[] [ஒரு வாசகம்] ஒரு வாசகம் சு.கோதண்டராமன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com உரிமை –  Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ் . எல்லாரும் படிக்கலாம் , பகிரலாம் . This book was produced using PressBooks.com. உள்ளடக்கம் - ஒரு வாசகம் - நூல் ஆசிரியர் அறிமுக உரை - அம்மையார் - 1. அம்மையாரின் அன்பு வழி - 2. அம்மையாரின் தாக்கம் - சம்பந்தர் - 3. அரக்கனைச் செற்ற ஆதி - 4. பேரழலாகிய பெம்மான் - 5. உடையிலார், சீவரத்தார் - அப்பர் - 6. நரி பரி ஆனது எப்பொழுது - 7. அப்பரடிகளின் உவமைகள் - 8. இன்பமே எந்நாளும் துன்பமில்லை - சுந்தரர் - 9. வாழ்வாவது மாயம் - மாணிக்கவாசகர் - 10. திருவாசகத்தில் பசு - 11. நீத்தல் விண்ணப்பம் - 12. பொய் கெட்டு மெய் ஆனார் - 13. ஒரு வாசகம் - FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 ஒரு வாசகம் [17721320924_287ff94917_z] ஒரு வாசகம் சு . கோதண்டராமன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சைவ சமயக் குரவர்களாகிய காரைக்கால் அம்மையார், அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகரின் பக்திப் பனுவல்களின் சிறப்பான பகுதிகள் சில இதில் அலசப்பட்டுள்ளன. வடமொழி வேதமும் தமிழ் வேதமும் ஒரே கருத்தை வலியுறுத்துகின்றன என்பதை எடுத்துக் காட்டுகிறது கடைசிக் கட்டுரை. உருவாக்கம்: சு.கோதண்டராமன் மின்னஞ்சல்:kothandaramans@yahoo.co.in   மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார் மின்னஞ்சல்: socrates1857@gmail.com   உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.     2 நூல் ஆசிரியர் அறிமுக உரை சு . கோதண்டராமன் . ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் . கடந்த 25 ஆண்டுகளாக ஓம் சக்தி மாத இதழில் பல கட்டுரைகளையும் கதைகளையும் எழுதி வருகிறார் . இது வரை எழுதி வெளியிட்ட நூல்கள் –  1  வேதநெறியும் சைவத்துறையும் , 2 காரைக்கால் அம்மையார் , 3 பாரதி செய்த வேதம் . 4 வேதம் – சந்தேகங்களும் விளக்கங்களும் . இவற்றில் முதல் மூன்றும் சில மாற்றங்களுடன் மின்னூல்களாக freetamilebooks.com மற்றும் pratilipi.com ஆதரவில் வெளிவந்துள்ளன . இது தவிர திருவாசகத்தை தருமபுர ஆதீன வெளியீட்டுக்காக ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்துள்ளார் . இருப்பிடம் சென்னை . தொடர்பு எண் 9884583101 kothandaramans@yahoo.co.in [pressbooks.com] 1 அம்மையார் 1 அம்மையாரின் அன்பு வழி பலன் கருதா அன்பு காரைக்கால் அம்மையாருக்கு இறைவன் மேல் அன்பு ஏற்பட்டது எப்பொழுது? பிறந்தது முதலே என்று அவர் கூறுகிறார். மழலை பேசத் தொடங்கியதிலிருந்தே இறைவனுக்கு நாமாலை சூட்டத் தொடங்கினார் அவர். இது பலனை எதிர்பார்த்த அன்பு அல்ல. என் துன்பம் தீர்ப்பாயாக என்று இறைவனிடம் வேண்டும் அவர், “இறைவன் என் துன்பத்தைக் களையாமல் மீண்டும் பிறக்க வைத்தாலும் என் அன்பு அறாது, அவனல்லாத பிறர்க்கு ஆளாக மாட்டேன், எழுபிறப்பும் அவனுக்கே ஆளாவேன்” என்கிறார். அவனுக்கு ஆட்பட்டோம் என்ற நினைவே இன்பம் தருகிறது அவருக்கு. பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் (அற்புதத் திருவந்தாதி -1) இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும் படரும் நெறிபணியா ரேனும்- சுடருருவில் என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க் கன்பறா தென்நெஞ் சவர்க்கு. (அ-2) அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும் அவர்க்கேநாம் அன்பாவ தல்லால்- பவர்ச்சடைமேல் பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க் காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள். (அ-3) பிறையும் புனலும் அனல் அரவுஞ் சூடும் இறைவர் எமக்கிரங்கா ரேனுங்- கறைமிடற்ற எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே எந்தையா உள்ள மிது. (அ-23) சிந்தையார்க்கு உள்ள செருக்கு இவ்வாறு, தான் அம்மானுக்கு ஆட்படக் கிடைத்த வாய்ப்பு, தன் தவப் பயனாய்க் கிடைத்தது என்றும் இது பெறற்கரிய பேறு என்றும் அவர் மகிழ்கிறார். “உன் அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன். உன்னை அன்பாலே போர்த்து நெஞ்சினுள் அடைத்து வைத்து விட்டேன். அதில் வேறு யாருக்கும் இடமில்லை. என் நெஞ்சம் நல்ல நெஞ்சம். தனக்கு நன்மை தருவது எது என்று அறிந்து கொண்டு விட்டது. அதனால் காலனையும் வென்றோம், கடுநரகம் கை கழன்றோம், பிறவிக் கடலை நீந்தி விட்டோம்” எனப் பெருமைப்படுகிறார். இந்தப் பெருமித உணர்ச்சி வளர்ந்து செருக்காகவே ஆகிவிட்டதாம். “எந்தையார்க்கு ஆட்செய்யப் பெற்ற இது கொலோ சிந்தையார்க்கு உள்ள செருக்கு” என்று தன் சிந்தையைப் பார்த்து வியக்கிறார். யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம் …………………………………………… அம்மானுக் காளாயி னேன். (அ-7) ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன் ஆயினேன் (அ-8) ……………………………………….அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் (அ-9) தானே தனிநெஞ்சந் தன்னை யுயக்கொள்வான், தானே பெருஞ்சேமஞ் செய்யுமால் (அ-14) இனியோ நாம்உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம் இனியோர் இடரில்லோம் நெஞ்சே- இனியோர் வினைக்கடலை ஆக்குவிக்கும் மீளாப் பிறவிக் கனைக்கடலை நீந்தினோம் காண். (அ-16) மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும் திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய் (அ-31) எந்தையார்க் காட்செய்யப் பெற்ற இதுகொலோ சிந்தையார்க் குள்ள செருக்கு. (அ- 79) நோக்குமிடமெல்லாம் அவனன்றி வேறு இல்லை அம்மையாரின் உள்ளத்தில் உள்ள பக்தி உணர்ச்சி உலகத்துப் பொருள்களில் பிரதிபலிக்கிறது. பாரதியின் உள்ளத்தில் இருந்த நந்தலாலா காக்கைச் சிறகினிலும் பார்க்கும் மரங்களிலும் தோற்றம் காட்டியதைப்போல, அம்மையாருக்கும் எந்தக் காட்சியைப் பார்த்தாலும் செஞ்சடைப் பெம்மானாகவே தோன்றுகிறது. கார் கால வெள்ளம் அவருக்குக் கங்காதரனை நினைவூட்டுகிறது. பூத்துச் சொரிகின்ற கொன்றை மரம் அவருக்குக் கொன்றை மாலை அணிந்த குழகனாகக் காட்சியளிக்கிறது. கிரகண வேளையில் நிலவையும் அதை விழுங்க வரும் பாம்பையும் பார்த்ததும் ஆகாயம் விண்ணோர் பிரானின் விரிசடையாகவே தோன்றுகிறது. மேகங்கள் கங்கையாறு போன்று தோன்றுகின்றன. காலை இளஞ் சூரியனின் செந்நிறத்தில் அவர் செம்மேனிப் பெம்மானைக் காண்கிறார். கடும்பகலின் வெய்யில் அவருக்கு வேத முதல்வனின் வெண்ணீறாகத் தெரிகிறது. மாலைச் சூரியனின் பொன்னிறம் சங்கரனின் சடையாகத் தெரிகிறது. இரவின் இருளோ கறைமிடற்றன் கண்டத்தை நினைவூட்டுகிறது. சீரார்ந்த கொன்றை மலர்தழைப்பச் சேணுலவி நீரார்ந்த பேரியாறு நீத்தமாய்ப்- போரார்ந்த நாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன் பொன்முடிதான் காண்பார்க்குச் செவ்வேயோர் கார். (அ-53) நிலாவிலங்கு வெண்மதியை நேடிக்கொள் வான்போல் உலாவி உழிதருமா கொல்லோ- நிலாஇருந்த செக்கரவ் வானமே ஒக்குந் திருமுடிக்கே புக்கரவங் காலையே போன்று. (அ-64) காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின் வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு- மாலையின் தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு வீங்கிருளே போலும் மிடறு. (அ-65) கலங்கு புனற்கங்கை ஊடால லாலும் இலங்கு மதியியங்க லாலும்- நலங்கொள் பரிசுடையான் நீள்முடிமேற் பாம்பியங்க லாலும் விரிசடையாங் காணில் விசும்பு. (அ-75) எனக்கு இறையருள் பெறத் தகுதி உண்டா? யாம் உய்ந்தோம் என்று பெருமைப்பட்டுக் கொண்டாலும் சில சமயங்களில் அம்மையாருக்குக் கவலை வந்து விடுகிறது. “அவனோ வானவர்க்கும் அரியன். வானவர்கள் மலரிட்டு வணங்கியும் அடி பொருந்த மாட்டார்கள். அப்படி இருக்க எனக்கு என்ன செய்வானோ?” என்று கவல்கிறார் அவர். நினைந்திருந்து வானவர்கள் நீள்மலரால் பாதம் புனைந்தும் அடிபொருந்த மாட்டார்- நினைந்திருந்து மின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற் கென்செய்வான் கொல்லோ இனி. (அ-15) சிந்தையில் சுழலும் ஈசன் இறை வணக்கத்துக்கென்று நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அம்மையார் ஒதுக்கினாரா? அல்ல. நாள் முழுவதும் அவரது சிந்தனையில் இறைவன் பற்றிய நினைவு சுழன்று கொண்டே இருக்கின்றது. ஆயினும் அவன் பால் கொண்ட பேரன்பை இன்னும் பெருக்கு என்று தன் நெஞ்சுக்கு அறிவுறுத்துகிறார். இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா றிதுவன்றே என்றனக் கோர் சேமம்- இதுவன்றே மின்னுஞ் சுடருருவாய் மீண்டொயென் சிந்தனைக்கே இன்னுஞ் சுழல்கின்ற திங்கு. (அ-24) …………………………………………… இகழாதே யாரென்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட பேரன்பே இன்னும் பெருக்கு (அ-31) பேய்க்கணத்தில் ஒன்று நான் அம்மையாரின் உறவினரும் சுற்றத்தாரும் அவருடைய இந்தப் பேய்த்தனமான பக்தியைப் பார்த்து குறை கூறினர் போலும். அவர்களைக் குறித்து, “இந்தப் பேய்க் கோலம் எனக்குப் பொருந்துகிறதா இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை. இறைவனிடம் ஆட்பட்ட அன்பு காரணமாக எனக்கு இம்மைக்கும் மறுமைக்கும் தேவையானது எல்லாம் கிடைத்து விட்டதே. உங்கள் குறை கூறலால் எனக்கு ஒன்றும் தாழ்வு ஏற்படப் போவதில்லை” என்கிறார். திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய் உரைமருவி யாமுணர்ந்தோங் கண்டீர்- தெரிமினோ இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே எம்மைப் புறனுரைப்ப தென் (அ-1) பெறினும் பிறிதியாதும் வேண்டேம் எமக்கீ துறினும் உறாதொழியு மேனுஞ்- சிறிதுணர்த்தி மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்றன் பேயாய நற்கணத்தில் ஒன்றாய நாம். (அ-86) என் பேராசை உலகியல் ஆசைகளை எல்லாம் துறந்து இறைவனை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த அம்மையாருக்கும் ஒரு ஆசை இருக்கிறதாம். சாதாரண ஆசை அல்ல, பேராசை. ஈமப் பெருங்காட்டில் இறைவன் பேய்களோடு நடனமாடுவதை ஒரு நாள் காண வேண்டும் என்பது தான் அது. “இறைவனது பேயாய நற்கணத்தில் ஒன்றாக நான் இருந்து அவனுக்குக் கைப்பணி செய்ய வாய்ப்புக் கிடைத்தால் போதும். அண்டம் பெறினும் வேண்டேன். பிறிது யாதும் வேண்ட மாட்டேன்” என்கிறார் அவர். கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல் அண்டம் பெறினும் அதுவேண்டேன் (அ-72) எமக்கிதுவோ பேராசை என்றுந் தவிரா தெமக்கொருநாள் காட்டுதியோ எந்தாய்- அமைக்கவே போந்தெரிபாய்ந் தன்ன புரிசடையாய் பொங்கிரவில் ஏந்தெரிபாய்ந் தாடும் இடம். (அ-70) எதை வேண்டினாலும் தருவான் அம்மையார் நமக்கு அளிக்கும் செய்தி என்ன? இறைவனை எப்போதும் நினைந்து துதித்துக் கொண்டிருந்தால் விரும்பியது கைகூடும். இறைவன் மனது இரங்கிவிட்டால் அவன் கருணைக்கு எல்லை இல்லை. அவன் எதை வேண்டினாலும் தருவான். எந்த உலகம் வேண்டுமானாலும் அருள்வான் என்பது தான். கருத்தினால் நீகருதிற் றெல்லாம் உடனே திருத்தலாஞ் சிக்கெனநான் சொன்னேன்- பருத்தரங்க வெள்ளநீர் ஏற்றான் அடிக்கமலம் நீ விரும்பி உள்ளமே எப்போதும் ஒது. (அ-73) அரங்கமாப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய்- இரங்குமேல் என்னாக வையான் தான் எவ்வுலகம் ஈந்தளியான் பன்னாள் இரந்தாற் பணிந்து. (அ-78) கீழா யினதுன்ப வெள்ளக் கடல்தள்ளி உள்ளுறப்போய் வீழா திருந்தின்பம் வேண்டுமென் பீர் விர வார்புரங்கள் பாழா யிடக்கண்ட கண்டன் எண் தோளன்பைம் பொற்கழலே தாழா திறைஞ்சிப் பணிந்துபன் னாளுந் தலைநின்மினே. (திருவிரட்டைமணிமாலை-9) நெஞ்சறிவுறுத்தல் அம்மையார் சில பாடல்களில், தான் இறை அருள் பெற்று விட்டதாகவும் இனித் தனக்குத் துன்பமே இல்லை என்றும் மகிழ்கிறார். முடிமேற் கொடுமதியான் முக்கணான் நல்ல அடிமேற் கொடுமதியோம் கூற்றைப்- படிமேற் குனியவல மாம்அடிமை கொண்டாடப் பெற்றோம் இனியவலம் உண்டோ எமக்கு. (அ-69) காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம் மேலை இருவினையும் வேரறுத்தோம்- கோல அரணார் அவிந்தழிய வெந்தீஅம் பெய்தான் சரணார விந்தங்கள் சார்ந்து. (அ-81) வேறு சில பாடல்களில், “என் துன்பத்தை எப்பொழுது தீர்க்கப் போகிறாய், நான் திரும்பத் திரும்பக் கூறியும் நீ காதில் வாங்கிக் கொள்ள மறுக்கிறாயே” என்று வருந்துகிறார். ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டால் கேளாத தென்கொலோ (அ-4) உண்மை என்ன? இந்தப் பாடல்கள் பாடிய காலத்தில் அம்மையார் இறை அருளுக்கு ஆட்பட்டுவிட்டாரா, இல்லையா? ஆட்பட்டு விட்டார் என்றால், சில இடங்களில் எனக்கு அருளாதது ஏன் ஏன்று கேட்கிறாரே, அது ஏன்? இவை வெவ்வேறு காலங்களில், அதாவது அருள் பெறுவதற்கு முன்னும் பின்னும் பாடியவையா? அம்மையார் தன் நெஞ்சோடு பேசி அறிவுறுத்தும் பாடல்களைக் கவனித்தால் இதற்கு விடை கிடைக்கும். “நெஞ்சே, இறைவனுக்கு ஆட்பட்டதால் உனக்கு நீயே பெரும் நலம் சேர்த்துக் கொண்டாய். அவன் பால் கொண்ட பேரன்பை இன்னும் பெருக்கு. இறைவனடி பணிந்தும் அதனை மலர் கொண்டு அணிவித்தும் அவ்வாறு வழிபடும் அடியாரை ஏத்தியும் எந்தையார்க்கு ஆட்செய்ய வாய்ப்புப் பெற்றதால் என் நெஞ்சம் பெருமையே கொள்கிறது” என்று கூறுவதிலிருந்து அவர் இறைவனுக்கு ஆட்பட்டு விட்டார் என்பதையும் பிறவிக் கடலை நீந்திவிட்டோம் என்ற நம்பிக்கை அவருக்கு வந்துவிட்டது என்பதையும் அறிகிறோம். மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும் திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய்- இகழாதே யாரென்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட பேரன்பே இன்னும் பெருக்கு (அ-31) பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால் அணிந்தும் அணிந்தவரை ஏத்தத்- துணிந்தென்றும் எந்தையார்க் காட்செய்யப் பெற்ற இதுகொலோ சிந்தையார்க் குள்ள செருக்கு. (அ-79) “நெஞ்சே, அவனை அடைவதற்கென்று ஒரு முறை உண்டு. அது இல்லாமல் அவனை நீ பெற முடியாது. தளர்ச்சி அடையாமல் அவனை வணங்கு. அவன் புகழை ஓயாது உரை. மனைவி மக்களைச் தஞ்சமென்று எண்ணி அவனடி நினையாது அழிகின்றாய். சாவு வருமுன் நெய்யாடியின் திறம் கேட்டு உய்க. எப்போதும் அவன் அடிக்கமலம் விரும்பி ஒது, நீ கருதியது எல்லாம் உடனே நிறைவேறும். அவன் இரக்கம் காட்டிவிட்டால் எந்த உயர் நிலையிலும் வைப்பான், எவ்வுலகம் வேண்டுமானாலும் ஈந்தளிப்பான். அவனடியாரை வினைகள் தீண்டா, ஈசனது தொண்டர் பாதத்தைக் குறிக்கோளாகக் கொள்க. அவனடி நினையாதாரை விட்டு நீங்கு” என்று கூறும் போது தன் நெஞ்சுக்கு அறிவுறுத்துவது போல மற்றவர்களுக்கு உபதேசம் செய்கிறார் என்பதையும் உலக மக்கள் அனைவரும் தான் பெற்ற இன்பம் பெற வேண்டும் என்று விரும்புவதால் அவர்கள் சார்பில் தான், “எப்பொழுது இடர் தீர்க்கப் போகிறாய்?” என்று கேட்கிறார் என்பதையும் அறிகிறோம். மறித்து மடநெஞ்சே வாயாலுஞ் சொல்லிக் குறித்துத் தொழுதொண்டர் பாதங்- குறித்தொருவர் கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார்மாட் டுள்ளாதார் கூட்டம் ஒருவு (அ-40) திறத்தால் மடநெஞ்சே சென்றடைவ தல்லால் பெறத்தானும் ஆதியோ பேதாய்- நிறத்த இருவடிக்கண் ஏழைக் கொருபாகம் ஈந்தான் திருவடிக்கட் சேருந் திரு. (அ-47) கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும் போதஞ்சி நெஞ்சமென்பாய்த் தளர்ந்திங் கிருத்தல் தவிர்திகண் டாய்தள ராதுவந்தி வளர்ந்துந்து கங்கையும் வானத் திடைவளர் கோட்டுவெள்ளை இளந்திங் களும்எருக் கும்இருக் குஞ்சென்னி ஈசனுக்கே. (தி-1) சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற் பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை அங்கொருநாள் ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை எப்பொழுதும் ஒவாது நெஞ்சே உரை. (தி-6) நினையா தொழிதிகண் டாய்நெஞ்ச மேஇங்கொர் தஞ்சமென்று மனையா ளையும்மக்கள் தம்மையுந் தேறிஓர் ஆறுபுக்கு நனையாச் சடைமுடி நம்பன் நந் தாதைநொந் தாதசெந்தீ அனையான் அமரர் பிரான்அண்ட வாணன் அடித்தலமே. (தி-13) உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள் செத்த மரமடுக்கித் தீயாமுன் உத்தமனாய் நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே கேளாழி நெஞ்சே கிளர்ந்து. (தி-20) 2 அம்மையாரின் தாக்கம் அம்மையாருக்கும் அப்பருக்கும் இடைப்பட்ட இரு நூற்றாண்டுகளில் சைவத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பல. இந்த மாற்றங்களுக்கு அம்மையார் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாக இருந்தார். ஆலங்காட்டிலிருந்து அம்பலம் வரை அம்மையாரின் மிகப் பெரிய கொடை என்று ஒன்றைச் சொல்வதானால் அது ஆடற்பெருமான் வழிபாடு என்று தான் சொல்ல வேண்டும். காரைக்கால் அம்மையார் தான் முதன் முதலாக இறைவனின் நாட்டியக் கோலத்தைப் போற்றுகிறார். அவரது அற்புதத் திருவந்தாதியில் 2, 25, 30, 51, 70, 77, 78, 85, 98, 99 ஆகிய பத்துப் பாடல்களிலும், இரட்டை மணிமாலையில் 14, 15 ஆகிய இரு பாடல்களிலும், மூத்த திருப்பதிகங்களில் எல்லாப் (இருபத்திரண்டு) பாடல்களிலும் அம்மையார் ஈசன் நடனம் ஆடுவதைக் கூறுகிறார். தில்லை அம்மையாரின் பெம்மான் ஸம்ஹிதைக் கால ருத்திரனைப் போல் அச்சம் தரும் தோற்றம் உடையவன். கண்ணுக்கு அழகற்ற எட்டி, இலவம், ஈகை, காரை, சூரை ஆகிய முட்செடிகளுக்கு இடையிலும், காதிற்கு இனிமையற்ற நரி, ஆந்தை, கூகை, ஓமன் ஆகிய பிராணிகளின் ஓலத்துக்கு இடையிலும், நெடும்பல் குழிக்கட்பேய் சூழவும், மலையமான் மகள் மருண்டு நோக்கவும் பிணப் புகையினூடே நடனமாடுகிறான். தில்லை மூவாயிரவர் ஏத்திய அம்பலத்தாடியோ ஆனந்தமே வடிவானவன். அவன் தன் கொவ்வைச் செவ்வாயின் குமிண் சிரிப்பால் அடியார்களுக்கும் ஆனந்தம் அளிப்பவன். ஆனந்தமே பிரம்மம் என்று உபநிடதங்கள் கூறும். வேதம் பரிணாம வளர்ச்சி அடைந்ததற்கு இணையாக இறைவனின் தோற்றம் பற்றிய கருத்தும் மாறி வருவதைப் பார்க்கிறோம். அம்மையாரால் ஏற்படுத்தப்பட்ட