[] ஓம் நமச்சிவாயா- திருக்கைலை யாத்திரைத் தொடர் கீதா சாம்பசிவம் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை ஓம் நமச்சிவாயா- திருக்கைலை யாத்திரைத் தொடர் Copyright © 2014 by Creative Commons Attribution 4.0 International License.​. This book was produced using PressBooks.com. Contents - திருக்கைலை யாத்திரை - 1. ஓம் நமச்சிவாயா- 1 - 2. ஓம் நமச்சிவாயா-2 - 3. ஓம் நமச்சிவாயா-3 - 4. ஓம் நமச்சிவாயா-4 - 5. ஓம் நமச்சிவாயா-5 - 6. ஓம் நமச்சிவாயா-6 - 7. ஓம் நமச்சிவாயா-7 - 8. ஓம் நமச்சிவாயா-8 - 9. ஓம் நமச்சிவாயா-9 - 10. ஓம் நமச்சிவாயா-10 - 11. ஓம் நமச்சிவாயா-11 - 12. ஓம் நமச்சிவாயா-12 - 13. ஓம் நமச்சிவாயா-13 - 14. ஓம் நமச்சிவாயா-14 - 15. ஓம் நமச்சிவாயா-15 - 16. ஓம் நமச்சிவாயா-16 - 17. ஓம் நமச்சிவாயா-17 - 18. ஓம் நமச்சிவாயா-18 - 19. ஓம் நமச்சிவாயா-19 - 20. ஓம் நமச்சிவாயா-20 - 21. ஓம் நமச்சிவாயா-21 - 22. ஓம் நமச்சிவாயா-22 - 23. ஓம் நமச்சிவாயா-23 - 24. ஓம் நமச்சிவாயா-24 - 25. ஓம் நமச்சிவாயா-25 - 26. ஓம் நமச்சிவாயா-26 - 27. ஓம் நமச்சிவாயா-27 - 28. ஓம் நமச்சிவாயா-28 - 29. ஓம் நமச்சிவாயா-29 - 30. ஓம் நமச்சிவாயா-30 - 31. ஓம் நமச்சிவாயா-31 - 32. ஓம் நமச்சிவாயா-32 - 33. HOME SWEET HOME! - ஆசிரியர் பற்றி - Free Tamil Ebooks - எங்களைப் பற்றி 1 திருக்கைலை யாத்திரை இமயம் குறித்த பெருமை இந்தியர் அனைவருக்கும் சிறு வயது முதலே உண்டு.  அந்த இமயச் சிகரங்களில் ஒன்றான திருக்கைலை யாத்திரை என்பது எல்லாராலும் செல்ல முடிந்த ஒன்றல்ல.  மிகக் கடினமான யாத்திரை.  ஆனால் வருந்தத் தக்கது என்னவெனில் இந்த திருக்கைலை இந்தியர்கள் அனைவருக்கும் புண்ணிய ஸ்தலமாகவும் ஈசனே திருக்கைலாய நாதனாகவும் இருக்க, அது அமைந்திருக்கும் பகுதியோ சீனாவிடம் சென்றுவிட்டது. நினைத்த உடனே செல்ல முடியாத இடம்.  இதற்கும் நம் முன்னோர்கள், ஆசாரியர்கள் பலர் சென்று வந்துள்ளதாகக் கேள்விப் படுகிறோம்.  சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார்,ஒளவைப்பாட்டி போன்றோர் இங்கே சென்றுள்ளனர்.  காரைக்கால் அம்மையார் திருக்கைலையை மிதிக்கக் கூடாது எனத் தலையாலேயே தலைகீழாகச் சென்றார் எனக் கேள்விப் பட்டிருக்கிறோம். அத்தகைய புண்ணிய சீலர்கள் மிதித்த, நடந்த திருக்கைலையை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுவதிலும் ஆச்சரியம் இல்லை அல்லவா? நம்பன் றிருமலை நான்மிதி யேனென்று தாளிரண்டு மும்பர் மிசைத்தலை யானடத் தேற வுமைநகலுஞ் செம்பொன் னுருவனென் னம்மை யெனப்பெற் றவள் செழுந்தேன் கொம்பி னுகுகாரைக் காலினின் மேய சூலதனமே. அப்படிப் பட்ட  புகழ் வாய்ந்த திருக்கைலை யாத்திரை செல்வது என்பது சாமானியத்திலும் சாமானியமான எனக்குக் கிடைக்கப் பெற்றது என் வாழ்நாளின் தவப்பயனால் அன்றோ!  அத்தகைய யாத்திரையை எனக்கு முன்னரும் பலரும் சென்றிருக்கின்றனர்.  பலரும் எழுதி இருக்கின்றனர்.  என்றாலும் ஒவ்வொருவர் அனுபவங்களும் ஒவ்வொரு மாதிரியானவை.  இதிலே யாத்திரையின் போது நாங்கள் எதிர்கொள்ள நேர்ந்த சம்பவங்கள், சங்கடங்கள் என அனைத்தையுமே பகிர்ந்துள்ளதால் இனி வரும் நாட்களில் செல்வோருக்கு இதில் நாங்கள் செய்த தவறுகளை அவர்கள் தொடராமல் இருக்க ஏதுவாக இருக்கும்.  மேலும் நாங்கள் சென்றபோது இருந்ததை விட இப்போது சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிகிறோம். அதோடு ஹெலிகாப்டர் பயணமும் செய்து கொடுக்கின்றனர்.  இதில் சாலை வழியில் செல்லும் ஐந்து நாட்கள் போக, திரும்ப ஐந்து நாட்கள் என்ற பத்து நாட்கள் மிச்சப்படுத்தலாம்.  ஆனால் பணம் கூடுதல்.  என்றாலும் சாலை வழிப் பயணத்தில் எதிர்கொள்ளும் ஆபத்து இதில் நேராதிருக்கும் எனக் கைலை நாதன் அருளை நினைத்துச் செல்லலாம். யாத்திரைக்குத் தேவையான பொருட்களின் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது. எத்தனை நாட்கள் பயணம் ஆனாலும் இந்தப் பொருட்கள் பட்டியலில் மாற்றம் இருக்காது.  மேலும் இந்திய வழி, நேபாள வழி ஆகிய இரு வழிகளிலும் உள்ள நன்மைகள், தீமைகள் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. இந்திய வழி நீண்ட வழிப் பிரயாணம் என்றாலும் அதில் ஆபத்துக்கள் அதிகம் இருந்தாலும் அது தான் சரியான வழி.  நேபாள வழி குறுக்கு வழி என்பதோடு மருத்துவப் பரிசோதனைகள் இல்லாமல் செல்லும் வண்ணம் ஏற்பாடுகள் செய்கின்றனர்.  இதில் நம் உடல்நிலைக்கு நாமே முழுப் பொறுப்பு.  அதையும் நினைவில் கொள்ள வேண்டும்.  கைலைநாதன் அருளினால் நாங்கள் நல்லபடி சென்று வந்திருந்தாலும் பலரும் அவதிப்பட்டிருக்கின்றனர்.  உயிரும் இழந்திருக்கின்றனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.  இத்தகைய பிரயாணம் செய்ய ஆசைப்படுபவர்கள் இள வயதிலேயே செல்வது தான் சரியானது.  உடலில் இளமையும் வலுவும் இருக்கும்போது செல்வதே சிறப்பானது. மேலும் இந்திய வழியில் சென்றால் ஆதி கைலாசத்திலிருந்து வரிசையாக எல்லாக் கோயில்களும் பார்க்கவும் முடியும்.  மருத்துவ வசதிகளோடு பாதுகாப்பான பிரயாணமும் உறுதியாகக் கிடைக்கும். [pressbooks.com] 1 ஓம் நமச்சிவாயா- 1 ஓம் நமச்சிவாயா- திருக்கைலை யாத்திரைத் தொடர்! நமச்சிவாய வாழ்க!நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில்நீங்காதான் தாள் வாழ்க! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! சின்ன வயசிலே பள்ளிப் பாடத்தில் கைலாஷ்னு ஒரு மலை இருக்கிறதா பூகோளத்தில் படிச்சது தான். அது பற்றி அப்போ ஒண்ணும் குறிப்பிடத் தகுந்த மாதிரியா தோன்றியது இல்லை. அதுக்கு அப்புறம் ஒருமுறை ஆனந்த விகடனில் திரு நம்பியார் அவர்கள் கைலாய யாத்திரை போய் வந்தது பற்றி எழுதி இருந்தார். அட்டைப் படத்திலே போட்டுக் கெளரவித்து இருந்தார்கள். அப்பவும் இது எல்லாம் நாம் ஒரு காலத்தில் போகப் போகிறோம் என்ற மாதிரியான எண்ணம் எல்லாம் இல்லை. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் கைலாய மலை பற்றியும், மானசரோவர் பற்றியும் அறிய அறிய நாமும் ஒருமுறை போக முடியுமா என்ற எண்ணம் வந்தது. ஆனால் அது திபெத்தில் இருக்கிறதாலும், நடுவில் கொஞ்ச நாள் சீன அரசு யாத்திரீகர்களை அனுமதிக்காததாலும் இதெல்லாம் நம்மால் முடியாத ஒன்று என்ற நினப்புத் தான் இருந்து வந்தது. பிறகு அனுமதிக்கு இந்திய அரசு முயற்சி செய்து யாத்திரீகர்களை வடிகட்டி அனுப்பி வரும் விஷயம் தெரிந்ததும் ஆஸ்த்மா , உயர் ரத்த அழுத்தம் உள்ள நம்மால்இந்தப் பயணம் செய்ய முடியாது என்றே இருந்தேன். அதுக்கு அப்புறம் என் கணவரின் வேலை நிமித்தமாகவும், வேறு பல காரணங்களாலும் ஊர் ஊராகச் சுற்ற நேர்ந்த போதும் இந்த மாதிரி ஒரு நினைப்பு இல்லை. சமீபகாலமாக யாத்திரீகர்கள் அதிகம் போக ஆரம்பித்ததிலும்,அதைப் பற்றி எழுதியதைப் படிக்க நேர்ந்ததிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆசை துளிர் விட்டது. ஆனால் மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளானால் மறுக்கப் படும் என்ற உண்மைநெஞ்சைக் குடைந்து கொண்டிருந்தது. இந்தச் சமயத்தில் 2006 ஆம் வருடம் மே மாதம் போல் என் கணவர் தான் மட்டும் செப்டெம்பரில் போய் வருவதற்கு த் தேவையான ஆயத்தங்கள் செய்யஆரம்பித்தார்.அப்போது தான்தெரிந்தது மருத்துவப் பரிசோதனைக்கு உட்படாமலேயே நேபாளம் வழியாகப் போக முடியும் என்று. நேபாளம் போவதற்கு விசாதேவை இல்லை. அங்கிருந்து திபெத் போவதற்குத் தான் தேவை. என்ன செய்வது? இங்கே சென்னை, மயிலாப்பூரில் உள்ள “அன்னபூர்ணா யாத்திரா” நடத்துபவர்களைப் போய்ப் பார்த்தார். அவர்கள் எல்லா ஏற்பாடுகளையும் அவங்களே செய்து தருவதாகச் சொல்லிவிட்டு ஒரு நாள் வீட்டிற்கும் வந்தனர். அவங்க வீட்டிற்கு வந்து பாஸ்போர்ட் காப்பி வாங்க வந்த சமயம் என்னைப் பார்த்து விட்டு, “நீங்க வரலியா?” என்று கேட்க நான் என்னுடைய உடல் நிலையைச் சொன்னேன். அப்போது அவர் உங்களை விட உடல் நிலை மோசமானவர்கள் எல்லாம் வராங்க! தைரியமா வாங்க! விசா நாங்க குழுவாக வாங்குவதால் பிரச்னை இல்லை,” என்று சொல்லி என்னுடைய பாஸ்போர்ட் காப்பியும் வாங்கிப் போய் விட்டார்கள். இப்படியாக நான் போவதும் ஒரு மாதிரியாக உறுதி செய்யப் பட்டது. ஆனால் விஷயம் முதலில் யாருக்கும் சொல்லவில்லை. எங்களோட பையன், பெண்ணுக்குக் கூட விசா வந்ததும் தான் சொன்னோம். அப்போதும் இங்கே சென்னையில் உள்ள உறவினர்கள் கிட்டேயோ அல்லது என் கணவரின் வயதான அம்மாவிடமோ கூடச் சொல்லவில்லை. டெல்லி போனதும் அவங்க கிட்டே நேபாள் போகிறோம் என்று மட்டும் தான் சொன்னோம்.முக்திநாத் கோவிலுக்கு என்று நினைத்த அவர்கள் அதுக்கே கவலைப் பட்டார்கள். டெல்லியில் மாமியாரோடு தங்குவதாக இருந்த நான் திடீரென ஏற்பட்ட மாறுதலால் பயணத்திற்குத் தயாரானேன். ஒரு விதத்தில் சந்தோஷம் தான். அவரை மட்டும் தனியாக எப்படிஅனுப்புவது? என்று குழப்பமாக இருந்தது தற்சமயம் நானும் போவதால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆகஸ்ட் 30-ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டுத் தமிழ்நாடு விரைவு வண்டியில் டெல்லி போனோம். 2 ஓம் நமச்சிவாயா-2 செப்டெம்பர் 1-ம் தேதி டெல்லி போய்ச் சேர்ந்து அங்கிருந்து குர்காம்மில் உள்ள மைத்துனன் வீட்டிற்குப் போயாகி விட்டது. அங்கே நாங்கள் ஒரு மாதமாவது தங்கப் போகிறோம் என நினைத்த என் மாமியாரிடம் என் கணவர் நாங்கள் 3-ம் தேதி விமானத்தில் நேபாள் போவதாய்க் கூறியதும் ஏமாற்றம் அடைந்தார். அப்போதும் எங்கள் முழுப் பயணத்திட்டத்தை நாங்கள் என் மைத்துனனிடமும் கூறவில்லை. எல்லாரும் பயப்படுவார்கள் என்பதோடு ஒரு வேளை ஆதரவு தெரிவிக்காமல் இருந்தால் என்ன செய்வது என்ற எண்ணம் தான். என் பையனுக்கு முழு விவரமும் தெரிந்திருந்தும் எங்களை ஆர்வத்தில் இருந்து தடுக்கக்கூடாது என்று பேசாமல் இருந்து விட்டான். இதனால் என் பெண்ணோ எங்களுடன் சரியாகப் பேசக்கூட முடியாமல் திணறினாள். எங்களுக்கு அப்போது அது ஒன்றும் தெரியவில்லை. போவதற்கு வேண்டிய சாமான்கள் எல்லாம் சென்னையிலே எங்களிடமே இருந்தாலும், trekking shoe, wollen socks, rain coat போன்றவை டெல்லி போய் வாங்கிக் கொண்டு, 3-ம் தேதி மாலை 3-00P.M. அளவில் விமான நிலையம் போனோம். எங்களுடன் யார், யார் வருகிறார்கள் என்ற விவரம் ஒன்றும் எங்களுக்குத் தெரியாது. என் கணவர் ஒரே ஒரு முறை “சென்னை, மயிலாப்பூரில் நடுத்தெருவில் உள்ள அன்னபூர்ணா யாத்திரா சர்வீஸுக்குப் போனதோடு சரி. அப்புறம் அவங்க ஆள் “ஆதி” என்பவர் வந்து விசாவிற்காக வேண்டிய பாஸ்போர்ட் காப்பி வாங்கிப் போனார். எல்லாப் பேச்சு வார்த்தையும் தொலைபேசியில்தான். அதுவும் இந்த சேவையை நடத்தும் “கைலை மனோஹர்” அவர்களைப் பார்த்தது கூடக் கிடையாது. தொலைபேசியில் கிடைத்தாலோ ஒரு நிமிடம் பேசுவதற்குள் அவருக்கு வேறு அழைப்பு வந்து விடும். ஆகக்கூடி எந்த விதமான தகவலும் சரியாக இல்லாமல் தான் நாங்கள் போவதற்கு டி.டி. முதற்கொண்டு எடுத்துக் கொண்டு இங்கே உள்ள மனோஹரின் சேவைக்கு உரிய பணத்தைச் செக்காகக் கொடுத்துவிட்டுக் கிளம்பினோம். இதை ஏன் இவ்வளவு விவரமாக எழுதுகிறேன் என்றால் வேறு யாரும் இனிமேல் இந்த மாதிரி இருக்கக்கூடாது என்பதற்குத் தான். ஏர்போர்ட் போனதும் தொலைபேசியில் மனோஹரை அழைத்தோம். உடனேயே வந்து check-in-counter-க்கு வந்து எங்களை அழைத்துப் போனார். அப்போது தான் சக பிரயாணிகளைப் பார்த்தோம். அநேகமாக என் வயதுக்குள் பெண்கள் நிறையஇருந்தார்கள். மற்ற எல்லாரும் 60+ தான். ஒரு டாக்டர் அம்மா மடிப்பாக்கத்தில் இருந்து வந்திருந்தார். 78 வயது. அவர் கணவரும் வயதானவர் தான். வேறு ஒரு பெரியவர் பங்களூரில் இருந்து 76 வயது. ஆனால் திடமாக இருந்தார். இப்படியாக நாங்கள் ஒர் 26 பேர் இருந்தோம். இன்னும் 22 பேருக்கும் அல்லது அதிகமாகச் சென்னையில் இருந்து ரெயில் மார்க்கமாகக் “காட்மாண்டு” வருவதாக மனோஹர் தெரிவித்தார். சென்னையில் இருந்து ரெயில் மார்க்கம் என்றால் சென்னை-கோரக்பூர் வந்து அங்கிருந்து பஸ்ஸில் காட்மாண்டு வரவேண்டும். நேபாள் போவதற்கு விசா எல்லாம் கிடையாது. இந்தியர்கள் தடையின்றிப் போகலாம், வரலாம், நேபாளியர்களும் அப்படியே. ஆனால் தற்சமயம் மாறுபட்ட அரசியல் சூழ்நிலையால் பாஸ்போர்ட் நம்பரைக் குறித்துக்கொள்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் சோதனை மிக அதிகம். இங்கே இந்தியாவிலும் அதிகமாக இருந்தது. சோதனை முடிந்து போர்டிங் பாஸ் கொடுத்து சாமான் எல்லாம் சரிக்கட்டி (ஆமாம், உண்மையிலேயே சரிக்கட்டினோம். ஒருத்தருக்கு 25 கிலோ தான் அனுமதி) குழுவாகப் போனதால் சிறப்பு அனுமதி பெற்று சாமான்களை அனுப்ப முடிந்தது. விமானப் பயண நேரம் 1-20 நிமிடங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் போய் உட்கார்ந்து அவங்க சாப்பாடு கொடுத்து சாப்பிட்டு முடிக்கும்போதே வந்து விடுகிறது. ஒரு வழியாக நேபாளம் வந்து விட்டோம், இரவு 9-30 மணி இந்திய நேரம். நேபாள நேரம் 20 நிமிஷம் கூட. அங்கே ஆரம்பித்தது ஒரு சிறிய தவறு. நாங்கள் எல்லாரும் நேபாளத்திலேயே அதிக நாள் தங்கப் போவதில்லை. மறு நாளுக்கு மறு நாள் அதாவது 5-ம் தேதி “மானசரோவர், கைலாஷ்” யாத்திரை போக வேண்டும். அது இருப்பதோசீனப்பகுதியான திபெத்தில். அதற்கு நேபாளத்தில் இருந்து அனுமதி வாங்காமல் எப்படிப் போவது? இந்த விவரம் பற்றிய தெளிவு இல்லாமல் நாங்கள் ஒரு 12 பேர் முன்னால் வந்தவர்கள் பாஸ்போர்ட்டைக் காட்டி நம்பர் குறிக்கப்பட்டதும் கீழே வந்து விட்டோம். வந்த பின்னர்தான் திரு மனோஹர் அவர்கள் பாஸ்போர்ட்டில் entry seal வைக்கவேண்டும் எனக்கூற நாங்கள் எல்லாரும் மறுபடி மாடிக்குப் போக அனுமதி கிடைக்கவில்லை. விமானம் ஏறும்போதோ அல்லது விமானத்தில் இறங்கி வரும்போதோ தான் அங்கே போக முடியும். என்ன செய்வது? பி.கு.: ரொம்பவே விவரமாக எழுதுவதின் காரணம் நாங்கள் செய்த தவறு வேறு யாராலும் செய்யப்படாமல் இருக்க வேண்டித்தான். போரடித்தால் மன்னிக்கவும். 3 ஓம் நமச்சிவாயா-3 திரு கைலை மனோஹரிடம் முக்கியமான குறைகள் இரண்டு. மொழிப் பிரச்னை. ஹிந்தி சுத்தமாகத் தெரிய வில்லை. ஆங்கிலமும் சுமார்தான். (இவர் எப்படி 8 முறை கைலை யாத்திரை போய் வந்திருக்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. 8 முறை ஏற்பாடு செய்து அழைத்தும் போய் இருக்கிறார்.) ஆகவே அவர் ஒண்ணு சொல்ல ஏர்போர்ட்காரர்கள் வேறே மாதிரிப் புரிந்து கொள்ளச் சற்று நேரம் குழப்பமான சூழ்நிலை நிலவியது. திடீரென நாங்கள் 12 பேரும் அங்கிருந்த செக்யூரிட்டியிடம் நாங்கள் மேலே வருவதை தொலைபேசியில் சொல்லச் சொல்லிவிட்டுப் படை எடுத்தோம். மனோஹரும் உடன் வந்தார். அவர் பக்க விவாதம் குழுவாக வந்திருக்கையில் எல்லாருக்கும் கூப்பிட்டு முத்திரை வைத்திருக்க வேண்டும் என்பது. ஏர்போர்ட் காரர்கள் குழுவில் எத்தனை பேர் என்று தெரியாதபோது முன்னால் போனவர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று எங்களுக்கு எப்படித் தெரியும் என்பது. திரு மனோஹர் சொன்னது சரியில்லை என எங்களுக்குத் தெரிய நாங்கள் அதிகாரியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டோம். இந்தப் புதிய நடைமுறை பற்றி மனோஹர் அவர்கள் டெல்லியிலேயோ அல்லது இறங்கும் முன்போ தெரிவித்திருக்க வேண்டும் என்பது எங்கள் எண்ணம். ஒருவழியாக அதிகாரி சமாதானம் ஆகி எங்கள் எல்லாருக்கும் ஸ்டாம்ப் ஒட்டி அனுமதி முத்திரை போட்டுத் தந்தார். நேபாளத்தில் உள்ள ‘ECO TREK’ என்னும் நிறுவனம் நேபாளத்தில் இருந்து திருக்கைலாயம் வரை சென்று திரும்பி வரும் வரை யாத்திரீகர்கள் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறது. திரு மனோஹர் அதன் சென்னை ஏஜெண்ட் மட்டும் தான். நாம் முன்னதாக மனோஹரிடம் 5,000 ரூபாய் முன்பணம் கட்டிப் பதிவு செய்து கொண்டால் அதை வைத்து அவர்கள் காட்மாண்டு சென்று குழுவில் எத்தனை பேர் சேருகிறார்களோ அத்தனை பேருக்கும் குழுவாக விசா ஏற்பாடு செய்கிறார்கள். சென்னையில் இருந்து ரெயில் மூலம் காட்மாண்டு சென்று அங்கிருந்து கைலை சென்று பின் திரும்பி ரெயில் மூலமே சென்னை திரும்பக் கட்டணம் முன் பதிவையும் சேர்த்துரூ.52,900/-. சென்னையில் இருந்து டெல்லி ரெயிலில் சென்று பின் அங்கிருந்து விமானம் மூலம் காட்மாண்டு சென்று கைலை தரிசனம் முடித்துப் பின் அதே மாதிரி திரும்பி வரக் கட்டணம் ரூ.58,400/-. நாங்கள் டெல்லி வரை சொந்தச் செலவிலும் பின் அங்கிருந்து காட்மாண்டுவிற்கு விமானம் மூலமும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம். இதை ஏற்று நடத்தும் “எக்கோ ட்ரெக்” காரர்கள் ஏர்போர்ட்டுக்கு வந்து எங்களை வரவேற்று ஒரு பஸ்ஸில் எங்களை எல்லாம் ஹோட்டலுக்கு அழைத்துப் போனார்கள். ஹோட்டல் 3 நட்சத்திர அந்தஸ்து உள்ளது. கணவன், மனைவியராக வந்தவர்களுக்கு ஒரு ரூமும் தனியாக வந்தவர்களுக்கு அவரவர் விரும்பும் நண்பருடன் இரண்டு பேருக்கு ஒரு ரூமுமாக ஏற்பாடு செய்து தந்தார்கள். சாமான்கள் எல்லாம் வந்ததும் எல்லாரும் ரூமுக்குப் போகும்போது திரு மனோஹர் டின்னர் சாப்பிட அழைத்தார். ஏற்கெனவே மணி 11-00P.M. நெருங்கிக் கொண்டிருந்தது. மேலும் விமானத்தில் 9-00P.M.-க்குத் தான் சாப்பிட்டிருந்தோம். ஆகையால் நாங்கள் சாப்பாடு வேண்டாம், பால் மட்டும் போதும், அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு அறைக்குத் திரும்பினோம். அவங்க விளம்பரத்தில் பால், ஹார்லிக்ஸ், காபி, டீ, போர்ன்விடா, சாக்லேட் டிரிங்க் என்று எல்லாம் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆகையால் தான் அம்மாதிரி வேண்டுகோள் விடுத்துவிட்டுப் போனோம். அறைக்குப் போய் 1/2 மணி ஆகியும் தண்ணீர் கூட வரவில்லை. என்ன இது என்று அறையைத் திறந்து கண்ணில் எதிர்ப்பட்ட ரூம்பாயிடம் எங்கள் வேண்டுகோளைச் சொன்னோம். அவன் சிரித்து விட்டுப் போனான். என்ன இது? நாம் நல்லாத் தானே ஹிந்தி பேசறோம்? என்று எனக்கு ஆச்சரியம்? அதற்குள் எதிர் அறைக்கதவு தற்செயலாகத் திறந்து புனே நகரில் இருந்து வந்திருந்த திரு. ராமச்சந்திரன் எதிர்ப்பட்டார். அவரிடம் “சாப்பிட்டீங்களா? நாளை என்ன ப்ரொக்ராம் சொன்னார்கள்?” என்று கேட்டேன். அவர், “காலை 7-30 மணிக்கு காலை உணவுக்கு வரச் சொல்லி இருக்கிறார்கள். அங்கே அறிவிப்பார்களாம்.” என்றார். உடனேயே நான், “பின் காலை காபிக்கு ரூம் செர்வீஸ் உண்டா?” என்று கேட்டேன். உடனேயே அவர்,”தெரியவில்லை. இப்போ நாங்கள் சாப்பாடு வேண்டாம். பால் போதும் என்று சொன்னோம். பால் கொண்டு கொடுத்துவிட்டு பில் கொடுத்தான். பணம் நாங்கள் தான் கொடுத்தோம்.” என்றார். உடனேயே என் கணவரிடம் சொல்ல அவர் ரிசப்ஷனுக்கு போன் செய்து எங்கள் விருப்பத்தையும், இன்னும் பால் வராததையும் சொல்ல அவர்கள் பால் தருவதாகவும் உடனேயே பணம் கொடுக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். பால் என்ன ஆயிரம் ரூபாயா இருக்கப் போகிறது? சரி என்றோம். பால் வந்தது. பில்லும் கூட. அதில் எங்கள் சொத்தையே கேட்பார்கள் போல் பாலுக்கு விலை. நேபாளத்தில் இந்திய 500ரூ. 1,000ரூ செல்லாது. 100ரூ தான் செல்லும். 100ரூபாய்களாகக் கொடுத்துவிட்டு மிச்சம் நேபாள ரூபாயில் சில்லறையாகத் தந்ததை வாங்கிக் கொண்டோம். சரி, யு.எஸ்ஸுக்கு போன் செய்தாவது பேசலாம் என்று ரிசப்ஷனை அழைத்துக் கேட்டால் அவன் சொத்தெல்லாம் போதாது. ஸ்விஸ் பாங்க் அக்கவுண்ட் இருக்கிறதா? என்று கேட்டான். போனே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டுப் படுத்தோம். காலைக் காப்பி வாயிலும் மண். காலை எழுந்து குளித்து முடித்துவிட்டுக் காலை உணவு அளிக்கும் இடம் சென்றோம். ப்ரெட் டோஸ்ட், சாஃப்ட் ப்ரெட், தோசை என்ற பெயரில் ஒரு வஸ்து, சட்னி, சாம்பார் ஆகியவையும் காப்பி,டீ போன்றவையும் காலை உணவு. யாருமே காலைக் காப்பியைப் பற்றிப் பேசவில்லை. ஏன் கொடுக்கவில்லை என்றும் கேட்கவில்லை. நாம் மட்டும் எப்படிக் கேட்பது? எல்லாரும் முக்திநாத் போவது பற்றி மட்டும் விசாரித்தோம். ரெயிலில் வருபவர்கள் அன்று மாலை அளவில் வருவதாகவும் எல்லாரும் வந்த பின்னர் கைலை யாத்திரை முடிந்து திரும்ப வரும்போது முக்திநாத் போகலாம் என்றும் மெம்பர்கள் ஜாஸ்தி ஆக ஆகப் பணம் குறையும் என்றும் சொன்னார்கள். இன்று நேபாளத்தில் உள்ள பசுபதி நாத், குஹேஸ்வரி(சக்தி பீடம்) கோயில், பூடா நீல்கண்ட் கோவில் மற்றும் ஸ்வயம்புநாத் கோவில் ஆகியவை செல்ல பஸ் ஏற்பாடு செய்திருப்பதாகவும் சொல்லவே எல்லாரும் மறுபடி உற்சாகம் அடைந்து காலை உணவை முடித்துக் கொண்டு பஸ்ஸில் ஏறினோம். 4 ஓம் நமச்சிவாயா-4 இந்தியாவில் காலை 4-30 என்றால் நேபாளத்தில் 4-50 ஆகிறது. அந்த அதிகாலையே விடிய ஆரம்பித்து விடுகிறது. எல்லாரும் சுறுசுறுப்பாக வேலை ஆரம்பிக்கிறார்கள். பெண்களும், ஆண்களும் நன்கு குளித்துத் தலை முழுகிக் கையில் ஒரு தட்டு அல்லது கூடையில் பூக்கள், ஒரு கெண்டியில் தண்ணீர் முதலியன எடுத்துக் கொண்டு அவரவருக்குப் பிடித்த கோவிலுக்குப் போகிறார்கள். பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தில் இலங்கை மக்கள் வாழ்வைப் பற்றி திரு கல்கி எழுதி இருப்பார். மக்கள் சந்தோஷமாகக் கோவிலுக்கும், விளையாட்டுத் திடல் களுக்கும் சென்றார்கள் என. அது நினைவு வந்தது. ஆகவே நாங்கள் கோயிலுக்குப் போகும்போது மணி 9 ஆகி விட்டதால் கோயிலில் கூட்டம் எல்லாம் இருக்காது என நினைத்தோம். அப்புறம் ஒரு விஷயம் மறந்துட்டேனே, அங்கே எல்லாம் தினமும் தெருவைச் சுத்தம் செய்கிறார்கள். நம் நாட்டில் குறிப்பாகச் சென்னையில் பார்க்க முடியாத காட்சியாகையால் எனக்குச் சற்று வியப்பாகவே இருந்தது. முதலில் நாங்கள் போன கோவில் குஹேஸ்வரி அம்மன் கோயில். சக்தி பீடங்களில் ஒன்று. தட்சனின் மகளான தாட்சாயணி ஈசனை மணக்கிறாள். தட்சனுக்கு மருமகன் எல்லாம் வல்லவர் என்று அறிய முடியாமல் மாயை மறைக்கிறது. அகங்காரத்தில் இருக்கும் தட்சன் ஒரு யாகம் செய்ய ஏற்பாடு செய்கிறான். அந்த யாகத்தில் எல்லா தேவர்களுக்கும் அவரவருக்கு உரிய அவிர்ப் பாகத்தைக் கொடுக்கிறான் தட்சன் ஈசனைத் தவிர. ஈசனை யாகத்துக்கு அழைக்கவும் இல்லை. யார் பேச்சையும் செவிமடுக்காத தட்சன் யாகத்தை தொடரும்போது அழைப்பில்லாமல் பிறந்தகம் தானேனு நினைத்துக் கொண்டு வருகிறாள் தாட்சாயணி. அவளை மகள் என்றும் மதிக்காமல் அலட்சியம் செய்கிறான் தட்சன். தாட்சாயணி அவனுக்கு எடுத்துச் சொல்லியும் அலட்சியம் செய்கிறான் தட்சன். மனவேதனையுடன் அந்த யாகத் தீயில் விழுந்து உயிர் விடுகிறாள் தாட்சாயணி. தன் சக்தியை இழந்த சிவனின் உக்கிரத்தை அடக்க முடியவில்லை. தட்சனை அழித்து விட்டு சதியின் உடலைத் தோளில் போட்டுக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்க அவர் கோபத்தைத் தணிக்கும் பொருட்டு மஹாவிஷ்ணு தன் சுதர்சன சக்கரத்தால் அன்னையின் உடலைத் துண்டு துண்டாக்க அது பாரத தேசம் எங்கும் ஒவ்வொரு பாகமும் போய் விழுகிறது. அம்மாதிரி விழுந்த இடங்களை” ஸ்ரீமஹாசக்தி பீடம்” என்று சொல்கிறார்கள். நேபாளத்தில் அம்மாதிரி அன்னையின் ஒரு மார்புப் பகுதி விழுந்த இடம்தான் குஹேஸ்வரி கோவில். நேபாளிகள் இந்தக் கோயிலைக் குயேஸ்வரி மந்திர் என்று அழைக்கிறார்கள். பாக்மதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்குத் தான் முதலில் போனோம். ஆற்றுப் பாலத்தைக் கடந்ததும், சற்று மேலே படிகள் ஏறிக் கோயிலை அடைய வேண்டும். வழியெல்லாம் நம் முன்னோர்களின் தொந்தரவுதான். ஆகவே விலை உயர்ந்த காமிரா, கைப்பை, மற்றும் முக்கியப் பொருட்களைப் பத்திரமாக வைத்துவிட்டுப் போனோம். உள்ளே குகை போன்ற அறைக்குள் போனதும் ஒரு பள்ளத்தில் அருவமாக அன்னை வீற்றிருக்கிறாள். பிண்டி ஸ்வரூபமாக இருக்கும் அந்த அருவுருவம் தான் அன்னையின் மார்பாகக் கருதப்பட்டுப் பூஜைகள், அலங்காரங்கள, நைவேத்யங்கள் முதலியன அதற்குச் செய்யப் படுகின்றன. பூஜை செய்வது எல்லாம் நேபாளப் பெண்களே. அங்கு அம்மனை மனதாரவேண்டி விட்டுப் பின் ஐயனை தரிசிக்கப் பசுபதிநாத் கோவிலுக்குப் போக வண்டிக்கு விரைந்தோம். நேபாளத்தில் முக்கியமான ஆறுகளாகக் கண்டகி நதியும், அதன் கிளை நதியான பாக்மதியும் இருக்கின்றன. பாக்மதி நதி காட்மாண்டு நகரைச் சுற்றி வளைத்துக் கொண்டு ஓடுகிறது. தண்ணீர் ஜில்லோ ஜில். குடிக்கப் பயமாக இருந்தது. எனக்கு” ஜில்லுனு ஒரு தண்ணீர் ” குடிக்க ஆசைதான். கைப்பை நிறையக் கொண்டு வந்திருந்த மருந்து வகைகள் அந்த ஆசையைத் தடை செய்தது. எல்லாரும் தண்ணீர் குடிக்கப் பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். பசுபதி நாத் கோவிலுக்குப் போகும் வழி எல்லாம் ஒரே ட்ராபிக் ஜாம். டிரைவர் எப்படியோ சாமர்த்தியமாக வண்டியை ஓட்டினார். மேடு என்றால் ஒரே மேஏஏஏஏஏடு. பள்ளம் என்றால் ஒரே பள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளளளளம். மேட்டில் இருந்து பள்ளத்தில் இறங்கும்போது பார்த்தால் பயமாகக் கூட இருந்தது. இன்னும் பயமெல்லாம் இருப்பது அப்போது தெரியாது அல்லவா? பசுபதி நாத் கோவிலில் தோல் சம்மந்தப் பட்ட பொருட்கள் எதுவும் கொண்டு போகத் தடை. ஆகவே அனைவரும் அங்கே எங்கள் ட்ராவல்ஸ் காரர்களுக்குத் தெரிந்த கடையில் ஒரு லாக்கரில் கொண்டு போன பொருட்களை வைத்துப் பூட்டி விட்டுச் சாவியை நம்பிக்கையான ட்ராவல்ஸ்காரரின் பணியாளரிடம் கொடுத்துவிட்டுப் போனோம். மிகப் பெரிய கோவில். புத்தமதப் பகோடாக்கள் போல் வெளியில் இருந்து தெரிந்தாலும், தஞ்சைக் கோவிலின் நந்தி அளவில் உள்ள பெரிய நந்தி பிரமிக்க வைக்கிறது. நேபாள ராஜா 2-வது ராம்ஷா என்பவரால் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னால் வைக்கப் பட்ட இந்த நந்தி யெம்பெருமான் பித்தளையால் ஆனவர். நந்தியைக்கடந்து எதிரே பசுபதிநாதரின் மூலஸ்தானம். சுலபமாகக் கோவிலில் தரிசனம் முடிக்கலாம் என்றால் கூட்டமோ கூட்டம். பெரிய வரிசைகளில் பிரதான 4 வாசல்களிலும் உள்ளூர் மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள். அன்று சோமவாரம், சிவனின் உகந்த நாள் என்பதால் இவ்வளவு கூட்டம் என்று தெரிந்து கொண்டோம். எல்லார் கையிலும் நெய்த்திரிகளால் நிரப்பப் பட்ட பெரிய தட்டுக்கள், மூங்கிலால் அல்லது பித்தளைத் தட்டுக்கள். தீபங்கள் ஏற்றப்பட்டுக் கையில் அதை எடுத்துக் கொண்டு தீச்சட்டி ஏந்துவது மாதிரி மக்கள் கூட்டம் பிரகாரத்தைச் சுற்றி வந்து கொண்டு இருந்தது. கூட்டத்தில் எங்கள் குழு பிரிந்து விட்டது. நாங்களும், வயது முதிர்ந்த டாக்டர் தம்பதியும், பங்களூரில் இருந்து வந்திருந்த சங்கரன் என்ற 76 வயது முதியவரும் தனித்து விடப் பட்டோம். மற்றவர் அவரவருக்குப் பிடித்த வாயிலில் நின்றார்கள் என்பதையும் பார்த்தோம். 5 ஓம் நமச்சிவாயா-5 பசுபதி நாதருக்கு 5 முகங்கள். 4 திசைகளிலும் 4 முகங்கள், மேலும் தலையில் மேலே பார்த்து ஒரு முகம், இதை “அதோ முகம்” என்கிறார்கள். மொத்தம் 5 முகங்கள். திருக்கைலையிலும் கைலை நாதனுக்கு 5 முகங்கள். ஆகவே திருக்கைலைநாதனைத் தரிசிக்கும் சிறப்பு இந்தப் பசுபதி நாதனைத் தரிசிக்கும்போதும் கிடைக்கிறது. கூட்டத்தில் கிடைத்த இடத்தில் நின்று கொண்டோம். நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் நாம் வெளியில் இருந்து வந்திருக்கிறோம் என்றால் உடனேயே நம்மை முன்னால் பார்க்க விடுவார்கள். நிதானமாகவும் பார்க்க விடுவார்கள். அவசரப் படுத்துவது இல்லை. இங்கே அம்மாதிரி இல்லை என்பதோடு போலீஸ் காவலையும் மீறிச் சிலர் உரிமையோடு கூட்டத்தில் முன்னே போய்ப் பார்த்துக் கொண்டும் வந்து கொண்டும் இருந்தார்கள். நம்ம தமிழ்நாட்டுக் கோவில் மாதிரித் தான் இருந்தது. மேலும் இந்தக் கோயிலுக்கு வந்து இறைவனைத் தரிசித்தால் மறுபிறவி இல்லை என்ற ஒரு நம்பிக்கையும் உள்ளது. பல வயதானவர்கள், இறக்கும் தருவாயில் உள்ளவர்கள் கூட வந்து தரிசனம் செய்து கோயிலிலேயே இறக்கும் வரைத் தங்குமாறு ஏற்பாடு செய்து தருகிறார்கள். கோவில் நிர்வாகம் இதைச் செய்கிறது. கோயிலின் அர்ச்சகர் ஒரு இந்தியர். கேதார்நாத் கோவிலில் அர்ச்சனை செய்யும் “ராவல்” சமூகத்தைச் சேர்ந்தவர். நல்ல சிவப்பழமாக இருக்கிறார்கள். இது வரை இவரை நியமிக்கும் அதிகாரம் நேபாள மன்னரிடம் இருந்தது. இனிமேல் எப்படியோ தெரியாது. நாங்கள் வரிசையில் நிற்கும்போது சில அர்ச்சகர்கள் வந்து “ருத்ராபிஷேஹம்” செய்ய வேண்டுமா எனக் கேட்டனர். கட்டணம் ரொம்ப ஜாஸ்தியாக இருந்ததால் நாங்கள் மறுத்து விட்டோம். சுமார் 1/2 மணிக்கும் மேலாக வரிசையில் நின்ற பிறகு ஒரு முகத்தின் தரிசனம் சற்றுக் கிடைத்தது. இறைவனை எவ்வளவு பார்த்தாலும் திருப்தி ஏது? பிறகு ரொம்பக் கஷ்டப்பட்டு மற்ற முகத்தின் தரிசனத்துக்குப் போனோம். 