன் ஒரு இடத்தில் நில்லாமல் அங்கேயும் , இங்கேயும் அலைந்து திரிந்த ஒரு சமயம் விண்ணில் புஷ்பக விமானத்தில் பறந்து கொண்டிருந்த குபேரனையும் , அவன் தேஜஸையும் , கம்பீரத்தையும் பார்த்தான் . ஏற்கெனவே அவன் புகழையும் பற்றிக் கேள்விப் பட்டிருந்த சுமாலி இப்போது இன்னும் மனம் கொதித்தான் . பொறாமையில் துவண்டு போனான் . தன் அழகிய மகளைப் பார்த்து , ” உனக்குத் திருமணப் பருவம் வந்து விட்டது , நீ குபேரனின் தகப்பனும் , புலஸ்தியரின் மகனும் ஆன விஸ்ரவஸை அணுகி உன்னைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்வாய் . உனக்குக் குபேரனுக்கு நிகரான மகன் பிறப்பான் . பெரும் புகழ் அடைவான் அந்த மகன் . அவன் மூலம் இழந்த ராஜ்யத்தைத் திரும்பப் பெறலாம் !” என்று சொல்கின்றார் . கைகஸியும் தகப்பன் யோசனையின் பேரில் விஸ்ரவஸை அடைந்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி , இரு கை கூப்பி வேண்டுகின்றாள் . விஸ்ரவசோ , தன் தவ வலிமையால் அவள் எண்ணம் புரிந்தவராய் , அவளிடம் ,” பெண்ணே ! உன் எண்ணம் என்னவென எனக்குப் புரிகின்றது . ஆனால் நீ என்னை வந்து அணுகி இருக்கும் இந்நேரம் நல்ல நேரம் அல்லவே ! ஆகையால் உனக்குப் பிறக்கப் போகும் மகன்கள் கொடுமைக்காரர்களாயும் , உருவத்தில் பயங்கரமாயும் இருப்பார்களே ?” என்று கூறுகின்றார் . அதுவும் அவள் உடனேயே ஆசிரமத்திற்குள் அனுமதி இன்றிப் புகுந்ததால் கர்ப்பமும் , குழந்தைப் பேறும் தவிர்க்க முடியாது எனவும் கூறுகின்றார் . அதிர்ச்சி அடைகின்றாள் . கைகஸி , எனக்கு அப்படிப் பட்ட பிள்ளைகள் வேண்டாம் எனக் கதறுகின்றாள் . ஆனால் விஸ்ரவஸோ , இதைத் தடுக்க முடியாது , எனவும் , உனக்குப் பிறக்கும் கடைசி மகன் மட்டும் தெய்வ பக்தி நிறைந்தவனாய் , என்னைப்போல தவ வலிமைகள் உள்ளவனாய் இருப்பான் . உன் மகன்களின் குலமும் அவன் மூலமே விருத்தி அடையும் !” என்று கூறுகின்றார் . பின்னர் சிறிது காலத்தில் கைகஸிக்கு ராவணன் பிறக்கின்றான் . பிறக்கும்போதே ரத்த மழை , பயங்கரமான இடி முழக்கம் , சூரிய ஒளி மங்கியது , வால் நட்சத்திரங்கள் விண்ணிலிருந்து மண்ணில் விழுந்தன , பேய்க்காற்று , பூமி நடுக்கம் , கடல் கொந்தளிப்பு இத்தனைகளுடன் பத்துத் தலைகளுடன் , பிறந்தான் ராவணன் . இவனுக்கடுத்து பெரும்பலம் வாய்ந்தவனாய்க் கும்பகர்ணனும் , கோர உருவத்துடன் கூடிய சூர்ப்பநகையும் பிறந்தார்கள் . கடைசியில் விபீஷணனைப்பெற்றெடுத்தாள் கைகஸி . அப்போது விண்ணில் இருந்து பூமாரி பொழிந்தது , யக்ஷர்களும் , தேவர்களும் இனிய கானம் இசைத்தார்கள் , அசரீரிகள் வாழ்த்துச் சொல்லின . தசக்ரீவன் எனப் பெயரிடப் பட்ட ராவணனும் , கும்பகர்ணனும் , பிறரைத் துன்புறுத்துவதில் இன்புற்று வாழ , விபீஷணனோ , வேதங்களைக் கற்று அமைதியான முறையில் தன் வழிபாடுகள் , தவங்கள் என வாழ்ந்து வந்தான் . இந்நிலையில் ஓர் நாள் விண்ணில் அதசய புஷ்பக விமானத்தில் குபேரன் பறந்து செல்ல , குபேரனின் ஒளியையும் சிறப்பையும் கண்டுப் பிரமித்து நின்ற தசக்ரீவனை கைகஸி அழைத்து , “ அது உன் சகோதரன் தான் , வேறு யாரும் இல்லை , மாற்றாந்தாய் மகன் , அவன் ஒளியையும் , கம்பீரத்தையும் பார் ! நீ அவனைப் போல் ஆக வேண்டாமா ?” எனக் கேட்க ராவணனின் மனதில் பொறாமை கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது . இந்த ராவணனின் பத்துத் தலைகளுக்கும் தனித் தத்துவமே உண்டு . நாமே ஒருவரிடத்தில் நடந்து கொள்கிறாப் போல் இன்னொருவரிடம் நடப்பதில்லை . தாய் , தந்தையிடம் ஒரு மாதிரி , மனைவி , குழந்தைகளிடம் ஒரு மாதிரி , அலுவலகத்தில் சக ஊழியர் என்றால் ஒரு மாதிரி , மேல் அதிகாரி என்றால் வேறு மாதிரி , சிநேகிதர்களிடம் ஒரு மாதிரி , என்று பல்வேறு விதமான குண அதிசயங்கள் கொண்டவர்களே . ஒரே மாதிரி நடந்து கொள்ளுவதில்லை நாம் அனைவரிடமும் . நமக்குள் நாமே புரிந்து கொள்கின்றோமா என்பதே சந்தேகம் தான் . நாம் ஒருவர்தான் என்பதை நாம் அறிவோம் , என்றாலும் , நமக்குள் இருப்பவர்கள் எத்தனை பேர்கள் ? இது தான் ராவணனின் பத்துத் தலைகளின் தத்துவம் , மிகச் சிறந்த சிவ பக்தனும் , வீணை விற்பன்னனும் , வீரனும் , சகோதர , சகோதரிகளிடம் பாசம் கொண்டவனும் , முறை தவறி எதிலும் நடவாதவனும் ஆன ராவணன் , முதல் முதலாய் முறை தவறி நடந்து கொண்டது சீதை விஷயத்தில் தான் . ஆனால் ராமனோ என்றால் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரே மாதிரியாக நமக்குள் இருக்கும் , “ நான் ‘ விழிப்புற்றவனாய் , தனக்கு நேரிடும் துன்பத்தைக் கூடப் பொருட்படுத்தாதவனாய் , எப்போதும் தருமத்தின் வழி நடப்பவனாய் இருக்கின்றான் . இரு பெரும் வீரர்களில் ஒருவன் தோல்வி அடைவதும் , மற்றவன் வெற்றி அடைவதும் அதனால் தான் அல்லவா ? 28 கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 28 வால்மீகி ராமாயணத்தில் , ராவணனின் பிறப்பு , வளர்ப்பு , போன்ற விபரங்கள் உத்தரகாண்டத்திலேயே இடம் பெறுகின்றது . என்றாலும் நம் கதைப் போக்குக்குத் தேவையாக , இப்போதே சொல்லப் படுகின்றது . ராம பட்டாபிஷேகம் முடிந்த பின்னர் , அகத்தியரால் ராமருக்குச் சொல்லப்பட்டதாய் வால்மீகி ராமாயணம் கூறுகின்றது . இனி , ராவணனின் கதை தொடரும் : “ தன் தாயின் ஆசையையும் அவள் வார்த்தையையும் கேட்ட ராவணன் , தாயிடம் , அவள் ஆசையைத் தான் நிறைவேற்றுவதாய் உறுதி அளித்ததோடு அல்லாமல் , தன் தம்பியரோடு கூடிக் கடும் தவங்களில் ஈடுபட்டான் . கும்பகர்ணன் , கடும் வெயிலில் அக்கினிக்கு நடுவேயும் , குளிரில் நீருக்கு நடுவேயும் தவம் புரிய , விபீஷணனோ ஒற்றைக் காலில் நின்று தவம் செய்கின்றான் . ராவணனோ என்றால் நீர் கூட அருந்தாமல் தவம் செய்ததோடு அல்லாமல் , தன் தலைகளையும் ஒவ்வொன்றாய் அறுத்துப் போட்டுத் தவம் செய்கின்றான் . ஒன்பது தலைகள் வெட்டப் பட்டு , பத்தாவது தலை வெட்டப் படும்போது பிரம்மா எதிரே தோன்றி , “ தசக்ரீவா , என்ன வரம் வேண்டும் ?” என வினவ , சாகா வரம் கேட்கின்றான் , தசக்ரீவன் . அது இயலாது என பிரம்மா கூற , தசக்ரீவன் சொல்கின்றான் :” நாகர்கள் , கழுகு இனங்கள் , தேவர்கள் , யக்ஷர்கள் , தைத்யர்கள் , தானவர்கள் , ராட்சதர்கள் ஆகியோர் மூலமாய் எனக்கு மரணம் நேரிடக் கூடாது . மனிதர்கள் பற்றி எனக்குக் கவலை இல்லை , புல்லைவிடக் கீழாய் அவர்களை நான் மதிக்கின்றேன் .” எனக் கூறுகின்றான் . அவ்வாறே வரம் அளித்த பிரம்மா , “ உன் மற்ற ஒன்பது தலைகளையும் நீ திரும்பவும் பெறுவாய் ! அத்தோடு , நினைத்த நேரத்தில் நினைத்த உருவத்தையும் அடைவாய் ” என்றும் ஆசி அளிக்கின்றார் . பின்னர் விபீஷணனைப் பார்த்து என்ன வரம் வேண்டுமெனக் கேட்க , அவனோ , ” எந்த நெருக்கடியிலும் தன்னிலை இழக்காமல் , நல்ல வழியை விட்டு விலகாமல் , தர்மத்தின் வழியிலேயே நான் நடக்க வேண்டும் , பிரம்மாஸ்திரம் முறையான சிட்சை இல்லாமலேயே எனக்கு வசமாக வேண்டும் , தர்மத்தின் வழியை விட்டு நான் விலகக் கூடாது !” என்று கேட்க அவ்வாறே அவனுக்கு வரம் அளிக்கப் பட்டது . மேலும் , பிரம்மா விபீஷணனை , “ நீ சிரஞ்சீவியாக இருப்பாய் !” எனவும் ஆசி வழங்குகின்றார் . அடுத்துக் கும்பகர்ணன் வரம் கேட்க எத்தனித்த போது , தேவர்கள் பிரம்மாவைத் தடுக்கின்றார்கள் . வரம் ஏதும் கொடுக்கும் முன்னரே கும்பகர்ணன் செய்யும் அட்டகாசம் தாங்க முடியவில்லை . வரம் கொடுத்தால் தாங்காது . அவனை மாயைக்கு உட்படுத்திவிட்டுப் பின்னர் வரம் கொடுங்கள் என்று சொல்கின்றார்கள் . இல்லை எனில் பூவுலகின் நன்மைகள் அனைத்தும் கடுந்தீமைகளாகி விடும் எனவும் சொல்கின்றனர் . பிரம்மாவும் சரஸ்வதி தேவியை மனதில் நினைக்க அவளும் , கும்பகர்ணன் நாவில் குடி இருந்து , விருப்பம் தவறிய சொல் வரும்படியாகச் செய்கின்றாள் . கும்பகர்ணன் விரும்பியதோ “ நித்தியத்துவம் ” ஆனால் அவன் நாவில் வந்ததோ “ நித்ரத்துவம் “. காலம் கடந்தே இதை உணர்ந்த கும்பகர்ணன் வருந்த , வேறு வழியில்லாமல் உறங்காமல் இருக்கும்போது பெரும்பலத்துடன் இருக்கும் சக்தியையும் அடைகின்றான் . பின்னர் தசக்ரீவனின் பாட்டன் ஆகிய சுமாலிக்கு , பேரன்கள் மூவருக்கும் பிரம்மா கொடுத்த வரங்கள் பற்றித் தெரிய வர , தசக்ரீவனை அழைத்து , “ குபேரனைத் துரத்தி விட்டு இலங்கையை உனதாக்கிக் கொள்வாய் ! உன் இனிய மொழிகளால் கிடைக்கவில்லை எனில் அன்பளிப்பாகவோ , அல்லது , பலாத்காரமாகவோ இலங்கையை உன் வசப் படுத்து !” எனக் கூறுகின்றான் . தசக்ரீவன் மறுக்கின்றான் . “ வைஸ்ரவணன் என்ன இருந்தாலும் என் சகோதரன் . அவனை அங்கிருந்து விரட்டுவது தவறு .” எனக் கூறுகின்றான் . ஆனால் சுமாலி மேலும் மேலும் அவனை வற்புறுத்தக் கடைசியில் மனம் மாறி தசக்ரீவன் குபேரனுக்குத் தூது அனுப்பி இலங்கையைத் தன் வசம் ஒப்படைக்கும்படிக் கேட்கின்றான் . இருவருக்கும் தந்தையான விஸ்ரவஸ் குபேரனிடம் தசக்ரீவன் பெரும் வரங்களைப் பெற்றிருப்பதை எடுத்துக் கூறி , அவனை விரோதித்துக் கொள்ள வேண்டாம் , எனவும் , கைலை மலையில் குபேரன் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளலாம் எனவும் கூறுகின்றார் . இந்தப் பிரச்னையின் காரணத்தால் தசக்ரீவனைத் தாம் சபிக்கவும் நேர்ந்து விட்டது எனக் கூறி வருந்துகின்றார் . ஆகவே குபேரன் தகப்பன் மனம் நோகாமல் இருக்கக் கைலை சென்று அங்கே “ அல்காபுரி “ யை ஸ்தாபித்து அங்கே இருக்க ஆரம்பிக்க இலங்கை தசக்ரீவன் வசம் ஆகின்றது . பின்னர் சூர்ப்பநகை வித்யுத்ஜிஹ்வாவையும் , மயன் மகள் மண்டோதரியை தசக்ரீவனும் திருமணம் செய்து கொள்கின்றார்கள் . தசக்ரீவனுக்கும் , மண்டோதரிக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்கின்றது . அப்போது விண்ணில் இருந்து பெரும் இடி முழக்கம் கேட்க , ராஜ்ஜியமே ஸ்தம்பித்து நின்றது . அந்தக் குழந்தைக்கு மேகநாதன் என்ற பெயரிட்டு வளர்த்து வருகின்றான் , தசக்ரீவன் . கும்பகர்ணனோ தான் பெற்ற வரத்தால் பெருந்தூக்கத்தில் ஆழ , தசக்ரீவன் பெரும் போர்களைப் புரிகின்றான் . பல ரிஷிகளையும் , யக்ஷ , கந்தர்வர்களையும் , இந்திர லோகத்தையும் அழிக்கின்றான் . தசக்ரீவனின் அண்ணன் ஆன குபேரன் தம்பியை நல்வழிப்படுத்த வேண்டி , ஒரு தூதுவனை அனுப்புகின்றான் . அந்தத் தூதுவன் , தசக்ரீவனிடம் கைலை மலை பற்றியும் , சிவ , பார்வதி பற்றியும் கூறி , நீ நல்வழிக்குத் திரும்பி விடு , இல்லை எனில் அழிந்து விடுவாய் எனக் கூற , தசக்ரீவன் கோபம் கொண்டு , “ மகேசனுக்கு நெருங்கியவன் என்பதால் என் அண்ணன் தன் வசமிழந்து விட்டானோ ? அண்ணன் எனக் கூடப் பார்க்காமல் அவனையும் மற்ற நாயகர்கள் ஆன இந்திரன் , யமன் , வருணன் ஆகியோரையும் அழிக்கின்றேன் !” எனக் கோபத்துடன் கூறிவிட்டு தூதுவனை வெட்டி வீழ்த்தி விட்டுக் கைலை மலை அடைந்தான் . 29 கதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் பகுதி 29 கைலை மலை நோக்கிச் சென்ற தசக்ரீவனையும் , அவனோடு வந்த ராட்சதர்களையும் , எதிர்த்த யக்ஷர்கள் அனைவரும் எரிந்து சாம்பலாகிப் போனார்கள் . கோர தாண்டவம் புரிந்தான் தசக்ரீவன் . அவன் எதிரே தோன்றினான் அண்ணனாகிய குபேரன் என்னும் வைஸ்ரவணன் . தம்பியைப் பார்த்து குபேரன் சொல்லுகின்றான் :” மூடனே , மூர்க்கத் தனத்தால் அனைவரையும் அழிப்பதோடு அல்லாமல் உன்னையும் அழித்துக் கொள்ளாதே ! விஷத்தை விஷம் என நினைக்காமல் பருகியவன் போல் , பின்னர் அதன் விளைவுகளை அனுபவிப்பவன் போல் , இப்போதைய உன் செயல்களின் விளைவுகளை நீயும் அனுபவிப்பாய் . தாய் , தந்தை , ஆச்சார்யர் ஆகியோரை நிந்திப்பவர்களுக்கு அதற்குரிய விளைவை அனுபவித்தே தீரவேண்டும் . நீ விதைத்த இந்த வினையை நீயே அறுப்பாய் !” என எச்சரிக்குமாறு பேசக் குபேரனைத் தாக்கி வீழ்த்திவிட்டு அவன் புஷ்பக விமானத்தையும் அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்ட தசக்ரீவன் அடுத்துச் சென்ற இடம் கார்த்திகேயன் அவதரித்த சரவணப் பொய்கை ஆகும் . அங்கே அவன் அபகரித்து வந்த புஷ்பக விமானம் மேற்கொண்டு நகராமல் தடைப்பட்டு நிற்க , தசக்ரீவனும் என்னவெனப் பார்த்தான் . நந்தியெம்பெருமான் காட்சி அளித்தார் . தசக்ரீவனைப் பார்த்து அவர் , “ மூடனே திரும்பிப் போ ! ஈசனும் , அன்னையும் வீற்றிருக்கும் இடம் இது ! நில்லாதே ! திரும்பிப் பார்க்காமல் போ !” என்று கூற நந்தியின் உருவத்தைப் பார்த்த தசக்ரீவன் ,” யார் அந்த ஈசன் ? என்னைவிட மேலானவனா ?” என்று கேட்டுக் கொண்டே நந்தியின் உருவத்தைப் பரிகாசம் செய்து சிரிக்கின்றான் . கோபம் கொண்ட நந்தி தசக்ரீவனைப் பார்த்து , “ உன்னைக் கொல்லும் வல்லமை படைத்தவனே நான் ! எனினும் உன் தீச்செயல்களால் செயலிழந்து போன உன்னை நான் இப்போது கொல்வது முறையன்று . ஆகையால் என் போன்ற தேவர்களோ , மற்ற யட்ச , கன்னர , கந்தர்வர்களோ , பூதகணங்களோ உன்னைக் கொல்ல முடியாது என விடுகின்றேன் . ஆனாலும் உனக்கு அழிவு நிச்சயம் . என் உருவத்தை அழகில்லை எனக் கேலி செய்த நீ வானர இனம் ஆகிய குரங்குகளின் மூலம் குலத்தோடு நாசமடைவாய் ! அந்தக் குரங்குகளும் சாதாரணக் குரங்குகளாய் இராமல் , வீரமும் , ஒளியும் , நினைத்த உருவை அடையும் வல்லமையும் பெற்ற குரங்குகளாய் இருக்கும் .” என்று சாபம் கொடுக்கின்றார் . சாபத்துக்கும் அஞ்சாத தசக்ரீவன் ஆணவம் தலைக்கேற , ” நான் வந்துவிட்ட பிறகும் , அதை உணராமல் , என்னை வரவேற்க வராமல் , இருந்த இடத்திலேயே இருக்கும் அந்த ஈசனின் ஆணவத்தை ஒழிக்கின்றேன் .” என்று நந்தியிடம் கூறிவிட்டு , கைலாய மலைக்குக் கீழ் தனது கையைக் கொடுத்து அதைத் தூக்க ஆரம்பித்தான் . அண்டசராசரமும் நடுங்கியது . கைலை குலுங்கவும் , ஏழுலகமும் குலுங்கிற்று . கங்கையின் வேகம் பூமியில் இறங்கினால் பூமி தாங்காது என அதைத் தலையில் தாங்கிய ஈசன் பார்த்தார் . உமை அம்மை சற்றே நடுங்கினாள் . தன் கால் கட்டை விரலைக் கீழே அழுத்தினார் ஈசன் . கைலை மலை அடியில் தசக்ரீவன் நசுங்கினான் . வலி தாங்க முடியவில்லை , அவனால் , பெரும் கூச்சல் போட்டான் . அந்தக் கூச்சலினால் மீண்டும் ஏழுலகும் நடுங்கியது . அத்தகைய பேய்க் கூச்சல் போட்டான் தசக்ரீவன் . ஊழிக்காலத்தின் இடியோசையோ என அனைவரும் நடுங்க , தசக்ரீவன் கூச்சல் போடுகின்றான் . கூட வந்த அனைவரும் செய்வதறியாது திகைக்க , சிலர் மட்டும் அறிவு வந்தவராய் , தசக்ரீவனிடம் அந்த ஈசனை வேண்டிக் கொள் எனச் சொல்ல , பிறந்தது ஒரு இனிய நாதம் , சாம கானம் இசைத்தான் , தசக்ரீவன் . சிவனை பல துதிகளிலும் துதிக்க ஆரம்பித்தான் . கடைசியில் அவனின் சாமகானத்தில் மயங்கிய மகேஸ்வரர் , அவனைப் பார்த்து , ” உன் வீரத்தை நான் மெச்சுகின்றேன் . ராவணா ! இன்று முதல் நீ ராவணன் என அழைக்கப் படுவாய் . மூவுலகும் அண்ட சராசரமும் நடுங்கும் அளவுக்கு நீ ஒலி எழுப்பியதால் இந்தப் பெயர் பெற்றாய் !” எனக் கூறுகின்றார் . ராவண = ஓலமிடுவது , கதறுவது , பெருங்கூச்சல் போடுவது என்று அர்த்தம் வரும் . ஆகவே அவனுக்கு அன்று முதல் ராவணன் என்ற பெயரும் ஏற்பட்டது , ஏற்கெனவே நீண்ட ஆயுளை வரமாய்ப் பெற்றிருந்ததால் , தசக்ரீவன் ஈசனிடம் , அதை உறுதி செய்யும் வண்ணம் , ஒரு ஆயுதம் கொடுத்தால் போதும் எனச் சொல்லவே , “ சந்திரஹாசம் ” என்னும் சிறப்பான கத்தியை அவனுக்குக் கொடுத்து அனுப்பி வைக்கின்றார் ஈசன் . சிதம்பரம் திருப்புகழ் பாடல் எண் 466 ( மதவெங்கரி ) நதியுந் திருக்க ரந்தை மதியுஞ் சடைக்க ணிந்த நடநம் பருற்றி ருந்த …… கயிலாய நகமங் கையிற்பி டுங்கு மசுரன் சிரத்தொ டங்கம் நவதுங் கரத்ந முந்து …… திரடோ ளுஞ் அருணகிரிநாதர் தம் சிதம்பரம் திருப்புகழில் கைலையை ராவணன் தூக்கியது பற்றி மேற்கண்ட பாடலில் தெரிவிக்கின்றார் . நதியும் = கங்கை நதியையும் , திருக்கரந்தை = விபூதிப் பச்சை ? வில்வம் ? மதியும் = பிறைச்சந்திரனும் சடைக்கணிந்த = சடையில் தரித்த நடனம் ஆடும் இறைவன் வீற்றிருந்த கைலை மலையை , நகம் அங்கையில் பிடுங்கும் அசுரன் = தன் வன்மை மிகுந்த தோளால் பிடுங்கி எடுத்துத் தன் உள்ளங்கையில் எடுத்தானாம் ராவணன் . இவ்விதம் அகங்காரத்தின் பால் வீழ்ந்து பட்டு , அந்த ஈசன் குடி இருக்கும் இடத்தையே ராவணன் பிடுங்கியும் கூட அந்த ஈசன் அவனுக்கு அவனுடைய பாபங்களை அபகரித்துக் கொண்டு நல்லதையே செய்தாராம் , அதுவும் எவ்வாறு ? இதோ கீழ்க்கண்ட பாடல் தெரிவிக்கின்றதே ! காஞ்சீபுரம் திருப்புகழில் அருணையார் சொல்லுவது என்னவென்றால் : அடியோடு பற்றிப் பொற்கைலையை உள்ளங்கையில் எடுத்த ராவணனுக்கு ஈசன் சந்திரஹாசம் என்னும் வாளைக் கொடுத்தார் என்று , “ தசமுகன் கைக்குக் கட்கமளிக்கும் பெரியோனும் ” என்று பாடுகின்றார் . காஞ்சீபுரம் திருப்புகழ் 312- ம் பாடல் ( கனக்ரவுஞ்சத்திற் ) அடியொடும் பற்றிப் பொற்கயி லைக்குன் றதுபிடுங் கப்புக் கப்பொழு தக்குன் றணிபுயம் பத்துப் பத்துநெ ரிப்புண் …… டவனீடுந் தனதொரங் குட்டத் தெட்பல டுக்குஞ் சரியலன் கொற்றத் துக்ரவ ரக்கன் தசமுகன் கைக்குக் கட்கம ளிக்கும் …… பெரியோனுந் 30 கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி -30 தசக்ரீவன் ராவணன் ஆனதை நேற்றுப் பார்த்தோம் , அவன் கை நரம்புகளால் ஆன வீணையை இசைத்தானா என்பது பற்றி சிலருக்கு சந்தேகம் . அது பற்றிய தகவல் எதுவும் வால்மீகி ராமாயணத்தில் இல்லை . கம்பர் எழுதி இருக்காரானு பார்க்கணும் . இனி மேற்கொண்டு ராவணனின் திக்விஜயம் ஆரம்பம் ஆகின்றது . ராவணனின் கர்வமும் , அவன் மேற்கொண்ட திக்விஜயமும் , அதில் கிடைத்த சாபங்களும் , கதையில் சிலரின் பிறப்புக்களுக்கும் காரணமாகவும் , காரியமாகவும் அமைந்தது என்பது புரியவரும் . பூமியின் பல பகுதிகளுக்கும் சென்று திக்விஜயம் செய்த ராவணன் , மனிதர்களையும் , குறிப்பாக க்ஷத்திரியர்களையும் துன்புறுத்தி வந்தான் . பூமியின் பல பாகங்களிலும் சஞ்சாரம் செய்து வந்த அவன் ஒரு முறை இமயமலைச் சாரலில் உலாவந்த போது , ஒரு பேரழகுப் பெண்ணொருத்தி , கடுந்தவத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டான் . இத்தனை செளந்தர்யவதியான பெண் , ஏன் தவக்கோலத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என யோசித்த அவன் , அதை அந்தப் பெண்ணிடமே கேட்டான் . நடக்கப்போவதை அறியாத அந்தப் பெண்ணும் , “ பெரும் தவங்கள் பல செய்து பிரம்மரிஷியான என் தகப்பனார் குசத்வஜனுக்கு நான் மகள் . வேதங்களே உருவெடுத்த பெண்ணாக நான் பிறந்திருக்கின்றேன் என என் தந்தை எனக்கு “ வேதவதி ” என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் . அந்த மகா விஷ்ணுவே தனக்கு மாப்பிள்ளையாக வரவேண்டும் எனவும் விரும்பினார் . ஆகவே என் அழகைப் பார்த்துத் திருமணம் செய்து கொள்ள வந்த ரிஷிகள் , கந்தவர்கள் ஆகியோருக்கு என் தந்தை என்னைத் திருமணம் செய்து கொடுக்கவில்லை . அதிலே ஒருவன் என் தந்தையைக் கொன்றுவிட , என் தந்தையோடு என் தாயும் உடன்கட்டை ஏறிவிட்டாள் . ஆகவே நான் தனியள் ஆகிவிட்டேன் . தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதே இனி என் கடமை என எண்ணி , அந்த நாராயணனையே மனதில் நிறுத்தித் தவம் செய்து வருகின்றேன் . என் தவத்தின் பலனால் , இனி நடக்கப் போகும் மூவுலக நிகழ்ச்சிகளும் எனக்குத் தெரியவருகின்றது . விஸ்ரவஸின் மகனே ! சென்றுவா ! பேசியது போதும் !” எனச் சொல்கின்றாள் . ஆனால் அதைக் கேட்காத ராவணன் , “ இந்த இளம் வயதில் எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் நீ தவம் மேற்கொண்டது எப்படி ? வா , நாம் திருமணம் செய்து கொள்வோம் , இலங்கையின் அரசன் ஆன நான் உன்னைச் சகல செளகரியங்களோடும் வைத்திருப்பேன் , யார் , அந்த விஷ்ணு ? யார் அந்த நாராயணன் ? எங்கே இருந்து வந்து உன்னைக் காப்பாற்றுவான் ?” என ஏளனமாய்க் கேட்கின்றான் . வேதவதி , “ சாட்சாத் சர்வேஸ்வரன் ஆன , மூவுலகையும் ஆளுகின்றவனைப் பற்றி நீ தான் இப்படி முட்டாள் தனமாய்ப் பேசுகின்றாய் ” எனக் கோபமாய்ச் செல்ல , வேதவதியின் கூந்தலைப் பிடித்துத் தன் பக்கம் அவளை இழுக்கின்றான் ராவணன் . தன் கையையே ஒரு கத்தி போல் உபயோகித்து , ராவணன் தொட்ட தன் கூந்தலை அறுத்து எடுக்கின்றாள் வேதவதி . தொடர்ந்து , ” நீ என்னையும் , என் புனிதத் தன்மையையும் அவமதித்த பின்னர் நான் உயிர் வாழ விரும்பவில்லை . தீ மூட்டி உன் கண்ணெதிரேயே தீயில் குதித்து இறக்கப் போகின்றேன் . ஆனால் நான் மீண்டும் பிறப்பேன் . கர்ப்பத்தில் இருந்து உதிக்காமலேயே பிறப்பேன் , உன் அழிவுக்கு நான் தான் காரணமும் ஆவேன் . நான் செய்த தவங்களின் மீதும் , நற்செயல்களின் மீதும் ஆணை !” என்று சபதம் செய்து விட்டுத் தீயில் புகுந்தாள் . விண்ணில் இருந்து பூமாரி பொழிந்தது . ராவணன் வியப்போடு பார்த்துக் கொண்டிருக்கும்போதே அங்கே இருந்த ஒரு தாமரை மலரில் ஒரு அழகிய பெண் தோன்றினாள் . ராவணன் அந்தப் பெண்ணின் கரத்தைப் பிடித்து பலாத்காரமாய் இழுத்து இலங்கைக்குக் கொண்டு செல்கின்றான் . அங்கே ஜோதிட வல்லுனர்களும் , சாமுத்ரிகா லட்சணம் தெரிந்தவர்களும் , “ இந்தப் பெண்ணின் லட்சணங்களைப் பார்த்தால் இவள் உன் அழிவுக்குக் காரணம் ஆவாள் எனத் தெரியவருகின்றது . ஆகவே இவளை விட்டு விடு !” எனச் சொல்ல , அந்தப் பெண்ணைக் கடலில் தூக்கி எறிந்தான் ராவணன் . அந்தச் சமயம் மிதிலையில் ஜனகர் யாக சாலையை உழுது செப்பனிட்டுக் கொண்டிருந்தார் . கடலில் தூக்கி எறியப் பட்ட பெண் , மிதந்து சென்று நிலத்தில் இருந்து தோன்றி ஜனக மன்னனை அடைந்தாள் . அந்தப் பெண் தான் நீ திருமணம் செய்து கொண்ட சீதை !” என்று அகத்தியர் ராமரிடம் கூறுகின்றார் . அகத்தியர் மேலும் சொல்லுவார் : “ இதன் பின்னரும் ராவணனின் திக்விஜயம் நிற்கவில்லை . தொடந்து திக்விஜயம் செய்து கொண்டிருந்தான் . பல மன்னர்கள் அவன் வீரத்தையும் , பலத்தையும் பற்றிக் கேள்விப் பட்டுத் தாங்களாகவே சரண் அடைந்தனர் . அயோத்தியின் மன்னன் ஆகிய அனரண்யன் என்பவன் பணிய மறுத்துச் சண்டை போடுகின்றான் . ராவணனால் நாசம் செய்யப் பட்ட மன்னன் படைகள் தோல்வியைத் தழுவி , மன்னனும் , மரணத்தின் வாயிலை எட்டுகின்றான் . அப்போது அனரண்யன் , ” ஒழுங்காகவும் , நேர்மையாகவும் , தர்மத்தில் இருந்து பிறழாமலும் , குடிமக்களைப் பாதுகாத்தும் ஆட்சி புரிந்து வந்த என்னை நீ தோற்கடித்ததாய் எண்ணாதே ! நான் உண்மையாக நடந்து கொண்டிருக்கிறேன் என்பது உண்மையானால் என் குலத்தில் பிறக்கப் போகும் ஒருவனாலேயே உனக்கு அழிவு ஏற்படும் . இது உறுதி !” எனச் சொல்லி விட்டு இறக்கின்றான் . பின்னர் மனிதர்களை மட்டுமே யுத்தத்தில் தோற்கடிப்பதால் என்ன பயன் என யோசித்த ராவணன் , சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்போது , அதைத் தூண்டும் விதமாய் நாரதர் அங்கே வந்து , எமனோடு போரிட்டு வென்றாயானால் நீ வீரம் செறிந்தவன் என்று சொல்ல ராவணனும் தயார் ஆகின்றான் எமனோடு போரிட . எமனும் போருக்கு வந்தான் . உலகையே அழிக்கக் கூடிய காலதண்டத்தை ஏந்தி வந்த எமன் அதைப் பிரயோகித்து ராவணனை அழிக்க முற்பட , பிரம்மா அவனிடம் காலதண்டத்தைப் பிரயோகித்து ராவணனை எமன் அழித்தால் , அவனுக்குத் தான் அளித்த வரம் பொய்யாகிவிடும் , மாறாகக் காலதண்டத்தினாலும் ராவணன் அழியவில்லை எனில் கால தண்டம் வல்லமை அற்றது என்றாகிவிடும் , ஆகவே பொறுமை காப்பாய் , ராவணன் அழிவு இப்போதல்ல ,” என்று கூற எமனும் சமாதானம் அடைந்து சென்று விடுகின்றான் . ராவணனோ எமனையும் தான் வென்றதாய் நினைத்து மகிழ்ச்சியோடு கூத்தாடுகின்றான் . பின்னர் , நாகர்கள் , மற்ற தேவர்கள் , வருணன் , என அனைவரையும் போருக்கு அழைத்துத் தோற்கடிக்கின்றான் . எவரையும் விட்டு வைக்காமல் அனைவரையும் சண்டைக்கு இழுத்து வென்ற ராவணன் தான் வென்றவர்களுடைய பெண்களைத் தன் புஷ்பக விமானத்தில் ஏற்றி , அவர்கள் கதறக் கதற இலங்கைக்குக் கொண்டு சேர்த்தான் . அந்தப் பெண்கள் அனைவரும் ராவனனின் அழிவு ஒரு பெண்ணாலேயே நிகழ வேண்டும் எனச் சபித்தனர் . அப்போது அங்கே கதறிக் கொண்டு வந்த சூர்ப்பனகை , காலகேயர்களை நீ அழித்த போது என் கணவனையும் சேர்த்துக் கொன்று விட்டாயே எனக் கதறுகின்றாள் . அவளைச் சமாதானப் படுத்தி ராவணன் , அவளைக் கர , தூஷணர்கள் பாதுகாப்பில் தண்டக வனத்தில் இருக்கும்படி வைக்கின்றான் . இதனிடையில் மேகநாதன் சடாமுடி தரித்து , மரவுரி அணிந்து விரதமிருந்து யாகங்கள் , பூஜைகள் செய்வதைக் கண்டு விட்டு ராவணன் என்னவென வினவ , மேகநாதன் தன் தவங்களாலும் , யாகங்களாலும் விஷ்ணுவையும் , ஈசனையும் மகிழ்வித்துப் பல வரங்களைப் பெற்றதோடல்லாமல் , ஈசன் ஒரு சக்தி வாய்ந்த ரதத்தையும் , சக்தி வாய்ந்த வில் , அழிவை உண்டாக்கும் அஸ்திரங்கள் , அம்புகள் நிறைந்துள்ள அம்புறாத் தூணி , மறைந்திருந்து எதிரிகளைத் தாக்கும் வல்லமை போன்றவற்றைக் கொடுத்திருப்பதாயும் அறிகின்றான் . கோபம் கொண்ட ராவணன் , தேவர்களும் , இந்திரனும் எனக்கு அடிமையாக இருக்க இங்கே என் மகன் அவர்களை வணங்குவதா ? போனது போகட்டும் இதை இத்தோடு விட்டு விட்டு என்னோடு வருவாய் எனக் கூறி மகனை உடன் அழைத்துச் சென்று விடுகின்றான் . பின்னர் ஒரு சமயம் ரம்பையைச் சந்தித்த ராவணன் அவள் அழகால் கவரப் பட்டு அவளை அடைய விரும்ப அவளோ , குபேரன் மகன் ஆன நலகூபரன் மனைவி நான் . ஆகவே தங்கள் மருமகள் ஆகின்றேன் . என்னை மன்னிக்கவும் எனக் கூறி வேண்டுகின்றாள் . ஆனாலும் ராவணன் பலாத்காரமாய் அவளை அடையவே , கோபமும் , வருத்தமும் கொண்ட ரம்பை , தன் கணவன் நலகூபரனிடம் முறையிட அவன் , தண்ணீரைக் கையில் எடுத்துக் கொண்டு , பெரும் கோபத்துடன் , முறைப்படியான மந்திரங்களைக் கூறி , ராவணன் இனி ஒரு முறை விரும்பாத பெண்ணை மானபங்கப் படுத்தினால் அவன் தலை சுக்குநூறாகட்டும் !” எனச் சபிக்கின்றான் . ராவணன் கை நரம்புகளால் வீணை மீட்டினானா ? தேவாரம் ஐந்தாம் திருமுறையில் உள்ள கீழ்க்கண்ட பாடல் ராவணன் தன் கை நரம்புகளை மீட்டிப் பாடியதற்கு ஆதாரம் என நண்பர் திரு சிவசிவா அவர்கள் கூறுகின்றார் . எனினும் வால்மீகியில் இப்படி ஒரு கருத்து இருப்பதாய்த் தெரியவில்லை . வலிந்த தோள்வலி வாளரக் கன்றனை நெருங்க நீள்வரை யூன்றுநெய்த் தானனார் புரிந்து கைந்நரம் போடிசை பாடலும் பரிந்த னைப்பணி வார்வினை பாறுமே . வலிமை பெற்ற தோளாற்றல் உடைய இராவணனை நீண்டவரை நெருங்கும்படித் திருவிரலையூன்றிய திருநெய்த்தானனாரை விரும்பி கைநரம்புகளோடு இசையினால் அவன் பாடுதலும் அதற்கு விரும்பிய பெருமானைப் பணி வார்களின் வினைகள் கெடும் . 31 கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 31 இதன் பின்னரும் எதற்கும் கலங்காத ராவணன் , சூரியன் , சந்திரன் ஆகியோரையும் வெற்றி கொண்டான் , பின்னர் , இந்திரனை வெற்றி கொள்ள இந்திர லோகத்தை அடைந்தான் . இந்திரன் கவலையுடனேயே மகாவிஷ்ணுவிடம் இவனை எப்படி வெல்வது எனக் கலந்து ஆலோசிக்கின்றான் . மகாவிஷ்ணுவோ , நேரம் வரும்போது இவனைத் தானே முடிப்பதாய்க் கூறி விடுகின்றார் . தேவர்கள் அனைவருமே ராவணனைப் பணிந்து ஒத்துக் கொள்ளுமாறு வற்புறுத்தப் பட்டனர் . ஆனால் அவர்கள் எதிர்த்துப் போரிட்டனர் . இதில் ராவணனின் பாட்டன் சுமாலி இறந்தான் . இதைக்கண்டு கொதித்த மேகநாதன் , யுத்த களத்தின் மத்தியில் நின்று கொண்டு தேவர்களைத் தாக்கினான் . அவன் தாக்குதலுக்கு அஞ்சிய தேவர்கள் சிதறி ஓட , இந்திரன் மகன் ஜயந்தனோ கடலுக்கு அடியில் கொண்டு செல்லப் பட்டு மறைத்து வைக்கப் பட்டான் . மேகநாதனைப் பின்னே தள்ளி , ராவணன் , தானே இந்திரனை எதிர்க்க ஆரம்பிக்கின்றான் , கும்பகர்ணன் துணையோடு . இந்திரனின் தாக்குதல் தாங்க முடியாமல் சிதறி ஓடிய ராட்சதர்களைக் கண்டு ராவணன் கோபத்தோடு இந்திரனைத் தாக்குகின்றான் . இந்திரன் , குபேரன் , வருணன் , எமன் ஆகியோரையும் அவர்களைச் சூழ்ந்து காக்கும் தேவர்களையும் கொல்ல எண்ணிய ராவணன் தன் தேரை தேவர்களின் படைக்கு உள்ளே செலுத்துகின்றான் . இதன் காரணமாய் அவன் தனிமைப் படுத்தப் பட்டுத் தன் வீரர்களிடம் இருந்து பிரிந்தான் . இதைக் கண்ட மேகநாதன் தன் மாயாசக்தியால் மறைந்துகொண்டு , கண்ணுக்குப் புலன் ஆகாத தனமையை அடைந்து , இந்திரனை நோக்கிப் பாய்ந்து சென்று அவனைச் சிறை எடுத்துவிட்டான் . பின்னர் தன் தந்தையைப் பார்த்து , தான் இந்திரனைச் சிறை எடுத்து விட்டதாயும் , ராட்சதர்கள் ஆகிய தங்கள் குலம் வென்று விட்டதாயும் , இனி மூவுலகுக்கும் தன் தந்தையாகிய ராவணனே அரசன் எனவும் கூறித் தந்தையைத் திரும்பச் சொல்கின்றான் . உடனேயே சிறை எடுத்த இந்திரனோடு அனைவரும் இலங்கை திரும்புகின்றனர் . தேவர்கள் அனைவரும் பிரம்மா தலைமையில் இலங்கை சென்று ராவணனிடம் சமாதானமாய்ப் பேசுகின்றார்கள் . மேகநாதனின் வீரத்தை மெச்சுகின்றார் பிரம்மா . ராவணனையும் மிஞ்சிய வீரன் எனப் போற்றுகின்றார் அவனை . இந்திரனை வென்றதால் அவன் இன்று முதல் “ இந்திரஜித் ” என அழைக்கப் படுவான் எனவும் கூறுகின்றார் . அவனை யாராலும் வெல்ல முடியாது எனவும் சொல்லுகின்றார் . உனக்கு இனிமேல் அச்சம் எதுவும் தேவை இல்லை . ஆகையால் இந்திரனை விட்டு விடு . என்று கேட்க , இந்திரஜித் பேசுகின்றான் , தந்தைக்குப் பதிலாய் . இந்திரனை நாங்கள் விடுவிப்பதாய் இருந்தால் நான் இறவாத வரம் வேண்டும் எனக் கேட்கின்றான் . ஆனால் பிரம்மா மறுக்கின்றார் . இந்த வரம் தவிர வேறு ஏதாவது கேள் எனச் சொல்கின்றார் . அப்போது மேகநாதன் ஆகிய இந்திரஜித் கேட்கின்றான் : “ ஒவ்வொரு முறையும் எதிரிகளுடன் போர் நடக்கும்போது நான் செய்யும் யாகத்தால் எனக்கு ஒரு ரதம் அந்த வேள்வித் தீயில் இருந்து வரவேண்டும் . அந்த ரதத்தில் அமர்ந்தே நான் போர் செய்வேன் . அப்போது நான் எவராலும் வெல்லப் படாதவனாய் இருக்கவேண்டும் . யாகம் செய்யாமல் நான் போர் செய்தால் மட்டுமே மரணம் சம்பவிக்க வேண்டும் . மற்றவர்கள் போல் நான் யாகங்கள் செய்து இந்த வரம் கேட்கவில்லை . என் வீரத்தின் மேல் நம்பிக்கை வைத்தே கேட்கின்றேன் .” என்று கேட்க , பிரம்மாவும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லி , இந்திரஜித் கோரிய வரத்தை அளிக்கின்றார் . பின்னர் விடுவிக்கப் பட்ட இந்திரனை நோக்கிப் பிரம்மா , “ அகல்யையை நீ விரும்பியதால் , உனக்கு கெளதமர் அளித்த சாபத்தின் விளைவை நீ இதுவரை அனுபவித்தாய் !” என்று கூறிவிட்டுப் பாவத்திற்குப் பிராயச் சித்தம் செய்யச் சொல்ல , அவனும் மகாவிஷ்ணுவைத் துதித்து யாகங்கள் செய்கின்றான் . பின்னர் கார்த்தவீர்யாஜுனனை எதிர்க்கப் போக அவன் ராவணனைச் சிறைப் பிடிக்கின்றான் . பின்னர் புலஸ்திய மகரிஷியின் வேண்டுகோளின்படி கார்த்தவீர்யாஜுனன் ராவணனின் நட்பை ஏற்று அவனை விடுவிக்கின்றான் . பின்னர் வாலியை எதிர்க்க , அவனும் ராவணனைத் தன் கைகளில் தூக்கிக் கொண்டு ஆகாய மார்க்கமாய்ப் பறக்க ராவணனும் , வாலியின் நட்பைக் கோரிப் பெற்று அவனுடன் நண்பனாய் இருந்தான் . இத்தகைய ராவணனையும் , இந்திரஜித்தையும் தான் நீ வென்றாய் , ராமா !” என்று அகத்தியர் கூறி முடிக்கின்றார் . இனி நாம் திரும்ப ஆரண்ய காண்டத்திற்குச் சென்று ராவணன் சூர்ப்பநகையின் தூண்டுதலால் ரதத்தில் ஏறி மாரீசனைக் காணப் போனதைப் பற்றிக் காண்போம் . சூர்ப்பநகையால் தூண்டப் பட்ட ராவணன் தன் ரதத்தில் ஏறி , மாரீசன் தவம் செய்து கொண்டிருந்த இடம் நோக்கிச் சென்று அவனைப் பார்த்துத் தன் துன்பத்தை எடுத்துச் சொல்கின்றான் . கர , தூஷணர்கள் ராமனால் கொல்லப் பட்டதையும் , சூர்ப்பநகை அங்கபங்கம் செய்யப் பட்டு வந்ததையும் கூறுகின்றான் . ஆகவே ராமனின் மனைவியைக் கடத்தப் போவதாயும் கூறி விட்டுப் பின்னர் , மாரீசன் உதவியை நாடுகின்றான் . ஆனால் மாரீசனோ மறுக்கின்றான் திட்டவட்டமாய் . “ ராவணா , ராமன் பலம் உனக்குத் தெரியாது . அவன் யாருக்கும் தீமையும் செய்யவில்லை , அகம்பாவியோ , கர்வியோ அல்ல . உன்னுடைய இந்தத் தீய எண்ணம் ராட்சத குலத்தையே அழித்து விடும் . ஒரு மன்னனுக்கு இந்த மாதிரிக் கெட்ட எண்ணம் இருக்கக் கூடாது . அப்படி இருந்தால் அவன் அமைச்சர்கள் அவனைத் திருத்த வேண்டும் . ராமனை எதிர்த்துக் கொண்டு , மரணத்தைச் சம்பாதித்துக் கொள்ளாதே , இந்த ராமன் சிறுவனாய் இருந்தபோதே , விசுவாமித்திரரால் அழைத்து வரப் பட்டான் . அவன் அப்போது விட்ட ஒரு அம்பு என்னை இத்தனை தூரம் கடலில் தள்ளிக் கொண்டு சேர்த்து விட்டது . அவன் பலம் அறியாமல் பேசாதே ! இந்த துர் எண்ணம் வேண்டாம் ! இலங்கைக்குத் திரும்பு !” என்று சொல்கின்றான் . திரும்பும் திசை எல்லாம் ராமன் தோன்றுவதாயும் கூறி மாரீசன் நடுங்குகின்றான் . ஆனால் ராவணன் அவன் சொன்னதைக் கேட்காமல் தான் சீதையை அபகரிக்கப் போவதாயும் , அதற்கு வேண்டிய உதவி செய்வதே மாரீசன் வேலை என்றும் வேறு ஒன்றும் பேசத் தேவை இல்லை என்றும் கூறிவிட்டு , தான் சீதையை அபகரிக்க வசதியாக ராமனையும் , லட்சுமணனையும் அப்புறப் படுத்த மாரீசன் ஒரு பொன்மானாக மாறி சீதையின் முன் தோன்றுமாறும் சீதை அதைப் பார்த்து ஆசைப் பட்டு ராமனை அந்த மானைப் பிடித்து வர அனுப்புவாள் என்றும் , அப்போது மாரீசன் ராமன் குரலில் , “ ஓ , சீதா , ஓ , லட்சுமணா !” எனக் கதறினால் அதைக் கேட்டு பயந்துகொண்டு சீதை உடனே லட்சுமணனையும் அனுப்புவாள் எனவும் , அப்போது தான் போய் அவளை அபகரித்து வந்துவிடுவதாயும் இதற்குத் தன் ராஜ்ஜியத்தில் பாதியைத் தருவதாயும் ராவணன் கூறுகின்றான் . மாரீசனோ ராவணனைப் பார்த்துத் தான் ராமன் கையால் இறப்பது உறுதி எனவும் , அதற்குத் தான் அஞ்ச வில்லை என்றும் , என்றாலும் ராவணன் கதியை நினைத்தே கலங்குவதாயும் சொல்லிவிட்டு ராவணன் பேச்சுக்கு வேறு வழி இல்லாமல் இணங்குகின்றான் . 32 கதை, கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 32 ராவணனை எதிர்க்க முடியாத மாரீசன் பணிந்து விடுகின்றான் . ராவணன் , தனக்கு இந்த வேலையை முடித்துக் கொடுத்த பின்னர் மாரீசன் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம் எனச் சொல்லுகின்றான் . மேலும் என் அமைச்சர்களின் வேலையை நீ செய்ய வேண்டாம் எனவும் அவன் சொல்கின்றான் . பின்னர் ராவணனுடைய தேரில் இருவரும் ஏறிக் கொள்ள பஞ்சவடி வந்தடைந்தனர் இருவரும் . ராமனின் ஆசிரமம் அருகே வந்ததும் , ராவணன் , மாரீசனுக்கு ராமனின் ஆசிரமத்தை அடையாளம் காட்டி , “ நான் சொன்னபடி நடந்து கொண்டாயானால் உனக்கு நல்லது , அப்படியே நடந்து கொள்வாயாக !” எனச் சொல்கின்றான் . மாரீசன் தங்க மானாய் உருவெடுத்தான் , நவரத்தினங்களால் இழைக்கப் பட்ட கொம்புகள் , உடலெல்லாம் தங்கமயமாய் ஜொலிக்க அந்த மானின் அழகைச் சொல்லி முடியாது , மூக்கின் மேல் ஒரு மாணிக்கம் ஒளி வீசியது ! வயிற்றுப் பகுதியிலோ விலை உயர்ந்த வைரங்கள் ! உடலெங்கும் வெள்ளியால் ஆன புள்ளிகள் . புள்ளிமானா ? கலைமானா ? மொத்தத்தில் அந்த மாதிரியான மானை எங்குமே காணமுடியாது . அப்படிப் பட்ட ஓர் அற்புத மான் அது ! ஆனால் என்ன ஆச்சரியம் ? துள்ளிக் குதிக்கின்றதே ? இதோ இங்கே ஓடுகின்றது ? இது என்ன ? திடீரெனக் காணோம் ? ஓ , அங்கே ஒளி வீசுகின்றதே , அதுதான் மான் மறைந்திருக்கும் இடமோ ? சூரியப் பிரகாசத்தை விடப் பிரகாசமாய் , கோடி சூரியப் பிரகாசம் என்பார்களே , அது இதுதானோ ? இவ்விதமெல்லாம் எண்ணினாள் சீதை அந்த மானைப் பார்த்ததும் . அவள் கொண்ட உற்சாகத்துக்கு ஒரு அளவே இல்லை . மீண்டும் , மீண்டும் அந்த மானைக் கண்டு மன மகிழ்வு அடைந்த அவள் , ராமனைக் கூவி அழைத்தாள் , “ பிரபுவே , வாருங்கள் , இங்கே விரைந்து வந்து இந்த அதிசயத்தைக் காணுங்கள் !” எனக் கூப்பிடுகின்றாள் . அவள் கூக்குரலைக் கேட்டுவிட்டு ராம , லட்சுமணர் இருவருமே அங்கே வருகின்றனர் . சந்தேக புத்தி கொண்ட லட்சுமணனுக்கு உடனேயே இதில் ஏதோ சூது என மனதில் படுகின்றது . வெளிப்படையாகத் தன் அண்ணனிடம் சொல்லவும் சொல்கின்றான் . மேலும் இது மாரீசனாக இருக்குமோ என்ற எண்ணமும் அவனுக்கு உதிக்கின்றது . ஆனால் அதற்குள் சீதை , ராமனிடம் அந்த மானைத் தனக்குப் பிடித்துத் தருமாறு வேண்டுகின்றாள் . அயோத்தி திரும்பும் வேளையில் அங்கே அந்தப்புரத்தை இது அழகு செய்யும் எனவும் சொல்கின்றாள் . ராமரும் அந்த மாய மானின் வசப்பட்டவராகவே காணப் பட்டார் . அவரும் லட்சுமணனிடம் , “ லட்சுமணா , நீ சீதைக்குக் காவல் இருப்பாயாக . இந்த மானை நான் பிடித்து வருகின்றேன் . உண்மையிலேயே அற்புதம் ஆன இதை நான் பிடித்தல் எவ்வகையிலும் நியாயமே ! அப்படியே நீ சொல்வது போல் இந்த மான் ஒரு அசுரனாக இருந்தால் , அப்பொழுதும் , இந்த மானை நான் பிடித்துக் கொல்வது முறையாகவும் இருக்கும் அல்லவா ? நான் உயிரோடு பிடிக்கின்றேன் , அல்லது அந்த மானைக் கொன்று விடுகின்றேன் . நீ சீதைக்குத் துணையாக இங்கேயே இருப்பாய் , ஜடாயுவும் உனக்கு உதவியாக இருப்பார் . நான் விரைவில் வருகின்றேன் .” என்று சொல்லிவிட்டு மானைத் துரத்திக் கொண்டு சென்றார் . ராமரால் துரத்தப்பட்ட மான் அவரை அங்கும் இங்கும் அலைக்கழித்தது . ஒரு நேரம் நின்று கொண்டிருக்கும் , ராமர் அருகில் போகும்வரை பேசாது இருந்துவிட்டுப் பின்னர் ஓடி விடும் . ஒரு நேரம் மறைந்து இருந்து ராமரையே கவனிக்கும் , ஒரு நேரம் கவனிக்காது போல் பாசாங்கு காட்டும் . ராமர் பின் தொடருவது சர்வ நிச்சயம் ஆனதும் ஓடி மறைந்து கொள்ளும் . இப்படியே போக்குக் காட்டிக் கொண்டிருக்க ராமர் கடைசியில் அலுப்பும் , கோபமும் கொண்டு , தன் வில்லில் இருந்து ஓர் அம்பை எய்த அது அந்த மானைத் துளைத்தது . மாரீசன் சுயவுருவை அடைந்தான் . எனினும் அத்தகைய நிலையிலும் தன் நினைவை இழக்காமல் , ராவணனுக்கு உதவும் எண்ணத்துடன் , “ ஓ , சீதா , ஓ , லட்சுமணா !” என ராமனின் குரலில் கதறி ஓலமிட்டுவிட்டுப் பின்னர் உயிரையும் விட்டான் . ராமனுக்கு லட்சுமணன் செய்த எச்சரிக்கை நினைவில் வந்தது . உடனே ஆசிரமம் திரும்பவேண்டும் என எண்ணிக்கொண்டே விரைவில் பர்ணசாலையை நோக்கி விரைந்தார் . பர்ணசாலையில் இந்த ஓலக் குரலைக் கேட்ட சீதை பதறினாள் . ஆனால் லட்சுமணனோ பதறவில்லை . சற்றும் கலங்காமல் லட்சுமணன் நிற்க , சீதை அவனைப் பார்த்து , உடனே சென்று என்ன நடந்தது என அறிந்து வரச் சொல்கின்றாள் . லட்சுமணன் அவளைத் தனியே விட மறுத்து விட்டு , ஜனஸ்தானத்து ராட்சதர்களை அண்ணன் வெற்றி கொண்டதால் அவர்கள் செய்யும் சூழ்ச்சி இது என்றும் கூறுகின்றான் , ஆனால் , சீதை ஒரு சாதாரணப் பெண் போல் அவனை இழித்தும் , தூற்றியும் பலவாறு பேசுகின்றாள் . அண்ணன் இல்லாத போது அவன் மனைவியை நீ அடைய நினைக்கின்றாயே , நீ உத்தமனா ? உன்னை நம்பி உன் அண்ணன் என்னை ஒப்படைத்துவிட்டுப் போயிருக்கின்றாரே ? அல்லது பரதனின் துர்ப்போதனையால் இவ்விதம் செய்கின்றாயா ? ராமருக்கு மட்டும் ஏதாவது நடந்து அதன் பின்னரும் நான் உயிர் வாழ்ந்திருப்பேனா ? உன் எண்ணம் ஈடேறாது .” என்கின்றாள் . மனம் நொந்த லட்சுமணன் , “ இந்தக் காட்டில் உள்ள அனைத்து தெய்வங்களும் , தேவதைகளும் சாட்சியாக நான் பேசுவது சத்தியம் . வீணே என் மீது அவநம்பிக்கை கொண்டு ஒரு சாதாரணப் பெண்போல் தாங்கள் இப்போது இயற்கையின் வசத்தினாலும் , கோபம் , துக்கம் போன்றவைகளின் வசத்தினாலும் என்னை இழிவாய்ப் பேசிவிட்டீர்கள் . ஆனால் இது அழிவுக்கு அறிகுறி , நீங்கள் என் தாய்க்குச் சமம் ஆனவர்கள் . கெட்ட சகுனங்களாகக் காண்கின்றேனே ? என்ன செய்வது ? தேவி , நான் இப்போது உங்களைத் தனியே விட்டுச் சென்றேன் என்றால் திரும்பக் காண்பேனா என்ற சந்தேகம் என் மனதில் மூண்டு விட்டதே ?” என்று கதறுகின்றான் . எனினும் புறப்பட ஆயத்தம் ஆகின்றான் . சீதையை எவ்வளவோ சமாதானம் செய்ய நினைத்தும் ஒன்றும் முடியாமல் அவளை இரு கரம்கூப்பி வணங்கிவிட்டுக் கிளம்புகின்றான் இளவல் . நேரமும் வாய்த்தது , வேளையும் நெருங்கிவிட்டது . காத்திருப்பானா ராவணன் , வந்தான் ராவணன் ஒரு துறவி வேடம் தரித்து . காஷாய உடை , தலையிலே சடாமுடி , மரத்தினால் ஆன காலணிகள் , கையிலே கமண்டலம் , அவன் வருகையினால் பயந்து சூரிய , சந்திரர் விண்ணிலே தோன்றவில்லையோ என்னும் வண்ணம் காட்டிலே இருள் சூழ்ந்ததாம் , அப்போது . காற்றுக் கூடப் பயத்தால் வீசவில்லை , மரங்களின் “ மர்மர ” சப்தம் கேட்கவில்லை , கோதாவரி கூடப் பயத்தால் தன் வேகத்தை மட்டுப் படுத்திக் கொண்டாளோ ? வாசலிலே வேத கோஷங்கள் கேட்கின்றதே ? அழுதுகொண்டிருந்த சீதையைக் கண்ட ராவணன் , மிகவும் தயவான குரலில் , “ அம்மா , நீ யார் , யார் மனைவி , ஏன் அழுகின்றாய் ? இப்படிப் பட்ட பேரழகுப் பெண்ணான நீ இந்தக் காட்டில் ஏன் இருக்கின்றாய் ? ராட்சதர்கள் நடமாடும் இடமாயிற்றே இது ?” என வினவுகின்றான் . சீதையும் தன் கதையைக் கூறுகின்றாள் . தானும் , தன் கணவரும் , பிதுர்வாக்ய பரிபாலனத்துக்காக வேண்டி காட்டுக்கு வர நேர்ந்ததையும் , சொல்கின்றாள் . உடனேயே ராவணன் அவளை நோக்கி , ” நான் ராட்சதர் தலைவன் ஆகிய ராவணன் என்போன் . இலங்கை என் தலைநகரம் , என் முந்தைய மனைவிமார்களையும் பார்த்துவிட்டு இப்போது உன்னையும் பார்க்கும்போது அவர்களால் என் மனதில் மகிழ்ச்சியே உண்டாகவில்லை என எண்ணுகின்றேன் . நீ என்னுடன் வந்துவிடு , சகல செளபாக்கியங்களுடன் உன்னை நான் வைத்திருக்கின்றேன் கிளம்பு , இலங்கை செல்லலாம் .” எனச் சொல்கின்றான் . கோபம் கொண்ட சீதை , ராமனுக்கும் , ராவணனுக்கும் , மலைக்கும் , மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்று கூறுகின்றாள் . நீ என்னை உன் மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதன் மூலம் அழிவைத் தேடிக் கொள்கின்றாய் ,” என்றும் சொல்கின்றாள் . ராவணன் மிகுந்த கோபத்தோடு , தந்தை சொன்னார் என்ற உடனேயே ராஜ்யத்தைத் துறந்து வந்ததில் இருந்தே உன் கணவன் கோழை எனவும் , பலமில்லாதவன் என்பதும் புலனாகவில்லையா ? இல்லை எனில் பரதனை எவ்வாறு உன் மாமன் ஆகிய தசரதன் தேர்ந்தெடுக்கின்றான் . இத்தகைய மனிதன் ஒருவனால் நீ அடையப் போகும் சுகம் தான் என்ன ? என் பலத்தை நீ அறிய மாட்டாய் என்று கூறிவிட்டுத் தன் சுயவுருவை அடைகின்றான் . சீதையிடம் நான் உன்னை வற்புறுத்த மாட்டேன் , எனினும் உன் கணவனை விட நான் மேன்மை அடைந்தவன் என்பதை உணர்வாய் . ஒரு ராஜ்யத்தைத் தனது எனத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் , ஒரு பெண்ணின் வார்த்தைக்காகத் தன் சொந்தம் , பந்தம் , குடிமக்கள் அனைவரையும் விட்டுவிட்டு ஒரு மனிதன் காட்டில் வந்து ஜீவிக்கின்றான் என்றால் அவனை என்ன சொல்லுவது ? அவன் உனக்கு ஏற்றவனே அல்ல , வா என்னுடன் !” என்று கூறிவிட்டுச் சீதையைத் தன் இடது கையினால் கூந்தலையும் , தன்னுடைய வலது கையால் அவள் கால்களையும் பிடித்துத் தூக்கித் தன் புஷ்பக விமானத்தில் அவளை அமர்த்தினான் . புஷ்பகம் பறக்க ஆரம்பித்தது . சீதை உரக்கப்பரிதாபமாகத் தன் கணவன் பெயரைச் சொல்லி , ” ஓஓஓஓஓ ராமா ” என்று அலறினாள் . காட்டில் உள்ள மிருகங்கள் எல்லாம் , அவனிடம் அஞ்சியது போல் ஓடி மறைய , தேவதைகள் பயத்துடன் ஒளிந்து கொள்ள , சூரியனும் , சந்திரனும் மறையக் காற்று , அசைவின்றி நின்று போக காடே ஸ்தம்பித்தது . புஷ்பகம் விண்ணில் கிளம்பியது . லட்சுமணனுக்குச் சந்தேகம் தான் என்பதில் சந்தேகம் இல்லை ! // சந்தேக புத்தி கொண்ட லட்சுமணனுக்கு உடனேயே இதில் ஏதோ சூது என மனதில் படுகின்றது . // எதையும் தெளிவாக ஆராய்ந்து முடிவெடுக்கும் எனச் சொல்லி இருக்கலாமோ ? ‘ சந்தேக புத்தி கொண்டவன் ‘ என வர்ணித்தால் , பின்னர் , சீதையும் , இவனை இப்படியே விளித்ததில் தவறில்லை என்ற பொருள்படுமே ! சிலர் லட்சுமணன் பற்றி நான் எழுதியதுக்கு வருத்தப் பட்டிருக்கின்றனர் . ஆனால் வால்மீகி அப்படித் தான் எழுதி உள்ளார் என்பதைக் கீழ்க்கண்ட மொழி பெயர்ப்பில் இருந்து காணலாம் . மேலும் “ லட்சுமணன் கோடு ” அதாவது லட்சுமண் ரேகா என்ற ஒன்றைப் பற்றியும் கேட்டிருக்கிறார் . அதுவும் வால்மீகியில் இல்லை . இது பற்றி விரிவான விளக்கம் தருகின்றேன் . தேவைப் பட்டால் . //But Lakshmana became incredulous on seeing it and said to Rama, “I believe this deer to be that Maareecha, the demon.” [3-43-5]// கூகிளாண்டவர் தயவால் மேற்கண்ட மேற்கோள் வால்மீகி ராமாயணத்தின் மொழிபெயர்ப்பு படிக்கிறவர்களின் வசதிக்காக ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன் . ஒரு சிலர் லட்சுமணனைச் சந்தேகம் நிறைந்த என எழுதியதற்கு வருந்தி இருக்கின்றனர் . வால்மீகி ஒரு மனிதனின் கதையைத் தான் எழுதி இருக்கின்றார் . யாரையும் மிகைப்படுத்திச் சொல்லவில்லை என்பதை மீண்டும் நினைவு கூருகின்றேன் . 33 கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 33 வால்மீகி ராமாயணம் , “ இதி ஹாசஹ :” என்று சொல்லப் படுகின்றது . இது இப்படித் தான் நடந்தது என்று அதன் அர்த்தம் . ஆகவே வால்மீகியின் படி சீதை ராவணனால் தூக்கித்தான் செல்லப் பட்டாள் . அவளோ வரமாட்டேனெனப் பிடிவாதம் பிடிப்பதோடல்லாமல் , அவனைத் தூற்றியும் , பழித்தும் பேசுகின்றாள் . இப்படிப் பட்ட முரட்டுப் பெண் (?) ணைக் கவர்ந்து தான் செல்லவேண்டுமென ராவணன் நினைத்ததில் தவறு இல்லை . தூக்கிச் சென்றான் என்பதிலும் எந்தவித முரண்பாடும் இல்லை . ஆனால் கம்பர் அப்படிச் சொல்லவில்லை என்பதால் சிலருக்குச் சந்தேகம் வருகின்றது . ராவணன் , சீதையுடன் வாக்குவாதம் நடத்திய பின்னர் , சீதை தனக்கு இணங்க மாட்டாள் என்பதைப் புரிந்து கொண்ட ராவணன் , அவளைத் தொடாமலேயே ஒரு காத தூரத்திற்குப் பூமியைப் பர்ணசாலையோடு பெயர்த்து எடுத்ததாய்ச் சொல்லுகின்றார் . துளசிதாசர் இன்னும் ஒரு படி மேலே போய் கவர்ந்து சென்றது , இந்த சீதையே அல்ல . ராமன் மாரீசன் வருமுன்னரே , நடக்கப் போவதை ஊகித்துக் கொண்டு சீதையை அக்னிக்குள் ஒளிந்திருக்கச் சொல்கின்றார் , அவளின் மாய உரு மட்டும் பர்ணசாலையில் தங்குகின்றது , என்றும் , லட்சுமணன் கூட இதை அறிய மாட்டான் எனவும் , ராவணன் அபகரித்தது அந்த மாய சீதைதான் எனவும் சொல்கின்றார் . வால்மீகிக்குப் பல வருஷங்கள் பின்னர் இவை வந்தவை என்பதால் அதற்குள் ராமரை ஒரு அவதாரம் என மக்கள் மனதில் அழுத்தமான கருத்து விழுந்து விட்டபடியால் அதை ஒட்டியவை இவை இரண்டுமே ! லட்சுமண் ரேகா என்னும் லட்சுமணன் கோடு , லட்சுமணனால் பர்ணசாலையைச் சுற்றிப் போடப்பட்டு , பின்னர் சீதை அதைத் தாண்டியது போன்ற விபரங்கள் வால்மீகியிலோ , கம்பனிலோ , துளசிதாசரிலோ இல்லை . வழக்கில் இருக்கும் பல ராமாயணங்களில் ஒன்றான “ ஆனந்த ராமாயண “ த்தில் இது பற்றிக் குறிப்பிடுவதாய்க் “ காமகோடி ” என்னும் புத்தகத்தில் படித்தேன் . இனி நம் கதைக்குத் திரும்பச் செல்லலாமா ? ராவணனால் கவர்ந்து செல்லப் பட்ட சீதை கதறினாள் , பதறினாள் , துடித்தாள் , அழுதாள் , விம்மினாள் . “ லட்சுமணா , பெரும்புத்தி கொண்டவனே ! உன்னை நான் தவறாய்ப் பேசியதால் அன்றோ எனக்கு இந்நிலைமை ? நீ ராமரின் எண்ணத்தைப் பிரதிபலிப்பவன் என்பதை நான் உணராமல் போனேனே ? உன் உயிரையே அவருக்காகப் பணயம் வைத்துள்ளாய் ! நான் அறியாமல் போனேனே ? இதெல்லாம் அரக்கர் வேலை என்று நீ எச்சரித்தும் உணராமல் போனேனே ? உடனே வா , வந்து இந்த ராவணன் என்னும் அரக்கனைத் தண்டிப்பாய் !” என்று லட்சுமணனைக் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கதறுகின்றாள் . லட்சுமணா , எங்கே காட்டில் அலைகின்றாயோ அண்ணனைத் தேடி ! [:(] பின்னர் ராவணனைப் பார்த்துச் சொல்லுவாள் : “ தீய காரியங்களின் பலன் உடனே கண்ணுக்குத் தெரியவில்லை எனத் தைரியமாய் இருக்காதே ! உரிய காலத்தில் இதன் பலனை நீ அனுபவிப்பாய் ! என் பதியான ராமன் கையில் தான் உன் உயிர் முடியப் போகின்றது !” என்று சொல்கின்றாள் . தன் நிலையை நினைத்து , நினைத்து மனம் வருந்தினாள் சீதை ! “ என் இந்த நிலை ஒருவேளை என் மாமியாரில் ஒருவள் ஆன கைகேயிக்கு மன ஆறுதலாய் இருக்குமோ ? ஏ , மரங்களே , ராமனிடம் சென்று சொல்லுங்கள் , ராவணன் என்னைத் தூக்கிச் செல்வதை ! தாயே , கோதாவரி அம்மா , நீ போய் உன் பிரவாகத்துடன் ஓடிச் சென்று ராமனிடம் சொல்லமாட்டாயா ? வன தேவதைகளே ! என்ன செய்கின்றீர்கள் ? எங்கே என் ராமன் ? ஏன் இன்னும் வரவில்லை ? மிருகங்களே , என்னைக் காவல் காக்க மாட்டீர்களா ? பறவைகளே , துணைக்கு வாருங்கள் , எமன் கொண்டு போனால் கூட ராமன் என்னைப் பாதுகாப்பதில் இருந்து வல்லமை கொண்டவன் ஆயிற்றே ! அவனிடம் போய்ச் சொல்லுங்கள் !” என்று கதறிக் கொண்டு போன சீதை ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த ஜடாயுவைப் பார்க்கின்றாள் . ஜடாயு தூங்கிக்கொண்டிருந்தது . சீதையின் கதறல் கேட்டுக் கண்விழித்துப் பார்த்தது . சீதையை ராவணன் கவர்ந்து செல்வதைக் கண்டது . உடனே , “ ராவணா , நான் கழுகரசன் , என் பெயர் ஜடாயு . இந்தக் காடே ராமனின் பாதுகாப்பில் உள்ளது . அவன் மனைவியை நீ அபகரித்துச் செல்கின்றாய் ! மாற்றான் மனைவியை அபகரித்துச் செல்பவனுக்குக் கேடுகள் விளையும் எனத் தெரியாதா ? மற்ற மனிதர்களால் இகழத் தக்க ஒரு காரியத்தை எந்த ஒரு மனிதனும் செய்யக் கூடாது . ராவணா ! நீ ஒரு அரசன் ! அரசன் எவ்வழி , அவ்வழி குடிமக்கள் . நீ இத்தகைய ஒரு துர் நோக்கத்துடனான காரியத்தைச் செய்தாயானால் உன் மக்களும் , அவ்வகை நெறிமுறைகளையே பின்பற்றுவார்கள் . நீ எப்படியும் ராமனால் அழியப் போகின்றாய் ! அதில் அச்சம் ஏதும் எனக்கில்லை . எனினும் இது நடக்க என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது . நீ இளைஞன் , நான் வயோதிகன் ! என்றாலும் நீ சுத்த வீரனாக இருப்பதால் என்னுடன் போரிட்டு என்னை வென்றுவிடு , பார்க்கலாம் , இப்போதே ராம , லட்சுமணர்கள் இருக்குமிடம் பறந்து சென்று தெரிவிக்கலாம் என்றால் அதற்குள் நீ சீதையை அபகரித்துக்கொண்டு வெகு தூரம் சென்று விடுவாய் . உன்னுடன் சண்டை போட்டு உன்னை வீழ்த்துவதே என் முதல் கடமை !” என்று சொல்லிவிட்டு ஜடாயு போருக்குத் தயார் ஆனது . ராவணன் கோபம் கொண்டு ஜடாயுவுடன் போருக்குத் தயார் ஆனான் . இருவரும் மோதிக் கொண்டது , ஊழிக்காலத்து நீருடன் கூடிய இரு பெரும் கருமேகங்கள் மோதிக்கொள்வது போல் இருந்தது . ராவணன் அம்புமாரி பொழிந்தான் . ஆனால் ஜடாயுவோ வீரத்துடன் மோதி ராவணனின் வில்லை ஒடித்தது . ராவணனின் தேரோட்டியை வீழ்த்திக் கொன்றது . என்றாலும் வயதின் காரணமாய்க் களைப்பும் அடைந்தது . ராவணனுக்கு அதைக் கண்டதும் மகிழ்ச்சி தோன்றியது . ஜடாயுவோ விடவில்லை , ராவணனைத் துரத்தியது . தாக்கியது வீரத்துடன் . சீதையைத் தன் இடது தொடையில் வைத்துக் கொண்டு ஒரு கையால் அவளை அழுத்திப் பிடித்துக் கொண்டே ராவணன் தன் இன்னொரு கையால் ஜடாயுவுடன் போரிட்டான் . ஜடாயு , ராவணனின் பத்து இடக்கைகளை வெட்ட , அவை மீண்டும் , மீண்டும் அவன் பெற்ற வரத்தினால் முளைத்து வந்தன . கடைசியில் ராவணன் , பெருங்கோபத்துடன் ஜடாயுவின் இறக்கைகளை வெட்டி வீழ்த்தினான் . கழுகரசன் தரையில் வீழ்ந்தான் . சீதை பதறித் துடித்துக் கொண்டு ஜடாயுவின் அருகே ஓடினாள் . “ என்னைக் காக்க வந்த உனக்கு இந்தக் கதியா ? ஏ , ராமா , லட்சுமணா , ஓடிவந்து என்னைக் காக்க மாட்டீர்களா ?” எனக் கதறினாள் . அவள் தலைமுடியைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து ராவணன் அவளைப் புஷ்பக விமானத்தில் ஏற்றிக் கொண்டு விண்ணிலே பறந்தான் . பார்த்துக் கொண்டிருந்த ரிஷிகள் அனைவரும் மனம் துன்புற்றனர் . எனினும் இதனால் ராவணன் அழியப் போவது உறுதி எனத் தெரிந்து கொண்டனர் . பிரம்மாவோ எனில் தேவ காரியம் இனிமேல் நிறைவேற ஆரம்பிக்கும் என உவகை கொண்டார் . ராவணன் மடியில் கிடத்தப் பட்டிருந்த சீதையோ துயரத்தால் கலங்கி அழ , அவள் காலில் இருந்த நகை ஒன்றும் , அவள் கழுத்தில் பூண்டிருந்த முத்துக்கள் பதித்த நகை ஒன்றும் விண்ணில் இருந்து கங்கையோ , நர்மதையோ வீழ்வது போல் வீழ்ந்தன . காட்டு மிருகங்கள் ஆன புலி , சிங்கங்கள் கூட இந்தக்கொடிய காட்சியைக் கண்டு கண்ணீர் சிந்தின , கோபமுற்று ராவணன் சென்ற புஷ்பக விமானத்தின் நிழலைப் பின் தொடர்ந்து சென்றன . சூரியன் ஒளி இழந்தான் . மிகுந்த துக்கத்துடன் சீதை அவனைப் பார்த்து ,” உனக்கு வெட்கமாய் இல்லையா ? இப்படி என்னை அபகரித்துக் கொண்டு ஒரு கோழை போல் செல்கின்றாயே ? நீயும் ஒரு வீரனா ? உன் படைகளை அடியோடு அழிக்கும் வல்லமை பெற்றவர்கள் என் கணவனும் , கொழுந்தன் ஆன லட்சுமணனும் . அவர்களை எதிர்க்கும் வல்லமை இல்லாமல் , நீ இப்படி அவர்கள் அறியாமல் என்னைக் கவர்ந்து செல்லலாமா ? உன் அழிவு நிச்சயம் !” என்று சொல்ல மனம் துணுக்குற்ற இலங்கேஸ்வரன் பதில் ஏதும் பேசவில்லை . விமானம் காடுகள் , நதிகள் , மலைகள் , ஏரிகள் , நாடுகள் கடந்து பறந்து சென்று இலங்கையை அடைந்தது . அங்கே சென்றதும் , ராவணன் சீதையை அந்தப்புரத்தில் உள்ள சில அரக்கிகளிடம் ஒப்படைத்துவிட்டுத் தன்னைக் கேளாமல் யாரும் இவளைப் பார்க்கவோ , பேசவோ கூடாது எனவும் , அவள் என்ன விரும்புகின்றாளோ அதை உடனே நிறைவேற்றித் தரவேண்டும் எனவும் உத்தரவிடுகின்றான் . பின்னர் வலிமை வாய்ந்த எட்டு அரக்கர்களை அழைத்து , உடனே ஜனஸ்தானம் சென்று ராமனின் நடவடிக்கைகளைக் கண்காணித்துச் சொல்ல வேண்டும் எனவும் உத்தரவிடுகின்றான் . பின்னர் மீண்டும் சீதையை அந்தப்புரம் சென்று கண்டு , அவளை ராமனை மறந்துவிடுமாறும் , இந்த இடத்தை விட்டுச் செல்ல முடியாது எனவும் , உடனேயே தன்னை ஏற்குமாறும் கேட்கின்றான் . சீதை மறுக்கின்றாள் . “ உன் மதி அழிந்ததால் ராவணா , உன் உயிர் , உன் மனைவி , மக்கள் , உன் அந்தப்புர ராணிகள் , உன் குடிமக்கள் , உன் படை வீரர்கள் , உன் ஊர் , உன் ராஜ்யம் என அனைத்தும் அழியப் போகின்றது . உன் அரக்கர் குலமே அழியப் போகின்றது .” என்கின்றாள் . சீதைக்குப் பனிரண்டு மாதம் அவகாசம் கொடுக்கின்றான் ராவணன் . அதற்குள் அவள் மனம் மாறி ராவணனை ஏற்றுக் கொள்ளவில்லை எனில் , சீதையைக் கண்டதுண்டமாய் வெட்டித் தான் உணவாய் உண்ணப் போவதாயும் சொல்கின்றான் . பின்னர் அவளை அசோகவனத்திற்கு அழைத்துச் சென்று அங்கே பாதுகாப்பில் வைக்குமாறும் சொல்கின்றான் . அரக்கிகளை அழித்து , இவளை மிரட்டியோ , கெஞ்சியோ , வழிக்குக் கொண்டு வருமாறு சொல்கின்றான் . அசோகவனம் சென்ற சீதை அங்கேயும் நிம்மதி அடையாமல் துன்பம் தாங்க முடியாமல் மயக்க நிலையும் , விழிப்பு நிலையுமாக மாறி , மாறி அடைகின்றாள் . 34 கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 34 மாரீசனைக் கொன்ற ராமரின் மனதில் இனம் தெரியாத கலக்கம் ஏற்பட்டது . வேகமாய்த் திரும்ப ஆரம்பித்தார் . இறக்கும் தருவாயில் மாரீசன் எழுப்பிய ஓலக் குரல் தன் குரலில் இருந்தது , அவரை வேதனைப்படுத்திக் கொண்டே இருந்தது . திரும்பும் வழியில் ஊளையிட்ட நரியின் ஓலமும் , மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியது . சீதையைத் தனியே விட்டுவிட்டு லட்சுமணன் வந்துவிடப் போகிறானே என எண்ணி வருந்தினார் . மிருகங்கள் அனைத்தும் ஓலக் குரல் எழுப்பியதைக் கண்ட அவர் மனம் இன்னும் கவலையுற்றது . அப்போது பதட்டத்துடனும் , கலக்கத்துடனும் லட்சுமணன் தன்னை நோக்கிச் சற்றுத் தொலைவில் வருவதை ராமர் கண்டார் . ஓடிச் சென்று லட்சுமணனைக் கண்ட ராமர் ,” லட்சுமணா , என்ன இது ? சீதையைத் தனியே விட்டு விட்டு ஏன் வந்தாய் ? அவளை அரக்கர்கள் என்ன செய்தனரோ ? நாம் உயிரோடு காண்போமா ? இங்கே நான் காணும் தீய சகுனங்களைப் பார்த்தால் என் மனம் பதறுகின்றதே ? என்ன நடந்தது ?” என்று கேட்டார் ராமர் . “ ஆஹா , என் இடது கண் துடிக்கின்றதே , லட்சுமணா , எங்கே அந்தத் தெய்வ மகள் ? என் இதயராணி எங்கே ? அவள் இல்லை எனில் நான் எப்படி உயிர் வாழ்வேன் ? அவள் இல்லாமல் எனக்கு எந்த சாம்ராஜ்யமும் தேவை இல்லை ! சீதை உயிரோடு இல்லை எனில் நானும் உயிர் விடுகின்றேன் லட்சுமணா ! கைகேயியாவது மன நிம்மதி அடைவாள் .” என்றெல்லாம் புலம்புகின்றார் ராமர் . லட்சுமணன் வேறு வழியில்லாமல் ராமரைப் பார்த்து , நடந்ததை எல்லாம் சொல்கின்றான் . சீதை தன் மேல் சந்தேகப் பட்டதாலேயே தான் வேறு வழியின்றி அங்கே வர நேர்ந்தது எனவும் கூறுகின்றான் . அதிலும் பரதனோடு சேர்ந்து தான் சதி செய்வதாய்ச் சொல்லவே வர நேர்ந்தது என்றும் கூறுகின்றான் . ஆனால் ராமரோ லட்சுமணன் செய்தது தவறு என்கின்றார் . “ சீதை ஆத்திரத்தில் பேசியதை நீ அப்படியே எடுத்துக் கொண்டாயா லட்சுமணா ? தவறு உன் மேல் தான் . உண்மையில் அவள் அவ்வாறு பேசியதில் நீ கோபம் கொண்டே அவளைத் தனியே விட்டு விட்டு வந்திருக்கின்றாய் . என் மனம் இதனால் மகிழ்ச்சி அடையவில்லை லட்சுமணா . என் உத்தரவை மீறி நீ வந்தது சரியில்லை .” என்று சொல்லிக் கொண்டே இருவரும் பர்ணசாலையை அடைந்தனர் . யுத்தம் நடந்த களத்தைப் போல் காட்சி அளித்தது பர்ணசாலை . பொருட்கள் சிதறிக் கிடந்தன . பர்ணசாலையைச் சுற்றி சீதையுடன் விளையாட வரும் மான்களும் , பறவைகளும் சோகமாய் இருந்தன . மலர்கள் வாடி இருந்தன . ஒரு வேளை சீதை நீர் கொண்டு வர கோதாவரிக்குச் சென்றிருப்பாளோ என எண்ணீய ராமர் அங்குமிங்கும் ஓடி அவளைத் தேடுகின்றார் . மரங்களிடையே தேடுகின்றார் . ஒளிந்து விளையாடுகின்றாளோ என குகைகளில் தேடுகின்றார் . செடியே , சீதை எங்கே , மரமே சீதை எங்கே , மானே , சீதை எங்கே , பூவே , சீதை எங்கே , மிருகங்களே , சீதை எங்கே , மலைகளே , சீதை எங்கே ? வன தேவதைகளே , சீதை எங்கே ? எங்கே ? எங்கே ? எங்கே ? என் சீதை எங்கே ? பரிதவித்துப் பதறினார் ராமர் . “ சீதை இல்லாமல் ஒருவேளை நான் உயிர்விட்டு மேலுலகம் சென்றால் நம் தந்தையாகிய தசரதச் சக்கரவர்த்தி சீதை இல்லாமல் நீ ஏன் வந்தாய் என்பாரே ? சீதா , ஓ , சீதா , நீ இல்லாமல் நான் உயிர் வாழமாட்டேன் !” ஓலமிட்டார் ராமர் . லட்சுமணன் பலவகைகளிலும் சமாதானம் செய்கின்றான் . “ ஆஹா , கைகேயியின் எண்ணம் இதுவோ ? அயோத்திமக்கள் சீதையை இழந்த கோழை என்பார்களே என்னை ! ஜனக மகாராஜாவிற்கு என்ன பதில் சொல்லுவேன் ? லட்சுமணா , உடனே அயோத்தி செல்வாய் , தாய்மார்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு பரதனை நாட்டை ஆளச் சொல்லுவாய் . ஏ , சூரியனே , எங்கே போனாய் ? என் சீதையைக் கண்டாயா ? நீ அறியாமலா அவள் எங்கோ போய்விட்டாள் ?” என்றெல்லாம் கதறினார் . சீதையைத் தேடிக் கொண்டு கோதாவரி நதிக்கரைக்குச் சென்ற லட்சுமணன் திரும்பி வந்து அங்கேயும் சீதை இல்லை எனவும் , ராமர் செடி , கொடிகள் , மரங்கள் , மிருகங்கள் என அனைத்திடமும் மீண்டும் புலம்ப , ஒரு இடத்தில் சில மான்கள் நின்று அவரையே பார்த்தன . ராமர் லட்சுமணரிடம் இந்த மான்கள் ஏதோ செய்தி சொல்லுகின்றனவோ எனக் கேட்டு அவற்றையே பார்த்துக் கொண்டு , ஒரு மானிடம் , “ சீதை எங்கே ?” எனக் கேட்க அந்த மானோ விண்ணை நோக்கி எகிறிக் குதித்துவிட்டுப் பின்னர் தென் திசையை நோக்கி ஓடத் துவங்கியது . ராமர் லட்சுமணனிடம் , “ லட்சுமணா , தென் திசையை இந்த மான்கள் சுட்டுவதால் அதை நோக்கிச் செல்வோம் .” எனக் கூறிவிட்டுப் போகின்றார்கள் இருவரும் தென் திசையை நோக்கி . அப்போது ஒரு இடத்தில் சீதையின் காலடிகள் தென்பட்டன . ஒரு பயங்கர ராட்சசன் காலடியும் தென்பட்டது . இவற்றைத் தவிர ஒரு ரதத்தின் பாகங்கள் , சில அம்புகள் , ஒடிந்த ஒரு வில் , அம்புறாத்தூணி போன்றவையும் தென்பட்டது . ஆனால் சீதையைக் காணவில்லை . கோபம் கொண்ட ராமர் , “ கட்டுப்பாடுடன் , தர்மத்தின் வழியில் வாழ நினைக்கும் எனக்கு இத்தகைய கொடிய பாவத்தைச் செய்தவன் யார் ? யாராய் இருந்தாலும் அவர்களை அழிப்பேன் . மூவுலகையும் ஸ்தம்பிக்க வைக்கின்றேன் . சூரியன் தன் ஒளியை இழப்பான் , மலைகளை உடைக்கின்றேன் , மரங்களைப் பொசுக்கி வனங்களை அழிப்பேன் , யாருக்கும் இனி நிம்மதி இருக்கப் போவதில்லை . படைக்கப் பட்டவை அனைத்தும் இப்போது என்னால் அழியப் போகின்றது .” என்று சொல்லிவிட்டு , வில் , அம்புகளை எடுத்துக் கொண்டு , உதடுகள் துடிக்க , கண்கள் சிவக்க , ஊழிக்காலப் பரமன்போல் பெரும் கோபத்துடன் நின்றார் . லட்சுமணன் நிதானம் தவறாமல் அவரைச் சமாதானப் படுத்தினான் . ராமன் தசரதருக்குப் பிறந்தது முதல் காட்டுக்கு வந்ததும் , இப்போது சீதையைப் பிரிந்திருப்பதும் வரை எடுத்துக் கூறிய லட்சுமணன் , “ தர்மத்தின் வசப்பட்டு , அதனால் கடமையை முடிக்க வேண்டி காட்டுக்கு வந்திருக்கும் நீங்கள் இப்படிப் பேசுவது சரியில்லை . அதீத சோகத்தினால் பேசுகின்றீர்கள் என்பதையும் நான் அறிவேன் . ஆராயாமல் பிறருக்கு நாம் துன்பத்தை விளைவிக்கக் கூடாது அல்லவா ? வாருங்கள் , இந்த ஜனஸ்தானம் பூராவும் தேடுவோம் . பின்னர் சீதை போனவழி எவ்வாறு எனத் தெரிந்து கொண்டு , அவளைக்கவர்ந்து சென்றவர்கள் இருந்தால் அவர்களை வேரோடு அழிப்போம் .” எனக் கூற அதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்ட ராமர் அவ்வாறே ஜனஸ்தானம் பூராவும் லட்சுமணனுடன் தேடுகின்றார் . சீதை எங்கும் காணவில்லை . ஓரிடத்தில் கழுகரசன் ஆன ஜடாயு பெரும் ரத்த வெள்ளத்தில் பெருமூச்சு வாங்கிக் கொண்டு மூச்சு விட முடியாமல் படுத்திருப்பதைக் கண்ட ராமர் , யாரோ அரக்கன் தான் கழுகரசன் வடிவிலே வந்து சீதையைச் சாப்பிட்டிருக்கின்றான் என நினைத்து , கடும் கோபத்துடன் , பூமி அதிர , வில்லும் , அம்பும் எடுத்துக் கொண்டு , ஜடாயுவை நோக்கிச் செல்கின்றார் . ஜடாயு , ராமர் வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தது . 35 கதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 35 ரத்தம் கக்கிக் கொண்டிருந்தது ஜடாயு , அதன் மூச்சும் மெல்ல மெல்ல அடங்கிக் கொண்டிருந்தது . அப்போது ராமன் தன்னை நோக்கி வேக வேகமாய் வருவதைக் கண்டது . “ ராமா , ஏற்கெனவே ராவணனால் வீழ்த்தப் பட்ட என்னை நீ கொல்ல நினைக்கின்றாயா ? காப்பாற்ற லட்சுமணனும் அருகில் இல்லாமல் , ராவணனால் கொண்டு போகப் பட்ட சீதையைக் காப்பாற்ற நான் ராவணனோடு பெரும்போரிட்டேன் . இங்கே கிடக்கின்ற அம்புகள் , ஒடிந்து இருக்கும் வில் , என்னால் உடைக்கப் பட்ட அவன் தேரின் பாகங்கள் , அதோ கிடக்கின்றதே , ராமா , அதோ பார்ப்பாய் ! ஆனாலும் இறுதியில் என் இறக்கைகளை அவன் வெட்டி வீழ்த்தி விட்டான் . சீதை ராவணனால் கவர்ந்து செல்லப் பட்டாளே ! ” என்று சொல்லிவிட்டு ஜடாயு , பெருமூச்சு விடுவதைக் கண்ட ராமர் மனம் நெகிழ்ந்தது . “ ஐயோ , நான் பெரும்பாவி , அரசுரிமை இழந்தேன் , தாய் , தந்தையரோடு சேர்ந்திருக்க முடியாமல் காட்டுக்குச் செல்லுமாறு பணிக்கப் பட்டேன் , இங்கே மனைவியையும் பறி கொடுத்தேன் , துணை நின்ற ஜடாயுவும் இப்போது இறக்கும் தருவாயில் ! என்னே என்னுடைய துரதிருஷ்டம் ! இதன் காரணமாய் நான் கடலுக்குச் சென்றால் கூட அந்தக் கடலும் வற்றுமோ ? எத்தகைய துரதிர்ஷ்டக் காரன் நான் !” என்று புலம்பி விட்டுக் கீழே அமர்ந்து ஜடாயுவைத் தடவிக் கொடுத்து , ஆறுதல் சொன்னதோடு , ” என் சீதை எங்கே சென்றாள் ?” என்றும் கேட்கின்றார் . ஜடாயு சொல்கின்றது : “ தன் மாயையால் , புயல் , இருள் சூழ்ந்த வானத்தை உருவாக்கி விட்டு , ராவணன் சீதையைக் கவர்ந்து கொண்டு தென் திசையில் சென்றான் . அவன் கவர்ந்து சென்ற நேரம் “ விந்தை ” எனச் சொல்லப் படும் . சாத்திரங்கள் கூறியவற்றின் படி , அந்த நேரத்தில் ஒருவனுடைய உரிமைப் பொருள் வேறொருவனால் கவர்ந்து செல்லப் பட்டால் , அதன் விளைவுகள் கவர்ந்தவனைச் சென்றடையும் . ராவணன் இதை அறியமாட்டான் போலும் !” என்று சொல்லிவிட்டுப் பின்னர் , மிக்க சிரமத்துடன் , “ இந்த ராவணன் , மஹரிஷி , விஸ்ரவஸின் மகன் , குபேரனின் சகோதரன் !’ என்று சொல்லிக் கொண்டே உயிர் நீத்தது . லட்சுமணனிடம் ஜடாயுவின் மறைவுக்கு வருந்திய ராமர் , அவனைக் கொண்டு சிதை மூட்டச் செய்து , ஜடாயுவிற்கு இறுதிச் சடங்குகளை நடத்தி முடித்தார் . பின்னர் இருவரும் காட்டுப் பகுதிகளைக் கடந்து மேலே செல்லும்போது , ஒரு இடத்தில் ஒரு குகைக்கு அருகே , பயங்கர உருவம் படைத்த ஒரு அரக்கி காணப்பட்டாள் . லட்சுமணனைக் கண்டதும் அவள் ஓடி வந்து கட்டி அணைத்து , ” என் பெயர் அயோமுகி , நான் உன் அழகால் கவரப் பட்டேன் , நாம் திருமணம் செய்து கொள்வோம் !” என்று சொல்கின்றாள் . லட்சுமணன் அவளை அங்கஹீனம் செய்ய அவள் அலறிக் கொண்டு ஓடுகின்றாள் . பின்னர் பயணத்தை இருவரும் தொடரும்போது , காடே அதிரும் சப்தம் கேட்கின்றது . எதிரே தோன்றினான் ஒரு விசித்திர உருவம் படைத்த மனிதன் . மனிதனா அவன் ? வாய் வயிற்றிலே ! தலையோ , கழுத்தோ காணவே இல்லை . தன் பெயர் “ கபந்தன் ” என்றும் , ராம , லட்சுமணர்களைத் தான் விழுங்கப் போவதாயும் சொன்ன அவன் ( நீண்ட கைகளுடன் காணப்பட்ட ) ராம , லட்சுமணர்களை இறுகத் தன் கைகளால் பிடிக்க , அவர்களை விழுங்கப் போவதாய்ச் சொல்கின்றான் . ராமர் , லட்சுமணனுக்குத் தைரியம் சொல்லிவிட்டு , பின்னர் இருவருமாய் அந்த அரக்கனின் கைகளை வெட்டித் தள்ள அரக்கன் கீழே விழுந்தான் . “ யார் நீங்கள் ?” என ராம , லட்சுமணர்களைக் கபந்தன் வினவ , அவர்கள் தங்கள் கதையைச் சொல்கின்றனர் . தன் கதையையும் சொல்கின்றான் கபந்தன் . வேண்டிய உருவம் எடுக்கத் தக்க கந்தர்வன் ஆகிய தான் “ ஸ்தூலசிரஸ் ” என்ற ரிஷியைத் துன்புறுத்தியதால் அவரால் சாபம் கொடுக்கப் பட்டு , விமோசனம் வேண்டிய காலத்தில் , ராமன் வந்து விமோசனம் கொடுப்பான் , அவரால் உன் உடல் தகனம் செய்யப் படும்போது முந்தைய உருவைத் திரும்ப அடைவாய் ! எனக் கூறியதாய்ச் சொல்கின்றான் . தன்னைத் தகனம் செய்யும்படியும் , தான் பழைய உருவை அடைந்த பின்னர் , ராமருக்கு வேண்டிய உதவியைத் தான் செய்வதாயும் , சீதையைக் காப்பாற்றும் விஷயத்தில் ராமருக்கு யார் உதவுவார்கள் என்பதும் தனக்குத் தெரியும் எனவும் சொல்லவே , அவ்வாறே , கபந்தன் கூறியவாறே அவன் உடலைக் குழியில் இட்டு சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் தகனம் செய்கின்றனர் . கபந்தன் எரிந்த சிதையில் இருந்து தூய ஆடைகள் அணிந்தவனாய்த் தோன்றி அப்போதே அங்கே தோன்றிய தெய்வீக விமானத்தில் ஏறி அமர்ந்து கொண்டு , ராமரைப் பார்த்துச் சொன்னான் :” உன் மனைவியை நீ இழந்து இப்போது துன்புற்று இருப்பதை போல் தன் மனைவியையும் , அனுபவித்து வந்த ராஜ்யத்தையும் துறந்து வாழும் ஒருவனை நீ உனக்குத் துணையாகக் கொள்வாயாக . அப்படிப்பட்ட ஒருவன் , சுக்ரீவன் என்ற வானரத் தலைவன் . இந்திரனின் மகன் ஆகிய வாலி என்பவனின் சகோதரன் . வாலியினால் துரத்தப் பட்டு , பம்பா நதிக்கரையில் , ரிச்யமுகம் என்னும் மலையில் இப்போது தன்னந்தனியாக சில வானரங்களோடு வசிக்கின்றான் . மிக்க தைரியசாலி , பலவான் . சீதையைத் தேடும் விஷயத்தில் அவன் உனக்கு உதவி புரிவான் . விதியை யாராலும் வெல்ல முடியாது . ஆகவே நீ சூரியனின் அம்சம் ஆன சுக்ரீவனைச் சந்தித்து , அக்னி சாட்சியாக அவன் நட்பை ஏற்றுக் கொள்வாய் . நினைத்தபோது நினைத்த உருவம் எடுக்கும் வல்லமை பெற்ற அவன் , உன் மனைவி , மேருமலையின் உச்சியில் இருந்தாலும் சரி , பாதாள லோகத்தின் மூலையில் இருந்தாலும் சரி , கண்டு பிடித்துக் கொடுப்பான் . மேலும் , ராமா , கேள் , இந்தப் பம்பை போகும் வழியில் , பல புனிதமான இடங்கள் இருக்கின்றனன் . அங்கிருந்த முனிவர்களுக்குத் தொண்டு செய்து வாழ்ந்த “ சபரி ” என்னும் பெண் துறவி அங்கே வசிக்கின்றாள் . உன்னைக் காணவே அவள் உயிர் தரித்திருக்கின்றாள் . உன்னைக் கண்டதும் அவள் மோட்சத்தை அடைவாள் . பம்பைக்கு எதிரிலேயே அந்த ரிச்யமூகம் இருக்கின்றது . அங்கே தான் சுக்ரீவன் வாழ்கின்றான் . நான் விடை பெறுகின்றேன் .” என்று சொல்லிவிட்டுக் கபந்தன் விடை பெற்றான் . ராம , லட்சுமணர்கள் கபந்தன் குறிப்பிட்ட பாதையில் சென்று , பம்பையின் மேற்குக் கரையை அடைந்தனர் . அங்கே சபரியின் ஆசிரமம் இருந்தது . 36 கதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 36 கபந்தன் குறிப்பிட்ட வழியிலேயே ராம , லட்சுமணர்கள் பிரயாணம் செய்து , பின்னர் பம்பையின் மேற்குக்கரையில் உள்ள சபரியின் ஆசிரமத்தை அடைந்தனர் . அங்கே இவர்களைக் கண்ட சபரி எழுந்து நின்று வரவேற்றாள் . போற்றத் தக்க அந்தப் பெண் துறவி , இருவரின் காலடிகளிலும் வீழ்ந்து எழுந்தாள் . ராமர் அவளைப் பார்த்துத் “தாயே , தங்கள் தவம் எவ்விதத் தடையுமின்றி முடிவை அடைகின்றதா ?” என விசாரித்துத் தெரிந்து கொள்கின்றார் . ராம , லட்சுமணர்களை நேரில் பார்த்ததில் மிக மன மகிழ்ச்சி அடைந்திருந்த சபரியோ , தன்னுடைய பிறவிப் பயனையே அடைந்து விட்டதாய்ப் பூரிப்பு எய்தினாள் . ராம , லட்சுமணர்கள் , சீதையுடன் சித்திரகூடத்துக்கு வந்தபோது ரிஷி , முனிவர்கள் மன மகிழ்ந்து சொர்க்கம் செல்லும் வழியில் சபரியைக் கண்டு , ராம , லட்சுமணர்கள் , இன்னும் சிறிது நாட்களில் இங்கே வருவார்கள் . அதன்பின்னர் உனக்கும் நற்கதி கிடைக்கும் என வாழ்த்தியதாயும் சொல்கின்றாள் . கபந்தனிடமிருந்து சபரியைப் பற்றித் தெரிந்து கொண்டதாய்ச் சொன்ன ராமர் அந்த இடம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆசைப் படவே , மதங்க வனம் என்ற பெயரில் உள்ள அந்த இடமானது , பல்வேறு ரிஷி , முனிவர்களின் ஆசிரமம் ஆக இருந்து வருவதைக் குறிப்பிட்டுவிட்டுத் தான் இந்த உடலை ஒழித்து ஆத்மஞானிகளின் முன்னிலையில் போக விரும்புவதாயும் சொல்கின்றாள் . அவ்வாறே ஆகட்டும் என ராமர் சொல்ல , சபரி தன் பூத உடலை அழிக்க எண்ணம் கொண்டவளாய் , தீ மூட்டிக் கொண்டு அந்த அக்னிக்குள் பிரவேசம் செய்கின்றாள் . தீக்குள் புகுந்த சபரியானவள் ஒளி பொருந்திய தேகத்தை அடைந்தவளாய் , பேரழகோடு ஜொலித்துக் கொண்டு , அந்த வனமே பிரகாசமாய் விளங்கும்படியான ஜோதி சொரூபமான உடலோடு , ராமரை நமஸ்கரித்துவிட்டு விண்ணுலகைச் சென்று அடைந்தாள் . பின்னர் ராமர் , லட்சுமணனைப் பார்த்து , “ லட்சுமணா , என்னவோ தெரியவில்லை , நம் கவலை தீரும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றிவிட்டது . என் மனம் சாந்தி அடைந்து உள்ளது . வா , நாம் புறப்பட்டு ரிச்யமூக மலையை அடைவோம் . அங்கே வாலியிடம் உள்ள பயத்தின் காரணமாய் ஒளிந்து வாழும் சுக்ரீவனைத் தேடிப் பிடித்து அவன் உதவியுடன் சீதையைத் தேடுவோம் .” என்று சாந்தமாய்ச் சொல்கின்றார் . நடு , நடுவில் அவர் மனதைச் சோகம் கவ்வுகின்றது . சீதையின் நினைவு பெரிதும் வாட்டுகின்றது . இவ்வாறே பேசிக் கொண்டு பம்பையை அடைந்து அங்கே இருந்த வனத்தினுள் பிரவேசித்தனர் . பம்பையைக் கடக்கும்போதெல்லாம் மனம் கலங்கிக் கதறி அழுத வண்ணமே ராமர் சென்றார் . பார்க்கும் ஒவ்வொரு காட்சியும் , பூக்கும் ஒவ்வொரு பூவும் , பேசும் ஒவ்வொரு வார்த்தையும் , உண்ணும் ஒவ்வொரு கவளமும் , குடிக்கும் ஒவ்வொரு துளி நீரும் சீதையை நினைவு படுத்திய வண்ணமாகவே இருந்தது , ராமருக்கு . “ லட்சுமணா , இனி நான் அவளை மீண்டும் காண்பேனோ ?” எனப் பலவாறாய்ப் புலம்பிக் கொண்டே வந்தார் ராமர் . லட்சுமணன் ஆறுதல் மொழிகளைச் சொல்லி அவரைச் சமாதானம் செய்கின்றான் . இவர்கள் இருவரும் வருவதை ரிச்யமூக மலையில் இருந்து சுக்ரீவன் பார்த்துக் கொண்டே இருந்தான் . ஒருவேளை வாலியின் நண்பர்களோ என ஐயமுற்றான் சுக்ரீவன் . தன் நண்பர்களோடு கலந்து ஆலோசிக்கின்றான் . அனுமனோ சுக்ரீவன் வீணே கவலைப் படுவதாய்ச் சொல்லுகின்றார் . உடனே அனுமனை நேரில் சென்று அவர்கள் யார் என விசாரித்து வருமாறு கூறுகின்றான் சுக்ரீவன் . அவ்வாறே செய்வதாய்ச் சொல்லி அனுமனும் உடனே அங்கு செல்கின்றார் . அனுமனுக்கும் கொஞ்சம் சந்தேகம் இருந்தபடியால் , தன்னை ஒரு பிராமண சந்யாசிபோல் மாற்றிக் கொண்டு அவர்களை அடைகின்றார் . ராம , லட்சுமணர்களை நெருங்கி அவர்களை வணங்கிய அனுமன் , ரிஷிகள் போல் மரவுரி தரித்து , ஆனால் பூரண ஆயுதங்களோடு நீங்கள் இருவரும் இந்தக் காட்டில் வருகை புரிந்ததின் நோக்கம் என்ன ? இந்தக் காட்டைப் பாதுகாக்க சூரிய , சந்திரர்கள் போல் நீங்கள் இருவரும் வந்துள்ளீர்களோ ? அல்லது விண்ணிலிருந்து சூரிய , சந்திரரே இறங்கி விட்டனரா ?” என விசாரிக்கின்றார் . இருவரும் பேசாமல் இருப்பது கண்டு மேலும் சொல்லுவார் :” வானர அரசன் ஆகிய சுக்ரீவன் , என் அரசன் , நான் அவன் நண்பன் , அமைச்சன் , நானும் ஒரு வானரனே . என் அரசனை அவன் அண்ணன் ஆகிய வாலி , நாட்டை விட்டுத் துரத்தி விட்டான் . ஆகவே என் அரசனாகிய சுக்ரீவனுடன் நாங்கள் இங்கே வாழ்ந்து வருகின்றோம் . அவர் அனுப்பியே நான் இங்கே வந்தேன் . எங்களுக்கு நினைத்த போது நினைத்த உருவை எடுக்க முடியும் . என் அரசனை உங்கள் நண்பனாய் ஏற்றுக் கொள்ளுங்கள் .” என்று சொல்கின்றார் . உடனே ராமர் லட்சுமணனைப் பார்த்து , “ நாம் தேடி வந்திருக்கும் சுக்ரீவனின் அமைச்சரும் , நண்பரும் ஆன இந்த அனுமனின் சொல் வல்லமையைப் பார்த்தாயா ? “ என வியந்து பேச , லட்சுமணனும் , அனுமனிடம் தாங்கள் சுக்ரீவனையே தேடி வந்திருப்பதாய்ச் சொல்ல , அனுமன் அவர்கள் வந்த காரணத்தைக் கேட்கின்றார் . லட்சுமணன் , மீண்டும் ஒரு முறை ராமர் பட்டம் துறந்து காட்டுக்கு வந்தது முதல் சீதை அபகரிக்கப் பட்டது வரை அனைத்தும் சொல்லி முடிக்கின்றான் . கபந்தன் சுக்ரீவனைப் பற்றிக்கூறியதாயும் சொல்லிவிட்டு , ராமர் சுக்ரீவனின் நட்பை வேண்டி வந்திருப்பதாயும் கூறுகின்றான் . உடனே மன மகிழ்ச்சி கொண்ட அனுமன் , ராம , லட்சுமணர்களைத் தன் தோளில் சுமந்து கொண்டு சுக்ரீவன் இருக்குமிடம் நோக்கிச் சென்றான் . அங்கே சுக்ரீவனின் முன்னிலையை அடைந்ததும் , அனுமன் ராம , லட்சுமணர்களைப் பற்றி எடுத்துச் சொல்ல , தன் நிலையையும் , தான் அண்ணனால் துரத்தப்பட்டு வந்திரூப்பதையும் சுக்ரீவன் எடுத்துக் கூறுகின்றான் . தன் மனைவியும் வாலியினால் அபகரிக்கப் பட்டதையும் சுக்ரீவன் எடுத்துச் சொல்லுகின்றான் . ராமர் வாலியை அழித்து , சுக்ரீவன் இழந்த ராஜ்யத்தை மீட்டுத் தருவதாய் உறுதி கூற , ராமனுக்கும் , சுக்ரீவனுக்கும் இடையே நட்பு உறுதி செய்யப் பட்டது . அதே நேரத்தில் , கிஷ்கிந்தையில் வாலிக்கும் , இலங்கையில் ராவணனுக்கும் , சீதைக்கும் ஒரே சமயத்தில் அவர்களுடைய இடது கண் துடிக்கின்றது . அன்றலர்ந்த தாமரை போன்ற சீதையின் கண்களில் இடது கண்ணும் , தங்கம் போல் ஜொலிக்கும் வாலியின் இடது கண்ணும் , பிரளய கால நெருப்புப் போன்ற ஜொலிப்புடன் கூடிய ராவணனின் இடது கண்ணும் துடித்தனவாம் . பெண்களின் இடதுகண்கள் துடித்தால் நன்மை பயக்கும் , என்றும் ஆண்களின் இடது கண்கள் துடித்தால் தீமை எனவும் நிமித்தங்கள் கூறுகின்றன . அப்போது சுக்ரீவன் மேலும் ராமனிடம் கூறுவான் :” ராமா , உன் மனைவியை ராவணன் கடத்திச் செல்லும்போது நான் அவர்களைப் பார்த்தேன் என்று தான் நினைக்கின்றேன் . ராமா , லட்சுமணா , என்று கதறிக் கொண்டே அந்தப் பெண் ராவணன் கையிலிருந்து தன்னை விடுவிக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள் . மலையின் மீது நானும் , இன்னும் சில வானரங்களும் இருப்பதைப் பார்த்துவிட்டு ஒரு சிறு மூட்டையையும் , இன்னும் சில நகைகளையும் எங்களை நோக்கி வீசினாள் . அவற்றை நாங்கள் எடுத்துப் பத்திரமாய் வைத்துள்ளோம் . இவை சீதையின் நகைகளா எனப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் .” என்று சொல்லவே , சுக்ரீவன் மீண்டும் குகையினுள்ளே சென்று , ஒரு மூட்டையைக் கொணர்ந்து ராமனிடம் கொடுக்க அதைப் பார்த்த ராமன் மீண்டும் கதறி அழுதான் . பின்னர் லட்சுமணனைப் பார்த்து அரக்கனால் கவர்ந்து செல்லப் பட்ட சீதை இவற்றை வீசி எறிந்திருக்கின்றாள் என்று கூறுகின்றார் . லட்சுமணனோ , என்னால் கால் கொலுசுகளைத் தவிர , மற்றவற்றை அடையாளம் காணமுடியவில்லை எனச் சொல்கின்றான் . பின்னர் ராமன் சுக்ரீவனைப் பார்த்து , சீதை எந்தத் தேசத்தில் சிறை இருக்கின்றாள் ? யார் அவன் ? எங்கே உள்ளான் ? என்ற விபரம் கேட்க , சுக்ரீவன் , ராமரை ஆறுதல் வார்த்தைகளினால் சமாதானம் செய்கின்றான் . பின்னர் ராமர் அவனின் அண்ணன் எந்தக் காரணத்துக்காக சுக்ரீவனைத் துரத்தினான் எனக் கேட்கத் தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கின்றான் சுக்ரீவன் . ரிக்ஷரஜஸ் என்னும் வானர அரசனின் வளர்ப்பு மகன்கள் தாங்கள் இருவரும் எனவும் , தங்கள் வளர்ப்புத் தந்தை இறந்ததும் , மூத்த மகன் ஆன வாலி பட்டம் ஏற்றதாயும் , வாலிக்கும் “ மாயாவி ” என்னும் அரக்கனுக்கும் ஒரு பெண்ணின் காரணமாய்ப் பல வருடங்களாய் விரோதம் இருந்ததையும் சொல்கின்றான் . ஒருமுறை நள்ளிரவு நேரத்தில் மாயாவி கிஷ்கிந்தை வந்து வாலியைச் சண்டைக்கு அழைத்ததையும் , வாலி உடனே புறப்பட்டதையும் , மனைவி தடுத்தும் கேளாமல் , தான் சொல்லியும் கேளாமல் , வாலி யுத்தம் செய்யச் சென்றதையும் சொல்கின்றான் . ஆனால் சுக்ரீவன் வாலியோடு தானும் உடன் சென்றதாயும் , அசுரன் இருவரும் வருவதைப் பார்த்துவிட்டுப் பூமியில் இருந்த ஒரு பெரிய பள்ளத்தினுள் புகுந்து விட்டதாயும் சொல்கின்றான் . இருவரும் அசுரனைப் பின்பற்றிச் செல்ல முயல , வாலி , சுக்ரீவனைத் தடுத்துத் தான் மட்டும் உள்ளே செல்வதாயும் , அசுரனைக் கொன்றுவிட்டுத் திரும்புவதாயும் சுக்ரீவன் அங்கே இருந்து காவல் காக்குமாறும் கூறிவிட்டுச் செல்கின்றான் . ஒரு வருஷம் செல்கின்றது . சுக்ரீவன் அப்படி , இப்படி அசையாமல் நின்று காவல் காக்கின்றான் . வாலி திரும்பவில்லை . திடீரென ஒரு நாள் பள்ளத்துக்குள்ளிருந்து ஒரு அசுர கர்ஜனை கேட்கின்றது . பின்னர் அந்தப் பள்ளத்தில் இருந்து ரத்தம் ஊற்றுப் போல் பொங்கி வர ஆரம்பிக்கின்றது . அண்ணன் இறந்துபட்டான் என உறுதி கொண்ட சுக்ரீவன் அழுது கொண்டே பள்ளத்தை மூடிவிட்டுப் பின்னர் அங்கேயே வாலிக்கு இறுதிச் சடங்குகள் செய்துவிட்டுக் கிஷ்கிந்தை திரும்புகின்றான் . கிஷ்கிந்தை வந்த சுக்ரீவன் வாயே திறக்கவில்லை . எனினும் மந்திரி , பிரதானிகள் விஷயத்தை அறிந்து கொண்டனர் . பின்னர் ஆலோசனைகள் பலவும் செய்துவிட்டு சுக்ரீவனுக்கு முடிசூட்டுகின்றனர் வலுக்கட்டாயமாய் . சுக்ரீவனின் ஆட்சி நடக்கும்போது ஒரு நாள் திடீரென வாலி திரும்பி விடுகின்றான் . மனம் மகிழ்ந்த சுக்ரீவன் அண்ணனை மகிழ்வோடு வரவேற்கின்றான் . நடந்ததைச் சொல்கின்றான் . தான் மகுடம் சூட இஷ்டப் படவில்லை என்றும் , மந்திரி , பிரதானிகளால் பட்டம் கட்டப் பட்டதையும் சொல்கின்றான் . தன் மீது கோபம் கொள்ளவேண்டாம் எனவும் சொல்கின்றான் . இதை ஏற்காத வாலி , சுக்ரீவனைச் சந்தேகம் கொண்டு கடுமையாகவும் , கொடுமையாகவும் திட்டுகின்றான் . தன்னால் கொல்லப் பட்ட மாயாவியின் ரத்தத்தினால் அந்தப் பள்ளம் நிரம்பித் தான் வெளியேற வழி இல்லாமல் , தவித்ததையும் , பள்ளம் மூடப் பட்டிருந்ததையும் சொல்கின்றான் . சுக்ரீவனைக் கூவிக் கூவி அழைத்தும் பலனில்லாமல் போனதையும் சொல்கின்றான் . ராஜ்யத்தை அடையவே சுக்ரீவன் இவ்வாறு செய்ததாயும் சொல்கின்றான் . பின்னர் கட்டிய துணியோடு சுக்ரீவனை நாடு கடத்தினான் . எங்கும் தங்க இடமின்றி அலைந்த சுக்ரீவன் , வாலியினால் நுழைய முடியாத இந்த ரிஷ்யமுக மலையைத் தேர்ந்தெடுத்து அங்கே தங்க ஆரம்பித்ததாயும் சொல்கின்றான் . தனக்கு உதவி செய்யுமாறும் ராமனிடம் வேண்டுகின்றான் . ராமனும் அவ்வாறே வாலியை அழித்து சுக்ரீவனுக்கு உதவுவதாய் வாக்களிக்கின்றார் . இனி கிஷ்கிந்தா காண்டம் நாளையில் இருந்து ஆரம்பிக்கின்றது . 37 கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 37 லட்சுமணன் , சீதையின் கால் ஆபரணத்தைப் பற்றி மட்டுமே தான் அறிந்திருந்ததாய்ச் சொன்னதன் தாத்பரியத்தை விளங்கச் சொல்லுமாறு சிலர் கேட்டுக் கொண்டதன் பேரில் அதைச் சொல்லிவிட்டு இன்றைய பகுதிக்குப் போகலாம் . லட்சுமணன் சீதையின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவன் அல்ல . எப்போதுமே அவளின் கால்களைப் பார்த்தே பேசும் வழக்கம் உள்ளவன் . அவன் மட்டுமல்ல , ராமனின் மற்றைய சகோதரர்களும் அவ்வாறே , தங்கள் அண்ணன் மனைவியான சீதையைத் தங்கள் தாய்க்கும் மேலாய் மதிப்பதாலும் , பிற பெண்களை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற நற்பண்பு அரசகுமாரர்களிடம் இருந்தமையாலும் , அவன் சீதையின் கால்களை மட்டுமே பார்த்திருந்தான் . ஆகவே தான் அவனுக்கு அவள் கால்களின் கொலுசு மட்டுமே அடையாளம் காண முடிந்தது . அவளின் கைவளைகள் , கழுத்தின் மாலைகள் , தலையின் ஆபரணம்உள்ளிட்ட மற்ற ஆபரணங்கள் தெரியவில்லை . இனி , வாலியைப் பற்றியும் , அவன் பலத்தைக் குறித்தும் சுக்ரீவன் ராமனிடம் கூறியதும் , அத்தகைய வாலியை ராமனால் வெல்ல முடியுமா என சந்தேகம் கொண்டதும் பற்றிப் பார்ப்போம் . இந்திரன் மகன் ஆன வாலி அசாத்திய பலசாலி . கிழக்கு , மேற்காகவோ , வடக்கு , தெற்காகவோ பல கடல்களைத் தாண்டிச் செல்லும்போது கூட வாலி களைப்படையாமல் இருந்து வந்தான் . ஒரு சமயம் எருமை உருவம் கொண்ட துந்துபி என்னும் அரக்கன் ஒருவன் ஒரு சமயம் தான் கொண்ட மமதையால் , சமுத்திர ராஜனைச் சண்டைக்கு இழுக்க , சமுத்திர ராஜனோ , ஹிமவானிடம் சண்டை போட்டு ஜெயிக்குமாறு சொல்லி அனுப்புகின்றான் . ஹிமவானோ , துந்துபியை ஜெயிக்கத் தன்னால் முடியாது எனச் சொல்லி , இந்திரன் மகன் ஆன வாலியை ஜெயிக்குமாறு சொல்லி அனுப்புகின்றான் . வாலியைச் சண்டைக்கு இழுத்த துந்துபியைத் தரையில் அடித்துக் கொல்கின்றான் வாலி , அதுவும் மிக மிக அனாயாசமாய் . அவன் உடலைச் சுழற்றித் தூக்கி எறிய அது வெகு தூரம் அப்பால் போய் மதங்க முனிவரின் ஆசிரமத்தில் போய் விழுகின்றது . முனிவர் புனிதமான தன் ஆசிரமம் இவ்வாறு பாழ்பட்டதைப் பார்த்து , மனம் நொந்தார் . தன் தவ வலிமையால் இம்மாதிரியான காரியத்தைச் செய்து ஆசிரமத்தைப் பாழ்படுத்தியது ஒரு வானரன் என்பதைப் புரிந்து கொண்டு , அவன் இனி இந்த ஆசிரமத்துக்குள் காலடி எடுத்து வைத்தால் அந்தக் கணமே இறப்பான் எனவும் , அவனுக்கு உதவி செய்பவர்களும் உடனே இந்தக் காட்டை விட்டு அகலவில்லை எனில் அடுத்த கணமே கல்லாகிவிடுவர் எனவும் சபிக்கின்றார் . பின்னர் இந்த விஷயம் தெரிந்து வாலி , அங்கே வந்து முனிவரின் மன்னிப்பைக் கோரக் காத்து நின்றும் முனிவர் வாலியை மன்னிக்க மறுத்துவிட்டார் . சாபம் பலித்துவிடும் என்ற பயத்தால் வாலியும் உடனே திரும்பிவிட்டான் . அன்றிலிருந்து இந்தப் பக்கம் அவன் வருவதில்லை . ஆகவே அவன் விரோதம் வந்ததும் எங்கும் தங்க இடம் இல்லாமல் இருந்த நான் இந்த ரிச்யமூக மலைப்பகுதியைத் தேர்ந்தெடுத்தேன் . இங்கு நான் தைரியமாக வசிக்க முடிகின்றது . பின்னர் அந்தப் பகுதியில் விழுந்து கிடந்த துந்துபியின் உடலைக் காட்டுகின்றான் சுக்ரீவன் ராமனுக்கு . வாலியின் திறமைகளைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்த சுக்ரீவனுக்கு , ராமனின் பலத்திலும் , திறமையில் சந்தேகம் ஏற்பட்டிருப்பதைப் புரிந்து கொண்ட லட்சுமணன் , “ ராமன் என்ன செய்தால் அவர் திறமையை நீ நம்புவாய் ?” எனக் கேட்க , சுக்ரீவன் அங்கே இருந்த ஏழு மரங்களை ஒரே அம்பினால் ராமனைத் துளைத்துக் காட்டச் சொல்கின்றான் . இந்த மரங்களை ஒவ்வொன்றாய் வாலி துளத்தான் . ராமன் அவனை விடப் பலசாலி என்றால் ஒரே அம்பினால் இந்த மரங்களைத் துளைக்க வேண்டும் எனச் சொல்கின்றான் . ராமன் சிரித்துக் கொண்டே தன் கால் கட்டை விரலினால் துந்துபியின் உடலை ஒரு நெம்பு , நெம்பித் தள்ள அந்த உடல் வெகுதூரம் போய் விழுகின்றது . எனினும் நம்பாத சுக்ரீவன் ஏழு மரங்களையும் துளைத்தால் தான் தனக்கு நம்பிக்கை வரும் எனச் சொல்ல , அவ்வாறே ராமர் ஒரே அம்பினால் ஏழு மரங்களையும் துளைத்தெடுக்கின்றார் . அம்பானது ஏழு மரங்களையும் துளைத்தெடுத்துவிட்டுப் பின்னர் ராமனிடமே திரும்பி வந்தது . மனம் மகிழ்ந்த சுக்ரீவனை , கிஷ்கிந்தை சென்று வாலியைச் சண்டைக்கு அழைக்குமாறு கூற , சுக்ரீவனும் அவ்வாறே , கிஷ்கிந்தையை அடைந்து வாலியைச் சண்டைக்குக் கூப்பிடுகின்றான் . இருவரும் கடுமையாகச் சண்டை போடுகின்றனர் . எனினும் கடைசியில் வாலியே ஜெயிக்கின்றான் . தப்பி ஓடினான் சுக்ரீவன் . அவனைத் துரத்தி வந்த வாலி , அவன் ரிச்யமூக பர்வதத்தில் , மதங்க முனிவரின் ஆசிரமத்தை அணுகவும் , உள்ளே போகாமல் மீண்டும் கிஷ்கிந்தை திரும்பினான் . மன வருத்தத்துடன் வந்த சுக்ரீவனைப் பார்த்த ராமர் , “ நீங்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருப்பதால் என்னால் அடையாளம் காண முடியவில்லை . என்னுடைய அம்பினால் நான் உன்னையே கொன்றுவிட்டால் என்ன செய்வது ? ஆகவே நீ மீண்டும் வாலியைச் சண்டைக்கு இழுப்பாய் ! சண்டை போடும்போது “ கஜபுஷ்பி ” என்னும் இந்த மலர்க்கொடியக் கழுத்தில் கட்டிக் கொள் .” என்று கூறிவிட்டு , லட்சுமணனைப் பார்த்து , கஜபுஷ்பி மலர்க்கொடியைச் சுக்ரீவன் கழுத்தில் கட்டச் சொல்கின்றார் . பின்னர் மீண்டும் சுக்ரீவன் கிஷ்கிந்தை போய் வாலியைச் சண்டைக்கு இழுக்க , வாலி மிகுந்த கோபத்துடன் கிளம்புகின்றான் . அவன் மனைவியான தாரை தடுக்கின்றாள் . ஒரு முறை அல்ல , பலமுறை தோற்று ஓடிப் போன சுக்ரீவன் , இப்போது உடனே வந்திருக்கின்றான் எனில் , தக்க காரணம் இருக்கவேண்டும் , ஆகவே அவன் தகுந்த துணை இல்லாமல் வந்திருக்க மாட்டான் என நினைக்கின்றேன் . அங்கதன் காட்டுப் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த போது , இக்ஷ்வாகு குலத்தைச் சேர்ந்த இரு அரசகுமாரர்கள் , சுக்ரீவனைத் தங்கள் நண்பனாய் ஏற்றுக் கொண்டதாய்ச் செய்தி கிடைத்ததாம் . அந்த ராமன் ஒரு பெரும் வீரனாம் , அவனை நாம் விரோதித்துக் கொள்ள வேண்டாம் . நீங்கள் சுக்ரீவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டிவிட்டு , அவனுடன் நட்புப் பாராட்டுவதே நல்லது . ராமனும் தங்களுக்கு நண்பன் ஆவான் . என யோசனை சொல்கின்றாள் . ஆனால் வாலி அதைக் கேட்காமல் சண்டைக்கு வருகின்றான் . சுக்ரீவனுடைய கர்வத்தைத் தான் நான் அழிக்கப் பார்க்கிறேன் , அவனை அல்ல எனக் கூறிவிட்டு மீண்டும் சுக்ரீவனுடன் போருக்கு ஆயத்தம் ஆகின்றான் . இரு மேகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு ஏற்படும் இடி முழக்கம் போலவும் , மின்னல்கள் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்வது போலவும் பயங்கர சப்தத்துடனும் , ஆவேசத்துடனும் இருவரும் போரிட்டனர் . இருவரும் சமபலம் கொண்டவர்களே எனினும் , எதிராளியின் பலத்தில் பாதி பலம் பெற்றுவிடும் வாலியின் பலத்துக்கு முன்னர் சுக்ரீவன் கை தாழ்ந்தது . ராமர் சரியான தருணத்துக்குக் காத்திருந்தார் . கொடிய பாம்பை ஒத்த ஒரு அம்பை எடுத்துத் தன் வில்லிலே பொருத்திவிட்டு நாணை ஏற்றி , அம்பை விடுவிக்கும்போது , காட்டுப் பறவைகளும் , மிருகங்களும் பயந்து ஓடினவாம் . அத்தகைய கொடிய சக்தி வாய்ந்த அந்த அம்பு , வாலியை அவன் மார்பிலே தாக்கியது . வாலி தரையில் வீழ்ந்தான் . வலியினால் கதறினான் . இந்திரனால் அளிக்கப் பட்ட தங்கச் சங்கிலி அவன் மார்பை அலங்கரித்துக் கொண்டு அவன் உயிரைக் காத்துக் கொண்டிருந்தது . அம்பு வந்த இடம் நோக்கித் திரும்பிய அவன் ராமனும் , லட்சுமணனும் தன்னை நோக்கி வருவதைக் கண்டான் . ராமனிடம் கடுமையான சொற்களைப் பேசத் தொடங்கினான் . “ தசரதன் மகன் ராமனா நீ ? என்ன காரியம் செய்துவிட்டாய் ? யுத்தகளத்தில் நான் உன்னை எதிர்த்து நிற்காதபோது என்னை நீ கொல்ல முயன்ற காரணத்தால் , உன் குலம் பெருமை அடைந்ததா ? உனக்குப் பெருமையா ? உன்னை அனைவரும் மேன்மையானவன் , கருணை மிக்கவன் , வீரன் , மக்களுக்கு நன்மையே செய்பவன் , எப்போது எதைச் செய்யவேண்டுமோ , அப்போது அதைச் செய்பவன் என்றெல்லாம் கூறுகின்றனரே ? உன்னுடைய குலப்பெருமையை நினைத்தும் , உன்னுடைய மேன்மையான குணத்தில் நம்பிக்கை வைத்தும் , தாரை தடுத்தும் கேளாமல் இந்தப் போர் புரிய வந்தேனே ? வானர இனத்தைச் சேர்ந்த என்னோடு உனக்கு என்ன பகை ? நற்குணங்கள் நிரம்பியதாக நடித்திருக்கின்றாய் நீ . உன் நற்குணங்கள் அனைத்தும் நீ போட்டுக் கொண்ட முகமூடி . பாவம் செய்துவிட்டாயே ? மனம் போன போக்கில் அம்பை விடும் நீயும் ஒரு அரசனா ? அந்தக் குலத்துக்கே தீங்கிழைத்து விட்டாயே ? ஒரு குற்றமும் செய்யாத என் மேல் அம்பை விட்டுக் கொல்ல முயன்ற நீ இப்போது அதற்கு என்ன நியாயம் சொல்லப் போகின்றாய் ?” என்று கேட்டான் வாலி . மேலும் சொல்கின்றான் : தர்மச் சங்கிலியை அறுத்துவிட்டு , நன்னெறிக் கட்டுகளைத் தளர்த்திவிட்டு , நியாயம் என்ற அங்குசத்தையும் அலட்சியம் செய்துவிட்டு , மதம் பிடித்த ஒரு யானை போல் நடந்து கொண்டு விட்ட ராமன் என்பவன் என்னை கொன்றுவிட்டானே ? உனக்கு என்ன வேண்டும் ? உன் மனைவி சீதை தானே ? என்னிடம் சொல்லி இருந்தால் நான் ஒரே நாளில் கொண்டு வந்து சேர்த்திருப்பேனே ? ராவணனைக் கழுத்தில் சுருக்குப் போட்டு இழுத்து வந்திருப்பேனே ? சுக்ரீவன் எப்படியும் எனக்குப் பின்னர் இந்த ராஜ்யத்தை அடைய வேண்டியவனே . ஆனால் அதற்காக அதர்மமாய் நீ என்னை கொன்றது எவ்வகையில் நியாயம் ?” என்று கடுமையாக ராமரைப் பார்த்துக் கேட்கின்றான் வாலி . ராமர் சொல்கின்றார் :” நான் உன்னை ஏன் கொன்றேன் என்பதை நீ ஆச்சாரியர்களாய் அங்கீகரிக்கப் பட்டவர்கள் , தர்மநுட்பம் அறிந்தவர்கள் ஆகியோரைக் கேட்கவேண்டும் . என்னை நீ தூஷிப்பதில் அர்த்தமே இல்லை . இந்த மலைகள் , வனங்கள் , நதிகள் கொண்ட இந்தப் பூமியும் , மனிதர்களும் , மிருகங்கள் , பறவைகள் ஆகிய அனைத்து இனங்களும் இக்ஷ்வாகு குலமாகிய எங்கள் குலத்து மன்னர்களின் அதிகாரத்துக்கு உட்பட்டவை . பரதன் நேர்வழியில் சென்று பூமியை நிர்வகித்து வருகின்றான் . நாங்கள் பரதனின் ஆக்ஞைக்கு உட்பட்டு இந்தக் காட்டு நிர்வாகங்களில் ஈடுபட்டுக் கொண்டு வாழ்ந்து வருகின்றோம் . நீ தர்மம் தவறி இழிசெயல் புரிந்துவிட்டு , என்ன என்று என்னையே கேட்கின்றாயே ? உன் தம்பி மனைவி உனக்கு மருமகள் அல்லவா ? அவளை நீ உன் மனைவியாய்க் கொள்ளலாமா ? ஒரு மருமகள் என்பவள் மகளுக்கும் மேலானவள் அல்லவா ? அப்படிப் பட்ட ஒரு பெண்ணின் மானத்தை நீ அவள் சம்மதம் துளியும் இல்லாமல் , அவள் கணவனிடமிருந்து அவளை அபகரித்துச் சூறையாடலாமா ? மகள் , சகோதரி , சகோதரன் மனைவி ஆகியோரைக் கற்பழிப்பவர்களுக்குத் தண்டனை மரணமே !” என்று சொல்லும் ராமர் மேலும் சொல்லுவார் : சுக்ரீவனுக்கு நான் வாக்களித்து இருக்கின்றேன் அவனைக் காப்பதாய் . அந்த வாக்கை நான் நிறைவேற்ற வேண்டும் . மேலும் குற்றங்கள் செய்தவர்கள் யாராய் இருந்தாலும் , அரசனின் தண்டனையை அனுபவித்துவிட்டால் அந்தப் பாவத்தில் இருந்து நீங்கியவர்கள் ஆவார்கள் . ஆனால் நீயோ , தண்டனையும் அனுபவிக்கவில்லை , மன்னிப்பும் கோரவில்லை . ஆகவே இவ்வகையில் பார்த்தாலும் உன்னைத் தண்டித்தது சரியே ! மேலும் நீயோ ஒரு வானரன் . அரசகுலத்தைச் சேர்ந்த நானோ வேட்டையாடி மிருகங்களைக் கொல்லும் சுபாவம் உள்ளவன் , அந்த வகையில் பார்த்தாலும் மிருக இனத்தைச் சார்ந்த உன்னை நான் கொன்றது சரியே ! ” எனக் கூற , வாலி , சற்றே அமைதி அடைந்து , ராமரை இரு கை கூப்பித் தொழுது ,” நான் உங்களை மேலும் குறை கூறவில்லை , ஆனால் என் மகன் அங்கதன் ஒரு குழந்தை , அப்பாவி , அவனை நீங்கள் பாதுகாக்கவேண்டும் , பரதனிடமும் , லட்சுமணனிடமும் , சத்ருக்கனனிடமும் காட்டும் அன்பை சுக்ரீவனுக்கும் அளித்து , அவனும் என் மகன் அங்கதனை நன்கு பார்த்துக் கொள்ளுமாறும் , செய்யவேண்டும் . என் மனைவியான தாரையை சுக்ரீவன் அவமரியாதையாக நடத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள் .” என வேண்ட , ராமன் அவன் மனதில் என்ன குறை இருந்தாலும் சொல்லுமாறு வேண்டுகின்றார் . ராமரை இகழ்ந்து பேசியதற்குத் தன்னை மன்னிக்குமாறு கூறிய வாலி மூர்ச்சை அடைகின்றான் . வாலி தோற்றுவிட்டதை அறிந்த தாரை அலறிக்கொண்டு ஓடி வருகின்றாள் . ராமர் செய்த இந்தச் செயலுக்காகத் தாரையும் பலவாறு இகழ்ந்து பேசுகின்றாள் . சுக்ரீவனைப்பார்த்து , நீ இனி சந்தோஷமாய் இருக்கலாம் என்று மனம் வெதும்பிச் சொல்லிச் சொல்லி அழுகின்றாள் தாரை . கணவனிடம் உன் மனதுக்குப்பிடிக்காமல் நான் நடந்து கொண்டிருந்தால் என்னை மன்னித்துவிடு என்று கூறிவிட்டுக் கதறி அழ , அனுமன் சமாதானம் செய்கின்றார் தாரையை . ஆனாலும் நிம்மதி அடையாத தாரை , வாலி இருக்கும்போது தனக்குக் கிடைத்த கெளரவம் இப்போது கிடைக்குமா எனச் சொல்லி , இனி அனைத்தும் சுக்ரீவன் வசமே , அவனே முடிவு செய்யட்டும் எனவும் கூறி அழுகின்றாள் . மயக்கத்தில் இருந்து கண்விழித்த வாலி , தன் கழுத்துச் சங்கிலியைக் கழற்றிச் சுக்ரீவனிடம் கொடுத்துவிட்டு , தாரையை வெகு நுட்பமான அறிவு படைத்தவள் என்றும் எல்லாக் காரியங்களையும் எளிதில் புரிந்து கொள்பவள் என்றும் , இனி சுக்ரீவன் அனைத்திலும் அவள் சொன்னபடி கேட்டு நடக்கவேண்டும் எனவும் , கூறிவிட்டு அங்கதனை பெற்ற மகன் போலப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுத் தன் சங்கிலியில் வெற்றி தேவதை குடி இருப்பதாயும் , தான் இறந்த பின்னர் இந்தச் சங்கிலியை அணிந்தால் அந்தச் சக்தி போய்விடும் எனவும் இப்போதே அணிந்து கொள்ளுமாறும் கூறி இந்திரன் அளித்த சங்கிலியை சுக்ரீவனுக்கு அளித்துவிட்டு ஆசிகள் பல கூறிவிட்டு இவ்வுலகில் இருந்து நிரந்தரமாய் விடைபெறுகின்றான் வாலி . வாலி வதம் சரியா , தப்பா , சில கேள்விகளும் , பதில்களும் இந்தப் படம் ராமாயண காலத்தில் ராமர் , லட்சுமணன் , சீதையுடன் இருந்த இடங்களையும் , பின்னர் சீதையைத் தேடி தென்னாடு வந்த வழியையும் குறிக்கின்றது . இனி வாலி வதம் பற்றிய சில மேலதிகத் தகவல்களைப் பார்த்துவிட்டுப் பின்னர் அடுத்தாற்போல் செல்வோம் . வாலியை ராமர் மறைந்திருந்து கொன்றதாய்ச் சொல்லப் படுவது முதன்முதலில் கம்பராமாயணத்திலே தீர்மானிக்கப் பட்டதாகவே நினைக்கின்றேன் . துளசிதாசர் , ராமனை ஒரு கடவுளாகவே சித்திரிக்கின்றபடியால் , ராமன் மறைந்திருந்து வாலியைக் கொன்றதாய் அவர் சித்திரிந்திருந்தாலும் , வாலியோ ராமனை ஒரு அவதாரம் எனவும் , கடவுள் எனவும் உணர்ந்ததாயும் , எத்தனை பிறவி எடுத்தாலும் ராமன் பாதங்களை மறவாத வரம் வேண்டும் என்று கேட்பதாயும் வரும் . ஆனால் கம்பரோ , சுக்ரீவன் இறுதி முறையாக அடையாளம் காணக் கூடிய மாலை அணிந்து போருக்குச் செல்லும்போதே , ராமனும் , சுக்ரீவனும் திட்டம் போட்டுக் கொண்டதாய்க் காட்டுகின்றார் . வாலியோடு சுக்ரீவன் சண்டை போடும்போது ராமன் , மற்றொரு இடத்தில் இருந்து அம்பு தொடுப்பதாய் சுக்ரீவனிடம் சொல்லுவது போல் வருகின்றது . அம்பானது வாலியின் மார்பில் தைத்து , அதில் ராமனின் பெயரைப் பார்த்துவிட்டே வாலி கண்டு பிடிப்பதாயும் வரும் . அதில் ராமனைப் பற்றி வாலி நினைப்பதாய்க் கம்பர் இவ்வாறு கூறுகின்றார் : “ இல்லறம் துறந்த நம்பி எம்மனோர்க்காகத் தங்கள் வில் அறம் துறந்த வீரன் தோன்றலால் வேத நல் நூல் சொல் அறம் துறந்திலாத சூரியன் மரபும் தொல்லை நல் அறம் துறந்தது என்னா நகை வர நாண் உட்கொண்டான் .” மனைவியோடு சந்தோஷமாய் அனுபவிக்க வேண்டிய இல்வாழ்வைத் துறந்து காட்டுக்கு வந்த ஆண்மகன் ஆகியவனும் , தங்கள் குலப் பரம்பரையில் வந்த விற்போர் முறையை , எம் போன்ற வானரங்களைக் கொல்வதற்காகக் கைவிட்ட வீரனும் ஆன இந்த ராமன் தோன்றியதால் , வேதங்களின் அறங்களையும் அவற்றில் சொல்லப் பட்ட தர்மங்களையும் கடைப்பிடிக்கும் அவன் பிறந்த சூரியகுலம் தன் அறத்தை இழந்து பாழ்பட்டது என எண்ணி ஏளனத்துடன் வாலி நகைத்தானாம் . பின்னர் வாலி ராமனைக் கேட்கும் கேள்விகளும் அதற்கான வால்மீகியின் பதில்களை ஒட்டிய கம்பரின் பதில்களும் வருகின்றன . ஆனால் மேலே கடைசியில் வாலி ராமனை நீ ஒரு வேடன் போல் என்னை மறைந்திருந்து ஏன் கொன்றாய் எனக் கேட்டதாயும் , அதற்கு லட்சுமணன் , சொல்வதாய் இவ்வாறு கம்பர் கூறுகின்றார் : “ உன் தம்பியாகிய சுக்ரீவன் என் அண்ணனை முதலில் சரணடைந்து “ அபயம் ” எனக் கேட்டுவிட்டான் . நீயும் சரியான விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என உறுதியாய்த் தெரிந்ததால் அண்ணனும் அபயம் அளித்தார் . இப்போது சண்டையில் ஒரு வேளை உன்னைக் காத்துக்கொள்ள நீயும் அபயம் என வந்துவிட்டால் என்ன செய்வது என்பதாலேயே மறைந்திருந்து கொல்ல நேரிட்டது .” என்று லட்சுமணன் கூறுவதாய்க் கம்பர் சொல்கின்றார் . வாதம் செய்வதற்கும் , செய்ததை நியாயப் படுத்துவதற்கும் வேண்டுமானால் மேற்கண்ட மேற்கோளை எடுத்துக் கொள்ளலாம் . ஆனால் உண்மையில் நடந்ததை , நடந்தபடியே வால்மீகி விவரிக்கின்றாரே ? இது இப்படியே இருக்கட்டும் . ஆனால் முதல் தோன்றியது வால்மீகியின் ராமாயணமே என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை . அதில் இவ்வாறு சொல்லப் படவில்லை . ஏன் எனில் நடந்ததை நடந்தபடிக்கே எழுதி இருக்கின்றார் வால்மீகி . ஒரு அரசன் கடைப்பிடிக்கவேண்டிய தர்மத்தில் இருந்து ராமன் சற்றும் பிறழ்ந்ததாய் எங்கும் சொல்லவில்லை . சுக்ரீவன் , அனுமன் , ராமன் , லட்சுமணன் உட்பட அனைவரும் கூட்டமாகவே கிஷ்கிந்தைக்குச் சென்று , காட்டில் மறைந்து நிற்கின்றனர் . பின்னர் வாலிக்கு சுக்ரீவன் அறைகூவல் விடுத்துக் கூப்பிட்டுச் சண்டை நடக்கின்றது . சண்டையின் போது ராமர் மறைந்து இருந்ததாய் வால்மீகி எங்கும் குறிப்பிடவில்லை . சண்டையின்போது சுக்ரீவன் தனக்கு உதவிக்கு யாரும் வருகின்றார்களா எனச் சுற்றும் முற்றும் பார்த்ததாயும் அதை ராமன் பார்த்ததாயும் குறிப்பிடுகின்றார் . இதோ கீழே : // Raghava has then seen the lord of monkeys Sugreeva who is repeatedly eyeing all sides for help and who is even deteriorating in his enterprise. [4-16-31]// அதன் பின்னரே ராமன் சுக்ரீவன் உதவிக்குப் போகின்றார் . ராமர் நேரிடையாக வாலியுடன் சண்டை போட்டதாய் எங்கும் சொல்லவில்லைதான் . அதே சமயம் மறைந்திருந்து சண்டை போட்டதாயும் எங்கும் சொல்லவில்லையே ? //”When you have not appeared before me when I confronted Sugreeva my concept was, ‘it will be inapt of Rama to hurt me while I am combating with another combatant, besides, when I will be unvigilant in that fight…’ [4-17-21]// நான் உன்னுடன் சண்டை போடாமல் , உன்னைக் கவனிக்கக் கூட இல்லாமல் சுக்ரீவனுடன் போரிடுவதிலேயே கவனமாய் இருந்தபோது என்னை நீ வீழ்த்தி விட்டாய் . உன்னுடன் நேருக்கு நேர் மோதாத என்னை நீ எப்படி வீழ்த்தலாம் என்றே வாலி கேட்கின்றான் ராமனை . மேலும் பலவகையிலும் ராமனை இகழ்ந்து வாலி பேசியபின்னரே , ராமர் தனது கடமையையும் , குல தர்மத்தையும் , ஒரு அரசனானவன் , வானரங்களைக் கொல்வது தவறில்லை எனவும் சொல்கின்றார் . அதிலும் தம்பி மனைவியை அவள் இஷ்டம் இல்லாமல் வலுக்கட்டாயமாய் அபகரித்ததே அவனைக் கொல்ல முக்கியக் காரணம் என்றும் சொல்கின்றார் . மேலும் ராமர் வில்லை எடுக்கும்போதும் , அம்பைப் பொருத்தும் போதும் , அம்பை விடுவிக்கும்போதும் ஏற்பட்ட சப்தத்தைக் கம்பரும் விவரித்திருக்கின்றார் . வால்மீகியும் சொல்கின்றார் . பறவைகளும் , மான்களும் , காட்டு மிருகங்களும் சிதறிப் பதறி ஓடி இருக்கும்போது வாலிக்குத் தெரியாமல் ராமன் வாலியைக் கொன்றது எப்படி ? சிந்திப்போம் இனியாவது ! //Then on tautening a venomous serpent like arrow in the bow, Rama started to draw out bowstring, whereby that bow attained a similitude with the Time-disc of the Terminator. [4-16-33] At the blast of bowstring the lordly birds and animals are panicked, like those that will be startled by the approach of ear ending, and they all fled. [4-16-34] The arrow released by Raghava that has the boom of thunderbolt’s thunderclap and the flashes of a lightning fell on the chest of Vali. [4-16-35]// மேலும் சுக்ரீவனோ , மற்ற வானரங்களோ கூட ராமன் மறைந்திருந்து வாலியைக் கொன்றதாய்க் கூறவில்லை . வாலியின் ஆயுதங்கள் ஆன மரங்களையும் , பாறைகளையும் ராமன் பொடிப்பொடியாக்கிவிட்டதாகவே கூறுகின்றனர் . மேலும் ஒரு மனித தர்மத்திற்கு உட்பட்டே ராமன் நடந்து கொண்டார் எனவும் கொள்ளவேண்டும் . ராமன் வாலியின் எதிரே வந்து சண்டை போட்டிருந்தார் எனில் , ஒன்று வாலி சரணடைந்திருக்கலாம் , அப்போது சுக்ரீவனுக்கு ராமன் கொடுத்த வாக்கைக்காப்பாற்ற முடியாது . கொடுத்த வாக்கைக் காப்பது அரசனுக்கு முக்கியக் கடமை . அதிலும் அபயம் என்று வரும் அரசர்கள் , சிற்றரசர்களுக்கு உதவி செய்வதும் அரச தர்மம் . அல்லது ராமன் நேரில் சண்டைக்கு வருகின்றான் என்ற காரணத்தினால் ஏற்கெனவே ராவணனை வென்றிருக்கும் வாலி , அவனுக்குத் துணைக்கும் போயிருக்கலாம் , அல்லது வாலியினிடம் இருந்த சுக்ரீவன் மனைவி ருமைக்கு ஆபத்து நேரிட்டிருக்கலாம் . இவை அனைத்தையும் யோசித்தே , அரச தர்மம் இது என உணர்ந்து ராமன் செயல்பட்டிருக்கின்றான் என்றே நாம் கொள்ளவேண்டும் . நாம் ராமனை அவதாரமாகவே நினைப்பதால் வரும் தவறான கருத்தே இது . ராமனுக்கு அந்தக் கட்டாயம் ஏதும் இல்லை . அவன் தான் மனிதனா ? அவதாரமா ? என்ற கேள்விகளுக்குள் போகவே இல்லை . அவனுக்குச் சிலமுறை சுட்டிக் காட்டப் பட்டும் அவன் தான் யார் எனத் தெரியாமலேயே சாதாரண மனித தர்மத்திற்கும் , மனித குணங்களுக்கும் உட்பட்டே அநேக காரியங்களைப் புரிந்து வந்திருக்கின்றான் . இன்னும் சொல்லப் போனால் இவை இரண்டுக்கும் நடுவில் இருந்து கொண்டு தன் விதியானது தன்னை எங்கே கொண்டு சேர்க்கப் போகின்றது என்பதைக் கூட அறியாதவனாயும் இருக்கின்றான் . அதன் வழியில் அது இழுத்த இழுப்பின் போகவேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாகின்றான் . ஒரு அவதாரம் என்றால் அவனால் முடியாதது என்ன ? சற்றே யோசிக்கலாம் . அப்படி அவனுக்குத் தான் ஒரு அவதாரம் என்பதும் , தன்னால் முடிக்கவேண்டிய காரியம் ராவண வதம் என்றும் , அதை நோக்கியே விதி தன்னை இழுத்துச் செல்கின்றது என்பதும் முன்பே தெரிந்து கொண்டிருந்தானால் , கதை எப்படி இருந்திருக்கும் ? கதையின் போக்கே மாறி இருக்கும் அல்லவா ? இனி மேற்கொண்டு என்ன நடந்தது என்பதை நாளை பார்ப்போம் . 38 கதை, கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 38 வாலி வதம் பற்றி இன்னும் சிலருக்குச் சந்தேகமும் , ராமர் மறைந்திருந்துதான் கொன்றார் என்ற எண்ணமும் இருப்பதாய்த் தெரியவருகின்றது . இது பற்றிய வெவ்வேறு கருத்துக்கள் இருந்தாலும் , சுக்ரீவனுடன் வாலி சண்டை போட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ராமர் மறைந்து நின்றார் எனச் சொல்லவில்லை . வாலி வீழ்ந்ததைத் தாரையிடம் சென்று தெரிவிக்கும் வாலியினுடைய வானர வீரர்களும் , ராமர் வாலியின் அனைத்து ஆயுதங்களையும் பொடிப் பொடியாக்கினார் என்றே சொல்லுகின்றனர் . நாரதர் வால்மீகிக்கு ராமாயணம் பற்றிய விபரங்களைக் கூறியதாக ஆரம்பத்திலேயே பார்த்தோம் . நாரதர் சுக்ரீவனின் வேண்டுகோளின்படியே ராமன் வாலியைக் கொன்றதாய்க் கூறி இருக்கின்றார் . அதை ஒட்டியே நடந்த சம்பவங்களையும் , நடக்கும் சம்பவங்களையும் , நடக்கப் போகின்றவங்களையும் காணும் வல்லமை பெற்ற வால்மீகியும் எழுதி உள்ளார் . வாலி வீழ்ந்தான் எனக் கேட்ட தாரை வந்து கண்ணீர் விட்டு அழுது , ராமனைத் தூற்றியதைப் போன அத்தியாயத்தில் பார்த்தோம் . பின்னர் வாலியின் உயிரும் பிரிகின்றது . என்னதான் பகைவன் ஆனாலும் அண்ணன் பாசம் மேலோங்க , சுக்ரீவனும் வாலி வீழ்ந்ததில் இருந்தே , தன் தவற்றை நினைத்து நொந்து கொண்டிருந்தான் . வாலி இறந்ததும் , ராமனின் ஆணைப்படி ஒரு பல்லக்கில் வாலியின் உடலை ஏற்றிச் சிதைக்குக்கொண்டு சென்று , அவன் மகன் ஆகிய அங்கதனை விட்டு முறைப்படி ஈமச்சடங்குகள் செய்ய வைக்கின்றான் . பின்னர் ராமரைக் கிஷ்கிந்தைக்குச் சென்று சுக்ரீவனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைக்குமாறு அனுமன் வேண்ட , ராமன் அதை மறுக்கின்றார் . தகப்பன் கட்டளையை ஏற்றுத் தான் வனவாசம் வந்திருக்கும் வேளையில் நகருக்குள் நுழைவதோ , இம்மாதிரியான கொண்டாட்டங்களில் பங்கேற்பதோ , ஏற்றுக் கொண்ட பிரதிக்ஞைக்கு மாறானது என்று சொல்லி மறுக்கின்றார் . வானர வீரர்களுடனும் , அனுமனுடனும் , சுக்ரீவன் கிஷ்கிந்தைக்குச் சென்று முடிசூட்டிக் கொள்ளட்டும் என்று சொல்லி விட்டு , மழைக்காலம் வந்துவிட்டபடியால் , தாம் லட்சுமணனுடன் இந்தக் காட்டிலேயே ஒரு குகையில் தங்குவதாயும் , மழைக்காலம் முடிந்த பின்னர் மேற்கொண்டு என்ன செய்யலாம் என ஆலோசிக்கலாம் எனவும் சொல்லி அவர்களை அனுப்புகின்றார் . அதன்படிக்குக் கிஷ்கிந்தை சென்ற சுக்ரீவன் முடிசூட்டிக் கொண்டு தன் மனைவியான ருமையோடு கூடி ஆட்சி , அரச போகத்தை அனுபவிக்கத் தொடங்குகின்றான் . இங்கே காட்டில் ஒரு குகையைத் தேர்ந்தெடுத்து அதில் தங்கும் ராமருக்குச் சீதையின் நினைவுகள் வந்து துன்புறுத்துகின்றன . மேலும் சுக்ரீவன் சொன்ன வாக்கைக் காப்பாற்றுவானா என்ற எண்ணமும் வந்து அலை மோதுகின்றது . லட்சுமணன் ஆறுதல் வார்த்தைகள் சொல்லி சுக்ரீவனைத் தாராளமாய் நம்பலாம் எனக் கூற ராமர் கூறுகின்றார் : “ நான் என் மனைவியைப் பிரிந்து இருக்கின்றேன் . ஆனால் சுக்ரீவனோ வெகுநாட்கள் கழித்து மனைவியோடு சேர்ந்திருக்கின்றான் . இப்போது நாம் அவனைத் தொந்தரவு செய்வதும் நியாயமில்லை . இந்த மழைக்காலம் முடிந்ததும் அவனே இறங்கி வந்து நமக்கு உதவி செய்வான் என்று நம்புகிறேன் .” என்று தன் மனதையும் தானே சமாதானம் செய்து கொண்டார் . மழைக்காலமும் முடிந்தது . கிஷ்கிந்தையில் போகத்தில் மூழ்கி இருந்த சுக்ரீவனைக் கண்ட அனுமன் , அவனுக்குச் செய்ய வேண்டிய கடமை இருப்பதை நினைவூட்டுகின்றார் . ராமர் திரும்ப வந்து கேட்கும்வரை காத்திருக்கக் கூடாது எனவும் , சீதையைத் தேட ஏற்பாடுகள் செய்யுமாறும் அறிவுறுத்துகின்றார் . அதை ஒப்புக் கொண்ட சுக்ரீவனும் தன் தளபதியான நீலனை அழைத்துப் படைகளை ஒருங்கே கொண்டு வந்து சேர்க்குமாறு கட்டளை இடுகின்றான் . அன்றிலிருந்து பதினைந்து இரவுகள் செல்வதற்குள் அனைத்து வானர வீரர்களும் அங்கே வந்து சேர்ந்திருக்கவேண்டும் எனவும் ஆணை இடுகின்றான் . அதற்குள் இங்கே குகையில் வசிக்கும் ராமருக்குப்பொறுமை எல்லைமீறி விட்டது . மழைக்காலம் முடிந்தும் சுக்ரீவன் இன்னும் தன்னை வந்து காணவும் இல்லை , எதுவும் ஏற்பாடுகள் செய்தானா எனவும் புரியவில்லையே எனத் தவித்தார் . கோபத்தில் லட்சுமணனிடம் சொல்கின்றார் , “ வாலிக்குச் செய்ததை சுக்ரீவனுக்குச் செய்துவிடுவேனோ என அஞ்சுகின்றேன் . லட்சுமணா , நீ உடனெ சென்று அவனுக்கு அனைத்தையும் எடுத்துச் சொல் , ஆனால் கோபம் கொள்ளாமல் சாந்தமாகவே சொல்லுவாய் !” என்று கேட்டுக் கொள்கின்றார் . லட்சுமணன் அப்படியும் தாளாத கோபத்துடன் கிளம்பினான் . கிஷ்கிந்தையை அடைந்தான் . அவன் கோபத்துடன் வருவதைப் பார்த்த வானர வீரர்கள் அஞ்சி ஒளிந்து கொண்டனராம் . இன்னும் சிலர் சுக்ரீவனிடம் போய்ச் சொன்னார்கள் . ஆனால் அதுசமயம் தாரையுடன் கூடி மகிழ்ந்துகொண்டிருந்த சுக்ரீவன் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை . ஆகவே அவன் மந்திரிமார் கூடி ஆலோசித்து , ஒரு பெருங்கூட்டமாய்ச் சென்று லட்சுமணனை வரவேற்கச் சென்றனர் . வாலியின் மைந்தனான அங்கதன் கோட்டையின் வாயிலைக் காத்து நின்றான் . அவனிடம் லட்சுமணன் சுக்ரீவனிடம் சென்று தான் வந்திருப்பதைச் சொல்லுமாறு கூற அவனும் அவ்வாறே சென்று சொல்கின்றான் . வேறு இருவரும் சென்று சொல்கின்றனர் . ஒருமாதிரித் தன்னுணர்வு வந்த சுக்ரீவனுக்குப் பயம் மேலிடுகின்றது . பின்னர் அங்கதனை அனுப்பிச் சகல மரியாதைகளுடனும் , லட்சுமணனை அழைத்துவரச் சொல்ல அவனும் அவ்வாறே சென்று அழைத்து வருகின்றான் . நகரின் கோலகலங்களாலும் , வானரப் பெண்கள் எழுப்பிய சப்தங்களாலும் கோபம் கொண்ட லட்சுமணன் வில்லின் நாணோசையை எழுப்ப கிஷ்கிந்தையே அதிர்ந்தது . சுக்ரீவன் இன்னும் பயம் கொண்டு தாரையைப் பார்த்து இப்போது என்ன செய்வது ? நான் எந்தத் தவறும் செய்யாமல் இருக்கும்போதே லட்சுமணன் இவ்வளவு கோபத்துடன் வந்திருக்கின்றானே எனச் சொல்லித் தாரையை முதலில் சென்று லட்சுமணனைப் பார்த்துக்கோபத்தைத் தணிக்கச் சொல்கின்றான் . தாரை மிக புத்திசாலியும் , எந்த சமயத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது அறிந்தவளாயும் இருப்பதாலேயே அவளைப் போகச் சொல்கின்றான் . தாரையோ எனில் அந்தச் சமயம் அவளும் குடிமயக்கத்திலேயே இருந்தாள் . கண்கள் செருகி , ஆடை விலகி , ஆபரணங்கள் நழுவிய கோலத்தில் அவளைக் கண்ட லட்சுமணன் குனிந்த தலை நிமிரவில்லை . அவள் லட்சுமணனுடைய கோபத்தின் காரணம் கேட்க சுக்ரீவன் ஆட்சி சுகத்தில் தங்கள் வேலையை மறந்துவிட்டதாய்க் கூறி அவனைத் தூற்றுகின்றான் லட்சுமணன் . அதி புத்திசாலி ஆன உன்னையும் இப்போது அவன் மணந்த பின்னரும் இவ்வாறு அவன் நட்புக்குத் துரோகம் இழைக்கலாமா எனக் கேட்கின்றான் . தாரை அவனிடம் சொல்கின்றாள் : “ வீரரே , அவ்வாறில்லை . ஏற்கெனவே சுக்ரீவன் வீரர்களை நாலாபுறத்திலும் அனுப்பி இங்கே திரட்டிக் கொண்டிருக்கின்றார் . பல மலைப் பிரதேசங்களைச் சேர்ந்த நினைத்தபோது நினைத்த உருவம் எடுக்கும் வல்லமை படைத்த பல வானர வீரர்கள் இங்கே வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றனர் . இப்போது நீர் உள்ளே வந்து எம் அரசனை கண்டு பேசுவீராக !” என அழைக்க உள்ளே சென்ற லட்சுமணன் , குடிபோதையில் மனைவிமார்கள் புடைசூழ இருந்த சுக்ரீவனைக் கண்டு கோபம் அடைந்தான் . சுக்ரீவனோ இருகையும்கூப்பிக் கொண்டு லட்சுமணனைத் தொழுது தலை குனிந்து நின்றான் . 39 கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 39 சுக்ரீவன் கை கூப்பித் தொழுதும் கோபம் அடங்காத லட்சுமணனைத் தாரையே மீண்டும் சமாதானம் செய்கின்றாள் . இந்த அரசும் , சுக்ரீவன் மனைவியான ருமையும் அவனுக்குத் திரும்பக் கிடைத்ததற்கு ராமன் தான் காரணம் என்பதை சுக்ரீவன் மறக்கவில்லை என்றும் , இத்தனை நாட்கள் கஷ்டப் பட்டுவிட்டு இப்போது சுகபோகம் அனுபவிக்கும்போது காலம் சென்றதைச் சற்றே மறந்துவிட்டான் எனவும் , வானரர் படையைத் திரட்டுவதில் சுக்ரீவன் முனைந்திருப்பதாயும் சொல்கின்றாள் . படை வந்து சேர்ந்ததும் உடனேயே சீதையைத் தேட ஆட்கள் அனுப்பப் படுவார்கள் எனவும் சொல்கின்றாள் . பின்னர் சமாதானம் ஆன லட்சுமணனோடு , சுக்ரீவனும் ஏற்கெனவே வந்து சேர்ந்த படை வீரர்களோடு ராமனைக் காணச் சென்றனர் . படைவீரர்களோடு வந்த சுக்ரீவனைப் பார்த்த ராமர் மனம் மகிழ்ந்து சுக்ரீவனைப் பார்த்து ,” உன் உதவியோடு நான் எதிரியை வீழ்த்தி விடுவேன் , சந்தேகம் இல்லை !” என்று கூறுகின்றார் . மேலும் , மேலும் வானரப் படைகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன . சுக்ரீவன் மனைவியான ருமையின் தகப்பன் தாரன் , தாரையின் தகப்பன் சுசேனன் , ஹனுமனின் தந்தை கேசரி , போன்ற பெரும் வீரர்கள் தங்கள் தலைமையில் இருந்த பெரும் படைகளுடன் வந்து சேர்கின்றார்கள் . ராமன் அனைவரையும் பார்த்துப் பேசத் தொடங்குகின்றார் . “ சீதை உயிருடன் இருக்கின்றாளா இல்லையா எனவே தெரியவில்லை . முதலில் அது அறியப் படவேண்டும் , ராவணன் அவளை எங்கே கொண்டு சென்று வைத்திருக்கின்றான் என்பதும் அறியப் படவேண்டும் . இவை தெரிந்ததும் , நாம் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்ற முயற்சியில் இறங்கலாம் .” என்று கூறிவிட்டு , சுக்ரீவனைப் பார்த்து இதற்குத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றார் . சுக்ரீவனும் அது போலவே வினதன் என்பவனை அழைத்து கிழக்குப் பகுதிகளுக்குச் சென்று தேடுமாறும் , எல்லாப் பகுதிகளுக்கும் சென்று தேடிவிட்டு ஒரே மாதத்தில் திரும்ப வந்து தகவல் தெரிவிக்கவில்லை எனில் மரண தண்டனை எனவும் சொல்கின்றான் . பின்னர் அங்கதன் தலைமையில் அனுமன் , நீலன் ஆகியோரைத் தென் பகுதிகளுக்குச் சென்று தேடுமாறு கூறுகின்றான் , அதே நிபந்தனைகளுடன் . வடக்கே செல்ல சதபலியையும் , மேற்கே செல்ல சுஷேணனையும் நியமிக்கின்றான் சுக்ரீவன் . எனினும் அனுமனிடம் மட்டுமே அதிக நம்பிக்கை வைக்கின்றான் சுக்ரீவன் . அனுமனைப் பார்த்து அவன் , “ வாயு புத்திரன் ஆன நீ , ஆகாயம் , நீர் , மலைகள் , பூமி போன்ற அனைத்து இடங்களிலும் சஞ்சாரம் செய்யும் வல்லமை உள்ளவன் . உன் தகப்பன் ஆகிய வாயுவைப் போல் அந்த வேகத்துடன் கூடிய ஆற்றலையும் கொண்டவன் நீ . உன் பலத்துக்கு ஈடு இங்கு யாரும் இல்லை . மன உறுதியிலும் , முன் யோசனையிலும் நீ நிகரற்றவன் . உன் விவேகமும் பெயர் பெற்றது . அரச காரியங்களை நிறைவேற்றும் திறமையும் , சாமர்த்தியமும் கொண்டவன் நீ . உன்னைத் தான் நான் நம்பி உள்ளேன் .” என்று சொல்கின்றான் . அனுமனைக் கண்டதில் இருந்தே ராமன் மனதிலும் அதே எண்ணங்கள் தோன்றிக் கொண்டிருந்தமையால் , அவரும் மிக்க மன நிறைவுடன் தன் கையில் இருந்து தன் பெயர் கொண்ட ஒரு மோதிரத்தைக் கழற்றிக் கொடுக்கின்றார் . “ இந்த மோதிரத்தைப் பார்த்தால் சீதை நீ என்னிடம் இருந்து வந்திருக்கின்றாய் எனப் புரிந்து கொள்வாள் . சுக்ரீவன் வார்த்தைகள் எனக்கு மிக்க நம்பிக்கை அளிக்கின்றது . வீரனே , வாயு புத்திரனே , நீ உன் வீரத்தினாலும் , திறமையினாலும் எடுத்த காரியத்தை வெற்றிகரமாய் முடிப்பாய் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டு விட்டது .” என்று கூறுகின்றார் . மிகுந்த பணிவோடு அந்த மோதிரத்தை ராமனிடம் இருந்து பெற்றுக் கொண்ட அனுமன் , அங்கதனோடு தென் திசை நோக்கிக் கிளம்புகின்றார் . சுக்ரீவன் ஒவ்வொரு திசைக்கு ஒவ்வொருவர் தலைமையில் வானரப் படை வீரர்களை அனுப்பும்போது அந்தத் தளபதிகளிடம் அந்த அந்தத் திசைகளின் ஆறுகள் , மலைகள் , வனங்கள் , சீதோஷ்ணங்கள் , குடிமக்கள் ஆகியவற்றைப் பற்றி விவரமாய் எடுத்துக் கூறியதைக் கண்ட ராமர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார் . சுக்ரீவனிடம் இது பற்றிக் கேட்டபோது வாலியினால் துரத்தப் பட்ட தான் எங்கும் தங்க முடியாமல் உலகம் பூராவும் சுற்ற நேர்ந்தது பற்றியும் ஒவ்வொரு மூலைக்கும் சென்ற போது இந்த விவரங்கள் அனைத்தும் தெரிய வந்ததாயும் , கடைசியில் ரிச்யமூக மலைக்கு வாலி வந்தால் அவன் தலை சுக்கு நூறாய் வெடிக்கும் எனத் தெரிந்து கொண்டு அங்கே வந்து தங்கியதாயும் எடுத்துக் கூறுகின்றான் . பெருத்த ஆரவாரத்தோடு படை கிளம்புகின்றது . நாலா திக்குகளிலும் வானரங்கள் செல்கின்றனர் . வானரங்கள் சென்று சீதையைத் தேடுமுன்னர் , சுக்ரீவன் வர்ணித்த நான்கு திசைகளிலும் நமக்கு முக்கியமான தென்பகுதியின் வர்ணனையைப் பார்ப்போம் . அங்கதன் தலைமையில் சென்ற தென்பகுதி வீரர்களில் , நீலன் , அனுமன் போன்றவர் இருந்தனர் என்பதை ஏற்கெனவே கண்டோம் . தென்பகுதியில் இருப்பவையாக சுக்ரீவன் சொன்னது : விந்திய பர்வத மலைச்சாரல் , நர்மதா நதி தீரம் , கோதாவரி நதி தீரம் , நகரங்களும் , நாடுகளும் , “ மேகலா , அவந்தி , உத்கலம் , தர்சனா , விதர்ப்பம் , அஸ்வந்தி , ரிசிகா , பங்கம் , கலிங்கம் , ஆந்திரம் , கெளசிகம் , தண்டகாரண்யக் காடுகள் , புந்திரம் , சோழ , சேர நாடுகள் , அயோமுகா மலை , காவேரி நதி தீரம் , அகத்தியரின் இருப்பிடம் ஆன பொதிகை , பாண்டிய சாம்ராஜ்யம் , தாமிரபரணி நதி தீரம் , ஆகியன . இந்தப் பாண்டிய சாம்ராஜ்யம் என்பது சோழ , சேர நாடுகளைத் தாண்டி பெரிய அளவில் இருந்ததாயும் முத்துக்கள் அப்போதும் பெருமை பெற்றிருந்தன எனவும் தெரிய வருகின்றது . அடுத்து வினதன் சென்ற கிழக்குப் பகுதியின் வர்ணனை : மலைகள் , காடுகள் , பாகீரதி , சரயூ , கெளசிகீ , யமுனை , சரஸ்வதி , சிந்து , சோன் , மாஹி , காலமாஹி . அரசு புரிந்த நாடுகள் : ப்ரம்ம மாலா , மாலவம் , கோசலம் , காசி , மகதம் , புந்தரம் , அங்கம் , பட்டு உற்பத்தி ஆகும் இடம் எனவும் கூறுகின்றது . வெள்ளிச் சுரங்கம் இருந்ததாயும் கூறுகின்றது . மந்தரமலையில் இவை கிடைத்ததாய்ச் சொல்லும் வால்மீகியில் மேலும் செங்கடல் பற்றியும் சொல்லப் படுகின்றது . வெண்மையான பாற்கடல் இருந்ததாயும் சொல்கின்றது . மேற்கே சென்ற சுஷேணன் செளராஷ்டிரம் , பாலிகா , சுரா , பீமா , மலை சூழ்ந்த பகுதிகள் , கடல் சூழ்ந்த பகுதிகள் , மேற்குக் கடல் பகுதிகளும் , பாலைவனங்களும் அங்கே கிடைக்கும் தேங்காய் , பேரீச்சை போன்ற பழ வகைகள் பற்றியும் மரீசிப் பட்டினம் பற்றியும் சிந்து நதி அங்கே தான் கடலில் கலந்ததாயும் சொல்கின்றது . வடக்கே சென்ற சதமாலி இமயமலைத் தொடர்களையும் , அங்கே வசிக்கும் மிலேச்சர்கள் என்பவர்கள் பற்றியும் கூறுவதோடு மஞ்சள் நிறம் உள்ள சீனர்களையும் சொல்லி , அங்கேயும் தேடச் சொல்கின்றான் சுக்ரீவன் . கைலை மலை பற்றியும் அது செல்லும் வழி பற்றிய விபரங்களும் , ( ராமாயண காலம் போல் தான் இப்போவும் கைலை செல்லும் வழி உள்ளது ), நிலம் வளமற்றுப்பாசனத்துக்கு லாயக்கில்லாமல் பல மலைகள் தரிசாய்க் கிடப்பதையும் , மனிதர் அங்கே அதிகம் வசிப்பதில்லை எனவும் கூறுகின்றது . 40 கதை, கதையாம், காரணமாம் ராமாயணம் -பகுதி 40 ராமன் அளித்த கணையாழியைப் பெற்றுக் கொண்ட அனுமன் , அங்கதன் , மற்ற வானர வீரர்களுடனேயே தென் திசை நோக்கிப் பயணம் ஆனான் . சுக்ரீவனால் வடக்கு , மேற்கு , கிழக்குத் திசைக்கு அனுப்பப் பட்டவர்கள் ஒவ்வொருவராய்த் திரும்பி வர ஆரம்பித்தனர் . எல்லாரும் சுக்ரீவனால் சொல்லப் பட்ட அனைத்து இடங்களிலும் அலைந்து திரிந்த போதிலும் சீதையைக் கண்டு பிடிக்க முடியாதவர்களாய் ஏமாற்றத்துடன் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டவராய்த் திரும்பி வர ஆரம்பித்தனர் . தென் திசைக்குச் சென்ற அனுமன் , ஜாம்பவான் , அங்கதன் போன்றோர் திரும்பி வராததால் ஒருவேளை அவர்கள் மூலமாய் நல்ல செய்தி கிட்டலாம் என்ற நம்பிக்கையும் இருந்தது . அனுமனோடு சேர்ந்து தென் திசையில் தேடுதல்களை நடத்தியவர்களும் வெற்றி காணமுடியாமல் மனச் சோர்வை அடைந்தனர் . அப்போது மிக்க மனச் சோர்வு அடைந்த அவர்கள் தலைவன் ஆன அங்கதன் அனைவரையும் கூப்பிட்டு , வயதில் மூத்த வானரங்களுக்குத் தக்க மரியாதை செலுத்திவிட்டுப் பின்னர் சொல்லுவான் :” ஒரு மாதம் ஆகியும் நம்மால் இன்னும் சீதையைக் கண்டு பிடிக்க முடியவில்லை . நாம் சுக்ரீவனிடம் இதை எப்படிச் சொல்லுவது ? இரும்புக்கரம் கொண்டு நிர்வாகம் செய்து வரும் நம் மன்னர் இதை எப்படி ஒத்துக் கொள்ளுவார் ? நம்மை எல்லாம் கடும் தண்டனைக்கு உள்ளாக்குவார் என்பதில் சந்தேகமே இல்லை . சுக்ரீவனிடம் நம் தோல்வியை ஒத்துக் கொண்டு மரணதண்டனை பெறுவதை விட நாம் இங்கேயே உணவு கொள்ளாமல் வடக்கிருந்து உயிர் விட்டு விடலாம் .” என ரொம்பவே மனம் சோர்வடைந்து பேசினான் அவன் சொன்னதைக் கேட்ட மற்ற வானரங்களும் அதில் உள்ள உண்மையை உணர்ந்து கொண்டு அதை ஏற்றனர் . தவறு செய்தவர்கள் நாம் , தலைவன் முன்னிலையில் சென்றால் கட்டாயம் தண்டனை அடைவோம் . அவ்வாறு தண்டனை அடைந்து நாம் உயிர் விடுவதை விட இங்கிருந்தே உயிரை விட்டு விடலாம் . என்று அனைவரும் மனம் சமாதானம் அடைந்து உயிர் விடத் தயார் ஆனார்கள் . அனுமன் அனைத்தையும் பார்த்துக் கொண்டும் , கேட்டுக் கொண்டும் இருந்தார் . வாலி மைந்தன் ஆகிய திறமை மிக்க அங்கதன் , சிற்றப்பன் மீது கொண்ட அச்சத்தாலும் , வெறுப்பாலும் இவ்வாறு பேசுகின்றான் . சுக்ரீவன் சொன்னதை அவன் செய்யும் வண்ணம் அவனை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராய்ப் பேசத் தொடங்கினார் .” அங்கதா , உண்மையில் நீ சுக்ரீவனை விடச் சக்தி உள்ளவன் . அண்ணன் அனுமதித்ததாலும் , வயதில் மூத்தவன் என்பதாலும் சுக்ரீவன் ஆட்சி புரிகின்ற இந்தக் கிஷ்கிந்தைக்கு நீ நாளைக்கு அரசனாகப் போகின்றவன் . இப்போது உன்னை ஆதரிக்கும் இந்த வானரர்கள் தொடர்ந்து ஆதரிப்பார்கள் என்பது என்ன நிச்சயம் ? அனைவருக்கும் அவர்கள் மனைவி , மக்கள் நினைவுக்கு வந்தால் உன் பக்கம் திரும்பக் கூட மாட்டார்கள் . ஆகவே நாம் கிஷ்கிந்தை திரும்பி நடந்தது , நடந்தபடிக் கூறுவோம் !” என்று சொல்கின்றார் . எனினும் சுக்ரீவனிடம் அங்கதனுக்கு உள்ளூற உள்ள வெறுப்பும் , பயமும் போகாததாலும் , அரசனாகவேண்டும் என்பதற்காகவே தன் தகப்பனைக் கொல்ல ஏற்பாடு செய்தான் என்ற எண்ணம் முழுமையாக அவனை விட்டுப் பிரியாததாலும் அங்கதன் மற்ற வானரவீரர்களை அனுமனோடு போகச் சொல்லிவிட்டுத் தான் மட்டும் அங்கேயே உயிர் துறக்கப் போவதாய்ச் சொல்கின்றான் . அங்கதனின் முடிவைக் கேட்ட விசுவாசம் மிக்க வானர வீரர்கள் வாலி மைந்தன் ஆன அவனைத் தாங்கள் தனியே விடமாட்டோம் எனச் சொல்லிவிட்டு அவர்களும் உயிர் விடத் தீர்மானித்தனர் . அப்போது தங்களுக்குள்ளேயே ராமனின் சரிதத்தைப் பற்றியும் , தற்சமயம் சீதை ராவணன் வசம் இருப்பதையும் , இருக்குமிடம் தெரியாமல் தாங்கள் தவிப்பது பற்றியும் பேசிக் கொண்டனர் . அது சமயம் அங்கே ஒரு மலைக்குகையில் வசித்து வந்த ஒரு வயதான கழுகு இவர்கள் பேச்சைக் கேட்டுவிட்டு , உரத்த குரலில் , “ யார் அது ? ஜடாயு என என் தம்பியைப் பற்றிப் பேசுவது ?” என்று கேட்க வானரர்கள் அனைவரும் அங்கே சென்று ஒரு வயதான கழுகு படுத்திருப்பதைக் கண்டனர் . அந்தக் கழுகானது தான் ஜடாயுவின் மூத்த சகோதரன் சம்பாதி என்ற பேர் உள்ளவன் என்று சொல்கின்றது . தானும் , ஜடாயுவும் தங்களில் யார் வல்லமை உள்ளவர்கள் என்றறியும் போட்டியில் சூரியனைச் சுற்றிப் பறக்கும் வேளையில் , ஜடாயு களைத்துப் போய்விடவே , சூரிய கிரணங்களின் கொடுமையில் இருந்து ஜடாயுவைக் காக்க வேண்டித் தன் சிறகால் அவனைத் தான் மூடியதாகவும் , அந்த வெப்பத்தில் தன் சிறகுகளை இழந்ததாயும் , அது முதல் தன்னால் பறக்க முடியவில்லை எனவும் சம்பாதி சொல்கின்றது . தான் அப்படிக் காத்த தன் தம்பியா இறந்துவிட்டான் எனக் கேட்டுவிட்டுத் துக்கத்தில் ஆழ்ந்தது . பின்னர் ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு , ஒரு நாள் தனது மகன் தனக்கு உணவு தேடிப் போயிருக்கும் நேரம் தன் மகன் கண்டதாய் ஒரு நிகழ்ச்சியைச் சொல்கின்றது . ஒளி பொருந்திய ஒரு பெண்மணியை ஒரு ராட்சசன் ஒரு விமானத்தில் ஏற்றிச் சென்றதாயும் அந்தப் பெண்ணின் அபயக் குரல் கேட்டுத் தான் வழி மறித்த போது அவன் வழி விடுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்ளவே எதிர்த்துப் போரிடாமல் வழிவிட்டுவிட்டதாயும் சொன்னான் என் மகன் என்று அந்தச் சம்பாதிக் கழுகு வானர வீரர்களிடம் சொல்லியது . அது அநேகமாய் நீங்கள் சொல்லும் சீதை தேவியாய்த் தான் இருக்கும் என்றும் சொல்லியது . கூனியின் முதுகில் இருந்த உண்டிவில் பற்றிய சந்தேகத்தை எழுப்புகின்றனர் . ஆழ்வார்கள் பாடலில் அது பற்றிய குறிப்புகள் இருப்பதாயும் தெரிவிக்கின்றனர் . ஆனால் வால்மீகியில் அது பற்றி எதுவும் இல்லை . ஆழ்வார்கள் காலம் கம்பருக்கு முன்னால் என்பதால் எனக்கும் கொஞ்சம் சந்தேகம் இருக்கின்றது . கொஞ்சம் ஆராய்ந்து பார்த்துவிட்டுத் தான் சொல்லவேண்டும் . வாலியின் பலத்தில் பாதி எதிராளிக்கு வந்து விடும் என்று சொல்லி இருப்பதும் வால்மீகியில் இல்லை . அதற்கான பதில் கீழே : வாலி அம்மாதிரியான எந்த வரமும் பெற்றிருக்கவில்லை , வால்மீகியின் கூற்றுப்படி ,! இந்திரனால் அளிக்கப் பட்ட சங்கிலி ஒன்றே அவன் கழுத்தை அலங்கரிக்கின்றது . அதுவும் வெற்றித் தேவதை என்றே கொண்டாடப் படுகின்றது . தான் உயிரை விட்டதும் , சங்கிலியைக் கழற்றி சுக்ரீவன் எடுத்துக் கொள்ள நேர்ந்தால் அதன் சக்தி முழுமையும் கிடைக்காது எனத் தன் உயிர் ஊசலாடும்போதே அதைக் கழற்றித் தம்பிக்குக் கொடுக்கின்றான் வாலி . 41 கதை கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 41 சீதை ராவணனால் அபகரிக்கப் பட்டது நிச்சயம் தான் என்பதை உறுதி செய்த சம்பாதி , கடலைத் தாண்டிச் சென்று தான் சீதை இருக்கும் இடத்தை அடையமுடியும் எனவும் கூறுகின்றது . ராவணனைப்பற்றிய மற்ற விபரங்களையும் கூறிய சம்பாதி , அவன் பெரும் வீரன் , குபேரனின் சகோதரன் , இலங்கையின் அதிபன் , அவனுடைய அந்தப்புரத்தில் தான் சீதை கடும் காவலில் வைக்கப் பட்டிருக்கின்றாள் . நீங்கள் , உங்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து , எப்படியாவது முனைந்து கடல் கடந்து சென்று சீதை இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து ராமனிடம் தெரிவியுங்கள் என்றும் யோசனை கூறியது சம்பாதி . மேலும் சம்பாதி கூறியதாவது : “ இது இவ்வாறு நடக்கும் என முன்பே நான் அறிவுறுத்தப் பட்டேன் . நிசாகரர் என்னும் மஹரிஷி என்னிடம் ராமருக்கு உதவக் கூடிய ஒரு முக்கியமான செய்தியைச் சொல்லும் வாய்ப்பு உனக்குக் கிட்டும் . அப்போது உனக்கு இந்தப் பொசுங்கிய இறக்கைகள் மீண்டும் முளைக்கும் என்று கூறினார் . என் பணி இது தான் . நான் செவ்வனே செய்து முடித்து விட்டேன் .” என்று சம்பாதி கூறவும் , அனைவரும் அதிசயிக்கும் வகையில் சம்பாதியின் இறக்கைகள் முளைத்தன . சம்பாதியிடம் இருந்து உத்தரவு பெற்றுக் கொண்டு வானர வீரர்கள் அனைவரும் சமுத்திரக் கரையை அடைந்தனர் . கடலின் தூரத்தையும் , கண்ணுக்கெட்டாத தூரம் பரந்து விரிந்து கிடந்ததையும் கண்ட அவர்கள் மனம் தளர்ந்தனர் . அப்போது அங்கதன் , யார் யாருக்கு எவ்வளவு தூரம் தாண்ட முடியும் என்று சொல்லுங்கள் எனக் கேட்டான் . ஒவ்வொருத்தரும் சொன்ன பதிலில் திருப்தி அடையாத அங்கதன் , கடைசியில் என்னால் கடலைத் தாண்ட முடியும் , சென்று விடுவேன் , ஆனால் திரும்பி எப்படி வருவது ? திரும்ப வர அதே பலம் என்னிடம் இருக்கிறதாய்க் காணவில்லையே ? என்று குழப்பம் அடைந்தான் . அதைக் கேட்ட அங்கிருந்த கரடிகளின் தலைவன் ஆன ஜாம்பவான் , “ அங்கதா , போக மட்டும் அன்றி , திரும்பி வரவும் நீ வல்லமை உள்ளவனே ! ஆனால் எங்கள் தலைவன் நீ . தலைவனை இம்மாதிரியான காரியத்துக்கு அனுப்புதல் முறையன்று . எங்கேயானும் மரத்தின் வேரை வெட்டுவதுண்டோ ? ஆகவே இந்தக் காரியத்துக்குத் தகுதி வாய்ந்த ஒரு நபரை அனுப்பவேண்டும் . அது அதோ அந்த அனுமன் தான் . அவன் தான் தகுதி வாய்ந்தவன் . அவனை அனுப்புவோம் .” என்று கூறுகின்றான் ஜாம்பவான் . ஜாம்பவானையே அனுமனிடம் சென்று பேசுமாறு அங்கதன் சொல்ல அவ்வாறே ஜாம்பவான் அனுமனிடம் சென்று பேசுகின்றான் . “ வாயு குமாரனே , வானர வீரனே , ராம காரியத்திற்கு உன் உதவி தேவை !” என்கின்றான் ஜாம்பவான் . “ என்னால் என்ன செய்ய முடியும் ?” என்று அனுமன் கவலைப்பட , ஜாம்பவான் சொல்லுகின்றான் . “ ஆஞ்சனேயா , கவலைப்படாதே ! இந்தக் காரியத்திற்குத் தக்கவன் நீ ஒருவனே ஆகும் . உன்னால் தான் இந்த வேலை முற்றிலும் வெற்றியில் முடியப் போகின்றது . அப்பா , உன் பலத்தை மறந்து விட்டாயா ? கேள் , நீ சிறு வயதில் மிக்க பலத்துடன் ஏகமாய்க் குறும்புகள் செய்து வந்தாய் . யாராலும் உன்னை அடக்கமுடியவில்லை . குழந்தையாய் இருக்கும்போதே பழம் என நினைத்துக் கொண்டு சூரியனைப் பிடிக்கத் தாவினாய் . அதனால் கோபம் கொண்ட இந்திரன் உன்னைத் தாக்க வந்தபோது உன் அம்சமும் , உனக்கு இந்தப் பலத்தை அருளியவனும் ஆன வாயுதேவன் தன் நடமாட்டத்தைக் குறைத்துக் கொள்ள மக்கள் உலகில் காற்றே இல்லாமல் தவிக்க , பின்னர் அனைவரின் வேண்டுகோளின் பேரில் வாயு திரும்பி வர , உலகில் காற்று நிலவியது . தேவாதி தேவர்கள் அனைவரும் உனக்குப் பல வரங்களை அளித்தனர் .” பிரம்மா உனக்கு எந்த ஆயுதத்தாலும் மரணம் இல்லை எனவும் , நீ விரும்பினால் ஒழிய உனக்கு மரணம் இல்லை எனவும் , அறிவிலும் , வீரத்திலும் , பலத்திலும் , மன உறுதியிலும் , நற்குணத்திலும் , கருணையிலும் , சாமர்த்தியத்திலும் , அச்சமின்மையிலும் உனக்கு நிகரானவன் ஒருத்தனும் இல்லை . உன்னுடைய பலம் வேறு யாருக்கும் இல்லைஎன்றும் சொன்னதோடு இக்குறும்பின் காரணத்தால் உனக்கு இவ்விஷயம் நினைவில் இருக்காது . ஆனால் தக்க சமயம் வருகையில் உனக்கு நினைவூட்டப் படும்போதே உன் பலத்தைப் பற்றி நீ அறிவாய் எனவும் அப்போது உனக்குச் சொல்லப் பட்டது . அப்பனே , அனுமனே , உன் பலம் உனக்குத் தெரியாததா ? நீ ராம காரியத்திற்கென்றே பிறந்தவன் . சக்கரவர்த்தித் திருமகன் ஆன அந்த ராமனின் தூதன் ஆக , வானரங்களில் மேம்பட்டவன் ஆன நீ போய் இந்தக் கடலைத் தாண்டிச் சென்று சீதையைக் கண்டுபிடித்துக் கொண்டு வரவேண்டும் . உன்னால் அது முடியும் . நீ ஒருவனே இதற்குத் தகுந்தவன் .” என்றெல்லாம் சொல்ல , அனுமனும் தன்னுணர்வு பெற்றுத் தன் பலம் தானே உணரப் பெற்றவன் ஆகின்றான் . ஆஞ்சநேயன் விஸ்வரூபம் எடுக்கின்றான் . அனைவர் மனதிலும் உற்சாகம் பொங்கியது . அப்போது அனுமன் , தான் இந்த இடத்தில் இருந்து தாண்டும்போது பூமி தாங்காது எனச் சொல்லி பக்கத்தில் உள்ள மகேந்திர மலைக்குச் சென்றார் . சீதையை எவ்வாறேனும் கண்டு பிடித்து விட்டே வருவேன் என்று அனைவரிடமும் உறுதி கூறிவிட்டுக் காலை ஊன்றினார் . மகேந்திர மலையே கிடுகிடுத்தது . மிருகங்களும் , பறவைகளும் பயந்து ஓட , பாறைகள் அசைந்து , அதனிடுக்கில் இருந்த பூச்சிகளும் , பாம்புகளும் வெளியே வர , பிளந்த பாறைகளில் இருந்து நீர் ஊற்றுக்கள் கிளம்ப , தன்னுடைய காரியமே நினைவாக அனுமன் இலங்கையை மனதில் நினைத்துக் கொண்டு ஒரே தாவு தாவினான் . அடுத்து சகல நன்மைகளும் தரும் சுந்தர காண்டம் ஆரம்பிக்கின்றது . இதைப் படிக்கின்றவர்களுக்கும் , கேட்கின்றவர்களுக்கும் அந்த ஆஞ்சநேயனின் பரிபூரண அருள் கிட்டும் . ஆஞ்சநேயனுக்கு அவன் தாய் அஞ்சனை “ சுந்தரன் ” என்ற பெயரிட்டதாய் ஒரு கூற்று உண்டு . அதன்படி பார்த்தாலும் , சிரஞ்சீவியான அனுமன் உலகிலேயே முதன்முறையாகத் தூதனாய்ச் சென்று வெற்றி அடைந்தது பற்றிக் கூறும் தகவல்கள் அடங்கியது . மேலும் சீதையின் சிறப்புகளைச் சொல்லுவதும் இந்தக் காண்டத்தில் தான் . காணாமல் போயிருந்த சீதையை அனுமன் கண்டெடுத்து ஆனந்திப்பதும் , ராமனிடம் சொல்லுவதும் இதில் தான் . தன்னலமற்ற சேவை செய்தவன் அனுமன் . ராமனிடமிருந்து கணையாழியைச் சீதைக்கு எடுத்துச் சென்று அவள் துக்கத்தைத் தீர்த்த துக்க நிஷ்ட காரகன் அனுமன் . சீதை செளகரியமாய் இருக்கின்றாள் என்ற தகவலை ராமனுக்குக் கொடுத்தவன் அனுமன் . இந்த உலகிலே நாமெல்லாம் கஷ்டங்களைப் பட்டு அனுபவித்துக் கொண்டு , “ இறைவா , காப்பாற்று !” என்று வேண்டிக் கொள்கின்றோம் . அத்தகைய இறைவனுக்கும் , பிராட்டிக்குமே மனிதர்களாய்ப் பிறந்து வந்த கஷ்டகாலத்தின்போது அவர்களை அந்த இக்கட்டில் இருந்து காத்தவன் அனுமன் . இந்த சுந்தரகாண்டப் பாராயணத்தின் மகிமையை உணரத் தான் முடியும் . சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை . சர்வ ரோக நிவாரணியான இந்தச் சுந்தரகாண்டம் , தீராத மனக்கஷ்டங்களைத் தீர்த்து வைப்பதோடு , முக்கியமாய்ப் பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் . இது அனுபவபூர்வமான உண்மை ! இனி வரும் நாட்களில் அனுமனின் வீர , தீர பராக்கிரமத்தைப் பற்றிப் பார்ப்போம் . கம்பன் பஞ்சபூதங்களையும் பயன்படுத்தி அனுமனைப் பாராட்டியதாய்ச் சொல்லப்படும் கவசம் கீழே : பாராயணத்துக்கும் , தனிவழி செல்லுவோர்க்கும் சிறந்த காப்புக் கவசம் ஆன அது : “ அஞ்சிலே ஒன்று பெற்றான் , அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக , ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான் .” ஐந்து முறைகள் ஐந்து என்னும் எண்ணைப் பயன்படுத்திக் கம்பர் பஞ்சபூதங்களான காற்று , ஆகாயம் , நீர் , நிலம் , நெருப்பு போன்றவற்றைப் பயன் படுத்திச் சீதையைக் காத்த ஆஞ்சநேயன் நம்மையும் காப்பான் என்கின்றார் . வாயு ( காற்று ) பகவானின் மகன் ஆன ஆஞ்சநேயன் , கடலை ( நீர் ) த் தாண்டி , ஆகாய மார்க்கமாய்ச் சென்று , பூமி ( மண் ) புத்திரி ஆன சீதையைக் கண்டு பேசி , ராவணனுடைய இலங்கைக்குத் “ தீ “ யை வைக்கின்றார் . அந்த அனுமன் நம்மைக் காப்பான் . 