ஆடற்பெருமான் வழிபாடு தில்லையில் மையம் கொண்டு தமிழ்நாடு முழுவதும் பரவியது. சோதி வழிபாட்டின் துவக்கம் அம்மையார் போற்றிய எம்மான் சுடலையில் நடனம் ஆடுபவன். சுடலையில் எப்பொழுதும் பிணம் சுடு தீ எரிந்து கொண்டிருக்கிறது. பெருமான் கையிலும் ஒரு பெருந் தீ எரிந்து கொண்டிருக்கிறது. சூரியனும் சந்திரனும் அவனது இரு கண்களாக விளங்க, தீ அவனது மூன்றாவதான நெற்றிக்கண்ணாக உள்ளது. அவன் கண் விழித்துப் பார்த்தால் காமன் ஒண்பொடியாக ஆகிவிடுகிறான். அவன் கையிலிருந்து புறப்பட்ட ஒரு அம்பினால் முப்புரங்களும் வெந்து அழிகின்றன. அம்மையார் இறைவனின் உருவத்தை பலவாறு வர்ணிக்கிறார். அவன் தழற்கொண்ட சோதிச் செம்மேனி எம்மான். சிவந்த நீண்ட சடை, நெற்றியில் ஒரு கண். கறுத்த கண்டம். தலையிலும் மார்பிலும் பாம்புகள். இடையில் புலித் தோல், யானை உரி. காலில் சிலம்பும் கழலும். ஒரு பக்கத்தில் உமை. மறு பக்கத்தில் திருமால். இப்படி எல்லாம் சொல்லால் வர்ணித்தாலும் அம்மையாரால் இறைவனின் இத்தகைய உருவத்தை மனக் கண்ணால் காண முடியவில்லை. சுற்றிலும் எரிந்து கொண்டிருக்கும் தீயின் நடுவே, கையிலும் தீ ஏந்தி, தீப் போன்ற சிவந்த உடலுடன், அழல் வாய்ப் பேய், அழல் கண் பேய் இவற்றின் துணையோடு நடனமாடும் இறைவனை நினைத்தால் அந்தத் தீத் திரளின் சுவாலையில் மற்ற உருவ அடையாளங்கள் மறைந்து போய் சோதி வடிவம் ஒன்றே அவரது மனதில் தங்குகிறது. அதனால் தான் அவர் ‘அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன், இன்றும் திருவுருவம் காண்கிலேன்’ என்றும் ‘சுடருருவில் எரியாடும் எம்மான்’ என்றும், ‘காண்பார்க்குச் சோதியாய்ச் சிந்தையுளே தோன்றும்’ என்றும் ‘ஈசன் திருவுருவம் மின்னுஞ் சுடருருவாய் மீண்டும் மீண்டும் என் சிந்தனைக்கே இன்னுஞ் சுழல்கின்றது’ என்றும் ‘நொந்தாத செந்தீ அனையான்’ என்றும் வர்ணிக்கிறார். இப்படி தீ வடிவமாக நின்றாலும் அவன் உடல் எப்பொழுதும் குளிர்ந்துதான் உள்ளது. தீயைத் தீ சுடுமா? பஞ்ச பூதங்களும் அவனே என்றாலும் தீ மட்டும் அவனுடைய சிறப்பு வடிவமாகக் கருதப்படுவதற்கு வித்திட்டவர் அம்மையார். இறைவன் மாலுக்கும் அயனுக்கும் அளப்பரியன் என்று அம்மையார் சொன்னதையும் சேர்த்துப் பின்னர் வந்த மூவர் முதலிகள் காலத்தில் மாலயன் காணாப் பேரழலாக நின்றான் ஈசன் என்று ஒரு புராணக் கதை தோற்றுவிக்கப்பட்டது. இந்தத் தீ வடிவத்தைச் சம்பந்தர் தன் ஒவ்வொரு பதிகத்திலும் எட்டாவது பாடலில் போற்றினார். வேதமும் தீ வழிபாட்டை முக்கியமாகக் கொண்டதால் வேத நெறியும் சைவ நெறியும் வேறுபாடற்றதாக இணைந்தன. வேத முறைப்படி வேள்வி செய்ய இயலாதவர்களும் தீ வடிவினனான சிவனை வணங்குவதன் மூலம் துயர் நீங்கி நலம் பெற முடியும் என்ற கருத்து வளர்ந்தது. சைவம் மக்கள் சமயமாக மலர்ந்தது. சிவன் மாலுக்கும் அயனுக்கும் அளக்க முடியாதவன் என்று சொன்னார் அம்மையார். சோதி வடிவில் என் சிந்தனையில் சுழல்கின்றான் எனவும் கூறினார். அப்பரும் சம்பந்தரும் இவை இரண்டையும் இணைத்து மாலயன் அறிய முடியாமல் சோதி வடிவமாய் நின்றான் என விரித்தனர். அம்மையார் காட்டிய இறைவனின் சோதி வடிவத்தையும், கருணைப் பண்பையும் மிக அதிகமாகப் பெருமைப்படுத்தி மனமுருகினார் மணிவாசகர். அவரைத் தொடர்ந்து வள்ளலாரோ ‘அருட் பெரும் சோதி தனிப் பெருங்கருணை’ என்பதை ஒரு மந்திரமாகவே உருவாக்கினார். பக்தி இயக்கத்துக்கு முன்னோடி அம்மையார் அம்மையாரின் பாடல்களின் மொழியும் நடையும் சாதாரண மக்களின் அன்றாட அனுபவத்துக்கு ஒட்டி இருப்பதால் அது மக்களை விரைவாகக் கவர்ந்ததில் வியப்பு இல்லை. இறை அருளை அடைதல் எல்லோர்க்கும் எளிது என்று அம்மையார் கூறினார். துன்பக் கடலிலிருந்து விடுபட விரும்புவோரை அவர் அழைத்து எண்தோளன் தாள் பணியுமாறு அறிவுறுத்தினார். வேத வல்லுநர்களையும் அறிவுத் திறம் மிக்கோரையும் அவர் அழைக்கவில்லை. மாறாக, அவர் தன் நெஞ்சுக்கு அறிவுறுத்துவது போல எளிய மக்களுக்கே உபதேசம் செய்கிறார். அதனால் எல்லாத் தரப்பு மக்களும் இறையன்பில் ஈடுபடலானார்கள். சிவநெறி மக்கள் இயக்கமாக மாறியது. பிற்காலத்தில் பல வேறு சாதி மக்களும் நாயன்மார் ஆவதற்கு அம்மையாரே வழி காட்டினார் எனலாம். இன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும் அன்றும் அளப்பரியன் ஆனானை- என்றும்ஒர் மூவா மதியானை மூவே ழுலகங்கள் ஆவானைக் காணும் அறிவு. (அ-19)   எளிய திதுவன்றே ஏழைகாள் யாதும் அளியீர் அறிவிலீர் ஆஆ- ஒளிகொள்மிடற் றெந்தையராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த சிந்தையராய் வாழுந் திறம். (அ-46)     கீழா யினதுன்ப வெள்ளக் கடல்தள்ளி உள்ளுறப்போய் வீழா திருந்தின்பம் வேண்டுமென் பீர் விர வார்புரங்கள் பாழா யிடக்கண்ட கண்டன் எண் தோளன்பைம் பொற்கழலே தாழா திறைஞ்சிப் பணிந்துபன் னாளுந் தலைநின்மினே. (தி-9)     உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள் செத்த மரமடுக்கித் தீயாமுன் உத்தமனாய் நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே கேளாழி நெஞ்சே கிளர்ந்து. (தி-20)   வட இந்தியாவில் புத்த மத எழுச்சியால் நலிவடைந்திருந்த வைதிக சமயம் மீண்டும் தழைக்க உதவியவை புதிதாக எழுதப்பட்ட புராணங்களே. மஹாராஷ்டிரத்தில் இஸ்லாம் மேலோங்கிய நிலையில் அங்கு தோன்றிய சான்றோர்களின் அபங்கங்களே இந்து சமயத்தை நிலை நிறுத்தின. அது போலத் தமிழ் நாட்டில் சமணத்துக்கு எதிராகச் சைவத்தைத் தூக்கி நிறுத்திய பெருமை தேவார திருவாசகங்களுக்கு உண்டு எனினும் அவற்றிற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவை அம்மையாரின் பாடல்களே. பிறவா நிலை பிறவா நிலை விரும்பத்தக்கது தான். ஆனால் இறைவனைப் போற்றிப் பாடும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றால் எத்தனை பிறவிகள் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று அம்மையார் கூறி இவ்வுலக வாழ்வை இடர் எனக் கருதும் சமண சாக்கிய சமயங்களின் கருத்தை மக்கள் மனதிலிருந்து அகற்றினார். அவரைப் பின்பற்றிய சம்பந்தர் சிவ பெருமானை வணங்குவோர் மண்ணிலும் நல்ல வண்ணம் வாழலாம், வானுலகில் நல்ல கதிக்கும் யாதும் ஓர் குறைவில்லை என்ற கருத்தைத் தன் பாடல்கள் முழுவதும் பாடியுள்ளார். அப்பரும் உன் திருவுருவத்தைக் காணும் வாய்ப்புக் கிட்டுமானால் பிறவியை வெறுக்காமல் ஏற்றுக் கொள்வேன் என்று இறைவனிடம் குழைகிறார். இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டு கின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார் –சேக்கிழார்   அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும் அவர்க்கேநாம் அன்பாவ தல்லால்- பவர்ச்சடைமேல் பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க் காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள். – அம்மையார்     மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை கண்ணின் நல்லஃதுறும் கழுமல வளநகர் பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே. –சம்பந்தர்   குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும் இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே. –அப்பர்   அவன் அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் என்ற அம்மையாரின் கருத்து பின்னர் வந்த அப்பர் பிரானின் வாக்கில் எதிரொலிப்பதைக் காண்கிறோம். ‘அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே’ என்கிறார் அவர். ‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்று மணிவாசகர் பாடியதிலும் அம்மையாரின் தாக்கத்தைக் காண்கிறோம். பித்தன் சுந்தரரின் முதல் பாடல் பித்தா என்று துவங்குகிறது. சிவனைப் பித்தன் என்று முதன் முதலாக அழைத்தவர் அம்மையாரே. (பதிகம் 2-4) ‘பலிக்குநீர்வரும் போது நுங்கையிற் பாம்புவேண்டா பிரானிரே’ என்ற சுந்தரரின் திருப்பைஞீலி தேவார வரிகள் ‘நீயுலக மெல்லாம் இரப்பினும் நின்னுடைய தீய அரவொழியச் செல்கண்டாய்- தூய மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி விடவரவம் மேல்ஆட மிக்கு’ என்ற அ-57ஐ நினைவூட்டுகிறது ‘கையோர் பாம்பு அரையார்த்தோர் பாம்பு கழுத்தோர் பாம்பவை’    7.36.10 என்ற சுந்தரரின் வரிகள் அம்மையாரின் பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின் நாணாக மேல்மிளிர நன்கமைத்துக்- கோள்நாகம் பொன்முடிமேற் சூடுவது மெல்லாம் பொறியிலியேற் கென்முடிவ தாக இவர் என்ற அற்புதத் திருவந்தாதி – 28 பாடலை நினைவூட்டுகிறது. கல்வியால் அடையமுடியாது நூலறிவு பேசி நுழைவிலாதார் திரிக என்ற அம்மையாரின் கருத்து கல்வியின் மூலம் அவனை அடைய முடியாது என்று உறுதிப்படுத்துகிறது. நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந்தோர்கட்கே என்று அப்பர் கூறுவதன் கருத்து இதுவே. கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும் என்று இதையே மணிவாசகர் கூறுகிறார். அப்பர் தன் திருக்கழுக்குன்றப் பதிகத்தில் ‘சுடருருவில் என்பறாக் கோலத் தான்’ என்று அம்மையாரின் (அ2 பாடலின்) சொற்றொடரை அப்படியே எடுத்தாள்கிறார். இறைவன் தன்னை ஆண்டு கொண்டு அருள் செய்ததை எண்ணிப் பெருமிதமாகச் சில பாடல்களிலும், எனக்கு எப்பொழுது அருள் செய்வானோ என்று ஏக்கமாக வேறு சில பாடல்களிலும் மணிவாசகர் பாடுவது, அம்மையாரைப் போல், தான் நற்கதி அடைந்தது போதாது, ஏனைய மக்களும் இறை அருள் பெறவேண்டும் என்ற எண்ணத்தினால் தான். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற திருமூலரின் கருத்துக்கு வேர் அம்மையாரின் பாடல்களில் இருப்பதை அவரது நெஞ்சறிவுறுத்தும் பாடல்களில் கண்டோம். இசையும் பக்தியும் பக்தி இலக்கியங்கள் இசை முதலிய கலைகளின் துணை பெறும்போது இவற்றின் தாக்கம் அதிகமாகிறது. அம்மையார் இசை நுணுக்கங்களைப் பற்றிக் கூறியிருப்பதால் அவர் இசை வல்லுநராக இருந்திருக்கக் கூடும். தனது படைப்புகளை அவர் இசையோடு பாடக் கேட்ட மக்கள் அவரைச் சூழ்ந்திருப்பர். அவரைப் பின்பற்றியே அப்பர் முதலானோர் மக்களை நல்வழிப்படுத்தத் தங்கள் பனுவல்களை இசையுடன் பாடும் வழக்கத்தை மேற்கொண்டனர். பதிகம் பாடும் முறை, கடைக்காப்பு பாடுதல் முதலியனவற்றையும் அம்மையாரிடமிருந்து பின்னர் வந்த சமயக் குரவர்கள் ஏற்றுக் கொண்டனர். அம்மையாரும் இஸ்லாமும் அம்மையாரின் தாக்கத்தை இஸ்லாத்திலும் காணலாம். குர் ஆனின் முதல் வசனம், லா இலாஹ் இல்லில்லாஹ் என்பது, ஈசன் அவன் அல்லாது இல்லை என்ற அம்மையார் வாக்கின் (தி-2) நேர் மொழிபெயர்ப்பே. சங்க காலத்திலிருந்தே அராபிய வாணிகர்கள் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் வாணிகம் செய்து வந்தனர். அவர்கள் அம்மையாரைப் பற்றி அறிந்திருக்கக் கூடும். நான் அந்தந்த இன மக்களிடமும் அவரவர் மொழியிலேயே பேசுகிறேன் என்று குர் ஆனில் கூறப்பட்டுள்ளதால் அம்மையாரை, ‘ஈசன் அவன் அல்லாது இல்லை’ என்று பேச வைத்த இறைவனே நபிகள் நாயகத்திடமும் அக் கருத்தை அரபி மொழியில் கூறியதாகக் கொள்ளலாம். 2 சம்பந்தர் 3 அரக்கனைச் செற்ற ஆதி 4 பேரழலாகிய பெம்மான் திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகம் ஒவ்வொன்றிலும் ஒன்பதாவது பாடல், திருமால் அயன் இருவரும் பணிந்து வணங்கும் வகையில் சோதிப் பிழம்பாய் சிவபெருமான் தோற்றம் அளித்த நிகழ்ச்சியை வர்ணிக்கிறது. அந்தப் பாடல்களை மட்டும் இப்பொழுது ஆராய்வோம். கதை எல்லோருக்கும் தெரிந்தது தான். பிரமனும் மாலும் தங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்பதில் முரண்பட்டனர். இந்த இருவர் அல்லாத மூன்றாமவர் தானே இதற்குத் தீர்ப்பு அளிக்க முடியும்! எனவே சிவனிடம் சென்றனர். சிவன் அவர்களுக்கு ஒரு எளிய சோதனை வைத்தார். என்னுடைய அடியையோ முடியையோ யார் முதலில் கண்டு திரும்புகின்றனரோ அவரே பெரியவர் என்பது தான் அது. ‘இது ஒரு பெரிய வேலையா?’ என்ற தருக்குடன் இருவரும் புறப்பட்டனர். சிவன் ஒரு பெரிய தீப்பிழம்பாக உருவெடுத்து நின்றார். அவ்வெரியின் அடி மண்ணுக்குள் புதைந்து இருந்தது. முடி விண்ணுக்கு மேல் இருந்தது. மால் பன்றி உருவெடுத்து மண்ணைக் கிண்டிக் கீழ் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அயன் அன்ன வடிவெடுத்து மேல் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். நீண்ட காலம் ஆகியும் அவர்கள் இலக்கை அடைய முடியவில்லை. இறுதியில் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு சிவனிடம் இறைஞ்சிப் பணிந்தனர். தங்கள் இருவரையும் விடச் சிவனே பெரியவர் என்பதை உணர்ந்தனர். சொல்வளம் ஞான சம்பந்தர் பதிகங்கள் மொத்தம் 386இல் 17 நீங்கலாக மற்றவற்றில் 380 முறை பேரழலாய் நின்ற பெம்மான் கதை பேசப்பட்டுள்ளது. ஒரே விஷயத்தை 380 முறை சொன்னாலும் கூறியது கூறாமல் ஒவ்வொரு முறையும் புதிய சொற்களைப் பயன்படுத்தி இருப்பது அவரது சொல்வளத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. சிவன் மால் மற்றும் அயன் இவர்களது பல வகையான அடைமொழிகள் இந்த வாய்ப்பை அளிக்கின்றன. “வலியவனாகிச் சுடர் வீசிக் கொண்டு நிற்கும் அக்கினி தேவனைப் பற்றிய மந்திரங்களிலே கவிதை மிகவும் செழிப்புற்று இருக்கின்றது. சூட்சுமப் பொருள் ஆழ்ந்து நிற்கிறது. தெய்வ வெறி தெளிந்து நிலவுகிறது. பாட்டுக் கொள்ளுகிற அக்கினி தேவனுடைய தழலும் அவன் உறுமுதலும் ஒளியும் பாடுகிற ரிஷிகளின் அறி்விலே தாவி விட்டன போலும்” என்ற அரவிந்த கோஷின் வார்த்தைகளை மேற்கோள் காட்டிப் பாரதி மேலும் கூறுகிறார், “ஆம், உயர்ந்த கவிதையின் நெறியே அது. இஷ்ட தேவதையின் காந்தி கவியின் உள்ளத்திலே வீசும், அந்த ஒளி பாட்டிலே தெரியும்”. எரியுருவாகி நின்ற ஈசனைப் பற்றிய ஞானசம்பந்தரின் பாடல்களும் அதே போன்று தெய்வ வெறியும் கவிதை ஒளியும் பொருந்தியனவாகத் திகழ்கின்றன. விரிவஞ்சி, ஒவ்வொன்றிலும் சில எடுத்துக்காட்டுகள் மட்டும் பார்ப்போம். சிவசோதியைப் பற்றிய அடைமொழிகளில் சில இவை. 1 அளவிடல் ஒழியவொர் பயமுறு வகை தழல் 2 மேலது நான்முகனெய்தியதில்லை கீழது சேவடி தன்னை நீலது வண்ணனு மெய்தியதில்லை 3 சிந்தையினாலுந் தெரிவரிதாகித் திகழ்சோதி 4 விண்ணுற ஓங்கிய விமலன் 5 எரியுருவாகிய ஈசன் 6 பேரழலாகிய பெம்மான் 7 நிறவுரு ஒன்று தோன்றி எரியொன்றி நின்றதொரு நீர்மை 8 எரியாய் உயர்ந்த பெரியான் 9 அண்டமுற அங்கி உருவாகி மிக நீண்ட அரனார் 10 வளர் தீயுருவமான வரதன் 11 ஆதியினொடந்தமறியாத அழல் மேனியவன் 12 ஊற்றமிகு கீழுலகும் மேலுலகும் ஓங்கியெழு தன்மைத் தோற்றமிக நாளும் அரியான் 13 குரை கழலடி தொழக் கூரெரியென நிறங் கொண்ட பிரான் 14 இருவரும் அஞ்ச எரியுருவாய் எழுந்தான் 15 கூடிய கூரெரியாய் நிமிர்ந்த குழகர் மாலுக்கு சம்பந்தர் வழங்கும் பெயர்கள் – அரி, மால், நாரணன், கண்ணன், மாயன், மதுசூதனன் ஆகியவை ஆகும். மாலின் உடல் நிறத்தைக் குறிக்கும் வகையில் கரியன், கடல் வண்ணன், நீல வண்ணன், பச்சையான், மணிவண்ணன், மைதிகழ் உருவினான், புயலொப்பவன், குளிர்கொண்டல் நிறத்தவன், கார்வணன் ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மால் அழகிய தோற்றம் உடையவர் என்பதை எழில் மால், கோலம் முடி நெடுமால், சீர்நெடுமால், பொற்பமர் வாமனன் என்ற அடைமொழிகள் காட்டுகின்றன. திருமாலின் கண்ணழகைக் கண்ணிகழ் புண்டரிகத்தினன், செங்கண் மால், செய்ய தண் தாமரைக் கண்ணன் என்று வர்ணிக்கிறார். மாலின் தனிச் சிறப்புகளான கருடக் கொடி, துழாய் மாலை, சக்கரம், சங்கு, திரு அமர்ந்த மார்பு இவற்றால் அவர் அடையாளப் படுத்தப்படுகிறார். அவர் பாற்கடலில் பாம்புப் படுக்கையில் அறிதுயில் கொள்வது அகலிடம் நீரேற்றான், அரப்பள்ளியான், அரவணைத் துயின்றான், கடல் கிடந்தான், கிடந்தவன், கோண் நாக அணையான், திகழ் பாற்கடற் கருநிற வண்ணன், நாகத்தணையான் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. வடங்கெட நுடங்குபவன் என்ற சொல் அவர் ஆலிலையில் துயில் கொள்வதைக் கூறுகிறது. அவர் ஆற்றல் மிக்கவர் என்பது அடல்மலி படை அரி, ஆற்றலுடைய அரி என்ற சொற்களாலும், தேவர்களில் பெரியவர் என்பது பெம்மான் என்ற சொல்லாலும், பழமையான தெய்வம் என்பது ஆதிமால் என்ற சொல்லாலும் சுட்டப்படுகிறது. அவர் இலக்குமி தேவியின் இனிய கணவனாக இருப்பது திருமால், எழிலமர் மலர் மகள் மகிழ் கணன், விரிபோதின் மல்குந் திருமகள் தனை மேவினான் என்ற பெயர்களால் கூறப்பட்டுள்ளது. திருமால் பல பிறப்புகளை எடுத்து, மக்களுக்கு நலம் செய்தார் என்பது தோற்றலார் மால், நன்மையான் நாரணன் என்று பகரப்பட்டுள்ளது. ராம அவதாரத்தை, வில்லிமையினால் விறலரக்கனுயிர் செற்றவன் என்று சம்பந்தர் குறிப்பிடுகிறார். மற்றும் கிருஷ்ண, வாமன, வராக அவதாரங்கள் குறிக்கப்பட்டுள்ளன. மற்ற அவதாரங்கள், குறிப்பாக, நரசிம்ம அவதாரம் கூறப்படாதது கவனிக்கத் தக்கது. சம்பந்தர் காலத்தில் இது வழக்கிற்கு வரவில்லை போலும். எல்லாவற்றிலும் மிக அதிகமாகக் கூறப்படுவது அவரது வாமன – திரிவிக்கிரம அவதாரம் தான். அவர் குறுகிய வடிவோடு வாமனனாகச் சென்றதையும் பின்னர் பெரிய உருவெடுத்து விண்ணையும் மண்ணையும் தாவி அளந்ததையும் சம்பந்தர், உயர்ந்தவன் உருக்கொடு திரிந்து எண் பெரிய பண்படை கொண் மால், ஓங்கிய நாரணன், குறிய மாணுருவாகிக் குவலயம் அளந்தவன், சேணியலும் நெடுமால், பேரால் நெடியவன், தரணியளந்த வாமனன், தாவினான், நெடியவன், விண் முடியாப் படி மூவடியால் உலக முழுதுந் தாவிய நெடியான் என்ற அடைமொழிகள் மூலம் சிறப்பிக்கிறார். கண்ணனாக அவதரித்த காலை இளமைப் பருவத்தில் அவர் செய்த விளையாட்டுகளான மண்ணை உண்ட வாயில் உலகத்தைக் காட்டுதல், வெண்ணை திருடியதால் உரலோடு கட்டப்பட்டு அதனுடன் தவழ்ந்து வந்து மருத மரத்திடையே புகுந்தது ஆகிய காட்சிகள் இடந்து மண்ணையுண்ட மால், ஞாலமுண்ட மால், மருதிடை நடவிய மணிவணர், வானகம் வரையகம் மறிகடல் நிலன் எனும் எழுவகைப் போனகம் மருவினான் (ஏழுவகையாக அமைந்த வானகம், மலை, கடல், நிலன் இவற்றை உணவாக உண்டவன்) என்ற சொற்களில் ஓவியமாகின்றன. புள்வாய் பிளந்தான் (பகாசுர வதம்), வேழ வெண்கொம்பு ஒசித்தான் (குவலயாபீடம் என்னும் யானை வடிவில் வந்த