[] 1. Cover 2. Table of contents ஒரே ஒரு இட்லி ஒரே ஒரு இட்லி   நிர்மலா ராகவன்   nirurag@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/orae_oru_idli மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation நூல் அறிமுக உரை ஒரே ஒரு இட்லி – இழப்பு ஒன்றுதான். ஆனால் வெவ்வேறு வயதினர் அதை எதிர்கொள்ளும் விதம் வித்தியாசமானது. பாலிவுட் டான்ஸ் – பெண்ணானவள் ஆணுக்குச் சளைத்தவள் இல்லை என்ற சவால் எண்ணம் கொண்ட பல பெண்களில் ஒருத்தி இக்கதையின் நாயகி. ரெண்டுங்கெட்டான் – பதின்ம வயதில் ஏற்படும் குழப்பங்களை எப்படிச் சமாளிப்பது? அவ்வயதுப்பெண், தாய் இருவருக்குமே போராட்டம்தான். ‘பெண்’ என்றால் பணிந்துபோவது, நிம்மதியைவிட மரியாதைதான் முக்கியம் என்று வளர்க்கப்பட்ட பெண்ணின் அவலக்கதை. Test tube baby முறையில் பிள்ளை பெறுவதில்தான் எத்தனை சிக்கல்கள்! ஓர் ஆணின் உணர்வுகளைப் படம்பிடித்துக்காட்டும் கதை ‘தந்தை யாரோ’. இறுதிக் கதை ஜாலியானது. ஒரே ஒரு இட்லி “அம்மா! எனக்கு இன்னும் ஒரு இட்லி!” சமையலறைக்கு வெளியே இருந்த இடத்தில் தரையில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த மாது கத்தினான். ஓயாத பசி ஏன் என்று யோசித்ததில் இன்னும் அதிகமாகப் பசித்தது. அந்த பதினைந்து வயதுப் பையனுக்கு உடலை வளர்க்க வேறு வழி கிடையாது என்பது புரியவில்லை. ஒரே மகனை அகாலத்தில் பறிகொடுத்த துக்கம் ஆறாது, சற்றுத் தொலைவில் காலை நீட்டியபடி உட்கார்ந்திருந்த பாட்டிக்கு ஆத்திரம் பொங்கியது. “அதான் இந்த வயசிலேயே அப்பனை முழுங்கிட்டியே! போதாதா? இன்னும் இட்லியை வேற முழுங்கணுமா?” என்று பதிலுக்குக் கத்தினாள். அவ்வளவுதான். தட்டை ஒரு பெரிய ஓசையுடன் தள்ளிவிட்டு, கையைக்கூடக் கழுவாது வாசலை நோக்கி நடந்தான் பையன். அவன் கேட்டபடி இட்லியை எடுத்துக்கொண்டு வந்தவள், “இட்லி கொண்டுவான்னு என்னைக் கேட்டுட்டு, எங்கே போறான்?” என்றாள் முணுமுணுப்பாக. “சுப்பு போனதிலிருந்தே இவனுக்கு மூளை சரியில்லை!” என்று அனுமானித்தாள் பாட்டி. “எவ்வளவு கட்டுப்பாடா வளர்த்தார் தாத்தா!” என்று என்றோ இறந்துபோன கணவரை நினைத்து பெருமூச்சு விட்டாள். ‘கட்டுப்பாடு,’ ‘ஒழுக்கம்’ என்று நினைத்து, கையில் பிரம்புடன் அவன் பின்னாலேயே நடந்தவர் அந்த தாத்தா. “ரெண்டு வயசுக்குழந்தையை ஏம்பா ஓயாம திட்டறீங்க? அதுக்கு என்ன தெரியும்?” என்று கெஞ்சலாகக் கேட்ட மகனை அலட்சியமாகப் பார்த்தார் கிழவர். “ஆண்பிள்ளையை அடிச்சு, மிரட்டி வளர்க்கணும். அப்போதான் கெட்டுப்போக மாட்டான். கடைசி காலத்திலே நமக்கு ஆதரவா இருப்பான்,” என்று உபதேசித்தார். “இப்போ நீ இல்லியா?” தந்தை கையால் தான் வாங்கிய அடிகள் நினைவிலெழ, அதன்பின் மகன் வாயைத் திறக்கவில்லை. தன் சிறு வயதில் தான் அடைந்த ஆத்திரம், ஆனால் அப்பாவை எதிர்த்து எதுவும் செய்ய இயலாத கையாலாகாத்தனம், அதுவே தன்னையும் எளிதில் உணர்ச்சிவசப்படுத்துகிறவனாக மாற்றியது – எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தன. அதன்பின் தந்தையைப் பிடிக்காதுபோக, ‘வயதில் மூத்தவர்களே இப்படித்தான்!’ என்றெழுந்த கசப்பு ஆசிரியர்களையும்கூட வெறுக்கவைத்தது. அரைகுறையாகப் படிப்பு நின்றுபோனது நிம்மதியாக இருந்தது. ‘படி, படி’ என்று அப்பா இனி உயிரை வாங்கமாட்டார். தனக்கென ஒரு குடும்பம் அமைந்தபின்னர்தான் தோன்றியது சுப்புவுக்கு, அப்பாவை எதிர்ப்பதாக நினைத்து, படிப்பை நிறுத்தியது சரியில்லையோ என்று. எதுவும் மாறவில்லை – அப்பாவிற்குப் பதில் மேலதிகாரி, ஓயாது அவனிடம் குற்றம் கண்டுபிடிக்க. தன் மனப்பொருமலை மனைவியை அடக்கி ஆள்வதன்மூலம் தணித்துக்கொள்ளப் பார்த்தான். ஆனால் நிம்மதி என்னவோ கிடைக்கவில்லை. ‘இதென்ன வாழ்க்கை!’ என்ற கசப்புதான் மிஞ்சியது. ‘இதென்ன வாழ்க்கை!’ என்ற கசப்பு எழ, வேகமாக நடந்த மாதுவுக்கு ரயில் நிலையத்தைப் பார்த்ததும் ஒரு வழி தோன்றியது. முதலிலேயே தண்டவாளத்தின்மேல் படுத்துக்கொண்டால், யாராவது பார்த்து, எழுப்பி விடுவார்கள் என்று யோசித்து, பிளாட்பாரத்தின் ஓரத்தில் நின்றுகொண்டான். ஒரு கை அவனைப் பிடித்து இழுத்தது. “தம்பி! விழுந்துடப்போறே!” “விடுங்க,” என்று திமிறினான். “நான் சாகணும்”. அந்த மனிதருக்கு அறுபது வயதிருக்கும். “ஏம்பா? பெயிலாயிட்டியா?” குரலில் கனிவு. “ஊகும்”. “பின்னே?” “அப்பா செத்துப்போயிட்டாரு!” “அடப்பாவமே! துக்கம் தாங்காமதான் இந்த முடிவுக்கு வந்தியா?” தனக்குள் கேட்டுக்கொள்வதுபோல் பேசியவர், “வா! காண்டீனில் சாப்பிட்டபடியே பேசலாம்,” என்று, அவனை எதுவும் பேசவிடாது அழைத்தார். பிடித்த கை இன்னும் இறுகியிருந்தது. “காலையில ஏதாச்சும் சாப்பிட்டியா?” அவன் சாப்பிட்ட வேகம் அப்படிக் கேட்கவைத்தது. “ஒரே ஒரு இட்லி!” சுயபரிதாபத்துடன் வந்தது குரல். “இன்னொண்ணு கேட்டப்போ எங்க பாட்டி ‘அதான் அப்பனை முழுங்கிட்டியே’! ன்னு..,” குரல் விக்கியது. “அப்பாவோட அம்மாவா?” “ம்!” “பாவம்! அவங்க துக்கத்தை ஒம்மேல ஆத்திரமா காட்டி இருக்காங்க. நீ செத்துப்போனா, ஒங்கம்மாவும் பிள்ளையைப் பறிகொடுத்த வருத்தத்திலே இப்படித்தானே ஆகிடுவாங்க?” வாயருகே போன கை நின்றது. தன் உணர்ச்சிகளிலேயே ஆழ்ந்துபோன தனக்கு