42 கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 42 பிரம்மா , சிவன் , வாயுதேவன் , இந்திரன் போன்றவர்களை மனதில் நினைத்து வணங்கிய அனுமன் தன் பிரயாணத்தை ஆரம்பித்தார் . மலையே குலுங்கும் வண்ணம் கிளம்பிய அனுமன் சமுத்திரத்தைத் தான் தாண்டும் வண்ணம் விசுவரூபம் எடுத்துக்கொண்டு கூடி இருந்த வானர வீரர்களிடம் தான் சீதையை எவ்வாறேனும் கண்டுபிடித்துக் கொண்டு வருவதாயும் இல்லை எனில் ராவணனைச் சங்கிலியால் கட்டி இழுத்து வருவதாயும் கூறிவிட்டுச் சமுத்திரத்தைத் தாண்டுகின்றார் . கடலைத் தாண்டி விண்ணில் பறந்த அனுமனைக் கண்ட தேவாதிதேவர்கள் அனைவரும் ஆனந்தம் அடைந்தனர் . கடல் தாண்டும்போது சமுத்திரராஜன் அனுமனைப் பார்த்துவிட்டு , அவன் இக்ஷ்வாகு குல திலகம் ஆன ராமனின் காரியமாய்ப் போவதை அறிந்து கொண்டு அவனை உபசரித்து அனுப்புவது தன் கடமை என நினைக்கின்றான் . ஆகவே தன்னுள் அடங்கிக் கிடந்த மைந்நாகம் என்னும் மலையை எழுப்பி அனுமனைத் தடுத்துத் தன்னில் சற்று நேரம் தங்கிப் போகச் சொல்லி வேண்டுமாறு சொல்கின்றான் . அப்போது கடல் நடுவே இருந்த மைந்நாக மலை விண்ணளவுக்கு உயர்ந்து நின்று எழும்பியது . இந்த மலை இவ்வாறு தன் வழியில் குறுக்கிட்டுத் தடுப்பதை உணர்ந்த அனுமன் அந்த மலையைப் புரட்டித் தள்ளிவிட்டு அதைவிடவும் உயரே பறக்க ஆரம்பிக்க , மைந்நாகமோ அனுமனைத் தன் சிகரத்தில் சற்றே அனுமன் தங்கிப் போகுமாறு வேண்டியது . மேலும் இது சமுத்திரராஜனின் வேண்டுகோள் எனவும் , இக்ஷ்வாகு குலத்தவரை உபசரிப்பது தன் கடமை என சமுத்திரராஜன் வேண்டியதன் பேரில் தான் கேட்பதாயும் சொன்னது , மலை உருவில் இருந்த மலையரசன் . தான் ராம காரியமாய் வேகமாய்ச் செல்லவேண்டி இருப்பதாய் அனுமன் கூறிவிட்டு அதைத் தாண்டி முன்னே இன்னும் வேகமாய்ப் போனான் . சூரியனே வியக்கும் வண்ணம் வேகமாய்ப் பறந்தானாம் அனுமன் . அந்தச் சூரியனை மறைக்கும் ராகுபோல் அனுமன் வானத்தில் பறக்கும்போது உலகில் மேலெல்லாம் ஒளிபெற்றுக் கீழெல்லாம் இருண்டிருந்தது . விண்ணில் உள்ள தேவர்கள் நாக மாதா ஆன சுரசை என்னும் தூய சிந்தை உடைய பெண்ணை நோக்கி , இந்த அனுமனின் பலத்தை நாம் அறிந்துவர உதவி செய்வாய் என வேண்ட , அவளும் உடனே சுய உருவை விடுத்து ஒரு அரக்கி வடிவம் எடுத்து அனுமன் முன்னே செல்கின்றாள் . பிளவு பட்ட நாக்குடன் கூடியவளாய் அனுமன் முன்னே தோன்றிய சுரசை அனுமனை உண்ணும் ஆசை உள்ளவள் போல் அனுமனைப் பழித்துப் பேசுகின்றாள் . “ ஆணவம் கொண்ட வானரமே , எனக்கு ஏற்ற உணவு நீயே , என்னெதிரே வருபவர்களைத் தடுத்து நிறுத்தி எனக்கு உணவாக்கிக் கொள்வது என் வேலை , பிரமன் எனக்களித்த வரம் .” எனக் கூறுகின்றாள் . “ என் வாய் வழியே புகுந்து உட்செல்லுவதைத் தவிர வேறே வழியில்லை உனக்கு .” என்று கூறுகின்றாள் . அனுமன் அவளிடம் ,” நான் ராமகாரியமாய்ச் செல்கின்றேன் . இப்போது தடை செய்யாதே . பெண்ணாகிய நீ பசித்துன்பத்தால் வருந்துவது கண்டால் மனம் வேதனைப் படுகின்றது . ராமனின் காரியம் முடிந்து நான் திரும்பி வரும் வேளையில் நீ என்னை உண்ணலாம் , அப்போது என் உடம்பைத் தருவேன் .” என்று கூற சுரசை சம்மதிக்கவில்லை . உடனேயே அனுமனைத் தன் வாயினுள்ளே புகச் சொல்கின்றாள் . அனுமன் அவளை எவ்வாறு வெல்லுவது என யோசித்த வண்ணம் , “ உன்னை எவ்வாறேனும் அவமதித்துவிட்டுச் செல்வேன் . உன் வாயினுள் நான் புகுந்து கொள்கின்றேன் . முடிந்தால் நீ என்னை உண்ணலாம் .” என்று சொல்லிவிட்டுச் சட்டெனத் தன்னைச் சுருக்கிக் கொண்டு சுரசையின் வாயினுள் புகுந்துவிட்டு அவள் அதை உணரும்முன்னர் வெளியே வந்துவிட , அனுமனின் வல்லமை உறுதியானதை எண்ணி வானவர் வாழ்த்தினர் , மலர்மாரி தூவினார்கள் . சுரசையும் தன் பழைய உருவை அடைந்து அனுமனின் செயல்களில் இனி வெற்றியே என ஆசிகள் கூறி வாழ்த்தி வழி அனுப்புகின்றாள் . பின்னர் அனுமன் இன்னும் அதிக உயரத்தில் விண்ணில் பறக்கக் கண்ட தேவர்களும் , யக்ஷர்களும் , அந்த மகாவிஷ்ணுவின் வாகனம் ஆன கருடனோ இவ்வாறு வேகமாய்ப் பறக்கின்றார் என வியந்தனர் . அப்போது சமுத்திரத்தில் அனுமனின் நிழல் நீளமாய் விழவே , அந்த நிழலைப் பிடித்து யாரோ இழுக்கவே அவர் வேகம் தடைப்பட்டது . அனுமன் கீழே பார்த்தார் . பெரிய உருவம் படைத்த ஒரு அரக்கி குகை போன்ற தன் வாயைத் திறந்து வைத்துக் கொண்டு இருப்பதையும் அவள் உருவம் வளர்வதையும் கண்டார் அனுமன் . சிம்ஹிகை என்னும் அந்த அரக்கி குகை போன்ற தன் வாயைத் திறந்து வைத்துக்கொண்டு அனுமனை விழுங்க வர , அனுமன் அவள் வாயினுள் புகுந்து , வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்து வெற்றி காண்கின்றார் . அதன் பின்னர் தடையேதும் இல்லாமல் , சமுத்திர ராஜனும் , வாயுவும் துணை செய்யப் பறந்த அனுமன் , கடலின் மறுகரையை அடைந்து திரிகூட மலை மீது நின்று கொண்டு இலங்கையைப் பார்வை இடுகின்றார் . எவ்வளவு பெரிய நகரம் , எத்தனை அழகு பொருந்தியது ? மாட மாளிகைகள் , கூட கோபுரங்கள் , குளங்கள் , ஏரிகள் , நந்தவனங்கள் , பேரழகோடு ஒளிமயமாய்க் காட்சி அளித்தது இலங்கை நகரம் . பாதுகாக்கத் தான் எத்தனை அரக்கர்கள் ? இத்தனை அரக்கர்களின் பாதுகாப்பையும் மீறி என்ன செய்ய முடியும் ? அவ்வளவு எளிதில் இந்நகரைக் கைப்பற்ற முடியுமா ? இப்போது நாம் வந்தாற்போல் கடல் கடந்து இந்நகருக்குள் வர வானரத் தலைவர்கள் ஆன அங்கதன் , அரசன் ஆன சுக்ரீவன் , தளபதியான நீலன் , நான் ஆகிய நால்வரால் மட்டுமே இவ்வாறு வர முடியும் . மற்றப் பெரும்படை எவ்வாறு வரும் ? சீதையை எப்படி மீட்பது ? முதலில் எவ்வாறு காண்பேன் ? எங்கே இருப்பாள் அந்தச் சுந்தரியான சீதை ? இந்த அரக்கர்களுக்குத் தெரியாமல் தான் பார்க்கவேண்டும் . இப்போது பட்டப் பகலாய் இருக்கின்றதே ? இரவு வரட்டும் , பார்க்கலாம் . இவ்விதமெல்லாம் அனுமன் எண்ணினான் . ஆராய்ந்து பார்த்துத் தான் நாம் வந்த காரியம் கெட்டுவிடாமல் வேலையை முடிக்கவேண்டும் என்று எண்ணியவனாய் அனுமன் பகல் போய் இரவுக்குக் காத்திருந்தான் , இரவும் வந்தது . அனுமன் முன் தோன்றினாள் , இலங்கை நகரைக் காத்து வருபவள் ஆன இலங்கிணி , மிக்க கோபத்துடன் . கடாம்பி உ . வே . ரங்காசாரியார் அவர்களின் வால்மீகி ராமாயண மூல மொழிபெயர்ப்புக்கு இணங்க திருத்தப் பட்டது . 43 கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 43 தன் முன்னர் தோன்றிய லங்கிணியைப் பார்த்த அனுமன் இவள் யாரோ என யோசிக்க அந்த லங்கிணியோ அனுமனைப் பார்த்து , “ ஏ , வானரமே , யார் நீ ? ஏன் இங்கே வந்தாய் ?” என வினவுகின்றாள் . லங்கிணியைப் பார்த்த அனுமன் ஏன் என்னை விரட்டுகின்றாய் என வினவிவிட்டு உள்ளே செல்ல யத்தனிக்க , லங்கிணியோ , அனுமனைப் பார்த்துக் கோபமாய்ச் சொல்கின்றாள் ,. “ இந்த லங்காபுரியைக் காவல் காக்கும் லங்கிணி நான் . என்னை மீறி யாரும் நகரின் உள்ளே செல்ல முடியாது . இதன் அதிதேவதை நானே .” என்கின்றாள் . ஏ , குரங்கே உன்னால் என்ன ஆகும் என்று சொல்லிக் கேலியாய்ச் சிரிக்க அனுமன் யோசிக்கின்றார் . தன்னைச் சண்டைக்கு இழுக்கும் இவளை ஜெயிக்காமல் உள்ளே செல்ல முடியாது என நன்குணர்ந்த அனுமன் அவ்வாறே அவளோடு போரிட ஆயத்தம் ஆனார் . அதற்குள் வெறும் குரங்குதானே என நினைத்த லங்கிணி , அனுமனை ஓங்கி அறைய , அந்த அறையின் வேகம் கண்ட அனுமன் அதை விட வேகமாய்ப் பெருங்கோஷத்துடன் தன் கைவிரல்களை மடக்கிக் கொண்டு முட்டியினால் ஒரு குத்துக் குத்தவே அந்த ஒரு குத்துக் கூடத் தாங்க முடியாத லங்கிணி கீழே விழுந்தாள் . உடனேயே தன்னிலை புரிந்து கொண்ட லங்கிணி , அனுமனைப் பார்த்து , “ ஓ , ஓ , வானரமே , இன்றுவரை யாராலும் நெருங்க முடியாத என்னை வீழ்த்திவிட்டாயே ? எனில் அரக்கர்களுக்கு அழிவுகாலம் ஆரம்பம் ஆகிவிட்டதா ? ஓஓஓ , என்ன சொல்வேன் ? இந்நகரைப் பாதுகாக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தபோதே , பிரமன் சொன்னது , எப்போது ஒரு வானரத்தால் நீ வீழ்வாயோ அப்போதே உனக்கும் , அரக்கர் குலத்துக்கும் அழிவு எனப் புரிந்து கொள் என்பதே ! இப்போது நீ என்னை வீழ்த்திவிட்டாய் , இனி அரக்கர் குலத்துக்கே அழிவுதான் என்பதைப் புரிந்து கொண்டேன் . உன் வெற்றி உறுதி செய்யப் பட்டது . நீ நகருக்குள் செல்வாயாக !” என்று கூறி வழி விட்டாள் . நகரினுள் சென்ற அனுமன் அங்கே பல இடங்களில் இருந்தும் வேத கோஷங்கள் , உற்சாகமான ஒலிகள் , மற்றும் பெண்களின் உல்லாசக் குரல்கள் அனைத்தையும் கண்டார் , கேட்டார் , வியந்தார் . மாட , மாளிகைகளையும் , கூட , கோபுரங்களையும் கண்டார் . விசாலமான கடைத் தெருக்களைக் கண்டார் . இவற்றில் சீதை எங்கே ஒளித்து வைக்கப் பட்டிருக்கின்றாளோ என வியந்தார் . ஒவ்வொரு இடமாய் அலசி , ஆராய்ந்து கொண்டு வந்த அனுமன் கடைசியில் ஒரு பெரிய மாளிகையைக் கண்டார் . அந்த மாளிகையின் தோற்றத்தில் இருந்தும் , அதன் பிரம்மாண்டத்தில் இருந்தும் , அதன் காவல் புரிபவர்களின் எண்ணிக்கை , தரம் போன்றவற்றில் இருந்தும் அதுவே ராவணன் மாளிகையாய் இருக்கலாமோ என எண்ணினார் . அந்த மாளிகைக்குள் தன்னைச் சிறு உருவிலே மாற்றிக் கொண்டு சென்றார் . அந்தப்புரம் நிறையப் பெண்கள் இருந்ததைக் கண்டார் . இவர்களில் சீதையும் இருப்பாளோ என்று வியந்தார் . பின்னர் இருக்க முடியாது எனத் தெளிந்தார் . அரண்மனை பூராவும் செல்வம் கொழிப்பதைப் பார்த்த அனுமன் , குபேரனின் மாளிகையோ என்னும் வண்ணம் செழிப்புடன் இருக்கின்றதே , இது நாசம் ஆகிவிடுமே என எண்ணிய வண்ணம் சென்ற போது ஒரு பக்கம் புஷ்பகவிமானத்தையும் கண்டார் . உடனேயே அதில் ஏறிப் பார்த்தார் . அப்போது ராவணனின் மாளிகையின் உட்புறமும் , அந்தப்புரத்திலே பல பெண்கள் உறங்கிக் கொண்டிருப்பதும் கண்டார் . அந்தப் பெண்களில் யாரும் சீதையாக இருக்கலாமோ என எண்ணிக் கொண்டு அந்தப்புரத்துக்குள் சென்று பார்த்தார் . ஒரு விசாலமான அறையில் அமையப் பெற்றிருந்த ஒரு மேடையில் இருந்த ஓர் அழகான ஆசனத்தில் வீரம் செறிந்த ஓர் ஆண்மகன் இருப்பதைக் கண்டார் . அந்த ஆண்மகனின் கம்பீரம் , ஆடை , ஆபரணங்கள் , சந்தனம் , வாசனாதித் திரவியங்கள் பூசி அலங்கரிக்கப் பட்ட உடல் , ஆசனத்தில் அமர்ந்தவாறே உறங்கிக் கொண்டிருந்த அவன் கம்பீரம் இவற்றைப் பார்த்த அனுமன் , இவன் தான் ராவணன் என்பதையும் புரிந்து கொண்டார் . ( அனுமன் பார்க்கும்போது ராவணன் பத்துத் தலையோடு இருக்கவில்லை . வேண்டியபோது அவ்வாறு பத்துத் தலைகளுடன் கூடிய உருவை அவன் எடுத்துக் கொள்ளுவான் .) அந்த ஆடவனின் பக்க்த்திலே விலை உயர்ந்த மற்றொரு கட்டிலிலே பேரழகுப் பெண்ணொருத்தி உறங்கிக் கொண்டிருக்கக் கண்ட அனுமன் , துள்ளிக் குதித்தான் . ஆஹா , இதோ சீதை , எனத் தெளிந்தான் , பின்னர் மனம் கலங்கினான் . ராமனைப் பிரிந்த சீதை , இப்படி எங்கேயாவது இன்னொரு ஆடவன் அருகே அவனுடைய கட்டிலில் படுத்து உறங்குவாளா ? இல்லை , இல்லை இவள் சீதை இல்லை , பின் எங்கே சீதை ? இவள் ஒருவேளை ராவணன் மனைவியோ , ஐயகோ , அப்படி எனில் மாற்றான் மனைவியை இவ்வாறு நான் எங்கனம் பார்ப்பது முறை ? இந்த அந்தப்புரத்து மகளிர் அனைவரும் ராவணன் மனைவியரா ? நான் இவ்வாறு பார்ப்பது முறையே அன்று . எனினும் நான் தீய எண்ணத்தோடு பார்க்கவில்லையே ? சீதையைத் தேடும் முகமாய்த் தானே பார்க்கின்றேன் . இவர்களில் யார் சீதை ? எப்படிக் கண்டு பிடிப்பது ? ஒருவேளை ராமனைப் பிரிந்த சோகம் தாளாமல் இறந்துவிட்டிருந்தால் ? என்ன செய்யலாம் ? பின்னர் ராமனிடம் போய் எவ்வாறு சொல்லுவேன் ? ராமனும் உடனே உயிரை விட்டு விடுவாரே ? பல விபரீதங்கள் எழுமே ? பின்னர் லட்சுமணன் உயிர் வாழ மாட்டான் . பரதன் உயிர் தங்காது . சத்ருக்கனனும் அவர்கள் வழியே போவான் . பேரழிவு ஏற்படுமே ? இந்நிலை ஏற்பட நான் காரணம் என்பதறிந்தால் மன்னன் சுக்ரீவனும் உயிரை விட்டு விடுவானே ? கிஷ்கிந்தை என்ன ஆகும் ? அழிந்து படுமே . அயோத்தியின் புகழ் மங்குமே ? எப்படியாவது சீதையைத் தேடிக் கண்டுபிடித்தே ஆகவேண்டும் . இல்லை எனில் திரும்பக் கூடாது . திரும்பாமல் இங்கேயே துறவியாக வாழ்ந்துவிடலாம் . இல்லை எனில் ஜலசமாதி அடைந்துவிடலாம் . யாருக்கும் தெரியாது . அதனால் பல விளைவுகளையாவது தடுத்துவிடலாமே ?” இவை எல்லாம் அனுமனின் மனதில் தோன்றிய எண்ணங்கள் . பின்னர் மன உறுதியை மீண்டும் பெற்ற அனுமன் உயிர் விடுவதால் பயன் இல்லை , தொடர்ந்து முயன்று தீர்மானித்த காரியத்தில் வெற்றி அடைதலே வாழ்வின் அர்த்தம் எனத் தெளிந்து கொண்டார் . சீதை கிடைக்கவில்லை எனில் ராவணனை நாமே அழித்துவிடலாம் , அந்தப் பரமேசனுக்குப் பலியிடலாம் , என எண்ணிக் கொண்ட அனுமனின் கண்களில் ஒரு பெரிய அசோகவனம் கண்ணில் பட்டது . இங்கே இன்னும் இதுவரை தேடவில்லையே என நினைத்த வண்ணமே , சீதை இங்கே இருக்கவேண்டுமே என்ற எண்ணத்துடனேயே , ராமனை , லட்சுமணனை , சீதையை , ருத்ரனை , எமனை , இந்திரனை , பிரம்மனை , அக்னியை , சந்திரனை , வாயுவை , வருணனை , விஷ்ணுவை என அனைத்துத் தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு அனுமன் அசோக வனத்தினுள்ளே நுழைகின்றார் . 44 கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 44 ராவணனைத் தாம் அழிக்கக் கூடிய வல்லமை இருந்தும் , இது ராமன் செய்ய வேண்டிய ஒன்று எனத் தெளிந்த அனுமன் அசோகவனத்தைக் கண்டதும் இந்த வனத்தில் இதுவரை தேடவில்லை எனக் கண்டு உள்ளே நுழைந்தான் . யார் கண்ணிலும் படாமல் தேட வேண்டிய கட்டாயத்தினால் , தன் உருவத்தை மிக , மிகச் சிறு உருவமாக்கிக் கொண்டிருந்த அனுமன் மரத்திற்கு மரம் தாவிக் கொண்டே அந்த வனம் பூராவும் தேடினார் . ஓரிடத்தில் ஓர் அழகான தாமரைக் குளத்தைப் பார்த்துவிட்டு , ஒருவேளை சீதை இந்த வனத்தில் இருந்தால் இந்தக் குளத்திற்கு வரலாம் என எண்ணியவாறே அந்தக் குளக்கரையில் ஓர் உயர்ந்த மரத்தின் மீது அமர்ந்த வண்ணம் சுற்றுமுற்றும் பார்த்தார் . அப்போது அங்கே பவளத்தினால் ஆன படிகளைக் கொண்டதும் , தங்கத்தினால் உள்ள மேடைகளைக் கொண்டதும் , மிக , மிக உயரமானதுமான ஒரு மண்டபத்தைக் கண்டார் அனுமன் . அந்த மண்டபத்திற்கு அருகே , ஆஹா , என்ன இது ? யாரிவள் ? இத்தனை அதிரூப செளந்தர்யவதியான பெண்ணும் உலகிலே உண்டா ? ஆனால் , என்ன இது ? ராகு பிடித்துக் கொண்ட சந்திரன் போல் அவள் முகம் ஒளியிழந்து காணப்படுகின்றதே ? ஏன் , இவள் ஆடை இத்தனை அழுக்காயிருக்கின்றது ? இது என்ன , இந்தப் பெண்மணியைச் சுற்றி இத்தனை அரக்கிகள் ? ஆனாலும் இவளைச் சுற்றிலும் ஒரு தெய்வீக ஒளி வீசுகின்றாற்போல் இருக்கின்றதே ? இவள் ஆடையின் நிறத்தின் மஞ்சளைப் பார்த்தால் , ரிச்யமூக பர்வதத்தில் சீதை வீசி எறிந்த ஆடையின் நிறத்தை ஒத்திருக்கின்றதே ? இவளின் ஆபரணங்களின் இந்தப் பகுதியும் , சீதை வீசி எறிந்த ஆபரணங்களின் மற்றொரு பகுதியாய்த் தெரிகின்றதே ? இவள் முகத்தில் தெரியும் கரைகாணாச் சோகத்தின் காரணமும் புரிகின்றது . இவள் தான் சீதை . ராமனைப் பிரிந்து இருப்பதால் இவ்வாறு சோகமாய் இருக்கின்றாள் . ஆஹா , ராமனின் சோகத்தின் காரணமும் புரிகின்றது . இத்தகைய சீதையைப் பிரிந்த ராமன் சோகமாய்த் தான் இருக்க முடியும் , எவ்வாறு இன்னமும் உயிர் வைத்திருக்கின்றான் என்பதே பெரும் சாதனை தான் என்று இவ்வாறெல்லாம் ஆஞ்சநேயன் நினைத்தார் . சீதை இத்துணை மேன்மை வாய்ந்தவளாய் இருந்தும் இத்தகைய துன்பத்துக்கு ஆளாகி இருக்கின்றாள் என்றால் விதி வலியது என்ற முடிவில் மாற்றம் ஏதும் இல்லை . எவராலும் விதியை வெல்ல முடியாது என்பதிலும் வேறு கருத்து இல்லை . ராமனை நினைத்துக் கொண்டு அவனுக்காகவே இந்தப் பெண்மணி தன் உயிரை வைத்துக் கொண்டிருக்கின்றாள் , என்றெல்லாம் நினைத்துக் கொண்டு மேலே என்ன செய்யலாம் என்று அனுமன் யோசித்தார் . இரவிலே அதுவும் பாதி ராத்திரியிலே சீதைக்கு முன்னால் எவ்வாறு போய் நிற்பது , என்ன வழி ? என்றெல்லாம் அனுமன் யோசிக்கும்போதே இரவு கடந்து காலையும் வந்தது . அரண்மனையில் அரசன் ஆன ராவணனைத் துயிலெழுப்பும் ஓசையும் , வேத கோஷங்களும் , மந்திர கோஷங்களும் , பூஜை வழிபாடுகளும் கலந்து கேட்க ஆரம்பித்தது . ராவணன் துயிலெழுந்தபோதே சீதையின் நினைவோடே எழுந்தான் . சீதையைச் சந்தித்து அவள் சம்மதம் பெற்றே தீரவேண்டும் என முடிவெடுத்தான் . அரக்கிகள் , மற்ற தன் பரிவாரங்கள் சூழ ராவணன் அசோக வனத்திற்குச் சென்று சீதையைச் சந்திக்க ஆயத்தம் ஆனான் . அனுமன் மரத்தின் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த போதே , ராவணன் அசோக வனத்தினுள் நுழைந்தான் . அவன் தோற்றத்தைக் கண்டு அனுமன் வியந்தான் ராவணன் சீதையைக் கண்டதும் முதலில் மிக மிக அன்பாய்ப் பேசத் தொடங்கினான் . “ என் அன்பே , சீதை , என் மீது அன்பு காட்டு . மாற்றான் மனைவியைக் கவர்வது என் போன்ற அரக்க குலத்துக்கு உகந்த ஒரு செயலே ஆகும் . எனினும் உன் சம்மதம் இல்லாமல் உன்னை நான் தொட மாட்டேன் . ஒற்றை ஆடையில் நீ இவ்வாறு அமர்ந்து தனிமையில் துக்கத்தில் ஆழ்ந்து கிடப்பது ஏற்றதே அல்ல . என்னை ஏற்றுக் கொண்டாயானால் அனைத்து இன்பங்களும் உன் வசமே . ராமனிடமிருந்து நீ வந்துவிட்டாய் பெண்ணே , இனி அதையே நினைந்து , நினைந்து துயரம் கொள்வதில் பயனில்லை . உன்னைப் பார்த்தால் பிரமன் கூட படைப்பை நிறுத்திவிடுவானோ என எண்ணுகின்றேன் . இத்தகைய செளந்தர்யவதியான நீ என் ராணியாகி விட்டால் ? இந்த உலகம் முழுதும் சென்று நான் வென்ற அத்தனை சொத்து , சுகங்களையும் உன் தந்தையான ஜனகனுக்கு உரியதாக்குவேன் . என்னளவு பலம் கொண்டவனோ , எனக்கு நிகரானவனோ இவ்வுலகில் யாருமே இல்லை . எனக்கு நீ கட்டளை இடு , நான் நிறைவேற்றுகின்றேன் . ராமன் உன்னை நினைத்துக் கொண்டிருப்பான் என்பதே நிச்சயம் இல்லை . இங்கு வந்து உன்னை மீட்டுச் செல்வான் எனக் கனவு காணாதே !” என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் காட்டுகின்றான் . சீதை அவன் பேசியதைக் கேட்டுவிட்டு , பின்னர் ஒரு புல்லை எடுத்து அவனுக்கும் , தனக்கும் இடையே போடுகின்றாள் . இதன் தாத்பரியம் ராவணனை அவள் ஒரு புல்லுக்குச் சமம் என மதித்தாள் என்பது மட்டும் இல்லை , தீய எண்ணத்துடன் தன்னிடம் பேசும் ஒரு அந்நிய ஆடவனிடம் நேரிடையாகப் பேச அவள் இஷ்டப் படவில்லை , ஆகையால் தங்களுக்கிடையே ஒரு தடுப்பை உண்டுபண்ணிக் கொண்டே பேசுகின்றாள் என்பதே உண்மையான அர்த்தம் . சீதை சொல்கின்றாள் :” என்னை விட்டுவிடு , என்னை விரும்புவது என்பது உனக்கு அழிவையே தரும் . உன் மனைவிகளோடு கூடி வாழ்வதில் உள்ள சுகத்தை விட இதில் என்ன மேலானதைக் கண்டாய் ? இங்கு உனக்கு நல்வழி புகட்டுபவர்களே இல்லையா ? உன் பொருட்டு இந்த ராஜ்யமே அழிந்துவிடுமே ? உன் சக்தியோ , செல்வமோ என்னைப் பணிய வைக்க முடியாது . ராமனைப் பற்றி நீ அறிய மாட்டாய் . அவர் பலத்தைப் பற்றி எண்ணவில்லை நீ . அத்தகைய ராமனை மணந்த நான் உன்னை மனதாலும் நினைப்பேனா ? ராமனும் , அவர் தம்பி லட்சுமணனும் ஏவப் போகின்ற அம்புகளால் உன் இலங்கையே அழியப் போகின்றது . அவர்கள் இருவரும் இப்போது சும்மா இருப்பதாய் எண்ணாதே . புலிகள் இருவரும் . அந்த இரு புலிகளையும் நாய் போன்ற உன்னால் எப்படி எதிர்க்க முடியும் ?” என்று கோபமாய்ப் பேசவே ராவணன் அமைதி இழந்தான் . “ நான் அமைதியாய்ப் பேசுகின்றேன் என நினைத்துக் கொண்டு நீ என்னை அவமதிக்கின்றாய் . உன் மீதுள்ள அன்பினால் நான் இப்போது கோபத்தை வெளிக்காட்டாமல் இருக்கின்றேன் . உன்னைக் கொல்லாமலும் விடுகின்றேன் . உனக்கு நான் பனிரண்டு மாதங்கள் அவகாசம் அளித்தேன் . ஆனால் இன்னும் நீ பதில் சொல்லவில்லை . பனிரண்டு மாதங்கள் முடியவும் இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன . அதன் பின் நீ எனக்கு உரியவளாய் ஆகிவிட வேண்டும் . இல்லை எனில் , நீ கண்ட துண்டமாய் வெட்டப்பட்டு , சமைக்கப் பட்டு அனைத்து அரக்கர்களுக்கும் உணவாகிவிடுவாய் !” என்று கோபத்துடன் சொல்கின்றான் . மேலும் , மேலும் சீதை மறுத்துப் பேசவே , அவளுக்குக் காவல் இருந்த சில அரக்கிகளைப் பார்த்து ராவணன் , சொல்கின்றான் :” சீதை விரைவில் எனக்கு இணங்க வேண்டும் . நல்ல வார்த்தைகளால் முடியவில்லை எனில் கடுமையான அணுகுமுறைகளால் மாற்றுங்கள் “ என்று சொல்ல அவன் பட்டமகிஷியான மண்டோதரியும் , மற்றொரு மனைவியும் வந்து அவன் கடுமையைத் தணிக்க முயன்றனர் . அவர்கள் பேச்சால் , சற்றே அமைதி அடைந்த ராவணனும் , அரண்மனைக்குப் பூமி அதிர , நடந்து சென்றான் . காவல் இருந்த அரக்கிகள் ஏகஜடை , ஹரிஜடை , விகடை , துர்முகி , போன்றவர்கள் ராவணனின் பெருமைகளை சீதைக்கு எடுத்துக் கூறி அவள் மனத்தை மாற்றும் முயற்சிகளில் இறங்க ஆரம்பித்தனர் . சீதை அவர்கள் பேச்சுக்கு இணங்கவில்லை . “ இந்திரன் மீது சசி கொண்டிருந்த அன்பைப் போலவும் , வசிஷ்டர் மீது அருந்ததி கொண்ட அன்பைப் போலவும் , சந்திரனிடம் ரோகிணி கொண்ட அன்பைப் போலவும் , அகத்தியரிடம் லோபாமுத்திரை கொண்ட அன்பைப் போலவும் , ச்யாவனரிடம் சுகன்யை கொண்ட அன்பைப் போலவும் , , சத்தியவானிடம் சாவித்திரி கொண்ட அன்பைப் போலவும் , நான் ராமனிடம் அன்பு வைத்துள்ளேன் . இந்த அன்பு ஒருக்காலும் மாறாது .” என்று சொன்ன சீதையைப் பலவிதங்களிலும் பயமுறுத்துகின்றனர் அரக்கிகள் . அவளைக் கொன்றுவிடுவோம் எனவும் , அவளை விழுங்கிவிடுவோம் எனவும் பலவிதங்களிலும் தொந்திரவு செய்கின்றனர் . சீதை துயரம் தாளாமல் புலம்புகின்றாள் : “ தந்திரங்கள் பல செய்யவல்ல ராவணன் , ராமனையும் , லட்சுமணனையும் கொன்றுவிட்டானோ ? என்ன பாவம் செய்தேன் நான் இத்தகைய துன்பத்தை அனுபவிக்க ? ஏதோ ஒரு பெரும் குறை அல்லது பாவத்தின் காரணமாகவே இத்தகைய துன்பம் எனக்கு நேர்ந்துவிட்டிருக்கின்றது . இத்தகைய நிலையில் நான் உயிர் விடுவதே சிறந்தது . ராமனும் , லட்சுமணனும் காப்பாற்றவும் வராமல் , இந்த அரக்கிகளின் தொல்லை தாங்க முடியாமல் நான் உயிர்வாழ்வதே வீண் என்ற முடிவுக்கு வந்தாள் சீதை . அப்போது அதுவரை அங்கே உறங்கிக் கொண்டிருந்த திரிஜடை என்னும் அரக்கி விழித்து எழுகின்றாள் . மற்ற அரக்கிகளைப் பார்த்து ,” நமக்கு அழிவுகாலம் வந்துவிட்டது . சீதையின் கணவனுக்கும் , அவன் சிறப்புக்கும் புகழ் சேரப் போகின்றது . அத்தகைய கனவொன்றை நான் கண்டேன் , ஆகவே பெண்களே , உங்கள் தொல்லையை நிறுத்திக் கொள்ளுங்கள் ” என்று சொல்ல , மற்ற அரக்கிகள் திரிஜடையிடம் உன் கனவு என்னவென்று தெளிவாய்ச் சொல் எங்களிடம் என்று கேட்கின்றார்கள் . திரிஜடையும் சொல்கின்றாள் :” பொழுது விடியும் முன் காணும் கனவு பலிக்குமெனச் சொல்வதுண்டு . நான் கண்டது , வெள்ளைக்குதிரைகளால் இழுக்கப்பட்ட தங்கத் தேரில் ராமனும் , லட்சுமணனும் இலங்கைக்கு வந்து , சீதையை மீட்டுச் செல்கின்றனர் . மிகவும் மகிழ்ச்சியோடு புஷ்பக விமானத்தில் அவர்கள் செல்வதைக் கண்டேன் . ஆனால் மாறாக ராவணன் தலை மொட்டை அடிக்கப் பட்டு , எண்ணெய் பூசப் பட்டு புஷ்பகத்தில் இருந்து கீழே தள்ளப் பட்டான் . கறுப்பாடை அணிந்திருந்தான் . தென் திசை நோக்கிச் சென்று கொண்டிருந்தான் ஒரு கழுதை மீது ஏறி , அதே போல் ராவணனின் மகன் , தம்பியான கும்பகர்ணன் ஆகியோரும் அவ்வாறே சென்றனர் . சிவப்பாடை அணிந்த ஒரு பெண்ணால் அவர்கள் அனைவரும் இழுத்துச் செல்லப் பட்டனர் . ராவணன் தம்பி விபீஷணன் மட்டுமே வெண்மை ஆடை தரித்து சந்தனம் பூசப்பட்ட உடலுடன் யானை மீது அமர்ந்திருந்தான் . இந்த லங்காபுரியே மூழ்கிவிடுவது போலவும் , தீப்பற்றி எரிவது போலவும் , மாட , மாளிகைகள் , கூட , கோபுரங்கள் கீழே விழுவது போலவும் கனவு கண்டேன் . சகல லட்சணங்களும் பொருந்திய சீதைக்கு ஒரு துன்பமும் நேரப் போவதில்லை .” என்று கூறவே , சந்தோஷம் கொண்ட சீதை , “ அத்தகைய ஒரு நிலை எனக்கு நேரிட்டால் , நிச்சயமாய் உன்னைப் பாதுகாப்பேன் ,” என்று சொல்கின்றாள் . எனினும் ராவணனின் அச்சுறுத்தல்களும் , மற்ற அரக்கிகளின் தொந்திரவுகளினாலும் மனம் நைந்து போன சீதை தன் தலையில் கட்டி இருந்த ஒரு கயிற்றினால் தான் தூக்குப் போட்டுக் கொள்ளலாமா என யோசிக்கின்றாள் . உடலிலும் இடது கண்கள் , தோள்கள் துடித்து நற்சகுனத்தையும் காட்டவே , சற்றே யோசிக்கின்றாள் . அப்போது எங்கே இருந்தோ தேவகானம் போல் ராம நாமம் கேட்கின்றது . “ ஸ்ரீராம் , ஜெயராம் , ஜெய ஜெய ராம் “ அனுமன் மெல்ல , மெல்ல மெல்லிய குரலில் சொல்லத் தொடங்கினான் , ராமனின் கதையை . 45 கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 45 துயருற்றிருந்த சீதையின் முன்னர் தாம் திடீரெனப் போனால் விளையும் விளைவுகளை எல்லாம் புத்திமான் ஆன அனுமன் நன்கு யோசித்துத் தெளிந்தார் . “ நாமோ ஒரு வானரன் . தற்சமயம் உருவோ சிறியதாய் இருக்கின்றோம் . பேருருவை எடுத்துச் சென்றாலும் சீதை பயப்படுவாள் . அவளுக்குத் தாம் ராமனிடமிருந்துதான் வந்திருக்கின்றோம் எனத் தெளியவும் வேண்டுமே ? ஆகவே , நாம் நடந்த கதையை ஒருவாறு நாம் அறிந்தது , அறிந்தபடி சொன்னோமானால் , முதலில் சீதையின் நம்பிக்கையைப் பெறலாம் . ஆகவே ராமனின் சரித்திரத்தைச் சொல்லலாம் என நினைத்துச் சொல்ல ஆரம்பிக்கின்றார் , மிருதுவான குரலில் . தசரதகுமாரன் ஆன ராமன் , மிகச் சிறந்த வில்லாளி , மனிதர்களில் உத்தமர் , தர்மத்தின் காவலர் , என ஆரம்பித்து , மிகச் சுருக்கமாய் ராமன் பட்டாபிஷேகம் தடைப்பட்டு , ராமன் வனம் வர நேரிட்ட கதையையும் , பின்னர் சீதை அபகரிக்கப் பட்டு , தற்சமயம் சீதையைத் தேடி வருவதையும் , அதன் காரணமாகவே தான் கடல் தாண்டியதையும் சொல்லி முடித்தார் . சீதைக்குத் தாள முடியாத வியப்பு . சொல்லுவது என்னமோ தன் வாழ்க்கைச் சரித்திரம் தான் . ஆனால் சொல்வது யார் ? தான் பார்க்காத சில சம்பவங்களும் இருக்கின்றனவே ? தான் அமர்ந்திருந்த மரத்தை அண்ணாந்து பார்க்கின்றாள் சீதை . ஒரு வானரம் மரத்தின் மீது வெண்ணிற ஆடை அணிந்து அமர்ந்திருப்பது கண்ணில் படுகின்றது . கனவோ இது ? என மயங்கினாள் . வானரம் தன்னிடம் பேசியதா ? எப்படி ? ஒருவேளை இது அரக்கிகளின் சதியோ ? அல்லது ராவணன் தன்னை அடையச்செய்யும் மற்றொரு வகைத் தந்திரமோ ? யோசனையுடனேயே மீண்டும் மரத்தின் மேலே பார்த்தாள் சீதை . உடனேயே அங்கிருந்து கீழே இறங்கிய அனுமன் தன் இருகைகளையும் கூப்பிக் கொண்டு சீதைக்கு வணக்கம் தெரிவித்து வணங்கி நின்று , “ குற்றமற்ற பெண்மணியே , நீ யார் ? ராவணனால் கடத்தி வரப்பட்ட ராமனின் மனைவி சீதை நீதானா ? எனில் அதை என்னிடம் சொல்லு ! உனக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகட்டும் ” எனச் சொல்கின்றார் . சீதை மனம் மகிழ்ச்சி அடைந்து , “ தசரதன் மருமகளும் , ஜனகனின் மகளும் , ராமனின் மனைவியும் ஆன சீதை நான் தான் .” என்றுசொல்லிவிட்டு , அயோத்தியை நீங்கியதில் இருந்து நடந்த நிகழ்வுகளையும் , தான் கடத்தி வரப்பட்டதையும் சொல்கின்றாள் . அனுமன் மனம் மகிழ்ந்து , நெகிழ்வுடன் , “ ராமசாமியின் தூதனாய்த் தான் நான் வந்திருக்கின்றேன் . ராமன் நலமே . உங்களைப் பற்றிய கவலையன்றி வேறே ஒரு கஷ்டமும் இல்லை அவருக்கு . லட்சுமணனும் நலமே . உங்கள் கஷ்டத்தின் போது காப்பாற்ற முடியவில்லை என்ற வருத்தமே அவருக்கு .” என்று சொல்லிக் கொண்டே அனுமன் சீதையை நெருங்க , சீதைக்கு மீண்டும் சந்தேகம் வருகின்றது . ஒருவேளை ராவணனோ என . ஆகவே எதற்கும் அமைதி காக்கலாம் என அமைதி காக்கின்றாள் . சீதையின் சந்தேகத்தைப் புரிந்து கொண்ட அனுமன் தான் ராமனின் நட்பைப் பெற்ற வானர அரசன் சுக்ரீவனின் நண்பன் , அமைச்சன் , ராமனின் சார்பாகவே தான் இங்கே வந்திருப்பதையும் சொல்ல , ஒரு வானரம் எவ்வாறு கடல் தாண்ட முடியும் எனச் சந்தேகப் படும் சீதையிடம் நடந்த விபரங்களைக் கூறுகின்றார் அனுமன் . ராம , லட்சுமணர்களின் தோற்றத்தைப்பற்றியும் , அவர்களின் சோகத்தைப் பற்றியும் , சுக்ரீவனுடன் ஏற்பட்ட நட்பு பற்றியும் , வாலி வதம் பற்றியும் விவரிக்கின்றார் அனுமன் . சீதையின் மனதில் நம்பிக்கை பிறக்கின்றது . சீதைக்கு முழுமையான நம்பிக்கை ஏற்படுத்தும் எண்ணத்துடன் அனுமன் , “ நான் ஒரு வானரன் , ராமனின் தூதன் . இதோ ராமன் பெயர் கொண்ட மோதிரம் . இந்த மோதிரத்தை உங்களுக்கு அடையாளமாய் ராமன் என்னிடம் கொடுத்தார் . மங்களம் உண்டாகட்டும் , உங்கள் அனைத்துத் துன்பங்களும் பறந்தோடட்டும் .” என்று கூறிவிட்டு அனுமன் , ராமனின் மோதிரத்தை சீதையிடம் அளித்தார் . அந்த மோதிரத்தைக் கண்ட சீதைக்கு ராமனையே நேரில் காண்பது போலிருந்தது . மனமகிழ்வோடு அனுமனைப் பார்த்து , “ அப்பனே ! அரக்கர்களின் இந்தக் கோட்டைக்குள் நீ உட்புகுந்து என்னைப் பார்த்து இதைச் சேர்ப்பித்ததில் இருந்தே உன்னுடைய துணிவும் , வலிமையும் , அறிவும் நன்கு புலப்படுகின்றது . மழைநீரைத் தாண்டி வரும் சாதாரண மனிதன் போல் நீ பெருங்கடலைத் தாண்டி இங்கே வந்துள்ளாய் . உன் சக்தியைப் புரிந்து கொள்ளாமல் ராமன் உன்னை இங்கே அனுப்பவில்லை என்று தெரிந்து கொண்டேன் . ராமன் நலம் என்ற செய்தி கேட்டு மகிழும் அதே நேரம் ராமன் ஏன் இன்னும் வந்து என்னை மீட்கவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை . என் துன்பத்திற்கு இன்னும் முடிவுகாலம் வரவில்லை போலிருக்கின்றது . போகட்டும் , ராமர் மற்றக் கடமைகளைச் சரிவர ஆற்றுகின்றாரா ? என் பிரிவினால் மற்றக் கடமைகளுக்குப் பாதிப்பு ஒன்றும் இல்லையே ? நண்பர்கள் அவரை மதிக்கின்றார்கள் அல்லவா / என் மாமியார்கள் ஆன கோசலை , சுமித்திரை , பரதன் ஆகியோரிடமிருந்து அவர்கள் நலன் பற்றிய செய்திகள் வருகின்றனவா ? என்னை எப்போது ராமன் மீட்டுச்செல்வார் ? லட்சுமணனும் உடன் வந்து அரக்கர்களை அழிப்பான் அல்லவா ? ” என்றெல்லாம் கேட்க அனுமனும் பதில் சொல்கின்றார் . “ தாங்கள் இங்கே இருக்கும் செய்தி இன்னும் ராமருக்குத் தெரியாத காரணத்தினாலேயே இன்னும் வந்து உங்களை மீட்கவில்லை . பெரும்படையுடன் வந்து உங்களை மீட்டுச் செல்லுவார் . உறக்கத்தில் கூட உங்களையே நினைத்துக் கொண்டிருக்கின்றார் ராமர் . வேறு சிந்தனை இல்லாமல் இருக்கின்றார் .” என்று சொல்லவும் , சீதை பெருமிதம் கொண்டாள் . “ எனக்குப் பெருமை அளித்தாலும் , இந்தச் சிந்தனை மட்டுமே ராமனுக்கு இருக்கிறது என்பது கொஞ்சம் கவலையாகவும் இருக்கின்றது . ராவணன் ஒரு வருடமே கெடு வைத்திருந்தான் . அந்தக் கெடுவும் இப்போது முடியப் போகின்றது . ராமன் விரைந்து செயல்படவில்லை எனில் அதற்குள் என் உயிர் பிரிந்துவிடும் என ராமனிடம் நீ எடுத்துச் சொல்வாய் . விபீஷணன் , ராவணனின் தம்பி , என்னை ராமனிடம் திரும்பச் சேர்க்குமாறு பலமுறை எடுத்துச் சொல்லியும் ராவணன் மறுத்துவிட்டான் . மேலும் ஓர் கற்றறிந்த நன்னடத்தை பொருந்திய அரக்கன் ஆன “ அவிந்த்யன் ” என்பவனும் ராவணனுக்கு எடுத்துச் சொன்னான் . ராவணன் அவனையும் மதிக்கவில்லை .” என்று சொல்லவே , அனுமன் அவளைத் தன் தோளில் அமரச் சொல்லிவிட்டுத் தான் தூக்கிச் சென்று கடலைக் கடந்து ராமனிடம் சேர்ப்பிப்பதாயும் தன்னை நம்புமாறும் கூறுகின்றான் . தன்னுடைய வேகத்துக்கு ஈடு கொடுத்துத் தன்னைத் தொடர்ந்து வரக் கூடியவன் இந்த இலங்கையில் இல்லை எனவும் சொல்கின்றான் . அதைக் கேட்ட சீதை , மகிழ்ச்சி அளிக்கக் கூடிய வார்த்தைகளையே சொல்லும் அனுமனின் இத்தனை சிறிய உருவைப் பார்த்து சந்தேகம் கொண்டு கேட்கின்றாள் .” இத்தனை சிறிய உருப்படைத்த நீ எவ்வாறு கடலைக் கடப்பாய் , அதுவும் என்னையும் சுமந்து கொண்டு ?” என்று கேட்கின்றாள் . உடனேயே அனுமனின் விஸ்வரூபம் காண நேரிடுகின்றது அவளுக்கு . நினைத்தபோது , நினைத்த வடிவைத் தான் எடுக்க முடியும் என சீதைக்குக் காட்ட வேண்டி , விண்ணுக்கும் , மண்ணுக்குமாய் வளர்ந்து நிற்கின்றார் ஆஞ்சநேயர் , வானர வீரன் , வாயுகுமாரன் , மங்களங்களை அள்ளித் தரும் சுந்தரன் . மேலும் , மேலும் , மேலும் வளர்ந்து கொண்டே போகும் அந்த அனுமனின் விசுவரூபத்தைக் கண்டு வியக்கின்றாள் வைதேஹி . அனுமன் சொல்கின்றான் . “ அம்மையே , உங்களை மட்டுமல்ல , இந்த நகரையும் , நகரோடு உள்ள மக்களையும் , ராவணனையும் , அனைவரையும் சுமக்கக் கூடிய வல்லமை படைத்தவனே நான் . ஆகவே தாங்கள் தயங்க வேண்டாம் . உடனே என்னுடன் வருவீர்களாக .’ என்று கூப்பிடுகின்றான் . அனுமனின் விசுவரூபத்தைக் கண்டு வியந்த ஜானகி , “ அப்பா , இப்போது நன்கு புரிகின்றது . ஒரு சாதாரண வானரன் எவ்வாறு கடல் தாண்ட முடியும் என நான் நினைத்தது , தவறு என்று தெரிந்து கொண்டேன் . ஆனால் , காற்றை விடக் கடினமாயும் , வேகமாயும் பறக்கும் உன்னுடைய வேகத்தை என்னால் தாங்க முடியுமா ? வழியில் அரக்கர்கள் பின் தொடர்ந்தால் , என்னையும் சுமந்துகொண்டு அவர்களோடு நீ எவ்விதம் சண்டை போடுவாய் ? உன் முதுகிலிருந்து நான் நழுவி விழுந்தாலும் விழலாம் , அல்லது அரக்கர்கள் ஜெயித்தால் என்னைக் கொன்றாலும் கொல்லலாம் . இப்படி எல்லாம் நடந்தால் உன்னுடைய முயற்சி வீணாகிவிடுமே ? மேலும் ராமனின் பெருமைக்கும் இது களங்கம் அல்லவோ ? அதுவும் தவிர , வேறொரு முக்கியமான விஷயமும் இருக்கின்றதே , ராமனைத் தவிர , வேறு யாரையும் நான் தீண்ட மாட்டேன் . அப்படி எனில் ராவணனோடு வந்தது எப்படி என்கின்றாயா ? அது பலவந்தமாய் அவன் இழுத்துக் கொண்டு வந்ததால் , நான் வேறு வழி அறியாமல் இருந்துவிட்டேன் . இப்போது நான் உன் முதுகில் ஏறிக் கொண்டு எவ்வாறு வருவேன் , அறிந்தே வரமுடியாது . ராமன் இங்கே வந்து அரக்கர்களோடு சண்டையிட்டுவிட்டு , அவர்களைத் தோற்கடித்து , ராவணனையும் வென்று என்னை அழைத்துச் செல்வதே சிறப்பானது , அவருக்கும் , எனக்கும் . ஆகவே அவரிடம் சென்று சொல்லி , சீக்கிரம் இங்கே வந்து இவர்களைத் தோற்கடித்துவிட்டு என்னை அழைத்துச் செல்லச் சொல்வாயாக !” என்கின்றாள் ஜானகி . 46 கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 46 சீதையின் வார்த்தைகளைக் கேட்டு நெகிழ்ந்து போன அனுமன் , “ தாயே , உங்கள் கூற்று சரியானதே . உங்கள் மேன்மைக்குத் தக்க வார்த்தைகளையே நீங்கள் கூறினீர்கள் . ராமனைத் தவிர , இன்னொருவரைத் தீண்டமாட்டேன் என்று நீங்கள் கூறியது , உங்கள் தகுதிக்கும் , மேன்மைக்கும் , நிலைக்கும் பொருத்தமான ஒன்றே . எனினும் , நீங்கள் இருவரும் உடனடியாக ஒன்று சேரவேண்டும் என்ற ஆவலின் காரணமாகவே நான் மேற்கூறிய வழியைக் கூறினேன் . அதற்காக என்னை மன்னிக்கவும் . நான் தங்களைச் சந்தித்துத் தான் திரும்பியுள்ளேன் என்பதை ராமன் உணரும்வண்ணம் ஏதேனும் அடையாளச் சின்னம் இருந்தால் கொடுக்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன் .” என்று கூறி வணங்கி நின்றார் . சற்று நேரம் யோசித்த சீதை பின்வருமாறு சில நிகழ்ச்சிகளைக் கூறினாள் . “ நாங்கள் இருவர் மட்டுமே அறிந்த ஓர் நிகழ்ச்சியை இப்போது கூறுகின்றேன் . என்னை ஒருநாள் ஒரு காகம் துன்புறுத்தித் தொல்லை கொடுத்தது . அதைக் கண்ட ராமர் ஒரு புல்லை அஸ்திரமாக்கி அந்தக் காக்கையை அழிக்க முனைந்தார் . காகம் மிகவும் மன்றாடியது . ஆனால் அஸ்திரம் ஏவப்பட்ட பின்னர் திரும்பப் பெறமுடியாது , அஸ்திரத்தின் பலனை ஏதாவது ஒருவகையில் அனுபவித்தே தீரவேண்டும் என்பது மாறாத விதி . ஆகையால் காக்கையின் ஒரு கண்ணை மட்டும் அந்த அஸ்திரத்தால் அழித்து , அதை உயிரோடு விட்டார் ராமன் . என்னைத் துன்புறுத்திய ஒரே காரணத்திற்காகக் காக்கையின்மேல் இவ்வளவு கோபம் கொண்ட ராமன் , இப்போது ஏன் இன்னமும் பொறுமை காட்டிக் கொண்டிருக்கின்றார் . நிகரற்ற வில்லாளியான லட்சுமணனாவது வரலாமே ? ஏன் அவனும் வரவில்லை என்று நான் கேட்டதாய்ச் சொல் . ராமனின் நலன் பற்றி நான் விசாரித்தேன் எனச் சொல்வாய் , பெருமை மிக்க தாய் சுமித்திரையின் மைந்தன் ஆன லட்சுமணனை விசாரித்தேன் எனச் சொல் . ராமனைப் பின் தொடர்ந்து காட்டுக்கு வந்த லட்சுமணன் , என்னை விட ராமனுக்கு உகந்தவன் . அவன் மனது வைத்து , என் துன்பங்களைத் தீர்க்கும் வகையில் நீ என் துன்பத்தைப் பற்றி அவனிடம் எடுத்துச் சொல் . இன்னமும் ஒரு மாதம் தான் நான் உயிர் வாழ்வேன் எனவும் , அதற்குள் வந்து என்னைக் காக்கவேண்டும் எனவும் இருவரிடமும் சொல் .” என்று சொல்லிவிட்டுச் சீதை தன் தலையில் சூடிக் கொண்டிருந்த அழகிய ஆபரணத்தை எடுத்து அனுமனிடம் கொடுத்தாள் . அதைக் கொடுத்த சீதை மேற்கொண்டு சொல்கின்றாள் : “ இந்த ஆபரணத்தைப் பார்த்தால் ராமனுக்கு நான் தான் இதைக் கொடுத்தேன் என்பது தெரிய வரும் . என் நினைவு மட்டுமின்றி , என் தாய் , மற்றும் ராமனின் தந்தை தசரதன் ஆகியோரின் நினைவும் அவருக்கு வரும் . ஏனெனில் தசரதச் சக்கரவர்த்தியின் முன்னிலையில் , என் தாய் இந்த ஆபரணத்தை எனக்குப் பரிசாய்க் கொடுத்தாள் . மற்றும் உன் மன்னன் ஆன சுக்ரீவனிடமும் , மற்ற வானர அமைச்சர்கள் , வீரர்கள் அனைவரிடம் சொல்வாய் .” என்று கூறினாள் . அனுமனும் அந்தச் சூடாமணியை வாங்கிக் கொண்டு சீதையிடம் ராமனுடனும் , பெரும்படையுடனும் , வந்து உங்களை மீட்டுப் போவது உறுதி என்று சொல்கின்றார் . சீதை அனுமனைப் பார்த்து இன்னும் ஓர் நாள் தங்கிவிட்டுப் போகின்றாயா ? நீ இருந்தால் என் மன உறுதியும் , தைரியமும் என்னைக் கைவிடாது எனத் தோன்றுகிறது , கடலைக் கடந்து வந்து எவ்வாறு மீட்டுச் செல்லுவார்கள் என்பதை எண்ணும்போது சந்தேகமாய் உள்ளது . கருடனையும் , வாயுவையும் , இப்போது உன்னையும் தவிர மற்றவர்களால் முடியுமா எனத் தெரியவில்லையே ? பெரும்படை வருவது எவ்வாறு ” என்று எண்ணிப் புலம்ப ஆரம்பித்தாள் . அனுமன் அவளுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லி , சுக்ரீவனின் படை பலத்தையும் , வீரர்களின் வல்லமை , திறமை போன்றவற்றையும் எடுத்துரைக்கிறார் . உண்மையில் இந்தக் காரியத்துக்காக ஏவப்பட்ட நான் அவர்கள் அனைவரிலும் தாழ்ந்தவனே . ஒரு காரியத்துக்கு ஏவப் படுகின்றவன் , மற்றவர்களை விட மேன்மையானவனாய் எவ்விதம் இருப்பான் ? ஆகவே தாங்கள் அஞ்ச வேண்டாம் . உங்கள் துன்பம் அழியும் நேரம் வந்துவிட்டது . பொறுங்கள் , அமைதி காத்து இருங்கள் ” என்றெல்லாம் சொல்லிச் சீதையிடம் விடைபெற்றுக் கொண்டு அனுமன் வடதிசையில் செல்லத் தீர்மானித்தான் . செல்லும்போதே அனுமன் நினைத்தான் .” சீதையைக் கண்டு பேசியாகிவிட்டது . எடுத்த காரியத்தில் வெற்றி அடையும் அடுத்த வழியைப் பார்ப்போம் . அரக்கர்களிடம் பேச்சு வார்த்தை பலனில்லை . துணிவின் மூலமே அவர்களுக்குத் தக்க தண்டனை அளிக்கவேண்டும் . மேலும் நமக்கும் , ராவணனுக்கும் நடக்கப் போகும் யுத்தத்தில் வெற்றி அடையவேண்டுமானால் , ராவணன் பற்றியும் அவன் பலம் பற்றியும் அறிந்து கொள்ளவேண்டும் . அதற்கு அவனைச் சந்திக்கவேண்டும் , அவன் அமைச்சர்களைச் சந்திக்க வேண்டும் . என்ன செய்யலாம் ? ம்ம்ம்ம்ம் ??? இந்த நந்தவனம் எத்தனை அழகு ? பல்வேறு விதமான கொடி , செடிகள் , மரங்கள் , உத்தியான மண்டபங்கள் , லதாமண்டபங்கள் ??? ம்ம்ம் இதை நான் அழித்தால் ராவணன் கட்டாயம் கோபம் கொண்டு என்னை அழிக்கப் படையை ஏவுவான் , அல்லது அவனே வரலாம் . எதிராளியின் பலம் அப்போது தெரிய வரும் ” என்றெல்லாம் எண்ணிய அனுமன் அசோகவனத்தை அழிக்க முற்பட்டு , அதை நாசம் செய்யத் தொடங்கினார் . அசோக வனம் நாசமடைந்ததைக் கண்ட அரக்கிகள் சீதையிடம் சென்று யார் அது உன்னிடம் பேசியது , எங்கிருந்து வந்தான் என்றெல்லாம் கேட்டார்கள் . சீதையோ எனில் , தாம் விரும்பிய வடிவம் எடுத்துக் கொள்ளும் அரக்கர்கள் எப்போது என்ன செய்கின்றார்கள் என்பதை நான் அறியேன் . யார் வந்தார்களோ , நான் என்ன கண்டேன் என்று சொல்லிவிடுகின்றாள் . அரக்கிகள் ராவணனிடம் ஓடிச் சென்று நடந்த நாசத்தைக் குறித்து விவரிக்கின்றார்கள் . சீதை அமர்ந்திருக்கும் இடம் தவிர , மற்ற இடங்களெல்லாம் அழிக்கப் பட்டு விட்டது என்பதை அறிந்த ராவணன் பெரும்கோபத்துடன் கிங்கரர்கள் என அழைக்கப் படும் அரக்கர்களை அனுப்பினான் . அனுமன் ராமநாமத்தைச் சொல்லிக் கொண்டே , தான் வாயுவின் மைந்தன் எனவும் , ராமனின் தூதன் எனவும் சொல்லிவிட்டு , கிங்கரர்களை அழித்துவிடுகின்றார் . பின்னர் பிரஹஸ்தன் என்பவனின் மகன் ஜம்புமாலி என்பவன் வந்து அனுமனுடன் மோத , ஜம்புமாலியும் , அவனுடன் சேர்ந்து அசோகவனத்தில் மீதமிருந்த ஓர் மண்டபமும் , அதைக் காத்த அரக்க வீரர்களும் மாண்டனர் . ராவணனின் அமைச்சர்களின் மகன்கள் எழுவர் வர , அனுமன் அவர்களையும் எதிர்கொண்டார் . தன் தளபதிகளையும் அனுமன் வென்றதைக்கண்ட லங்கேசுவரன் , பின்னர் தன் மகன்களில் ஒருவன் ஆன அக்ஷ குமாரனை அனுப்ப அவனும் அனுமன் கையால் மடிகின்றான் . அக்ஷ குமாரன் மடிந்தது கேட்ட ராவணன் , உடனேயே இந்திரஜித்தை அழைத்துச் சொல்கின்றான் :” மூவுலகிலும் உன்னை யாராலும் வெல்ல முடியாது . உன்னாலும் , உன் தவத்தாலும் , பலத்தாலும் சாதிக்க முடியாதவை எவையும் இல்லை . இப்போது இந்த வானரத்தால் நம் வீரர்கள் , உன் சகோதரன் அக்ஷகுமாரன் அனைவரும் மடிந்துவிட்டனர் . இந்த அனுமனின் பலத்துக்கு எல்லை இல்லை என்பதாலேயே உன்னை அனுப்புகின்றேன் . இது புத்திசாலித் தனமான காரியமா இல்லையா என்பது தெரியவில்லை . எனினும் நன்கு ஆலோசித்து இந்த அழிவைத் தடுத்து நிறுத்துவது உன் கடமை .” என்று சொல்லி அனுப்புகின்றான் . இந்திரஜித்தும் அனுமன் நிற்கும் இடம் நோக்கிச் செல்கின்றான் . துர்சகுனங்கள் ஏற்பட்டன . அப்படி இருந்தும் இந்திரஜித் தொடர்ந்தான் . அனுமன் விஸ்வரூபம் எடுத்து நின்றுகொண்டு உரக்கக் கோஷம் இடுகின்றார் . பலத்த மோதல் இருவருக்கிடையே நடக்கின்றது . இருவரின் பலமும் சமமாய்த் தெரிகின்றது . இந்திரஜித்தை வீழ்த்தும் வழி அனுமனுக்குத் தெரியவில்லை . அனுமனை எப்படி வீழ்த்துவது என இந்திரஜித்துக்குக் குழப்பம் . ஆனால் இந்திரஜித் அனுமனை எவ்வாறேனும் சிறைப்பிடித்துவிடலாம் என எண்ணினான் . உடனேயே யோசனை செய்து பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகித்தான் . அனுமன் கீழே வீழ்ந்தான் . எனினும் அவனுக்குத்தான் பிரம்மாஸ்திரத்தால் கட்டப் பட்டுவிட்டோம் என்பது புரிந்தது . ஆனால் அதன் வலி அவனுக்கு இல்லை . மேலும் இந்த அஸ்திரத்தால் தான் கட்டுப்பட்டாலும் விரைவில் விடுதலையும் கிடைக்கும் என்பதும் அனுமனுக்கு நினைவு வந்தது . பிரம்மாவின் இந்த அஸ்திரத்தில் இருந்து நாமாய் விடுவித்துக் கொள்ள முடியாது . ஆகவே காத்திருப்போம் என்ற முடிவுக்கு வந்தார் . அனுமன் வீழ்ந்தது கண்ட அரக்கர்கள் தைரியமாய்க் கிட்டே வந்து அனுமனைக் கொடி , செடிகளால் ஏற்படுத்தப் பட்ட கயிற்றினால் பிணைக்கவும் , அதன் காரணமாய் , பிரம்மாஸ்திரக் கட்டு அனுமனை விடுவித்தது . வேறு வகையில் கட்டப் பட்டவனை பிரம்மாஸ்திரம் கட்டாது என்பது அதன் விதி . இந்திரஜித் உடனேயே விஷயம் புரிந்து அரக்கர்களின் மூடத் தனமான செயலை நினைந்து வருந்தினான் . எனினும் கட்டுண்டு அமைதியாகக் கிடந்த அனுமனை மற்ற அரக்கர்கள் ராவணனின் சபைக்கு இழுத்துச் சென்றனர் . சபையில் அமைச்சர்களும் , மற்றா வீரர்களும் , படைத்தலைவர்களும் வீற்றிருந்தனர் . ராவணன் முன்னிலையில் பலரால் இழுத்துச் செல்லப் பட்டான் அனுமன் . அவன் முன்னே நின்றான் . அமைச்சர்கள் அனுமனை அவன் யாரெனவும் , வந்த காரியம் பற்றியும் பலவித விசாரணைகள் செய்ய ஆரம்பித்தனர் . அனுமனின் ஒரே பதில் :’ நான் சுக்ரீவனிடமிருந்து வந்திருக்கும் தூதன் ” என்பதே . பேசும்போதே ராவணனைப் பற்றி ஆராய்ந்தறிந்தார் அனுமன் . எத்துணை கம்பீரம் பொருந்தியவன் ? ஒளி வீசும் தோற்றம் ? அவன் மகனா இந்திரஜித் ? மகனே இவ்வளவு வீரன் என்றால் தகப்பன் எத்தனை பெரிய வீரன் ? என்ன அழகு ? என்ன மதிநுட்பம் ? முகமே காட்டுகின்றதே ? இவன் ஓர் அரக்கர் தலைவனா ? இவன் மட்டும் நன்னடத்தை உள்ளவனாய் இருந்திருந்தால் இவ்வுலகையே வென்றிருப்பானே ? அதே சமயம் ராவணன் நினைக்கின்றான் அனுமனைப் பற்றி :” கைலையில் இருக்கும் அந்த ஈசனின் அமைச்சன் ஆன நந்திதேவனே இந்த உருவெடுத்து வந்துவிட்டானோ ? இவன் பெரும் வீரம் செறிந்தவனாய்க் காணப்படுகின்றானே என நினைத்துக் கொண்டே , தன் அமைச்சர்களில் முக்கியமானவன் ஆன பிரஹஸ்தன் என்பவனைப் பார்த்து இந்த அனுமன் வந்த காரியம் என்ன என்பது அறியப் படட்டும் என்று உத்தரவிடுகின்றான் . பிரஹஸ்தன் கேள்விகள் கேட்கத் தொடங்குகின்றான் . 47 கதை, கதையாம், காரணமாம், ராமாயணம் பகுதி 47 ராவணன் சபையில் அமரவைக்கப்படாமல் கட்டப் பட்ட நிலையிலேயே அனுமன் பேசியதாய் வால்மீகி குறிப்பிடுகின்றார் . வாலைச் சுருட்டி வைத்துக் கொண்டு உட்காருவது எல்லாம் பின்னால் வந்திருக்கின்றது என நினைக்கின்றேன் . ராவணனும் நேரிடையாக அனுமனைக் கேள்விகள் கேட்கவில்லை , தன் அமைச்சன் ஆகிய பிரஹஸ்தனை விட்டே கேட்கச் சொல்லுகின்றான் . கம்பர் , ராவணனும் , அனுமனும் நேரிடையாகப் பேசிக் கொண்டதாய் எழுதி இருக்கின்றார் . இனி , பிரஹஸ்தனின் கேள்விகளும் , அனுமனின் பதில்களும் : “ ஏ , வானரனே , உனக்கு நலம் உண்டாகட்டும் , நீ யாரால் அனுப்பப் பட்டவன் ? தேவேந்திரனா , குபேரனா , வருணனா , அந்த மகாவிஷ்ணுவா , பிரமனா ? யார் அனுப்பி இருந்தாலும் உள்ளது உள்ளபடிக்கு உண்மையைச் சொல்லிவிடு , உருவத்தில் வானரன் ஆன உன் சக்தி பிரம்மாண்டமாய் இருக்கின்றது . சாதாரண வானர சக்தி இல்லை இது . பொய் சொல்லாதே !” என்று கேட்க , அனுமன் நேரிடையாக ராவணனைப் பார்த்தே மறுமொழி சொல்லத் தொடங்குகின்றார் . “ நான் ஒரு வானரன் , நீங்கள் கூறிய தேவர்கள் யாரும் என்னை அனுப்பவில்லை . ராவணனைப் பார்க்கவேண்டியே நான் வந்தேன் . அரக்கர்களின் தலைவன் ஆகிய ராவணனைப் பார்க்கவேண்டியே அசோகவனத்தை அழித்தேன் . அரக்கர்கள் கூட்டமாய் வந்து என்னைத் தாக்கியதால் , என்னைத் தற்காத்துக் கொள்ளும்பொருட்டு , நான் திரும்பத் தாக்கியதில் அவர்கள் அழிந்து விட்டனர் . என்னை எந்த ஆயுதங்களாலும் கட்டுப்படுத்த முடியாது . பிரம்மாஸ்திரத்துக்கு நான் கட்டுப்பட்டதுக்குக் கூட ராவணனைப் பார்க்கவேண்டும் என்பதாலேயே . இப்போது அதில் இருந்து நான் விடுபட்டுவிட்டேன் , எனினும் , நான் அரக்கர் தலைவன் ஆன உன்னைப் பார்க்கவே இவ்வாறு கட்டுப்பட்டது போல் வந்துள்ளேன் . ராம காரியமாய் வந்திருக்கும் நான் அவருடைய தூதனாக உன் முன்னிலையில் வந்துள்ளேன் என்பதை அறிவாயாக !” என்று கூறினார் . பின்னர் தன் வானரத் தலைவன் ஆன சுக்ரீவனின் வேண்டுகோளின் பேரிலேயே தான் ராமனின் காரியமாக அவரின் தூதுவனாக அவர் கொடுத்த தகவலைத் தாங்கி வந்திருப்பதாய்த் தெரிவிக்கும் அனுமன் , சுக்ரீவன் ராவணனின் நலன் விசாரித்துவிட்டு , ராவணனுக்கு நற்போதனைகள் சொல்லி அனுப்பி இருப்பதாயும் , அதைக் கேட்குமாறும் கூறுகின்றார் . இப்படிக் கூறிவிட்டு , தசரத மகாராஜாவுக்கு , ராமன் பிறந்ததில் இருந்து ஆரம்பித்துக் காட்டுக்கு வந்தது , வனத்தில் சீதையை இழந்தது , சுக்ரீவனோடு ஏற்பட்ட நட்பு , வாலி வதம் , சீதையைத் தேட சுக்ரீவன் வானரப் படையை ஏவியது , அந்தப் படைகளில் ஒரு வீரன் ஆன தான் கடல் தாண்டி வந்து சீதையைக் கண்டது வரை விவரித்தார் . பின்னர் மேலும் சொல்கின்றார் :” ராவணா , உனக்கு அழிவு காலம் வந்துவிட்டது . ராம , லட்சுமணர்களுடைய அம்புகளின் பலத்தைத் தாங்கக் கூடிய அரக்கர்கள் எவரும் இல்லை . ராமருக்குத் தீங்கு இழைத்துவிட்டு அரக்கன் எவனும் இந்தப் பூமியில் நிம்மதியாய் வாழமுடியாது . ஜனஸ்தானத்தில் அரக்கர்கள் கதியை நினைத்துப் பார்ப்பாய் . வாலியின் வதத்தை நினைத்துப் பார் . சீதையை ராமனுடன் அனுப்பி வைப்பது தான் சிறந்தது . இந்த நகரையோ , உன் வீரர்களையோ , படைகளையோ அழிப்பது என் ஒருவனாலேயே முடியும் . எனினும் ராமரின் விருப்பம் அதுவல்ல , சீதையைக் கடத்தியவனையும் , அவனைச் சார்ந்தவர்களையும் தம் கையால் அழிக்கவேண்டும் என்பதே அவர் விருப்பம் . அவ்வாறே சபதம் இட்டிருக்கின்றார் . அதை நிறைவேற்றியே தீருவார் . இந்த உலகத்தின் அழிவுக்கே காரணம் ஆன காலனின் துணையான காலராத்திரி போன்ற சீதையை விட்டு விலகினாய் ஆனால் உனக்கே நன்மைகள் . இல்லை எனில் இந்த உன் இலங்கைக்கும் , உன் குலத்துக்கும் அழிவுக்கு நீயே காரணம் ஆவாய் .” என்று சொல்லி நிறுத்த அனுமனைக் கொல்லச் சொல்லிக் கட்டளை இடுகின்றான் ராவணன் . ராவணனின் கோபத்தையும் அவன் அனுமனைக் கொல்லச் சொன்னதையும் கண்ட விபீஷணன் , எந்நேரமும் இந்தக் கட்டளை நிறைவேற்றப்பட்டுவிடுமோ என அஞ்சினான் . தான் தலையிடும் நேரம் வந்துவிட்டதாய்க் கருதினான் . ராவணனைப் பார்த்து , ” அரசே , என் குறுக்கீட்டுக்கு மன்னிக்க வேண்டுகின்றேன் . பொதுவாக அரசர்கள் தூதுவனை மரியாதையுடனேயே நடத்துவது வழக்கம் . இந்த வானரனின் உயிரைப் பறிப்பது சரியல்ல . தாங்கள் அறியாத விஷயம் எதுவும் இல்லை . கோபத்தினால் பீடிக்கப் பட்டு தாங்கள் சாத்திரங்களை முறையாகப் பயின்றதை வீண்வேலை என ஆக்கிவிடாதீர்கள் ” என்று சொல்கின்றான் . ராவணன் இன்னும் அதிகக் கோபம் கொண்டு , “ விபீஷணா , இந்த வானரன் ஒரு மாபெரும் பாவி . பாவிகளைத் தண்டித்தால் ஒரு பாவமும் வராது .” என்று கூற , அவன் முடிவு தவறு என்று மேலும் விபீஷணன் கூறுகின்றான் . ஒரு தூதுவனை எந்த நிலையிலும் அரசன் ஆனவன் கொல்லக் கூடாது , அதற்குப் பதிலாக வேறு வழியில் தண்டிக்கலாம் , சாட்டையால் அடித்தோ , அங்கஹீனம் செய்யப்பட்டோ , மொட்டை அடித்தோ , முத்திரை குத்தி ஊர்வலம் விட்டோ எப்படியும் தண்டிக்கலாம் , ஆனால் கொல்வது முறையல்ல . இந்த வானரனை எவர் அனுப்பினரோ அவர்களே தண்டிக்கப் படக்கூடியவர்கள் . இவனைக் கொன்றுவிட்டால் பின் அந்த இரு அரசகுமாரர்களுக்கும் விஷயம் எவ்விதம் தெரியவரும் ? ஆகவே இவனை உயிரோடு அனுப்பினால் அவர்கள் இங்கே வருவார்கள் . யுத்தம் செய்யலாம் என்றெல்லாம் எடுத்துச் சொல்ல , ராவணனும் சம்மதித்து , வானரங்களுக்கு வாலின் மீது பிரியம் அதிகம் என்பதால் இந்த வானரனின்வாலில் தீ வைத்து அனுப்புங்கள் . வால் பொசுங்கி இவன் போவதைப் பார்த்த இவன் ஆட்கள் இவனைப் பார்த்து மகிழட்டும் . நகரின் வீதிகளில் இழுத்துச் சென்று வாலில் தீ வைக்கப் படட்டும் என்று ஆணை இடுகின்றான் , தசகண்ட ராவணன் . அனுமன் தனக்கு நேரிடும் இந்த அவமானத்தை ராமனின் காரியம் ஜெயம் ஆகவேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்தவராய்ப் பொறுத்துக் கொள்கின்றார் . மேலும் நகர்வலம் வருவதன் மூலம் இலங்கையின் அமைப்பைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம் எனவும் நினைத்துக் கொள்கின்றார் . சங்குகள் ஊதப்பட்டு , முரசம் பலமாகக் கொட்டப் பட்டு , தூதுவனுக்குத் தண்டனை வழங்கப்படுவது உறுதி செய்யப் படுகின்றது . வாலில் தீ வைக்கப் பட்ட அனுமன் நகரின் பல வீதிகளிலும் இழுத்துச் செல்லப் படுகின்றார் . நகரின் தெருக்களின் அமைப்பையும் , நாற்சந்திகள் நிறுவப்பட்டிருந்த கோணங்களையும் அனுமன் நன்கு கவனித்துக் கொள்கின்றார் . சீதைக்கு அரக்கிகள் விஷயத்தைத் தெரிவிக்கின்றனர் . அனுமன் வாலில் தீ வைக்கப் பட்ட விஷயத்தை அறிந்த சீதை மனம் மிகவும் நொந்துபோய்த் துக்கத்தில் ஆழ்ந்தாள் . உடனேயே மனதில் அக்னியை நினைத்து வணங்கினாள் :” ஏ , அக்னி பகவானே , ராமன் நினைப்பு மட்டுமே என் மனதில் இருக்கின்றது என்பது உண்மையானால் , கணவன் பணிவிடையில் நான் சிறந்திருந்தது உண்மையானால் , விரதங்களை நான் கடைப்பிடித்தது உண்மையானால் , இன்னமும் ராமர் மனதில் நானும் , என் மனதில் ராமர் மட்டுமேயும் இருப்பது உண்மையானால் , அனுமனிடம் குளுமையைக் காட்டு . சுக்ரீவன் எடுத்த காரியம் வெற்றி அடையுமெனில் ஏ , அக்னியே , குளுமையைக் காட்டு .” எனப் பிரார்த்தித்தாள் சீதை . அனுமனோ , சற்றும் கலங்கவில்லை . வாலில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி இருந்த நெருப்பு மேல் நோக்கி எரியத் தொடங்கியது . திடீரென , அந்த நெருப்பானது ஒரு பக்கமாய்ச் சாய்ந்து அதிகம் உஷ்ணம் காட்டாமல் , மென்மையாய் எரியத் தொடங்கியது . ஒரு கணம் திகைத்தார் அனுமன் . “ நாற்புறமும் எரியும் தீ என்னைத் தகிக்கவில்லையே ? என்னைக் காயப் படுத்தவில்லையே ? ஏதோ குளுமையான வஸ்துவை வைத்தாற்போல் இருக்கின்றதே ஏன் ? சீதையின் மேன்மையாலா ? அக்னியின் கருணையாலா , நட்பினாலா ? என்று மனதுள் வியந்த அனுமன் , இவர்கள் செய்த அட்டூழியத்துக்கு நான் சரியாகப் பழிவாங்க வேண்டும் என மனதினுள் நினைத்தவராய் , கட்டுக்களைத் திடீரென அறுத்துக் கொண்டு , வானத்திலே தாவி , பெரும் சப்தத்தை எழுப்பினார் . நகரின் நுழைவாயிலை அடைந்து , சிறு உருவை அடைந்து , கட்டுக்களை முழுமையாகத் தளர்த்திவிட்டுப் பின்னர் மீண்டும் பெரிய உருவை எடுத்துக் கொண்டார் . காவாலாளிகளை அடித்துக் கொன்றார் . வாலில் சக்ராயுதம் போல் ஒளிவீசிப் பிரகாசித்துக் கொண்டிருந்த தீ அவர் சுழலும்போது மீண்டும் மீண்டும் சுழன்று பிரகாசித்தது . அனுமன் , கட்டிடங்களின் மீதும் , மாளிகைகளின் மீதும் தாவி ஏறி , தனது வாலில் இருந்த தீயை அந்தக் கட்டிடங்களின் மீது வைத்தார் . ப்ரஹஸ்தன் , மஹாபார்ச்வன் , சுகன் , சரணன் , இந்திரஜித் , ஜம்புமாலி , சுமாலி , ரச்மகேது , சூர்யசத்ரு , ரோமசன் , கரலன் , விசாலன் , கும்பகர்ணன் , போன்றவர்களின் மாளிகைக்கெல்லாம் தீ வைத்த அனுமன் விபீஷணன் மாளிகையை மட்டும் விட்டு வைக்கின்றார் . ராவணனின் மாளிகையைக் கண்டறிந்து கொண்டு அதற்கும் பல இடங்களில் தீவைக்கின்றார் . தீ நகரம் பூராப் பரவ வசதியாக வாயு தேவன் உதவினான் . மாட , மாளிகைகள் , கூட கோபுரங்கள் தீயினால் அழிந்தன . அரக்கர்கள் கதற , அங்கே சேமிக்கப் பட்டிருந்த நவரத்தினங்கள் தீயினால் உருகி ஓர் பெரிய ஆறாக உருவெடுத்து ஓட ஆரம்பித்தது . திரிகூட மலை உச்சியிலும் அனுமன் தீயை வைக்க நகரையே தீ சூழ்ந்து கொண்டது . எங்கு பார்த்தாலும் , அழுகை , கூக்குரல் , முப்புரம் எரித்த அந்த ஈசனே வந்துவிட்டானோ என்ற ஐயம் அனைவர் மனதிலும் எழ , அனுமன் மனதிலும் இரக்கம் தோன்றுகின்றது . தான் செய்தது தப்போ என்ற எண்ணம் அவரை வாட்டி வதைக்கின்றது . வானரபுத்தியால் ராம , லட்சுமணர்களின் கீர்த்திக்குத் தான் அபகீர்த்தி விளைவித்துவிட்டதாய் எண்ணுகின்றார் அனுமன் . அவர்கள் முகத்தில் எவ்வாறு விழிப்பேன் என எண்ணி மயங்குகின்றார் . அனைவரும் தவறாய் எண்ணும்படிப் பேரழிவைப் புரிந்துவிட்டேனோ என எண்ணித் துயர் உறும் அனுமன் மனம் மகிழும் வகையில் நற்சகுனங்கள் தோன்றுகின்றன . விண்ணில் இருந்து சில முனிவர்களும் , சித்த புருஷர்களும் , இவ்வளவு பெரிய தீங்கு ஏற்பட்டபோதிலும் சீதை இருக்கும் அசோகவனத்துக்கு எந்த அழிவும் உண்டாகவில்லை என மகிழ்வுடன் பேசுவதையும் கேட்டார் . உடனேயே அசோகவனம் விரைந்து சென்று சீதையைக் கண்ட அனுமன் அவளுக்கு ஆறுதல் வார்த்தைகள் பல கூறி அவளிடம் விடைபெற்றார் . 48 கதை, கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 48 இலங்கையை எரித்தது சரியே என மன அமைதி பெற்ற அனுமன் , அசோகவனத்தில் சீதைக்குத் துன்பம் எதுவும் நேரிடைவில்லை என இன்னும் அதிக அமைதியுடனும் , ஆறுதலுடனும் விடைபெற்றுக் கொண்டு , சீதையின் செய்தியுடன் , மீண்டும் இலங்கையை விட்டுவிட்டு , வந்த இடம் நோக்கிக் கிளம்பினார் . அரிஷ்டம் என்னும் பெயர் கொண்ட மலைமீது ஏறி நின்றுகொண்டு , தன் உருவை வளர்த்துக் கொண்டு கால்களைப்பலம் கொண்ட வரைக்கும் எம்பினார் . மலை மண்ணோடு மண்ணாக நொறுங்க அனுமன் விண்ணில் கிளம்பினார் . வானவெளியில் மிக வேகமாய்ப் பறந்து சென்று அனுமன் கடலின் அக்கரையை விரைவில் அடைந்து மகேந்திரமலையைக் கண்டதும் , மகிழ்ச்சியில் ஒரு ஹூங்காரம் எழுப்பினார் . அந்த ஹூங்காரத்தைக் கேட்ட வானரர்கள் , அனுமன் திரும்பிவிட்டதை மட்டுமல்லாமல் வெற்றியோடு வருகின்றான் என்ற நிச்சயமும் கொண்டனர் . ஜாம்பவான் , அனுமன் எழுப்புகின்ற ஒலியே அவன் போன காரியத்தில் வெற்றி பெற்றான் என்பதைக் காட்டுகின்றது என்று மற்ற வானரர்களிடம் உற்சாகத்துடன் சொன்னார் . காற்றை விலக்கிக் கொண்டு அனுமன் வேகமாய் வந்த காட்சியானது , கார்கால மேகம் விரைவில் விண்ணைத் தன் கூட்டங்களால் நிரப்புவது போல் காட்சி அளித்ததாம் . இரு கரம் கூப்பி நின்ற வானரர்கள் நடுவே மகேந்திர மலையின் மீது இறங்கிய அனுமன் முதலில் ஜாம்பவானையும் , இளவரசன் அங்கதனையும் வணங்கிவிட்டுப் பின்னர் “ கண்டேன் சீதையை ” என்ற நற்செய்தியைத் தெரிவித்தார் . பின்னர் அங்கதனின் கையைப் பற்றிக் கொண்டு கீழே அமர்ந்த அனுமன் , தான் கிளம்பியதில் இருந்து , அசோகவனத்தில் சீதையைத் தான் சந்தித்ததையும் , சீதை அங்கு அரக்கிகளின் காவலில் இருப்பதையும் , ராமரை நினைத்து வாடிக் கொண்டிருப்பதையும் தெரிவிக்கின்றார் . பின்னர் அங்கதன் அனுமனைக் கண்டு , “ மிக்க துணிவோடு இக்காரியத்தை நீ நிகழ்த்தி உள்ளாய் . உனக்கு நிகரானவன் எவரும் இல்லை . நீ செய்த இந்தக் காரியத்தினால் வானர குலத்துக்கே பெருமை சேர்த்துவிட்டாய் . உன்னால் வானரக் குலம் அழியாப் புகழ் பெறும் .” என்றெல்லாம் பராட்டுகின்றான் . பின்னர் அனைவரும் அமர்ந்து யோசனை செய்தனர் . ஜாம்பவான் , அனுமனைப் பார்த்து , அனைத்து சம்பவங்களையும் விபரமாய்ச் சொல்லுமாறு கேட்க , அனுமனும் அவ்வாறே சொல்கின்றான் . ராமனிடம் எதைச் சொல்லலாம் , எதைச் சொல்லக் கூடாது என்பதையும் இங்கேயே முடிவு செய்யுமாறும் கூறுகின்றான் ஜாம்பவான் . அதன்படியே அனைத்தையும் கூறிய அனுமன் மேலும் சொல்கின்றான் : “ சீதையின் தூய்மை வியக்கும் வண்ணம் உள்ளது . அதைக் கண்டதுமே என் மனம் நிறைந்துவிட்டது . விரத வலிமை ஒன்றாலேயே மூவுலகையும் பொசுக்கும் வல்லமை கொண்டவர் அவர் என்பதை அறிந்தேன் . ராவணன் பெற்ற பெரும் வரங்கள் காரணமாகவே சீதையைத் தீண்டித் தூக்கிச் சென்றும் அவன் இன்னும் பொசுங்காமல் இருக்கின்றான் . எனினும் , ராவணனையும் , அவன் மகன் இந்திரஜித் , சகோதரன் கும்பகர்ணன் அனைவரையும் என் ஒருவனாலேயே எதிர்க்க முடியும் . ஜாம்பவானாகிய உம்மை எதிர்க்கும் வல்லமை கொண்டவனும் எவனும் இல்லை . அதே போல் வாலியின் மகன் ஆகிய அங்கதனும் திறமை கொண்டவனே . மிகப் பெரிய வீரன் ஆகிய நீலனும் நம்மிடையே இருக்கின்றான் . இப்படிப் பெரும் வல்லமை கொண்ட நாம் அனைவரும் கூடி இருக்கின்றோம் . சீதையின் துயரத்திற்கு முடிவு கட்ட ஆலோசனை செய்யலாம் .” என்று கூறுகின்றான் . உடனேயே அங்கதன் சீதையைப் பார்த்தாகிவிட்டது , ஆனால் மீட்டு வரவில்லை , என்று கிஷ்கிந்தையில் போய்ச் சொல்ல முடியுமா ? தேவர்களுக்கும் , அசுரர்களுக்கும் நிகரான சக்தி படைத்த நாம் சென்று அரக்கர்களை அழித்து , ராவணனைக் கொன்று , சீதையை மீட்டுக் கொண்டே கிஷ்கிந்தை திரும்பவேண்டும் . அனுமனோ ஏற்கெனவே பெரும் நாசத்தை இலங்கையில் விளைவித்துள்ளான் . நாம் சென்று சீதையை மீட்டு வருவதே பாக்கி . இதை விட்டுவிட்டு , நாம் சென்று ராம , லட்சுமணர்கள் கடல் கடந்து சென்று சீதையை மீட்டு வரட்டும் என்று சொல்வது சரியல்ல . இது நாமே செய்துவிடலாம் , கிளம்புங்கள் , சீதையை மீட்டுக் கொண்டே , நாம் கிஷ்கிந்தை சென்று ராம , லட்சுமணர்களைச் சந்திப்போம் .” என்று சொல்கின்றான் . ஜாம்பவான் , வயதில் மட்டுமன்றி , புத்தியிலும் மூத்தவர் என்பதற்கிணங்க , அங்கதனைப் பார்த்துச் சொல்கின்றார் :” நீ விவேகத்துடன் பேசவில்லை அங்கதா , நமக்கு சீதையை மீட்டு வருமாறு கட்டளை ஒன்றும் இடப்படவில்லை என்பதை அறிவாய் அல்லவா ? நாம் மீட்டுச் சென்றால் கட்டாயம் ராமர் மனம் வருந்துவார் . தன்னைத் தவிர , வேறு யார் சீதையை மீட்டு வந்தாலும் ராமர் விரும்பமாட்டார் என்றே கருதுகின்றேன் . மேலும் எல்லா வானரர்கள் முன்னிலையிலும் ராமர் செய்துள்ள சபதத்தை மறந்துவிட்டாயா ? நாம் சீதையை மீட்டு வந்துவிட்டால் , அந்தச் சபதம் என்னாவது ? அனுமனின் சாதனைகள் வீணாகிவிடும் . நாம் சென்று அனுமனின் சாதனையைச் சொல்லுவோம் . ராமனின் தீர்மானப் படி முடிவெடுப்போம் .” என்று சொல்ல அனைவரும் அதை ஏற்றுக் கிஷ்கிந்தை புறப்படுகின்றார்கள் . உற்சாகம் கொண்ட வானரர்கள் அங்கிருந்து கிளம்பி மதுவனம் என்னும் நந்தவனத்தை அடைந்து , மகிழ்ச்சியில் இன்னது செய்கின்றோம் என்பதே அறியாமல் அந்த வனத்தில் புகுந்து தேன் பருகும் ஆசையில் அங்கிருந்த பழமரங்களை முற்றுகை இட்டனர் . அந்த வனம் சுக்ரீவனின் மாமன் ஆன ததிமுகன் என்பவனுடையது . வானரங்கள் அங்கே வந்து பெரும் நாசத்தை விளைவித்து , மரங்களிலிருந்த பழங்களையும் , கனிகளையும் உண்ணவே , போதை அதிகம் ஆகி , அங்கே உள்ள காவலாளிகளைத் தாக்க ஆரம்பித்தனர் . தடுத்த ததிமுகனும் தாக்கப் படவே அவன் சென்று சுக்ரீவனிடம் நடந்ததைச் சொல்லுகின்றான் . யாரும் நுழையாதவாறு தடுக்கப்பட்டுக் காவல் காக்கப் பட்டிருந்த மதுவனம் நம் வானரர்களாலேயே அழிக்கப் பட்டது , எங்களையும் கடுமையாகத் தாக்கிவிட்டனர் . மதுவனம் அழிந்தது .” என்று சொல்லவே லட்சுமணன் அப்போது அங்கே வந்தான் . ததிமுகனைப் பார்த்துவிட்டு என்ன விஷயம் என லட்சுமணன் விசாரிக்கவே , சுக்ரீவன் தன்னால் அனுப்பப்பட்ட வானரவீரர்கள் மதுவனத்தை அழித்தது பற்றிச் சொல்லி , தாங்கள் சென்ற காரியத்தில் வெற்றி பெற்றிருந்தால் ஒழிய இந்த வானரங்களுக்கு இத்தகைய தைரியம் வந்திருக்காது . மேலும் அனுமனே இதைச் சாதித்திருப்பான் , மற்றவர்களுக்கு இத்தகைய தைரியம் இல்லை . ஆகவே போன காரியத்தில் வெற்றி அடைந்திருக்கின்றனர் ,” என்று சொல்லவே அருகில் இருந்த ராமனும் , லட்சுமணனும் மகிழ்ந்தார்கள் . வானரர் கூட்டத்துக்கு சுக்ரீவனால் அழைப்பு அனுப்பப் பட்டது . சுக்ரீவன் அனைத்து வானரங்களையும் கலந்து ஆலோசித்துவிட்டுப் பின்னர் அனைவரையும் கிஷ்கிந்தை செல்ல உத்தரவிட அனைவரும் கிளம்பினார்கள் . பெரும் மகிழ்வோடு வானரர்கள் வந்து கொண்டிருக்கும் சப்தம் கேட்ட சுக்ரீவன் , “ அவர்கள் குரலின் மகிழ்வில் இருந்து வெற்றி உறுதியாகிவிட்டது , ராமா , உனக்கு மங்களம் உண்டாகட்டும் . காலக்கெடு கடந்தும் கூட அவர்கள் என்னைத் தேடி வருகின்றார்கள் எனில் எடுத்த காரியத்தைச் சாதித்து விட்டார்கள் என்றே அர்த்தம் . இல்லை எனில் என் அண்ணன் மகன் ஆன அங்கதன் என் முன்னே வரமாட்டான் . இனி கவலை வேண்டாம் .” என்று சொல்கின்றான் . அங்கதன் , அனுமன் தலைமையில் வானரர்கள் வந்து சேர்ந்தனர் . அனுமன் அனைவரையும் தலை தாழ்த்தி வணங்கிவிட்டுப் பின்னர் “ கண்டேன் , சீதையை !” என்று கூறிவிட்டு , அவள் உடல் நலத்தோடு இருக்கின்றாள் என்ற நற்செய்தியையும் தெரிவிக்கின்றான் முதலில் . மேலும் சீதைக்கு ராவணன் விதித்திருக்கும் காலக்கெடுவையும் குறிப்பிடுகின்றான் அனுமன் . ராமன் அனைத்து விபரங்களையும் கிளம்பியதில் இருந்து சொல்லுமாறு கேட்க , அவ்வாறே அனுமன் தான் கொண்டு வந்திருந்த சூடாமணியை ராமனிடம் கொடுத்துவிட்டுப் பின்னர் தன் பிரயாண விபரங்களைத் தெரிவிக்கின்றான் . கடலைக் கடந்து வந்து தன்னை ராமன் மீட்கவேண்டும் என சீதை சொன்னதையும் , அவள் அளித்த சூடாமணியையும் கண்ட ராமன் கண்ணில் இருந்து அருவி போல் நீர் பொங்கியது . அந்தச் சூடாமணியை மார்போடு அணைத்துக் கொண்ட ராமன் , இந்த நகை ஜனகரால் சீதைக்கு அளிக்கப் பட்டது . ஜனகருக்கு இதை இந்திரன் கொடுத்தான் . இந்த நகையைப் பார்க்கும்போதெல்லாம் சீதை கண்முன்னே வருகின்றாள் . என் தந்தை ஆன தசரதச் சக்கரவர்த்தியும் , சீதையின் தகப்பன் ஆன ஜனகனும் நினைவில் வருகின்றனர் . அனுமனே , சீதை என்ன சொன்னாள் , எப்படி இருந்தாள் , அவள் கூறிய வார்த்தைகள் என்ன என்பதை நீ எனக்கு இன்னும் விபரமாய் எடுத்துச் சொல்வாயாக , என் மனமானது அதில் கொஞ்சம் ஆறுதல் அடையும் f எனத் தோன்றுகின்றது . என்று அனுமனை மீண்டும் விபரம் கேட்க , அனுமன் சீதைக்கும் , தனக்கும் நடந்த பேச்சு வார்த்தைகளை விபரமாய்க் கூற ஆரம்பிக்கின்றான் . இத்துடன் சுந்தரகாண்டம் முடிந்தது . இனி யுத்த காண்டம் . 