3வது, 4வது முக தரிசனத்துக்குப் போகவே முடியவில்லை. கூட்டம் நெட்டித் தள்ளியது. பின் அங்கிருந்து கிளம்பிச் சற்றுத் தூரத்தில் எல்லாரும் தரையில் பதிக்கப்பட்ட சில வடிவங்களை வணங்குவதைப் பார்த்துவிட்டு, என்ன எனவே தெரியாமல் வணங்கிவிட்டு, காலபைரவரைத் தேடிவிட்டுப் பின் அங்குள்ள 1,008 லிங்கங்களைத் தேடினோம். இதெல்லாம் எங்களுக்குச் சொல்லி வழிகாட்ட வேண்டிய வழிகாட்டியும், திரு மனோஹரும் எங்கள் யாருடனும் வரவே இல்லை. பின்னால்தான் தெரிந்தது தரையில் பதிக்கப்பட்டவை நவக்ரஹங்கள் என்றும், ருத்ராபிஷேஹம் குழுவாக வந்தவர்கள் செய்தால் எல்லாரும் உள்ளே போய்த் தரிசித்திருக்கலாம் என்றும். நாங்கள் 24 பேர் இருந்ததுக்கு ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு 2 குழுவாகப் போய்த் தரிசித்திருக்கலாம். கூட்டத்தில் இடிபட்டு, மணிக்கணக்காக நின்றிருக்க வேண்டாமே? எங்களில் ஒருவர் கோபத்துடன் இப்போ நாங்கள் போய் ருத்ராபிஷேஹம் செய்து தரிசிக்கிறோம் என்றதற்கு நேரம் ஆகிவிட்டது என்றும் இன்னும் 2 கோவில்கள் போக வேண்டும் என்றும், கைலை யாத்திரை முடிந்து திரும்பி வரும்போது மறுபடி ஒருமுறை தரிசனம் செய்விக்கிறோம் என்றும் கூறவே ஒருமாதிரி சமாதானம் ஆகி எல்லாரும் காரில் ஏறி உட்கார்ந்தோம். பின் நாங்கள் போனது “பூடா நீல்கண்ட்” என்னும் கோவில். இந்தக் கோவிலில் ஒரு தடாகத்தின் உள்ளே சிவன்/விஷ்ணு படுத்திருக்கிறார். மிகப் பெரிய உருவம். நஞ்சுண்ட கண்டனான ஈசன் நஞ்சை உண்ட அசதியில் மெதுவாக நடந்து கைலை வரும்போது சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள இங்கே படுத்தாராம். படுத்தவர் மஹாவிஷ்ணுவாக மாறி விட்டார் என்கிறார்கள். உள்ளே கிட்டத்தில் போய்ப் பார்க்க எல்லாவற்றையும் வெளியே வைத்துவிட்டுப் போக வேண்டும். உள்ளே போய்ப் படம் எடுக்க முடியாது. சிலர் வெளியேயே நின்று படம் எடுத்தார்கள். சிவன் ரூபத்திலும், விஷ்ணு ரூபத்திலும் ஏககாலத்தில் தோன்றுவதுதான் இவர் தனிச்சிறப்பு. அங்கேயே பூஜை செய்து பிரசாதம் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலேயும் நம் இந்தியாவில் உள்ள மாதிரிக் கதைகள். ஆன்மீக நம்பிக்கைகள். சொல்லப் போனால் நேபாளம் ஒரு குட்டி இந்தியாதான். எல்லா வடமாநில நகரங்களைப் போல்தான் இருக்கிறது. பேச்சிலும், எழுத்திலும் இந்தி ஆதிக்கம் நிறையவே இருக்கிறது. நேபாள மொழியை அவர்களுக்குள் பேசிக்கொண்டாலும் அதிகம் புழங்குவது இந்தி மொழிதான். கலாசாரம், நம்பிக்கைகள், கடவுள் பக்தி இவற்றில் எல்லாம் இந்தியத் தன்மையே மிகுந்து இருக்கிறது. எந்தப்பாட்டுப் பாடினாலும், பஜனை செய்தாலும் கடைசியில் ராமரிடத்திலும், சீதையிடத்திலும் வந்து முடிக்கிறார்கள். ராமாயணமும், ராமரும், சீதையும் தான் முதலில். அவர்களைத் துதி செய்யாமல் இருப்பதில்லை. பரமசிவன் பற்றிப் பாட ஆரம்பித்தால் கூட அதில் ராமரும், சீதையும் வெகு அழகாகவும், ஸ்வாதீனமாகவும் வந்து உட்கார்ந்து கொள்கிறார்கள். பொதுவாகப் பக்தி நிறைந்த மக்கள். நாட்டின் பொருளாதாரத்திற்கு அடிப்படையே சுற்றுலாதான். ஆகவே அதற்கு நிறைய முக்கியத் துவம் இருக்கிறது. 6 ஓம் நமச்சிவாயா-6 பசுபதி நாதர் கோவில் மற்றும் பூடா நீல்கண்ட் கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்புவதற்குள்ளேயே மணி 1 ஆகி விட்டது. கடைசியாக “ஸ்வயம்புநாத்” கோவில். இது புத்தர்களின் கோவில். கிட்டத்தட்ட ஒரு புத்த விஹாரம். கொஞ்சம் ஊரை விட்டுத் தள்ளி ஒரு சிறிய மலை மேல் இருக்கிறது. ஊரே ஒரே ஏஏஏஏற்றமும் இறக்கமும் உள்ளது. குறுகலான தெருக்கள். அதில் ட்ராஃபிக் ஜாம் வேறு. நம் ஊரில் என்றால் ஒரே டென்ஷன் ஆகிவிடுவார்கள். இங்கே அதைப் பற்றிக் கவலையே இல்லை. ஒரு வழியாக ஸ்வயம்புநாத்” கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தோம். இங்கே உள்ள புத்தர் சிலை மிகப் பெரிது. அநேகமாக எல்லா ஹிந்திப் படத்திலும் நடித்த புத்தர் கோயில் இதுவாக இருக்கும். 4 பக்கமும் பார்க்குமாறு வடிவமைக்கப் பட்ட மிகப் பெரிய புத்தர் சிலை குன்றின் உச்சியில் இருக்கிறது. சில பல படிகள் மேலே ஏறிப் போய்த் தான் தரிசனம் செய்ய வேண்டும். சரி, கைலாஷ் மலையில் “பரிக்ரமா” செய்ய உதவி என்று எல்லாருமே ஏற முடியாமல் ஏறிப் போனோம். படிகள் இருக்கின்றன, என்றாலும் சில இடங்களில் செங்குத்தான அமைப்பாக இருப்பதால் ஏறச் சிரமம் தான் எல்லாருக்குமே. ஒரு வழியாக மேலே ஏறிப் போய்ப் பார்த்தோம். புத்தரின் 4 முக தரிசனமும் தெரியும் 4 பக்கமும் போய்ப் பார்த்தால் உயரே இருந்து காட்மாண்டு நகரம் பூராவும் தெரிகிறது. மிகப் பெரிய நகரமாக இருக்கிறது. கீழே “பாக்மதி” நதி வளைந்து வளைந்து ஓடுவது ஒரு வெள்ளிக் கோடாகத் தெரிகிறது. உயரே கோவிலில் சின்னச் சின்னச் சன்னதிகள், அதில் சில புத்தர் சிலைகள், நம் ஊர் அம்மன் மாதிரிச் சிலைகள், பிறகு வெளியே வந்தால் எல்லாரும் கையால் உருட்டி விடும் பித்தளை ட்ரம் போன்ற அமைப்பு சுவற்றைச் சுற்றி. என்ன காரணம் என்று தெரியாமலேயே நாங்களும் அதை ஒவ்வொன்றாக உருட்டி விட்டு வந்தோம். நினைத்தது நடக்கும் என்று விசாரித்ததில் சொன்னார்கள். கோவிலுக்கு எதிரேயே ஒரு புத்த பிட்சுக்களின் மடாலயமும்,பள்ளியும் இருக்கிறது. பல இளம் பிட்சுக்கள் (இளம் என்றால் 7 முதல் 10 வயதுக்கு உட்பட்ட) காலில் செருப்புக் கூட இல்லாமல் மலை ஏறி வழிபட்டுச் செல்கிறார்கள். அவர்களுக்குத் துணையாக ஒரு 20 வயதுக்கு உட்பட்ட பிட்சு காவல் மாதிரி கூட வருகிறார் ” ஸ்வயம்புநாத்” மலை ஏறும், இறங்கும் பாதை பூரா ருத்திராட்சம், ஸ்படிகம், பவளம், முத்து, கைவினைப் பொருட்கள் விற்கும் கடைகள். எல்லாரும் கடைகளைச் சூழ்ந்து கொள்ள நான் மட்டும் வண்டிக்குப் போய்விட்டேன். என்னை இந்த மாதிரி “ஷாப்பிங்” அவ்வளவாகக் கவர்ந்தது கிடையாது. முதலில் போகும் ஊரில் எல்லாம் சாமானாக வாங்கிக் குவித்தால் எங்கே வைத்துக் கொள்வது? அதை என்ன செய்வது? சற்றும் உபயோகம் ஆகாத பொருட்கள் என்று என்வரை அபிப்பிராயம். என் கணவரும் சில மணி, தட்டு, சிற்பங்கள் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு விலையைக் கேட்டு மயக்கம் வந்து, வண்டிக்குத் திரும்பி விட்டார். பின் எல்லாரும் ஹோட்டல் அறைக்குப் போய்ச் சாப்பிடப் போனோம்.சாப்பாடு தயார் ஆகாத நிலையில் எல்லாரும் சூழ்ந்து கொண்டு அவசரப் படுத்தினர். எல்லாருக்கும் அவ்வளவு பசி. இதற்குள் மணி மூன்று ஆகிவிட்டது. சென்னையில் இருந்து ரெயில் மூலம் வருபவர்கள் ஒரு 22 பேர் வந்து சேர்ந்தார்கள். பின் எல்லாரும் அன்று இரவுச் சாப்பாட்டுக்குப் பின் கூடிப் பேசி மறுநாள் பிரயாணத்திற்குத் தயார் ஆகவேண்டியது பற்றி விவாதிக்க ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்யப் பட்டது. அவ்வளவில் எல்லாரும் அவரவர் அறைக்குப் போனோம். மாலை நாங்கள் கணினி சேவை மையம் போய் ஒரு மெயில் கொடுத்தோம் யு.எஸ்ஸுக்கு. அதையே பையன், பெண் இரண்டு பேருக்கும் அனுப்பினோம். அதற்கே 20ரூ வாங்கி கொண்டான் அந்த சேவை மையம் நடத்தும் பையன். என்னோட மெயில் அக்கவுண்டைச் செக் செய்து விடலாம் என்ற என் ஆசையில் மண் விழுந்தது. என் கணவர் கிட்டத் தட்ட என்னை இழுத்துக் கொண்டு வந்துவிட்டார். சரி, டீயாவது சாப்பிடலாம் என்று அங்கிருந்த ஒரு லோக்கல் டீக்கடை என்று சொல்லப்பட்ட இடத்துக்குப் போனோம்.டீ தயாரித்துக் கொடுத்தாள் அந்தப் பெண்மணி. ரொம்பக் குறைந்த அளவே உள்ள அந்தத் தேநீருக்குப் பதினைந்து ரூபாய் ஆனது. இந்தியாவின் மேல் பாசம் அதிகமாகப் பொங்கி வழிய ஆரம்பித்தது. இதுக்கே இப்படியா இன்னும் இருக்கு பார் என்றது எங்கள் விதி. அது கை கொட்டிச் சிரித்தது எங்கள் யார் காதிலும் விழவில்லை. ஹோட்டல் அறைக்குப் போனோம். சற்று நேரத்தில் இரவுச் சாப்பாடு மற்றும் மீட்டிங்கிற்கு அழைப்பு வந்தது. எங்கள் “அன்னபூர்ணா ட்ராவல்ஸ்” மனோஹர் எங்களுக்கு நேபாளத்தில் இருக்கும், “எகோ ட்ராவல்”ஸின் முக்கிய நபர்களை அறிமுகம் செய்து வைத்தார். சாப்பாடு முடிந்து மீட்டிங் ஆரம்பம் ஆனது. உடனேயே எங்கள் குழுவில் இருந்தவர்களின் குறைகளும் ஆரம்பித்தன. கடவுள் வணக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட மீட்டிங்கில் முதலில் எங்களுக்குப் பேச வாய்ப்புக் கொடுங்கள், பிறகு நீங்கள் சொல்வதைச் சொல்லுங்கள் என்று எங்கள் குழுவினர் சொல்ல ட்ராவல்ஸ்காரர்கள் முதலில் திகைத்தாலும் பின் சரி என்றார்கள். அன்று காலைக் காப்பி கொடுக்கவில்லை என்பதில் இருந்து ஆரம்பித்து பசுபதிநாதர் கோவிலில் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து தரவில்லை என்பது வரை எல்லாரும் அவரவர் மனத்தில் உள்ள குறைகளைச் சொல்ல அவர்கள் கேட்டுக் கொண்டு திரும்பி வரும்போது மறுபடி தரிசனம் செய்து வைக்கிறோம் எனச் சொல்லி சமாதானம் செய்தார்கள். சிலருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் சிலரின் குறை. ஆகவே அம்மாதிரிக் குறை சொன்னவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படும் என்றும் சொல்லப் பட்டது. ஓரளவு சமாதானம் ஆகி மீட்டிங் ஆரம்பம் ஆனது. 7 ஓம் நமச்சிவாயா-7 நாங்க இரண்டு பேரும் குழந்தைகள், மாமியாருடன் போகும்போதோ அல்லது இப்போ நாங்க இரண்டு பேரும் தனியாகப் போகும்போதோ எந்த ஒரு ட்ராவல்ஸ் குழுவுடனும் சேர்ந்து போனது இல்லை. போனது எல்லாம் இந்தியாவுக்குள் என்பதாலும், மொழிப் பிரச்னை இல்லை என்பதாலும் நாங்களாகவே போய்விட்டு வந்திருக்கிறோம். ஆகவே இம்மாதிரிக் குழுவுடன் போவது இது தான் முதல்முறை என்பதால் இம்மாதிரி மீட்டிங் என்பது எங்களுக்குப் புதிசு. ஆனால் கைலை யாத்திரை போகிறவர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதாலும், ஒருவேளை அவர்களால் முடியாது என்று தோன்றினால் உடனேயே விலகிக் கொள்ள வசதியாகவும் இந்த ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. நேபாளத்தின் வழியாகப் போகிறவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை கிடையாது. ஆனால் அவர்கள் வீட்டிலேயே “ட்ரெட் மில்” பயிற்சி எடுத்துக் கொண்டு வருவது நல்லது என்றும், யோகா, தியானம், நடைப் பயிற்சி முதலியன மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப் படுகிறது. இதிலே எனக்கு என்னோட மருத்துவர் இதுவரை எடுத்த எல்லா டெஸ்ட்களிலேயும் “ட்ரெட் மில்” மட்டும் வேண்டாம் என்று குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். நான் கைலை யாத்திரை போனதும், வந்ததும் இன்னும் அவருக்குத் தெரியாது. மருத்துவப் பரிசோதனை நம் குடும்ப டாக்டரிடம் மேற்கொண்டு வரச் சொல்கிறார்கள். யாருமே அப்படிச் செய்யவில்லை, நாங்கள் இரண்டு பேரும் உள்பட. சிலர் மட்டும் வீட்டிலேயே ட்ரெட் மில் பயிற்சி மேற்கொண்டிருந்தார்கள். நாங்கள் இருவரும் யோகா,நடைப் பயிற்சி முதலியன மேற்கொண்டிருந்தாலும் அது மட்டும் போதாது. மேலும் சர்க்கரை நோயாளிகள், இருதய நோயாளிகள் தங்கள் தங்கள் பொறுப்பிலேயே வருமாறு கூறப்பட்டனர். எங்களுடன் வந்த டாக்டர் திருமதி நர்மதா அவர்கள் ஒரு இருதய நோயாளி. திறந்த அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டவர். மேலும் இரண்டு பேர் கணவன், மனைவி இருவரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு தினமும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்கிறோம் என்று சொன்னார்கள். சில பேர் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தாலும் பொதுவாக ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பிரச்னை உடல் நலத்தில் இருந்து வந்தது. ரெயிலில் வந்தவர்களில் ஒருவர் கீழே விழுந்து காயம் பட்டிருந்தது. இம்மாதிரியான ஒரு குழுவாகத் தான் நாங்கள் இருந்தோம். எங்களுடன் கைலை வரை வரப் போகிற “எகோ ட்ரக்” சிப்பந்திகள் அறிமுகம் செய்யப் பட்டனர். பின் பயணம் பற்றி விளக்கப் பட்டது. மறுநாள் செவ்வாய் அன்று காலை நாங்கள் எல்லாரும் கிளம்பி ஹோட்டலில் இருந்து இரண்டு பஸ்களில் சீன எல்லை வரைப் பிரயாணம் செய்ய வேண்டும். அது ஒரு 150 கிலோ மீட்டருக்குக் குறையாது. பின் அங்கிருந்து நட்புப் பாலம் வழியாகக் கால்நடையாக நேபாள, சீன எல்லையைக் கடக்கவேண்டும். பின் அங்கிருந்து குழுவில் 4, 4 பேராகப் பிரிந்து ஒரு வண்டிக்கு 4 பேர் என்று ஒரு டொயோட்டா காரில் பயணம் செய்ய வேண்டும். முதலில் திபெத்தில் உள்ள நியாலம் என்னும் ஊரை அடைய வேண்டும். அதுவே சிறிது உயரம் உள்ள ஊர். மறுநாள் போகவேண்டியது இன்னும் உயரம். கால நிலை மாறும். குளிர் அதிகமாகும். ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும். சிலருக்கு ஒத்துக் கொள்ளும். சிலருக்கு ஒத்துக் கொள்ளாது. மயக்கம், வாந்தி போன்றவை வரலாம். அல்லது சுவாசிக்க முடியாமல் போகலாம்.கூடவே எடுத்து வரும் ஆக்ஸிஜன் சிலிண்டர் மூலம் ஆக்ஸிஜன் கொடுத்தும் சரியாக வில்லை என்றால், gammao bag”-ல் படுக்க வைப்பார்கள். High altitude-ல் இருந்து சாதாரண நிலைக்குக் கொண்டு வரும்.ஆனால் அந்த நபர் திரும்ப மலை ஏற முடியாது. ஒரு முறை கீழே வரும் சிகிச்சை எடுத்துக் கொண்டவர் பின் கீழேதான் இறங்க வேண்டும். கூடவே சமையல் காரர்கள், பாத்திரம் தேய்ப்பவர்கள், மற்றும் சாப்பாடு பரிமாறுபவர்கள், போன்றவரும் அவர்களை மேற்பார்வை பார்க்க ஒரு ஆளும், எங்களுக்கு வேண்டியதைக் கவனிக்க ஒரு நம்பகமான ஆளும் நேபாள், சீன எல்லையில் மாறும்போது அங்கே இருக்கும் immigration office மற்றும் மேலே போகப் போகச் சீனமொழி, திபெத் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பதால் ஒரு co-ordinator மற்றும் அன்னபூர்ணா ட்ராவல்ஸின் கைலை மனோஹர் போன்றவர்களும் வருவார்கள். எங்களுக்கு ஒரு சிவப்புப்பையும், தொப்பி ஒன்றும் ட்ராவல்ஸ் காரர்களால் அளிக்கப்படும். இரண்டும் அவர்கள் அன்பளிப்பு. அந்தப்பையில் இரவே கைலை யாத்திரைக்கு வேண்டிய துணிமணிகள் எடுத்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப் பட்டோம். அவரவர் கையில் மேலும் ஒரு சிறிய பையில் அவரவருக்குத் தேவையான மருந்துகள், மாத்திரைகள், வழியில் சாப்பிட ஏதாவது தின்பண்டங்கள் ஊரில் இருந்தே கொண்டு வரச் சொல்லி விடுகிறார்கள். அவை மற்றும் ஒரு ஸ்டீல் ஃப்ளாஸ்க்கில் வெந்நீர்(இது காலை உணவின் போது எல்லாருக்கும் கொடுக்கப்படும். மீண்டும் இரவு தருவார்கள்). அது தவிர எலக்ட்ரால் பவுடர், க்ளூகோஸ் பவுடர், வயிறு சரியில்லை என்றால் உதவ மாத்திரைகள் போன்றவை வைத்துக் கொள்ள வேண்டும். அது நம் கையிலே நாம் போகும் வண்டியில் வைத்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிர ட்ராவல்ஸ் காரர்களால் குளிருக்குப் போட்டுக் கொள்ளும் ஜெர்கின் வாடகைக்கு அளிக்கப் படுகிறது. போகிற இடத்தில் படுக்கை இல்லை என்றால் என்ன செய்வது? அதற்கு ஒரு “ஸ்லீப்பிங் பாக்” இதுவும்வாடகைக்குத் தான் தரப்படும். இவை தொலைந்தால் கட்ட வேண்டிய பணம் ரூ3,000/-. வாடகை ஜெர்கினுக்கு ரூ500-ம், தூங்கும் பைக்கு ரூ, 250-ம் வாங்குகிறார்கள். நல்லவேளையாக எங்களிடம் சொந்தமாக ஜெர்கின் இருந்ததால் அது வாங்கிக் கொள்ள வில்லை. ஸ்லீப்பிங் பாக் இல்லாமல் முடியாது. ஒருவேளை தங்க “மட் ஹவுஸ்” கிடைக்காமல் கூடாரத்தில் தங்க நேர்ந்தால் என்ன செய்வது? ஆகவே அதை வாங்கிக் கொண்டோம். பணம் மேலே ரூமில் இருந்ததால் ஸ்லீப்பிங் பாக்கைக் கொடுக்கும்படியும், மேலே போய் எடுத்து வந்து யாராவது ஒருத்தர் கொண்டு தருகிறோம் என்று கேட்டதற்குக் கண்டிப்பாக மறுக்கப்பட்டுக் கையில் கொடுத்ததை வாங்கி வைத்து விட்டார்கள். ரொம்பவே கஷ்டமாக இருந்தது. இவர்களை நம்பி நாம் கிட்டத்தட்ட 55,000 ரூ கொடுத்துள்ளோம் ஒரு 250/-ரூக்கு நம்பவில்லை. அந்த ஹோட்டலை விட்டு நாங்கள் திடீரென எங்கே போய்விடுவோம். ஒருவிதமான கலக்கத்துடனேயே போய்ப் பணத்தை எடுத்து வந்து கொடுத்து விட்டு வாங்கிக் கொண்டோம். நாம் எடுத்து வைத்துக் கொண்ட பொருட்கள் தவிர மேலும் இருக்கும் துணிமணிகள், மற்ற சாமான்களை நாம் ஏற்கெனவே கொண்டு வந்த பையில் போட்டு வைத்துவிட்டால் ஹோட்டல்காரர்கள் ஒரு அடையாளச் சீட்டுக் கொடுத்துவிட்டுப் பாதுகாப்பாக வைக்கிறார்கள். லாக்கரும் இருப்பதால் தேவைப்பட்ட பணம் எடுத்துக் கொண்டு மிச்சப் பணம், மற்றும் விலை உயர்ந்த நகைகள் போட்டுக் கொண்டு போட்டிருந்தால் அவற்றையும் ஹோட்டலிலேயே லாக்கரில் வைக்கலாம். இரண்டு சாவி போட்டால் மட்டுமே திறக்க முடிந்த அதன் ஒரு சாவியை நாம் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். எல்லாம் கேட்டுக் கொண்டு மீட்டிங் முடிந்து சாமான்களைப் பாக் செய்து அறைக்கு வெளியில் வைக்கச் சொன்னார்கள். கைலை யாத்திரைக்கு வேண்டிய பை(ட்ராவல்ஸ் காரர்கள் கொடுத்த சிவப்பு பை) அறைக்கு வெளியே வைத்தோம். இந்தப் பைகள் ஒரு ட்ரக்கில் மொத்தமாக ஏற்றப்பட்டு எங்கள் கூடவே அந்த ட்ரக் வரும். மற்றொரு ட்ரக்கில் சமையல் சாமான்கள், காஸ் அடுப்புக்கள், சிலிண்டர்கள், பழங்கள், காய்கறிகள், ஊறுகாய் வகைகள், பால் பதப்படுத்தப்பட்டது முதலியன வருகிறது. ஒவ்வொரு நாளும் சாயங்காலம் நாங்கள் தங்கும் கேம்ப் வந்ததும் பைகள் எங்களுக்குக் கொடுக்கப் படும். எல்லாம் முடித்து அன்றிரவு படுக்கும்போது இரவு கிட்டத் தட்ட ஒரு மணி ஆகிவிட்டது. இன்னும் சற்று நேரத்தில் எழுப்பி விடுவார்கள். 8 ஓம் நமச்சிவாயா-8 கைலை யாத்திரையின்போது உடன் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களின் பட்டியல் கீழே கொடுத்திருக்கிறேன். பயணம் மூன்று நிலைகளில் அமையும். ஆகவே அதற்குத் தகுந்தவாறு சாப்பாடு, உடல் பயிற்சி மட்டும் இல்லாமல் கொண்டு போகும் பொருட்களும் இருக்க வேண்டும்.பயணத்தின் மூன்று நிலைகள் கீழ்வருமாறு: முதல் நிலை: நமது இருப்பிடமான ஊரில் இருந்து காட்மாண்டு வரை செல்லுதல். 2-ம் நிலை: காட்மாண்டுவில் இருந்து கைலை மலை அடிவாரம் ஆன தார்ச்சன் (பேஸ் கேம்ப்) வரை செல்லுதல். 3. கைலை மலையைச் சுற்றி வரும்(பிரதட்சிணம்) “பரிக்ரமா” செல்லுதல். பின்னால் திரும்பி வரும்போது கொண்டு போகும் பொருட்களே உபயோகம் ஆகிவிடும் என்பதால் அதைச் சேர்க்க வேண்டாம். பயணத்தின் போது தேவைப்படும் பொருட்களின் விபரம்: 1. சூட்கேஸ்: சென்னை அல்லது நாம் இருக்கும் இடத்தில் இருந்து காட்மாண்டு வரை செல்லும் நாட்களுக்கும், பின் திரும்பி காட்மாண்டு வந்ததும் உபயோகிக்கவும் தேவையான உடைகள் இதில் இடம் பெறும். திருக்கைலை யாத்திரை போகும் சமயம் இந்தப் பெட்டியைப் பூட்டி ஹோட்டலில் கொடுத்துவிட்டால் அவர்கள் பாதுகாப்பு அறையில் இருக்கும். திரும்பி வந்ததும் அடையாளச் சீட்டைக் காட்டிப் பெற்றுக் கொள்ளலாம். இத்துடன் கொண்டு போகும் அதிகப் பணம், மற்றும் விலை உயர்ந்த நகைகள் போன்றவற்றை ஹோட்டலில் இருக்கும் லாக்கரில் வைத்துக் கொள்ளலாம். இதற்குக் கட்டணம் இல்லை. 2. முதல் பை:(பூஜைப் பொருட்கள்) 1.இதில் மானசரோவர் தீர்த்தம் எடுக்க இரண்டு 5 லிட்டர் கேன், 500-மில்லி பாட்டில்-1(கெளரி குண்டம்) தீர்த்தம் எடுக்க.மானசரோவரில் மணல் எடுக்க ஒரு பை, எம்.சீல்-1. 2.மானசரோவரில் மூர்த்தங்கள் சேகரிக்க ஒரு துணிப்பை-1 3. உலர் பழ வகைகள். மானசரோவரிலும், கைலையிலும் நைவேத்தியம் செய்ய(வீட்டிற்குக் கொண்டு வந்து விநியோகிக்கும் அளவுக்கு) 4. நன்கு காய வைத்த வில்வம் இலைகள் ஒரு பாலிதீன் பையில், கட்டி கற்பூரம், ஊதுபத்தி, நெய்த்திரி, மற்றும் மண் அகல் அல்லது வெங்கல விளக்குகள், மற்றும் நறுமணம் உள்ள பூஜைப் பொருட்கள். 3. இரண்டாம் பை(யாத்திரைக்குத் தேவையான துணிகள் வைக்க) பெண்கள், ஆண்கள் எல்லாருக்குமே உள்ளாடைகள் நிறையவே வேண்டும். ஒரு டஜன் கூட வைத்துக் கொள்ளலாம். அதைத் தவிர 1.தெர்மல் வேர் 1 செட் போதாது. 2செட் வைத்துக் கொள்ளவும். 2.ஆண்களுக்கு ஹாஃப் ஸ்வெட்டர், பெண்களுக்கு உல்லன் ப்ளவுஸ்(டெல்லியில் கிடைக்கும்) முழு ஸ்வெட்டர், உல்லன் க்ளவுஸ், தெர்மல் க்ளவுஸ், உல்லன் தொப்பி, மஃப்ளர், நைலான் மற்றும் உல்லன் சாக்ஸ், ரெயின் கோட், ப்ளாஸ்டிக் செருப்பு, ஆக்‌ஷன் ட்ரெக்கிங் ஷூ காட்மாண்டுவில் இருந்து மானசரோவர் வரை அணிய ட்ரெஸ் செட் (இதில் கூடிய வரை ஆண்கள் ஜீன்ஸ் பேண்ட்டும், பெண்கள் ட்ராக் சூட் அல்லது சல்வார், குர்த்தாவும் அணிவதுதான் நல்லது. திரும்பி வரும்போது அணியவும் தேவையான உடைகள் மற்றும் டவல், கைக்குட்டை போன்றவைகள். சூரிய வெப்பத்தில் இருந்து தப்பிக்க Hat, Mask, Trek Bag போன்றவை ட்ராவல்ஸ்காரர்களால் அளிக்கப் படும். ட்ராவல்ஸ்காரர்கள் கொடுக்கும் இந்தச் சிவப்புப் பையில் தான் நம் துணிகளை வைத்துக் கொண்டு அவர்களிடம் கொடுத்து விட்டால் நம்முடனேயே வந்து கொண்டிருக்கும் ட்ரக்கில் வரும். ப்ளாஸ்டிக் பக்கெட் ஒரு 2 அல்லது 3 லிட்டர் பிடிக்கும் அளவு, ஒரு மக்.(மானசரோவரில் குளிக்க முடிந்தால் குளிக்கவும், மற்றும் ட்ராவல்ஸ்காரர்கள் அளிக்கும் வெந்நீர் வாங்கிக் கொள்ளவும் பயன்படும்.) இதைத் தவிர தோள் பை அல்லது backpack என்று சொல்லப்படும் ஒரு பையில் கீழ்க்கண்ட பொருட்களை வைத்துக் கொண்டு நாம் காரில் போகிறபோதும் சரி, கைலை பரிக்ரமா போதும் சரி கூடவே கொண்டு வர வேண்டும். அந்தப் பையில் குளியல் சோப், துவைக்கும் சோப் டூத் ப்ரஷ், டூத் பேஸ்ட் நிவியா அல்லது பாண்ட்ஸ் கோல்ட் க்ரீம், மற்றும் சன் க்ரீம் வாசிலின், சீப்பு, கண்ணாடி(முகம் பார்க்க) கத்தரிக்கோல்(சின்னது) ஒரு டார்ச் தலைக்குத் தேவையான க்ரீம் டாய்லெட் டிஸ்ஸூ பேப்பர் ரோல் பனியினால் ஏற்படும் கண்பார்வைக் குறைவையும் பனியில் சூரிய ஒளி படும்போது ஏற்படும் கூசுதலைத் தவிர்க்கவும் கறுப்புக் கண்ணாடி(இது முக்கியம்) காமரா, அட்ரஸ் டைரி, பேனா அவரவருக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் ஸ்டீல் ஃப்ளாஸ்க் பெரியது(2 பேரானால்) தேவைப்பட்டால் கூலிங் ஃப்ளாஸ்க். இதைத் தவிரப் பரிக்ரமாவுக்குச் செல்லும்போது கீழ்க்கண்ட பொருட்கள் அடங்கிய 3 பாக்கெட்டுகள் தேவை. இவை நாம் சாப்பிட மட்டும். ஆகவே கையிலிருக்கும் தோள் பையில் போடவேண்டும். முந்திரி,திராட்சை, பேரீச்சை, தேவையானால் பாதாம்,பிஸ்தா, எலக்ட்ரால், க்ளூக்கோஸ்,மில்க் சாக்லேட்,பிஸ்கட், கடலை, வாந்தி வந்தால் போட்டுக் கொள்ள ஆல்பக்கோடா பழம்,நாரத்தங்காய் ஊறுகாய் அல்லது உப்பு எலுமிச்சங்காய் ஊறுகாய்,ஆரஞ்சு மிட்டாய்கள். எல்லாவற்றையும் சென்னையில் இருந்தே எடுத்துப் போனதால் எல்லாவற்றையும் பாக் செய்து விட்டுப் படுத்தோம். காலை 4 மணிக்கே ஹோட்டல் ரிசப்ஷனில் இருந்து “waking call” வந்தது. இனி திருக்கைலை யாத்திரையின் முதல் நாள் துவக்கம். பிள்ளையாரை வேண்டிக் கொண்டு தயாரானோம்..கீழே சாப்பிடும் இடத்துக்கு வரச் சொன்னார்கள். அன்று காபி, டீ ஹோட்டல்காரர்களே கொடுத்தார்கள். இரண்டு பஸ்கள் வந்தன. அவரவர் பஸ்ஸில் ஏறிக் கொண்டோம். எல்லாரும் “ஓம் நமச்சிவாயா” சொல்ல அங்கே இருந்தவர்களில் வயதானவர் ஒருத்தர் கற்பூரம் ஏற்றிச் சுற்றிக் கொட்ட எல்லாரும் கடவுளைப் பிரார்த்தனை செய்து கொண்டே பிரயாணத்தைத் துவங்கினோம். பி.கு; மேலே குறிப்பிட்ட பொருட்களில் என்னுடைய அனுபவத்தின் படி யாரும் டூத் ப்ரஷ், பேஸ்ட் கொண்டு போக வேண்டாம். மவுத் வாஷ் வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் குளிரிலே அவர்கள் கொடுக்கும் ஒரு கப் வெந்நீரில் பல் எல்லாம் தேய்க்க முடியாது. பல் தந்தி அடிக்கும்.. ஊருக்குத் தகவல் கொடுக்கவும் முடியாது. ரொம்பக் கஷ்டம். மேலும் சோப்(குளியலுக்கோ, தோய்க்கவோ) தேவை இல்லை. மானசரோவரில் குளிக்க முடிந்தாலே பெரிய விஷயம். எங்கே துவைக்க? அவ்வளவுதான் உங்க கை உங்க கிட்டே இல்லை. லிக்விட் சோப் உடலுக்கு மட்டும் எடுத்துப் போங்கள். தினமும் முகம், கை, கால் கழுவ உபயோகப் படும். இது மாதிரி தேவைப் பட்ட சமயங்களில் என்னுடைய அபிப்பிராயத்தையும் சேர்த்துச் சொல்கிறேன். பெண்களுக்கு சாக்ஸ் வாங்கும்போது டெல்லியில் வாங்குவது நல்லது. அங்கே கால் கட்டை விரல் மட்டும் தனியாக மாட்டும்படிக் கிடைக்கும். செருப்புப் போட்டுக் கொள்ளும்போது வசதியாக இருக்கும். பொதுவாய் வட மாநிலங்களிலேயே பெண்கள் சாக்ஸ் என்றால் இப்படித்தான் தருவார்கள். 9 ஓம் நமச்சிவாயா-9 5-9-06 செவ்வாய்க்கிழமை காலையில் நாங்கள் எல்லாரும் இரு குழுவாகப் பிரிந்து இரண்டு பஸ்ஸில் ஏறிக் கொண்டு கைலை யாத்திரையின் முதல் நாள் பயணத்தைத் துவங்கினோம். காட்மாண்டுவின் மலைப்பகுதிகளில் பிரயாணம் தொடர்ந்தது. உயர்ந்த மலைச் சிகரங்கள்,. கீழே , கீழே, கீழே, இந்திராவதி நதி வேகமாகப் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது. வெகு தூரத்துக்கு இது வருகிறது. காட்மாண்டு நகரில் இருந்து சில கிலோ மீட்டர் தூரம் வரை பாதை நன்றாக இருக்கிறது. இருந்தாலும் அப்படி ஒன்றும் பாதை அகலம் இல்லை. இத்தனை பெரிய பஸ் வளைவுகளில் திரும்பும்போது சற்றுப் பயமாகத் தான் இருக்கிறது. என்றாலும் போகும்போது போகிற சந்தோஷத்திலும், ஆசையிலும், எதிர்பார்ப்பிலும் யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை. எல்லாரும் உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் பயணத்தைத் தொடர்ந்தோம். சற்றுக் குளிர் கூடிக் கொண்டே வந்தது. மலைப் பகுதிகளில் பசுமை தெரிந்தது. நடு நடுவே உருக்கி ஊற்றிய வெள்ளி போல அருவிகள், மிக மிக உயரத்தில் இருந்து கீழேஏஏஏஏ விழுந்து கொண்டிருந்தன. ஒன்றா, இரண்டா? 10 அடிக்கு ஒன்று இருக்கும் என நினைக்கிறேன். அத்தனை உயரத்தில் இருந்து அருவி விழும் வேகத்தில் பாதை சரிந்து நிலச் சரிவு ஏற்பட்டிருந்ததும் தெரிய வந்தது. மலைச் சரிவுகளில் பல இடங்களில் நெற்பயிரும் கண்ணுக்குத் தெரிந்தது. ஆனால் அதிகம் தெரிந்தது சோளம் தான். சோள மணிகள் காய வைக்கப் பட்டிருந்தன. ரொம்பவே உயரமான பகுதி. குறுகலான பாதை. ஒரு வண்டி எதிரே வந்தால் அது கடக்கும் வரையோ, நம் வண்டி கடக்கும் வரையோ மனசு திக் திக் என்று அடித்துக் கொள்வதைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு மயிரிழை நகர்ந்தாலும் அதோகதிதான். டிரைவர் மிகச் சாமர்த்தியமாக வண்டி ஓட்டினார். சற்று தூரம் போனதும் சுமார் 8-30 மணி அளவில் ஒரு பள்ளத்தாக்கு ஊர் வந்ததும் காலை உணவு ஏற்கெனவே தயார் செய்து பெட்டியில் அடைக்கப் பட்டது கொடுக்கப் பட்டது. ஒரு டீக்கடையில் உட்கார்ந்து காலை உணவைச் சாப்பிட்டு விட்டு அங்கேயே டீயும் குடித்தோம். வரும் வழியில் தென்பட்ட “அன்னபூர்ணா மலைத் தொடர்ப் பகுதிகள்” பற்றியும், எவரெஸ்ட்டின் மறுபக்கச் சிகரம் தெரிந்தது பற்றியும் எல்லாரும் பேசிக் கொண்டோம். வழி எல்லாம் ராணுவ சோதனை. உள்நாட்டில் இன்னும் நிலைமை சீராகாத காரணத்தால் நேபாளம் எங்குமே இந்த சோதனை நடக்கிறது. நாங்கள் அரசு அனுமதி பெற்றிருப்பதால் அதிகம் சோதனை இல்லை. காட்மாண்டுவில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரம் பயணித்துப் பின் நேபாள எல்லையான கோடரி-தொட்டபாணி என்ற கிராமத்தை அடைந்தோம். அங்கே இந்த பஸ் நின்று விடும். அங்கிருந்து சீனாவிற்குள் அதாவது திபெத் பள்ளத்தாக்கில் நுழைய நடந்தே கடக்க வேண்டும்.. இது சுமார் 2 அல்லது 3 கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும். அதே போல் சீன எல்லையில் இருந்தும் நேபாளத்திற்குள் நுழைய நடந்தே வருகிறார்கள். இந்த இடத்தில் எல்லாரும் இறங்கிக் கொண்டு கையில் கொண்டு வரும் சாமான்களைத் தவிர மற்றவை இருந்தால் ட்ராவல்ஸ்காரரிடம் ஒப்படைக்க வேண்டும். எல்லாரும் ஏற்கெனவே அதற்குத் தகுந்தாற்போல் பாக் செய்து வந்திருந்ததால் கைப்பையைத் தூக்கிக் கொண்டு நடந்தோம். அங்கிருந்து “ஹோட்டல் லாசா” என்ற இடத்துக்குப் போய் மதிய உணவை முடித்துக் கொண்டு அங்கே இருந்து எல்லாரும் நேபாள,சீன எல்லையில் இருக்கும் “நட்புப் பாலம்” (friendship bridge) போக வேண்டும். “லாசா” ஹோட்டலில் சாப்பாடு என்ற பெயரில் இரண்டு கருகிய ரொட்டி, ஒரு ஸ்பூன் சாதம், அதே மாதிரி ஒரு ஸ்பூன் தால், சப்ஜி என்ற பெயரில் இரண்டு உருளைக்கிழங்குத் துண்டங்கள் கொடுத்தார்கள். சிலருக்கு அது போதவே இல்லை. ரொம்பக் கேட்டதுக்கு அப்புறம் தயிர் என்ற பெயரில் ஒரு திரவம் வந்தது. சாப்பிட்டு விட்டு நட்புப் பாலத்தை நோக்கி நடந்தோம். வெயில் சுட்டெரித்தது. ஒரே வியர்த்துக் கொட்டியது. நட்புப் பாலம் வரை ஏராளமான வீடுகள், கடைத் தெருக்கள், சுமை தூக்குபவர்கள் சுமைகளைத் தூக்கிக் கொண்டு நேபாளத்தில் இருந்து சீன எல்லைக்குள் அவரவர் அனுமதிச் சீட்டைக் காட்டி விட்டு நுழைந்து கொண்டிருந்தார்கள். சுமை தூக்குபவர்களில் சிறு பையன்கள், பெண்கள், மற்றும் பெண்கள் தான் அதிகம் காணப்பட்டனர். எங்கள் ட்ரக்கில் இருந்து நாங்கள் உபயோகிக்கும் பொருட்கள் அடங்கிய சிவப்புப் பைகள், மற்றும் சாப்பாட்டுப் பொருட்கள், காஸ் சிலிண்டர்கள்,அடுப்புகள் முதலியன சுமை தூக்குபவர்களால் ஏற்றப்பட்டு சீன எல்லைக்குள் நுழைந்து கொண்டிருந்தன. நாங்கள் நட்புப் பாலத்தை அடந்தோம். நேபாள அரசின் பாஸ்போர்ட் அலுவலகத்தில் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை ட்ராவல்ஸ் காரர்களே செய்து வெளியே போகும் அனுமதி வாங்கி விட்டதால் நாங்கள் இனிமேல் சீன அரசின் அலுவலகத்திலே தான் தனித் தனியாக ஒவ்வொருவராக அனுமதி பெற வேண்டும். இந்த நட்புப் பாலம் “1985-ல் ” கட்டப்பட்டிருக்கிறது. நட்புப்பாலத்தின் இருபக்கமும் இமயமலைத் தொடரின் ரம்மியமான காட்சிகள். மலை மேல் உயரத்தில் சில வீடுகள்,அதில் பயமில்லாமல் ஏறி விளையாடும் குழந்தைகள். பாலத்துக்குக் கீழே ஆர்ப்பரித்து ஓடும் நதி. “போடேகுயிச்சி” என்று சொல்கிறார்கள். மிக வேகம், சத்தமும் கூட. அதைப் படம் பிடிக்கலாம் என்று எங்களில் சிலர் முயலச் சீன அரசாங்கக் காவலாளியால் எச்சரிக்கப் பட்டோம். படம் எடுக்கக் கூடாதாம். விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து கையில் வைத்திருந்தோம்.