அசுரனைக் கொன்றது), கன்று ஒரு கையில் ஏந்தி நல் விளவின் கனி பட நூறி (ஒருகையால் பசுவின் கன்றைப்பற்றி விளமரத்தின் கனி வடிவில் இருந்த கபித்தாசுரனை அழித்தது), கற்குன்றம் ஒன்று ஏந்தி மழை தடுத்த கடல் வண்ணன், அருவரை பொறுத்த ஆற்றலினான் (கோவர்த்தன மலையைத் தூக்கிப் பிடித்தது) என்று அவருக்கு ஏற்பட்ட சிறப்புப் பெயர்களும் கூறப்பட்டுள்ளன. இத்தகைய அருஞ்செயல்களைச் செய்ததால் அவர் அற்புதன் என்று வியந்து பாராட்டப்படுகிறார். இத்தகைய பெருமைகள் படைத்த மால் சிவனாரது அடியைக் காண்பேன் எனத் தருக்குற்று தன் இயல்புக்கு மாறுபட்ட பன்றி உருவம் எடுத்து மண்ணைத் தோண்டி நெடுந்தூரம் சென்றும் வெற்றி பெற முடியாமையால் அவருக்குக் கிடைத்த பெயர்கள் அன்றியல் உருவு கொள்வான், ஏனவ உருவாகி மண் இடந்த இமையோன், காய மிக்கதொரு பன்றி, கீண்டு புக்கார் (அகழ்ந்து சென்றவன்), மருளார் தரு மாயன் (தருக்குற்றவன்), பன்றியர் ஆகியவை. மாலுக்காவது அவதாரங்கள், இளமைப் பருவ விளையாட்டுகள், பகைவர்களை அழித்த சிறப்புகள் உள்ளன. இவை எதுவும் இல்லாத பிரமனையும் ஒரு முறை பயன்பட்ட சொல் மறுமுறை வராத வகையில் வர்ணித்துச் சம்பந்தர் தன் தமிழ் வளத்தை நிரூபிக்கிறார். பிரமனின் தனித்தன்மைகள் வேதம் ஓதுதலும் உலகத்தைப் படைத்தலும், தாமரையில் வீற்றிருப்பதும் தாம். இம்மூன்றையும் சம்பந்தர் பல வகையாக வர்ணிக்கிறார். தாமரை மலர் கவிஞர்களுக்குப் பிரியமான மலர் அல்லவா? அதை வர்ணிக்கப் புகுந்தாலே சம்பந்தருக்குக் கற்பனை பெருக்கெடுத்து ஓடுகிறது. அணிகிளர் தாமரை, அல்லிகொள் தாமரை, ஏடவிழ் நறுமலர், ஏலும் தண் தாமரை, கடி படு கமலம், களங்குளிர்ந்து இலங்கு போது, கள்ளவிழ் மலர், கொங்கு ஆர்ந்த பைங்கமலம், கொய்யணி நறுமலர், சீர் கொள் மாமலர், சுண்ணமலி வண்ணமலர், செய்ய தாமரை, செறி முளரி, சேற்றினார் பொய்கைத் தாமரை, சோதி மலர், தண்டமர் தாமரை, தழல் (தீயின் நிறம் கொண்ட) தாமரை, தாதலர் தாமரை, திருவினார் போது, தேன் அகம் மருவிய செறிதரு முளரி, நகுவாய் மலர், நளிர் மாமலர், நற்றாமரை மலர், நறையார் மலர், நீருடைப் போது, புண்டரிகம், பைந்தாமரை, மாமலர், முள்ளார் கமலம், மென் மலர், வண்டமர் பங்கயம், வரியாய மலர், வளம் பட்டலர் மலர், வளர் போது, வளங்கொள் மலர், வாசமலர், வெள்ளத் தாமரை, வெறிகமழ் தாமரை, வென்றி மாமலர், வேதக் கிளர் தாமரை என்று அது பலபடியாகச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்புடைய மலரில் வீற்றிருக்கும் பிரமனை – இருந்தவன், தாமரையான், துன்று பூமகன் (இதழ் நெருங்கிய தாமரையில் இருப்பவன்), நாட வல்ல மலரான், பூவில் தோன்றும் புத்தேள் (தேவன்), பூவின் உள்வாயல்லி மேலுறைவான், வெண்டாமரை மேல் அயன், செங்கமலப் போதான், மண்ணு கோலம் உடைய மலரான் எனச் சம்பந்தர் போற்றுகிறார். பிரமனைச் சுட்ட மிகுதியாகப் பயன்படும் சொல் அயன் என்பதே. அதற்கு அடுத்தபடியாக நான்முகன், அதே பொருள் கொண்ட வடசொற்கள் சதுர்முகன், திசைமுகன் என்பவையும் ஆம். இச்சொற்கள் பல இடங்களிலும் அடைமொழியுடன் சேர்ந்தே வருகின்றன. விளங்கிய நான்முகன், நிறை நான்முகன், நீதி உற்றிடும் நான்முகன், சீரணங்குற (தெய்வத்தன்மை பொருந்த) நின்றவன் என்பன அவற்றில் சில . அயனுடைய வேதத் தொடர்பைக் குறிக்கும் அடைமொழிகள் இவை – புரை கடிந்தோங்கிய நான்முகத்தான், மெய்த்தவத்தோன், வேத முதலோன், நெறியண்ணல், பொய்யா மறையான், பொய்யா வேத நாவினான், நுணங்கு நூல் அயன் (நுட்பமான நூல்களை அறிந்துணர்ந்தவன்), வேதம் ஓதும் அயன், அந்தணன், அழல் ஓம்புபவன், அறவுரு, ஏடியல், சாம(வேதம் பாடுபவன்), ஆறும் செற்றிருந்தான் (காமம், கோபம் முதலான ஆறு தீக்குணங்களை வென்றவன்), சென்றொருக்கிய மாமறைப்பொருள் தேர்ந்தவன் (தொகுக்கப்பட்ட வேதங்களின் பொருளை நன்கு கற்றவன்), தீயோம்பு மறைவாணர்க்கு ஆதி, நன்று ஆம் நால்மறையான். அவர் பூணூல் அணிந்திருப்பதை, ‘மேலோடி நீடு விளையாடல் மேவு விரிநூலன் வேதமுதல்வன்’ என்ற இன்னிசைத் தொடர் காட்டுகிறது. அவரது உடல் பொன் நிறம் என்பதை பொன்னொப்பான், பொன்னிற நான்முகன் என்பதனால் அறிகிறோம். பிரமனே உலகிற்கு முதல்வர், அவரே உலகம் முழுவதையும் படைத்தவர் என்பதனால் அவர் ஆதி, உலகமெல்லாம் பயந்தவன், ஊனக மருவிய புலனுகர்வு உணர்வுடை ஒருவன், (மன்னுயிர்கட்குத் தனு, கரண, புவன, போகங்களைப் படைப்பவன்), பண்டு ஏழுலகு கண்டான், பயனாகிய பிரமன், (மக்கள் அடையத்தக்க பயன்களில் ஒன்றான பிரமலோகத்தை உடையவன்), மீத்திகழ் அண்டம் தந்த அயன் என்று போற்றப்படுகிறார். தாமரையாள் மகன், கருவருந்தியின் நான்முகன் (சிருட்டி எல்லாம் தன்னிடத்தினின்று உண்டாக்கத் தக்கவன், உந்தியில் தோன்றியவன்), இடையல்லிக் கிடந்தவன் (கொப்பூழ் இடையில் தோன்றியவன்) என்று அவரது பிறப்பு வரலாறு கூறப்படுகிறது. அவரது பெருமைகளைக் காட்டும் பிற அடைமொழிகளாவன- அண்ணல், ஒண்டிறல், கேடில் புகழோன், கோலத்தயன், பெருமகன், மாறிலான். இத்தகு பெருமைகளைக் கொண்ட அயன் சிவனுடைய முடி காண்பேன் எனச் செருவுற்று அன்னப் பறவை வடிவெடுத்துப் பல நாள் பறந்தும் காண முடியாமல் தோற்றுச் சரண் அடைந்ததால் அவருக்கு ஏற்பட்ட பிற பெயர்கள் – விண் பயில மண்பகிரி வண்பிரமன், பிரமப் பறவை, பருத்துருவதாகி விண் அடைந்தவன், பறந்தார், பறவையர், அன்ன வாகனன், அன்னமாக உருவெடுத்தவன், நாணமுடை வேதியன் (தோற்றதற்காக வெட்கப்படுபவன்). மால் அயன் ஆகியோரது பெயர்களையோ அடைமொழிகளையோ பயன்படுத்தாமல் வெறுமனே இருவர் என்ற சொல்லால் குறிப்பிட்ட இடங்கள் 32 உண்டு அவரது பதிகங்களில். அந்த இடங்களில் கூட சம்பந்தர் கூறியது கூறவில்லை. உதாரணத்துக்குச் சில மட்டும் காண்போம். இருவரறியாத ஒருவன் 1.93.9, இருவரேத்த நின்று உருவம் ஓங்குமே 1.94.9, இருவரை அசைவு செய்தீரே 3.97.9, இருவரை இடர்கள் செய்தீரே 3.96.9, இருவரை வெருவுற ஆரழல் ஆயினார்    3.88.9, அன்றிருவர் தேர்ந்துணரா வானூரான்1.61.9, இருவர் தெரியாததோர் தீத் திரள் ஆயவன் 2.18.9 பொருள் சிறப்பு ஒரே கருத்தைத் திரும்பத் திரும்பப் பதிகம் தோறும் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? ராவணன் செருக்கு அடங்கியதைக் கூறும் 8வது பாடலும், மால் அயன் செருக்கு அடங்கியதைக் கூறும் 9வது பாடலும் சமணர் உரையைச் செவி மடுக்காதீர் என்று கூறும் 10வது பாடலும் இந்த மூன்று கருத்துகளையும் மக்கள் மனதில் பதியவைப்பது தான் சம்பந்தரின் முக்கிய நோக்கம் என்பதை உணர்த்துகின்றன. 11 பாடல் கொண்ட பதிகத்தில் நிறைவுப் பாடல் பதிகப் பலன் கூறுவது. பத்தாவது பாடல் சமண சாக்கியத்தைக் கண்டிப்பது. மற்ற ஒன்பது பாடல்களும் சிவபிரான் பெருமையைப் பேசுபவை. முதல் எட்டுப் பாடல்களில் சம்பந்தர், செஞ்சடை, பிறை நிலா, கங்கை, கொன்றை, வன்னி, பாம்புகள், புலித் தோல், யானைத் தோல், கோவணம், எலும்பு மாலை, கையில் பிரம்ம கபாலம், பிச்சைக்குச் செல்வது, இரவு நேரங்களில் சுடுகாட்டில் பேய்க் கணங்கள் சூழ நின்று நடனம் ஆடுவது, அவரது உடலில் இடக்கூறாக அமைந்துள்ள உமை, நீலகண்டம், நெற்றிக்கண் ஆகிய சிவனுக்கே உரிய தோற்றச் சிறப்புகளை வர்ணிக்கிறார். காமனை, காலனை, தக்கனை, சலந்தரனை அழித்தல், முப்புரம் எரித்தல், ராவணனை நசுக்குதல் ஆகிய அவரது அருஞ்செயல்களும் அவற்றில் இடம் பெறுகின்றன. முதலில் சிவனின் பல்வேறு தோற்றச் சிறப்புகளையும் அருஞ்செயல்களையும் விவரித்து விட்டு இறுதியாக ஒன்பதாவது பாடலில் மாலயன் காணா எரியாய் நிமிர்ந்தான் என்று அவர் சொல்வதற்கு ஏதாவது காரணம் இருக்கக் கூடுமா? சிவனாரது தோற்றச் சிறப்புகளுக்கும், அருஞ்செயல்களுக்கும் சிகரம் வைத்தாற்போல இருப்பதை, அதாவது மாலையும் அயனையும் விட மேலானவராக எரி உருவமாக விளங்குவதை இந்த நிறைவுப் பாடலில் அவர் வைத்துள்ளார். முந்தைய பாடல்களில் வர்ணிக்கப்பட்ட தோற்றங்கள் எல்லாம் ஆரம்ப சாதகர்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ளத்தான், சிவனுடைய உண்மையான சொரூபம் பெருஞ் சோதி வடிவமே எனக் கூறுவதே போல அவர் 9வது பாடலில் சிவனது எரியாகி நீண்ட கோலத்தை முன் வைக்கிறார். வரலாற்றுப் பின்னணி வேதமும் புறச்சமயங்களும் வேத வழிபாட்டு முறையில் அக்கினி முக்கிய இடம் பெறுகிறது. மற்றத் தெய்வங்களுக்கு அளிக்கப்படும் ஆகுதியை எல்லாம் சுமந்து செல்பவன் அக்கினி. அவனைச் சில இடங்களில் வேதம் ருத்ரனாகவே குறிப்பிடுகிறது. ஆனால் அக்கினியை அந்தணர் மட்டும் வேள்வி செய்து தான் வழிபட முடியும் என்ற நிலை இருந்தது. அந்தணர்கள் வேள்வி இயற்றியது யாவும் சமுதாய நலனுக்காக மட்டுமே. “மித்திரனும், வருணனும் எங்களுக்கு நல்லவர்களாக இருக்கட்டும்”, “இரண்டு கால் பிராணிகளுக்கும் நான்கு கால் பிராணிகளுக்கும் நலம் உண்டாகட்டும்”, “எங்களைப் பகைவர்களிடமிருந்து காப்பாற்று”, “எங்களுடைய பசுக்களையும் குழந்தைகளையும் காப்பாற்று”, “எங்களுக்குச் செல்வம் கொடு”, “எங்களுக்கு மழை பொழிவி” என்று சமுதாய நலனையே வேண்டுகின்றன வேத மந்திரங்கள். புகழ் பெற்ற காயத்ரி மந்திரம் கூட, “எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” என்று பன்மையில் தான் வேண்டுகிறது. ‘எனக்குக் கொடு’ என்று கேட்கும் சமகம் போன்ற மந்திரங்கள் சில வேதத்தில் இருந்தாலும் அவையும் சமுதாய நலனுக்குரிய வேள்வி செய்யத் தேவையானவற்றைத் தான் எனக்குக் கொடு என்றுகேட்கின்றன. சமண சாக்கிய நிறுவனர்கள் தனி மனிதன் வாழ்வில் அனுபவிக்கும் துயரங்களாகிய பிணி, மூப்பு, சாக்காடு என்பவற்றால் உந்தப்பட்டு அவற்றிலிருந்து விடுபடப் புது வழி காண முனைந்தவர்கள். பிறவி என்றால் துன்பம் தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்த பின், பிறவியே இல்லாத ஒரு நிலையில் துன்பங்களே இரா என்று கற்பனை செய்தனர். துன்பங்களுக்கு ஆசையே காரணம் என்றும், அறநெறி வாழ்வின் மூலம் ஆசையை ஒழித்து விட்டால் பிறவியே அழிந்து போகும் என்றும் கூறினர். பிணி, மூப்பு, சாக்காட்டை ஒழிப்பதில் அவர்கள் வெற்றி பெறாததை மறைப்பதற்காக தனிப்பட்ட மனிதன் முத்தி நிலை அடைய வேண்டும் என்பதையே குறிக்கோளாகப் பிரசாரம் செய்தனர் அவர்கள். இதனால் அவரவரது உயர்வுக்கு அவரவரே முயல வேண்டும் என்னும் கொள்கையும், வேள்வி என்பது செய்பவருக்கு மட்டும் தான் பலன் தரும், மற்றவருக்கு நன்மை இல்லை என்ற தவறான கருத்தும் பரவின. வேள்வி மந்திரங்கள் மறு உலகம் பற்றிக் கூறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் வேள்வி செய்யாதாரும் பக்தியின் மூலம் இறைவனின் அருளுக்கு ஆளாகிச் சிவகதி என்னும் பிறப்பிலா நிலை அடைய முடியும், அப்படி மீண்டும் பிறக்க நேர்ந்தாலும் இறைவனின் திருவடிகளைத் தொழும் இன்பத்தின் முன் உலகியல் துன்பங்கள் ஒரு பொருட்டல்ல என்னும் வழியை முதன் முதலில் எடுத்துக் காட்டினார் காரைக்கால் அம்மையார். அம்மையாரின் வழி நின்ற சம்பந்தர், அக்கினியும் சிவனும் வேறல்ல, சிவனை நீரும் மலரும் கொண்டு போற்றியும் வழிபடலாம் என்ற கருத்தை வலியுறுத்துவதற்காகவே எரியுருவான சிவன் என்ற கருத்தை 9வது பாடல் தோறும் வைத்துள்ளார் எனக் கருத முடிகிறது. இவ்வாறு வேதத்தின் அக்கினி வழிபாட்டைச் சாதாரண மக்களுக்காக எளிமைப்படுத்துவதே அவரது நோக்கமாகத் தெரிவிக்கின்றன இந்த ஒன்பதாவது பாடல்கள். 5 உடையிலார், சீவரத்தார் வேதநெறி தழைக்க, சைவத்துறை விளங்க அவதரித்த திருஞானசம்பந்தர் தன் ஒவ்வொரு பதிகத்திலும் பத்தாவது பாடலில் வேதநெறிக்குப் புறம்பான சமண சாக்கியர்களைச் சாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பதிகத்தின் பதினோராவது பாடல் திருக்கடைக்காப்பு எனப்படுகிறது. அதில் தன் பெயரைப் பதிவு செய்வதோடு இப் பதிகத்தைப் பாடுவதால் என்ன பலன் கிடைக்கும் என்றும் கூறுகிறார். எனவே பத்தாவது பாடலே இறைவனைப் பற்றிய பாடல் தொகுதியின் நிறைவுப் பாடலாக அமைகிறது. இறைவியிடம் ஞானப்பால் உண்டவுடன் அவர் பாடிய ‘தோடுடைய செவியன்’ என்ற முதல் பதிகத்தில் பத்தாவது பாடல் சமண சாக்கியர்களுக்கு எதிராக அமைந்தது திட்டமிடாதது அல்லது இறைவன் செயல் எனக் கூறலாம். ஆனால் மற்றப் பதிகங்களிலும் அதே பாணியைப் பின்பற்றியது இறைவன் வகுத்துக் கொடுத்த அமைப்பை ஒட்டிச் செல்லவேண்டும் என்று அவர் திட்டமிட்டே செய்ததாகத் தோன்றுகிறது. ஒன்பது பாடல்களில் இறைவனின் சிறப்புகளைப் பலபடப் புகழ்ந்துவிட்டுப் பத்தாவது பாடலில் புறச்சமயத்தாரைச் சாடி நிறைவு செய்திருப்பதைப் பார்க்கும்போது முழுப்பதிகத்தின் நோக்கமே புறச்சமயத்தின் ஆதிக்கத்தை வீழ்த்திவிட்டுச் சைவத்தை அரியணை ஏற்றுவது தான் என்பது புலப்படுகிறது. அத்தகைய சமண சாக்கிய எதிர்ப்புப் பாடல்களை மட்டும் இப்பொழுது ஆராய்வோம். சம்பந்தர் பாடிய பதிகங்களின் எண்ணிக்கை (கல்வெட்டுகளின் மூலம் கிடைத்தவை உள்பட) 385. அவற்றில் பெரும்பாலானவை கடைக்காப்பு உள்பட 11 பாடல்களைக் கொண்டவை. சில பதிகங்களில் 12 பாடல்களும், ஒன்றில் மட்டும் 10 பாடல்களும் உள்ளன. இந்த 385 இல் 19 பதிகங்களில் புறச்சமய எதிர்ப்பு வெளிப்படையாகக் காட்டப் பெறவில்லை. 5 பதிகங்களில் 10வது பாடல் கிடைக்கவில்லை. இந்த 24 நீங்கலாக மீதி அனைத்திலும் சமண சாக்கியங்கள் இகழப்பட்டுள்ளன. பெரும்பாலான பதிகங்களில் பத்தாவதாகவும், ஐந்தில் ஒன்பதாவது பாடலாகவும், ஏழில் 11வது பாடலாகவும் இது அமைந்துள்ளது. 47 அடிகள் கொண்ட தொடர்நிலைச் செய்யுளான திருவெழுகூற்றிருக்கையில் 36, 37வது அடியாக இக்கருத்து அமைந்துள்ளது. மதுரையில் பாடிய பதிகங்களில் நான்கில் எல்லாப் பாடல்களிலுமே புறச்சமயத்தைத் தாக்குவது காணப்படுகிறது. சமணம் சாக்கியம் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிக் கொள்கை உடையவை. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்ற கர்மாக் கொள்கை, மறுபிறவிக் கொள்கை, உண்மை, அகிம்சை, புலனடக்கம், புலால் மறுப்பு, இறை மறுப்பு இவை அவற்றின் பொதுக் கொள்கைகள். பௌத்தத்தை விடச் சமணம் இவற்றை அளவு கடந்து வலியுறுத்தியது என்பது தான் அவற்றிற்கு இடையேயுள்ள வேறுபாடு. எனவே தமிழகத்தைப் பொறுத்தவரை அவை இரண்டும் ஒன்றாகவே கூறப்படுகின்றன. சம்பந்தரும் தன் பாடல்களில் அவ்விரண்டையும் சேர்த்தே பேசுகிறார். ஆனாலும் சமண சாக்கியர்களின் தனிப்பட்ட பழக்க வழக்கங்களைத் தனித்தனியாகவே குறிப்பிடுகிறார். மிகுதேரர் எனக் குறிப்பிடப்படுவதால் பௌத்தர்கள் எண்ணிக்கையில் மிகுந்தவர் எனத் தெரிகிறது. ஆனால் சாக்கியத்தை விடச் சமணமே அன்றைய தமிழ்நாட்டில் சைவத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கியது என்பது சம்பந்தர் அதிகமாகச் சமணத்தைப் பற்றிக் குறிப்பிடுவதிலிருந்து அறியலாம். சாக்கியரைப் பற்றிக் குறிப்பிடாத பதிகங்கள் உண்டு. ஆனால் சமணரைப் பற்றிக் குறிப்பிடாதவை இல்லை. இனி, அக்காலச் சமண சாக்கியப் பழக்க வழக்கங்களைச் சம்பந்தர் கூறும் வகையில் காண்போம். உணவு சமண சாக்கியத் துறவிகள் மனைதோறும் பிச்சை எடுத்து வாழ்ந்தனர். சமணர் கையில் உணவை வாங்கி நின்றுகொண்டே உண்ண, சாக்கியர்களோ மண்டை எனப்படும் பாத்திரத்தில் உணவைப் பெற்று அமர்ந்து உண்டனர். இரு வகையினரும் குண்டிகை எனப்படும் சுரைக் குடுக்கையில் அருந்துவதற்கு நீர் வைத்திருந்தனர். அதை உறிகட்டித் தூக்கிச் சென்றனர். சமணர்கள் காலையில் தூங்கி விழித்தவுடன் கண் கழுவுமுன்னே உணவு உண்டதாகச் சம்பந்தர் குறிப்பிடுகிறார். சாக்கியர்கள் அந்த அளவுக்கு உணவுக்குப் பறக்கவில்லை என்பது தெரிகிறது. அவர்கள் காலையில் உணவு உண்டாலும் அது போதுமான அளவில் கிடைக்கவில்லை என்பது, ‘யானைத் தீ எனப்படும் கொடும்பசி வரும் அளவும் உண்ணாமல் உச்சி வேளையில் மிகுதியாக உண்டனர்’ என்று சொல்லப்படுவதால் தெரிகிறது. இருவகையினரும் ஒரு நாளில் இருமுறை, காலையிலும் பகலிலும் மட்டும், உணவு கொண்டனர். இரு வகையினரும் நீர்நிலைகளிலுள்ள மீன்களைக் கவர்ந்து உண்டதாகக் குறிப்பிடுகிறார் காழியார். பௌத்தம் என்றாலே அகிம்சை என்றும் புலால் இல்லாத உணவு என்றும் கேட்டுப் பழகி வந்த நமக்கு அவர்கள் மீன் உண்டார்கள் என்ற செய்தி வியப்பை அளிக்கிறது. ஆனால் சாக்கியம் என்றுமே புலால் உணவை முழுமையாகக் கண்டித்ததில்லை. புத்தரே ஒரு அடியவர் கொடுத்ததை மறுக்கக்கூடாது என்பதற்காகப் பன்றி ஊன் கலந்த உணவை உண்டு அதனால் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக அறிகிறோம். ஊன் உண்ணல் நன்று எனச் சாக்கியரும் தீது எனச் சமணரும் வாதம் புரிந்து கொண்டிருப்பதாகச் சம்பந்தர் கூறுகிறார். ஆனால் சமணரையும் இதே போன்று மீன் உண்பவர் என்று அவர் வர்ணித்திருப்பது மிக அதிகமான வியப்பை அளிக்கிறது. ஏனெனில் சமணர்கள் அகிம்சையை அளவு கடந்து பின்பற்றியவர்கள். நடக்கும்போது புழு பூச்சிகள் மிதிபட்டு இறந்துவிடப் போகிறதே என்பதற்காக மயில் தோகையால் பாதையை நீவிக்கொண்டே நடப்பர் என்று அறிந்திருக்கிறோம். அவர்கள் கையில் மயில் தோகை வைத்திருப்பதைச் சம்பந்தரும் குறிப்பிடுகிறார். இவ்வளவு அகிம்சைக் கொள்கையுள்ளவர்கள் மீன் பிடித்து உண்டிருப்பரா என்பது ஐயமாக இருக்கிறது. மீன் உண்ணும் வழக்கமுடையவர்கள் சமண மதத்தில் சேர்ந்த பின்னும் தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியாதிருந்ததையும் அதை மற்றவர்கள் பார்த்துவிடப் போகிறார்களே என்று அஞ்சி, பள்ளி அருகே உள்ள ஆற்றில் மீன்களைப் பிறர் அறியாமல் கவர்ந்து உண்டதையும் இதிலிருந்து ஊகிக்கிறோம். அதனால் தான் அவர்களது நோன்பைப் பொய்ம்மை நோன்பு என்று சம்பந்தர் எள்ளுகிறார் போலும். சமண சாக்கியர் இருவருமே கஞ்சி உண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. கஞ்சி என்பது இன்று நாம் வழங்கும் பொருளில் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. பொதுவாக எல்லா மக்களும் உண்ணும் பொருளாக இருந்தால் அதை ஒரு இகழ்ச்சிக்குரியதாகச் சம்பந்தர் குறிப்பிட்டிருக்க மாட்டார். “கண் கழுவு முன்னே ஓடிக் கலவைக் கஞ்சியை உண்டவர்கள்” என்ற தொடரிலிருந்து இரவில் உணவு கொள்ளாத அவர்கள் அதிகாலையிலேயே பிச்சைக்குக் கிளம்பிவிட்டிருப்பது தெரிய வருகிறது. அவ்வளவு அதிகாலையில் இல்லறத்தார் நொய் அல்லது மாவு கொண்டு இந்த யாசகர்களுக்காகக் கஞ்சி