ஏன் அம்மாவைப்பற்றியும் நினைக்கத் தோன்றவில்லை? அம்மா! வாயில்லாப்பூச்சி! வீட்டுக்கு வெளியில் தன்னைப் பிறர் நடத்தியதுபோல் மனைவியைச் சுயமாகச் சிந்திக்கவிடாது, வன்முறையோடு அதிகாரம் செலுத்திய கணவன். மகனை மிஞ்சிய மாமியார். தானும் போய்விட்டால், அந்த அப்பாவி அம்மாவின் கதி? அவனையே பார்த்துக்கொண்டிருந்தவருக்கு அவனுடைய மனநிலை புரிந்திருக்க வேண்டும். “சீக்கிரமா சாப்பிடு. அடுத்த ரயில் வரப்போ, தண்டவாளத்திலே குதிக்கத் தெம்பு வேணாம்?” என்றார் கேலியாக. அவருடைய சிரிப்பில் அவனும் கலந்துகொண்டான். பாலிவுட் டான்ஸ் தான் தினமும் ஆபீஸ், வேலை என்று உயிரை விட, கிடைத்த நேரத்திலெல்லாம் மனைவி ஹாயாக சோபாவில் படுத்தபடி புத்தகங்கள் படிக்கிறாளே என்ற எரிச்சல் பிறந்தது சிவாவிற்கு. “எதுக்கு எப்ப பாத்தாலும் துப்பறியும் நாவலே படிச்சுக்கிட்டிருக்கே?” முகத்தைச் சுளிக்காது கேட்டாலும், குரலும் தொனியும் அவளை மட்டம் தட்டுவது போலிருந்தது. தனக்குப் பிடித்ததைச் செய்ய ஏன் இவ்வளவு தடை? முகம் மாறாது, “நாலு பக்கத்துக்கு ஒரு கொலை! யார் குத்தவாளின்னு யோசிக்கிறப்போ சுவாரசியமா இருக்கு. அதோட, நாம்ப அப்படியெல்லாம் கஷ்டப்படலியேன்னு ஒரு நிம்மதி!” என்று அடுக்கினாள் அலமேலு. அவளுடைய விளக்கம் அவனிடம் எடுபடவில்லை. “உருப்படியா எதையாவது படி. படிக்க விஷயமா இல்லே?” என்றபடி நகர்ந்தான். அன்று வேலை முடிந்து வீடுதிரும்பும்போது, சிவாவின் கையில் ஒரு பை. “இந்தா, அலமு! ஒனக்காகத்தான் வாங்கிட்டு வந்தேன். ஒனக்குத்தான் படிக்கப் பிடிக்குமே!” என்று குத்தலாகக் கூறியபடி, ஒரு பையை மனைவியிடம் நீட்டியவன், “அதுக்காக வீட்டையும் குழந்தையையும் கவனிக்காம இருந்துடாதே!” என்று கேலிவேறு செய்தான். பையைப் பிடுங்காத குறையாக வாங்கினாள் அலமேலு. உள்ளே பார்த்தவள் முகம் சுருங்கியது. அறுபது வயதுக்குமேல் ஆன கிழடுகள், ‘போகிற வழிக்குப் புண்ணியம் தேடலாமே!’ என்ற நப்பாசையுடன் படிக்கும் புத்தகங்கள்! அவளுடைய தாத்தாதான் இதையெல்லாம் படிப்பார். அவளோ, ‘பெரியவங்க கதையெல்லாம் நீ படிக்கக்கூடாது!’ என்று அம்மா ஓயாது கண்டித்ததால், ’அப்படி அதில் என்னதான் இருக்கிறது?" என்ற ஆர்வத்துடன் எட்டு வயதிலிருந்தே காதல் நவீனங்களையும், பத்திரிகைகளையும் படித்தவள். படித்தது எல்லாம் புரியாவிட்டாலும், ஏதோ ரகசியக்குற்றத்தில் ஈடுபட்டதுபோன்ற த்ரில் ஏற்பட்டது. ஒரு வழியாகப் பதின்ம வயதை அடைந்தபோது, மகிழ்ச்சியாக இருந்தது. ‘அம்மா பார்த்துவிடுவார்களோ!’ என்று பயந்து, பயந்து இனி படிக்கவேண்டாம். ஒரு தலைமுறைக்குமுன், ‘நான் டான்ஸ் கத்துக்கட்டுமாம்மா?’ என்று தாயிடம் கேட்டதும், அவளுடைய பதிலும் மறக்குமா! ‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நீ எப்படி ஆடினாலும், எல்லா ஆம்பளையும் ஒன்னோட ஒடம்பைத்தான் உத்து உத்துப் பாப்பான்!’ அன்று அம்மா. இன்று கட்டியவரா! அப்போதுதான் இனிமேல் பிறர் சொல்வது எதையும் கேட்டு நடக்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்தாள். “ரேகாவை டான்ஸ் கிளாசில சேர்க்கப்போறேன்”. உத்தரவு கேட்டாற்போல் இல்லை. தகவல் தெரிவிக்க நினைத்தாள். அவ்வளவுதான். “ம்!” தூக்கக்கலக்கத்தில் பதில் வந்தது. மறுநாள், “கிளாசில கொண்டுவிடுன்னு என்னை இதுக்கெல்லாம் இழுக்காதே!” என்று அவன் கறாராகச் சொன்னபோது, அவளுக்கு நிம்மதியாக இருந்தது. “சேச்சே!” தனக்குக் கிடைக்காத சுதந்திரத்தை மகளுக்கு அளிக்கப்போகும் பெருமையுடன் மறுத்தாள். எந்த நாட்டிய வகுப்பில் சேர்ப்பது என்று ஆரம்பத்தில் அவளுக்கு இருந்த குழப்பம் கணவன் வாங்கிவந்த ஆன்மிகப் புத்தகத்தில் ஒன்றைப் புரட்டியபோது அகன்றது. பரமசிவனுக்கும் பார்வதிக்கும் போட்டி நடந்தது என்று ஆரம்பித்தது கதை. ‘ஆணுக்கும் பெண்ணுக்கும் நாட்டியப் போட்டியா! பலே!’ சுவாரசியம் மேலிட, மேலே படித்தாள். முடிவு அவளுக்குப் பிடிக்கவில்லை. ‘ஊர்த்துவத் தாண்டவம்’ என்று, சிவன் காலைத் தலைக்குமேல் தூக்க, சக்தி தன் தோல்வியை ஒப்புக்கொண்டாளாம். சிவகாமி நாணினாள், களிப்புடன் சிரித்தாள், அதிர்ந்தாள் என்றெல்லாம் விதவிதமாக விமரிசனங்கள் எழுந்திருந்தாலும், கடவுள் செய்ததை முன்னுதாரணமாகக் கொண்டுவிட்டார்கள். ஒரு பெண் தன் காலைக் கண்டபடி தூக்கக்கூடாது – இது ஆண்கள் விதித்த விதி. ‘எங்களுக்கு மட்டும் என்ன, காலிலே பலம் கிடையாதா? எத்தனை பாலிவுட் சினிமாவிலேயும், தொலைகாட்சியிலேயும் பார்க்கிறோம்!’ அலமேலுவுக்கு ஆத்திரம் பொங்கியது. ‘இப்படி எதையாவது சொல்லிச் சொல்லியே பெண்களை அடக்கி வைக்கிறது நம் சமுதாயம்!’ பரதநாட்டியம் வேண்டாம் என்று முடிவெடுத்தாள். பெண்கள் இடுப்பை ஆட்டக்கூடாது, காலைத் தலைக்குமேல் தூக்கக்கூடாது என்று காலத்துக்கு ஒவ்வாத எதையெதையோ கடைப்பிடிக்கச் சொல்வார்கள். அந்த நடன நிகழ்ச்சிக்கு இரு மாதங்கள் இருந்தன. வகுப்பில் சேர்ந்த ஒரு வருடத்துக்குள் மகள் மேடையில் ஆடப்போகிறாள்! அலமேலுவுக்குத் தலைகால் புரியவில்லை. “இதிலே பைஜாமா காஸ்ட்யூம் தைக்கணும். உடம்போட ஒட்டினாப்போல இருக்கணும்”. என்று தான் கையோடு கொண்டுவந்திருந்த புடவையைக் காட்டினாள். “மயில்கழுத்து கலர்! கிழிச்சுத் தைச்சா அழகா இருக்கும்”. “கொஞ்சம் பழசு போல இருக்கே!” என்று தயங்கினார் தையற்காரர். “நான் சொல்றபடி செய்யுங்க. புடவையை அப்படியே, மடிப்பு கலையாம, புதுசாவே வெச்சிருக்கேன்,” லேசான அதட்டலும் பெருமிதமாகவும் வந்தது குரல். அவளுடைய கல்யாணத்திற்கு அம்மா அதை வாங்கி வந்தபோது, ‘என்னைக் கேட்காமலேயே, எனக்குப் பிடிக்காத பச்சை கலரிலே ஒரு புடவை வாங்கிட்டு வரணுமா!’ என்று ஏற்பட்ட கொந்தளிப்பில், ஒருமுறைக்குப்பின் அதை உடுத்தவேயில்லை. பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் அந்தப் புடவைக்கு விமோசனம். ஒரு சிறு தயக்கமும் ஏற்பட்டது. “அதெல்லாம் தெச்சுடலாம்மா. ஆனா லூசா தைக்கலாமே! சின்னப்பிள்ளை! ஒரே வருஷத்திலே போட்டுக்க முடியாம போயிடும்”. “தொளதொன்னு வேண்டாம். காலைப் பிடிக்கப் பிடிக்க இருக்கட்டும்”. இவளுடன் பேசிப் பயனில்லை என்று மேலே எதுவும் பேசாது அதை வாங்கிக்கொண்டார். வரும் வியாபாரத்தை விடுவதாவது! அருமை மகளுடைய உணவில் சில மாற்றங்களைச் செய்தாள் அலமேலு. ஆடத் தெம்பு வேண்டாமா! தினமும் உருளைக்கிழங்கு, வெண்ணைபோன்ற ‘சத்துணவு’ வகையறா. எதிர்பார்த்திருந்த அந்த முக்கியமான தினம் ஒருவழியாக வந்தது. “எவ்வளவு அழகா இருக்கு, பாரு!” மயில் கழுத்து வண்ண பைஜாமாவைத் தடவிக்கொடுத்தாள் தாய். “போட்டுக்கோ, வா!” “ரொம்ப டைட்டா இருக்கும்மா!” என்று சிணுங்கினாள் பதின்மூன்று வயது மகள் ரேகா. அம்மாவின் போஷாக்கில் அந்தச் சில மாதங்களிலேயே உடலளவு மாறிப்போயிருந்தது. “இதுதான் இப்போ ஸ்டைல்! திருஷ்டி படறமாதிரி அழகா இருக்கேடி. ஹிந்தி சினிமா டைரக்டர் எவனாவது ஒன்னைப் பாத்தா, அப்படியே கொத்திட்டுப் போயிடுவான்!” சினிமா நடிகைமாதிரி இருக்கிறோமாமே? கர்வத்துடன் மேடை ஏறி, வளைந்து, நெளிந்து ஆடினாள் சிறுமி. அம்மா சொல்லியிருந்த சிவன்-பார்வதி கதை அப்பெண்ணின் நினைவிலேயே நிலைத்திருந்தது. ‘நான் அந்தக்காலத்துப் பெண்ணில்லை,’ என்று சற்றே கோபத்துடன் காலைத் தலைமேல் தூக்க, ‘டர்’ என்ற ஓசையுடன் தொடையருகே ஆடை கிழிந்தது. காற்றே படாது, உள்ளேயே அமுக்கி வைத்திருந்ததால் புடவை நைந்து போயிருந்ததால் வந்த வினை! உள்ளாடை எட்டிப்பார்த்தது. கண்களில் நீர் வழிய, பாதி நடனத்திலேயே அவசரமாக ஒரு கும்பிடு போட்டுவிட்டு, உள்ளே ஓடினாள் நடனமணி. முதல் வரிசையில் அமர்ந்து, ‘என் பொண்ணு!’ என்று பக்கத்திலிருந்தவர்களிடம் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்த அலமேலு அதிர்ச்சியில் திறந்த வாயை இரு கரங்களாலும் பொத்தினாள். உடல் பின்னோக்கிச் சரிந்தது. ஈராண்டுகளாக வெளியில் எங்கும் போகமுடியாது வீட்டிலேயே அடைந்து கிடந்து அலுத்த மக்கள், ‘நாட்டியத்தை ரசிக்க முடிகிறதோ, இல்லையோ, நாலுபேரைப் பார்த்துப் பேசலாமே!’ என்று திரளாக வந்திருந்தார்கள். “பாவம்!” என்ற சில குரல்கள் அவளுக்கும் கேட்டன. ரெண்டுங்கெட்டான் தனக்கு மட்டும் ஏன் இத்தனை பெயர்கள் என்று தாயிடம் புகார் செய்தபோது அவளுக்கு ஏழு வயது. அது ஏன் அம்மா சுகந்தி, என்றும் அப்பா ‘மலரு’ என்றும், பள்ளித்தோழிகள் சுகி என்றும் அழைக்கிறார்கள்? “எனக்கு ஏம்மா இவ்வளவு நீளமான பெயர் வெச்சீங்க?” என்று சிணுங்கினாள். “அதுவா கண்ணு? எனக்கு சுகந்திங்கிற பேரு பிடிச்சுது. அப்பாவோ, மலருன்னுதான் வைக்கணும்னு பிடிவாதம் பிடிச்சாரு!” புன்னகையால் விரிந்த இதழ்களை மூடிக்கொண்டாள் மகள். “நாங்க ரெண்டு பேரும் விட்டுக்குடுக்கல. கடைசியில, ’இதுக்கு என்ன சண்டை?’ன்னு சுகந்த மலர்னு வெச்சோம். அதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா? வாசனையுள்ள மலர்!” சமாதானம் மட்டுமல்ல, பெருமையும் ஏற்பட்டது சுகந்தாவிற்கு. தோட்டத்திலிருந்த மல்லிகையையும் ரோஜாவையும் விரும்பிச் சூடிக்கொண்டாள். மலர் என்ற தான் எப்படி மாலாவாகிப்போனோம் என்று சற்றுப் பெரியவளானதும் புரிந்துகொண்டாள். சீனர்களுக்கு ‘ர’ என்கிற எழுத்து தகராறு. அவர்கள் மொழியில் அது கிடையாதாம். சிலர் அதற்குப் பதில் லகரத்தைப் பயன்படுத்துவார்கள் – ராகவன் என்ற அவளுடைய மாமாவின் பெயர் ‘லகாவான்’ என்று மாறுபட்டுவிட்டதுபோல். சீன ஆசிரியைகளுக்கு அவள் மாலா. அடுத்த சில ஆண்டுகள் எவ்விதக் குழப்பமுமின்றி நகர்ந்தன. பன்னிரண்டு வயதில் அடையாளக்கார்டு எடுக்கவேண்டும். “நீ எடுத்த பிள்ளையா? என்னடா, அப்பா அம்மா ரெண்டுபேர் சாயலும் இல்லியேன்னு பாத்தேன்!” என்று ஆசிரியை கூற, சுகந்தாவுக்கு எதுவும் புரியவில்லை. வீடு திரும்பியதும், “எடுத்த பிள்ளைன்னா என்னம்மா?” என்று கேட்டாள். அப்போது அவளுக்குத் தெரியவில்லை, தாயின் பதிலால் தன் வாழ்க்கையின் தடமே மாறிப்போகுமென்று. தாய் முதலில் பயந்தாள். பிறகு, ’இதெல்லாம் மறைக்கக்கூடிய சமாசாரமா என்று உண்மையைச் சொன்னாள்: “மத்தவங்க குழந்தையை நம்ப குழந்தையா வளக்கறது!” “ஏன் அப்படிச் செய்யணும்?” “பெத்தவங்களுக்கு ஏதோ அசௌகரியம்,” என்று வலிய வரவழைத்துக்கொண்ட அலட்சியத்துடன் கூறினாள். “ஏழையா இருந்திருப்பாங்களா?” “இருக்கலாம். ஏனோ அவங்களால குழந்தையை வளக்க முடியல. தத்து எடுக்கிறவங்களுக்குப் பிள்ளை பெறமுடியாம ஏதோ கோளாறு. இதனால இப்போ ரெண்டு பக்கத்திலேயும் நிம்மதி”. நிம்மதிதானா? மகிழ்ச்சி கிடையாதா? அதற்குமேல் எதுவும் கேட்காது, முகம் வாட அப்பால் நகர்ந்தாள் பெண். ‘அம்மா’ என்று உயிரையே வைத்திருந்தோமே! அந்த அம்மா, மீனாம்பாள், தன்னைக் குப்பைத்தொட்டியிலிருந்து பொறுக்கியிருக்கிறாள் – சாமான் போட்டு வரும் பிளாஸ்டிக் பையைக்கூட ஒருமுறை உபயோகப்படுத்திவிட்டு, வேறு எதற்காவது பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சுத்தப்படுத்தி வைப்பதுபோல! இந்தக் குடும்பத்தில் தானும் ஒரு குப்பை. என்றைக்காவது எதற்காகவாவது பயன்படும் என்று சோறு போட்டு வைத்திருக்கிறார்கள். அவ்வளவுதான். அழுகை ஆத்திரமாக மாறியது. தனக்குச் சொந்தமில்லாதவளை எதற்காக ‘அம்மா’ என்று அழைப்பது? அப்போதிலிருந்து சுகந்தாவின் குணமே மாறிப்போயிற்று. பள்ளிக்கூடத்தில் அவளைப்போன்ற சில பெண்கள் தோழிகளாக அவளை ஏற்றுக்கொண்டபோது, ‘வாழ்க்கை அவ்வளவு மோசமில்லை!’ என்று தோன்றிப்போயிற்று. “நாம்ப சந்தோஷமா இருக்க கூடாதுன்னுதான் சாமி அம்மான்னு ஒருத்தரைப் படைச்சிருக்கிறாரு,” என்றாள் உமா. இத்தனைக்கும், அவளைச் சுமந்து பெற்ற தாய்! இரவு நேரங்களில் மகள் தனியாகச் சற்றே பெரிய பையன்களுடன் ஊர்சுற்றுவதைக் கண்டித்ததால் எழுந்த கோபம் வெறுப்பாக மாறி இருந்தது. “சரியாச் சொன்னே, உமா,” என்று பாராட்டினாள் கமலி. “எங்கம்மாவை அவங்க வீட்டில அதிகம் படிக்கவைக்கல. அதனால, என்னை எப்பவும் ’படி, படி’ன்னு பிராணனை வாங்கறாங்க,” என்று பொருமினாள். “போன பரீட்சையில நல்லா செய்யலேன்னு ரூமில போட்டு பூட்டிட்டாங்க. மூணு நாள்! அம்மாவாம் அம்மா!” தன்னையுமறியாது, அவர்களுடன் தன்னை ஒப்பிட்டுக்கொண்டாள் சுகந்தா. இப்படியெல்லாம் செய்து தன்னைத் துன்புறுத்தவில்லை அம்மா என்று தான் நம்பிய மீனாம்பாள். இருந்தாலும், ‘இனிமே என்னை அம்மான்னு கூப்பிடவேமாட்டியா?’ என்ற ஏக்கம் பெருக, அவள் முகத்தில் ஆழ்ந்த வருத்தம் குடிகொண்டிருப்பதைப் பார்த்து ஒரு குரூர திருப்தி எழுந்தது சுகந்தாவுக்கு. வளர்ப்புத்தாயை இன்னும் எப்படியெல்லாம் நோகடிக்கலாம் என்பதுபோல் நடந்துகொண்டாள், தன்னையுமறியாது. உமாவின் பிறந்தநாள் விழா என்று போனவள், அங்கு முன்பின் தெரியாத ஒருவனுடன் நேரத்தைக் கழித்துவிட்டு வீடு திரும்பும்போது நள்ளிரவு. அவன் அவளைவிட மூத்தவனாக இருந்தபோதும் அவளை மதித்துப் பேசியதில் நேரம்போனதே தெரியவில்லை. அவளுடைய அறிவையும் அழகையும் எப்படிப் புகழ்ந்தான்! வழக்கத்துக்கு விரோதமாக முன்ஹாலில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அமைதியான முகத்துடன் மீனாம்பாள் உட்கார்ந்திருந்தாள். அவளைக் கவனியாததுபோல உள்ளே செல்ல முற்பட்டாள் சுகந்தா. “இப்படி வந்து ஒக்காரு. ஒங்கிட்ட ஒண்ணு சொல்லணும்.” வழக்கத்துக்கு விரோதமாக அவள் குரலில் இருந்த கண்டிப்பு சுகந்தாவைப் பணியவைத்தது. “நான் நல்லவிதமா வளத்தா, ஒன் பிறப்பை மாத்திடலாம்னு நினைச்சேன். அது தப்புன்னு இப்போ தோணுது”. சுகந்தா விழித்தாள். என்ன சொல்ல வருகிறாள்? “ஒனக்கு இப்போ ரெண்டுங்கெட்டான் வயசு. நீ குழந்தையுமில்லே, வளந்த பெரியவளும் இல்லே. ஒனக்கு இன்னும் ஒலகம் புரியல. அதான் ஒன்னைப் பெத்தவ செஞ்ச தப்பையே நீயும் பண்ணறே!” சுகந்தா நிமிர்ந்து உட்கார்ந்தாள். தான் கேட்க நினைத்ததைத் தானே சொல்கிறாள். “அவளுக்கும் அப்போ பதினஞ்சு வயசுதான். கூடப் படிக்கிற பையனோட கண்ட கண்ட படங்களை ஒண்ணாப் பாத்துட்டு…! சுதந்திரம்னு நினைச்சு மனம்போனபடி நடந்துக்கிட்டா. அவ வயத்திலே நீ! படிப்பு பாதியில நின்னுபோச்சு.” பழைய சம்பவத்தில் மனம் நிலைக்க, சற்றே நிறுத்தினாள். “மைனர் பொண்ணைக் கற்பழிச்ச குத்தத்துக்காக அந்தப் பையனை போலீஸ் பிடிச்சுக்கிட்டுப்போச்சு”. பிறக்குமுன்பே தாய் தந்தை இருவர் வாழ்க்கையையும் நாசமாக்கியிருக்கிறேன்! சுகந்தா மெல்ல விசும்பினாள். “அந்த அம்மா செஞ்ச தப்பை நீயும் செய்யக்கூடாது, சுகந்தி. அப்புறம் ஒனக்குப் பிறக்கப்போற குழந்தையும் நிம்மதி இல்லாமத் திண்டாடும்”. சுகந்தாவின் மனதில் பல கேள்விகள் எழுந்தன. அப்புறம் அந்தப் பெண்ணுக்கு என்ன ஆயிற்று? சீர்திருத்தப்பள்ளியிலிருந்து வெளியேறியதும் பையனுடைய வாழ்க்கை சீரடைந்ததா? அதெல்லாம் தெரிந்து இப்போது என்ன ஆகப்போகிறது! ‘யார் எப்படிப் போனால் எனக்கென்ன!’ என்று அவற்றை ஒதுக்கித் தள்ளியபோது, தானும் அப்படி ஒரு கண்டத்திலிருந்து தப்பித்தோமே என்ற நிம்மதி பிறந்தது. ஓடி வந்து, “அம்மா!” என்று விம்மியபடி மீனாம்பாளை இறுக அணைத்துக்கொண்டாள் சுகந்தா. ஆதர்ச மனைவி(?) ஒங்கப்பனையும் ஒரு மனுசனா மதிச்சு, பொண்ணு கேக்கப்போனேன் பாரு!" மேற்கொண்டு அவன் உறுமியது ரயில் விட்ட பெருமூச்சில் அடிபட்டுப்போயிற்று. சிறிது பயம் கலந்த பார்வையைக் கணவன்மீது ஓடவிட்டு, தலையைக் குனிந்துகொண்டாள் மீனாட்சி. டிக்கட் வாங்காமலேயே ஜன்னலூடே நுழைந்த காற்று அவள் மேல்புடவையை அலைக்கழைத்தது. அவசரமாக அதை இழுத்துப் போர்த்துக்கொண்டபோது, முதுகில் கை உரச, ’முணுக்’கென்று ஒரு வலி. வடுகூட வலிக்குமா, என்ன? அது என்னவோ, அவளுக்கு வலித்தது. அன்றுதான் பட்ட காயம்போல், மேல்முதுகின் அடிப்பாகத்தில் ஒரு கோடியிலிருந்து மறு கோடிவரை படர்ந்திருந்த அது – அந்த நலிந்த உடலுக்குள்ளும் உணர்ச்சிகள் இருக்கலாம் என்பதையே மறுப்பவனாய், தன் ஆக்கிரமிப்பை முழுமையாக நிலைநாட்டிக்கொள்பவனாக, ஒரு மஞ்சள் கயிற்றால் அவளைத் தன் உடைமையாக்கிக்கொண்டவனது கைங்கரியம். தொந்தியின்மீது