49 கதை, கதையாம், காரணமாம், ராமாயணம் - பகுதி 49 அனுமன் வந்து சொன்னவைகளைக் கேட்ட ராமன் மிக்க மனமகிழ்ச்சி அடைந்தார் . மேலும் மற்ற யாராலும் செய்ய முடியாத ஒரு காரியத்தை அனுமன் நிறைவேற்றிவிட்டு வந்திருக்கின்றார் . சமுத்திரத்தை அனுமனைத் தவிர வேறு யார் சென்றிருந்தாலும் கடக்க முடியாது என்பது உண்மை . ராவணனின் கடுங்காவலில் இருக்கும் இலங்கையில் நுழைந்து , சீதையையும் கண்டு பேசிவிட்டு , அங்கே கடும் விளைவுகளையும் ஏற்படுத்திவிட்டு உயிருடன் திரும்பி இருக்கின்றான் அனுமன் என்றால் அவன் ஆற்றல் எப்படிப் பட்டது என்பதை உணர முடிகின்றது . இந்த அனுமனுக்குத் தக்க பரிசளிக்கக் கூடிய நிலைமையில் தற்சமயம் நான் இல்லையே என்பதை நினைத்து வருந்துகின்றேன் என்ற ராமன் அனுமனை நெஞ்சாரக் கட்டித் தழுவினார் . பின்னர் சீதையை என்னமோ தேடிக் கண்டு பிடித்தாகிவிட்டது . ஆனால் வானர வீரர்கள் அனைவரையும் எவ்வாறு அழைத்துச் சென்று சமுத்திரத்தைக் கடப்பது என்றே புரியவில்லையே என்ற கவலையில் ராமன் சோகத்தில் ஆழ்ந்தார் . சுக்ரீவன் ராமனின் மனக்கவலையை விரட்டி அடிக்கும் வகையில் பேசத் தொடங்கினான் : “ மிக மிகச் சராசரியான மனிதன் போல் நீங்கள் அடிக்கடி மனக் கவலைக்கு இடமளிக்கக் கூடாது . சீதை எங்கிருக்கின்றாள் என்பது தெரிந்து விட்டது . எதிரியின் நிலைமையும் நமக்குத் தெள்ளத் தெளிவாய்ப் புரிந்துவிட்டது . தாங்களோ ஆற்றல் மிகுந்தவர் . அனைத்தும் அறிந்தவர் . அப்படி இருக்கையில் கவலை வேண்டாம் , சமுத்திரத்தைக் கடப்போம் , இலங்கையை அடைவோம் , ராவணனை வீழ்த்துவோம் , சீதையை மீட்போம் . இலங்கையை அடைய சமுத்திரத்தை எவ்வாறு கடப்பது என்ற ஒன்றே தற்சமயம் யோசிக்க வேண்டிய ஒன்றாகும் . தாங்கள் அது பற்றிச் சிந்தியுங்கள் . ஒரு பாலம் அமைக்க முடியுமா என யோசிக்கலாம் .” என்று கூறுகின்றான் . ராமனும் சுக்ரீவன் கூறியதை ஒத்துக் கொண்டு , தன் தவ வலிமையால் சமுத்திரத்தை வற்றிப் போகச் செய்யலாம் , அல்லது , பாலமும் அமைக்கலாம் என்பதையும் ஒத்துக் கொள்கின்றார் . மேலும் , மேலும் அனுமனிடம் இலங்கையின் அமைப்பு , பாதுகாப்பு ஏற்பாடுகள் , செல்வம் , படைபலம் , வீரர்பலம் போன்றவற்றைப் பற்றி எல்லாம் விவாதிக்கின்றார் . அனுமன் அவரிடம் , அங்கதன் , த்விவிதன் , நீலன் , மைந்தன் , ஜாம்பவான் , நளன் , ஆகியோரே போதும் இலங்கையை வென்று சீதையை மீட்டும் வருவதற்கு . இவ்வாறிருக்கையில் வானரப் படைகள் சமுத்திரத்தைக் கடப்பதும் சாத்தியமான ஒன்றே என்று தெளிவாய் எடுத்துக் கூற ராமனும் மன அமைதி அடைந்து , படைகளைத் திரட்டி அணி வகுக்குமாறு சுக்ரீவனை உத்தரவிடச் சொல்லுகின்றார் . நீலன் என்ற வானரத் தளபதியின் தலைமையில் படைகள் அணிவகுக்கப் பட்டு , யார் , யார் , எந்த , எந்தப் படைக்குப் பொறுப்பு எனவும் தீர்மானிக்கப் படுகின்றது . வானரவீரர்கள் கிளம்புகின்றனர் தென் திசை நோக்கி . ஒரு மாபெரும் அலையானது சமுத்திரத்தில் இருந்து பொங்கி வேகமாய்க் கரையை நோக்கி வருவதைப் போன்ற வேகத்துடனும் , வீரத்துடனும் , “ ராமனுக்கு ஜெயம் , சீதாராமனுக்கு ஜெயம்” என்ற ஜெய கோஷங்களை எழுப்பிக் கொண்டு வானரப் படையானது தென் திசை நோக்கிச் செல்கின்றது . வழியிலே காணப்பட்ட நற்சகுனங்கள் லட்சுமணன் மனதை நிறைக்கின்றது . காற்றானது , இளந்தென்றலாகவும் தென் திசை நோக்கி வீசிக் கொண்டும் , பறவைகள் இனிமையான குரலில் கூவிக் கொண்டும் , சூரியனானது மேக மூட்டமில்லாமல் ஒளி வீசிக் கொண்டும் காணப்பட்டான் . வானரப்படை நதிகளைக் கடந்து , மலைகளைக் கடந்து , காடுகளைக் கடந்து சஹ்யாத்திரி மலைத் தொடர்களையும் கடந்து , மலய மலைப்பகுதிகளையும் தாண்டி மஹேந்திர மலையையும் கடந்து , சமுத்திரக் கரையை அடைந்தது . சமுத்திரக் கரையில் படைகள் ஓய்வெடுத்துக்கொள்வதற்காக முகாமிட்டார்கள் . ராமனும் , லட்சுமணனும் அடுத்துச் செய்ய வேண்டியவைகள் பற்றி வானர வீரர்களில் முக்கியமானவர்களுடன் கலந்தாலோசிக்கின்றனர் . ராமருக்கு மீண்டும் சீதையின் நினைவு வந்து துக்கம் பெருக்கெடுக்க , லட்சுமணன் அமைதிப் படுத்துகின்றான் அவரை . அப்போது அங்கே இலங்கையில் ???????? இலங்கையில் அரக்கர்கள் ராவணன் தலைமையில் அரசவைக் கூட்டம் ஒன்று ஏற்படுத்தினார்கள் . அனைத்து முக்கிய அரக்கர்களையும் கலந்தாலோசித்தான் ராவணன் .:” யாராலும் நுழையக் கூட முடியாத கடினமான கல்கோட்டை போன்றிருந்த இலங்கைக்குள் ஒரு வானரன் நுழைந்தது மட்டுமில்லாமல் , சீதையையும் பார்த்துவிட்டு நகருக்கும் நாசத்தை விளைவித்துச் சென்றிருக்கின்றான் . ராமன் விஷயத்தில் நான் என்ன செய்யவேண்டும் என்பதை நீங்கள் அனைவரும் எனக்கு எடுத்துக் கூறுங்கள் . நண்பர்கள் , சகோதரர்கள் , மற்ற உறவினர்கள் , மற்ற உயர்ந்தவர்கள் அனைவரையும் ஆலோசித்துவிட்டுப் பின்னர் தெய்வத்தையும் நம்பிச் செயல் பட்டாலே சிறப்புக் கிடைக்கும் என்பது உறுதி . தானாக முடிவெடுப்பவன் சிறந்த அரசனாய்க் கருதப் படமாட்டான் , இந்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் ? அறிவிற் சிறந்தவர்களே ! தன் தம்பியோடும் , பெரும் வானரப் படையோடும் ராமன் இலங்கையை நோக்கிப் புறப்பட்டிருக்கின்றானாம் . சமுத்திரக் கரையை வந்தடைந்துவிட்டானாம் . அந்த ராமனின் தவ வலிமை அவ்வளவு வலியதாம் . அவன் தவ வலிமையால் சமுத்திரத்தையே வற்றச் செய்தாலும் , செய்யலாம் என்று பேசிக் கொள்கின்றார்களே ? இந்நிலையில் இந்த இலங்கை மாநகரையும் , நம் படைகளையும் நான் காக்கும் வழிதான் என்ன ?” என்று கவலையுடனேயே இலங்கேஸ்வரன் கேட்கின்றான் . அதற்கு அவன் மந்திரி , பிரதானிகள் ஆன அரக்கர்களோ ராவணனைப் பாராட்டிப் பேசுகின்றார்கள் . “ இலங்கேஸ்வரா , ராவணா , உன் வீரம் சொல்லவும் முடியுமோ ? நாகர்கள் , யக்ஷர்கள் , யமன் , வருணன் , வருணனின் மகன்கள் , குபேரன் , அவன் செல்வம் தானவர்களின் தலைவன் மது , தேவேந்திரர்களின் தலைவன் இந்திரன் போன்ற பலரை நீங்கள் வெற்றி கொண்டுள்ளீர்கள் அரசே ! பெரும் ஆற்றல் படைத்த பல க்ஷத்திரியர்களை நீங்கள் வென்றுள்ளீர்கள் . கவலைக்கே இடமில்லை . தாங்கள் இங்கேயே இருந்தாலே போதுமானது . இந்திரஜித் ஒருவனே போதும் அனைவரையும் அழிக்க . சமுத்திரத்தைக் கடக்கும் முன்பே வானர வீரர்களை அடக்கிவிட்டு வெற்றியோடு திரும்பி வருவான் .” என தைரியம் சொல்லப் பின்னர் அவன் மந்திரிகள் ஆன பிரஹஸ்தன் , துர்முகன் போன்றோரும் அதை ஆதரித்தே பேசுகின்றனர் . இவர்களில் , வஜ்ரதம்ஷ்ட்ரன் என்னும் அரக்கன் கூறுகின்றான் : தேர்ந்தெடுத்த அரக்கர்களை மனிதர்களாய் மாறும் வல்லமை படைத்தவர்களை மனிதர்களாய் மாறச் சொல்லி , ராமனை அடைந்து பின் வரும் வார்த்தைகளைத் தெரிவிக்க வேண்டும் :’ ராமா , உன் தம்பியாகிய பரதனால் நாங்கள் அனுப்பப் பட்டு படையோடு வந்துள்ளோம் . பரதனும் வந்து கொண்டிருக்கின்றார் . பரதனைச் சந்திக்கும் ஆவலில் , தன் படையோடு ராமன் பரதன் வரும் வழிக்குச் செல்லும்போது , நாம் காத்திருந்து சூழ்ச்சியால் முறியடிப்போம் .” என்று யோசனை சொல்லுகின்றான் . . கும்பகர்ணனின் மகன் ஆன நிகும்பன் தான் ஒருவனே தனியாய்ச் சென்று , அனைவரையும் அழித்துவிட்டு வருவதாய்ச் சொல்லுகின்றான் . அரக்கர்கள் அனைவருக்கும் வீரம் பொங்க அனைவரும் வெற்றிக் கோஷம் இட்டுக் கொண்டு , போருக்குச் செல்லலாம் எனக் கோஷம் இடுகின்றனர் . அப்போது விபீஷணன் , ராவணனின் தம்பியானவன் எழுந்து , தன் இரு கைகளையும் கூப்பிக் கொண்டு பேசத் தொடங்கினான் . :” சாம , தான , பேத , தண்டம் போன்ற நான்கு வழிகளில் முதல் மூன்று வழிகளினால் பயன் இல்லை எனத் தெரிந்தால் மட்டுமே நான்காவது வழியைப் பிரயோகிக்க வேண்டும் . மேலும் தெய்வத்தால் கைவிடப் பட்டவர்கள் , அஜாக்கிரதைக் காரர்கள் போன்றவர்களிடம் பிரயோகிக்கலாம் என்று தர்ம சாத்திரம் சொல்லுகின்றது . ஆனால் ராமன் அப்படிப் பட்டவர்களில் இல்லை . வெற்றிக்கும் , வீரத்துக்கும் இலக்கணம் ஆன அவரை எவ்வாறு எதிர்ப்பது ? சினத்தை வென்றவரும் , தெய்வபலம் பொருந்தியவரும் ஆக இருக்கின்றாரே ? அதை யோசியுங்கள் . நியாயமும் , தர்மமும் அவர் பக்கமே என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் . ராமன் தானாக வலிய வந்து நம் மன்னருக்கு எந்தக் குற்றமும் செய்யவில்லையே ? அவர் மனைவியை நம் மன்னர் அபகரித்து வந்தார் சூழ்ச்சியினால் . அதன் பின்னரே அவர் நமக்கு எதிரியாகி இருக்கின்றார் . கரன் கொல்லப் பட்டதும் கூட தன் வரம்பு கடந்து நடந்து கொண்டதாலேயே தானே ? மேலும் தன்னைத் தாக்க வருபவர்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் இயல்பு அனைவருக்கும் இருக்கின்றதல்லவா ? “ மாற்றான் மனைவியான சீதையை அரசன் அபகரித்து வந்திருக்கின்றபடியாலே தானே நமக்கு இத்தகைய துன்பம் விளைகின்றது ? சீதையால் நமக்குப் பெரும் விபத்தே வந்து சேரும் . அவளை அவளுக்கு உரிய இடத்தில் சேர்ப்பிக்க வேண்டியதே நம் கடமை ஆகும் . ராமரை விரோதித்துக் கொண்டு , பெரிய பட்டணமும் , செல்வம் கொழிக்கும் இடமும் ஆன இந்த இலங்கையை அவர் படை வீரர்கள் அழிப்பதில் இருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் . வானர வீரர்களின் தாக்குதலில் இருந்தும் நம்மையும் , நம் உறவினர்களையும் , படை வீரர்களையும் , நம் நாட்டையும் , குடி மக்களையும் நாம் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் . ஆகவே சீதை திருப்பி அனுப்பப் படவேண்டும் . நாம் அனைவருக்கும் நல்லதே செய்வோம் . சீதை ராமனிடம் திரும்பிப் போகட்டும் .” என்று சொன்னான் . ஆனால் அந்தக் கருத்துக்களுக்கு எந்தப்பதிலும் சொல்லாமல் ராவணன் திரும்பித் தன் மாளிகைக்குப் போய்ச் சேர்ந்தான் . மறுநாள் ????? 50 கதை, கதையாம், காரணமாம், ராமாயணம் பகுதி 50 மறுநாள் காலையில் தன் தமையன் ராவணனின் இருப்பிடம் நோக்கிச் சென்றான் விபீஷணன் . மிக்க பாதுகாப்புடன் , திறமை மிக்க அறிவிற் சிறந்த , துரோக சிந்தனை இல்லாத மந்திரி , பிரதானிகளைக் கொண்ட ராவணனின் அரண்மனையானது அந்தக் காலை வேளையில் மிக்க மகிழ்வுடன் கூடிய பெண்களுடனும் , தங்கக் கதவுகளையும் கொண்டு விளங்கியதாம் . வேத கோஷங்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த வேளையில் விபீஷணன் சென்று , அண்ணனை வணங்கிவிட்டு , அண்ணனின் ஆணைக்குப் பின்னர் ஆசனத்தில் அமர்ந்தான் . அமர்ந்தவன் , ராவணனுக்கு நல்வார்த்தைகளைக் கூறவேண்டி ஆரம்பித்தான் . “ அரசே , சத்துருக்களை அழிப்பவரே , சீதையை நீங்கள் இங்கே கொண்டு வந்து சேர்த்ததில் இருந்து , இலங்கையில் நல்ல சகுனங்களே காணப்படவில்லை . பசுக்கள் பால் கறப்பதை நிறுத்திவிட்டன . யாகத்துக்காக மூட்டப் படும் அக்னியானது , சுடர் விட்டு ஒளி வீசி எரியவில்லை . புகையும் , தீப்பொறிகளும் கலந்து மங்கலாக இருக்கின்றது . யாகசாலைகளிலும் , வேதம் ஓதும் இடங்களிலும் பாம்புகளும் , எலும்புகளும் காணப்படுகின்றன . இன்னும் யானைகள் சோர்ந்து இருப்பதோடல்லாமல் , ஒட்டகங்களும் முடி உதிர்ந்து சிகிச்சைக்குக் கட்டுப்படாமல் இருக்கின்றது . நரிகள் ஊளையிடுகின்றன , காக்கைகளும் , கழுகுகளும் நகரில் பறந்து கொண்டிருக்கின்றன . நான் பேராசை எதுவும் கொண்டு உங்களுக்கு இதைச் சொல்லவில்லை . ஒருவேளை உண்மையை எடுத்துரைக்க மந்திரிமார்களுக்குத் தயக்கமாய் இருக்கின்றதோ என்னவோ ? அல்லது பயத்தினால் சொல்லவில்லையோ ? தெரியவில்லை . சீதையைத் துறந்துவிடுவது ஒன்றே சரியாகும் . நன்கு ஆலோசித்து முடிவு எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் .” என்று சொன்னான் . விபீஷணன் சொன்னதைக் கேட்ட ராவணன் சற்றும் கலங்காமல் “நீ சொன்னபடிக்கான சகுனங்கள் எதுவும் எனக்குத் தெரியவில்லை . ராமனிடம் சீதையைத் திரும்பக் கொடுக்கும் பேச்சுக்கே இடம் இல்லை . சென்று வா .” என்று விடை கொடுத்து அனுப்பி விட்டான் . பின்னர் தனக்கு ஆதரவும் , தைரியமும் அளித்த மந்திரிமார்களிடம் சென்று மீண்டும் கலந்தாலோசிக்க எண்ணித் தன் அழகு வாய்ந்த ரதத்தில் ஏறிக் கொண்டு தன்னுடைய மந்திரிசபையில் கலந்து கொள்ளச் சென்றான் . படைத் தளபதிக்கு நகரைப் பாதுகாக்கும்படி உத்தரவிட்ட ராவணன் , தன் மந்திரி , பிரதானிகளைப் பார்த்துச் சொல்கின்றான் :” இன்பமோ , துன்பமோ , லாபமோ , நஷ்டமோ , சாதகமோ , பாதகமோ உங்கள் கடமையை உணர்ந்து நீங்கள் அனைவரும் செயலாற்ற வேண்டும் . இதுவரை உங்களை எல்லாம் முன்வைத்து நான் செய்த அனைத்துக் காரியங்களும் வெற்றியையே கண்டிருக்கின்றன . ஆகவே , தொடர்ந்து நமக்கு வெற்றியே கிடைக்கும் எனவும் நம்புகின்றேன் . மேலும் நான் செய்த ஒரு காரியம் பற்றிய விபரமும் உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் . கும்பகர்ணன் இன்னும் தூக்கம் கலைந்து எழுந்திருக்கவில்லையே என யோசித்தேன் . இப்போது தான் அவன் விழித்திருக்கின்றான் என்ற தகவல் கிடைத்தது . ஆறுமாதம் உறங்கி விழிக்கும் சுபாவம் கொண்ட அவன் விழித்திருக்கும் இவ்வேளையில் இது பற்றிப் பேச எண்ணி உள்ளேன் . நான் தண்டக வனத்தில் இருந்து , ராமனின் மனைவியான சீதையைக் கடத்தி வந்தேன் . என்னுடைய ஆசைக்கு அவள் இணங்க மறுக்கின்றாள் , அவளைப் போன்ற பெண்ணை நான் இம்மூவுலகிலும் பார்க்கவில்லை . நெருப்பைப் போல் ஜொலிக்கின்றாள் அவள் . நான் என் வசமிழந்துவிட்டேன் , அவள் அழகில் . ராமனைச் சந்திப்போம் என்ற எண்ணத்தில் அவள் என்னிடம் ஒரு வருஷம் அவகாசம் கேட்டிருக்கின்றாள் .” என்று நிறுத்தினான் ராவணன் . உண்மையில் சீதை அவகாசம் எதுவும் கேட்கவில்லை . உறுதியாக ராவணன் ஆசைக்கு இணங்க மறுத்து விடுகின்றாள் . ராவணன் தான் அவளுக்கு ஒரு வருஷம் அவகாசம் கொடுக்கின்றான் . எனினும் , தனக்குக் கீழ்ப்பட்டவர்கள் ஆன மந்திரி , பிரதானிகளிடம் உண்மைக்கு மாறாக இவ்விதம் சொல்லியதன் மூலம் தன் கெளரவம் நிலைநாட்டப் பட்டதாய் ராவணன் நினைத்தானாம் . மேலும் சொல்கின்றான் ராவணன் :” அந்த ராமனும் , அவன் தம்பியும் , வானர வீரர்களுடன் கடல் கடந்து எவ்விதம் வருவார்கள் ? ஆனால் அனுமன் வந்து இங்கே விளைவித்து விட்டுப் போயிருக்கும் நாசத்தை நினைத்துப் பார்த்தால் , எது , எப்போது , எவ்விதம் சாத்தியம் என நினைக்கக் கூட முடியாமல் இருக்கின்றது . நீங்கள் அனைவரும் நன்கு யோசித்து உங்கள் முடிவைச் சொல்லுங்கள் .” என்று கேட்கின்றான் . அப்போதே பெரும் தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்து வந்திருந்த கும்பகர்ணன் இவற்றை எல்லாம் கேட்டுக் கோபம் மிக அடைகின்றான் :” சீதையை அபகரித்துக் கொண்டு வந்தபோதே இவற்றை எல்லாம் நீங்கள் யோசிக்கவில்லையா ?? அப்போது எங்களை யாரையும் எதுவும் நீங்கள் கேட்கவில்லையே ? உங்கள் தகுதிக்கு உகந்த காரியமா இது ? நன்கு யோசித்துச் செய்தீர்களா இதை ? அப்படி இருந்தால் எந்த மன்னனுக்கும் தோல்வி என்பதே இல்லை . முறை தவறி நீர் செய்த இந்தக் காரியம் , சற்றும் தகாத இந்தக் காரியம் உம்மால் செய்யப் பட்டது என்பது வெட்கத்துக்கு உரியது . உமக்கு இன்னும் ஆயுள் பலம் இருக்கின்றது போலும் , அது தான் அந்த ராமன் உம்மை இன்னும் விட்டு வைத்திருக்கின்றான் .” என்று கடுமையான வார்த்தைகளால் ராவணனைச் சாடுகின்றான் கும்பகர்ணன் . ராவணன் முகம் வாடக் கண்டு பொறுக்காத அவன் பின்னர் , “ சரி , சரி , நடந்தது , நடந்துவிட்டது . உமக்காக நான் அந்த இரு அரசகுமாரர்களைக் கொன்று உம்மை இந்த இக்கட்டில் இருந்து காப்பாற்றுகின்றேன் . யார் அவர்கள் ?? தேவாதி தேவர்களாய் இருந்தாலும் சரி , அவர்கள் இருவரையும் , அந்த வானரப் படையையும் நாசம் செய்துவிட்டு எனக்கு உணவாக்கிக் கொள்கின்றேன் . அதன் பின்னர் சீதை உங்களுக்கு உட்பட்டுத் தான் தீரவேண்டும் . நீங்கள் இன்பத்தை அனுபவிக்கலாம் .” என்று தேற்றுகின்றான் . இதைக் கேட்கும் அவன் மந்திரிகளில் ஒருவன் ஆன மகாபார்ச்வன் , “ சீதையைத் துன்புறுத்திப் பலவந்தமாய் அவளுடன் கூடி இன்பம் அனுபவியுங்கள் . சீதையை வற்புறுத்துங்கள் . எதிரிகளை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் .” என்று ராவணன் மனதில் ஆசைத் தீயை மூட்டி விடுகின்றான் . அதைக் கேட்ட ராவணன் , தனக்கு இடப்பட்ட சாபம் ,” எந்தப் பெண்ணையாவது பலவந்தமாய் அனுபவித்தால் தலை சுக்கு நூறாகிவிடும்” என்று இருப்பதை அவனிடம் நினைவு கூர்ந்தான் . கடலை விடக் கடினமான , காற்றை விட வேகமான , நெருப்பை விடத் தகிக்கும் என்னுடைய ஆற்றலை இந்த ராமன் சந்தேகப் பட்டுக் கொண்டு என்னுடன் மோத வருகின்றானா என்றெல்லாம் பேசினான் தசகண்டன் . விபீஷணன் மீண்டும் அண்ணனுக்கு நல்லுரை கூற ஆரம்பித்தான் . “ இந்த சீதை நாகப் பாம்பைப் போன்றவள் . யாராவது விஷம் கக்கும் பாம்பை எடுத்துக் கொண்டாடுவார்களா ? நீர் அவ்விதம் செய்கின்றீரே ? இவளை உம் கழுத்தில் கட்டியது யார் ? யார் இந்த யோசனையை உமக்குச் சொன்னது ? சீதையை வானரப் படை இலங்கை வந்து சேருமுன்னரே ராமனிடம் ஒப்படையுங்கள் . பேராபத்து நம்மைச் சூழ்ந்துவிடும் .” என்று சொல்லவும் பிரஹஸ்தன் விபீஷணனிடம் , “ யக்ஷர்கள் , கின்னரர்கள் , தானவர்கள் , தேவர்கள் , நாகர்கள் , அசுரர்கள் என்று யாரிடம் இருந்தும் நமக்கு எவ்வித ஆபத்தும் வரப் போவதில்லை . வரவும் வராது . இது இவ்வாறிருக்க மனிதர்களின் அரசன் ஆன ஒருவன் , அதுவும் அரசாள முடியாமல் காட்டுக்கு வந்த ஒரு மனிதன் , அவனால் நமக்கு என்ன நேரிடும் ?” என்று சர்வ அலட்சியமாய்ப் பேசுகின்றான் . விபீஷணன் அதற்குச் சொல்கின்றான் :” ஏனெனில் தர்மம் அவன் பக்கம் இருக்கின்றது . நியாயம் அவனிடம் இருக்கின்றது . அந்த ராமனை எவராலும் ஏன் , தேவேந்திரனால் கூட வெல்ல முடியாது . அப்படிப் பட்ட ஆற்றல் படைத்தவன் . அவனிடம் போய் நாம் மோத வேண்டாம் . இது நம் நன்மைக்காகவே சொல்லுகின்றேன் . அதுவும் அரக்கர் குலத் தலைவன் ஆன ராவணனைக் காப்பாற்றவே இதைச் சொல்கின்றேன் . சீதை திருப்பி அனுப்பப் பட வேண்டும் .” என்று விபீஷணன் வற்புறுத்தவும் , ராவணன் கோபம் மிகக் கொண்டு , “ நம் அரக்கர் குலத்தில் உன் போல் தொடை நடுங்கி , வீரம் இல்லாதவன் எப்படிப் பிறந்தானோ ?” என்று சொல்லிவிட்டு , மீண்டும் சபையினரை பார்த்துப் பேசத் தொடங்குகின்றான் . 51 கதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 51 - யுத்த காண்டம் விபீஷணனை இகழ்ந்து பேசிய ராவணனைத் தொடர்ந்து அவன் மகனும் , இந்திரனை வென்று புகழ் நாட்டியவனும் ஆன இந்திரஜித் தன் சிற்றப்பனை அரக்கர் குலத்திலேயே தைரியமும் , வீரமும் , துணிவும் , வலிமையும் இல்லாதவன் என்று தூற்றுகின்றான் . மேலும் இந்திரஜித் , “ இந்த சாதாரண வலிமை பொருந்திய இரு அரச குமாரர்களையும் நம் அரக்கர் கூட்டத்தில் உள்ள பலவீனமானவனே கொன்று விடுவான் . நீர் கோழையைப் போல் நம்மைப் பயமுறுத்தும் காரணம் என்ன ? தேவேந்திரனை நான் வென்றது உமக்குத் தெரியாதா ? அவன் யானையான ஐராவதம் என்னால் பூமியில் தள்ளப் பட்டதை நீர் அறிய மாட்டீரா ? ” என்றெல்லாம் வீரம் பேசினான் . பின்னரும் விபீஷணன் விடாமல் அவனைப் பார்த்து , ” நீ இன்னும் சிறுவனே ! உனக்கு நன்மை , தீமை பற்றிய பாகுபாடு அறிந்திருக்கவில்லை . அதனால் தான் உன் தந்தைக்கு அழிவு ஏற்படும் என்பது தெரியாமல் அழிவுக்கான பாதையையே நீயும் தேர்ந்தெடுக்கின்றாய் . உன்னைப் போன்ற சிறுவனின் ஆலோசனையைக் கேட்கும் மன்னனும் அறிவற்றவனே ! உண்மையில் உன் தகப்பனும் , இந்த இலங்கையின் அரசனும் ஆன ராவணனின் நலனை நீ விரும்புவாயெனில் இவ்வாலோசனையைக் கொடுக்க மாட்டாய் ! கெடுமதி படைத்தவனே ! நீ உளறுகின்றாய் ! எமனை ஒத்த ராமனின் வில்லில் இருந்து கிளம்பும் பாணங்கள் ஆன அம்புகளை வெல்லும் வல்லமை நம்மிடம் மட்டுமில்லை , யாரிடமும் கிடையாது . நீ அந்த ராமனின் வலிமையையும் , தவத்தையும் , ஒழுக்கத்தையும் , தர்மத்தையும் அறியாமல் பேசுகின்றாய் . தர்மம் அவன் பக்கம் இருக்கின்றது . சகல மரியாதைகளுடன் சீதையை அவனிடம் நாம் ஒப்படைத்தோமானல் நமக்கும் , நம் அரக்கர் குலத்துக்கும் என்றென்றும் நன்மையே !” என்று சொல்கின்றான் விபீஷணன் . ஆனால் பேரழிவுக் காலத்தை எட்டிவிட்டதாலோ என்னமோ , ராவணன் விபீஷணன் சொற்களால் பெரும் கோபமே அடைந்தான் . ” காட்டில் வளரும் சுதந்திரமான யானையானது எவ்வாறு தன் குலத்தைச் சேர்ந்த மற்றொரு யானையால் பிடிபட்டு மனிதர் வசம் ஆகின்றதோ , அது போல் நீயும் நம் குலத்தைச் சேர்ந்தவனாய் இருந்தாலும் இன்னொருவர் வசம் சென்று அவர்கள் பக்கமே பேசுகின்றாய் . இது உனக்கு அழகல்ல . மேலும் மூவுலகிலும் என்னை மதிப்பதைக் கண்டும் , தேவருலகையும் நான் வெற்றி கொண்டதைக் கண்டும் , என் வல்லமையைக் கண்டும் , என் விரோதிகள் அனைவரையும் நான் காலால் மிதித்துக் கொண்டு இருக்கும் பலம் பெற்றவன் என்பதும் உன்னால் சகிக்க முடியாமல் இருக்கின்றது விபீஷணா ! யானை தன் தலையிலேயே தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதைப் போல் நீ உன் நிலையை நீயே கெடுத்துக் கொள்கின்றாய் . இது நல்லதல்ல . இந்தக் குலத்துக்கும் ஏற்றதல்ல . குலத்தைக் கெடுக்க வந்துள்ளாய் நீ .” என்று சொல்கிறான் விபீஷணன் உடனேயே தன் ஆசனத்தில் இருந்து எழுந்தான் . அவனுடன் அவனை ஆதரிக்கும் நால்வரும் எழுந்தனர் . “ மன்னனே , உன்னை நீயே ஏமாற்றிக் கொள்கின்றாயே ? நீ உன்னையே அடக்கிக் கொள்ளவில்லை . உனக்கு அழிவு காலம் நெருங்கிவிட்டதாலேயே உனக்கு வேண்டியவர்கள் சொல்லும் புத்திமதியை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கின்றாய் . ஒருவனுக்கு மனதுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக இந்த அறிவுரையைச் சொல்லாமல் இருப்பவன் , உண்மையானவன் அல்ல . நீ இறந்துவிடப் போகின்றாயே , என்ற கழிவிரக்கத்தினாலும் , நீ எப்படியாவது பிழைத்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தினாலும் நான் இவ்வளவு தூரம் உன்னிடம் எடுத்துச் சொன்னேன் . உன் நலனை நினைத்து நான் சொன்ன வார்த்தைகளை உனக்குப் பிடிக்கவில்லை எனில் விட்டு விடு . ஆனால் எவ்வாறேனும் அரக்கர் குலத்தையும் , உன்னையும் காத்துக் கொள் . உனக்கு எல்லா நலன்களும் உண்டாகப் பிரார்த்திக்கின்றேன் . நான் இல்லை எனினும் உனக்கு நன்மையே உண்டாகட்டும் என நினைக்கின்றேன் . உன் மனம் போல் இன்புற்று வாழ்வாய் !” என்று சொல்லிவிட்டு விபீஷணன் தன் ஆதரவாளர்களுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான் . அதற்கு ஒரு முகூர்த்தம் என்று சொல்லப் படும் ஒன்றரை நாழிகைக்குப் பின் அவன் ராம , லட்சுமணர்கள் இருக்கும் இடம் தேடி வந்தான் . கூடியிருந்த வானரர்கள் விண்ணிலே நிலை பெற்ற விபீஷணனையும் , அவனுடன் வந்த நால்வரையும் கண்டு திகைத்தனர் . 52 கதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 52 (விபிஷண சரணாகதி) - யுத்த காண்டம் பல்வகை ஆயுதங்களுடன் , மாபெரும் போர் வீரனைப் போன்ற தோற்றத்துடன் காணப்பட்ட விபீஷணனையும் , அவன் நண்பர்கள் நால்வரையும் பார்த்து சுக்ரீவன் சிந்தனையில் ஆழ்ந்தான் . அனுமனையும் , மற்றவர்களையும் பார்த்துப் பின்னர் இவன் இந்த நால்வரோடு இங்கே வந்திருப்பதைப் பார்த்தால் நம் அனைவரையும் கொல்லவே வந்திருக்கின்றான் என்றே தோன்றுகின்றது என்று சொல்கின்றான் . அப்போது உரத்த குரலில் விபீஷணன் , “ அரக்கர் குலத் தலைவன் ஆன ராவணன் என்ற பெயர் கொண்ட , தீய நடத்தை படைத்த மன்னன் , இலங்கையின் அரசன் ஆக இருக்கின்றான் . அவன் எனக்கு மூத்த அண்ணன் . நான் அவனின் இளைய சகோதரன் . அந்த ராவணன் , ராமனின் மனைவியான சீதையை ஜனஸ்தானத்தில் இருந்து ஜடாயு என்னும் கழுகரசனைக் கொன்றுவிட்டு அபகரித்து வந்துவிட்டான் . அவளை அசோகவனத்தில் அரக்கியர்கள் நடுவில் சிறை வைத்துள்ளான் . நான் அவனிடம் பலமுறைகள் வாதம் புரிந்து சீதையைத் திருப்பி அனுப்பச் சொல்லிப் பார்த்தேன் . ஆனால் அவன் திரும்ப அனுப்பச் சம்மதிக்கவில்லை . அவனுக்கும் , அவன் குடும்பத்துக்கும் , குடிமக்களுக்கும் , நாட்டுக்கும் , அரக்கர் குலத்துக்கும் நன்மையையே நினைத்த என்னை அவன் இழிவாகப் பேசிவிட்டான் . அடிமை போல் நடத்திவிட்டான் . என் மனைவி , மக்களை அங்கேயே விட்டு விட்டு இங்கே உங்களிடம் அடைக்கலம் தேடி வந்துள்ளேன் . ஈரேழு பதினாலு உலகங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கக் கூடிய வல்லமை படைத்த ராமனிடம் சென்று விபீஷணன் வந்திருக்கின்றான் என்று அறிவியுங்கள் .” என்று சொல்கின்றான் . அனுமன் சமுத்திரத்தைக் கடக்க அவ்வளவு கஷ்டப் பட்டபோது , நினைத்த நேரத்தில் நினைத்த உருவை எடுக்கக் கூடிய வல்லமை பெற்றிருந்த அரக்கர் குல இளவல் , தான் பெற்றிருந்த வரங்களின் மகிமையாலும் , தவ வலிமையாலும் வான் வழியே வந்து ராமனைச் “சரணம்” என்று அடைந்தான் . அப்போது சுக்ரீவனும் , மற்றவர்களும் விபீஷணன் சொன்னதைக் கேட்டுக் கொண்டு ராமனிடம் சென்று , ராவணனின் ஆள் ஒருவன் நான்கு பேரோடு வந்திருக்கின்றான் . அவன் நடத்தை எவ்வாறிருக்குமோ என்று சந்தேகமாகவே இருக்கின்றது . பிறர் கண்ணுக்குக் கூடத் தெரியாமல் சஞ்சரிக்கக் கூடிய அரக்கர் குலத்தவன் ஒருவன் இங்கே வந்துள்ளான் என்பது சற்றே கவலை அளிக்கக் கூடியதாய் உள்ளது . ஒருவேளை அந்த ராவணனின் ஒற்றர்களில் ஒருவனாயும் இருக்கலாமோ ? நாம் கவனமாய் இருக்கவேண்டும் . நம்மிடையே பிளவை உண்டு பண்ணி விடுவானோ என்றும் அஞ்சுகின்றேன் . எதிரியான அரக்கர்களில் ஒருவன் நமக்கு உதவி செய்கின்றேன் என்று வந்திருப்பது சற்றும் ஏற்கத் தக்கது அல்ல . நம் பலவீனத்தைத் தெரிந்து கொண்டு நம்மைத் தாக்கவும் முற்படலாம் . அவனைச் சிறைப்படுத்துவதே சிறந்தது .” என்று சொல்கின்றான் வானர அரசன் ஆன சுக்ரீவன் . ராமர் இதை எல்லாம் கேட்டுவிட்டு மற்ற வானரர்களிடம் ,” சுக்ரீவன் சொன்னதை நீங்கள் அனைவரும் கேட்டீர்கள் . தன்னை நம்பியவர்களுக்கு நம் மனதைத் திறந்து பேசுவதும் , ஆலோசனை சொல்வதும் நண்பர்களின் லட்சணம் , அழகு . ஆகவே நீங்கள் உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள் ,” என்று கேட்கின்றார் . வானரர்களில் பலரும் ராமனைப் பார்த்து , “ உங்கள் இஷ்டம் எதுவோ அப்படியே செய்யுங்கள் . உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை .” என்று பணிவோடு சொல்கின்றனர் . இவர்களில் அங்கதன் எழுந்து , “ நாம் நன்கு ஆராய்ந்து , கலந்து பேசி , இவனை ஏற்பதால் நமக்கு நன்மை உறுதி எனத் தெரிந்தால் ஏற்போம் , இல்லை எனில் வேண்டாம் .” என்று சொல்கின்றான் . சரபன் என்ற இன்னொரு வானரன் ஒற்றன் ஒருவனை அனுப்பி விபீஷணனைச் சோதித்துவிட்டு அனுமதிக்கலாம் என்று கூறுகின்றான் . ஜாம்பவானோ , இவனை நம்பக் கூடாது . ராவணனிடமிருந்து வந்துள்ளான் , இவனை எவ்வாறு நம்புவது என்று சொல்கின்றார் . மைந்தன் , கொஞ்சம் கொஞ்சமாய் விசாரிப்போம் , இவன் எப்படிப் பட்டவன் என்பது புரியும் . பின்னர் முடிவுக்கு வரலாம் என்று சொல்கின்றான் . அனுமன் எழுந்து இரு கையையும் கூப்பிக் கொண்டு சொல்லுவார் :” இங்கே பேசிய அனைவர் கருத்திலும் நான் தவறு காண்கின்றேன் . அனைவரும் அறிவிற் சிறந்தவர்களே ஆயினும் இவ்விஷயத்தில் நீங்கள் சொல்லும் எந்தக் கருத்தும் உதவாது . விபீஷணனை ஒற்றனை அனுப்பித் தெரிந்து கொள்ள முயன்றால் அவனுக்குக் கோபம் வரக் கூடும் . நான் அனுப்பியதன் காரணமும் அவனுக்குப் புரியாமல் போகாது . நன்மை நாடி வந்திருந்தானானால் மனம் புண்படும் , அல்லாமல் தீமை நாடி வந்திருந்தானானால் , இன்னும் அதிக மோசமாய் நடந்து கொள்ளுவான் . இம்முயற்சி பலனளிக்காது . ஆனால் என்னைப் பொறுத்த வரையில் விபீஷணன் அமைதியாகவும் , சாந்தமாகவும் காணப்படுகின்றான் . ஆகையால் அவனால் நமக்கு நன்மையே ஏற்படும் . பேச்சிலும் தெளிவும் , மன உறுதியும் காணப்படுகின்றது . கெட்ட நோக்கத்தினால் வந்தவனுக்கு இவ்வளவு தெளிவும் , மன உறுதியும் காணப்படாது . அனைத்தையும் யோசித்தே அவன் இங்கு வந்திருக்க வேண்டும் . ராவணனை விட தாங்கள் மேம்பட்டவர் என்பது அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும் .. இலங்கை தாக்கப் படும் என்பதையும் அறிந்து கொண்டிருக்கின்றான் . மேலும் வாலிக்கு நேர்ந்த கதியையும் அறிந்து வைத்துள்ளான் . சுக்ரீவன் உங்களோடு இருக்கின்றார் என்பதையும் தெரிந்து வைத்துக் கொண்டே இனிமேல் இங்கே வந்து சேருவதே உசிதம் என்றே வந்திருக்கின்றார் . ஏற்கத் தக்கவன் ஆன அவனை ஏற்பது நமக்கு நன்மை பயக்கும் . இதுவே என் கருத்து .” என்று சொல்லி அமர்கின்றார் . அனுமன் சொன்னதைக் கேட்ட ராமனுக்கும் மனம் மகிழ்ச்சி அடைந்தது . தானும் அவ்வாறே நினைத்ததாய்ச் சொன்ன அவர் மேலும் சொன்னார் :” அனைவரும் என்னுடைய நன்மையைக் கருதியே பேசினீர்கள் என்பதில் சற்றும் சந்தேகம் இல்லை . முதலில் ஒரு விஷயம் தெளிவாய்ச் சொல்கின்றேன் . என்னிடம் “சரணாகதி” என்று சரண் அடைந்தவனை நான் எக்காரணம் கொண்டும் நிராகரிக்க மாட்டேன் . அவன் தீயவனாகவே இருந்தாலும் .” என்று சொல்ல சுக்ரீவனும் , மற்ற வானரர்களும் மனம் சமாதானம் அடையவில்லை . சுக்ரீவன் சொல்கின்றான் :” தன் சொந்த சகோதரனையே ஆபத்தில் விட்டுவிட்டு ஓடி வந்து விட்ட இவன் வேறு யாரைத் தான் காட்டிக் கொடுக்க மாட்டான் ?” என்று சொல்லவே , ராமர் சிரித்துக் கொண்டே சொல்கின்றார் :” விபீஷணன் உலக இயல்புப் படியே இங்கே வந்துள்ளான் . ஒரு அரசனுக்கு ஆபத்து நேரிடும் போது அவன் உறவினர்கள் எவ்வாறேனும் , அவனைத் தாக்கி நாட்டைக் கைப்பற்றவே முயல்கின்றனர் . இவன் அம்மாதிரியே இங்கே வந்திருக்கின்றான் . இவனுக்கு ராஜ்யத்தின் மீது ஆசை வந்துள்ளது . அரக்கர்களிடையே அச்சம் தோன்றிவிட்டதை இவன் வரவு நமக்கு உணர்த்துகின்றது . இவன் இங்கே வந்திருப்பதால் அரக்கர்களிடையே பெரும் பிளவும் உண்டாகலாம் . சுக்ரீவா , எல்லா சகோதரர்களும் பரதனைப் போன்றவர்கள் அல்ல . எல்லா மகன்களும் ராமனைப் போன்றவர்கள் அல்ல . எல்லா நண்பர்களும் சுக்ரீவனைப் போன்றவர்கள் அல்ல . “ என்று சொல்கின்றார் . சுக்ரீவனும் ராமனைப் பார்த்து , மீண்டும் , மீண்டும் விபீஷணன் கொல்லப் பட வேண்டியவன் என்ற கருத்தை வலியுறுத்துகின்றான் . ராமர் அவன் கூறியதைப் பற்றி நன்கு யோசித்துவிட்டுப் பின்னர் சொல்கின்றார் :” விபீஷணன் தீயவனாகவே இருந்தாலும் என்னால் அவனை அழிக்க முடியும் . மேலும் தனக்குக் கெடுதல் செய்த வேடனிடம்கூட ஒரு புறா அன்பு காட்டியதை நாம் அறிந்துள்ளோம் . அதையும் நினைத்துப்பார்க்க வேண்டும் . மேலும் நம்மிடம் அடைக்கலம் என்று கை கூப்பி , பாதுகாப்பு வேண்டி வந்துவிட்டவன் விரோதியே ஆனாலும் அவனைப் பாதுக்கக்கவேண்டியது நம் கடமை . அவனைத் தாக்கக் கூடாது . நம் உயிரைக் கொடுத்தாவது அவனைக் காக்க வேண்டும் , இது நம் கடமை . மேலும் அடைக்கலம் என்று வந்தவனைப் பாதுகாக்க முடியாமல் அவன் அழிக்கப் பட்டால் நாம் செய்த புண்ணியம் எல்லாம் அழிந்தவனைச் சேர்ந்து நமக்குப்பாவமே வந்து சேரும் . சுக்ரீவா ! “ இனி நான் உன்னுடையவன்” என்று கூறிக் கொண்டு இனியும் யார் வந்தாலும் , அவர்களை நான் ஏற்றுக் கொண்டு இறுதி வரை காப்பாற்றுவது என் விரதம் . ராவணனாகவே இருந்தாலும் சரி ! போய் அவனை அழைத்து வா , “ அபயம் என்று வந்தவனைக் காக்க நான் தயாராகிவிட்டேன் என்று சொல் .” என்று சொல்கின்றார் . சுக்ரீவனும் ராமன் சொல்வதில் உள்ள நியாயத்தையும் , தர்மத்தையும் உணர்ந்து , தர்மத்தில் இருந்து சற்றும் பிறழாமல் ராமர் நடந்து கொள்வதைப் பாராட்டி விட்டுத் தானும் , விபீஷணனை அழைத்துவர ஏற்பாடு செய்வதாய்ச் சொல்லுகின்றான் . விபீஷணன் , விண்ணில் இருந்து இறங்கி , ராமனிடம் வந்து இரு கை கூப்பி நமஸ்கரித்து , ராவணனின் இளைய சகோதரன் ஆன நான் உங்களை நாடி வந்துவிட்டேன் . என்னுடையது என்று சொல்லக் கூடிய அனைத்தையும் துறந்து உங்களை நாடி நீங்களே சரணம் என்று வந்துள்ளேன் ,” என்று கூறுகின்றான் . ராமன் உடனே விபீஷணனைப் பார்த்து அரக்கர்களின் பலம் , பலவீனம் , ஆகியவற்றை உள்ளது உள்ளபடிக்கு எடுத்து உரைப்பாய் , என்று கேட்க விபீஷணனும் அவ்வாறே சொல்கின்றான் :”, பிரம்மன் அளித்த வரம் காரணமாய் , கந்தர்வர்கள் , நாகர்கள் , , பறவைகள் , என்று படைக்கப் பட்ட எந்த ஜீவராசியாலும் ராவணனைக் கொல்வது என்பது முடியாது . ராவணனுக்கு இளையவனும் , எனக்கு மூத்தவனும் ஆன கும்பகர்ணன் பலம் சொல்லி முடியாது . தேவேந்திரனை எதிர்க்கும் வல்லமை படைத்தவன் . கைலை மலையில் குபேரனின் படைத்தலைவனை வீழ்த்திய பிரஹஸ்தன் ராவணனின் படைத் தளபதி . வில்லாளியும் , எதிரிகளின் கண்ணுக்குத் தெரியாமல் போரிடக் கூடிய வல்லமை பெற்றவனும் தேவேந்திரனைச் சிறை எடுத்தவனும் ஆகிய இந்திரஜித் ராவணனின் மைந்தன் . இன்னும் மஹோதரன் , மஹாபார்சவன் , அகம்பனன் ஆகியோரும் முக்கியமானவர்களே . இவர்களைத் தவிர , எண்ணிலடங்கா அரக்கர் படையும் உள்ளது . அனைவருக்கும் மாமிசமும் , ரத்தமுமே உணவு . அவர்கள் உதவியோடு மூவுலகையும் ராவணன் எதிர்த்தான் . தேவர்களையும் யுத்தத்தில் வென்றவனே கெடுமதியாளன் ஆன ராவணன் .” என்று சொல்கின்றான் . ராமர் உடனேயே ராவணனின் வரங்கள் பற்றி அறிந்திருப்பதால் நீ கூறியவை அனைத்தும் உண்மையே எனத் தெரிய வருகின்றது . ராவணனையும் , அவனைச் சார்ந்தவர்களையும் கொன்றுவிட்டு உனக்கே இலங்கையின் முடியைச் சூட்டுகின்றேன் . பாதாளத்தில் போய்ப் புகுந்தாலும் , பிரம்மாவே வந்து அடைக்கலம் கொடுத்தாலும் ராவணன் என்னிடமிருந்து தப்பிக்க முடியாது . என் மூன்று சகோதரர்களின் புகழ் மீதும் ஆணையிட்டுச் சொல்கின்றேன் . இந்த அரக்கர்களை ஒழிக்காமல் அயோத்திக்குத் திரும்ப மாட்டேன் .” என்று சொல்கின்றார் . விபீஷணனும் அவரை வணங்கிவிட்டு அரக்கர்களை வெல்லும் வழியையும் , இலங்கையைத் தாக்கவும் வழியைத் தான் கூறுவதாயும் , அரக்கர் படையைப் பிளந்து கொண்டு உள்ளே நுழைந்து தாக்க உதவுவதாயும் சொல்கின்றான் . பின்னர் ராமன் முக மலர்ச்சியுடனும் , மகிழ்வுடனும் லட்சுமணனைப் பார்த்து , சமுத்திரத்தில் இருந்து நீர் எடுத்து வரச் சொல்கின்றார் . விபீஷணனுக்கு அரக்கர் மன்னனாய் இப்போதே அபிஷேகம் செய்து வை என்றும் சொல்கின்றார் . உடனேயே இதைச் செயல் படுத்துமாறும் லட்சுமணனைச் சொல்ல அவனும் உடனேயே சென்று சமுத்திரத்தில் இருந்து நீர் எடுத்து வந்து வானரர்கள் அனைவர் முன்னிலையிலும் ராமரின் கட்டளைப்படி விபீஷணனுக்கு அபிஷேகம் செய்து வைக்கின்றான் . வானரர்கள் அனைவரும் நன்று , நன்று , என்று கோஷமிட்டுக் கொண்டாடினார்கள் . விபீஷணனிடம் தங்கள் கவலையை அனுமனும் , சுக்ரீவனும் தெரிவிக்கின்றார்கள் . இத்தனை பெரிய வானரப் படை சமுத்திரத்தைக் கடந்து செல்வது எவ்வாறு ? எவ்வாறு அணுகினால் சமுத்திரத்தைக் கடக்க முடியும் ? என்று யோசனை கேட்கின்றார்கள் . 53 கதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 53 - யுத்த காண்டம் விபீஷணன் , சமுத்திரத்தைக் கடக்க , ராமரே சமுத்திர ராஜனை அணுகி உதவி கேட்க வேண்டும் எனச் சொல்கின்றான் . மேலும் இக்ஷ்வாகு குல மன்னன் ஆன சகரன் முயற்சியால் தோன்றியதே சமுத்திரம் . ஆகவே சமுத்திர ராஜன் இக்ஷ்வாகு குலத்துக்குக் கட்டுப் பட்டவன் . அவன் நிச்சயம் ராமனுக்கு உதவி செய்வான் .” என்று சொல்கின்றான் . ராமனிடம் சுக்ரீவன் இதைத் தெரிவிக்க அவரும் அந்த யோசனையை ஏற்றுக் கொண்டு , லட்சுமணனைப் பார்த்து மேலே என்ன செய்யலாம் என்று கேட்கின்றார் . லட்சுமணனும் , சமுத்திர ராஜனைக் கேட்டுக் கொள்வதே சிறந்த வழி என்று சொல்கின்றான் . ஒரு பாலத்தைக் கட்டாமல் சமுத்திரத்தைக் கடந்து செல்ல முடியாது . ஆகையால் நேரத்தை வீணாக்காமல் சமுத்திர ராஜனை உதவி செய்யுமாறு கேட்க வேண்டும் .” என்று சொல்கின்றான் . இதனிடையில் ராவணனால் அனுப்பப் பட்ட ஒற்றன் ஒருவன் வானரப்படையில் புகுந்து கொண்டு அனைத்து விபரங்களையும் அறிந்து கொண்டு ராவணனிடம் திரும்பிப் போய் ராமனின் படை பலத்தையும் , வானர வீரர்களின் எண்ணிக்கை மற்றொரு சமுத்திரமோ என்னும் அளவில் இருப்பதையும் தெரிவித்து விட்டு சமாதானம் செய்து கொள்வதா , அல்லது எதிரிகளிடையே பிளவை உண்டு பண்ணுவதா என்று முடிவு செய்யுமாறு கூறுகின்றான் . ராவணனும் இதைக் கேட்டுவிட்டு மற்றொரு ஒற்றன் ஆன சுகன் என்பவனை அழைத்து , சுக்ரீவனைச் சென்று அடைந்து , இனிமையாய்ப் பேசி , அவனைப் புகழ்ந்து , கிஷ்கிந்தைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தும்படிக் கேட்டுக் கொள்கின்றான் . சுகனும் ஒரு பறவையின் வடிவில் உடனேயே சமுத்திரக் கரை நோக்கிப் பறந்து வருகின்றான் . சுக்ரீவனை நெருங்கி , ராவணன் கூறியதைச் சொன்ன சுகனை உடனேயே வானரவீரர்கள் பிடித்து , ராமன் முன்னிலையில் கொண்டு நிறுத்தினர் . தூதர்களைக் கொல்லுவது நீதி அன்று ராமா என்று சுகன் சொல்லவே , ராமனும் , அவனை விடுவிக்குமாறு கூற அவன் விடுவிக்கப் பட்டு ஆகாயத்திலே போய் நின்று கொண்டு , ராவணனிடம் நான் தெரிவிக்க வேண்டியது என்னவெனக் கேட்க , சுக்ரீவன் அவனைப் பார்த்துச் சொல்கின்றான் :” ராவணனே , நீ என் நண்பன் அல்ல . என் நலனை விரும்புபவனும் அல்ல , ராமனின் எதிரி ஆன நீ எனக்கும் எதிரியே . ராமனும் , லட்சுமணனும் இல்லாத வேளை பார்த்து நீ சீதையைக் கடத்தினாய் ! உன்னைக் காப்பாற்றக் கூடியவர் இம்மூவுலகிலும் எவரும் இல்லை இப்போது . நீ எங்கே சென்றாலும் சரி , ராமனால் கொல்லப் படப்போகின்றாய் . படையோடு இலங்கை வந்து இலங்கையையும் , உன் மக்களையும் எரித்துச் சாம்பல் ஆக்குவேன் . தகாத காரியத்தைச் செய்த நீ எவ்விதம் உயிரோடு தப்பிக்க முடியும் ? இது தான் நான் ராவணனுக்குச் சொல்லும் செய்தி !” என்று சொல்கின்றான் சுக்ரீவன் . அப்போது அங்கதன் ராமனைப் பார்த்து இவன் ஒற்றன் என்றே நான் எண்ணுகின்றேன் . தூதுவனாய்த் தெரியவில்லை . நமது படை பலத்தை முழுதுமாக அறிந்து கொண்டு விட்டான் . இவனை வெளியே விடுவது முழுத்தவறு .” என்று சொல்லவே அவன் மீண்டும் பிடித்துக் கட்டிப் போடப் பட்டான் . சுகன் ராமனைப் பார்த்து ,” ராமா , என்னை இந்த வானரர்கள் துன்புறுத்துகின்றனரே ? உன் கண் எதிரிலேயே என் உயிர் போனால் , நான் எந்த இரவில் பிறந்தேனோ , அன்றில் இருந்து என் உயிர் போகும் வரைக்கும் நான் செய்த பாவங்கள் அனைத்தும் உன்னையே சேரும் ,” என்று உரக்கக் கூவி அழ , ராமன் வானரர்களைப் பார்த்து , சுகனை விட்டுவிடுமாறு கூறுகின்றார் . அவன் திரும்பிப் போகட்டும் என்றும் சொல்கின்றார் . ஆனால் அவனை விடுவித்த வானரர்கள் அவனைத் திரும்ப அனுமதிக்கவில்லை . இதை அடுத்து கடற்கரையில் தர்ப்பைப் புற்களினால் ஆன ஆசனத்தில் அமர்ந்து உடல் , மனம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஒரே தியானத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் ராமன் அமர்ந்தார் . மூன்று நாட்கள் கடந்த பின்னரும் சமுத்திர ராஜன் அவர் முன்னே தோன்றவில்லை . ராமர் லட்சுமணனைப் பார்த்து மிகுந்த கோபத்துடனேயே , “ சமுத்திர ராஜனின் கர்வத்தைப் பார்த்தாயா ? நீரால் நிரம்பிக் காட்சி அளிக்கும் இந்தக் கடலை இப்போது என்னுடைய சக்தி வாய்ந்த அம்புகளால் துளைத்து நீரை வற்றிப் போகும்படிச் செய்து விடுகின்றேன் . முத்துக்களாலும் , சங்குகளாலும் , மீன்களாலும் , முதலைகளாலும் , பவளங்களாலும் நிரம்பி இருக்கும் இந்த சமுத்திரத்தை வற்றச் செய்கின்றேன் . என்னுடைய பொறுமை கண்ட சமுத்திர ராஜன் என்னைச் சக்தியற்றவன் என்று நினைத்துக் கொண்டான் போலும் . உடனே சென்று என்னுடைய வில்லையும் , அம்புகளையும் எடுத்துவா ,” என்று சொல்லி விட்டு மிகுந்த கோபத்தோடும் , வீரத்தோடும் வில்லை அம்பை ஏற்றி அவற்றை எய்து விடத் தொடங்கினார் . அம்புகள் இந்திரனின் வஜ்ராயுதம் போல் கடல் நீரைத் துளைத்துக் கொண்டு சென்று கடல் வாழ் ஜந்துக்களை எல்லாம் வாட்டத் தொடங்கியது . முத்துக்களும் , பவளங்களும் , மீன்களும் , சங்குகளும் உள்ளே இருந்து மேல்நோக்கி வந்து தூக்கி அடிக்கப் பட்டன . நெருப்பை ஒத்த அம்புகள் கடல் நீருக்கு மேல் ஊழிப் பெருந்தீ போன்ற ஒளிமயமான தீயைத் தோற்றுவிக்க அங்கே எழுந்த புகை மண்டலத்தால் விண்ணை மூடும் அபாயம் ஏற்பட்டது . கடல் கொந்தளித்துக் கொண்டு பேரலைகள் எழுந்தன . தூக்கி அடிக்கப் பட்ட கடல்வாழ் பிராணிகளின் ஓலம் தாங்க முடியாமல் இருந்தது . மேலும் அம்புகளைப் பொருத்தி எய்வதற்காக நாணில் ஏற்றிய ராமரை லட்சுமணன் “போதும் , போதும்” என்று சொல்லி வில்லைக் கையில் இருந்து வாங்கினான் . கோபம் கொள்ளாமல் வேறு வழியில் கடலைக் கடக்க உதவியை நாடுங்கள் என்றும் சொன்னான் . விண்ணில் இருந்து இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டும் , கேட்டுக் கொண்டும் இருந்த தேவர்களும் , ரிஷி , முனிவர்களும் , பயத்தினால் அலறிக் கொண்டு ,” போதும் , போதும் , நிறுத்து , நிறுத்து .” என்று கூறவே ராமனும் சமுத்திர ராஜனைக் கூப்பிட்டுப் பேசத் தொடங்கினார் . 54 கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம்- பகுதி 54 யுத்த காண்டம் ராமர் சமுத்திர ராஜனைக் கூப்பிட்டு , “ ஏ , சமுத்திர ராஜனே , உன்னை வற்றச்செய்துவிடுவது எனக்கு மிக எளிதான ஒன்று . வற்றச் செய்த பின்னர் இந்தக் கடலின் மணற்பரப்பில் நடந்து செல்ல இந்த வானரசேனைக்கு அத்தனை கஷ்டமாய் இருக்காது . என்னுடைய சக்தி பற்றி நீ அறிய மாட்டாய் . இன்று நீ என் மூலம் பெரும்துன்பத்தை அனுபவிக்கப் போகின்றாய் .” என்று அறை கூவல் விடுத்தார் . பின்னர் பிரம்மாஸ்திரத்தின் சக்தியை ஓர் அம்பில் ஏற்றி , அதை வில்லிலே பூட்டி , அதி பயங்கரமான ஓசையுடன் நாணேற்றினார் ராமர் . ஏழு உலகும் குலுங்க , பூமி அதிர , இருள் சூழ , சூரிய , சந்திரர் நிலை தடுமாற , காலம் கூட ஒரு கணம் செயலற்று நிற்க , காற்று பேய்க்காற்றாய் மாறி வீச ஆரம்பிக்க , மரங்கள் சரிய , மலைகள் நொறுங்க , பேரிடி அண்டசராசரமும் நடுங்கும் வண்ணம் இடிக்க , மின்னல் ஒளி கண்ணைப் பறித்தது . விலங்குகள் அனைத்தும் பீதியில் ஓலமிட , பிரளயமே வந்துவிட்டதோ என்னும்படிக்குக் கடல் பொங்கி , நுரைத்துச் சுழித்துக் கொந்தளித்து , வேகம் தாங்க மாட்டாமல் கரையை வந்து வேகத்துடன் மோதியது . கல்லால் ஆன சிலை போல உறுதியுடனும் , திடத்துடனும் , அசையாமல் உட்கார்ந்திருந்தார் ராமர் . கிழக்கே இருந்து , சூரியன் உதிப்பது போன்ற தோற்றத்தோடு மெல்ல , மெல்ல சமுத்திரத்தில் இருந்து சமுத்திர ராஜன் எழுந்தான் . பல்வேறு விதமான நதிகளால் சூழப்பட்டவனாயும் , அந்த நதிகளுக்கு அர்ப்பணிக்கப் பட்ட பூக்களினால் ஆன மாலைகளை அணிந்தவனாயும் , ஒளி வீசிக் கொண்டும் , காட்சி அளித்த சமுத்திர ராஜன் , தன்னிரு கைகளையும் கூப்பிக் கொண்டு , ராமனை வணங்கிவிட்டுப் பேச ஆரம்பித்தான் . “ராமா, பூமி, காற்று, ஆகாயம், நீர், நெருப்பு இவை எல்லாம் தங்கள் தன்மையில் நிலைத்திருக்கும் பண்புள்ளவை. நீ அறிய மாட்டாயா???? கடலின் ஆழத்தை அறிய முடியாமையும், அதில் நீந்திச் சென்று அக்கரையை அடைய முடியாமையும் இயற்கையின் இந்த விதிக்கு மாறுபட்டவை அல்லவே. மாறாக நடந்தால் இயற்கையின் விதியில் இருந்து நான் நழுவியவன் ஆவேனே? எனினும் என்னைக் கடக்கும் வகையை நான் சுட்டிக் காட்டுகின்றேன். நான் கர்வமாய் இருந்தது என் தவறுதான். அதன் காரணமாய் இந்தக் கடல் நீர் வற்ற நான் காரணமாய் ஆகக் கூடாது. உன்னுடைய இந்தப் பெரும்படை செல்லும் வழியை நான் சொல்லுகின்றேன்.” என்று பணிவோடு கூறவும், ராமர் உடனேயே வில்லில் பூட்டி நாணேற்றிய இந்த அஸ்திரத்தை நான் என்ன செய்ய முடியும்? இதை எங்கே செலுத்தட்டும்?” என்று சமுத்திர ராஜனையே கேட்கின்றார். சமுத்திர ராஜன், எனக்கு வடக்கே திருமசூல்யம் என்ற புண்ணிய ஸ்தலம் இருக்கின்றது. ஆனால் அங்கே அதிகம் பாவம் செய்தவர்களே வருகின்றனர். உன்னுடைய அம்பை நீ அந்த இடத்தில் செலுத்தினால் என்னுடைய நீரை மிகவும் கெட்டவர்கள் பயன்படுத்தாமல் இருக்கலாம்.” என்று கூற ராமரும் அவ்வாறே ஏவிய அம்பை அங்கே செலுத்துகின்றார். அந்தப் பகுதி மறுகாந்தாரம் என்ற பெயர் பெற்று, ராமரின் வில்லில் இருந்து கிளம்பிய அம்பின் வலிமையால் சகல வளங்களும் பெற்றது. பின்னர் சமுத்திர ராஜன் ராமனிடம், “தேவதச்சனாகிய விஸ்வகர்மாவின் மகன் நளன், தந்தையிடமிருந்து வரம் பெற்றவன். என் மீது பேரன்பு கொண்டவன். அவன் என் மீது ஒரு பாலம் கட்டட்டும். நான் அதைத் தாங்குகின்றேன்.” என்று வாக்களித்தான். உடனேயே அங்கே இருந்த நளன் எழுந்து , “ என்னால் இக்காரியம் குறைவின்றிச் செய்து தரப்படும் . எனினும் சமுத்திர ராஜன் நன்றி கெட்டவனாகவே இருக்கின்றான் . உம்முடைய தண்டனைக்குப் பயந்தே அவன் இப்போது இவ்விதம் இணங்கி வருகின்றான் . உம்முடைய குலத்து மன்னனாகிய சகரனால் தோற்றுவிக்கப் பட்ட உம்மிடம் அவன் நன்றி இவ்வளவே . வானர வீரர்களால் அணை கட்டுவதற்கு வேண்டிய பொருட்கள் கொண்டு வரப்படட்டும் . நான் அணை கட்டி அக்கரை போக வழி செய்கின்றேன் .” என்று சொல்கின்றான் . அக்கம்பக்கத்தில் உள்ள காடுகளில் தேடுதல் வேட்டைகள் நிகழ்த்தி வானர வீரர்கள் பெரிய மரங்களை வேரோடு பிடுங்கிக் கொண்டு வருகின்றனர் . பெரும்பாறைகள் தகர்க்கப் பட்டன . சமுத்திரக் கரையை வந்தடைகின்றன . கொண்டு வரப்பட்ட பெரும்பாறைகளை ஒரே நேர்க்கோட்டில் வைக்கக் கயிறுகள் பயன்படுத்தப் பட்டன . இப்படியாக நளன் சொன்னபடிக்குப் பாறைகளை சமுத்திரத்தில் நிலை நிறுத்தியும் , அவற்றின் மீது மரங்களை நிறுத்தியும் , எண்ணிலடங்கா வானரர்கள் பாலம் கட்டும் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றனர் . ஒரு சில நாட்களில் பாலம் கட்டும் வேலையும் முடிந்தது . விண்ணில் இருந்து தேவர்களும் , தவ முனிவர்களும் , கந்தர்வர்களும் , சித்தர்களும் இதைப் பார்க்கக் கூடி நின்றார்கள் . நேர் வகிடு எடுத்த பெண்ணின் கூந்தல் போல் சமுத்திரத்துக்கு நடுவில் பாலம் தெரிந்ததாம் . அந்தப் பாலத்தின் மீது ஏறிக் கொண்டு வானர சேனை கடக்கத் தொடங்கியது . ராமனை , அனுமனும் , லட்சுமணனை , அங்கதனும் தங்கள் தோளில் ஏற்றிச் செல்லவேண்டும் என்ற சுக்ரீவனின் ஆவலும் நிறைவேற்றப் பட்டது . மெல்ல , மெல்ல சமுத்திரத்தைக் கடந்து அக்கரை சென்ற வானரப் படை சுக்ரீவனின் கட்டளைப்படி அங்கேயே முகாமிட்டது . ராமருக்கு இலங்கை அழியப் போகின்றது என்பதை முன்கூட்டியே உணர்த்தும் வண்ணமான துர் சகுனங்கள் பல தோன்றுகின்றன . அதை அவர் லட்சுமணனுடன் கூடி விவாதிக்கின்றார் . பின்னர் இலங்கை நகரை நோக்கி முன்னேற படைக்குக் கட்டளை பிறப்பிக்கும்படி சுக்ரீவனுக்குச் சொல்ல ராமனின் ஆணைப்படி வானரப்படை முன்னேறியது . விண்ணை முட்டும் வெற்றிக் கோஷங்கள் எழுப்பிக் கொண்டு சென்ற வானரப்படையின் கூச்சலில் இலங்கை நகரே அதிர்ந்தது . முரசுகள் பெரும் முழக்கம் செய்தன . பேரிகைகள் முழங்கின . எங்கும் ஒரே உற்சாகம் , ஜெயகோஷம் , இவற்றுக்கு நடுவில் இலங்கை நகரும் கண்ணுக்குப் புலன் ஆகியது . உடனே ராமர் யார் , யார் , எந்த , எந்தப் பக்கம் தலைமை தாங்க வேண்டும் , எங்கே நிற்க வேண்டும் , படையின் அணிவகுப்பு எவ்வாறு இருக்க வேண்டும் , என்பதை எல்லாம் எடுத்து உரைத்தார் . வானரப் படையினருக்கு இருந்த உற்சாகத்தில் உடனேயே இலங்கைக்குள் சென்று , இலங்கையை நாசம் செய்ய வேண்டும் என்று துடித்தனர் . சுக்ரீவனிடம் ராமர் , நாம் நமது படையின் அணிவகுப்பைக் கூடத் தீர்மானித்துவிட்டோம் , ஆகவே , ராவணனின் ஒற்றனை விடுதலை செய்துவிடலாம் . என்று கூறவே , சுகன் விடுவிக்கப் பட்டு ராவணன் அரண்மனை நோக்கி விரைந்தான் . 55 கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 55 அவனைக் கண்ட ராவணன் , என்ன ஆயிற்று ? ஏன் இவ்வளவு அலங்கோலமான நிலை உனக்கு ? என விசாரிக்கின்றான் . சுகனும் விரிவாகவே பதில் கூறினான் . விண்ணில் இருந்தே தகவல் தெரிவித்த தன்னை வானரர்கள் படுத்திய பாட்டையும் , இறக்கைகளை அறுத்ததையும் , பலவாறாகத் துன்புறுத்தியதையும் , அவர்களோடு பேச்சு , வார்த்தைக்குக் கூட வாய்ப்பில்லை என்பதையும் தெரிவித்தான் . சுக்ரீவன் உதவியோடு ராமன் , சீதையைக் காப்பாற்றி அழைத்துச் செல்ல இலங்கை வந்துள்ளான் . கடலில் பாலம் கட்டப் பட்டது . அந்தப் பாலம் வழியாக எண்ணிலடங்காத வானரப்படை இங்கே வந்துவிட்டது . நமது பாதுகாப்பு அரண்களை உடைத்துக் கொண்டு அவர்கள் வரும்முன்னரே , சீதையை அவர்களிடம் ஒப்படைத்துவிடுவோம் , அல்லது சமாதானம் தேவையில்லை எனில் யுத்தம் செய்வதா எனத் தீர்மானியுங்கள் என்று கூறுகின்றான் . ராவணன் கோபமுற்று ,” தேவாதி தேவர்களும் , கந்தர்வர்களும் , அசுரர்களும் , சேர்ந்து எதிர்த்தாலும் கூட சீதையை நான் திரும்ப அனுப்புவது என்பது இல்லை . ராமனின் உடலை என் அம்புகள் துளைத்து எடுக்கும் நேரத்தை நான் எதிர்பார்த்திருக்கின்றேன் . அந்தக் காட்சியைக் கண்டால் தான் என் இதயம் நிறைவு அடையும் . நட்சத்திரங்கள் சூரியனால் ஒளி இழந்து காணப்படுவதைப் போலவே , ராமனும் , அவன் படையும் என் முன்னும் , என் படைகள் முன்பும் ஒளி இழந்து காண்கின்றனர் . கடலைப் போன்ற ஆழமான என்கோபத்தையும் , காற்றைப் போல் வலுவான என் பலத்தையும் உணராமல் அந்த ராமன் என்னோடு மோத வந்துள்ளான் . பாம்புகளை ஒத்த என் அம்புகள் ராமனின் உடலில் விஷம் போல் பாயப்போவது திண்ணம் . இந்திரனோ , கருடனோ , எமனோ , குபேரனோ யாராக இருந்தாலும் யுத்த களத்தில் என்னை ஜெயிப்பது என்பது கஷ்டம் . “ என்றெல்லாம் கூறிய ராவணன் , தன் அமைச்சன் ஆகிய சாரணன் என்பவனைப் பார்த்து , வானரப்படை எவ்வாறு கடல் கடந்தது என்பது ஒருபுறம் இருக்கட்டும் . படையின் எண்ணிக்கையையும் , பலத்தையும் எவரும் அறியாமல் நாம் அறிய வேண்டும் . நீங்கள் சுகனோடு சென்று எவரும் அறியாமல் வேறு உரு எடுத்துக் கொண்டு சென்று அறிந்து வாருங்கள் எனச் சொல்லவே , சாரணனும் , சுகனும் , வானர உரு எடுத்துக் கொண்டு சென்றால் வானரப்படையின் பலத்தை அறிய முடியும் என நினைத்து , வானர உரு எடுத்துக் கொண்டு செல்கின்றனர் . வானரப்படைக்குள் புகுந்த அவ்விருவரும் படையின் எண்ணிக்கையையும் , அதன் பலத்தையும் பார்த்துவிட்டுத் திகைத்து நிற்கையில் விபீஷணன் அவர்களைப் பார்த்துவிட்டான் . அவனுக்கு அவர்களின் உண்மையான வடிவமும் , வந்த காரணமும் புலனாக , இருவரையும் பிடித்துக் கொண்டு ராமனின் முன்னே கொண்டு சென்று நிறுத்தினான் . இருவரும் ராவணனின் அமைச்சர்கள் . ஒற்றர்களாய் இங்கே வந்திருக்கின்றனர் என்று சொல்லவே , இருவரும் பயந்து போய் நம் கதை இன்றோடு முடிந்தது என நினைத்து , ராமன் முன் இரு கை கூப்பி நின்று தாங்கள் வந்த காரணத்தையும் , ராவணனால் அனுப்பப் பட்டதையும் சொன்னார்கள் . இதைக் கேட்ட ராமர் மனம் விட்டுச் சிரித்த வண்ணம் ,” நீங்கள் அனைத்தையும் அறிந்து கொண்டாயிற்று . இன்னுமும் எங்களையும் பார்த்து இன்னார் எனத் தெரிந்து கொண்டாயிற்று . உங்கள் காரியம் முடிவடைந்து விட்டது அல்லவா ? ஆகவே நீங்கள் உங்கள் அரசனிடம் திரும்பிச் செல்லுங்கள் , இன்னமும் ஏதும் தெரிந்து கொள்ள மிச்சம் இருந்தால் திரும்பி வாருங்கள் ,. இல்லை எனில் படையை மீண்டும் , மீண்டும் சுற்றிப் பாருங்கள் . துணைக்கு விபீஷணனையும் அழைத்துக் கொள்ளுங்கள் . எல்லாவற்றையும் காட்டச் சொல்கின்றேன் . ஆயுதங்கள் இல்லாமல் சிறைப்பட்டிருக்கும் உங்களை நாங்கள் கொல்வது சரியல்ல !” என்று சொல்லிவிட்டு வானர வீரர்களைப் பார்த்து ,” இவர்களை விடுதலை செய்து விடுங்கள் , ஒற்றர்கள் தான் எனினும் உயிரோடு போகட்டும் . என்று சொல்கின்றார் . பின்னர் அவர்கள் இருவரையும் பார்த்து , ராவணனிடம் நான் சொல்கின்ற வார்த்தைகளைத் தெரிவிக்க வேண்டும் . உன் பலம் , உன்னுடைய உறவின் பலம் , படையின் பலம் போன்றவற்றை நம்பி சீதையை அபகரித்து வந்துள்ளாய் . அந்த பலத்தை அழிக்கும் நேரம் வந்தாகிவிட்டது . என்னுடைய கோபத்திற்கு இலக்காகிவிட்ட உன் படைகளும் , உன் இலங்கையும் , நீயும் அழிவது திண்ணம் .” என்று ராவணனிடம் சொல்லுமாறு கூறுகின்றார் . ராமரைப் பலவாறு வாழ்த்திவிட்டுச் சென்ற இருவரும் ராவணனைப் போய் அடைந்தார்கள் . ராமனை வெல்வது கடினம் என்றும் அவன் ஒருவனே போதும் , என்றாலும் மேலும் வானரப்படைகள் வந்துள்ளன . அவற்றின் திறமையைப் பார்த்தால் அந்த வானரப்படையை வெல்வதும் கடினம் என்றே தோன்றுகின்றது . சமாதானமாய்ப் போய்விடுவதே நல்லது என்று ராவணனுக்கு எடுத்து உரைக்கின்றார்கள் . ஆனால் ராவணன் அவர்களைப் பார்த்து எள்ளி நகையாடுகின்றான் . படையின் அனைத்து விபரங்களையும் கேட்கின்றான் . உடனேயே ராவணனின் மாளிகையின் மேல்தட்டுக்குப் போய் , படைகளின் எண்ணிக்கைப் பலத்தையும் , வீரர்களையும் காட்டி , அவர்கள் பலத்தையும் பற்றிச் சொல்லி , அவனுக்கு அனைவரையும் காட்டுகின்றனர் இருவரும் . 56 கதை, கதையாம், காரணமாம், ராமாயணம் பகுதி 56 ராவணனுக்கு ஒவ்வொருவரின் பலத்தையும் , நன்கு புரியும் வண்ணம் எடுத்துக் கூறுகின்றனர் , சுகனும் , சாரணனும் . அனுமனையும் சுட்டிக் காட்டி அவன் ஏற்கெனவே இலங்கைக்கு விளைத்திருக்கும் நாசத்தையும் , அவன் ஒருவனாலேயே இலங்கையை அழிக்க முடியும் என்பதையும் நினைவில் கொள்ளுமாறும் கூறிவிட்டு , ராமனையும் காட்டுகின்றனர் . சீதையின் கணவன் ஆன இந்த ராமனைப் பாருங்கள் , தாமரைக்கண்ணன் ஆன இந்த ராமனை விடுத்து சீதை மற்றொருவரை மனதிலும் நினைப்பாளா ? மேலும் பிரம்மாஸ்திரத்தை நன்கு கற்றறிந்ததோடு , வேதங்கள அனைத்தையும் அறிந்தவர் . இவரின் அம்புகள் ஆகாயத்தையும் பிளக்கும் சக்தி வாய்ந்தவை என்று சொல்லிவிட்டு , அவருடன் இணை பிரியாமல் இருக்கும் லட்சுமணனையும் ராவணனுக்குக் காட்டுகின்றனர் . ராமனின் நலனைத் தன் நலனாக நினைக்கும் இந்த லட்சுமணன் இருக்கும் வரையில் ராமனை யாராலும் வெல்ல முடியாது என்று கூறுகின்றனர் . விபீஷணனையும் காட்டி , அவனுக்கு ராம , லட்சுமணர்கள் இலங்கை அரசனாக முடிசூட்டியதையும் சொல்கின்றனர் . இவ்விதம் சொல்லிவிட்டு சுக்ரீவனையும் , அவன் தலைமையில் வந்திருக்கும் வானரப்படைகளையும் காட்டி அதன் எண்ணிக்கையைச் சொல்வது கஷ்டம் என்றும் தெரிவிக்கின்றனர் . அனைத்தையும் பார்த்தும் , கேட்டும் கூட ராவணனின் மனம் அசைந்து கொடுக்கவில்லை . திரும்பத் திரும்ப அறிவுறுத்தப் பட்டதால் கொஞ்சம் கவலை அடைந்தாலும் , அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருவரையும் கோபத்தோடு பார்த்து , “ எதிரிகளைப் புகழ்ந்து பேசும் இத்தகைய அமைச்சர்களைப் பெற்ற நான் உங்களைக் கொல்லவேண்டும் , ஆனால் கொல்லாமல் விடுகின்றேன் . ஏனெனில் இன்று வரை விசுவாசத்தோடு நீங்கள் வேலை செய்து வந்த காரணத்தாலேயே கொல்லாமல் விடுகின்றேன் . உங்கள் நன்றி கெட்ட தன்மையே உங்களைக் கொன்றுவிட்டது .” என்று சொல்லிக் கடுமையான வார்த்தைகளால் இருவரையும் கண்டிக்க , இருவரும் ராவணனை வெற்றி பெற வாழ்த்திவிட்டு அங்கிருந்து வெளியேறுகின்றனர் . ராவணன் பின்னர் மஹோதரன் என்பவனை அழைத்து , வேறு நல்ல ஒற்றர்களை அழைத்து வரும்படி ஆணை இடுகின்றான் . அந்த ஒற்றர்களிடம் ராமனின் திட்டம் என்ன ?, எங்கே , எப்போது , எந்த இடத்தில் இருந்து எவ்வாறு தாக்கப் போகின்றான் ? மற்றும் ராமனின் , லட்சுமணனின் பழக்க , வழக்கங்கள் , சாப்பாட்டு முறைகள் , தூங்கும் நேரம் , செய்யும் ஆலோசனைகள் அனைத்தையும் அறிந்து வந்து சொல்லுமாறு பணிக்கின்றான் . ஆனால் இந்த ஒற்றர்களையும் விபீஷணன் சரியாக அடையாளம் கண்டு கொள்ள , ராமரோ இவர்களையும் விடுவிக்குமாறு கட்டளை இடுகின்றார் . வானரர்களோ இவர்களையும் விடாமல் துன்புறுத்தவே , ஒருவழியாகத் தப்பித்த அவர்கள் ராவணனைச் சென்று அடைந்து , நடந்தவற்றைக் கூறிவிட்டு , சீதையை ஒப்படைத்து விடுங்கள் , இல்லை எனில் யுத்தம் தான் என்று சொல்ல , ராவணனோ , சீதையை மீண்டும் அனுப்புவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று சொல்லி விட்டு , வானரப்படையின் விபரங்களைக் கேட்டு அறிந்து கொள்கின்றான் . உடனடியாகத் தன் மற்ற சகோதரர்களை அழைத்து அடுத்துத் தான் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பேசி முடிவு செய்து கொள்கின்றான் ராவணன் . பின்னர் அரண்மனைக்குள் சென்று மந்திர , தந்திரங்களில் தேர்ந்தவன் ஆன வித்யுத்ஜிஹ்வா என்பவனை அழைக்கின்றான் . . அவனிடம் ராமனின் தலையைப் போல் ஒரு தலையை உருவாக்கிக் கொண்டு வரச் சொல்கின்றான் . அத்துடன் சிறப்பு வாய்ந்த வில்லும் , அம்புகளும் கூடவே எடுத்துவரச் சொல்கின்றான் . உடனேயே வித்யுத்ஜிஹ்வா அவற்றை உருவாக்க ராவணன் அவனுக்குப் பரிசளித்துவிட்டு அவற்றை எடுத்துக் கொண்டு சீதை இருக்கும் அசோகவனம் நோக்கி விரைகின்றான் . தந்திரத்தால் எவ்வாறேனும் சீதையின் மனதைக் கவரவேண்டும் என நினைத்த ராவணன் சீதையிடம் சென்று , ஏற்கெனவே துன்பத்தில் மூழ்கி இருந்த அவளிடம் பேசத் தொடங்குகின்றான் . “ ஏ சீதா , நான் எவ்வளவோ சொல்லியும் , ராமன் நினைவாகவே இருந்து வந்த உனக்கு ஒரு துக்கச் செய்தி , ராமன் என்னால் கொல்லப் பட்டான் . உன்னுடைய நம்பிக்கை என்னும் ஆணிவேர் அறுக்கப் பட்டுவிட்டது . எந்த ராமனை நம்பி , நீ என்னை நிராகரித்தாயோ அந்த ராமன் யுத்தத்தில் கொல்லப் பட்டான் . இனியாவது நீ என் மனைவியாவாய் ! என்னைத் தாக்குவதற்கு என்று சுக்ரீவனால் திரட்டப்பட்ட பெரும்படையோடு , என் கடற்கரைப் பகுதியை ராமன் அடைந்தான் . படைவீரர்கள் அனைவரும் களைப்பினாலும் , கடும் பயணத்தினாலும் தூங்கி விட்டனர் . என்னுடைய ஒற்றர்கள் நள்ளிரவில் அங்கே சென்று விபரங்களைத் திரட்டிக் கொண்டு வந்தனர் . பின்னர் பிரஹஸ்தன் தலைமையில் சென்ற என்னுடைய பெரும்படையானது ராமனையும் , லட்சுமணனையும் , பெரும்படையோடு வந்த மற்ற வீரர்களையும் அழித்து , ஒழித்துவிட்டது . ராமனின் தலை பிரஹஸ்தனின் வாளால் துண்டிக்கப் பட்டது . விபீஷணன் சிறை எடுக்கப் பட்டான் . லட்சுமணன் செய்வதறியாது ஓடி விட்டான் . சுக்ரீவன் காலொடிந்து விழுந்தான் . அனுமனோ கொல்லப் பட்டான் . ஜாம்பவானும் கீழே விழ்ந்தான் . மற்ற வானரர்கள் பயத்தில் கடலில் குதித்து உயிரை விட்டு விட்டனர் .” என்று சொல்லிவிட்டு , அங்கிருந்த அரக்கிகளில் ஒருத்தியிடம் சீதையின் காதில் விழுமாறு கீழ்கண்டவாறு சொல்கின்றான் . “ இந்த யுத்தத்தை நேரில் பார்த்துக் கொடுஞ்செயல்கள் பல புரிந்த வித்யுத்ஜிஹ்வாவை இங்கே வரச் சொல் . உடனேயே கொல்லப் பட்ட ராமனின் குருதி வாய்ந்த தலையையும் கொண்டுவரச் சொல் .” எனச் சொல்ல , வித்யுத்ஜிஹ்வா , கையில் வில் , அம்புகளுடனும் , அவனால் செய்யப் பட்ட போலி ராமர் தலையுடனும் அங்கே வந்து சேர்ந்தான் . ராவணன் , சீதையைப் பார்த்து , “ பெண்ணே , வில்லைப் பார்த்தாயா ? ராமனின் வில் இது . அந்த மானிடனைக் கொன்ற பின்னர் பிரஹஸ்தன் இந்த வில்லையும் எடுத்து வந்துவிட்டான் . இனி நீ என் ஆசைக்கு இணங்குவதே நன்று .’ எனக் கூறினான் . சீதை அந்தத் தலையைப் பார்த்தாள் . துக்கம் தாங்க முடியாமல் “ ஓஓ ” வென்று கதறி அழுதாள் . 57 கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி- 57 தன் கணவன் மறைந்துவிட்டானோ என எண்ணிய சீதையின் புலம்பலும் , அழுகையும் அதிகம் ஆனது . அந்த மாயத் தலையை அத்தனை தத்ரூபமாய் வடித்திருந்தான் வித்யுத்ஜிஹ்வா . தன் சிறிய மாமியார் ஆன கைகேயியின் செயலால் அன்றோ ராமன் நாட்டை விட்டுக் காட்டுக்கு வந்து , தன்னையும் பறி கொடுத்துவிட்டு இப்போது இறந்தும் போக நேர்ந்தது ?? ஆஹா , ஒருவழியாய் கைகேயி , உன் ஆசை நிறைவேறியதா ? உன் மகனுக்குப் போட்டி இல்லாமல் போயிற்றா ??? ராமர் கொல்லப் பட்டார் . குலமே நாசம் அடந்துவிட்டது . இதுதான் நீ விரும்பியதா ? நான் உனக்கு என்ன கெடுதல் செய்தேன் ??? என்று எல்லாம் புலம்பி மயங்குவதும் , சில நேரம் தெளிந்து மீண்டும் புலம்புவதும் , அந்தத் தலையின் அருகே அமர்ந்து அழுவதுமாய் இருந்தாள் சீதை ! “ கணவன் முன்னால் இறந்து போக மனைவி உயிரோடு இருப்பது போன்ற துயர சம்பவம் என் வாழ்விலும் நிகழ்ந்துவிட்டதே ? இது எத்தகைய கொடிய துயரம் ??? உங்கள் ஆயுளைப் பற்றிக் கூறிய ஜோசியர்களின் பலனெல்லாம் பொய்த்துவிட்டதோ ? குலத்தைத் தவிக்கவிட்டுவிட்டு சொர்க்கம் சென்று உங்கள் தந்தையோடு சேர்ந்தீர்களோ ??? என்னைப் பார்க்க மாட்டீர்களா ?? என்னோடு சேர்ந்து தர்மத்தைக் கடைப்பிடிப்பேன் என்று சொன்ன வாக்குறுதி என்ன ஆயிற்று ? லட்சுமணன் கெளசலைக்கு இந்தச் செய்தியைச் சொல்லுவானோ ??? நீங்களும் இறந்து , நானும் அரக்கர் பிடியில் மாட்டிக் கொண்டிருப்பதை அறிந்த பின்னரும் கெளசலை உயிரோடு இருப்பாரா ??? நிச்சயம் மாட்டார் . என்னைக் காக்கும்பொருட்டு சமுத்திரத்தைக் கடந்து வந்த நீங்கள் உயிரை விட நேர்ந்தது என்னாலே அன்றி வேறு என்ன காரணம் ??? என் முன் பிறவியில் நான் ஏதோ ஒரு திருமணத்தைத் தடுத்திருக்க வேண்டும் , அதனாலேயே எனக்கு இம்மாதிரி ஒரு துயரம் ஏற்பட்டு விட்டது . ஏ , ராவணா , என்னையும் கொன்றுவிட்டு , என் கணவரின் உடல் மீது என் உடலைப் போட்டுவிடு , இறப்பிலாவது அவருடன் நான் ஒன்றாய் இருக்கின்றேன் .” என்று சொல்லும்போது , ராவணனின் பணியாள் ஒருவன் ஓடி வந்து மந்திராலோசனை சபையை மந்திரிமார்கள் அவசரமாய்க் கூட்டி இருப்பதால் , ராவணன் வரவுக்குக் காத்திருப்பதாய்ச் சொல்லுகின்றான் . அவ்வளவில் ராவணன் அங்கிருந்து செல்ல , அந்த மாயத் தலையும் அவனோடு சேர்ந்து மறைந்து போகின்றது . ராவணன் மந்திராலோசனை சபையில் நுழைந்ததுமே , யுத்த முழக்கம் செய்ய அனைவரும் ஆமோதித்தனர் . அப்போது பெரும் துயரத்தில் அசோகவனத்தில் இருந்த சீதையிடம் சரமை என்னும் ஓர் அரக்க குலப் பெண் வந்து ஆறுதல் சொல்லுகின்றாள் .