தயாரித்து இருப்பரா என்பது ஐயத்துக்கு உரியது. மேலும் சமணர் கையில் உணவை வாங்கி நின்ற நிலையிலேயே உண்டவர் எனக் கூறப்படுவதால் அது திரவ வடிவிலுள்ள கஞ்சியாக இருக்க வாய்ப்பு இல்லை. எனவே கஞ்சி என்பது பழைய சோற்றைக் குறிப்பதாக இருக்கலாம். மீந்து போன சோற்றைத் தண்ணீரில் ஊறவைத்துக் காலையில் வரும் யாசகருக்குப் படைத்திருப்பர் எனக் கருதலாம். மேலும் ‘புளித்தட்டையர்’ என்ற சொல்லுக்குப் புளித்த கஞ்சியை உண்பவர் என்று பொருள் சொல்லப்படுவதால் அது புளித்த பழைய சோறாகத் தான் இருக்க வேண்டும். முன்கூறு, பின் கூறு – “மூடிய சீவரத்தர் முன்கூறு உண்டு ஏறுதலும் பின்கூறு உண்டு காடி தொடு சமண்” என்ற தொடர் (திருக்குறும்பலாப் பதிகம்) ஆராயத் தக்கது. மூடிய சீவரத்தர் ஆகிய புத்தர்கள் முன்கூறு உண்டு வெளியேறிய பின்னர், பின்கூற்றை உண்டு காடியை அருந்திய சமணர் என்று இதைப் பொருள் கொள்ளலாம். முன்கூறு பின்கூறு என்பது என்ன? இது சாதாரணமாகப் பொதுமக்கள் உண்ணும் உணவின் முற்பகுதியான குழம்புச் சோற்றையும் பிற்பகுதியான மோர்ச் சோற்றையும் குறிப்பதாக இருக்கலாம். புத்தர்கள் குழம்புச் சாதத்துடன் நிறுத்திக் கொண்டனர், சமணர்கள் மோர் சாதம் மட்டும் சாப்பிட்டனர் என்று கொள்வது தவறாகாது. மற்றொரு இடத்தில் அறுவகைத் தேரர் என்பதற்கு அறுசுவையுடன் கூடிய உணவு உண்ணும் புத்தர் என்று பொருள் கூறப்படுவதால் (1.128 திருவெழுகூற்றிருக்கை – தருமை ஆதீன உரை) அவர்கள் அறுசுவையும் அடங்கிய குழம்பு போன்ற பொருளை உண்டிருப்பர் என்றும் சமணர்கள் அறுசுவை அற்ற மோர்ச் சோற்றை மட்டுமே உண்டிருப்பர் என்பதும் வலுப்படுகிறது. உலக இன்பங்களைத் துய்த்தல் ஆகாது என்னும் சமணக் கொள்கையில் உணவின்பமும் அடங்குவதால் இவ்வாறு ஊகிக்கிறோம். சாக்கியரும் புளிப்பேறிய காடியைத் தட்டில் இட்டு உண்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்தக் காடி என்பது என்ன? அரிசிச் சோற்றை நீரில் பல நாட்கள் ஊறவைத்துப் புளிக்கவிட்டுத் தயாரிக்கப்படும் பானம் இது. இதை உண்டால் வரும் போதை மயக்கம் போன்ற மனநிலை தியானத்துக்கு ஏற்றது என்ற நம்பிக்கை அண்மைக் காலத் துறவிகளிடமும் உண்டு. சமணர்கள் கடுக்காய், சுக்கு இவற்றைத் தின்றது கூறப்பட்டுள்ளது. உடலில் காம உணர்வு தோன்றக் கூடாது என்பதற்காக இதைப் பயன்படுத்தி இருக்கலாம். இதே நோக்கத்துடன் கடுக்காயும் எட்டிக்காயும் சேர்த்து உண்ணும் வழக்கம் அண்மைக் காலத் துறவிகளிடமும் உண்டு. உடை சமணர்கள் ஆடை அணியாமல் இருந்ததும் அவர்கள் அதை நாணுதற்குரிய செயலாகக் கருதவில்லை என்பதும் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓரிடத்தில் மட்டும் (சாய்க்காட்டுப் பதிகம்) நான்கு விரல் அகலமுள்ள கோவணம் அணிந்த குறிப்பு காணப்படுகிறது. அரிதாக ஓரிருவர் இவ்வாறு கோவணம் அணிந்திருக்கலாம். எல்லாச் சமணத் துறவிகளும் ஓலையால் முடையப்பட்ட தடுக்கு ஒன்றைக் கையில் ஏந்தி உடலை மறைத்தனர். உட்காரும்போது தடுக்கின் மேல் அமர்ந்தனர். சாக்கியர்கள் துவராடை அணிந்திருந்தனர். ஆடையில் காவி வண்ணம் ஏற்றுவதற்கு மருத மரத்தின் இலையையோ, காவிக் கல்லையோ, செம்மண்ணையோ பயன்படுத்தினர். அவ்வாடை சீவரம் எனப்பட்டது. இவர்கள் உடல் முழுதும் உடையால் போர்த்தி இருப்பர். நீண்ட போர்வையர் என்றும் இணைப் போர்வையர் (இரு போர்வை போர்த்தியவர்) என்றும் அவர்கள் கூறப்படுகின்றனர். ‘கலிங்கமுடை பட்டைக் கொண்டார்’ என்ற தொடரிலிருந்து சாக்கியர்கள் கலிங்கம் எனப்படும் பட்டாடையை உடுத்தியதை அறிகிறோம். அது கலிங்க நாட்டுப் பட்டாடையாகவும் இருக்கலாம். உறைவிடம் இரு வகையினரும் தத்தம் பள்ளிகளில் தங்கினர். சமணர்கள் மட்டும் பாழிகளில் தங்கியது கூறப்பட்டுள்ளது. அது தவம் புரியும் இடமாக இருக்கலாம். தம் உடலைச் சுற்றிப் புற்றேறும்படி கடுமையாகத் தவம் செய்தனர் என்பதும் தெரிகிறது. உடல் தோற்றம் இருவகையினரும் கருநிறத்தவர் எனக் கூறப்படுவதிலிருந்து அவர்கள் பகல் முழுவதும் வெய்யிலில் உணவுக்காக அலைந்ததால் கருத்திருந்தது பெறப்படுகிறது. சமணர்களைப் பற்றிக் ‘குளித்துணாச் சமணர்’, ‘ஊத்தை வாய்ச் சமண்’ என்று கூறப்படுவதால் அவர்கள் குளிப்பதில்லை என்றும் பல் கூடத் துலக்க மாட்டார்கள் என்றும் தெரிகிறது. உடம்பினை இழுக்கு என்று கருதுவது அவர்களது கொள்கை போலும். இதனால் உடலில் வியர்வை தோன்றி அழுக்கேறி அவரது உடலில் முடைநாற்றம் எப்பொழுதும் வீசிக் கொண்டிருந்ததையும், அவர்கள் இகழத்தக்க உருவுடையோராக இருந்ததையும் ஆளுடைய பிள்ளை கூறுகிறார். மாறாகச் சாக்கியர்கள் நீரில் பலகாலும் மூழ்கிக் குளித்துத் தூய்மை செய்து கொண்டது சொல்லப்பட்டுள்ளது. சமணர்கள் கடுக்காய்ப் பொடியை உடல் முழுவதும் பூசிக் கொண்டதும் சாக்கியர்கள் மருதமரப் பூவை அரைத்துப் பின்பக்கத்தில் பூசி உடலை மறைத்ததும் குறிக்கப்பட்டுள்ளது. இது எதற்காக என்பது தெரியவில்லை. குறைந்த அளவே உணவு கொள்கின்ற சமணரைக் குண்டர் என்று சம்பந்தர் அடிக்கடி குறிப்பிடுகிறார். அது உடல் பருமனைக் குறிக்காமல் கீழ்மையைக் குறிப்பிடுவதாக உரையாசிரியர்கள் சொல்கின்றனர். சாக்கியர்களைப் பொறுத்தவரை குண்டர் என்ற சொல் உடற் பருமனையே குறிப்பதாகும். அவர்கள் உடல் பருத்தவர்கள் என்று தெளிவாகவே குறிப்பிடுகிறார் கவுணியர் கோன். சாக்கியர்கள் வழக்கமான முறையில் தலையை மொட்டை அடித்துக் கொண்டதும் சமணர்கள் பறிதலைக் கையினராக இருந்ததும் கூறப்பட்டுள்ளது. கொள்கைகள் சமணர்கள் தெய்வம் ஒன்று உண்டு என்பதை முற்றிலுமாக மறுத்தனர். தங்கள் சமய குருவாகிய மகாவீரரின் சின்னமான அசோக மரத்தைப் புனிதமாகக் கருதினர். துன்பங்களைத் தாங்குதலே தவத்தின் அடையாளம் எனக் கருதினர். கடுமையான தவத்தால் உடம்பை வாட்டினர். வெய்யிலில் அலைதல், முடியைக் கையினால் பறித்துத் தலையை முண்டிதமாக்கிக் கொள்ளுதல், பல வகை உண்ணா நோன்புகள் ஆகியவற்றின் மூலம் தம் உடலைத் துன்புறுத்திக் கொண்டனர். சாக்கியர்கள் பிடகத்தை வேதமாக உரைத்தனர். இறை மறுப்பைப் பொறுத்தவரை அவர்கள் சமணர்களைப் போல் முழு நாத்திகர்களாக இல்லாமல் சற்றுத் தடுமாற்றமான கொள்கைகளைக் கொண்டிருந்தனர். தெய்வம் இருக்கட்டும் அல்லது இல்லாமல் போகட்டும், அது பற்றிக் கவலைப்படாமல் மனிதனின் துன்பங்களைப் பற்றிச் சிந்திக்க என்னும் புத்தரின் அறிவுரைப்படி, ‘கடவுள் உண்டு, இல்லை’யென்று குழப்பமாகக் கூறினர். “எட்டுத் திக்கிலும் இல்லாத தெய்வம் ஒன்று உள்ளது என்று சாக்கியர்கள் கூறுகிறார்களே, அதனால் என்ன பயன் உள்ளது?” என்று சம்பந்தர் வினவுகிறார். குணங்களும் அறிவும் நிலையில்லாதன எனவும், காணப்படும் உலகப் பொருள்களும், உரைக்கும் உரையால் உணர்த்தப் படும் ஏனைய பொருள்களும் அவ்வாறே அழிந்து தோன்றுமியல்பின எனவும் அவர்கள் கணபங்க வாதம் புரிவதாக அவர் கூறுகிறார். சாக்கியர்கள் போதி எனப்படும் அரசமரத்தைப் புனிதமாகக் கருதினர். இரு சமயத்தாரின் இயல்புகளையும் சம்பந்தர் மிக ஆவேசமாகத் தாக்குகிறார். உணவையே பெரிதாகக் கருதுபவர், வஞ்சகர், நற்குணங்கள் இல்லாதவர், நீதியறியாதவர், அறிவற்றவர், நெறியற்ற கீழ்மக்கள், இழிதொழில் புரிபவர், தந்திரசாலிகள், மயக்க அறிவினர், குற்றங்களையே பலகாலும் சொல்லித் திரிபவர், அஞ்சத் தகுந்த சிரிப்பு உடையவர், தம் தவறான கொள்கையில் வழுவார், நாவிற்கு வெறுப்பை உண்டாக்கும் பொய்ம்மொழி பேசுபவர், நேயமற்றவர், பித்தர், ஒன்றுமுணரா ஊமர், நல்லதை அறியாதவர், வாதுசெய்பவர், நல்வினை நீக்கிய வல்வினையாளர், ஓதியுங் கேட்டும் உணர்வினையிலாதார், உள்கலாகாததோர் இயல்பினையுடையார், குறிக்கோள் இல்லாதவர், பேய் போன்றவர், செருக்குடையவர், ஒரு பயனும் அறியாதவர், முரட்டுத்தன்மை உடையவர், சான்றோர் நெறி நில்லாதவர், தம் மனதுக்கு ஒத்தது மட்டும் சொல்பவர், போலியான தவம் செய்பவர், பொருளல்லாதன பேசுபவர், ஆசி மொழியாதவர், ஏசுபவர், ஈரமிலாதன பேசுபவர், குணமல்ல கூறுவார், போதிய பயிற்சியின்றித் தொடக்க நிலையில் உள்ளவர், குற்றப்பட்ட சமயநெறியை உடையவர், பெருக்கப் பிதற்றுவோர், தடுமாற்றமுறுபவர், அற்பமானவர், அழிதலில் வல்லவர், வாய்த்திறனால் புறங்கூறுபவர், பல்வகை விரதங்களை மேற்கொள்பவர், கைகூப்பி வணங்காதவர், வம்பு செய்யும் இயல்பினர், வீண் தவத்தர், புண்ணியப் பேறு இன்மையால் அன்பு செய்து வழிபாட்டில் நிலைத்திரார், கேட்பவர்க்குத் தெளிவு ஏற்படாதவாறு, “பொருள் இது அன்று, அதுதான்” என்று வாய்க்கு வந்தபடி காரணம் கூறுபவர், பூமியின் கண் நுகரத் தகுவன நுகராதே, துன்பத்தைத் தாமே தேடிக்கொண்டு வருந்துபவர்கள் என்று பல இகழ்மொழிகளால் தூற்றுகிறார். சமண சாக்கியர்களின் புற ஒழுக்கங்களைச் சம்பந்தர் கடுமையாகத் தாக்குவதற்குக் காரணம் என்ன? சமணர்கள் ஆடை இல்லாதிருப்பதையும் சிலர் நால்விரல் கோவணம் அணிந்திருந்ததையும் ஏசும் சம்பந்தர் சிவனின் நக்கத் தோற்றத்தையும் துன்னம் சேர் கோவணத்தையும் மட்டும் புகழுவது ஏன்? சிவன் பலி ஏற்றுத் திரிவதைப் போற்றுதலுக்கு உரிய பண்பாகப் பேசும் அவர் சமண சாக்கியர்களின் பிச்சை எடுத்துண்ணலைக் குறை கூறுவது ஏன்? காரணம் அவர்களது நாத்திக வாதம் தான். அவர்கள் சிவனை அறியார். இறைவன் பாதம் வணங்கல் அறியார். சிவனைக் கண்டு நடுக்கம் உறுவர். வேதவேள்வியை நிந்தனை செய்துழல்வர். “ஆதமில் (அறிவற்ற) அவுணரது பொய் உரைகளைக் கேட்காதீர், அவர்களோடு பேசவும் செய்யாதீர், தர்க்க சாத்திரத்தவர் சொல் இடுக்கண்வரு மொழி, அவர்களுடைய உரைகளைக் கொள்ளாதீர், இவர்களுடன் பெரியோர் நட்புக் கொள்ளார், உண்மை நெறியல்லாத புறச்சமயிகளின் அடையாளங்களைக் கருதாதீர், அவர்கள் கூறும் சமய நெறிகளும் அறவுரைகளும் வஞ்சனை மார்க்கத்தை வகுப்பன, மக்களைத் துன்பநெறியில் செலுத்தும், பழிக்கத்தக்க இவ்வாழ்க்கை நீங்கத் தவம் செய்ய விரும்புவோர் இவர்களது ஞானம் நீங்கிய பொய்மொழிகளைத் தெளியாது இறைவன் இறைவியோடு பொருந்தி வாழும் கோலத்தை வணங்குவீர்களாக, அறியாமை வயப்பட்ட சாத்திரங்களை ஓதும் புத்தர்களும், இழிந்த சமணக் குண்டர்களும் ஊழிக்காலம் வரை உணராது வாழ்நாளைப் பாழ் போக்குவர், அவர்கள் கூறும் மடமையை விரும்பி மயங்கியோர் கானல் நீரை முகக்கக் குடத்தை எடுத்துச் செல்வார் போன்றவராவர், அவ்வாறு சென்றவர் செல்லட்டும், ஏனையோர் விழிப்புப் பெறுக” என்று அறிவுறுத்தும் சம்பந்தர் “அவர்களை அவ்வாறு புறச்சமயத்தில் இருத்திவைப்பவனும் தன்னுடைய உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவனும் சிவனே” என்று கூறி இறைவனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றெனக் குறிப்பால் உணர்த்துகிறார். மாற்றுக் கருத்துகளைச் சகித்துக் கொள்வதும் ஏற்றுக் கொள்வதும் வேதத்தின் அடிப்படைப் பண்பு. அப்படி இருக்க வேதநெறியில் வந்த சம்பந்தர் சமண சாக்கிய சமயங்களை ஏன் பகைமை பாராட்டி வேரறுத்தார்? இச்சமயங்களின் சிறந்த கொள்கைகளாகிய கர்மாக் கொள்கை, மறுபிறப்புக் கொள்கை, அஹிம்சை ஆகியவற்றை வைதிக சமயம் ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் அதை அவர்களை விடத் தீவிரமாகக் கடைப்பிடித்தது. ஏனெனில் அவை வேதத்தில் கூறப்படாதிருப்பினும் அதன் அடிப்படைக்கு மாறானவை அல்ல. ஆனால் இறை மறுப்பு என்பது வேதநெறிக்கு முரணானது. இறைவன் இருப்பதை ஒப்புக் கொண்டு அவருடைய தன்மை இத்தகையது என்று புது வகையான விளக்கம் கொடுத்திருக்குமானால் சமண சாக்கிய சமயங்களும் வைதிக சமயத்தின் உட்பிரிவாக ஆகியிருக்கும். திருமாலும் பிரமனும் சிவனை வணங்குவதாகப் புராணங்கள் தோற்றுவித்ததைப் போலச் சாக்கியக் கடவுளும் சிவனைப் போற்றுவதாகக் கதைகள் எழுந்திருக்கும். சிவலிங்கத்தின் மேல் கல் எறிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் சாக்கியர் ஒருவர். இதுவும் ஒரு வகையான வழிபாட்டு முறை என்று ஏற்றுக் கொண்ட மக்கள் அவரை நாயனாராக ஆக்கியதை நோக்குக. சமணர்களுடன் சம்பந்தர் செய்த வாதம் தான் எத்தகையது? அவர் தன் கொள்கையாக வலியுறுத்தியது இறைவன் உண்டு என்னும் கருத்தை மட்டுமே. திரும்பத் திரும்ப சிவபெருமானின் விந்தைச் செயல்களை மட்டுமே துணையாகக் கொண்டு வாதம் புரியும் அவரது கூற்றை நாத்திகர்களாகிய சமணர்கள் எப்படி ஏற்றுக் கொண்டிருக்க முடியும்? இவை எல்லாம் புராணப் புளுகுகள், கட்டுக் கதைகள் என்று அவர்கள் தள்ளியிருக்கக் கூடும். அனல் வாதமும் புனல் வாதமும் அறிவுக்குப் பொருத்தமான வாத முறைகள் அல்ல. பின் எப்படி அவர் வாதத்தில் வென்றதாக அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்? நடுநிலையோடு தீர்ப்பு வழங்க வேண்டிய அரசனோ, பார்வையாளர்களான பொது மக்களோ இதை எப்படி ஒப்புக் கொண்டார்கள்? உண்மை என்னவெனில் சைவர்களும் வைணவர்களும் பிற சிறு தெய்வ வழிபாட்டினரும் தனித்தனியே பிரிந்து புராணக் கதைகளின் அடிப்படையில் ஒருவரை ஒருவர் தாழ்த்திக் கொண்டிருந்த நிலையில் இவர்களின் முரண்பாடுகளைக் காட்டியே இவை அனைத்தும் பொய் என்று நிரூபித்து வந்த சமண சாக்கியர்களுக்கு எதிராக மக்களை ஒன்றுபடுத்தினார் சம்பந்தர். புராணக் கதைகள் ஒவ்வொரு தெய்வத்தை உயர்த்தியும் ஒவ்வொன்றைத் தாழ்த்தியும் பேசுகின்றன. சிவனை உயர்த்தும் புராணக் கதைகளை அவர் போற்றினாலும் வேதம் ஒன்றே இவை அனைத்தையும் ஒன்று படுத்தும் என்பதால் வேத நெறியையே அதிகம் வலியுறுத்துகிறார். சாக்கிய, சமணக் கொள்கைகள் தான் வடநாட்டிலிருந்து வந்தனவே தவிர இங்கு அதைப் பின்பற்றியவர்கள் யாவரும் தமிழர்களே. அவர்களில் பிராமணரும் உண்டு. இவ்விரண்டு சமயங்களும் தர்க்க வாதத்தின் அடிப்படையில் அமைந்ததால் அவர்களை வாதத்தில் தோற்கடிப்பது எளிதல்ல. “உங்கள் வேதத்தில் சிவனைப் பற்றிய குறிப்பே இல்லையே, எந்த அடிப்படையில் நீங்கள் சிவனை வேத முதல்வன் என்று புகழ்கிறீர்கள்?” என்று அவர்கள் வாதம் செய்திருக்கக் கூடும். எப்பெயரிட்டு அழைப்பினும் இறைவன் ஒன்றே என்ற வேதக் கருத்தை முன் வைத்துத் தான் ஞானசம்பந்தர் அவர்களிடம் எதிர்வாதம் புரிந்திருக்க வேண்டும். திருவாழ்கொளிபுத்தூர் பதிகத்தில் சம்பந்தர் முடியும் ஆயிரம் உடையார், கண்ணும் ஆயிரம் உடையார், வடிவும் ஆயிரம் உடையார், பெயரும் ஆயிரம் உடையார் என்று கூறுவது ருக் வேதம் 10 ஆவது மண்டலம் புருஷ சூக்தக் கருத்தே. அதே பதிகத்தில் சாகை ஆயிரம் உடையார், சாமமும் ஓதுவது உடையார் என்று கூறித் தன் கருத்துகளுக்கு வேத ஆதாரம் உண்டு என்பதைப் புலப்படுத்துகிறார். மக்கள் சம்பந்தரின் கருத்துகளை ஏன் ஏற்றுக் கொண்டார்கள்? நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறிய சமண சாக்கியர்கள் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்த அளவுக்கு உணர்ச்சிக்கு இடம் கொடுக்கவில்லை. மனித வாழ்வு என்பது அறிவு உணர்ச்சி இரண்டின் கலவை அன்றோ? உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் வறட்டுத்தனமான தர்க்க ரீதியாக வாழ்க்கைப் பிரச்சினைகளை அணுகிய சமண சாக்கியர்களின் போக்கினால் அலுப்படைந்திருந்த மக்களுக்கு அம்மையாரின் வழிநின்ற ஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரின் உணர்ச்சிமயமான அணுகுமுறை ஆறுதல் அளிப்பதாக இருந்தது. அன்றாடம் சிறிது நேரம் அறிவைப் புறத்தே ஒதுக்கி வைத்து விட்டு புராணக் கதைகளை நம்பி இறைவனை நினைந்து காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்குதல் மக்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது. அது ஆறுதலாகவும் இன்பமாகவும் இருந்தது. அதனால் தான் அவர்கள் புறச் சமயங்களைப் புறக்கணித்துச் சைவத்துக்குத் திரும்பினர். சம்பந்தரின் இசைத் திறனும் அதில் முக்கிய பங்கு வகித்திருக்க வேண்டும்.    பயமறியாச் சிங்கக்கன்று போன்ற இந்தச் சிவக்கன்றின் காட்டமான தாக்குதலும் அவருடைய இளமையும் மக்களைப் பெரிதும் கவர்ந்திருக்க வேண்டும். சமணர்களால் அழிய இருந்த சைவம் இவரால் புதிய வலுவுடன் வீறுநடை போடத் தொடங்கியது. எனவே தான் சம்பந்தர் சைவசமயக் குரவர்களில் முதலானவராகப் போற்றப்படுகிறார். புத்தரும் மகாவீரரும் வகுத்த கொள்கைகள் சம்பந்தர் வர்ணித்தது போன்ற நாகரிகமற்ற வாழ்க்கை முறையைப் போதிக்கவில்லை. சமுதாயக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு மனம் போன போக்கில் வாழ விரும்பிய சிலர் இச்சமயங்களைப் போர்வையாகப் பயன்படுத்தி அவ்வாறு நடந்து கொண்டிருக்க வேண்டும். உழைக்க விருப்பம் இன்றிப் பிச்சை எடுத்து உண்பதும், ஆடையின்றித் திரிவதும், உடல் தூய்மை பற்றிக் கவலைப்படாமல் இருப்பதும், தவம் என்ற பெயரில் காடியைக் குடித்து விட்டு மயங்கிக் கிடப்பதுமான குறிக்கோள் இல்லாத வாழ்க்கை அண்மைக் காலத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட ஹிப்பி இயக்கத்தைப் போன்று இருப்பதை அறிய முடிகிறது. சமணத்தில் சில காலம் உழன்ற அப்பர் குறிக்கோள் இலாது கெட்டேன் என்று வருந்தியதை நினைவு கூர்க. இந்தக் கலாசாரம் பரவினால் சமுதாயம் முழுமையும் நாகரிகத்தில் பின்னடைவு கொள்ளும் அல்லவா? எனவே இந்தப் போக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டியது ஒரு சமுதாயக் கட்டாயமாக இருந்தது. சமயத்தின் பெயரால் ஏற்பட்ட இந்தத் தவறுகளை மற்றொரு சமயத்தின் பெயரால் ஒழித்துக் கட்டிய சம்பந்தர் ஒரு சமூக சீர்திருத்தக்காரராகவும் விளங்கினார். அமெரிக்காவில் ஹரே கிருஷ்ணா இயக்கமும் யோகமும் பரவிய பின்னர் ஹிப்பிக் கலாசாரம் அழிந்ததை நாம் அறிவோம். 