நிலையாக நிற்காது, நழுவுவதிலேயே குறியாக நிற்கும் கால்சராயை கட்டுப்படுத்தும் தோல் சாதனத்திற்கு மற்றொரு உபயோகத்தை அவன் கற்பித்திருந்ததின் நிதரிசனம். தனது ஆண்மையின் வீரியத்தை அவளுக்கோ, இல்லை தனக்கேதானோ, உணர்த்த முயன்றதன் காட்சிப்பொருள். ரயிலின் ஒரே சீரான அசைவுதான் தாலாட்டாக அமைந்ததோ, அல்லது மனக்கொதிப்பு தாங்கமுடியாது உடல்தான் களைத்துப்போயிற்றோ, உட்கார்ந்த நிலையிலேயே முத்தையன் கண்ணயர்ந்து இருந்ததைக் கவனித்தாள் மீனாட்சி. அவ்வளவுக்கு அவ்வளவு நிம்மதி. அவனுடைய எடை மாறி மாறி இருபக்கமும் சாய, மற்றபடி காலியான அந்த இருக்கை மட்டும் சற்று லேசாக இருந்திருந்தால், மேலும் கீழுமாக ஆடியிருக்கும். அப்படி ஒரு ஆகிருதி. எங்காவது யானைக்கும், சுண்டெலிக்கும் முடிச்சுப்போடுவார்களோ! புதிதாகக் கல்யாணமான சமயத்தில்கூட கணவனின் மிருக பலத்திற்கு தன்னால் ஈடுகொடுக்க முடியாது போயிற்றே! என்ன உறவு இது! நினைக்கும்போதே கசப்புதான் பெருகியது. எந்த வகையிலும் சற்றேனும் பொருத்தமில்லாத ஒருவருடன் ஆயுள் முழுவதும் இருந்து தீரவேண்டிய கட்டாயம்! பல பெண்களுடன் அவன் தகாத உறவு வைத்திருந்தது தெரிந்தபோதும், கேவலம், இந்தப் பிணைப்பும் அறுந்துவிடக்கூடாதே என்று எவ்வளவு அஞ்சினோம்! “என்னை நிர்க்கதியா விட்டுடாதீங்க!” என்று, அவன் காலைப் பற்றிக்கொண்டு – பண்டைக்கால சினிமா கதாநாயகியிடமிருந்து கற்றதுபோல் – கண்ணீர் வடியக் கெஞ்சியதால்தானே அவனுக்கு அவ்வளவு அலட்சியமாகப் போய்விட்டது! கணவன் உறங்குகிற தைரியத்தில், மீனாட்சி அவனை உற்றுக் கவனித்தாள். அந்தக் கால்கள்! ஒரு மனிதனின் உடலிலுள்ள எல்லா ரத்தத்தையும் உறிஞ்சிவிட்ட இரு அட்டைப்பூச்சிகளின்மேல் அடர்ந்த ரோமம் வளர்ந்தால் இப்படித்தான் இருக்குமோ! “என்னாடி, சிரிப்புப் பொங்குது!” தனது ரகசிய எண்ணப்போக்கினால் அவமானமும், பிடிபட்டுவிட்ட அதிர்ச்சியும் ஒன்றுசேர, தோளையும் முதுகையும் மட்டுமின்றி, வாயையும் சேர்த்து மூடிக்கொண்டாள் புடவைத் தலைப்பால். அவளுடைய தாடை நெஞ்சுக்குள் மறைய முயற்சி செய்தது. உடல் பூராவும் பாறையின் வெடிப்புகளாக வடுக்கள் உருப்பெறத் தொடங்கியபோது, வேறு சில மறைந்துபோயின – ‘நீ சிரிப்பாய் சிரிக்கும் லட்சணத்திற்கு நாங்கள் ஒரு கேடா!’ என்பதுபோல், அகாலமாக உதிர்ந்துவிட்ட, உதிர்க்கப்பட்டுவிட்ட, முன்பற்கள். அரைகுறைத் தூக்கம் கலைந்த நிலை. எப்போதும்போல், அவளுடைய ஒடுங்கிய உடல் அதீத பலத்தை அளிக்க, “ஒன் தங்கச்சிக்கு என்னாடி இருக்கு, படிப்பா, பணமா? ஒடம்பு மட்டும் சும்மா ’திமு திமு’ன்னு வளர்ந்திருந்தா ஆயிடுச்சா? இதை எனக்குக் கட்டிக்குடுக்க கசக்குதாமோ?” என்று பொரிந்தான். கணவனுடன் தங்கையை வைத்துப் பார்த்தாள் மீனாட்சி, அது நடக்காத காரியம் என்று உறுதியாகத் தெரிந்துவிட்டதால் தயக்கம் ஏற்படவில்லை. அச்சோடியின் உருவப் பொருத்தத்தை அவளால்கூட மறுக்க முடியவில்லை. ஒரு சிறு நப்பாசை தலைகாட்டியது: ‘பொருத்தமா, மனசுக்குப் பிடிச்சமாதிரி நான் இருந்தா, கண்ணுக்குள்ளே வெச்சுக் காப்பாரோ!’ சற்றுக் கவனத்துடன் உடலைப் பார்த்துக்கொண்டு, அப்படியே சிறிது தைரியத்தையும்… – நினைக்கையிலேயே தோள்கள் சரிந்தன. ஊகும். ‘நான் யானைக்கு நிகராவேன்!’ என்று சுண்டெலி வீறுகொண்டு எழுவது முடியாத காரியம் மட்டுமல்ல; முழுப் பைத்தியக்காரத்தனமும்கூட. ‘பெண்’ என்ற வார்த்தைக்கே ‘ஆணின் அடைக்கலப்பொருள்’ என்று கற்பிக்கப்பட்ட, குடும்பத்தின் மூத்த பெண் ஆயிற்றே! அவளுடைய பாங்கான நடத்தையில்தான் குடும்ப மானமும், தம்பி தங்கைகளின் எதிர்காலமும் இருந்தன. கணவனை ஏறிட்டவளின் நோக்கில் ஒரு அலாதியான கனிவு. “என் தங்கச்சி கிடக்கா! ஒங்களுக்கென்னங்க குறைச்சல்? ஒங்க அழகுக்கும் பலத்துக்கும் வேற பொண்ணு கிடைக்காமலா போயிடும்!” என்று சமாதானப்படுத்தினாள். தனது பசிக்கு இரையாக்க எப்படிப்பட்ட தீனியைக் கொண்டுவரலாம் என்ற கற்பனையில் அந்த ஆண்மகன் ஆழ்ந்துபோக, கொண்டவனின் ஆத்திரத்தை அடக்கி, சிறிதளவேனும் இன்பத்தைக் கொடுத்துவிட்ட தன்னைப் பார்த்துத் தானே பெருமைப்பட்டுக்கொண்டாள் அந்த மனைவி. தந்தை யாரோ (சிறுகதை) “என்னங்க! டாக்டர் என்னமோ சொன்னாரே…?” என்று இழுத்தாள் இந்திரா. அவளது கேள்வியில் அச்சமிருந்தாலும் அதில் அடங்கியிருந்த ஆர்வமும் எனக்குப் புலப்படாமல் இல்லை. எனக்குள் ஆத்திரம் பொங்கி எழுந்தது. அப்படியென்ன பிள்ளை ஆசை வேண்டிக்கிடக்கிறது! படித்தவளாம், படித்தவள்! எல்லாம்தான் இருக்கிறதே வாழ்வில். பிள்ளைச்செல்வம் மட்டும் இல்லாவிட்டால் குறைந்தாவிட்டது! மணமாகி ஐந்து பிறந்த நாட்கள் வந்து போயும், தான் பூக்காத மரமாகவே இருக்கிறோமே என்றவளின் கவலை எனக்கு முதலில் பைத்தியக்காரத்தனமாகப் பட்டது. கிளினிக்கின் முதற்படி ஏறுமுன், அதுதான் என் அமைதியான வாழ்வின் இறுதிப்படி என்பதை நான் உணராமல் போனேன். “ஸாரி ஸார்,” என்று ஆரம்பித்து, டாக்டர் விவரமாகச் சொன்ன விஷயத்தைக் கேட்ட நொடியிலேயே நான் இறந்துவிட்டேன். உலகின்முன் எப்படி நடிப்பது என்ற பெருங்கவலை என்னைச் சூழ்ந்துகொண்டது. ‘இவளுடைய வற்புறுத்தலுக்கு ஏன்தான் இணங்கினோமோ!’ என்று நான் என்னையே கடிந்துகொள்ளாத நாளில்லை. இல்லாவிட்டால், குறை என் உடலில்தான் என்று டாக்டர் தீர்மானமாகச் சொல்லியிருந்திருப்பாரா? என் உணர்ச்சிகளைப் புரிந்தவளாக இதமாக நடந்துகொண்ட மனைவியால் என் ஆத்திரத்தை இன்னும் அதிகரிக்கத்தான் முடிந்தது. எனக்காகப் பரிதாபப்படுகிறாள்! காதலித்து மணந்தவர் ஆண்மையற்றவர் என்று அறிந்து. தன் துர்பாக்கியத்தை உள்ளுக்குள் சபித்துக்கொண்டாலும், வெளியில் பசப்புகிறாள்! இப்படி ஒரு குரூரமான எண்ணம். சே! அந்த உத்தமியைப்பற்றி இப்படியெல்லாம் நினைப்பதே பாவம். இன்னொருத்தியாக இருந்தால், சட்டபூர்வமாக விலகிவிடுவாள். இல்லை, இல்லை, என்னை விலக்கி வைத்துவிடுவாள். இது அவளை நன்கறிந்த எதிர்க்குரல். இந்திரா காரியவாதி. எங்களைப்போன்றோர் பிள்ளை பெற்றுக்கொள்ள ஏதேனும் வழி உண்டா என்று தேடி அலைந்தாள். “இதிலே ஒண்ணும் தப்பே இல்லீங்க!” பல முறை அவள் மன்றாடியபோது, ஒருவாறாக இணங்கினேன். “டாக்டர்கிட்டே முழு விவரத்தையும் கேட்டுக்கலாம்,” என்று சமாதானப்படுத்தினேன். அப்போதைக்கு அதுவே நல்ல அறிகுறிதான் என்ற மலர்ச்சி அவள் முகத்தில். “இது மேல்நாட்டிலே அமோக வரவேற்பு பெற்ற முறை, ஸார். தத்து எடுத்துக்கிட்டா, அதை முழுமனசோட ஏத்துக்கிறவங்க எத்தனை பேர் இருக்காங்க, சொல்லுங்க!” டாக்டர் சவால் விட்டார். “தன்னோட வயத்திலே வளர்ந்த குழந்தையைப் பாத்தா தாய்ப்பாசம் பொங்கும். ஒங்க குழப்பம் இவங்க சந்தோஷத்திலே கரைஞ்சுபோயிடாதா!” இந்த மனிதரும் என் மனைவியுடன் சேர்ந்துகொண்டு, என் மனதைக் கலைக்க ஏதோ சூழ்ச்சி செய்கிறார்! என்னிடம் இயற்கையும் வளர்ச்சியும் அளிக்கத் தவறிவிட்ட ஒன்றை எவனோ ஒரு இளைஞன் தானமாக அளிக்கப்போகிறான்! சீச்சீ! எதைத்தான் தானம் கொடுப்பது என்ற விவஸ்தை இல்லாமல் போய்விட்டது இப்போது. “பெத்தவங்க சாயலே இல்லாம குழந்தைங்க பிறக்கிறதில்லையா!” டாக்டர் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினார். அப்போதைக்கு அவரிடமிருந்து தப்பினால் போதும் என்ற, யோசித்து வருவதாகச் சொல்லி நழுவினேன். தன் ஏமாற்றத்தைச் சாமர்த்தியமாக மறைத்துக்கொண்டாள் இந்திரா. நானோ, அந்த நினைப்பையே அப்புறப்படுத்த முயன்றுகொண்டிருந்தேன். நடக்கிற காரியமா! தானே கனிந்துவருவேன் என்ற நம்பிக்கை சரிய, ‘டாக்டர் என்னவோ சொன்னாரே!’ என்று சுற்றி வளைக்கிறாள்! அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவள் கேட்பதெல்லாம் ஒரு குழந்தை. சாதாரணமாக எந்தப் பெண்ணுக்கும் எழும் ஆசைதான். இதைக்கூட நிறைவேற்ற முடியாவிட்டால், நான் எதில் சேர்த்தி? மனத்தளவில் நான்தான் மடிந்துவிட்டேன். அவளாவது வாழ்க்கையை அனுபவிக்கட்டும். இப்போது இந்திராவின் மனதிலிருந்த பூரிப்பு உடலிலும் வெளிப்படையாகவே தெரிந்தது. ஊர்பேர் தெரியாத எவனுடைய விந்துவோ என் மனைவியின் உடலுக்குள் நுழைக்கப்பட்டு, அது கருவாக வளர்வதைப் பொறாமையுடன் பார்த்தேன். இதே காரியத்திற்கு, ‘கட்டியவனுக்கு துரோகம்’ என்றொரு பெயருண்டு, வேறு சில சந்தர்ப்பங்களில். ஆனால், நாங்களே தெரிந்து செய்ததை என்னவென்பது! இந்த மன உளைச்சலை யாரிடமும் பகிர்ந்துகொள்ளவும் முடியவில்லை. இந்திராவின் உடல் எடைக்கு ஏற்ப என் மனச்சுமையும் கூடியது. பயங்கர மிருகமானேன். கொண்டவளைப் படாத பாடு படுத்தினேன். ‘உரிமை’ என்ற போர்வையில் என் வேதனை - மனதின் வெறுமையே – வெறியாக மாறுகிறது என்று புரிந்துகொண்டாற்போல், அவ்வளவுக்கும் ஈடுகொடுத்தாள். எதிர்ப்பில்லாத சண்டையும் ஒரு சண்டையா! நான் அடங்கிப்போனேன். நான் இரவு பகலாக நினைக்க மறுத்து, அஞ்சிக்கொண்டிருந்த அந்நாள் இறுதியில் வந்தேவிட்டது. ‘உங்களைச் சும்மா விட்டுவிடுவோமா? விருந்து எப்போ?" என்று மிரட்டிய நண்பர்களுடன் எனக்கு ’வாரிசு’ பிறந்திருப்பதை கொண்டாடினேன். போலிச்சிரிப்புடன். மருத்துவமனைக்கும் சென்றேன் – பிறர் முன்னிலையில் மனைவியைத் தலைகுனிய வைக்கக்கூடாது என்ற ஒரே நோக்கத்தோடு. “என்னங்க! குழந்தை ரொம்ப அழகா இருக்கு இல்லே?” உவகையுடன் வந்த அவள் குரல் எனக்கு நாராசமாகக் கேட்டது. “ஏன், இந்தச் சனியனோட அப்பாபோல இருக்குதோ?” குரோதத்துடன் வெளிப்பட்ட என் எதிர்க்கேள்வியின் உக்கிரத்தைத் தாங்கமுடியாது அவளுடைய பச்சை உடம்பு நடுங்கியது. சே! என்ன மனிதன் நான்! எவ்வளவோ யோசித்து அக்காரியத்தைச் செய்யத் துணிந்தும், மனம் ஒருநிலைப் படவில்லையே! எனக்கே என்மேல் வெறுப்பு ஏற்பட்டது. “ஸாரிம்மா. ஒனக்குச் சந்தோஷமா இருந்தா சரிதான்!” ஒப்பிப்பதுபோல் பேசிவிட்டு, அவள் முகத்தைப் பார்க்கவும் துணிவின்றி வெளியே நடந்தேன். முன்யோசனை இல்லாமல் செய்த காரியத்தின் விளைவு. எங்களிடையே பாலமாக இருக்கும் என்று அவள் நம்பிப் பெற்ற குழந்தையே எங்கள் நெருக்கத்தைத் துண்டித்துவிடும் என்று அப்போதே நான் உணர்ந்துவிட்டேன். என் மனைவியின் குழந்தை பாபு, ஆமாம், அவன் என் மகனென்று உலகை ஏமாற்றியதுபோல் என்னையே நான் ஏமாற்றிக்கொள்ள விரும்பவில்லை. அதன் அழுகைச் சத்தம் கேட்டாலே, “பிசாசு கத்துதே! யாராவது ஏதாவது பண்ணித் தொலைக்கக்கூடாது?” என்று அலறுவேன். கண்ணீரைத் தடுக்க கீழுதட்டைப் பல்லால் கடித்தபடி அவனுடன் உள்ளே விரைவாள் பெற்றவள். கூடியவரை, தந்தையின் பராமுகத்தை அவன் அறியாதபடி அவன்மேல் பாசத்தைக் கொட்டினாள் இந்திரா. நானோ, அவனையும் எங்களுடன் வெளியே அழைத்துப்போய் புழுங்குவானேன் என்று எங்கும் தனியே செல்ல ஆரம்பித்தேன். பள்ளிக்குப் போக ஆரம்பித்ததும், “ஏம்மா அப்பா என்னோட பேசறதே இல்லே? என் ப்ரெண்ட்ஸோட அப்பா எல்லாம் வெளியே கூட்டிட்டுப் போறாங்க, சேர்ந்து விளையாடறாங்களே!” ஏக்கத்துடன் வந்த குரலை ஒரு நாள் கேட்க நேர்ந்தது. ‘அப்படி ஒரு எண்ணம் வேறு இருக்கிறதாடா பயலே உனக்கு?’ என்று கொக்கரித்தேன். ’ எனக்கும் என் இந்திராவுக்கும் இடையே புல்லுருவிபோல வந்தாயே! என் அன்புக்காக ஏங்கி, ஏங்கி வாடிப்போ!’ அடுத்த நாள், “நம்ப பாபுவுக்கு மலாய்ப்பாடம் கஷ்டமாயிருக்காம். அதனால..,” என்று இழுத்தாள் இந்திரா. பயத்தில் கண்களைச் சுருக்கினாள். பதிலுக்கு, “அதுக்கு என்னை என்ன செய்யச் சொல்றே? முட்டாள்தனத்துக்கு எவனைக் கொண்டதோ!” என்று சீறினேன். அதை லட்சியம் செய்யாது, “இந்த மூணாங்கிளாஸ் படிப்பு ஒங்களுக்கு ஒண்ணும் கஷ்டமா இருக்காது. நீங்க கொஞ்சம் கவனிச்சுக்கிட்டா..!” ஓ! எனக்கும் பாபுவுக்கும் இடையே இருக்கும் அகழியை அடைக்கும் முயற்சியா? “வேற வேலை இல்லே. டியூஷன் வெச்சுக்க ஒன் மக்குப்பிள்ளைக்கு”. எவ்வளவோ நம்பிக்கையுடன் வந்தவள் அதிர்ந்துபோனாள். நான் மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். புண்பட்ட மனம் பிறரைப் புண்படுத்துவதில்தான் இன்பம் காணுமோ? ‘அவசரம்! உடனே பெரிய ஆஸ்பத்திரிக்கு வரவும். வார்டு எண்…!’ அலவலகத்தில் செய்தி கிடைத்தபோது, மேற்கொண்டு விசாரிக்கத் தோன்றவில்லை. பதட்டத்துடன் விரைந்தேன். என் இந்திரா! அவளுக்கு என்ன ஆயிற்றோ! ஒரு வேளை, தற்கொலை முயற்சியோ? நீ இல்லாவிட்டால், அனாதைகளாகிவிட்ட நானும் பாபுவும் ஒருவர்க்கொருவர் பற்றுக்கோடாக மாறமுடியும் என்று யோசித்தாயா, இந்திரா? உயிருடன் இருந்து சாதிக்க முடியாததை தன் இறப்பு சாதித்துவிடும் என்றுதான் அவள் அந்த முடிவுக்கு வந்திருக்கவேண்டும். புதிய வேதனையின் விஸ்வரூபத்தில் பழைய வேதனை சுருங்கிப்போயிற்று. பிறருக்கும் உணர்ச்சிகள் உண்டு என்று புரிந்துகொள்ளாத முட்டாளாக இருந்துவிட்டேனே! ‘இந்திரா! இனிமேல் உன் மனதைப் புண்படுத்தவே மாட்டேன். என்னை விட்டுப் போய்விடாதே!’ மானசீகமாகக் கெஞ்சினேன். எதையும் இழக்கும் தறுவாயில்தான் அதன் அருமை புரிகிறது. எனக்கொரு அதிர்ச்சி காத்திருந்தது. இன்ப அதிர்ச்சி. என் வரவை எதிர்பார்த்து வாசலிலேயே நின்றிருந்தவள் படபடப்புடன் எதையோ கூறியதைக் கேட்கும் நிலையில் நான். அங்கேயே அவளை ஆரத் தழுவ வேண்டும்போல இருந்தது. அவளுடைய வேதனையில் பங்கேற்கத் தோன்றவில்லை. நிம்மதிப் பெருமூச்சுதான் வெளிப்பட்டது. அப்பாடா! அபாயம் பாபுவுக்குத்தானா? ஏதோ விபத்தாம். உயிருக்கே அபாயமாம். எனக்குள் ஒரு சிலிர்ப்பு. என் ஆருயிர் மனைவிக்கும் எனக்குமிடைய வந்த கோடரி சக்தியிழந்து, நிரந்தரமாகக் கீழே விழப்போகிறது! எனக்கு அவள், அவளுக்கு நான். நான்-இந்திரா. வேறு அர்த்தமற்ற உறவுகளுக்கே அங்கே இடமில்லை. என் இன்பக் கனவுகளிலிருந்து என்னை உலுக்கியது அந்த அழுகுரல்: “நான் சொல்லச் சொல்ல அப்படியே நிக்கறீங்களே! அப்படிப் பாக்காதீங்க. (என் எண்ண ஓட்டம் அவளுக்கு எப்படிப் புரிந்தது?) ஒண்ணை மட்டும் நினைவு வெச்சுக்குங்க. அவன் இல்லாட்டி நானும் இல்லே. நான் கொண்டுவந்த உயிர் ஒங்களால போனா..,” மேலே கூறமுடியாது விம்மினாள். மிரட்டலாக இல்லாது, அழுகுரலாக அவள் சொன்னதைப் பரீட்சித்துப் பார்க்கும் தைரியம் எனக்கில்லை. நான் ரத்த தானம் அளித்து, எத்தனையோ பேரை பிழைக்க வைத்திருக்கிறேன். இந்திராவுக்காக இதுகூடச் செய்யமாட்டேனா இப்போது! சிறிது பொறுத்து, “நம்ப பாபுவைச் சீக்கிரமே வீட்டுக்கு அழைச்சுட்டுப் போயிடணும். பாடமெல்லாம் வீணாகிடும். நான் கத்துக்குடுக்க வேண்டியது எத்தனையோ இருக்கு,” என்று உளறிக்கொட்டினேன். அவன் பிறப்பின் பின்னாலிருந்த நிழலைத்தான் என் ரத்தத்தால் துரத்திவிட்டேனே! அஷ்டலட்சுமியில் ஐந்துபேர் மூன்றாவது மகள் பள்ளியிலிருந்து திரும்பியதும், புன்னகையுடன் கேட்டாள், ஞானம்: ’இன்னிக்கு யாரோட சண்டை?" வலியப்போய் சண்டை போடமாட்டாள் என்று தெரியும்தான். வேடிக்கையாக இருந்தாலும், சற்று சலிப்பும் ஏற்பட்டது. எந்த வேளையில் அவளுக்கு வீரலட்சுமி என்று பெயர் வைத்தாளோ! “பின்னே என்னம்மா? ’மூணும் பொண்களா!’ன்னு எங்களைப் பார்த்து சலிச்சுக்கிட்டா? அவங்களா எங்களுக்கு சாப்பாடு போடப்போறாங்க?” தாய் அதிர்ந்தாள். “ஒன்னைவிட பெரியவங்களோடேயா சண்டை போட்டே?” “சண்டை போடலேம்மா. நான் என்ன சொன்னேன், தெரியுமா?” அவள் குரலில் பெருமை. “இன்னும் நிறைய பொண்ணுங்க பிறக்கும் எங்க குடும்பத்திலேன்னு சொன்னேன்”. நிலைமை இன்னும் மோசமாக ஆகிவிடாது காப்பதுபோல், இரண்டாமவள் ஒரு பெரிய தாம்பாளம் நிறைய மாம்பழங்களைக் கொண்டுவந்தாள். “எல்லாம் நம்ப தோட்டதிலேருந்தும்மா!” அவளுடைய பூரிப்பு தாயையும் தொற்றிக்கொண்டது. “ரெண்டு கிலோ இருக்கும்போல இருக்கே!” “பள்ளிக்கூடம் லீவுதானே! எங்கேயாவது போகலாம்பா!” என்று கொஞ்சிய மகளைப் பார்த்துப் புன்னகைத்தார் நாராயணன். “எங்கே போகலாம்? நீயே சொல்லு!” “குவால காண்டா (Kuala Gandah)!” என்றபடி வந்தாள் இந்திரா. முதலிலேயே பேசி வைத்துக்கொண்டு, தைரியமான தங்கையைத் தூது அனுப்பியிருக்கிறாள்! “அம்மாவுக்கு முடியுமா?” என்று சற்று தயங்கினார். “எல்லாம் முடியும்!” என்று