( இவள் விபீஷணன் மனைவி எனச் சில ராமாயணங்களின் கூற்று .) ராமனை யாராலும் கொல்ல முடியாது எனவும் , இதுவும் ராவணனின் தந்திரங்களில் ஒன்று , எனவே பயம் வேண்டாம் எனவும் கூறிய அவள் யுத்த முழக்கம் கேட்பதைச் சுட்டிக் காட்டுகின்றாள் . படைகள் யுத்தத்திற்குத் தயாராகின்றன என்றும் எடுத்துச் சொல்கின்றாள் . யுத்தத்தில் ராமரே வெற்றி பெற்று அவளை மீட்டுச் செல்வார் என்றும் உறுதி அளிக்கின்றாள் . யாரும் அறியாமல் ராமரிடம் சென்று சீதையைப் பற்றிக் கூறிவிட்டு , ராமரிடமிருந்து சீதைக்கும் செய்திகளை எடுத்துவரத் தயாராய் இருப்பதாயும் தெரிவிக்கின்றாள் . சீதையோ , ராவணனின் திட்டம் என்ன என்று அறிந்து வந்தால் போதும் என்று சொல்லவே அவ்வாறே அவளும் ராவணன் இருக்குமிடம் சென்று அவன் ஆலோசனைகளைக் கேட்டு வந்து சொல்கின்றாள் . ராவணனின் தாயார் அவனை சீதையை ராமனிடமே ஒப்படைக்கும்படி அறிவுரை கூறியதாகவும் , இன்னும் சில வயதில் மூத்தவர்களும் அவ்வாறே ஆலோசனை கூறியதாகவும் கூறுகின்றாள் . ஆனால் ராவணனோ இவை எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் போருக்கு ஆயத்தம் அடைந்ததாயும் சொல்கின்றாள் . ராமர் ராவணனைப் போரில் வீழ்த்துவார் எனவும் , சீதையை மீட்டுச் செல்வார் எனவும் ஆறுதல் கூறுகின்றாள் . வானரப் படைகளின் பேரொலி கேட்கின்றது . ராவணன் தரப்பில் அரக்கர்களிடம் மனவலிமை ஏனோ குன்றத் தொடங்கியது . அரசன் செய்தது குற்றம் என அனைவருக்கும் நன்கு தெரிந்திருந்த காரணத்தால் , நம்பிக்கை அவர்களிடமிருந்து அகன்றது . ஆனால் ராவணனோ தீர்மானமாய் யுத்தம் செய்வதில் இருந்தான் . அவன் பாட்டனாகிய மால்யவான் ராவணனுக்கு அவன் செய்த தவறுகளை எடுத்துக் காட்டுகின்றான் . படைப்புகள் அனைத்துமே இருவகையிலேயே இயங்குவதாயும் , நன்மை , தீமை என்ற அந்த இருவகையிலே அரக்கர்கள் தீமையின் வழியிலேயே சென்றுவிடுவதாயும் சொல்கின்றான் . தர்மத்தின் வழியிலேயே மற்றவர்கள் செல்வதால் அவர்களுக்குத் தர்மம் ஒரு பெரும்பலமாய் இருந்து காப்பதாயும் சொல்கின்றான் . தர்மத்தை வளர்த்து வந்த ரிஷி , முனிவர்களைத் துன்புறுத்திவிட்டு நாம் செய்யும் யாகமோ , தவமோ நம்மைக் காப்பாற்றாது என்பதை அறிவாயாக ! ராவணா , நீ பெற்றிருக்கும் வரமோ தேவர்களிடமிருந்தும் , ராட்சதர்கள் , அரக்கர்கள் , யக்ஷர்கள் போன்றோரிடமிருந்து உனக்கு மரணம் இல்லை என்பதே . ஆனால் இங்கே வந்திருக்கும் பெரும்படையோ எனில் வானரர்களையும் , மனிதர்களையும் கொண்டது என்பதை மறந்து விடாதே ! அபசகுனங்களும் , ரத்தமழை பொழியும் மேகங்களும் இலங்கையைச் சூழ்ந்துள்ளன . அரக்கர்களில் பலருக்கும் துர் சொப்பனங்கள் வருகின்றன . தெய்வங்களுக்கு என்று படைக்கப் படும் உணவை நாய்கள் தின்கின்றன . சூரியனைப் பார்த்து மிருகங்களும் , பறவைகளும் எழுப்பும் சப்தம் கர்ணகடூரமாய் உள்ளது . ராவணா , நமக்குப் பேரழிவு காத்திருக்கின்றதோ என்று அஞ்சுகின்றேன் , மேலும் மனித உருவில் விஷ்ணுவே தான் ராமனாய் வந்திருக்கின்றாரோ எனத் தோன்றுகின்றது . நினைத்துப் பார் ! கடலில் எத்தகைய அற்புதமான பாலம் அமைக்கப் பட்டிருக்கின்றது இந்த ராமனின் ஆணையால் . நன்கு ஆலோசனைகள் செய்துவிட்டு முடிவை எடுப்பாய் .” என்று கூறுகின்றான் . கோபம் கொந்தளித்துக் கொண்டிருந்த ராவணனுக்குப் பாட்டனின் வார்த்தைகள் இன்னும் அதிகக் கோபத்தையே ஏற்படுத்தியது . பல்வேறு சாத்திரங்களையும் நன்கு கற்றுத் தேர்ந்த தன் பாட்டன் , யாருடைய தூண்டுதலாலோ இவ்விதம் பேசி இருக்க வேண்டும் என்றும் , அல்லது தன் பேரனாகிய தன் மீதுள்ள வெறுப்பினால் பேசி இருக்க வேண்டும் என்றும் நினைத்தான் . அப்படியே பாட்டனிடம் சொல்லவும் சொன்னான் . சீதையைத் திரும்பிக்கொடுப்பது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று உறுதிபடச் சொல்லிவிட்டான் , தசக்ரீவன் . அவன் பாட்டனும் அவனுக்கு வாழ்த்துகளையும் ஆசிகளையும் கூறிவிட்டுச் சென்றான் . சபையில் போர்த் திட்டங்கள் விவாதிக்கப் பட்டன . ராவணன் பாதுகாப்புக்கான பல்வகை உபாயங்களையும் கையாண்டு அதற்கேற்ப உத்திரவுகளைப் பிறப்பித்தான் . அதே போல் ராமரும் வானரப் படையும் , தாங்கள் தங்கி இருந்த இடத்தில் விவாதித்துக் கொண்டிருந்தனர் . விபீஷணன் , தன் அமைச்சர்களைப் பறவை உரு எடுத்துக் கொண்டு இலங்கையின் காவல் பற்றித் தெரிந்து வந்து சொல்லச் சொல்ல அவர்களும் அவ்வாறே சென்று தெரிந்து வந்து சொல்கின்றார்கள் . ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொருவரால் பலமாய்க் காக்கப் படுகின்றது என்றும் , ராவணனின் பலத்தையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும் அறிந்து கொள்கின்றனர் அனைவரும் . அனைத்தையும் கேட்டுக் கொண்ட ராமர் யார் , யார் , எவர் எவரை , எம்முறையில் தாக்குவது என்று முடிவு செய்து கட்டளைகள் பிறப்பிக்கின்றார் . அதன்படி நீலன் , கிழக்கு வாயிலில் நிற்கும் பிரஹஸ்தனையும் , தெற்கு வாயிலின் மஹாபார்ச்வனையும் , மஹோதரனையும் அங்கதனும் , மேற்கு வாயிலைத் தகர்த்து உள்ளே புகும் பொறுப்பு அனுமனிடமும் , ராவணனாலேயே பாதுகாக்கப் படும் வடக்கு வாயிலை ராமரும் , லட்சுமணனும் தாக்குவதாயும் முடிவு செய்யப் படுகின்றது . சுக்ரீவன் , ஜாம்பவான் , விபீஷணன் , ஆகியோர் படையின் மத்தியிலும் , ஊரின் மத்தியிலும் புகுந்து தாக்க வேண்டும் . வானரர்கள் அனைவரும் தங்கள் சொந்த வானர உருவிலேயே இருக்க வேண்டும் . அப்போதுதான் நம் படை வீரர்களை நாம் தனியாக அடையாளம் காணலாம் . ராமர் , லட்சுமணன் , விபீஷணன் , அவனுடன் வந்திருக்கும் நால்வர் ஆகிய ஏழு பேர் மட்டுமே மனித உருவில் இருப்போம் . என்று கட்டளை இடுகின்றார் ராமர் . பின்னர் லட்சுமணன் , விபீஷணன் , சுக்ரீவன் ஆகியோர் தொடர சுவேல மலை மீது ராமர் ஏறினார் . இலங்கை முற்றுகைக்கு வானரப் படை ஆயத்தம் ஆனது . 58 கதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் - பகுதி 58 ராமனுடன் சேர்ந்து சுவேல மலை மீது பல வானரர்களும் ஏறினார்கள் . இலங்கை போருக்குத் தயாராகிக் கொண்டிருந்த காட்சி அங்கிருந்து கண்ணில் பட்டது . மாலை நேரம் முடிந்து இரவில் அங்கேயே ஓய்வெடுத்த வானரப் படை மறுநாள் காலையில் , திரிகூட மலையின் மீது ஆகாயத்தில் இருந்து தொங்க விடப்பட்டது போன்ற பேரழகோடு காட்சி அளித்த இலங்கையைப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் , ஒரு உயரமான இடத்தில் ராவணன் நின்று கொண்டிருப்பதை ராமர் கவனித்தார் . ராவணனின் , கம்பீரத்தையும் , தேஜஸையும் , வீரத்தோற்றத்தையும் கண்டு ராமர் வியந்து கொண்டிருந்த நேரத்தில் , சுக்ரீவனுக்கு ராவணன் பேரில் கடுங்கோபம் ஏற்படுகின்றது . உடனேயே அந்த மலைச் சிகரத்தில் இருந்து ராவணனை நோக்கித் தாவினான் . “ உன்னைக் கொன்று விடுவேன் , விடமாட்டேன் ” என்று கூவிய வண்ணம் தாவிய சுக்ரீவனின் தாக்குதலினால் ராவணனின் கிரீடம் தலையில் இருந்து கீழே விழுந்து உருண்டோடியது . ராவணன் மிகுந்த கோபத்துடன் எதிர்த் தாக்குதல் நடத்தினான் . தரை மீது சுக்ரீவனைத் தூக்கி வீசி அடித்தான் . பதிலுக்கு சுக்ரீவனும் ராவணனை வீசி எறிய இருவருக்கும் பயங்கரமாக யுத்தம் நடந்தது . கடுமையான சண்டையால் கொஞ்சம் மனம் தளர்ந்த ராவணன் தன் மாயாசக்தியைப் பிரயோகிக்க முடிவு செய்தான் . அதற்குள் இதை உணர்ந்த சுக்ரீவன் ஆகாயத்தில் தாவி , இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான் , ராமர் சுக்ரீவனை ,” நீ ஒரு அரசனாக இருந்து கொண்டு இம்மாதிரியான காரியங்களைச் சொல்லாமலும் , யாருடனும் கலந்து ஆலோசிக்காமலும் செய்யலாமா ??? உனக்கு ஏதானும் நேர்ந்திருந்தால் ???? அதன் பின்னரும் யாரைப் பற்றியாவது நான் யோசனை செய்ய முடியுமா ??? ராவணன் படைகளையும் , அவனையும் நாசம் செய்து விட்டு , உன் மகன் ஆன அங்கதனையும் , இலங்கை மன்னனாக விபீஷணனையும் , என் தம்பி பரதனையும் முறையே சிம்மாசனத்தில் அமர்த்தி விட்டு நான் உயிரை விட்டிருப்பேன் .” என்று சொல்லிவிட்டு , “ இனியும் இம்மாதிரியான காரியங்களை யாரையும் கேட்காமல் செய்யாதே .” என்று கூறுகின்றார் . பின்னர் லட்சுமணனும் , விபீஷணனும் , சுக்ரீவன் , அனுமன் , நீலன் , ஜாம்பவான் ஆகியோருடன் பின் தொடர , ராமர் வானரப் படையை முன்னேறிச் செல்லக் கட்டளை பிறப்பித்துவிட்டுத் தானும் தொடர்ந்து முன்னேற ஆரம்பித்தார் . ராம , லட்சுமணர்கள் ராவணனால் பாதுகாக்கப் பட்ட வடக்கு வாயிலை அடைந்தனர் . மற்றவர்கள் தங்களுக்குக் குறிப்பிடப் பட்ட வாயிலை நோக்கிச் சென்று காற்றுக் கூடப் புக முடியாத அளவுக்கு இலங்கையைச் சூழ்ந்து கொண்டு , யுத்தம் தொடங்கும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர் . அப்போது மீண்டும் ஒரு முறை ஆலோசனைகள் செய்த ராமர் அங்கதனை அழைத்து , ராவணனிடம் சென்று , எச்சரிக்கை கொடுக்குமாறு சொல்லித் தூது அனுப்புகின்றார் . ராவணன் செய்த பாவங்களுக்கெல்லாம் முடிவு கட்டிவிட்டு அவன் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டிய வேளை நெருங்கிவிட்டதென்றும் , சீதையை ஒப்படைத்துவிட்டு , பாதுகாப்பைக் கோரவேண்டும் என்றும் , விபீஷணன் இலங்கை அரசனாய் முடிசூட்டப் படுவான் என்றும் , நீ ஒத்துழைக்கவில்லை எனில் உன் உயிர் என் கையில் என்றும் சொல்லி அனுப்புகின்றார் . மண்ணோடு மண்ணாக ஆக்கிவிடுவதாயும் சொல்லி அனுப்புகின்றார் . அங்கதன் அவ்வாறே ராமனின் உத்தரவை ஏற்று ராவணனின் அரண்மனை அடைகின்றான் . அங்கதன் கூறிய செய்தியைக் கேட்ட ராவணன் கோபத்துடன் அங்கதனைச் சிறைப் பிடிக்குமாறு உத்திரவிட , அங்கதனை நான்கு அரக்கர்கள் பிடிக்கின்றார்கள் . தன் வலிமையை அவர்கள் உணரவேண்டி தானாகவே அவர்களிடம் சிறைப்பட்ட அங்கதன் , பின்னர் நால்வரையும் , குருவிகளைத் தூக்கிச் செல்வது போல் தூக்கிக் கொண்டு அரண்மனையின் உப்பரிகையை அடைந்து , அங்கிருந்து அவர்களை உதறிக் கீழேதள்ள , அவர்கள் கீழேவிழுந்தார்கள் . உப்பரிகையை இடித்துத் தள்ளிவிட்டு அங்கதன் ஆகாயத்தில் தாவி , ராமர் இருக்குமிடம் போய்ச் சேர்ந்தான் . ராமரின் அனைத்துப் படைகளும் முன்னேறி இலங்கையைப் பரிபூரணமாய் முற்றுகை இட்டன . நான்கு பக்கங்களிலும் கோட்டையை ஒட்டிக் கோட்டைச் சுவர்கள் போல் அடைத்துக் கொண்டு வந்து விட்ட வானரப் படையைக் கண்ட அரக்கர்கள் , ராவணனிடம் ஓடிப் போய் இலங்கை முற்றுகைக்கு ஆளாகி விட்டது என்னும் தகவலைத் தெரிவிக்கின்றனர் . ராவணன் வானர சேனை எவ்வாறு அழிப்பது என யோசனையில் ஆழ்ந்தான் . ஆனால் ராமரோ எனில் தாமதம் செய்யாமல் எதிரிகளைத் தாக்குவோம் என உத்தரவு பிறப்பிக்கின்றார் . கையில் கிடைத்த பாறைகள் , பெரிய மரங்கள் , மலைகளைப் பெயர்த்தெடுத்த கற்கள் , சிறு மலைகள் , குன்றுகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு வானரப் படை இலங்கையைத் தாக்க ஆரம்பித்தது . தாக்குதல் முழு அளவில் ஆரம்பித்தது . வானரப் படையும் , அதன் தலைவர்களும் அவரவருக்கு உரிய இடத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டனர் . உள்ளே இலங்கை நகரிலும் , ராவணன் படை வீரர்களை ஊக்குவித்து அனுப்பி வைக்கின்றான் . சங்க முழக்கம் கேட்கின்றது . போர்ப் பேரிகை ஒலிக்கின்றது . எக்காளங்கள் ஊதப் படுகின்றன . அரக்கர்கள் ராவணனுக்கு ஜெயம் என்ற கோஷத்தோடு எதிர்த் தாக்குதலுக்குத் தயாராகி வருகின்றனர் . தேர்களிலும் , யானைகள் மீதிலும் , குதிரைகள் மீதிலும் அரக்கர் படைகள் வருகின்றன . இந்திரஜித் அங்கதனையும் , சம்பாதி , ப்ரஜங்கனையும் , அனுமான் , ஜம்புமாலியையும் , விபீஷணன் , சத்ருக்கனன் என்பவனையும் , நீலன் நிகும்பனையும் , சுக்ரீவன் ப்ரக்சனையும் , லட்சுமணன் , விருபாஷனையும் எதிர்க்கின்றனர் . எண்ணற்ற வானர வீரர்களின் உடல்கள் கீழே விழுகின்றன . அதே போல் அரக்கர்களின் உடல்களும் வெட்டித் தள்ளப் படுகின்றன . ரத்த வெள்ளத்தில் உடல்கள் மிதந்து செல்கின்றன . சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னரும் கூட அரக்கர்கள் வலிமையுடனேயே வானரவீரர்களைத் தாக்குகின்றனர் . தன்னைத் தாக்கிய இந்திரஜித்தின் தேரோட்டியும் , தேர்க்குதிரைகளும் அங்கதனால் கொல்லப் படுகின்றனர் . இந்திரஜித் களைப்புடன் போர்க்களத்தை விட்டு அகலுகின்றான் . ராமர் , லட்சுமணர் , சுக்ரீவன் , விபீஷணன் போன்றோர் அவனைப் போற்றினார்கள் . அங்கதனால் துன்புறுத்தப் பட்ட இந்திரஜித்தோ கோபம் மிகக் கொண்டு தன்னுடைய மாயாவி யுத்தத்தில் இறங்கிவிட்டான் . தன்னை மறைத்துக் கொண்டு , ராம , லட்சுமணர்களை அம்பு உருக் கொண்ட விஷப் பாம்புகளால் தாக்கினான் . மனித சக்திகளை மீறிய சக்தி கொண்ட இந்திரஜித் தன்னுடைய இந்த அம்புகளால் ராமனையும் , லட்சுமணனையும் கட்டிவிட்டான் . சகோதரர்கள் இருவரும் மயங்கிக் கீழே விழுந்தனர் . அம்பு உருக் கொண்ட பாம்புகளால் அவர்கள் உடல் துளைக்கப் பட்டது . ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது . வானரப் படை செய்வதறியாது கலங்கி நின்றது . நம்மில் பெரும்பாலோர் வால்மீகியின் மூலக் கதையை முழுதும் படித்திருக்க மாட்டோம் , பெரும்பாலோருக்குத் தெரிந்தது கம்பரும் , மற்றச் சில சுருக்கமான ராமாயணங்களுமே . ஆனால் இது முழுக்க , முழுக்க வால்மீகியின் மூலத்தையே எடுத்துச் சொல்லும் ஒரு முயற்சி . அதற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய கம்பரை நன்கு அறிந்தவர்கள் அறிந்தது எல்லாம் ராமன் ஒரு அவதாரம் என்றே . ஏனெனில் கம்பர் ராமாயணம் பூராவுமே ராமரை ஒரு அவதாரம் என்றே குறிப்பிடுகின்றார் . அதனாலேயே வாலி வதம் பற்றிய கேள்விகளும் , சீதையின் அக்னிப் ப்ரவேசம் பற்றிய கேள்விகளும் எழுகின்றன . வாலியைக் கண்டு ராவணன் அஞ்சினான் . வாலி ராவணனை வென்றிருக்கின்றான் . ராவணன் பயந்த ஒரே ஆள் வாலி மட்டுமே . அத்தகைய வீரம் பொருந்திய வாலி , சீதையை , ராவணன் தூக்கிக் கொண்டு சென்ற போது , வாலியின் நாட்டின் வழியாகவே சென்ற போதும் அதைத் தடுத்து நிறுத்தவில்லை எனச் சிலர் நினைக்கலாம் . இந்த வாதம் ஓரளவு ஏற்கக் கூடியதே ! ஏனெனில் , தன்னை வீழ்த்தியதும் , வாலியே ராமனிடம் சொல்கின்றான் :” தர்மச் சங்கிலியை அறுத்துவிட்டு , நன்னெறிக்கட்டுகளைத் தளர்த்திவிட்டு , நியாயம் என்ற அங்குசத்தையும் அலட்சியம் செய்துவிட்டு , மதம் பிடித்த ஒரு யானை போல் நடந்து கொண்டுவிட்ட ராமன் என்பவன் என்னை கொன்றுவிட்டானே ? உனக்கு என்ன வேண்டும் ? உன் மனைவி சீதை தானே ? என்னிடம் சொல்லி இருந்தால் நான் ஒரே நாளில் கொண்டு வந்து சேர்த்திருப்பேனே ? ராவணனைக் கழுத்தில் சுருக்குப் போட்டு இழுத்து வந்திருப்பேனே ?” என்று ராமனைப் பார்த்துக் கேட்கின்றான் . ஆகவே வாலி ராவணனைத் தடுக்காததின் காரணமாகவே ராமர் கொன்றிருக்கலாம் என்பதும் ஒரு கருத்து . ஆனால் வால்மீகியோ தான் அறிந்த ஒரு மனிதனின் வாழ்க்கையையே தான் அறிந்தும் , கேட்டும் , பார்த்தும் தெரிந்து கொண்ட வரையில் எழுதி இருக்கின்றார் . ஆகவே , ராமர் அவ்வாறு நடந்து கொண்டதிலோ , அல்லது சீதையோ , ராமரோ கைகேயியைக் குறை கூறிப் பேசும்போதோ சற்றும் யாருடைய கோபத்தையுமோ , அல்லது , பேச்சுக்களையோ கூட்டியோ , குறைத்தோ சொல்லவில்லை . ராமரோ , அல்லது சீதையோ இப்படி எல்லாம் பேசி இருப்பார்களா என்று போன அத்தியாயத்தைப் படித்தவர்கள் நினைக்கலாம் . சாதாரண மானுடப் பெண்ணாக வாழ்ந்த சீதையும் சரி , ராமரும் சரி இப்படித் தான் பேசுவார்கள் , பேச முடியும் , என்பதை நினவில் கொள்ள வேண்டும் . மேலும் அரசன் ஆனவன் எவ்வாறு தர்மம் , கடமை , நீதி , நேர்மை , நியாயம் பொருந்தியவனாய் இருக்க வேண்டும் என்பதிலும் கடுமை காட்டியே வருகின்றது ராமாயணம் பூராவும் . ராவணன் ஒரு வீரனாக இருந்தும் , தன் குடி மக்களுக்கு நன்மையே செய்து வந்தும் , அவன் தர்மத்தில் இருந்து தவறியதாலேயே அவனுக்கு இந்த வகையில் மரணம் ஏற்படுகின்றது . ஆகவே ஆட்சி புரிவோருக்கு ஒழுக்கம் என்பது முக்கியத் தேவையாக இருந்து வந்திருக்கின்றது என்பது நன்கு விளங்குகின்றது . அதை ஒட்டியே தோன்றி இருக்கும் , “ மன்னன் எவ்வழி , அவ்வழி மக்கள் ” என்னும் கூற்று . ஒவ்வொருத்தரின் பிறப்புக்கும் , இறப்புக்கும் தகுந்த காரணங்களையும் சொல்லி வருகின்றது இந்த ராமாயணக் கதை . அவரவர்கள் செய்யும் பாவத்துக்குத் தக்க தீய பலனும் , செய்யும் புண்ணியங்களுக்குத் தக்க நற்பலனையும் கொடுத்தாலும் அவரவர்களுக்கு என்று விதிக்கப் பட்ட விதியை யாராக இருந்தாலும் மீற முடியாது . விதியின் பலனை அனுபவித்தே தீரவேண்டும் என்றும் சொல்கின்றது . தமிழில் இவ்வாறு ஊழ்வினையைச் சுட்டிக் காட்டும் காப்பியம் “ சிலப்பதிகாரம் “. 59 கதை, கதையாம், காரணமாம், ராமாயணம் - பகுதி 59 தன்னால் ராம , லட்சுமணர்கள் வீழ்த்தப் பட்டதைப் பார்த்த இந்திரஜித்திற்கு மனதில் மகிழ்ச்சி பொங்கியது . நேருக்கு நேர் நின்று யுத்தம் செய்யும் போது , எதுவும் செய்ய இயலாமல் தவித்துக் கொண்டிருந்த இந்திரஜித் , இப்போது தன்னை மறைத்துக் கொண்டு செயல்பட்டதின் மூலம் சகோதரர்கள் இருவரையும் வீழ்த்திவிட்டது குறித்து மேலும் மகிழ்ந்தான் . இன்னும் , இன்னும் என அம்புகளைப் பொழிந்த வண்ணம் , “ தேவேந்திரனால் கூட என்னை நெருங்க முடியாது . அப்படி இருக்க நீங்கள் இருவரும் என்னைக் கொல்ல எண்ணுவது நடக்கும் காரியமா ?” என்று கூவினான் . நாராசங்கள் என்ற பெயருடைய அந்த அம்புக் கூட்டங்களால் முதலில் ராமரின் உடல் துளைக்கப்பட அவர் மீழே வீழ்ந்தார் . வில் கையில் இருந்து நழுவியது . இதக் கண்ட லட்சுமணனுக்குத் தன்னுடைய உயிரே உடலை விட்டுப் பிரிவது போல் மனம் தளர்ந்து , உடல் சோர்வுற்றது . இனி தன் உயிர் என்னவானால் என்ன என்று அவன் மனம் எண்ண அவனும் தரையில் சாய்ந்தான் . இருவரையும் வானர வீரர்கள் சுற்றிக் கூடி நின்றனர் . உடலில் ஒரு விரல் அளவு கூட இடைவெளி இல்லாமல் எங்கும் அம்புகள் துளைத்து , ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது . மூச்சுவிடத் திணறிக் கொண்டிருந்த இரு சகோதரர்களையும் பார்த்து வானரப் படைத் தலைவர்களும் , மற்ற வீரர்களும் கவலையுடன் யோசிக்க இந்திரஜித் மறுபடியும் கூவினான் . எத்தனை நன்கு கவனித்துப் பார்த்தாலும் அவன் இருக்குமிடம் தெரியவில்லை . ஆனால் அவன் குரல் மட்டும் நன்கு கேட்டது அனைவருக்கும் . “ கர , தூஷணர்களை வென்றுவிட்ட பெருமையில் இருந்த இந்த இரு மனிதர்களும் , தேவேந்திரனையே வென்ற என்னால் தோற்கடிக்கப் பட்டு தரையில் வீழ்த்தப் பட்டனர் . இவர்கள் இருவரையும் என்னுடைய அம்புகளில் இருந்து விடுவிக்க யாராலும் முடியாது . சாத்திரங்கள் கற்றறிந்த , வேத மந்திரங்கள் அறிந்த ரிஷிகளாலோ , அல்லது தேவர்களாலோ , யாராலும் முடியாது . இவர்களை வீழ்த்தியதன் மூலம் பெரும் துன்பக் கடலில் மூழ்கி இருந்த என் தந்தை காப்பாற்றப் பட்டார் . இலங்கையை அழிப்போம் என்று வந்த இவர்களை நான் வீழ்த்தியதன் மூலம் வானரக் கூட்டத்தின் பெருமைகளும் , மேகங்கள் கலைவது போலக் கலைந்துவிட்டது .” என்று உற்சாகக் கூச்சல் போட்டுக் கொண்டு , மேன் மேலும் அம்புகளை வானரப் படை இருக்குமிடம் நோக்கி ஏவுகின்றான் . அரக்கர்கள் மனம் மகிழ , வானரப் படை வீரர்களுக்குப் பெரும் காயங்கள் ஏற்படுகின்றது . ராம , லட்சுமணர்கள் இறந்துவிட்டனரோ என்ற முடிவுக்கு வந்த சுக்ரீவனை விபீஷணன் தேற்றுகின்றான் . மந்திர , ஜபங்களைச் செய்து கையில் நீர் எடுத்துக் கொண்டு அந்த மந்திர நீரால் சுக்ரீவன் முகத்தைக் கழுவி விட்டு , வானரப் படையை மேன்மேலும் ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றான் . தன்னம்பிக்கையை இழக்கவேண்டாம் , ராமரோ , லட்சுமணனோ இறந்திருக்க மாட்டார்கள் , முகத்தில் ஒளி குன்றவில்லை எனவும் ஆறுதல் சொல்கின்றான் . அரக்கர்களோ தாங்கள் ஜெயித்துவிட்டதாகவே ராவணனிடம் சென்று சொல்ல , இந்திரஜித்தும் அங்கே சென்று தன் தந்தையிடம் நடந்த விபரங்களைத் தெரிவிக்கின்றான் . மனம் மகிழ்ந்த ராவணன் இந்திரஜித்தைப் பாராட்டிக் கொண்டாடுகின்றான் . உடனேயே சீதையைக் காத்து நின்ற அரக்கிகளை அழைத்து வருமாறு கட்டளை இடுகின்றான் . அவர்களிடம் , சீதையிடம் சென்று , ராம , லட்சுமணர்கள் இந்திரஜித்தால் கொல்லப் பட்டனர் என்ற செய்தியைத் தெரிவிக்குமாறு கூறுகின்றான் . அவளைப் புஷ்பக விமானத்தில் அமரச் செய்து அழைத்துச் சென்று யுத்தகளத்தில் வீழ்ந்து கிடக்கும் அந்த இரு இளவரசர்களையும் காட்டச் சொல்கின்றான் . பின்னர் வேறு வழியில்லாத சீதை என்னை நாடி வருவாள் எனக் கோஷம் போடுகின்றான் தசகண்டன் . சீதை அந்தப் படியே புஷ்பக விமானத்தில் ஏற்றப் பட்டு யுத்தகளத்துக்கு அழைத்துச் செல்லப் படுகின்றாள் . வானரக் கூட்டங்கள் அழிக்கப் பட்டு , ராமரும் , லட்சுமணனும் தரையில் வீழ்ந்து கிடப்பதை சீதை கண்டாள் . தன்னுடைய அங்க , லட்சணங்களைக் கண்ட ஜோதிடர்களும் , ஆரூடக்காரர்களும் , தனக்குப் பட்டமகிஷியாகும் , லட்சணம் இருப்பதாய்க் கூறியது பொய்த்துவிட்டதே எனவும் , தான் விதவை ஆகிவிட்டோமே என ஜோதிடத்தின் மேலும் , அந்த ஜோசியர்கள் சொன்னது எல்லாம் பொய் என்றும் கூறிப் புலம்புகின்றாள் சீதை . அப்போது திரிஜடை , “ கலங்க வேண்டாம் சீதை , ராமரோ , லட்சுமணரோ இறக்கவில்லை , அவர்கள் முகம் ஒளி பொருந்தியே காணப் படுகின்றது . மேலும் தலைவர்கள் இறந்து விட்டதால் ஏற்படும் குழப்பம் எதுவும் வானரப் படையிடம் காணப்படவில்லை . அமைதியாக மேற்கொண்டு செய்யும் வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றனர் . இவர்கள் இறக்கவில்லை , நீ அமைதியாக இரு . இவர்களை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று என் மனம் சொல்கின்றது . உன் மனதைத் தேற்றிக் கொண்டு தைரியமாய் இருப்பாயாக .” என்று சொல்கின்றாள் . அப்படியே இருப்பதாய் இரு கைகளையும் கூப்பிக்கொண்டு சீதை அவளை வேண்ட புஷ்பகம் மீண்டும் அசோக வனத்துக்கே திரும்புகின்றது . அரை மயக்கத்தில் இருந்த ராம , லட்சுமணர்களில் , சற்றே கண்விழிக்க முடிந்த ராமர் , தன் அன்புக்கு உகந்த சகோதரன் , தன்னோடு சேர்ந்து தரையில் வீழ்ந்து கிடப்பதைக் காண்கின்றார் . அவர் மனம் லட்சுமணனைப் பெற்றெடுத்த தாயான சுமித்திரையின் மனம் என்ன பாடுபடும் இதைக் கண்டால் என்று யோசிக்கின்றது . தனக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லி வந்து , தன்னைத் தேற்றிய லட்சுமணன் இப்போது விழுந்து கிடப்பதைக் கண்டதும் அவர் மனம் துடிக்கின்றது . லட்சுமணனைப் பின் தொடர்ந்து தானும் யமனுலகுக்குச் செல்லவேண்டியதே என்று மனம் நொந்து சொல்கின்றார் . சுக்ரீவனுக்காவது கிஷ்கிந்தைக்கு அரசுப் பட்டம் கட்டியாயிற்று . ஆனால் விபீஷணனுக்குக்கொடுத்த வாக்கைக் காக்க முடியவில்லையே ?? இப்படி வீழ்ந்து கிடக்கின்றோமே என மனம் பதறுகின்றார் ராமர் . அங்கே அப்போது வந்த விபீஷணனைக் கண்ட வானர வீரர்கள் இந்திரஜித்தோ எனக் கலக்கமுற , அவர்களை நிறுத்திய விபீஷணன் , சுக்ரீவனிடம் படையை அணிவகுத்து நின்று எதிர்த்துப் போரிடக் கட்டளை இடுமாறு கூறுகின்றான் . எனினும் தன்னாலன்றோ ராம , லட்சுமணர்கள் இவ்விதம் வீழ்ந்து கிடப்பது என எண்ணித் தவிக்கின்றான் . ராவணன் ஆசை நிறைவேறிவிடுமோ எனக் கலக்கம் அடைகின்றான் . இவர்களை எழுப்புவது எவ்வாறு என அவன் சுக்ரீவனிடம் ஆலோசனை செய்கின்றான் . தன் மந்திர நீரினால் இருவர் கண்களையும் துடைக்கின்றான் . சுக்ரீவன் தன் மாமனாராகிய சுஷேணனைப் பார்த்து , “ ராம , லட்சுமணர்களைக் கிஷ்கிந்தை கொண்டு சேர்க்கும் படியும் , தான் இருந்து ராவணனையும் , அவன் குடும்பம் , மகன் , சகோதரர் போன்றோரையும் , மற்ற அரக்கர்களையும் அழித்துவிட்டு , சீதையை மீட்டுக் கொண்டு வருவதாயும் தெரிவிக்கின்றான் . சுஷேணன் சொல்கின்றான் : தேவாசுர யுத்தம் நடந்த போது அதை நானும் கண்டிருக்கின்றேன் . அப்போது அசுரர்கள் தங்களை நன்கு மறைத்துக் கொண்டு போர் புரிந்த வண்ணமாக தேவர்களுக்கு மீண்டும் , மீண்டும் அழிவை ஏற்படுத்தினார்கள் . அப்போது தேவகுருவாகியவரும் , மஹரிஷியும் ஆன பிரஹஸ்பதியானவர் சில மந்திரங்களை ஓதி , துதிகளைப் புரிந்து , சில மருந்துகளைத் தயாரித்து , அவற்றின் மூலம் தேவர்களை உயிர்ப்பித்து வந்தார் . அந்த மருந்துகள் இப்போதும் பாற்கடலில் கிடைக்கின்றது . சம்பாதி , பனஸன் ஆகியோர் தலைமையில் சில வானரர்கள் சென்று அந்த மருந்துகளைக் கொண்டு வரவேண்டும் . பாற்கடலில் இருந்து எழும் இரு மலைகள் ஆன , சந்திரம் , துரோணம் ஆகியவற்றில் , “ சஞ்சீவகரணி ” என்னும் அற்புத மருந்து , இறந்தவர்களைக் கூடப் பிழைக்க வைக்கும் , ஆற்றல் பொருந்திய மூலிகையும் , விசால்யம் என்னும் அம்புகளால் படும் காயங்களை இருந்த இடம் தெரியாமல் போக்கும் சக்தி வாய்ந்த மூலிகையும் கிடைக்கும் . அவை கொண்டுவரப்படவேண்டும் . அனுமன் நினைத்தால் அவை நம் கையில் கிடைத்துவிடும் , ராம , லட்சுமணர் எழுந்து விடுவார்கள் என்று சொல்கின்றான் . அப்போது ஆகாயத்தில் பெருத்த ஓசை ஒன்று கேட்டது . இடி , இடித்தது , மின்னல்கள் பளீரிட்டன . அண்ட , பகிரண்டமும் நடுங்கும்படியான பேரோசை கேட்டது . கடல் கொந்தளித்தது . மலைகள் ஆட்டம் கண்டன . மேகங்கள் ஒன்றுக்கொன்று மோதும் ஓசையில் உலகே நடுங்கியது . பூமி பிளந்துவிட்டதோ என்னும்படியான எண்ணம் ஏற்பட்டது . இத்தகைய மாற்றங்கள் எதனால் ஏற்படுகின்றது என அனைவரும் அதிசயித்துப் பார்க்கும்போது , காற்று பலமாக வீசத் தொடங்கியது . ஊழிப்பெருங்காற்றோ , புயலோ , இது என்ன இவ்வாறு காற்று ? எனக் கலங்கும் வேளையில் கருடன் வானில் தோன்றினான் . ஊழித் தீயே காற்றின் வேகத்தோடு பறந்து வருவது போன்ற செந்நிறத் தோற்றத்தில் வானம் மட்டுமின்றி , பூமியும் சிவந்தது . 60 கதை, கதையாம், காரணமாம் ராமாயணம் பகுதி 60 கருடன் செவ்வொளி வீசப் பறந்து வருவதைக் கண்ட வானரர்கள் மனம் மகிழ்ந்தனர் . ராம , லட்சுமணர்களைக் கட்டி இருந்த அம்புகளின் உருவில் இருந்த பாம்புகள் பயந்து ஓடிப் போயின . அதைக் கண்ட வானரகள் மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்ப , ராம , லட்சுமணர்கள் இருவரும் எழுந்தனர் . புத்துயிர் பெற்று எழுந்த அவர்களைக் கண்ட வானரர்கள் ஆரவாரம் எழுப்பினார்கள் . அவர்கள் முகத்தைத் தன் கையால் கருடன் துடைத்தான் . அவர்களின் பலம் , தேஜஸ் , அனைத்தும் மீண்டும் இரு மடங்காய்ப் பெருகிவிட்டது போல் ஒரு தோற்றம் எழுந்தது . இருவரையும் கட்டி அணைத்தான் கருடன் . ராமர் அவனிடம் , “ இத்தனை அன்புடன் என்னையும் என் சகோதரனையும் காத்த நீ யாரோ ?? உன்னைக் கண்டதுமே என் மனதில் அன்பு வெள்ளமாய் ஓடுகின்றதே ? எனக்கு மிக நெருங்கியவன் நீ என்ற எண்ணம் உண்டாகின்றதே ? நீ யார் ??” என்று கேட்க , கருடனோ , ” நான் கருடன் , உனக்கும் , எனக்கும் உள்ள பிணைப்பு அசைக்க முடியாதது . எவராலும் நினைத்துப் பார்க்க முடியாத வல்லமை கொண்ட இந்திரஜித்தால் நீ தாக்கப் பட்ட போது தேவர்களே எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தனர் . அந்த அம்பு உருக் கொண்ட பாம்புகள் என் ஒருவனால் மட்டுமே விரட்ட முடியும் . இந்தச் செய்தியை அறிந்ததுமே , நம்மிருவரின் நட்பின் பிணைப்பையும் , அன்பின் உறுதியையும் மனதில் கொண்டு உன்னைக் காக்க வேண்டி இங்கே வந்தேன் . இப்போது அந்தப் பாம்புகள் ஓடி விட்டன . ஆனாலும் இந்த ராட்சதர்கள் மாயத் தன்மை கொண்டவர்கள் . அதிலும் இந்திரஜித்திடம் நீ மிகக் கவனமாய் இருக்கவேண்டும் . “ “ நான் யார் என்பதெல்லாம் இருக்கட்டும் . நம் நட்பு பற்றியும் நீ இப்போது சிந்திக்கவேண்டியதில்லை . உன் கடமை இப்போது சீதையை மீட்பதே . இலங்கையின் இளைஞர்களையும் , வயோதிகர்களையும் விடுத்து மற்றவர்களையும் , ராவணனையும் அழித்து , சீதையை மீட்பது ஒன்றே உன் இப்போதைய கடமை . பின்னால் நீயே தெரிந்து கொள்வாய் , நம் நட்பின் பிணைப்புப் பற்றி . இப்போது நான் சென்று வருகின்றேன் . உனக்கு மங்களம் உண்டாகட்டும் .” என்று வாழ்த்திவிட்டு , என்ன தான் மகாவிஷ்ணுவே மனித உருவில் இருந்தாலும் , மனித உருக் கொண்டவனிடம் தான் யார் என்றும் , அவன் தான் விஷ்ணு என்பதையும் தான் சொல்லுவது தகாது என்ற உணர்வோடு கருடன் திரும்புகின்றான் . புதுப் பலம் எய்திய வானர வீரர்களின் ஆரவாரம் ராவணன் காதை எட்டுகின்றது . ராவணன் என்ன விஷயம் என்று பார்த்து வரச் சொல்ல , ராட்சதர்கள் அவ்வாறே பார்த்துச் சென்று ராம , லட்சுமணர்கள் இந்திரஜித்தின் கட்டில் இருந்து விடுபட்டுவிட்டனர் என்று சொல்கின்றார்கள் . உடனேயே ராவணன் தன் தளபதியான தூம்ராக்ஷனை அனுப்ப , வானரப் படைக்குப் பெரும்நாசத்தை உண்டு பண்ணிய தூம்ராக்ஷனை அனுமன் வீழ்த்துகின்றான் . பின்னர் ராவணன் வஜ்ரத்ம்ஷ்ட்ரனன் , அகம்பனன் ஆகியோரை அனுப்ப அவர்களை முறையே அங்கதனும் , அனுமனும் வீழ்த்துகின்றனர் . பின்னர் தலை கவிழ்ந்து யோசனையில் ஆழ்ந்த ராவணன் , பிரஹஸ்தனை அழைத்து ஆலோசனை செய்கின்றான் . மேலே என்ன செய்வது என்ற யோசனையில் ஆழ்ந்த ராவணனிடம் பிரஹஸ்தன் சொல்கின்றான் :” இந்த ஆலோசனை முன்னால் நடந்த போதே நான் சீதையைத் திருப்பி அனுப்புவதே உகந்தது எனத் தெரிவித்தேன் . இத்தனை பயங்கரமான , பெரிய யுத்தத்தை எதிர்பார்த்தே அவ்விதம் சொன்னேன் . எனினும் , நான் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டவன் . என்னால் என்ன முடியுமோ அதை உங்களுக்காக நான் செய்யத் தயாராக இருக்கின்றேன் . உயிர்த் தியாகம் கூடச் செய்யுவேன் .” என்று கூறிவிட்டு யுத்தகளத்துக்குச் செல்கின்றான் பிரஹஸ்தன் . பிஹஸ்தனைப் பார்த்த ராமர் , அவன் பலத்தையும் , வந்த நொடியில் பல வானரர்களை அவன் அழித்ததையும் கண்டு வியந்தார் . அதே சமயம் நீலன் பிரஹஸ்தனைத் தோற்கடித்து அவனையும் கொன்றான் . பிரஹஸ்தனே போரில் மாண்டான் என்ற செய்தி கேட்ட ராவணன் திகைத்தான் . பின்னர் தானே நேரில் போரில் இறங்குவதே சரி என்ற முடிவுக்கும் வந்தான் . தன்னுடைய அம்பு வெள்ளத்தால் வானர சேனையையும் , ராம , லட்சுமணர்களையும் மூழ்கடிக்கும் எண்ணத்துடன் தேரில் ஏறிக் கொண்டு வந்த ராவணனையும் , அவன் தலைமையில் வந்த படைகளின் அணிவகுப்பையும் கண்டு ராமர் வியந்த வண்ணம் , விபீஷணனிடம் , “ கம்பீரமான ஒளி பொருந்திய , இந்த அணி வகுப்பை நடத்தி வருபவர் யார் ? இந்த அணி வகுப்பில் யார் , யார் இருக்கின்றனர் ?” என்று கேட்கின்றார் . விபீஷணன் சொல்கின்றான் : “ இந்திர வில்லைப் போன்ற வில்லைக் கையில் ஏந்தி , சிம்மக் கொடியுடன் இந்திரஜித்தும் , மலைபோன்ற தோற்றத்துடன் அதிகாயனும் , சிவந்த நிறமுள்ள கண்களை உடைய மஹோதரனும் , இடி போன்ற வேகம் உடைய பிசானனும் , கையில் வேலுடன் திரிசிரனும் , மேகங்கள் போன்ற தோற்றத்துடம் கும்பனும் , எல்லாருக்கும் மேல் , தெய்வங்களுக்கே அஞ்சாத துணிவும் , வல்லமையும் கொண்டவனும் , இந்திரனையும் , யமனையும் ஜெயித்தவனும் , ருத்ரனுக்கு நிகர் ஆனவனும் ஆன ராவணனே இந்தப் படை அணிவகுப்புக்குத் தலைமை தாங்கி வருகின்றான் .” என்று சொல்கின்றான் . ராவணனின் அணிவகுப்பு போர்க்களத்தை அடைந்தது . போர் ஆரம்பம் ஆனது . தன் இடைவிடாத அம்பு மழையால் வானரப் படையைச் சிதற அடிக்கின்றான் ராவணன் . வானரப் படையோ திக்குத் தெரியாமல் ஓடுகின்றது . தன் அம்பால் சுக்ரீவன் மார்பில் ராவணன் அடிக்க அதனால் சுக்ரீவன் நிலை குலைந்து கீழே விழ , கோபம் கொண்ட வானரப் படை ராவணனைத் தாக்க , அவனோ அம்புமழை பொழிய , வானர வீரர்கள் ராமனிருக்கும் இடம் தேடி ஓடுகின்றது , பாதுகாப்புக்காக . 61 கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 61 வானரப் படைகள் ராமரின் பாதுகாப்பைத் தேடி ஓடி வரவும் , ராமர் வில்லைக் கையில் ஏந்திப் போருக்கு ஆயத்தம் ஆக , அவரைத் தடுத்த லட்சுமணன் , தான் சென்று ராவணனை அழித்துவிடுவதாய்ச் சொல்கின்றான் . ராமர் , ராவணனின் வீரத்தை லட்சுமணனுக்கு எடுத்துச் சொல்லிக் கவனமாய்ச் சென்று போர் புரியும்படி சொல்லி அனுப்புகின்றார் . ஆனால் அனுமனுக்கோ , தானே ராவணனை எதிர்க்க ஆவல் . ஆகவே அனுமன் ராவணனை நெருங்கி , “ நீ பெற்றிருக்கும் வரத்தால் வானரர்களிடமிருந்து உனக்கு வரப் போகும் இந்த விபத்தைத் தடுப்பவர் எவரும் இல்லை . நான் என் கையால் கொடுக்கப் போகும் அடியில் நீ வீழ்ந்து போவது நிச்சயம் .” என்று கூவுகின்றார் . ராவணனோ , சர்வ அலட்சியமாய் அனுமனை எதிர்க் கொள்ளத் தயாராய் இருப்பதாய்த் தெரிவிக்கின்றான் . ராவணனுக்குத் தான் அவன் மகன் ஆன அட்சனை அழித்ததை நினைவு படுத்துகின்றார் அனுமன் . ராவணனின் கோபம் பெருக்கெடுக்கின்றது . அனுமனை ஓங்கி அறைய , அனுமன் சுழன்றார் . அனுமன் திரும்ப அடிக்க , அனுமனின் வீரத்தை ராவணன் பாராட்டுகின்றான் . ஆனால் அனுமனோ , என்னுடைய இத்தகைய வீரம் கூட உன்னை வீழ்த்தவில்லையே என வருந்துகின்றார் . அனுமனை மேலும் ஓங்கிக் குத்தி , நிலைகுலையச் செய்துவிட்டு நீலனைத் தேடிப் போகும் ராவணனை நீலனும் வீரத்தோடும் , சமயோசிதத்தோடும் எதிர்த்துச் சண்டை போடுகின்றான் . சற்றே தெளிந்த அனுமன் அங்கே வந்து நீலனுடன் சண்டை போடும் ராவணனை இப்போது எதிர்ப்பது முறை அல்ல என ஒதுங்கி நிற்க , ராவணனோ நீலனை வீழ்த்துகின்றான் . நீலன் கீழே விழுந்தான் எனினும் உயிரிழக்கவில்லை . ராவணன் அனுமனை நோக்கி மீண்டும் போக லட்சுமணன் அப்போது அங்கே வந்து , வானரப் படைகளை விட்டு விட்டு தன்னுடன் போர் புரிய வருமாறு கூவி அழைக்கின்றான் . அவ்வாறே , லட்சுமணன் வந்திருப்பது தனக்கு அதிர்ஷ்டமே என எண்ணிய ராவணன் , அதை அவனிடமும் கூறிவிட்டு அவனுடன் போருக்கு ஆயத்தம் ஆகின்றான் . அம்பு மழை பொழிகின்றான் ராவணன் . லட்சுமணனோ சர்வ சாதாரணமாக அவற்றை ஒதுக்கித் தள்ளுகின்றான் . பிரம்மனால் அளிக்கப் பட்ட அஸ்திரத்தால் லட்சுமணனைத் தாக்க , சற்றே தடுமாறிய லட்சுமணன் சுதாரித்துக் கொண்டு ராவணனைத் தாக்க அவனும் தடுமாறுகின்றான் . எனினும் வீரனாகையால் , லட்சுமணனைப் போலவே அவனும் சீக்கிரமே தன்னை சுதாரித்துக் கொள்கின்றான் . ரொம்பவும் பிரயத்தனம் செய்தும் லட்சுமணனை வீழ்த்த முடியாமல் தன் சக்தி வாய்ந்த வேலை லட்சுமணன் மீது ராவணன் எறிய லட்சுமணன் அதனால் மார்பில் அடிபட்டுக் கீழே வீழ்ந்தான் . உடனே ராவணன் வந்து அவன் அருகில் கை வைத்துப் பார்த்து அவனைத் தூக்க முயற்சிக்க , ராவணனால் லட்சுமணனை அசைக்கக் கூட முடியவில்லை . இதைக் கண்ட அனுமன் மிக்க கோபத்துடன் வந்து ராவணனின் மார்பில் தன் முட்டியால் ஓங்கித் தாக்க ராவணன் ரத்தம் கக்க ஆரம்பித்துக் கீழேயும் வீழ்ந்தான் . அனுமன் சர்வ அநாயாசமாக லட்சுமணனைத் தூக்கிக் கொண்டு ராமனிடம் விரைந்தார் . ( தான் கீழே வீழ்ந்த சமயம் லட்சுமணனுக்கு ஒரு நொடிக்கும் குறைவான நேரம் , தன்னுடைய அம்சம் விஷ்ணுவுடையது என்ற எண்ணம் தோன்றியதாகவும் , அதனாலேயே , ராவணனால் லட்சுமணனை அசைக்க முடியவில்லை என்றும் வால்மீகி சொல்கின்றார் . அதே நேரம் அனுமனுக்கு இருந்த அளவு கடந்த அன்பு , மற்றும் பக்தியின் காரணமாய் அவனால் லட்சுமணனைத் தூக்க முடிந்ததாயும் சொல்கின்றார் .) ராவணனின் வேல் லட்சுமணன் வீழ்ந்ததும் உடனேயே அவனைச் சென்றடைந்து விட்டது . சற்று ஓய்வுக்குப் பின்னர் லட்சுமணன் சுயநினைவை அடைந்தாலும் , ராவணனால் வானரசேனைக்கு ஏற்பட்ட அழிவைக் குறித்துக் கவலை அடைந்த ராமர் , தானே போருக்கு ஆயத்தம் ஆகின்றார் . அதற்குள் ராவணனும் அனுமனின் தாக்குதலில் இருந்து மீண்டு வந்து மறுபடியும் சண்டை போட ஆரம்பித்துவிட்டான் . அனுமன் ராமனிடம் , தன் தோள்களில் உட்கார்ந்த வண்ணம் ராவணனோடு போர் புரியும்படி வேண்டிக் கொள்ள ராமனும் அதற்கு இசைந்தார் . அனுமன் தோள் மீது அமர்ந்த ராமர் , ராவணனைப் பார்த்து , “ நில் அரக்கர்களில் புலியே , நில் , என்னிடமிருந்து நீ தப்பிக்க முடியாது . நீ எந்தக் கடவுளின் உதவியை நாடினாலும் தப்ப மாட்டாய் . உன் வேலால் தாக்கப் பட்ட என் தம்பி லட்சுமணன் மீண்டு எழுந்து புது வேகத்தோடு உன்னுடன் சண்டைக்கு ஆயத்தம் ஆகி வருகின்றான் . நான் யாரென நினைத்தாய் ?? உன் அரக்கர் கூட்டம் அனைத்தையும் , ஜனஸ்தானத்தில் அழித்தவன் நான் என்பதை நீ நினைவில் கொள்வாய் .” என்று கூவினார் . ராவணன் மிகுந்த கோபத்துடன் , ராமரைக் கீழே தள்ளும் நோக்கத்துடன் அவரைத் தாங்கி நின்ற அனுமன் மீது தன் அம்புமழைகளைப் பொழிகின்றான் . ராமரும் கோபத்துடன் , ராவணனின் தேரைப் பொடிப் பொடியாக ஆக்குகின்றார் . பின்னர் தன் அம்பு மழைகளினால் ராவணனை ஆயுதம் அற்றவனாய்ச் செய்கின்றார் . அந்நிலையில் தன் சக்தியை இழந்து நின்ற ராவணனிடம் ராமர் , “ என்னால் வீழ்த்தப்பட்டு உன் சக்தியை இழந்து நிற்கும் நீ இப்போது யுத்தம் செய்யும் நிலையில் இல்லை . உன்னுடன் இப்போது நான் யுத்தம் செய்வது முறையும் அல்ல . யுத்தகளத்தை விட்டு நீ வெளியேறலாம் . நீ சென்று ஓய்வெடுத்துக் கொண்டு பின்னர் மீண்டும் வலிமையுடன் வில்லேந்தி வருவாய் . அப்போது என் வலிமையைப் பூரணமாக நீ உணர்வாய் .” என்று சொல்லிவிடுகின்றார் . பின் குறிப்பு : சிலர் இந்திரஜித்தின் நாகபாசத்தால் லட்சுமணன் மட்டுமே கட்டப்பட்டது பற்றியக் கம்பராமாயணப் பாடல் பற்றிக் கேட்டிருக்கின்றனர் . கம்பர் அவ்வாறு எழுதி இருந்தாலும் வால்மீகியில் இது பற்றி இல்லை . மேலும் முதற்போரில் ராமரோ , லட்சுமணரோ சண்டை இட்டதாகவே கம்பர் தெரிவிக்கவில்லை . பார்க்க : முதற்போர் புரி படலம் , ராவணன் சண்டைக்கு ஆயத்தம் ஆகி வந்ததுமே ராமர் சண்டைக்கு வருவதாக கம்பர் தெரிவிக்கிறார் . ஆனால் வால்மீகியோ முதற் போரிலேயே ராம , லட்சுமணர் பங்கு பற்றித் தெரிவித்திருப்பதோடல்லாமல் , ராம , லட்சுமணர் இருவருமே , “ நாராசங்கள் ” என்னும் பாம்பு உருக்கொண்ட அம்புகளால் துளைக்கப் பட்டதாகவே முதல் போரில் சொல்லுகின்றார் . இப்போது தான் கருடன் வருகின்றான் . அதற்கடுத்த இரண்டாம் போரிலே இந்திரஜித் விடுத்த பிரம்ம்மாஸ்திரமும் இருவரையும் கட்டியதாகவே சொல்லுகின்றார் வால்மீகி . சஞ்சீவி மலை கொண்டு வரும் நிகழ்ச்சியும் இது சமயமே வரும் . அதுபற்றிய கம்பர் குறிப்புகளும் மற்ற விளக்கங்களும் பின்னர் வரும் . நன்றி . 62 கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 62 அவமானம் தாங்க முடியாத ராவணன் , தன் வலிமையும் , சக்தியும் இன்று ஒருநாள் யுத்தத்திலேயே குறைந்து விட்டதையும் உணர்ந்தவனாய் , தன்னுடைய கிரீடமும் , தேரும் சுக்குநூறாகப் போய்விட்டதையும் கண்டவனாய் , வேறு வழியில்லாமல் , ராமர் சொன்ன வார்த்தைகளினால் தலை கவிழ்ந்து , திரும்பினான் . விண்ணில் இருந்து இதைக் கண்ட தேவர்களும் , ரிஷி , முனிவர்களும் ராமரைப் போற்றிப் புகழ்ந்தனர் . அவமானத்துடன் திரும்பிய ராவணன் , செய்வது இன்னதென்று அறியாமல் மனம் கலங்கினான் . தன் ஆலோசனைக்காகக் கூடி இருந்த மற்ற அரக்கர்களிடம் ஆலோசனையும் நடத்தினான் . தன் கவலைகளை வெளிப்படையாகச் சொன்னான் . தேவேந்திரனையும் , யமனையும் வெற்றி கொண்ட தான் , இன்று ஒரு சாதாரண மனிதனிடம் தோற்றுப் போனதைக் குறிப்பிடுகின்றான் . அவன் திரும்பிப் போ என்று சொன்னதையும் , அதனால் தன் மனம் துயரில் ஆழ்ந்ததையும் தெரிவிக்கின்றான் . பல வரங்களைப் பெற்ற தான் மனிதர்களிடமிருந்து மரணம் இல்லை என்ற வரத்தை பெறாமல் போனதற்கு மிகவும் வருந்தினான் . இஷ்வாகு குல அரசன் ஆன அனரண்யன் என்பவன் , மனம் நொந்து தன் வம்சத்தில் பிறந்த ஒருவனால் ராவணன் தோற்கடிக்கப் படுவான் எனச் சொன்னது உண்மையாகிவிட்டதே என்றும் வருந்தினான் . மேலும் வேதவதியைத் தான் பலாத்காரம் செய்ய முனைந்தபோது அவள் கொடுத்த சாபத்தையும் நினைவு கூருகின்றான் . அவள்தான் சீதை என்பதில் தனக்கு ஐயம் இல்லை தற்போது என்றும் உறுதிபடச் சொல்கின்றான் . மேலும் கைலையில் நந்திஸ்வரனை நான் கேலி செய்தபோது குரங்குகளால் தனக்கு மரணம் நேரிடும் என்று நந்தி கொடுத்த சாபத்தையும் நினைவு கூருகின்றான் . இவ்வாறு தான் முன்னால் செய்த தீமைகள் அனைத்துமே தனக்கு இப்போது தீவினைகளாய் வந்திருக்கின்றது என்பதில் தனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை எனச் சொல்லி வருந்துகின்றான் தசக்ரீவன் . பின்னர் அரக்கர்களைப் பார்த்து , போனது போகட்டும் , இப்போதும் ஒன்றும் ஏற்படவில்லை . எப்படியாவது அந்த எதிரிகளை வென்றால் அதுவே போதும் . அதற்கான முயற்சிகளைச் செய்யுங்கள் . உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள் .. நாம் எவ்வாறேனும் வெல்லவேண்டும் . கோட்டை நன்கு பாதுகாக்கப் படவேண்டும் . தவறான வார்த்தைப் பிரயோகத்தினால் , பெற்ற பிரம்மாவின் வரத்தின் காரணமாய்த் தூங்கும் கும்பகர்ணனை எழுப்புமாறும் கேட்டுக் கொள்கின்றான் . ராமனின் வானரப் படைகளை அழிக்கும் ஆற்றல் அவனிடத்தில் உள்ளது என்றும் சொல்கின்றான் . அரக்கர்களில் சிலர் சென்று கும் பகர்ணனை எழுப்ப ஆரம்பிக்கின்றனர் . ஒரு பெரிய மலை போல் படுத்திருந்த கும்பகர்ணனின் திறந்த வாயானது , அந்த மலையின் குகை போல் தோன்றியதாம் . கும்பகர்ணனின் மூச்சுக் காற்று அனைவரையும் வெளியிலும் , உள்ளேயும் மாறி , மாறி இழுக்க , சமாளித்த அரக்கர்கள் அவனை எழுப்பும் ஆயத்தங்களைச் செய்தனர் . தூக்கத்தில் இருந்து எழுந்ததும் கும்பகர்ணன் சாப்பிடப் பல்வகை மிருகங்கள் , அவற்றின் மாமிசங்கள் , குடம் குடமாய்க் கள் , ரத்தம் , பல்வேறு விதமான உணவு வகைகள் போன்றவை தயார் நிலையில் இருந்தன . பின்னர் அவன் உடலில் வாசனைத் திரவியங்கள் பூசி , கொம்புகளையும் , எக்காளங்களையும் , சங்குகளினாலும் பெரும் சப்தங்கள் எழுப்பிப் பல யானைகளை அவன் மீது நடக்க வைத்து ஒருவழியாக மிகுந்த சிரமத்துடனேயே அவனை எழுப்புகின்றனர் . எழுந்த உடனேயே உணவு உட்கொண்ட கும்பகர்ணன் பின்னர் , தன்னை எழுப்பிய காரணத்தை வினவுகின்றான் . ராவணன் தான் தன்னை எழுப்பச் சொன்னான் என அறிந்ததும் அற்பக் காரணத்துக்குத் தன்னை எழுப்புபவன் இல்லையே எனக் கேட்க , அரக்கர்கள் சீதையை அபகரித்து வந்ததையும் , அதன் காரணமாய் ராமன் போருக்கு வந்திருப்பதையும் , அதற்கு முன்னாலேயே அக்ஷகுமாரன் , அனுமனால் கொல்லப் பட்டான் என்பதையும் , ராமன் நேற்றைய போரில் ராவணனை , “ இன்று போய் நாளை வா” எனச் சொல்லிவிட்டதையும் , அதனால் ராவணன் மனம் மிக நொந்து போயிருப்பதையும் சொல்கின்றனர் அரக்கர்கள் . கோபம் கொண்ட கும்பகர்ணனைச் சமாதானம் செய்த மஹோதரன் ராவணனைப் பார்த்து என்ன வழிமுறைகள் , என்ன கட்டளைகள் எனத் தெரிந்து கொண்டு போர்க்களம் செல்வதே நலம் எனச் சொல்ல அதன் படியே நீராடிவிட்டுத் தன் அண்ணன் ஆன ராவணனைப் பார்க்கச் செல்கின்றான் கும்பகர்ணன் . அப்போது கும்பகர்ணன் தன் அரண்மனையில் இருந்து ராவணன் அரண்மனை நோக்கிச் செல்வதை ராமரும் பார்க்கின்றார் . விபீஷணனிடம் இவன் யார் ?? ஒரு மலையே பெயர்ந்து வந்துவிட்டதோ எனத் தோன்றுகின்றானே எனக் கேட்கின்றார் . விபீஷணன் உடனேயே , ராவணனின் தம்பியானவனும் மஹரிஷி விஸ்ரவஸின் மகனும் ஆன கும்பகர்ணன் ஆவான் அவன் , எனச் சொல்லிவிட்டுக் கும்பகர்ணனின் பெருமைகளை விவரிக்கின்றான் . யமனையும் , இந்திரனையும் வென்றவன் அவன் . பெரும்பலம் பொருந்தியவன் ஆவான் . மற்ற அரக்கர்கள் வரங்களினால் பலம் பெற்றார்கள் என்றால் இவனுக்கோ பிறவியிலேயே பலம் நிரம்பிப் பெற்றவன் ஆகிவிட்டான் . இந்திரன் இவனை அழிக்கச் செய்த முயற்சிகள் அனைத்தும் பலனின்றிப் போய்விட்டது . இவன் கொடுமை தாங்க முடியாமல் தவித்த இந்திரன் , இவனைத் தோற்கடிக்க முடியாமல் தவிக்க , பிரம்மா இவனுக்குத் தூக்கத்தில் ஆழ்ந்து போகும் வரம் கொடுத்துவிட்டார் . வரத்தின் கடுமையைக் குறைக்கும்படி ராவணன் பிரம்மனிடம் முறையிட , ஆறுமாதத்துக்கு ஒரு முறை ஒரு நாள் மட்டுமே விழித்திருப்பான் எனவும் , அந்த ஒருநாள் அவனுக்குத் தோன்றியதை அவன் செய்வான் எனவும் சொல்லி விடுகின்றார் . இப்போது தனக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தில் இருந்து தன்னைக் காக்க ராவணன் இவனை எழுப்பி இருக்கின்றான் என்றும் சொல்கின்றான் . உடனேயே வானரப் படை வீரர்களுக்குப் பலவிதமான உத்தரவுகள் பிறப்பிக்கப் படுகின்றன . கும்பகர்ணன் வதை பற்றிய கம்பர் பாடல்கள் ! இந்த இடத்தில் வழக்கம்போல் கம்பர் வால்மீகியிடமிருந்து வேறுபடுகின்றார் . கும்பகர்ணன் போருக்கு ஆயத்தம் ஆகி வருவதைக் கண்ட ராமர் , அவனைப் பார்த்து வியந்தவராய் , விபீஷணனிடம் அவனைப் பற்றிய விபரங்களைக் கேட்டு அறிகின்றார் . விபீஷணனும் , கும்பகர்ணனும் ராவணனுக்கு நல்லுபதேசங்கள் செய்ததையும் , ராவணன் அதைக் கேட்காமல் இருந்ததையும் , இப்போது ராவணனுக்கு ஒரு பிரச்னை என்றதும் கும்பகர்ணன் , உதவிக்கு ஓடி வந்திருப்பதையும் தெரிவிக்கின்றான் . “ தருமம் அன்று இதுதான் இதால் வரும் நமக்கு உயிர் மாய்வு எனா உருமின் வெய்யவனுக்கு உரை இருமை மேலும் இயம்பினான் .”: கும்பகர்ணன் வதைப் படலம் : பாடல் எண் :1336 “ மறுத்த தம்முனை வாய்மையால் ஒறுத்தும் ஆவது உணர்த்தினான் வெறுத்தும் மாள்வது மெய் எனா இறுத்து நின் எதிர் எய்தினான் .” பாடல் எண் : 1337 “ நன்று இது அன்று நமக்கு எனா ஒன்று நீதி உணர்த்தினான் இன்று காலன் முன் எய்தினான் என்று சொல்லி இறைஞ்சினான் .” : பாடல் எண் : 1338 என்று விபீஷணன் கும்பகர்ணனின் தன்மையைப் பற்றி ராமனிடம் எடுத்து உரைக்கின்றான் . அப்போது சுக்ரீவன் , ராமனிடம் , கும்பகர்ணனைத் தங்களுடன் சேர்த்துக் கொண்டு விடலாம் என ஆலோசனை சொல்கின்றான் . அந்தப் பாடல் “என்று அவன் உரைத்தலோடும் இரவி சேய் இவனை இன்று கொன்று ஒரு பயனும் இல்லை கூடுமேல் கூட்டிக் கொண்டு நின்றது புரிதும் மற்று இந்நிருதர்கோன் இடரும் நீங்கும் நன்று என நினைத்தேன் என்றான் நாதனும் நயன் ஈது என்றான் .” பாடல் எண் : 1339 என்று கும்பகர்ணனைத் தங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம் என சுக்ரீவன் சொன்ன யோசனையை ஏற்று ராமனும் , அப்போது கும்பகர்ணனிடம் சென்று பேசுபவர்கள் யார் எனக் கேட்க , விபீஷணன் தானே சென்று பேசுவதாய்க் கூறிவிட்டுச் சென்று கும்பகர்ணனிடம் பேசுவதாயும் , அவன் அதை மறுத்துப் பேசுவதாயும் கம்பர் கூறுகின்றார் . விபீஷணன் ராமனைச் சரணடையுமாறு கேட்பதை இவ்வாறு கூறுகின்றார் கம்பர் : “ இருள் உறு சிந்தையேற்கும் இன் அருள் சுரந்த வீரன் அருளும் நீ சேரின் ஒன்றோ அபயமும் அளிக்கும் அன்றி மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம் , மாறிச் செல்லும் உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து வீடு அளிக்கும் அன்றே .” : கும்பகர்ணன் வதைப் படலம் : பாடல் எண் : 1351 “ போதலோ அரிது போனால் புகலிடம் இல்லை வல்லே சாதலோ சரதம் நீதி அறத்தொடும் தழுவி நின்றாய் ஆதலால் உளதாம் ஆவி அநாயமே உகுத்து என் ஐய ? வேதநூல் மரபுக்கு ஏற்ற ஒழுக்கமே பிடிக்க வேண்டும் .” பாடல் எண் 1353 என்று விபீஷணன் கும்பகர்ணனிடம் கூறுவதாய்த் தெரிவிக்கும் கம்பர் , இன்னும் ராமன் தனக்கு அளித்த இலங்கை சிம்மாசனத்தையும் , தான் கும்பகர்ணனுக்கு அளிப்பதாய் விபீஷணன் கூறுவதாயும் தெரிவிக்கின்றார் . மேலும் ராமனே , இவ்வாறு கும்பகர்ணனைக் கேட்டு வருமாறு அனுப்பி உள்ளதாயும் தெரிவிக்கின்றார் கம்பர் விபீஷணன் வாயிலாக . அது இவ்வாறு : “ வேத நாயகனே உன்னைக் கருணையால் வேண்டி விட்டான் காதலால் என் மேல் வைத்த கருணையால் கருமம் ஈதே ஆதலால் அவனைக் காண அறத்தொடும் திறம்பாது ஐய போதுவாய் நீயே என்னப் பொன் அடி இரண்டும் பூண்டான் .” என ராமன் அனுப்பியதாய்க் கூறுகின்றார் கம்பர் . ஆனால் வால்மீகியில் ஒரு இடத்திலும் இவ்வாறு இல்லை . கும்பகர்ணன் விபீஷணனை மறுத்துப் பேசுவதாயும் , ராவணனுக்குத் தான் உயிர்த்தியாகம் செய்வதே சிறந்தது எனக் கும்பகர்ணன் கூறுவதாயும் கம்பர் கூறுகின்றார் . “ நீர்க் கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்துப் பின்னைப் போர்க்கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது அங்குப் போகேன் ! தார்க்கோல மேனி மைந்த என் துயர் தவிர்த்தி , ஆயின் கார்க்கோல மேனியானைக் கூடுதி கடிதின் ஏகி .” என்று விபீஷணனை , ராமனிடம் சென்று சீக்கிரம் சேரச் சொல்லி வாழ்த்தவும் செய்கின்றான் . மேலும் , “ ஆகுவது ஆகும் காலத்து ஆகும் , அழிவதும் அழிந்து சிந்திப் போகுவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம் ! சேகு அறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர் ? வருத்தம் செய்யாது ஏகுதி எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய் .” என்று தன்னை நினைத்து வருந்த வேண்டாம் எனவும் விபீஷணனிடம் சொல்லுகின்றான் கும்பகர்ணன் . எல்லாவற்றுக்கும் மேல் , சுக்ரீவனை , கும்பகர்ணன் எடுத்துச் செல்லும்போது யாரும் தடுக்கவில்லை , வால்மீகியின் கூற்றுப்படி , ஆனால் கம்பரோ , ராமன் தடுத்ததாய்க் கூறுகின்றார் இவ்வாறு : “ உடைப்பெருந்துணைவனை உயிரின் கொண்டு போய் கிடைப்ப அருங்கோடி நகர் அடையின் கேடு என தொடைப் பெரும் பகழியின் மாரி தூர்த்து இறை அடைப்பேன் என்று அடைத்தனன் விசும்பின் ஆறு எலாம் .” என்று ராமன் வழியை அம்புகளை எய்து அடைப்பதாய்ச் சொல்கின்றார் . மேலும் கடும்போர் புரிந்து கும்பகர்ணன் , படை வீரர்களையும் ஆயுதங்களையும் இழந்து தனித்து நின்றதாயும் அப்போது ராமர் அவனிடம் இவ்வாறு கேட்பதாயும் கம்பர் கூறுகின்றார் : அது வருமாறு : “ ஏதியோடு எதிர் பெருந்துணை இழந்தனை எதிர் ஒரு தனி நின்றாய் நீதியோனுடன் பிறந்தனை ஆதலின் நின் உயிர் நினக்கு ஈவென் போதியோ பின்றை வருதியோ அன்று எனின் போர் புரிந்து இப்போதே சாதியோ உனக்கு உறுவது சொல்லுதி சமைவுறத் தெரிந்து அம்மா .” பாடல் எண் 1536 என்று கும்பகர்ணனை நன்கு ஆராய்ந்து உனக்கு எது பொருத்தம் என்று சொல்லுமாறு ராமன் கேட்பதாய்க் கூறுகின்றார் கம்பர் . இதுவும் வால்மீகியில் இல்லை . மேலும் இதற்குப் பின்னர் நடக்கும் கடும்போரிலே தான் ராமன் கும்பகர்ணனின் அவயங்களைத் துண்டிப்பதாயும் , அவயங்கள் துண்டிக்கப் பட்ட நிலையில் கும்பகர்ணன் , விபீஷணனுக்காக ராமனிடம் வேண்டுவதாயும் சொல்லுகின்றார் கம்பர் . “” வெல்லுமா நினைக்கின்ற வேல் அரக்கன் வேரொடும் கல்லுமா முயல்கின்றான் இவன் என்னும் கறுவுடையான் ஒல்லுமாறு இயலுமேல் உடன்பிறப்பின் பயன் ஓரான் கொல்லுமால் அவன் இவனை குறிக்கோடி கோடாதாய் .” பாடல் எண் 1568 “ தம்பி என நினைந்து இரங்கித் தவிரான் அத்தகவு இல்லான் நம்பி இவன் தனைக் காணின் கொல்லும் இறை நல்கானால் உம்பியைத் தான் உன்னைத் தான் அனுமனைத் தான் ஒரு பொழுதும் எம்பிரியானாக அருளுதி யான் வேண்டினேன் .” பாடல் எண் 1569 என விபீஷணனை ராவணன் துன்புறுத்தாமல் பார்த்துக் கொள்ளுமாறும் , அவனைப் பிரியாமல் இருக்கவும் வேண்டுகின்றான் கும்பகர்ணன் ராமனிடம் , போர்க்களத்தில் இறக்கும் தருவாயில் . ஆனால் வால்மீகியில் இதெல்லாம் இல்லை . அதன் பின்னர் தன்னைக் கடலில் தள்ளுமாறு அவனே ராமனைக் கேட்டுக் கொள்ளுவதாயும் சொல்கின்றார் கம்பர் . “ மூக்கு இலா முகம் என்று முனிவர்களும் , அமரர்களும் நோக்குவார் நோக்காமை நுன் கணையால் என் கழுத்தை நீக்குவாய் நீக்கியபின் நெடுந்தலையைக் கருங்கடலுள் போக்குவாய் இது நின்னை வேண்டுகின்ற பொருள் என்றான் .” எனக் கும்பகர்ணன் தனக்கு வரம் வேண்டி ராமனிடம் பெறுவதாயும் கம்பர் கூறுகின்றார் . 63 கதை,கதையாம் காரணமாம், ராமாயணம் -யுத்த காண்டம் பகுதி 63 இங்கே கும்பகர்ணன் ராவணன் மாளிகையை அடைந்து தனக்கு என்ன உத்தரவு எனக் கேட்கின்றான் . அவன் வரவினால் மகிழ்ச்சி அடைந்த ராவணன் , மிகுந்த கோபத்துடன் , ராமன் சுக்ரீவன் துணையோடு கடல் கடந்து சீதையை மீட்க வந்திருப்பதையும் , அந்த வானரப் படைகளால் ராட்சதர்களுக்கு நேர்ந்த அழிவையும் , துன்பத்தையும் எடுத்துக் கூறுகின்றான் . இந்த வானரப் படைகள் மேலும் மேலும் கடல் பொங்குவது போல் அலைகள் அவற்றிலிருந்து வந்து , வந்து மோதுவது போல் வந்து கொண்டே இருப்பதாயும் , இவற்றிற்கு முடிவு இல்லையெனத் தோன்றுவதாயும் சொல்லிவிட்டு இவற்றை அழிக்க என்ன வழி என்றே தான் அவனை எழுப்பச் சொன்னதாயும் சொல்கின்றான் . அரக்கர்கள் அடைந்திருக்கும் பெரும் துன்பத்தில் இருந்து அவர்களைக் காக்கும்படியும் சொல்லுகின்றான் . பெருங்குரலெடுத்துச் சிரிக்கின்றான் கும்பகர்ணன் . ஏற்கெனவே ஆலோசனைகள் செய்த காலத்தில் சொல்லப் பட்ட வழிமுறைகளை நீ பின்பற்றி இருக்கவேண்டும் . அப்போதே உனக்கு இத்தகையதொரு ஆபத்து நேரிடும் என எச்சரிக்கை செய்யப் பட்டது . நீ அப்போது சொல்லப் பட்ட சமாதானத்தை நாடும் முறையிலோ , அல்லது பொருள் கொடுத்து அவனுடன் கூட்டுறவை ஏற்படுத்திக் கொள்ளாமலோ , நேரடியாகப் போருக்குச் சென்றுவிட்டாய் . உன்னுடைய , மற்றும் என்னுடைய தம்பியாகிய விபீஷணன் கூறியவற்றையோ , உன் மனைவியாகிய மண்டோதரி கூறியவற்றையோ நீ கேட்டு நடந்திருக்கவேண்டும் . உன்னுடைய மேன்மைக்கும் , நன்மைக்குமே அவர்கள் இந்த வழிமுறைகளைக் கூறினார்கள் . நீ அலட்சியம் செய்துவிட்டாய் .” என்று கூறி மீண்டும் பெருங்குரலில் சிரிக்க ராவணன் கோபம் பொங்கி எழுந்தது . “ கும்பகர்ணா , நீ என் தம்பி என்பதை மறந்து விடாதே , ஒரு ஆச்சாரியன் போல் அறிவுரைகள் கூறுகின்றாயே ?? மேலும் , கும்பகர்ணா , என் தவறுகள் காரணமாகவே இப்போதைய சம்பவங்கள் நடந்திருந்தாலும் , நீ அதை எல்லாம் மறந்துவிட்டு , எனக்கு எவ்வாறு உதவி செய்வது என யோசிப்பாயாக ! நான் நேர் பாதையில் இருந்து விலகிச் சென்றிருந்தாலும் இப்போது எனக்கு உதவி செய்வதே என் உறவினன் ஆன உன் கடமை என்பதையும் மறவாதே , உன் பலத்தை நீ உணர மாட்டாய் , அதை முதலில் உணர்ந்து கொள்வாயாக , எனக்கு உதவி புரிய ஆயத்தமாகிவிடு .” என்று சொல்கின்றான் . கும்பகர்ணன் மனம் நெகிழ்ந்து போனான் . ஆஹா , நம் அண்ணனா இவன் ?? எத்தனை பலவான் ? எவ்வளவு தைரியம் நிறைந்தவன் ?? இப்போது இப்படிக் கலங்கி இருக்கிறானே ? இப்போது இவனுக்குத் தேவை தைரியமும் , ஆறுதலும் அளிக்கும் வார்த்தைகளும் , செயல்களுமே எனக் கண்டு கொள்கின்றான் கும்பகர்ணன் . அவ்விதமே பேசத் தொடங்குகின்றான் ராவணனிடம் , “ அன்பு மிகுந்த அண்ணனே , என் தந்தைக்குச் சமம் ஆனவனே ! உன் கவலையை விட்டொழி , உன் சகோதரன் ஆன நான் உன்னுடைய மேன்மைக்காகவே மேற்கண்ட அறிவுரைகளைக் கூறினேன் . மேலும் உன்னை நல்வழியில் திருப்பவதும் என் கடமை அன்றோ . ஆனால் உனக்கு ஏற்புடையது இல்லை எனத் தெரிந்து கொண்டேன் . என்ன செய்யவேண்டும் உனக்கு ? அந்த ராமனை நான் அழிப்பேன் , பார் நீயே ! நீ இதற்கென வேறு யாரையும் அழைக்க வேண்டாம் , நானே செல்கின்றேன் , சென்று அந்த வானரக் கூட்டத்தையும் , அந்த நர மனிதர்கள் ஆன ராம , லட்சுமணர்களையும் அடியோடு அழிக்கின்றேன் . இவர்களை அழிக்க எனக்கு ஆயுதங்கள் கூடத் தேவை இல்லை . என் கைகளாலேயே அழித்து விடுவேன் . நீ போய் உன் வேலையைப் பார் , என்னுடைய வெற்றி முழக்கம் கேட்கும் , அப்போது வந்தால் போதும் , நீ இப்போது வரத் தேவை இல்லை ,” என்று சொல்கின்றான் . ஆனால் அதைக் கேட்டுக் கொண்டிருந்த மஹோதரனுக்கோ , இதில் கொஞ்சம் கூடச் சம்மதம் இல்லை . “ கும்பகர்ணா , தன்னந்தனியாக நீ சென்று யுத்தம் செய்கின்றேன் என்று சொல்வது முற்றிலும் தவறு . ஜனஸ்தானத்தில் என்ன நடந்தது ? சற்றே எண்ணிப் பார்ப்பாய் , அத்தகைய பெரும்பலம் கொண்ட ராமனையோ , அவன் தம்பி லட்சுமணனையோ , நம்மால் தனியாக எல்லாம் வெற்றி கொள்ள முடியாது . நீ இப்போது யுத்தம் செய்யப் போகவேண்டாம் . ராமனை வெற்றி கொள்வது என்பது எளிது அல்ல . ஆனால் சீதையை நம் வசம் ஆக்க ஒரு வழி கூறுகின்றேன் . இப்போது கும்பகர்ணனை விடுத்த மற்ற நாங்கள் சென்று யுத்தம் செய்கின்றோம் . அல்லது அவனும் வர விரும்பினால் வரட்டும் . யுத்தத்தில் நாங்களே ஜெயிப்போம் , அவ்வாறு இல்லாமல் , உடல் முழுதும் ரத்தக்காயங்களோடு திரும்பும் நாங்கள் , உங்கள் காலடியில் விழுந்து , ராம , லட்சுமணர்களை நாங்கள் கொன்றுவிட்டதாயும் , வானரப்படையை அழித்துவிட்டதாயும் தெரிவிக்கின்றோம் . நீங்கள் எங்களுக்குப் பரிசுகளை வழங்கிக் கொண்ட்டாட்டங்களை அறிவியுங்கள் . அப்போது அந்தச் செய்தி சீதையைச் சென்றடையும் , அந்த நேரம் பார்த்து , அவள் மனம் கவரும் வண்ணம் வண்ண , வண்ணப் பட்டாடைகளும் , ஆபரணங்களும் , பல்வேறுவிதமான கண் கவரும் பரிசுகளையும் அளித்து இனி ராமன் இல்லை , நான் தான் உன்னுடைய ஒரே பாதுகாவலன் என்று தெரிவித்தால் வேறு வழியில்லாமலும் , செல்வத்திலே பிறந்து , செல்வத்திலே வளர்ந்து , செல்வத்தை மணந்த சீதை , அந்த செல்வத்திற்காகவும் முழுமையாக உங்களுடையவள் ஆகிவிடுவாள் . இது ஒன்றே வழி” எனச் சொல்ல கும்பகர்ணன் மஹோதரனைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிக்கிறான் . பின்னர் தன் அண்ணனைப் பார்த்து தான் தனியாகச் சென்று யுத்தம் செய்யப் போவதாயும் , மன்னனுக்கு நெருக்கம் என்ற பெயரிலே மஹோதரன் தவறான ஆலோசனைகளைக் கூறுவதாயும் , சொல்கின்றான் . மஹோதரனையும் அவ்வாறே கடிந்தும் பேசுகின்றான் . ராவணன் மனம் மகிழ்ந்து தன் தம்பியைப் போர்க்களத்திற்குச் செல்ல ஆயத்தப் படுத்துகின்றான் . தன் அருமைத் தம்பிக்குத் தன் கையாலேயே ஆபரணங்களைப் பூட்டி , போருக்கான மாலைகளையும் சூட்டுகின்றான் . கவசத்தை அணிவித்து எவரும் தன் தம்பியைத் தாக்க முடியாது என உறுதி கொள்கின்றான் . கையிலே சூலத்தைக் கொடுத்து , பிரளயக் காலத்திலே அழிக்க வந்த ருத்ரனோ என்று எண்ணுமாறு தன் தம்பி இருப்பதாய் மகிழ்கின்றான் . வேதியர்களை அழைத்து ஆசீர்வாத மந்திரங்களைச் சொல்ல வைக்கின்றான் , இத்தனைக்கும் பின்னர் ஊழிக்காலத்துப் பரமசிவன் போலக் கையில் சூலம் , ஏந்து , உடலில் கவசம் தரித்து , தன் பேருருவோடு புறப்பட்டுச் சென்று யுத்தகளத்தை அடைந்த கும்பகர்ணனைப் பார்த்த வானர வீரர்கள் திகைத்தனர் . 64 கதை,கதையாம் காரணமாம் ராமாயணம் - பகுதி 64 இவ்வளவு பெரிய உருவமா ? என மலைத்தனர் ! மலையே பெயர்ந்து வந்துவிட்டதோ என எண்ணிக் கலங்கினர் . வானர வீரர்கள் இவ்விதம் எண்ணிக் கலங்கினாலும் சகுனங்கள் கும்பகர்ணனுக்கு அபசகுனமாகவே இருந்ததை அவன் காண்கின்றான் . ஆகவே அபசகுனங்களால் கும்பகர்ணனின் மனம் கொஞ்சம் தளர்ந்தது . எனினும் அதைக் காட்டிக் கொள்ளாமலேயே அவன் போர்க்களத்தில் முன்னேறினான் . அங்கதன் , முதலில் கும்பகர்ணனின் பேருருவைக் கண்டு திகைத்து நின்றாலும் , பின்னர் சுதாரித்துக் கொண்டு , நீலனையும் , நளனனயும் பார்த்து , பயந்து ஓட இருக்கும் வானரப் படைகளைத் திறம்படச் சேர்ப்பிக்கச் சொல்லிக் கட்டளை இடுகின்றான் . வானர வீரர்களுக்குத் தானும் தைரியம் சொல்கின்றான் . நாம் திறமை அற்றவர்கள் அல்லவே ? ஏன் பயப்படவேண்டும் ? எனத் தைரியம் சொல்கின்றான் . இதைக் கேட்ட வானரவீரர்கள் திரும்பி வந்து , மலைக்குன்றுகளையும் , பெரும் மரங்களையும் பிடுங்கி கும்பகர்ணன் மீது வீசுகின்றனர் . ஆனால் அவை பொடிப்பொடியாகப் போயிற்றே ஒழிய கும்பகர்ணனுக்கு ஒன்றும் ஆகவில்லை . வானரர்களைப் பிடிக்கக் கும்பகர்ணன் தன் பெரிய கைகளை நீட்டிப் பிடிக்க ஆரம்பித்தான் . உடனேயே வானரர்கள் அவன் கையில் பிடிபட்டு நசுங்கத் தொடங்கினார்கள் . பிடிக்க முடியாத வானரர்கள் ஓடி மறைந்து கொள்ள ஆரம்பித்தனர் . அங்கதன் கோபம் கொள்கின்றான் . இப்படியாவது நம் உயிரை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமா ??? ராமனை எதிர்த்துக் கும்பகர்ணன் உயிரோடு இருக்க முடியுமா ??? நாம் ஓடி ஒளிந்தால் நம் புகழும் ஒழிந்துவிடும் , திரும்பி வாருங்கள் எனக் கூவி அழைக்கின்றான் அங்கதன் வானர வீரர்களை . ஆனால் பயத்தின் எல்லையில் இருந்த அந்த வானர வீரர்கள் வர மறுக்கவே , மிகுந்த பிரயாசைக்கு இடையில் அங்கதன் அனுமன் தலைமையில் சில வானர வீரர்களைச் சேர்க்கின்றான் . அனைவரும் கும்பகர்ணனைக் கடுமையாகத் தாக்குகின்றார்கள் . அனுமன் தலைமையில் கடும் சண்டை நிகழ்ந்து கும்பகர்ணனின் ஆதரவுக்கு அனுப்பப் பட்ட படை வீரர்களுக்குப் பெரும் சேதம் விளைகின்றது . கோபத்துடன் கும்பகர்ணன் அனுமனைத் தாக்க அனுமன் நிலைகுலைந்து ரத்தம் கக்கிக் கொண்டு , சற்றே தடுமாற , அதைப் பயன்படுத்திக் கொண்ட கும்பகர்ணன் , வானரர்களை அழிக்க ஆரம்பித்தான் . கோபம் கொண்ட அங்கதன் கும்பகர்ணனின் கடுமையான தாக்குதலில் கீழே , விழ , அங்கே சுக்ரீவன் பெரும் கோபத்தோடு வருகின்றான் . சுக்ரீவனோடு பொருத கும்பகர்ணன் விரைய , இருவருக்கும் கடும் சண்டை நடக்கின்றது . ஆனால் தன் சூலத்தால் சுக்ரீவனைக் கீழே வீழ்த்தி விடுகின்றான் கும்பகர்ணன் . ஆனால் அனுமன் இடையில் புகுந்து சூலத்தைப் பொடிப் பொடியாக்க சுக்ரீவன் தப்ப முயல , கும்பகர்ணனோ ஒரு பெரும் மலைச்சிகரத்தால் சுக்ரீவனைக் கீழே மீண்டும் வீழ்த்தியே விடுகின்றான் . அரக்கர் படை கோலாகலம் அடைகின்றது . சுக்ரீவனைத் தன் கையிலே இடுக்கிக் கொண்டு கும்பகர்ணன் இலங்கை நகருக்குள்ளே செல்ல விரைகின்றான் . அப்போது வானரப்படை நிலைகுலைய , இதைக் கண்ட அனுமன் தான் என்ன செய்வது என்று யோசிக்கின்றார் . இப்போது தன் பலத்தைக் காட்டினால் , அது பயன் தராது . எப்படியும் சுக்ரீவன் தானாகவே தன் பலத்தால் திரும்ப வந்து சேருவான் . இப்போது நம் பூரண பலத்தைக் காட்டி சுக்ரீவனை விடுவிப்பது அவனுக்கும் புகழ் தராது , நமக்கும் பயன் இல்லை என்று முடிவு செய்கின்றார் . இலங்கை நகருக்குள்ளே கும்பகர்ணன் நுழையும் வேளையில் சுக்ரீவன் நினைவு திரும்பி , கும்பகர்ணனைத் தாக்குகின்றான் அவன் சற்றும் எதிர்பாராவண்ணம் , சற்றே நிலைகுலைந்த கும்பகர்ணன் தடுமாறவும் , அதைப் பயன்படுத்திக் கொண்டு திரும்ப ராமர் இருக்கும் இடம் வந்து சேருகின்றான் சுக்ரீவன் . கும்பகர்ணன் கோபத்தோடு மீண்டும் போர்க்களம் வருகின்றான் . இம்முறை வானரப்படைக்கு அவன் விளைவித்த நாசத்தால் அச்சம் கொண்ட வானரப்படை மீண்டும் ராமரைச் சரணடைய , முதலில் லட்சுமணன் வருகின்றான் , போருக்கு . கும்பகர்ணன் அவனிடம் அவனைப் பாராட்டிப் பேசிவிட்டு எனினும் தான் ராமனையும் , அவன் வீரர்களையும் அழித்துவிடுவதாய்ச் சபதம் பூண்டே வந்திருப்பதாயும் அதே போல் செய்யப் போவதாயும் சொல்லுகின்றான் . ஆகவே ராமனோடு நேருக்கு நேர் போர் புரியும் அவன் ஆசையை நிறைவேற்ற வேண்டி அவனிடம் ராமன் இருக்குமிடம் இதுவே எனக்காட்டுகின்றான் லட்சுமணன் . அவன் ஆசைப்படியே ராமனுடன் பெரும்போர் புரிகின்றான் கும்பகர்ணன் . வானரர்களைத் தொடர்ந்து அவன் அழிப்பதைப் பார்த்த லட்சுமணன் , வானர வீரர்களை கும்பகர்ணன் மீது ஏறச் சொல்லுகின்றான் . இவ்விதம் ஏறினால் அவனால் ஏதும் செய்ய முடியாமல் தொடர்ந்து அழிக்க முடியாமல் திணறுவான் எனச் சொல்ல , கும்பகர்ணனோ ஒரே உதறலில் அத்தனை வானரர்களையும் கீழே வீழ்த்தி விடுகின்றான் . அவனின் அளப்பரிய ஆற்றலை எண்ணி வியந்த ராமர் , அவனைப் பார்த்து , “ உன்னை அழிக்கும் பாணம் தயார் , வா உடனே , என்னோடு பொருத ,” என அழைக்கக் கும்பகர்ணனும் ,” ஹே , இக்ஷ்வாகு குலத் திலகமே , நான் வாலியோ , கபந்தனோ , கரனோ , விராதனோ , அல்லது மாரீசனோ அல்ல என்பதை அறிவாய் . என்னை வீழ்த்துவது என்பது கடினம் என்று தெரிந்து கொள்வாய் . முதலில் உன் பலத்தைக் காட்டு , பின்னர் நான் உன்னை விழுங்கிவிடுகின்றேன் .” என்று சொல்கின்றான் . ராமர் ஏவிய வாயு அஸ்திரத்தால் கும்பகர்ணனின் ஒரு கையை வெட்டக் கீழே விழுந்த அந்தக் கையில் சிக்கி , பல வானரர்கள் உயிரிழந்தனர் . பின்னர் மற்றொரு கையையும் வெட்டி வீழ்த்துகின்றார் ராமர் . எனினும் தன் வலிமை பொருந்திய கால்களின் துணை கொண்டு போருக்கு வருகின்றான் கும்பகர்ணன் . அவன் கால்களை யும் வெட்டித் தள்ளுகின்றார் ராமர் . திசைகள் நான்கும் நடுங்க , மலைகள் ஆட்டம் போட , கடல் கொந்தளிக்க , ராமர் விடுத்த அம்பு இப்போது கும்பகர்ணனின் தலையை அறுத்து எறிகின்றது . அவன் தலை கீழே விழுந்த பேரதிர்ச்சியில் இலங்கைக்கோட்டை வாயில் தகர்ந்தது . உடல் விழுந்த அதிர்ச்சியில் கடல் பொங்கியது . நீர்வாழ் உயிரினங்கள் பலவும் உயிரை விட்டன . மீன்களும் , சுறாக்களும் நசுங்கிச் செத்தன . ஆனால் வானரவீரர்களோ ஆடிப் பாடி மகிழ்ந்தனர் . எங்கும் மகிழ்ச்சி , கோலாகலம் , ஆட்டம் , பாட்டம் , கொண்டாட்டம் , மலை போன்ற கும்பகர்ணன் வீழ்ந்து பட்டான் . இனி ??? வானரப்படை கோலாகலமாய்க் கொண்டாட , மிகுந்திருந்த அரக்கர்கள் ராவணனிடம் சென்று கும்பகர்ணன் ராமனால் மாய்க்கப் பட்டான் எனத் தெரிவிக்கின்றனர் . அதைக் கேட்ட ராவணன் மயங்கி விழுகின்றான் . மற்ற அவன் உறவினர்களும் பெரும் துக்கத்தில் ஆழ்ந்தனர் . ஒருவாறு சமாளித்து எழுந்த ராவணன் , “ ஆஹா , தேவர்களையே போரில் வென்ற என் தம்பி கும்பகர்ணனா இறந்து பட்டான் ??? இடி , இடித்தாலும் , மின்னல் மின்னினாலும் அவற்றையும் எதிர்க்கும் வல்லமை படைத்த என் தம்பி கும்பகர்ணனுக்கா மரணம் நிகழ்ந்தது ? அதுவும் ஒரு நரன் ஆகிய ராமனின் கையாலேயே ஏற்பட்டு விட்டதே ?? கும்பகர்ணா !, கும்பகர்ணா ! இந்த ரிஷி , முனிவர்கள் இனிமேல் எதற்கும் அஞ்ச மாட்டார்களே ? வானரர்களுக்கும் இனி இலங்கைக் கோட்டைக்குள் நுழைவது எளிது எனத் தோன்றி விடுமே ?? ஐயகோ ! என்ன செய்வேன் நான் ?? அருமைத் தம்பி , உன்னைப் பறி கொடுத்தேனே ?” என்றெல்லாம் புலம்புகின்றான் ராவணன் . இனியும் இந்த ராஜ்யத்தாலோ , அல்லது சீதையை நான் அடைந்தாலோ என்ன பயன் ஏற்படும் ? கும்பகர்ணா ! நீ இல்லாமல் நான் உயிர் வாழ்வதெப்படி ?? ஆனால் உன்னைக் கொன்ற அந்த ராமனைக் கொன்று நான் பழி தீர்க்கவேண்டுமே ? அதற்காகவே என் உயிரை வைத்துக் கொண்டு இருக்கிறேன் . இல்லையேல் நானும் உன் வழியே இதோ புறப்படுகிறேன் , காலதேவனை நோக்கி ! ஆஹா , அன்றே விபீஷணன் கூறினானே ?? விபீஷணன் வார்த்தைகளை அலட்சியம் செய்தேனே ? அதற்கான பலனை அல்லவோ இப்போது அனுபவிக்கின்றேன் ? பிரஹஸ்தனும் , மாண்டான் , கும்பகர்ணனும் மாண்டான் , இனி நான் என்ன செய்வது ?” புலம்பினான் ராவணன் . அவன் சோகத்தைக் கண்ட அவனுடைய மற்றப் பிள்ளைகளும் , மற்ற சகோதரர்களும் அவனைத் தேற்றி , தாங்கள் போருக்குச் சென்று ராம , லட்சுமணர்களை அழித்து விடுவதாய்ச் சொல்லிப் பெரும்படையுடன் போருக்குக் கிளம்பினார்கள் . சூரியன் போல் பிரகாசித்த மஹோதரனும் , கார்மேகத்துக்கு நிகரான திரிசிரனும் , மலை போன்ற தோற்றத்துடன் அதிகாயனும் , சிவனார் மனம் குளிர இரு செவிகளிலும் உபதேச மந்திரத்தைச் சொன்ன தேவ சேனாபதியான கார்த்திகேயன் போல் நராந்தகனும் , அவன் மாமன் , மாயோன் , போன்ற தோற்றத்துடனேயே தேவாந்தகனும் , செல்வத்துக்கு அதிபதியானவனும் , ராவணனுக்கு அண்ணனும் ஆன குபேரன் போல் மஹாபார்ச்வனும் தோற்றம் அளிக்க அரக்கர் படை மீண்டும் புது உற்சாகத்துடனேயே வானரப்படையுடன் பொருத ஆரம்பித்தது . வானரப்படையில் பலரையும் வந்த உடனேயே அரக்கர் படை அழித்து நாசம் செய்தது . அங்கதன் , நராந்தகனையும் , அனுமன் , திரிசிரன் , தேவாந்தகனையும் , நீலன் , மஹோதரனையும் , ரிஷபன் , மஹாபார்ச்வனையும் முறையே கொன்றனர் . ஆனால் பிரம்மனிடம் வரம் பெற்ற அதிகாயனை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை . பெரும் சாதனைகள் புரிந்த அவனைக் கட்டுப்படுத்தும் வழி , வகை புரியாமல் வானரப்படையினர் திகைத்து நின்றனர் . பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அந்த விஷ்ணுவே வந்துவிட்டானோ , அவன் கையிலிருந்து சக்கரம் தான் தங்களை அழிக்க வந்துவிட்டதோ , என வானர வீரர்கள் எண்ணும் வண்ணம் சுழன்று , சுழன்று சண்டையிட்டுக் குவித்தான் வானர வீரர்களைப்பிணமாக . அதிர்ச்சி அடைந்த வானர வீரர்களில் சிலர் ராமனிடம் சென்று போர்க்களச் செய்திகளைத் தெரிவிக்க , ராமரும் அதிகாயனின் வீர சாகசங்களைக் கண்ணால் கண்டு வியப்புற்றார் . விபீஷணனிடம் யார் இவன் எனக் கேட்க அதிகாயன் பற்றிய விபரங்களை விபீஷணன் சொல்ல ஆரம்பிக்கின்றான் . 