3 அப்பர் 6 நரி பரி ஆனது எப்பொழுது பாண்டிய மன்னனின் அமைச்சராக இருந்த வாதவூரடிகள் அராபிய வணிகரிடம் குதிரை வாங்கக் கடற்கரைப் பகுதிக்குச் சென்றார். அங்கு சிவபெருமான் குருந்த மரத்தடியில் குரு வடிவாக எழுந்தருளி இவருக்கு உபதேசம் செய்தார். வந்த வேலையை மறந்து இறைவனுக்கு ஆலயம் எழுப்புவதில் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொருள் முழுவதையும் செலவிட்டார். அரசனிடமிருந்து அழைப்பு வந்ததும், சிவனிடம் முறையிட, பெருமானும் நரிகளைப் பரியாக்கிக் குதிரைச் சேவகனாக வந்து பாண்டியனிடம் ஒப்புவித்துச் சென்றார். இரவில் அக்குதிரைகள் மீண்டும் நரியாயின. அது கண்டு சினந்த அரசன் மணிவாசகரைச் சிறையிலிட்டான். பின் இறைவன் மணிவாசகரின் பெருமையை அரசனும் பிறரும் உணருமாறு, வைகையில் வெள்ளம் தோற்றுவித்துத் திருவிளையாடல் புரிந்தார். இந்த நிகழ்ச்சி திருவிளையாடற் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. மணிவாசகர் வாழ்வில் நடந்ததாகக் கூறப்படும் இதற்கு அவரது திருவாசகத்தில் அகச்சான்று உள்ளதா? ஆராய்வோம். திருவாசகத்தில் 3 இடங்களில் நரியைப் பரியாக்கிய விபரம் கூறப்பட்டுள்ளது. கீர்த்த்தித் திருவகவல் 36வது வரியில் – “நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்.” திருவேசறவு 1-“நரிகளெல்லாம் பெருங்குதிரை ஆக்கியவாறன்றே உன் பேரருளே.” ஆனந்தமாலை 7- “நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்தாய்.” இது தவிர 9 இடங்களில் சிவன் குதிரைச் சேவகனாக வந்த செய்தி கூறப்பட்டுள்ளது. இந்த 12 இடங்களில் எதிலும், இந்தத் திருவிளையாடல் தனக்காகச் செய்யப்பட்டதாகவோ தன் வாழ் நாளில் நடைபெற்றதாகவோ மணிவாசகர் குறிப்பிடவில்லை. தன்னடக்கத்தின் காரணமாக, மணிவாசகர் தன்னைப் பற்றிக் கூறாமல் இறைவனின் திருவிளையாடலை மட்டும் குறிப்பிடுகிறார் என்ற வாதம் பொருந்தாது. ஏனெனில், மணிவாசகர் பல இடங்களில் இறைவன் தனக்காகச் செய்த பெருங் கருணை பற்றிப் பலவாறாகப் புகழ்கிறார். என் குற்றங்களைப் பொருட்படுத்தாது ஆண்டு கொண்டாயே, இறைவா உன் கருணைத்திறத்தை நான் எப்படி இயம்புவேன் என்று விம்முகிறார். என்னைத் தில்லைக்கு வா என்று பணித்து என்னை உன் அடியவருடன் கூட்டிவைத்தவன் அல்லவா நீ என்று போற்றுகிறார். . நாயினேனை நலமலி தில்லையுட் கோலமார்தரு பொதுவினில் வருகென ஏல என்னை ஈங்கொழித்தருளி அன்றுடன் சென்ற அருள் பெறும் அடியவர் ஒன்றவொன்ற உடன்கலந்தருளி……… கீர்த்தித் திருவகவல் 127- 131 எந்தத் திருவிளையாடலையும் இன்னாருக்காகச் செய்யப்பட்டது என்று கூறும் வழக்கம் இல்லாதவர் மணிவாசகர் என்ற கூற்றும் பொருந்தாது. ஏனெனில், பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சியைக் கூறும்போது, ‘அடியவட்காகப் பாங்காய் மண் சுமந்து’ என்று பிட்டு வாணிச்சியைப் பற்றிக் குறிப்பிடுகிறார். கீர்த்தித் திருவகவல் 15 பாண்டிய மன்னனுக்காகக் குதிரைச் சேவகனாக இறைவன் வந்ததைத் திருப்பாண்டிப் பதிகத்தில் 6 இடங்களில் குறிப்பிட்டு ‘மதுரையர் மன்னன் மறுபிறப்போட மறித்திடும்’ பாண்டிப்பிரான் என்று இறைவனைப் போற்றும் அவர் எந்த இடத்திலும் தனக்காக இறைவன் குதிரை மேல் வந்ததாகக் கூறவில்லை. அதிசயப்பத்து என்ற பகுதியில் அவர் குறிப்பிடும் அதிசயம், மானிடரில் கடையனான தன்னை இறைவன் ஆண்டுகொண்டது தான். மண்ணிலே பிறந்திறந்து மண்ணாவதற் கொருப்படுகின்றேனை அண்ணல் ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாமே. மேலும் அவர் இறைவனின் மிகப் பெரிய அதிசயச் செயலாக வியந்து பாராட்டுவது கல்லைப் பிசைந்து கனியாக்கிய விந்தையைத் தான். ஆம். கல் போன்ற தன் மனத்தை நெகிழ வைத்து ‘மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்து, கை தலை மேல் வைத்து கண்ணீர் ததும்பி உள்ளம் வெதும்பி’ இறைவனைப் போற்றும் நெறியில் ஆற்றுப்படுத்திய செயல் தான் மிகப் பெரிய அதிசயம். கல்லை மென்கனி ஆக்கும் விச்சை கொண்டு என்னை நின் கழற்கன்பன் ஆக்கினாய் – திருச்சதகம் 94   கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக் கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை வெள்ளத் தழுத்தி வினை கடிந்த வேதியனை தில்லை நகர் புக்குச் சிற்றம்பல மன்னும் ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய் – திருவம்மானை 5   இறைவனின் மற்ற திருவிளையாடல்களை வர்ணிப்பது போல, எங்கோ எப்போதோ நடந்தது என்ற முறையில் தான் அவர் நரியைப் பரியாக்கிய திருவிளையாடலையும் கூறுகிறாரே அன்றித் தன் வாழ்வில் அது நடந்ததாகக் குறிப்பிடாத நிலையில் இந்தக் கதை எப்படியோ மணிவாசகர் வரலாற்றுடன் தன்னை இணைத்துக் கொண்டுவிட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, நரியைப் பரி ஆக்கிய திருவிளையாடல் மணிவாசகர் காலத்துக்கு முன்பே நடந்தது என்பதற்கு வலுவான சான்று, மணிவாசகருக்குக் காலத்தால் முற்பட்ட திருநாவுக்கரசரும் இறைவன் நரியைப் பரி ஆக்கிய நிகழ்ச்சியைக் குறிப்பிடுவது தான். அப்பரின் திருவீழிமிழலைப் பதிகத்தில் இறைவன் இடுகாட்டு நரியைப் பரியாகக் கொண்டு மகிழ்வதாகக் கூறுகிறார். எரியினார் இறையார் இடுகாட்டிடை நரியினாற் பரியா மகிழ்கின்றதோர் பெரியனார் தம் பிறப்பொடு சாதலை விரியினார் தொழு வீழி மிழலையே   திருவாரூர்ப் பதிகத்தில் மேலும் தெளிவாக இறைவன் நரியைக் குதிரை செய்பவன் என்றே கூறுகிறார்.   நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவு செய்வானும் விரதங்கொண்டாடவல்லானும் விச்சின்றி நாறு செய்வானும் முரசதிர்ந்தானை முன்னோட முன்பணிந்தமரர்கள் ஏத்த அரவரைச் சாத்தி நின்றானும் ஆரூரமர்ந்த அம்மானே   இதில் இறைவன் எல்லாம் வல்லவன் என்பதற்குச் சான்றாக சில எடுத்துக்காட்டுகள் தருகிறாரே தவிர இந்த நிகழ்ச்சி நடந்ததாக அவர் குறிப்பிடவில்லை. மறைமலை அடிகள் கூறுவது போல மணிவாசகர் திருநாவுக்கரசருக்குக் காலத்தால் முந்தியவர் என்பதை ஏற்றுக் கொண்டாலும் பிரச்சினை தீரவில்லை. தன் காலத்திலும் முற்காலத்திலும் இருந்த பல அடியார்களைக் குறிப்பிடும் அப்பர் பெருமான் மணிவாசகர் பற்றியோ அவர் பொருட்டு நரி பரியாக்கப்பட்டதையோ குறிப்பிடாதததும் சிக்கலைத் தருகிறது. அப்பர் மட்டுமல்ல பிற தேவார ஆசிரியர்களும் மணிவாசகர் பற்றிக் குறிப்பிடவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். எனவே நரியைப் பரி ஆக்கிய நிகழ்ச்சி மணிவாசகர் காலத்தில் நடந்தது அல்ல, இது இறைவனின் எல்லாம் வல்ல தன்மையை விளக்க வந்த ஒரு கூற்று என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. 7 அப்பரடிகளின் உவமைகள் உவமை என்பது அணிகளுக்குள்ளே முதன்மையானது; பிற அணிகளுக்கு அடிப்படையானதும் கூட. உவமை அணியைப் பயன்படுத்தாத புலவர் இல்லை. திருநாவுக்கரசு நாயனாரும் இதனை விரிவாகப் பயன்படுத்துகிறார். இறைவனின் புகழ் உரைக்கும் அதே வேளையில் தன்னைத் தாழ்த்திக் கொண்டு பேசுவது அப்பரடிகளின் தனிச்சிறப்பு. அவரைத் தொடர்ந்து மணிவாசகரும், அருணகிரியாரும், பின்னர் ராமலிங்க வள்ளலாரும் இதே பாணியைப் பின்பற்றினர். நாயனாரின் உவமைகளை பொருள் உவமை, நிகழ்வு உவமை என இருவகையாகப் பிரிக்கலாம். முத்து, பவளம், தேன், குன்று போன்ற உயர்ந்த பொருட்களை உவமையாக்குவது பொருள் உவமையாகும். இந்த உவமைகள் பெரும்பாலும் ஒரு சொல் அல்லது இரு சொல்லாக இருக்கும். பொதுவாக, இறைவனை வர்ணிக்கும்போது பொருள் உவமைகளைப் பயன்படுத்துகிறார். வெள்ளிக் குன்றன்ன விடையான் கருமணிபோற் கண்டத்தழகன் முத்தினைப் பவளத்தை முளைத்த வெம் தொத்தினைச் சுடர் போலொளிப் பித்தனை சுடரைப் போலொளிர் சுண்ண வெண்ணீற்றனை கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே   ஆகியவற்றை இதற்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். தன் கீழ்மையைக் குறிப்பிடும்போது நிகழ்வு உவமைகளைப் பயன்படுத்துகிறார். சொல் தொடர்களாக உள்ள இவை ஒரு நிகழ்வாகவோ, ஒரு கதையின் சுருங்கிய வடிவமாகவோ அல்லது பழமொழியாகவோ இருக்கக் காண்கிறோம். அத்தகைய உவமைகளில் சிலவற்றைப் பார்ப்போம். ஊருக்குப் புதியவன் ஒருவன் ஒரு குளத்துக்கு வருகிறான். அக்குளத்தின் ஆழம் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறான். குளத்துக்கு ஒரு காவல்காரர் உண்டு. ஆனால் அவர் தன் கடமையைப் புறக்கணித்து எங்கோ போய்விட்டார். அந்நிலையில் குளக்கரையில் நின்று கொண்டிருந்த சிலரை அவன் வினவுகிறான். அவர்களோ வம்பர்கள். ‘குளத்தின் ஆழத்தை நீயே தெரிந்து கொள்’ என்று சொல்லி அவனைக் குளத்துக்குள் தள்ளிவிட்டார்கள். ஆழம் நிலை கொள்ளவில்லை. எந்தத் துறைப் பக்கம் சென்றால் கரையேற முடியும் என்பதை அறியாமல் அவன் தவிக்கிறான். இந்த நிலையில் தான் இருப்பதாக அப்பர் தெரிவிக்கிறார். உய்யும் வழியை முறையாக அறிவிப்பாரின் நட்பு எனக்கு முன்னதாகக் கிடைக்கவில்லை. வீணர்களின் வார்த்தையைக் கேட்டு சமணம் என்னும் ஆழம் தெரியாத குளத்தில் விழுந்து தடுமாறி, சூலை நோயால் துன்புற்று நிற்கின்றேன். சிவபெருமானின் பெருமையை அறிந்தோரின் வார்த்தைகளை முன்னமே நான் கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காதே என்று வருந்துகிறார். காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற் கரைநின்றவர் கண்டுகொளென்று சொல்லி நீத்தாய கயம்புக நூக்கியிட நிலைகொள்ளும் வழித்துறை ஒன்றறியேன் வார்த்தை இது ஒப்பது கேட்டறியேன் 4.1.5 காம வயப்பட்டு இறைவனை மறந்து திரிவர் பலர். ஏதோ நல்வினைப் பயனால் அவர்களுக்கு இறையருள் நெறிக்குத் திரும்பும் வாய்ப்புக் கிட்டுகிறது. ஆனால் அவர்கள் மனமோ பழைய பொய்ந் நெறியிலேயே செல்ல விழைகிறது. உழுத வயலையே மறுபடியும் யாராவது உழுவார்களா? இந்தப் பேதை நெஞ்சம் மட்டும் ஏன் இப்படிப் பழைய பாதையிலேயே நாட்டம் கொள்கிறது என்று கேட்கிறார் அப்பர் பெருமான். எழுது பாவை நல்லார் திறம் விட்டு நான் தொழுது போற்றி நின்றேனையுஞ் சூழ்ந்துகொண்டு உழுத சால்வழியே உழுவான்பொருட்டு இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே. 5.90.8 நரி ஒன்று வாயில் கவ்விய நல்ல ஊனுடன் நீர் நிலையைக் கடந்து செல்லும் போது அங்கு ஒரு வரால் மீனைக் கண்டு அதனை அடைய விரும்பி தன் வாயில் இருந்ததையும் இழந்த கதை போல மக்கள் கிட்டாத பொருட் செல்வத்திற்கு ஆசைப்பட்டு எளிதில் கிட்டியதாகிய சிவ பக்தியை இழந்து விடுகின்றனர். அத்தகையோருக்கும் சிவபெருமான் அருள் புரிவார். நரிவரால் கவ்வச் சென்று நற்றசை இழந்தது ஒத்த தெரிவரால் மால்கொள் சிந்தை தீர்ப்பதோர் சிந்தை செய்வார் 4-27-5   ஒரு நல்ல இல்லத்தரசி என்றால் நண்பகலில் பசிக்கும் என்பதை உணர்ந்து முற்பகலில் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வாள். பேதையாக இருந்தால் முற்பகலை வீணே கழித்துவிட்டு, பசி வந்த பின் உணவு தயாரிக்க முற்படுவாள். அது போலப் பேதையாகிய நான் வாழ்வின் முற்பகுதியை வீணே கழித்து விட்டு, முதுமையில் உடல் நலிவுற்றபின் இறை வழியைத் தேடுகின்றேன் என்று தன்னை இகழ்ந்து கொள்கிறார் வாகீசப் பெருமான். பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன்    4.28.1 நீர்க் கரையில் நிற்கும் கொக்கு தனக்குத் தேவையான உணவைத் தேடிப் பெறுகிறது. மரத்தின் மீது அமர்ந்துள்ள கொக்கோ வயிற்றை நிரப்ப முயற்சி செய்யாமல் பசியால் வாடி வாய் விட்டு அலறுகிறது. அது போல மக்கள் துன்பத்தில் உழன்று அலறுகிறார்களே அன்றி உய்யும் வழியைக் கடைப்பிடிக்காமல் தீய குணங்கள் ஆகிய சரக்கைச் சுமந்து திரிகிறார்கள் என்கிறார் அடிகள். மரக்கொக் காமென வாய்விட்டலறி சரக்குக் காவித் திரிந்து 5-75-1 முன்னாள் சமணராகிய அவர் நகைப்புக்குரிய தன் பழைய நிலையை விவரித்து விட்டு, அதிலிருந்து தான் தப்பியதையும் கூறுகிறார். சமணத் துறவிகள் பிச்சை உணவைக் கையில் ஏந்தி உண்பர். கைகளிலிருந்து நெய் கீழே சொட்டும்போது, அதைத் தவிர்க்கக் கைகளை உயர்த்தாமல், கழுத்தைக் கீழே வளைத்துக் கைகளருகே கொணர்வித்து, நிலைகுலையாமல் இருப்பதற்காகக் கால்களை விரித்துக்கொண்டு நின்றவாறே உண்பர். அத்தகைய கீழ்மக்கள் கூறிய பொய்யுரைகளை மெய்யெனக் கருதி அவர்கள் குழுவினிடைக் கலந்து, பின் அவ்வேடர்கள் விரித்த வலையில் அகப்படாது அத் தீங்கினின்றும் தப்பிப் புறமே வந்து சேர்ந்தேன். கையெலாம் நெய்பாயக் கழுத்தே கிட்டக் கால்நிமிர்த்து நின்றுண்ணுங் கையர் சொன்ன பொய்யெலாம் மெய்யென்று கருதிப் புக்குப் புள்ளுவரால் அகப்படாது உய்யப் போந்தேன் 6.11.9 இறைவனை வழிபடுவதற்குரிய தலங்கள் உள்ளன. அங்கு சென்று உய்யும் நெறியிற் கலவாமல் மக்கள் இன்பத்தை எங்கெங்கோ தேடுகின்றனர். ஆற்றில் தொலைத்த பொருளைக் குளத்தில் தேடும் அறிவிலிகள் உண்டோ என்று வியக்கிறார் நாவுக்கரசர். துன்மதியால் ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற் தேடிய ஆதரைப்போற் காற்றிற் கெடுத்து உலகெல்லாந் திரிதர்வர் காண்பதற்கே. 4.97.6 இறைவா, ஏன் அடியேனை அறிவில்லாத சமணரோடு உறவு கொள்ளச் செய்து குருடனுக்கு ஊமை வழிகாட்டுவித்தாற் போன்று செய்துவிட்டாய் என்று வினவுகிறார். கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு வித்தென்னைக் கோகுசெய்தாய் 4-100-2 பயன் அற்ற பாழ் நிலத்தில், நல்ல நீரை வீணாகப் பாய்ச்சியது போன்ற தன் மடமையை வெளிப்படுத்துகிறார். பாழுக்கே நீரிறைத்து வழியிடை வாழ மாட்டேன் 4-31-6) ஐம்பொறிகளால் பலவாறாக வருத்தப்பட்டு உப்பங்கழியில் அங்கும் இங்கும் அலையும் தோணி போலவும் தான் இருந்ததாக அப்பர் பெருமான் கூறுகிறார். கழியிடைத் தோணி போன்றேன் 4.31.6 செஞ்சுடர் விளக்கத்தில் (சூரிய உதயத்தில்) கூவுங் கோழியை விலக்குவார் உளரோ? கோழி தானே கூவித் தானே அடங்கும். அவ்வாறே தாம் தகாதன செய்யும் காலத்தில், விலக்குவாரின்மையால் தாமே செய்து தாமே ஓய்ந்ததைக் குறிப்பிடுகிறார். விலக்குவார் இலாமையாலே விளக்கத்திற் கோழி போன்றேன் 4.31.5 துன்பத்தை அனுபவித்தால் தான் கீழ்மக்களுக்கு உண்மை புலப்படும் என்னும் பொருள் பொதிந்த வார்த்தைக்கு இலக்கியமாகத் தான் இருந்ததையும் குறிப்பிடுகிறார். உற்றலாற் கயவர் தேறார் என்னும் கட்டுரையோடு ஒத்தேன் 4.31.8 அப்பரடிகளின் தேவாரத்தில் பழமொழிப் பதிகம் என்றே ஒன்று உண்டு. பரம்பரைச் சைவராகிய அவர் சமண சமயத்தைத் தழுவி உறியைத் தூக்கிக்கொண்டு திரிந்தது, பெருமானைக் கையினால் தொழாது காலத்தை வீணாக்கியது, சமணர்கள் செய்த செயல்களில் அகப்பட்டுப் பல்லாண்டுகள் துன்புற்றது, பயனுடைய பொருளை விடுத்துப் பயனில்லாத பொருளைக் கைகொண்டு வாழ்நாளை வீணாய்க் கழித்தது ஆகியவற்றிற்கு ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழியை உவமையாகக் காட்டுகிறார். அந்தப் பழமொழிகள் கீழே தரப்பட்டுள்ளன. சுவையுடைய இனிய கனி இருக்கவும் அதனை விடுத்துச் சுவையற்ற காய்களை விரும்பினேன். கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே. 4.5.1 கைப்பற்றுதற்கு எளிதாகவும், உண்பார்க்குச் சுவையை உடையதுமான முயலை விடுத்துக் கைப்பற்றுதற்கும் அரிதாய், கைக்கொண்டாலும் உண்ணத் தகுதியற்றதாய் உள்ள காக்கையின் பின் சென்ற அறிவிலியைப் போன்றவன் நான். முயல்விட்டுக் காக்கைப் பின் போனவாறே. 4.5.2 அறம் விலை கொடுக்காமலேயே கிட்டவும் அதனை விடுத்து, பாவத்தை விலை கொடுத்துப் பெற்ற அறிவில்லாதவன். அறமிருக்க மறம் விலைக்குக் கொண்டவாறே. 4.5.3 திரவ வடிவமாக இருக்கும் குளிர்ந்த நீரினால் திடப் பொருளாகிய பொம்மையைச் செய்ய முற்படுபவரைப் போன்றவன். பனிநீராற் பாவை செயப் பாவித்தேனே. 4.5.4 ஒருவன் ஏற்படுத்திய சண்டையில் அதனோடு எந்தத் தொடர்பும் இல்லாத மற்றவன் அகப்பட்டுத் துன்புறுவது போலத் துன்புற்றேன். ஏதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே. 4.5.5 இருட்டறையில் மலட்டுப் பசுவைப் பால் வேண்டிக் கறக்க முனைந்து உதைபடும் அறிவிலி நான். இருட்டறையின் மலடு கறந்து எய்த்தவாறே. 4.5.6 விளக்கு இருக்கும்போது, மின்மினியினுடைய தீயைக் குளிர் காயக் கொள்வாரைப் போன்றவன். விளக்கிருக்க மின்மினித்தீக் காய்ந்தவாறே. 4.5.7 மக்கள் குடியில்லாத ஊரிலே பிச்சை எடுக்கச் சென்று இளைத்த அறிவில் வறிஞன். பாழூரிற் பயிக்கம் புக்கு எய்த்தவாறே. 4.5.8 செய்தற்குரிய செயலாகத் தவம் இருக்கும்போது, அதனை விடுத்து, பயனற்ற செயல்களைச் செய்து பெருமிதம் கொண்டேன். தவமிருக்க அவஞ்செய்து தருக்கினேனே. 4.5.9 மெல்லுதற்கு ஏற்றதாய் மிகுசுவை உடையதாய் இருக்கும் கரும்பை விடுத்து, கடிக்க இயலாத சுவையற்ற இரும்பைக் கடித்தேன். கரும்பிருக்க இரும்பு கடித்தெய்த்தவாறே. 4.5.10 அப்பரடிகள் மக்களின் பொதுவான இயல்பினைத் தன் மேல் ஏற்றிக்கொண்டு அவர்களுக்காக இறைவனை வேண்டுகிறார். அவர் தம்மிடம் இருப்பதாகக் கூறும் தீக்குணங்கள் நம் ஒவ்வொருவரிடமும் உள்ளன. இந்த உவமைகளைக் கொண்டு அதை அழுத்தம் திருத்தமாக நம் உள்ளத்தில் பதிய வைப்பதன் மூலம் நம் குறைகளை நாம் உணர வைத்து முன்னேற வழி காட்டுகிறார் அவர். 