எங்களுக்கு ட்ராவல்ஸ்காரரால் நம்பர்கள் அளிக்கப் பட்டிருந்தன. அதன்படி என் நம்பர் 12, என் கணவர் நம்பர் 13. எல்லாரும் நம்பர் படி வரிசையில் நின்று கொண்டோம். சீன அரசின் அலுவலருக்கு எங்களைப்பற்றி எடுத்துச் சொல்லி எங்களுக்கு உதவ வேண்டிய உதவியாளர் வந்ததும் தான் நாங்கள் போகமுடியும்.அது வரை காத்திருந்தோம். அவர் வந்து எங்கள் குழு விசாவைக் காட்டிக் கிட்டே நின்று கொண்டிருக்க ஒவ்வொரு நபராகப் போய் அனுமதி பெற்றுச் சீன ஆக்கிரமிப்பில் இருக்கும் திபெத்தில் நுழைந்தோம். 10 ஓம் நமச்சிவாயா-10 நாங்கள் முதலில் நுழைந்த கிராமத்தின் பெயர் “ஜாங்-மூ” என்பதாகும்.. வழி எல்லாம் நிறையக் கடைகள். எல்லா இடங்களிலும் குளிருக்குப் பாதுகாப்பான ஆடைகளும், வெல்வெட் துணிகள், படுக்கை விரிப்புக்கள் முதலியன இருந்தன. நம் தமிழ்நாட்டில் அதுவும் சென்னையில் சற்றும் உபயோகப் படாது. ஆகவே நாங்கள் மேலே நடந்தோம். மேலும் இருக்கும் பணமெல்லாம் செலவு செய்து விட்டால் மேலே போய்க் குதிரைக்கு, கூட வரும் ஹெல்ப்பருக்கு என்று பணம் தேவைப் படும். திடீரென உடல் நிலை சரியில்லாது போனாலும் பணம் தேவைப் படும். அதிகப்படியான சீனப் பணம் ட்ராவல்ஸ்காரர்களிடம் இருந்தது என்றாலும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது அல்லவா? சீன நேரத்திற்கும் நம் நேரத்திற்கும் 2-1/2 மணி நேரம் வித்தியாசம்.அதாவது நம் நாட்டில் பகல் 12-00 மணி என்றால் சீனாவில் 2-30PM ஆகும். அதற்கேற்பக் கைக்கடிகாரங்களை எல்லாரும் மாற்றிக் கொண்டார்கள். எல்லாருக்கும் தேவையான சீனப் பணம் அன்றிரவு நாங்கள் தங்கப் போகும் “நியாலம்” என்ற ஊரில் தரப் படும் என்று கூறப்பட்டது. சற்றுத் தூரம் நடந்ததும் “எகோ ட்ரக்” கொடி ஏற்றப்பட்ட வண்டிகள் கண்ணுக்குத் தெரிந்தன. கிட்டத் தட்ட 10, 12 வண்டிகள். எல்லாம் “டொயோட்டோ” கார் வகைகள்.”Land Cruiser” வண்டிகள். ஒரு காரில் டிரைவரைத் தவிர்த்து 4 பேர் பிரயாணம் செய்யலாம். வலது பக்க டிரைவ். டிரைவரின் அருகில் ஒருத்தர். பின்னால் 3 பேர். அதற்கும் பின்னால் உள்ள இடத்தை சாமான்கள் வைக்கும் இடமாக வைத்திருந்தார்கள். எந்தக் காரில் ஏற வேண்டும் எனத் தெரியவில்லை. நாங்களாக ஒரு காரில் ஏறிக் கொண்டோம். டிரைவர் உடனே பார்த்துவிட்டு வந்து பின்னால் திறந்து சாமான்கள் வைக்க உதவினார். எல்லாம் சைகையில்தான். அவர் சொல்வது நமக்குப் புரியாது. நாம் கேட்பது அவருக்குப் புரியாது. போக வேண்டிய ஊரின் பேரைச் சொல்லிக் கையால் எத்தனை மணி நேரம் ஆகும் எனக் கேட்டோம். 4 கைவிரல்களை விரித்துக் காட்டினார். அதற்குள் பங்களூரில் இருந்து வந்த முதியவர் திரு சங்கரன் எங்கள் வண்டியில் வேறு யாரும் இல்லை என்றால் ஏறிக் கொள்ளலாமா? எனக்கேட்கவே நாங்கள் வரவேற்றோம். இன்னும் ஒருத்தர் இருக்கிறாரே என நினைத்த போது ஒரு ஃப்ரெஞ்ச்காரர் வந்தார். எங்கள் குழுவில் இவரைத் தவிர 3 ரஷ்யர்கள், ஒரு ஜர்மானியப் பெண், இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த இரண்டு குஜராத்தைச் சேர்ந்த இந்தியர்கள், சென்னையில் இருந்து மனோஹரனத் தவிர்த்து நாங்கள் 2 பேர், டாக்டர் நர்மதா, அவர் கணவர், மடிப்பாக்கத்தில் இருந்து, மைலாப்பூரைச் சேர்ந்த லலிதா என்ற பெண்மணி இருந்தனர். மற்றவர்கள் முறையே மதுரை, திருச்சி, நாகூர், பங்களூர், ஹைதராபாத், புனா, பாம்பே, குஜராத்தில் உள்ள புஜ் ஆகிய இடங்களைச் சேர்ந்த தமிழர்கள். கேரளாவில் இருந்து ஒருவரும், பாண்டிச்சேரியில் இருந்து ஒருவரும் வந்திருந்தனர்.பாண்டிச்சேரிக்காரரை முதல் மந்திரி திருரங்கசாமி அவர்கள் தன் செலவில் அனுப்பி வைத்துள்ளார். இவர் தன் பொறுப்பில் ஒரு சிவாலயம் எழுப்பிக் கைலாச நாதர் கோவில் என்ற பெயரில் பராமரித்து வருகிறார். அதற்கு திருரங்கசாமி அவர்களும் உதவியதோடு அல்லாமல் ட்ரஸ்டியாகவும் இருந்து உதவி இருக்கிறார். எல்லாரும் காரில் ஏறிக் கொண்டார்கள் என்று தெரிந்ததும், சாமான்கள் ஏற்றிய இரண்டு ட்ரக்குகள் உள்பட மொத்தம் 14 வண்டிகள் தன் நீண்ட நெடும் பயணத்தை மேற்கொண்டன. கைலை யாத்திரையின் முதல் நாள் பயணம் துவங்கியது. இன்னும் 4 நாள் போக வேண்டும். எல்லாம் மலைகளின் மேலேயே. எல்லாரும் கடவுளை வேண்டிக் கொண்டு புறப்பட்டோம். மிகக் குறுகிய தெருக்கள். ஒரு வண்டி வந்தால் மேலே போக இடமே இல்லை. அதில் மிகச் சாமர்த்தியமாக டிரைவர்கள் ஓட்டுகிறார்கள். மலைப்பாதைதான். சற்றுப் பயமாகத் தான் இருக்கிறது. கிட்டத் தட்ட 2,300 மீட்டர் உயரத்தில் பயணம் செய்து கொண்டிருந்தோம். தூரத்திலும் கிட்டத்திலும் அருவிகள் தெரிந்தன என்றாலும் நேபாளத்தில் மிக் அருகே பார்த்த மாதிரி இல்லை. சற்றுத் தூரம் வரை பசுமை, மலைகளிலும் சுற்றுப் புறங்களிலும். போகப் போகக் குறைந்து கொண்டே வருகிறது. கீழே சுழித்துக் கொண்டு ஓடும் ஆறு கூடவே வருகிறது. கொஞ்சம் தப்பினாலும் அவ்வளவு தான். இதிலே எதிரே நிறைய லாரிகள், ட்ரக்குகள் வருகின்றன. அவற்றுக்கு விட இடமே இல்லை என்றாலும் வண்டிகள் நம்மைக் கடந்து போனதும் ஒரு நிம்மதி. சற்றுத் தூரம் வரை ஊர் வந்ததால் ஒன்றும் தெரியவில்லை. மேலும் ஒரு வண்டி நின்றால் எல்லா வண்டிகளும் நின்று விட்டு என்ன ஏது என்று தெரிந்து கொண்டுதான் கிளம்புகிறார்கள். மற்ற வண்டிகள் பிரச்னை என்றால் எல்லாரும் கூடிப் போய்ச் சரி செய்கிறார்கள். சுமார் 5 அல்லது 6 கி.மீ போனதும் வண்டிகள்நின்றன. என்ன என்று பார்த்தால் சீனக் கஸ்டம்ஸ் அலுவலகம்.. இங்கேயும் எல்லாரும் தனித் தனியாகத் தங்கள் பாஸ்போர்ட்டைக் காட்டி விட்டுச் செல்ல வேண்டும். மறுபடி வரிசை, மறுபடி,எங்கள் ஏஜெண்ட் வந்து அறிமுகம் செய்ய ஒவ்வொருவராக வந்து எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வண்டியில் ஏறினோம்.அந்தத் தெரு தாண்டித் திரும்பலாம் என்று போன போது எதிரே ஒரு லாரி வந்தது. சற்று நின்றால் பின்னாலேயே லாரிகளின் அணிவகுப்பு. நாங்கள் நின்றபோது நேரம் சீன நேரப்படி மாலை 4-00. ஆகி இருந்தது. சற்று நேரத்தில் சரியாகிவிடும் போகலாம் என்றால் எல்லா டிரைவர்களும் வண்டியை நிறுத்தி விட்டுப் போய் உட்கார்ந்து கொண்டு விட்டார்கள். எங்களுக்கு என்னவென்றே புரியவில்லை. எங்கள் குழுவில் ஒருத்தர் முன்னால் போய் விசாரித்து விட்டு ஏதோ பாதை சரியில்லையோ எனத் தெரிவித்தார். எல்லாருக்கும் கவலையும்.. பயமும் ஏற்பட்டது. முதல்நாள் பயணத்திலேயே தடங்கலா என. டிரைவரைக் கேட்டால் அவர், “மாச்சி,மாச்சி,” என்று ஏதேதோ சொல்கிறார். குழப்பத்துடன் உட்கார்ந்திருந்த போது ஒரு வண்டி ஹிந்தியில் எழுதப் பட்டு வரவே அதன் டிரைவரிடம் கேட்டோம். அவர் நட்புப் பாலம் அருகாமையில் இருப்பதால் அதை மாலை 6 மணிக்குள் கடக்க வேண்டும் எனவும் இல்லை எனில் மலைப்பாதையில் ஒரு இரவு பூராக் கழிக்க வேண்டி வரும் எனவும் ஆகவே மாலை 4-00 மணி முதல் 6-00 மணி வரை நேபாளம் போகிற வண்டிகளை விடுவார்கள் எனவும் 6-00 மணிக்கு அப்புறம் நீங்கள் போக முடியும் எனவும் சொன்னார். ஒரே லாரிகளின் அணி வகுப்பு. நூற்றுக் கணக்கான லாரிகள் சீனாவில் இருந்து வருகிறது, நேபாளத்தில் இருந்து சீனா போய்விட்டும் திரும்புகிறது. எல்லாம் ஏதேதோ சாமான்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள். அந்த அணி வகுப்பு சரியாக 6 மணிக்கு முடிந்து நாங்கள் “நியாலம்” கிளம்பினோம். மலைப்பாதை,வளைந்து வளைந்து போகிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,750 மீட்டர் உயரத்தில் உள்ள “நியாலம்’ என்ற ஊரில் தான் நாங்கள் முதல் நாள் தங்க வேண்டும். 11 ஓம் நமச்சிவாயா-11 நியாலத்தில் அன்று இரவு மட்டும் இல்லாமல் மறுநாள் முழுதும் தங்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். மறுநாளில் இருந்து மேலே மேலே உயரத்தில் போக வேண்டியிருக்கும், ஆதலால் இந்த ஓய்வு. மிக ஆபத்தான வளைவுகள் கொண்ட பாதை. கொஞ்ச தூரம் வரை வீடுகள், கடைகள், மக்கள் நடமாட்டம். எங்கு பார்த்தாலும் தெருமுனைகளிலும், சற்று உயரமான இடங்களிலும் தோரணங்கள் கலர் கலராகத் தொங்கின. சில வீட்டு வாயில்களிலும் கோலம் போன்ற அமைப்புத் தெரிகிறது. கூடாரம் போன்ற அமைப்புக்களில் தோரணங்கள் கட்டப் பட்ட இடத்தை வண்டிகள் கடக்க நேர்ந்தால் பிரதட்சிணமாகச் செல்லுகின்றன. புத்த மத வழிபாட்டு இடம் என்கிறார்கள். எல்லாரும் வந்து அங்கே பிரதட்சிணம் செய்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறார்கள். நல்ல வேளையாக வெயில் இருந்தது. ஆகவே வண்டிகள் போய்க் கொண்டிருந்தன. வழியில் அருவிகள் வழக்கம் போல் குறுக்கிட்டன. ஒரு இடத்தில் மலை மேலிருந்து விழும் அருவி ரோட்டில் நேராக விழுவதால் அதன் வேகத்தாலும் அதன் தாரையாலும் வண்டிகள் ஓட்ட முடியாது என கான்கிரீட்டில் தூண்கள் எழுப்பி மேலே ஒரு கான்கிரீட்டால் ஆன பலகை போட்டும் அதை மீறிக் கொண்டு தண்ணீர் மிக வேகமாக விழுந்து கொண்டு இருந்தது. ரோடா அது எல்லாம். எல்லாம் வண்டிகள் போய்ப்போய்ப் பழக்கத்தில் ஏற்பட்டவையாக இருந்தனவே தவிர ஒழுங்காகப் போடப்பட்ட மாதிரி இல்லை. வண்டியும் குதித்துக் குதித்துப் போனது. எல்லாரும் மேலேயும் கீழேயும் குதிக்க வேண்டி வந்தது, வண்டிக்குள்ளேயே. புழுதி பறக்கிறது. வாயை மூட மாஸ்க் கொடுத்திருந்தார்கள். கண்டிப்பாக வாயை மூடிக் கொள்ள வேண்டும். என்னதான் வண்டியின் ஜன்னல்கள் மூடி இருந்தாலும் புழுதி கொஞ்சம் உள்ளே வரத் தான் செய்கிறது. இம்மாதிரியே மேலே ஏறிக் கீழே இறங்கிச் சில சமயம் கீழ் மலையிலேயே சுற்ற வேண்டும். பின் சமவெளி. மறுபடி ஒரு மலை. இமயமலை அடுக்குத் தொடர். அதில் ஒவ்வொரு அடுக்கும் ஏறி, இறங்கி அந்தச் சமவெளி அல்லது பள்ளத்தாக்கைக் கடந்து, மறுபடி இன்னொரு மலை ஏறி, இறங்கி இப்படியே போய் அன்றிரவு 8-30 மணி அளவில் “நியாலம் ஹோட்டல்” அடைந்தோம். ஹோட்டலில் மாடியில் அறைகள். சாப்பிடும் இடம் கீழே. கழிப்பறை வசதி இருந்தாலும் அத்தனை பேருக்குப் போதாது. சமாளித்தோம். அன்றிரவு எல்லாரும் கூட்டுப் பிரார்த்தனைக்கு அழைக்கப் பட்டு எல்லாருக்கும் மறுபடி பயணத்தின் சிரமங்கள் பற்றி எடுத்துச் சொல்லப் பட்டது. மேலே போகப் போக ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும், உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் இருப்பதற்கும் ட்ராவல்ஸ்காரர்களே “Diamox” என்னும் மாத்திரை இருவேளையும் கொடுக்கிறார்கள். நம் மருத்துவர்களும் இதை ஆதரிக்கிறார்கள். மேலும் திட உணவு இல்லாவிட்டாலும் திரவ உணவு அதிகம் எடுத்துக் கொள்ளும்படியும் வற்புறுத்துகிறார்கள். இதெல்லாம் கட்டாயம் இவ்வளவு உயரம் பயணம் செய்யும்போது தெரிந்து கொள்ள வேண்டியவை, என்பதால் எழுதுகிறேன். மேலும் காலை “ப்ளாக் டீ”யுடன் எழுப்புவார்கள். நமக்கு அவ்வளவாக “ப்ளாக் டீ” பழக்கம் கிடையாது என்றாலும் அங்கே கட்டாயம் சாப்பிட வேண்டும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் தேவை என்கிறார்கள். அன்றுக் கூட்டுப் பிரார்த்தனை முடிந்து இரவு எல்லாரும் படுத்தோம். எல்லாருக்கும் கட்டில், மெத்தை, தலையணை, ரஜாய் முதலியன இருந்தது. என்றாலும் மேலே போகப் போக எப்படியோ தெரியாது. மறுநாள் காலை நாங்கள் எல்லாரும் காலை உணவுக்குக் கூடியபோது மலை மேல் ஏறும்போது தேவைப்படும் பொருட்கள் இல்லை என்றால் அங்கே வாங்கிக் கொள்ளும்படி அறிவுறுத்தப் பட்டோம். எல்லாருக்கும் “RED BULL” என்ற பானம் வாங்கிக் கொள்ளும்படியும் சொன்னார்கள். கைலை பரிக்ரமா செய்யும் போது அது தேவைப்படும் என்றார்கள். கடையில் பொருட்கள் வாங்கப் போனால் விலையை அவர்கள் கால்குலேட்டரில் போடுவார்கள். நாம் கேட்கும் விலையை அதில் போட வேண்டும். இப்படிப் பேரம் நடந்து சாமான்கள் வாங்கிக் கொண்டு சீன தொலைபேசித் துறை மூலம் நடத்தப் படும் தொலைபேசியில் ஒரு நிமிஷத்துக்கு 5 யுவான் கொடுத்து யு.எஸ்ஸில் உள்ள பெண்ணிடமும், பையனிடமும் பேசினோம்.. இந்தியாவுக்கு 6 யுவான். ஒரு யுவான் இந்தியப் பணத்தில் 6ரூ. ஆகிறது. வெந்நீர் எல்லாம் ஒரு ப்ளாஸ்டிக் மக்கில் கொடுப்பார்கள். அதிலேயே எல்லாம் முடித்துக் கொள்ள வேண்டும் என்பதால் குளியல் எல்லாம் கிடையாது. அந்தக் குளிரில் தண்ணீரில் குளித்தால் விறைத்துத் தான் போகும். இருந்தாலும் சில துணிகளைத் துவைத்துக் கொண்டோம். மேலே போகப் போக எப்படியோ என்று. மதியச் சாப்பாடு தென்னிந்திய முறைப்படி சாம்பார், ரசம், சப்ஜி என்று இருந்தாலும் கூடவே ரொட்டியும் இருந்தது. நியாலம் வருவதற்குள் சிலருக்கு ரொம்பவே முடியாமல் போய்விட்டது. அதில் எங்களுடன் வந்த டாக்டர் நர்மதாவும், SBI Retd. திரு தாரகராமன், திருமதி தாரகராமன் மற்றும் செந்தில் என்ற ஒரு இளைஞர் செவ்வாய் அன்று படுத்தவர்கள் எழுந்திருக்கவே இல்லை. சாப்பிடக் கூடவரவில்லை. பயணம் அவர்களை மிகவும் வாட்டி விட்டது. மேலும் இருவர் வந்த வண்டிகளும் ஒன்று டயர் பங்சர் ஆகித் தொந்தரவு கொடுத்தது. இன்னொருத்தருக்கு டயரே உருண்டு விட்டது. பின் எல்லாரும் நின்று சரி செய்து கொண்டு வந்தோம். மெக்கானிசமும் டிரைவர்கள் தெரிந்து வைத்திருப்பதால் வசதியாக இருக்கிறது. இல்லாவிட்டால் அந்த மலைக்காட்டில் என்ன செய்வது? மறுநாள் காலை “ப்ளாக் டீ”யுடன் எழுப்பினார்கள். டீ குடித்து ஓரளவு சுத்தம் செய்து கொண்டு தயார் ஆனோம்..இங்கே தான் கட்டிடம் போன்ற அமைப்பு உள்ள தங்கும் இடம். மற்ற இடங்களில் எல்லாம் (Mud House)களிமண்ணால் செய்யப் பட்ட சிறு அறைகள் தான். குளிர் தாங்கும் என்பதால் இந்த மாதிரியான அறைகள் தான் அங்கே பயணிகள் தங்கும் camp-ல் அதிகம் காணப்படுகிறது. காலை உணவு முடிந்து, மதியம் சாப்பாடும் அங்கேயே தயார் செய்து ஒரு வண்டியில் ஏற்றிப் பின் பாத்திரங்கள் சுத்தம் செய்து சமையல் அறை காலி செய்து பொருட்கள் ட்ரக்கில் ஏற்றப்பட்டு மறு நாள் பயணம் துவங்கியது. நியாலத்தில் இருந்து “சாகா” என்னும் ஊர் பிரம்மபுத்ரா நதிக்கரையில் உள்ளது அங்கே போய்த் தங்க வேண்டும். இங்கிருந்து தான் high altitude ஆரம்பிக்கிறது. எல்லாரும் மீண்டும் எச்சரிக்கப் பட்டோம். ஒரு விதமான எதிர்பார்ப்புடன் பயணம் துவங்கியது. இமயமலையின் இந்தப் பகுதி ஒன்று நீண்ட பள்ளத்தாக்காக வருகிறது. அல்லது அடுக்கடுக்கான மலைத் தொடர்களாக வருகிறது. ஆகவே பார்க்கும்படியான இடங்கள் எதுவும் இல்லை. திபெத் மக்களின் வறுமை பற்றியும் மிகவும் பின் தங்கி இருப்பது பற்றியும் நிறையச் சொல்லலாம். 12 ஓம் நமச்சிவாயா-12 நியாலம் வந்ததில் இருந்தே என் கணவருக்கு மூச்சு இரைக்க ஆரம்பித்தது. கொஞ்சம் நடந்தாலே மூச்சு இரைத்தது. அதுவும் அங்கே படி ஏறி இறங்க ரொம்பச் சிரமப்பட்டார். தெருக்கள் வேறு ஏறி ஏறி இறங்க வேண்டும். ரொம்ப உயரமாக இருக்கும்,. திடீரெனக் கீழே இறங்க வேண்டும். எனக்குப் பருவ நிலையின் மாற்றம் எப்போதுமே ஒத்துக் கொள்ளாது. மூக்கில் இருந்து ரத்தம் வர ஆரம்பிக்கும். இப்போது வர ஆரம்பித்தது. எங்கள் குழுவில் கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லக் கூடியவர்கள் ஒரு பத்து பேரும், பூரண ஆரோக்கியத்துடன் திரு மனோஹரைத் தவிர ஒரு 4,5 பேரும் தான் இருந்தார்கள். இந்நிலையில் சாகா பிரயாணம் துவங்கியது. எங்கள் குழுவில் திரு கோபாலகிருஷ்ணன் என்பவர் மூன்றாம் முறையாகக் கைலை யாத்திரைக்கு வருகிறார். அவர் தலைமையில் சிலர் வந்தார்கள். ஆனால் இந்தக் கோபாலகிருஷ்ணனுக்கு நியாலம் வந்ததில் இருந்து உடல் நிலை சரியில்லாமல் போனது. அதோடு சாகாவுக்கும் கிளம்பி வந்தார். ஏற்கெனவே டாக்டர் நர்மதாவின் உடல் நிலையிலும் பிரச்னை இருந்தது. வழியில் ஒரு சிறிய நதிக்கரையில் பகல் 2 மணி சுமாருக்கு வண்டிகள் நின்று எல்லாரும் மதிய உணவு எடுத்துக் கொண்டோம். டிரைவர்கள் எல்லாருக்கும் நாங்கள் சாப்பிடும் சைவ உணவு ஏற்காது என்பதால் அவர்களுக்கு என்று இந்த மாதிரிச் சில இடங்களில் திபெத்தியர் உனவு விடுதிகள் இருக்கின்றன. அவை வந்ததும் வண்டிகள் நிறுத்தப்பட்டு டிரைவர்கள் அங்கே போய்ச் சமைத்துத் தரச் சொல்லிச் சாப்பிடுவார்கள், எங்களுக்குப் பூண்டு, வெங்காயம், மசாலா சேர்க்காத உணவு. வழி எல்லாம் நிறைய நதிகள், ஓடைகள், சிற்றோடைகள் கடக்க வேண்டி இருந்தன. மனித நடமாட்டம் என்பதே இல்லை. நியாலத்தில் வியாபாரம் செய்யும் நபர்கள் கூட சீனர்கள் தான். சீன் அரசு கொஞ்சம் கொஞ்சமாகத் தன் மக்களை அங்கே குடியேற்றிக் கொண்டு இருக்கிறது. எல்லாவற்றிலும் அவர்கள் ஆதிக்கம்தான். உள்ளூர் மக்கள் நம்மிடம் வந்து காசு கேட்கிறார்கள். சாப்பிடக் கேட்கிறார்கள். மிகவும் வறுமையுடனும், இழிந்த நிலையிலும் இருக்கிறார்கள். பெண்கள் வந்து சூழ்ந்து கொண்டு பொட்டு, துணி, வளையல், மணிமாலை முதலியன கேட்கிறார்கள். என்னிடம் இருந்த வளையல்களை எல்லாம் கொடுத்தும் ஒரு கூட்டம் சூழ்ந்து கொள்ளவே எல்லாரும் சேர்ந்து என்னை வண்டியில் ஏறிக் கதவை மூடிக் கொள்ளச் சொன்னார்கள். அப்படியும் ஜன்னல் கதவை வந்து தட்டித் தட்டிக் கேட்டார்கள். பிஸ்கட், சாக்லட்,தின்பண்டங்கள் என்று யாரிடம் என்ன இருந்ததோ அதைக் கொடுத்தோம். எங்களுடன் வண்டியில் கூடவரும் பெரியவர் சங்கரன் தன் கைப்பையில் இருந்து பிரசாதங்கள் விபூதி, குங்குமம் என்று குழந்தைகளுக்குக் கொடுத்து அவர்களுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுத்து குழந்தைகளுடன் ஒரு குழந்தையாக விளையாடினார். மலைகளின் தோற்றம் விசித்திரம் விசித்திரமாக இருந்தது. ஒரு இடத்தில் பாறைகளாய்த் தோற்றம் அளிக்கும். ஒரு இடத்தில் நீலமலைகளாகக் காட்சி அளிக்கும். ஒரு இடத்தில் மஞ்சள் நிறமாக இருக்கும். அதே போல் மலைகளின் மேலிருந்து விழும் தண்ணீரும். வெள்ளியை உருக்கி ஊற்றியது போலப் பனி உருகி ஓடி வந்து கொண்டிருக்கும். தண்ணீர் சில இடங்களில் நிறமற்று இருக்கும். சில இடங்களில் பளபளக்கும் பச்சை நிறத்துடன் நடுவே வெள்ளி ஜரிகை போட்டது போல வெள்ளி நிறத்துடனும் இருக்கும். ஒரு ஏரி முழுக்கமுழுக்க நீல மலைகளின் ஒளி விழுந்து பிரதிபலிக்கிறது. தூரத்தில் இருந்தே ஒரு ஏரி முழுக்க பலவிதமான நீலக் கலர்களில் எத்தனை ரகம் உண்டோ அத்தனை ரகத்திலும் காட்சி அளிக்கிறது. கிட்டே போனால் அப்பாடி,எவ்வளவு பெரிய ஏரி? என்ற வியப்பு ஏற்படுகிறது. இத்தனை இருந்தும் மருந்துக்குக்கூட புல், பூண்டு கிடையாது. ஏதோ ஒரு வகையான செடிகள் தான். மரங்களே பல மைல்களுக்குக் கிடையாது. அங்கங்கே “யாக்” எனப்படும் காட்டு எருமைகள், செம்மறி ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. சில இடங்களில் காட்டுக் குதிரைகளும் தென்பட்டன. காட்டு எலி ஒரு முயல் அத்தனை பெரிசாக இருக்கிறது. அதை முயல் என்றே முதலில் நினைத்தோம். அப்புறம்தான் தெரிந்தது காட்டு எலி என்று. திபெத்தியன் நாய்களும் கூட மிகப் பெரிதாக இருந்தன. நாங்கள் ஏற்கெனவே இந்த நாய்களிடம் ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டிருந்தோம். ஆகவே தனியாக எங்கேயும் போகமாட்டோம். அன்று மாலை சுமார் 6-00 மணி அளவில் நாங்கள் பிரம்மபுத்திரா நதி ஆரம்பித்து ஓடி வரும் இடத்துக்கு வந்து சேர்ந்தோம். நதியைக் கடந்தால் “சாகா” என்னும் தங்கும் இடம். குளிர் தெரிய ஆரம்பித்தது. Altitude மாற்றத்தினால் யாருக்கு என்ன தொந்திரவு என இனிமேல் தான் தெரியும். எல்லாரும் தலைக்குத் தொப்பி, கழுத்தைச் சுற்றி மஃப்ளர், ஸ்வெட்டர், கோட் என்னும் ஜெர்கின் எல்லாம் போட்டுக் கொண்டு இருந்தோம். பிரம்மபுத்திரா நதியைக் கடந்து, கடக்கும் இடத்தில் பாலம் சற்றுச் சிறியதாக இருக்கிறது. இருந்தாலும் எல்லா இடங்களிலும் இம்மாதிரி பாலங்களைக் கடந்து ரோடுக்கு வரும் இடம் நடுவில் சற்று இரும்புத் தண்டவாளங்களைப் போட்டு இருப்பதால் அதை வண்டி கடக்கும் போது “திக், திக்” என்று அடித்துக் கொள்ளும். மலைப் பாதையில் உயரத்தில் இருந்து இறங்கினால் சரிவாக எல்லாம் இறங்க முடியாது. கிட்டத் தட்ட 10 அடி அல்லது 15 அடிக்குமேல் உயரத்தில் இருந்து வண்டி குதிக்கும். அப்படியே செங்குத்த்த்த்த்த்த்தாகக் கீழே இறங்கும். எல்லாருடைய உயிரும் ஒரு முறைக் கைலை போய் விட்டு மீண்டு வரும். இம்மாதிரி இன்னும் 2 நாள் போயாக வேண்டும். “சாகா” வந்ததும் அங்கு ஏற்பாடு செய்திருந்த தங்கும் இடம் சென்றதும், நாங்கள் நாங்களாகவே ஒரு சுமாரான அறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு உள்ளே போய்ச் சாமானை வைத்தோம். சாமான்கள் ஏற்றிய ட்ரக் இன்னும் வராததால் காபி, டீக்கு நேரம் ஆகும் என்று சொன்னார்கள்.ஆகவே போய் ஃபோன் செய்து விட்டு வரலாம் என்று நினைத்தோம். நான் கழட்டி வைத்த தொப்பியைப் போட்டுக் கொள்ளப் போனபோது காதில் போட்டிருந்த கம்மல் கழன்று இருப்பது தெரிந்தது. ஏற்கெனவே நேபாளில் லாக்கரில் வைக்கிறேன் என்றதற்கு என் கணவர் கம்மல் இல்லாவிட்டால் முகம் நல்லா இல்லை, (இல்லாவிட்டாலும் இருக்கிறது தானே இருக்கும், பார்க்கஅவருக்குப் பயமாக இருந்திருக்கும் போல) என்று சொல்லி விட்டார். கழன்ற கம்மலைப் போட நினைத்துக் காதில் கை வைத்தால் கம்மல் மட்டும் வந்தது. திருகு காணோம். நல்ல வேளையாக மாட்டல் கம்மலிலேயே இருந்தது. திருகைத் தேடினோம். கிடைக்க வில்லை. கம்மலைக் கழற்றிக் கைப்பையில் வைத்துக் கொண்டு ஃபோன் செய்யப் போனால் அங்கே அவங்க காட்டிய தொகை சீனப் பணத்தில் 48 யுவான் என்றிருந்தது. சற்று நேரம் பேசிப் பார்த்து விட்டு (கால்குலேட்டரிலேயே தான்) வந்துவிட்டோம். மனதில் கம்மல் திருகு தொலைந்ததற்கும் இப்போது பேச முடியாமல் போனதற்கும் முடிச்சுப் போட்டு நினைவுகள். அறையில் வந்து ஜெர்கினைக் கழற்றினால் கீழே ஏதோ விழுந்த சத்தம். உடனேயே லைட்டைப் போட்டுப் பார்க்கலாம் என்றால் அங்கே ஜெனரேட்டர் போட்டால் தான் மின்சாரமே! மின் விளக்குகளே இல்லை. மெல்ல மெல்ல தடவித் தடவிப் பார்த்தபோது கம்மலின் திருகு கிடைத்தது ஒருவழியாக. 13 ஓம் நமச்சிவாயா-13 எங்களுடன் வந்தவர்களில் திரு கோபாலகிருஷ்ணன் என்பவர் மூன்றாம் முறையாகக் கைலை யாத்திரை வருகிறார் என்று ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். நியாலத்திலேயே உடல் நிலை முடியாமல் போனது இங்கே வரும்போது நிலைமை மிகவும் மோசம் அடைந்திருக்கிறது. அவரை எங்கள் அறைக்குக் கூட்டி வந்து படுக்க வைத்து ஆக்ஸிஜன் கொடுக்க முயன்றார்கள். அவர் தனக்கு ஒன்றும் இல்லை என மறுக்கப் பின் அவரோடு வந்தவர்களில் ஒருவர் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். அங்கே அவருக்குச் சிகிச்சை தரப்பட்டு மேலே பயணம் தொடர வேண்டாம் என வற்புறுத்தப்பட்டார். சாகாவில் தான் மருத்துவ உதவி கிடைக்கும். மேலே போகப்போக மருத்துவ உதவி கிடைக்காது. சாகா கிட்டத்தட்ட ராணுவக் கண்டோன்மெண்ட் மாதிரி ராணுவ வீரர்கள் நிறைந்த ஊராக இருந்தது. ஆகவே அங்கே மருத்துவ உதவியும் கிடைத்தது. சீன மொழி தெரிந்த ஸ்ரீமதி ஸ்ரீலட்சுமி என்பவர் கூடப் போய் பேசும்போது மொழி பெயர்த்து உதவினார். இவர் ஹைதரபாத்தைச் சேர்ந்தவர். தெலுங்கு மொழியில் பிரபல எழுத்தாளர் என்றார்கள். இவர் தன்னுடைய சம்பந்தி ஸ்ரீமதி செளமினி மற்றும் அவர் தோழி ஸ்ரீமதி கண்ணம்மா என்பவருடனும் வந்திருந்தார். குழுவிலேயே இவர்களுக்கு தனிக் கவனிப்பு இருந்து வந்தது. மூவரும் பலவிதப் பயிற்சிகளை மேற்கொண்டு இதற்கெனத் தயார் செய்து கொண்டு வந்திருந்தனர். பஜனை,கூட்டுப் பிரார்த்தனை முதலியன இவர்கள் இல்லாமல் நடைபெறாது. இதை நான் இங்கே குறிப்பிடக் காரணம் உண்டு. திரு கோபாலகிருஷ்ணன் வரப்போவது இல்லை என்பது நிச்சயம் ஆகி விட்டது. திருமதி நர்மதாவும் உடல்நிலை பாதிக்கப் பட்டிருந்தாலும் திரு கோபாலகிருஷ்ணன் அளவுக்கு இல்லை என்பதால் அவர் பயணத்தைத் தொடர்ந்தார். சாப்பாடு நல்ல சாப்பாடாகக் கொடுத்து வந்தாலும் கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் பலராலும், அநேகமாக எல்லாராலும் சாப்பிட முடியவில்லை. 1/2 வயித்துக்கு ஏதோ கொறிப்போம். கூடியவரை நீர் ஆகாரம் மட்டும் சாப்பிட்டு வந்தோம். காபி,டீ அவர்கள் கொடுக்கும் பெரிய கப்பில் குடிக்க முடியாது என்பதால் அதற்குப் பதில் ஹார்லிக்ஸ், சாக்லேட் ட்ரிங்க் என்று குடித்து வந்தோம். காலை உணவாக ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வகைக் கஞ்சி, பாதாம், பிஸ்தா போட்டது, பான் கேக், தோசை, பூரி என்று கொடுத்தார்கள். எதுவும் தொடப் பிடிக்காது. வெறும் ஹார்லிக்ஸ் மட்டும் சாப்பிடுவோம். மத்தியானம் வண்டியை டிரைவர்கள் எங்கே சாப்பிட ஏற்பாடு செய்துள்ளதோ அங்கே நிறுத்துவார்கள். சிலசமயம் ரொம்ப சீக்கிரமாக இருந்தால் வேறு எங்காவது நிறுத்துவார்கள். வெறும் சாதம், கலந்த சாதம் ஒன்று, சப்ஜி(சாம்பார் என்ற பெயரில்) மோர் அல்லது தயிர், பதப்படுத்தப்பட்ட பழங்கள், ஜூஸ் இருக்கும். சாதமும் தயிரும் சாப்பிட்டு விட்டுப் பின் ஜூஸை வாங்கிக் கொண்டு வந்து விடுவோம். வெட்ட வெளியில்தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும்போது திடீரெனக் காற்று வீசும், அல்லது பனிமழை பெய்யும். ஜவ்வரிசிகள் போல ஐஸ்கட்டிகள் விழும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை என்பதே கிடையாது. இது கிட்டத் தட்ட 800 கி.மீட்டருக்கு நீடிக்கிறது. தண்ணீருக்குக் குறைவு இல்லை. ஆனால் எல்லாத் தண்ணீரும் பனி உருகி ஓடி வருவதால் வரும் தண்ணீர் என்பதாலும் அந்தப் பனிக்குப் பசுமை இருக்க முடியாது என்பதாலும் மரங்களே இல்லை. சில இடங்களில் ஒருவகைப் புல் இருக்கிறது. அந்த மாதிரி இடங்களில் சில வீடுகள் இருக்கும். சில இடங்களில் கட்டுகிறார்கள். கட்டினாலும்மொத்தம் 10 வீடுகளுக்குள் தான் இருக்கும். எல்லாம் களிமண்ணால் கட்டப்பட்ட வீடுகள். குறுகிய வாயிலைக் கொண்டது. ஒரே ஒரு ஜன்னல் போன்ற அமைப்பைக் கொண்டது. வீடுகள் இருக்கும் இடங்களில் “யாக்” என்று சொல்லப்படும் காட்டெருமைகளைப் பழக்கி வைத்துக் கொள்கிறார்கள். எல்லாரிடமும் ஒரு நாய் கட்டாயம் இருக்கிறது. இந்தக் காட்டெருமைகள்,ஆடுகள், குதிரைகள் மேயும்போது காவல் போலக் கூடப் போகிறது. அன்று இரவு எங்களுடன் திரு கிருஷ்ணா என்ற எங்கள் பயணக் கண்காணிப்பாளர் மட்டும் தங்கினார். மறுநாள் காலை வெளியே வந்து பல் தேய்த்து, முகம் கழுவ முடியவில்லை. குளிர். ஒரு பெரிய ட்ரம் நிறைய வெந்நீர் போட்டு வைத்திருந்தார்கள். எல்லாம் எடுக்கும்போது சூடாக இருந்தது. கையில் விடும்போது ஆறி விடுகிறது. கையை எல்லாம் இழுக்க ஆரம்பித்தது. தேள் கொட்டினால் கடுக்குமே அதுமாதிரிக் கையெல்லாம் கடுக்க ஆரம்பித்தது. எனக்கு ராஜஸ்தான், குஜராத்தில் இருக்கும்போது குளிர் நாட்களில் கை, காலில் ரத்த ஓட்டம் இல்லாத காரணத்தால் அரிப்பு ஏற்படும். சில சமயம் கை, கால் விரல்கள் எல்லாம் சிவந்து வீங்கி விடும். அதனால் கொஞ்சம் பயமாக இருந்தது,என்ன ஆகப் போகிறதோ என்று. நல்லவேளையாக காலில் உல்லன் சாக்ஸ் போட்டிருந்த காரணத்தாலும், தண்ணீர் தொட்டு வேலை செய்யும் நிர்ப்பந்தம் இல்லாத காரணத்தாலும் காலில் ஏற்பட்ட அரிப்பு ஒன்றையும், மூக்கில் இருந்து தொடர்ந்து வந்த ரத்தத்தையும் தவிர வேறு பயந்த மாதிரி மூச்சு விடுவதில் தொந்திரவு எதுவும் வரவில்லை. என்னுடன் நான் தினசரி சாப்பிடும் மாத்திரைகள் தவிர INHALER -ம் அதில் போடும் காப்ஸ்யூலும் நிறைய எடுத்துப் போயிருந்தேன். கொஞ்சம் திணறினாலும் உடனேயே எடுத்துக் கொள்ள வசதியாகக் கையிலேயே இருந்தது. ஒண்ணும் இல்லாட்டியே நான் தினமும் இருமுறை Inhale செய்துக்கணும். இப்போ கேட்கவே வேண்டாம். இங்கே எனக்குப் பதினைந்து நாள் வருவது அங்கே 1 வாரம் கூட வரவில்லை. நல்லபடியாகப்போய் விட்டுத் திரும்ப வேண்டுமே என்ற கவலை வந்தது. “பர்யாங்க்” கிளம்பினோம். மீண்டும் சிறிது பள்ளத்தாக்குப் பயணம். மலை ஏறுதல், கீழே இறங்குதல், பள்ளத்தாக்கில் பயணம். இப்படிப் போனது பயணம். வழியில் ஒரு இடத்தில் சீனப் போலீஸின் செக்போஸ்ட். அங்கே நாங்கள் யாத்திரிகர்கள் என்பதைத் தெரிவித்தபின் மீண்டும் பயணம்.