65 கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 65 ராவணனின் புத்திரர்களில் ஒருவனும் , பிரம்மாவிடம் வரம் பெற்றவனும் ஆன அதிகாயன் பற்றிய விபரங்களை விபீஷணன் சொல்லத் தொடங்கினான் . அந்த மஹாவிஷ்ணுவே வந்து ராவணனுக்காக யுத்தம் செய்கின்றாரோ என்று எண்ணும் வண்ணம் தன் வீரத்தைக் காட்டிய அதிகாயனைப் பார்த்த ராம , லட்சுமணர்கள் அவன் வீரத்தைப் பார்த்து வியந்தனர் . விபீஷணன் சொல்கின்றான் :” தந்தையான ராவணனுக்கு நிகரானவன் இவன் . அவன் மனைவிகளில் ஒருத்தியான தான்யமாலினி என்பவளுக்குப் பிறந்த இவன் அதி புத்திசாலி , ஆலோசனைகள் சொல்லுவதில் வல்லவன் , வேதங்களை முழுமையாகக் கற்றறிந்தவன் , எதிரிப்படைகளைத் துண்டிப்பதில் சிறந்தவன் , அதே போல் சமாதானம் பேசுவதிலும் வல்லவன் , இன்று இலங்கை நகரே இவன் ஒருவனையே நம்பி உள்ளது என்றால் மிகை இல்லை . பிரம்மாவிடமிருந்து வரங்கள் பெற்ற இவனின் ஒளி பொருந்திய தேரும் , கவசங்களும் கூட அவராலேயே அளிக்கப் பட்டது . மிக்க அறிவு படைத்த இவன் இந்திரனின் வஜ்ராயுதத்தையே அடக்கியவன் . நாம் சற்றும் தாமதிக்காமல் இவனை அழிக்க வேண்டும் . இல்லையேல் வானரப் படையை இவன் அழித்து விடுவான் என்பதில் சற்றும் ஐயமில்லை .” என்று சொல்கின்றான் . வானர வீரர்களை எல்லாம் கதிகலங்க அடித்துக் கொண்டிருந்த அதிகாயனைக் கண்டு அவன் முன்னே லட்சுமணன் வீரத்தோடு போய் நின்றான் . அதிகாயனோ லட்சுமணனைச் சிறுவன் என்றே மதித்தான் . “ வயதில் மிக இளையவன் ஆன நீ தப்பிப் போ . உன்னால் என்னோடு போர் புரியவேண்டிய பலம் இல்லை , என் அம்புகளைத் தாங்கும் சக்தி உன்னிடம் இல்லை , திரும்பிப் போவாய் , இளைஞனே !” என்று அதிகாயன் சொல்ல லட்சுமணன் தீரத்தோடு அவனை எதிர்த்து நிற்கின்றான் . அதிகாயனும் , லட்சுமணனை எதிர்க்க இருவருக்கும் கடும்போர் நடக்கின்றது . லட்சுமணனின் அம்புகளை எல்லாம் எதிர்த்து ஒரு பாதிப்பும் இல்லாமல் நிற்கும் அதிகாயனைக் கண்டு திகைக்கின்றனர் வானர வீரர்கள் . தேவர்களும் , யட்சர்களும் , ரிஷி , முனிவர்களும் இந்த அதிசயச் சண்டையைக் காண விண்ணில் கூடி நின்றனர் . லட்சுமணன் அதிகாயனை வீழ்த்தும் வழி தேடித் திகைத்து நிற்க அப்போது வாயு அவன் காதில் மெல்ல , “ அதிகாயனைத் தோற்கடித்துக் கீழே வீழ்த்த வேண்டுமானால் பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்து .” என்று சொல்ல லட்சுமணன் பிரம்மாஸ்திரத்தைக் கையில் எடுத்தான் . சந்திர , சூரியர்கள் திகைத்து நடுங்க , பூமி அதிர , லட்சுமணன் பிரம்மாஸ்திரத்தை ஏவினான் . தன் முழு பலத்தோடு அது அதிகாயனைத் தாக்கியது . அதிகாயன் பிரம்மாஸ்திரத்தை வீழ்த்த ஏவிய அஸ்திரங்கள் பலனற்றுப் போயின . பிரம்மாஸ்திரம் தாக்கிக் கீழே வீழ்ந்தான் அதிகாயன் . அவன் தலையைத் துண்டித்தது பிரமாஸ்திரம் . அதிகாயன் உயிரை இழந்தான் . ராவணனுக்குச் செய்தி தெரிவிக்கப் பட்டது . மிக்க கவலையுடன் அவன் தூம்ராக்ஷனைப் பார்த்துத் தன் மனக்கவலையைப் பகிர்ந்து கொள்கின்றான் : “ இந்த ராம , லட்சுமணர்களை வீழ்த்தக் கூடியவர் எவரேனும் இருக்கின்றனரா தெரியவில்லை . பலம் மிகுந்த இந்திரஜித்தின் கட்டில் இருந்தே இவர்கள் இருவரும் விடுவித்துக் கொண்டு விட்டனர் . அந்த ஸ்ரீமந்நாராயணன் தான் ராமனாக வந்திருக்கின்றானோ என எண்ணுகின்றேன் . சீதை இருக்கும் அசோகவனமும் , அதைச் சுற்றிய இடங்களும் பாதுகாக்கப் படவேண்டும் . வானரர்களைச் சாதாரணமாய் நினைத்து அலட்சியம் செய்ய வேண்டாம் .” என்று சொல்லி விட்டுத் தன் உறவினர் ஒவ்வொருவராய்க் கொல்லப் படுவதை எண்ணிப் பெருந்துக்கத்தில் மூழ்கினான் . அவனைக் கண்டு வருந்திய இந்திரஜித் தன் தகப்பனுக்குத் தைரியம் சொல்ல ஆரம்பித்தான் . “ தந்தையே , நான் உயிரோடு இருக்கும்வரை தாங்கள் கவலை கொள்ளல் ஆகாது . ஏற்கெனவே என் நாராசங்களால் ராமனும் , லட்சுமணனும் ரத்தம் பெருக விழுந்து கிடந்ததைக் கண்டீர்கள் அல்லவா ?? அவர்கள் உயிரை விடும் சந்தர்ப்பமும் என்னாலேயே நடக்கப் போகின்றது . அதைத் தாங்கள் கண்ணால் காணவும் போகின்றீர்கள் . சம்ஹார மூர்த்தியான ருத்ரன் , மூவுலகையும் காக்கும் விஷ்ணு , தேவேந்திரன் , எமன் , அக்னி , சூரிய , சந்திரர் வியக்கும்படியாக இன்று நான் யுத்தம் செய்து அந்த ராம , லட்சுமணர்களை வீழ்த்தி விடுகின்றேன் .” என்று கூறிவிட்டுப் போருக்குத் தயார் ஆனான் இந்திரஜித் . மகனைக் கண்டு பெருமிதம் கொண்டான் ராவணன் . போருக்குப் புறப்படும் முன்னர் அக்னியை வளர்த்து , அக்னிக்கு வேண்டிய பூஜைகளை முறைப்படி இந்திரஜித் செய்ய , அக்னிதேவன் நேரில் வந்து தனக்கு உரிய காணிக்கையைப் பெற்றுக் கொண்டு சென்றான் . இத்தகைய வழிபாட்டினாலும் , ஏற்கெனவே தனக்குத் தெரிந்த மாயாஜால முறைகளினாலும் ஒளிர்ந்த இந்திரஜித் , தன் , தேர் , ஆயுதங்கள் , வில் ஆகியவை வானர வீரர்களுக்கும் , ராம , லட்சுமணர்களுக்கும் கண்ணுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டான் . போர்க்களத்தில் நுழைந்ததும் படையை அணிவகுத்துவிட்டுத் தான் பிறர் கண்ணில் படாமல் மாயமாய் நிற்கும்படியாகத் தன் மாயாசக்தியைப் பயன்படுத்தித் தன்னை மறைத்துக் கொண்டான் . வானர வீரர்களும் , தளபதிகளும் , சுக்ரீவன் , அங்கதன் உள்ளிட்ட மற்ற மாபெரும் வீரர்களும் அவன் தாக்குதலில் நிலை குலைந்தனர் . இதைக் கண்டு மனம் மகிழ்ந்த இந்திரஜித் , ராம , லட்சுமணர்களையும் தன் அம்பு , மழையால் முழுதும் மூடினான் . பின்னர் பிரம்மாஸ்திரத்தை அவன் ஏவ , அதைக் கண்ட ராமர் , லட்சுமணனிடம் , பிரம்மாஸ்திரத்தை இவன் ஏவுகின்றான் . நாம் இதற்குக் கட்டுப் பட்டே ஆகவேண்டும் . தாங்க வேண்டியது தான் . நாம் நினைவிழந்து விழுந்துவிட்டதும் , ஏற்கெனவே வானரப் படையின் நிலைகுலைந்த கதியை நினைத்து , அவன் உற்சாகம் அடையப் போகின்றான் . நாம் இப்போது இந்த அஸ்திரத்துக்குக் கட்டுப் பட்டே தீரவேண்டும் ” என்று சொல்கின்றார் . அதே போல் இந்திரஜித் ஏவிய அஸ்திரம் இருவரையும் கட்ட , இருவரும் அதற்குக் கட்டுப் பட்டு கீழே விழுகின்றனர் . இலங்கை திரும்பி இந்திரஜித் மிக்க மன மகிழ்வோடு தன் தந்தையிடம் , தான் அனைவரையும் வீழ்த்திவிட்டதையும் , வானர வீரர்கள் நிலை குலைந்துவிட்டதையும் தெரிவிக்கின்றான் . வானர வீரர்கள் மிக்க கவலையுடன் தங்கள் உடலில் ரத்தம் பெருகுவதையும் , தங்கள் காயங்களையும் கூட மறந்துவிட்டுக் கவலையுடனும் , திகைப்புடனும் , இனி என்ன என்று ஒன்றும் புரியாமல் நின்றனர் . ராம , லட்சுமணர்கள் தவிர , அங்கே தலைமை வகித்த பெரிய வீரர்கள் ஆன , சுக்ரீவன் , ஜாம்பவான் , அங்கதன் , நீலன் , ஆகிய அனைவரும் மயக்க நிலையிலும் , கிட்டத் தட்ட இறக்கும் தருவாயிலும் இருப்பதைக் கண்ட அனைவரும் செய்வதறியாது யோசிக்கையில் , ஓரளவு காயத்துடனும் , நினைவுடனும் இருந்த அனுமன் மற்ற அனைவரையும் எவ்வாறேனும் காக்கவேண்டியது தன் கடமை என்று உணர்ந்தான் . அதைப் புரிந்து கொண்ட விபீஷணனும் அவனைத் தேற்றி , யாரேனும் உயிர் பிழைத்துள்ளார்களா எனப் பார்க்கச் சொல்ல , விழுந்து கிடந்தவர்களில் அனுமன் தேட ஜாம்பவான் மட்டுமே அரை நினைவோடு முனகிக் கொண்டு இருந்ததைக் கண்டனர் இருவரும் . ஜாம்பவானைக் கூப்பிட்டு , இந்திரஜித்தின் பாணங்கள் உங்களைத் தாக்கியதா என விசாரிக்க , என்னால் கண் திறந்து பார்க்க முடியவில்லை , ஆனால் எனக்கு ஒரு யோசனை தோன்றுகின்றது . அதை நிறைவேற்ற அனுமனால் தான் முடியும் . அவன் இங்கே இருக்கின்றானா என்று வினவ , அனைவரையும் விட்டு , விட்டு அனுமனை ஏன் தேடுகின்றான் ஜாம்பவான் என்று யோசித்த விபீஷணன் , அதை ஜாம்பவானிடம் கேட்டான் . 66 கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் - பகுதி 66 எழுந்து நிற்கக் கூட முடியாத நிலையில் இருந்த ஜாம்பவான் , குரலை வைத்தே விபீஷணன் தான் பேசுவது எனப் புரிந்து கொண்டு , அனுமனைக் கூப்பிடுமாறு சொல்லவே , விபீஷணன் அனுமனைத் தேடுவதின் காரணத்தைக் கேட்கின்றான் . ஜாம்பவான் சொல்கின்றான் . “ வானரப்படை மொத்தமும் அழிந்திருந்தால் கூட திரும்ப அவற்றை மீட்கும் வல்லமை படைத்தவன் அனுமன் ஒருவனே ! அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை எனில் நம் வெற்றியும் உறுதியே !” என்று சொல்கின்றான் . உடனேயே பக்கத்தில் இருந்த அனுமன் , ஜாம்பவானைப் பார்த்து , நலம் விசாரிக்கவே , ஜாம்பவானும் , அனுமனிடம் , சொல்கின்றான் :” வானரங்களில் மிக மிகச் சிறந்தவனே ! வாயுகுமாரா , உன்னால் ஆகாதது ஒன்றுமில்லை . இப்போது இந்த வானரப்படையையும் , ராம , லட்சுமணர்களையும் காக்கும் பொறுப்பு உன்னிடம் தான் உள்ளது . நீ மீண்டும் கடலைக் கடக்கவேண்டும் . கடலைக் கடந்து இமயமலைச் சாரலுக்குச் சென்று , அங்கே மிக மிக உயர்ந்திருக்கும் ரிஷப மலையின் மீது ஏறினால் திருக்கைலைமலையை நீ காண்பாய் ! அந்த இரு மலைச் சிகரங்களுக்கும் இடையில் ஒளிவீசிப் பிரகாசிக்கும் தன்மையை உடைய ஒரு மலையையும் நீ காணலாம் . அந்த மலை தான் பல்வேறுவிதமான மூலிகைகள் அடங்கிய மலை ஆகும் . ம்ருதசஞ்சீவினி , விசல்யகரணி , ஸுவர்ணகரணி , ஸம்தாணி , போன்ற நான்கு முக்கியமான மூலிகைகளை அங்கே இருந்து நீ கொண்டு வரவேண்டும் . அவற்றை எடுத்துக் கொண்டு எவ்வளவு விரைவாக திரும்ப முடியுமோ அத்தனை விரைவாக வந்தாயானால் அனைவரையும் காப்பாற்றி விடலாம் .” என்று சொல்கின்றான் ஜாம்பவான் . ஜாம்பவான் கூறியதைக் கேட்ட அனுமன் புதிய பலம் வரப்பெற்றவராய் , அந்த மகாவிஷ்ணுவின் சக்ராயுதம் செல்லும் வேகத்தை விட அதிக வேகத்துடன் எழும்பி , சமுத்திர ராஜனை வணங்கித் துதித்து , கடலைக் கடந்து விண்ணிலே தாவி , இமயத்தை நோக்கி வேகமாய் விரைந்தார் . அந்த சூரியனையே சென்று தொட்டுவிடுவாரோ என்று அனைவரும் எண்ணி வியக்கும் வண்ணம் வேகமாயும் , வெகு உயரத்திலும் பறந்து சென்று இமயமலையை அடைந்த அனுமன் அங்கே மூலிகைகளைத் தேடியும் அவரால் எதையும் சரிவரக் கண்டு பிடிக்க முடியவில்லை . கோபம் கொண்ட அனுமன் அந்த மலைச்சிகரத்தை அப்படியே பெயர்த்து எடுத்தார் . தன் கையில் அதைத் தாங்கிக் கொண்டு மீண்டும் அதே வேகத்துடன் பறந்து வந்து இலங்கையில் போர்க்களத்தை அடைந்தார் . அனுமனால் கொண்டுவரப்பட்ட மூலிகைகளின் சுகந்தம் எங்கும் பரவியது . அந்த வாசனையை நுகர்ந்ததுமே வானரங்களும் , அவற்றின் தலைவர்களும் விழித்து எழுந்தனர் . மூலிகைகளின் உதவியால் , தங்கள் காயங்களும் ஆறப் பெற்று , புத்துயிர் கொண்டனர் அனைவரும் . ராம , லட்சுமணர்களும் அவ்வாறே உயிர் மட்டுமின்றி , தங்கள் காயங்களும் ஆற்றப்பட்டு , புத்துணர்ச்சி பெற்று மீண்டும் போருக்குத் தயார் ஆனார்கள் . ஆனால் இதே மூலிகைகள் அரக்கர்களையும் குணப்படுத்தி இருக்கும் . ராவணன் செய்த ஒரு தவற்றினால் அவர்களுக்கு இதன் பலன் கிட்டாமல் போயிற்று . அரக்கர் தரப்பில் உயிர் இழப்பு அதிகம் என எதிரிகளுக்குத் தெரியக் கூடாது என்பதால் , யாரேனும் காயம் அடைந்தோ , அல்லது உயிர் விட்டோ கீழே வீழ்ந்தால் அவர்களை உடனடியாகக் கடலில் தள்ளும்படியோ , வீசி எறிந்துவிடும்படியாகவோ ராவணன் உத்தரவிட்டிருந்தபடியால் , இந்த மூலிகைகளின் பலன் அவர்களுக்குக் கிட்டாமல் போயிற்று . இதுவும் விதியின் ஒரு சூழ்ச்சி , அல்லது ராவணனின் அழிவுக்கு அடையாளம் எனக் கொள்ளலாம் அல்லவா ?? “ விநாச காலே , விபரீத புத்தி !” என்று சொல்வார்கள் அல்லவா ??? பின்னர் அனுமன் அந்த மூலிகைச் சிகரத்தை மீண்டும் வானவீதிவழியாகவே இமயத்துக்கு எடுத்துச் சென்று எடுத்த இடத்திலேயேமீண்டும் வைத்துவிட்டதாய்க் குறிப்புக் கூறுகின்றது .. இதன்பின்னர் நடந்த பெரும்போரில் பெரும்பாலும் அனுமனால் சொல்லப் பட்ட யோசனைகளே பின்பற்றப் பட்டன . ராவணன் தன் தம்பியான கும்பகர்ணனின் மகன்களையும் , மற்ற வீரர்களையும் யுத்த களத்திற்கு அனுப்ப அவர்கள் அனைவரும் அங்கதனால் வீழ்த்தப் படுகின்றனர் . இதே போல் மற்றொரு தம்பியான கரனின் மகனும் வீழ்த்தப் பட , கோபம் தலைக்கேறிய இலங்கேசுவரன் , இந்திரஜித்தை மீண்டும் யுத்தம் செய்ய அனுப்புகின்றான் . இந்திரஜித் இம்முறையும் நேருக்கு நேர் யுத்தம் செய்யாமல் மறைந்திருந்தே யுத்தம் செய்கின்றான் . பலவிதமான வழிபாடுகளையும் நடத்திவிட்டுப் போருக்கு வந்திருந்த இந்திரஜித் , வானத்தில் எங்கே இருக்கின்றான் என்றே தெரியவில்லை , ராம , லட்சுமணர்களுக்கு . அவர்களின் அம்புகள் அவனைத் தொடக் கூட இல்லை . அங்கும் , இங்கும் நகர்ந்து , நகர்ந்து அம்பு மழை பொழிந்தாலும் எந்த இடத்தில் இருக்கின்றான் எனக் குறிப்புத் தெரியாமல் தவித்தனர் இருவரும் . அம்புகள் வரும் திக்கைக் குறிவைத்து , ராம , லட்சுமணர்கள் போர் செய்ய ஓரளவு அவர்களால் இந்திரஜித்தைக் காயப் படுத்த முடிந்தது என்பதை அந்த அம்புகள் கீழே விழும்போது ரத்தம் தோய்ந்து விழுவதை வைத்துத் தெரிந்தது . ஆனால் மறைந்திருந்து யுத்தம் செய்யும் இவனை அழிப்பது எவ்வாறு என யோசிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டார் ராமர் . லட்சுமணனிடமும் அவ்வாறே கூறுகின்றார் . ராமரின் எண்ணம் தன்னை அழிப்பதே எனப் புரிந்துகொண்ட இந்திரஜித் , போர்க்களத்தை விட்டு வெளியேறுகின்றான் . தன் மாயாசக்தியால் , சீதையைப் போன்றே மற்றொரு சீதையைத் தோற்றுவிக்கின்றான் . நிஜமான சீதை எவ்வாறு , அழுக்கான ஆடையுடனேயே , ஆபரணங்கள் இல்லாமல் , உடலிலும் தூசியுடனும் , புழுதியுடனும் காணப்பட்டாளோ அவ்வாறே இவளையும் தோற்றுவிக்கின்றான் . சீதையின் துக்கமும் இவள் கண்களிலும் காணப்பட்டது . அனுமன் பார்த்தார் . நிஜமான சீதைதான் இவள் என்றே நினைத்தார் . பல வானரர்களையும் கூப்பிட்டுக் கொண்டு தன்னைத் தாக்க அனுமன் வருவதை இந்திரஜித் பார்த்துவிட்டு , நகைத்துக் கொண்டே தன் வாளை உருவி , தன்னருகில் இருக்கும் மாய சீதையின் தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்க ஆரம்பித்தான் . அந்த மாய சீதையும் , “ ராமா , ராமா ‘” என்றே அலறுகின்றாள் . கோபம் கொண்ட அனுமன் “ உன்னுடைய அழிவுக்காலம் நெருங்கிவிட்டது . இந்த அபலை உனக்கு என்ன தீங்கு செய்தாள் ? ஒரு பெண்ணைக் கொல்வது மகா பாபம் ! சீதையை நீ கொன்றாயானால் , நீ உயிர் பிழைப்பது நிச்சயம் இல்லை .” என்று எச்சரிக்கின்றார் . இந்திரஜித் மேல் அனுமன் முழுவேகத்தோடு பாய , இந்திரஜித்தோ , “ நீ சொல்வது உண்மையே , ஒரு பெண்ணைக் கொல்லக் கூடாதுதான் . ஆனால் போரில் எதிரிக்கு எது பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்து பாதிப்பை ஏற்படுத்துவது செய்யக் கூடிய ஒரு காரியமே ! இவளைக் கொன்றால் உங்கள் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும் . முதலில் இவளைக் கொன்றுவிட்டு , பின்னர் உங்கள் அனைவருக்கும் முடிவு கட்டுகின்றேன் .” என்று சொல்லிவிட்டுத் தன் கைவாளால் மாய சீதையை இரண்டு துண்டாக்குகின்றான் . பதறிய அனுமன் , மிகுந்த கோபத்துடன் , அரக்கர் படையைத் தாக்க , பெரும் உயிர்ச்சேதம் ஏற்படுகின்றது இருதரப்பிலும் . அனுமன் சீதை மரணம் அடைந்தாள் என்னும் செய்தியை ராமரிடம் தெரிவிக்க எண்ணி , போர்க்களத்தில் இருந்து மெல்ல , விலக , அதைக் கண்ட இந்திரஜித்தும் , தானும் இன்னொரு யாகத்தைப் பூர்த்தி செய்துவிட்டு வரலாம் என்ற எண்ணத்தோடு போர்க்களத்தில் இருந்து விலகுகின்றான் . ராமரைச் சென்றடைந்த அனுமன் , சீதை இந்திரஜித்தால் கொல்லப் பட்டாள் எனத் தெரிவிக்க , அதைக் கேட்ட ராமர் மனம் தாங்க முடியாத சோகத்தில் ஆழ , செய்வது இன்னதென்று அறியாமல் தவிக்க , மரம் போல் கீழே சாய்ந்தார் . லட்சுமணன் தாங்கிப் பிடித்துத் தன் மடியில் போட்டுக் கொண்டான் . 67 கதை,கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 67 இப்போது சொல்லப் போகும் விஷயங்கள் லட்சுமணன் கூறுவதாய் வால்மீகி ராமாயணத்தில் வருவது . லட்சுமணன் தர்மத்தை நிந்தித்துப் பேசுவான் இந்த இடத்தில் . இந்த இடத்தை முக்கியமாய்க் குறிப்பிடுவதற்குக் காரணமே மற்ற ராமாயணங்களில் இவ்விதம் வரவில்லை என்பதே ! என்னதான் மனிதரில் உயர்ந்தவர் என்றாலும் ராமரும் சரி , லட்சுமணனும் சரி , சாதாரண மனிதனின் ஆசாபாசங்களுக்கு உட்பட்டே , அந்த நியதிகளுக்குக் கட்டுப்பட்டே நடந்திருக்கின்றனர் . நான் குறிப்புகள் எடுக்கும்போதே இவ்விதமான மேற்கோள்கள் வரும் இடத்தை முக்கியமாய் எடுத்துக் கொண்டேன் . ஏனெனில் ராமர் ஒரு மனிதன் தான் , என்பதையும் , அவரைச் சார்ந்தவர்களும் , தாங்கள் ஒரு அவதாரம் என்று நினைக்காதபடிக்குமே வால்மீகி அவர்கள் பேசுவதை எல்லாம் குறிப்பிட்டுள்ளார் . மனச்சோர்வு என்பது நமக்கு இன்றளவும் எதற்கானும் ஏற்பட்டே தீர்கின்றது . அந்தச் சோர்வு ஏற்பட்டால் உடனே தர்மத்தின் பாதையில் இருந்து பிறழாமல் , மீண்டும் நமது கடமையிலேயே மனதைச் செலுத்தி , செய்யவேண்டியவற்றை ஒழுங்கு முறையோடு செய்யவேண்டும் என்பதை உணர்த்தவே இது இங்கு குறிப்பிடப் படுகின்றது , என என்னுடைய கருத்து . சாதாரண மனிதர்கள் ஆன நமக்கெல்லாம் இன்றிருக்கும் அதே ஆசா , பாசங்களும் , கோப , தாபங்களும் , தர்ம நிந்தனையும் , பெரியோர்களை மதித்து நடந்தாலும் அதன் விளைவாய் ஏற்பட்ட தனிப்பட்ட நஷ்டத்தைக் குறித்து வருந்துவதும் , ராமரும் , சீதையும் , லட்சுமணனும் ஆங்காங்கே எடுத்துச் சொல்லுவதாகவே வால்மீகி கூறி உள்ளார் . அதன்படியே நாம் பார்க்கவேண்டும் . சீதை தான் சிறைப்பட்டதும் , கைகேயியை நினைத்துப் புலம்புவதும் சரி , சீதையை இழந்ததும் ராமர் புலம்பியதும் சரி , இந்தத் தனிப்பட்ட மனிதர்களின் சாமான்யப் போக்கைச் சுட்டுவதே அல்லாமல் , ராமரை ஒரு அவதாரமாய் எடுத்துக் கொண்டு பார்த்தால் தப்பாகவே தெரியும் . ஆனால் வால்மீகிக்கு அந்தக் கட்டாயம் ஏதும் இல்லை . ஆகவே தான் பார்த்தபடி , தன் கோணத்திலேயே சொல்லி உள்ளார் . இந்தக் குறிப்பிட்ட வித்தியாசங்கள் தெரியும்படியாகவே நான் எழுதி வருகின்றேன் கூடியவரையிலும் . இனி சீதை இறந்துவிட்டாள் என்று கருதிய ராமர் மயங்கி விழுந்துவிட்டதைக் கண்ட லட்சுமணன் கூறுவது : அருமை அண்ணன் மயங்கி விழுந்ததைக் கண்ட லட்சுமணன் , அண்ணனை வாரி எடுத்துத் தன் மடியில் போட்டுக் கொள்கின்றான் . “ தூய்மையிலேயே நிலைத்து நின்று , அதையே நிரந்தரமாய்க் கடைப்பிடிக்கும் உங்களுக்கு இப்படி ஒரு துன்பமா ?? தர்மத்தின் பாதையில் செல்லும் உங்களை அந்தத் தர்மம் கூடக் காக்கவில்லையா ? எனில் நீங்கள் செய்து வந்த அந்தத் தர்மத்தினால் என்ன பயன் ?? அது தேவையா என்றே தோன்றுகின்றதே ? தர்மத்தைக் கடைப்பிடிப்பவன் மேன்மை உறுவான் எனில் உங்களுக்கு என்ன நடந்துள்ளது ? அம்மாதிரி அனைவரும் சொல்வதற்கு என்ன ஆதாரம் உள்ளது ? தர்மத்தை இனியும் நாம் பின்பற்றவேண்டாம் என்றே தோன்றுகின்றது . தர்மம் தலை காக்கும் என்பது உண்மையானால் இம்மாதிரியான துக்கம் உங்களுக்கு ஏன் நேர வேண்டும் ? தீயவனை அதர்மம் அழிக்கும் என்றால் , அந்த அதர்மம் அவனைக் கொன்றால் , அவனைக் கொன்ற பாவம் அந்த அதர்மத்துக்கு வந்தால் , அப்புறம் அந்த அதர்மமும் அழிந்து விடும் அல்லவா ? அப்படி எனில் அதனால் என்ன ஆபத்து ஒருவனுக்கு நேரிடும் ?? ஒன்றும் இல்லையே ? அல்லது விதியின் செயல் என்றால் விதியைத் தானே நொந்து கொள்ளவேண்டுமோ ??? குழப்பமாய் உள்ளதே ?” “ தர்மம் எங்கே இருக்கின்றது ??? கண்ணுக்குத் தெரியுமா ?? கண்ணுக்குத் தெரியவில்லை எனில் இல்லை என்று தானே பொருள் ??? தர்மம் என்று ஒன்று இருந்திருந்தால் இம்மாதிரியான துக்கம் உங்களுக்கு எப்படி நேரிட முடியும் ?? ஆஹா , இதெல்லாம் எவ்வாறு ஆரம்பித்தது ?? நம் தந்தை அன்றோ ஆரம்பித்து வைத்தார் ? உங்களுக்குப் பட்டாபிஷேஹம் என்று சொல்லிவிட்டு , உங்களிடமும் அது பற்றிச் சொல்லிவிட்டுப் பின்னர் அதை மறுத்து வாக்குத் தவறியதால் வந்தது அன்றோ இத்தனையும் ??? தர்மம் பெரியது என நீங்கள் வாதிட்டாலும் , குடிமக்களுக்கு நீங்களே அரசனாவீர்கள் என வாக்குக் கொடுத்தீர்களே ? அதிலிருந்து தவறியவர் ஆக மாட்டீர்களா ?? தந்தையை நீங்கள் அடக்கி இருக்க வேண்டுமோ ?? தவறி விட்டீர்களோ ?? தந்தையை அடக்காததால் குடிமக்களுக்குச் செய்யவேண்டிய கடமை என்னும் தர்மத்தில் இருந்து நீங்கள் தவறியவர் ஆகிவிட்டீர்களோ ? இப்படி எல்லாம் தியாகம் செய்து நீங்கள் கண்ட பலன் தான் என்ன ? மனைவியை ஒரு அரக்கனிடம் பறி கொடுத்துவிட்டு , அவள் இருக்கின்றாளா , இறந்துவிட்டாளா என்பதே தெரியாமல் , இப்படி மயங்கி விழுந்து கிடப்பதைத் தவிர நீங்கள் அடைந்த நன்மைதான் என்ன ??” “ இருக்கட்டும் , இளவரசே , நான் இந்த இந்திரஜித்தைச் சும்மா விடப் போவதில்லை . என் பலம் முழுதும் பிரயோகித்து அவனைக் கொல்வேன் , அழிப்பேன் அடியோடு , இன்று என் போர்த்திறனை நீங்கள் காண்பீர்கள் , எழுங்கள் , உங்களை மன மகிழ்ச்சி அடையச் செய்வதே என் நோக்கம் , உங்கள் திருப்தியே என் திருப்தி , அந்த ராவணனையும் , அவன் குடிமக்களையும் , படை வீரர்களையும் அழித்து நாசம் செய்கின்றேன் . சீதைக்கு நேர்ந்த கதியை மனதில் வைத்துக் கொண்டு அவர்களைப் பழி வாங்குவேன் .” என்று பலவாறு லட்சுமணன் சொல்கின்றான் . ஏற்கெனவே இந்திரஜித் செய்த அட்டகாசத்தால் கதி கலங்கிக் கிடந்த வானரப் படைகள் இப்போது ராமரும் மயங்கியதும் சிதறிப் போகின்றது . விபீஷணன் பெரும் முயற்சி எடுத்து படைகளை ஒன்று திரட்டுகின்றான் . அப்போது தான் அவனுக்குச் சீதையை இந்திரஜித் கொன்றுவிட்டதாய்ச் செய்தி வந்ததும் ராமர் கீழே விழுந்துவிட்டார் என்று தெரிய வருகின்றது . விபீஷணன் பெருங்குரலெடுத்து நகைக்கின்றான் . மேலும் சொல்கின்றான் :” ராவணனை நான் நன்கு அறிவேன் . கடல் அலைகள் வற்றிவிட்டது என்றாலோ , சூரியன் மேற்கே உதிக்கின்றது என்றாலோ நம்பலாம் . சீதையை ராவணனோ , இந்திரஜித்தோ கொன்றுவிட்டார்கள் என்று நம்புவது இயலாத காரியம் . ராவணன் சீதையைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றான் என்பது எனக்கு நன்கு தெரியும் . எனவே சீதையின் உயிர் பற்றிய கவலையோ , சிந்தனையோ கொள்ள வேண்டாம் . மாயையில் வல்லவன் ஆன இந்திரஜித் , இம்மாதிரி உங்களைக் கலங்க அடித்து வெற்றி பெற எண்ணுகின்றான் . அவனால் உண்டாக்கப் பட்ட மாய சீதையாகத் தான் அவள் இருக்க முடியும் . அதுவும் அவன் ஏன் செய்திருக்கின்றான் என்றால் , இப்போது அவன் ஒரு குறிப்பிட்ட யாகம் செய்ய “ நிகும்பிலம் ” என்னும் இடம் சென்றிருக்கின்றான் . அங்கே போய் அந்த யாகத்தில் நாம் இடையூறு விளைவித்து விடாமல் இருக்கவே இம்மாதிரியான குழப்பத்தை உண்டு பண்ணி நம்மை வேதனையில் ஆழ்த்தி இருக்கக் கூடும் . இந்த யாகத்தை அவன் முடித்து விட்டானெனில் அவனை நம்மால் வெல்ல முடியாது . அவனை யாகத்தை முடிக்கவிடக் கூடாது . நாம் இப்போது அங்கே தான் செல்லவேண்டும் .” என்று விபீஷணன் சொல்கின்றான் . அனைவரும் யாகம் நடக்கும் இடம் நோக்கிச் செல்கின்றனர் . கம்பர் காட்டும் காட்சிகள் , கும்பகர்ணன் வதை - சஞ்சீவி மலை கொணருதல் மேலே செல்வதற்கு முன்னர் , சஞ்சீவி மலையை ஆஞ்சநேயர் எடுத்து வந்தது பற்றிய கம்பரின் பாடல்கள் இடம் பெறும் இடம் பற்றிப் பார்க்கலாமா ??? வால்மீகியின் கூற்றுப் படி முதற்போர்புரி படலம் எனக் கம்பர் எழுதி இருக்கும் முதல்போர் புரி படலத்திலேயே ராமன் , போர்க்களத்துக்கு வந்து போர் புரிந்ததும் , கருடன் வந்து இந்திரஜித்தின் நாராசங்கள் என்னும் அம்புகளில் இருந்து விடுவிப்பதையும் பார்த்தோம் . கம்பர் தன் முதல்போர் புரிபடலத்தில் இது பற்றிக் குறிப்பிடவில்லை என்றும் பார்த்தோம் . அதன் பின்னர் கும்பகர்ணன் வதைப் படலம் , மாயா சனகப் படலம் என்றெல்லாம் கம்பர் குறிப்பிடுகின்றார் . ராவணன் போர் தொடங்கும் முன்னரே சீதையை அசோகவனத்தில் கண்டு பேசி , ராமரின் தலையை மாயாரூபமாய் வெட்டுண்டதாய்ச் சித்திரித்துக் காட்டி சீதையை ஏமாற்றுவதாய் வால்மீகி கூறுகின்றார் . இதற்கெல்லாம் பின்னரே , இலங்கை முற்றுகை தொடங்குகின்றது வால்மீகி ராமாயணத்தில் . ஆனால் கம்பரோ கும்பகர்ணன் வதைக்குப் பின்னரே ராவணன் சீதையைக் கண்டு பேசுவதாயும் , அப்போதும் ஜனக மகாராஜாவைக் கொண்டு வந்து சீதைக்கு முன்னர் துன்புறுத்துவதாயும் காட்டுகின்றார் . மாயா சனகப் படலம் : பாடல் எண் 1604, 1605 “ ஆயது ஓர் காலத்து ஆங்கண் மருத்தனைச் சனகன் ஆக்கி வாய் திறந்து அரற்றப் பற்றி மகோதரன் கடிதின் வந்து காய் எரி அனையான் முன்னர்க் காட்டினான் வணங்கக் கண்டாள் தாய் எரி வீழக் கண்ட பார்ப்பு எனத் தரிக்கிளாதாள் .” ” கைகளை நெரித்தாள் கண்ணில் மோதினாள் கமலக் கால்கள் நெய் எரி மிதித்தாலென்ன நிலத்திடைப் பதைத்தாள் நெஞ்சம் மெய் என எரிந்தாள் ஏங்கி விம்மினாள் நடுங்கி வீழ்ந்தாள் பொய் என உணராள் அன்பால் புரண்டனள் பூசலிட்டாள் .” என்று ராவணன் சீதையிடம் ஜனகன் போல் தோற்றமளிக்கும் மாயையை உருவாக்கிக் காட்டியதாய்ச் சொல்கின்றார் . மேலும் மாயா சனகனைக் காட்டி , சீதையைத் தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியதாயும் , சீதை அதற்கு இணங்காமல் , ராவணனைக் கடுமொழிகள் பல பேசியதாயும் , கடைசியில் இவ்வாறு உரைத்ததாயும் சொல்கின்றார் . பாடல் எண் 1632 “ புன் மக , கேட்டி கேட்டற்கு இனியன புகுந்த போரின் உன் மகன் உயிரை எம்மோய் சுமித்திரை உய்ய ஈன்ற நன் மகன் வாளி நக்க நாய் அவன் உடலை நக்க என் மகன் இறந்தான் என்ன நீ எடுத்து அரற்றல் என்றாள் “ என சீதை ராவணனைப் பார்த்து உன் மகன் இந்திரஜித்தை , லட்சுமணன் அழிப்பான் , அப்போது நீ இவ்விதம் புலம்புவாய் எனக் கூறுவதாயும் , அது சமயம் கோபம் கொண்டு சீதையைத் தாக்க முனைந்த ராவணனை மகோதரன் தடுத்து நிறுத்தி இவ்விதம் சொல்லுவதாயும் தெரிவிக்கின்றார் கம்பர் . பாடல் எண் : 1633 “ வெய்பவன் அனைய கேளா வெயில் உக விழித்து வீரக் கை பல பிசைந்து பேழ் வாய் எயிறு புக்கு அழுந்தக் கவ்வி தையல் மேல் ஓடலோடும் மகோதரன் தடுத்தான் ஈன்ற மொய் கழக் தாதை வேண்ட இசையும் நீ முனியல் என்றான் .’ என மாய சனகனைக் காட்டி சனகன் சொன்னால் சீதை உனக்கு இணங்குவாள் என்று மகோதரன் தடுப்பதாய்ச் சுட்டிக் காட்டும் கம்பர் அடுத்து எழுதி இருப்பது : பாடல் எண் : 1634 1635, 1636 “ என்று அவன் விலக்க மீண்டான் ஆசனத்து இருக்க ஆவி பொன்றினன் ஆகும் என்னத் தரையிடைக் கிடந்த பொய்யோன் இன்று இது நேராய் என்னின் என்னை என் குலத்தினோடும் கொன்றனை ஆதி என்னா இனையன கூறலுற்றான் .” “ பூவின் மேல் இருந்த தெய்வத் தையலும் பொதுமை உற்றாள் பாவி யான் பயந்த நங்கை நின் பொருட்டாகப் பட்டேன் ஆவி போய் அழிதல் நன்றோ அமரருக்கும் அரசன் ஆவான் தேவியாய் இருத்தல் தீதோ சிறையிடைத் தேம்புகின்றாய் ?” “ என்னை என் குலத்தினோடும் இன் உயிர் தாங்கி ஈண்டு நல் நெடுஞ்செல்வம் துப்பேன் ஆக்கினை நல்கி நாளும் உன்னை வெஞ்சிறையின் நீக்கி இன்பத்துள் உய்ப்பாய் என்னா பொன் அடி மருங்கு வீழ்ந்தான் உயிர் உகப் பொருமுகின்றான் .” என்று இவ்வாறு மாயா சனகன் சீதையை ராவணனுக்கு இணங்குமாறு கேட்டதாயும் , அதற்கு சீதை கடிந்து கொண்டதாயும் தெரிவிக்கின்றார் . பாடல் எண் 1640 “ நீயும் நின் கிளையும் மற்று இந்நெடு நில வரைப்படம் நேரே மாயினும் முறைமை குன்ற வாழ்வெனோ வயிரத்தின் தோள் ஆயிர நாமத்து ஆழி அரியினக்கு அடிமை செய்வேன் நாயினை நோக்குவேனோ நாண் துறந்து ஆவி நச்சி ” என்று சீதை ஜனகனின் குலமே அழிந்து பட்டாலும் ராவணனுக்குத் தான் இணங்க மாட்டேன் எனச் சொன்னதாயும் , உடனேயே கோபம் கொண்ட ராவணன் மாயா சனகனைக் கொல்லத் துணிந்ததாயும் , அதை மகோதரன் தடுத்ததாயும் , அந்நேரமே கும்பகர்ணன் இறந்து பட்டதும் வானர வீரர்களின் ஆரவார ஒலி விண்ணைத் தொடும் அளவுக்கு எழுந்ததாயும் , அதைக் கேட்டுக் கும்பகர்ணன் இறந்த விஷயத்தை ராவணன் தெரிந்து கொண்டதாயும் கம்பர் சொல்கின்றார் . மேலும் மாயா சனகனைச் சிறையில் அடைக்குமாறு மகோதரன் சொன்னதாகவும் சொல்கின்றார் . பின்னர் சீதை அதைக் கேட்டு மகிழ்ந்ததாயும் , அப்போது திரிஜடை என்னும் அரக்கி , இந்த மாயா சனகன் உண்மையில் மாயையில் வல்லவன் ஆன மருத்தன் என்னும் பெயரைப் பெற்ற அரக்கன் ஆவான் என்று உண்மையைச் சீதையிடம் சொல்லி அவளைத் தேற்றியதாகவும் சொல்கின்றார் . இவ்வாறு கும்பகர்ணன் வதை , பின்னர் அதிகாயன் வதை , அதிகாயன் வதைக்குப் பின்னரே இந்திரஜித் கோபம் மிகக் கொண்டு , நாக பாசங்களை ஏவி லட்சுமணனைக் கட்டியதாயும் , லட்சுமணனை மீட்கவே கருடன் வந்ததாயும் தெரிவிக்கின்றார் . அது பற்றி நாளை பார்ப்போம் . கம்பர் காட்டும் காட்சிகள் - தொடர்ச்சி !! மாயா சனகன் வால்மீகியில் வருவதில்லை . அப்படி ஒரு காட்சியே வால்மீகி சொல்லவில்லை . அதிகாயனைக் கொன்ற லட்சுமணனைப் பழி தீர்க்க ராவணனே இந்திரஜித்திடம் சொல்லி லட்சுமணனை நாகபாசத்தால் பிணிக்குமாறு சொல்லுவதாயும் கம்பர் கூறுகின்றார் . அது குறித்த பாடல் : நாகபாசப் படலம் : பாடல் எண் 1957 “ ஏகா இது செய்து எனது இன்னலை நீக்கிடு எந்தைக்கு ஆகாதனவும் உளதோ எனக்கு ஆற்றலார் மேல் மா கால் வரி வெஞ்சிலையோடும் மதித்த போதே சேகு ஆகும் என்று எண்ணி இவ் இன்னலில் சிந்தை செய்தேன் “ என்று சொல்கின்றார் கம்பர் . இதன் பின்னரே நடக்கும் கடும்போரில் வானர சேனைகளை இந்திரஜித் சிதற அடிப்பதைக் கண்ட இலட்சுமணன் விபீஷணனுடன் , இந்திரஜித்தைத் தான் தனியாக எதிர்க்கக் கலந்தாசிப்பதாயும் சொல்கின்றார் . இதன் பின்னரும் நடந்த கடும்போருக்குப் பின்னர் இந்திரஜித் தன் மாயாசக்தியால் மறைந்திருந்து நாகாஸ்திரத்தை ஏவ மறைய , அப்போது இந்திரஜித் தோற்று ஓடிவிட்டான் என்று போரை வானரப் படை நிறுத்தி இருந்த சமயம் நாகபாசத்தால் கட்டுகின்றான் இந்திரஜித் . அந்தப் பாடல் : பாடல் எண் 2132 “ விட்டனன் அரக்கன் வெய்ய படையினை விடுத்தலோடும் எட்டினோடு இரண்டு திக்கும் இருள் திரிந்து இரிய ஓடி கட்டினது என்ப மன்னோ காகுத்தர்கு இளைய காளை வட்ட வான் வயிரத் திண் தோள் மலைகளை உளைய வாங்கி .” என்று கம்பர் நாகபாசங்களாலும் , லட்சுமணன் மட்டுமே கட்டுண்டு கிடப்பதாயும் , அதன் பின்னர் அனுமன் முதலானவர்களையும் நாகபாசம் மெல்லப் பிணித்ததாயும் சொல்கின்றார் . பாடல் எண் 2134 “ மற்றையோர் தமையும் எல்லாம் வாள் எயிற்று அரவம் வந்து சுற்றிய வயிரத் தூணின் மலையின் பெரிய தோள்கள் இற்றன இற்ற என்ன இறுக்கின இளகா உள்ளம் தெற்றென உடைய வீரர் இருந்தனர் செய்வது ஓரார் .” என்று சொல்கின்றார் கம்பர் . இதன் பின்னர் விபீஷணன் லட்சுமணன் நிலைகண்டு கலங்கிப் புலம்பியதாயும் , அவனுடன் வந்த அவன் உற்ற தோழர்களில் ஒருவன் ஆன அனலன் என்பவன் ராமனிடம் போய் லட்சுமணனுக்கு நேர்ந்த கதியைச் சொல்லிப் போர்க்களம் அழைத்ததாயும் சொல்கின்றார் கம்பர் . இந்தப் படலத்தில் அதுவரை ராமன் போர்க்களம் வந்ததாய்ச் சொல்லவில்லை . பின்னர் ராமர் விபீஷணனிடம் தம்பியின் நிலை குறித்து ஆலோசித்துப் புலம்புவதாயும் , அது கண்டு விண்ணில் தேவர்களும் மனம் கலங்குவதாயும் , இவை எல்லாவற்றையும் பார்த்த கருடன் , நாகபாசத்தில் இருந்து லட்சுமணனை விடுவிக்கப் புறப்பட்டு வந்ததாயும் சொல்கின்றார் . பாடல் எண் : 2186, 87 “ இத்தன்மை எய்தும் அளவின் கண் நின்ற இமையோர்கள் அஞ்சி இது போய் எத்தன்மை எய்தி முடியும்கொல் என்று குலைகின்ற எல்லை இதன்வாய் அத்தன்மை கண்டு புடை நின்ற அண்ணல் கலுழன் தன் அன்பின் மிகையால் சித்தம் கலங்கும் இது தீர மெள்ள இருளூடு வந்து தெரிவான் . “ அசையாத சிந்தை அரவால் அனுங்க அழியாத உள்ளம் அழிவான் இசையா இலங்கை அரசோடும் அண்ணல் அருள் இன்மை கண்டு நயவான் விசையால் அனுங்க வடமேரு வையம் ஒளியால் விளங்க இமையாத் திசையானை கண்கள் முகிழா ஒடுங்க நிறை கால் வழங்கு சிறையான் .” நாகபாசத்தில் இருந்து லட்சுமணனை விடுவிக்கும் கருடனுக்கு , ராமன் விஷ்ணுவின் அவதாரம் எனத் தெரிந்து அதை ராமனிடமே சொல்லுவதாயும் கம்பர் தெரிவிக்கின்றார் . ராமனைக் கருடன் தேற்றுதல் என்னும் அத்தியாயத்தில் இவ்வாறு சொல்கின்றார் கம்பர் : பாடல் எண் 2200 “ சொல் ஒன்று உரைத்தி பொருள் ஆதி தூய மறையும் துறந்து திரிவாய் வில் ஒன்று எடுத்தி சரம் ஒன்று எடுத்தி மிளிர் சங்கம் அங்கை உடையாய் சொல் என்று உரைத்தி கொலையுண்டு நிற்றி கொடியாய் உன் மாயை அறியேன் அல் என்று நிற்றி பகல் ஆதி ஆர் இல் அதிரேக மாயை அறிவார் .” “ மறந்தாயும் ஒத்தி மறவாயும் ஒத்தி மயல் ஆரும் யானும் அறியேம் துறந்தாயும் ஒத்தி துறவாயும் ஒத்தி ஒரு தன்மை சொல்ல அரியாய் பிறந்தாயும் ஒத்தி பிறவாயும் ஒத்தி பிறவாமல் நல்கி பெரியோய் அறம்தான் நிறுத்தல் அரிது ஆக ஆர் இவ் அதிரேக மாயை அறிவார் .” அடுத்து வருவதே மருத்துமலைப் படலம் என்னும் சஞ்சீவி மலையைக் கொண்டு வருவது . கம்பர் காட்டும் காட்சிகள் - பிரம்மாத்திரப் படலம் ! பல அரக்கர்கள் இறந்தபின்னரும் , ராமன் போர்க்களத்திலேயே இருந்ததாய்க் கம்பர் கூறவில்லை . வானரப் படைகளும் , வானரத் தளபதிகளும் , லட்சுமணனுமே எதிர்கொண்டதாய்ச் சொல்லும் கம்பர் , இந்திரஜித்துடன் சண்டை போடும் லட்சுமணன் பிரம்மாஸ்திரத்தை ஏவி அவனை அழிக்க எண்ணியதாயும் , அதை ராமர் தடுத்ததாயும் சொல்கின்றார் . பின்னர் இந்திரஜித் மறைந்திருந்து லட்சுமணனைத் தாக்க வேள்விகள் பல புரிந்துவிட்டு , பிரம்மாஸ்திரத்தை ஏவும் எண்ணத்தோடு வந்ததாயும் அப்போது ராமன் அங்கே போர்க்களத்தில் இல்லை என்பதாயும் கூறுகின்றார் . பிரம்மாத்திரப் படலம் : பாடல் எண் 2543 “ வந்திலன் இராமன் வேறு ஓர் மலை உளான் உந்தை மாயத் தந்திரம் தெரிவான் போனான் உண்பன தாழ்க்கத் தாழா எந்தை ஈது இயன்றது என்றார் மகோதரன் யாண்டை என்னை அந்தரத்திடையன் என்றார் இராவணி அழகிற்று என்றான் ” என்று இந்திரஜித் போர்க்களத்தின் நிகழ்ச்சிகளைக் கேட்டு அறிந்த பின்னர் வேள்விகள் செய்து பிரம்மாஸ்திரத்தை ஏவத் தயார் ஆனதாயும் கூறுகின்றார் . பாடல் எண் 2544, 45 “ காலம் ஈது எனக் கருதிய இராவணன் காதல் ஆல மாம மரம் ஒன்றினை விரைவினில் அடைந்தான் மூல வேள்விக்கு வேண்டுவ கலப்பைகள் முறையால் கூலம் நீங்கிய இராக்கதப் பூசுரர் கொணர்ந்தார் .” “ அம்பினால் பெருஞ்சமிதைகள் அமைத்தனன் அனலில் தும்பை மாம் மலர் தூவினன் காரி என் சொரிந்தான் கொம்பு பல்லோடு கரிய வெள்லாட்டு இருங்குருதி வெம்பு வெந்தசை முறையின் இட்டு எண்ணெயால் வேட்டான் “ என்று வேள்விகளைச் செய்து முறையாகப் பிரமாஸ்திரத்தை இந்திரஜித் ஏவியதாய்க் குறிப்பிடுகின்றார் . மேலும் அரக்கர்களில் பலரும் மகோதரனும் மாயைகள் பல புரிந்து தேவேந்திரன் போலும் , தேவர்கள் போலும் , ரிஷி , முனிவர்கள் போலும் உருமாறி வானரர்களுடன் போரிட்டதாயும் சொல்கின்றார் கம்பர் . பாடல் எண் 2550 கோடு நான்குடைப் பால் நிறக் களிற்றின் மேல் கொண்டான் ஆடல் இந்திரன் அல்லவர் யாவரும் அமரர் சேடர் சிந்தனை முனிவர்கல் அமர் பொரச் சீறி ஊடு வந்து உற்றது என்கொலோ நிபம் என உலைந்தார் .” என்று வானரர்கள் வருந்தியதாயும் , அந்த வேளையில் இந்திரஜித் தன்னுடைய பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகம் செய்ததாயும் , லட்சுமணனும் , வானரர்களும் அதனால் செயலற்று விழுந்ததாயும் சொல்கின்றார் . அனுமனும் கூட பிரமாஸ்திரத்தில் கட்டுண்டதாகத் தெரிவிக்கின்றார் கம்பர் . அப்போது ராமன் வேறிடத்தில் இருந்ததாயும் , பின்னர் போருக்கு முறையான ஏற்பாடுகள் செய்துகொண்டு ஏதும் அறியாமலேயே புறப்பட்டு வந்ததாகவுமே கம்பர் சொல்கின்றார் . பிரமாஸ்திரத்தில் ராமனும் கட்டுண்டது பற்றிய செய்தி கம்பனில் இல்லை . பாடல் எண் :2570 செய்ய தாமரை நாள் மலர்க்கைத்தலம் சேப்ப துய்ய தெய்வ வான் படைக்கு எலாம் வரன் முறை துரக்கும் மெய்கொள் பூசனை விதிமுறை இயற்றி மேல் வீரன் மொய் கொள் போர்க்களத்து எய்துவாம் இனி என முயன்றான் .” போர்க்களம் வந்த ராமன் , வானர வீரர்கள் மட்டுமின்றி , சுக்ரீவன் , அனுமன் , லட்சுமணன் அனைவரையும் இழந்துவிட்டோமே எனக் கதறுவதாயும் சொல்கின்றார் . லட்சுமணனை நினைத்து ராமன் புலம்புவதாயும் கம்பர் கூறுகின்றார் . “ மாண்டாய் நீயோ யான் ஒரு போதும் உயிர் வாழேன் ஆண்டான் அல்லன் நானிலம் அந்தோ பரதன் தான் பூண்டார் எல்லாம் பொன்றுவர் துன்பப் பொறையாற்றுவர் வேண்டாவோ நான் நல் அறம் அஞ்சி மெலிவுற்றான் ” என்று சொல்லும் கம்பர் , துக்கம் தாங்காமல் லட்சுமணனை அணைத்த வண்ணமே ராமன் துயிலுற்றதாயும் சொல்கின்றார் . பாடல் எண் 2602 என்று என்று ஏங்கும் விம்மும் உயிர்க்கும் இடை அஃகி சென்று ஒன்று ஒன்றோடு இந்தியம் எல்லாம் சிதைவு எய்த பொன்றும் என்னும் நம்பியை ஆர்வத்தோடு புல்லி ஒன்றும் பேசான் தன்னை மறந்தான் துயில்வுற்றான் .” என்று ராமன் தன்னை மறந்து உறங்கியதாய்ச் சொல்லும் கம்பர் ராமனை தேவர்கள் உண்மையை உணர்த்தி எழுப்புவதாயும் கூறுகின்றார் . ஆனால் வால்மீகியில் இதெல்லாம் கிடையாது . இதற்கெல்லாம் பின்னரே , ராமனும் இறந்துவிட்டான் , என நினைத்த அரக்கர்கள் ராவணனிடம் சென்று நீ ஜெயித்தாய் , உன் பகைவன் ஒழிந்தான் எனக் கூறுவதாயும் , சீதையை ராவணன் போர்க்களம் காண அப்போது அழைத்து வந்ததாயும் சொல்கின்றார் கம்பர் . பாடல் எண் 2612 என் வந்தது நீர் என்று அரக்கர்க்கு இறைவன் இயம்ப எறி செருவில் நின் மைந்தந்தன் நெடுஞ் சரத்தால் துணைவர் எல்லாம் நிலம் சேர பின் வந்தவனும் முன் மடிந்த பிழையை நோக்கிப் பெருந்துயரால் முன் வந்தவனும் முடிந்தான் உன் பகை போய் முடிந்தது என மொழிந்தார் .” என்று சொல்கின்றார் . இதன் பின்னர் சீதை களம் கண்டு திரும்பிய பின்னரே மருத்து மலைப் படலம் .. 68 கதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் பகுதி 68 இதன் பின்னரே சீதை போர்க்களம் வந்து ராம , லட்சுமணர்களும் , வானரப் படைகளும் மயங்கி வீழ்ந்திருப்பது கண்டு துயரம் மிகக் கொண்டதாயும் திரிசடை என்னும் அரக்கி அவளைத் தேற்றியதாயும் கூறும் கம்பர் , இதன் பின்னரே , விபீஷணன் , ராமன் ஆணையின் பேரில் ராமனுக்கு உணவு கொண்டு வரச் சென்றவன் போர்க்களம் வந்து அனைவரும் கிடந்த நிலை கண்டு துயருற்றதாயும் , அனுமனைத் தேடிக் கண்டுபிடித்து மயக்கம் தெளிவித்ததாயும் கூறுகின்றார் . மருத்துமலைப் படலம் : பாடல் எண் 2655 “ கண்டு தன் கண்களூடு மழை எனக் கலுழி கால உண்டு உயிர் என்பது உன்னி உடற் கணை ஒன்று ஒன்று ஆக விண்ட நீர்ப்புண்ணின் நின்று மெல்லென விரைவின் வாங்கி கொண்டல் நீர் கொணர்ந்து கோல முகத்தினைக் குளிரச் செய்தான் .” இதன் பின்னர் ஜாம்பவானை அவர்கள் இருவரும் தேடிக் கண்டு பிடித்துச் சென்று அடைந்து யோசனை கேட்பதாயும் ஜாம்பவான் மருத்துமலைக்குச் சென்று மூலிகைகள் கொண்டு வரும்படியாக அனுமனை வேண்டுவதாயும் சொல்லுகின்றார் . பாடல் எண் 2667 “ எழுபது வெள்ளத்தோரும் இராமனும் இளைய கோவும் முழுதும் இவ்வுலகம் மூன்றும் நல் அற மூர்த்திதானும் வழு இலா மறையும் உன்னால் வாழ்ந்தன ஆகும் மைந்த பொழுது இறை தாழாது என் சொல் நெறி தரக் கடிது போதி .” என்று அனுமனை மருத்து மலைக்குச் செல்லும் வழியையும் கூறி அனுப்பவதாய்க் கம்பர் கூறுகின்றார் . மேலும் இங்கே மலையைப் பெயர்த்து எடுக்கும் அனுமனை மூலிகைகளைக் காக்கும் தேவதைகள் முதலில் தடுப்பதாயும் அனுமன் சொன்ன பதிலில் திருப்தியுற்று அனுமதி அளித்ததாயும் கம்பர் கூற , வால்மீகி அது பற்றி எதுவும் சொல்லவில்லை . பாடல் எண் 2705, 76 “ பாய்ந்தனன் பாய்தலோடும் அம்மலை பாதலத்துச் சாய்ந்தது காக்கும் தெய்வம் சலித்தன கடுத்து வந்து காய்ந்தது நீதான் யாவன் கருத்து என்கொல் சுழறுக என்ன ஆய்ந்தவன் உற்ற தன்மை அவற்றினுக்கு அறியச் சொன்னான் .” “ கேட்டு அவை ஐய வேண்டிற்று இயற்றிப் பின் கெடாமல் எம்பால் காட்டு என உரைத்து வாழ்த்திக் கரந்தன கமலக் கண்ணன் வாள் தலை நேமி தோன்றி மறைந்தது மண்ணின் நின்றும் தோட்டனன் அனுமன் மற்று அக்குன்றினை வயிரத் தோளால் .” இதன் பின்னரே ராவணன் தாம் ஜெயித்ததாய் எண்ணிக் களியாட்டங்களில் ஆழ்ந்ததும் , பின்னர் உண்மை நிலை தெரிந்து மாயாசீதையை இந்திரஜித் கொல்வதாய்க் காட்டுவதும் , நிகும்பலை யாகம் செய்ய மறைந்திருந்து செல்வதும் வருகின்றது . இப்போ இந்திரஜித் யாகம் செய்து கொண்டிருப்பான் , நாமும் அங்கே சென்று பார்ப்போமா ??? இனி வால்மீகி ! பெரும் துக்கத்தில் ஆழ்ந்து கிடந்த ராமரை விபீஷணன் தன் ஆறுதல் வார்த்தைகளால் தேற்றி இவை யாவும் இந்திரஜித்தின் மாயையே என விளக்குகின்றான் . ராமருக்கோ முழுதும் மனம் சமாதானம் ஆகவில்லை . அவருடைய அப்போதைய மனநிலையில் விபீஷணன் சொன்னதை முழுதும் அவரால் ஏற்கவும் முடியவில்லை . எனினும் விபீஷணனை மீண்டும் சொல்லும்படி கேட்டுவிட்டு , அவன் சொன்னதை ஒருவாறு ஏற்று , லட்சுமணனை இந்திரஜித்துடன் போர் புரிய ஆயத்தம் செய்து கொள்ளுமாறு ஆணை இடுகின்றார் . அவ்வாறே லட்சுமணனும் கிளம்புகின்றான் . வானரர்களில் முக்கியமானவர்கள் ஆன அனுமன் , ஜாம்பவான் , அங்கதன் ஆகியோரும் பெரும்படையோடும் , விபீஷணனோடும் லட்சுமணனைப் பின் தொடருகின்றனர் . முதலில் நிகும்பிலம் சென்று இந்திரஜித்தின் யாகத்தைத் தடுக்க வேண்டும் என்று அங்கே செல்கின்றனர் அனைவரும் . யாகத்தை முடித்துவிட்டால் பின்னர் இந்திரஜித்தை வெல்வது கடினம் . லட்சுமணன் உடனடியாகக் கடும் தாக்குதலை நிகழ்த்தினான் . அம்புகளினால் வானம் மூடப் பட்டது . சூரியனும் மறைந்து போனான் , அந்த அம்புக் கூடாரத்தினால் . அவ்வளவு அடர்த்தியாக அம்பு மழை பொழிந்தான் லட்சுமணன் . நிலைகுலைந்துபோனது அரக்கர் படை எதிர்பாராத தாக்குதலினால் . அரக்கர் படையினர் விளைவித்த ஓலக் குரலைக் கேட்டு நிதானமிழந்த இந்திரஜித் யாகம் செய்வதைப் பாதியிலேயே விட்டுவிட்டு வெளியே வந்தான் . அரக்கர் படைக்குப் பெரும் சேதத்தை விளைவித்துக் கொண்டிருந்த அனுமன் கண்களில் பட அனுமனைத் தாக்கப் போனான் . அப்போது விபீஷணன் லட்சுமணனிடம் இந்திரஜித்தைத் தாக்கும்படிச் சொல்கின்றான் . யாகம் செய்யும் இடத்தில் இருந்த ஆலமரம் ஒன்றினைச் சுட்டிக் காட்டிய விபீஷணன் , “ இந்திரஜித் இந்த ஆலமரத்தினடியில் தான் யாகத்தை முடிப்பான் . இந்த இடத்தில் தான் மறைந்திருந்து போருக்கும் கிளம்புவான் . ஆகவே அதற்கு முன்னாலேயே அவனை அழித்துவிடு .” என்று லட்சுமணனிடம் சொல்ல , லட்சுமணன் இந்திரஜித்தைப் போருக்கு அழைக்கின்றான் . இந்திரஜித் அவனை லட்சியம் செய்யாமல் , விபீஷணனைத் தூஷித்துப் பேசுகின்றான் . தன்னுடைய வயதுக்கும் , உறவுக்கும் மரியாதை கொடுக்காமல் இந்திரஜித் பேசியதைக் கேட்ட விபீஷணன் அவனைப் பழித்தும் , இழித்தும் பலவாறு பேசி தர்மத்தின் பால் செல்லும் தனக்கு எப்போதும் ஜெயமே கிட்டும் என்றும் , தர்மத்தை கடைப்பிடிக்காத ராவணனுக்கும் , அவன் குடும்பத்தினருக்கும் அழிவே கிட்டும் என்று சொல்லி இந்திரஜித் இன்று தப்ப முடியாது எனவும் சொல்லுகின்றான் . ஆத்திரம் கொண்டான் இந்திரஜித் . லட்சுமணனைப் பார்த்து , நீயும் , உன் அண்ணனும் என்னுடைய ஆயுதங்களால் மயங்கி விழுந்து கிடந்ததை மறந்தாயோ ? உன்னைக் கொன்று விடுவேன் , உன் சகோதரன் தன் இளைய சகோதரன் ஆன உன்னை இழந்து தவிக்கப் போகின்றான் .” என்று கூறிவிட்டுத் தன் அம்புகளால் மழை போலப் பொழிய ஆரம்பித்தான் . லட்சுமணன் நடத்திய பதில் தாக்குதல்களினால் விண்ணே மறையும் அளவுக்கு அம்புகள் சூழ்ந்து மீண்டும் வானம் இருண்டது . லட்சுமணன் இந்திரஜித்தின் தேரோட்டியையும் , தேர்க்குதிரைகளையும் வெட்டி வீழ்த்தினான் . அப்படியும் இந்திரஜித் வீரத்துடனும் , சாகசத்துடனும் தேரைத் தானே ஓட்டிக் கொண்டு வீரமாய்ப் போர் புரிந்தான் . வானரர்களும் , விபீஷணனும் , லட்சுமணனும் அவன் சாகசத்தைக் கண்டு வியந்தனர் . இருள் மிகச் சூழ்ந்ததால் இந்திரஜித் மறைந்திருந்து தாக்கும்போது அரக்கர்களைக் கொன்றுவிடுவோமே என எண்ணி , நகருக்குள் சென்று மற்றொரு தேரைக் கொண்டு வருகின்றான் . மீண்டும் கடுமையான போர் நடக்கின்றது லட்சுமணனுக்கும் , இந்திரஜித்துக்கும் . கண்டவர் வியக்கும் வண்ணம் இருவரும் போர் புரிந்தனர் . அப்போது லட்சுமணன் தன் வில்லிலே இந்திரனையே அதிபதியாய்க் கொண்ட ஒரு ஆயுதத்தை ஏற்றி , ராமனின் , சக்தியும் , கொடுத்த வாக்கைக் காக்கும் உறுதியும் , தர்மத்தின் பாதையில் செல்வதும் உண்மை , எனில் இந்த அம்பு இந்திரஜித்தைக் கொல்லும் , எனப் பிரார்த்தித்துக் கொண்டு ஏவ , அந்த அம்பும் அவ்வாறே இந்திரஜித்தின் தலையைத் துண்டிக்கின்றது . வானரர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றனர் , ராமர் பெரும் மகிழ்ச்சி கொண்டு லட்சுமணனைக் கட்டித் தழுவிப் பாராட்டுகின்றார் . இனி ராவணன் கதி அதோகதிதான் , ராவணன் வீழ்ந்துவிட்டான் என்றும் சொல்கின்றார் . அங்கே ராவணன் மாளிகையில் …….. 69 கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 69 இந்திரஜித் மாண்டான் . ராவணனின் அன்பு மகனும் , தேவேந்திரனையே வென்றவனும் , எவராலும் வெல்ல முடியாத யாகங்களைச் செய்து , தன்னை வெற்றி கொள்ள அனைவரையும் திணற அடித்தவனும் ஆன இந்திரஜித் மாண்டான் . உண்மையா ?? இது உண்மையா ?? ராவணனுக்குத் துக்கமும் , கோபமும் அடக்க முடியவில்லை . வானரர்களின் ஜெயகோஷம் கேட்கின்றது . அரக்கர்களின் அழுகுரல் கேட்கின்றது . ராவணனின் கோபமும் , துவேஷமும் , பழிவாங்கும் வெறியும் அதிகம் ஆனது . இயல்பிலேயே எவராலும் அடக்க முடியாத கோபம் கொண்டவன் ஆன ராவணனின் கோபம் பல்மடங்கு பல்கிப் பெருகியது . தவித்தான் , திணறினான் . துக்கத்தை அடக்க முடியவில்லை . பட்டத்து இளவரசனைப் பறி கொடுத்தேனே எனக் கதறினான் . கல்நெஞ்சுக் காரன் என்றாலும் புத்திரசோகம் ஆட்டிப் படைத்தது , அவனையும் . அவனுடைய கோபத்தையும் , துக்கத்தையும் கண்டு அரக்கர் கூட்டம் அவனருகே வரப் பயந்து ஓடோடி ஒளிந்தனர் . கண்ணீர் பெருகி ஓட அமர்ந்திருந்த அவனைக் கண்டு அவனுக்கு ஆறுதல் சொல்ல ஒரு உறவினர் கூட இல்லாத நிலைமை ஏற்பட்டதை நினைத்து அவன் துக்கம் அதிகரிக்க , கண்களிலிருந்து நீர் அருவி போல் பொங்கியது . “ எத்தனை தவங்கள் செய்து , எவ்வளவு கடுமையான விரதங்கள் செய்து , பிரம்மனிடமிருந்து வரங்களைப் பெற்றேன் . அத்தகைய என்னையும் ஒருவன் வெல்ல முடியுமோ ??? பிரம்மாவால் எனக்களிக்கப் பட்ட ஒளி வீசும் கவசத்தையும் பிளக்க ஒருவனால் முடியுமோ ?? ராமனுக்கும் , லட்சுமணனுக்கும் ஒரு முடிவு கட்டுகின்றேன் . அதற்கு முன்னால் , ஓ , சீதா , சீதா , உன்னால் அன்றோ நான் என் அருமை மகனை இழந்தேன் ? ஒரு மாய சீதையை நீ என நம்பவைத்தான் அல்லவா என் மகன் ? இரு , நான் இதோ வந்து உண்மையாகவே உன்னைக் கொன்று விடுகின்றேன் . பின்னர் அந்த ராமன் என்ன செய்வான் என்று பார்ப்போம் .” ராவணன் நினைத்த் உடனேயே அசோகவனம் நோக்கித் தன் வாளை எடுத்துக் கொண்டு சீதையை அழித்துவிடும் நோக்கத்தோடு கிளம்பினான் . பட்டமகிஷியான மண்டோதரியும் செய்வதறியாமல் அவனைத் தொடர்ந்தாள் . உடன் மற்ற அமைச்சர்கள் தொடர்ந்தனர் . சற்றே தயக்கத்துடன் அமைச்சர்கள் ராவணனைத் தடுக்க முயன்றனர் . எனினும் ராவணன் அவர்களை லட்சியம் செய்யவில்லை . சீதையோ ராவணன் வாளும் , கையுமாக வருவதைக் கண்டு தன்னைக் கொல்லத் தான் வருகின்றான் என நிச்சயம் செய்துகொண்டு , தான் அனுமன் அழைத்த போதே அனுமனுடன் சென்றிருக்காமல் போனோமே என நொந்து கொண்டு புலம்பினாள் . சீதை புலம்ப , ராவணனின் அமைச்சர்களில் ஒருவர் அவனை மிக மிக வினயத்துடன் , வேதங்களை முறைப்படி கற்றுத் தேர்ந்த ராவணன் ஒரு பெண்ணைக் கொல்வது என்பது தகாது என்றும் , நாளைக்கு போர்க்களம் புகுந்து , ராமனை வென்றபின்னர் முறைப்படி சீதையை அடையலாம் எனவும் கூறுகின்றான் . திடீரென அவன் வார்த்தைகளில் மனம் மாறிய இலங்கேசுவரனும் திரும்புகின்றான் . படைகள் வானரர்கள் மீது தாக்குதலைத் தொடருமாறு கட்டளை இடுகின்றான் ராவணன் . அரக்கர்களின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்திய வானரர்கள் ராமரின் துணையை நாட ராமரும் அம்பு மழை பொழிந்தார் . ராமர் எங்கே இருக்கின்றார் , எப்படி அம்புகள் வருகின்றன என்பதே தெரிய முடியாத அளவுக்கு நினைத்தும் பார்க்க முடியாத கடும் வேகத்தில் அம்புகள் தொடர்ந்தன . எங்கு நோக்கினும் ராமனே கண்ணுக்குத் தெரிந்தார் . இதோ யானைப் படையில் ராமர் , அதோ அரக்கர்களின் காலாட்படையை அழிக்கின்றார் , இல்லை , இல்லை , இங்கே குதிரைப் படையில் ராமர் , யார் சொன்னது ? அதோ இலங்கையின் கோட்டை வாயிலில் அல்லவா இருக்கின்றார் ? எங்கே பார்த்தாலும் ராமரின் அம்புகள் தான் கண்ணுக்குத் தெரிந்தன . அரக்கர்களும் , அரக்கிகளும் கலங்கினர் , துடித்தனர் , துவண்டனர் , பதறினர் , புலம்பினர் . இனி இலங்கைக்கு அழிவு காலம் தான் எனக் கதறினார்கள் . ராவணன் அழிந்தானே என்று புலம்பினார்கள் . அவர்களின் ஓலக் குரல் ராவணனின் காதுகளையும் எட்டியது . ஏற்கெனவே அருமைத் தம்பி , மகன்கள் , அனைத்துக்கும் மேல் உயிரினும் மேலான இந்திரஜித் ஆகியோரைப் பறி கொடுத்துப் பரிதவித்துக் கொண்டிருந்த ராவணன் , அருகில் இருந்த வானரர்களைப் பார்த்து , “ என்னுடைய படைகளை அணிவகுத்து நிற்கச் சொல்லுங்கள் . நான் யுத்தம் செய்யத் தயார் ஆகின்றேன் . வானரர்களையும் , அந்த ராமன் , லட்சுமணனையும் கொன்று நான் கழுகுகளுக்கும் , நரிகளுக்கும் உணவாக்குகின்றேன் . என்னுடைய ரதம் தயாராகட்டும் , என் அருமை வில் எங்கே ?? யுத்த களம் செல்ல என்னோடு வரச் சம்மதிக்கும் அனைவரும் தயாராகுங்கள் .” என்று ஆணை இடுகின்றான் . மீண்டும் எண்ணற்ற யானைகளும் , குதிரைகளும் , அரக்கர் படைகளும் , தேர்களும் தயார் ஆகின்றன . மகாபார்ச்வன் என்னும் அமைச்சனின் உதவியால் படைகள் அணிவகுக்கப் பட்டன . மிக மிக உன்னதமான தேரும் ராவணனுக்காகத் தயார் செய்யப் பட்டது . யுத்த பேரிகை , “ பம் , பம் ” என்று முழங்கியது . சங்குகள் ஆர்ப்பரித்தன . எங்கும் ராவணனுக்கு ஜெயகோஷம் எழும்பியது . அரக்கர் படை தன்னுடைய கடைசித் தாக்குதலுக்குத் தயார் ஆனது . ஆனால் சகுனங்களோ எனில் ??? பூமி நடுங்கியது , பூகம்பமே வந்துவிட்டதோ என அனைவரும் கலங்கினர் . மலைகள் இடம் பெயர்ந்தன . சூரியன் தன் ஒளியை இழந்து எங்கும் இருள் சூழ்ந்தது . நான்கு திக்குகளும் இருளில் மூழ்கின . ராவணனோ போருக்கு ஆயத்தம் ஆனான் . போர் ஆரம்பித்தது . வானரங்களும் , அரக்கர்களும் ஒருவருக்கொருவர் மீண்டும் மோதிக் கொண்டனர் . இம்முறை மிகக் கடுமையாகவும் , மிக வேகத்தோடும் கடும் போர் நடந்தது . பல வானரங்கள் வீழ்த்தப் பட்டது போல் அரக்கர் தரப்பிலும் கடும் சேதம் . அரக்கர் படைத் தலைவனான விரூபாக்ஷனும் , அமைச்சன் ஆன மகாபார்சவனும் முறையே சுக்ரீவனாலும் , அங்கதனாலும் கொல்லப் பட்டனர் . ராவணன் , ராமனையும் , லட்சுமணனையும் பழி தீர்க்கும் எண்ணத்தோடு சபதம் பூண்டான் . திக்கெங்கும் பேர் ஒலியைக் கிளப்பிய வண்ணம் ராவணனின் தேர் கிளம்பியது . ராமரை நோக்கி , அவர் இருக்கும் திசை நோக்கி விரைந்தது . அண்டசராசரமும் குலுங்கியது ராவணனின் தேரின் வேகத்தில் . ராமர் மேல் தேரின் மீது இருந்த வண்ணம் அம்பு மழை பொழிந்தான் ராவணன் . ராமர் பதிலுக்குத் தாக்க இருவரின் அம்புகளால் வானம் மூடிக் கொள்ள மீண்டும் இருள் சூழ்ந்தது . சம பலம் பொருந்திய இருவர் , வேத விற்பன்னர்கள் ஆன இருவர் , அஸ்திரப் பிரயோகம் தெரிந்த இருவர் , போரில் வல்லவர்கள் ஆன இருவர் , சிறப்பான ஆயுதங்களை வைத்திருந்த இருவர் சண்டை போடும்போது அதன் சிறப்பையோ , கடுமையையோ வர்ணிக்கவும் வேண்டுமா ? கடல் அலைகள் போல் மீண்டும் , மீண்டும் , ராவணனின் அம்புகள் தாக்குதலைத் தொடுக்க , ராமரின் அம்புகள் அவற்றைத் தடுக்க இதற்கு ஒரு முடிவே இல்லையா என்றே தோன்றியது அனைவருக்கும் . ராவணனின் அம்புகளால் ராமரை ஒன்றும் செய்யமுடியாமல் போனது போலவே , ராமரின் அம்புகளாலும் , ராவணனை ஒன்றும் செய்ய முடியவில்லை . கோபம் கொண்ட லட்சுமணன் அம்புகளால் , ராவணனின் கொடியைத் தாக்கிக் கீழே விழச் செய்து , ராவணனின் தேரோட்டியையும் தாக்கிக் கீழே வீழ்த்திக் கொன்றான் . தேரின் குதிரைகளை விபீஷணன் வீழ்த்தக் கோபம் கொண்ட இலங்கேசுவரன் , கீழே குதித்துச் சண்டை போடத் துவங்கினான் . விபீஷணன் மீது கோபத்தோடு அவன் எறிந்த வேலை லட்சுமணன் தடுத்து நிறுத்தினான் . இரு முறைகள் லட்சுமணன் , ராவணனின் வேலைத் தடுத்து நிறுத்த , கோபத்துடன் இராவணன் , லட்சுமணனைத் தாக்கப் போவதாய்ச் சத்தமிட்டுச் சொல்லிக் கொண்டே , அவன் மீது சக்தி வாய்ந்த வேலை எறிந்தான் . ராமர் தன் தம்பியை ராவணன் தாக்குவதைக் கண்டு , “ இந்த வேலின் சக்தி அழியட்டும் . லட்சுமணனுக்கு ஒன்றும் நேராது , இது பயனற்றதாய்ப் போகட்டும் ,” என்று கூற , வேல் லட்சுமணன் மார்பைத் தாக்கியது . லட்சுமணன் தரையில் வீழ்ந்தான் . ராமர் பதறினார் . 70 கதை, கதையாம் காரணமாம் -ராமாயணம் பகுதி 70 திரும்பத் திரும்ப அருமைத் தம்பி லட்சுமணன் தாக்கப் படுவதை நினைந்து ராமர் மனம் வேதனையில் ஆழ்ந்தது . லட்சுமணன் மார்பில் பதிந்த வேலை எடுக்க முனைந்தனர் . ஆனால் வேலோ மார்பைத் துளைத்துக் கொண்டு சென்று பூமியில் பதிந்து விட்டிருந்தது . ராமர் தன் கையினால் வேலைப் பிடுங்க முனைந்தார் . ஆனால் அவராலும் முடியவில்லை . அதற்குள் ராவணனோ ராமரைத் தன் அம்புகளால் துளைத்தெடுக்க ஆரம்பித்தான் . ராவணனின் தாக்குதலையும் தாங்கிக் கொண்டு ராமர் லட்சுமணனை எப்படியாவது காப்பாற்றத் துடித்தார் . பின்னர் அனுமனையும் , சுக்ரீவனையும் பார்த்து , லட்சுமணனைச் சற்று நேரம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு , ராவணனுக்குத் தான் பதில் தாக்குதல் கொடுக்கவேண்டும் என்று சொல்கின்றார் . நான் யார் , எப்படிப் பட்ட வீரன் என்பதை ராவணனுக்குக் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் , தன் வீரத்தைக் கண்டு தேவாதிதேவர்களும் , ரிஷி , முனிவர்களும் கண்டு பிரமிக்கப் போகின்றார்கள் என்றும் , தான் கற்ற போர்த்தொழில் வித்தை அனைத்தையும் இந்தப் போர்க்களத்தில் தான் காட்டப் போவதாயும் தெரிவிக்கின்றார் . ராவணனை நோக்கி முன்னேறுகின்றார் ராமர் . இருவருக்கும் கடும்போர் மூண்டது . ராமரின் அம்புகளின் வேகத்தைத் தாங்க முடியவில்லை ராவணனால் . அவனால் முடிந்தவரையில் முயன்று பார்த்துவிட்டுப் பின்னர் சற்று மறைந்திருந்துவிட்டு வரலாம் என போர்க்களத்தில் இருந்து ஓடி மறைந்தான் ராவணன் . இதனிடையில் லட்சுமணனுக்கு மயக்கம் தெளிந்துவிட்டதா எனப் பார்க்கச் சென்றார் ராமர் . ரத்தவெள்ளத்தில் மயங்கிக் கிடந்த இளவலைப் பார்த்த ராமரின் மனம் பதறியது . சுஷேணன் என்னும் வானரத்திடம் தன் கவலையைத் தெரிவிக்கின்றார் ராமர் . என் பலத்தையே நான் இழந்துவிட்டேனோ என்று புலம்புகின்றார் . லட்சுமணனுக்கு ஏதானும் நடந்துவிட்டால் எவ்வாறு உயிர் தரிப்பேன் என்று கண்ணில் கண்ணீர் பெருகச் சொல்கின்றார் . லட்சுமணனின் முனகலையும் , வேதனையையும் பார்க்கும்போது செய்வதறியாது தவிக்கின்றேனே , என்று கலக்கம் உற்ற ராமர் , தன் கண்களில் இருந்து பெருகும் கண்ணீர் தன் பார்வையை மறைப்பதையும் , தன் அங்கங்கள் பதறுவதையும் , உணர்ந்தவராய் , லட்சுமணன் இல்லாமல் இனித் தான் வெற்றி பெற்றும் என்ன பயன் என்று கேட்கின்றார் . “ என் மனைவியான சீதையைத் திரும்பப் பெறுவதற்காக இந்த யுத்தம் செய்யும் எனக்கு உதவியாக வந்த என் தம்பி இனி எனக்குத் திரும்பக் கிடைப்பானா ?” என்று கவலை மேலிடுகின்றது ராமருக்கு . மனைவியோ , மற்ற உறவின்முறைகளோ கிடைப்பது கடினம் அல்ல .. ஆனால் லட்சுமணன் போன்ற அறிவிலும் , அன்பிலும் , முன்யோசனையிலும் , துக்கத்திலும் , சந்தோஷத்திலும் பங்கெடுப்பவனும் , தன்னைப் பற்றி நினையாமல் அண்ணனின் செளகரியத்தையே நினைப்பவனும் ஆன தம்பி எங்கே கிடைப்பான் ? என வேதனைப் படுகின்றார் ராமர் .. என்ன பாவம் செய்தேனோ , இப்படிப்பட்ட தம்பி அடிபட்டுக் கீழே வீழ்ந்து கிடந்து வேதனையில் துடிப்பதைக் காண , தம்பி , என்னை மன்னித்துவிடு , என்று கதறுகின்றார் ராமர் . அவரைத் தேற்றிய சுஷேணன் , அனுமனைப் பார்த்து , நீ மீண்டும் இமயமலைச் சாரல் சென்று சஞ்சீவி மலையில் இருந்து விசால்யகரணி , சாவர்ண்ய கரணி , சஞ்சீவகரணி , ஸம்தானி , ஆகிய மூன்று முக்கிய மூலிகைகளைக் கொண்டுவா , லட்சுமணனை உயிர் பிழைக்க வைத்துவிடலாம் என்றும் சொல்கின்றான் சுஷேணன் , அனுமனிடம் . மீண்டும் சென்ற அனுமன் மீண்டும் மூலிகைகளை இனம் காணமுடியாமல் தவித்ததால் மீண்டும் சிகரத்தை மட்டும் கொண்டு போவதால் காலதாமதமும் , மீண்டும் , மீண்டும் வரவேண்டியும் இருக்கும் என நினைத்தவராய் , இம்முறை மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு செல்கின்றார் . மூலிகை மருந்துகள் உள்ள மலையே வந்ததும் , லட்சுமணனுக்கு அதன் சாறு பிழிந்து மூக்கின்வழியே செலுத்தப் பட்டதும் , லட்சுமணன் மூச்சுவிட ஆரம்பித்து மெல்ல , மெல்ல எழுந்தும் அமர்ந்தான் . தம்பியை உயிருடன் கண்ட மகிழ்ச்சியில் ராமரும் மனம் மகிழ்ந்தார் . மேலும் சொல்கின்றார் :” நீ இல்லாமல் நான் இந்த யுத்தத்தில் வெற்றி பெற்றிருந்தால் அதனால் என்ன பயன் ?? நல்லவேளையாக மரணத்தின் பிடியிலிருந்து நீ தப்பி வந்தாயே ?” என்று கூறவும் , லட்சுமணன் அவரை எடுத்த காரியத்தை முடிக்கவேண்டுகின்றான் . ராவணன் சூரியன் அஸ்தமனம் ஆவதற்கு முன்பாகவே மரணம் அடையவேண்டுமென்றும் , செய்த சபதத்தையும் , கொடுத்த வாக்கையும் ராமர் நிறைவேற்ற வேண்டுமென்றும் சொல்கின்றார் . ராமரும் உடன்பட்டு மீண்டும் ராவணனுடன் போருக்குத் தயார் ஆகின்றார் . ராவணனும் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றவனாய்ப் போர்க்களம் வந்து சேருகின்றான் . ராமருக்கும் , ராவணனுக்கும் மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கின்றது . கடுமையாக இரு வரும் போரிட்டனர் . ராவணனோ அதி அற்புதமான ரதத்தில் அமர்ந்திருக்க , ராமரோ தரையில் நின்று கொண்டே போரிட நேர்ந்தது . யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தேவர்களுக்கும் , முனிவர்களுக்கும் இந்த வித்தியாசம் புரிந்ததோடல்லாமல் , தரையில் நின்று கொண்டே போரிட்டாலும் ராமரின் வீரம் , ராவணனைச் செயலிழக்கச் செய்தது என்பதையும் கண்டு கொண்டார்கள் .. அப்போது அவர்களிடையே ராமருக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணமும் உண்டாகியது . உடனேயே தேவேந்திரனின் ரதத்தை அனுப்ப முடிவு செய்து , தேவேந்திரன் தன்னுடைய ரதசாரதியாகிய மாதலியை அழைத்து , ரதத்துடன் உடனே பூமிக்குச் சென்று ராமருக்கு உதவி செய்யுமாறு கூற அவனும் அவ்வாறே புறப்பட்டுச் சென்று ராமரை வணங்கி இந்திரனுடைய தேரையும் , ஆயுதங்களையும் காட்டி இதன் மீது அமர்ந்துகொண்டு ராவணனுடன் போரிட்டு அவனை வெல்லுமாறு கூறுகின்றான் . தேரை மும்முறை வலம் வந்து வணங்கிவிட்டு , ராமர் அதில் ஏறி அமர்ந்தார் . மீண்டும் சண்டை ஆரம்பம் ஆனது . ஆனால் இம்முறை ராவணனின் கையே ஓங்கி நின்றது . தன் அம்புகளாலும் , பாணங்களாலும் ராமரைத் திணற அடித்துக் கொண்டிருந்தான் ராவணன் . இலங்கேசுவரனின் இடைவிடாத தாக்குதல்கள் ராமரை நிலைகுலையச் செய்ததோடு அல்லாமல் , தன்னுடைய வில்லில் அம்புகளைப் பூட்டி , நாண் ஏற்றவும் முடியாமல் தவிக்கவும் நேரிட்டது அவருக்கு . கோபம் கொண்ட ராமர் விட்ட பெருமூச்சு , பெரும் புயற்காற்றைப் போல் வேகத்தோடு வந்தது . அவர் பார்வையை நான்கு புறமும் செலுத்தியபோது சக்தி வாய்ந்த மின்னல் ஒன்று விண்ணை வெட்டுவது போல் ஒளிவிட்டுப் பிரகாசித்தது . அந்தப் பார்வையில் பொசுங்கிவிடுவோமோ என சகல ஜீவராசிகளும் நடுங்கின . மூச்சின் வேகத்தில் விண்ணில் வட்டமிடும் மேகங்கள் சுழன்றன . கடலானது பொங்கிக் கரைக்கு வரத் தொடங்கியது . சூரியனின் ஒளி குன்றியது . ராவணன் மிக மிகச் சக்தி வாய்ந்த ஒரு ஆயுதத்தைக் கையில் எடுத்தான் . ராமரின் கோபத்தைக் கண்டு அஞ்சியவண்ணமே அவன் அந்த ஆயுதத்தைப் பிரயோகிக்க ஆரம்பித்தான் . போரில் இறந்த அனைத்து அரக்கர்கள் சார்பிலும் இந்த ஆயுதத்தைச் செலுத்தி ராமரையும் , லட்சுமணனையும் , வானரப் படைகளையும் அடியோடு அழிக்கும்படியான வல்லமை பொருந்தியது இந்த ஆயுதம் என்று கூவிக் கொண்டே அதைச் செலுத்தினான் இலங்கேசுவரன் . ராமர் அந்த ஆயுதத்தைத் தடுக்க முயன்றபோது முதலில் அவரால் முடியவில்லை . பின்னர் இந்திரனின் சிறப்பு வாய்ந்த சூலத்தினால் அந்த ஆயுதத்தைப் பொடிப் பொடியாக்கினார் . ராவணனின் குதிரைகளை வெட்டி வீழ்த்திவிட்டு அவன் மார்பில் பாணங்களைச் செலுத்த ஆரம்பித்தார் . ராவணன் உடலில் இருந்து செந்நிறக் குருதிப் பூக்கள் தோன்றின . எனினும் ராவணன் தீரத்துடனும் , மன உறுதியுடனும் போரிட்டான் . அதைக் கண்ட ராமர் அவனைப் பார்த்துக் கோபத்துடன் சொல்கின்றார் :” ஏ , இலங்கேசுவரா ! அபலையான சீதையை , அவள் சம்மதம் இல்லாமலும் , தன்னந்தனியாக இருக்கும் வேளையிலும் பார்த்து நீ அபகரித்துக் கொண்டு வந்தாயே ? என் பலத்தை நீ அறியவில்லை , அறியாமல் அபகரணம் செய்துவந்த நீயும் ஒரு வீரனா ? மாற்றான் மனைவியைக் கோழைத்தனமாய் ஒருவரும் இல்லாத சமயம் கொண்டு வந்து வைத்துள்ள நீயும் ஒரு வீரனா ? உனக்கு வெட்கமாய் இல்லையா ? மனசாட்சி உள்ளவர்களுக்கே ஏற்படும் தயக்கமும் , வெட்கமும் உனக்கு அப்போது ஏற்படவில்லையா ? நீ இந்தக் காரியம் செய்ததினால் உன்னை , வீராதி வீரன் , என்றும் சூராதி சூரன் என்றும் நினைத்துக் கொண்டுள்ளாய் அல்லவா ? அது தவறு என உனக்குத் தெரியாமல் போனதும் , உனக்கு வெட்கமும் , அவமானமும் ஏற்படாததும் விந்தை தான் . என் முன்னே நீ அப்படி ஒரு காரியத்தைச் செய்திருக்க முடியுமா ? அது முடியாதென்பதால் தானே , என்னை அப்புறப்படுத்திவிட்டு , நான் இல்லாதபோது என் மனைவியை அபகரித்து வந்திருக்கின்றாய் ? உன்னை நான் இன்றே கொல்லுவேன் . உன் தலையை அறுத்துத் தள்ளப் போகின்றேன் . என் அம்பினால் உன் மார்பு பிளக்கப் பட்டு குருதி பெருகும் . அந்தக் குருதியைக் கழுகுகளும் , பறவைகளும் வந்து பருகட்டும் . “ என்று ராமர் கூறிவிட்டு ராவணன் மீது மீண்டும் அம்பு மழை பொழியத் தொடங்கினார் . கூடவே வானரர்களும் சேர்ந்து ராவணனைத் தாக்கத் தொடங்கினார்கள் . தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ராவணன் பிரமித்து நிற்கவே , செய்வதறியாது திகைத்த அவனைக் காக்க வேண்டி , ராவணனின் தேரோட்டி , தேரை யுத்த களத்தில் இருந்து திருப்பி வேறுபக்கம் ஓட்டிச் சென்றான் . ராவணனுக்குக் கோபம் பெருகியது . மிக்க கோபத்துடன் அவன் தேரோட்டியைக் கடிந்து கொள்ளத் தொடங்கினான் . 