8 இன்பமே எந்நாளும் துன்பமில்லை ஒரு துன்பமில்லாத வாழ்வுதான் எல்லோரும் விரும்புகிறோம், ஆனால் யாரும் அப்படி வாழ முடிவதில்லை. துன்பத்துக்குக் காரணம் என்ன? ஆசையே என்று சமண சாக்கிய சமயங்கள் கூறுகின்றன. சமணத்தில் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்த நாவுக்கரசர் ஆசைகளை முற்றிலுமாக ஒழித்துத் தானே துறவியாக வாழ்ந்தார்? அவருக்கு ஏன் சூலை நோய் ஏற்பட்டது? இது போன்ற விளக்கம் சொல்ல முடியாத துன்பங்களுக்குக் காரணம் முன்வினை என்கின்றன அச்சமயங்கள். நமக்கு வரும் துன்பங்களை இரு வகையாகப் பிரிக்கலாம்- நிகழ்காலத் துன்பங்கள், வருங்காலத் துன்பங்கள். நாளைய துன்பங்களின் நினைவே நடுங்க வைக்கிறது. அதைத் தான் அச்சம் என்கிறோம். நம்மைப் போன்ற சராசரி மனிதர்கள் நாள் முழுவதும் ஆயுள் முழுவதும் எதாவது ஒன்றுக்கு அஞ்சித்தான் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். அரசன் தீயநெறியில் நடப்பவனாக இருந்தால் அவன் கொடுக்கவிருக்கும் தண்டனைக்கு அஞ்சி, உயிர் போய்விடுமோ என்று அஞ்சி நாமும் பொய்மை ஒழுக்கங்களைப் பின்பற்ற வேண்டியிருக்கிறது. அதன் விளைவாக நரகத்தில் இடர்ப்பட வேண்டியுள்ளது. அச்சமும் இன்பமும் ஒன்றுக்கொன்று எதிரானவை. ஆயிரம் இன்பங்களுக்கு நடுவில் இருத்தி வைத்தாலும் எதிரில் அச்சம் தரும் பொருள் ஒன்று இருந்து விட்டால் அந்த இன்பங்களை அனுபவிக்க முடியுமா? எனவே துன்பத்தோடு கூட அச்சத்தையும் ஒழிக்க வேண்டும். முன் வினைப்பயனாக விளைந்த துன்பங்களை நீக்குவது எப்படி? அவற்றை அனுபவித்துத் தான் தீர்க்க வேண்டும் என்று சமணம் சொல்கிறது. அவற்றிலிருந்து தப்பிக்க முயன்றால் மீண்டும் பிறந்து அனுபவிக்க நேரிடும். இந்தப் பிறவியிலேயே அனுபவித்துவிட்டால் மறுபிறவி இல்லாமல் போகும். சமணத்துறவி நாவுக்கரசருக்குச் சூலை நோய் ஏற்பட்டது. அனுபவித்தால் தீர்ந்துவிடும் என்று பல்லைக் கடித்துக்கொண்டு அதை ஏற்றுக் கொண்டார். நோய் தீர்வதற்குப் பதிலாக, வர வர மிகுதிப்பட்டது. அவரால் தாங்க முடியவில்லை, கதறத் தொடங்கினார். தன் சகோதரியின் ஆலோசனையின் பேரில் சிவனைத் தஞ்சம் அடைந்தார். அதிகை வீரட்டானப் பெருமானிடம் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர், சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் என்று முறையிட்டார். நோய் நீங்கியது. அவர் ஒரு புதிய உண்மையைக் கண்டறிந்தார். துன்பம் நீங்க, ஆசையை ஒழித்தால் மட்டும் போதாது, ஆலமர் செல்வனிடம் முழுமையாகச் சரண் அடையவும் வேண்டும். ஆசையும் முன்வினையுமே துன்பத்துக்குக் காரணம் என்ற கொள்கையைச் சமண சாக்கியங்களிலிருந்து ஏற்றுக் கொண்ட சைவம் துன்பத்திலிருந்து விடுபட ஒரு தீர்வையும் அளித்தது. நாவுக்கரசர் சமணம் விட்டுச் சைவத்திற்கு வந்து சேர்ந்தார். சமண குருமார்கள் அரசனிடம் தங்களுக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி அவருக்குப் பல துன்பங்களை ஏற்படுத்தினர். அரசனின் பகைமை தொடர்ந்து துன்பம் தந்தது. நஞ்சு ஊட்டப்பட்டார், நீற்றறையில் தள்ளப்பட்டார், கடலில் தள்ளப்பட்டார். அவர் அஞ்சவும் இல்லை, துன்பப்படவும் இல்லை. உயிர் போவதைப் பற்றி அஞ்சுபவர்கள் தாம் அரசனுக்குக் கட்டுப்பட்டு வாழவேண்டும். இவருக்கோ நரகம் பற்றிய அச்சம் கூட இல்லை. எதற்கும் அச்சம் இல்லாததால் பொய் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. எந்தப் பிணியும் நம்மைப் பிணிக்காது, இன்பமாக வாழ்வோம், இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்று முழங்கினார். நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை தனக்கு இந்த நிலை எப்படி ஏற்பட்டது என்பதையும் அடுத்த பகுதியில் கூறுகிறார். அரசர்க்கெல்லாம் பேரரசனான சங்கரனுக்கு அடிமையாகத் தன்னை ஆக்கிக் கொண்டுவிட்டார் அவர். அவர் யாருக்கு, எதற்கு அஞ்ச வேண்டும்? தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே. இந்த அச்சமின்மை அவரது பாடல்கள் எல்லாவற்றிலும் தொனித்தாலும் சில பாடல்களில் அது தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, திருநீறும், பிறையும், புலித்தோல் ஆடையும், பவளம் போன்ற நிறமும், காளையும், மார்பில் பரவியிருக்கின்ற பாம்புகளும், கெடில ஆற்று நீரும் உடைய ஒப்பற்ற அதிகை வீரட்டருடைய அடியவர்கள் நாம். ஆதலின் நமக்கு அஞ்சுதற்குரிய பொருள் யாதும் இப்பொழுது இல்லை. இனித் தோன்றப் போவதும் இல்லை. சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும் வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும் அண்ண லரண்முர ணேறும் அகலம் வளாய அரவும் திண்ணன் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம் அஞ்சுவது யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை. தனக்கு இன்றும் அச்சமில்லை, தன்னை அச்சுறுத்தக்கூடிய பொருள் நாளையும் தோன்றாது என்ற உறுதியைப் புலப்படுத்தி இப்படிப் பத்துப் பாடல்கள் பாடுகிறார். சிவபெருமானிடத்தில் சரணடைய வேண்டுமென்றால் உலகாயத இன்பங்களில் பற்று விட வேண்டும். தன் இடையில் கட்டிய கந்தல் தவிர வேறு எதையும் உடமையாகக் கொள்ளமல், கிடைத்ததை உண்டு, கண்ட இடத்தில் தூங்கியவர் அவர். என்னைக் காப்பது அவன் கடன், இறை பணி செய்வது என் கடன் என்று வாழ்ந்தவர். அவருடைய கீழ்வரும் பாடலைப் பாருங்கள். அம்பலங்களில் பாய் முதலியன இன்றி பூமி மேலேயே படுத்துக் கிடக்கிறார். இவரது பொறுப்பைச் சிவன் ஏற்றுக் கொண்டுவிட்டான். இவர் ஏன் பணக்காரர்களைத் துதி பாடி வாழவேண்டும்? புகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவி உடன்கிடந்தாற் புரட்டாள் பொய்யன்று மெய்யே இகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டான் இனியேதுங் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோம் துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லுஞ் சொற் கேட்கக் கடவோமோ துரிசற்றோமே. இதன் எதிரொலியைச் சங்கரரின் பஜகோவிந்தத்தில் கேட்கிறோம். ஸுரமந்திர தருமூலநிவாஸ: சய்யா பூதலமஜினம் வாஸ: I ஸர்வபரிக்ரஹ போக த்யாக: கஸ்ய ஸுகம் நகரோதி விராக: II கோயில் வாசலிலோ, மரத்தடியிலோ தங்கி, தரையில் படுத்து, மான் தோலை உடுத்தி, எல்லா சுகானுபவத்தையும் துறந்து வைராக்கியத்துடனிருப்பது அனைவருக்குமே சுகம்தானே! சிவனுக்கு மீளா ஆளாக ஆகிவிட்டதால் அவருக்கு வருங்காலத் துன்பமாகிய அச்சம் நீங்கியது மட்டுமல்ல, நிகழ்காலத் துன்பங்களும் நீங்கிவிட்டன. கடந்த பிறவியில் செய்த வினைகளும் செயலிழந்து போய்விட்டன என்கிறார். அல்லல் என்செயும் அருவினை என்செயும் தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செயும் தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு எல்லையில்லதோர் அடிமை பூண்டேனுக்கே. 4 சுந்தரர் 9 வாழ்வாவது மாயம் வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தில் வேதத்திற்கும் தமிழ்த் திருமுறைகளுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு காணப்படுகிறது. வேதம் மனித வாழ்க்கையின் இனிய பகுதிகளைக் கொண்டாடுகிறது. திருமுறைகள் வாழ்க்கையின் இருண்ட பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. வாழ்க்கையைத் துறந்து சன்னியாசி ஆவது வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. வேத ரிஷிகள் வாழ்க்கையை நன்கு அனுபவித்தார்கள். பிள்ளை குட்டிகளுடன், பேரன் பேத்திகளுடன் சௌக்கியமாக வாழ்வதில் ஆனந்தம் கண்டார்கள். வாழ்க்கை துன்பமயமானது என்ற புலம்பல் அவர்களிடம் இல்லை. அதற்காக, அவர்கள் வாழ்வில் துன்பமே இல்லை என்று சொல்லி விட முடியாது. அவர்களுக்கும் பிரச்சினைகள் இருந்தன. ஆனால் மனம் உடைந்து இந்த வாழ்க்கையே மோசம், இதிலிருந்து விடுபடவேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை. சாவைக் குறித்து அவர்கள் அஞ்சவில்லை. செத்தபின் என்ன ஆகிறோம் என்பது பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை. முற்பிறவி, மறுபிறவி என்ற கருத்துருக்கள் அவர்கள் அறியாதவை. அவர்கள் இயற்கை அழகை ரசித்தார்கள். இயற்கையின் எழில் வளத்தை ரசித்து, அதனால் அடையும் ஆனந்தத்தையே செல்வம் என்று கருதினர். இறைவனைச் சரணடைவதே துன்பம் நீக்க வழி என்று கருதினர். திருமுறைகளில் இல்லறத்தை விடத் துறவறம் மேலானது என்ற கொள்கை போற்றப்படுகிறது. வாழ்க்கை துன்பமயமானது, அதிலிருந்து விடுதலை பெறவேண்டும், இறந்த பின் மீண்டும் பிறவா நிலையை அடையவேண்டும், உடல் இழிவானது, நமது புலன்கள் நமக்கு வஞ்சனையைச் செய்பவை, அவற்றை அடக்கி வாழவேண்டும் என்ற கருத்து மேலோங்கி நிற்கிறது. இந்த வேறுபாட்டுக்குக் காரணம் என்ன? இடைக்காலத்தில் ஏற்பட்ட சமண சாக்கிய சமயங்கள் மக்களிடையே மறுபிறவி, கர்மாக் கொள்கைகளைப் பரப்பின. பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும் பேரின்பம் என்ற கருத்தை வலியுறுத்திப் பிரசாரம் செய்தன. இச்சமயங்களைத் தழுவியவர்கள் மட்டுமில்லாது எல்லோரையுமே இந்தக் கொள்கைகள் கவர்ந்தன. தேவார மூவர் மற்றும் மணிவாசகர் பாடல்களில் இவற்றின் அழுத்தமான தாக்கத்தைக் காணலாம். உடலினை முன்னம் இழுக்கென்றிருந்தேன், அந்த அறியாமையிலிருந்து விடுபட்டேன் என்று திருமூலர் சொல்கிறார். ஆடற்பெருமானின் அழகைக் காண்பதற்காக மீண்டும் பிறக்கவும் ஆயத்தம் ஆகிறார் அப்பர். ஆனால் அவரும், சம்பந்தரும், சுந்தரரும், மணிவாசகரும் உடலை இழுக்கென்று கருதினர். அதிலிருந்து விடுபட்டுப் பிறவா நிலை அடைவது தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று கருதினர். சுந்தரர் தேவாரத்தில் வாழ்க்கை துன்பமயமானது என்ற கருத்து மற்றவர்களை விட மிகுதியாகக் காணப்படுகிறது. அவற்றில் சில இடங்களைப் பார்ப்போம். திருஎதிர்கொள்பாடித் தேவாரத்தில் சுந்தரர் கூறுகிறார்- இவ்வுலகில் மிகச் செல்வாக்குடன் வாழ்கிறோம் என்று இறுமாப்பு அடையவேண்டாம். இறந்தபின் இவை பயன்படா. நற்கதி அடையவேண்டும் என்றால் இறைவனைத் துதியுங்கள். மத்த யானை ஏறி மன்னர் சூழவரு வீர்காள் செத்த போதில் ஆரும் இல்லை சிந்தையுள் வைம்மின்கள் வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே அத்தர் கோயில் எதிர்கொள் பாடி என்பதடைவோமே. பிறந்தவர் அனைவரும் இறப்பது உறுதி. இறந்த பின் அடையவேண்டிய பிறவாநிலைக்கு ஆயத்தம் செய்துகொள்ளுங்கள். மனை வாழ்க்கை துயரமானது. இதிலேயே கிடந்து உழல வேண்டாம். . தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயரம் மனைவாழ்க்கை மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நெஞ்ச மனத்தீரே நீற்றர் ஏற்றர் நீல கண்டர் நிறைபுனல் நீள்சடைமேல் ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே. நமது ஐம்புலன்களும் நமக்கு வஞ்சனையைச் செய்கின்றன. எனவே அவற்றின் வழிச் செல்லாமல் இறைவனை நாடி உய்வு பெறுங்கள். வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே யாவராலும் இகழப் பட்டு இங்கு அல்லலில் வீழாதே மூவராயும் இருவராயும் முதல்வன் அவனேயாம் தேவர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே. மனை வாழ்க்கையில் இன்பம் இருக்கிறது என்று ஏமாந்து விடாதீர்கள். அதில் துன்பமும் உண்டு. எனவே அதைக் கைவிட்டு இறைவனடி சேருங்கள். இன்பம் உண்டேல் துன்பம் உண்டு ஏழை மனைவாழ்க்கை முன்பு சொன்ன மோழை மையான் முட்டை மனத்தீரே அன்ப ரல்லால் அணிகொள் கொன்றை அடிக ளடிசேரார் என்பர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே. இப்பிறவியில் நமக்கு உறவினராய் வாய்த்தவர்கள் நமக்கு மறு உலகு அடைவதற்கு எந்த வகையிலும் உதவ மாட்டார்கள். எனவே அவர்களைக் கைவிட்டு இறைவனை நாடுங்கள். தந்தை யாரும் தவ்வை யாரும் எட்டனைச் சார்வாகார் வந்து நம்மோ டுள்ள ளாவி வான நெறிகாட்டுஞ் சிந்தை யீரே நெஞ்சி னீரே திகழ்மதி யஞ்சூடும் எந்தை கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே. பசிநோயை உண்டாக்குகின்ற உடம்பு நிலைத்திருத்தல் என்பது பொய். இது மண்ணாய் மறைந்தொழிவதே மெய். ஆதலின், இல்லாது ஒழிய வேண்டுவது பிறவியாகிய கடலே; அதன் பொருட்டு, விரைந்து அறத்தைச் செய்யுங்கள் வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம் பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான் தாழாதறஞ் செய்ம்மின்தடங் கண்ணான்மல ரோனுங் கீழ்மேலுற நின்றான்றிருக் கேதாரமெ னீரே. உடம்பைச் சுமந்தே திரிகின்றவர்களே, இவ்வுடம்பு நரிகளால் கிழித்து உண்ணப்படுவதாதலை அறிகின்றிலீர்; குறித்த நாளில் உம்மை அழைத்தற்குக் கூற்றுவன் நினைக்கின்ற நாளில் உமக்கு அறங்கள் செய்ய முடியுமோ? எனவே இப்பொழுதே, `திருக்கேதாரம்` என்று சொல்லுஙகள். பறியேசுமந் துழல்வீர்பறி நரிகீறுவ தறியீர் குறிகூவிய கூற்றங்கொளும் நாளாலறம் உளவே அறிவானிலும் அறிவானல நறுநீரொடு சோறு கிறிபேசி நின்றிடுவார் தொழு கேதாரமெனீரே. சிற்றின்பத்தில் மூழ்கி இராமல் யமன் வருமுன் இப்பொழுதே இறைவனை அடைந்து அவனுக்கு ஆளாகிப் பிழையுங்கள். வாளோடிய தடங்கண்ணியர் வலையிலழுந் தாதே நாளோடிய நமனார்தமர் நணுகாமுனம் நணுகி ஆளாயுய்ம்மின் அடிகட்கிடம் அதுவேயெனில் இதுவே கீளோடர வசைத்தானிடங் கேதாரமெ னீரே. இறைச்சிப் பொதியாகிய உடம்பைச் சுமந்து திரிதல் ஒன்றையே செய்கிறீர்களே, அப்பொதி பயனற்று ஒழிவதை அறியீரோ? அறிவை இழந்து நீவிர் குழியில் வீழ்வது, நும் வினைப்பயனேயாம். இதனை விடுத்து, சிவ பெருமானது இடம் திருக்கேதாரத்தைத் துதிமின்கள். பொதியேசுமந் துழல்வீர்பொதி அவமாவதும் அறியீர் மதிமாந்திய வழியேசென்று குழிவீழ்வதும் வினையாற் கதிசூழ்கடல் இலங்கைக்கிறை மலங்கவரை அடர்த்துக் கெதிபேறுசெய் திருந்தானிடங் கேதாரமெ னீரே. தேடிச் சோறு நிதம் தின்று ஒரு நாள் கூற்றுக்கு இரையாகும் வேடிக்கை மனிதரைப் போல நான் வீழக்கூடாது என்ற பாரதியின் பாடலை நினைவூட்டும் ஒரு பாடலில் சுந்தரர் கூறுகிறார்- உலகியலில் நின்றோர் இறக்கும்போது மற்றவர்கள் அவரைப் பற்றி, `நல்ல துணைவியை மணந்தார்; இல்லற நெறியிலே ஒழுகினார்; நன்றாக உண்டார்; உடுத்தார்; மூப்படைந்தார்; இறந்தார்` என்று சொல்கிறார்கள். அடியேன் அத்தகைய சொல் பெற விரும்பவில்லை. நற்கதி அடைவதற்கான ஒரு வழியினைச் சொல்லியருள். கல்வாய் அகிலுங் கதிர்மா மணியுங் கலந்துந் திவருந் நிவவின் கரைமேல் நெல்வா யில்அரத் துறைநீ டுறையும் நிலவெண் மதிசூ டியநின் மலனே நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார் நரைத்தார் இறந்தா ரென்றுநா னிலத்திற் சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன் தொடர்ந்தேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. சமண சாக்கிய சமயங்களுக்கும் சைவத்துக்கும் வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தில் வேறுபாடு இல்லை. ஆனால் சமண சாக்கிய சமயங்கள் துன்பத்தை அனுபவித்துத் தான் தீர்க்க வேண்டும் என்று போதித்தன. சைவமோ, வேதக் கருத்தை ஒட்டி, துன்பத்தைத் தீர்க்க ஒரே வழி இறைவனைச் சரணடைதல் என்றது. 5 மாணிக்கவாசகர் 10 திருவாசகத்தில் பசு பக்தி மேலீட்டால் உருகிக் கசிந்த உள்ளத்திலிருந்து பொங்கிப் பீறிட்டு வெளிவந்து கேட்போர் உள்ளத்தையும் உருகிக் கசியவைப்பது திருவாசகம். காரிகை கற்றுக் கவி பாடியவரல்ல மணிவாசகர். ஆனால் அவரது படைப்பில் இலக்கியச் சிறப்புகளும் அடங்கி இருப்பது பொன்மலர் நாற்றமுடைத்து என்பது போல இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. இந்த இலக்கியச் சிறப்புகளில் ஒன்று உவமைகள் கையாளப்படும் பாங்கு. இவரது உவமைகள் கற்போரது உள்ளத்தில் கருத்தை அழுத்தமாகப் பதிய வைப்பதோடு அழகும் கூட்டுகின்றன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு காணலாம். மாணிக்கவாசகரின் உவமைகளுள் விலங்குகள் முக்கிய இடம் பெறுகின்றன. அவற்றுள்ளும் மிக அதிகமாகப் பேசப்படுவது நாய். நன்றி உணர்ச்சிக்காகப் பாராட்டப்பட்டாலும் விலங்குகளில் மிகக் கீழானதாகக் கருதப்படுவது நாய். இறைவனை மிக உயர்ந்தவனாகவும், தன்னை மிகத் தாழ்ந்தவனாகவும் கூறிக் கொள்வது பக்தர்களின் இயல்பு. மணிவாசகர் தன்னை மனிதரில் மிகத் தாழ்ந்தவன் என்று சொல்லிக் கொள்வதோடு நிற்காமல் நாயேன் என்றும் நாயினும் கடையேன் என்றும் இகழ்ந்து கொள்கிறார். நான் என்னும் செருக்கு முற்றிலும் ஒழிந்து விட்ட அவரது மனநிலையை இதிலிருந்து உணரமுடிகிறது. நாய்க்கு அடுத்தபடியாக, வாதவூரடிகள் மிகுதியாகப் பயன்படுத்தும் உவமை-விலங்கு பசுவாகும். தமிழ் மக்களின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பின்னிப் பிணைந்து இருப்பதல்லவா பசு! அமைச்சராக இருந்தபோதும், அக்காலச் சூழலுக்கு ஏற்ப, அவரது வீட்டில் நிறைய பசுக்கள் இருந்திருக்க வேண்டும் என்பதும் அவற்றை அவர் கூர்ந்து கவனித்திருக்க வேண்டும் என்பதும் அவரது உவமைகளிலிருந்து தெரிகிறது. அடிகள் தீட்டும் இந்த சொற்சித்திரத்தைப் பாருங்கள். ஒரு பசு மந்தை. பல பசுக்கள் மேய்ந்துவிட்டு வீடு திரும்புகின்றன. அவற்றில் ஒன்று குருடு. மற்ற பசுக்களோடு அதுவும் நடந்து வருகிறது. வீட்டை நெருங்கியதும் பகல் முழுவதும் கன்றைப் பிரிந்திருந்த பசுக்கள் தத்தம் கன்றைக் கண்டவுடன் பெருங் குரலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன. இந்தக் குருட்டுப் பசு தன் கன்றைக் காணமுடியாவிட்டாலும் மற்ற பசுக்கள் மிலைப்பதால் (கத்துவதால்) தானும் அவற்றுடன் சேர்ந்து மிலைக்கிறது. மெய்யடியார்கள் சிவபெருமானின் பக்தியில் தோய்ந்து ஆனந்தமடைந்து அவன் புகழைப் பாடுகின்றனர். மணிவாசகரோ தனக்கு உண்மையான பக்தி இல்லை என்று கூறிக்கொள்கிறார். (யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய்) ஆனால் மற்ற மெய்யடியார்கள் சிவன் புகழ் பாடும்போது, குருட்டுப் பசு மிலைப்பது போல, தானும் பாடுவதாகக் கூறிக்கொள்கிறார். ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆ மிலைத்தாங்கு உன் தாளிணை அன்புக்கு ஆரா அடியேன் அயலே மயல் கொண்டு அழுகேனே. (திருச்சதகம் 87) பக்தி மலையின் உச்சியில் நின்றுகொண்டு அவர் இவ்வாறு தன் அன்பு பொய் என்று கூறிக்கொள்வது நெஞ்சை உருக்குவதாக உள்ளது. கடவுளை அடைய நம்முடைய பக்தி உணர்வு எவ்வளவு தீவீரமாக இருக்கவேண்டும் என்பதற்குத் திருவாதவூரார் காட்டும் உதாரணைத்தைப் பாருங்கள். புதிதாகக் கன்று ஈன்ற பசு தன் கன்றைச் சற்று நேரம் காணாவிட்டால் கூடக் கதறித் தீர்த்துவிடுகிறது. மேயச் சென்றால் கூட அதன் நினைவு கன்றிடமே உள்ளது. வயிறு நிரம்பியதும் அது கன்றிடம் திரும்பி வரும் வேகத்தையும் அதனை நக்கிக் கொண்டே பாலூட்டுவிக்கும் பாசத்தையும் பார்த்தவர்களுக்கு, கற்றா (கன்றை ஈன்ற பசு) போலக் கசிந்துருக வேண்டுவனே என்ற அவரது உவமையின் ஆழம் புரியும். கூத்தா உன் குரைகழற்கே கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே. (திருப்புலம்பல் 3)   கற்றா மனமெனக் கதறியும் பதறியும் (போற்றித் திருவகவல் 73) திருவாசகம் முழுவதும் மணியிடை நூல்போல் ஊடுருவி நிற்பது ஒரே உணர்ச்சி. இறைவனின் பெருமையையும் தன் சிறுமையையும் ஒருங்கே காட்டி, அத்தகைய பெரியோன் இவ்வளவு அற்பனான என்னை ஆண்டுகொண்ட கருணைத்திறம் எவ்வளவு பெரியது என்று வியந்து, அந்தச் சிவானந்தத் தேனை மீண்டும் பருகத் துடிக்கும் ஆவலே அது. மாட்டை உவமையாக்கி மணிவாசகர் அதை விளக்கும் அழகைக் காணுங்கள். நோயுற்ற பசுங்கன்று நடக்கமுடியாமல் தடுமாறினால் மாட்டுக்காரர் அதை ஆதரவுடன் தாங்கி, மெதுவாகத் தள்ளிக் கொண்டோ தூக்கிக் கொண்டோ போவர். இத்தகைய கன்றுக்கு நுந்து கன்று என்று பெயர். சொந்த முயற்சியால் இறைவனை அடைய முடியாத தான் நுந்து கன்றைப் போல் இருப்பதாகவும் இறைவன் தன்னைத் தேடிவந்து தாங்கிச் சென்றதாகவும் கூறி அந்தக் கருணையை வியக்கிறார் மாணிக்கவாசகர். நோயுற்று மூத்து நான் நுந்து கன்றாய் இங்கிருந்து நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாம் தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்ட தன்கருணைத் தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. (திருக்கோத்தும்பி 10) மாடு சில சமயம் மந்தையிலிருந்து பிரிந்துவிடும். கால் போனவாக்கில் அது வேற்றூர் போய்ச்சேரும். அங்கு அதனைக் கவனிப்பார் இருக்கமாட்டார்கள். அதுவாக, கிடைத்ததை உண்டு, கண்ட இடத்தில் படுத்துறங்கி, தானும் மகிழ்ச்சியாக இல்லாமல், மற்றவர்க்கும் பயன்படாமல் வறிதே பொழுது போக்கும். இது ஆள்வாரிலி மாடு என்றும் ஊரேறு என்றும் கூறப்படும். மெய்யடியார் கூட்டத்தில் சேர்ந்திராமல் பிரிந்து நின்று தன் மனம் போன போக்கில் ஆள்வார் இல்லாத மாடு போலத் தான் வாழ்வதாக மணிவாசகர் கூறுகிறார். இப்படிப்பட்ட தன்னையும் எதிர்பாராத விதத்தில் இறைவன் ஆட்கொண்டதை நினைத்து மகிழ்கிறார். …………………………….