வழியில் கூட வந்த சிலரின் வண்டிகள் பங்க்சர் அல்லது டயர் தொந்திரவு என்று மாற்றி மாற்றி வந்தது. உடனேயே எல்லா வண்டிகளும் நிற்கும். எந்த வண்டி சரி இல்லையோ அது சரி செய்தபின் தான் கிளம்பும். எங்கள் டிரைவர் எல்லா வண்டிகளின் ரிப்பேர் வேலைக்கும் உடனேயே போய் விடுவார். அது முடிந்து எல்லா வண்டிகளும் கிளம்பிப் போனபின் தான் அவர் வண்டியை எடுப்பார். இப்படி எல்லா இடத்திலும் கடைசியாக வண்டியைக் கிளப்பினாலும் எல்லாருக்கும் முன்னால் குறுக்கு வழியாகப் போய் முன்னால் நிற்பார். அவர் போகும் வழியைப் பார்த்தால் நிஜமான கைலாசம் போகப் போகிறோம் என்றே தோன்றும். மலையில் இருந்து குதிப்பார் வண்டியில் எங்களையும் வைத்துக் கொண்டு. பாதையோ படு மோசமான பாதை. பத்ரிநாத், கேதாரநாத் பாதைகளோடெல்லாம் ஒப்பிடவே முடியாது. அதை பாதை என்றே சொல்ல முடியாது. மலையை வெட்டி வழி உண்டு பண்ணி இருக்கிறார்கள். வண்டி ஜன்னலைத் திறந்தால் புழுதி பறக்கும். கதவை மூடினால் ஜன்னல் வழியாகச் சூரிய வெளிச்சம் பட்டு சூடாக இருக்கும். ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து ஓட்டினால் உடனேயே டிரைவர்கள் எல்லாம் ஒரு இடத்தில் தங்கி ஓய்வு எடுத்துக் கொள்வதோடு அல்லாமல் வண்டியில் உள்ள சில சில்லறைப் பழுதுகளையும் சரி பார்த்துக் கொள்கிறார்கள். மலைப்பாதையில் போனால் எத்தனை மலை வருகிறதோ அத்தனையும் முடிந்தால் தான் வண்டி நிற்கும். வண்டியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு நின்றால் கூடப் பின்னால் வரும் வண்டிகள் முன்னால் கடந்து வர முடியாது. அவ்வளவு குறுகலான பாதைகள். ஆகையால் மலைகள் கடக்கும் முன்பே அதற்குத் தயார் செய்து கொள்கிறார்கள். மதிய உணவு முடிந்து ஓய்வும் எடுத்துக் கொண்டு அன்று சாயங்காலம் 6-00 மணிக்குள் “பர்யாங்க்” வந்து சேர வேண்டும் என்று வந்து கொண்டிருந்தோம். டாக்டர் நர்மதாவின் உடல் நிலை சற்றுக் கவலை அளிக்கக் கூடியதாக இருந்தது. அவருடன் வண்டியில் கூட வந்த ஸ்ரீநிவாசனும், அவர் மனைவியும்தான் எல்லாத் தங்கும் இடங்களிலும் கூட இருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பெற்ற மகள் போல கல்பனா ஸ்ரீநிவாசன் திருமதி நர்மதாவிற்குப் பணிவிடை செய்து வந்தார். மாலை “பர்யாங்க்’ வந்தது. இங்கே முதல் முதலில் நாங்கள் “Mud House” எனப்படும் களிமண்ணால் கட்டப் பட்ட வீடுகளில் தங்க வைக்கப் பட்டோம். எங்கள் அறையில் 5 பேர் தங்கலாம். எங்களுடன் திரு தாரகராமன் என்பவர் தன் மனைவியுடனும், திருமதி லலிதா என்ற பெண்மணி மைலாப்பூரில் இருந்து தனியாக வந்திருந்தார். தங்கி இருந்தார்கள். திருமதி தாரகராமனும் உடல் நிலை மோசமாக இருந்தார். சர்க்கரை நோய் வேறே வாட்டிக் கொண்டிருந்தது. தினமும் ஊசி போட்டுக் கொள்வார். அன்று போடமுடியவில்லையாம். அதனால் ரொம்பவே முடியாமல் இருந்தார். நான் அவர்களை நினைத்துக் கவலைப்பட்டேன், எனக்கு வரப்போவதைப் பற்றி உணராமல். நாளைப் பயணத்தின் முடிவில் “மானசரோவரை” அடையலாம்.. “திருக்கைலை”யின் முதல் தரிசனமும் கிடைக்கும். இதுதான் நினைப்பாக இருந்தது. என் கணவருக்கு இன்னும் மூச்சு விட முடியாமல் போனது. அதோடு விடாத இருமல் வேறே இருந்தது. கேட்டதில் சிலருக்கு இப்படி இருக்கும் என்றும் இது ஒன்றும் பயப்படும்படி இல்லை என்றும் சொன்னார்கள். ஆனால் செந்தில் என்ற இளைஞர் கஷ்டப்பட்டதைப் பார்க்கும்போது எங்களுக்கும் அப்படித்தான் தோன்றியது. 14 ஓம் நமச்சிவாயா-14 படிப்பவர்களுக்கு நான் ரொம்ப பயமுறுத்துகிறேன் என்று அபிப்பிராயம் வரலாம். பயமுறுத்தவெல்லாம் இல்லை. நடந்த நிகழ்வுகளை எனக்குத் தெரிந்த வரை அப்படியே கொடுக்கிறேன். இதிலே என்னோட மனநிலையும், என் கணவரோட மனநிலையும் தான் சொல்லி வருகிறேன்னு நினைக்கிறேன். எங்களோட தனிப் பட்ட அபிப்பிராயத்தினால் யாரும் பாதிக்கப் படாமல் இனிமேல் எழுதலாம்னாலும் சில நிகழ்வுகளைக் கட்டாயமாகச் சொல்ல வேண்டி இருக்கிறது. எல்லாருமேவா உடல்நலமில்லாமல் போனார்கள்? உங்கள் குழுவில் ஆரோக்கியமாய் யாருமே இல்லையா? என்று கேள்வி வரலாம். ரொம்பவே உடல் நலமில்லாமல் போனது டாக்டர் திருமதி நர்மதாவும், திரு கோபாலகிருஷ்ணனும் தான். திரு கோபாலகிருஷ்ணனைத் திரும்ப அனுப்பி விட்டார்கள். துணைக்கு ஆளோடு, அவர் வீட்டுக்கும் தகவல் கொடுத்து விட்டார்கள். திருமதி நர்மதா கைலை வரை வந்தார். மற்றவர்களுக்கு அங்கங்கே சில சில சின்னச் சின்னப் பிரச்னைகளும், உடல்நலக் குறைவும் ஏற்படத் தான் செய்தது. இதை மறைப்பதற்கோ மறுப்பதற்கோ இல்லை. முழு ஆரோக்கியத்துடன் இருந்தவர்களில் பதிவு 13-ல் எழுதிய மூன்று பெண்மணிகளைத் தவிர மதுரையில் இருந்து வந்த அலமேலு என்பவர், மைலாப்பூரில் இருந்து வந்த லலிதா, திருச்சியில் இருந்து வந்த தம்பதியர், திரு மனோஹர், எங்கள் குழுத் தலைவரான திரு மனோஹர் 9-வது முறையாகக் கைலை வருகிறார். இவர் குளிருக்கான ஆடைகள் கூட அணியவில்லை. பாண்டிச்சேரியில் இருந்து வந்த பெரியவர், டாக்டரின் கணவர்,(இவர் 73 வயது ஆனவர்), பங்களூரில் இருந்து வந்த பெரியவர் சங்கரன், இன்னும் சிலர் இருந்தார்கள். ஆனால் குளிர் எல்லாரையும் வாட்டியது என்பதே உண்மை. சிலர் சாப்பாடு பிடிக்காமல் அவதிப் பட்டார்கள். வட இந்திய உணவுமுறை பழக்கம் இல்லாமல் சிலருக்குப் பிடிக்கவில்லை. இதையும் மறுக்க முடியாது. இறைவனின் நினைவுக்கு முன்னால் எல்லாம் துச்சம் என்றும் தான் கைலை சென்றபோது அதிகம் சிரமப் படவில்லை என்றும் உடல் என்பதே நினைவில் இல்லை என்றும் கூறுகின்றார்கள். அத்தகைய நிலை எங்களில் யாருக்கும் இல்லை என்பது நிஜம். மற்றபடி பக்தியில் யாரும் பின்வாங்கவில்லை. எப்படியாவது போய்க் கைலையைத் தரிசனம் செய்யவேண்டும் என்ற பேராவலுடன் தான் எல்லாரும் எதையும் வாய்விட்டுச் சொல்லாமல் பயணத்தைத் தொடர்ந்தார்கள். இப்போது இந்த 2006-ல் போவதற்கே இவ்வளவு சிரமம் என்றால் முன்னாளில் எல்லாம் எப்படிப் போயிருப்பார்கள்? நினக்கவே முன்னோர்களைக் கை எடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது. இப்போது பிரம்மபுத்திராவைப் பற்றிச் சிலவரிகள். பாரத நாட்டில் நதிகளைப் பெண் உருவில்தான் வணங்கி வருகிறார்கள். பிரம்மபுத்ராவும், சோன் நதியும் விலக்கு. சிலர் மஹாநதியும் ஆண்நதி என்கிறார்கள். அது பற்றிச் சரியாகத் தெரியவில்லை. இந்த பிரம்மபுத்ராவைக் கடந்து தான் நாங்கள் சாகாவுக்கு வந்திருந்தோம். பாலம் இருந்தது. இருந்தாலும் குறிப்பிட்ட இடங்களில் சற்றுத் தண்ணீரும் இருந்தது. ஆனால் 2004 வரை இந்தப் பாலம் கூடக் கிடையாதாம். பெரிய படகு அல்லது கட்டுமரங்களில் முன்னாலேயே தயார் செய்து வைத்திருப்பார்களாம். அதில் வரும் வண்டிகளைச் சங்கிலிகளால் கட்டி விட்டுப் பின் அக்கரையில் இருந்து இழுப்பார்களாம். அப்படித் தான் போய் வந்திருக்கிறார்கள். அப்படிப்பார்க்கும்போது நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்லவேண்டும். பிரம்மாவின் புதல்வன் என்பதால் “பிரம்மபுத்ரா” என்று பெயர் என்று சொல்கிறார்கள். ஆனால் திபெத்தியர்கள் இதை அழைப்பது “சான்போ” என்ற பெயரிலோ “சம்போ” என்ற பெயரிலோ தான். இங்கே நதியின் அகலம் குறைவுதான் என்றாலும் ஆழம் மிகவும் அதிகம். 400 அடிக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள். வங்காளத்தின் துயரம் என்று அழைக்கப் படும் இந்த நதி இங்கே சற்று அடங்கித் தான் ஓடுகிறது என்றே சொல்ல வேண்டும். கடல் மட்டத்துக்கு மேல் 8,000 மீட்டர் உயரத்தில் இருக்கும் சாகாவுக்கு முன்னால் சிலப் பனிமலைச் சிகரங்கள் பாதுக்காக்கப் பட்ட பகுதி என்று சொல்கிறார்கள். இங்கே ராணுவம் அந்தப் பகுதியைப் பாதுகாக்கிறது என்கிறார்கள். உறைபனி ஏரிகள் அங்கே இருக்கின்றனவாம். சுற்றுலாப் பயணிகள் வருவதாகவும் சொல்கிறார்கள். சாகாவுக்குச் சற்று முன்னால் கிழக்கே பிரியும் சாலை திபெத்தின் தலைநகரான “லாஸா”வுக்குப் போவதாகவும் அடுத்த ட்ரெக்கிங் இதை முடித்து விட்டு அக்டோபரில் லாசாவுக்குப் போவதுதான் என்றும் ட்ராவல்ஸ்காரர்கள் மூலம் அறிந்து கொண்டோம். பொதுவாக திபெத்திய மக்கள் ஏழையாகவும் அறியாமையிலும் இருக்கிறார்கள். இவை தேவை இல்லை என்றே எழுதாமல் விட்டேன். என்றாலும் சிலர் பார்த்தது, கேட்டது என்று எழுதச் சொல்வதினால் எழுதுகிறேன். தினசரி வாழ்வுக்கே அவர்கள் நம்பி இருப்பது காட்டெருமைகளைத்தான். செம்மறி ஆடுகளையும், காட்டெருமைகளையும் தேவைப்படும்போது விற்றுக் கிடைக்கும் பணத்தில்தான் வாழ்க்கை ஆதாரமே இருக்கிறது.காட்டெருமைகள் தானே போய் மேய்ந்துவிட்டு வீடு திரும்புகின்றன. சுமை தூக்குவதும் அவற்றின் வேலை. இது மாதிரிச் சுற்றுலாப் பயணிகள் வரும் நேரம் அவர்களுக்கு சுமை தூக்க வாடகைக்குக் காட்டெருமைகள், குதிரைகளைக் கொடுத்துவிட்டுப் பணம் சம்பாதிக்கிறார்கள். வழிபாட்டுக்கு இருக்கவே இருக்கிறார் கைலாசபதி. காணும் கற்களில் எல்லாம் கைலை நாதனைக் காணும் திபெத்தியர்கள் அவற்றைக் கோபுரம்போல அடுக்கிக் கைலைநாதனாக வழிபடுகிறார்கள்.கொம்புகளுடன் கூடியக் காட்டெருமை முகத்தையும் வழிபடுகிறார்கள். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் போவது என்றால் ட்ராக்டர் போன்ற ஒரு வாகனம், குடும்பமே அதில் எல்லா சாமான், செட்டுக்களுடனும் போகிறது. செய்திப் பரிமாற்றம் குதிரைகள் மூலம்தான். நாட்டுப் பகுதியில் இருந்து வரும் ஊழியர்கள் குதிரைக் காரர்களிடம் கொடுக்கும் செய்தியை அவர்கள் அங்கே இந்த மாதிரி மலைக்காடுகளில் வசிக்கும் கொஞ்சநஞ்சக் குடிமக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிறார்கள். முன்னேற்றம் என்பதே எந்த விதத்திலும் இல்லை. குழந்தைகளுக்குப் படிப்பு என்பதே கிடையாது. எதிர்காலம்? இந்தக்காட்டில்தான். குதிரைகள், காட்டெருமைகள் மூலம் என்ன கிடைக்கிறதோ அதுதான். மின்சாரம் அறவே கிடையாது. ஒரு குறிப்பிட்ட இடங்களில் அதுவும் அங்கே அரசு அலுவலகம் இருந்தால் ஜெனெரேட்டர் மூலம் மின்சாரம் இருக்கும். பகலில் அதுவும் கிடையாது. ஆனால் இந்த மலைமக்கள் நடக்கும் வேகம் இருக்கிறதே? வியக்கவைக்கிறது. சாகாவுக்கு முன்னால் எங்கள் வண்டி ஒரு இடத்தைக் கடக்கும்போது ஒரு குடும்பம் முன்னால் நடந்து போய்க் கொண்டிருந்தது. நாங்கள் சாகா போய்த் தங்குமிடம் போகும்போது அந்தக் குடும்பம் ஊருக்குள் நுழைந்து விட்டது. அவ்வளவு வேகம் நடையில். பெண்கள் ஜிப்ஸி போல உடை அலங்காரம் செய்து கொள்கிறார்கள். இவர்களின் நிலை எப்போது உயரும்? இவர்கள் நம்மிடம் பிச்சை கேட்டு வாங்கும் பொருட்கள் எத்தனை நாளுக்குத் தாங்கும்? காலம்தான் பதில் சொல்லவேண்டும். 15 ஓம் நமச்சிவாயா-15 சாகாவில் இருந்து நாங்கள் “பர்யாங்க்” என்னும் ஒரு இடத்தில் போய்த் தங்கினோம். வழக்கம் போல வழியில் சில வண்டிகள் நின்று போய்த் தொந்திரவு கொடுத்தது. எங்கள் டிரைவர் உடனே போய் உதவுவார். பொதுவாகவே ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொண்டாலும் இவர் எல்லாருக்கும் உதவுவதில் முன்னால் நிற்பார். எல்லா வண்டிகளும் சரியாகக் கிளம்புகிறதா என்று பார்த்துவிட்டுக் கிளம்பி அந்த மலைப்பாதையில் வண்டியோடு உண்மையிலேயே குதித்துக் கீழே இறங்கி எங்கள் வயிற்றைக் கலக்கிவிட்டு முன்னால் போய் நின்று நான் ஜெயிச்சுட்டேன் என்பது போல கட்டை விரலை உயர்த்திக் காட்டிச் சிரிப்பார் நாங்கள் அவரை ஜாக்கி சான் என்றும் (பார்க்க அந்த ஜாடையில் இருப்பார்) திபெத்திய ரஜினி என்றும் குறிப்பிடுவோம். எப்பவும் அவர் வழி தனி வழிதான். அதனால் அப்படி. வழியில் சீன RTO அலுவலகத்தில் மானசரோவர் நெருங்கும் சமயம் என்பதால் எல்லா வண்டி ஓட்டிகளின் லைசென்ஸ், அடையாள அட்டை முதலியனவற்றைப் பரிசோதித்து அனுப்புகிறார்கள். அநேகமாய் இந்தியாவிலேயே தமிழ் நாட்டைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள், கால் டாக்ஸி ஓட்டுநர்கள், வாடகை வண்டி ஓட்டுநர்களுக்கு அடையாள அட்டை இருக்கிறது. மேலும் லைசென்ஸ் எதுவரை இருக்கிறது, அடுத்து எப்போது புதுப்பிக்க வேண்டும் என்பதெல்லாம் புகைப்படப் பதிவு மூலம் வண்டியின் உள்ளேயே ஒட்டி விடுகிறார்கள். தமிழ்நாட்டில் இம்முறை எப்போ வருமோ தெரியலை.. பர்யாங்கில் குறிப்பிடும்படி எதுவும் நடக்கவில்லை. .குளிர் அதிகம் என்பது தவிர. திருமதி நர்மதாவின் உடல் நிலை அப்படியே இருந்தது. அதோடு அவர் மறுநாள் மானசரோவர் பிரயாணத்திற்கும் தயார் ஆனார். பர்யாங்கை விட மானசரோவர் சில அடிகள் மட்டும் குறைந்த உயரம் என்று சிலரும் இல்லை மானசரோவர்தான் உயரம் என்று சிலரும் சொல்கிறார்கள். கடல் மட்டத்திற்கு மேல் 14,950 அடி உயரத்தில் உள்ளது. உலகில் எங்கும் இத்தகைய அபூர்வமான ஏரி இத்தனை உயரத்தில் கிடையாது. இனி மானசரோவர் பிறந்த விதம் பற்றிய ஒரு நிகழ்வு. தட்சனின் மகளான தாட்சாயணி தன்னைத் தானே மாய்த்துக் கொண்டதும், தன் மனைவியான சக்தி இல்லாமல் இயங்க முடியாத சர்வேஸ்வரன் அவள் உடலைத் தோள் மேல் போட்டுக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடியதும் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அப்போது அவர் கோபத்தைத் தணிக்க வேண்டியும், அன்னையின் சக்தி பாரதமெங்கும் பரவி அவள் அருளாட்சி எங்கும் திகழ வேண்டியும், மஹாவிஷ்ணுவானவர் தன் சுதர்ஸன சக்கரத்தால் அன்னையின் உடலைத் துண்டு துண்டுகளாக்குகிறார். ஒவ்வொரு துண்டும் வீழ்ந்த இடம் ஒரு “மஹா சக்தி பீடம்” ஆகிறது. அப்படி அன்னையின் வலது முன் கை வீழ்ந்த இடமே மானசரோவர் ஆகும். அன்னையின் வலது முன்கை வீழ்ந்த போது படுவேகமாக ஆகாயத்தில் இருந்து பாய்ந்து வந்து விழுந்தது. அப்போது இமயமே அதிர்ந்தது. அண்டசராசரங்கள் கிடுகிடுத்தன. அந்தப் பிரதேசம் தாழ்வடைந்தது. மேலும் வலது முன்கை வீழ்ந்த இடம் ஒரு அகண்ட பெரிய பள்ளம் ஆனது. புல், பூண்டு, நீர் என ஒன்றுமே இல்லாத அந்தப் பிரதேசத்தில் அந்தப் பள்ளம் வேதகாலத்தில் மஹாசக்தி பீடமாக வணங்கப் பட்டிருக்கிறது. பற்பல யுகங்களுக்குப் பிறகு பிரம்மாவின் நல்வரவால் அந்தப் பிரதேசத்தில் நீர் நிரம்பி இருக்கிறது. இதுவே பின்னால் மானசரோவர் என்று அழைக்கப்படுகிறது. இந்த சக்திபீடத்தை அலங்கரிக்கும் தேவி “தாட்சாயணி”யே ஆவாள். இப்போது மானசரோவரின் பெருமைகளைத் தெரிந்து கொள்ளும் முன் அது வந்த விதம் பற்றி அறிவோமா? அத்திரி மஹரிஷியின் தவத்தால் மகிழ்ச்சி அடைந்த மஹாவிஷ்ணு அவர் முன் தோன்றி என்ன வேண்டும் எனக் கேட்க ஸ்ரீமந்நாராயணனின் அம்சத்தோடு ஒரு பிள்ளை கேட்கிறார் மஹரிஷி. தன் அம்சத்தோடு ஈசன், பிரம்மாவின் அம்சங்களையும் கலந்து ஒரு பிள்ளையைத் தானே சிருஷ்டி செய்து அத்திரி மஹரிஷியிடம் அளிக்கிறார். அந்தக் குழந்தையை முறைப்படி ரிஷிக்குத் தத்தம் செய்கிறார். (இதுவே அனசூயையின் கற்பைச் சோதிக்க வந்த மும்மூர்த்திகளையும் குழந்தை வடிவில் அனசூயை மாற்றியதாகவும், மும்மூர்த்திகள் திரும்பிச் செல்லும்போது தங்கள் அம்சமான அந்தக் குழந்தையை விட்டுச் சென்றதாகவும், அந்தக் குழந்தையே “தத்தாத்ரேயர்” எனவும் செவிவழிக் கதைகள் கூறுகின்றன.) ஆனால் இது இப்போது நான் எழுதுவது ஸ்காந்த புராணத்தில் இருப்பதாகவும் அதில் “மானஸ்காந்தம்” என்ற பகுதியில் இது வருவதாகவும் புராணங்களைப் பற்றிய தொகுப்பில் படித்திருக்கிறேன். மஹாவிஷ்ணு தத்தம் செய்ததால் தத்தாத்ரேயர் என்ற பெயர் பெற்ற அந்தக் குழந்தை சதுர்வேதங்களையும், தர்ம சாஸ்திரங்களயும் நன்கு கற்றுப் பெரும் முனிவராக விளங்கினார். ஒரு முறை தத்தாத்ரேயர் இமயத்தைக் கடந்து செல்ல முயன்றபோது இமவான் அவர் முன் தோன்றி மலையைக் கடந்து ஏன் செல்ல வேண்டும் எனக் கேட்க, இமயத்தை விட பிரம்மாண்டத்திலும், உயரத்திலும் மற்ற எல்லாவற்றிலும் குறைவான மந்தரம், விந்தியம், நிடதம், ஏமகூடம், நீலம், கந்தமாதனம் போன்ற மலைகளை நாடிப் பக்தர்கள் கூட்டம் செல்வதாகவும் அதன் காரணம் தெய்வங்கள் உறையும் இடமாக அது இருப்பதால்தான் எனவும் கூறுகிறார். மேலும் இமவானைப் பார்த்து உன்னிடம் மறைந்துள்ள அரிய தலங்களை வெளி உலகுக்குக் காட்டு. உன் பொக்கிஷங்கள் இந்தப் பூலோக மக்களுக்கும் பயன்படட்டும். அந்தத் தெய்வீக ஸ்தலங்களுக்கு முதலில் என்னை அழைத்துச் செல்வாயாக என வேண்ட இமவானும் அவர் வேண்டுகோளை ஏற்றுத் திருக்கைலை அழைத்துச் சென்று கைலைநாதனைத் தரிசனம் செய்விக்கிறான். பின் இருவரும் மானசரோவர் ஏரிக்கரைக்கு வந்து அங்கு நீராடுகிறார்கள். அப்போது இந்த ஏரி அங்கேவந்த காரணத்தை இமவான் தத்தாத்ரேயரிடம் கூற ஆரம்பிக்கிறான். (தொடரும்.) 16 ஓம் நமச்சிவாயா-16 பிரம்மாவின் புத்திரரான மரீசி மஹரிஷி ஒரு முறைக் கைலையில் பரமேஸ்வரனைக் குறித்துத் தவம் செய்ய முற்பட்டார். அங்கே உள்ள ரிஷி, முனிவர்கள் உதவியுடனும், அன்னையான சர்வேஸ்வரியின் துணையுடனும், 12 ஆண்டுகள் தாந்திரீக முறைப்படி சிவனை ஆராதிக்கத் திட்டம் இட்டார். தாந்திரீக முறையில் நீராடிய உடனே ஈர உடைகளோடுதான் வழிபாடு தொடங்க வேண்டும் என்று நியதி. கோடை முடிந்து குளிர்காலம் வந்து கைலையில் உள்ள நீர் முழுதும் பனிக்கட்டியாக மாறி விட்டது. நீராடவோ, மற்ற பூஜா முறைகளுக்கோ ஒரு சொட்டு நீர் கூட இல்லை. எல்லாரும் தண்ணீருக்கு என்ன செய்வது என யோசிக்க மரீசி மஹரிஷி தன் தந்தையான நான்முகனை வேண்ட நான்முகனும் அவர் முன் தோன்றினார். நான்முகனோ கைலைநாதனை வேண்ட அங்கிருந்த பனிக்கட்டிகள் உருகி, ஆறாகப் பெருகி, ஏற்கெனவே தாட்சாயணியின் அங்கம் வீழ்ந்து ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து நிரம்பியது. இது ஓர் அழகிய ஏரியாக உருவெடுத்தது. பிரம்மாவின் கருணையால் உருவான இந்த ஏரி அவருடைய மனதே கருணை பொருந்தியது என நிரூபிக்கும் வண்ணம் “மானசரோவர்” என்று பெயர் பெற்றது. “மான” என்றால் மனதைக் குறிக்கும் சொல். சரோவர் என்றால் பெரிய நீர் நிலை என்று பொருள், என்று கூறினான் இமவான் . இதை அறிந்த தத்தாத்ரேயர் அங்கேயே ஒரு குகை ஒன்றில் தவம் செய்துவிட்டு, இமயமலையில் உள்ள மற்ற புண்ணிய ஸ்தலங்களைத் தரிசனம் செய்து விட்டு அங்கேயே தங்கி விட்டதாகவும், இன்றைய நாளில் கூட அவரது தரிசனம் காடுகளில் சிலருக்குக் கிடைக்கிறது என்றும் கூறுகிறார்கள். மானசரோவர் ஏரியானது உலகிலேயே மிக உயரத்தில் அமைந்தது. சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தின் மேற்குப் பகுதில் அமைந்துள்ளது. திபெத் என்றால் சம்ஸ்க்ருதத்தில் “த்ரிவிஷ்டம்” என்று பொருள் என்றும் அதற்கு “ஸ்வர்க்கம்” என்று அர்த்தம் என்றும் கூறுகிறார்கள். தன்னுடைய கடைசிக்காலத்தில் தன் தவம் முடிந்து அர்ஜுனன் இங்கேதான் இந்திரன் அனுப்பிய ரதத்தில் சென்றதாகக் கூறுகிறார்கள். மானசரோவர் இரு பெரும் மலைகளுக்கு இடையே குன்றுகளால் சூழப்பட்ட பிரதேசத்தில் உள்ளது. இதன் வடக்கே தான் நாம் அடுத்துத் தரிசிக்கப் போகும் திருக்கைலாய மலை. தெற்கே ரகுவம்சத்தில் உதித்த மாந்தாதா என்னும் மன்னன் தவம் இருந்த மாந்தாதா மலை 5 சிகரங்களுடன் காட்சி அளிக்கிறது. இந்த அரசன் ராமருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் ரகுவம்சத்தில் உதித்தவன். கடல் போன்ற இந்தப் பெரிய ஏரியானது 88 கி.மீ சுற்றளவுடன் 24 கி.மீ அகலம் கொண்டது. இதன் பரப்பு 320 சதுர கி.மீ. ஆழம் 90 மீட்டர்கள். இதை ஒரு முறைப் பிரதட்சிணம் செய்ய வண்டியிலேயே எங்களுக்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை ஆனது. சுற்றி வர 120 மைல்கள். நடந்து சுற்றி வர சுமார் 2 நாட்கள் நமக்குத் தேவைப்படும். ஆனால் திபெத்தியர்கள் ஒரே நாளில் முடிக்கின்றனர். இது போன்பாஸ்” எனப்படும் திபெத்தியருக்கு மட்டும் இல்லாமல் இந்துக்கள், பெளத்தரகள், ஜைனர்கள் எல்லாருக்கும் புனிதமானதாக இருந்து வருகிறது. மானசரோவரின் ஒவ்வொரு பக்கத்துக் கரையும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. ஒரு பக்கம் கற்களால் சூழப்பட்ட கரை. ஒரு பக்கம் கடற்கரை போன்ற நீண்ட கரை. இன்னொரு பக்கம் மலைகளால் சூழப்பட்டது. இப்படி ஒவ்வொரு பக்கம் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. கரையில் அலைகள் வந்து மோதுகின்றன. நடுவில் அமைதியாகத் தோற்றம் அளிக்கிறது. ஏரி நீரில் அன்னப் பறவைகள் நீந்துகின்றன. முதலில் நாங்களும் வாத்துக்கள் என்றுதான் நினைத்தோம்.ஆனால் அவை இல்லை. பல பறவைகள் வந்து அங்கே விளையாடிச் செல்கின்றன. கரையில் சில இடங்களில் பல வண்ணங்களில் கற்கள் கிடைக்கின்றன. சிவலிங்க சொரூபமாகக் கருதப்பட்டு பக்தர்களால் அவை கொண்டு வரப்படுகின்றன. மானசரோவர் இருக்கும் பிராந்தியத்தில் தான் நான்கு முக்கிய நதிகளின் மூலஸ்தானங்கள் இருக்கின்றன. இந்த ஏரிக்குத் தென்கிழக்கே 99 கி.மீ. தொலைவில் “செமாயாங்டுங்” எனும் பனி மூடிய சிகரத்தில் இருந்து “பிரம்ம புத்ரா”வும், வடகிழக்கில் 99 கி.மீ. தூரத்தில் “செஞ்ச்காம்பாப்” என்னும் இடத்தில் இருந்து “சிந்து” நதியும், கிழக்கே 48 கி.மீ. தொலைவில் “டால்ச்சு கோபா” வுக்கு அருகில் இருந்து “சட்லெஜ்” நதியும், தென் கிழக்கே 48 கி.மீ.தூரத்தில் “மாப்சா கங்கோ” என்னும் இடத்தில் இருந்து கர்னாலி நதியும் உற்பத்தி ஆகின்றன. மானசரோவர் சக்தி பீடம் என்று ஏற்கெனவே பார்த்தோம். அங்கே தினமும் பிரம்ம முஹூர்த்தம் என்று சொல்லப்படும் 3-00 மணி முதல் 4-00 மணி அளவில் வடக்கே கைலை மலையில் இருந்து ஒரு ஜோதி வந்து ஏரியில் ஐக்கியம் ஆவதாயும்,அது “சிவசக்தி சொரூபம்” என்றும் தினமும் அது நிகழ்வதாகவும் எங்களுக்கு முன்னால் போய்த் திரும்பியவர்கள் சொன்னார்கள். சிலர் தினமும் தேவர்கள் தீப ஒளி போல தீபத்தை ஏற்றி வந்துப் பூஜை செய்வதாயும், கரையில் இருந்து பல விளக்குகள் போல ஒளி தெரிந்து நடு மையத்தில் மறைவதாயும் சொன்னார்கள். நாங்கள் ஒரு வழியாக மானசரோவர், கைலை முதல் தரிசனம் செய்யும் இடம் வந்து சேர்ந்தோம். திபெத்திய வழக்கப்படி தோரணங்கள் கட்டப்பட்ட ஒரு கூடார வடிவிலான இடத்தை எல்லா வண்டிகளும் மும்முறை சுற்றி வந்து மானசரோவரின் கரையில் நின்றன. எங்களுக்கு நேர் எதிரே மானசரோவர், வலது பக்கம் கைலை மலை. மானசரோவரில் இருந்து சுமார் 40 கி.மீ தூரத்தில் இருக்கிறது என்றார்கள். இதன் நிழல் எப்படி மானசரோவரில் விழும்? எனக்குப் புரியவில்லை. முன்னால் இத்தனை மலைகள் இருக்கின்றனவே, கைலையின் சிகரம் மட்டும் தான் தெரிகிறது, என்று யோசித்தவாறே இருந்தேன். வண்டி ஓட்டிகள் எல்லாரும் கீழே இறங்கி மானசரோவரின் பக்கமும்,கைலையின் பக்கமும் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தனர். ஒரு முறை இல்லை மூன்று முறை. சிலர் ஏதோ கணக்கு வைத்துக் கொண்டும் செய்தனர். பின்னர் நாங்கள் அனைவரும் வண்டிகளில் ஏறி மானசரோவரின் “பரிக்ரமா” என்று சொல்லப்படும் பிரதட்சிணத்திற்குத் தயார் ஆனோம். எங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் குறைவு என்பதாலும், கைலை பரிக்ரமா வேறு இருப்பதாலும் மானசரோவரின் பரிக்ரமாவை நாங்கள் வண்டிகளிலேயே உட்கார்ந்த வண்ணம் செய்தோம். இதிலும் எங்கள் டிரைவர் எல்லாரும் போகும்வழியில் போகாமல் தனிவழியில் சென்றார். ஒரு இடத்தில் மலைப்பாங்கான பாறைகளில் பாதையே இல்லாமல் கிட்டத்தட்ட ஏரிக்குள் சற்றுத் தூரம் காரைச் செலுத்தும்படி ஆயிற்று. பின் நாங்கள் தங்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். “சன்ஸ்கார்” சானலில் தினமும் “கங்கா தீபம்” ஏற்றிப்பாடும் “பரமார்த்த நிகேதனின்” ஸ்வாமிஜி “சிதானந்தாவின்” முயற்சியால் சிலவெளிநாட்டு குஜராத்தியர்களின் பண உதவியால் கட்டப்பட்ட ஆசிரமம், மற்றும் தங்கும் விடுதி. அறைகள், பஜனைக்கூடம், சாப்பிடும் இடம்,சமையல் அறை எல்லாம் நன்றாக இருக்கிறது, கழிப்பிடத்தைத் தவிர. இதில் ஏன் கவனம் செலுத்தவில்லை என்று புரியவில்லை. நாங்கள் அங்கு போய் அறைகளுக்குப் போனதும் இரவு 8-00 மணி அளவில் கூட்டுப் பிரார்த்தனை, பஜனை மற்றும் மீட்டிங் என்று அறிவிப்புச் செய்தார்கள். 