71 கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 71 “என்னுடைய விருப்பத்தைத் தெரிந்து கொள்ளாமல், நீ எப்படி தேரைத் திருப்பிக் கொண்டு வரலாம். என்னைக் கோழை என நினைத்தாயோ? அற்பமதி படைத்தவன் என நினைத்தாயோ??? உன் இஷ்டப்படி தேரைத் திருப்பிவிட்டாயே? தீயவனே! எதிரியின் கண் எதிரேயே என்னை இவ்வாறு இழிவு செய்த நீ எனக்கு எப்படி நண்பனும், ஊழியனும் ஆவாய்?? எப்படி இவ்வாறு செய்யத் துணிந்தாய்?? ஆஹா, என்னுடைய போர்த்திறனையும், இத்தனை காலமாய்ப் பல தவங்களும், விரதங்களும், வழிபாடுகளும், வேள்விகளும் நடத்தை நான் பெற்ற அனைத்துக் கெளரவங்களையும் இந்த ஒரு நொடியில் நாசமாக்கி விட்டாயே? முதலில் தேரைத் திருப்புவாயாக! என்னிடமிருந்து நீ பெற்ற நன்மைகளை மறந்து விட்டாயா?? “ என்று கடுமையாகக் கடிந்து கொள்கின்றான். தேரோட்டி மிக்க வணக்கத்துடன் , “ ஐயா , தங்களிடமிருந்து பெற்ற நன்மைகளை நான் மறந்து செய்ந்நன்றி கொன்றவன் ஆகிவிடவில்லை . எதிரிகள் யாரும் என்னை அவர்கள் பக்கம் இழுத்தும் விடவில்லை . தங்கள் நன்மைக்காக வேண்டியே நான் தேரைத் திருப்பவேண்டியதாயிற்று . மேலும் தாங்களும் , கடும் யுத்தத்தின் காரணமாயும் , மன உளைச்சல் காரணமாயும் களைத்துவிட்டீர்கள் . தங்கள் தேரின் இந்தக் குதிரைகளும் களைத்துவிட்டன . உங்கள் வீரம் நான் அறியாத ஒன்றா ?? நான் தேரை மட்டும் ஓட்டினால் சரியாகவும் இருக்காது ஐயா , தங்கள் பலம் , வீரம் மட்டுமின்றி உங்கள் உடல் சோர்வு , மனச்சோர்வு அனைத்தையுமே நான் கவனித்தாகவேண்டும் . உங்கள் உடல்நிலையோ , மனநிலையோ மேலும் யுத்தம் செய்யக் கூடிய தகுதியில் இருக்கின்றதா எனவும் நான் கவனிக்கவேண்டும் . ஐயா , தேரைச் செலுத்தும் பூமியைக் கூட நான் கவனித்து , எங்கே வேகம் வேண்டுமோ , அங்கே வேகமாயும் , எங்கே மெதுவாய்ச் செல்லவேண்டுமோ , அங்கே மெதுவாயும் , எந்த இடத்தில் எதிரிப் படையை ஊடுருவ முடியுமோ அங்கே ஊடுருவதல் செய்தல் , எப்போது பின்வாங்க வேண்டுமோ அப்போது பின் வாங்குதல் என முறையாகச் செய்யவேண்டும் ஐயா ! இதில் தங்கள் நலன் ஒன்றே என் கருத்து .” என்று மிகவும் தயவாகச் சொல்கின்றான் . ராவணன் மனம் ஒருவாறு மகிழ்ந்தது . தேரோட்டிக்கு அப்போது தன் கையில் இருந்த ஆபரணங்களில் ஒன்றைப் பரிசாக அளித்துவிட்டுத் தேரைத் திரும்ப யுத்த களத்திற்கு ஓட்டச் சொன்னான் . தேரும் திரும்பியது . இதனிடையில் ராமரும் களைத்துப் போயிருந்தமையால் , அவரும் சற்று இளைப்பாறுவதோடு அல்லாமல் , ராவணனை வெல்வது எப்படி என்ற சிந்தனையும் செய்ய ஆரம்பித்தார் . அப்போது இந்த யுத்தத்தைக் கவனித்துக் கொண்டிருந்த தேவர்கள் , ரிஷிகள் , முனிவர்களில் இருந்த சிறப்பும் , தனிப் பெருமையும் வாய்ந்த அகத்தியர் ராமன் இருக்கும் இடம் நோக்கி வந்தார் . ராமரைப் பார்த்துப் பேசத் தொடங்கினார் .” ராமா , என்றும் அழியாத ஒரு விஷயத்தைப் பற்றி நான் இப்போது உன்னிடம் கூறுகின்றேன் . இந்தப் பூவுலகில் நிலையானவனும் , அனைவரும் ஏற்கக் கூடியவனும் , தினம் தவறாமல் தன் ஒளியால் அனைவரையும் வாழ்விப்பவனும் , கண்ணால் காணக் கூடிய ஒரு கடவுளும் , அழிவற்றவனும் , அனைவராலும் தினம் தினம் வணங்கப் படுபவனும் அந்த சூரியன் ஒருவனே ஆவான் ! அவனே பிரம்மா , அவனே விஷ்ணு , அவனே ருத்திரன் , அவனே கார்த்திகேயன் , அவனே ப்ரஜாபதி , அவனே இந்திரன் , அவனே குபேரன் ! காலனும் அவனே ! சோமனும் அவனே ! வருணனும் அவனே ! வசுக்களும் அவனே , மருத்துக்களும் அவனே , பித்ருக்களும் அவனே ! வாயுவும் அவனே , அக்னியும் அவனே , மனுவும் அவனே , பருவங்களும் அவனே , ஒளியும் அவனே , இருளும் அவனே , இந்த உலகின் ஒவ்வொரு மூச்சுக்காற்றிலும் அவனே நிறைந்துள்ளான் . அப்படிப் பட்ட சூரியனைக் குறித்த இந்தத் துதியை உனக்கு நான் இப்போது சொல்கின்றேன் . இந்தத் துதியை நீ மும்முறை தோத்தரித்து , அந்தச் சூரியனை வேண்டிக் கொண்டு , பிரார்த்தித்துக் கொண்டு ஒருமித்த மனத்தோடு சூரியனை வழிபட்டு , நீ ராவணனை வெல்வாய் ! சக்தி வாய்ந்த இந்தத் துதி சாஸ்வதம் ஆனது , என்றும் நிலையானது , புனிதமானது . எல்லாப் பாவங்களையும் ஒழிக்கவல்லது . எதிரிகளை அழிக்கவல்லது .” என்று சொல்லிவிட்டு “ ஆதித்ய ஹ்ருதயம் “ என்னும் ஸ்லோகத்தைச் சொல்லி விட்டு , அவ்விடத்தை விட்டு அகன்றார் . அகஸ்தியரின் உபதேசத்தைக் கேட்ட ராமரும் , அவ்வாறே மனக் குழப்பம் நீங்கி , ஆதித்திய ஹ்ருதயம் என்னும் ஸ்லோகத்தை மும்முறை , ஒரு மனதுடன் சூரியனை நோக்கித் துதிக்கவும் , அவருடைய குழப்பமும் , கலக்கமும் நீங்கித் தெளிவு பெற்றார் . மீண்டும் யுத்தம் செய்யத் தயாராக வந்த ராவணனைப் பார்த்து அவனை வென்றே தீருவது என்ற மன உறுதியோடு ராமரும் மீண்டும் ராவணனோடு போருக்குத் தயார் ஆனார் . அவருடைய மன உறுதியையும் , தன்னை முழுமனத்தோடு துதித்ததையும் கண்ட சூரியனும் அவருக்கு “ ஜெயம் உண்டாகட்டும் ” என்று ஆசி வழங்கினான் . சகுனங்களும் ராமருக்கு சாதகமாகவே சுபமாக ஏற்பட்டன . சகுன சாஸ்திரத்தில் வல்லவர்கள் ஆன அனைவரும் மட்டுமின்றி , ராமரும் சகுன சாஸ்திரத்தை அறிந்தவர் ஆதலால் அவரும் மனம் மகிழ்ந்தார் . ராவணனுக்கு முடிவு நெருங்கிவிட்டது என்பதை ராவணனும் அறிந்திருந்தான் . எனினும் தீரத்துடன் போரிட முன்வந்தான் . கடும்போர் மூண்டது . அங்கே ராவணனின் தேரில் ரத்த மழை பொழிந்தது . பூமி நடுங்கியது . பறவைகள் இறந்து வீழ்ந்தன ராவணனின் தேரில் . கழுகுகள் வட்டமிட்டன . அனைத்தையும் எதிர்கொண்டு ராவணன் ராமரோடு போரிட்டான் . அசுர குலத்தைச் சேர்ந்த ராவணனுக்கும் , மனிதன் ஆன ராமனுக்கும் நடந்த பெரும்போரை வர்ணிக்க இயலாது . இரு தரப்பு வீரர்களும் தங்கள் சண்டையை நிறுத்திவிட்டு , ஓவியத்தில் எழுதிய சித்திரங்களைப் போல் அசையாமல் நின்று அவர்கள் இருவரின் சண்டையைப் பார்க்க ஆரம்பித்தனர் . விண்ணிலோ எனில் , தேவர்களும் , யக்ஷர்களும் , கந்தர்வர்களும் , கின்னரர்களும் , ரிஷி , முனிவர்களும் ஏற்கெனவே கூடி இருந்தனர் . இந்திரனின் தேரை வீழ்த்த ராவணன் விடுத்த அஸ்திரம் பயனற்றுப் போய்விட்டது . கூடியவரையில் அம்புகள் குறிதவறாமல் போய் ராமரைக் காயப் படுத்தினாலும் பெரும் சேதம் ஒன்றும் நேரிடவில்லை . ராவணனால் ராமருக்கு சேதத்தை விளைவிக்க முடியவில்லை . தேரோட்டிகள் முழு மனதோடு ஒத்துழைக்க இருவருமே தீரத்துடனும் , வேகத்துடனும் போரிட்டனர் . போர் இன்னும் ஒரு முடிவுக்க வரவில்லையே என ரிஷி , முனிவர்கள் கவலையில் ஆழ்ந்தனர் . ராவணன் கொல்லப் படவேண்டும் , ராமர் ஜெயிக்கவேண்டும் என்ற பிரார்த்தனையில் மூழ்கினர் அனைவரும் . ராமரும் தன் அம்பினால் ராவணனின் தலையை அறுத்து வீழ்த்துகின்றார் . எனினும் , என்ன ஆச்சரியம் ?? அவன் தலை திரும்பத் திரும்ப முளைக்கின்றதே ? ராமர் சிந்தனையில் ஆழ்ந்தார் . கரன் , தூஷணன் , மாரீசன் , விராதன் , வாலி போன்றோரை வென்ற நம் அஸ்திரங்கள் ராவணனிடம் பயன் இல்லாமல் போவதேன் ? எனினும் விடாமல் யுத்தம் செய்தார் ராமர் . இரவும் , வந்தது , யுத்தமும் தொடர்ந்தது . மீண்டும் பகல் வந்தது , மீண்டும் யுத்தம் நிற்காமல் தொடர்ந்தது . அப்போது இந்திரனின் தேரோட்டியான மாதலி , ராமரிடம் , “ இன்னும் எத்தனை நாட்கள் இவ்வாறு சமபலத்தைக் காட்டிக் கொண்டிருப்பீர்கள் ? ராவணன் அழியும் நேரம் வந்துவிட்டது . பிரம்மா இதற்கெனத் தனியாகத் தங்களுக்கு அருளி இருக்கும் அஸ்திரத்தை ஏவ வேண்டிய நேரம் வந்துவிட்டது .” எனக் கூறினான் . ராமரும் பிரம்மாவை வேண்டிக் கொண்டு , அகத்தியரால் தனக்கு அளிக்கப் பட்ட அந்த விசேஷமான அஸ்திரத்தை எடுக்கின்றார் . அந்த அஸ்திரத்துக்கு உரிய மந்திரங்களைச் சொல்லியவண்ணம் , அஸ்திரம் குறி தவறாமல் ராவணனை வீழ்த்தவேண்டும் என வேண்டிக் கொண்டு , ஊழித் தீபோலவும் , உலகையே அழிக்கக் கூடிய வல்லமை கொண்டதும் , அனைத்து ஜீவராசிகளையும் ஒழித்துவிடுமோ என்ற அச்சத்தைத் தரக்கூடியதும் ஆன அந்த அஸ்திரத்தை வில்லில் பூட்டி , நாண் ஏற்றினார் . அஸ்திரம் பாய்ந்தது . ராவணனின் இதயத்தைப் பிளந்து அவனுடைய உயிரை எடுத்துவிட்டு , மீண்டும் அந்த அஸ்திரம் ராமரின் அம்பறாத் தூணிக்கே வந்து சேர்ந்தது . ராவணன் இறந்தான் . அரக்கர் படை கலக்கத்துடன் ஓடிச் சிதறியது . வானரங்கள் ஜெயகோஷம் போட்டனர் . வாத்தியங்கள் மங்கள இசை இசைத்தன . விண்ணில் இருந்து வானவர்கள் பூமாரி பொழிந்தனர் . ரிஷி , முனிவர்கள் ராமரை வாழ்த்திப் பாடினர் . சூரியனின் ஒளி பிரகாசித்தது . விபீஷணன் விம்மி , விம்மி அழுதான் . 72 கதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் - பகுதி 72 ராவணன் கொல்லப் பட்டான் . அரக்கர்களின் தலையாய தலைவன் , இந்திரனை வென்றவன் , பிரம்மாவின் வரங்களைப் பெற்றவன் , தனக்கு நிகர் தானே தான் என்று பெருமையுடன் இருந்தவன் கொல்லப் பட்டான் . பலவிதமான யாகங்களையும் , வழிபாடுகளையும் செய்தவன் , சிவபக்திச் செல்வன் , சாமகான வித்தகன் , கொல்லப் பட்டான் . எதனால் ?? பிறன் மனை விழைந்ததினால் . இத்துணைச் சிறப்புக்களையும் பெற்றவன் பிறன் மனை விழைந்த ஒரே காரணத்தினால் ஒரு மனிதனால் கொல்லப் பட்டான் . அரக்கர் குலமே திகைத்து நின்றது . விபீஷணன் , அவ்வளவு நேரம் , தன்னுடைய உடன்பிறந்த மூத்த சகோதரனைக் கொல்ல வேண்டி யோசனைகள் சொல்லிக் கொண்டிருந்தவன் , இப்போது கதறி அழ ஆரம்பித்தான் . “ தானாடாவிட்டாலும் , தன் சதை ஆடும் ” என்பது உறுதியாகிவிட்டதோ ??? பலவாறு ராவணனின் பெருமையைச் சொல்லிச் சொல்லிக் கதறுகின்றான் விபீஷணன் . சுத்த வீரனும் , பெருமை வாய்ந்தவனும் , தர்ம வழியிலும் , அற வழியிலும் அரசை நடத்தியவன் என்று வேறு கூறுகின்றான் . துக்கம் அளவுக்கு மீறியதாலும் , தன்னுடைய அண்ணன் என்ற பாசத்தாலும் விபீஷணன் நிலை தடுமாறித் தன்னை மறந்தானோ ?? ராமர் விபீஷணனைத் தேற்றுகின்றார் . போர்க்களத்தில் கடும் சண்டை போட்டு வீர மரணம் அடைந்த க்ஷத்திரியர்களுக்காக அழுவது சாத்திரத்துக்கும் , தர்மத்துக்கும் விரோதமானது என்கின்றார் . தன் வீரத்தைக் காட்டிவிட்டே ராவணன் இறந்திருக்கின்றான் என்று கூறும் ராமர் அவன் சக்தியற்றுப் போய் வீரமிழந்து போய் இறக்கவில்லை என்றும் எடுத்துச் சொல்கின்றார் . மேலும் தேவேந்திரனையும் , தேவர்களையும் , ராவணன் அச்சுறுத்தி வந்ததையும் எடுத்துச் சொல்லி , ராவணன் இறந்தது உலக நன்மைக்காகவே , என்றும் இதற்காக வருந்த வேண்டாம் , எனவும் மேலே ஆகவேண்டியதைப் பார்க்கும்படியாகவும் விபீஷணனிடம் சொல்ல , அவனும் ராவணன் ஒரு அரசனுக்கு உரிய மரியாதைகளுடன் ஈமச்சடங்குகளைப் பெறவேண்டும் என்றும் , தானே அவனுக்கு ஈமச் சடங்குகளைச் செய்வதாயும் கூற , ராமரும் அவ்வாறே ஆகட்டும் , இறந்தவர்களிடம் பகைமை பாராட்டுவது அழகல்ல , ஆகையால் ராவணன் இனி எனக்கும் உரியவனே . அவனுக்கு உரிய மரியாதையுடன் அவன் ஈமச் சடங்குகள் நடக்கும் என உறுதி அளிக்கின்றார் . இந்நிலையில் ராவணனின் மனைவிமார்களும் பட்ட மகிஷியான மண்டோதரியும் வந்து தங்கள் துக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு அழுகின்றார்கள் . மண்டோதரி ராவணன் தன் பேச்சைக் கேட்டிருந்தால் , சீதையை விடுவித்திருந்தால் , ராமருடன் நட்புப் பாராட்டி இருந்தால் இக்கதி நேரிட்டிருக்காதே எனப் புலம்ப அனைவரும் அவளைத் தேற்றுகின்றனர் . ராவணனின் இறுதிச் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டு , அது நடக்க ஆரம்பிக்கும்போது திடீரென விபீஷணன் இறுதிச் சடங்குகள் செய்ய முரண்பட , ராமர் மீண்டும் அவனைத் தேற்றி , அவனுக்கு அறிவுரைகள் சொல்லி , தான் ராவணன் மேல் கொண்ட கோபம் தனக்கு இப்போது இல்லை என்றும் , இறந்த ஒருவன் மேல் விரோதம் பாராட்டக் கூடாது எனவும் பலவாறு எடுத்துச் சொல்லி , விபீஷணனை ஈமச் சடங்குகள் செய்ய வைக்கின்றார் . இந்திரனின் தேரோட்டியைத் திரும்ப அனுப்பிய ராமர் , பின்னர் லட்சுமணனை அழைத்து விபீஷணனுக்கு உடனடியாகப் பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடுகள் செய்யுமாறும் , இன்னும் பதினான்கு வருஷங்கள் முடிவடையாத காரணத்தால் , தாம் நகருக்குள் நுழைய முடியாது எனவும் , லட்சுமணனே அனைத்தையும் பார்த்துச் செய்யுமாறும் கூறுகின்றார் ராமர் . அவ்வாறே லட்சுமணன் அனைத்து ஏற்பாடுகளையும் திறம்படச் செய்து விபீஷணனுக்கு முறையாகப் பட்டாபிஷேகமும் நடக்கின்றது . விபீஷணன் , ராமரை வணங்கி ஆசிபெறச் சென்றான் . அப்போது ராமர் அனுமனைப் பார்த்து , இப்போது இலங்கை அரசன் ஆகிவிட்ட இந்த விபீஷணன் அனுமதி பெற்று நீ சீதையைக் கண்டு அவள் நலனை விசாரித்து வருவாய் ! அவள் எண்ணம் என்ன என்றும் தெரிந்து கொண்டு வருவாய் ! இங்கே அனைவரும் நலம் எனவும் தெரிவிப்பாய் ! அவள் என்ன சொல்கின்றாள் எனத் தெரிந்து கொண்டு வருவாய் .” என்று சொல்லி அனுப்புகின்றார் . இரண்டாம் முறையாக ராமரால் தூதுவனாய் அனுப்பப் பட்ட அனுமன் , நடக்கப் போவது ஒன்றையும் அறியாமல் , மகிழ்ச்சியுடனேயே சென்றார் . சீதையிடம் அனைத்து விபரங்களையும் தெரிவித்த அனுமன் , ராவணன் இறந்ததையும் , விபீஷணன் இப்போது இலங்கை அரசன் எனவும் சொல்லிவிட்டு , ராமர் அவளிடம் , இனி அஞ்சுவதற்கு ஏதுமில்லை எனவும் , சொந்த இடத்திலேயே வசிப்பதுபோல் அவள் நிம்மதி கொள்ளலாம் எனச் சொன்னதாயும் , விபீஷணன் சீதையைச் சந்தித்துத் தன் மரியாதைகளைத் தெரிவிக்க ஆசைப் படுவதாயும் சொல்கின்றார் . பேச நா எழாமல் தவித்தாள் சீதை . அனுமன் என்ன விஷயம் , இத்தனை மகிழ்ச்சிச் செய்தியைச் சொல்லியும் என்னிடம் பேசாமல் மெளனமாய் இருப்பது எதனால் என்று கேட்கவும் , தன் கணவனின் வீரத்தையும் , வெற்றியையும் கேட்டதும் தனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை என்று சொல்லும் சீதை , இதைவிடப் பெரிய பரிசு ஏதும் இருக்க முடியாது எனவும் சொல்கின்றாள் . சீதைக்குக் காவல் இருந்த அரக்கிகளைத் தான் கொன்றுவிடவா என அனுமன் கேட்டதற்கு அவ்வாறு செய்யவேண்டாம் , ராவணன் உத்திரவின்படியே அவர்கள் அவ்விதம் நடந்தனர் , தவறு அவர்கள் மேல் இல்லை என்று சொன்ன சீதை , தான் ராமரை உடனே பார்க்கவேண்டும் எனச் சொல்லி அனுப்புகின்றாள் . உடனே ராமரிடம் வந்து சீதை சொன்னதைத் தெரிவிக்கின்றார் அனுமன் . ராமரின் முகம் இருண்டது . கண்களில் நீர் பெருகியது . செய்வதறியாது திகைத்தார் ராமர் . ஒருவாறு தன்னைச் சமாளித்துக் கொண்டு ராமர் விபீஷணனிடம் விதேக தேசத்து ராஜகுமாரியான சீதையை நன்னீராட்டி , சகலவித அலங்காரங்களையும் செய்வித்து , ஆபரணங்களைப் பூட்டி இவ்விடம் அழைத்துவரச்சொல்லவும் , தாமதம் வேண்டாம் என்று சொல்கின்றார் . விபீஷணனும் மகிழ்வோடு , சீதையிடம் சென்று ராமரின் விருப்பத்தைச் சொல்ல , சீதை தான் இப்போது இருக்கும் கோலத்திலேயே சென்று ராமரைக் காண விரும்புவதாய்ச் சொல்ல , விபீஷணனோ , ராமர் இவ்வாறு குறிப்பிட்டுச் சொன்னார் என்றால் , அதன்படியே நாம் செய்வதே நல்லது . என்று கூற , கணவன் இவ்வாறு சொல்வதின் காரணம் ஏதோ இருக்கின்றது என ஊகம் செய்தவளாய்ச் சீதையும் சம்மதித்து , தன் நீராட்டலை முடித்துக் கொண்டு சகலவித அலங்காரங்களோடும் , ஆபரணங்களோடும் , அலங்கார பூஷிதையாக ராமர் இருக்குமிடம் நோக்கி வந்தாள் . ராமர் குனிந்த தலை நிமிரவில்லை . வானரப் படைகள் சீதையைக் காணக் கூட்டம் கூடினர் . நெரிசல் அதிகம் ஆனது . ஒருவரோடொருவர் முண்டி அடித்துக் கொண்டு சீதையைக் காண விரைய , அங்கே பெருங்குழப்பம் ஏற்பட்டது . விபீஷணனும் , மற்ற அரக்கர்களும் , வானரப் படைத்தலைவர்களும் கூட்டத்தை ஒழுங்கு செய்ய முனைந்தனர் . ராமர் கடுங்கோபத்துடன் விபீஷணனைப் பார்த்து , “ ஏன் இப்படி வானரப் படைகளைத் துன்புறுத்துகின்றாய் ? இந்தக் கொடுமையை நிறுத்து . சீதைக்கு உயர்ந்த மரியாதைகளோ , உன்னுடைய காவலோ பாதுகாப்பு அல்ல . அவளுடைய நன்னடத்தை ஒன்றே பாதுகாப்பு . ஆகவே அவளை பொதுமக்கள் முன்னிலையில் வரச் செய்வதில் தவறொன்றுமில்லை . கால்நடையாகப் பல்லக்கை விட்டு இறங்கி வரச் சொல் . வானரங்கள் விதேக தேசத்து ராஜகுமாரியைப் பார்க்கட்டும் , அதனால் பெரும் தவறு நேராது .” என்று சொல்கின்றார் . ராமரின் கோபத்தைப் புரிந்துகொண்ட விபீஷணன் அவ்வாறே செய்ய , லட்சுமணன் , அனுமன் சுக்ரீவன் போன்றோர் மனம் மிக வருந்தினர் . சீதையின் மீது ராமருக்குள்ள அன்பையும் , அவள் இல்லாமல் ராமர் துடித்த துடிப்பையும் கண்ணால் கண்டு வருந்திக் கொண்டிருந்த அவர்களுக்கு , ராமர் சீதையின்மேல் ஏதோ கோபத்துடன் இருக்கின்றார் எனப் புரிந்து கொண்டார்கள் . கோபத்தின் காரணம் தெரியவில்லை . சீதையோ ஏதும் அறியாதவளாகவே , மிக்க மகிழ்வோடு பல்லக்கை விட்டு இறங்கி , ராமரின் எதிரே வந்து நின்று , தன் கணவனைக் கண்ணார , மனமார , தன் ஐம்புலன்களும் மகிழ்வுறும்படியான மகிழ்வோடு பார்த்தாள் . இது என்ன ?? ராமரின் முகம் ஏன் சுருங்குகின்றது ? ஏன் பொலிவில்லாமல் காட்சி அளிக்கின்றது ? எல்லாம் நம்மை ஒருமுறை பார்த்தாரானால் சரியாகிவிடும் , சீதை மீண்டும் ராமரை நோக்க , ராமரின் வாயிலிருந்து வரும் சொற்களோ இடிபோல் சீதையின் காதில் விழுகின்றது . தன் காதையே நம்பமுடியாதவளாய்ச் சீதை ராமரை வெறிக்கின்றாள் . அப்படி என்னதான் ராமர் சொன்னார் ? “ ஜனகனின் புத்திரியே !, உன்னை நான் மீட்டது என் கெளரவத்தை நிலைநாட்டவே . இந்த யுத்தம் உன்னைக் கருதி மேற்கொள்ளப் பட்டது அல்ல . என்னுடைய தவங்களினால் தூய்மை பெற்றிருந்த நான் அவற்றின் வலிமை கொண்டும் , என் வீரத்தின் வலிமை கொண்டும் , இக்ஷ்வாகு குலத்திற்கு நேரிட்ட இழுக்கைக் களைவதற்காகவும் , என் வரலாற்றை இழுக்கில்லாமல் நிலை நாட்டவுமே , அவதூறுகளைத் தவிர்க்கவுமே உன்னை மீட்கும் காரணத்தால் இந்தப் போரை மேற்கொண்டேன் . இனி நீ எங்கு செல்லவேண்டுமோ அங்கே செல்வாய் ! உன் மனம்போல் நீ செல்லலாம் . இதோ என் இளவல் லட்சுமணன் இருக்கின்றான் , அல்லது பரதனுடனோ வேறு யாரோடு வேண்டுமானாலும் நீ வாழலாம் !” ராமர் வாயிலிருந்து வந்த வார்த்தைகளா இவை ? அல்லது விஷப் பாம்புகள் தன்னை கடித்துவிட்டதா ? அல்லது ராவணனின் வேறு வடிவமா ? என்ன இது ? ஒன்றும் புரியவில்லையே ? தன்னை உள்ளும் , புறமும் நன்கு அறிந்த தன்னுடைய கணவன் வாயிலிருந்தா இத்தகைய கொடும் வார்த்தைகள் ? ஆஹா , அன்றே விஷம் அருந்தி உயிர்விடாமல் போனோமே ? சீதைக்கு யோசிக்கக் கூட முடியவில்லை , தலை சுழன்றது . எதிரிலிருக்கும் ராமரும் சுழன்றார் . பக்கத்திலிருக்கும் அனைத்தும் சுழன்றன . இந்த உலகே சுழன்றது . சீதையின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி பூமியை நனைக்கத் துவங்கியது . அங்கே உலகமே ஸ்தம்பித்து நின்றது . பூமிதேவி தன் சுழற்சியை நிறுத்தி விட்டாளோ ??????? 73 கதை, கதையாம் காரணமாம்,ராமாயணம் பகுதி 73 சீதை திகைக்க , வானரங்களும் , அரக்கர்களும் , விபீஷணனும் , சுக்ரீவனும் நடுங்கினர் . லட்சுமணன் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது . உலகே ஸ்தம்பித்து நின்றுவிட்டது போலும் காட்சி அளித்தது . ராமரோ மேலும் சொல்கின்றார் :” ராவணனால் தூக்கிச் செல்லப் பட்டபோது அவன் கைகளுக்கிடையே சிக்கியவளும் , அவனால் தீய நோக்கத்தோடு பார்க்கப்பட்டவளும் நீயே ! இப்படிப் பட்ட உன்னை குலப்பெருமையக் காப்பாற்ற வேண்டிய நான் எவ்வாறு ஏற்க முடியும் ?? உன்னை நான் மீட்டதின் காரணமே , என் குலப் பெருமையை நிலைநாட்டவும் , எனக்கு இழைக்கப் பட்ட அவமதிப்பு நீங்கவுமே . உனக்கு எங்கே , எவருடன் இருக்க இஷ்டமோ அவர்களோ நீ இருந்து கொள்வாய் . இத்தனை பேரழகியான உன்னை , ராவணன் இடத்தில் பதினான்கு மாதங்கள் இருந்த உன்னை , பிரிந்திருப்பதை ராவணன் வெகுகாலம் தாங்கி இருந்திருக்க மாட்டான் .” ராமரின் இந்தக் கொடிய வார்த்தைகளைக் கேட்ட சீதை , கதறி அழுதாள் . பின்னர் தன் அழுகையைக் கட்டுப் படுத்திக் கொண்டு பேசுகின்றாள் :” ஒரு அற்ப மனிதன் , தன் மனைவியிடம் பேசுகின்ற முறையில் தாங்கள் இப்போது என்னிடம் பேசினீர்கள் . நீங்கள் நினைப்பதுபோல் நான் நடக்கவில்லை என்பது தங்கள் மனதுக்கு நன்கு தெரிந்திருக்கும் . ஒழுக்கமற்ற பெண்கள் இருக்கின்றார்கள் தான் . அதை வைத்து அனைத்துப் பெண்களையும் ஒரே மாதிரி எனச் சிந்திக்கக் கூடாது அல்லவா ? ராவணனால் தூக்கிச் செல்லப்பட்டது என் விருப்பத்தின் பேரில் நடந்த ஒன்றல்லவே ? அப்போது நான் எதையும் செய்யமுடியாத நிலையில் அல்லவோ இருந்தேன் ? ஆனால் என் உடல் தான் அவனால் தூக்கிச் செல்லப் பட்டதே தவிர , என் உள்ளம் தங்களையே நினைத்துக் கதறிக் கொண்டிருந்தது . தங்கள் தூய அன்பை உணர்ந்த நான் பிறிதொருவரின் அன்பையும் விரும்புவேனோ ? என் இதயம் உங்களை அன்றி மற்றொருவரை நினைக்கவில்லை . தாங்கள் இப்படி ஒரு முடிவுக்குத் தான் வருவதாய் இருந்தால் , அனுமனை ஏன் தூது அனுப்பினீர்கள் ? ஏன் என்னை ராவணன் தூக்கிச் சென்றதுமே துறக்கவில்லை ? அல்லது அனுமனிடம் தூது அனுப்பும்போது சொல்லி இருந்தால் , இந்த யுத்தமே செய்திருக்க வேண்டாம் அல்லவா ? ஒரு சாதாரண மனிதன் போல் பேசிவிட்டீர்களே ? என்னை நன்றாக அறிந்திருக்கும் உங்கள் வாயிலிருந்தா இப்படிப் பட்ட வார்த்தைகள் வருகின்றன ? லட்சுமணா , நெருப்பை மூட்டு . பொய்யான இந்த அவதூறுகளைக் கேட்டுக் கொண்டும் நான் உயிர் வாழவேண்டுமா ? என் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவதூறாய்ப் பேசும் கணவரால் , நான் அக்னிப்ரவேசம் செய்வது ஒன்றே ஒரே வழி .” என்று லட்சுமணனைத் தீ மூட்டும்படி சீதை வேண்டுகின்றாள் . சீதையின் வார்த்தைகளைக் கேட்ட லட்சுமணன் , ராமரின் முகத்தைப் பார்க்கின்றான் . மிகவும் மனம் நொந்து போன லட்சுமணன் , ராமருக்கும் அதில் சம்மதம் என முகக் குறிப்பில் இருந்து அறிகின்றான் . ராமரோ , ஊழிக்காலத்து காலருத்திரனைப் போன்ற தோற்றத்துடன் காணப்பட்டார் . அவர் கோபம் தணிவதாய்த் தெரியவில்லை . யாருக்கும் ராமர் அருகே நெருங்கவும் அச்சமாய் இருந்தது . யாரும் யாரையும் ஏறிட்டுப் பார்க்கவில்லை , யாரும் யாரிடமும் எதுவும் பேசவும் இல்லை . லட்சுமணன் தீ மூட்டினான் . சீதை முதலில் ராமரையும் பின்னர் அந்தத் தீயையும் , மும்முறை வலம் வந்தாள் . அக்னியை நெருங்கினாள் . தன் கைகளைக் குவித்த வண்ணம் அக்னியை மட்டுமின்றி , அனைத்துத் தெய்வங்களையும் துதித்த வண்ணம் சீதை சொல்லத் தொடங்கினாள் : “ என் இதயம் ராமரை விட்டு அகலாதது என்றால் ஏ அக்னியே , நான்கு திசைகளிலும் என்னைக் காப்பாய் ! என் நடத்தை அப்பழுக்கற்றது என்றால் ஏ அக்னியே , நான்கு திசைகளிலும் என்னைக் காப்பாய் ! மனம் , வாக்கு , காயம் என்ற உணர்வுகளினால் நான் தூய்மையானவள் தான் என்றால் , ஏ அக்னியே என்னைக் காப்பாய் ! ஏ சூரியதேவா , ஏ சந்திர தேவா , ஏ வாயுதேவா , திக்குகளுக்கு அதிபதிகளே , வருணா , பூமாதேவியே ! உஷத் கால தேவதையே ! பகலுக்கு உரியவளே , சந்தியாகால தேவதையே , இரவுக்கு உரியவளே , நீங்கள் அனைவருமே நான் தூய்மையானவள் , பவித்திரமானவள் என்பதை நன்கு அறிவீர்கள் என்பது உண்மையானால் , ஏ அக்னியே நான்கு திசைகளிலும் என்னைக் காப்பாய் !” இவ்வாறு உரக்கப் பிரார்த்தித்துக் கொண்டு , சற்றும் அச்சமில்லாமல் , குளிர் நீரிலோ , நிலவொளியிலோ பிரயாணம் செய்வதைப் போன்ற எண்ணத்துடன் சீதை அக்னிக்குள் பிரவேசித்தாள் . அங்கே குழுமி இருந்தவர்கள் அனைவருமே அலறித் துடித்தனர் . ராமர் கண்களிலிருந்து ஆறாகக் கண்ணீர் பெருகியது . லட்சுமணன் இந்தக் காட்சியைக் காணச் சகியாமல் முகத்தை மூடிக்கொண்டு அழுதான் . வானரங்களும் , அரக்கர்களும் பதறித் துடித்தனர் . விண்ணிலிருந்து தேவர்களும் , ரிஷி , முனிவர்களும் இந்த அக்னிப்ரவேசத்தைப் பார்த்துக் கொண்டு செய்வதறியாமல் திகைத்தனர் . அக்னிக்குள் ப்ரவேசித்த சீதையோ தங்கம் போல் ஒளியுடனே பிரகாசித்தாள் . இப்போது ராமர் செய்தது சரியா , தவறா என்ற விவாதம் ஒரு பக்கம் இருக்கட்டும் . சீதை அக்னிக்குள் ப்ரவேசம் செய்தபோது சொன்ன வார்த்தைகள் கம்பராமாயணத்தில் வேறு மாதிரியாக வருகின்றது . அது பற்றிய விவாதங்கள் இன்னும் முடியவில்லை . சீதை என்ன சொல்கின்றாள் , கம்பர் வாயிலாக என்று பார்ப்போமா ? அப்புறம் அது பற்றிய தமிழறிஞர் ஒருவரின் கருத்தும் , அது பற்றிய அந்தத் தமிழறிஞர் குறிப்பிட்டுச் சொல்லும் ஆங்கில நாடகம் ஒன்றின் குறிப்பும் , பார்க்கலாம் . கருத்துச் சொல்ல விரும்புபவர்கள் சொல்லலாம் . குறிப்பிட்ட கட்டுரை , பிரதி எடுக்க முடியவில்லை . ஆகவே அதைக் கீழே தட்டச்சு செய்கின்றேன் . “ நீதிபதி மகாராஜன் அவர்கள் கம்பனைக் கண்டு ஆனந்தித்தவர் . அவர் ஒரு நிகழ்ச்சியில் சொல்லி இருக்கின்றார் . என்பதாய்க் கட்டுரை ஆரம்பிக்கின்றது . இந்தக் குறிப்பிட்ட சொற்பொழிவு , நீதிபதி மகாராஜன் அவர்களால் , பேராசிரியரும் , இலக்கிய அறிஞரும் ஆன திரு அ . சீனிவாச ராகவன் அவர்களின் இலக்கிய ஆய்வைக் குறித்தது . திரு அ . சீனிவாசராகவன் அவர்கள் சீதை சொன்ன வார்த்தைகளுக்கு எவ்வாறு நாம் பொருள் கொள்ளவேண்டும் என்பதை ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ நாடகத்தில் டெஸ்டிமோனோ சொல்லும் வார்த்தைகளைக் கொண்டு நிரூபிக்கின்றார் என்பதாய்க் கட்டுரை வருகின்றது . இனி கட்டுரையும் , சீதை சொன்ன வார்த்தைகளாய்க் கம்பன் சொல்வதும் . அக்னிப் பிரவேசத்தில் சீதை ! கம்பரும் , வால்மீகியும் ! அக்னிப் ப்ரவேசத்துக்குத் தயார் ஆவது சீதைதான் என்றும் , அவளே லட்சுமணனிடம் அக்னியை மூட்டும்படிச் சொல்லுகின்றாள் எனவும் , ராமர் அதற்கு மறுப்புச் சொல்லாததில் இருந்து அவருக்கும் இது சம்மதமே எனவும் , வால்மீகி எழுதி இருக்கின்றார் . கம்பரும் அதை ஒட்டியே எழுதி இருக்கின்றார் . எனினும் வால்மீகி , மனம் , வாக்கு , காயம் என்னும் மூன்றையும் சீதை சொல்வதாய்ச் சுட்டிக் காட்டி இருக்கின்றார் . ஆனால் கம்பர் இங்கே என்ன எழுதுகின்றார் எனில் , மீட்சிப் படலம் : சீதையின் துயர நிலை : பாடல் எண் : 3976 கனத்தினால் கடந்த பூண் முலைய கைவளை மனத்தினால் வாக்கினால் மறு உற்றேனெனின் சினத்தினால் சுடுதியால் தீச் செல்வா என்றாள் புனத் துழாய்க் கணவற்கும் வணக்கம் போக்கினாள் ” என்று சொல்கின்றார் . கம்பர் ஆரம்பத்திலேயே சீதையை , ராவணன் தூக்கிச் செல்லும்போது , அந்தப் பர்ணசாலையையே பெயர்த்தெடுத்ததாய்த் தான் சொல்லுகின்றார் . வால்மீகி , ராவணன் தொட்டுத் தூக்கித் தன் தொடையில் இடுக்கிக் கொண்டு சென்றதாகவே சொல்லிவிடுகின்றார் . இவ்வாறு இருக்கும்போது வால்மீகி சொல்லும்போது , சீதை , மனம் , வாக்கு , காயம் என்ற மூன்றையும் குறிப்பிட்டுச் சொல்லுவதாயே சொல்லுகின்றார் . ஆனால் கம்பரோ எனில் , “ மனத்தினால் வாக்கினால் மறு உற்றேனெனின் ” என்று சீதை சொல்லுவதாய்ச் சொல்கின்றார் . இந்த வாக்கே பெரும்பாலும் நம் தமிழறிந்த நல்லோர்களால் ஏற்கப் பட்டிருப்பதால் இது என்ன ? இவ்வாறு சீதை சொல்லி இருப்பதால் உடலால் சீதை கெட்டிருப்பாள் என்றல்லவோ எண்ண நேரிடுகின்றது ? என மனதுக்குள்ளாகவாவது சிலர் எண்ணுகின்றனர் அல்லவா ? ஆனால் இந்தப் புதிரைத் தான் பேராசிரியர் அ . சீனிவாச ராகவன் அவர்கள் விடுவித்ததாய் , நீதிபதி திரு மகாராஜன் கூறுகின்றார் . அவர் கூறுவதாவது : “ சில ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் நடந்த இலக்கிய நிகழ்ச்சியில் அதுவரை விடுபடாத ஒரு புதிரை பேராசிரியர் அ . சீனிவாச ராகவன் அவர்கள் விடுவித்தார் . அதுவரை பண்டிதமணி , சோமசுந்தரபாரதி போன்றவர்களால் கூடத் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்ட புதிர் அது . அக்னி பிரவேசத்தின்போது சீதை தீயை வலம் வந்து , “ மனத்தினால் வாக்கால் , மறுவுற்றேனெனில் சினத்தினால் சுடுதியால் தீச்செல்வா ” என்கின்றாள் . அவள் ஏன் மெய்யால் என்று சொல்லவில்லை என்பதுதான் புதிர் . If I have been sullied In mind or speech, Burn me, Oh, Fire-God, With all thy ire” என்பது பேராசிரியரின் ஆங்கில ஆக்கம் . விடை காண முடியாமல் அறிஞர்கள் திணறிய இந்தப் புதிருக்குத் தீர்வை அந்தக் கோயம்புத்தூர் நிகழ்ச்சியில் சொன்னார் பேராசிரியர் . ஷேக்ஸ்பியரின் நாடகமான ஒதெல்லோவில் வில்லன் இயகோ ஒதெல்லோ மனதில் சந்தேகத்தைத் தோற்றுவித்து விடுகின்றான் . அதைக் கேட்டுவிட்டு ஒதெல்லோ டெஸ்டிமோனோவைச் சொல்லத் தகாத வார்த்தையால் திட்டுகின்றான் . அப்பொழுது ஒன்றும் தெரியாதவன் போல் இயாகோ வருகிறான் . அவனிடம் டெஸ்டிமோனா கேட்கிறாள் : “ எனக்கு அந்தப் பெயரா இயாகோ ?” எந்தப் பெயர் ராணி ?” இதோ இவள் சொல்கிறாளே நான் அது என்று அவர் சொன்னாரென்று .” இதோ கீழே டெஸ்டிமோனாவின் வார்த்தைகளும் , ஒதெல்லோ அவளைச் சொன்ன வார்த்தையும் . Impudent strumpet! DESDEMONA DESDEMONA I cannot tell. Those that do teach young babes Do it with gentle means and easy tasks: He might have chid me so; for, in good faith, I am a child to chiding. IAGO What’s the matter, lady? EMILIA Alas, Iago, my lord hath so bewhored her. Thrown such despite and heavy terms upon her, As true hearts cannot bear. DESDEMONA Am I that name, Iago? IAGO What name, fair lady? DESDEMONA Such as she says my lord did say I was. EMILIA He call’d her whore: a beggar in his drink Could not have laid such terms upon his callat. ஒதெல்லோ சொன்னதாகச் சொல்லப் படும் அந்தச் சொல்லைக் கூடச் சொல்லுவதற்கு டெஸ்டிமோனோவின் உயர்குடிப் பிறப்பும் , அவளுடைய கற்பும் தடுக்கின்றது . சீதைக்கும் அதே நிலைமைதான் . “ மெய் ” தூய்மை பற்றிய களங்கம் மக்களால் கற்பனை செய்து பார்க்க இயலும் . கதை கட்டிவிடவும் முடியும் . எனவே அதைச் சொல்லக் கூசுகின்றாள் சீதை . இந்தத் தீர்வை அங்கே இருந்த பேராசிரியர்கள் ஏற்றுக் கொண்டனர் . இது இலந்தை ராமசாமி என்பவரால் எழுதப் பட்ட “ இலக்கியச் சீனி அ . சீ . ரா . வாழ்வும் , வாக்கும்” என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப் பட்டது . மேலும் சீதைக்கு ராமன் மனது தெரியாமலோ , ராமனுக்கு சீதையின் மனம் தெரியாமலோ , அல்லது அவள் கற்பிற் சிறந்தவள் எனத் தெரியாமலோ இல்லை . எனினும் , உலகத்தார் கண் முன்னால் சீதை தன் கற்பை நிரூபிக்கவேண்டும் எனவே ராமன் விரும்பி இருக்கின்றான் . சீதையும் தன் கணவனின் மனக் குறிப்பை அறிந்து அதை நிறைவேற்றத் துணிந்திருக்கிறாள் . இதையே சீதை நெருப்பிலிருந்து மாசுபடாமல் வெளியே வந்தபோது ராமரும் தன்னிலை விளக்கமாயும் அளிக்கின்றார் . எனினும் ஒரு மானுடனாகவே வாழ்ந்த ராமர் இந்த இடத்திலும் மானுடனாகவே , சாதாரண மனிதன் எவ்வாறு தன் மனைவியிடம் கோபத்துடனும் , அதிகாரத்துடனும் , கடுமையாகவும் நடப்பானோ அவ்வாறே நடந்து , தான் மனிதனாய் இருப்பதில் இருந்து சற்றும் மாறவில்லை என நிரூபித்திருக்கின்றார் என்றும் கொள்ளலாம் . இலந்தை ராமசாமி எழுதிய இந்தப் புத்தகத்தின் மின்னாக்கத்தை எனக்குக் கொடுத்து உதவிய முத்தமிழ்க்குழும சகோதரர் சிங்கை குமார் அவர்களுக்கும் , ஒதெல்லோ நாடகப் பிரதியைக் கொடுத்து உதவிய சகோதரர் திரு திவா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் . சீதையின் அக்னிப்ரவேசம் சரியானதா ?? இல்லையா ? தொடர்ச்சி ! பலரும் சீதை ஏன் மெய்யாலும் என்ற வார்த்தையை உபயோகிக்கவில்லை எனவே கேட்டுக் கொண்டிருக்கின்றனர் . . ஏனெனில் கம்பர் தன் ராமாயணத்தில் சீதையை ராவணன் கவர்ந்து சென்றதைப் பற்றி எழுதும்போது , தொட்டுத் தூக்கிச் சென்றதாய் எழுதவே இல்லை அல்லவா ? அதை நாம் முன்பே பார்த்தோம் . பர்ணசாலையோடு பெயர்த்து ராவணன் தூக்கிச் சென்றதாகவே கூறுகின்றார் . அதிலும் ஒரு காத தூரம் பூமியைப் பெயர்த்து எடுத்து சீதையைத் தீண்டாமலேயே தூக்கிச் சென்றதாய்க் கூறுகின்றார் கம்பர் . தீண்டாமல் தூக்கிச் சென்றிருக்கும்போது மெய்யால் என்று கம்பரால் எப்படி எழுத முடியும் ? அப்புறம் அவர் முன்னம் எழுதியது தவறென ஆகாதோ ?? ஆகவே அவர் அக்னிப்ரவேசத்தின்போது சீதை மனத்தினால் , வாக்கினால் மறு உற்றேனெனின் என்று மட்டுமே கூறியதாய் எழுதிவிட்டார் . மேலும் ராவணனுக்கோ வேதவதி மூலம் கிடைத்த சாபம் இருக்கிறது . அவன் எவ்வாறு சீதையை அவள் சம்மதம் இல்லாமல் தீண்ட முடியும் ??? தொட்டுத் தூக்கிச் சென்றதைக் கம்பர் எழுதவில்லை எனினும் , வால்மீகி எழுதி உள்ளார் . அந்த அளவே தான் அவனால் முடியும் . அதுவும் தலைமுடியைப் பிடித்தும் , கையைப் பிடித்து இழுத்தும் தூக்கித் தன் தொடையில் இடுக்கிக் கொண்டு சென்றதாய் வால்மீகி கூறுகின்றார் . இஷ்டமில்லாமல் இருக்கும் ஒரு பெண்ணை அந்த அளவுக்குக் கூடப் பலவந்தப் படுத்தித் தானே தூக்கிச் செல்லமுடியும் ??? அதை வால்மீகி மறுக்கவில்லை , சீதையும் மறுக்கவில்லை , ராமரும் மறுக்கவில்லை , அதனாலேயே வால்மீகி மனதால் , வாக்கால் , காயத்தால் என்று சொல்லி இருக்கின்றார் . தொட்டுத் தூக்கிச் சென்றதால் சீதையின் கற்பு போய்விட்டது என எவ்வாறு கூறமுடியும் ??? ஆகவே தான் தன் மேல் உள்ள நம்பிக்கையாலேயே சீதை தன் கணவன் தன்னை இவ்வாறு பேசும்படி நேர்ந்தது என்பதைப் புரிந்து கொண்டாள் என்றே சொல்லவேண்டும் . அக்னி கூடத் தீண்ட அஞ்சும் அளவுக்கு சீதை பரிசுத்தமானவளே என்பதை ராமர் புரிந்து வைத்திருந்ததாலேயே சீதை அக்னிப்ரவேசம் செய்யத் தயார் ஆனபோது மறுக்கவில்லை , தடுக்கவில்லை . தன் மனைவி பரிசுத்தமானவளே என்பது தன் மனதுக்கு மட்டும் தெரிந்து தான் மனைவியைச் சேர்த்துக் கொண்டால் , உலகிலுள்ளோர் பெண்ணாசையால் பீடிக்கப் பட்ட ராமன் பிறர் வீட்டில் மாதக் கணக்கில் இருந்தவளைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டுவிட்டானே எனப் பேசக் கூடாது என்ற எண்ணம் மட்டும் காரணம் இல்லை . தன் மனைவி தனக்கு வேண்டும் , ஆனால் அதே சமயம் அவளைப் பிறர் குற்றம் காணாத வகையிலும் இருத்தல் நல்லது . என்று யோசித்தே ராமர் இந்த முடிவுக்கு வந்தார் எனவும் கூறலாம் . ஏனெனில் , இதே ராமர் , சீதையுடன் சேருவதற்காக சீதையை அக்னிப்ரவேசம் செய்ய வைத்த அதே ராமர் , பின்னால் , இதே சீதையைத் துறக்கவும் போகின்றார் . தன் நாட்டு மக்கள் பேசியதற்காக ! ஒரு அரசனாய்த் தன் கடமையைச் செய்யப் போகின்றார் . ஆங்கிலப் பழமொழி , “ சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாய் இருத்தல் வேண்டும்” என்று சொல்லுவதுண்டு . இங்கே ராமரின் மனைவிக்கு அந்தக் கதி நேரிட்டிருக்கின்றது . மக்கள் மனதில் சந்தேகம் உதித்ததும் , ராமர் உடனே மனைவியைத் துறக்கவும் தயாராகின்றார் . அதையும் பார்ப்போம் . இனி அக்னிப்ரவேசத்துக்கு அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்று நாளைக்குப் பார்ப்போமா ??? 74 கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 74 அக்னியில் இறங்கிய சீதையைப் பார்த்து அனைவரும் அலறிக் கதற ராமர் கண்களில் குளமாய்க் கண்ணீர் பெருகியது . ரிஷிகளும் , தேவர்களும் , கந்தர்வர்களும் பார்த்துப் பதறிக் கொண்டிருந்தனர் . அப்போது ராமரின் எதிரில் எமன் , குபேரன் , பித்ரு தேவர்கள் , இந்திரன் , வருணன் , பிரம்மா போன்றோர் பரமசிவனுடன் அங்கே தோன்றினார்கள் . ராமரைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்கள் அவர்கள் . “ ராமா , நீ யார் என்பதை மறந்துவிட்டாயோ ??? அனைத்துக்கும் நீயே அதிபதி ! நீ எவ்வாறு சீதை அக்னியில் பிரவேசிப்பதைப் பார்த்துச் சகித்துக் கொண்டு இருக்கின்றாய் ?? ஆரம்பமும் , நீயே ! நடுவிலும் நீயே ! முடிவிலும் நீயே ! அனைத்தும் அறிந்தவன் நீ ! காரண , காரியங்களை அறிந்தவன் நீ ! நீயே ஒரு சாமானிய மனிதன் போல் இப்படி சீதையை அலட்சியமாய் நடத்தலாமா ?” என்று கேட்க , ராமரோ அவர்களைப் பார்த்துச் சற்றே குழப்பத்துடன் , “ நான் தசரதச் சக்கரவர்த்தியின் மகன் ராமன் என்பதாய்த் தான் என்னை அறிந்திருக்கின்றேன் . படைக்கும் கடவுளான பிரம்மனே ! உண்மையில் நான் யார் ? எங்கிருந்து , எதன் பொருட்டு வந்தேன் ?” என்று கேட்கின்றார் . பிரம்மா சொல்கின்றார் . “ ராமா , நீயே ஆரம்பம் , நீயே முடிவு , நீயே நடுவில் இருப்பவனும் ஆவாய் ! படைப்பவனும் நீயே , காப்பவனும் நீயே , அழிப்பவனும் நீயே ! இயக்கமும் நீயே ! இயங்காமையும் உன்னாலேயே ! அகில உலகமும் உன்னாலேயே இயங்குகின்றது . கையில் சங்கு , சக்ரத்தை ஏந்திய மகாவிஷ்ணு நீயே ! அனைத்து உலகத்து மாந்தர்களின் விதியும் நீயே ! நீயே கண்ணன் , நீயே பலராமன் , நீயே கார்த்திகேயன் என்னும் ஸ்கந்தன் ! ஆற்றலும் நீயே , அடங்குவதும் உன்னாலேயே ! வேதங்கள் நீயே ! “ ஓ “ ங்கார சொரூபமும் நீயே ! அனைவரையும் பாதுகாப்பவனும் நீயே ! அழிப்பவனும் நீயே ! நீ இல்லாத இடமே இல்லை . அனைத்து உயிர்களிலும் நீயே நிறைந்திருக்கின்றாய் ! நீ எப்போது , எங்கே , என்ன செய்து கொண்டிருக்கின்றாய் என யாராலும் அறிய முடியாதது , இந்த பூமியிலும் , மண்ணிலும் , செடி , கொடிகளிலும் , மலரும் பூக்களிலும் , மலராத மொட்டுக்களிலும் , விண்ணிலும் , காற்றிலும் , மேகங்களிலும் , இடி , மின்னலிலும் , மழை பொழிவதிலும் , மலைகளிலும் , சமுத்திரங்களின் நீரிலும் , ஆற்றுப் பெருக்கிலும் , மிருகங்களின் உயிர்களிலும் , மனித உயிர்களிலும் , இன்னும் தேவாசுர உயிர்களிலும் அனைத்திலும் நிறைந்திருப்பவன் நீயே ! அனைத்துக்கும் ஆதாரம் நீயே ! சூரிய , சந்திரர்கள் உன் கண்கள் . நீ உன் கண்ணை மூடினால் இரவு . திறந்தால் பகல் . உன் கோபம் நெருப்பை ஒத்தது என்றால் உன் சாந்தமே சந்திரன் ஆவான் . உன் பொறுமை , உறுதி பூமி எனின் உன் இதயம் பிரம்மாவாகிய நான் ஆவேன் , உன் நாவில் சரஸ்வதி இருக்கின்றாள் . நீயே மூவுலகையும் ஆளும் அந்த மகாவிஷ்ணு ஆவாய் ! சீதையே உன்னுடைய தேவி ஆன மகாலட்சுமி ஆவாள் .” என்று சொல்கின்றார் பிரம்மா . வால்மீகி ராமாயணத்தில் இந்தக் குறிப்பிட்ட கட்டம் , பிரம்மா ராமரைப் பார்த்துச் சொல்லுவது ஒரு ஸ்லோகமாகவே இருக்கின்றது . இதைப் பாராயணம் செய்பவர்கள் இருக்கின்றனர் . அப்போது அக்னியில் இருந்து அக்னிதேவன் , தன் கரங்களில் சீதையைத் தாங்கியவண்ணம் எழுந்தான் . சீதையோ அன்றலர்ந்த மலர் போல் அக்னியில் இறங்கும்போது எவ்வாறு சர்வாலங்கார பூஷிதையாகக் காணப் பட்டாளோ அவ்வாறே சற்றும் மெருகு குன்றாமல் காணப்பட்டாள் . அக்னி தேவனோ ராமனிடம் , “ ராமா , இதோ உன் அருமை மனைவி சீதை ! அரக்கர்கள் கூட்டத்தில் , அரக்கிகளின் காவலில் இருந்த சமயத்தில் கூட இவள் தன்னை இழக்கவில்லை . உன்னையே நினைத்திருந்தாள் அன்றோ ??? இவள் தூய்மையானவள் . இவளை ஏற்றுக் கொள்வாயாக . இதை என் உத்தரவாகச் சொல்லுகின்றேன் .” என்று சொல்ல , ராமரும் மகிழ்வுடனேயே , அக்னியிடம் , ராவணன் வீட்டில் , அவனுடைய அசோகவனத்தில் பதினான்கு மாதங்கள் வாழ்ந்துவிட்ட சீதையை நான் தவறாய் நினைக்கவில்லை எனினும் , இவ்வுலக மக்கள் மத்தியில் அவளுடைய தூய்மையை நிரூபிக்காமல் நான் ஏற்பது எங்கனம் முறையாகும் ?? ஒரு அரசனாகக் கூடிய நான் பெண்ணாசையால் அவ்வாறு செய்தேன் என்று என்னைத் தூஷிப்பார்கள் அல்லவா ?? என் மனது அறியும் , என் மனைவி தூய்மையானவள் என்று . எனினும் அவளுடைய மேன்மையை உலகும் அறியவேண்டியே இவ்விதம் அவள் செய்யும்போது தடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியவன் ஆகிவிட்டேன் . ராவணன் அவளை ஏதும் செய்திருக்க முடியாது என்பதும் எனக்குத் தெரியும் . நெருப்பை ஒத்த என் மனைவியை நான் எவ்வாறு பிரிந்திருக்க முடியும் ?” என்று சொல்லிவிட்டு சீதையை ஏற்றுக் கொள்கின்றார் ராமர் . 75 கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி – 75 சீதையை மனமுவந்து ஏற்றுக் கொண்ட ராமரின் எதிரே பரமசிவன் காட்சி அளித்தார் . ராமர் அயோத்திக்குத் திரும்பிச் சென்று இக்ஷ்வாகு குலப் பெருமையை நிலை நாட்டும் வண்ணம் அரசாட்சி செய்து பின் மேலுலகம் திரும்புவார் என்றும் , இப்போது ராமரைக் காண அவரது தந்தையான தசரதர் வந்திருப்பதாயும் சொல்கின்றார் . ராமருக்கும் , சீதைக்கும் தசரதர் காட்சி அளிக்கின்றார் . ஆனால் இந்த நிகழ்ச்சிகளெல்லாம் ராமர் , சீதை இருவரையும் தவிர கூடி இருந்த மற்றவர்கள் பார்த்ததாய் வால்மீகி சொல்லவில்லை . ஏதோ அதிசயம் ஒன்று நடக்கின்றது என்ற அளவில் மட்டுமே புரிந்து கொண்டதாய்ச் சொல்கின்றார் . தசரதன் தன் அருமை மகன் ராமனை ஆரத் தழுவிக் கொண்டு தன் மகன் புருஷர்களில் உத்தமன் எனத் தான் உணர்ந்து கொண்டு விட்டதாய்ச் சொல்கின்றார் . பதினான்கு வருட வனவாசமும் முடிவடையப் போகின்றதால் ராமர் சீக்கிரமாய் அயோத்திக்குத் திரும்பி ராஜ்யத்தை ஏற்றுக் கொண்டு ஈடு இணையற்ற வகையில் அரசாட்சி செய்து நீண்ட நெடுங்காலம் பெரும் புகழோடு வாழ்வார் எனவும் வாழ்த்துகின்றார் தசரதர் . அப்போது ராமர் தன் தந்தையிடம் , கைகேயியையும் , பரதனையும் விலக்கிவிடுவதாய்ச் சொன்னதை மறந்து அவர்கள் இருவரையும் அந்தக் கடுமையான சாபத்தில் இருந்து விடுவிக்க வேண்டினார் . தசரதரும் அவ்வாறே ஆகட்டும் என வாக்களித்தார் . பின்னர் லட்சுமணனுக்கும் ராமருக்குத் தொடர்ந்து சேவைகள் செய்து வருமாறு ஆசி கூறிவிட்டு , சீதையைப் பார்த்து , ராமன் இப்போது நடந்து கொண்ட விதத்தாலும் , இங்கே நடந்த இந்த அக்னிப் பிரவேச நிகழ்ச்சியாலும் சீதையின் மனம் துன்புறக் கூடாது என்றும் சொல்லிவிட்டு , “ உன்னுடைய தூய்மை அனைவருக்கும் புரியவே இவ்வாறு நடந்தது . செய்ய முடியாத ஒரு காரியத்தை நீ செய்ததால் உன்னுடைய புகழ் மற்றப் பெண்களின் புகழை விட ஓங்கும் . இனி உன் கணவனின் பணிவிடைகளில் நீ இன்புற்று இருப்பாயாக .” என்று சொல்லிவிட்டுப் பின்னர் அனைவரும் மேலுலகம் செல்கின்றனர் . பின்னர் இந்திரன் ராமரைப் பார்த்து , ஏதாவது வரம் வேண்டிப் பெற்றுக் கொள்வாய் எனச் சொல்ல ராமரும் , இந்தப் போரில் உயிர் நீத்த அனைத்து வானரங்களும் உயிர் பெற்று எழ வேண்டும் என்பதே தனக்கு வேண்டிய வரம் என்றும் சொல்லி விட்டு , அவர்கள் முழு ஆரோக்கியத்தோடும் எழச் செய்யும்படிக்கும் பிரார்த்திக்கின்றார் . இந்திரன் இது மிக அரிதான வரம் எனினும் நான் வாக்குக் கொடுத்துவிட்டதால் நீ கேட்டது கேட்டபடி நடக்கும் எனச் சொல்ல , இறந்த வானரர்கள் அனைவரும் தூங்கி எழுவது போல் எழுந்தனர் . பின்னர் ராமரை நீ மீண்டும் அயோத்திக்குச் செல்வாய் . உன்னுடைய பிரிவால் வாடி , வருந்தி தவங்களையும் , கடும் விரதங்களையும் செய்து கொண்டிருக்கும் பரத , சத்ருக்கனர்களைக் காக்க வேண்டியும் , அவர்களை மகிழ்விக்க வேண்டியும் விரைவில் அயோத்தி செல்வாய் . என்று கூறிவிட்டு அனைவரும் மறைந்தனர் . மறுநாள் விபீஷணன் ராமரைச் சகல வசதிகளோடும் நீராடி , நல்லாடை உடுத்தி , ஆபரணங்களை அணிந்து அனைவரையும் மகிழ்விக்கக் கோர , ராமரோ , தான் உடனே சென்று பரதனையும் , சத்ருக்கனனையும் பார்க்க வேண்டும் என்று சொல்கின்றார் . விரைவாக அயோத்திக்கு அருகே இருக்கும் நந்திகிராமம் செல்லவேண்டும் எனவும் , கால்நடையாகச் சென்றால் பல நாட்களாகிவிடும் என்பதால் அது வரையில் பரதன் தாங்க மாட்டான் எனவும் சொல்கின்றார் . விபீஷணனும் உடனேயே , ராவணனால் அபகரித்துவரப் பட்ட குபேரனின் புஷ்பகம் இங்கேயே இருப்பதாயும் , அதில் அமர்ந்து வெகு விரைவில் அயோத்தி சென்று விடலாம் எனவும் சொல்கின்றான் . ஆனால் ராமர் இலங்கையில் சில நாட்கள் தங்கிச் செல்வதே தனக்கு விருப்பம் எனவும் சொல்கின்றான் . ராமர் விபீஷணன் செய்த உதவிகளைப் பாராட்டிப் பேசிவிட்டு , இப்போது தங்க நேரம் இல்லை எனவும் , பரதனைச் சென்று உடனேயே பார்க்க வேண்டும் எனவும் , தாயார்களைப் பார்க்க வேண்டும் எனவும் சொல்கின்றார் . ஆகவே விடை கொடுக்குமாறு கேட்கின்றார் . விபீஷணன் மிக்க மரியாதையுடனே ராமரை வணங்கி , மேலும் என்ன வேண்டும் எனக் கேட்க , போரில் சாகசங்கள் பல புரிந்த வானரங்களுக்குப் பரிசளிக்கும்படிச் சொல்கின்றார் ராமர் . அவ்வாறே வானரங்கள் அவர்கள் விரும்பிய வண்ணம் தங்கம் , வெள்ளி , நவரத்தினங்கள் எனப் பரிசைப் பெற்றனர் . பின்னர் வானரங்களையும் , சுக்ரீவனையும் , விபீஷணனையும் பார்த்து ராமர் அவர்கள் அனைவரும் அவர்களின் சொந்த இடத்துக்குச் செல்லலாம் எனவும் , தனக்கு விடை கொடுக்குமாறும் கேட்கின்றார் . விபீஷணனும் , சுக்ரீவனும் , ராமரின் பட்டாபிஷேக நிகழ்ச்சியைக் கண்டு களிக்க தாங்கள் அயோத்தி வர விரும்புவதாய்ச் சொல்ல , ராமர் அனைவரையும் புஷ்பகத்தில் ஏற்றிக் கொள்கின்றார் . புஷ்பகம் பெரும் சப்தத்துடன் விண்ணில் எழும்பியது . சீதையிடம் புஷ்பகத்தில் சென்று கொண்டிருந்த சமயம் , ராமர் ஒவ்வொரு இடமாய்க் காட்டுகின்றார் . “ இதோ பார் , இது தான் நான் ராவணனை வீழ்த்திய இடம் . இதுதான் முக்கியமான அரக்கர்கள் ஒவ்வொருவராய் வீழ்த்தப் பட்ட இடம் . இதோ இந்தக் கடற்கரையில் தான் நாங்கள் இறங்கினோம் . இதோ இந்த இடத்தில் தான் நளசேது கடல் மீது கட்டப் பட்டது . அதோ பார் , எங்கும் வியாபித்திருக்கும் மகாதேவன் , எனக்கு அருள் புரிந்து அணை கட்ட உதவிய இடம் இது தான் . இந்தக் கடற்கரையில் உள்ள இந்தப் புனிதமான இடம் இனிமேல் சேதுபந்தனம் என அழைக்கப் படும் . சகல பாவங்களையும் போக்கும் புண்ணிய இடமாய்க் கருதப் படும் , என்று சொல்லிவிட்டு , விபீஷண சரணாகதி நடந்த இடம் , வாலி வதம் நடந்த இடம் என ஒவ்வொரு இடமாய்க் காட்டி வருகின்றார் . . ராமேஸ்வரத்தில் ராமர் சிவனைப் பூஜித்து ராவணனைக் கொன்ற பாவத்துக்குப் பிராயச்சித்தம் செய்தார் என்பது பற்றிய குறிப்பு வால்மீகி ராமாயணத்தில் இல்லை . ஆனால் ஸ்காந்த புராணத்தில் இது பற்றிய குறிப்பு வருகின்றது . ஆகவே அதன் அடிப்படையில் அங்கே ராமநாதஸ்வாமி கோயில் எழும்பி இன்றளவும் அனைவராலும் புனிதமான இடமாய்க் கருதி வழிபடப் பட்டு வருகின்றது . ஸ்காந்த புராணத்தில் மகாதேவனாகிய ஈசன் ராமரிடம் , “ ராமா , உன்னால் பிரதிஷ்டை செய்யப் பட்ட இந்த லிங்கத்தை யார் வழிபடுகின்றார்களோ , அவர்கள் எல்லாவிதமான பாவங்களிலிருந்தும் விடுபடுவார்கள் . சேதுபந்தனம் நடந்த தனுஷ்கோடியில் ஸ்நானம் செய்து , இங்கே என்னைத் தரிசனம் செய்து வழிபடுபவர்களுக்கு அனைத்துப் பாவங்களும் நீங்கும் ,” என்று அருளியதாய் ஸ்காந்த புராணத்தில் சொல்லப் பட்டிருக்கின்றது . பின்னர் வழியில் கிஷ்கிந்தை நகர் தெரிய , ராமரும் அந்த நகரைச் சீதைக்குக் காட்டினார் . சீதை நம்முடன் சுக்ரீவன் மனைவியும் , தாரையும் மற்ற வானரங்களின் மனைவிமார்களும் அயோத்திக்கு வரட்டும் என வேண்ட , அவ்வாறே புஷ்பகம் அங்கே கீழே இறங்கி , மற்றவர்களையும் ஏற்றிக் கொண்டு கிளம்பியது . ராமர் ஒவ்வொரு இடமாய்ச் சீதைக்குக் காட்டிக் கொண்டே வருகின்றார் . பரதன் வந்து சந்தித்த இடம் , யமுனை நதி , பரத்வாஜ முனிவரின் ஆசிரமம் என ஒவ்வொன்றாக வந்தது , சரயு நதியும் கண்ணில் பட்டது . அங்கிருந்தே அயோத்தியும் கண்ணில் தெரிய ஆரம்பித்தது . பரத்வாஜரின் ஆசிரமத்தில் விமானம் இறங்கி , அனைவரும் அவரை வணங்கி நமஸ்கரிக்க , ராமர் , அனைவரின் நலன் பற்றியும் பரத்வாஜரிடம் விசாரிக்கின்றார் . 76 கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி- 76 பாரத்வாஜரும் , “ ராமா , மரவுரி தரித்துக் காட்டுக்குச் சென்ற போது உன் நிலை கண்டு மனம் நொந்த நான் , இப்போது நீ எதிரிகளை வீழ்த்திவிட்டு வெற்றி வீரனாய் அயோத்திக்கு வந்திருப்பது கண்டு மிக்க மகிழ்வடைந்தேன் . காட்டில் உனக்கு நேர்ந்தவைகள் அனைத்தையும் நான் அறிவேன் . சீதை அபகரிக்கப் பட்டதும் , நீ தேடி அலைந்ததும் , சுக்ரீவன் உதவி பெற்றதும் , சேதுவைக் கட்டியதும் , கடல் தாண்டியதும் , ராவணனை வீழ்த்தியதும் , பின்னர் அனைத்துத் தேவாதி தேவர்களும் நேரில் வந்து உன்னை வாழ்த்தியதும் , அனைத்தையும் என் தவ வலிமையால் நான் அறிந்து கொண்டே . ன் . உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேட்டுப் பெற்றுக் கொள்வாயாக !” என்று சொல்கின்றார் . ராமர் வழியில் உள்ள மரங்களெல்லாம் , பூத்துக் குலுங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ள , பரத்வாஜரும் அவ்வாறே அருளினார் . பின்னர் ராமர் அனுமனைப் பார்த்து , நீ விரைவில் சிருங்கவேரபுரம் சென்று அங்கே குகன் என்னும் என்னுடைய நண்பனைப் பார்த்து நாம் அனைவரும் நலம் எனவும் அயோத்தி திரும்புவதையும் சொல்லுவாய் . அவனிடம் கேட்டு பரதன் இருக்குமிடம் தெரிந்து கொண்டு பரதனைப் பார்த்து அனைத்து விஷயங்களையும் எடுத்துச் சொல்லு . நாம் அயோத்தி திரும்புகின்றோம் வெற்றியோடும் , சீதையோடும் என்பதையும் அவனுக்கு எடுத்துச் சொல்வாய் . ஈசன் அருளால் எங்கள் தந்தை நேரில் வந்து எங்கள் அனைவரையும் வாழ்த்தியதையும் தெரிவி . விபீஷணன் , சுக்ரீவனோடு மற்ற வானரங்கள் புடை சூழ நான் அயோத்தியை நெருங்கிக் கொண்டிருக்கின்றேன் என்றும் சொல்வாய் என அனுப்பி வைக்கிறார் . பின்னர் அனுமனிடம் சொல்லுகின்றார் ; இந்தச் செய்தியை நீ சொல்லும்போது பரதனின் முகபாவம் எப்படி உள்ளது என்பதையும் ஏதேனும் மாறுதல்கள் ஏற்படுகின்றதா என்பதையும் கண்டுவிட்டு எனக்குத் தெரிவிக்க வேண்டும் . நான் திரும்புவது குறித்து உண்மையில் பரதன் என்ன நினைக்கின்றான் என்பது எனக்குத் தெரியவேண்டும் . ராஜ்யத்தை இத்தனை வருஷங்கள் பரதன் நிர்வகித்து வந்திருக்கின்றான் . என்ன இருந்தாலும் ராஜ்ய ஆசை யாரை விட்டது ? அதிலும் இத்தனை சுகபோகங்களும் , சகலவிதமான செளகரியங்களும் , வசதிகளும் உள்ள ராஜ்யம் யாரைத் தான் கவராது ??? ஒருவேளை பரதனுக்கு இத்தனை வருஷங்களில் இந்த ராஜ்யத்தின் மீது ஆசை ஏற்பட்டிருந்தால் அந்த ஆசையை நான் பூர்த்தி செய்ய வேண்டும் அல்லவா ?? அது என் கடமை . என்று சொல்லி அனுப்புகின்றார் ராமர் . அவ்வாறே அனுமனும் சென்று அயோத்தியை மிக மிக வேகமாய் அடைய வேண்டி விரைந்தார் . அயோத்தியை மிக வேகமாய் அடைந்த அனுமன் அங்கே சிருங்கவேரபுரத்தில் குஹனைக் கண்டு , ராமரின் செய்தியைத் தெரிவித்துவிட்டுப் பின்னர் அங்கிருந்து விரைவாக நந்திகிராமத்தை அடைந்தார் . அங்கே பரதன் தவக் கோலம் பூண்டு ராமரின் பாதுகைகளை வைத்து நேர்மையான , உண்மையான மந்திரி , பிரதானிகளுடன் , மக்கள் தொண்டை உண்மையான மகேசன் சேவையாக நினைத்து ஆட்சி புரிந்து வந்திருப்பதைக் கண்டு , மகிழ்ச்சி கொண்டார் அனுமன் . அயோத்தி மக்களும் தங்கள் அன்பை பரதன் பால் காட்டும்விதமாய் , பரதன் அனைத்தையும் துறந்து வாழும்போது தாங்கள் மட்டும் மகிழ்வான விஷயங்களில் ஈடுபடுதல் நல்லதல்ல என இருந்தனர் . இப்படி இருக்கும் நிலையில் அனுமன் போய்ச் சேர்ந்ததும் , பரதனைக் கண்டு வணங்கி இரு கையும் கூப்பியவண்ணம் ராமனின் செய்தியைத் தெரிவித்தார் . “ எந்த ராமரை நினைத்து வருந்தி , அவர் வரவைக் குறித்து ஏங்குகின்றீர்களோ அந்த ராமர் வருகின்றார் . ராவணனைக் கொன்று சீதையை மீட்டு , நண்பர்கள் , லட்சுமணன் , மற்றும் வானரப் படைகளுடன் சகலவிதமான பெருமைகளையும் ஈட்டிய ராமர் வந்து கொண்டிருக்கின்றார் .” என்று அனுமன் தெரிவிக்கின்றான் . செய்தி கேட்ட பரதன் ஆனந்தத்தில் மூர்ச்சை அடைந்தான் . பின்னர் ஒருவாறு மூர்ச்சை தெளிந்து எழுந்து அனுமனைக் கட்டித் தழுவித் தன் ஆனந்தத்தை வெளிப்படுத்தினான் . அனுமனிடம் ராமர் வந்து அரசை ஏற்றுக் கொள்ளப் போவது பற்றிய தன் ஆனந்தத்தையும் சொல்கின்றான் பரதன் . அனுமன் அப்போது ராமர் அயோத்தியில் இருந்து கைகேயியின் வரங்களினால் தசரதச் சக்கரவர்த்தி ராமரைக் காட்டுக்கு அனுப்பியது முதல் அன்று வரை நடந்த அனைத்தையும் சொல்ல ஆரம்பித்துச் சொல்லி முடிக்கின்றார் . ராமர் வந்து கொண்டு இருக்கின்றார் என்றும் சொல்லவே அயோத்தி நகரம் கொண்டாட்டங்களை ஆரம்பித்தது , பரதனின் மகிழ்வுக்கு எல்லை இல்லை . 77 கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 77 ராமர் வரப் போகும் செய்தி கேட்டு மகிழ்ந்த பரதன் , ராமரின் பாதுகைகளைத்தன் தலையில் தாங்கிய வண்ணம் பாதுகைகளுக்கு மேலே வெண்கொற்றக் குடையுடனேயே , மந்திரி , பிரதானிகளுடனும் , சகலவிதமான மரியாதைகளுடனும் ராமரை எதிர்கொண்டழைக்கப் புறப்பட்டான் . தாய்மார்கள் மூவரும் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தனர் . கெளசலையின் தலைமையில் மூவரும் பல்லக்கில் அமர , சத்ருக்கனனோ ராமர் வரும் வழியெல்லாம் அலங்காரம் செய்யவேண்டிய பொறுப்பை ஏற்று , அதற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்யத் தொடங்கினான் . அயோத்தி மக்கள் அனைவருக்கும் ராமர் திரும்பி வெற்றித் திருமகளுடனும் , சீதையுடனும் , லட்சுமணன் மற்றும் அனைத்து வீரர்களுடனும் வரும் செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்ததோடு அல்லாமல் , அனைவருமே ராமரை எதிர்கொண்டு அழைக்க விரும்பி நந்திகிராமம் நோக்கிப் புறப்பட்டு வர ஆரம்பித்தனர் . பொறுத்துப் பார்க்கக் கூடிய அளவு நேரம் கடந்தும் ராமரைக் காணாமல் பரதன் கலங்கி , ஒரு வானரத்தின் பொறுப்பற்ற பேச்சை நம்பினோமோ என எண்ணி , அனுமனை விசாரிக்கத் தொடங்கினான் . அப்போது விண்ணில் பலத்த சப்தம் எழும்ப , புஷ்பகம் தோன்றியது . அதைப் பார்த்த அனுமன் அதோ அவர்கள் வருகின்றனர் என்று கூறிக் காட்ட பரதனும் , மேலே பார்த்தான் . ராமர் , சீதை , லட்சுமணன் , விபீஷணன் , சுக்ரீவன் மற்றும் பலரும் அமர்ந்திருந்த புஷ்பகம் கண்ணில் பட்டதும் , பரதன் தன் இருகையும் கூப்பிக் கொண்டு ராமரை நோக்கித் தொழுதவண்ணம் கண்ணில் நீர் பெருக நின்றான் . புஷ்பகம் தரையில் இறங்கியது . பரதன் புஷ்பகத்தால் தூக்கப் பட்டு , அதனுள் நுழைய , ராமர் அவனைக் கண்டு மகிழ்வோடு கட்டி அணைத்துத் தன் பாசத்தைத் தெரிவித்தார் . பின்னர் லட்சுமணனோடு அளவளாவிவிட்டு பரதன் சீதைக்குத் தன் வணக்கங்களைத் தெரிவித்தான் . அனைவரையும் பார்த்து ராமருக்கு உதவியதற்காகத் தன் நன்றியையும் , ராமர் போலவே தானும் , சத்ருக்கனனும் நட்போடு பழகுவோம் எனவும் தெரிவித்தான் . சுக்ரீவனை நீ எங்கள் ஐந்தாவது சகோதரன் என்று கூறிய பரதன் , விபீஷணனுக்கும் தன் நன்றியைத் தெரிவித்தான் . சத்ருக்கனனும் அவ்வாறே அனைவருக்கும் தன் மரியாதைகளையும் , நன்றியையும் தெரிவிக்க , பதினான்கு வருஷம் கழித்துச் சந்திக்கும் தன் தாயை ராமர் வணங்கினார் . பின்னர் சுமித்திரை , கைகேயி போன்றோருக்குத் தன் வணக்கங்களைத் தெரிவித்துவிட்டுப் பின்னர் வசிஷ்டரையும் வணங்கினார் . பரதன் ராமரின் பாதுகைகளை அவர் காலடியில் வைத்துவிட்டு அவரை வணங்கி , அவரிடம் சொல்கின்றான் .” நீங்கள் என்னிடம் ஒப்படைத்துவிட்டுப் போயிருந்த ராஜ்யத்தை நான் மீண்டும் தங்களிடம் ஒப்படைக்கின்றேன் . உங்கள் அருளினாலும் , உதவியினாலும் தானியக் கிடங்கும் , பொக்கிஷமும் நிரம்பி வழிகின்றது . படை வீரர்கள் , அரண்மனை , கிடங்குகள் போன்றவற்றைச் சரிபார்த்துக் கொள்ளும்படி வேண்டுகின்றேன் .” பின்னர் அனைவரும் நந்திகிராம ஆசிரமத்தை அடைந்தனர் . ராமர் புஷ்பகம் குபேரனையே போய் அடையவேண்டும் என விரும்ப அவ்வாறே அந்த விமானம் மீண்டும் குபேரனையே போய்ச் சேர்ந்தது . பரதன் ராஜ்ய பாரத்தை ராமரை ஏற்கும்படி வேண்டினான் . அயோத்தியின் உண்மையான அரசர் ஆன ராமர் இருக்கும்போது தான் இந்தச் சுமையைத் தாங்கமுடியாது எனவும் தெரிவிக்கின்றான் . ராமருக்குப் பட்டாபிஷேகத்துக்கு ஏற்பாடுகள் ஆரம்பிக்கின்றன . ராமரின் சடைமுடி அவிழ்க்கப் பட்டு , ஒரு அரசனுக்குரிய அலங்காரங்கள் செய்யப் படுகின்றன . லட்சுமணன் , பரதன் , சத்ருக்கனன் கூட இருந்து உதவ , ராமரின் அலங்காரங்கள் நடக்கின்றன . சீதைக்கு கெளசலையின் மேற்பார்வையில் அரண்மனைப் பெண்டிரும் , சுமித்திரை , கைகேயியும் உதவ அலங்காரங்கள் செய்கின்றனர் . சுமந்திரர் வழக்கம்போல் அரசனின் தேரை ஓட்டி வர , ராமரும் , சீதையும் அதில் அமர்ந்தனர் . அனைவரும் பின் தொடர , நந்திகிராமத்தில் இருந்து அயோத்தியை வந்தடைந்தனர் . ரிஷிகள் வேதம் ஓதினர் . தேவகீதம் முழங்கப் பட்டது . வாத்தியங்கள் இசைக்கப் பட்டன . கந்தர்வர்கள் பாடினார்கள் . பரதன் தேரோட்டியாகப் பொறுப்பு ஏற்க , சத்ருக்கனன் வெண்கொற்றக் குடை பிடிக்க , லட்சுமணன் சாமரம் வீச , விபீஷணன் இன்னொரு பக்கம் சாமரம் வீச பவனி வருகின்றார் ராமர் . மறுநாள் விடியும் முன்னர் நான்கு பொற்குடங்களில் நான்கு பக்கத்து சமுத்திரத்திலிருந்தும் நீர் கொண்டுவரச் சொல்லி ஜாம்பவான் , அனுமன் , கவயன் , ரிஷபன் ஆகிய வானர வீரர்களுக்குப் பரதன் வேண்டுகோள் விடுக்க அவ்வாறே கொண்டுவரப் பட்டது . பல நதிகளில் இருந்தும் புனித நீர் சேகரிக்கப் பட்டது . விலை உயர்ந்த ரத்தின சிம்மாசனத்தில் ராமரையும் சீதையையும் அமர்த்தினார்கள் . பின்னர் வசிஷ்டர் , வாமதேவர் , ஜாபாலி , காச்யபர் , காத்யாயனர் , கெளதமர் , விஜயர் போன்ற ரிஷிகள் வேத மந்திரங்களை முறைப்படி ஓதி , புனித நீரினால் ராமருக்கும் , சீதைக்கும் பட்டாபிஷேகம் செய்தனர் . மனுவின் வம்சத்தில் வந்த பிரசித்தி பெற்ற மன்னர்களினால் அணியப் பட்ட சிறப்பு வாய்ந்த கிரீடம் வசிஷ்டரால் ராமருக்கு அணிவிக்கப் பட்டது . சத்ருக்கனன் வெண்கொற்றக் குடை ஏந்த , சுக்ரீவனும் , விபீஷணனும் சாமரம் வீச , வாயுதேவன் பொன்னும் , மணியும் கலந்த நூறுதாமரைகளைக் கொண்ட மாலையைப் பரிசாய்க் கொடுக்க கந்தர்வர்கள் தேவ கானம் இசைக்க ராமர் மணி முடி சூடினார் . ராமரின் பட்டாபிஷேகம் இனிதாய் முடிந்தது . ராமர் அனைவருக்கும் பரிசுகளை வாரி வழங்கினார் . தான , தருமங்களை அரச முறைப்படி செய்தார் . எனினும் நம் ராமாயணக் கதையில் இன்னும் உத்தரகாண்டம் இருக்கின்றது . அதுவும் வரும் . உத்தரகாண்டம் ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கின்றது . சீதைக்கு மீண்டும் , மீண்டும் நேரும் துக்கம் , அதனால் அவள் பட்ட துன்பங்கள் . ராமரின் நிலை ! ராமரின் மறைவு ! அனைத்தையும் பார்க்கப் போகின்றோம் . அதற்கு முன்னர் சற்றே கம்பராமாயணத்தில் ராமர் அயோத்தி திரும்பும் முன்னர் பரதனின் நிலை பற்றியும் , ராம பட்டாபிஷேகம் பற்றியும் பார்க்கலாம் . கம்பர் தன் ராமாயணத்தைப் பட்டாபிஷேகத்தோடு முடித்திருக்கின்றார் . துளசி ராமாயணத்தில் சீதையின் அக்னிப்ரவேசத்தில் அக்னியில் இறங்குவது மாயசீதை என்றும் , மாயசீதை அக்னியில் இறங்கி மாயமாகிவிட்டதாயும் , பின்னர் உண்மையான சீதை வெளியே வருவதாயும் சொல்லி இருக்கின்றார் . அதே போல் உத்தர காண்டம் துளசிதாஸ் எழுதி இருப்பது வால்மீகியில் இருந்து மாறுபட்டே இருக்கின்றது . பொதுவாக ராமாயணத்தைப் பட்டாபிஷேகத்தோடு தான் முடிப்பார்கள் . ராமருக்கு நேரிடும் துக்கத்தைத் தாங்கும் சக்தி இல்லை என்றோ என்னவோ தெரியவில்லை . ஆனால் நாம் முதலில் இருந்தே ஒரு மனிதனின் கதையாகவே பார்த்து வந்திருப்பதால் , அந்த மனிதனுக்கு நேரிடும் அனைத்துத் துன்பங்களையும் பார்த்துவிடுவோமே !! ராமர் அயோத்தி திரும்புதல் - கம்பர் காட்டும் காட்சிகள் ! ராமர் அயோத்திக்குத் திரும்பும் வேளையில் , பாரத்வாஜர் ஆசிரமத்தில் தங்க நேரிடுகின்றது . அதனால் ராமர் முன்னால் அனுமனை அனுப்பி , பரதனுக்குச் செய்தி சொல்லுமாறு கேட்டுக் கொள்கின்றார் . ராமர் அயோத்தி வந்து சேரச் சற்றே தாமதம் நேரிட்டதாயும் , அதைக் கண்ட பரதன் , ராமர் எப்போது வருவார் என ஜோதிடர்களை அழைத்துக் கேட்டதாயும் , அவர்கள் பதினான்கு வருடம் முடிந்து விட்ட காரணத்தால் ராமர் வர வேண்டும் என்று சொல்லியதாகவும் கம்பர் கூறுகின்றார் . பின்னரும் ராமர் வந்து சேரவில்லை எனக் கலங்கிய பரதன் அதனால் உடல் நலம் கெட்டு மயங்கி விழுகின்றான் . ராமருக்குத் தீங்கு நேரிட்டிருக்குமோ என அஞ்சுகின்றான் . இல்லை , ராமன் எனக்கு ராஜ்யம் ஆள ஆசை வந்துவிட்டிருக்கும் இத்தனை வருடங்களில் , அதனால் நானே ராஜ்யம் ஆள வேண்டும் என விட்டு விட்டானோ எனவும் எண்ணுகின்றான் பரதன் . பின்னர் பரதன் ராமன் எப்போது வேண்டுமானாலும் வரட்டும் . ஆனால் நான் உயிர் துறக்கப் போவது திண்ணம் எனக் கருதி உயிர் துறக்கத் தீர்மானிக்கின்றான் . ஆகவே நகரிலிருந்து சத்ருக்கனனை வரவழைத்து அவனிடம் ராமர் குறிப்பிட்ட நாளில் வராததால் , தான் முன்னரே கூறியபடி உயிர் துறக்கப் போவதாய்த் தெரிவிக்கின்றான் . பாடல் எண் 4110 “ என்னது ஆகும்கொல் அவ்வரம் என்றியேல்சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன் மின்னு தீயிடை யான் இனி வீடுவென்மன்னனாதி என் சொல்லை மறாது என்றான் .” சத்ருக்கனனை நாட்டை ராமர் வரும்வரைக்கும் ஆண்டு வரும்படிக் கூறுகின்றான் . சத்ருக்கனன் மறுக்கின்றான் . நீ மட்டும் உயிர் துறப்பாய் , கடைசித் தம்பியான நான் மட்டும் எந்தவித நாணமும் , அச்சமும் இல்லாமல் கவலை ஏதுமின்றி ராஜ்யத்தை ஆள முடியுமா எனக் கேட்கின்றான் . பாடல் எண் 4113 “ கான் ஆள நிலமகளைக் கைவிட்டுப் போனானைக் காத்துப் பின்பு போனானும் ஒரு தம்பி போனவன் தான் வரும் அவதி போயிற்று என்னா ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி அயலே நாணாது யானாம் இவ் அரசு ஆள்வென் என்னே இவ்வரசாட்சி இனிதே அம்மா “ ஆனால் பரதன் , ராமர் வரும்வரைக்கும் ராஜ்யத்தைப் பொறுப்பான நபர்களிடம் ஒப்படைக்கவேண்டும் ஆகவே சத்ருக்கனன் உயிர் துறக்க முடியாது என ஆணை இடுகின்றான் . இந்த நிகழ்ச்சி கெளசலையின் காதுகள் வரை எட்டி அவள் துடிதுடிக்கின்றாள் . பரதனைத் தீயில் விழாமல் காக்க வேண்டி , தன் வயதையும் , உடல் நலத்தையும் , முதுமையையும் யோசிக்காமல் ஓடி வருகின்றாள் . பரதனைத் தீயில் விழக்கூடாது என வற்புறுத்தும் கெளசலை , ஆயிரம் ராமர்கள் உனக்கு ஈடாக மாட்டார்கள் என்று பரதனைப் புகழ்ந்தும் பேசுகின்றாள் . அந்தப் பாடல் இதோ ! : பாடல் எண் 4122 “ எண்ணில் கோடி ராமர்கள் என்னினும் அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ புண்ணியம் எனும் நின் உயிர் போயினால் மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ !” ஆனாலும் பரதன் அவள் வார்த்தையையும் மீறித் தீக்குளிக்கத் தயார் ஆகின்றான் . தசரதச் சக்கரவர்த்தியின் மகன் ஆன நான் , வாக்குத் தவற மாட்டேன் அவரைப் போலவே . பாடல் எண் 4127 “ யானும் மெய்யினுக்கு இன்னுயிர் ஈந்து போய் வானுள் எய்திய மன்னவன் மைந்தனால் கானுள் எய்திய காகுத்தற்கே கடன் ஏனையோர்க்கும் இது இழுக்கு இல்வழக்கு அன்றோ ஆகவே நான் உயிர் துறப்பேன் என்று கூறி பரதன் தீக்குளிக்கத் தயார் ஆகும் வேளையிலேயே அனுமன் அங்கே வந்து சேருவதாய்க் கூறுகின்றார் கம்பர் . இங்கேயும் அனுமன் “கண்டேன் சீதையை” என்னும் தொனியிலேயே சொல்லுவதாய்ப் பாடல் வருகின்றது . அந்தப் பாடல் இதோ : பாடல் எண் : 4130 யுத்த காண்டம் “அய்யன் வந்தனன்: ஆரியன் வந்தனன் மெய்யின் மெய் அன்ன நின் உயிர் வீடினால் உய்யுமே அவன் ? “ என்று உரைத்து , உள் புகா கய்யினால் எரியைக் கரி ஆக்கினான் . “ என்று சொல்கின்றார் கம்பர் . இதை அடுத்துக் கம்பர் பட்டாபிஷேக நிகழ்ச்சிகளை வர்ணித்துவிட்டு அதோடு ராமாயணத்தை முடிக்கின்றார் . ஆனால் நாம் உத்தர காண்டத்தை நாளை முதல் பார்க்கப் போகின்றோம் . 