ஆள்வாரிலி மாடாவேனோ நெருங்குமடியார்களும் நீயும் நின்று நிலாவி விளையாடு மருங்கே சார்ந்து வரவெங்கள் வாழ்வே வாவென்றருளாயே (கோயில் மூத்த திருப்பதிகம் 7) சீரேறடியார் நின்பாதம் சேரக்கண்டும் கண்கெட்ட ஊரேறாய் இங்கு உழல்வேனோ (திருச்சதகம் 53) மாடு தொடர்பான பொருட்களும் திருவாசகத்தில் நிறைய இடம் பெற்றுள்ளன. உவமிக்கமுடியாத சிவானந்தத்திற்கு உவமையாக தேன், கரும்புச்சாறு இவற்றுடன் பாலும் அவரால் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. மாடு வளர்ப்பவர்கள் வீட்டில் தயிர் கடைதல் ஒரு தினசரி வேலை. மணிவாசகர் தயிர் கடையப்படுவதைக் கூர்ந்து கவனிக்கிறார். மத்துக்கும் தாழிக்கும் இடையில் தயிர் தான் என்ன பாடு படுகிறது! புலன்களால் அலைக்கழிக்கப்பட்டுப் பரம்பொருளில் நிலைகொள்ளாமல் தவிக்கும் தன் மனதுக்கு அதை உவமிக்கிறார். மானிலாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகித் தேனிலாவிய திருவருள் புரிந்தவென் சிவநகர் புகப்போகேன் (திருச்சதகம் 40) மத்துறு தண்டயிரிற் புலன் தீக்கதுவக் கலங்கி வித்துறுவேனை விடுதிகண்டாய் (நீத்தல் விண்ணப்பம் 30) மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத்திட வுடைந்து தாழியைப் பாவு தயிர்போற் தளர்ந்தேன் (அடைக்கலப் பத்து 6) நிறைய மாடு உள்ளவர்கள் நெய்யை ஒரு குடத்தில் சேகரித்து வைத்திருப்பர். அது வீசும் மணத்தால் கவரப்பட்ட எறும்புகள் மெள்ள குடத்தின் மீது ஏறி உள்ளே இறங்கி நெய்யை அடைந்துவிடும். நெய்ப்பசை கால்களை அசையவிடாமற் செய்யவே, அவை திரும்பிச் செல்ல முடியாமல் நெய் மீது மிதக்கத் தொடங்கும். மனிதனும் அப்படித்தான். புலன்களுக்கு மகிழ்ச்சி தரும் உலகப் பொருட்கள் பால் நாட்டம் கொண்டு அவற்றை அடைவதிலேயே தன் முயற்சி முழுவதும் செலவிடுகிறான். அந்தப் போகப் பொருட்களை அடைந்த பின் அவனால் மீள முடிவதில்லை. இறைநாட்டம் அவனுக்கு இயலாமற் போகிறது. வாழ்வின் லட்சியம் என்ன என்பதை உணராமல் உரிய கடமைகளைச் செய்யாமல் புலனின்பத்தை மெய்யென்று மயங்கி, செய்யக் கூடாததைச் செய்து அதிலேயே உழலும் நம் போன்றோரின் நிலையைத் தன் மேல் சார்த்தி மணிவாசகர் புலம்புகிறார். உள்ளனவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி வெள்ளன் அலேனை விடுதி கண்டாய் வியன் மாத்தடக்கைப் பொள்ளனல் வேழத்துரியாய் புலனின் கட் போதவொட்டா மெள்ளெனவே மொய்க்கு நெய்க்குடம் தனை எறும்பெனவே (நீத்தல் விண்ணப்பம் 24) பசுவேறும் பரமனையே இடைவிடாமல் சிந்தித்துக் கொண்டிருந்த வாதவூரர் பசுவை உவமையாக்கித் தன் பக்தியை வெளிப்படுத்தியுள்ளது நம்மைப் பரவசப்படுத்துகிறது. 11 நீத்தல் விண்ணப்பம் திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது பழமொழி. இறையருள் பெற்ற அடியார் பலருண்டு, அவர்கள் பாடிய பனுவல்களும் பல உண்டு. இத்தனைக்கும் இல்லாத சிறப்பு திருவாசகத்திற்கு எப்படி வந்தது? எல்லா அடியார்களும் இறைவனைப் போற்றுவர். அவனது பேராற்றலைப் புகழ்வர். அவனது கருணையைப் பரவுவர். மணிவாசகரோ ஒவ்வொரு பாடலிலும் தன் சிறுமைகளை விரிவாகக் கூறி, இத்தனை தாழ்ந்த எனக்கும் அருள் புரிந்தாயே என்று வியக்கும் போது, இறைவனின் கருணையின் பெருமை மிகுதிப்படுகிறது. தன் சீவபோதம் ஒடுங்கும் வகையில் மாணிக்க வாசகர் தன்னைப் பற்றிக் கூறிக் கொள்ளும் சிறுமைகள் மானிட குலம் முழுமைக்கும் பொருத்தமானதாக உள்ளன. நம் சார்பில் அவர் பேசுவதாகவே தோன்றுகிறது. வாழ்க்கையில் தவறு செய்யாதவர் நம்மில் யார்? நாம் தவறு செய்து விட்டோம், நமக்கு உய்யும் வழி இல்லை என்று விரக்தி அடைந்த நிலையில் இருப்போர்க்கு, ‘எந்த நிலையிலும் மனம் திருந்தி இறை நாட்டம் கொண்டால் அவன் நம்மைக் கடைத்தேற்றக் காத்து இருக்கும் கருணை வள்ளலாக விளங்குகிறான்’ என்ற ஆறுதல் ஏற்பட்டு, திருவாசகம் படிக்கும் பொழுது வெளிப்படும் கண்ணீரில், செய்த பாவங்கள் கரைந்து மனம் பக்குவப்படுவது பலருடைய அனுபவம். இப்படிப்பட்ட திருவாசகத்தில் நீத்தல் விண்ணப்பம் என்ற பகுதியிலிருந்து சில முத்துகளைச் சுவைப்போம், வாருங்கள். பெயர் நீத்தல் விண்ணப்பம் என்று இருந்தாலும் அதில் கூறப்பட்ட விஷயம்- இறைவன் தன்னை விட்டு நீங்காது இருக்க வேண்டும் என்ற விண்ணப்பம் தான். அனைத்துப் பாடல்களிலும் வரும் ஒரு பொதுவான தொடர், விட்டிடுதி கண்டாய் என்பது. ‘என்னை விட்டு விடாதே’ என்பது பொருள். நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டது. அந்தாதி முறையில் அமைந்தது. இதன் முதல் பாட்டின் முதல் சொல் ‘கடையவன்’ என்பது. அந்தாதி இலக்கணப்படி, கடைசிப் பாட்டின் கடைசிச் சொல்லும் இதுவே. முதலில் உள்ள ‘கடையவன்’ என்ற சொல்லைக் ‘கீழ்த்தரமானவன்’ என்ற பொருளில் தன்னைக் குறிக்குமாறும், கடைசியில் உள்ள ‘கடையவன்’ என்ற சொல்லைக் ‘கடைசித் தொழிலான சம்காரம் செய்பவன்’ என்ற பொருளில் சிவனைக் குறிப்பதாகவும் அமைந்துள்ளது. தத்துவரீதியாகப் பார்க்குமிடத்து, வாழ்க்கையை மும்மலங்களுடன் துவக்கும் சீவன் படிப்படியாகச் சீவபோதம் நீங்கி இறுதியில் சிவபோதம் அடைவதை இது குறிக்கிறது. மணிவாசகர் கூறுகிறார், “நான் கடையவன். காமத்தின் வசப்பட்டுக் கடவுளை மறந்தவன். ஆற்றங்கரையில் உள்ள மரத்தின் வேரடி மண், ஓடும் நீரால் அரிக்கப்பட்ட நிலையில் அந்த மரம் பார்வைக்கு நேராக நின்றாலும் எந்த நேரத்திலும் விழுந்து விடக் கூடிய நிலையில் இருப்பது போல, என் ஐம்பொறிகள் காம நீரால் அரிப்புண்டு என்னை நிலையற்றவனாக்கி விட்டன. இறைவா, நீ என்னை வளைத்துப் பிடிக்க வந்தாய். நானோ உன் கையில் பிடிபடாமல் புலனின்பமே பெரிது என்று மயங்கி இன்னமும் உலகாயதச் சேற்றில் உழல்கின்றேன். தீயினைப் பழம் என்று நினைத்து அதைச் சுற்றி வட்டமிட்டு இறுதியில் தன்னை அதில் மாய்த்துக் கொள்ளும் விட்டில் போல, நான் இந்த உலக வாழ்வே இன்பம் என்று கருதி அதையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறேன். நீ உன் அருள் அமுதை என் வாயில் ஊட்ட வந்தாய். நான் அதை ஏற்காமல் மறுத்து விட்டேன். என்னே என் அறியாமை” என்று நொந்து கொள்கிறார். செழிகின்ற தீப்புகு விட்டிலிற் சின்மொழி யாரிற்பன்னாள் விழுகின்ற என்னை விடுதிகண் டாய்வெறி வாய்அறுகால் உழுகின்ற பூமுடி உத்தர கோசமங் கைக்கரசே வழிநின்று நின்னரு ளாரமு தூட்ட மறுத்தனனே. “என் ஐம்புலன்கள் எனக்கு வஞ்சனையைச் செய்து கொண்டிருக்கின்றன. உண்மையான இன்பம் எது என்று நான் உணர அவை வாய்ப்பு அளிக்கவில்லை. அதனால் நான் உன் மணி மலர்த் தாள் குறுகாமல் வேறுபட்டேன். எறும்புகள் நெய்க்குடத்தை மோப்பத்தால் அறிந்து நாடுவது போல என் புலன்கள் உலக இன்பத்தையே நாடிக் கொண்டிருக்கின்றன. உண்மையான மெய்ப்பொருள் நீ இருக்க, நான் பொய்மை செய்து வீண் பேச்சைப் பெருக்கிக் கொண்டிருக்கிறேன். கடைகின்ற மத்துப் பொருந்திய உடனே, தயிர் சுழல்வது போல என்னைப் பற்றிய பாசங்கள் ஐந்தினால் நான் அலைப்புண்டு வருந்துகிறேன். இவ்வாறாக, மீண்டும் ஒரு பிறவிக்கு உரியவனாக என்னை ஆக்கிக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு புலன் வசப்பட்டு வாழ்ந்தது கூடப் பெரிதில்லை. அதை விடப் பெரிய தவறு ஒன்றும் செய்து கொண்டிருக்கிறேன். இறைவனை அடைய வேண்டும் என்ற குதுகுதுப்பு (ஆர்வம்) என்னிடத்தில் எள்ளளவும் இல்லை. என் மனம் போன வழியில் சென்று கொண்டு இது தான் இறைவனின் குறிப்பு என்று தவறாக விளம்பரம் செய்து கொண்டிருக்கிறேன். இது மன்னிக்கப்படக் கூடிய குற்றமா?” குதுகுதுப் பின்றிநின் றென்குறிப் பேசெய்து நின்குறிப்பில் விதுவிதுப் பேனை விடுதிகண் டாய்   “உன்னோடு ஒன்றுபடும் வழியும் எனக்குத் தெரியவில்லை. உன்னைப் பாடவில்லை. உனக்குப் பணி செய்யவில்லை. சிவன் யார் எங்குளான் என்று தேடவில்லை. ஓடிப் பார்க்கவில்லை. ஸ்தம்பித்து மனம் உருகவில்லை. அது மட்டுமல்ல, உன்னைப் பழிக்கவும் துணிந்தேன்.” திருவாசகத்தில் தோய்ந்து கிடந்த அருட் பிரகாச வள்ளலார் இதே கருத்தை எதிரொலிக்கிறார். அல்லார்க்கும் குழலார் மேல் ஆசை வைப்பேன் ஐயா நின் திருத்தாள் மேல் அன்பு வையேன். செல்லார்க்கும் பொழில் தணிகை எங்கே என்று தேடிடேன் நின் புகழைச் சிந்தை செய்யேன் கல்லார்க்கும் கடுமனத்தேன் வன்கண்ணினேன் புன் கண்ணினேன் உதவாத கையேன் பொய்யேன் எல்லார்க்கும் உதவாத பாவியேன் யான் ஏன் பிறந்தேன் புவிச் சுமையாய் இருக்கின்றேனே. “இத்துணை நாள் இப்படி வாழ்ந்தது போதும். இனி புலால் நாற்றமுடைய, நோய்களுக்கு இருப்பிடமான இந்த உடலை நான் தாங்கி இருக்க மாட்டேன். நான் தளர்ந்து விட்டேன். என்னைத் தாங்கிக் கொள்வாயாக” என்று இறைவனிடம் இறைஞ்சுகிறார். தன் சிறுமைகளை எல்லாம் பட்டியலிட்ட மணிவாசகர் ஆங்காங்கு இறைவனின் கருணையையும் புகழ்ந்து பாடுகிறார். இறைவன் பேராற்றலும் பெருங் கருணையும் உடையவன் என்பது முன்னரே தெரிந்தது தான். ஆனால் இவ்வளவு குறை உடைய எனக்கும் அவன் கருணை செய்துள்ளான் என்பது அவனது கருணைக்கு எல்லையில்லை என்பதை அடிக் கோடிட்டுக் காட்டுகிறது. கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல் உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே சடையவ னேதளர்ந் தேன்எம்பி ரான்என்னைத் தாங்கிக்கொள்ளே. “நான் கள்ளன் என்பது உனக்குத் தெரியும். அப்படியும் என்னை ஆண்டு கொண்டாயே அப்பா, அது என்ன காரணம் பற்றி?” என வினவுகிறார். கள்ளேன் ஒழியவும் ஆண்டு கொண்டதெக் காரணமே “என்னை ஆண்டு கொண்டது மட்டுமல்லாமல் என் குறையை நிறையாக்கி என் பிறவிப் பிணியைத் தீர்த்தாயே இறைவா. முன்பு பாற்கடலைக் கடைந்த போது உண்டான ஆலகால விடத்தை அமுதமாக்கி உண்டாயே அது போன்ற விந்தைச் செயல் அல்லவா நீ என்னிடம் செய்து விட்டாய்!” பொய்யவ னேனைப் பொருளென ஆண்டொன்று பொத்திக்கொண்ட மெய்யவ னேவிட் டிடுதிகண் டாய்விட முண்மிடற்று மையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே செய்யவ னேசிவ னேசிறி யேன்பவந் தீர்ப்பவனே “சுடர் விடும் பொருள்களுக்கு எல்லாம் ஒளி தந்த மூலப் பொருள் நீ. அதே நேரத்தில் எளிமையின் எல்லையைத் தொட்டவன். அதனால் அன்றோ, உன்னோடு கலந்து விட நான் வெளிவராத போதும் நீயாக வந்து என்னை ஆட்கொண்டாய்.” களிவந்த சிந்தையொ டுன்கழல் கண்டுங் கலந்தருள வெளிவந்தி லேனை விடுதிகண் டாய்மெய்ச் சுடருக்கெல்லாம் ஒளிவந்த பூங்கழல் உத்தர கோசமங் கைக்கரசே எளிவந்த எந்தை பிரான்என்னை ஆளுடைய என்னப்பனே “சிவனே, உன்னிடத்தே ஒன்றுக்கொன்று பகையான நிலவும் பாம்பும் இசைந்து வாழ்கின்றன. அது போலப் பண்பில் மேம்பட்ட பழ அடியார் பலரோடு கூட படிறு {பொய்} ஒழுக்கம் கொண்ட என்னையும் இசைத்தாயே, இந்த வித்தையை எப்படிப் புகழ்வேன்? பிறவி என்னும் ஐவாய் அரவத்துக்கு அஞ்சி என் மனம் பொந்தில் ஒடுங்குகிறது. என்னைக் கைவிட்டு விடாதே.” பரம்பர னேநின் பழஅடி யாரொடும் என்படிறு விரும்பர னேவிட் டிடுதிகண் டாய்மென் முயற்கறையின் அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவிஐ வாயரவம் பொரும்பெ ருமான்வினை யேன்மனம் அஞ்சிப் பொதும்புறவே. “நான் உன்னை ஏசினாலும் ஏத்தினாலும் பிழைகளை எண்ணி மனம் குழைகின்ற என்னை விட்டு விடாதே” என்று நீத்தல் விண்ணப்பத்தை நிறைவு செய்கிறார். தாழ்மை உணர்வோடு பாடிக் கொண்டு வந்த மாணிக்க வாசகர் தோழமை உரிமையோடு பாடிய பாடல் ஒன்றும் நீத்தல் விண்ணப்பத்தின் இறுதிப் பகுதியில் உண்டு. “இறைவா, நீ கபால மாலை அணிந்து தீயை ஏந்தி அரவு பூண்டு வீரத்தின் நிலைக் களனாக விளங்குகிறாய். நீ என்னைக் கைவிட்டு விட்டால், நீ யாருடைய அடியவன் என்று ஊரார் என்னைக் கேட்கும்போது உத்தரகோசமங்கைக்கு அரசின் அடியார்க்கு அடியேன் என்று பதில் அளிப்பேன். என் கீழ்மையைப் பார்க்கும் அவர்கள் உன்னைப் பரிகசிப்பர். இது உனக்குத் தேவையா? உன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவாவது நீ என்னைக் கடைத்தேற்ற வேண்டும்” என்கிறார். அடுத்த பாடலில் இன்னும் ஒரு படி மேலே போய் நிந்தா ஸ்துதியாக மிரட்டுகிறார். “நான் பிழை செய்தவன் என்று என்னை நீ வெறுத்துப் புறக்கணித்தால் உன் செயல்கள் சரியல்ல என்று ஊரார் சிரிக்கும்படி செய்து விடுவேன். அப்படியும் நீ என்னை ஒதுக்குவாய் ஆயின் நீ யானைத் தோலைப் போர்த்த பித்தன், புலித் தோலை உடுத்த பித்தன், நஞ்சு உண்ட பித்தன், சுடுகாட்டுத் தீயில் விளையாடும் பித்தன், என்னை ஆண்டு கொண்டு பின்பு புறக்கணித்த பித்தன் என்றெல்லாம் ஏசி உன்னைப் பழிக்கு ஆளாக்குவேன்” என்கிறார். கற்றுப் புலமை தேர்ந்து தன் அறிவுத் திறம் விளங்கப் பாடிய பாடல்கள் அல்ல இவை. பக்திச் சுவையில் தோய்ந்து கிடந்து பழுத்த மனத்திலிருந்து பீறிட்டு எழுந்தவை இவை. ஆயினும் இவற்றில் இலக்கியச் சுவைக்கும் பஞ்சமில்லை. மணிவாசகரின் உவமை நயம் சிறப்பு மிக்கது. புலனின்பமே மேலானது என்று கருதி வாழ்பவன் சிறப்புற வாழ்வது போலத் தோன்றினாலும் அவன் ஒரு நாள் வீழ்ந்து படுவது திண்ணம் என்பதைக் காட்ட வேரடி மண் அரிக்கப்பட்டும் நிமிர்ந்து நிற்கின்ற ஆற்றங்கரை மரத்தை உவமையாக்கியதை முதலில் பார்த்தோம். புலனின்பம் தனக்கு அழிவு தர வல்லது என்பதை உணராமல் அதைத் தேடி அலைகின்ற மானிடரை தீப்புகு விட்டிலாகவும் நெய்க்குடம் மொய்க்கும் எறும்பாகவும் சித்தரித்ததையும் பார்த்தோம். இறை நாட்டம் ஒரு புறமும் புலன் நாட்டம் ஒரு புறமுமாக இருப்பவர்களை இருதலைக் கொள்ளி எறும்புக்கு உவமிக்கிறார். இறையருள் வெள்ளமாகப் பெருகிக் கொண்டிருந்தும் அதைப் பருக முடியாமல் தடுமாறும் மனிதக் கூட்டத்தை வெள்ளத்தில் மிதந்து கொண்டே தாகத்தால் நா வறண்டு துன்புறும் பேதை என வர்ணிக்கிறார். யானைப் படை கொண்டு புரிகின்ற போரில் சிறு செடிகள் மிதியுண்டு மாய்வது போல, ஐம்புலன்கள் இன்பம் நாடிச் செல்லும் வேளையில் ஆன்மா நாசமடைகிறது என்கிறார். நாங்கூழ்ப் புழுவைச் சுற்றி எறும்புகள் கூட்டமாக மொய்த்து அதைக் கடித்து உண்ணும் வேளையில் தன்னைக் காத்துக் கொள்ள முடியாமல் புழு துடிப்பது போல், ஐம்புலன்கள் துன்புறுத்த, என் மனம் தன்னைக் காத்துக் கொள்ள முடியாமல் துடிக்கிறது என்கிறார். இறைவனை அடைய வேண்டும் என்கிற இதய தாகத்துக்கு அவர் கொடுக்கும் உவமை, ‘பெரு நீர் அறச் சிறு மீன் துவண்டாங்கு.’ வெள்ளம் வற்றிய இடத்தில் உள்ள மீன் துடிப்பது போல இறைவனின் பிரிவாற்றாமையால் தான் துடிப்பதாகக் கூறுகிறார். வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன் கலந்து பால் கலந்து செழுங் கமலத்தின் சுவை கலந்து ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே என்று வள்ளலார் பாடியது பொருத்தமானதே என்று உணர்கிறோம். 12 பொய் கெட்டு மெய் ஆனார் மெய் என்ற சொல்லுக்கு உடம்பு, உண்மை என்ற இரு பொருள்கள் உண்டு. உடம்பு உண்மையா? இதில் என்ன ஐயம்? உடம்பு மூச்சு விடுகிறது, உணவு உண்கிறது, ஐம்புலன்களாலும் இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது. இவை கனவோ, மாயத் தோற்றமோ அல்ல. எனவே மெய் (உடம்பு) மெய் (உண்மை) தான். மேலே, உண்மை என்ற சொல்லை எதிர்மறையாக விளக்கி, கனவோ, மாயத் தோற்றமோ அல்லாதது உண்மை என்று பார்த்தோம். இதற்கு உடன்பாடான விளக்கம் என்ன? எது உள்ளதோ அது உண்மை. இருக்கிறது, உள்ளது என்ற இரு சொற்களுக்கும் ஒரே பொருள் என்றாலும், இருக்கிறது என்ற சொல்லுக்கு இருந்தது, இருக்கும் என்ற இறந்தகால, எதிர்கால வடிவங்கள் உண்டு. உள்ளது என்ற சொல்லுக்கு இறந்த கால, எதிர்கால வடிவங்கள் இல்லை. அது முக்காலத்தையும் குறிக்கும் சொல். எது கால மாறுபாட்டால் பாதிக்கப்படாமல் முக்காலத்திலும் நிலையாக இருக்குமோ அதுவே உள்ளது என்றும் உண்மை என்றும் சொல்லப்படும். இனி, முதலில் தொடங்கிய பிரச்சினையை மீண்டும் பார்ப்போம். இந்த உடம்பு உண்மையா? அதாவது, முக்காலத்திலும் இருப்பதா? இது ஒரு காலத்தில் இல்லாமல் இருந்தது. இனி ஒரு காலத்தில் இல்லாமல் போகும். எனவே இந்த உடம்பு உண்மையல்ல. பொய். எது உண்மை? பரம்பொருள் ஒன்றே உண்மை. அதை இயற்கை நியதி என்றோ, சக்தி என்றோ அல்லது உங்களுக்கு விருப்பமான எந்தப் பெயரிலோ அழையுங்கள். காலத்தால் மாறுபடாதது அது ஒன்றே. புல், மரம் போன்ற தாவரங்களும், புழு, மிருகங்கள் முதலான எல்லா உயிரினங்களும் பிறக்கின்றன, சாகின்றன. ஆனால் அவை இது பற்றிச் சிந்திப்பதில்லை. மனிதரில் பலரும் இதைப் பற்றிச் சிந்திப்பதில்லை. தேடிச் சோறு நிதம் தின்று கொடுங் கூற்றுக்கு இரையென மாயும் வேடிக்கை மனிதராக இருக்கிறோம். மெய்யல்லாத உடம்பை மெய்யெனக் கருதுகிறோம். இதைப் பேணுவதே வாழ்வின் ஒரே இலக்கு என நினைக்கிறோம். உடம்பினுக்குள்ளே உறுபொருள் ஒன்று உண்டு என்பதை மறந்து விடுகிறோம். அரிதாக ஒரு சிலர் இது பற்றிச் சிந்திக்கிறார்கள். அத்தகையோரில் ஒருவர் மாணிக்க வாசகர். அவருடைய வாழ்வின் மூன்று கட்டங்களை அவரது பாடல்கள் காட்டுகின்றன. முதல் கட்டம் அவரும் ஒரு காலத்தில் புல், பூண்டு, புழு, மரம், மிருகம், பறவை, பாம்பு, கல் போன்று மெய் பொய் பற்றிய அறிவின்றி இருந்தார். வினையின் விளைவாக மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து கொண்டிருந்தார். எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் பொருந்தும் இப் பிறப்பு இறப்பு இவை நினையாது பொய்களே புகன்று போய்க் கருங் குழல்லினார் கண்களால் ஏறுண்டு கலங்கியேகிடப்பேன் பொய்மையே பேசிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையன் பொய் கலந்து அல்லது இல்லை பொய்ம்மையேன், பொருத்தமின்மையேன் பொய்ம்மை உண்மையேன் பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும் மெய்யாக் கருதிக் கிடந்தேன் பொத்தை ஊன் சுவர்புழுப் பொதிந்து உளுத்து அசும்பு ஒழுகிய பொய்க் கூரை இத்தை மெய்யெனக் கருதி நின்று இடர்க் கடற் சுழித் தலைப் படுவேன்   என்று தன்னை பற்றி இகழ்ந்து கூறிக் கொள்கிறார். மாணிக்கவாசகர் குற்றமற்றவர், மற்ற மக்கள் குற்றங்களை எல்லாம் தம் மீது ஏற்றிக் கொண்டு பாடுகிறார் என்று பெரியோர் கூறுவர். இரண்டாம் கட்டம் இப்படி வினையிலே கிடந்து உழன்ற மணிவாசகரை ஒரு நாள் இறைவன் திருவடிக் காட்சி தந்து ஆட்கொள்கிறான். மறைந்து போகிறான். அவன் ஆட்கொண்டதால் இவருக்குத் தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி விட்டது. இறைவன் பேரில் அன்பு கொள்ளத் தொடங்கினார். அப்பொழுது ஏற்பட்ட அறிவு விடியலில் தான் இத்தனை நாள் மெய்யல்லாததை மெய்யென மயங்கி காலத்தை வீணாக்கியதை உணர்கிறார். தோன்றி மறைந்த அந்தத் திருவடியை மீண்டும் கண்டு அதில் கலந்து விட ஏங்குகிறார். உண்மையான அடியார்கள் இறையடி சேர்ந்து நிலைத்த இன்பத்தை அடைந்ததைக் கண்டு, தனக்கு அந்த நல்லூழ் கிட்டாதது பற்றி வருந்துகிறார். செய்வது அறியாச் சிறுநாயேன் செம்பொற் பாத மலர்காணாப் பொய்யர் பெறும்பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன், பொய்யிலா மெய்யர் வெறியார் மலர்ப் பாதம் மேவக் கண்டுங் கேட்டிருந்தும் பொய்யனேன் நான் உண்டு உடுத்து இங்கு இருப்பதானேன்.. இவருக்கு மட்டும் இறைவனின் திருவடி நிழல் கிட்டுவது எளிதாக இல்லை. தான் மட்டும் இவ்வுலகிலேயே கிடந்து உழலுமாறு விடப்பட்டதற்கு என்ன காரணம்? இறைவனிடம் சண்டைக்குப் போகிறார். எனக்கு உன் திருவடியைக் காட்டினாய், உன்னைப் பிரியேன் என்று சத்தியம் செய்தாய். நீயே பொய்யனாகி விட்டாயே என்கிறார். சங்கரா, கருணையினாற் பெரியோன் ஒருவன் கண்டு கொள் என்று உன் பெய்கழல் அடி காட்டிப் பிரியேன் என்றென்று அருளிய அருளும் பொய்யோ? எங்கள்பெருமானே. நான் தவறு செய்திருக்கலாம். பொறுப்பது தானே பெரியோர் கடன். முன் வினை காரணமாக நான் செய்த தீச் செயல்களுக்கு தண்டனை தந்தாவது நீ ஆண்டு கொள்ள வேண்டாமா என்கிறார். மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின் என் மணியே வெறுத்து எனை நீ விட்டிடுதி கண் டாய் வினையின் தொகுதி ஒறுத்து எனை ஆண்டு கொள் உத்தர கோசமங்கைக்கரசே பொறுப்பர் அன்றே பெரியோர் சிறு நாய்கள் தம் பொய்யினையே.   