17 ஓம் நமச்சிவாயா-17 மானசரோவர் ஏரிக்கரையில் அன்று சாயங்காலம் போய்ச் சேர்ந்தோம். போகும்போதே ஒரு பக்கக் கரையில் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் இருந்து பார்த்தால் கைலை மலையின் நிழல் ஏரியில் விழுந்திருந்தது. அம்மனும், அப்பனும் ஐக்கியமாகி நின்ற காட்சியைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கப் பெற்றது. உண்மையில் திருக்கைலாயம் கூட ஒரு சக்தி பீடம் தான் என்று சொல்கிறார்கள். அன்னையின் உடல் துண்டு துண்டாக அறுக்கப்பட்டபோது உடலின் கொழுப்புப் பூராவும் கைலைமலையில் விழுந்ததாகவும், அதனால் தான் கடும் கோடையில் கூட மற்ற மலைகளில் இருந்து பனி உருகினாலும் கைலை மலையில் பனி உருகாமல் இருப்பதாகவும் கூறுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்து தரிசனம் செய்தால் அர்த்த நாரீஸ்வரர் தரிசனம் என்றும் கூறு கிறார்கள். ஏரியின் அமைதியான கரையை ஒட்டிக் கட்டப் பட்டிருந்த “பரமார்த்த நிகேதன்” ஐச் சேர்ந்த ஆசிரமக் கட்டிடங்களில் நாங்கள் தங்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. மறுநாள் காலை மானசரோவரில் குளித்துப் பூஜை முதலியன செய்யவும், பின் அன்று மதிய உணவுக்குப் பின் தயாராகிக் கைலையின் “Base Camp” என்று சொல்லப் படும் தார்ச்சனில் போய்த் தங்கவும் அதற்கு மறுநாள் காலை “கைலை பரிக்ரமா” செய்யப் போவது பற்றிப் பேசவும் அன்று கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. எங்களுக்கு அளிக்கப் பட்ட அட்டவணையில் மானசரோவரில் நீராடி தகுந்த சன்னியாசிகளைக் கொண்டோ அல்லது சிவாச்சாரியார்களைக் கொண்டோ வேள்வி செய்து மூர்த்தங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றும், காசியில் செய்வது போலவே இங்கும் வேணி தானம், தம்பதி பூஜை, தீப வழிபாடு, முன்னோர் வழிபாடு முதலியவை செய்து தரப்படும் என்று கொடுத்திருந்தார்கள். அது பற்றி எந்தவிதமான ஏற்பாடும் செய்ததாய்த் தெரியவில்லை. ஏன் எனில் எங்களுடன் எந்த சிவாச்சாரியாரோ அல்லது சன்னியாசியோ வரவில்லை. பின் என்ன செய்யப் போகிறார்கள் ஒன்றும் புரியவில்லை. எல்லாரும் அதுபற்றிக் கேட்டதற்குப் பதிலும் இல்லை. பின் கைலை பரிக்ரமாவிற்கு வேண்டிய குதிரைகளுக்கு அன்றே ஆள் அனுப்பி ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதால் பரிக்ரமாவிற்கு யார் யார் வரப் போகிறீர்கள், யார், யார் தங்கப் போகிறீர்கள் என்று கேட்கப் பட்டது. அநேகமாய் எல்லாரும் போவது என்று முடிவு செய்தோம். டாக்டர் நர்மதாவையும், இன்னொரு பெண்மணி தன்னால் குதிரைச் சவாரியோ அல்லது நடந்தோ வர முடியாது என்றதால் அவரும் தங்கப் போவதாய் முடிவு ஆனது. ஒருத்தருக்கு ஒரு குதிரை, அதனுடன் குதிரைச் சொந்தக்காரர், நாம் கையில் எடுத்துப் போகும் சாமான்கள் உள்ள பையைச் சுமக்கும் ஒரு பணியாள் தேவைப் படும். கையில் எடுத்துப் போகும் பையில் ஒரு மாற்று உடை, அதிகப்பட்சத் தேவைக்கான உள்ளாடைகள், குளிருக்கான ஆடைகள், மழை பெய்தால் போட்டுக்கொள்ள ரெயின்கோட், வழியில் சாப்பிட ஏதும் சிற்றுண்டி அல்லது பிஸ்கட், கடலை, பாதாம் போன்ற பொருட்கள் அடங்கியது. இதைக் குதிரையில் உட்கார்ந்து போகும் நாம் சுமக்கமுடியாது என்பதால் அதற்கு ஒரு ஆள் சுமந்து வருவார். இவர் நமக்கு நாம் பரிக்ரமாவில் நடக்கும்போதும் உதவி செய்வார். நம்முடைய உதவி ஆள் நமக்கு மட்டுமே உதவி செய்வார். கூடவே வரும் நம் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ உதவ மாட்டார். இது எல்லாத்துக்கும் சேர்த்து ஒருத்தருக்கு 1,020 யுவான்கள் கணக்குப் போட்டு வாங்கினார்கள். எல்லாரும் குறைக்கச் சொன்னதுக்கு இதுவே குறைத்திருப்பதாயும்,,பொதுவாய் 1,200 யுவான்கள் ஆகும் என்றும் சொன்னார்கள். கிட்டத்தட்ட 12,300 இந்திய ரூபாய்கள் ஆனது இருவருக்கு. பணத்தைக் கொடுத்துவிட்டுக் கூட்டுப் பிரார்த்தனை முடிந்து சாப்பிட்டுவிட்டுப் பின் படுக்கப் போனோம். இரவில் வரும் சிவஜோதி எனப்படும் சிவசக்தி ஐக்கியத்தைக் காண எல்லாரும் ஆவலாய் இருந்தோம். இதில் எங்களுக்கு நேரம் தவறாய்ச் சொல்லப் பட்டிருக்கிறது. இந்திய நேரப்படி 3-30 மணியில் இருந்து 6-00 மணி வரை என்றால் சீன நேரம் மணி காலை ஐந்துக்கு மேல் ஆகி விடும். நாங்கள் இந்திய நேரமா சீன நேரமா என்ற குழப்பத்தில் இரவு பூரா விழித்திருந்தோம். கடைசியில் சுமார் 3-30 மணி அளவில் ஒரு நட்சத்திரம் போன்ற ஒன்று மானசரோவர் ஏரியில் விழுந்ததைச் சிலர் பார்த்தோம். சிலர் அது இல்லை என்று சொன்னார்கள். சிலர் அதுதான் என்றார்கள். எப்படியோ ஒரு வித்தியாசமான அனுபவமாய் அமைந்தது. அந்தக் குளிரில் இரவில் ஏரிக்கரையில் வீசும் காற்றைப் பொருட்படுத்தாமல் உட்கார்ந்து கொண்டு இருந்ததும், ஏரியின் நீர் பல பல வண்ணங்களைக் காட்டிப் பிரதிபலித்ததும். ஏதோ மர்மத்தைத் தன்னுள் அடக்கி இருப்பதுபோலவும் தோன்றியது. உண்மையில் அந்த இரவில் வானில் தொட்டுவிடலாம் போல் தொங்கிய நட்சத்திரங்களும் நட்சத்திர வெளிச்சத்தைப் பிரதி பலித்த ஏரியும் ஒரு சொர்க்கம் போலக் காட்சி அளித்தது. நட்சத்திரம் மின்னி மின்னி அடங்கும் போது எங்கே நம்மேல் வந்து விழுமோ என்ற எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது. கையால் பறிக்கலாம், பறித்து மாலை தொடுக்கலாம் போல் உள்ள நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கிற ஆழ்ந்த கரிய நிறம் கொண்ட வானமும், நட்சத்திர ஒளியால் சற்றே மினுமினுக்கும், சத்தமில்லாமல் அலைகள் வந்து அடிக்கும் ஏரியும் பார்க்கப் பார்க்க அற்புதமாய் இருந்தது. எங்கே இருந்து இத்தனை நட்சத்திரங்கள் வந்தன என்றே புரியவில்லை. தொட்டு விடும் தூரத்தில் அவை தெரிவதால் நாம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் என்பதும் புரிந்தது. ஒருவழியாக எல்லாரும் படுக்கப் போனோம். காலை சற்று நேரம் கழித்துத் தான் எழுப்புவோம் என்று ஏற்கெனவே சொல்லி இருந்தார்கள். காலை “ப்ளாக் டீ”யுடன் எழுப்பினார்கள். சிலருக்குச் சந்தேகம். ஏன் “ப்ளாக் டீ”யுடன் தினம் எழுப்புகிறார்கள் என்று. அதற்குக் காரணம் அவ்வளவு குளிரில் காலை கறுப்புத் தேநீர் உடலின் ரத்த ஓட்டத்தைச் சமன் செய்து, சுத்தப் படுத்திக் காலை நாம் நம் வேலையைச் சுறுசுறுப்புடன் செய்யத் தயாராக்குகிறது. இதன்பின் தான் வெந்நீர் கொடுத்துக் காலைக்கடன்கள் முடித்துக் காலை ஆகாரம் கொடுக்கிறார்கள். இன்று மானசரோவரில் குளிப்பதாய் ஏற்பாடு செய்திருப்பதால் ஏரிக்கரையில் பெரிய பள்ளம் ஒன்று ஏற்கெனவே இருந்ததில் கொண்டு போயிருந்த பெரிய காஸ் அடுப்பை வைத்துப் பெரிய பாத்திரத்தில் வெந்நீர் போட்டுக் கொண்டிருந்தார்கள். சக்தி உள்ளவர்கள் முதலில் மானசரோவரில் கரைக்கு அருகேயே உள்ளே அதிகம் போகாமல் இறங்கிக் குளித்துவிட்டுப் பின் அவர்கள் கொடுக்கும் வெந்நீரை வாங்கி ஊற்றிக் கொண்டுப் பின் அங்கே உடை மாற்றக் கட்டி இருக்கும் டெண்டில் போய் உடை மாற்றவேண்டும். முடியாதவர்கள் வெந்நீர் மட்டும் வாங்கிக் குளிக்கலாம். என்று சொன்னார்கள். குளிர் அதிகம் என்பதாலேயே சூரியன் வந்ததும் குளிக்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. எல்லாரும் குளித்துமுடித்துப்பின் பூஜைக்குத் தயார் ஆகும்போது மணி 12-00 ஆகி விட்டது. பூஜைக்கோ அல்லது முன்னோர் வழிபாடு செய்து கொடுப்பதற்கோ ஆள் இல்லை என்ன செய்யப் போகிறார்கள்? ஒன்றும் புரியவில்லை. அங்கே ஹோமம் செய்ய ஏரிக்கரையில் அலங்காரம் நடந்து கொண்டிருந்தது. பெரிய பெரிய கற்களைக் கொண்டு வந்து அடுக்கி, எல்லாரும் கொண்டு வந்த சிவன் படங்கள், சிலர் சிவலிங்கம் கொண்டு வந்திருந்தனர். இவற்றை வாங்கி அலங்காரம் செய்து எல்லாரும் கொண்டு போயிருந்த விளக்கில் நெய் கொண்டு போயிருந்தோம்,அதில் தீபம் ஏற்றி எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்துத் தயார் ஆனோம். 18 ஓம் நமச்சிவாயா-18 மானசரோவரில் பூஜை, யாகம் நடத்த நாங்கள் எல்லாரும் தயார் ஆனாலும் யார் செய்யப் போகிறார்கள் என்பதே ஒரு பெரிய விஷயமாக விவாதிக்கப் பட்டுக் கொண்டிருந்தது. என் கணவரும்,எங்களோட காரில் பிரயாணம் செய்யும் திரு சங்கரனும் முன்னோர் வழிபாட்டை முதலில் முடிக்க வேண்டும் என்று முடித்துக் கொள்ள திரு சங்கரனிடம் எல்லாரும் வந்து தங்களுக்கும் உதவும்படிக் கேட்க அவரும் தன்னால் முடிந்த உதவியைச் செய்தார். அவரையே ஹோமம் செய்யச் சொல்லலாம் என்று நாங்கள் விரும்பியபோது தனக்கு அதன் சட்ட திட்டங்கள் சரிவரத் தெரியாது என்பதால் முடியாது என்று அவர் மறுத்தார். பின் எங்களுடன் வந்திருந்த சமையல் குழுவில் உள்ள “அர்ஜுன்” என்ற நபர் தான் ஹோமம் செய்வதாகக் கூறி முன் வந்தார். அவருக்கும் முறைப்படிச் செய்யத் தெரியவில்லை. பிறகு எல்லாரும்சேர்ந்து ம்ருத்யுஞ்சய ஸ்தோத்திரத்தை உரக்க 108 முறை கூறி ஹோமத்துக்கு என்று கொண்டு போன பொருட்களை அதில் போட்டு ஒரு வழியாக ஒப்பேற்றினோம். பின்னர் தம்பதி பூஜையும் செய்ய ஆள் இல்லாத காரணத்தால் நாங்கள் தேர்ந்தெடுத்த தம்பதிக்குக் கால் அலம்பி நமஸ்கரித்துக் கொண்டு போன பொருட்களை வைத்துக் கொடுத்தோம். மற்றவர்களும் அப்படியே செய்தார்கள். தம்பதி பூஜைக்குக் கிட்டத் தட்டக் கல்யாணம் போலவே திருமாங்கல்ய தாரணம் செய்து, மெட்டி அணிவித்து எல்லாம் முறைப்படி செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் போனது கொஞ்சம் வருத்தம் தந்தது. பின் மானசரோவரில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டி எல்லாரும் செல்லலாம் என்ற போது “கைலை பரிக்ரமா” முடித்துப் பின் திரும்பி வரும்போது மறுபடி மானசரோவர் வருவோம். அப்போது எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். ச ரினு எல்லாரும் சாப்பிடப் போனோம். அன்று பெரிய விருந்து கொடுக்க வேண்டும் என்று விதவிதமான தித்திப்பு வகைகள், சாத வகைகள், காய், கனி வகைகள் என்று நிரம்பி இருந்தது, மானசரோவரில் தொலைபேசி வசதி கிடையாது. ஆகவே வீட்டுக்குத் தொலைபேச விரும்புபவர்கள் தார்ச்சனில் போய்ப் பேசலாம் என்று சொன்னார்கள். சாப்பிட்டு விட்டு உடனேயே எல்லாரும் கைலாஷ் பரிக்ரமாவிற்குத் தயார் ஆனோம். அங்கிருந்து சுமார் 40 மைல் தூரத்தில் உள்ள “தார்ச்சன்” என்ற Base Camp ற்குப் போய்ச் சேர்ந்தோம். அவரவர் வந்த காரிலேயே அந்தப் பிரயாணம் நடைபெற்றது. தார்ச்சனில் அறைகள் நன்றாகவே இருந்தன. என்றாலும் இங்கேயும் கழிப்பிடம் என்பது மிக மோசமான ஒன்றாகவே இருந்தது. பொதுவாகவே நியாலம் தாண்டி சாகா வந்ததில் இருந்தே இந்தத் தொல்லை இருக்கிறது.அநேகமாய்த் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் தான். பெண்கள் தனியாக வந்தால் கூட்டமாகப் போய் வருவது நலம். தார்ச்சன் காம்ப்பிற்கு மாலை 5-30 அளவில் போய்ச் சேர்ந்தோம். போய் அறையில் சாமான்களை வைத்து விட்டுத் தொலைபேசி இருக்கும் இடம் தேடிப்போனோம். அப்போது எங்களுடன் பிரயாணம் செய்யும் திரு வெங்கடேசன் தன் மனைவியிடம் தெரிவிக்காமல் வெளியே எங்கேயோ இன்னொரு நண்பருடன் போய் வர நேரம் ஆகவே சிறு குழப்பம் ஏற்பட்டது. பின்னர் நாங்கள் தொலைபேசச் செல்லும்போது அவர்களை வழியில் பார்த்து விவரம் சொல்லிச் சீக்கிரம் போகும்படி சொல்லிவிட்டுத் தொலை பேசினோம். இது சீன அரசால் நியமிக்கப்பட்ட தொலைபேசியகம் என்பதால் கட்டணம் ஒரு நிமிஷத்திற்கு 5 யுவான் மட்டும் வாங்கிக் கொண்டு பேச அனுமதித்தார்கள். இந்தியாவுக்கு என்றால் 6 யுவான் வாங்குகிறார்கள். பிறகு அறைக்கு வந்து சாப்பிட்டுவிட்டுப் படுத்து மறுநாள் காலை நாங்கள் எல்லாரும் காலை உணவு முடித்து முதல் நாள் “பரிக்ரமா”விற்குத் தயார் ஆனோம். தார்ச்சன் காம்பில் இருந்து சற்றுத் தூரம் வரை காரில் போய் எங்கே பரிக்ரமா ஆரம்பிக்குமோ அங்கே இறங்கிக் கொள்ளும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எல்லாரும் காரில் ஏறிக்கொண்டோம். போகும்வழியில் ஒரு இடத்தில் இருந்து கூட்டமாகச் சில குதிரைகளும், காட்டெருமைகளும், அவற்றோடு சில ஆட்களும் வந்து கொண்டிருந்தார்கள்,. அவர்கள் எங்களுக்காகத் தான் வருகிறார்கள் என்று புரிந்து கொண்டோம். அரை மணி நேரத்தில் ஒரு பெரிய ஆறு தெரிந்தது. அதுதான் “வைதருணி நதி” என்றும் இதைக் கடந்து தான் செல்லவேண்டி இருக்கும் என்று பேசிக் கொண்டார்கள். ஆற்றங்கரையில் ஒரு இடத்தில் முக்கோணமாகக் கோபுரம் போல் கட்டி இருந்தது. கற்களாலும்,தோரணங்களாலும் திபெத்திய முறைப்படி அலங்கரிக்கப் பட்ட அதற்கு முன்னால் எல்லா வண்டிகளும் நிற்கவே எல்லாரும் இறங்கினார்கள். நாங்களும் இறங்கினோம். அந்தக் கோபுரத்தின் நடுவில் சிறிய ஒரு துவாரம் தெரிந்தது. எல்லாரையும் அதற்குள் போய் வருமாறு கூறினார்கள். எல்லாரும் அதற்குள் போய் வந்தோம். அது “யமத்துவாரம்” என்றும் இந்த இடத்திற்கு “யமஸ்தல்” என்று பெயர் என்றும் தெரிந்து கொண்டோம். அந்தத் துவாரத்திற்குள் போய் வருவது யமலோகத்திற்குள் போய் வருவது போல் இருக்குமோ என்னமோ என்று நினைத்துக் கொண்டோம். பிறகு அங்கிருந்து இன்னும் சற்றுத் தூரத்தில் இருந்த ஒரு பெரிய சமவெளிக்குப் போய்ச் சேர்ந்தோம். அங்கே நாங்கள் போன சற்று நேரத்துக்கு எல்லாம் குதிரைகள் வந்து சேர்ந்தன. எல்லாரையும் நம்பர் படி வரிசையாக நிற்கச் சொன்னார்கள். முதலில் எல்லாருக்கும் உதவி ஆள் தேர்வு நடந்தது. ஆட்கள் பெயரை எழுதிப் போட்டுக் குலுக்கல் முறையில் தேர்வு நடந்தது. எங்கள் முறை வந்தது. என் கணவருக்கு ஒரு பெண்ணும், எனக்கு ஒரு ஆளும் தேர்வானார்கள். எனக்கு நியமிக்கப் பட்ட ஆள் தேர்வானதும் என்னோட பையை வாங்கிக் கொண்டு எங்கே போனான் என்றே தெரியாமல் காணாமல் போனான். என் கணவரின் உதவிக்கு வந்த பெண்ணோ அவர் பையை வாங்கிக் கொண்டு அவர் அருகிலேயே நின்று கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் குதிரைத் தேர்வும் நடை பெற்றது. குதிரைகள் என்றால் குதிரைகள். காட்டில் இஷ்டத்துக்குச் சாப்பிட்டு வளர்ந்த குதிரைகள். திபெத்திய மொழி மட்டுமே தெரிந்தவை. இந்தி கூடப் புரியாது. இங்கே நம் நாட்டில் கேதார்நாத் மற்றும் அமர்நாத்தில் பிரயாணத்திற்கு மட்டக் குதிரைகள் என்னும் PONY தான் வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இவை அப்படி இல்லை. அவற்றின் வாலிற்கே தனியாக வாரிப் பின்னி அலங்காரம் எல்லாம் செய்து வைத்திருந்தார்கள். குதிரையின் வாலின் நீளம் நம்மைப் பொறாமைப் படவைக்கிறது. அவ்வளவு நீளமான வால். குதிரைத் தேர்வில் தேர்வு பெற்றவர்கள் ஒவ்வொருவராகக் குதிரையில் உதவி ஆளின் உதவியுடனும், குதிரைக்காரர்கள் உதவியுடனும் ஏறிக் கொண்டிருந்தார்கள். எங்கள் முறையும் வந்தது. என் நம்பர் முன்னால் இருந்தாலும் என் கணவர் எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த காரணத்தால் அவருக்கு முதலில் குதிரைத் தேர்வு நடந்தது. ஒரு பெண் குதிரைக்காரியும் அவள் குதிரையும் தேர்வானது. உடனேயே அந்தக் குதிரைக்காரி என் கண்ணெதிரிலேயே என் கணவரைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினாள். அவர், இரு, இரு, என் மனைவியும் வரட்டும்,” என்று சைகை செய்கிறார். அவள் அதைக் கவனிக்காமல் எங்கேயோ அவரைக் கிட்டத் தட்ட இழுத்துக் கொண்டு ஓடினாள். நான் திகைத்து நின்றேன். என் பக்கம் என்னோட உதவி ஆள் கூட இல்லை. எங்கே இருக்கிறானோ தேட வேண்டும். என்னோட முறையும் வந்தது, குதிரையும் தேர்வானது. எனக்கும் ஒரு பெண் தான் வந்தாள் குதிரைச் சொந்தக்காரியாக. முகம் முழுக்க மூடிக் கொண்டு இரு கண்கள் மட்டுமே தெரிந்தன. அவளோடகண்களையும் அவள் முகத்தை மூடிக் கொண்ட துணியின் நிறத்தையும் வைத்துத் தான் அடையாளம் கண்டு பிடிக்க வேண்டும். அவர்கள் பெயர் எழுதின சீட்டு ஒன்று நம்மிடமும், குதிரைக்காரர்களிடமும் கொடுக்கிறார்கள். வெறும் காகிதத்தால் ஆன அந்தச் சீட்டை நாம் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். என்னோட குதிரைக்காரி என்னை அங்கேயே இருக்கச் சொல்லி விட்டுத் தான் போய்க் குதிரையைக் கொண்டு வந்தாள், குதிரையின் உயரம், நீளம், அதன் நிறம், வாளிப்பு எல்லாம் பார்த்தால் சாட்சாத் தேசிங்கு ராஜா இம்மாதிரிக் குதிரையைத் தான் அடக்கி இருப்பானோ, ராணி லட்சுமி பாய் இம்மாதிரிக் குதிரையில் தான் சண்டை போடப் போர்க்களத்துக்குப் போயிருப்பாளோ, ராணி மங்கம்மாவிடம் இம்மாதிரிக் குதிரைப் படை இருந்திருக்குமோ என்றெல்லாம் தோன்றியது. என்னோட இந்த அபார சரித்திர அறிவைப் பத்தி ஏதும் தெரியாத அந்தப் பெண் என்னைக் குதிரையில் ஏறி உட்காரச் சொன்னாள். நானோ, ” இவர் எங்கே போனார்?” என்ற கவலையில் மூழ்கி அவளிடம், “என் கணவர் வரட்டும்.” என்று ஜாடை காட்டினேன். குதிரை கனைத்தது. 19 ஓம் நமச்சிவாயா-19 குதிரை கனைக்கவும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. குதிரை நல்ல உயரம். என் கணவரின் கணிப்பிலே அது 7 முதல் 8 அடிக்குக் குறையாது. எனக்கோ இமயமலை அளவு உயரமாய்த் தெரிஞ்சது. நல்ல வெள்ளை நிறம். நல்ல அடர்த்தியான வால் நேர்த்தியான அலங்காரம். குதிரைக்கு முகத்திலும் அலங்காரம். உட்காருமிடத்திலும் நல்ல மெத்தென்று தான் துணிகள் போடப் பட்டிருந்தன. உட்காரக் கால் வைத்து ஏறும் சேணம்? சேணம் என்ற வார்த்தை சரியா இது? தெரியலை. ஏறும் வளையம் தரையில் இருந்து மூன்று அடி உயரத்தில் .இருந்தது.என் வலது கால் ஏற்கெனவே சரியில்லை. நடக்கும்போதே மடிந்து விடும். வலது காலைத் தூக்கி வைத்து ஏறமுடியாது. இடது காலைத் தூக்கி ஏற வசதியாக இல்லை.என்ன செய்வது என்று விழித்துக் கொண்டிருந்தேன். குதிரைக்காரியோ அவசரப் படுத்திக் கொண்டிருந்தாள். நான் என் கணவர் வரட்டும் இரு என்று அவளிடம் எவ்வளவோ ஜாடை செய்து சொல்லியும் அவள் புரிந்து கொள்ளவே இல்லை. ஏதோ நான் பிறந்தது முதல் குதிரையிலேயே சவாரி செய்து வந்தவள் என்று எண்ணிக் கொண்டாள் போல் இருக்கிறது. இவர் எங்கே போனார் என்று பார்த்தால் ஆள் விலாசமே தெரியவில்லை. அதுக்குள்ஏறிப் பார்க்கலாம்னு முயற்சி செய்தால் என்னால் காலைத் தூக்கி வைக்கவே முடியவில்லை. என்ன செய்வது என்று புரியவில்லை. நான் தயங்கிக் கொண்டிருந்த போது அந்தப் பெண் திடீரென திபெத்திய மொழியில் ஏதோ கத்தினாள். என்னவென்று புரிந்து கொள்வதற்குள் நான் குதிரையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். என்னைச் சுற்றி ஆட்கள். அப்புறம் ஒரு வழியாகப் புரிந்தது. அந்தப் பெண் கூட வந்தவர்கள் உதவியுடன் என்னைக் குதிரையில் ஏற்றி இருக்கிறாள் என்று. நான் சுதாரித்துக் கொள்வதற்குள் குதிரை கிளம்பி விட்டது. அப்பவும் என் கணவரைத் தேடினேன். அந்த நீண்ட, வளைந்த மலைப்பாதையில் அவர் வருகிறாரா இல்லையா எனவே தெரியவில்லை. குதிரை வேக நடை போட்டது. கூடவே அந்தப் பெண்ணும் வேக நடை போட்டாள். அவளுடைய சிறிய பாதங்கள் அந்தக் கல்லிலும், பாறையிலும் சற்றும் தடுமாறாமல் போய்க் கொண்டிருந்தது. குதிரைக்காரர்களில் ஒருத்தர் நடந்து போகும் அலுப்புத் தெரியாமல் இருக்க ஏதோ ஒரு நாட்டுப் புறப்பாடலை ஆரம்பிக்கப் பின் அந்தப் பெண்களும் கூடவே அதற்குத் தகுந்தாற்போல பாட ஊர்வலம் போல் போய்க் கொண்டிருந்தது. ஆனால் எனக்கு உள்ளூறத் திகில். பாதை சரியான மலைப்பாதை. பாறைகளும், கற்களும் நிறைந்தது. பாறைகள் என்றால் பாறைகள். குதிரை அவற்றை எப்படித்தான் மிதித்துக் கொண்டு போனதோ தெரியவில்லை. மிகக் குறுகலான பாதை. குதிரையின் காலடியும், அந்தப் பெண்களின் காலடியும் மட்டும் வைக்கலாம். அவ்வளவு குறுகலான பாதை. ஒரு பக்கம் நெடிதுயர்ந்த மலைச் சிகரங்கள். இடது பக்கமாய்க் கரைக்குக் கீழே பல அடி ஆழத்தில் “வைதருணி நதி” கிட்டத் தட்ட 200 முதல் 250 அடி வரை அகலத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆழம் என்னவோ தெரியாது. நதி வேகமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. நதியின் மறு கரையில் மலைச் சிகரங்கள் காலை வெயிலில் பள பளக்கின்றன. அவற்றின் பிரதிபலிப்பின் வேகத்தைப் பார்த்ததும் கண்கள் கூசும். ஆகவே தான் கறுப்புக் கண்ணாடி அவசியம். குளிருக்கான ஆடை அணிகள், இவற்றோடு நடப்பதே சிரமமாக இருக்கும் அந்த மலைப்பாதையில். இதிலே குதிரை மேலே வேறே போவது என்றால் கேட்கவே வேண்டாம். எனக்கு முன்னால் தெலுங்கு எழுத்தாளப் பெண்மணி ஸ்ரீலட்சுமி போய்க் கொண்டிருந்தார். அவருடைய தோழிகளும் முன்னால் போனார்கள். எனக்குப் பின்னால் திரு வெங்கடேசன், திரு ராமச்சந்திரன் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். என்னோட உதவிக்கு வரும் ஆள் எங்கேயோ முன்னால் போய்க் கொண்டிருந்தான். எல்லாரும் அவனைக் கூப்பிட்டுக் கிட்ட வைத்துக் கொள்ளும்படி அறிவுரை கூறினார்கள். ஆனால் அவன் வந்தால் தானே. குதிரை போகும் திசைக்கு நேர்மாறாக ஆறு ஓடுகிறது. குதிரையில் போய்க் கொண்டே ஆற்றைப் பார்க்கும்போது அந்தக் கரையில் இருக்கும் பெரிய பெரிய மலைகளும் கூடவே நகர்கிற மாதிரி ஒரு பிரமை. எனக்குத் தானா எல்லாருக்குமா தெரியவில்லை. முன்னால் பார்த்தால் மலை ஏறும் பாதை. பின்னால் பார்த்தாலோ மலை ஏறி வந்த பாதை ஆழத்தில் தெரியும். பக்கவாட்டில் வலது பக்கமாய்ப் பெரிய பெரிய மலைகள். இடது பக்கமாய் ஓடும் நதி. எங்கே பார்ப்பது? இயற்கையை ரசிக்க வேண்டும் என்று நினைத்தாலும், இந்த மனக்குரங்கானது பயத்தையே ரசித்து வர ஆரம்பித்தது. சில கி.மீ தூரம் போனதும் நதி அங்கே ஒரு சிறு கிளையாக இரண்டு மலைகளுக்கு இடையில் பிரிகிறது. அங்கே இறங்கி ஒரு கி.மீ. வரை நதியில் போய்ப் பின் மறுபக்க மலையில் மேலே ஏற வேண்டும். குதிரை இறங்க ஆரம்பித்தது.குதிரை இறங்கும்போது நாம் பின்னால் சாய்ந்து கொள்ளவேண்டும் என்றும் குதிரை ஏறும்போது முன்னால் சாய வேண்டும் என்றும் ஏற்கெனவே சொல்லி இருந்தார்கள். பின்னால் சாயும் என் முயற்சியில் கால் வளையத்தில் இருந்து விடுபட்டது. எனக்குப் பயம் பிடித்துக் கொண்டது. என்னுடைய உதவி ஆளைக் கூப்பிடுமாறுக் கூட வந்தவர்களிடம் சொல்ல அவர்களும் அப்படியே செய்தார்கள். அவன் திரும்பிப் பார்த்துவிட்டுத் தலை ஆட்டி விட்டுப் பின் போய் விட்டான். என்ன செய்வது என்றே புரியவில்லை. நாமாகச் சரி செய்து கொள்வோம் என்று குனிந்து பார்த்தேன். வளையத்தில் காலை மாட்டிக் கொள்ள முயற்சி செய்தேன். அடுத்த நிமிஷம் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தேன். 20 ஓம் நமச்சிவாயா-20 அந்தக் குதிரைக்கு நான் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள் இல்லைனு தெரிஞ்சிருக்கணும். வளையத்தைக் காலில் நானாக மாட்டிக் கொள்ள முயன்றதும் அது என்னைக் கீழே தள்ளி விட்டது.குதிரையின் விலாப் பக்கத்தில் வளையத்தை மாட்டிக்கொள்ள முயன்றபோது நான் கொடுத்த அழுத்தத்தினால் அது ஓட ஆரம்பித்திருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதெல்லாம் அப்புறம் தான் தெரிந்து கொண்டேன். இப்போக் கீழே விழறதுன்னா எப்படி விழறது? அது ஒரு பெரிய விஷயம். ஒரு பக்கம் நதிக் கரை. நல்ல வேளையா உயர்ந்த கரைப் பக்கத்தில் இருந்து கொஞ்சம் கீழே இறங்கி ஆச்சு. இன்னொரு பக்கம் நெடிது உயர்ந்த மலைகள். இடது பக்கமாய் விழுந்தால் நதியில் விழுந்து அங்கே இருந்து நேரே கைலை தான் போகணும். வலது பக்கமாய் விழுந்தால் மலைப் பாறை மண்டை உடையும். எது தேவலை. யோசிக்கவே நேரம் இல்லை. உடம்பைக் குறுக்கிக் கொண்டேன். என்னோட யோகா பயிற்சி கை கொடுத்தது. நல்லவேளையாக நான் விழுந்தது வலது பக்கமாய்த் தான். அப்படியே உட்கார்ந்த வாறு விழுந்தேன். தலையில் அடி படாமல் இருக்கக் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டபடி விழுந்தேன். அதற்குள் சத்தம் கேட்டுக் குதிரைக்காரி ஓடி வந்தாள். என்னோட உதவி ஆளைக் கூப்பிட்டாள். அது மட்டும் நதியின் உயர்ந்த கரையாக இருந்திருந்தால் அந்தக் குறுகிய இடத்தில் நான் விழுந்திருந்தால் பின்னால் வந்த குதிரைகள் எல்லாம் தமிழ் சினிமா, இந்தி சினிமா வில்லன், வில்லியை மிதிக்கிற மாதிரி மிதித்துக் கொண்டு போக வேண்டி இருக்கும் அல்லது எனக்கு நல்ல அடி பட்டிருக்கும். இப்போதும் அடி பட்டது. ஆனால் இடுப்பில் அடி பட்டது. மண்டை உடைந்து ரத்தம் வராமல் போச்சே என்று சந்தோஷப்பட்டேன். ஏற்கெனவே வலது பக்க இடுப்பில் ஏணியில் இருந்து கீழே விழுந்து, மாடு முட்டிக் கீழே விழுந்து, வீட்டிலேயே நடக்கும்போது விழுந்து என்று மேலே மேலே அடி பட்டுக் கொண்டிருந்தது. அதே இடத்தில் இப்போதும் நல்ல அடி. என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை.அசையக் கூட முடியவில்லை. குதிரைக் காரியானால் எழுந்திரு என்கிறாள். இவர் எங்கே போனார் என்றும் தெரியவில்லை. ஒரே ஆத்திரமும், அழுகையுமாக வந்தது. அதற்குள் தாண்டிப் போனவர்கள் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று சொன்னார்கள். அதற்கு இவங்க விட்டால்தானே. இரண்டு பேருமாக என்னை மறுபடி குதிரை மேல் ஏற்றி விட்டார்கள். இத்தனை நேரம் உட்காரக் கஷ்டமாக இல்லை. இப்போ உட்காரவே முடியலை. காலைத் தொங்கப் போடவும் முடியலை. குதிரை நடக்கும் போது எல்லாம் அதன் முதுகெலும்பு பட்டு இன்னும் வலி ஜாஸ்தி ஆகிறது. ரொம்பவே வேதனையாக இருந்தது. ரத்தம் கட்டி வீங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைத்தேன். சற்றுத் தூரம் போனதும் சாப்பாடு சாப்பிட ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். அங்கே இறங்கச் சொன்னார்கள். எங்கே இறங்கறது? முடியலைன்னு சொன்னேன். உடனேயே பிடித்து இழுத்து இறக்கி விட்டார்கள். வலது காலை ஊன்ற முடியாமல் கால் மடிந்து மறுபடி கீழே விழுந்தேன். (இந்தக் குதிரைக்காரர்கள் கொஞ்சம் முரட்டுத்தனமாய்த் தான் நடந்து கொள்கிறார்கள். மேலும் நாம் குதிரையில் இருந்து கீழே விழுவது அவர்களுக்கு உற்சாகமாய்ச் சிரிப்பு வருகிற விஷயமாய் இருக்கிறது. இது பற்றி ஏற்கெனவே எங்களுக்குச் சொல்லி அவர்கள் என்ன சொன்னாலும் பேசாமல் இருக்கவேண்டும், அவர்களிடம் கோபமாய்ப் பேசக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டிருந்தோம்.)நான் மறுபடி கீழே விழுந்த சமயம் எங்கோ இருந்து வந்த என் கணவர், “பார்த்து இறங்கக் கூடாது?” என்றார். உடனேயே கோபமும், அழுகையுமாய் வழியிலேயே கீழே விழுந்ததைச் சொன்னேன். அடி பட்டிருக்கிறது என்றும் சொன்னேன். அதற்குள் திரு ராமச்சந்திரன் சில வலி நிவாரணி மாத்திரைகளைக் கொண்டு வந்து கொடுத்தார். பக்க விளைவுகள் இல்லாதது என்றும், தைரியமாய்ச் சாப்பிடலாம் என்றும் சொன்னார். என் கணவர் எங்கள் இருவருக்கும் சாப்பாடு வாங்கிக் கொண்டு திரு மனோகரனிடமும், கிருஷ்ணாவிடமும் எனக்கு அடிபட்டு வலி அதிகம் இருப்பதைச் சொன்னார். அவர்கள் இங்கே தங்க இடம் ஏதும் இல்லை என்றும் இன்னும் ஒரு 3 மணி நேரம் போனதும்தான் இரவு தங்கப் போகும் கேம்ப் வரும் என்றும் அங்கே வந்து பார்த்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார்கள். சாப்பிடும் போதே பனிமழை பொழிய ஆரம்பித்தது. கூரை எதுவும் இல்லாத திறந்த வெளி தான். ஆகவே எல்லாரும் ரெயின்கோட்டைப் போட்டுக் கொள்ளலாம் என்று நினைக்கும்போதே காற்று அடிக்க ஆரம்பித்தது. ஒருவழியாகச் சாப்பிட்டோம் என்று பெயர் பண்ணிவிட்டுக் கிளம்பினோம். குதிரைக்காரியிடமும், என்னோட உதவி ஆளிடமும் என் கணவர் எவ்வளவோ சொல்லிப் புரியவைக்க முயன்றார். என்ன புரிஞ்சிண்டாங்களோ தெரியலை. மூன்று மணி நேரம் கழித்து ஒரு நதிக்கரையில் மறுபடி இறக்கி விட்டார்கள். நதி இப்போது குறுக்காகப் போய்க் கொண்டிருந்தது. நதியின் மறு கரையில் நாங்கள் தங்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அந்த இடத்தில் கரை குதிரை போகிற மாதிரி இல்லை. நாம் தான் இறங்கிப் போக வேண்டும். நதியைக் கடந்து மறு கரை போய் மேட்டில் ஏறிக் கேம்பிற்குப் போகவேண்டும். எல்லாரும் இறங்கிக் கடந்து கொண்டிருந்தார்கள். என்னோட ஹெல்ப்பரை உதவிக்குத் தேடினேன். கையில் ஒரு தடி கொடுத்து விடுகிறார்கள். எல்லாருக்குமே. எங்கெல்லாம் வழுக்குமோ அங்கெல்லாம் தடியின் உதவியுடன் நடக்க வேண்டும். பனியாக இருந்தாலும் தடியை ஊன்றிக் கொண்டு நடக்கலாம். இருந்தாலும் பாறை வழுக்குப் பாறையாக இருந்தால் என்ன செய்வது? அதனால் ஆளைத் தேடினேன். அவன் முன்னாலே போய்விட்டான். எனக்கு ஒரு அடி எடுத்து வைக்க முடியலை. எனக்கு முன்னாலே தெலுங்கு எழுத்தாளப் பெண்மணி ஸ்ரீலட்சுமி போய்க் கொண்டிருந்தார். அவரும் தடுமாறிக் கொண்டிருந்தார். ஒரு அடி எடுத்து வைப்பதும், நிற்பதுமாக ரொம்பவே சிரமப்பட்டார். அதற்குள் என் கணவரும் அவருடைய உதவிப் பெண்மணியும் வரவே அந்தப் பெண்மணி முதலில் அவரைக் கொண்டு அக்கரையில் விட்டு விட்டுப் பின் திரும்பி வந்து என்னை அழைத்துக் கொண்டு போனாள். அங்கே கேம்பில் எல்லா இடமும் பூர்த்தி ஆகிக் கொண்டிருந்தது. சற்றுக் கீழே உள்ள ஒரு “மட் ஹவுஸில்” எங்களைப் போய்ப் படுக்குமாறு மனோகரன் கூறவே, சற்றுப் படுக்கை உறுத்தாமல் இருந்தால் பரவாயில்லை. அடி பட்டிருக்கிறது என்று என் கணவர் கூறினார். ஆனால் அவர் நடந்து வருகிறவர்களுக்குத் தான் இந்த இடம்னு சொல்கிற மாதிரிப் பேசாமல் போய்விட்டார். வேறு வழியில்லாமல் அந்த அறைக்கு வந்தோம். கிட்டத் தட்ட 10 பேருக்குப் படுக்கை போட்டிருந்தது. எனக்கு முன்னாலே செந்திலின் நண்பர் ரமேஷ், ஸ்ரீலட்சுமி, அவரின் கூட வந்த செளமினி, கண்ணம்மா, திருமதி லலிதா மற்றும் மதுரையில் இருந்து வந்த அலமேலு ஆகியோர் இருந்தார்கள். ஒரு இரட்டைப்படுக்கையில் எங்களுக்கு இடம் கிடைத்தது. கற்களால் மேடை போல அடுக்கி வைத்து அதன் மேல் விரிப்பை விரித்திருந்தார்கள். போர்த்திக் கொள்ள நல்ல வேளையாக ரஜாய் இருந்தது. எல்லாரும் அதில் படுக்கவே முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இதிலே எங்கள் படுக்கையின் கால்மாட்டில் திருமதி லலிதாவின் படுக்கை, தலைமாட்டில் இன்னும் இரண்டுபேர், பக்கவாட்டில் திருமதி அலமேலு. நாங்கள் இறங்குவது என்றால் யார் காலையோ தலையையோ மிதிக்காமல் இருக்கிறோமா என்று பார்க்கவேண்டும். என் கணவர் போய்ப் படுத்தது தான் இறங்கவே இல்லை மறுநாள் காலை வரை. அப்போது திரு கிருஷ்ணா வந்து எல்லார் உடல் நலமும் தினசரி கேட்கிற மாதிரி விசாரித்து விட்டு என்னிடம் நீங்கள் தொடர்ந்து வருகிறீர்களா? என்று கேட்டார்.நான் யோசித்துச் சொல்கிறேன் என்று சொன்னேன். அப்போது அவர் மறுநாள் கிட்டத்தட்ட 7 கி.மீ. முதலில் நடக்கவேண்டும் என்றும், அதன் பின் குதிரையில் போகவேண்டும் என்றும், பின் மறுபடி நடக்கவேண்டும். அது ரொம்பவே கஷ்டமான ஒன்று. எங்கேயும் நடுவில் நிற்க முடியாது. ஒரே செங்குத்துப் பாதை. துணை இல்லாமல் முடியாது யோசித்துச் சொல்லுங்கள். என்று சொன்னார். 21 ஓம் நமச்சிவாயா-21 என்னிடம் கேட்ட மாதிரி ஸ்ரீலட்சுமிக்கும் முடியலைன்னதும் அவரிடமும் திரு கிருஷ்ணா கேட்டார். ஸ்ரீலட்சுமி தான் தொடரப் போவதாய் அறிவித்தார். அவருடைய சிநேகிதிகளின் துணையுடன் தான் வருவதால் தனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை என்றும் தெரிவித்தார். மற்றபேர் எல்லாரும் தொடரப் போவதாய்ச் சொல்ல, அதற்குள் நாங்கள் இருவரும் கலந்து பேசிக் கொண்டு பிரயாணத்தைத் தொடருவதில்லை என முடிவு செய்து அதைத் திரு கிருஷ்ணாவிடம் தெரிவித்தோம். அவரும் என் உடல்நிலையில் தொடருவது ரொம்பவே கஷ்டம் என்றும், நீங்கள் எடுத்தது சரியான முடிவுதான், அதனால் சோர்வு அடைய வேண்டாம் என்றும் இரண்டு முகம் தரிசனம் கிடைத்தது அல்லவா? அதனால் நீங்கள் சந்தோஷமாய்த் திரும்பி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் ஆறுதல் சொன்னார். நாங்கள் கேம்ப் இறங்கி இருக்கும் இடத்தில் எங்களுக்கு நேர்முகமாய்க் கைலையின் ஒரு முக தரிசனம் கிடைத்துக் கொண்டிருந்தது. இந்த முக தரிசனம் ஐயன் தன் சடாமுடியை விரித்துக் கொண்டு ஆடும் தோற்றம் போலக் காட்சி தந்தது. சுற்றிலும் நட்சத்திரங்கள் மாலை போல அணி வகுக்க அந்த இருண்ட வானில் வெள்ளை வெளேர் என்ற பனி படர்ந்த கைலைமலைச் சிகரமானது ஐயனின் இன்னொரு பக்க முகத் தரிசனத்தைக் காட்டி நின்றது. காலைச் சூரிய ஒளியில் அதன் தரிசனம் வேறு மாதிரிக் காட்சி அளிக்கும் என்றும், “பொன்னார் மேனியனே!” என்று சுந்தரர் விளித்ததற்கு ஏற்பக் காலைச் சூரியனின் பொற்கிரணங்கள் பட்டுத் தங்கம் போல் தகதகவென்று ஜொலிக்கும் என்றும் சொன்னார்கள். பார்க்கப் பார்க்கத் திகட்டாத செளந்தரியமான காட்சி. ஆனால் இரு முகம் தான் பார்க்க முடியும் என்பது சற்று வருத்தமாய்த் தான் இருந்தது. இது இப்படி நேரும் என்றுதான் முன்னாலேயே பசுபதிநாதர் கோவிலில் கூட எங்களால் நின்று கூட மற்ற இரு முக தரிசனம் காணப் பெற முடியவில்லை போலும். அப்போதே இறைவன் சூசகமாய்த் தெரிவித்தானோ என்னவோ? இரவு என் கணவர் அசந்து உறங்க, எங்களுடன் தங்கி இருந்த மற்றப் பெண்கள் உதவ நான் என்னோட சிலத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டேன். என்னை எழுப்பி உட்கார்த்தி வைக்கத் திரு ரமேஷ் ரொம்பவே உதவியாக இருந்தார். இரவு போய்ப் பொழுது புலர்ந்ததும் எல்லாரும் கிளம்ப ஆயத்தமானார்கள். சிலருக்கு முதலில் 7 கி.மீ. நடக்கவேண்டும் என்று தெரியாமல் குதிரையைத் தேட குதிரை எல்லாம் வேறு இறங்குமுகமாய் இறங்கிப் போக ஆரம்பிக்க எல்லாரும் நடைப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். ஒவ்வொரு நாள் பரிக்ரமா ஆரம்பிக்கும் முன் காலை உணவுக்குப் பின் சில ஜூஸ் வகைகள், அல்லது பெப்ஸி, கோலா போன்ற குளிர்பானவகைகள், பிஸ்கட் வகைகள் முதலியன வழியில் சாப்பிடக் கொடுக்கிறார்கள். உணவு விஷயத்தில் தேவைக்கு மேல் அதிகமாய்த் தான் கொடுக்கிறார்கள். நம்மால்தான் சாப்பிட முடிவதில்லை. நாங்கள் திரும்பத் தயாராய் இருந்தோம். என்னால் நிற்க முடியவில்லை. இதிலேயே நதியில் கீழே இறங்கிச் சற்றுத் தூரம் நடந்து போய் அக்கரையில் இருக்கும் குதிரையில் ஏறிக் கொண்டு போகவேண்டும். எப்படியும் நிற்காமல் போவதால் 4 மணி நேரமாவது ஆகும். பரிக்ரமாவைத் தொடருகிறவர்கள் கிளம்பிப் போக என் கணவரின் குதிரையைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிவந்தார்கள். நல்ல வயசான குதிரையாக இருந்தது. மெதுவாகப் போகிறது. என்னோட குதிரை அதை வம்பிழுக்க, எனக்குப் பயம் வந்தது. அப்புறம் என் கணவர் இம்முறை கூடவே வந்ததால் என்னோட உதவி ஆளிடம் கடிந்து கொண்டு கூடவே வந்து எனக்குப் பாதுகாப்பாக இருக்குமாறு கூறினார். அதற்குள் என் கணவரின் உதவிக்கு இருக்கும் பெண்மணி என்னை மிக ஜாக்கிரதையாகக் குதிரையில் ஏற்றி, உட்கார வசதி செய்து கொடுத்துக் காலையும் சற்றும் அவிழாமல் இருக்கும்படி ,மாட்டி விட்டுத் தான் கூட வருவதாயும், பயம் வேண்டாம் என்றும் சைகை செய்தாள். எங்கள் பயணம் ஆரம்பித்தது. நதியில் போய்க் கொண்டிருந்த போது ஒரு மோட்டார் பைக் எங்களைக் கடந்து சென்றது. திரு கிருஷ்ணா மோட்டார் பைக்கில் ஆளை அனுப்பி எங்களுக்குத் திரும்பி தார்ச்சன் கேம்ப் போக மோட்டார் அனுப்ப உதவி செய்வதாய்க் கூறி இருந்ததால் அதான் போகிறார்கள் என்று நினைத்தோம். அந்த மலைப்பாதையில் அந்த பைக்கில் ஓட்டுநரைத் தவிர இன்னும் யாரோ இருந்தார்கள். தெரிந்தமுகமாய் இருந்தது. யாரெனத் தெரியவில்லை. ஒரு வழியாக நாங்கள் 3,4 மணி நேரம் கழித்து முதல் நாள் நாங்கள் குதிரை ஏறின இடம் வந்து சேர்ந்து குதிரையில் இருந்து நான் இறக்கி விடப்பட்டேன். என் கணவர் வந்து பிடித்துக் கொண்டு நான் இறங்க உதவி செய்ததால் சற்று சமாளித்துக் கொண்டேன். ஆனால் உட்கார இடமும் இல்லை. எங்களுக்காக எந்த வண்டியும் வந்திருக்கவில்லை. மலைவாழ் மக்களுக்கு வேண்டிய சாமான்கள் கொண்டு வந்த ட்ரக் ஒன்று தான் திரும்பிப் போக ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. யாரை என்ன கேட்பது ஒன்றும் புரியவில்லை. ஒன்று சீன மொழியில் பேச வேண்டும், அல்லது திபெத்திய மொழி தெரிந்திருக்க வேண்டும். விழித்துக் கொண்டு இருந்த போது காதில் தேன் பாய்ந்தது போல அந்த ட்ரக்கில் வந்து பரிக்ரமாவிற்கு இறங்கிய ஒருத்தர் எங்களிடம் ஆங்கிலத்தில் பேசினார். என்னைப் பார்த்துவிட்டு ஏன் இப்படி நிற்க முடியாமல் நிற்கிறார்கள்? என விசாரிக்க நாங்களும் சொன்னோம். உடனேயே எங்கே போகவேண்டும் என்று கேட்டுவிட்டு அந்த ட்ரக் ட்ரைவரிடம் எங்கள் தேவையைச் சொன்னார். அவரும் சற்றுப் பொறுத்தால் எல்லா சாமான்களையும் இறக்கிவிட்டு எங்களை ஏற்றிக் கொண்டு தார்ச்சன் கேம்பில் விடுவதாயும் அதற்குள் எங்கள் ட்ராவல்ஸ் வண்டியும் வந்துவிட்டால் நல்லது என்றும் கூறினார். ட்ரக் ட்ரைவர் கொண்டு விட 50 யுவான்கள் கேட்க அப்போது வேறு வழியும் இல்லை, வேறு எந்த உதவியும் வரவும் வழி இல்லை என்பதால் ஒத்துக் கொண்டோம். நிற்க முடியாமல் நின்ற 1/2 மணி நேரத்திற்குப் பின் அந்த ட்ரக் ட்ரைவர் என்னை மெதுவாய்த் தூக்கி வண்டியில் உட்கார வைக்க என்கணவரும் உட்கார்ந்து கொள்ள எங்களை தார்ச்சன் கேம்பிற்கு அழைத்துப் போனார். வழியில் எங்கள் ட்ராவல்ஸ் வண்டி வர, நாங்கள் நிறுத்தி விசாரித்ததற்கு எங்களைப் பற்றி எந்தத் தகவலும் வரவில்லை எனவும் வேறு யாரோ 7 பேர் பாதியில் திரும்புவதாகவும் அவங்களுக்காக வண்டி செல்வதாயும் கூற எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். வழியில் எங்கள் ஒருங்கிணைப்பாளர் இன்னொரு வண்டியுடன் எதிர்ப்பட எங்களை அடையாளம் கண்டுகொண்டு அவர் விசாரிக்க, நாங்கள் கொடுத்த தகவல் அவருக்கும் புதிதாய் இருந்தது. எங்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்றும் 7 பேர் திரும்புவதாயும் அவரும் உறுதிப் படுத்தினார். நாங்கள் அந்த ட்ரக்கிலேயே மேற்கொண்டு பயணத்தைத் தொடர்ந்து தார்ச்சன் கேம்ப் போய்ச் சேர்ந்து அங்கே உள்ள பெண்மணியிடம் சொல்லவே, எங்களுக்கு ஒரு அறையைத் திறந்து கொடுத்தார் அந்தப் பெண்மணி. பெரிய ஃப்ளாஸ்க் நிறைய வெந்நீரும் கொடுத்துவிட்டு அவர் போக என் கணவர் எங்கள் குழுவின் ஆட்களைத் தேடிப் போய் நாங்கள் திரும்பி விட்டதை அறிவித்துவிட்டு சாப்பாடு வேண்டும் என்றும் சொல்லவே வெறும் சாதமும், தயிரும் மட்டும் வாங்கி வந்து சாப்பிட்டுவிட்டுப் படுத்தோம். அதற்குள் டாக்டர் நர்மதாவைப் பார்த்த நான் அவங்க நிலைமை ரொம்பவே மோசமாய் இருப்பதை அறிந்து கொண்டேன். அவங்களுக்கு infection ஏற்பட்டு diarrohea நிற்காமல் போய்க் கொண்டிருந்தது. அவர் கணவர்தான் மோட்டார் பைக்கில் திரும்பி இருக்கிறார். பிறகு அவர் என்னை மருந்து வேண்டுமா என்று கேட்க நான் வேண்டாம் இருக்கு என்று சொல்லிவிட்டு மருந்துகளைச் சாப்பிட்டுவிட்டு, வலி குறையவும் மருந்துகள் சாப்பிட்டுவிட்டுப் படுத்தோம். எங்களுக்குப் பின் சுமார் 2 மணி அளவில் குஜராத்தில் இருந்து வந்திருக்கும் சிவநாராயணன், இன்னும் 2 பேர், பின் பங்களூரில் இருந்து வந்திருக்கும் மீராவும் அவர் கணவரும் திரும்பினார்கள். திருமதி மீராவின் கணவருக்கு வீஸிங் ஜாஸ்தி ஆகவே அவர்கள் திரும்பி இருக்கின்றனர். திரு சிவநாராயணன் குதிரையில் இருந்து விழுந்து அடிபட்டு ரத்தம் வந்து மயக்கம் வரவே அவரும் மற்ற இருவரும் நடக்க முடியவில்லை என்பதாலும் திரும்பி விட்டனர். ஏற்கெனவே செந்திலும் குதிரையில் இருந்து விழுந்திருக்கிறார். ஆனாலும் சமாளித்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார் என்றும் தெரிவித்தார்கள். திருமதி ஸ்ரீலட்சுமியும் குதிரையில் உட்காரமுடியாமல் சரிந்து சரிந்து விழுவதாயும், திருமதி தாரகராமனும் உட்காரமுடியாமல் விழுந்து விட்டதாயும் தெரிவித்தார்கள். ஆனால் அவர்கள் எல்லாரும் பயணத்தைத் தொடர்ந்தார்கள். மறு நாள் என்ன ஆனது? நாளை பார்ப்போமா? இங்கே ஒரு முக்கியமான விஷயம் சொல்லவேண்டி இருக்கிறது. கர்நாடக அரசும், குஜராத் அரசும் கைலைப் பயணம் மேற்கொள்கிற யாத்திரீகர்களுக்கு அவர்கள் எந்த வழியில் போனாலும் சரி, இந்திய வழியானாலும் சரி, நேபாள வழியானாலும் சரி பண உதவி செய்கிறது. கர்நாடக அரசு நபர் ஒருத்தருக்கு ரூ.25,000/-ம் கொடுக்கிறது. குஜராத் அரசு ரூ.50,000/- கொடுக்கிறது. இது எந்த அரசு வந்தாலும், மாறினாலும் தொடர்ந்து கொடுத்து வருகிறது. அதனாலே எங்கள் குழுவிலே கர்நாடகாவில் இருந்தும் சரி, குஜராத்தில் இருந்தும் சரி நிறையப் பேரைப் பார்க்க முடிந்தது. பாண்டிச்சேரி முதல் மந்திரி தன் சார்பின் நிதி உதவி செய்து ஒருத்தரை அனுப்பி வைத்திருந்தார். ஆனால் யாத்திரீகர்களை வடிகட்டி அனுப்பும் இந்திய அரசு எந்த நிதி உதவியும் செய்வதில்லை. என்ன ஒரு வசதி என்றால் கூடவே நல்ல தரமான வண்டிகளுடன் சமையல்காரர், மருத்துவர், மருத்துவ வசதியுடன் கூடிய உபகரணங்கள் என்று பாதுகாப்பான பயணத்திற்கு உத்திரவாதம் உண்டு. செலவுகளை நாம் பங்கிட்டுக் கொண்டாலும் பாதுகாப்புக் கிடைக்கிறதே, அதுவே பெரிசு இல்லையா? 22 ஓம் நமச்சிவாயா-22 டாக்டர் நர்மதாவின் கணவரும் திரும்பி விட்டார். மனைவியின் உடல் நிலை கருதியோ என்னவோ அவரும் திரும்பி விட்டார். அவர்தான் மோட்டார் பைக்கில் எங்களைக் கடந்தார் என்று தெரிந்து கொண்டோம். திரு. சிவநாராயணனும் அவரும் மோட்டார் பைக்கில் வந்திருக்கிறார்கள். அதற்கு 500 யுவான் ஒருத்தருக்குக் கொடுத்திருக்கிறார்கள். கேம்பில் போய்ச் செய்தி சொல்லவும் கிட்டத்தட்ட 300 யுவான் வரை கொடுக்க வேண்டுமாம். நல்லவேளையாக எங்களுக்கு யாரும் போய்ச் செய்தி சொல்ல அனுப்பவில்லை என்று சந்தோஷப்பட்டோம். 500 யுவான் என்பது கிட்டத்தட்ட ரூ.3,500/-ஆகிறது. நாங்கள் சென்ற சமயம் ஒரு யுவானுக்கு இந்திய ரூபாய் 6-60 மதிப்பு. மறுநாள் நாங்கள் எல்லாரும் பரிக்ரமாவில் இருந்து திரும்பி வருபவர்களை எதிர்பார்த்து இருந்தோம். அவர்கள் வருவதை வரவேற்க இங்கிருந்து எல்லா வண்டிகளும் கிளம்பிப் போனது. திருமதி மீராவும் வருபவர்களை வரவேற்கப் போனார். இங்கே நாங்கள் தங்கி இருந்த அதே கேம்பில் இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட குழு ஒன்றும் வந்து திரும்பிக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 25, 30 பேர் இருக்கும். சமையல்காரர், மருத்துவர், மருத்துவ உபகரணங்கள் என்று எல்லாவிதமான ஏற்பாட்டோடும் வந்திருந்தார்கள். இங்கே உள்ள திபெத்தியர் கூட்டம் கூட்டமாக வந்து சீனப் பொருட்களையும், மற்றும் பவளம், முத்து, கிரிஸ்டல் போன்ற மாலைகள், மணிகள், விக்ரஹங்கள் என்று விற்க வருகிறார்கள். என்னைப் பொறுத்த வரை நான் எப்பவுமே ரொம்ப மோசமான shopper. எல்லாரும் பொருட்கள் வாங்க நான் வேடிக்கை மட்டும் பாரத்துக் கொண்டிருந்தேன். நான் போன இடங்களில் இருந்து எல்லாம் பொருட்கள் வாங்கி வந்து கொண்டிருந்தால் வீட்டில் இடம் இருக்காது. அதை வைத்துப் பராமரிக்கவும் போவதில்லை. ஆகையால் நான் எதுவுமே வாங்கவில்லை. என் கணவருக்கு ஏதாவது வாங்க வேண்டும் என்று ஆசை இருந்தது. சிலபொருட்களைப் பார்த்தார். விலை சரிப்பட்டு வரவில்லை. நாங்கள் கொண்டு வந்திருந்த பணத்துக்குள் வரவில்லை. ட்ராவல்ஸ்காரர்கள் பணம் போதவில்லை என்றால் உதவி செய்கிறார்கள். ஆனால் அது அவசரம் என்றால் மட்டுமே பெறவேண்டும் என்று எங்கள் கொள்கை, ஆதலால் எதுவுமே வாங்காமல் இருந்து விட்டோம். சற்று நேரத்திற்கெல்லாம் பரிக்ரமா போனவர்கள் எல்லாம் திரும்ப ஆரம்பித்தார்கள். எல்லாரும் பார்க்கவே என்னவோ ரொம்பவே கஷ்டப்பட்ட மாதிரியும், ஏதோ சொல்ல முடியாத துக்கத்தில் இருப்பவர்கள் போலவும் தெரிந்தார்கள். என்னவென்று புரியவில்லை. அப்போது மத்தியானச் சாப்பாட்டு நேரம் ஆகிவிட்டதால் எல்லாரும் சாப்பிட ஆரம்பிக்கவும், சிலர் எங்கள் அறைக்கு வந்து என் உடல் நலத்தை விசாரித்து விட்டு அங்கேயே உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்கள். ஏதோ சொல்ல நினைத்து சொல்லலாமா வேண்டாமா எனத் தயங்குவது போல் இருந்தது. எனக்குள்ளும் சொல்ல முடியாத அளவு ஏதோ சங்கடமாய் இருந்தது. அப்போது திருமதி ராமச்சந்திரன் அங்கே வந்தவர் என்னைப் பார்த்துவிட்டு உடனேயே கண்ணில் நீர் வர ஆரம்பித்தது. என்னவென்று கேட்டால் பரிக்ரமாவில் 2-வது நாள் ரொம்பவே கஷ்டப்பட்டதாகவும், திடீர் என மழை, திடீர் எனக்காற்று, திடீர் எனப் பனிமழை என்று மாறி மாறி வந்ததாயும் நடக்கவே முடியாமல் ரொம்ப உயரத்தில் போகும்போது அதாவது அங்கே “டோல்மா பாஸ்” என்னும் இடத்தில் மூச்சு விடப் பிராணவாயு போதாத இடம். அங்கே high altitude cross in the world. ஆகவே அங்கே கடக்கும்போது ஐந்து நிமிஷத்திற்குள் கடக்கவேண்டும். இல்லாவிட்டால் ரொம்பக் கஷ்டமாகி விடும். அப்போது அவரால் முடியவில்லை என்றும் வீட்டில் விட்டு வந்திருந்த குழந்தைகள் நினைவு வந்து ரொம்பவே அழுது விட்டதாகவும் கூறினார். கீழே இறங்கும்போதும் செங்குத்தாக இறங்க வேண்டி இருந்ததால் இறங்கவே முடியவில்லை என்றும் அவருடைய உதவி ஆள் கிட்டத்தட்ட அவரை இழுத்துக் கொண்டு போனார் என்றும் கூறினார். மேலும் அவர் கூறினார்: டோல்மா பாஸைக் கடக்கும்போது ஸ்ரீலட்சுமிக்கு உடனடியாய்க் கடக்க முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், உடனேயே அங்கே சற்றுக் கீழே வந்து அவசர டெண்ட் போட்டு அவருக்கு ஆக்ஸிஜன் கொடுத்து அங்கேயே வைத்திருந்தாகவும் சொன்னார். அவரால் மேற்கொண்டு 7 கி.மீ. கீழே இறங்கும் அளவு நடக்க முடியாது என்பதால் அவரை அங்கே தங்க வைத்து துணைக்கு 2 ஆளும் இருந்திருக்கிறார்கள். அவரால் சாப்பாடும் சாப்பிட முடியாமல் போய் விட்டது. அன்று பூராவும் கஷ்டப்பட்டு ராத்திரி கொஞ்சம் பரவாயில்லை, காலையில் போகலாம் என்று நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். திடீரென இரவு 2 அல்லது 3 மணி அளவில் அவர் உடல் நிலை ரொம்ப மோசமடைந்து அவர் ஆவி பிரிந்தது.” இதைச் சொல்லி விட்டு திருமதி ராமச்சந்திரன் ரொம்பவே அழ ஆரம்பித்தார். எங்களுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. கைலையில் வந்து இறப்பது என்பது அவருக்குக் கொடுத்து வைத்திருக்கிறது என்று சமாதானப் படுத்திக் கொள்ளப் பார்த்தாலும் எங்களால் முடியவில்லை. அவரோட பாட்டும், பேச்சும் எங்கள் மனதை விட்டுப் போகவில்லை. வழியில் எவ்வளவு குறிப்புக்கள் எடுத்துக் கொண்டு வந்தார்? எவ்வளவு உற்சாகமாய் இருந்தார்? நாங்கள் சிலபேர் எதிர்பாராமல் பிரயாணம் மேற்கொண்டவர்கள். ஆனால் அவர் திட்டம் போட்டு நல்ல முன்னேற்பாடுகள் செய்து கொண்டு, “ட்ரெட் மில்” பயிற்சியிலிருந்து எல்லாம் மேற்கொண்டு தயாராகி வந்தார். இதைத் தான் விதி என்று சொல்வதா? புரியவில்லை. திருமதி தாரகராமனும் ரொம்பவே முடியாமல் ஆளே பாதியாகிச் சுருங்கி விட்டிருந்தார். அவரும் குதிரையில் இருந்து விழுந்து விட்டதாயும், அவருக்கும் ஆக்ஸிஜன் கொடுத்ததாயும், அவரால் நடக்க முடியாமல் போனதால் அவரோட குதிரைக்காரரும், உதவி ஆளும் அவரைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டதாயும் தெரிவித்தார்கள். எல்லாரும் ஒரு மனதாய்ச் சொன்னது, “நல்லவேளை, நீங்கள் வரவில்லை, வந்தால் நீங்களும் கஷ்டப்பட்டிருப்பீர்கள்” என்பது தான். எல்லாரும் திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தோம். இதே யாத்திரைக் குழுவின் முதல் முதல் மே மாதம் வந்த குழுவிலும் இதே மாதிரி ஒரு பெண்மணி இறந்து விட்டதாயும் சொல்லிக் கொண்டார்கள். ஒருவேளை உயிர் காக்கும் மருந்துகளும், தேர்ந்த மருத்துவரும் இருந்திருந்தால் ஸ்ரீலட்சுமியைக் காப்பாற்றி இருக்கலாமோ என்னவோ? அப்போது திரு கிருஷ்ணா வந்து எங்களை எல்லாம்,. “அஷ்டபத்” போகத் தயார் ஆகச் சொன்னார். எட்டு மலைகளுக்கிடையில் கைலையின் தரிசனம் மிக அருகில் கிடைக்கும். எதிரே நந்தி மலையும் இருக்கும். அதற்குப் போவதற்கு இங்கிருந்து சில கிலோ மீட்டர்கள் போய் அங்கிருந்து மலைகளின் உச்சியில் போய்த் தரிசிக்க வேண்டும். மலைப்பாதை ரொம்ப உயரம் என்பதால் நடக்கவேண்டாம் என்றும் இப்போது வண்டிகள் போகிறது, அதிலேயே போகலாம் என்றும் சொன்னார். 2004 வரை நடந்துதான் போய்ப் பார்த்திருக்கிறார்கள். “அஷ்டபத்தில்” நாங்கள் யாத்திரை முடிந்ததற்குப் பூஜையும், விநாயகருக்கு நன்றி தெரிவித்துப் பூஜையும் செய்வதாய் இருந்தது. தற்சமயம் இருந்த சூழ்நிலையால் அவை நிறுத்தி வைக்கப்பட்டது. ரொம்பவே வேதனையோடு எல்லாரும் “அஷ்ட பத்” தரிசனத்திற்குக் கிளம்பினோம். அங்கிருந்து திரும்பி இந்த கேம்ப் வர வேண்டாம் என்றும், மானசரோவரின் மற்றொரு கரையில் இரவு தங்க ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாயும், நேரே அங்கே போகவேண்டும் எனவும் திரு கிருஷ்ணா கூறினார். அவரும், திரு மனோஹரனும், எங்களில் ஒருவரான வரதராஜன் துணையுடன், இன்னும் எகோ ட்ராவல்ஸைச் சேர்ந்த 2 பேரும், ஸ்ரீலட்சுமியுடன் வந்தவர்களுடன் திருமதி ஸ்ரீலட்சுமியின் உடலை எடுத்துக் கொண்டு மலை இறங்குவதற்கு ஏற்பாடு செய்து விட்டுப் பின் எங்களுடன் வந்து சேர்ந்து கொள்வதாய்ச் சொன்னார். நாங்கள் கிளம்பினோம். 23 ஓம் நமச்சிவாயா-23 கைலை மலை பற்றிச் சிலத் தகவல்கள் இந்த இடத்தில் கைலை மலை பற்றிச் சிலக் குறிப்புக்கள் கொடுக்க நினைக்கிறேன். முன்னாலேயே கொடுத்திருக்க வேண்டும். தொடரில் தொடர்பு விட்டுப் போகக் கூடாது என்று நினைத்ததால் எழுதவில்லை. இப்போ கைலைப் பயணம் முடிந்து திரும்பிக் கொண்டிருக்கிறோம். திரும்பும் வழியில் “அஷ்ட பத்” போய்க் கொண்டிருக்கிறோம். அது இருக்கட்டும் தனியாக. ஏற்கெனவேயே கைலை மலையும் ஒரு சக்தி பீடமாய்க் கருதப் படுகிறது எனத் தெரிவித்திருக்கிறேன். தட்சனின் யாகத் தீயில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்ட அன்னையின் உயிரற்ற உடலைத் தோளில் போட்டுக் கொண்டு ஆடிய எம்பெருமான் தென்னாடுடைய சிவனின் கோபம் தணிய மஹாவிஷ்ணு தன் சுதர்ஸன சக்கரத்தால் அன்னையின் உடல் அங்கங்களைத் துண்டு துண்டாக அறுக்க அதிலே அன்னையின் உடல் கொழுப்புப் பூராவும் விழுந்து மூடிக் கொண்ட இடம் தான் திருக்கைலை ஆகும். அந்தக் கொழுப்புத் தான் உறைந்து காலப் போக்கில் பனியாக மாறியதாக சாக்தர்க்ளின் அபிப்பிராயம். திபெத்தின் மேற்குப் பகுதியில் (வடமேற்கு என்றும் சொல்லலாம்) ஒரு மூலையில் உள்ள திருக்கைலாய மலையின் உயரம் 22,028 அடிகளாகும். திபெத்திய பீடபூமியால் சூழப்பட்ட இந்த மலை இந்துக்கள், சமணர்கள், பெளத்தர்கள் எல்லாருக்குமே ஒரு புனித யாத்திரைத் தலமாய் விளங்குகிறது. மற்றச் சுற்று வட்டார மலைகளில் இருந்து பனி கோடை காலத்தில் உருகினாலும் திருக்கைலாய மலையில் மட்டும் பனி உருகுவதில்லை. இந்தப் பனி மூடிய மலையைச் சுற்றி வரும் தூரம் (பரிக்ரமா செய்யும் தூரம்) கிட்டத் தட்ட 52 கிலோ மீட்டர் ஆகும். “மஹா நிர்வாண தந்திரம்” என்ற பெளத்த மத நூலின் படி பெளத்தர்களுக்கும், திருக்கைலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவர்களின் கோட்பாட்டின் படி பெளத்தர்கள் அதாவது பிட்சுக்கள் மலையின் உச்சியில் “டொம்சோக்” என்னும் சக்தி வாய்ந்த தெய்வத்தின் உருவம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறது. இந்தத் தெய்வம் மூன்று உலகங்களுக்குக் காவல். 12 கரங்கள் உள்ள இந்தத் தெய்வம், தன் கைகளில் அறிவைக் குறிக்கும் வண்ணம் கருவிகளைத் தாங்குகிறது. தேவியின் பெயர் “டோர்ஜி பாஸ்மோ” அல்லது “வஜ்ர வர்ஷி”. செந்நிற அழகியான இந்தச் சக்தி வாய்ந்த தேவியான இவள் கையில் வைத்திருக்கும் அரிவாளினால் மனிதர்களின் ஆசைகளை வேரறுக்கிறாள். எல்லாத் திசைகளிலும் இந்த அரிவாள் தகாத ஆசை கொண்டவர்களை வேரறுக்கிறது. தன் இடக்கையால் “டொம்சேக்”கைத் தழுவிய நிலையில் காணப்படுகிறாள். ஆனால் இவள் காமத்தைக் கடந்தவள். “டொம்சேக்கும்” “வஜ்ரவர்ஷி”யான இந்தத் தேவியும் பிரிக்க முடியாதவர்கள். இது கிட்டத் தட்ட நம் அர்த்த நாரீஸ்வர தத்துவத்தை எடுத்துரைப்பதாய்த் தோன்றுகிறது. திபெத்தின் புராணம் என்று அழைக்கப் படும், “காங்குரி கார்ச்சொக்” என்ற நூலில் கைலை மலையில் தான் கற்பக விருட்சம் இருப்பதாயும், மற்ற பகுதிகள் வைரம், வைடூரியம், மரகதம், பொன், வெள்ளி போன்ற நவரத்தினங்கள் நிறைந்ததாயும் கூறப்படுகிறது. இவர்கள் கடவுளும் டொம்சொக் எனப்படும் “தர்மபாலர்” 4 முகங்கள் கொண்டவர். ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்கள் கொண்டவர். அவை முக்காலங்களை உணர்த்துகிறது. புலித்தோல் அணிந்தவர், மண்டையோட்டு மாலை தரித்து, உடுக்கையைக் கையில் வைத்திருப்பவர், திரிசூலத்தைக் “காட்டம்” என்கிறார்கள். அதையும் குறிப்பிடும் இவர்கள் கடவுள் தோற்றத்தில் நம் சிவபெருமானின் வர்ணனையை ஒத்து இருக்கிறது. ஜைனருக்கோ என்றால் அவர்கள் முதல் தீர்த்தங்கரர் “ரிஷபா நந்தா” இங்கே தான் முக்தி அடைந்ததாகவும் அவருடைய சமாதி மலை உச்சியில் இருப்பதாயும் நம்புகிறார்கள். கைலையை “அஷ்டபாதா” என்று அழைக்கும் அவர்களின் 24-வது தீர்த்தங்கரரான மஹாவீரர் இங்கே ஒரு முறை வருகை புரிந்ததாய்க் கூறுகிறார்கள். இந்துக்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். தத்தாத்ரேயர் கைலையில் பரிக்ரமா செய்ததாகவும், இப்போதும் கூட அங்கே உள்ள காடுகளில் மறைந்து இருக்கும் தத்தாத்ரேயர் மிகச் சிலர் கண்களுக்குத் தென்படுவதாயும் சொல்கிறார்கள். மஹா சிரஞ்சீவியான ஆஞ்சநேயப் பிரபு தன் சுய உருவுடன் கைலை மலைப் பிராந்தியத்தில் உலவிக் கொண்டிருப்பதாயும் சொல்கிறார்கள். கேதார்நாத்தில் உள்ள ஈசான மூலை வழியாக (நான் சென்றதில்லை) ஆதிசங்கர பகவத்பாதர் இமயம் கடந்து கைலை ஏறி அங்கேயே ஐக்கியமாகி விட்டதாயும் சொல்வார்கள். நான்கு அடுக்குகள் கொண்டதாய்க் கூறப்படும் இந்தக் கைலையின் முதல் மூன்று அடுக்குகளில் யக்ஷர்களும், நான்காம் அடுக்கில் தேவர்கள், கின்னரர்கள், அஸ்வினி தேவர்களும் இருப்பதாயும் கூறுகிறார்கள். பக்கத்தில் உள்ள “அஷ்டபத்தில்” தான் குபேரன் தன் செல்வத்தோடு வசிப்பதாயும் கூறுவார்கள். எட்டுமலைகள் கொண்ட அந்த மலைத் தொடர்கள் “குபேர பண்டார்” என்று அழைக்கப் படுகிறது. 24 ஓம் நமச்சிவாயா-24 கைலை மலையின் தோற்றங்களை நாம் நான்கு திசைகளிலும் பார்க்க முடிகிறது. உலகின் மையத்தில் இருப்பதாய்க்கூறப்படும் இந்தக் கைலையே “மஹா மேரு” என்றும் சொல்லப் படுகிறது. நான்கு திசைகளிலும் தோன்றும் 4 முகங்களும், மேல் நோக்கிய ஒரு முகமும் வருமாறு: கிழக்கு நோக்கிய “தத்புருஷம்” என்னும் முகம் மின்னல் போல் ஒளி வீசும் ஸ்படிகம் என்றும், தெற்கு நோக்கிய “அகோரம்” என்னும் முகம் நீலக்கடலைப் போன்ற நீல ஒளி வீசும் நீலக்கல்லாகவும், மேற்கு நோக்கிய “சத்யோஜாதம்” என்னும் முகம் செந்நிறம் கொண்ட மாணிக்கக் கல்லாகவும், வடக்கு நோக்கிய முகம் “வாம தேவம்” எனப்படும் பளபளக்கும் தங்கமாகவும், மேல் நோக்கிய “ஈசானம்” என்னும் முகம் கண்களை உறுத்தும் வெள்ளியாகவும் தோன்றுகிறது என்று வர்ணிக்கிறார்கள். இப்போ சமீப காலத்தில் தினசரிச் செய்திகளில் இந்தியாவும், சீனாவும் இணைந்து கைலைப் பிராந்தியத்தில் செய்யப் போகும் ஆய்வுகள் பற்றிய செய்திகள் வந்தன.அவை கங்கை, பிரம்ம புத்ரா, சிந்து, சட்லெஜ், கர்நாலி போன்ற நதிகள் எங்கிருந்து உற்பத்தி ஆகின்றன என்பதையும் கண்டுபிடிக்கவும்தான் என்று படித்தோம். கைலையின் ஈசான முகத்தில் இருந்து தான் கங்கை ஆறு உற்பத்தி ஆகி வருவதாயும், மற்ற ஆறுகள் கைலையின் மற்றப் பக்கங்களில் இருந்து உற்பத்தி ஆகி வருவதாயும் சொல்கிறார்கள். எல்லாம் வல்ல அந்த ஆதிப் பரம்பொருள் பத்மாசனத்தில் தன் தொடையில் தேவியை உட்கார்த்தி வைத்துக் கொண்டு நிஷ்டையில் இருப்பதாக ஐதீகம். கண்ணால் காணுதற்கு அரிய இந்தக் காட்சியைக் கண்டு கொண்டே 52 கி.மீ. தூரம் உள்ள “பரிக்ரமா”வை மேற்கொள்கிறோம். நிரம்பக் கொடுத்து வைத்தவர்களுக்கும், மிகுந்த மன உறுதி படைத்தவர்களுக்குமே இதை முடிக்க முடிகிறது என்பது உண்மை. “தார்ச்சன்” என்னும் இடத்தில் இருந்து ஆரம்பிக்கும் முதல் நாள் பரிக்ரமா அவ்வளவாகச் சோதனைகள் இல்லாதது, கொஞ்சம் சமவெளி, சற்றுக் குன்றுகள், ஆறுகள் என்றுதான் இருக்கின்றன என்றாலும் சிலர் (எங்களைப் போல்) இதிலேயே களைப்படைந்து போகிறார்கள்.வழி நெடுகக் காணும் கைலையின் தரிசனத்தால் ஓரளவு புத்துணர்ச்சி பெற முடியும். தார்ச்சனில் உள்ள பழமையான பெரிய “பெளத்த ஆலயம்” சீனப் புரட்சியாளர்களால் தரைமட்டமாக்கப் பட்டிருக்கிறது. இரண்டாம் நாள் “பரிக்ரமா” இருப்பதிலேயே சற்றுக் கடினமானது. கட்டாயமாய் எல்லாரும் 7 கி.மீ. நடக்க வேண்டும். அதன்பின் ஒரு செங்குத்தான மலையைக் கடக்கிறார்கள். கிட்டத் தட்ட 19,000 அடி உயரம் உள்ள அந்தச் செங்குத்தான மலையை ஏறிக் கடப்பதுதான் இந்தப் பரிக்ரமாவின் முக்கியமான சாதனை. கட்டாயம் எல்லாருடைய மன உறுதியையும் சோதிக்கக் கூடிய பயணம். 18,600 அடி உயரத்தில் “டோல்மா பாஸ்” என்னும் இடம் வருகிறது. இது சாட்சாத் அம்பாளின் உறைவிடமாய்க் கருதுகிறார்கள். இதற்குப் பக்கத்தில் உள்ள “கெளரிகுண்ட்” இதை உறுதி செய்கிறது. அந்த கெளரிகுண்டிற்குப் போக எல்லாருக்கும் அனுமதி இல்லை. மனோதிடமுள்ள வெகு சிலரே அங்கு அனுமதிக்கப் படுகின்றனர். அங்கிருந்து நீர் எடுத்து வர எங்கள் குழுவில் உள்ள யாரும் போகவில்லை. ட்ராவல்ஸ்காரர்களே போய் நீர் எடுத்து வந்திருக்கிறார்கள். இந்த டோல்மா-பாஸில் தான் பிராணவாயு ரொம்பவே கம்மி. இங்கு தங்கப் பத்து நிமிஷங்களுக்கு மேல் யாரையும் அனுமதிப்பதில்லை. அதற்குள் இதைக் கடந்து விடவேண்டும். பின் இந்தச் செங்குத்தான மலையில் இறங்க வேண்டும். இதுவும் ரொம்பவே கடினமானது தான். ஆனால் நம் கூட வரும் உதவி ஆளின் துணையுடன் இறங்கவேண்டும் என்று சொல்கிறார்கள். அன்று இரவு வரைக் கைலையின் தோற்றம் கிடைப்பதில்லை என்கிறார்கள். பின் மூன்றாம் நாள் முதல் நாள் பயணத்தைப் போல் சற்றுச் சுலபமானது. திரும்பவும் தார்ச்சனில் வந்து முடிகிறது. இதைத் தவிர உள்சுற்று எனப்படும் ஒரு பரிக்ரமா முறையும் உள்ளது கைலையில். இதன் தூரம் 28 கி.மீ. என்கிறார்கள். 13 முறை வெளிச்சுற்றை முடித்தவர்கள் (அதாவது 52 கி.மீ தூரம் உள்ள வெளிச்சுற்று) உட்சுற்றுக்குப் போகலாம் என்று கூறப்படுகிறது. கைலையின் மிக அருகில் போகவும், கரங்களால் தொடும் தூரத்துக்குப் போகவும் முடிகிற இந்தச் சுற்றை முடித்தவர்கள் சில பெளத்தத் துறவிகள் மட்டுமே என்று அறிகிறோம். உள்ளே அமர்நாத்தைப் போல் பனிலிங்க தரிசனம் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். கைகளால் தொட முடிந்த தூரத்துக்குப் போனாலும் அந்த இடத்தின் புனிதம் கருதி யாரும் தொடுவதும் இல்லை என்றும் சொல்கிறார்கள். 25 ஓம் நமச்சிவாயா-25 இப்போ மறுபடி நாம் நம்ம பயணத்தைத் தொடர்கிறோம். தார்ச்சன் காம்பில் இருந்து திருமதி ஸ்ரீலட்சுமியின் உறவினர்கள், மற்றும் ட்ராவல்ஸ்காரர் ஒருத்தர், விசா கொடுக்குமிடத்தில் உதவ ஒருத்தர், மற்றும் குழுவில் இருந்து வெங்கடேசன் என்ற மும்பையில் இருந்து வந்த நண்பரின் தம்பி திரு வரதராஜன் ஆகியோர் போலீஸ் விசாரணை முடித்து உடனேயே ஸ்ரீலட்சுமியின் உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துவிட்டுக் காட்மாண்டு கிளம்ப ஏற்பாடு செய்வதற்காக திரு மனோஹர் மற்றும் திரு கிருஷ்ணா ஆகியோர் தங்க, மற்ற குழுவினர் எல்லாரும் அவரவர் வந்த வண்டிகளில் ஏறி “அஷ்டபத்” எனப்படும் எட்டு மலைகளுக்கு நடுவில் “திருக்கைலை”யும் அதன் எதிரே “நந்தி பீடம்” எனப்படும் நந்தி மலையின் தரிசனமும் பார்க்கப் புறப்பட்டோம். சற்றுச் செங்குத்தான மலை, குறுகலான பாதை. ஏற்கெனவே எல்லாரும் பரிக்ரமாவினால் சற்றுக் களைப்பாக இருந்தார்கள்.