78 கதை, கதையாம் , காரணமாம் - ராமாயணம் பகுதி 78 ராமரின் பட்டாபிஷேகம் முடிந்தது . அனைவருக்கும் பரிசுகள் அளிக்கப் பட்டு அனைத்துக் கொண்டாட்டங்களும் முடிந்து சில ஆண்டுகள் . சீதை முதல் முதலாய்க் கருவுற்றாள் . பட்டமகிஷி அல்லவா ?? அனைவரின் மனமகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும் ? ராமரும் குதூகலத்தில் ஆழ்ந்தார் . சீதையிடம் உனக்கு என்ன இஷ்டமோ அதை நிறைவேற்றித் தருவது என்னுடைய பொறுப்பாகும் , என்ன வேண்டுமோ கேள் , என்கின்றார் . சீதையின் நாவில் இது என்ன ??? சனி பகவான் வந்து உட்கார்ந்தானோ ??? சீதை கேட்கின்றாள் : “ கிழங்குகளையும் , கனிகளையுமே உண்டு நாம் வாழ்ந்து வந்த அந்தக் காட்டு வாழ்வை மீண்டும் ஒருமுறை வாழ ஆசைப் படுகின்றேன் . ரிஷி , முனிவர்களின் ஆசிரமத்தில் ஒரு நாளாவது அவர்களுடன் பொழுதைக் கழிக்க ஆசைப்படுகின்றேன் .” என்று சொல்ல , ராமரும் அதை நிறைவேற்றித் தருவதாய்ச் சொல்கின்றார் . அப்போது அவரைக் காண தூதர்கள் வந்திருப்பதாய்த் தகவல் வர , சீதையை அங்கேயே விட்டு விட்டு , ராமர் மட்டும் , வந்திருப்பவர்களைக் கண்டு தன் அரசவைக் கடமையை நிறைவேற்றும் வண்ணம் சென்றார் . அங்கே அறிவிலும் , விவேகத்திலும் , புத்தி சாதுரியத்திலும் சிறந்த பலர் அமர்ந்திருக்க பொதுவான பல விஷயங்கள் பேசப் பட்டன . பல முடிவுகள் எடுக்கப் பட்டன . அப்போது ராமர் அங்கே இருந்தவர்களில் குறிப்பாக பத்ரன் என்பவனைப் பார்த்து , “ ஒரு அரசன் தன் கடமையைச் சரிவரச் செய்து வருகின்றானா என்பது பற்றிக் குடிமக்கள் பேசுவதன் மூலமே தெரிந்து கொள்ளலாம் . நம் ராஜ்யத்தில் நீங்கள் சென்ற பகுதியில் உள்ள மக்கள் என்ன பேசிக் கொள்கின்றனர் ?? குறிப்பாக என் அரசாட்சியைப் பற்றியும் , என் தம்பிமார்கள் உதவியைப் பற்றியும் , என் மனைவியும் , பட்டமகிஷியுமான சீதையைப் பற்றியும் என்ன பேசிக் கொள்கின்றனர் என்பதை அறிய விரும்புகின்றேன் .” என்று கேட்கின்றார் . பத்ரன் முதலில் நாட்டு மக்கள் ராமரை மிகவும் புகழ்ந்து பேசுவதையும் , அவரது வீரத்தைப் பாராட்டுவதையும் மட்டுமே சொன்னான் . ஆனால் அவன் முழுதும் உண்மை பேசுகின்றானா என்பதில் சந்தேகம் வரவே ராமர் அவனைப் பார்த்து , “ முழுதும் உண்மையைச் சொல்லுங்கள் . குறைகள் ஏதேனும் என்னிடம் இருப்பதாய் மக்கள் பேசிக் கொண்டாலும் அவற்றையும் சொல்லுங்கள் . அந்தக் குறையைக் களைந்துவிடுகின்றேன் . மக்கள் மன மகிழ்ச்சியே ஒரு மன்னனுக்குத் தலையாய கடமை ஆகும் .” என்று கேட்கின்றார் . பத்ரன் உடனே இரு கைகளையும் கூப்பியவண்ணம் , ராமரைப் பார்த்து வணங்கிக் கொண்டே , “ அரசே , மக்கள் நீங்கள் கடல் மேல் பாலம் கட்டி கடல் கடந்தது பற்றியும் , ராவணனை வெற்றி கொண்டது பற்றியும் , சீதையை மீட்டது பற்றியும் புகழ்ந்தே பேசுகின்றனர் . உங்கள் அரசாட்சியிலும் யாதொரு குறையையும் அவர்கள் காணவில்லை . ஆனால் ராமருக்குப் பெண்ணாசை அதிகம் ஆகிவிட்டது . அதன் காரணமாகவே , ராவணனால் பலவந்தமாய் அபகரிக்கப் பட்டு , அவனால் மடியில் அமர்த்தப் பட்டு இலங்கைக்குக் கொண்டு சென்று அங்கே ராட்சதர்களின் காவலின் கீழ் அசோகவனத்தில் வைக்கப் பட்ட சீதையை ராமர் மீண்டும் சேர்த்துக் கொண்டு குடும்பம் நடத்துகிறாரோ ? எவ்வாறு சீதையை மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம் ?? நம் நாட்டு அரசனே இவ்வாறு இருந்தால் பின்னர் நாம் என்ன செய்வது ?? நம் மனைவிமார்களும் இவ்வாறு நடந்து கொண்டால் , இனி நாமும் அதைச் சகித்துக் கொண்டு வாழவேண்டுமே ?? “ யதா , ராஜா !, ததா ப்ரஜா !” {“ அரசன் எவ்வழி , அவ்வழி குடிமக்கள் “} என்று தானே சொல்கின்றனர் ?” என்று பல இடங்களிலும் , கிராம மக்கள் கூடப் பேசுகின்றனர் . ” என்று இவ்விதம் பத்ரன் ராமரிடம் சொன்னான் . ராமர் மனம் நொந்து மற்றவர்களைப் பார்த்து இதன் முழு விபரமும் உங்களில் யாருக்குத் தெரியும் எனக் கேட்க , அனைவரும் பத்ரன் சொல்வது உண்மையே எனவும் , பல இடங்களிலும் மக்கள் இவ்வாறே பேசிக் கொள்வதாயும் , வேதனையுடனேயே உறுதி செய்தனர் . ராமர் உடனேயே முகவாட்டத்துடனும் , நிலைகுலைந்த தோற்றத்துடனும் , தன் தம்பிகளை அழைத்து ஆலோசனை செய்தார் . வந்த தம்பிகள் மூவருக்கும் ராமரின் தோற்றம் அதிர்ச்சியைக் கொடுத்தது . சீதையைப் பிரிந்து இருந்தபோது இருந்த தோற்றத்தை விட மோசமான தோற்றத்தில் காட்சி அளித்த ராமரைப் பார்த்த மூவரும் , திடுக்கிட்டு நிற்க , தம்பிகளைப் பார்த்த ராமரின் கண்கள் அருவியாய் நீரைப் பொழிந்தது . கண்களில் கண்ணீருடனும் , மனதில் வேதனையுடனும் , தாங்க மாட்டாத துக்கத்துடனும் , ராமர் சொல்கின்றார் :” என் அருமைச் செல்வங்களான தம்பிகளே ! நீங்கள் மூவருமே எனக்குச் சொத்தைவிடப் பிரியமானவர்கள் ஆவீர்கள் . எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்னையைக் கேளுங்கள் .” என்று சொல்லிவிட்டு , ராமர் பத்ரன் கொண்டு வந்த செய்தியையும் , மற்றவர்கள் அதை உறுதி செய்ததையும் கூறுகின்றார் . “ தம்பிகளே ! நான் என்ன செய்வேன் ??? நான் பிறந்ததோ புகழ் பெற்ற இக்ஷ்வாகு குலத்தில் ! சீதை உதித்ததோ புகழ் பெற்ற ஜனகன் குலத்தில் ! ராவணனால் அபகரிக்கப் பட்ட சீதையை மீட்டதும் , உடனே அயோத்திக்கு அழைத்து வருதல் முறையில்லை என்றே அவள் மீது குற்றம் சொன்னேன் . ஆனால் என் உள் மனதுக்குத் தெரியும் , ஜானகி எந்தக் குற்றமும் அற்ற புனிதமானவள் என . எனினும் , என் வேண்டுகோளை ஏற்று அவள் அக்னிப்ரவேசமும் செய்துவிட்டாளே ??? வானவர்களாலும் , தேவர்களாலும் , அக்னியாலும் சீதை புனிதமானவள் என உறுதி செய்யப் பட்டிருக்க இப்போது இந்த ராஜ்யத்து மக்கள் இவ்விதம் பேசுகின்றார்கள் என்றால் என்ன செய்வேன் நான் ???? இந்த அவதூறுப் பேச்சு ஒரு தீ போல் பரவுகின்றது என நினைக்கின்றேன் . ஒரு அரசன் என்ற முறையில் நான் அதைத் தடுக்க வேண்டும் . நாட்டு மக்களை இந்த அவதூற்றைப் பரப்பா வண்ணம் தடுக்க வேண்டும் . என்னுடைய குடிமக்களின் நலனுக்காக நான் என் உயிரையும் கொடுத்தாகவேண்டும் . இன்னும் சொல்லப் போனால் என் உயிரினும் மேலாக நான் நினைக்கும் உங்களையும் நான் தியாகம் செய்ய வேண்டி இருக்கும் . அவ்வாறிருக்கும்போது சீதையை மட்டும் நான் எவ்வாறு அந்தப்புரத்தில் வைத்திருக்க முடியும் ??? சீதையை நான் தியாகம் செய்தே ஆகவேண்டும் . ஒரு அரசன் என்ற முறையில் நாட்டு மக்களுக்கு வந்திருக்கும் இந்த சந்தேகத்தை நான் போக்கியே ஆகவேண்டும் . ஆகவே லட்சுமணா ! சீதையை நீ உடனேயே ரதத்தில் வைத்து அழைத்துச் சென்று கங்கைக்கு மறுகரையில் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தின் அருகே விட்டுவிட்டு வந்துவிடு . துன்பம் என்னும் கடலில் நான் மூழ்கியே ஆகவேண்டும் என்ற விதியோ இது ??? வேண்டாம் , வேண்டாம் , லட்சுமணா , உன்னிடம் நான் மறுமொழி எதுவும் கேட்கவில்லை ! நீ எதுவும் பேசவேண்டாம் ! நான் சொன்னதைச் செய்து முடி ! அது போதும் ! என் அருமைச் சகோதரர்களே , இவ்விஷயத்தில் எந்த சமாதானமும் நீங்கள் எனக்குச் செய்ய வேண்டாம் .” “மேலும் சீதையே காட்டுக்குச் செல்ல ஆசைப் பட்டாள். ஆகவே லட்சுமணா, சீதையை உடனேயே அழைத்துச் சென்று கங்கையின் மறுகரையில் விட்டுவிட்டு வா! சுமந்திரரை ரதத்தைத் தயார் செய்யச் சொல்வாய்! இது என் ஆணை!” என்று கூறிவிட்டு ராமர் தனி அறைக்குச் சென்று விட்டார். லட்சுமணன் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது . பரதனும் , சத்ருக்கனனும் திகைத்து நின்றனர் . அக்னிப்ரவேசத்தோடு சீதையின் துயரம் முடியவில்லை . இப்போது மற்றொரு துயரம் அவளை ஆக்கிரமிக்கின்றது . மேலும் மேலும் சீதை படும் துயரங்களுக்குக் காரணம் என்ன ?? அதை நாம் கதையின் ஆரம்பத்திலேயே பார்த்தோம் இல்லையா ??? 79 கதை, கதையாம் காரணமாம் ராமாயணம் - பகுதி 79 பொழுது விடிந்தது , மற்றவர்கள் அனைவருக்கும் , ஆனால் சீதைக்கு இல்லை . எனினும் பேதையான சீதை இதை அறியமாட்டாள் . அவள் எப்போதும்போல் மனமகிழ்வுடனேயே இருந்தாள் . லட்சுமணன் ஆறாத்துயரத்துடன் சுமந்திரரிடம் சென்று , ரதம் தயார் செய்யும்படிக் கூறிவிட்டு , சீதையின் அந்தப்புரத்திற்குச் சென்று அவளை நமஸ்கரித்தான் . பின்னர் அவளிடம் , ராமர் அவளைக் கங்கைக் கரைக்கு அழைத்துச் செல்லுமாறு கட்டளை இட்டதாயும் , தயார் ஆகி வருமாறும் , ரதம் தயார் நிலையில் இருப்பதையும் தெரிவிக்கின்றான் . சீதை மிக்க மகிழ்வோடு , ஒவ்வொரு ரிஷி பத்தினிகளுக்கும் அளிக்கும் வகையில் பல்வேறு விதமான பரிசுப் பொருட்களை எடுத்து வைத்துக் கொள்கின்றாள் . மனதிற்குள் , ஒரு இரவிலேயே தன் கணவன் தன்னுடைய ஆசையை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்தது பற்றிய பெருமிதத்துடனும் , அநேகவிதமான பரிசுப் பொருட்களுடனும் , சீதை ரதத்தில் ஏறி அமர்ந்தாள் . அவள் நிலையைக் கண்ட லட்சுமணன் மிக்க வேதனை அடைந்தான் . ரதம் கிளம்பியது . ராமர் மனதில் சூன்யம் சூழ்ந்தது . ரதம் செல்லும்போதே சீதை லட்சுமணனிடம் தனக்கு ஏனோ மனதில் மிக்க வேதனை தோன்றுவதாயும் , அபசகுனங்கள் தோன்றுவதாயும் , வலது கண்ணும் , வலது தோளும் துடிப்பதாயும் கூறுகின்றாள் . மனதில் ஏதோ இனம் தெரியாத வெறுமை சூழ்வதாயும் சொல்லும் அவள் , “ லட்சுமணா , உன்னுடைய அண்ணனுக்கு ஏதும் நேராமல் நலமாய் இருக்கவேண்டும் , என் மாமியார்கள் , நலமாய் இருக்கவேண்டும் , மற்ற இரு மைத்துனர்களும் , உங்கள் மூவரின் மனைவிமாரும் , என் சகோதரிகளும் நலமாய் இருக்க வேண்டும் , இதற்காக ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன் .” என்று கூறினாள் . லட்சுமணன் அவளுடைய பரிசுத்தமான உள்ளத்தை மனதில் போற்றிய வண்ணம் , சற்று நேரத்தில் தனக்கு நேரப் போகும் துக்கத்தை உணராமல் மற்றவர்கள் கஷ்டப் படுவார்களோ என எண்ணித் தவிக்கும் அவளைத் தேற்றினான் . ரதம் கங்கைக் கரையை அடைந்தது . கீழே இறங்கி ஓய்வெடுத்துக் கொண்ட போது , துயரத்தை அடக்க முடியாமல் லட்சுமணன் “ ஓ “ வென வாய்விட்டுக் கதறி அழுதான் . பேதையும் , மனதில் கூடத் தனக்கு நேரிடப் போகும் அளவிட முடியாத இழப்பை நினைக்காதவளும் ஆன சீதை , ஒருவேளை ராமரை விட்டுச் சற்று நேரம் அதிகம் பிரிந்து இருப்பதாலேயே லட்சுமணன் துன்பப் படுகின்றான் என எண்ணி , அவனைத் தேற்றுகின்றாள் . “ நாம் அக்கரை சென்று அனைவரையும் பார்த்துவிட்டுப் பரிசுப் பொருட்களைக் கொடுத்துவிட்டுத் திரும்பி விடுவோமே ? ஏன் கலங்குகின்றாய் ? எனக்கும் ராமரைப் பிரிந்து அதிக நேரம் இருக்க முடியாது தான் , லட்சுமணா , வெட்கத்தை விட்டுச் சொல்கின்றேன் . நீ உன்னைத் தேற்றிக் கொள்வாய் !” என்று சொல்லவும் , லட்சுமணன் படகு தயாராகிவிட்டதால் அக்கரைக்குச் செல்லலாம் எனக் கூறுகின்றான் . அக்கரையைப் படகு அடைகின்றது . இருவரும் கீழே இறங்கியதும் , லட்சுமணன் தன் இரு கைகளையும் கூப்பிய வண்ணம் சீதையை வலம் வந்தான் . “ தாய்க்கு நிகரானவளே ! அனைவரும் ஏசப் போகும் ஒரு காரியத்தை என்னைச் செய்யும்படி என் அண்ணன் ஆணை ! நீ எவ்வளவு பரிசுத்தமானவள் என்பதும் , என் அண்ணனைத் தவிர மற்றொருவரை நினையாதவள் என்பதும் நான் அறிவேன் . தயவு செய்து , தேவி , இந்தக் காரியத்தை நான் என் முழு மனதோடு செய்வதாய் நினைத்து விடாதீர்கள் . காலம் , காலத்துக்கும் எனக்கு நேரிடப் போகும் பழிச் சொல்லுக்கு நான் காரணம் இல்லை !” என்று வேண்டுகின்றான் சீதையிடம் . சீதைக்கு இப்போது தான் சற்று மனக் கலக்கம் வருகின்றது . ஏதோ தனக்குச் சற்றும் உடன்பாடு இல்லாத ஒரு விஷயத்தை லட்சுமணன் இப்போது செய்யப் போகின்றான் என்பதை உணர்ந்தாள் . “ ஏதோ பெரும் சுமையை உள்ளத்தில் சுமந்திருக்கின்றாய் லட்சுமணா , அது என்ன ? சொல்லிவிடு ! மன்னரும் , என் கணவரும் ஆன ஸ்ரீராமர் உன்னிடம் ஏதோ விரும்பத் தகாத காரியத்தைச் செய்யச் சொல்லி இருக்கின்றாரா ?? சற்றும் மறைக்காமல் உள்ளது உள்ளபடிச் சொல்லிவிடு லட்சுமணா !” என்று சீதை கேட்க , லட்சுமணன் , பத்ரனிடம் ராமர் கேட்டு அறிந்த செய்தியைக் கூறுகின்றான் . மற்றவர்களும் அந்தச் செய்தியை உறுதி செய்ததையும் , நாட்டு மக்கள் பேசுகின்ற அவதூறு காரணமாய் , தேவர்களாலும் , அக்னியாலும் , போற்றப்பட்டு , வாழ்த்தப் பட்ட உங்களைக் காட்டில் விட்டுவிட்டு , ஆசிரமங்களுக்கு அருகில் அநாதை போல் விட்டுவிட்டு வருமாறு ராமர் என்னிடம் கூறி உள்ளார் . ஆனால் தேவி , இதைச் சொல்ல அவர் எவ்வளவு வேதனைப் பட்டார் என்பதும் , அவர் மனம் முற்றிலும் உடைந்துவிட்டது என்பதும் நான் அறிவேன் . மனம் தளரவேண்டாம் , தேவி , ரிஷி , முனிவர்கள் உங்களைக் கைவிட மாட்டார்கள் . அதிலும் இங்கே ரிஷிகளில் மிக உயர்ந்தவரும் , எங்கள் தந்தையான தசரதரின் நண்பரும் , ஆன வால்மீகியின் ஆசிரமம் உள்ளது . தாங்கள் விரும்பினால் அங்கேயே தங்கிக் கொள்ளலாம் . ராமரை மனதில் நினைத்தவண்ணம் அந்த ஆசிரமத்தில் வாழுமாறு தங்களை மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கின்ரேன் . உங்கள் சிறப்பு இன்னும் ஓங்கி ஒளி விட்டுப் பிரகாசிக்கவே இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கின்றது என நம்புகின்றேன் .” என்றான் லட்சுமணன் . சீதை அளவிடமுடியாத துயரத்துடன் கீழே வீழ்ந்தாள் . கதறி அழுதாள் . பின்னர் லட்சுமணனிடம் சொல்கின்றாள் . “ லட்சுமணா , ஒரு கணத்துக்கேனும் , மனதாலும் , உடலாலும் , நன்னடத்தையில் இருந்து தவறாத எனக்கு இப்படிப் பட்ட துன்பங்கள் நேருமளவுக்கு நான் என்ன பாவம் செய்தேனோ ??? என்னை பிரம்மதேவன் துன்பங்கள் அனுபவிப்பதற்கெனவே சிருஷ்டித்தானோ ?? என் பதியைப் பிரிந்து ஆசிரமத்தில் தனிமையில் நான் வாழவும் வேண்டுமோ ?? ஐயகோ ! தற்கொலை செய்து கொள்வோமெனில் ராமரின் குலவாரிசு என் வயிற்றில் வளருகின்றதே ! அதற்கும் முடியாதே !! ரிஷிகளிடம் நான் என்ன காரணத்தைச் சொல்லிக் கொண்டு ஆசிரமத்தில் தங்குவேன் ? ஒன்றும் புரியவில்லையே ! சரி , லட்சுமணா , நீ என்ன செய்ய முடியும் ? மன்னரின் ஆணை அதுவானால் நீ திரும்பிச் செல்வாய் ! ஆனால் மன்னருக்கு நான் தெரிவிக்க வேண்டிய செய்திகளைச் சொல்கின்றேன் . அவற்றை மன்னரிடம் நான் கூறியதாய்க் கூறுவாய் !” என்று சொல்கின்றாள் சீதை . 80 கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 80 தன்னிரு கைகளையும் கூப்பிய வண்ணம் சீதை சொல்லியதாவது :” லட்சுமணா , பாவியாகிய நான் மிகுந்த பாவம் செய்ததாலேயே இத்தகையதொரு தண்டனையை அனுபவிக்கின்றேன் . என் மாமியார்கள் அனைவரிடமும் , நான் அவர்களின் நலனைத் தவிர வேறொன்றையும் விரும்பவில்லை எனத் தெரிவிக்கவும் . மன்னரிடம் , நான் அவரைத் தவிர வேறொருவரை மனதிலும் நினைத்தவள் இல்லை என்பது அவருக்கே தெரியும் என்பதை அவருக்கு நினைவுபடுத்தவும் . மேலும் மன்னரிடம் நான் சொன்னதாய் இதைச் சொல்வாய் லட்சுமணா ! “ அரசே ! மக்களின் அவதூறுப் பேச்சைத் தாங்க முடியாமல் நீங்கள் என்னைத் துறந்திருக்கின்றீர்கள் . இது அரசனின் கடமை என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன் . ஆனால் எனக்கு உங்களைத் தவிர , வேறு கதி இல்லை அரசே ! ஒரு மனைவியாகவும் , உங்கள் பட்டமகிஷியாகவும் , உங்களுக்கு நேரும் , அவதூறிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் மாபெரும் கடமை எனக்கும் உள்ளது . ஆகையால் இந்த அவதூறு உங்களைப் பாதிக்கும் என்று நீங்கள் கருதுவதால் நானும் உங்களை விட்டு விலகியே இருக்கின்றேன் . உங்கள் மனதில் உங்கள் சகோதரர்களுக்கு நீங்கள் என்ன இடம் கொடுத்திருக்கின்றீர்களோ , அத்தகையதொரு இடம் குடிமக்களுக்கும் நீங்கள் கொடுத்து வருகின்றீர்கள் என்பதையும் நான் நன்கு அறிவேன் . “ என்னுடைய இந்த உடலும் , உள்ளமும் , நீங்கள் அருகாமையில் இல்லாததால் அடையப் போகும் , துன்பங்களைப் பற்றி நான் பொருட்படுத்தவில்லை . ஆனால் , அரசே , மக்களுடைய இந்தக் குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை என்பதை மட்டும் நீங்கள் அறிந்து கொண்டிருக்கின்றீர்கள் , அதை அவர்கள் உணரும் வகையில் தாங்கள் நடந்து கொள்வீர்கள் என்றும் நம்புகின்றேன் . திருமணம் ஆன ஒரு பெண்ணுக்குக் கணவனே , குரு , தெய்வம் அனைத்தும் என்றாகிவிடுகின்றது . ஆகவே நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொண்டு தங்கள் கட்டளைப்படி நடப்பேன் என உறுதி அளிக்கின்றேன் .” லட்சுமணா , இதை நீ நான் சொன்னதாய் ராமரிடம் கூறுவாயாக !” “ மேலும் லட்சுமணா , இதோ , என்னுடைய இந்த வயிற்றைப் பார் , கர்ப்பிணி ஆகிவிட்ட நிலையில் தான் , இன்னும் சில நாட்களில் குழந்தை பிறக்கப் போகின்றது என்னும் நிலைமையில் தான் நீ என்னைக் காட்டில் கொண்டு வந்து விட்டிருக்கின்றாய் என்பதையும் சற்றும் சந்தேகம் இல்லாமல் தெரிந்து கொள்வாய் !” என்று சொல்லிக் கொண்டே , சீதை தன் கர்ப்ப வயிற்றை லட்சுமணனுக்குத் தொட்டுக் காட்டினாள் . லட்சுமணன் கதறினான் . தலையைத் தரையில் மோதிக் கொண்டு அழுதான் . ” என் தாயே , நான் என்ன பாவம் செய்தேன் ?? தங்கள் திருவடிகள் தவிர , மற்றவற்றைக் காணாத என் கண்கள் , இன்று இந்தக் காட்சியைக் காணும்படி நேர்ந்ததா ?? இதுவும் நான் செய்த பாவம் தான் ! என்னால் இதைத் தாங்க முடியவில்லையே !” என்று கதறினான் லட்சுமணன் . பின்னர் சீதையை நமஸ்கரித்து வலம் , வந்து மீண்டும் படகில் ஏறிக் கங்கையைக் கடந்தான் . அக்கரையில் சுமந்திரர் ரதத்துடன் காத்திருந்தார் . இக்கரையில் நிர்க்கதியான சீதை செய்வதறியாது திகைத்து நின்றாள் . அவள் படகைப் பார்த்த வண்ணமே நிற்க அக்கரையை அடைந்த லட்சுமணன் , தேரில் ஏறிக் கொள்ளுவதும் , தேர் கிளம்புவதும் கண்களில் பட்டது . மனதில் வெறுமை சூழ்ந்து கொள்ள சீதை துக்கம் தாங்க முடியாமல் பெரியதாக அலறி அழுதாள் . காட்டில் கூவிக் கொண்டிருந்த குயில்களும் , ஆடிக் கொண்டிருந்த மயில்களும் , விளையாடிக் கொண்டிருந்த மற்ற விலங்கினங்களும் தங்கள் வேலையை நிறுத்தி விட்டு சீதை அழுவதைக் கவனித்ததோ என்று எண்ணும்படிக் காட்டில் சீதையின் அழுகுரல் தவிர வேறொன்றும் ஒலிக்கவில்லை . 81 கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 81 காடே மெளனத்திலும் , சோகத்திலும் ஆழ்ந்தது . ஆழ்ந்த அந்த மெளனத்தில் , “ ராமா , என்னை ஏன் பிரிந்தீர் ?” என்ற சீதையின் கூவலும் , ஓலமும் மட்டுமே கேட்டன . அருகாமையில் இருந்த வால்மீகியின் ஆசிரமத்தின் உள்ளே போய்த் தவத்திலும் , வேள்வியிலும் , தியானத்திலும் ஆழ்ந்து போயிருந்த ரிஷி , முனிவர்களின் நெஞ்சாழத்தைக் கசக்கிப் பிழிந்தது அந்த ஓலக் குரல் . ரிஷிகளின் மகன்கள் , நெஞ்சு பிளக்கும்படியான இந்தக் கதறலைக் கதறி அழும் பெண் யாரோ எனப் பார்க்க வேண்டி விரைந்து வந்தனர் . அங்கே தேவேந்திரனின் இந்திராணியையும் , அந்த ஈசனின் உமையவளையும் தோற்கடிக்கக் கூடிய அழகுடன் கூடிய ஒரு கர்ப்பிணிப் பெண்ணைக் கண்டனர் . அழுதது அவள் தான் எனவும் தெரிந்து கொண்டனர் . அவள் நிலையைக் கண்டு பரிதாபம் அடைந்து உடனேயே ஆசிரமத்தின் தலைவர் ஆன வால்மீகி ரிஷியை அடைந்து அவரிடம் , “ மிக மிக உயர்ந்த ஒரு பெண்மணி , ஒரு பேரரசனுக்குப் பட்ட மகிஷியோ என எண்ணும்படியான தோற்றம் உடையவள் , சாட்சாத் அந்த மகாலட்சுமியே பூமிக்கு வந்துவிட்டாளோ என்று எண்ணும்படியாக இருப்பவள் , அத்தகைய ஒரு மங்கையர்க்கரசி , நம் ஆசிரமத்தின் வாசலிலே நதிக்கரையிலே அழுது கொண்டு இருக்கின்றார் . விண்ணிலிருந்து , மண்ணுக்கு வந்துவிட்ட தெய்வீகப் பெண்மணியோ என எண்ணுகின்றோம் . அவர் சாதாரணப் பெண்ணாய்த் தோன்றவில்லை . என்றாலும் அவர் நிலைமை பரிதாபமாகவே உள்ளது .” என்று சொல்கின்றனர் . தன் தவவலிமையாலும் , தியானங்கள் பல செய்தமையாலும் , நடந்தது , நடப்பது , நடக்கப் போவது அனைத்தையும் அறிந்து கொள்ளும் திறன் படைத்த வால்மீகி ரிஷியானவர் , ஆசிரமத்தின் வாயிலுக்கு வந்திருப்பது சாட்சாத் அந்த ஸ்ரீராமனின் மனைவியான சீதைதான் என அறிந்து கொள்கின்றார் . சீதை இருக்குமிடம் நோக்கி வேகமாய்ச் செல்கின்றார் . சீதையைப் பார்த்து ஆறுதல் மொழிகள் கூறுகின்றார் :” ஜனகரின் மகளும் , தசரதரின் மருமகளும் , ஸ்ரீராமனின் மனைவியுமான சீதையே , உனக்கு நல்வரவு ! உன் துயரங்களைத் துடைத்துக் கொள்வாயாக ! உன் கணவனிடம் நீ மாறாத விச்வாசமும் , பேரன்பும் பூண்டவள் என்பதை நான் நன்கறிவேன் . மாதரசியே ! கலங்காதே ! நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் நான் செய்த புண்ணியத்தின் காரணமாய் அறியப் பெற்றேன் . உன் தூய்மையை நான் நன்கு அறிவேன் , மாசற்றவளே ! திருமகளுக்கு நிகரானவளே ! நீ எந்தப் பாவமும் செய்யாதவள் என்பதையும் நான் நன்கறிவேன் . இந்த ஆசிரமத்தில் ரிஷிகளின் பத்தினிமார்கள் வாழ்கின்றனர் . அவர்கள் தவவழிகளை மேற்கொண்டவர்கள் . உன்னைத் தங்கள் மகள் போல் கண்ணும் , கருத்துமாய்ப் பாதுகாப்பார்கள் . உனக்குத் தேவையான அனைத்தும் செய்து கொடுப்பார்கள் . பெண்ணிற் சிறந்தவளே ! உன்னுடைய பாதுகாவலனாக நான் பொறுப்பேற்கின்றேன் . நீ என்னுடைய இந்த வார்த்தைகளை முழுமையாக ஏற்றுக் கொண்டு இந்த ஆசிரமத்தை உன்னுடைய வீடாக நினைத்துக் கொண்டு , வேறொருவர் பாதுகாவலில் இருக்கின்றோம் என எண்ணாமல் , இங்கேயே தங்கி , உன் மனம் அமைதி பெறவும் , உன்னை மன அமைதி பெறச் செய்வதின் மூலம் நாங்கள் மனமகிழ்வு எய்தவும் கருணை புரிவாய் !” என்று வேண்டுகின்றார் . சீதையும் சம்மதிக்கவே , வால்மீகி அவளை அழைத்துச் சென்று , ஆசிரமத்தின் உள்ளே சென்று , மற்ற ரிஷிகளின் பத்தினிமார்களுக்கு சீதையை அறிமுகம் செய்து வைக்கின்றார் . சீதையின் மனத் துன்பத்தையும் , கணவனை விட்டு அவள் இங்கே வந்திருக்கும் காரணத்தையும் எடுத்துச் சொல்லி சீதை எந்தவிதத்திலும் துயர் அடையாமல் அவளைப் பாதுகாக்கவேண்டும் என்றும் தனக்குக் காட்டும் மரியாதைகள் போல் அதற்குச் சற்றும் குறைவில்லாமல் சீதையை மரியாதையுடன் நடத்த வேண்டும் எனவும் சொல்லிவிட்டு , அவள் தன் பாதுகாவலில் இருப்பதாயும் தெரிவித்துவிட்டுத் தன் தவத்திற்குத் திரும்பச் சென்றார் வால்மீகி . இங்கே , லட்சுமணன் சுமந்திரர் தேரை ஓட்டத் தேரில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான் . அப்போது சுமந்திரரிடம் லட்சுமணன் பின்வருமாறு கேட்கின்றான் :” சீதையை ராமர் பிரிய நேர்ந்தது ஒரு கொடூரமான நிகழ்ச்சி , இதை விதி என்று சொல்லுவதா ??? இந்த விதியில் இருந்து யாரும் தப்ப முடியாதா ?? விதியின் செயலை யாராலும் மாற்ற முடியாதா ? ராமரின் பலம் நாம் அறியாதது அல்ல . தேவர்கள் , அசுரர்கள் , ராட்சசர்கள் , கந்தர்வர்கள் என அனைவரையும் தம் பலத்தால் அடக்கி , ஒடுக்கும் வல்லமை பெற்றவர் . அப்படிப் பட்டவர் இப்போது குடிமக்களின் அவதூறுப் பேச்சால் தன் மனைவியை விலக்க வேண்டுமென்றால் ??? சீதை காட்டில் வாசம் செய்தபோதையும் விட , ராவணன் வசம் சிறைப்பட்டிருந்ததையும் விட மிக , மிகக் கொடூரம் ஆன கடுமையான பிரிவு இது . இதைத் தாங்க இருவர் மனதும் எவ்வளவு கஷ்டம் அடைந்திருக்கும் ??? நாட்டு மக்களின் அவதூறுக்காக சீதையைத் துறந்தது ராமருக்குப் பெரும் கஷ்டத்தையே தரக் கூடியது அல்லவா ?? இதனால் அவருக்கு என்ன லாபம் ??? நாட்டுமக்களுக்காக இத்தகையதொரு பெரும் தியாகத்தையும் அவர் செய்திருக்கவேண்டுமோ ?” என்று சொல்கின்றான் . சுமந்திரர் சற்று நேரம் ஒன்றும் பேசவில்லை . பின்னர் சற்று யோசித்துவிட்டுச் சொல்கின்றார் . “ இளவரசே ! இப்போது இப்படி நடப்பதற்காக வருந்திப்பயன் ஏதும் இல்லை . இது இப்படித் தான் , இவ்வாறுதான் நடக்கும் என்பதாக ஏற்கெனவே நிர்ணயிக்கப் பட்டுவிட்டது . ஜோதிடர்கள் கூறி இருக்கின்றனர் . தன் மனைவியை மட்டுமில்லாமல் , பிரியத்துக்கு உகந்த சகோதரர்கள் ஆன உங்களைக் கூட ராமர் பிரிய நேரிடும் என்றும் சொல்லி இருக்கின்றனர் . ராமர் பிறந்தபோது ஜோதிடம் பார்த்த ஜோதிடர்கள் , ராமர் தனக்கென எந்தவிதமான சுகம் நாடாமல் , மகிழ்ச்சியை நாடாமல் மற்றவர்களுக்கெனவே வாழ்வார் எனச் சொல்லி இருக்கின்றனர் . இது மட்டுமில்லை , இளவலே ! ஒருமுறை துர்வாசர் வசிஷ்டரின் ஆசிரமத்திற்கு வந்தபோது , அவரைக் காண உங்கள் தகப்பனும் , அயோத்தியின் அரசனும் ஆன தசரதச் சக்கரவர்த்தி வந்தார் . அப்போது அவருடன் நானும் சென்றிருந்தேன் . துர்வாசர் அப்போது உன் தகப்பனிடம் கூறிய செய்தி மிக மிக ரகசியம் ஆன செய்தி ! மற்றவர்களுக்கு இதைத் தெரிவிக்கக் கூடாது என்று ஆணை இடப்பட்டது எனக்கு . எனினும் இப்போது நீ படும் துயரைக் காண முடியாமல் அந்த ஆணையை மீறி உனக்கு நான் இந்தச் செய்தியைச் சொல்கின்றேன் லட்சுமணா ! இதைக் கேள் !” என்று சொல்ல ஆரம்பித்தார் சுமந்திரர் . 82 கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 82 சுமந்திரர் தொடர்ந்தார் . தன்னுடைய மகன்களான ராமர் , லட்சுமணன் , பரதன் சத்ருக்கனன் ஆகிய நான்கு சகோதரர்களின் வாழ்க்கை எவ்வாறு அமையும் எனத் தெரிந்து கொள்ள விரும்பிய தசரத மன்னன் அதை துர்வாசரிடம் கேட்டார் . அப்போது துர்வாசர் சொன்னார் . “ தசரத மன்னா , நன்கு கவனித்துக் கேட்பாய் ! முன்னொரு காலத்தில் அசுரர்கள் பிருகு முனிவரின் ஆசிரமத்தை அடைந்து அங்கே அடைக்கலம் புகுந்தனர் . பிருகு முனிவரின் மனைவியும் தன் கருணை உள்ளத்தால் அனைவருக்கும் அடைக்கலம் கொடுத்துக் காத்து வந்தார் . அதை அறிந்த தேவர்கள் இதை மகாவிஷ்ணுவிடம் கூற அவரும் கோபம் அடைந்து , காப்பாற்றத் தகுதி இல்லாத அசுரர்களைக் காப்பாற்றியதற்காக பிருகுவின் மனைவியின் தலையைத் தன் சுதர்சனச் சக்கரத்தால் அறுத்துத் தள்ளிவிட்டார் . மனைவியை மகாவிஷ்ணுவே கொன்றதைக் கண்ட பிருகு முனிவர் தன் நிலை மறந்து , தன்னை இழந்து , தன் மனைவியை இழந்தோமே என்ற பெரும் துயரத்தில் மகாவிஷ்ணுவைப் பார்த்து , “ கோபத்தினால் நிதானம் இழந்து , எந்தவிதமான பாவமும் செய்யாமல் நிரபராதியான என் மனைவியைக் கொன்ற நீர் , பாவங்களைப் போக்கும் வல்லமை படைத்தவர் . உம்மை நான் சபிக்கின்றேன் , வல்லமை படைத்தவரே ! நீரும் என் போன்ற ஒரு மனிதனாய்ப் பிறந்து , உன் அருமை மனைவியை இழந்து , துயருற்று , மனைவியைக் கட்டாயமாய்த் துறந்து , நீண்டகாலம் அந்த மனவேதனையுடனேயே வாழ்வீராக !” என்று பிருகு முனிவர் விஷ்ணுவிற்குச் சாபம் கொடுக்கின்றார் . எனினும் பிருகு முனிவருக்கு , மகாவிஷ்ணுவிற்கே சாபம் கொடுக்க நேரிட்டதை நினைத்து மிகுந்த மனக்கிலேசமும் , சங்கடமும் ஏற்பட்டது . செய்வதறியாது , பித்தன் போல் கலங்கினார் . ஆனால் விஷ்ணுவோ அவரைச் சமாதானம் செய்தார் . வேறொரு காரணத்திற்காகத் தான் மனித அவதாரம் எடுக்கவேண்டும் எனவும் , பிருகுவின் சாபத்தைத் தான் ஏற்பதாயும் , அந்த அவதாரத்தில் முழு மனிதனாகவே தாம் வாழப் போவதாயும் , ஆகவே பிருகு முனிவர் கலங்கவேண்டாம் எனவும் இதனால் உலகுக்கு நன்மையே ஏற்படும் எனவும் சொல்லித் தேற்றுகின்றார் . தசரதா ! இப்போது உனக்குப் பிறந்துள்ள இந்த ஸ்ரீராமன் அந்த சாட்சாத் மகாவிஷ்ணுவின் அவதாரமே எனப் புரிந்து கொள்வாயாக ! இவர் அனைத்தையும் துறந்து நல்லாட்சி புரிந்து , நீண்டநாட்கள் வாழ்ந்து மக்களுக்குத் தொண்டுகள் பல புரிந்து , பின் தன் மனைவியான சீதையின் மூலம் பிறந்த மக்களுக்கு ஆட்சியைப் பகிர்ந்தளித்துவிட்டு மேலுலகம் செல்லுவார் .” என்று கூறினார் . ஆகவே லட்சுமணா , ராமர் சீதையைப் பிரிவார் என்பதும் , அந்த சோகத்தை அவர் அனுபவிக்க வேண்டும் என்பதும் ஏற்கெனவே நிர்ணயிக்கப் பட்ட ஒன்று . இது துர்வாசர் மூலம் தசரதச் சக்கரவர்த்திக்கு பல ஆண்டுகள் முன்பாகவே எடுத்துச் சொல்லப்பட்ட ஒன்று லட்சுமணா ! இதை நான் உன் மற்ற சகோதரர்கள் எவரிடமும் இன்றுவரையில் சொன்னதில்லை . இனிமேலும் அவர்கள் எவருக்கும் இது தெரியவேண்டியதில்லை . லட்சுமணா , கவலை கொள்ளாதே , சீதை காட்டில் குழந்தைகளைப் பெற்றெடுப்பாள் . அந்தக் குழந்தைகள் மூலம் ரகுவம்சம் தழைக்கும் . எல்லாம் விதி விதித்ததற்குச் சற்றும் மாறாமலேயே நடக்கின்றது .” என்று தேற்றினார் சுமந்திரர் லட்சுமணனை . அயோத்தி வந்தடைந்த லட்சுமணன் ராமரிடம் சீதையைக் காட்டில் விட்டு வந்த செய்தியைச் சொல்லிவிட்டு , ராமருக்குத் துன்பம் நேராது எனத் தேற்றுகின்றான் . ராமரும் மனதைத் தேற்றிக் கொள்ளுகின்றார் . சில காலம் கழித்து “ லவணாசுரன் ” என்பவனைக் கொல்வதற்காக ராமர் சத்ருக்கனனை அனுப்புகின்றார் . லவணாசுரனைக் கொல்லச் செல்லும் வழியில் சத்ருக்கனன் வால்மீகியின் ஆசிரமத்தில் தங்குகின்றான் . அவன் அங்கே ஓர் இரவைக் கழிக்கின்றான் . அந்தச் சமயம் சீதைக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன . வால்மீகி முனிவருக்குச் செய்தி தெரிவிக்கப் பட்டு அவர் சீதையைக் காண வருகின்றார் . தன் கையில் இருந்த தர்பையை இரண்டாகக் கிள்ளி , ஆசிரமத்தின் வயது முதிர்ந்த பெண்ணிடம் கொடுத்து , தர்பையின் “ குசம் ” என்னும் மேல்பாகத்தால் , முதலில் பிறந்த குழந்தையையும் , தர்பையின் “ லவம் ” என்னும் கீழ்ப்பாகத்தால் இரண்டாவதாய்ப் பிறந்த குழந்தையையும் சுத்தம் செய்துவிட்டு , முறையே குழந்தைகளுக்கும் , லவன் , குசன் என்றே பெயர் சூட்டுகின்றார் . பின்னர் குழந்தைகள் பிறந்ததும் செய்யவேண்டிய வைதீக காரியங்களையும் முறைப்படி அவர் செய்து முடிக்கின்றார் . குழந்தைகள் எதிர்காலத்தில் பெரும்பேரும் , புகழும் பெற்று விளங்குவார்கள் எனவும் ஆசீர்வதிக்கின்றார் . சத்ருக்கனனுக்கும் இந்த விஷயம் தெரிவிக்கப் படுகின்றது . குழந்தைகள் பிறந்த செய்தி கேட்டு மிக்க மகிழ்வுற்ற சத்ருக்கனன் , அதன் பின்னர் லவணாசுரனை வீழ்த்தச் செல்கின்றான் . சென்று கிட்டத் தட்ட பனிரண்டு ஆண்டுகள் கழித்தே திரும்பும் , சத்ருக்கனன் , திரும்பும் வேளையிலும் வால்மீகியின் ஆசிரமத்தில் தங்குகின்றான் . இடைப்பட்ட பனிரண்டு வருடங்களில் லவனும் , குசனும் காண்போர் வியக்கும் வண்ணம் கண்கவரும் தோற்றத்துடனும் , தவவலிமையுடனும் , மிக்க அறிவுக் கூர்மை படைத்தவர்களாயும் , சகல சாஸ்திரவிதிகளை அறிந்தவர்களாகவும் ஆகிவிட்டதையும் காண்கின்றான் . அப்போது அவர்கள் இருவருமே வால்மீகி எழுதிய , எழுதிக் கொண்டிருந்த ராமாயணக் காவியம் பாடிப் பார்த்துக் கொண்டிருந்தனர் . அதைக் கேட்கும் வாய்ப்பு சத்ருக்கனனுக்குக் கிடைக்கின்றது . கேட்கும்போதே அவன் மனமானது பொங்கிப் பொங்கித் தவிக்கின்றது . எல்லையற்ற மகிழ்வுடனும் , அதே சமயம் அளவு கடந்த சோகத்துடனும் கூடிய இந்தக் காவியத்தைக் கேட்ட சத்ருக்கனன் ஒரு கட்டத்தில் தன் நினைவையே இழந்துவிட்டானோ எனத் தோன்றும்படி ஆயிற்று . தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்ட சத்ருக்கனன் வால்மீகியிடம் விடைபெற்று அயோத்தி நோக்கிச் சென்றான் . இப்போது இங்கே சற்றே நிறுத்திவிட்டு துளசிதாசர் , சீதையை ராமர் காட்டுக்கு அனுப்பியது பற்றியும் , லவ , குசர்கள் பிறந்தது பற்றியும் என்ன சொல்லுகின்றார் என்று பார்க்கலாமா ??? துளசிதாசரின் ராமாயணம் உத்தர காண்டம் துளசியின் ராமாயணம் , கம்பராமாயணத்தைப் போலவே , ராமரை ஒரு அவதாரம் எனவும் , சீதையை சாட்சாத் அந்த மகாலட்சுமியே எனவும் கூறி வந்திருக்கின்றது ஆரம்பம் முதலிலேயே . ஆகவே ராவணன் கடத்தியதும் , உண்மையான சீதை அல்ல , துளசியின் கருத்துப் படி . மாய சீதை தான் ராவணனால் கடத்தப் படுகின்றாள் . அசோகவனத்தில் சிறையும் இருக்கின்றாள் . பின்னர் அவள் தான் அக்னிப்ரவேசமும் செய்கின்றாள் . உண்மையான சீதை பூமியிலே மறைந்திருந்து வாழ்வதாயும் அக்னிப்ரவேசத்தின் போது பூமித் தாய் உண்மை சீதையை வெளியே கொண்டுவருவதாயும் துளசி சொல்கின்றார் . கிட்டத் தட்ட அதே தான் இப்போவும் சீதை நாடு கடத்தப் பட்டபோதும் துளசி சொல்கின்றார் . ஆனால் அவதூறு பேசுவது அனைத்து மக்களும் என்றும் துளசி சொல்லவில்லை . யாரோ ஒரு வண்ணான் சந்தேகப் படும் வகையில் நடந்து கொண்ட தன் மனைவியைக் கண்டிக்கும்போது , “ நான் என்ன ராமனா ?? பதினான்கு மாதங்களுக்கு மேல் இன்னொருவன் பாதுகாவலில் இருந்த மனைவியைத் திரும்ப அழைத்து வைத்துக் கொண்டதுபோல் வைத்துக் கொள்ள ?” என்று கேட்டதாயும் , அந்தப் பேச்சைக் கேட்ட தூதர்கள் ராமரிடம் வந்து சொன்னதும் , ராமர் சீதையைத் துறக்க முடிவு செய்ததாயும் துளசி ராமாயணத்தில் வருகின்றது . என்றாலும் துளசியின் ராமாயணப் படி ராமர் இப்போது துறப்பதும் உண்மையான சீதை அல்ல . சீதை மேலுலகு செல்லும் நேரம் வந்துவிட்டதாய்க் கூறி ராமர் அவளை மேலுலகம் அனுப்புவதாயும் , அவள் தோற்றம் மட்டுமே பூமியில் தங்கியதாயும் , அந்தத் தோற்றத்தையே ராமர் காட்டுக்கு அனுப்பியதாயும் துளசியின் ராமாயணப் பாடல்கள் கூறுகின்றன . அப்போது அந்த மாய சீதைக்குப் பிறக்கும் பையன்களே லவ - குசர்கள் என அழைக்கப் பட்டதாயும் சொல்கின்றார் துளசி . இந்த சகோதரர்கள் மாபெரும் வீரர்களாய்த் திகழ்கின்றனர் . இவர்கள் யாராலும் வெல்ல முடியாதவர்களாய் இருக்கின்றனர் . ராமர் அசுவமேத யாகம் நடக்கும்போது அவர் திக்விஜயத்திற்கு அனுப்பும் குதிரையை இவர்கள் பிடித்து வைத்துக் கொள்ளுகின்றார்கள் . குதிரையை மீட்காமல் அசுவமேத யாகம் செய்ய முடியாது . பெரும்போர் நடக்கின்றது . போர் புரிவது தன் உறவினருடன் என்பதை அறியாமலேயே இளைஞர்கள் இருவரும் போர் புரிகின்றனர் . பரதன் , சத்ருக்கனன் , லட்சுமணன் , விபீஷணன் , அனுமன் என அனைவருமே இவ்விரு இளைஞர்களால் தோற்கடிக்கப் பட்டு கடைசியில் ராமரே வருகின்றார் . ராமர் போர் புரியும் முன்னர் சற்று தூங்க , அந்த இளைஞர்கள் இடைப்பட்ட நேரத்தில் தாங்கள் பிடித்து வைத்த அனைவரையும் , காட்டத் தங்கள் அன்னையை அழைத்து வருகின்றனர் . சீதை அவர்களைப் பார்த்துவிட்டு , இவர்கள் அனைவரும் உங்கள் இருவரின் உறவினர்கள் . உங்கள் தந்தையின் சகோதரர்கள் என்று சொல்கின்றாள் . அதற்குள் அங்கே வால்மீகி வந்து தூங்கும் ராமரை எழுப்பி , லவ , குசர்களைக் காட்டி ராமரின் மகன்கள் எனச் சொல்வதாயும் , மகன்களை ஏற்ற ராமர் , சீதையை மீண்டும் சத்தியப் பிரமாணம் செய்யச் சொல்ல , சீதை , பூமிக்குள் செல்வதாயும் , அதன்பின்னர் , ராமரின் மறைவு பற்றிய விபரங்கள் வால்மீகி சொல்லி இருப்பதை ஒட்டியே வருகின்றது . லவ , குசர்கள் குதிரையைப் பிடிப்பது , கட்டுவது , தங்கள் சித்தப்பன்மார்களிடமும் , தந்தையின் நண்பர்களுடனும் போர் புரிந்து அனைவரையும் தோற்கடிப்பது போன்ற விபரங்கள் வால்மீகியில் இல்லை . ஆனால் துளசி ராமாயணத்தை ஒட்டிப் பல திரைப்படங்கள் , மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் வந்திருக்கும் காரணத்தால் அனைவருக்கும் மேற்கண்ட நிகழ்ச்சிகளே நடந்தவை என நினைக்கும்படியாக மனதில் பதிந்து விட்டிருக்கிறது . இது கொஞ்சம் வருத்தமாகவே உள்ளது . 83 கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 83 அநேகமாய் நம் ராமாயணம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றது . அதிலும் இந்த உத்தரகாண்டம் எழுதுவது என்பது மிக மிக அதிகமான துயரத்தைக் கொடுக்கும் ஒரு வேலை . என்றாலும் , நடந்தது இதுதான் , இப்படித் தான் என்பதாலும் , ராமரே , தன் கதையைத் தன் குமாரர்கள் வாயிலாகக் கேட்டிருக்கின்றார் என்பது வருவது இந்த உத்தரகாண்டப் பகுதியிலும் , என்பதாலும் , தனக்கு நேரப் போகும் முடிவையும் , ராமர் வால்மீகி வாயிலாகத் தெரிந்து கொள்கின்றார் என்பதும் இதிலேயே வருகின்றது . ஆகையால் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்றே உத்தரகாண்டப் பகுதி . தன் ஆசிரமத்தில் லவ , குசர்களை வளர்த்து வந்த வால்மீகி அவர்களை வேதம் , வில்வித்தை , அஸ்திரப் பிரயோகம் , மற்றும் பல கலைகளில் சிறப்புடன் கூடியவர்களாக வளர்த்து வந்தார் . கூடவே , பிரம்மாவின் அனுகிரகத்தாலும் , நாரதரின் அறிமுகத்தாலும் ராமரையும் , ராமரின் கதையையும் நன்கு அறிந்த வால்மீகி அதை ஒரு மாபெரும் காவியமாக இயற்றி வந்தார் . சத்தியத்திலிருந்து ஒரு வார்த்தை கூடப்பிறழாது என பிரம்மாவால் உறுதி அளிக்கப் பட்டிருந்த அந்தக் காவியத்தின் இறந்த காலம் , நிகழ்காலம் , எதிர்காலம் அனைத்தையும் பிரம்மாவின் அருளாலே கூறக் கைவரப் பெற்றிருந்த வால்மீகி அதை இசையுடன் பாட லவ , குசர்களே சிறந்தவர்கள் எனவும் முடிவுக்கு வந்தார் . ஆகவே லவ , குசர்களுக்கு அவற்றைப் பாடச் சொல்லிக் கொடுத்திருந்தார் . இரு இளைஞர்களும் ரிஷிகள் கூடிய சபையில் தங்கள் இனிமையான குரலால் ராமாயண காவியத்தைப் பாடி வந்தனர் . அப்போது தான் தற்செயலாக ஸ்ரீராமர் நடத்தி வந்த அசுவமேத யாகம் பற்றியும் , அங்கே ஒரு மாபெரும் வித்வத் சபை கூடுவதையும் அறிந்து கொண்டனர் இவ்விரு இளைஞர்களும் . நடப்பது தங்கள் வீட்டு விசேஷம் என்பதை அவர்கள் அறியவில்லை . அவர்களின் இளங்குரலில் அருமையான பாடல்களாய் ராமாயணம் பொழிய ஆரம்பித்தது . இனிய இன்னிசை மழையில் நனைந்த ரிஷிகள் யாகத்தின் செயல்பாடுகளுக்கு இடையே இவர்களைப் பாடவைத்து இசையைக் கேட்டு ஆனந்தித்ததோடு அல்லாமல் , தங்களிடம் உள்ள விலை உயர்ந்த பொருட்கள் எனத் தாங்கள் கருதும் , கமண்டலம் , மான் தோல் , காஷாய வஸ்திரங்கள் , மரவுரிகள் போன்றவற்றைப் பரிசாய்க் கொடுத்தனர் . சிறுவர்களை வாழ்த்தினார்கள் அந்த ரிஷி , முனிவர்கள் . மெல்ல , மெல்ல நகரம் பூராவும் விஷயம் பரவியது . யாரோ இரு சிறுவர்களாமே ? பார்க்க மிக , மிக அழகாய் இருக்கின்றார்களாம் ! தேவலோகத்துக் குமாரர்களோ ? மண்ணுலகத்தில் எந்த அரசன் பெற்றெடுத்த பிள்ளைகளோ ?? தெரியவில்லையே ! இனிமையாகப் பாடுகின்றனராமே , நம் அரசன் ராமனின் கதையை ! ஆஹா , இதோ கேட்கின்றது அல்லவா ?? அவர்களின் இன்னிசை ! “ ஜெகம் புகழும் புண்ணிய கதை ஸ்ரீராமனின் கதையே ! உங்கள் செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே !” என ஆரம்பித்துச் சிறுவர்கள் பாடவும் , அயோத்தி மக்களின் ஆரவாரங்கள் மன்னனின் அரண்மனை வரை சென்று கேட்டது . மன்னனாகிய ராமனின் செவியும் குளிரவேண்டாமா ??? மன்னன் அந்தச் சிறுவர்களை அரண்மனைக்கு அழைத்துவரச் செய்தான் . சிறுவர்கள் வந்தனர் ! ஆஹா , என்ன ஒளி பொருந்திய முகங்கள் ?? ஆனால் ?? இவர்கள் யார் ? இது என்ன ?? ஏன் மனம் இப்படிப் பதைக்கின்றது ?? என் கண்கள் நீரைப் பெருக்குகின்றன ?? சீதா , சீதா , நீ இல்லாமல் நான் எவ்வாறு தவிக்கின்றேன் என்பதையும் இந்தக் கதை சொல்லுமோ ?? சிறுவர்கள் பாட ஆரம்பிக்கின்றனர் தங்கள் தகப்பன் முன்னிலையிலேயே , பாடுவது தங்கள் கதை எனத் தெரியாமலும் , கேட்பது தங்கள் தகப்பனே என அறியாமலும் பாடுகின்றனர் . என்ன ஒரு கொடுமையான , கொடூரமான நிகழ்வு ?? இந்தப் பூவுலகில் எவருக்காவது இத்தகையதொரு கொடுமை நடந்துள்ளதா ? அனைவரும் கேட்கச் சிறுவர்கள் பாடினார்கள் தங்கள் தெய்வீகக் குரலில் . கேட்கக் கேட்க ராமருக்கு அரியாசனத்தில் இருப்புக் கொள்ளவில்லை . மெல்ல , மெல்ல , மெல்லக் கீழே இறங்கினார் . மக்களுள் ஒருவராகச் சரியாசனத்தில் அமர்ந்தார் . கதையைக் கேட்டார் . மனத் தவிப்பும் , கண்ணீரும் பெருக ஆரம்பித்தது . ராமர் மனதில் சந்தேகம் தோன்ற ஆரம்பித்தது . தொடர்ந்து பல நாட்கள் காவிய இசை தொடர்ந்தது சிறுவர்களின் குரலில் . ராமருக்குச் சந்தேகம் நிவர்த்தியாகிவிட்டது . இவர்கள் தான் பெற்றெடுத்த மகன்களே , சீதையின் குமாரர்களே என சர்வ நிச்சயமாய்ப் புரிந்துவிட்டது . இனிச் செய்யவேண்டியது என்ன ?? மனமோ சீதையக் காண ஏங்குகின்றது ! சற்றும் வெட்கமில்லாமல் தவிக்கின்றது . ஆனால் உலகம் சொல்லும் வார்த்தையை நினைத்துக் கவலை வருகின்றது ! என்ன செய்யலாம் ?? ராமர் சிந்தித்தார் . சபையில் கூடி இருந்த பெரியவர்களை எல்லாம் கலந்து கொண்டார் . பின்னர் ஒரு சில ஆட்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை வால்மீகியிடம் அனுப்பினார் தன் செய்தியுடன் ! என்ன செய்தி ?? மூன்றாம் முறையாகச் சீதைக்குச் சோதனை ! சத்திய சோதனை ! தாங்குவாளா அவள் ??? ராமர் அனுப்பிய செய்தி இது தான் : “ சீதை தூய்மையானவள் தான் என்பது நிச்சயம் ஆனால் , அவள் பாவம் செய்யவில்லை என்பது நிச்சயம் ஆனால் , அவள் இந்த மகாசபைக்கு வந்து அதை நிரூபிக்கட்டும் . தன் புனிதத் தன்மையை உறுதி செய்யட்டும் . இதற்கு சீதையும் சம்மதித்து , வால்மீகியும் ஒப்புதல் அளித்தால் சீதை இந்தச் சபைக்கு வந்து தன் புனிதத்தை அனைவரும் காண நிரூபிக்கட்டும் . சத்தியப் பிரமாணம் செய்யட்டும் .” செய்வாளா ???? 84 கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 84 மூன்றாம் முறையாக ஜனகன் மகளுக்குச் சோதனை காத்திருக்கின்றது . அதுவும் இம்முறை அவள் புகுந்த வீட்டிலேயே , யார் முன்னிலையில் சகல மரியாதைகளுடனும் , மருமகளும் , பட்டமகிஷியும் ஆனாளோ அந்த மக்கள் அனைவரின் முன்னிலையிலும் அவள் சபதம் செய்யவேண்டும் . சத்தியப் பிரமாணம் செய்து தன் தூய்மையை நிரூபிக்கவேண்டும் . தன்மானமுள்ள எந்தப் பெண்ணும் இதை உடனடியாக ஏற்க மாட்டாள் தான் . ஆனால் சீதை ஏற்றாள் . தன்மானம் இல்லாததினால் அல்ல . தன்மானம் அளவுக்கு அதிகமாய் இருப்பதாலேயே இதற்கு ஒரு முடிவு இதன் மூலம் கிட்டும் என்ற எதிர்பார்ப்பினாலோ , அல்லது அவள் தனக்குத் தானே ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டதாலோ ?? யார் அறிய முடியும் ??? எனினும் வால்மீகி முனிவரிடம் ராமரின் தூதர்கள் வந்து ராமரின் செய்தியைச் சொன்னதும் , வால்மீகி மட்டுமின்றி சீதையும் சம்மதித்தாள் , பெரும் சபையினரின் முன்னே தன் தூய்மையை நிரூபிக்க . வால்மீகி முனிவர் சீதை தூய்மையானவள் ஆகையால் அவள் சபதம் செய்ய எந்தத் தடையும் இல்லை , என்றே செய்தி அனுப்புகின்றார் ராமருக்கு . ராமரும் மனம் மகிழ்ந்தவராய் , சபையில் கூடி இருந்த மற்ற அரசர்களையும் , ரிஷி , முனிவர்களையும் பார்த்து மறுநாள் சீதை சத்தியப் பிரமாணம் செய்யப் போவதாயும் , அனைவரும் அதை வந்து நேரில் பார்க்கவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றார் . விருப்பமுள்ளவர்கள் யாராக இருந்தாலும் வரட்டும் , வந்து அந்த நிகழ்ச்சியைக் காணட்டும் என்கின்றார் ராமர் . ஆஹா , இந்த சத்தியப் பிரமாணத்தில் சீதை வென்று வந்துவிட்டாளானால் , அவளுடன் மீண்டும் கூடி வாழவேண்டும் என்ற ஆசை ராமரின் உள்மனதில் இருந்ததோ ?? தெரியவில்லை . ஆனால் ராமர் அத்தோடு விட்டாரா என்ன ?? யாகம் நடக்கும் இடத்திற்குச் சென்று அங்கே இருந்த ஜாபாலி , வசிஷ்டர் , வாமதேவர் , காச்யபர் , விஸ்வாமித்திரர் , துர்வாசர் , பார்கவர் , புலஸ்தியர் , மார்க்கண்டேயர் , மெளத்கல்யர் , பாரத்வாஜர் , கெளதமர் போன்ற ரிஷிகளிடமும் , சீதை மறுநாள் ராஜசபையில் சபதம் செய்யப் போவதாயும் அனைவரும் வந்து பார்க்கவேண்டும் எனவும் அழைக்கின்றார் . ராமர் அழைத்தது போக மக்களுக்கும் செய்தி பரவி அனைவரும் அயோத்தியை நோக்கி வரத் தொடங்குகின்றார்கள் . இதன் இடையே விண்ணுலக மாந்தருக்கும் செய்தி சென்றடைந்து அவர்களும் தயார் ஆகின்றனர் . அரக்கர்களும் , வானரர்களும் பெருமளவில் குவிந்து இந்த நிகழ்ச்சியைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர் . மறுநாளும் வந்தது . வால்மீகி ரிஷி சபைக்கு வருகின்றார் . அவர் பின்னே அதோ !!! சீதை ! என்ன இவளா சீதை ?? ஆம் , ஆம் , இவளே சீதை ! சபையில் இருந்த பெரியவர்கள் அனைவரும் கல்லாய்ச் சமைந்து போய் அமர்ந்திருக்க , இருகரம் கூப்பியபடியே வால்மீகிக்குப் பின்னால் மெதுவாய் நடந்து வந்தாள் சீதை . அவள் இதயத்தில் ராமர் தவிர வேறு யாரும் இல்லை என்பது அவள் கண்களில் இருந்து தெரிந்தது . சபையோர் சற்று நேரம் பேச்சற்று இருந்துவிட்டுப் பின்னர் மெதுவாய் சீதையை வாழ்த்தினார்கள் . அப்போது வால்மீகி பேச ஆரம்பிக்கின்றார் :” ராமா , தசரதன் புதல்வா ! நாட்டு மக்களின் அவதூறுப் பேச்சால் நீ என்னுடைய ஆசிரமத்துக்கு அருகே கொண்டு வந்து விட்டு விட்டுப் போன இந்த உன் மனைவி சீதை மிக மிகத் தூய்மையானவள் . இந்த இரு குழந்தைகள் ஆன லவனும் , குசனும் உன்னுடைய பிள்ளைகளே . அவதூறுக்கு அஞ்சி மனைவியைக் கைவிட்ட உன்னுடைய முன்னிலையில் இதோ , இப்போது சீதை சத்தியப் பிரமாணம் செய்வாள் . ராமா ! நான் பொய்யே சொன்னது இல்லை . பல்வேறு ஜப , தவங்களை மேற்கொண்டு இருக்கின்றேன் . அப்படிப் பட்ட நான் பொய் சொன்னால் என்னுடைய தவங்களின் பலன் எனக்குக் கிட்டாமல் போய்விடும் . மனதாலோ , வாக்காலோ , என் செய்கையாலோ நான் ஏதேனும் பாவம் செய்திருந்தால் எனக்கு என்னுடைய தவபலன் கிட்டாது . ஆகவே நான் உறுதியுடன் சொல்கின்றேன் . சீதை பாவம் செய்யாதவள் . சீதை பாவமற்றவள் என்றால் மட்டுமே என்னுடைய நன்னடத்தையின் பலன் எனக்குக் கிட்டும் .” “ அவள் தூய்மையானவள் என்பதாலேயே நான் அவளுடைய பொறுப்பை எடுத்துக் கொண்டு அவளுக்குப் பாதுகாப்புக் கொடுத்தேன் . உன்னையே தெய்வமாய்க் கருதும் இவள் , இதோ இப்போது அனைவர் முன்னிலையிலும் சத்தியப் பிரமாணம் செய்வாள் . ” என்று வால்மீகி சொல்கின்றார் . ராமர் தன் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓட , மறுமொழி சொல்கின்றார் . “ மகரிஷி , உங்கள் வார்த்தைகள் எனக்குள் மிக மன ஆறுதலையையும் , நம்பிக்கையையும் கொடுக்கின்றது . ஏற்கெனவேயே சீதை அக்னிப்ரவேசம் செய்து தேவர்கள் முன்பு தன் தூய்மையை நிரூபித்தாள் . அதன் பின்னரே நான் அவளை அயோத்திக்கு அழைத்து வந்தேன் . குற்றமற்ற என் மனைவியை அவதூறுப் பேச்சுக்கு அஞ்சியே நான் துறக்கவேண்டி வந்தது . ஆனால் அதனால் என் மனம் படும் பாடு சொல்ல முடியாது . இந்த இரு குமாரர்களும் என் மகன்களே என்பதிலும் எனக்குச் சந்தேகம் எதுவும் இல்லை . சீதையின் பால் நான் மிக்க அன்பு வைத்திருக்கின்றேன் என்பதை இந்த மாபெரும்சபையின் முன் நான் பிரகடனம் செய்கின்றேன் .” என்று சொல்கின்றார் . அப்போது சீதை , மெல்லிய குரலில் , தன்னிரு கைகளையும் கூப்பியவண்ணம் கீழ்க்கண்டவாறு சொல்கின்றாள் : “ ரகுகுலதிலகமான ஸ்ரீராமனைத் தவிர , வேறொருவரை நான் நினைத்ததில்லை என்பது உண்மையானால் , பூமித் தாயே , எனக்கு நீ இடமளிப்பாய் ! மனதாலும் , வாக்காலும் , சரீரத்தாலும் ராமனைத் தவிர வேறொருவர் என் சிந்தையில் இல்லை என்பது உண்மையானால் , அவரையே நான் வணங்கி நிற்பது உண்மையானால் , பூமித் தாயே , எனக்கு நீ இடமளிப்பாய் ! ராமரைத் தவிர , வேறொருவரை என் சிந்தையில் நான் நினைத்ததில்லை என்பது உண்மையானால் , பூமித் தாயே , எனக்கு நீ இடமளிப்பாய் !” என்று சீதை சொல்லி முடித்ததும் , பூமி பிளந்தது . அனைவரும் பேச்சு , மூச்சற்றுப் பார்த்துக் கொண்டிருக்க , பூமியில் ஒரு உயர்ந்த ரத்தின சிம்மாசனம் பலவிதமான அலங்காரங்களுடன் தோன்றியது . சிம்மாதனத்தில் அமர்ந்திருந்த பூமித்தாய் , தன்னிரு கரம் நீட்டி , “ மகளே , என்னிடம் வருவாய் !” என சீதையை அழைத்துத் தன்னருகில் அமர்த்திக் கொள்கின்றாள் . விண்ணிலிருந்து பூமாரி பொழிந்தது . சபையோர் அந்தக் காட்சியைப் பார்த்து ஆனந்த கோஷம் , கர கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தபோதே , சிம்மாசனம் மறைந்தது . அத்துடன் சீதையும் மறைந்தாள் . அனைவரும் திகைத்தனர் . உலகமே ஸ்தம்பித்து ஒரு கணம் அசையாமல் நின்றது . ராமரின் கண்களில் இருந்து கோபம் , ஆத்திரம் , துக்கம் ஆகியவை ஊற்றாகப் பிரவாகம் எடுத்தது . 85 கதை,கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 85 கண்களில் இருந்து கண்ணீர் அருவியாகக் கொட்ட ராமர் மனம் துயருற்று , மிக்க மனவேதனையில் ஆழ்ந்தார் . அந்தத் துக்கத்தினூடே அவர் கூறுகின்றார் :” இதுவரை அடையாத துக்கத்தை இன்று நான் அடைந்தேன் . தந்தை காட்டுக்கு அனுப்பியபோதும் இவ்வளவு துக்கம் அடையவில்லை . சீதையை ராவணன் தூக்கிச் சென்றபோதும் கடல்கடந்து சென்று அவளை மீட்டு வந்தேன் . இப்போது இந்த பூமியிலிருந்தும் அவளை நான் மீட்கவேண்டுமோ ?? ஏஏ , பூமாதேவி , இதே சீதையை நீ ஜனகன் வயலை உழும்போது உன்னிலிருந்து கொடுத்தாய் . ஆகையால் நீ எனக்கு மாமியார் முறை ஆவாய் அல்லவா ? என் மனைவியை என்னிடம் கொடுத்துவிடு , என் அன்பு மனைவியை திரும்பக் கொடு . இல்லையேல் உன்னை சர்வநாசம் செய்வேன் . உன் மலைகளைப் பொடிப் பொடியாக்குவேன் . நதிகளை வற்றச் செய்வேன் . காடுகளை அழிப்பேன் . உன்னை ஒன்றுமில்லாமல் செய்து சமுத்திரம் பொங்கி வந்து பூமி முழுதும் ஜலப்பிரளயம் ஆகும்படி செய்துவிடுவேன் . என் ஒரு அஸ்திரம் போதும் உன்னை அழிக்க !” என்று கூவுகின்றார் . அந்நிலையில் அங்கே அப்போது பிரம்மா பிரசன்னம் ஆகி , “ ராமா , நீ யார் ?? உன் நிலையை நீ மறந்தாயோ ?? உன் சீதை உனக்குத் திரும்பக் கிடைப்பாள் . நீ ஒரு மாசற்ற மனிதனாய் இருந்து , வாழ்ந்து , அரசாட்சி புரிந்தது பற்றிய இந்த மாபெரும் காவியம் , இந்தப் பூவுலகிலேயே தலை சிறந்த காவியமாய்த் திகழப் போகின்றது . ராமா , இதுவரை நீ அனுபவித்து வந்த சுக , துக்கம் மட்டுமின்றி இனி என்ன நடக்கப் போகின்றது என்பதையும் வால்மீகி எழுதியுள்ளார் . அதை நீயும் அமர்ந்து கேட்கவேண்டும் . உன் எதிர்கால நிகழ்ச்சிகளை விளக்கும் பகுதி அது . அனைவருடன் இதை நீ கேட்பாயாக !” என்று சொல்லி மறைய , சீதையின் சத்தியப் பிரமாணத்தைக் காண வந்திருந்த அனைத்து தேவர்களும் மறைந்து போகின்றனர் . ராமரும் அவ்வாறே காவியத்தின் அடுத்த பகுதியைக் கேட்க விருப்பம் தெரிவிக்க காவியம் மறுநாள் மீண்டும் விட்ட இடத்தில் இருந்து லவ , குசர்களால் பாடப் படுகின்றது . அந்தக் காவியத்தை லவ , குசர்கள் பாடி முடித்தனர் . ராமரும் கேட்டார் . அது என்னவென்று பார்ப்போம் . சீதை பூமிக்குள் சென்றதும் முற்றிலும் வெறுமையை உணர்ந்த ராமர் உலகே சூன்யமாகிவிட்டதாய் நினைத்தார் . யாகத்தை ஒருவாறு சீதையைப் போன்ற ஒரு பிரதிமையைத் தங்கத்தால் செய்து அதை வைத்துக் கொண்டு முடித்தார் . வந்த மன்னர்கள் விடைபெற்றுச் செல்ல , ராமர் மன அமைதியை இழந்து அயோத்திக்குத் திரும்புகின்றார் . சீதையைத் தவிர மற்றொரு பெண்ணிடம் அவர் மனம் செல்லவில்லை . பல்வேறு யாகங்களைச் செய்வதிலும் , நாட்டைப் பரிபாலனம் செய்வதிலும் மனத்தை நிலை நிறுத்தினார் . தர்மத்திலிருந்து சிறிதும் வழுவாமல் ஆட்சி நடத்தி வந்தார் . பருவங்கள் ஒத்துழைக்க , நாட்டு மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று மகிழ்வுடன் இருக்க , ராமரின் அன்னையர் ஒருவர் பின் ஒருவராய் இயற்கை எய்தினார்கள் . பின்னர் லட்சுமணன் மகன்கள் ஆன அங்கதன் , சந்திரகேது இருவருக்கும் முறையே காருபதம் , சந்திரகாந்தம் என்ற பிரதேசங்களுக்கு அரசனாக முடிசூட்டினார் ராமர் . பரதனின் மகன்கள் தக்ஷன் , புஷ்கலன் இருவருக்கும் பரதனால் வெல்லப் பட்ட கந்தர்வப் பிரதேசத்தில் அடங்கிய தக்ஷசீலம் , புஷ்கலாவதி ஆகிய இடங்களுக்கு அரசர் ஆக்கப் பட்டனர் . சத்ருக்கனன் மகன்கள் ஆன சுபாஹூ , சத்ருகாதி இருவரும் முறையே மதுரா , வைதிசம் போன்ற இடங்களை ஆண்டனர் . இவ்வாறு ஒருவாறு ராஜ்யப் பங்கீடு செய்த நிலையில் , ஒரு நாள் ஒரு முனிவர் ஒருவர் ராமரைக் காண வந்தார் . ராமரின் அரண்மனை வாயிலுக்கு வந்த முனிவர் , அங்கே அப்போது இருந்த லட்சுமணனைப் பார்த்து , ” ஒரு முக்கியமான காரியமாக ராமனைக் காண நான் இங்கு வந்திருக்கின்றேன் . நீ சென்று ராமனிடம் என் வரவைச் சொல்வாயாக !” என்று அனுப்ப லட்சுமணனும் , ராமரிடம் சென்று தெரிவிக்கின்றான் . ராமரின் அனுமதி பெற்று லட்சுமணன் அந்த முனிவரை ராமனிடம் அழைத்துச் செல்கின்றான் . அவரைப் பார்த்து ராமர் , “ தங்கள் வரவு நல்வரவாகட்டும் . என்ன காரியமாக வந்தீர்கள் ? யாரால் அனுப்பப் பட்டீர்கள் ? கொண்டு வந்த செய்தி என்ன ?” என்று கேட்கின்றார் . அந்த முனிவர் , ” மிக மிக ரகசியமான ஒரு செய்தியைத் தாங்கி நான் வந்திருக்கின்றேன் . அந்தச் செய்தியை நீங்கள் மட்டுமே கேட்கவேண்டும் . வேறு யார் கேட்டாலோ , அல்லது நாம் பேசும்போது யார் பார்த்தாலோ , அவன் உங்களால் கொல்லப் படத் தக்கவன் ஆவான் .” என்று கூறுகின்றார் . ராமர் “ அப்படியே ஆகட்டும் !” என்று சம்மதம் தெரிவித்து , லட்சுமணனைப் பார்த்து , “ லட்சுமணா ! நீ சென்று கதவின் அருகில் நிற்பாய் ! நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளும்போது யாரும் உள்ளே வராமல் பார்த்துக் கொள்வாய் ! அப்படி மீறி யார் பார்க்கின்றார்களோ , அல்லது கேட்கின்றார்களோ , அவன் என்னால் கொல்லப் படுவான் !” என்று சொல்கின்றார் . லட்சுமணன் சென்று வாயிற்கதவை அடைத்துவிட்டு நிற்கின்றான் காவலுக்கு . உள்ளே வந்தவருக்கும் , ராமருக்கும் பேச்சு வார்த்தை தொடங்குகின்றது . அரண்மனை நுழைவாயிலில் துர்வாச முனிவர் மிக , மிக வேகத்துடனும் , கோபத்துடனும் வந்து கொண்டிருக்கின்றார் . 86 கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம்- பகுதி 86 ராமரும் , வந்த முனிவரும் பேச ஆரம்பித்தனர் . லட்சுமணன் வெளியே சென்ற பின்னால் ராமர் வந்த முனிவரைப் பார்த்து ,” தாங்கள் யார் ? தாங்கள் சொல்ல விரும்பியது எதுவாய் இருந்தாலும் தயங்காமல் என்னிடம் சொல்லலாம் .” என்று சொல்ல , முனிவர் சொல்கின்றார் . “ ராமா , நான் பிரம்மதேவனால் அனுப்பப் பட்டிருக்கின்றேன் . அவர் தங்களிடம் தெரிவிக்கச் சொன்ன செய்தி இதுதான் . “ படைப்புக்கடவுள் ஆன பிரம்மதேவன் ஆன நான் படைப்புத் தொடங்கிய போது உங்களால் படைக்கப் பட்டு உங்கள் மகன் ஆனேன் . இவ்வுலகைக் காக்க வேண்டி தாங்கள் உலகில் அவதரிக்க முடிவு செய்து , அங்கு வாழும் காலத்தையும் தாங்களே நிர்ணயம் செய்திருந்தீர்கள் . அந்தக் காலம் முடியும் நாள் நெருங்கிவிட்டது . ராவணனின் வாழ்க்கையை முடிக்கவேண்டி மனித உருவெடுத்து அவனை அழித்த தங்களுக்கு , தாங்களே நிர்ணயம் செய்து கொண்ட வாழ்க்கை முடிவை எய்தி விட்டது . ஆகையால் உங்களிடம் நான் “ மரண தேவனை ” அனுப்பி உள்ளேன் . இனி தங்கள் முடிவு . இன்னும் சில காலம் பூமியில் வாழ்ந்து பூவுலக மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் , பாதுகாவல் செய்யவேண்டும் என்று நீங்கள் கருதினால் அவ்விதமே ஆகுக ! இல்லை தாங்கள் தங்கள் உரிய இடத்திற்குத் திரும்பவேண்டும் என்று நினைத்தாலும் அவ்விதமே ஆகுக !” என்று சொல்கின்றார் வந்த மரண தேவன் . ராமரும் அதை ஏற்று இந்தச் செய்தி தனக்கு மகிழ்வையே அளிப்பதாயும் , வந்த காரியம் முடிந்த பின்னரும் , இங்கே தாமதிப்பதில் அர்த்தம் இல்லை , இதில் சிந்திக்கவும் எதுவும் இல்லை என்றும் சொல்லிவிட்டுத் தாம் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே திரும்புவதாயும் கூறுகின்றார் . அப்போது வாசலில் ஒரே சத்தம் , இரைச்சல் , வாக்குவாதம் . ராமர் என்னவென்று பார்க்கத் திரும்புகின்றார் . அப்போது லட்சுமணன் தடையை மீறி உள்ளே வரப் பார்க்கின்றான் . அடடா , என்ன இது ??? லட்சுமணன் காவல் இருந்த வேளையில் அரண்மனைக்கு வந்த துர்வாசர் ராமரைக் காணவேண்டும் என விரும்ப ராமர் தனி அறையில் வேறு யாரோ ஒரு முனிவருடன் மந்திராலோசனையில் ஈடுபட்டிருப்பதாய்க் கேள்விப் பட , அங்கே வந்து சேருகின்றார் . அங்கே காவலுக்கு இருந்த லட்சுமணன் திகைத்துப் போகின்றான் . துர்வாசரின் கோபம் மூவுலகும் அறிந்ததே . சாட்சாத் அந்த ருத்ரனின் அம்சமே ஆன அவரிடமிருந்து நாம் எவ்வாறு தப்பிப்பது ?? என்றாலும் மிக்க பணிவோடு துர்வாசரிடம் , வந்த காரியம் என்னவெனத் தன்னிடம் தெரிவிக்குமாறும் , தான் அதை நிறைவேற்றுவதாயும் கூறுகின்றான் . ராமரைத் தற்சமயம் காண இயலாது எனவும் மிக மிக விநயத்துடன் கூறுகின்றான் . ஆனால் துர்வாசரோ லட்சுமணனிடம் மிக மிகக் கோபத்துடன் கூறுகின்றார் . “ லட்சுமணா , என்னையா தடுக்கின்றாய் ? நான் இப்போது உள்ளே சென்றே ஆகவேண்டும் . நீ என்னைத் தடுத்து நிறுத்தினால் உன்னை மட்டுமின்றி , உன் சகோதரர்கள் மட்டுமின்றி , இந்த நாட்டையே சபிப்பேன் . இந்த நாட்டு மக்களையும் சபிப்பேன் . உடனே உள்ளே சென்று ராமனிடம் நான் வந்திருக்கும் செய்தியைத் தெரிவிப்பாயாக ! இல்லையேல் என் கோபம் கட்டு மீறிப் பாயும் .” என்று சொல்கின்றார் . லட்சுமணன் சிந்தித்தான் . துர்வாசர் தன்னை மட்டும் சபிப்பார் என நினைத்தால் இது என்ன பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுவிட்டார் ? நாட்டு மக்களுக்கும் சாபம் கிடைக்கும் என . என்ன , இப்போது அண்ணன் சொல்லை மீறி உள்ளே சென்றால் எனக்கு மட்டுமே மரண தண்டனை . மொத்த நாடும் சாபத்தால் பீடிக்கப் பட்டு வருங்காலமே துயரில் ஆழ்வதற்குப் பதிலாய் , நாம் ஒருவன் எது வந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டியது தான் . நடப்பது எதுவானாலும் அது தனக்கே நேரட்டும் என நினைத்த வண்ணம் உள்ளே செல்கின்றான் லட்சுமணன் . ராமருக்கு துர்வாசர் உடனே பார்க்க வேண்டும் என்று சொன்னதைத் தெரிவிக்கின்றான் லட்சுமணன் . ராமரும் தன் கோபம் , திகைப்பு ஆகியவற்றைக் காட்டிலும் துர்வாசர் உடனே கவனிக்கப் படவேண்டியவர் என்று கருதி உடனேயே சென்று முனிவருக்கு முகமன் கூறி வரவேற்றார் . துர்வாசரும் , தான் மாபெரும் விரதத்தை நீண்ட காலம் இருந்து அன்று தான் அதை முடித்திருப்பதாயும் , விரதம் முடியும்போது உட்கொள்ளப் போகும் முதல் உணவை ராமர் கையால் பெற முடிவு செய்து அங்கே வந்ததாயும் சொல்கின்றார் . ராமரும் துர்வாசருக்கு எனப் பிரத்தியேகமாய் உணவு தயாரித்து அதை அவருக்கு அளிக்க முனிவரும் திருப்தியாக உண்ணுகின்றார் . பின்னர் ராமரையும் , மற்றவர்களையும் ஆசீர்வதித்துவிட்டுச் செல்கின்றார் . துர்வாசர் சென்ற பின்னர் நடந்தவைகளை நினைத்த ராமரின் மனம் பெரும் துக்கத்தில் ஆழ்ந்தது . முனிவர் உருவத்தில் வந்த மரண தேவன் விதித்த நிபந்தனை தன் அருமைத் தம்பி லட்சுமணால் மீறப்பட்டு விட்டதே ? அதனால் லட்சுமணன் தன்னால் கொல்லப் படத் தக்கவன் ஆகிவிட்டானே ?? நமக்கு வேண்டியவர்களையும் அன்புக்குரியவர்களையும் நாமே பிரிவதும் , நம் கையால் கொல்வதுமே நமக்கு ஏற்பட்ட விதியோ என எண்ணிக் கலங்கினார் ராமர் . தன் மந்திரி பிரதானிகளை ஆலோசனை கேட்கலாம் என யோசித்தார் . அப்போது அங்கே இருந்த லட்சுமணன் இதற்காகத் தாங்கள் வருந்த வேண்டாம் . அப்படி எதுவும் நடக்கவில்லை . இது காலம் இயற்றி உள்ள ஒரு சட்டம் . அதை நாம் மீற முடியாது . இது இப்படித்தான் நடக்கவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் . ஆகவே தாங்கள் என்னைக் கைவிட்டுவிட்டு காலத்துக்குத் தாங்கள் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றுங்கள் . சொன்ன சொல்லை ராமன் தவறினான் என்ற அவப்பெயர் உங்களுக்கு வரவேண்டாம் . வார்த்தை தவறுகின்றவர்கள் நரகத்திற்குத் தான் செல்வார்கள் .” என்று சொல்லி தான் தண்டனைக்குத் தயாராய் இருப்பதை ராமரிடம் தெரிவிக்கின்றான் . 87 கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 87 லட்சுமணனை என்ன செய்வது என்று ராமர் யோசித்தார் , தன்னுடைய மந்திரி , பிரதானிகளையும் , முக்கிய பெரியவர்களையும் அழைத்து , தன் சகோதரர்களையும் அழைத்து நடந்த விஷயத்தைக் கூறுகின்றார் . தன் குல குருவான வசிஷ்டரிடம் ஆலோசனை கேட்கின்றார் . வசிஷ்டர் , கூறுகின்றார் :” ராமா , உன்னுடைய முடிவு நெருங்கிவிட்டது என்பது நன்கு புரிகின்றது . லட்சுமணனிடம் இருந்து நீ கட்டாயம் பிரிந்தே ஆகவேண்டும் . இப்போது நீ லட்சுமணனைக் கைவிடுவதே சரியானது . காலம் மிகவும் சக்தி வாய்ந்தது . நீ கொடுத்த வாக்கை எக்காரணம் கொண்டும் தவறக் கூடாது . வாக்குத் தவறுதலைப் போன்ற ஒரு அதர்மம் வேறு எதுவும் இல்லை . அது ஒன்றே மூவுலகும் அழியக் காரணமாகிவிடும் , ஆகவே லட்சுமணனைக் கைவிடு !” என்று சொல்கின்றார் வசிஷ்டர் . ராமர் அனைவர் முன்னிலையிலும் லட்சுமணனைப் பார்த்து , ” நான் உன்னை விட்டு விட்டேன் , இனி உனக்கும் எனக்கும் எந்த விதமான உறவு கிடையாது . உற்றவனைக் கைவிடுதல் அவனைக் கொல்லுவதற்குச் சமம் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன . ஆகவே நான் உன்னை இப்போது கைவிடுவது , உன்னைக் கொல்வதற்குச் சமம் .” என்று கூறுகின்றார் . லட்சுமணன் கண்கள் குளமாகக் கண்ணீரோடு அங்கிருந்து வெளியே செல்கின்றான் . பின்னர் சரயூ நதிக்கரைக்குச் சென்று , அங்கே தர்ம சாஸ்திரப் படியும் , வேத நெறிகளின் படியும் சில , நியமங்களைக் கடைப்பிடித்து முடித்து , தன் மூச்சை அடக்கி , அங்கேயே அமர்ந்தான் . விண்ணில் இருந்து இந்திராதி தேவர்கள் தோன்றி , பல மஹரிஷிகளோடு அங்கே வந்து , லட்சுமணன் மீது பூமாரி பொழிந்து , அவனை மற்றவர்கள் கண்களுக்குத் தெரியாமல் விண்ணுலகம் அழைத்துச் சென்றனர் . இவ்விதம் லட்சுமணனும் பிரிந்ததும் , ராமருக்கு அரசனாய் இன்னும் ஆட்சி செலுத்தவேண்டுமா என்ற எண்ணம் தோன்றி , ஒரு நாள் அரச சபையில் அனைவர் முன்னிலையிலும் , தான் இனி அரசனாய் இருக்க விரும்பாததாயும் , பரதனுக்கு முடிசூட்டிவிட்டுத் தான் கானகம் செல்ல விரும்புவதாயும் சொல்கின்றார் . சபையில் கூடி இருந்த அனைவரும் துயரத்தில் மூழ்க , பரதனோ , தனக்கு அரசாட்சி வேண்டாம் என்றும் , ராஜ்யத்தின் மீது தனக்கு ஆசை இல்லை என்றும் சொல்கின்றான் . மேலும் ராமரின் இரு பிள்ளைகள் ஆன லவனும் , குசனும் முறையே அரசாளத் தகுதி பெற்றிருப்பதாயும் , தென் பகுதிக்குக் குசனும் , வட பகுதிக்கு லவனும் மன்னனாக முடிசூட்டிக் கொள்ளட்டும் என்றும் , தானும் ராமருடன் போக விரும்புவதால் உடனே செய்தியை சத்ருக்கனனுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் சொல்கின்றான் . அவனின் தீர்மானத்தைக் கேட்டு வசிஷ்டர் ராமரிடம் பரதன் சொன்னபடி செய்வதே முறையானது என்றும் அதற்கு ஒத்துக் கொள்ளுமாறும் சொல்கின்றார் . ராமரும் மீண்டும் சபையோரிடம் அவர்களின் சம்மதத்தைக் கேட்க அனைவரும் ஒருமித்த குரலில் நீங்கள் செல்லும் இடத்திற்கு நாங்களும் வருகின்றோம் , எங்களையும் அழைத்துச் செல்லுங்கள் . உங்கள் பின்னால் வருவதே எங்களுக்கு மிக விருப்பமானது என்று சொல்கின்றனர் . ராமரும் அவ்வண்ணமே இசைந்து , வட கோசலத்திற்கு லவனையும் , தென் கோசலத்திற்கு குசனையும் மன்னர்களாக முடி சூட்டுகின்றார் . நடந்த நிகழ்ச்சிகளைக் கேள்விப்பட்டு அங்கே வந்த சத்ருக்கனனும் , தங்கள் , தங்கள் மகன்களும் அரசாட்சியை முறையாகச் செய்வதாயும் , தானும் ராமருடன் வரப் போவதாயும் , கூறுகின்றான் . ராமர் மறுக்கக் கூடாது என்றும் வேண்டிக் கொள்கின்றான் . வானரர்கள் , விபீஷணனைச் சேர்ந்த அரக்கர்கள் என அனைவருக்கும் செய்தி தெரிவிக்கப் பட்டு அனைவரும் அயோத்தியில் வந்து குவிந்தனர் . ரிஷிகள் , கந்தர்வர்கள் , அனைவரும் வந்தனர் . சுக்ரீவன் தான் அங்கதனுக்கு முடிசூட்டிவிட்டு வந்திருப்பதாய்த் தெரிவிக்க , விபீஷணனும் அங்கே வந்து ராமருடன் செல்லும் நோக்கத்துடன் வந்து நிற்க , ராமர் அவனைப் பார்த்து , “ விபீஷணா , இக்ஷ்வாகு குல தெய்வம் ஆன அந்த ஜகந்நாதனை வழிபட்டு வருவாய் , சூரிய , சந்திரர் இருக்கும் வரையில் , இந்த பூமி இருக்கும் வரையில் நீ இலங்கையை ஆள்வாய் . மக்களைப் பாதுகாக்கும் கடமையில் இருந்து தவறக் கூடாது .” என்று சொல்கின்றார் . பின்னர் அனுமனைப் பார்த்து , “ நீ என்ன செய்யப் போகின்றாய் ?” என்று கேட்க , அனுமனோ பூமியிலேயே இருக்கப் போவதாய்ச் சொல்ல , ராமர் அனுமனிடம் , ” உன் விருப்பப் படியே ஆகட்டும் . என்னுடைய சரித்திரம் பேசப்படும் காலம் வரையில் நீ இந்தப் பூமியில் வாழ்வாய் !” என்று சொல்கின்றார் . மறுநாள் வந்தது . வசிஷ்டர் சாஸ்திரங்கள் கூறியபடி அனைத்து நியமங்களையும் செய்து முடிக்க , பரத , சத்ருக்கனர் பின் தொடர , ராமர் சரயூ நதிக்கரைக்குச் சென்றார் . பிரம்மாவும் , தேவாதி தேவர்களும் காட்சி கொடுக்க , வானம் அசாதாரணமானதொரு பிரகாசத்துடன் காட்சி கொடுக்க , காற்றில் நறுமணம் கமழ , பூமாரி பொழிய , தெய்வீக இசை இசைக்கப் பட , ராமர் சரயூ நதியில் இறங்கினார் . பிரம்மா நல்வரவு கூறுகின்றார் :” மஹாவிஷ்ணுவே , வருக , வருக , உங்கள் இடத்திற்கு மீண்டும் வருக . உங்கள் சகோதரர்களோடு உங்கள் இயல்பை அடைவீராக . உன்னை நன்கு அறிந்தவர் எவரும் இல்லை , உன்னால் அறியத் தக்கவன் , அழிவற்றவன் ஆகின்றான் .” என்று முகமன் கூறுகின்றார் . தேவாதி தேவர்களும் , ரிஷி , முனிவர்களும் ,” மங்களம் பெருகட்டும் !” என்று நல்வாழ்த்துக் கூற , ராமருடன் வந்த அனைவரும் நதியில் இறங்க அனைவருக்கும் அவரவர்களுக்கு உரிய நல்லுலகம் கிட்டியது . அனைத்து உலகங்களிலும் , அசையும் பொருட்களிலும் , அசையாப் பொருட்களிலும் , ஒவ்வொரு உயிரிலும் வியாபித்து இருக்கும் மஹாவிஷ்ணு தன் நிலையை அடைந்தார் . இந்த ராமாயண மாலா ரத்தினத்தை இதுவரை படித்தவர்கள் அனைவருக்கும் நன்றி . எல்லாம் அவன் செயல் . இயக்குவதும் , இயங்குவதும் அவனே . ஓம் நமோ நாராயணாய ! “ காயேந வாசா , மனஸேந்த்ரியைர்வா புத்யாத்மநாவா ப்ரக்ருதேஸ்வபாவாத் கரோமி யத்யத் ஸகலம்பரஸ்மை நாராயாணாயேதி ஸமர்ப்பயாமி !” 1 எங்களைப் பற்றி - Free Tamil Ebooks மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948 நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook:  https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus:  https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin   alagunambiwelkin@fsftn.org - Arun   arun@fsftn.org -   இரவி Supported by - Free Software Foundation TamilNadu,  www.fsftn.org - Yavarukkum Software Foundation  http://www.yavarkkum.org/