உள்ளேயிருந்து குரல் எழும்பியது. யோசிக்க ஆரம்பித்தார். கிழக்குக் கடற்கரை நெடுஞ்சாலையில் போனால், கோலாலம்பூரிலிருந்து இரண்டே மணிதான். யானைகள் ஆற்றில் குளிப்பதைப் பார்க்கலாம். மரங்கள் அடர்ந்த இடமும் ரம்மியமாக இருக்கும். சில வருடங்களுக்குமுன், யானை ஒன்றின் முதுகில் குழந்தைகளை ஏற்றுவார்கள். அந்த யானை ஆற்றில் நடந்து, பிறகு சாய்ந்துவிடும். எதிர்பாராவிதமாகத் தண்ணீரில் விழுந்த குழந்தைகளின் சிரிப்பும் அழுகையும்! பழைய நினைவுகளால் உற்சாகம் ஏற்பட, “புறப்படுங்க,” என்றார். அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை, அந்த இடத்தில் இன்னொரு மகள் பிறப்பாளென்று. “கஜலட்சுமின்னு எனக்கு ஏன் அக்கா இந்தப் பேர் வெச்சாங்க? எல்லாரும் கஜா, கஜான்னு கூப்பிடறாங்க! நான் யானைமாதிரியா குண்டா இருக்கேன்?” என்று சிணுங்கிய தங்கையிடம், “அப்படி இல்லேடி! யானைங்களைப் பாக்கப்போன இடத்திலே நீ பிறந்துட்டே. அதனால..!” என்று சமாதானப்படுத்தினாள் இந்திரா. முதல் குழந்தைகளுக்கே உரிய பொறுமையும் கருணையும் அவளிடமிருந்தது. “நல்லவேளை, ஜூவில சிங்கத்தைப் பாக்கப் போனப்போ நான் பிறக்கலே!” என்று சிரித்தாள் சிறுமி. ஒரு வருடத்துக்குள் பிறந்த விஜயலட்சுமி தான்மட்டுமல்லாது, அக்காள் நால்வரும் கல்வி, பேச்சுப்போட்டி, ஆடல், பாடல் என்று எதிலாவது சிறக்க தன்னாலானதைச் செய்தாள். ஞானத்திற்குப் பரம சந்தோஷம். ஒவ்வொரு மகளும் பெயருக்கு ஏற்றாற்போல் வளர்கிறார்கள். வயிற்றிலிருக்கும் ஆறாவது குழந்தை சந்தானலட்சுமியா? ஆனால், பிறந்ததோ ஆண்குழந்தை. அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. தன் கனவு பலிக்காமல் போய்விட்டதைக் கணவரிடம் கூறி வருத்தப்பட்டுக்கொண்டாள். “சந்தானம்னு பேர் வைக்கலாம்!” என்று அவர் ஓர் உபாயம் கூறினார். “இனிமே பிள்ளை பிறந்தா இவங்க உயிருக்கே ஆபத்து!” என்று டாக்டர் மிரட்டலாகக் கூற, வேறு வழி புலப்படாது, கருத்தடை சிகிச்சைக்கு உடன்பட்டாள் ஞானம். அவளைப் பார்க்க வந்த கணவருக்கு மனம் பொறுக்கவில்லை. “இந்தச் சமயத்திலே அழக்கூடாதும்மா. பேத்தி பிறக்காம போயிடுமா? அந்தக் குழந்தைங்களுக்கு வித்யாலட்சுமி, தனலட்சுமின்னு பேர் வெச்சா போச்சு! அப்போ ஒன் ஆசைப்படியே நம்ப குடும்பத்துக்கு அஷ்டலட்சுமியும் வந்துடுவாங்க இல்லே?” என்றார். மகள் எப்போது பெரியவளாகப் போகிறாள், எப்போது கல்யாணமாகி, தான் எப்போது பேத்திகளைப் பார்க்கப்போகிறோம் என்று புதிய கவலையில் ஆழ்ந்தாள் ஞானம். நிர்மலா ராகவன் […] இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். தமிழ்-ஆங்கில இருமொழி எழுத்தாளர்.   1967 தொடக்கம் மலேசியாவில் தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதை, கட்டுரை, தொடர்கதை, வானொலி நாடகம், கலை விமர்சனங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் ஆக்கங்கள் மலேசியாவின் பிரபல ஆங்கில மற்றும் தமிழ் இதழ்களிலும் இடம்பெற்றுள்ளன. பல மேடைகளிலும் கருத்தரங்கங்களிலும் உரையாற்றியுள்ளார். இந்தியர்களிடையே காணும் சமுதாயப் பிரச்சினைகளை அலசி, தமது எழுத்துக்களில் அவற்றின் தீர்வுக்கான ஆலோசனைகள் வழங்கி வருகிறார். இளைஞர் மனோநிலைகள் பற்றி அதிகம் எழுதியுள்ளார். நேரடிச் சமூகச் சேவையிலும் ஈடுபட்டவர். இவரது சிறுகதைத்தொகுப்பு “ஏணி” தமிழ்நாட்டுக் கல்லூரி ஒன்றில் இளநிலை பட்டப்படிப்புக்கு பாட புத்தகமாக அமைந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பரதநாட்டியத்திற்கான பாடல்களை கர்னாடக இசைப்பாணியில் எழுதி, பாடிப் பதிவு செய்துள்ளார். பரிசில்களும், விருதுகளும் - “சிறுகதைச் செம்மல்” விருது (1991) - “சிறந்த பெண் எழுத்தாளர்” விருது (1993) - சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான விருது (தங்கப் பதக்கம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2006) - ஆஸ்ட்ரோ, மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய நாவல் போட்டிகளில் மூன்று முறை பரிசு பெற்றிருக்கிறார். - மின்னூல்கள்: தமிழ் –37, ஆங்கிலம் –8 (Amazon Kindle, Amazon paperback) கணியம் அறக்கட்டளை [] தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழலை உருவாக்குதல். பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். எமது பணிகள் - கணியம் மின்னிதழ் - kaniyam.com - கணிப்பொறி சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், மின்னூல்களை இங்கு வெளியிடுகிறோம். - கட்டற்ற தமிழ் நூல்கள் - FreeTamilEbooks.com - இங்கு யாவரும் எங்கும் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில், தமிழ் மின்னூல்களை இலவசமாக, அனைத்துக் கருவிகளிலும் படிக்கும் வகையில் epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் வெளியிடுகிறோம். - தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல். மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். https://github.com/KaniyamFoundation/Organization/issues இந்த இணைப்பில் செயல்களையும், https://github.com/KaniyamFoundation/Organization/wiki இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account