ஸ்ரீலட்சுமியின் மரணமும் சேர்ந்து கொண்டதால் எல்லார் மனதிலும் இனம் சொல்ல முடியாத பயம் நிழலாடியது. மேலும் அங்கே செய்ய வேண்டிய பூஜைகள், மற்றும் யாத்திரை முடிவில் செய்ய வேண்டிய பூஜைகள் என்று எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் எல்லாரும் புறப்பட்டோம். நல்ல உயரமான மேல் மலைக்குப் போன பின் ஒரு சமவெளி. அங்கே ஒரு ஆறு ஓடுகிறது. அது மானசரோவருக்குப் போவதாய்ச் சிலரும் இல்லை, கங்கா என்று சிலரும், பிரம்மபுத்ரா என்று சிலரும் சொன்னார்கள். எங்கள் டிரைவர் திபெத்திய மொழியில் சொன்னது எங்களுக்குப்புரியவில்லை. எங்களுடன் துணைக்கு எங்கள் ட்ராவல்ஸ் குழுவில் இருந்து யாரும் வர முடியவில்லை. அவர்கள் இன்றிரவு நாங்கள் தங்கும் மானசரோவர் கரையில் டெண்ட் போட்டுத் தங்குமிடம் அமைக்கும் பணிக்காகப் போய் விட்டார்கள். ஆகவே சொல்ல யாருமில்லை. குன்றின் உச்சியில் ஒரு பெளத்த ஆலயமும், திபெத்திய வழக்கப் படி முக்கோண முறையில் கட்டப் பட்ட கொடிகளும் இருந்தன. எல்லாரும் மேலே போனார்கள். என்னால் ஏற முடியவில்லை என்பதால் நான் ஏறவில்லை. எங்கள் டிரைவர்கள் எல்லாரும் அந்த நதியில் இறங்கி அத்தனைக் குளிரிலும் குளித்தார்கள். அவர்கள் குளியலே வேடிக்கையாக இருந்தது. ஒண்ணு,தலையை மட்டும் நனைத்துக் கொள்கிறார்கள் அல்லது பாதி உடலுக்குக் குளிக்கிறார்கள். அந்த மாதிரித் தான் சிலர் தலை மட்டும் நனைத்தும், சிலர் பாதி உடலுமாகக் குளித்தார்கள். நீர் நிரப்பிக் கொண்டார்கள். அங்கிருந்து பார்க்கையில் கைலை மலை எதிரேயே ரொம்பக் கிட்டத்தில் இருக்கிறாப்போல் தெரிகிறது. ஆனால் போக 2 நாள் ஆகும் என்றார்கள். கைலை தரிசனம் முடித்து எதிரே உள்ள சிறிய பலிபீடம் போன்ற குன்றையும், அதற்கு எதிரே நந்தியின் தரிசனமும் (ஒரு குன்று தான் நந்தி போல் அமைப்பில் உள்ளது.) முடித்துக் கொண்டு எல்லாரும் கீழே இறங்கினோம். வண்டி ஒரு மயிரிழை நகர்ந்தாலும் கீழே அதல பாதாளம் தான். அவ்வளவு குறுகல். மேலும் நாங்கள் இத்தனை நாள் மலை ஏறி வந்த பாதை ஒன்றுமே இல்லை என்பது போல் ஒரே கற்களும், பாறையும், புழுதியும் உள்ள சாலை. ஏதோ போட்டிருக்கிறார்கள் தர்மத்துக்கு. பாதை என்ற பெயர் அவ்வளவு தான். கைலை வழி பூராவும் இப்படித்தான் பாதை இருக்கிறது. முந்தைய மத்திய அரசு இதற்குக் கொஞ்சம் வசதியான வழியாக மாற்ற ஏற்பாடு செய்து கொண்டிருந்ததாயும், அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் சில எதிர்பாராத நிகழ்வுகளினாலும்,அரசியல் காரணங்களாலும் அதை நடைமுறைப் படுத்த முடியவில்லை எனவும், பின் ஆட்சி மாறி விட்டது எனவும் எங்கள் ட்ராவல்ஸ் குழுவின் பணியாளர்கள் கூறினர். “அஷ்டபத்”தில் இருந்து நாங்கள் கிளம்பி அன்று தங்க வேண்டிய இடமான மானசரோவர் ஏரிக்கரையை அடைந்தோம். இது மற்றொரு பக்கம். இதன் ஃபோட்டோ எடுத்தால் இந்தப் பக்கம் வரவில்லை. மறுபடி முயற்சி செய்கிறேன். இந்தப் பக்கம் ஏரிக்கரை கடற்கரை மாதிரி ஒரே மணலாக இருக்கிறது. நீண்ட கடற்கரை போன்ற அமைப்பு மட்டுமல்லாமல் ஏரித் தண்ணீரே அலை அடித்துக் கொண்டிருந்தது. இங்கே தான் பூஜைக்கு உகந்த கற்கள் கிடைக்கும் என்றும் சிலருக்கு லிங்கம் போன்ற அமைப்புள்ள சிற்பமே கிடைக்கும் என்றும் சொல்லி இருந்ததால் எங்கள் குழுவினர் சிலரும், என் கணவரும் லிங்கம் தேடப் போய்விட்டார்கள். மேலும் மானசரோவர் தீர்த்தம் எடுக்க என்று எல்லாரும் கிளம்பும்போது ட்ராவல்ஸ்காரர்களின் உதவி ஆள் ஒருத்தர் தாங்கள் நிறைய தண்ணீர் எடுத்து வைத்திருப்பதாயும், காட்மாண்டு வந்ததும் எல்லாருக்கும் ஒரு 5 லிட்டர் கேனில் தண்ணீர் கிடைக்குமென்றும் சொல்லவே சிலர் திரும்பி விட்டார்கள். ஆனால் என் கணவர் எதற்கும் இருக்கட்டும் என்று தண்ணீர் எடுத்து வரப் போனார். அப்போது எங்கள் டிரைவர் அங்கே இறங்க வேண்டாம் எனவும், ஆழம் அதிகம் என்றும் ஜாடையில் சொல்லித் தான் தண்ணீர் பிடித்து வைப்பதாய்ச் சொல்லிக் கேனை வாங்கிப் போய் அவர் தண்ணீர் பிடித்து வண்டிக்குள் வைத்து விட்டார். இது எவ்வளவு நல்லது என்று காட்மாண்டு போய்த்தான் எங்களுக்குப் புரிந்தது. அன்று எங்களுக்குத் தங்குமிடத்திற்கு மட் ஹவுஸ் எனப்படும் களிமண்ணால் கட்டிய வீடுகள் 2 மட்டுமே கிடைத்ததால், அதில் என்னைப் போல் உடல் நலம் சரியில்லாதவர்களைத் தங்க வைத்து விட்டு மற்றவர்கள் வெளியே டெண்டில் தங்க வைக்கப் பட்டார்கள். இந்த இடத்தில் மட் ஹவுஸுக்கு உள்ளேயே குளிர் தாங்க முடியவில்லை. டெண்ட்டில் உள்ளவர்கள் எல்லாம் ரொம்பவே கஷ்டப்பட்டார்கள். ஒரு வழியாக அன்றிரவு முடிந்து நாங்கள் மறு நாள் “பர்யாங்” செல்ல (திரும்பும் வழியில் வரும் முதல் ஊர்) தயார் செய்து கொண்டோம். திரு கிருஷ்ணாவும், திரு மனோஹரனும் அதற்குள் வந்து விட்டார்கள். எங்களுடன் வண்டியில் ஆரம்பம் முதல் வந்த பிரெஞ்ச் வாலிபர் மற்ற வெளிநாட்டுக் காரர்களுடன் சேர்ந்து கொண்டதால் எங்கள் குழுவின் தலைமைச் சமையல்காரப் பையன் எங்களுடன் வந்தார். வண்டியும் கிளம்பியது. இரவு சரியாகத் தூங்க முடியவில்லை அதிகக் குளிரால். எங்களிடம் மிகுந்த “ரெட்புல்” பானத்தை (நாங்கள் இருவரும் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை) எங்கள் டிரைவரிடம் கொடுத்தோம். வண்டியில் ஏறினதும் எங்களுக்குத் தூக்கமாக வந்தது. சற்று ஆட்டம் போட்டுக்கொண்டே இருந்தது வண்டியும். எதைப் பற்றியும் நினைக்காமல் நாங்கள் தூங்க ஆரம்பித்தோம். டிரைவர் வெளியே பார்த்துக் கொண்டே வண்டி ஓட்டினார், அதையும் சரியாகக் கவனிக்காமல் நாங்கள் அலுப்புடன் இருந்தோம். வண்டி போய்க் கொண்டிருந்தது,சற்று நேரத்தில் நேரப் போகும் ஆபத்தை எதிர்பார்க்காமல். 26 ஓம் நமச்சிவாயா-26 நாங்கள் பயணம் செய்த வண்டியின் டிரைவர் இருக்கிறதிலேயே ரொம்பவே அனுபவம் வாய்ந்தவர்னு எல்லாரும் சொல்வாங்க. எந்த வண்டியிலே பிரச்னை என்றாலும் இவர் முன்னாலே போயிடுவார் உதவி செய்ய. கடைசியிலே அந்த வண்டி கிளம்பினதும் தான் வந்து எங்க வண்டியைக் கிளப்புவார். ஆனால் எங்களை முன்னால் கொண்டு போய்ச் சேர்த்துடுவார். கிட்டத் தட்ட இருபது நாட்களாய்ப் பயணித்து வந்ததில் நாங்கள் ஒரு நெருக்கத்தையும், பாதுகாப்பையும் உணர ஆரம்பித்ததால் சற்றும் பயம் இல்லாமல் வண்டியில் உட்கார்ந்து தூங்க ஆரம்பித்தோம். ஆனால் டிரைவர் எப்போதும் போல் இல்லாமல் வண்டியின் முன்னே உள்ள சக்கரங்களைக் கவனிப்பதும், பின் வண்டியை ஓட்டுவதுமாய் இருந்தார். அமெரிக்க நாடு போல் இங்கே சீனாவிலும் இடது பக்கமாய் ஓட்ட வேண்டும். வெளியே பார்த்துக் கொண்டே வந்தார். பர்யாங்கை நோக்கிப் போக சில மலைகள் இறங்க வேண்டும். அவ்வாறு ஒரு 2 முறை மலை இறங்கி விட்டு, பள்ளத்தாக்கில் வண்டி ஓடிக் கொண்டிருந்தது. சாலையில் இரு பக்கமும் மூன்று அடி அகல, ஆழத்தில் பள்ளங்கள் தோண்டிப் போட்டிருந்தது. எதற்கு என்று புரியவில்லை. ஆனால் வண்டிகள் போய்க் கொண்டிருந்ததால் அதைப் பற்றிச் சிந்தனை செய்யவே இல்லை. எங்கள் வண்டி இம்முறை சற்று முன்னால் போய்க் கொண்டிருந்தது. நானும் சற்றுக் கண்ணயர்ந்து விட்டேன். திடீரென வண்டி வேகம் எடுக்கிற மாதிரி ஒரு உணர்வு தோன்ற சட்டெனக் கண் விழித்தேன். வண்டியில் என் இருபக்கமும் உட்கார்ந்திருந்த என் கணவர் மற்றும் ட்ராவல்ஸ் காரப் பையன் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். பெரியவர் சங்கரனும் தூங்கிக் கொண்டிருந்தாப் போல் இருந்தது. வண்டி திடீரென ஒரு பக்கமாய் ஓட ஆரம்பித்தது. சாலை நடுவில் போகாமல் இம்மாதிரிக் குறுக்கே போய் முன்னால் போவது எங்கள் டிரைவரின் வழக்கம் என்பதால் நான் ஒண்ணும் கலவரமாய் உணரவில்லை. ஆனால் டிரைவர் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வண்டியை மெதுவாய்த் தன் கட்டுப் பாட்டில் கொண்டுவரப் போராடுவதை உணர்ந்தேன். அதே சமயம் வண்டி சாலையின் வலது பக்கம் உள்ள பள்ளத்திற்குள் போய் இறங்கி ஒரு பக்கத்துச் சக்கரங்கள் உள்ளே மாட்டிக் கொள்ள மற்ற சக்கரங்கள் மேலே தூக்கிக் கொள்ள வண்டி இரு சக்கரங்களின் உதவியால் அந்தப் பள்ளத்திற்குள் செங்குத்தாக நின்றது. நான் பயத்தில் அலறவே என் கணவரும், கூட வந்த பயணியும் விழித்துக் கொள்ளவே நிலைமையைப் புரிந்து கொண்ட சங்கரன் அவர்கள் என்னிடம், “கத்தாதீங்க, இந்தச் சமயததில் தான் தைரியமாய் இருக்கணும்.” என்று சொல்லித் தேற்றவே, என் பக்கத்தில் இருந்த பையன் பள்ளத்தின் பக்கம் உட்கார்ந்திருந்ததால் வண்டியின் ஜன்னல் வழியாக மெதுவாக வெளியேறி எங்களையும் வெளியேற்ற முயன்றான். பெரியவரும் அந்தப் பக்கமாகவே மெதுவாக இறங்கினார். என் கணவரின் உயரம் காரணமாக அவரால் அந்தப் பக்கம் இறங்க முடிய வில்லை. இதற்குள் வண்டியைப் பிரேக் போட்டு நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கிக் குதித்து எங்கள் பக்க ஜன்னலைத் திறந்து விட்டு என் கணவர் இறங்க உதவி செய்தார். அவர் மெதுவாய் இறங்கி விட்டுப் பின் என்னை இறக்கினார். ஏற்கெனவே சரியில்லாத வலது காலுடன் இருந்த நான் இப்போது குதிரையில் இருந்து விழுந்து அடி வேறு பட்டுக் கொண்டிருக்கிறேன். இறங்குவதற்குள் நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும். அவ்வளவு வலி. மற்ற வண்டிகள் நிறுத்தப் பட்டு, எல்லாரும் உதவிக்கு ஓடி வந்தார்கள். டிரைவர் ஆபத்தை எதிர்பார்த்து ஆயத்தமாக இருந்ததால் அதிகம் அடியோ, காயமோ படாமல் நாங்கள் தப்பித்திருக்கிறோம். அந்தச் சமயம் அவர் எச்சரிக்கை உணர்வோடு செயல்பட்டதால் எங்கள் உயிர் மட்டும் இல்லாமல் உடல் காயமும் இல்லாமல் போனதை உணர்ந்தோம். இது இறை அருள் இல்லாமல் வேறு என்ன? பின் ரொம்பப் போராட்டத்துக்குப் பின் கயிறு, சங்கிலி எல்லாம் கட்டி இழுத்து வண்டியை வெளியே கொண்டு வந்து சக்கரங்களை மாற்றிப் பின் பயணத்தைத் தொடர்ந்தோம். 27 ஓம் நமச்சிவாயா-27 ங்களை விட்டு அதிர்ச்சி விலகவே இல்லை. அடி ஏதும் பட்டிருந்தால்? மருத்துவ உதவிக்குக் கூட யாருமே இல்லை. இப்போது தான் “சக்தி விகடனில்” எங்களுக்கு ஒரு வருஷம் முன்னால் கைலை யாத்திரை மேற்கொண்ட திருச்சியைச் சேர்ந்த டாக்டர் கங்கா அவர்கள் எழுதியதில் தெரிந்து கொண்டேன். அவங்க குழுவில் ஒரு வண்டி இம்மாதிரிக் கவிழ்ந்து ஒருத்தருக்குக் கண்ணில் கண்ணாடித் துகள்கள் குத்தியும், வேறு இருவருக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டிருக்கிறது. டிரைவருக்குக் காயம் அதிகம் இருந்ததால் அவரை இன்னொருத்தர் துணையுடன் 1,000 கி.மீ கிழக்கே இருந்த தலைநகரான “லாசா”வுக்கு அனுப்பினாங்களாம். மற்றவர்களுக்கு டாக்டர் கங்காவும், அவங்க குழுவிலே வந்த மற்ற 5 மருத்துவர்களும் முதலுதவி செய்து இருக்காங்க. கைலை யாத்திரை முடிந்து திரும்பி டெல்லி வரும் வரை தினமும் மருத்துவம் செய்து இருக்காங்க. அவங்க எழுதி இருந்தது, “நான் குழந்தைகள் நல மருத்துவர், மற்றவர்கள் யாருமே கண் மருத்துவரோ அல்லது எலும்பு முறிவு மருத்துவரோ இல்லை. எங்களுக்குத் தெரிந்த வரை மருத்துவம் செய்தோம். கடவுள் அருளால் எங்க மருத்துவத்துக்குப் பயன் ஏற்பட்டது.” என்று எழுதி இருக்கிறார்கள். அந்தக் குறைந்த பட்ச மருத்துவ உதவி கூட எங்களுக்குக் கிட்டாது. ரத்தம் வந்தால் வந்தது தான். அதோடு தான் கிட்டே இருக்கும் பர்யாங்கிலோ அல்லது மேம்பட்ட மருத்துவ உதவிக்காக லாசாவிற்கோ போகவேண்டும். எனவே, ஒரு சிறு சிராய்ப்புக் கூட இல்லாமல் நாங்கள் தப்ப முடிந்தது அந்தக் கைலை நாதன் திருவுளம் அன்றி வேறு ஏதும் இல்லை. எங்கள் பயணம் தொடர்ந்தது. அன்றிரவு பர்யாங் வந்து சேர்ந்தோம். டாக்டர் நர்மதாவிற்கு உடலில் நீர்ச் சத்துக் குறைபாடு ஏற்பட்டது. அவங்களுக்கு வேண்டிய உதவிகள் செய்தார்கள் திருமதி கல்பனாவும் அவள் கணவர் ஸ்ரீநிவாஸனும். இருவரும் இளம் வயதினராக இருந்தாலும் மிகப் பொறுமையுடனும், சகிப்புத் தன்மையுடனும் டாக்டர் நர்மதாவிற்குச் சேவை செய்தார்கள். பர்யாங்கில் உடலில் க்ளூகோஸ் ஏற்ற வசதி இல்லை என்பதால் மறுநாள் சாகா போனதும் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க முடிவு செய்யப் பட்டது. இரவில் பெரியவர் சங்கரனையும் அவருடன் சேர்ந்து அறையில் தங்கி இருந்த மற்ற நால்வரையும் சாப்பிட அழைக்க மறந்து போய் அவர்கள் இரவு 11 மணி வரை பார்த்துவிட்டுச் சமையல் பகுதிக்கு வந்து பார்த்தால் ஏதும் கிடைக்கவில்லை. ஏற்கெனவே ஸ்ரீலட்சுமியின் மரணத்தால் பாதிக்கப் பட்டிருந்த அவர்கள் எல்லாரும் உடனேயே திரு கிருஷ்ணாவையும், மனோகரனையும் கூப்பிட்டு மருத்துவ உதவி இல்லாமல் வந்ததற்கும், இப்போது சாப்பாடு சாப்பிடும்போது எல்லாரும் வந்தாச்சா என்று கவனிக்காததற்கும், அறைகள் சரியாகக் கொடுக்கப் படவில்லை என்றும் புகார் கொடுத்துத் திரும்பிப் போகும் போதாவது சரியாகக் கவனிக்கும்படிச் சொல்லி இருக்காங்க. எங்களுக்கு மறுநாள் காலை தான் திரு சங்கரன் சொல்லி இது தெரியும். நாங்கள் ஒரு 10 பேர் விடுதியின் மறுபக்கமாய்த் தங்கி இருந்தோம். விடுதின்னு தான் பேரு. எல்லாம் களிமண்ணால் கட்டப்பட்ட அறைகள். ஆனால் படுக்க மெத்தை, போர்த்திக் கொள்ள ரஜாய், தலையணை கிடைக்கும். சற்றுக் குறை சொல்ல முடியாத விஷயம் இது ஒண்ணுதான். இல்லாவிட்டால் என்னதான் அவங்க கொடுத்த “ஸ்லீப்பிங் பாக்” உபயோகித்தாலும் தினமும் அதில் உள்ளே போய்ப் படுத்துவிட்டு வெளியே வருவது கொஞ்சம் சிரமமாகத் தான் இருக்கிறது. மறுநாள் காலை எல்லாரும் “சாகா” நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தோம். இப்போதும் எங்கள் வண்டி முன்னால் போய்க் கொண்டிருந்தது. அப்போது மறுபடி நல்ல வேளையாகச் சமவெளியில் போய்க் கொண்டிருக்கையில் ஒரு வண்டியின் சக்கரம் எங்களுக்கு முன்னால் ஓடி வந்தது. மறுபடி வண்டிகள் நிறுத்தப்பட்டுப் பார்த்தால் இம்முறை புனாவில் இருந்து வந்திருந்த திரு ராமச்சந்திரன் வந்த வண்டி அது. ஒரு பக்கச் சக்கரம் கழன்று ஓடியே போய் விட்டது. பின் ஒரு 2,3 பேர் அதை எடுத்து வரப் போக மற்ற டிரைவர்கள் வேறு சக்கரத்தை மாட்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள். சக்கரம் மாற்றி வண்டி சரியாக இருக்கிறது என உறுதி செய்ததும் மறுபடி கிளம்பினோம். ஒரு வழியாக “சாகா” வந்தோம். சிலர் “பிரம்மபுத்ரா”வைக் கிட்டே போய்ப் பார்க்கப் புறப்பட நாங்கள் தொலைபேசப் போனோம். டாக்டர் நர்மதா அங்கே ஒரு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டது. இரவு 9 மணி வரை மருத்துவமனையில் இருந்து சிகிச்சை எடுத்துக் கொண்டுப் பின் விடுதிக்குத் திரும்பினார் டாக்டர் நர்மதா அவர்கள். அவங்க கணவரும் மனைவிக்குப் பணிவிடை செய்யச் சளைக்கவில்லை. சற்றும் அலுத்துக் கொள்ளாமல் அவங்க கூப்பிட்ட நேரத்துக்குக் கேட்ட உதவிகள் செய்து வந்தார். பின் மறு நாள் காலை “சாகா”வில் இருந்து “நியாலம்” நோக்கிப் புறப்பட்டோம். எல்லாரும் வழியில் மலை இறங்கும் போது பயப்பட்டிருக்கின்றனர். எல்லாரும் ஒரு முகமாய்ச் சொன்னது:போகும்போது இவ்வளவு தெரியவில்லை. இப்போ ரொம்பவே கஷ்டமாக இருக்கு.” என்று தான். எல்லாம் “நியாலம்” போய்விட்டால் சரியாகி விடும் என்று நினைத்தோம். பின் அங்கிருந்து “நட்புப் பாலம்” கிட்டே தானே? நியாலம் போனாலே பாதி நிம்மதி என்ற நினைப்புடன் சாகாவில் இருந்து பயணத்தைத் தொடர்ந்தோம் 28 ஓம் நமச்சிவாயா-28 “சாகா”வில் இருந்து “நியாலம்” போகும் போதும் எல்லார் மனதிலும் கவலையும், பயமும் தான் மேலிட்டு இருந்தது. மனதில் தைரியம் இல்லை. இன்னும் சிலபேர் ஊருக்குப் போனால் போதும் நல்லபடியாக என்ற மனநிலையில் இருந்தனர். அன்று பூராப் பயணம் முடித்து சாயங்காலம் “நியாலம்” போய்ச் சேர்ந்தோம். இம்முறை மாடியில் இல்லாமல் கீழேயே சற்று நல்ல முறையில் ஆன அறைகள் தரப் பட்டன. அங்கிருந்து சாப்பிடும் இடமும் கிட்டவே இருந்தது. எல்லாரும் கொஞ்சம் கவலையை மறந்து சந்தோஷமாகப் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும், ஷாப்பிங் செய்யவும், தொலைபேசவும் போனார்கள். நாங்களும் தொலைபேசிவிட்டு வந்தோம். நான் முன்னமே சொன்னபடி நான் ஒரு மோசமான ஷாப்பர். அப்படி ஒண்ணும் பெரிசா வாங்க எதுவும் இல்லை. நாங்கள் போகிற ஊர்களில் எல்லாம் இம்மாதிரிப் பொருட்களை வாங்கிக் குவித்தால் பணமும் நிச்சயம் வேஸ்ட் அதோடு நேரமும் வேஸ்ட். ஆகவே வாங்குபவர் சிலருக்கு மொழி புரியாத காரணத்தால் கொஞ்சம் உதவி விட்டு வந்து விட்டோம். அன்று இரவு “கூட்டுப் பிரார்த்தனை”யும் இறந்து போன ஸ்ரீலட்சுமிக்காக அஞ்சலிக்கும் ஏற்பாடு செய்தார்கள். நாங்கள் குழுவினர் அனைவரும் சேர்ந்து சமையலில் உதவிய ட்ராவல்ஸ் கார நண்பர்களுக்கும், மற்ற ட்ராவல்ஸ்காரர்களுக்கும் எங்களால் முடிந்த பணம் போட்டு அவர்கள் வேண்டிய பொருட்களை வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டோம். இது தனியாக அவரவர் விருப்பத்தின் பேரில் செய்வது. ஆகவே கொஞ்சம் பணம் இதுக்குத் தனியாய் ஏற்கெனவே ஒதுக்கி வைத்திருந்தோம். இது மாதிரி எங்களுக்குப் பயணத்தில் கொடுத்த “பெப்ஸி, கோலா” போன்ற பானங்கள்,நாங்கள் மலை ஏற்றத்துக்கு வாங்கி வைத்த “ரெட் புல்” எனப்படும் சீன நாட்டுப் பானங்கள் எல்லாவற்றையும் எங்கள் வண்டி ஓட்டிக்குக் கொடுத்து விட்டோம். அந்தக் குழுவிலேயே “ரெட் புல்” குடிக்காத ஒரே பயணிகள் நாங்கள் இருவரும் தான். தவிர, டிரைவருக்கு எங்களுடன் வண்டி ஓட்டி நல்லபடிக் கொண்டு சேர்த்ததற்கு ஆளுக்கு 100 யுவான் கொடுக்க வேண்டும் என்றும் ஏற்கெனவே பேசி வைத்துக் கொண்டோம். அன்றிரவு கழிந்து மறுநாள் எல்லாரும் உற்சாகத்துடன் புறப்பட்டோம்.”போடோகுயிச்சி” (?) என்னும் ஆறு வழி நெடுக வரும். மிக மிக நீளமான ஆறு அது. நியாலத்தில் கொஞ்ச தூரத்தில் மலை ஏறும்போது கீழே ஓடிக் கொண்டிருக்கும் இந்த ஆறு மலை இறங்க இறங்க கரை ஓரத்தில் வண்டிகள் போகின்றன. அப்போதும் வண்டிகள் கிட்டத் தட்ட 2,500 மீட்டர் உயரத்திற்கு மேல் இருக்கும். ஒவ்வொரு மலைப் பாதையும் முடிந்து நதிக்கரை வந்ததும் அந்தக் குறுகலான பாதையில் வண்டி போகிற போது மனம் பக், பக்கென்று அடித்துக் கொள்கிறது. இதில் எங்களுக்குள் விவாதம் வேறே. போகிறப்போ இந்த வழியில் போகவில்லை என்று என் கணவர் சொல்ல, நானும் திரு சங்கரனும் “இங்கே வேறு வழி ஏது? எல்லாம் இந்த வழி தான், இதோ இந்த இடம் பார்த்தோம், அந்த அருவி பார்த்தோம்” என்று நினவு படுத்திக் கொண்டே வந்தோம். இங்கே இருந்து கீழே நட்புப்பாலம் வழியாக நேபாளம், இந்தியா போன்ற நாடுகளுக்கு ட்ரக்கில் பொருட்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள் வேறே அணி வகுத்து வரும். எதிரே ஒரு வண்டி வந்து விட்டால் அவ்வளவு தான். எல்லா வண்டிகளும் நின்று, எந்தப் பக்கம் முதலில் போகவேண்டுமோ அவர்களுக்கு வழி விட்டுப் பின் போகிற வரை சற்றுப் பயம் தான். அருவிகள் மேலே இருந்து கீழே விழ அருவியில் நனைந்து கொண்டே வண்டிகள் போகின்றன. ஒரு இடத்தில் அருவித் தண்ணீர் மிக வேகமாகக் கொட்டும். அங்கே போனதும் எல்லா வண்டிகளும் சற்று நின்று வண்டியை நன்றாகக் கழுவி விட்டுக் கொண்டு மேலே செல்கின்றன. இம்மாதிரி மலைகள் ஏறி, இறங்கி வரும் வழியில் ஒரு இடத்தில் திடீரென எங்கள் வண்டி நின்றது. அப்போது நாங்கள் ஒரு மலையில் உச்சியில் ஏறி விட்டோம். இனி மறுபக்கமாய்க் கீழே இறங்கிக் கரையைக் கடந்து வேறு மடிப்பு மலையின் பக்கம் போகவேண்டும். வண்டி நிற்கவே என்ன என்று பார்க்க என் கணவரும், திரு சங்கரனும் கீழே இறங்கினார்கள். வண்டிச் சக்கரத்தை வண்டியுடன் சேர்க்கும் இடத்தில் இருக்கும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ப்ளேட் கழன்று விட்டிருக்கிறது. சற்றும் கவனிக்காமல் அந்த இடத்தில் வளைவில் வண்டியைத் திருப்பி இருந்தால் அதோ கதி தான். டிரைவர் வண்டியில் இருந்து ஏதோ லெதர் பெல்ட் போன்ற ஒன்றை எடுத்து அதைச் சக்கரத்தோடு சேர்த்துக் கட்டினார். இதற்குள் மற்ற டிரைவர்களும் வந்தார்கள். எல்லாரும் சேர்ந்து சக்கரத்தைக் கட்டி விட்டுப் பின் வண்டியைக் கிளப்பினார்கள். அந்த இடத்தில் ஊர் ஏதும் இல்லை. “ஜாங்மூ” என்னும் ஊர் வரும். அங்கே தான் நாங்கள் கஸ்டம்ஸில் மறுபடி பேர்களைப் பதிய வேண்டும். அது வருவதற்கு இன்னும் சற்று நேரம் ஆகும். அதற்குள் இப்படி. கொஞ்சம் கவலையாகத் தான் இருந்தது. இது வரை முன்னால் போய்க் கொண்டிருந்த வண்டி இப்போது சற்று மெதுவாகப் போக ஆரம்பித்தது. “ஜாங்க்மூ” வந்ததும் சரி செய்து கொள்ளலாம் என நினைத்தோம். ஆனால் “ஜாங்க்மூ” வந்ததும் நாங்கள் கஸ்டம்ஸில் வேலையை முடித்துக் கொண்டுத் திரும்பி வண்டியில் ஏறினால் மறுபடி மலை ஏற்றத்தில் இதே தொந்திரவு. இம்முறை சக்கரம் கழன்றே வந்து விட்டது. பின்னாலும் முன்னாலும் வண்டிகள். வண்டியை ஒதுக்கினால் கீழே பாதாளத்தில் ஓடும் ஆறு. வண்டி ஒரு இஞ்ச் தள்ளி ஒதுங்கினாலும் அதோ கதி தான். மெதுவாக மற்ற வண்டிகள் போன பின் உதவிக்கு நின்ற 2 வண்டி டிரைவர்களின் உதவியுடனும் எங்கள் டிரைவர் சக்கரத்தை மறுபடி இறுக்கிக் கட்டினார். நட்புப் பாலம் எவ்வளவு தூரமோ? இன்னும் எவ்வளவு போகணுமோ என்று கவலைப் பட்டபோது கீழே இறங்கினதும் நட்புப் பாலத்துக்கு அருகே உள்ளே கடைத்தெரு வந்ததும் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு வந்தது. நாங்கள் இறங்க வேண்டிய இடமும் வந்தது. இனிமேல் இறங்கிக் கொஞ்ச தூரம் நடந்து நட்புப் பாலம் வந்ததும் அங்கேயும் நாங்கள் திரும்பி விட்டதற்கான அடையாளப் பதிவு செய்து கொண்டுப் பின் நேபாள எல்லையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் நாங்க்ள் நேபாளம் வந்ததற்கான பதிவையும் செய்து கொண்டுப் பின் 2 கி.மீட்டருக்கு மேல் நடந்து வண்டிகள் நிற்கும் இடம் போய் வண்டிகளில் ஏறிக் கொண்டு காட்மாண்டு செல்லவேண்டும். ஆனால் நட்புப் பாலம் வந்ததுமே எங்களில் பலர் ஆறுதல் அடைந்தோம். நேபாள் எல்லை வந்ததுமோ இந்தியாவே வந்து விட்டது போல் நிம்மதி வந்தது. 29 ஓம் நமச்சிவாயா-29 நட்புப் பாலம் வந்ததுமே எங்கள் வண்டி ஓட்டிக்குப் பரிசுப் பொருள் வாங்கிக் கொள்ளப் பணம் உதவி செய்து விட்டு அவரைக் கைகுலுக்கி நன்றி தெரிவித்து விட்டுப் பின் நாங்கள் நடையில் பயணத்தைத் தொடர்ந்தோம். கிட்டத் தட்ட 2 கிலோ மீட்டருக்கு மேல் கடைத் தெருக்களில் நடந்து பின் அங்கே உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வரவேண்டும். கடைகளில் யாரும் எதுவும் வாங்கும் மனநிலையில் இல்லை. சீக்கிரம் காட்மாண்டு போக வேண்டும் என்ற எண்ணம் தான் எல்லாரிடமும். பாஸ்போர்ட் அலுவலகத்தில் எல்லாரும் பழையமுறையில் வரிசையில் நின்று சீனாவை விட்டு வெளியேறுவதற்கான பதிவைச் செய்து கொண்டு மீண்டும் நடந்தோம். இப்போது நேபாளப் பாஸ்போர்ட் அலுவலகத்தில் வந்து சேர்ந்ததற்கான பதிவு செய்து கொள்ள வேண்டும். இது வரை எங்களுக்கு உதவி செய்து வந்த ட்ராவல்ஸ்காரர்கள் இந்த இடத்தில் எங்களை நீங்களே செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டதால் சற்றுத் தடுமாறிப் போனோம். பின் அங்கே ஆங்கிலமும், ஹிந்தியும் செல்லும் என்பதால் வழிமுறைகளைக் கேட்டறிந்து பின் அங்கே வந்து சேர்ந்ததற்கான பதிவை முடித்துக் கொண்டு விட்டால் போதும் என்ற நினைப்புடன் எங்களுக்காகத் தயாராக இருக்கும் வண்டிகளை நோக்கி நடந்தோம். வண்டிகள் கிட்டத் தட்டப் பேருந்துகள் தயாராக நின்றன. எல்லாரும் வண்டிகளில் ஏறிக் கொண்டதும் அவை புறப்பட்டன. மீண்டும் ஒரு மலைப் பயணம். மிகுந்த ஆர்வத்துடன் பயணம் செய்யும் எல்லாரும் எப்போது கீழே இறங்குவோம் என்ற மன நிலையில் இருந்தார்கள். அப்போது ட்ராவல்ஸ்காரரில் திரு கிருஷ்ணா என்ற எங்கள் ஒருங்கிணைப்பாளர் மறுநாள் எங்களுக்கு எல்லாம் விமானத்தில் டெல்லி திரும்புவதற்கான பயணச்சீட்டு உறுதி செய்யப் பட்டுத் தகவல் வந்து இருப்பதாயும் எங்களில் யார், யார் “முக்தி நாத்” பயணம் செய்யப் போகிறார்கள் என்றும் கேட்டார். நாங்கள் எல்லாருமே “முக்தி நாத்” பயணத்தில் ஆர்வமாய் இருந்தோம். அதற்கு அவர் நாளை முக்திநாத் செல்ல ஏற்பாடு செய்யப்படும் ஹெலிகாப்டரில் மொத்தம் 24 பேர்தான் போகலாம் என்றும் அதில் இருவர் விமான ஓட்டிகள், மற்ற இருவர் பயணிகளின் தேவைகளைக் கவனிப்பவர் என்றும் மற்றபடி 20 பேர்தான் போகலாம் என்றும் உங்களுக்குள் பேசி முடிவு செய்து கொண்டு தெரிவியுங்கள் என்றும் சொன்னார். இதற்கு நடுவில் ரெயிலில் வந்தவர்களும் மறுநாள் முக்தி நாத் போகவேண்டும் எனத் தெரிவிக்க அவர்களுக்கு ரெயில் கிளம்ப இன்னும் 2 நாள் இருப்பதால் அவர்களைப் பேருந்தில் “போக்ரா” போய் அங்கிருந்து ஹெலிகாப்டரில் அழைத்துப் போவதாய்ச் சொல்லவே ஒரு குழப்பம் வந்தது. ரெயில் பயணிகள் எங்களைப் பிரிக்கிறீர்கள்,விமானப் பயணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் எனச் சொல்லவே ஒரே விவாதம் வரவே சிலர் யாருக்கு உடல் நலமில்லையோ அவர்கள் வரவேண்டாம் எனச் சொல்ல நானும் இன்னும் உடல் நலமில்லாத சிலரும் தீவிரமாக மறுத்தோம். இது இப்படியே நிற்க, நாங்கள் அங்கே ஒரு மிகச் சிறந்த ஓட்டலில் சாப்பாடு முடித்துக் கொண்டு காட்மாண்டுவிற்கு மாலை 4 மணி அளவில் வந்து சேர்ந்தோம். அங்கே வந்ததும் அறைகள் கொடுத்ததும், மாலை மறுபடி ஒரு மீட்டிங் நடப்பதாயும் அனைவரும் வரவேண்டும் எனவும் கூறினார்கள். சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு கிட்டத் தட்ட 15 நாட்கள் கழித்து எல்லாரும் நன்றாகக் குளித்தோம். கடைகளுக்குச் செல்பவர்களும், தொலைபேசச் செல்பவர்களுமாக ஒரே மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவியது. மாலை 6-00 மணி அளவில் மீட்டிங் துவங்கியது. பயணிகளுக்கு நன்றி தெரிவித்து விட்டு எல்லாருக்கும் அவரவர் புகைப்படத்துடன் கூடிய கைலை சென்று திரும்பியதற்கான சர்டிஃபிகேட் வழங்கப் பட்டது. பின் மறுநாள் செல்லக் கூடிய பயணத்துக்கான விவாதங்களில் முடிவு ஒன்றும் எட்டப் படாமல் போகவே முடிவில் அவர்கள் 24 பேர் உட்காரக் கூடிய ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்வதாய்க் கூறினார்கள். ஒரு ஆளுக்கு இந்திய ரூபாயில் 13,500/- வீதம் எங்கள் இருவருக்குமாக ரூ.27,000/- கொடுத்தோம். பின் மானசரோவரில் இருந்து எடுத்து வந்த புனித நீர் தருவதாய்க் கூறினார்களே என எங்களுக்காகக் கேட்டோம். ஒரு 5 லிட்டர் பிடிக்கக் கூடிய கேன் 100ரூ/- கொடுக்க வேண்டும் எனவும், எங்கள் இருவருக்குமாக 250/-ரூ கொடுக்க வேண்டும் எனவும் சொன்னார்கள். அதிகம் 50ரூ ஒரு கேனுக்கு 25ரூ வீதம் 2 கேனுக்கு உள்ள பணம். நாங்கள் எடுத்து வந்த நீரே போதும் என்று சொல்லிவிட்டு கெளரிகுண்ட் நீர் மட்டும் கேட்டு வாங்கிக் கொண்டோம். “கெளரி குண்ட்” நீர் இலவசமாய்க் கொடுத்தார்கள்.பின் இரவுச் சாப்பாட்டுக்குப் பின் மறுநாள் காலை 7-30 மணிக்கு ஏர்போர்ட் புறப்பட வேண்டும் என்று சொல்லவே முக்திநாத் செல்லவும் அன்று மாலையே டெல்லி போகப்பிரயாணத்திற்குப் பொருட்களைப் பெட்டிகளில் பாக்கிங் செய்யவும் வேண்டும் என்றும் எங்கள் அறைகளுக்குப் போய் வேலையைத் துவங்கினோம். மறுநாள் காலை 7-30 மணிக்கு எங்கள் காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டு நாங்கள் விமான நிலையம் போகப் பேருந்து வரவுக்குக் காத்திருந்தோம். காத்திருப்பின் நடுவில் ட்ராவல்ஸ்காரர் ஏற்பாட்டின் படி கிரிஸ்டல், பவளம், நவரத்தினம், முத்துக்கள் போன்றவற்றால் செய்யப் பட்ட மாலைகள், நெக்லஸ்கள் முதலியனவற்றை விற்பனைக்கு எடுத்துக் கொண்டு சிலர் வந்தனர். எல்லாரும் அவற்றை (விலை கொஞ்சம் நியாயமாயும் இருந்தது) வாங்கினர். பேருந்திலேயே போயும் முக்திநாத் போகலாம். அதற்கு மூன்று நாளோ என்னவோ மலைப் பயணம் செய்து “போக்ரா” என்னும் ஊரை அடைய வேண்டும். சிலர் இந்த ஊரில் இருந்தே மலை ஏறிப் போய் முக்திநாதரைத் தரிசனம் செய்வார்கள். நடக்க முடியாத சிலர் ஹெலிகாப்டரில் போவார்கள். ஆனால் போக்ராவில் இருந்து ஹெலிகாப்டருக்கு முன்பதிவு செய்யவேண்டும் என்பதோடு அல்லாமல் அங்கே இருந்து 5 பேர் அல்லது 10 பேர் மட்டும் போகக் கூடிய ஹெலிகாப்டர்களே கிடைக்கும். போக்ராவிலும் பார்க்கக் கூடிய இடங்கள் இருப்பதால் அவ்வழியே போகிறவர்கள் காத்திருக்கும் நேரம் அங்கே பார்க்கக் கூடிய இடங்களைப் பார்க்க முடியும். ஆனால் முக்திநாத் பயணத்தை முடித்துக் கொண்டு பின் போனால் தான் நல்லது. ஏனெனில் முக்திநாத் பயணம் அது எங்கே இருந்து செய்தாலும் சரி, முற்றிலும் மலைகளுக்கு நடுவே உள்ள அந்தக் கோயிலுக்குச் செல்லும் வழி வான் வழி மட்டும் தான். இல்லாவிட்டால் மலை ஏற வேண்டும். இரண்டுமே கடினமானது. ஏனெனில் காலநிலை ஒரு நேரம் போல் மற்ற நேரம் இருக்காது. முக்திநாத் கோவிலுக்கு விமானத்தில் போய் இறங்கும் போது வெயில் அடிக்கும். ஆனால் சில சமயங்களில் திரும்பும் போது மழை வந்து விடும். ஹெலிகாப்டர் கிளம்ப முடியாது. மழை இல்லாமல் மேகங்கள் சூழ்ந்தால் இன்னும் மோசம். மழை என்றாலும் அங்கே எல்லாம் பெய்யும் மழையில் ஒன்றும் செய்ய முடியாது. மேகங்கள் சூழ்ந்துவிட்டால் வரிசையாக இருக்கும் மலைச்சிகரங்கள் தெரியாது. விமானம் சிகரங்களில் மோதலாம். இது எல்லாம் திரும்பத் திரும்ப எங்களுக்கு அறிவுறுத்தப் பட்டது. நம் அதிர்ஷ்டம் எப்படியோ என்று நினைத்துக் கொண்டு இருந்தோம். ஏன் என்றால் அன்றே மாலை நாங்கள் டெல்லி திரும்பவேண்டும். எல்லாரையும் அறைச் சாவியைக் கொடுத்துவிட்டுப் போகும்படிச் சொல்ல நாங்களும் அறைச் சாவியைக் கொடுத்து விட்டோம். கையில் இருந்த பணத்தை மறுபடி அங்கேயே லாக்கரில் வைத்தோம். பேருந்து வந்தது. அதில் ஏறிக் கொண்டு முக்திநாத் போக விமான நிலையம் கிளம்பினோம். 30 ஓம் நமச்சிவாயா-30 முக்திநாத் தலம் நேபாளத்தில் அமைந்திருந்தாலும் போகிற வழி சற்றுக் கடினமானது. சுற்றிலும் பனி படர்ந்த மலைகளினால் சூழப் பட்ட இந்தப் பிராந்தியம் கடல் மட்டத்தில் இருந்து சுமாராக 4,000 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. காட்மாண்டுவில் இருந்து சாலை வழியாகப் “போக்ரா” என்னும் ஊர் வந்து அங்கிருந்து குதிரை மூலமோ, நடந்தோ அல்லது ஹெலிகாப்டர் மூலமோ மேலே போய் முக்தி நாதரைத் தரிசனம் செய்யலாம். ஆனால் நாங்கள் காட்மாண்டுவில் இருந்தே ஹெலிகாப்டர் மூலம் செல்லத் தயார் ஆனோம். ஏனெனில் சாலை வழி 3 நாள் பயணம் என்பதோடு அல்லாமல் எங்களில் விமானப் பயணம் மூலம் வந்தவர்களில் 16 பேருக்கு அன்றைய விமானம் மூலம் டெல்லி செல்ல டிக்கெட் தயாராக இருந்தது. ஆகவே அன்றே போய்விட்டுத் திரும்ப வேண்டும். எதற்கு அறைச் சாவிகளைக் கொடுக்கச் சொல்கிறார்கள் என்பது தெரியாமலேயே சாவிகளைக் கொடுத்து விட்டு விமான நிலையத்திற்குக் கிளம்பினோம். வழியில் தான் தெரிந்தது ஒரு வேளை முக்திநாத்தில் இருந்து நாங்கள் திரும்பத் தாமதம் ஆனால் எங்களுடைய உடைமைகளை விமான நிலையத்திற்கு ட்ராவல்ஸ்காரர்கள் எடுத்து வந்து ஒப்படைப்பார்கள் என்று. உடைமைகள் பரவாயில்லை, அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து விடலாம் தான். ஆனால் நாங்கள் பெரும்பாலான பணத்தை லாக்கரில் வைத்திருந்தோம். சாவி எங்களிடம் இருந்தது. அது இருந்தால் தான் திறக்க முடியும். இல்லாவிட்டால் டெல்லி போய் வீட்டுக்குப் போகக்கூடப் பணம் மைத்துனனைத் தயாராக வைத்திருக்கச் சொல்ல வேண்டும். ஒரே குழப்பமுடன் தான் போனோம். விமானப் பயணம் என்பதால் எல்லாருடைய பாஸ்போர்ட்டுகளும் சோதனை செய்யப் பட்டு விமானச்சீட்டும் கொடுக்கப்பட்டு நாங்கள் ஏற வேண்டிய வாசலில் காத்திருந்தோம். அவ்வளவில் எங்கள் ஒருங்கிணைப்பாளர் சென்று விட நாங்கள் மட்டுமே 24 பேர்கள் காத்திருந்தோம். நேரம் செல்லச் செல்ல விமானம் வரும் அறிகுறியே காணோம். நேரம் நேபாள நேரப்படி 11 ஆனதும் தான் எங்களுக்கான விமானம் வந்தது. உடனேயே அறிவிப்புக் கொடுக்க நாங்கள் எல்லாரும் ஓடிப் போய் ஏறிக் கொண்டோம். 2 விமான ஓட்டிகளைத் தவிர எங்களுக்கு உதவ ஒரு பணியாளும் இருந்தார். சாதாரண விமானத்துக்கும் ஹெலிகாப்டருக்கும் உள்ள வித்தியாசங்களைச் சொல்லிவிட்டுக் கட்டாயமாய் சீட்பெல்ட் போட வேண்டும் என்று அறிவுறுத்திவிட்டுக் காதில் வைத்துக் கொள்ளப் பஞ்சு போன்றவை கொடுத்தார். ஒரே சத்தம். விமானம் கிளம்பியது. சுற்றிலும் மலைகள், மலைகள், மலைகள். அதில் மிதக்கும் மேகங்கள். நீல வண்ண மேகம், வெள்ளை வெளேரென மேகம். பழுப்பு நிற மேகம். கறுப்பு நிற மேகம். கறுப்பு நிற மேகத்தைப் பார்த்தால் பயமாக இருந்தது. ஏனெனில் மழை வந்து விட்டால் என்ன செய்வது?பணி ஆள் எங்களுக்கு விதிக்கப்பட்ட நேரம் 40 நிமிடங்கள் என அறிவித்தார். 40 நிமிடங்களுக்குள் அங்கே உள்ள 108 தீர்த்தங்களிலும் குளிக்கிறவர்கள் குளித்து விட்டு ஸ்வாமியையும் தரிசனம் செய்துவிட்டுக் கிளம்ப வேண்டும். முடியுமா? போய்க் கொண்டிருந்தோம். முக்திநாத் 108 வைணவத் திருப்பதிகளில் 106-வதாகப் போற்றப்படுகிறது. இப்பெருமானைத் திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார், பெரியவாச்சான் பிள்ளை போன்ற வைணவப் பெரியார்களால் மங்களா சாஸனம் செய்யப் பெற்றது என்று சொல்கிறார்கள். மற்றத் திருப்பதிகளையும், பூரி, துவாரகா, அயோத்தி, பத்ரிநாத் போன்ற க்ஷேத்திரங்களையும் தரிசனம் செய்து விட்டே கடைசியில் முக்திநாதரைத் தரிசனம் செய்ய வேண்டுமென வைணவ சம்பிரதாயப் படி ஐதீகம். நாங்கள் பூரியும், அயோத்தியும் போனது இல்லை. அதனால் என்ன? பரவாயில்லை விடக்கூடாது என முக்தி நாதர் தரிசனத்திற்குத் தயாரானோம். தவளகிரி மலைப்பிராந்தியத்தில் உள்ள இந்த முக்தி நாதர் கோவில் இருக்கும் இடத்தில் இருந்து 26 கி.மீ. தூரத்தில் “தாமோதர் குண்டம்” எனப்படும் குண்டம் உள்ளது. முக்திநாத் தலம் “கண்டகி” நதிக்கரையில் உள்ளது. கண்டகி நதி இத்தலத்தை ஒரு மாலை போல் சுற்றிக் கொண்டு ஓடுகிறது. பக்கத்திலேயே சாளக்கிராம மலை உள்ளது. மஹாவிஷ்ணுவே இம்மலையாக அவதாரம் எடுத்ததாய்ச் சொல்கிறார்கள். கண்டகியானது முற்பிறவியில் ஒரு வேசிப் பெண்ணாக இருந்து பின் அவளுடைய வெளிப்படையான மனத்தாலும், அவள் அனுஷ்டித்த தர்மத்தாலும் ஸ்ரீமந்நாராயணனால் ஆசீர்வதிக்கப்பட்டு எந்நாளும் அவர் பாதங்களைப் பற்றிக் கொண்டு ஓட வரம் கேட்டதினால் “கண்டகி” நதியாக மாறி ஓடுகிறாள். கண்டகி நதி பற்றிய கதை தொடரும். 31 ஓம் நமச்சிவாயா-31  கண்டகி நதியின் கதை இப்போ நாம் “கண்டகி நதி” பற்றிய வரலாறு பார்க்கலாம். இது என்னுடைய புத்தகக்குறிப்புக்களில் இருந்து கொடுக்கிறேன். ஏனெனில் நாங்கள் முக்திநாத் போனபோது ட்ராவல்ஸ்காரர்கள் யாரும் வரவில்லை. ஹெலிகாப்டரில் இருந்தும் எங்களை இறக்கிவிட்டு விட்டு அங்கேயே விமான ஓட்டிகள் இருக்கத் துணைக்கு வந்த உதவியாளர் எங்களை ஒருங்கிணைத்துக் கூட்டிச் செல்லும் வேலையில் இருந்ததால் அவரும் ஒன்றும் சொல்லவில்லை. இதில் தவறு ஏதும் இருந்தால் நான் தான் பொறுப்பு. இது ஒரு செவிவழிக் கதை. நேபாளத்தில் உள்ள “மஸ்டாங்” என்னும் மாவட்டத்தில் சுமார் 5,000 மீட்டர் உயரத்தில் உள்ள “தாமோதர் பீடபூமி”யில் 60-க்கும் மேற்பட்ட பனிச்சிகரங்கள் உள்ளன. அன்னை தாட்சாயணியின் வலது கன்னம் துண்டு துண்டாக வீழ்ந்ததாயும், அப்படி வீழ்ந்த இடங்கள் பள்ளங்கள் ஆனதாயும், அந்தப் பள்ளங்களில் இந்தப்பனிச்சிகரங்களில் இருந்து உருகி ஓடிய நீர் வழிந்து ஏரிகளாய் மாறினதாயும் சொல்கிறார்கள். இந்த ஏரிகள் “தாமோதர் குண்டங்கள்” என்று அழைக்கப் படுகின்றன. திபெத் நாட்டின் எல்லைக்குப் பக்கத்தில் இருக்கும் இந்தக் குண்டத்தில் இருந்து உற்பத்தி ஆகும் நதிகளில் ஒன்றுதான் கண்டகி நதி. இந்த நதியின் வேறு பெயர்கள் ஸம்ட கண்டகி, நாராயணி, காளி கண்டகி என்பது ஆகும். இதன் அருகில் தான் பிரசித்தி பெற்ற “சாளக்கிராம மலை”யும் அதன் அருகிலே உள்ள கிராமம் “சாளக்கிராமம்” எனவும் அழைக்கப் படுகிறது. கண்டகி நதியைப் பற்றிய ஒரு செவிவழிக் கதையை இப்போது பார்ப்போம். வேசி குலப் பெண்ணான “கண்டகி” என்னும் அழகான பெண்ணிடம் ஒரு விசித்திரமான குணம் இருந்தது. அது என்ன வென்றால், தன்னை நாடி வரும் ஒவ்வொரு ஆணையும் தன் மணாளனாகவே பாவித்து, ஒரு தர்மபத்தினியைப் போல் அவனிடம் நடந்து கொண்டு அவனுடைய எல்லாத் தேவைகளையும் முழு மனத்துடன் செய்து வந்தாள். இதைப் பார்த்த ஊரார் அவளை எள்ளி நகையாடினர். இருந்தாலும் அவள் தன் குணத்தில் இருந்து மாறவில்லை. ஒருநாள் ஒரு கட்டழகு வாலிபன் மாலைப் பொழுதில் அவளிடம் வந்து பொன்னும், மணியும் கொடுத்துவிட்டு அவளை ஏறிட்டுக் கூடப் பாராது சென்று விட்டான். வருந்திய கண்டகி செய்வதறியாது திகைக்க,அதே வாலிபன் அன்று நடுநிசியில் திரும்ப அவளிடம் வருகிறான். உற்சாகத்துடன் அவனை உபசரித்த கண்டகி அன்றிரவு அவனைத் தன் பதியாக மனத்தால் வரித்து அவனுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்ய முற்பட்டாள். அப்போது அவன் உடல் வியர்வையால் நனைந்திருப்பது கண்டு நறுமணத்தைலம் தடவி அவனைக் குளிக்க ஆயத்தம் செய்ய யத்தனித்தவளுக்கு அவன் ஒரு குஷ்டரோகி எனத் தெரிய வருகிறது. அதிர்ச்சி அடைந்தாலும் அவனைத் தன் பதியாக வரித்த காரணத்தால் வெறுக்காமல் அவனைத் தொட்டு வேண்டிய உதவிகள் செய்து அவனுக்கு வேண்டிய சிசுருஷைகள் புரிந்தாள். உண்மை தெரிந்த அவள் வீட்டார் அவனை அப்போதே விலக்கச் சொல்ல மறுத்தாள் கண்டகி. அன்றிரவை அவனுடன் கழிக்க, மறுநாள் பொழுது விடிகிறது. அவனை எழுப்புகிறாள் கண்டகி. என்ன பரிதாபம்! வாலிபன் உயிரோடு இல்லை. இதைக் கண்டு வருந்திய கண்டகி, அவன் தன் பதி என்று சொல்லி அவனுடைய இறுதிச் சடங்குக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டுப் பின் அந்நாளைய வழக்கப்படி தானும் அவனுடன் உடன்கட்டை ஏறுகிறாள். திகைத்த உறவினர் செய்வதறியாமல் விழிக்க சிதைக்குத் தீ மூட்டும் நேரம் அற்புதம் நிகழ்கிறது. இறந்த வாலிபன் உடல் மறைய அங்கே சங்கு,சக்ர கதாபாணியான ஸ்ரீமந்நாராயாணன் காட்சி அளிக்கிறார். கண்டகி ஒவ்வோர் இரவிலும் ஒரு ஆணைத் தன் கணவனாக வரித்து வந்த போதிலும் அந்த ஆணுக்கு உண்மையான பத்தினியாக அவள் அனுஷ்டித்த பதிவிரதா தர்மத்தை உலகுக்கு எடுத்துக் காட்டவே இவ்வாறு நடந்ததாய் ஸ்ரீமந்நாராயணன் சொல்லிக் கண்டகிக்கு மூன்று வரங்கள் அளிப்பதாய்ச் சொல்கிறார். கண்டகி கேட்டதோ ஒரே ஒரு வரம் மட்டும் தான். அதுவும் என்ன? எப்போதும் ஸ்ரீமந்நாராயணன் பக்கத்திலேயே தான் இருக்க வேண்டும் என்பது தான் அது. அப்போது ஸ்ரீமந்நாராயணன் சொல்கிறார்” ஒரு பக்தனின் சாபத்தால் தான் மலையாக மாறவேண்டி இருப்பதால் மலையோடு சார்ந்த நதியாகக் கண்டகி எப்போதும் தன்னுடன் இருக்கலாம் என்று சொல்லுகிறார். சாபம் பெற்ற நாராயணன் சாளக்கிராம மலையாக மாறக் கண்டகி அதே பேரோடு நதியாக ஓடுகிறாள். ஒரு மாலைபோல் மலையைச் சுற்றிக் கொண்டு ஓடுவதாய்ச் சொல்கிறார்கள். இதே கதை ஒரு ஜெர்மன் புத்தகத்திலும் இருப்பதாய்ப் படித்தேன். சாளக்கிராம மலையைப் பூச்சிகள் துளைத்தெடுத்ததால் சாளக்கிராமங்கள் உருவாகி நதியிலும், நதிக்கரையிலும் கிடைப்பதாய்ச் சொல்கிறார்கள். இமயமலையின் இந்தப் பகுதியில் முன்னால் சமுத்திரம் இருந்ததாயும், அது வற்றி போய்க் கடல்வாழ் பூச்சிகளின் ஓடாக இருக்கலாம் எனவும் சொல்லப் படுகிறது. சாளக்கிராமம் மூன்று வகைப்படுகிறது. முதல் வகை: உடையாமல், துவாரம் இல்லாமல், கூழாங்கல் போல் இருக்கும். குளிர்ச்சியாக இருக்கும். 2-ம்வகை: சரிபாதி உடைந்து உள்ளே சக்கரம் போன்ற அமைப்புடன் கூடியது 3-ம் வகை:துவாரம், சக்கரம் இவற்றுடன் ரேகைகளும் தென்படும். எந்தச் சாளக்கிராமமாய் இருந்தாலும் தினமும் பூஜை செய்ய வேண்டும். தினமும் சாளக்கிராம ஆராதனை செய்தால் முக்தி கிடைக்கும் என்பதாய் ஒரு நம்பிக்கை இந்துக்களிடம் உள்ளது. நாங்கள் தாமோதர் பள்ளத்தாக்குப் போனோமே தவிர, கண்டகி உற்பத்தி ஆகும் இடத்துக்குப் போகவில்லை. அதற்குக் கூடுதலாய் நாட்கள் பிடிக்கும். நாங்கள் அன்றே திரும்ப வேண்டுமே? ஆகவே முக்திநாத்திலேயே நேரடியாய் இறங்கிக் கொண்டோம். 108 திவ்ய தேசங்களில் 106-வது முக்திநாத். இது சென்று வருவது கஷ்டம் என்பதால் கடைசியில் வைத்திருக்கிறார்கள். 107-வது வைகுண்டம். 108-வது திருப்பாற்கடல். இங்கே எல்லாம் போய்விட்டுத் திரும்பியவர் “நம்மாழ்வார்” மட்டும் தான் என நினைக்கிறேன். நாங்க தான் கைலைப்பயணத்தின் போதே வைகுண்டம், சொர்க்கம் எல்லாம் எட்டிப் பார்த்துவிட்டுத் தானே வந்திருக்கிறோம். ஆகவே அடுத்ததாய் முக்தி நாதரின் தரிசனம் பார்க்கலாம். 32 ஓம் நமச்சிவாயா-32 கண்டகி நதிக்கரையில் உள்ள “முக்திநாத்” க்ஷேத்திரம் இமயமலைத் தொடரான தவளகிரிப் பிராந்தியத்தில் உள்ளது. கண்டகி உற்பத்தி ஆகும் தாமோதர் குண்டத்தில் இருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் இருக்கும் இது கடல் மட்டத்தில் இருந்து 4,000 மீட்டர் உயரத்தில் உள்ளது. எங்கள் விமானம் கோவிலுக்குச் சற்றுக் கிட்டேயே இறங்கியது. அங்கிருந்து முக்திநாத் ஊர் கீழே ஒரு ஆயிரம் அடி தள்ளி இருக்கிறது. ஊரில் இருந்து வரும் வழியில் கூட ஒரு ஹெலிகாப்டர் விமானத் தளம் இருக்கிறது. அங்கேயும் ஒரு ஹெலிகாப்டர் வந்து நின்று அதில் இருந்து சிலர் இறங்கி மேலே வந்தார்கள். அந்த ஹெலிகாப்டரில் ஐந்து பேர்தான் பயணம் செய்யலாம் எங்களுடையது பெரியது என்பதால் சற்று மேலேயே வந்து கிட்டத்திலே உள்ள இறங்கும் தளத்தில் இறங்கியது.இன்னும் சிலர் இன்னும் கீழேஇருந்து குதிரையின் மூலமும் வந்து கொண்டிருந்தார்கள். முக்திநாத் ஊருக்கு மேலே சுமார் 500 அடி உயரத்தில் அமைந்த இந்தத் திருக்கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்று. திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார் போன்றோர் மங்களாசாஸனம் செய்திருக்கும் இந்தக் கோயிலில் கருவறையில் பெருமாள் நான்கு திருக்கரங்களோடு சேவை சாதிக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் அமர்ந்திருக்கும் பெருமாளின் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். பக்கத்திலேயே கையைக் கூப்பிக் கொண்டு ஆழ்வார் ஒருத்தர். யார் அவர் என்று நாம் கேட்பது அங்கே பூஜை செய்யும் நேபாளிப் பெண்ணிற்குப் புரியவில்லை. ஆம், அங்கே பூஜை செய்வது நேபாளப் பெண்கள்தான். ராமானுஜர் என்று ஒருத்தரும் இல்லை நம்மாழ்வார் என்று ஒருத்தரும் கூறினார்கள். கடைசியில் அது யார் என்று தெரியாமலேயே தரிசனம் செய்தோம். இங்கே தமிழ்நாட்டுப் பெருமாள் கோவில் போல் அங்கேயும் தீர்த்தம், சடாரி உண்டு. எல்லாரும் தாங்கள் வாங்கிய முத்து, மணி, பவள மாலைகளைப் பெருமாள் பாதத்தில் வைத்துத் தரச்சொல்ல அந்தப் பெண்ணும் அப்படியே வைத்துக் கொடுத்தார். குளிப்பவர்கள் குளித்ததும் உடை மாற்ற வசதியாக அறைகள் உள்ளன. ஆனால் அந்த நடுக்கும் குளிரில் குளிப்பது எப்படி? அதுவும் நாங்கள் தரிசனம் செய்யும்போதே திடீரென மழை வரவே எங்கள் ஹெலிகாப்டரில் கூடவே வரும் உதவியாளர் எங்களை அவசரப் படுத்த ஆரம்பித்தார். ஆகவே தரிசனமே முண்டி அடித்துக் கொண்டு பார்க்க வேண்டி வந்தது. கோவில் புத்த மதப் படி “பகோடா’ என்னும் முறையில் கட்டப் பட்டிருந்தது. இதன் ஸ்தல வரலாறு ;தெரியவில்லை, கொஞ்சம் வருத்தமாய்த் தான் இருந்தது. பின் அங்கிருந்து சற்றுத் தூரத்தில் உள்ள மலைப்பகுதிக்கு எல்லாரும் போனார்கள். என்னவென்று விசாரித்தால் அன்னை இங்கே ஜ்வாலமுகி”யாகக் காட்சி அளிப்பதாய்ச் சொன்னார்கள். அதற்குள் எங்கள் உதவியாளரும் ரொம்பவே அவசரப் படுத்தினார். அங்கே உள்ள விநாயகர், அனுமன் எல்லாரையும் அவசரமாய்ப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு நாங்களும் அங்கே போனோம். நிறையப் பேருக்கு இங்கே இந்தக் கோயில் இருப்பது தெரியாதாம். நாங்கள் ஏற்கெனவே தெரிந்து இருந்ததால் போனோம். முக்திநாத் மலைப்பாதையில் இருந்து சற்று விலகி இருந்தாலும் திரும்பவும் அங்கேயும் வர முடியும். நேபாளிகள் இந்தத் தேவியைப் “பகுளாமுகி” என்று சொல்கிறார்கள். இங்கேயும் பெண்கள்தான் பூஜை செய்கிறார்கள். குகை போன்ற அமைப்புள்ள பகுதியில் சற்றுக் கீழே இறங்கினோமானால் மேலே ஒரு பெரிய மேடையில் அன்னையின் திரு உருவம் காட்சி அளிக்கக் கீழே வலைக் கதவு போட்ட ஒரு ஜன்னல் போன்ற அமைப்பு. அதன் அருகில் உட்கார்ந்து கீழே குனிந்து பார்த்தோமானால் காதில் அருவியாகப் பாய்ந்து ஓடும் நதியின் ஓசையும் அதற்கு நடுவில் ஒரு நீல நிற ஜ்வாலையும் தென்படுகிறது. அந்த ஜ்வாலையைத் தான் ஜ்வாலாமுகி என்றும், அருவியின் சத்தம் கேட்பதால் பகுளாமுகி என்றும் சொல்கிறார்கள். அன்னைக்குப் பூஜை செய்யும் தகுதி படைத்த பெண்கள் சிவப்பு வண்ண உடையில் காட்சி அளிக்கிறார்கள். செந்தூரம்தான் பிரசாதம். நாங்கள் சிலர் கொண்டு போயிருந்த தீபத்தை ஏற்றினோம். சிலர் அங்கேயே தீபம் வாங்கி ஏற்றினார்கள். அங்கேயும் தீபம் வாங்கி ஏற்றலாம். மற்றபடி பூஜை என்று ஏதும் அங்கே நடக்கவில்லை. தரிசனம் முடிந்ததும் எல்லாரும் ஒவ்வொருத்தராய்க் கீழே இறங்கினோம். தயாராய் நின்றிருந்த ஹெலிகாப்டரில் ஏறியதும் புறப்பட்டது. எல்லாருக்கும் நல்ல பசி என்பதால் அவரவர் கொண்டு வந்திருந்த தின்பண்டங்களைப் பகிர்ந்து கொண்டோம். மறுபடி மேகங்களின் ஊடே பயணம். இப்போது நல்ல வெயில் தெரிந்தது. கையை நீட்டினால் தொட்டுவிடலாம் போல் சூரியன் பிரகாசித்தான். ஒரு மணி நேரத்தில் காட்மாண்டு ஊர் தெரிய ஆரம்பித்தது. இறங்க இன்னும் பத்து நிமிஷமே இருந்தபோது விமான நிலையம் நெருங்கும் சமயம் விமான ஓட்டிக்கு அவசரமாய் சிக்னல் கொடுத்து விமானத்தை நடுக்காட்டில் இறக்கினார்கள். முதலில் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. விமானம் இங்கேதான் இறங்குகிறது. இங்கே இருந்து பேருந்தோ, சிற்றுந்தோ வந்து அழைத்துப் போகும் என நினைத்தோம். எங்களை இறங்க வேண்டாம் எனச் சொல்லி விட்டு உதவியாளரும், விமான ஓட்டிகளும் இறங்கினார்கள். ராணுவ உடையில் பெண்களும், ஆண்களும்,போலீஸ் உடையிலும் அதிகாரிகளும் வந்தனர். கூடவே 2 பெரிய நாய்கள். எல்லாரும் வந்ததும் அவர்களில் ஒருத்தர் கதவைத் திறந்து உள்ளே வந்து எங்கள் எல்லாரையும் பார்த்தார். பின் இறங்கச் சொன்னார். நாங்களும் இறங்கினோம். எல்லாரையும் எடுத்து வந்த பொருட்களைக் காட்டச் சொன்னார்கள். நாங்கள் கண்டகியில் நீர்தான் எடுத்திருந்தோம். அதைக் காட்டினோம். முகர்ந்து பார்த்துவிட்டுப் போகச் சொல்லிவிட்டுச் சிலர் இடுப்பில் கட்டி இருக்கும் கைத் தொலைபேசி வைக்கும் பெல்ட்டைஅவிழ்த்துப் பார்த்தார்கள். நாய்கள் வந்து முகர்ந்து பார்த்தன. வண்டியிலும் ஏறிப் பார்த்தன. அலமேலு என்பவரின் உடைமைகள் சோதனை போடப் பட்டன. பின் எங்களை விடுவித்தனர். எங்களுடன் வந்திருந்த பெரியவர் சங்கரன் கோபம் வந்து யாத்திரீகர்களை அதுவும் புனிதப் பயணம் வந்திருப்பவர்களை இப்படி நடத்தலாமா எனக்கேட்டதற்கு இது மாமூலான ஒன்று என்று சொல்லிவிட்டுப் போகச் சொன்னார்கள். பின் நாங்கள் அனைவரும் காட்மாண்டு விமான நிலையம் வந்து எங்களுக்குத் தயாராக இருந்த ட்ராவல்ஸ்காரரின் வண்டியில் ஏறி ஹோட்டலுக்கு வந்தோம். உள்ளே நுழைந்தபோது மணி மூன்று. பசியுடன் சாப்பிடப் போனால் மனோகரன் வந்து 5 மணிக்கு விமானம் உங்களுக்கு. இப்போச் சாப்பிட நேரம் இல்லை. உடனேயே விமான நிலையம் கிளம்புங்கள் எனச் சொல்ல நானும், என் கணவரும் அறைக்குப் போய் மற்ற உடைமைகளை எல்லாம் சேர்த்துக் கொண்டு கீழே வந்தோம். சிலர் சாப்பிடுவதைப் பார்த்துவிட்டு நாங்களும் போய் ஒரு சப்பாத்தியும், கொஞ்சம் தயிர்சாதமும் சாப்பிட்டோம். பின் அவசர அவசரமாய் விமானநிலையம் பயணம் மறுபடி. அங்கே போய் விமானத்தில் நுழையச் சீட்டு வாங்கி விட்டுப் பின் எங்கள் பொருட்களை விமானத்தில் ஏற்றக் கொடுத்தால் அதிக எடைப் பிரச்னை. திரு மனோகரனை உதவிக்குக் கூப்பிட்டு குழுவாக வந்திருப்பதால் எடை போடும்போது குழுவினர் எல்லாருடைய உடைமைகளையும் சேர்த்து அப்படியே போடவேண்டும் என்று கூப்பிடத் தேடினால் அவர் எங்களை விமான நிலையத்தில் விட்டு விட்டுப் போய்விட்டார். அவர் மறுநாள்தான் திரும்புகிறார். பின் நாங்களே பேசிக் கொஞ்சம் பணமும் கொடுத்து ஒருமாதிரியாக எல்லாருடைய சாமான்களையும் ஏற்றத் தயார் செய்தோம். பின் விமானம் கிளம்பும் வாயிலுக்குப் போகும் வழியில் மறுமுறை செக்கிங். இம்முறை நாங்கள் கையிலேயே வைத்திருந்த மானசரோவர் தண்ணீரில் இருந்து சோதனை செய்யப் பட்டது. மற்ற எல்லாரும் அந்த ப்ளாஸ்டிக் கேனை லக்கேஜில் போட நாங்கள் மட்டும் பிடிவாதமாய்க் கையில் வைத்திருந்தோம். சிலருடைய கேன் உடைந்து தண்ணீர் எல்லாம் கொட்டி விட்டது. நல்ல வேளையாக நாங்கள் எங்களுடைய சொந்தக் கேனிலேயே தண்ணீர் பிடித்து வந்திருந்ததால் எங்களுடையது காப்பாற்றப் பட்டது. எஸ்கலேட்டரில் நானும், இன்னும் சிலரும் ஏற முடியாமல் படிக்கட்டு எங்கே என்று தேடினால் உதவ ஆளே இல்லை. ஒருமாதிரியாகத் தேடிக் கண்டுபிடித்து படி ஏறி மேலே வந்தால் மறுபடி ஒரு சோதனை. எல்லாம் முடிந்து வந்தால் விமானம் தாமதமாய் வந்தது. ஒரே கூட்டம் விமானத்தில். இந்தியா வரும்போது நெரிசலாய் இருக்கும் விமானம். சிலசமயம் இடமே கிடைக்காது. இந்தியாவில் இருந்து நேபாளம் போகும்போது படுத்துக் கொண்டே போகலாம். அவ்வளவு இடம் இருக்கிறது. விமானம் ஏறியதுமே அனைவருக்கும் இந்தியா வந்த உணர்வு. 2 மணி நேரத்தில் டெல்லி தெரிந்தது,. இந்தியா வந்தோம். எங்கள் லக்கேஜ் வரத் தாமதம் ஆனதால்என்னுடைய மைத்துனனுக்குத் தொலைபேசித் தெரிவித்து விட்டுசாமானுக்காகக் காத்திருந்தோம். அந்த ஏ.சி. குளிரிலும் எனக்கு வியர்த்தது.மனதிலோ இனம் புரியாத நிம்மதி. வெளியே வந்து டெல்லியின் புழுக்கத்தை அனுபவித்ததும் தோன்றியது இது தான். “ஸாரே ஜஹான்ஸே அச்சா, ஹிந்து ஸிதா ஹமாரா, ஹமாரா!” என்ற வரிகள். எத்தனை உண்மை!   33 HOME SWEET HOME!   “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே!” கைலைப் பயணம் என்பது என்னோட சின்ன வயசிலே இருந்தே ஆசை. முதல் முதல் எம்.என். நம்பியார் போனதைப்பத்தி ஆனந்த விகடனில் வந்திருந்தது,. அப்போ எல்லாம் போகமுடியும்னு நினைக்கவில்லை. இப்போப் போயிட்டு வந்தாச்சு. ஓரளவு சீராக நினைவு இருந்தவற்றைத் தொகுத்திருக்கிறேன். முக்திநாத் தரிசனத்தைப் பற்றி எழுதும்போது அதற்கு மேல் எழுத விஷயம் இல்லை. ஏனெனில் நாங்கள் அவசரம் அவசரமாய்த் தான் பார்த்தோம். திரும்பினோம். இன்னும் சொல்லப் போனால் விமான நிலையத்தில் 3 மணி நேரம் ஹெலிகாப்டர் வராமல் காத்துக் கிடந்தோம். அந்த நேரம் கூட அங்கே செலவழிக்கவில்லை. ஆகவே கட்டுரையிலும் என் மனத்தில் உள்ள அந்தஅவசரத் தன்மை வெளிப்பட்டு விட்டது. நாங்கள் குழுவோடு பயணமே செய்யாத காரணத்தால் எங்களுக்குக் குறைகள் அதிகமாய்த் தெரிந்திருக்கலாம். ஆனால் கைலைப் பயணம் குழுவாய்த் தான் போக முடியும். இந்தியா வழி போனால் கொஞ்சம்கஷ்டமாய் இருந்தாலும், பிரயாண நேரம் அதிகமாய் இருந்தாலும், அது தான் சரியானது. ஏனெனில் எங்களுக்கு மருத்துவர்கள் இல்லாமல், மருத்துவ உதவி ஏதும் கிட்டாமல் காயம் பட்டுக் கொண்டவரும் சரி,. மற்ற உபாதைகளில்தவித்தவர்களும் சரி, ரொம்பவே தவித்தார்கள். ஒரு மருத்துவர் இருந்தால் குறைந்த பட்சமாய் உதவியாவது கிட்டுமே என,ஸ்ரீலட்சுமியின் மறைவுக்குப் பின் அது எல்லாருக்கும் ரொம்பவே குறையாகவே இருந்தது. நேபாளம் வழி செல்பவர்கள் நேபாளத்தில் இருந்தாவது மருத்துவர் யாரையாவது அழைத்துச் செல்லவேண்டும் என்று ட்ராவல்ஸ் காரர்களிடம்வாக்குறுதி வாங்கிக் கொள்ள வேண்டும் அதே மாதிரி மானசரோவரில் பூஜைகள், ஹோமங்கள் செய்யவும் நேபாளத்தில் இருந்தாவது அழைத்துச் செல்ல வேண்டும். இதையும் “எக்கோ ட்ரக்” ட்ராவல்ஸ்காரரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும். மருத்துவ உதவியும் கேட்கவேண்டும். நான் இதில் உள்ள குறைகளைத் திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டுவதின் நோக்கமே நாங்கள் செய்த தவறு மற்றவர்கள் செய்யக் கூடாது என்றுதான். மற்றபடி கைலைப் பயணத்திற்கு வண்டி ஏறியதில் இருந்து சாப்பாடோ, டீ, காப்பியோ, பாலோ குறைவில்லை. ரொம்பவே நன்றாகவும், தாராளமாயும்கொடுக்கிறார்கள். மானசரோவரில் புனித நீர் அவரவர் நல்ல கேனாய்க்கொண்டு போய் எடுத்து வைத்துக் கொள்வதே நலம். அவர்கள் சேமித்து வைத்துக் கொடுக்கிற புனித நீருக்கு ரூ.50/ம், கேனுக்கு ரூ.50/ம் கொடுக்க வேண்டி உள்ளது. அப்படியும் அநேகரோட கேன் உடைந்து தண்ணீர் கொட்டி விட்டது. ஆகவே இதையும் தெளிவாக்கிக் கொள்ளவும். தங்குமிடங்கள் எங்களுக்குக் கூடியவரை மட் ஹவுஸ் எனப்படும் களிமண்ணாலாகிய வீடுகள் கிடைத்தன. சில சமயங்களில் அதுவும் கிடைக்காது. அப்போது டெண்டில் படுக்கவும், ஸ்லீப்பிங்பாகில் படுக்கவும் தயாராக இருக்கவேண்டும். ஜெர்கின் போன்றவைசொந்தமாய் வாங்கிக் கொள்வதே நல்லது. ஏனெனில் அவர்கள் கொடுப்பது வாடகையும் அதிகம். தொலைந்து போனால் அபராதமும் அதிகம். சொந்தமாய் வாங்கினால் மிஞ்சிப் போனால் 1,000/-ரூ அல்லது 1,500/-க்குள் வட இந்தியாவில் அதுவும் டெல்லியில் தாராளமாய்க் கிடைக்கும். வட இந்திய திருத்தலங்களில் யாத்திரை செய்யும்போதும் பயன் படும். அமர்நாத், பத்ரிநாத், கேதார்நாத் இவற்றுக்கு மே மாதம் சென்றால் கூட இவை எல்லாம் தேவைப் படும். பெண்கள் இயற்கை உபாதைக்குக் கூடியவரை குழுவாகப் போவதே நல்லது. மறைவிடங்களோ, கழிப்பிடங்களோ, தண்ணீர் வசதியோ கிடையாது. ஆகையால் எல்லாம் எதிர்பார்த்தே போகவேண்டும். இந்தத் திருக்கைலைப் பயணத்தைக் கேலி செய்தவர்களும் உண்டு. ஒரு பனிமலையைப் போய் சிவன் என்று சொல்கிறாளே என்றவர்களும் உண்டு.அது நாம் பார்க்கும் கோணத்தில் தான் உள்ளது. இறை உணர்வு நம்பிக்கையோடு சேர்ந்தது. அதை உணரத் தான் முடியுமே தவிரப் புரிந்து கொள்ளவோ புரிய வைக்கவோ முடியாது. பொதுவாக நம் முன்னோர்கள் இயற்கையோடு இசைந்தே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். நாமும் அப்படித்தான் வாழ்கிறோம். ஆகவே இயற்கையின் ஒரு அதிசயமான கைலை மலையை இறை வடிவில் காண்பது எவ்வாறு தவறு? மேலும் சங்க காலத்திலேயே சிவன், முருகன், திருமால் வழிபாடு இருந்து வந்துள்ளது. ஆகையால் இது ஒன்றும் புதுமை அல்ல. எங்களோடு வந்த வெளிநாட்டுக் காரர்கள் எங்களுடன் பூஜையிலும் கலந்து கொண்டு, ரட்சைக் கயிறு கட்டிவிடச் சொல்லிக் கட்டிக் கொண்டு, எங்களைப் போலவே “ஓம் நமச்சிவாயா” சொல்லிக் கொண்டு எங்களில் ஒருவராகவே இருந்தனர். இந்தக் கைலைப் பயணத்திற்குச் செலவு நிறையவே ஆகிறது. அதற்கும் தயாராக இருக்க வேண்டும். கர்நாடக அரசும், குஜராத் அரசும், இப்போது புதிதாக பாண்டிச்சேரி அரசும் இந்தக் கைலைப் பயணம் மேற்கொள்ளும் யாத்திரீகர்களுக்குப் பண உதவி செய்கிறது. அம்மாதிரி மத்திய அரசும் செய்யலாம், செய்ய முடியும் என்பதே என் வேண்டுகோள். தற்சமயம் இந்தியச் சீன எல்லையில் கைலைப் பயணத்திற்கு உள்ள சாலையைச் செப்பனிடப் போவதாய் அறிவித்திருக்கும் இந்திய அரசு, சீன அரசுடன் பேசிச் சீனாவில் கைலைப் பயணம் மேற்கொள்ளும் நீண்ட மலைச் சாலைகளையும் இரண்டு அரசும் சேர்ந்து செப்பனிட்டு யாத்திரீகர்கள் வந்து தங்க வசதியும், கழிப்பிடங்களும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்பது என் வேண்டுகோள். ஏனெனில் அதிகம் கைலைப் பயணம் மேற்கொள்ளுவது இந்தியர்கள் தான். அனைவரின் ஆதரவாலும், கைலை நாதனின் அருளாலும் இந்தத் தொடரைஒரு மாதிரியாக முடித்து விட்டேன். ஓம் நமச்சிவாயா! 1 ஆசிரியர் பற்றி கீதா சாம்பசிவம் geethasmbsvm6@gmail.com என்னைப் பற்றிச் சொல்ல அதிகம் இல்லை.  தமிழில் சிறு வயது முதலே ஆர்வம் என்றாலும் தமிழை ஒரு மொழியாக மட்டுமே பள்ளி நாட்களில் படிக்க நேர்ந்தது.  ஆகவே தமிழ் இலக்கணம், இலக்கியம், கவிதைகள் எல்லாம் படித்து ரசிப்பதோடு சரி.  ஹிந்தியில் பிஜி டிப்ளமா வாங்கியுள்ளேன். மற்றபடி வெகுநாட்களாக எழுத்துத் தொழிலில் ஆர்வம் இருந்தாலும் எதுவும் எழுதி எந்தப் பத்திரிகையிலும் வந்தது இல்லை.  முதல் முதல் எழுத ஆரம்பித்தது இணையத்தில் தான்.  என்னையும் நம்பி என்னை எழுதத் தூண்டியவர் மழலைகள்.காம். நடத்தும் திரு ஏ.கே. ராஜகோபாலன் அவர்கள்.  பல முறை ஊக்கம் கொடுத்து என்னை எழுத வைத்தார். மழலைகளில் புராணங்களில் இருந்து தொகுக்கப்பட்ட பிள்ளையார் கதைகளைப்  பிள்ளையார் பாட்டி என்ற பெயரில் எழுதினேன்.  பின்னர் நாயன்மார்கள் குறித்துத் தற்போது எழுதி வருகிறேன்.  சில வருடங்களுக்கு ஒரு முறை அமெரிக்கா செல்வதால் அமெரிக்க வரலாற்றை எழுதும்படி ஏ.கே.ராஜகோபாலன் கேட்டுக் கொண்டதன் பேரில் அதை எழுதி வருகிறேன்.  யோகாசனங்கள் பயிற்சி குறித்தும் கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். மின் தமிழ், தமிழ் வாசல், தமிழ்ச் சிறகுகள், மழலைகள், இல்லம் ஆகிய குழுமங்களில் பங்கெடுத்துக் கொள்கிறேன்.இதன் மூலமே  பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்திருக்கிறது.  உலகளாவிய நண்பர்களும் இருக்கின்றனர்.  என் கணவர் உதவியுடன், சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்த பல விஷயங்களையும் கேட்டுப் படித்து அறிந்து கொண்டு தொகுத்து, “சிதம்பர ரகசியம்” என்னும் பெயரில் தொடராக எழுதி வந்தேன்.  இணைய உலகில் என்னைப் பலரும் அறியும்படி செய்தது திருக்கைலை யாத்திரைத் தொடரும், சிதம்பர ரகசியம் தொடருமே என்றால் மிகை ஆகாது.  இப்போது ஹிந்துத் திருமணங்களில் பிராமணர்களின் திருமணங்களின் சடங்குகள் குறித்து விரிவாக ஒரு தொடர் எழுதி இருக்கிறேன்.  விரைவில் அதுவும் மின்னூலாகக் கிடைக்கும். 2 Free Tamil Ebooks - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org - Arun arun@fsftn.org -  இரவி Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/