இல்லை. இறைவன் பொய்யன் அல்லன். என் அன்பு தான் பொய். பொய்யனாகத் தானே இத்தனை நாள் இருந்தேன். திடீரென்று இறைவன் மேல் அன்பு வந்து விடுமா? அன்பு இருப்பதாக நான் நடிக்கிறேன். நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பல செய்து நான் எனது எனும் மாய (பாம்பு) கடித்த வாயிலே நின்று முன் வினை மிகக் கழறியே திரிகிறேன் . நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன். யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய். மற்ற அடியார்களை அழைத்துக் கொண்டு இவரை இறைவன் விட்டு வைத்த காரணம் என்னவாக இருக்கும் என்று மேலும் யோசித்த போது அவருக்கு வேறு ஒன்று புலப்படுகிறது. எல்லாம் படைத்த இறைவன் தான் இந்தப் பொய்யையும் படைத்தான். என்னை அழைத்துக் கொண்டுவிட்டால் பூமியில் பொய்யரே இல்லாமல் போய்விடுவர். ஒரு மரத்தின் கனிகளை உண்பதற்காக நாம் அறுவடை செய்யும்போது ஒரு சில கனிகளை விதைக்கென்று விட்டு வைக்கிறோம் இல்லையா, அது போல பூமியில் பொய்க்கு விதை இல்லாத நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக என்னை விட்டு வைத்திருக்கிறான் போலும். விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று இங்கு எனை வைத்தாய் இச்சைக்கானார் எல்லாரும் வந்து உன் தாள் சேர்ந்தார். இப்படிப்பட்ட போலி அன்பை வைத்துக் கொண்டு நான் எப்படி இறைவனை அடைவது? அவருக்கு ஒரு வழி தெரிகிறது. வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே ! மெய் தான் அரும்பி, விதிர்விதிர்த்து, இறைவனின் விரையார் கழற்கு கை தலைவைத்து, கண்ணீர் ததும்பி, உள்ளம் வெதும்பி, பொய் தவிர்ந்து, ஈசனைப் போற்றி, கைதான் நெகிழ விடேன், உடையாய் என்னைக் கண்டு கொள்ளே என்று நீண்ட காலம் அழுதால் அன்றி வேறு வழி இல்லை என உணர்கிறார். மூன்றாவது கட்டம் அழுத பிள்ளை பால் குடித்தது. உயிருடன் இருந்தபோதே இறைவன் அவரைத் தன் திருவடியில் மற்ற அடியாரோடு சேர்த்துக் கொண்டு விட்டான். திருவடி எப்படிப்பட்டது? ஒரே சோதி மயம். அந்தச் சோதி முன் பொய்ம்மை என்னும் அஞ்ஞான இருள் எப்படி நிற்க முடியும்? முன் செய்த பொய் அறத் துகள் அறுத்து எழு தரு சுடர்ச் சோதி ஆக்கி ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. புழுவினாற் பொதிந்திடு குரம்பையிற் பொய் தனை ஒழிவித்திடும் எழில் கொள் சோதி பொய்யிருள் கடிந்த மெய்ச் சுடரே என்று அந்தச் சோதியைப் போற்றுகிறார். மெய்யே, உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் என்று மகிழ்கிறார். அப்பொழுது மணிவாசகருக்கு தான் பெற்ற இன்பம் இந்த வையகம் பெற வேண்டும் என்று தோன்றுகிறது. மக்களே, இதுவரை பொய்யராய்க் காலம் கழித்துவிட்டோமே என்று கழிவிரக்கம் வேண்டா. இன்று பொய்யை விட்டால் இறைவன் உங்கள் கடந்த காலம் பற்றி முனியாமல் ஆட்கொள்வான். அவன் என் போலும் பொய்யர் தம்மை ஆட்கொள்ளும் வள்ளல். புயங்கன்அருளமுதம் ஆரப் பருகி ஆராத ஆர்வம் கூர அழுந்துவீர் போரப் புரிமின் சிவன் கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே என்று உபதேசிக்கிறார். புல் முதலாகத் தேவர் வரையிலான எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்த மாணிக்கவாசகர் எம் ஐயா அரனே ஓ என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய் ஆன வரலாறு நமக்கும் பொய் விட்டு உடையான் கழல் புக வழி காட்டுகிறது. 13 ஒரு வாசகம் தேவர் குறளும் திருநான் மறை முடிபும் மூவர் தமிழும் முனி வாக்கும் – கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகம் என்றுணர். இந்தப் பழம் பாடல் தேவார திருவாசகங்களின் கருத்தும் நான் மறையின் கருத்தும் ஒன்றே என்கிறது. இதற்கு மாறாக, “வேத நெறிக்கும் சைவ நெறிக்கும் சம்பந்தம் இல்லை, இரண்டும் வேறு வேறானவை” என்ற வாதம் தமிழ் நாட்டில் பரப்பப்பட்டு வருகிறது. அதன் உண்மையை ஆராய்வோம். தேவாரத்திலும் திருவாசகத்திலும் பல இடங்களில் இறைவனை வேத ரூபனாகவும் வேதத்திற்கு ஆதியனாகவும் கூறப்பட்டுள்ளது. வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம் வேதம் நான்கும் ஓலமிட் டுணங்கு நின்னை எய்த லுற்று மற்றொ ருண்மை இன்மையின் வேதமெய்ந்நூல் சொன்னவ னே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஓத உலவா ஒருதோழன் சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடிச் வேதமும் வேள்வியும் ஆயி னார்க்கு வேதமொழியர்வெண்ணீற்றர்செம்மேனியர் மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே என்று திருவாசகத்தில் பல இடங்களில் வேதத்துக்கும் சிவனுக்கும் உள்ள தொடர்பு கூறப்பட்டுள்ளது. 1 இத்தனை சான்றுகளையும் தள்ளி விடும் வகையில் “தேவார, திருவாசகங்கள் சொல்லும் வேதம் வேறு, அவை இருக்கு முதலான வடமொழி வேதங்களைக் குறிப்பன அல்ல. அவை தமிழ் மறைகள்” என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள். அவர்களுக்காகவே மணிவாசகர், இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் என்று இறைவனுடைய அடியார்களில் ஒரு சிலர் இருக்கு வேதம் முதலான தோத்திரங்களைக் கூறிப் போற்றுகிறார்கள் என்றுதெளிவு படுத்துகிறார். சங்கரனைச் சந்தோக சாம மோதும் வாயானை சாமத்தின் இசைவீணை தடவிக் கொண்டார் ஊடலை ஒழிக்க வேண்டிப் பாடினார் சாம வேதம் சாமுண்டி சாம வேதங் கூத்தொடும் பாட வைத்தார் சாமத்து வேத மாகி நின்றதோர் சயம்பு தன்னை சங்கரன் சாம வேதி என்று அப்பர் பெருமானும் சிவனுக்கும் சாம வேதத்துக்கும் உள்ள தொடர்பைப் போற்றுகிறார். 2 “வேதம் உயிர்க் கொலை வேள்வியை அடிப்படையாகக் கொண்டது. சைவம் கொல்லா நோன்பை அடிப்படையாகக் கொண்டது. எனவே சைவமும் வேதமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை” என்பது அவர்களது மற்றொரு வாதம். மேற்கூறிய இரண்டுமே தவறு. வேதத்தில் உயிர்க் கொலை வேள்வி கூறப்பட்டிருப்பது உண்மை தான். என்றாலும் எல்லா வேள்விகளும் உயிர்க்கொலை கொண்டவை அல்ல. சைவத்திலும் உயிர்க் கொலை இருந்தது. வேப்பமரத்தில் உறையும் தெய்வத்துக்கு பசுவின் உதிரத்தைப் படைத்ததாக அகநானூறு 309 கூறுகிறது. முருகனுக்கு ஆட்டுக்குட்டியை அறுத்துக் குருதியைத் தினையுடன் கலந்து குறவர் படைத்ததை நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் குறிப்பிடுகிறார். இறைவனுக்குப் படைக்கும் உணவு வழிபடுவோரின் உணவுப் பழக்கத்தை ஒட்டியே பல் வேறு காலங்களிலும் பல் வேறு இடங்களிலும் இருந்திருக்கிறது. இன்றைக்கும் சில கோவில்களில் இறைவனுக்கு சுருட்டு, சாராயம் முதலானவை படைக்கும் வழக்கம் உள்ளது. அந்தணர் உள்பட எல்லா மக்களும் புலால் உண்ட காலம் ஒன்று இருந்தது. புத்த சமண சமயக் கருத்துகள் பரவிய பின்னர் மக்களில் சிலர் புலால் மறுக்கத் தொடங்கினர். தெய்வங்களுக்கும் உயிர்க் கொலை தவிர்த்த படையலை மேற்கொண்டனர். எனவே படைக்கும் உணவின் அடிப்படையில் வேதத்தையும் சைவத்தையும் பிரிக்க முடியாது. 3 “வேதம் வேள்வி மூலம் இறைவனைப் போற்றுவது. சைவம் ஆலய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தருவது. எனவே இவை இரண்டும் தொடர்பு அற்றவை” என்பது இன்னொரு வாதம். வேதம் வேள்வி முறையை மட்டுமே வலியுறுத்தவில்லை. இல்லாமலும் வழிபடலாம் என்று கூறுகிறது. வருங்காலத்தில் ஏற்படக் கூடிய பல்வேறு விதமான வழிபாட்டு முறைகளுக்கும் வரவேற்பு தரும் வகையில் வேதம் அமைந்துள்ளது. மருத்துகள் பக்தர்களின் வழிபாட்டை வேள்வியுடனோ அல்லது பிரார்த்தனைகளுடனோ ஏற்றுக் கொள்கிறார்கள். இந்திரனை வேள்விகளால் மனிதர்கள் அறிவதில்லை. அவர்கள் தோத்திரங்களால் அறிகிறார்கள். வேள்வியால் ஏற்படக்கூடிய பலன்களை ரிபு சகோதரர்கள் அருஞ்செயல் மூலமாக அடைந்தார்கள். வேள்வியும் செய்து கடுமையாக உழைக்கவும் செய்பவனுக்கு தேவர்கள் அருள் புரிகிறார்கள். வணங்கினாலோ, அருஞ்செயல் செய்தாலோ, அல்லது வேள்வி செய்தாலோ அக்னி அவருக்கு வளங்களை அளிக்கிறார். பிரார்த்தனை இல்லாத வேள்வி பயனில்லை. வேள்வி இல்லாமல் பிரார்த்தனை மட்டுமே பலன் தரும். இந்த வேத மந்திரங்களிலிருந்து வேள்வி மட்டுமே வேத முறை அல்ல என்று அறிகிறோம். 4 “வேதத்தில் சிவன் என்னும் தெய்வம் குறிக்கப்பெறவில்லை. எனவே வேதத்துக்கும் சைவத்துக்கும் தொடர்பு இல்லை” என்று ஒரு வாதம். காரைக்கால் அம்மையாரின் பாடல்களில் ஒன்றில் கூட சிவன் என்னும் பெயர் குறிக்கப் பெறவில்லை. அதனால் அம்மையாருக்கும் சைவத்துக்கும் தொடர்பு இல்லை என்று கூற முடியுமா? வேதத்தில் இந்திரன், அக்னி, மருத், அசுவினி தேவர்கள் முதலான தேவர்கள் தான் உண்டு. சிவன் இல்லை என்பது உண்மையே. ஆனால் எப்பெயரிட்டு அழைத்தாலும் எல்லாம் ஒரே சத்தியத்தையே குறிக்கும் என்பது வேதக் கருத்து. உள்ளது ஒன்று, அதை அறிஞர்கள் பல விதமாகக் கூறுகிறார்கள். (ரிக் 1.164.46) சிவன் என்ற பெயரிலும் விஷ்ணு என்ற பெயரிலும் புதிதாக தெய்வங்கள் ஏற்படுத்தப்பட்ட போது அவை பரம்பொருளை எப்பெயரிட்டும் அழைக்கலாம் என்ற இந்த வேதக் கருத்துக்கு இயைபுடையவையாகவே அமைந்தன. பிற மதத் தெய்வங்களுக்கும், இனி வரவிருக்கும் தெய்வங்களுக்கும் கூட இது பொருந்தும். பரம்பொருளுக்குரிய இலக்கணத்தை முதன் முதலில் வரையறுத்தது ரிக் வேதம் தான். ரிக் 10.54 மற்றும் 10.55 பரம்பொருளுக்கு இந்திரன் என்ற பெயர் அளித்து அவருடைய நான்கு மாவலிமைகளைக் குறிப்பிடுகிறது. 1 கடந்த காலமாகவும் வருங்காலமாகவும் காலம் கடந்து நிற்றல், 2 விண் மண் எல்லாவற்றிலும் வியாபித்து இடம் கடந்து நிற்றல், 3 சூரியன் முதலான எல்லாப் பொருளையும் படைத்தல், 4 புரிந்து கொள்ளப்படாத செயல்பாடுகள் கொண்டிருத்தல். எப்பொருட்குந் தானேயாய் யாவைக்கும் வீடாகும் அப்பொருளாம் உலகேழெனத்திசை பத்தெனத்தான்ஒருவனுமே பலவாகிநின்றவா எங்கள் பெருமான் பாத மிரண்டும் வினவில் பாதாள மேழினுக் கப்பால் சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந் துநின்ற தொன்மை முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த முத்தனே முடிவிலா முதலே விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லை யிலாதானே என்று பரம்பொருளின் முதல் பண்பை, அதாவது, இடம் கடந்த தன்மையை விளக்குகிறது திருவாசகம்.   ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதி முன்னீறும் ஆதியும் இல்லான் என்று பரம்பொருளின் காலம் கடந்த தன்மை குறிப்பிடப்படுகிறது. கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி என்று அதன் படைப்புத் திறன் வியக்கப்படுகிறது. இறைவனும் அவனது செயல்களும் நம் சிந்தனைக்கு எட்டாதவை என்பதைக் கீழ்க்கண்டவாறு புகழ்கிறது திருவாசகம். மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே யாவையுமாய் அல்லையுமாஞ் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க சிந்தை யாலும் அறிவருஞ் செல்வனே. விச்ச தின்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய் சிந்தனைக்கும்அரியாய் நின்னையே அறியேன் நின்னையே அறியும் அறிவறி யேன் நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்துப் பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்சதேற்றும் பெருந்துறையாய் எல்லாப் பொருளிலும் எல்லாக் காலத்திலும் வியாபித்துள்ள பொருள் ஒன்று தான் இருக்க முடியும். அதை இந்திரன், அக்னி, வருணன் என்று எந்தப் பெயரிலும் அழைக்கலாம் என்பது வேதம் தரும் சுதந்திரம். இதை இன்னும் சற்று நீட்டினால் பரம்பொருளின் பெயர்களில், சிவன், திருமால், விநாயகன், காளி, சாத்தன், வேலன் என்ற பெயர்களும் இருப்பது தெரியவரும். இன்னும் நீட்டுகிறார் பாரதி. அங்கே அல்லா, யெஹோவா என்ற பெயர்களும் தெரிகின்றன. வேதம் ஒரு சடங்கு நூல் என்று பிரசாரம் செய்யப்பட்டாலும் கூட அது ஒரு பக்தி நூலே. வேதத்தில் பக்தி மாத்திரம் தான் உண்டு என்று பாரதி கூறுவதைக் கவனிக்க. பக்தி என்பது என்ன? பாரதி வரையறுக்கிறார்- எப்போதும் எப்போதும் எப்போதிலும் எதிலும் எங்கும் நம்மைக் கடவுள் காக்கும் என்ற நம்பிக்கை கொண்டிருத்தல் பக்தி என்று சொல்லப்படும். இறைவனை, என்றும் எங்கும் நம்மைக் காப்பவராக, தனக்கு மிக நெருங்கியவராக- தாயாக, தந்தையாக, நண்பனாக, குழந்தையாகக்- கருதுவது, அவனையே சரணடைவது, அவன் புகழைக் கூறுவது, அவனிடம் தன் குறைகளைத் தெரிவித்து நீக்குமாறு வேண்டுவது, அவனன்றி வேறு ஒருவரையும் நாடாமல் இருப்பது – இது தான் பக்தியின் அடையாளங்கள். கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே, கற்றா மனமெனக் கதறியும் பதறியும் மற்றோர் தெய்வங் கனவிலும் நினையா என்ற மாணிக்க வாசகர் கூற்றின் ஆழ்ந்த பக்தியை இந்திரா, நாங்கள் உன்னை மடி நிரம்பிக் கன்றை அழைக்கும் பசுப் போலக் கதறி அழைக்கிறோம். எங்கள் பிரார்த்தனையைச் செவி மடுப்பாயாக என்ற ரிக் 7.32.22 இல் காணலாம். அவனருளாலே அவன் தாள் வணங்கி என்று மணிவாசகர் சொல்வது உன்னைத் துதிக்க வலிமையும் நீயே தான் கொடுக்க வேண்டும் என்ற வேதக் கூற்றின் எதிரொலியே 5.10.7 நீ எங்களுடையவன், நாங்கள் உன்னுடையவர்கள் என்ற ரிக் 8.92.32 உன்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று திருவாசகத்தில் வெளிப்படுகிறது. தந்தையின் ஆடை முனையைப் பிடித்திழுக்கும் மகனைப் போல நான் உன்னை என் பிரார்த்தனையால் பிடித்திழுக்கிறேன் (ரிக் 3.53.2) என்பது சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே என்று மாணிக்க வாசகர் கூறுவதற்கு முன்னோடி. தெய்வத்தைத் தந்தையாக, உறவினனாக, நண்பனாகப் பாவித்துப் போற்றும் மந்திரங்கள் வேதத்தில் பல உள்ளன. இதோ ஒன்று. மருத்துகளே, தந்தை மகனை அணைத்துக் கொள்வது போல, நீங்கள் என்னை எப்பொழுது இருகைகளாலும் அணைத்துக் கொள்வீர்கள்? (ரிக் 1.38.1) சூரனே, நீ எங்களை ஒரு குற்றத்துக்காகக் கொல்லாதே, இரு குற்றங்களுக்காகக் கொல்லாதே, மூன்று குற்றங்களுக்காகக் கொல்லாதே, பல குற்றங்களுக்காகக் கொல்லாதே என்ற மந்திரம் 8.45.34 சிறியேன் பிழை பொறுக்குங் கோனே பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்குமன்பின் வெற்றடியேனை விடுதிகண்டாய் விடிலோ கெடுவேன் பேயேனதுள்ளப் பிழை பொறுக்கும் பெருமையனை உமையாள் கணவா எனை ஆள்வாய் பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ என்ற திருவாசக வரிகளில் தொனிக்கிறது. உன்னையன்றி எனக்கு சுகப்படுத்துபவன் எவரும் இல்லை என்ற ரிக்8.66.1 இன் ஒரு முனைப்பட்ட பக்தி பரி மேற் கொண்ட சேவகனார் ஒருவரையன்றி உருவறியாதென்றன் உள்ளமதே என்ற திருவாசகத்தில் காணப்படுகிறது. பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றுஅறியேன் என்று மணிவாசகர் கூறியதின் முன்னோடி ரிக் 1.7.7 இல் காணப்படுகிறது. இந்திரனைப் புகழும் வகையை நான் அறியேன் என்கிறார் ரிஷி. புகழுள்ள உன் நாமத்தை நான் எப்பொழுதும் கூறிக் கொண்டிருப்பேன் என்று வேதம் 7.22.5 கூறுவதற்கிணங்க திருவாசகமும் கொற்றச் சேவகன் நாமங்கள் பாடிப் பாடி ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ உன்நாமங்கள்பேசுவார்க் கிணக்கிலாததோர்இன்பமேவரும் என்று நாம ஜப மஹிமை பற்றிப் பேசுகிறது. திருமறையும் திருவாசகமும் ஒருவாசகம் என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? 1 FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/ Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/   2 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !